Literary Works of Bharathidaasan : "tamiziyakkam" by pAvEntar pAratitAcan
in Tamil script, unicode/utf-8 format
தமிழியக்கம் (ஒரு கவிதைத்தொகுப்பு)
பாவேந்தர் பாரதிதாசன்
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation & Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This page was first put up on August 29, 2000
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது. சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36
தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37
நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகல்கின்ற பலஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்டம் செய்தால் அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம்? அல்லாக்கால் அமைதி யுண்டோ? 38
தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை, வாழ்வு தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்! சுமைசுமையாய் அரசியல்சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய? 39
கழகத்தின் கணக்காயர், தனிமுறையிற் கல்விதரும் கணக்கா யர்கள், எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக் கணக்காயர், எவரும், நாட்டின் முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக் கருத்துடனும் உழைப்பா ராயின் அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்; அவள்மக்கள் அடிமை தீர்வார்! 71
நற்றமிழில் தமிழகத்தில் நல்லெண்ணம் இல்லாத நரிக்கூட் டத்தைக் கற்றுவைக்க அமைப்பதினும் கடிநாயை அமைத்திடலாம்! அருமை யாகப் பெற்றெடுத்த மக்கள்தமைப் பெரும்பகைவர் பார்ப்பனர்பால் அனுப்போம் என்று கொற்றவர்க்குக் கூறிடவும் அவர்ஒப்புக் கொண்டிடவும் செய்தல் வேண்டும். 72
தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள் எழுத வேண்டும். தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள் நாடகத்தில் படக்கதையைத் தமிழர் எல்லாம் இமைப்போதும் பார்த்திடுதல் இனியேனும் நீக்கிடுதல் வேண்டும். யாவும் அமைப்பானும் செந்தமிழன் அதைக்காண்பா னுந்தமிழன் ஆதல் வேண்டும். 87
தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டை யெல்லாம் கண்டறிந்தபடி அவற்றை மக்களெலாம் மறுக்கும்வணம் கழற வேண்டும். வண்டுதொடர் மலர்போலே மக்கள்தொடர் ஏடுபல தோன்றும் வண்ணம் மண்டுதொகை திரட்டி,அதை ஏடெழுத வல்லார்பால் நல்க வேண்டும்! 109
ஆங்கிலத்துச் செய்தித்தாள் அந்தமிழின் சீர்காக்க எழுதல் வேண்டும். தீங்கற்ற திரவிடநன் மொழிகளிலே பலதாள்கள் எழுதல் வேண்டும். ஓங்கிடநாம் உயர்முறையில் நாடோறும் கிழமைதொறும் திங்கள் தோறும் மாங்காட்டுக் குயிலினம்போல் பறந்திடவேண் டும்தமிழ்த்தாள் வண்ணம் பாடி! 110
----------
23. பெருஞ்செல்வர்
கோயில்பல கட்டுகின்றீர் குளங்கள்பல வெட்டுகின்றீர் கோடை நாளில் வாயிலுற நீர்ப்பந்தல் மாடுரிஞ்ச நெடுந்தறிகள் வாய்ப்பச் செய்தீர். தாயினும்பன் மடங்கான அன்போடு மக்கள்நலம் தாவுகின்றீர். ஆயினும்நம் தமிழ்நாட்டில் செயத்தக்க தின்னதென அறிகி லீரே. 111
தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், அறிவுயரும் அறமும் ஓங்கும். இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும். தமிழுக்குப் பொருள்கொடுங்கள் தமிழறிஞர் கழகங்கள் நிறுவி டுங்கள். தமிழ்ப்பள்ளி கல்லூரி தமிழ்ஏடு பலப்பலவும் நிலைப்பச் செய்வீர்! 112
நேர்மையின்றிப் பிறர்பொருளில் தம்பெயரால் கல்லூரி நிறுவிப் பெண்ணைச் சீர்கெடுத்தும் மறைவழியாய்ச் செல்வத்தை மிகவளைத்தும் குடி கெடுத்தும் பார்அறியத் தாம்அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில் வேர்அறுந்த நெடுமரம்போல் வீழ்ந்தும்அவன் விட்டதுவே வழியாம் என்றும் 113
அறத்துக்கு நிறுவியதை வருவாய்க்கென் றாக்குவதில் அறிவு பெற்ற மறப்பார்ப்பான் செந்தமிழ் மாணவரைக் கெடுத்தாலும் எதற்குமே வாய் திறக்காமல் தாமிருந்தும் செந்தமிழ்க்குப் பாடுபடல் போல் நடித்தும் சிறப்பார்போல் இல்லாது செந்தமிழ்க்கு மெய்யுளத்தால் செல்வம் ஈக. 114
சிங்கங்கள் வாழ்காட்டில் சிறுநரிநாய் குரங்கெண்கு சிறுத்தை யாவும் தங்கிநெடுங் கூச்சலிடும் தன்மைபோல் தமிழ்நாட்டில் தமிழே யன்றி அங்கங்கே அவரவர்கள் தம்மொழிக்கும் பிறமொழிக்கும் ஆக்கம் தேடி மங்காத செந்தமிழை மங்கும்வகை செய்வதற்கு வழக்கும் சொல்வார். 115
24. மற்றும் பலர்
அச்சகத்துத் தமிழர்க்கோ அருந்தமிழில் அன்பிருந்தால் அச்சி யற்றும் எச்சிறிய அறிக்கையிலும் நூற்களிலும், எதிர்மொழியை உடையவர் நீக் கச்சொல்ல லாமன்றோ? எண்எல்லாம் தமிழினிலே உண்டோ என்றால் மெச்சுகின்ற ஆங்கில எண் அல்லாது வேறில்லை என்கின் றாரே! 116
கலைச்சொல்லாக் கத்தாரே கல்வியினால் நீர்பெற்ற அறிவை யெல்லாம் தலைச்சரக்காம் தமிழ்ச்சரக்கைத் தலைகவிழ வைப்பதற்கோ விற்கின் றீர்கள்? மலைச்சறுக்கில் இருக்கின்றீர் மாத்தமிழர் கண்திறந்து வாழ்வுக் கெல்லாம்
நிலைச்சரக்கைக் கண்டுகொண்டார் நெடுநாளின் விளையாட்டை நிறுத்த வேண்டும். 117
அரசினரும் பெரியநிலை அடைந்தவரும் அறிந்திடுக! மக்கள் நெஞ்சில் முரசிருந்து முழங்கிற்றுத் தமிழ்வாழ்க! தமிழ்வெல்க! என்றே முன்னாள் அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சிசெயும் ஆட்கள் யாரும் எரிசருகு!தமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீ!தீ!! 118
கடவுள்வெறி சமயவெறி கன்னல்நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே! இடைவந்த சாதியெனும் இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம் தாய் தாய் தாயே! கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல் கழறிடுக தமிழ்வாழ் கென்று! கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 119