ponniyin celvan
of kalki, part 3C
(in tamil script, unicode format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,
India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,
Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,
Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth
Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to distribute
them free on the Internet. Details of Project Madurai are available at
the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
மூன்றாம் பாகம் - கொலை வாள்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - "நீயும் ஒரு தாயா?"
இருபத்திரண்டாம் அத்தியாயம் - "அது என்ன சத்தம்?"
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி
இருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது!
இருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்!
இருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை
இருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு
இருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன்
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல்
முப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்
இருபத்தொன்றாம் அத்தியாயம்
"நீயும் ஒரு தாயா?"
சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து
கூறினார்:- "மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு
சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனர் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ
அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே
கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ
குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இராவணேசுவரனுடைய மூல பல சைன்யத்தைப் போல் இரட்டை
மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத
வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்ட
த்து மாபெரும்
சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் குருஷேத்திர யுத்தத்தைப் போன்ற
மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.
இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர்
பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம்
அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின்
மூத்த புதல்வர் சுந்தர சோழர், - சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை - ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார்.
அவரைப் பற்றியும் செய்தி கிட்டவில்லை.இராஜ குலத்தில் பிறந்து அச்சமயம் தஞ்சை அரண்மனையில்
பராந்தகச் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவர் உன் தந்தைதான்.
ஆனால் உன் தந்தையோ இளம் பிராயத்திலேயே இராஜ்ய விவகாரங்களை வெறுத்துச்
சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்தி வந்தவர். அவருக்கு யுத்தம் என்றால் பிடிப்பதில்லை. மன்னர்களின்
மண்ணாசை காரணமாக மக்கள் போரிட்டு மடிவானேன் என்று அவர் வருந்தினார். தந்தையிடமும்
சகோதரர்களிடமும் அதைக் குறித்து வாதித்தார். சிவஞானச் செல்வர்களான பெரியோர்களின்
சகவாசத்திலும், புண்ணிய ஸ்தல யாத்திரையிலும், ஆலய வழிபாட்டிலும் காலத்தைச் செலவிட்டார். வாள்,
வேல் முதலிய ஆயுதங்களைக் கையினால் தொடவும் அவர் விரும்பவில்லை. யுத்த தந்திரங்களிலும் போர்
முறைகளிலும் அவர் பயிற்சி பெறவில்லை. பொய்யும் புனை சுருட்டும், வஞ்சகமும், வேருமும் சூழ்ச்சிகளும் மறு
சூழ்ச்சிகளும், கொலை முதலிய பாவங்களும் நிறைந்தது இராஜரீகம் என்று அவர் நம்பினார். 'திருடன்
பிறர் பொருளைத் திருடுவதற்கும், ஒரு நாட்டு அரசன் இன்னொரு நாட்டைக் கவர்வதற்கும் என்ன
வித்தியாச
்?' என்று அவர் கேட்டார்.
மகனே! விதிவசத்தால் அப்படிப்பட்ட கொள்கையுடைய உன் தந்தை இந்தச் சோழ நாட்டின் பாரத்தை
வகிக்கும்படியாக நேர்ந்துவிட்டது. பராந்தகச்சக்கரவர்த்தி, இராஜ்யத்துக்கு நேர்ந்த பல
விபத்துக்களினாலும், இராஜாதித்தரின் மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும்
வேளையில் உன் தந்தையை அழைத்து, 'இராஜ்ய பாரத்தை நீ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்.
உன் தந்தை மரணத்தறுவாயிலிருந்த உன் பாட்டனாரின் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பாமல்
ஒப்புக்கொண்டார். உன் தந்தையை எனக்கு முன்னால் மணந்திருந்த பாக்கியவதியான வீரநாராயணி
தேவி அதற்கு முன்னரே சிவபதம் அடைந்து விட்டார். நானோ அப்போது உன் தந்தையைப் பார்த்ததே
இல்லை. ஆகையால் உன் தந்தையின் காலத்துக்குப் பிற்பாடு சோழ மகாராஜ்யம் என்ன ஆவது என்ற
கவலை உன் பாட்டனாருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் உன் சிறிய தந்தையின்
குமாரரைத் தேடுவதற்காக ஈழத்திற்குப் போனவர்கள், அங்கே ஒரு தீவிலிருந்த சுந்தர சோழரைக்
கண்டு பிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
பராந்தகச் சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் அளவிலாத பிரியம் வைத்திருந்தார்.
குழந்தையாயிருந்த நாளிலிருந்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். பெரியோர்கள்
பலர், சுந்தரசோழரின் மூலமாய்ச் சோழகுலம் மகோன்னதம் அடையப் போகிறது என்று சொல்லியிருந்தார்கள்.
இத்தகைய காரணங்களினால் உன் பாட்டனாருக்குச் சுந்தர சோழர் மீது அபாரமான பிரேமை.
ஆகையால், உன் தந்தை சிம்மாசனம் ஏறும்போது, சுந்தர சோழருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடவேண்டும்
என்றும், அவருடைய சந்ததியர்கள் தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சிவபதம்
அடைந்தார். இந்த விவரங்களையெல்லாம் உ
ன் தந்தை என்னிடம் கூறினார். பராந்தகச் சக்கரவர்த்தி மரணத்
தறுவாயில் வௌியிட்ட விருப்பத்தை நிறைவேற்ற அவர் உறுதிகொண்டிருந்தார். சுந்தர சோழரும் அவருடைய
சந்ததியாரும் பட்டத்துக்கு வருவதில் எவ்வித இடையூறும் நேரிடக் கூடாதென்று எண்ணினார். உன் தந்தைக்கு
இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை. அவர் புண்ணிய புருஷர்.
அவருடைய உள்ளம் சதாசர்வ காலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக்
கொண்டிருந்தது. ஆகவே, தமது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தர சோழரிடமும்
இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில்
ஈடுபட்டிருந்தார். முன்னமே சொன்னேனே, அது போல் அவருக்கு மறுபடியும் மணம் செய்துகொள்ளும் எண்ணமே
இருக்கவில்லை. ஆனால் அவருடைய மன உறுதியைக் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நானும்
சிவபக்தியில் ஈடுபட்ட 'பிச்சி' என்று அறிந்ததனாலேயே அவர் என்மீது பிரியங் கொண்டு என்னைத்
திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை
அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரைத் தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. இந்த
உலகில் இறைவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த மகான்கள் வெகு சிலர்தான். சிவபெருமான் ரிஷபாரூடராய்
வந்து, உன் தந்தைக்குக் காட்சி தந்து, அவரை இம்மண்ணுலகிலிருந்து அழைத்துப் போனார், நான் இப்போது
உன்னை என் ஊனக்கண்களால் பார்ப்பதுபோல உன் தந்தை பரமசிவனைத் தரிசித்தார். அப்படிப்பட்ட புண்ணிய
புருஷருடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் நீயும் கடமைப்பட்டவர்கள்...!"
அன்னை இவ்விதம் கூறி நிறுத்தியபோது, கேட்டுக் கொண்டிருந்த மகனுடைய உடல்
பதறிக்கொண்டிருந்தது.
அவனுடைய உள்ளம் கொதித
துக் கொண்டிருந்தது. "அது எப்படி, தாயே! என் தந்தை
என்னிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லையே? நான் என்ன கடமைப்பட்டிருக்கிறேன்? எந்த விதத்தில்
கடமைப்பட்டிருக்கிறேன்?" என்றான் மதுராந்தகன்.
"மகனே! கேள்! உன் தந்தை சிவபெருமானுடைய பாத மலர்களை அடைந்தபோது நீ சின்னஞ்சிறு
பிள்ளை.ஆகையால், உன்னிடம் அவர் ஒன்றும் தெரியப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னிடம்
சொல்லிவிட்டுப் போனார்; நாங்கள் மணம் புரிந்த புதிதில் மக்கள் பேற்றை விரும்புவதில்லையென்று முடிவு
செய்திருந்தோம். ஆனால் பேதையாகிய என்னால் அந்த மன உறுதியை நிறைவேற்ற முடியவில்லை. கன்னிப்
பருவத்தில் சிவபெருமானிடம் நான் கொண்டிருந்த பக்தி உன் தந்தையிடம் கொண்டிருந்த பிரேமையாக
மாறியது. நாளடைவில், என் கையில் ஏந்தி, மார்போடு அணைத்து, மடியில் வைத்துத் தாலாட்டிப்
பாராட்டிக் கொஞ்சுவதற்குக் குழந்தை வேண்டும் என்று என் இருதயம் தாபம் கொண்டது. மற்றப் பெண்களின்
கையிலும் மடியிலும் குழந்தையைக் கண்டால் என் உடம்பெல்லாம் துடித்து; உள்ளம் பற்றி எரிந்தது. குழந்தைப்
பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவனிடம் வரம் கோரினேன். இறைவனும் இந்தப் பேதையின் கோரிக்கையை
நிறைவேற்றினார். உன்னை எனக்கு அளித்தார். ஒரு பக்கத்தில் உன்னைப் பெற்றதினால் நான் உள்ளமும்
உடலும் பூரித்தேன்; மற்றொரு பக்கத்தில் உன் தந்தையின் கோபத்துக்கு ஆளாகி விட்டேனோ என்று பயந்தேன்.
அந்த மகா புருஷர் என்மீது கோபிக்கவில்லை. ஆனால் அவருடைய வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை
மட்டும் என்மீது சுமத்திவிட்டுப் போனார்.
"மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த
சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி
விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறும
ந்திருந்தேன்.
ஆனால், என் உயிருக்குயிரான மகனே! என் கண்ணுக்குக் கண்ணான செல்வப் புதல்வனே! சில
நாளாக நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும் போதெல்லாம் பொய்யென்று
நீ உறுதி சொல்லி, என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா?" என்று அன்னை செம்பியன்மாதேவி
கெஞ்சினாள்.
"தாயே! தங்களுடைய மர்மமான வார்த்தைகள் என்னுடைய நெஞ்சையும் புண்ணாக்குகின்றன.
தாங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்; என்னிடம் என்ன உறுதி
கேட்கிறீர்கள்?" என்று மதுராந்தகன் சீறினான்.
"குழந்தாய்! என் மனத்திலுள்ளதை அறிந்துகொள்ளும் சக்தியை நீ இழந்துவிட்டாய் போலும்!
வௌியிட்டுச் சொல்லத்தான் வேண்டும் என்கிறாய்; நல்லது, சொல்லுகிறேன். உன் மனம் சிவபக்தியாகிய
கங்கை நதியிலிருந்து மண்ணாசையாகிய குட்டையில் விழுந்துவிட்டது என்று கேள்விப்படுகிறேன். சோழ
குலத்துச் சிம்மாசனத்தில் ஏற, நீ ஆசை கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். உன் புனிதமான
உள்ளத்தை நம் விரோதிகள் அவ்விதம் கெடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். நான் இவ்வாறு
கேள்விப்பட்டது உண்மையல்ல என்று நீ கூறினால், என் மனம் நிம்மதி அடையும்!" என்றாள் மூதாட்டி.
மதுராந்தகன் இதுவரை உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து எழுந்து நின்றான். அவனுடைய படபடப்பை
பார்த்துத் தாயும் எழுந்தாள். "என்னுடைய மனத்தை விரோதிகள் யாரும் கெடுக்கவில்லை. என்னைச்
சிம்மாசனம் ஏற்ற விரும்புகிறவர்கள் என் விரோதிகளா? எனக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க முன்
வந்திருப்பவர்கள் என் விரோதிகளா? ஒரு நாளும் இல்லை. உண்மையில் என் ஜன்ம விரோதி யார்? என்னைப்
பெற்றவளாகிய நீதான்!..." என்று மதுராந்தகன் கூவினான்.
ஆத்திர மிகுதியால் அச்சமயம் அவன் மரியாதையை மறந்தான்; சின்
ப் பழுவேட்டரையர் நல்ல
வார்த்தைகளினால் அன்னையின் மனத்தை மாற்றும்படி சொல்லியிருந்ததை மறந்து வசைமாரி பொழிந்தான்.
"ஆம்; நீதான் என்ஜன்ம சத்துரு; வேறு யாரு இல்லை. நீயும் ஒரு தாயா? நீயும் ஒரு ஸ்திரீயா?
உலகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளில் உரிமைக்காகப் படாதபாடு படுவார்கள். கதைகளிலும்,
காவியங்களிலும் கேட்டிருக்கிறேன், வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறேன். அன்னையின் இயல்புக்கே மாறான
இயல்புடைய நீ மானிட ஸ்திரீதானா? அல்லது மனிதப்பெண் உருக்கொண்ட அரக்கியா? நான் உனக்கு என்ன
துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்? எல்லாவித
நியாயங்களினாலும் எனக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தைப் பிடுங்கி இன்னொருவனுக்குக் கொடுப்பதில் உனக்கு
என்ன சிரத்தை! என் தந்தையின் விருப்பம் என்று சொல்லுகிறாய். அவருக்கு நீ வாக்குக் கொடுத்ததாகச்
சொல்லுகிறாய். அதற்கெல்லாம் அத்தாட்சி என்ன? நான் நம்பவில்லை. எனக்கு யாரோ துர்ப்போதனை
செய்துவிட்டதாகச் சொல்கிறாய். இல்லவே இல்லை, உனக்குத்தான் யாரோ துர்ப்போதனை செய்து, உன்
மனத்தைத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்கள். தாயை மகனுக்கு விரோதியாக்கியிருக்கிறார்கள்.
நியாயமாக எனக்கு உரிய சோழ சிங்காசனத்தை நான் ஒருநாளும் கை விடமாட்டேன். நீ சொன்னாலும்
விடமாட்டேன். சிவபதம் அடைந்த என் தந்தையே திரும்பி வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். இந்தச்
சோழ சாம்ராஜ்யம் என்னுடையது; இந்தப் பழமையான சிங்காசனம் எனக்குரியது; கரிகால் பெருவளத்தான்
அணிந்திருந்த மணிமகுடம் எனக்கு உரியது; அவற்றை நான் அடைந்தே தீருவேன்.இதோ என் கழுத்தில்
போட்டிருக்கும் ருத்திராட்சை மாலை நீ எனக்கு அளித்தது. தாய் என்ற மரியாதைக்காக இத்தனை நாளும்
இதைத் தரித்திருந்தேன்; என்னைப் பேடியாக்கி, நாடு நகரமெல்ல
ம் நகைக்கும்படி செய்த இந்த ருத்திராட்ச
மாலையை இதோ இந்தக் கணமே கழற்றி எறிகிறேன்; நீயே அதை வைத்துக்கொள்ளலாம்!"
இவ்விதம் பித்தம் பிடித்தவனைபோல் பிதற்றிவிட்டு மதுராந்தகன் தன் கழுத்திலிருந்த
ருத்திராட்ச மாலையை அவசரமாகக் கழற்ற முயன்றான். கழற்ற முடியாமல் அதை அறுக்க முயன்றான்; ஆனால்
கழுத்து நெறிந்ததே தவிர, மாலை அப்படியே இருந்தது.
மதுராந்தகன் அழகிய தோற்றமுடையவன். சுந்தரசோழரின் புதல்வர்களைக் காட்டிலும் அழகன்
என்று சொல்லலாம். அவர்களிடம் இல்லாத பெண் தன்மையின், வசீகரமான சாயல் அவன் முகத்தில் பொலிந்தது.
அத்தகைய களை பொருந்திய அவன் முகம் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் இப்போது விகாரமடைந்து
காட்டியது. அதைக் காணச் சகியாமல் செம்பியன் மாதேவி கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் சத்தமிட்டு ஓய்ந்த பிறகு தன் கண்களைத் திறந்து பார்த்தாள். குரலின் சாந்தத்தில்
சிறிதும் மாறுதல் இல்லாமல், "மகனே! சற்று அமைதியாயிரு. நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும்,
என் வார்த்தைகளைச் சற்றுச் செவிசாய்த்துக் கேள்!" என்றாள்.
மதுராந்தகன் அந்தக் குரலைக் கேட்டுச் சிறிது அடங்கினான். "நன்றாய்க் கேட்கிறேன்,
கேட்கமாட்டேன் என்று மறுக்க வில்லையே!" என்றான்.
"தாயின் இயல்பைக் குறித்து நீ குறிப்பிட்டாய், பொல்லாத அரக்கியாயிருந்தாலும் தன்
குழந்தைக்குத் துரோகம் செய்யமாட்டாள்.துஷ்ட மிருகங்களும், தங்கள் குட்டிகளை மற்ற துஷ்ட
மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முயலுகின்றன. அது போலவேதான் நானும் உன்னைக்
காப்பாற்ற முயல்கிறேன். நீ இராஜ்யத்துக்கு ஆசைப்படவேண்டாம் என்று நான் சொல்லுவதற்கு, முன்னே
கூறியதைத் தவிர வேறு காரணமும் இருக்கிறது. இராஜ்ய ஆசையினால் உன் உயிருக்கே ஆபத்து வரும். பெற்று
வளர்த்த தாய் தன் மகன் உயிரோடிருக்க வேண்டும் என
று ஆசைப்படுவதில் குற்றம் உண்டா? நீ இராஜ்யத்துக்கு
ஆசைப்பட்டால், சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு எதிரியாவாய். ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும்
வீராதி வீரர்கள். நீயோ ஆயுதம் எடுத்து அறியாதவன். சோழ நாட்டுச் சைன்யம் முழுதும் சுந்தர சோழருடைய
புதல்வர்களின் கட்சியிலேயே இருக்கும்.படைத்தலைவர்களும் அவர்களுக்குச் சார்பாக இருப்பார்கள்.
அக்கம் பக்கத்து நாடுகளிலும் அவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உனக்குத் துணைவர்கள் யார்?
யாரை நம்பி நீ அவர்களுடன் போர் தொடங்குவாய்? மகனே! சில நாளாக வானத்தில் தூமகேது
தோன்றியிருப்பதை நீ அறிவாய்.வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் அரச குலத்தினர் உயிருக்கு
அபாயம் என்பது உலகம் கண்ட உண்மை. அப்படி நேரும் விபத்து உனக்கு நேராமலிருக்க வேண்டுமே
என்றுதான் நான் கவலைப்படுகிறேன். குழந்தாய்! என் ஏக புதல்வன் உயிரோடிருக்க வேண்டும் என்று நான்
ஆசைப்படுவது தவறா? அது உனக்கு நான் இழைக்கும் துரோகமா?"
இவ்வார்த்தைகளினால் மதுராந்தகனுடைய ஆத்திரம் சிறிது தணிந்தது. அவன் உள்ளம்
கனிவடைந்தது. "அன்னையே! மன்னியுங்கள்! தங்களுடைய கவலை இதுதான் என்று முன்னமே
சொல்லியிருக்கலாமே? ஒரு நொடியில் தங்கள் கவலையைத் தீர்த்திருப்பேனே! நான் அப்படியொன்றும்
துணைவர்கள் இல்லாத அநாதையல்ல. சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும்,
பெருந்தரத்து அதிகாரிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் என் கட்சியில்
இருக்கிறார்கள். கடம்பூர்ச் சம்புவரையர் என் பக்கம் இருக்கிறார். தங்கள் சகோதரரும் என் மாமனுமான
மழவரையரும் என் கட்சியில் இருக்கிறார். மற்றும் நீல தங்கரையாரும், இரட்டைக்குடை இராஜாளியாரும்,
குன்றத்தூர்ப் பெருங்கிழாரும் பூரண பலத்துடன் என்னை ஆதரிக்கிறார்கள். என்ன
ை ஆதரித்து நிற்பதாகச்
சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்...."
"மகனே! இவர்கள் செய்து கொடுக்கும் சத்தியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. சுந்தர சோழச்
சக்கரவர்த்திக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் உண்மையுடன் நடப்பதாக இவர்கள் ஒரு காலத்தில் சத்தியம்
செய்து கொடுத்தார்கள். அவர்கள் உனக்கு உண்மையாக நடப்பார்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். இவர்களிடம்
உள்ள சைன்யம் வெகு சொற்பம் என்பது உனக்குத் தெரியாதா? வடக்கேயுள்ள சைன்யம் ஆதித்த கரிகாலனுடைய
தலைமையில் இருக்கிறது. தென்திசைச் சேனையோ கொடும்பாளூர் வேளாரின் தலைமையில் இருக்கிறது...."
"தாயே! என் கட்சியை ஆதரிக்கும் சிற்றரசர்கள் எந்த நேரத்திலும் தலைக்குப் பதினாயிரம்
வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வரக்கூடியவர்கள்."
"சைன்யம் ஒரு பக்கம் இருக்கட்டும். மக்களைப் பற்றி என்ன? சோழநாட்டு மக்கள் சுந்தர
சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா! இன்றைக்கு
நீயே பார்த்தாய். இந்தப் பழையாறை நகருக்கு இன்று அருள்மொழிவர்மனோ, ஆதித்த கரிகாலனோ
வந்திருந்தால் மக்கள் எப்படித் திரண்டு கூடி வரவேற்றிருப்பார்கள்? இந்த ஊர் மக்கள் ஒரு காலத்தில்
உன்னிடமும் அன்புடனே தான் இருந்தார்கள். பழுவேட்டரையர்களுடன் நீ உறவு பூண்டதிலிருந்து
உன்னை மக்கள் வெறுக்கவே தொடங்கி விட்டார்கள்...."
"தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின்
அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள், சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு
செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!"
"மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட
உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிம
ானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது.
அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை!..."
இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும்
ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக் குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித
கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பயங்கரப் பேரொலியாகக்
கேட்டது.
"மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன்
முதலாவது அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வௌியே சென்று, என்ன விஷயம் என்றும் தெரிந்து வருகிறேன்.
அதுவரையில் நீ இங்கேயே இரு!" என்றாள் அன்னை.
பக்க தலைப்பு
இருபத்திரண்டாம் அத்தியாயம்
"அது என்ன சத்தம்?"
ஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன்
நான் தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான் அவ்விடத்தில் நிற்கவே, வந்தியத்தேவனும் தயங்கி
நின்றான். "அப்பனே! ஏன் நிற்கிறாய்! இளைய பிராட்டி வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறார்.
படகில் ஏறியதும் 'இளவரசர் வந்து விட்டார்; பத்திரமாய் இருக்கிறார்', என்ற நல்ல சமாசாரத்தை முதலில்
சொல்! உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே! நான் திரும்பிப்
போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோம். அதை
மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால்
எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு, வந்த வழியாக விரைந்து
திரும்பிச் சென்றான்.
வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பெரும் விய
ப்பு ஏற்பட்டது. இவன் எப்படி எல்லா விவரங்களையும்
தெரிந்துகொண்டிருக்கிறான்! இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை! வெறும் ஊகமா? அல்லது
எல்லாம் அறிவானா? ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி என்றும், பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் இரண்டு வகை உண்டு;
ஒற்றர்களிலும் அப்படி இரு வகை உண்டு போலும். நான் அவசரத்துக்கு ஒற்றன் ஆனேன்; ஆகையால் அடிக்கடி
சங்கடத்தை வருவித்துக் கொள்கிறேன். இந்த வைஷ்ணவன், பரம்பரை ஒற்றன்போலும்; அதனால் ஒரு விதப்
பரபரப்புமில்லாமல் சாவதானமாகத் தன் வேலையைச் செய்துவருகிறான். ஆனால் யாருக்காக இவன் வேலை
செய்கிறான்? இவன் தன்னைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மைதானா?
இவ்விதம் யோசித்துக்கொண்டே ஓடை நீர்க் கரைக்கு வந்த வந்தியத்தேவன், ஓடத்திலிருந்த
இளவரசியின் முகத்தைப் பார்த்தான். ஆழ்வார்க்கடியானை மறந்தான். தான் போய்வந்த காரியத்தை
மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான். ஆகா, இந்தப் பெண்ணின் முகம் தன்னைவிட்டுச்
சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கவில்லை. கனவிலும் நனவிலும், புயலிலும் மலையிலும், காட்டிலும் கடல்
நடுவிலும் தன்னுடன் தொடர்ந்து வந்தது. ஆயினும் என்ன விந்தை! நேரில் பார்க்கும்போது இந்தப்
பெண் முகத்தின் அழகு எதனால் அதிகப்பட்டுக் காண்கிறது! ஏன் தொண்டையை வந்து அடைக்கிறது!
நெஞ்சில் ஏன் இந்தப் படபடப்பு?
சுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில்
ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது.
வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.
"நிமித்தக்காரா! இளவரசர்களுக்கு மட்டுந்தான் நீ நிமித்தம் சொல்வாயா? எனக்கும்
சொல்வாயா? நிமித்தம் எப்படிச் சொல்வாய்? வானத்துக் கிரஹங்களையும், நட்சத்திரங்களையு
் பார்த்துச்
சொல்வாயா? அல்லது காக்கை, குருவிகளைப் பார்த்துச் சொல்வாயா? கை ரேகை பார்த்துச் சொல்வாயா?..
முகக்குறி பார்த்துத்தான் சொல்வாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஏன் என் முகத்தையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இப்படிச் செய்தாயானால் உயர்குலத்துப் பெண்கள் யாரும் உன்னிடம் நிமித்தம்
கேட்க முன்வர மாட்டார்கள்!" என்று அரசிளங்குமரி கூறியது வந்தியத்தேவன் செவிகளில் இனிய கிண்கிணி
நாதமாகக் கேட்டது.
"அம்மணி! நிமித்தம் பார்ப்பதற்காகத் தங்கள் முகத்தைப் பார்க்கவில்லை. எங்கேயோ,
எப்போதோ பார்த்த முகம்போல் இருக்கிறதே என்று ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றேன்..."
"தெரியும், தெரியும்! நீ மிக்க மறதிக்காரர் என்று எனக்குத் தெரியும். நான்
ஞாபகப்படுத்துகிறேன்.
ஏறக்குறைய நாற்பது நாளைக்கு முன்னால், குடந்தை ஜோதிடர் வீட்டில் முதன் முதலாகப் பார்த்தீர்.
பிறகு, அன்றைக்கே அரசலாற்றங்கரையில் பார்த்தீர்."
"அம்மணி! நிறுத்துங்கள்! தங்களை வார்த்தையை நான் நம்ப முடியவில்லை. நாற்பது நாளைக்கு
முன்புதானா தங்களை முதன்முதலாகப் பார்த்தேன்! நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவில்லை? நூறு
நூறு ஜென்மங்களில் நூறாயிரம் தடவை தங்களைப் பார்க்கவில்லையா? மலை அடிவாரத்தில் பார்க்கவில்லையா?
குன்றின் உச்சியிலே பார்க்கவில்லையா? நீர்ச்சுனையின் ஓரத்தில் பார்க்கவில்லையா? அடர்ந்த காட்டின்
மத்தியில் கொடும் புலியினால் துரத்தப்பட்டு ஓடி வந்த தங்களை நான் காப்பாற்றவில்லையா? வேல் எறிந்து
அந்தப் புலியைக் கொல்லவில்லையா? அப்போது நான் காட்டில் வேட்டையாடித் திரிந்த வேடுவனாயிருந்தேன்!
விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள அழகழகான கிளிகளை வலை போட்டுப் பிடித்துக் கொண்டுவந்து
கொடுத்தேன். தாங்கள் அந்தக் கிளிகளை என்னிடமி
ுந்து வாங்கிக்கொண்டு வானத்தில் பறக்க விட்டு
விட்டுக் கலகலவென்று சிரித்தீர்கள். ஒரு சமயம் நான் மீன் பிடிக்கும் வலைஞனாயிருந்தேன்.
தூரதூரங்களிலுள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் சென்று, வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், மரகத மீன்களைப்
பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தேன். அவற்றைத் தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு,
அவை துள்ளி நீந்திச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தொலை தூரங்களிலுள்ள கடல்களுக்குச் சென்று
கடலின் ஆழத்தில் மூச்சுப்பிடித்து முழுகி முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து
கொடுத்தேன். தாங்கள் அவற்றைக் கையினால் அளைந்து பார்த்துவிட்டு, ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளை
அழைத்து அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளிலே முத்துக்களையும், பவழங்களையும் சொரிந்து அனுப்பினீர்கள்.
முந்நூறு வருஷங்கள் வளர்ந்த இலந்தை மரத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் இலந்தைக்
கனியைக் காத்திருந்து பறித்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தேன். அதைத் தாங்கள் வளர்த்த நாகணவாய்ப்
பறவைக்குக்
கொடுத்து, அது கனியைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்துக் களித்தீர்கள். தேவலோகத்துக்குப்
போய் அங்குள்ள மந்தார மலர்களையும், முன் பொழிந்தேன். 'எங்கள் கொல்லை வேலியில் பூக்கும் முல்லை
மலரின் அழகுக்கும் மணத்துக்கும் இவை ஈடாகுமா?' என்று சொல்லிவிட்டீர்கள். தேவேந்திரனிடமிருந்து
அவன் அணியும் ஒப்பில்லா ரத்தின ஹாரத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஒழுக்கமற்ற
இந்திரன் அணிந்த மாலையை நான் கையினாலும் தொடுவேனா?' என்று சொல்லிவிட்டீர்கள்.
கைலாசத்துக்குச் சென்று, பார்வதி தேவியின் முன்னால் தவங்கிடந்து, தேவி பாதத்தில் அணியும் சிலம்பை
வாங்கிக் கொண்டுவந்தேன். தங்கள் பாதங்களில் சூட
டி விடுவதாகச் சொன்னேன். "ஐயையோ! ஜகன்
மாதாவின் பொற்பாதச் சிலம்பு என் காலிலே படலாமா? என்ன அபசாரம்? திரும்பக் கொண்டுபோய்க்
கொடுத்துவிட்டு வா!" என்றீர்கள். போர்க்களத்துக்குச் சென்று அறுபத்துநாலு தேசங்களின் அரசர்களையும்
வென்று, அவர்களுடைய மணிமகுடங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து தங்கள் முன் காணிக்கை
செலுத்தினேன். தாங்கள், அந்த மணிமகுடங்களைக் கால்களால் உதைத்துத் தள்ளினீர்கள். "ஐயோ!
தங்கள் மெல்லிய மலர்ப் பாதங்கள் நோகுமே?" என்று கவலைப் பட்டேன். இளவரசி! இவையெல்லாம்
உண்மையா இல்லையா? அல்லது நாற்பது நாளைக்கு முன்பு முதன்முதலாகத் தங்களை நான் பார்த்தது
தான் உண்மையா?" என்றான் வந்தியத்தேவன். அப்படியும் அவன் பேசி முடித்து விட்டதாகக் காணப்படவில்லை.
"தேவி! இன்னொரு ஞாபகம் வருகிறது. ஒரு சமயம் வெள்ளி ஓடத்தில் நாம் ஏறி, தங்கப்
பிடிப்போட்ட தந்தத் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு, வானக் கடலில் வெண்ணிலா அலைகளைத் தள்ளிக்கொண்டு,
பிரயாணம் செய்தோம்..." என்று ஆரம்பித்தான்.
"ஐயையோ! இந்த நிமித்தக்காரனுக்கு நன்றாய்ப் பைத்தியம் பிடித்துவிட்டது போலிருக்கிறது படகைத்
திருப்பிக் கரைக்குக் கொண்டு போகவேண்டியதுதான்!" என்றாள் இளவரசி.
"இல்லை, தேவி, இல்லை! சற்று முன்னால் இந்த ஓடைக் கரைக்கு வந்துசேரும் வரையில் என் அறிவு
தௌிவாகத்தானிருந்தது. இல்லாவிட்டால், இந்தப் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பதற்கு நான் உபாயம்
கண்டுபிடித்திருக்க முடியுமா? மதுராந்தகத் தேவரிடம் நிமித்தக்காரன் என்று சொல்லி, அதை நம்பும்படியும்
செய்து, அரண்மனைக்கு வந்திருக்க முடியுமா? வைத்தியர் மகனிடமிருந்துதான் அவ்வளவு எளிதில் தப்பி
வந்திருக்க முடியுமா? இந்தப் படகில் ஏறித் தங்கள் திருமுகத்தைப் பார்த்தவுடனேதான், மது உண்டவனைப்போல்
மதிமயங்
ிப் போய்விட்டேன்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.
"ஐயா, அப்படியானால் என் முகத்தைத் தாங்கள் பார்க்க வேண்டாம். இந்த ஓடையின் தௌிந்த
நீரைப் பாரும். நீல வானத்தைப்பாரும், ஓடைக்கரையில் வானளாவி வளர்ந்திருக்கும் மரங்களைப் பாரும்,
அரண்மனை மாடங்களைப் பாரும். பளிங்குக்கல் படித்துறைகளைப் பாரும். இந்த ஓடையில் பூத்திருக்கும் ஆம்பல்
மலர்களையும், செங்கழுநீர்ப் பூக்களையும் பாரும். அல்லது இந்தச் செவிட்டு ஓடக்காரனின் முகத்தையாவது
சற்றே பாரும். அவ்விதம் பார்த்துக்கொண்டே தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; காயா, பழமா என்று
சொல்லும். இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர்,
யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதலாவது நடந்தவை
எல்லாவற்றையும் சொல்லும்!" என்று இளவரசி கூறினாள்.
அதற்கு வந்தியத்தேவன், "தேவி! தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக
முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா? இளவரசரை
இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு
அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப்
பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து
வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சிறுவன் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை
விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் இளவரசரைக் காப்பாற்றுவதற்காக நூறாயிரம் தடவை வேண்டுமென்றாலும்
தங்கள் உயிரைக்கொடுக்கக்கூடியவர்கள்!" என்றான்.
அச்சமயம் தூரத்தில் பயங்கரமான, குழப்பமான, அநேகாயிரம் குரல்களின் ஒருமித்த ஓலம்போன
்ற
சத்தம் எழுந்தது. சத்தம் வந்த திசையை அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் பயத்தோடும் கவலையோடும்
நோக்கினார்கள்.
"அது என்ன ஆரவாரம்? கோபங்கொண்ட ஜனத்திரளின் கூக்குரல் போல் அல்லவா இருக்கிறது?"
"ஆம்; அப்படித்தான் தோன்றுகிறது!" என்றான் வந்தியத்தேவன்.
பக்க தலைப்பு
இருபத்து மூன்றாம் அத்தியாயம்
வானதி
கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை
நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள். பகற்பொழுது சென்று மாலை
மங்கிவரும் போது மனதில் ஒரு சோகமும் ஏற்படுகிறது; கூடவே ஓர் அமைதியான இன்பமும் தோன்றுகிறது.
ஆதவனின் இறுதிக் கிரணங்கள் மெலிந்து மறைந்த பிறகு, இரவின் இருள் நாலாபுறமும் கவிந்து வருகிறது.
இதனால் மனத்தில் தோன்றும் சோர்வைப் போக்கிக் கொள்வதற்கு வானத்தை நோக்கினால் போதும்,
கண்ணிமைக்கும் நேரத்தில் வானமாதேவி ஏற்றிவைக்கும் கோடானுகோடிச் சுடர் விளக்குகள் எவ்வளவு ஆனந்தத்தை
அளிக்கின்றன! சூரியனுடைய தகிக்கும் ஜோதியைப்போல் அவை கண்களைக் கூசச் செய்வதில்லையே? கண்களால்
அவற்றைப் பார்த்து இன்புறலாமே? சந்திரனும் உதயமாகி விட்டாலோ, கேட்கவேண்டியதில்லையே. முத்துச்
சுடர்போன்ற முழுமதியின் நிலவில் உலகம் பூரிக்கிறது; உள்ளமும் உடலும் பூரிக்கின்றன. மாலை வந்ததும்
தாமரைகள் கூம்புவது என்னவோ உண்மைதான். ஆனால் விண்மீன்களுடன் போட்டியிடுவதுபோல் மல்லிகை
மொட்டுக்கள் வெடித்து மலர்ந்து அவற்றின் நறுமணத்தினால் வானமும் பூமியும் போதை கொள்கின்றன அல்லவா?
அஸ்தமித்ததும் பட்சிகளின் குதூகலத்வனிகள் ஓய்ந்து விடுகின்றன என்பது உண்மைதான். ஆனால்,
அதோ தேவாலயத்திலிருந்து வரும் சேமக்கலச் சத்தமும், நாதஸ்வர வாத்தியத்தின
இன்னிசையும், இப்போது
எவ்வளவு மதுரமாயிருக்கின்றன! மணிமாடங்களின் மீதிருந்து மென்மையான விரல்கள் மீட்டும் வீணையும்,
யாழும் எத்தகைய இன்ப கீதத்தை எழுப்புகின்றன!
கொடும்பாளூர் இளவரசி வானதியின் அழகில் இப்படியே சோகத்தின் சாயலும், களிப்பின்
மெருகும் இனம் தெரியாதபடி கலந்து போயிருந்தன. அழகுக்கு ஒத்தபடி அவளுடைய சுபாவமும் இரு
வகைப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவளைப் பார்த்தால் துயரமே உருக்கொண்ட சந்திரமதியையும்,
சாவித்திரியையும் போல் இருக்கும். இன்னொரு சமயம் பார்த்தால் அரம்பையும், ஊர்வசியும் தேவருலகில்
இப்படித்தான் ஆடிப்பாடிக்கொண்டு காதலில் களித்த மாதவியைப் போல் ஒரு சமயம் அவள் இன்ப உயிர்ச்
சிலையாக விளங்குவாள். மற்றொரு சமயம் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் சோகவடிவம் இதுதானோ
என்று கருதும்படி இருக்கும். ஒரு சமயம் மாலை வடிவேலரின் மையலுக்கு உள்ளாகி இதயம் கலந்து நின்ற
வள்ளியைப்போல் தோன்றுவாள். இன்னொரு சமயம் தேவலோகமெல்லாம் களிக் கூத்தாடும்படி கார்த்திகேயருக்கு
மாலையிட்டு மகிழ்ந்த தெய்வயானை இவளேதான் என்று எண்ணி மகிழும்படி ஆனந்த உருவாகி விளங்குவாள்.
சேர்ந்தாற்போல் பல தினங்கள் வானதியின் முகத்தில் ஒரு சிறு புன்னகையைக்கூடக் காணமுடியாது.
வேறு சில நாட்களில் அவள் ஓயாது சிரித்துக் கொண்டேயிருப்பாள். அந்தச் சிரிப்பின் ஒலி கோடானு
கோடி நுண் துளிகளாகிக் காற்று வௌியில் கலந்து உலகத்தையே ஆனந்தப் பரவசப்படுத்தும்.
வானதியின் இத்தகைய இருவகைச் சுபாவத்துக்குக் காரணம் அவளுடைய பிறந்த வேளையும் வளர்ந்த
காலமும் என்று ஊகிக்கலாம். அன்னையின் கர்ப்பத்தில் அவள் இருந்தபோது, கொடும்பாளூர் சிறிய வேளார்,
கொடிய போர்களில் ஈடுபட்டிருந்தார். வெற்றிச் செய்தியும், தோல்விச் செய்தியும் மாறி மாறி வந்து
கொண்டிருந்தன.
இவை அவளுடைய அன்னையின் உள்ளத்தில் களிப்பையும், துயரத்தையும் மாற்றி மாற்றி
உண்டாக்கின. வானதி பிறந்த சில காலத்துக்குப் பிறகு அவளுடைய அன்னை காலமானாள்.பிறகு
வானதியை அவளுடைய தந்தை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தார். ஆனால் இதுவும் நீடித்திருக்கவில்லை.
வீராதி வீரராகிய வானதியின் தந்தை அருமை மகளை முன்னிட்டுக்கூட அரண்மனையிலேயே உட்கார்ந்திருக்க
விரும்பவில்லை. வீரபாண்டியன் ஓடி ஒளிந்த பிறகும், அவனுக்குத் துணைவந்த ஈழத்துப் படைகளைத் துரத்திக்
கொண்டு இலங்கை சென்றார். அங்கே போர்க்களத்தில் உயிர் நீத்து, சரித்திரத்தில் 'ஈழத்துப் பட்ட
சிறிய வேளார்' என்ற பட்டப்பெயர் பெற்றார்.
பின்னர், வானதியின் வாழ்க்கை சிலகாலம் ஒரே துயரமாயிருந்தது. தாயை இழந்து,
தகப்பனாரால் வளர்க்கப்பட்ட பெண்கள்தான் அந்தச் சோக உணர்ச்சி எத்தகையது என்பதை அறிய முடியும்.
பெற்றோரில்லாப் பெண் கொடும்பாளூர் அரண்மனையில் சீராட்டி வளர்க்கப்பட்டாலும், அவளுடைய உள்ளத்தில்
தந்தை பெற்றிருந்த இடத்தை யாரும் பெற முடியவில்லை. அதற்குப் பலரும் பலவிதமாக ஆறுதல் கூறினார்கள்.
'வருந்தாதே குழந்தை! உன் தந்தை உன் வயிற்றில் வந்து மீண்டும் வீரமகனாகப் பிறப்பார்; உலகம்
வியக்கும்படியான அற்புத வீரச்செயல்களைப் புரிவார்" என்று ஒருவர் கூறினார்.
இவ்வார்த்தைகள் வானதியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து வேரூன்றின. அருமைத் தந்தையைப்
பிரிந்ததினால் ஏற்பட்ட துயரத்தையும், சோர்வையும் கற்பனை மகனைப் பற்றி எண்ணுவதிலே போக்கிக்
கொள்ள முயன்றாள். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தாள்.
தனக்குப் பிறக்கும் குமரன் எப்படி எப்படி இருப்பான். எந்தெந்த மாதிரி நடப்பான், எத்தகைய
வீரச்செயல்களைப் புரிவான் என்ற மனோராஜ்யத்தில் நாள் கணக்காக மூழ்கி விடுவாள். கற்பனைக் கண்ணின்
மூலமா
க, அந்த வீரமகன் தூர தூர தேசங்களுக்குச் சென்று மாபெரும் யுத்தங்களில் வெற்றி பெறுவதைப்
பார்த்தாள். வேகமாகத் திரும்பி வந்து அவன் அடைந்த வெற்றியின் காணிக்கைகளை எல்லாம் தன்னுடைய
காலடியில் சமர்ப்பிப்பதைப் பார்த்தாள். அவன் மணிமுடி தரித்து வீர சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப்
பார்த்தாள். ராஜாதி ராஜாக்கள் வந்து அவனுக்குக் கப்பம் கட்டி அடிபணிவதைப் பார்த்தாள். அவனுடைய
திருமுகத்தைக் கண்டதும் ஜனத்திரள்கள் பூரண சந்திரனைக் கண்ட மாகடலைப் போல் பொங்கி எழுந்து,
அலைமோதி ஆரவாரிப்பதைப் பார்த்தாள். நூறு நூறு கப்பல்களின் வீரர்களை ஏற்றிக் கொண்டு அவன்
கடல்களைக் கடந்து சென்று அப்பாலுள்ள நாடுகளிலே வெற்றிக்கொடி நாட்டுவதைப் பார்த்தாள். "அன்னையே!
நான் அடைந்துள்ள இத்தனை பெருமைக்கும் காரணம் நீயே அல்லவோ!" என்று தன்னிடம் அடிக்கடி அவ்வீரமகன்
வந்து கூறுவதையும் கேட்டாள்.
அந்த அறியாத பேதைப் பெண் சிலசமயம் தன் ஆலிலை வயிற்றைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்
கொள்வாள். தன் கற்பனை மகன் ஒரு வேளை வயிற்றில் வந்துவிட்டானோ என்றுதான். பழந்தமிழ் நாட்டில்
ஆண்கள், பெண்கள் அனைவரும் பாரதக் கதையைக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். குந்திதேவி குழந்தை பெற்ற
விதத்தைப் பற்றியும் கேட்டிருந்தார்கள். அதுபோல் எந்தத் தெய்வம் வந்து தனக்குக் குழந்தை வரம் கொடுக்கப்
போகிறது என்று எண்ணி எண்ணி அவள் வியப்பதுண்டு. அப்போதெல்லாம் யாரையும் மணந்து கொள்வதைப்
பற்றியே அவள் எண்ணவில்லை. வயது அந்த பிறகு, உலகம் ஓரளவு தெரிந்த பிறகு, கணவன் ஒருவனை
மணந்தேயாக வேண்டும் என்றும், அவன் மூலமாகவே குழந்தைப் பேற்றை அடைய வேண்டும் என்று அறிந்தாள்.
அப்போதும் கணவனைப்பற்றி அதிகமாக மனோராஜ்யம் செய்யவில்லை.
பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு அவளுடைய வாழ்க்கையிலும், மனப
்போக்கிலும் மாறுதல்
ஏற்பட்டது. குந்தவைதேவியின் பெருமிதம் கலந்த அன்பு அவளுக்கு ஆறுதலும், குதூகலமும் அளித்தன.
குந்தவையின் நாகரிக நடை உடை பாவனைகளும் சாதுர்யப் பேச்சுக்களும் வானதியை அவள் இதுவரை அறியாத
வேறொரு உலகத்துக்குக் கொண்டு போயின. அவளைப் போலவே பழையாறை அரண்மனைக்கு வந்திருந்த மற்ற
அரச குலப்பெண்களின் அசூயை அவளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. அவர்கள்
அசூயைப்படும் படியாகத் தன்னிடம் ஏதோ மகிமை இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்மனம் உணர்த்தியது.
அதே சமயத்தில் அவளுடைய இயற்கையாகப் பிறந்த இனிய சுபாவமும் பெருந்தன்மையும் எல்லோருடனும்
நல்லபடியாக நடந்துகொள்ள அவளைத் தூண்டின. இத்தனைக்கும் நடுவில், வானதி தனக்குப் பிறக்கப்போகும் வீர
மகனைப் பற்றி இன்பக் கனவு காண்பதை மட்டும் விட்டுவிடவில்லை.
இதற்கிடையிலேதான் அவள் பொன்னியின் செல்வரைப் பார்க்கும்படி நேர்ந்தது. அதன் பலனாக
அவளுடைய மனக்கோட்டைகள் எல்லாம் பொலபொல என்று தகர்ந்து விழுந்தன. கணவனை அடைந்த பின்னர்தான்
மகனைப் பெற முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். கணவன் யாராயிருந்தாலும், எப்படிப்பட்டவனாயிருந்தாலும்
சரிதான் என்ற அலட்சியப்பான்மை அதற்கு முன்பு அவள் அடி உள்ளத்தில் இருந்தது.ஆனால், இந்தப் பொல்லாத
மனத்தை என்ன செய்வது? இது சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரிடமல்லவா போய்விட்டது!
ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் 'என் பெண்ணை மணந்து கொள்!' என்று கெஞ்சிக் கூத்தாடக்கூடிய பெருமை
வாய்ந்தவர் அல்லவா அவர்! அத்தகையவர் தன்னைத் திரும்பியும் பார்ப்பாரா? அவரை மணந்துகொள்ளும்
பாக்கியத்தைப் பற்றி அவளால் கனவுகூடக் காணமுடியாதே? இளவரசரிடம் இந்தப் பேதை மனம் சென்றபிறகு,
இன்னொருவரை மணந்து கொள்வதுதான் எப்படிச் சாத்தியம்! ஆகையா
், தன் வயிற்றில் பிறக்கபோகிற
வீரகுமாரனைப் பற்றி இத்தனைக் காலமும் அவள் கட்டி வந்த மனக்கோட்டைகள் எல்லாம் சிதறிப் போகத்தானே
வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்க, அவளுடைய உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. மறுபடியும்
பழையபடி சோக வடிவானாள். அவளுடைய மனத்தை அறிந்துகொண்ட இளைய பிராட்டி அவளிடம் விசேஷ அன்பும்
ஆதரவும் காட்டினாள். தன்னாலியன்றவரையில் வானதியை உற்சாகப்படுத்த முயன்றாள். பொன்னியின்
செல்வரிடம் அவளுடைய உள்ளம் சென்றது அப்படியொன்றும் பிசகான விஷயமில்லையென்றும், நடக்கமுடியாத
காரியமும் அல்லவென்றும் குறிப்பாக உணர்த்தி வந்தாள். குடந்தை ஜோதிடர் வானதிக்குப் பிறக்கப்போகும்
மகனைப்பற்றிக் கூறியது, அவளுடைய உள்ளக் கனலுக்குத் தூபம் போட்டு வளர்த்தது; அவளுடைய மனோராஜ்யம்
மேலும் விரிவடைந்து கொண்டே வந்தது. மனச்சோர்வும் குதூகலமும் மேலும் துரிதமாக மாறி மாறி
ஏற்பட்டன. ஏக்கத்தினால் ஏற்பட்ட மனவேதனை பொறுக்க முடியாமலிருந்தது போல், மகிழ்ச்சியினால்
ஏற்பட்ட கிளர்ச்சியையும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இரண்டும் மிதமிஞ்சிப் போன போது
மயக்கம் போட்டு விழுந்தாள்; இயற்கையருளிய இந்த மயக்கமருந்து சாதனத்தினால் அவள் தன் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டு வந்தாள்.
தஞ்சைக்குச் சென்றிருந்த போது வானதி பார்த்த பராந்தகச் சக்கரவர்த்தி நாடகமும், அன்றிரவு
அவள் கேட்ட அபயக் குரலும், கண்ட பயங்கரக் காட்சியும் அவளுடைய மனக்குழப்பத்தை அதிகமாக்கின.
கொடும்பாளூர் வம்சத்துக்கும், பழுவூர் சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த தீராத பகையின் அளவை அவள்
அன்று நன்கு அறிந்து கொண்டாள். பழுவூர்க்காரர்கள் சோழ நாட்டில் அப்போது அடைந்திருந்த செல்வாக்கின்
அளவையும் தெரிந்து கொண்டாள். இளவரசர் அருள் மொழிவர்மர் விஷயத்தில் தன் ம
ோரதம் ஈடேறப்
பழுவேட்டரையர்கள் அநுமதிப்பார்களா? அவர்கள் அநுமதித்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள்
சும்மாயிருப்பார்களா? பழுவூர் இளையராணி சம்மதிப்பாளா? அவளுடைய செல்வாக்கும் சக்தியும் உலகம்
அறிந்தவை. நந்தினியை நினைக்கும் போதெல்லாம் அழகிய நாகம்பாம்பின் நினைவு வானதிக்கு வந்தது.
இளையபிராட்டியின் பேரில் அவளுடைய பகைமையைப்பற்றி அறிந்து கொண்டிருந்தாள். அது தன் பேரிலும்
பாயும் அல்லவா? ஏன், பொன்னியின் செல்வரையே அந்த விஷநாகம் தீண்டினாலும் தீண்டக்கூடும்! நள்ளிரவில்
நோயாகப் படுத்திருக்கும் சக்கரவர்த்தியின் முன்னால் நந்தினியையொத்த வடிவம் ஒன்று நின்றதே! அது
உண்மையில் நந்தினிதானா? சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பீதி நிறைந்த குரலில் ஓலமிட்ட காரணம்
என்ன? இளையபிராட்டி இதைப்பற்றி யெல்லாம் ஏன் தன்னிடம் எதுவும் பேசுவதற்கு மறுக்கிறாள்! ஆமாம்!
இளையபிராட்டியின் மனமும் மாறிப்போயிருக்கிறது. தன்னிடம் முன்பெல்லாம் போல் அவ்வளவு கலகலப்பாகப்
பேசுவதில்லை. அடிக்கடி தன்னை விட்டு விட்டுத் தனிமையை நாடிப் போய்விடுகிறார். அவரை ஏதோ
பெருங்கவலை பீடித்திருக்கிறது. ஒரு வேளை பொன்னியின் செல்வரைப் பற்றிய கவலைதானோ என்னவோ?
அதனாலேதான் தன்னிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு மறுக்கிறார் போலும்!
இன்றைக்குக்கூடத் திடீரென்று இளையபிராட்டி காணாமல் போய்விட்டார். அவர் இல்லாத
சமயங்களில் இந்தப் பெண்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள்? என்ன கொட்டம் அடிக்கிறார்கள்? கவலையென்பதை
அறியாதவர்கள். எது எப்படிப் போனாலும் அவர்களுடைய கும்மாளத்துக்குக் குறைவு ஒன்றும் கிடையாது.
அவர்களுடைய கேலிப் பேச்சுக்களை வானதியினால் எப்போதுமே சகித்துகொள்ள முடிவதில்லை. அதுவும் இந்த
இரண்டு மூன்று தினங்களாக ஒரே சோகக் கடலில் வானதி ஆழ்ந்திருந்தபடியால் அவர்
ளுடைய வீண் பேச்சுக்கள்
அவளுடைய காதில் நாராசமாக விழுந்தன. இளையபிராட்டி எங்கேதான் போயிருப்பார் என்று தேடிக் கொண்டு
புறப்பட்டாள். மூத்த மகாராணியின் அரண்மனையில் ஏதோ சபை கூடியிருக்கிறதென்றும், அங்கே
போயிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டாள். ஆகையால் அந்த அரண்மனைக்குச் சென்றாள்.வானதி
போவதற்குள், அங்கே சபை கலைந்துவிட்ட்டது. பெரிய மகாராணியும் அவருடைய செல்வப் புதல்வர்
மதுராந்தகரும் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தாள். எதனாலோ இந்தச் செய்தி
வானதிக்கு மேலும் கவலை உண்டாக்கியது. அங்கிருந்து மறுபடியும் புறப்பட்டாள்.அரண்மனை வாசலில்
ஜனத்திரளின் பெரும் இரைச்சல் கேட்டது. விஷயம் இன்னதென்று தெரியவில்லை. இளையபிராட்டியை உடனே
பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது. அரண்மனையில் சேடிப் பெண்களை ஒவ்வொருத்தியாக
விசாரித்தாள். சற்று முன்னால் ஆழ்வார்க்கடியன் என்னும் வீர வைஷ்ணவனுடன் இளைய பிராட்டி அந்தரங்கமாகப்
பேசிக்கொண்டிருந்ததாகவும், பிறகு அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கிச் சென்றதாகவும், ஒரு சேடி
கூறினாள். இளைய பிராட்டி தனிமையை நாடிச் செல்லும் சமயங்களில் யாரும் வந்து தொந்தரவு செய்வதை
இப்போதெல்லாம் அவர் விரும்புவதில்லை. ஆகையால் ஓடைப் பக்கம் இளையபிராட்டியைத் தேடிக்கொண்டு,
போகலாமா வேண்டாமா என்று வானதி தயங்கினாள். அச்சமயம் வாரிணி என்னும் மங்கை ஓட்டமாக
ஓடிவந்தாள்.
"பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கிவிட்டாராம்!" என்ற பயங்கரச் செய்தியைச்
சொல்லிவிட்டு அலறி அழுதாள்.மற்றப் பெண்களும் இதைக் கேட்டு 'ஓ' வென்று கதற தொடங்கினார்கள்.
வானதிக்கோ முதலில் எவ்வித உணர்ச்சியும் உண்டாகவில்லை. சும்மா நின்றவளை மற்றப் பெண்கள் உற்று
நோக்கினார்கள்.
"அடிப்பாவி! உன்னுடைய துரதிஷ்டத்தினால் தா
் இளவரசர் கடலில் மூழ்கினார்!" என்று அவ்வளவு
கண்களும் அவளை நோக்கி இடித்துச் சொல்வதுபோல் காணப்பட்டன. வானதியினால் அதற்குமேல் பொறுக்க
முடியவில்லை. அங்கு நிற்கவும் முடியவில்லை. அரண்மனைத் தோட்டத்து ஓடையை நோக்கி ஓடினாள்.
ஓடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது வானதியின் உள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது. "இளவரசர்
கடலில் மூழ்கிவிட்டார்" என்ற வார்த்தைகளின் பொருள் அவளுக்கு விளங்கியது. அதனால் ஏற்பட்ட
அதிர்ச்சியை மீறிக்கொண்டு மற்றோர் எண்ணம் மேலேழுந்தது. சென்ற சில தினங்களாத் தண்ணீரைப்
பார்க்கும் போதெல்லாம் அதில் இளவரசரின் முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கரையில் நின்று
பார்க்கும் போதெல்லாம் அவருடையே முகம் தத்ரூபமாகத் தண்ணீரில் தோன்றும். தொடுவதற்குப் போனால்
மறைந்து விடும். அதன் காரணம் என்னவென்பது வானதிக்குப் புலனாயிற்று. இளவரசர் கடலில் மூழ்கியபோது
என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்; என்னை அழைத்துமிருக்கிறார். அதை அறியாமல் பாவி நான்
கரையிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்! ஆஹா! என்ன தவறு செய்து விட்டேன்!
போனதை நினைப்பதில் இனிப் பயனில்லை. இனிச் செய்யவேண்டியது என்ன? பேதைப் பெண்ணே!
இனிச் செய்யவேண்டியதைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா! யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? அரண்மனைத்
தோட்டத்தை அடுத்துள்ள ஓடை அரசலாற்றில் கலக்கிறது. அரசலாறு கடலில் போய்ச் சங்கமமாகிறது.
கடலின் அடியில் காத்திருக்கிறார் இளவரசர். எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். கடலின்
அடியில் முத்துக்களாலும், பவளங்காலும் ஆன அற்புத மாளிகையில் எனக்காகக் காத்துக்
கொண்டிருக்கிறார். அவரைச் சந்திக்கப் போகாமல் இந்த உலகத்தில் எனக்கு வேறென்ன வேலை?...
யாருக்காக இங்கே நான் இருக்க வேண்டும்?...
இவ்வாறு வானதி தீர்மானம் செய்
ததும் வானதியின் உள்ளத்தில் ஒருவித அமைதியே
உண்டாகிவிட்டது; அவளது பரப்பரப்பு அடங்கிவிட்டது; துயரம் நீங்கிவிட்டது; கவலை தீர்ந்துவிட்டது.
நேரே ஓடைக் கரைக்குச் சென்றாள். பளிங்குக் கல்லினாலான படிக்கட்டுகளில் இறங்கி நின்றாள்; சுற்று
முற்றும் பார்த்தாள். அதோ தூரத்தில் படகு ஒன்று வருவது தெரிந்தது. அதில் இருப்பவர்
இளையபிராட்டிதான்.அவருடன் இருக்கும் ஆடவன் யார்? குடந்தை சோதிடர் வீட்டில் முதலில் சந்தித்து,
இலங்கைக்கு ஓலை எடுத்துச் சென்ற வாலிபன் போலத் தோன்றுகிறது.இளவரசரைப் பற்றிய செய்தியைக்
கொண்டு வந்தவன் அவன்தான் போலும்! அதனாலேதான் அவனை இளையபிராட்டி தனியாக அழைத்துப் போகிறார்;
விவரங்களைக் கேட்டு, அறிந்திருக்கிறார்.எனக்குத் தெரிந்தால் கஷ்டப்படுவேன் என்று என்னை
விட்டுவிட்டுப் போய் இருக்கிறார். அவர் வந்துவிட்டால் என் இஷ்டப்படி செய்ய முடியாது. ஏதாவது
சமாதானம் சொல்லப்பார்ப்பார்; ஆறுதல் கூறப்பார்ப்பார், நான் இளவரசரைப் போய்ச் சேர்வதைக் கட்டாயம்
தடுத்துவிடுவார். ஆனாலும், அவரிடம் சொல்லாமல், கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொள்ளாமல்
போவது நியாயமா? தாய் தந்தையற்ற இந்த அனாதைப் பெண்ணிடம் இத்தனை அன்பாக இருந்தாரே! அவருக்கு ஒரு
நன்றி வார்த்தையாவது சொல்ல வேண்டாமா?... முடியாது! இனி ஒரு கணமும் காத்திருக்க முடியாது! இதோ
தண்ணீரில் அவர் முகம் தெரிகிறது. இதோ அவருடைய முழு உருவமும் பொலிகிறது. என்னை அவர்
அழைக்கிறர்; புன்னகை செய்து கூப்பிடுகிறார். "உன்னை நான் மணம் புரிந்து கொள்வதற்கு எல்லாத் தடைகளும்
நீங்கி விட்டன, வா!" என்று அழைக்கிறார். இன்னும் ஏன் தாமதம்?.. ஆகா! தலை ஏன் இப்படிச்
சுற்றுகிறது? பாழும் மயக்கம் வருகிறதா, என்ன? மயக்கம் வந்தால் பாதகமில்லை. கரையில் விழாமல் இந்த
ஓடைத் தண்ணீரில் விழுந்தால் போதும்!...
வானத
ியின் மனோரதம் நிறைவேறியது. அவள் தண்ணீரிலேதான் விழுந்தாள். கொதித்துக்
கொண்டிருந்த உடம்பு இனிதாகக் குளிர்ந்தது, இதயம் குளிர்ந்தது. கீழே கீழே கீழே போய்க்
கொண்டிருந்தாள். எத்தனை காலம் போனாள் என்று சொல்லமுடியாது. சில வினாடி நேரமாகவும் இருக்கலாம்;
நீண்ட பல யுகங்களாகவும் இருக்கலாம்.
ஆம், கடலின் அடியிலுள்ள அற்புத லோகத்துக்கு அவள் வந்து விட்டாள். நாகலோகம் என்பது
இதுதான் போலும்! ஆகா எத்தகைய அழகிய மாளிகைகள்! எத்தனை அடுக்கு மெத்தைகள் முடிவில்லாமல், சிகரம்
எங்கே இருக்கிறதென்று தெரியாமல் அல்லவா, இம்மாளிகைகள் உயர்ந்து விளங்குகின்றன! இங்கு உள்ள
வௌிச்சம் எதனால் இவ்வளவு குளிர்ந்து மனோரம்மியமாக இருக்கிறது? தண்ணீருக்குள் புகுந்து வருவதால்
ஒளிக்கிரணங்களும் குளிர்ந்திருக்கின்ற போலும்! ஒளி எங்கிருந்து வருகிறது? மாளிகைச் சுவர்களிலிருந்தே
வருகிறது போலிருக்கிறது! ஆம். அதில் வியப்பில்லைதான்! தங்கத்தினாலும், முத்துகளாலும், வைர
வைடூரியங்களாலும், நாக சர்ப்பங்களின் சிரோரத்தினங்களாலும் ஆன விசித்திர மாட மாளிகைகள்
குளிர்ந்த வௌிச்சத்தைப் பரப்புவது இயல்புதானே?
அதோ கூட்டமாக வருகிறவர்கள் யார்? அவர்களுடைய தேகங்கள் எப்படிக் காந்தி
மயமாயிருக்கின்றன? முகங்களிலே தான் என்ன தேஜஸ்? இவர்களெல்லாம் தேவலோகத்து ஸ்திரீ புருஷர்களைப்
போல் அல்லவா தோற்றமளிக்கிறார்கள்? நாம் வந்திருப்பது ஒரு வேளை நாகலோகமில்லையோ?
தேவலோகத்துக்கு வந்துவிட்டோமோ!...
பிறகு, கனவுக்குள் ஒரு கனவைப்போல சில நிகழ்ச்சிகள் அதிவேகமாக நடந்தேறின. சிங்கார
அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த மணிமண்டபம் ஒன்றுக்கு வானதியை அவர்கள் அழைத்துச் சென்றார்கள்.
மண்டபத்தில் மத்தியில் பொன்னியின் செல்வர் தமது பொன் முகத்தில் புன்னகை பொலிய நின்று வானதியை
வரவேற
்றார். தேவ துந்துபிகள் முழங்க, மணிகளும் மலர்களும் பொழிய, மங்கள கோஷங்கள் ஒலிக்க,
இளவரசரும் வானதியும் மாலை மாற்றித் திருமணம் புரிந்து கொண்டார்கள். அந்த ஆனந்தத்தின் மிகுதியைத்
தாங்க முடியாமல் வானதி மூர்ச்சையாகி விழுந்தாள். வெகுநேரம் நினைவின்றிக் கிடந்த பிறகு இருகரங்கள்
அவளைத் தூக்கி எடுத்தன. அக்கரங்கள் பொன்னியின் செல்வருடைய திருக்கரங்கள் என்று முதலில் வானதி
கருதினாள். அவர்தான் தன்னைத் தூக்கியெடுத்து, வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டு மூர்ச்சைத்
தௌிவிக்கிறார் என்று எண்ணினாள். ஆனால், கைகளிலே வளையல் தட்டுப் பட்டதும் சிறிது ஐயம் உதித்தது.
"வானதி! வானதி! இப்படிச் செய்துவிட்டாயே!" என்ற குரலும் பெண்குரலாக ஒலித்தது. மிகமிகப்
பிரயத்தனம் செய்து வானதி சிறிதளவு கண்ணிமைகளைத் திறந்து பார்த்தாள். குந்தவையின் முகம் அவள்
கண்ணில் பட்டது. "அக்கா! அக்கா! என் கலியாணத்துக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? தங்களைக்
காணவில்லையே?" என்று வானதியின் வாய் முணுமுணுத்தது.
பக்க தலைப்பு
இருபத்துநான்காம் அத்தியாயம்
நினைவு வந்தது!
வானதி மீண்டும் ஒரு முறை நினைவற்ற நிலையை அடைந்தாள். அவளுடைய கண்களும் மூடிக்
கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாகச் சுய நினைவு வரத் தொடங்கியது. நாகலோகத்திலோ,
தேவலோகத்திலோ, தான் இளவரசரை மணந்தது வெறும் பிரமை என்பதை உணர்ந்தாள். இளவரசரைப் பற்றிய
துயரமான செய்தி கேட்டதையும், அதன் பேரில் தான் ஓடைக் கரையில் வந்து நின்றதையும், தலை சுற்றி
நீரில் விழுந்ததையும் நினைவுபடுத்திக் கொண்டாள். இந்த நினைவுகள் அவளுக்கு எல்லையற்ற ஏமாற்றத்தை
அளித்தன; நெஞ்சில் சுருக்கென்று ஈட்டி பாய்வது போன்ற வலியையும் அளித்தன. கண்களைத் திறக்க
முயன்றாள், ஆனால் முடியவில்லை. தன்னைத் தண்ணீரிலிருந்து
ூக்கிக் கரை சேர்த்தது யாராயிருக்கும்? இளைய
பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் படகில் வந்து கொண்டிருந்த குந்தவை தேவியாகத்தான்
இருக்க வேண்டும். தன்னை எதற்காக அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்? ஒரேயடியாக முழுகித் தொலைந்து
போகும்படி விட்டிருக்கக் கூடாதா? கண்களைத் திறந்து பேசுவதற்கு முடிந்தவுடனே, "ஏன் என்னைக்
காப்பாற்றினீர்கள்?" என்று இளைய பிராட்டியுடன் சண்டை பிடிக்க வேண்டும்! தம்முடைய அருமைத் தம்பியிடம்
அவருடைய அன்பு இவ்வளவுதானா?...
இதோ இளையபிராட்டி பேசுகிறார். என்ன சொல்கிறார்? யாரிடம் சொல்கிறார்?
கேட்கலாம்.
"மயக்கத்தில் ஏதேதோ பிதற்றுகிறாள்! இந்த மட்டும் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்!
நம்முடைய
படகு மட்டும் இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்திருந்தால்? இவள் ஓடையில் விழுந்தது நம் கண்ணில் படாமற்
போயிருந்தால்? அதை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது!"
"நாம் பாராமல் விட்டிருந்தால், ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிருக்கும் இந்தப் பெண்ணின்
வாழ்க்கை இனிதாக முடிந்திருக்கும். தங்களால் உயிர் பிழைத்த கொடும்பாளூர் இளவரசி வாழ்க்கையில்
எவ்வளவோ மனவேதனைப்படவேண்டியிருக்கும்..."
ஆகா! இது யார்? நம்மிடம் இவ்வளவு அநுதாபத்துடன் பேசுகிறது? ஆம், அந்த வாலிபர் தன்;
குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரசலாற்றங்கரையிலும் பார்த்த அந்த வீர வாலிபர் தான்! இளவரசர் கடலில்
முழுகிய செய்தியையும் அவரே கொண்டு வந்திருக்க வேண்டும். இன்னும் இவர்கள் என்ன பேசிக்கொள்ளப்
போகிறார்கள்? கேட்கலாம், கண்ணைத் திறக்க முடியாவிட்டாலும் காது நன்றாய்க் கேட்கிறதல்லவா!'
"இது என்ன, இவ்வளவு நெஞ்சிரக்கம் இல்லாமல் பேசுகிறீர்? ஆண்பிள்ளைகளின் மனதே கல்
மனதாகத்தான் இருக்குமோ?" என்றது இளையபிராட்டியின் குரல்.
"அப்படி
் கல் நெஞ்சன் என்று தீர்ப்புக் கூறும் படியாக இப்போது நான் என்ன சொல்லி விட்டேன்?"
"இந்தப் பெண் இறந்திருந்தால் நல்லது என்று சொன்னீரே, அது போதாதா? எவ்வளவு சிரமம்
எடுத்து இவளை நான் வளர்த்து வருகிறேன் தெரியுமா?..."
"இவள் பிதற்றிய வார்த்தைகளைத் தாங்கள் கேட்டீர்களா?"
"உம்முடைய செவிகளில் என்ன விழுந்தது?"
"இளவரசரை மணந்து கொள்வது பற்றி ஏதோ சொன்னதாகக் காதில் விழுந்தது..."
"ஆம், நினைவு தெரியாத மயக்கத்திலே கூட அவளுடைய வாய் அப்படி முணுமுணுத்தது.
இளவரசர் மீது ஆசை அவள் உள்ளத்தில் அப்படி வேரூன்றியிருக்கிறது."
"அந்த ஆசை இந்தப் பெண்ணுக்கு நல்லதல்ல! அதனால் துன்பமும், ஏமாற்றமுந்தான் ஏற்படும்."
"ஏன் அவ்வாறு சொல்கிறீர்? இவளைக் காட்டிலும் இளவரசருக்கு ஏற்ற உயர்குலப் பெண் வேறு
யார்? புராதனமான கொடும்பாளூர் வீரவம்சத்தைப் பற்றி உமக்குத் தெரியாதா?"
"நன்றாய்த் தெரியும். நான் நினைப்பது ஒன்று; தாங்கள் சொல்வது இன்னொன்று. இந்தப் பெண்
எவ்வளவு உயர்குலமாயிருந்தால் என்ன? இவள் மனத்திலுள்ள சபலம் நிறைவேறப் போவதில்லை..."
"கட்டாயம் நிறைவேறியே தீரும். அது இவள் மனத்தில் உள்ள சபலம் அன்று. என்னுடைய
மனோரதம்; நான் செய்து இருக்கும் தீர்மானம்."
"தங்கள் தீர்மானமாயினும், இந்த விஷயத்தில் நிறைவேறாது."
"ஏன் மீண்டும் அவ்விதம் சொல்கிறீர்? இளவரசர் நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில்
பத்திரமாயிருக்கிறார் என்று சற்றுமுன் நீ கூறியது உண்மைதானே?"
ஆகா! இது என்ன இன்பமான செய்தி? இளவரசர் பத்திரமாயிருக்கிறாரா? நாகைப்பட்டினம்
சூடாமணி விஹாரத்தில் இருக்கிறாரா? இந்தச் செய்தியைக் கேட்க இந்தச் செவிகள் கொடுத்து
வைத்திருந்தனவே? ஓடை நீரில் முழுகிச் சாகாமல் நான் உயிர் பிழைத்தது எவ்வளவு நல்லதாய்ப்
போயிற்று! இளையபிராட்டிக
்கு எத்தனையோ விதத்தில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதுவும்
ஒன்று இப்போது சேர்ந்தது. ஆனால் ஐயோ! இது என்ன மேலே இவர் சொல்லும் செய்தி? செவியில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறதே!'
"அம்மணி! இளவரசர் பத்திரமாயிருக்கிறார் என்பது உண்மைதான். அதனால் இவளுடைய
ஆசைநிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? இளவரசர் இந்தப் பெண்ணை மணந்து கொள்ளமாட்டார் என்று
நான் நினைக்கிறேன்..."
"நீர் எதை வேணுமானாலும் நினைக்கலாம். இந்த உலகில் நான் இட்ட கோட்டைத் தாண்டாமல்,
என் பேச்சைத் தட்டாமல் நிறைவேற்றக்கூடிய ஓர் ஆண்மகன் இருக்கிறான். அவன்தான் என் தம்பி
அருள்மொழிவர்மன்!"
"இளவரசி! அத்தகையவன் நானும் ஒருவன் இருக்கிறேன்..."
"பின்னர் என்ன எனக்குக் குறைவு? என்னுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு என்ன தடை?
பழுவேட்டரையர்கள் இதற்குக்கூடக் குறுக்கே வருவார்களா, என்ன...?"
"அது எனக்குத் தெரியாது. தங்களிடம் இளவரசருக்கு எல்லையற்ற அன்பு உண்டு என்பதை நான்
அறிந்திருக்கிறேன்.வேறு எந்தக் காரியத்திலும் தங்கள் வார்த்தையைக் கேட்பார். அவருக்கு இராஜயம்
ஆளுவதில் சிறிதும் இஷ்டமில்லை. என் கண் முன்னால் இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்று மறுத்தார்.
ஆயினும் தாங்கள் வற்புறுத்தினால் இராஜ்யம் ஆளுவதற்குக்கூடச் சம்மதிப்பார். ஆனால் இந்தப் பெண்ணை
மணப்பதற்கு..."
"சம்மதிக்க மாட்டான் என்றா சொல்கிறீர்? அவ்விதம் என் அருமை தோழியை நிராகரிப்பதற்கு
அவன் இவளிடம் என்ன குறையைக் கண்டான்? நீர்தான் என்ன கண்டீர்?"
"அம்மணி! நான் இந்தப் பெண்ணிடம் ஒரு குறையும் காணவில்லை; கண்டாலும் நம்ப மாட்டேன்.
இளைய பிராட்டி அரண்மனையில் பணி செய்யும் எல்லாரிலும் கீழான சேடிப் பெண்ணும் எனக்குத் தேவ
கன்னிகைதான். இளைய பிராட்டியின் தோட்டத்தில்வாழும் முயற்குட்டி என் கண்
களுக்குத்
தேவேந்திரனுடைய ஐராவதத்துக்கும் மேலானதாகத் தோன்றும். இளவரசரும் இந்தப் பெண்ணிடம்
குறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அவருடைய மனது வேறொரு பெண்ணிடம் சென்றிருக்கலாம்
அல்லவா?..."
ஐயோ! எவ்வளவு கொடுமையான வார்த்தைகள்! இந்த வாலிபர் எதற்காக இவ்விதம் நம்முடைய
புண்பட்ட உள்ளத்தில் வேலை எடுத்துக் குத்துகிறார்?
"வாணர் குலத்து வீரரே! தாங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை. என் தம்பியைப் பற்றி
ஏன் இப்பேர்ப்பட்ட அவதூறு கூறுகிறீர்?"
"அவதூறு ஒன்றுமில்லை, அம்மணி! உண்மையைத்தான் கூறுகிறேன் கண்ணால் கண்டு, காதினால்
கேட்டதைச் சொல்கிறேன்."
"மேலே சொல்லுங்கள்! எவ்வளவு கஷ்டமான விஷயத்தைக் கேட்கவும் இப்பொழுது நான்
சித்தமாயிருக்கிறேன்."
"ஓடக்காரப் பெண் பூங்குழலி என்பவளைப்பற்றிச் சொன்னேன் அல்லவா? இலங்கைக்கு
என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தவளும் அவள்தான். இளவரசரையும் என்னையும் கடலிலிருந்து
காப்பாற்றியவளும் அவள்தான். சூடாமணி விஹாரத்துக்கு இளவரசரைப் படகில் ஏற்றிக் கொண்டு
போயிருப்பவளும் அவள்தான். சேந்தன் அமுதனை மட்டும் நம்பி இளவரசரை நான் ஒப்புவித்து வந்திருக்க
மாட்டேன். பூங்குழலியை நம்பித்தான் ஒப்புவித்திருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் உயிர் இருந்தால்
அவ்வளவையும் இளவரசருக்கு அர்ப்பணம் செய்வாள்..."
"அதனால் என்ன? ஓடக்காரப் பெண் ஓடக்காரிதானே? உலகமாளப் பிறந்தவனை மணப்பது பற்றி
அவள் கனவு காணமுடியுமா? தரையில் தத்திக் குதிக்கும் சிட்டுக் குருவி வானத்தில் உயரப்பறந்து, வட்டமிடும்
கருடனைப் பார்க்க முடியுமா?"
"ஏன் முடியாது? சிட்டுக் குருவியும் கருடனை அண்ணாந்து பார்க்கலாம்; கருடனும் சிட்டுக்குருவியைக்
குனிந்து பார்த்து ஆசைப்படலாம்."
"என் தம்பியின் மனத்தில் அப்படி ஏதேனும் எண்ணம் உ
ித்திருந்தால், அதைப் போக்குவதற்கு
நான் ஆயிற்று. கூடவே கூடாது! எத்தனையோ அபாயங்களிலிருந்து அருள்மொழிவர்மனை நான்
தப்புவித்திருக்கிறேன். இந்த ஓடக்காரியின் மோக வலையிலிருந்தும் நான் தப்புவிப்பேன்..."
"ஓடக்காரியென்றால் அவ்வளவு தள்ளுபடியா? குலமும் கோத்திரமும் அவ்வளவு முக்கியமா?
ஓடக்காரியின் உடம்பில் ஓடுவதும் சிவப்பு இரத்தந்தானே? அவளுடைய நெஞ்சும் அரண்மனையில் பிறந்த
இளவரசிகளின் நெஞ்சைப்போல் துடிப்பதில்லையா? பார்க்கப் போனால் இளவரசிகளின் அன்பில் இராஜ்ய
ஆசை முதலியவை கலந்திருக்கலாம். ஆனால், அந்த ஓடக்காரப்பெண்ணின் அன்பு மாசற்றது; புனிதமானது.
இளவரசரும் அவ்வாறுதான் நம்புகிறார். மற்றவர்கள் ஏன் குறுக்கே வந்து தடை செய்யவேண்டும்? இப்போது
வந்து, ஹூம்- என் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்து அதனுள் இருப்பதைத் தங்களுக்கு
நான் வௌியிட்டுக் காட்டமுடியுமானால்..."
"வேண்டாம், வேண்டாம். உம்முடைய நெஞ்சில் இருப்பது அப்படியே பத்திரமாயிருக்கட்டும்.
அதுதான் நல்லது. அன்பு, ஆசை, காதல் என்பவையெல்லாம் உலகில் பிறந்த மற்றவர்களுக்குச் சரிதான்.
ஆனால் இராஜ்யம் ஆளப்பிறந்தவர்களின் விஷயம் வேறு. அவர்கள் இராஜ குலத்திலேயே கலியாணம் செய்து
கொள்ள வேண்டும். மனத்தைச் சிதறவிடக்கூடாது. தவறினால் அதன்மூலம் பல தொல்லைகள் ஏற்படும். எங்கள்
குடும்பத்திலேயே அதற்குத் தகுந்த உதாரணம் இருக்கிறது. என் தந்தையின் இளம்பிராயத்தில் - இராஜ்யம்
அவருக்கு வரும் என்ற உத்தேசமே இல்லாதபோது- இப்படித்தான் காட்டில் வளர்ந்த ஒரு பெண்ணை...! ஆனால்
இதையெல்லாம் இப்போது உமக்கு நான் எதற்காகச் சொல்லவேண்டும்? இந்தப் பெண்ணுக்கும் மூர்ச்சை தௌிந்து
சுயநினைவு வந்து கொண்டிருக்கிறது கண்ணிமைகள் அசைகின்றன. வேறு ஏதேனும் சொல்வதற்கு இல
லையா?
ஈழநாட்டில் இன்னும் பல அபாயங்களுக்கு நீங்கள் உள்ளானதாகச் சொன்னீர் அல்லவா! அதைச் சொல்லுங்கள்"
"ஆம்! இளவரசி! இலங்கைச் சிம்மாசனத்தையும் மணி மகுடத்தையும் இளவரசர் மறுத்துவிட்டு வந்த
அன்று நாங்கள் அநுராதபுரத்தின் வீதிகளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கட்டிடத்தின் முன்பகுதி
இடிந்து விழுந்தது. ஒரு கணநேரம் நாங்கள் அங்கே தாமதித்திருந்தால் எங்கள் தலையில் விழுந்திருக்கும்.
உயிரோடு சமாதி ஆகியிருப்போம். அச்சமயத்தில் ஒரு பெண்மணி திடீரென்று அங்கே தோன்றினாள்.
சமிக்ஞை செய்து இளவரசரை அழைத்தாள்..."
"கடவுளே! அங்கேயும் ஒரு பெண்தானா உங்களைக் காபாற்றுவதற்கு ? அந்தப் பெண் யார் ?"
"அவள் யாரோ எனக்குத் தெரியாது. ஆனால் இளவரசருக்கு முன்னால் பழக்கமுள்ளவளாகத்
தோன்றியது... வீண் சந்தேகத்துக்கு ஆளாக வேண்டாம். அம்மணி! அந்த அம்மாள் பிராயம் முதிர்ந்தவள்..."
"எவ்வளவு பிராயம் இருக்கும்?"
"இளவரசரின் அன்னையாக இருக்கக் கூடியவள். அதோடு காது செவிடு, வாயும் ஊமை!"
"என்ன? என்ன இன்னொருதரம் சொல்லுங்கள்! "
"பிறவிச் செவிடும் ஊமையுமான ஒரு மூதாட்டி... அவள் பிராயம் நாற்பத்தைந்துக்கு மேல்
இருக்கும்..."
"ஐயா! அப்படி ஒரு மூதாட்டியை ஈழநாட்டில் பார்த்தீரா? அவளைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.
அவளுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒன்றும் தெரியாதா? அவள் எங்கே பிறந்தவள்".
"ஈழநாட்டை அடுத்துக் கடலில் ஒரு தீவில் பிறந்தவள்...."
இளவரசி குந்தவைதேவி அளவில்லாத பரபரப்பை அடைந்து "ஐயா! இன்னும் சொல்லுங்கள்!
பார்ப்பதற்கு அவள் எப்படியிருக்கிறாள்?" என்றாள்.
"அம்மணி! அவளுடைய தோற்றத்தில் ஓர் அதிசயத்தைக் கண்டேன். அதைச் சொல்வதற்கே
எனக்குத் தயக்கமாயிருக்கிறது."
"தயக்கம் வேண்டாம்! சீக்கிரம் சொல்லுங்கள்."
"சோழ நாட்டில
நான் பார்த்த ஒரு பெண்ணைப் போலவே அவள் இருந்தாள்; வயது மட்டுந்தான்
அதிகம். ஆடை ஆபரணங்கள் பூணாமல் தலைவிரிகோலமாயிருந்தாள். மற்றபடி அதே முகம்! அதே தோற்றம்.
உண்மையில் நான் ஒரு நிமிஷம் ஏமாந்து போய்விட்டேன்."
"ஐயா, அப்படிப்பட்ட பெண் - இங்கே உள்ளவள் யார்?"
"இளவரசி! தங்களால் ஊகித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லையா?"
"நானா? இந்தப் பெண் வானதியா? தஞ்சை அரண்மனையில் உள்ள என்னுடைய அன்னையரா?"
"நீங்கள் குறிப்பிட்ட யாரும் இல்லை."
"பழுவூர் இளையராணி நந்தினியா?"
"ஆம், நந்தினிதான்!"
"கடவுளே! அப்படியானால், நான் சந்தேகித்தது உண்மை தான்."
"என்ன சந்தேகித்தீர்கள்?"
"விஷ நாகத்தைவிடக் கொடியவள் என்று எண்ணி நான் வெறுத்தவள் உண்மையில் என் தமக்கையாக
இருக்கலாமோ என்று சந்தேகித்தேன். அது நிஜமென்று தாங்கள் சொல்வதிலிருந்து தெரிந்தது. விதியின்
கொடுமையே கொடுமை. இதிலிருந்து குலம், கோத்திரம் தெரியாத ஒரு பெண்ணை அரச குலத்தைச்
சேர்ந்தவர் மணப்பது எவ்வளவு பிசகு என்று தெரிகிறது."
"அம்மணி! நான் அவ்விதம் குலம் கோத்திரம் தெரியாதவன் அல்ல. எங்கள் மூதாதையர் முந்நூறு
வருஷங்களாகச் செந்தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்களைச் சிறையில்
அடைத்தார்கள். இன்றைக்கு எனக்கு இராஜ்யமில்லாத போதிலும் என் கையில் வாள் இருக்கிறது; என் தோளில்
வலிமை இருக்கிறது; என் நெஞ்சில் தைரியமிருக்கிறது..."
"ஐயா! தங்கள் பெருமைகளைக் கொஞ்சம் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். உடனே செய்வதற்குப்
பல காரியங்கள் இருக்கின்றன. உம்முடைய உதவி இன்னமும் எனக்குத் தேவை. அளிப்பீர் அல்லவா?"
"எனக்கு ஆயிரம் உயிர் இருந்தால் அவ்வளவையும் தங்களுக்குக் கொடுக்கச் சித்தமாயிருப்பேன்."
"ஓடக்காரப் பெண் பூங்குழலிக்கு நீர் உடன் பிறந்தவர் போலிருக்கிறத
. நல்லது; அந்தப் பேச்சு
இப்போது வேண்டாம். இதோ, இந்தப் பெண் கண்ணைத் திறக்கப்போகிறாள்..."
ஆம்; இதற்குள் வானதிக்குப் பூரண நினைவு வந்துவிட்டது. உடம்பிலும் சக்தி பிறந்துவிட்டது.
மனத்தில் பலப்பல யோசனைகள் உதித்தன. இளவரசரிடம் அந்த ஓடக்காரப் பெண்ணின் அன்பைவிடத் தன்னுடைய
அன்பு அதிகமானது என்பதை நிரூபிக்கும் வரையில், தான் உயிரோடிருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அத்துடன் தஞ்சை அரண்மனையில் சக்கரவர்த்தி படுத்திருந்த அறையில் அன்றொரு நாள் இரவு, தான் கண்ட
காட்சியும், கேட்ட புலம்பலும் நினைவுக்கு வந்தன! அவற்றின் பொருளும் ஒருவாறு விளங்கத் தொடங்கிவிட்டது.
வானதி கண் விழித்ததும் இளையபிராட்டி, "என் கண்ணே! உனக்கு இப்போது எப்படியிருக்கிறது?"
என்று அன்போடு கேட்டாள்.
"எனக்கு ஒன்றுமில்லை. அக்கா! தங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேனே என்பதை
நினைத்தால்தன் சங்கடமாயிருக்கிறது" என்றாள்.
அச்சமயத்தில் ஆழ்வார்க்கடியான் பிரவேசித்து, "நானும் தொந்தரவு கொடுக்கத்தான்
வந்திருக்கிறேன். தேவி! அரண்மனை வாசலில் ஒரே ஜனக்கூட்டமும் குழப்பமாயிருக்கிறது! இளவரசர்
கடலில் முழுகிவிட்டது பற்றி ஜனங்கள் ஒரே ஆத்திரமாயிருக்கிறார்கள். தாங்கள் உடனே வந்து சமாதானம்
சொல்லாவிட்டால் விபரீதம் நேரலாம்" என்றான்.
பக்க தலைப்பு
இருபத்தைந்தாம் அத்தியாயம்
முதன்மந்திரி வந்தார்!
பழையாறை நகரின் வீதிகள் அன்றுவரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன.
அத்தொன்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப்
போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிகர்களும், வாலிபர்களும், சிறுவர்களும் கூட்டம்
கூட்டமாகச் சென்றார்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும்; பௌத்தர
களும், சமணர்களும் அக்கூட்டத்தில்
கலந்திருந்தார்கள். கடும் விரதங்கள் கொண்ட காலாமுகர்கள் சிலரும் அக்கூட்டத்தில் ஆங்காங்குக்
காணப்பட்டார்கள். மக்களில் அநேகர் அழுது புலம்பிக் கொண்டு சென்றார்கள் பலர் பழுவேட்டரையர்களை
வாயாரச் சபித்துக் கொண்டு சென்றார்கள்.
வாலிபர்கள் சிலர் ஆங்காங்கே கையில் கழிகளுடன் காணப்பட்டார்கள். அவர்கள் அவ்வப்போது
ஒருவருடைய கழியை இன்னொருவர் தட்டி ஓசைப் படுத்திக்கொண்டு சென்றார்கள். கழி அடிபடும் ஓசை
கேட்டதும், "பழுவேட்டரையர்களின் தலையில் அப்படிப் போடு!" என்று சிலர் மெதுவாகச் சொன்னார்கள்; சிலர்
அவ்வாறு சத்தம் போட்டும் கத்தினார்கள். சத்தம் போட்டுக் கத்தியவர்களில் காலாமுகர்கள்
முக்கியமாயிருந்தார்கள்.
பழையாறையிலிருந்து முக்கியமான இராஜ மாளிகைகளின் முன் முகப்புகள் பிறைச்சந்திரன்
வடிவமாக அமைந்திருந்தன. எல்லா மாளிகைகளுக்கும் சேர்ந்து முன் பக்கத்தில் விசாலமான நிலாமுற்றம்
இருந்தது.விசேஷமான சந்தர்ப்பங்களில் பதினாயிரக் கணக்கான மக்கள் கூடி நிற்கும்படியாக அந்த நிலா
முற்றம் விசாலமாய் இருந்தது. முற்றத்தைச் சூழ்ந்து வௌிப்புறத்தில் உயரமான மதில் சுவர் இருந்தது. அந்த
மதில் சுவருக்கு மூன்று வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாசலிலும் சில அரண்மனைச் சேவகர்கள் காவல்
புரிந்தார்கள்.
திரள் திரளாக வந்து கொண்டிருந்த கூட்டம் நிலாமுற்றத்தின் மூன்று வாசல்களின் அருகிலும் வந்து
சேரத்தொடங்கியது.வினாடிக்கு வினாடி கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. செய்தி கொண்டு
வந்திருந்த இருவரையும் அவர்களை அழைத்து வந்த ஊர் சேவகர்களையும் மட்டும் அரண்மனைக் காவலர்கள்
உள்ளே விட்டார்கள். மற்றவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் வெகுநேரம் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கூட்டத்தில் எங்
ிருந்து கிளம்புகின்றன என்று தெரியாதபடி, சில குரல்கள் 'உள்ளே போங்கள்! உள்ளே
போங்கள்!' என்று கூவின. பின்னாலிருந்தவர்கள் முன்னாலிருந்தவர்களைத் தள்ளினார்கள். கடலின் அலைகள்
ஒன்றையொன்று தள்ளிக்கொண்டு வந்து கடைசியில் பேரலையைக் கரையிலேயே போய் மோதும்படி
செய்கின்றனவல்லவா? அது போலவே இந்த ஜனசமுத்திரத்திலும் நடந்தது.
முன்னாலிருந்தவர்கள் பின்னால் வந்தவர்களால் மோதப்பட்டு வாசற் காவல் புரிந்த சேவகர்களைத்
தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தார்கள். அவ்வளவுதான்! காவேரிக்கரையில் சிறிய உடைப்பு எடுத்தாலும்
வரவரப் பெரிதாகி வெள்ளம் குபுகுபுவென்று பாய்வது போல், ஜனங்கள் நிலா முற்றத்தில் தடதடவென்று
பிரவேசித்தனர். சிறிது நேரத்திற்குள் நிலா முற்றம் நிறைந்து விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள்
அங்கே சேர்ந்துவிட்டார்கள்.
இப்படி ஜனங்கள் கட்டுக்காவல்களை மீறி நிலா முற்றத்தில் புகுந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட
ஆரவாரத்தைத்தான் செம்பியன் மாதேவி மதுராந்தகனோடு பேசிக் கொண்டிருக்கையில் கேட்டார். குமாரனுடன்
வாதாடுவதை அத்துடன் நிறுத்தி விட்டு அரண்மனை மேல் மாடத்தில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார்.
தெய்வீகக்களை பொருந்திய அப்பெரு மூதாட்டியின் திருமுகத்தையும், கூப்பிய கைகளுடன் அவர் நின்ற
சாந்தமான தோற்றத்தையும் பார்த்ததும் அந்த ஜனசமுத்திரத்தின் ஆரவாரம் அடங்கியது. சில வினாடி நேரம்
அங்கே நிசப்தம் குடி கொண்டிருந்தது.
"தாயே! எங்கள் இளவரசர் எங்கே? பொன்னியின் செல்வர் எங்கே? தங்கள் கண்ணுக்குக் கண்ணான
அருள்மொழி வர்மர் எங்கே" என்று அக்கூட்டத்தில் சில குரல்கள் எழுந்தன. அவ்வளவுதான்; அந்த ஜன
சமுத்திரத்தில் முன்னை விடப் பன்மடங்கு ஆரவாரம் கிளம்பிவிட்டது.
செம்பியன் மாதேவி ஒன்றும் புரியாதவராகத் திகைத்து நின்றா
். பழையாறை மக்களின்
இதயங்களைக் கொள்ளை கொண்டிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்பதை
மட்டும் அறிந்தாள். அது என்ன ஆபத்து? எப்படி நேர்ந்தது? பழுவேட்டரையர்களே ஏதேனும் விபரீதமான
காரியம் செய்து சோழ குலத்துக்கும், மதுராந்தகனுக்கும் அழியாத பழியை உண்டாக்கி விட்டார்களோ?
இச்சமயத்தில் தஞ்சாவூர் தூதர்கள் இடித்துப் பிடித்து ஜனங்களைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து
சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த சேவகர்களில் ஒருவன், "பெருமாட்டி! இவர்கள்
தஞ்சாவூரிலிருந்து முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்!" என்றான்.
செம்பியன் மாதேவி ஜனக் கூட்டத்தைப் பார்த்துக் கை அமர்த்திவிட்டுத் தூதர்களை நோக்கி,
"என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்.
"தாயே! மிகத் துயரமான செய்தி கொண்டு வந்திருக்கும் அபாக்கியசாலிகள் நாங்கள்.
சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையிலிருந்து கோடிக்கரைக்குக்
கப்பலில் வந்து கொண்டிருந்தார்; வரும் வழியில் சுழிக்காற்றில் கப்பல் அகப்பட்டுக் கொண்டுவிட்டது.
துணையாக வந்த கப்பல் உடைந்து முழுகிவிட்டது. அதிலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இளவரசர்
கடலில் குதித்தார். பிறகு அகப்படவில்லை. கடலிலும் கடற்கரையெங்கும் தேடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
சக்கரவர்த்தியும், மலையமான் மகளாரும் இச்செய்தியைக் கேட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தங்களையும் மதுராந்தகத் தேவரையும், இளைய பிராட்டியையும் உடனே புறப்பட்டு தஞ்சைக்கு வரும்படி
சக்கரவர்த்தி எங்கள் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்!"
இவ்வாறு தூதர்கள் கூறியது செம்பியன் மாதேவியின் காதிலும் விழுந்தது. அதே சமயத்தில் ஜனக்
கூட்டத்தின் செவிகளில
ும் விழுந்தது. செம்பியன் மாதேவியின் கண்களில் நீர் தாரை தாரையாகப்
பெருகியது. அதைப் பார்த்த ஜனங்கள் மேலும் 'ஓ' என்று கதறினார்கள்.
கூட்டத்தில் முன்புறம் இருந்தவர்களில் ஒருவர், "தாயே! தாங்கள் தஞ்சை போகக்கூடாது;
இளையபிராட்டியும் தஞ்சைக்குப் போகக் கூடாது! சக்கரவர்த்தியை இங்கே வரும்படி செய்ய வேண்டும்" என்று
கூவினார்.
"பொன்னியின் செல்வர் கடலில் முழுகிவிட்டார் என்பது பொய்; பழுவேட்டரையர்கள்தான் அவரைக்
கொன்றிருப்பார்கள்!" என்றார் இன்னொருவர்.
"மதுராந்தகரும் இனித் தஞ்சைக்குப் போகக் கூடாது. இங்கேயே இருக்கவேண்டும்" என்று
இன்னொரு குரல் கேட்டது.
"இளைய பிராட்டி எங்கே? அவரை நாங்கள் பார்க்க வேண்டும்!" என்று குரல்கள் கூவின.
செம்பியன் மாதேவி தம் அருகிலிருந்த சேடிகளில் ஒருத்தியைப் பார்த்து இளவரசியை அழைத்து வரச்
சொன்னார். கீழே கூட்டத்தில் கலந்து நின்றுகொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் அதே சமயத்தில் அங்கிருந்து
நகர்ந்து சென்றான். பழையபடி குறுக்கு வழியில் விரைவாகச் சென்று குந்தவை தேவி வானதியை மூர்ச்சை
தௌிவித்துக் கொண்டிருந்த கொடி வீட்டைக் கண்டு பிடித்தான். வந்தியத்தேவனிடம் இளையபிராட்டி கூறிய
கடைசி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே சென்று அரண்மனை முற்றத்தில் நடக்கும் அமர்க்களத்தைப் பற்றி
அறிவித்தான்.
இளைய பிராட்டி வானதிக்குச் சைத்யோபசாரம் செய்யும் வேலையைப் பணிப்பெண்களிடம் ஒப்புவித்து
விட்டு, அவசரமாகக் கிளம்பினாள்.
இளையபிராட்டி குந்தவை தேவி அரண்மனை மேல் மாட முகப்பில் செம்பியன் மாதேவியின் அருகில்
நெருங்கியபோது அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைக் கவனித்தாள். அந்தக் காட்சி
குந்தவையின் கண்களிலும் கண்ணீர் பெருகச் செய்தது. இதைக் கண்ட ஜனசமூகம் மேலும் துயர
சா
கரத்தில் மூழ்கியது.
"பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கவில்லை. பழுவேட்டரையர்கள் கொன்று விட்டார்கள்.
அவர்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்!"
"சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். அவரை விடுவித்து
அழைத்து வர வேண்டும். இளவரசி கட்டளையிட்டால் இந்தக் கணமே நாங்கள் புறப்படச்
சித்தமாயிருக்கிறோம்." இவ்வாறெல்லாம் அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் இளைய பிராட்டியைப் பார்த்துக்
கூறினார்கள்.
குந்தவையின் மனம் தீவிரமாகச் சிந்தித்தது. இளவரசர் உயிரோடிருக்கிறார் என்ற உண்மையை
இப்பொழுது வௌியிடக் கூடாது. ஆனால் ஜனங்களையும் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும்.அதற்கு ஒரு வழி
தோன்றியது.
கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஜனக் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றவர்களை
இளவரசி நோக்கினாள். அதற்குள் ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அங்கே வந்து நின்று
கொண்டிருந்தார்கள். ஆழ்வார்க்கடியானைப் பார்த்து இளையபிராட்டி மேலே வரும்படி சமிக்ஞை செய்தாள்.
ஆழ்வார்க்கடியான் அவ்விதமே மேலே ஏறிச் சென்றான். அவனிடம் குந்தவை மெல்லிய குரலில் ஏதோ கூறினாள்.
ஆழ்வார்க்கடியான் ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான். இடி முழக்கம் போன்ற பெரிய குரலில்
கூறினான்: "பொன்னியின் செல்வர் இறந்திருப்பார் என்று இளைய பிராட்டியினால் நம்ப முடியவில்லை.
முன்னொரு சமயம் காவேரித்தாய் இளவரசரை ஏந்திக் காப்பாற்றியதுபோல் சமுத்திர ராஜனும் அவரைக்
காப்பாற்றியிருப்பான் என்று நம்புகிறார். நிமித்தக்காரனைக் கேட்டதில் அவனும் அப்படியே
சொல்கிறானாம். இளவரசரைத் தேடிக் கண்டுபிடிக்க இளைய பிராட்டி தக்க ஏற்பாடு செய்வார்.
உங்களையெல்லாம் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகும்படி கேட்டுக் கொள்கிறார்!"
<
BR>இதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டத்தில் ஒரு பெரிய ஆசுவாச நெடுமூச்சைப் போன்ற சத்தம்
எழுந்தது.
"நிமித்தக்காரன் எங்கே? அவன் வாயினால் நாங்களும் அந்த நல்ல செய்தியைக் கேட்கிறோம்"
என்றார் ஒருவர்.
இதுதான் சமயம் என்று வந்தியத்தேவன் தாவிக் குதித்து மேல் மாடத்துக்குச் சென்றான்.
ஆழ்வார்க்கடியான் அருகில் போய் நின்றுகொண்டு "இளவரசருக்குப் பெரிய கண்டம் நேர்ந்தது உண்மைதான்.
ஆனால் அவருடைய உயிருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லை; விரைவில் கிடைத்து விடுவார்!" என்றான்.
"உனக்கு எப்படி தெரியும்?" என்றது ஒரு குரல்.
"நான் நிமித்தக்காரன். கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்து அறிந்து கொண்டேன்;
நிமித்தங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்."
"பொய்! நீ சொல்வது பொய்! நீ நிமித்தக்காரன் அல்ல! நீ ஒற்றன்!" என்றது அதே குரல்.
வந்தியத்தேவன் அந்தக் குரலுக்கு உரியவனைக் கவனித்துப் பார்த்தான். அவன் வைத்தியர் மகன்
என்பதை அறிந்து கொண்டான்.
"பைத்தியக்காரா! என்னையா ஒற்றன் என்று சொல்லுகிறாய்? நான் ஒற்றனாயிருந்தால், யாருடைய
ஒற்றன்!" என்று கேட்டான்.
"பழுவேட்டரையர்களுடைய ஒற்றன்" என்ற வைத்தியர் மகன் பளிச்சென்று மறுமொழி கூறினான்.
"என்ன சொன்னாய்?" என்று வந்தியத்தேவன் கர்ஜித்தான்.
ஜனங்கள் கீழே நின்ற நிலா முற்றத்திலிருந்த வந்தியத்தேவன் நின்ற மேல் மாடம் பன்னிரண்டு
அடி உயரத்தில் இருந்தது. அதை அவன் பொருட்படுத்தாமல் மேல் மாடத்திலிருந்து வைத்தியர் மகன் பேரில்
பாய்ந்தான். இருவருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிற்று. சண்டை என்றால் எல்லாருக்கும், எல்லாக்
காலத்திலும் வேடிக்கை பார்ப்பதில் பிரியம் உண்டு அல்லவா?
வந்தியத்தேவனுக்கும், வைத்தியர் மகனுக்கும் சண்டை நடந்த இடத்தைச் சுற்றி இடைவௌி விட்டு
ஜனங்க
் வட்டவடிவமாக நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். மேல் மாடத்தில் இருந்தவர்கள்
கவலையுடன் அதை நோக்கினார்கள். ஜனக்கூட்டதில் பெரும்பாலோர் விஷயம் இன்னதென்று தெரிந்து
கொள்ளாமலே முன்னைவிட அதிகக் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.
இச்சமயத்தில் வாசற் பக்கத்திலிருந்து சங்கநாதமும் கொம்புகளின் முழக்கமும் கேட்டன. "முதன்
மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வருகிறார். வழிவிடுங்கள்!" என்ற குரல் முழக்கமும் கேட்டது."
அந்தப் பெருங்கூட்டத்தில் முதன் மந்திரிக்குத் தானாகவே வழி ஏற்பட்டது.
பக்க தலைப்பு
இருபத்தாறாம் அத்தியாயம்
அநிருத்தரின் பிரார்த்தனை
முதன் மந்திரி அநிருத்தரின் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த
ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன்
மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலர் இளவரசரைப் பற்றிய தங்கள்
கவலையையும் வௌியிட்டார்கள். முதன் மந்திரியும் கவலை தேங்கிய முகத்துடனேதான் தோன்றினார்.
ஆனாலும் இரு கைகளையும் தூக்கி ஜனங்களுக்கு ஆறுதலும் ஆசியும் கூறும் பாவனையில் சமிக்ஞை செய்துகொண்டு
சென்றார். அரண்மனைக் கட்டிடத்தின் முகப்பை அடைந்ததும் பல்லக்கு கீழே இறக்கப்பட்டது. முதன் மந்திரி
வௌி வந்து முதலில் மேலே நோக்கினார்.பெரிய ராணியும் இளவரசியும் அங்கே நிற்பதைப் பார்த்து,
வணக்கம் செலுத்தினார். பிறகு, துவந்த யுத்தம் நடந்த இடத்தை நோக்கினார். இவ்வளவு நேரம் தங்களைச்
சுற்றி நடப்பது ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் வந்தியத்தேவனும், பினாகபாணியும் சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்கள். ஆழ்வார்க்கடியான் இதற்குள் இறங்கிவந்து முதன் மந்திரியின் காத
ுகில் ஏதோ
சொன்னான். அவர் தம்முடன் வந்த சேவகர்களைப் பார்த்து, "அரண்மனை முற்றத்தில் கலகம் செய்யும் இந்த
முரடர்களை உடனே சிறைப்படுத்துங்கள்!" என்று கட்டளையிட்டார்; சேவகர்களுடன் ஆழ்வார்க்கடியானும் கூட்டத்தைப்
பிளந்து கொண்டு சென்றான். சண்டை போட்ட இருவரையும் சேவகர்கள் கைப்பற்றி அவர்களுடைய கைகளை
வாரினால் பிணைத்தார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் நோக்கி ஜாடை செய்யவே, அவன் தன்னைச்
சிறைப்படுத்தும்போது சும்மாயிருந்தான்.
அநிருத்தர் மேல்மாடத்துக்குச் சென்றார். அங்கு நின்றபடி ஜனங்களைப்பார்த்து, "உங்களுடைய
கவலையையும் கோபத்தையும் நான் அறிவேன். சக்கரவர்த்தியும், ராணிமார்களும் உங்களைப் போலவே
துயரத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்களுடைய கவலையை அதிகப்படுத்தும்படியான காரியம் எதுவும் நீங்கள்
செய்யவேண்டாம். இளவரசரைத் தேடுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்திருக்கிறது. நீங்கள் எல்லோரும்
அமைதியாக வீடு திரும்புங்கள்" என்று கூறினார்.
"சக்கரவர்த்தியை நாங்கள் பார்க்கவேண்டும். சக்கரவர்த்தி பழையாறைக்குத் திரும்பி
வரவேண்டும்" என்று கூட்டத்தில் ஒருவரும் கூறினார்.
"இலங்கையில் உள்ள எங்கள் ஊர் வீரர்கள் கதி என்ன?" என்று இன்னொருவர் கேட்டார்.
"சக்கரவர்த்தி தஞ்சை அரண்மனையில் பத்திரமாயிருக்கிறார். அவர் தங்கியுள்ள அரண்மனையை
இப்போது வேளக்காரப்படையினர் இரவு பகல் என்று காவல் புரிகின்றனர். கூடிய சீக்கிரத்தில்
சக்கரவர்த்தியை இந்த நகருக்கு நானே அழைத்து வருகிறேன். இலங்கையில் உள்ள நம் வீரர்களைப்
பற்றியும் உங்களுக்கு கவலை வேண்டாம்; ஈழத்துப் போர் நமக்குப் பூரண வெற்றியுடன் முடிந்து விட்டது.
நம் வீரர்கள் விரைவில் திரும்பி வந்து சேருவார்கள்!" என்று முதன் மந்திரி அறிவித்ததும் கூட்டத்தில்
பெரும் உற்ச
ாக ஆரவாரம் ஏற்பட்டது. சுந்தரசோழரையும், அன்பில் அநிருத்தரையும் வாழ்த்திக்
கொண்டு ஜனங்கள் திரும்பலானார்கள்.
முதன் மந்திரி பெரிய மகாராணியைப் பார்த்து, "தேவி, தங்களிடம் மிக முக்கியமான
விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்! அரண்மனைக்குள் போகலாமா?" என்றார். இளவரசியைத் திரும்பி
பார்த்து, "அம்மா! உன்னிடம் பிற்பாடு வருகிறேன்" என்று கூறியதும், குந்தவை தன்னுடைய இருப்பிடத்துக்குப்
புறப்பட்டாள். அவளுடைய மனத்தில் இப்போது பல கவலைகள் குடிகொண்டன. சோழ சாம்ராஜ்யத்தில்
யாராவது ஒருவரிடம் குந்தவை பயம் கொண்டிருந்தாள் என்றால், அவர் முதன் மந்திரி அநிருத்தர்தான். கழுகுப்
பார்வையுள்ள மனிதர் அவர். புறக்கண்களினால் பார்ப்பதைத் தவிர எதிரேயுள்ளவர்களின் நெஞ்சிலும்
ஊடுருவிப் பார்த்து, அவர்களுடைய அந்தரங்க எண்ணங்களை அறியும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு எவ்வளவு
தெரியும் - எவ்வளவு தெரியாது; அவரிடம் எதைச் சொல்லலாம் எதைச் சொல்லாமல் விடலாம்
என்பதைப்பற்றி இளைய பிராட்டிக்கு ஒரே குழப்பமாயிருந்தது. வாணர் குல வீரரையும், பினாகபாணியையும்
சேர்த்து அவர் சிறைப்படுத்தும்படி கட்டளையிட்டது இளவரசிக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அதை வௌிக்
காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. அந்த மாபெரும் ஜனக்கூட்டத்தின் முன்னால் வந்தியத்தேவனுக்குப் பரிந்து
பேசவும் முடியவில்லை. "என்னிடம் பிற்பாடு வரப்போகிறாராமே? வரட்டும்; ஒரு கை பார்த்து
விடுகிறேன்!" என்று மனத்தில் கறுவிக்கொண்டே தன் அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்றாள்.
செம்பியன் மாதேவி சோழ சாம்ராஜ்யத்தில் அனைவருடைய பயபக்தி மரியாதைக்கும்
உரியவராயிருந்தவர். முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் அதற்கு விலக்கானவர் அல்ல. ஆனாலும்,
அம்மூதாட்டி இச்சமயம் ஏதோ ஒருவித பயத்துடனேயே நடந்து கொண்
டார். அநிருத்தர் ஆசனத்தில் அமர்ந்த
பிறகே தாம் அமர்ந்தார்.
"ஐயா! சில காலமாக என் தலையில் இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருக்கிறது. நீரும்
அத்தகைய செய்தி ஏதேனும் கொண்டு வந்தீரா? அல்லது ஆறுதலான வார்த்தை சொல்லப் போகிறீரா?" என்று
வினவினார்.
"அம்மணி! மன்னியுங்கள்! தங்கள் கேள்விக்கு என்னால் விடை சொல்ல முடியவில்லை. நான்
கொண்டு வந்திருக்கும் செய்தியைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தைப் பொறுத்திருக்கிறது!" என்றார்
தந்திரத்திலே தேர்ந்த மாதிரி.
"பொன்னியின் செல்வனைப் பற்றிய செய்தி உண்மைதானா, ஐயா! என்னால் நம்பவே
முடியவில்லையே? அருள் மொழ்வர்மனைப் பற்றி நாம் என்னவெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம்? இந்த
உலகத்தையே ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவன் என்று நாம் எத்தனை தடவை பேசியிருக்கிறோம்?...'
"பெருமாட்டி! ஜோசியர்கள் அவ்விதம் சொல்வதாகத் தாங்கள் என்னிடம் கூறியது உண்மைதான்.
அடியேன் தங்களை மறுத்தும் பேசியதில்லை; ஒத்துக்கொண்டும் பேசியதில்லை!"
"அது போகட்டும்; இப்போது சொல்லுங்கள். பொன்னியின் செல்வனைச் சமுத்திர ராஜன்
கொள்ளை கொண்டு விட்டது நிச்சயந்தானா?"
"நிச்சயம் என்று யார் சொல்ல முடியும், தாயே! அம்மாதிரி செய்தி நாடு நகரமெங்கும்
பரவியிருப்பது நிச்சயம்."
"அது உண்மை என்று ஏற்பட்டால், இந்தச் சோழ நாட்டின் கதி என்ன? எத்தகைய
விபரீதங்கள் ஏற்படும்?"
"விபரீதங்கள் அது உண்மை என்று ஏற்படும் வரையில் காத்திருக்கப் போவதில்லையென்று
தோன்றுகிறது..."
"ஆம், ஆம்! விபரீதம் நேரிடுவதற்கு வதந்தியே போதுமானதுதான். இந்தப் பழையாறை
நகரமக்கள் இவ்வளவு ஆத்திரங்கொண்டு திரளாக அரண்மனைக்குள் பிரவேசித்ததை இதுவரையில்
நான் பார்த்ததில்லை...."
"பழையாறையில் மட்டுந்தான் இப்படி நடந்ததென்று கருத வேண்டாம்; தஞ்சாவூர் நகர
் நேற்று முதல்
அல்லோலகல்லோலமாயிருக்கிறது. வேளக்காரப் படையினர் சக்கரவர்த்தியின் அரண்மனையைவிட்டு நகர
மறுத்துவிட்டார்கள். மக்கள் கோட்டைக்குள் திரள் திரளாகப் புகுந்து பழுவேட்டரையர்களின் மாளிகைகளைச்
சூழ்ந்து கொண்டார்கள். மதங் கொண்ட யானைகளை ஜனங்கள் பேரில் ஏவி விட்டு அவர்களைக் கலைந்து
போகும்படி செய்ய வேண்டியதாயிற்று..."
"ஐயோ! இது என்ன விபரீதம்! எத்தகைய பயங்கரமான செய்தி!"
"மதுராந்தகர் பழையாறைக்கு வந்துவிட்டதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் அந்தப்
பயங்கரமான பழி அவரையும் சேர்ந்திருக்கும்..."
"ஐயா! மதுராந்தகன் எப்படி மாறிப் போயிருக்கிறான் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப்
போவீர்கள்."
"ஆச்சரியப்பட மாட்டேன், தாயே! அவை எல்லாம் எனக்குச் சில காலமாகத் தெரிந்த விஷயந்தான்."
"தெரிந்திருந்தும் அவனுடைய மனத்தை மாற்றத் தாங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லை.
இப்போதாவது யோசனை சொல்லி உதவுங்கள்."
"அம்மா! மதுராந்தகருடைய மனத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத்
தோன்றவில்லை. அவருடைய கட்சியை ஆதரித்துப் பேசவே நான் வந்திருக்கிறேன்...."
"அப்படியென்றால்? எனக்கு விளங்கவில்லை, ஐயா!"
"அம்மணி! மதுராந்தகர் இந்தச் சோழ சிங்காதனம் தமக்கு உரியது என்று கருதுகிறார்.
சக்கரவர்த்திக்குப் பிறகு தாம் இந்த இராஜ்யத்தை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறார். அது
நியாயமான ஆசை. நன்றாக அவர் மனத்தில் வேரூன்றி விட்ட ஆசை. அதைத் தடுக்க முயல்வதினால் சோழ
ராஜ்யத்துக்கு நன்மை ஏற்படாது. அதை நிறைவேற்றி வைப்பதுதான் உசிதம்..."
"ஐயோ! இது என்ன வார்த்தை? தாங்கள் கூடவா சோழ சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்யத்
துணிந்துவிட்டீர்கள்? இது என்ன விபரீத காலம்?"
"பெருமாட்டி! சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்ய நான் கனவிலும் க
ருதியதில்லை.
சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரிலேயே வந்தேன். அவர் தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளச்
சொன்னதைத்தான் சொல்கிறேன், சக்கரவர்த்தியின் காலத்துக்குப் பிறகு மதுராந்தகர் சிங்காதனம் ஏற
விரும்புகிறார். பழுவேட்டரையர்கள் அதற்காகச் சதி செய்கிறார்கள். ஆனால் சக்கரவர்த்தி இப்போது
மதுராந்தகருக்கு முடிசூட்டி விட்டுச் சிங்காசனத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார். இதற்குத் தங்கள்
சம்மதத்தைப் பெற்று வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்..."
"சக்கரவர்த்தி அவ்விதம் செய்ய விரும்பலாம். ஆனால் அதற்கு என்னுடைய சம்மதம் ஒருநாளும்
கிட்டாது. என் பதியின் விருப்பத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
கல்விக் கடலின் கரை கண்ட முதலாவது அமைச்சரே! சக்கரவர்த்தியே சொன்னாலும் தாங்கள் இந்த முறைதவறான
காரியத்தை என்னிடம் சொல்ல எப்படி வந்தீர்? சோழ சிங்காசன உரிமையைப் பற்றித் தங்களுக்கும் எனக்கு
மட்டும் தெரிந்த சில உண்மைகள் இருக்கின்றனவென்பதைத் தாங்கள் அடியோடு மறந்துவிட்டீர்களா...?"
"அம்மணி! நான் எதையும் மறக்கவில்லை. தங்களுக்குத் தெரியாத சில உண்மைகளும் எனக்குத்
தெரியும். ஆகையினாலேயே சக்கரவர்த்தியின் தூதனாகத் தங்களிடம் வந்தேன்..."
"ஐயா! தங்களுடைய மதி நுட்பமும், இராஜ தந்திரமும் உலகம் அறிந்தவை. அவற்றைப்
பெண்பாலாகிய என்னிடம் காட்ட வேண்டாம்..."
"பெருமாட்டி! தங்களிடம் நான் வாதாட வரவில்லை. என் சாமார்த்தியத்தைக் காட்டுவதற்கும்
வரவில்லை. இந்தச் சோழநாட்டைப் பேரபாயத்திலிருந்து காப்பாற்றி அருளும்படி மன்றாடிப் பிரார்த்தனை
செய்ய வந்தேன்."
"தங்கள் பிரார்த்தனையைப் பிறைசூடும் பெருமானிடம் செலுத்திக் கொள்ளுங்கள், அல்லது தங்கள்
இஷ்ட தெய்வமான விஷ்ணு மூர்த்தியிடம் பிரார்த்
தனை செய்யுங்கள்..."
"ஆம், தாயே! தாங்கள் பெரிய மனது செய்யாமற் போனால் அம்பலத்தானும், அரங்கத்தானும்தான்
இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்."
"அப்படி என்ன ஆபத்து, இந்த நாட்டுக்கு வந்துவிட்டது? மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதால்
அதை எப்படித் தடுக்க முடியும்?"
"கேளுங்கள், பெருமாட்டி! இன்றைக்கு இந்நகர மாந்தர் கொதித்தெழுந்தது போல்,
காஞ்சிபுரத்திலிருந்து இராமேசுவரம் வரை உள்ள மக்கள் இன்னும் இரண்டு மூன்று நாளைக்குள் ஆத்திரமடைந்து
கொதித்தெழுவார்கள். அத்துடன் முடிந்து விடாது, இலங்கையிலிருந்து பூதிவிக்கிரமகேசரி ஏற்கனவே, படை
திரட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார் என்று அறிகிறேன். ஆதித்த கரிகாலனுக்குச் செய்தி எட்டும்போது
அவனும் பொறுக்க மாட்டான். வடதிசைச் சைன்யத்துடன் தஞ்சையை நோக்கிக் கிளம்புவான்.
பழுவேட்டரையர்களும், மற்ற சிற்றரசர்களும் ஏற்கெனவே படை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த யுத்தத்தைப் போன்ற பயங்கரமான தாயாதிச் சண்டை இந்த
நாட்டில் நடைபெறும். தங்களுடைய உற்றார் உறவினார் எல்லாரும் அழிந்து விடுவார்கள். இதையெல்லாம்
தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா...?"
"ஐயா! மதிநுட்பம் மிகுந்த முதலாவது மந்திரியே! எனக்கு உற்றார் உறவினர் என்று யாரும் இல்லை.
மேற்கே மலை நாட்டில் அவதரித்த சங்கரர் என்ற மகாபுருருனைப் பற்றித் தாங்கள் கேள்விப் பட்டிருப்பீர்.
அந்த மகான்,
'மாதாச பார்வதி தேவி
பிதா தேவோ மகேச்வர
பாந்தவா: சிவபக்தாஷ்ச'
என்று அருளியிருக்கிறார். என்னுடைய அன்னை பார்வதி தேவி. என் தந்தை பரமசிவன்; என் உற்றார் உறவினர்
சிவ பக்தர்கள், இந்த உலகில் வேறு பந்துக்கள் எனக்கு இல்லை."
"அம்மணி! அதே சுலோகத்தில் சங்கரர் அருளியுள்ள நாலாவது வாக்கியத்தைத
் தங்களுக்கு
நினைவூட்டுகிறேன்.
'ஷ்வதேசோ புவனத்ரய:'
என்றும் அவர்தான் சொல்லியிருக்கிறார். நாம் பிறந்த தேசந்தான் நமக்கு மூன்று உலகமும், தங்களுடைய
சொந்த நாடு உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதைத் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?"
"என்னுடைய சொந்த தேசம் எனக்கு மூன்று உலகத்தையும் விட அருமையானதுதான். ஆனால் இந்தச்
சாண் அகலத்துச் சோழநாடுதான் நம்முடைய சொந்த நாடா? ஒரு நாளுமில்லை. வடக்கே கைலையங்கிரி
வரையில் உள்ள நாடு என்னுடைய நாடு. சோழ நாட்டில் இடமில்லாவிட்டால் நான் காசி க்ஷேத்திரத்துப்
போவேன். காஷ்மீரத்துக்கும் கைலசத்துக்கும் போவேன். அப்படி யாத்திரை கிளம்பும் யோசனை எனக்கு
வெகு நாளாக உண்டு. அதற்கு உதவி செய்யுங்கள்..."
"தாயே! தெற்கே திரிகோண மலையிலிருந்து வடக்கே இமோத்கிரி வரையில் உள்ள தேசம்
நமது ஸ்வதேசம் என்று ஒத்துக்கொள்கிறேன். இப்படிப் பரந்துள்ள பாரத புண்ணிய பூமிக்குத் தற்போது
பேரபாயம் நேர்ந்திருக்கிறது. பட்டாணியர்கள், துருக்கர்கள், மொகலாயர்கள், அராபியர்கள் என்னும்
சாதியினர் பொங்கிக் கிளம்பி எந்தப் புது நாட்டைக் கைப்பற்றலாம் என்று புறப்பட்டிருக்கிறார்கள்.
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு யவனர்களும், ஹ்ஊணர்களும் படையெடுத்து வந்ததுபோல் இந்தப் புதிய மதத்தினர்
இப்போது அணிஅணியாக இந்நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய மதம்
விசித்திரமான மதம். கோவில்களை இடிப்பதும் விக்கிரகங்களை உடைப்பதும் புண்ணியம் என்று
நம்புகிறவர்கள். அம்மணி! இவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பேரரசர்கள் யாரும் இப்போது வடநாட்டில்
இல்லை. சோழநாட்டு வீரர்கள் கங்கை நதி வரையில், அப்பால் இமயமலை வரையில் சென்று பெரிய பாரத
சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகிறார்கள் என்றும், கோயில்களை இடிக
்கும் கூட்டங்களைத் தடுத்து நிறுத்தப்
போகிறார்கள் என்றும், அடியேன் கனவு கண்டு வந்தேன். அந்தக் கனவை நனவாக்கத் தாங்கள் உதவி
செய்யுங்கள். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டச் சம்மதித்துச் சோழநாட்டில் தாயாதிச் சண்டை ஏற்படாமலிருக்க
உதவி புரியுங்கள்!"
இதைக்கேட்ட செம்பியன் மாதேவி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர்,
"ஐயா! ஏதேதோ இந்தப் பேதைப் பெண்ணுக்கு விளங்காத விஷயங்களைச் சொல்லி என்னைக் கலங்க அடித்து
விட்டீர்கள். இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரிடுவதாயிருந்தால், அதை சர்வேசுவரன்
பார்த்துத் தடுக்க வேண்டுமே தவிர, இந்த அபலையினால் என்ன செய்ய முடியும்? என்னுடைய கணவர் இறைவனடியைச்
சேரும் சமயத்தில் எனக்குச் சொல்லிவிட்டுப் போனதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன். அதற்கு
விரோதமான காரியம் எதுவும் நான் செய்ய மாட்டேன்!" என்றார்.
"அப்படியானால் இதுவரையில் தாங்கள் அறியாத ஓர் உண்மையை இப்போது நான்
தெரியப்படுத்தியாக வேண்டும்!" என்றார் அநிருத்தர்.
இச்சமயத்தில் மதுராந்தகன் அங்கே தடபுடலாகப் பிரவேசித்து, "அம்மா! இது என்ன நான்
கேள்விப்படுவது? அருள்மொழிவர்மனைக் கடல் கொண்டு விட்டதா?" என்று கேட்டான்.
"பெருமாட்டி! தங்கள் செல்வக் குமாரருக்கு ஆறுதல் சொல்லுங்கள். நான் சொல்ல விரும்பியதை
இன்னொரு சமயம் சொல்லிக் கொள்கிறேன்" என்று முதன் மந்திரி கூறி விட்டுக் கிளம்பினார். அவர்
வாசற்படி தாண்டியதும், "இதோ போகிறாரே, இவர்தான் என்னுடைய முதன்மையான சத்துரு. நான் இங்கிருக்கும்
போதே தங்களுக்குத் துர்போதனை செய்ய வந்துவிட்டார் அல்லவா?" என்று இளவரசர் மதுராந்தகன் கூறியது
அநிருத்தரின் காதிலும் விழுந்தது.
பக்க தலைப்பு
இருபத்தேழாம் அத்தியாயம்
குந்தவையின்
திகைப்பு
முதன் மந்திரி அநிருத்தர் குந்தவையின் அரண்மனையை அடைந்தார். இளவரசி அவரைப் பார்த்ததும்
எழுந்து நின்று நமஸ்கரித்தாள். "வீரத்திலும் குணத்திலும் சிறந்த கணவனை அடைந்து நீடுழி வாழ்வாயாக!"
என்று முதன் மந்திரி அநிருத்தர் ஆசீர்வதித்தார்.
"ஐயா! இந்தச் சமயத்தில் இத்தகைய ஆசீர்வாதத்தைத் தானா செய்வது?" என்றாள் இளவரசி.
"ஏதோ இக்கிழவனுக்குத் தெரிந்த ஆசியைக் கூறினேன். வேறு எந்த ஆசியைக் கோருகிறாய்,
அம்மா?"
"என் அருமைத் தந்தையின் உடல் நிலையைப்பற்றி எல்லாரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அருள்மொழிவர்மரைப் பற்றி நாடெல்லாம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது..."
"ஆனால் உன்னுடைய திரு முகத்தில் அதைப்பற்றிய கவலை எதையும் நான் காணவில்லையே, தாயே!"
"வீரமறக் குலத்தில் பிறந்தவள்நான். எல்லோரையும் போல் அபாயம் என்றதும் அழுதுகொண்டிருக்கச்
சொல்கிறீர்கள?..."
"ஒரு நாளும் அவ்விதம் சொல்லமாட்டேன். என்னைப் போன்ற வீரமற்ற ஜனங்களுக்கு இளவரசி
ஆறுதல் கூறும்படி தான் சொல்லுகிறேன்."
"ஆச்சாரியரே! தங்களுக்கா நான் ஆறுதல் கூறவேண்டும்? உலகமே புரண்டாலும், நிலை கலங்காத
வயிர நெஞ்சம் படைத்தவராயிற்றே தாங்கள்!"
"அப்படிப்பட்ட என்னையும் கலக்கி விடுகிறாய், அம்மா! அந்தப்புரத்துப் பெண்கள் ஆடல்
பாடல்களில் ஆனந்தமாகக் காலங்கழித்து வரவேண்டும் அதைவிட்டு இராஜாங்க விஷயங்களில் நீ
தலையிட்டதனால் எத்தகைய விபரீதம் நேர்ந்தது பார்த்தாயா!"
"ஐயோ! இது என்ன பழி? நான் எந்த இராஜாங்க விஷயத்தில் தலையிட்டேன்? என்னால் என்ன
விபரீதம் நடந்தது?"
"இன்னும் சில காலத்துக்குப் பொன்னியின் செல்வன் இலங்கையிலேயே இருக்கவேண்டும்
என்று நான் சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு விரோதமாக நீ உடனே புறப்பட்டு வரும்படி உன் தம்பிக்கு
ஓலை அனுப்ப
னாய். உன் விருப்பத்துக்கு மாறாக இந்தக் கிழவன் பேச்சை யார் மதிப்பார்கள்? அதனால்
நேர்ந்துவிட்ட விபத்தைப் பார்த்தாயா? சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் கடல் கொண்டு
விட்டது.சற்றுமுன் இந்த அரண்மனை வாசலில் ஜனத்திரள் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததைப் பார்த்தாய்.
இம்மாதிரி நாடெங்கும் இன்று குழப்பம் நடந்து வருகிறது. இந்த அல்லோலகல்லோலத்துக்குக் காரணம்
நீயல்லவா தாயே!"
"என்னுடைய ஓலையைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மன் இலங்கையிலிருந்து புறப்பட்டான் என்று ஏன்
சொல்கிறீர்கள்? பழுவேட்டரையர் இரண்டு கப்பல் நிறைய வீரர்களை அனுப்பி இளவரசரைச் சிறைப்
பிடித்துக்கொண்டு வரச் செய்தது உமக்குத் தெரியாதா?"
"தெரியும் அம்மா! தெரியும்! அத்துடனிருந்தால், இப்பொழுது பொன்னியின் செல்வனுக்கு நேர்ந்துவிட்ட
கதிக்குப் பழுவேட்டரையர்களைப் பொறுப்பாளிகளாக்கலாம். அவர்கள் அனுப்பிய கப்பல்கள் இரண்டும்
நாசமாகிவிட்டன. உன்னுடைய ஓலைக்காகத்தான் இளவரசன் புறப்பட்டான் என்று அவர்கள் சொன்னால்,
யார் அதை மறுக்க முடியும்?"
"ஐயா! தான் ஓலை அனுப்பியது தங்களுக்கு எப்படித் தெரியும்? பழுவேட்டரையர்களுக்கு எப்படித்
தெரியும்?"
"நல்ல கேள்வி கேட்டாய், அம்மா! எங்களுக்கு மட்டுந்தானா தெரியும்? உலகத்துக்கெல்லாம்
தெரியும். நீ அனுப்பிய தூதன் இலங்கையில் முதலில் நம் வீரர்களால் சிறைப்படுத்தப் பட்டான். அதனால்
இலங்கையில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். அவனோடு கோடிக்கரை வரை சென்ற வைத்தியர் மகன் மூலமாக
இந்த நாட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். நீ அந்தரங்கமாகச் செய்த காரியம் இவ்வளவு தூரம்
அம்பலமாகியிருக்கிறது! ஆகையினாலேதான் ஸ்திரீகள் இராஜாங்கக் காரியங்களில் தலையிடக் கூடாது என்று
நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்."
<
BR>
குந்தவை சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றாள் மறுமொழி என்ன சொல்வது என்று அவளுக்குத்
தெரியவில்லை. முதன்மந்திரி நன்றாகத் தன்னை மடக்கிவிட்டார். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான்
இருக்கிறது. இந்த எண்ணம் தோன்றியதும் வாணர்குல வீரன் மீது அவளுக்குக் கோபம் எழுந்தது. வீர சாகஸச்
செயல்கள் அவன் செய்யக்கூடியவன்தான். ஆனால் காரியத்தைப் பகிரங்கப்படுத்திக் கொடுத்து விட்டானே?
அவனைப் பார்த்து நன்றாகக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு எண்ணியதும் முதலாவது மந்திரியின் கட்டளையின்படி அவன்
சிறைப்படுத்தப்பட்டது நினைவு வந்தது. என்னவெல்லாம் தொந்தரவுக்கு ஆளாக்கிக் கொண்டு எனக்கும் தொந்தரவு
அளிக்கிறான்! சற்றுநேரம் சும்மா இருந்திருக்கக் கூடாதா? வைத்தியர் மகன் ஏதாவது உளறினால் அதற்காக
அவர் பேரில் மேல் மாடத்திலிருந்து பாய்ந்து சண்டை துவக்கியிருக்க வேண்டுமா?
"ஐயா! ஒரு கோரிக்கை செய்து கொள்கிறேன். பெரிய மனது செய்து நிறைவேற்றித்
தரவேண்டும்."
"தேவி! கட்டளை இடு! இந்த இராஜ்யத்தில் உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?"
"தாங்கள் அரண்மனை வாசலுக்கு வரும் சமயத்தில் இரண்டு பேர்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களைச் சிறைப்படுத்தத் தாங்கள் கட்டளையிட்டீர்கள்."
"அவர்கள் செய்தது பெருங்குற்றம். அரண்மனையில் மகாராணியின் கண் முன்னால் அவர்கள் சண்டை
தொடங்கியது பெரும் பிசகு! அதுவும் எப்பேர்ப்பட்ட சமயத்தில்? பெரும் ஜனக்கூட்டம் கொதிப்புடனிருந்த
நேரத்தில்! காரணம் தெரியாத ஜனங்கள் தாங்களும் சண்டையில் கலந்து கொண்டிருந்தால் எத்தகைய விபத்து
நேர்ந்திருக்கும்? சிறு நெருப்புப்பொறி பெருங்காட்டையே அழிப்பது போல் நாடு நகரமெல்லாம் கலகமும்
குழப்பமும் விளைந்திருக்குமே!"
"ஆம், ஐயா! அவர்கள் செய்தது பெரும் குற்றம்தான
. ஆயினும் அவர்களில் ஒருவனை மன்னித்து
விடுதலை செய்யும்படி தங்களை மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்."
"இளவரசியின் அருளுக்குப்பாத்திரமான அந்தப் பாக்கியசாலி யார்?"
"நான் இலங்கைத் தீவுக்கு அனுப்பிய தூதன் அவன்தான்."
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று!"
"எதனால் இவ்வாறு சொல்கிறீர்கள்?"
"அந்தத் தூதனை நானே சிறைப் படுத்த வேண்டும் என்றிருந்தேன். இங்கே அவனாகவே
எளிதில் அகப்பட்டுக் கொண்டான்."
"எதற்காக? என்ன குற்றத்திற்காக?"
"தாயே! அவன் பேரில் பயங்கரமான குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது."
"அது என்ன?"
"பொன்னியின் செல்வனை அவன்தான் கடலில் தள்ளி மூழ்கட்டித்து விட்டான் என்று."
"என்ன நாராசமான வார்த்தைகள்! அப்படிக் குற்றம்சாட்டுவது யார்?"
"பலரும் அவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள். இளவரசரைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்த
பார்த்திபேந்திரன் சொல்கிறான்; பழுவேட்டரையர்கள் 'இருக்கலாம்' என்கிறார்கள். நானும்
சந்தேகிக்கிறேன்."
"ஆச்சாரியரே! ஜாக்கிரதை! நான் ஒரு கொலைகாரனைப் பிடித்து அனுப்பி என்
தம்பியைக்கொன்று விட்டு வரச் சொன்னதாகவா சந்தேகிக்கிறீர்!"
"ஒரு நாளும் இல்லை, தாயே! அவனை உனது நம்பிக்கைக்குரிய தூதன் என்று
நினைத்துக்கொண்டு நீ அனுப்பினாய். அது தவறாயிருக்கலாம் அல்லவா? அவன் மாற்றார்களின்
ஒற்றனாயிருக்கலாம் அல்லவா?"
"இல்லவே இல்லை, ஆதித்த கரிகாலன் அவனை என்னுடைய உதவிக்கு அனுப்பினான். அவனைப்
பூரணமாக நம்பலாம் என்று எழுதி அனுப்பினான்..."
"ஆதித்த கரிகாலனும் ஏமாந்திருக்கலாம் அல்லவா இளவரசி? வழியில் அவன் மாற்றப்பட்டும்
இருக்கலாம் அல்லவா? நான் இங்கே வரும்போது 'ஒற்றன்' என்ற குற்றச்சாட்டு என் காதில் விழுந்தது.
மேலே இருந்தவனைப் பார்த்துக் கீழே நின்றவன் குற்றம் சாட்டினான். அது
என்ன, அம்மா?"
"மேலே நின்றவன்தான் என் தமையன் அனுப்பிய தூதன். வாணர் குலத்தில் வந்த வல்லவரையன்
வந்தியத்தேவன். கீழே நின்றவர் வைத்தியர் மகன் பினாகபாணி. வந்தியத்தேவனைப்
பழுவேட்டரையர்களின் ஒற்றன் என்று வைத்தியர் மகன் குற்றம் சாட்டினான். என்ன அறிவீனம்?"
"ஏன் இருக்கக் கூடாது, தாயே!"
"ஒருநாளும் இருக்கமுடியாது. பழுவேட்டரையர் காவலிலிருந்து அவன் தப்பி வந்தவன்.
அவனைத் திரும்பக் கைப்பற்றப் பழுவேட்டரையர்கள் எத்தனையோ ஆட்களை அனுப்பிப் பிரம்மப்
பிரயத்தனம் செய்தார்கள்..."
"அவனிடம் பழுவூர் முத்திரை மோதிரம் எவ்விதம் வந்தது தாயே?"
"அந்த வஞ்சக அரக்கி, - மாயமோகினி - விஷ நாகம் - தயவு செய்து
மன்னித்துக்கொள்ளுங்கள் - பழுவூர் இளையராணி கொடுத்துத் தான் அவனுக்கு அம்மோதிரம் கிடைத்தது."
"அது உனக்குத் தெரிந்திருப்பது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். நான் சொன்னால் நீ
நம்பியிருக்கமாட்டாய். அந்த வல்லத்து வீரன் பழுவேட்டரையர்களின் ஒற்றன் அல்ல என்பது சரி.
ஆனால் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் அல்லவா!"
"அது எப்படி முடியும்?"
"எப்படி முடியும் என்று சொல்கிறேன். வந்தியத்தேவன், - நீ இலங்கைக்கு அனுப்பிய
அந்தரங்கத்தூதன், - தஞ்சைக் கோட்டைக்கு வௌியில் பழுவூர் ராணியைப் பல்லக்கில் சந்தித்தான்.
அப்போது முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கோட்டைக்குள் பழுவூர் அரண்மனையின்
அந்தப்புரத்தில் அவளைச் சந்தித்தான். அவனைப் பழுவூர் இளைய ராணி பொக்கிஷ நிலவறையில் ஒளித்து
வைத்திருந்து வௌியே அனுப்பினாள். உன்னிடம் ஓலை கொண்டு வரப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும்.
இலங்கையிலிருந்து அவன் திரும்பி வரும்போது அரிச்சந்திர நதிக்கரையில் பாழடைந்த பாண்டியன்
அரண்மனையில் நள்ளிரவில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச
னார்கள். அதற்குப் பிறகும் பழுவூர் முத்திரை
மோதிரம் வந்தியத்தேவனிடம் இருக்கிறது.இதையெல்லாம் பற்றி நீ என்ன நினைக்கிறாய், அம்மா! உன்
தூதனிடம் இன்னமும் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறாயா?"
குந்தவையின் உள்ளம் இப்போது உண்மையாகவே குழப்பத்தில் ஆழ்ந்தது.
பக்க தலைப்பு
இருபத்தெட்டாம் அத்தியாயம்
ஒற்றனுக்கு ஒற்றன்
மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், "தாயே! ஏன்
பேசாமலிருக்கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?" என்று கேட்டார்.
"ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன சொல்லட்டும்? இன்னும் சற்று நேரம் தாங்கள்
பேசிக் கொண்டே போனால் என்னை நானே சந்தேகிக்கும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறதே!"
என்றாள் இளவரசி.
"காலம் அப்படி இருக்கிறது, அம்மா யாரை நம்பலாம், அவ்வளவு சுலபமில்லைதான்.
நாலாபுறமும் அவ்வளவு விரோதிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; அவ்வளவு மர்மமான சூழ்ச்சிகள் நடந்து
வருகின்றன!" என்றார் முதன் மந்திரி அநிருத்தர்.
"ஆனாலும் தங்களுக்குத் தெரியாத மர்மமும், தாங்கள் அறியாத சூழ்ச்சியும் இராது என்று
தோன்றியது. நான் அனுப்பிய தூதனைப் பற்றி அவ்வளவு விவரங்களையும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?"
என்று கேட்டாள் குந்தவை தேவி.
"அம்மணி! நான் ஆயிரம் கண்களும், இரண்டாயிரம் செவிகளும் படைத்தவன். நாடெங்கும்
அவை பரவியிருக்கின்றன. பழுவூர் அரண்மனையில் என் ஆட்கள் இருக்கிறார்கள். பழுவூர்
இளையராணியின் மெய்க்காவலர்களிலே எனக்குச் செய்தி அனுப்புகிறவன் ஒருவன் இருக்கிறான்.
ஆழ்வார்க்கடியானைப் போல் ஊர் ஊராக அலைந்து திரிந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் பலர்
இருக்கிறார்கள். சுற்றுப்புற நாடுகளிலோ நான் அறியாமல் எந்தக் காரியமும் நடைபெ
முடியாது என்றுதான்
எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆயினும், யார் கண்டது? என்னையும் ஏமாற்றக் கூடியவர்கள் இருக்கலாம்.
நான் அறியாத மர்மங்களும் நடைபெறலாம்!"
இவ்வாறு முதலாவது மந்திரி சொன்னபோது, பொன்னியின் செல்வன் இப்போது சூடாமணி விஹாரத்தில்
இருப்பதும் இந்தப் பொல்லாத மனிதருக்குத் தெரியுமோ என்ற எண்ணம் குந்தவைக்கு உண்டாயிற்று. அதை அவள்
வௌியிடாமல் மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள்.
"ஐயா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம்; ஆனால் அந்த வாணர் குல
வீரன் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருப்பான் என்று மட்டும் என்னால் நம்பமுடியவில்லை. அவனைத்
தயவு செய்து விடுதலை செய்து விடுங்கள்!" என்றாள்.
"நன்றாக யோசித்துப் பார், அம்மா! அந்தப் பெண் நந்தினியிடம் மாயமந்திர சக்தி ஏதோ
இருக்கிறது! சிவபக்தன் மதுராந்தகன் அவளுடைய வலையில் விழுந்து இராஜ்யத்தில் ஆசை கொண்டான்.
சம்புவரையரின் மகன் கந்தமாறன் அவளுடைய ஓலையை எடுத்துக்கொண்டு ஆதித்த கரிகாலனிடம்
போயிருக்கிறான். பழுவேட்டரையர்களின் பரம விரோதியாயிருந்த பார்த்திபேந்திரன் இன்று பழுவூர்
ராணியின் அடிமையாகி விட்டான். சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு
பகுதியும், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன்
வந்திருக்கிறான்..."
"இது என்ன அக்கிரமம்! இராஜ்யத்தை இரண்டாகப் பிரிக்கவாவது? எங்கள் குலத்து முன்னோர்கள்
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துப் பெரிதாக்கிய மகா இராஜ்யம் இது!"
"இராஜ்யத்தைப் பிரிப்பதை நீ விரும்பமாட்டாய்; நானும் விரும்பவில்லை, தாயே! பத்து நாட்களுக்கு
முன் இந்த யோசனையைச் சொல்லியிருந்தால் பார்த்திபேந்திரனும் பொங்கி எழுந்திருப்பான். இப்போது
அவனே இந்த ஏற்பாட்டுக்கு முதன்மையாக நிற்க
ிறான்..."
"இது என்ன விந்தை! அந்த பழுவூர் ராணியிடம் அப்படிப் பட்ட மாய சக்தி என்னதான் இருக்கும்?"
"இளவரசி! அதை நான் உன்னிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். நீ என்னைக் கேட்கிறாய்.
போகட்டும்; வந்தியத்தேவன் மட்டும் அவளுடைய மாய சக்திக்கு உட்படமாட்டான் என்று எதனால் நீ
அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?"
"ஐயா! காரணங் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. மனதுக்கு மனதே சாட்சி
என்பார்கள். வாணர்குல வீரன் அத்தகைய துரோகம் செய்ய மாட்டான் என்று என் மனத்தில் ஏனோ
நிச்சயமாகத் தோன்றுகிறது."
"அப்படியானால், அதை பரீட்சித்துப் பார்த்துவிடலாம், அம்மா!"
"அப்படி என்ன பரீட்சை?"
"காஞ்சிக்கு ஒரு தூதனை நாம் உடனே அனுப்பியாக வேண்டும். ஆதித்த கரிகாலனுக்கு மிக
நம்பிக்கையான ஆளிடம் அவசரமாக ஓலை கொடுத்து அனுப்ப வேண்டும்."
"என்ன விஷயம் பற்றி?"
"சற்று முன்னால், நந்தினியை விஷநாகம் என்று நீ சொல்லிவிட்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக்
கொண்டாய். உண்மையில் விஷநாகத்தைவிட அவள் பன்மடங்கு கொடியவள். இந்தச் சோழ குலத்தை அடியோடு
நாசம் செய்து பூண்டோடு ஒழித்து விட அவள் திட்டமிட்டிருக்கிறாள்."
"கடவுளே! என்ன பயங்கரம்!" என்று குந்தவை கூறியபோது அவளுடைய உள்ளக் கடல் பற்பல எண்ண
அலைகளினால் கொந்தளித்தது.
"உன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைக்கும்படி அவள்
சம்புவரையரைத் தூண்டியிருக்கிறாள். சம்புவரையர் மகள் ஒருத்தியையும், பழுவேட்டரையர் குமாரி
ஒருத்தியையும் கரிகாலனுக்கு மணம் செய்விப்பது பற்றிப் பேசிவருகிறாள். இராஜ்யத்தை இரண்டாகப்
பிரித்து ராஜிசெய்விக்கும் விஷயத்தையும் அங்கே முடிவு செய்யப் போகிறாளாம். இவையெல்லாம்
வௌிப்படையான பேச்சு. ஆனால் அவளுடைய அந்தரங்கத்தில் என்ன நோக்கம் வைத்திருக்கிறாளோ அது
ாருக்கும் தெரியாது. எல்லாம் அறிந்தவன் என்று கர்வம் கொண்டிருக்கும் என்னால் கூட அவள் நோக்கத்தை
அறிய முடியவில்லை."
"அதைப்பற்றி நாம் என்ன செய்யவேண்டும், ஐயா?"
"ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் போகாமல் எப்படியாவது தடை செய்யவேண்டும்.
அதற்குத்தான் நீயும் நானும் ஓலை கொடுத்து வந்தியத்தேவனிடம் அனுப்ப வேண்டும். நம்முடைய விருப்பத்தை
மீறிக் கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்படும் பட்சத்தில் வந்தியத்தேவனும் அவனுடன் போக வேண்டும்.
உடம்பைப் பிரியாத நிழலைப் போல் அவன் உன் தமையனைத் தொடர்ந்து காவல் புரிய வேண்டும்.
நந்தினியைத் தனியாகச் சந்திப்பதற்குக்கூட அவன் இடந்தரக் கூடாது..."
குந்தவை பெருமூச்சுவிட்டாள்; முதன் மந்திரி கூறுவது எவ்வளவு முக்கியமான காரியம் என்பதை அவள்
உணர்ந்தாள். எல்லா விவரங்களும் அறிந்து அவர் சொல்கிறாரா, அல்லது இராஜாங்க நோக்கத்தை மட்டும்
வைத்துக் கொண்டு சொல்கிறாரா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
"ஐயா! அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பது அவ்வளவு முக்கியமான காரியம் என்று ஏன்
கருதுகிறீர்கள்!" என்று கேட்டாள்.
"அம்மணி! வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் சோழகுலத்தைப் பூண்டோடு அழிக்கச் சபதம்
செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய பழுவேட்டரையருடைய பொக்கிஷத்திலிருந்து புதிய
தங்கக்காசுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் நான் இதைப்பற்றிச் சொல்ல
வேண்டுமா?"
"வேண்டாம்" என்று முணுமுணுத்தாள் குந்தவை.
சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் படுத்திருக்கும் இளவரசனின் நினைவு அவளுக்கு வந்தது.
பொன்னியின் செல்வனையும் அபாயங்கள் சூழ்ந்திருக்கலாம் அல்லவா?
"ஐயா! சோழநாட்டுக்கு விபத்துக்கு மேல் விபத்தாக வந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்
தில்
தாங்கள் முதன் மந்திரியாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான்! என் தம்பியின் விஷயமாக என்ன ஏற்பாடு
செய்தீர்கள்?" என்று கேட்டாள்.
"சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும், விஷ்ணு, ஆலயங்களிலும் இளவரசருடைய
சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன்.
அப்படியே புத்த விஹாரங்களிலும், சமணப் பள்ளிகளிலும் பிரார்த்தனை செய்யப் போகிறார்கள்.
நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில் புத்த பிக்ஷூக்கள் ஒரு மண்டலம் விசேஷப் பிரார்த்தனை
நடத்தப் போகிறார்கள். வேறு என்ன செய்யலாம் என்று நீ சொல்கிறாய்?"
சூடாமணி விஹாரத்தைப் பற்றிச் சொல்லும் போது முதன் மந்திரியின் முகத்தில் ஏதேனும் மாறுதல்
ஏற்படுகிறதா என்று குந்தவை கவனித்தாள். ஒன்றுமே தெரியவில்லை. "ஐயா! சூடாமணி விஹாரம் என்றதும்
ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. சூடாமணி விஹாரத்தின்மீது பெரிய பழுவேட்டரையர் ஏதோ கோபம்
கொண்டிருக்கிறாராம். இலங்கையில் பிக்ஷூக்கள் இளவரசருக்கு முடிசூட்டுவதாகச் சொன்ன செய்தி
வந்ததிலிருந்து அந்தக் கோபம் முற்றியிருக்கிறதாம். இளவரசர் காணாமற் போனதற்குப் பழியைச் சூடாமணி
விஹாரத்திலுள்ள பிக்ஷூக்களின் மீது சுமத்தினாலும் சுமத்துவார்கள். அதற்குத் தக்க பாதுகாப்பு, தாங்கள்தான்
செய்யவேண்டும்" என்று சொன்னாள்.
"உடனே செய்கிறேன், அம்மா! சக்கரவர்த்தியின் கட்டளையுடன் சூடாமணி விஹாரத்தைப்
பாதுகாக்க ஒரு சிறிய சைன்யத்தையே வேணுமானாலும் அனுப்பி வைக்கிறேன். வந்தியத்தேவனைக் காஞ்சிக்கு
அனுப்புவது பற்றி என்ன சொல்கிறாய்?"
"ஐயா! அவ்வளவு முக்கியமான காரியத்துக்கு வேறு யாரையாவது அனுப்புவது நல்லதல்லவா?"
"உனக்கு மட்டும் அவனிடம் நம்பிக்கையிருந்தால் அவனையே அனுப்ப விரும்புகிறேன். அவனுடைய
வீர சாகஸச் செயல்
ளைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சாத அஸகாய சூரனையே
இந்தக் காரியத்துக்கு நாம் அனுப்ப வேண்டும். இன்றைக்கு நான் அரண்மனை முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தபோது
என் கண்ணாலேயே பார்த்தேனே! அந்த வைத்தியனை என்ன பாடுபடுத்திவிட்டான். நான் குறுக்கிட்டுத்
தடுத்திராவிட்டால் வைத்தியர் மகன் யமனுக்கு வைத்தியம் செய்யப் போயிருப்பான்..."
இளைய பிராட்டி இதைக் கேட்டுப் பூரிப்பு அடைந்தாள். ஆயினும் சிறிய தயக்கத்துடன்,
"வீரனாயிருந்தால் மட்டும் போதுமா? படபடப்புக்காரனாயிருக்கிறானே? எவ்வளவு விரைவில் சண்டை
தொடங்கிவிட்டான்!"
"அதற்கு வேணுமானால் பின்னோடு என்னுடைய சீடன் திருமலையையும் அனுப்பி வைக்கிறேன்.
நிதானமான யோசனைக்குப் பெயர்போனவன் ஆழ்வார்க்கடியான்!" என்றார் அநிருத்தர்.
இளையபிராட்டி தன் மனத்திற்குள், இவருடைய உள்ளத்தில் இருப்பதைக் கடவுளும் அறிவாரோ,
என்னமோ தெரியவில்லை; ஒற்றனுக்குத் துணையாக ஒற்றன் ஒருவனையே அனுப்பி வைக்க விரும்புகிறார்
போலும்!" என்று எண்ணிக் கொண்டாள்.
பக்க தலைப்பு
இருபத்தொன்பதாம் அத்தியாயம்
வானதியின் மாறுதல்
குந்தவை வந்தியத்தேவனைச் சிறையிலிருந்து மீட்டு மறுபடியும் பிரயாணம் அனுப்புவதற்காகப்
புறப்பட்டபோது, வானதி எதிரே வந்தாள். இளைய பிராட்டியிடம் அடிபணிந்து நின்றாள்.
"என் கண்ணே! உன்னை விட்டுவிட்டு வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம் முக்கியமான
அலுவல் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். சற்று நேரம் தோட்டத்தில் சென்றிரு!
ஓடைப்பக்கம் மட்டும் போகாதே" என்றாள்.
"அக்கா! தங்களுக்கு இனி தொந்தரவு கொடுக்கமாட்டேன். கொடும்பாளூருக்குப் போக
விரும்புகிறேன், அனுமதி கொடுங்கள்!" என்றாள் வானதி.
"இது என்ன, என் த
ையில் நீயுமா இடியைப் போடுகிறாய்? உனக்கு என் பேரில் என்ன
கோபம்? உன் பிறந்தகத்தின் மீது திடீரென்று என்ன பாசம்?"
"உங்கள் பேரில் நான் கோபங் கொண்டால் என்னைப் போல் நன்றி கெட்டவள் யாரும் இல்லை.
என் பிறந்தகத்தின் பேரில் புதிதாகப் பாசம் ஒன்றும் பிறந்துவிடவும் இல்லை. தாயும் தந்தையும் இல்லாத
எனக்குப் பிறந்தகம் என்ன வந்தது? எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள காளி கோவிலுக்கு பூசைபோடுவதாக என்
தாயார் ஒருமுறை வேண்டிக்கொண்டாளாம். அதை நிறைவேற்றுவதற்கு முன் அவள் கண்ணை மூடிவிட்டாள். எனக்கு
அடிக்கடி மயக்கம் வருகிறதல்லவா? ஒருவேளை அந்த வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி என்னைப்
படுத்துகிறதோ என்னமோ?"
"அதற்காக நீ அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை; நானே சொல்லி அனுப்பி அந்த வேண்டுதலை
நிறைவேற்றச் சொல்கிறேன்."
"அது மட்டுமல்ல அக்கா! என் பெரிய தகப்பனார் இலங்கையிலிருந்து திரும்பி வந்து
கொண்டிருக்கிறார். அவர் தஞ்சையைத் தாண்டிப் பழையாறைக்கு வரமாட்டார். அவர் வரும்போது நான்
கொடும்பாளூரிலிருக்க விரும்புகிறேன். அவரிடம் இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் நேரில் கேட்க
ஆசைப்படுகிறேன்!"
"இலங்கையில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன அவ்வளவு ஆசை?"
"அது என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? என் தந்தை இலங்கைப் போரில் வீர சொர்க்கம்
அடைந்ததை மறந்து விட்டீர்களா...?"
"மறக்கவில்லை. அந்தப் பழி இப்போது நீங்கிவிட்டது..."
"முழுவதும் நீங்கியதாக எனக்குத் தோன்றவில்லை. யுத்தம் முடிவதற்குள்ளே அவசரப்
பட்டுக்கொண்டு பெரிய வேளார் திரும்புகிறார்."
"அவரை மறுபடி இலங்கைக்குப் போய்ப் போர் நடத்தும்படி சொல்லப் போகிறாயா? அதற்காகவா
கொடும்பாளூர் போக வேண்டும் என்கிறாய்?"
"அவ்வளவு பெரிய விஷயங்களைப் பற்றிச் சொல்
வதற்கு நான் யார்? நடந்ததைப் பற்றிக்
கேட்டுத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்..."
"ஆகா! உன் மனது இப்போது எனக்குத் தெரிகிறது. பொன்னியின் செல்வன் இலங்கைப் போரில்
புரிந்த வீரச் செயல்களைப்பற்றி உன் பெரிய தகப்பனாரிடம் கேட்க விரும்புகிறாய், இல்லையா?"
"அது ஒரு தவறா, அக்கா?"
"அது தவறில்லை. ஆனால் இத்தகைய சமயத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டுப்
போகிறேன் என்கிறாயே, அதுதான் பெரிய தவறு!"
"அக்கா! நானா தங்களைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன்? என்னைப்போல் தங்களுக்கு
எத்தனையோ தோழிகள், தங்கள் கருத்தை அறிந்து காரியத்தில் நிறைவேற்ற எத்தனையோ பேர்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்..."
"நீ கூட இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயா, வானதி? என் தம்பியைப் பற்றி செய்தி கேட்டு
உன்மனம் பேதலித்து விட்டது போலிருக்கிறது. அந்தச் செய்தியைப் பற்றி நீ அதிகமாய்க் கவலைப்பட
வேண்டாம்...
"தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும், அக்கா!"
"உண்மையைச் சொல்! ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா? மயக்கம் வந்து விழுந்தாயா?"
"வேண்டுமென்று எதற்காக விழ வேண்டும்? மயக்கம் வந்து தான் விழுந்தேன் தாங்களும் அந்த
வாணர் குலத்து வீரருமாக என்னைக் காப்பாற்றினீர்கள்."
"காப்பாற்றியதற்கு நன்றி உள்ளவளாகத் தோன்றவில்லையே?"
"இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல; ஏழேழு ஜன்மத்திலும் நன்றியுள்ளவளாயிருப்பேன்."
"இந்த ஜன்மம் இத்துடன் முடிந்து போய்விட்டது போல் பேசுகிறாயே? நான் சொல்கிறேன் கேள்,
வானதி! வீணாக மனதை வருத்தப்படுத்திக் கொள்ளாதே! அருள்மொழி வர்மனுக்கு அபாயம் எதுவும் வந்திருக்கும்
என்று எனக்குத் தோன்றவில்லை. சற்றுமுன் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சொன்னதையே
உனக்கும் சொல்லுகிறேன். அ
்றொரு நாள் காவிரித்தாய் என் தம்பியைக் காப்பாற்றினாள். அதுபோல்
சமுத்திரராஜனும் அவனைக் காப்பாற்றியிருக்க வேண்டும். சீக்கிரத்தில் நல்ல செய்தியை நாம்
கேள்விப்படுவோம்."
"எந்த ஆதாரத்தைக் கொண்டு இவ்வளவு உறுதியாகத் தைரியம் சொல்கிறீர்கள் அக்கா?"
"என்மனத்திற்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. என் அருமை தம்பிக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அது
என் உள்மனத்திற்குத் தெரிந்திருக்கும். நான் இப்படிச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்..."
"மனது சொல்வதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை அக்கா! உள் மனத்திலும் நம்பிக்கை
இல்லை! வௌி மனத்திலும் நம்பிக்கை இல்லை!"
"அது எப்படி நீ மட்டும் அவ்வளவு தீர்மானமாகச் சொல்லுகிறாய்?"
"என் உள் மனத்திலும், வௌி மனத்திலும் சில நாளாக ஒரு பிரமை தோன்றிக் கொண்டிருந்தது.
தூக்கத்தில், கனவிலும் தோன்றியது. விழித்துக் கொண்டிருக்கும் போதும் சில சமயம் அப்படிப் பிரமை
உண்டாயிற்று."
"அது என்ன வானதி?"
"தண்ணீரில் தங்கள் தம்பியின் முகம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. என்னை அழைப்பது
போலவும் இருந்தது. கனவிலும் இந்தப் பிரமை அடிக்கடி ஏற்பட்டு வந்தது."
"அதை ஏன் பிரமை என்று சொல்லுகிறாய்? நமக்கு வந்திருக்கும் செய்திக்கும் உன்னுடைய
மனத்தோற்றத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே?"
"இன்னும் முழுவதும் கேட்டால் அது எவ்வளவு பைத்தியக்காரப் பிரமை என்பதை அறிவீர்கள்.
ஓடையில் மயக்கம் போட்டு விழுந்தேனல்லவா? அப்போது நான் நாகலோகத்துக்கே போய் விட்டேன். அங்கே
ஒரு திருமண வைபவம் நடந்தது..."
"யாருக்கும் யாருக்கும் திருமணம்?"
"அதைச் சொல்ல விருப்பமில்லை, அக்கா! மொத்தத்தில் மனத்தில் தோன்றுவதிலும், கனவில்
தோன்றுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையு
்தான்
இனிமேல் நம்புவது என்று தீர்மானித்திருக்கிறேன்..."
"வானதி! நீ சொல்வது முற்றும் தவறு. கண்ணால் காண்பதும், காதினால் கேட்பதும் சில
சமயம் பொய்யாக இருக்கும். மனத்திற்குள் தோன்றுவதுதான் நிச்சயம் உண்மையாயிருக்கும். கதைகள்,
காவியங்களிலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்கள் நான் உனக்குச் சொல்லுவேன்..."
"பிறகு ஒரு சமயம் கேட்டுக் கொள்கிறேன், அக்கா! இப்போது எனக்கு விடை கொடுங்கள்!"
என்றாள் வானதி.
இளவரசி குந்தவைக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு
தைரியமும், பிடிவாதமும் திடீரென்று எப்படி ஏற்பட்டன என்று ஆச்சரியப்பட்டாள்.
"வானதி! இது என்ன அவசரம்? அப்படியே நீ கட்டாயம் ஊருக்குப் போக வேண்டுமென்றாலும்,
சிலநாள் கழித்துப் புறப்படக்கூடாதா? இப்போது நாடெங்கும் ஒரே குழப்பமாய் இருக்குமே? உன்னைத்
தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டாமா?"
"எனக்கு என்ன பயம், அக்கா! கொடும்பாளூரிலிருந்து என்னை அழைத்து வந்த பல்லக்குத் தூக்கிகளும்
காவல் வீரர் நால்வரும் ஒரு வேலையுமின்றி இத்தனை காலம் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களே என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள்..."
"அழகாயிருக்கிறது! உன்னை அப்படி நான் அனுப்பி விடுவேன் என்றா நினைக்கிறாய்?"
"உங்களை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் அக்கா! எனக்குப் பயம் ஒன்றுமில்லை.
கொடும்பாளூர் வானதியை இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். அதிலும்
இளையபிராட்டியின் அன்புக்குகந்த தோழி நான் என்பது யாருக்குத் தெரியாது? ஒரே ஒரு காரியத்துக்கு மட்டும்
அனுமதி கொடுங்கள்.போகும்போது அந்தக் குடத்தை ஜோதிடரின் வீட்டுக்கு இன்னொரு தடவை போய்
அவரைச் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். அவ்விதம் செய்யலாமா?"
"அவ
ிடம் எனக்குக்கூட வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் நீ இவ்வளவு அவசரப்படுகிறாயே?"
"இல்லை, அக்கா! இந்தத் தடவை அவரை நான் தனியாகப் பார்த்து ஜோதிடம் பார்க்க
விரும்புகிறேன்..."
குந்தவை மூக்கின்மீது விரலை வைத்து அதிசயப்பட்டாள். இந்தப் பெண் ஒரு நாளில், ஒரு ஜாம
நேரத்தில், இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறிவிட்டது எப்படி என்று இளவரசிக்குப் புரியவேயில்லை.
அவள் பிரயாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள்.
"சரி, வானதி! உன் விருப்பம் போலச் செய்யலாம். நீ பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தம்
செய். அதற்குள் சிறையிலிருக்கும் அந்த வாணர் குலத்து வீரகுமாரனை விடுதலை செய்துவிட்டு வருகிறேன்"
என்றாள்.
பக்க தலைப்பு
முப்பதாம் அத்தியாயம்
இரு சிறைகள்
வானதியை விட்டுப் பிரிந்ததும் அரசிளங்குமரி நேரே பழையாறைச் சிறைச்சாலைக்குச்
சென்றாள். காவலர்களை வௌியிலேயே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வந்தியத்தேவன் அடைபட்டிருந்த
இடத்துக்குப் போனாள். அவன் தனி அறையில் பூட்டப் பட்டிருந்தான். சிறையின் உச்சியைப் பார்த்துக்கொண்டு
உற்சாகமாகத் தெம்மாங்கு பாடிக் கொண்டிருந்தான்:
"வானச் சுடர்கள் எல்லாம்
மானே உந்தனைக்கண்டு
மேனி சிலிர்க்குதடி -
மெய்மறந்து நிற்குதடி!"
குந்தவை அருகில் வந்து நின்றது தொண்டையைக் கனைத்த பிறகுதான் அவளைத் திரும்பி பார்த்தான்.
உடனே எழுந்து நின்று, "வருக! வருக! இளவரசியாரே! வருக! ஆசனத்தில் அமருக!" என்று உபசரித்தான்.
"எந்த ஆசனத்தில் அமரட்டும்?" என்று இளவரசி கேட்டாள்.
"இது தங்கள் அரண்மனை. இங்கு நடப்பது தங்கள் ஆட்சி, தங்கள் ஆணை. இங்குள்ள சிம்மாசனம்
எதில் வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல் அமரலாம்" என்றான் வல்லவரையன்.
"ஐயா! உமது முன
னோர்கள் ஆணை செலுத்தி மூவுலகையும் ஆண்டபோது வல்லத்து அரண்மனை
இவ்விதந்தான் இருந்தது போலும்! எங்கள் நகரில் இந்த இடத்தைச் சிறைச்சாலை என்று சொல்லுவார்கள்"
என்றாள் இளவரசி.
"அம்மணி! எங்கள் ஊரில் இப்போது அரண்மனையும் இல்லை; சிறைச்சாலையும் இல்லை.
பல தேசத்து அரசர்களுமாகச் சேர்ந்து அரண்மனை, சிறைச்சாலை எல்லாவற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி
விட்டார்கள், நூறு வருஷங்களுக்கு முன்பு..."
"ஏன்? ஏன்? வல்லத்து அரண்மனை மீதும் சிறையின் பேரிலும் அவர்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?"
"எல்லாம் ஒரு கவிஞரால் வந்த வினை!"
"ஆ! அது எப்படி?"
"என் குலத்து முன்னோர்கள் தென் நாட்டின் பேரரசர்களாக அரசு புரிந்த நாளில், காலாகாலத்தில்
கப்பம் செலுத்தாத அரசர்களை அதிகாரிகள் சிறைப்பிடித்துக் கொண்டு வருவார்கள். அரண்மனை முற்றத்தின்
இருபுறத்திலும் அரசர்களை அடைத்து வைக்கும் சிறைகள் இருந்தன. சக்கரவர்த்தி கருணை புரிந்து எப்போது
தங்களை வரும்படி சொல்லி அனுப்புவார், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்று
அச்சிற்றரசர்கள் காத்திருப்பார்கள். பேரரசரைக் காணும்பேறு அவர்களுக்கு எளிதிலே கிட்டாது. அவர்கள்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே கவிஞர்களும் புலவர்களும் சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குப்
போவார்கள். சக்கரவர்த்தி முன்னிலையில் பாடல்களைச் சொல்லிப் பரிசுகள் பெற்றுக் கொண்டு திரும்பிச்
செல்லுவார்கள். அப்போது சிறையில் காத்திருக்கும் சிற்றரசர்கள் 'அடாடா! இந்தப் புலவர்களுக்கு வந்த
யோகத்தைப் பார்! இவர்கள் கொண்டு போகும் பரிசுகளைப் பார்!' என்று சொல்லி வியப்பார்கள்.
'ஓகோ! இந்தப் புலவன் கொண்டு போவது என் வெண் கொற்றக் குடையல்லவா?" என்பான் ஓர் அரசன்.
'அடடே! இந்தக் கவிஞன் என் சிவிகையில் அமர்ந்து போகிறானே!' என்பா
் இன்னொரு வேந்தன். 'ஐயோ!
என் பட்டத்து யானையை இவன் கொண்டு போகிறானே!' என்பான் இன்னொரு மன்னன். 'இது என் குதிரை!
இந்தக் கவிராயனை என் குதிரை கட்டாயம் ஒரு நாள் கீழே தள்ளிவிடும்!' என்று சொல்லி மகிழ்வான்
வேறொரு சிற்றரசன். எல்லாப் புலவர்களுக்கும் கடைசியில் இன்னொரு புலவர் வந்தார். அவர்
சிறையிலிருந்த சிற்றரசர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தியின்
சந்நிதானத்துக்குச் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்:
'என் கவிகை என் சிவிகை
என் கவசம் என் துவசம்
என் கரியீது என் பரியீது
என்பரால் - பன்கவள
மாவேந்தன் வாணன்
வரிசைப் பரிசு பெற்ற
பாவேந்தரை வேந்தர்
பார்த்து!'
இவ்விதம் அந்தப் புலவர்கள் பாடிய பாடல் தமிழ் நாடெங்கும் அப்பாலும் பரவிவிட்டது. மக்கள்
அடிக்கடி பாடியும் கேட்டும் மகிழ்ந்தார்கள். இதனால் எங்கள் இராஜ்யத்துக்கே ஆபத்து வந்துவிட்டது. எல்லா
அரசர்களுமாகச் சேர்ந்து வந்து படையெடுத்து எங்கள் ஊரையும் அரண்மனையையும், சிறைச்சாலையையும்
எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள்..."
"எல்லாவற்றையும் அழித்தாலும் அந்தக் கவியின் பாடலை அழிக்க முடியவில்லையல்லவா? உங்கள்
குலம் பாக்கியம் செய்த குலந்தான்! அதன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!"
"வாணர் குலத்தின் வீரப் புகழைக் கெடுக்க நான் ஒருவன் இப்போது ஏற்பட்டிருக்கிறேன்..."
"ஆகா! அந்த உண்மையை நீரே ஒப்புக் கொள்கின்றீர் அன்றோ?"
"ஒப்புக் கொள்ளாமல் வேறு என்ன செய்வது? அடிமைத்தனங்களுக்குள்ளே பெண்ணடிமை மிகப்
பொல்லாதது. ஒரு பெண்மணியின் வார்த்தையைக் கேட்கப் போய், என் முன்னோர்களில் குலப்புகழுக்கு நான்
மாசு தேடிக்கொள்ள நேர்ந்தது. ஓடி ஒளிந்து, மறைந்து திரிந்து உயிர் வாழ நேர்ந்தது. என்கோபத்தையெல்லாம்
அந்த வைத்தியர் மகனைக் கொன்
ு தீர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்தேன். அதற்கும் ஒரு தடை
வந்து குறுக்கிட்டு விட்டது..."
"ஐயா! வைத்தியர் மகன் பினாகபாணி மீது உமக்கு ஏன் அவ்வளவு கோபம்?"
"கோபத்துக்கு வேண்டிய காரணம் இருக்கிறது. நல்ல ஆளைப் பிடித்து என்னோடு
கோடிக்கரைக்கு அனுப்பினீர்கள். அவன் என் காரியத்தையே கெடுத்துவிட இருந்தான். அது
போகிறதென்றால், சற்று முன் இந்த ஊர் வீதியில் அவன் என்னைப் பகைவர்களின் ஒற்றன் என்று
சொல்லிப் பழுவேட்டரையர்களிடம் பிடித்துக்கொடுக்கப் பார்த்தான். அங்கிருந்து தப்பி வந்தால்,
அரண்மனை முற்றத்தில் ஆயிரம் பதினாயிரம் பேருக்கு எதிரில் என்னைப் 'பழுவூர் ராணியின்
ஒற்றன்' என்று குற்றம் சாட்டினான்..."
"வல்லத்து இளவரசரே! அது உண்மையல்லவா?"
"எது உண்மையல்லவா?"
"நீர் பழுவூர் ராணி நந்தினி தேவியின் ஒற்றன் என்று பினாகபாணி குற்றம் சாட்டியதைக்
கேட்கிறேன். உண்மையைச் சொல்வீரா?"
"நான் உண்மை சொல்லுவதில்லையென்று விரதம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தேவி!"
"ஆகா! அது என்ன விரதம்? அரிச்சந்திர நதிக்கரையில் பழுவூர் ராணியைப் பார்த்ததிலிருந்து
அப்படிப்பட்ட விரதம் எடுத்துக் கொண்டீரா?"
"இல்லை, இல்லை! அதற்கு முன்னாலேயே அந்த முடிவுக்கு வந்து விட்டேன். நான் உண்மைக்கு
மாறானதைச் சொல்லிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில்
வாய் தவறி 'இளவரசர் நாகைப் பட்டினத்தில் பத்திரமாயிருக்கிறார்' என்று சொன்னேன். ஒருவரும்
நம்பவில்லை கேட்டவர்கள் எல்லாரும் சிரித்தார்கள்..."
"எவ்வளவு தவறான காரியத்தைச் செய்தீர்! உம்முடைய வார்த்தையை அவர்கள் நம்பாததே
நல்லதாய்ப் போயிற்று! நம்பியிருந்தால் எவ்வளவு பிசகாகப் போயிருக்கும்?"
"இனிமேல் எப்போதும் இத்தகைய தவறுகள் நேரவே நேராது..."
"உமது வாக
்குறுதிக்கு மிக்க நன்றி!"
"என்ன வாக்குறுதி கொடுத்தேன்?"
"இனிமேல் தவறு எதுவும் நேராமல் நான் இட்ட காரியத்தைச் செய்வதாக..."
"கடவுளே! அப்படி நான் ஒன்றும் வாக்குறுதி கொடுக்கவில்லை. போதும்! என்னைச்
சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."
"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து
வரவேண்டியதுதான்" என்றாள்.
வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.
"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"
"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால்,
நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"
இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களினால் உற்றுப் பார்த்துவிட்டு,
"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர்.
பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?" என்றாள்.
"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."
"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால்
இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர்தப்ப முடியாது..."
"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"
"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும்
புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."
"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"
"என்னுடைய இதயமாகிற சிறைச் சாலையைத்தான் சொல்கிறேன்."
"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய
கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ, மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியி
ன்
செல்வக்குமாரி...."
"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒருநாள் பழைய கதை ஆகலாம்."
"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற, அதிகாரம் படைத்தவர்.
சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதலாவது மந்திரியும், தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத்
துணியமாட்டார்கள்..."
"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர்மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"
"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."
"அதிலேதான் என்ன தவறு?"
"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம்தான் தவறு..."
"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"
"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப்
பொருந்துமல்லவோ?"
"ஆம்! பொருந்தும்தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால்
அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."
"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன்.
அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும்
அடைய விரும்பினேன்..."
"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"
"ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை
அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில்
கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."
"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக
மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச்
சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."
<
BR>
"தேவி தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர
மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவரவேண்டியதாயிற்று.
அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது! விடை கொடுங்கள்..."
"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப்
பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"
"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான்
அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய
மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்..."
இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற
தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக்
கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர்
வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு.
பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.!"
"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"
"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."
வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த
வண்ணம் மதியும் இழந்து நின்றான்.
"ஐயா! உம்முடைய பதட்டமான காரியங்களினால் உமது உயிருக்கு ஏதேனும் அபாயம்
நேர்ந்தால், என்னுடைய கதி என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாரும்."
"தேவி! தங்கள
டைய இதய சிங்காசனத்தில் இடம் பெற்ற இந்தப் பாக்கியசாலி உயிருக்குப்
பயந்த கோழையாயிருக்க முடியுமா?"
"கோழைத்தனம் வேறு, ஜாக்கிரதை வேறு, ஐயா! முதன் மந்திரி அநிருத்தருக்குக்கூடத் தங்கள்
வீரத்தைப் பற்றி ஐயம் கிடையாது."
"பின்னர், எதைப்பற்றி அவர் ஐயப்படுகிறார்..."
"நீர் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுறுகிறார்.."
"அப்படியானால், வைத்தியர் மகன் பினாகபாணிக்கு அளித்த மறுமொழியை அவருக்கும் அளிக்கச்
சித்தமாயிருக்கிறேன். சிறைக்கதவைத் திறந்து விடுங்கள்! அந்த மனிதர் எங்கே இருக்கிறார் என்று
சொல்லுங்கள்!"
"வைத்தியர் மகனாவது மற்போரில் சிறிது பழக்கமுள்ளவன். அநிருத்தர் சொற்போர்
அறிவாறேயன்றி மற்போர் அறியார். அறிவின் கூர்மையே அவருடைய ஆயுதம். வாளின் கூர்மையை அவர்
என்றும் துணை கொண்டதில்லை..."
"அப்படியானால், என்னுடைய வாளின் கூர்மையைத்தான் முதன் முதலில் பரீட்சை பார்க்கட்டுமே?"
"ஐயா! இந்த நாட்டில் சக்கரவர்த்திக்கு அடுத்த மரியாதைக்குரியவர் முதன் மந்திரி அநிருத்தர்.
அவருடன் பகிரங்கமாக முரண்படப் பழுவேட்டரையர்களும் தயங்குகிறார்கள்..."
"பழுவேட்டரையர்கள் குற்றம் உள்ள நெஞ்சினர். அவர்கள் பயப்படுவார்கள்; நான் ஏன் பயப்பட
வேண்டும்?"
"இளம் பிராயத்திலிருந்து என் தந்தையின் உற்ற தோழர் அவர். முதன் மந்திரிக்குச் செய்த
அவமரியாதை சக்கரவர்த்திக்கும், எனக்கும் செய்த அவமரியாதையாகும்."
"அப்படியானால், அவருடைய நம்பிக்கையை நான் பெறுவதற்கு வழியையேனும் சொல்லுங்கள்."
"முதன் மந்திரி, காஞ்சிக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை அனுப்ப விரும்புகிறார். உம்மை
அனுப்பலாம், நம்பி அனுப்பலாம் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்."
"தேவி! காஞ்சிக்கு என்னை அனுப்பாதீர்கள்! என் மனத்திற்குள் ஏதோ ஒரு
ுரல், "காஞ்சிக்குப்
போகாதே!" என்று சொல்லிக் கொண்டிருக்கிறது."
"அது ஒருவேளை பழுவூர் இளைய ராணியின் குரலாயிருக்கலாம் அல்லவா?"
"இல்லவே இல்லை! தங்களுடைய சொல்லுக்கு மாறாக அந்த விஷ நாகத்தின் குரலை நான்
கேட்பேனா?"
"ஐயா! பழுவூர் இளைய ராணியைப் பற்றி இனி எந்தச் சமயத்திலும் அப்படியெல்லாம் பேசாதீர்கள்!"
"இது என்ன? ஏன் இந்தத் திடீர் மாறுதல்?"
"ஆம்; என் மனம் அவள் விஷயத்தில் அடியோடு மாறிவிட்டது. நீர் இலங்கையிலிருந்து கொண்டு
வந்த செய்தியைக் கேட்ட பிறகு."
"அப்படியானால் இனி நான் பழுவூர் இளைய ராணியிடமும் பயபக்தியுடன் நடந்து கொள்ள
வேண்டியதுதானோ?"
"ஆம்!"
"அவள் பயபக்தியுடன் பூஜை செய்யும் கொலை வாளை என்னிடம் கொடுத்து, 'இன்னாருடைய
தலையைக் கொண்டு வா!' என்று சொன்னாலும் கொண்டுவர வேண்டியதுதானோ?"
குந்தவை தேவியின் உடம்பு நடுங்கிற்று. மறுமொழி கூறியபோது அவளுடைய குரலும் நடுங்கிற்று.
"பழுவூர் ராணியிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவள் பேச்சைக்
கேட்க வேண்டிய அவசியமில்லை. அவள் எத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவளுக்கே
தெரியாமலிருக்கலாம் அல்லவா?"
"அப்படித்தான் அவளும் கூறினாள். 'நான் எதற்காக இந்தக் கத்தியைப் பூஜை செய்து
கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை' என்றாள்."
இதைக் கேட்ட இளவரசி இன்னும் அதிகமாக நடுங்கிய குரலில் "இந்தச் சோழர்
தொல்குடியைத் தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்" என்றாள்.
"காப்பாற்றுகிற தெய்வம் இந்த ஏழையைச் சாதனமாக வைத்துக்கொண்டு காப்பாற்றட்டும்" என்றான்
வந்தியத்தேவன்.
"ஐயா! நானும் அவ்வாறுதான் நம்பியிருக்கிறேன். நீர் காஞ்சியிலிருந்து திரும்பி வந்ததும்
மறுபடி ஒருதடவை இலங்கைக்குப் போக வேண்டும்.அந்த ஊமைத்தாயை எப்படியா
து இங்கே அழைத்து
வரவேண்டும்..."
"அவளை அழைத்து வருவது சுழிக்காற்றைக் குடத்தில் அடைத்துக் கொண்டு வருவது போலத்தான்.
இப்படி ஒரு முறை யாரோ சொன்னார்கள், ஆம். அந்த வீர வைஷ்ணவன் தான். ஒருவேளை அவனே அழைத்து
வந்திருக்கலாம்."
"இல்லை; அவனால் அந்தக் காரியம் முடியவில்லை. உம்மாலேதான் அந்தக் காரியம் ஆக
வேண்டும்."
"அப்படியானால் என்னைக் காஞ்சிக்கு அனுப்பாதீர்கள், தேவி!"
"ஏன்?"
"அங்கே என் எஜமானர் இருக்கிறார். அவர் கேட்டால் நான் எல்லா விவரங்களையும்
சொல்லித்தான் ஆகவேண்டும். பழுவேட்டரையர்களும், மற்றச் சிற்றரசர்களும் செய்யும் சதியைப்பற்றி
அறிந்தால் உடனே வெகுண்டு எழுவார். சக்கரவர்த்தியைச் சிறைவைப்பது போல் வைத்திருக்கிறார்கள்
என்று அறிந்தால் உடனே படை எடுத்துக் கிளம்புவார். பொன்னியின் செல்வரைப் பற்றிய செய்தி
அவர் காதில் எட்டியிருந்தால் இதற்குள்ளேயே ஒருவேளை புறப்பட்டிருந்தாலும் புறப்பட்டிருப்பார்..."
"அதற்காகவேதான் - உம்மை அனுப்ப விரும்புகிறேன். அவர் காஞ்சியைவிட்டுப் புறப்படாமல்
எப்படியாவது தடுத்து விடவேண்டும்."
"நான் காஞ்சியை அடைவதற்குள் அவர் புறப்பட்டிருந்தால்?"
"வழியில் அவர் எங்கே இருந்தாலும் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட
முக்கியமாக நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..."
"சொல்லுங்கள்!"
"பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டார் என்ற
செய்தி கிடைத்திருக்கிறது..."
"உண்மையில் இளைய ராணிதான் போகிறாளா! அல்லது இளைய ராணியின் பல்லக்கில்..."
"இல்லை; இளைய ராணிதான் போகிறாள். என் சித்தப்பாதான் இன்னும் இங்கே இருக்கிறாரே!"
"எதற்காகப் போகிறார்களாம்?"
"ஆதித்த கரிகாலனையும் கடம்பூருக்கு வரும்பட
அழைத்திருக்கிறார்கள். கல்யாணப் பேச்சு என்பது
வௌிப்படையான காரணம். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்து வைக்கப்
போவதாகவும் ஒரு பேச்சு நடந்து வருகிறது."
"என் எஜமானர் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்."
"அதைப் பற்றியெல்லாம் இப்போது எனக்குக் கவலை இல்லை."
"பின்னே என்ன கவலை தேவி!"
"இன்னதென்று சொல்லமுடியாத பயம் என் மனத்தில் குடி கொண்டிருக்கிறது நெஞ்சு 'திக் திக்'
என்று அடித்துக் கொள்கிறது. அரைத் தூக்கத்தில் விவரமில்லாத பயங்கரங்கள் என்னைச் சூழ்ந்து
கொள்கின்றன. நல்ல தூக்கத்தில் அகோரமான கனவுகள் கண்டு விழித்துக் கொள்கிறேன். அப்புறம்
வெகு நேரம் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்கிறது."
"இந்த நிலையில் தங்களைப் பிரிந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறீர்கள்? தங்களுக்கு
எத்தகைய அபாயம் வந்தாலும் என் உயிரைக் கொடுத்து..."
"ஐயா! என்னுடைய பயம் என்னைப் பற்றியதே அன்று. என் தமையனைப் பற்றியது;
பழுவூர் ராணியைப் பற்றியது. அவர்கள் சந்தித்தால் என்ன நேரிடுமோ என்று எண்ணி என் உள்ளம்
கலங்குகிறது. அவர்கள் தனியாகச் சந்திக்க முடியாதபடி நீர் தடை செய்ய வேண்டும்..."
"தேவி! அவர் ஒன்றும் செய்வதற்கு நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?"
"ஐயா! என் தமையனைக் காப்பாற்றும் இரும்புக் கவசம் போல் நீர் உதவவேண்டும்.
அவசியமானால் நந்தினி யார் என்பதை என் சகோதரனிடம் சொல்லிவிட வேண்டும்..."
"அதை அவர் நம்ப வேண்டுமே?"
"நம்பும்படியாகச் சொல்வது உமது பொறுப்பு. எப்படிச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது.
அவர்களை எப்படியேனும் சந்திக்க முடியாதபடி செய்தால் நலமாயிருக்கும்."
"தேவி! என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக்
குற்றம் சொல்ல வேண்டாம்" என்றான் வந்த
ியத்தேவன்."
"ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து
இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!" என்றாள் அரசிளங்குமரி.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters
of this website.