kOtai nAcciyAr tAlATTu
(author not known)
in Tamil Script, unicode format)
கோதை நாச்சியார் தாலாட்டு
( ஆசிரியர் யார் என தெரியவில்லை)
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany ; Grammer correction; Periannan Chandrasekaran, Atlanta, GA, USA
PDF and HTML versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Our thanks also due to Mr. S. Nambi (son of the publisher) for providing us with a copy of the work for etext preparation.
This page was first put up on May 28, 2001
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை
நா.கண்ணன், ஜெர்மனி.
கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய விட்டு சித்தரின்
மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். குழல் இனிது, யாழ் இனிது, மழழைச்
சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு ஆனந்தித்துப் பாடிய
பெரியாழ்வாழ்வருக்கு - உண்மையான தூண்டுதல் (inspiration) ஆண்டாள் என்ற இளம்
சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும்
தேரே!" என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள்
காரணியாக இருந்தது போல்! இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த
ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டு சித்தரின் வழியில், அவரது வரிகளை
உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப்
பாடியுள்ளார். ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா, மகாவித்வான்
இரா.இராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த
புண்ணிய பூமியாகும். பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து,
பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள்
மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று. அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு".
ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக
வெளிவந்திருக்கிறது.
ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை , "நாடோ டிப் பாட்டுக்கு
தாய் தந்தை யாரோ?" எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது.
பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின்
வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக்
காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய்
மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபகத்தில் வராத வரிகளை எழுதாமல்
விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை
இப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது.
தாலாட்டு ஒரு மக்கள் கலை. அடுப்படிப் பெண்களின் கவித்துவத் தூறல். தவழும் குழந்தைக்கு
தூளிக் கயிற்றில் அன்பைப் பாய்ச்சும் மந்திரப் பாடல்கள். தூளியில் உறங்கும் எளிமையின்
உருவைத் திருமகளாகக் காணும் தாயின் பரிவைப் பதிவு செய்யும் பாடல்கள் தாலாட்டு.
திருமகளே உரு எடுத்து விட்டு சித்தருக்கு மகளாகப் பிறந்த பின், அவளுக்குத் தாலாட்டுப்
பாடாமல் வேறு யாருக்குப் பாடுவது? வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல்
என்பவை.
முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.
வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன்
திருடனாக வந்து வழி மறைத்தான், பறைமகன் தானொருவன் பரம்பொருளைத் தொழத்
தடை சொன்னபோது மறை சொல்லும் நூலார் தலைமேல் தூக்க வைத்தான்
நம் பெருமாளான, "நீதி வானவன்!", கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய்
உண்ட வாயனாக வளைய வந்தான் வீட்டு முற்றத்தில் மணிவண்ணன், ஆனால், அவர் மகள்
கோதைக்கோ, "மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரிதிடுவேன்" எனப் பேச வைத்து
மணவாளனாக வந்து உய்யக் கொண்டான். இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும்
கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும் பசும் கன்று போல்
அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான், "பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப்
பால்வாங்கி மோர் வாங்கிப், பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து, நண்பனாய்,
மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்"
வளைய, வளைய வருகிறான் மாதவன். இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர்
அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?
எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை குழல் போல் ஒலிப்பது
தவறோ? தவறில்லை என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர். கண்ணனுக்குத் தலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி, கோதைக்குத் தாலாட்டுப்
பாடினர் கொங்கைப் பெண்டிர்!
இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.
புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21
.........
புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை 26
கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப்பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில் கன்னல் "கல, கலவென"ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே! கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில் தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!
அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!
கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் தமிழில் உண்டு என்பதற்கு கோதையின்
கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! 35
"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! 36
சீதை போல் பூமியின் புதல்வியான கோதை, கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
"மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்பது! இவள் துளசியின் புதல்வி! காளிதாசன்
சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது, நாம் செய்த பாக்கியம்!
வைணவத் தொன்மங்களில் (myths), குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும். இது, இந்த நூற்றாண்டு "கோபல்ல கிராமம்" வரை கடை பிடிக்கப் படுகிறது (கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்). அதனால்தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், "நம் பெருமாள்" என்றழைக்கப் படுகிறார். நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் 39
அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் 40
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். 41
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டு
பேரும் வைத்து வருகிறார்.
விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது, "தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!" என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல், "தடங்கடல் பள்ளிப் பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்) கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபல பாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே" - கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில் வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல் கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.
இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் என்ன செய்யும்?
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள்.
அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை. நாச்சியார்
மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்? கோதை தந்த தமிழுக்கு, தமிழ்
சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60
அடுத்து, சூடிக் கொடுக்கும் வைபவம் பேசப் படுகிறது. ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப்
பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன். இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும்.
கோதை காவியத்தின் உயிரான வரிகளை எளிமையாய் சொல்கிறது இத்தாலாட்டு:
வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.
"உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் 95
இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96
இச்சூளுரைதான், காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, இன்று பிரபு பாதாவின் முயற்சியால் உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது. மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான். நாம் எல்லோரும் அவன் தோட்டத்து கோபியர்கள் என்னும் Yin Yan தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.
அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு. "தூயோமாய் வந்தோம்" என்னும்படி
உள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும். நோன்பு கழித்த பின்தான் இறைத் தரிசனம்
சாத்தியமாகிறது. அது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்" என்னும் விரதம் மட்டுமன்று,
"செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்" என்பதும் அடங்கும். உடலையும்,
மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.
அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.
எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது. பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன். பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,' நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்பது போல் கூடல் சனம் அத்தனைக்கும் அன்று
வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன். பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய்
தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான். கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில்
மறைத்து வைத்து,
ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான அன்னையென்றே கருதி
அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தான் தொழுகின்றான். பாகவதன் திருப்பாதத் தூளியில்
சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன், அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள்
பாத மலரையும் தொடுகின்றான். முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று
பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும் மணவாளனாக வந்து மீண்டுமொருமுறை
காட்சியளிக்கின்றான்.
நாராணனுக்குப் பெருமை "நம்மை உடைத்தல்" என்று சொல்லும் வரிகளை
வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம். செம்மையுடைய திருக்கையால் அம்மி
மிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ ?
பரம் பொருளை "தாழ்த்தி அம்மி மிதி"க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு
உண்டோ ?
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.
என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!
ஆண்டாள், "வாரணமாயிரம்" என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு
செய்கிறாள். அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு
மென்மையாகிப் போகிறது.
வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; 32
என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது. மேலும் சில உதாரணங்கள்:
என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்
கலக்குகிறது.
"அய்யர் இணையடியைத்" என்று சொல்வதிலிருந்து இப்பாடல் இயற்றப் பட்ட
காலத்தில் ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது. இல்லையெனில்
பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.
1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001). இவ்வோலைச் சுவடி
பதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை. ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்
காலத்தில் உருவானது என்று சொல்வர். அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர்
வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?
ஆழ்வார்க்கு அடியான்
தாசன்
நா.கண்ணன் மே 27, 2001
ஜெர்மனி.
நன்றி: பதிப்பாசிரியர் திரு.பெரியன் ஸ்ரீநிவாசன் புதல்வர் திரு.S.நம்பி (ஆழ்வார் திருநகரி) அவர்களுக்கு
--------
This webpage was last revised on 26 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).