urainatail Kalevala
in Tamil Script, unicode format)

உரைநடையில் கலேவலா
தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)




Etext Preparation: Mr. Uthayanan; Proof-reading: Mr. Uthayanan of Helsinki, Finland
Web version: Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

உரைநடையில் கலேவலா

கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்
உலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று


இலங்கை அரசின் 1999ஆம் ஆண்டிற்கான
சாகித்திய இலக்கிய விருது பெற்ற நூல்


தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்


தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)


நூலமைப்பும் முன்னுரையும்: முனைவர் அஸ்கோ பார்பொலா


பொருளடக்கம்
முன்னுரை: முனைவர் அஸ்கோ பார்பொலா
சிறப்புரை: முனைவர் இந்திரா பார்த்தசாரதி
ஆய்வுரை: கவிஞர் வி. கந்தவனம், ரொறன்ரோ
என்னுரை - உதயணன்

முகவுரை
அத்தியாயம் 1. வைனாமொயினனின் பிறப்பு
அத்தியாயம் 2. வைனாமொயினனின் விதைப்பு
அத்தியாயம் 3. பாடற்போட்டி
அத்தியாயம் 4. ஜனோவின் முடிவு
அத்தியாயம் 5. கடற்கன்னி
அத்தியாயம் 6. சகோதரனின் பழிவாங்கல்
அத்தியாயம் 7. வைனாமொயினனும் லொவ்ஹியும்
அத்தியாயம் 8. வைனாமொயினனின் காயம்
அத்தியாயம் 9. இரும்பின் மூலக்கதை
அத்தியாயம் 10. சம்போவைச் செய்தல்
அத்தியாயம் 11. லெம்மின்கைனனின் விவாகம்
அத்தியாயம் 12. சத்தியம் தவறுதல்
அத்தியாயம் 13. பிசாசின் காட்டெருது
அத்தியாயம் 14. லெம்மின்கைனனின் மரணம்
அத்தியாயம் 15. லெம்மின்கைனனின் மீட்சி
அத்தியாயம் 16. மரண உலகில் வைனாமொயினன்
அத்தியாயம் 17. வைனாமொயினனும் விபுனனும்
அத்தியாயம் 18. இரண்டு மாப்பிள்ளைகள்
அத்தியாயம் 19. திருமண நிச்சயம்
அத்தியாயம் 20. விவாக விருந்து
அத்தியாயம் 21. திருமணக் கொண்டாட்டம்
அத்தியாயம் 22. மணமக்களின் பிாிவுத்துயர்
அத்தியாயம் 23. மணமக்களுக்கு அறிவுரைகள்
அத்தியாயம் 24. மணமக்கள் புறப்படுதல்
அத்தியாயம் 25. மணமக்களுக்கு வரவேற்பு
அத்தியாயம் 26. லெம்மின்கைனனின் பயணம்
அத்தியாயம் 27. வடநாட்டுப் போர்
அத்தியாயம் 28. லெம்மின்கைனனும் தாயும்
அத்தியாயம் 29. லெம்மின்கைனனின் அஞ்ஞாதவாசம்
அத்தியாயம் 30. உறைபனியில் லெம்மின்கைனன்
அத்தியாயம் 31. குலப்பகையும் அடிமை வாழ்வும்
அத்தியாயம் 32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியும்
அத்தியாயம் 33. குல்லர்வோவின் பழிவாங்கல்
அத்தியாயம் 34. குல்லர்வோவும் பெற்றோரும்
அத்தியாயம் 35. குல்லர்வோவின் குற்றச்செயல்
அத்தியாயம் 36. குல்லர்வோவின் மரணம்
அத்தியாயம் 37. பொன்னில் மணமகள்
அத்தியாயம் 38. வடநாட்டுப் பெண்ணைக் கவர்தல்
அத்தியாயம் 39. வடநாட்டின் மீது படையெடுப்பு
அத்தியாயம் 40. 'கந்தலே' என்னும் யாழ்
அத்தியாயம் 41. 'கந்தலே' யாழை இசைத்தல்
அத்தியாயம் 42. 'சம்போ'வைத் திருடுதல்
அத்தியாயம் 43. 'சம்போ'வுக்காகக் கடற்போர்
அத்தியாயம் 44. புதிய யாழ்
அத்தியாயம் 45. கலேவலாவில் தொற்றுநோய்
அத்தியாயம் 46. வைனாமொயினனும் கரடியும்
அத்தியாயம் 47. சூாிய சந்திரர் திருடப்படுதல்
அத்தியாயம் 48. நெருப்பை மீட்டல்
அத்தியாயம் 49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்
அத்தியாயம் 50. கன்னி மர்யத்தா
முடிவுரை
விளக்கக் குறிப்புகள்
உலகளாவிய கலேவலா

Transliteration used in this e-text:

அ - a; ஆ - aa; இ - i; ஈ - ii; உ - u; ஊ -uu; எ - e; ஏ- ee; ஐ - ai; ஒ - o; ஓ- oo; ஔ - au.

க் - k; ங் - ng; ச் - c; ஞ் - nj; ட் - t; ண் - N; த் - th; ந் - n-; ப் - p; ம் - m; ய் - y; ர் - r; ல் - l; வ் - v; ழ் - z; ள் - L; ற் - R; ன் - n.

NOTE - II

There are two additional vowels in Finnish Language. They are two dots above "a" ("A") and two dots above "o" ("O"). They are written in this e-text as a* (A*) and o* (O*) respectively.


 அட்டவணைமேலே

முன்னுரை

பேராசிாியர் அஸ்கோ பார்பொலா
ஹெல்சிங்கி பல்கலைக் கழகம்

பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததின் பலனாகத் திரு. ஆர். சிவலிங்கம் கலேவலா என்னும் காவியம்முழுவதையும் கவிதை நடையில் தமிழாக்கி 1994ல் வௌியிட்டிருந்தார். இது ஓர் உயர்ந்த உன்னதமான இலக்கியப் படைப்பாக வௌிவந்திருந்தபோதிலும், பின்லாந்து நாட்டின் தேசீய காவியமான இந்தஅரிய இலக்கியச் செல்வத்தின் தமிழாக்கம், உலக இலக்கியத்திலும் நாட்டுப் பாடல்களிலும் ஆர்வமுள்ளஅறிஞர்களால் மட்டுமே படிக்கப்படுமோ என்ற அச்சமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்த அற்புதமானஆக்கம் சாதாரணமான தமிழ் வாசகர்களைக் குறிப்பாக இளம் தலைமுறையினரைச் சென்றடையாதுவிட்டால்,அது வருத்தப்படக்கூடிய செயலாகும் என்றும் அவர் கருதினார். எனவே கலேவலாவின் முழுக் கதைகளையும்எளிமையான உரைநடையில் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார்.

கவிதைநடையில் வௌிவந்த தமிழாக்கத்துக்கு அறிவுபூர்வமான 'அறிமுக உரை' ஒன்றை நான் எழுதியிருந்தேன். கலேவலா என்னும் இந்தக் காவியத்தின் பின்னணி என்ன, இது எப்படி எப்பொழுது ஓர்உருவத்தைப் பெற்றது என்பன போன்ற பல விடயங்களை அதில் கூறியிருந்தேன். நாடோடி இலக்கிய,வரலாற்றுத் தகவல்கள்பற்றியெல்லாம் அந்த அறிமுக உரையில் நான் அலசியாராய்ந்து இருப்பதால், 'உரைநடையில கலேவலா' என்னும் இந்தத் தமிழாக்கத்துக்கு ஒரு முன்னுரை எழுதி, அதில் பின்லாந்து நாட்டைப்பற்றிய பொதுப்படையான சில விவரங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் கூறும்படி திரு சிவலிங்கம்என்னைக் கேட்டிருந்தார். இது ஒரு நல்ல ஆலோசனை என்று எனக்குத் தோன்றியது. அதனால்பின்லாந்துபற்றிய சில அடிப்படைத் தகவல்களை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால், இன்றைக்குக்கவிதைநடைத் தமிழாக்கத்தை எல்லோரும் பார்க்க வாய்ப்பில்லாமல் போகலாம் என்ற காரணத்தால்,அதன் 'அறிமுக உரை'யில் கூறப்பட்ட சில விடயங்களையும் இதில் சுருக்கமாகக் கூறுவேன்.

பின்லாந்தும் அதன் இயற்கை வளமும்

பின்லாந்து, ஐரோப்பாவின் வட கரையில் 1600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு மிகப் பொிய நாடு. மேற்குப் பக்கத்தில் ஸ்கன்டிநேவிய நாடுகாளான நோர்வே, சுவீடன் நாடுகளுக்கும் கிழக்கேரஷ்யாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டின் பெரும் பகுதியில் காடுகள் மண்டிக்கிடக்கின்றன. இந்த நாட்டைப்போன்ற சம அளவு குளிருள்ள இந்தியாவின் இமயமலைப் பிரதேசத்தில்வளரக்கூடிய தேவதாரு மர இனங்களை (spruce, pine, birch) பின்லாந்தின் காடுகளில்காணலாம். பின்லாந்து ஒரு தட்டையான நாடு அல்ல; இமயமலைத் தொடர்போலப் பாாிய மலைகள்நிறைந்த நாடுமல்ல; பதிந்த குன்றுகள் நிறைந்த நாடு. பென்னம்பொிய பாறைகளைப் பெரும்பாலும் எங்கும்காணலாம். இங்கே சிறிதும் பொிதுமாக இரண்டு லட்சம் ஏாிகள் இருக்கின்றன. பின்லாந்தின் மேற்குத்தெற்குப் பக்கங்களில் பால்டிக் கடல் (Baltic Sea) இருக்கிறது. தென்மேல் கரையோரத்தில்ஏராளமான தீவுகளும் இருக்கின்றன. கடலிலும் ஏாிகள் ஆறுகளிலும் மக்கள் நீந்துவார்கள்; படகுச்சவாாி செய்வார்கள்; மீன் பிடிப்பார்கள். சிலர் காடுகளில் வேட்டைக்குப் போவார்கள். ஓநாய்களும்கரடிகளும் வாழும் காடுகளில் வேட்டையாடுவது ஒரு காலத்தில் ஆபத்து மிகுந்ததாக இருந்தது. இந்தநாட்களில் மாமிச பட்சணிகள் அருகி வருகின்றன. பொிய காடுகளில் பயணம் செய்த சிலர் வழிதவறிப் போன சம்பவங்களும நடந்திருக்கின்றன - ஏன், இன்னமும் நாட்டின் பெரும் பகுதிகளில் மக்கள்அடர்த்தியாக வாழவில்லை. பின்லாந்து நாட்டின் மொத்தக் குடிசனத் தொகையே ஐம்பது லட்சம்தான்.அந்த நாட்களில் குடிசனத் தொகை இன்னமும் குறைவாகவே இருந்தது.

காடுகளையும் சதுப்பு நிலங்களையும் தவிர, விவசாய வயல்களும் ஏராளம். இங்கே நெல்விளைவிப்பதில்லை. வேறு தானியங்களான பார்லி, கோதுமை, மற்றும் புல்லாிசி வகைகள் (oats,rye) விளைவிக்கப்படுகின்றன. இவற்றுடன் உருளைக்கிழங்கும் உணவு எண்ணெய் தயாாிப்பதற்கு rypsi(Brassica rapa oleifera) என்னும் செடியும் பெருமளவில் பயிாிடப்படுகின்றன. பின்லாந்தின்தென்பகுதியில் மட்டுமே விவசாயம் செய்யலாம். அதுவும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய குறுகியகோடையில் மட்டுமே செய்யலாம். அந்த நாட்களில் காலநிலை பொதுவாக 10 - 30 பாகையாக(centigrade) இருக்கும். இதுவும் வெய்யில் மழை மப்பு மந்தாரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கமாகஇருக்கும். விவசாயிகள் பசுக்கள், கோழிகள், பன்றிகள், செம்மறி ஆடுகளை வளர்த்து, அவற்றிலிருந்துபால், முட்டை, இறைச்சி, கம்பிளி ஆகியவற்றைப் பெறுவார்கள். வட பின்லாந்தில் கலைமான்(raindeer) வளர்த்தல் ஒரு முக்கிய தொழிலாகும். குளிர் காலமும் மூன்று நான்கு மாதங்கள்நீடிக்கும். அப்போது காலநிலை கடும் குளிராக இருக்கும். + 5லிருந்து -40 பாகைவரை (plus 5to minus 40 degrees centigrade) இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை (snow) பெய்துநாடு முழுவதையும் மூடியிருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் ஒரு மீட்டர் தடிப்பமான பனிக்கட்டிதரைக்குமேல் இருக்கும். வெப்பவலய நாடுகளில் தண்ணீாில் நடப்பது ஒரு மந்திர தந்திர நிகழ்ச்சிஎன்பார்கள். ஆனால் இங்கே குளிர் காலத்தில் கடல் ஏாி ஆறுகளில் சாமானிய மனிதர்கள்சாதாரணமாக நடந்து போகலாம். அந்த அளவுக்கு நீர் உறைந்து கட்டியாகி வயிரமாகிப் பாறையாகிப்போயிருக்கும்.நடப்பது மட்டுமல்ல, பனிக்கட்டிமேல் மோட்டார் காாிலேயே பயணம் செய்து அக்கரைக்குப் போகலாம்.குளிர்கால விளையாட்டுகளில் வழுக்கியோடுதலும் சறுக்கிப் பாய்தலும் முக்கியமானவை.

வசந்த காலத்தில், அதாவது மார்ச் ஏப்பிரல் மாதங்களில் பனிமழையும் பனிக்கட்டியும் உருகும்.மரங்களில் பசுந்தளிர்கள் தோன்றும். இலையுதிர் காலத்தில், அதாவது அக்டோபர் மத்தியில் பசுமரம்என்றழைக்கப்படும் தோவதாரு இனத்தைச் சேர்ந்த spruce, pine தவிர்ந்த மற்ற எல்லா மரங்களும்இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு மொட்டையாய் மவுனமாய் நிற்கும். அதைத் தொடர்ந்து குளிர் காலம்ஆரம்பிக்கையில் நிறைய மழையும் பெய்யும். கோடை கால வெப்பமும் குளிர் காலத் தட்பமும்கதிரவனிலேயே தங்கியிருக்கிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியா, இலங்கை நாடுகளைப்போலல்லாமல் இங்கே சூாிய உதயமும் மறைவும் வித்தியாசமானவை. குளிர் காலத்தில் பின்லாந்தின்வட கோடியில் இரண்டு மாதங்களுக்குச் சூாியன் உதிப்பதில்லை. அங்கே கோடையில் இரண்டுமாதங்களுக்குச் சூாியன் மறைவதுமில்லை. வசந்த இலையுதிர் காலங்களில் வரும் சமராத்திாி நாட்களில்,அதாவது சூாியன் பூமத்திய ரேகையைத் தாண்டும் நாட்களில் உலகின் ஏனைய இடங்களைப்போலவே இங்கேயும்சூாியன் காலை ஆறுமணிக்கு உதித்து மாலை ஆறுமணிக்கு மறையும். கடக மகர ரேகைகளுக்கு நேராகச்சூாியன் பிரகாசிக்கும் காலங்களில், அதாவது பூமத்திய ரேகைக்கு அதிக தூரத்தில் சூாியன்இருக்கக்கூடிய நடுக்கோடை நடுக்குளிர்கால நாட்களில் (solstice) பகல் மிகவும் நீண்டதாகஇருக்கும். இந்த நாட்களில் தென் பின்லாந்தில்கூட இரண்டொரு மணி நேரமே சூாியன் மறைந்திருக்கும்.கோடையின் மத்திய நாள் விழாவைப் பின்லாந்து மக்கள் நள்ளிரவில் சொக்கப்பனை எாித்துக்கொண்டாடுவார்கள். இந்த நாட்களில் நள்ளிரவில் சூாியனைப் பார்ப்பதற்காக உலகின் பல பாகங்களில்இருந்தெல்லாம் மக்கள் வட பின்லாந்தில் திரளுவார்கள். இதிலிருந்து சூாியன் தாமதமாக உதித்துமுன்னதாக மறையத் தொடங்கும். இப்படியே பகற்பொழுது குறைந்து குறைந்து மிகச் சிறிய பகற்பொழுதானநடுக் குளிர்கால நாள்வரை செல்லும். இன்றைக்குப் பின்லாந்து மக்கள் யேசுநாதர் பிறந்த நாளைநத்தாரன்று கொண்டாடுகிறார்கள். ஆனால் முன்னாட்களில், அதாவது கி.பி. 12ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பின்லாந்துக்கு வருவதற்கு முன்னர் இது சூாியனின் பிறந்த நாளாகவே கருதப்பட்டது. கோடையில் பகற்பொழுது நீளமாக இருப்பதாலும் அளவான வெப்பம் இருப்பதாலும் போதிய மழைபெய்வதாலும் எங்கும் இயற்கை பச்சைப்பசேல் என்றிருக்கும். மரஞ்செடிகள் செழித்து வளர்ந்து கண்ணுக்குக்குளிர்ச்சியாகவும் மனத்துக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இன்றைய பின்லாந்தின் பொருளாதாராம், சமூகம், கலாசாரம்

குளிர் காலத்தில் பல மாதங்கள் கடும் குளிராக இருப்பதால் வீடுகளை அதற்கேற்பக் கட்டி வெப்பமூட்ட வேண்டியது அவசியமாகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்த நாட்களில் இதுவொன்றும் சிக்கலானவிடயமல்ல. பெரும்பான்மையான மக்கள் இப்பொழுது நகரங்களிலும் மாநகரங்களிலும் பலமாடிக்கல்வீடுகளில் வசிக்கிறார்கள். இவை பெரும்பாலும் வெப்பமூட்டும் வசதிகள் உடையவை. உதாரணமாக,தலைநகரான ஹெல்சிங்கியில் ஒரு அனல்சக்தி நிலையம் நிலக்காியை எாித்து மின்சக்தியைஉண்டுபண்ணுகிறது. அதேவேளையில் அந்த நிலையம் பெருமளவு நீரைக் கொதிநிலைக்குக் கொதிக்கவைக்கிறது. இந்தக் கொதிநீர், வெப்பம் கடத்தாத அடிநிலக் குழாய்கள் மூலம் அநேகமாக ஹெல்சிங்கிநகரத்து அனைத்துக் கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. இந்தக் கொதிநீர், வெப்பத்தைப் பரவச் செய்யும்சாதனங்களுக்கு அனுப்பப்படுவதால், வௌியே உறைகுளிராக இருந்தாலும் கட்டிடங்களின் உள்ளே +20பாகையாகவே (plus 20 degrees centigrade) இருக்கும். வீட்டுக் குழாய்களில் தண்ணீரும் வெந்நீரும் சாதாரணமாக வந்துகொண்டிருக்கும்.

இங்கே பெருமளவு காடுகள் இருப்பதால், இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்தரமான காகிதம் மரப்பொருள்ஆகியவற்றிலேயே தங்கியிருக்கிறது. கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம் போன்றவை மேலதிக தொழில்களாகும். சமீப காலமாகத் தகவல் தொழில்நுட்பத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது.உதாரணமாகக் கைத் தொலைபேசி (mobile phone) உற்பத்தியில் நொக்கியா (Nokia)நிறுவனத்தின் துாித முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து அரசு, கல்வித்துறைக்கு நிறையச்செலவு செய்கிறது. வெகுகாலமாகவே பின்லாந்து மக்கள் நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்கள். இந்தநாட்களில் பெரும்பான்மையான மக்கள் உயர் கல்லூாி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியறிவு உடையவர்கள்.பெருமளவில் கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் வலைப்புலத் (internet) தொடர்பு வசதிகளில்முன்னேறி வரும் உலக நாடுகளில் ஒன்றாகப் பின்லாந்தும் விளங்குகிறது. இந்த நாடு 1917ல் சுதந்திரம்அடைந்த பின்னர் ஒரு ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.

பின்லாந்து, குறிப்பாக 1950களில் தொழில்மயமாக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பின்லாந்து மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டிருந்த சோவியத் யூனியனுடன் ஐந்து வருடங்களாகப் போர்புாிந்து, கடைசியில் பின்லாந்து தோல்விகண்டது. அப்பொழுது ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை விதிகளின்படி, சோவியத் யூனியனுக்குப் போாினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைப் பின்லாந்து ஈடுசெய்ய வேண்டி வந்தது. இதன் பிரகாரம் கப்பல்கள் உழவு யந்திரங்கள் மற்றும் போாில் அழிந்த கவசவாகனங்கள் விமானங்கள் துப்பாக்கிகளுக்குத் தேவையான பொருட்களையும் கொடுக்க நேர்ந்தது. இந்தச்சூழ்நிலை தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை உண்டாக்கியதோடு விவசாயத்தையும்காட்டுத் தொழிலையும் யந்திரமயமாக்க வழியமைத்துத் தந்தது. அதுவரை வயல்களில் கலப்பைகளை இழுத்துவந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு உழவு யந்திரங்களைக் களத்தில் இறக்கினார்கள். அதிலிருந்துநாட்டின் வளர்ச்சியில் ஒரு வேகம் காணப்பட்டது. பின்லாந்து இப்பொழுது ஐரோப்பிய சமூகத்தில் அங்கம்வகிப்பதோடு ஓர் உலகளாவிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. அதேவேளையில் பின்லாந்து தனதுசொந்தக் கலாச்சாரப் பாரம்பாியத்தைப் பேணிப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறது. இதில்'கலேவலா' என்னும் இந்த நாட்டின் தேசீய காவியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

கலேவலாவும் பின்லாந்திய தேசீய அடையாளமும்

உண்மையாக எழுதப்பட்ட பின்லாந்தின் வரலாறு, சுவீடனால் பின்லாந்து கைப்பற்றப்பட்ட கி.பி. 12ம் நூற்றாண்டில்தான் ஆரம்பமாகிறது. அப்பொழுது தமது இனத்துக்கென ஒரு சொந்த மதத்தைக் கொண்டிருந்தபின்னிஷ்மொழி பேசும் குடிமக்கள் பலவந்தமாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். பின்லாந்துசுவீடனின் ஆட்சியின் கீழ் 800 வருடங்கள் இருந்தது. பெரும்பான்மையான குடிமக்கள் பின்லாந்துமொழியைப் பேசியபோதிலும் நிர்வாகம் கல்வித் துறைகளில் இலத்தீன் சுவீடன் மொழிகளே ஆட்சிமொழிகளாக இருந்தன. 1809ல் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போாில் சுவீடன் தோல்விகண்டதால், பின்லாந்து ரஷ்யாவின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. புதிய ஆளுனரான ரஷ்ய மன்னர்பின்லாந்துக்குக் கணிசமான அளவு சுய ஆட்சியைக் கொடுத்திருந்தார். அதனால் பின்லாந்தின் சட்டசபை(senate) பல அரச அலுவல்களைத் தாங்களே தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. எனினும், 19ம்நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில், ரஷ்ய ஆட்சியாளர்கள் ரஷ்யமயப்படுத்தும் இயக்கம் ஒன்றைத்தொடங்கினார்கள். அதை எதிர்த்த பின்லாந்து மக்கள் சுதந்திரத்துக்கான பல்வேறு திட்டங்களைஆரம்பித்தார்கள். மேற்கூறியவாறு, கடைசியில், கம்யூனிஸ்ட் புரட்சியோடு பின்லாந்து சுதந்திரம்பெறும் வாய்ப்பு வந்தது.

சுவீடனின் ஆட்சிக் காலம் முழுவதிலும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியாக இருந்த பின்னிஷ்மொழி, பின்னர் பின்லாந்தியர் அனைவரையும் ஒன்றுசேர்க்கக்கூடிய ஒரு தேசீய அடையாளத்தைஉருவாக்க உறுதுணையாக அமைந்தது. சமூகத்தில் மேல்மட்ட மக்கள் சுவீடன்மொழி பேசுபவர்களாக இருந்தபோதிலும், 19ம் நூற்றாண்டில் பல உயர் வகுப்புக் குடும்பத்தினர் தங்கள் சொந்த மொழியாகப்பின்னிஷ்மொழியை ஏற்கத் தீர்மானித்தனர். பின்லாந்தின் பாரம்பாிய நாடோடி இலக்கியங்களை உயர்கல்வி வட்டாரங்களில் படிக்கத் தொடங்கினார்கள். அத்துடன், தூர இடங்களில் வாழ்ந்த சாமானியகிராமத்து மக்கள் அாிய பழைய நாடோடிப் பாடல்களைப் பாதுகாத்து வைத்திருந்ததையும்கண்டுபிடித்தார்கள். அத்தகைய பாடல்கள், பல பாரம்பாியக் கதைகளைக் கூறின; கிறிஸ்துவுக்கு முந்தியகாலத்துக் கடவுள்கள் மாவீரர்கள்பற்றிய கதைகளையும் கூறின. அவற்றைச் சேகாித்துப் படித்து ஆராய்ந்துபார்த்ததின் உச்சப்பயன், பின்லாந்தியர் சுயவிழிப்புணர்வையும் தேசீயப் பற்றையும் தூண்டும் சக்திபடைத்த 'கலேவலா' என்னும் காவியத்தின் வௌியீடாக விளைந்தது. ஆயிரம் ஆண்டுகளாக சுவீடனும்ரஷ்யாவும் ஆண்டு வந்த போதிலும், பின்லாந்தியர் ஒரு பாரம்பாிய வீரவரலாற்றுக் காவியத்தைத்தமக்கெனப் பெற்றிருக்கிறார்கள். அதனால் உலக நாடுகளில் தமக்கென ஓர் இடத்தையும் பெருமையுடன்பெற்றிருக்கிறார்கள்.

பின்லாந்தின் நாடோடிப் பாடல்களைச் சேகாித்தலும் கலேவலா வௌியீடும்

எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot 1802-1884), தானும் மற்றும் முன்னோடிகளும் கரேலியாக் காட்டுப் பிரதேசங்களில் சேகாித்த சிறந்ததும் பாடபேதங்கள் நிறைந்ததுமான பின்லாந்தின் நாட்டுப் பாடல்களிலிருந்து கலேவலாவைத் தொகுத்து வௌியிட்டார். ஒரு மருத்துவராகத் தனது தொழிலைத் தொடங்கிய லொண்ரொத், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பின்னிஷ் மொழியின் பேராசிாியராக மாறினார். பாரம்பாியச் சொத்தை அழிவிலிருந்து காத்து உலக இலக்கியத்துக்கு லொண்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிரூட்டிய பிரபல முனைவர் உ.வே.சாமிநாதையாின் அரும்பணிக்கு ஒப்பிடலாம். ஜீன் சிபெலியூஸ் (Jean Sibelius 1865-1957)கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்துப் பின்லாந்து மக்களின் இதயங்களில் பிடித்த இடம் தமிழ்மக்களின் இதயங்களில் தியாகராஜாின் கீர்த்தனைகள் பெற்ற இடத்துக்கு இணையாகும். கலேவலாவின்பாடல்கள் பின்லாந்தின் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர்களுக்கும் ஊக்கத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும்உண்டாக்கியிருக்கின்றன. அவர்களில் ஒருவரான அக்செலி கல்லேன் - கல்லேல (Akseli Gallen -Kallela 1865 -1931)வின் "போர்ப்பாதையில் குல்லர்வோ" என்ற வர்ண ஓவியம் இந்நூலின்அட்டையை அலங்காிக்கிறது.

"பழைய கலேவலா" என்னும் முதற் பதிப்பை லொண்ரொத் 1935ல் வௌியிட்டார். முதற் பதிப்பிலும்பார்க்க இரண்டு மடங்கு நீளமானதும் முழுமையானதுமான இரண்டாவது பதிப்பு 1849ல் வௌிவந்தது."கந்தலேதார்" என்னும் ஓர் இசைநூலின் தொகுப்பை லொண்ரொத் 1840-41ல் வௌியிட்டார்.கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக அமைந்த மூல நாடோடிப் பாடல்களின் ஒரு மாபெரும்தொகுதி 'பின்லாந்து மக்களின் பண்டைய பாடல்கள்' என்ற பெயாில் 33 பொிய பாகங்களாக1909-1948ல் வௌியிடப்பட்டது. இந்தப் பொிய செயற்பாடுகூட நூற்றுக் கணக்கான கல்விமான்களாலும்தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் குவித்துவைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகாிப்புச் செல்வங்களை வற்றச் செய்ய முடியவில்லை. பின்னிஷ் இலக்கியமன்றம் 1831ல் நிறுவப்பட்டது. லொண்ரொத் சில அடிகளைத் தானும் இயற்றிக் கலேவலாவில்சேர்த்திருந்த போதிலும், பாரம்பாிய மூலக் குறிப்புகளையும் கதைகளையும் ஒழுங்குபடுத்திமுரண்பாடில்லாத இசைவான முழுமையான நூலைத் தந்த பெருமை அவரையே சாரும்.

தப்பிப் பிழைத்த பின்லாந்தின் நாட்டுப் பாடல்கள்

கி.பி. 1155ல் சுவீடன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை மேற்கிலிருந்து பின்லாந்துக்குக்கொண்டுவந்தார்கள். அதோடு பின்லாந்தில் நிலைகொண்ட ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தினர்கிறிஸ்துவுக்கு முந்திய காலத்து மதநம்பிக்கையற்றவர்களின் பரம்பரை வழக்கங்களைச் சகிக்கமுடியாதவர்களாக இருந்தார்கள். 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தத்துடன் மேற்படி தேவாலயத்தினாின்இடத்தைப் பிடித்த லுத்தரன் சபையினர் இந்தப் பரம்பரை வழக்கங்களை வேரறுக்கும் முயற்சியில்தீவிரமானதோடு அதை இன்னமும் தொடர்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் நிலவிய கிரேக்க ஆர்தடக்ஸ்கிறிஸ்தவர் உள்நாட்டு நாடோடி நம்பிக்கைகளைப் பொறுத்துக் கொண்டார்கள். எந்த நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் கலேவலா தோன்றியதோ அந்த நாட்டுப் பாடல்கள் கரேலியாவில் தப்பிப்பிழைத்திருந்தன. இப்பொழுது இந்தக் கரேலியாவின் பெரும்பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்குஅப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. நெடுந் தூரங்களினாலும் காடுகளில் செறிவில்லாத குடியிருப்புகளாலும்பின்னிஷ் - கரேலியக் கலாச்சாரத்தின் பாிமாணம் ஏனைய கலாச்சார மையங்களுடன் தொடர்பில்லாமலே இருந்தது. லொண்ரொத்தும் அந்தக் காலத்து நாடோடி இலக்கிய வேட்டைக்குப் புறப்பட்டமற்றைய சேகாிப்பாளர்களும் பாதைகளேயில்லாத காட்டுவௌிகளில் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் காகிதமும் பேனாவுமாக நடந்து திாிந்தே குறிப்பெடுத்தார்கள். ஒலிப்பதிவுக்கருவிகளெல்லாம் அந்த நாட்களில் இருந்ததில்லை.

பின்லாந்து மொழியும் மக்களின் முந்திய வரலாறும் கலேவலாவின் பொருளடக்கமும்

1548ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மிக்கல் அகிாிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் இருக்கும் மிகப் பழைய நூலாகும். பின்னிஷ் மொழியுடன்நெருங்கிய தொடர்புடைய கரேலியமொழியில் உள்ள மிகச் சிறிய எடுத்துக்காட்டுகள் மூன்றுநூற்றாண்டுகள் பழையன. அவற்றில் மிலாறு மரப் பட்டையில் எழுதப்பட்ட மந்திரக் குறிப்புகள்இருக்கின்றன. இவை ரஷ்யாவில் நொவ்கொறட் (Novgorod) நகாில் கண்டெடுக்கப்பட்டன. பழையஎழுத்துமூல ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோதிலும், பின்னிஷ்மொழி மற்றும் அதனுடன் தொடர்புடைய பிறமொழிகளைக் கட்டிடக்கலைக் கல்வியுடன் இணைத்து ஆராயும்போது பின்லாந்தியாின் முந்தியவரலாறுபற்றிச்சிறிது அறியக்கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மொழி, இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டுகோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தைச் (Uralic language family)சேர்ந்தது. இந்தத் தொகுதியில் அதிக மக்களால் பேசப்படுவன ஹங்கோிய, பின்லாந்திய, எஸ்தோனியமொழிகளாகும். இவை முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால்பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்யாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன. இந்தமொழிகளைப் பேசுவோாின் முன்னோர் வேட்டையாடுபவராகவும் மீனவராகவும் தென்கிழக்கு ஐரோப்பாவின்காட்டுப் பிரதேசங்களில் கற்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இரவற் சொற்கள்பற்றிய ஓர்ஆய்வு, தென் ரஷ்யாவில் முன்-இந்தோ-ஐரோப்பிய மொழி (Proto-Indo-European language)பேசி வாழ்ந்த நாடோடி இனத்தவருக்கும் யூராலிக் மக்களுக்கும் 6000 வருடங்களுக்கு முன்பேதொடர்பிருந்தது என்பதைக் காட்டுகின்றது.

சுமார் 5000 - 4000 வருடங்களுக்கு முன்னர், இத்தகைய தென்புறத்து அயலவர்களின் மொழி,சமஸ்கிருதத்தின் தாய்மொழியான முன்-ஆாியமாக (Proto-Aryan) மாறிற்று. கி.மு. 2000ல்மத்திய ஆசியா வழியாக வந்த மேற்படி நாடோடி இனத்தவாில் ஒரு பகுதியினர் இம்மொழியைஇந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். பின்னிஷ் மொழியில் இன்னமும் நூறு எனப் பொருள்படும் "sata" என்றசொல் சமஸ்கிருதத்தில் 'sata' என்ற சொல்லுடன் தொடர்புடையது. ஆதியில் இருந்த பின்லாந்து மதம்ஆாியக் கொள்கைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு 'கடவுள்' என்னும்பொருளுடைய 'jumala' என்ற பின்னிஷ் மூலச் சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும்இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் 'பிரகாசித்தல்' என்னும் பொருளுடைய'dyumat' என்ற பழைய ஆாியச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். பண்டைய இந்தோ-ஆாியதேவதாகணத்தில் இந்திரன் உயர்ந்த பதவியை வகித்திருக்கிறார். அப்படியே பின்லாந்தின்கடவுள்களிலும் 'உக்கோ' (Ukko) என்னும் முழக்கத்தின் கடவுள் உயர்ந்தவராகக் கருதப்பட்டிருக்கிறார்.இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் 'சம்போ' என்னும் அற்புத ஆலை. சுழலும் சுவர்க்கத்தின்நட்சத்திரப் புள்ளிகளுடைய இசைவான பிரபஞ்ச 'ஆலை'யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம்ஏற்பட்டிருக்கலாம் என்று 'சம்போ'வின் 'புள்ளிகளுள்ள மூடி' என்ற நிலையான அடைமொழி கருத வைக்கிறது. 'சம்போ' (sampo) என்னும் சொல்லிலிருந்து வரும் தூண் என்னும் பொருளுள்ள திாிபுருsammas என்பது, skambha அல்லது stambha என்ற சமஸ்கிருதச் சொல்லை நினைவூட்டுகிறது;வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குாிய தூணைக் குறிக்கிறது.

5000-4000 வருடங்களுக்கு முன்னர், முன்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்(Proto-Indo-European language) வழிவந்த வேறு சில மொழிகளின் தாக்கமும் பின்னிஷ்மொழியில் ஏற்படத் தொடங்கியது. இத்தகைய மொழிகள் சுவீடன் மக்களின் முன்னோர் பேசியமுன்-ஜெர்மானிக் (Proto-Germanic) மொழியும் லித்துவேனிய லத்வியா நாடுகளது மக்களின்முன்னோர் பேசிய முன்-பால்டிக் (Proto-Baltic) மொழியுமாகும். ஆதியில், ரஷ்ய மொழிபேசியோாின் முன்னோர் பின்னிஷ் மொழி பேசியோருடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில்தெற்கில் வாழ்ந்தார்கள். ஆனால் பின்னர் அவர்களும் பின்லாந்து மக்களின் அயலவராகி அந்தத் தாக்கமும்ஏற்பட்டது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்த யூராலிக் மக்கள் இருவகுப்பினராகப் பிாிந்திருந்தார்கள். அப்போது ஒரே மொழியைப் பேசிய பின்லாந்து எஸ்தோனியநாடுகளது மக்களின் முன்னோர்கள், தங்கள் அயலவரான இந்தோ-ஐரோப்பியாின் விவசாயம் கால்நடைவளர்த்தல் ஆகியவற்றைச் செய்துகொண்டு பின்லாந்து எஸ்தோனிய நாடுகளின் தென் கரைகளில் வாழ்ந்துவந்தார்கள். தற்கால லாப்பியாின் முன்னோர் வேட்டையாடுவோராகவும் மீனவராகவும் பழைய யூராலிக்முறையில் தென் பின்லாந்தில் வாழந்து வந்தார்கள். தென் பகுதியைச் சேர்ந்த கலேவலாப் பாடல்கள்,பின்லாந்தியாின் வடதிசை நகர்வையும் லாப்பியர்பால் இருந்த பகையுணாவையும் அவர்களுடையமொழியுறவையும் பிரதிபலிக்கிறது. இந்த லாப்பியர் ஸ்கன்டிநேவிய நாடுகளான பின்லாந்து சுவீடன்நோர்வேயின் வடகோடியில் வட சமுத்திரத்துக்கு அருகில் சிறிய சிறுபான்மையராக வாழ்கிறார்கள்.அவர்கள் இன்னமும் வேட்டையாடுவோராகவும் கலைமான் வளர்க்கும் நாடோடி இடையராகவுமே வாழ்கிறார்கள். கி.பி. 98ல் ரோமன் நூலாசிாியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுறஎல்லைகளைப்பற்றி விபாிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகாித்து வாழ்ந்த நிரந்தர வீடுகளில்லாத'பென்னி' (Fenni) என்ற ஓர் இனத்தவரைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது பெரும்பாலும் இந்தலாப்பியராகஇருக்கலாம்.

கலேவலாப் பாடல்களின் வேறு கருப்பொருட்கள்

கி.பி. 800-1100 கால கட்டத்தில், வைக்கிங் கடலோடிகளின் தாக்குதல்களும் கலேவலாவின் போர்ப்படையெடுப்புக்குப் பின்புலமாய் இருந்திருக்கின்றன. ஸ்கன்டிநேவிய நாடுகளான சுவீடன் நோர்வேடென்மார்க் நாடுகளில் - அனேகமாகப் பின்லாந்தில் இருந்தும் என்றும் சொல்லலாம் - கடலோடிகள்மேற்கு, தெற்கு ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கிழக்கே ரஷ்யா ஊடாகக்கருங்கடலிலும் தாக்குதல்களை நடாத்தினார்கள்.

எனினும், கலேவலாப் பாடல்கள் போர் நடவடிக்கைகளை மட்டும் கருப்பொருளாகக் கொண்டவையல்ல. அவை பண்டைய பின்லாந்தியாின் நாளாந்த வாழ்க்கைபற்றியும் கூறுகின்றன. அவற்றுள், விவாகங்கள், மருத்துவச் சடங்குகள், தத்துவங்கள், இளைஞாின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உலக நோக்குகள், மதங்கள் ஆகிய பலதரப்பட்ட நாடோடிப் பழக்க வழக்கங்கள் அடங்குகின்றன. யூராலிக் மொழிகள் பேசிய மக்களின்மிகப் பழைய மதம் அனேகமாகச் 'ஷமானிசம்' (Shamanism) ஆக இருந்திருக்கலாம். ஆனால்கலேவலாவில் பிரதிபலிக்கும் மதம், பால்டிக் பின்லாந்தியருடன் தொடர்புபட்ட வேறு இன மக்களின்தாக்கத்தால் ஏற்பட்டதாகத் தொிகிறது. உண்மையில், கலேவலாவில் உலகின் பல நோக்குகளைக்காணலாம். எடுத்துக்காட்டாக, கற்காலம்வரை பின்னோக்கிச் செல்லக்கூடிய புராணக் கதைகள், மாபெரும்சிந்துர மரத்தைப் படைத்தலும் வீழ்த்தலும், வைக்கிங் காலத்து வீரர்களின் பரம்பரைப் பராக்கிரமக்கதைகள், கிறிஸ்தவ மதமும் பின்லாந்தில் அதன் வெற்றியும் (கலேவலாவின் கடைசிப் பாடல்கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது), விவசாயிகள் பெண்களின் பாடல்கள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். ஏற்கனவே வௌிவந்த கலேவலாவின் செய்யுள்நடைத் தமிழாக்கத்தில்மொழிபெயர்ப்பாளர் போதிய விளக்கக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். எனவே, நான் மேற்கொண்டுவிாிவாகக் கூறாமல் சில முக்கிய விடயங்களைப்பற்றி மட்டும் சொல்லப் போகிறேன். பாடல்களேவாசகர்களுடன் பேசட்டும்.

சில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள்

'கலேவலா' என்னும் பெயர் பின்லாந்திய இடப்பெயர் விகுதியான '-லா' (-la) வில் முடிவடைகிறது.'கலேவா' என்னும் முற்பகுதி பின்லாந்தியாின் சந்ததியின் ஆதிமுதல்வாின் பெயராகக்கருதப்படுகிறது. அவருக்குப் பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்றும் அவர்களுள் கலேவலாவின் முக்கியநாயகர்ளான வைனாமொயினனும் இல்மாினனும் அடங்குவர் என்றும் சொல்வர். பின்னிஷ்மொழியில்'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது. கையில் கத்தியும் அரைக்கச்சும்உடையபோர்வீரன் போன்ற உருவமுள்ள நட்சத்திரக் கூட்டத்தைக் 'கலேவாவின் வாள்' என்று அழைப்பர்.இடியேறு போன்ற வானுலகக் காட்சியை 'கலேவாவின் நெருப்பு' என்பர். கலேவாவின் ஆண்மக்களை,வயல்களை உண்டாக்குவதற்காகக் காட்டு மரங்களை எாித்தழித்த காட்டு விவசாயத்தின் அதிசக்திவாய்ந்த பூதங்கள் என்பர். கலேவா என்னும் பெயாின் சொல்லாக்க விளக்கம் உறுதியாகச்சொல்வதற்கில்லை. கொல்லன் என்னும் பொருள் வரும் Kalvis என்னும் லித்துவேனியச் சொல்லும் பழையபால்டிக் கொல்வேலைத் தெய்வம் Kalevias என்பதும்தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருக்கமானவிளக்கமாகும்.

கலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மாினன் தேவகொல்லன் என்னும் தனிச்சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படினமாக்கியது, சம்போ என்னும் அற்புத ஆலையைக் கொல்லுலையில் உருவாக்கியது, தங்கத்தில் ஒரு மங்கையைத் தட்டியெடுத்தது, விண்ணுலக ஒளிகளை வடபுலப்பாறைகளில் இருந்து விடுவித்தது என்பனவாம். இல்மாினன் சம்போவைச் செய்ததுபோலவே விண்ணுலகின்கவிகை விமானத்தையும் செய்தவன் என்று பண்டைய நாட்டுப் பாடல்கள் கூறுகின்றன. லாப்புலாந்திலிருந்துகிடைத்த 1692ம் காலத்தைய "ஷமானிச" முரசின்படி (drum) இல்மாிஸ் என்னும் மன்புனைவான தெய்வம்காற்றையும் காற்று வீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னிஷ் மொழியில்'இல்மா' (ilma) என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்யாவில் வாழும் வொத்யாக்ஸ்(Votyaks) இனத்தவர் இன்னமும் இன்மர் (Inmar) அல்லது இல்மெர் (Ilmer) என்னும் வான்கடவுளைவழிபட்டு வருகின்றனர்.

கலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் தெய்வச் சிறப்பு மனிதச் சிறப்பு எனப் பலமுகங்கள்கொண்ட பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொண்ரொத் (Lo*nnrot) பின்னதற்கே சாதகமாக இருந்திருக்கிறார் என்று தொிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதிகாலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான். அகன்ற ஆறு அல்லது விாிகுடா என்னும்பொருளுடைய வைனா (Va*ina*) என்னும் சொல்லிலிருந்து வந்ததால், அவன் தண்ணீருடன் தொடர்புடையகடவுளாகவும் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.வைனாமொயினன் ஒரு கலாச்சார நாயகனாகவும் விளங்குகிறான்: ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே.ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் வசப்படுத்தியவனும் அவனே.வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப் பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக்கூறுகின்றன. அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த வல்லமைமிக்க ஞானி; மந்திரப்பாடல்களாலும் சக்தி வாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்தியவன். ஒரு மந்திர சூனியமதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் சென்று ஒரு பழைய இறந்த பூதத்திடம் தனக்குத் தேவையானமந்திரச் சொற்களைப் பெற்று வந்தவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப்போல பல இடங்களில்தோற்றம் தந்தாலும், அவனுடைய போர்வீரனுக்குாிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப்பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன், வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல்sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நோர்டிக் (Old Nordic) சொல்லான sangareவரை பின் நோக்கிச் செல்வதைக் கவனித்தல் மனத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின்பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தொிந்துகொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள்மிகவும் வித்தியாசமான முரண்பாடான முடிவுகளையே தந்திருக்கின்றன. கலேவலாவில் வரும் வேறு பலபாத்திரங்களுக்கும் இந்தக் கூற்றுப் பொருந்தும்.

பின்லாந்து இலக்கியம்

பின்லாந்து இலக்கியம்பற்றி மேலெழுந்தவாாியாகச் சில முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன். 1809ன் முற்பகுதிகளில் தேசீய கலாசாரத்தையும் பின்னிஷ்மொழி இலக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்நெல்மன் (J.V.Snellman1806 - 1881) என்பார் ஓர் அரசியல் ஞானி. இவரது தலைமையிலும் எலியாஸ் லொண்ரொத் போன்றஅறிஞர்களின் முயற்சியிலும் 1831ல் பின்னிஷ் இலக்கிய மன்றம் நிறுவப்பட்டது. அரச அனுசரணையுடன்இம்மன்றம் இன்றுவரை சிறப்பாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கலேவலா, கந்தலேதார் நூல்களின் காலகட்டத்துக்குப் பின்னர் றுனேபேர்க் (J.L.Runeberg 1804 - 1877) என்பார் தனதுபடைப்புகளால் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்துத் தேசீய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இவருடைய 'எங்கள் நாடு' என்ற பாடலே இன்று பின்லாந்து நாட்டின் தேசீய கீதமாக விளங்குகின்றது. பின்லாந்து இலக்கியத்தின் இரண்டாவது பெருந்தூண் என்று அலெக்ஸிஸ் கிவியை(Aleksis Kivi 1834 - 1872) அழைப்பர். இவருடைய 'செருப்புத் தைப்பவர்கள்' ஒருவித்தியாசமான நாடகம். இது ஒரு செருப்புத் தைப்பவாின் மகன் திருமண முயற்சிகளில்தோல்வியடைவதை நகைச்சுவையாகச் சொல்கிறது. அலெக்ஸிஸ் கிவியின் படைப்புகள் அனைத்திலும்தலைசிறந்தது 'ஏழு சகோதரர்கள்' என்ற நாவலாகும். ஷேக்ஸ்பியாின் படைப்புகளில் காணப்படும் அழகும்அலங்காரமும் இந்த நாவலில் இருக்கிறது என்பதும், மனத்தைத் தளர்த்தவல்ல நல்ல நகைச்சுவையும் மனத்தைஅழுத்தவல்ல ஆழ்ந்த சோகமும் அருகருகாய்ச் செல்வது ஒரு சிறப்பம்சம் என்பதும் விமர்சகர்கள் கருத்து. இதுஇருபதுக்கு மேற்பட்ட உலக மொழிகளில் வௌிவந்திருக்கிறது.

அலெக்ஸிஸ் கிவியைத் தொடர்ந்து 1900வரையில் பல படைப்பாளிகளை பின்லாந்தின் இலக்கியவரலாற்றில் காணமுடிகிறது. சிலர் மிக ஆழமான சுவடுகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.1939ல் இலக்கியத்துக்கு நோபல் பாிசு பெற்றவர் பின்லாந்து எழுத்தாளர் சில்லன்பா(F.E.Sillanpaa 1888 - 1964). மாியா யொத்துனியும் (Maria Jotuni 1880 - 1943)ஐனோ கல்லாஸும் (Aino Kallas 1878 - 1956) பெண் எழுத்தாளர்களில் பிரபலமாகப்பேசப்படுபவர்கள்.

உலகளவில் பெரும் புகழீட்டிய எழுத்தாளர் மிக்கா வல்தாி (Mika Waltari 1908 - 1979) இவர்தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் கதை சொல்லும் முறையையும் அமைத்துக்கொண்டு இருபதுகளில்இளைமைத் துடிப்புடன் புறப்பட்டார். 1928ல் வௌியான இவருடைய "மாபெரும் மாயை" என்ற நாவல்இவரை ஓர் இளம் "ஹெமிங்வே" என அடையாளம் காட்டிற்று. இரண்டாவது உலகப் போரையடுத்து இவர்எழுதிய சாித்திர நாவல்கள் உலகப் புகழ் பெற்றதோடு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.இவருடைய "சினுஹே என்னும் எகிப்தியன்" என்ற நாவல் 29 மொழிகளுக்கு மொழிபெயர்க்ப்பட்டது.

கொஞ்சம் வேகமாக இருபதாம் நூற்றாண்டின் மத்திக்கு வருவோம். அடுத்தடுத்து நடந்த யுத்தங்கள், உள்நாட்டு வௌிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்களினால் தேசீய வரலாற்றில் ஒரு சுயதேடலையும் மறுமதிப்பீட்டு முயற்சியையும் எழுத்தாளர்களிடையே காண முடிந்தது. இந்தக் கால கட்டத்தில், 1920ல் பிறந்த வைனோ லின்னா (Va*ino* Linna) முன்னணியில் நிற்கிறார். இவருடைய போர்பற்றியநாவலான 'அறிமுகமற்ற போர்வீரன்' நாடெங்கணும் தர்க்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திப் பெரும்வெற்றியையும் அள்ளித் தந்தது. போர்பற்றிய யதார்த்தமான வர்ணனைகளையும், இராணுவஅதிகாாிகளுக்கும் போர்வீரர்களுக்குமிடையே நிலவும் உறவுகள்பற்றிய உண்மைகளையும் உள்ளத்தைத்தொடும்வகையில் தருகிறார். இது ஒரு நிதர்சமான நேர்மையான புதிய பார்வை. இந்த நாவலின்பாத்திரங்கள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து தேசீய அளவில் பேசப்பட்டன.

கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பு

கலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பாளரான, இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; 'உதயணன்' என்ற புனைபெயாில் ஏராளமான சிறுகதைகள் நாவல்களைப் படைத்து தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பின்லாந்தில் பதினாறுவருடங்கள் வாழ்ந்து இந்த நாட்டு மொழியுடனும் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டவர். 1994ல்வௌிவந்த இவருடைய கவிதைநடைத் தமிழாக்கம் பின்னிஷ் - கரேலிய மூலப் பிரதியிலிருந்துநேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாறே இந்த உரைநடைத் தமிழாக்கமும் பின்னிஷ் மூலநூலிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக அலசியாராய்ந்து கவிதைநடைத்தமிழாக்கத்தை வௌியிட்ட இவருடைய அனுபவம், இந்த உரைநடைத் தமிழாக்கம் மிகச் சிறப்பாக அமையஉதவியிருக்கிறது.

கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவாின் ஒரு புதிய ஆங்கிலமொழிபெயர்ப்பை 'உலகளாவிய இலக்கியங்கள்' என்ற வாிசையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம்(Oxford University press) 1989ல் வெயிட்டது. மற்றும் W.F.கிர்பி (W.F.Kirby -1907), F.B.மகோன் (F.B.Magoun jr - 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளுடன் வேறுசில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ஆய்வு நூல்களும் இந்த இரு தமிழாக்கங்களுக்கும் துணை நூல்களாகப்பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும்மாறுபட்ட இதுபோன்ற மொழிபெயர்ப்பு வேலைகள் ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடியன. நவீனதொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ்மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகள் என்பதை இங்கு நினைவுகூர்வோம். தென் ஆசியாவில் வளராதசெடிகளுக்கும் சிறுபழங்களுக்கும் எப்படிப் பெயர் தருவது? கவிதைநடையில் வௌிவந்த தமிழாக்கத்தில்சுமார் ஐம்பது பக்கங்களை இதற்காகவே ஒதுக்கிப் போதிய விளக்கங்கள் தந்ததை வாசகர்கள்அறிவார்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளை வைத்திருப்பதற்காகப் பெருமைப்படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றான கலேவலாவைச் சிறப்பாகக் கவிதைநடை உரைநடை ஆகிய இரு வடிவங்களில் தந்து தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும்வளமூட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ் மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்;அதேபோல பின்லாந்திய மக்களாகிய நாங்களும் எங்களுடைய பண்டைய பாரம்பாியச் செல்வம் இந்தத்தமிழாக்கங்கள் மூலம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிாியர்களை அடையமுடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான கலேவலா, தமிழ் உட்பட, முப்பத்தைந்து மொழிகளிலும் சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பதினொரு மொழிகளிலும் வௌிவந்திருக்கின்றன.

ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிாிக்க நாடுகளின் கல்வி தொடர்பான திணைக்களம்,பின்னிஷ் இலக்கிய மன்றம் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] மற்றும்பின்னிஷ் ஒாியன்ரல் மன்றம் இந்தத் தமிழக் கலேவலாச் செயற்திட்டத்துக்கு உதவினார்கள்.'போர்ப்பாதையில் குல்லர்வோ' என்ற அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen- Kallela)வின் ஓவியத்தை இந்நூலின் அட்டையில் மறுபிரசுரம் செய்ய அனுமதித்த அதன் பதிப்புாிமையாளர்களுக்கும்இந்நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கியப் பிாியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில்சிறப்பாக வௌியிட்டு அதன் விநியோகப் பொறுப்பையும் ஏற்ற தென்னிந்திய சைவசித்தாந்தநூற்பதிப்புக் கழகத்தின் அதிபர் முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

கலேவலா தொடர்பாகப் படிக்கக்கூடிய வேறு நூல்கள்: The Kalevala: An epic poem afteroral tradition, by Elias Lo*nnrot, translated from the Finnish with an introduction and notes by Keith Bosley, and a foreword by Albert B.Lord (The World's Classics), Oxford & New York: Oxford University Press,1989, lvi, 679 pp. Lauri Honko (ed.), Religion, myth and folklore inthe world"s epics: The Kalevala and its predecessors (Religion andSociety 30), Berlin & New York: Mouton de Gruyter, 1990, xii, 587 pp. Matti Kuusi, Keith Bosley and Michael Branch (ed. and transl.), Finnishfolk poetry: Epic, Helsinki: Finnish Literature Society, 1977, 607 pp.,46 photographs. Anna-Leena Siikala, Finnic religions, pp. 323-330 in:Mircea Eliade (ed, in chief), Encyclopedia of Religion, Vol. 5, NewYork and London: Macmillan, 1987; Lauri Honko, The Great Bear,Helsinki: The Finnish Literature Society, 1993.

அஸ்கோ பார்பொலா
Institute for Asian and African Studies
University of Helsinki
Finland
e-mail:
29. 01. 1999


 அட்டவணைமேலே

சிறப்புரை

பேராசிாியர் இந்திரா பார்த்தசாரதி

பின்லாந்தின் தேசீய காவியம் 'கலேவலா'. இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கிய வாய்மொழிக் கதைகளைத் தொகுத்து ஓர் அமர காவியமாக்கியவர் எலியாஸ் லொண்ரொத் (1802 - 1884).

அமொிக்கக் கவிஞர் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லொ (1807 - 1882) இவ்வற்புத இலக்கியப் படைப்பினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நவீன மொழிகளின் பேராசிாியராக இருந்த அவர், பல தடவைகள் ஐரோப்பாவுக்குவிஜயம் செய்திருக்கிறார். இதனால்தான் 'கலேவலா'வைப்போல், பாரம்பாியக் கதைகளை நிகழ்காலத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்று, அவர் 'ஹியவத்தா'வை ஆக்கியிருக்கிறார் என்றுசொல்லலாம். சிவப்பு இந்தியர்களின் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு, 'ஹியவத்தா' என்ற நூல். வைனாமொயினனைப்போல், 'ஹியவத்தா', அமொிக்காவில் ஐரோப்பியர் வருகைக்கு முந்தியிருந்த ஒரு காலகட்டத்தின் கலாச்சாரப் பிரதிநிதி. லாங்ஃபெல்லொ எழுதிய இந்நூலின் கட்டமைப்பும், யாப்பு அமைதியும் 'கலேவலா'வை ஒத்து இருக்கின்றன.

ஆங்கிலோ - சாக்ஸானிய மொழியில், ஆங்கில கதாபாத்திரப் பெயர்களுடன், ஸ்கன்டிநேவியக் கதை பேயொவுல்ஃப் (Beowulf) இங்கிலாந்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இதுவும்கிறித்துவ சகாப்பதத்துக்கு முந்தி வழங்கிய அதீதக் கற்பனைகளுடன் கூடிய வாய்மொழிக் கதைகளின்தொகுப்பு. பேயொவுல்ஃப் வைனாமொயினனைப் போன்ற ஒரு கதாபாத்திரம். சிந்தனையில் கண்ணியமும்,செயலில் உறுதியுமுடைய வீரன்.

உலகில் வழங்கும் ஆதிகாலக் கதைகள் அனைத்துக்குமிடையே ஓர் அடிப்படை ஒற்றுமை காணப்படுகிறது.'மனித இனத்தின் ஆழ்மனத் தொகுப்பின் வௌியீடே தொன்மம்' (Myths represent thecollective unconscious of the human race) என்று அமொிக்க உளவியல் அறிஞர் யூங்கூறியிருப்பதை நினைவு கூர வேண்டும்.

பேராசிாியர் அஸ்கோ பார்பொலா, தமது முன்னுரையில், இக்காவியத்தில் காணும் கதைக்கும்,திருமாலின் அவதாரக் கதைக்குமிடையே உள்ள இயைவை எடுத்துக் காட்டியுள்ளார். அதுதான் வாமனன்திருவிக்கிரமனாக ஆவதுபோல், செந்தூர மரத்தை வெட்டக் குறள் வடிவச் செப்பு மனிதன் விசுவரூபம்எடுக்கும் கதை.

ஈரடியால் மூவுலகத்தையும் திருமால் அளந்ததே, மனிதனுக்கு வாழ்வதற்கு இருப்பிடம் தருவதற்காகத்தான் என்றுவிஷ்ணு புராணம் கூறுகிறது. வராகவதாரம், கிடைத்த இவ்விடத்தை அகல உழுவது பற்றிய செய்தி. அடிப்படையில் இவை எல்லாமே வளம் தரும் வேளாண்மைப்பற்றிய மரபுக் கதைகள் (Fertility cultstories). 'கலேவலா'விலும் இத்தகைய பல கதைகள் பயின்று வருவதைக் காணமுடிகிறது.

உலகெங்கும் விரவியுள்ள பல இனத்துக் கலாச்சாரங்களில் சிருஷ்டிப்பற்றிய கதைகளில், ஓர் அடிப்படைஒற்றுமை நூலிழையாக இசைந்தோடுவதைக் காண்கின்றோம். ஆக்கமும் அழிவும் மாறிமாறிச்சகடக்கால்போல் வருவதுதான் இயற்கையின் நியதி. அநேகமாக எல்லாக் கதைகளிலும், அழிவின்அடையாளமாகப் பிரளயம் குறிப்பிடப்படுகிறது. சிருஷ்டி கடலை ஒட்டி அமைவதுதான் பாரம்பாியப்பிரக்ஞை.

வைனாமொயினனின் பிறப்பும் கடலோடு சம்பந்தப்படுத்தித்தான் கூறப்படுகிறது. வாயுமகளுக்குக் கடல் பரப்பில், முப்பது கோடை, முப்பது குளிர்ப் பருவங்கள் கழிந்த பிறகு அவன் தோன்றுகிறான். எதற்காக?கதிரவனைக் கண்டு களிப்படைய! குளிர்ந்த நிலவைக் கண்டு குதூகலிக்க! பிறப்பும் பிறப்பதற்கானஅாத்தமும் அற்புதமாகச் சொல்லப்படுகிறது.

வையினாமொயினன் இசைப் பேரறிஞன் என்று குறிப்பிடப்படுவதே, பிரபஞ்சத்தில் காணும் இசை ஒழுங்கை (Rhythm)ச் சொல்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது. இந்த ஒழுங்குதான் இயற்கை விதிகள் மீறப்படாமலிருப்பதற்கான ஆதார ஸ்ருதி.

ஒரேயொரு மிலாறு மரத்தை வெட்டாமல் இருந்ததற்குக் காரணமாக வைனாமொயினன் கூறுகிறான்:'குயிலே, நீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்த மரத்தை வெட்டாமல்விட்டேன். இப்பொழுது கூவு குயிலே . . . கூவு! வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு! ஈயத்துநெஞ்சே, இனிதாய்ப் பாடு . . . !' இது ஒரு பழைய பர்ஸியக் கவிதையை நினைவூட்டுகின்றது.'எனக்கு ஒரு ரொட்டித் துண்டும், ரோஜாப் பூவும் தேவை. ரொட்டி, வாழ்வதற்கு. ரோஜா, வாழ்வதற்கானஅர்த்தத்தைத் தருவதற்கு . . . !'

தமிழிலக்கியத்தில் நெய்தல் நிலக் கடவுள் வருணன். அவன் மழையைத் தருகின்றான். இக்கருத்தை ஒட்டியபல பாடல்கள் 'கலேவலா'வில் வருகின்றன. பிாிவு நிகழ்வதற்கான களமும் நெய்தல்தான்.இக்காவியத்தில், தாயிடமிருந்தும், நண்பனிடமிருந்தும், காதலியிடமிருந்தும், பலவிதமானபிாிவுகள் சித்தாிக்கப்படுகின்றன.

நம் புராணங்களில் வருவது போல், சூாிய சந்திரர்களை அசுரர்கள் ஒளித்து வைப்பதும் (இதை இக்காவியத்தில் வடபுலத்து முதியவள் செய்கிறாள்), அவற்றை மீட்பதும் போன்ற பல செய்திகள்வருகின்றன.

வடக்கு, தெற்கு என்ற பூகோளப் பிாிவுகள், பூர்வ கதைகள் எல்லாவற்றிலுமே ஒருவகையானபிணக்கத்தைக் குறிக்க வந்ததுபோல் தோன்றுகிறது. பண்டைய தமிழிலக்கியங்களில், தென்புலத்தரசர்கள்வடதிசை சென்று வெற்றிக் கொள்வதையே அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தார்கள் போல்தோன்றுகிறது. இக்காவியத்திலும், வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போராட்டம் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிய முடிகிறது. இதுபற்றி விாிவான ஆய்வு தேவை.

'கலேவலா' ஓர் அற்புதமான காவியம். பின்னிஷ் மொழியிலிருந்து இதைத் தமிழில் தருவது என்பது ஒருமாபெரும் சவால். திரு. சிவலிங்கம் அவர்கள் இத் தலைசிறந்த பணியை மிகச் சிறப்பாகச்செய்திருக்கிறார். அவருடைய முதல் ஆக்கம், செய்யுள் வடிவில். யாப்பமைதியுடன், பொருள் பங்கம் ஏற்படாமல் அவர் இதை ஏற்கனவே செய்திருந்தாலும், எல்லாரும் படிப்பதற்கேற்ப, உரைநடையில்இப்பொழுது இக் காவியத்தை நமக்கு அளித்திருக்கிறார்.

தமிழில் படிக்கும்போதே, எனக்கு இக் காவியத்துக்குப் பல அர்த்தப் பாிமாணங்கள் தோன்றுகின்றனஎன்றால், இதுவே மொழிபெயர்ப்பாளாின் வெற்றி.

திரு.சிவலிங்கம் தொடர்ந்து இப்பணிகளைச் செய்ய வேண்டுமென்பது என் விருப்பம்.

இந்திரா பார்த்தசாரதி
# 3, "Ashwarooda",
248 A, T.T.K. Road
Chennai - 600 018
Tamilnadu, India


 அட்டவணைமேலே

தமிழிற் கலேவலா - ஓர் ஆய்வுரை

கவிஞர் வி. கந்தவனம்

அறிமுகம்

தமிழுக்குக் 'கலேவலா' என்ற பெயாில் புதியதோர் இலக்கியம் கிடைத்திருக்கின்றது. பின்லாந்தின் தேசீய காவியமான கலேவலா உலகத்தின் உன்னத இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்தஇலக்கியம் நெடுங்காலமாக நாட்டுப் பாடல்கள் வடிவத்தில் நிலவி வந்தது. நாட்டுப் பாடல்களை மிகுந்த சிரமங்களின் மத்தியில் தொகுத்து, ஆராய்ந்து, அவற்றுக்குத் தக்க கதை வடிவம் கொடுத்த பெருமைஎலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot: 1802 - 1884) என்ற மொழிநூல் வல்லுநரைச் சாரும்.அவர் தாம் தொகுத்த கலேவலாவின் முதற் பதிப்பை 1835லும் செம்மைப்படுத்திய இன்னொரு பதிப்பை1849லும் வௌியிட்டார். செம்மைப்படுத்தப் பெற்ற இரண்டாவது பதிப்பு 50 நெடும் பாடல்களாகவிாிந்து 22,795 அடிகளில் முடிகிறது.

'கலேவலா' கலேவா இனத்தவர் வாழ்ந்த நிலத்தைக் குறிக்கும். 'வீரர்கள் நிலம்' என்றும் இதற்குப்பொருள். இராவணனின் இலங்கை 'வீரமாநகர்' ஆனதுபோல பின்லாந்தும் கலேவலா காவியத்தால்'வீரமாநிலம்' என்னும் இலக்கியப் பெயரைத் தாங்கலாயிற்று.

கலேவலா கூறும் கதை

பேராற்றல் படைத்த வைனாமொயினன் தன்னை எதிர்த்த யொவுகாஹைனனைத் தோற்கடிக்க, எதிாி தனதுதங்கை ஐனோவை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்கிறான். ஒரு வயோதிபமனிதனை மணக்க மனம் இன்றி, காடுகளில் திாிந்த ஐனோ, கடலிற் குளிக்கையில் இறந்துபோகிறாள். கவலை கொண்ட வைனாமொயினனுக்கு வடநாட்டு மங்கையாில் ஒருவரை மணக்கும்படிகூறுகிறாள் அவனது காலஞ்சென்ற தாய்.

வடநாட்டுத் தலைவி லொவ்ஹி வடநாட்டு மங்கையின் தாய். செல்வச் செழிப்பை வழங்க வல்ல கற்பகப் பொறியாகிய 'சம்போ'வைச் செய்து தந்தால் தனது மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறாள். வைனாமொயினன், கொல்லவேலைக் கலைஞன் இல்மாினனை அனுப்புவதாகக் கூறித் தனது நாட்டுக்குத்திரும்புகிறான்.

வைனாமொயினனின் வற்புறுத்தலின் போில் வடநாடு சென்ற இல்மாினன் சம்போவை அமைத்துக் கொடுத்து, ஊதியமாக வடநாட்டு மங்கையைக் கேட்கிறான். வடநாட்டு மங்கை அச்சமயத்தில் வீட்டைவிட்டுப் புறப்படும்நிலையில் தான் இல்லை என்று கூற, இல்மாினன் நாடு திரும்புகிறான்.

வடநாட்டு மங்கையை லெம்மின்கைனன் என்பானும் விரும்புகிறான். ஆனால் பெண்ணின் தாயார் விதித்த நிபந்தனைகளை அவனால் நிறைவேற்ற முடியவில்லை.

வடநாட்டு மங்கையை மணக்க விரும்பி வைனாமொயினன் தான் புதிதாக அமைத்த கப்பலிற்பயணமாகிறான். அதனைக் கேள்வியுற்ற இல்மாினனும் வடநாடு செல்கிறான். வடநாட்டு மங்கை 'சம்போ'வைச் செய்த இல்மாினனையே மணக்கச் சம்மதிக்கிறாள். வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்துக்கு முக்கியமானவர்கள் எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் லெம்மின்கைனன் அழைக்கப்படவில்லை. திருமணத்தை முடித்துக்கொண்டு இல்மாினன் மனைவியைச் சறுக்கு வண்டிலில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்புகிறான்.

தன்னைத் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்று கோபமுற்ற லெம்மின்கைனன் வடநாடு சென்று போர்தொடுத்து, வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவிவிட்டுத் தலைமறைவாகிறான். மீண்டும் போருக்குப்போன அவன் லொவ்ஹி ஏவிவிட்ட பனிப்பையனால் பாதிக்கப்பட்டுக் காடுகளில் அலைந்து கடைசியில்வீட்டை அடைகிறான்.

இல்மாினனின் மனைவி, அவள் வீட்டில் அடிமையாகப் பணிசெய்த குல்லர்வோ என்பானின் சூழ்ச்சியால் இறந்துபோகிறாள். அது குறித்துப் பல நாட்களாகக் கவலையுற்றிருந்த இல்மாினன் கடைசியில்வடநாட்டுக்குச் சென்று தனது மனைவியின் தங்கையை மணம் முடித்துத் தரும்படி வடநாட்டுத் தலைவியைக்கேட்கிறான். அவள் அதற்குச் சம்மதிக்காததால் மனம் உடைந்து தனது நாட்டுக்குத் திரும்புகிறான்.

பின்னர், வடநாட்டுச் செல்வச் செழிப்புக்குக் காரணமான 'சம்போ'வை அபகாிக்கும் எண்ணத்தை வைனாமொயினன் முன்வைக்க, அதற்கு இல்மாினன் இசைந்து அவனுடன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான்.வழியில் லெம்மின்கைனனும் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறான்.

இவர்கள் மூவரும் 'சம்போ'வை அபகாிக்க முயன்றதன் விளைவாக வடநாட்டுக்கும் கலேவா இனத்தவருக்கும்போர் மூள்கிறது. போாில் கலேவா இனத்தவர் வெற்றி பெறுகின்றனர். அதன் பின்னரும் கலேவாஇனத்தவரை அழிக்க வடநாட்டுத் தலைவி எடுத்த முயற்சிகளை வைனாமொயினன் முறியடிக்கிறான்.ஆத்திரமுற்ற வடநாட்டுத் தலைவி சூாியனையும் சந்திரனையும் பிடித்துத் தனது நாட்டு மலைக்குள் ஒளித்துவைக்கிறாள். கலேவலா மாநிலம் இருளடைகிறது.

சூாியனையும் சந்திரனையும் விடுவிக்க வடநாடு சென்ற வைனாமொயினன், கைப் பலத்தாலோமந்திரத்தாலோ அவற்றை விடுவிக்க முடியாது என்பதை உணர்கிறான். வைனாமொயினனின்வேண்டுகோளின்படி இல்மாினன் சில படைக்கலங்களைத் தயாாிக்கிறான். தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்தலொவ்ஹி சூாிய சந்திரரை விடுவிக்கிறாள்.

பின்னர், கன்னி மர்யாத்தா சிறுபழத்தினால் கர்ப்பமாகிப் பெற்ற பிள்ளையை ஒரு முதியவர்கரேலியாவுக்கு அரசனாக்குகிறார். அதனால் மனம் உடைந்து வைனாமொயினன் நாட்டைவிட்டுச்செல்கிறான்.

இது கதையின் மூலவோட்டம். இதனைச் சூழ்ந்து, பழங் கதைகளுக்கு உள்ள இயல்புகளைப் போலவே பலகிளைக் கதைகள், மந்திர தந்திரங்கள், இன்ப துன்ப நிகழ்ச்சிகள், புத்திமதிகள் முதலியனவெல்லாம்இதிலும் உள்ளன.

கலேவலாவும் இந்தியக் காப்பியங்களும்

'மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட அல்லது இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு மேற்கொண்ட படையெழுச்சியைப்போல, ஸ்கன்டி நேவியக் கடல்வீரர்களின்தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் உடைய கலேவலாவின் போர் நடவடிக்கைகள்இப்பாடல்களின் முதுகெலும்பாக அமைந்தன' என்று டாக்டர் அஸ்கோ பார்பொலா தமது செய்யுள்நடைத்தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு அளித்த அறிமுகவுரையில்(i) குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இராமாயணத்தில் இராமாின் மனைவி சீதையை இலங்கை வேந்தன் இராவணன் கவர்ந்தமை போருக்குக் காரணமாயிற்று. மகாபாரதத்தில் பாண்டவர் அரசுாிமையைக் கௌரவர் கைக்கொண்டது மட்டுமல்லாது ஊசி நிலந்தானும் அவர்களுக்குக் கொடுக்க மறுத்ததால் யுத்தம் நடைபெற்றது. கலேவலாவிலும் செயற்காியசெல்வச் சின்னமாகிய 'சம்போ'வை வடநாட்டிலிருந்து அபகாிக்கும் முயற்சி வடநாட்டுக்கும் கலேவாமக்களுக்கும் போரை ஏற்படுத்தியது.

மகாபாரதத்தில் குந்திதேவி சூாியனை நினைத்துக் கர்ணனைப் பெறுகிறாள். இராமாயணத்தில் சீதை நிலமகளின் குழந்தையாகப் பிறக்கிறாள். கலேவலாவில் வைனாமொயினன் வாயுமகளின் மகனாகப் பிறக்கிறான். இராமாயணத்தில் விலங்குகளும் பறவைகளும் பேசுவதுபோல கலேவலாவிலும் அஃறிணைகள்பேசுகின்றன.

மகாபாரதத்தில் திரௌபதையை மணப்பதற்கு அர்ச்சுனன் சுழலும் இயந்திரத்தின் ஊடாக இலச்சினை ஒன்றை அடித்து விழுத்த வேண்டியிருந்தது. இராமன் சீதையை அடைவதற்கு உருத்திர வில்லை எடுத்து வளைக்க வேண்டியிருந்தது. இவற்றைப் போலவே கலேவலாவிலும் இல்மாினன் வடநாட்டு மங்கையை மணப்பதற்குச் செயற்காிய 'சம்போ'வைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

இராவணனுடன் வீணையும் கண்ணனுடன் புல்லாங்குழலும் இணைந்தவாறு வைனாமொயினனுடன் கந்தலே என்னும் யாழ் பொிதும் பேசப்படுவதைப் பார்க்கிறோம்.

இவ்விதமாக இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை இந்தியக் காவியங்களுக்கும் கலேவலா வுக்குமிடையில் கண்டு மகிழலாம்.

சிலப்பதிகாரத்தில் பழந் தமிழர் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், கலைகள் முதலியன பதிவு செய்யப்பட்டிருப்பதைப் போலவே கலேவலாவிலும் பின்லாந்தின் மூத்த குடிகளின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் கலை கலாச்சார மரபு முறைகளும் விழுமியங்களும் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில்,

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பு எய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று
இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்.(ii)

என்று யாழின் வருணனை வருவதுபோல கலேவலாவிலும்

கந்தலே கீழ்ப்புறம் எந்தவா றமைந்தது?
பொியகோ லாச்சியின் பெருமல கெலும்பினால்;
கந்தலே முளைகள் எவ்வா றமைந்தன?
கோலாச் சிமீன் கூாிய பற்களால்;
கந்தலே நரம்புகள் எவ்வா றமைந்தன?
வீாிய மடக்கிய விறற்பிசா சுரோமமால்.(iii)

கந்தலே என்னும் யாழின் அமைப்பு விவாிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

அன்றியும் இசை, நடனம் முதலாய தேசீயக் கலைகள் பற்றிய விவரம், திருமண வைபவம், விருந்துபசாரம் முதலிய பண்பாடுகள், கனவு, நன்னிமித்தங்கள், துன்னிமித்தங்கள் முதலிய சமூக நம்பிக்கைகள்போன்றவை நிறையவே கலேவலாவிலும் சிலப்பதிகாரத்திலும் வருகின்றன. இவற்றையும் பிறஇயல்புகளையும் உற்று நோக்குகின்ற பொழுது பின்னிய மக்களுக்கும் தமிழருக்குமிடையிற் பெரும்ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கலேவலாவின் தனித்துவத் தன்மை

எனினும் கலேவலா தன்னிகரற்ற ஒரு தனித்துவக் காப்பியமாகவே திகழ்கிறது. இதன் நாயகன் வைனாமொயினன் மனிதாில் மாணிக்கம் போன்றவன். கலேவலா மாநிலத்து மக்கள் பொிதும் மதிக்கும் தலைவன். நீரன்னையாகிய வாயு மகளுக்குப் பிறந்தவன். முப்பது ஆண்டுகள்வரை தாயின் கருப்பையில்இருந்ததால் பிறக்கும் பொழுதே முதியவன் என அழைக்கப்பட்டவன். இது வேறு எந்தக் காவியங்களிலும்காணப்படாத ஒரு கற்பனையாகும்.

நித்திய முதிய வைனாமொயினன் என்று காவியத்தில் அடிக்கடி குறிக்கப்படும் இவன் பொிய கவிஞன். கந்தலே என்னும் யாழை மீட்பதில் வல்லவன். இவனது பாடல்கள் மந்திர சக்தி வாய்ந்தவை. மதிநுட்பம்மிக்க இவன் பொது அறிவிலும் தொழில் அறிவிலும் சிறந்தவன். படகு அமைப்பதில் வல்லவன்.போாிலே வல்லவன். நாட்டுப் பற்று மிகுந்தவன்.

எனினும் இவனின் முதுமையால் இவனை எந்தப் பெண்ணும் மணம் முடிக்க முன்வரவில்லை. பொதுவாகக் காவிய நாயகனுக்கு நாயகி ஒருவள் இருப்பதே வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்கு மாறாக கலேவலாவில்வைனாமொயினன் தனியான, தனித்துவமான கதாநாயகனாகவே சித்திாிக்கப்பட்டிருக்கின்றான். நாயகி இல்லாத காரணத்தால் நாயகியையுடைய இல்மாினனை நாம் நாயகனாகக் கொள்ள முடியாது. காவியம் வைனாமொயினனின் பிறப்புடன் தொடங்கி அவனைச் சுற்றி நடந்து, அவன் கலேவலாவை விட்டுநீங்குவதுடன் முடிவடைவதால் காவியத்தின் தலைவன் வைனாமொயினனே என்பது நிலைநாட்டப்படுகின்றது.

அடுத்து மிகவும் முக்கியமான பாத்திரம் ஒன்று பெயர் இல்லாமலேயே கலேவலாவில் இடம் பெற்றிருக்கும்தன்மை அதனின் மற்றொரு தனித்துவ அமிசமாகும். வடநாட்டு மங்கை என்பவள் வடநாட்டுத் தலைவிலொவ்ஹியின் மகள். பெயாிடப்படாத இந்த நாயகி தெய்வச் சிற்பி இல்மாினனை மணந்த பின்னரும்'இல்மாினனின் தலைவி' என்றே அழைக்கப்படுகிறாள். ஏன் இந்தப் பாத்திரத்துக்குப் பெயர்சூட்டப்படவில்லை என்பது தனியாக ஆராயப்படவேண்டிய கேள்வி ஒன்று.

காவியம் நாட்டுப் பாடல் அமைப்பில் இருப்பது மற்றொரு தனித்தன்மை. நாட்டுப் பாடல்களுக்கென்று சில இயல்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஒரு கருத்தை மீண்டும் கூறுதல் அல்லது வேறுவிதமாகக் கூறுதல்.உதாரணமாக,

காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது பாடல் 1, அடி: 177-178

நீலக் கடலின் நீள்கரை தன்னில்
மாபெருங் கடலின் மடிவின் எல்லையில் பாடல் 2, அடி: 239-240

விரைந்து விரைந்து பறந்து சென்றது
சிறிய சிறகினால் பறந்து விரைந்தது பாடல் 15, அடி: 509-510

எவ்வினா வும்மில்லா திப்போ பார்க்கிறேன்
கேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன் பாடல் 25, அடி: 235 - 236

முதலாய அடிகளைக் கூறலாம்.

மேலும் இசைப் பாடல்களில் பல்லவியை மீண்டும் மீண்டும் பாடுதல்போல சில அடிகள் திரும்பத் திரும்ப வருதலையும் கலேவலாவிற் காண்கின்றோம். உதாரணமாக, பாடல் 4ல் மூன்று முறை வரும்

இச்செய்தி இப்போயார் எடுத்தேக வல்லார்
வாயாலே யாாிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவிவான வளர்தோட்டக் காட்டில்

என்னும் பாடலையும் பாடல் 23ல் நான்கு தடவைகள் வரும்

நற்புது முறைகள் நனிகொளல் வேண்டும்
பழையன யாவும் களைதலும் வேண்டும்

என்னும் அடிகளையும் காட்டலாம். இத்தகைய முறை பழைய தமிழ் நூல்களில் காணப்படுவது அருமை. அதற்குக் கூறியது கூறலை இலக்கணம் வகுத்தோர் குற்றமாகக் கொண்டது காரணமாகும். எனின், கலேவலாப் பாடல்கள் நாட்டுப் பாடல்கள் என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். அவற்றிற் பல அடிகள் திரும்பத் திரும்பவந்து போயினும் அவை எவ்வகையிலும் அலுப்புத் தட்டுவதாக இல்லை என்பதை வாசகர் உணர்வர்.

கலேவலாவின் மற்றுமொரு தனித்தன்மை அதன் மந்திரப் பாடல்களாகும். வைனாமொயினன்,யொவுகாஹைனன், வடநாட்டுத் தலைவி லொவ்ஹி, இல்மாினன், லெம்மின்கைனன் போன்ற பிரதானபாத்திரங்கள் மந்திரங்களில் வல்லவர்களாகச் சித்திாிக்கப்படுகின்றனர். இக்காவியத்தில் பலபாடல்கள் அக்காலத்து மக்கள் மந்திரங்கள்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் பலவற்றை விளக்குகின்றன.உதாரணமாக,சொற்கள் இருந்த பெட்டகம் திறந்தான்
பெருமந் திரச்சொல் பெட்டியைத் திறந்தான்
நல்ல பாடல்கள் நனிசில பாட
சிறந்த மந்திரச் செம்பா இசைக்க
பாடிடப் படைப்பின் மூலத்(து) ஆழம்
பாடிடக் காலத் தொடக்க மந்திரம்
இவைஎல்லாப் பிள்ளையும் இசைக்கும் பாட்டல்ல
வீரர்கள் மட்டுமே விளங்கும் பாட்டிவை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே
வாழ்வே முடிவுறும் வறுக்கடை நாட்களில். பாடல் 17, அடி: 531 - 540

முதலாய அடிகள் மந்திரங்கள் மாயமானவை என்றும் அனாதியானவை என்றும் அவற்றை ஒரு சிலரே ஓத வல்லவர்கள் என்றும் அவற்றை இன்னற் காலங்களில் முறைப்படி ஓதி நன்மை பெறலாம் என்றும் கூறுகின்றன.

நல்ல பாடல்கள், சிறந்த பாடல்கள் என்னும் தொடர்கள் கூடாத மந்திரங்களும் உள்ளன என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. இந்த வேறுபாட்டை எமது வேத மந்திரங்களுக்கும் பில்லி சூனிய மந்திரங்களுக்கும்இடையேயுள்ள வேறுபாடாகக் கொள்ளலாம். கலேவலாவிலும் நன்மை செய்யும் மந்திரங்களும் தீமை தரும்மந்திரங்களும் விரவிக் கிடக்கின்றன.

மேலும்,
கர்த்தர் மொழிந்த கட்டளை யாலும்
அனைத்து வல்லோன் ஆணையி னாலும் பாடல் 17, அடி: 543 - 544

என்னும் அடிகள்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப தொல்: செய். 178

என்னும் தொல்காப்பிய அடிகளை நினைவுபடுத்துவதையும் பார்க்கிறோம்.

மந்திரங்களின் தெய்வீக சக்திபற்றி எமது வேதங்களில் நிறையவே பேசப்படுகின்றன.மந்திர சுலோகங்களும் ஏராளம் உள்ளன. அவற்றின்வழி இராமாயணம், பாரதம் போன்ற காவியங்களிலும்முனிவர்கள் வாயிலாகவும் தவவலிமை படைத்த பிற பாத்திரங்களின் வழியாகவும் மந்திரங்களின்பெருமை பேசப்படுகின்றன. எனினும் கலேவலா போன்று மந்திரங்களின் வலிமையே பாத்திரங்களின்வலிமை என்னும் அளவில் தமிழ்க் காவியங்களிலோ பிற தேசீய காவியங்களிலோ பாத்திரங்கள்படைக்கப்படவில்லை. அதனாலும் அதிக அளவு மந்திரப் பாடல்களைக் கொண்டிருப்பதனாலும்கலேவலாவை ஒரு மந்திர காவியம் என்றே அழைக்கலாம்.

தேசீய காவியம்

பின்லாந்து மக்கள் கலேவலாவைக் கண்ணெனப் போற்றுகின்றனர். காரணம் அது அவர்களின் முன்னோர்களின் கலாச்சார வளர்ச்சியையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு களஞ்சியம். அதில் விவாிக்கப்பட்டிருக்கும் பல விடயங்களை வரலாறாகக் கொள்வாரும் உள்ளனர்.

பின்னிய மொழிக்கு உயர்ந்த தகைமை ஒன்றைப் பெறறுக் கொடுத்த பெருமையும் கலேவலாவுக்கு உண்டு.12ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து 1809 வரை பின்லாந்து சுவீடனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.அதனால் சுவீடிய மொழியே நாட்டின் அரச, கல்வி, இலக்கிய மொழியாக விளங்க நேர்ந்தது.1835ல் வௌியிடப்பெற்ற கலேவலா மக்கள் மத்தியில் தேசீய உணர்வைத் தோற்றுவித்தது. அதன்விளைவாகப் பின்னிய மொழி ஆட்சியிலும் கல்வியிலும் இடம்பிடிக்கத் தொடங்கி, 1863ல்உத்தியோக மொழி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது.

கலேவலாவின் செல்வாக்குப் பின்லாந்தின் கலை வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. கலேவலாக் காட்சிகள் பலவற்றை வரைந்த அக்செலி கல்லன் கல்லேலா (Akseli Gallen-Kallela) என்பவாின் ஓவியங்கள், காவியப் பாடல்கள் சிலவற்றுக்கு ஜெயன் சிபெலியுஸ் (Jean Sibelius) கொடுத்த இசை வடிவங்கள் என்பன யாவும் பின்லாந்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் பெயர் பெற்றவை.

கலேவலாவின் முதற் பதிப்பின் முன்னுரையில் உள்ள திகதியாகிய பெப்பிரவாி 28 பின்லாந்தில் 'கலேவலா தினம்' ஆக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறதென்றால், கலேவலா எந்த அளவுக்குபின்னிய மக்களின் அருஞ் செல்வமாகியுள்ளதென்பது சொல்லாமலே விளங்கும்.

மொழிபெயர்பாளர் ஆர். சிவலிங்கம்

இத்தகைய புகழ்வாய்ந்த காப்பியத்தை முதன்முதலில் தமிழில் தந்த பெருமை ஈழத்தவர் திரு. ஆர்.சிவலிங்கத்துக்கு உாியது. தமிழ் உலகில் திரு. ஆர்.சிவலிங்கம் பிரபலியமானவர். அவரது 'உதயணன்' என்னும் புனைபெயர் எழுத்து உலகில் இன்னும் புகழ் பெற்றது. உதயணனின் சிறுகதைகளையும் நாவல்களையும் பத்திாிகைகள் விரும்பிப் பிரசுாித்தன. 'கல்கி' பத்திாிகைநடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'தேடிவந்த கண்கள்' பாிசு பெற்றது. இவரது 'பொன்னானமலரல்லவோ', 'அந்தரங்க கீதம்' ஆகிய நாவல்கள் 'வீரகேசாி' வௌியீடுகளாக வௌிவந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழை நன்கு அறிந்த பெருமகன் இவர். தமிழுக்கு ஆக்கபூர்வமான தொண்டுகள்செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தவர். உண்மையில், திருக்குறள் சிலப்பதிகாாரம் என்னும்இரண்டையும் பின்னிய மொழியில் பெயர்க்குந் திட்டத்துடனேயே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தில்1986ம் ஆண்டு நியமனம் பெற்றார். அவற்றின் மொழிபெயர்ப்பு வேலைகளும் முடிந்துவிட்டன. ஆயின்,அவை வௌிவருவதற்குமுன் கலேவலாவில் அவருக்குக் காதல் பிறந்ததினால் அதன் தமிழ் மொழிபெயர்ப்புமுந்திக் கொண்டது.

மொழிபெயர்ப்பு என்பது சிறப்பான தகைமைகளை வேண்டி நிற்கும் ஒரு தனித்துவக் கலை. ஒரு நூலைமொழிபெயர்ப்பதற்கு நூலின் மொழியிலும் பெயர்க்கப்படவுள்ள மொழியிலும் மொழிபெயர்ப்பாளருக்குத்தகுந்த அறிவு இருந்தால் மட்டும் போதாது. இரு மொழிகளின் சொல்லாக்க (etymology) அறிவும்அவசியமாகும்.

மிகவும் முக்கியமாக, இங்கு திரு. சிவலிங்கம் அவர்கள் தமிழில் தந்திருப்பது ஒரு பழைய நூலை. கலேவலாவில் உள்ள பல சொற்கள் பின்னிய மொழியில் இப்பொழுது வழக்கில் இல்லை. இன்னும் பலசொற்கள் பொருள் திாிபு பெற்றுள்ளன. இந்தச் சிரமங்களை வெற்றி கொள்வதற்கு மற்றுமொருதகைமையும் வேண்டும். அத்தகைமைபற்றி அவரே சொல்கிறார்: 'இம் மொழிபெயர்ப்பு முற்றுப்பெற்றபொழுது நான் இந்நாட்டுக்கு வந்து பதினொரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. எனவே இவ்வேலையைத்தொடங்கிய சமயம் எனக்கு இந்நாட்டு வாழ்க்கையும் மொழியும் கலாசாரமும் ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன.அந்தத் துணிச்சலில்தான் இப்பாாிய பணியைத் தொடங்கினேன்.' (iv) 'ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன'என்பது அறிஞருக்கே உாிய அடக்கத்தின் வௌிப்பாடு. மொழிபெயர்ப்போ பெருமளவு பழக்கப்பட்டுவிட்டதன்மையைக் காட்டி நிற்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'Having lived in Finlandfor more than ten years, he has become aquainted with the Finnishculture and language and has been able to base his rendering of Kalevaladirectly on the Finnish-karelian original' என்று அஸ்கோ பார்பொலா தமதுஅறிமுகவுரையில்(v) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

கலேவலாக் கதை மக்களின் பாரம்பாியங்களையும் பழக்க வழக்கங்களையும் கலை கலாச்சாரங்களையும் பிரதிபலிப்பதால் அவை பற்றிய அறிவை வளர்த்துக்கொண்ட தகைமை ஒருபுறம் இருக்க, கதையையும்அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, அதில் நன்கு ஊறித் திளைத்த பின்னரே அதன் மொழிபெயர்ப்புப்பணியில் அவர் இறங்கியிருப்பது துலக்கமாகத் தொிகிறது.

அத்தகைமையே மொழிபெயர்ப்பின் வெற்றிக்கும் அடிப்படைக் காரணம் ஆகின்றதெனில் மிகையாகாது.

ஆக,

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என்னும் வள்ளுவர் வாக்குக்கிணங்க, தகுதிவாய்ந்த ஒருவரைக் கொண்டு இந்த அாிய காவியத்தின் மொழிபெயர்ப்பை ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகம் செய்திருப்பது கண்கூடு.

சிவலிங்கம் அவர்கள் கலேவலாவைத் தமிழில் இரண்டு வடிவத்திலே தந்திருக்கிறார். ஒன்று செய்யுள் வடிவம்; மற்றையது உரைநடை வடிவம். அவைபற்றித் தனித்தனியாகச் சிறிது நோக்குவோம்.

செய்யுள் நடையிற் கலேவலா

கலேவலாவின் முதற் தமிழ் மொழிபெயர்ப்பு 1994ஆம் ஆண்டு வௌியிடப்பெற்றது. எலியாஸ் லொண்ரொத்அவர்களின் புதிய கலேவலாப் பதிப்பை அடியொற்றிச் செய்யுள் வடிவத்தில் ஆக்கப்பட்டுள்ள இந்நூல் 50 பாடல்களையும் 22,795 அடிகளையும் கொண்டுள்ளது. செய்யுள் நடைச் செம்மைக்கு ஈழத்துப் புகழ்வாய்ந்தகவிஞர் திமிலைத்துமிலன் அவர்கள் செய்த உதவிகளை நூலாசிாியர் திரு. சிவலிங்கம் தமது உரையில்நன்றியறிதலுடன் குறிப்பிட்டிருக்கின்றார்.

காவியக் கதையைச் சொல்ல ஆசிாியப்பாவைத் தொிவு செய்திருப்பது மிகவும் பொருத்த முடையது. கருத்துக்களைச் சிரமம் இன்றித் தொடர்ந்து சொல்வதற்கு இவ்வகைப்பா வாய்ப்பினை அளிப்பது. கலேவலாப்பாடல் அடிகள் எதுகைகள் அற்றவை. ஆனால் மோனைச் சிறப்புடையவை. இவ்வியல்புகள் ஆசிாியப்பாவுக்கும் மிகவும் உகந்தவையாகும். மேலும், கலேவலாப் பாடல் அடிகள் ஒவ்வொன்றும் நாற்சீர்களைக் கொண்டவை. ஆசிாியப்பா அடிகளும் நாற்சீர்களைக் பெற்று நடப்பவை. அளவொத்த நாற்சீரடியால் பாடல்கள்பயில்வதால் கலேவலா ஆசிாியப்பா நிலைமண்டில வகையைச் சேர்ந்தது.

ஆசிாியப்பாவுக்கு உாிய ஓசை அகவலோசை எனப்படும். சீர்கள் செம்மையாக அமையுமிடத்து அவ்வோசை இயல்பாகவே பிறக்கும். அகவல் ஓசையில் பாடல்கள் அழகுறச் செல்வது ஆசிாியருக்குச் சங்க நூல்களில்இருக்கும் பயிற்சியைக் காட்டுகின்றது. உதாரணத்துக்கு ஒன்று:

காற்றின் இயற்கைக் கடிமக ளவளே
காற்றின் பாவையர் கன்னியர் அத்துடன்
இசையின் பத்தை இனிதே நுகர்ந்தனர்
கந்தலே யாழைக் காதால் களித்தனர்
ஒருசிலர் வானத் தொண்வளை விருந்தனர்
வானவில் மீதிலும் மற்றுளர் அமர்ந்தனர்

ஒருசிலர் இருந்தனர் சிறுமுகில் மேலே
செந்நிற வனப்பொடு மின்னிய கரைதனில்
நிலவின் மகளவள் நிதஎழிற் கன்னி
சிறப்பு மிகுந்த செங்கதிர் மகளவள்
தாங்கி இருந்தனள் தான்நெச வச்சை
ஏந்தி இருந்தனள் ஊடிளைக் கயிற்றை
நெய்துகொண் டிருந்தனள் நிகாில் பொற்றுணி
செய்துகொண் டிருந்தனள் சிறந்தவெள் ளித்துணி
செந்நிற முகிலின் திகழ்மேல் விளிம்பில்
வளைந்த நீண்ட வானவில் நுனியில்.(vi)

இவ்வடிகளிற் காணப்படுவதுபோலவே பாடல்கள் எளிமையான சொற்களாற் பாடப்பட் டிருத்தலையும் காணலாம்.ஆர்வமுள்ள வாசகர்கள் அதிகம் சிரமம் இன்றி விளங்கிக் கொள்ளும் அளவுக்குச் சொல் தொிவு நடத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றிக் கடுஞ் சொற்புணாச்சிகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. தவிர்க்கமுடியாது புணாச்சிகள் கடுமையாகும் இடங்களில் அவை பிாித்து எழுதப்பட்டுள்ளன.

பல இடங்களில் மொழிபெயர்ப்பு என்றே தொியாத ஆளவுக்குத் தமிழ் களிநடம் புாிகின்றது. சிலபகுதிகள் பின்வருமாறு:

கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோத்து
விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோத்து
நன்றாய்நாம் பாடிடுவோம் நயந்திகழப் பாடிடுவோம்
ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையொடு பாடிடுவோம் - பாடல் 1, அடி: 21-24

நங்கையர் நடந்தனர் நல்லுலாப் போந்தனர்
வானத்துக் காாின் வளர்விளிம் பெல்லையில்
பூாித்து மலர்ந்த பூத்த மார்புடன்
மார்பின் காம்பில் வந்துற்ற நோவுடன்
பாலைக் கறந்து படிமிசைப் பாய்ச்சினர்
மார்பகம் நிறைந்து பீறிட்டுப் பாய்ந்தது
தாழ்நிலம் தோய்ந்தது சகதியில் பாய்ந்தது
அமைதியாய் இருந்த அகல்புனல் கலந்தது. - பாடல் 9, அடி: 47 -54

ஓ, நீ அன்புடை உயாிய கிராமமே
விாிந்தஎன் நாட்டில் மிகச் சிறப்பிடமே
கீழே புற்றரை மேலே வயல்நிலம்
இடைநடு வினிலே இருப்பது கிராமம்
இயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை
அந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது
வாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்
விாிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம். - பாடல் 25, அடி: 376 -382

சுவர்க்கம் பிளந்தது துவாரம் விழுந்தது
வானகம் முழுவதும் சாளரம்வந்தது
தீப்பொறிச் சுடரும் சிதறித் தெறித்தது
செந்நிறப் பொறியாய்ச் சிந்திப் பறந்தது
சீறிச் சுவர்க்கத் தூடாய்ச் சென்றது
தொடர்முகில் ஊடாய்த் துளைத்து விரைந்தது
விண்ஒன் பதுவாம் விரைந்தவற் றூடாய்
ஆறு ஒளிரும் மூடிகள் ஊடாய். - பாடல் 47, அடி: 103 - 110

கலேவலாவில் மந்திரப் பாடல்கள் அதிகம். அவை சொற்செறிவும் வேகமும் ஆணைத் தொனியும் உள்ளவை. அவற்றை மொழிபெயர்க்கையில் திரு. சிவலிங்கம் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்திருப்பது நன்கு தொிகின்றது. ஓர் உதாரணம் பின்வருமாறு:

Poem 9: lines 343 - 352 from W.F.Kirby's translation:

Hear me, Blood, and cease thy flowing,
O thou Bloodstream, rush no longer,
Nor upon my head spurt further,
Nor upon my breast down-tricle,
Like a wall, O Blood, arrest thee,
Like a fence, O Bloodstream, stand thou,
As a sword in sea is standing,
Like a reed in moss-grown country,
Like the bank that bounds the cornfield,
Like a rock in raging torrent.

இதே அடிகளை Keith Bosley என்பார் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்:

Hold, blood, your spilling
and gore, your rippling
upon me spraying,
spurting on my breast!
Blood, stand like a wall
stay, gore, like a fence

like an iris in a lake
stand, like sedge among moss, like
a boulder at a field edge
a rock in a steep rapid!

இனி, இவற்றின் செய்யுள்நடைத் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

இரத்தமே உனது பெருக்கை நிறுத்து!
உயர்சோாி ஆறே ஓட்டம் நிறுத்து!
பாய்வதை நிறுத்து பார்த்துஎன் தலையில்!
படர்ந்தென் நெஞ்சில் பாய்வதை நிறுத்து!
இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல!
மிகுசோாி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென!
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீழ்ச்சி யில்உறு நெடுங்கல் லெனநில்!

இப்பாடலைப் படிக்கின்ற பொழுது பலருக்கு, குறிப்பாகச் சைவ சமயத்தவருக்குக் கந்தசஷ்டி கவசம்நினைவுக்கு வாின் ஆச்சாியப்படுவதற்கில்லை. அவ்வளவுக்கு மொழிபெயர்ப்பு அற்புதமாகவுள்ளது. சுந்தரத்தமிழில் மந்திர சுலோகங்களுக்கு உாிய நடையில் மொழிபெயர்ப்புச் செல்கின்றது. சொற்களில்ஏவுகணை வேகம் தொிகின்றது. ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இல்லாத ஓசைச் சிறப்பு சொற்களுக்குத்தெய்வீக சக்தியை ஊட்டுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தை நிறுத்த இந்த மந்திரத்தைநாமும் பயன்படுத்தலாம் என்னும் நம்பிக்கை தோன்றுகின்றது.

திரு. சிவலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு.

கலேவலாப் பாடல்கள் உவமைநயம் கொழிப்பவை. அவற்றின் சுவை குன்றாதவாறு மொழிபெயர்ப்பிலும்அழகாகத் தந்திருக்கிறார் சிவலிங்கம் அவர்கள்.

கண்ணீர் விழிகளில் கழிந்துபாய் கிறது
கன்னம் வழியாய்ப் புனல்கழி கிறது
பயற்றம் விதையிலும் பருத்தநீர்த் துளிகள்
அவரையைக் காட்டிலும் கொழுத்தநீர்த் துளிகள் - பாடல் 4, அடி: 511 -514

கறுப்பு நிறத்திற் கடலிடைச் சென்றான்
கோரைப் புற்றட நீர்நாய் போலவே
இரும்புப் புழுப்போல் ஏகினான் தவழ்ந்து
நஞ்சுப் பாம்புபோல் நகர்ந்தே சென்றான் - பாடல் 16, அடி: 371 - 374

அந்தப் பிராணிக் காயிரம் நாக்குகள்
கண்அாி தட்டின் கண்களை ஒத்தவை
ஈட்டியின் அலகுபோல் இகல்நீள் நாக்கு
வைக்கோல் வாாியின் வன்பிடி போற்பல்
ஏழு தோணிகள் போல்முது களவு - பாடல் 26, அடி: 622 - 626

அருமையாய் வளர்த்தாள் அழகிய பையனை
அவள்தன் சிறிய அரும்பொன் அப்பிளை
வெள்ளியில் ஆனதன் வெண்தடி யதனை
அங்கையில் வைத்து அவளுண வூட்டினள் - பாடல் 50, அடி: 342 - 345

என்பனபோன்ற உவமைகளைக் கலேவலா நிறையவே கொண்டிருக்கிறது. அவை கருத்துக்களைச் சிறப்பாகவிளக்கியும் படிப்பதற்கு இன்பம் தந்தும் காவியத்தின் இலக்கியத் தரத்தை வெகுவாக நிலைகாட்டுகின்றன.

ஒவ்வொரு பாடல் தொடக்கத்திலும் அடிச் சுருக்கங்களை உரைநடையில் தந்திருப்பது ஒரு சிறப்பு. அவைபாடலுள் இறங்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு காத்திரமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

மற்றுமொரு சிறப்பு, மூலநூல் அளவுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஆக்கியிருப்பது. அதாவது, மூலநூலில்உள்ள ஓர் அடியைத் தமிழிலும் ஓர் அடியாகவே அமைத்திருப்பது. இது மிகவும் சிரமமான விடயம்.இந்தச் சிரமமான விடயம் வெற்றியுறக் கையாளப்பட்டிருப்பதால் அடி அளவால் மூல நூலும் தமிழ் நூலும்ஒத்திருக்கின்றன.

இதிலிருந்து இன்னொன்றும் துலக்கமாகின்றது. அது கதையிலும் கதை சொல்லும் கருத்துக்களிலும் மொழிபெயர்ப்பாளர் கைவக்கவில்லை என்பது. தமது கற்பனைகளையோ சொந்தக் கருத்துக்களையோ அவர்புகுத்த முனையவில்லை. அதனால் மூலக் கலேவலாவையே படிக்கிறோம் என்னும் நிறைவை வாசகர்பெறலாம்.

ஆனால் பொருத்தமான தமிழ்ச் சொற்களால் கூறமுடியாத பின்லாந்தின் சிலவகைத் தாவரங்கள்,பிராணிகள், பறவைகள் போன்றவை எமக்குப் பழக்கமான சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலில்நாம் ஆங்காங்கு காணும் ஆம்பல், குவளை, குயில், அன்னம், கீாி முதலியவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் பின்லாந்தின் காலநிலையில் வளரக்கூடிய அதே இனத்தையோ குடும்பத்தையோ சார்ந்த ஒருதாவரம் என்றோ பிராணி என்றோ கருதிக்கொள்ள வேண்டும் என்று நூலாசிாியர் தமது உரையில்கேட்டிருப்பதைக் கவனித்தல் வேண்டும். அத்தகைய சொற்கள் உண்மையில் காவியத்துக்குத் தமிழ் மணம்ஊட்டுகின்றன.

அந்த அளவுக்குத் துணிந்திருப்பவர், பிற பெயர்ச் சொற்களைப் பொருத்தமுற ஏன் தமிழ்ப்படுத்தமுனையவில்லை என்னும் கேள்வியும் எழவே செய்கிறது. புதிதான சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும்என்றில்லை. உதாரணமாக, sotkaவைச் சொற்கா என்றும் oatsஐ ஓற்சு என்றும் strawberryஐத்தாபோி என்றும் எழுதுவதில் தவறில்லை. அல்லது இயல்பு, வடிவம், பண்பு என்பவற்றைக் கொண்டுதமிழ்ப்படுத்தும் முறையைக் கையாண்டு, இப்பொழுது பிற்பகுதியில் தந்திருக்கும் விளக்கத்தைப் போலவேஅவற்றுக்கும் விளக்கத்தைத் தந்திருக்கலாம்.

இடப் பெயர்களும் காவிய மாந்தர் பெயர்களும்கூடத் தமிழ் வடிவம் பெற்றிருப்பின் பொருத்தமாக இருந்திருக்கும். இல்மாினன், கௌப்பி, தூாி, விபுனன் போன்ற பல பெயர்கள் இயல்பாகவே தமிழ் வடிவமாகியுள்ளன. எஞ்சியுள்ளவற்றுக்கும் தமிழ் வடிவம் அளித்திருக்கலாம். கம்பர் இராமன் என்றும்இலக்குவன் என்றும் பெயர்களுக்குப் பச்சைத் தமிழ் வடிவம் கொடுத்திருப்பதை நாம் அறிவோம்.அதுபோலவே வடமொழிக் காவியமான பாரதத்தைத் தமிழில் தந்த வில்லிபுத்தூராரும் சீறாப்புராணம்படைத்த உமறுப்புலவர், இரட்சணிய யாத்திாிகம் இயற்றிய கிருஷ்ணபிள்ளை முதலியோரும் இடப்பெயர்களுக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் அழகிய தமிழ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.அவர்களின் மரபையொட்டி கலேவலாவிலும்,

அஹ்தி - அகுதி
லொவ்ஹி - இலவுகி
விரோக்கன்னாஸ் - விரோக்கன்னன்
வைனா - வைனன்
சவுனா - சவுனை
தப்பியோ - தப்பியன்
இமாத்திரா - இமாத்திரை
ஹீசி - ஈசி அல்லது கீசி
ஹீசித்தொலா - ஈசித்தலம் அல்லது கீசித்தலம்

என்பன போன்ற தமிழ் மாற்றங்களைச் செய்திருப்பின் செய்யுள் யாப்புக்கும் எளிதாக இருந்திருக்கும்.தமிழ் வாய்க்கும் இதமாக அமைந்திருக்கும். மொழிபெயர்ப்புச் செய்யுள் நடையில் இருப்பதாலும் தமிழ்வடிவங்கள்தாம் செய்யுளுக்கு உகந்தன என்பதாலும் இவ்விதம் சிந்திக்க வேண்டியுள்ளது. உரைநடையாயின்விரும்பியவாறு எழுதலாம். அது எவ் வடிவத்தையும் ஏற்கும் இயல்புடையது.

கலேவலா காவியத்தைத் தமிழ் மக்கள் நன்கு அறியவேண்டும் என்னும் நோக்குடன், அதுபற்றிய விளக்கங்கள் பலவற்றை இந்நூல் கொண்டிருப்பது ஒரு பெரும் சிறப்பு அம்சம். அஸ்கோ பார்பொலா அவர்களின் அறிமுகம்,நூலாசிாியாின் உரை என்பன காவிய மாளிகை வாயிலை வாசகருக்கு இனிதே திறந்துவிடுகின்றன.

பின்னிணைப்புகளாக இடம் பெற்றுள்ள சொற்றொகுதியும் விளக்கக் குறிப்புகளும் காவியத்தை விளங்கிக் கொள்வதில் யாதேனும் சந்தேகங்கள் ஏற்படின், அவற்றைத் தீர்க்க உதவுகின்றன. அருமையான பத்து வண்ணப்படங்களும் எம்மைக் காவிய காலத்துக் கலேவலா மாவட்டத்துச் சூழ்நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.பாடல்களின் தொடக்கத்திலும் முடிவிலும் தரப்பட்டிருக்கும் முத்திரைப் படங்களும் சிந்தனையைத்தூண்டுகின்றன.

இவ்விதம் பலவகையாலும் சிறப்புற்று விளங்கும் இந்நூல், காவியத்தின் புகழுக்குத் தகச் செம்மையாக அமைக்கப்பெற்றுக் கவர்ச்சியாக வௌியிடப்பட்டுள்ளது.

உரைநடையிற் கலேவலா

செய்யுள் நடை மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து திரு. ஆர். சிவலிங்கம் அவர்கள் கலேவலாவை தமிழில் உரைநடை வடிவத்திலும் 'உரைநடையில் கலேவலா' என்னும் பெயாில் இப்பொழுது தந்திருக்கின்றார்கள்.திரு. சிவலிங்கம் அவர்கள் நல்ல நாவல் ஆசிாியரல்லவா? அதனால் நூல் முழுவதையும் படித்து முடித்தபோதுஅருமையான நாவல் ஒன்றைப் படித்த நிறைவு வந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் காவியத்தை அவர்சுருக்கி இருப்பது. செய்யுள் நடையில் மூல நூல் நயங்களை எல்லாம் தந்துவிட வேண்டும் என்னும்நோக்கினால் அடிக்கு அடி மொழி பெயர்த்தவர், உரைநடையில் 50 பாடல்களின் கதையையும் ஏறத்தாழஅரைவாசியாகக் குறைத்திருக்கின்றார். குறைக்க வேண்டிய ஓர் அவசியமும் அவருக்கு இயல்பாகவேஏற்பட்டுள்ளது. 'கலேவலாவின் தனித்துவத் தன்மை' என்னும் பகுதியில் ஓர் அடியிற் கூறிய கருத்தைஅடுத்த அடியில் வேறுவிதமாகக் கூறுதல், சில அடிகள் அப்படியே திரும்பத் திரும்ப வருதல் போன்றதன்மைகளைச் சுட்டிக் காட்டியிருந்தேன். உரைநடையில் கூறியதைக் கூறின் அலுப்புத் தட்டுமாதலால் அவைமுற்றாக நீக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு முதலாவது பாடலில் வரும் ஆரம்ப அடிகள் சிலவற்றையேகாட்டலாம்:

எனதுள்ளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெலாம்
பாடலையான் பக்குவமாய்ப் பாடுதற்கு வந்திட்டேன்
பாடலையான் பண்ணுடனே பலபேர்க்குப் பகருகிறேன்
சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
உற்றதொரு போினத்தின் பழங்கதையை ஓதுதற்கு
வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
நேர்த்திமிகு சொற்றொடர்கள் நோராய்ச் சொாிகிறது
நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது. - பாடல் 1, அடிகள்: 1 - 10

இது சுருக்கமாக உரைநடையிற் பின்வருமாறு தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதை இந்நூலின் முதற் பக்கத்தின்முதற் பந்தியிலேயே காணலாம்:

'ஒரு சந்ததியின் காவியத்தை, ஓர் இனத்தவாின் பாடல்களைப் பாட எனது உள்ளுணர்வு அழைக்கிறது. அந்த ஆர்வத்தில் வாயிலே வார்த்தைகள் சுழல்கின்றன; நாவிலே நெகிழ்ந் தோடி உருள்கின்றன; பற்களில் பாட்டாகப் புரள்கின்றன.'

மற்றோர் உதாரணம்:

ஆயினும் புதல்வி அதைமனங் கொண்டிலள்
மாதா மொழிகளை மகளோ கேட்டிலள்
அப்புறத் தோட்டத்து அழுது திாிந்தனள்
துன்பம் தோய்ந்து தோட்டம் நடந்தனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்
'நலமுறு நெஞ்சம் நயக்கும் உணாவெது?
பாக்கியம் பெற்றோர் பயனுறு நினைவெது?
உறுநல நெஞ்சம் உணாந்திடும் இவ்விதம்
பாக்கியம் பெற்றவர் பாங்குறும் பேறிது
தொன்னீர் தோன்றிடும் துள்ளலைப் போலவும்
அல்லது மென்னீர் அலையது போலவும்
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்வெது?
தனிநீள் வாலுடைத் தாரா நினைவெது?
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்விது
தனிநீள் வாலுடைத் தாரா நினைவிது
பருவத முடியின் பனிக்கட் டியைப்போல்
கிணற்றிடைப் பட்ட கிளர்நீ ரதைப்போல்.' - பாடல் 4, அடிகள்: 191 - 208

என்னும் அடிகள் உரைநடையிற் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

'அவளுடைய தாயார் இப்படியெல்லாம் சொன்னபோதிலும், ஐனோ அவற்றைக் கேட்கவுமில்லை; அதன்படி நடக்கவுமில்லை. அவள் குனிந்த தலையுடன் தோட்டமெல்லாம் சுற்றித் திாிந்து இப்படி முணுமுணுத்தாள்: "மகிழ்ச்சி நிறைந்த மனம் எப்படி இருக்கும்? நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலை போல இருக்கும்! நீளமான வாலுள்ள வாத்தைப்போல நொந்து போன நெஞ்சம் எப்படி இருக்கும்? பனிக்கட்டியின்கீழ் அகப்பட்ட பனிமழைபோல இருக்கும். கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப் போலவும் இருக்கும்." ' - இந்நூல்: அத்தியாயம் 4

இவ்விதம் செய்யுள்நடையில் திரும்பத் திரும்ப வரும் சொற்களும் கருத்துக்களும் பொிதும்நீக்கப்பட்டுள்ளதால் உரைநடை இறுக்கமாக அமைந்திருக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட சொல் அடுத்து அடுத்து வருவதைத் தவிர்க்க முடியாதவிடங்களில் அவற்றுக்குப் பொருத்தமானமாற்றுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய உரைநடையின் மகிமையைக் காட்டப் பின்வரும்உதாரணம் ஒன்றே போதுமானது:

Poem 22 : lines 269 - 292 from W. F. Kirby's translation:

But a bird that flies thou art not,
Nor a leaf away that flutters,
Nor a spark in drafts that'a drifting,
Nor the smoke from house ascending.

lack-a-day, O maid, my sister!
Changed hast thou, and what art changing!
Thou hast changed thy much-loved father
For a father-in-law, a bad one;
Thou hast changed thy tender mother
For a mother-in-law, most stringent;
Thou hast changed thy noble brother
For a brother-in-law so crook-necked;
And exchanged thy gentle sister
For a sister-in-law all cross-eyed;
And has changed thy couch of linen
For a sooty hearth to rest on;
And exchanged the clearest water
Fot the muddy margin-water;
And the sandy shore hast bartered
For the black mud at the bottom;
And thy pleasant meadow bartered
For a dreary wast of heartland;
And thy hills of berries bartered
For the hard stumps of a clearing.

Poem 22: lines 269 - 292 from Keith Bosley's translation:

but you are no bird to fly
and no leaf to flit
not a spark to speed
smoke to reach the yard.
'Oh, maid, little sister
you've changed , and what exchanged!
You've exchanged your dear father
for a bad father-in-law
exchanged your kindly mother
for a stern mother-in-law
exchanged your splendid brother
for a brutish-necked brother-in-law
exchanged your decent sister
for a mocking-eyed sister-in-law
you've exchanged your hempen beds

for sooty log fires
you've exchanged your white waters
for mucky oozes
you've exchanged your sandy shores
for black muddy holes
you've exchanged your darling glades
for heathery heaths
and your hills full of berries
for rough burnt treestumps!

கவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 22: அடிகள் 269 - 292:

ஆயினும் பறவையே அல்லநீ பறக்க
இலையுமே யல்லநீ இடம்சுழன் றேக
பொறியுமே யல்லநீ புறம்பரந் தோட
புகையுமே யல்லநீ போய்த்தோட்ட முறவே

ஓ, என் பெண்ணே, உடைமைச் சோதாி!
இப்போது மாற்றினாய் எதற்கெதை மாற்றினாய்?
தனியன் புறுநின் தந்தையை மாற்றினாய்
வலிய தீக்குணமுறு மாமனார் தனக்கு,
அன்புக் கினியநின் அன்னையை மாற்றினாய்
வல்லகங் காரமார் மாமியார் தனக்கு,
கண்ணிய மான கவின்சகோ தரனையும்
வளைந்த கழுத்து மைத்துனன் தனக்கு,
துன்னுபண் புறுநின் சோதாி தனையும்
கண்பழு தான கடியமைத் துனிக்கு,
கவின்சணல் விாிப்புக் கட்டிலை மாற்றினாய்
புகைபடி அடுப்பின் புன்தளத் துக்கு,
தௌிந்த வெண்மைத் திகழ்நீர் மாற்றினாய்
செறிந்த அழுக்குடைச் சேற்றுநீ ருக்கு,
நிதம்மணல் நிறைந்த நீர்க்கரை தன்னையும்
அகல்கரும் சேற்று அடித்தள மாக்கினாய்,
வெட்டித் திருத்திய விாிவன வௌியை
படர்புற் புதர்நிறை பற்றைக ளாக்கினாய்,
சிறுபழம் நிறைந்த சின்மலை யாவையும்
அடல்எாி கருக்கிய அடிமரம் ஆக்கினாய்.

இனி இவ்வடிகளின் உரைநடைத் தமிழாக்கத்தைக் கவனிப்போம்

'ஆனால் இனிமேல் ஒரு பறவையின் சுதந்திரம், ஓர் இலையின் சுயாதீனம், ஒரு தீப்பொறியின்விடுதலை உனக்கு இருக்காது. நீ உன் அப்பாவை விற்று மாமாவை வாங்கினாய். நீ உன் அன்னையை விற்று மாமியை வாங்கினாய். பட்டுப் படுக்கையை விடுத்துப் புகை அடுப்பை அடுத்தாய். தௌிந்த நீரைக் கொடுத்துச் சேற்று நீரை எடுத்தாய். மணல் நிறைந்த கரைக்குச் சதுப்பு அடித்தளம் பெற்றாய். வளமான வயலுக்கு வெறுங்காடு பெற்றாய். சிறுபழம் முளைத்த சிங்கார மேட்டுக்குச் சுட்ட அடிமரத்து அழிந்த நிலம் பெற்றாய்.' - இந்நூல்: அத்தியாயம் 22

இதில் 'மாற்றினாய்' என்ற சொல் தமிழில் கருத்துத் தௌிவுக்குப் பொருந்தாமை கண்டுபோலும் அதனைக்கைவிட்டு, அதற்குப் பதிலாக 'விற்று வாங்கினாய்' 'விடுத்து அடுத்தாய்', 'கொடுத்து எடுத்தாய்', 'பெற்றாய், முதலிய சொற்களைக் கையாண்டு, ஒரு சொல்லையே மீண்டும் மீண்டும்பிரயோகிப்பதால் ஏற்படக்கூடிய சலிப்பைச் சாதுாியமாக மொழிபெயர்ப்பாளர் தவிர்த்துள்ளதைக்காணலாம்.

பல இடங்களில் இது ஒரு பிறமொழிக் காவியம் என்னும் நினைவை மறக்கச் செய்யும் வகையில் தமிழ்இன்பம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில வாிகளைப் படிக்கும்போது அவற்றை எங்கேயோதமிழில் கேட்டது போன்ற அல்லது படித்ததுபோன்ற உணர்வு எழுகின்றது.

பின்வரும் பகுதி நல்ல உதாரணம்:

'கிட்ட வந்து பார்த்தால் காற்றும் அடிக்கவில்லை. காடெல்லாம் சாியவில்லை. கடல் அலையும்புரளவில்லை. கூழாங்கற்களும் உருளவில்லை. மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார் சறுக்குவண்டியிலே. கூட வந்தார், கூட வந்தார் இருநூறு பேரே!' - இந்நூல்: அத்தியாயம் 21

இதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யுள்நடைத் தமிழாக்கத்தையும் சிறிது நோக்குவோம்:

Poem 21: lines 27 - 34 from W.F.Kirby's translation:

So I went to gaze around me,
And observe the portent nearer;
But I found no wind was blowing,
Nor the faggot-stag was falling,
On the beach no waves were breaking,
On the strand no shingle rattling.
'Twas my son-in-law's assemblage,
Twice a hundred men in number.

Poem 21: lines 27 - 34 from Keith Bosley's translation:

and I waded out to look
to inspect it from close by:
it was not the wind blowing
was not the woodstack toppling
was not the seashore yielding
was not the gravel crooning -
my son-in-law's band comes, by
the hundred in pairs they turn!

கவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 21: அடிகள் 27 - 34:

வௌியே வந்தேன் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றேன் ஆராய்ந் தறிய
அங்கே காற்று அடிக்கவு மில்லை
காட்டிலோர் பகுதிக் கரைசாிந் திலது
கடலின் ஓரம் இரையவு மில்லை
கூழாங் கற்கள் குலைந்துருண் டிலது;
மருமகன் குழுவினர் வந்தனர் ஆங்கே
இருநூறு மக்கள் இப்புறம் வந்தனர்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் படிக்கையில் 'மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுவண்டியிலே' என்னும் பெயர் பெற்ற சினிமாப் பாடலை நினைவுபடுத்தும் உரைநடைத் தமிழாக்கம்மொழிபெயர்ப்பாளாின் தனித்துவத் திறமையே என்பது கண்கூடு.

கலேவலாவிற் கூறப்படும் பல விடயங்கள் தமிழ் மக்கள் வாழ்க்கையோடும் தொடர்புடையனவாக உள்ளன என்றுமுன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. அத்தகைய தொடர்புகளைக் கவிதை நடையிலும் உரைநடை தெற்றெனநினைவுக்குக் கொண்டு வந்துவிடுவதையும் அனுபவித்து இன்பமுற முடிகிறது.

கவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 38 : அடிகள் 143 - 178:

காாிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மாினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலாச்சி மீனாய்க் குமாிபின் தொடர்வேன்."

காாிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
கீாியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மாினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."

காாிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மாினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அவ்விட முன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிபின் தொடர்வேன்."

இப்பாடலில் வரும் உரையாடலுக்கும் தமிழ்க் கிராமியப் பாடல் ஒன்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.ஆயின் தமிழ்க் கிராமியப் பாடலை உடனே நினைவூட்டும் குழூஉச் சொற்கள் இல்லை. மேலும், 'அந்தக்கொல்லன் அவ்வில் மாினன், உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்' என்பன போன்ற தொடர்களும்நினைவைத் தோற்றுவிப்பதற்குத் தடையாகவுள்ளன. இது மூல நூலின் நேரடித் தமிழாக்கம் என்பதனைக்கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

உரைநடை சொல்லுக்குச் சொல்லான தமிழாக்கம் அன்று. பிரதான விடயங்களையே அது பிழிந்துதருகின்றது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. மேற்படி பாடலின் உரையாக்கம் பின்வருமாறு:காாிகை அப்போது கத்திப் புலம்பினாள். கைகளைப் பின்னிப் பிசைந்தாள். பின்னர் இப்படிச் சொன்னாள்: "இங்கிருந்து என்னை நீ விடுவியாது இருப்பாயாகில், நான் ஒரு பாடலைப் பாடுவேன். கடல்மீனாகிக் கடலுள் புகுவேன். வெண்மீனாகி வெள்ளலையில் மறைவேன்."

"கடல் மீனாகிக் கடலுள் புகுந்தாயானால் கோலாச்சி மீனாகிக் கூடவே நான் வருவேன்"என்றான் இல்மாினன்.

"கோலாச்சி மீனாகிக் கூடவே வருவாயானால், கல்லின் குழிக்குள் கீாியாய் நான் நுழைவேன்."

"கல்லின் குழிக்குள் கீாியாய் நுழைவாயானால், நீர்நாய் வடிவெடுத்து உனைத் தொடர்ந்து நான் வருவேன்."

"நீர்நாய் வடிவெடுத்து எனைத் தொடர்ந்து வருவாயானால், மேகப்புள் ஆவேன். மேகத்தில்மறைந்திருப்பேன்" என்றாள் அவள்.

"மேகப் புள்ளாகி மேகத்தில் மறைவாயானால், கழுகின் உருவெடுப்பேன். கன்னி உனைத் தொடர்வேன்" என்றான் இல்மாினன்.

- இந்நூல்: அத்தியாயம் 38

இதனைப் படித்ததுமே,

ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே.

நல்ல பாம்பு வேடம்கொண்டு
நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடம்கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்.

ஊர்க்குருவி வேடம்கொண்டு
உயரத்தில் பறந்தாயானால்
செம்பருந்து வேடம்கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன்

என்னும் நாட்டுப் பாடல், அதனைத் தொிந்தவர்களுக்கு நினைவுக்கு வரக்கூடிய வகையில் உரைநடையாக்கம் அமைந்திருக்கிறது. திரும்பத் திரும்ப வரும் தொடர்கள் இல்லாமையும் செய்யுள் நடையிற் காணப்பெறாத 'நான் வருவேன்' என்னும் தொடர் குழூஉக் குறியாக உள்ளமையும் தமிழ்த் தொடர்பைத் தூண்டுகின்றன.

பிறமொழிக் காவியத்தின் மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம் என்னும் எண்ணத்தை இல்லாமற் செய்யும் உரைநடைச் சிறப்புக்கு இத்தகைய கட்டங்களும் காரணங்களாகும்.

திரு. சிவலிங்கம் அவர்களின் உரைநடையின் மற்றுமொரு தனித்தன்மை சிறு சிறு வாக்கியங்கள். இவைதௌிவான கருத்தோட்டத்தை வழங்குவதோடு நடையிலே ஒரு வேகத்தை ஏற்படுத்திப் படிப்பவரையும்தொடர்ந்து படிக்கத் தூண்டும் சக்தி படைத்தவையாக அமைகின்றன.

'உந்தமோ வந்தான். உண்மையைக் கண்டான். உள்ளம் கொதித்தான். அவன் உடல்வலி மிக்கவன். விரல்களினால் ஒரு போரைத் தொடங்குவான். உள்ளங் கைகளால் ஒரு போரைக் கேட்பான். மீன்குடலுக்காகப் போருக்குப் போனான். பொாித்த மீனால் ஒரு போரும் எழுந்தது. இருவரும் செய்தஇந்தப்போாில் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.'

- இந்நூல்: அத்தியாயம் 31

என்று செல்லும் நடையின் வேகம் போாின் வேகம். இது சொல்லவரும் பொருளுக்குப் பொருத்தமானதே.எனினும் பிற இடங்களிலும் சிறு சிறு வசனங்களே பொிதும் கையாளப் பட்டுள்ளன. சிறு வசனங்களில்வேகம் அதிகம். அந்த வேகத்தோடு வாசகரும் ஈடுகொடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுவதனால்கதை முழுவதையும் ஒரே மூச்சில் படிக்க வேண்டும் என்னும் ஆவலும் கூடவே எழுகின்றது.

இந்த வேகத்தில் இயல்பாகவே கலந்து வரும் ஓசை இன்பந் தருகின்றது. முன்னர் காவியத்தைச்செய்யுள்நடையிலே தந்த அனுபவத்தினாற் போலும் உரைநடையிலும் செய்யுள் நயம் கொழிக்கின்றது.உண்மையில் மேற்காட்டிய உரைப் பந்தியை மிக இலகுவாக ஓர் அகவல் ஆக்கலாம்.

உந்தமோ வந்தான் உண்மையைக் கண்டான்
உள்ளம் கொதித்தான் உடல்வலி மிக்கான்
விரல்களினாலே ஒருபோர் தொடங்குவான்
உள்ளங் கைகளால் ஒருபோர் கேட்பான்
மீன்குடற் பொருட்டுத் தான்போர் செய்வான்
பொாித்த மீனால் மூண்டது போரே
இருவரும் செய்த இந்தப் போாில்
எவருமே வெற்றி ஈட்டினா ரல்லர்
ஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.

இவைபோன்று சீர்கட்டி வரும் சிறு சிறு வசனங்கள் என்றில்லாது, சற்றுப் பொிய வசனங்களிலும் பேராசிாியர் ஆர். பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோாின் உரைநடைபோன்றுஎதுகை மோனைச் சிறப்புகளையும் இவரது உரைநடையிற் காணக்கூடியதாகவுள்ளது.

"நான் தொடக்கூட முடியாத மிகக் கொடியவன் நீ! இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின்பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும்குதிரைகளை முடக்கினாய்!"

'ஈரத் தொப்பி அணிந்த அந்த இடையன் எதுவும் பேசாமலே வௌியேறினான். துவோனலா நதிக்குச்சென்று ஒரு நீர்ச்சுழி அருகில் காத்திருந்தான். லெம்மின்கைனன் வீடு திரும்ப அந்த வழியாலேவருவான் என்று அவன் பார்த்திருந்தான்.'

- இந்நூல்: அத்தியாயம் 12

" 'கட்டாத கூந்தலும் மூடாத முகத்திரையும் இங்கே உனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. திருமணத்தின் பின்னர் வரும் முக்காடும் முகத்திரையும் முடிவிலாத் துயருக்கு முகவுரை படிக்கும். அவை நாளும் மனதைஅல்லலாய் இடிக்கும்.' "

- இந்நூல்: அத்தியாயம் 22

என்னும் பந்திகளில் வருவன போன்ற எதுகைகளும்,

" 'எனது கைக்கு எட்டா இடமெல்லாம் இறைவனார் கைகள் எட்டித் தொடட்டும்! எனது விரல்கள் படாதஇடமெல்லாம் இறைவனார் விரல்கள் தொட்டுப் படட்டும்! கடவுளின் கரங்கள் கருணை மிக்கவை.திங்களின்வெண்ணிலவு திகழும்வரை மக்களை நோய்கள் தீண்டாது இருக்கட்டும்.' "

- இந்நூல்: அத்தியாயம் 45

என்னும் பந்தியில் காணப்படுவன போன்று மோனைகளும் ஆங்காங்கு வசன நடைக்கு அழகு செய்கின்றன.

முடிவுரை

இவ்விதம் வசன அமைப்பில் அளவானதும் படிப்பதற்குத் தௌிவானதும் விளங்குதற்கு எளிதானதும் ஓசைச் சிறப்பானதும் கருத்துச் செறிவானதுமான பசுந் தமிழ் நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கலேவலாஎன்னும் பின்லாந்தின் காவியக் கதைக்குத் தமிழர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது எனதுநம்பிக்கை.

நிச்சயம் செய்யுள்நடைத் தமிழாக்கத்திலும் இவ்வுரைநடைத் தமிழ் பலரையுங் கவர வல்லதாக இருக்கும். எவ்வளவுதான் எளிமையாகச் செய்யுள்நடை மொழிபெயர்ப்பு இருந்தாலும் 'செய்யுள்' என்ற சொல்லேவாசகர்களை, அவர்கள் நன்கு தமிழ் கற்றவர்களாக இருந்தாலும்கூட, தூரத் துரத்திவிடும். செய்யுள் இன்றும் அறிவுலகத்தார் நடையாகவே திகழ்கிறது.

உரைநடை பொதுமக்களுக்கும் உவந்த நடை. இக்காலத்து நடை. காலத்தின் தேவையை உணாந்து உறுபணி ஆற்றியிருக்கின்றார் திரு. சிவலிங்கம் அவர்கள். இப்பணி கடும் உழைப்பினால் உருவாய பயன்; தமிழர்உதவியோ, தமிழ் நூலக, அச்சக வசதிகளோ இல்லாத சூழ்நிலையில் தனித்த முயற்சியால் விளைந்தபயன்; தான் பெற்ற இன்பத்தை எல்லாத் தமிழ் மக்களுக்கும் வழங்கவேண்டும் என்னும் அவாவினால் தழைத்தஆக்கம். அவரே தமது 'என்னுரை'யில் இதுபற்றிக் குறிப்பிடுகின்றார்:

"கவிதைநடை மொழியாக்கத்தைச் சுருக்கமாக இப்படிச் சொல்லாம்: ஏற்கனவே போடப்பட்டஅறிமுகமில்லாத ஒரு வளைவான தண்டவாளத்தில் வண்டியைத் தடம்புரளாமல் வேகமாக ஓட்டிச் செல்வதுபோன்ற ஓர் அனுபவம் - திாில்!

" 'உரைநடையில் கலேவலா' வில் உரைநடையில் தமிழாக்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை.சாறு பிழிந்து கொடுப்பதுபோல, சுருக்கமாகச் சுதந்திரமாகச் சொல்லப் போகிறோம் என்று எண்ணும்போது, கடற்கரையில் கைவீசி நடப்பதுபோன்ற ஓர் உணாவு - ஒரு சுகானுபவம்! நான் அனுபவித்ததை அப்படியே மற்றவர்களுக்கும் கொடுத்துவிடலாம் என்றொரு மடைதிறந்த மகிழ்ச்சி.'

உலகத்தில் பலபேருடைய ஆசைகள் நிறைவேறுவதில்லை. திரு. ஆர். சிவலிங்கம் அவர்களுடைய ஆசைமுழுமையாகவே இந்த நூல் வௌியீட்டுடன் நிறைவேறப் போகின்றது. அதுமட்டுமன்று. மொழிபெயர்ப்பு வரலாற்றுச் சாதனை ஒன்றையும் இவர் நாட்டியிருக்கின்றார். இறவாத பிறநாட்டு இலக்கியங்கள் பலவற்றை அவ்வப்போது அறிஞர் பெருமக்கள் தமிழ்மொழியில் தந்திருக்கிறார்கள். எனினும் முதன் முதலாகப் பின்னியமொழிக் காவியம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் இவரே.

புகழ்மிக்க ஓடிஸ்சி, இலியட் ஆகிய காவியங்களையும் பெயர்பெற்ற ஆதிக் கிரேக்க நாடகங்களையும்செய்யுள் நடையில் தமிழாக்கம் செய்துள்ள ஈழத்து அறிஞர் க. தா. செல்வராஜக்கோபால் (ஈழத்துப்பூராடனார்) அவர்களின் பெயர் கிரேக்க இலக்கிய உலகத்தில் மிகவும் பிரசித்தம். அவரைப் போன்றுதிரு. ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களும் தமிழீழத்து அறிஞர் மாண்பை பின்லாந்தில் மிகவேநிலைநாட்டியுள்ளார்.

இதனை மிக எளிதாகவே அவர் சாதித்தமைக்குப் பிரதான காரணம் அவர் பின்லாந்தின் பிரசையாக இருப்பது. 1983ஆம் ஆண்டு முதல் அவர் அங்கேயே வாழ்ந்து, பின்லாந்து மொழியைக் கற்று, பின்லாந்து மக்களுடன் கலந்து, அவர்களது வாழ்க்கை, கலை கலாச்சாரப் பாரம்பாியங்களை நன்கு அறிந்தகாரணத்தினாலும் பின்லாந்தின் தேசீய காவியமாகிய கலேவலாவைப் பல்கலைக்கழக மட்டத்தில்ஆழ்ந்தகன்று பல ஆண்டுகளாக ஆய்ந்து, அதில் தேறித் திளைத்த காரணத்தினாலும் அதன் தமிழாக்கப்பணியைச் செவ்வனே செய்ய முடிந்தது.

ஒரு காவியத்தைச் செய்யுளிலும் தந்து, அதனையே உரைநடையிலும் தந்த முதல் தமிழ்மொழிபெயர்ப்பாளரும் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலம் அல்லாத பிறநாட்டு இலக்கியங்களின் தமிழாக்கங்களிற் பெரும்பான்மை அவற்றின் ஆங்கிலமொழிபெயர்ப்புகளை அடியொற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலேவலா பின்னிய மொழிமூலத்திலிருந்தே தமிழாக்கப்பட்டிருப்பது கடக்கக் கருத முடியாத கருமம்.

கலேவலா காலத்தை வென்ற காவியம். அதனோடு ஒட்டிக்கொண்ட பெயர்கள் பல. அவற்றுள் ஒன்று திரு.ஆர்.சிவலிங்கம் என்ற பெயர் என்பதையிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் பெருமைப்படும்.

வி. கந்தவனம்
Upper Canada College
200, Lonsdale Road
Toronto, Ontario
M4V 1W6, Canada

மேற்படி 'ஆய்வுரை'யில் இடம்பெற்ற அடிக்குறிப்புகள் வருமாறு:


 அட்டவணைமேலே

என்னுரை

வணக்கம்

'கலேவலா' என்னும் காவியத்தின் எனது தமிழாக்கம் செய்யுள் நடையில் 1994ல் வௌிவந்த போது மனம்கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. பின்லாந்து, தமிழ் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நாடு.முற்றிலும் மாறுபாடான மொழி, கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள். 'கலேவலா' என்ற நூலின்பெயரை முதன்முதலாகப் பார்த்தவுடன் எந்தவிதமான அர்த்தமும் தோன்றாமல் குழம்பக் கூடிய சூழ்நிலை. அதனால்தான் சுமார் நூறு பக்கங்களை முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் மற்றும் படங்களுக்காக மட்டும்ஒதுக்கிப் போதிய விளக்கங்களுடன் இக்காவியத்தை அப்போது வௌியிட்டிருந்தோம்.

இப்பொழுது 'பழைய கலேவலா' என்று அழைக்கப்படும் நூல் 1835ல் வௌிவந்தது. அதைத் தொடர்ந்து அதன்முதலாவது மொழிபெயர்ப்பின் முதற்பதிப்பு 1841லேயே சுவீடன்மொழியில் வந்துவிட்டது. தற்போதுவழக்கிலுள்ள முழுமையான 'கலேவலா' 'பழைய கலேவலா'விலும் பார்க்க இருமடங்கு நீளமாக 22,795 அடிகளைக் கொண்ட 50 பாடல்களாக 1849ல் வௌிவந்தது. இதன் 150வது ஆண்டு நிறைவைஹெல்சிங்கியிலும் இப்பாடல்கள் சேகாிக்கப்பட்ட கரேலியாப் பகுதியிலும் கோலாகலமாகக்கொண்டாடப்படுகிற இந்த 1999ம் ஆண்டில் 'உரைநடையில் கலேவலா' என்னும் இந்தத் தமிழாக்கம்வௌிவருவது மிகவும் பொருத்தமானது. 1999 ஆண்டுவரை எவரெவர் எந்தெந்த மொழிகளில் எந்தெந்தஆண்டுகளில் கலேவலாவை மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதை விளக்கும் 'உலகளாவிய கலேவலா'என்ற பட்டியலை இந்நூலின் கடைசியில் இணைத்திருக்கிறேன்.

'கலேவலா'வுக்கு ஒரு பலமான பின்னணி உண்டு. பின்லாந்து நாட்டின் தேசீய காவியம் என்னும் மகிமை பெற்றது. உலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்ற மேன்மை பெற்றது. இதுவரையில் 46மொழிகளில் 150 நூல்கள் சுமார் 250 பதிப்புகளாக வௌிவந்திருக்கின்றன என்ற பெருமை பெற்றது.

எனவே 'கலேவலா'வை நான் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதில் அர்த்தயில்லை.'கலேவலா' என்னை உலகமெலாம் அறிமுகப்படுத்திற்று என்பதே உண்மை. 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்குஉலகின் பல நாடுகளிலும் கிடைத்த வரவேற்பில் வியப்பு எதுவுமில்லை. ஏனென்றால், ஒரு நாட்டின்தேசீய காவியத்துக்கு உலகத் தமிழாின் உளமார்ந்த வணக்கம் அது.

ஒரு குறை

செய்யுள் நடையில் வௌியான 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்குப் பொதுவாக ஒரு குறை கூறப்பட்டது. அறிஞர்களும் ஓரளவு தமிழ் இலக்கியப் பயிற்சி உள்ளவர்களும் முழு மனத்தோடு வரவேற்றபோதிலும்,சாதாரண வாசகர்களால் படித்து விளங்கிக்கொள்ள முடியாத மரபுக் கவிதை நடை என்பது அந்தக் குறை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக்தின் பேராசிாியர் கா. சிவத்தம்பி அவர்கள் இந்த நூலைப்பற்றிவலைப்புலத்துக்கு (internet) எழுதிய ஓர் ஆங்கில ஆய்வுரையில் 'கலேவலா'வுக்கு உரைநடையிலும் ஒருதமிழாக்கம் அவசியம் என்பதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டினார். இதுபற்றி வேறு பலரும் நேரடியாகஎங்களுக்கு எழுதியிருந்தார்கள். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திாிகைகளில் வௌியானவிமர்சனக் கட்டுரைகளிலும் இதைத் தொட்டுக் காட்டியிருந்தார்கள். எனவே உரைநடையிலும் ஒருதமிழாக்கத்தை வௌியிட்டு இப்பணியை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பலன்தான்'உரைநடையில் கலேவலா' என்ற இந்த நூல்.

தமிழாக்கம்

'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் மிகுந்த பொருட் செலவில் 1994ல் அழகாக வௌியிடப்பட்டது. சுமார் பதினையாயிரம் அமொிக்க டொலர் அதற்குச் செலவானது. உலகிலேயேஅதிக செலவில் வௌியான தமிழ் நூல் என்று அப்போது அதைப் பத்திாிகைகள் பாராட்டின. அந்தவௌியீட்டில் பின்னிஷ் மூல நூலில் உள்ள 22,795 அடிகளும் ஓரடிகூடத் தவறாமல் அடிக்கு அடி தமிழாக்கம்செய்யப்பட்டது. அதில் ஒரு சிரமம். மூல நூலில் ஓரடியில் சொல்லப்பட்ட கருத்தைத் தமிழாக்கத்தில்முன்னடிக்கோ பின்னடிக்கோ கொண்டு செல்லாமல், அதே அடிக்குள் கூடாமல் குறையாமல் கைகட்டி அடங்கிநிற்க வைப்பதுபோல் சொல்ல வேண்டியிருந்தது. அத்துடன் பொருட் சிதைவு ஏற்படாமல் இலக்கணவரம்புக்குள்ளும் அமைக்க வேண்டியிருந்தது. செய்யுள் நடை மொழியாக்கத்தைச் சுருக்கமாக இப்படிச்சொல்லலாம். ஏற்கனவே போடப்பட்ட அறிமுகமில்லாத ஒரு வளைவான தண்டவாளத்தில் வண்டியைத்தடம்புரளாமல் வேகமாக ஓட்டிச் செல்வது போன்ற ஓர் அனுபவம் - ஒரு த்ாில்!

உரைநடையில் தமிழாக்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. சாறு பிழிந்து சுத்தமான கிண்ணத்தில்கொடுப்பதுபோலச் சுருக்கமாகச் சுதந்திரமாகச் சொல்லப் போகிறோம் என்று எண்ணும்போது,கடற்கரையில் கைவீசி நடப்பதுபோன்ற ஓர் உணர்வு - ஒரு சுகானுபவம்! நான் அனுபவித்ததை அப்படியேமற்றவர்களுக்கும் கொடுத்துவிடலாம் என்றொரு மடைதிறந்த மகிழ்ச்சி.

1991 ஜனவாியில் 'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தைத் தொடங்கினேன். இத்தனை வருடங்களாகப் பின்னிஷ் மூல நூலையும் ஆங்கில மொழியாக்கங்களையும் அதுபற்றிய ஆய்வு நூல்களையும்திரும்பத் திரும்பப் படித்து வந்ததால், அதன் கதையும் களமும் கற்பனையும் கதாபாத்திரங்களும் எனதுமனத்தில் கல்லில் எழுத்தாகப் பதிந்துவிட்டன. அதனால் எனது ஒரு சொந்த நாவலை எழுதுவதுபோன்றஉணர்வுகளுடன் இந்த உரைநடைத் தமிழாக்கத்தை எழுதியிருக்கிறேன். ஆனால் இம்முறையும் பின்னிஷ் மூலநூலிலிருந்தே நேரடியாகத் தமிழாக்கியிருக்கிறேன்.

செய்யுள் நடையில் 'கலேவலா'வின் தமிழாக்கம் வௌியானபோது, அதன் பாத்திரப் பெயர்கள்உச்சாிக்கச் சிரமமாய் இருப்பதாயும் அவற்றையும் தமிழ்ப்படுத்தியிருக்கலாமே என்றும் சிலர்கேட்டார்கள். அந்தக் கேள்வி இந்த 'உரைநடையில் கலேவலா'வுக்கும் பொருந்தும். தமிழ் மொழியும்பின்னிஷ் மொழியும் முற்றிலும் மாறுபட்ட கலை, கலாசாரப் பழக்க வழக்கங்களைப் பின்னணியாகக்கொண்டவை. ஒரு மொழியில் பேச்சு இன்னொரு மொழியில் ஏச்சு என்பார்கள். எங்களுடைய வாய்க்குவசதியாகப் பெயர்களை மாற்றப்போய், அந்தச் சொற்கள் அவர்களுடைய மொழியில் தவறான அர்த்தத்தைத்தரக்கூடாது என்று அஞ்சுகிறேன். உதாரணமாக, பின்னிஷ் மொழியில் 'பாவி' என்பது ஒருபவித்திரமான சொல். போப்பாண்டவர் என்று அர்த்தம். அதுவே தமிழில் எதிமாறான கருத்தைக்கொண்டது. அதனால் இந்த நூலிலும் பாத்திரங்களின் பெயர்கள் அப்படியே இருக்கட்டும் என்றுவிட்டுவிட்டேன். பின்லாந்து நாட்டுத் தேசீய காவியத்தின் அடையாளங்களாக அவை அப்படியேஇருக்கட்டுமே!

'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் மிகவும் சிறப்பாகப் பதிப்பித்து வௌியிடப்பட்டது.ஆனால் இந்த உரைநடைத் தமிழாக்கத்தை மிகவும் சிக்கனமாகவே வௌியிடுவது என்று தீர்மானித்தோம்.அதனால் இதில் விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை. விளக்கங்கள் தேவைப்படுவோர் செய்யுள்நடைத்தமிழாக்கத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். 'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம்முழுவதையும் இப்பொழுது வலைப்புலத்திலும். (internet) பார்க்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

வலைப்புலத்தில் இயங்கிவரும் 'தமிழ் இணைய'த்தில் (http://www.tamil.net) பல நல்லஉள்ளங்களைச் சந்திக்க முடிகிறது. பல நாடுகளையும் சேர்ந்த உறுப்பினாகள் ஒன்றுகூடி உலகெலாம்படைக்கப்பட்ட பழைய புதிய தமிழ் இலக்கியங்களை மின்னெழுத்துக்களில் பதிந்து பாதுகாக்கும் பணி,தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்ககளில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த'மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்'தின் (Project Madurai) தலைவர் முனைவர்கல்யாணசுந்தரம் அவர்கள் (சுவிட்சர்லாந்து), இணைத் தலைவர் முனைவர் குமார் மல்லிகார்ச்சுனன் அவர்கள்(அமொிக்கா), மற்றும் பல நாடுகளையும் சேர்ந்த இணைப்பாளர்களின் அாிய சேவை காலத்தையும் வென்றுநிற்கும். இதில் எனது "கலேவலா"வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் முழுவதும் இடம்பெறுவது ஓர்உவப்பான செய்தி. இதன் கணனித்தள (website) முகவாி: http://www.tamil.net/projectmadurai/

கலேவலா

செய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்கு நீங்கள் தந்த ஆதரவு நெஞ்சை நெகிழ வைத்தது. தனித்தனியே பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி கூற முடியாது இருக்கிறதே என்று எண்ணும்போதுஒரு பக்கம் வருத்தமாகவும், இத்தனை பேரா, இத்தனை நீண்ட பட்டியலா என்று மறுபக்கம் மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

செய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வுக்கு இலங்கையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தியஅறிமுக விழாவையும், அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியா இலங்கை நாடுகளுக்கானபின்லாந்தின் தூதுவர் அதிமாண்புமிகு பெஞ்சமின் பஸ்ஸின் அவர்களையும் (His ExcellencyBenjamin Bassin Esqr.), மற்றும் அறிஞர்களையும், விழாவைச் சிறப்பாக நிறைவேற்றியசங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. க.இ.க. கந்தசாமி அவர்களையும் எப்படி மறப்பது?

தமிழ்க் 'கலேவலா'வில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கி, அவற்றைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம்மூலமாக இலங்கையில் நூறு நூலகங்களுக்கு அன்பளிப்புச் செய்த பின்னிஷ் - இலங்கை நட்புறவுச்சங்கத்தினாின் (Finnish - Sri Lanka Friendship Society, Helsinki) இலக்கியப்பணியை என்னவென்று வர்ணிப்பது?

இலங்கை, இந்தியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பத்திாிகைகள், வானொலிதொலைக்காட்சி நிலையங்கள் காட்டிய ஆர்வத்தை எந்தக் கணக்கில் வரவு வைப்பது?

தனிப்பட்ட முறையில் அஞ்சல்களையும் மின்னஞ்சல்களையும் அனுப்பி உற்சாகப்படுத்திய உலகெலாம் வாழும்முகம் தொியாத மதிப்புக்குாிய அறிஞர்களே, மனமார்ந்த நண்பர்களே உங்களுக்கு நான் என்ன கைமாறுசெய்வது?

உரைநடையில் கலேவலா

இந்த 'உரைநடையில் கலேவலா' என்ற நூலைத் தொடங்கிய போதும் நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தது. ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில், எங்கள் ஆசிய ஆபிாிக்க நாடுகள் தொடர்பான கல்வித்திணைக்களத்தின் தலைவரும் தென்னாசியக் கல்வித் துறைக்குப் பொறுப்பான பேராசிாியருமான அஸ்கோபார்பொலா (Asko Parpola) அவர்கள்தான் இந்த நூல் வௌிவர முழுமுதற் காரணமானவர். அவர்எழுதியுள்ள முன்னுரை இந்த நூலுக்கு ஓர் அருமையான அர்த்தமுள்ள நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.

இந்த நூலுக்கு உலகறிந்த ஓர் அறிஞாின் சிறப்புரையைச் சேர்ப்பது என்று தீர்மானித்தபோது நண்பர்இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பெயர் நினைவுக்கு வந்தது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில்முப்பது ஆண்டுகள் பேராசிாியராக இருந்தவர். சில காலம் போலந்து, கனடா, ஹாலந்து நாடுகளிலும்சிறப்புப் பேராசிாியராகப் பணிபுாிந்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுத்துறை இயக்குனராகநான்காண்டுகள் கடமையாற்றியவர். சாகித்திய அகதமி, தமிழ்நாடு அரசு விருதுகள் பெற்ற பிரபல எழுத்தாளர் என்ற வகையில் என் மனம் நிறைந்தவர். இவருடைய சிறப்புரை இந்த நூலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் என்பது திண்ணம்.

செய்யுள்நடையில் வௌிவந்த 'கலேவலா'வில் தமிழ் அறிஞாின் முன்னுரை எதையும் பிரசுாிக்க வசதிப்படவில்லை. செய்யுள் நடையில் 'கலேவலா', 'உரைநடையில் கலேவலா' ஆகிய இரண்டுநூல்களையும், கவிதை உரைநடை இரண்டிலும் தேர்ச்சியுள்ள ஓர் அறிஞர் ஆய்வு செய்து எழுதினால்வாசகர்களுக்குப் பொிதும் பயன்படும் என்று தோன்றியது. இதற்கு மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் என்று எண்ணினேன். இவர் கனடாவில் Upper Canada College, Torontoவில்கடமையாற்றுகிறார். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகப் பணிபுாிகிறார். சிலகாலம் யாழ். அளவெட்டி அருணோதயக் கல்லூாியின் அதிபராகவும் முப்பது ஆண்டுகள் இலங்கையிலும்ஆபிாிக்காவிலும் ஆசிாியராகவும் சேவை செய்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிாியர். இந்தநண்பர் 'கலேவலா'வின் எனது இரண்டு தமிழாக்கங்களை மட்டுமல்லாமல், கலேவலாவின் பல ஆங்கிலமொழிபெயர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து ஒரு நீளமான ஆய்வுரையை இந்நூலுக்கு எழுதியிருக்கிறார்.உலகில் தமிழ்க் கலேவலாவைப்பற்றிப் பேசப்படும் காலமெல்லாம் இவருடைய ஆய்வுரைபற்றியும் பேசப்படும்என்பது எனது எண்ணம்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க ஆரம்பித்தபோது எனது முதலாவது வகுப்பிலேயே ஒரு தமிழ் கற்கும் மாணவராக அறிமுகமானவர் திரு.யூாி ஆல்போர்ஸ் (Juri Ahlfors). இன்றைக்கு எங்கள் திணைக்களத்திலேயே கணனி ஆலோசகராகக் கடமையாற்றும் இவர், கணனியில் தமிழில் செயலாற்ற அவ்வப்போது உதவுவதோடு இந்த நூலின் பக்கங்களைஅச்சிடுவதற்கேற்ப வடிவமைத்துத் தந்தார்.

செய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வை வௌியிட்டபோது ஒரு சிக்கல் ஏற்பட்டது. பின்லாந்தின்காவியத்தைக் கொண்டுபோய் ஹொங்கொங்கில் அச்சிட்டு வௌியிடத் தீர்மானித்தோம். அந்தப் பதிப்பகத்தில் எவருக்குமே தமிழ் தொியாது. எனவே அந்த நூலை எப்படித் தமிழ்மக்கள் வாழும்நாடுகளில் விநியோகிப்பது என்று தயங்கியபொழுது தமிழ்நாட்டின் தலைசிறந்த பழம் பெரும்பதிப்பகங்களில் ஒன்றான சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிர்வாக அதிபர் முனைவர் இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் விநியோகப் பொறுப்பை ஏற்று உதவ முன்வந்தார். இம்முறை அவர்களே'உரைநடையில் கலேவலா'வை இத்தனை அழகாகவும் சிறப்பாகவும் அச்சிட்டு வௌியிட்டதில் எங்களுக்குமட்டற்ற மகிழ்ச்சி.

செய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வை ஒரேயொரு கணனித் தமிழ் எழுத்தை வைத்துக் கொண்டேசெய்து முடித்தேன். இந்த 'உரைநடையில் கலேவலா'வுக்கு வேறு புதிய தமிழ் எழுத்துக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அமொிக்காவிலிருந்து முனைவர் பொியண்ணன் குப்புச்சாமி அவர்களும், கனடாவிலிருந்துதிரு சசி பத்மநாதன் அவர்களும் சில சிறந்த தமிழ் எழுத்துக்களை மனமுவந்து அன்பளிப்பாகத்தந்தார்கள். ஆனால் இந்த நூலைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டியிருந்ததால், பிந்திக்கிடைத்த அந்த எழுத்துக்களை இந்த நூலுக்குப் பொிதும் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.அதனாலென்ன! இத்தகைய வனப்புமிக்க வடிவமைப்பான எழுத்துக்களைத் தந்ததன் மூலம் இதுபோன்ற பத்துநூல்களைப் படைக்கும் பலத்தை எனக்குத் தந்திருக்கிறார்களே!

இப்படியொரு செயற்திட்டத்தைத் தொடங்கினால், மற்றும் அலுவல்கள் எல்லாவற்றையும் மறந்து இரவு பகலாக அதிலேயே முழ்கிவிடுவது எனது வழக்கம். அப்பொழுதெல்லாம் எனது பக்கபலமாக இருப்பவர்கள் எனது அன்பு மனைவியும் பாசமுள்ள பிள்ளைகளும்தாம். எனது எழுத்தை முதலில் படித்துப் பெருமைப்படுபவர்களும்அவர்கள்தாம். அவர்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும்தாம் எனது உழைப்புக்கு ஊற்றுக்கண் என்பது எனதுஉள்ளம் மட்டிலும் உணாந்துகொண்ட உண்மை.

நன்றி

மேற்கூறிய உங்கள் அனைவரது ஒருமனப்பட்ட அன்புதான் எனது எழுத்துப்பணிக்கு மூலதனம். உங்களுடையஅப்பழுக்கற்ற ஆதரவுதான் எனது இலக்கியப்பணிக்கு அத்திவாரம். ஒரு சம்பிரதாயமாக உங்களுக்குவார்த்தையால் நன்றி சொல்லி என் மனம் நிறையப் போவதில்லை. எனவே உங்கள் அனைவரையும்அந்தரங்கசுத்தியுடன் வணங்கி மகிழ்ந்து மனநிறைவு பெறுகிறேன்.

சமர்ப்பணம்

பின்லாந்தில், தமிழ் ஆர்வமும் தமிழ் இலக்கிய அறிவும் உள்ளவர்கள் என்று யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. தமிழில் ஒரு பக்கத்தைப் படித்துப் பார்த்து எழுத்துப் பிழைகளையாவது சுட்டிக்காட்டக்கூடிய நண்பர் என்று யாருமே எனக்கு இன்னமும் இங்கே வாய்த்ததில்லை. எனவே இம்முறையும்தனிமுயற்சிதான். மொழிபெயர்ப்பது, கணனியில் எழுதுவது, கணனி அச்சுப்பிரதிகளில் சாிபிழைபார்ப்பது, திருத்தங்களைச் செய்வது போன்ற சகல வேலைகளையும் நான் ஒருவனே செய்து முடித்தேன்.எனவே ஆங்காங்கு ஏதாவது பிழைகள் இருக்கலாம். அவற்றைப் பொறுக்கும்படி கேட்டு, இந்த உலகளாவியஉன்னத இலக்கியத்தை வாசகப் பெருமக்களாகிய உங்களுக்கு உளநிறைவோடு சமர்ப்பணம் செய்கின்றேன்.

அன்புடன்,

ஆர். சிவலிங்கம் (உதயணன்)
Laakavuorentie 4 C 41
00970 Helsinki
Finland
12. 01. 1999