muththoLLAyiram
(author not known)
(in tamil script, unicode format)
முத்தொள்ளாயிரம்
ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input) : Mr. Raj Parthasarathy, Indianapolis, U.S.A.
Etext Preparation (proof-reading) : Dr. Ram Ravindran, Indianapolis, USA
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA,USA
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This web page was first put up on Dec 10, 2001 and revised on 14 March 2002
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முத்தொள்ளாயிரம்
ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
மறைந்து போன தமிழ் நூல்
1. கடவுள் வாழ்த்து.
மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு !
---------
சேரன்
2. அடைப்பும் திறப்பும்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா
வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு !
3. இழந்தலும் பெற்றதும்
வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர்
மாமையே யன்றோ இழப்பது- மாமையிற்
பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற்
பொன்னுாறி யன்ன பசப்பு!
4. முடிந்ததும் முடியாததும்
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்!
5. பழிக்காப்பு
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!
6. கனவுப் புணர்ச்சி
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு!
7. நெஞ்சு விடு துாது
கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் நெஞ்சு!
8. வருவதும் போவதும்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு!
9. காணாப் பேச்சு
வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென்
றருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம்
உண்டா யிருக்கஅங் ஓண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம்!
10. வஞ்சப் புகழ்ச்சி
இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்!
சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோபெரிது!
11. காதல் நோய்
காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்
நெஞ்சங் களங்கொண்டநோய்!
12. உலக இயல்பு
மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல
திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால்
உலகங் கிடந்த இயல்பு!
13. அணையா நெருப்பு
நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிந்
புகலுங் களியானைப் புழியர் கோக் கோதைக்
கழலுமென் நெஞ்சங் கிடந்து!
14. சேர நாடு
அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினம்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு
15. வஞ்சி வளம்
களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கட்-துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே
பும்புனல் வஞ்சி அகம்!
16. வானகமும் வையகமும்
வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற் கனையார் மறமன்னர்-வானத்து
மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர்
கோன்சேரன் கோதையென் பான்!
17. உய்யும் வழி
பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசும்பு!
18. நரியினமும் வண்டினமும்
அரும்பவிழ் தார்க் கோதை அரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்-சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு!
19. குடையோ? திங்களோ?
வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை!
20. யானை நாவாய்
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான்
காய்சினதேற் கோதை களிறு!
21. பூழியன் போர்க்களம்
மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா
வயிரக் கடக்கை வாங்கித்-துயருழந்து
புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை
கண்ணுற்று வீழந்தார் களம்!
22. சேரன் சினந்தால்!
கரிபர்ந்து எங்கும் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையும் கூடி-எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு!
23. வேலைப் பழித்தால்
வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறியலாகா கிடந்தனவே-போரின்
முகையவிழ்த்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு!
-------------
சோழன்
24. பெரும் பழி
திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணீரக் காணக் கதவு!
25. கானல் நீர்
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை யெருகென்றால் அன்னை- அதுபோய்
விளைந்தவா இன்று! வியன் கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று!
26. கண்ணும் கயலும்
சுடரிலைவேற் சோழன் தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத்- தொடர்புடைய
நீர் வலையிற் கயல்போற் பிறழுமே
சாலேக வாயில்தொறுங் கண்!
27. தேரையும் பாவையும்
அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும்
என்னை அழியுஞ்சொற் சொல்லுவர்-நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து!
28. நீரும் நெருப்பும்
அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி
விலங்கியான் வேண்டா வெனினும்- நலந்தொலைந்து
பீர்மேற் கொளல் உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு!
29. நாணும் நலனும்
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற- யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு!
30. கனவிலும் இழந்தேன்
ஊடல் எனஒன்று தோன்றி அல்ருறூஉங்
கூடல் இழந்தேன் கொடியன்னாய்!-நீடெங்கின்
பாளையிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று
31. கண்ணாரக் காணேன்
புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்
மண்ணளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு!
32. கண்ணும் நாணமும்
கனவினுள் காண்கொடா கண்ணூம் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும்-இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று!
33. முறை இதுவோ?
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு!
34. அரசர்க்குரியது
என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புன்னாடன் வௌவினான் -என்னே
அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்!
35. காவானோ
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ! மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்!
36. அறமும் அரசும்
அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி -இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
சென்கோன்மை செந்நின்ற வாறு!
37. பெண்தன்மை
நீள்நீலத் தாரிவளவன் நின்மேலான் ஆகவும்
நாணிமை யின்றி நடத்தியால் - நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை இல்லை பிடி!
38. நாரைவிடு தூது
செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேநியேல்
நின்கால்மேல் ைவைப்பன் என் கையிரண்டும் - நன்பால்
கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்
குரையாயோ யானுற்ற நோய்!
39. கண்ணோட்டம்
வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண் ஆள்வார் கண்ணென் - றிரக்கண்டாய்
வாள் உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோள் அழுவம் தோன்றத் தொழுது!
40. வாடைக் காற்றே
பேயோ பெருந்தண் பனிவாடாய்! பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங்க் கிறைக்குடிகள் -நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம் பார்ப் பாய்!
41. வண்டின் தூது
நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீல்முந் தைவந்-தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்!
பண்டன்று பட்டினங் காப்பு
42. தானையும் யானையும்
தானைகொண் டோடுவ தாய்ந்தன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ-யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது
43. சோழ நாடு
காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை-காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றி சைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு!
44. உறைந்த வளம்
மாலை விலைபகர்வார் கிள்லிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால்-காலையே
வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம்!
45. குடைச் சிறப்பு
மந்தரங்க் காம்பா மணீவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிலற்றுமே
கொற்றப் போர்க் கிள்ளி குடை!
46. இரே வதித் திருநாள்
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னொ
சிலம்பிதன கூடிழந்த வாறு
47. மன்னர் மன்னன்
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ!
48. ஆற்றலும் அழகும்
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு!
49. உஞ்சைமுதல் ஈழம்வரை
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு!
50. களிறு புறப்பட்டால்
பற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப-ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு!
51. செம்பியன் போர்க்களம்
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மட்டி-எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம்!
52. கூகையிள் தாலாட்டு
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரி இளம் செங்காற் குழவி-அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு!
--------------
பாண்டியன்
53. துளைதொட்ட தேன்
காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி!
54. தாயும் மகளும்
வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள்!
55. ஆற்றாமையும் அறியாமையும்
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்க்குச் சென்றெவன் நெஞ்சறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்!
56. நானும் இழப்பதா
களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க-அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்!
57. காப்பதா? கவர்வதா?
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் -இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி!
58. யானோ எளியேன்?
தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால்-யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்!
59. பாலும் நீரும்
மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு!
60. மானும் மங்கையும்
புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா- இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் நெஞ்சு!
61. கனவோ? நினைவோ?
களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் தௌியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என் அலால் யான்!
62. கண்கள்
கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும்-புனையிழாய்!
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தண்கண் அருள்பெறுமா தான்!
63. வளைக்கள் வன்
தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும் என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா!
64. கனவும் இழந்தேன்
ஓராற்றல் எண்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற- வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழ்ந்திருந்த வாறு!
65. குவளையின் தவம்
கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்!
66. யார் அறிவார்?
அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து-மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற!
67. தோளும் துணைவனும்
கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள்!
68. முத்துத் துளிகள்
இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது-கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்!
69. வள்ளைப் பாட்டு
கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ? யானும் ஓர்
அம்மனைக் காவல் உளேன்!
70. தோழிவிடு தூது
என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படாவாறே யுரை!
71. வாடைவிடு தூது
மாறாடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளீர்வாடாய்! சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை!
72. பெண்ணும் பிடியும்
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை யிரப்பல் - கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகதலுமெஞ்
சாலேகம் சார நட!
73. பிடியும் பெண்மையும்
எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் - உலா அங்கால்
பைய நடக்கவுந் தோற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ துடைத்து!
74. மாதும் மாவும்
போரகத்துப் பாயுமா பாயாது பாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ - கூர்வேல்
மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ!
75. வழுதியும் பூவையும்
ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ -நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு!
76. வாடையும் வாட்டமும்
பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் - மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து
77. மங்கையும் கொங்கையும்
வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் - கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை!
78. நாணமும் நலிவும்
நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் - காணேன் நான்
வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு!
79. நாணமும் நங்கையும்
மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் - கண்டக்காற்
பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான்!
80. வரிவளையும் புரிவளையும்
செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்! - கையார்
வரிவளை நின்றன வையயார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு!
81. உரையும் திரையும்
உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் - புகுவான்
திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு!
82. சுழிக்குறி
கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடு என்று - கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து!
83. விளக்கமும் காமமும்
குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி - புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை
தரும்!
84. வையையும் தையலும்
ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் - வேற்கண்ணாய்!
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோர் இடர்!
85. ஊடல்
யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின்
தான் ஊட யானுணர்த்தத் தான் உணரான் - தேன் ஊறு
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு!
86. இரவு
புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் - நல்ல
விராமலர்த் தார்மாறன் வென்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது!
87. பாண்டிய நாடு
பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் - சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு
88. முத்து வளம்
நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு!
89. கூடல் அகம்
மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈஞ்சாந்தின சேறுழக்கி - எங்கும்
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூடல் அகம்!
90. முருகனும் மாறனும்
மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் - தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை
இன் தமிழால் யாம்பாடும் பாட்டு!
91. முடியும் அடியும்
செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்ரியபூப்
பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் - எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்1
92. மாலும் மன்னனும்
கூந்தன்மா கொன்று குடிமாடிக் கோவலானாய்ப்
பூந்ந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு!
93. உத்திராடத் திருநாள்
கண்ணர் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணாற நடைப் புரவி பண்விடுமின் - நண்ணார்தம்
தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள்
போர்வேந்தன் பூசல் இலன்!
94. குடை கண்டால்
நிறைமதிபோல் யானைமேல் நீல்த்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர் - திறைகொள்
இறையோ! எனவந் திடம்பெறுதல் இன்றி
முறையோ என நின்றார் மொய்த்து!
95. மன்னர் முடியும் மாவின் அடியும்
நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத் தமாப்
பொன்னுரையகல் போன்ற குளம்பு!
96. வேலும் பாம்பும்
அருமணி அந்தலை யாடரவம் வானத்து
உருமேற்ரை அஞ்சி ஒளிக்கும் - செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு
97. தேவரும் காவலனும்
நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்!
98. பாம்பும் பகைவரும்
செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமின் இடிமுரசு ஆர்ப்ப - அறவுறழ்ந்து
ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து!
99. யானையின் பட்டயம்
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லாம் எம்தென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு!
100. கொம்பின் தொழில்
உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில் வேறால் - ஒருகோடு
வேற்றார் அகலம் உழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால்!
101. மாறன் களிறு
தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங்
குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோள்
எறிகதிர்வேல் மாறன் களிறு!
102. நாணமும் வீரமும்
அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப்
பிடிமுன் பழகதலில் நாணி - முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு!
103. தென்னவன் போர்க்களம்
வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண் டஞ்சி -நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்!
104. வீரமும் ஈரமும்
ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி - யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே
பல்யானை அட்ட களத்து!
105. கூகையின் கொலு
வாகை வனமாலை சூடு அரசுறையும்
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து - கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு!
106. பாண்டியர் சினந்தால்
பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையின் உய்யாதார் தேயம் - முறைமுறையின்
ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே
ஈன்பேய் உறையும் இடம்!
107. பாண்டியன் பண்பு
கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற் - பிடித்தவேற்
களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக்
கண்டு!
108. அருமருந்து
தொழில்தோற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின்
நழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் - கழலடைந்து
மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமறன்
கண்னிரத்தந் தீர்க்கு மருந்து!
109. சிதைந்த பாடல்
இருங்களி ன்ற மடப்பிடி சார
லிருங்கருவி நீராற் றௌி நலங்கிளர்வேற்
றுன்னரும் போர்க்கோதை துடாசெருக்கின்
மன்னன் மதிலாய வென்று!
-------------
This webpage was last revised on 6 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).