pm logo

tirumalaiANTavar kuRavanjci
(in Tamil Script, Unicode format)

திருமலையாண்டவர் குறவஞ்சி



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation & Proof Reading : Mr. & Mrs.V. Devarajan, Durham, NC, USA
PDF and HTML versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etxt in Tamil scrip in Unicode encoding.
This page was first put up on May 11, 2001

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திருமலையாண்டவர் குறவஞ்சி
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)

Note:
This text has been entered from 1995 edition (second edition) of the book by this name published by U.Ve. Swaminatha Aiyar Library.
This contains only the verse (moolam) and not the meaning / commentary in the book.
It is not known who is the author of this work. The deity on whom this poem has been sung is Muruga situated on the hill in the town PANPULI in Tirunelveli district. Last few verses are missing.
--------

பாயிரம்

காப்பு

உச்சிக் கணபதி
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

சீர்தங்கு பண்பை யூர்வாழ் திருமலை முருக னீபத்
தார்தங்கு புயவேண் மீது தமிழ்க்குற வஞ்சி பாட
ஏர்தங்கு கமலம் பூத்த விறையவன் முதலோர் போற்றும்
கார்தங்கு மேனி யுச்சிக் கணபதி காப்ப தாமே. ....1

சுந்தரேசுவரர்

சந்திர வதனந் தன்னிற் றருகயற் கண்ணி வேட்ட
சுந்தரே சுரன்பொற் பாதத் துணைக்கம லத்தை நித்தம்
சிந்தையா னினைந்து வாழ்த்தித் திருமலைக் குவட்டின் மீது
வந்தருள் கந்த வேண்மேற் குறவஞ்சி வழுத்த லுற்றாம். ....2

திருமால் முதலியோர்

நிலவுவந் துலவுஞ் சோலை நிறைதிரு மலைமேல் வந்து
குலவிய குமரன் மீது குறவஞ்சித் தமிழைக் கூற
மலர்தரு திருவை வேட்ட மாலுநான் முகனு மேவும்
கலைவளர் மாது மென்பார் கருணைதந் தருளுவாரே. ....3

நால்வரும் அகத்திய முனிவரும்

நற்றமிழ்க் காழி வேந்த னாவினுக் கரச னாரூர்ப்
புற்றிடங் கொண்டார் தோழன் வாதவூர்ப் புனித னல்ல
சொற்மிழ் முனிவன்றங்க டுணைப்பதப் போதை வாழ்த்திக்
கொற்றவேற் குமரன் மீது குறவஞ்சி கூற லுற்றாம். ....4

அவையடக்கம்

அரவணி பரம னீன்றோ னருட்டிரு மலைமே னின்ற
குரவணி குமரன் மீது குறவஞ்சித் தமிழ்நான் பாடி
விரவுசொற் புலவோர் தம்முன் விளம்புவே னென்ற செய்கை
இரவியா யிரத்தின் முன்ன ரிலகுமின் மினிபோ லாமே. ....5

மணிதனின் மாசு கண்டான் மாசினை மாற்றித் தங்கப்
பணிதனி லணிவர்நல்லோர் பான்மையென் றெண்ணி நெஞ்சத்
துணிவினாற் சிறியோன்பாடுஞ் சொற்குற வஞ்சி தன்னைக்
குணமெனக் கொள்வார் கற்றோர் குகன்புகழ் கூற லாலே. ....6

நூல்

கட்டியக்காரன் வருகை

நீர்தங்கு கமல மாது நிறைதிரு மலையின் மீது
சீர்தங்கு குமர நாதன் சிகரமே லுலவுங் காட்சி
பார்தங்கு வீதி வந்த பவனியெச் சரிக்கை பாடக்
கார்தங்கு முழக்கங் காட்டுங் கட்டியக் காரன் வந்தான். ....7

எச்சரிக்கை

(சிந்து)

திருமருவு தருமேவு தேவர்முத லோர்கடமைச்
      சிறைவிடுத்துக் காத்தருள்செய் செல்வாவெச்சரிக்கை - செய செய
மருமலர்ச்செங் காவிமலை வாலசுப்ரமணியா
      வடிவேற் கரக்குமரா வரதாவெச்ச ரிக்கை - செய செய
தமிழ்மதுரைப் பாண்டியன்முன் சபையதனில் வாதுசெய்து
      சமணர்களைக் கழுவேற்றுஞ் சதுராவெச்ச ரிக்கை - செய செய
அமரர் கிளை வாழவைத்தே யசுரர்கிளை தாழவைத்த
     அலர்க்குவளைத் திருமலைவா ழண்ணலேயெச்ச ரிக்கை - செய செய. ....8

முருகக் கடவுள் பவனி வருதல்

(எண்சீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்)

பூவனிதை தனக்கழகார் வதன மான
      புண்டரிகப் போதனைய பண்பை மீதே
மேவுபொருட் டனையதிரு மலையின் மேலே
      விளங்கியமுத் தெனச்சிறந்த வேற்கைநாதன்
தாவுமயி றனிலேறி யனந்த கோடி
     சரற்கால சந்திரன்போற் றழைத்துத் தோன்றித்
தேவர்கண முடுக்கணம்போற் சேனை சூழத்
      திருவுலாப் பவனிவந்து சிறக்கின் றானே. ....9

(சிந்து)

பல்லவி

மயிலில் வந்தனனே - திருமலைக்குமரன்
      மயிலில் வந்தனனே. (மயிலில்)

அநுபல்லவி

செயல்மிகுந்திடு மயில்விளங்கிய தினகலர்பலர் நிகரவே
புயமிலங்கிய குரவலங்கல்வெண் பொடியலங்க்ருத மிலகவே (மயிலில்)

சரணங்கள்

வித்தியாதரர் கருடர்கின்னரர்
      வீணையின்னிசை முழங்கவே
சித்தர்யோகியர் திக்குப்பாலர்கள்
      செயசெயென்றொலி முழங்கவே
முத்தமிழ்த்திருப் புகழிசைத்திட
      மூவர்பாடல்கள் விளங்கவே
மத்தளமந்தவில் பேரிசல்லரி
      மங்கலத்தொலி தழங்கவே (மயிலில்)

பவளமொய்த்தவெண் முத்துக்குடைகளும்
      பாங்கரெங்கணும் பிடிக்கவே
கவளயானையின் வாசியின்னொலிகளாய்க்
      ககனவண்டமும் வெடிக்கவே
தவளவாணகை வானரம்பையர்
     தாதத்தாவென நடிக்கவே
காலைகூர்ந்துவெஞ் சூரர்தங்கிளை
      கலங்கியேநெஞ்சு துடிக்கவே. (மயிலில்) ....10

தரிசித்த மாதர்நிலை

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

அயிலேறு திருக்கரத்தா னல்லேறு குவளைமலை
      அண்ணல் தோகை
மயிலேறிப் பவனிவரக் கண்டுமட வார்தங்கள்
      மனமா லேறிப்
புயலேறு குழல்சரியப் பூவேறு வண்டிசைக்கப்
      பொற்பூண் மின்னக்
கயிலேறு வளைசரியப் பருவமின்னா ரெவரும்வந்து
      கருதுவாரே. ....11

(சிந்து)

தோகை மயின்மிசை மேவுங் குமரனைக் கண்டு - மன
      தோகை யுடன்மயிற் சாயலன் னார்மயல் கொண்டு (1)
ஓகை தருபர மேகர னேயிவ ென்பார் - அவற்
      கோங்கு மழுமான்கைத் தாங்குந்துடி யெங்கே யென்பார். (2)
தேகமை மேகத் திருநெடுமாலிவ னென்பார் - என்னிற்
      செங்கையி லாழியுஞ் சங்குஞ் சிறக்குமே யென்பார். (3)
மாகம் புகழும் பிதாமக னாமிவ னென்பார் - அன்ன
      வாகன முத்தமிழ் வாணியும் பூணுமே யென்பார். (4)
மேகந் தவழுந் திருமலை மேவிய வேலன் - எங்கள்
      வித்தகன் முத்துக் குமர சுவாமி யென்றார். (5) ....12

காமவல்லி வருதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

திருமலை வேண்முன் சென்று சேர்கலை வையுஞ் சோர்ந்து
பெருமயல் கொண்டு காமப்பேய் தொட விரகத் தீயை
ஒருமலைத் தென்றன் மூட்ட வுருவிலி நாணைப் பூட்ட
மருமலர்க் குழல்சேர் காம வல்லியாஞ் செல்வி வந்தாள். ....13

காமவல்லியின் வருணனை

(சிந்து)

இருண்மங்குன் மிகவந்து குடிகொண்டு நிறைகின்ற
      குழலினாள் - கதிர்
எழுபொன்க டிகைசந்த்ர திலகஞ்செய் நுதலென்ற
      எழிலினாள். (1)
கருவண்டு கடுவண்டு குழைகண்டு பொருகெண்டை
      விழியினாள் - நல்
கனியின்சொ லமுதுண்டு பயில்கின்ற கிளியென்ற
      மொழியினாள். (2)
அருணக் கதிர்துலங்கு மணிபொற் பணிபுனைந்த
      குழையினாள் - குமிழ்
அதனைப் பொருவுதுண்ட மணிமுத் தணிசிறந்த
      வொளியினாள். (3)
கருபொற் பணிபுனைந்து கமுகத் தினையடர்ந்த
      மிடற்றினாள் - நல்ல
தருணப் பருவமங்கை வரையைப் பொருவு கொங்கைத்
      தடத்தினாள். (4)
இரவுக் கதிபனென்ற வயிரத் தொடியிலங்கு
      கையினாள் - மதன்
இனிதுற் றிடுநிதம்ப மரவத் தினிலிசைந்த
      பையினாள். (5)
பெருமைத் துகில்புனைந்து துடிபொற் கொடியிசைந்த
      இடையினாள் - சிறு
பிடியெப் படிநடந்த ததனைப் பொருவுகின்ற
      நடையினாள். (6) ....14

(வேறு)
தேமருவு மெய்யழகு தோணவே
      தேவரம்பை மார்மனது நாணவே
காமரச வல்லியெழில் காணவே
      காதன்மிஞ்சி வேலன்மயல் பூணுமே. ....15

காமவல்லியின் வருகை

பல்லவி

வல்லி வந்தனளே-எழிற்காம
வல்லி வந்தனளே (வல்லி)

அநுபல்லவி

வில்லைப் பொருநுதல் முல்லைக் கிணைநகை
வல்லுத் துணைநகில் செல்விக் கிணையென (வல்லி)

சரணங்கள்

கொங்கை யிணைமத தும்பி யெதிர்த்திட
      கூந்தலிற் றும்பிகள் பாட லொலித்திடச்
செங்க ணெனுந் தும்பி மேலே துளைத்திடத்
      தேனிசை யாடவர் தம்மை வளைத்திட (வல்லி) (1)

சிந்துர ரேகைத் திலகந் திகழ்த்திடச்
      சேல்விழி வேன்மத வேளை யிகழ்ந்திடச்
சந்தன மஞ்சள் சவாது கமழ்ந்திடச்
      சரச விலாசவுல் லாசம் புரிந்திட. (வல்லி) (2) ....16

காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

சோலையின் றலத்தின் வந்த தோழிமா ருடனே கூட
மாலைவார் குழல்சேர் காம வல்லிபந் தடித்து நின்ற
வேலையில் வேலை யேந்தி மெய்யொளி தழைத்த நீலக்
கோலமா மயின்மீ தேறிக் குமரனை வரக்கண் டானே. ....17

காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்

(ஆனந்தக் களிப்பு)

வினா

வித்தார மாமயி லேறிப் - பண்பை
வீதியில் வந்தவ ரார்சொல்லு பெண்ணே (வித்தார)

சித்தாதி சித்தரைப் போலே - உயர்
      தேவர் குழாங்களு மேயொரு காலே
சத்தாதி தாளமுழங்கப் - பேரி
      சல்லரி கண்டைமத் தாளந் தழங்க
முத்தார மாலைகண் மின்ன - அதில்
      முப்புரி நூன்மலர் மாலைகண் மின்ன
மத்தாரந் திங்கள் திகழச் - சென்னி
      வைத்தவன் புத்திர னென்று புகழ (வித்தார) (1)

சீர்மது ரைப்பதி போற்றத் - தென்னன்
      தீப்பிணி தன்னைவெண் ணீற்றினா லாற்றி
நீர்மிசை யேடெதி ரேற்றி - வந்து
      நேர்சம ணர்களை வேரொடு மாற்றிப்
பார்மிசைச் சைவந் தழைக்க - வேறு
      பல்சம யத்தவ ரெல்லா மிழக்கத்
தார்மணச் சோலைச்சீ காழி - வந்த
      சம்பந்த மூர்த்திதன் சாயலைப் போலே (வித்தார) (2)

விடை

திருநகரை வீட்டுசங் காரன் - தன்னை
      நினைத்தோ ருளத்தி னிறைந்தசிங் காரன்
குருமதி சூடுகங் காளன் - தந்த
      குமரன்றெய் வானை குறத்திபங் காளன்
தருமலர் வானவர் பெய்யும் - கும்ப
      சம்பவன் வந்து பதந்துதி செய்யும்
திருமலை முத்துக் குமார - சுவாமி
      செங்கதிற் வேற்கரச் சேவக னம்மா. (3) ....18

காமவல்லி மயல்கொள்ளுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

சீதரன் றிருவன் னார்க டிருமலை முருக னென்ற
போதினின் மயங்கி வீழ்ந்த பூங்கொடி காமவல்லி
மாதைமா னார்கள் கையான் மலரணை மீதே சேர்த்தித்
தாதவர் பனிநீர் பெய்யத் தழலென்று கழல்கின் றானே. ....19

காமவல்லி இரங்கல்


(சிந்து)

மயங்கி னேன்யா னாசை கொண்டேன்
      மயிலில் வந்த வரையுங் காணேன்
புயங்கள் பன்னி ரண்டுங் கண்டேன்
      பூண்டு கொண்ட வளையுங் காணேன்
தயங்கு மாறு தலையுங் கண்டேன்
      தாதி யாறு தலையுங் காணேன்
செயங்கொள் காவித் திரும லைவாழ்
      சேந்த னென்னைச் சேர்ந்திலானே. ....20

காமவல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

தோகைமேல் வந்த வால சுப்பிர மணியன் றன்மேல்
மோகம தாகி யாக முழுதுமே பசந்தேன் றன்மேற்
சிகர வடவைத் தீப்போற் சண்டவெங் காளம் போல
வேகமாய்த் தென்ற லேநீ வெம்புலி யெனப் பாய்ந்தாயே. ....21

(கண்ணிகள்)

சந்தனச் சாரலில் வந்து பிறந்தெழு தென்றலே - தமிழ்
      தன்னிற் பழகியும் வன்மத் துடன்வந்தாய் தென்றலே
செந்தழல் போல்வந்து வந்தெனைக் காயாதே தென்றலே - கொடுந்
      தீய விரகாக் கினியை யெழுப்பாதே தென்றலே
மந்தரக் கொங்கை மலயமென் றெண்ணாதே தென்றலே - என்றன்
      மாலைக் குழன்மலர்ச் சோலையென் றெண்ணாதே தென்றலே
கொத்தலர்ச் சோலைத் திருமலையான்றிரு முன்னமே - சென்று
      கூடிக் குலாவி மகிழச்செய் வாயிளந் தென்றலே. ....22

சந்திரனை நோக்கிக் கூறுதல்


சீதளப் பாற்கடலாரமு தாமெனத் திங்களே - வந்தும்
      தீக்கதி ராய்க்குண மேன்படைத் தாய்தலைத் திங்களே
நீதமன் றேகுருதார மணந்தாயே திங்களே - நெறி
      நில்லாத தாற்பகற் செல்லா தவனானாய் திங்களே
பூதலந் தோருணை யிராமனென் றார்களே திங்களே - கல்லைப்
      பூங்கொடி யாய்ச்செய்த பாங்குனக் கில்லையே திங்களே
மாதுடன் கூடப் பிறந்து மறந்தாயே திங்களே - திரு
      மாமலைக் கந்த சுவாமிமுன் செல்லுவாய் திங்களே. ....23

மன்மதோபாலம்பனம்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

திங்களினான் மதிசோர்ந்தேன் கலைசோர்ந்தேன் கைவளைகள்
      சேரச் சோர்ந்தேன்
அங்கமெலாம் பசந்துநொந்தே னண்ணறிரு மலைவேள்வந்
      தணையா னென்மேல்
மங்குலெனுந் தும்பியின்மேல் வசந்தன்மே லுலவிவரும்
      வசந்தாநீயும்
கொங்கலர்பூங் கணைதெரிந்து பொரநின்றா லென்னவென்று
      கூறுவேனே. ....24

இரதி மன்மதனே - திருமகள்
      ஈன்ற மன்மதனே - வசந்தன்றேர்
      ஏறு மன்மதனே - கருப்புவில்
      ஏந்து மன்மதனே

சரமலர் மதனே - மதிக்குடை
     தனில்வரு மதனே - பேதையர்
      தமைப்பொரு மதனே - பொருவது
      தான்வசை மதனே

உருவிலி மதனே - எனதுடல்
      உருவிலி மதனே - பகைக்கெதிர்
      உயர்சிவன் மதனே - எதிர்ந்தவ
      னோடெதிர் மதனே

வருதிறல் மதனே - உயர்திரு
      மலைக்குக னுடனே- உன்றிறல்
      வன்மையைக் காட்டிக் - கணைமலர்
      மாரிபெய் மதனே. ....25

தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

கன்னல்வார் சிலைமதவேள் கணையினா லுடைந்தேனே
      காவா யென்றாய்
என்னமால் கொண்டவகை யெந்தவகை வந்தவிதம்
      இவைதாந் தந்த
மன்னவரா ரன்னவர்பே ரென்னவென்று மின்னார்கள்
      மறித்துக் கேட்கத்
துன்னுமயிற் காமவல்லி தன்னுடைய மையறனைச்
      சொல்லு வாளே. ....26

(சிந்து)

திருமயிலி லேறிவந்த முருகனைநான் கண்டுகொண்ட
      செய்தியுமால் கொண்டதுவுஞ் செப்புவன்கேள் சகியே
ஒருவேலை வைத்தவனை வருவேலை கண்டவுடன்
      ஒலிவேலை யெனப்பொரவும் பெருவேலை படைத்தாய்

அறுளிலகு மாறுமுக மெய்யனைநான் கண்டுமயல்
      ஆறுதல்கா ணாதொருபோ தாறுமுகமாய்க் கொண்டேன்
மருமனச வாசமலர் முகங்கொள்சகி யேதிரு
      மலைமுருகன் றருமயல்கொண் டுளமெலிந்தேன் சகியே. ....27

தோழி கூற்று

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

வாசத்தார் மலர்ச்செங் காவி மலைக்குமரேசன் றாதை
காசற்றா னிறைச்சி யுண்டான் மாதுவன் கணிச வானோ
பாசத்தாற் கட்டு முண்டான் மருகன்மேற் பாவை நீமால்
பேசத்தான் வழக்கு முண்டோ பெண்மதி பிழையென்றானே. ....28

(சிந்து)

காமரச வல்லிமின்னே திருமலைவேள் தாதை
      கால்கொண்ட பணிதலையிற் கொண்டுசடைப் பட்டே
ஈமமதில் நடமாடு பித்தனவன் செய்தி
      ஈன்றதாய் முழுநீலி தமயன்மண மில்லான்
மாமனென்றா லாயனென்றார் மாடுமேய்த் திருந்தான்
     மையல்தந்த மாப்பிள்ளையோ சீரலைவாய்ச் செட்டி
தாமவன வேடனுறு பிணிமுகமேற் கொண்டும்
      சத்தியெடுத் தேதிரிந்தான் றன்மேல் மால்கொண்டாய். ....29

காமவல்லி கூற்று

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

முருகவேள் குலத்தையெல்லா முற்றிநீ பழிப்புச் சொன்னாற்
பெருமைசே ருலக முன்போற் பேசுமோ பேச வொண்ணா
தருமறை யாலுஞ் சேட னாலுமே யரிதா மேன்மைத்
திருமலை முருகன் கீர்த்தி தெரிந்தது செப்பக் கேளாய். .... 30

முருகவேள் பெருமை

(சிந்து)

அனுராக வல்லி மகமேரு வில்லி
      அருள்தரு புதல்வ னருமறை முதல்வன்
முனமெதிர் சூரன் முனையடு வீரன்
      மும்மதத் தும்பி முகன்றுணைத் தம்பி
சனகாதி வேதன் றுதிஞான போதன்
      அருட்குண சீலன் முனிக்கனு கூலன்
தினைவன வாசம் வளர்வல்லி நேசன்
      திருமலை முருகன் பெருமைய நேகம். ....31

தூது செல்ல வேண்டுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

என்றிவை பலவுங் கூறி யென்பொருட் டாக மின்னே
சென்றுநீ தூதுசொல்லித் திருமலை முருகன் மார்பில்
ஒன்றிய கடப்ப மாலை யுண்மையா வாங்கி யென்பால்
வென்றியாய் வருதல்வேண்டு மென்குலக் கொடிமின் னானே. ....32

பல்லவி

தூதுசொல் லடியோ மானே - விரைவினிற்போய்த்
தூது சொல்லடி மானே (தூது)

அநுபல்லவி

பூதலம் பரவு பண்பை மீதுகந்த நாதன்முன்னே (தூது)

சரணங்கள்

அத்தநா ரீசர்தரு புத்ரன்வடி வேலனொரு
சித்ரமயில் மீதில்வரு முத்தையன் முனமேசென்று (தூது) (1)

இந்த்ரன்முடி சூடவர விந்தன் முத லோற்பரவ
வந்தருள் செய் வேலனெழிற் கந்தன் முனமேசென்று (தூது) (2)

பாவினஞ் சிறந்திலகு சேவலங் கொடிமருவு
காவியங் கிரியின்மிசை மேவுகந்த நாதன்முன்னே (தூது) (3) ....33

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

மறுசமய மானசமண் வஞ்சமய வாதிகளை மறுத்தீ ராறு
பெறுசமய மீதினிலே புறச்சமய மாறகற்றிப் பேச மேலாம்
அறுசமய மானவற்று ளருட் சமயஞ் சைவமென்றே அருள்செய் வேலன்
உறுசமயம் பார்த்துமிக்கா யொருசமயஞ் சொல்லுவன்கேள் உற்று மானே. ....34

(சிந்து)

தேவர்பணி காவிமலை முருகனுக்குப் பூசை
      தினமாறு காலமதி லபிடேகம் நாலு
ஆவலுட னைப்பசியுந் தைமாதந் தனிலும்
      அவனிதொழுந் திருவுலாப் பவனிபெருங் கூட்டம்
மேவியவை காசி விசாகநாள் தன்னில்
      மிக்காக வபிடேக விழாச்சிறப்பு மயிலே
பாவலரும் பூவலரும் பாடலுட னாடலிரு
      பாலிலருஞ் சாயரட்சை கொலுப்பார்க்கும் பொதுக்காண் ....35
ஆகமத்தின் மிக்கான காரணத்தின் படியே
      அருச்சனைசெய் சங்கரநா ராயணெனவே தியனும்
மேகநிகர் காதலன்சொ லாதிசுப்பி ரமணியன்
      மேன்மைபெறு விக்கிரம பாண்டியவே தியனும்
பாகமதில் நின்றுநீ பாராதனை செய்வார்
      பகரவுங் கூடாது காலசந்தி புரிந்தே
ஏகமெனத் தனித்திருக்கும் வேளையிற்றூ துரைத்தே
      எழிற்கடப்ப மாலைதனை வாங்கிவா சகியே. ....36

காமவல்லி கூடற்சழி பார்த்தல்

(கொச்சகக் கலிப்பா)

வேலையணி வேள்குவளை வெற்பின்முரு கேசர்தந்த
மாலைமிகத் தாங்கிமலர் மாலைவரக் காணாமற்
சோலைதனிற் காமவல்லி சோகமுட னேமுயங்கிக்
கோலவிழி நீர்சொரியக் கூடல்வளைக் கின்றாளே. ....37

(சிந்து)

பூமகள்பதி நாமகள் பதியொடு
      புரந்த ரர்தொழ வரந்தரு தயவிறை
பூர்ந்து ணர்க்கடம் பேந்திய மார்பினர்
      போர்செயு மயில்வீரர்
கோமளமுறு சாமளை பாலர்
      குஞ்சரிகுற வஞ்சி மனோகரர்
குருப ரர்குகர் கூடுவ ராமெனிற்
      கூடலே கூடாயோ. ....38

இரங்கல்

(மடக்கு)

ஓங்கி யேவளர சோக மேபசந்
      தோங்கி மேலுற்ற சோகமே
பாங்கு சூழ்ந்த காலை யேமையற்
      பாரம் பாரென் கவலையே
பூங்க னேயஞ் சுகங்க ளேயொரு
      போது தானஞ் சுகங்களே
தேங்கொள் காவித் தடத் துளான்வந்து
      சொர்ந்து தீபங் கொடுத்திலான். ....39

குறத்தி வருகை

(கட்டளைக் கலித்துறை)

கனத்திற் சிறந்த குழற்காம வல்லிதண் காவின்மிசை
இனத்தைப் பிரிந்திடு மான்போன்மயங்கிய வேல்வைதன்னில்
அனத்திற் சிறந்த நடைகாட்டி மாமயி லாமெனவே
வனத்திற் சிறந்த குறத்திமின் னாளங்கண் வந்தனளே. ....40

(நிலைமண்டில வாசிரியப்பா)

தண்கதிர் விரிந்த வெண்கயி லாய
வெற்பினி லுதித்த பொற்பொறு நீலம்
முகிழ்தரு காவி திகழ்திரு மலையான்
மாமணித் திரளும் வன்புலிப் பறழும்
தேமலர்த் தளிருந் தெண்டிரைக் கரத்தால் 5

வானிரு நிதிபோல் மகிழ்ந்திட வுதவி
நானிலம் புரக்கு நன்னதி யாளன்
பொன்னிறத் திருவும் பூந்துணர்த் தருவும்
மன்னிநின் றோங்கு வடவாரிய நாட்டான்
ஆடல்வண் டொலிக்கு மண்டர்க டுதிக்கும் 10

பாடல்வண் டிசைக்கும் பண்பைமா நகரான்
சூர்கிளை நெஞ்சந் துணுக்குற வானோர்
சீர்பெறத் தோன்றுஞ் சிகண்டிவெம் பரியான்
வெண்மதி மருப்பு விளங்கிட முகில்போற்
தண்மத மழைநீர்த் தாரைகள் பெய்யும் 15

வரையென வோங்கி வளர்ந்தவா ரணத்தான்
விரைதரு கடப்ப மென்மலர் மாலையான்
வான்வரை யுயர்ந்த வாரணக் கொடியான்
மேன்மைமும் முரசும் விளங்கிய வாசலான்
அண்டம்யா வையினு மாருயிர் தோறும் 20

கொண்டிடு நிழற்போற் குலவிய வாணையான்
அன்பர்தம் முள்ளத் தின்புறு பெருமான்
அடியனைக் காக்கும் வடிவயிற் குமரன்
வண்புகழ் பாடி வெண்பொடி பூசி
வெஞ்சர விழிமீ தஞ்சனந் தீட்டிக் 25

குன்றென வளர்ந்த கொங்கையின் மீதில்
ஒன்றிய பாசியுங் குன்றியும் புனைந்து
பட்டுடை மருங்கி லொட்டிய கூடையும்
மாத்திரைக் குறிதெரி வேத்திரக் கோலும்
வேல்விழி நயப்பும் பான்மொழி வியப்பும் 30

மேனகை யுருவசி மான்விழி யரம்பை
துதிசெயத் திடமா யதிசயத் துடனே
மால்கொளு மடவார் மனத்துய ரடங்க
மேலணி யுடுக்கும் விளங்கிடத் தொனித்தே
உலகெலாந் துதிக்குந் திலகமா யிலகி 35

மாதர்க ணினைத்த மனக்குறி மூன்று
போதினும் வருங்குறி போங்குறி மெய்க்குறி
வேந்தர்கள் கைக்குறி விரும்பினோர் மொழிக்குறி
பாந்தமாய் வகையாய்ப் பகர்ந்திடுங் குறியே
திறத்துடன் சொல்லுங் குறத்திவந் தனளே. 40 ....41

பல்லவி

குறத்தி வந்தனளே - திருமலைக்
குறத்தி வந்தனளே (குறத்தி)

அநுபல்லவி

மறத்தி யின்சொலை யுறுத்தி மஞ்சுறு
நிறத்தி வஞ்சியர் திறத்தை மிஞ்சிய (குறத்தி)

சரணங்கள்

அல்லை நேர்குழல் கெண்டை போல்விழி
முல்லை வாணகை தொண்டை வாயிதழ்
வில்லை நேர்நுதல் கண்டு போன்மொழி
செல்வி போலெழில் கொண்டு மேவிய (குறத்தி) (1)

தங்க மலைநிகர் கொங்கை யணிபணி
      தங்கி யொளிகள் விளங்கவே
செங்க ணடுகுழை திங்க ளொளிநிகர்
      செங்கை யணிவளை முழங்கவே
அங்க மிலகிய சிங்க நிகரிடை
      அங்க ணணிதுகில் துலங்கவே
தொங்க லணிகுழன் மங்குல் செறிதரு
      துங்க விரதி மயங்கவே. (குறத்தி) (2) ....42

(கொச்சைக் கலிப்பா)

சித்தர்பணிந் தேத்தவருஞ் செவ்வேள் குவளைவெற்பிற்
கொத்தலருங் கூந்தற் குறத்திமதி யானனத்தில்
முத்தை நிகர்த்த முகிழ்ப்பவள வாயிசைதான்
புத்தமுதோ தேனோ புகலவரி தென்றாரே. ....43

பல்லவி

குறிசொல்ல வந்தாளே - குறத்தி
குறிசொல்ல வந்தாளே (குறி)

சரணங்கள்

உறுகாம வல்லி பெறுகாம நோயால்
மறுகாமல் மாலை கருகாமல் மேவக் (குறி) (1)

கிஞ்சுக மலர்வா யஞ்சுக மொழியாள்
நெஞ்சறு மயற்கே சஞ்சீவி போலக் (குறி) (2)

வருவிட விழியா ளிருகுட முலையாள்
பெருகிய மயல்தீர் முருகனை மேவக் (குறி) (3) ....44

காமவல்லி குறத்தியை வினாவுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

செந்திரு நிறைந்த பண்பைத்
      திருமலைக் குவட்டில் வாழும்
கந்தவேள் புகழைப் பாடிக்
      கலைமதி போலே தோன்றி
வந்திடுங் குறத்தி தன்னை
      வளர்காம வல்லி நோக்கி
விந்தையாய் வந்தா யெந்த
      வெற்புநீ விளம்பென் றாளே. ....45

குறத்தி மலைவளம் கூறுதல்

(சிந்து)

கோங்கமெனுங் கன்னிமுலைக்கொங்குமுகி ழரும்பக்
      கொழுநனெனும் வேங்கைமலர்ப் பொன்சொரிந்து விரும்பப்
பாங்குசெம்பொன் வாங்குகைபோற் காந்தண்முகிழ் விரியப்
      பாந்தவர்கள் போல்வண்டு தூதுசொல்லித் திரிய
மூங்கிலெனுங் கிளைகண்முத்த மூரல்தனை வழங்க
      முறைமுறையே வாத்தியம்போன் மும்மதமா முழங்கத்
தேங்கமழு மலர்ப்பணைகள் தாங்குபொழி லோங்கும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே. (1)

சந்திதொறுஞ் சிந்தமுத்த மீந்தெனக்கால் வீசும்
      சாதிகிளை மீதுகிளி வேதமுறை பேசும்
மந்திகனி கொண்டுமத தந்தியின்மேற் சாடும்
      வானுலகின் பூவெடுத்துக் கானவர்கள் சூடும்
அந்திதொறு மைந் துவகைத் துந்துபிகண் முழக்கும்
      ஆற்றொலிதென் காற்றொலிவான் மேற்றிசையைப் பிளக்கும்
செந்தமிழ்மா முனிமகிழ்ந்து சந்ததமும் போற்றும்
      செங்குளைத் திருமலைதா ளெங்கண்மலை யம்மே. (2)

பூவின்மதுக் குடித்துவண்டு மேவியிசை படிக்கும்
      பொங்குமத தும்பியும்பர் மங்குறனைப் பிடிக்கும்
காவின்மிசை யெங்கள்குலப் பாவையர்கள் கூட்டம்
      காத்திருந்து வேன்முருகர் பார்த்தருளு நாட்டம்
வாவிதனிற் றினங்குவளைப் பூவின்முகி ழரும்பும்
      மண்ணவரும் விண்ணவரு நண்ணிமிகத் துதிக்கும்
தேவர்முதன் மூவர்களு மாவலொடு போற்றும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே. (3)

மண்ணின்வரு கண்ணெனவே வந்துவௌி பார்க்கும்
      வானுலகுக் கேறிவரு மேணியெனச் சேர்க்கும்
தண்ணளியால் மண்மடந்தை தன்கையென வளர்ந்து
      தண்ணிலவின் மறுத்துடைக்குந் தகைமையெனக் கிளர்ந்து
விண்ணுலவும் பெண்ணினங்க ளேறிவிளையாட
      மேன்மையென வோங்கியெழில் வாய்ந்தகழை யாடும்
திண்ணமுறும் யானைமதம் வீழருவி யிறைக்கும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கள்மலை யம்மே. (4)

ஆனைமருப் பென்னும்வெள்ளி வேலிபுடை துதைப்பார்
      அதனடுவில் வேடர்பொன்போற் செந்தினையை விதைப்பார்
கானமரை பாய்ந்தெழுந்து வானினதி தோயும்
      கார்முகிலை வேழமெனக் கோளரிமேற் பாயும்
தானமத மாமுழக்கக் குன்றமெதிர் முழக்கும்
      தருகுறவர் வில்லொலியுஞ் சில்லொலியுங் கிளக்கும்
தேனுலவு மஞ்சரியிற் சஞ்சரிகம் பாடும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே. (5)

குரவமெனும் பாவைதனக் கழகுமணம் பேணிக்
      குறவர்சிறு மகளிர்நவ மணிகளதிற் பூண
அரவமது பணம்விரித்து மணிவிளக்குப் பிடிக்க
      ஆவலுடன் மயினடிக்கப் பூவைகவி படிக்க
விரவிமுகின் முழவதிர மதுதாரை வார்க்க
      வேட்டமண வாளனென மென்றளிர்க்கை யேந்தித்
திரமுறவே தினந்தோருங் கலியாணஞ் சிறக்கும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே. (6)

கனகவரை வில்லிதரு குமரனெனச் சொல்லிக்
      கயிலைமலை தந்ததன்பேர் பயிலுமலை யம்மே
சனகர்முத லோர்வணங்கும் பெருமைமலை யம்மே
      சதுமறைகண் முறையிடுஞ்சொல் நிறையுமலை யம்மே
பனகமணி யிரவியென விரவுமொரு பாலில்
      பணைமணிக ணிலவெனவே யுலவுமொரு பாலில்
தினகரன்றேர்க் குதிரைபுன லுண்டுதகை யாறும்
      செங்குவளைத் திருமலைதா னெங்கண் மலை யம்மே. (7)

முனிகள்தன் சிருக்கவொரு பாவமுனிகள் திரியும்
      முத்திருக்கும் பெற்றிருப்பார் முத்திருக்குங் கிளையார்
வனிதையர்கள் கற்புநெறி வனிதனையே நிகர்க்கும்
      வண்டொலிக்குந் தண்டலைக்குள் வண்டொலிக்குந் தடத்தில்
கனிவுகொடு மேல்பாலிற் கனிகையெழு பேர்கள்
      காத்திருப்பர் நீலமலர் பூத்திருக்கு மம்மே
பனிமதியந் தவழ்சடையான் பனிபாகத் துடையான்
      பழங்கயிலைக் கிணையெங்கள் செழுங்குவளை மலையே. (8) ....46

காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்

(அறுசீர்க்கழி நெடிவடியாசிரிய விருத்தம்)

செங்கையின் மலருங் கண்டேன் றேங்குழற்காடுங் கண்டேன்
கொங்கையின் கோடுங் கண்டேன் மலையியற் கோலங் கண்டேன்
பங்கயா சனத்தோ னாதி பணிதிரு மலையின் மேவு
நங்கையே குறப்பெண் ணேயுன் னாட்டிய னவிற்று வாயே. ....47

குறத்தி நாட்டுவளம் கூறுதல்

(சிந்து)

முண்ட காசினி வெண்ணிறக் கொண்டல்
      முந்நீ ருண்டுமை மாலென மீண்டு
கொண்ட பொன்மகண் மார்பினன் மின்னைக்
      குலாவு சங்க முழக்கிடி யென்னப்
பண்டு தான்சிவ பூசனை செய்யும்
      பான்மை யென்னப் பருப்பதஞ் சார்ந்து
மண்ட லீசுரர் கொண்டாட வானம்
      வழங்கு வாரிவட வாரிய நாடே. (1)

பாரதி நிறச் சொல்லைவி தைத்துநற
      பார்ம டந்தை யிடத்தங் குரித்தெழ
ஏர்த ருஞ்செல்வி போல வொளிமின்ன
      இமய மாதென நெல்வளர்ந் தோங்குறச்
சீர்த ழைத்திட முப்பத் திரண்டறம்
      செய்து மேன்மை சிறந்திடுஞ் செய்ந்நல
மாரி யோங்க விளைந்திடு சாலியை
      வழங்கு மெங்கள் வடவாரிய நாடே. (2)

செய்யிற் பூத்த கமலங்கை யென்னச்
      செழுங்கு முதங்கள் வாய்விண்டு சொல்ல
மெய்யெ னாவிழி நீலங்கள் காட்
      விளைந்த சாலிகள் முத்தஞ் சொரியத்
துய்ய வால்வளை யெங்கு முழங்கவெண்
      தூவி யன்னங்க ளாடல் விளங்க
வைய மேழும் புகழ்ந்திடு கீர்த்தி
      வழங்கு மெங்கள்வட வாரிய நாடே. (3)

செந்நெல் கன்ன லெனவளர்ந்தேறச்
      சிறந்த கன்னல் கமுகொத்து மீறத்
துன்னு பூகங்கள் வானைத் துளைக்கச்
      சுவர்க்கத் தோர்பயங் கொண்டு திளைக்கச்
சின்ன மாங்குயில் வாய்விண்டு கூவச்
      சிலீமு கம்மலர்த் தேன்கொம்பிற் றாவ
மன்னு சோலைக் குழாஞ்சிறந் தோங்கி
      வழங்கு மேன்மைவட வாரிய நாடே. (4)

கருப்பு வில்லி கொடிவெடி யுந்தக்
      கமுகிற் பூத்த பழத்தினைச் சிந்த
பருத்த வாழைப் பழத்திற் புடைத்துப்
      பலாவிற் றூங்கும் பழத்தை யுடைத்துத்
திருத்து தேறல் புறவினிற் பாய்ந்து
      செழிக்க நாரை சுனைக்கயன் மாந்த
மருத்து றைபொழி லெங்கு நெருங்கி
      வளரு மேன்மை வட வாரிய நாடே. (5)

காவின் முக்கனி யைக்கரு மந்தி
      களிப்ப வானரங் கையிற் கொடுக்கப்
பூவை யேழிசை கொண்டு படிக்கப்
      புளின மீது சிகண்டி நடிக்க
மேவு சங்கொலி வான மிடிக்க
      மிடைந்த சோலை மலர்கள் வெடிக்க
வாவி மாதர் மலர்ப்பந் தடிக்க
      வழங்கு மெங்கள் வாரிய நாடே. (6) ....48

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

பெருநாட்டி யஞ்சிறந்த பெம்மான்றன் னிடத்தமர்ந்த
      பிராட்டி யீன்றோன்
தருநாட்டி யும்பர்கிளை தனைநாட்டிப் பன்னிரண்டு
      சலசம் பூத்த
திருநாட்டம் படைத்தகந்தன் றிருநாட்டின் சிறப்புரைக்கத்
      தெவிட்டா தம்மே
மருநாட்டு மலர்க்குவளைச் சுனைத்தீர்த்தந் தலமகிமை
      வகுக்கக் கேளே. ....49

தல மகிமை

(சிந்து)

வானின்வளர் கங்கையெனும் வான்சுனையின் தங்கை
      மணக்குவளைப் பூமகிமை வகுக்கவரி தம்மே
நான்சிறிது தெரிந்தவகை நவிற்றுவன்கேள் வான
      நாடதனிற் பூத்திலகு பூவதுகா ணம்மே
மேன்மையெழு கன்னியர்கள் வேன்முருக னருளால்
      விளங்குசுனை மீதுவந்து வழங்குவர்கா ணரிதாய்த்
தேன்மலியுங் குவளைமலர் தினந்தோறும் பூத்த
      திருமலையின் றலமகிமை செப்பவரி தம்மே. (1)

முத்தர்முத லோர்மதிக்கு முக்யதல மம்மே
      முத்தலமு நித்தியமுந் துத்தியஞ்செய் தலமே
சுத்தமுறு குகையிரண்டு மேல்பாற்கீழ் பாலில்
      துலங்குமதிற் றயிலநதி சுனையுளதொன் றதன்பாற்
சித்தர்முனி வோர்காய சித்திபுனைந் திருப்பார்
      தேவர்களு மூவர்களுந் தினந்தினஞ்சஞ் சரிப்பார்
கொத்தலவு பரமொன்று பேரில்லாத் தருவாழ்
      குவளைமலைத் தலமகிமை கூறவரி தம்மே. (2) ....50

காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

வாவியின் சிறப்பு நீல மலர்தருஞ் சிறப்பு மேன்மைச்
சேவலங் கொடிசி றந்த திருமலைச் சிறப்புங் கேட்டேன்
தாவிய மயில்போற் சாயற் றருகுறக் கொடியே வைவேல்
மேவிய கரத்துச் செவ்வேள் குலத்தினை வியம்புவாயே. ....51

குறத்தி கூறுதல்

(சிந்து)

காவிமலை முருகபிரான் மேவுகுலங் கேளாய்
      கற்பகக்காத் தேவரினு நற்குலங்கா ணம்மே
தேவியெண்ணான் கறம்வளர்த்த பாவைதனை வேட்
      செல்வநக ரீசருக்குத் திருக்குமர னம்மே
பூவுலகை யளந்தநெடு மாறணக்கும் வானைப்
      புரத்தருளும் புரந்தரற்கும் புகழ்மருக னம்மே
ேவுரும்பத் தும்பிமுக னாவறுணைத் தம்பி
      வீரமொய்ம்பன் முதலோர்க்கோர் தமையனிவ னம்மே. (1)

மதனனுக்குஞ் சதுமுகற்கு மைத்துனன்கா ணம்மே
      மாறனுக்கு யிமயமலை மன்னனுக்கும் பேரன்
அதிககுல மெங்கள்குலத் துதித்தவள்ளிக் கொடிக்கும்
      ஐந்தருவா ரிந்திறனார் தந்ததெய்வப் பிடிக்கும்
இதமுடனே மனதுகந்த புதுவைமண வாளன்
      எப்பொழுதும் பொற்பதத்தை யேத்துவார்கண் ணாளன்
கதியுலவு திருமலைவேன் முருகன்கிளை வளத்தைக்
      காசினியோ ரிப்படியே பேசுவர்கா ணம்மே. (2) ....52

காமவல்லி வினாவுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

சிற்ப வடிவேற் கந்தன் றிருமலைக் குமரன் சீர்த்தி
அற்புதம் பாடி மேவு மருட்குறக் கொடியின் னாளே
பொற்புறு புவன மீது போந்துநீ குறிகள் சொன்ன
சொற்படி கேட்டோர்தங்கள் தொகைவகை சொல்லென்றானே. ....53

குறத்தி தான் பெற்ற பரிசுவகை கூறல்

(சிந்து)

நிறைகின்ற கொல்லந் தொள்ளாயிரத்
      தைம்பதா மாண்டிற் - பண்பை
நீடூழி வாழ வருள்தர
      வோங்கியெண் ணான்காம்
அறம்வளர்த் தம்மன் றிருநக
      ரீசுரர்க் கன்பாய்ச் - செம்பொன்
அம்பலம் போலத் திருமுன்பு
      மண்டப வாசல்
முறைமதிற் சுற்று திருக்கோயில்
      தூவி சிகரம் - வாவி
முதலான கோடி திருப்பணி
      செய்யமேன் மேலும்
துறவி சிவகுரு நாத
      முனிக்கந்த நாளிற் - குறி
சொல்லிநான் பெற்ற மணித்தாழ்
      வடமிது வம்மே. (1)

பார்புகழ் கொல்லந் தொளாயிரத்
      தைம்பத்தை யாண்டில் - நெல்லைப்
பதிமிசைச் சென்று குறிசொல்லப்
      போனேனா னம்மே
சீர்தழைத் தோங்க மனுமுறை
      யோங்கிய செங்கோல் - எங்கும்
செலுத்திய சாலிவா டீசுரச்
      சாமியைக் கண்டேன்
ஏர்தரு காந்தி மதிநெல்லை
      நாயகர்க் கன்பாய் - ஊர்தி
என்றிடு கிள்ளையும் பொற்கயி
      வாசமுஞ் செய்ய
நேர்தரு மென்குறி கேட்டதற்
      காயவன் றந்தான் - நல்ல
நித்தில மாலையுங் கொத்துச்
      சரப்பளி யம்மே. (2)

பொங்கிய கொல்லந் தொளாயிரத்
      தைம்பத்தா றாண்டில் - மிக்க
பூபதி தென்கிளு வைப்பதி
      வாழ்பதி நீதன்
துங்கன் பெரிய சுவாமி
      யருளுஞ்சிங் கேறு - நல்ல
துரைமக ராசன் பெரியசு
      வாமியைக் கண்டே
அங்கவன் சிந்தை நினைத்த
      குறிமுற்றுஞ் சொன்னேன் - அதற்
காச்சரி யங்கொடு பூச்சரி
      கைச்சேலை யொன்றும்
தங்கக் கடகமுந் தும்பிப்
      பதக்கமு முத்து - மாலைத்
தாருங் கொடுத்துநெற் சேருங்
      கொடுத்தன னம்மே. (3)

மதுரை சிராப்பள்ளி காழி
      சிதம்பர மாரூர் - கச்சி
மாநகர் காளத்தி யூர்கும்ப
      கோணமை யாறு
முதுகிரி யண்ணா மலையொற்றி
      யூர்திருப் புத்தூர் - சத்தி
முற்றத் திருவாலங் காடுவெண்
      காடுசாய்க் காடு
பதிதிரி கூடந்தென் காசி
      வடகாசி சேது - தமிழ்ப்
பாண்டி முதலிய வெண்ணெழு
      தேசமுஞ் சென்று
புதுமைய தாய்க்குறி சொல்லி
      விருதுகள் பெற்றேன் - அங்கம்
பூண்டிடுந் தங்கப் பணியா
      பரணங்க ளம்மே. (4) ....54

காமவல்லி கூறுதல்

(கட்டளைக் கலித்துறை)

எல்லார்க்கு நல்ல குறிசொல்வ துங்க ளியல்பதென்றாற்
கல்லாமற் பாதி குலவித்தை யேவருங் காணிசமே
வில்லார் நுதற்குற மின்னே திருமலை வெற்பில்வளர்
நல்லாய் நினைத்த குறியெனக் கொன்று நவிற்றுவையே. ....55

குறத்தி குறி கூறுதல்

(சிந்து)

நினைத்தகுறிப் படியுள்ள
      குறிசொல்லுவ னம்மே - என்முன்
நீவிட்ட பேரைக்குறி
      யால் வெல்லுவன் அம்மே
கனத்தபல்லி சொன்னிமித்த
      நன்றுகா ணம்மே - மிக்க
கருடகீர்த்த னஞ்செய்ததும்
      வென்றிதா னம்மே
தனித்துநீ நின்ற வாரூடம்
      நன்றுதா னம்மே - கன்னி
தானிசைத்த வாய்ச்சொல்நன்மை
      இன்றுகா ணம்மே
மனத்திநீ நினைத்தகுறி
      இன்றுகே ளம்மே - வைவேல்
வாலசுப் பிரமணி யனுனக்
      குண்டுகா ணம்மே. ....56

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

சென்னியோ ராறு முள்ளான்
      திருவிழி யீரா றுள்ளான்
மின்னிய வேற்கை யாளன்
      திருமலை வெற்பி னுள்ளான்
முன்னிய தேவர்க் கெல்லாம்
      முதன்மையாய் வேந்தனாகக்
கன்னியே யுனக்கு நல்
      கணவன்றான் வருவா னம்மே. ....57

(சிந்து)

மணமுடனே தரைமெழுகிக் கணபதிதான் வைப்பாய்
      மாங்கனியும் தேங்கனியு மனமகிழப் படைப்பாய்
பணமுடனே யடைக்காயும் வெள்ளிலையும் வைப்பாய்
      பாங்குடனே நிறைநாழி பூங்கொடியே வைப்பாய்
குணமாகப் பணிந்தேத்திக் கும்பிடுவா யுங்கள்
      குலதெய்வங் களையெல்லாம் வேண்டுகொள்வா யம்மே
துணிவாக நினைத்தசெய்தி தேர்த்துகொள்வா யம்மே
      தோகைமயி லேகுறிநீ யோகையுடன் கேளே. ....58

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

திருந்திய வடிவேற் கந்தன்
      திருமலைக் குமர னாட்டில்
வருந்திரு வனைய பெண்ணே
      வந்திடுந் திசையு நன்றே
இருந்திடு தலமும் வாய்ப்பும்
      இயம்பிய மொழியின் மேன்மை
பொருந்திய குறிநா னன்றாய்ப்
      புகலுவேன் புகலுவேனே. ....59

(சிந்து)

செங்கமலக் கைகாட்டாய் திங்கண்முகப் பொன்னே
      தேனமிர்தம் பாலமிர்தம் பழகுமிந்தக் கையே
தங்கநவ மணிகண்மிகக் கொடுக்குமிந்தக் கையே
      தானதன்ம மேன்மைபெறச் செய்யுமிந்தக் கையே
துங்கவடி வேலர்தமக் கேற்குமிந்தக் கையே
      சோபனகல் யாணமலர் சூட்டுமிந்தக் கையே
*.................................
.............................. ....60

*இறுதி அடி கிடைக்க வில்லை.

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

மங்கையே யுனது செந்தா
      மரைக்கரம் பார்க்கி னிந்தச்
செங்கைதான் பிடித்தோர் மிக்க
      தேவர்க்குத் தேவா ராவார்
இங்கிது பொய்யா தென்றே
      எழிற்றிரு மலையில் வாழ்ந்த
தங்கவேற் கடவு ளாரை
      வணங்கியே துதிசெய் வாளே. ....61

(நிலைமண்டில வாசிரியப்பா)

முச்சகம் புகழு முச்சி விநாயகா
கொன்றையி னிழல்வாழ் வென்றி வினாயகா
மருமலர்க் குவளைத் திருமலைக் குமரா
வாவிமேல் கரையின் மேவுகன் னியரே
அருமறை போற்றுந் திருமலைக் காளி

கொடுவினை தீர்க்கும் வடுக நாதா
கருமணி கண்டனார் தருமணி கண்டா
ஆதிநா யகனே பூதநா யகனே
கடும்படை தரித்த விடும்ப சுவாமி
மாடனே கமல வல்லிநா யகியே

வேடனே விரும்பும் வேடிச்சி யம்மே
வன்னிய ராயா முன்னடி முருகா
பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா
உவப்பான கண்டா சிவப்பாறை முண்டா
மாலைவார் குழல்சேர் கால விசக்கியே

வருதுட்ட ராயா பொருபட்ட ராயா
படைக்கலஞ் சேர்த்த வடைக்கலங் காத்த
ஐயனே கருணை மெய்யனே சரணம்
கனதனம் பூத்த காம வல்லியார்
மனதினி னினைத்தது மன்னுயிர்ச் சீவனோ

நவமணித் திரளோ நானிலப் பொருளோ
கவனர்செய் மயக்கோ காலத்தி னியல்போ
மாடகூ டங்களோ வரத்தொடு செலவோ
ஊடலாய் மன்ன ருடனுறுஞ் செயலோ
வேந்தர்தா மிவண்மேற் விரும்பிமால் சொன்னதோ

போந்தமன் னவர்மேற் பொருந்திய மயலோ
துகிலொடு வளையுஞ் சோர்ந்திடு மயக்கோ
மகிழ்வுடன் மணமும் வரும்பெருங் குறியோ
தொகை சொலுங் குறிக்குள் வகையிது வென்ன
இங்கிவ ணினைத்த வியற்குறி தன்னை
மங்கள மாக வகுத்தருள் வீரே. ....62

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

தேசமெண் ணேழும் போற்றும்
      திருமலைக் குமர நாதன்
தேசமா யிருக்கு தம்மே
      நினைத்திடுங் கறுப்பன் வந்து
மூகமூ சென்றே யென்னுள்
      முன்னியே யுன்னி வந்து
பேசுது குறிதா னம்மே
      பேசுவேன் குறியைக் கேளே. ....63

குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்

(சிந்து)

சோலைமலை வீதியினீ நின்றுதா னம்மே - நல்ல
      தோழியுடன் பந்தடித்த வேளைதா னம்மே
கோலமயில் வீரன்வரக் கண்டுதா னம்மே - சேனைக்
      கூட்டங்கண்ட வெருட்சிபோலக் கண்டதே யம்மே. (1)

கூட்டங்கண்ட வெருட்சியென்றார் குறத்தி மாதே - மயல்
      கொண்டகுளிர் காச்சலுண்டோ நின்று பாராய்
வாட்டமின்றிப் பூங்குழலே சொல்லக் கேளாய் - திரு
      மாமயிலி லேறிவந்த வேலனைக் கண்டே. (2)

நாட்டமெல்லா மவன்மேலே வைத்த மோகம் - மிக
      நாடுமயல் காச்சலென்று காணுதே யம்மே
கேட்டசெய்திக் காகவொன்றைச் சொல்லலாமோ என்னைக்
      கேலிசெய்ய லென்றுசொல்லி வெல்ல லாமோ. (3)

சொன்னகுறி நிசந்தானோ வின்னம் பாரு - நல்ல
      தோகையர்க்கெல் லாமரசே யின்னம் பாரு
பொன்னனைய காமரச வல்லி மாதே - குறி
      பொய்யலவே நீமயங்கிச் சொல்கிறா யென்றாள். (4)

அன்னவன் பேரென்னவென்று பன்னுவா யென்றாள் - பேர்
ஆயிரம் பேரானதனி லொன்று கேளாய்
வண்ணமயிற் காரனவன் பண்பை யூர்வாழ் - திரு
மாமலையில் வாழுங்கந்த சவாமிதா னென்றாள். (5)

என்று சொன்ன குறிநிசத்தைக் கண்டுதான் முன்னே - வந்
திருந்தகாம வல்லிநாணங் கொண்டு கவிழ்ந்தாள்
வென்றிவடி வேலருன்னை வந்து சேரும் - நாளை
வெட்கமெல்லா மோடியொரு பக்கம் போமே. (6)

மன்றல்செறி பூங்கடப்ப மாலைதா னம்மே - தோழி
மாதுகொண்டு நொடியில்வரும் வென்றிதா னம்மே
நன்றிதென்று காமவல்லி திருமலைக் கந்த
நாதனரு ளியகடப்ப மாலை வாங்கினாள். (7) ....64

காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

தெருள்பெறு தோழி வந்து
      திருமலைக் கந்த நாதன்
அருளிய கடப்ப மாலை
      அன்பினாற் கொண்டு வந்து
மருமலர்க் குழல்சேர் காம
      வல்லிகைக் கொடுப்ப வாங்கி
பெருமய றீரப் பூண்டு
      பேரின்ப மேபெற் றாளே. ....65

குளுவன் வருதல்

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

மருப்பினா லிழைத்த பாசி
      மணிப்பணி பூண்ட கொங்கைப்
பொருப்புயர் குறத்தி யெங்கே
      போந்தன ளென்று தேடி
விருப்பினாற் கூவிக் கொண்டே
      மென்மலர்த் தேனை நாடும்
சுருப்பென நீல வெற்புக்
      குளுவனுந் தோன்றி னானே. ....66

(சிந்து)

கலைத்தலைக் கொம்புங் கரடியின் றோலும்
      கையினின் மெய்யினிற் காதலிற் புனைந்தே
கொலைத்தொழில் செய்யு நிலைச்சிலை யேந்திக்
      குவளையங் கிரிவாழ் குளுவன்வந் தனனே. (1)

திருமலைக் குமரன் மருமலர்ப் பாதம்
      சிந்தையி னினையார் நைந்திடு முடல்போற்
குருகுக டம்மைக் கருவியிற் படுக்கும்
      கொலைத்திறஞ் செய்யுங் குளுவனு நானே. (2)

ஆறெழுத் தோதி யைம்பொறி யடக்கி
      அருள்வடி வேலன் றிருவடி நினையார்
மீறிய நெஞ்சைக் கீறியென் பெடுத்து
      வில்லென வளைக்கும் வல்லவ னானே. (3)

காவியங் கிரிவாழ் கந்தனைக் கொலுவிற்
      கண்டறி யாதவர் கண்களைப் பிடுங்கி
மேவிய சிலையில் விருதெனத் தூக்கி
      மெய்த்திறஞ் செலுத்துஞ் சித்தனு நானே. (4) .....67

(உடன் வந்தோர்)

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

செங்கணற் கண்ணன் றிண்ணன்
      தீப்பொறி வாயன் பேயன்
வங்கணக் கொடிய னாகன்
      மதிப்புலி நூவ னென்றோர்
அங்கையிற் கண்ணி கோட்டோ
      டடுசிலை வலைதாங் கொண்டே
கொங்கலர் காவி வெற்புக்
      குளுவனை வணங்கிச் செல்வார். ....68

(குளுவனுடைய ஏவலர் கூற்று)

பல்லவி

வருகினு மையே - குருகினம்
வருகினு மையே.

சரணங்கள்

கருவாலி யுள்ளானுஞ் சிட்டுல்லி யானும்
      காடையு மடைக்கலங் காத்தான் குருவியும்
குருகோடு கொக்கு மயிலுங் குயிலுடன்
      கூழைக் கடாவுடன் சேகர மாகவே (வருகினு) (1)

ஐப்பசி மாதம் வருகந்த சட்டி
      யதனிற் பவனி வருதலைக் காணப்
பொற்பணி யாடையு மாலையு மின்னப்
      புனைந்த பரிசு வருவது போல (வருகினு) (2)

செயக்கய நல்லூர் புறியறை பண்புலி
      தென்காசி நாலு துறையும் வரும்பொதி
வைக்குந் துலாத்துக் கொண்ணரை மாகாணி
      வானிதி வாங்கி மகிழ்ந்து தினந்தினம்
எய்க்குந் திருப்பணிக் கல்லோலங் கொண்டெழ
      ஏலோலம் போடுஞ் சனங்களைப் போலவும்
பக்கி வருகுது கொக்குத் திரளெலாம்
      பாற்கடற் றெண்டிரை யார்ப்பென வோங்கியே (வருகினு) (3)

வரத்தைக் கொடுத்திடுந் தேவாரப் பாடலும்
      வண்ணத் திருப்புகழ்ச் சந்த வகுப்புடன்
உரத்திசை காட்டிய விக்ரம பாண்டியன்
      ஓதுவார் போலிசை கூவிக்கொண்டே குயில். (வருகினு) (4) ....69

(தரவு கொச்சகக் கலிப்பா)

வார்க்கு ளடங்கா வரைத்தனத்து வள்ளிதனைச்
சேர்க்குந் தடம்புயத்துச் செவ்வேள் குவளைவெற்பில்
ஆர்க்கும் பறவையெல்லா மாழியவை போன்முழங்கிப்
பார்க்குந் திசைதோறும் பட்சிநிரை சாயுதையே. ....70

பல்லவி

சாயினு மையே - குருகினஞ்
சாயினுமையே.

சரணங்கள்

கோயிலுங் கோல முடையவர் தோப்பிலும்
      கொண்ட திருமலைப் புறத்தோப்பு மீதிலும்
வாய்மை தருந்திரு மலைப்புற மேவிய
      வன்மைப் புதுக்குளப் பற்றினிற் கூடியே (சாயினு) (1)

வாய்மை தருந்தா மரைக்குளப் பற்றிலும்
      வட்டஞ் செறிகாடு வெட்டிப் புரவிலும்
மேய புகழ்த்திரு மாமலைச் சுற்றிலும்
      மீறிய பண்புளி யூரினுங் கூடியே (சாயினு) (2)

முருகன்றன் மங்கலந் தேமாங் கனிவயல்
      முடுக்குப் புரவினிற் பொக்கணந் தூக்கியும்
இரவி குலம்வரு சோழர்கள் பாண்டியர்
      இயற்கட் டளைக்கொப்பா வீந்த புரவெலாஞ் (சாயினு) (3) ....71

குளுவன் கூற்று

(தரவு கொச்சகக் கலிப்பா)

தெண்ணீர் மலர்ப்பொழில்சூழ் செங்குவளை வாவிவெற்பிற்
கண்ணீலம் பூத்த கமலமுக வாய்க்குமுதப்
பெண்ணா ணடந்தவனப் பேடைமயிற் சாயறனை
உண்ணாடி யேநெஞ்ச முருகவுநான் வாடினனே. ....72

ஏவலர் கூற்று

பல்லவி

மேயினு மையே - குருகினம்
மேயினு மையே.

அநுபல்லவி

மேய்தரு மிந்தப் புளியறை மீதினில்
      மீறிய புஞ்சையில் கூறிய நஞ்சையில்
சேய்கரிப் பானுவின் மேலெழு தோப்பினும்
      செங்கால நாரையுஞ் சிங்கார மாகவே (மேயினு)

சரணங்கள்

தண்ணம்பி தாமரைக் குளங்கோழி கிண்டியும்
      சார்கத்தி யூற்றுட னரசடிப் பற்றும்
வண்மைப் புதுவலுந் தோப்படிப் பள்ளமும்
      வாழ்கரி சல்வன மாடன் செட்டிதன்
தெண்ணீர்த் திருத்து வளர்வாசற் பிள்ளைத்
      திருத்து நதிக்கரைத் தோப்பு முதலாகப்
புண்ணியஞ் செய்திடு மழகப்ப மாலெனும்
      பூபதி தானஞ்செய் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு) (1)

எண்ணெழு தேசமும் போற்றிடச் செங்கோல்
      இயற்றிய மூவ ரெனச்சொல்லும் பொன்புரை
வண்ணன் சிறந்த சிதம்பர நாதன்சி
      வன்றுணை மைத்துன னென்றிடு வித்தகன்
கண்ணன் பரவிய நெல்லையப் பாரெனக்
      கையொப்பங் கொண்டிந்தக் காசினி மீதினில்
புண்ணியந் தேடிய சாலிவா டீசுரப்
      பூபதி செய்திடு கட்டளைப் புரவெல்லாம் (மேயினு) (2)

வடகரை யாதி பதிதிரி கூடபதி
      மனுராச ராச னரபதி மிக்க
திடபதி யெங்கள் பெரிய சுவாமி
      சிறுகால சந்தித் திருத்துப் புரவெல்லாம் (மேயினு) (3)

மன்னவன் பொன்னக் குடிதனில் வாழும்
      மனைகாவ லப்பெரு மாள்செய்த கட்டளை
தென்னவன் செவ்வல் வருராம லிங்கவேள்
      செய்திடு முச்சந்திக் கட்டளைப் புரவெல்லாம் (மேயினு) (4)

தரணிக் கதிபதி யிருளப்ப பூபதி
      தந்திடு மைந்தன் வடகரை வாசற்
கரணிக்கஞ் செய்திடுஞ் சம்புலிங் கேந்திரன்
      கட்டளைப் பற்றெல்லாம் வித்தார மாகவே (மேயினு) (5)

நற்றாலம் போற்றிய குற்றால நாதன்செய்
      நற்றவத் தால்வரு புத்திர னித்தியம்
வற்றாத செல்வன் புகழ்தொண்டை மண்டலம்
      வாழ்தெய்வ நாயகன் கட்டளைப் பற்றெல்லாம் (மேயினு) (6)

அருளிச்சை பூண்டு திருப்பணி செய்திடும்
      அன்பு பெருகிய முத்துக்கு மாரர்
தருபிச்சைக் கட்டளை சுக்கிர வாரத்
      தருமஞ்செய் கட்டளைப் பற்றுத் திருத்தெல்லாம் (மேயினு) (7)

நல்வளஞ் சேருந்தென் காசிப் பதிவளர்
      ஞான சிவன்றரு நற்கத னச்சுதன்
கல்வி நயந்தெரி நெல்லையப் பேந்திரன்
      கட்டளைப் பற்றினி லிட்டம தாகவே (மேயினு) (8)

தானத் தலமு நிலைமைக் கணக்குந்
      தவத்தை வளர்க்கு மருத்துவ ராசன்
பான்மைக் குமார சுவாமி யுதவிய
      பாலன் சிவகுரு நாதனைப் பெற்றவன்
மேன்மைப் புகழ்த்தொண்டை மண்டல தீரன்
      விளங்கிய தொப்பைச் சிவப்பண பூபன்
கோன்மைக் கணக்கு ளகப்பட்ட பற்றெல்லாம்
      கூட்டக் குருவிக ணாட்டக மாகவே (மேயினு) (9)

தேசிக னெந்தை குருசுப்ர மண்யவேள்
      செய்த சுனைக்கரை மடத்துக்கு தற்பொருள்
பேசு நெடுவயற் பண்டாரத் தேவன்
      பிரதோடக் கட்டளைப் பற்றினிற் கூடியே (மேயினு) (10) ....73

குளுவன் கூற்று

(தரவு கொச்சகக்கலிப்பா)

சேலுலவும் பண்ணைவயல் செந்நெனிறை பண்பையில்வாழ்
கோலவடி வேற்கைக் குமரன்வளர் காவிவெற்பில்
வாலமதி போல வளைந்தநெற்றி மாதர்முலை
மேலணியுங் கச்சாய் விதிவிதித்தா னில்லையே. ....74

பல்லவி

கண்ணி கொண்டு வாடா புலியா - குருக்குக்
காண்ணி கொண்டு வாடா.

சரணங்கள்

கண்ணன் கருடனைக் கொண்டாடி னான்குகன்
      கைக்கோழி கொண்டொரு மெய்த்தோகை யேறியும்
நண்னிய கொக்கை யவித்துக்கொண் டான்பின்
      நமக்கென்ன குற்றஞ் சுருக்கென வோடியே (கண்ணி) (1)

அந்நாளில் நம்முடைக் கண்ணப்பன் காலடி
      யான்மிதி பட்டு மருந்திய வூனுக்குப்
பின்னாசை வைத்ததை யருந்தும் பெரிய
      பிரான்செய்தி மன்மதன் பேராசை கொண்டே
என்னாளுங் கையினின் மீனைப் பிடித்தனன்
      இரணியன் சொன்ன புலியைப் பிடித்தனன்
உன்னாத பேர்களு முன்னுவர் நாந்தின்னும்
      ஊன்கறி வேட்டைக்குத் தான்குறி கொண்டனர். (கண்ணி) (2) ....75

புலியன் கண்ணி கொண்டு வருதல்

(தரவு கொச்சகக்கலிப்பா)

சூரர்களை வேரறுத்த சோதிவடி வேற்குமரன்
சீர்தழைத்த பண்பைச் செழுங்குவளை வாவிவெற்பில்
கார்தழைத்த மேனிக் கடுவன்மந்தி போற்பாய்ந்து
வாரிசைத்த கண்ணிகொண்டு வாய்ப்புலியன் வந்தானே. ....76

புலியன் கூற்று

(சிந்து)

கண்ணியைக் குத்தினால் அங்கே குளுவா
      கைக்குரு ருத்திர மாகப் படுமே
எண்ணிய படியே கண்ணியை வைத்தால்
      எத்திடுங் காலங் கொத்திடும் பறவை
மண்ணினிற் சிலபேர் பண்ணிய தவத்தால்
      வாழ்வுறுங் காலந் தானென்ன செய்யும்
தண்ணனி கொடுக்குந் திருமலைக் குமரன்
      தன்னடி தொழுதே கண்ணிவை குளுவா. ....77

புலியன் பதுங்குதல்

(தரவு கொச்சகக்கலிப்பா)

தேனுலவுஞ் சோலைபுடை சூழ்ந்த திருமலைவாழ்
கானமுறு வேடன் கலந்தகண்ணி தானிறுக்கி
மான்மரைகள் பக்கியெல்லாம் வந்துகண்ணி சிக்குதற்குப்
பூனையது போற்பதுங்கிப் புலியன் கிடந்தானே. ....78

புலியன் கூற்று

பல்லவி

கெம்பாரடையே - நொடிவளை
      கெம்பாரடையே

சரணம்

செம்பருந்தார்த்து வருகினுங் கொக்குத்
      திரள்களுஞ் சிட்டுக் குருவியும் வந்து
கொம்புறு கண்ணிக்குள் வந்தகப் பட்டன
      கூட்டுக் குருவியோ பாட்டம் வருகுது. (கெம்பா) ....79

(தரவு கொச்சகக்கலிப்பா)

கண்ணியெல்லாம் வைத்தபின்பு காவிமலைச் சாரல் வந்தே
வண்ணமுற்ற தோகைமுலை மாமலையிற் றோய்ந்திருந்தேன்
திண்ணமுறுங் கண்ணி தெரிந்துலகி லேதீமை
பண்ணியபேர் செல்வம்போற் பட்சியெல்லாம் போயினவே. ....80

பல்லவி

போயினு மையே குருகினம்
போயினு மையே.

அநுபல்லவி

செய்ய வடிவேற் றிருமலை நாதனைத்
தெரிசனை செய்பவர் வினையது போலவே (போயினும்)

சரணம்

பாவலர்க் கீயாத லோபரைப் போலவும்
      பாதகஞ் செய்திடு வார்குலம் போலவும்
தேவர்கள் மேல்வரு தானவர் போலவும்
      சிவனடி யார்க்கிடர் செய்தவர் போலவும் (போயினும்) ....81

குறவன் கூற்று

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

வைத்திடுங் கண்ணி தப்பிப்
      பறவைகண் மறைந்து போன
இத்திறஞ் சொல்லி னுன்பேர்
      புலியெனச் சாற்ற லென்னாம்
மொய்திடும் பொழில்சூழ் பண்பை
      முருகவேள் கொடுப்பா னென்றன்
மெய்த்துணைக் குறத்தி தன்னை
      விரைவினிற் காட்டு வாயே. ....82

(குறவன் குறத்தியை தேடுதல்)


காட்டுவா னொருவன் மேவிக்
      காண்பவ னொருவன் பின்னும்
கூட்டுவான் சுகத்தை யென்றாற்
      குறத்திதான் வந்தா லென்ன
போட்டியாற் போனா லென்ன
      புலியனோ புலிதா னென்றே
தேட்டமாய்க் குறத்தி தன்னைக்
      குறவனுந் தேடு வானே. ....83

(சிந்து)

தென்காசிவாசி வடகாசி தேசம்
      சிவகாசி யூர்வஞ்சி தென்சேலத் தோடு
பொன்காசி மிஞ்சிய காஞ்சியுஞ் செஞ்சியும்
      பூசுரர் கொச்சியும் வஞ்சியுந் தஞ்சையும்
மின்காவு சிங்களங் கொங்கண மீழம்
      விளங்குந் தெலுங்க மாரடங்கன் னாடம்
மன்காதல் கொண்டு விரைந்தொடித் தேடி
      வளர்திரு மாமலைச் சாரல்வந் தானே. .....84

(அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்)

இன்னமுந் தேடிக் காணேன்
      என்னுயிர்க் குறத்தி தன்னைக்
கொன்னைவாய்ப் புலியா நீதான்
      கண்டனை கூறு கென்றான்
தென்னுயர் சோலைப் பண்பைத்
      திருமலை வழியிற் கண்டேன்
என்னவே குறவன் பின்னும்
      மயங்கியே யியம்பு வானே. ....85

குளுவன் கூற்று

பல்லவி

தேடியுங் காணேனே - குறத்தியைத்
தேடியுங் காணேனே.

சரணங்கள்

தேடிய செல்வப் பசுங்கொடி வஞ்சியைத்
      தேனைத் திருமலை யானைத் தினந்தினம்
பாடிய செங்கனி வாய்க்குயிற் பேடையைப்
      பைங்கிளி வண்ணக் குறப்பெண்ணை நாடிநான் (தேடி) (1)

கிஞ்சுக வாயித ழஞ்சுக வாய்மொழிக்
      கீற்றிள மாமதி தோற்றிய வல்லியைக்
கஞ்சுக வார்முலை யின்சுகக் காரியைக்
      காம ரசந்தரு காமியைக் காமித்துத் (தேடி) (2)

மெய்ப்பணச் சோலையுள் மைப்பணங் கொண்டு
      விரித்திடும் பாம்பு கடித்திடு மென்றிரு
கைப்பணங் கொண்டவன் காலிற் சொரிந்துமெய்
      கட்டிக்கொண் டேனெனை முத்திக்கொண் டாளைநான் (தேடி) (3)

மலையானை கண்டு மலையாம னெஞ்சு
      மயங்காம லென்று பயந்தீர வென்று
முலையானை யென்கை வசப்படத் தந்தொரு
      முத்தங் கொடுத்திடு புத்தமு தத்தைநான் (தேடி) (4)

மைக்குழ லோசையும் புட்குர லோசையும்
      வால்வளை யோசையும் மேகலை யோசையும்
மெய்க்கழ லோசையும் மேலிட லீலை
      விதத்தொழில் செய்யு மதக்குயி றன்னைநான் (தேடி) (5)

தாரேறு கூந்தல் சரிந்தாடு மோகம்
      தழைத்தாடு வேல்விழி தான்களி கொண்டாடப்
போரேறு போலெதிர் தேறி விளையாடும்
      போகத்தைத் தந்திடு மோகக் குறத்தியைத் (தேடி) (6)....86

(தரவு கொச்சக் கலிப்பா)

சங்கமங்க டாவரங்க டாபரமாய்க் கொண்டிலகும்
துங்கமுரு கேசன் சுனைக்குவளை நீல வெற்பில்
வங்கணனைப் பார்த்து மலைக்குறவ னென்னுடைய
சிங்கிதனைக் காட்டினையேற் செய்வன்வெகு மானமென்றான். ....87

(சிந்து)

சொக்குப் பொடியுங் குளிகையுங் கூடத் தருவேன் - என்
தோகையி னைக்குற மாதினைக் காட்டிய பேர்க்கே. (1)

சர்க்கரை மந்திர தந்திரஞ் செய்து கொடுப்பேன் - என்
சல்லாபக் காரியைக் காட்டிய பேருக்குத் தானே. (2)

கைக்கனி போலவு மிந்திர சாலமுஞ் செய்வேன் -இரு
கண்ணாங் குறத்தியைக் காட்டிய பேருக்கு முன்னே. (3)

அக்ரம மாகவே குக்கிட்டி மந்திரஞ் சொன்னாற் - கூத்
தாடிச் சிலம்பம் படைவெட்டுக் காகுமோ முன்னாய். (4) ....88

குறவன் சிங்கியைக் காணுதல்

(எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்)

சுனைக்குவளை மலர்தரித்த புயவேள் கந்த
      சுவாமிமலர்ப் பதங்கண்டு துதிசெய் வோர்க்கு
மனத்துயரெல் லாந்தவிர்க்கும் வறுமை தீர்க்கும்
      வாய்த்தாபக் கியங்கொடுக்கு மகிமை யாலே
நினைத்தகா ரியங்கொடுப்போன் குமர னென்றே
      நீல வெற்பில் வந்தவுட னேர்மை யாகக்
கனத்தமுலைச் சிங்கிதன்னைச் சிங்கன் கண்டான்
      கண்களிக்க மனுதுபெருங் களிகொண்டானே. ....89

சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்

(சிந்து)

சொல்லாமலெங்கேநீ போனா யடிசொல் லுசிங்கி - காம
வல்லி தனக்குக் குறிசொல்லப் போனேனானா சிங்கா. (1)

போனதின் மேனி யதிசயங் காணுதே சிங்கி -குண
மேன்மை மனிதரைக் கண்டால் வருமடா சிங்கா. (2)

தலைதனிற் கொம்பு முளைத்த விருதேது சிங்கி - வஞ்சி
மலைமன்னர் தந்த மணிக்குப்பித் தொங்கல்காண் சிங்கா. (3)

இந்து நுதலி லிரத்தப்பொட் டேதடி சிங்கி - அது
சிந்துர ரேகைத் திலதமென் பாரடா சிங்கா. (4)

காதி லகத்திப் பழுப்பை நுழைப்பானேன் சிங்கி - தங்கச்
சோதி யிலகிய சொன்னப் பணியடா சிங்கா. (5)

மூக்கின் மேலொரு மூக்குத் துளியெது சிங்கி - கோத்துத்
தூக்கிய வெண்முத்து மூக்குத் தளியடா சிங்கா. (6)

வாயெல்லாம் ரத்த மயமா யிருப்பானேன் சிங்கி - பாக்குப்
போயிலை வெற்றிலை போட்ட சிவப்படா சிங்கா. (7)

கண்டத்தில் நீர்ப்பாம்பு கட்டிக்கிடப்பானேன் சிங்கி - பூணும்
பண்டத்தில் மிக்கான பைம்பொற் சவடிகாண் சிங்கா. (8)

செங்கை வளையத்துள் சில்லூறொலிப்பானேன் சிங்கி - நல்ல
தங்கக் கடகச் சரியிட்ட வோசைதான் சிங்கா. (9)

கொங்கைக் குவட்டினிற் குல்லா வணிவானேன் சிங்கி - பொது
மங்கையர் தந்த வனமுலைக் கச்சடா சிங்கா. (10)

சங்கலி யாலிரு காலிற் றளைந்ததார் சிங்கி - ராசைத்
துங்க மருதப்பன் சூட்டுஞ் சரமடா சிங்கா. (11)

உன்னுடம் பெல்லா முளுப்பொடி யேதடி சிங்கி - மணந்
துன்னுங் களபந் துதைந்தாடு பூச்சடா சிங்கா. (12)

இசங்கப் பழக்கோவை யிங்கே தரிப்பானேன் சிங்கி - அது
உசந்த விலைதரு மொண்முத்த மாலைதான் சிங்கா. (13)

மைக்குழை பூண்ட மருங்கு தெரியாமற் சிங்கி - நீதான்
கொக்கிற காலே குழல்கட்டிக் கொண்டாயே சிங்கி. (14)

கல்லார மாமலைக் கன்னிபா தத்தையர் தந்த - இளஞ்
சல்லாவென்று சொல்லு முல்லாசச் சேலைகாண் சிங்கா. (15)

வசந்த னுறையு மலர்ச்சோலைச் சாரலடி சிங்கி - கெட்டி
நிசந்தா னுனக்கென் னெனக்கென்ன சொல்லடா சிங்கா. (16)

பெரிய தனம்பெற்றும் பேசா திருப்பானேன் சிங்கி - நடுத்
தெருவினிற் போட்டுத் தியாகங் கொடுப்பாரோ சிங்கா. (17)

அரைப்பணந் தந்துதுரைப்பெண்ணே நீவேலை கொண்டால் - பாரம்
பரைப்பணந் தந்துன்னைப் பாதம் வருடுவன் சிங்கி. (18)

அணைத்துக் கிடக்கவு மாசை துடக்குதே சிங்கி - நல்ல
கிணற்றுத்தண்ணீர்வெள்ளங் கொண்டோடிப் போகுமோ சிங்கா. (19)

கம்பத்தி லேசிறு கும்பங் கவிழ்த்ததடி சிங்கி - புதுக்
கும்பத்துக் கள்ளைக் குடித்துக் கவிழ்த்ததடா சிங்கா. (20)

தொண்டைக் கனியைச் சுவைக்கவா யூறுதே சிங்கி - கள்ளை
மண்டிய பின்வெறு வாயைச் சுவையடா சிங்கா. (21)


குறிப்பு- இதன் பின்னர் வரிகள் கிடைக்க வில்லை.

This webpage was last revised on 26 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).