pm logo

cuppiramaNiya pAratiyAr pATalkaL
teivap pATalkaL
(in tamil script, Unicode/UTF-8 format)

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
2. தெய்வப் பாடல்கள்



Acknowledgment:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
E-text preparation: Mr. GovardhananHTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents teivap pATalkaL of pArati in Tamil script - Unicode encoding.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் :
தெய்வப் பாடல்கள்

1. தோத்திரப் பாடல்கள்


1. விநாயகர் நான்மணி மாலை

வெண்பா

(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா) - அத்தனே
(நின்)றனக்குக் காப்புரைப் பார், நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே. 1

கலித்துறை

நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்,
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2

விருத்தம்

செய்யுந் தொழிலே காண்
      சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
      வானத் தையுமுன் படைத்தவனே,
ஐயா, நான்முகப் பிரமாவே
      யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே,
      கமலா சனத்துக் கற்பகமே 3

அகவல்

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி
சிற்பர மோனத் தேவன் வாழ்க
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக் கிறையவன்; பண்ணவர் நாயகன்,

இந்திர குரு.எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்,
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்,

அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்?
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்,
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்,
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்,
அச்சந் தீரும். அமுதம் விளையும்,
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்
அமரத் தன்மை எய்தவும்
இங்குநாம் பெறலாம், இஃதுணர் வீரே 4

வெண்பா

(உண)ர்வீர் உணர்வீர் உலகத்தீர், இங்குப்
(புண)ர்வீர் அமர(ரு)ம் போக(ம்) - கண(ப)தியைப்
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர் கால்) 5

கலித்துறை

காலைப் பிடித்தேன் கணபதி, நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமென்னும் நாட்டின் நிறுத்த குறியெனக்கே. 6

விருத்தம்

எனக்கு வேண்டும் வரங்களை
      இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல்
      மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
      நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறுவயது,
      இவையும் தர நீ கடவாயே. 7

அகவல்

கடமை யாவன, தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,

அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உமையெனுத் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்

கடமை யெனப்படும, பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்

எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்ட
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. 8

வெண்பா

களியுற்று நின்று, கடவுளே! இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து. 9

கலித்துறை

துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தா ரைக்காத் தெளியார்க்குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்கள்ம் நீடுழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. 10

விருத்தம்

தவமே புரியும் வகையறியேன்,
      சலியா துறநெஞ் சறியாது
சிவமே, நாடிப் பொழு தனைத்தும்
      தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனைந்தமுடி
      நாதா! கருணா லயனே! தத்
துவமாகி யதோர் பிரணவமே
      அஞ்சேல் என்று சொல்லுதியே. 12

அகவல்

சொல்லினுக் கரியனாய் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்

பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியவனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்

வாழ்ந்திட விரும்பினேன், மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே,

நின்னா லியன்ற துணைபுரி வாயேல்
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே! எனை நீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே 12

வெண்பா

புகழ்வோம் கணபதியின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம, ஈங்கிது காண்
வல்லபைகோன் தந்த வரம். 13

கலித்துறை

வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும் காய்ந்தெறிந்து
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர் என்றுளத் தேகளி சார்ந்ததுவே 14

விருத்தம்

சார்ந்து நிற்பாய் எனதுளமே
      சலமும் கரமும் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவாநந்தப்
      பேற்றை நாடி, நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
      ஐயன், சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடங்கள் போக்கிடுநங்
      கோமான் பாதக் குளிர்நிழலே. 15

அகவல்.

நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும்,

மௌன வாயும், வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்

தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானய்
முக்தி நிலைக்கு மூலவித் தாவான்
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்

ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே. 16

வெண்பா.

முறையே நடப்பாய் முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல் - கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை. 17

கலித்துறை

துணையே! எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவ னே!என்றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளத்தி லார முதே! என தற்புதமே!
இணையே துனக்குரைப்பேன் கடைவானில் எழுஞ்சுடரே! 18

விருத்தம்

சுடரே போற்றி! கணத்தேவர்
      துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்.
      எண்ணாயிரங்கால் முறையிட்டேன்,
படர்வான் வெளியிற் பலகோடி
      கோடி கோடிப் பலகோடி
இடறா தோடும் அண்டங்கள்
      இசைத்தாய், வாழி இறையவனே! 19

அகவல்

இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ? பரம்பொரு ளேயோ?
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்

தேவ தேவா! சிவனே கண்ணா!
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,
நோவு வேண்டேன் நூற்றாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்,

உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்,
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 20

வெண்பா

கடமைதா னேது? கரிமுகனே! வையத்
திடம்நீ யருள்செய்தாய், எங்கள் - உடைமைகளும்
இன்பங் களுமெல்லாபம் ஈந்தாய் நீ யாங்களுனக் (கு)
என்புரிவோம் கைம்மா றியம்பு? 21

கலித்துறை

இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும், எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவர்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே 22

விருத்தம்

மேன்மைப் படுவாய்! மனமே! கேள்
      விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
      பயத்தால் ஏதும் பயனில்லை,
யான்முன் உரைத்தேன் கோடிமுறை
      இன்னுங் கோடி முறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
      அருளுண்டு அச்சம் இல்லையே. 23

அகவல்

அச்ச மில்லை அமுங்குத லில்லை,
நடுங்குதலில்லை நாணுத லில்லை
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்,
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்

கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்,
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்,
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்,
வான முண்டு மாரி யுண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்

தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே,
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்

என்றுமிங் குளவாம்! சலித்திடாய், ஏழை
நெஞ்சே! வாழி! நேர்மை யுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. 24

வெண்பா

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே! இம்மூன்றும் செய். 25

கலித்துறை

செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெல்லாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில்புரி நெஞ்சே! கணாதிபன் பக்திகொண்டே! 26

விருத்தம்

பக்தி யுடையார் காரியத்திற்
      பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
      மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
      சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
விந்தைக் கிறைவா! கணநாதா!
      மேன்மைத் தொழிலிற் பணியெனையே! 27

அகவல்

எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்?
யாவும் நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதிற் சிவநிலை பெறலாம்,
பொங்குதல் போக்கிற் பொறையெனக் கீவாய்

மங்கள குணபதி, மணக்குள கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்,
அகல்விழி உமையாள் ஆசைமகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி

ஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்.

காத்தருள் புரிக கற்பக விநாயகா!
காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம்
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே!

அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி! 28

வெண்பா

போற்றி! கலி யாணிபுதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத் - தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு. 29

கலித்துறை

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே!
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்!
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்
தெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. 30

விருத்தம்

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
      செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
      தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள் புகழ்சேர் வாணியுமென்
            னுள்ளே நின்று தீங் கவிதை
பெய்வாள்! சக்தி துணைபுரிவாள்
பிள்ளாய்! நின்னைப் பேசிடிலே. 31

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்.
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள்,
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,

இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந்த் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க', என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே
இந்நாள் இப்பொழுது தெனக்கிவ் வரத்தினை

அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே. 32

வெண்பா

உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்,
மனக்கேதம் யாவினையும் மாற்றி- (எனக்கே நீ)
நீண்டபுகழ் வாணாள் நிறைச் செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33

கலித்துறை

விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத் திலேடிரு மாதுடன் பள்ளிகொண் டான் மருகா!
வரங்கள் பொழியும் முகிலே, என்னுளத்து வாழ்பவனே! 34

விருத்தம்

வாழ்க புதுவை மணக்குளத்து
      வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
      அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
      தொலையா (இன்பம் விளைந்திடுக!)
வீழ்க கலியின் வலியெல்லாம்
      கிருத யுகந்தான் மேவுகவே. 35

அகவல்

மேவி மேவித் துயரில் வீழ்வாய்.
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்.
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல்,
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்

அபயமிங் களித்தேன்.... நெஞ்(சே)
நினக்குநான் உரைத்தன நிலை நிறுத்தி(டவே)
தீயிடைங் குதிப்பேன் கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்.
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்

மூட நெஞ்சே முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன, இன்னும் மொழிவேன்,
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே,
எது நிகழினும் நமக்கென்? என்றிரு,
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்

நமக்கேன் பொறுப்பு? 'நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை, நானெனும் எண்ணமே வெறும்பொய்'
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன்பதம்
இனியெப் பொழுதும் உரைத்திடேன், இதை நீ
மறவாதிருப்பாய், மடமை நெஞ்சே!

கவலைப் படுதலே கருநரகு அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி,
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. 36

வெண்பா.

செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு. 37

கலித்துறை.

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதென்றாம்.
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும், சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. 38

விருத்தம்

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
      முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
      உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
      பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
      கொணர்வேன், தெய்வ விதியிஃதே. 39

அகவல்

விதியே வாழி! விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!

இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி!
நல்ல குணங்களை நம்மிடை யமரர்

பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன், வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே! 40

-----------

2. முருகன் பாட்டு

ராகம் -நாட்டைக் குறிஞ்சி தாளம் - ஆதி

பல்லவி

முருகா! முருகா! முருகா!

சரணங்கள்

வருவாய் மயில் மீதினிலே
      வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
      தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலரிங் குளரே,
      அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
      முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

சுருதிப் பொருளே, வருக!
      துணிவே, கனலே, வருக!
சுருதிக் கருதிக் கவலைப் படுவார்
      கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)

அமரா வதிவாழ் வுறவே
      அருள்வாய்! சரணம்! சரணம்!
குமரா பிணியா வையுமே சிதறக்
      குமுறும் சுடர்வே லவனே சரணம்! (முருகா)

அறிவா கியகோ யிலிலே
      அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
      புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா)

குருவே! பரமன் மகனே!
      குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
      சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)

3. வேலன் பாட்டு

ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை
      வேலவா! - அங்கோ
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
      யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
      வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை
      தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
      பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
      கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
      வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக்
      கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
      கடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப்
      புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
      செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
      குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி
      துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
      மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
      மணங்கொண்ட வேலவா!

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
      மாகுதே, - கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
      மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
      யாவையும் © இங்கு
நீங்கி அடியரை நித்தமுங்
      காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி யவுணரின்
      கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித் தண்டங் குலுஙக
      நகைத்திடுஞ் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு
      தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன
      லே, வடி வேலவா!

4. கிளி விடு தூது

பல்லவி

சொல்ல வல்லாயோ? - கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி

வல்ல வேல்முரு கன்தனை -இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)

சரணங்கள்

தில்லை யம்பலத்தே - நடனம்
      செய்யும் அமரர்பிரான் -அவன்
செல்வத் திருமகனை - இங்கு வந்து
      சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)

அல்லிக் குளத்தருகே - ஒருநாள்
      அந்திப் பொழுதினிலே - அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை
      முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)

பாலை வனத்திடையே - தனைக் கைப்
      பற்றி நடக்கையிலே - தன் கை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
      விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)

5. முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி
      வேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த
நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை
      நீலி பராசக்தி தண்ணருட் - கரை
ஓரத்திலே புணை கூடுதே! - கந்தன்
      ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை
வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்
      வானவர் துன்பத்தைச் சாடுவான்.

வேடர் கனியை விரும்பியே- தவ
      வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி
      நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட - இருட்
      பார மலைகளைச் சீறுவான்-மறை
யேடு தரித்த முதல்வனும் - குரு
      வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.

தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்
      தீவில சுரனை மாய்த்திட்டான், - மக்கள்
யாவருக் குந்தலை யாயினான், - மறை
      அர்த்த முணர்ந்துநல் வாயினன், - தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான், - இந்தப்
      பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான், - நித்தம்
      ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.

தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
      சேவகத் தின்புகழ் காட்டினார், - ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், - நின்றன்
      மேன்மையி னாலறம் நாட்டினார், - ஜய!
நீவள ருங்குரு வெற்பிலே - வந்து
      நின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம்
ஈவள் பராசக்தி யன்னை தான் - உங்கள்
      இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)

6. எமக்கு வேலை

தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.

7. வள்ளிப்பாட்டு - 1

பல்லவி

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!

சரணங்கள்

(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
            யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
      யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
      பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)

வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
      விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
      குறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
      பின்ன மறச் செல்லவிட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்
      சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)

வட்டங்க ளிட்டுங் குளமக லாத
      மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
      மேனி தனைவிட லின்றி - அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
      இரவியைப் போன்ற முகத்தாய்! - முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
      இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)

8. வள்ளிப் பாட்டு - 2

ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி

பல்லவி

உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)

சரணம்

எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! - நிலவினில்
நினமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)

9. இறைவா! இறைவா!

பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
      சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
      மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
      முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள
      பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

10. போற்றி

அகவல்

போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!
கனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும்
கலந்தாற் போலநீ, அனைத்திலும் கலந்தாய்,
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி!

அன்னை போற்றி! அமுதமே போற்றி!
புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
நானெனும் பொருளாய் நானையே பெருக்கித்

தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,

செய்கையாய் ஊக்கமாய், சித்தமாய் அறிவாய்
நின்றிடும் தாயே, நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி!

சக்தி, போற்றி! தாயே, போற்றி!
முக்தி, போற்றி! மோனமே, போற்றி!
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!

11. சிவசக்தி

இயற்கை யென்றுரைப்பார் - சிலர்
      இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
      தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்,
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
      வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே? - சிவ
      நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.

அன்புறு சோதியென்பார் - சிலர்
      ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்,
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
      எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்,
புன்பலி கொண்டுவந்தோம் - அருள்
      பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி - எங்கள்
      வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.

உண்மையில் அமுதாவாய் - புண்கள்
      ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்,
வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு
      வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்,
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்
      ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே - எம்மை
      ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.

தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு
      சேர்த்தனம், நினக்கது சோமரசம்,
ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
      ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்,
களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
      களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்,
குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
      குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.

அச்சமும் துயரும் என்றே - இரண்டு
      அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,
துச்சமிங் கிவர்படைகள் - பல
      தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
      இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
      பெருநகர் உடலெனும் பெயரினதாம்.

கோடிமண் டபந்திகழும் - திறற்
      கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
நாடிநின் றிடர்புரிவார் - உயிர்
      நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்,
சாடுபல் குண்டுகளால் - ஒளி
      சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்
      பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.

நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்
      நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே,
பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
      பொற்புடை மாதரும் மதலையரும்,
அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
      ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே - அன்னை
      இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.

எம்முயி ராசைகளும் - எங்கள்
      இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன்
      சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் - திரு
      முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,
அம்மைநற் சிவசக்தி - எமை
      அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.

12. காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
      காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
      துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
      கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
      கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
      பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
      முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
      காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
      தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
      பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
      கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
      காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
      பாலித்திட வேணும்.

13 நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை செய்தே - அதை
      நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
      சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
      மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
      சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
      வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
      நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
      சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
      அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

14. மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
      மூச்சை நிறுத்திவிடு,
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
      சிந்தனை மாய்த்துவிடு,
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
      ஊனைச் சிதைத்துவிடு,
ஏகத் திருந்துலகம் - இங்குள்ள
      யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
      பாரத்தைப் போக்கிவிடு,
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
      செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே - நெல்லா மென
      எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
      இயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
      ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்மா! பக்திக்
      கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
      வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
      மேவி யிருப்பவளே!

15. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,
      நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
      தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
      பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
      நசித்திட வேண்டும் அன்னாய்!

16. பூலோக குமாரி

பல்லவி

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி!

அனுபல்லவி

ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே
கால பய குடாரி காம வாரி, கன லதா ரூப கர்வ திமிராரே.

சரணம்

பாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேக்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி.

17. மஹா சக்தி வெண்பா

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு.

18. ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
      நிறைந்த சுடர்மணிப் பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
      பார்வைக்கு நேர் பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
      வையக மாந்த ரெல்லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி
      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
      நலத்தை நமக்கிழைப் பாள்,
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
      அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
      சொல்லு மவர் தமையே!
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
      நாமின்று நம்பி விட்டோம்
கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக்
      கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
      அச்சமில் லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
      போற்றி உனக்கிசைத் தோம்,
அன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை
      அத்தனையுங் களைந்தோம்,
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
      மே தொழில் வேறில்லை, காண்,
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
      ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
      ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
      விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
      இரா தென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
      வேல், சக்தி வேல், சக்தி வேல்!

19. பராசக்தி

கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்,
      காவி யம்பல நீண்டன கட்டென்பார்,
விதவி தப்படு மக்களின் சித்திரம்
      மேவி நாடகச் செய்யுளை வேவென்பார்,
இதயமோ எனிற் காலையும் மாலையும்
      எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேண்டில தன்னை பராசக்தி
      இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
      நையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே,
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
      கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்,
      பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
      ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
      நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
      பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y
முட்டும் அன்புக் கனலொடு வாணியை
      முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
      கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.

மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
      வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்
      ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்
      ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
"மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!
      வாழ்க தாய்!" என்று பாடுமென் வாணியே.

சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
      சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
      அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
      கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
      பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!

20. சக்திக் கூத்து

ராகம் - பியாக்

பல்லவி

தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? - சிவ
சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)

புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன்
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)

21. சக்தி

துன்ப மங்லாத நிலையே சக்தி,
      தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி,
      ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
      எண்ணத் திருக்கும் எரியே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
      முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
      சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
      தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி,
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
      பாட்டினில் வந்த களியே சக்தி,
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
      சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
      மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
      சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
      விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
      உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.

22. வையம் முழுதும்

கண்ணிகள்

வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்,
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்,
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே.

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்,
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே.

உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம்,
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே.

சித்தத்தி லே நின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம்,
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.

23. சக்தி விளக்கம்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி,
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று.

24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்

கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சக்தி வழியதனைக் காணும் - கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்திதிருப் பாடலினை வேட்கும்.

வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி புகழினையது முழங்கும் - வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்.

சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச்
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ
சக்தி தாக்கே எமது நாக்கு.

மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாதலற்ற வழியினை தேறும்.

கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுடன் என்றும் உறவாடும்.

தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும்.

நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத்
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது
சாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ
சக்தி தனக்கே எமது வயிறு - அது
சக்தி பெற உடலினைக் காக்கும்.

இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை
சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.

கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாடியெழு கடலையுந் தாவும் - கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்
சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
சாரும் நல்ல உறுதங்யும் சீரும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி யென்று குதித் தாடும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில்
சாவுபெறும் தீவினையும் ஊழும்.

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத்
தான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்
சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்
சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு
சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும்.

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்திபரி மளமிங்கு வீசும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்.

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தியுறை விடங்களை நாடும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்தியொளி நித்தமுநின் றிலகும்.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும்.

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி
தந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தாமதமும் ஆணவமும் தீரும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னையவள் கோயிலென்று காணும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.

சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
சக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ
சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.
--------------

25. சக்தி திருப்புகழ்

சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,
சக்திசக்தி சக்தீ என்பார் - சாகார் என்றே நின்றோது.

சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்திசக்தி என்றீ ராகில் - சாகா உண்மை சேர்ந்தீரே!

சக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் வெற்றி - தானே நேரும் கண்டீரே!

சக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை நேராகும்,
சக்திசக்தி என்றால் அஃது -தானே முத்தி வேராகும்.

சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?
சக்திசக்தி சக்தீ யென்றே - தாளங்கொட்டிப் பாடோமோ?

சக்திசக்தி என்றால் துன்பம் - தானே தீரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் இன்பம் - தானே சேரும் கண்டீரே!

சக்திசக்தி என்றால் செல்வம் - தானே ஊறும் கண்டீரோ?
சக்திசக்தி என்றால் கல்வி - தானே தேறும் கண்டீரோ?

சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!

சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,
சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.
------------
26. சிவசக்தி புகழ்

ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,
சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.

ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு.
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.

ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.
சக்திபுக ழாமமுதை அள்ளு - மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு.
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தன்னமுத மாரிநித்தம் பெய்கை.

ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு,
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல் லமதனைக் கேட்டு.

ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு.
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு,
சக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.

ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு,
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,
சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!

27. பேதை நெஞ்சே

இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
      எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை,
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோமில்லை,
      முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை,
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
      வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங்கில்லை, நாளும்
      பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
      நினைத்தப் பயன் காண்பதவள் செய்கை யன்றோ?
மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?
      மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி, வீரர் தேவி
      இமையவருந் தொழுந்தேவி, எல்லைத்தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி
      மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்,
      சங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி
      நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
      பசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,
      உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,
      சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
கல்வியிலே மதியினை நீ தொடுக்க னொன் றில்லை,
      கருணையினாaல் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,
      துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
      நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!

பாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்!
      பயனின்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,
      கேடில்லை, தெய்வமுண்டு வெற்றியுண்டு,
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,
      வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,
நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,
      நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!

28. மஹாசக்தி

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்,
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்,
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

29. நவராத்திரிப் பாட்டு
(உஜ்ஜயினி)

உஜ்ஜயினீ நித்ய கல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமாஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

30. காளிப்பாட்டு

யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

31. காளி ஸ்தோத்திரம்

யாது மாகி நின்றய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!

கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.

என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைகொ ணாதாம்.
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே!

--------

32. யோக சக்தி

வரங் கேட்டல்

விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
      வீரை சக்தி நினதருளே - என்றன்
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
      கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்
      பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி
      வில்லா தகிலம் அளிப்பாயோ?

நீயே சரணமென்று கூவி - என்றன்
      நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
      தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு
வாயே என்றுபணிந் தேத்திப் - பல
      வாறா நினது புகழ்பாடி - வாய்
ஓயே னாவதுண ராயோ? - நின
      துண்மை தவறுவதோ அழகோ?

காளீ வலியசா முண்டி - ஓங்
      காரத் தலைவியென் னிராணி - பல
நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்
      நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
      தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
      நீலியென் னியல்பறி யாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று - பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
      நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
      மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
      கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி - உடற்
      சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
      மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
      நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
      மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
      யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
      பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
      நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
      பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
      கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
      போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
      விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
      சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
      கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
      நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
      தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
      முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
      அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
      பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
      உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
      வாழி! நின்ன தருள் வாழி!

ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!
-------------

33. மஹாசக்தி பஞ்சகம்

கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
      காளி நீ காத்தருள் செய்யே,
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
      மாரவெம் பேயினை அஞ்சேன்,
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
      யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,
      தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
      யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
      மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்
      காலுமே அமைதியி லிருப்பேன்,
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
      தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
      நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
      மயங்கினே அவையினி மதியேன்,
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
      சிந்தையிற் குலவிடு திறத்தாள்,
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
      விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே
      அச்சமுந் தொலைந்தது, சினமும்
பொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்
      போயின உறுதிநான் கண்டேன்.
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
      மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
      துணையெனத் தொடர்ந்து கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்
      தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,
சிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்
      சித்தமும் தெளிவுறச் செய்தாள்,
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்
      பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
      அநந்தமா வாழ்க யிங்கவளே!
-------------

34. மஹா சக்தி வாழ்த்து

விண்டு ரைக்க அறிய அரியதாய்
      விரிந்த வான் வெளியென - நின்றனை,
அண்ட கோடிகள்வானில் அமைத்தனை,
      அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,
மண்ட லத்தை அணுவணு வாக்கினால்,
      வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
      கோலமே! நினைக் காளியென் றேத்துவேன்.

நாடு காக்கும் அரசன் தனையந்த
      நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
      பண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்,
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
      கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
      நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே!

பரிதியென்னும் பொருளிடை யேய்ந்தனை,
      பரவும்வெய்ய கதிரெனக் காய்ந்தனை,
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
      காலு மின்னென வந்துயிர் கொல்லுவை,
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,
      சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
      வெல்க காளி யெனதம்மை வெல்கவே.

வாயு வாகி வெளியை அளந்தனை,
      வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை,
      செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
      பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை,
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
      தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
      நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை
இதலத்தின் மீது மலையும் நதிகளும்
      சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
      கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை!
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே!
      போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!

சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
      செய்த கர்மபயனெனப் பல்கினை,
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
      தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
      சூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை
      உள்ளமென்னும் கடலில் அமைந்தனை.
----------------

35. ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

36. காளிக்குச் சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்,
வந்தனம், அடி பேரருள் அன்னாய்,
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!

சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!

37. ஹே காளீ! (காளி தருவாள்)

எண்ணி லாத பொருட்குவை தானும்,
      ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
      வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்,
      தருவள் இன்றென தன்னை யென் காளி,
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
      வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
      தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
      மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
      வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,
      நான்வி ரும்பிய காளி தருவாள்.

38. மஹா காளியின் புகழ்

காவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இஃதெலா மவள்புரியும் மாயை - அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை.

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் - அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
அறிவு தான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று
நேர்மைவேதம் சொல்லும் வழியிது.
------------

39. வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
      எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
      வேண்டி னேனுக் கருளினன் காளி,
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
      சாரு மானுட வாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
      பாரில் வெற்றி எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
      எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
      காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
      வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
      வெல்க காளி பதங்களென் பார்க்கே.
-------------

40. முத்துமாரி

உலகத்து நாயகியே! - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து
மாரியம்மா,எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா. எங்கள் முத்து மாரி!
--

41. தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.

எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.

நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
----------

42. கோமதி மஹிமை

தாருக வனத்தினிலே - சிவன்
      சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் - பர
      சிவன்பு கழமுதினை அருந்திடுவார்,
பேருயர் முனிவர் முன்னே - கல்விப்
      பெருங் கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்
      சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்.

வாழிய, முனிவர்களே! - புகழ்
      வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், - இந்த
      உலக மெலாமுருக் கொண்டபிரான்.
ஏழிரு புவனத்திலும் - என்றும்
      இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், - ஒளி
      யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான்.

தேவர்க் கெலாந்தேவன். - உயர்
      சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் - அந்தக்
      கண்ணுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவர்கள் - பல
      ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான். - அந்த
      வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.

கேளீர், முனிவர்களே! இந்தக்
      கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
      வேதங்க ளாயிர முறைபடித்தால்,
மூளுநற் புண்ணியந்தான் - வந்து
      மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்,
நாளுநற் செல்வங்கள் - பல
      நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்!

இக்கதை உரைத்திடுவேன், - உளம்
      இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் - இங்கு
      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் - வளர்
      தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? - புவி
      எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரானறிவான், - மற்று
      நானறி யேன்பிற நரரறியார்.
தொக்க பேரண்டங்கள் - கொண்ட
      தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ஒளி
      தருகின்ற வானமோர் கடல்போலாம் ,
அக்கட லதனுக்கே - எங்கும்
      அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.

இக்கட லதனக்கே - அங்கங்
      கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள், - திசைத்
      தூவெளி யதனிடை விரைந்தோடும்,
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
      வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்!
மெய்க்கலை முனிவர்களே! - இதன்
      மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்!

எல்லை யுண்டோ இலையோ? - இங்கு
      யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லிமொர் வரம்பிட்டால் - அதை
. . . . . .
(இது முற்றுப் பெறவில்லை)
-----

43. சாகா வரம்

பல்லவி

சாகவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!

சரணங்கள்

ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)

வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)

நித்யா, நிர்மலா, ராமா
நிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா)

44. கோவிந்தன் பாட்டு

கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு

நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும், மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.

எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான

வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ?

என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு

வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா
எனக்கமுதம் புகட்டு வாயே.

45. கண்ணனை வேண்டுதல்

வேத வானில் விளங்கி அறஞ்செய்மின்
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்
தீத கற்றுமின் என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

உண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.

எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.

வீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்
பார தர்செய் தவத்தின் பயனெனும்
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ.

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.

ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே,
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.

ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்
கொற்றவா! நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.

நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.
----------

46. வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

உருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் - கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே - கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்)
----------

47. கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே - நீ

காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே - நீ
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே - நீ

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ

வேறு
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே!
----------

48. நந்த லாலா

ராகம் - யதுகுல காம்போதி தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!
----

49. கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - இந்தக்
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ண முடையான் - மணி
வண்ண முடையான் - உயிர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
புண்ணை யொழிப்பீர் - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
கண்ணை விழிப்பீர் - இனி
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)

அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான் - சுரர்
ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
மிக்க திரளாய் - சுரர்,
இக்கணந் தன்னில் - இங்கு
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் - உயிர்
கக்கி முடித்தார் - கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)

சங்கரன் வந்தான், - இங்கு
மங்கல மென்றான் - நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,
பங்க மொன் றில்லை - ஒளி
மங்குவதில்லை, - இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
கங்கையும் வந்தாள் - கலை
மங்கையும் வந்தாள், - இன்பக்
காளி பராசக்தி அன்புடனெய்தினள்,
செங்கம லத்தாள் - எழில்
பொங்கு முகத்தாள் - திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)
----------

50. கண்ணன் திருவடி

கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே

தருமே நிதியும், பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை, பொங்கும் நலமே

நலமே நாடிற் புலவீர் பாடீர்,
நிலமா மகளின், தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே

தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர், புவியீர் மாலும்
சிவனும் வானோர், எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே.
-------------

51 வேய்ங்குழல்

ராகம் - ஹிந்துஸ்தான் தோடி
தாளம் - ஏகதாளம்

எங்கிருந்து வருகு வதோ? - ஒலி
யாவர் செய்கு வதோ? - அடி தோழி!

குன்றி னின்றும் வருகுவதோ? - மரக்
      கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
      மதி மருண்டிடச் செய்குதடி! - இஃது, (எங்கிருந்து)

அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
      யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
      எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)

காட்டி னின்றும் வருகுவதோ? - நிலாக்
      காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
      நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)

பறவை யேதுமொன் றுள்ளதுவோ? - இங்ஙன்
      பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினின்றுங் கின்னர ராதியர்
      வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)

கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
      காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
      பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
-----------

52. கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
      காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
      வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
      வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
      விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
      நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
      பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
      மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
      சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
-----------

53. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)
----------

54. மனப்பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்
பீடத்தி லேறிக் கொண்டான்.

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
      கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி
மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி
      ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
      மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து
      வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
      விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
      எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்
      கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்
      உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)
----------

55. கண்ணம்மாவின் எழில்

ராகம் - செஞ்சுருட்டி தாளம் - ரூபகம்

பல்லவி

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்,
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று,
மதுர வாய் அமிர்தம், இத ழமிர்தம்,
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய வரம்பை, சதுர் அயிராணி. (எங்கள்)

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்,
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்)

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்,
தாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்!
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்)
----------

56. திருக்காதல்

திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்
வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்
மையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது
தேனே! என்திரு கண்ணே - எனையுகந்து
தானே! வருந் திருப் - பெண்ணே
----------

57. திருவேட்கை

ராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம்

மலரின் மேவு திருவே! - உன்மேல்
      மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
      நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் - தெய்வக்
      களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
      இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
      காத லாகி நின்றேன்.
குமரி நினை இங்கே - பெற்றோர்
      கோடி யின்ப முற்றார்.
அமரர் போல வாழ்வேன் - என்மேல்
      அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத - நின்மேல்
      இசைகள் பாடி வாழ்வேன்.

வாணி தன்னை என்றும் - நினது
      வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? - என்னை
      நன்க றிந்தி லாயோ?
பேணி வையமெல்லாம் - நன்மை
      பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
      பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
      பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள்
      மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
      என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
      நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
      செம்மை யேரி வாழ்வேன்,
இல்லை என்ற கொடுமை - உலகில்
      இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் - காட்டி,
      மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
      என்றும் வாழ வைப்பாய்.
------------

58 திருமகள் துதி

ராகம் - சக்ரவாகம் தாளம் - திஸ்ர ஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
      நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே
      பெருமை யுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்!
      செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வ ரென்றே
      உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
      சுடர் மணியே! திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
      மேவிடுவாய், திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ
      உலக மிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்
      புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
      மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ
      மணிக்குள முள்ள சோலைகளும்;
அன்னம் நறுநெய் பாலும்
      அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
      நிலைத்திருப்பேன், திருவே!

ஆடுகளும் மாடுகளும்
      அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
      விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
      எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
      மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடுமணிச் செல்வ மெல்லாம்
      நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
      பெருங்களியே, திருவே!
--------------

59. திருமகளைச் சரண்புகுதல்

மாதவன் சக்தியினைச் - செய்ய
      மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
      போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
      வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
      மாமக ளடியிணை சரண்புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
      கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்
      முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர் - பயன்
      எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய
      மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
      பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
      இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
      நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் - செய்ய
      மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே - அன்பு
      நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
      தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
      வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
      பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் - நறும்
      பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
      காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் - மன்னர்
      முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
      பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

மண்ணினுட் கனிகளிலும் - மலை
      வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் - உயர்
      புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
      பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
      நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும் - பல
      விநயங்கள் அறிந்தவர் கடையிலும்,
நற்றவ நடையினிலும் - நல்ல
      நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
      உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
      கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.
----------

60. ராதைப் பாட்டு

ராகம் - கமாஸ் தாளம் - ஆதி

பல்லவி

தேகி முதம் தேகி ஸ்ரீராதே, ராதே!

சரணங்கள்

ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!
ராஜ்ஸ்ரீ மண்டல ரத்ந, ராதே, ராதே!
போக ரதி கோடி துல்யே ராதே, ராதே! ஜயஜய (தேகி)

பூதேவி தப; பல ராதே, ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்தியா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதிபரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி)

தமிழ்க்கண்ணிகள்

காதலெனுந் தீவினிலே, ராதே ராதே! அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி)

காதலெனுஞ் சோலையிலே ராதே ராதே! நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி)

மாதரசே! செல்வப் பெண்ணே, ராதே, ராதே! - உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி)
-------------

61. கலைமகளை வேண்டுதல்

நொண்டிச் சிந்து

எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
      இன்னுயிரே! என்றன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன் - கடல்
      திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
      காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
      புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

மாதமொர் நான்காநீர் - அன்பு
      வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
      பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும் என்றன்
      நாவினிலே பொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
      விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

கண்மணி போன்றவரே! இங்குக்
      காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
      பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
      வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! - இனி
      அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

தானெனும் பேய்கெடவே - பல
      சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே - நல
      வாய்மையி லேமதி நிலைத்திடவே
தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
      திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
      ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
      தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே - உம்மை
      மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் - பொறை
      சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; - இனி
      மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!
--------------

62. வெள்ளைத் தாமரை

ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
      வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
      கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
      ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
      கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
      மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
      கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
      குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
      இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
      வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
      வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
      வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
      தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
      தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
      உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
      செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
      கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
      சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
      வாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
      வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
      சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
      நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
      தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
      கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
      உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
      செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
      சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
      கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
      இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
      பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
      நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
      ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
      வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)
-------------

63. நவராத்திரிப் பாட்டு

(மாதா பராசக்தி)

பராசக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே !
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
-------------

64. மூன்று காதல்

முதலாவது சரஸ்வதி காதல்

ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்

பிள்ளைப் பிராயத்திலே - அவள்
      பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே - மதி
      பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் - அவள்
      வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் - கண்டேன்
      வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!

ஆடிவரு கையிலே - அவள்
      அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் - அதில்
      இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் - பல
      ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
      கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!

ஆற்றங் கரைதனிலே - தனி
      யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
      கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
      என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
போற்றிய போதினிலே - இளம்
      புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
      தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் - பகற்
      பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் - பிற
      வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
      பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா!

இரண்டாவது - லக்ஷ்மி காதல்

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்

இந்த நிலையினிலே - அங்கொர்
      இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் - அவள்
      சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
      செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
அந்தத் தின முதலா - நெஞ்சம்
      ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!

புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
      போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
      மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
      என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
சின்னமும் பின்னமுமா - மனஞ்
      சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா!

காட்டு வழிகளிலே - மலைக்
      காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
நாட்டுப் புறங்களிலே நகர்
      நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே - சில
      வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் - கண்ட
      விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா!

மூன்றாவது - காளி காதல்

ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்

பின்னொர் இராவினிலே - கரும்
      பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே - களி
      கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
      ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
      யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல
      தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே - இவை
      அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
      வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
      தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
----------

65. ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன் - அவனிரு
      காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
      கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
      சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
      வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

வெற்றி வடிவேலன் - அவனுடை
      வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
      துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
      தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
      புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
      பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
      வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
      சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
      திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
------------

66. விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை
காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.

வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.

சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்.
------------

67. ஜயம் உண்டு

ராகம் - காமாஸ் தாளம் - ஆதி

அனுபல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே ! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே,
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி
நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்.
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே,
தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
------------

68. ஆரிய தரிசனம்

ஓர் கனவு

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி

கனவென்ன கனவே - என்றன்
கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)

கானகங் கண்டேன் - அடர்
கானகங் கண்டேன் - உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)

பொற்றிருக் குன்றம் - அங்கொர்
பொற்றிருக் குன்றம் - அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)

புத்த தரிசனம்

குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

பொன்மரத் தின்கீழ் - அந்தப்
பொன்மரத் தின்கீழ் - வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

புத்த பகவன் - எங்கள்
புத்த பகவன் - அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)

காந்தியைப் பார்த்தேன் - அவன்
காந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)

ஈதுநல் விந்தை! - என்னே!
ஈதுநல் விந்தை! - புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)

பாய்ந்ததங் கொளியே; - பின்னும்
பாய்ந்ததங் கொளியே; - அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

குன்றத்தின் மீதே - அந்தக்
குன்றத்தின் மீதே - தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)

தேரின்முன் பாகன் - மணித்
தேரின்முன் பாகன் - அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

ஓமென்ற மொழியும் - அவன்
ஓமென்ற மொழியும் - நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)

அருள் பொங்கும் விழியும் - தெய்வ
அருள் பொங்கும் விழியும் - காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன)

கண்ணனைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் - மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)

சேனைகள் தோன்றும் - வெள்ளச்
சேனைகள் தோன்றும் - பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)

கண்ணன்நற் றேரில் - நீலக்
கண்ணன்நற் றேரில் - மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

விசையன்கொ லிவனே! - வ'றல்
விசையன்கொ லிவனே! - நனி
இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)

வீரிய வடிவம்! - என்ன
வீரிய வடிவம்! - இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை)

பெற்றதன் பேறே - செவி
பெற்றதன் பேறே - அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)

"வெற்றியை வேண்டேன்; - ஜய
வெற்றியை வேண்டேன்! - உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)

சுற்றங் கொல்வேனோ? - என்றன்
சுற்றங் கொல்வேனோ? - கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?" (பெற்ற)

மிஞ்சிய அருளால் - மித
மிஞ்சிய அருளால் - அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

இம்மொழி கேட்டான் - கண்ணன்
இம்மொழி கேட்டான் - ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

வில்லினை யெடடா! கையிற்
வில்லினை யெடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை)

வாடி நில்லாதே; - மனம்
வாடி நில்லாதே; - வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)

ஒன்றுள துண்மை - என்றும்
ஒன்றுள துண்மை - அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)

துன்பமு மில்லை - கொடுந்
துன்பமு மில்லை - அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)

படைகளுந் தீண்டா - அதைப்
படைகளுந் தீண்டா - அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)

செய்தலுன் கடனே - அறஞ்
செய்தலுன் கடனே - அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)
-----------

69. சூரிய தரிசனம்

ராகம் - பூபாளம்

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
      தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
      பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
      பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
      கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு
      வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
      நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
      கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
      அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
------------

70. ஞாயிறு வணக்கம்

கடலின்மீது கதிர்களை வீசிக்
      கடுகி வான்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
      பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே
      ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
      சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.

என்ற னுள்ளங் கடலினைப் போலே
      எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
      நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா!
      ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
      வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல் கொண்டனை போலும் மண்மீதே,
      கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
      மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
      தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
      ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.
-----------

71. ஞான பாநு

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.

கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள்.

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்.
--------

72. சோமதேவன் புகழ்

ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!

சரணம்

நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
      வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
      துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்.
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய்
      உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்
      பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)
-------------

73. வெண்ணிலாவே

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
      வெண்ணிலாவே! - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
      வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
      வெண்ணிலாவே! - நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
      வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
      வெண்ணிலாவே! - இந்த
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
      வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
      வெண்ணிலாவே! - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
      வெண்ணிலாவே!

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
      வெண்ணிலாவே! - அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
      வெண்ணிலாவே!
காத லொருத்தி இளைய பிராயத்தள்
      வெண்ணிலாவே! - அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
      வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள்
      வெண்ணிலாவே! - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
      வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
      வெண்ணிலாவே! - நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
      வெண்ணிலாவே!

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
      வெண்ணிலாவே! - நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
      வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
      வெண்ணிலாவே! - அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
      வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
      வெண்ணிலாவே! - இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
      வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
      வெண்ணிலாவே! - நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
      வெண்ணிலாவே!

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
      வெண்ணிலாவே! - நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
      வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
      வெண்ணிலாவே! - நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
      வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
      வெண்ணிலாவே! - நீ
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை
      வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
      வெண்ணிலாவே! - நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
      வெண்ணிலாவே!

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
      வெண்ணிலாவே! - உன்றன்
மேனி யழகு மிகைபடக் காணுது
      வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
      வெண்ணிலாவே! - மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
      வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
      வெண்ணிலாவே! - நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
      வெண்ணிலாவே!
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
      வெண்ணிலாவே! - இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
      வெண்ணிலாவே!
----------

74. தீ வளர்த்திடுவோம்!
யாகப் பாட்டு
ராகம் - புன்னாகவராளி

பல்லவி

தீ வளர்த்திடுவோம்! - பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்

ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
      அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
      ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
      செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
      தீமை யழிப்பவனை - நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை - பல
      சீர்க ளுடையவனைப் - புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
      ஆரியர் நாயகனை - உருத்திரன்
அன்புத் திருமகனை - பெருந்திர
      ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
      கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
      காட்டை யழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
      யாவும் பழகிடவே - புவிமிசை
இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)

நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
      நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
      நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
      ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
      ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
      அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
      யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
      ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
      மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
      வண்ணந் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
      தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
      தேவத் திருமகளிர் - இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
      தேறிடு நல்லிளமை - நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
      முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
      மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)
-----------

75. வேள்வித் தீ

ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்

ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
      ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
      பாயுதே தீ! தீ! இந்நேரம்.

அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
      சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
      வந்ததே தீ! தீ! - அம்மாவோ!

ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
      போந்து விட்டானே! - இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
      சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.

அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
      ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
      வேதமுண்டாமோ! - அம்மாவோ!

ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
      வளருதே தீ! தீ! - இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
      நண்ணி விட்டாளே! - இந்நேரம்

அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
      கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
      பண்பிழந் தோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
      காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
      வாட்டு கின்றானே! - இந்நேரம்.

அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
      மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
      கண்டு கொண்டாரே! - அம்மாவோ!

ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
      வாய்திறந் தானே! - இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
      மகிழ வந்தானே! - இந்நேரம்.

அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
      ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
      தோன்றி விட்டானே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
      ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
      கோயில் கொண்டானே! - இந்நேரம்.

அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
      மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
      பின்னி மாய்வோமே! - அம்மாவோ!

ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
      அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
      நன்மை கண்டோமே! - இந்நேரம்

அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
      பாடுகின்றானே - ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
      பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!

ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
      இரவி வந்தானே! - இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
      மேன்மையுற்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
      அமுது முண்பீரே! - இந்நேரம்
ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
      வேள்வி கொள்வீரே! - இந்நேரம்

ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
      ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
      சேர்த்து விட்டோமே! - இந்நேரம்

ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
      ஓங்கி விட்டானே! - இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
      கை கொடுத்தாரே! - இந்நேரம்

ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
      யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
      சார்ந்து நின்றோமே! - இந்நேரம்

ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
      மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
      வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்
------------

76. கிளிப்பாட்டு

திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே! - மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! - கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே! - அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே! - அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே! நெருங்கித் துயர் வருமோ?
---------

77. யேசு கிறிஸ்து

'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
      எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமாமரியா' மக்த லேநா
      நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
      தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
      நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்புகாண் மரியா மக்த லேநா
      ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
      மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
      போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
      ஆஹ! சாலப் பெருங்கிளி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
      உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
      வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
      பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து,
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
      நொடியி லிஃது பயின்றிட லாகும்.
------------

78. அல்லா

பல்லவி

அல்லா! அல்லா! அல்லா!

சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)

கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
--------------


This webpage was last revised on 16 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).