புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கவிதைகள் - இரண்டாம் தொகுதி (66 கவிதைகள்)
pAratitAcan kavitaikaL
iraNTam tokuti - 66 kavitaikaL
(in tamil script, unicode format)
Acknowledgements:
Our sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
EText input & Proof-reading: Mr.P.K. Ilango, Erode, Tamilnadu, India.
HTML and PDF versions : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.
This webpage was put online first on 26 Feb 2003.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கவிதைகள் - இரண்டாம் தொகுதி
(66 கவிதைகள் )
உள்ளுறை
திராவிட நாட்டுப்பண்
2.00 திராவிட நாட்டுப்பண் மின்பதிப்பு
சிறுகாப்பியம்
2.01 போர் மறவன் மின்பதிப்பு
2.02 ஒன்பது சுவை மின்பதிப்பு
2.03 காதல் வாழ்வு மின்பதிப்பு
இயற்கை
2.04 இயற்கைச் செல்வம் மின்பதிப்பு
2.05 அதிகாலை மின்பதிப்பு
2.06 வானம்பாடி மின்பதிப்பு
2.07 மாவலிபுரச் செலவு மின்பதிப்பு
2.08 இருசுடரும் என் வாழ்வும் மின்பதிப்பு
2.09 தென்றல் மின்பதிப்பு
காதல்
2.10 தொழுதெழுவாள் மின்பதிப்பு
2.11 சொல்லும் செயலும் மின்பதிப்பு
2.12 இருவர் ஒற்றுமை மின்பதிப்பு
2.13 பந்துபட்ட தோள் மின்பதிப்பு
2.14 தன்மான உலகு மின்பதிப்பு
2.15 மெய்யன்பு மின்பதிப்பு
2.16 பெற்றோர் இன்பம் மின்பதிப்பு
2.17 பணமும் மணமும் மின்பதிப்பு
2.18 திருமணம் மின்பதிப்பு
கருத்துரைப் பாட்டு
2.19 தலைவன் கூற்று மின்பதிப்பு
2.20 தலைவி கூற்று மின்பதிப்பு
2.21 தோழி கூற்று மின்பதிப்பு
2.22 கதவு பேசுமா? மின்பதிப்பு
பாரதி
2.23 புதுநெறி காட்டிய புலவன் மின்பதிப்பு
2.24 தேன்கவிகள் தேவை மின்பதிப்பு
2.25 பாரதி உள்ளம் மின்பதிப்பு
2.26 மகா கவி மின்பதிப்பு
2.27 செந்தமிழ் நாடு மின்பதிப்பு
2.28 திருப்பள்ளி எழுச்சி மின்பதிப்பு
2.29 நாடக விமரிசனம் மின்பதிப்பு
திராவிட நாடு
2.30 இனப்பெயர் மின்பதிப்பு
திராவிடன்
2.31 திராவிடன் கடமை மின்பதிப்பு
2.32 அது முடியாது மின்பதிப்பு
2.33 பிரிவு தீது மின்பதிப்பு
2.34 உணரவில்லை மின்பதிப்பு
2.35 உயிர் பெரிதில்லை மின்பதிப்பு
2.36 இனி எங்கள் ஆட்சி மின்பதிப்பு
2.37 தமிழனுக்கு வீழ்ச்சியில்லை மின்பதிப்பு
2.38 தமிழன் மின்பதிப்பு
2.39 பகை நடுக்கம் மின்பதிப்பு
2.40 கூவாய் கருங்குயிலே! மின்பதிப்பு
2.41 தமிழர்களின் எழுதுகோல் மின்பதிப்பு
2.42 இசைத் தமிழ் மின்பதிப்பு
2.43 சிறுத்தையே வௌியில் வா! மின்பதிப்பு
2.44 தீவாளியா? மின்பதிப்பு
2.45 பன்னீர்ச் செல்வம் மின்பதிப்பு
பன்மணித்திரள்
2.46 அறம் செய்க மின்பதிப்பு
2.47 கற்பனை உலகில் மின்பதிப்பு
2.48 குழந்தை மின்பதிப்பு
2.49 தொழில் மின்பதிப்பு
2.50 குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை மின்பதிப்பு
2.51 கடவுளுக்கு வால் உண்டு மின்பதிப்பு
2.52 மலையிலிருந்து மின்பதிப்பு
2.53 எந்த நாளும் உண்டு மின்பதிப்பு
2.54 பெண்குரங்குத் திருமணம் மின்பதிப்பு
2.55 கற்பின் சோதனை மின்பதிப்பு
2.56 தலையுண்டு! செருப்புண்டு! மின்பதிப்பு
2.57 எண்ணத்தின் தொடர்பே! மின்பதிப்பு
2.58 சங்கங்கள் மின்பதிப்பு
2.59 குடியானவன் மின்பதிப்பு
2.60 மடமை ஓவியம் மின்பதிப்பு
2.61 நாடகம் - சினிமா நிலை மின்பதிப்பு
2.62 படத்தொழிற் பயன் மின்பதிப்பு
2.63 வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் மின்பதிப்பு
2.64 இசைபெறு திருக்குறள் மின்பதிப்பு
2.65 வாழ்வு மின்பதிப்பு
2.66 கொட்டு முரசே! மின்பதிப்பு
-------------
கவிஞர் பாரதிதாசன்
புரட்சிக் கவிதைகள் - இரண்டாம் தொகுதி
2.0 திராவிட நாட்டுப்பண்
இசை -- மோகனம் தாளம் -- ஆதி
வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்கவே!
சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
வாழ்க வாழ்கவே...
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
வாழ்க வாழ்கவே...
அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...
அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு.
வாழ்க வாழ்கவே...
அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.
வாழ்க வாழ்கவே...
ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
வாழ்க வாழ்கவே...
புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.
வாழ்க வாழ்கவே...
திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 2 சிறுகாப்பியம்
2.1 போர் மறவன்
1
(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)
தலைவி
என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்
குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும்
உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!
எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!
வான நிலவும், வண்புனல், தென்றலும்
ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக்
கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே!
புளித்தது பாலும்! பூநெடி நாற்றம்!
(காதலன் வரும் காலடி ஓசையிற்
காதைச் செலுத்துகிறாள்.)
காலடி ஓசை காதில் விழுந்தது.
நீளவாள் அரை சுமந்த கண்
ணாளன் வருகின் றான்இல்லை அட்டியே!
2
(தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.)
தலைவன்
வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்!
சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை
கிளம்பிற்று! முரசொலி கேள்நீ! விடைகொடு!
(தலைவி திடுக்கிடுகிறாள். அவள்
முகம் துன்பத்தில் தோய்கிறது.)
தலைவி
மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்!
ஒன்றும் என்வாய் உரையாது காண்க!
தலைவன்
பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்!
ஆண்டகை என்கடன் என்ன அன்னமே?
நாடு தானே நம்மைப் பெற்றது?
நாமே தாமே நாட்டைக் காப்பவர்?
உடலும் பொருளும் உயிரும் ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த
அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி
நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ?
வென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!
தலைவி
பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை
நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது!
வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.
(தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் பிரியா
உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)
3
(பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப் படுகின்றான்; வாளை உருவுகின்றான்.
தலைவனும் வாளை உருவுகின்றான்.)
தலைவன்
பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்!
என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச்
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுநின் வல்லமை காட்டுக.
(இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.)
4
(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்.)
தலைவன்
ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.)
என்னை நோக்கி என்றன் அருமைக்
கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச்
சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள்.
என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்?
(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக்
காணுகின்றான்.)
பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்!
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில்
உலவாது மேனி, உரையாது செவ்வாய்,
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக:
பெருமையை உனது அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக்
குயிரைப் படைத்தான். உடலைப் படைத்தான்.
என்று கூறி ஏகுக மறந்திடேல்!
(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)
பாண்டி மாநாடே, பாவையே!
வேண்டினேன் உம்பால் மீளா விடையே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 2 ஒன்பது சுவை
1. உவகை
(இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச்
சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள்.
அவன் வருகின்றான்.)
காதலன்
என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி!
(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)
காதலன்
வா பறந்து! வாவா மயிலே!
(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)
காதலன்
வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர்
குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.)
2. வியப்பு
(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி)
காதலன்
வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும்,
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்.)
காதலன்
சோம்பிக் கிடந்த தோகை மாமயில்
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.)
3. இழிப்பு
காதலன்
குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;
இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்?
உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.
காலடி ஓசை காட்டாது மெல்லஅக்
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக் குரியாய் உணர்க!
(தம்மை நோக்கி வரும் அத்தீயனை
இருவரும் பார்க்கிறார்கள்.)
4. வெகுளி (கோபம்)
காதலன்
வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்!
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!
(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன்
உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன்
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான். காதலி காணுகின்றாள்.)
5. நகை
காதலன்
நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன்
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
காதலன்
ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)
6. மறம் (வீரம்)
காதலன்
என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)
காதலன்
எவனோ உறையினின் றுருவினான் வாளை;
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்முடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!
(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை
உற்று நோக்கியிருக்கிறாள்.)
காதலன்
(தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)
அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?
முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது
இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்!
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்.
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்!
(வாட்போர் நடக்கிறது.)
காதலன்
மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின்பெயர் வாழி!
(வந்தவன் இறந்து படுகிறான்.)
7. அச்சம்
(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)
8. அவலம்
(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.)
காதலன்
ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள்.
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அன்பே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை?
எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்!
தனித்தேன், உய்விலை. தையலே, தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!
9. அறநிலை
கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொலோ என்ன இருத்தல் கூடும்?
வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின்
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.3. காதல் வாழ்வு
ஒன்று
மணம் முடிந்தது.
தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு
கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக்
காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை.
இரண்டு
ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து
பேசலுற்றார்கள்.
"மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும்
தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின்
துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய
சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா
அத்தான்."
"ஆம்! குறைவற்ற தனிமை!"
பறந்தார்கள்.
மூன்று
"நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்."
"நான் மட்டுமா?"
அதிர்ந்தது அவள் உள்ளம்!
இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல்
குடிசையில் நுழைந்தன.
"விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?"
"மன்னிக்க வேண்டும்!"
குடிசை சாத்தப் பட்டது.
நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும்
இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே
ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி
யன்று!
நான்கு
"தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும்
பார், நம்மைப்போல!"
"இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில்
குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது."
வானில் ஓர் ஒலி!
"வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை
உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!"
"நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!"
நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும்.
ஐந்து
"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில்
அள்ளி நுகர்வன இன்பத்தை!"
"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம்
மீன்களல்லவே!"
கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்!
பிற்பகுதியும் கேள்."
"நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி
விட்டது!"
மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல்
நீராடின.
ஆறு
"கரையேறுங்கள் என்னோடு."
"மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும்
உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?"
"தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி,
இதற்கு நனைந்த ஆடை காரணம்."
"அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்."
குடிசையில் மறைந்தார்கள் ஓடி!
ஏழு
"அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா."
"ஏன்?"
"கப்பல் வந்திருக்கிறது."
"மெல்லப் பேசு!"
"என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு
விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!"
"என்ன சொன்னார் அப்பா?"
"அனுப்ப வேண்டுமாம் உம்மை."
"சிங்கைக்கா?"
"ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த
உடலின் ஓசை!"
"நாலு நாட்கள் நீடிக்கலாமா?"
"இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?"
"நீ போ! இதோ வருகின்றேன்."
எட்டு br>"தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை
ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!"
"இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப்
பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்."
"கடமை என் வாயை அடைக்கிறது."
"என் மடமை கிடந்து துடிக்கிறது."
"மடமை அல்ல; உயிரின் இயற்கை."
" `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்'
என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது;
உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை."
ஒன்பது
"தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்."
"நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?"
"என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால்
அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று."
"எவ்வளவு நேரம்?"
"நேரமா?"
"எத்தனை நாள்?"
"நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்."
"கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக்
கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள்
உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன்
வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்."
"என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்."
பத்து
(நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.")
கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்."
"கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?"
"இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல்
குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க
முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்."
"இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை.
தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்."
"பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு
கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன்.
இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில்
கலக்கிறேன்."
சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு
மாகிறார்கள்.
"அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்."
"தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும்
உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!"
வாழ்க, காதல் வாழ்வு!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
இயற்கை
2. 4. இயற்கைச் செல்வம்
விரிந்த வானே, வௌியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!
அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச்செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!
எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.5. அதிகாலை
அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஒளி...
இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஒளி...
தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஒளி...
பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி
அமைதியில் ஒளி...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 6. வானம்பாடி
வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,
நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.
உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!
அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.7. மாவலிபுரச் செலவு
(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம்
கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம்
நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது.
எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறுபற்றி ஒருவன் இழுத்துச்
சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும்
இரங்கத்தக்க காட்சி.அதையும் அங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில
காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு. 1934)
சென்னையிலே ஒரு வாய்க்கால் - புதுச்
சேரி நகர்வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.
தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்.
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே நாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும் ஒளி வானம்.
சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்.
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்.
மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்கம் இருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவௌி யெல்லாம் - இருள்
போர்த்தது! போனது தோணி.
வெட்ட வௌியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை
கலகல வென்று கொட்டிற்றே.
எட்டியமட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வௌிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக் குளிர்மதி எங்கே - என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.
முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாகஎம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திரும்பிப் பார்த்திட்ட போது.
தோணிக் கயிற்றினை ஓர்ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின் புறத்தில்.
இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும் துணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருபது தரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.
நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந்தாள் உயர் விண்ணாள்.
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத் திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலி புரக்கரை சேர்ந்தோம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.8. இருசுடரும் என் வாழ்வும்
காலை
ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நௌியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!
துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தௌியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!
மாலை
மறையக் கண்டேன் கதிர்தான் - போய்
மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
நினைவிற் கண்டேன் புதுமை!
குறையக் கண்டேன் வெப்பம் - எனைக்
கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
ஓங்கக் கண்டேன் வாழ்வே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.9. தென்றல்
பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம் சுவைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி,
அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்
அங்கிருந்த விசுப்பலகை தனிற் படுத்தேன்.
பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம்
பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன்.
வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்த துணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் `தனிமை', `அந்தி'
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
மணம் இவற்றைப் பருகுவதே நினைவாயிற்று.
தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்;
சரியாத குழல்சரிய லானாள் போலும்;
தடவினாள் போலும்;எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி;மற் றொருத்தி தென்றல்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
காதல்
2. 10. தொழுதெழுவாள்
உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி,
மண்டிடும் காதற் கண்ணான்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன்என் மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்.
அறைவாயி லுட்பு குந்தேன்
அத்தான்தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனிஇதழ் நெடிது றிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக் கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்ச ணைமேல்
நலியா துட்கார வைத்தான்.
கமழ் தேய்வு* பூசி வேண்டிக்
கனியோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடை யால்து டைத்தே
தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,
* தேய்வு -- சந்தனம்
தென்றலும் போதா தென்று
சிவிறி*கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப் பொழுதாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி.
* சிவிறி -- விசிறி
கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்;
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால் துடைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி!
மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றார்க்கு
மறம்*குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மழைகுன்ற நேரும் அன்றோ?
* மறம் - வீரம்
நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்!பின்
இரவுபோ யிற்றே. கோழி
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ண ரும்பு.
உயிர்போன்றான் துயில் களைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது. பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.
அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி.
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
"ஒழித்தது வறுமை அன்னாய்
உதவுக" என்று நைந்தார்.
"பிழைத்தது மழை*என் அத்தான்
பெய்"என்றேன் குடிகட் கெல்லாம்.
மழைத்தது* மழைக்கை** செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.
* பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.
* மழைத்தது - மழைபோல் செந்நெல் தந்தது.
** மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.11. சொல்லும் செயலும்
சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
சொல்வதென்றால்...
முல்லைவிலை என்ன என்றான்
இல்லைஎன்று நான் சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்
சொல்வதென்றால்...
பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்
பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்
கன்னல் என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்று தின்றான்.
சொல்வதென்றால்...
நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லை என்றேன்.
குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.
சொல்வதென்றால்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.12. இருவர் ஒற்றுமை
எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...
எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்
எனக்கும் உன்மேல்...
இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன்செயல் இனிக்கும்!
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
எனக்கும் உன்மேல்...
விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்
எனக்கும் உன்மேல்...
நீஉடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நம தன்பும் - இங்கு
ஒழிவிலை பே ரின்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.13. பந்துபட்ட தோள்
கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்தரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர் துடித்திட லானேன்.
வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ?
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.
"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட
மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்."
தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை"வென்று சொன்னான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.14. தன்மான உலகு
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று
வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்
என்மா னத்தை ஈவேன்" என்று
மறுத்து, நான்வரும் வரைபொருத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
என்வீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
"ஏன்"எனில் அதட்டலென் றெண்ணு வாளோ?
"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ?
"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்
பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
"காத்திருக் கின்றேன், கட்டழ கே"என
உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.
ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
காத்தி ருப்பது கழறினேன்; உவந்தாள்.
ஒருநொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 15. மெய்யன்பு
மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,
விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள்.
கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்,
உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்
தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ?
தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச்
"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்; தேனைச்
சொட்டுகின்ற இதழாளே! பிழைபொ றுப்பாய்;
பிள்ளைபெற வேண்டாமே; உனைநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே ஆவேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.
"மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் எதோ
மனக்கசப்பு வரல்இயற்கை. தினையை நீதான்
பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி" ரென்றேன்.
எனைநோக்கிச் சொல்லலுற்றாள்: "நமக்கு மக்கள்
இல்லையெனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;
எனக்கும்இனி உயிரில்லை" என்றாள் செத்தாள்.
திடுக்கென்று கண்விழித்தேன். என்தோள் மீது
செங்காந்தாள் மலர்போலும் அவள்கை கண்டேன்.
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்;
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்.
படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்
பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.16. பெற்றோர் இன்பம்
கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.
"கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகாலி அவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்; அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்.
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன; விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே! ஒன்றும் இல்லை"
என்று கூறினான் ஏழை ஏகாலி.
அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.
"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம்"என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.
தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்.
நல்லி ஓர்புதுமை நவில லுற்றாள்.
"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள்.
ஆடவர் பற்பலர் அழகுப் போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே!
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது; பின்அது மீள வில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளும் இரண்டும் பின்னின;
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம். இவைகள் அகத்தில் நேர்ந்தவை.
மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான்தெருக் குறட்டில்
காத்திருந் தேன்;அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின்`எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும்மொழியை நான் முடிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்" என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக்கூற
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.
"நல்லியே நல்லியே! நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது,
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர,எம்
வாழ்வுக்கு உரிய வண்மை பெற்றோம்;
ஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய்
இன்னான் இடத்தில் என்அன் பென்று
சொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம்.
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும் பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ"என் றுரைத்தான்.
தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்.
"மலைபோற் சுமந்தஎன் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல விழிகள்
உலவு மீன்போல் ஒளி வீசினவோ!
நான்கேட் கும்பேறு பெற்றிலேன்" என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.17. பணமும் மணமும்
அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்
ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்
பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடி
தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்
வளர்ந்து வருகையிலே, மஞ்சினி தன்மைந்தன்
குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்.
ஆளி சிரித்தே அவனிடத்தில் - "கேளண்ணா
தத்தை விதவைப்பெண் சம்மதமா?" என்றுரைத்தான்.
"மெத்தவிசேட" மெனச்சொல்லி மஞ்சினிதான் - ஒத்துரைத்தான்.
"சாதியிலே நான்மட்டம் சம்மதமா?" என்றே
ஓதினான் ஆளி. "ஒருபோதும் - காதில்நான்
மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை
இட்டந்தான்" என்றுரைத்தான் மஞ்சினி. - "கிட்டியே
ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்
செய்வாயா?" என்றாளி செப்பினான். - "ஐயோஎன்
உத்தேசம் பார்ப்பான் உதவா தெனலன்றோ?
செத்தாலும் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்
சொன்னேன்" எனஉரைத்தான் மஞ்சினி. சொன்னதும்
பின்ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்நேரம்
வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை:
கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்
பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும்
குணமில்லை என்றிருத்தல் கண்டு - திணறியே
"வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூரு - கூடிவரும்
மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்
நாளமைப்போம்" என்றந்த ஆளி நவிலவே,
தோளலுத்த மஞ்சினி "ஆளியண்ணா - கேளிதை
இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை
சிந்திப்போம் பின்"என்று செப்பினான். - "எந்த
வருடத்தி லே?எந்த வாரத்தில்? எந்தத்
தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ"என்றான் ஆளிதான்.
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்: - "பச்சையாய்த்
தாலி யறுத்தவளைத் தாலிகட்டி னால்ஊரார்
கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா? - மேலும்
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது
முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும்
முத்தன் அங்குவந்தான். "முகூர்த்தநாள் நாளைக்கே,
தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த
இருந்தசொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும் - விரிவாக
இல்லை மணந்துகொள்" என்றுரைத்தான் ஆளி!அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல
கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்
தனியாய் இராதே "தடையேன் - இனி"என்றான்.
முந்திமணம் ஆயிற்றாம். "பாங்கு முறியவில்லை"
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.18. திருமணம்
மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!
புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்
துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!
என்தின வறிந்து தன்செங் காந்தள்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு!
மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!
மலம் மூடத்தான் மலர்பறித் தேன்எனில்
குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா?
திருமண மின்றிச் செத்தால், அந்தச்
சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது
புரோகிதன் புரட்டுநூல்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
கருத்துரைப் பாட்டு
2.19. தலைவன் கூற்று
(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை
நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே
தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து' என்று கூறுவது.)
நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்;
வளயல் நிறைந்த கையுடை
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.
(குறுந்தொகை 189--ஆம் பாடல். மதுரை ஈழத்துப் பூதன்றேவன் அருளியது.)
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.20. தலைவி கூற்று
(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)
ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!
(குறுந்தொகை 186--ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது.)
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.21. தோழி கூற்று
(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே
வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி:
"தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்துவிடவில்லை"
என்று.)
மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்
அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற-
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.22 கதவு பேசுமா?
காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்
வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?
"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். "என்னேடி
தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே" என்றுரைத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பாரதி
2.23. புதுநெறி காட்டிய புலவன்
தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.
உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.
இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுைளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லினை எடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா"
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
"பாருக்குள்ளே நல்லநாடு - இந்தப் பாரதநாடு"
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
"தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்"
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
"முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்"
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
"நீலத்திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
"இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே."
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு"
"விடுதலை! விடுதலை! விடுதலை!"
"மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே" என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான்.
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா" என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
"முனைமுகத்து நில்லேல்" முதியவள் சொல்இது.
"முனையிலே முகத்துநில்" - பாரதி முழக்கிது!
"மீதூண் விரும்பேல்" மாதுரைத் தாள்இது.
"ஊண்மிக விரும்பு" - என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் - "கோல்கைக் கொண்டுவாழ்"
"குன்றென நிமிர்ந்துநில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்", நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.
( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில்
தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.24. தேன்கவிகள் தேவை
பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.
அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
"என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார்.
பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ'ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
"பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?"
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"என்றார்.
நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
"நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்"
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
"வேண்டும் எழுதத்தான் வேண்டும்"என்றோம். பாரதியார்,
"வேண்டும்அடி எப்போதும் விடுதலை" என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வௌியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் "தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்" என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
"தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்" என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.25. பாரதி உள்ளம்
சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!
என்றுரைப் பார்என் னிடத்தில் - அந்த
இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை - நான்
இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல
பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்
நற்றமிழர்க் கெழில் மூச்சு!
மேலவர் கீழவர் இல்லை - இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்
நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி
வேரைப் பொசுக்குங்கள் என்றே.
செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.26. மகா கவி
பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.
அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தௌிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.
பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!
கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!
ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!
"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே"யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.
"சாதிகளே இல்லையடி பாப்பா" என்றார்
"தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்" என்றார்.
சோதிக்கின் "சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி"பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்" என்றார்.
தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.
வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?
[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் "ரா.கி" (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல
என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.]
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.27. செந்தமிழ் நாடு
(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)
தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்.
"அந்தவிதம் ஆகட்டும்" என்றார்கள் நண்பரெலாம்.
"செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" என்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்!
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 28. திருப்பள்ளி எழுச்சி
(திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)
நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவய தன்னையார் ஐயரே,
பீடு தரும்"திருப் பள்ளி யெழுச்சி"தான்
சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே.
நீல மணியிருட் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது;
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!
ஞானப் "பொழுது புலர்ந்த"தென் றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.29. நாடக விமரிசனம்
ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்!
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:
"மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவது தானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா" என்றார்!
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்;
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை?
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்;
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான். தூங்கி விட்டால்
முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரம மும்போம்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திராவிட நாடு
2.30. இனப்பெயர்
1
"இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
"நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.
அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
"திராவிடன்" ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்.
2
கடந்த காலப் படம் இது:
அடடே வடபெருங் குன்றமும் இல்லை!
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே!
அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
வெற்பின் வடபுறத்து விளையா டினவே!
மேற்கு அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல்
இல்லை! என்ன வியப்பு இது!
ஆபி ரிக்கமும், ஆத்திரே லியமும்
குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
இடையீ டின்றி நெடிது கிடந்த
"தொடித்தோள் வையம்" தோன்றக் கண்டேன்.
அங்குக் கண்டேன்:
தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம்!
அதன்பாற் கண்டேன்:
ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!
தொடித்தோள் வைய நெடிய வானில்,
உடுக்கள் போற்பல உயர்நா டுகளும்
அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
தென்மா மதுரையும் திகழ்வ தாகப் -
பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு -
திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.
3
என்னே! என்னே!
வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
தொடித்தோள் வையத் தூயநா டுகளில்
சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே!
அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம்!
மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
என்னே கொடுமை!
அங்குளார் இங்கு வந்தனர் அலறியே.
`தெய்'என்று செப்பும் தீமுதல் ஐந்தில்
நீர்ஒன்று அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால்
சிதறி வந்த தென்புலத் தாரை
ஓம்பும்நாள் இடைவிடாது உளவா யிற்றே!
4
கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை
மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர்
தென்பால் ஐயகோ சீறி வந்ததால்
தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே.
இன்று தென்கடலில் இலங்கை முதலால்
ஒன்று மில்லை.
மேற்கிடம் அரபிக் கடலும்
கிழக்கிடம் வங்கக் கடலும்
அன்றி வேறில்லை.
வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்ற மட்டும்
நிலப்பரப் பானது!
திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர்.
ஆரியர் கால்நடை அமைய வந்தவர்,
பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்
குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.
ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள்.
இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருங் கழகம் ஆகிய
எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ!
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திராவிடன்
2. 31. திராவிடன் கடமை
மனவீட்டைத் திறப்பாய் - சாதி
மனக்கத வுடைத்து
மனவீட்டைத்...
இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வு விளக்கேற்று
மனவீட்டைத்...
புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்
புராண வழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டுவைக் காதே
எடுதுடைப் பத்தைஇப் போதே
தனிஉலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்
மனவீட்டைத்...
வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத் தாண்டு பார்த்தார்
விடுவாயாடா தன்ன லத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.
மனவீட்டைத்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 32.. அது முடியாது
கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.
கோட்டை நாற்காலி...
கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை.
கோட்டை நாற்காலி...
காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
கோட்டை நாற்காலி...
அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?
கோட்டை நாற்காலி...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.33. பிரிவு தீது
கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.
கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.
செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?
செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.34. உணரவில்லை
உணரச் செய்தான் உன்னை - அவன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
உணரச் செய்தான்...
தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத்
தணலில் தள்ள வழிபார்க் கின்றான்.
உணரச் செய்தான்...
முணுமுணு வென்றே மறைவிற் சென்றே
முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே
பணிமனை ஆட்சி பட்டம் யாவும்
பார்ப்பா னுக்கே என்றுபு கன்றே.
உணரச் செய்தான்...
நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள்
நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள்
ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்?
எண்ணில் கோடி மக்கட் குறவே.
உணரச் செய்தான்...
அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான்
ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான்
துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி
தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே.
உணரச் செய்தான்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.35. உயிர் பெரிதில்லை
ஒருவன் உள்ள வரையில் - குருதி
ஒரு சொட்டுள்ள வரையில்
ஒருவன் உள்ள வரையில்...
திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்
ஒருவன் உள்ள வரையில்...
பெரிது மானம்! உயிர்பெரி தில்லை!
பெற்ற தாயைப் பிறராள விடுவோன்
திராவிடன் அல்லன்! திராவிடன் அல்லன்!
தீமை செய்து பார்க்கட்டும் ஆள்வோர்!
ஒருவன் உள்ள வரையில்...
அடித்தோன் அடிபட நேர்ந்ததிவ் வுலகில்
ஆள வந்தார் ஆட்படல் உண்டு
நெடிய திராவிடம் எங்களின் உடைமை
நிறைவுணர் வுண்டெங்கள் பட்டாள முண்டு!
ஒருவன் உள்ள வரையில்...
வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!
ஒருவன் உள்ள வரையில்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.36. இனி எங்கள் ஆட்சி
தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்!
தன்னினம் மாய்க்கும்...
இந்நிலம் திராவிடர் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க.
தன்னினம் மாய்க்கும்...
மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திராவிட மன்னன் - எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள்
திராவிட மன்னவன் தோளே!
சின்ன நினைப்புகள் தன்மான மற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்.
தன்னினம் மாய்க்கும்...
திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத்
திருநாடு பெற்ற சேய்தான் - இத்
திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில்.
தன்னினம் மாய்க்கும்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.37. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை
தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள்,
தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை!
தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?
தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும்,
தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும்,
தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ றொன்று
தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே!
உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும்
உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும்
தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு
தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை!
ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்;
உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்;
அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின்
ஆழத்தில் காணுகின்றான்! தமிழன் இந்நாள்
பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்;
"பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்;
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்."
வாழ்கதமிழ்! இவ்வையம் வாழ்க நன்றே!
அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே!
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.38. தமிழன்
அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள்
அறியச் செய்தோன்...
செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள்
அறியச் செய்தோன்...
காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவும் திறமும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று, நவின்று, நவின்று முன்னாள்
அறியச் செய்தோன்...
எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்!
அங்குத் தமிழன் திறமை கண்டாய்!
அங்குத் தமிழன் தோளே கண்டாய்!
அறியச் செய்தோன்...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.39. பகை நடுக்கம்
தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.
தமிழர் என்று...
நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை!
தமிழர் என்று...
எந்த நாளும் தமிழர் - தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை - செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.
தமிழர் என்று...
வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரி கைமு ழக்கு.
தமிழர் என்று...
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.40. கூவாய் கருங்குயிலே
எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே!
கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம்
முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக்
கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!
வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி
இராத இடமில்லை என்றநிலை நாட்டத்
திராவிட நாடு சிறைநீங்க என்று
குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே!
உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை
நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி
எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம்
பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே!
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!
இளைஞர் துடிக்கின்றார் தமிழின் நிலைஎண்ணிக்
கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு
விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின்
களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே!
பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.41. தமிழர்களின் எழுதுகோல்
கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?
தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்
சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!
இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சி மனப்பான்மை
ஏற்படுத்தல்; பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.
விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம்
வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்?
மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற
மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்.
உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!
பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்
பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ?
பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்?
உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே
உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.42. இசைத் தமிழ்
மேசை விளக் கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ் மன்னர் - தம்பகையை
வென்ற வர லாற்றை
ஓசை யுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!
செந்தமிழ் நாட்டி னிலே - வாழ்கின்ற
சேயிழை யார் எவரும்
வந்த விருந் தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லு கையில்
அந்தத் தமிழன் னையின் - முகத்தினில்
அன்பு பெருகி யதை
எந்த வகை உரைப்பேன்! - கேட்டபின்பும்
இன்னும்சொல் என்றுரைத் தார்!
கிட்டநெருங்கி எனைப் - பிள்ளாய்என்று
கெஞ்சி நறுந் தேனைச்
சொட்டு வதைப் போலே - வாய்திறந்து
சொல்லொரு பாடல் என்றார்
கட்டிக் கரும் பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்ட வுடன்
எட்டு வகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.43. சிறுத்தையே வௌியில் வா!
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வௌியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வௌியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.44. தீவாளியா?
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 45. பன்னீர்ச் செல்வம்
மார்புற அணத்து நாதன்
மங்கைக்குத் தந்த இன்பம்
சார்புறத் தேகம் தன்னை
மனத்தினைத் தழுவும் நேரம்
நேரினில் இருந்த நாதன்
மறைந்தனன் என்றால் நேயக்
கார்குழல் மங்கை கொள்ளும்
கடுந்துயர்க் களவு முண்டோ?
இறைந்தநற் றமிழர் தம்மை
இணைத்தசீர் இராம சாமி
அறைந்தநல் வழியே இந்தி
அரவினைக் கொன்றான் செல்வன்
நிறைந்தஅத் தேனை நாட்டார்
நினைந்துண்ணும் போதே அன்னோன்
மறைந்தனன் என்றால் யார்தாம்
மனம்துடி துடிக்க மாட்டார்?
எல்லையில் "தமிழர் நன்மை"
என்னுமோர் முத்துச் சோளக்
கொல்லையில் பார்ப்பா னென்ற
கொடுநரி உலவும் போது,
தொல்லைநீக் கிட எழுந்த
தூயரில் பன்னீர்ச் செல்வன்
இல்லையேல் படைத் தலைவன்
இல்லைஎம் தமிழ்வேந் துக்கே.
ஆங்கில நாட்டில் நல்ல
இந்திய அமைச்ச னுக்குத்
தீங்கிலாத் துணையாய்ச் சென்றான்
சர்.பன்னீர்ச் செல்வன் தான்மேல்
ஓங்கிய விண்வி மானம்
உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம்
தூங்கிய கடல்வீழ்ந் தானோ
துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.
பண்கெட்டுப் போன தான
பாட்டுப்போல் தமிழர் வாழும்
மண்கெட்டுப் போமே என்னும்
மதிகெட்டு மானம் கெட்டும்
எண்கெட்ட தமிழர் பல்லோர்
பார்ப்பனர்க் கேவ லாகிக்
கண்கெட்டு வீழும் போதோ
கடல்பட்ட தெங்கள் செல்வம்?
சிங்கத்தை நரிய டிக்கும்
திறமில்லை எனினும் சிங்கம்
பொங்குற்றே இறந்த தென்றால்
நரிமனம் பூரிக் காதோ?
எங்குற்றான் செல்வன் என்றே
தமிழர்கள் ஏங்கும் காலை
இங்குற்ற பூணூல் காரர்
எண்ணம்பூ ரிக்கின் றார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பன்மணித்திரள்
2. 46. அறம் செய்க
தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும், மக்கள் கூட்டமும்,
வாழுமாறு அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!
புலவர்கள் "உலகப் பொன்னி லக்கியம்"
ஆக்கினார்! மறவரோ, அறிவு-அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!
தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக "பணியை!"
இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக "அறம்இன்பம்" என்றே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 47. கற்பனை உலகில்
தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை
சிறியதொரு நாற்காலி தவிர மற்றும்
இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;
மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே
ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!
நெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
மிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே!
`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.
இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன்
மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? என்செயலாம்! நீயும் நானும்
உயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.
மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.
அல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
அவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.
பொன்னிறத்துக் கதிர்பாயும்முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னைஅறி யேன்!தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!
`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.48. குழந்தை
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!
வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.49. தொழில்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
எழிலை உலகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
இந்தவான், மண்,கனல் எரி,வளி உருப்படா
அந்தநாள் எழுந்தஓர் `அசைவினால்' வானொடு
வெண்ணி லாவும், விரிகதிர் தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்.
அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத்
துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார்.
அழியா தியங்கும்அவ் வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும்.
ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!
மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாறு தளிர்த்திடு கின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை!
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பை;
பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே!
பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றதோர்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடைந்தோர் உனைத்தம் ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!
தொழிலே காதுகொடு! சொல்வேன். எங்கள்
அதிர்தோள் உன்றன் அழகிய மேனி
முழுதும் தழுவ முனைந்தன பார்நீ.
அழகிய நாட்டில் அந்நாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!
அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்;
மலையெனச் செந்நெல் வழங்கஎம் தோளில்வா!
கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட்
டிரும்பா லைக்கு வரும்பழு தகற்றினோம்
பண்டம்இந் நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!
சூட்டி ரும்பும் துளியும் போலஎம்
தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாமும் நீயும் இரண்டறக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ளிகள்யாம்;
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானூர்தி யாலிவ் வையம் ஆள்வோம்.
ஐயப் படாதே! அறிவு புகட்டும்
வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்;
மாசு தவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பிணைதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்!! இதோபார் கிடந்த
துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.50. குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை
கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.
கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!
தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!
மின் இயக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி,
"இப்படி வா"என இச்இச் என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!
காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின;
அல்லல் உலகியல் அணுவள வேனும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!
மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்து லாவும் இளங்குழந் தைகளை
இழந்து போக நேரும்;
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.51. கடவுளுக்கு வால் உண்டு
காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,
கருங்குரங் கின்வா லிலே
கட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற
கழுதைதான் ஊச லாட
வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே
வெறிகொண்ட சாதி யென்னும்
வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி
மேதினி கலங்கும் வண்ணம்
வாணங்கொ ளுத்துகின் றான்என் பதும்வயிறு
வளர்க்கும்ஆத் திகர்க ருத்து.
மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும்
வாலையடி யோட றுத்தால்
சேணேறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும்
தீராத சாதி சமயத்
தீயும்வி ழுந்தொழியும் எனல்என் கருத்தாகும்
திருவார்ந்த என்றன் நாடே.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.52. மலையிலிருந்து
சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்
சுப்பனைக் காண லானேன்.
`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'
என்றுநான் சொன்ன வுடனே
கோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சி
நான்அதில் கொய்யாப் பழம்;
கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்
கோட்டமே' என்று சொன்னான்.
தாபித்த அந்நிலையில் அம்மாப்பிள் ளைக்குநான்
தக்கமொழி சொல்லி அவனைத்
தள்ளினேன். மலையுச்சி மீதே யிருந்தவன்
தன்புதுப் பெண்டாட் டியின்
சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன்.
துயரமும் மனம கிழ்வும்
சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன்
தூயஎன் அன்னை நாடே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.53. எந்த நாளும் உண்டு
மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்
மறிக்கின்ற இந்து மதமும்,
மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்
வாள்தூக்கும் மகம்மதி யமும்,
வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை
`மகாத்மீயம்' என்னும் நிலையும்,
வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்
மதிப்பைப் பறித்தெ றிந்து,
பாடின்றி வாழ்ந்திட நினைத்திடும் பாதகப்
பார்ப்பனர், குருக்கள், தரகர்,
பரலோகம் காட்டுவார்' என்கின்ற பேதமையும்
பகைமிஞ்சு கடவுள் வெறியும்,
ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற
அவ்வுரிமை நாளும் இங்கே
அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட
அழகுசெந் தமிழ்வை யமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.54. பெண்குரங்குத் திருமணம்
பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி
`பெண்வேண்டும் மகனுக்' கெனப்
`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செல்லாம் கீச்'சென் றனன்.
`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்
`இரட்டைவால் அல்ல' என்றான்.
ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.
`என்றன்பெண் கால்வ ரைக்கும்
கருங்கூந்தல் உண்'டென்ன, ஏழையண் ணாசாமி
கடிதுமண நாள்கு றித்தான்.
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல, அதுதான்
பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங் குரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
பெரியஎன் அன்னை நாடே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.55. கற்பின் சோதனை
கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
கணவனின் வைப்பாட் டியும்
ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்
`உடன்இப்பெண் யார்?'என் றனள்.
`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மை
உணவுக்கு வழிகேட் டனள்.
`இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
ஈந்துவா உணவெ'ன் றனன்.
அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை. ஆயினும்
அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
அழகுசேர் அன்னை நாடே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.56. தலையுண்டு ! செருப்புண்டு !
நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனை
நெடுவௌியை அடைவ தற்கும்
பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ
பணக்காரர் நன்மை யெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
பறித்துத் தொலைத்து விட்டால்
நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
நஞ்சுண்டு சாகட் டுமே!
நற்காற்று, வானம்,நீர், அனல்பொது வடைந்ததால்
நன்செயும் பொதுவே எனத்
தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப் பேஉண்டு
தகைகொண்ட அன்னை நிலமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.57. எண்ணத்தின் தொடர்பே!
குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்,
படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்,
கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
தூயசுய மரியா தையாய்ச்
சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
தூயஎன் அன்னை நிலமே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.58. சங்கங்கள்
சங்கங்களால் - நல்ல
சங்கங்களால் - மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்
சிங்கங்கள்போல் - இளஞ்
சிங்கங்கள்போல் - பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே
பொங்கும் நிலா - ஒளி
பொங்கும் நிலா - எனப்
பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை
மங்கிடுமோ? - உள்ளம்
மங்கிடுமோ? - என்றும்
மங்காது நல்லறி வும்தௌி வும்வரும்
சங்கங்களை - நல்ல
சங்கங்களை - அந்தச்
சட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க
அங்கம் கொள்க! - அதில்
அங்கம் கொள்க! - எனில்
அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட
எங்கும் சொல்க! - கொள்கை
எங்கும் சொல்க! - இதில்
ஏதுத டைவந்த போதிலும் அஞ்சற்க!
தங்கத்தைப் போல் - கட்டித்
தங்கத்தைப் போல் - மக்கள்
தங்களை எண்ணுக! சங்கங்க ளிற்சேர்க்க!
தங்கத்தைப் போல்...
கொள்கை இல்லார் - ஒரு
கொள்கை இல்லார் - மக்கள்
கூட்டத்தில் இல்லை!சங் கங்களின் சார்பினைத்
தள்ளூவதோ? - மக்கள்
தள்ளூவதோ? - சங்கத்
தாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று
விள்ளுவதோ? - மக்கள்
விள்ளுவதோ? - மக்கள்
வெற்றியெல் லாம்சங்க மேன்மையி லேஉண்டு
கொள்ளுகவே - வெறி
கொள்ளுகவே -சங்கம்
கூட்டிட வும்கொள்கை நாட்டிட வும்வெறி
கொள்ளுகவே...
சாதி மதம் - பல
சாதி மதம் - தீய
சச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்
போதத்தையே - மக்கள்
போதத்தையே - அறப்
போக்கிடும் மூடவ ழக்கங்கள் யாவும்இல்
லாத இடம் - தீதி
லாத இடம் - நோக்கி
யேகிடு தேஇந்த வைய இலக்கியம்!
ஆதலினால் - உண்மை
ஆதலினால் - சங்கம்
அத்தனை யும்அதை ஒத்து நடத்துக!
உள்ளத்திலே - நல்ல
உள்ளத்திலே - எழுந்
தூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல்
வெள்ளத்திலே - இன்ப
வெள்ளத்திலே - இந்த
மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று
தள்ளத் தகாப் - பல
தள்ளத் தகா - நல்ல
சங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்!
பள்ளத்திலே - இருட்
பள்ளத்திலே - வீழ்ந்த
பஞ்சைகட் கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும்
சங்கங்களால்...
தாய் தந்தையர் - நல்ல
தாய் தந்தையர் - மண்ணில்
தாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற
நேயத்தினால் - மிக்க
நேயத்தினால் - நித்தம்
நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக!
ஆய பொருள் - உண்
டாய பொருள் - முற்றும்
அங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே
தூய எண்ணம் - மிகு
தூய எண்ணம் - இங்குத்
தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.59. குடியானவன்
அகவல்
ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை,
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்"
"குடியா னவன்"எனக் கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடிஇலாச் செல்வரும்!
அக்குடி யானவன் அரசர் செல்வரோடு
இக்கொடு நாட்டில் இருப்பதும் உண்மை!
அழகிய நகரை அவன்அறிந் ததில்லை
அறுசுவை உணவுக்கு - அவன் வாழ்ந்த தில்லை!
அழகிய நகருக்கு - அறுசுவை உணவை
வழங்குதல் அவனது வழக்கம்; அதனை
விழுங்குதல் மற்றவர் மேன்மை ஒழுக்கம்!
"சமைத்தல்" "உழைத்தல்" சாற்றும் இவற்றிடை
இமைக்கும் நேரமும் இல்லை ஓய்வு - எனும்
குடியா னவனின் குறுகிய காதில்
நெடிய ஓர்செய்தி நேராய் வந்தது:
"உலகிற் பெரும்போர்" "உலகைப் பெறும்போர்"
"உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர்
மூண்டது மூண்டது மூண்டது - ஆகையால்
ஆண்தகை மக்கள் அனைவரும் எழுக"
அந்த ஏழையும் ஆண்தகை தானாம்!
ஒருவன் ஆண்தகையை உற்றறி யத்தகும்
திருநாள் வாழ்க - எனச் செப்பினான் அவனும்!
அருமை மகனுக்கு - ஒருதாய் சேர்த்தல் போல்,
பெருங்கடல் அளக்கும் பெரும்போர்க் கப்பல்,
குண்டுகள் கொடிய வண்டிகள் சாப்புகை,
வண்டெனப் பறக்கும் வான ஊர்திகள்,
அனைய அனைத்தும் அடுக்கடுக் காக
மறைவினில் சேர்த்து வைத்த இட்லர்,
இறைமுதல் குடிகள் யார்க்கும் போர்வெறி
முடுக முடுக்கித் திடீரென எழுந்தான்!
பெல்ஜியம் போலந்து முதல்நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்.
முடியரசு நாடு குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடித்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்.
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்,
கொத்தாய் ஆசியக் கொள்கையை நாடும்
ஜப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்.
ஆங்கில நாட்டையும் அமெரிக் காவையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னுங்
"குருவி" நெருப்புக் குழியில் விழுந்தது!
எத்தனை நாட்டுச் சொத்துக் குவியல்!
எத்தனை நாட்டில் இருந்த படைகள்!
எத்தனை நாட்டில் இருந்த காலாட்கள்!
அத்தனையும் சேர்த்து - அலைஅலை யாக
உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர்; தீர்ந்தான்; முற்றிற்று!
உருசிய நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசி யத்தை இட்லர் உணர்கிலான்!
ஜப்பான் காரன் தன்கொடி நாட்ட
இப்பெரு நாட்டின் எழில்நக ரங்களில்
குண்டெறி கின்றான்; கொலையைத் தொடங்கினான்!
பண்டை நாள்மறத் தொண்டுகற் கண்டென
நாய்க்குட்டி நாடுகள் நன்று காணக்
காட்டிய தமிழகம் கைகட்டி நிற்குமா?
ஊட்டத் தோளை ஓலைத்தோ ளென்னுமா?
இந்த நாட்டின் இருப்பையும், மூச்சையும்,
வந்துள பகையை வாட்டும் படையாய்
மாற்றி அமைத்து வைத்தனர் அன்றோ?
முகத்தைப் பின்னும் முன்னும் திருப்பாது
விடியுமுன் எருதின்வால் அடிபற் றிப்பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடி யானவன் அருகில்இச் செய்தி
வலியச் சென்று வாயைத் திறந்தது!-
எழும்அரசர், செல்வர், எதிரிஇம் மூன்றுக்கு-
உழைக்க வேண்டும்அவ் வோலைக் குடிசை!
உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல்போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடி யானவன் அழகிய தோளிலும்,
விழியிலும் எழுந்து மின்ன,அவ் வேழை
எழுந்தான்; அவனுக்கு - இதற்குமுன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை,அவன் காலை இழுத்தன கடித்து!
மெத்தை வீடு, மென்மை ஆப்பிள்,
முத்தரிசி பாலில் முழுங்கிய சோறு,
விலைதந்து தன்புகழ் விதைக்கும் ஆட்கள்,
இவற்றி னின்றுதான் இன்பமும் அறமும்,
துவங்கும் என்று சொல்லல் பொய்ம்மை!
இதைஅவன் கண்ட தில்லை; ஆயினும்
அக்குடி யானவன் எழுந்தான்
நிற்க வில்லை; நிறைந்தான் போரிலே!
(வையப் போரில் ரஷ்யாவை ஜெர்மனி
தாக்கத் துவங்கியபோது எழுதியது.)
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.60. மடமை ஓவியம்
பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தீதாமோ?
காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்
கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை
பார்க்க மறுத்தார்கள்?
பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனில்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
நற்கலை கண்டார்கள்?
தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந் துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
சந்திப்ப தேனும்உண்டோ?
நேர்மைஇ லாவகை இத்தனை நாளும்
நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
திறத்திற் பிறந்திருந்தால்,
ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்
உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
அடிமையும் தீர்த்திடலாம்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.61. நாடகம் - சினிமா நிலை
சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்;
கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால்
கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்
பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள பகைமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்தபிடி யில்பிடித்துத் தீர்ப்ப தற்கும்
பெருநோக்கம் கொள்வதற்கும் பிறநாட் டார்கள்
நாடகங்கள், சினிமாக்கள் செய்வார். என்றன்
திருநாட்டில் பயனற்ற நாட கங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர்
தமிழ்மொழியின் பகைவரே! கொள்கை யற்றோர்!
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்
இதம்அகிதம் சிறிதேனு மறியா மக்கள்
தமைக்காக்கப் பிறர்நலமும் காக்க எண்ணும்
தருமகுண மேனுமுண்டோ இல்லை இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை .
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்
இந்நிலையில் நாடகத்தில் தமிழோ, காதை
இருகையால்மூடிக்கொள் என்று சொல்லும்
தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.62. படத்தொழிற் பயன்
கேள்வி
நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கது வோபுகல் அண்ணே.
விடை
கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தை இங்கில்லாக் கதைகளை
ஏற்றின ரோஅவர் தம்பி? - இது
மாறா திருக்குமோ தம்பி?
கேள்வி
தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? - இங்
கெழுத்தாள ரேஇல்லை அண்ணே.
விடை
சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்.
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி.
கேள்வி
செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே.
விடை
அந்தத் தெலுங்கு, மலையாளம், கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி.
கேள்வி
அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே.
விடை
கங்குல், பகல்,அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்,மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.63. வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்
1
தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!
2
வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!
3
தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!
4
கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!
5
வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.64. இசைபெறு திருக்குறள்
கசடறக் கற்க
பகவத் கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்;
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!
இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உளஎன உணர்தல் வேண்டு மன்றோ?
கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கின்றார்.
பரிமே லழகர் திருக்குற ளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன் றுணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் என்றார் மன்னுகல் லாடனார்!
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்.
திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்.
ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்.
பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள் ளத்தின் திரையே ஆனது!
நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமே லழகர்.
பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறமே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார்; தெள்ளு தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமே லழகர் செய்த உரையில்
தமிழரைக் காணுமா றில்லை. தமிழரின்
எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்!
வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை
இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்!
எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்;
"ஒழுக்க முடைமை குடிமை"என் பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்:
"தத்தம் வருணத் திற்கும், நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடைய ராதல்" - உரைதா னாஇது?
"ஒழுக்க முடைமை, உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடைய ராதல்" - தகும்இது;
குடிமை என்பது குடிகளின் தன்மையே!
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்"எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக.
நன்றுயாம் நவில வந்த தென்எனில்
திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழர் இனிது வாழ்கவே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. 65. வாழ்வு
அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பில் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர்
மானத்தில் வாழ்வது வாழ்வு!
உச்சி மலைவிளக் காக - உல
கோங்கும் புகழ்கொண்ட தான
பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!
மூதறி வுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின் - முன்
கண்டதை ஓவியம் ஆக்கும்
பாதித் தொழில்செய லின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!
ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயன வாம்என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.66. கொட்டு முரசே!
எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டு முரசே! - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!
இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லிக்
கொட்டுமுரசே! - வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டுமுரசே !
சான்றாண்மை இவ்வுலகில்
தோன்றத் துளிர்த்ததமிழ்
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!
ஈன்று புறந்தருதல்
தாயின் கடன்!உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டுமுரசே!
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி முற்றும்,
This webpage was last revised on 1 Nov. 2021
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com)