குறுந்தொகை
(எட்டுத்தொகை நூல்களில் ஒன்று) பல ஆசிரியர்கள் இயற்றிய பாடல்கள்
kuRuntokai
of eTTuttokai anthology
(in Tamil Script, unicdoe format))
Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation, HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Proof Reading : Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This page was first put up on May 11, 2001
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
-கபிலர்.
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
-கோவர்த்தனார்.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
-தாமோதரனார்.
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளா யத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே. -கோப்பெருஞ்சோழன்.
130. பாலை - தோழி கூற்று
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரும் உளரோநம் காதலோரே. -வெள்ளி வீதியார்.
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கட லடைகரைத் தௌிமணி யொலிப்பக் காண வந்து நாணப் பெயரும் அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே. -நெய்தற் கார்க்கியன்.
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே.
-காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
298. குறிஞ்சி - தோழி கூற்று
சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்விட் டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே.
-பரணர்.
மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே.
-நக்கீரனார்.
குறுந்தொகை முற்றிற்று
------------------------
This page was last revised on 20 Nov.. 2021.
Please send your comments and corrections to the webmaster of the site (pmadurai AT gmail.com)