எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப"
என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட
ஓரடியையாவது இம் முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இ·து ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாயிருக்கின்றது. ஏனைப் பாட்டுக்களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றோம். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை
காலத்தையுந், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யத்தமையானுந், துறவோர் கருவிகளை
உவமை எடுத்துக்காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும்.
இப்பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்
இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன.
இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங் கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற்சென்ற அரசர்
காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர்.
அரசன் போர்மேற் செல்லும் போது பெண்களும் வாள்வரிந்த கச்சுடனே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இங்ஙனம் அரசரோடு உடன் சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கம்மவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவகசிந்தாமணியிலுந் "தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே" என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமை காண்க. மிலேச்ச தேயத்திலுள்ள ஊமைகளை
வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறை அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லாரை அங்கு
வைப்பின் அரசன் பல்ளியறைக்கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளியிடுவரெனவும்,
ஒருவரோடொருவர் சிற்சில பொழுது கூடி முணுமுணுவென்று பேசுதலுஞ் செய்வாராதலால் அதனால் அரசன் துயில் கெடுவுமெனவுங் கருதிப்போலும் ஊமைகள் அங்ஙனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாராயினர்! இன்னும் ஏழடுக்கு மாளிகை முதலிய உயர்ந்த கட்டிடங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிறவளங்களும் பழந்தமிழ்நாட்டு மன்னர் உடையராய் இருந்தனரென்பதும் பிறவும் இப்பாட்டினால் இனிது விளங்குகின்றன.
11. விளக்க உரைக்குறிப்புகள்
இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை
உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை
அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் 'மாட்டு' என்னும்
இலக்கணமாமென அதனியல்பைப் பிறழ உணர்ந்து வழுவினா ரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப் பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றோம்.
(1-6 அடிகள்) பெரிய கையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை
வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுந்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த
மாலைக்காலம் என்க.
கரிய நிறம் பற்றியும், உலகமெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப
நிமிர்ந்தமை பற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமை கூறினார். மாவலி வார்த்த நீர் கைகளினின்று ஒழுகத்
திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க.
நனந்தலை - அகன்ற இடம். நேமி - சக்கரம். வலம்புரி பொறித்த - வலம்புரிச் சங்கை
வைத்த; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" என்றார் சீவகசிந்தாமணியிலும். 'மாதாங்கு' என்பதனை
'மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க. தடக்கை -
பெரியகை; "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் - உரியியல். 24. பாடுஇமிழ் பனிக்கடல் - ஒலி
முழங்குங் குளிர்ந்த கடல். கொடுஞ்செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரிந்தார்க்குத் துன்பம்
விலைக்குஞ் சிறு பொழுதான மாலை.
(7-11) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும் மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர்
நற்சொற் கேட்டுநிற்ப என்க.
அருங்கடி மூதூர் - பகைவர் அணுகுதற்கரிய காவல் அமைந்த பழைய ஊர். யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப
- யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க; இவை தூவும் முல்லை மலற்றேனை
நச்சி வந்தன. நாழிகொண்ட - நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ - நன்மணங் கமழும்
மலர். முல்லை - முல்லைக்கொடி. அரும்பு அவிழ்அலரி - அரும்பு விரிந்த மலர். " நென்னீ ரெறிந்து
விரிச்சி யோர்க்குஞ், செம்முது பெண்டிர்" என்றார் புறத்திலும், 280
(12-17) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவிற் பசிய கன்றின் வருத்தம் மிக்க சுழலுதலை
நோக்கிய ஓர் இடைப்பெண்: 'கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்'
என்று சொல்வோளுடைய நற்சொல்லைக் கேட்டனம் என்க.
புதிது ஈன்ற கன்று ஆதலாற் 'பசலைக்கன்று' என்றார்; 'பசலை' பசுமை என்னும் பண்படியிற்
பிறந்து குழவித் தன்மையை யுணர்த்திற்று, மிக இளைய கன்று என்றபடி; "பசலை நிலவின்" என்றார்
புறத்திலும்(392); நச்சினார்க்கினியர் 'வருத்தத்த யுடைத்தாகிய கன்று' என்றது கூறியது கூறலாகும். உறு
துயர் - பாலுண்ணாமையால் உற்ற துன்பம்.
நடுங்கு சுவல்அசைத்த கையள் - குளிரால் நடுங்குந் தோள்களின் மேற் கட்டின கையளாய். கைய -
கையிற் பிடித்த, கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக்கோல். நன்னர் நன்மொழி - நன்றாகிய
நல்லமொழி, நன்மைப் பொருளையுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் இருங்கு வந்தமை "ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றானமக்கப்படும். (சொல், எச்சவியல், 64)
(18) அதனாலும், நின் தலைவன், படைத்தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர்
கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தனவாதலாலும் என்க.
நல்லோர் - படையுள் நற்சொற்கேட்டதற் குரியோர். வாய்ப்புள் - வாயிற்பிறந்த
நிமித்தச்சொல்.
பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன்
சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால்
இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண்கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச்சி கேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப்பொருள்
இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் 18 ஆவது அடியிலுள்ள '
நல்லோர்' என்பதனை 7 ஆவது அடியிலுள்ள 'போகி' என்னும் வினையடு கூட்டி இடர்ப்பட்டும் இப் பொருளே
கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள்
அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப்போன கார்ப்பருவ வரவினைக் கண்டு ஆற்றாளான
தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றார் என்பது
நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டதற்கு
உரியோர், ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன் றாகலானும், யாங்கூறும்
பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புகளும் இனிது பெறப்படுவதாக அவர்
உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித்தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப்படுதலானும் நச்சினார்க்கினியருரை
போலியுரையா மென்று மறுக்க.
(19-23) 'நின்றலைவன் பகைவர் இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந்
தான் எடுத்த போர்வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின் துயரத்தை
விலக்கு' என்று அவர் வற்புறுப்பவுந் தலைமகள் ஆற்றாளாய்க் கலுழ்ச்சிமிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த
கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க.
இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க்கினியர் மறுக்கின்றார். அவர் கூறிய
மறுப்பின் பொருள் வருமாறு : - முல்லை என்பது கதலனைப் பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும். நப்பூதனார் இதற்கு 'முல்லைப்பாட்டு' என்று பெயரமைத்தமையால் இதன்கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம். ஆகலின், இவ் விரங்கல் ஒழுக்கம் போதரப் பொருளுரைத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகலின் இப் பாட்டுக்கு நேரே பொருள் கூறுதலாகாது; என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட்
சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை
வரைகின்றார்.
இனி, அவர் நிகழ்த்திய தடையினைப் போக்கியுரைக்கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில்
தலைவன் தான் பிரியும்போது 'யான் கார்காலந் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப் பாவாய்! நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்' என்று
கற்பித்தவண்ணமே, ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற்
பெரிதும் ஆற்றாளாயினள்; இ·துலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி
கேட்டு வந்து வற்புறுப்பவும் ஆற்றாது வருந்துந் தலைவி பின் ' நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கணவன்
கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைந்து பார்த்து 'அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது.' என்று தன்னைத் தேற்றிக் கொண்டு கிடந்தாள் என்பது 82 ஆவது அடி முதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின், இப்பாட்டின்கண் முல்லை யழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்டதென்பது அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடந்தது. அற்றன்று, முல்லையழுக்கமே பயின்று வரும் இப்பாட்டின்கட் "பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப" என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையழுக்கமே தொடர்ந்து வரும் இச்செய்யுளின் அகத்து இடையே தோன்றிய அவ்விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற்பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலெல்லாம் இடைஇடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனந் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் 'அகநானூறு', 'கலித்தொகை' முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக் கிடத்தலின், இம்முல்லைப்பாட்டினிடையே வந்த அவ்வடிபற்றி ஈண்டைக் காவதொரு குற்றமுமில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும், செய்தலொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் நூலகளிற் காண்க 1 ஆற்றுவிப்பார் உள்வழி யெல்லாம் நிகழும் ஆற்றாமை 'னெய்தல்' ஆவதில்லை யாகலின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற் றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக.
பருவரல் - துன்பம், துயரம், எவ்வம் - வருத்தம். மாயோள் - வெளிறித் தளுக்காக மிளிருங்
கரியநிறம் உடையவள்; "மாயோள் முன்கை யாய்தொடி" என்னும் பொருநராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி - அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த் துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் "புலம்பே தனிமை" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.
(24-28) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த
முல்லைக்காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற் கோட்டைகளையும் அழித்து, முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க.
இன்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச் சென்ற வேந்தன் பாடிவீட்டில் இருக்கும்
இருப்புமாக இரண்டு பாசறையமைப்பு இதன்கட் சொல்லப்பட்டதெனக்கொண்டு சில எழுதினாரும் உளர்.
நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரையாம் என்க.
கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டியாறு சூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்நாறு
- நீளமணங்கமழும்; இவ் அடை மொழியைப் 'பைம்புதல்' என்பதனொடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி -
அழித்து. புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை, 'இடுமுட்புரிசை' முள் இடு புரிசை என மாற்றுக;
காட்ட - காட்டின் கண் உள்ள, இது முள்ளுக்கு அடை; புரிசை - மதில். 'ஏமம்உறு' இடைக்குறைத்து ஏமுறு
எனவாயின; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி - ஒலிக்கின்ற நீரையுடைய கடல்.
(29-36) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாக நின்ற
மதயானை, கரும்பொடு கதிரும் நெருங்கக் கட்டிய அதிமதுரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது
நெற்றியைத் துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்றதாகப் பாகர்
பரிக்கோலினாற் குத்தி வடசொற்பல்காற் கூறிக் கவளம் ஊட்ட என்க.
உவலைக் கூரை - தழைகள் வேய்ந்த கூரை ; பாடி வீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக
வகுத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு - இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள்
ஒழுங்காக இருக்கும் தெருக்கள். கவலை - நாற்சந்தி கூடும் இடம். பாடியினுட் புகுவார் இவ்விடத்திலுள்ள
முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போகல் வேண்டுதலின், இங்கே யானை காவலாக
நிறுத்தப்பட்டது. தேம்படு கவுள - மதநீர் ஒழுகுங் கன்னத்தினையுடைய. ஓங்குநிலைக் கரும்பு - உயர்ந்து வளர்ந்து
நிற்றலையுடைய கரும்பு. கதிர் மிடைந்து யாத்த - நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய. வயல் விளை
- வயலில் விளைந்த. இன்குளகு - அதிமதுரத் தழை. அயில்நுனை - கூரிய முனை. கவைமுள் கருவி - கவர்த்த
அல்லது பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் - யானை பழக்குஞ் சொற்களையன்றி வேறு
வடசொற்களைக் கல்லாத இளைஞர். கைப்ப - ஊட்ட.
(37-44) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன்கட் காவியுடையைத் தொங்கவிட்டு
வைத்தாற்போலப், போரிற் பின்னிடாமைக்கு ஏதுவான வலிய வில்லில் தூணியைத் தொங்கவிட்டுப் பின்
அவ்விற்களை யெல்லாம் படங்குக்காக ஊன்றிப், பின்னர் அவை தம்மை யெல்லாங் கயிற்றால் வளைத்துக் கட்டிச்
செய்த இருக்கையிற் குந்தங்கோல்களை நட்டு, அவற்றொடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய வளைந்த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வேறுவேறான பல்பெரும் படைகளின் நடுவில், நீண்ட குத்துக் கோல்களோடு சேர்த்துச் செய்த பலநிறம் வாய்ந்த மதிட்டிரையை வளைத்து வேறோர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லோரும் உடன்பட்டுச் செய்து என்க.
கல் - காவிக்கல். கல்தோய்த்து உடுத்த - துகிலைக் காவிக்கற் சாயத்தில் தோய்த்து. படிவம்
- தவவேடம்; "பல்புகழ் நிறுத்த படிமையோனே" என்னும் பனம்பாரனார் பாயிரச் செய்யுளிலும் இச்சொல்
இப்பொருட்டாதல் காண்க. அசைநிலை - தங்க வைத்த தன்மை; என்றது காவியுடையை. கடுப்ப - ஒப்ப;
இச்சொல் மெய்உவமத்தின் கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூணி நாற்றி - அம்பறாப்
புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிளவிகள். பூந்தலைக் குந்தம் -
பூச்செதுக்கின தலையையுடைய கைவேல். கிடுகு - படல். நிரைத்து - வரிசையாக வைத்து. நாப்பண் - நடு.
காழ் - கம்பு; கோல். கண்டம் - கூறு, கூறுபட்ட பல நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்:
" நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த" என்றார் சிலப்பதிகாரத்திலும்2.
(45-49) வாளினைத் தமது கச்சிலே சேரக் கட்டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள்
கெடுந்தோறுந் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக் கொளுத்த என்க.
இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள்
கொளுத்த என்னுரைப்பின், 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்று வற்றுமாகலின் அப்பொருள்
பொருந்தாதென்க.
தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணங் கைவளை யருபலந் தொடியே" என்னும்
பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. கூந்தல் அம் சிறுபுறத்து - கூந்தல் கிடக்கும் அழகிய சிறிய
முதுகினையுடைய, என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக்கும் வலிய பிடியமைந்த ஒளியுடைய வாள்.
விரவு - கலந்த, சேர்ந்த; 'விரவ' எனத்திரிக்க. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; 'வரி'
- நிறம் எனினுமாம். நிறத்தினையுடைய கச்சு என்க. குறுந்தொடியணிந்த முன்கையினையுங் கூந்தலசைந்து
கிடக்குஞ் சிறு புறத்தினையுடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சையணிந்த மங்கையர், என
அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை - நெய்யை ஒழுக விடுந் திரிக்குழாய். நந்து
தொறும் - கெடுந்தோறும்.
(50-54) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடி
யேறிய சிறு தூறுகள் துவலையடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற் போலத், தூக்க மயக்கத்தால்
அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரியவென்க.
நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளிய மணி, நிழத்திய - நுணிகிய;
அ·தாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ''ஓய்தல் ஆய்தல் நிகழ்த்தல்
சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள" என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க. இனி
'நிழற்றல்' எனப் பாடமோதுவாருமுளர்; 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின்
அ·தீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் ''நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலு மாகும்" என்று
அ·து இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவாறென்னையெனின்; அது காப்பியத்தொடு முரணுவதாகலிற்
கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரையானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழிலவிதற்குத்
திரிகுறியாக அடித்துவிட்ட மணியென்றுரைப்பினும் அமையும். 'பூத்த ஆடு அதிரற்கொடி' எனச் சொற்களை
மாற்றிக் கூட்டுக. படார் - சிறுதூறு. சிதர் - திவலை. துகில்முடித்துப் போர்த்த - கூறையால் மயிரை
முடித்து உடம்பையும் போர்த்துக் கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது; "மீப்பால்
வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர்" என்னும் பரிபாடற் பத்தாஞ்
செய்யுளடிகள் ஈண்டு ஒப்பிடற்பாலன. ஓங்குநடைப் பெருமூதாளர் - உயர்ந்த நல்லொழுக்கத்தினை யுடைய
மெய்காப்பாளர்; தம் அரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல்களுக்கு இடங் கொடாது தம் அரசர் மாட்டு
மெய்யழுக்க முடையராதல் பற்றி 'ஓங்குநடை' யுடையரெனச் சிறந்தெடுத்துக் கூறினார்; 'பெருமூதாளர்' என்பது
பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற்றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட
ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்பரென்பதூஉம் பெற்றாம்.
(55-58) பொழுதினை இத்துணையென்று வரம்பறுத்து உணரும் பொழுதறி மக்கள், அரசனைத் தொழுது
கொண்டே காணுங்கையினராய், விளங்க வாழ்த்தி 'நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே! நினது
கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க.
தம் அரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக்
கூறுவார் போலாது, என்றுந் தம் அரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி
அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யா மாக்கள்' என்றும், பொழுதளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது
அறியாமையின் இவரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப்பொருள் காணமாட்டாத
நச்சினார்க்கினியர் பொழுதறியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற்றொடரை 'மாக்கள்
பொழுதளந்தறியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும்
உரைத்தார். எறிநீர் வையகம் - வீசுகின்ற கடல் நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர் - சிறிய நீர்;
இது நாழிகை வட்டிலினுட் கசிந்த நீர். 'குறுநீர்' என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு
எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க்கினிய ருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அது
பொருந்தாதென விடுக்க. கன்னல் - நாழிகைவட்டில்; இ·திப் பொருட்டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகை
வட்டில்" என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. "குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர்" என்றார்
மணிமேகலையிலும் (7, 64-65). ஒரு கடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளையுள்ள ஒரு
வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப் புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக
நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.
(59-66) உடையினையும் மெய்ப்பையினையுந் தோற்றத்தினையும் யாக்கையினையுமுடைய யவனர்,
புலிச் சங்கிலி விட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணிவிளக்கினை ஒளிரவைத்து வலிய கயிற்றிற்
சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின்கண்ணே
சட்டையிட்ட ஊமை மிலேச்சர் அருகே காவலிருப்பரென்க.
மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளை இயஉடை - குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட
உடை; மறிந்து வீங்கு செறிவுஉடை - மடங்கிப் புடைக்க நெருங்குதலுறக் கட்டின உடை. மெய்ப்பை - சட்டை.
வெருவருந் தோற்றம் - காண்பார்க்கு அச்சம் வருவதற்கேதுவான தோற்றம். வலிபுணர்யாக்கை - வலிமைகூடிய
உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர்( Ionians). மணிவிளக்கம் - பளிங்கு விளக்கு; மணிபோதலிற்
பளிங்கும் மணி எனப்பட்டது; "மணியிற் றிகழ்தரு" என்பதற்குப் பரிமேலழகரும் 'பளிக்கு மணி' என்று
பொருளுரைத்தார். திருக்குறள் 1273. எழினி - திரை. 'உடம்பின் உரைக்கும் நாவினுரையா' என மாறி
உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்க மாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர்,
பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின்
வழியாகப் பரத நாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென
அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் "மிலேச்சர் ஆரியர்" எனப் போந்தமை காண்க.
(67-79) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை
விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப்
பெட்டை யானைகளையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்றுவிழத் தாம்
அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த
மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக் கொண்டு அப்புகள் அழுந்தினமையாற்
செவியைச் சாய்த்துக் கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின்
மேல் வைத்து மற்றொரு கையால் முடியைத் தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக்
கழித்துப் பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன் வலிய விரலாலே அவர் தம்மையெல்லாம்
வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல்வெற்றியினை நிலைநிறுத்திப், பின்னாளில் தன்
மனைவியைக் காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க.
'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் நசையென்பதனோடாதல் கூட்டி மிக்குச் செல்லும் போர்,
மிக்குச் செல்லும் நசை என்க. பாம்பு பதைப்பு அன்ன - அடியுண்ட பாம்பின் துடிப்பை யத்த ; இது வெட்டுண்டு
விழுந்து துடிக்கும் யானைத் தும்பிக்கைக்கு உவமம். தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு
வாய்த்தல் - செஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் 'சிறந்ததிதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப" என்னும்
புறப்பொருள் வெண்பா மாலை யுரையிலுங் காண்க. கடகம் - கங்கணம், தொடி, வளை; இவ் அணிகலன் ஆண்மக்களும் அணிதலுண்டென்பது 'கண்ணெரி தவழ அவ்ண்கை மணிநகு கடகம் எற்றா" என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடியிற் சேர்த்தி என்றார்.
நகைதாழ் கண்ணி - ஒளி தங்கு மாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சி
மாலையை. அரசு இருந்து பனிகும் முரசு முழங்கு பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும்.
(80-103) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆண்டுக்
காண்க.
நிறைதபு புலம்பு - நிறை கெடுதற்கு ஏதுவான தனிமை. "நிறையெனப் படுவது மறைபிற
ரறியாமை" என்றார் கலியிலும். ஏஉறுமஞ்ஞை - அம்பு தைத்த மயில், இது மயிலின் சாயலினையுடைய
தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய - இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை -
வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன் கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை -
கூடல்வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரள் அருவி - பெரிது திரண்டு விழும்
அருவிநீர். இன்பல் இமிழ் இசை - இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள் -
செவியிற் கேட்பவளாய்க் கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின - உட்செவி நிரம்ப ஒலித்தன.
பிறர் வேண்டுபுலம் - பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர் - ஊதுகொம்பு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய
வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேன் வளர்தலின் 'அயிரகாயா' என்றார். அஞ்சனம்
- மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன்கால - பொன் நிறமான பூவைத் தர. முறிஇணர் - தளிருங்
கொத்தும். தோடுஆர் - இதழ் நிறைந்த; 'தொகுதி நிறைந்த' என உரைப்பினுமாம். கானம் நந்திய
செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லை நிலத்தின் வழியிலே. வானம் வாய்த்த - வேண்டும்
பருவத்து மழை பெய்யப்பெற்ற. வாங்கு கதிர்வரகு - வளைந்த கதிரினையுடைய வரகு. திரிமறுப்பு இரலை -
முறுக்குண்ட கொம்பினை யடைய புல்வாய்க் கலைகள். எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்கள் - இனிமேற்
பெய்தற்காகச் செல்லும் வெண்புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித் திங்கள் முதலில்;
இதற்கு நச்சினார்க்கினியர் முன் பனிக்காலம் என்று பொருள் கொண்டு இப்பாட்டின் பொருளுக்குச் சிறிதும்
இணங்காதவாறு உரை கூறினார். பிறக்கு - பின். துனைபரி துரக்கும் - விரைந்து செல்லுங் குதிரையை மேலுந்
தூண்டிச் செலுத்தும். வினை விளங்கு - போர்வினைக்கண் தமதுதிறம் மிக்கு விளங்கும், என்றது தலைமகனது
தேரிற்பூட்டிய குதிரைகளை.
- திருச்சிற்றம்பலக் கோவையாரில், "ஆரம்பரந்து திரைபொரும்" என்னுஞ் செய்யுள்முதல் "மூவறழீஇய அருண்முதலோன்" என்னுஞ் செய்யுள் ஈறாகத்
தலைமகள் யாரும் இல் ஒரு சிறைத் தனியளாயிருந்து கடலை நோக்கியும்
அன்னம் முதலியவற்றை நோக்கியும் வருந்திக் கூறிய பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலால் 'திணைநெய்தல்' என்று பேராசிரியர் "மூவறழீஇய"
என்னுஞ் செய்யுளுரையிற் கூறியதூஉம் உற்று நோக்கற்பாலது.
- நீர்படைக்காதை, 151 ஆம் அடி.
12. வினை முடிவு
எழிலி பெரும்புயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், "யாம் ஊர்
மருங்கிற்போகி நெல்லொடு முல்லையுந் தூஉய்த் தொழுதுநிற்ப, ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி ' நுந்தாயர்
கோவலர் உய்த்தர இன்னே வருகுவர்' என்போள் நன்மொழி கேட்டனம் அதனாலும், நின் தலைவர் திறையராய்
வினைமுடித்து வருவது வாய்வது, மாயோய்! நீ நின் எவ்வங் களை எனக் காட்டவுங் காட்டவுங் கலுழ்ந்து கண்முத்து
உறைப்ப ஆற்றாது வருந்துந் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுந் தலைவனைத் தன் மருங்கிற் காணாளாய்
மேலும் வருந்திப், பின் தன் நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப்படுத்தித், தான் தனியளாய் இருக்கும் நிலைமையினை
நீளநினைந்து பார்த்து, " நாம் நங் காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை" எனத்தேற்றியும், ஓடுவளை
திருத்தியும், மையல்கொண்டும், உயிர்த்தும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்சுடர் அழல, மாடத்து முடங்கிறைச்
சொரிதரும் அருவி ஓர்ப்பனள் கிடந்தோள் செவிநிறைய ஆலின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுந்தேர் பூண்டமா
என்று வினைமுடிவு செய்க.
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
[எண் : பாட்டு வரி எண்]
அகம் - உள்வீடு, 44; பிங்கலந்தை
அங்கை- அழகியகை; அகம்கை - உள்ளங்கை, 15; தொல்காப்பியம், எழுத்தியல், 315
அசை நிலை - தங்கவைத்த தன்மை, 38; 'அசைதலடலுந் தங்கலு முரித்தே' திவாகரம்
அசைத்த - கட்டிய, 14; பிங்.
அஞ்சனம்(வடசொல்) - மை: மைபோன்ற நீலமலர், 13
அஞ்செவி - அகம் செவி - உட்செவி, 89
அதிரல் - மோசி மல்லிகை, 51; சிலப்பதிகார உரை, 13, 156; 'புனலி' என்பர்
நச்சினார்க்கினியர்
அமர் - போர், 67
அயிர் - நுண்மணல், 92; திவாகரம்
அயில் - கூர்மை, 34; திவாகரம்
அரசு - அரசன், 79
அரணம் - காவலான இடம், 42; காவல், 4 ஆம் பரிபாடலுரை
அருங்கடி - அரிய காவல், 7
அருப்பம் - அரண், 26; 'வியலருப்பம்' என்புழியும் இப்பொருட்டாயிற்று, புறநா. 17
அலமரல் - சுழலல், 13; தொல்காப்பியம் உயிரியல் 13
அலரி - பூ, 10
அவிழ் - மலர்ந்த, 10
அழல - எரிய, 85
அன்ன - ஒத்த, 70
ஆய்மகள் - இடைப்பெண், 14
ஆர் - நிறந்த, 96; திவாகரம்
ஆர்ப்ப - பேரொலி செய்ய, 8, 92; 'ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி' என்பர் திவாகரர்
ஆலின - ஒலித்தன, 89; திவாகரம்; புறநானூற்றுரை, 128
ஆற்றுப்படுத்த - வழிச் செலுத்திய, 81
இசை - ஒலி, 7, 88
இசைப்ப - சொல்ல, 58
இணர் - கொத்து, 94; திவாகரம்
இமிழ் - முழங்கும், 4, 88; 'ஏறுமாறிமிழிப்ப' என்பதனுரையைக் காண்க, பரிபாடல், 22
இரலை - ஆண்மான், புல்வாய், 99; தொல்., மரபியல், 44
இருக்கை - இருப்பிடம், 40
இல் - வீடு, பாடிவீடு, 62
இழை - அணிகலன், 84; திவாகரம்
இன்குளகு - இனிய அதிமதுரத்தழை, 33
இன்னே - இப்பொழுதே, 16
இனம் - கூட்டம், 8; 'சுறவினத் தன்ன வாளோர்', புறநா., 13
இனைத்து - இவ்வளவு, 58
ஈண்டு - திரண்ட, 10; புறநா., 17
உகள - தாவ, 99; புறநானூற்றுரை, 15
உண்கண் - மையுண்ட கண், 23; புறப். வெண். உரை, பொது, 7; திருக்குறள் பரிமேலழகருரை 1091
உய்த்தர - செலுத்துதலைச் செய்ய, 'உள்' முதனிலை வினைப் பெயர், 15
உயங்கும் - வருந்தும், 74; திவாகரம்
உயரி - உயர்த்து, 91; புறநா. 56; புறப்பொருள் வெண்பா மாலை 8, 17
உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும், நெட்டுயிர்ப் பெறிந்தும், 83
உவலை - தழை, 29; பதிற்றுப்பத்து, 28
உழந்து - வருந்தி, 80; பரிபாடலுரை, 9
உழையர் - அருகிலுள்ளவர், 66; 'உழை யிருந்தான்' என்பழியும் இப் பொருட்டாதல் காண்க, திருக்குறள் 638
உள்ளியும் - நினைத்தும், 72; திருக்குறளுரை 1316
உறுதுயர் - மிக்க வருத்தம், உறுகின்ற துயர் என உரைப்பினுமாம், உறுதல் - அடைதல், 13
உறைப்ப - துளிப்ப, 23; உறை - நீர்த்துளி, திவாகரம்
எ·கம் - வேல், 68; திவாகரம்
எருக்கி - அழுத்தி, 25; பதிற்றுப்பத்து, 83; கொல்லுதல், திவாகரம்
எவ்வம் - வருத்தம், 21; எவ்வம் மானம் என்பர் புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர்; கைக்கிளை, 7
எழிலி - மேகம், 5
எழினி - திரை, 64; சிலப். 3, 109
எறிநீர் - வீசும்நீர்; கடல், 54; எறிதல் - வீசுதல், பிங்கலந்தை
ஏ - அம்பு, 84; ஏத்தொழில் - 'அம்பின்றொழில்' பரிபாடல், 18
ஏமம் - காவல், 54; திவாகரம்
ஏமுற - 'ஏமம் உற' என்பன ஏமுற என்றாயின. ஏமம் - காவல், 27; புறநானுறு, 3
ஒய்யென - விரைய, 83; ஞானாமிர்தப்பாயிரவுரை, 6; புறநா. 98
ஒழிந்தோர் - இறந்தோர், 72; 'ஈரைம் பதின்மரும்பொருது களத்தொழிய' என்றார் புறத்திலும், 2
ஒழுகிய - ஒழுங்குபட்ட, 29
ஒள் - விளங்கிய, 46; புறநா. 11
ஒற்றி - சேர்த்தி, 75; சீவகசிந்தாமணியுரை, 1746
ஓங்கு - உயர்ந்த, 53; புறநா. 13
ஓர்ப்பனள் - செவியிற் கேட்பவளாய், 88; புறநானூறு, 157; 'கருதினவளாய்' என்றுரைப்பினுமாம்.
கச்சு - முலைக்கச்சு; இரவிக்கை, 47; பிங்கலந்தை
கடகம் - கங்கணம், தொடி, வளை, 76; திவாகரம்
கடுப்ப - ஒப்ப, 38; மெய் உவமத்தின் கண் வருவது இச்சொல், தொல்காப்பியம், உவம. 15
கண்டம் (வடசொல்) - கூறுபாடு, கூறுபட்ட பல நிறத்தினையுடய மதிட்டிரை, 44; சீவகசிந்தாமணி, 64
கண்ணி - மாலை; வஞ்சிமாலை, 71, 78; திவாகரம்
கண்படை - உறக்கம், 57; திருக்குறள், 1049; பிங்கலந்தை
கருவி - பரிக்கோல்; குத்துக்கோல், தாறு, 35; படைக்கலம், திவாகரம்
கலுழ் - அழுதல், 22; திவா. கலக்கம் எனினுமாம், 6 ஆம் பரிபாடலுரையையுங் காண்க.
கவர்ந்த - கைக்கொண்ட, 10; கொள்ளை கொண்ட, புறப்பொருள் வெண்பா உரை, 2, 6
கவலை - நாற்சந்தி கூடும் இடம், 30; சந்தி, திவாகரம்; கவர்த்த வழி, புறநானூற்றுரை, 3
கவளம் - உணவு, 36; சோறு, திவாகரம்
கவுள - கன்னத்தை உடைய, 31; கவுள் - கதுப்பு; கன்னம், திவாகரம்
கவை முட்கருவி - கவர்த்த முள் உள்ள பரிக்கோல், 35; மணிமே. 18. 165, கவை - கவர், பிங்கலந்தை
களை - விலக்கு, 21; பிங்கலந்தை
கன்று - ஆன்கன்று, 12
கன்னல் - நாழிகைவட்டில், 58; திவாகரம்
காட்ட - காட்டில் உள்ள, 26
காயா - காசாஞ்செடி, 93; திவாகரம்
கால - கக்க; சொரிய; மலர, 94; திவாகரம்
காழ் - கோல், 44; திவாகரம்
கான்யாறு - காட்டியாறு, 24
கானம் - காடு, 97
கிடுகு - படல், 41
குந்தம் - கைவேல், 41; திவாகரம், புறப்பொருள் வெண்பா மாலை, 4, 7; சிறுசவளம் பெருஞ்சவளம் என்பர்
பிங்கலந்தையார்
குருதி - உதிரம், 76; திவாகரம்
குளகு - தழை, 33; 'இலைநுகர் விலங்கின் உணவு' என்பர் திவாகரர்; 'மறி குளகு உண்டன்ன' நாலடியார் 16
குறுநீர் - சிறிய நீர், 58
கூடம் - படங்கு; கூடாரம், 40; பிங்கலந்தை
கூர்ந்த - மிக்கு, 68; தொல்காப்பியம், உயிரியல், 18
கூரை - இல்லின் மேற்பகுதி, 29
கைப்ப - ஊட்ட, 36; தீற்ற, மதுரைக்காஞ்சி, 659
கைய - கையிலுள்ள, 14
கொடுங்கோல் - வருத்துந் தாற்றுக் கோல், 15
கொடுஞ்செலவு - விரைந்து செல்லல், 5
கொண்டென - கொண்டனவாக, 34
கொளீஇ - கொளுத்தி, 48
கோடல் - காந்தள், 15; புறப்பொருள் வெண்பா மாலை, 8, 16
கோடு - மலைமுகடு, மலையுச்சி, 5; பிங்கலந்தை
கோலி - வளத்து, 44; திவாகரம்
கோவலர் - இடையர், 15
சிதர் - துவலை, மழைத்திவலை, 52; பிங்கலந்தை
சிந்திதும்(வடசொல்) - நினைந்தும் 74
கட்டிய - குறித்த, 77; புறநானூறு, 32
சுடர் - கனலி; தீக்கொழுந்து, 85; திவாகரம்
சுரை - திரிக்குழாய், 48; பதிற்றுப்பத்து, 47 ஆம் பாடலுரை
சுவல் - தோள், 14; திவாகரம்
செந்நிலம் - செவ்விய நிலம், 17
செறி - நெருங்கின, 93
செறிவு - நெருங்குதல், 59; பிங்கலந்தை
சேண் - தொலைவு, நீளம், 25; திவாகரம்
ஞாண் - நாண்; கயிறு, 63; பதிற்றுப்பத்துரை, 60
தட - பெரிய, 2; 'தடவுங் கயவும் நளியும் பெருமை' தொல். உரி. 24
தபு - கெடு, 81: திவாகரம்
தழீஇய - சூழ்ந்த, 24
தாம்பு - தாமணி, 12; திவா.; கயிறு, பிங்கலந்தை.
தாழ் - தங்கும், 78; 'தாழ்தல் - தங்குதல்' அடியார்க்கு நல்லாருரை, சிலப்பதிகாரம், 4
தானை - சேனை, 10; காலாட்படை, திவாகரம்
திங்கள் - மாதம்; ஆவணி மாதம், 100
திண் - வலிய, 46; திவாகரம்
திரி - முறுக்குண்ட, 99
திரு - அழகு, 63; பரிமேலழகருரை, திருக்குறள், 1011; ஞானாமிர்த உரை, 22; பேராசிரியருரை,
திருச்சிற்றம்பலக் கோவையார் 1
திருத்தி - செவ்விதாக்கி, 71, 78; புறநானூற்றுரை, 17
திறை - கப்பம், அரசிறை, 19; திவாகரம்
துகில் - பெரும்பாலும் வெள்ளிய ஆடையினை உணர்த்தும், 53; பரிபாடல் 10 ஆஞ் செய்யுளிலுங் காண்க;
'துகில் வெண்மை செம்மை இரண்டற்கும் பொது' என்பர் நச்சினார்க்கினியர், சீவகசிந்தாமணி, 34
துமிபு - அறுத்து, 72; திவாகரம்
துமிய - அற்றுவிழ, 70; துணிபட, பிங்கலந்தை; புறநா. 19
துயர் - துன்பம், 80; திவாகரம்
துயில் - உறக்கம், 80
துரக்கும் - செலுத்தும், 102; புறநானூறு, 8
துனை - விரைவு, 102; தொல். உயிரியல் 17
தூங்கல் - தூக்கமயக்கம், 53
தூஉய் - தூவி 10
தூணி - அம்புபெய் கூடு, 39; திவாகரம்
தெவ்வர் - பகைவர், 18; 'தெவ்வுப் பகையாகும்' தொல். உரி. 50
தேம் - மதநீர், 31; தித்திப்பு, பிங். தென், 71; தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 46
தொடர் - சங்கிலி, 62; புறநா. 74
தொடி - கைவளை, 45; பிங்.
தொடுத்த - கட்டப்பட்ட, 12; 'தொடுகழன் மன்னன்' என்பதனுரையுங் காண்க. புறப். வெண்., பாடாண், 9
தொழுது - கும்பிட்டு, 10, 56; பிங்கலந்தை
தோடு - தொகுதி, பூவின் இதழ், 36; திவாகரம்; புறநானூறு, 238, 22
தோய்த்து - நனைத்து, ஊற வைத்து, 37
தோல் - கேடகம், பரிசை, 72; புறநானூறு, 4, 16; தோற்பலகை, திவாகரம்
தோன்ற - விளங்க, 56
தோன்றி - செங்காந்தள், 96; திவாகரம்
நகை - ஒளி, 78; பிங்கலந்தை
நசை - விருப்பம், 67
நடை - ஒழுக்கம், 53; பிங்க.
நந்துதல் - கெடுதல், 49, தழைத்தல், 97; ' நந்தல் கேடும் ஆக்கமுமாகும்' என்பது திவாகரம்
நறு - நல்லமணம், 9
நன்னர் - நன்மை, 17; திவாகரம்
நனந்தலை - அகன்ற இடம், 1; தொல்., உரி. 78
நாப்பண் - நடு, 43; பிங்கலந்தை
நாற்றி - தொங்கவிட்டு, 39
நாழி - அளக்குநாழி; படி, 9; பிங்கலந்தை
நாறும் - மணக்கும், 25; இப்பொருட்டாதல் ' நாற்ற நாட்டத்து' என்புழியுங் காண்க, புறநானூறு, 70
நிமிர்ந்த - உயர்ந்த, 3
நிரைத்து - வரிசையாக வைத்து, 41; பட்டினப்பாலை, 78
நிலை - தன்மை, 38; திவாகரம், நிற்குந்தன்மை எனினுமாம்
நிழத்திய - நுணுகிய; ஓசை அடங்கிய, 50; தொல்., உரி., 34
நிறை - 'மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதல்' என்பர் நச்சினார்க்கினியர், நெய்தற்கலி
உரை 16
நுதல் - நெற்றி, 33
நுனை - முனை, 36, 73; புறநானூறு 42
நெகிழ்ந்து - கழன்று, 84; திருக்குறள், 1236
நெடிது - நீள, 76; நெடுங்காலம், திருக்குறள், பரிமேலழகருரை, 562
நேமி(வடசொல்) - சக்கரம், 1
நேர்பு - உடன்பட்டு, 44
நோன் - வலிய, 77
பகழி - அம்பு, 74; திவாகரம்
பசலை - பசிய நிறம், மிக்க இலமைத் தன்மைக்குரியது 12; ' நெருஞ்சிப்பசலை வான்பூ' என்புழியுங்
காண்க. புறநானூறு, 155
படம் - சட்டை; குப்பாயம், 66; 'குப்பாய மிலேச்சனை' என்றார் சீவகசிந்தாமணியிலும், 431
படார் - சிறுதூறு, 51
படிவம் - தவவேடம், விரதம் எனினுமாம், 37; 'படிவம் வேடம்' புறப்பொருள் வெண்பாமாலை உரை, 9, 42;
விரதம், பதிற்றுப்பத்து, 74; பரிபாடல், 5, 75
படுநீர் - ஒலிக்கும் நீர், 28; படுமணி - ஒலிக்கும் மணி, புறப்பொருள் வெண்பா மாலை, வெட்சி, 6
படை - படைக்கலம்; வாள், 77; பிங்கலந்தை
பதைப்பு - பதைத்தல், 70; மெலிவுறுதல், பரிபாடலுரை 10
பயிற்றி - பலகாற் கூறி, 35; புறநானூற்றுரை, 34
பரந்த - அகன்ற, பரவிய, 28
பரி - குதிரை, 102; திவாகரம்
பருகி - குடித்து, 4
பருவரல் - துன்பம், 21; திவாகரம்; துயரம், புறப்பொருள் வெண்பா மாலை உரை, கைக்கிளை, 7
பரூஉ - பரிய; 70, 85
பள்ளி - படுக்கை, 64, 75; பிங்கலந்தை
பனிக்கடல் - குளிர்ந்த கடல், 4
பனிக்கும் - நடுங்கும், 79; புறநானூறு, 5
பாசறை - பாடிவீடு, 79; புறநானூறு, 31
பாடி - பாசறை, 28; படைவீடு, திவாகரம்
பாடு - ஒலி, 4; திவாகரம்
பாவை - பிரதிமை, 85
பிடவம் - நறுமணங் கமழும் வெள்ளிய பூக்களையுடைய ஒரு காட்டுச் செடி, 25; மணிமேகலை, 3, 163;
பதிற்றுப்பத்து, 66; ஐங்குறு. 435, 461; குறிஞ்சிப்பாட்டு, 78
பிடி - பெண்யானை, 69; திவாகரம்
பிறக்கு - பின், 101; புறநானூற்றுரை, 15; 'பிறக்கடி ஒதுங்கா' என்றார் பதிற்றுப்பத்து, 80
புக்க - புகுந்த, இட்ட, 60
புணர் - கூடின, 61
புனரி - கடல், 28; திவாகரம்
புதல் - சிறுதூறு, 25
புரிசை - மதில், 27; புறநானூறு, 17
புலம் - இடம், 90; திருக்குறளுரை 43
புலம்பு - தனிமை, 23, 81; தொல். உரி. 35
புலித்தொடர் - புலிச்சங்கிலி, 62
புழை - சிறுவாயில், 26; திவாகரம்
புறவு - முல்லைநிலக் காடு, 24; பிங்கலந்தை
புன் - துன்பம், 6; இப்பொருளில் 'புன்கண்' என்னுஞ் சொல் 'புன்' என நின்றது.
புனை - கைசெய்த, அழகு செய்த, 62; புறநானூறு 14
பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர், 11
பெருமூதாளர் - காவற்ரொழிலிற் பெரிது முதிர்ந்தோர், 54; பெரிய முதுமையுடையோர், புறநானூறு, 243
பொறித்த - வைத்த, 2
மஞ்ஞை - மயில், 84; திவாகரம்
மடம் - மென்மை, 99; புறநானூற்றுரை, 23
மண்டு - மிக்குச் செல்லும், 67; புறநானூற்றுரை, 6; 'மேற்கொண்டு' புறப்பொருள் வெண்பாமாலையுரை, 6,
10
மணி - ஓசைமணி; கண்டை மணி, 50; பிங்கலந்தை; பளிக்கு மணி, 66; திருக்குறளுரை, 1273
மத்திகை - குதிரை சம்மட்டி, 59; திவாகரம்
மருங்கு - பக்கம், 7
மருப்பு - கொம்பு, 4, 99
மறிந்து - மடங்கி, 59; 'கீழ் மேலாய்' என்பர் புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரர், 7, 9;
நச்சினார்க்கினியர் 'வடிம்பு தாழ்ந்து' என்பர்
மா - திருமகள், 2, பெரிய, 87, திவா; குதிரை, 74, 10; பிங்கலந்தை
மாட்ட - கொளுத்த, 49; புறநானூறு, 19
மாட்டி - அழித்து, 26; புறப்பொருள் வெண்பா மாலை உரைகாரர் 'மாளப் பண்ணி' என்பர்.
மாடம் - அழகிய வீடு, 86; 'மாடு' என்னும் முதனிலையிற் பிறந்த சொல்
மாண் - மாட்சிமைப்பட்ட, 62
மாயோள் - கரிய நிறத்தை உடையோள், மாந்தளிரின் நிறத்தை உடையோளெனினுமாம், 21; 'மாமை'
நிறத்தையுணர்த்துமென்பர்' திவாகரரும், புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரரும்
மால் - மாயோன், கரிய நிறத்தினன் என்பது சொற்பொருள், திவாகரம்
மிடைந்து - நெருங்க, 2
முடங்கிறை - முடங்கு இறை; மூட்டப்பட்டு வளைவாய் இருக்கும் வீட்டிறப்பு, என்றது நீர் விழுங் கூடல்வாயை, 87;
திவாகரம்; 'உழவினார் கைம்மடங்கின்' என்னுந் திருக்குறளில் மடங்குதல் இப்பொருட்டாதல் காண்க.
முற்றம் - முன்இடம், 30; புறநானூறு, 170
முல்லை - காட்டு மல்லிகைக் கொடி, 9, திவாகரம்
முறி - தளிர், 94; திவாகரம்
முனை - பகைவரிடம், 19; 'வேற்றுப்புலம்' புறப். வெண். உரை, வெட்சி 17
மூதூர் - பழைய ஊர், 7
மூழ்கல் - அழுந்தல், 7; பரிபாடலுரை, 9
மெய்ப்பை - ச்ட்டை, 60; திவாகரம்
மையல் - மயக்கம், 8; பிங்கலந்தை
யவனர் - சோனகர், 61; திவாகரம். (Ionians or Greeks)
யாக்கை - உடம்பு, 61
யாத்த - கட்டிய, 2
யாழ் - ஒர் இசைக்கருவி, 8
வதியுநன் - தங்குகிறவன், 80; திவாகரம்.
வயிர் - ஊது கொம்பு, 92; திவாகரம்.
வரி - வரிந்துகட்டு; நிறம் எனினுமாம் 47
வலம் - வெற்றி; வென்றி, 71; திவாகரம்.
வலம்புரி - ஓர் உயர்ந்த சங்கு, 2; ஆயிரஞ் சங்கு சூழத் திரிவது வலம்புரிச் சங்கு என்பர்;
சீவகசிந்தாமணி ''வரிசளை சூழும் வலம்புரி'' என்பதன் உரையைக் காண்க, 210
வலன் ஏர்பு - வலமாக, 4; வலன்நேர்பு - வெற்றிக்கு ஒத்து, 91; நேர்பு - ஒத்து, பரிபாடலுரை, 19
வள்ளி - கிழங்கு தருகொடி, 101; பிங்கலந்தை
வளி - காற்று, 51
வளை - சங்கு, 92; திவாகரம்.
வளைஇ - வளைத்து 1
வளைஇய - சூழப்பட்ட, 59; புறநானூறு, 61
வன்கண் - கொடுமை, 61; தறுகண்மை, புறநா. அருளின்மை, அசைவின்மை, திண்மை, திருக்குறள்
பரிமேலழகருரை, 189, 92
வாங்கு - வளைத்த, 40; வளைந்த, 42, 92; பிங்கலந்தை; வாங்கிய - வளைத்த 94
வாய்த்த - தப்பாமற் பெற்ற, 98; புறப். வெண்பாமாலை 8
வாய்த்து - தப்பாமற் கழித்து, புறப். வெண்பாமாலை, வாகை
வாய்ப்புள் - நற்சொல், விரிச்சி, 18; புறப். வெண்பாமாலை பொது, 11
வாய்வது - உண்மை, 20
வானம் - மழை, 98; திருக்குறள் 19
விசயம்(வடசொல்) - வெற்றி, 91; பிங்கலந்தை
விரவு - கலந்த; சேர்ந்த, 47; புறநானூறு, 152
விரிச்சி - நற்சொல், 11; இப்பொருட்டாதல் ''ஆடமைத் தோளிவிரிச்சியுஞ் சொகினமும்"
என்பதனுரையிலுங் காண்க, புறப். பொருள் வெண்பா மாலை, பொது, 11
விளக்கம் - விளங்கு, 9; 'குடியென்னுங் குன்றா விளக்கம்', திருக்குறள், 901
வீ - மலர், 9
வீங்கு - புடைக்கும், 59
வெருவரும் - அச்சம் வரும், 60; திவாகரம்
வெலீஇய - வெல்லுதற்கு, 57
வேட்டு - வேடு, வேட்டுவச் சாதி, 26; சிந்தாமணி 446
வேழம் - யானை; களிற்றியானை, 69; திவாகரம்
வை - கூர்மை, 7; 'வையே கூர்மை' தொல்காப்பியம், உரியியல், 61
வையகம் - நிலவுலகம், 57; 'வையகமும் வானகமு மாற்றலரிது' என்றார் திருக்குறளிலும்