Kalevala - A Finland Epic -part II (songs 19-25)
(in tamil script, unicode/utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 19-25



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

பாடல் 19 - வடநில மங்கையை இல்மரினனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தல்  *



அடிகள் 1 - 32 : இல்மரினன் வடநாட்டின் வீட்டுக்கு வந்து வடநில மகளை மணம் செய்யக் கேட்கிறான். அவனுக்குச் சில பயங்கரமான வேலைகள் தரப்படுகின்றன.

அடிகள் 33 - 344 : வடநில மகளின் ஆலோசனைப்படி அவன் அந்த வேலைகளைச் செய்து முடிக்கிறான். முதலாவதாக பாம்புகள் நிறைந்த வயலை உழுகிறான்; இரண்டாவதாக துவோனியின் கரடியையும் மரண உலகின் ஓநாயையும் பிடிக்கிறான். மூன்றாவதாக துவோனலா ஆற்றில் ஒரு பெரிய பயங்கர மீனைப் பிடிக்கிறான்.

அடிகள் 345 - 498 : வடநாட்டுத் தலைவி தனது மகளை இல்மரினனுக்குத் தருவதாக வாக்களித்து விவாக நிச்சயம் செய்கிறாள்.

அடிகள் 499 - 518 : வைனாமொயினன் மனத்துயருடன் வடநாட்டை விட்டுத் திரும்புகிறான். எவரும் தன்னிலும் பார்க்க இளையவர்களுடன் விவாகத்தில் போட்டியிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறான்.



அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தானே வீட்டின் தனியுள் நுழைந்து
நற்கூ ரையின்கீழ் நடந்தே போனான்.

குடுவையில் தேனும் கொணரப் பட்டது
சாடி ஒன்றிலே தேன்வந் தடைந்தது
கொல்லன்இல் மரினனின் கொழுங்கரங் களிலே;
இந்தச் சொற்களில் இயம்பினன் கொல்லன்:
"இந்தவாழ் நாளில் என்றுமே யில்லை
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்   10
அருந்துவ தில்லை அளித்தஇப் பானம்
எனது**சொந் தத்தை இனிக்காண் பதன்முன்
அன்புக் குரியாள் ஆயத்த மாகுமுன்
நான்காத் திருந்தவள் நற்றயா ராகுமுன்."

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உனது மணமகள் உளள்பெரும் சிக்கலில்
காத்திருந் தவட்கொரு கடுந்தொ(ல்)லை வந்தது
புனையுமோர் பாதணி பொருத்தம தாயிலை
அடுத்ததும் கூடவே அளவாய் இல்லையாம்;   20
ஆயத்த மானவள்நின் அன்புக்கு உரியவள்
உண்மையில் அவளைநீ உடையவன் ஆகலாம்
விரியன் பாம்பார் விளைவயல் உழுதிடில்
உறும்அரா வயலினை உழுதே புரட்டினால்
பயன்படுத் தாமலோர் பாய்ந்திடு கலப்பையும்
நகர்த்தப் படாமலோர் நனிதவழ் உழுமுனை;
அதனையே புதமொன் றந்தநாள் உழுதது
வாய்க்கால் பறித்தது வலியபேய் ஒன்றுதான்
செப்பினாற் செய்ததோர் செழும்உழு முனையினால்
கூரிய அலகினைக் கொள்கலப் பையினால்   30
அதிர்ஷ்ட மற்றவன் அன்புறும் என்மகன்
பாதியை உழுதனன் மீதியை விட்டனன்."

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"வளர்இரா நங்கையே, வைகறைப் பெண்ணே!
உன்நினை வினிலே உளவோ அந்நாள்?
திகழ்புதுச் சம்போ செய்தஅந் நாட்களை?
அரும்ஒளிர் மூடியை அடித்தவந் நாட்களை?
அப்போது நீயொரு சத்தியம் செய்தனை   40
அனைவரும் அறிந்த ஆண்டவன் பேரிலே
சர்வ வல்லவன் தன்முகத் தின்கீழ்
என்னிடம் வருதற் கிசைவைக் காட்டினாய்
அரியநற் கணவன் ஆகிய என்னிடம்
திகழ்நாள் முழுவதும் சினேகிதி யாக
என்கை யணைப்பில் இருக்குமோர் கோழியாய்;
அன்னைஇப் போதுனை அளிக்கிறா ளில்லை
தன்பெ(ண்)ணை எனக்குத் தருகிறா ளில்லை
உறுவிரி யன்வயல் உழாதே போனால்
போயுழு தராவயல் புரட்டா விட்டால்."   50

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
செய்வாய் தங்கத் திலேயொரு கலப்பை
அதனை வெள்ளியால் அலங்கரித் திடுவாய்
உறுவிரி யன்வயல் உழலாம் அதனால்
பொறியரா வயலைப் புரட்டிப் போடலாம்."

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொல்லுலை வைத்தான் கொழும்பொன் எடுத்தே   60
வெள்ளியும் வைத்தான் வியனுலைத் துருத்தியில்
அமைத்தான் கலப்பையொன் றதிலே யிருந்து;
இரும்பிலே பாதணி இயற்றினான் அடுத்து
அமைத்தான் உருக்கிலே அதன்பின் காலணி
அவற்றை அவனும் அணிந்தே கொண்டனன்
தன்கால் அணிகளைத் தரித்துக் கொண்டனன்
அணிந்தனன் இரும்பினால் ஆனமேற் சட்டை
உருக்கு வளையம் உறுத்தினான் பட்டியை
எடுத்தான் இரும்பில் இயைந்தகை யுறைகளை
கல்லினால் ஆன கையுறை கொண்டான்   70
கொடுங்கனல் கக்கும் குதிரையைப் பெற்றான்
அந்நற் புரவிக் கணிகலன் புட்டினான்
புறப்பட் டேகினான் போய்வயல் உழற்கு
புன்னிலம் உழுது புரட்டிப் போட்டிட.

போந்தாங்கு நோக்கினன் புரள்நெளி தலைகளை
சலசலத் திரையும் **தலையோடு கண்டான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
"ஏ,நெளி புழுவே, இறைவனின் படைப்பே!
உனது தலையினை உயர்த்தி யதுயார்?
எவர்தான் சொன்னார், எவரது கட்டளை?   80
உன்தலை உயர்த்தி உயரமாய் நிற்க
நேராய்க் கழுத்தை நிமிர்த்தியே நிற்க?
இப்போது பாதையில் இடம்விட் டகல்க!
புன்மைப் பிராணியே புல்லினுள் மறைக!
பற்றையின் உட்புறப் பால்நுழைந் திடுக!
புற்புத ருள்ளே புகுந்துசென் றிடுக!
நீஅங் கிருந்து நிமிர்த்தினால் தலையை
நொருக்குவார் உன்தலை நுவல்மனு முதல்வன்
உருக்கு முனையுடை ஒளிர்கணை களினால்
இரும்புக் குண்டாம் இகல்மழை பொழிவார்."   90

பின்னர்நச் சரவப் பெருவயல் உழுதான்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினான்
பார்த்துழும் நிலத்திலே பாம்புகள் எடுத்தான்
புரட்டிய மண்ணில் புகும்பாம் பெடுத்தான்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"உழுதிப்போ(து) முடித்தேன் உறுவிரி யன்வயல்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
பாம்புகள் நிறைந்த பன்னிலம் கிளறினேன்,
இப்போது பெண்ணை எனக்கீய லாமா?
என்இணை யில்லா அன்புக் குரியளை?"    100

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரிவை உனக்கு அளிக்கப் படுவாள்
பெண்ணிங் குனக்குப் பெறத்தரப் படுவாள்
இங்கு துவோனியின் கரடி கொணர்ந்தால்
மாய்வுல கோநாய் மடக்கி யடக்கினால்
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து;
சென்றனர் நூற்றுவர் திசைபிடித் தடக்க
மீண்டு திரும்பினோர் வியன்நிலத் தில்லை."   110

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதித்திடப் பட்டது
மாய்வுல கோநாய் மடக்கிப் பிடிக்க
துவோனிக் கரடிகள் அவைகளைக் கொணர
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து."

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:    120
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
ஒருகடி வாளம் உருக்கிலே செய்வாய்
வாய்பிணை கருவியை வடிப்பாய் இரும்பிலே
நனைந்து கிடக்குமோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்;
துவோனிக் கரடிகள் அவற்றால் கொணர்வாய்
மாய்வுல கோநாய் மடக்கி அடக்குவாய்."

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாத கைவினைக் கலைஞன்   130
ஒருகடி வாளம் உருக்கிலே செய்தான்
வாய்பிணை கருவியை வடித்தான் இரும்பில்
நனைந்து கிடந்ததோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்.

பிடித்து அடக்கப் பின்புறப் பட்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பனிப்புகார் மகளே, பனிமறை பாவாய்!
மூடு பனியினை முன்சுள கால்தெளி!
பனிப்புகார் அதனை நனிமிதக் கச்செய்!
வேட்டை மிருகம் மிகஉலா விடத்தில்   140
கேளா திருக்கஎன் காலடி யைஅது
உறும்எனை முந்தியஃ தோடா திருக்க."

பிடித்தோ நாயைப் பொருத்தினன் கடிவளம்
கரடிக் கிரும்புச் சங்கிலி கட்டினன்
அங்கோர் துவோனியில் அமைபுற் புதரில்
நெடிதுட் புறமுள நீலக் காட்டினில்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"வயோதிப மாதே வழங்குக நின்மமகள்
துவோனியின் கரடி கவனமாய்க் கொணர்ந்தேன்
மாய்வுல கோனாய் மடக்கி அடக்கினேன்."  150

அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"வாத்து உனக்கு வழங்கப் படுவாள்
நீலவாத் துனக்கு நிசம்தரப் படுவாள்
**கோலாச்சி பெரும்செதிற் கொழுமீன் பிடித்தால்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தால்
அந்தத் துவோனலா ஆற்றிலே அங்கே
பாதாள மாய்புவிப் படுகிடங் கினிலே
கரைவலை ஒன்றைக் கையெடுக் காமல்
திருப்பி யிடாமல் சேருமோர் கைவலை   160
சென்றோர் நூற்றுவர் சேர்ந்ததைப் பிடிக்க
திரும்பிவந் தோர்கள் செகத்திலே இல்லை."

இப்போ தவனுக் கெழுந்தது கவலை
தொல்லையாய்ப் பட்டன எல்லா அலுவலும்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதிக்கப் பட்டது
தந்ததைக் காட்டிலும் தரமிகு வேலை
கோலாச்சி பெருஞ்செதிற் கொழுமீன் பிடிக்க
விரையும் கொழுத்த மீனதைப் பிடிக்க   170
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மரண உலகின் **மாயா அருவியில்
கைவலை கரைவலை எவையுமில் லாமல்
எந்தப் பொறியும் எடுத்தல்இல் லாமல்."

மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
இதற்காய் வீணாய் வருத்தப் படாதே
அனல்உமிழ் கழுகொன் றமைப்பாய் இப்போ(து)
அனற்புள் படைப்பாய் அதிபிர மாண்டமாய்!  180
பிடிப்பாய் அதனால் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடிப்பாய்
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மாய்வுல கத்தின் பாத(஡)ளக் கிடங்கில்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
அனல்உமிழ் கழுகொன் றமைத்திட லானான்
அனற்புள் படைத்தான் அதிபிர மாண்டமாய்
பறவையின் கால்களைப் படைத்தான் இரும்பால்
பாத நகங்களைப் படைத்தான் உருக்கால்   190
படகின் புறங்களால் படைத்தான் சிறகுகள்
தானே பறவையின் தவழ்சிற கேறினான்
அமர்ந்தனன் பறவையின் அகல்முது கினிலே
சிறகு எலும்பின் செறிமுனை அமர்ந்தான்.

இதன்பின் கழுகுக் கியம்பினான் வழிமுறை
பெரியதீப் பறவைக் கறிவுரை சொன்னான்:
"என்னுடைக் கழுகே, எனது பறவையே!
நான்சொல் இடத்தை நாடிப் பறந்துசெல்
துவோனியின் கறுப்புத் தொல்நிற நதிக்கு
மாய்வுல கத்தின் பாத(஡)ளக் கிடங்குக்(கு)  200
அறைவாய் பெருஞ்செதில் அக்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனை அடிப்பாய்!"

அந்தக் கழுகு அழகிய பறவை
எழுந்தது மேலே பறந்தே சென்றது
விரைந்துகோ லாச்சி வேட்டைக் ககன்றது
பல்லு(ள்)ள பயங்கரப் பருமீன் தேடி
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
மாய்வுல கத்தின் பாதளக் கிடங்குக்(கு);
ஒற்றைச் சிறகு **அப்பைக் கலக்க
மற்றச் சிறகு வானைத் தொட்டது    210
நகங்கள் கடலில் இறங்கிப் பிறாண்ட
பாறையில் அலகு மோதிமுட் டியது.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வேட்டையைத் தேடி விரைந்தே சென்றான்
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
கழுகவ னுக்குக் காவல் இருக்க.

நீரில் இருந்தொரு **நீர்விசை எழுந்தது
இல்மரி னனையே இறுகப் பிடித்தது
கழுகு அதனது கழுத்தில் குதித்தது
திருகிய துநீர்ச் சக்தியின் சென்னியை    220
இழுத்தது பிடித்து இரும்தலை கீழே
காலடிக் கிடந்த கறுப்புச் சேற்றினுள்.

வந்தது துவோனியின் வலுக்கோ லாச்சி
நீர்வாழ் நாயும் நேராய் வந்தது
சின்னஞ் சிறியகோ லாச்சியு மல்ல
பென்னம் பெரியகோ லாச்சியு மல்ல;
கோடரி இரண்டு கொள்கைப் **பிடிநா
குப்பைவா ரிகைப் பிடிநீள் பற்கள்
மூன்றுநீர் வீழ்ச்சிமுன் கடைவாய் அளவு
ஏழு தோணிகள் நீளம் முதுகு    230
வந்தது கொல்லனை வலிதுகைப் பற்ற
கொல்லன்இல் மரினனைக் கொன்று(ண்)ண வந்தது.

கழுகு எதிரே கடுகதி வந்தது
காற்றின் பறவை கடிததை அறைந்தது
அந்தக் கழுகு அதுசிறி தல்ல
ஆனால் உண்மையில் அதுபெரி தல்ல:
வாயின் அகல மதுவறு நூறடி
ஆறுநீர் வீழ்ச்சி அளவது கடைவாய்
நாக்கின் நீளம் ஈட்டிஆ றலகு
அதன்நகம் ஐந்து அரிவாள் நீளம்;    240
அதுபெரும் செதிற்கோ லாச்சியைக் கண்டது
கூடிய விசைசெலும் கொழுத்த மீனதனை
அந்தமீ னினையே அடித்தது பாய்ந்து
அந்தமீன் செதிலை அடித்தே கிழித்தது.

அப்போ தந்த அதிபெரும் செதில்மீன்
விரைந்தே செல்லுமம் மிகுகொழுப் புறுமீன்
கழுகின் நகங்களைக் கடிதுதொட் டிழுத்தது
தெளிந்தநீ ரதனின் திகழடி ஆழம்;
என்னினும் கழுகு எழுந்தே பறந்தது
வானதில் உயர வலுவுடன் சென்றது   250
கறுப்புச் சேற்றினைக் கலக்கிக் கிளப்பி
தெளிந்தநீர் மேலே சேரக் கொணர்ந்தது.

வட்டமிட் டுயர வந்தது முன்பின்
முயற்சித் ததுஒரு முறையது மீண்டும்
உள்திணித் ததுதன் ஒற்றை நகத்தை
பயங்கர மிகுந்த படர்கோ லாச்சிதோள்
நீர்நா யதனின் நீள்வளை வெலும்பில்;
அடுத்ததன் நகத்தை அதிஉள் திணித்தது
உருக்கில் அமைந்த உறும்மலை யுள்ளே
இரும்பினால் ஆன இருங்குன் றுள்ளே;    260
ஆயினும் பாறையில் அந்நகம் வழுக்கி
விலகிச் சென்றது விரிகுன் றிருந்து
கோலாச்சி வழுவிக் கொண்டது அதனால்
நழுவிச் சென்றது நளிர்நீர் விலங்கு
கழுகின் கால்நகங் களிலே யிருந்து
பிரம(஡)ண்டப் பறவைப் பிடிவிர லிருந்து
நெஞ்செலும் புகளில் நேர்நகக் கீறலும்
கிழித்த காயமும் கிடந்தன முதுகில்.

பின்னர் இரும்புப் பெருநகக் கழுகு
இன்னொரு தடவை எடுத்தது முயற்சி    270
அதன்சிற கினிலே அனல்வீ சியது
கனலும் நெருப்பாய்க் கனன்றன விழிகள்
பிடித்தது நகங்களால் பெருங்கோ லாச்சியை
தன்பிடிக் கொணர்ந்தது தனிநீர் நாயை
உறுசெதிற் கோலாச்சி(யை) உயர்த்தி எடுத்தது
இழுத்து வந்தது இரும்நீர் விலங்கை
ஆழத் தலைகளின் அடியிலே யிருந்து
தெளிந்த நீரதன் திகழ்மேற் பரப்பு.

இரும்பு நகக்கழு கிப்படி யாக
அதனுடை மூன்றாம் அருமுயற் சியினால்   280
பெற்றது துவோனியின் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தது
அந்தத் துவோனலா ஆற்றிலே யிருந்து
படுமாய் வுலகின் பாதளத் திருந்து;
தண்ணீர் நீராய்த் தான்தெரிந் திலது
பெருங்கோ லாச்சிப் பிறழ்மீன் செதில்களால்
வருகால் காலாய் **மணக்கவு மில்லை
பருத்த கழுகின் பறப்பிற குகளால்.

இரும்புப் பாதத் திருங்கழு கதன்பின்
சென்றது சுமந்து செதிற்கோ லாச்சியை   290
பெரியசிந் தூரச் செறிமரக் கிளைக்கு
படர்தேவ தாருவின் தொடர்முடி யதற்கு;
சுவையை அங்கே சுவைத்துப் பார்த்தது
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தது
நெஞ்சு எலும்பை நேர்பிளந் தெடுத்தது
அடித்து நொருக்கி அதன்தலை போட்டது.

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"ஓ,நீ இழிந்த ஊனுண் கழுகே,
எந்த இனம்நீ இயைந்தபுட் குலத்தில்
எவ்வகைப் பிராணிநீ இருக்கும் வகையில்   300
சுவையை இவ்விடம் சுவைத்துப் பார்த்தாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
பிளந்தே எடுத்தாய் பெரியநெஞ் செலும்பை
அடித்து நொருக்கி அதன்தலை போட்டாய்."

அப்போ(து) இரும்பால் ஆம்நகக் கழுகு
சினந்தே எழுந்து சென்றது பறந்து
படர்வான் உயரப் பறந்தே சென்றது
மேகமண் டலத்து வெளிபரப் புடே
மேகம் கலைந்தது விண்முழங் கிற்று
வான்அதன் மூடி வளைந்தே வந்தது    310
மானிட முதல்வனின் மாவில் தெறித்தது
திங்களின் கூரிய கொம்புகள் உடைந்தன.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொண்டே சென்றான் குறித்தமீன் தலையை
மாமியா ருக்கு வருமன் பளிப்பாய்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நாற்க(஡)லி ஒன்றிதோ நாளெலா மழியா(து)
வடபுல நல்ல வதிவிடத் துக்கு."

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:   320
"விரியன் வயலை விரைந்துழு(து) முடித்தேன்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
உயர்மாய் வுலகின் ஓநாய் பிடித்தேன்
கடிதே துவோனியின் கரடிகள் கட்டினேன்
பெரிய செதிற்கோ லாச்சியைப் பெற்றேன்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தேன்
துவோனலா வதனின் தொன்னதி யிருந்து
படர்மாய் வுலகின் பாதளத் திருந்து
அரிவையிப் போது அளிக்கப் படுவளா
தையலாள் இங்கே தரப்படு வாளா?"   330

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஆயினும் அதிலே ஆற்றினாய் ஓர்பிழை
அடித்துத் தலையை நொருக்கிப் போட்டாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
நெஞ்சின் எலும்பை நேர்பிளந் தெடுத்தாய்
சுவையை ஆங்கே சுவைத்துப் பார்த்தாய்."

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விளைசே தமிலா வெற்றியொன் றில்லை
எம்மிகச் சிறந்த இடங்களிற் கூட     340
நதிதுவோ னலாவிது நனிபெறப் பட்டது
படுமாய் வுலகின் பாதளக் கிடங்கில்;
ஆயத்தம் தானா அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயார்நிலை யுள்ளளா தனிக்காத் திருந்தவள்?"

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"ஆயத்த மானாள் அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயாரா யுள்ளனள் தனிக்காத் திருந்தோள்
அளிக்கப் படுவள் அரியஉன் தாரா
தரப்படு வாள்உன் தனிவாத் துனக்கு    350
இல்மரி னன்எனும் இகல்கொல் லற்கு
என்றுமே அருகில் இருந்திட அமர்ந்து
முழங்கால் மனையளாய் அமர்ந்தே இருக்க
கொள்கரத் தணைப்பில் கோழியா யிருக்க!"

ஆங்கொரு பிள்ளை அகலத் திருந்தது
பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று:
"இவ்வதி விடங்கட் கிப்போ(து) வந்தது
எங்கள்கோட் டைக்கு இன்னொரு பறவை
வடகிழக் கிருந்தே பறந்ததக் கழுகு
கவின்வான் குறுக்கே கருடன் பறந்தது   360
விரிசிற கொன்றுவான் விளிம்பைமுட் டிற்று
மற்றது அலைமேல் வந்துதட் டிற்று
வால்கடற் பரப்பை வலிதே தொட்டது
தலைவான் முகட்டில் தட்டுப் பட்டது;
பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
ஆண்களின் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
இரும்புக் கூரை **இயைந்த(து)ஆண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது.    370

பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
அரிவையர் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
செப்புக் கூரை செறிந்த(து)பெண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது.

பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
மடவார் கோட்டைமேல் வந்தே அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;    380
சணற்றுணிக் கூரையில் **தையலர் கோட்டை
அதனால் உட்புகல் அதற்கு முடிந்தது.

கோட்டை யதன்புகைக் கூண்டில்வந் தமர்ந்தது
கூரை விளிம்பைக் குறுகியங் கிருந்தது
திறந்தது கோட்டைக் கதவம் தட்டி
அமர்ந்தது கோட்டைச் சாளர மதன்மேல்
சுவரரு கணைந்தது தொடர்பசு மிறகுடன்
நூறிற குடன்சுவர் மூலையை யடைந்தது.

பின்னிய நறுங்குழற் பெண்களைப் பார்த்தது
நறுங்குழல் தலைகளை நன்கா ராய்ந்தது   390
மங்கையர் குழுவில் மாசிறப் பினளை
பின்னல் தலைகளில் பெரும்பே ரழகியை
முத்துத் தலைகளில் மிக்கொளி யுடையளை
மலர்தலை களில்மிகு மாபுகழ் உடையளை.

கழுகுபின் அவளைக் கடிதுபற் றியது
அவளைக் கருடன் அணைந்து பிடித்தது
குழுவில் மிகநலக் குமரிபற் றியது
வாத்துக் கணத்தில் வனப்புள் ளாளை
ஒளியும் மென்மையும் ஒருங்கிணைந் தாளை
செம்மையும் வெண்மையும் சேரவுள் ளாளை   400
அவளையே பிடித்தது அரியகாற் றின்புள்.

நீண்ட நகங்களில் தாங்கிய தவளை
எழில்தலை நிமிர்த்தி இருந்திடு மவளை
அருவடி வுகந்த அமைப்புடை யாளை
இறகினைப் போன்ற இனியமென் மையளை
தண்ணிய தோகைச் சாயலுயுள் ளாளை."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அன்புக் குரியநீ எங்கிருந் தறிந்தாய்,
கேட்டது எவ்விதம் கிளர்பொன் அப்பிளே,   410
வனிதையாம் இவளும் வளர்வது பற்றி,
நற்சணற் குழலாள் நடமிடல் பற்றி?
அரிவையின் வெள்ளி அணிஒளிர்ந் ததுவா?
பாவையின் பொன்பிர சித்தமுற் றதுவா?
எங்கள்செம் பருதி அங்கெறித் ததுவா
எங்கள் திங்கள் அங்குதிகழ்ந் ததுவா?"

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
வளர்ந்து வருமது வருபதில் சொன்னது:
"அன்புக்கு உரியது அறிந்தது இவ்விதம்
பாக்கியம் உள்ளவன் பாதையை அறிந்தான்   420
மகிமை பெற்ற மங்கைவீட் டுக்கு
அவளது அழகிய அகல்கா வெளிக்கு;
அவளது தந்தை அருமதிப் புள்ளவர்
கப்பல் பெரிதாய்க் கட்டி முடிப்பதால்,
அவளது அன்னையோ அதிலும் சிறந்தவள்
தடிப்பாய் ரொட்டிகள் தாம்சுட் டெடுப்பதால்,
ரொட்டி கோதுமையில் சுட்டுவைப் பதனால்,
வந்தோரை ஏற்று வைப்பதால் விருந்து.

அன்பபுக்கு உரியது அறிந்தது இவ்விதம்
சரியாம் அந்நியர் தாமும் அறிந்தது    430
இளமைப் பெண்ணாள் வளர்கிறாள் என்பதை
கன்னி நல்விருத்தி காண்கிறாள் என்பதை:
ஒருமுறை முற்றத் துலாவிய வேளையில்
களஞ்சியக் கூடம் காலிடும் வேளையில்
புலர்அதி காலைப் பொழுதுஅன் றொருநாள்
வளர்புலர் போதின் வைகறை வேளை
நுண்புகை கிளம்பி நுலாய் எழுந்தது
புகைதடித் தெழுந்தது புகாராய் வந்தது
சீர்த்திகொள் பாவையின் திருஇல் இருந்து
வளரும் வனிதையின் எழிற்கா விருந்து;   440
அரைத்துக் கொண்டு அவளே யிருந்தனள்
திரிகையின் பிடியில் செயற்பட் டிருந்தாள்;
திரிகையின் கைப்பிடி குயிலென ஒலித்தது
காட்டு வாத்தெனக் கைத்தண் டொலித்தது
திரிகையின் சக்கரம் குருவிபோன் றிசைத்தது
திரிகை அசைந்தது திகழ்முத் துப்போல்.

மீண்டும் ஒருமுறை விரைந்துசெல் வேளையில்
வயல்எல் லையிலடி வைத்திடு வேளையில்:
பசும்புல் தரையிலே பாவையும் இருந்தனள்
மஞ்சள்புல் தரையில் வழிநகர்ந் தேகினள்  450
கலயம் நிறைசெஞ் சாயம் காய்ச்சினள்
மஞ்சள்சா யத்தை வடித்தாள் கெண்டியில்.

மூன்றாம் முறையில் முனைந்துசெல் வேளை
பாவைபல் கணிக்கீழ் படர்ந்துசெல் வேளை
நங்கையின் நெசவு நன்றாய்க் கேட்டது;
தறியின் அச்சவள் தளிர்க்கைமோ திற்று;
சிறிய**நூ னாழி வழுவிச் சென்றது
குன்றதன் குழியில் துன்று**கீ ரியைப்போல்
தறியச் சுப்பல் செறிந்தொலி யெழுப்பின
மரத்தில் இருக்கும் மரங்கொத் தியைப்போல்   460
பாவோ(ட்)டு **சட்டம் படுவிசை சுழன்றது
மரத்துக் கிளையின் மரவணி லதுபோல்."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதுதான் அதுதான் அழகென் பெண்ணே!
உனக்கெப் போதும் உரைப்பேன் அல்லவா,
கூவிடேல் தேவ தாருக ளிடையென,
பள்ளத் தாக்கிலே பாடா தேயென,
கழுத்தின் வளைவைக் காட்டா தேயென,
கரங்களின் வெண்மையைக் காட்டா தேயென,   470
இளமை மார்பதன் எழுச்சியை என்று,
ஏனைய உறுப்பின் எழிலினை என்று!

இலையுதிர் காலம் முழுவதும் சொன்னேன்
பாடினேன் இந்தக் கோடைஎக் காலமும்
விரைந்து செல்லும் வசந்தத் தியம்பினேன்
அடுத்த விதைப்புப் பருவத் திசைத்தேன்:
இரகசிய மானதோர் இல்லம் கட்டுவோம்
இரகசியச் சாளரம் சிறிதாய் வைப்போம்
நேரிழை யார்துணி நெய்வதற் காக
இழைநான் **கூடுநூல் இரைச்சலி னோடு,   480
செவிகொடார் பின்லாந்(து) திகழ்மண வாளர்
பின்லாந்(து) மணவ(஡)ளர், பெருநாட்(டு) வரன்மார்."

பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
**ஒருபட்சக் குழவி உரைத்ததிவ் வாறு:
"மாபரி ஒன்றை மறைப்பது சுலபம்
முரட்டு மயிர்ப்பரி மறைப்பது எளிது
மங்கை ஒருத்தியை மறைப்பது சிரமம்
உயர்நெடுங் குழலியை ஒளிப்பது சிரமம்;
கல்லினால் கோட்டைநீ கட்டிய போதிலும்
உயர்ந்து கிளர்ந்த ஒலிகடல் நடுவில்    490
மகளிரைத் தடுத்து வைத்தற் காங்கே
நின்கோ ழிகளை நேர்வளர்த் தெடுக்க
மகளிரை அங்கே மறைத்தலு மரிது
அங்கே வளர்தலும் அரிதுகன் னியர்கள்
மாப்பி(ள்)ளை கைகளில் மாட்டப் படாமல்
நன்மண வாளர், நாட்டு வரன்மார்,
உயர்ந்த தொப்பிகள் அணிந்திடு மனிதர்
உருக்குக் குளம்பு உயர்பரி யுடையோர்."

முதிய வைனா மொயினன் அவனே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்   500
வீடு நோக்கி விரைந்திடும் வேளை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நான்அபாக் கியவான் நவில்துர்க் கதியினன்
ஏனெனில் எனக்கு இதுதெரிந் திலது
திருமணம் இளமையில் செய்து களிக்க
வாழ்கா லத்தில் வழித்துணை தேட!
**தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான்
இளமையில் திருமணம் இயைந்தே செய்பவன்
பிள்ளைப் பருவம் பிள்ளைப் பெறுபவன்
சிறுபரா யத்தில் பெறுபவன் குடும்பம்."   510

அப்போ(து) வைனா மொயினன் தடுத்தான்
அமைதிநீர் மனிதன் அவன்தடுத் துரைத்தான்
வயோதிபன் இளமை மங்கையை நாடலை
அழகிய பெண்ணை அடைய முயல்வதை
போட்டியில் சேர்ந்து நீந்திப் போவதை
போட்டிக் காகப் புனலில் விரைவதை
இளம்பெண் ஒருத்திக்கு இடுவதைப் போட்டி
இளம்பரு வத்தில் இருக்கையில் அடுத்தவன்.



பாடல் 20 - விவாக விருந்துக்குப் பெரிய எருது கொல்லப்படுதல்  *




அடிகள் 1 - 118 : திருமணக் கொண்டாட்டத்திற்கு மிகப் பெரிய எருது ஒன்று கொல்லப்படுதல்.

அடிகள் 119 - 516 : 'பீர்' என்னும் பானம் வடித்து உணவுகள் தயாரித்துத் திருமணக் கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெறுதல்.

அடிகள் 517 - 614 : நாயகர்களைத் திருமணத்திற்கு அழைக்கத் தூதுவர் அனுப்பப்படுதல்; ஆனால் லெம்மின்கைனன் மட்டும் அழைக்கப் படவில்லை.




என்ன பாடலை இப்போ(து) பாடுவோம்?
எந்தக் கதைகளை இப்போ(து) கூறுவோம்?
பாடுவோம் நாங்கள் பாடலை இவ்விதம்
இயம்புவோம் நாங்கள் இந்தக் கதைகளை:
வியன்வட பால்நில விழாக்களைப் பற்றியும்
தெய்வீகப் பானமே தேர்ந்து(ண்)ணல் பற்றியும்.

கடிமண ஒழுங்குகள் கனநாள் நடந்தன
ஆயத்த மாயின அனைத்துப் பொருட்களும்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
சரியோலாப் பகுதியின் தகுவாழ் விடங்களில்.   10

அங்கே கொணர்ந்த அவைஎவை எவைகள்
வந்து சேர்ந்திட்ட வகைப்பொருள் எவைஎவை
வடபால் நிலத்துநீள் மணவிழா வுக்கு
குடித்து மகிழ்பெருங் குழுவத னுக்கு
உறுநாட்டு மக்களுக் குபசாரம் செய்ய
உயர்பெருங் குழுவுக் குணவு படைக்க.

*கரேலியா இடத்திலோர் காளை வளர்ந்தது
நின்றது கொழுத்துப் பின்லாந் தெருது
அதுவும் பெரியதோ சிறியதோ அல்ல
இளங்கன்று தானது இனிதாய் வளர்ந்தது;   20
*'ஹமே'யெனு மிடத்தில் அதன்வால் சுழன்றது
*'கெமி'யெனு மாற்றில் அதன்தலை அசைந்தது
அதன்கொம்பு நீளம் அறுநூ றடிகள்
தொ(ள்)ளாயிரம் அடிகளாம் தொடர்வாய்ப் புட்டு;
வாரமொன் றெடுக்கும் வலம்வரக் கீரி
நுவல்எரு தொருபுற நுகக்கட் டதன்மேல்;
**தூக்கணத் துக்கொரு நாட்பொழு தெடுக்கும்
பறந்து முடித்திடப் படிகொம் பிடையே
விரைந்து பபறந்து விறல்முனை யடையும்
இடையில் தங்கி எடுக்கா தோய்வு;   30
திங்களொன் றோடித் திரிந்ததோர் **கொடையணில்
கழுத்தி லிருந்துவால் கரைமுனை நோக்கி
அதுவால் முனையை அடையவே யில்லை
அடுத்த மாதமும் அடையவே யில்லை.

கட்டுக் கடங்காக் கன்றது இளையது
பின்லாந்து நாட்டின் பெரியதோர் காளை
கரேலியா விருந்து கொணரப் பட்டது
வடபால் நிலத்து வயல்களின் பக்கம்;
கொம்புகள் பக்கம் நின்றொரு நூறுபேர்
வாய்ப்புட் டுப்புறம் மற்றா யிரம்பேர்    40
அந்தக் காளையை அடுத்துப் பிடித்தனர்
வடநாட்டு கொண்டு வந்தபோ தினிலே.

வழியிலே நடந்து வந்தது எருது
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்
சேற்று நிலங்களில் செறிபுல் மேய்ந்தது
முதுகுமேற் புறமோ முகிலில் தோய்ந்தது;
அடித்ததை வீழ்த்த அங்கெவ ரும்மிலர்
நாட்டின் குரூரம் வீழ்த்துவோ ரங்கிலர்
வடக்கு மாந்தர் வரிசைத் தரத்தில்
உயர்ந்த பெரிய உறவின ரிடையே   50
எழுச்சிகொண் டுயரும் இளைஞரி னிடையே
அல்லது முதியோர் அவரிலும் இல்லை.

வயோதிபன் வெளிநாட் டொருவன் வந்தான்
*'விரோகன் னாஸ்'என்னும் கரேலியன் அவனே
இந்த சொற்களில் இயம்பினன் அவனே:
"பொறுப்பாய், ஏழை எருதே பொறுப்பாய்!
இதோநான் வருகிறேன் இகல்தண் டத்தொடே
தண்டா யுதத்தால் சார்ந்துனை அறைகிறேன்
அபாக்கியப் பிராணியே அடிப்பேன் மண்டையில்
உன்னால் முடிந்திடா தின்னொரு கோடையில்   60
முடியா துனது மூக்குவாய் திருப்ப
வாய்ப்புட்(டுத்) திருப்பிப் பார்க்கவொண் ணாது
இந்த வயல்களின் எல்லை வெளிகளில்
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்."

முதியவன் சென்றான் முன்விலங் கறைய
விரோக(ன்)னாஸ் அதைத்தொட விரைந்தே சென்றான்
போற்றுதற் குரியோன் போனான் பிடிக்க:
அங்கே எருது அசைத்தது தலையை
கறுத்த விழிகளைச் சுழற்றிப் பார்த்தது;
முதியோன் தாவித் தேவதா ரேறினான்   70
விரோகன்னாஸ் பாய்ந்தான் விரியும் புதருள்
போற்றுதற் குரியோன் புகுந்தான் செடிப்புதர்.

எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
ஒருவனைப் பெரிய எருதினை வீழ்த்திட
அழகிய கரேலியா அயற்புறத் திருந்து
பெரியதோட் டத்தில் பின்லாந் திருந்து
அமைதி ரஷ்யா அகல்நாட் டிருந்து
விறல்நிறை சுவீடன் வியன்நாட் டிருந்து
லாப்புவின் அகன்ற இரும்வெளி யிருந்து
மிகுவலித் *துர்யா வினிலுமே யிருந்து   80
துவோனலா நிலத்திலும் ஒருவனைத் தேடினர்
மரண உலகின் மண்ணின் அடியிலும்
தேடினர் ஆயினும் சேர்ந்திலர் எவரும்
நாடினர் ஆயினும் நண்ணிலர் எவரும்.

எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
அறைந்து வீழ்த்திட ஆளொன்று தேடினர்
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.

கறுத்த மனிதன் கடலிடை எழுந்தான்
வீரன் ஒருவன் விளங்கினான் அலையில்   90
சரியாய்த் தெளிந்த தண்ணீ ரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து);
உயர்ந்தோர் தம்மில் ஒருவனு மன்றவன்
சிறியவர் தம்மையும் சேர்ந்தவ னன்றவன்
ஒருகல யக்கீழ் உறங்கத் தக்கவன்
நேர்ஒரு முறம்கீழ் நிற்கத் தக்கவன்.

முதியோன் இரும்பு(க்)கை முட்டியை யுடையவன்
இரும்புரோ மமுளோன் எதிர்பார் வைக்கு
தொல்பா றையிலாம் தொப்பி தலையிலே
கற்களில் செய்த காலணி கால்களில்    100
கனகத் தியைந்த கத்தி கரத்திலே
கத்தியில் இருந்தது கைப்பிடி செப்பினால்.

எருதை அடிக்க ஒருவன் கிடைத்தனன்
கொன்று வீழ்த்தக் கண்டனர் ஒருவனை
பின்லாந் தெருதைப் பிடித்தடிப் பவனை
நாட்டின் குரூரம் வீழ்த்துவோன் தன்னை.

தன்னுடை இரையைத் தான்கண் டதுமே
தாவி விரைந்து தாக்கினான் கழுத்தில்
காளையை முழங்கால் களிற்பணித் திட்டான்
விலாவைப் பற்றி வீழ்த்தினான் நிலத்தில்.    110

அதிக இரையை அவன்பெற் றானா?
அதிக இரையை அவன்பெற வில்லை:
பேழைகள் நூறு பெய்த இறைச்சியும்
அறுநூறு அடியில் அமை**பதன் இறைச்சியும்
ஏழு தோணிகள் எலாம்நிறை இரத்தமும்
ஆறு சாடிகள் அவைநிறை கொழுப்பும்
அந்த வடநிலத் தமைவிழா வுக்கு
அச்சரி யோலா அதன்விருந் துக்கு.

கட்டப் பட்டதோர் கவின்இல் வடக்கே
ஒருபெரும் வீடு உயர்பெரும் கூடம்    120
ஐம்பத்து நாலடி அதன்நீள் பக்கம்
நாற்பத் திரண்டடி நனிஉயர் அகலம்
கூரையில் நின்றொரு சேவல் கூவினால்
அதன்குரல் தரையில் அறக்கேட் காது,
கொல்லையில் நின்றொரு குட்டிநாய் குரைத்தால்
அதன்கத வம்வரை அதுகேட் காது.

அந்த வடநிலத் தலைவியும் அங்கே
வந்தாள் நடந்து வளர்தரை கடந்து
வந்து சேர்ந்ததும் மத்தித் தரைக்கு
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்:   130
"'பீரை' எப்படிப் பெறலா மப்பா
மதுவைத் தரமாய் வடிப்ப தெப்படி
திருமண விழாவில் உபசா ரம்செய
விவாக வீட்டு விருந்தில் வழங்க?
மதுவினை வடிக்கும் வகைநான் அறியேன்
வியன்'பீர்' தோன்றிய விதமும் அறியேன்."

அங்கே இருந்தான் அடுப்பில் கிழவன்
இயம்பினன் அடுப்பினில் இருந்த கிழவனும்:
" 'பீர்'தான் பிறந்தது பார்லியி லிருந்து
**போதைச் செடியால் பொலிந்த நற்பானம்   140
ஆயினும் நீரிலா ததுபிறந் திலது
எரியும் நெருப்பு இலாமலு மல்ல."

**ஆரவா ரத்தின் அருமகன் அச்செடி
நன்னிலம் சிறிதாய் நாட்டப் பட்டது
உறுமராப் போல்நிலத் துழவும் பட்டது
**காஞ்சொறிச் செடியெனக் களைந்தெறி பட்டது
கலேவாப் பகுதியிற் காண்கிணற் றருகினில்
ஒஸ்மோ வயலின் உளகரை யோரம்;
ஓரிளம் நாற்று உடனங் கெழுந்தது
முளையொன்(று) பசுமையாய் முளைத்து வந்தது   150
ஒருசிறு மரத்தில் உயரப் படர்ந்தது
உச்சியை நோக்கி உயர்ந்தே சென்றது.

பார்லியை அதிர்ஷ்டத் தேவதை விதைத்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்;
அழகாய் பார்லி அங்கே வளர்ந்தது
செழித்து உயர்ந்து சீராய் வந்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்
கலேவா மைந்தனின் காட்டு வெளியினில்.

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அழைத்தது மரத்திருந் தப்போ தைச்செடி   160
திடல்வயல் பார்லி செப்பிட லானது
கேட்டது கலேவாக் கிணற்றிநீ ரதுவும்:
'கூடுவ தெப்போ(து) குவிந்தொன் றாய்நாம்
எப்போ தொருவரை ஒருவர்சந் திப்பது
தனித்த வாழ்வு தருவது துயரம்
இருவர் மூவர் இணைவது இனிமை.'

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
பார்லித் தானியம் பைங்கரத் தெடுத்தாள்
ஆறு பார்லி அருமணி எடுத்தாள்    170
போதைச் செடிப்புக் குஞ்சமே ஏழு
எடுத்தாள் நீரை எட்டு அகப்பைகள்
பானையைப் பின்னர் தீயினில் வைத்தாள்
கொதிக்கச் செய்தாள் நெருப்பில் கலவை
பார்லி மணிகளில் 'பீரை'க் காய்ச்சினாள்
கரையும் கோடை காலத்து நாட்களில்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
மரத்தில் குடைந்த வன்புதுச் சாடியில்
மிலாறு மரத்தின் வியனார் தொட்டியுள்   180

எடுத்தாள் 'பீரை' இதமாய் வடித்து
பெற முடிந்திலது உறுபுளித் தன்மை
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
வேறு எதனைத் தேடிப் பார்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப் 'பீர்'ப்பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்   190
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சிராய்த்த துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சிராயை எடுத்தனள்.

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்   200
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் விரல்களின் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அங்கே வெள்ளை அணிலொன் றுதித்தது.   210

தன்மக னுக்குச் சாற்றினாள் வழிமுறை
அவ்வணி லுக்கு அறிவுரை புகன்றாள்:
'புல்மேட்(டுப்) பொன்னே, புதியஎன் அணிலே!
புல்மேட்டு மலரே, புமியின் எழிலே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகு!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
களிப்பு நிறைந்த கானகம் அதற்கு
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே
ஒருசிறு மரத்தில் ஓடிமே லேறு
தளைத்துச் சடைத்த தனிமர முடிக்கு    220
அதனால் கழுகு அதுபிடிக் காது
காற்றின் பறவை கண்டடிக் காது
கொணர்வாய் தேவ தாருவின் **கூம்பை
கொணர்வாய் தாருவின் கூம்பின் **செதிலை
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் உயர்'பீர்'ப் போடு!'

அணிலுக்(கு) ஓட அழகாய்த் தெரிந்தது
விரையத் தெரிந்தது **சடைவா லதற்கு
நீடிய பாதையை ஓடியே கடக்க
செறிதொலைப் பயணம் செய்தே முடிக்க   230
ஒருகா முடித்தது மறுகா **கடந்தது
கடந்தது குறுக்கே காவொரு மூன்றும்
களிப்பு நிறைந்த கானகம் சென்றது
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே.

கண்டது மூன்று கானகத் தருவை
சிறிய நான்கு தேவதா ருக்களை
தளர்சேற்று நின்ற தாரு(வில்)ஏ றிற்று
புற்றிடர் மரமேற் போயிட லானது
பெருங்கழு கதனைப் பிடிக்கவு மில்லை
அடர்காற் பறவை அடிக்கவும் இல்லை.   240

குலதேவ தாருவின் கூம்பைப் பறித்தது
தாரு மரத்தில் தழைகளை ஒடித்தது
நகங்களில் அவற்றை நன்கொளித் திட்டது
பாதத்தைச் சுற்றிப் பத்திரம் செய்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.

பெண்ணவள் அவற்றை 'பீரி'ல் போட்டனள்
பகர்ஒஸ் மோமகள் பானத் திட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்லை யப்'பீர்'
இளமைப் பானம் எழவிலை நுரைத்து.    250

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை    260
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சீவற் துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சீவலை எடுத்தனள்.

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்   270
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
கிளர்பொன் மார்புக் கீரியொன் றுதித்தது.

வந்தகீ ரிக்கு வழிமுறை சொன்னாள்
அனாதைப் பிள்ளைக் கறிவுரை சொன்னாள்:  280
'எனதுநற் கீரியே என்னிளம் பறவையை
அழகிய கம்பளி அருமைத் தோலே
நான்புகல் இடத்து நனிவிரைந் தேகு
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
காட்டுக் கரடியின் தோட்ட வெளிக்கு
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே;
**புரையைநின் காலில் போய்நீ எடுத்து
கால்களில் புளித்த மாவுறை சேர்த்து    290
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.'

கீரிக்(கு) இப்போ(து) ஓடத் தெரிந்தது
பொன் மார்புக்குப் போகத் தெரிந்தது
விரைந்து கடந்தது விரிநீள் பாதை
செய்து முடித்தது சேர்தொலைப் பயணம்
ஒருநதி நீந்தி மறுநதி கடந்தது
கடந்தது குறுக்கே கவின்மூன் றாம்நதி
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
கரடிகள் இருக்கும் கற்குகை யதற்கு    300
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே
இரும்பினா லான இருங்குன் றதற்கு
உருக்கினா லான உயர்மலை யதற்கு.

கரடியின் வாயில் கனநுரை வழிந்தது
கொடிய கரடிவாய்க் கனபுரை இருந்தது
கைகளில் சற்றே காண்நுரை யெடுத்தது
பாதத் **திலும்பின் படிபுரை சேர்த்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.   310

ஒஸ்மோ மகளும் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் வந்ததை யிட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்யை யப்'பீரே'
மனிதனின் பானம் வரவி(ல்)லை நுரைத்தே.

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '    320

கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை 
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
பயற்றம் **நாற்றைப் படிதரைக் கண்டனள்
நாற்றை எடுத்தனள் நற்றரை யிருந்தே.   330

அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்  
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '

தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்    340
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அதிலே பிறந்ததோர் அழகிய வண்டு.

தன்பற வைக்குச் சாற்றினள் வழிமுறை
தன்வண் டுக்குச் சாற்றினள் அறிவுரை:
'வண்டே, வண்டே, வான்விரை பறவையே!
புதுப்பசும் புல்நிலப் பூக்களின் அரசே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகுக!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
இகல்விரி கடலில் இருக்கும் தீவகம்
கிளர்கடல் நடுவே கிடக்கும் பாறை    350
ஒருபெண் ஆங்கே உறக்கத் திருப்பாள்
செப்பிடைப் பட்டி தெரியும் கழன்று
தேன்புல் அவளது செறிமருங் கிருக்கும்
திகழ்உடை ஓரம் தேன்புல் இருக்கும்
கொஞ்சத் தேனைக் கொணர்வாய் சிறகில்
ஆடையில் தேனை அள்ளி வருவாய்
ஒளிரும் புல்லின் உயர்நுனி யிருந்து
இனிய பொன்மலர் இதழினி லிருந்து
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.'   360

அந்த வண்டு அதிவிரை பறவை
சென்றது பறந்து சென்றது விரைந்து
விரைந்து கடந்தது மிகுசிறு தூரம்
குறுகியே வந்தது கொண்டநீள் தூரம்
குறுக்கே ஒருகடல் குறுக்கே மறுகடல்
கடந்தது மூன்றாம் கடலநயும் குறுக்கே
எறிகடற் பரப்பில் இருந்ததீ வுக்கு
கிளர்கடல் நடுவே கிடந்தபா றைக்கு
நற்துயில் புரிந்த நாரியைக் கண்டது
ஈய மார்பினள் வாடிக் கிடந்தனள்    370
புனைபெய ரில்லா புல்மே டொன்றில்
வளர்நறை நிறைந்த வயலின் அருகில்
அம்பொற் புற்கள் அவளது இடையில்
வெள்ளிப் புற்கள் மிளிர்ந்தன பட்டியில்.

சிறகை வண்டு தேனில் தோய்த்தது
உருகும் நறையில் சிறகைத் தோய்த்தது
ஒளிரும் புல்நுனி ஒன்றின் மேலே
பைம்பொன் மலரின் படர்முனை ஒன்றில்
மங்கையின் கைகளில் வைத்தது கொணர்ந்து
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.   380

ஒஸ்மோ வின்மகள் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் மற்றதைப் போட்டனள்
புளித்து வந்தது புதுப்பீர் இப்போ(து)
நுரைத்து எழுந்தது நுவல்இளம் பானம்
குணப்புது மரத்தில் குடைந்த சாடியில்
தேவதா ருமரத் திகழ்நற் றொட்டியில்
பொங்கி எழுந்தது புனைகைப் பிடிவரை
நுரைத்து நின்றது நுரைவாய் விளிம்பில்
உயர்தரை வழிந்து ஓடிடப் பார்த்தது
படர்நிலம் சிந்திப் பாய்ந்திடப் பார்த்தது.    390

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
குடிக்க மனிதர்கள் கூட்டமாய் வந்தனர்
பெற்றனன் முதலிடம் பேர்லெ(ம்)மின் கைனனே
குடித்தனன் அஹ்தி, கொள்தூர நெஞ்சினன்,
குடித்தனன் செந்நிறக் கன்னத்துப் போக்கிரி
வளர்ஒஸ் மோமகள் வடித்தவப் 'பீரை'யே
கலேவா வின்மகள் காய்ச்சிய மதுவை.

ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,    400
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
'ஓ,அபாக் கியள்எனக் குரியவிந் நாட்கள்
தீயஇப் 'பீர்'நான் தேர்ந்தே வடிக்கையில்
நான்செய்த போதுவிந் நனிகெடும் பானம்
தொட்டியின் வாய்வரை தொடர்துயர்ந் தெழும்பி
நுரைத்தே வழிந்து நிலத்திடைப் போனதே! '

பாடிற்று மரத்திலோர் பவளச்செங் குருவி
கூரையின் மரத்திலே கூறிற்றோர் குருவி:
'தீயதன் மையில்அது திகழ்'பீ ர'ல்ல
அதுநல் வகையாம் அருமந்த பானம்    410
பீப்பாவி லூற்றியே பிறிதுவைத் திடலாம்
களஞ்சிய அறைதம்மில் கனமாய்வைத் திடலாம்
சிந்துரக் கலயம் சேர்த்துவைத் திடலாம்
வைக்கலாம் செப்பான வளையச்சா டிக்குள்.'

'பீர்'தான் பிறப்புப் பெற்றதிவ் விதமாம்
கலேவாவின் வடிப்பின் கதையினா ரம்பமாம்
அவ்விதம் நல்லதோர் அரும்பெயர் பெற்றது
புகழொடு மதிப்பும் பொருந்திடப் பெற்றது
நல்லதாம் வகையென நற்பெயர் பெற்றது
உயர்ந்தநல் மனிதரின் உயர்பான மானது   420
நாரியர் களைமது நகைத்திட வைத்தது
நல்மன நிலையினை நல்கிய தாடவர்க்(கு)
உயர்ந்தநல் மானிடர்க் குவகையைத் தந்தது
மயங்கியே பிதற்றினர் மடையர்கள் போதையில்."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
'பீரி'ன் பிறப்பைப் பெரிதும் கேட்டதும்
தூநீர் பெரிய தொட்டியில் நிறைத்து
வைத்ததன் அருகே மரப்புதுச் சாடி
போதிய பார்லியைப் போட்டதன் உள்ளே
சேர்த்துப் போதைச் செடித்தழை நிறைய   430
மதுப்'பீர்' காய்ச்சி வடிக்கத் தொடங்கினள்
கனபல நீரைக் கலக்கத் தொடங்கினள்
கவின்புது மரத்துக் கலயம் ஒன்றிலே
மிலாறு மரத்தொரு விரிசா டியிலே.

கற்கள்பல் திங்கள் கடுஞ்சூ டேற்றி
கோடை முழுவதும் கொள்நீர் காய்ச்சி
காடு காடாய்க் கனமர மெரித்து
கிணறு கிணறாய் கிளர்நீர் கொணர்ந்தாள்;
மரங்கள் குறைந்து வந்தன காட்டில்
அருவியில் நீரும் அருகியே வந்தது    440
வனப்'பீர்' வடித்து வந்தவே ளையிலே
மயக்கப் பானம் வடித்தவே ளையிலே
வடநிலப் பெரிய வருவிருந் துக்கு
மாந்தி மகிழநல் மானிடர் களுக்கு.

தீவு முழுவதும் செறிபுகை படிந்தது
மேட்டு நிலத்தில் செந்தீ எரிந்தது
தடித்த புகையும் சார்ந்துயர்ந் தெழுந்தது
நீராவி பரந்து நெடுங்கால் கலந்தது
கனன்று எரிந்த கனலினி லிருந்து
பெரிதாய் எரிந்த பெருநெருப் பிருந்து    450
வடநிலத் தையது மறைத்தது பாதி
இருளைக் கரேலியா முழுதும் நிறைத்தது.

முற்றும் பார்த்தனர் முழுமாந் தர்களும்
அறிய விரும்பினர் அதையெலாம் பார்த்தோர்:
"இப்புகை வருகிற தெங்கே யிருந்து
காற்றில்நீ ராவி கலந்தது எவ்விதம்?
இகல்போர்ப் புகையெனில் இதுமிகச் சிறிது
இடையரின் தீயெனில் இதுமிகப் பெரிது."

லெம்மின் கைனனின் அன்னையிப் போது
காலைப் பொழுததி காலைவே ளையிலே   460
புனல்பெற வேண்டிப் போனாள் அருவி
கண்டனள் எங்கணும் கனத்த புகையினை
வடக்கு நிலத்தின் வான்மீ தினிலே
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"போரினால் மூண்டு எழுந்த புகைஅது
அமரினால் மூண்டு அனலும் நெருப்பது."

அவனே அஹ்தி அத்தீ **வருமகன்
தோன்றுமவ் வழகுறு தூர நெஞ்சினன்
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:   470
"நானே சென்று நனிநேர் பார்க்கலாம்
பக்கத்து நின்று பார்த்து அறியலாம்
எங்கிருந் தென்று இப்புகை வருவது
காற்றில்நீ ராவி கலந்ததெவ் விதமென
போரினால் மூண்ட புகையா என்பதை
அமரினால் எரியும் அனலா என்பதை."

தூர நெஞ்சினன் நேரிலே போனான்
எழும்புகை பிறந்த இடத்தினை அடைந்தான்
போரினால் மூண்ட புகையே யல்ல
அமரினால் எரியும் அனலுமே யல்ல    480
இனியபீர் வடிக்கும் இடத்தின் நெருப்பு
போதைப் பானம் காய்ச்சும் தீயது
நிமிர்சரி யொலாவின் நீரிணை வாயிலில்
மேட்டு நிலத்தின் மிகுவளை முனையில்.

தூர நெஞ்சினன் தொடர்தங்(கு) பார்த்தான்
ஒருவிழி சுழன்றது உயர்அவன் தலையில்
அவ்விழி சுழல அடுத்தது சாய்ந்தது
வாயும் சற்றே வளைந்தே நெளிந்தது
பார்த்தவன் பின்னர் பகர்ந்திட லானான்
நீரிணைக் கப்பால் நின்றே உசாவினன்:   490
"ஓ,என் அன்புக் குரியநல் மாமி!
வடபால் நிலத்தின் மாண்புறு தலைவி!
சிறந்த 'பீரை'ச் சீராய் வடித்தெடு!
போதைப் பானம் நேராய்க் காய்ச்சு!
மாபெரும் கூட்டம் மகிழக் குடித்து!
வாகாய் லெம்மின் கைனனும் மாந்திட!
திகழ்தன் சொந்தத் திருமண நாளில்,
வளருநின் இளமை மகளவ ளுடனே!"

தயாராய் வந்தது தக்க'பீர்'ப் பானம்
வந்தது முடிவு(க்கு) மனிதரின் இரசம்   500
வடிந்தே வந்தது மகிழ்செம் 'பீரே'
வந்தது போதை மதுநன் றாக
திணிநிலத் தடியில் சேர்த்தே வைக்கலாம்
கல்லில் அமைந்த களஞ்சிய அறையில்
வைக்கலாம் மிலாறு மரத்துச் சாடியில்
வைக்கலாம் செப்பு வன்முளைப் பீப்பா(வில்).

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
வெந்த உணவை வெப்பமா யாக்கி
கெண்டிகள் அனைத்திலும் கிளர்**குமிழ் எழுப்பி
சட்டிகள் அனைத்தையும் **சலசலப் பாக்கினள்   510
பின்னர் சுட்டனள் பெரிய ரொட்டிகள்
தட்டி எடுத்தனள் தகுபணி யாரம்
உறும்நல் மனிதரை உபசா ரம்செய
உயர்பெரும் குழுவிற் குணவு அளிக்க
வடக்கில் நிகழும் மாபெரும் விருந்தில்
சரியொலாப் பகுதி சார்குடிப் போர்க்கு!

ரொட்டிகள் நன்றே சுட்டு முடிந்தன
தட்டி முடிந்தன தகுபணி யாரம்
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநேர ரம்சில கடந்தே முடிந்தது    520
சாடியி லே'பீர்' தனிக்கொதித் தெழுந்தது
களஞ்சிய அறையில் கதித்து நுரைத்தது:
"இப்போ(து) குடிப்பவன் இங்கே வரலாம்
வருதலும் கூடும் மதுச்சுவை மனிதன்
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பதிதி
பகருமென் சரியாம் பாடகன் வருவான்."

பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்ப்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்லபா டகனை;    530
பாட வஞ்சிர மீனை யழைத்தனர்
கோலாச்சி நீனைப் போட்டிக் கழைத்தனர்
ஆயினும் வஞ்சிரம் அதுபா டாது
கோலாச் சிக்கது கூடி வராது
வஞ்சிர மீனின் வாயோ கோணல்
பகர்கோ லாச்சிமீன் பற்களில் நீக்கல்.

பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்ல பாடகனை;    540
பாலகன் ஒருவனைப் பாட அழைத்தனர்
பாடல் போட்டியில் பையனை அழைத்தனர்;
ஆயினும் பாலகன் அவன்பா டுகிலான்
கூவா(து) எச்சில் வழியும் குழந்தை
குழந்தையின் நாக்கோ கொண்டது கீச்சிடல்
அடிநாக் கதுவோ அமைந்தது விறைப்பாய்.

பொங்கி யெழுந்தது பொருசெம் 'பீரே'
தனியிளம் பானம் சபிக்க வந்தது
தகுசிந் துரமரச் சாடியி லிருந்து
செப்பினால் அமைந்த தொட்டியி லிருந்து:   550
"ஒருபா டகனை உடன்கொண ராவிடில்
பண்புறு முகந்த பாடகன் ஒருவனை
குயிற்குரற் சிறப்புக் கொண்டபா டகனை
நவஎழில் நிறைந்த நல்ல பாடகனை
உதைத்துத் தள்ளுவேன் உள்ளநல் வளையம்
விரைந்தடி உடைத்து வெளியே வருவேன்."

அந்த வடநிலத் தலைவியப் போது
அழைப்பை வெளியே அகல விட்டனள்
அனுப்பினள் வெளியே அவள்தூ துவரை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவளே:   560
"ஏய்,என் சிறிய இளமைப் பெண்களே!
அகலா நித்திய அடிமை யாளரே!
ஒன்றாய் அழைப்பீர் உடனெலாச் சனத்தையும்
குடிக்கும் மாந்தரைக் கூப்பிட்டு வாரீர்
இழிஞரை அழைப்பீர் எளியரை அழைப்பீர்
குருடரி னோடு குணக்கே டரையும்
வண்டி முடவர்கள் நொண்டிகள் தமையும்;
குருடரைத் தோணி கொண்டே(ற்றி) வருவீர்
நொண்டியைப் புரவி கொண்டே(ற்றி) வருவீர்
வண்டியில் இழுத்து வருவீர் முடவரை.    570

வடநிலத் தனைத்து மக்களை அழைப்பீர்
கலேவாச் சந்ததி கள்ளெலாம் வரட்டும்
முதிய வைனா மொயினனை அழைப்பீர்
சிறந்தபா டகனாய்த் திகழ்ந்தே யிருக்க,
ஆயினும் வேண்டாம் தூர நெஞ்சினன்
தீயஅஹ் தியெனும் தீவினன் வேண்டாம்."

அப்போ(து) சிறிய அந்தப் பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தூரநெஞ் சினற்குத் தொட(ர்)அழைப் பேனி(ல்)லை
அஹ்தி என்னும் அத்தீ வினற்கு?"    580

அந்த வடநிலத் தலைவியப் போது
மறுமொழி யாக வழங்கினள் ஒருசொல்:
"அத்து(஡)ர நெஞ்சற் கழைப்பிலை இதனால்
குறும்பன் லெம்மின் கைனன் தனக்கு
கொள்ளுமெவ் வழியிலும் குழப்பம் செய்பவன்
சண்டை என்றால் சடுதிமுன் நிற்பவன்
திருமண வீட்டில் செய்வோன் அவமதிப்(பு)
பெரிய குற்றம் புரிபவன் விழாவில்
கற்புமா தர்க்குக் களங்கம் விளைப்பவன்
அவர்கள் புனிதமாம் ஆடையி லிருப்பினும்."   590

அப்போ(து) அந்த அருஞ்சிறு பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"எவ்விதம் அறிவது இகல்து(஡)ர நெஞ்சனை
அவனை மட்டும் அழையா திருக்க
அஹ்தியின் இல்லம் அறியேன் நானே
தூர நெஞ்சினன் தோட்டமு மறியேன்."

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"தூர நெஞ்சினனைத் தீரநன் கறியலாம்
அஹ்தி என்னும் அகல்தீ வின்மகன்    600
அஹ்தி என்பவன் அத்தீ வுறைபவன்
பொருநீர்க் கரையிலப் போக்கிரி உள்ளான்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்."

அந்தச் சிறிய அரிவையும் அங்கே
குற்றே வல்செ(ய்)யக் கூலிக்கு வந்தவள்
ஆறு வழிகளில் அழைப்பு விடுத்தனள்
எட்டு வழிகளில் ஏகினள் அழைக்க
வடநில அனைத்து மக்கள் தம்மையும்
கலேவாச் சந்ததிக் குலமக் களையும்    610
குடில்வாழ் ஏழைக் குலநலிந் தோரையும்
இறுகிய ஆடை ஏவலர் தமையும்;
அஹ்தி என்னுமப் பையனைத் தவிர
அவனை மட்டுமே அழைக்கா திருந்தனள்.



பாடல் 21 - திருமணக் கொண்டாட்டம்  *




அடிகள் 1-226 : மணமகனையும் அவன் கூட்டத்தினரையும் வட நாட்டில்
வரவேற்றல்.

அடிகள் 227-252 : விருந்தாளிகளுக்கு நிறைய உணவும் பானமும்
கொடுத்து உபசரித்தல்.

அடிகள் 253-438 : வைனாமொயினன் அந்நாட்டு மக்களைப் பாடிப் புகழுதல்.




அந்த வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி
வெளியிலே நின்றாள் மிகச்சிறு நேரம்
வீட்டு வேலையில் நாட்டமுற் றிருந்தாள்
சதுப்பு நிலத்தில் சாட்டையின் ஒலியும்
உறுகரை வண்டியின் ஓசையும் கேட்டது
செலுத்தினள் பார்வை திகழ்வட மேற்திசை
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினள்
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்:
"இங்கே எதற்காய் இவ்வள வாட்களும்    10
ஏழைஎன் னுடைய இகல்கடற் கரைகளில்
போருக்கு வந்த பொருபெரும் படைகளோ?"

வெளியே வந்தாள் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றாள் ஆராய்ந் தறிய
அதுபோர்க் கெழுந்த அதிபெரும் படைய(ல்)ல
விவாக வீட்டு விருந்தினர் கூட்டம்
மருமகன் அவர்களின் மத்தியில் இருப்பவர்
நாட்டு மக்களின் நடுவிலே உள்ளார்.
அவளே வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி    20
தனது மருமகன் தான்வரல் உணர்ந்ததும்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காற்றடிக் கிறதெனக் கடிதே நினைத்தேன்
காட்டிலோர் பகுதிக் கரைசரி கிறதென
கடலின் ஓரம் இரைகிற தோவென
கூழாங் கற்கள் குலைந்துருள் கிறதென;
வெளியே வந்தேன் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றேன் ஆராய்ந் தறிய
அங்கே காற்று அடிக்கவு மில்லை
காட்டிலோர் பகுதிக் கரைசரிந் திலது    30
கடலின் ஓரம் இரையவும் இல்லை
கூழாங் கற்கள் குலைந்துருண் டிலது:
மருமகன் குழுவினர் வந்தனர் அங்கே
இருநூறு மக்கள் இப்புறம் வந்தனர்.

அருமரு மகனைநான் அறிவது எங்ஙனம்
இம்மனுத் திரளில் என்மரு மகனை?
மருமகன் தனையே மக்களுள் அறியலாம்
சிறுபழச் செடிபோல் திகழ்மர மத்தியில்
சிறுசெடி மத்தியில் சிந்துர மரம்போல்
வானத்து மீன்களில் வண்ண நிலவுபோல்.   40

மருமகன் வருகிறார் வன்கரும் புரவியில்
இரைதேர் (ஓ)நாயில் இவர்வது போல
இலக்குதே **டண்டங் காக்கைமேல் வரல்போல்
வான்ஊர் **மாயக் கழுகுமேல் வரல்போல்;
ஆறு பொன்னிற அம்புள் ஆங்கே
இசைத்தன வண்டியின் ஏர்க்கால் மேலே,
ஏழு நீல இருங்குயில் போல்மணி
ஒலித்தன வண்டியின் உறுசட் டத்தே."

எழுந்தது சத்தம் எங்கும் பாதையில்
கிணற்று வழிமிசை ஒலித்தது ஏர்க்கால்   50
முன்றிலின் முன்னே வந்தார் மருமகன்
தோட்டம் சேர்த்தனர் தொடர்ந்துடன் வந்தோர்
மக்கள் மத்தியில் மருமகன் நின்றார்
நல்ல மக்களின் நடுவினில் நின்றார்
மக்கள் குழுமுன் வரிசையில் இல்லை
ஆயினும் பின்புறத் தப்புறத் தில்லை.

"வீரரே, இளைஞரே, வெளியே செல்வீர்!
உயரந்த மனிதர்காள், உறுகமுற் றத்தே!
நெஞ்சப் பட்டியை நேராய்க் கழற்ற
கடிவா ளத்தைப் பிடித்தே நிறுத்த    60
ஏர்க்கால் நுகத்தை இறக்கக் கீழே
மருமக னாரை வரஉள் அழைக்க!"

மருமகனின் குதிரை வந்தது ஓடி
அலங்கார வண்டி அதிகதி வந்தது
மாமனார் வீட்டின் வண்ணமுன் றில்முன்;
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஏய்,அடி மைகளே, ஏவுகூ லியரே!
கிராமத் தழகிய கிளர்தொழி லாளரே!
மருமக னாரின் மாபரி பிடிப்பீர்
நெற்றிச் சுட்டி நிமிர்பரி எடுப்பீர்    70
செப்பினால் இழைத்த திகழ்அணி யிருந்து
ஈயநெஞ் சத்து **இயைவார் இருந்து
தோலிலாம் நற்கடி வாளத் திருந்து
இளமை மரத்து ஏர்க்கா லிருந்து;
மருமகன் பரியை வழிநடத் துங்கள்
அதிமிகக் கவனமாய் அதைநடத் துங்கள்
பட்டிலாம் நற்கடி வாளம் பற்றி
தனிவெள் ளியிலாம் தலையணி தொட்டு
உருண்டு புரண்டிட உயர்மெது விடத்தே
சமதரை யுள்ள தகுசிறப் பிடத்தே    80
புதிதாய்ப் பனிமழை பொழிந்தநல் லிடத்தே
பால்போல் வெளுத்து படிவிளங் கிடத்தே!

மருமகன் பரிக்கு வளநீ ரூட்டுக
அண்மையில் இருக்கும் அருவியொன் றினிலே
உறைந்துபோ காது உறுநல் லருவியில்
நீர்நனி சொட்டுநல் நீரரு வியிலே
அழகிய தாருவின் அகல்வேர டியில்
தளிர்க்கும் தேவ தாருவின் அருகில்!
மருமகன் பரிக்கு மகிழ்ந்துண வூட்டுக
கொழும்பொன் னிழைத்த கூடையி லிருந்து   90
செப்பினால் செய்த பெட்டியி லிருந்து
கழுவிய பார்லியை, கனவெண் ரொட்டியை,
கோடைக் கோதுமை கொ(ண்)டுஅட்ட **உணவை,
கோடைத் **தானியக் கொழுநொருக் குணவை.

மருமகன் பரியை வழிநடத் துங்கள்
வளமிகு சிறந்த வைக்கோற் போரிடை
மிகவும் சிறந்து விளங்குமோ ரிடத்தே
தோட்டத் துள்ளே தொலைவிடத் துக்கு;
அருமரு மகன்பரி அங்கே கட்டுக
பொன்னினால் செய்த புதுவளை யத்தால்   100
இரும்பினால் செய்த எழில்வளை யத்தால்
வளைந்த மிலாறு மரத்தம் பத்தில்;
மருமகன் பரிக்கு வழங்குக இவ்விதம்
புதிதாய் ஒரு**படிப் **புல்லரி சிமணி
அடுத்தது மென்மையாய் அமைந்தநல் வைக்கோல்
மூன்றாவ தரிந்து முடித்தவைக் கோல்தீன்.

வாருவீர் பின்னர் மருகனின் பரியை
கடற்பரி எலும்பின் கவினார் சீப்பினால்
உரோமம் எதுவும் உதிரா திருக்க
நீண்ட உரோமம் நீங்கா திருக்க;    110
இவ்வாறு மருகனின் எழிற்பரி போர்ப்பீர்
வெள்ளி விளிம்பு விளங்குபோர் வையினால்
தங்கத் திழைத்த தனிப்பாய் அதனால்
செப்பினால் செய்த திகழ்துணி யதனால்.

கவின்ஊர் இளைஞரே, கனிவுறு மக்களே!
வாருங்கள் அழைத்து மருகனை உள்ளே
தலைமயி(ரில்) தொப்பி தரித்திலா நிலையில்
கையுறை எதுவும் கரத்தில்இல் லாமல்.

பார்க்கிறேன் பொறுங்கள் படர்மரு கனைநான்
'நுவல்மரு கன்உள் நுழைவரா' என்று    120
கதவு இங்கே கழற்றப் படாமல்
பெருங்கத வின்நிலை பிடுங்கப் படாமல்
உறுமேல் உத்தரம் உயர்த்தப் படாமல்
படிவா யிற்படி பணிக்கப் படாமல்
இணைமூ லைச்சுவர் இடிக்கப் படாமல்
நற்சுவர் விட்டம் நகர்த்தப் படாமல்.
அல்ல, மருகன் அவர்புக முடியா(து)
நற்பரி சாமவர் நனிகூ ரையின்கீழ்
கதவு இங்கே கழற்றப் படாமல்
பெருங்கத வின்நிலை பிடுங்கப் படாமல்   130
உறுமேல் உத்தரம் உயர்த்தப் படாமல்
படிவா யிற்படி பணிக்கப் படாமல்
இணைமூ லைச்சுவர் இடிக்கப் படாமல்
நற்சுவர் விட்டம் நகர்த்தப் படாமல்
ஏனெனில் மருகனின் எழிற்சிர முயர்ந்தது
உறுசெவி அளவும் உயரமே யானது.

உறுமேல் உத்தரம் உயரத் தூக்குக!
தலையின் தொப்பி தட்டா திருக்கும்,
பணிப்பீர் வாயிற் படியினைக் கீழே!
இருக்கும் முட்டா தியைகா லணிக்குதி,   140
கதவு நிலைகளைக் கழற்றிவை யுங்கள்!
திகழ்கத வகலத் திறந்து வையுங்கள்!
மருமகன் உள்ளே வந்திடும் வேளை,
அதியுயர்ந் தோர்உள் அடியிடும் வேளை.

அழகுத் தெய்வமே, அர்ப்பணம் நன்றிகள்!
மருகனார் உள்ளே மகிழ்வொடே வந்தார்
பொறுப்பீர் ஒருகணம், புகும்இல் பார்க்கலாம்,
விழிகளைச் சற்று வீட்டுட் செலுத்தலாம்
இங்குள மேசைகள் எல்லாம் கழுவி
**நெடுவாங் கெல்லாம் நீரினால் அலசி    150
உறுமென் பலகைகள் மறுவறத் துடைத்து
தொடர்தரைப் பலகைகள் சுத்தமோ வென்று.

இப்போ(து) பார்க்கிறேன் இந்தஇல் லத்தை
எனக்கோ சரியாய் எதுவும் தெரிந்தில(து)
எந்த மரத்தால் இவ்வில் ஆனது
இக்குடில் வந்தது எங்கே யிருந்து
எதனால் சுவர்கள் இவ்வித முள்ளன
எப்படித் தரையும் இப்படி யுள்ளது?

பக்கச் சுவர்முட் பன்றியின் எலும்பால்
கலைமான் எலும்பினால் காண்பிற் புறச்சுவர்   160
சேர்கத வுறுசுவர் **கீரியின் எலும்பால்
ஆனது கதவுமேல் நிலைஆட் டெலும்பால்.

அப்பிள் மரத்தினால் ஆனமேல் உத்தரம்
வளைந்த மிலாறு மரத்திலாம் தூண்கள்
அடுக்களைப் பக்க அமைப்புநீ ராம்பலால்
**கெண்டைமீன் செதில்களைக் கொண்டமை கூரையாம்.

ஆசனம் அனைத்தும் ஆனவை இரும்பால்
*சக்ஸாப் பலகையால் சமைத்தநல் வாங்குகள்
அலங்கார(ம்) மேசைக் கமைந்தது பொன்னினால்
படிமிசை விரித்தவை பட்டிலாம் கம்பளம்.   170

அடுப்புகள் செம்பினால் ஆனவை இருந்தன
அடுப்பின் அடித்தளம் அமைந்தது கல்லினால்
அலைகடற் பாறையால் ஆனதீக் கற்களாம்
அடுப்பின்வா **யாசனம் அதுகலே வாமரம்.

நல்மண மகனும் இல்லுள் வந்தார்
வியன்கூ ரையின்கீழ் மெதுவாய் நடந்தார்
உரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:
"இறைவனே, நின்னருள் இங்கும் தருக!
புகழுறு கூரைப் புணர்தம் பக்கீழ்
குறைவிலாக் கீர்த்திசேர் கூரையின் கீழே!"   180

வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"நம்பி,நின் வருகை நல்வர வாகுக!
இந்தச் சிறிய இல்லதன் உள்ளே, தாழ்ந்திடும் இந்தத் தனிக்குடில் உள்ளே,
அரும்பசு மரத்தின் அறையதன் உள்ளே,
கொழுந்தேவ தாருவின் கூடதன் உள்ளே!

ஏய்,சிறு பெண்ணே, எனது அடிமையே!
கூலிக்கு வந்த குறும்ஊ ரவளே!
மிலாறுப் பட்டையில் விளைதீக் கொணர்வாய்
**கீல்மர நுனியில் கிளர்சுடர் ஏற்று   190
மருமக னாரை வடிவாய்ப் பார்க்க
மணமகன் விழிகளை வாஞ்சையாய் நோக்க
நெடும்அவர் கண்கள் நீலமா சிவப்பா
அல்லது துணிபோல் வெள்ளை நிறத்ததா!"

சிறியவள் அந்தச் சிறுஅடி மைப்பெண்
குறும்ஊ ரிருந்து கூலியாய் வந்தவள்
மிலாறுப் பட்டையில் மிளிர்தீக் கொணர்ந்தாள்
கீல்மர நுனியில் கிளர்சுடர் ஏற்றினாள்.

"மிகுசட சடத்தெழும் மிலாறு மரத்தீ
கிளர்கரும் புகைஎழும் கீல்மரச் சுடரில்   200
மருகனின் விழிகளில் கறைஅது ஆக்கும்
எழிலுறும் தோற்றம் இருளதாய்ப் போகும்
மெழுகுவர்த் தியிலே மிளிர்தீக் கொணர்வாய்
மெழுகினால் செய்ததில் மிகுசுடர் கொணர்வாய்."

சிறியவள் அந்தச் சிறுஅடி மைப்பெண்
குறும்ஊ ரிருந்து கூலியாய் வந்தவள்
மெழுகு வர்த்தியில் மிளிர்தீக் கொணர்ந்தாள்
மெழுகினால் செய்ததில் மிகுசுடர் கொணர்ந்தாள்.

மெழுகிலே யிருந்து வெண்புகை எழுந்தது
மெழுகுவர்த் தியிலே மிகவொளிர் தீச்சுடர்    210
மருமகன் விழிகளில் வரச்செய்த தொளியை
மருமகன் வதனம் மலர்ந்தொளி தந்தது.

"இப்போ(து) மருமகன் எழில்விழி பார்க்கிறேன்
நிறம்சிவப் பதுவோ நீலமோ அல்ல
நேர்துணி வெள்ளை நிறத்தது மல்ல
மிகுகடல் நுரைபோல வெளுத்த நிறமவை
படர்கடல் நாணல்போல் பழுத்த நிறமவை
**கடற்செடி போலக் கவின்படைத் தனவே.

கவின்ஊர் இளைஞரே, கனிவுறு மக்களே!
அழைத்து வருவீர் அருமரு மகனை    220
உயர்ந்த ஆசனம் ஒன்றினுக் கிங்கே
சிறப்பா யிருக்கும் திருவிட மீதில்
முதுகுப் புறம்நீல் சுவரோ டிருக்க
செந்நிற மேசை முன்புற மிருக்க
அழைத்த அதிதியை அவரெதிர் நோக்கிட
நாட்டு மக்களின் நடுஅம ரட்டும்."

அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
கொடுத்தாள் விருந்தினர்க் குணவும் பானமும்
உருகிய வெண்ணெயை ஊட்டினாள் வாயில்
பால(஡)டைப் பணிய(஡)ரம் பகிர்ந்தனள் நிறைய   230
அழைத்த விருந்தரை அவள்உப சரித்தாள்
தந்தனள் முதலிடம் தம்மரு மகற்கு.

வடிவுறும் தட்டில் வஞ்சிர மீனும்
படர்அவற் றருகில் பன்றி இறைச்சியும்
நிறைந்து வழிந்தன நெடுங்கிண் ணமெலாம்
நிறைந்து பெருகின நீள்கல யங்களில்
விருந்துக் குவந்தோர் மிகஉண் பதற்காய்
விசேடமாய் உண்ண வியன்மரு மகனும்.

வடநிலத் தலைவி வருமா ரைத்தாள்:
"ஏய்,நீ சிறிய எமதடி மகளே!     240
சாடி நிறையப் 'பீரை'க் கொணர்வாய்
இரண்டு கைப்பிடி இருக்கும் சாடியில்
அழைத்த விருந்தினர் அருந்துதற் காக
முதலிடம் தருவாய் முறைமரு மகற்கு."

அப்போ(து) சிறிய அடிமைப் பெண்ணவள்
கூலிக்கு வந்து குற்றேவல் புரிவோள்
சாடிகள் நிறையத் தான்பரி மாறினள்
சுற்றிவந் திட்டதைம் பட்டிச் சாடிகள்
பானத் தனைத்துத் தாடியும் நனைந்தன
தாடிகள் வெண்நிற மாயின நுரையால்    250
அழைத்த விருந்தினர் அனைவரும் ஆங்கே,
முதலிடம் பெற்றார் முறைமரு மகனார்.

இப்போ(து) 'பீரு'ம் எதனைச் செய்யும்
தளம்புமைம் பட்டிச் சாடியின் பானம்
பாடகன் ஒருவன் பக்கத் திருக்கையில்
கைதேர் பாவலன் கலந்தாங் கிருக்கையில்?
முதிய வைனா மொயினன் இருந்தான்
அழிவிலாப் பாடலின் ஆத(஡)ரத் **தூணவன்
பாடகர் தம்முளே பகர்தரப் பாடகன்
மந்திரப் பாடலில் வல்லவன் பாடிட.    260

முதலில் கொஞ்சம் மொய்ம்'பீர்' எடுத்தான்
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"அன்பார்(ந்த) பானமே, அருமைப் 'பீரே'
மனிதர்கள் குடித்து மயங்குதல் தகாது
மனிதரைப் பாட வைப்பாய் பாடல்கள்
கூவ வைத்திடுவாய் கொழும்பொன் வாயால்
வீட்டின் தலைவர்கள் வியப்படை யட்டும்
இல்லத் தலைவிகள் இனிதெண் ணிடட்டும்:
சற்றுப் பாடல்கள் தாம்இசை மாறினால்
மகிழும் நாக்குகள் வழிதிசை மாறினால்    270
அல்லது தாழ்ந்து அமை'பீர்' கொடுத்தால்
பானம் தரக்குறை வானது கொடுத்தால்
எமது பாடகர் இசைக்கவே மாட்டார்
இன்னிசை யாளர் இருந்தே பாடிடார்
அரிய விருந்தினர் அரும்பாட் டிசையார்
மகிழ்ச்சிக் குயில்கள் மகிழ்வுடன் பாடா.

இங்கே இன்னிசை இசைப்பது எவரோ
நாவால் பாடல்கள் நவில்வது எவரோ
இங்கே வடநிலத் திந்த விழாவில்
சரியோ லாவின் களியாட் **டயர்வில்?   280
இங்குள **வாங்கோ இசைத்திட மாட்டா
வாங்கிலே இருப்போர் வாய் திறவாமல்,
நிலமும் இங்கே நவிலமாட் டாது
நன்னிலம் நடப்போர் நாவசை யாமல்,
சாளரம் இங்கே தான்மகி ழாது
சாளரத் ததிபர்கள் தாம்மகி ழாமல்
மேழையின் விளிம்புகள் பேசமாட் டாது
மேளையின் அருகுவீற் றிருப்பவ ரின்றி,
உயர்புகைக் கூண்டும் ஓசை தராது
அதன்கீழ் இருப்போர் அமர்ந்திசை யாமல்."   290

ஆங்கொரு பிள்ளை அகலத் திருந்தது
அடுப்பா சனத்தில் அமர்ந்தபால் தாடி
பெருநிலத் திருந்த பிள்ளை சொன்னது
அடுப்பா சனத்து அமர்பயல் கூறினான்:
"நானோ வயதில் நனிமுதிர்ந் தோனலன்
வளர்ந்து உயர்ந்த வலியவன் அல்லன்
இப்படி இங்ஙனம் இருந்தபோ தினிலும்
ஏனைய கொழுத்தோர் இசையா நேரம்
பருத்த மனிதர்கள் பாடா(த) வேளை
இரத்தம் நிறைந்தோர் இசைக்காப் போதில்   300
பாடுவேன் நானொரு பையன் மெலிந்தோன்
வலியிலாப் பையன் வகையாய்க் கூவுவன்
பாடுவேன் தளர்ந்த பலமிலாத் தசையோன்
சிறிய இடுப்பைச் சேர்ந்தோன் பாடுவேன்
மாலைப் பொழுதிதை மகிழ்வாக் கிடவே
மதிப்பாக் கிடஇம் மாபுகழ் நாளை."

அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பிள்ளைகள் பாடலில் பெறுபயன் இல்லை
எளியவர் கூவலில் எதுவுமே யில்லை    310
பிள்ளைகள் பாடல் பெரும்பொய் நிறைந்தவை
சிறுமியர் பாடலோ வெறுமையே யானவை;
முழங்குக பாடல் முதல்எவ் வறிஞரும்
இன்னிசை வழங்குக இருக்குமா சனத்தோர்."

முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இங்கே இருக்கும் இளைஞர்கள் மத்தியில்
மாபெரும் சுற்ற மக்கள் அனைத்திலும்
கரத்தொடு கரத்தைக் கனிவாய்க் கோர்த்து
ஒருவர் கரத்தொடு ஒருவர்கை சேர்த்து    320
வளர்பாட் டிசைக்க வல்லவர் உண்டா
இன்னிசை எழுப்ப இயன்றவர் உண்டா
இந்நாள் முடிவை இனிதாய்க் கழிக்க
மாபுகழ் மாலையை மதிப்புள தாக்க?"

அடுப்பிலே அமர்முது ஆடவன் சொன்னான்:
"இதுவரை அறிந்ததே இல்லைஇப் படியே
இல்லையே பார்த்ததும் இல்லையே அறிந்ததும்
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பண்மிகச் சிறந்த பாடகன் ஒருவனை
கைதேர் தரமுறும் கவிவலோன் ஒருவனை   330
என்றனை யும்விட என்கூ வலைவிட
பாடல்கள் பிள்ளைப் பருவத் திசைத்தேன்
விரிகுடாக் கடல்நீர் மீதிலும் பாடினேன்
மிகுபுல் வெளியதன் மீதிலும் பாடினேன்
வண்தேவ தாருவின் மரத்திலும் பாடினேன்
நெடுங்கான் வெளியின் நிலத்திலும் பாடினேன்.
என்குரல் உயர்ந்து இனிமையாய் இருந்தது
என்னிசை யமைப்பு எழிலாய் அமைந்தது
ஆறொன்று ஓடி அசைந்த பாங்குபோல்
அருவியில் பாய்ந்து ஓடிய நீரைப்போல்   340
தண்பனிக் கட்டிமேல் சறுக்கணி போல
நீரலை மேற்செல் நெடுநா வாய்போல்;
இப்போ(து) என்னால் இயம்புதற் கியலா
ஒழுங்காய் என்னால் உணரவும் முடியா
உயர்ந்தஎன் குரற்கு விளைந்தது எதுவென
இனியஎன் குரலோ இறங்கிய தேனென;
ஆறொன்று இப்போது ஓடிய வாறிலை
அலைகளில் எழும்பும் குமிழ்களைப் போலிலை
முளைநிலத் திழுத்த **பரம்புப் பலகைபோல்
இறுகிய பனியில் எழில்தேவ தாருபோல்   350
சாகரக் கரைமணற் சறுக்கணி போல
காய்ந்த பாறையிற் கடிதூர் படகுபோல்."

முதிய வைனா மொயினனப் போது
இந்த சொற்களில் இயம்பினன் அவனே:
"எழுந்து யாருமே இவ்விடம் வந்து
என்னுடன் சேர்ந்து இசைத்திடாப் போது
தனியனாய் நின்று சமைப்பேன் கவிதைகள்
ஒருவனாய் நின்று உயர்கவி பாடுவேன்
பாடக னாகநான் படைக்கப் பட்டதால்
பாடுவோன் மந்திரப் பாடல்கள் என்பதால்   360
மற்றொருத் தனிடம் வழிவகை கேளேன்
அன்னியன் உதவியால் அரும்பா முடியேன்."

முதிய வைனா மொயினன் பின்னர்
அழிவிலாப் பாடலின் ஆத(஡)ரத் தூணவன்
ஆனந்த வேலைக்கு அமைந்தனன் ஆங்கே
அர்ப்பணித் தான்தனை அருஇசைத் தொழிற்கு
பக்கத்து மகிழ்வுறும் பாடலை வைத்து
அழகுறும் சொற்களில் ஆயத்த மாயினன்.

முதியவ வைனா மொயினன் பாடினன்
நற்பா பாடினன் ஞானம் காட்டினன்   370
சொற்களில் சொற்குத் துளிபஞ் சமி(ல்)லை
புகன்றிடும் ஆற்றலும் அகன்றதே யில்லை
கனமலைக் கற்கள் காணா தொழிந்தன
அருவிநீ ராம்பல் அகன்றதே போனது.

வைனா மொயினன் மகிழ்ந்தாங் கிசைத்தனன்
மாலைப் பொழுதெலாம் மகிழ்வுடன் பாடினன்;
பூவையர் யாவரும் புன்னகை பூத்தனர்
ஆடவர் நல்ல அகநிலை பெற்றனர்
அமைதியாய்க் கேட்டனர் அதிசயப் பட்டனர்
வைனா மொயினனின் வளச்சொல் கண்டு   380
அற்புதம் என்றனர் அவைகேட் டோ ரெலாம்
அதிசயப் பட்டனர் அங்குளர் அனைவரும்.

முதிய வைனா மொயினன் கூறினன்
பாடலின் முடிவில் பகர்ந்தனன் இவ்விதம்:
"எனது வசத்தினில் என்னப்பா உள்ளது
பாடகன், மந்திரப் பணிவ(ல்)லன் என்பதால்;
என்னால் ஆவது எதுவுமிங் கில்லை
எனது ஆற்றலால் இயல்வது ஒன்றிலை;
படைத்தவன் பாரினில் பாடலைப் பாடினால்
இனியநல் வாயினால் இசைப்பா பாடினால்   390
படைத்தவன் பாடுவான் பண்ணுறும் பாடலை
வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்.

வாரிதி தேனாய் மாறிடப் பாடுவான்
கடற்குழாங் கற்களை காண்*பய றாகவும்
மறிகடல் மண்ணையே **மாவூற லாகவும்
கடற்பரற் கற்களைக் கரிக்கும்உப் பாகவும்
உயர்ந்தடர் சோலைகள் ரொட்டியின் வயல்களாய்
வெட்டிய வனங்களை விளைகூல வயல்களாய்
தொடர்உயர் குன்றுகள் சுவைப்பணி யாரமாய்
பாறையைக் கோழியின் பருமு(ட்)டை யாக்குவான்.   400

வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்
மந்திரம் பாடுவான் மகத்துவம் ஆற்றுவான்
விழங்குமிவ் வில்லத்து மீதிலும் பாடுவான்
துன்னுகால் நடைநிறை தொழுவம் பாடுவான்
பாதையில் நிறைந்திடும் பணைக்கோட்(டுத்) **தலைகளை
பரந்தநல் வெளிகளின் பால்தரு வோர்களை
கனமுறு கொம்புகொள் கால்நடை நூறினை
பாடுவான் ஆயிரம் பால்மடி கொணர்(஧)வ(஡)ரை.

வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்
மந்திரம் பாடுவான் மகத்துவம் ஆற்றுவான்   410
மேலாடை தலைவர்க்(கு) மிளிர்**சிவிங்(கி) உரோமத்தில்
தலைவியர்(க்கு) மேலாடை **தனித்தகல் துணிகளில்
கவர்ச்சியே மிக்கதாய்க் காலணி மகளிர்க்(கு)
மிளிருசெந் நிறத்தமை மேற்சட்டை மைந்தர்க்கு.

இறைவனே, எங்கட்(கு) என்றும் வழங்குவீர்!
மெய்யாம் கர்த்தரே, மீண்டும்(நீர்) வழங்குவீர்!
இதுபோல் யாவரும் இனிதாய் வாழ
இனியும் இவ்விதம் இயற்றியே முடிக்க
வடபால் நிலத்தின் வகையுறு விழாவில்
சரியொலாப் பகுதிக் களியாட்(ட) விருந்தில்;   420
'பீரெ'னும் பானம் பெருகும் ஆறென
நறையது(ம்) பாய்ந்திடும் நல்தூ(ய) அருவிபோல்
வடபுல நிலத்தின் வதிவிடம் யாவும்
சரியொலாப் பகுதித் தகுமில் யாவும்
இனியஅந் நாளிலும் இன்னிசை யிசைப்போம்
மாலைப் பொழுதை மகிழ்வொடு கழிப்போம்
அரியஇத் தலைவன் அனைத்துநாட் களுமே
வனிதைஇத் தலைவி வாழ்நாள் முழுதுமே.

மிகுவலித் தேவே வெகுமதி தருக!
ஆண்டவா, ஆசி(யும்) அருளும் அளியும்!   430
விருந்தில் தலைவராய் விளங்குப வர்க்கு
களஞ்சியக் கூடக் கவின்தலை வியர்க்கும்
மீன்பிடித் துவரும் விறல்மைந் தர்க்கும்
கைத்தறி அமர்ந்த கன்னியர் தமக்கும்
வாழ்நா ளெலாமவர் வருந்தா திருக்க!
தொடர்மறு ஆண்டிலும் துயரிலா(து) வாழிய
பெரிதாய் நிகழ்ந்தவிப் பெருவிழா வதனால்
கலந்த பெருஜனக் களியாட்(ட) விருந்தால்.



பாடல் 22 - மணமகளின் பிரிவுத்துயர்  *




அடிகள் 1 - 124 : மணமகள் பயணத்துக்கு ஆயத்தமாகிறாள். அவள் தனது கடந்த வாழ்க்கையையும் இனி வரப்போகிற எதிர்கால வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கிறாள்.

அடிகள் 125 - 184 : மணமகள் கவலைப்படுகிறாள்.

அடிகள் 185 - 382 : மணமகள் அழ வைக்கப்படுகிறாள்.

அடிகள் 383 - 448 : மணமகள் அழுகிறாள்.

அடிகள் 449 - 522 : மணமகளுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.




நற்றிரு மணஇல் நன்கே குடித்து
விழாவும் முடிந்து விருந்தும் முடிகையில்
வடபால் நிலத்து வதிவிடங் களிலே
இருண்ட பூமியின் இனிய விருந்தில்
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இல்மரி னன்எனும் இளமரு மகற்கு:
"இருப்பது எதற்கு, இனிதுயர் பிறப்பே?
எதிர்பார்ப் பதெது, எம்நிலச் சிறப்பே?
இருப்பது தந்தையின் இனிமைக் காகவா?
அல்லது அன்னையின் அன்புக் காகவா?    10
இல்லிட மதற்கு எழிலைக் கூட்டவா?
திருமண வீட்டை அருமழ குறுத்தவா?

இருப்பது தந்தையின் இனிமைக் கல்ல
அன்னையின் அன்புக் காகவு மல்ல
இல்லிடத் துக்கெழில் ஏற்றவு மல்ல
அரும்மண வீட்டின் அழகுக் கல்ல;
இந்தக் கன்னியின் இனிமைக் காகவும்
அழகிளம் பெண்ணின் அன்புக் காகவும்
விரும்பிய வனிதையின் வியன்வனப் புக்கும்
இயைகுழல் தலையாள் எழிற்கும் இருக்கிறீர்.   20

அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
பெண்குழற் பாதிதான் பின்னி முடிந்தது
இன்னுமோர் பாதி பின்னா துள்ளது.

அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை    30
சட்டை(க்)கை மடிப்பு பாதிதான் முடிந்தது
மறுபாதி இன்னும் முடியா துள்ளது.

அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
பாதணி தரிப்பது பாதிதான் நடந்தது
மறுபாதி இன்னும் தரியா துள்ளது.

அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்   40
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
அணிவது கையுறை அரைதான் முடிந்தது
அரைவாசி இன்னும் அணியா துள்ளது.

அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுத்தீர் சலிப்பற
ஆயத்தம் இப்போ ஆகினள் காதலி
தயாரா யுள்ளனர் தக்கநின் வாத்து.

விலையான பெண்ணே, விரைவாய், இப்போ(து)!
விரைவாய், அவருடன் விலைப்படு கோழியே!   50
அருகினில் வந்ததுன் அரியதாம் காலம்
புறப்படும் நேரம் புக்கது பக்கம்
உன்னுடைத் தலைவர் உன்னுடன் உள்ளார்
உள்ளார் வாயிலில் உனதன் பாளர்
கடித்து நிற்கிறது கடிவளம் புரவி
சறுக்கு வண்டிபெண் தனையெதிர் பார்க்கிற(து).

பணமெனில் உனக்குப் பாரிய விருப்பம்
உன்கரம் விரைவாய் முன்புறம் நீட்டி
தேடி ஆர்வமாய்த் திருமணப் பொருத்தம்
பெற்றாய் வண்ணமாய் பெறலரும் விரலணி   60
வனிதையே இப்போ(து) வண்டியில் ஏறு
படரொளி வண்டியில் பாங்குடன் ஏறு
கிராமம் நோக்கிக் கிளர்கனி வுடன்செல்
நல்ல பெண்போல் நலமுடன் செல்வாய்.

பருவப் பெண்ணே பார்த்திலை எண்ணிநீ
இருபக் கமும்நீ இனிதுசிந் தித்திலை
தலையில் நினைத்துநீ தானே உணர்ந்திலை
செய்தனை காரியம் சிந்தை வருந்துதற்(கு)
முழுவாழ் நாளும் அழுவதற் கென்று
ஆண்டாண்டு காலம் அழுவதற் கென்று    70
தந்தையின் இல்லம் தனைநீங்கு வதால்
பிறந்த இடத்தைநீ பிரிவத னாலே
அன்னையின் அன்பைநீ அகல்வத னாலே
சுமந்தவள் தோட்டத் தொடர்பறுப் பதனால்.

எவ்விதம் இருந்தது இயைந்தநின் வாழ்வு
உனது தந்தைக் குரியஇல் லங்களில்
வளர்ந்தாய் பாதையில் மலர்ந்தபூப் போல
படர்கான் **சிறுசெடிப் பழமாய் மலர்ந்தாய்
விழிதுயின் றெழுந்ததும் வெண்ணெயை யுண்டாய்
படுக்கைவிட் டெழுந்ததும் பாலைக் குடித்தாய்   80
ரொட்டி இருந்தது உன்கரம்நீள் தொலை
அருகிலே தட்டில் ஆம்புது வெண்ணெய்
வெண்ணையை உண்ண விரும்பா(த) நேரம்
பன்றி இறைச்சிப் பலதுண் டமைத்தாய்.

வருந்த உனக்கிங்(கு) வகையெது மில்லை
சிந்தனை செய்யச் செயலெது மில்லை
விட்டாய் மனத்துயர் விரிபசு மரங்களில்
வேலிக்கம் பத்தில் விதைத்தாய் சிந்தனை
துயரினைச் சதுப்புத் தொல்தேவ தாருவில்
புதரிலே வளர்ந்த பூர்ச்ச மரத்தில்    90
பசும்இலை எனநீ பறந்த அந்நேரம்
வண்ணத்துப் பூச்சியாய் வளர்சிற கடிக்கையில்
ஒருசிறு பழம்போல் **அமைந்தாய் மண்ணில்
சிவந்த **பழம்போல் உயர்பெரு வெளியில்.

இப்போ திந்த இல்லம் பிரிகிறாய்
இன்னொரு மனையில் இனிப்புகப் போகிறாய்
அடுத்தொரு தாயின் ஆட்சியில் இருப்பாய்
அடைவாய் அன்னியம் ஆனதோர் குடும்பம்;
அங்கே ஒன்று இங்குமற் றொன்று
வெவ்வேறு வீட்டில் வெவ்வேறு விதமாம்   100
ஆங்கா யர்குழல் அன்னிய மானது
கதவு கிறீச்சிடும் கடிதுமற் றொருவிதம்
வாயிற் சத்தமும் வேறாய்க் கேட்டும்
இரும்புப் பிணைச்சலில் எழும்ஒலி மாறும்.

கதவு வழியால் நுழைவது சிரமம்
கதவின் வழியால் **கனவாய் வழியால்
வீட்டில் பழகிய மெல்லியள் போல;
முனைந்துதீ ஊதிநீ மூட்டவே யறிவாய்
வெப்பத்தை யாக்கும் விதமுமே யறியாய்
வீட்டு மனிதரின் விருப்புக் கிணங்க.    110

இளமைப் பெண்ணே, எண்ணிய துண்டா?
எண்ணிய துண்டா, இருந்தறிந் தனையா?
இரவு வேளையில் எழுந்தே சென்று
மறுநாள் திரும்பி வருவதாய் நினைப்போ?
நீஎழுந் தேகுதல் ஓர்நிசிக் கல்ல
ஓர்நிசிக் கல்ல ஈர்நிசிக் கல்ல
நீள்பெருங் காலம் நீயங் கிருப்பாய்
பலநாள் மாதம் விழிபடா தகல்வாய்
பெருவாழ் நாளெலாம் பிதாஇல் லிருந்து
என்றென் றைக்கும்அன் னையிட மிருந்து;   120
தோட்டத்து முற்றம் நீண்டிடும் ஓரடி
ஒருமரம் உயர்ந்திடும் உறுகளஞ் சியவறை
மற்றிங்கு மீண்டுநீ வருகை தருகையில்
ஒருமுறை நீயும் திரும்பி வருகையில்."

ஏழை பெண்ணவள் எறிந்தாள் நெடுமூச்(சு)
நெடுமூச் செறிந்து நெஞ்சம் துவண்டாள்
இன்னல் வந்து இறங்கிற் றிதயம்
கண்ணீர் வந்து கண்களை நிறைத்தது
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"அப்படித் தெரியும் அப்படி நினைத்தேன்   130
அப்படி உணர்ந்தேன் ஆனஎன் (வாழ்)நாட்களில்
மொழிந்தேன் வளர்ந்த முழுக்கா லமுமே:
பெண்ணே முடியா(து) பெண்ணா யிருப்பது
தங்கிச் சொந்தத் தாய்தந் தையரில்
தந்தையின் சொந்தத் தரையதன் மீது
உன்னுடை முதிய அன்னையின் வீட்டில்;
வளருமோர் பெண்ணாய் மட்டும்நீ யிருப்பது
கணவரின் வீட்டில் காலடி வைக்கையில்,
ஒரடி களஞ்சிய ஒளிர்அறை வைத்துநீ
மறுவடி மணமகன் வண்டியில் வைக்கையில்,   140
உன்சிர மப்பொழு துயரமா யிருந்திடும்
உன்செவி கூடவே உயரமாய்த் தெரிந்திடும்.

இதனையே வாழ்நாள் எல்லாம் விரும்பினேன்
எதிர்பார்த்(த) திதுவே என்வளர் நாட்களில்
நலம்தரும் வருடம் நான்பார்த் திருந்தேன்
கோடையின் வருகை குறித்தெதிர் பார்த்தேன்;
எதிர்பார்த் திருந்தது இன்றுமெய் யானது
புறப்படு நேரம் விரைந்தரு கணைந்தது
ஓரடி களஞ்சிய ஒளிர்அறை இருக்க
மறுவடி மணமகன் வண்டியில் இருக்க.    150
எனக்கு விளங்கவே யில்லை ஆயினும்
மனத்தின் நிலமையை மாற்றிய தெதுவென:
மனத்திலே நிறைவுடன் புறப்பட வில்லை
மகிழ்ச்சியாய்ப் பிரிந்து வழிச்செல வில்லை
வாய்த்த அருமை வாழ்விடத் திருந்து
இளமையில் இருந்த இவ்விட மிருந்து
வளர்ந்தஇத் தோட்ட மதிலே யிருந்து
தந்தையார் அமைத்த தகுமனை யிருந்து;
இளைத்தவள் அகல்கிறேன் இன்னல்க ளோடு
வெவ்வருத் தத்தொடு விலகிச் செல்கிறேன்   160
இலையுதிர் காலத் திரவதன் அணைப்பில்
வசந்தகா லத்து வழுக்கும் பனியில்
பாதத்தின் பதிவு பனியில் அமையா(து)
நிலத்தில் வராது நெடுமடிச் சுவடு.

ஏனையோர் நினைவு எப்படி யிருக்கும்?
மற்஡றய மணமகள் மனநிலை யென்ன?
மற்றையோர் நிச்சயம் வருந்தமாட் டார்கள்
சுமக்கமாட் டார்கள் துயரத்தை நெஞ்சில்
துர்ப்பாக் கியநான் சுமப்பது போல
கருமைத் துயரைநான் கட்டிச் சுமத்தல்போல்   170
அடுப்புக்கரி போல் ஆனதென் னிதயம்
கரிய நிறமாய் அதுமா றிற்று.

இவ்விதம் அதிர்ஷ்ட இயல்பினர் எண்ணுவர்
ஆசியைப் பெற்ற அவர்இவ்வா றுணருவர்
புதுவசந் தத்துப் புலரியைப் போலவும்
காலை வசந்தக் கதிரவன் போலவும்;
என்மன உணர்வுகள் எத்திறத் தனவோ
என்மன ஆழத்து இருள்எவ் வகையோ?
நீர்நிலை ஒன்றின் நேர்சமக் கரையென
கார்க்கண மொன்றின் கறுத்த விளிம்பென   180
இலையுதிர் காலத் திருண்ட இரவென
படிகுளிர் காலத்துப் பகலென உள்ளது
இவைகளைக் காட்டிலும் இன்னும் இருண்டது
இலையுதிர் காலத் திரவிலும் இருண்டது."

இருந்தனள் முதியள் இல்லத்து வேலையள்
எப்போதும் அந்த இல்லிலே வாழ்பவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"பருவப் பெண்ணே பார்இப் பொழுது
இயம்பிய துநான் இல்லையா நினைவில்?
கூறினேன் நூற்றுக் கணக்காம் தடவை:    190
மணமகன் கண்டுநீ மையல்கொள் ளாதே
மணமகன் வாயில் மயக்க முறாதே
கண்களைக் கண்டுநீ நம்பி விடாதே
நலமுறும் கால்களில் நாட்ட முறாதே!
வாயினை அவனும் வனப்பாய் வைத்து
விழிகளைத் திருப்புவன் அழகா யாயினும்
அவனது தாடையில் அமர்வது பிசாசம்
வாயிலே வாழ்ந்து வருவது மரணமாம்.

மகளிர்க்கெப் போதும் வழங்கினேன் அறிவுரை
அவர்கட் கிவ்விதம் அளித்தேன் வழிமுறை:   200
'மதிப்புறு மணவார் வந்திடும் போதில்
நாட்டு மணவ(஡)ளர் நன்மண மக்கள்
அவர்க்கு நேரில் அறைவீர் இவ்விதம்
உங்கள் சார்பிலே உரைப்பீர் நீரே
இவ்வித வார்த்தையில் இயம்புவீர் இப்படி
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிவீர்:
'என்னிடம் இருப்பது எதுவுமே யில்லை
எதுவுமே யில்லை இயல்பொடு மில்லை
மருமக ளாக வருமுறை கொள்ள
அடிமையாய் என்னை அழைத்துச் செல்ல    210
என்னைப் போல இயல்புறு மொருபெண்
அடிமையாய் வாழ அறிந்தவ ளல்ல,
நினைப்பவ ளல்ல நேராய்ச் சென்று
ஆடவன் பெருவிரல் ஆட்சியில் வாழ;
என்னிடம் அடுத்தவன் இயம்பிடில் ஒருசொல்
இருசொலில் அவற்கு இயம்புவேன் உத்தரம்,
படருமென் குழலவன் பற்றிட வந்தால்
கவின்குழல் அள்ளிக் கைக்கொள வந்தால்
அம்குழ லிருந்து அகற்றுவேன் தூர
அழகத் திருந்து அகற்றி விரட்டுவேன்.'   220

இவற்றை நீயும் ஏற்கா திருந்தாய்
கூறுமென் வார்த்தை கேட்கா திருந்தாய்
தெரிந்து கொண்டே தீயிலே நடந்தாய்
கனகொதிக் **கீலில் காலடி வைத்தாய்
வருநரிச் சறுக்கு வண்டியில் முட்டினாய்
ஏகினாய் கரடி வண்டியேற் காலில்
இளநரி வண்டியில் இழுத்துச் செல்ல
கரடி தொலைவுனைக் கடத்திச் செல்ல
எசமான் அடிமையாய் என்றும் இருக்க
ஆயுள் அடிமையாய் மாமிக் கிருக்க.    230

இல்லத் திருந்து பள்ளி(க்கு)ச் சென்றாய்
துயர்பெறச் சென்றாய் பிதாதோட் டத்தால்;
பள்ளியின் அனுபவம் அல்லலாய் இருக்கும்
நீணடதாய் இருக்கும் தாங்கும் துயரமும்:
வாங்கி யாயிற்று நாணயக் கயிறங்(கு)
சிறைக்குக் கம்பிகள் நிறுத்தி யாயிற்று
அவைகள்யா ருக்கும் ஆகவும் அல்ல
ஏழைப் பெண்ணே, எல்லா முனக்காய்.
பேதையே விரைவில் பெறுவாய் துயரம்
விதியிலாப் பெண்ணே மிகுதுயர் பெறுவாய்   240
மாமனின் எலும்பு வாய்க்கடை யிருந்து
மாமியின் கல்போல் வன்னா விருந்து
மைத்துனன் கொடிய வார்த்தையி லிருந்து
மைத்துனி தலையின் வருஅசைப் பிருந்து.

நான்புகல் வதனை நனிகேள் பெண்ணே!
நான்புகல் வதனை, நான்மொழி வதனை!
மனையிலே நீயொரு மலர்போ லிருந்தாய்
தந்தையின் முன்றிலில் தனிமகிழ் வடைந்தாய்
தண்ணிலா வொளியெனத் தந்தை அழைத்தார்
ஆதவன் கதிரென அன்னையு மழைத்தாள்    250
தண்ணீர் ஒளியெனச் சகோதரன் சொன்னான்
'அகன்றநீ லத்துணி' புகன்றாள் சகோதரி;
இன்னொரு இல்லம் இப்போ தேகிறாய்
அன்னிய அன்னையின் ஆட்சியின் கீழே:
என்றும் அன்னைக் கீடிலர் அன்னியர்
பிறிதொரு பெண்ணோ பெற்றவ ளாகாள்;
இனிமையாய் அன்னியர் ஏசுதல் அரிது
ஒழுங்காய் அறிவுரை உரைத்தலு மரிது;
மாமனார் உன்னை **மரக்கிளை என்பார்
மாமியார் உன்னை **மான்வண்டி யென்பாள்   260
'வாயிற் **படிக்கல்' மைத்துன னுரைப்பான்
தீயவள் என்றுனைச் செப்புவள் மைத்துனி.

உனக்கு நன்மையாய் உருப்பெறு நேரமும்
உனக்கு அமையும் உகந்தநற் பொழுதும்
புகார்போல் வெளியே போகும் வேளைதான்
புகைபோற் தோட்டத் துலவும் வேளைதான்
இலைபோற் சுழன்று அகலும் வேளைதான்
பொறியாய் விரைந்து பரவும் வேளைதான்.

ஆயினும் பறவையே அல்லநீ பறக்க
இலையுமே யல்லநீ இடம்சுழன் றேக    270
பொறியுமே யல்லநீ புறம்பரந் தோட
புகையுமே யல்லநீ போய்த்தோட்ட முறவே!

ஓ,என் பெண்ணே, உடமைச் சோதரி!
இப்போ(து) மாற்றினாய், எதற்கெதை மாற்றினாய்?
தனியன் புறுநின் தந்தையை மாற்றினாய்
வலியதீக் குணமுறு மாமனார் தனக்கு,
அன்புக் கினியநின் அன்னையை மாற்றினாய்
வல்லகங் காரமார் மாமியார் தனக்கு,
கண்ணிய மான கவின்சகோ தரனையும்
வளைந்த கழுத்து மைத்துனன் தனக்கு,    280
துன்னுபண் புறுநின் சோதரி தனையும்
கண்பழு தான கடியமைத் துனிக்கு,
கவின்சணல் விரிப்புக் கட்டிலை மாற்றினாய்
புகைபடி அடுப்பின் புன்தளத் துக்கு,
தெளிந்த வெண்மைத் திகழ்நீர் மாற்றினாய்
செறிந்த அழுக்குடைச் சேற்றுநீ ருக்கு,
நிதம்மணல் நிறைந்த நீர்க்கரை தன்னையும்
அகல்கரும் சேற்று அடித்தள மாக்கினாய்,
வெட்டித் திருத்திய விரிவன வெளியை
படர்புற் புதர்நிறை பற்றைக ளாக்கினாய்,   290
சிறுபழம் நிறைந்த சின்மலை யாவையும்
அடல்எரி கருக்கிய அடிமரம் ஆக்கினாய்.

எண்ணிய **துண்டா? இளமெழிற் பெண்ணே!
உண்மையாய் நீயொரு ஒளிர்வளர் கோழியாய்,
அன்பா தரவு அலுவல்கள் அனைத்துமே
விளைந்த இம்மாலை விருந்துடன் முடிந்ததை?
அமளிக்கு உன்னை அழைத்துச் செல்வார்
இன்துயி லுக்கங் கேகுவாய் என்பதை?

ஆயினு முனக்கங் கமளியு மில்லை
நிம்மதி கொள்ளும் நித்திரை யில்லை    300
தூக்கமே யின்றித் தொடர்ந்துகண் விழித்து
கருமம் யாவையும் கவனத் தெடுத்து
சிந்தனை செய்தே சித்தம் குழம்பி
மனநிலை கெட்டு மறுகவும் செய்வர்.

தலைத்துணி யின்றி தனிநீ திரிகையில்
இன்னல்க ளின்றி இனிதே திரிந்தனை;
முகத்திரை யின்றி முன்நீ உலாவையில்
மனத்துய ரின்றி மகிழ்வா யுலாவினை;
தலைத்துணி யிப்போ(து) தரும்மிகு துன்பம்
முகத்திரை யிப்போ(து) மனத்துய ரேற்றும்   310
அளவிலா இன்னலை ஆக்கும்முக் காடு
சணல்துணி முடிவில்லாச் சஞ்சல மாக்கும்.

எங்ஙனம் அரிவைதன் இல்லத் திருப்பாள்?
தந்தையார் வீட்டில் தையலாள் வசிப்பாள்?
மன்னனின் கோட்டையில் மன்னனைப் போல
வாள்மட்டும் அவளது வயமிலா திருக்கும்.
ஏழை மருமகள் நிலையென்ன வாகும்?
கணவனின் வீட்டில் காரிகை நிலையும்?
திகழ்ரஷ்ய நாட்டின் சிறைக்கைதி போலாம்
ஆள்மட்டும் காவலுக் கமைந்திடா திருக்கும்.   320

வேலைநே ரத்தில் வேலைகள் செய்வாள்
தோள்களும் துவண்டு சோர்ந்து தளர்வுறும்
மேனி முழுவதும் வியர்வையில் ஊறும்
நுதலதும் வெண்மையாய் நுரைத்தே மாறும்;
இவ்வா றுருப் பெறும் இன்னொரு வேளை
வெங்கனல் மூட்டியே வேலைகள் செய்ய
அடுப்பொழுங் காக்கி அலுவல்கள் செய்ய
அனைத்தையும் ஒருத்தியின் அங்கையால் முடிக்க.

அப்போ தவட்கு ஆகும்இப் படித்தான்
ஏழைப் பெண்ணுக் கிப்படித் தான்ஆம்    330
**வஞ்சிர நெஞ்சும் **(நன்)னீர்மீன் நாவும்
குளத்திலே **வாழ்மீன் கொண்ட சிந்தனையும்
**வெள்ளிமீன் வாயும் **வெண்மீன் வயிறும்
**கடல்வாத் தறிவும் காணும்உண் டாகி.

ஒருவரும் அறிய உறுவாய்ப் பில்லை
ஒன்பது பேரும் உற்றறி யார்கள்
தாயார் பெற்ற தையலர் மத்தியில்
பெற்றவர் பேணிய பெண்களி டத்தே
எங்கே பிறப்பார் உண்பவர் என்பதை
**எங்குபோய்க் கடிப்பவர் இவர்வளர் வாரென   340
இறைச்சி உண்பவர் எலும்பு கடிப்பவர்
அம்குழல் காற்றில் அலைந்திட விடுபவர்
விரித்துக் கூந்தலைப் பரப்பி வைப்பவர்
கொடுப்பவர் இரைதான் குளிர்காற் றுக்கு.

அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழுவாய் கண்ணீர் அங்கே நிறைய
உள்ளங் கைநிறைந் தொழுகநீர் வரட்டும்
தந்தைதோட் டத்துக் கண்துளி விழட்டும்
விழிநீர் குளமாய் மிகட்டும் பிதாநிலம்    350
அழுவாய் வெள்ளம் அறைகளில் ஓட
தரையிலே பரந்து திரைகள் எழட்டும்.
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
தந்தையின் வீடு தனித்திரும் புகையில்
வயோதிபத் தந்தையை வந்துநீ காண்கையில்
இருப்பார் புகைசூழ் சவுனா அறையில்
இருக்கும் காய்ந்த இலைப்பிடி கைகளில்.

அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,    360
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
அன்னையின் இல்லுக் கடுத்து வருகையில்
வயோதிப அன்னையை வந்துநீ காண்கையில்
மாட்டுத் தொழுவில் மூச்சடைத் திருப்பாள்
வைக்கோற் கட்டுடன் மாண்டே கிடப்பாள்.

அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழச்செய்(த) இப்போ தழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்   370
இந்தவீட் டுக்கு இனிவரும் போது
காண்பாய் செந்நிறத் தனிச்சகோ தரனை
வழியிலே காண்பாய் மயங்கிவீழ்ந் திருக்க
தோட்ட(த்து) முற்றம் துவண்டுவீழ்ந் திருக்க.

அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
இந்தவீட் டுக்கு இனிவரும் போது
அன்புச் சகோதரி அவளையும் காண்பாய்   380
துணிதோய் பாதையில் தனிப்புதைந் திருப்பாள்
ஒருதுணி **யடித்தடி உறுகரத் திருக்கும்."

பேதைப் பெண்ணவள் பெருமூச் செறிந்தாள்
பெருமூச் செறிந்து பெருந்துயர் கொண்டாள்
அப்போ தவளே அழவும் தொடங்கினள்
கண்ணீர் பெருக்கிக் கலங்கி யழுதாள்.

அழுதாள் கண்ணீர் அம்கை நிறைந்தெழ
உள்ளங் கைநிறைந் தொழுகிய(து) விழிநீர்
தந்தையின் கழுவிய தகுவசிப் பிடத்தில்
பிதாவின் நிலத்தில் குளமாய் அழுதாள்   390
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"ஓ,சகோ தரிகாள், உறுமென் **குருவிகாள்!
என்வாழ் நாளின் முன்னாள் தோழிகாள்!
என்னுடன் வளர்ந்த எலாச்சிநே கிதிகாள்!
இங்குநான் உரைப்பதை எல்லிரும் கேட்பீர்:
ஆனஎன் அறிவுக் கப்பால் உள்ளது
எனக்கு நடந்தது என்னதான் என்பது
இத்தனை இன்னல் எப்படி வந்தது
இத்தனை சுமையும் எதற்காய் என்பது    400
இந்தத் துயரை எதுதான் கொணர்ந்தது
இத்துணை துன்பம் எங்ஙனம் வந்தது?

வேறாய் உணர்ந்தேன் வேறாய் அறிந்தேன்
வாழ்நாள் வேறாய் வருமென நினைத்தேன்
குயில்போற் சென்று உலவவும் எண்ணி
குன்றிலே நின்று கூவவும் நினைத்தேன்
இந்த நாட்களே வந்தநே ரத்தில்
இந்த நினைவுகள் இயைந்தவே ளையிலே;
ஆயினும் குயிலாய் அடைந்தே இப்போ(து)
குன்றிலே நின்று கூவவும் மாட்டேன்    410
அலையின் நடுவில் அலையும் வாத்துநான்
அகன்ற குடாக்கடல் அலைதா ராநான்
நிறைகுளிர் நீரில் நீந்தி வருகிறேன்
பனிக்கட்டி நீரில் பதறி நிற்கிறேன்.

ஐயகோ, எனது அன்னையே, தந்தையே!
ஐயகோ, எனது அரியபெற் றோரே!
எதற்காய் என்னை இங்கே படைத்தீர்
பேதை யென்றனைப் பெற்றது எதற்கு
இத்தனை இன்னலில் இருந்தழு வதற்காய்
இத்தனை சுமையையும் ஏற்பதற் காக    420
அடையா இத்துயர் அடைவதற் காக
இத்துணை துன்பம் இதுபெறற் காக!

ஏழையம் மா,முன் இதுசெய் திருக்கலாம்,
எனைத்தாங் கழகியே, இதுசெய் திருக்கலாம்,
பாலூட்(டி) வளர்த்த பரிவுறும் அன்னாய்!
ஆளாக்கி எடுத்த(என்) அன்புக் கினியளே!
கட்டையைத் துணியால் சுற்றிவைத் திருக்கலாம்
கற்கள் சிறியவை கழுவிவைத் திருக்கலாம்
இம்மகள் கழுவி எடுத்தநே ரத்தில்
சுற்றிய நேரம் துணியில்நின் அழகி    430
இத்துணை துயரை இதுகொணர்ந் ததுவே
மனநிலை கெட்டு மறுகி மடிந்ததே!

பல்வே றிடங்களில் பலரிதைச் சொல்வார்
இன்னும் பற்பலர் இப்படி நினைப்பார்:
அறிவிலா மூடர்க் கக்கறை யில்லை
என்றுமே கவலை இல்லையே யென்று;
நல்ல மனிதரே, சொல்லீர் அவ்விதம்!
சொல்லீர் என்றுமே, சொல்லீர் அவ்விதம்!
ஏனெனில் அக்கறை எந்தனுக் குண்டு
கனநீர் வீழ்ச்சிக் கற்களைக் காட்டிலும்    440
தீய நிலத்துச் செடிகளைப் பார்க்கிலும்
படர்புதர் முளைத்த பற்றையைப் பார்க்கிலும்
இகல்பரி யொன்று இழுக்க மாட்டாது
இரும்புக் கழுத்து இகல்பரி இழாது
உறும்ஏர்க் கால்மேல் உயர்த்தப் படாமல்
ஏர்க்கால் சற்றும் அசைக்கப் படாமல்,
மெலிந்தவ ளாயினும் மனத்துய ரடைந்தேன்
கருமையாய் இவ்விதம் கடுந்துய ரடைந்தேன்."

படிமிசை யிருந்து பாடிற் றோர்சிசு
புகன்றதிவ் விதம்புகை போக்கியில் வளர்வது:   450
"அரிவை இப்படி அழுவது என்ன
மாபெரும் துயரும் வந்தது என்ன?
படுதுயர் அனைத்தும் பரிக்குக் கொடுங்கள்
கறுத்தவாத் துக்குக் கடுந்துயர் கொடுங்கள்
இரும்புவா யதனை இரங்க விடுங்கள்
விடுங்கள் புலம்பலை வியன்பெருந் தலைக்கு;
சிறந்த சென்னிகள் திகழ்பரிக் குண்டு
பல்சீர்த் தலைகளும் பலமுறு மெலும்பும்
வளைந்த கழுத்தது வல்லது சுமக்க
உடலம் முழுவதும் உறுதியா யுடையது.    460

ஏதுக்கள் இங்கு இல்லை அழுதிட
கடுந்துயர் கொள்ளக் காரண மில்லை
உனைக்கொடு செல்லார் உறுசேற் றுநிலம்
உனைக்கொடு செல்லார் ஒருபாழ்ங் குழிக்கு
இத்தா னியமேட் டிருந்துனைப் பெற்று
இன்னும் சிறந்த இடத்தே போவார்
'பீர்'அருந் தும்மிப் பெருவீ டிருந்து
இகல்மதுப் பெருகும் இடத்தே போவார்.

விலாப்புறம் திரும்பி விரும்பிநீ பார்த்தால்
வலது பக்கமாய் மகிழ்ந்துநீ பார்த்தால்    470
மாப்பிளை இருப்பார் காப்பதற் காக
செந்நிற மனிதர் சேர்ந்தரு கிருப்பார்
ஒருநல் மனிதன் ஒருநற் குதிரை
வீடு நிறைய வேண்டிய துண்டு
காட்டுக் கோழிகள் கடுகதி பறந்து
வண்டிஏர்க் காலில் மகிழ்ந்திசை பயிலும்
**குருவி யினங்கள் குதூகலங் கொண்டு
நுகத்தடி மரத்தில் மகிழ்பாட் டிசைக்கும்
ஆறு பொன்னிறத் தம்குயில் போல்மணி
பரியின் கழுத்துப் பட்டியில் துள்ளும்    480
ஏழு நீல எழிற்புள் மணிகள்
ஓசை வண்டியின் ஒளிர்நுகத் தெழுப்பும்.
எனவே கவலை எதற்கு முறாதே
எதற்குமே வேண்டாம் **இனிதாய் மகளே
எதுவுமே தீமை இனியுனைத் தொடாது
நண்ணும் யாவுமே நன்மையாய் முடியும்
உழவன்உன் கணவன் உறுமவ னருகில்
விவசாயி அவனது மெல்லா டையின்கீழ்
உணவுக்கு உழைப்பவன் ஒளிர்தாடை யின்கீழ்
மீனவன் அவனது வியன்கை யணைப்பிலே   490
உயர்மான் சறுக்கி ஓட்டுவோன் துணையில்
கரடி பிடிப்பவன் கவின்சவு னாவில்.

உயர்ந்தோன் கணவரில் உனக்குக் கிடைத்தான்
மிகவும் மேன்மை மிக்கவன் மனிதரில்
சோம்பி யிராது தொடும்அவன் குறுக்குவில்
அம்புக் கூட்டிலே அம்புகள் தங்கா
வீட்டிலே நாய்கள் தூக்கம் கொள்ளா
குட்டிகள் ஓய்ந்து வைக்கலில் கிடவா.

முகிழ்ந்தவிவ் வசந்தம் மூன்று தடவைகள்
புலரும் காலைப் பொழுததி காலையில்   500
எரிதீ யெதிரே எழுந்தே நின்றனன்
சுள்ளிப் படுக்கைத் துயில்விட் டெழுந்தான்;
முகிழ்ந்தவிவ் வசந்தம் மூன்று தடவைகள்
துளிப்பனி அவனது விழிக்கடை வீழ்ந்தது
தடவின அவனது தலையைச் சுள்ளிகள்
கணுக்கள் அவனது கவினுடல் வருடின.

வளர்ப்பவன் அந்த மனிதனோ கால்நடை
வளர்த்துப் பெருக வைப்பவன் கால்நடை
இங்கே வந்த எம்மண மகனிடம்
வனத்திலே நடக்கும் மந்தைகள் உண்டு    510
மணல்மேட் டினிலே மந்தைகள் திரியும்
பள்ளத் தாக்கிலே பரந்தே உலாவிடும்
கோட்டு விலங்குகள் நூற்றுக் கணக்கிலே
மடியுள விலங்குகள் மற்றாயிர வகை;
வைக்கோல் பட்டடை மிக்குறும் வெளிகளில்,
கரைகளில் தானியக் களஞ்சியம் அருவியின்,
பூர்ச்சந் தோப்புகள் பொதுவயல் ஆகின
பள்ளப் பரப்பினில் பார்லிநன் னிலங்கள்
புல்நல் லரிசிப் புனம்பா றைப்புறம்
ஆற்றங் கரைகளில் கோதுமை வயல்கள்    520
கூழாங் கற்கள் **கொள்பண நாணயம்
சிறுகற் களெலாம் சில்லறை நாணயம்."



பாடல் 23 - மணமகளுக்கு அறிவுரைகள்  *




அடிகள் 1 - 478 : கணவனின் வீட்டில் எவ்விதம் வாழ வேண்டும் எவ்விதம் ஒழுக வேண்டும் என்று மணமகளுக்கு அறிவுரை கூறுதல்.

அடிகள் 479 - 850 : ஒரு வயோதிபப் பெண் தான் பெற்றோருக்கு மகளாகவும் கணவனுக்கு மனைவியாகவும் கணவனைப் பிரிந்த பின் தனியாகவும் வாழ்ந்த அனுபவங்களைக் கூறுதல்.



அரிவைக்(கு) இப்போ தறிவுரை தேவை
மணமக ளுக்கு வழிமுறை தேவை
அரிவைக் கறிவுரை யளிப்பவ ரெவரோ?
பாவைக்குப் புத்தி பகர்பவர் யாரோ?

ஒஸ்மோ மகளெனும் ஒண்செழிப் பரிவை
கலேவா மகளெனும் கவினுறு நங்கை
அவள்தான் பெண்ணுக் கறிவுரை சொல்வாள்
அனாதைக் கவளே அளிப்பாள் வழிமுறை
விவேகமாய் வாழ்ந்திடும் விதம்எது என்பதை
மாசில்லா தெங்ஙனம் வாழ்வது என்பதை   10
விவேகமாய்க் கணவனின் வீட்டிலும் எங்ஙனம்
மாசில்லா தெங்ஙனம் மாமியார் வீட்டிலும்.

இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"அருமண மகளென் அன்புச் சோதரி!
இதயம் நிறைந்த இனியளே, அன்பே!
நான்மொழி கையிலே நன்குநீ கேட்பாய்
வெவ்வேறு விதமாய் விளம்ப நீகேட்பாய்.

மலரேயிப் போது மனைவிட் டகில்கிறாய்
சிறியசெம் **பழம்நீ செல்லப் போகிறாய்    20
தடித்த துணிநீ தான்நகர் கின்றனை
**'வெல்வெட்' துணியே வெகுதொலை போகிறாய்
எழில்புகழ் பெற்றஇவ் வில்லத் திருந்து
தொல்லெழில் வாய்ந்தஇத் தோட்டத் திருந்து;
இன்னோ ரிடத்து இல்லம் வருகிறாய்
அன்னிய மானதோர் அகல்இல் வருகிறாய்
மாறு பட்டதோர் மனைக்குநீ வருகிறாய்
மற்றவர் மத்தியில் **மறாளாய் வருகிறாய்;
சிந்தித் தடியிடல் சீரா யிருக்கும்
கவனமாய் அங்குநீ கருமம் செய்வாய்,    30
அப்பாவின் நிலத்தில் அமைந்தது போல(ல்)ல
உரிமைத் தாயின் தரைபோ லிருக்கா(து)
பள்ளத் தாக்கிலே பாட்டுகள் பாடியும்
வழிகளில் கூவியும் வாழ்வது அரிது.

இந்த வீட்டி லிருந்துநீ போகையில்
உனது பொருள்கள் அனைத்தையு மெடுப்பாய்
ஆயினும் வீட்டில்விட் டகல்கவிம் மூன்றையும்
பகலிலே தூங்கும் பழக்கமஃ தொன்று,
அன்புறு மன்னையின் அறிவுரை, அடுத்தது
சுத்தமாய் கடைந்த சுவையுறும் வெண்ணெய்.   40

ஆனஇல் லப்பொருள் அனைத்தையும் நினைவாய்
எனினும் துயிலதை எளிதினில் மறப்பாய்
இருக்கட் டுமது இல்வாழ் மகளிர்க்(கு)
இருக்க(ட்டும்) அடுக்களை இதமூ லையிலே;
பாடல்கள் ஆசனப் பலகைதங் கட்டும்
இருக்க(ட்டும்) சாளரத் தினியநற் கதைகள்
தூரிகைப் பிடியிலே **ஆர்கசின் னவள்இயல்(பு)
கேலியும் கிண்டலும் போர்வையின் விளிம்பிலே
ஆன தீப் பழக்கமே அடுக்களைப் பீடமாம்
உனதுசோம் பலைநிலத் துறும்படி விட்டுவை   50
அல்லது திருமணத் தோழிக்(கு) அளித்திடு
அவளது கைகளில் அவற்றையே சுமத்திடு
புற்றரை மேட்டிடைப் போகட்டு(ம்) கொண்டவள்
புதருக்குச் செல்கையில் கோக(ட்டும்) கூடவே.

நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அப்பாவின் அன்பை அகற்றிடல் நன்று
மாமனின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.   60

நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அன்னையின் அன்பை அகற்றிடல் நன்று
மாமியின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.

நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
சகோதரன் அன்பைத் தள்ளிடல் நன்று
மைத்துனன் அன்பை மனங்கொளல் நன்று    70
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.

நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
சகோதரி அன்பைத் தள்ளிடல் நன்று
மைத்துனி அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.

உன்வாழ் நாளில் என்றுமே வேண்டாம்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்   80
பொல்லா நினைவுடன் புக்ககம் செல்லுதல்
திறமை இல்லையேல் திருமணம் வேண்டாம்.
இல்லத்து வாழ்ந்திட இனியவை தேவை
நலமுறு வீட்டில் நன்பண்பு தேவை
கணவனாய் வந்தவன் கடிதுசோ திப்பான்
அறிவுடைக் கணவனும் அங்ஙனம் செய்வான்;
அறிவும் கவனமும் அவசியம் நினக்கு
நீபுகும் வீடு நிலையிலா திருந்தால்,
வலியும் விவேகமும் வரனுலக் கவசியம்
தரங்கெட்ட கணவன் தன்திசை மாறின்.   90

மூலைஓ நாய்போல் முதியவன் இருப்பினும்
மொய்புதர்க் கரடிபோல் முதியவள் இருப்பினும்
அரவுபோல் களஞ்சிய அறையில் மைத்துனன்
மைத்துனி தோட்டத்து நத்தையா யிருப்பினும்
சமமதிப் பினைநீ சளைக்கா தேகொடு
பணிவான நடத்தை பழக்கத்து வேண்டும்
அம்மா விடத்தில் அமைந்ததைப் பார்க்கிலும்
அப்பாவின் வீட்டில் அமைந்ததைப் பார்க்கிலும்
பிதாவிடம் காட்டிய பணிவைப் பார்க்கிலும்
மாதாவுக் கீந்த மதிப்பைப் பார்க்கிலும்.    100

எப்போது முனக்கு இவையிவை தேவை
தெளிவுறு தலையும் திகழ்தர அறிவும்
நிதானம் கண்டிப்பு நிறைந்தசிந் தனையும்
விளம்பலைச் செயலை **விளங்கும் ஆற்றலும்,
மாலையில் கூர்மை மலர்விழிக் கவசியம்
மனையிலே விளக்கு மங்கா திருக்க,
காலையில் செவியில் கவனமும் அவசியம்
சத்தமாய்ச் சேவலின் தனிக்குரல் கேட்க;
சேவல் முதல்முறை கூவிய பின்னர்
சேவலின் அடுத்த கூவலின் முன்னர்    110
இளையவர்க் கதுவே துயிலெழும் நேரம்
முதியவர்க் கதுவே ஓய்வுகொள் நேரம்.

சேவலும் ஒருநாள் கூவா திருந்தால்
தலைவனின் பறவை ஒலிதரா விட்டால்
திங்களை உந்தன் சேவலாய்க் கருது
தாரகைக் குலம்வழி காட்டியா யாக்கு
வெளியே அடிக்கடி விரைந்தெழுந் தேகி
சந்திரன் திகழ்வதைச் சரியாய்ப் பார்ப்பாய்
வழிவகை தாரகை வண்குலத் தறிவாய்
விண்மீ னிடத்தே விதிமுறை கற்பாய்.   120

**விண்மீன் குலமும் விளக்கமாய்த் தெரிந்து
அவற்றின் கொம்புகள் அவைதெற் கமைந்து
வடதிசை பார்த்து வாலும் இருந்தால்
உனக்கது துயிலெழ உகந்தநல் நேரம்
இளமண வாளன் இனிதரு கிருந்து
செந்நிறத் தோனின் திகழ்அரு கிருந்து
சாம்பரைக் கிளறித் தகிஅனல் மூட்ட
தீக்கற் பெட்டியில் தீப்பொறி யாக்க
ஊதி விறகில் உறுகனல் மூட்ட
பக்கம் நெருப்பும் பரவா தமைப்பாய்.    130

சாம்பரில் நெருப்புத் தானிலா திருந்தால்
பெட்டியி லிருந்தும் பெயரா விடிற்பொறி
அன்புறு கணவனை அன்புடன் கேட்பாய்
எழிலுறும் கணவனை இவ்விதம் கேட்பாய்:
'அன்புக்(கு) உரியரே, அழல்சிறி தருளிரோ,
செஞ்சிறு பழமே, செந்தீ தாரிரோ?'

சிறியதீக் கல்லைப் பெறுவையப் போது
தீக்கல் மிகமிகச் சிறியதைப் பெறுவாய்
தேய்த்துப் பொறியை ஆக்குதீக் கல்லில்
காய்ந்த குச்சியில் கனலதை மூட்டு    140
வெளியில் சென்று தொழுவதும் பெருக்கு
உணவைக் கால்நடை உண்ண அளித்திடு;
பக்கம் மாமியின் பசுவொன் றலறும்
கவின்மா மன்பரி கனைக்கு(ம்)முன் னின்று
மைத்துனன் பசுவும் வந்த லறும்முன்
மெதுவாய் மைத்துனி பசுக்கன் றலறும்
மென்மைவைக் கோலை வீசவை கட்கு
அள்ளிச் சற்றே **மணப்புல் நீகொடு

பாதையில் சற்றுப் பணிவுடன் சென்று
நுழைந்து கால்நடைத் தொழுவிற் குனிந்து   150
பசுவுக்(கு) உணவைப் பதமாய் வைத்து
ஆட்டுக் குணவை அன்பா யூட்டு;
சரியாய் வைக்கோல் தந்தா வுக்கு
மெலிந்தகன் றுக்கும் மிதநீர் கொடுத்து
தெரிந்த வைக்கோல் பரிக்குட் டிக்கும்
இடுவாய் செம்மறிக் குட்டிக் கிதப்புல்;
ஏனக் குழாத்தை ஏசுதல் கூடா(து)
வராகக் குட்டியை உதைத்தலும் ஆகா(து)
பதவூண் தொட்டியைப் பன்றிக்(கு) ஈந்து
குட்டிக் குணவுத் தட்டத்தைத் தருவாய்.   160

ஓய்தல் தகாது கால்நடைத் தொழுவில்
சோம்பலும் தகாது செம்மறித் தொழுவில்
கால்நடைத் தொழுவில் கருமம் முடிந்ததும்
அனைத்து மந்தையின் அலுவல் முடிந்ததும்
அவ்விடம் விட்டு அகன்றுநீ செல்வாய்
பனிப்புயல் போலே படர்வாய் வீட்டுள்
அங்கொரு பிள்ளை அழுதுகொண் டிருக்கும்
போர்வையின் உட்சிறு பிள்ளை யிருக்கும்
பேதைக் குழந்தை பேச வராது
நாவாற் சொல்லும் நயம்தெரி யாது    170
கூறா(து) குளிரெனக் கூறா(து) பசியென
அல்லது வேறென்ன சொல்லா தெதனையும்
பழகிய யாரும் பக்கம் வரும்வரை
தாயின் குரலும் காதில் விழும்வரை.

நேரே இல்லுள் நீவரும் போது
உறுநாற் பொருளில் ஒன்றென வருவாய்
நீர்நிறை வாளி நின்கரத் திருக்கும்
குளியற் **தூரிகை கக்கத் திருக்கும்
எயிற்றின் இடையினில் இருக்கும்தீக் குச்சி
நான்காம் பொருளென நனிநீ யிருப்பாய்.   180

பெருநிலம் அடுத்துப் பெருக்கிக் கூட்டி
நிலத்துப் பலகையை நீசுத் தம்செய்;
தண்ணீர் அள்ளித் தரையிலே வீசு
குழந்தையின் தலையில் கொட்டி விடாதே;
குளிர்தரை நீயொரு குழந்தையைக் கண்டால்
மைத்துனி பெற்ற மழலையஃ தாயினும்
பிள்ளையைத் தூக்கிப் பீடத் திருத்தி
கண்களைக் கழுவிக் காண்தலை வருடி
குழந்தைக்கு ரொட்டி கொடுத்துக் கையில்
கொஞ்சம் ரொட்டிமேல் கொழுவெ(ண்)ணெய் பூசு   190
இல்லத்து ரொட்டியும் இல்லாது போனால்
மரக்குச்சி யொன்றை மழலைகை வைப்பாய்.

வீட்டில் கழுவுதல் மேசைகள் என்றால்
கூடிய காலம் வாரத் தொருநாள்,
கழுவு மேசையைக் கரையையும் நினைவாய்
கழுவவும் வேண்டும் கால்மறக் காமல்;
ஆசனப் பலகையை நீரினாற் கழுவு
சுவரெல்லாம் துடைத்துச் சுத்தமாய்ச் செய்து
ஆசனப் பலகையின் அருகெலாம் கழுவி
கழுவு சுவரையும் காண்சுவர் மூலையும்    200

மேசையின் மேலே தூசுகள் படிந்தால்
சாளர மேலே சார்அழுக் குறைந்தால்
துடைப்பத் தோகையால் துப்புர வாக்கி
ஈரத் துணிகொண் டெடுப்பாய் அழுக்கை
அப்போ தழுக்குகள் அயற்புறம் போகா
தூசுகள் பறந்து கூரையிற் படியா.

கூரையில் சேர்ந்த குப்பையைக் கூட்டி
அடுப்பங் கரையின் அசுத்தம் நீக்கு
கதவின் நிலைகளில் கவனம் வைத்திரு
உத்தரம் யாவையும் நித்தமும் நினைவாய்   210
அப்போ(து) குடிவாழ் குடிலா யதுவரும்
வாழத் தகுந்த வதிவிட மாய்வரும்.

நான்மொழி கையிலே நங்கைநீ கேட்பாய்
நான்மொழி கையிலும் நான்உரைக் கையிலும்!
வெளியா டையிலா(து) வெளிச்செல் லாதே
மேலாடை யின்றி வெளியலை யாதே
எங்கும் **கைத்துணி யின்றியே காதே
காலணி யின்றிக் காலாற நடந்திடேல்:
மாப்பிள்ளை பார்த்தால் மகாசினம் கொள்வார்
இளமைக் கணவர் எதுவெனும் சொல்வார்.   220
அந்தச் செடிகளில் அதிகவ னம்வை
பெருந்தோட் டம்வளர் **பேரிச் செடிகளில்;
தோட்டத் துப்பேரி தூய்மையே யானது
பேரியின் கிளைகள் பெரிதும் புனிதம்
கிளைகளின் இலைகளும் உளமிகப் புனிதம்
அதன் சிறுகனிகளே அனைத்திலும் புனிதம்,
இளங்கொடி அறிவது இவற்றினால் எதுவெனில்
இருப்பவள் அனாதைபோல் எதுகற்ப தோவெனில்
வருமிளங் கணவனை மகிழச்செய் வகையதே
மணமகன் உளமதை மகள்தொடு விதமதே.   230

செவியிலே வேண்டும் எலியதன் கூர்மை
பாதத்தில் வேண்டும் முயற்பரி சுத்தம்:
பருவக் கழுத்துப் பணிந்து பின்புறம்
வனப்புறும் கழுத்து வளைதலும் நன்று
சிலிர்ப்பொடு முளைவிடு **செடிசூ ரையைப்போல்
பசுமை வளர்சிறு பழச்செடி யைப்போல்.

விழிப்புணர் வுனக்கு வேண்டும் வழக்கில்
கணந்தோறும் விழிப்புணர் கவனமும் வேண்டும்
ஆசனம் பொழுதெலாம் அமர்தலும் வேண்டாம்
பலகையில் நீளப் படுத்தலும் வேண்டாம்   240
போர்வையுள் சதாநீ புதைதலும் வேண்டாம்
படுக்கைநா டிப்புறப் படலதும் வேண்டாம்.

வருவான் உழுதலை மைத்துனன் முடித்தபின்
வருவார் வேலியை மாமன்கட் டியபின்
வெளிப்புற மிருந்துன் கொழுநன் வருவார்
அடர்கான் திருத்திஉன் அழகனும் வருவார்;
கலயம் ஒன்றிலே புனலினைக் கொணர்வாய்
கைத்துணி ஒன்றையும் அத்துடன் கொணர்வாய்
தலையைச் சிறிது தாழ்த்தியே பணிந்து
அன்புறும் சொற்களை அருமையாய்க் கூறு.   250
மாமியார் களஞ்சியக் கூடத்தால் வருவார்
அரைத்தமாக் கூடை இருக்கும் கக்கம்
மாமியை எதிர்கொள ஓடுமுற் றத்தே
தலையைச் சற்றுத் தாழ்த்திப் பணிந்து
கேட்டுநீ கக்கக் கூடையை வாங்கு
இல்லத்தின் உள்ளே எடுத்ததை ஏகு.

ஊகிக்கச் சிந்திக்க உனக்கிய லாவிடில்
சுத்தமாய் விளங்குதல் மெத்தவும் சிரமமேல்
எந்தெந்தப் பணியை எப்போது செய்வது
எதையெதைத் தொடங்கி இனிதியற் றுதலென   260
வீட்டின் முதியளை வினயமாய்க் கேட்பாய்:
'ஓ,என் அன்பு உடைய மாமியே!
எங்ஙனம் வேலைகள் இங்கே நடப்பது
எவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்?'

முதியவள் இங்ஙனம் மொழிவாள் மறுமொழி
மாமியார் இவ்விதம் மறுமொழி சொல்வாள்:
'இப்படித் தான்செயல் இங்கே நடப்பது
இவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்
இடித்தல் குத்துதல் அரைத்தல்இங் குண்டு
கல்லின் திரிகையைக் கைகளால் சுற்றலும்   270
அத்துடன் தண்ணீர் அள்ளி வருதலும்
பசையாய் மாவைப் பிசைதலும் இங்குள;
விறகை எடுத்து வீட்டுட் கொ(ண்)டுசெலல்
அடுப்பை மூட்டி அனலையுண் டாக்கல்,
அடுத்து ரொட்டிகள் அடுப்பில் சுடலுள
கனமாம் பெரிய பணிய(஡)ரம் சுடலுள
கலயம் சட்டிகள் கழுவும் செயலுள
ஊண்மரத் தட்டை உடனலம் பலுமுள.'

முதியவ ளிடத்தே முயற்சிகள் கேட்டதும்
ஒழுங்காய் மாமியார் உரைத்தலும் அலுவலை   280
காய்ந்த தானியம் கணப்பில்நீ யெடுத்து
அரைக்கும் குடிற்கு அவசரம் ஏகுவாய்;
அந்த இடத்தைநீ சென்று அடைந்தபின்
அரைக்கும் குடிற்கு அவசரம் வந்தபின்
குயிற்குர லெடுத்துக் கூவுதல் கூடா
கண்டக் குரலால் கத்தலும் ஆகா
கூவலைத் திரிகைக் கைப்பிடிக் களித்திடு;
பாடலைத் திரிகைக் கைப்பிடிக் களித்திடு;
பலமிகும் ஒலியில் புலம்பலும் கூடா(து)
திரிகைக் கல்மேல் சேர்ந்தூத லாகா(து)   290
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
பலமாய்ச் சினங்கொடு புலம்பினாய் நீயென
நெஞ்சம் வெறுப்பொடு நெட்டுயிர்த் தாயென.

அரைத்த மாவை அரித்தெடுத் தருமையாய்
தட்டிலே வைத்து வீட்டுள் கொணர்வாய்,
மென்மை ரொட்டிகள் மெதுவாய்ச் சுடுவாய்
கவனமாய்ப் பிசைந்தமாக் களியிலே யிருந்து,
அங்கிங்கு கட்டிமா அமைதல்கூ டாது
புளித்தமாச் சேராது போகலா காது.   300

சரிந்ததோர் தொட்டியாங் கிருந்திடக் காண்பாய்
தொட்டியைத் தூக்கியுன் தோளிலே வைத்து
கைவாளி யொன்றைக் கக்கத் தெடுத்து
புனலள் ளிவரப் போதுறை நோக்கி
தொட்டியை யழகாய்த் தோளில்நீ சுமப்பாய்
கொளுவிநீ சுமந்தாய் கொண்டோ ர் **காத்தடி
வாயுபோல் விரைந்துநீ வீடு திரும்புவாய்
குளிர்ருதுக் காற்றெனக் குறுகுவாய் கடிதில்
சற்றும் சோம்புதல் நீர்த்துறைக் கூடா(து)
அத்துடன் ஓய்வுறல் ஆகா(து) கிணற்றடி    310
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
உன்மத்த மாயினாய் உன்னுருப் பார்த்தென
உன்னையே பார்த்துநீ உளமகிழ்ந் தனையென
உன்செந் நிறத்து உருவம் தண்புனல்
மருண்டனை கிணற்றிலுன் வளர்எழில் கண்டென.

நீள்விற கடுக்கில் நீபோய் நிற்கையில்
விறகை யெடுக்க விரும்புமவ் வேளையில்
நிந்தையாய் விறகை நீநோக் காதே
**அரசம் விறகை அளவொடு நீபெறு    320
விறகை மெதுவாய் வீழ்த்திடு மண்ணில்
ஓசைகடுமையாய் ஒன்றும் வராமலே
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
வெறுப்பினால் விறகதை விட்டெறிந் தாயென
கடுஞ்சின மதாலெழுங் கடுமொலி யதுவென.

நெடுங்களஞ் சியவறை நீசெ(ல்)ல நேர்ந்தால்
அரைத்தமா அள்ளிநீ அயல்வரப் போனால்
களஞ்சியத் தில்வீண் காலம்போக் காதே
களஞ்சியப் பாதையில் கழியேல் வெகுகணம்   330
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
பலருக்கு மாவைநீ பங்கிட் டாயென
கொடுத்தனை கிராமக் கோதையர்க் கேயென.

சமையல் பாத்திரம் சரியாய்க் கழுவையில்
மரத்தட் டுகளை மற்றுநீ யலம்பையில்
கழுவிடு குடுக்கைகள் கைபிடி யதனொடே
கலய(த்து)க் குழிவிழும் கரையையும் கழுவுநீ
மறவா(மல்) சாடியின் மறுபுறம் கழுவுநீ
கைபிடி நினைவில்வை கரண்டிக ளாகிடில்.   340

கரண்டிகள் தொகையைக் கவனத்(து) இருத்துக
எண்ணிடு பாத்திரம் எல்லாம் பக்குவம்
அல்லது நாயெடுத் தவைசெல வழியுள
பூனையும் சிலதைப் புறங்கொடு போகலாம்
குருவிகள் பறவைகள் கொடுசெல வாய்ப்புள
நிலத்திலே பரப்பியே நீக்கலாம் பிள்ளைகள்
இருக்கிறார் கிராமம் ஏர(஡)ளம் பிள்ளைகள்
சிறுதலை படைத்திட்ட சிறுவர்ஏ ராளம்
சிறுவர் சாடிகொடு செல்வராங் கிருந்து
அச்சிறார் எடுத்தெறிந் தகப்பைகள் பரப்புவார்.    350

நீராவிக் குளியல் நேரமா லையிலே
சுத்தநீ ரிறைத்துத் **தூரிகை கொணர்ந்து
அவைமெது வாக்கி ஆயத்த மாக்கி,
புகைவெளி யேற்றிப் பொருந்தும் பதமதை,
நீள்கணம் சவுனா(வில்) நிற்றலும் கூடா(து)
அதற்கா யாங்கிருந் தகல்தலு மாகா(து)
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
சவுனாப் பலகையில் சாய்நதிருந் தாயென
குதித்துப் பலகையில் **கும்மலித் தாயென.   360

மீண்டுநீ அங்கிருந்(து) வீட்டுள் வந்ததும்
மாமனார் குளிக்க மனமுவந் துரைப்பாய்:
'ஓ,என் அன்புடை உயர்மா மாவே!
ஆவிக் குளிப்பறை ஆயத்த முள்ளது
தூயநீ ரிறைத்துத் தூரிகை வைத்துள்ளேன்
பலகைகள் யாவையும் பாங்காய்ப் பெருக்கினேன்
மனம்நிறை யும்வரை மகிழ்வாய்க் குளிப்பீர்
நினைப்புபோல் நிறைவாய் நீரா டுங்கள்
நீராவி இயக்கம் நேர் கவனிப்பேன்
நீள்மே டையின்கீழ் நின்றே இயக்குவேன்.'   370

நிதம்நூல் நூற்கும் நேரம் வந்திடில்
நெய்தல்வே லைக்கு நேரம் வந்திடில்
கிராமம் வென்று கேளேல் கருத்து
அறிவுரை வேண்டி **அகழ்கடந் தேகேல்
அடுத்தவர் வீட்டுக் கதுகேட் டேகேல்
**பாவுநூல் கேட்டுப் படரேல் புதுவிடம்.

நூற்றெடுப் பாய்நீ நூலை உனக்காய்
நெசவு(ப்)பா வுநூலை நீஉன் விரல்களால்
சற்று(ப்)பா வுநூலைத் தளர்ச்சியாய் நூற்று
இறுக்கமாய் இழைநூல் என்றும் பின்னு;   380
உறுதியாய்ப் பந்துபோல் உடன்அதைச் சுற்றிநீ
உருளையில் பலமாய் உடனதைச் சேர்த்து
திருகு விட்டத்தில் திடமிணைத் ததனை
நெய்யும் கருவியில் நேராய்ப் பூட்டுவாய்; கைத்தறிச் சட்டம் கனபலத் தியக்கி
ஊடிழைக் **கயிற்றை உடன்மெது விழுப்பாய்
அடுத்ததாய் இ(ல்)லப்பல் லாடைகள் நெய்வாய்
கம்பளித் துணியிலே கவின்பா வாடைசெய்
அவ்வா றோராட்டு உரோமத்(தால்) ஆக்குவாய்
ஒருகுளிர் ருதுஆட்(டு) உரோமத் திருந்து   390
வசந்தச் செம்மறி மணிக்குட்(டி) இருந்து
வளர்கோ(டைச்) செம்மறி மறியாட் டிருந்து.

நான்கூ றுகையில்நீ நனியிவை கேட்பாய்
இன்னமும் சொல்வதை இப்போ(து) கேட்பாய்
பார்லி(த்)தா னியத்திலே 'பீர்'நீ வடிப்பாய்
பகர்சுவை மாவூ(றற்) பானம் வடிப்பாய்
ஒருமணிப் பார்லியாம் அரிசியி லிருந்து
பாதியாம் மரமதன் படுவிற கெரித்து.

பார்லிப் பானம் பக்குவம் செய்கையில்
மாவூ(றற்) பானம் வளர்சுவை யாக்கையில்   400
கொளுவியால் நீயதைக் கிளறுதல் ஆகா(து)
குச்சியால் கிளறுதல் கூடா(து) நீயதை
உன்கை முட்டியால் கிளறுதல் வேண்டும்
கிண்டுதல் வேண்டும் கொண்டுள் ளங்கை;
அடிக்கடி ஆவிக் குளிப்பறை செல்வாய்
முளைத்த முளையெதும் மழுங்கா தமைப்பாய்
அமர்தல் பூனைகள் ஆகா(து) முளைமேல்
கூடா(து) பூனையின் குட்டிகள் படுத்தல்
ஓடியே வந்திடும் ஓநாயென் றஞ்சிடேல்
பயப்பட வேண்டாம் பருவிலங் குறுமென   410
நீராவிக் குளிப்பறை நீசெல்லும் போது
நடுச்சாமத் தினிலும் நடக்குமட போதுநீ.

வெளியார் எவரும் வீட்டுக்கு வந்தால்
வெளியாரை என்றும் வெறுத்த லாகாது
எப்போதும் நலமுடை இல்லத் துளது
வரவேற்க வெளியார் வகையாம் பொருட்கள்
இறைச்சித் துண்டுகள் இருக்கும்ஏ ராளம்
எழிலார் பலக(஡)ரம் இருக்கும்எவ் வளவோ.

அன்னியர் வந்தால் அடுத்தம ரச்சொல்
அவரோ டமைதியாய் உரையா டிடுவாய்   420
சுவையா(க) யூட்டு சொற்கள்வந் தவர்க்கு
ஊண்ரசம் தயாராய் உற்றிறக் கும்வரை.

அவர்பின் இல்விட் டகலும் வேளை
எழுந்து 'போய் வருவேன்' எனப்பிரி நேரம்
வந்தவர் பின்போய் வழியனுப் பாதே
வெளிப்பட வேண்டாம் வழிவாய் நுழைந்து
ஆத்திரம் கொள்வார் அரியஉன் கணவர்
அழகுறும் உன்னவர் அருவருப் பாரதை.

சிலகணம் நின்மணம் சித்தமா யானால்
எங்கெனும் பக்கத் தேகவேண் டுமென    430
பரிவொடு போக விடையது கேட்பாய்
அயல்வீட்(டில்) உரையசெய அனுமதி கேட்பாய்;
அவ்வா றுரையசெய அயல்வீ டேகினால்
கவனமாய்ப் பொருளு(ள்)ள கதைகளைச் சொல்வாய்
உள்ளகக் குறைகுற்றம் உரைத்தல்ஆ காது
இறக்கமாய் மாமியை இயம்பல்ஆ காது.
வளம்நீ போம்இல் மருகியார் கேட்பார்
கேட்பார்கள் எவரெனும் கிராமமங் கையர்கள்;
'உனக்கிங் கீவாளா உயர்வெ(ண்)ணெய் மாமி
உன்இல் முன்நாள் அன்னையைப் போல?'   440

ஒருக்காலும் இவ்வாறு உரைக்கா தேபதில்:
'மாமியார் எனக்குங்(கு) வழங்கார் வெண்ணெய்!'
அவளுனக் கென்றும் அளிப்பளே என்பாய்
அகப்பையில் நிறைவாய் அளிப்பளே என்பாய்
ஒருகால் கிடைத்திடும் உயர்கோ டையிலே
குளிர்நாளி **லிருந்தது கூடவே இருமை.

இன்னும் நான்சொல இவைநீ கேட்பாய்
இனியும் சொல்வதை இப்போ(து) கேட்பாய்
இந்தஇல் லகத்திலே யிருந்துநீ ஏகி
மற்றொரு வீடு வரும்போ தினிலே    450
உனையீன் அன்னையை ஒருகா(லும்) மறவேல்
தாயவள் உள்ளம் தளரவை யாதே;
உனைவளர்த் தெடுத்தவள் உனதுதா யன்றோ
முலையால் இனிதாம் அமிழ்துதந் துயர்த்தினள்
தரமாம் உடலால் தனையே தந்தாள்
வெள்ளையாம் உடலால் விரும்பிய தீந்தாள்;
இரவுகள் எத்தனை உறங்காக் கழித்தாள்
எத்தனை நாள்ஊணை எடுத்துண மறந்தாள்
தனித்ததொட் டிலில்உனைத் தாலாட்டு கையில்
சீராட்டி வளர்க்கையில் சிசுவாய்த் தானும்.   460

தத்தம் அன்னையை தாம்எவர் மறப்பரோ
தாயவள் இதயம் தளர்வுறச் செய்வரோ
மரண உலகவர் புகாதிருக் கட்டும்
தூயநன் நெஞ்சோடு துவோனியின் உலகு:
மரண உலகம் கடும்விலை கொடுக்கும்
துவோனியின் உலகு கொடும்பரி சளிக்கும்
தாயினை மறந்த தரங்கெட் டோ ர்க்கு
தாய்தளர்ந் திடச்செய் தீமனி தர்க்கு;
துவோனியின் மகளார் சொலிலிகழ்ந் தேசுவார்
கன்னியர் சாப்புவிக் கலகஞ்செய் திடுவர்:   470
'அன்னையை மறத்தலும் எங்ஙனம் ஆனது?
தன்தாயை எவ்வாறு தளரவிட லானது?
அன்னையே உழன்றாள் அளவிலாத் துன்பம்
பெற்றவள் பட்டது பெருந்துய ரன்றோ
நீராவி யறையில் நீண்(டு)சய னித்தாள்
பரப்பிவைக் கோலைப் படுத்தாள் அதன்மேல்
அப்போ துனையீன் றளித்தவந் நாளில்
எளிய பிறவியே எடுத்துனைச் சுமக்கையில்!' "

முன்நிலத் தங்கோர் முதியோள் இருந்தாள்
மேலா டைதரி(த்த) வியன்முது கிழவி   480
கிராமக் களஞ்சியம் திரிந்து வருபவள்
அந்தவூர் வீதி அலைந்தே திரிபவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"சேவலொன் றினியதன் சோடிக் குரைத்தது
கோழியின் குஞ்சுதன் அழகுக் குரைத்தது
காகம் **பங்குனி மாதம் கரைந்தது
இனிய வசந்தத் திசைத்துப் பறந்தது;
பாடலை நானே பாடுதல் வேண்டும்
அடுத்தவர் பாடலை நிறுத்தலும் வேண்டும்:   490
அன்புளோர் உண்டு அவரவர் வீட்டில்
அன்புளோர் அவரவர் அருகிலே யுள்ளார்
எனக்கிலை அன்புளோர் இல்லமு மில்லை
என்றுமே அன்புளோர் இல்லா துள்ளேன்.

நீகேள் சோதரி நான்கூ றுகையில்
கணவனின் இல்நீ கால்வைக் கையிலே
ஏற்று நடந்திடேல் எண்ணம் கணவனின்
நான்பேதை ஏற்று நடந்ததைப் போல
**வானம் பாடிநா மணாளனின் எண்ணம்
என்பெருங் கணவனின் இதய மதுவே.    500

என்வாழ் நாளில் இருந்தேன் மலர்போல்
பற்றையில் வளர்ந்த பசும்புலா யிருந்தேன்
முன்வெடித் தெழும்பிய முளையா யிருந்தேன்
முகைத்து நீண்ட மொட்டா யிருந்தேன்
**தேன்சிறு பழமெனச் செப்பிடப் பட்டேன்
பொன்னெனப் பெருமையாய்ப் புகன்றிடப் பட்டேன்
தந்தையார் தோட்டக் காட்டுவாத் தானேன்
தாரா வாய்த்திரிந் தேன்தாய் நிலத்தில்
சகோதரன் அருகுநீர்ப் பறவையா யானேன்
சகோதரி பக்கம் தனில்சிறு **புள்நான்;   510
பாதையின் வழியில் பூவாய் நடந்தேன்
வயல்வெளி களிற்சிறு பழமா யிருந்தேன்
தொடர்நீர்க் கரைமணல் துள்ளித் திரிந்தேன்
மலர்நிறை மேடெலாம் மகிழ்ந்தா டிட்டேன்
பள்ளத் தாக்கிலே பாடித் திரிந்தேன்
ஒவ்வொரு குன்றிலும் உயர்ந்திசை பாடினேன்
வளமுறு சோலைகள் விளையாட் டிடமாய்
மகிழ்ச்சியின் இடமாய் மாறின தோப்புகள்.
தன்வா யாலே தான்நரி வீழ்ந்தது
கீரிதன் நாக்கால் கெட்டகப் பட்டது    520
கணவனின் வீட்டைக் காரிகை எண்ணினள்
மற்றொரு இ(ல்)லிற்கு வழிமுறை தேடினள்:

ஆதலால் மகளிர்க் காம்இயல் நெறியிது
மகளாய்ப் பிறந்தவள் மாறியே மனம்பின்
மணாளன் வீட்டிலே மருமக ளாவதும்
அடிமையாய் மாமியார் அகத்துக்(கு) ஏகலும்.

விழுந்தேனொர் அந்நிய வியன்நிலம் பழமென
மற்றொரு சிறுபழ மாய்ப்புனற் கிடந்தேன்
தண்செம் **பழம்நான் சஞ்சலங் கொண்டேன்
நிலநலப் **பழம்நான் நிந்தனை கண்டேன்   530
ஒவ்வொரு மரமும் உடனெனைக் கடிக்கும்
இன்னொரு **வகைமரம் என்னையே கிழிக்கும்
மிலாறு மரமது மிகஎனை வருத்தும்
**அரசெனைப் பார்த்து அதிரக் குரைக்கும்.

மணந்தபின் மாப்பி(ள்)ளை மனைக்குச் சென்றேன்
மாமியின் மனைக்கு மகிழ்ந்துகொண் டேகினர்
இங்ஙனம் அப்போ தெனக்குக் கூறினர்
மணந்தபின் அங்கே மணப்பெண் சென்றால்
ஆறாம் தேவதா ரமைத்தநல் வீடுகள்
அறைகளின் தொகையோ அதிலிரு மடங்காம்   540
காட்டின் எல்லையில் களஞ்சியக் கூடம்
பாதையின் மருங்கில் பன்மலர் மேடை
பள்ளத் தரையில் பார்லி வயல்கள்
புல்வெளி யருகினில் **புல்லரி சிப்புனம்
தொட்டிகள் நிறையத் தூற்றிய தானியம்
தூற்றாத் தானியத் தொட்டிகள் அனேகமாம்
கிடைத்த **காசுகள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு நூறாம்.

பேதைநான் சென்றதும் பெற்றது பலவகை
ஏழைநான் கையினில் எடுத்தது ஒருவகை:   550
அகமதைத் தாங்கிய தாறே தூண்கள்
ஏழு மரங்களில் இல்லம் இருந்தது
கருணையில் லாமை காட்டில் இருந்தது
அன்புஇல் லாமை அமைந்தது தோட்டம்
பாவியென் பேணலில் பாதைகள் இருந்தன
தீய நினைவுகள் சோலைகள் அனைத்திலும்
தொட்டிகள் நிறையத் துயர்தரும் தொல்லைகள்
துயர்தரப் போகும் தொட்டிகள் அனேகம்
இகழ்வாம் சொற்கள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு நூறாம்.   560

எதையுமே பொருட்டாய் எண்ணிய தில்லைநான்
மாசில்லா வாழ்வை வாழமுற் பட்டேன்
முழுமதிப் பைப்பெற முயன்றனன் அங்கே
விரும்பினேன் அன்பை வென்றிட இவ்விதம்
வீட்டுள்ளே தீயினால் வெப்பமுண் டாக்கினேன்
விறகுச் சுள்ளிகள் சிராய்கள் பொறுக்கினேன்
நெற்றியைக் கதவில் நெட்டி முட்டினேன்
தலையைக் கதவு நிலையில் மோதினேன்;
அக்கத வம்வழி அன்னிய விழிகள்
நெருப்பிட மூலையில் நெருக்குறு நோக்கு   570
கூடத்து மத்தியில் கூர்கடை விழிநோக்(கு)
வெளியிலே இருப்பதோ வெறுப்பு நிறைந்தது;
வாயிலே வெந்தீ வரும்வெளி வீச்சு
நாக்கின் அடியிலே தீச்சுடர் பறக்கும்
கொடிய தலைவனின் தடிவா யிருந்து
அன்பிலா நாவின் அடிப்புற மிருந்து.

எதையும் பொருட்டாய் எண்ணிய திலைநான்
எப்படி யாயினும் ஒப்பேற்ற முயன்றேன்
அவர்களின் மத்தியில் அன்பாய் வாழ்ந்திட
சாந்தமாய் சுத்தமாய் தாழ்மையாய் வாழ்ந்திட;   580
முயலின் பாதமாய் முன்குதித் தோடினேன்
கீரியின் பாத நேர்சுவட் டேகினேன்
வெகுபொழு தாகி வீழ்ந்தேன் படுக்கையில்
இயைவை கறையில் எழுந்தேன் விழித்து;
ஆயினும் பேதைக் கங்கிலை மதிப்பு
ஏழைநான் அன்பை எங்கும் கண்டிலேன்
ஒருமலை பெயர்த்து உருட்டி யிருக்கலாம்
உயர்கல் இரண்டாய் உடைத்து மிருக்கலாம்.

வீணாய் ப் போனது நான்மா வரைத்தது
தானியம் கொழித்தது போனது பயனற   590
ஆங்கா ரங்கொள் மாமியின் ஊணாய்
கனலாம் தொண்டையால் கடித்தே விழுங்க
நீண்டமே சையிலே நேர்தலை யிடத்தே
தங்க விளிம்புத் தகுகிண் ணங்களில்;
பாவ மருமகள் யானோ உண்டது
திருகைக் கல்லில் சிதறிய மாவிலே
அடுப்படிப் பலகையே ஆனஎன் மேசை
மரத்தின் அகப்பைதான் வனப்புறென் கரண்டி.

எழுந்தது அடிக்கடி இன்னல் மனதிலே
மணாளன் வீட்டில் மருமக ளானதில்    600
படர்சதுப் புநிலப் பாசியை எடுத்தேன்
அவற்றில் ரொட்டியை அமைத்தேன் எனக்கு
கிணற்று நீரைக் கொணர்ந்தேன் வாளியில்
அதையே பானமாய் அருந்தினேன் நானும்;
பேதைநான் உண்டது தசைமீன் மட்டுமே
ஒருவகை **மீனையே உண்டேன் அபலையங்(கு)
மீன்வலை மீதுநான் மெதுவாய்ச் சாய்கையில்
நடுவில் தோணியில் நான்தள் ளாடையில்;
என்றும் பெற்றதே இல்லையோர் மீனும்
மாமியார் எனக்கு வழங்கிய உணவில்   610
ஒருநாள் தேவைக் குகந்த மீனினையோ
ஒருபொழு துணவுக் குகந்த மீனினையோ.

கோடையில் கால்நடைக் குணவு தேடினேன்
குளிரில் **கவர்க்கோல் கொடுதொழி லாற்றி
ஊதியம் பெற்றிடும் ஊழியர் போலவும்
கூலிக்கு வந்தகொத் தடிமையைப் போலவும்;
என்றும் மாமியின் இல்லக மதனிலே
எனக்குக் கிடைத்தவை இவையிவை அலுவல்கள்
சூடடிக் களம்மிகப் பெரியசூ டடிக்கோல்
சவுனா(வில்) கிடைத்தது தனிக்கன நெம்புகோல்   620
கடற்கரை வேலைக்(குக்) கடினமாய் ஒருதடி
பண்ணைமுற் றத்திலோர் பரும்எரு வாரி
நான்சோர் களைப்பை நம்பினோர் இலையே
இளைத்தி(ன்)னற் பட்டதை எண்ணினோர் இலையே
வீரர்கள் களைத்து விறலறச் சோர்ந்துளர்
பரிக்குட் டிகளும் படுவதுண் டிளைத்தி(ன்)னல்.

ஏழைப்பெண்நான் இங்ஙனம் நாள்தொறும்
வேலைநே ரத்தில் வேலைகள் செய்துளேன்
தோளால் யாவையும் தூக்கிச் சுமந்துளேன்;
அக்கா லம்போய் அடுத்து வந்தது    630
தகிஅனற் கிடங்கெனைத் தள்ளினர் இப்போ(து)
தீயதன் கரங்களில் திணித்தனர் இப்போ(து).

ஆத(஡)ரம் இன்றி அலம்பும் கதைகள்
இகழும் கதைகள் இசைத்தனர் நாவால்
ஒழுங்குறும் எனது பழக்கத் தெதிராய்
வாகார் புகழ்கொளென் மதிப்பிற் கெதிராய்;
தலையில் வார்த்தை மழையாய்ப் பொழிந்தன
மொழியொடு பேச்சும் கதையாய் வளர்ந்தன
கொடிய நெருப்பின் கொழுங்கனற் பொறிபோல்
இரும்புறை விண்மழை பொழிந்தது போல.   640

ஆயினும் எனையிது அறமாற் றிலது
இப்படிச் சென்று என்நாள் கழிந்திடும்
ஆங்கா ரங்கொள் அக்கிழத் துதவியாய்
அனல்தொண் டைக்கு ஆனகூட் டாளியாய்;
ஆயினும் எனக்கின்னல் ஆனது இவ்விதம்
பெருந்துயர் வந்து பெருகிய திவ்விதம்
மணாளர் எனக்கு(ஓ) நாயாய் மாறினார்
கவினுறும் என்னவர் கரடியாய் மாறினார்
புறங்காட்(டித்) துயின்றார் அருகிலே அயின்றார்
புறங்காட்(டிச்) செய்தனர் புரியும் செயலெலாம்.  650

இதையே எண்ணிநான் இருந்தழு தரற்றினேன்
களஞ்சிய அறையில் கடிதுசிந் தித்தேன்
நடந்த நாட்களை நான்நினைந் திட்டேன்
இளமைப் பொழுதெலாம் எண்ணிப் பார்த்தேன்
தந்தையின் நீண்ட முன்றில் பரப்பினில்
அன்புறும் அன்னையின் அகத்து வெளியினில்.

இவ்வா றடுத்து இயம்பத் தொடங்கினேன்
நானே கூறினேன் நனியிஃ துரைத்தேன்
'எனது அன்னை என்பவள் அறிவாள்
அப்பிளை எங்ஙனம் அடைவது என்பதை   660
வளர்ப்பது எங்ஙனம் வளர்முளை என்பதை,
ஆயினும் செடிநட அவளோ அறியாள்:
எழிலுறும் முளையை இவ்விதம் நட்டனள்
தீமை நிறைந்த தீய இடங்களில்
கொடுமை நிறைந்த கொடிய இடங்களில்
மிலாறு வேர்விட்ட மிகக்கடு மிடங்களில்
ஆயுள் முழுவதும் அழுவதற் காக
புணர்வாழ் நாளெலாம் புலம்புதற் காக.

என்தகு திக்கு இருக்கலாம் ஒழுங்கொடு
நன்மை நிறைந்த நல்ல இடங்களில்    670
பரந்தமுற் றத்துப் படர்நீள் வெளிகளில்
அகன்று விரிந்த அணிநிலத் தரைகளில்
சீரியர் ஒருவரின் சிறந்த துணையாய்
சென்னிறங் கொண்டவர் சீருறும் துணையாய்;
எனினும் மந்தர் இவருட னிணைந்தேன்
கொழுத்துப் பருத்த கொழுநரைச் சேர்ந்தேன்:
காணும் இவருடல் காகம் போன்றது
அண்டங் காக அகல்மூக் குடையவர்
ஓடிஇரைக் கலை ஓநாய் போன்றவர்
புறத்தோற் றமெலாம் கரடியைப் போன்றது.   680

பெற்றிருப் பேனே இப்படியொ ருவரை
ஆனகுன் றினிலே அலைந்து திரிந்து
தேவ தாருவைத் தெருவினில் எடுத்து
பூர்ச்சங் கட்டையைத் தோப்பினில் எடுத்து
ஒருபிடி புல்லால் உறுமுகம் செய்து
தாடியை அழுகிய பாசியால் படைத்து
பாறையால் வாயும் பதக்களித் தலையும்
கனலின் கரியினால் கண்களும் அமைத்து
மிலாறுவின் கணுக்களால் மிளிர்செவி செய்து
**மரக்கவர்க் கால்களும் அமைத்திருந் தாலே.'   690

இத்துணை துன்பத் திவ்விதம் பாடினேன்
பெருந்துயர் வந்ததால் பெருமூச் செறிந்தேன்
எழிலார் என்னவர் இதுகேட்க நேர்ந்தது
சுவரின் அருகிலே அவர்நிற் கையிலே;
அவ்விட மிருந்து அவர்வரும் வேளை
கூடத்துப் படிகளில் காலடி வைக்கையில்
அறிவேன் வருபவர் அவரே என்பதை
காலடி ஒலிஅடை யாளம் தெரியும்:
காற்றில் லாமலே கலைந்தது கேசம்
குழல்காற் றோட்ட மின்றி(யே) குலைந்தது  700
படர்சின முற்றதால் பல்லீறு தெரிந்தது
வெகுளியால் வெளியே விழிகள் வெறித்தன
கரத்திலே ஒருசிறு மரக்குச் சிருந்தது
வளைந்தகோ லொன்று மறுகக் கத்திலே
அதனால் என்னை அடிக்க விரைந்தனர்
தலையில் ஓங்கித் தந்து முடித்தனர்.
அந்திப் பொழுது அடுத்தே வந்தது
படுக்கைக் கென்னவர் படர்ந்தபோ தினிலே
கூடவே சாட்டையைக் கொண்டே சென்றார்
கொளுக்கி லிருந்த கொழுந்தோற் சாட்டையை   710
அதுவேறு யார்க்கு ஆகவு மல்ல
ஏழைப் பெண்ணாள் எனக்குத் தானது.

படுக்கைக் கியானும் படர்ந்தேன் பின்னர்
சென்றேன் உறக்கம் அந்தியில் வேண்டி
படுத்தேன் மணாளர் படுக்கையில் அருகில்
எனது மருங்கிலே என்னவர் படுத்தார்
முழங்கையால் எனக்கு முழுமையும் தந்தார்
வெறுப்புறும் கைகளால் வெகுவாய்த் தந்தார்
கொடிச்செடிக் குச்சியால் கொடுத்தார்எவ் வளவோ
கடற்பசு எலும்பின் கைப்பிடிச் சவுக்கிலும்.   720

படுகுளிர் அவரது பக்கத் தெழுந்தேன்
இருங்குளிர்ப் படுக்கையி லிருந்தே எழுந்தேன்
மணாளர் துரத்தி வந்தார் எனையே
வைதே விரட்டினர் வாயிலில் வெளியே
குறுகிக் கரங்களென் கூந்தலுள் நுழைந்தன
கையால் கூந்தலைக் கலைத்துத் துளாவினார்
குலைத்தனர் அலையக் கூந்தலைக் காற்றில்
பரந்து வளியிலே விரிந்திடச் செய்தனர்.

இதன்பின் செய்வது எவ்வழி முறைநான்
எவ்வறி வுரையினை ஏற்று நடப்பது?   730
உருக்கின் காலணி உண்டென் னிடத்திலே
இருந்தது செப்பினால் இயைந்த பட்டியும்
அவ்வீட் டின்சுவர் அருகினில் நின்றேன்
பாதை எல்லையின் ஓசையைக் கேட்டேன்
கோபம் சிலகணம் குறைந்திடு மென்றும்
ஆத்திரம் அடங்கிடும் அவர்க்கென எண்ணினேன்
ஆயினும் அவர்சினம் அடங்கவே யில்லை
அமைதியோர் காலும் அடைந்ததே யில்லை.

கடையில் என்னைக் கடுங்குளிர் பிடித்தது
வெறுப்பு வந்து வேகமாய்ச் சேர்ந்தது    740
அவ்வீட் டின்சுவர் அருகில்நான் நிற்கையில்
கதவின் அருகிலே காத்துநிற் கையிலே;
சிந்தனை செய்தேன் சீருற நினைத்தேன்:
இங்ஙனம் பொறுத்து இருப்பது சிரமம்
கடினம் சுமப்பது காலநீள் வெறுப்பை
இகல்நீள் கால இகழ்ச்சியை ஏற்பது
இந்தப் பிசாச எதிர்க்கண மத்தியில்
அரக்கர்கள் வாழ அமைந்தஇக் கூட்டினில்.

எழிலுறும் எனதுஇல்ல(த்)தை விட்டேன்
அருமையில் லத்தை அகன்று விலகினேன்   750
பலமிலா நிலையிலும் அலையத் தொடங்கினேன்
அலைந்தேன் சேற்றிலும் அலைந்தேன் நிலத்திலும்
பரந்தஆ ழத்து புனலிலும் அலைந்தேன்
சென்றேன் சகோதரன் செறிவயல் எல்லையும்;
காய்ந்த மரங்களும் கூவின அங்கே
இசைத்தது முடியுடை எழில்தேவ தாரு
காகங்கள் எல்லாம் கரைந்தன கூடி
**பறவைகள் கூடிப் பண்ணொடு பாடின:
'இங்கே இருப்பதுன் இல்லமே யல்ல
இங்கே இருப்பதுன் பிறப்பிடம் அல்ல.'   760

எனக்குஅக்கறை இவைகளில் இல்லை
அண்மினேன் சகோதரன் அழகில்(ல) முற்றம்;
வீட்டின் வாயில் விளம்ப லாயிற்று
முற்றமும் என்னிடம் முறைப்பா டுரைத்தது:
'இல்ல(த்)தை நோக்கி எதற்காய் வந்தனை
எளிய பிறப்பே எதுகேட் டிவர்ந்தனை?
நின்(தந்)தை யிறந்து நெடுநா ளானது
உனைச்சுமந் தழகிபோய் ஓய்ந்ததே பலநாள்
நினக்கோர் அந்நியன் நிகர்த்தவன் சோதரன்
அவன்மனை(வி) ரஷ்ஷியா நாட்டாள் அனையளே.'   770

எனக்கு அக்கறை இவைகளில் இல்லை
வாயில் வழியாய் வந்தேன் வீட்டினுள்
கதவின் கைப்பிடி கடிதே பற்றினேன்
கைபிடி எனக்குக் கனகுளி ரானது.
வாயிலின் வழியாய் வந்ததும் வீட்டினுள்
கதவின் பக்கமாய் காத்துநின் றேன்கணம்;
வீட்டின் தலைவி மிகுகர் வத்தாள்
அருகெனை வந்து அணைக்கவு மில்லை
வரவேற் றுக்கரம் வழங்கவு மில்லை;
நானும் அவள்போல் நல்லகர் வத்தாள்   780
அருகுநான் அவளை அணைக்கவு மில்லை
கைகொடுத் தவளைக் கணிக்கவு மில்லை;
அடுப்பின் மீது அங்கைகள் வைத்தேன்
அடுப்பின் கற்கள் அனைத்தும் குளிர்ந்தன
திருப்பினேன் கைகள் நெருப்பின் பக்கமாய்
நெருப்பின் கரிகள் நேராய்க் குளிர்ந்தன.

வாங்கிலே சகோதரன் சோம்பி யிருந்தான்
அடுப்பின் பீடம் வெறித்துப் பார்த்தான்
பணைத்தோள் கரித்துகள் பலவடி யுயரம்
பருவுடல் இருந்ததோ பலசாண் அளவு   790
உயர்தலைச் தூசு ஒருமுழத் தளவு
கரிப்புகைப் படிவு அரையடி யளவு.

சகோதரன் அதிதி தன்னையே கேட்டான்
என்னையே புதிதாய் எழுந்ததாய்க் கேட்டான்:
'அன்னியர் எங்கிருந்து அலைகடந் தெழுகிறார்?'

அதற்குநான் உத்தரம் அளித்தேன் இவ்விதம்:
'தெரிந்தில தோவுடன் பிறந்தசோ தரியை
அறிந்திலை யோஉன் அன்னைபெற் றவளை?
ஒருதாய் வயிற்றுப் பிறந்தபிள் ளைகள்நாம்
ஒருபுள்(தா) லாட்டில் உயர்ந்தவர் நாங்கள்  800
ஒருவாத் தடைகாத் துதித்தகுஞ் சுகள்நாம்
ஒருகான் கோழியின் குடம்பையில் வளர்ந்தவர்.'
அப்போ(து) சோதரன் அழுதனன் இரங்கி
கண்களில் பெருகிக் கண்ணீர் வடிந்தது.

சகோதரன் பின்னர் தன்மனைக் குரைத்தான்
இனியதன் மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'என்சகோ தரிக்கு எடுத்துவா உணவெதும்!'
ஏளன விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
அடுக்களை யிருந்து **இலைக்கறி ரசத்தை
ரசத்துக் கொழுப்பைச் சுவைத்திருந் ததுநாய்   810
நாயொன்று உப்பை நக்கி யிருந்தது
கறுப்புநாய் உணவை ருசிபார்த் திருந்தது.

சகோதரன் பின்னர் தன்மனைக் குரைத்தான்
இனியதன் மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'விருந்தா ளிக்கு அருந்து'பீர்' கொண்டுவா!'
ஏளன விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
விருந்தா ளிக்கு வெறும்நீர் மாத்திரம்
அதுவும் சுத்தமாய் அமைந்திட வில்லை
கண்களைச் சகோதரி கழுவிய நீரது
அரியமைத் துனிமுகம் அலம்பிய நீரது.   820

சகோதரன் இல்லம் தனிலிருந் தகன்றேன்
பிறந்தகம் விட்டுப் பிறிதிட மலைந்தேன்
பேதைநான் நடந்து பிறநிலந் திரிந்தேன்
அலைதலும் திரிதலும் அதுபே தைக்காம்
நீர்க்கரை யோரம் ஏழைநான் நடந்தேன்
ஏழைநான் அலைந்து என்றும் திரிந்தேன்
என்றும் அன்னியர் இல்லத்து வாயிலில்
வெளியார் வாயிலின் வெளிக்கத வருகில்
எதிர்க்கரை வாழும் ஏழைப் பிள்ளையாய்
கிராமமா தரிக்கும் கீழ்நிலைப் பேதையாய்.    830

இப்போ(து) பலரைநான் என்கணாற் பார்க்கிறேன்
எத்தனை யோபேர் இவ்வித முள்ளனர்
வெறுப்புறும் குரலிலே வீசுவோர் வார்த்தைகள்
கொடிய குரலினைக் கொண்டு தாக்குவர்;
ஆயினும் இல்லையே அதிகபேர் என்னிடம்
அன்புறும் சொற்களை அளிக்கும் மானுடர்
இனியநல் வாயால் இதமாய்ப் பேசுவார்
அடுக்களை யதற்கே அன்பா யழைப்பவர்
மழையிலே நனைந்துநான் வந்திடும் வேளை
கொடிய குளிரில்நான் கொடுகிய நேரம்   840
ஆடையை உறைபனி மூடிய போது
பனிமழை ஆடையில் படிந்திட்ட காலை.

இளமையாய் ஒருகால் இருந்தநாட் களிலே
இப்படி வருமென இருந்திலேன் நம்பி
நூறுபேர் ஒன்றாய்க் கூறிய போதிலும்
நாக்குகள் ஆயிரம் நவின்றிட்ட போதிலும்
இத்துணை துயரம் ஏற்படும் எனக்கென
இந்தநாட் களிலே இப்படி வருமென
எனினும் வீழ்ந்தது என்தலை வீழ்ந்ததே
சுமைகளை என்கரம் சுமந்தது சுமந்ததே."   850



பாடல் 24 - மணமகனும் மணமகளும் புறப்படுதல்.  *




அடிகள் 1 - 264 : மணமகன் மணமகளை எவ்விதம் நடத்த வேண்டும் என்றும் அவளைக் கொடுமைப் படுத்தக் கூடாது என்றும் மணமகனுக்கு அறிவுரை கூறுதல்.

அடிகள் 265 - 296 : ஒரு முதியவன் தனது மனைவியை, தன்னை விரும்பும்படி எப்படி மாற்றினான் என்ற அனுபவத்தைக் கூறுதல்.

அடிகள் 297 - 462 : மணமகள் தனது பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிவதை உணர்ந்து அனைவரிடமும் கண்ணீருடன் விடை பெறுகிறாள்.

அடிகள் 463 - 528 : இல்மரினன் மணமகளைச் சறுக்கு வண்டியில் ஏற்றிப் பயணித்து மூன்றாம் நாள் மாலை வீட்டை அடைகிறான்.



அரிவைக் கிப்போ(து) அறிவுரை கிடைத்தது
மணமகள் தனக்கு வழிமுறை கிடைத்தது;
அரியஎன் சோதரற் கடுத்துநான் சொல்வேன்
வாயினால் எனது மாப்பிளைக் குரைப்பேன்:
"மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சோதர னைவிடத் தூயசீ ருடையரே!
அன்னையின் மக்களில் அன்புமிக் குடையரே!
பிதாபெற்ற மகவில் பெரும்பண்பு உடையரே!
நான்மொழி கையிலே நன்குநீர் கேட்பீர்,
நான்மொழி கையிலும் நான்உரைக் கையிலும்,   10
இசைபாடு மிச்சிறு **இளம்புள் பற்றி,
கொண்ட நின்சிறிய கோழியைப் பற்றி.

நவிலுக மாப்பிளாய், நன்றிநின் அதிர்ஷ்டத்(துக்கு)
நல்லதோர் பேற்றின் நலம்கிடைத் ததற்கு
நன்றி புகல்கையில் நன்கதைக் கூறும்:
நலத்தையே பெற்றீர் நலம்சந் தித்தீர்
படைத்தவன் உமக்குப் பயனுள தளித்தான்
இரக்கமுற் றிடுமவன் இனியதொன் றீந்தான்!
மனையாள் பிதா(வு)க்கு மனம்நிறை நன்றிசொல்(க)
அதற்கும்மே லாக அன்னைக்கு நன்றிசொல்(க)   20
பெண்ணையித் தகையளாய்ப் பேணிய செயற்கு
மணப்பெண்இத் தகையளாய் மாண்பொடீன் றதற்கு.

இருப்பவள் அருகில் இளம்புனி தப்பெண்
உம்முடன் இணைந்தவள் உள்ளொளி நிறைந்தவள்
வாய்த்தவள் உமக்கு வண்ணமாம் வெண்மையள்
அழகுளாள் நும்காவ லதனுளே வந்தவள்
உன்மருங் கிருப்பவள் உறுதிமிக் குடையவள்
காரிகை நின்அயல் கன்னமே சிவந்தவள்
போரடி களத்திலே புதுப்பலப் பாவையள்
வைக்கோல்தூற் றிடவ(ல்)ல வனப்பான வனிதையள்   30
துணிமணி அலம்பலில் துடிப்பான தையலாள்
துணிகளை வெண்மையாய்த் தோய்த்திடும் திறனுளாள்
நூல்நூற்றல் நுட்பமே மேலாகக் கற்றுளாள்
கருமமாம் துணிநெய்தல் தரமிகச் செயவலள்.

கைத்தறி அச்சொலி கனதொலை ஒலிக்கும்
குயிலொன்று மலையுச்சி கூவிடும் ஒலிபோல்;
நுவல்மகள் கைத்தறி நூனாழி கலவெனும்
காட்டுளே ஒருகீரி கலகலத் திடல்போல்;
நூல்சுற்றும் சில்சுற்றி நுட்பமாய்ச் சுழலும்
அணில்வாயில் சுழல்கின்ற **கூம்புக்காய் அதுபோல்;   40
அக்கிரா மத்தோர் அமைதியாய்த் துயின்றிலர்
நாட்டின் மாந்தர்கள் நன்றாய்த் துயின்றிலர்
சட்டம்கைத் தறியினில் சடசட ஒலியினால்
நுவல்மகள் கைத்தறி நூனாழி ஓசையால்.

மாப்பிள்ளை யாரே, வளர்இள மையரே!
கணவரா னவரில் கவினுடை யவரே!
அரிவாள் கூர்மையாய் ஆக்குவீர் உருக்கில்
சிறப்புமிக் கொருபிடி யதற்கிணைத் திடுவீர்
வைப்பீர் செதுக்கி வாயிற் புறமதை
மரத்துக் கட்டையில் அடித்திறுக் கிடுவீர்;    50
பகலொளி வந்து பட்டொளிர் நேரம்
புற்றரை நிலத்துப் போவீர் மாதுடன்
பார்ப்பீர் அங்கே படபடக் கும்புல்
கடின வைக்கோல் கலகலப் பதனை
கிளர்கோ ரைப்புல் கிலுகிலுப் பதனை
**காரப் பூண்டுகள் கவின்மெது வசைவதை
மேட்டு நிலங்கள் மிகுமட்ட முறலை
நாற்றுச் செடிகள் நனிமுறி படலை.

மற்றொரு நாளிவ் வாறே வந்ததும்
நல்ல நூனாழி நங்கைக் களிப்பீர்    60
அடர்பா(வு) பலகையும் அளிப்பீர் பொருத்தமாய்
தரப்பா வோடுஞ் சட்டமும் தருவீர்
மெல்லநற் செதுக்கிய மிதிக்கும் பலகையும்
கைத்தறிக் கான கனபொருள் தருவீர்
பூவையைக் கைத்தறிப் பொறியிலே நிறுத்தி
பாவோடு பலகையைப் பைங்கரத் தளிப்பீர்:
அப்போநூ னாழி அசையும் ஒலியெழும்
கைத்தறிப் பொறியும் கடகடத் தோடும்
கிராமம் கைத்தறிச் சத்தம் கேட்கும்
அதையும் மிஞ்சும்நூ னாழியின் ஓசை.    70

வயதுறும் பெண்கள் வியப்பாய் நினைப்பர்
கிராமப் பெண்கள் கேட்பர்இவ் வாறு:
'நேராய் யார்துணி நெய்வ(து) இப்போது?'
தகுந்ததோர் பதிலைத் தருவிர்அப் போது:
'சொந்தஎன் அன்பவள் துணிகள் நெய்கிறாள்
இதயத் தினியவள் எழுப்புவள் ஓசை;
எங்கெனும் துணியில் இயைஒழுங் கிலதா
அசைவில்நூ னாழி இழைதப் பியதா?'
'இல்லை துணியில் ஒழுங்கழிந் திலது
அசைவில்நூ னாழி இழைதப் பியதிலை:   80
நேர்நிலா மகளார் நெய்தது போல
பெருங்கதிர் மகளார் பின்னிய வாறு
**தாரகைக் குலத்தின் தரமார் கைத்திறன்
விண்மீன் மகளின் மிகுவனப் புச்செயல்.'

மாப்பிள்ளை யாரே, மதிப்புளச் சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்போ திங்கிருந்(து) எழப்போ கின்றீர்
இப்போ திங்கிருந்(து) எழுகிறீர் பயணம்
உமக்கு வாய்த்த ஒளிரிளம் பெண்ணுடன்
அழகு படைத்த அருங்கோ ழியுடன்    90

**சிட்டுக் குருவியை விட்டிடீர் அலைய
இசைபாடு மிந்த இன்சிறு **பறவையை
நன்நீர்க் கரைவழி நகரவிடாதீர்
வேலி மூலையில் விடாதீர் செல்ல
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
நவில்நீர்க் கரைவழி நகர்ந்ததே யில்லை
வேலியின் மூலைக் கேகிய தில்லை   100
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர்ந்ததே யில்லை.

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்பெண் உமதவள் ஏகவி டாதீர்
அன்புக் குரியளை அகலவி டாதீர்
திகழ்கோடி மூலையில் திரியவி டாதீர்
அமைகோடி மூலையில் அலைய விடாதீர்.

என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
முந்திய அன்னையின் இல்லத்தி லில்லை   110
திகழ்மூலை கோடியில் திரிந்ததே யில்லை
அமைகோடி மூலையில் அலைந்ததே யில்லை;
இருப்பாள் சாளரப் பீடம்மெப் போதும்
இருப்பாள் நிலத்தில் எழில்தரை மத்தியில்
மாலை தந்தையின் மகிழ்ச்சி வடிவாய்
அதிகாலை அன்னை அன்புமா யிருப்பாள்.

அதிர்ஷ்டமில் கணவ அனுதினம் வேண்டாம்
இந்தக் கோழியை என்றும் அனுப்புதல்
**சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில்   120
**வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
இடித்திடத் தேவ தாரெழிற் பட்டை.

என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில்
வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
பட்டைத்தா ரிடிக்கவும் படர்ந்தன ளேயிலை.

ஆயினும் நீரிக் கோழியை அனுப்பலாம்
குவியலாய்த் தானியம் குவிந்துள்ள மேடு   130
ஒருகொள் கலத்தை வெறுமையாக் கற்கும்
தானியக் கலத்தில் தானியம் பெறற்கும்
பருமனாய் ரொட்டி பலசுட் டெடுக்கவும்
தானியப் பானம் தரமாய் வடிக்கவும்
தட்டிமாக் கோதுமை ரொட்டிகள் சுடவும்
உணவுக்கு மாப்பசை அமைக்கவு மனுப்பலாம்.

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
எங்கள்இவ் வாத்துக் கிந்நிலை வேண்டாம்
ஏங்கித் துயருற் றிவளழ வேண்டாம்    140
ஒருக்கால் துயருறும் ஒருநிலை வந்தால்
வனிதைக் கேக்கமும் வருத்தமும் வந்தால்
புகல்பழுப் புப்பரி பூட்டுமேர்க் காலில்
அல்லது வெள்ளைக் கலங்கா ரம்செய்(க)
தந்தையின் இல்லம் தையலைக் கொணர்க
அவளே பழகிய அன்னையின் இல்லம்.

இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
இசைபாடு **பறவைக் கெப்போதும் வேண்டாம்
நீர்பெறும் அடிமையாய் நினைக்கவும் வேண்டாம்
கூலிக்கு வந்தளாய்க் கொள்ளவும் வேண்டாம்   150
தடைபோட வேண்டாம் களஞ்சியக் கூடம்
பூட்டவும் வேண்டாம் புறவெளி நிறுத்தி!
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
தம்முடை அடிமையென் றெண்ணிய தில்லை
கூலிக்கு வந்ததாய்க் கொண்டது மில்லை
தடைபோட்ட தில்லைக் களஞ்சியக் கூடம்
பூட்டவு மில்லைப் புறவெளி நிறுத்தி.

கோதுமை ரொட்டியைக் கொள்துண் டாக்குவள்
கோழிமுட் டைகளைத் தேடிப் பொறுக்குவள்   160
பாற்கலங் களையெலாம் பார்த்தே அத்துடன்
கலங்களில் மதுவையும் கண்கா ணிப்பாள்
காலையில் திறபடும் களஞ்சியக் கூடம்
மாலையில் பூட்டுதல் மட்டுமே வழக்கமாம்.

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
பக்குவ மாகவே பார்த்தால் பெண்ணைநீர்
நினைவில்அவ் வளவும் நிற்கும் நன்மையாய்:
மாமனார் வீடு நீர்வரும் வேளையில்
அன்பு மாமியின் அகம்வரு வேளையில்   170
உண்டிடச் சிறந்த உணவுகள் கிடைக்கும்
உண்டிட உணவுடன் அருந்திடப் பானமும்
ஆனஉம் குதிரைக் கவிழ்த்தலங் காரம்
தொழுவம் அதனைத் தொட்டே கொணர்ந்து
உண்ணவும் அருந்தவும் உகந்தெலா மீந்து
**உதவலாம் கூலப்புல் லரிசியோர் பெட்டியும்.

எங்கள் பெண் பற்றி இவ்விதம் சொ(ல்)லாதீர்
இசைபாடு மெம்சிறு **பறவையைப் பற்றி
உறவினர் அவட்கு உற்றிலர் எ(ன்)னாதீர்
உயர்சுற் றத்தார் இலர்என் றுரையீர்;    180
எமதிப் பெண்மணிக் கிருக்கிறா ரனைவரும்
உயர்சுற் றத்தார் உறுபெரு மினசனம்
**ஒருபடி **யவரை உயர்விதை விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருமணி மட்டுமே!
ஒருபடி சணல்விதை உவந்தே விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருநார் மட்டுமே!

அதிர்ஷ்டமில் மணாள, அறவே வேண்டாம்!
சுந்தரி இவளைத் துன்புறுத் தாதீர்
அடிமைச் சவுக்கால் அறிவுரை வேண்டாம்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வேண்டாம்   190
ஐந்துசாட் டைகளால் அழவிட வேண்டாம்
குடிசையின் வாசலில் குழறவைக் காதீர்
என்றுமே இவளுக் கிவ்விதம் நேர்ந்ததில(து)
தாதையின் வீட்டிலோர் போதுமே நிகழ்ந்தில(து)
அடிமைச் சவுக்கால் அறிவுரை புகன்றிலர்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வைத்திலர்
ஐந்துசாட் டைகளால் அழவும் வைத்திலர்
குடிசையின் வாசலில் குழறவும் வைத்திலர்.

அவளின் முன்னால் சுவர்போல் நிற்பீர்
நிற்பீர் கதவின் நிலைபோல் அவள்முன்   200
அடிக்கும் மாமியின் அல்லல்வை யாதீர்
மாமனார் ஏச்சால் மலங்கவைக் காதீர்
வேறெவ ராலும் வெறுக்கச்செய் யாதீர்
அயல்வீட் டார்குறை கூறவை யாதீர்!
அடிக்கலாம் என்று அறைந்தனர் வீட்டார்
துன்புறுத் தலாமெனச் சொல்லினர் மறுசிலர்
ஆயினும் பெண்ணைநீர் அடிக்கவே முடியா
ஏழையாள் துன்புற இதயம்நீர் தாங்கீர்
ஆண்டொரு மூன்று அவட்காய் இருந்தீர்
வெகுநாள் அவளை விரும்(பி)எதிர் பார்த்தீர்.    210

மங்கைக் கறிவுரை வழங்குக, மாப்பிள்ளாய்!
**அப்பிள் பழம்போல் அவள்கற் பிப்பீர்
அரிவைக் கமளி(யில்)ஆ லோசனை புகல்வீர்
கதவின் பின்புறம் கற்பிப் பீர்பெண்
ஓராண்(டு) காலம் ஓரிடம் பயிற்றுவீர்
வாய்ச்சொலால் முதலாம் ஆண்டுகற் பிப்பீர்
இரண்டாம் ஆண்டுகண் சிமிட்டால் புகட்டுவீர்
மூன்றில் கால்நிலத் தூன்றிப் பயிற்றுவீர்.

காரிகை இனைத்தையும் கவன மெடாமல்
அவதான மின்றி அசட்டை செய் திட்டால்   220
**கோரை இனத்திலோர் கொழும்புல் பறிப்பீர்
**பரிவால் ஒன்றைப் பற்றையில் ஒடிப்பீர்
அதைக்கொண் டவளுக் கறிவுரை புகல்வீர்
நான்காம் வருடம் நாரிக் கோதுவீர்
பரிவால் கொண்டு பைய அடிக்கலாம்
குற்றுவீர் மங்கையைக் கோரையின் நுனியால்
ஆயினும் சவுக்கால் அடித்த லாகாது
கோல்கொ(ண்)டு திருத்துதல் கூடா தரிவையை.

காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால்   230
பற்றையில் ஒருசிறு குச்சியை ஒடிப்பீர்
மிலாறுவை ஒடிப்பீர் வெங்கான் பள்ளம்
மடிப்பில்மேற் சட்டையில் மறைத்ததைக் கொண்டு
அயல்இல் மனிதர் அறியா(து) வருவீர்;
நச்சினாள் பார்க்கவே குச்சியைக் காட்டுவீர்
ஆசைத்துக் காட்டுவீர் அடித்தல் ஆகாது.

காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால்
கோல்கொண் டவட்கு கூறுவீர் அறிவுரை
மிலாறுவின் கிளையால் நடத்துவீர் பாடம்   240
நான்கு சுவர்களின் நடுவில் நடத்துவீர்
கூறுவீர் பாசியால் **மூடிய அறையிலே
அடித்திடல் புற்றரை மேட்டி லாகாது
அகல்வயற் காட்டிலும் அடித்த லாகாது:
சத்தமும் கிராமம் சாரும் அவ்விதம்
பக்கவீட் டுக்குப் படர்ந்திடும் கலகம்
அரிவையின் அழுகை அயல்வீ டடையும்
குழப்பம் பெரிதாய்க் கொழுங்கா டார்ந்திடும்.

என்றும் தோள்களில் வெப்பம் ஏற்றிடும்
மெல்லியள் பின்புறம் மென்மையா கட்டும்   250
கண்ணிலோர் போதும் தண்டனை ஆகா(து)
அவ்விதம் காதிலும் அறைதலா காது:
திரட்சியாய் ஏதெனும் புருவத் தேற்படில்
கண்களில் நீலமாய்க் கட்டிகள் வந்தால்
மைத்துனர் அதனை வந்தாய்ந் திடுவார்
மாமனார் ஏதெனும் மனத்தெண் ணிடுவார்
கிராமத் துழவோர் இருகண்(ணால்) பார்ப்பார்
நங்கையர் கிராமத்(தில்) நகைப்பரிவ் விதமே:
'சண்டைக் கிவளெங் கேனும் போனளோ
போரில் சமரில் போய்ப்பங் கேற்றளோ   260
அல்லது ஓநாய் அருகுபோய்க் கிழித்ததோ
அல்லது கரடியும் அறைந்ததோ காட்டில்
அல்லது கீறிய ஓனாய் கணவனோ
கணவனே காட்டிக் கரடியா யினனோ?' "

அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இருந்தான் தேசாந் திரியவன் கணப்பில்
அடுப்படி முதியவன் அங்கே சொன்னான்
சொன்னான் தேசாந் திரியவன் கணப்பில்:
"ஏழைமாப் பிள்ளாய், இவ்விதம் செய்யேல்,
மாதவள் கருத்து மதிப்புத் தராதீர்    270
மகளிரின் கருத்து **முகிற்புள் நாக்கு
அதிர்ஷ்டமில் பயல்நான் முடித்ததைப் போல!

வாங்கினேன் இறைச்சி வாங்கினேன் ரொட்டி
வாங்கினேன் வெண்ணெய் வாங்கினேன் 'பீரு'ம்
எல்லா வகையாம் நல்மீன் வாங்கினேன்
பலபல சுவையுறும் பல்பொருள் வாங்கினேன்
சொந்தஎன் நாட்டில் தோன்றிய 'பீரு'ம்
அயல்நாட்(டுக்) கோதுமை அதையும் வாங்கினேன்.

ஆயினும் நன்மை(யாய்) ஆனதொன் றில்லை
பயனுள கருமம் செயலெதும் நிகழ்ந்தில;   280
அரிவையும் வீட்டின் அகப்புறம் வந்திடில்
புரிகுழல் பிய்ப்பவள் போல வருவளே
வதனம் மாற்றி மறுவடி வாக்குவள்
உருட்டி விழிகளைத் திரட்டியே நோக்குவள்
ஏசுவள் ஆத்திரம் எப்போதும் கொ(ண்)டே
வெறுப்புறும் வார்த்தைகள் புறப்படும் அக்கணம்
உடலால் பருத்த உலுத்தனென் றழைத்தாள்
மரமண் டையென வார்த்தையால் குரைத்தாள்.

முறையொன்(று) புதிதாய் மூண்டது மனத்தில்
வகையுறக் கண்டனன் மறுவழி யொன்றை:   290
மிலாறுக் கிளையை முறித்தஅவ் வேளை
அரு஡மப் பறவையென் றணைத்திட வந்தாள்;
சூரைச் செடியின் தொடுமுடி யொடிக்கையில்
அன்பே யென்று அவள்தலை குனிந்தாள்;
அலரிச் செடியின் தடியினால் வைக்கையில்
கழுத்தை யணைத்தாள் கட்டி பிடித்தாள்."

பேதையிப் போது பெருமூச்செறிந்தாள்
கடுமூச் செறிந்து களைத்துச் சோர்ந்தாள்
அவள்பின் அழுது விழிநீர் விட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:   300
"மற்றயோர் புறப்படும் மணிப்பொழு தணைந்தது
மற்றயோர் காலமும் நேரமும் வந்தது
என்புறப் பாட்டு இரும்பொழு தணைந்தது
என்கால நேரம் இங்குவந் தடுத்தது
பிரிந்து புறப்படல் பெருந்துய ராயினும்
விடைபெற் றேகுமிவ் வேளையும் நேரமும்
கீர்த்திகொள் இந்தக் கிராமத் திருந்து
அழகாய் அமைந்தஇவ் வகல்தோப் பிருந்து
வனப்பாய் நானும் வளர்ந்தவிவ் விடத்தில்
இனிப்பாய்ச் சிறப்பாய் எழுந்தவிவ் விடத்தில்    310
வளர்ந்து வந்தஎன் வாழ்நாள் முழுவதும்
குழந்தைப் பருவம் கழித்தநாள் முழுவதும்.

இதற்குமுன் என்றுமே எண்ணிய தில்லை
என்றும்என் வாழ்நாள் நம்பிய தில்லை
இனிவிடை பெறுவனென் றெண்ணிய தில்லை
பிரிந்துபோ வேனெனத் தெரிந்துநம் பியதிலை
அரியஇக் கோட்டையின் அயற்புறத் திருந்து
பரந்த இம்மேட்டின் படர்புயத் திருந்து;
இப்போ நினைக்கிறேன் என்விடை பெறலை
இப்போ(து) பிரிந்து ஏகல்நம் புகிறேன்   320
வெறுமையா யினபிரி யாவிடைச் சாடிகள்
விடைபெறும் 'பீரு'ம் முடிந்தது குடித்து
வண்டியும் விரைவில் வழிதிரும் பிடலாம்
முன்புறம், வெளியே பின்புறம் வீட்டே
ஒருபுறம் தந்தையின் உயர்களஞ் சியவறை
மறுபுறம் தொழுவம் வழிபார்த் திருக்கும்.

இப்போ(து) பிரிந்துநான் எதைக்கொண் டேகுவேன்
பேதைப் பெண்நான் பிரிவிடைச் செல்கையில்
தாய்ப்பால் விலைக்குத் தருவது எதைநான்
அத்துடன் தந்தையார் ஆற்றுநன் மைக்கெலாம்   330
சகோதரன் அன்புக்(கு) தருவது எதுகொல்
சகோதரி காட்டிய கனிந்த பண்புக்கு?

தந்தாய், உமக்குச் சாற்றுவேன் நன்றி
முன்னாள்(என்) வாழ்வு முழுதும் மகிழ்ந்ததால்
சென்றநாட் களில்நான் உண்டஊண் அதற்கு
சிறப்பாய்க் கிடைத்த சிற்றுண்(டி) வகைக்கு.
தாயே, உமக்குச் சாற்றுவேன் நன்றி
இளமைதா லாட்டில் எனைவளர்த் ததற்கு
ஏந்தியே சிறுநாள் எனைவளர்த் ததற்கு
முலைப்பா லுட்டி முன்வளர்த் ததற்கு.   340

சோதரா, அடுத்துநான் சொல்லுவேன் நன்றி
என்னருஞ் சோதரா, என்னருஞ் சோதரி,
குடும்பத் தோர்க்கெலாம் கொடுப்பேன் திருப்பி
என்னோடு வளர்ந்த எல்லா ருக்கும்
என்னோடு வாழ்ந்த எல்லா ருக்கும்
வாழ்வில் கூடிநான் வளர்ந்தஎல் லார்க்கும்.

என்இன் தந்தையே இப்போ(து) வேண்டாம்
என்அன் பன்னையே இப்போ(து) வேண்டாம்
என்பெருஞ் சுற்றத்து எவருஞ்செய் யாதீர்
இரும்புகழ் பெற்றஎன் இனசனக் கணத்தில்   350
மனதிலே யாருமே வருத்தம் கொள்ளாதீர்
இனிப்பெரும் துயருக்கு இடம்கொடுக் காதீர்
வேறொரு நாடுநான் ஏகவிருப் பினும்
பிரிந்து புறப்பட்டுப் போக விருப்பினும்!

இயற்றியோன் பருதி என்றுமே ஒளிரும்
இயற்றியோன் மதியும் என்றுமே திகழும்
சுவர்க்கத்து விண்மீன் சுடரும்எப் போதும்
விரிந்தெங்கும் பரவும் விண்மீனின் கூட்டம்
விண்ணின்வே றேயோர் விரிபக் கத்திலும்
வையத்தின் வேறோர் வளர்பக் கத்திலும்   360
தந்தையார் முற்றம் தனில் மட்டுமல்ல
வளர்ந்தஎன் தோட்டம் மட்டுமே யல்ல.

இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
அன்பாய்நே சித்த அகத்தினி லிருந்து
தந்தையார் அமைத்தவித் தனியகத் திருந்து
கருணையன் னையின்நிறை களஞ்சியத் திருந்து;
என்சதுப் புத்தரை எழில்நிலம் விடுகிறேன்
என்புற் றரைமேட் டியைபுவி விடுகிறேன்
என்வெண் புனல்விட் டிங்கே பிரிகின்றேன்
மணல்நிறை என்புனல் வளர்கரை விடுகிறேன்   370
கிராம மதில்வாழ் கிழவிகள் குளித்திட
மந்தைமேய்த் திடுமிடை மாந்தர்கள் சிந்திட.

சதுப்பு நிலத்தை மிதித்திடு வோர்க்கும்
அலைந்திடு வோர்க்கும் நிலங்கள் விடுகிறேன்
இளைப்பாறி ஏகுவோர்க் கிரும்**பூர்ச்ச மரங்களை
உலாவித் திரிவோர்க் குயர்பைம் புற்றரை
அடிவைத்(துத்) திரிவோர்க் ககல்வே லிப்புறம்
பயணித்துச் செல்வோர்க்(கு) பாதைமூ லைகளை
நடந்தோடிச் செல்வோர்க்(கு) நல்லநீள் முற்றம்
நெடுஞ்சுவர்ப் பக்கம் நிற்போர்க்(கும்) விடுகிறேன்   380
சுத்தம்செய் வோர்க்கு நிலத்தடிப் பலகையை
பெருக்கிவைப் போர்க்கு பெருந்தரைப் பகுதியை
கலைமான் ஓட வயல்களை விடுகிறேன்
**சிவிங்கிகள் திரியத் திகழ்வனப் பகுதிகள்
வாத்துகள் வாழ வளமார் புல்வெளி
பறவைகள் ஓய்வுறப் பாங்குள சோலைகள்.

இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
புறப்பட் டேகும் பிறிதொரு துணையொடு
இலையுதிர் கால இரவணைப் புக்கு
பசிய வசந்தப் பனித்திண் பரப்பு(க்கு)   390
பனித்திண் மத்திலே படிசுவ டெதுமிரா(து)
பாதைப் பரப்பினில் பாதச் சுவடிரா(து)
பாவாடை நூலிழை பனித்துளி களிலிரா(து)
ஆடைக் கரைச்சுவ(டு) அப்பனி யிலேயிரா(து).

பின்னர்நான் திரும்பிப் பிறந்தஇல் வருகையில்
விருந்தாளி யாயென் வீடு வருகையில்
என்தாய்க் குக்குரல் எதுவுமே கேளா(து)
அழுமொலி தந்தை அறியவும் வாய்ப்பிலை
மூலையில் நின்றுநான் முனகிப் புலம்பினும்
அவர்களின் தலைமுன் னாலே பாடினும்;    400
இளையபுல் மேடு எழுந்துயர்ந் திருக்கும்
சூரையின் நாற்று துளிர்த்துயர்ந் திருக்கும்
எனைவளர்த் தவளின் இதவுடல் தோலிலே
எனைச்சுமந் தவளின் எழில்முகப் பரப்பிலே.

பின்னர்நா னிங்கு பெயர்ந்திடும் வேளை
மிகநீண் டகன்று விரிந்தவிம் முன்றிலில்
அடுத்தவர்க் கென்னை அறிமுக மிராது
ஆயினும் என்னையே அறியுமிவ் விருபொருள்
ஒன்று வேலியில் தாழ்வரிச் சுமரம்
வயல்வெளித் தூர(வேலி) மரம்மற் றொன்று   410
சிறுமியாய் இருக்கையில் சீராய் நட்டவை
கன்னிகை யானபின் கைபட நட்டவை.

வளர்த்தனள் அன்னை மலட்டுஆ அறியும்
அதற்குநீர் இளமைப் பருவத் **தருத்தினேன்
கன்றா யிருக்கையில் கவனமாய் வளர்ந்துளேன்
கண்டால் கிட்டக் கதறியோ டிவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அப்பசு வெனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.   420

தந்தையின் கிழட்டுத் தனிப்பொலிக் குதிரை
உணவதற் கூட்டிய(து) உண்டிள வயதில்
அளித்துளேன் புல்ஊண் அரிவையா யானபின்
கண்டால் அருகே கனைத்தோடி யேவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
என்றுமப் பரிதான் எனையே அறியும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.

நித்திய வயதில் நற்சோதரன்நாய்
ஊட்டிவந் ததுவூண் உண்டிளம் பருவம்   430
கற்பித்த துண்டு கன்னிகை யானபின்
கண்டால் குரைக்கும் கடிதிலே யருகுறும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அந்தநாய் எனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.

ஏனைய எவையும் எனையறி யாவே
திரும்பிநான் என்இல் சேரும்வே ளையிலே
தோணிகள் கரைபுகும் தொல்லிட மாயினும்
முன்னர்நான் வாழ்ந்தஇந் நன்னிட மாயினும்   440
வெண்ணிற மீனினம் விளையாடி யேவரும்
பலவலை விரியும் பரந்தநல் இடத்திலும்.

விடைபெறு கின்றேன், வீடே, போய்வர!
பலகைகள் கூரை பரப்பிய இல்லமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.
வாயிற் கூடமே, போய்வர விடைதா!
பலகைகள் பரப்பிப் பதித்தமண் டபமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.   450

முன்றிலே, போய்வர முழுவிடை பெறுகிறேன்,
நிறைந்த பேரி வளர்ந்துள முன்றிலே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.

அனைவரும் நல்விடை அருளினீர் போய்வர,
நிலத்தும், சிறுபழம் நிறைவனத் திருந்தும்
மலர்ந்திடும் பூக்கள் வழிகரை யிருந்தும்
பசும்புல் வளர்புதர்ப் பற்றையி லிருந்தும்
நூறுபல் தீவுகொள் ஏரிகளி லிருந்தும்
நிதம்வெண் மீனுலா நீரிணை யிருந்தும்   460
ஊசி யிலைமர உயர்மே டிருந்தும்
மிலாறுவின் தழைகிளை முழுதிலு மிருந்தும்!"

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
வனிதையைப் பற்றினன் வண்டியி லேற்றினன்
சாட்டையால் குதிரையைச் சாடி யடித்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஏரிக் கரைகளே, இதோவிடை பெற்றேன்!
ஏரிக் கரைகளே, எழில்வயல் எல்லைகாள்!
உயர்மலை வளர்ந்த ஊசி(யி)லை மரங்காள்!
தாருவின் தோட்டத்து நீடிய மரங்களே!   470
வீட்டின் பின்**சிறு மிகுபழச் செடிகளே!
பாதைக் கிணற்றடிச் சூரைச் செடிகளே!
தரையெலாம் பரந்த சிறுபழக் காம்புகாள்!
சிறுபழக் காம்புகள் திகழ்புல் தாள்களே!
அலரிப் புதர்களே, அலர்தாரு வேர்களே!
பூர்ச்சந் தழைகளே, பொன்மிலா றுரிகளே!"

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வடபால் முற்ற மதைவிட் டகன்றான்
பிள்ளைகள் நின்று பிரிபாட் டிசைத்தனர்
சிறார்கள் இசைத்துச் செப்பினர் இவ்விதம்:   480
"இனியதோர் கரும்புள் இவ்வழிப் பறந்தது
வியன்வனத் தூடாய் விரைந்தே பறந்தது
வாத்தையெம் மிடத்தால் மயக்கிப் பிரித்தது
வளர்சிறு பழத்தினை மருட்டிப் பறித்தது
அப்பிளை எம்மைவிட் டதுஎடுத் தகன்றது
புனல்மீ னெடுத்தது போட்டது தரையிலே
சிறுபணம் காட்டி அவளைஏ மாற்றிய(து)
வெள்ளிப் பணத்தினால் வஞ்சக மிழைத்தது;
யாரெமை யிப்போ(து) நீர்க்கொண் டேகுவார்?
ஆற்றிடைப் படுத்த ஆர்தான் இங்குளார்?   490
தண்ணீர்க் கலயம் தாம்ஓய்ந் திருக்குமே
**காவுதண் டங்கள் சோர்வடைந் திருக்குமே
பலகைகள் துடைக்கப் படாதங் கிருக்குமே
நிலம் பெருக்காமல் நலமற் றிருக்குமே
**குவளை விளிம்புகள் அழுக்கடைந் திருக்குமே
கைப்பிடிச் சாடியில் கறைபடிந் திருக்குமே!"

அவனே கொல்லன் அவ்வில் மரினன்
தன்பரு வத்துத் தையல் தன்னுடன்
தனது வழியில் தான்விரைந் தேகினன்
வடபால் நிலத்து வளர்கரைப் பாதையில்   500
நறைபோல் இனிய நிறைநீ ரிணைவழி
மணல்நிறை மேட்டை வாகாய்க் கடந்து;
சிறுகல் சலசல மணல் கலகலக்க
வண்டி உருண்டது வளர்வழி ஒளிர்ந்தது
பரியதன் இரும்புப் பட்டி ஒலித்தது
மிலாறுவின் சறுக்கு வில்கட கடத்தது
வளைந்த சலாகை மரம் படபடத்தது
பழமரப் பட்டம் முழுதா யசைந்தது
சாட்டையின் சுழற்சியில் சதாஒலி எழுந்தது
செப்பிலாம் வளையம் சேர்ந்தே யசைந்தது   510
உயர்குலப் புரவி ஓடிய போதினில்
வெண்சுட்டிப் புரவி விரைந்தவே ளையிலே.

ஒருநாள் சென்றனன் இருநாள் சென்றனன்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினன்
கையொன் றுபரிக் கடிவ(஡)ளம் பிடித்தது
மறுகை மங்கையின் மருங்கினை யணைத்தது
ஒருகால் வண்டியின் ஒருபுறத் திருந்தது
தளவிரிப் பின்கீழ் மறுகால் இருந்தது
பரியும் விரைந்தது பயணம் தொடர்ந்தது
நீள்நாள் கழிந்தது நெடுந்தொலை குறைந்தது   520
மூன்றா வதுநாள் முன்வரும் போதினில்
சூரியன் கீழே தொடர்ந்துசெல் நேரம்
கொல்லனின் இல்லம் நல்விழித் தெரிந்தது
*இல்மா(வின்) இல்லமும் எதிர்த்தோன் றியது:
நூலிழை போல மேலெழுந் ததுபுகை
தடித்த புகையும் தான்வெளிப் போந்தது
இல்லதன் உட்புறத் திருந்தே வந்தது
மேகத்தை நோக்கி மேலெழுந் ததுவே.