pm logo

cilappathikaaram of ilankO aTikaL
canto 1 - pukaark kaaNtam
(in tamil script, unicode format)

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றியது



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext input: Dr Badrinarayanan Seshadri, chennai, India
Proof-reading : Dr. V. Venkataramanan, Tokyo, Japan; Mr. Anbu Jaya, Sydney, Australia
HTML encoding: Dr. V. Venkataramanan,Tokyo, Japan.
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.
This file was first put up on 13 Jan 2000 and revised on 10 May 2001

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
1. புகார்க் காண்டம்

பதிகம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு       5

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென,
அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன்       10

யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு       15

ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு       20

மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்       25

கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்       30

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய       35

பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன, விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்       40

வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்       45

முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை       50

ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்       55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என,       60

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,       65

அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
இந்திர விழவூர் எடுத்த காதையும்,
கடலாடு காதையும்,
மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீதுடைக்       70

கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்,
வேட்டுவர் வரியும், தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
ஊர்க்காண் காதையும், சீர்சால் நங்கை       75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும்,       80

அழல்படு காதையும், அருந்தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும், என்றுஇவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரந்தரு காதையொடு       85

இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.       90
-------------

புகார்க் காண்டம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு       5

மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்       10

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.

(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய       15

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால்,       20

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான்,       25

போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
ஆங்கு,       30

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
அவனுந்தான்,       35

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
அவரை,       40

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி,       45

முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன,
முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,
அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் து஡ணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்       50

சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்       55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்       60

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுது஡வி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை       65

உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.
--------------

2. மனையறம்படுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்       5

ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய       10

கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை       15

வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்       20

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து,       25

விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்       30

கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்       35

தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்       40

பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க,       45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே       50

அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து       55

நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது       60

உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்       65

எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?       70

திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே.       75

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.

மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று       80

உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்       85

விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.       90

(வெண்பா)

தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று. --------------

3. அரங்கேற்று காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய       5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்       10

சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு       15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்       20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,       25

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்       30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்       35

அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னு஡ல் நன்கு கடைப்பிடித்து       40

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னு஡ல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே       45

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்       50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,       55

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்       60

பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி       65

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்       70

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்       75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை       80

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்       85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு       90

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது       95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக       100

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்       105

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு       110

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு       115

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்       120

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப       125

அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,       130

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க       135

வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்       140

பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி       145

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து       150

மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்       155

பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னு஡ல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்       160

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,       165

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை       170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.       175

(வெண்பா)

எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.
----------------

4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்       5

முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி       10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு       15

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென       20

இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி       25

மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த       30

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு       35

குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்       40

பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்       45

காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்       50

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப       55

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து       60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்       65

துணைபுணர் அன்னத் து஡வியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து       70

விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்       75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்       80

அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.

(வெண்பா)

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.
-----------------

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி       5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,       10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,       15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா       20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்       25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்       30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்       35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,       40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,       45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்       50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்       55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய       60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்       65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்       70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,       75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்       80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென       85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்       90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்       95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்       100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்       105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,       110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்       115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று       120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்       125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்       130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து       135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,       140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து       145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து       150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து       155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி       160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்       165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்       170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,       175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்       180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு       185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு       190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து       195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு       200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி       205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த       210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு       215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது       220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்       225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்       230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து       235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.       240 -------------

6. கடலாடு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்       5

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட       10

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்       15

பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய       20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,       25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்       30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்       35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட       40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,       45

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற       50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,       55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்       60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்       65

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய       70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்       75

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை       80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,       85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,       90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்       95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,       100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,       105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,       110

உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப       115

வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்       120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப       125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்       130

வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,       135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,       140

இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி       145

இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்       150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்       155

பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல       160

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,       165

கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை       170

வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.

(வெண்பா)

வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர். --------------

7. கானல் வரி

(கட்டுரை)

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.       1

வேறு (ஆற்று வரி)

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.       2

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.       3

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.       4

வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)

கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.       5

காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.       6

மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.       7

வேறு (முகம் இல் வரி)

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.       8

(கானல் வரி)

நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.       9

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.       10

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.      11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.       12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.       13

வேறு (முரிவரி)

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே.       14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே.       15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.       16

வேறு (திணை நிலைவரி)

கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.       17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.       18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்

கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.       19

வேறு

பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய       20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.       21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.       22

வேறு

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.       23

(கட்டுரை)

ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்.       24

வேறு (ஆற்று வரி)

மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி.       25

பூவர் சோலை மயில்ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி.       26

வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி.       27

வேறு (சார்த்து வரி)

தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.       28

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் து஡ற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர். 29

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்து஡ர்க்கும் புகாரே எம்மூர்.       30

வேறு (திணை நிலைவரி)

புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.       31

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.       32

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?       33

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?       34

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.       35

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.       36

வேறு (மயங்கு திணை நிலைவரி)

நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ?       37

வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ?       38

புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ?       39

வேறு

இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?       40

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?       41

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?       42

வேறு (சாயல் வரி)

கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.       43

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.       44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.       45

வேறு (முகம் இல் வரி)

அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.       46

வேறு (காடுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.       47

வேறு (முகம் இல் வரி)

நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.       48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.       49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.       50

வேறு

தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.       51

வேறு (கட்டுரை)

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.       52
----------

8. வேனில் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்       5

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் து஡தன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை       10

புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய       15

மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்       20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி       25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,       30

பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்       35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்       40

நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை       45

வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட       50

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு,       55

மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்       60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்       65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்       70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட       75

மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய       80

நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக்      85

கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்       90

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்       95

மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்       100

கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்       105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,       110

அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை.       115

காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

(வெண்பா)

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.

ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண். ---------------

9. கனாத்திறம் உரைத்த காதை

(கலி வெண்பா)

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்       5

பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்       10

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,       15

ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு       20

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்       25

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், து஡ய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்       30

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து       35

நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க்       40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை       45

பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு       50

ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு       55

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு       60

தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்       65

கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த       70

இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன,
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு
உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்       75

மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

(வெண்பா)

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன். ------------

10. நாடுகாண் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும்       5

தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,       10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து       15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்       20

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,       25

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்       30

இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,       35

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க       40

மதுரை மூது஡ர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,       45

உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்       50

மதுரை மூது஡ர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்       55

மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற       60

காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ:       65

வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்       70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.       75

கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்       80

கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,       85

குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்       90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை       95

நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்       100

பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்       105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்       110

ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்       115

கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய       120

கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி       125

ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்       130

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,       135

அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு       140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து       145

மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்,       150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:       155

ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட       160

இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்       165

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:       170

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்       175

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்       180

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்       185

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது       190

போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,       195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்       200

பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது       205

இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்       210

பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி       215

மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்       220

காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்       225

பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,       230

எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு       235

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,       240

அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின்       245

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன். --------------
(கட்டுரை)

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூது஡ர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்       5

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்       10

பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்       15

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.      20

(வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

(புகார்க் காண்டம் முற்றிற்று.)


This webpage was last revised on 7 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).