vinA veNpA, koTikkavi, nenjcu viTu tUtu & civappirakAcam
of Umapathi Sivam
in Tamil Script, unicode format)

வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்
நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்




Etext Preparation & Proof Reading : Ms. Subashini Kanagasundaram, Boeblingen, Germany
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

1. வினா வெண்பா
நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1308)


இந்நூல் பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய ஒன்று. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கி கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெருவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர்.

பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினைவிளக்குவனவாக அமைந்திருக்கின்றன. இதைத் தவிர்த்து மற்ற பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது எனபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன.

முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக்கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்

வினா வெண்பா

1.
நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.

2.
இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி
மருளி நிலையருளு மானும் - கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா
வீங்குனரு ளாலென் பெற.

3.
புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.

4.
கனவு கனவென்று காண்பரிதாங் காணி
னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

5.
அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா
யாமா ரறிவா ரினி.

6.
சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான்.

7.
உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்
தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.

8.
அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்
பூணுமிறைக் கென்னாம் புகல்.

9.
இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா
வன்றாகி லாமா றருள்.

10.
ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை.

11.
காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்.

12.
ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.

13.
அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண்.

வினா வெண்பாமுற்றும்

2. கொடிக்கவி
நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1310)

நூல் அறிமுக உரை:
-------------------

கொடியேற்றம் என்பது பொதுவாக ஆலயங்களில் கும்பாபிஷேகங்களின் போதும் மற்ற திருவிழாக்களின் போதும் நடைபெருகின்ற ஒரு முக்கியச் சடங்கு. இச்சடங்கின் உட்பொருளை மிக அழகாக சைவ ஆகமத் தத்துவங்களைப் புகுத்தி ஐந்தே பாடல்களில் விளக்குகின்றார்

நூலாசிரியர்.
இந்த நூல் எழக்காரணமாக ஒரு கதையும் உண்டு. திருவிழா சமயத்தில் ஆலய நிர்வாகஸ்தர்கள் கொடியேற்றம் செய்ய, அக்கொடி மேல் நோக்கி ஏறாமல் தடைபட்டுக் கொண்டே வர, அப்பொழுது இறைவனின் ஆணைப்படி உமாபதி சிவம் வந்தால்தான் கொடியேரும் என உணர்த்தப்பட, தில்லைவாழ் அந்தணர்கள் அவரை அழைத்து வருகின்றனர். அவரும் இச்செய்தியைக் கேட்டு, அக்கொடியேற்றத்திற்காக இப்பாடல்கள் ஐந்தினையும் பாடி கொடியினை ஏற்றி வைத்ததாகக் கூறுகின்றன சைவ பரம்பரைக் கதைகள்.

இந்நூல் வடிவில் சிறிதாக இருப்பினும், சைவ சித்தாந்தத்தின் மூலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து பெருமை சேர்க்கின்றது. முக்கியமாக, இறையாகிய பதியும், ஆசைகளுக்கு மூலமான பாசமும் இவை இரண்டும் இருக்கின்ற இடம் பசுவாகிய உயிரினிடத்தில்தான். அப்படி இரண்டும் இருந்தாலும், இறைசக்தியானது, உயிரை பாசங்கள் தாக்கா வண்ணம் அருள் புரிந்து கொண்டே இருக்கின்றது. உயிர் உலகியல் இன்பங்களில் ஈர்க்கப்பட்டு கீழ் நோக்கிச் செல்லாமல், பதியை நோக்கி மேலே செல்ல வேண்டும் என்பதை உணர்த்த இந்தக் கொடியைக் கட்டுகின்றேன் எனப் பாடுகின்றார்.

ஓம் எனும் மூல மந்திரத்திலிருந்து எழுகின்ற ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய மற்றும் அவற்றிலிருந்து எழுகின்ற மற்ற பல மந்திர அட்சரங்கள், அவற்றிலிருந்து உருவாகும், ஒலிகள், மொழிகள், இவற்றையும் கடந்த மௌன நிலை ஆகிய அனைத்தும் உயிரோடு கலந்திருக்கின்ற பரம்பொருளையே உணர்த்துகின்றன என்கின்றார். இறைசக்தி எல்லையற்ற கருணை கொண்டது. உயிர்கள் மலங்கள் நீங்கி தெளிவு பெற்று, அந்த தெளிந்த அறிவுடனே மாறாமல் இருக்கின்ற நிலையே சிவப்பேறு. இக்கருத்துக்களையே இக்கொடியேற்றம் மறைமுகமாக விளக்குகின்றது என்கின்றது இந்நூல்.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்


கொடிக்கவி

1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

முற்றும்

3. நெஞ்சு விடு தூது
நூலாசிரியர் : உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1311)


நூல் அறிமுகம்:
இந்நூலின் செய்யுட்கள் கலிவெண்பா வகையைச் சேர்ந்தவை. அகப் பாடல்களில் அன்னத்தை தூது விட்டு தனது மனதின் எண்ணங்களை காதலனுக்கோ காதலிக்கோ தெரிவிப்பது போல பாடல்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நூல் ஆசிரியர் தனது ஞானாசிரியனை தலைவனாக நினைத்து தன்னை காதலியாக பாவித்து தனது மனதை தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வர தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இங்கு தலைவனாக அமைந்திருப்பவன் இறைவனே! ஆகையால் அவனது பெருமைகள் சிறப்புற விளக்கப்படுகின்றன. சைவ சித்தாந்த கொள்கைகள் இங்கு மேலும் விரிவாக பயன்படுத்தப்படுகின்றன. பதியின் இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை செய்யுட்களில் விளக்கப்படுகின்றன. பொதுவாக இப்பாடல்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, முதற்பகுதியில் இறைவனின் பெருமையயும், பாசங்களால் பந்திக்கப்பட்டு சிற்றறிவுடன் இருக்கும் உயிரின் தன்மைகளையும்ளைப்பகுதியில் விளக்குகின்றார்.

இரண்டாம் பகுதியை தனது தலைவனாகிய இறைவனின் புகழைக் கூறும் வகையில் தசாங்கங்களாக வடித்து அவற்றின் இயல்பைக் கூறுகின்றார். மூன்றாம் பகுதியில் இறைவனை அடைகின்ற நோக்கில் இடையிலேயே மனம் குழம்பி மாயாவாதம், உலோகாயுதம், சமணம், பௌத்தம், ஸ்மார்த்தம் ஆகிய கொள்கைகளில் செல்லாமல் குறிக்கோள் மாறாமல் தனது தலைவனை அடைந்து அவனின் அருளைப் பெற வேண்டும் என்று விளக்குகின்றார்.

திருவள்ளுவர், திருவுந்தியார், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தாக்கங்கள் பாடல்களில் தெரிகின்றன. தெய்வப் புலமை கொண்ட நூலான திருக்குறள் உலக வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கு உதவும் நூல் என்பதையும் தனது பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் இறுதி அங்கமாக தனி வென்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார். சைவ சித்தாந்தத்தின் சாரத்தை வித்தியாசமான முறையில் கூறும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்


நெஞ்சு விடு தூது

இறைவனியல்பு

பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்
பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினா - னன்றியும்
இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு
மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்
வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினா - னோத
வரியா னெளியா நளவிறந்து நின்ற
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
வருவா னுருவா னருவுருவு மில்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்

உயிரியல்பு

என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று
தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்
சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலா ரகந்தைக்கு - மேனி
யயர வயர வழிய வழியும்
உயிரின் றுயர முரையேன் - வயிரமே

தளையினியல்பு

கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத
வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்

இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா
வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி
வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது
தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு

மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல்
பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்
குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும்
சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை

இறைவனது நிலை

வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
யாதி யமல நிமலனருட் - போத
அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி
லளியி லளியி லளிய னளியில்
அளவி லளவி லளவன் - அளவிறந்து
நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா

விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற்
றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்
கல்லாது தோன்றா வமல னகிலமெலா
நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு
மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்

தசாங்கம்:-

1.மலை

பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே

2.ஆறு

செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்

களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்
கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய

பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு
மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ
மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்
காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப்

புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்
சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்
ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்
மீதான பத்து மிகப்பரந்து - காதிப்

பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய
வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா
நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த
தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு
மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்
தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா
வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா

வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு
மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்

3. நாடு

பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்

4. ஊர்

கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்

5. தார்

தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்
துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும்
புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்
உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்
மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத

6. குதிரை

வானம் புவன மலைகடலேழ் பாதாள
முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா
யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள்
நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்

7. யானை

பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு
மாதார மாகி யகண்டநிறைந் - தோத
அரிதா யெளிதா யருமறையா றங்கத்
துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்
காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்
தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த
மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா
லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா
லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான்
மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்

8. கொடி

சமையங் கடந்து தனக்கொப் பிலாத
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்

9. முரசு

தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே
என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே
நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்

10. ஆணை

மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை
யுலகு முலகா லுணரவொண்ணா வூரு
மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த

இறைவன் பெருமை

காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்

ஞானாசாரியார்

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்
போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ
நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்

சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்
வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா
நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்

குரூபதேசம்

வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே
னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்
நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய

தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய

வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை
நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை
யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு
வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்
சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி
னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற

பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச
மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்
கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத
வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா
மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க
ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்

பாடலா ராடலார் பண்பலார் நண்பலா
ராடலா ராட லகன்பதியாங் - கூடலார்
காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா
நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன
மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த
மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு
மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா
னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்

அடையும் இடம்

சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற
நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென்
றிகலா விருளலகை போலிகலே பேசு
முலகா யதன்பா லுறாதே - பலகாலுந்

தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே
நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்
தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு
மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும்
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை

யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா
வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே
லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்
செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
வழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ
னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்

வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி
யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து

நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்ப
மருவி மயங்கி வருவரோ - விருபொழுது

நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்
கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா
டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும்
பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
யீங்கொன்றை வாரா யினி.

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.

முற்றும்


4. சிவப்பிரகாசம்
நூலாசிரியர்: உமாபதி சிவம் (காலம்: 1306)

பாயிரம்

[காப்பு]

ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு
களியார வருமானை கழல்நாளு மறவாமல்
அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.

நடராசர் துதி

ஓங்கொளியாய் அருண்ஞான மூர்த்தி யாகி
உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை
திகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து
நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றிமையோர் துடி செய்ய நிருத்தஞ் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம்.

சிவகாமியம்மை துதி

பரந்தபரா பரையாதி பரன திச்சை
பரஞானம் கிரியைபர போக ரூபம்
தருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத்
தனுகரண புவனபோ கங்கள் தாங்க
விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய்
விமலாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்
தரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும்
அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.

விநாயகர் துதி

நலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன்
கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக்
கடமருவி யெனநிலவு கணபதியின் அருளால்
அலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல
மனைதிரு வடியினைகள் நினைதல் செய்வாம்.

முருகக்கடவுள் துதி

வளநிலவு குலவமரர் அதிபதியாய் நீல
மயிலேறி வருமீச னருள்ஞான மதலை
அளவில்பல கலையங்கம் ஆரணங்கள் உணர்ந்த
அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விறலெண்ணா
உளமருவு சூரனுரம் எமதிடும்பை யோங்கல்
ஒன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வேல் உகந்த
களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.

சந்தான பரம்பரை

தேவர்பிரான் வளகயிலைக் காவல் பூண்ட
திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற்
பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை
மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா
விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத்
தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவரிச்
சந்தானத் தெமையாளும் தன்மை யோரே.

குரு வணக்கம்

பார்திகழ வளர்சாம வேத மல்கப்
பராசரமா முனிமரபு பயில ஞானச்
சார்புதர வந்தருளி எம்மை யாண்ட
சைவசிகா மணிமருதைத் தலவன் அந்தன்
கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியங்
கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச்
சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை
திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம்.

நுதலிய பொருள்
(தொடக்கம்)

புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப்
புகல் அவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற் பொருள்போல்
பேதாபே தமும் இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் வளைவதா யுடலுயிர்கண் ணருக்கன்
அறிவொளிபோல் பிறிவருவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம்.

தீட்சாக்கிரமம்

மூவகையா ருயிர்வருக்க மலத்தார் கன்ம
மூலமலத் தார்மூன்று முடையாரன்றே
தீவகமா மெனவுருவாய் வந்து நாதன்
திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால்
பாவனையால் மிகுநூலா லியோகப் பண்பால்
பரவிவரு மவுத்திரியால் பாச நாச
மேவவரு ளுதவுமவுத் திரியிரண்டு திறனாம்
வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே.

விரும்பியமந் திராதிகார மர்ச்சனா திகார
மேவுமியோ காதிகார மெனச்சமய விசேடம்
வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் பவனங்கள் தத்துவங்கள் கலைகள்
ளிரங்கடைவிற்றொகைபதினொன் றெண்பத் தொன்றைம்பத்தொன்
றிருநூற்றோ டிருபத்து நாலாறா றைந்திற்
பரந்தநெறி யறுவகையு மொருவிநினை வரிதாம்
பரபதத்து ளுயிர்விரவப் பயிற்று மன்றே.

சிவஞானத்தின் சிறப்பும் வகையும்

கிரியையென மருவுமவை யாவும் ஞாங்
கிடைத்தற்கு நிமித்தமெனக்கிளக்குமுண்மைச்
சரியைகிரி யாயோகத் தன்மையோர்க்குச்
சாலோக சாமீப சாரூ பங்கண்
மருவியிடு முயர்ஞான மிரண்டா மாறா
மலமகல வகலாது மன்னு போதத்
திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதுஞ்
சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே.

நூல்வழியும் நூற்பெயரும்

தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ்
செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி
விரித்தனர்மற் றவர்கள்திரு வடிகள் போற்றி
விளம்பிநூ லவையிரண்டும் விரும்பினோக்கிக்
கருத்திலுறை திருவருளு மிறைவ னூலுங்
கலந்துபொது வுண்மையெனக் கருதி யானு
மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு
மாசில்சிவப் பிரகாச மாகு மென்றே.

அவையடக்கம்

தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று
தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க
நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந்தறிதல்
இன்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற்
றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கென வொன் றிலரே.

பொது வதிகாரம்

முதற் சூத்திரம்

1.பதி இயல்பு

பல்கலையா கமவேத மியாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல்பதிபாரமே யதுதான்
நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி
நின்மலமா யேகமாய் நித்த மாசி
யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி
யகண்டிதமா யானந்த வருவா யன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே.

முதல்வன் திருவுரு

நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான
நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி
நாடரிய கருணைதிரு வுருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரன புவன போகம்
பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.

ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானும்
ஈறுமுத நடுவொன்று மிலாமை யானும்
ஓங்கிவளர் ஞானமய னாத லானும்
உண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானும்
தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ்
சார்வரிய தனிமுதல்வ னாத லானும்
நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானும்
நிறுத்திடுவ நினைந்தவுரு நிமலன் றானே.

முதல்வனது உண்மை

உலகமெலா மொருவனோ டொருத்தியொன்றென்
றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு
மலமதனா லுளதாகு முருவ மாறி
வருவது பேர் வதுசெல்வ தாத லானும்
மலைவிலசேத தனமாயை யாதலானு
மணுக்களுரு வடையுமறி விலாமை யானும்
நிலவுதொழின் மருவுயுரு நிற்ற லானும்
நின்றெவையு மளித்திடுவ நிமலன் றானே.

கந்தமல ரயன்படைக்கு முலக மெல்லாங்
கண்ணனளித் திடுமவையெங் கடவுள் தானே
யந்தமுற வழித்திடுவ னாத லாலே
யயனரியு மவனதுய ரதிகா ரத்து
வந்தமுறை தன்றொழிலே மன்னுவிப்ப னெல்லாம்
வருவிப்பன் விகாரங்கண் மருவான் வானின்
முந்தரவி யெதிர்முளரியலாவுறுமொன்றலர்வான்
முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே.

உலகப் படைப்பின் பயன்

ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக
வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே
யூற்றமிக வருள்புரித லேது வாக
வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத்
தோற்மல பாகம்வரக் காத்தல் போகந்
துய்ப்பித்த றிரோதாயி தகநிறுத்த லாகும்
போற்வரு மருளருளே யன்றி மற்றுப்
புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே.

இரண்டாம் சூத்திரம்

2. பசுவியல்பு

எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி
யிருவினையின் றன்மைகளுக் கீடான யாக்கை
யண்ணலரு ளானண்ணி யவையவரா யதனால்
அலகினிகழ் போகங்க ளருந்து மாற்றாற்
புண்ணியபா வம்புரிந்து போக்குவரவுடைத்தாய்ப்
புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா
லுண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத
முற்றிடுநற் பசுவருக்க மெனவுரைப்பருணர்ந்தோர்.

3.பாச வியல்பு

மலமும் திரோதனமும்

ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளும்
எண்ணரிய சத்தியதாயிரு ளொளிரவிருண்ட
மோகமாய்ச் செம்பிலுரு களிம்பேய்ந்து நித்த
மூலமல மாயறிவு முழுதினையு மறைக்கும்
பாகமாம் வகைநின்று திரோதான சத்தி
பண்ணுதலான் மலமெனவும் பகர்வரதுபரிந்து
நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக
ணணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே.

சுத்தமாயையின் காரியம்

உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத
முதிக்கு மிருங் குடிலைதனில் விந்துவரு நாதந்
தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரில்
தயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான்
மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே
வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே
முன்னுதவுஞ் சூக்குமாதி யொருநான்கு மென்று
மொழிந்திடுவரருங்கலைகண் முதிர்ந்துளோரே.

மாயையின் இயல்பு

உருவாதி சதுர்விதமா யொன்றொன்றொவ்வா
உண்மையதாய் நித்தமா யொன்றா யென்று
மருவாகிக் கன்மாந்த மணுக்க ளியார்க்கு
மாவார மாயசித்தா யசல மாகி
விரிவாய தன்செயலின் வியாபியா யெல்லாம்
விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை யொடுங்க
வருகால முயிர்களெல்லா மருவிடமாய் மலமாய
மன்னியிடு மரனருளான் மாயை தானே.

மாயையின் உண்மை

என்னையிது வெனினுலகுக் குபாதான மில்லை
பிறைவனல தெனினசித்துத் சித்தினிடத் துதியா
மன்னியுள தேனமுதல்வ னெனகொ லென்னின்
மாயைதா னசித்துருவாய் மருவ மாட்டா
தன்னவனு மிதுவொழிய வாக்க மாட்டான்
அசத்தனா மெனினதுவு மவன்போ னித்த
முன்னவனவ் வசித்தைவிரித் தெவையு மாக்கு
முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே.

இருவினை உண்மை

படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நரராய்ப்
பண்ணியதென் முன்னைவினைப் பான்மையென்ப
ரடுத்தவினை யுளதாயி னிறையே னென்னில்
அசேதனமற் றவையாவிக் கமைந் தாகும்
எடுத்தவினை யுறுவுறுவ துயிரேற் றானே
யிருவினைக்குத் தக்கவுட லெய்து மென்னில்
சடத்திரளு மகர்த்தாவா யறிவொன் றில்லாத்
தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே.

மும்மலமும் அநாதி

அல்லன்மிக வுயிர்க்கிவைதா னனைத்த தீசன்
அருவினைக ளருந்துதற்கோ விளையோ வன்றிச்
சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச்
சூழ்ந்ததெனு முரைமுதலோர் தொடக்கிலார்பால்
ஒல்லைவரு மெனினுளதா முயிருண் டாவே
யுளதுமல மலமுளதா வொழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோ லநாதி யாக
நிறுத்திடுவ ரிதுசைவ நிகழ்த்து மாறே.

தத்துவங்களின் தோற்றமுறை

அருத்திமிகுங் கலைகால நியதியுடன் வித்தை
யராகமிவை யனந்தரான் மாயைதனி லாகும்
உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்கள்
உளவாகு மாங்காரம் புந்திதனி லுதிக்குந்
தெரித்தவிது திரிவிதமாந் தைசதம்வை காரி
திகழ்தரு பூதாதி யெனத் திருந்தி யசாத்துவிதம்
விரித்தகுண மனம்புத்தி யிந்திரிய மென்று
விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே!

மன்னியகன் மேந்திரிய மானவிரா சதஞ்சேர்
வாக்காதி வைகாரி மருவிவருஞ் சத்தந்
தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின்
தருமதனின் வானநில மனல்புனன்மண் சத்த
முன்னதனில் வெளியாதி யொன்றொன் றாக
முறையிலுறு மிருமையயன் முடிவா முன்னே
யுன்னுசதா சிவராதி யதிபதிக ளொடுக்க
முதித்தவடை வெனவுரைப்ப ருணர்ந்து ளோரே.

கன்மத்தின் இயல்பு

நண்ணியிடு முருவதனுக் கேது வாகி
நானாபோ கங்களாய் நாசோற் பத்தி
பண்ணிவரு மாதலால் அநாதி யாகிப்
பலவாகி யணுக்கடொறும் படர்வதாகி
யெண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்று
மியல்பிதனாய் மதிகதமா யிருபயனாம் பாவ
புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்
பொருந்துமிது கன்மமலம் புகலு மாறே.

கன்மநெறி திரிவிதநற் சாதியாயுப் போகக்
கடனதெனவருமூன்று முயிரொன்றிற் கலத்தல்
தொன்மையதூ ழல்லதுண வாகா கானுந்
தொடங்கடைவினடையாதே தோன்று மாறித்
தன்மைதரு தெய்விகமுற் பௌதிகமான் மிகமாந்
தகையிலுறு மசேதனசே தனத்தாலுஞ் சாரு
நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவணூ
ணாடிலத நூழ்வினையா நணுகுந் தானே.

மேலைக்கு வருவினையே தென்னி னங்கண்
விருப்புவெறுப் பெனவறியவ் விளைவு மெல்லா
மூலத்த வினைப்பயில்வா மென்னி னாமேன்
முற்றியதன் பயனுனக்கு முளைக்குமென்பர்
ஞாலத்து வினைகளிரு திறனாகும் புந்தி
நண்ணாத வினைநணுகும் வெனையெனவொன் றிரண்டா
யேலத்தா னிதமகித மாமிதனால் வழுவா
தெய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே.

உற்றதொழி னினைவுரையி நிருவினையு முளவாம்
ஒன்றொன்றா லழியா தூணொழியாதுன்னின்
மற்றவற்றி னொருவினைக்கோர் வினையால் வீடு
வைதிகசை வம்பகரு மரபி லாற்றப்
பற்றியது கழியுமிது வினையாலேற்கும்
பான்மையுமாம் பண்ணாதும் பலிக்கு முன்னஞ்
சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோருஞ்
சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே.

ஐம்மலம்

மோகமிக வுயிர்கடொறு முடனாய் நிற்க
மூலவா ணவமொன்று முயங்கி நின்று
பாகமிக வுதவுதிரோ தாயி யொன்று
பகர்மாயை யொன்றுபடர் கன்ம மொன்று
தேகமுறு கரணமொடு புவன போகச்
செயலாரு மாமாயைச் திரட்சி யொன்றென்
றாகமல மைந்தென்ப ரைந்து மாறா
தருளென்ப தரிதென்ப ரறிந்து ளோரே.

அவத்தை இயல்பு

1.கேவலாவத்தை

ஓங்கிவரும் பலவுயிர்கண் மூன்றவத்தை பற்றி
யுற்றிடும்கே வலசகல சுத்தமென வுணர்க
வீங்குவருங் கலாதியொடு குறியுருவ மொன்று
மின்றிமல மன்றியொன்று மில்லையெனு மியல்பா
யாங்கறிவை யறிவரிதாய் அறிகருவி யணையா
வாதலினா லிருண்மருவு மலர்விழிபோல துவாய்
நீங்கும்வகை யின்றி நித்த வியாபகமா யங்க
ணிற்பதுகே வலமென்று நிகழ்த்து நூலே.

ஐக்கியவாத மதமும் மறுப்பும்

இன்மைமல மாயைகன்ம மென்றிரண்டே யிறைதான்
இலங்குபல வுயிர்களு முன்புரிந்த விருவினையின்
தன்மைகளா லெவர்களுக்குந் தனுகரண புவனந்
தந்திடுமிங் கதனாலே யிருபயனுஞ் சார்ந்து
கன்மமெலா நேராக நேராதன் மருவக்
கடவுளரு ளாலெவையுங் கழித்திடுவ னதனாற்
பின்மலமா னவையணுகா பெருகொளிமுன்புளதே
பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே.

மலத்தின் உண்மை

மாயைமுத லெனவினையின் பான்மைமுதலெனவே
மன்னுபனை விதைமரபின் மயங்குமலம் சுத்தற்
கேயுநெறி யென்கொலத னியல்பாயின் முத்தி
என்பதென்மற் றிவை நிற்க விருங்கலாதி யுணர்வாய்
மேய பினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கு
மிகுமுலகந்த னிலென்னிலி வைவிடுங்கா லுணர்வுள்
தோயுநெறி யிலதாத லறியாமை யெனநீ
சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே.

அந்நியமா னவையுணர்த்தி யநந்நியமாய் நிறைந்த
வறிவறியா மையினானு மருணிலவுங் காலந்
தன்னிலவ னேயாவு மாய்நின்ற தொன்மை
தாமுணர்த லானுமுயிர் தானென வொன்றிலதாய்
மன்னியிடு மலமாயை கன்மங்கண் மாறி
வந்திடுமிங் கிதுவழுவா தாதலினான் மனத்தால்
உன்னரிய திருவருளை யொழியமல முளதென்
றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கே.

2. சகலாவத்தை

மலமும் மாயையும் முரனுவன:

நால்வகை வாக்குகள்

புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதன் மாயை
பொருந்தியிடு மரனருளாற் போதந் தீபஞ்
சகலமெலா முடனாய வாறு போலுந்
தருமருளை மலமுயிர்கள் சாராமன் மறைக்கு
மிகலிவரு மியையுணரி னிருள்வெளியாந் தன்மை
எய்தும் வகை தன்செய்தி யிலங்கும் விந்து
பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப்
பான்மையினால் ஒரு நாதம் படரும் தானே.

வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர்
சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற்
சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுந் தெரித்து
முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளணர்வா யோசை
முழங்கியிடு மத்திமைதான் வைகரியிலுதானன்
பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின்
பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே.

வாக்குகளால் சவிகற்ப உணர்வு உண்டாதலும் தத்துவங்களின் தொழிலும்

இத்தகைமை இறையருளால் உயிரறியும் அறிவுக்
கீடாக வாடாதே யீரிரண்டா னுரைத்த
வித்தைமுத லைவரான் விளங்கு ஞான
மேவியிடு மெனவுரைப்ப ரசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலஞ்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதர வித்தையிடை நின்றறிவை யுயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.

பேசரிய வராகந்தன் கன்மத்துக் கீடாப்
பெற்றதனி லாசைதனைப் பெருகுவிக்கு நியதி
தேசமிகு மரசர்தரு மாணி செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கை போல
நேசமுறு தங்கன்ம நிச்சயித்து நிறுத்து
நிகழ்காலங் கழிகால மெதிர்கால மென்றே
யோசைதர வருங்கால மெல்லைபலம் புதுமை
யுறுவிக்கு மிறைசக்தி யுடனாய் நின்றே.

ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால
மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனினிதற்குஞ் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்புஞ்
செய்வகையின் றொடர்ச்சியிங்குத் தோற்றுவிக்குங் குணத்தின்
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமா மவைதா
மிவ்வகையிற் சாத்துவித ராசததா மதமா
இயம்புவர்க ளொன்றிரண்டு குணமேற்கை யுடைத்தே.

அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா விருதி
யடர்ச்சிமிகுஞ் கவுரவம நியமமிவையடைவே
நிலவியிடு மும்மூன்று முயிரொன்றிற் கலந்தே
நிற்குமிவை நிறைபுலனின் பயனெவையுங் கவருங்
குலவிவரு போகங்கொ ளிடமா மாறாக
குறைவிலொளி யாமலகில் புலனிடத்தி னொருமை

பலவகையு முடையதாய்ப் பரனருளாற் புத்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே
ஆனதனு வதனிலுறு மநிலனையு மியக்கி
யாங்கார நீங்காத வகந்தைக்கு வித்தா
யானலது பிறரொருவ ரெனையொப்பார் புவியி
னில்லையெனு மியல்பினதா யிந்திரியம்புலன்க
டானுகரு மளவிலதின் முந்தியுறு மிச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து
மானதமா னதுநிற்குஞ் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.

சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டமிவை யைந்திற்குந் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்த
மருவியிடு மிவையடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறு மைந்திற்கும் பிறங்கொலிகொள் வசன
முன்னரிய கமனதா னவிசர்க்கா நந்த
முற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.

முந்தியவைம் பூதங்கள் வானாதி யாக
முயங்கியநற் செவிமெய்கண் ணாநாசிமுறையா
லிந்தவயி னின்றுவரு மைம்புலனு முயிர்தா
மெய்தும்வகைதம் முருவினிலங்கியிடும் புறத்து
வந்தடைய விடங்கொடுக்கு மிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டுந்தீ வெம்மை
தந்தவைசுட் டொன்றுவிக்கு நீர்குளிர்ந்து பதமே
தருமுரத்துத் தரிக்குமிகு தரணி தானே.

தத்துவங்களின் வகையும் உயிர்கள் இறந்து பிறந்து வருமாறும்

இந்நிரையி லைந்துசுத்த மேழ்சுத்தா சுத்த
மெண்மூன்று மசுத்தமெனு மிவைமுப்பத்தாறா
மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தா
மருவுமுரு நிலையழிய வரும்பொழுது வரியார்
பன்னகமண் டசங்கனவு படர்வகையே முன்னம்
பகரவருங் கலாதிநிலை பரவியசூக் குமமாந்
தன்னுருவி லணைந்துபய னருந்தியர னருளாற்
றரையினிடை வருமென்று சாற்று நூலே.

நால்வகைத் தோற்றம் முதலியன

தோற்றியிடு மண்டசங்கள் சுவேதசங்கள் பாரிற்
றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கி
னூற்றமிகு தாபரங்கள் பத்தொன்பதென்று
மூர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடரொன் பதுமா
வேற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி
யெண்பத்து நான்குநூ றாயிரமென்றெடுத்தே.

3. சுத்தாவத்தை

இனையபல பிறவிகளி னிறந்துபிறந் தருளா
லிருவினைகள் புரிந்தருந்து மிதுசகலம் அகலா
முனமருவு மிருபயனு மொருகாலத் தருந்த
முந்துநுக ருந்துபய னந்தமுற வந்த
வினையுமெதிர் வினையுமுடி வினையுதவு பயனா
னேராக நேராதன் மேவுங் கான்முற்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே.

நாடியசத் திநிபாத நாலு பாத
நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங்
கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்
கூத்தனொரு மூர்த்திகொடு குறுகி மோக
நீடியகே வலசகல நிகழாவாறு
நிறுத்திமல மறுக்குமிது நிலையார் சுத்தங்
கேடி புகழ் தருஞ்சரியை கிரியா யோகக்
கேண்மையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே.

முத்தி பேதங்கள்

அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்து
மறுமுத்தி திரிகுணமு மடங்கு முத்தி
விரவுவினை கெடுமுத்தி மலம்போ முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி
திரிமலமு மகலவுயி ரருள்சேர் முத்தி
திகழ்முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே.

உண்மை அதிகாரம்

இவ்வியலின் வகை

இங்கியவை பொதுவி யம்பு
மென்பர்க ளிதன்மேல் ஆன்மாத்
தங்கிய அஞ்சவத்தை
தன்னுண்மை உணர்த்துந் தன்மை
பொங்கொளி ஞான வாய்மை
அதன்பயன் புனித னாம
மங்கதில் அணைந்தோர் தன்மை
யறைகுவ னருளி னாலே.

1. ஆன்ம வியல்பு

செறிந்திடு முடலுண் மன்னிச்
சேர்புலன் வாயில்பற்றி
யறிந்ததி லழுந்து மொன்று
மறிந்திடா தறியுந்தன்மை
பிறிந்தடை வஞ்ச வத்தை
பெருகிய மலத்தாற்பேணி
யுறுந்தனி யதீத முண்மை
யுயிர்க்கென வுணர்த்துமன்றே.

உருவுணர் விலாமை யானு
மோரொரு புலன்களாக
மருவிநின் றறித லானு
மனாதிகள் தம்மின் மன்னித்
தருபய னுகர்த லானு
முயிர்சட மாத லானும்
அருவினை யுடலு ளாவி
யறிவினா லறியு மன்றே.

அறிவெனில் வாயில் வேண்டா
வன்றெனி லவைதாமென்னை
யறிவவை யுதவு மென்னி
லசேதன மவைதாமெல்லாம்
அறிபவ னறியுந் தன்மை
யருளுவ னென்னி லான்மா
வறிவில தாகு மீச
னசேதனத் தளித்தி டானே.

அறிவினா லறிந்த யாவு
மசத்தாத லறிதி யென்றும்
அறிவினா லறியொ ணாதே
லாவதொன்றின்மை தொன்மை
யறி வுதா னொன்றை முந்தி
யதுவது வாகக் காணு
மறிவுகா ணசத்து மற்ற
தறிவினுக் கறியொணாதே.

எவ்வறி வசத்த றிந்த
தெனிலுயி ரறியா தீசன்
அவ்வறி வறியா னல்ல
தசேதன மறியா தாவி
செவ்விய கருவி கூடில்
தெரிவுறா தருளிற் சேரா
துவ்விரு வகைய தென்னி
லொளியிரு ளொருங்குறாவே.

சத்திது வென்ற சத்துத்
தானறி யாத சத்தைத்
சத்தறிந் தகலவேண்டா
வசத்திதுசத்தி தென்றோர்
சத்திரு ளொளிய லாக்கண்
டன்மைய தாம சத்தைச்
சத்துட னின்று நீக்குந்
தன்மையாற் சதசத்தாமே.

கண்ணொளி விளக்களித்துக்
காட்டிடுமென்னின் முன்னங்
கண்ணொளி யொன்று மின்றாம்
விளக்கொளி கலந்த வற்றைச்
கண்ணொளி யகல நின்றே
கண்டிடும் வேறு காணாக்
கண்ணொளி விளக்கின் சோதி
கலந்திடுங் கருத்தொன் றன்றே.

ஓரிடத் திருத்தன் மாயா
வுருநிறைந் திடுத லொன்றாம்
பேரிடத் துறைத றானே
பிறங்கறி வாகி நிற்றல்
சோர்வுடைச் சடநி கழ்த்த
லெனுமிவை சொல்லார் நல்லோ
ரோரிடத் துணரு முண்மை
யொளிர்தரு முபலம் போலும்.

2. அஞ்சவத்தை இயல்பு

எண்ணவொன் றிலாத தீத
மெய்திய துரியத் தொன்று
நண்ணிடுஞ் சுழுத்தி தன்னில்
நயந்துள தொன்று பின்னு
மண்ணிடுங் கனவு தன்னி
லாறேழாஞ் சாக்கிரத்திற்
கண்ணுறு மஞ்சா றாய
கருவிகள் மருவுந் தானே.

இவ்வகை அவத்தை தன்னி
லெய்திடுங் கரணமெல்லா
மெய்வகை யிடத்தி லுற்று
மேவுமா கண்டு மிக்க
பொய்வகைப் பவம கற்றப்
புரிந்திடி லருளாலாங்கே
யைவகை யவத்தை யுய்க்குமறி
வினாலறிந்து கொள்ளே.

நீக்கமி லதீத மாசு
நிறைந்தகே வலமா நீர்மை
சாக்கிரங் கலாதி சேர்ந்த
சகலமாந் தன்மை யாகு
மூக்கமி லிரண்டுங் கூடா
தொழியவோர் நிலையி னீடுஞ்
சாக்கி ராதீதஞ் சுத்தத்
தகைமைய தாகுந் தானே.

3. தன்னுன்மை உணர்த்துந் தன்மை

மருவிய பொறியி லொன்று
மாபூத மைந்தி லொன்றுங்
கருவிக ணான்கு நீங்காக்
கலாதிக ளைந்துங் கூடி
யொருபுல னுகரு மிந்த
வொழுங்கொழிந் துயிரு மொன்றைத்
தெரிவுறா தவனொ ழிந்தத்
திரள்களுஞ் செயலி லாவே.

தனக்கென வறிவி லாதான்
றானிவை யறிந்து சாரான்
றனக்கென வறி விலாத
வாயிறா னறியா சாரத்
தனக்கென வறிவி லாதான்
தத்துவ வன்ன ரூபன்
தனக்கென வறிவா னாலிச்
சகலமு நுகருந் தானே.

அவிகாரவாதம் சிவாத்துவிதம் என்பவற்றை மறுத்தல்

கண்டுணர் புலன்கள் காணுங்
கருத்தினா லொருத்தன் ஞானங்
கொண்டுள மறியு மென்னிற்
கொள்பவன் முதலி யாகு
மண்டிய வுணர்வு யிர்க்கா
மன்னிநின் றறியு஦ மன்னில்
உண்டிட வேண்டு வானுக்
கொருவன்வே றுண்ட லாமே.

சித்தாந்தம்

இருணனி யிரவி தான்வந்
திரித்தலு மிரவி லெண்ணும்
பொருணிலை கண்டு மாந்தர்
பொருந்திடு மாறு போல
மருணிலை யெங்கு நீங்க
மகிழ்ந்துயிர் தன்னுண் மன்னு
மருளையு மொழிய ஞாலத்
தறிந்தவா றறியு மன்றே.

அறிந்திடு மனாதி வாயி
லானவை யவன்ற னாலே
யறிந்திடு மென்று மொன்று
மறிந்திடா வவைபோலி யாவும்
அறிந்திடு மறியுந் தன்மை
யறிந்திட கன்மத் தொன்மை
யறிந்தவை நுகரு மாறு
மருளுவ னமலன் றானே.

4. ஞான வாய்மை

காட்டிடுங் கரண மொன்று
மில்லையேற் காணொ ணாதா
னாட்டிய விவற்றான் ஞான
நணுகவு மொண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தி னாலே
யிறையரு ளுருவாய் வந்து
கூட்டிடு மிவற்றை நீக்கிக்
குரைகழல் குறுகு மாறே.

பன்னிறங் கவருந் தொன்மைப்
படிகநீ டொளியும் பன்மை
மன்னிலங் கியல்புந் தந்த
வளரொளி போல வையந்
தன்னகம் பயிலு நற்சிற்
சடங்களின் றன்மை தாவா
நன்னலம் பெறநி றைந்த
ஞானமே ஞானமென்பர்.

மாயைமா யேய மாயா
வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு
மருளெனி லிருளாய் நிற்கும்
மாயைமா யேய மாயா
வருமிரு வினையின் வாய்மை
யாயவா ருயிரின் மேவு
மருளெனி லொளியாய் நிற்கும்.

5. ஞானவாய்மையின் பயன்

தேசுற மருவு மான்ம
தெரிசன மான்ம சுத்தி
வாசிலா வான்ம லாப
மாகமூன் றாகு மூன்றும்
பாசம தகல ஞானம்
பற்றறான் பணியை நீத்தல்
ஏசினே யத்த ழுந்த
லெனுமிவற் றடங்கு மன்றே.

1. ஆன்ம தரிசனம்

தன்னறி வதனா லேதுந்
தனக்கறி வில்லை யேனுந்
தன்னறி வாக வெல்லாந்
தனித்தனி பயன ருந்துந்
தன்னறி வறியுந் தன்மை
தன்னாலே தனைய றிந்தாற்
தன்னையுந் தானே காணுந்
தானது வாகி நின்றே.

தத்துவ மான வற்றின்
தன்மைக ளுணருங் காலை
யுய்த்தறிந் திடவு திப்ப
தொளிவளர் ஞான மாகும்
அத்தன்மை யறிவு மாறு
மகன்றிட வதுவா யான்மா
சுத்தமாஞ் சுத்த ஞானத்
தொருமுத றோன்று மன்றே.

சத்தி சத்திமான் என்னும் இருமை

உறைதரு முணர்வு மன்றி
யதன்முத லுள்ள தென்றிங்
கறைவதெ னென்னி லண்ண
லருளெனு மதுவே யன்றி
நிறையொளி முதல தன்றி
நின்றிடா நிமல னாகும்
இறைவன் முதல வன்றே
னிலங்கருள் சத்தி யாமே.

சுத்தமாஞ் சத்தி ஞானச்
சுடராகுஞ் சிவமொ ழிந்தச்
சத்திதா நின்றா முன்னைத்
தகவிலா மலங்கள் வாட்டி
யத்தனை யருளு மெங்கு
மடைந்திடு மிருள கற்றி
வைத்திடு மிரவி காட்டும்
வளரொளி போன்ம கிழ்ந்தே.

2.ஆன்ம சுத்தி

சிவசமவாத மறுப்பு

புகலரு மசத்தர் தம்பாற்
பொருந்திய வலகை யேபோல்
அகிலமு முணரு மீச
னருளுயிர் மேவ லாலே
சகலமு நிகழ வேண்டுந்
தலவனைந் தொழிலுந் தானே
யிகலற வியற்றல் வேண்டு
மென்றது நன்றி யின்றே.

இன்றுநோக் குரை நடக்கு
மியல்பிலோற் கினைய வாய்ந்து
நின்றதோ ரலகை நேர்ந்தா
னிகழ்வதெ னதுபோ லுள்ளத்
தொன்றிய வுணர்வு தம்பா
லுள்ளது நிகழ்த்து மீசன்
தன்றொழி னடத்து மேனி
தனக்கெனக் கொண்டு தானே.

இந்நிலை தன்னின் மன்னி
யெய்திடுங் கலாதி போதந்
தன்னள வறிந்து நிற்குந்
தகவிலா மலங்க ணீத்த
வந்நிலை கரண மாகா
வகையதி லறிவ டங்கி
மன்னிய வியாபி யாய
வான்பயன் றோன்று மன்றே

அடைபவர் சிவமே யாகு
மதுவன்றித் தோன்று மென்ற
கடனதெ னென்னின் முன்னுங்
கண்டிடார் தம்மைப் பின்னுந்
தொடர்வரு மருளி னாலுந்
தோன்றுமா காணா ராயின்
உடையவ னடிசேர் ஞானம்
உணர்தலின் றணைத லின்றே.

3. ஆன்ம லாபம்

பொற்புறு கருவி யாவும்
புணராமே யறிவி லாமைச்
சொற்பெறு மதீதம் வந்து
தோன்றாமே தோன்றி நின்ற
சிற்பர மதனா லுள்ளச்
செயலறுத் திடவு திக்குந்
தற்பர மாகி நிற்றல்
சாக்கிரா தீதந் தானே.

ஒடுங்கிடா கரணந் தாமே
யொடுங்குமா றுணர்ந்தொ டுக்க
வொடுங்கிடு மென்னி னின்ற
தொடுங்கிடா கரண மெல்லா
மொடுங்கிட வொடுங்க வுள்ள
வுணர்வுதா னொழியும் வேறா
யொடுங்கிடி னன்றி மற்றவ்
உண்மையை யுணரா ணாதே.

பற்றிடுங் கருவி யாவும்
படர்ந்துணர் வளிக்கும் காலை
யுற்றறிந் திடுவ தொன்றி
னுணர்வினி னுண்மை யாகு
மற்றது பகல்வி ளக்கின்
மாய்ந்திட வருவ துண்டேற்
பெற்றிடு மதனை மாயப்
பிறப்பினை யறுக்க லாமே.

முந்திய வொருமை யாலே
மொழிந்தவை கேட்டல் கேட்ட
சிந்தனை செய்த லுண்மை
தெளிந்திட லதுதா னாக
வந்தவா றெய்த நிட்டை
மருவுத லென்று நான்கா
மிந்தவா றடைந்தோர் முத்தி
யெய்திய வியல்பி னோரே.

பாசமா ஞானத் தாலும்
படர்பசு ஞானத் தாலும்
ஈசனை யுணர வொண்ணா
திறையருண் ஞான நண்ணின்
தேசுறு மதனான் முன்னைச்
சிற்றறி வொழிந்து சேர்ந்து
நேசமோ டுயர்ப ரத்து
நிற்பது ஞான நிட்டை.

உபாய நிட்டை

விளம்பிய வகையி னிட்டை
மேவிட லரிதேன் முன்னம்
அளந்துணர் வளித்த வற்றி
னளவுமற் றவற்றி னாலே
யுளங்கொளுந் தனையு முள்ள
படியுமுற் றுணர்ந்து செவ்வே
தளர்ந்திடா துவப்ப மற்றத்
தன்மைய தாகுந் தானே.

பாவிக்கின் மனாதி வேண்டும்
பயனிலை கரண நீத்துப்
பாவிப்ப னென்னி லென்ன
பழுதுள பாவ கத்தாற்
பாவிக்க வொண்ணா னென்று
பாவிப்ப னென்னி னீயென்
பாவிக்க வேண்டா வாண்ட
பரனருள் பற்றி னோர்க்கே.

பரமுத்தியின் இயல்பு

ஒன்றிரண் டாகி யொன்றி
னொருமையா மிருமை யாகி
யொன்றினொன் றழியு மொன்றா
தென்னினொன் றாகா தீயி
னொன்றிரும் புறழி னின்றா
முயிரினைந் தொழிலும் வேண்டு
மொன்றிநின் றுணரு முண்மைக்
குவமையா ணவத்தொ டொன்றே.

பாச நீக்கம்

அழிந்திடும் பாச மென்னி
னித்தமென் றுரைத்தல் வேண்டா
அழிந்திடா தென்னின் ஞான
மடைவது கருதல் வேணா
அழிந்திடுஞ் சத்தி நித்த
மழிந்திடா வொளியின் முன்னர்
அழிந்திடு மிருளு நாச
மடைந்திடா மிடைந்தி டாவே.

வினை நீக்கம்

எல்லையில் பிறவி நல்கு
மிருவினை யெரிசேர் வித்தி
னெல்லையி னகலு மேன்ற
உடற்பழ வினைக ளூட்டுந்
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையு ஞானத்
தழலுற வழிந்து போமே.

6. புனித நாமம்

பந்தமா னவைய றுத்துப்
பவுதிக முழலு மெல்லைச்
சந்தியா தொழியா திங்குத்
தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தமா திகளில் லாத
வஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே.

திருவெழுத் தைந்தி லான்மாத்
திரோத மாசருள் சிவஞ்சூழ்
தரநடு நின்ற தொன்றாந்
தன்மையுந் தொன்மை யாகி
வருமந மிகுதி யாலே
வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங்
காதலார்க் கோத லாமே.

ஆசறு திரோத மேவா
தகலுமா சிவமுன் னாக
வோசைகொ ளதனி னம்மே
லொழித்தரு ளோங்கு மீள
வாசியை யருளு மாய
மற்றது பற்றா வுற்றங்
கீசனி லேக மாகு
மிதுதிரு வெழுத்தி னீடே.

7. அணைந்தோர் தன்மை

தீங்குறு மாயை சேரா
வகைவினை திரிவி தத்தா
னீங்கிட நீங்கா மூல
நிறையிரு ளிரிய நேயத்
தோங்குணர் வகத்த டங்கி
யுளத்துளின் பொடுங்க நேரே
தூங்குவர் தாங்கி யேகத்
தொன்மையிற் றுகளி லோரே.

குறிப்பிடங் காலத் திக்கா
சனங்கொள்கை குலங்கு ணஞ்சீர்
சிறப்புறு விரதஞ் சீலந்
தபஞ்செபந் தியான மெல்லா
மறுத்தற வொழிதல் செய்தன்
மருவிடா மன்னு செய்தி
யுறக்குரு பவர்போல் வாய்மை
யொழிந்தவை யொழிந்து போமே.

அகம்புற மென்றி ரண்டா
லருச்சனை புரியு மிந்தச்
சகந்தனி லிரண்டு மின்றித்
தமோமய மாகி யெல்லா
நிகழ்ந்திட மகிழ்ந்து வாழு
நீர்மையோர் போல ஞானந்
திகழ்ந்தகம் புறமெ னாத
செம்மையார் நன்மை யாரே.

ஞானத்தில் யோகம்

அண்டமே விடவ னைத்து
மனைத்தையு மண்ட மேவிக்
கொண்டல்போ லெவையு ஞானங்
குறைவிலா நிறைத லாலே
கண்டதோர் பொருளை யந்தக்
கருத்தினாற் காணிற் றானே
யண்டநா யகனா மேனி
யானதே லைய மின்றே.

ஞானத்திற் கிரியை

மண்முதற் கரணமெல்லா மறுவசத் தாக்கி ஞானக்
கண்ணினி லூன்றி யந்தக் கருத்தினா லெவையு நோக்கி
யெண்ணியஞ் செழுத்து மாறி யிறைநிறை வுணர்ந்து போற்றல்
புண்ணியன் றனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே.

ஞானத்திற் சரியை

தொண்டர்கள் தாமும் வானோர் தொழுந்திரு மேனிதானும்
அண்டருங் கண்டி லாத வண்ணலே யெனவ ணங்கி
வெண்டர ளங்கள் சிந்த விழிமொழி குழற மெய்யே
கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே.

நூற்கருத்து
(முடிவு)

நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக்
குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத்
தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரியத்தாய்
மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே.

நூலை உபதேசிக்குமாறு

திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல்
விரிவது தெளியு மாற்றால் விளம்பிய வேது நோக்கிப்
பெருகிய வுவமை நான்கின் பெற்றியி னிறுவிப்பின் முன்
தருமலை வொழியக் கொள்வோன் றன்வயிற் சாற்ற லாமே.

முற்றும்



This page was first put up on July 9, 2001
Please send your comments and corrections to the Webmaster(s) of this site