Kalevala - A Finland Epic -part II / verses 11-18
(in tamil script, unicode-utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 11-18



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.



பாடல் 11 - லெம்மின்கைனனின் விவாகம்  *



அடிகள் 1-110 : லெம்மின்கைனன் தீவின் உயர் குலப் பெண்களில் ஒரு மனைவியைப் பெறப் புறப்பட்டுப் போகிறான்.

அடிகள் 111-156 : அந்தத் தீவின் பெண்கள் முதலில் அவனை ஏளனம் செய்கிறார்கள்; பின்னர் நட்பாகப் பழகுகிறார்கள்.

அடிகள் 157-222 : அவன் தேடி வந்த குயிலிக்கி அவனுடைய எண்ணத்துக்கு இணங்கவில்லை; அதனால் அவன் குயிலிக்கியைப் பலவந்தமாக வண்டியில் ஏற்றிக் கடத்திச் செல்கிறான்.

அடிகள் 223-314 : குயிலிக்கி அழுகிறாள்; குறிப்பாக லெம்மின்கைனன் போருக்குச் செல்வதை அவள் விரும்பவில்லை. அதனால் லெம்மின்கைனன் தான் இனிமேல் போருக்குச் செல்வதில்லை என்றும் குயிலிக்கி இனிமேல் கிராமத்துக்கு நடனம் ஆடச் செல்வதில்லை என்றும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொடுக்கிறார்கள்.

அடிகள் 315-402 : லெம்மின்கைனனின் தாய் தனது மருமகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்.



*அஹ்தியைப் பற்றியிஃ தறிந்துசொல் தருணம்
போக்கிரி அவன்நிலை புகன்றிடும் நேரம்
தீவினில் வசித்துத் திகழுமிவ் வஹ்தி
*லெம்பியின் குறும்புடை அம்புவி மைந்தன்
வானுயர் இல்லில் வளர்ந்தவன் அவனே
அன்புமிக் கன்னையின் அருகினில் வளர்ந்தோன்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்.

*தூரநெஞ் சினனவன் மீனயின் றுயர்ந்தான்
ஒருவகை **மீனயின் றுயர்ந்தனன் அஹ்தி   10
மனிதரில் சிறந்தவோர் வல்லவ னானான்
சிவந்தநற் குருதிபோல் திகழ்ந்தவா லிபனாம்
தரமுடன் அமைந்தது தலைஅவ னுக்கே
தீரமும் திறமையும் திகழ்ந்தன துணையாய்;
ஆயினும் சிறுகுறை அவனில் இருந்தது
தனித்தவன் நடத்தையில் தரம்குறைந் திருந்தது:
பூவைய ரோடுதன் பொழுதெலாம் கழிப்பான்
அலைந்திரா முழுவதும் அவன்திரிந் திடுவான்
மங்கையர் தம்மையே மகிழவைத் திடுவான்
குழலியர் தம்முடன் குலவிக் களிப்பான்.   20

தீவக மடந்தையாய்த் திகழ்பவள் *குயிலி
தீவக மடந்தை தீவின் மலரவள்
வானுயர் வீட்டில் வளர்ந்தாள் அவளே
எழிலாய் அழகாய் இனிதாய் வளர்ந்தாள்
தந்தையின் இல்லில் சதாஅமர்ந் திருப்பவள்
அழகுயர் சாய்மணை ஆசனப் பலகையில்.

நெடிதாய் வளர்ந்தவள் நீள்பெரும் சீர்த்தியள்
தூரதே சத்தால் துணைவர்கள் வந்தனர்
மிகமிகப் புகழுடை மெல்லியள் இல்லம்
சிறந்ததோட் டத்துச் சீர்சால் பகுதி.   30

அவளைத் தன்மகற் கருக்கன் கேட்டனன்
அவள்புக வில்லை அருக்கனின் நாடு,
அருக்கனின் அருகே அவள்ஒளி வீசி
கோடையிற் காயக் கொண்டிலள் விருப்பே.

சந்திரன் கேட்டான் தன்மகற் கவளை
சந்திர நாடு தான்புக் கிலளாம்,
சந்திர னருகில் தண்ணொளி வீசி
வானம் சுற்றி வரும்விருப் பிலளே.

தாரகை கேட்டது தன்மகற் கவளை
தாரகை நாடு தான்புக் கிலளாம்,    40
நீண்ட இரவுகள் நேத்திரம் சிமிட்டி
குளிர்வான் இருக்கக் கொண்டிலள் விருப்பே.

*எஸ்த்தோனி யாவிருந் தேகினர் வரன்மார்
*இங்கிரி யாவிருந் தெழுந்தனர் பிறசிலர்
அங்கெலாம் பாவை அவள்புக் கிலளாம்
அவளே அளித்தாள் அதற்கோர் மறுமொழி:
"விரயமா கிறது வீணாய் நும்பொன்
வெள்ளியும் வீணாய் விரைந்தழி கிறது
நாடுஎஸ்த் தோனியா நான்புக மாட்டேன்
போவதே யில்லைநான் போகவே மாட்டேன்   50
எஸ்த்தோனி(ய) நீரில் எழிற்பட கோட்டேன்
தீவினில் பகடையாய் தினந்தொறும் மாறேன்
எஸ்த்தோனி யாமீன் எடுத்துண மாட்டேன்
எஸ்த்தோனி யா**ரசம் எடுத்துநான் குடியேன்.

இங்கிரி யாவும் ஏகநான் மாட்டேன்
அதன்நீர்க் கரைக்கும் அயல்மேல் நிலத்தும்
பசியுள தாங்கு பலதும் குறைவு
மரக்**குச் சியொடு மரங்களும் பஞ்சம்
குடிநீர்ப் பஞ்சம் கோதுமைப் பஞ்சம்
உறுதா னியத்து ரொட்டியும் பஞ்சம்."   60

குறும்பன் லெம்மின் கைனனப் போது
அழகிய தூர நெஞ்சினன் அவன்தான்
செய்தான் முடிவு செய்திடப் பயணம்
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தனித்துவம் வாய்ந்த மணப்பெண் அவளை
அழகிய கூந்தல் அமைந்த பாவையை.

ஆயினும் சொன்னாள் அன்னையோர் தடையே
வயோதிப மாது வந்தெச் சரித்தாள்:
"செல்வஎன் மகனே சென்றிட வேண்டாம்
உன்னிலும் பார்க்க உயர்விடம் நோக்கி   70
அங்கே உன்னை அவர்கள் ஏற்றிடார்
உயரிய தீவின் உறவினர் மத்தியில்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"என்இல் சிறந்ததே இல்லையா யிடினும்
என்னினம் சிறந்ததே இல்லையா யிடினும்
காரியம் என்உடற் கவினால் ஆகும்
நேர்பிற சிறப்பால் நினைத்தது நடக்கும்."

அன்னை தடையாய் இன்னும் நின்றாள்
லெம்மின் கைனன் செய்பய ணத்து    80
தீவில் வாழ்ந்த சிறப்பினத் துக்கு
உயர்வாய் வாழ்ந்த உறுகுடி யினரிடம்:
"ஏளனம் செய்வராங் கிருக்கும் மகளிர்
பாவையர் உன்னைப் பார்த்துச் சிரிப்பர்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அரிவையர் சிரிப்பைநான் அடக்குவேன், ஆமாம்,
நிறுத்துவேன் மகளிர் நிகழ்த்தும் சிரிப்பை
வழங்குவேன் பையனை மார்பினில் சுமக்க
தருவேன் குழந்தையைத் தளிர்க்கர மணைக்க   90
அப்போ தேளனம் அவர்கள் செய்திடார்
இகழ்ச்சியாய் என்னை எதுவுமே சொல்லார்."

இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"அடடா, பேதைநான் ஆகினேன் வாழ்வில்,
தீவின் மகளிரைச் செய்தால் கேவலம்
அவமானம் தூய மகளிர்க் களித்தால்
அதனால் நீயோ அடைவது கலகம்
பெரும்போர் தொடர்வது பிறிதொரு உண்மை
அனைத்துத் தீவின் அருமண வாளரும்
வாளொடு நூறென வந்திடு வார்கள்   100
பேதை மகனே பெரிதுனைத் தாக்குவர்
சுற்றித் தனியாய்ச் சூழ்ந்து வளைப்பர்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தாயினெச் சரிக்கை தனையும் இகழ்ந்தான்
எடுத்தான் சிறந்த எழிற்பொலிப் புரவி
ஏர்க்காற் பூட்டினன் இகல்தெரி புரவி
புறப்பட் டெழுந்து போனான் பயணம்
தீவின் போர்பெறும் திருவூ ரதற்கு
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தீவின் தனித்துவச் செல்வியாம் மகளை.   110

நங்கையர் லெம்மின் கைனனை நகைத்தனர்
மங்கையர் கேலி வலுவாய்ச் செய்தனர்
பாதையில் வினோதமாய்ப் படர்ந்தபோ தினிலே
தோட்டத்து வினோதத் தொடர்பய ணத்திலே,
வண்டியை அதுகவிழ் வரையும் ஓட்டினன்
உருட்டி வாயிலில் உடனதை வீழ்த்தினன்.

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   120
"இதுபோல் கண்டதே இல்லைமுன் னாளில்
இல்லையே கண்டதும் இல்லையே கேட்டதும்
என்னைப் பார்த்தொரு பெண்சிரிப் பதனை
ஏளனம் மகளிர் என்னைச் செய்வதை."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"விரும்புமித் தீவில் வெற்றிடம் உண்டா
இடமெது முண்டா இந்நில மேட்டில்
என்விளை யாட்டை இனிவிளை யாட
நிலமெதும் உண்டா நிகழ்த்துவதற் காடல்   130
தீவக மகளிரைச் செறிகளிப் பூட்ட
கூந்தலார் பெண்களைக் கூடிநன் காட?"

தீவுப் பெண்கள் செப்பினர் இப்படி
கடல்முனைக் கன்னியர் கள்விடை கூறினர்:
"ஆமாம், தீவிலே அகல்வெற் றிடமுள
தீவின் மேட்டிலே திகழிட முளது
உன்விளை யாட்டை உயர்வாய் நிகழ்த்த
ஆடலைச் செய்ய அகல்நில முண்டு
ஆயனுக் கேற்ற அமைவெறும் பூமி
எரித்த காடு இடையனுக் குண்டு    140
தீவுப் பிள்ளைகள் தேகம் மெலிந்தவர்
ஆயினும் கொழுத்தவை அணிபரிக் குட்டிகள்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தொழிலொன் றிடையனாய்த் துணிவுடன் பெற்றான்
மந்தை மேய்த்தலை வளர்பகல் செய்தான்
இரவில் மகளிரின் இனிமையில் களித்தான்
அங்குள பெண்களோ டாடி மகிழ்ந்தான்
**கூந்தலார் பெண்களைக் கூடிநன் காடினான்.

குறும்பன் லெம்மின் கைனனிவ் வாறு
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்    150
அரிவையர் நகைப்புக் கமைத்தான் முடிவு
ஏளனப் பேச்சை இல்லா தொழித்தான்;
அந்த இடத்திலோர் அரிவையும் இல்லை
தூய்மையா னவளும் சொல்லவாங் கில்லை
அவன்தொடாப் பெண்ணென அறுதியிட் டுரைக்க
அவன்அரு கேதுயில் அயராப் பெண்ணென.

எல்லோர் நடுவிலும் இருந்தாள் ஒருகுமர்
தீவின் உயர்ந்த செழுங்குடி மரபாள்
ஏற்கா திருந்தாள் எம்மண மகனையும்
நினையா திருந்தாள் நேரிய கணவனை   160
குயிலிக்கி அழகிய குமரியே அவளாம்
தீவிலே மலர்ந்த செழும்எழில் மலரவள்.

குறும்பன் லெம்மின் கைன னப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
அணிந்து காலணி அழித்தான் நூறு
துடுப்புகள் வலித்துத் தொடர்ந்துநூ றழித்தான்
பெண்ணவள் தேடும் பெரும்வே லையிலே
அக்குயி லிக்கியை அடையுமெ ண்ணத்தில்.

குயிலிக்கி என்னும் கொழுமெழில் மங்கை
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:   170
"எளிய மனிதா எதற்கா யலைகிறாய்?
கரைநிலப் புள்போல் கடிதூர்ந் தலைகிறாய்?
இங்குள பெண்டிரை ஏன்கேட் டலைகிறாய்?
**ஈயநெஞ் சினரை ஏன்விசா ரிக்கிறாய்?
இங்கிதற் கெனக்கு இலையவ காசம்
திரிகைக் கல்லைச் சேர்த்தரைக் கும்வரை
உலக்கையை இடித்து உறத்தேய்க் கும்வரை
உரலை இடித்தணு உருவாக் கும்வரை.
மதியேன் நான்சிறு மதிபடைத் தோரை
சபலம் சிறுமதி தாம்உடை யோரை,   180
உரம்பெறும் தரமுடை உடல்தான் வேண்டும்
உரமும் தரமும் உடையஎன் உடற்கு,
அழகும் எழிலும் அமையுருத் தேவை
எழிலார் அழகுடை எனதுரு வதற்கு,
வடிவுடைக் கவினார் வதனமே தேவை
வடிவும் கவினும் வாய்ந்தஎன் முகத்துக்(கு)."

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அரிதாய் மாதத் தரைக்கூ றழிந்தது
பலநாள் சென்று ஒருநாள் வந்தது
பலமாலை களிலே ஒருமாலை வேளை   190
விளையாட் டினிலே மின்னார் மூழ்கினர்
அழகுறும் அரிவையர் ஆடலில் ஆழ்ந்தனர்
இரகசிய மாக இருந்தவூர்த் தோப்பில்
புல்தரைப் பக்கமாய்ப் புணர்வெளி ஒன்றிலே
எல்லோர்க் கும்**மேல் இருந்தனள் குயிலி(க்கி)
தீவதன் சிறப்புடைச் செறிபுகழ் மலரவள்.

வந்தனன் போக்கிரி மன்னுசெங் கதுப்பினன்
குறும்பன் லெம்மின் கைனன் விரைந்தனன்
தனக்கே உரிய தனிப்பொலிப் புரவியில்
தேர்ந்தே எடுத்த சிறப்புறும் குதிரையில்   200
விளையாட் டயரும் வியன்நில மத்தியில்
அழகிய மாதர் ஆடிய இடத்தில்;
குயிலிக்கி அவளைக் குறுகியே பற்றினன்
ஏற்றினான் பெண்ணை இயைந்ததன் வண்டி
அமர்த்தினன் தனதுதோ லாசனத் தவளை
வண்டியின் அடியில் வைத்தனன் அவளை.
சவுக்கினால் பரியைச் சாடினான் ஓங்கி
சாட்டை சுழற்றிச் சாற்றிநன் கறைந்தான்
அவனது பயணம் அவ்வா றெழுந்தது
புறப்படும் போதே புகன்றனன் இவ்விதம்:   210
"ஒருக்கால்(உம்) வேண்டாம் ஓ,இள மடவீர்!
நடந்த கதையினை நவிலவும் வேண்டாம்
மற்றுநான் இங்கே வந்தது பற்றியும்
செல்வியைக் கடத்திச் சென்றது பற்றியும்.
பகருமிம் மொழிக்குப் பணியா விடிலே
கொடிய சம்பவம் கூடுமுங் களுக்கு
பாடுவேன் போர்க்களம் படரநும் துணைவர்
பாடுவேன் வாளிற் படநும் இளைஞர்
என்றுமே அவர்தம் செய்திகள் கேட்கீர்
வாழ்நாள் என்றுமே மற்றவர் காணீர்   220
பாதையில் அவர்கள் படர்ந்துசெல் வதையும்
வண்டியிற் செல்வதும் வயலிடைக் காணீர்."

மெய்குயி லிக்கி மேல்முறை யிட்டாள்
தீவின் மலரவள் தேம்பி அழுதாள்:
"இங்கிருந் தென்னை ஏகிட விடுவாய்
பிள்ளை சுதந்திரம் பெறவிடு விப்பாய்
திரும்பியே வீடு சென்றிட விடுவாய்
அழுது புலம்பும் அன்னையின் அருகில்,
எனைச்சுதந் திரமாய் ஏக விடாயேல்
வீட்டுக்குச் செல்ல விடாதுபோ னாலோ   230
இன்னும் சோதரர் இருக்கிறார் ஐவர்
எழுவர் மாமனின் மக்கள் இருக்கிறார்
முயலைத் தொடர்ந்து முன்னோடி வருவர்
கன்னியின் தலையைக் காத்திட வருவர்."

அவட்கு விடுதலை அமையா நிலையில்
கண்மடை திறந்து கண்ணீர் பெருக்கினள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"பேதைநான் வீணாய்ப் பிறந்தேன் உலகில்
வீணாய்ப் பிறந்தேன் வீணாய் வளர்ந்தேன்
வாழ்நாள் முழுக்க வாழ்ந்தேன் வீணாய்   240
பெறுமதி யற்ற பிறன்கைப் பட்டேன்
மதிப்பெது மில்லா மனிதனைச் சேர்ந்தேன்
போரிடும் ஒருவன் புறம்வந் தணைந்தேன்
ஓய்விலாப் போர்செயும் ஒருவனைச் சார்ந்தேன்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழில்மிகு தூர நெஞ்சினன் இயம்பினன்:
"கண்ணே, குயிலி(க்கி), கனிவன் புளமே!
எனது சிறிய இனியநற் பழமே!
எதற்கும் துன்பம் இவ்வா றுறாதே
உனைநான் வருத்தேன் ஒருபொழு தேனும்    250
அணைப்பினில் இருப்பாய் அடி,நான் உண்கையில்,
கரங்களில் இருப்பாய் கனி,நான் நடக்கையில்,
அருகினில் இருப்பாய் அயல்நான் நிற்கையில்,
பக்கத் திருப்பாய் படுக்கும் பொழுதே.

எனவே நீயும் எதற்கு வருந்தல்?
நெடுமூச் செறியும் நீள்துயர் எதற்கு?
இதற்கா வருந்தி இடர்நீ படுகிறாய்
இதற்கா நெடுமூச் செறிந்து அழுகிறாய்
பஞ்சம் பசுக்கள், பஞ்சம் ரொட்டி,
எல்லாம் குறைவு என்றே எண்ணமா?    260

எதற்கும் வருந்தல் இப்போ வேண்டாம்
பசுக்களும் என்னிடம் பலப்பல உண்டு
கறக்கும் பசுக்களும் கணக்கிலா துள்ளன
முதலில் சதுப்பு நிலத்து **'மூ ரிக்கி'
அடுத்துக் குன்றில் அலையு(ம்) **'மன் ஸிக்கி'
**'புவோலுக் கா'எரி காட்டின்மூன் றாவது
உண்ணா மலேஅவை உரமாய் உள்ளன
கவனிப் பின்றியே கனசிறப் புற்றன;
மாலையில் கட்டி வைப்பது மில்லை
காலையில் அவிழ்த்துக் கலைப்பது மில்லை   270
அவைக்கு வைக்கோல் அளிப்பது மில்லை
உப்பில் உணவில் பஞ்சமொன் றில்லை.

அல்லது இதற்கா உள்வருந் துகிறாய்?
நெடுமூச் சிதற்கா நீயெறி கின்றாய்?
உயர்உற வினர்எனக் குற்றிலர் என்றா?
எனக்குச் சிறந்தவீ டில்லையே என்றா?

உயருற வினரெனக் குற்றிலர் எனினும்
எனக்குச் சிறந்தவீ டில்லையே எனினும்
என்னிட முளதொரு இகல்மகத் துவவாள்
ஒளிவிடும் அலகொடு ஒருவாள் உண்டு   280
அதுவே எனக்கு அதியுயர் உறவு
அதுவே எனக்கு ஆம்சீர்க் குடும்பம்
அலகைகள் அமைத்து அருளிய வாளது
கடவுளர் தீட்டிக் கைத்தரும் வாளது
எனது உறவினை இவ்வா றுயர்த்தினேன்
என்குடும் பத்தை இயல்சிறப் பாக்கினேன்
கூர்மை மிக்கஅக் கொடுவாள் அதனால்
அலகுமின் எறிக்கும் அந்தவாள் அதனால்."

பேதைப் பெண்ணாள் பெருமூச் செறிந்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:   290
"ஓகோ, அஹ்தி, லெம்பியின் புதல்வா!
ஒருபெண் என்போல் உனக்குவேண் டுமெனின்
துணைவாழ் நாளெலாம் தொடரவேண் டுமெனின்
கோழிஉன் அணைப்பில் கொள்ளவேண் டுமெனின்
அகலா நிரந்தர ஆணையொன் றுரைப்பாய்
போருக்கு இனிமேல் போகேன் என்று
பொன்பெற நேரினும் போகேன் என்று
வெள்ளியின் ஆசையால் விலகேன் என்று."

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   300
"அழியாச் சத்தியம் அளிக்கிறேன் நான்இதோ
போருக்கு இனிமேல் போகவே மாட்டேன்
பொன்தேவைப் படினும் போகவே மாட்டேன்
வெள்ளியை விரும்பியும் விலகவே மாட்டேன்;
நீயொரு சத்தியம் நிகழ்த்துவாய் இப்போ
போகாய் உன்ஊர்ப் புறம்நீ என்று
விருப்புடன் துள்ளி விளையாட் டயர
ஆசையாய் நடனம் ஆடிக் களித்திட."

அப்போ(து) இருவரும் அளித்தனர் சத்தியம்
ஒப்பந்தம் என்றும் உரைத்தனர் நிலைபெற   310
எனைவரும் உணர்ந்திடும் இறைவனின் முன்நிலை
சர்வவல் லோனது தண்முகத் தின்கீழ்
போகேன் அஹ்தி போருக்கு என்று
குயிலிக்கி ஊர்ப்புறம் குறுகேன் என்று.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
ஓங்கி அடித்தான் உறுபரி சவுக்கால்
பொலிப்பரி யதனைப் புடைத்தான் சவுக்கால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தீவின்புற் றிடரே, செலவிடை பெறுகிறேன்,
ஊசிமர வேரே, உயர்தா ரடியே,    320
நற்கோ டையில்நான் நடந்த தடங்களில்
குளிர்கா லத்துயான் உலாவிய இடங்களில்
மேகமூ டிராநட மாடிய விடங்களில்
சீறிய காற்றிலே போயொதுங் கிடங்களில்
இக்கான் கோழியை இனிதுதே டுகையிலே
இந்தவாத் தினைத்துரத் திட்டநே ரத்திலே."

பயணம் தொடர்ந்து பாங்காய் நடந்தது
வீடு கண்ணில் விரைந்து தெரிந்தது
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:   330
"அங்கோர் வசிப்பிடம் அதோ தெரிகிறது
சிறிதாய் வறிதாய்த் தெரிகின் றதது
அந்தக் குடிசை ஆருக் குரியது
உரியது யார்க்கப் பொலிவிலா இல்லம்?"

குறும்பன் லெம்மின் கைனன் அவனே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வசிப்பிடம் பற்றி வருந்தவும் வேண்டாம்
குடிசைக் காய்ப்பெரு மூச்சதும் வேண்டாம்
வேறு வசிப்பிடம் விரைந்துகட் டப்படும்
மிகவும் சிறந்தவை அவைநிறு வப்படும்   340
பலமிகச் சிறந்த பலகை யவற்றால்
சிறப்பு மிகுந்த மரங்கள் அவற்றினால்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
விரைந்து வந்து வீட்டை அடைந்தான்
அருமை அன்னை அருகை அடைந்தான்
மதிப்புடைப் பெற்றவர் வயமருங் கணைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காணவே யிலையுனைக் கனநாள் மகனே,
வெகுநாள் அந்நிய நாட்டில்வே றிருந்தாய்."   350

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அவமா னம்அவ் வரிவையர்க் கமைத்தேன்
பதிலடி தூய பாவையர்க் களித்தேன்
பார்த்தெனை அவர்கள் பழித்ததற் காக
நன்கெனை அவர்கள் நகைத்ததற் காக;
வண்டியில் சிறந்ததோர் வனிதையைக் கொணர்ந்தேன்
அவள்தோ லிருக்கையில் அமரவைத் திட்டேன்
வண்டிப் பீடம் வைத்தேன் அவளை
தூயகம் பளியில் சுற்றி யெடுத்தேன்    360
கோதையர் நகைக்குக் கொடுத்தேன் பதிலடி
ஏந்திழை யாரின் ஏளன உரைக்கு.

அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
என்னுடை அம்மா, எனைவளர்த் தவளே!
எதற்கே கினனோ அதனைப் பெற்றேன்
தேடிய தெதுவோ நாடியஃ துற்றேன்;
சிறந்ததோர் மெத்தையைத் தெரிந்து விரிப்பாய்
தருவாய் மென்மைத் தலையணை யினிதே
சொந்தஎன் நாட்டில் சுகத்துடன் படுக்க
என்னுயிர்க் கினிய இளமைப் பெண்ணுடன்."   370

இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இறைவனே, உனக்கு இயம்பினேன் நன்றி,
கர்த்தனே, நின்புகழ் கனிந்தே இசைத்தேன்,
எனக்கொரு மருமகள் ஈந்ததற் காக
நல்லதீ ஊத நல்லவள் ஒருத்தியை
துணிநெய்யச் சிறந்த துடியிடை ஒருத்தியை
நல்லுடை பின்ன வல்லவள் ஒருத்தியை
துணிமணி தோய்த்துப் பணிசெயு மொருத்தியை
துணிமணி வெளுக்கத் துணைதந் ததற்காய்.   380

நீபெற்ற பேற்றை நினைத்துநீ நன்றிசொல்
நல்லதே பெற்றாய் நல்லதே யடைந்தாய்
நல்லதைக் கர்த்தர் நயந்துதந் ததற்காய்
அருங்கரு ணைக் கடல் அளித்தநன் மைக்கு.
பனித்திண்மப் **பறவை பரிசுத்த மானது
அதனிலும் தூய்மை அரியஉன் துணைவி
நுவல்கடல் அலையும் நுரையே வெண்மை
அதனிலும் வெண்மைநீ அரிதுபெற் றவளாம்
கடலிடை வாத்து கவின்வனப் புடையது
அதனிலும் வனப்புநீ அரிதுகொணர்ந் தவள்   390
உயர்வான் தாரகை ஒளிமய மானது
அதனிலும் ஒளிர்பவள் அரியஉன் மணப்பெண்.

கூடத்தின் தரையைக் கூட்டி **அகற்று
பயன்மிகு பெரிய பலகணி கொணர்வாய்
பொற்சுவ ரெல்லாம் புதிதாய் நிறுத்து
வசிப்பிட மனைத்தையும் மாற்று சிறப்புற
கட்டு கூடங்கள் கடிமனைக் கெதிரே
பூட்டு கூடத்தில் புதிய கதவுகள்
இளம்பெண் ஒருத்தியை இன்றுநீ பெற்றதால்
நேர்எழில் பெண்ணை நீபார்த் ததனால்   400
உன்னிலும் மேலாம் உயர்சிறப் பொருத்தியை
உன்னினத் தோரிலும் உயர்ந்தவள் ஒருத்தியை."



பாடல் 12 - சத்தியம் தவறுதல்  *



அடிகள் 1 - 128 : குயிலிக்கி சத்தியத்தை மறந்து கிராமத்துக்குப் போகிறாள். அதனால் சினமடைந்த லெம்மின்கைனன் அவளை விலக்கிவிட்டு வடபகுதி மங்கையிடம் புறப்படுகிறான்.

அடிகள் 129 - 212 : லெம்மின்கைனனின் தாய் அவன் அங்கே கொல்லப்படலாம் என்று தடுக்கிறாள். தலை வாரிக் கொண்டிருந்த லெம்மின்கைனன் தனக்கு கெடுதி நேர்ந்தால் அந்தச் சீப்பில் இருந்து இரத்தம் பெருகும் என்று உரைக்கிறான்.

அடிகள் 213 - 504 : அவன் புறப்பட்டு வட நாட்டுக்கு வருகிறான். அங்கே மந்திரப் பாடலைப் பாடி எல்லா அறிஞர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான், ஒரேயொரு கொடிய இடையனைத் தவிர.



அதன்பின் அஹ்தி லெம்மின் கைனன்
அவன்தான் அழகிய தூர நாட்டினன்
எல்லாக் காலமும் இனிதே வாழ்ந்தான்
இளமைப் பருவ ஏந்திழை தன்னுடன்;
போருக் கேயவன் போனதும் இல்லை
குயிலிக்கி கிராமம் குறுகவு மில்லை.

போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
அவன்தான் அஹ்தி லெம்மின் கைனன்
மீன்சினைக் கின்றதோர் வியனிட மடைந்தான்  10
மாலையில் வீடு வந்தனன் இல்லை
அடுத்தநாள் இரவும் அவன்இல் வந்திலன்
குயிலிக்கி அதனால் குறுகினள் கிராமம்
அங்குள மகளிரோ டாடிடப் போனாள்.

இந்தச் செய்தியை எவர்கொண் டேகுவர்
இப்புதி னத்தை எவர்போய்ச் சொல்வார்?
அஹ்தியின் சகோதரி அவள்*ஐ னிக்கி
செய்தியை அவளே தெரிந்தெடுத் தேகினள்.
செய்தியைச் சுமந்து சென்றாள் அவளே:
"அன்பே, அஹ்தி, அரியஎன் சோதரா,  20
குயிலிக்கி எழுந்து குறுகினள் கிராமம்
அந்நியர் வாயில்போய் அடைந்தனள் அவளே
சென்றனள் கிராமப் பெண்டிரோ டாட
நறுங்குழ லாருடன் நடமிடச் சென்றாள்."

அஹ்திப் பையன் அவன்நிக ரில்லான்
அவன்தான் குறும்பன் லெம்மின் கைனன்
கோபம் கொண்டான் குரோதம் கொண்டான்
நீண்ட நேரமாய் நெடுஞ்சினங் கொண்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே!  30
என்மே லாடையை எடுத்துநீ கழுவினால்
கறுத்தப் பாம்பின் கடுங்கொடு நஞ்சிலே,
உடன்அதை விரைவாய் உலரப் பண்ணினால்,
போருக்கு நானும் புறப்பட் டிடுவேன்
வடபால் இளைஞர் வளர்தீத் தடத்தே
லாப்பு மைந்தர் இருப்பிடம் அதற்கு
குயிலிக்கி கிராமம் குறுகியே விட்டாள்
அந்நியர் வாயிலை அடைந்தே விட்டாள்
அந்தப் பெண்களோ டவள்விளை யாட
நறுங்குழ லாருடன் நடனமா டற்கு."  40

குயிலிக்கி இப்போ கூறினள் ஆமாம்
முதலில் பெண்ணவள் மொழியமுன் வந்தாள்:
"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:
உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது  50
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது."

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பெண்களின் கனவைநான் நம்புவ தில்லை
மனைவியர் சத்திய வாக்கும்நான் நம்பேன்
அன்னையே, தாயே, எனைச் சுமந்தவளே!
எனதுபோ ராடையை இங்கே கொணர்க!   60
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
உள்ளுணர் வென்னுள் ஓ,விழிக் கின்றது
போருக் கானதாம் **பானம் பருக
போருக் குரியநற் புதுநறை நுகர."

இவ்வா றப்போ தியம்பினள் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்!
பானம்எம் வீட்டில் பருகிடற் குளது
**மரப்பீப் பாக்களில் மதுமிக வுளது
சிந்துர மரத்தில் செய்தமூ டியின்பின்;   70
உனக்கு அருந்தயான் உடனே கொணர்வேன்
வரும்நாள் முழுக்க மனம்போல் அருந்தலாம்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வேண்டேன் வடித்த வீட்டுப் பானம்
அதற்குமுன் பாக ஆற்றுநீர் குடிப்பேன்
வலிக்கும் சுக்கான் வல்லல கேந்தி;
ஏந்துமந் நீரெனக் கினிமையா யிருக்கும்
இல்லிலே வடித்த இனியபா னத்திலும்,
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!  80
வடபால் நிலத்து வசிப்பிடம் போகிறேன்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் போகிறேன்
பெரும்பொன் கேட்டுப் பெறற்குப் போகிறேன்
வெள்ளி கோரிமிகப் பெறப் போகிறேன்."

கூறினள் லெம்மின் கைனன் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லிலே நிறைய நல்லபொன் உளது
வெள்ளியும் கூடம் மிகநிறைந் துளது
சரியாய் நேற்றுஇச் சம்பவம் நடந்தது
வைகறைப் பொழுதும் மலர்ந்திடும் நேரம்   90
விரியன் வயல்களை அடிமை உழுதனன்
இகல்அரா நிறைந்த இடத்தைப் புரட்டினன்
உழுமுனை பெட்டக மூடியொன் றுயர்த்த
உழுமுனைப் பின்புறம் ஒரு**கா சிருந்தது
நுழைந்துள் இருந்தவை நூறு நூறாகும்
அதிற்புக் கிருந்தவை ஆயிர மாயிரம்
பெட்டகம் களஞ்சியப் பெரும்அறைக் கொணர்ந்து
அறையின் மேல்தட் டதனைவைத் திட்டேன்.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வீட்டுச் செல்வம் வேண்டேன் எதுவும்   100
போருக்குச் சென்றொரு **மார்க்குப் பெறினும்
அதையே சிறந்ததாய் அகம்நான் கருதுவன்
இல்லிலே உள்ள எல்லாப் பொன்னிலும்
உழுமுனை தூக்கிய உயர்வெள் ளியிலும்;
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
போகிறேன் வடபால் நிலம்போ ருக்கு
லாப்பின் மைந்தரோ டேகிறேன் போர்க்கு.
உள்ளுணர் வென்னுள் உடன்விழிக் கிறது
எண்ணம் உயிர்பெற் றெழுகின் றனஆம்   110
என்செவி தாமாய் இதமுறக் கேட்க
என்விழி தாமாய் இனிமையாய்ப் பார்க்க
ஒருபெண் வடக்கிலே உள்ளனள் என்பதை
இருண்ட பூமியில் ஏந்திழை உள்ளதை
மணாளர் தம்மையே வரித்திடா மங்கை
அரியநற் கணவரை அடைந்திலா நங்கை."

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லில் குயிலி(க்கி) இருக்கிறாள் உனக்கு
உயர்குடிப் பிறந்த உத்தம மனையாள்;   120
இரண்டு பெண்கள் இருப்பது கொடுமை
மனிதன் ஒருவனின் மலர்மஞ் சத்தே."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"குயிலிக்கி என்பவள் குறுகுவோள் கிராமம்
ஆட்டம் அனைத்திலும் அவள்கலந் திடட்டும்
பலவீட் டினிலும் படுத்தெழுந் திடட்டும்
ஊர்ப்பெண் களையெலாம் உவகையூட் டட்டும்
நளிர்குழ லாருடன் நடனமா டட்டும்."

தாயும் அவனைத் தடுக்க முயன்றாள்
எச்சரித் தனளவ் வெழில்முது மாது :   130
"ஆயினும் வேண்டாம் அரியஎன் மகனே,
வடபால் நிலத்து வசிப்பிடம் போவது
மந்திர சக்தியின் வளரறி வின்றி
அறிவுடன் ஆழ்ந்த ஆற்றல்இல் லாமல்
வடபால் இளைஞரின் வளர்தீத் தடத்தில்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் நோக்கி!
லாப்பியர் மந்திரப் பாடலை இசைப்பர்
அங்கே *துர்யா ஆடவர் திணிப்பர்
உன்வாய் கரியிலும் உன்தலை சேற்றிலும்,
முன்கரம் புழுதியிலும் முழுதும் அமுக்குவர்   140
புதைப்பர் உன்முட்டியைப் புணர்சுடு சாம்பலில்
எரிந்தெழும் அடுப்பின் இயல்கல் நடுவில்."

லெம்மின் கைனன் அப்போ தியம்பினன்:
"மந்திர காரர்கள் மாயம்முன் செய்தனர்
மாயம் செய்தனர் **வல்அராச் சபித்தன
லாப்பியர் மூவர் என்னுடன் மோதினர்
கோடை காலக் குளிர்இர வொன்றில்
நிர்வாண மாயொரு நெடும்பா றையிலே
ஆடையும் இடுப்புப் பட்டியும் அகன்று
என்னுடல் சிறுதுணி இல்லா நிலையில்;   150
இதுதான் அவர்கள் என்னிடம் பெற்றது
இழிந்த மனிதர் இதுதான் பெற்றனர்
பாறையில் மோதிய கோடரி போல
குன்றிலே பாய்ந்த நுண்துளைக் **கோல்போல்
பனித்திடர் வழுக்கிய தனிமரக் கட்டைபோல்
வெற்று வீட்டில் விளைமர ணம்போல்.

ஒருவழி நிலைமை உறுமச் சுறுத்தலாய்
வேறு விதமதாய் மாறியே வந்தது,
எனைவென் றிடற்கே எலாம்முயன் றார்கள்
அமிழ்த்தி விடுவதாய் அச்சுறுத் திட்டனர்  160
சதுப்பு நிலமதன் தனிநடை பாதையாய்
அழுக்கு நிலத்திலே குறுக்குப் பலகையாய்
செய்யஎன் தாடையைச் சேற்றிலே தாழ்த்தி
அழுக்கிலே தாடியை அமிழ்த்தவும் நினைத்தனர்
ஆயினும் நானொரு அத்தகு மனிதனே
அஞ்சிட வில்லைநான் அதற்கெலாம் பெரிதாய்
மாறினேன் நானொரு மந்திர வாதியாய்
அறிந்தவன் ஆயினேன் அரியமந் திரங்கள்
கணையுடன் பாடினேன் சூனியக் காரரை
எய்யவந் தோரை எறிபடைக் கலத்தொடும்  170
எதிர்மா யாவிகள் இரும்புவா ளுடனும்
உயர்அறி வுடையரை உருக்குடன் சேர்த்தும்
வீழ்த்தினேன் பயங்கர வீழ்ச்சியாம் துவோனி
திரண்ட கொடிய திரைநுரை நடுவில்
உயரப் பாயும் உறுமரு விக்கீழ்
அனைத்திலும் கொடிய அடிநீர்ச் சுழியில்
மந்திர வாதிகள் அங்குதுஞ் சட்டும்
பொறாமைக் காரர்கள் போய்த் துயிலட்டும்
புற்கள் முளைத்து புறமெழும் வரைக்கும்
தொப்பியின் ஊடாய் தொடுந்தலை ஊடாய்  180
சூனியக் காரரின் தோள்மூட் டூடாய்
தோளின் தசையைத் துளைத்துக் கொண்டு,
சூனியக் காரர் தூங்கும் இடத்தில்
பொறாமை பிடித்தோர் போய்த்துயி லிடத்தில்."

இன்னமும் அவனின் அன்னை தடுத்தாள்
லெம்மின் கைனன் நிகழ்த்தும் பயணம்
தாயவள் தடுத்தாள் தன்னுடை மகனை
மாது அந்த மனிதனைத் தடுத்தாள்:
"அங்கே செல்வதை அடியொடே நிறுத்து
குளிருடைக் கிராமக் கொடும்பகு திக்கு   190
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே!
அழிவு நிச்சயம் அணுகிடும் உன்னை
எழுச்சிகொள் மகர்க்கு ஏற்படும் வீழ்ச்சி
துயரம் குறும்பன் லெ(ம்)மின்கை னற்கு;
நூறு வாயினால் நுவன்ற போதிலும்
நம்புதற் கில்லை நான்உனை இன்னும்
உனக்குள் மந்திரப் பாடகன் உறைந்திலன்
வடக்குமைந் தர்க்கு வருமீ டிணையாய்
நீஓர்ந்த தில்லை நெடிய*துர் யாமொழி
லாப்பியர் பாடலும் ஏதும்நீ அறிந்திலை."  200

குறும்பன் லெம்மின் கைனன் அப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
வாரத் தொடங்கினன் வாகாய்த் தன்தலை
சீவத் தொடங்கினன் சீராய்த் தலைமயிர்
எடுத்துச் சுவரில் எறிந்தனன் சீப்பை
தூணில் எறிந்தனன் தொடுமயிர்க் **கோதியை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"அப்போ லெ(ம்)மின்கை னனையழி வணுகும்
எழுச்சி மகற்கு வீழ்ச்சியேற் படுகையில்   210
மயிர்க்கோ தியினால் வழிந்திடும் குருதி
சீப்பினி லிருந்து செந்நீர் பெருகிடும்."

குறும்பன் லெம்மின் கைனன் சென்றனன்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
தாயார் அவனைத் தடுத்த போதிலும்
பெற்றவள் எச்சரித் திட்ட போதிலும்.

இடுப்பில் பட்டியை இட்டுப் பூட்டினான்
இருப்பு மேலாடை எடுத்தே அணிந்தான்
கொளுக்கியை உருக்குப் பட்டியில் கொளுவினான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:  220
"ஆயுதம் மனிதருக் கானதோர் காப்பு
இரும்பு மேலாடை இதனிலும் காப்பு
உருக்குப் பட்டி உயர்ந்தது சக்தியில்
மந்திர வாதிகள் மத்தியில் அவர்க்கு
தீயோர் பற்றிச் சிறிதி(ல்)லைக் கவலை
அஞ்சுதல் நல்லவர் ஆயினும் இல்லை."

கையிலே சொந்தக் கதிர்வாள் எடுத்தான்
தீயுமிழ் அலகைச் செங்கர மெடுத்தான்
அலகைகள் தட்டி அமைத்தநல் வாளது
தெய்வமே தீட்டித் திருத்திய வாளது   230
வாளைக் கட்டினான் வலியதன் பக்கம்
செருகினான் உறையுள் செருந்திறல் வாளை.

இருப்பது கவனமாய் எங்கே மனிதன்?
காப்பது எங்கே கருமவீ ரன்த(ன்)னை?
இங்கே கவனமாய் இருந்தனன் கொஞ்சம்
தன்னை இங்கே தற்காப் பாக்கினன்:
உத்தரத் தின்கீழ் உயர்கடை வாயிலில்
வசிப்பிடம் அதனின் வருகடை நிலையில்
முன்றிலின் நல்வழி முன்தொடக் கத்தில்
இறுதி வரைக்கும் எழில்வாய் அனைத்திலும்.  240

அங்ஙனம் மனிதன் அருங்காப் பியற்றினன்
பெண்கள் இனத்தின் பெரும்எதிர்ப் பெதிராய்
ஆயினம் காவல் அவைபலம் அல்ல
பயனுள தல்ல பாதுகாப் பணிகள்
தன்னை மீண்டும் தற்காப் பாக்கினன்
ஆண்கள் இனத்தின் அரும்எதிர்ப் பெதிராய்
இரண்டு வழிகள் இணைபிரி இடத்தில்
நீல மலையின் நீடுயர் உச்சியில்
நகர்ந்து திரிந்திடும் நளிர்சேற் றிடங்களில்
நீர்நிறைந் தோடும் நீரூற் றுக்களில்   250
வேகமாய்ப் பாயும் வியன்நீர் வீழ்ச்சியில்
பலமாய்ப் பெருகும் பல்நீர்ச் சுழிப்பினில்.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எழுவீர், புவியிருந் தெதிர்வாள் மனிதர்காள்!
வியன்நில வயதுகொள் வீரர்கள், எழுவீர்!
எழுவீர், கிணற்றிருந் திகல்வல் மறவர்காள்!
எழுவீர், ஆற்றிருந் திகல்வில் வீரர்காள்!
அடவியே, எழுகநின் ஆட்களோ டிங்கே!
வனங்க ளெலாநும் மக்கள் தம்முடன்,   260
மலைகளின் முதல்வ,நின் வன்சக் தியுடன்,
நீரின் சக்தியே, நின்பயங் கரத்துடன்,
நீரின் தலைவியே, நினது பலத்துடன்,
நீர்முதி யோளே, நினது வலியுடன்,
பாவையீர், ஒவ்வொரு பள்ளத் திருந்தும்,
எழில்உடை அணிந்தோர் இருஞ்சேற் றிருந்தும்,
ஒப்பிலா மனிதனின் உதவிக்கு வருக!
நற்புகழ் மனிதனின் நட்புக்கு வருக!
சூனியக் காரரின் சுடுகணை தவிர்க்க,
மந்திர வாதிகள் வல்லுருக் காயுதம்   270
இகல்மா யாவிகள் இரும்புக் கத்திகள்
வில்லவர் படைக்கலம் வல்லியக் கொழிய!

இதுவும் போதா தின்னமு மென்றால்
இன்னும் ஒருவழி என்நினை வுள்ளது
நேர்மேற் பார்த்து மெடுமூச் செறிவேன்
அங்கே விண்ணுறை அருமுதல் வனுக்கு
எல்லா முகிலையும் இருந்தாள் வோற்கு
ஆவிநீ ரனைத்தின் அரசகா வலர்க்கு.

ஓ,மானுட முதல்வனே, உயர்மா தெய்வமே!
வானகம் வதியும் மாமுது தந்தையே!   280
முகில்களின் ஊடாய் மொழிந்திடு வோனே!
வாயுவின் வழியாய் வாக்குரைப் பவனே!
தீயுமிழ் ஒருவாள் தேர்ந்தெனக் கருள்வாய்!
உமிழ்தீ வாளுறை ஒன்றினில் வைத்து
அதனால் தடைகளை அடியேன் நொறுக்குவேன்
அதனால் நானும் அழிவை அகற்றுவேன்
தொல்புவிச் சூனியக் காரரைப் புரட்டுவேன்
நீர்மா யாவியை நெடிததால் வெல்வேன்
எனக்கு முன்வந் தெதிர்த்திடும் பகைவரை
எனக்குப் பின்னே இருந்தெழும் தெவ்வரை   290
தலைக்கு மேலும் தழுவென் பக்கமும்
என்விலாப் பக்கம் இரண்டிலு மாக
அழிப்பேன் மாய ஆவிகள் அம்புடன்
இரும்புக் கத்தியோ டிகல்சூ னியரை
உருக்கா யுதத்துடன் உறுமாந் திரிகரை
தீயவல் மாந்தரைச் செறுமவர் வாளுடன்!"

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
பற்றையில் நின்ற பரிதனை அழைத்தனன்
புல்லில் நின்றபொன் பிடர்மயிர்ப் புரவியை  300
அதன்பின் புரவிக் கணிகலன் பூட்டினன்
தீநிறக் குதிரையை ஏர்க்காற் பூட்டினன்
அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில்
வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
சாட்டையால் குதிரையை சாடியே ஏவினன்;
பரியும் பறந்தது பயணம் தொடர்ந்தது
வண்டியும் உருண்டது வழித்தொலை குறைந்தது
வெள்ளிமண் சிதறி வேகமாய்ப் பரவின
பொன்னிறப் புதர்கள் புத்தொலி யெழுப்பின. 310

ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினான்
மூன்றாவ தாக முகிழ்த்தஅந் நாளில்
அவன்ஒரு கிராமம் அடைந்திட லானான்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
தொலையில் இருந்த தொடர்வழி ஒன்றின்
தூரத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டனன்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:   320
"இந்த வீட்டிலே எவரும் உளரோ
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
எனதேர்க் காலை இறக்கக் கீழே
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு?"

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
பகுவாய்ப் புறத்தொரு பையன் இயம்பினன்:
"இந்தஇல் லத்தே எவருமே இல்லை
படியும்உன் மார்புப் பட்டியே அவிழ்க்க
உனதேர்க் காலை உடன்கீழ் இறக்க
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு."  330

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சவுக்கால் வாகாய் அறைந்தான்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
மத்தியில் இருந்த வழியொன் றினிலே
வீதி மத்தியில் வீடொன் றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டான்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:
"இந்த வீட்டில் எவரும் உளரோ
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற   340
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
கடிவாள வாரைக் கைப்பிடித் திழுக்க?"

அடுப்புக் கல்லின் அருகிலோர் முதுமகள்
அடுப்பா சனத்தில் அமர்ந்தவள் அரற்றினாள்:
"ஆமாம், இந்த அகத்திலே உள்ளனர்
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற
படியும்உன் மார்புப் பட்டியை அவிழ்க்க
எடுத்துன் ஏர்க்கால் இறக்கக் கீழே
உளரப் பாஇங் உயர்பல **பதின்மர்
நூற்றுக் கணக்கிலும் ஏற்கலாம் விரும்பின்   350
பயண வண்டியும் பார்த்துனக் கருளுவர்
சவாரிக் குதிரையும் தந்தே உதவுவர்
உனது வீடுபோய் உறற்குக் கள்வனே
உனது நாடுபோய் உறற்குத் தீயோய்
உனதுதெச மானனின் உறைவிடத் துக்கு
உனதெச மானி உற்றுவா ழிடத்து
நின்சகோ தரனின் நீள்நுழை வாயில்
நின்சகோ தரியின் நெடும்இற் கூடம்
இந்தப் பகற்பொழு திதுமுடி தற்குள்
சூரியன் கீழே சோர்ந்துசாய் வதற்குள்."  360

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"சுடப்பட வேண்டியோள், தொல்கிழ விநீ!
நொருக்கவேண் டியது வளைந்தநின் தாடை."
அதன்பின் குதிரையை அவன்விரைந் தோட்டினன்
தொடர்ந்து செய்தனன் துணிந்துதன் பயணம்
அனைத்து வழியிலும் அதிஉயர் பாதையின்
உள்ளவீ டனைத்திலும் உயர்ந்தவீட் டுக்கு.

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
அந்த வீட்டின் அருகிற் சென்றதும்   370
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"பிசாசே, குரைக்கும் பெருவாய் மூடு!
நாயின் அலகை மூடிடு பேயே!
வாயின் முன்னொரு வன்தடை போடு
பற்களின் இடையிலோர் நற்பூட் டையிடு
அதன்வாய்ச் சத்தம் அற்றே இருக்க
அவ்வழி மனிதன் அகன்றுபோம் வரையில்."

முற்றத் திவ்விதம் முன்வந் துற்றான்
சாட்டையால் நிலமிசைச் சாற்றினான் ஓங்கி  380
சாட்டையின் திசையிலோர் சார்புகார் எழுந்தது
புகாரின் நடுவொரு புதுச்சிறு மனிதன்
மார்புப் பட்டியை வந்தவிழ்த் தவனவன்
ஏர்க்கால் கீழே இறக்கியோன் அவனே.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது செவிகளால் தானே கேட்டான்
ஒருவரும் அவனை உடன்கவ னித்திலர்
அவதா னிப்போர் ஆங்கெவ ரும்மிலர்;
வெளியே இருந்தவன் வியன்கவி கேட்டனன்
**பாசியில் இருந்து பலசொல் கேட்டனன்  390
கனசுவர் வழியாய்க் கலைஞர் இசையையும்
பலகணி வழியாய்ப் பாடலும் கேட்டனன்.

அங்கிருந் தில்லுள் அவனும் பார்த்தனன்
இரகசிய மாக எட்டிப் பார்த்தனன்
அறையில் நிறைய அறிஞர் இருந்தனர்
பல்லா சனத்தும் பாடகர் இருந்தனர்
இருஞ்சுவர்ப் பக்கம் இசைவல் லார்கள்
கதவு வாயிலில் கனநுண் ஞானிகள்
வகுத்தபின் ஆசனம் மந்திர வாதிகள்
புகைபோக்கி மூலையில் சூனியக் காரர்கள்;  400
லாப்பின் பாடலை இசைத்தனர் அவர்கள்
பலபேய்க் கதைகளைப் பாடினர் அவர்கள்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
வாய்த்ததன் உருவை மாற்ற எண்ணினன்
இன்னொரு வேடமாய்த் தன்னை மாற்றினன்
மூலையில் இருந்து முனைந்தறை சென்றான்
சுவர்இடுக் கிருந்து துணிந்துட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முடிவிலே பாடல்கள் மூட்டும் இன்பமே
சிறப்பு வாய்நதவை சீர்க்குறுங் கவிகள்   410
நினைந்துதம் பாடலை நிறுத்துதல் நல்லது
நடுவில் புகுந்ததை நாம்தடுப் பதிலும்."

அவளே வடநிலத் தலைவியப் போது
எழுந்து நடந்து எழில்தரை நின்று
அறையின் மத்திய அமைவிடம் மடைந்து
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இங்கே முன்பு இருந்தது ஒருநாய்
இரும்புச் சடையோ டெதிர்கொளும் நீசநாய்
இறைச்சியை அயின்று எலும்பைக் கடிப்பது
புதிதாய் வருவோர் குருதி குடிப்பது.   420
எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்
இவ்வறை யுள்ளே எளிதாய் நுழைந்தாய்
இவ்வில் உட்புறம் இனிதே வந்தாய்
கிளர்ந்தெழு நாயுனைக் கேட்கவு மில்லை
குரைக்கும் நாயுனைக் குறிகொள்ள வில்லை."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உண்மையாய் நானிங் குற்றிட வில்லை
திறமையும் அற்றுத் திகழ்அறி வற்று
வீரமும் அற்று ஞானமும் அற்று   430
தந்தையின் மந்திர சக்தியு மற்று
பயந்தபெற் றோரின் பாதுகாப் பற்று
உங்கள் நாய்கள் உண்பதற் காக
குரைக்கும் நாய்கள் கிழிப்பதற் காக.

எனது அன்னை என்னைக் கழுவினாள்
கழுவினள் சிறுவனாம் காலத் தினிலே
கோடை நிசியில் கூடுமுத் தடவை
இலையுதிர் காலத் திரவொன் பதுமுறை
அறிஞனாய் ஒவ்வொரு துறையிலும் ஆகென
சீர்த்தியோ டொவ்வொரு நாட்டிலும் திகழென  440
இருக்கஎன் வீட்டிலோர் இசைப்பா டகனாய்
சிறக்கநுண் அறிஞனாய்ச் சேர்பிற நாடெலாம்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
மாறினான் மந்திர வாதியே யாக
பாடுவோன் ஆயினான் மந்திரப் பாடல்கள்
தீப்பொறி மேலுடைத் திகழ்மடிப் பெழுந்தது
அவனது கண்கள் அனலைச் சிந்தின
லெம்மின் கைனன் நின்றுபா டுகையில்
மந்திரம் செபிக்கையில் வருபாட் டிசைக்கையில்.  450

வெகுதிறற் பாடகர் மீதே பாடினான்
படிமிகத் தாழ்ந்த பாடகர் ஆக்கினான்
அவர்களின் வாய்களில் அவன்கல் திணித்தான்
பக்கங் களிலெலாம் பாறையுண் டாக்கினான்
மிகுசிறப் புற்ற வியன்பா டகற்கு
தேர்ச்சிமிக் குயர்ந்து திகழ்கவி ஞர்க்கு.

இவ்விதம் பாடினான் இத்தகு மனிதரை
ஒருவரை இங்கும் ஒருவரை அங்குமாய்
மரம் செடியற்ற மலட்டு நிலத்தே
உழப் படாவெற்று உலர்நிலத் துக்கு   460
மீன்களே யற்ற வெறும்நீர் நிலைக்கு
நன்னீர் **மீனினம் நாடாப் புலத்து
பயங்கர *உறுத்தியாப் படர்நீர் வீழ்ச்சியில்
இரைந்து விரையும் இகல்நீர்ச் சுழிகளில்
நுரைத்தெழும் நதியின் அடிப்பா றைகளில்
நீர்வீழ்ச் சிகளின் நேர்நடுக் குன்றில்
நெருப்பென எரிந்து நீறா வதற்கு
தீப்பொறி யாகிச் சிந்தியே குதற்கு.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
பாடினான் வாளுடைப் பலமுறு மனிதரை   470
பாடினான் படைக்கல முடையபல் வீரரை
பாடினான் இளைஞரைப் பாடினான் முதியரை
பாடினான் நடுவய துடையபன் மக்களை
ஒருவனை மட்டுமே உருத்தவன் பாடிலன்
அவனொரு கொடியவன் ஆநிரை மேய்ப்பவன்
பார்வையே அற்றவன் படுகிழ வயோதிபன்.

*நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"லெம்பியின் மைந்தா நீ,ஓ, குறும்பா!
பாடினாய் இளைஞரைப் பாடினாய் முதியரை  480
பாடினாய் நடுவய துடையபன் மக்களை
என்னைச் சபித்து எதற்குப் பாடிலை?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உன்னைத் தொடாமல் ஒதுக்கிய திதற்கே
பார்க்கநீ இழிந்த பண்பினன் ஆனதால்,
கிளர்ந்துநான் தொடாமலே கீழ்மகன் ஆனவன்;
இளைஞன் ஆகநீ இருந்தவந் நாட்களில்
இடையர்க ளிடையோர் இழிந்தவ னாகினை
மாசுறுத் தினைநின் மாதா பிள்ளையை
உடன்பிறந் தவளின் உயர்கற் பழித்தனை  490
திகழ்பரி அனைத்தையும் சேர்த்தே அழித்தனை
குதிரைக் குட்டிகள் கொன்றே ஒழித்தனை
திறந்த சதுப்பில் சேர்தரை நடுவில்
சேற்று நீரோடும் திணிநிலப் பரப்பில்."

நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
கோபம் கொண்டான் கொடுஞ்சின முற்றான்
கதவின் வாயில் கடந்தே சென்றான்
முற்றம் கடந்து முன்வய லடைந்தான்
துவோனலா நதியின் தொலைபார்த் தோடினான்
போனான் அருவியின் புனிதநீர்ச் சுழிக்கு  500
தூரநெஞ் சினனை தொடர்ந்தெதிர் பார்த்தான்
லெம்மின் கைனனை நெடிதுகாத் திருந்தான்
வடநா டிருந்து வழிதிரும் புகையில்
வீடு நோக்கி விரைந்தஅப் பாதையில்.



பாடல் 13 - பிசாசின் காட்டெருது  *



அடிகள் 1 - 30 : லெம்மின்கைனன் வடபகுதித் தலைவியிடம் அவளுடைய மகளைத் தனக்கு மனைவியாக்கும்படி கேட்கிறான். வடபகுதித் தலைவி, பனிக்கட்டிச் சறுக்கணிகளில் சென்று பிசாசின் காட்டெருதைப் பிடித்தால் தனது மகளைத் தருவதாகக் கூறுகிறாள்.

அடிகள் 31 - 270 : லெம்மின்கைனன் செருக்குடன் காட்டெருதைப் பிடிக்கப் புறப்படுகிறான். ஆனால் காட்டெருது தப்பிவிடுகிறது; அவனுடைய பனிக் காலணிகளும் ஈட்டியும் உடைகின்றன.



குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
முதிய வடபால் முதல்விக் குரைத்தான்:
"தகுமுதி யவளே தருகநின் மகளிர்
இங்கே கொணர்கநின் எழில்மங் கையரை
அனைத்து அணங்கிலும் அதிசிறந் தவளை
அரிவையர் குழாத்தில் அதிஉயர்ந் தவளை!"

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தருவதற் கில்லை தகுமென் பெண்கள்
அளிப்பதற் கில்லை அரியஎன் மகளிர்   10
சிறந்தவ ளாயினும் சிறப்பிலள் ஆயினும்
உயர்ந்தவ ளாயினும் உயர்விலள் ஆயினும்
உனக்கேற் கனவே உள்ளாள் இல்லாள்
நிலைபெறும் மனையாள் நினக்குமுன் உள்ளாள்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"பெயர்குயி லிக்கியைப் பிணைப்பேன் கிராமம்
படர்ஊர்க் கூடப் படிகளில் வைப்பேன்
வளர்வெளி அந்நிய வாயிலில் வைப்பேன்
இங்கே சிறந்தவோர் அணங்கினைப் பெறுவேன்
இப்பொழு துன்பெண் இங்கே கொணர்வாய்   20
எல்லாப் பெண்ணிலும் இயல்சிறப் பொருத்தியை
அனைத்து அணங்கிலும் அழகுறும் ஒருத்தியை!"

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"கொடுக்கவே மாட்டேன் கொணர்ந்தென் பெண்ணை
பெறுமதி யற்ற நரர்எவ ருக்கும்
வருபய னற்ற மானுடர் எவர்க்கும்.
ஆயினும் நீயென் அரிவையைக் கேட்கலாம்
தலையில்பூச் சூடிய தையலைக் கேட்கலாம்
பிசாசுகாட் டெருதைப் பிடித்தால் **சறுக்கி
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்."   30

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது ஈட்டியில் முனைகள் பொருத்தினன்
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினன்
கணைகளின் தலைப்பில் கடுங்கூர் பூட்டினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போ தீட்டியில் இகல்முனை பொருத்தினேன்
அம்புகள் அனைத்தும் ஆயத்த மாயின
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினேன்
உந்திச் சென்றிட இ(ல்)லைஇடச் **சறுக்கணி
வளமாய் முந்திட **வலதணி இலது."    40

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்கே பெறலாம் எழிற்பனி மழைஅணி
சறுக்கும் பாதணி பெறப்படல் எங்ஙனம்?

*கெளப்பியின் தோட்டக் கவின்இல் சென்றான்
*லூலிக்கி வேலைத் தளத்தினில் நின்றான்:
"வடநாட் டவரே, திடநுண் மதியரே!
எழிலுறும் கெளப்பியே, லாப்புலாந் தியரே!
பயனுள சறுக்கணி படைப்பீர் எனக்காய்,
அழகிய சறுக்கணி அமைப்பீர் சிறப்பாய்,   50
பேய்க் காட்டெருதைப் பிடித்திடச் செல்ல,
பிசாசின் வயலின் பெருவெளிக் கப்பால்."

லூலிக்கி என்பவன் உரைத்தான் ஒருசொல்
நாவினால் கெளப்பி நவின்றான் இப்படி:
"லெம்மின் கைனனே நீவீண் போகிறாய்
பேய்க்காட் டெருதின் பெருவேட் டைக்கு
உழுத்த மரத்துண் டொன்றுதான் பெறுவாய்
அதுவும் துன்பம் அதிகம் பெற்றபின்."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   60
"செய்வாய் உந்திச் செல்ல இடதணி
வலதையும் செய்வாய் வலிதே முன்செல
எருத்து வேட்டைக் கிதோபுறப் பட்டேன்
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்."

திகழ்இடச் சறுக்கணி செ(ய்)யும்லூ லிக்கி
திடவலச் சறுக்கணி செய்யும் கெளப்பி
இலையுதிர் காலத் திடதணி செய்தான்
வளர்குளிர் காலம் வலதணி செய்தான்
**தண்டுகள் அணிக்குச் சமைத்தான் ஒருநாள்
தண்டுக்கு **வளையம் சமைத்தான் மறுநாள்.  70

இதமாய் உந்த இடதணி கிடைத்தது
வளமாய் முந்த வலதணி வந்தது
அணிகளின் தண்டுகள் ஆயத்த மாயின
பொருத்தப் பட்டன புதுஅணி வளையம்
ஈந்தான் தண்டுக் கீடுநீர் **நாய்த்தோல்
வளையத் தின்விலை பழுப்பு நரித்தோல்.

வெண்ணெய் சறுக்கணி மேலெலாம் பூசி
கலைமான் கொழுப்பையும் கலந்துடன் தேய்த்தான்
சிந்தனை பின்னர் செய்தான் அவனே
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:   80
"இளைஞர்கூட் டத்துள் எவருமிங் குளரோ
உண்டோ எவருமிங் குளவளர் வோர்களில்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
சென்னிறக் கன்னப் போக்கிரி செப்பினன்:
"இளைஞர்கூட் டத்துள் எவரோ இங்குளர்
வளர்ந்திடு வோரில் மற்றெவ ரோஉளர்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்."   90

அம்புறைக் கூட்டை அவன்முது கிட்டனன்
தோளில் புதியதோர் தொடுவில் கட்டினன்
தண்டைக் கையிலே சரியாய்ப் பிடித்தனன்
இடச்சறுக் கணியை எடுத்துமுன் தள்ளினன்
உந்தி வலதணி உதைத்தான் குதியால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:  
"இல்லை இறைவனின் இந்தக் காற்றினில்
வானம் இதனின் வளைவதன் கீழே
எதுவுமே வனத்தில் இல்லைவேட் டைக்கு
நான்கு கால்களில் பாய்ந்திடும் பிராணி   100
வென்றிட முடியா வேறெதோ வொன்று
இலகுவாய்க் (கைப்)பற்ற இயலாத தொன்று
கலேவா மைந்தன் காற்சறுக் கணியால்
லெம்மின் கைனனின் நேர்ச்சறுக் கணிகளால்."

அலகைகள் இதனை அறிந்திட நேர்ந்தது
**தீய சக்திகள் தெரிந்திட நேர்ந்தது
பேய்கள்காட் டெருதை ஆக்கத் தொடங்கின
படைத்தன கலைமான் பலதீச் **சக்திகள்
தலையை உழுத்த கட்டையில் சமைத்தன
**சிறுமரக் கிளைகளில் சேர்கொம் பியற்றின    110
பாதம் சுள்ளிகள் கொண்டு படைத்தன
கால்களைச் சேற்றுக் கம்பினால் செய்தன
வேலித் தம்பத்தால் விரிமுது கியற்றின
வாடிய புற்களால் வைத்தன நரம்புகள்
நீராம்பல் முகைகளால் நேத்திரம் அமைத்தன
நீராம்பல் இதழ்களில் நெடுஞ்செவி நிமிர்த்தின
தேவதா ருரியிலே செய்தன தோலினை
பதன்கெடு மரங்களில் படைத்தன தசையினை.

எருத்துக் குயோசனை இருண்டபேய் சொன்னது
மானுக்கு இங்ஙனம் வாயினால் சொன்னது:   120
"இரும்பேய் எருதே, இப்போ தோடு!
தாவுநின் கால்களால் சாந்தப் பிறவியே!
ஓடிடு மானே, உன்சினைப் பிடத்தே!
லாப்பு மைந்தரின் எழில்புல் வெளிக்கு
சறுக்குணி மனிதரைக் களைப்புறச் செய்வாய்
குறிப்பாய் லெம்மின் கைனனைச் செய்வாய்!"

மிகுபேய் எருது விரைந்தோ டியது
காட்டுக் கலைமான் கடுகதி விரைந்தது
வடக்கினில் அமைந்த அடைப்புகள் வழியாய்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளிகளில்   130
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
சாம்பரில் இறைச்சியைத் தள்ளிப் போட்டது
அடுப்படி இரசம் அதுசிந் திற்று.

அப்போ தெழுந்தது அங்கே கூச்சல்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளியில்
லாப்பு நாட்டின் இகல்நாய் குரைத்தன
லாப்பு நாட்டின் இளஞ்சிறார் அழுதனர்
லாப்பு நாட்டின் ஏந்திழை சிரித்தனர்
மற்றும் சிலரோ சற்றே முனகினர்.    140

குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
எருதின் பின்னே சறுக்கிச் சென்றான்
சறுக்கிச் சேற்றிலும் தரையிலும் சறுக்கினன்
திறந்த வெளியிலும் சென்றான் சறுக்கி
சறுக்கணி தன்னில் தகிநெருப் பெழுந்தது
தண்டின் நுனியில் தழற்புகை பறந்தது
ஆயினும் எருதை அவனோ கண்டிலன்
இல்லைக் கண்டதும் இல்லைக் கேட்டதும்.

நாட்டிலும் சென்றான் நகரிலும் சென்றான்
தண்கடற் பின்னால் தரையிலும் சென்றான்   150
அலகையின் தோப்புகள் அனைத்திலும் சென்றான்
*இடுகாட் டாவியின் **ஏற்றமும் சென்றான்
மரண வாயில் வழிவரை சென்றான்
இடுகாட் டின்பின் இயல்கா டடைந்தான்;
மரணம் தனது வாயைத் திறந்தது
இடுகாட் டாவி எடுத்தது தலையை
மனிதனை உள்ளே வரவிடு தற்கு
லெம்மின் கைனனை நேராய் விழுங்க
ஆயினும் உண்மையில் அவனைப் பெற்றில(து)
கடுகதி கொண்டு கைக்கொண் டிலது.   160

அவன் சென்றிலனே அனைத்திடத் துக்கும்
தொடாத பகுதியோர் தொல்புற மிருந்தது
வடபால் நிலத்து மறுகோ டியிலே
லாப்பு நாட்டின் அகல்நிலை வெளிகளில்
அந்த இடத்துக் கவன்புறப் பட்டான்
அதனையும் தொட்டு அறிந்திட நினைத்தான்.

அந்த இடத்தை அவன்போ யடைந்ததும்
அங்கொரு கூச்சலை அவனும் கேட்டான்
வடபால் நிலத்து மறுகரை யதனில்
லாப்பு மைந்தரின் நிலப்புல் வெளிகளில்   170
லாப்பு நாய்களின் குரைப்புக் கேட்டது
லாப்புச் சிறாரின் அழுகுரல் கேட்டது
லாப்பு மகளிரின் சிரிப்பொலி கேட்டது
மற்றும் சிலரோ சற்றே முனகினர்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சறுக்கினன் உடனே சார்ந்தப் பக்கமாய்
நாய்கள் குரைத்தஅந் நாட்டின் பக்கமாய்
லாப்பின் மைந்தரின் நிலப்புல் வெளிக்கு.

அங்ஙகவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்:    180
"ஏந்திழை யர்இங் கெதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்ததும் பிள்ளைகள் அழுததும்
முதிய மனிதர்கள் முனகலும் எதற்கு
நரைநிற நாய்கள் குரைத்ததும் எவரை?"

"ஏந்திழை யர்இங் கிதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்தனர் பிள்ளைகள் அழுதனர்
முதிய மனிதர்கள் முனகிய திதற்கு
நரைநிற நாய்களும் குரைத்தது இதற்கு:
இருட்பேய் எருது இங்கிருந் தோடிய(து)
மென்மைக் குளம்பால் முன்பாய் தோடிய(து)   190
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
கஞ்சியை உதைத்துக் கவிழ்த்தது கீழ்மேல்
அடுப்படி இரசம் அதுசிந் திற்று."

சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
குறும்பன் லெம்மின் கைனனப் போது
பனியில் இடது பாதணி தள்ளினான்
செறிபுற் றரையின் விரியன் பாம்பென,
தேவதா ரணியைச் செலுத்தினான் முன்னே
உயிர்ப்பாம் பசைந்து ஊர்வது போலே,   200
செல்லும் போதினில் செப்பினன் இவ்விதம்
தண்டைக் கையில் கொண்டவ னிசைத்தான்:
"லாப்பிலே வாழும் எல்லா மனிதரும்
எருதைச் சுமந்து எடுத்துவந் திடட்டும்,
லாப்பிலே வாழும் ஏந்திழை யாரெலாம்
சட்டி கழுவத் தாம் தொடங் கட்டும்;
லாப்பிலே வாழும் இளம்சிறார் அனைவரும்
தீப்படும் சுள்ளிகள் சேர்த்து வரட்டும்;
லாப்பிலே இருக்கும் எல்லாக் கலயமும்
எருதைச் சமைக்க எழட்டும் தயாராய்!"   210

விரைவாய்ச் சென்றனன் மிகுபலம் கொண்டனன்
உதைத்துப் போயினன் உந்திச் சென்றனன்
முதல்முறை உந்தி முன்செல் கையிலே
ஒருவர் விழியிலும் தெரிபடா தேகினன்
அடுத்த தடவை அவன்போ கையிலே
ஒருவர் காதிலும் ஒலிவிழா தேகினன்
மூன்றாம் முறையவன் முன்பாய் கையிலே
தடிப்பேய் எருதின் தடத்தை அடைந்தனன்.

**'மாப்பிள்' மரத்தின் வன்கயி றெடுத்தான்
மிலாறுவின் முறுக்கிய வெங்கொடி எடுத்தான்  220
பேய்க்காட் டெருதைப் பிடித்துக் கட்டினான்
சிந்துர மரத்தாற் செறிஅடைப் புக்குள்:
"பேய்க்காட் டெருதே பிணைப்புண் டிங்குநில்
காட்டுக் கலையே கேட்டிங் குலவுக."

முயன்றவ் விலங்கின் முதுகைத் தடவினான்
தட்டினான் விலங்கின் தடித்ததோ லதனில்:
"எனக்குவப் பான இடமே இதுவே
இதுவே படுக்கைக் கேற்றநல் இடமாம்
ஒளிரிளம் பருவ ஒருத்தி தன்னுடன்
வளரும் பருவத் திளங்கோ ழியுடன்."    230

அப்போ பேய்எரு ததுசினந் தெழுந்தது
கலைமான் அதிர்ந்து கனன்றுதைத் தெழுந்தது
பின்னர் அதுவே பேசியது இங்ஙனம்:
"பேய்உனக் குதவி பெரிதுசெய் யட்டும்
இளம்பரு வத்து மகளிரோ டுறங்க
நாள்தொறும் நல்ல நங்கையோ டுலாவ!"

உரங்கொண் டெழுந்தது உடன்கிளர்ந் தெழுந்தது
மிலாறுவின் கொடியை வெகுண்டறுத் தெறிந்தது
**'மாப்பிளி'ன் கயிற்றை ஆர்த்தறுத் தெறிந்தது
சிந்துர அடைப்பை சினந்துடைத் தழித்தது;   240
ஓடத் தொடங்கிய துடன்முன் வேகமாய்
நழுவி விரைந்தது நவில்காட் டெருது
தரையையும் சேற்றுத் தலத்தையும் நோக்கி
கொழும்புதர் நிறைந்த குன்றுகள் நோக்கி
ஒருவர் விழியிலும் தெரிபடா தகன்றது
ஒருவர் காதிலும் விழாதுசென் றிட்டது.

சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
நிமிர்சினங் கொண்டான் நிதான மிழந்தான்
கொடுங்கோ பத்தோடு கொண்டான் சினமிக
சறுக்கிச் சென்றான் தாவும் கலைபின்;   250
அவ்வா றொருதரம் அவனுந் துகையில்
இடது சறுக்கணி வெடித்தது நுனியில்
சறுக்கணி பாதத் தட்டில் உடைந்தது
வலதணி உடைந்தது வருகுதிப் பக்கம்
விழுந்தது ஈட்டியின் மேல்முனை உடைந்து
தண்டு வளையத் தடியில் உடைந்தது
பேய்க்காட் டெருது போயிற் றோடி
தநலுதெரி யாமல் தாவி மறைந்தது.

குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்   260
வெறித்துப் பார்த்தான் உடைந்த பொருட்களை
இனிவரும் சொற்களில் இயம்பினன் அவனே:
"வேண்டாம் வாழ்நாள் என்றும் வேண்டாம்
இன்னொரு மனிதன் ஏகவே வேண்டாம்
வேட்டையை நாடிக் காட்டிடைப் போதல்
தேடிச் சறுக்கிச் செல்லல்காட் டெருதை
பாக்கியம் அற்றஇப் பாவியைப் போல
தரமிகு சறுக்கணி தம்மை அழித்தேன்
அழகிய தண்டுகள் அவற்றையு மிழந்தேன்
ஈட்டிக் கம்பில் இழந்தேன் உயரந்ததை."   270



பாடல் 14 - லெம்மின்கைனனின் மரணம்  *



அடிகள் 1 - 270 : லெம்மின்கைனன் வன தேவதைகளை வணங்கி, முடிவில் காட்டெருதைப் பிடித்து வடபகுதித் தோட்டத்துக்குக் கொண்டு வருகிறான்.

அடிகள் 271 - 372 : அவனுக்கு இன்னொரு வேலை தரப்படுகிறது; அதன்படி அவன் அனல் கக்கும் குதிரையைப் பிடித்துக் கொண்டு வருகிறான்.

அடிகள் 373 - 460 : துவோனலா ஆற்றில் ஓர் அன்னத்தைக் கொல்லும்படி அவனுக்கு மூன்றாவது வேலையும் தரப்படுகிறது. அவன் ஆற்றுக்கு வரும் வழியில் காத்திருந்த 'நனைந்த தொப்பியன்' என்ற இடையன், லெம்மின்கைனனைக் கொன்று துவோனியின் நீர்வீழ்ச்சியில் எறிகிறான்; துவோனியின் மைந்தன் அவனது உடலைத் துண்டுகளாக்கி ஆற்றில் எறிகிறான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எந்தப் பாதையில் ஏகலாம் என்று
எங்கே காலடி இடலாம் என்று:
பேய்க்காட் டெருது பிடிப்பதை விட்டு
வீட்டை நோக்கி விரைவதா தானாய்
அல்லது மேலும் அச்செயல் ஏற்று
மெதுவாய்ச் சறுக்கி மிகமுன் செல்வதா
செறிகான் தலைவியைத் திருப்தி செய்தற்கு
தோட்ட மகளிரைத் தோய்மகிழ் வுறுத்த.   10

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"ஓ,மனு முதல்வனே, உயர்மா தெய்வமே!
விண்ணிலே உறையும் மேல்வகைத் தந்தையே!
நேராம் சறுக்கணி நீர்எமக் கமைப்பீர்
கனமே இல்லாக் காற்சறுக் கணிகள்
சுலபமாய் சறுக்கித் தொடர்ந்தவற் றேக
சதுப்பு நிலத்திலும் சமதரை மீதிலும்
பிசாசுகள் வாழும் பெருநில மீதும்
வடபால் நிலத்து வளர்புற் தரையிலும்    20
பேய்க்காட் டெருது பெரிதுலா விடத்து(க்கு)
காட்டுக் கலைமான் கலைதிரி தடத்து(க்கு).

மனிதரைப் பிரிந்து வனம்ஏ குகிறேன்
வீரரை விலகி வெளிக்களம் போகிறேன்
*தப்பியோ லாவின் தனிவழி யூடாய்
*தப்பியோ வாழும் தரிப்பகத் தூடாய்.
வாழ்க மலைகளே, வாழ்ககுன் றுகளே!
வாழிய எதிரொலி வருதா ருகளே!
வாழிய வெண்பசும் மரஅர சுகளே!
வாழிய நும்மை வாழ்த்துவோர் அனைவரும்!   30
அன்புகாட் டுங்கள், அடவிகாள், வனங்காள்!
மேன்மைகொள் தப்பியோ, மிக்கருள் கூர்வீர்!
மனிதனைத் தீவகம் வந்தெடுத் தகல்வீர்!
**உச்சவன் அடைய உடன்வழி நடத்துவீர்!
நிறைவேட் டைத்தொழில் நிகழ்விடத் துக்கு!
பயன்மிக விளையுமப் படர்தடத் துக்கு!

தப்பியோ மைந்தனே, தகை*நுயீ ரிக்கியே!
தூய்மைகொள் மனித,செந் தொப்பியை யுடையோய்!
கணவாய்க ளமைப்பாய் கவின்நீள் நிலத்தில்!
வரைகளின் வழிகளில் வழித்தடம் அமைப்பாய்   40
மடையன் எனக்கு வழிதெரி தற்காய்
அந்நியன் முற்றிலும் அறியப் பாதைநான்
தேடும் பாதைநான் தெரிந்துகொள் ளற்கு
நாடும் ஆடலை நான்அடை தற்காய்.

வனத்தின் தலைவியே, வளர்*மியெ லிக்கியே!
தூய்மைப் பெண்ணே, சுடர்அழ குடையளே!
பசும்பொன் வழியில் பயணிக்க வைப்பாய்
வெள்ளியை வைப்பாய் வெளிநகர்ந் துலவ
தேடும் மனிதனின் திருமுன் பாக
நாடும் மனிதனின் நல்லடிச் சுவட்டில்.    50

திறவுகோல் பொன்னால் செய்ததை எடுப்பாய்
வயத்தொடை இருக்கும் வளையத் திருந்து
தப்பியோ களஞ்சியத் தரிப்பிடம் திறப்பாய்
திறந்துவைத் திருப்பாய் உறுகான் கோட்டையை
நான்வேட்டை யாடும் நல்லஅந் நாட்களில்
நான்இரை தேடும் நல்லஇவ் வேளையில்.

உனக்குச் சிரமம் ஒன்றி(ல்)லை யானால்
உனது மகளிரை உடனே அழைப்பாய்
ஊதிய மகளிர்க் கொருசொல் உரைப்பாய்
கட்டளை யிடுவாய் கட்டளை ஏற்போர்க்(கு)!   60
சத்தியம் நீஒரு தலைவியே யல்ல
ஏவற் பெண்கள் இல்லை உனக்கெனில்,
ஒருநூறு நங்கையர் உனக்கிலை யென்றால்,
ஆணையை ஏற்போர் ஆயிரம் பேரும்
உனது உடைமையை ஊர்ந்துகாப் பவரும்
இரும்பொருள் காப்போர் எவரு மிலையெனில்.

சின்னஞ் சிறிய செறிகான் மகளே!
தண்தேன் இதழுடைத் தப்பியோ மகளே!
நறைபோன் றினிய நற்குழல் ஊது
இசைப்பாய் தேனென இனிய குழலினை    70
மூளுமன் புடைநின் முதல்வியின் செவிகளில்
கவினார் நினது கானகத் தலைவிக்(கு)
அவ்விசை விரைந்து அவள்கேட் கட்டும்
வீழ்துயில் அமளியை விட்டே எழட்டும்
ஏனெனில் அவளோ இப்போ கேட்டிலள்
இருந்துயில் அகன்று எழுந்தனள் இல்லை
இப்போ திங்குநான் இரந்தே நிற்கையில்
பசும்பொன் நாவினால் பரிந்துநின் றிருக்கையில்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நேரம் முழுதும் தேடிப் பெறாமல்    80
சதுப்பு நிலத்திலும் தரையிலும் சறுக்கி
முரட்டுக் காட்டிலும் சறுக்கிச் சென்றான்
கடவுளின் எரிந்த காமரக் குன்றிலும்
வெம்பேய் நிலக்கரி மேட்டிலும் சறுக்கினன்.

ஒருநாள் சறுக்கினான் இருநாள் சறுக்கினான்
மூன்றாம் நாளும் முடிவாய்ச் சறுக்கினான்
உயர்ந்து மலையில் உரம்பெற் றேறினான்
பருத்துக் கிடந்த பாறையில் ஏறினான்
பார்வையை வடமேற் பக்கம் செலுத்தினான்
வளர்சதுப் பூடாய் வடக்கே பார்த்தான்:   90
தப்பியோ வீடு தவழ்விழிப் பட்டது
கனகம் ஒளிரும் கதவுகள் இருந்தன
வளர்சதுப் பதனின் வடதிசைப் பக்கமாய்
குறுங்கா டார்ந்த குன்றதன் கீழே.

குறும்பன் லெம்மின் கைனனப் போது
அந்த இடத்தை அடைந்தான் உடனே
அந்த இடத்திற் கண்மிச் சென்றான்
தப்பியோ வீட்டின் சாளரத் தின்கீழ்;
குனிந்து முன்னால் கூர்ந்துட் பார்த்தான்
ஆறாம் சாளரம் அதன்ஊ டாக    100
வழங்குவோர் அங்கே வாசம் செய்தனர்
**வேட்டை வயோதிப மெல்லார் கிடந்தனர்
தொழிலுடை அணிந்து தோற்றம் தந்தனர்
அழுக்குக் கந்தை ஆடையில் இருந்தனர்.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எழில்வனத் தலைவீ, எக்கா ரணத்தால்
வன்தொழில் உடைகளில் வாசம் செய்கிறாய்?
அழுக்குக் கந்தல் ஆடைகள் அணிகிறாய்?
காட்சியில் மிகவும் கறுப்பாய் இருக்கிறாய்?
பார்க்கப் பயங்கரப் பண்போ டிருக்கிறாய்?   110
தயங்குநின் மார்புகள் தருவது விரக்தி
வயங்குநின் உருவால் வருவது குரூபம்!

நான்முன் காட்டில் நடந்த வேளையில்
காட்டிலே இருந்தன கோட்டைகள் மூன்று
ஒன்று மரத்தினால் இன்னொன் றெலும்பினால்
மூன்றாம் கோட்டை மூண்டது கல்லினால்
ஆறுசா ளரங்கள் **அமைந்தன பொன்னால்
முழுக்கோட் டையதும் மூலையில் இருந்தன;
நன்கவற் றூடாய் நான்உட் பார்த்தேன்
நற்சுவ ரின்கீழ் நான்நிற் கையிலே:    120
தப்பியோ வீட்டின் தலைவன் அவனொடு
தப்பியோ வீட்டின் தலைவியும் கண்டேன்
*தெல்லெர்வோ என்னும் செல்வி தப்பியோ
மற்றம் தப்பியோ மனிதரும் இருந்தனர்
அனைவரும் பொன்னில் ஆர்ந்தே இருந்தனர்
அனைவரும் வெள்ளியில் ஆழ்ந்தே இருந்தனர்;
அடவியின் தலைவி அவளும் கூட
கருணை மிக்க காட்டுத் தலைவியின்
கரங்களில் இருந்தன காப்புகள் பொன்னில்
விரல்களில் இருந்தன விரலணி பொன்னில்   130
சிரசினில் இருந்தன சிரசணி பொன்னில்
மலர்குழல் இருந்தன வளையங்கள் பொன்னில்
கர்ணத் திருந்தன காதணி பொன்னில்
நன்மணி அவளது நளிர்கழுத் திருந்தன.

காட்டின் தலைவி, கருணைமிக் கோய்,ஓ!
வனத்தின் இனிய வயோதிபப் பெண்ணே!
வைக்கோற் காலணி வைப்பாய் கழற்றி
பட்டைப் **பூர்ச்சம் பாதணி கழற்று
அழுக்குக் கந்தல் ஆடைக ளகற்று
தொழிலுக் குரிய தொல்லுடை அவிழ்ப்பாய்   140
செல்வம் செழிக்கும் சிறப்புடை அணிவாய்
ஆடலுக் கானமேல் ஆடையை அணிவாய்
மிகும்என் வனத்து வேட்டை நாட்களில்
இரையைத் தேடும் எனதுநே ரத்தில்;

எனக்கு வந்தது ஏதோ சோர்பு
சோர்பு வந்ததித் தொடர்புறு வழிகளில்
வெற்று நேரத்தில் விளைந்ததிச் சோர்பு
வேட்டையே இல்லா வேளையாம் இதிலே
ஏனெனில் நீதர வில்லைஎப் போதும்
அரிதினும் நீயெனை ஆதரித்தா யிலை   150
மகிழ்வுறும் மாலை மனஞ்சோர் வானது
நீள்பகற் போது நிர்ப்பய னானது.

கான்நரைத் தாடி கடுமுது மனிதா!
தளிரிலைத் தொப்பி **தரிபா சாடையோய்!
மென்மைத் துணிகளால் வியன்கா டுடுத்துவாய்
அகன்ற துணிகளால் அலங்கரி கானகம்
அரசுக் கணிவாய் அருநரை நிறவுடை
**'அல்டர்' மரங்களை அழகிய உடையால்
தேவ தாருவை திகழ்வெள்ளி உடையால்
பொன்னால் வேறு **மரத்தைப் புனைவாய்   160
செம்புப் பட்டியால் திகழ்முது **தாருவை
வெள்ளிப் பட்டியால் வேறொரு **தாருவை

பொன்னின் மலர்களால் பூர்ச்ச மரத்தை
புனைவிப் பாயடி மரங்களைப் பொன்னணி
அலங்கரிப் பாய்அவை அந்நாள் அமைதல்போல்
உனது சிறந்தஅவ் வுயர்நாள் களைப்போல்:
செறி**மரக் கிளைகளில் திங்கள் திகழ்தல்போல்
திகழ்**தா ருச்சியில் தினகரன் சுடர்போல்
வனத்தில்தே னார்ந்து மணத்ததைப் போல
நீல்நிறக் கான்நறை நிலைத்ததைப் போல    170
அடல்எரிக் கானக மதன்மா வூறல்போல்
உறுசேற் றுநிலம் உருகிய வெண்ணெய் போல்.

வனத்தின் வனிதையே, மனமுவந் தவளே!
*தூலிக்கி யே,தப்பி யோவின் மகளே!
வேட்டையைத் வெம்மலைச் சரிவுகட் கனுப்பு
வேட்டையைத் திறந்தபுல் வெளிகளுக் கனுப்பு;
ஓடிநீ ஏக உளதெனில் சிரமம்
விரைந்து நீசெல்ல விளையுமேல் சோம்பல்
எடுப்பாய் பற்றையில் இருந்தொரு சாட்டை
ஒடிப்பாய் மிலாறுவில் உடன்ஒரு சுள்ளி   180
கூச்சம் இடுப்பதன் குறிக்கீழ் கூட்ட
உணர்ச்சியைக் கால்களின் இடையே ஊட்ட;
தானே விரைந்து தனிச்செல விடுவாய்
விடுவாய் விரைந்து விரைந் தேகிடவே
தேடியே வந்து செலுமா னிடன்முன்
வேட்டைக்கு வந்தோன் வியனடிச் சுவட்டில்.

வழிச்சுவ டதிலே வருகையில் வேட்டை
வேட்டையைக் கொணர்வாய் வீரனின் முன்னே
உனதிரு கரங்களும் உறமுன் வைத்து
வழிநடத் துகநீ வருமிரு பக்கமும்     190
வேட்டைஎன் னிடத்து விலகா திருக்க
அகலா திருக்க அதுவழித் தடத்தே
வேட்டைஎன் னிடத்து விலகிப் போயிடில்
அகன்று வழித்தடம் அப்பால் போனால்
வழிநடத் துகஅதன் வன்செவி பற்றி
கொம்பைப் பற்றிக் கொணர்வாய் வழிக்கு.

குறுக்கே மரத்துக் குற்றியொன் றிருந்தால்
அதனைப் பாதையின் அக்கரைத் தள்ளுக
பாதையின் நடுவண் பன்மர மிருந்தால்
இரண்டாய் உடைத்து எறிவாய் அவற்றை.   200

உனக்குக் குறுக்கே வேலியொன் றுற்றால்
வேலியை மோதி மிதித்தழித் திடுவாய்
தம்பம் ஐந்து தவிர்த்துய ரத்தே
தம்பம் ஏழைத் தவிர்த்தக லத்தில்.

ஒருநதி உன்னெதிர் ஓடியே வந்தால்
பாதையின் குறுக்கே படர்ந்தால் சிறுநதி
பட்டினா லேயொரு பாலமங் கமைத்து
சிவப்பு துணியினால் அமைப்பாய் படிகள்
வெளிக்கால் வாயால் வேட்டையைக் கொணர்ந்து
வருவாய் இழுத்து மலிநீர்க் குறுக்காய்    210
ஓடும் வடநாட் டுயர்நதி யூடாய்
நுரைத்தநீர் வீழ்ச்சிப் பரப்பதன் மேலாய்.

தப்பியோ வீட்டின் தகமைத் தலைவா!
தப்பியோ வீட்டின் தண்ணளித் தலைவி!
கான்நரைத் தாடிக் கனமுது மனிதா!
கானக மதனின் கனமன் னவனே!
*மிமெர்க்கியே, காட்டின் விந்தைத் தலைவியே!
அன்புடை வனத்தின் ஆடலின் காவலீர்!
நீல்உடை அணிந்த சோலையின் மங்கையே!
சிவப்புக்கா லுறையணி சதுப்புலத் தலைவியே!   220
வருவாய் இப்போ வழங்கிடப் பொன்னே
வருவாய் இப்போ வழங்கிட வெள்ளி
சந்திரன் வயதுகொள் தங்கமென் னிடமுள
சூரியன் வயதுகொள் சுத்தவெள் ளியுமுள
பெரும்போர் வெற்றியால் பெற்றவை அவைகள்
வீரரை மோதிநான் வென்றவை அவைகள்;
வெறுமனே பையில் மிகக்கா சுள்ளன
கிடக்கின் றனவீண் பணப்பைக் காசுகள்
அரும்பொ(ன்)னாய் மாற்ற ஆருமில் லாஇடம்
எழில்வெள்ளி மாற்ற எவருமில் லாவிடம். "   230

குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்
சாலநீள் நேரம் சறுக்கிச் சென்றனன்
பற்றைகள் வழியே பாடினன் பாடல்கள்
பாடல்கள் மூன்று பாடினான் புதரில்
காட்டின் தலைவியை கனமகிழ் வூட்டினான்
அங்ஙனம் செய்தான் அடர்கான் தலைவனை
அரிவையெல் லோரையும் அவன்களிப் பூட்டினான்
தப்பியோ மகளிரைத் தன்வச மாக்கினான்.

அவர்கள் துரத்தினர் அதனை விரட்டினர்
வன்பேய் எருதை மறைவிடத் திருந்து   240
தப்பியோ குன்றின் பின்புற மிருந்து
காட்டெருத் ததன்உட் கோட்டையி லிருந்து
தேடிவந் திட்ட திண்மா னுடன்முன்
மந்திரப் பாடகன் வசதியாய்ப் பிடிக்க.

குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
சருக்குக் கண்ணியைச் சுழற்றி எறிந்தான்
பிசாச எருத்தின் பெருந்தோள் மீது
ஒட்டகம் போன்று உறும்அதன் கழுத்தில்
அதுவே அவனை உதையா திருக்க
அதன்முது கதனை அவன்தட வுகையில்.   250

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினான் அவனே:
"வனத்தின் தலைவ, நிலத்ததி பதியே!
அழகொளிர் பவனே **அம்பசும் புற்புதர்!
கவின்மிய லிக்கியே, காட்டின் தலைவியே!
அருவனத் தாடலின் அன்புக் காவல!
இப்போ வருவீர், எழிற்பொன் பெறற்கு!
வெள்ளியைத் தெரிய விரைந்திங் குறுக
விரிப்பீர் நிலத்தில் மிகநும் துணியை
சிறப்புறும் துணியைப் பரப்புக நிலத்தில்    260
மின்னி ஒளிரும் பொன்னதன் கீழே
பிரகாச முடைய பெருவெள் ளியின்கீழ்
நிலத்திலே அவற்றை நீடுபோ டாமல்
அழுக்கிலே அவற்றை அறச் சிந்தாமல்."

அதன்பின் வடக்கே அவன்பய ணித்தான்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தான்:
"பேய்எரு துக்காய்ப் போனேன் சறுக்கி
பிசாசின் வயலின் பெருவெளி யிருந்து
வயோதிப மாதுஉன் மகளைத் தருவாய்
இளம்மணப் பெண்ணை எனக்குத் தருவாய்!"   270

லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
அதற்கு இவ்விதம் அளித்தாள் மறுமொழி:
"நான்என் மகளை நல்குவேன் உனக்கு
இளம்மணப் பெண்ணை ஈவேன் உனக்கு
வீரிய மொடுக்கிய விறல்விலங் கடக்கினால்
பழுப்புப் பேய்நிறப் பரியினைப் பிடித்தால்
பிசாசின் நுரைவாய்ப் புரவியைப் பிடித்தால்
பிசாசின் புல்வெளிப் பெருநிலத் தப்பால்."

குறும்பன் லெம்மின் கைனனப் போது
கனகத் தமைந்த கடிவ(஡)ள மெடுத்தான்   280
வெள்ளிவாய்ப் பட்டியை விறற்கரம் எடுத்தான்
புரவியைத் தேடிப் புறப்பட் டேகினான்
புற்சடைப் புரவி போனான் நாடி
பிசாசின் புல்வெளிப் பெருநிலத் தப்பால்.

புறப்பட் டுஅவன் போனான் விரைவாய்
தன்பய ணத்தைச் சரியாய்த் தொடர்ந்தான்
புணர்ஒரு பசுமைப் புல்வெளி நோக்கி
புனிதம் நிறைந்தவோர் புல்வயல் வெளிக்கு
தேடிப் பார்த்தான் திகழ்பரி ஆங்கு
செவிமடுத் திட்டான் செறிசடைப் பரிக்கு   290
இடுப்புப் பட்டியில் அடக்குவார் இருந்தது
குதிரையின் கடிவ(஡)ளம் கொழுந்தோள் இருந்தது.

ஒருநாள் தேடினான் மறுநாள் தேடினான்
மூன்றாம் நாளும் முனைந்தவன் தேடினான்
பெருமலை ஒன்றிலே பின்அவன் ஏறினான்
பாரிய பாறைப் பகுதிமேல் ஏறினான்
பார்வையைக் கீழ்த்திசை படரச் செலுத்தினான்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினான்
மணல்மேற் கண்டவன் வலியஅப் புரவி
தாருவின் நடுபுற் சடையது நின்றது    300
அதன்உரோ மத்தினால் அனல்பறந் திட்டது
புற்சடை யிருந்திரும் புகைஎழுந் திட்டது.

லெம்மின் கைனன் இயம்பினன் இவ்விதம்:
"ஓ,மனு முதல்வனே, உயர்மா தெய்வமே!
மானிட முதல்வனே, மழைமுகிற் காவலா!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே!

விண்ணுல கத்தின் வியன்வாய் திறப்பாய்
அகல்வான் சாளரம் அனைத்தையும் திறப்பாய்
இரும்புக் கற்களை இனிக்கீழ்ப் பொழிவாய்
கிளர்பனித் துண்டுகள் கீழே வீழ்த்துவாய்   310
நல்ல குதிரையின் நளிர்சடை மயிர்மேல்
பிசாசக் குதிரையின் பெருங்கன லுடல்மேல்."

மானிட முதல்வன்அம் மாவுயர் கர்த்தன்
மழைமுகில் களின்மேல் வாழ்ந்திடும் இறைவன்
கந்தை கந்தையாய்க் கனன்றுவிண் கிழித்தார்
இரண்டாய்ப் பிளந்தார் இகல்விண் மூடியை
பனிக்கட் டியொடு பனிக்கூழ் பொழிந்தார்
இரும்புக் கட்டியாய் எழும்மழை பொழிந்தார்
குதிரைத் தலையிலும் சிறியதக் கட்டிகள்
மனிதத் தலையிலும் பெரியதக் கட்டிகள்   320
நல்ல குதிரையின் நளிர்சடை மயிர்மேல்
பிசாசக் குதிரையின் பெருங்கன லுடல்மேல்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அதனைப் பார்க்க அங்கே சென்றான்
அவதா னிக்க அருகில் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பிசாச தேசத்துப் பேரெழிற் புரவியே!
வரையிடை வாழும் நுரைவாய்ப் பரியே!
உன்பொன் வாயை உடன்நீ தருவாய்
வெள்ளித் தலையை விரும்பித் திணிப்பாய்   330
மணிப்பொன் வனைந்த **வளையத் துள்ளே
வெள்ளியில் அமைந்த வியன்மணி **நடுவே!
கொடுமையாய் உன்னைக் கொண்டுநான் நடத்தேன்
கடுமையாய்ச் சவாரி கடுகிநான் செய்யேன்
சிறிய தூரமே சவாரிநான் செய்வேன்
அதுவும் சிறிய அதர்களின் வழியாய்
வடக்கின் ஆங்கே வசிப்பிடங் களுக்கு
ஆணவம் கொண்ட மாமியார் அருகே;
கயிற்றுப் பட்டியைக் கடிது(ன்)னில் வீசின்
விசையதைக் கொண்டு விரைந்துனைச் செலுத்தின்   340
பட்டினால் அமைந்த பட்டியால் வீசுவேன்
செலுத்துவேன் துணியால் செய்தமென் விசையால்."

பிசாசின் பழுப்புப் பெருநிறக் குதிரை
பிசாசின் நுரைவாய்ப் பிடர்மயிர்க் குதிரை
பொன்வாய் உள்ளே புகத்திணித் திட்டது
வெள்ளியி லான சென்னியும் வைத்தது
தங்கத் தியைந்த தளைவளை யத்துள்
வெள்ளியில் செய்த வியன்மணி நடுவே.

குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்   
வீரிய மடக்கிய விறற்பரி கட்டி    350
கனகநல் வாய்க்குக் கடிவ(஡)ள மிட்டு
பிடிவார் வெள்ளிப் பெருந்தலை கட்டி
நல்ல விலங்கதன் நடுமுது கேறி
எரியுடற் குதிரையில் இனிதே யிருந்தான்.

சவுக்கால் ஓங்கிச் சாடினான் பரியை
அலரித் தடியால் அடித்தான் ஓங்கி
சிறிது தூரம் செய்தான் பயணம்
பலமலை யூடாய்ப் பயணம் செய்து
வந்தான் மலையின் வடக்குப் பக்கம்
உயர்பனி மழைவீழ் உச்சியின் மேலே   360
வடபால் நிலத்து வசிப்பிடங் களுக்கு
முற்றத் திருந்து முன்உட் சென்றான்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தான்
வடபால் நிலத்தே வந்து சேர்ந்ததும்:
"கடிவ(஡)ள மிட்டேன் கனநல மடிபரி
பிடித்துக் கட்டினேன் பிசாசின் குதிரை
பசுமை மிகுமொரு படர்புல் வெளியில்
புனித முறுமொரு புல்வயல் வெளியில்
பிசாசெரு துக்கும் பின்நான் சறுக்கினேன்
பிசாசின் வயல்களின் பெருவெளி யிருந்து   370
வயோதிப மாதுன் மகளைத் தருவாய்
இளம்மணப் பெண்ணை எனக்குத் தருவாய்!"

லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"எனது மகளை ஈவேன் உனக்கு
இளமை மணப் பெண்ணை ஈவேன் உனக்கு
ஆற்றிலே இருக்கும் **அன்னமஃ தெய்தால்
அருவியில் வாழும் பறவையைச் சுட்டால்
அங்கே துவோனியின் அடர்கரு நதியில்
புனித நதியின் புணர்நீர்ச் சுழியில்    380
எய்தலும் வேண்டும் எழும்ஒரே முயற்சியில்
எய்தலும் வேண்டும் இனிதொரே அம்பால்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
அன்னம் ஒலிசெயும் அகலிடம் சென்றான்
கழுத்துநீள் பறவையைக் காணுதற் காக
துவோனியின் கறுப்புத் தொடர்நிற நதியில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில்.

அவன் தன்வழியே அசைந்து சென்றனன்
தன்வழி யேஅவன் தனிநடை கொண்டனன்   390
தொடர்தாங் கிருந்த துவோனியின் நதிக்கு
புனித நதியின் புகுநீர்ச் சுழிக்கு
குறுக்கு வில்லைக் கொழுந்தோள் தாங்கி
அம்புக் கூட்டை அவன்முது கேந்தி.

நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
வடநிலக் குருடன் வயோதிப மனிதன்
துவோனியின் நதியின் தொடரயல் நின்றான்
புனித நதியின் புகுநீர்ச் சுழியில்;
**பார்த்தனன் அங்கு, பார்த்தனன் திரும்பி,
லெம்மின் கைனன் நேர்வர வாங்கே.    400

பலநாள் சென்று ஒருநாள் வந்ததும்
குறும்பன் லெம்மின் கைனனைக் கண்டான்
கண்டான் வருவதைக் கடுகிவந் தணைவதை
அந்தத் துவோனியின் அருநதிக் காங்கே
பயங்கர மான பக்கநீர் வீழ்ச்சி
புனிதம் மிக்க புணர்நீர்ச் சுழிக்கு.

நீரில் இருந்தொரு நீர்ப்பாம் பெடுத்தான்
**நீர்க்குழல் போன்றதை நெடுந்திரை யிருந்து
ஏற்றினன் மனிதனின் இதயத் தூடாய்
லெம்மின் கைனனின் ஈரலின் ஊடாய்    410
இடதுபக் கத்துக் கக்கத் தூடாய்
பலமிகு வலதுதோட் பட்டையி னுள்ளே.

குறும்பன் லெம்மின் கைனனப் போது
வாதை கொடிதாய் வருதல் உணர்ந்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அதுவே நான்புரி அரும்பிழை வேலை
கேட்க ஞாபகம் கெட்டுப் போனது
எனது தாயிடம் எனைச்சுமந் தவளிடம்
மந்திர வேலையின் மற்றிரு சொற்களை
அதிகமாய் மூன்றுசொல் அங்ஙன மிருக்கும்   420
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது
இடுக்கண் நிறைந்த இத்தகை நாட்களில்
நீர்அராக் கொடுமையை நிசம்நான் அறிந்திலன்
நீர்க்குழல் போன்றதன் தீண்டலும் அறிந்திலன்.

எனதுமா தாவே, எனைச்சுமந் தவளே!
துன்பந் தாங்கித் தோள்வளர்த் தவளே!
தெரியுமா உனக்குத் தெரிந்திட முடியுமா,
அபாக்கிய மானஉன் அருமகன் எங்கென?
நிச்சயம் தெரிந்தால் நீயிவண் வருவாய்
விரைந்தெனக் குதவ விரும்பியிங் குறுவாய்   430
அபாக்கிய மகனை அகற்றிட வருவாய்
இம்மர ணத்தின் எதிர்வழி யிருந்து
உறுமிள வயதின் உறக்கத் திருந்து
**அரத்தச் செழிப்புடன் அழிவினி லிருந்து.

அதன்பின் கண்ணிலா அகல்வட நாட்டவன்
நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
குறும்பன் லெம்மின் கைனனைச் செலுத்தினன்
வீழ்த்தினன் கலேவலா வியன்குல மைந்தனை
துவோனியின் கறுப்பு தொடர்நிற நதியில்
நிலைகொடி தான நீர்ச்சுழி தன்னில்;    440
குறும்பன் லெம்மின் கைனன் சென்றான்
ஆர்த்திரை கின்ற அந்நீர் வீழ்ச்சியுள்
ஒளிர்ந்து பாய்ந்திடும் நளிர்அரு வியினுள்
துவோன லாவின் தொல்வசிப் பிடத்தே.

இரத்தக் கறையுள *மரணத் தின்மகன்
மனிதனை ஓங்கி வாளால் அறைந்தான்
குறுவாள் கொண்டே குத்தி அவனை
ஒளிர்ந்தே தெறிக்க ஓங்கி அடித்து
ஐந்து பங்குகள் ஆக்கி மனிதனை
அட்ட துண்டுகள் ஆக்கியே அவனை    450
துவோனலா ஆற்றில் தூக்கி யெறிந்தான்
மரண உலகின் வல்லாற் றெறிந்தான்;
"என்றுமே என்றும் இருப்பாய் ஆங்கே
குறுக்கு வில்லுடன் கூரிய அம்புடன்
ஆற்றிலே அன்னம் அதனையெய் தவனாய்
கரைநீர்ப் பறவை கடிதெய் தவனாய்."
அதுவே லெம்மின் கைனனின் அழிவு
நற்சுறு சுறுப்பு நாயகன் மரணம்
துவோனியின் கறுப்புத் தொடர்நிற ஆற்றில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில்.    460



பாடல் 15 - லெம்மின்கைனன் உயிர்த்தெழுதல்  *



அடிகள் 1 - 62 : ஒருநாள் லெம்மின்கைனனின் வீட்டில் அவன் விட்டுச் சென்ற சீப்பிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்ட அவனுடைய தாய், லெம்மின்கைனனுக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்கிறாள்; அவள் வடநாட்டுக்கு விரைந்து சென்று வடநாட்டுத் தலைவியிடம் லெம்மின்கைனனுக்கு நிகழ்ந்தது என்ன என்று வினவுகிறாள்.

அடிகள் 63 - 194 : லெம்மின்கைனனைத் தான் அனுப்பிய செய்தியை வடநாட்டுத் தலைவியும், அவனுக்கு மரணம் சம்பவித்த விபரங்களைச் சூரியனும் கூறுகிறார்கள்.

அடிகள் 195 - 554 : லெம்மின்கைனனின் தாய் ஒரு நீண்ட குப்பை வாரியுடன் மரண நீர்வீழ்ச்சிக்குச் சென்று நீர்வீழ்ச்சியை வாரி அவனுடைய உடலின் துண்டுகள் அனைத்தையும் எடுத்து அவற்றை ஒன்று சேர்த்துத் தனது மந்திர சக்தியினால் உயிர்பிக்கிறாள்.

அடிகள் 555 - 650 : உயிர்த்தெழுந்த லெம்மின்கைனன் துவோனலா ஆற்றில் தான் இறந்த விபரங்களைக் கூறித் தாயுடன் வீட்டுக்குத் திரும்புகின்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறும்பன் லெம்மின் கைனனின் அன்னை
சிந்தனை வீட்டில்எந் நேரமும் செய்தாள்:
"எங்கே ஏகினன் லெம்மின் கைனன்?
எங்ஙனம் மறைந்தான் தூர நெஞ்சினன்?
அவனின் வரவையிட் டறிந்திலேன் எதுவும்
பாரகம் சுற்றும் பயணத் திருந்து!"

அன்னைதுர்ப் பாக்கியவள் அறியவு மில்லை
அவனைச் சுமந்தவள் உணரவு மில்லை
தன்தசை நடமிடும் தகவலைப் பற்றி
இரத்தத்தின் இரத்த இயக்கம் பற்றி,    10
பசுமை செறிமலைப் பக்கஏ கினனோ!
புற்றரை மேட்டு புறநிலத் தினிலோ!
அல்லது கடற்பரப் பவனின் பயணமோ!
அடர்நுரை வீசும் அலைகளின் மீதோ!
அல்லதே தேனும் அரியபோர் தனிலோ!

அல்லதே தேதோ அச்சுறல் யுத்தமோ!
இயல்கணைக் காலில் இரத்தம் வடியுமோ!
அல்லது முழங்கால் ஆனதோ செந்நிறம்!

குயிலிக்கி என்பாள் கொழும்எழுல் மங்கை
பார்த்தனள் அங்கு, பார்த்தனள் திரும்பி,   20
குறும்பன் லெம்மின் கைனனின் வீட்டில்
தூர நெஞ்சினன் தோட்டத்து வெளியில்
பார்த்தாள் சீப்பைப் படர்மா லையிலே
தூரிகை அதையும் காலையில் பார்த்தாள்;
போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
சீப்பினி லிருந்து சிந்திய(து) இரத்தம்
தூரிகை அதனில் துளிர்த்தது குருதி.

குயிலிக்கி என்பாள் கொழும்எழுல் மங்கை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:  30
"என்னிட மிருந்து என்னவன் ஏகினான்
அழகிய தூர நெஞ்சினன் அகன்றான்
வாழ்விட மின்றி வளர்பய ணத்தே
முன்ன றியாத வன்பா தைகளில்
சீப்பினி லிருந்து சிந்துதே குருதி
தூரிகை அதனில் துளிர்க்கிற திரத்தம்!"
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
சீப்பினை வந்து நோக்கினள் அவளே
கவலை யடைந்தாள் கண்ணீர் விட்டாள்:
"ஐயகோ, அதிர்ஷ்டம் அற்றஇந் நாளில்நான்   40
எனது காலத்தில் இன்னல் அடைந்தவள்
இப்போ பாக்கிய மில்லா என்மகன்
பாக்கிய மற்றஎன் பாவவம் சத்தினன்
நலமிலாத் தீயதாம் நாட்களைப் பெற்றனன்
ஈடிலாப் புதல்வனைச் சீரழி வடுத்தது
குறும்பன் லெம்மின் கைனனின் வீழ்ச்சி
சீப்பினி லிருந்து சிந்துதே குருதி
தூரிகை அதனில் துளிர்க்கிற திரத்தம்!"

கைத்தலத் தெடுத்தாள் கடிதுதன் உடைகளை
கரங்களில் பற்றினாள் கடிதுதன் துணிகளை   50
மிகநீள் தூரம் விரைந்தே ஓடினாள்
ஓட்டமா யோடி உடன்விரைந் தேகினாள்;
அகல்கையில் மலையெலாம் அதிர்ந்தொலி யெழுப்பின
தாழ்நிலம் உயரந்தது மேல்நிலம் தாழ்ந்தது
மேட்டு நிலங்கள் மிகக்கீழ்ப் போயின
தாழ்ந்த நிலங்கள் தடித்துமே லுயர்ந்தன.

வடக்கு நாட்டின் வசிப்பிடம் வந்தாள்
வியன்மகன் பற்றிய விபரம் கேட்டாள்
இவ்விதம் அவளே இயம்பிக் கேட்டனள்:
"ஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே!   60
லெம்மின் கைனனை எங்கே அனுப்பினை?
எனதுநன் மகனை எங்கே அனுப்பினை?"

லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
அதற்கு இவ்விதம் அளித்தாள் மறுமொழி:
"உன்மகன் பற்றி ஒன்றுமே அறியேன்
மற்றெங் கவன்போய் மறைந்தான் என்பதை;
அணிபரி வண்டியில் அவனை அமர்த்தினேன்
பொருகொடும் குதிரை பூட்டிய வண்டியில்,
உருகும் பனிமழை யுற்றாழ்ந் தனனோ?
உறைபனிக் கடலில் இறுகி விட்டானோ?   70
ஓநாய் வாயில் உறவீழ்ந் தானோ?
அல்லது கரடியின் அகல்கொடு வாயிலோ?

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"நிச்சயம் உன்சொல் நேரிய பொய்யே
ஓநாய் எனது உறவை உண்ணாது
லெம்மின் கைனனை நிசம்தொடா கரடி
வெறியோ நாய்களை விரலால் அழிப்பான்
கரடியைத் தனது கைகளால் ஒழிப்பான்;
உண்மையில் நீயும் உரையா விட்டால்
லெம்மின் கைனனை நீபோக் கிடத்தை   80
காண்புதுக் களஞ்சியக் கதவை நொருக்குவேன்
சம்போ இணைப்பைச் சாடி உடைப்பேன்."

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"உண்ண அவனுக் குணவு கொடுத்தேன்
அருந்தப் பானம் அவனுக் களித்தேன்
சோரும் வரையுப சாரம் செய்தேன்
இருத்தினேன் தோணி இயல்பின் புறத்தடம்
அதிர்நீர் வீழ்ச்சியால் அவனை அனுப்பினேன்
ஆயினும் எனக்கு அதுபுரிந் திலது
எளியவன் எங்கே ஏகினான் என்று,    90
நெடுநுரை பாயும் நீர்வீழ்ச் சியிலோ
அல்லது சுழலும் அருவியில் தானோ?"

கூறினள் லெம்மின் கைனன் அன்னை:
"நிச்சயம் உன்சொல் நேரிய பொய்யே
சரியாய் இப்போ சாற்றுவாய் உண்மை
இனிப்பொய் புகல்வது இதுவே கடைசி
லெம்மின் கைனனை எங்கே அனுப்பினை
மறைத்தது எங்கே கலேவலா மனிதனை
அல்லது உன்னை அணுகும் இறப்பு
உடனே மரணம் உன்னைச் சேரும்."    100

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"உனக்கு உண்மையை உரைக்கலாம் இப்போ
எருத்தினைத் தேடிச் சறுக்குதற் கனுப்பினேன்
மிகுவலி **விலங்கின் வேட்டைக் கனுப்பினேன்
வீரிய மொடுக்கிய விறற்பரிக் கனுப்பினேன்
புரவியை ஏர்க்கால் பூட்டிடக் கூறினேன்
அன்னத்தைத் தேட அவனை அனுப்பினேன்
போக்கினேன் புனிதப் புள்வேட் டைக்கு
இப்போ விளங்கவே இல்லை எனக்கு
எங்ஙனம் இயைந்தது இவ்வழி வென்று   110
எதிர்ப்பு வந்தது எவ்விதம் என்று
அவன்மீண் டிடுவதை அறிந்ததே யில்லை
மணமகள் ஒருத்தியை வரிப்பதற் காக
எனதுபெண் அவளை ஏற்பதற் காக."

மறைந்த மைந்தனை மாதா தேடினள்
இழந்த பையனை ஈன்றோள் தேடினள்
ஓடினாள் சேற்றிலே ஓநாய் போல
கரடிபோல் தீய்ந்த காட்டிலே திரிந்தாள்
**நீர்நாய் போல நீரில் நீந்தினாள்
நிலத்திலே அலைந்தாள் **வளைக்கர டியைப்போல்  120
**குளவிபோல் வந்தாள் குரைகடல் முனையில்
ஏரிக் கரைகளில் ஏகினாள் முயல்போல்;
பாறைக் கற்களைப் பக்கம் தள்ளினாள்
மரக்குற் றிகளை மண்கீழ் வீழ்த்தினாள்
தெருவின் கரைகளில் சேர்த்தாள் சுள்ளிகள்
வழிகளி லிருந்து கிளைகளை ஒதுக்கினாள்.

தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
மைந்தனைப் பற்றி மரங்களைக் கேட்டாள்
தொலைந்தவ னுக்காய்த் துயர்மிகத் கொண்டாள்   130
தருவொன் றுரைத்தது தாருநெட் டுயிர்த்தது
சிந்துர மரமும் செம்மையாய்ச் சொன்னது:
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
பெருந்துண் டுகளாய்ப் பிளக்கப் படற்கு
விறகுக ளாக வெட்டப் படற்கு
சூளையில் கிடந்து தொடர்தழி தற்கு
அல்லது வெட்டி அடுப்பெரிப் பதற்கு."    140

தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
ஒருசிறு பாதையை உடன்வந் தடைந்தாள்
அந்தப் பாதைக் கவள்சிரம் தாழ்த்தினாள்:
"ஓ,சிறு பாதையே, உயர்இறை படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா,
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை,
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"

பாதை அவளிடம் பாங்காய்ச் சொன்னது
அவளுடன் பேசி அதுவிடை யிறுத்தது:    150
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
ஒவ்வொரு நாயும் ஓடுதற் காக
வன்பரிச் சவாரி மனிதர்கள் செய்ய
கடினகா லணிகள் கவினுற நடக்க
ஒவ்வொரு குதியும் உராய்ந்துதேய்ப் பதற்காய்."

தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்   160
வளர்சந் திரனை வழியிலே கண்டாள்
தாழ்த்தினாள் தலையைச் சந்திரனுக்கு:
"எழிற்பொன் நிலவே, இறைவன் படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"

எழிற்பொன் நிலவு இறைவன் படைப்பு
இவ்விதம் செவ்விதாய் இறுத்தது விடையே:
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை   170
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
பனிஇராப் பயணம் தனியே செய்கிறேன்
உயர்பனிப் புகாரிலும் ஒளியைத் தருகிறேன்
காவல் குளிர்கா லத்திலும் செய்கிறேன்
கோடையில் தேய்ந்து குறுகிப் போகிறேன்."

தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
வரும்சூ ரியனை வழியிலே கண்டாள்
செங்கதி ரோற்குச் சிரசைத் தாழ்த்தினாள்:    180
"ஓ,நீ கதிரே, உயர்இறைப் படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"

செங்கதி ரோற்குத் தெரியும் என்னவோ
பரிதிஇப் போது பதிலாய்ச் சொன்னது:
"பாங்குறும் உன்மகன் பாக்கிய மற்றவன்
தொலைந்தே போனான் சோர்கொலை யுண்டான்
துவோனியின் கறுப்புத் தொடர்நிற நதியில்
அகலமாய் வுலகில் அழிவிலா நீரில்   190
பாய்நீர் வீழ்ச்சியில் பயணம் சென்றனன்
ஓடும் அருவியில் உள்ஆழ்ந் தேகினன்
அங்கே துவோனி ஆற்றின் அடியில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில்."

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
அவள்தான் அழுது அங்கணீர் உகுத்தாள்
கொல்லன் வேலைக் கொள்களம் சென்றாள்:
"ஓ,நற் கொல்ல உயர்இல் மரின!
முன்னரும் நேற்றும் முனைந்தே செய்தனை
இன்றைக்கும் ஒன்று இயற்றுவாய் அங்ஙனம்   200
செப்புப் பிடியுடன் செய்வாய் வாரியை
முட்களை அதற்கு மூட்டுவாய் இரும்பில்
அதன்முன் நீளம் **அறுநூ றடியாம்
அதன்கைப் பிடியோ **ஐந்நூ றாறடி."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
செப்பிலே பிடியுடன் செய்தான் வாரியை
அதற்கு முட்களை அமைத்தான் இரும்பி
அதன்முன் நீளம் அறுநூ றடியாம்
அதன்கைப் பிடியோ ஐந்நூ றாறடி.    210

அவளே லெம்மின் கைனனின் அன்னை
வல்லிரும் பியைந்த வாரியைப் பெற்றாள்
துவோனலா ஆறு துரிதமாய்ப் போனாள்
வணங்கிக் கதிரினை வருமாறு இசைத்தாள்:
"ஓ,நீ கதிரே, உயர்இறைப் படைப்பே!
கர்த்தரின் படைப்பே, காலுமெம் ஒளியே!
ஒருகண நேரம் ஒளிர்வாய் மிகவே
இரண்டாம் வேளை எரிவாய் மங்கலாய்
மூன்றில் முழுமைச் சக்தியோ டொளிர்வாய்
தீய இனத்தைச் செலுத்துக துயிலில்    220
மாய்புவிச் சக்தியைத் தேய்ந்திடச் செய்வாய்
துவோனியின் சக்தியைத் தூர்ந்திளைத் திடச்செய்."

அந்தக் கதிரவன் ஆண்டவன் படைப்பு
கர்த்தரின் படைப்பு கதிரோன் அப்போ
வளைந்த மிலாறு மரத்தை யடைந்தது
வளைந்த பூர்ச்ச மரக்கிளை யிருந்தது
ஒருகண நேரம் ஒளிர்ந்தது மிகவும்
இரண்டாம் வேளை எரிந்தது மங்கலாய்
மூன்றிலே முழுமைச் சக்தியோ டொளிர்ந்தது
தீய இனத்தைச் செலுத்திய துறங்க    230
மாய்புவிச் சக்தியைத் தேய்ந்திடச் செய்தது
உளஇள மனிதர்கள் உறங்கினர் வாளுடன்
காண்முது மனிதர்கள் கைத்தடி தம்முடன்
இகல்நடு வயதினர் ஈட்டிகள் தம்முடன்
அதுபின் உயரத் தாங்கே சென்றது
உயரச் சுவர்க்கத் துச்சி அடைந்தது
இதன்முன் இருந்த இடத்தை அடைந்தது
தனது பழைய தங்கிட மடைந்தது.

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
வல்லிரும் பியைந்த வாரியை எடுத்தாள்   240
மைந்தனைத் தேடி வாரிட லானாள்
ஆரவா ரிக்கும் அந்நீர் வீழ்ச்சியுள்
பாய்ந்து பெருகிப் படர்அரு வியினுள்
வாரிய போதிலும் வந்தவன் கிடைத்திலன்.

மேலும் நீரதன் ஆழத் திறங்கினாள்
அவ்வழி சென்றனள் ஆழியின் வரையும்
காலுறை வரைக்கும் ஆழத் தேகினள்
இடுப்பு வரைக்கும் இறங்கினள் நீரில்.

மைந்தனைத் தேடி வாரிட லானாள்
துவோனலா ஆற்றுத் தொடர்நீள் வழியினில்   250
வாரித் தேடினாள் வளர்அரு வியினுள்
ஒருமுறை வாரினாள் இருமுறை வாரினாள்
மைந்தனின் ஒருமேற் சட்டைவந் திட்டது
சட்டை வந்ததால் தாங்கொணா மனத்துயர்
வாரியால் மீண்டும் வாரினாள் ஒருமுறை
கிடைத்தது காலுறை கிடைத்தது தொப்பியும்
காலுறை கண்டதும் கடுந்துயர் வந்தது
தொப்பியைக் கண்டதும் துயர்மனத் துயர்ந்தது.

மேலும் இறங்கினாள் விரியும் அருவியுள்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கிலே    260
ஒருமுறை வாரினாள் உறுநீள் நீரினுள்
இரண்டாம் முறையும் எதிர்த்தே நீரினை
மூன்றாம் முறையும் முழுநீர் அடியிலே;
இப்போ திந்த இயல்மூன் றாம்முறை
உடல்தசைத் தொகுப்பு ஒன்றுமுன் வந்தது
இரும்பு வாரியின் இகல்முனை யினிலே.

அதுவுடல் தசைத்தொகுப் பானதே யல்ல
குறும்பன் லெம்மின் கைனன்அஃ தப்பா
அதுவே அழகிய தூர நெஞ்சினன்
வாரியின் முட்களில் வந்தகப் பட்டனன்   270
கொள்மோ திரவிரல் கொளுவி இருந்தனன்
வல்இடக் கால்விரல் மாட்டி இருந்தனன்.

குறும்பன் லெம்மின் கைனன் எழுந்தான்
கலேவாவின் மைந்தன் கரைமேல் வந்தான்
சேர்ந்தே செப்பினால் செய்த வாரியில்
வந்தான் தெளிந்த வளர்நீர் மேற்புறம்
ஆயினும் சிறிது அங்கிலா திருந்தது
தனதுகை ஒன்று தலையிலே பாதி
இன்னும் சிறுசிறு இணைந்த பகுதிகள்
அதன்மேல் அவனது ஆவியும் இல்லை.   280

அப்போ தவனது அன்னை எண்ணினாள்
அவளே அழுது அரற்றினள் இவ்விதம்:
"இனிஇதில் இருந்தொரு மனிதன் எழுவானா
உருவா குவனா ஒருபுது வீரன்?"

**அண்டங் காகமொன் றதனைக் கேட்டது
அதுஇவ் விதமாய் அளித்தது ஓர் பதில்:
"உட்சென் றவர்களில் ஒருமனி தருமிலர்
ஒன்றும்வந் தவைகளால் உருப்படல் இல்லை
கண்களை வெண்மீன் கடித்தயின் றிட்டன
கோலாச்சி மீன்கள் தோள்களைப் பிளந்தன   290
**வாரியுள் மனிதனை ஏகவே விடுவாய்
துவோனலா ஆற்றில் துணிந்துதள் ளிடுவாய்
ஒரு**மீ னாயவன் உருவம் பெறலாம்
அல்லது திமிங்கல மாகவும் மாறலாம்."

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
தனயனை நீரில் தள்ளவு மில்லை
வாரினாள் நீரை மற்றொரு முறையே
செம்மையாய் செப்பால் செய்தவா ரியினால்
துவோனலா ஆற்றுத் தொல்நீள் வழியினில்
வாரினாள் நீளமாய் வாரினாள் குறுக்காய்   300
தனிக்கை கிடைத்தது தலையும் கிடைத்தது
பருமுது கெலும்பின் பாதியும் கிடைத்தது
மார்பு எலும்பின் மற்றொரு பாதியும்
வேறுபல் துண்டுகள் மீண்டே வந்தன;
மகனைச் சேர்த்தனள் மற்றிவற் றிருந்து
குறும்பன் லெம்மின் கைனனை ஆக்கினள்.

தசையை எடுத்துத் தசையோ டிணைத்தனள்
எலும்பை எடுத்து எலும்பொடு சேர்த்தனள்
உறுப்புகள் அனைத்தையும் ஒன்றாய்ப் பொருத்தினள்
நரம்பை எடுத்து நரம்பொடு வைத்தனள்.   310

உளநரம் பனைத்தையும் ஒன்றாய்க் கட்டி
நரம்பு முனைகளை நனிதைத் திணைத்து
தைத்த நுல்களைத் தான்பார்த் துரைத்தாள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்:
"அமைநரம் புகளின் அழகிய பெண்ணே!
நரம்பு மகளே, நலலெழில் நங்கையே!
நேர்நரம் பிணைத்து நெசவுசெய் மகளே!
கவின்நிறைந் திட்ட கைத்தறி யுடனே
கனசெப் பியன்ற கைத்தறித் தண்டுடன்
தனிஇரும் பியைந்த சக்கரத் துடனே,    320
தேவையாம் நேரம் தெரிந் கெழுக
கூவி யழைக்கையில் குறைநீக் கிடவா
உனது கரங்களில் ஒருங்கிணை நரம்புகள்
உனதுகை களிலே உறுப்பின் உருண்டைகள்
நரம்பினை இணைத்து நன்குகட் டுதற்காய்
நரம்பின் நுனிகளை நன்குதைப் பதற்காய்
திறந்து விரிந்து திகழ்ரண மீது
புறம்பிளந் துள்ள புண்களின் மீது.

இதுவும் போதா தின்னமு மென்றால்
வானிலே இருக்கிறாள் வனிதை யொருத்தி   330
செப்பினால் செய்த திகழ்பட கொன்றில்
உயர்செந் நிறத்து ஓடம் ஒன்றிலே;
வானத்தை விட்டு வருகநீ பெண்ணே!
சுவர்க்கத் திருந்து துணிந்துவா கன்னியே!
நரம்புகள் மீதுன் நற்பட கோட்டு
உறுப்புகள் மீது உடன்நீ நகர்ந்திடு
எலும்பின் இடையில் இணைந்தசைந் தேகு
உறுப்புள் உடைவின் ஊடாய்ச் செல்லு!

அவ்வவ் விடங்களில் அமைத்துவை நரம்பை
உறுசரி இடங்களில் ஒழுங்காய் வைப்பாய்   340
நரம்பில் பெரியதை நன்நேர் வைத்து
பிரதான நரம்பை பிடித்தெதிர் வைப்பாய்
இரட்டிப் பாய்நல் இகல்நரம் பமைப்பாய்
இணைப்பய் நரம்பின் இயைசிறு முனைகளை.

சிறிய ஊசியைத் தேர்ந்துபின் எடுத்து
பட்டினால் இயைந்த பதநூல் கோர்த்து
சிறந்த ஊசியால் செய்வாய் தையலை
தகரத் தூசியால் தையலைச் செய்வாய்
நரம்பின் முனைகளை நனியுறப் பின்னி
பட்டினால் செய்த பட்டியால் கட்டு.    350

இதுவும் போதா தின்னமு மென்றால்
எழில்வான் வாழும் இறைவா, நீரே,
வல்லநின் பரிகளை வண்டியில் பூட்டி
அரியநின் பரிகளை சரித்தயார் செய்வீர்
சிறந்தநின் வண்டியைச் செலுத்தி வருவீர்
எலும்பு நரம்புகள் என்பன ஊடாய்
ஒழுங்கு மாறிய ஊன்தசை ஊடாய்
நழுவி வழுக்கும் நரம்புகள் ஊடாய்;
எலும்புகள் அனைத்தையும் இணைப்பாய் தசைகளில்
நரம்பின் நுனியை நரம்பின் நுனியொடு   360
மிகும்எலும் புடைவில் வெள்ளியைப் பூசி
நரம்பின் வெடிப்பில் நற்பொன் பூசுவீர்.

தோற்சவ் வெங்கே தொய்நது கிழிந்ததோ
அங்கே தோற்சவ் வதைவளர்த் திடுவீர்
அமைநரம் பெங்கே அறுந்து போனதோ
அங்கே நரம்பை அமைவுறத் தைப்பீர்
எங்கே குருதி வெளியே றியதோ
அங்கே ஓட அதைவைத் திடுவீர்
ஒள்ளெலும் பெங்கே உடைந்து போனதோ
அங்கே எலும்பை அமைப்பீர் பொருத்தி   370
தசைகள் எங்கே தளர்ந்து போனதோ
அங்கே தசையை அமைப்பீர் இறுக
ஆசியோ டமைப்பீர் அவ்வவ் விடங்களில்
உரிய இடங்களில் ஒழுங்காய் வைப்பீர்
எலும்பை எலும்புடன் இயல்தசை தசையுடன்
உறுப்பை உறுப்போ டொன்றாய் வைப்பீர்."

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
ஆக்கினள் மனிதனை அமைத்தாள் வீரனை
உயிருடன் முன்னர் ஒருங்கிருந் ததுபோல
உயிருடன் முன்உள உருவத் தோடே.   380
தரிநரம் பனைத்தும் தைக்கப் பட்டன
நுனிநரம் பெல்லாம் நுட்பமோ டிணைந்தன
ஆயினும் மனிதன் வாய்கதைத் திலது
பிள்ளைக் கின்னும் பேச்சுவந் திலது.

பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"பூச்சு மருந்தைப் போய்எவண் பெறலாம்
எங்கே சிறிது தேன்துளி கிடைக்கும்
இளைத்தவன் மீது எடுத்துப் பூசிட
குறைநோ யாளியைக் குணமாக் கிடற்கு   390
மீண்டும் பேசத் தூண்டிட மனிதனை
பாடலை மீண்டும் பாடவைத் தற்கு?

ஓ,எம் வண்டே, உயர்ந்த பறவையே!
காட்டு மலர்களின் கவினுறும் அரசே!
தேனை இப்போ சென்றே கொணர்வாய்
தேனைஎங் கேனும் சென்றே பெறுவாய்
களிப்பு நிறைந்த காட்டு வெளிகளில்
தனிக்கவ னம்நிறை தப்பியோ இடங்களில்
பலவிதமான மலர்களின் இதழ்களில்
பலவித மான பனிப்புல் மடல்களில்    400
புலர்நோ யாளியின் பூச்சு மருந்தாய்
குறைநோ யாளியைக் குணமாக் கற்கு."

சுறுசுறுப் பான பறவையவ் வண்டு
பறந்து சென்று பயணம் செய்தது
களிப்பு நிறைந்த காட்டு வெளிகளில்
தனிக்கவ னம்நிறை தப்பியோ இடங்களில்
வன்மேல் நிலத்து மலர்களில் எடுத்தது
சிறியதன் நாவில் தேனைச் சேர்த்தது
ஆறு மலர்களின் அலர்நுனி யிருந்து
நூறு புற்களின் நுண்மட லிருந்து;   410
தேனளி மெதுவாய்த் திரும்பி வந்தது
விரைந்து பின்னர் பறந்து வந்தது
சிறகுகள் முழுதிலும் தேனே இருந்தது
இறக்கைகள் மீது இனியதேன் வடிந்தது.

லெம்மின் கைனனின் அன்னை அவளே
பூச்சு மருந்தினைப் பூக்கரத் தெடுத்து
இளைத்தவன் மீது இனிதே தடவினள்
நலமற் றோன்மேல் நன்றாய்ப் பூசினள்;
ஆயினும் குணமதால் ஆகிட வில்லை
மனிதன் வாயிலே வரவிலைச் சொல்லே.   420

பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்!
"வண்டே, எனது மன்சிறு பறவையே!
பறப்பாய் வேறு பக்கமாய் அங்கே
கடல்ஒன் பதினைக் கடந்தே செல்வாய்
செறிந்து பரந்தநீர்த் தீவுக் கேகுவாய்
தேன்நிறைந் திட்ட திருநிலம் செல்வாய்
*தூரியின் புதிய தொடர்வீ டடைவாய்
வணங்குதற் குரிய மாமே லோனவன்.
அங்கே சிறப்புறும் அரியதேன் உளது
அங்கே தரமிகும் அருமருந் துளது   430
நரம்புகட் கேற்ற நல்மருந் ததுவே
உறுப்புகட் குவந்த உயர்மருந் ததுவே;
அந்த மருந்தில் கொஞ்சம் கொணர்வாய்
மந்திர மருந்தை இங்கே கொணர்வாய்
காயப் பட்டவன் மேனிமேற் பூச
ஏற்பட்ட காயத் திடங்களில் தடவ."

கரியஅவ் வண்டு கனமிலா மனிதன்
பறந்தது மீண்டும் பயணம் செய்தது
கடல்கள் ஒன்பது கடந்து சென்றது
பத்தாம் கடலிலும் பாதியைத் தாண்டி;   440
ஒருநாள் பறந்தது இருநாள் பறந்தது
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகி
அதுஎப் புல்லிலும் அமரா தகன்று
எந்த இலையிலும் இருக்கா தகன்று
சென்றது பரந்த செறிநீர்த் தீவு
தேன்நிறைந் திட்ட திருநிலம் சென்றது
விரைந்து பாய்ந்தநீர் வீழ்ச்சியின் அருகில்
புனித அருவிநீர்ப் பொழிசுழிப் பக்கம்.

தேன்உரு வாகித் திகழ்ந்தஅவ் விடத்தில்
அரியபூச் செளடதம் ஆக்கிடப் பட்டது    450
சின்னஞ் சிறிய மண்சட் டிகளில்
அழகா யிருந்த கலயங் களிலே
அளவில் பெருவிரல் ஆம்கல யங்கள்
நுனிவிரல் மட்டுமே நுழையத் தக்கன.

கரியஅவ் வண்டு கனமிலா மனிதன்
செம்பூச் செளடதம் சிறிதே எடுத்தது
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
பறந்து வந்தது பண்ரீங் கரத்தொடு
பயணம் முடித்து பறந்து மீண்டது    460
ஆறுகிண் ணங்கள் அதன்கரத் திருந்தன
ஏழுகிண் ணங்கள் இருந்தன முதுகில்
அவைநிறைந் திருந்தன அரும்பூச் செளடதம்
நிகரில்நல் தைலம் நிறைய இருந்தது.

லெம்மின் கைனனின் அன்னை அவளே
பூசினாள் அந்தப் பூச்சு மருந்தை
வல்லஒன் பதுவகை மருந்தைப் பூசினாள்
தகும்எண் வகையாம் தைலம் பூசினாள்
ஆயினும் இன்னும் அடைந்திலன் குணமே
உண்டாக வில்லை ஒருபயன் தானும்.   470

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"கரிய வண்டே, காற்றின் பறவையே!
முனைந்தே பறப்பாய் மூன்றாம் முறையாங்(கு)
உயரும் விண்ணின் உலகம் செல்வாய்
ஒன்பது சுவர்க்கம் உடன்கடந் தேகுவை
அங்கே தேனும் அதிகமே யுண்டு
இதயம் நிறைந்த இனியதேன் உண்டு
தேவன் மந்திரம் செபித்த தேனது
இறைவன் புனிதன் இரட்சித்த தேனது   480
கர்த்தர் பிள்ளைகட் கதனைப் பூசினார்
கடும்தீச் சக்தியால் காயமேற் படுகையில்,
தேனிலே உனது சிறகினைத் தோய்ப்பாய்
நனைப்பாய் இறக்கை நனிகரை நறையில்
தேனைக் கொண்டு சிறகில் வருவாய்
வருவாய் ஆடையில் வளநறை சுமந்து
காயப் பட்டவன் மேனிமேற் பூச
ஏற்படு காயத் திடங்களில் தடவ."

அந்த வண்டு அன்புடைப் பறவை
இந்தச் சொற்களில் இயம்பிய ததுவே:   490
"அங்கே எப்படி அடியேன் செல்வது
நானோ இளைத்த நனிசிறு மனிதன்?"

"சுலபமாய்ப் போகலாம் துணிந்தாங் கேநீ
அழகுறப் பயணித் தங்கே யடையலாம்,
கதிரின் மேலே கலைநிலாக் கீழே
விண்ணில் இருக்கும் மீன்களின் நடுவே,
சிறகை அடித்து சென்றே ஒருநாள்
அடைவாய் திங்களின் அதியுயர் விளிம்பை!
அடுத்த நாளிலும் அதிவிரைந் தேகி
தாரகைக் கூட்டத் தனித்தோ ளடைவாய்,   500
உறுமூன் றாம்நாள் உயரப் பறந்து
ஏழு மீன்களின் எழில்முது கடைவாய்,
சிறியது அதன்பின் செய்யும் பயணம்
அடுத்து வருவது அதிகுறும் தூரம்
புனிதக் கடவுளின் பொலியும் வதிவிடம்
பேரின்ப மானவர் பெரிதுறை வீடு."

எழுந்தது வண்டு இருநிலத் திருந்து
திடரினி லிருந்து தேன்சிற கெழுந்தது
விரைந்து விரைந்து பறந்து சென்றது
சிறிய சிறகினால் பறந்தது விரைந்து    510
பறந்தது சந்திர வளையப் பக்கம்
பரிதியின் எல்லையில் பறந்து திரிந்தது
தாரகைக் கூட்டத் தனித்தோள் கடந்தது
ஏழு மீன்களின் எழில்முது கேகிய(து)
கர்த்தர்வாழ் கூடம் கடிதுட் பறந்தது
சென்றது சர்வ வல்லோன் திருமடம்
அங்குபூச் செளடதம் ஆக்கப் பட்டது
தைலம் அங்கே தயார்செயப் பட்டது
வெள்ளியில் ஆன கொள்கல யத்திலும்
தங்கத் தியன்ற சட்டிகள் பலவிலும்   520
தேறல் கொதித்தது திகழ்நடுப் பகுதியில்
அருகிலே வெண்ணெய் உருகியே வந்தது
தெற்குக் கரையில் தேறல் இருந்தது
வடக்குக் கரையில் மலர்ந்தது தைலம்.

கரியஅவ் வண்டு காற்றின் பறவை
போதிய தேனை போந்தேற் றெடுத்தது
இதயம் நிறைய எடுத்தது தேனை
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
வண்டு திரும்பி வந்தது மெதுவாய்
பறந்து பின்னர் விரைந்து வந்தது    530
**கொம்புகள் நூறு கொடுங்கைகள் நிறைய
ஆயிரம் வேறு **அடர்கட் டிருந்தன
இதிலே தேனும் இனிததில் நீரும்
இன்னு மொன்றிலே இயைசீர் மருந்தும்.

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
சொந்தமாய்த் தனது தூயவாய் வைத்து
நாவினாற் சோதனை நன்றே செய்தாள்
நன்மனம் நிறைய நனிசுவைத் திட்டாள்:
"அந்தப் பூச்சு அருமருந் திவையே
சர்வ வல்லவன் தன்னுடை மருந்து   540
புனிதக் கடவுள்தாம் பூசிய மருந்து
உயர்இறை காயத் தூற்றிய மருந்து."

போய்இளைத் தவன்மேல் பூசினாள் மருந்தை
தளர்நலத் தோன்மேல் தடவினாள் மருந்தை
உடைந்த எலும்பின் ஊடாய்ப் பூசினாள்
உறுப்புகள் வெடிப்பின் ஊடாய்ப் பூசினாள்
பூசினாள் கீழும் பூசினாள் மேலும்
பூசினாள் மத்திய புறம்ஒரு முறையும்;
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:  550
"எழுவாய் உறக்கத் திருந்துஇப் போது
கனவினி லிருந்து கண்விழிப் பாய்நீ
இந்தத் தீய இடத்தினிலிருந்து
அதிர்ஷ்ட மற்ற அமளியி லிருந்து!"

எழுந்தான் உறக்கத் திருந்தே மனிதன்
கனவினி லிருந்து கண்களை விழித்தான்
இப்போது அவனால் இயம்பிட முடிந்தது
உரியதன் நாவால் உரைத்திட முடிந்தது:
"எளியோன் நெடுநாள் இருந்தேன் துயிலில்
பாக்கிய மற்றவன் பலநாள் உறங்கினேன்   560
இனிய துயிலில் இருந்திட லானேன்
அமைதித் தூக்கம் ஆழ்ந்தே இருந்தேன்."

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இன்னும் பல்லாண் டிருப்பாய் உறங்கி
பலகா லம்நீ படுக்கையில் இருப்பாய்
இல்லா விடில்உன் ஏழ்மைத் தாய்தான்
இல்லா விடில்உன் ஈனச் சுமந்தவள்.
சொல்வாய் இப்போ துர்ப்பாக் கியனே
புகல்வாய் அதனைஎன் புன்செவி கேட்க   570
வெம்மாய் வுலகுநீ விரைந்தது எதனால்
தண்துவோ னலாநதி தாழ்ந்தது எவரால்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
அன்னைக் கிவ்விதம் அளித்தான் மறுமொழி:
"நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
*கனவுல கத்தின் கட்புல னற்றவன்
மரண உலக மனுப்பியோன் அவனே
தண்துவோ னலாநதி தள்ளியோன் அவனே
நீரி லிருந்தொரு நெடும்பாம் பெடுத்தான்
**பறவைநா கத்தை படர்திரைப் பெயர்த்தான்   580
என்மேல் **பாக்கியம் இல்லான் ஏவினன்
அதைதான் முன்னர் அறிந்தது மில்லை
நீர்அரா வெறுப்பை நிசம்நான் அறிந்திலேன்
நீர்க்குழல் அதனின் நெடுங்கொடும் கடியை."

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"அடடா, நுண்ணறி வற்றவன் என்பேன்,
மாந்திரீ கனுக்கு மந்திரம் செய்வேன்
படர்லாப் பியரைப் பாடுவேன் என்றாய்,
நீர்அரா வெறுப்பை நீதெரிந் திலையே
நீர்க்குழற் கடியை நீஅறிந் திலையே!   590

நீர்அராப் பிறப்பது நீரின் நடுவிலே
நீர்க்குழல் பிறப்பது நீரின் அலையிலே
முன்இது **வாத்துநல் மூளையில் பிறந்தது
தண்கடற் **பறவையின் தலையுட் பிறந்தது
இதனை **அரக்கி இருநீர் உமிழ்ந்தாள்
எச்சிற் குமிழை இறக்கினாள் அலைகளில்
நீரோ அதனை நீளமாய் வளர்த்தது
வெய்யோன் அதனை மென்மையாக் கிற்று
தண்காற் றதனைத் தாலாட் டிற்று
ஆராட்டி வளர்த்தது அகல்நீ ராவி    600
கரைக்குச் சுமந்தது கடலலை அதனை
தரைக்குக் கொணர்ந்தது தண்திரை அதனை."

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
அவனைத்தா னறிந்த வாறுசீ ராட்டி
அவனது முந்திய அழகுரு வாக்கி
பழையதோற் றத்தைப் பாங்குற வமைத்தனள்
இப்போ சற்றவன் இருந்தான் நலமாய்
நிலவிய முந்திய நிலையிலும் பார்க்க.
பின்னர் மகனைப் பெற்றவள் கேட்டாள்
ஏதும் குறைபா டிருக்கிற தாவென.   610

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எ(வ்)வளவோ குறைபா டின்னமு முள்ளது
எனதுளவேட்கை இருக்கிற தாங்கே
ஆவலும் ஆசையும் அங்கே உறங்கும்
வடபால் நிலத்து மங்கையர் மத்தியில்
அழகுறும் கூந்தல் அரிவையர் தம்மிடம்.
குமிழ்ச்செவி வடநிலக் குணமிலா மாது
தன்னுடைத் தனையைத் தருவதாய் இல்லை
வாத்தைநான் எய்து வந்தால் தவிர
அந்த அன்னத்தை அடித்தாற் தவிர   620
அந்தத் துவோனலா அருநதி யாங்கே
ப,னித அருவிப் பொங்குநீர்ச் சுழியில்."

கூறினள் லெம்மின் கைனனின் அன்னை
உரைத்தே அவள்தான் உசைய லாயினள்:
"எளியஅன் னத்தை இனிக்கை விடுவாய்
வாத்தினை ஆங்கே வாழ்ந்திட விடுவாய்
துவோனலா அதனின் தொல்கறுப் பாற்றில்
புகார்கள் படிந்த பொங்குநீர்ச் சுழியில்;

இல்லப் பக்கமாய் இப்போ தேகுவாய்
அகமகிழ் விழந்த அன்னை என்னுடன்    630
இனியுமுன் நலனுக்கு இயம்பிடு நன்றி
அனைவரும் அறிந்த ஆண்டவ னுக்கு
உண்மையாய் உனக்கு உதவிய தற்காய்
இவ்வுயி ருடன்மீட் டெழுப்பிய தற்காய்
துவோனியின் வலிய தொல்வழி யிருந்து
மரண உலகதன் வசிப்பிட மிருந்து
என்னால் முடிந்தது எதுவுமே யில்லை
எதுவும் நானே இயற்றுதற் கில்லை
கர்த்தர் அவரின் கருணை யில்லாமல்
இறைவழி நடத்தல் இல்லா விடினே."    640

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
இல்லம் நோக்கி எழுந்திட லானான்
அன்புடைத் தனது அன்னை தன்னுடன்
மாண்புடைத் தனது மாதா தன்னுடன்.
இழக்கிறேன் துரநெஞ் சினனையாங் கிப்போ
குறும்பன் லெம்மின் கைனனை விடுகிறேன்
நீள்கா லத்தென் நெடுங்கதை யிருந்து
போகிறேன் இன்னொரு கதையின் புறமே
பாடலை வேறொரு பக்கமாய் விடுகிறேன்
அதைத்திருப் புகிறேன் அகல்புதுப் பாதையில்.   650



பாடல் 16 - மரண உலகில் வைனாமொயினன்  *



அடிகள் 1 - 118 : வைனாமொயினன் ஒரு படகு செய்வதற்கு பலகைகள் கொண்டு வருமாறு சம்ஸாவைப் பணிக்கிறான்; அங்ஙனம் கிடைத்த பலகைகளில் ஒரு படகைச் செய்கிறான்; ஆனால் மூன்று மந்திரச் சொற்கள் நினைவுக்கு வரவில்லை.

அடிகள் 119 - 362 : இந்த மந்திரச் சொற்கள் கிடைக்காமல் போனதால், அவற்றைப் பெறுவதற்குத் துவோனலா என்னும் மரண உலகத்துக்குப் போகிறான். அங்கே அவன் தடுத்து வைக்கப் படுகிறான்.

அடிகள் 363 - 412 : வைனாமொயினன் அங்கிருந்து தப்பி வந்து விடுகிறான். இனிமேல் அங்கே ஒருவரும் போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்வதோடு அது தீய மக்கள் வாழும் பயங்கரமான இடம் என்றும் வர்ணிக்கிறான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
செம்பட கொன்றைச் செய்யத் தொடங்கினான்
தொடங்கினன் புதிய தோணியொன் றியற்ற
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.
கலக்கலை ஞற்குக் கிடைத்தில துமரம்
படகுசெய் வோற்குப் பலகையாங் கில்லை.

தேவையாம் மரத்தைத் தேடுவார் யாரோ
பெருஞ்சிந் துரமரம் பெறுவர் யாரோ    10
வைனா மொயினன் வன்பட கியற்ற
ஓடத் தடித்தட்(டு) உடன்செயப் பாடகன்?

பெருவிளை நிலமகன் பெல்லர் வொயினன்
சம்ஸா என்னும் தனிச்சிறு வாலிபன்
அந்த மரத்தை அவனே தேடுவான்
அடர்சிந் துரமரம் அவனே பெறுவான்
வைனா மொயினன் வன்பட கியற்ற
ஓடத் தடித்தட்(டு) உடன்செயப் பாடகன்.

அவன்நடை போட்டான் அகல்தன் பாதையில்
வலம்வந் திட்டான் வடகிழக் குலகில்    20
ஒருகுன் றேறினான் உடன்இன் னொன்றிலும்
மூன்றாம் குன்றும் முயன்றயல் ஏகினான்
தங்கக் கோடரி தடத்திண் தோள்களில்
செப்பினால் ஆன கைப்பிடிக் கோடரி
அரச மரமொன் றருகினில் வந்தான்
அம்மரத் துயரம் அதுபதி னெட்டடி.

அரச மரத்தை அவன்தொட எண்ணினான்
தொடுகோ டரியினால் துணிக்க நினைத்தான்
அப்போ தந்த அடர்மரம் சொன்னது
தன்நா வால்அது சாற்றிய திவ்விதம்:   30
"என்னிடம் மனிதா என்னதான் வேண்டும்
எப்படி யாயினும் என்னநின் விருப்பம்?"
பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
இனிவரும் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதுவே உன்னிட மிருந்துவேண் டுவது
இதுவே தேடிய(து) இதுவே விரும்பிய(து)
வைனா மொயினன் வன்பட கியற்ற
பாடகன் தோணிப் பலகைகள் தேவை."

அதிசயப் பட்டு அரசும் சொன்னது
நூறுகிளை மரம் நுவல முடிந்தது:    40
"ஓட்டைப் படகையே உகந்தெ(ன்)னாற் பெறுவாய்
உடன்நீர் அமிழும் ஓடமே கிடைக்கும்
அடிமரம் எனது ஆனது குழல்போல்,
இந்தக் கோடையில் ஒருமுத் தடவைகள்
என்இத யத்தை இழிபுழு தின்றது
பூச்சி அரித்துப் போட்டதென் வேர்களை."

பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
நடந்து மேலும் நகர்ந்தே பார்த்தான்
நடந்த பொழுதே நன்குசிந் தித்தான்
வதியுமிவ் வுலகின் வடக்குப் பக்கம்    50
எழில்தேவ தாரவன் எதிரே வந்தது
முப்பத்தி யாறடி முழுமரத் துயரம்.
அறைந்தான் மரத்தை அவன்கோ டரியால்
கோடரிக் காம்பைக் கொண்(டு)உரத்(து) அடித்தான்
வினவினன் இவ்விதம் விளம்பினன் இவ்விதம்:
"உயர்தேவ தாருவே உன்னால் முடியுமா
வைனா மொயினன் வன்பட காக
பாடகன் தோணிப் பலகையாய் மாற?"

வியன்தேவ தாரு விரைந்தே சொன்னது
உரத்த குரலில் உடன்அதே சொன்னது:    60
"வராது படகுஎன் வயத்தே யிருந்து
வராது ஆறு **வங்(கக்)காற் படகு
கணுக்கள் நிறைந்த கவின்தே(வ) தாருநான்
மூன்று தடவைகள் முனைந்திக் கோடையில்
அண்டங் காகம் அசைத்தது உச்சியை
காகம் கிளைகளில் கரைந்தது இருந்து."

பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
நடந்துமென் மேலும் நகர்ந்தே பார்த்தான்
நடந்த பொழுதே நன்குசிந் தித்தான்
திகழுமிவ் வுலகின் தெற்குப் பக்கம்    70
ஒருசிந் துரமரம் ஒளிர்ந்துமுன் வந்தது
ஐம்பத்து நாலடி அதன்சுற் றளவு
பின்னர் இவ்விதம் பேசினான், கேட்டான்:
"உன்னால் முடியுமா உயர்சிந் தூரமே
வேட்டைப் படகின் வியன்உறுப் பாக
அணிபோர்ப் படகின் அடிப்புற மாக?"

சிந்துரம் சீராய்ச் செப்பிய துத்தரம்
விதையுள மரமும் மிகுதரத் துரைத்தது:
"படகு(க்கு)ப் பலகைகள் பலஎன் னிடமுள
அடிப்புற முள்ளது அகல்பட கமைக்க   80
கணுக்கள் விழுந்ததோர் கடைமரம் நான(ல்)ல
உள்ளே குழல்போல் உருவந் திலது
முகிழ்இக் கோடையில் மூன்று தடவைகள்
இந்தக் கோடை இயைபரு வத்தில்
நடுமரம் சுற்றி நகர்ந்தது பருதி
சந்திரன் திகழ்ந்து தரித்ததென் உச்சி(யில்)
எனது கிளைகளில் இருங்குயில் அமர்ந்தன
பறவைகள் இலைகளில் படிந்தோய் வுற்றன."

பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
கோடரி எடுத்தான் கொள்தோ ளிருந்து   90
வன்கோ டரியால் மரத்தை அறைந்தான்
வெட்டினான் அலகால் வியன்சிந் துரமரம்
விரைவாய் மரத்தை வீழ்த்த முடிந்தது
தனியெழில் மரத்தைத் தரையில் வீழ்த்தினான்.

வெட்டி உச்சியை விலக்கினான் முதலில்
துண்டுதுண் டாக்கினான் தொடர்ந்தடி மரத்தை
அதிலே யிருந்து அடிப்புறம் செய்தான்
எண்ணிலாப் பலகைகள் எடுத்துடன் சீவினான்
பாடக னுக்குப் படகுகள் செய்ய
வைனா மொயினனின் வன்பட கமைக்க.   100

முதிய வைனா மொயினன் பின்னர்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
தூயதன் அறிவால் தோணியைச் செய்தான்
கப்பலை மந்திரப் பாடலால் கட்டினான்
தூயசிந் தூரத் துண்டுகள் தம்மால்
சோர்ந்துடை மரத்தின் துணுக்கினி லிருந்து.

பாடிஓர் பாடல் பண்ணினான் அடிப்புறம்
பாடல்மற் றொன்றால் பக்கங்(கள்) பொருத்தினான்
பாடியே மூன்றாம் பாடலை விரைந்து
வேண்டிய துடுப்புகள் மிடுக்குடன் செய்தான்   110
வங்கக் கால்களை வகையுறச் செய்தான்
பொருத்துகள் அனைத்தையும் பொருத்தியொன் றாக்கினான்.

படகுக்கு வங்கக் கால்களைப் படைத்து
எல்லாப் பக்கமும் இணைத்த பின்னரும்
மூன்றுமந் திரச்சொல் வேண்டி(யே) யிருந்தன
முன்னணி விளிம்பை மொய்ம்புறப் பூட்ட
முன்பா கத்தை முற்றுப் படுத்த
கனத்தபின் அணியம் கட்டி முடிக்க.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்   120
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,என் நாட்களில் ஒருபாக் கியமிலான்
இறக்க முடிந்தில(து) இப்பட(கு) அப்பில்
அகல்புதுத் தோணியை அலைகளின் மீது."

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்கே அச்சொல் இருந்துபெற் றிடலாம்
திருமந் திரச்சொல் தேடுவ தெங்கே
தூக்கணஞ் சிட்டின் தொடுஉச் சியிலா
அன்னக் கணத்தின் மென்தலை களிலா
வாத்துக் கூட்ட வளர்தோள் இருந்தா?    130

திருமந் திரச்சொல் தேடிச் சென்றான்
அன்னக் கூட்டம் அதுவொன் றழித்தான்
கொன்றான் வாத்துக் கூட்டம் ஒன்றினை
தூக்கணங் குருவிகள் சொற்கணக் கடங்கா
ஆயினும் கிடைத்தில அந்தச் சொற்கள்
இல்லைசொல் ஒன்றுமே இல்லைஓர் **அரையும்.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
"அச்சொல் நூறு அங்கே இருக்கலாம்
கோடை மானின் கொழுநாக் கடியில்
அரியவெண் ணிறத்து அணிலின் வாயில்."   140

திருமந் திரச்சொல் தேடிச் சென்றான்
மர்மச் சொற்களை வாகாய்ப் பெறற்காய்,
வெட்டித் திறந்தான் வெகுவயல் மான்களை
ஆங்கொரு பெரிய அணிலின் குழுவையும்
அதிக சொற்களை அங்கே பெற்றான்
ஆயினும் சொற்கள் அவைபய னற்றவை.

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
"அச்சொல் நூறு அங்கே பெறுவேன்
துவோனியின் இருண்ட தொல்வதி விடத்தில்
காலங் கடந்த மாய்வுல கில்லில்."    150

சொற்கள் வேண்டித் துவோனியை அடைந்தான்
மந்திர மொழிக்காய் மரண உலகம்;
அமைதி யாக அடிவைத் தேகினான்
வாரமொன் றுபுதர் வழியூ டேகினான்
**சிறுபழச் செடிவழி திகழ்மறு வாரம்
மூன்றாம் வாரம் சூரைச் செடிவழி
மரணத் தீவு வந்தது கண்ணெதிர்
துவோனியின் குன்று தொடர்ந்தெதிர் ஒளிர்ந்தது.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உறுபலக் குரலில் உரத்துக் கத்தினான்    160
அங்கே துவோனியின் அந்தஆற் றிடையே
மரண உலகின் வலுதாழ் விடத்தில்:
*"துவோனியின் மகளே, தோணிநீ கொணர்வாய்!
மரண(த்தின்) மதலாய், வருவாய் படகொடே!
இந்தநீ ரிணையை இனிநான் கடக்க!
ஆற்றைக் கடந்து அக்கரை சேர!"

துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
சலவைத் தொழிலைத் தான்செய் திருந்தாள்
அடித்துத் துணிகளை அலம்புதல் செய்தாள்   170
துவோனியின் கறுப்புத் தொடர்நிற ஆற்றில்
மரண உலகின் வலுதாழ் நீரில்;
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இங்கிருந் தோடம் இனிக்கொண ரப்படும்
என்ன காரணம் என்பதைச் சொன்னால்
மரண உலகுநீ வந்தது எதற்கு
வருநோய் உனக்கு மரணம் தராமல்
இயற்கையாய் உனக்கு இறப்பு வராமல்
வல்விதி எதாலும் மரணம் வராமல்?"    180

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"துவோனி என்னை இங்கே கொணர்ந்தது
என்நாட் டிருந்து இழுத்தது மரணம்."

துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"கண்டுகொண் டேன்யான் கள்ளன் ஒருவனை
உன்னைத் துவோனி இங்கே கொணர்ந்தால்
உன்நாட் டிருந்து உறுமிறப் பிழுத்தால்    190
தன்னுடன் துவோனி தான்கொணர்ந் திருக்கும்
படும்இறப் புன்னுடன் பயணித் திருக்கும்
மரணத்(தின்) தொப்பிநின் வன்தோள் வைத்து
மரணத்(தின்) கையுறை வன்கரம் தந்து
வழங்குக உண்மை(யை) வைனா மொயினனே,
மரண உலகுநீ வந்தது எதற்கு?"

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இவ்விதம் அதன்பின் இயம்பினன் அவனும்
"இறப்புல குக்கெனை இரும்பு கொணர்ந்தது
உருக்குத் துவோனியின் உலகிற் கொணர்ந்தது."  200

துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அறிந்துகொண் டேன்யான் அரியதோர் கள்ளனை
இறப்புல குக்குனை இரும்பு கொணர்ந்தால்
உருக்கே துவோனியின் உலகிடைக் கொணர்ந்தால்
இரத்தம் பெருக்கும் ஏற்றநின் ஆடை
பாயும் இரத்தம் படுரண மிருக்கும்
வழங்குக உண்மையை வைனா மொயினனே
இரண்டாம் தடவை வழங்குவாய் உண்மை."   210

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மரண உலகெனை வண்புனல் கொணர்ந்தது
துவோனியின் உலகெனைத் தொடர்அலை கொணர்ந்தது."

துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தெரிந்துகொண் டேன்யான் திரும்பவோர் பொய்யனை
மரண உலகுனை வண்புனல் கொணர்ந்தால்
துவோனியின் உலகுனைத் தொடர்அலை கொணர்ந்தால் 220
தண்ணீர் பெருக்கும் தரித்தநின் ஆடை
நீரைச் சொட்டும் நின்உடைக் கரைகள்;
உண்மையைச் சரியாய் உரைப்பாய் இப்போ(து)
மரண உலகு வந்தது எதற்கு?"

முதிய வைனா மொயினன் அங்கே
கடிதுமற் றொருமுறை களவே செய்தான்:
"மரண உலகெனை வளர்தீ கொணர்ந்தது
துவோனியின் உலகெனைச் சுடுகனல் கொணர்ந்தது."

துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்    230
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"உணர்ந்துகொண் டேன்யான் உயர்ந்ததோர் பொய்யனை
மரண உலகுனை வளர்தீ கொணர்ந்தால்
துவோனியின் உலகுனைச் சுடுகனல் கொணர்ந்தால்
கனத்தஉன் தலைமயிர் கருகியே யிருக்கும்
இரிந்தநின் தாடிநன் கெரிந்துபோ யிருக்கும்.

ஓ,நீ முதிய வைனா மொயினனே!
ஓடம்இங் கிருந்து உனக்குத் தேவையேல்
உண்மையைச் சரியாய் உரைப்பாய் இப்போ(து)
பொய்யே சொல்வது போய்முடி யட்டும்    240
மரண உலகம் வந்தது எவ்விதம்
வருநோய் உனக்கு மரணம் தராமல்
இயற்கையாய் உனக்கு இறப்பு வராமல்
வல்விதி எதாலும் மரணம் வராமல்?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சிறுபொய் சிலநான் செப்பிய துண்டு
இரண்டாம் தடவையும் இழைத்தேன் களவு
உண்மையை இப்போ உரைப்பேன் யானே:
அமைத்தேன் படகொன்(று) அறிவின் சக்தியால்
பாடலின் தன்மையால் படகொன் றாக்கினேன்  250
ஒருநாள் பாடினேன் இருநாள் பாடினேன்
அங்ஙனம் பாடினேன் அடுமூன் றாம்நாள்
பாட்டெனும் வண்டி பட்டென உடைந்தது
பாடற் சொல்நடை பட்டது குழப்பம்
ஊசியொன் றினுக்காய் உற்றேன் துவோனலா
துறப்பணம் தேடி இறப்புல கடைந்தேன்
கடிதுஎன் வண்டியைக் கட்டி யமைத்திட
என்பா வண்டியை ஏற்றதாய்த் திருத்த
இங்கொரு ஓடம் இப்போ(து) கொணர்வாய்
அடுத்துன் படகொன் றாயத்த மாக்கு   260
இந்த நீரினையை இனிநான் கடக்க
ஆற்றைக் கடந்து அக்கரை சேர."

ஏசினாள் துவோனியின் எழில்மகள் அவனை
தகரா றிழைத்தனள் சாவுல கத்தவள்:
"நீயொரு மூடன், நீள்மடத் தனத்தோன்,
மூளைக்கோ ளாறு மூண்டுள மனிதன்,
துவோனலா காரணத் தொடர்பிலா தடைந்தாய்
நோயின்றி மரண நுண்ணுல குற்றாய்
உனக்கொரு காரியம் உகந்ததா யிருக்கும்
திரும்பிநின் நாடு செல்வதே யதுவாம்   270
வந்தது உண்டு மற்றிங் கனேகர்
ஆனால் திரும்பி அனேகர் சென்றிலர்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"பாதையை ஒருமுதுப் பாவைதான் மாற்றலாம்
ஆயினும் இளைத்ததோர் ஆடவன் செய்திடான்
சோம்பிய மனிதனும் துணிந்ததைச் செய்திடான்
துவோனியின் மகளே தோணியைக் கொணர்வாய்
கொணர்வாய் மாய்புலக் குழந்தையே படகினை!"

துவோனியின் மகளும் தோணியைக் கொணர்ந்தாள்
முதிய வைனா மொயினனை அதிலே    280
நீரிணை கடந்து நேராய்க் கொணர்ந்தாள்
ஆற்றைக் கடந்து அக்கரை வந்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"வைனா மொயினநீ வந்தனை, பாவம்,
இறப்பிலா திந்த இறப்புல கடைந்தாய்
மரண மின்றியே வந்தாய் துவோனலா."

துவோனியின் மகளெனும் துணிந்தநற் தலைவி
மரணலோ கத்து மகள்முது மாது
கொஞ்சமாய்க் குடுக்கையில் கொணர்ந்தாள் 'பீர்'அது
இரண்டுகைப் பிடியுள ஏந்திய கெண்டியில்   290
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"முதிய வைனா மொயினனே பருகுக!"

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
குடுக்கையின் உள்ளே குனிந்து நோக்கினான்
சினைத்தன தவளைகள் சிறுகுடுக் கையினுள்
புரண்டுபக் கங்களில் புழுக்கள் நெளிந்தன
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"இங்குநான் வந்தது இதற்காய் அல்ல
மாய்புல(க)க் குடுக்கையில் மதுக்குடிக்(க) அல்ல
துவோனியின் கெண்டியில் தொட்டருந்(த) அல்ல   300
போதையே கொள்பவர் புணர்'பீர்' குடிப்போர்
சாடியில் குடிப்போர் தரையினில் வீழ்வார்."

சொன்னாள் துவோனித் தொல்புவித் தலைவி:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
மரண உலகம் வந்தது எதற்கு?
துவோனலாப் பயணம் தொடர்ந்தது எதற்கு?
நினைவரும் பாத நேரம் துவோனி?
அம்புவி யிருந்துசா வழைக்கா நிலையில்?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"படகு ஒன்றையான் படைத்தபோ தினிலே   310
புதிய தோணியைப் புனைந்தபோ தினிலே
தேவை யாயினமுத் திருமந் திரச்சொல்
முன்பா கமதை முற்றுப் படுத்த
கனப்பின் னணியம் கட்டி முடிக்க;
அவற்றை எங்குமே அடையா நிலையில்
இப்புவி அவைகள் இல்லா நிலையில்
வன்துவோ னலாயான் வரநேர்ந் ததுவே
பயணிக்க நேர்ந்தது பருமிறப் புலகு
தேவையா யிருந்த செஞ்சொல் தேடி
மந்திரச் சொற்களை வாகுறக் கற்க."   320

அப்போ(து) துவோனியின் அம்புவித் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"துவோனி சொற்களைச் சொ(ல்)லித்தரற் கில்லை
பலமதை மாய்நிலம் பகிர்வதற் கில்லை
இங்கிருந்து உன்னால் இனித்திரும் பொண்ணா
என்றும்உன் வாழ்வில் இனிமுடி யாது
பயணிக்க முடியா பழகுநின் இல்லம்
செல்லவும் முடியா சொந்தநா டினிநீ."

அவள்அம் மனிதனை அணைதுயில் ஆக்கினாள்
பயணியைக் கீழே படுக்கவைத் திட்டாள்   330
துவோனி செய்த தோற்படுக் கையிலே;
படுத்துக் கிடந்தான் படிந்ததில் மனிதன்
உறக்கத் திருந்தான் உயர்விற லோனதில்
உடைகள்காப் பளித்தன உறங்கினன் மனிதன்.

துவோனலா விலேயொரு தொல்முது மாது
முதியவள் ஒருத்தி முன்நீள் தாடையள்
இரும்புநூல் நெசவினை இனிதுசெய் கின்றவள்
செப்பிலே யிருந்துநூல் செய்வதே வருபவள்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை பின்னுவாள்
ஆயிரக் கணக்கிலும் ஆக்கியே முடிப்பாள்   340
கோடைகா லத்துகொள்இரா ஒன்றிலே
நீரில் கிடந்ததோர் நெடியபா றையின்மேல்.

துவோனலா விலேயொரு தொல்முது மனிதன்
மூன்று விரலுறும் முதியவன் இருந்தான்
இரும்பில் வலைகளை எடுப்பவன் பின்னி
செப்பிலும் வலைகளை செய்தே எடுப்பவன்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை பின்னுவான்
ஆயிரக் கணக்கிலும் ஆக்கியே முடிப்பான்
கோடை காலத்துக் கொள்அதே இரவில்
நீரில் கிடந்தநீள் அதே பாறையில்.    350

தொடுகோ ணல்விரல் துவோனியின் மைந்தன்
கூர்இரும் பாலமை கோணிய விரலான்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை இழுப்பான்
துவோனியின் ஆற்றின் தொடுகுறுந் திசையில்
குறுக்குத் திசையிலும் கொள்நீள் திசையிலும்
திகழ்சாய் சரிவுத் திசையிலும் இழுப்பான்
வைனா மொயினன் வழிச்செலல் நிறுத்த
அமைதிநீர் மனிதன் அகல்வதைத் தடுக்க
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்  360
துவோனலா வதிவிடத் தொல்லிட மிருந்து
காலங் கடந்தசாக் கதிநிலத் திருந்து.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வல்லழி வெனக்கு வந்தே விட்டதா?
இன்னற் காலம் எனக்கு வந்ததா?
துவோனலா வெனுமித் தொல்வதி விடத்தில்?
மரண உலகின் வாழ்விடம் தன்னில்?"

உடனே தனது உருவம் மாற்றினான்
விரைந்து வேறொரு வேடம் கொண்டனன்   370
கறுப்பு நிறத்தில் கடலிடைச் சென்றான்
கோரைப் புற்றட நீர்நாய் போலவே
இரும்புப் புழுப்போல் ஏகினான் தவழ்ந்து
நஞ்சுப் பாம்புபோல் நகர்ந்தே சென்றான்
துவோனலா ஆற்றின் தொடுகுறுக் காக
துவோனியின் வலைகளின் ஊடாய்த் துணிவொடே.

தொடுகோ ணல்விரல் துவோனியின் மைந்தன்
கூர்இரும் பாலமை கோணிய விரலான்
அங்கே சென்றான் அதிகா லையிலே
விரித்தன் வலைகளை மீண்டும் பார்க்க;   380
நன்னீர் மீன்கள் நன்குநூ றிருந்தன
சிறுமீன் கிளைகள் திகழ்ந்தன ஆயிரம்
வைனா மொயினன் வந்ததில் பட்டிலன்
அமைதிநீர் முதியோன் அகப்பட வில்லை.

முதிய வைனா மொயினன் அதன்பின்
துவோனலா விருந்து துணிந்தே வருகையில்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"எக்கா லத்தும் இறைவனே வேண்டாம்!
என்றும் நிகழ்த்தவும் வேண்டாம் இங்ஙனம்,   390
தானே மரண உலகுசார்ந் தோர்க்கு
துவோனலா நுழைந்த தூயமா னிடர்க்கு
அங்கே சென்றவர் அநேகர் உள்ளனர்
மிகவும் குறைவு மீண்டவர் அங்கிருந்(து)
துவோனலா வதிவிடத் தொல்பதி யிருந்து
காலங் கடந்தசாக் கதிநிலத் திருந்து."

பின்வரும் சொற்களில் பேசினான் இன்னும்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்
எழுச்சிபெற் றோங்கும் இளைஞர் தமக்கும்
வளர்ந்திடும் தேசீய மக்களார் தமக்கும்:   400
"ஒருபோதும் வேண்டாம், உயர்மனு மக்காள்!
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
குற்றமற் றோர்மேல் குற்றமேற் றாதீர்
தவறற் றோர்மேல் தவறு சாட்டாதீர்;
கடுமையாய்க் கூலி கணித்ததற் கிடப்படும்
அங்கே துவோனியின் அவ்வதி விடத்தில்;
குற்ற மிழைப்போர்க் குண்டொரு தனியிடம்
பாவிகட் கங்கே படுக்கைகள் உண்டு
கட்டில்கள் கொதிக்கும் கற்களில் உண்டு
கனல்விடும் பாளக் கற்களாங் குண்டு   410
புணர்அரா நஞ்சிலே போர்வைகள் உண்டு
துவோனிப் புழுக்களைத் தொடுத்தவை நெய்தவை."



பாடல் 17 - வைனாமொயினனும் அந்தரோ விபுனனும்  *



அடிகள் 1 - 98 : அந்தரோ விபுனனிடம் மந்திரச் சொற்களைப் பெறச் சென்ற வைனாமொயினன் பூமியின் கீழ் நீண்ட தூக்கத்தில் இருந்த அவனை எழுப்புகிறான்.

அடிகள் 99 - 146 : அந்தரோ விபுனன், வைனாமொயினனை விழுங்குகிறான்; வைனாமொயினன் வயிற்றுக்குள் இருந்து அவனைச் சித்திரவதை செய்கிறான்.
அடிகள் 147 - 526 : அந்தரோ விபுனன் வைனாமொயினனை வயிற்றிலிருந்து வெளியேற்ற எல்லா வழிகளையும் கையாளுகிறான். அவனுடைய வாக்குறுதிகள், மந்திரம், மாயம், சூனியம் எதுவும் பயனளிக்கவில்லை. தனது படகை முடிப்பதற்குத் தேவையான மூன்று மந்திரச் சொற்கள் கிடைத்தால் மட்டுமே தான் வயிற்றிலிருந்து வெளியேறுவதாக வைனாமொயினன் கூறுகிறான்.

அடிகள் 527 - 628 : அந்தரோ விபுனன் தனக்குத் தெரிந்த மந்திர அறிவுப் பாடல்கள் அனைத்தையும் பாடுகிறான். வைனாமொயினன் வயிற்றிலிருந்து வெளியேறிப் படகு கட்டும் இடத்துக்கு வந்து படகைக் கட்டி முடிக்கிறான்.



நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கிளர்மந் திரச்சொல் கிடைக்கா நிலையில்
வளருமத் துவோனலா வதிவிட மிருந்து
அழிவிலா மரண அகலுல கிருந்து
சிந்தனை பொழுதெலாம் செய்துகொண் டிருந்தான்
நீண்ட காலம் நிகழ்த்தினான் சிந்தனை
அந்தச் சொற்களை அடைவதெங் கிருந்து
மனங்கொளும் மந்திரம் மற்றெங் கடையலாம்.

ஒருநாள் இடையன் ஒருவன் வந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:   10
"அங்கே நூறு அருஞ்சொற் பெறலாம்
மந்திரச் சொற்களோ வயப்படும் ஆயிரம்
அந்தரோ விபுனன் என்பவன் வாயில்
வார்த்தைகள் நிறைந்த வயிற்றில் அவனிடம்;
ஆயினும் அங்கே அடைந்திடல் வேண்டும்
செல்லும் பாதையைத் தெரிதலும் வேண்டும்
பயணம் அதுநற் பயணமு மல்ல
ஆயினும் தீயதும் அல்லஅவ் வளவே;
ஓடுதல் வேண்டும் ஒருமுதற் கட்டம்
வனிதையர் ஊசிகள் **வாய்முனை மீது   20
நடத்தலும் வேண்டும் நவில்மறு கட்டம்
ஆடவர் வாள்களின் **அணிமுனை மீது
மூன்றாம் கட்டம் நீண்டடி வைத்திடல்
வீரன் ஒருவனின் கோடரி அலகில்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
திட்டமிட் டனனே செய்திடப் பயணம்
கொல்லனின் வேலை கொள்களம் நுழைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, கொல்ல உயர்இல் மரின!
இரும்பினால் பாதணி இதமுறச் செய்வாய்   30
இரும்பினாற் செய்வாய் ஏற்றநற் கையுறை
இரும்பினால் செய்வாய் இனியநற் சட்டை
இரும்பினால் செய்வாய் இருங்கூர்த் **தண்டமும்
அவ்விதம் கூலிக்கு ஆக்குவாய் உருக்கில்
உருக்கிலே நடுத்தண்டு ஒன்றையும் செய்து
அதன்மேல் வார்ப்பாய் அழகுமெல் இரும்பு;
சிலசொற் களையான் தேடிச் செல்கிறேன்
நல்மந் திரச்சொல் நாடிச் செல்கிறேன்
அவனது வார்த்தைகள் ஆர்ந்தஅவ் வயிற்றில்
அந்தரோ விபுனன் என்பவன் வாயில்."   40

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வெகுநாள் முன்பு விபுனன் இறந்தான்
அனேககா லம்முன் அந்தரோ மறைந்தான்
அவனே அமைத்த அப்பொறி யிருந்து
கடிதுஅவன் செய்த கண்ணியி லிருந்து
அங்கொரு சொல்லும் அடைந்திட மாட்டாய்
ஒருசொற் பாதியும் பெறல்உனக் கரிது."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அதைக்கவ னிக்காது அப்பால் தொடர்ந்தனன்   50
சென்றான் ஒருநாள் சிறுமென் நடையில்
வனிதையர் ஊசிகள் வாய்முனை மீது
இரண்டாம் நாளும் ஏகினன் அமைதியாய்
ஆடவர் வாள்களின் அணிமுனை மீது
மூன்றில் நீண்டடி முன்வைத் தேகினன்
வீரன் ஒருவனின் கோடரி அலகில்.

நிறைந்த பாடல்கள் நிலைகொள் விபுனன்
வார்த்தைகள் பொதிந்த வன்முது மனிதன்
பாடல்க ளோடு படுத்தனன் ஓய்ந்து
மந்திரத் தோடு மல்லாந் திருந்தான்;   60
அவனது தோள்களில் அரசு வளர்ந்தது
கண்ணிமை மேலே கனமிலா றெழுந்தது
தாடையில் பூர்ச்சம் தண்மரம் முளைத்தது
அடர்தா டியின்மேல் அலரிப் பற்றை
புருவத்தில் தாரு பொலிந்தது அணிலுடன்
பசியநல் மரங்கள் பற்களில் இருந்தன.

வந்தான் அங்கே வைனா மொயினன்
எடுத்தான் இரும்பு இகல்வாள் உருவினன்
தோலினால் செய்த தோலுறை யிருந்து
மென்மையாய்ச் செய்த மிளிர்பட்டி யிருந்து   70
வீழ்த்தினான் அரசை வியன்தோ ளிருந்து
வெட்டினான் கண்ணிமை மீதுள மிலாறு
அழித்தான் தாடையின் அகன்றபூர்ச் சமரம்
அடர்தா டியின்மேல் அலரிப் பற்றையை
புருவத்துத் தாருவைப் பொருந்திய **அணிலொடே
பசியநல் மரங்களைப் பற்களி லிருந்தே.

இரும்புத் தண்டம் எடுத்துள் திணித்தான்
அந்தரோ விபுனன் என்பவன் வாய்க்குள்
முன்இளி அவனது முரசுகள் உள்ளே
இறுகிய அலகினுள் இறுக்கித் திணித்தான்  80
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எழுவாய், மனித இனத்தின் அடிமையே!
நிலத்தின் கீழே நேர்துயி லிருந்து!
நீண்ட கால நெடுந்துயி லிருந்து!"

நிறைந்த பாடல்கள் நிலைகொள் விபுனன்
உடனே தூக்கம் உதறிவிட் டெழுந்தான்
கடுமையாய் தன்னைத் தொடுவதை உணர்ந்தான்
வன்கொடும் நோவும் வருவதை அறிந்தான்
தனியிரும் பியைந்த தண்டம் கடித்தான்
இருந்தமேல் மென்மை இரும்பையும் கடித்தான்  90
ஆயினும் முடிந்தில(து) அவன்உருக்(கு) கடித்தல்
இரும்பின் நடுத்தண்(டு) ஏற்றுண்ண முடிந்தில(து).

முதிய வைனா மொயினன் அங்கே
வாயின் அருகில் வந்துநின் றிருந்தான்
அவனது ஒருகால் அதுசறுக் கியது
இடதுகால் வழுக்கி இறங்கி ஏகியது
அந்தரோ விபுனனின் அகல்வா யுள்ளே
அவனது அலகின் அகல்இடை நடுவில்.

உடனே பாடல்கள் உள்நிறை விபுனன்
விரித்துப் பெரிதாய் வியன்வாய் திறந்தான்   100
அலகை அகட்டி அகலத் திறந்தான்
உள்ளே விழுங்கினான் உடன்வாள் மனிதனை
அவனைத் தொண்டையுள் அவனே விழுங்கினான்
முதிய வைனா மொயினன் அவனையே.

பின்னர் பாடல்கள் பெரிதார் விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முன்னர் எதோவெலாம் முழுமையா யுண்டுளேன்
உண்டேன் வெள்ளாடு உண்டேன் செம்மறி
மலட்டுப் பசுவையும் மகிழ்வா யுண்டுளேன்
காட்டுப் பன்றியும் கனக்க உண்டுளேன்   110
இதுபோல் என்றும் ஏற்றுண் டிலனே
இச்சுவைக் கவளம் இனிதுண் டிலனே."

முதிய வைனா மொயினன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எனது அழிவு இதோவரு கின்றது
துயர நாட்கள் தொடங்கு கின்றனவே
இப்பூ தத்தின் இரும்பிலத் தினிலே
இவ்விறப்(பு) ஆவியின் இழிகிடங் கினிலே."

சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எப்படி எருப்பது எங்ஙனம் வாழ்வது;   120
வைனா மொயினனின் **'வார்'அதில் கத்தி
கத்தி யதிலே கணுவுறும் கைப்பிடி
அதனால் படகை அவனும் செய்தனன்
படகை மந்திர அறிவால் படைத்தனன்
படகை வலித்தனன் பாடசைந் தேகினன்
ஏகினன் நரம்புதொட்டு இயல்மறு முனைக்கு
ஒவ்வொரு இடுக்கிலும் உறவலித் தேகினன்
ஒவ்வொரு வழியிலும் உடன்றுசுற் றிட்டனன்.

பாடல்கள் நி஡றந்த பழமுது விபுனன்
கண்டஇத் தனையும் கவனித்த திலனாம்   130
முதிய வைனா மொயினனப் போது
கொல்லனா யாக்கிக் கொண்டான் தன்னை
கொள்இரும்(பு) அடிக்கும் கொல்லனே ஆகினன்
தோள்மேற் சட்டையைத் தொழிற்கள மாக்கினன்
உறும்அதன் மடிப்பை உலைக்கள மாக்கினன்
கம்பளி ஆடையில் கட்டினன் துருத்தி
குழல்கள்காற் சட்டை கொண்டே செய்தனன்
காலுறை யாலே கடுங்குழல் வாய்முனை
பட்டறை யாக்கினன் படர்முழங் காலினை
சுத்தியல் ஆக்கினன் தொடுமுழங் கையினை.   140

சுத்தியல் கொண்டு தொடர்ந்தே தட்டினன்
அடித்து அடித்து அறைந்தனன் மென்மேல்
இரவெலாம் ஓய்வு இன்றியே அடித்தான்
அடித்தான் பகல்எலாம் அவன்மூச் சின்றி
அமைவுறும் பாடல்சேர் அவனது வயிற்றில்
மந்திர அறிவு வாய்ந்தவன் நெஞ்சில்.

அப்போ(து) பாடல்கள் அவைநிறை விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்    150
நூறுவீ ரரைநான் நொடியில் உண்டுள்ளேன்
ஆயிரம் மனிதரை அழித்ததும் உண்டு
உண்டதாய் நினைவி(ல்)லை ஒருவனை இப்படி;
வருகிற தெனது வாயிலே கரியே
நனிஎரித் தணல்என் நாவிலே யுளது
இரும்பின் கழிவுகள் எனதுதொண் டையிலே.
அதிசயப் பிராணியே, ஆகுக பயணம்!
புறப்பட்ட டேகு, புவிக்கொடும் பிராணீ!
நான்உன் அன்னையை நாடித் தேடுமுன்
உனைப்பெறு மாண்புறும் அவளைநான் நாடுமுன்  160
உனது தாயிடம் உடன்நான் சொன்னால்
பெற்றவ ளிடம்நான் மற்றிதை முறையிடில்
வேலை அதிகம் மிகுந்திடும் தாய்க்கு
பெற்றவ ளுக்குப் பெருகிடும் துன்பம்
அவளது மைந்தன் ஆற்றும் பிழைகளால்
முறைகெட்(டு) அவள்மகன் முயன்றிடும் போதே.

எதுவும் விளங்கிட வில்லையே எனக்கு
உனதுமூ லப்பிறப் பொன்றும் அறிந்திலன்
எங்கிருந் தொட்டினாய் என்னில்வெம் பூதமே?
எங்கிருந் திங்குவந் திழிந்தைதீப் பிராணியே?   170
கடித்திடு தற்கும், வதைத்திடு தற்கும்,
உண்டிடு தற்கும், உடன்மெல் தற்கும்,
கர்த்தர் படைத்த கடும்நோய் நீயா?
இறைவன் ஆக்கிய மரணமே நீயா?
வெறுமனே மனிதரால் விளைந்ததோர் செய்கையா?
யாரோ செய்து யாரோ கொணர்ந்ததா?
கூலிக் கிங்கே கொணரப் பட்டதா?
செறிகா சுக்காய்ச் செய்தஏற் பாடா?

கர்த்தர் படைத்த கடும்நோய் நீயெனில்,
இறைவன் ஆக்கிய மரணமே என்றால்,   180
எனது கர்த்தரை இனிநான் நம்புவேன்
எனது இறைவனை இனிநான் நோக்குவேன்
ஆண்டவர் கைவிடார் அமைந்தநல் லோரை
கர்த்தர் இழந்திடார் காணுநன் நெறியரை.

வெறுமனே செயப்படும் விழற்செயல் எனில்நீ
பிறிதெவ ரோபுனை பிரச்சினை யானால்
உன்இனம் நிச்சயம் உடன்நான் அறிவேன்
எங்குநீ பிறந்தாய் என்பதை அறிவேன்.

அங்கிருந் தேதான் அடைந்தன துயரம்
அங்கிருந் தேதான் ஆயின துன்பம்    190
சூனியம் கற்ற மானிடத் திருந்து
மந்திரப் பாடல்சேர் மற்றிடத் திருந்து
தீயோர் வாழும் செறிஇல் இருந்து
மந்திர வாதிகள் மானிலத் திருந்து
புன்மர ணப்புவிப் புல்வெளி யிருந்து
பூமியின் கீழுறும் புனலிடத் திருந்து
இறந்த மனிதரின் இருப்பிடத் திருந்து
மறைந்தோர் தோட்ட வளர்நிலத் திருந்து
சொரிந்து போகும் தூர்மண் ணிருந்து
குழம்பிப் போகும் வளப்புவி யிருந்து    200

சுழன்றுமா றும்சிறு தொடர்கற்க ளி(லி)ருந்து
சலசலக் கும்சிறு தனிமண லிருந்து
நிலைதாழ் சதுப்பு நிலத்தினி லிருந்து
திகழ்பா சியி(ல்)லாச் சேற்றினி லிருந்து
பெருகிடும் சேற்றுப் பெருநிலத் திருந்து
அடர்ந்துபாய்ந் தோடும் அருவியி லிருந்து
காட்டுப் பூதக் கடுங்குகை யிருந்து
ஐந்து மலைகளின் வெம்பிள விருந்து
செப்பு மலைகளின் செறிசரி விருந்து
செப்பு மலைகளின் உச்சியி லிருந்து    210
தாம்முணு முணுத்திடும் தாருவி லிருந்து
பெருமூச் செறியும் பசுமரத் திருந்து
உழுத்(த)தேவ தாருவின் உச்சியி லிருந்து
சிதைந்த தாருவின் திகழ்முடி யிருந்து
நரிகள்தாம் கத்தும் நவிலிடத் திருந்து
காட்டேறு வேட்டைக் கனதடத் திருந்து
மண்ணிறக் கரடியின் கற்குகை யிருந்து
கரடியின் பாறை வசிப்பிடத் திருந்து
வடநிலத் தூர எல்லையி லிருந்து
லாப்புவின் அகன்ற நிலப்பரப் பிருந்து   220
வெறும்புல் புதரிலா விரிவெளி யிருந்து
விதைக்கப் படாத விழல்நிலத் திருந்து
கடிய பெரும்போர்க் களங்களி லிருந்து
மனிதர் கொலையுறும் வல்லிடத் திருந்து
சரசரத் திடும்புல் சார்இடத் திருந்து
இரத்த மோடும் இரணங்க ளிலிருந்து
பாரிய கடல்நீர்ப் பரப்பினி லிருந்து
திறந்த கடல்அகல் செறிபரப் பிருந்து
கடலின் கருமைக் கருஞ்சேற் றிருந்து
பல்லா யிரமடி படிதாழ் விருந்து    230
நீடுபாய்ப் பயங்கர நீரூற் றிருந்து
புகைந்துபாய் நீர்ச்சுழிப் புதைவுக ளிருந்து
மிகுவலு உறுத்தியா வீழ்ச்சியி லிருந்து
நீடிய சக்திசேர் நீரோட்டத் தினால்
பரந்தசொர்க் கத்துமேற் பக்கத் திருந்து
நற்கவி **நிலையுறு முகில்மறு புறத்தால்
குளிர்கால் வீசிடும் நளிர்வழி யிருந்து
தொடர்முகிற் கூட்டத் தொட்டிலி லிருந்து.

நீயும்அங் கிருந்தோ நேராய் வந்தனை?
வந்தனை சித்திர வதையாங் கிருந்தோ?   240
ஏதமில் எனது இதயத் துள்ளுற
மறுபழு தற்றஎன் வயிற்றினுள் நுழைய
உண்ணுவ தற்கும் உறமெல் வதற்கும்
கடித்திடு வதற்கும் கிழித்திடு வதற்கும்?
பூத வேட்டைநாய், பெறுபெறு அமைதி!
நீள்மாய் வுலகின் நீசனே, நாயே!
என்னுடல் விட்டு இறங்குபோக் கிரியே!
இகக்கொடும் பிராணியே, ஈரல்விட் டிறங்கு
உண்பதை விட்டென் உட்புற இதயம்
கிடக்கும்மண் ணீரல் கிழிப்பதை விட்டு   250
நேரும்என் வயிறு நிறைப்பதை விட்டு
சேர்சுவா சப்பை திருகுதல் விட்டு
விரும்பித் தொப்புள் மெல்வதை விட்டு
இருக்கும் குடல்களை இறுக்குதல் விட்டு
உறுமுது கெலும்பை உடைப்பதை விட்டு
தொடும்என் பக்கம் துளைப்பதை விட்டு.

மீளா விடில்ஒரு மனிதனின் விறலில்நான்
சிறந்த முறைகளைத் தெரிந்துகை யாள்வேன்
இந்தச் சிக்கலை இனித்தீர்ப் பதற்கு
இந்தப் பயங்கர இழிதுயர் ஒழிக்க.    260

எழுப்புவேன் புவியிருந்(து) இகல்மண் மகளிரை
அழைப்பேன் வயலிருந்(து) அரும்எச மானரை
அனைத்து வாள்வீரரும் அகல்நிலத் திருந்து
மாபரி வீரரை மண்மிசை யிருந்து
என்பலத் துக்கும் என்சக் திக்கும்
என்பாது காப்பு என்உத விக்கும்
இப்போ(து) நான்உறும் இன்னலுக் காக
கூடிடும் இந்தக் கொடியநோ வுக்காய்.

அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில்  270
உன்மக்க ளுடனே உடன்எழு, காடே!
சூரைச் செடிகளே தொடர்நும் சனத்துடன்
தேவதா ருவேநின் திருக்குடும் பத்துடன்
தங்கு(ம்)ஏ ரியேநின் தகுபிள் ளைகளுடன்
ஒருநூறு மனிதர்கள் ஓங்குவாள் களுடன்
ஆயிரம் இரும்பு அடல் வீரர்களும்
இப்பூ தத்தை இங்கே ஒழிக்க
**இக்கொடும் பிராணியை இங்கே நசுக்க.

அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில்  280
நீரின் தலைவியே, நீரிலிருந் தெழு!
நீலத் தொப்பிநீர் அலையிருந் துயர்த்து
சிறந்தஆ டைகளுடன் சேற்றினி லிருந்து
ஊற்றினி லிருந்துஓ, அழகிய உருவே!
இச்சிறு வீரனின் இகல்பலத் துக்காய்
சிறியஇம் மனிதன் பெறுகாப் பாக
காரண மின்றியான் கடிது(ண்)ணப் படுகிறேன்
கொடுநோ யின்றிநான் கொல்லப் படுகிறேன்.

அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில்  290
எழிலார் பெண்ணே, இயற்கை மங்கையே!
பொன்னின் அழகு பொலியும் நங்கையே!
முழுப்பெண் களிலும் முதிர்ந்தவள் நீயே!
அனைத்(து)அன் னையரிலும் அதிமுதிர்ந் தோள்நீ!
இப்போ(து) வந்துபார் என்துய ரத்தை
என்துயர் நாட்களைஇங்கிருந் தோட்டிட
தூரத்(து) அகற்றித் தொலைக்கஇவ் வின்னலை
வெந்நோ யிருந்துநல் விடுதலை தந்திட.

அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில்  300
சுவர்க்கத் **துருவத்து மானிட முதல்வனே!
இடிமுகில் அதனின் எல்லையில் இருப்போய்!
தேவையாம் தருணம் தெரிந்திங் கெழுக!
அழைத்திடும் வேளையில் அரும்இவ் வழிவா!
தீயஇச் செயல்களைச் சேர்த்தே அகற்றிட
இந்தநோய்க் கொடுமையை இக்கணம் தீர்த்திட
அனல்உமிழ் அலகுறும் அரியவா ளுடன்வா
பொறிசிந்(தும்) அலகுறும் பொற்புவா ளுடன்வா.

புறப்படு அதிசயப் பிராணிஇப் போதிலே
படர்புவிக் கொடுமையே பயணம் முடிப்பாய்  310
இங்கே உனக்கு இடமெது மில்லை
உனக்கிட மொன்று உடன்தே வைப்படின்
இல்லம் வேறு இடத்தே மாற்றுவாய்
வசிப்பிடம் மாற்றுவாய் மற்றெங் காயினும்
உன்எச மானன் உகந்தமர் இடத்தே
நின்எச மாட்டியின் நடைநிகழ் இடத்தே.

அந்த இடத்தைநீ அடைந்திடும் பின்னர்
உனது பயணம் உடன்முடி வானபின்
உன்னைப் படைத்தவன் உள்ள இடத்திலே
உன்னை ஆக்கியோன் உறையும் இடத்திலே   320
அங்குவந் ததற்கோர் அடையா ளம்மிடு
சார்ந்த(தற் கி)ரகசியச் சைகையைக் காட்டு
அடையா ளம்மிடு அதிர்இடி முழக்கமாய்
மின்னலாய் மின்னி வெளியிடு சைகையை
தோட்டக் கதவைத் தொட்டுவீழ்த் துதைத்து
சாளரக் கதவைத் தான்தகர்த் தெறிந்திடு
பின்னர்அங் கிருந்து பெயர்ந்துள் நுழைவாய்
புயற்காற் றுப்போல் போய்ப்புகு வீட்டினுள்
உறுதியாய்ப் பாதம் ஊன்றுவாய் நிலத்தில்
ஊன்றியே நிற்பாய் உன்சிறு குதிக்கால்   330
உன்எச மானரை ஓட்டுமூ லைக்கு
எசமாட் டிகளை இயல்கடை நிறுத்து
காண்எச மான்களின் கண்களைத் தோண்டு
அடித்து நொருக்கெச மாட்டிகள் தலைகள்
வளைத்திடு எதிர்ப்புறம் வரும்அவர் விரல்களை
சென்னிகள் முறுக்கித் திருகித் திருப்பு.

செயல்இதன் விளைவு சிறிதாய் இருந்தால்
வேலாய் மாறித் தெருமிசைப் பறப்பாய்
கோழியாய் மாறிக் கொண்டுசெல் தோட்டம்
குப்பை மேட்டினைக் குறுகிடு நேராய்    340
தொழுவத்து நிற்கும் துரவம் துரத்து
கொம்புள விலங்கைக் கொள்தொழு விட்டு
சாணக் குவியலில் தாழ்த்திடு கொம்புகள்
வால்களைச் சிந்தி வன்தரை போடு
கோணலாய் வளைத்துக் கூர்விழி திருப்பு
கழுத்தைத் திடீரெனக் கடிதே முறித்திடு.

காற்றுக் கொணர்ந்த கடுநோய் நீயெனில்,
காற்று கொணர்ந்தால், கதிபுனற் பிறந்தால்,
வசந்தக் காற்று வழங்கி இருந்தால்,
குளிர்வா யுவொடு கூடிவந் திருந்தால்,   350
புறப்பட் டுச்செல் புணர்காற் றுவழி!
வசந்தக் காற்றின் வழிசறுக் கிச்செல்!
ஒருமரத் தேறி உட்கார்ந் திடாமல்,
பூர்ச்ச மரத்தில் போய்ஓய் வுறாமல்,
செப்பு மலைகளின் சிகரத் தினையடை!
செப்பு மலையின் முகட்டுக்குச் செல்!
தாலாட் டட்டும் தவழ்காற் றாங்கே
சீராட் டட்டும் செறிகுளிர் காற்றுனை.

சுவர்க்கத் திருந்துநீ தொடவந் திருந்தால்,
பாங்குயர் முகிலின் பரப்பினி லிருந்து,   360
சுவர்க்கம் நோக்கி தொடர்ந்தெழு மீண்டும்!
அந்தவா னத்தின் அதியுய ரம்செல்!
மழைத்துளி சொட்டும் வான்முகி லிடைச்செல்!
கண்ணைச் சிமிட்டும் விண்மீ னிடைச்செல்!
அங்கே நெருப்பாய் ஆர்ந்தே எரிந்துபோ!
பறந்துபோய் மின்னிப் பொறிகளாய்ச் சிந்து!
சூரியன் வலம்வரும் தொடர்பா தையிலே
சந்திர வட்டம் தான்சுழல் வீதியில்!

நீர்கொணர் தீமையாய் நீயே இருந்தால்,
கடலலை விரட்டிக் கலைத்ததே யென்றால்,  370
சிறுமையே மீண்டும் சென்றிடு நீருள்!
ஆழ்கடல் அலையின் அடித்தளம் செல்க!
சேற்றினால் கட்டிய கோட்டையுள் செல்க!
அமர்ந்திரு அலைகள் அமைத்த தோள்களில்!
அங்கே உன்னை அலையுருட் டட்டும்!
தாலாட் டட்டும் தவழ்இருள் நீர்உனை!
மாய்நிலப் புல்வெளி வழிவந் திருந்தால்,
மறைந்தோர் முற்றாய் வதிவிடத் திருந்தெனில்,
இல்லம் திரும்பநீ எடுத்திடு முயற்சி!
அம்மர ணப்புவி அகல்தோட் டவெளி!    380
அந்தச் சொரிந்துபோம் அகல்மண் ணுக்கு!
அந்தக் குழம்பிடும் ஆழ்பூ மிக்கு!
மக்கள்வீழ்ந் திருக்குமம் மறுஇடத் துக்கு!
அந்தமா வீரன் அழிந்தபா ழிடத்தே!

இங்கே யிருந்துவந் திடில்தீச் சக்திநீ,
கானகப் பூதக் கருங்குகை யிருந்து,
வளர்தேவ தாருவின் மறைவிடத் திருந்து,
பசுமை மரங்களின் பகுதிக ளிருந்து
அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
கானகப் பூதக் கருங்குகை களுக்கு   390
பசுமை மரங்களின் பகுதிக ளுக்கு
வளர்தேவ தாருவின் மறைவிடங் களுக்கு
நீஅங் கேயே நீடுதங் கிடுக!
நிலத்துப் பலகைகள் உழுக்கும் வரையில்,
சுவரில் காளான் முளைக்கும் வரையில்
முகடு இடிந்து முன்விழும் வரையில்.

அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
அங்குனை விரட்டுவேன் அதிதீச் சக்தியே!
கிழட்(டு)ஆண் கரடியின் கீழ்வதி விடத்தே!
பெண்கிழக் கரடியின் பெருந்தோட் டத்தே!  400
ஆழ்ந்த சேற்றுத் தாழ்நிலத் துக்கு!
உறைந்த சதுப்பு உவர்நிலத் துக்கு!
நகர்ந்துசெல் சேற்று நனைகிடங் குக்கு!
நெடிதுபாய்ந் தோடும் நீரரு விக்கு!
மீனே இல்லா வெறுங்குளங் களுக்கு!
நன்னீர் **மீனிலா நளிர்நீர் நிலைக்கு.
அங்கே **உனக்கிட மதுகிடைக் காவிடில்
இங்குனைத் துரத்தி இதோவிலக் குகிறேன்
அதாவது வடக்கு அருந்தொலை வெல்லைகள்!
லாப்புவின் பரந்த இடங்கள் அவைக்கு!   410
விரிபுல் புதரிலா வெறும்நிலங் களுக்கு!
உழுது விதைபடா துளநிலங் களுக்கு!
இரவி, சந்திரன் இலாநிலங் களுக்கு!
பகலொளி என்றும் படாஇடங் களுக்கு;
அங்குநீ வாழ அடைந்தாய் பாக்கியம்
நீஅங் கிருக்க நேர்விருப் புறுவாய்,
தொங்குகின் றனமரந் தோறும் எருதுகள்
கொலையுணப் படுவன கலைமான் ஆங்கெலாம்
பசியுறும் மனிதர் பாங்குறப் புசிக்க!
விரும்பியோர் அவற்றை விருப்பொடு கடிக்க!   420

அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
அதையுனக் கியம்பி ஆணை இடுகிறேன்
உறுத்தியாப் பயங்கர உயர்வீழ்ச் சிக்கு!
நெடும்புகை கிளம்பும் நீர்ச்சுழி களுக்கு!
அவற்றில் மரங்கள் அவைவீழ்ந் திருக்கும்
தேவதா ருருண்டு திசைவரும் வேரொடு
சுழன்றுவந் திடும்பசும் அடிமரத் துண்டுகள்
சடைத்திடு (முடித்)தேவ தாருறும் முடியுடன்
கெட்டஅஞ் ஞானியே கிடந்துநீந் திடுக
நுரைத்துறப் பாய்ந்திடு நுவலுநீர் வீழ்ச்சியில்    430
சுற்றிச் சுழன்றகல் துரிதநீர்ப் பரப்பில்
குறுகிய நீரதன் செறிவதி விடத்தில்.

அங்கே உனக்கிடம் அதுகிடைக் காவிடில்
இங்குனைத் துரத்தி இதோவிலக் குகிறேன்
அதாவது துவோனியின் கரும்ஆற் றினிடை!
மரணத்து உலகதன் அழிவற்ற அருவிக்கு
அங்கிருந் துன்னால் அகன்றிட முடியா(து)
மிகுவாழ் நாளெலாம் வெளிவர முடியா(து)
உன்னைநா னாகவே உறவிடு(வி)க் காவிடில்,
வந்துநான் விடுதலை வழங்கா விடினே,   440
ஒன்பது செம்மறி உயர்கடா வுடன்வந்(து)
ஒன்பதும் ஒற்றைநன் மறியே ஈன்றது,
ஒன்பது எருத்துநல் லுயர்மாட் டுடன்வந்(து)
ஒன்பது மொற்றை உயர்பசு ஈன்றது,
ஒன்பது நல்லாண் உயர்பரி கொடுவந்(து)
ஒன்பது மொற்றைப் பெண்பரி ஈன்றது.

பயணிக்க வசதி படருநின் தேவையேல்,
பயணிக்க நல்ல பரிவேண்டு மேயெனில்,
திண்ணமாய்ப் பயண வசதிநான் செய்வேன்
பயணிக்க நானே பரியினைத் தருவேன்   450
பூதத் திடம்நற் புரவியொன் றுண்டு
வாய்த்தசெஞ் சடையுடன் மலையிலே உள்ளது
அதன்வா யிருந்து அக்கினி வெளிவரும்
மூக்கினி லிருந்து மூள்கனல் வெளிவரும்
அதன்குதிக் கால்கள் ஆனவை இரும்பால்
அவைகள் உருக்கினால் ஆனவை மேலும்
அதனால் முடியும் அவைமலை ஏறல்
பள்ளத் தாக்கிடைப் படரவும் முடியும்
நற்பரி வீரன் இத்தலத் திருந்தால்
திறமாய்ச் சவாரி செய்பவன் என்றால்.   460

இதுவும் போதா தின்னமு மென்றால்
பூதம் சறுக்கும் பொருட்களை எடுப்பாய்
பிசாசின் மரத்துச் சறுக்கணி பெறுவாய்
தடித்த சறுக்குத் தண்டும் உள்ளது
பூத நாட்டினிற் போய்ச்சறுக் கிடற்கு
பிசாசின் தோட்டம் பெரிதும் சுற்றிட
பூத நாட்டினில் புகுந்து விரைந்திட
தீயவன் இடத்தில் சென்று திரிந்திட;
பாதையின் குறுக்கே பாறையொன் றுண்டு
அதனைத் துகள்துகள் ஆகநொ ருக்கு    470
ஒருமரக் கட்டை யுள்ளது வழியில்
உடைத்துப் போடுஉடன் அதை இரண்டாய்
பாதை நடுவிலோர் வீரன் உள்ளனன்
அவனையோர் கரைக்கு அனுப்பி வைத்திடு.

எழுக, சோம்பலோய், இப்பொழு துன்வழி,
பொல்லா மனிதனே, போ,நகர்ந் தேகுக,
பொழுது உதித்துப் புலர்வதன் முன்னர்
விடியற் கடவுளின் விடிவின் முன்னர்
எறிகதி ரோன்மேல் எழுவதன் முன்னர்
சேவலின் கூவல் செவிப்படு முன்னர்.   480
இதுவே சோம்பலன் எழுந்துசெல் நேரம்
பொல்லாப் பிராணியின் புறப்படு நேரம்
நடப்பதற் குளது நற்சந் திரஒளி
வெளிச்சமும் உளது வெளிச்சென் றுலவ.

விரைந்துநீ விலகி வெளிச்செலா விட்டால்
தாயிலா நீசநீ தான்புறப் படாவிடில்
நகங்களைப் பெறுவேன் நான்ஒரு கழுகிடம்
உதிரம் குடிப்பதன் உகிர்களைப் பெறுவேன்
ஊன்அயில் பறவையின் உகிர்களைப் பெறுவேன்
பற்றித் தூக்கும் பருந்தின் அவயவம்;    490
இவற்றால் பற்றுவேன் எளியபோக் கிரிகளை
நிறுத்துவேன் தடுத்து நிமிர்தீச் சக்தியை
திருப்ப முடியா திருக்கும் அதுதலை
மூச்சை விடவும் முடியா திருக்கும்.

**முற்படைப் பாம்பேய் முடிவுற நேர்ந்தது
அன்னை யிலாமகற் கழிவும் வந்தது
கடவுளின் விடிவுறும் காலம் வருகையில்
கர்த்தரின் உதவி கைமேற் கிடைக்கையில்;
அன்னையின் பிறவியே அழிந்துபோ காயோ
செயற்கைப் பிராணிநின் செயல்நிறுத் தாயோ    500
எசமான் இலாநாய் இனிமறை யாயோ
தாயிலா நீசநீ தான்புறப் படாயோ
இம்மணித் தியாலம் இதுமுடி வதனுள்
திகழ்இச் சந்திரன் தேய்வதற் குள்ளே."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பின னப்போ(து)
"இங்கே இருப்பது எனக்கு நல்லது
இங்கே வசிப்பது இனிமை யானது
எனக்கு ரொட்டியாய் ஈரல் இருக்கும்
உண்ணக் கொழுப்பும் உண்டு அதனுடன்   510
உளசுவா சப்பை உண்டிட வறுத்து
கொழுப்பும் அதனுடன் கொள்இத உணவு.

எனது பட்டடையை இங்கே அமைக்கிறேன்
ஆகும்உன் இதய ஆழப் பகுதியில்
அடிப்பேன் கடுமையாய் அடர்சுத் தியலால்
இன்னும் நொந்துபோய் இருக்கு(ம்)வே றிடங்களில்
என்றுமே விடுதலை இல்லை உனக்கு
உன்வாழ் நாளில் என்றுமே யில்லை
நாடும்அச் சொற்களை நான்கேட் காவிடில்
விரும்பிய மந்திரம் பொருந்த வராவிடில்    520
போதிய சொற்களை நேரிற் பெறாவிடில்
மந்திரம் ஆயிரம் ஆயிரம் வராவிடில்.
மந்திரச் சொற்களை மறைத்தல்ஆ காது
பகர்மந் திரமொழி பதுக்குதல் ஆகா(து)
நிலத்துக் கடியிலே புதைத்தலும் ஆகா(து)
மந்திர வாதிகள் மறைந்துபோ னாலும்."

அப்போ(து) பாடல்கள் அகம்நிறை விபுனன்
வார்த்தைகள் நிறைந்த மாமுது மனிதன்
வாயிலே மாபெரும் மந்திர அறிவுளோன்
மார்பிலே அளவிலா மறத்திற லுடையவன்   530
சொற்கள் இருந்த பெட்டகம் திறந்தான்
பெருமந் திரச்சொல் பெட்டியைத் திறந்தான்
நல்ல பாடல்கள் நனிசில பாட
சிறந்த மந்திரச் செம்பா இசைக்க
பாடிடப் படைப்பின் மூலத்(து) ஆழம்
பாடிடக் காலத்(துத்) தொடக்க(த்து) மந்திரம்
இவைஎ(ல்)லாப் பிள்ளையும் இசைக்கும் பாட்ட(ல்)ல
வீரர்கள் மட்டுமே விளங்கும் பாட்டிவை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.   540
படைப்பின் மூலத்(து) ஆழம் பாடினான்
மந்திர சக்தியை வலுவொழுங் கிசைத்தான்
கர்த்தர் மொழிந்த கட்டளை யாலும்
அனைத்தும் வல்லோன் ஆணையி னாலும்
பெருவான் தானாய்ப் பிறந்ததைப் பாடினான்
பெருவிண் இருந்துநீர் பிரிந்தது எவ்விதம்
நிலம்வந்(த) தெவ்விதம் நீரிலே யிருந்து
நிலத்தில் சகலதும் நேர்ந்தது எவ்விதம்.
நிலவுக்(கு) உருவம் நேர்ந்ததைப் பாடினான்
படர்கதிர் நிறுவப் பட்டதைப் பாடினான்   550
நெடுவான் தூண்கள் நிறுத்தப் பட்டதை
நீள்விண் மீன்கள் நிறைக்கப் பட்டதை.

அதன்பின் பாடல்கள் அகம்நிறை விபுனன்
பாடினான் உண்மையாய், பாடினான் முடிந்ததை,
பார்த்ததோ கேட்டதோ என்றும்இப் படியி(ல்)லை
என்றைக்கு மேயிவ் விரும்புவி நாட்களில்
இத்தனை சிறந்ததோர் இனியநற் பாடகன்
இத்தனை திறனுடை இனியதோர் நிபுணனை;
வாயிலே யிருந்துநேர் வார்த்தைகள் கொட்டின
நாவிலே யிருந்துசொற் றொடர்நனி பெருகின   560
விரைபரிக் குட்டியின் வியன்கால் போலவும்
பாய்ந்திடும் குதிரையின் பாதம் போலவும்.

அந்தமில் பலநாள் அவனும் பாடினான்
அவ்விதம் இரவுகள் அனைத்தும் பாடினான்
பாடலைக் கேட்கப் பகலவன் நின்றனன்
நின்றே தங்க நிலவும் கேட்டது
அலைகள்நீர்ப் பரப்பில் அசையா நின்றன
அவ்விதம் கரையிலும் அலைகள் நின்றன
அருவிகள் ஓடா(து) அமைந்தே நின்றன
நிமிர்நுரை உறுத்தியா நீர்வீழ்ச்(சி) நின்றது   570
வுவோக் சிநீர் வீழ்ச்சிப் பாய்ச்சலும் நின்றது
அவ்விதம் *யோர்தான் ஆறதும் நின்றது.

முதிய வைனா மொயினனப் போது
மந்திரச் சொல்செவி வாங்கிய தாலும்
சொற்கள்போ தியன பெற்றத னாலும்
விரும்பிய சொற்களை அடைந்தத னாலும்
புறப்பட வெளிவரப் புந்தியில் நினைந்தான்
அந்தரோ விபுனன் அகல்வா யிருந்து
வார்த்தைகள் நிறைந்தவன் வயிற்றினி லிருந்து
மந்திர அறிஞனின் மார்பிலே யிருந்து.   580

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஐயகேள் ஓஓ, அந்தரோ விபுனனே,
வாயை இன்னும் வலுபெரி தாய்த்திற
அலகை இன்னும் அகலத் திறந்திடு
வருவேன் புவிஉன் வயிற்றினி லிருந்து
புறப்பட்டு வீட்டினை நோக்கிப் போவேன்."

அப்போது பாடல்கள் அகம்நிறை விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"உண்டதும் அனேகம் குடித்ததும் அநேகம்நான்
ஆயிரக் கணக்கில் அழித்ததும் உண்டு   590
ஆயினும் என்றும் அயின்றதே யில்லை
முதிய வைனா மொயினனை உ(ண்)ணல்போல்;
நீவந்த போது நேராய் நடந்தனை
சிறப்புறச் செய்கநீ செல்லும் போதே."

அப்போ(து) அந்த அந்தரோ விபுனன்
இளித்துத் தன்முர செடுத்துக் காட்டினான்
இன்னும் பெரிதாய் இரும்வாய் திறந்தான்
அலகினை மேலும் அகலமாய் வைத்தான்;
முதிய வைனா மொயினன் அவனே
மாபெரும் அறிஞன் வாய்வழி வந்தான்   600
வார்த்தைகள் நிறைந்தவன் வயிற்றினி லிருந்து
மந்திர அறிஞனின் மார்பிலே யிருந்து;
வாயிலே யிருந்து வந்தவன் வெளியே
நின்றான் குதித்து நெடும்புற் றரைமேல்
அம்பொனில் ஆன அணிலதைப் போல
கிளர்பொன் நெஞ்சுடன் கீரியைப் போல.

அவனும் தன்வழி அதன்பின் சென்றான்
கொல்ல வேலைக் கொள்தளம் வந்தான்;
கொல்லன் இல்மரினன் கூறினன் அங்கே:
"மந்திரச் சொற்கள் வாய்க்கப் பெற்றதா   610
நச்சிய மந்திரச் சொற்கள் கிடைத்ததா
படகின் பக்கம் சரிவர இணைக்க
பின்னணி யத்தைப் பிணைத்து வைத்திட
வளைவுத் தட்டினை உயர்த்திப் பொருத்திட?"

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போது நூறு சொற்களைப் பெற்றேன்
பெற்றேன் ஆயிரம் பேசுமந் திரவிதி
மறைவிடத் திருந்து வரவெளிக் கொணர்ந்தேன்
புதைவிட மிருந்து கொணர்ந்தேன் மந்திரம்."   620

படகு இருந்த பக்கம் சென்றான்
மந்திரச் சொற்கள் வாய்ந்தன நிறைவாய்
தன்பட கின்தொழில் தன்னையே முடிக்க
படகின் பக்கம் சரிவர இணைத்தான்
பின்அணி யத்தைப் பிணைத்துவைத் திட்டான்
வளைவுத் தட்டை உயரப் பொருத்தினான்
செதுக்கப் படாமலோர் புதுப்பட குதித்தது
சீவப் படாமலோர் செல்கலம் வந்தது.



பாடல் 18 - வைனாமொயினனும் இல்மரினனும் வடநாடு செல்லுதல்  *



அடிகள் 1 - 40 : வடநாட்டு மங்கையின் உறவை விரும்பி வைனாமொயினன் தனது புதிய கப்பலில் பயணமாகின்றான்.

அடிகள் 41 - 266 : இல்மரினனின் சகோதரி அவனைக் கண்டு, கரையிலிருந்து அவனுடன் பேசி, அவனுடைய நோக்கத்தை அறிந்து, விரைந்து சென்று தன் சகோதரனிடம் ஒரு போட்டியாளன் வடநாட்டு மங்கையைப் பெறுவதற்குப் புறப்பட்டுவிட்டான் என்று கூறுகிறாள்.

அடிகள் 267 - 470 : இல்மரினன் ஆயத்தமாகித் தனது சறுக்கு வண்டியில் கடற்கரை வழியாக வடநாட்டுக்குப் புறப்படுகிறான்.

அடிகள் 471 - 634 : மணவாளர்கள் வருவதைக் கண்ட வடநிலத் தலைவி, வைனாமொயினனை மணம் முடிக்கும்படி தன் மகளுக்கு ஆலோசனை கூறுகிறாள்.

அடிகள் 635 - 706 வடநில மங்கையோ சம்போவைச் செய்த இல்மரினனையே மணமுடிக்க விரும்புகின்றாள். முதலில் அங்கு வந்து சேர்ந்த வைனாமொயினனிடம் அவனை மணம் முடிக்க முடியாது என்று அவள் கூறுகிறாள்.



நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
ஏந்திழை உறவை ஏற்பது பற்றி
பின்னிய குழலியை நண்ணிநோக் குதற்கு
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
செறிபுகார் நாடாம் சரியோ லாவில்
வடபால் நிலத்து வளர்புகழ் மங்கையை
வடக்கின் சிறந்த மணமக ளவளை.

நீல்நிறச் சோடனை நிகழ்த்திக் கப்பல்
பக்கம் சிவப்பு பதநிறம் பூசி    10
அணியம் பொன்னால் அலங்கரித் ததற்கு
வெள்ளியில் சாயமும் விரும்பித் தீட்டினான்;
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
வளரும் காலை வைகறைப் பொழுதில்
படகினைத் தள்ளிப் படிநீர் விட்டான்
பலகைநூ றமைந்த பட(கு)அலை யிட்டான்
மரப்பட்(டை) உருளையின் வயமதி லிருந்து
கமழ்தேவ தாருவாம் கட்டையி லிருந்து.

பாய்மரம் உயர்த்தி பாங்குற நிமிர்த்தி
பாயையம் மரத்திற் பார்த்தே கட்டினான்   20
சிவப்பு நிறத்திலோர் திகழ்பாய் கட்டினான்
இன்னொரு பாயை எழில்நீல் நிறத்திலே
கப்பலின் உள்ளே காலடி வைத்து
படகின் உள்ளே பக்குவ மாயமர்ந்(து)
பயண மாயினன் பனிக்கடல் மீது
நீல்நீர்ப் பரப்பில் நிகழ்த்தினான் பயணம்.

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"இப்போ(து) கப்பலுக் கிறைவனே, வாரும்!
கருணையுள் ளவரே, கப்பலுக் கெழுந்திடும்!   30
சிறியஇவ் வீரனின் சீரிய சக்தியாய்,
சிறியஇம் மனிதனின் திகழுமாண் பலமதாய்,
அகன்று பரந்த இந்நீர்ப் பரப்பில்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.

காற்றே இந்தக் கப்பலை அசைப்பாய்
அலையே கப்பலை அசைத்துச் செலுத்து
வலிக்கப் படாமல் மற்றென் விரல்களால்
குழப்பப் படாமல் கொழுநீர்ப் பரப்பு
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்."    40

*அன்னிக்கி யென்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
கடன்அதி காலை கனபொழு தியற்றுவோள்
வைகறைப் பொழுதில் வளர்துயில் எழுபவள்,
அன்றுக ழுவும்தொழில் அவள்செய நேர்ந்தது
உடைகளைக் கழுவி உலரப் போட்டனள்
செந்நிறப் படிக்கட் டதன்சேர் முடிவில்
அந்த அகன்ற அதேநிலப் பரப்பில்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.   50

பார்த்தனள் அங்கு, பார்த்தனள் திரும்பி,
நற்கால நிலையைச் சுற்றிலும் பார்த்தனள்
வாரியதலை மேல் வானம் பார்த்தாள்
கடலின் பக்கமாய்க் கரையைப் பார்த்தாள்
சூரியன் மேலே சுடர்ந்துகொண் டிருந்தது
மினுமினுத் திட்டன விரிகீழ் அலைகள்.

கடலின் பக்கமாய்க் காரிகை பார்த்தனள்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினள்
பின்லாந்(து) நதிவாய் தன்நோக் குறுகையில்
வைனோ நாட்டுநீர் வளர்முடி வெல்லையில்   60
கறுத்ததோர் புள்ளியைக் கடலில் கண்டனள்
அலையில் நீலமாய் எதையோ கண்டனள்.

உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"என்னநீ கறுப்பாய் இருப்பது கடலிலே
யார்நீ நீல நளிர்நிறம் அலையிலே?
நீயொரு வாத்தின் நேர்கண மானால்
இனிய வாத்தின் குழுவாய் இருந்தால்
அப்படி யானால் அசைந்தெழு பற(ந்து)போ!
உயரமாய் வானின் உறுவெளி யதனில்!   70

கொழுவஞ் சிரமீன் கூட்டமா யிருந்தால்
கிளர்வே றினமீன் கிளையா யிருந்தால்
தெறித்தெழு நீந்திச் செல்லப் படியெனில்
நீருக் குள்ளே நேராய் விழுந்துசெல்!

நீயொரு பாறை நெடுங்கல் லானால்
கனைநீர் மிதக்கும் கட்டையா யிருந்தால்
முகிழ்அலை உன்னை மூடிச் செல்லும்
அகல்நீர் உன்னை அடித்துச் செல்லும்."

படகு சிறிதே பக்கம் வந்தது
பயணம் வந்தது படர்புதுக் கப்பல்    80
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
படகு வருவதைப் பார்த்தனள் இப்போ(து)
பார்த்தனள் பலகைநூ றமைபட கசைவதை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"நீஎன் சகோதரன் நேர்பட கானால்
அல்லது தந்தையின் அகல்கல மானால்
பயணம் வீட்டுப் பக்கமாய் மாற்று
பாதையைச் சொந்தஊர்ப் பக்கமாய்த் திருப்பு!   90
இத்துறை நோக்கி எழுமுன் னணியம்
பிறதுறை நோக்கி உறுபின் னணியம்.

அந்நியன் கப்பலே யாகநீ யிருந்தால்
செல்லுக வேறு திசையிலே நீந்தி
வேறு துறைப்பால் விரைகமுன் னணியம்
இத்துறை நோக்கி இயைகபின் னணியம்."

அவள்வீட் டுப்பட கதுவே யல்ல
காணுமோர் அந்நியன் கப்பலு மல்ல
அதுவே வைனா மொயினனின் கப்பல்
என்றுமே நிலைத்த பாடகன் கப்பல்;    100
அவளின் அருகை யடைந்தது கப்பல்
உரைசெய லுக்காய் ஊர்ந்தது அண்மி
ஒருசொல் சொல்ல இருசொல் லியம்ப
உரமாய் மூன்றாம் சொல்லை யுரைக்க.

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
கப்பலை நோக்கிக் கேட்கத் தொடங்கினள்:
"எங்கே எழுந்தனை வைனா மொயினனே?
அமைதிநீர் மணமகன் ஆம்செல வெவண்கொல்?
ஆயத்த மானதெங்(கு) அரியநாட் டண்ணலே?"   110

முதிய வைனா மொயினனப் போது
கப்பலி லிருந்து கூறினான் இவ்விதம்:
"பெருவஞ்சிர மீன் பிடித்திட எழுந்தேன்
சினைக்கும் **மீனைச் சிறைப்பிடிப் பதற்காய்
துவோனியின் கறுப்புத் தொல்லாற் றிருந்து
அகல்*மர(ண) ஆற்றின் ஆழத் திருந்து."

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"சொல்லிட வேண்டாம் தொடர்வெறும் பொய்யே
மீனின் சினைத்தலை நானும் அறிவேன்   120
சத்திய மாய்என் தந்தையும் முன்னர்
உண்மையாய் எனது உயர்ந்தபெற் றோரும்
பெருவஞ் சிரமீன் பிடிக்கச் சென்றனர்
பெருநன் னீர்மீன் பிடிக்க முயன்றனர்
அவர்பட கார்ந்து அகல்வலை இருந்தன
கப்பல் நிறையக் கனபொறி இருந்தன
கைவலை இப்புறம் கயிறுகள் அப்புறம்
மறுபுறம் நீரில் வலிந்தடிக் கம்புகள்
குறுக்குப் பலகைகீழ் குத்திடும் ஈட்டிகள்
பின்னணி யம்நீள் பெரியகம் பங்கள்;   130
எங்கே எழுந்தனை வைனா மொயினனே
அமைதிநீர் மணமகன் ஆம்செல வெவண்கொல்?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"வாத்துகள் தேடிநான் வழிபுறப் பட்டேன்
மின்னும் சிறகுறும் வியன்புள் வேட்டை(க்கு)
*சக்ஸா நீரிணைத் தன்ஆழ் பகுதியில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்."

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:   140
"உண்மை பேசும் ஒருவனை அறிவேன்
அசத்தியம் பேசும் ஆளையும் அறிவேன்;
சத்திய மாய்என் தந்தையும் முன்னர்
உண்மையாய் எனது உயர்ந்த பெற்றோரும்
வாத்துவேட் டைக்கு வழிசெலல் உண்டு
சிவந்தவாய்ப் பறவையைத் துரத்துவ துண்டு
அவர்பெரும் குறுக்குவில் அமையும் நாணுடன் அவர்வளைத் திடும்வில் அழகுடன் இலங்கும்
கறுத்தநாய் ஒன்றாங்(கு) கட்டியே யிருக்கும்
வங்கக் காலிலே வன்கட் டமைந்திடும்    150
கள்ளநாய் பலதெருக் கரையெலாம் ஓடும்
பாறையில் குட்டிகள் பலவிரைந் தேகும்
வைனா மொயினனே வாய்மையைச் சொல்வாய்
எங்குநீ பயணம் இப்போ(து) செய்கிறாய்?"

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இங்கே செல்கிறேன் எனில்அதால் என்ன
அந்தப் பெரிய அடும்போர்க் கென்னில்
சமமா னோருடன் தான்பொரு தற்கெனில்
திகழ்கெண் டைக்கா(லி)ல் தெறிக்கக் குருதி
இரத்தம் முழங்கால் வரைக்கும் இருக்க?"   160

அன்னிக்கி மீண்டும் அதையே சொன்னாள்
ஈய மார்பினள் இயம்பினள் கடிந்தே:
"அறிவேன் போருக் காய்ச்செலல் பற்றி
முன்னர் தந்தைபோய் முயன்றபல் பொழுதில்
அந்தப் பெரிய அடுபோர் களுக்கு
சமமா னோருடன் தான்பொரு வதற்கு
மனிதர் தூற்றுவர் வலிப்பராம் தண்டு
ஆயிரம் மக்கள் அருகினில் இருப்பர்
முனைப்பாய் குறுக்குவில் முன்னணி யிருக்கும்
அலகுறும் வாள்கள் ஆசனத் தருகாம்;    170
சொல்வாய் உண்மை சொல்வாய் வாய்மை
நேர்மையைச் சொல்வாய் நெடும்பொய் யின்றி
எங்கே எழுந்தனை வைனா மொயினனே
எங்கே அமைதிகொள் இகல்நீர் மனிதனே?"

முதிய வைனா மொயினனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எனதுகப் பலுக்கு எழுந்தருள் பெண்ணே
எனது படகினுள் இனிவா மங்கையே
அந்த உண்மையை அப்போ துரைப்பேன்
பொய்யில் லாமல் புகல்வேன் நேர்மை."   180

ஆயினும் சொன்னாள் அன்னிக்கி ஒருசொல்
ஈய மார்பினள் இயம்பினள் கடிந்தே:
"காற்று உனது கப்ப(லி)ல்வீ சட்டும்
குளிர்கால் படகில் கூடவீ சட்டும்
கவிழ்த்துப் போடுவேன் கடிதுன் கப்பல்
முன்னணி யத்தை மூழ்கடித் திடுவேன்
அந்த உண்மைநான் அறிந்துகொள் ளாவிடின்
எங்கே(க) நினைத்தாய் எனஅறி யாவிடின்
உண்மைநீ சொல்வதை உடன்கேட் காவிடின்
பொய்யின் இறுதியைப் புரிந்துகொள் ளாவிடின்."   190

முதிய வைனா மொயினனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நல்லதிப் போது நவில்வேன் உண்மை
பொய்யைச் சிறிதாய்ப் புகன்றது முண்டு
நங்கை ஒருத்தியை நாடிப் போகிறேன்
கன்னி ஒருத்தியை உன்னிப் போகிறேன்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
செறிபுகார் நாடாம் சரியொலா விருந்து
மனிதரை உண்ணும் வறுநாட் டிருந்து
இகல்வோர்க் கவிழ்த்து ஆழ்த்திடத் திருந்து."   200

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
அந்த உண்மையை அறிந்த போதினில்
பொய்யிலா உண்மை புரிந்து கொண்டதும்
ஆடைகள் நீரில் அலம்பா திருந்தனள்
துணிகளை நீரில் தோய்க்கா திருந்தனள்
அகன்று பரந்தஅவ் விறங்கு துறையில்
செந்நிறப் படிக்கட் டதன்சேர் முடிவிலே
துணிகளை அள்ளித் தொடுகரத் தெடுத்தாள்
பாவ(஡)டை பொறுக்கிப் பைங்கரம் சேர்த்தாள்   210
அவ்விட மிருந்து அவள்நடந் தேகினள்
விரைந்து ஓடி வேகமாய்ச் சென்றனள்
கொல்லனின் வீட்டைக் குறுகினள் வந்து
வேலைத் தளத்தை மிதித்தடி வைத்தனள்.

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
பெரும்இரும் பாசனப் பீடம் அமைத்தான்
வெள்ளியால் அங்ஙனம் வேறொன் றியற்றினான்
அவன்தலை ஒருயார் அளவுதூ(சி) யிருந்தது
தோளில்ஆ றடியுயர் தூட்கரி யிருந்தது.   220

வாச(லி)ல் அன்னிக்கி வைத்தாள் காலடி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"சகோதர, கொல்ல, தகைஇல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ!
ஒருதறி **(நூ)னாழி உடன்எனக் குச்செய்
விரலுக்குச் சிறந்த விதமோ திரம்செய்
இரண்டு மூன்று இடுகா தணிசெய்
ஐந்தா றிடுப்பு அணிசங் கிலிசெய்
ஏனெனில் உனக்கு இயம்புவேன் உண்மை
பொய்யே யில்லா மெய்யதைப் புகல்வேன்."  230

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"நீநற் செய்தியை நிசமாய்ச் சொன்னால்
ஒருதறி நூனாழி உனக்குச் செய்வேன்
சிறந்தமோ திரமே செய்வேன் விரற்கு
சிலுவையை நன்கே செய்வ(ன்)மார் புக்கு
தலைக்குத் தகுந்த தலையணி செய்வேன்;
தீய செய்திநீ செப்புவ தானால்
அனைத்துப் பழைய அணிகளும் உடைப்பேன்
அனைத்துன் அணியையும் அனலிடை எறிவேன்
எனதுலைக் களத்தில் இடுவேன் அடியில்."   240

அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
மணக்க எண்ணிய மங்கையை நினைவாய்
வாக்களிக் கப்படு வனிதையை நினக்கு(முன்)