அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
4: மனிதரும், தேவரும்,
மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.
என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:
ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.
என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.
23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!
28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.
29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?
30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!
31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.
32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!
33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, 'அன்னையே' என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!
34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.
35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!
36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.
37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!
38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.
39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!
40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.
ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.
41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.
42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!
52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.
54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!
55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!
56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.
57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?
ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு
அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து
போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும்,
இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
+'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப்
பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப்
புரந்தனள் என்பது வழக்கு.
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?
ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)
61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!
62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.
63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.
65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!
66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.
68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?
72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!
73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.
75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு; வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.
79: விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
80: கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.
ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.
81: அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!
82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்? (மறவேன் ஒருபோதும்).
83: விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.
அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)
84: உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.
85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).
86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.
87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)
88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.
89: சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
90: வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத் தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?
91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள், பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.
93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.
95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
96: கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.
97: ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் போற்றித் துதிப்பர்.
98: தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?
99: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).
100: குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.