pm logo

taNTiyalangkAram
taNTiyAciriyar
(in tamil script, unicode format)

தண்டியாசிரியர் அருளிய
தண்டியலங்காரம்
இலக்கண நூல்



Acknowledgement:
Our Sincere thanks go to Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu,
for their assistance in the preparation of this work (text input, proof-reading and web versions.
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This file was last revised on 4 March 2002

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தண்டியலங்காரம்
தண்டியாசிரியர்


மூலம்

1. பொதுவணியியல்

தற்சிறப்புப் பாயிரம்

1. சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே.

நூல்

செய்யுள்வகை

2. செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென
எத்திறத் தனவு மீரிண் டாகும்.

முத்தகச்செய்யுள்

3. அவற்றுள்,
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.

குளகச் செய்யுள்

4. குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்.

தொகைநிலைச் செய்யுள்

5. தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினு மளவினுங் கூட்டிய வாகும்.

தொடர்நிலைச் செய்யுள்

6. பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை

பொருள்தொடர்நிலைச் செய்யுளின் பகுப்பு

7. பெருங்காப் பியமே காப்பிய மென்றாங்
கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே.

பெருங்காப்பியம்

8. அவற்றுள்,
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் - 5
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்ததாய்
மலைகட னாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமேன் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் - 10
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரத் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் - 15
பரிசசேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.

பெருங்காப்பிய இலக்கணத்திற்கு ஓரு புறநடை

9. கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்.

காப்பியம்

10. அறமுத னான்கினுங் குறைபா டுடையது
காப்பிய மென்று கருதப் படுமே.

காப்பியங்கட்கோர் இலக்கணம்

11. அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையம் பாடையும் விரவியும் வருமே.

சொற்றொடர்நிலைச் செய்யுள்

12. செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே.

செய்யுள்நெறி

13. மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கெளட மென்றாங்
கெய்திய நெறிதா மிருவகைப் படுமே.

வைதருப்பநெறி

14. செறிவே தெளிவே சமநிலை யின்பம்
ஒழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை
காந்தம் வலியே சமாதி யென்றாங்
காய்ந்த வீரைங் குணனு முயிரா
வாய்ந்த வென்ப வைதருப் பம்மே.

கெளடநெறி

15. கெளட மென்பது கருதிய பத்தொடும்
கூடா தியலுங் கொள்கைத் தென்ப.

16. செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை.

தெளிவு

17. தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே.

சமநிலை

18. விரவத் தொடுப்பது சமநிலை யாகும்.

இன்பம்

19. சொல்லினும் பொருளினும் சுவைபட லின்பம்.

ஒழுகிசை

20. ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை.

உதாரம்

21. உதார மென்ப தோதிய செய்யுளிற்
குறிப்பி னொருபொரு ணெறிப்படத் தோன்றல்

உய்த்தலில் பொருண்மை

22. கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்
குரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை.

காந்தம்

23. உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்

வலி

24. வலியெனப் படுவது தொகைமிக வருதல்.

சமாதி

25. உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற்
றரும்வினைப் புணர்ப்பது சமாதியாகும்.

இவ்வியலுக்குப் புறநடை

26. ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம்
முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற்
காட்டிய நடைநெறி கடைபிடித் திவற்றொடு
கூட்டி யுணர்த லான்றோர் கடனே.

2. பொருளணியில்

காப்பு

என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும்
அன்னை யுடைய வடித்தளிர்கள் - இன்னளிசூழ்
மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா
வன்மனத்தே தங்குமோ வந்து.

பொருளணிகள்

28. தன்மை யுவமை யுருவகந் தீவகம்
பின்வரு நிலையே முன்ன விலக்கே
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை
ஒட்டே யதிசயந் தற்குறிப் பேற்றம்
ஏது நுட்ப மிலேச நிரனிரை
ஆர்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை
பரியா யம்மே சமாயித முதாத்தம்
அரிதுண ரவநுதி சிலேடை விசேடம்
ஒப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம்
மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே
வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை
ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே.

தன்மையணி

29. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்.

30. அதுவே,
பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம்.

உவமையணி

31. பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்
தொப்புமை தோன்றச் செப்புவ துவமை.

உவமை வகை

32. அதுவே,
விரியே தொகையே யிதர விதரம்
உரைபெரு சமுச்சய முண்மை மறுபொருள்
புகழ்த னிந்தை நியம மநியமம்
ஐயந் தெரிதரு தேற்ற மின்சொல்
எய்திய விபரீத மியம்புதல் வேட்கை
பலபொருள் விகார மோக மபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை
மாலை யென்னும் பால தாகும்.

33. அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே.

34. மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும்
பான்மாறு படுதலும் பாகுபா டுடைய.

35. போல மான புரையப் பொருவ
நேரக் கடுப்ப நகர நகர்ப்ப
ஏர வேய மலைய வியைய
ஒப்ப வெள்ள வுறழ வேர்ப்ப
அன்ன வனைய வமர வாங்க
என்ன விகல விழைய வெதிரத்
துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ
இணைசிவண் கேழற்றுச் செத்தொடு பிறவு
நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே.

உருவகவணி

36. உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்
தொன்றன மாட்டினஃ துருவக மாகும்.

37. தொகையே விரியே தொகைவிரி யெனாஅ
இயைபே யியைபிலி வியநிலை யெனாஅச்
சிறப்பே விரூபகஞ் சமாதா னமெனாஅ
உருவக மேக மநேகாங் கமெனாஅ
முற்றே யவயவ மவயவி யெனாஅச்
சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே.

38. உவமை யேது வேற்றுமை விலக்கே
அவநுதி சிலேடையென் றவற்றொடும் வருமே.

புறநடை

39. உருவக முவமை யெனவிரு திறத்தவும்
நிறம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற்
கூறிய நெறியின் வேறுபட வருபவை
தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே.

தீவகவணி

40. குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல்
ஒருவயி னின்றும் பலவயிற் பொருடரிற்
றீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும்.

41. அதுவே,
மாலை விருத்த மொருபொருள் சிலேடையென
நால்வகை யானு நடைபெறு மென்ப.

பின்வருநிலையணி

42. முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரு மென்னிற் பின்வரு நிலையே.

முன்னவிலக்கணி

43. முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே
மூவகை காலமு மேவிய தாகும்.

44. அதுவே,
பொருள்குணங் காரணங் காரியம் புணரும்.

45. வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி
துணைசெயல் முயற்சி பரவச முபாயம்
கையற லுடன்படல் வெகுளி யிரங்கல்
ஐய மென்றாங் கறிந்தனர் கொளலே.

இதுவுமது

46. வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை
மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும.

வேற்றுப்பொருள் வைப்பணி

47.முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னொரு பொருளை யுலகறி பெற்றி
ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.

48. முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல்
கூடா வியற்கை கூடு மியற்கை
இருமை யியற்கை விபரீதப் படுத்தலென்
றின்னவை யெட்டு மதன தியல்பே.

வேற்றுமையணி

49.கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே.

50. அதுவே,
குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும்.

விபாவனையணி

51.உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி
வேறொரு காரண மியல்பு குறிப்பின்
வெளிப்பட உரைப்பது விபாவனை யாகும்.

ஒட்டணி

52. கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற்
கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென மொழிப.

ஒட்டணி வகை

53. அடையும் பொருளு மயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினு மியலு மென்ப.

அதிசயவணி

54. மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி
உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி
ஆன்றோர் வியப்ப தோன்றுவ ததிசயம்.

அதிசயவணி வகை

55. அதுதான்,
பொருள்குணந் தொழிலைந் துணிவே திரிபெனத்
தெருளுறத் தோன்று நிலைமைய தென்ப.

தற்குறிப்பேற்றவணி

56. பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும்
இயல்பின் விளைதிற னன்றி யயலொன்று
தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்.

57. அன்ன போலெனு மவைமுத லாகிய
சொன்னிலை விளக்குந் தோற்றமு முடைத்தே.

ஏதுவணி

58. யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென்
றேதுவிதந் துரைப்ப தேது வதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்படும்.

59. முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும்
ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம்.

ஞாபகவேது

60. அவையல பிறவி னறிவது ஞாபகம்.

அபாவவேது

61. அபாவந் தானு மதன்பாற் படுமெ.

62. என்று மபாவமு மின்மய தபாவமும்
ஒன்றினொன் றபாவமு முள்ளத னபாவமும்
அழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம்.

சித்திரவேது

63. தூர காரியமு மொருங்குடன் றோற்றமும்
காரண முந்துறூஉங் காரிய நிலையும்
யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும்.

நுட்பவணி

64. தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும்
அரிதுணர் வினைத்திற நுட்ப மாகும்.

இலேசவணி

65. குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாட லிலேச மாகும்.

இதுவுமது

66. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையு மன்னதென் றறைகுந ருளரே.

நிரனிறையணி

67. நிரனிருத் தியற்றுத னிரனிறை யணியே.

ஆர்வமொழியணி

68. ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே.

சுவையணி

69. உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டி னியல்வது சுவையே.

70. அவைதாம்,
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர நகையே.

தன்மேம்பாட்டுரையணி

71. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.

பரியாயவணி

72. கருதியது கிளவா தப்பொரு டோ ன்றற்
பிரிதொன் றுரைப்பது பரியா யம்மே.

சமாகிதவணி

73. முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று
தந்ததா முடிப்பது சமாகித மாகும்.

உதாத்தவணி

74. வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும்.

அவநுதியணி

75. சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை
மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும்.

சிலேடையணி

76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்.

77. அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.

78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.

விசேடவணி

79. குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின்
மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம்.

ஒப்புமைக்கூட்டவணி

80. கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத்
தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம்.

81. புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே.

விரோதவணி

82. மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை
விளைவுதர வுரைப்பது விரோத மாகும்.

மாறுபடுபுகழ்நிலைவணி

83. கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை.

புகழாப் புகழ்ச்சியணி

84. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி.

நிதரிசனவணி

85. ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட
நிகழ்வ தாயி னிதரிசன மதுவே.

புணர்நிலையணி

86. வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே
புணர மொழிவது புணர்நிலை யாகும்.

பரிவருத்தனையணி

87. பொருள் பரிமாறுதல் பரிவருத் தனையே.

வாழ்த்தணி

88. இன்னார்க் கின்ன தியைக வென்றுதா
முன்னியது கிளத்தல் வாழ்தென மொழிய.

சங்கீரணவணி

89. மொழியப் பட்ட வணிபல தம்முள்
 டழுவ வுரைப்பது சங்கீ ரணமே.

உவமை உருவகங்கட்கு புறநடை

90. ஒப்புமை யில்லது மையமு முவமையிற்
செப்பிய திறமு முவமை யுருவகமும்
உருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே.

பாவிகவணி

91. பாவிக மென்பது காப்பியப் பண்பே.

3. சொல்லணியியல்

92. எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே.

93. அதுதான்,
ஓரடி முதலா நான்கடி காறும்
சேரு மென்ப தெளிந்திசி னோரே.

94. ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை
இடையொடு கடைமுழு தெனவெழு வகைத்தே.

95. ஓரடி யொழிந்தன தேருங் காலை
இணைமுதல் விகற்ப மேழு நான்கும்
அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்.

96. அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே.

97. ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப.

சித்திர கவி வறுமாறு

98. கோமூத் திரியே கூட சதுக்கம்
மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்
நாக பந்தம் வினாவுத் தரமே
காதை கரப்பே கரந்துரைச் செய்யுள்
சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம்
அக்கரச் சுதகமு மவற்றின் பால.

வழுக்களின் வகைகள்

99. பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி
மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி
நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு
செய்யுள் வழுவொடு சந்தி வழுவென
வெய்திய வொன்பது மிடனே காலம்
கலையே யுலக நியாய மாகம
மலைவுமுள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர்.

பிறன்கோட்கூறி மறுத்தல்

100. மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென
ஆற்றுளிக் கிளக்கு மவற்றது வழுநிலை
நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப.

பிரிபொருட் சொற்றொடர்

101. அவற்றுள்,
பிரிபொருட் சொற்றொடர் செய்யுண் முழுவதும்
ஒருபொருள் பயவா தொரீஇத் தோன்றும்.

இதற்குச் சிறப்பு விதி

102. களியினும் பித்தினுங் கடிவரை யின்றே.

மாறுபடு பொருண் மொழி

103. மாறுபடு பொருண் மொழி முன்மொழிந் ததற்கு
மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும்.

சிறப்பு விதி

104. காமமு மச்சமுங் கைம்மிகி னுரித்தே.

மொழிந்தது மொழிவு

105. மொழிந்தது மொழிவே கூறியது கூறி
வேறுபட வொருபொருள் விளங்கா தாகும்.

சிறப்பு விதி

106. விரைவினுஞ் சிறப்பிணும் வரைவின் றதுவே.

கவர்படு பொருண்மொழி

107. ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல்
இருபொருட் கியைவது கவர்படு பொருண்மொழி.

சிறப்பு விதி

108. வழூஉப்பட லில்வழி வரைவின் றதுவே.

நிரனிறை வழு

109. ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே.

சிறப்பு விதி

110. உய்த்துணர வரும்வழி யவவாறு முரித்தே.

சொல் வழு

111. சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு
 புல்லா தாகிய புகர்படு மொழியே.

சிறப்பு விதி

112. வழக்கா றாயின் வழுவின் றதுவெ.

யதி வழு

113. யதிவழு வென்ப தோசை யறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப.

சிறப்பு விதி

114. வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே.

செய்யுள் வழு

115. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ
டெய்த லில்லா வியல்பிற் றாகும்.

சிறப்பு விதி

116. ஆரிடத் துள்ளு மவைபோல் பவற்றுளு
நேரு மென்ப நெறியுணர்ந் தோரே.

சந்தி வழு

117. சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச்
சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும்.

சிறப்பு விதி

118. இரண்டாம் வேற்றுமைக் கெதிர்மறுத்தும் வருமே.

மலைவு

இடமலைவு

119. இடமென படுபவ மலைநாடி யாறே.

கால மலைவு

120. காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே.

கலை மலைவு

121. கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற்
காமமும் பொருளு மேமுறத் தழுவி
மறுவறக் கிளத்த வறுபத்து நான்கே.

உலக மலைவு

122. உலகெனப் படுவதீண் டொழிக்கின் மேற்றே.

நியாய மலைவு

123. நியாய மென்பது நெறியுறக் கிளக்கின்
அளவயிற் றெளிக்கும் விளைபொருட் டிறமே.

ஆகம மலைவு

124. ஆகம மென்பன மநுமுத லாகிய
அறனொடு புணர்ந்த திறனறி நூலே.

இடமலைவு முதலியவற்றிற்கு சிறப்பு விதி

125. கூறிய நெறியி னாறுவகை மலைவு

நாடக வழக்கி னாட்டுதற் குரிய.

புறநடை

126. மெய்பெற விரித்த செய்யுட் டிறனு
மெய்திய நெறியு மீரைங் குணனும்
ஐயெழு வகையி னறிவுறு மணிய
மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று
முடிய வந்த மூவகை மடக்கும்
கோமூத் திரிமுதற் குன்றா மரபி
னேமுற மொழிமிறைக் கவியீ ராறு
மிவ்வகை யியற்றுதல் குற்ற மிவ்வகை
யெய்த வியம்புத லியல்பென மொழிந்த
வைவகை முத்திறத் தாங்கவை யுளப்பட
மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட
லான்ற காட்சிச் சான்றோர் கடனே.

தண்டியலங்காரம் முற்றிற்று.
-----------


This webpage was last revised on 31 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).