சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
C. Subramaniya Bharathiyar Songs - Part III
(kaNNan pATTu & kuyil pATTu)
in Tamil Script, unicode format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for
the preparation of the soft copy, HTML and PDF versions.
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.
This page was first put up on Feb. 2, 2000
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; - அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்; - நல்ல
பெண்மைக் குணமுடை யான்; - சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான்; - மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான். 8
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில் - பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்; - உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்; - நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன். 10
---
2. கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து)
உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1
இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். 2
விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 3
வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். 4
நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5
சோலைகள் காவினங் கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். 6
தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 7
இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. 8
சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; 9
வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 10
---
செல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை
சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை - மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு. 2
நாவு துணிகுவ தில்லை - உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே - எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு.
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே - அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். . 3
பிறந்தது மறக் குலத்தில்; - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான்; - உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4
ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5
இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; - ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6
வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7
நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8
வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை; மூப்பு மில்லை, - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 9
துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். . 10
---
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . 40
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50
புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி
சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. . 1
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
நாட்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி
கூடு முகமும், தெளிவுதான் - குடி
கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
சங்கதி பேசி வருகையில், 2
என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
இன்புற் றுரைத்திட லாயினர் -''தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையில் - அவன்
சத்தியங் கூறுவன்'' என்றனர். 3
மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், 4
ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைத் - கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - 'சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; - தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா - உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' 5
என்று கருதி யிருந்திட்டேன்; - பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், - ''நினை
நன்று மருவூக! மைந்தனே! - பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்! 6
சந்திரன் சோதி யுடையதாம்; - அது
சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும் -; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -'இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7
''ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; - கடல்
ஆருங் குமிழி உயிர்களாம்; - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8
''சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு
சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - 'இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே, 9
'சோதி அறிவில் விளங்கவும் - உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற
நீதி முறைவழு வாமலே - எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து - கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10
''ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம். 11
''ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய்'' - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
ஆட லுலகென நான் கண்டேன்! 12
---
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ! . 1
உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. 3
கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . 5
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், 3
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். 4
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? 5
---------
12. கண்ணன் - என் - காதலன் -3
(காட்டிலே தேடுதல்)
ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்
ரசங்கள்: பயாநகம், அற்புதம்.
திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
1.
மிக்க நலமுடைய மரங்கள், - பல
விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு (திக்குத்)
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். . 1
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். . 2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை
யாவும் தெளிவுபெறக் கோட்டு விடடீ!. 3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். 4
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். 3
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3
சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். 4
முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? 5
----
20. கண்ணம்மா - என் காதலி - 5
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி - ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! 1
மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? 2
கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். 3
கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! 4
----
21. கண்ணம்மா - என் காதலி - 6
யோகம்
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . 5
காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . 6
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
-----
ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான் காநாள்.
பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன்,
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்,
சென்று வருவீர்'' எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண். ... 75
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, ... 30
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ... 35
பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்,
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.
''ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் ... 10
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே?'' என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்,
''என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் ... 15
வேளை எனைத்தனியே விட்டகல்வீர்'' என்றுரைத்தேன்.
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்,
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். ... 20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்,
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம்,
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்,
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் ... 25
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் ... 85
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! ... 90
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றாய் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில் 15
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனென்னும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20
என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?'' என்று நீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி 95
நீ விலகிச் சென்றாய் - நெறியேது சாமியர்க்கே? -
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக.
''நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னை, ஒளிர்மணியே. புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி, 100
நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம்.
நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனொ; வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனதைச் சொல்வேன். எனதுநிரை யுரைப்பேன். 105
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்,
மாதரசே!'' என்று வலக் கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய், 110
ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், 260
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?
----------------
This page was last revised on 20 Nov. 2021
Please feel free to send comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com)