pm logo

etir pArAta muttam
of pAratitAcan
(in tamil script, unicode format)

பாவேந்தர் பாரதிதாசனின்
எதிர்பாராத முத்தம்
(ஒரு கவிதைத்தொகுப்பு)



Acknowledgment.
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
EText input : Mr.P.I.Arasu, Toronto, Ontario, Canada.
Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India.
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA
This webpage presents the Etxt in Tamil scriptin Unicode encoding.
This file was last revised on 12 Feb 2003

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

எதிர்பாராத முத்தம்
பாவேந்தர் பாரதிதாசன்

உள்ளுறை
முதற்பகுதி

1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

2. நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை!

3. பூங்கோதை - பொன்முடி

4. அவன் உள்ளம்

5. பண்டாரத் தூது

6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!

7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை

8. அவள் எழுதிய திருமுகம்

9. நுணுக்கமறியாச் சணப்பன்

10. விடியுமுன் துடியிடை

11. அறையிலிருந்து அம்பலத்தில்

12. பெற்றோர் பெருந்துயர்

13. இல்லையென்பான் தொல்லை

14. எதிர்பாராப் பிரிவு

15. அழுதிடுவாள் முழுமதியாள்

16. எந்நாளோ!

17. ஆசைக்கொரு பெண்

18. பறந்தது கிள்ளை

19. வடநாடு செல்லும் வணிகர்

20. வணிகர் வரும்போது

21. ஜீவமுத்தம்

-----------

இரண்டாம் பகுதி

22 தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்

23. குருபரனுக் கருள்புரிந்தான்

24. ஊமையின் உயர் கவிதை

25. ஞானகுருவை நாடிச் சென்றான்

26. யானைமேல் பானைத் தேன்

27. அவையிடைச் சிவை

28. தெய்வப் பாடல்

29. இறைவி மறைவு

30. திருவடி சரணம்

31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

32. இப்போதெப்படி நாய்கன்மார்கள்?

-----------


முதற்பகுதி

1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!

வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்!

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்!

பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு

வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்.
புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்

குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!

உள்ளுறைக்குத் திரும்ப

2. நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை!

வள்ளியூர்த் தென்பு றத்து
      வனசப்பூம் பொய்கை தன்னில்
வெள்ளநீர் தளும்ப, வெள்ள
      மேலெலாம் முகங்கள், கண்கள்;
எள்ளுப்பூ நாசி, கைகள்
      எழிலொடு மிதக்கப் பெண்கள்
தெள்ளுநீ ராடு கின்றார்!
      சிரிக்கின்றார், கூவு கின்றார்!

பச்சிலைப் பொய்கை யான
      நீலவான் பரப்பில் தோன்றும்
கச்சித முகங்க ளென்னும்
      கறையிலா நிலாக்கூட் டத்தை
அச்சம யம்கி ழக்குச்
      சூரியன் அறிந்து நாணி
உச்சி ஏறாது நின்றே
      ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்!

படிகத்துப் பதுமை போன்றாள்
      நீந்துவாள் ஒருத்தி! பாங்காய்
வடிகட்டும் அமுதப் பாட்டை
      வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்!
கடிமலர் மீது மற்றோர்
      கைம்மலர் வைத்துக் கிள்ளி
மடிசேர்ப்பாள் மற்றொ ருத்தி!
      வரும்மூழ்கும் ஓர்பொன் மேனி!

புனலினை இறைப்பார்! ஆங்கே
      பொத்தென்று குதிப்பார் நீரில்!
"எனைப்பிடி" என்று மூழ்கி
      இன்னொரு புறம்போய் நிற்பார்!
புனைஉடை அவிழ்த்துப் பொய்கைப்
      புனலினை மறைப்பார் பூத்த
இனமலர் அழகு கண்டே
      'இச்' சென்று முத்தம் ஈவார்.

மணிப்புனல் பொய்கை தன்னில்
      மங்கைமார் கண்ணும், வாயும்
அணிமூக்கும், கையும் ஆன
      அழகிய மலரின் காடும்,
மணமலர்க் காடும் கூடி
      மகிச்சியை விளைத்தல் கண்டோம்!
அணங்குகள் மலர்கள் என்ற
      பேதத்தை அங்கே காணோம்!

பொய்கையில் மூழ்கிச் செப்பில்
      புதுப்புனல் ஏந்திக் காந்த
மெய்யினில் ஈர ஆடை
      விரித்துப்பொன் மணி இழைகள்
வெய்யிலை எதிர்க்கப் பெண்கள்
      இருவர் மூவர்கள் வீதம்
கைவீசி மீள லுற்றார்
      கனிவீசும் சாலை மார்க்கம்!

உள்ளுறைக்குத் திரும்ப

3. பூங்கோதை - பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு!
     பொன்முடியோ எதிர்பாரா விதமாய்முத்து
வாங்கப்போ கின்றான்அவ் வழியாய்!வஞ்சி
      வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்;அன்னோன்
பூங்கோதை யாஎன்று சந்தேகித்தான்!
      போனவரு ஷம்வரைக்கும் இரண்டுபேரும்
வங்காத பண்டமில்லை; உண்ணும்போது
     மனம்வேறு பட்டதில்லை. என்னஆட்டம்!

அத்தானென் றழைக்காத நேரமுண்டா!
      அத்தைமக ளைப்பிரிவா னாஅப்பிள்ளை!
இத்தனையும் இருகுடும்பம் பகையில்மூழ்கி
      இருந்ததனை அவன்நினைத்தான்! அவள்நினைத்தாள்!
தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன்இன்பத்
      தோளான மணிக்கிளையும் நெருங்கமேலும்
அத்தாணி மண்டபத்து மார்பன்அண்டை
      அழகியபட் டத்தரசி நெருங்கலானாள்!

"என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால்
     என்னவிதம் நடப்ப"தென யோசிப்பாள்பெண்;
ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தேஅன்னோன்
      ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்துகொள்வாள்!
சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்!
     திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக்கொள்வாள்!
"இன்னவர்தாம் என்அத்தான்" என்றேஅந்த
      எழிற்புனிதை யிடம்விரல்சுட் டாதுசொன்னாள்!

பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள
      புதுமையெலாம் காண்பவன்போல் பூங்கோதைதன்
இன்பமுகம் தனைச்சுவைப்பான் கீழ்க்கண்ணாலே,
     'இப்படியா' என்றுபெரு மூச்செறிந்தே,
"என்பெற்றோர் இவள்பெற்றோர் உறவுநீங்கி
      இருப்பதனால் இவளென்னை வெறுப்பாளோ?நான்
முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ
     முடியாதோ" என்றுபல எண்ணிநைவான்.

எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்;
      இருமுகமும் வரிவடிவு கலங்கிப்பின்னர்
முதல்இருந்த நிலைக்குவர இதழ்சிலிர்க்க,
      முல்லைதனைக் காட்டிஉடன் மூடிமிக்க
அதிகரித்த ஒளிவந்து முகம்அளாவ
     அடிமூச்சுக் குரலாலே ஒரேநேரத்தில்
அதிசயத்தைக் காதலொடு கலந்தபாங்கில்
      "அத்தான்","பூங் கோதை"என்றார்! நின்றார்அங்கே.

வையம் சிலிர்த்தது.நற் புனிதையேக,
      மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச்சென்று
`கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல்
     கடிதுவைத்தாள்; "அத்தான்நீர் மறந்தீர்என்று
மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன்
      வெடுக்கென்று தான்அனைத்தான். "விடாதீர்"என்றாள்!
கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில்
     கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான்முத்தம்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும்உள்ள
      உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம்ஏறக்
கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
      கடையுகமட் டும்பொருந்திக் கிடப்பதென்று
நிச்சயித்த மறுகணத்தில் பிரியநேர்ந்த
     நிலைநினைத்தார்; "அத்தான்"என் றழுதாள்!அன்னோன்,
"வைச்சேன்உன் மேலுயிரைச் சுமந்துபோவாய்!
      வரும்என்றன் தேகம்.இனிப் பிரியா"தென்றான்!

"நீர்மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார்;
     நினைப்பாக நாளைவா" என்றுசொன்னான்.
காரிகையாள் போகலுற்றாள்; குடத்தைத்தூக்கிக்
      காலடிஒன் றெடுத்துவைப்பாள்; திரும்பிப்பார்ப்பாள்!
ஓரவிழி சிவப்படைய அன்னோன்பெண்ணின்
     ஒய்யார நடையினிலே சொக்கிநிற்பான்!
"தூரம்"எனும் ஒருபாவி இடையில்வந்தான்
      துடித்ததவர் இருநெஞ்சும்! இதுதான்லோகம்!

உள்ளுறைக்குத் திரும்ப

4. அவன் உள்ளம்

அன்று நடுப்பகல் உணவை அருந்தப்
பொன்முடி மறந்து போனான்! மாலையில்

கடைமேல் இருந்தான்; கணக்கு வரைதல்
இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல்

வணிகர் கொண்டு வந்த முத்தைக்
குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல்

பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து
வரின்அதைக் கருத்தோடு வாங்க முயலுதல்

ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய்
மோனத் திருந்தோன் முடிவு செய்து

மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி
வந்தான் வீடு! வந்தான் தந்தை!

தெருவின் திண்ணையிற் குந்தி
இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே!

"விற்று முதல்என்ன? விலைக்குவந்த முத்திலே
குற்றமில் லையே?நீ கணக்குக் குறித்தாயா?"

என்று வினவினான் தந்தை. இனியமகன்,
"ஒன்றும்நான் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்கவில்லை;

அந்தி வியாபாரம் அதுஎன்ன மோமிகவும்
மந்தமாயிற்" றென்றான். மானநாய்க்கன் வருந்திக்

"காலையிலே நீபோய்க் கடையைத்திற! நானவ்
வேலனிடம் செல்கின்றேன்" என்று விளம்பினான்.

"நான்போய் வருகின்றேன் அப்பா நடைச்சிரமம்
ஏன்தங்கட்" கென்றான் இனிதாகப் பொன்முடியான்.

"இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்;நான்
சென்றால் நலமன்றோ" என்றுறைத்தான் சீமான்.

"தயவுசெய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்;
வெயிலுக்கு முன்நான்போய் வீடுவருவேன்" என்றான்.

"வேலன்முத் துக்கொடுக்க வேண்டும்; அதுவன்றிச்
சோலையப்பன் என்னைவரச் சொல்லி யிருக்கின்றான்;

ஆதலினால் நான்நாளை போவ தவசியம்.நீ
ஏதும் தடுக்காதே" என்றுமுடித் தான்தந்தை.

ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை!
அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்!

அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்;
நச்சுண்ணச் சென்றான் நலிந்து.

உள்ளுறைக்குத் திரும்ப

5. பண்டாரத் தூது

பகலவன் உதிப்ப தன்முன்
      பண்டாரம் பூக்கொ ணர்ந்தான்.
புகலுவான் அவனி டத்தில்
      பொன்முடி: "ஐயா, நீவிர்
சகலர்க்கும் வீடு வீடாய்ப்
      பூக்கட்டித் தருகின் றீர்கள்
மகரவீ தியிலே உள்ள
      மறைநாய்கன் வீடும் உண்டோ?

மறைநாய்கன் பெற்ற பெண்ணாள்,
      மயில்போலும் சாயல் கொண்டாள்.
நிறைமதி முகத்தாள்; கண்கள்
      நீலம்போல் பூத்தி ருக்கும்;
பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
      பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்;
அறையுமவ் வணங்கை நீவிர்
      அறிவீரா? அறிவீ ராயின்

சேதியொன் றுரைப்பேன்; யார்க்கும்
     தெரியாமல் அதனை அந்தக்
கோதைபால் நீவிர் சென்று
     கூறிட ஒப்பு வீரா?
காதைஎன் முகத்தில் சாய்ப்பீர்!
     கையினில் வராகன் பத்துப்
போதுமா?" என்று மெல்லப்
     பொன்முடி புலம்பிக் கேட்டான்.

"உன்மாமன் மறைநாய் கன்தான்
     அவன்மகள் ஒருத்தி உண்டு;
தென்னம் பாலை பிளந்து
     சிந்திடும் சிரிப்புக் காரி!
இன்னும்கேள் அடையா ளத்தை;
     இடைவஞ்சிக் கொடிபோல் அச்சம்
நன்றாகத் தெரியும்! நானும்
     பூஅளிப் பதும்உண்" டென்றான்.

"அப்பாவும் மாம னாரும்
     பூனையும் எலியும் ஆவார்;
அப்பெண்ணும் நானும் மெய்யாய்
     ஆவியும் உடலும் ஆனோம்!
செப்பேந்தி அவள் துறைக்குச்
     செல்லுங்கால் சென்று காண
ஒப்பினேன்! கடைக்குப் போக
     உத்திர விட்டார் தந்தை.

இமைநோக என்னை நோக்கி
     இருப்பாள்கண் திருப்ப மாட்டாள்;
சுமைக்குடம் தூக்கி அந்தச்
     சுடர்க்கொடி காத்தி ருந்தால்
'நமக்கென்ன என்றி ருத்தல்
     ஞாயமா?' நீவிர் சென்றே
அமைவில்என் அசந்தர்ப் பத்தை
     அவளிடம் நன்றாய்ச் சொல்லி

சந்திக்க வேறு நேரம்
     தயவுசெய் துரைக்கக் கேட்டு
வந்திட்டால் போதும் என்னைக்
     கடையிலே வந்து பாரும்.
சிந்தையில் தெரிவாள்; கையால்
     தீண்டுங்கால் உருவம் மாறி
அந்தரம் மறைவாள்; கூவி
     அழும்போதும் அதையே செய்வாள்.

வையத்தில் ஆண்டு நூறு
     வாழநான் எண்ணி னாலும்
தையலை இராத்தி ரிக்குள்
     சந்திக்க வில்லை யானால்,
மெய்யெங்கே? உயிர்தா னெங்கே?
     வெடுக்கென்று பிரிந்து போகும்.
`உய்யவா? ஒழிய வா?'என்
     றுசாவியே வருவீர்" என்றான்.

பண்டாரம் ஒப்பிச் சென்றான்.
     பொன்முடி பரிவாய்ப் பின்னும்
கண்டபூங் கோதை யென்னும்
     கவிதையே நினைப்பாய், அன்னாள்
தண்டைக்கால் நடை நினைத்துத்
      தான்அது போல் நடந்தும்,
ஒண்டொடி சிரிப்பை எண்ணி
     உதடுபூத் தும்கி டப்பான்.

வலியஅங் கணைத்த தெண்ணி
     மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால்
ஒலிகடல் நீலப் பெட்டி
     உடைத்தெழுந் தது கதிர்தான்!
பலபல என விடிந்த
     படியினால் வழக்க மாகப்
புலம்நோக்கிப் பசுக்கள் போகப்
     பொன்முடி கடைக்குப் போனான்.

உள்ளுறைக்குத் திரும்ப

6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!

நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல்
ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் - சோலைஉதிர்

பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்இரு
சீவன்கள் மட்டும் திறந்தவிழி - ஆவலினால்

மூடா திருந்தனவாம். முன்னறையில் பொன்முடியான்
ஆடா தெழுந்தான் அவள்நினைப்பால் - ஓடைக்குள்

காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்உணர்வால்
ஏலா இருளில் வழிதடவி - மேல்ஏகி

வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட
காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல் - பேட்டை

அகன்றுபோய் அன்னவளின் வீட்டினது தோட்டம்
புகும்வாசல் என்று புகுந்தான் - புகும்தருணம்

வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்
ஆணழகன் என்றெண்ணி "அத்தான்" என்றாள் நங்கை!

ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத்
தாங்கா மகிச்சியுடன் தான்பிடித்துப் - பூங்கொடியை

மாரோ டணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில்
வேரோடு முத்தம் பறித்தான்!அந் - நேரத்தில்

பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன்
பொன்முடியை மங்கை புலன்துடிக்க - அன்பில்லா

ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில்
போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை - நீட்டு

மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில்
நிலாமுகத்தை ஒற்றி நிமிர்ந்து - கலாபமயில்

"அப்பா அடிக்காதீர்" என்றழுதாள். அவ்வமுதம்
ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான். - அப்போது

வந்துநின்ற தாயான வஞ்சி வடிவென்பாள்
சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் - சுந்தரியோ

அன்னையின் கைவிலக்கி ஆணழகிடம் சேர்ந்தே
"என்னை அடியுங்கள்" என்றுரைத்துச் - சின்னவிழி

முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைநடுங்க
வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின்

பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள்.
பின்னுமவன் கோபம் பெரிதாகி - அன்னார்

இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே
ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித் - திருவனைய

செல்விதனை வீட்டிற் செலுத்தி மறைநாய்கன்
இல்லத்துட் சென்றான். இவன்செயலை - வல்லிருளும்

கண்டு சிரித்ததுபோல் காலை அரும்பிற்று.
"வண்டு விழிநீர் வடித்தாளே! - அண்டையில்என்

துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ!
இன்ப உடலில்அடி யேற்றாளே! - அன்புள்ள

காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ?
மாது புவிவெறுத்து மாய்வாளோ - தீதெல்லாம்

என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ?"
என்றுதன் துன்பத்தை எண்ணாமல் - அன்னாள்

நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான்
உலராத காயங்க ளோடு.

உள்ளுறைக்குத் திரும்ப

7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை

பண்டாரம் இரண்டு நாளாய்ப்
      பூங்கோதை தன்னைப் பார்க்கத்
திண்டாடிப் போனான். அந்தச்
      செல்வியும் அவ்வா றேயாம்!
வண்டான விழியால் அன்னாள்
      சன்னலின் வழியாய்ப் பார்த்துக்
கொண்டிருந் தாள்.பண் டாரம்
      குறட்டினிற் போதல் பார்த்தாள்.

இருமினாள் திரும்பிப் பார்த்தான்.
     தெருச்சன்னல் உள்ளி ருந்தே
ஒருசெந்தா மரை இதழ்தான்
     தென்றலால் உதறல் போல
வருகஎன் றழைத்த கையை
     மங்கைகை என்ற றிந்தான்.
"பொருளைநீர் கொள்க இந்தத்
     திருமுகம் புனிதர்க்" கென்றே

பகர்ந்தனள்; போவீர் போவீர்
     எனச்சொல்லிப் பறந்தாள். அன்னோன்
மிகுந்தசந் தோஷத் தோடு
     "மெல்லியே என்ன சேதி?
புகலுவாய்" என்று கேட்டான்.
     "புகலுவ தொன்று மில்லை
அகன்றுபோ வீர்; எனக்கே
     பாதுகாப் பதிகம்" என்றாள்.

"சரிசரி ஒன்றே ஒன்று
     தாய்தந்தை மார்உன் மீது
பரிவுடன் இருக்கின் றாரா?
     பகையென்றே நினைக்கின் றாரா?
தெரியச்சொல்" என்றான். அன்னாள்
     "சீக்கிரம் போவீர்" என்றாள்.
"வரும்படி சொல்ல வாஉன்
     மச்சானை" என்று கேட்டான்.

"விவரமாய் எழுதி யுள்ளேன்
     விரைவினிற் போவீர்" என்றாள்.
"அவரங்கே இல்லா விட்டால்
     ஆரிடம் கொடுப்ப" தென்றான்.
"தவறாமல் அவரைத் தேடித்
     தருவதுன் கடமை" என்றாள்.
"கவலையே உனக்கு வேண்டாம்
     நான்உனைக் காப்பேன். மேலும்...

என்றின்னும் தொடர்ந்தான். மங்கை
      "என்அன்னை வருவாள் ஐயா
முன்னர்நீர் போதல் வேண்டும்"
      என்றுதன் முகம் சுருக்கிப்
பின்புறம் திரும்பிப் பார்த்துப்
     பேதையும் நடுங்க லுற்றாள்.
"கன்னத்தில் என்ன" என்றான்.
     "காயம்" என்றுரைத்தாள் மங்கை.

"தக்கதோர் மருந்துண்" டென்றான்.
      "சரிசரி போவீர்" என்றாள்.
அக்கணம் திரும்பி னாள்;பின்
      விரல்நொடித் தவளைக் கூவிப்
"பக்குவ மாய்ந டக்க
     வேண்டும்நீ" என்றான். பாவை
திக்கென்று தீப்பி டித்த
     முகங்காட்டச் சென்றொ ழிந்தான்.

உள்ளுறைக்குத் திரும்ப

8. அவள் எழுதிய திருமுகம்

பொன்முடி கடையிற் குந்திப்
      புறத்தொழில் ஒன்று மின்றித்
தன்மனத் துட்பு றத்தில்
      தகதக எனஒ ளிக்கும்
மின்னலின் கொடிநி கர்த்த
     விசித்திரப் பூங்கோ தைபால்
ஒன்றுபட் டிருந்தான் கண்ணில்
     ஒளியுண்டு; பார்வை யில்லை.

கணக்கர்கள் அங்கோர் பக்கம்
     கடை வேலை பார்த்திருந்தார்.
பணம்பெற்ற சந்தோ ஷத்தால்
     பண்டாரம் விரைந்து வந்தே
மணிக்கொடி இடையாள் தந்த
     திருமுகம் தந்தான். வாங்கித்
தணலிலே நின்றி ருப்போர்
     தண்ணீரில் தாவு தல்போல்

எழுத்தினை விழிகள் தாவ
     இதயத்தால் வாசிக் கின்றான்.
"பழத்தோட்டம் அங்கே; தீராப்
     பசிகாரி இவ்வி டத்தில்!
அழத்துக்கம் வரும் படிக்கே
     புன்னையில் உம்மைக் கட்டிப்
புழுதுடி துடிப்ப தைப்போல்
     துடித்திடப் புடைத்தார் அந்தோ!

புன்னையைப் பார்க்குந் தோறும்
     புலனெலாம் துடிக்க லானேன்;
அன்னையை, வீட்டி லுள்ள
     ஆட்களை, அழைத்துத் தந்தை
என்னையே காவல் காக்க
     ஏற்பாடு செய்து விட்டார்.
என்அறை தெருப்பக் கத்தில்
     இருப்பது; நானோர் கைதி!

அத்தான்!என் ஆவி உங்கள்
     அடைக்கலம்! நீர்ம றந்தால்
செத்தேன்! இ௬துண்மை. இந்தச்
     செகத்தினில் உம்மை அல்லால்
சத்தான பொருளைக் காணேன்!
     சாத்திரம் கூறு கின்ற
பத்தான திசை பரந்த
      பரம்பொருள் உயர்வென் கின்றார்.

அப்பொருள் உயிர்க் குலத்தின்
     பேரின்பம் ஆவ தென்று
செப்புவார் பெரியார் யாரும்
     தினந்தோறும் கேட்கின் றோமே.
அப்பெரி யோர்க ளெல்லாம்
     - வெட்கமாய் இருக்கு தத்தான் -
கைப்பிடித் தணைக்கும் முத்தம்
     ஒன்றேனும் காணார் போலும்!

கனவொன்று கண்டேன் இன்று
     காமாட்சி கோயி லுக்குள்
எனதன்னை, தந்தை, நான்இம்
     மூவரும் எல்லா ரோடும்
`தொணதொண' என்று பாடித்
     துதிசெய்து நிற்கும் போதில்
எனதுபின் புறத்தில் நீங்கள்
     இருந்தீர்கள் என்ன விந்தை!

காய்ச்சிய இரும்பா யிற்றுக்
     காதலால் எனது தேகம்!
பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல்
     தந்தையார் பார்க்கும் பார்வை!
கூச்சலும் கிளம்ப, மேன்மேல்
     கும்பலும் சாய்ந்த தாலே
ஓச்சாமல் உம்தோள் என்மேல்
     உராய்ந்தது; சிலிர்த்துப் போனேன்!

பார்த்தீரா நமது தூதாம்
     பண்டாரம் முக அமைப்பை;
போர்த்துள்ள துணியைக் கொண்டு
     முக்காடு போட்டு மேலே
ஓர்துண்டால் கட்டி மார்பில்
     சிவலிங்கம் ஊச லாட
நேரினில் விடியு முன்னர்
     நெடுங்கையில் குடலை தொங்க

வருகின்றார்; முகத்தில் தாடி
     வாய்ப்பினைக் கவனித் தீரா?
பரிவுடன் நீரும் அந்தப்
     பண்டார வேஷம் போடக்
கருதுவீ ராஎன் அத்தான்?
     கண்ணெதிர் உம்மைக் காணும்
தருணத்தைக் கோரி என்றன்
     சன்னலில் இருக்கவா நான்?

அன்னையும் தந்தை யாரும்
     அறையினில் நம்மைப் பற்றி
இன்னமும் கட்சி பேசி
     இருக்கின்றார்; உம்மை அன்று
புன்னையில் கட்டிச் செய்த
     புண்ணிய காரி யத்தை
உன்னத மென்று பேசி
     உவக்கின்றார் வெட்க மின்றி.

குளிர்புனல் ஓடையே, நான்
     கொதிக்கின்றேன் இவ்வி டத்தில்.
வௌியினில் வருவ தில்லை;
     வீட்டினில் கூட்டுக் குள்ளே
கிளியெனப் போட்ட டைத்தார்
     கெடுநினைப் புடைய பெற்றோர்.
எளியவள் வணக்கம் ஏற்பீர்.
     இப்படிக் குப்பூங் கோதை."

உள்ளுறைக்குத் திரும்ப

9. நுணுக்கமறியாச் சணப்பன்

பொன்முடி படித்த பின்னர்
      புன்சிரிப் போடு சொல்வான்:
"இன்றைக்கே இப்போ தேஓர்
      பொய்த்தாடி எனக்கு வேண்டும்;
அன்னத னோடு மீசை
     அசல்உமக் குள்ள தைப்போல்
முன்னேநீர் கொண்டு வாரும்
     முடிவுசொல் வேன்பின்" என்றான்.

கணக்கர்கள் அவன் சமீபம்
      கைகட்டி ஏதோ கேட்க
வணக்கமாய் நின்றி ருந்தார்;
     வணிகர்சேய் கணக்கர்க் கஞ்சிச்
சணப்பன்பண் டாரத் தின்பால்
     சங்கதி பேச வில்லை.
நுணுக்கத்தை அறியா ஆண்டி
     பொன்முடி தன்னை நோக்கி,

"அவள்ஒரு வெள்ளை நூல்போல்
     ஆய்விட்டாள்" என்று சொன்னான்.
"அவுஷதம் கொடுக்க வேண்டும்
      அடக்" கென்றான் செம்மல்! பின்னும்
"கவலைதான் அவள்நோய்" என்று
      பண்டாரம் கட்ட விழ்த்தான்.
"கவடில்லை உன்தாய்க்" கென்று
      கவசம்செய் ததனை மூடிக்

"கணக்கரே ஏன்நிற் கின்றீர்?
      பின்வந்து காண்பீர்" என்றான்.
கணக்கரும் போக லானார்;
      கண்டஅப் பண்டா ரந்தான்
"அணங்குக்கும் உனக்கும் வந்த
      தவருக்குந் தானே" என்றான்.
"குணமிலா ஊர்க் கதைகள்
      கூறாதீர்" என்று செம்மல்

பண்டாரந் தனைப் பிடித்துப்
      பரபர என இழுத்துக்
கொண்டேபோய்த் தெருவில் விட்டுக்
     "குறிப்பறி யாமல் நீவிர்
குண்டானிற் கவிழ்ந்த நீர்போல்
     கொட்டாதீர்" என்றான். மீண்டும்
பண்டாரம், கணக்கர் தம்மைப்
      பார்ப்பதாய் உள்ளே செல்ல

பொன்முடி "யாரைப் பார்க்கப்
      போகின்றீர்?" என்று கேட்டான்.
"பொன்முடி உனக்கும் அந்தப்
      பூங்கோதை தனக்கும் மெய்யாய்
ஒன்றும்சம் பந்த மில்லை
     என்றுபோய் உரைக்க எண்ணம்"
என்று பண்டாரம் சொன்னான்.
     பொன்முடி இடை மறித்தே

பண்டாரம் அறியத் தக்க
     பக்குவம் வெகுவாய்க் கூறிக்
கண்டிடப் பூங்கோ தைபால்
     காலையில் போக எண்ணங்
கொண்டிருப் பதையுங் கூறிப்
     பிறரிடம் கூறி விட்டால்
உண்டாகும் தீமை கூறி
     உணர்த்தினான் போனான் ஆண்டி.

உள்ளுறைக்குத் திரும்ப

10. விடியுமுன் துடியிடை

`சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத்
      தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி
தேவைஇல்லை போலும்!இதை நான்என் தாய்க்குச்
      செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்!
பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்கா லத்தில்
     புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம் என்ன?
ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்;
      அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்?

விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்ட மானால்
      வீதியில்நான் இந்நேரம், பண்டா ரம்போல்
வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணா ளர்தாம்
     வருகின்றா ராவென்று பார்ப்பே னன்றோ?
துடிதுடித்துப் போகின்றேன்; இரவி லெல்லாம்
      தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம்
ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்?' என்றே
      உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான்.

தலைக்கோழி கூவிற்று. முதலில் அந்தத்
     தையல்தான் அதைக்கேட்டாள்; எழுந்திருந்தாள்.
கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே
      கையோடு செம்பில்நீர் ஏந்தி ஓடி
விலக்கினாள் தாழ்தன்னை; வாசல் தன்னை
      விளக்கினாள் நீர்தெழித்து. வீதி நோக்கக்
குலைத்ததொரு நாய்அங்கே! சரிதான் அந்தக்
     கொக்குவெள்ளை மேல்வேட்டிப் பண்டா ரந்தான்

என்றுமனம் பூரித்தாள். திருவி ழாவே
      எனைமகிழ்ச்சி செய்யநீ வாவா என்று
தன்முகத்தைத் திருப்பாமால் பார்த்தி ருந்தாள்
      சணப்பனா? குணக்குன்றா? வருவ தென்று
தன்உணர்வைத் தான்கேட்டாள்! ஆளன் வந்தான்.
      தகதகெனக் குதித்தாடும் தனது காலைச்
சொன்னபடி கேள்என்றாள். பூரிப் பெல்லாம்
      துடுக்கடங்கச் செய்துவிட்டாள். "அத்தான்" என்றாள்.

"ஆம்"என்றான். நடைவீட்டை அடைந்தார்; அன்னை
     அப்போது பால்கறக்கத் தொடங்கு கின்றாள்.
தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்த தைப்போல்
      தமிழ்ச்சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை
நேமமுறச் செலுத்திநறுங் கவிச்சு வைகள்
      நெடுமூச்சுக் கொண்டமட்டும் உரிஞ்சி நின்று
மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு
     மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்.

பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான்.
      பூங்கோதை குழல்முடித்துப் புகுந்தாள் உள்ளே!
"நீமுடித்த வேலையென்ன?" என்றாள் அன்னை.
     "நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தண்ணீர் மொண்டேன்;
ஆமுடித்த முடியவிழ்த்துப் பால்கறந்தீர்;
      அதைமுடித்தீர் நீர்தௌித்து முடித்தேன். இன்னும்
ஈமுடித்த தேன்கூட்டை வடித்தல் போலே
     எனைவருத்தா தீர்!" என்றாள் அறைக்குள் சென்றாள்.

உள்ளுறைக்குத் திரும்ப

11. அறையிலிருந்து அம்பலத்தில்

"ஒருநாள் இரவில் உம்எச மானின்
அருமைப் பிள்ளை ஐயோ பாவம்
பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான்
பட்டி ருக்குமா? பட்டிருக் காதே!"
என்று கூறினான் இரிசன் என்பவன்.
"என்ன" என்றான் பொன்னன் என்பவன்.
இரிசன் என்பவன் சொல்லு கின்றான்:
"பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த
மாப்பிளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை1
சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல்
புன்னை அடியில் பூரிப்பு முத்தம்
தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான்
பிடித்துக் கட்டினார் பிள்ளையாண் டானை!
அடித்தார் மிலாரால்; அழைத்தார் என்னை
அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!"
என்றது கேட்ட பொன்னன் உடனே
சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து
மான நாய்கன் தன்னிடம்
போனான் விரைவில் புகல்வ தற்கே!

உள்ளுறைக்குத் திரும்ப

12. பெற்றோர் பெருந்துயர்

விளக்குவைத்து நாழிகைஒன் றாயிற்று மீசை
வளைத்துமே லேற்றிஅந்த மானநாய்கன் வந்தான்.

"அன்னம்"என்று கூவினான் அன்னோன் மனைவிதனை
"என்ன"என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள்.

"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்!
செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை

உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத்
தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி

வாரம் இரண்டா யினவாம் இதுஎன்ன
கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!

அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே
அச்ச மயமாக "ஐயா" எனக்கூவிப்

பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும்,
புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும்,

சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள்.
"நல்லதுநீ போபொன்னா" என்று நவின்றுபின்

மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல்
"தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை

ஏன்என் றதட்டாமல் இதுவரைக் கும்சிறந்த
வானமுதம் போல வளர்த்த அருமைமகன்

வெள்ளை உடுத்தி வௌியிலொரு வன்சென்றால்
கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்

வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா
நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு

செல்லப்பா என்று சிறக்க வளர்த்தபிள்ளை
கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா!"

என்று பலவாறு சொல்லி இருக்கையிலே,
நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல்

பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக்
கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக

"நில்லாதே போ!"என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை.
சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன்.

பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை
வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன். வேறென்ன?"

என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதைநாய்கன்.
"சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்"கென்றான்.

"பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும்
முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும்

எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்?
அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!

தாடிஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு.
மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி

நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில்.
மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப்

போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல்
ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!"

என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன்
"நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வ தைக்கேட்பாய்

என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே;
அன்னவனை நானோ அயலூருக் குப்போகச்

சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே
செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான்.

பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப்
பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்

"அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம்
சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன்.

நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர்
தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்

முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும்
ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்;

கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி
நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான்.

அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச்
சொன்னது நன்றென்றாள் துணிந்து.

உள்ளுறைக்குத் திரும்ப

13. இல்லையென்பான் தொல்லை

பொன்முடி கடையி னின்று
      வீட்டுக்குப் போகும் போது
தன்னெதிர்ப் பண்டா ரத்தைப்
      பார்த்தனன்; "தனியாய் எங்கே
சென்றனிர்" என்று கேட்டான்.
      பண்டாரம் செப்பு கின்றான்:
"உன்தந்தை யாரும் நானும்
      ஒன்றுமே பேச வில்லை.

அவளுக்கும் உனக்கு முள்ள
      அந்தரங் கத்தை யேனும்,
அவன்உன்னை மரத்தில் கட்டி
      அடித்ததை யேனும், காதற்
கவலையால் கடையை நீதான்
      கவனியா மையை யேனும்
அவர்கேள்விப் படவே இல்லை,
      அதற்கவர் அழவு மில்லை.

நாளைக்கே அயலூர்க் குன்னை
      அனுப்பிடும் நாட்ட மில்லை;
கேளப்பா தாடிச் சேதி
      கேட்கவும் இல்லை" என்றான்.
ஆளனாம் பொன்மு டிக்கோ
      சந்தேகம் அதிக ரிக்கக்
கோளனாம் பண்டா ரத்தின்
      கொடுமையை வெறுத்துச் சென்றான்.

உள்ளுறைக்குத் திரும்ப

14. எதிர்பாராப் பிரிவு

பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப்
      போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர்.
அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால்
     ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு
குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல்
      கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றான்.
மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி
      வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம்.

வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம்
     மங்கையரும் ஆடவரும் வீதி தோறும்
"இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்"
      என்றுரைத்து வாழ்த்த லுற்றார்! மாடிமீது
சுடரொன்று தோன்றிற்று. பொன்மு டிக்கோ
      துயர்ஒன்று தோன்றிற்று. கண்ணீர் சிந்த
அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால்
     "அன்பேநீ விடைகொடுப்பாய்" என்று கேட்டான்.

எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும்
      எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே!
அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும்
     அணிமுத்து வணிகரொடு கண்ட போது
விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக
      வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப்
புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப்
      புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்.

விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும்
      விழிதானா? விழியொழுகும் நீர்தா னா?பின்
இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா?
      எதுவிடை?பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும்
கடைவிழியால் மாடியிலே கனிந் திருக்கும்
     கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை
உடைந்துவிழு வாள்அழுவாள், அழுவாள் கூவி!
      "உயிரேநீர் பிரிந்தீரா" என்று சோர்வாள்!

உள்ளுறைக்குத் திரும்ப

15. அழுதிடுவாள் முழுமதியாள்

"இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே
     இப்பூதே வந்திடுவார் என்று கூறி
வெங்காதல் பட்டழியும் என்உ யிர்க்கு
      விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன்.
இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை;
      இருமூன்று மாதவழித் தூர முள்ள
செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி
      சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்ப துண்டோ?

செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும்
      சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி
எழுந்தோடும் கிள்ளைபோல் எனது டம்பில்
      இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை!
வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப
      வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக்
கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க
     கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள்.

தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று
      தள்ளாடும்; விழும்எழும்பின் னிற்கும்; சாயும்.
தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்.
      தோளசந்து தாளசந்து மாடி விட்டுப்
பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து
     படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில்
நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம்
      நாவறளக் கத்துதல்போல் பேச லுற்றார்.

வடநாடு செல்கின்றான் அந்தப் பையன்
      உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்!
நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா?
     நான்நினைக்க வில்லைஎன்று மகிழ்ச்சி கொண்டு
திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள்.
      சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய்
வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்!
      மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய் கன்தான்.

வெள்ளீயம் காய்ச்சிப்பூங் கோதை காதில்
      வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை
கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக்
      கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில்
துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார்
      துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா?
தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத்
      தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே.

உள்ளுறைக்குத் திரும்ப

16. எந்நாளோ!

பாராது சென்ற பகல்இரவு நாழிகையின்
ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத்

தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன்.
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்?

கண்டவுடன்வாரி அணைத்துக்கண் ணாட்டி யென்று
புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான்

அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ?
என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ?

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும்
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ?

என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை
இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?

ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன்
யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?"

என்று பலவா றழுதாள்.பின் அவ்விரவில்
சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள்.அப் புன்னைதனைக்

கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன்

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்

பொன்னுடம்பு நோகப் புடைக்கஅவ ரைப்பிணித்த
புன்னை இதுதான்! புடைத்துதுவும் இவ்விருள்தான்!

தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை,
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக்

கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான்
ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்!

தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ?
நோயோ உணவு?நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?

சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ!
ஏதோ அறியேன் இனி.

உள்ளுறைக்குத் திரும்ப

17. ஆசைக்கொரு பெண்

புன்னையில் அவளு டம்பு
      புதைந்தது! நினைவு சென்று
கன்னலின் சாறு போலக்
      கலந்தது செம்ம லோடு!
சின்னதோர் திருட்டு மாடு
      சென்றதால் அதைப் பிடித்துப்
பொன்னன்தான் ஓட்டி வந்தான்
      புன்னையில் கட்டப் போனான்.

கயிற்றொடு மரத்தைத் தாவும்
      பொன்னனின் கையில் தொட்டுப்
பயிலாத புதிய மேனி
      பட்டது. சட்டென் றங்கே
அயர்கின்ற நாய்கனைப் போய்
      அழைத்தனன்; நாய்கன் வந்தான்
மயில்போன்ற மகளைப் புன்னை
      மரத்தோடு மரமாய்க் கண்டான்.

"குழந்தாய்"என் றழைத்தான். வஞ்சி
      வடிவினைக் கூவி "அந்தோ
இழந்தாய்நீ உனது பெண்ணை!"
      என்றனன். வஞ்சி தானும்
முழந்தாளிட் டழுது பெண்ணின்
      முடிமுதல் அடி வரைக்கும்
பழஞ்சீவன் உண்டா என்று
      பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.

"அருமையாய்ப் பெற்றெ டுத்த
      ஆசைக்கோர் பெண்ணே!" என்றும்
அருவிநீர் கண்ணீ ராக
      அன்னையும் தந்தை யும்"பொற்
றிருவிளக் கனையாய்!" என்றும்
      செப்பியே அந்தப் புன்னைப்
பெருமரப் பட்டை போலப்
      பெண்ணினைப் பெயர்த் தெடுத்தார்.

கூடத்தில் கிடத்தி னார்கள்
     கோதையை! அவள் முகத்தில்
மூடிய விழியை நோக்கி
     மொய்த்திருந் தார்கள். அன்னாள்
வாடிய முகத்தில் கொஞ்சம்
     வடிவேறி வருதல் கண்டார்;
ஆடிற்று வாயிதழ் தான்!
     அசைந்தன கண்ணி மைகள்.

எழில்விழி திறந்தாள். "அத்தான்"
     என்றுமூச் செறிந்தாள். கண்ணீர்
ஒழுகிடப் பெற்றோர் தம்மை
     உற்றுப் பார்த்தாள்; கவிழ்ந்தாள்.
தழுவிய கைகள் நீக்கிப்
     பெற்றவர் தனியே சென்றார்.
பழமைபோல் முணு முணுத்தார்;
     படுத்தனர் உறங்கி னார்கள்.

உள்ளுறைக்குத் திரும்ப

18. பறந்தது கிள்ளை

விடியுமுன் வணிகர் பல்லோர்
      பொதிமாட்டை விரைந்தே ஓட்டி
நடந்தனர் தெருவில் காதில்
      கேட்டனள் நங்கை. நெஞ்சு
திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும்
      சில ஆடை பணம் எடுத்துத்
தொடர்ந்தனள் அழகு மேனி
      தோன்றாமல் முக்கா டிட்டே!

வடநாடு செல்லும் முத்து
      வணிகரும் காணா வண்ணம்
கடுகவே நடந்தாள். ஐந்து
      காதமும் கடந்த பின்னர்
நடைமுறை வரலா றெல்லாம்
      நங்கையாள் வணிக ருக்குத்
தடையின்றிக் கூற லானாள்
      தயைகொண்டார் வணிகர் யாரும்.

உள்ளுறைக்குத் திரும்ப

19. வடநாடு செல்லும் வணிகர்

பளிச்சென்று நிலா எரிக்கும்
      இரவினில் பயணம் போகும்
ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே
      ஒருநெஞ்சம் மகர வீதி
கிளிச்சந்த மொழியாள் மீது
      கிடந்தது. வணிக ரோடு
வௌிச்சென்ற அன்னோன் தேகம்
      வெறுந்தேகம் ஆன தன்றோ!

வட்டநன் மதியி லெல்லாம்
      அவள்முக வடிவங் காண்பான்!
கொட்டிடும் குளிரில் அப்பூங்
      கோதைமெய் இன்பங் காண்பான்!
எட்டுமோர் வானம் பாடி
      இன்னிசை தன்னி லெல்லாம்
கட்டிக்க ரும்பின் வாய்ச்சொற்
      கவிதையே கண்டு செல்வான்.

அணிமுத்து மணிசு மக்கும்
      மாடுகள் அலுத்துப் போகும்.
வணிகர்கள் அதிக தூர
      வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில்
தணியாத அவள் நினைவே
      பொன்முடி தனக்கு நீங்காப்
பிணியாயிற் றேனும் அந்தப்
      பெருவழிக் கதுதான் வண்டி!

இப்படி வடநாட் டின்கண்
      டில்லியின் இப்பு றத்தில்
முப்பது காத முள்ள
      மகோதய முனிவ னத்தில்
அப்பெரு வணிகர் யாரும்
     மாடுகள் அவிழ்த்து விட்டுச்
சிப்பங்கள் இறக்கிச் சோறு
     சமைத்திடச் சித்த மானார்.

அடுப்புக்கும் விறகினுக்கும்
     இலைக்கலம் அமைப்ப தற்கும்,
துடுப்புக்கும் அவர வர்கள்
     துரிதப்பட் டிருந்தார். மாவின்
வடுப்போன்ற விழிப்பூங் கோதை
     வடிவினை மனத்தில் தூக்கி
நடப்போன் பொன்முடிதான் அங்கோர்
      நற்குளக் கரைக்குச் சென்றான்.

ஆரியப் பெரியோர், தாடி
      அழகுசெய் முகத்தோர், யாக
காரியம் தொடங்கும் நல்ல
     கருத்தினர் ஐவர் வந்து
"சீரிய தமிழரே, ஓ!
     செந்தமிழ் நாட்டா ரேஎம்
கோரிக்கை ஒன்று கேட்பீர்"
     என்றங்கே கூவி னார்கள்.

தென்னாட்டு வணிக ரான
     செல்வர்கள் அதனைக் கேட்டே
என்னஎன் றுசாவ அங்கே
     ஒருங்கேவந் தீண்டி னார்கள்.
"அன்புள்ள தென்னாட் டாரே,
     யாகத்துக் காகக் கொஞ்சம்
பொன்தரக் கோரு கின்றோம்,
     புரிகஇத் தருமம்" என்றே.

வந்தவர் கூறக் கேட்டே
     மாத்தமிழ் வணிக ரெல்லாம்
சிந்தித்தார் பொன்மு டிக்குச்
     சேதியைத் தெரிவித் தார்கள்.
வந்தனன் அன்னோன் என்ன
     வழக்கென்று கேட்டு நின்றான்.
பந்தியாய் ஆரி யர்கள்
     பரிவுடன் உரைக்க லானார்.

"மன்னவன் செங்கோல் வாழும்,
     மனுமுறை வாழும்; யாண்டும்
மன்னிய தருமம் நான்கு
     மறைப்பாதத் தால் நடக்கும்;
இன்னல்கள் தீரும்; வானம்
     மழைபொழிந் திருக்கும்; எல்லா
நன்மையும் பெருகும்; நாங்கள்
     நடத்திடும் யாகத் தாலே.

ஆதலின் உமைக்கேட் கின்றோம்
      அணிமுத்து வணிகர் நீவீர்
ஈதலிற் சிறந்தீர் அன்றோ
     இல்லையென் றுரைக்க மாட்டீர்!
போதமார் முனிவ ரேனும்
     பொன்னின்றி இந்நி லத்தில்
யாதொன்றும் முடிவ தில்லை"
      என்றனர். இதனைக் கேட்டே

பொன்முடி உரைக்க லுற்றான்:
      "புலமையில் மிக்கீர்! நாங்கள்
தென்னாட்டார்; தமிழர்,சைவர்
      சீவனை வதைப்ப தான
இன்னல்சேர் யாகந் தன்னை
      யாம்ஒப்ப மாட்டோம் என்றால்
பொன்கொடுப் பதுவும் உண்டோ
     போவீர்கள்" என்று சொன்னான்.

காளைஇவ் வாறு கூறக்
     கனமுறு தமிழர் எல்லாம்
ஆளன்பொன் முடியின் பேச்சை
     ஆதரித் தார்கள்; தங்கள்
தோளினைத் தூக்கி அங்கை
     ஒருதனி விரலால் சுட்டிக்
"கூளங்காள்! ஒருபொன் கூடக்
     கொடுத்திடோம் வேள்விக்" கென்றார்.

கையெலாம் துடிக்க அன்னார்
      கண்சிவந் திடக்கோ பத்தீ
மெய்யெலாம் பரவ நெஞ்சு
     வெந்திடத் "தென்னாட் டார்கள்
ஐயையோ அநேக ருள்ளார்
     அங்கத்தால் சிங்கம் போன்றார்
ஐவர்நாம்" எனநி னைத்தே
     அடக்கினார் எழுந்த கோபம்.

வஞ்சத்தை எதிர்கா லத்துச்
     சூழ்ச்சியை வௌிக்காட் டாமல்
நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு
      வாயினால் நேயங் காட்டிக்
"கொஞ்சமும் வருத்த மில்லை
      கொடாததால்" என்ப தான
அஞ்சொற்கள் பேசி நல்ல
     ஆசியும் கூறிப் போனார்.

உள்ளுறைக்குத் திரும்ப

20. வணிகர் வரும்போது

முத்து வணிகர் முழுதும் விற்றுச்
சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில்

மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே
சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்.

போகும் போது பொன்கேட்ட அந்த
யாகஞ் செய்ய எண்ணு வோர்களின்

கொடுவிஷம் பூசிய கூரம்பு போன்ற
நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்!

ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப்
பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின!

தமிழர் கண்டு சந்தே கித்தனர்.
"நமது சொத்தும் நல்லுயிர் யாவும்

பறிபோகும் என்று படுகின்ற" தென்றே
அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான்.

செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்;
கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர்.

தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன!
வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர்.

தப்பிய சிற்சில தமிழர் வனத்தின்
அப்புறத் துள்ள அழகிய ஊரின்

பின்புற மாகப் பிரியும் வழியாய்ப்
பொன்முடி யோடு போய்ச்சேர்ந் தார்கள்.

சூறை யாடிய துறவிகள் அங்கே
மாறு பாட்டு மனத்தோடு நின்று

"வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்;
பைதலி வனத்தின் பக்க மாகச்

செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக்
கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனைக்

அனுப்பி வைப்போம் வருவீர்
இனிநில் லாதீர்" என்று போனாரே.

உள்ளுறைக்குத் திரும்ப

21. ஜீவமுத்தம்

வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்;
      வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று
வடதிசைநோக் கிச்சென்றாள். நெருங்க லானார்!
     வளர்புதர்கள் உயர்மரங்கள் நிறைந்த பூமி!
நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே
      நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும்
வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்!
      வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்!

பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட் டத்தைப்
      புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோ ரான
வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்;
      வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான்.
தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை
     தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற் றங்கே!
என்னஇது! என்னஇது! என்றே அன்னோன்
      இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.

"நிச்சயமாய் அவர்தாம்"என் றுரைத்தாள் மங்கை
     "நிசம்"என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல்
கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள்
      கொட்டினாள்! ஆடினாள்! ஓட லானாள்.
"பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே!
      பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று
கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான்.
     கடிதோடி னாள்அத்தான் என்ற ழைத்தே!

நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது
      நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள் ஒன்று
பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப்
     பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின்
சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்!
      தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்!
தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்
      செத்ததற்குச் செத்தாள்அத் தென்னாட் டன்னம்!

உள்ளுறைக்குத் திரும்ப

இரண்டாம் பகுதி
முறையீடு

22 தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்

திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி

சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார்

அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்!

அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத்
தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான்.

ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!
தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர்,

பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு

வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்! - வடவர்

அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம்.

வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின்
நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர்

குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

உள்ளுறைக்குத் திரும்ப

23. குருபரனுக் கருள்புரிந்தான்

கயிலாச புரத்தில் நல்ல
      சண்முகக் கவிரா யர்க்கும்
மயில்நிகர் சிவகா மிக்கும்
      வாயிலாப் பிள்ளை யாக
அயலவர் நகைக்கும் வண்ணம்
      குருபரன் அவத ரித்தான்
துயரினால் செந்தூர் எய்திக்
      கந்தனைத் துதித்தார் பெற்றோர்.

நாற்பது நாளில் வாக்கு
      நல்காயேல் எங்கள் ஆவி
தோற்பது திண்ண மென்று
      சொல்லியங் கிருக்கும் போது
வேற்படை முருகப் பிள்ளை
      குருபரன் தூங்கும் வேளை
சாற்றும்அவ் வூமை நாவிற்
      சடாட்சரம் அருளிச் சென்றான்.

உள்ளுறைக்குத் திரும்ப

24. ஊமையின் உயர் கவிதை

அம்மையே அப்பா என்று
      பெற்றோரை அவன் எழுப்பிச்
செம்மையே நடந்த தெல்லாம்
      தெரிவித்தான். சிந்தை நைந்து
கைம்மையாய் வாழ்வாள் நல்ல
      கணவனைப் பெற்ற தைப்போல்
நம்மையே மகிழ வைத்தான்
      நடமாடும் மயிலோன் என்றார்.

மைந்தனாம் குருப ரன்தான்
      மாலவன் மருகன் வாழும்
செந்தூரில் விசுவ ரூப
      தரிசனம் செய்வா னாகிக்
கந்தரின் கலிவெண் பாவாம்
      கனிச்சாறு பொழியக் கேட்ட
அந்தஊர் மக்கள் யாரும்
      அதிசயக் கடலில் வீழ்ந்தார்!

உள்ளுறைக்குத் திரும்ப

25. ஞானகுருவை நாடிச் சென்றான்

ஞானசற் குருவை நாடி
      நற்கதி பெறுவ தென்று
தானினைந் தேதன் தந்தை
      தாயார்பால் விடையும் கேட்டான்.
ஆனபெற் றோர்வ ருந்த
      அவர்துயர் ஆற்றிச் சென்றான்
கால்நிழல் போற் குமார
      கவியெனும் தம்பி யோடே.

மீனாக்ஷி யம்மன் பிள்ளைத்
      தமிழ்பாட விரைந்து தம்பி
தானதைக் குறிப் பெடுக்கத்
      தமிழ்வளர் மதுரை நாடிப்
போனார்கள்; போகும் போது
      திருமலை நாய்க்க மன்னன்
ஆனைகொண் டெதிரில் வந்தே
      குருபரன் அடியில் வீழ்ந்தான்.

உள்ளுறைக்குத் திரும்ப

26. யானைமேல் பானைத் தேன்

"என்னையும் பொருளாய் எண்ணி
      எழுதரும் அங்க யற்கண்
அன்னைஎன் கனவில் தோன்றி
      அடிகள்நும் வரவும், நீவிர்
சொன்னநற் றமிழும் பற்றிச்
      சொன்னதால் வந்தேன். யானை
தன்னில்நீர் எழுந்த ருள்க
      தமிழுடன்" என்றான் மன்னன்.

தெய்விகப் பாடல் தன்னைத்
      திருவரங் கேற்று தற்கே
எய்துமா றனைத்தும் மன்னன்
      ஏற்பாடு செய்தான். தேவர்
துய்யநற் றமிழ்ச்சா ராயம்
      துய்த்திடக் காத்தி ருந்தார்;
கையில்வாத் தியங்கள் ஏந்திக்
      கந்தர்வர் கண்ணாய் நின்றார்.

உள்ளுறைக்குத் திரும்ப

27. அவையிடைச் சிவை

அரங்கிடை அரசன் ஓர்பால்,
     அறிஞர்கள் ஓர்பால் கேட்கத்
தெரிந்தவர் கலையில் வல்லோர்
     செந்தமிழ் அன்பர் ஓர்பால்
இருந்தனர். அரிய ணைமேல்
     இருந்தனன் குருப ரன்தான்!
வரும்சனம் தமிழ ருந்த
     வட்டிக்க ஆரம் பித்தான்.

அப்போது கூட்டத் தின்கண்
     அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்
சிப்பத்தைப் பிரித் தெடுத்த
     சீனத்துப் பொம்மை போன்றாள்
ஒப்பியே ஓடி வந்தாள்
     காற்சிலம் பொலிக்க! மன்னன்
கைப்பற்றி மடியில் வைத்தான்;
     கவிதையில் அவாவை வைத்தான்.

உள்ளுறைக்குத் திரும்ப

28. தெய்வப் பாடல்

குமரகு ருபரன் பாடல்
     கூறிப்பின் பொருளும் கூறி
அமரரா தியர்வி ருப்பம்
     ஆம்படி செய்தான்; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்.
     அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமானமொன் றிருந்த தில்லை
     சாற்றுவோம் அதனைக் கேட்பீர்.

"தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
     றொடையின் பயனே! நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
      சுவையே! அகந்தைக் கிழங்கைஅகழ்ந்
தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
      கேற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
      இளமென் பிடியே! எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
      ஒருவன் திருவுள் ளத்தில்அழ
கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
      உயிரோ வியமே! மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்துமிள
      வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்றபெரு
      வாழ்வே வருக வருகவே!"

உள்ளுறைக்குத் திரும்ப

29. இறைவி மறைவு

என்றந்தப் பாடல் சொன்னான்
      குருபரன்! சிறுமி கேட்டு
நன்றுநன் றென இசைத்தாள்;
      நன்றெனத் தலை அசைத்தாள்;
இன்னொரு முறையுங் கூற
      இரந்தனள்; பிறரும் கேட்கப்
பின்னையும் குருப ரன்தான்
      தமிழ்க்கனி பிழியுங் காலை,

பாட்டுக்குப் பொருளாய் நின்ற
      பராபரச் சிறுமி நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
      கொஞ்சினாள் அரங்கு தன்னில்.
ஏட்டினின் றெழுத்தோ டோடி
      இதயத்துட் சென்ற தாலே
கூட்டத்தில் இல்லை வந்த
      குழந்தையாம் தொழும் சீமட்டி!

உள்ளுறைக்குத் திரும்ப

30. திருவடி சரணம்

முழுதுநூல் அரங்கேற் றிப்பின்
      முடிமன்னன் குதிரை யானை
பழுதிலாச் சிவிகை செம்பொன்
      காணிக்கை பலவும் வைத்துத்
தொழுதனன். குருப ரன்பின்
      துதிநூலும் நீதி நூலும்
எழுதிய அனைத்தும் தந்தே
      சின்னாட்கள் இருந்து பின்னே,

தம்பியை இல்லம் போக்கித்
      தான்சிராப் பள்ளி யோடு
செம்மைசேர் ஆனைக் காவும்
      சென்றுபின் திருவா ரூரில்
பைம்புனற் பழனத் தாரூர்
      நான்மணி மாலை பாடி
நம்மைவந் தடைந்த காலை
      நாமொரு கேள்வி கேட்டோம்.

"ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
      அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
      திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடு மானந்த
      எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
      மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."

ஆகுமித் திரு விருத்த
      அனுபவப் பயனைக் கேட்க
ஈகுவோன் கையி லொன்றும்
      இல்லாமை போல் தவித்துத்
தேகமும் நடுங்கி நின்று
      திருவடி சரணம் என்றான்
ஏகிப்பின் வருக என்றோம்
      சிதம்பரம் ஏகி உள்ளான்.

சென்றஅக் குருப ரன்தான்
      திரும்பிவந் திடுமோர் நாளும்
இன்றுதான். சிறிது நேரம்
      இருந்திடில் காணக் கூடும்.
என்றுநற் றேசி கர்தாம்
      இருநாய்கண் மாருங் கேட்க
நன்றுற மொழிந்தார். கேட்ட
      நாய்கன்மார் காத்தி ருந்தார்.

உள்ளுறைக்குத் திரும்ப

31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

புள்ளிருக் கும்வேளூர் போய்ப்
     புனைமுத்துக் குமரன் மீது
பிள்ளைநூல் பாடி மன்றில்
     பெம்மானை மும்மணிச் சொல்
தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும்
     சிதம்பரச் செய்யுட் கோவை
அம்மைக் கிரட்டை மாலை
     அருளினான் இருளொன் றில்லான்.

மூளும்அன் பாற் பண்டார
     மும்மணிக் கோவை கொண்டு
ஆளுடை ஞானா சானின்
     அடிமலர் தொழுது பாடி
நீளுறப் பரிசாய்ப் பெற்ற
     நெடுநிதி அனைத்தும் வைத்து
மீளவும் தொழும் சீடன்பால்
     விளம்புவான் ஞான மூர்த்தி.

"அப்பனே இதுகேள்! இந்த
     அரும்பொருள் அனைத்தும் கொண்டு
செப்பிடும் வடநா டேகிச்
     சிவதரு மங்கள் செய்க!
அப்பாங்கில் உள்ளா ரெல்லாம்
     அசைவர்கள், உயிர்வ தைப்போர்;
தப்பிலாச் சைவம் சார்ந்தால்
     அன்பிலே தழைத்து வாழ்வார்.

சைவநன் மடா லயங்கள்
     தாபிக்க! கோயில் காண்க!
நைவார்க்குச் சிவபி ரானின்
     நாமத்தால் உணவு நல்கும்
சைவசத் திரங்கள் காண்க!
     தடாகங்கள் பூந்தோட் டங்கள்
உய்வாக உயிரின் வேந்தன்
     உவப்புறச் செய்து மீள்க!"

என்றுதே சிகனார் சொல்லி
     இனிதாக ஆசி கூறி
நன்றொரு துறவு காட்டிக்
      காவியும் நல்கி, ஆங்கே
"இன்றொடு வட தேசந்தான்
      எம்பிரான் இருக்கை யாகித்
தென்றமிழ் நாட்டினைப் போல்
      சிறப்பெலாம் எய்த" என்றார்.

மறைநாய்கன் மான நாய்கன்
      வாய்மூடிக் காத்தி ருந்தார்.
குறைவறு பரி சனங்கள்
      கூட்டமாய்த் தொடர, அன்பால்
இறைவனாம் தேசி கன்தாள்
      இறைஞ்சிய குருப ரன்தான்
பிறைசூடி தன்னைப் பாடிப்
      பெருஞ் சிறப்போடு சென்றான்.

உள்ளுறைக்குத் திரும்ப

32. இப்போதெப்படி நாய்கன்மார்கள்?

தேசிகர் சரிதம் சொன்னார்
     செவிசாய்த்தார் நாய்கன் மார்கள்
ஆசிகள் சொல்லக் கேட்டார்
     அப்போது குருப ரன்தான்
தேசிகர் திருமுன் வந்து
     சேர்ந்ததும் பார்த்தி ருந்தார்
நேசத்தால் தேசி கர்தாம்
     நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்.

வடநாட்டை நோக்கிச் சென்ற
     வண்ணமும் பார்த்தி ருந்தார்;
உடன்சென்று வழிய னுப்ப
     ஒப்பினோர் தமையும் பார்த்தார்;
கடனாற்றத் தேசி கர்க்குக்
     கைகளும் குவித்தார்; செல்ல
விடைகேட்டார். தேசி கர்தாம்
     விடைதந்தார். எனினும் அந்தோ

அழுதிடு நாய்கன் மார்கள்
      அழுதுகொண் டேமீண் டார்கள்;
எழுதிய ஓவி யங்கள்
     கலைந்தன எனப் பதைத்தார்.
பழுதிலா எம்கு டும்பப்
     பரம்பரை `ஆல்' இன்றோடு
விழுதொடு சாய்ந்த தென்று
     விளம்பினார் உளம் பதைத்தே.
--------

எதிர்பாராத முத்தம் முற்றும்


உள்ளுறைக்குத் திரும்ப


This webpage was last revised on 8 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).