ponniyin celvan
of kalki, part 4B
(in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


நான்காம் பாகம் - மணிமகுடம்



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நான்காம் பாகம் - மணிமகுடம்


பதினோராம் அத்தியாயம் - தோழனா? துரோகியா?
பன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தது!
பதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம்
பதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா?
பதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம்
பதினாறாம் அத்தியாயம் - "மலையமானின் கவலை"
பதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை
பதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது!
பத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்
இருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்

பதினோராம் அத்தியாயம்
தோழனா? துரோகியா?




மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும் பரிவாரங்களும் வந்து கொண்டிருந்தார்கள். முதலாவது நாள் இரவு திருமுதுகுன்றத்தில் இளவரசருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றியும், அந்த க்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்த ஆலயத் திருப்பணியைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள்.

"திருமுதுகுன்றத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் செய்த காரியம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!" என்றான் பார்த்திபேந்திரன்.

"எதைப் பற்றிச் சொல்லுகிறாய்?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

"கிழவியைப் பாடமாட்டேன் என்று சொன்னதைத் தான்!"

"அது என்ன எனக்குத் தெரியாதே? விவரமாகச் சொல்" என்றான் ஆதித்த கரிகாலன்.

சுந்தரமூர்த்தி நாயனார் க்ஷேத்திர யாத்திரை செய்து கொண் ு வந்த பொழுது திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்துக்கு வந்தார். வழக்கம் போல் அந்த ஊர் சிவாலயத்துக்குச் சென்றார். பட்டர்கள் நாயனாருக்கு சுவாமி தரிசனம் பண்ணுவித்து, "எங்கள் ஊர் இறைவன் பேரிலும் பதிகம் பாடி அருள வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டார்கள்.

"பார்ப்போம், இந்த ஆலயத்திலுள்ள சுவாமியின் பெயர் என்ன?" என்று சுந்தரர் கேட்டார்.

திருமுதுகுன்றம் என்ற பெயரைக் கொண்டு அந்தச் சிவாலயத்திலுள்ள சுவாமிக்கு விருத்தகிரீசுவர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் பட்டர்கள் அந்தப் பெயரைச் சொன்னார்கள்.

நாயனாரின் முகம் சுருங்கிற்று; போயும் போயும் கிழவரையா பாட வேண்டும் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, "போகட்டும், அம்மன் பெயர் என்ன?" என்று வினவினார்.

"விருத்தகிரீசுவரி" என்றார்கள் கோவில் பட்டர்கள்.

"சுவாமிக்குத்தான் கிழவர் என்று பட்டம் கட்டினீர்கள். அம்மனையும் கிழவியாக்கி விட்டீர்களே? கிழவனையும் கிழவியையும் என்னால் பாட முடியாது போங்கள்!" என்று சொல்லி விட்டுச் சுந்தரமூர்த்தி நாயனார் கோபமாகக் கோவிலை விட்டுக் கிளம்பி விட்டார்.

சுந்தரமூர்த்தி நாயனரால் பதிகம் பாடப் பெறாவிட்டால் தங்கள் ஊர் ஆலயத்துக்கு மகிமை ஏற்படாது என்று பட்டர்கள் கருதினார்கள். ஆகையால் ஆலயத்தில் இன்னொரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து "பாலாம்பிகை" என்று பெயர் சூட்டினார்கள்.

மறுபடியும் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்த இடத்துக்குப் போய் அவரிடம் மேற்படி விவரத்தைச் சொல்லித் திரும்பவும் திருமுதுகுன்றம் ஆலயத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் பெரிய மனது செய்து மீண்டும் அந்த ஊருக்குச் சென்று பாலாம்பிகை சமேத விருத்தகிரீசுவரர் மீது பதிகம் பாடித் துதித்தார்.

இந்தக் கத ையைக் கேட்டுவிட்டு ஆதித்த கரிகாலன் உடல் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். "பெரிய பழுவேட்டரையரிடம் வந்த கவிஞன் யாராவது ஒருவேளை சுந்தரமூர்த்தியைப் போல் சொல்லியிருப்பான். கிழவனையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கூறியிருப்பான் அதற்காகத்தான் அவர் நந்தினியை மணந்து கொண்டாரோ, என்னமோ?" என்றான்.

இதைக் கேட்டுப் பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்படி அவர்கள் சிரித்த சிரிப்பில் குதிரை மேலிருந்து கீழே விழுந்து விடுவார்கள் போலிருந்தது!

சிரித்து ஓய்ந்த பிறகு பார்த்திபேந்திரன், "கடவுள் முதுமை என்பதாக ஒன்றை, எதற்காக ஏற்படுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரையில் ஒரே மாதிரி இருந்துவிட்டுச் சாவது என்று ஏற்படுத்தியிருக்கக் கூடாதோ?" என்றான்.

"கடவுள் என்ன ஏற்படுத்தினால் என்ன? முதுமை அடைவதும் அடையாததும் நம்முடைய கையிலே தானே இருக்கிறது?" என்றான் கரிகாலன்.

"அது எப்படி முடியும்?" என்று கந்தமாறன் கேட்டான்.

"அபிமன்யுவையும், அரவானையும் கிழவர்கள் என்று நாம் எண்ணுவதுண்டா?"

மற்ற இருவரும் ஒன்றும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள்.

"தஞ்சாவூர் அரண்மனைச் சித்திர மண்டபத்தில் என் மூதாதையர்களின் சித்திரங்கள் எல்லாம் எழுதியிருக்கின்றன.விஜயாலயச் சோழர், ஆதித்த சோழர், பராந்தக சக்கரவர்த்தி எல்லோரும் முதிய பிராயத்தவராகக் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் என் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் எப்படி இருக்கிறார்? நவயௌவன வீர புருஷராக விளங்குகிறார்! இராஜாதித்தர் இளம் வயதில் இறந்து போனார். அதனால் என்றைக்கும் அவர் யௌவனம் நீங்காத பாக்கியசாலி ஆனார்! நம்மில் யாருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுகிறதோ, தெரியவில்லை!"

மற்ற இருவருக்கும் இந்தப் ேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

"ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்கள்? சாவு என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்? இந்த உடம்பு போனால் இன்னொரு புத்தம் புதிய உடம்பு கிடைக்கிறது. எதற்காக மரணத்துக்கு அஞ்ச வேண்டும்? என்னுடைய நண்பன் வந்தியத்தேவன் இங்கே இருந்தால் என்னை ஆமோதிப்பான். அவனைப் போன்ற உற்சாக புருஷனைக் காண்பது அரிது. யமலோகத்தின் வாசலில் கொண்டு போய் விட்டாலும் அவன் குதூகலமாய் சிரிப்பான்!" என்றான் இளவரசன் கரிகாலன்.

அச்சமயத்தில் அவர்களுக்கு எதிராக சாலையில் இரண்டு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெகு வேகமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அக்குதிரைகள் அவர்களை நெருங்கி வந்து விட்டன. அவை வந்த வேகத்தைப் பார்த்தால் இளவரசர் கோஷ்டி எதிரில் வருவதைக் கூடக் கவனியாமல் தாண்டிப் போய்விடும் எனத் தோன்றியது. அவ்வளவு அகம்பாவம் பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காகக் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் வேல்களை நீட்டிச் சாலையின் குறுக்கே வழி மறிக்க ஆயத்தமானார்கள். ஆனால் வந்த குதிரைகள் அவர்களுக்குச் சிறிது தூரத்தில் தடால் என்று பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டன.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரைகள் மீதிருந்து கீழே குதித்தார்கள். வந்தியத்தேவனைக் கண்டதும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குக் குதூகலம் தாங்கவில்லை. அவனும் குதிரை மீதிருந்து கீழே குதித்து முன்னேறிச் சென்று வந்தியத்தேவனைக் கட்டிக் தழுவிக் கொண்டான்.

"தம்பி! உனக்கு நூறு வயது இப்போது தான் உன் பெயரைச் சொல்லி ஒரு கண நேரங்கூட ஆகவில்லை!" என்றான் கரிகாலன்.

கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் இந்தக் காட்சியைப் பார்த்து அடைந்த அசூயை அவர்கள் முகத்தில் தெர ிந்தது. அவர்கள் சற்று முன்னால் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய் நின்றார்கள்.

சிறிது தூரத்தில் இன்னும் சில குதிரைகள் வருவதை அவர்கள் கண்டார்கள். சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தக் குதிரைகளும் வந்து நின்றன. அந்தக் குதிரைகளின் மீது வந்தவர்கள் கடம்பூர் ஆள்கள் என்பதைக் கந்தமாறன் கவனித்தான். அவர்களிடம் நெருங்கிச் சென்று விவரம் கேட்டான்.

பின்னர், இளவரசன் ஆதித்த கரிகாலனிடம் வந்தான். "கோமகனே! இந்த வந்தியத்தேவன் தங்களுக்கும் நண்பன்; எனக்கும் சிநேகிதனாகத்தான் இருந்தான். ஆனால் இவன் மீது குற்றம் சுமத்த வேண்டியதாயிருக்கிறது. இவன் சிநேகிதத் துரோகி! இவன் என்னை முதுகில் குத்திப் படுகாயம் படுத்தினான். ஆகையால் இவன் விஷயத்தில் தாங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமையாகிறது!" என்றான் கந்தமாறன்.

பக்க தலைப்பு



பன்னிரண்டாம் அத்தியாயம்
வேல் முறிந்தது!




கந்தமாறன் அவனுடைய அருமை நண்பனாயிருந்த வந்தியத்தேவன் மீது கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு ஆதித்த கரிகாலன் இடி இடி என்று உடல் குலுங்கச் சிரித்தான்.

"கந்தமாறா! வந்தியத்தேவன் உன் முதுகில் குத்திவிட்டான் என்றா சொல்லுகிறாய்? நீ என்னத்திற்காக அவனுக்கு முதுகு காட்டினாய்?" என்று கேட்டுவிட்டு மறுபடியும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கத் தொடங்கினான்.

கந்தமாறனுடைய கரிய முகம் சிவந்தது; கண்கள் கோவைப் பழம் போலாயின. உதடுகள் துடித்தன.

"ஐயா! தாங்கள் இதைச் சிரிக்கக் கூடிய விஷயமாகக் கருதுகிறீர்களா?" என்று கேட்டான்.

"கந்தமாறா! நான் சிரிக்கக் கூடாது என்று சொல்கிறாயா? சிரிப்பு என்பது மனிதர்களுக்குத் தெய்வம் கொடுத்திருக்கும் ஒரு வரப் பிரஸாதம். மாடு சிரிக்காது; ஆடு சிரிக்காது; குதிரை சிரிக்க து; சிங்கம் சிரிக்காது; வேடிக்கை விளையாட்டுகளில் மிக்க பிரியம் உள்ள குரங்குகள் கூடச் சிரிப்பதில்லை. மனித ஜன்மம் எடுத்தவர்கள் மட்டுந்தான் சிரிக்க முடியும். அப்படி இருக்க, நீ என்னைச் சிரிக்கக் கூடாது என்கிறாயே? நான் கூடச் சிரித்து ரொம்ப காலமாயிற்று. நண்பா! இப்போது நான் சிரிக்கும் சத்தத்தைக் கேட்டு, எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நீ என்னைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது என்கிறாயே?" என்றான் ஆதித்த கரிகாலன்.

"ஐயா! தாங்கள் சிரித்து மகிழ்வது பற்றி எனக்கும் சந்தோஷந்தான். ஆனால் நான் இந்தச் சூராதி சூரனுக்கு முதுகு காட்டியதாக எண்ணிக் கொண்டு சிரிக்க வேண்டாம். நான் எதிர்பாராத சமயத்தில், பின்னால் மறைந்திருந்து இவன் என்னைக் குத்தினான். துர்க்காதேவியின் அருளாலும், நந்தினி தேவியின் அன்பான சிகிச்சையினாலுமே நான் பிழைத்து எழுந்து வந்தேன். இவன் செய்த அந்தத் துரோகச் செயலைக் குறித்துத் தாங்கள் விசாரித்து நியாயம் செய்யுங்கள். அல்லது நானே இவனைத் தண்டிப்பதற்கு எனக்கு உடனே அதிகாரம் கொடுங்கள்!" என்றான் கந்தமாறன்.

"நண்பனே! நானே அவசியம் விசாரித்து நியாயம் வழங்குகிறேன், செம்பியன் குலத்து மன்னர்களிடம் ஒருவன் நியாயம் கேட்டு அவனுக்கு நியாயம் கிட்டவில்லை என்ற பேச்சு இது வரையிலே கிடையாது. எங்கள் பரம்பரையின் ஆதி மன்னனாகிய சிபி, புறாவுக்கு நியாயம் வழங்குவதற்காகத் தன் சதையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொடுக்கவில்லையா? எங்கள் குலத்தைச் சேர்ந்த மனுநீதிச் சோழன் பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக தன் குமாரனையே பலி கொடுக்கவில்லையா! நீ புறாவை விட, பசுவை விட மட்டமானவன் அல்ல. உனக்கு நான் நியாயம் வழங்க மறுக்கமாட்டேன். இவனை நான் விசாரிக்கும் வரையில் பொறுமையாயிரு! வல்லவரையா! உன் பிரயாணத்தைப் பற்றிய மற்ற விவரங்களைச் சொல் லுவதற்கு முன்னால், கந்தமாறனுடைய குற்றச்சாட்டுக்கு நீ மறு மொழி சொல்லிவிடுவது நல்லது. என்ன சொல்லுகிறாய்? இவனை நீ பின்னாலிருந்து முதுகில் குத்தியது உண்மையா? அப்படியானால், அத்தகைய வீர லட்சணமில்லாத, நீசத்தனமான காரியத்தை ஏன் செய்தாய்? எதற்காகச் செய்தாய்?" என்று கேட்டான்.

"இளவரசே! நான் இந்த வீராதி வீரனைக் குத்தவும் இல்லை; முதுகில் குத்தவும் இல்லை; அதுவும் பின்னால் மறைந்து நின்று முதுகில் குத்தவே இல்லை. முதுகில் குத்தப்பட்டு நினைவிழந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தவனைத் தோளில் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் வீட்டில் போட்டுக் காப்பாற்றினேன். ஆனால் அப்படி இவன் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் இப்போது வருத்தப்படுகிறேன். இவனை மார்பிலே குத்திக் கொல்லாமற் போனோமே என்று பச்சாதாபப்படுகிறேன். சிநேக தர்மத்தை முன்னிட்டு என் அரசருக்குச் செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்து விட்டேன். ஐயா! இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி. இவன் முதுகில் குத்தப்பட்டது எங்கே, எந்தச் சந்தர்ப்பத்தில் என்று கேளுங்கள்! தஞ்சாவூர்க் கோட்டையின் இரகசிய சுரங்க வழியாக இவன் யாரைப் பழுவேட்டரையர் அரண்மனையில் கொண்டு போய்விட்டுத் திரும்பினான் என்று கேளுங்கள், பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவரையில் இவன் அன்றிரவு யாரைப் பார்த்தான் என்று கேளுங்கள். ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு தினத்தில் இவனுடைய கடம்பூர் மாளிகையில் என்ன நடந்தது என்று கேளுங்கள். அன்றைக்கு அங்கே மூடுபல்லக்கில் மறைந்து கொண்டு வந்தது யார் என்று கேளுங்கள்!

இந்தச் சமயத்தில் கந்தமாறன், உடல் நடுங்க, நாக்குழற, "அடே! அற்பப் பயலே! நிறுத்து உன் அபத்தப் பேச்சை!" இல்லாவிட்டால் இதோ இந்த வேலுக்கு இரையாவாய் !" என்று கூறி வேலைக் கையில் எடுத்தான்.

ஆதித்த கரிகாலன் அவனுடைய படபடப்பைக் கண்டு சிறிது வியப்படைந்தான். கந்தமாறனுடைய கையிலிருந்த வேலைப் பிடுங்கித் தனது இரும்பையொத்த கரங்களினால் அதன் அடிக்காம்பை வளைத்தான். வேல் படார் என்று முறிந்தது. அதன் இரு பகுதிகளையும் ஆதித்த கரிகாலன் வீசித் தூர எறிந்து விட்டு, "ஜாக்கிரதை! என் சிநேகிதர்கள் என் முன்னாலேயே சண்டையிடுவதை நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது... பார்த்திபேந்திரா! இவர்களில் யாராவது இனி வேலையோ, வாளையோ கையில் எடுத்தால் உடனே அவனைச் சிறைப்படுத்துவது உன் பொறுப்பு!" என்றான்.

உடனே வந்தியத்தேவன் தன்னிடமிருந்த வாளை எடுத்துப் பார்த்திபேந்திரனிடம் கொடுத்தான். பார்த்திபேந்திரனும் வேண்டாவெறுப்பாக அந்த வாளைப் பெற்றுக் கொண்டான்.

"கந்தமாறா! உன்னுடைய குற்றச்சாட்டுக்கு வல்லவரையன் மறுமொழி கூறினான். அதன் உண்மையைக் குறித்து நானே சாவகாசமாக விசாரித்துத் தீர்ப்பு கூறுகிறேன். அவன் கேட்ட கேள்விகளுக்கு நீ விடை சொல்லப் போகிறாயா?" என்று கரிகாலன் கேட்டான்.

கந்தமாறன் தட்டுத்தடுமாறி மென்று விழுங்கிக் கொண்டு, "ஐயா! அந்த விஷயங்களைப்பற்றி நான் யாரிடமும் சொல்லுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்" என்றான்.

பார்த்திபேந்திரன் இப்போது தலையிட்டு, "அரசே! இவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது ஏதோ பெண்ணை பற்றிய விஷயமாகக் காண்கிறது. ஆகையால் இவர்களைத் தனித் தனியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்!" என்றான்.

"ஆம், பார்த்திபா! நானும் அப்படித்தான் கருதுகிறேன். நீங்கள் மூன்று பேரும் தனித்தனியாகப் பழுவூர் இளையராணியைப் பார்த்து அவளுடைய மோக வலையில் விழுந்திருக்கிறீர்கள். ஆகையினால் தான் ஒருவரை ஒருவர் விழுங்கிவிடப் பார்க்கிறீர்கள்!" என் ு கரிகாலர் கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

பார்த்திபேந்திரனுடைய முகம் சிணுங்கியது; அவன் "பிரபு! தாங்கள் இன்றைக்கு எந்த முக்கிய விஷயத்தையும் இலேசாகக் கருதிச் சிரிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லது நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுகிறேன். இந்த வந்தியத்தேவன் பேரில் எனக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. முக்கியமானதை மட்டும் இப்போது சொல்லுகிறேன். இவனைத் தீப்பிடித்த கப்பலிலிருந்து காப்பாற்றுவதற்காகவே தங்கள் அருமைச் சகோதரர் நடுக்கடலில் கடும் புயலில் குதித்தார். பிறகு பொன்னியின் செல்வரைக் காணவே இல்லை. இவன் மட்டும் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் கொட்டாப் புளியைப் போல் இங்கே வந்து முளைத்திருக்கிறான். தங்கள் சகோதரர் என்ன ஆனார் என்று இவனைக் கேளுங்கள். அவரைக் கடல் கொண்டிருந்தால் அதற்கு இந்தப் பாதகனே காரணமாவான்!" என்றான்.

கரிகாலர் வந்தியத்தேவனைப் பார்த்து "இதற்கு என்ன மறுமொழி சொல்லுகிறாய்?" என்று கேட்டார்.

"ஐயா! நான் இவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லுவதற்கு முன்னால், இவர் ஒரு கேள்விக்கு விடை சொல்லட்டும்.பொன்னியின் செல்வரை இலங்கையிலிருந்து இவர்தான் தம்முடைய கப்பலில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதன் மந்திரி அநிருத்தரும், சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரியும் இலங்கையிலேயே இருக்கும்படி பொன்னியின் செல்வரைக் கேட்டுக் கொண்டார்கள். ஆயினும் தமையன் கட்டளையைப் பெரிதாய் மதித்து இளவரசர் இவருடைய கப்பலில் ஏறிக் கிளம்பினார். அவரை ஏன் இவர் பத்திரமாகத் தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கவில்லை? நடுக்கடலில் பொன்னியின் செல்வர் குதித்த போது இவர் ஏன் பார்த்துக் கொண்டு நின்றார்? ஏன் இளவரசரைத் தடுக்கவில்லை? ஏழையும் அநாதையுமான என்னைக் காப்பாற்றுவதற்காகப் பொன்னியின் செல வர் தம் உயிருக்குத் துணிந்து இறங்கினாரே! வீர பல்லவ குலத்தின் தோன்றலாகிய இவரும், இவருடைய ஆட்களும் இளவரசரைப் பாதுகாப்பதற்காக ஏன் கடலில் குதிக்கவில்லை? அவரைக் கடல் கொண்டுபோவதை வேடிக்கை என்று எண்ணிப் பார்த்துக் கொண்டு நின்றார்களா...?"

பார்த்திபேந்திரனுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனுடைய கைகள் துடித்தன; உதடுகளும் துடித்தன; உடல் ஆடியது.

"ஐயா! இந்த மூடன் என் மீது குற்றம் சுமத்துகிறான் என்று தோன்றுகிறது. இளவரசரை நானே கொன்று விட்டேன் என்று கூடச் சொல்லுவான் போலிருக்கிறது. இதை நான் ஒரு கணமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்றான்.

கரிகாலன் அவனை உற்று நோக்கி, "பார்த்திபா! நான் தான் சொன்னேனே? என் அருமைத் தோழர்களாகிய நீங்கள் மூன்று பேரும் ஒருவரையொருவர் கடித்துத் தின்றுவிடும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். இதற்கெல்லாம் நான் உங்கள் பேரில் குற்றம் சொல்லவில்லை. அந்தப் பழுவூர் ராணியின் சக்தி அப்படிப்பட்டது என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நீயும் கந்தமாறனும் குதிரை மீது ஏறிச் சற்று முன்னால் மெதுவாகப் போய்க் கொண்டிருங்கள். இவனுடைய பிரயாண விவரங்களைக் கேட்டுக் கொண்டு நான் சற்றுப் பின்னால் வருகிறேன். உங்கள் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்கிறேன். ஆனால் ஒன்று நிச்சயமாய் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேரும் சிநேகமாக இருந்தே தீரவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டீர்களானால், அதைக் காட்டிலும் எனக்கு அதிருப்தி உண்டாக்குவது வேறொன்றுமிராது!"

பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் வேறு வழியின்றித் தத்தம் குதிரை மீது ஏறி முன்னால் சென்றார்கள்.

அப்போது ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் அருகில் வந்து அவன் காதோடு, "அப்பனே! நீ வெகு கெட் டிக்காரனாகி விட்டாய்! பொய்யும் சொல்லாமல் உண்மையையும் வௌியிடாமல் வெகு சாமர்த்தியமாகப் பேசித் தப்பித்துக் கொண்டாய்!" என்றான்.

அப்போதுதான் ஆதித்த கரிகாலன் பார்வை அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் மீது விழுந்தது.

"ஓகோ! இவன் யார்? எப்போதோ, எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே!" என்று கேட்டான்.

"ஆம், அரசே! சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருக்கிறீர்கள்!"

"உன் குரல் கூடக் கேட்ட குரலாகத்தானிருக்கிறது."

"ஆம் ஐயா! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு தருணத்தில் என் குரலைக் கேட்டீர்கள்..."

ஆதித்த கரிகாலரின் முகத்தில் திடீரென்று ஒரு கரிய நிழல் வேகமாகப் படர்வது போலிருந்தது.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்...முக்கியமான தருணம்.. அது என்ன?.. வைகை நதித் தீவில் பகைவனைத் தேடி அலைந்த போது நான் கேட்ட குரலா? அப்படியும் இருக்க முடியுமா?"

"அந்தக் குரல் என் குரல்தான் அரசே! பகைவன் ஒளிந்திருந்த இடத்தைத் தங்களுக்கு மரத்தின் மறைவிலிருந்து சொன்னவன் நான்தான்!"

"ஆகா! என்ன பயங்கரமான தினம் அது? அன்றைக்கு எனக்குப் பிடித்திருந்த வெறியை நினைத்தால் இன்றுகூட உடல் நடுங்குகிறது. வைஷ்ணவனே! நீ ஏன் அன்று காட்டில் மறைந்திருந்தாய்? எதற்காக உன்னை அசரீரியாக மாற்றிக் கொண்டாய்?"

"அரசே! சற்று முன் தாங்களே சொன்னீர்களே! தங்களுக்கு அன்று பிடித்திருந்த வெறியைப் பற்றி! எதிரில் கண்டவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டு போனீர்கள் சில காலம் நான் உயிர் வாழ விரும்பினேன்..."

"அது மட்டுந்தானா காரணம்? 'அசரீரி வௌி வந்து எனக்கு வழிகாட்டட்டும்" என்று எவ்வளவோ முறை தொண்டை வலிக்கக் கூவினேனே? அப்போதும் நீ ஏன் வௌி வரவில்லை?"

"நான் வளர்த்த சகோதரி - இப்பொழுது பழுவூர் இளையராணி அவளுடைய தீராத கோபத்திற்கு ஆளாக நான் வ ரும்பவில்லை..."

"அவளுடைய தீராத கோபத்திற்கு நான் மட்டும் ஆளாகலாம் என்று எண்ணினாயாக்கும்! அட சண்டாளா!" என்று கூறி கரிகாலர் இடையிலிருந்த கத்தியை உருவினார்.

வந்தியத்தேவன் பயந்து போனான். ஆழ்வார்க்கடியானுடைய வாழ்வு அன்றோடு முடிந்தது என்றே எண்ணினான். மிக்க நயத்துடன் "ஐயா! இந்த வைஷ்ணவன் முதன் மந்திரியிடமிருந்து வந்திருக்கிறான். இவன் கொண்டு வந்த செய்தியைக் கேட்டுக் கொண்டு தண்டியுங்கள்!" என்றான்.

"ஆகா! இவனைத் தண்டித்து என்ன பிரயோஜனம்? இனி யாரைத் தண்டித்து என்ன பயன்?" என்று கூறிக் கரிகாலன் கத்தியை உறையில் போட்டான்.

கரிகாலன் போபத்தைக் கண்டு வந்தியத்தேவன் பயந்தது போல் ஆழ்வார்க்கடியான் பயந்ததாகத் தெரியவில்லை. முகத்தில் விசித்திரமான புன்னகையுடன், "அரசே! தங்கள் கோபத்தை என் பேரில் திருப்புவீர்கள் என்று எண்ணித்தான் இத்தனை நாளும் தங்களை நான் நேரில் சந்திக்காமலிருந்தேன். என் பேரில் என் சகோதரி கொண்ட கோபமும் இன்னும் தீரவில்லை. இன்று வரையில் என்னைப் பார்ப்பதற்குப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் தங்கள் பேரில் அவளுடைய கோபம் தீர்ந்து விட்டதாகக் காண்கிறது. நந்தினி தேவியின் அன்பான திருமுக ஓலையைப் பார்த்து விட்டுத்தானே தாங்கள் கடம்பூர் அரண்மனைக்கு விருந்துக்குப் புறப்பட்டீர்கள்?" என்றான்.

"ஆகா! துஷ்ட வைஷ்ணவனே! அது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கரிகாலன் கேட்டான்.

"ஐயா! முதன் மந்திரி அநிருத்தன் பணியாளன் நான். முதன் மந்திரிக்குத் தெரியாமல் இந்தச் சோழராஜ்யத்தில் எந்தச் சிறிய காரியமும் நடக்க முடியாது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பார்த்துக் கொண்டே இரு! ஒருநாள் அந்த அன்பில் அநிருத்தனையும் உன்னையும் சேர்த்துத் தேசப் பிரஷ்டம் செய்து விடுகிறேன்!... இப்போது இருவரும் குதிரை மீது ஏறிக் கொள்ளுங்கள்! என் இரு பக்கத்திலும் வந்து கொண்டிருங்கள் பேசிக் கொண்டே போகலாம்" என்றான் ஆதித்த கரிகாலன்.

பக்க தலைப்பு



பதின்மூன்றாம் அத்தியாயம்
மணிமேகலையின் அந்தரங்கம்




கடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள். அவளும் அன்றைக்கு மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு விளங்கினாள். அவளுடைய முகம் என்றுமில்லாத எழிலுடன் அன்று திகழ்ந்தது. அவள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பது அவளுடைய பாதி மூடிய கண்களிலிருந்து தெரிந்தது. கண்களின் கரிய இமைகள் மூடித்திறக்கும் போதெல்லாம் விழிகளிலிருந்து மின்னலைப் போன்ற காந்த ஒளிக்கிரணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இதிலிருந்து அவள் பார்ப்பதற்கு அரைத் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் அவளுடைய உள்ளம் உத்வேகத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பது நன்றாகப் புலனாயிற்று.

இன்னும் சிறிது கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவளுடைய பாதி மூடிய கண்களின் பார்வை அந்த அறையின் ஒரு பக்கத்தில் அகிற் குண்டத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைத் திரளின் மீது சென்றிருந்தது என்பதை அறியலாம். குண்டத்திலிருந்து புகை திரளாகக் கிளம்பிச் சுழிசுழியாக வட்டமிட்டுக் கொண்டு மேலே போய்ச் சிதறிப் பரவிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய்க் கொண்டிருந்தது. அந்த அகிற் புகைச் சுழிகளிலே நந்தினி என்னென்ன காட்சிகளைக் கண்டாளோ, தெரியாது. திடீரென்று அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய பவள இதழ்கள், "ஆம், ஆம்! நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான்!" என்று முணுமுணுத்தாள்.

அச்சமயம் "தேவி! தேவி! உள்ளே வரலாமா!" என்று மணிமேகலையின் மெல்லிய குரல் கேட்டது.

"வா, அம்மா, வா! உன்னுடைய வீட்டில் நீ வருவதற்கு என்னைக் கேட்பானேன்?" என்றாள் நந்தினி.

மணிமேகலை அந்தக் கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்துதான் வந்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றத்திலும் நடக்கும் நடையிலும் கையின் வீச்சிலும் உற்சாகம் ததும்பியபடியால் அவள் துள்ளிக் குதித்து ஆடிப்பாடிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

நந்தினி சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தந்தப் பீடத்தைக் காட்டி, அதில் மணிமேகலையை உட்காரச் சொன்னாள்.

மணிமேகலை உட்கார்ந்து கொண்டு, "தேவி! தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான்!" என்றான்.

"தென் தேசத்தாரும் அவர்களுடைய நாகரிகமும் நாசமாய்ப் போகட்டும். உன் அண்ணன் உனக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் உடனே மறந்து விடு! என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே! 'அக்கா' என்று அழை!"

"அக்கா! அக்கா! அடிக்கடி உங்களிடம் நான் வந்து தொந்தரவு செய்வது உங்களுக்குக் கஷ்டமாயிராதல்லவா?"

"நீ அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது எனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும்; என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருந்து விட்டாயானால் ஒரு தொந்தரவும் ராது!" என்று கூறி நந்தினி புன்னகை புரிந்தாள்.

அந்தப் புன்னகையில் சொக்கிப் போன மணிமேகலை, சற்று நேரம் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "தங்களைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. சித்திரங்களிலேகூட பார்த்ததில்லை" என்று சொன்னாள்.

"பெண்ணே! நீ வேறு என் மீது மோகம் கொண்டு விடாதே! ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக ஊரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்!"

"அக்கா! அப்படி யாராவது அவதூறு பேசுவது என் காதில் மட்டும் விழுந்தால், அவர்களுடைய நாக்கை ஒட்ட அறுத்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்!" என்றாள் மணிமேகலை.

"ஊராரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை மணிமேகலை! நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள்!"

மணிமேகலையின் முகம் சுருங்கிற்று. "ஆம், ஆம்! அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன...?"

"பேசினால் பேசிக் கொண்டு போகிறார்கள்; மணிமேகலை! அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது? என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு!"

"என்னைப் பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது அக்கா!"

"அடி, கள்ளி! இன்று மாலையில் வந்து உன் மனத்தில் உள்ள அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் என்று நீ கூறிவிட்டு போகவில்லையா? இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே?" என்று கூறிவிட்டு நந்தினி மணிமேகலையின் அழகிய கன்னத்தை இலேசாகக் கிள்ளினாள்.

"அக்கா! எப்போதும் என ்கு இப்படியே தங்களுடன் இருந்துவிட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. எனக்கு சுயம்வரம் வைத்து, பெண்கள் பெண்களையே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தினால் நான் தங்களுக்குத் தான் மாலையிடுவேன்!" என்றாள் மணிமேகலை.

"என்னை நீ பார்த்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை! அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே? அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே? ஆனால் நீ சற்று முன் கூறியது நடவாத காரியம். பெண்ணுக்குப் பெண் மாலையிடுவது என்பது உலகில் என்றும் நடந்ததில்லை. யாராவது ஓர் ஆண்பிள்ளையைத்தான் நீ மணந்து கொண்டு தீர வேண்டும்..."

"கன்னிப் பெண்ணாகவே இருந்துவிட்டால் என்ன, அக்கா?"

"முடியாது, கண்ணே! முடியாது! கன்னிப் பெண்ணாயிருக்க இந்த உலகம் உன்னை விடவே விடாது. உன் அம்மாவும் அப்பாவும் விடமாட்டார்கள்; உன் தமையனும் விட மாட்டான். யாராவது ஓர் ஆண்பிள்ளையின் கழுத்தில் உன்னைக் கட்டி விட்டால்தான் அவர்களது மனது நிம்மதி அடையும். அப்படி நீ கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பட்டால் யாரை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறாய், சொல்லு!"

"பெயரைக் குறிப்பிட்டுக் கேளுங்கள், அக்கா! சொல்லுகிறேன்!"

"சரி சரி, அப்படியே கேட்கிறேன் சிவபக்தியில் சிறந்த மதுராந்தகத் தேவரை மணந்துகொள்ள விரும்புகிறாயா? அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா?"

திடீரென்று மணிமேகலை எதையோ நினைத்துக் கொண்டவள் போல் கலகலவென்று வாய்விட்டுச் சிரி ்தாள்.

"ஏன் சிரிக்கிறாய், மணிமேகலை? நான் பரிகாசம் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டாயா? இந்த விஷயத்தை முடிவு செய்வதற்காகவே என்னை உன் தமையன் இங்கே முக்கியமாக வரச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் கரிகாலர் இங்கே வந்துவிடக் கூடும். உன் தமையனும் வந்து விடுவான். உன் அந்தரங்கத்தை அறிந்து சொல்லுவதாக அவனுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்" என்றாள் நந்தினி.

"என் அந்தரங்கம் இன்னதென்று எனக்கே தெரியவில்லையே, அக்கா! நான் என்ன செய்யட்டும்!"

"எதற்காகச் சிரித்தாய், அதையாவது சொல்!" என்று கேட்டாள் நந்தினி.

"மதுராந்தகர் பெயரைச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நாலு மாதத்துக்கு முன்பு அவர் இந்த வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்தார். தாங்கள் வழக்கமாக வரும் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஒருவரும் பார்க்காமல் திரை போட்டுக் கொண்டு வந்தார். அந்தப்புரத்தில் எங்களுக்கு அந்த இரகசியம் தெரியாது. தாங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். 'பழுவூர் ராணி ஏன் அந்தப்புரத்துக்கு வரவில்லை?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா! பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா? மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான்!..."

நந்தினி புன்னகை புரிந்து, "ஆம்! மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது.அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு!" என்றாள் நந்தினி.

"அப் டியும் சொல்லமாட்டேன், அக்கா! அவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி என் மனம் அவரிடம் சென்றிருக்க முடியும்?"

"அடியே! இராஜகுலத்துக்குப் பெண்கள் பார்த்து விட்டுத்தான் மனத்தைச் செலுத்துவது என்பது உண்டா? கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா?"

"ஆம், ஆம்! அறிந்திருக்கிறேன். ஆதித்த கரிகாலர் வீராதி வீரர் என்றும் உலகமெல்லாம் அவர் புகழ் பரவியிருக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். அக்கா! வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டிவிட்டாராமே? அது உண்மையா?"

நந்தினியின் முகம் அச்சமயம் எவ்வளவு பயங்கரமாக மாறியது என்பதை மணிமேகலை கவனிக்கவில்லை.

நந்தினி சில வினாடி நேரம் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அதற்குள் அவள் முகம் பழையபடி பார்ப்போரை மயக்கும் மோகன வசீகரத்துடன் விளங்கியது.

"மணிமேகலை! ஒருவருடைய தலையை ஒரே வெட்டில் வெட்டிவிடுவது பெரிய வீரம் என்று கருதுகிறாயா? அது பயங்கர அசுரத்தனம் அல்லவா?" என்றாள்.

"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை அக்கா! பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா? அது எப்படி அசுரத்தனமாகும்!"

"இந்த மாதிரி யோசனை செய்து பார்! உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள். அல்லது நீ மணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்ட வாயா?" என்று கேட்டாள் பழுவூர் ராணி.

மணிமேகலை சற்று யோசித்து விட்டு, "அக்கா! மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன்!" என்றாள்.

நந்தினி மணிமேகலையை ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாள். "என் கண்ணே! நல்ல மறுமொழி சொன்னாய்! இவ்வளவு புத்திசாலியாகிய உனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று கவலையாயிருக்கிறது. ஆதித்த கரிகாலர் கூட உனக்குத் தக்க மணவாளர் ஆவாரா என்பது சந்தேகந்தான்" என்றாள் நந்தினி.

"நானும் அப்படித்தான் எண்ணுகிறேன் கரிகாலருடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்ட பிறகு அவரை நினைத்தால் எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. என்னுடைய அந்தரங்கத்தை, என் மனத்திலுள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா அக்கா?" என்று கேட்டாள் மணிமேகலை.

பக்க தலைப்பு



பதினான்காம் அத்தியாயம்
கனவு பலிக்குமா?




நந்தினி மணிமேகலையின் முகவாயைச் சற்று நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு அவளுடைய மலர்ந்த கண்களை ஊடுருவி நோக்கினாள்.

"என் கண்மணி! உன் அந்தரங்கத்தை நீ என்னிடம் சொல்லாமல் வைத்துக் கொள்வதே நல்லது. பார்க்கப்போனால் உனக்கு நான் பழக்கமாகி முழுமையாக ஒருநாள் கூட ஆகவில்லை. நெடுநாள் பழகிய தோழிகளிடம் தான் அந்தரங்கத்தைச் சொல்ல வேண்டும்" என்றாள்.

"இல்லை அக்கா! உங்களைப் பார்த்தால் எனக்கு வெகு நாள் பழக்கமான தோழி மாதிரியே தோன்றுகிறது. யாரிடமும் சொல்லாத விஷயத்தைத் தங்களிடம் சொல்லும்படி என் உள்ளம் தூண்டுகிறது. யாரிடமும் கேட்கக் கூடாத காரியத்தைத் தங்களிடம் ேட்கும் தைரியமும் உண்டாகிறது..."

"அப்படியானால் கேளடி, கண்ணே!"

"உருவௌித் தோற்றம் என்று கதைகளில் சொல்லுகிறார்களே, அது உண்மையாக ஏற்படக் கூடுமா, அக்கா? நம் எதிரில் ஒருவர் இல்லாதபோது அவர் இருப்பது போலவே தோன்றுமா?"

"சில சமயங்களில் அப்படித் தோன்றும்; ஒருவரிடம் நாம் அதிகமான ஆசை வைத்திருந்தால், அவருடைய உருவம் எதிரில் இல்லாவிட்டாலும் இருப்பது போலத் தோன்றும். ஒருவரிடம் அதிகமான துவேஷம் வைத்திருந்தால் அவருடைய உருவமும் தோற்றம் அளிக்கும், மாயக் கண்ணனுடைய கதை நீ கேட்டதில்லையா, மணிமேகலை? ஏன்? நாடகம்கூடப் பார்த்திருப்பாயே? கம்ஸனுக்குக் கிருஷ்ணன் பேரில் ரொம்பத் துவேஷம். ஆகையால் கண்ட இடமெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. கத்தியை வீசி வீசி ஏமாந்து போனான். நப்பின்னை என்னும் கோபிகைக்குக் கண்ணன் மீது ரொம்ப ஆசை. அவளுக்கும் கண்ணன் உருவம் இல்லாத இடத்திலெல்லாம் தோன்றுமாம். தூணையும், மரத்தையும், நதியின் வெள்ளத்தையும் கண்ணன் என்று கட்டித் தழுவிக் கொள்ளப் போய் ஏமாற்றமடைவாளாம்! அடியே, மணிமேகலை, உன்னை அந்த மாதிரி மயக்கிவிட்ட மாயக் கண்ணன் யாரடி?"

"அக்கா! முதன் முதலாக நாலு மாதத்துக்கு முன்னால் தான் அவரை நான் நேரில் பார்த்தேன். அதற்கு முன்னால் என் தமையன் கந்தமாறன் அவரைப் பற்றி அடிக்கடி சொல்லி இருந்தான். அப்போதெல்லாம் அவர் உருவம் என் கண் முன் தோன்றுவதில்லை. ஒரு தடவை பார்த்த பிறகு அடிக்கடி என் கனவில் தோன்றி வந்தார்.பகலிலும் சில சமயம் எதிரில் அவருடைய உருவம் நிற்பது போலிருக்கும்...."

"நேற்றுக்கூட அந்த மாயாவியின் உருவௌித் தோற்றத்தை நீ கண்டாய் அல்லவா?"

"ஆம், அக்கா! உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"என்னிடம் மந்திர சக்தி உண்டு என்பதைப் பற்றி உனக்கு யாராவது சொல்லவில்லையா?"

"ஆம்; சொன்னார்கள் அது உண்மைதானா , அக்கா?"

"நீயே பரீட்சித்துத் தெரிந்துகொள்; உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்த யௌவன சுந்தர புருஷனை யார் என்று வேண்டுமானால், என் மந்திர சக்தியினால் கண்டு சொல்லட்டுமா!"

"சொல்லுங்கள், பார்க்கலாம் எனக்கும் அவர் பெயரைச் சொல்லக் கூச்சமாயிருக்கிறது."

நந்தினி சிறிது நேரம் கண்ணிமைகளை மூடிக் கொண்டிருந்துவிட்டுத் திறந்து "உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆசைக் காதலன் வாணர் குலத்தில் வந்த வல்லவரையன் வந்தியத்தேவன்! இல்லையா?" என்றாள்.

"அக்கா! உங்களிடம் மந்திர சக்தி இருப்பது உண்மைதான்!" என்றாள் மணிமேகலை.

"அடி பெண்ணே! எப்போது உன் உள்ளத்தை அவ்வளவு தூரம் ஒருவருக்குப் பறிகொடுத்துவிட்டாயோ, அப்போது ஏன் உன் தமையனிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லை? மதுராந்தகருக்கு ஆசை காட்டுவானேன்? கரிகாலரை இங்கே தருவித்து வீண் பிரயத்தனம் செய்வானேன்? என்னை அநாவசியமாக இங்கே வரவழைப்பானேன்?"

"அக்கா! என் தமையன் கந்தமாறனுக்கு அவரைப் பிடிக்கவில்லை.."

"அழகாயிருக்கிறது! உன் தமையனா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான்? ஆனால் கந்தமாறன் தானே வந்தியத்தேவனைப் பற்றி உனக்குச் சொன்னான் என்றாய்? இங்கே அவனைக் கூட்டிக் கொண்டு வந்ததும் உன் தமையன் தானே?"

"ஆமாம், கந்தமாறன் தான் அவரைப் பற்றிச் சொன்னான். அந்தப்புரத்துக்கு ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டும் வந்தான். ஆனால் பிற்பாடு அவன் மனம் மாறிவிட்டது; அதற்குக் காரணமும் இருக்கிறது. தஞ்சாவூரில் என் தமையனை அவர் கத்தியால் குத்திவிட்டாரம், அக்கா! உங்கள் அரண்மனையிலே என் தமையன் காயத்தோடு படுத்துக் கிடந்தானாமே? உங்கள் அன்பான பராமரிப்பினால்தான் அவன் உயிர் பிழைத்து எழுந்தானாமே?"

"நான் செய்ததை உன் தமையன் அதிகப்படுத்திக் கூறுகிறான். அது போனால் போகட்டும். இப்போது நீ என்ன செய்வாய்? உன் மனத்த க் கவர்ந்தவன் இப்படி உன் தமையனுக்கு விரோதியாகி விட்டானே?"

"ஆனால் இவர் என்ன சொல்கிறார், தெரியுமா?..."

"இவர் என்றால், யார்?"

"அவர்தான்! நீங்கள் சற்று முன் பெயர் சொன்னீர்களே, அவர் தான்! கந்தமாறனை அவர் குத்தவேயில்லையென்று ஆணையிடுகிறார். வேறு யாரோ குத்தித் தஞ்சாவூர்க் கோட்டை மதில் ஓரத்தில் போட்டிருந்தார்கள் என்றும், அவர் எடுத்துக் கொண்டு போய்க் காப்பாற்றியதாகவும் சொல்கிறார்."

"இதை எப்போதடி அவன் உனக்குச் சொன்னான்?"

"நேற்றுத்தான்.."

"நேற்று அந்த வந்தியத்தேவனை நீ நேரில் பார்த்தாயா, என்ன ? அவனுடைய உருவௌித் தோற்றத்தைக் கண்டதாக அல்லவா கூறினாய்?"

"அதுதான் அக்கா, எனக்கு ஒரே மனக் குழப்பமாயிருக்கிறது. நேற்று நான் பார்த்தது அவரா, அல்லது அவருடைய உருவௌித் தோற்றமா என்று தெரியவில்லை. நேற்று நடந்தவற்றை எண்ணினால், எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது.அக்கா! சில சமயம் மனிதர்கள் செத்துப் போனால் அவர்களுடைய ஆவி வந்து பேசும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" இந்தக் கேள்வியைக் கேட்ட போது மணிமேகலையின் குரலில் அளவிலாத பீதி தொனித்தது.

நந்தினியின் உடலும் நடுங்கிற்று. எங்கேயோ உச்சி முகட்டைப் பார்த்த வண்ணம் "ஆம்; உண்மைதான்! அற்பாயுளில் மாண்டவர்கள் ஆவி அப்படி உயிரோடிருப்பவர்களை வந்து சுற்றும். ஒருவருடைய தலையை வெட்டிக் கொன்று விட்டவர்கள் என்றால், சில சமயம் தலை மட்டும் வரும். சில சமயம் உடம்பு மட்டும் தனியாக வரும். இன்னும் சில சமயம் இரண்டும் தனித்தனியாக வந்து, 'பழி வாங்கினாயா?' என்று கேட்கும்!" என்றாள்.

பிறகு மணிமேகலையைப் பார்த்து உரத்த குரலில், "அடி பெண்ணே! நீ எதற்காக இந்தக் கேள்வி கேட்டாய்! உன் காதலனுக்கு அப்படி ஏதாவது நேர்ந்திருக்கும் என்று பயப்படுகிறாயா? உன் மனதில் இந்தச் சந்தேகத்தை யார் கிள ப்பி விட்டார்கள்?" என்றாள்.

"இந்த அரண்மனையின் ஆவேசக்காரன் ஒருவன் இருக்கிறான். அவனைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவனை யாரோ நேற்றிரவு அடித்துப் போட்டு விட்டார்களாம். அவனுக்குப் பதிலாக அவன் பெண்டாட்டி தேவராட்டி வந்தாள். அவள் தான் சொன்னாள்!"

"சீச்சீ! அதையெல்லாம் நீ நம்பாதே!"

"எனக்கும் நம்பிக்கைப்படவில்லை. வெறும் ஆவி வடிவமாயிருந்தால், தொட முடியாதல்லவா, அக்கா!"

"ஆவியையும் தொட முடியாது; உருவௌித் தோற்றத்தையும் தொட முடியாது. நீ ஏன் கேட்கிறாய்! உன் உள்ளத்தைக் கவர்ந்தவனை நீ நேற்றுத் தொட்டுப் பார்த்தாயா, என்ன?"

"அதுதான் ஒரே குழப்பமாயிருக்கிறது. தொட்டுப் பார்த்தது போலவும் இருக்கிறது; ஆனால் வேறு சில விஷயங்களை நினைத்துப் பார்த்தால் சந்தேகமாகவும் இருக்கிறது."

"நேற்று நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லடி, பெண்ணே! நான் உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்!"

"ஆகட்டும் அக்கா! நான் ஏதாவது முன் பின்னாக உளறினால் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்றாள் மணிமேகலை. பிறகு அவள் கூறினாள்; "நேற்று நான் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இங்கே இருந்தேன். என் தமையன் சொல்லிப் போயிருந்தபடி தங்களுக்கு இங்கே வேண்டிய சௌகரியம் எல்லாம் பணிப்பெண்கள் சரியாகச் செய்திருக்கிறார்களா என்று கவனிப்பதற்காக வந்தேன். ஒரு முறை, இதோ இருக்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!"

"உன் அழகை நீயே பார்த்துக் கொண்டிருந்தாயாக்கும்..."

"அப்படியொன்றும் இல்லை, அக்கா! என் முக இலட்சணம் எனக்குத் தெரியாதா, என்ன?"

"உன் முக லட்சணத்துக்கு என்ன குறைவு வந்தது? ரதியும் இந்திராணியும் மேனகையும் ஊர்வசியும், உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட மாட்டார்களா?"

"அவர்கள் எல்லாரும் உங்கள் கால் தூசி பெறமாட்டார்கள் அக்கா!" < BR>
"சரி, சரி! மேலே சொல்! கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..."

"அப்போது திடீரென்று இன்னொரு முகம் கண்ணாடியில் தெரிந்தது; என் முகத்துக்கு அருகில் தெரிந்தது."

"அது உன் காதலன் முகந்தானே!"

"ஆமாம்; எனக்குத் தூக்கி வாரிப் போட்டது..."

"எதற்காகத் தூக்கி வாரி போட வேண்டும்? நீ தான் அடிக்கடி அவனுடைய முகத்தைக் கனவில் பார்ப்பதுண்டு என்று சொன்னாயே?

"அதற்கும் இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. கனவில் வரும்போது எதிரே சற்றுத் தூரத்தில் தெரியும். உருவௌித் தோற்றத்திலும் அப்படித்தான் ஆனால் இங்கே - பின்னாலிருந்து சொல்லக் கூச்சமாயிருக்கிறது..."

"பாதகமில்லை, சொல்லடி கள்ளி!"

"பின்னாலிருந்து கன்னத்தில் முத்தமிட வருவதைப் போல் இருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன் ஒருவரும் இல்லை. பிறகு கண்ணாடியிலும் அந்த முகம் தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இந்த அறைக்குப் பக்கத்தில் உள்ள வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவைத் திறந்து காட்டினேன் அல்லவா? நேற்று கண்ணாடி அந்தக் கதவுக்கு நேரே வைத்திருந்தது. ஆகையால் அந்தக் கதவைத் திறந்து வேட்டை மண்டபத்திலிருந்து யாராவது எட்டிப் பார்ப்பார்களோ என்று தோன்றியது. அப்படி இருக்க முடியாது என்றும் எண்ணினேன். அன்னிய புருஷன் ஒருவன் அந்த வேட்டை மண்டபத்தில் எப்படி வந்திருக்க முடியும்? ஆயினும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கதவைத் திறந்து வேட்டை மண்டபத்துக்குள் போய்ப் பார்த்தேன்.."

நந்தினி இதற்குள் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கியிருந்தாள். "வேட்டை மண்டபத்தில் அந்தத் திருடன் ஒளிந்திருந்தானா? அகப்பட்டுக் கொண்டானா?" என்று கேட்டாள்.

"என்ன அக்கா, அவரைத் 'திருடன்' என்கிறீர்களே?"

"திருடன் என்றால், நிஜத் திருடனா? உன் மனத ்தைக் கவர்ந்த திருடனைச் சொன்னேன் அடி! அவன் வேட்டை மண்டபத்தில் இருந்தானா?"

"அதுதானே அதிசயம்! அவர் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக எங்கள் அரண்மனைப் பணியாள் இடும்பன்காரி அந்த அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய முகம் அய்யனார் கோவில் வாசலில் உள்ள காடுவெட்டிக் கருப்பன் முகம் மாதிரி இருக்கும். 'இங்கே வேறு யாராவது வந்ததுண்டா?" என்று கேட்டேன்; 'இல்லை' என்று சாதித்து விட்டான்..."

"அவன் பொய் சொல்லியிருப்பான் என்று கருதுகிறாயா?"

"அது என்னமோ எனக்கு தெரியாது ஆனால் இன்னொரு ஆள் அந்த மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகத் தோன்றியது. 'திருட்டு தானே வௌியாகட்டும்' என்று நான் இந்த அறைக்குத் திரும்பி வந்துவிட்டேன்..."

"திருட்டு வௌியாயிற்றா?"

"கேளுங்கள்! நான் இந்த அறைக்குள் வந்து வேட்டை மண்டபத்துக்குள் ஏதாவது பேச்சுக் குரல் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். பேச்சுக் குரல் கேட்டது! தடபுடலாக ஏதோ விழுகிற சத்தமும் கேட்டது. நான் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கதவு அசைந்தது. நான் விளக்கை மறைத்து வைத்து விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.இந்தக் கதவிலேயே வட்டமான ஒரு சிறிய உட்கதவு இருக்கிறது. அதைத் திறந்து கொண்டு ஓர் உருவம் இங்கே வரப் பார்த்தது. "அபயம் அபயம்! என்னைக் காப்பாற்று!" என்ற குரல் கேட்டது. குரலும் உருவமும் அவரைப் போல் தோன்றியபடியால் அவர் இந்த அறையில் வருவதற்கு உதவி செய்துவிட்டு விளக்கைத் தூண்டினேன் பார்த்தால் அவரேதான்!"

"மணிமேகலை! இது என்ன அதிசயமடி! விக்கிரமாதித்யன் கதையைப் போல அல்லவா இருக்கிறது?"

"இன்னும் கேளுங்கள்! நாலு மாதமாகக் கனவில் கண்டுவந்தவரை நேரில் பார்த்ததும் என் உள்ளம் பூரித்தது; உடம்பு சிலிர்த்தது.ஆனால் கள்ளக் கோபத்துடன் அவரிடம் பேச னேன். 'பெண்கள் வசிக்கும் அந்தப்புரத்தில் எப்படி அவர் திருட்டுத்தனமாகப் பிரவேசிக்கலாம்?" என்று கேட்டேன். அவரைக் கொல்லுவதற்காக யாரோ சிலர் துரத்திக் கொண்டு வருவதாகக் கூறினார். 'உயிருக்குக் பயந்தோடும் பயங்கொள்ளி' என்று பரிகசித்தேன். அதற்குத் தம்மிடம் ஆயுதம் இல்லை என்று சமாதானம் கூறினார். பிறகு தான் என் தமையனை அவர் முதுகில் குத்தியதைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். 'இல்லவே இல்லை' என்று சத்தியம் செய்தார், அக்கா!"

"நீயும் நம்பிவிட்டாயாக்கும்!"

"அப்போது நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் பிறகு நடந்ததையெல்லாம் யோசிக்கும் போது எதை நம்புவது, எதை நம்பாமலிருப்பது என்றே தெரியவில்லை..."

"பிறகு இன்னும் என்ன அதிசயம் நடந்தது?"

"அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே என் ஒரு காதினால் அடுத்த அறையில் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். பல பேர் நடமாடும் சத்தமும் பேச்சுக் குரல்களும் கேட்டன. ஆகையால் அவரைக் கொல்லுவதற்கு யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். கேளுங்கள் அக்கா! அந்தச் சமயத்தில் இந்தப் பேதை மனம் எப்படியாவது அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டது. அவரைக் கொல்ல வருகிறவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ள விரும்பினேன். இடும்பன்காரி இதற்கெல்லாம் உட்கையாக இருப்பானா? அப்படியானால் அவன் இவருக்கு உட்கையா? இவரைக் கொல்ல வருகிறவர்களுக்கு உட்கையா என்றும் அறிய விரும்பினேன். வேட்டை மண்டபத்துக்குள் வரும் இரகசியச் சுரங்க வழி இவ்வளவு பேருக்குத் தெரிந்திருப்பதை நினைத்துத் திகில் உண்டாயிற்று. அதிலும் நீங்கள் இங்கே தங்கப் போகிறீர்கள் என்பதை எண்ணியபோது கவலை அதிகமாயிற்று. தகப்பனாரைக் கூப்பிட்டனுப்பலாம் என்று நினைத்தால், அதற்கும ் தைரியம் வரவில்லை. இவர் அந்தப்புரத்துக்குள் வந்திருப்பதைத் தகப்பனார் பார்த்தால், உடனே இவர் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். ஆகையால் இவரை இங்கேயே சற்று இருக்கும்படி சொல்லிவிட்டு, வேட்டை மண்டபத்திற்குள் இருப்பவர்கள் யார் என்று பார்த்துவிட்டு வருவதற்காகக் கதவைத் திறந்து கொண்டு போனேன். உள்ளே ஐந்தாறு ஆட்கள் மூலைக்கு மூலை சுவர் ஓரமாக இருந்தார்கள். என்னைப் பார்த்துவிட்டு அவர்கள் பிரமித்து நின்றதாகத் தோன்றியது. அவர்களை அவ்விதம் பார்த்ததில் என் மனத்திலும் சிறிது பயம் உண்டாயிற்று. அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டு கடுங்கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் யார் என்று கேட்பதற்காக வாய் எடுத்தேன். இதற்குள், இந்த அறையில் என் தோழி சந்திரமதி மற்றொரு கதவு வழியாக 'அம்மா! அம்மா!' என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தாள். இவர் இங்கே இருப்பது எனக்கு உடனே நினைவு வந்தது.சந்திரமதி இவரைப் பார்த்துவிட்டுக் கூச்சல் போடப் போகிறாளே என்று பயந்து போனேன். வேட்டை மண்டபத்துக்குள் இருப்பவர்களை மறுபடி பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினேன். சந்திரமதியையும் வழி மறித்து அழைத்துக் கொண்டு இந்த அறைக்குள் வந்து பார்த்தேன். இங்கே அவரைக் காணவில்லை; மாயமாய் மறைந்து போய்விட்டார். 'யாராவது இங்கே இருந்தார்களா?' என்று சந்திரமதியைக் கேட்டேன், தான் பார்க்கவில்லை என்றாள். இன்னும் சிறிது தேடிப் பார்த்துவிட்டு மறுபடி வேட்டை மண்டபத்துக்குள் போனேன். அங்கேயும் நான் சற்று முன் பார்த்தவர்கள் யாரும் இல்லை. இடும்பன்காரி மாத்திரம் முன் போலவே அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். 'சற்று முன்னால் இங்கே வந்திருந்தவர்கள் யார்? அவர்கள் இப்போது எங்கே?' என்று கேட்டேன். இடும்பன்காரி 'இங்கே ஒருவரும் வரவில்லையே, அம்மா!' என்று ஒரே சாதிப்பாகச் சாதித்த ன். அவன் வார்த்தையை என்னால் நம்ப முடியவில்லை. என் தோழி சந்திரமதியோ என்னைப் பரிகாசம் பண்ண ஆரம்பித்து விட்டாள். 'அக்கா! இன்றைக்கு உங்களுக்கு ஏதோ சித்தப்பிரமை தான் பிடித்திருக்கிறது! ஆள் இல்லாத இடங்களிலெல்லாம் ஆள் இருப்பதாகத் தோன்றுகிறது!' என்றாள். பிறகு நீங்கள் எல்லாரும் கோட்டை வாசலை நெருங்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். தங்களை வரவேற்பதற்காக என்னை என் தந்தை உடனே அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினாள். உடனே நான் அரண்மனை வாசலுக்குப் புறப்பட்டேன். சீக்கிரம் அங்கே வந்து விடுவதற்காகச் சந்திரமதி வந்த நடையில் சென்று இரண்டு கட்டுக்களைத் தாண்டி மச்சுப்படி வழியாக ஏறி மேல் மாடத்தில் நடந்து போனேன். அப்போது மறுபடியும் ஓர் அதிசயத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த வாணர் குலத்து வீரர் நிலா முற்றத்தைக் கடந்து மதில் சுவர் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். சுவரில் ஒரு மூங்கில் கழியை வைத்து ஏறி மதில் சுவரைத் தாண்டிக் குதிப்பதையும் பார்த்தேன். என் கண்களுக்கு அவ்வாறு தோன்றியது. அவையெல்லாம் உண்மையாக நடந்தவையா அல்லது என் சித்தப்பிரமையா என்று இன்னமும் எனக்கு நிச்சயமாகவில்லை..."

நந்தினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அந்த மாளிகை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் அடர்ந்த மரங்களிடையே நேற்று மாலை அவள் பார்த்த இரு முகங்கள் அவள் மனக்கண் முன் தோன்றின. அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை ஆட்கள் ஏவப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அவர்கள் ஒருவேளை இதற்குள் பிடிபட்டிருப்பார்களா? பிடிபட்டிருந்தால் இங்கே கொண்டு வரப்படுவார்களா?...

"அக்கா! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டு, நந்தினியின் சிந்தனையைத் தடை செய்தாள் மணிமேகலை.

"எனக்கா! எனக்குத் தோன்றுகிறதையா கேட்கிறாய்? உனக்கு மோகப்பித் ம் நன்றாகத் தலைக்கு ஏறியிருக்கிறது என்று தோன்றுகிறது" என்றாள் நந்தினி.

"சந்திரமதியைப் போல் நீங்களும் பரிகாசம் செய்கிறீர்களா?"

"நான் பரிகாசம் செய்யவில்லையடி! நேரில் பார்த்துப் பேசிய உனக்கே உண்மையா, கனவா, சித்தப்பிரமையா என்று தெரியவில்லையே! நான் எப்படிச் சொல்ல முடியும்? இந்த அறையிலிருந்து வௌியேறிப் போவதற்கு வேறு ஏதேனும் இரகசிய வழி இருக்கிறதா?"

"எனக்குத் தெரிந்த வரையில் வேறு இரகசிய வழி இல்லை, அக்கா!"

"நீயும் சந்திரமதியும் போன வழியில் அவனும் போய் மச்சுப்படி ஏறிப் போயிருக்கலாம் அல்லவா?"

"அங்கே வழியில் பல பணிப்பெண்கள் இருந்தார்கள்; அக்கா! அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்க முடியாது."

"அதிசயமாகத்தானிருக்கிறது... இதையெல்லாம் பற்றி உன் தகப்பனாரிடம் நீ தெரிவிக்கவில்லையா?"

"தெரிவிக்கவில்லை அக்கா! தகப்பனாரிடம் சொல்லக் கூச்சமாகவும் இருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. ஒருவேளை அவர் இங்கே வந்திருந்ததெல்லாம் உண்மையாக இருந்தால்..."

"ஆமாம், புருஷர்களிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லாமலிருப்பதே நல்லது அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது..."

"என் தமையனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.."

"அவனிடம் சொன்னால் கட்டாயம் ரகளையாக முடியும். உன் தமையனுக்கு இப்போது எப்படியாவது உன்னைக் கரிகாலனுக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றிருக்கிறது!"

"அக்கா! நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். கந்தமாறனுக்கு உங்களிடம் ரொம்ப விசுவாசம். நீங்கள் சொன்னால் கேட்பான்..."

"அடி பெண்ணே! நான் எந்த நோக்கத்துடன் இங்கே வந்தேனோ, அதற்கு விரோதமாக என்னுடைய உதவியையே கேட்கிறாயே? வெகு கெட்டிக்காரி நீ! அப்படியே கரிகாலருக்கு உன்னை மணம் செய்து கொடுக்கும் யோசனையைக் கைவி ட்டாலும், மற்றவனைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாதே? அவன் உன்னை விரும்புவான் என்பது என்ன நிச்சயம்!"

"அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை; அக்கா! அவர் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்..."

"பெண்களின் தலையெழுத்தே இப்படித்தான் போலும்! புருஷர் எப்படி நடந்து கொண்டாலும், பெண்கள் அவர்களுக்காக உயிரை விட வேண்டியதென்று ஏற்பட்டிருக்கிறது! ஏதோ உன் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம். மறுபடியும் நேற்று மாதிரி ஏதேனும் நேர்ந்தால் என்னிடம் சொல்வாய் அல்லவா?"

"உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது அக்கா! நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அதையும் சொல்லிவிட விரும்புகிறேன்..."

"பகற் கனவு கண்டது போதாது என்று, இரவிலும் வேறு கனவு கண்டாயா? அது என்ன? மறுபடியும் அவன் கனவில் வந்து உன்னை ஏமாற்றிவிட்டுப் போனானா?"

"இல்லை, இல்லை! இது வேறு விஷயம் நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. காலை நேரத்தில் காணும் கனவு பலிக்கும் என்கிறார்களே? அது உண்மைதானா, அக்கா!"

"கனவைச் சொல் கேட்கலாம்! வேறு விஷயம் என்றால்..."

இன்னும் யாரையேனும் பற்றிக் கனவு கண்டாயா?"

"இவரைப் பற்றித்தான்! இவரை யாரோ ஒருவன் கத்தியால் குத்த வருகிறது போல் இருந்தது. இவர் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லை. ஆனால் தரையிலே ஒரு கத்தி பளபளவென்று மின்னிக் கொண்டு கிடந்தது. நான் அதைத் தாவி எடுத்துக் கொண்டு பாய்ந்தேன். இவரைக் குத்த வருகிறவனை முதலில் நான் குத்தி விடுவது என்ற எண்ணத்துடன் ஓடினேன். அருகில் சென்றதும் அவனுடைய முகம் தெரிந்தது. அவன் என் தமையன் கந்தமாறன்!.... 'ஓ' என்று அலறிக் கொண்டு விழித்தெழுந்தேன். என் உடம்பெல்லாம் வியர்வையினால் சொட்ட நனைந்திருந்தது. வெகு நேரம் என் கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. கனவு அவ்வளவு நிஜம் போல இருந்தது. இது ஒருவேளை பல த்து விடுமா, அக்கா!"

"அடி பெண்ணே! உன் மனம் உண்மையிலேயே குழம்பிப் போயிருக்கிறது. நிஜமாக நடந்தது பிரமைபோலத் தோன்றுகிறது. கனவிலே கண்டது நிஜம்போலத் தோன்றுகிறது! நல்ல தோழி எனக்குக் கிடைத்தாய்! நான்தான் பைத்தியக்காரி என்றால், நீ என்னைவிட ஒருபடி மேலே போய்விட்டாய்!" என்றாள் நந்தினி.

இந்தச் சமயத்தில் சந்திரமதி உள்ளே வந்தாள். "அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம்! வீரநாராயண ஏரியைத் தாண்டி வந்து விட்டார்களாம்" என்று தெரிவித்தாள்.

பக்க தலைப்பு



பதினைந்தாம் அத்தியாயம்
இராஜோபசாரம்




கடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம் ஜனங்கள் திரள் திரளாக நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், வயோதிகர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள்.

திடமாகக் காலூன்றி நிற்கவும் முடியாத கிழவர்களும் கிழவிகளும் கோலூன்றி நின்றார்கள். தாங்கள் பிறரால் அங்குமிங்கும் தள்ளப்படுவதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆதித்த கரிகாலரின் வீரத் திருமுகத்தைப் பார்க்கும் ஆர்வத்தினால் தள்ளாடிக் கொண்டு நின்றார்கள். சிறுவர் சிறுமியர் தாங்கள் ஜனக்கூட்டத்தின் நடுவே நசுக்கப்படுவதைப் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர முயன்று கொண்டிருந்தார்கள். யௌவனப் பெண்கள் தங்களுக்கு இயற்கையான கூச்சத்தை அடியோடு கைவிட்டு அன்னிய புருஷர்களின் கூட்டத்தினிடையே இடித்துப் பிடித்துக் கொண்டு முன்னால் வரப் பிரயத்தனம் செய்தார்கள். யௌவன புருஷர்களோ, அத்தகைய இளம் பெண்களைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல், அவர்களின் மீது கடைக்கண் பார்வையைக் கூடச் செலுத்தாமல், இளவரசரை நன்றா கப் பார்க்கக் கூடிய இடங்களைப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். அவர்களில் பலர் கடம்பூர் மாளிகைக்கு எதிரிலும் பக்கங்களிலும் உள்ள மரங்களின் மீதெல்லாம் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அநேகர் அந்த மாளிகையில் வௌி மதில் சுவரின் பேரிலும் ஏற முயன்று, அரண்மனைக் காவலர்களால் கீழே இழுத்துத் தள்ளப்பட்டார்கள்.

பச்சைக் குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு இளம் பெண்கள் எத்தனையோ பேர் அக்கூட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு நின்றார்கள். அழுத குழந்தைகளிடம் அவற்றின் தாய்மார்கள், "கண்ணே! அழாதே! வீரத் தமிழகத்தின் மகாவீராதி வீரர் 'வீரபாண்டியன் தலை கொண்ட' ஆதித்த கரிகால சோழர் வரப் போகிறார்! அவரைப் பார்க்கும் பேறு பெற்றால் நீயும் ஒருநாள் அவரைப் போல் வீரனாவாய்!" என்று சொல்லிச் சமாதானப்படுத்த முயன்றார்கள். இம்மாதிரியே காதலர்கள் தங்கள் காதலிகளிடமும், தாய்மார்கள் தங்கள் புதல்வர்களிடமும், ஆதித்த கரிகாலரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அந்த விதமாக ஆதித்த கரிகாலரின் வீரப் புகழ் நாடெங்கும் அக்காலத்தில் பரவியிருந்தது. பன்னிரண்டாவது பிராயத்தில் போர்க்களம் புகுந்து கையில் கத்தி எடுத்துப் பகைவர் பலரை வெட்டி வீழ்த்தியவரும், சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டிய சைன்யத்தை முறியடித்து, வீரபாண்டியன் பாலைவனத்துக்கு ஓடிப் பாறைக் குகையில் ஒளிந்துகொள்ளும்படி செய்தவரும், பத்தொன்பதாவது பிராயத்தில் வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சின்னாபின்னம் செய்து அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்தவருமான இளவரசரைப் பார்ப்பதற்கு யார்தான் ஆர்வம் கொள்ளாமலிருக்க முடியும்?

இத்தகைய வீர புருஷரைப் பற்றிச் சென்ற மூன்று நாலு வருஷ காலமாகப் பற்பல வதந்திகள் உலாவி வந்தன. ஆதித்த கரிகாலருக்கு யுவராஜ பட்டாபிஷேகம் ஆன பிறகு சுந்தர சோழ சக்கரவர்த்திக்கும் அவருக்கும் மனத்தாங்கல் வந்துவிட்டது என்றும், ஆதித்த கரிகாலர் தமக்குப் பின் பட்டத்துக்கு வருவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லையென்றும் சிலர் சொன்னார்கள். முன்னொரு காலத்தில் காஞ்சியில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துப் பல்லவர் பெருங்குலத்தைத் தொடங்கி வைத்தது போல் ஆதித்த கரிகாலரும் காஞ்சியில் தனி அரசை ஏற்படுத்த விரும்புகிறார் என்றார்கள் சிலர். அவருடைய தம்பியாகிய அருள்மொழிவர்மனிடம் சக்கரவர்த்தி அதிக அன்பு காட்டிப் பட்சபாதமாக நடந்து கொள்வதால் ஆதித்த கரிகாலருக்குக் கோபம் என்றார்கள், வேறு சிலர். இன்னும் சிலர் இதை அடியோடு மறுத்து கரிகாலனையும், அருள்மொழியையும் போல் நேய பாவமுள்ள சகோதரர்கள் இருக்க முடியாது என்று சாதித்தார்கள். இளவரசருக்கு இன்னும் திருமணம் ஆகாமலிருந்தது பற்றியும் பலர் பலவாறு பேசினார்கள். அரசகுலத்து மங்கை யாரையும் கரிகாலர் மணப்பதற்கு மறுதளித்து ஆலய பட்டர் மகளை மணந்து அரியாசனம் ஏற்றுவிக்க எண்ணியது தான், தந்தைக்கும் மகனுக்கும் வேற்றுமை நேர்ந்த காரணம் என்றும் சிலர் சொன்னார்கள். ஆதித்த கரிகாலருக்குச் சித்தப்பிரமை என்றும், பாண்டிய நாட்டு மந்திரவாதிகள் சூனிய வித்தையினால் அவரைப் பைத்தியமாக்கி விட்டார்கள் என்றும் அதனாலேயே சக்கரவர்த்திக்குப் பிறகு அவர் சோழ சிங்காதனம் ஏறுவதைச் சிற்றரசர்கள் விரும்பவில்லையென்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.

எது எப்படியிருந்தாலும் அந்த மஹாவீரரைப் பார்ப்பதற்கு ஜனங்கள் அளவில்லாத ஆர்வம் கொண்டிருந்தார்கள். கடம்பூர் மாளிகைக்கு இளவரசர் கரிகாலர் விஜயம் செய்யப் போகிறார் என்ற செய்தி பரவியதிலிருந்தே சுற்றுப் பக்கங்களில் பெருங் கிளர்ச்சி உண்டாகியிருந்தது. ன்று மாலை வரப்போகிறார் என்று தெரிந்த பிறகு அக்கம் பக்கத்தில் இரண்டு காத தூரம் வரையில் இருந்த எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து திரண்டு விட்டார்கள்.

அந்தக் கூட்டத்தை ஜன சமுத்திரம் என்று சொல்வது மிகப் பொருத்தமாயிருந்தது. ஆயிரமாயிரம் ஜனங்களின் கண்டங்களிலிருந்து எழுந்த பேச்சுக் குரல்கள் உருத்தெரியாத ஒரே இரைச்சலாகி சமுத்திர கோஷத்தைப் போலவே கேட்டுக் கொண்டிருந்தது. மாளிகையின் முன் வாசலுக்கு எதிரே இளவரசரும் அவருடைய பரிவாரங்களும் வருவதற்கு அரண்மனைக் காவலர்கள் வழி வகுத்து நின்றார்கள். பின்னாலிருந்த ஜனங்கள் வந்து மோதியபடியால் முன்னாலிருந்தவர்கள் தள்ளப்பட்டு அவ்வழியை அடைக்கப் பார்த்ததும், காவலர்களால் தள்ளப்பட்டு அவர்கள் மீண்டும் பின்னால் சென்றதுமான காட்சி, சமுத்திரக் கரையில் அலைகள் வந்து மோதிவிட்டுப் பின்வாங்குவதை ஒத்திருந்தது.

மரத்தின் மேல் இருந்த ஒருவன் திடீரென்று, "அதோ வருகிறார்கள்!" என்று கூவினான். "எங்கே? எங்கே?" என்று ஆயிரம் குரல்கள் எழுந்தன. ஒரு குதிரை அதிவேகமாக வந்தது. கூட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் புகுந்து பாய்ந்து வந்தது. குதிரையின் காலடியில் சிக்கிக் கொள்ளாமலிருக்கும்படி ஜனங்கள் இருபுறமும் நெருக்கியடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டு வழிவிட்டார்கள். "இளஞ் சம்புவரையன்!" என்று கத்தினார்கள்.ஆம், வந்தவன் கந்தமாறன் தான்! கூட்டத்திலிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கந்தமாறன் வேகமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய்க் கோட்டை வாசல் அருகில் நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான். அங்கே நின்று கொண்டிருந்த சம்புவரையரையும் பழுவேட்டரையரையும் பார்த்து வணங்கிவிட்டு, "இளவரசர் வருகிறார்; ஆனால் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லை. திடீர் திடீர் எ ன்று கோபம் வருகிறது. முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே வந்தேன். நல்லபடியாக இராஜோபசாரம் செய்து வரவேற்க வேண்டும். அவர் ஏதாவது தாறுமாறாகப் பேசினாலும் பதில் சொல்லாமலிருப்பது நல்லது!" என்றான். இவ்விதம் கூறிவிட்டு அங்கே நிற்காமல் மேலே அண்ணாந்து பார்த்தான். முன் வாசல் கோபுரத்தின் மேல் மாடியில் அரண்மனைப் பெண்கள் காத்திருப்பது தெரிந்தது. உடனே கோட்டை வாசலில் புகுந்து உள்ளே சென்று, அங்கே ஒரு பக்கம் இருந்த மச்சுப் படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றான்.

பெண்கள் இருக்குமிடத்தை அடைந்ததும் கந்தமாறனுடைய கண்கள் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் நந்தினி தேவி இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்தன. அவள் அருகில் சென்று, "தேவி! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன். இளவரசரை அழைத்து வந்தேன், அதோ வந்து கொண்டிருக்கிறார். ஆனால் மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறார். அவரை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ, தெரியவில்லை!" என்றான்.

"ஐயா! அதைப்பற்றி என்ன கவலை? மதம் பிடித்த யானையை அடக்கி ஆள்வதற்குத் தங்கள் சகோதரியின் இரு கண்களாகிய அங்குசங்கள் இருக்கின்றன!" என்றாள் நந்தினி.

மணிமேகலை, "அக்கா! இது என்ன பேச்சு!" என்றாள்.

கந்தமாறன், "மணிமேகலை! பழுவூர் ராணி கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே! ஆதித்த கரிகாலரைப் போன்ற வீராதி வீரரைப் பதியாகப் பெறத் தவம் செய்ய வேண்டாமா?" என்றான்.

மணிமேகலை பதில் சொல்வதற்குள் நந்தினி குறுகிட்டு, "ஐயா! இளவரசருடன் இன்னும் யாரேனும் வருகிறார்களா?" என்று கேட்டாள்.

"ஆம், ஆம்! பார்த்திபேந்திர பல்லவனும், வந்தியத்தேவனும் வருகிறார்கள்.."

நந்தினி மணிமேகலையைக் குறிப்பாகப் பார்த்துவிட்டு "எந்த வந்தியத்தேவன்? தங்களுடைய சிநேகிதன் என்று சொன்னீர்கள், அவனா?" என்றாள்.

"ஆம், என்னைப் பின்னாலிருந்து குத் ிக் கொல்லப் பார்த்த அந்தப் பரம சிநேகிதன்தான். அவன் எங்கிருந்தோ, எப்படியோ வந்து குதித்து வெள்ளாற்றங்கரையில் எங்களோடு சேர்ந்து கொண்டான். இளவரசருடைய தாட்சண்யத்துக்காகப் பார்த்தேன்; இல்லாவிடில் அங்கேயே அவனை என் கத்திக்கு இரையாக்கியிருப்பேன்!" என்றான்.

மணிமேகலையின் முகம் சுருங்கிப் புருவங்கள் நெரிந்தன. "அண்ணா! அவர் உங்கள் முதுகில் குத்தியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை எதற்காக இந்த மாளிகைக்குள் வர விடவேண்டும்?" என்றாள்.

"கண்ணே! நீ பேசாமலிரு! அதெல்லாம் புருஷர்களின் விஷயம். நேற்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள்; இன்றைக்கு கட்டிப் புரளுவார்கள்!" என்றாள் நந்தினி.

கந்தமாறன் புன்னகை புரிந்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இளவரசரின் முகத்துக்காகப் பார்க்க வேண்டியதாயிற்று. ஓகோ! கூடை கூடையாகப் புஷ்பம் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே! நீங்கள் இங்கிருந்து பொழிகிற மலர் மழையினால் இளவரசரின் கோபம் தணிந்து அவர் சாந்தம் அடைந்து விடுவார்! அதோ வந்து விட்டார்கள்! நான் கீழே போகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று மச்சுப் படிகளில் இறங்கிப் போனான்.

அந்த முன் வாசலின் மேன்மாடத்திலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் பரந்திருந்த ஜன சமுத்திரத்தின் நடுவே, சுழிக் காற்றினால் ஏற்படும் நீர்ச் சுழலைப் போல ஓரிடத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அந்தச் சுழலின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட நாவாயைப் போல் மூன்று குதிரைகளும் அவற்றின் மேல் வந்த வீரர்களும் சில சமயம் தோன்றினார்கள். மறு கணம் ஜன சமுத்திரத்தின் பேரலைகளினால் அவர்கள் மறைக்கப்பட்டார்கள்.

அவ்விதம் ஏற்பட்ட சுழல் மேலும் மேலும் பிரயாணம் செய்து கோட்டையின் முன் வாசலை நெருங்கிக் கொண்டிருந்தது. கடைசியில், கோட்டை வாசலு ்கே வந்து விட்டது.

கோட்டை வாசலை அடைந்த மூன்று குதிரைகள் மீதும் வீற்றிருந்தவர்கள் ஆதித்த கரிகாலரும், பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனுந்தான்.

அவர்களைத் தொடர்ந்து வந்த யானை குதிரை பரிவாரங்கள் எல்லாம் வெகு தூரம் பின்னாலேயே அந்தப் பெரிய ஜன சமுத்திரதினால் தடை செய்யப்பட்டு நின்றுவிட்டன.

குதிரைகள் வந்து மாளிகை வாசலில் நின்றது, ஒரு பெரிய முழக்கம் எழுந்தது. இருபது பேரிகைகள், இருநூறு கொம்புகள், முந்நூறு தாரைகள், ஐந்நூறு தம்பட்டங்களிலிருந்து எழுந்த அந்தப் பெருமுழக்கத்தைக் கேட்டு அந்த மாபெரும் ஜன சமுத்திரத்தின் பேரிரைச்சலும் ஒருவாறு அடங்கியது.

வாத்தியங்களின் பெருமுழக்கம் சிறிது நேரம் ஒலித்துவிட்டுச் சட்டென்று அடங்கி நின்றது.

அப்போது ஏற்பட்ட நிசப்தத்தில் கட்டியங் கூறுவோன் மேன்மாடத்தை அடுத்திருந்த ஒரு மேடை மீது நின்று இடி முழக்கக் குரலில் கூவினான்:

"சூரிய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாதா, அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர் ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில் எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர் மதுரையும் ஈழமு ் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதலாவது சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில் ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் - கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி - வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்! பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.

உடனே அவன் அருகிலிருந்த இன்னொரு கட்டியங்காரன் "கொல்லி மலை மன்னன் - ஒரே அம்பில் சிங்கத்தையும் கரடியையும் மானையும் பன்றியையும் சேர்த்துத் தொளைத்த வீரன் வல் வில் ஓரி - அவனுடைய பரம்பரையில் வழி வழித் தோன்றிய ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட வீர கம்பீர சம்புவரையன் - சோழ சக்கரவர்த்தி குலத்திற்கு என்றும் துணைவன் வீரநாராயண ஏரியின் காவலன் - ஐயாயிரம் வீரப் படையின் தண்டநாயகன் - தனது சிறு அரண்மனையில் எழுந்தருளியிருக்குமாறு கோப்பெருமகனார் ஆதித்த கரிகால சோழரை மனமொழி மெய்களால் உவந்து வரவேற்கிறான்! சோழ குலத்தோன்றலின் வரவு நல்வரவு ஆகுக!" என்று கூவினான்.

அவன் அவ்விதம் பேரிடி போன்ற குரலில் கூறி முடித்ததும் மேல் மாடியிலிருந்து மலர் மாரி பொழிந்தது. ஆதித்த கரிகாலனும், வந்தியத்தேவனும் அண்ணாந்து பார்த்தார்கள். அங்கே இருந்த பல பெண்களின் சுந்தர முகங்களுக்கு நடுவில் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையின் மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம் மட்டும் தெரிந்தது. வந்தியத்தேவனும் ஒரு கணம் புன்முறுவல் செய்தான். உடனே தன் காரியம் எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தவன் போல் வேறு திசையை நோக்கினான்.

அதே சமயத்தில் மேலே நோக்கிய ஆதித்த கரிகாலனின் முகத்தில் முன்னை விடக் கடுகடுப்பு அதிகமாயிற்று; அவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான்.

மற்ற இருவரும் குதிரை மீதிருந்து இறங்கினார்கள்.

இதற்குள் மறுபடியும் வாத்தியங்களின் கோஷம் முழங்கத் தொடங்கி விட்டது. சற்று அடங்கியிருந்த ஜன சமுத்திரத்தின் ஆரவாரப் பேரொலியும் மீண்டும் பொங்கி எழுந்து விட்டது.

விருந்தாளிகளும், அவர்களை வரவேற்பதற்கு வாசலில் நின்றவர்களும் கோட்டை வாசலுக்குள் புகுந்தார்கள். உடனே கோட்டை வாசலின் கதவுகள் படார், படார் என்று சாத்தப்பட்டன.

ஆதித்த கரிகாலன் திரும்பிப் பார்த்துவிட்டு, "ஏன் இவ்வளவு அவசரமாகக் கதவைச் சாத்துகிறார்கள்? தஞ்சைக் கோட்டையில் என் தந்தையைச் சிறை வைத்திருப்பது போல் என்னையும் இங்கே சிறை வைக்கப் போகிறார்களா, என்ன? என்னுடன் வந்த பரிவாரங்கள் என்ன ஆவது?" என்று கேட்டான்.

இரு கிழவர்களும் சில கணநேரம் திகைத்துப் போய் நின்றார்கள்.

பழுவேட்டரையர் முதலில் சமாளித்துக் கொண்டு, "கோமகனே! இந்த சோழ சாம்ராஜ்யத்திலுள்ள லட்சோப லட்சம் ஜனங்களின் அன்பு நிறைந்த உள்ளங்களே தங்களையும், தங்கள் தந்தையையும் சிறைப்படுத்தியிருக்கின்றன; தனியாகச் சிறை வைப்பது எதற்கு?" என்றார்.

"இளவரசே! தங்களுடைய தரிசனத்துக்காக வந்திருக்கும் பெருந்திரளான மக்கள் இந்தச் சிறிய குடிசைக்குள் புகுந்தால் என்ன ஆவது? அவர்கள் வௌியில் நிற்கும்போது அக்கம் பக்கமுள்ள தோப்புகள் எல்லாம் குரங்குகள் அழித்த மதுவனம் போல் ஆகிவிட்டன. ஜனக் கூட்டம் கலைந்ததும் தங்களுடன் வந்த பரிவாரங்களை உள்ளே அழைத்து வருகிறோம். அது வரையில் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய இங்கே பணியாளர் பலர் இருக்கிறார்கள்..." என்றார் சம்புவரைய ர்.

இச்சமயம் கோட்டை வௌி வாசலில் ஜனங்களின் ஆரவாரம் அதிகமானது போலக் கேட்டது. கரிகாலன் கந்தமாறானிடம், "முன் வாசல் மேன்மாடிக்குப் போக வழி எங்கே?" என்று கேட்டான்.

கந்தமாறன் மாடிப்படிகள் இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டியதும் கரிகாலன் அந்தப் பக்கம் நோக்கி விடுவிடுவென்று நடந்து சென்றான், கந்தமாறனும், வந்தியத்தேவனும், பார்த்திபேந்திரனும் உடன் சென்றார்கள்.

சம்புவரையர், பழுவேட்டரையரைப் பார்த்து, "இது என்ன? வழியோடுபோகிற சனியனை விலைக்கு வாங்கியது போல் வாங்கிக் கொண்டோமே? இவனுடைய மூளை சரியாயிருப்பதாகவே தோன்றவில்லையே? சின்னப்பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு இந்தக் காரியத்தில் தலையிட்டோம்!" என்றார்.

"அப்படி என்ன மோசம் வந்துவிட போகிறது? காரியம் நடந்தால் நடக்கட்டும்; நடக்காவிட்டால் போகட்டும்" என்றார் பழுவேட்டரையர்.

"காரியத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. நம் வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஏடாகூடமாக நடக்கக் கூடாது அல்லவா? நிமித்தம் ஒன்றும் சரியாக இல்லை. அவனோ மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறான். முகத்தின் கடுகடுப்பையும், நாக்கில் விஷத்தையும் பார்த்தீர்கள் அல்லவா?"

"சில நாள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டியதுதான். அந்தப் பல்லவன் பார்த்திபேந்திரன் அவனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாயிருப்பான். இன்னொரு துஷ்டச் சிறுவன் பின்னோடு வந்திருக்கிறானே, அவனைத்தான் எனக்குப் பிடிக்கவில்லை. அவன் ஒற்றன் என்றுகூட எனக்குச் சந்தேகம். முன்னால் நாம் கூட்டம் போட்ட அன்றைக்குகூட அவன் இங்கு வந்திருந்தான் அல்லவா? நேற்று மாலை இந்தக் கோட்டைக்கு வௌியில் மரத்தின் மறைவில் நின்றிருந்தவனும் அவன்தான்!"

"அவன் என் மகனுடைய சிநேகிதன் அல்லவா? ஆகையால் அவனைப் பற்றிப் பயமில்லை. இப்போது எதற் காகப் பெண்கள் இருக்கும் இடத்துக்கு அவசரமாக போகிறார்கள்? நாமும் போவோமா?"

இச்சமயம், மச்சுப்படி வரையில் போன பார்த்திபேந்திரன் திரும்பி வந்து, இரு பெரும் குறுநில மன்னர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை அணுகினான். சம்புவரையர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. "ஐயா! இளவரசர் விஷயத்தில் உங்களுக்கு வேறு என்ன சந்தேகம் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான சந்தேகம் மட்டும் வேண்டியதில்லை. பெண்களை அவர் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.." என்று சொன்னான்.

பழுவேட்டரையர் புன்னகையுடன், "அப்படியானால் அவரை நாம் இங்கே அழைத்ததின் நோக்கம் எப்படி நிறைவேறும்?" என்று கேட்டார்.

"அது சம்புவரையர் திருமகளின் அதிர்ஷ்டத்தையும் சோழ சாம்ராஜ்யத்தின் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது."

"பார்த்திபேந்திரா! மணிமேகலையின் அதிர்ஷ்டம் ஒருபுறம் இருக்கட்டும்! வரும்போதே எதற்காக இளவரசர் இவ்வளவு கடுகடுத்த முகத்துடன் வருகிறார்? எதற்காக இப்படி விஷமமாகப் பேசுகிறார்? அவரை நீ எப்படியாவது இங்கிருந்து சமாதானமாக அழைத்துப் போனால் போதும் என்று தோன்றுகிறது!" என்றார் சம்புவரையர்.

"வெள்ளாற்றங்கரை வரையில் இளவரசர் சுமுகமாகவும் குதூகலமாகவும் வந்தார். பின்னர் இந்த வந்தியத்தேவனும் வைஷ்ணவன் ஒருவனும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அது முதலாவது இளவரசரின் குணம் மாறியிருக்கிறது..."

"நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் இப்போது என்ன செய்யலாம்? அந்தத் துஷ்டப் பையனும் உங்களோடு வந்திருக்கிறானே?"

"நீங்கள் கொஞ்சம் பொறுமையாயிருங்கள்; நான் எல்லாம் சரிப்படுத்தியிருக்கிறேன். அந்தப் பையனுடன் எனக்கும் ஒரு சண்டை இருக்கிறது. அதை நான் சமயம் பார்த்துத் தீர்த்துக் கொள்கிறேன்" என்றான் பார்த்திபேந்திரன்.

கரிகாலனும் மற்ற இருவரும் முன் வாசல் மேன்மாடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்கள் திரும்பிப் படியில் இறங்கி வரும் சமயமாயிருந்தது.

கரிகாலன் கந்தமாறனைப் பார்த்து, "நண்பனே! தாய்மார்களையெல்லாம் நமக்காக இங்கு வந்து காத்திருக்கும்படி செய்யலாமா? அது பெருந்தவறு. நாம் அல்லவா இவர்கள் இருக்குமிடம் சென்று நமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும்?" என்று கூறிவிட்டுப் பெண்மணிகளுக்கு வணங்கி வழி விட்டு நின்றான். ஒவ்வொருவராக இறங்கிய போது கந்தமாறனிடம் யார் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். நந்தினியைப் பார்த்ததும், "ஓ! பழுவூர் இளைய பாட்டி அல்லவா? உண்மையாகவே வந்திருக்கிறார்களா? மிகவும் சந்தோஷம்!" என்றான். நந்தினி ஒன்றும் சொல்லாமல் அவனைத் தன் கூரிய கண்களால் பார்த்துவிட்டுச் சென்றான். அப்பார்வையின் தீட்சண்யத்தினால் கரிகாலனுடைய உடம்பு சிறிது நடுங்கிற்று. மறுகணமே அவன் சமாளித்துக் கொண்டு, பின்னால் வந்த மணிமேகலையைப் பார்த்து, "ஓகோ! இவள் உன் தங்கை மணிமேகலையாக இருக்க வேண்டும். சித்திரத்தில் எழுதிய கந்தர்வ கன்னிகையைப் போல் இருக்கிறாள். இவளுக்கு விரைவில் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும்!" என்றான். மணிமேகலை வெட்கத்தினால் குழிந்த கன்னங்களுடன் வந்தியத்தேவனைக் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு மடமடவென்று கீழே இறங்கினாள்.

பெண்கள் எல்லாருமே சென்ற பிறகு, கரிகாலன் அந்த மேல் மாடத்தின் முகப்புக்குச் சென்று நின்றான். வாசலில் அப்போது தான் கலையத் தொடங்கியிருந்த ஜனக் கூட்டதினிடையே மறுபடியும் பேராரவாரம் எழுந்தது. ஜனங்கள் திரும்பிக் கோட்டை வாசலண்டை வரத் தொடங்கினார்கள்.

அந்த மேல் மாடத்தையொட்டித் தனியாக நீண்டு அமைந்திருந்த மேடையில் கட்டியங் கூறுவோன் நிற்பதைக் கரிகா லன் கவனித்தான். அவனைச் சமிக்ஞையினால் அருகே வரும்படி அழைத்தான். வந்தவுடன் ஜனங்களுக்குச் சில விஷயங்களை அறிவிக்கும்படி கூறினான். கட்டியங் கூறுவோன் திரும்பிச் சென்று பேரிகையைச் சில தடவை முழக்கினான். பின்னர், ஜனங்களைச் சமிக்ஞையினால் பேசாதிருக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆதித்த கரிகாலரின் விருதுகளில் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை மீண்டும் கூறிவிட்டு, "அத்தகைய சோழர் குலக் கோமகனார் இந்தக் கடம்பூர் மாளிகையில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை தங்கியிருப்பார். சுற்றுப்புறமுள்ள ஊர்களுக்கெல்லாம் விஜயம் செய்வார். அப்போது அந்தந்த ஊர் மக்களை நேரில் கண்டு அவரவர்களுடைய குறைகளையெல்லாம் கேட்டு அறிந்து கொள்வார்!" என்று கூவினான்.

அவ்வளவுதான்! இதுவரையில் அந்த ஜனக் கூட்டத்தில் எழுந்த ஆரவாரமெல்லாம் நிச்சப்தம் என்று சொல்லும்படியாக அவ்வளவு பெரிய பேரிரைச்சல் கிளம்பியது. குதூகலக் குரல்களும் வாழ்த்தொலிகளும் கரகோஷ ஓசையும் சேர்ந்து கலந்து எழுந்து சுற்றுப் பக்கம் வெகு தூரம் சென்று வீர நாராயண ஏரியிலிருந்து எழுபத்து நாலு கண்மாய்களின் வழியாகப் பாய்ந்த தண்ணீர் வெள்ளத்தின் ஓசையையும் அமுங்கி விடும்படி செய்தன.

சம்புவரையரும் பழுவேட்டரையரும் பார்த்திபேந்திரனும் அவர்கள் முன்னால் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆதித்த கரிகாலன் அவர்கள் நின்ற இடத்தை நெருங்கியதும், "பார்த்திபேந்திரா! ஏது நீ இங்கேயே நின்றுவிட்டாய்? இந்தக் கிழவர்களுடன் சேர்ந்து நீயும் சதியாலோசனை செய்யத் தொடங்கி விட்டாயா?" என்று கேட்டான்.

கிழவர்கள் இருவரும் திடுக்கிட்டுக் கரிகாலனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

சம்புவரையர் சிறிது சமாளித்துக் கொண்டு, "கோமகனே! சற்று முன் ச றை என்கிறீர்கள்; இப்போது சதி என்கிறீர்கள். இந்தக் குடிசையில் தாங்கள் விருந்தாளியாகத் தங்கியிருக்கும் போது தங்களுக்கு அணுவளவேனும் தீங்கு நேராது என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். அவ்விதம் நேர்வதற்கு முன்னால் என் உடலிலிருந்து உயிர் பிரிந்து போயிருக்கும்!" என்றார்.

"ஐயா! எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சுவதாக எண்ணினீர்களா? ஒரு லட்சம் பாண்டிய நாட்டுப் பகைவர்களின் மத்தியில் இருக்கும்போதே எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சியதில்லை. என் அருமைச் சிநேகிதர்களின் மத்தியில் இருக்கும்போது அஞ்சுவானேன்? ஆனால் தங்களுடைய இந்த மாளிகையைக் குடிசை என்று மட்டும் கூற வேண்டாம்; ஆகா! இதைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் எவ்வளவு உயரம்? எவ்வளவு கனம்? தஞ்சாவூர்க் கோட்டை மதிலை விடப் பெரியதாக அல்லவா இருக்கிறது?" எந்தப் பகைவர்களை முன்னிட்டு இவ்வளவு பந்தோபஸ்தாகக் கோட்டை கட்டியிருக்கிறீர்கள்?" என்றான் கரிகாலன்.

"இளவரசே! எங்களுக்கென்று தனிப் பகைவர்கள் யாரும் இல்லை. சோழ குலத்தின் பகைவர்கள் எங்கள் பகைவர்கள்; சோழ குலத்தின் நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்கள்".

"தங்கள் வாக்குறுதி எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத் தங்கள் குமாரன் கந்தமாறனிடம் சொல்லி வையுங்கள். என்னுடைய நண்பனாகிய வாணர் குலத்து இளவரசனைக் கந்தமாறன் தன்னுடைய பகைவன் என்று கருதி வருகிறான். இது பெரும் பிழையல்லவா?" என்று ஆதித்த கரிகாலன் கூறிய போது கந்தமாறன் தலையைக் குனிந்து கொண்டான்.

பக்க தலைப்பு



பதினாறாம் அத்தியாயம்
"மலையமானின் கவலை"




மாளிகைக்கும் மதில் சுவருக்கும் இடையிலிருந்த நிலாமுற்றப் பகுதியில் கந்தமாறன் வழி காட்டிக் கொண்டு செல்ல, கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். ம ்ற நால்வரும் பின்தொடர்ந்து சென்றார்கள்.

குரவைக்கூத்துக்காக மேடையும், கொட்டகையும் போட்டிருந்த இடத்தை அடைந்ததும் கரிகாலன் நின்றான்.

"ஓகோ! இது என்ன? இங்கே என்ன நடக்கப் போகிறது?" என்று கேட்டான்.

"கோமகனே! தங்களுக்கு விருப்பமாயிருந்தால், இங்கே குரவைக்கூத்து வைக்கலாம் என்று உத்தேசம்..."

"ஆகா! ரொம்ப நல்லது! குரவைக்கூத்து வையுங்கள்; வில்லுப்பாட்டு வையுங்கள். கரிகால் வளவர் நாடகம், விஜயாலயச் சோழர் நாடகம் எல்லாம் வையுங்கள். பகலெல்லாம் காட்டில் வேட்டையாடுவதில் கழிப்போம். இரவெல்லாம் பாட்டிலும், கூத்திலும் கழிப்போம். சம்புவரையரே! என் பாட்டன் மலையமான் எனக்கு என்ன சொல்லி அனுப்பினான், தெரியுமா! கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் இருக்கும் போது, 'இரவில் தூங்காதே!' என்று எச்சரிக்கை செய்தான். நான் என் பாட்டனுக்கு என்ன மறுமொழி சொன்னேன் தெரியுமா? 'பாட்டா! நான் பகலில் தூங்குவதில்லை; இரவிலும் தூங்குவதில்லை. நான் தூங்கி மூன்று வருஷம் ஆகிறது.ஆகையால் நான் தூங்கும்போது விரோதிகள் எனக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். நான் விழித்துக் கொண்டிருக்கும் போதே யாராவது தீங்கு செய்தால்தான் செய்யலாம். அவ்வளவு துணிச்சலுள்ள ஆண் மகன் யார் இருக்கிறான்?" என்று மலையமானுக்குத் தைரியம் சொல்லி விட்டு வந்தேன்!" என்று கூறிவிட்டுக் கரிகாலன் கடகடவென்று சிரித்தான்.

சம்புவரையர் கோபத்தினால் நடுங்கிய குரலில், "ஐயா! தாங்கள் தூங்கினாலும் சரி, விழித்துக் கொண்டிருந்தாலும் சரி... தங்களுக்கு எவனும்.. இந்த மாளிகையில் இருக்கும் போது தீங்கு செய்யத் துணிய மாட்டான்!" என்றார்.

"ஆம், ஆம்! கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குள் எனக்குத் தீங்கு செய்யக் கூடியவன் யார் இருக்க முடியும்? அல்லது வௌியிலிருந்து இவ்வளவ ு பெரிய மதில் சுவர்களைத் தாண்டி யார் வர முடியும்? யமன் கூட வர முடியாது. கடம்பூர் சம்புவரையர் என்றால் யமன் கூடப் பயப்படுவானே? அந்தத் திருக்கோவலூர்க் கிழவனாரின் வீண் கவலையைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். வயதாகிவிட்டதல்லவா? சில பேருக்கு வயதானால் மனோதைரியம் குறைந்து விடுகிறது. அடுத்தாற்போல், என் பழுவூர்ப் பாட்டனைப் பாருங்கள்! எவ்வளவு மிடுக்காக நடந்து வருகிறார்? அறுபது பிராயத்தைக் கடந்தவர் என்று யாராவது சொல்ல முடியுமா?" என்று கூறிச் சிறுநகை செய்தான் கரிகாலன்.

பழுவேட்டரையர் இதற்கு மறுமொழி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று எண்ணித் தமது தொண்டையைக் கனைத்துக் கொண்டார். அது சிங்க கர்ஜனையைப் போல் முழங்கிற்று.

"பாருங்கள்! பெரிய பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்தால், பாரெங்கும் நடுங்கும் என்று சொல்வது எவ்வளவு சரியாயிருக்கிறது. கந்தமாறா! வந்தியத்தேவா! பார்த்திபேந்திரா! நீங்கள் எல்லாம் பழுவூர்ப் பாட்டன் வயதில் இவ்வளவு திடமாக இருப்பீர்களா என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை அவரைப் போல் தொண்டையைக் கனைப்பீர்கள். ஆனால் அவர் வயதில் அந்தப்புரத்துக்குப் புதிய பெண்ணைக் கொண்டு வரமாட்டீர்கள். தாத்தா! தங்களுடன் இளைய ராணியையும் அழைத்து வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே! முன் வாசல் மாடத்தில் பார்த்தேன்! இளையராணி எப்படிப் பிரயாணம் செய்து வந்தார்கள்? மூடுபல்லக்கிலா? ரதத்திலா? அல்லது வண்டியிலா?"

பழுவேட்டரையர் அப்போது குறுக்கிட்டு, "யானை மீது அம்பாரியில் வைத்து நாடு நகரமெல்லாம் அறிய அழைத்து வந்தேன்!" என்று பெருமிதத்துடன் கூறினார்.

"அப்படித்தான் செய்ய வேண்டும், தாத்தா! இனிமேல் எப்போதும் அப்படியே செய்யுங்கள்! மூடுபல்லக்கில் மட்டும் அழைத்துவர வேண்டாம். அதனால் பல விரஸமான வதந்திகள் ஏற்படுகின்றன. ரு வேடிக்கையைக் கேளுங்கள்; பழுவூர் இளையராணியின் மூடுபல்லக்கில் சில சமயம் என் சித்தப்பன் மதுராந்தகன் இரகசியமாக ஏறிக் கொண்டு ஊர் ஊராகப் போய் வருகிறானாம்! இப்படி ஒரு வதந்தி நாடெங்கும் பரவியிருக்கிறது!" என்று கரிகாலன் கூறி இடி இடி என்று சிரித்தான்.

ஆனால் அங்கிருந்த மற்றவர்கள் யாரும் சிரிக்கவில்லை. ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதக் கலக்கம் ஏற்பட்டது.

வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் "ஐயோ! எப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோம்! இந்த வெறி பிடித்த மனிதரிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டோமே! ஒன்றையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் பகிரங்கப்படுத்தி விடுவார் போலிருக்கிறதே!" என்று எண்ணிக் கலங்கினான்.

பெரிய பழுவேட்டரையரின் உள்ளம் எரிமலையின் உட்பிரதேசத்தைப் போல, தீயும் புகையுமாகக் குழம்பிக் கொதித்துக் கனன்றது. தீயும் புகையும் எரிமலை வாயின் வழியாக வருவதற்கு முன்னால் உண்டாகும் பயங்கர உறுமலைப் போல் அவர் மீண்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

அவர் பேசுவதற்கு முன் பார்த்திபேந்திரன் ஓர் அடி முன்னால் பெயர்ந்து வந்து, "கோமகனே! பழுவூர் இளையராணியை நான் வெகு சிறிய காலந்தான் பார்த்துப் பழக நேர்ந்தது. அதற்குள்ளேயே அவர் எத்தகைய பத்தினித் தெய்வம் என்பதை அறிந்து கொண்டேன். பழுவூர் ராணியைப் பற்றி யாரேனும் அவதூறு கூற முற்பட்டால், அவனை அந்தக் கணமே என் வாளுக்கு இரையாக்குவேன்! இது சத்தியம்!" என்று சொன்னான்.

கந்தமாறன் பின்னால் ஓர் அடி வந்து நின்று, "என் கையில் கத்தி எடுக்க வேண்டிய அவசியமே இல்லை, பழுவூர் இளையராணியைப் பற்றி அவதூறு கூறுகிறவனை என் கையினாலேயே கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் இது சத்தியம்!" என்றான்.

இதைக் கேட்ட வந்தியத்தேவனும் ஒரு அடி முன் வந்து "நானும் அப்படித்தான்! பழுவூர் ராணியைப் பற்றி யாரேனும் தவறாகப் பேசினால், என் கண்பார்வையினாலேயே அவனைச் சுட்டெரித்து விடுவேன்!" என்றான்.

"ஆஹாஹா! கொஞ்சம் பொறுங்கள்; நண்பர்களே! என்னிடமே சண்டைக்கு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! பார்த்தீர்களா, தாத்தா! தமிழ்ப் பெண் குலத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதில் இவர்கள் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார்கள்! ஆனால் பழுவூர் இளையராணியைப்பற்றி யாரும் அவதூறு சொல்லவில்லை. சொன்னால், நானும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இந்த வீராதி வீரர்கள் வரும் வரையில் அப்படி அவதூறு சொன்னவனை நான் உயிரோடு வைத்திருக்க மாட்டேன். பழுவூர் இளையராணியின் மூடுபல்லக்கைப் பற்றித்தான் குறை சொல்லுகிறார்கள்! அந்தக் கோழை மதுராந்தகன் பழுவூர் ராணியின் மூடுபல்லக்கில் ஊர் ஊராக இரகசியப் பிரயாணம் செய்கிறானாம்! எப்போது ஆண் மகன் ஒருவன் மூடுபல்லக்கில் இரண்டு பக்கத்திலும் திரைவிட்டுக் கொண்டு பிரயாணம் செய்கிறானோ, அப்போது இளையராணியும் அப்படி பிரயாணம் செய்தால், சில அனர்த்தங்கள் விளையக் கூடும் அல்லவா?"

"கோமகனே! பராந்தக சக்கரவர்த்தியின் பேரனும் கண்டராதித்தருடைய திருமகனுமான மதுராந்தகத் தேவர் எதற்காக மூடுபல்லக்கில் பிரயாணம் செய்ய வேண்டுமாம்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?" என்றான் பார்த்திபேந்திர பல்லவன்.

"அதன் காரணமும் ஒரு வேடிக்கையான காரணந்தான்! மதுராந்தகன் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஊர் ஊராகப் போய்த் தன் கட்சிக்குப் பலம் திரட்டிக் கொண்டு வருகிறானாம்!"

"எதற்காகப் பலம் திரட்டுகிறது?"

"எதற்காகவா? என் தகப்பனாருக்குப் பிறகு சோழ ராஜ்ய சிம்மாசனத்தில் அவன் ஏறுவதற்காகத்தான்! எப்படியிருக்கிறது கதை? சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இந்தக் கடம்பூர் மாளிகைக்குக் கூட அவன் அப்படி மூடுபல்லக்கில் இரக ியமாக வந்திருந்தானாம். நள்ளிரவில் சதியாலோசனைக் கூட்டம் ஒன்று இங்கே நடந்ததாம். பார்த்திபேந்திரா! திருக்கோவலூர்க் கிழவனார் நீயும் என்னுடன் இருந்தபோதுதானே இதையெல்லாம் சொன்னார்? மதுராந்தகனுக்குச் சிம்மாதனம் ஏறுவதற்கு உள்ள ஆர்வத்தினால் அவசரப்பட்டு என் தந்தையைக் கொஞ்சம் சீக்கிரமாகவே சொர்க்கத்துக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவான் என்று சொன்னாரே? அதெல்லாம் உனக்கு நினைவில்லையா?"

"நினைவுக்கு வருகிறது, இளவரசே! அதையெல்லாம் அப்போதும் நான் நம்பவில்லை; இப்போதோ, சிறிதுகூட நம்பவில்லை. தஞ்சாவூருக்குப் போய் தங்கள் தந்தையை நேரில் தரிசித்துவிட்டு வந்த பிறகு..."

"நீ மட்டும் என்ன? நானுங்கூடத்தான் நம்பவில்லை. நம்பியிருந்தால் இந்தக் கடம்பூர் மாளிகைக்கு விருந்தாளியாக வந்திருப்பேனா?" என்று கூறிக் கரிகாலன் மீண்டும் எதையோ நினைத்துக் கொண்டவன் போல் சிரித்தான்.

கடம்பூர் சம்புவரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "கோமகனே! திருக்கோவலூர் மலையமான் குலத்துக்கும் எங்கள் குலத்துக்கும் நீண்ட கால விரோதம் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும்!" என்றார்.

"தெரியாமல் என்ன? அந்த விரோதத்தைப் பற்றி சங்கப் புலவர்கள் பாடியிருக்கிறார்களே? கொல்லி மலை வல் வில் ஓரியை மலையமான் திருமுடிக்காரி சண்டையில் கொன்றான். வல் வில் ஓரியின் வம்சத்தில் நீங்கள் வந்தவர்கள். ஆகையால் அந்த விரோதத்தை இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..."

"கோமகனே! வல் வில் ஓரியின் சாவுக்கு உடனே பழி வாங்கப்பட்டது. வல் வில் ஓரியின் உறவினனாகிய அதியமான் நெடுமானஞ்சி திருக்கோவலூர் மீது படையெடுத்துச் சென்று அந்த ஊரையும் அழித்தான்; மலையமானுடைய முள்ளூர் மலைக் கோட்டையையும் தரைமட்டமாக்கினான்..."

"சம்புவரையரே! அதியமான் மட்டும் தனியாக அந்தக் கா ியத்தைச் செய்து விடவில்லை. என் முன்னோனாகிய சோழன் கிள்ளி வளவனுடைய உதவியைக் கொண்டு தான் மலையமான் மீது அதியமான் வெற்றி அடைந்தான். அந்தப் பழைய கதையெல்லாம் இப்போது எதற்கு?"

"நாங்கள் மறந்து விட்டாலும், மலையமான் மறப்பதில்லை. ஏதாவது எங்கள் பேரில் அவன் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறான்..."

"நான்தான் சொன்னேனே? கிழவருக்கு வயதாகி விட்டது ஆகையால் புத்தியும் தடுமாறுகிறது. நான் இங்கே இருக்கும்போது எனக்கு ஆபத்து ஒன்றும் வராமல் பாதுகாப்பதற்காக அவர் ஒரு பெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வராமல் இருக்க வேண்டுமே என்று கூட எனக்குக் கொஞ்சம் கவலையாயிருக்கிறது...."

"இளவரசே! அப்படி ஏதேனும் தங்களுக்குச் சந்தேகம் இருந்தால்..." என்று சம்புவரையர் தடுமாறினார்.

"எனக்குச் சந்தேகமா? இல்லவே இல்லை. மலையமானோடு எங்கள் உறவு இரண்டு தலைமுறையாகத்தான். பழுவேட்டரையரோடு எங்கள் உறவு ஆறு தலைமுறையாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. பழுவூர் அரசரே இங்கே வந்திருக்கிறார். அவர் சோழ குலத்துக்கு விரோதமாக ஏதும் செய்வார் என்று நினைக்க எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?" என்று கரிகாலன் கூறிப் பைத்தியச் சிரிப்புச் சிரித்தான்.

பழுவேட்டரையர் கம்பீரமான குரலில், "இளவரசே! சோழ குலத்துக்கு விரோதமாக நான் எதுவும் செய்ய மாட்டேன் இது சத்தியம். தர்ம நியாயத்துக்கும் விரோதமாகவும் எதுவும் எப்பொழுதும் செய்ய மாட்டேன் இது இரு மடங்கு சத்தியம்" என்றார்.

"ஆமாம், ஆமாம்! தர்ம நியாயம் என்பதாக ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அதைப் பற்றித் தங்களிடம் பேசித் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன். வேட்டையாடும் நேரமும், கூத்துப் பார்க்கும் நேரமும் போக ஒழிந்த நேரத்தில் சற்று தர்ம நியாயத்தையும் பற்றிப் பேசலாம்! சம்புவரையரே! இந்த பிரம்மாண்டமான ரண்மனையில் நானும் என் சிநேகிதர்களும் தங்குவதற்கு எந்த இடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்?" என்று கேட்டான் கரிகாலன்.

"ஐயா! தங்களுக்கும் பழுவூர் மன்னருக்கும் பின்கட்டில் விருந்தினர் விடுதி முழுவதையும் ஒதுக்கி விட்டிருக்கிறோம். மற்றப்படி வரக்கூடிய சிற்றரசர்களை எல்லாம் என்னோடு முன் கட்டிலேயே வைத்துக் கொள்வேன்..."

"ஓகோ! இன்னும் சிற்றரசர்களும் வரப் போகிறார்களா?"

"ஆம், இளவரசே! தங்களை இங்கே சந்திப்பதற்குச் சுற்றுப்புறமுள்ள குறுநில மன்னர்கள் எல்லாரும் ஆவலாயிருக்கிறார்கள், பலரும் வருவார்கள்."

"வரட்டும், வரட்டும்! எல்லாரும் வரட்டும்! ரொம்ப நல்லது. யோசித்து முடிவு செய்ய வேண்டியதை ஒரு வழியாக முடிவு செய்து விடலாம். மதுராந்தகனுடைய சதியாலோசனை ஒருபுறம் இருக்கட்டும். நானே உங்களுடன் சேர்ந்து ஒரு சதியாலோசனை செய்ய விரும்புகிறேன். அதற்கு இந்த மாளிகையைக் காட்டிலும் தகுந்த இடம் கிடைக்காது!" என்றான் கரிகாலன்.

பக்க தலைப்பு



பதினேழாம் அத்தியாயம்
பூங்குழலியின் ஆசை




நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரை வரையில் சென்ற ஓடையில் பூங்குழலியின் படகு போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியோடு சேந்தன் அமுதனும் அப்படகில் இருந்தான். படகு கோடிக்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஓடைக் கரையில் தங்க நிறத் தாழம்பூக்கள் மடல் விரித்து மணத்தை அள்ளி எங்கும் வீசிக் கொண்டிருந்தன.

ஒரு தாழம் பூவின் மீது பச்சைக்கிளி பறந்து வந்து உட்கார்ந்தது. அது உட்காந்த வேகத்தில், தாழம்பூ ஊஞ்சல் ஆடுவது போல் ஆடியது. பச்சைக்கிளியும் அத்துடன் ஆடி விட்டுப் பிறகு அதன் தங்க நிற மடலைத் தன் பவள நிற மூக்கினால் கொத்தியது.

படகு நெருங்கியதும், பச்சைக்கிளி, 'கிக்கி, கிக்கி' என்று கத்திக் கொண் ு பறந்தோடி விட்டது.

"பிறந்தால் பச்சைக் கிளியாகப் பிறக்க வேண்டும்!" என்றாள் பூங்குழலி.

"நீ அவ்விதம் எண்ணுகிறாய்! அதற்கு எத்தனை கவலையோ, எவ்வளவு கஷ்டமோ, யார் கண்டது?" என்றான் சேந்தன் அமுதன்.

"என்ன கவலை, கஷ்டம் இருந்தாலும் இஷ்டம் போல் எல்லையற்ற வானத்தில் பறந்து செல்ல முடிகிறதல்லவா? அதைக் காட்டிலும் இன்பம் வேறு உண்டா?" என்றாள் பூங்குழலி.

"அப்படிப் பறந்து திரியும் பச்சைக்கிளியைச் சிலர் பிடித்துக் கூண்டில் அடைத்து விடுகிறார்களே!" என்றான் சேந்தன் அமுதன்.

"ஆமாம், ஆமாம்! அரண்மனைகளில் வாழும் இராஜகுமாரிகள் பச்சைக்கிளிகளைக் கூண்டுகள் அடைத்து வைக்கிறார்கள்! குரூர ராட்சஷிகள்! கிளிகளைக் கூண்டில் அடைத்துவிட்டு அவற்றுடன் கொஞ்சி விளையாடுகிறார்கள். நான் மட்டும் ஏதேனும் ஓர் அரண்மனைகளில் சேடிப் பெண்ணாயிருந்தால், கூண்டில் அடைபட்ட கிளிகளுக்கு விஷம் வைத்துக் கொன்று விடுவேன். கிளிகளைப் பிடித்துக் கூண்டில் அடைக்கும் இராஜகுமாரிகளுக்கும் விஷத்தைக் கொடுத்து விடுவேன்..."

"நீ இப்போது பேசுவதைக் கேட்டால், உன்னையும் குரூர ராட்சஷி என்று தான் சொல்லுவார்கள்!"

"சொன்னால் சொல்லட்டும்! நான் ராட்சஷியாயிருந்தாலும் இருப்பேன்; இராஜகுமாரியாயிருக்க மாட்டேன்."

"இராஜகுமாரிகளின் மீது உனக்கு ஏன் இத்தனை கோபம் பூங்குழலி! பார்க்கப் போனால் அவர்கள் பேரிலும் பரிதாபப்பட வேண்டியதல்லவா? கூண்டில் அடைபட்ட பச்சைக்கிளிகளைப் போலத்தான் அவர்களும் அரண்மனைக்குள் அடைபட்டுக் காலம் கழிக்க வேண்டியிருக்கிறது. தப்பித் தவறி அவர்கள் வௌியில் புறப்பட்டால், எத்தனைக் கட்டுக்காவல்! எத்தனை இரகசியம்? எத்தனை ஜாக்கிரதை! உன்னைப் போல் அவர்கள் படகில் ஏறிக் கொண்டு, தன்னந் தனியாக ஓடையிலும் கடலிலும் போக முடியுமா? இஷ்டப்படி துள்ளித் ிரியும் மானைப் போல் காட்டில் சுற்றி அலைய முடியுமா?"

"அவர்களை யார் அடைந்து கிடக்கச் சொல்கிறார்கள்? நான் சொல்லவில்லையே? இஷ்டமிருந்தால் அவர்களும் காட்டில் அலைந்து திரிவதுதானே?"

"இஷ்டம் மட்டும் போதாது; அவரவர்களுடைய பிறப்பு வளர்ப்பையும் பொறுத்தது. கிளியைப் போல நீயும் வானத்தில் பறக்க விரும்புகிறாய் அது முடிகிற காரியமா? கடற்கரையில் நீ பிறந்து வளர்ந்தாய். அதனால் இவ்வளவு சுயேச்சையாக இருக்க முடிகிறது. அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர்களால் அது முடியாது. இன்னும் ஒரு விசித்திரத்தைக் கேள். சில நாள் கூண்டில் அடைபட்டு இராஜகுமாரிகளின் கையினால் உணவு அருந்தி பழக்கப்பட்ட கிளிகள் பிறகு கூண்டைத் திறந்து விட்டாலும் ஓடிப் போகவே விரும்புவதில்லை. சிறிது தூரம் பறந்து வட்டமிட்டு விட்டு, 'கிறீச், கிறீச்' என்று கத்திக் கொண்டு கூண்டுக்குள் திரும்பி வந்து விடும். தஞ்சையிலும் பழையாறையிலும் உள்ள அரண்மனைகளில் இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்...."

"அவ்விதம் கூண்டில் அடைபடுவதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நான் கிளியாயிருந்தால் சொல்கிறேன், என்னைக் கூண்டில் அடைத்து வைத்து அமுதூட்ட வரும் இராஜகுமாரியின் கையை வெடுக்கென்று கடித்து விடுவேன்..."

"கூண்டில் அடைபட்ட கிளியாயிருக்கவும் நீ விரும்பமாட்டாய். அரண்மனையில் அடைபட்ட அரசிளங் குமரியாயிருக்கவும் நீ விரும்ப மாட்டாயல்லவா?"

"மாட்டவே மாட்டேன். அதைக் காட்டிலும் விஷந்தின்று உயிரை விட்டுவிடுவேன்!"

"அதுதான் சரி; அப்படியானால் அரண்மனையில் வாழும் இராஜகுமாரனைக் கலியாணம் செய்து கொள்ளவும் நீ ஆசைப்படக் கூடாது."

கீழ்வானத்தில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. அவ்வப்போது பளீர் பளீர் என்று மின்னல்கள் மின்னிக் கொண்டிருந்தன. இடியின் குமுறல் இ ேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

சேந்தன் அமுதன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும் பூங்குழலியின் கண்களிலிருந்தும் பளீர் என்று மின்னல் கற்றைகள் புறப்பட்டன.

"நான் இராஜகுமாரனைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக உனக்கு யார் சொன்னது?" என்று கோபமாகக் கேட்டாள்.

"எனக்கு யாரும் சொல்லவில்லை; நானாகத்தான் சொன்னேன். உன் மனதில் அத்தகைய ஆசை இல்லாவிட்டால் நல்லதாய்ப் போயிற்று. நான் சொன்னதை மறந்துவிடு!" என்றான் சேந்தன் அமுதன்.

சற்று நேரம் அந்தப் படகில் மௌனம் குடி கொண்டிருந்தது. சேந்தன் அமுதன் துடுப்பினால் படகு தள்ளும் சத்தமும், வறட்டுத் தவளைகளின் குரலும், கடல் பறவைகளின் ஒலியும் கடல் அலைகளின் ஓசையும் அவ்வப்போது கீழ்த் திசைகளில் இடி முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன.

சேந்தன் அமுதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மனத்தையும் தைரியப்படுத்திக் கொண்டு "பூங்குழலி! என் அந்தரங்கத்தை வந்தியத்தேவன் உன்னிடம் வௌியிட்டதாகக் கூறினாய் அல்லவா? அதைப் பற்றி உன் கருத்தைத் தெரிவித்தால் நல்லது. அதோ கோடிக்கரையின் கலங்கரைவிளக்கம் தெரிகிறது. இனி உன்னோடு தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிட்டாமற் போகலாம். நாளை நானும் புறப்பட்டுச் செல்ல வேண்டும். தஞ்சையில் என் தாயாரைத் தனியாக விட்டு வந்து வெகு நாளாகிறது!" என்றான்.

"வந்தியத்தேவன் உனக்காக ஏன் தூது செல்ல வேண்டும்? உனக்கு வாய் இல்லையா? கேட்க வேண்டியதை நேரில் கேட்டு விடேன்!" என்றாள் பூங்குழலி.

"சரி! கேட்கிறேன்; நீ என்னைக் கலியாணம் செய்து கொள்வாயா?" என்று சேந்தன் அமுதன் கேட்டான்.

"எதற்காக என்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாய்?" என்றாள் பூங்குழலி.

"உன் பேரில் எனக்கு அந்தரங்கமான ஆசை இருக்கிறது; அதனாலேதான்!"

"அந்தரங்கமான ஆசையிருந்தால் கலியா ம் செய்து கொண்டுதான் தீர வேண்டுமா?"

"அப்படியொன்றும் 'தீர வேண்டும்' என்பதில்லை. உலக வழக்கம் அப்படி இருந்து வருகிறது.."

"உன்னைக் கலியாணம் செய்து கொண்டால் எனக்கு நீ என்ன தருவாய்? நான் வேண்டும் அரண்மனை வாழ்வும், ஆடை ஆபரணங்களும், யானை குதிரைகளும், பல்லக்கும் பணிப்பெண்களும் உன்னால் தர முடியுமா?"

"முடியாது; அவற்றுக்கெல்லாம் மேலான அமைதியுள்ள வாழ்க்கையைத் தருவேன். கேள், பூங்குழலி! தஞ்சை நகர்ப்புறத்திலுள்ள அழகான பூந்தோட்டத்தின் மத்தியில் என் குடிசை இருக்கிறது. அதில் என் அன்னையும் நானுந்தான் வசிக்கிறோம். நீ அங்கு வந்துவிட்டாயானால், உன் வாழ்க்கையே மாறுதல் அடைந்து விடும். என் அன்னை உன்னை அன்போடு வைத்து ஆதரித்துப் பாதுகாப்பாள். பொழுது விடிந்ததும் எழுந்திருந்து, நம் வீட்டைச் சுற்றியுள்ள கொடிகளிலும், மரங்களிலும் குலுங்கும் மலர்களை இருவரும் சேர்ந்து சித்திர விசித்திரமான மாலைகளாகக் கட்டலாம். மாலைகளை நான் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்துக்கும், துர்க்கா பரமேசுவரியின் ஆலயத்துக்கும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவேன். அதற்குள் நீ எங்கள் தோட்டத்திலுள்ள தாமரைக் குளத்தில் குளித்துவிட்டு என் அன்னைக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யலாம். மாலை நேரங்களில் நாம் மூவரும் தாமரைக் குளத்தில் தண்ணீர் மொண்டு கொண்டு போய்ப் பூச்செடிகளுக்கு ஊற்றலாம். மாலை ஆனதும் நான் உனக்கு அமுதினும் இனிய தெய்வத் தமிழ்ப் பதிகங்களைச் சொல்லிக் கொடுப்பேன். உன்னுடைய மதுரமான குரலில் அவற்றைப் பாடினால், பாடிய உன் நாவும் இனிக்கும்; கேட்கும் என் காதும் இனிக்கும். நமக்கு விருப்பம் இருந்தால் ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்து விட்டு அத்தெய்வப் பாடல்களைப் பாடிவிட்டு வரலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களும் கேட்டு மகிழ்வார கள். பூங்குழலி! இதைக் காட்டிலும் இனிய வாழ்க்கை - மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை உலகில் வேறு என்ன இருக்க முடியும்? யோசித்துப் பார்த்துச் சொல்லு!"

இவ்விதம் சேந்தன் அமுதன் கூறியதையெல்லாம் கேட்டு விட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.

"அமுதா! நீ இனியதென்று கருதும் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னாய்! ஆனால் நான் எத்தகைய வாழ்க்கை வேண்டுமென்று ஆசைப்படுகிறேன், தெரியுமா, வானுலகத்துக்குச் சென்று தேவேந்திரனை மணந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தேவேந்திரனுடன் ஐராவதத்தில் ஏறி வானத்தில் மேக மண்டலங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்ய விரும்புகிறேன். தேவேந்திரனுடைய கையிலிருந்த வஜ்ராயுதத்தைப் பிடுங்கி மேகக் கூட்டங்களின் மீது பிரயோகிக்க ஆசைப்படுகிறேன். வஜ்ராயுதத்தினால் தாக்கப்படும்போது அந்தக் கரிய மேகங்களிலிருந்து ஆயிரம் பதினாயிரம் மின்னல்கள் கற்றைக் கற்றையாகக் கிளம்பி வான மண்டலத்தைச் சுக்கு நூறாகப் பிளப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறேன். இப்போதெல்லாம் வானத்திலிருந்து இடி விழுந்தால் எங்கேயோ கடலில் அல்லது காட்டில் விழுந்து விடுகிறதல்லவா? நான் அப்படி இடிகளை வீணாக்க மாட்டேன். அரசர்களும் அரசிகளும், இராஜகுமாரர்களும் இராஜகுமாரிகளும், வாழும் அரண்மனைகளாகப் பார்த்து அவற்றின் மேல் இடிகளைப் போடுவேன், அந்த அரண்மனைகள் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாவதைப் பார்த்துக் களிப்பேன். தேவேந்திரன் ஒருவேளை மணந்து கொள்ள இஷ்டப்படாவிட்டால் வாயு தேவனிடம் செல்வேன். அவனுக்கு ஏற்கெனவே பல மனைவிகள் இருந்தாலும் பாதகம் இல்லையென்று என்னை மணந்து கொள்ளச் சொல்லுவேன். அவ்வளவுதான், பிறகு இந்த உலகத்தில் எப்போதும் புயற்காற்றும் சுழிக் காற்றும் சண்ட மாருதமும் அடித்துக் கொண்டேயிருக்கும். பெரிய பெரிய மரங்கள் பெயர்ந்து மாடமாளிக யின் மீது விழுந்து அவற்றை அழிக்கும். கடலில் போகும் மரக்கலன்கள் சண்ட மாருதத்தினால் தாக்குண்டு துகள் துகளாகச் சிதறிப் போகும்.அந்தக் கப்பல்களில் பிரயாணம் செய்வோர் கொந்தளிக்கும் கடலில் விழுந்து தவிப்பார்கள். அவர்களில் இராஜகுமாரர்களும் இராஜகுமாரிகளும் இருந்தால் அவர்கள் ஆழ் கடலின் அடிவாரத்துக்குப் போகட்டும் என்று விட்டுவிட்டு, மற்றவர்களை மட்டும் போனால் போகிறதென்று தப்ப வைப்பேன், வாயுதேவனும் ஒருவேளை என்னை மணந்து கொள்ள மறுத்தால், அக்கினி தேவனிடம் செல்வேன்.அப்புறம் கேட்க வேண்டுமா? இந்த உலகமே தீப்பற்றி எரிய வேண்டியதுதான்...!"

"பூங்குழலி, போதும்! நிறுத்து! ஏதோ ஒரு மனக் கசப்பினால் இவ்விதமெல்லாம் நீ பேசுகிறாய்; மனமறிந்து யோசித்துப் பேசவில்லை. உன் மன நிலையை அறிந்து கொள்ளாமல் உன்னிடம் நான் கலியாணப் பேச்சை எடுத்ததே என் தவறு தான், அதற்காக என்னை மன்னித்துவிடு! கடவுள் தான் உன்னுடைய மனக் கசப்பைப் போக்கி அமைதி அளித்து அருள வேண்டும். அதற்காக நான் அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து வருவேன்!" என்றான்.

உட்கார்ந்திருந்த பூங்குழலி திடீரென்று எழுந்து நின்றாள். ஓடைக் கரையில் இருந்த ஒரு மரத்தின் பக்கமாக உற்றுப் பார்த்தாள். சேந்தன் அமுதனும் அந்தத் திசையை நோக்கினான். மரக்கிளைகளின் மத்தியில் ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது. சேந்தன் அமுதன் ஒரு கணம் அங்கே நின்றவளின் முகத்தில் தன் அன்னையின் முகச் சாயலைக் கண்டு திகைத்துப் போனான்.

பின்னர், அவள் தன் அன்னை இல்லையென்பதை அறிந்து கொண்டான். பூதத் தீவில் வசிப்பதாகப் பூங்குழலி கூறிய தன் பெரியம்மாவாக இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

பூங்குழலி படகிலிருந்து தாவி ஓடைக் கரையில் குதித்து அந்தப் பெண்மணியை நோக்கி விரைந்து ஓடினாள்.

பக க தலைப்பு



பதினெட்டாம் அத்தியாயம்
அம்பு பாய்ந்தது!




ஓடைக் கரையில் ஒரு மரத்தின் பின்னால் மறைந்தும் மறையாமலும் நின்ற ஊமை ராணியைப் பூங்குழலி பார்த்தாள். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் அவளைக் கண்டதினால் பூங்குழலிக்குச் சிறிது திகைப்பு உண்டாயிற்று. அயல் மனிதர்களைப் பார்ப்பதில் ஊமை ராணிக்குப் பிரியம் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. படகில் சேந்தன் அமுதன் இருக்கிறானே, அவனைக் கண்டு ஒருவேளை அத்தை ஓடிவிடுவாளோ? என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றிய அந்தக் கணமே அவளுடைய அத்தை ஓடத் தொடங்கி விட்டாள். பூங்குழலி சட்டென்று ஓடத்திலிருந்து ஓடைக் கரையில் குதித்து மேட்டில் ஏறிப் பார்த்தாள். அத்தை சற்றுத் தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்ததைக் கவனித்தாள்.

இதற்குள் சேந்தன் அமுதனும் கரையில் குதித்து மேட்டில் ஏறிப் பூங்குழலி நின்ற இடத்துக்கு வந்து சேர்ந்தான். "பூங்குழலி! பூங்குழலி! சற்று முன் இங்கே நின்றது யார்?" என்று கேட்டான்.

"உனக்குத் தெரியவில்லையா, அமுதா?"

"நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை! ஒருவேளை..."

"ஆமாம், என் அத்தைதான்! செத்துப் போனதாக நீ நினைத்துக் கொண்டிருந்த உன் பெரியம்மாதான்!"

"ஆமாம்; அம்மாவின் ஜாடை கொஞ்சம் இருந்தது போல் தோன்றியது"

"வெறுமனே ஏதாவது சொல்லாதே! சின்ன அத்தைக்கும் பெரிய அத்தைக்கும் உருவ ஒற்றுமை ஒன்றுமில்லை; குணத்தில் ஒற்றுமையும் இல்லை. வீட்டில் கட்டிப் போட்டிருக்கும் பசு எங்கே? எதேச்சையாகத் திரியும் சிங்க ராணி எங்கே?"

"சரி, அப்படியே இருக்கட்டும், ஏன் உன்னைப் பார்த்ததும் சிங்க ராணி ஓடிப் போய்விட்டாள்?"

பூங்குழலி சிரித்துவிட்டு, "உன்னைப் பார்த்து விட்டுத் தான் ஓடினாள். அயல் மனிதர்களைப் பார்ப்பதற்கு அவளுக குப் பிரியமிருப்பதில்லை" என்றாள்.

"நான் அயல் மனிதன் அல்லவே?"

"அத்தைக்கு அது தெரியாதல்லவா? தெரிந்து கொண்டால் உன்னைப் பார்த்துவிட்டு ஓடமாட்டாள். ஆனால் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ரொம்பவும் தயங்குவாள்."

"பூங்குழலி! இப்போது என்ன செய்யப் போகிறாய்?"

"அத்தையைத் தேடிப் பிடிக்கப் போகிறேன்."

"நானும் வரட்டுமா?"

"எதற்காக?"

"பெரியம்மாவை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காகத்தான்."

"எதற்காகப் பெரியம்மாவை நீ தெரிந்து கொள்ள வேண்டும்?"

சேந்தன் அமுதன் தன் பெரியம்மாவின் பழைய வரலாற்றைச் சிறிது பூங்குழலியிடம் அறிந்து கொண்டிருந்தபடியால் அவளைப் பார்க்க ஆவலாயிருந்தான். அத்துடன் பெரியம்மா தன் கட்சியிலிருந்து பூங்குழலியின் மனத்தை மாற்றுவதற்கு உதவி செய்யக் கூடும் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது.

"எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன; ஆனால் பெரியம்மாவைத் தெரிந்து கொள்ள விரும்புவதற்குக் காரணம் வேண்டுமா, என்ன?" என்றான்.

பூங்குழலி சற்று யோசித்துவிட்டு, "சரி வா! போகலாம். உன்னையும் அழைத்துச் சென்றால் பெரியம்மாவைப் பிடிப்பது சற்றுப் பிரயாசையாக இருக்கும். ஆனாலும் யார் விடுகிறார்கள்? படகை இங்கேயே கட்டிப் போட்டு விட்டுப் போகலாம்!" என்றாள்.

அவ்விதமே படகை ஒரு தாழம்பூப் புதரின் அடியில் மறைவாக விட்டுக் கட்டியும் போட்டுவிட்டு இருவரும் கோடிக்கரைக் காட்டை நோக்கிச் சென்றார்கள்.

நடந்து கொண்டே சேந்தன் அமுதன், "பூங்குழலி! பெரியம்மா இலங்கைத் தீவிலோ பூதத் தீவிலோ இருக்கிறாள் என்று சொன்னாயல்லவா?" என்றான்.

"ஆமாம், சில சமயம் இலங்கைத் தீவிலும், சில சமயம் பூதத் தீவிலும் இருப்பாள்."

"இங்கே அடிக்கடி வருவதுண்டா?"

"இல்லை; அபூர்வமாகத்தான் வருவாள். நான் வெகுநாள் அவளைப் போய்ப் பார்க காமலிருந்தால் வருவாள்."

"இப்போது உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாளா?"

"இந்தத் தடவை வேறு காரியமாக வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது."

"வேறு என்ன காரியம்?"

"அவளுடைய சுவீகாரப் புதல்வன் கடலில் முழுகிப் போய் விட்டானா, தப்பிப் பிழைத்துக் கரை சேர்ந்தானா என்று தெரிந்து கொள்வதற்கு வந்திருக்கலாம். இளவரசர் கப்பலேறிப் புறப்பட்ட பிறகு கடலில் சுழிக் காற்று அடித்தது அத்தைக்குத் தெரியும் அல்லவா?"

"அருள்மொழிவர்மர் இவளுடைய சுவீகாரப் புதல்வரா? அப்படியானால் பெரியம்மாவின் சொந்த மகன் யார்?"

"அதுதான் எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அந்த இரகசியத்தை நான் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளப் போகிறேன்."

"சொந்த மகன் உயிரோடிருக்கிறானா, அல்லது இறந்து போய் விட்டானா?"

"ஆம், அவன் இறந்து போயிருக்கவுங்கூடும் யாருக்குத் தெரியும்?" என்று சொன்னாள் பூங்குழலி.

சற்றுப் பொறுத்து, "அமுதா! அத்தையைப் பார்த்தாயே! உன் அன்னையின் முக ஜாடையாயிருப்பதாகச் சொன்னாய்; வேறு யாருடைய முகமாவது ஞாபகத்துக்கு வந்ததா?" என்று கேட்டாள்.

"ஏதோ ஞாபகம் வருவதுபோலத் தோன்றுகிறது. தௌிவாகத் தெரியவில்லை. மேகத்திரை போட்டு மறைத்தது போலிருக்கிறது."

"பழுவூர் இளையராணியை நீ அடிக்கடி பார்த்ததுண்டா?"

"சில சமயம் பார்த்ததுண்டு. ஆமாம்! நீ சொன்ன பிறகு யாருடைய முக ஜாடை என்று தெரிகிறது. நந்தினி தேவியின் முகத் தோற்றமேதான்! ஆச்சரியமா இருக்கிறதே! அது எப்படி ஏற்பட்டிருக்கும். பூங்குழலி! நீ எப்படி அந்த ஒற்றுமையை கண்டுபிடித்தாய்?"

"அத்தையை அடிக்கடி நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பழுவூர் இளையராணியைச் சில தினங்களுக்கு முன்னாலேதான் இதே கோடிக்கரையில் பார்த்தேன். முகத்தோற்றத்தின் ஒற்றுமை உடனே எனக்குத் தெரிந்து போய் விட்டது.

"காரணம் என்னவாயிருக்கும்?'

"அதையுந்தான் ஒரு நாள் கண்டுபிடிக்கப் போகிறேன். இன்றைக்கு அத்தையைப் பார்த்ததும் அதைப்பற்றிக் கேட்கலாமென்றிருக்கிறேன்."

"அத்தைதான் ஊமையாயிற்றே? எப்படி அவளுடன் பேசுவாய்?"

"நீ உன் தாயாரோடு பேசுவதில்லையா? அமுதா!"

"ஜாடையினால் பேசுவேன். பிறந்தது முதலாவது பழக்கம். அப்படியும் புதிய விஷயம் ஒன்றைப் பற்றிச் சொல்வதாகயிருந்தால் கஷ்டந்தான்!"

"பெரிய அத்தையும் நானும் அப்படித்தான் ஜாடையினால் பேசிக் கொள்வோம். ஜாடையினால் பேச முடியாததைச் சித்திரம் எழுதிக் காட்டிக் கொள்வோம்.

"ஒரே குடும்பத்தில் அக்கா, தங்கை இருவரும் ஊமையாகப் பிறந்தது எவ்வளவு கஷ்டமான விஷயம்? அவர்களைப் பெற்றவர்களுக்கு அதனால் எவ்வளவு துன்பமாயிருந்திருக்கும்?"

"அது மட்டுமல்ல சிறு வயதில் அக்காவும், தங்கையும் ஓயாமல் சண்டை போட்டுக் கொள்வார்களாம். அதனால்தான் பாட்டனார் பெரிய அத்தையை மட்டும் அழைத்துக் கொண்டு போய்த் பூதத்தீவில் குடியேறி வசித்து வந்தாராம். பெரிய அத்தையின் பேரில் தாத்தாவுக்கு ரொம்ப ஆசையாம். குழந்தை பிறந்தவுடன் இராணியாகும் யோகம் இருக்கிறது என்று யாரோ ஜோசியன் ஒருவன் சொன்னானாம். அதனால் குழந்தை ஊமை என்று தெரிந்ததும் அவருடைய மன வேதனை ரொம்ப அதிகமாயிருந்ததாம்..."

இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் காட்டில் புகுந்தார்கள். வெகு நேரம் அலைந்தும் ஊமை ராணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அமுதா! நீ என்னுடனிருப்பதனால்தான் அத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உன்னைக் கண்டு வேண்டுமென்றே மறைந்து கொள்கிறாள்."

"என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் நான் நினைத்தது எதுவும் நடைபெறுவதில்லை நான் போகட்டுமா?"

"எப்படிப் போவாய்? இந்தக் காட்டிலிருந்து உன்னை நான் தான் வௌ ியிலே கொண்டு போய் விட வேண்டும்."

இந்தச் சமயத்தில் ஓர் அதிசயமான குரல் ஒலி காட்டுக்குள்ளேயிருந்து வந்தது, அது மனிதக் குரலாகவும் தோன்றவில்லை; மிருகங்களின் குரலாகவும் தோன்றவில்லை. இரண்டு மூன்று தடவை அந்த ஒலி கேட்டது.ஒலி வந்த திசையை நோக்கிச் சில மான்கள் பாய்ந்து ஓடின.

பூங்குழலி சற்று நின்று யோசித்தாள்; "அமுதா! சத்தம் செய்யாமல் என்னைத் தொடர்ந்து வா!" என்று கூறினாள்.

குரல் வந்த திக்கை நோக்கி இருவரும் மெள்ள நடந்து சென்றார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அதிசயமான காட்சி ஒன்றைக் கண்டார்கள்.

ஊமை ராணி ஒரு மரத்தின் அடிப்பகுதியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கையில் இளந்தளிர்கள் சில வைத்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் ஏழெட்டு அழகிய மான்கள் நின்று கொண்டிருந்தன. அவள் கையிலிருந்த தளிர்களைத் தின்பதற்கு அவை போட்டியிட்டன. அவளுடைய தோளின் மீது ஒரு சிறிய மான் குட்டி உட்கார்ந்து தன் சின்னஞ்சிறிய அழகிய கண்களால் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த அபூர்வமான தோற்றத்தைக் கண்டு பூங்குழலியும் அமுதனும் சிறிது நேரம் அசையாமல் நின்றார்கள்.

முதலில் ஊமை ராணியின் தோள் மேலிருந்த மான் குட்டிதான் அவர்களைப் பார்த்தது. பார்த்ததும் தோள் மீதிருந்து துள்ளிக் கீழே குதித்தது.

மற்ற மான்களும் அவர்களைப் பார்த்துவிட்டன. எல்லா மான்களும் அவர்கள் நெருங்கி வந்தால் பாய்ந்து ஓடுவதற்கு ஆயத்தமாக நின்றன. பின்னர் ஊமை ராணியும் அவர்களைப் பார்த்தாள். அவள் தொண்டையிலிருந்து இன்னொரு விசித்திரமான ஒலி வந்தது.

அதைக் கேட்டதும் மான்கள் எல்லாம் துள்ளிப் பாய்ந்து ஓடிப் போய் விட்டன.

"அத்தைக்கு மனிதர்களின் பாஷை மட்டுந்தான் தெரியாது. மிருகங்களின் பாஷை நன்றாய்த் தெரியும்" என் று பூங்குழலி சொல்லிக் கொண்டே ஊமை ராணியிடம் சமிக்ஞை செய்தாள்.

ஊமை ராணி இம்முறை ஓடவில்லை; பூங்குழலியைப் பார்த்துப் பதில் சமிக்ஞை செய்தாள்.

பூங்குழலி நெருங்கி வந்ததும் ஊமை ராணி அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு உச்சி முகந்தாள்.

சேந்தன் அமுதன் சற்றுத் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தான்.

அத்தையும் மருமகளும் சிறிது நேரம் மௌன பாஷையில் பேசினார்கள்.

பின்னர் பூங்குழலி அமுதனை அருகில் வரும்படி அழைத்தாள்.

ஊமை ராணி அவனை மேலும் கீழும் சில தடவை உற்றுப் பார்த்துவிட்டு அவன் தலை மீது கை வைத்து ஆசி கூறும் பாவனையில் சிறிது நேரம் இருந்தாள்.

பின்னர் கையை அவன் தலையிலிருந்து எடுத்து விட்டுப் பூங்குழலியைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

மூன்று பேரும் ஓடைக் கரைக்கு வந்தார்கள்.

ஊமை ராணி அங்கேயே உட்கார்ந்து கொண்டு பூங்குழலிக்குப் போய் வரும்படி சமிக்ஞை காட்டினாள்.

பூங்குழலி "வா! அமுதா! வீட்டுக்குப் போகலாம், அத்தை வரமாட்டாளாம். இங்கே சாப்பாடு கொண்டு வர வேண்டுமாம்" என்றாள். இருவரும் கலங்கரை விளக்கை நோக்கிப் போனார்கள்.

"பூங்குழலி! எனக்கு என்ன சொல்கிறாய்?" என்று அமுதன் கேட்டான்.

"உன்னோடு தஞ்சைக்கு வரலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது இப்போது சாத்தியமில்லை; அத்தைக்கு அவருடைய செல்வச் சுவீகாரப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமாம். ஆகையால் மறுபடியும் நாகைப்பட்டினப் பிரயாணம் எனக்கு இருக்கிறது. நீயும் உடன் வந்தால் அத்தை உடனே ஓடி மறைந்தாலும் மறைந்து விடுவாள். அவளிடம் நான் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியாது".

சேந்தன் அமுதன் பெருமூச்சுவிட்டு "நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், அப்படியானால், இப்போதே உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்!" என றான்.

"இல்லை, இல்லை! வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு உன் மாமன் முதலியவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு போ! இல்லாவிட்டால் என்னிடம் எல்லாரும் சண்டைக்கு வருவார்கள்!"

வழியில் இன்னொரு இடத்தில் ஒரு புதரின் மறைவில் நின்று ஒரு பெண்ணும் ஆணும் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.

"ஆகா! அண்ணி ராக்கம்மாள் போலிருக்கிறது. இன்னமும் இரகசியப் பேச்சு முடிந்தபாடாக இல்லை. இப்போது வந்திருப்பவர்கள் யார்? அந்தப் பாண்டிய நாட்டு ஒற்றர்கள்தானா? வேறு யாராவதா?" என்று பூங்குழலி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

ராக்கம்மாள் புதர் மறைவிலிருந்து வௌிப்பட்டு வந்தாள். பூங்குழலியைப் பார்த்ததும் சிறிது திடுக்கிட்டாள். ஆனால் அதை உடனே மறைத்துக் கொண்டு வேகமாக அவர்களண்டை நெருங்கி வந்தாள்.

"பூங்குழலி! இத்தனை நாள் எங்கே தொலைந்து போயிருந்தாய்? உன் அப்பாவும் அண்ணனும் ரொம்பக் கவலைப்பட்டுப் போனார்களே!" என்றாள்.

"எதற்காகக் கவலைப்பட வேண்டும்? நான் வீட்டை விட்டுப் போவது இதுதான் முதலாவது தடவையா!"

"இந்தத் தடவை உன் அத்தை மகனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டாயல்லவா? ஒருவருக்கும் சொல்லாமல் நீங்கள் கலியாணம் செய்து கொண்டு விடுவீர்களோ என்று கவலை!"

"அண்ணி! இந்த மாதிரி அசட்டுப் பேச்செல்லாம் என்னிடம் பேச வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? இன்னொரு தடவை இவ்வாறு பேசினாயோ...?"

"இல்லையடி பெண்ணே! இல்லை! நீ உன் அத்தை மகனைக் கலியாணம் செய்து கொண்டால் எனக்கு என்ன? அரச குமாரனைக் கலியாணம் செய்து கொண்டால் எனக்கென்ன? இலங்கையிலிருந்து உன் பெரிய அத்தை வந்து உன்னை தேடிக் கொண்டிருந்தாள். அவளை நீ பார்த்து விட்டாயா?" என்றாள்.

"இல்லை, இன்னும் பார்க்கவில்லை" என்று சொன்னாள் பூங்குழலி.

வீடு சேர்வதற்குள் ச ந்தன் அமுதனிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, "அமுதா! ஜாக்கிரதை! அண்ணி பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்தவள். அவள் உன் வாயைப் பிடுங்கப் பார்ப்பாள் ஒன்றுக்கும் பதில் சொல்லாதே!" என்றாள்.

"இங்கே நான் இருக்கும் இன்னும் சிறிது நேரமும் ஊமையாகவே இருந்து விடுகிறேன்" என்றான் சேந்தன் அமுதன்.

அன்று பிற்பகலில் பூங்குழலி மறுபடியும் நாகைப்பட்டினத்தை நோக்கித் தன் ஓடத்தைச் செலுத்தினாள்; படகில் ஊமை ராணி வீற்றிருந்தாள்.

ஊமை ராணியின் அருகில் இருக்கும் போது பூங்குழலி எப்போதும் மன நிம்மதி அடைவது வழக்கம், ஒத்த உணர்ச்சியுள்ள அவர்களுடைய உள்ளங்கள் ஒன்றுக்கொன்று அவ்விதம் அமைதியை அளிப்பதுண்டு. ஆனால் இம்முறை பூங்குழலியின் மனத்தில் அத்தகைய நிம்மதி ஏற்படவில்லை.

சில நாளைக்கு முன்பு அதே இடத்தில் பொன்னியின் செல்வனை உணர்வு இழந்திருந்த நிலையில் அழைத்து போனது அவளுக்கு அடிக்கடி நினைவு வந்தது. அந்த இராஜகுமாரனை இன்னொரு இராஜகுமாரியிடம் சேர்ப்பிப்பதற்காகவே தான் அத்தனை கஷ்டத்திற்கு உள்ளானதை எண்ணியபோது அவளுடைய இதயத்தில் 'சுருக்'கென்ற வேதனை ஏற்பட்டது.

சேந்தன் அமுதனை "ஊருக்குப் போ" என்று பிடித்துத் தள்ளியது போல் அனுப்பிவிட்டதை எண்ணியபோது அவள் உள்ளம் இரங்கியது. இந்த எண்ணங்களைத் தவிர, அன்று அவளுடைய தந்தை தியாக விடங்கக்கரையர் செய்த எச்சரிக்கை அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

"குழந்தாய்! உன்னுடைய போக்குவரத்துக்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டால் நன்றாயிருக்கும். யார் யாரோ புதுப் புது மனிதர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக வருகிறார்கள் என்று தெரியவில்லை. இராஜ்யத்தில் ஏதேதோ சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நீ அகப்பட்டுக் கொள்ளாதே! நம்முட ைய குடும்பம் என்றென்றைக்கும் சோழ குலத்து மன்னர் குடும்பத்துக்குக் கடமைப்பட்டது! இதை மறந்து விடாதே!" என்று அவளுடைய தந்தை கூறினார்.

தந்தையின் எச்சரிக்கையோடு அண்ணியின் இரகசிய நடவடிக்கைகளையும் சேர்த்து எண்ணியபோது பூங்குழலிக்கு என்றுமில்லாத திகில் உண்டாயிற்று. ஒருவேளை அந்தப் புது மனிதர்கள் தன்னைத் தேடிக் கொண்டுதான் வந்திருப்பார்களோ? தன்னைத் தொடர்வதின் மூலம் பொன்னியின் செல்வன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயல்வார்களோ? தன் மூலமாக அது வௌிப்பட்டால் எவ்வளவு பெரிய குற்றமாக முடியும்?...

பூங்குழலியின் மனக் கலக்கத்தை அதிகமாக்கக் கூடிய விதமாக ஓடையின் கரையோரமாகக் காடுகளில் சலசலப்புச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

அப்போது காற்றே அடிக்கவில்லை; எட்டுத் திசைகளும் சதி செய்து கொண்டு காற்றைப் பிடித்துத் தடுத்து வைத்திருப்பது போல் இருந்தது.

அப்படியிருக்கும் போது ஓடைக்கரைக் காடுகளில் சலசலப்பு ஏற்படக் காரணம் என்ன?

ஊமை ராணிக்கு இந்தத் தொந்தரவு ஒன்றுமில்லை. அவளுக்குக் காது கேட்காது ஆகையால் சலசலப்புச் சத்தமும் காதில் விழாது. அவளிடம் அதைப்பற்றி யோசனை கேட்கவும் முடியாது.

ஆனால் ஊமை ராணிக்கு அதிகமான வேறு சில சக்திகள் உண்டு. கண்ணால் பார்த்தும், காதால் கேட்டு தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை ஆறாவது புலனின் உதவியைக் கொண்டு அவள் கண்டுகொள்வாள். அவள் அறியாத அபாயம் ஒன்றும் தன்னை நெருங்க முடியாதல்லவா?....

இது என்ன? அத்தையும் கவலையோடு அடிக்கடி ஓடைக்கரையை அண்ணாந்து பார்த்துக் கொண்டு வருகிறாளே? உண்மையிலேயே அபாயம் ஏதேனும் தொடர்ந்து வருகிறதோ?...

அத்தை ஓடைக்கரையை அடிக்கடி பார்ப்பதின் காரணம் சீக்கிரம் தௌிவாகிவிட்டது. பூங்குழலியின் கவலையை அது போக்குவதாயிருந்தது.

ஓரிடத் ில் ஐந்தாறு மான்கள் ஓடைக்கரைப் புதர்களின் இடையில் தெரிந்தும் தெரியாமலும் நின்று படகை எட்டிப் பார்த்தன! இல்லை; படகைப் பார்க்கவில்லை! ஊமை ராணியைப் பார்த்தன!

ஆகா! மான்களைப் போன்ற அழகான பிராணிகள் உலகில் வேறு எதுவும் இல்லை! மான்களைப் படைத்த கடவுள் எதற்காக மனிதர்களையும் படைத்தாரோ, தெரியவில்லை! சண்டாள மனிதர்கள்! இவ்வளவு அழகான பிராணிகளை வேட்டையாடிக் கொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?...

மான்களைப் பார்த்து, அவற்றின் அழகை நினைத்து, அதிசயித்த பூங்குழலியின் கரங்கள் துடுப்புப் போடுவதை நிறுத்தின; படகு நின்றது.

ஊமை ராணியின் தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான ஒலி கிளம்பிற்று. அது அன்று காலையில் கேட்ட குரல் போல் இல்லை இதில் திகிலும் எச்சரிக்கையும் கலந்திருந்தன.

அதைக் கேட்ட மான்களும் திகில் அடைந்து திரும்பி ஓடத்தொடங்கின.

அதே கணத்தில் எங்கேயோ மறைவான இடத்திலிருந்து ஓர் அம்பு விர் என்று ஒரு மானின் மீது தைத்தது.

அம்பு தைத்த மான் சோகம் நிறைந்த ஓலமிட்டது.

ஊமை ராணி படகிலிருந்து கரையில் தாவிக் குதித்துக் காயமடைந்த மானை நோக்கி ஓடினாள்.

அவள் மானின் சமீபத்தை அடைந்த அதே சமயத்தில் நாலாபுறத்துப் புதர்களிலும் சலசலப்புச் சத்தம் உண்டாயிற்று. அடுத்த வினாடிகளில் ஏழெட்டுப் பேர் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களில் பலர் கையில் வேலாயுதங்கள் இருந்தன. சற்றுத் தூரத்தில் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வந்த ராக்கம்மாளும் காணப்பட்டாள்.

ஊமை ராணி தப்பி ஓட முயன்றாள்; முடியவில்லை.தப்பி ஓடுவது இயலாத காரியம் என்று அறிந்ததும் ஊமை ராணி சும்மா நின்று விட்டாள்.

இரண்டு பேர் நெருங்கி வந்து அவளுடைய கைகளைக் கயிற்றினால் பிணித்துக் கட்டினார்கள்.

இவ்வளவும் பூங்குழலி பார்த துக் கொண்டிருக்கும் போதே சில வினாடி நேரத்தில் நிகழ்ந்து விட்டன.ஊமை ராணியின் கரங்களைக் கயிற்றினால் கட்டுகிறார்கள் என்பதை அறிந்ததும் பூங்குழலி படகிலிருந்து பாய்ந்து கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தாள். கையிலிருந்த துடுப்பை ஓங்கிக் கொண்டு வந்தாள்.ஊமை ராணியைச் சுற்றி நின்றவர்களில் ஐந்தாறு பேர் பூங்குழலியை நோக்கி ஓடிவந்தார்கள். அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்ப் படகில் தூக்கிப் போட்டுக் கயிற்றினால் இறுக்கிக் கட்டிவிட்டார்கள். பிறகு திரும்பிச் சென்றார்கள்; அவர்களுடன் சாவதானமாக வந்த ஊமை ராணியையும் அழைத்துக் கொண்டு சில வினாடி நேரத்தில் மறைந்து விட்டார்கள்.

பக்க தலைப்பு



பத்தொன்பதாம் அத்தியாயம்
சிரிப்பும் நெருப்பும்




பூங்குழலி தன்னைப் படகுடன் சேர்த்துக் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்க்க அவசர அவசரமாக முயன்றாள். அது அவ்வளவு இலகுவான காரியமாக இல்லை. சண்டாளப் பாவிகள்! கயிற்றைத் தாறுமாறாக விட்டு முடிச்சுக்கு மேல் முடிச்சாகப் போட்டிருந்தார்கள். பூங்குழலியின் சிறிய கத்தி படகின் அடியில் கிடந்தது. ஒரு கரத்துக்காவது விடுதலை கிடைத்தால் கத்தியை எடுத்துக் கட்டுக்களை அறுத்து எரியலாம். ஆனால் பாவிகள் மணிக்கட்டுகளைச் சேர்த்துத்தான் பலமாகப் பின் புறத்தில் கட்டியிருந்தார்கள். பூங்குழலி மிகவும் கஷ்டப்பட்டுக் குனிந்து பற்களினால் கத்தியின் பிடியைக் கவ்வி எடுத்துக் கொண்டாள். பற்களினால் கவ்விய வண்ணமே கத்தியைப் பிடித்துக் கொண்டு கயிற்றை ஓரிடத்தில் அறுத்தாள். கைகளின் கட்டுச் சிறிது தளர்ந்தது. ஒரு கையை மிகவும் பிரயாசையின் பேரில் கட்டிலிருந்து விடுதலை செய்து கொண்டாள். பிறகு கயிறுகளை அறுப்பது சிறிது எளிதாயிற்று.

கட்டுகளிலிருந்து முழுதும் விடுவித் துக் கொள்வதற்கு ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் ஆகி விட்டது. இந்தச் சமயத்தில் ஓடைக்கரை மீது காலடிச் சத்தம் கேட்டது பிறகு ஒரு நிழல் தெரிந்தது. தன்னைக் கட்டிப் போட்டவர்களில் ஒருவன்தான் திரும்பி வருகிறான் போலும்! அல்லது தான் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தப்பிவிடாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒருவனைப் பின்னால் விட்டு வைத்துச் சென்றிருக்கிறார்கள் போலும்! அவன் தன் கண் முன்னால் தெரிந்ததும் கையிலிருந்து கத்தியை அவன் மீது எறிந்து கொன்று விடுவது என்று பூங்குழலி தீர்மானித்துக் கொண்டு அதற்கு ஆயத்தமாகக் கத்தியைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் எத்தகைய ஏமாற்றம்?

"பூங்குழலி! பூங்குழலி!" என்று சேந்தன் அமுதனுடைய குரல் கேட்டது.

அடுத்த வினாடி அமுதனுடைய பயப் பிராந்தியுற்ற முகம் ஓடைக் கரையின் மேலிருந்து எட்டிப் பார்த்தது.

பூங்குழலி கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டாள்.

அமுதனும் அவளைப் பார்த்துவிட்டான்;

"பூங்குழலி! நீ உயிரோடு இருக்கிறாயா?" என்று சொல்லிக் கொண்டே பாய்ந்து ஓடி வந்தான்.

"நான் உயிரோடிருப்பது உனக்கு கஷ்டமாயிருக்கிறதாக்கும்! வேண்டுமானால் உன் கையாலேயே கொன்று விட்டுப் போய்விடு! ஆனால் அவ்வளவு தைரியம் உனக்கு எங்கிருந்து வரப் போகிறது?" என்றாள் பூங்குழலி.

"சிவ! சிவா! எவ்வளவு கொடூரமான வார்த்தைகளைக் கூறுகிறாய்? நான் எதற்காக உன்னைக் கொல்லப் போகிறேன்? நீ தான் உன் வார்த்தைகளினால் என்னைக் கொல்லுகிறாய்!" என்றான் அமுதன்.

"பின்னே, சற்று முன்னாலேயே ஏன் வந்திருக்கக் கூடாது? கட்டுக்களை நானாக அறுத்து விடுவித்துக் கொள்ளுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டுப் போனேன், தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி எழுந்து நிற்க முயன்றாள். கால்கள் கயிறுகளில் தாறுமாறாகச் சிக்கிக் கொண்டிரு ்தபடியால் தடுமாறி விழப் பார்த்தாள்.

அமுதன் அலறிப் புடைத்துக் கொண்டு அவளைப் பிடித்து விழாமல் தடுத்தான்.

"ஐயையோ! இப்படியா பாவிகள் உன்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போனார்கள்? உடம்பெல்லாம் தடித்துப் போயிருக்கிறதே!" என்றான்.

"இப்போது இவ்வளவு கரிசனப்படுகிறாயே? சற்று முன்னாலேயே வருவதற்கு என்ன?"

"மறுபடியும் அப்படியே கேட்கிறாயே? உனக்கு இப்பேர்ப்பட்ட ஆபத்து வந்திருக்கிறது என்று நான் என்ன கண்டேன்! நீ என்னைப் 'போ, போ' என்று விரட்டினாய் நான் போய்க் கொண்டிருந்தேன்..."

"பின் எதற்காகத் திரும்பி வந்தாய்? ஒருவேளை நான் செத்துப்போயிருந்தால் என் உடலைத் தகனம் செய்து விட்டுப் போகலாம் என்பதற்காகவா?"

"சிவபெருமான் தொண்டையில் விஷத்தை வைத்துக் கொண்டார். நீ நாக்கிலேயே வைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று உன் அண்ணி சொன்னதைக் கேட்டு ஓடோடியும் வந்தேன். அதற்கு நல்ல பரிசு கிடைத்தது!"

இதற்குள் படகிலிருந்து ஓடைக்கரையில் இறங்கியிருந்தாள் பூங்குழலி.

"இந்தக் கத்தியை உன் மீது எறியலாம் என்றிருந்தேன். நீ தப்பித்தாய்; இதே கத்தியினால் என் அண்ணியை முதலில் குத்திக் கொன்று விட்டுத்தான் மறு காரியம் பார்க்கப் போகிறேன். அந்தச் சண்டாளி எங்கே இருக்கிறாள்?"

"என்னை விட்டுவிட்டு உன் அண்ணியின் பேரில் எதற்காகப் பாய்கிறாய்? அவள் பேரில் எதற்காக இத்தனைக் கோபம்? உன்னைப்பற்றி எனக்கு அவள் சொன்னது குற்றமா?..."

"அவள் தான் என் அத்தையைக் காட்டிக் கொடுத்தவள். புதர் மறைவில் அவள் யாருடனோ இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை நீ கூடத்தான் பார்த்தாயே?" என்றாள் பூங்குழலி.

"நீ நினைப்பது தவறு! உன் அண்ணி, யாருடன் என்ன இரகசியம் பேசிக் கொண்டிருந்தாளோ, என்னமோ? உன் அத்தையை அவள் காட்டிக் கொடுக்கவில்லை என்பது நிச்சயம். உன் அத்தையைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டு போனவர்கள் உன் அண்ணியையும் மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போய் விட்டார்கள். அவளுடைய தலையில் அடித்துக் காயப்படுத்தி விட்டும் போய்விட்டார்கள்.

"இது என்ன வேடிக்கை! நம்புவதற்கு முடியவில்லையே? உன்னை அவள் ஏமாற்றி விட்டிருக்கிறாள்! நல்லது; நீ ஏன் திரும்பி வந்தாய், அண்ணியை எவ்விடத்தில் பார்த்தாய், - எல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று பரபரப்புடன் பூங்குழலி கேட்டாள்.

சேந்தன் அமுதன் அவ்வாறே விவரமாகக் கூறினான். அவன் தஞ்சாவூர்ச் செல்லும் சாலையில் போய்க் கொண்டிருந்தான். பூங்குழலியைப் பிரிந்து போக மனமின்றித் தயக்கத்துடனே தான் போய்க் கொண்டிருந்தான். அப்போது பக்கத்துக் காட்டிலிருந்து ஏதோ கூச்சலும் அலறும் குரலும் கேட்டன. பலர் விரைந்து நடந்து வரும் சத்தமும் கேட்டது. சேந்தன் அமுதன் சாலை ஓரத்து மரம் ஒன்றின் பின்னால் மறைந்து கொண்டான். கையில் வேல் பிடித்த வீரர்கள் ஏழெட்டுப் பேர் காட்டு வழியாகத் திடுதிடுவென்று நடந்து வந்து இராஜபாட்டையில் பிரவேசித்தார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் பிள்ளை இருப்பது போலத் தோன்றியது. மனிதர்களிடையில் சற்று இடைவௌி தெரிந்த போது மத்தியில் இருந்தவள் பூங்குழலியின் அத்தை மாதிரி தோன்றினாள். அவள் அத்தையாக இருக்க முடியாது, அது தன்னுடைய மனப் பிரமை என்று சேந்தன் அமுதன் எண்ணிக் கொண்டான்.

அந்த வீரர் கூட்டம் சென்ற பிறகும் காட்டிற்குள்ளேயிருந்து ஒரு பெண் பிள்ளையின் கூக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சேந்தன் அமுதன் முதலில் 'நமக்கு என்னத்திற்கு வம்பு? நம் வழியே நாம் போய் விடலாமா?' என்று நினைத்தான் ஆனாலும் மனது கேட்கவில்லை. யார் அலறுவது என்று பார்த்து, தன்னால் ஏதேனும் உதவி செய்யக் கூடுமானா ல் செய்யலாம் என்று எண்ணிக் கூக்குரல் வந்த திசையை நோக்கிப் போனான். அங்கே ராக்கம்மாள் மரத்தில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டான். அவள் தலையிலிருந்து இரத்தம் வழிந்து முகமெல்லாம் ஒரே கோரமாயிருந்தது. அமுதனுக்கு அருகில் நெருங்கவே பயமாயிருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சென்று கட்டுக்களை அவிழ்த்து விட்டான். அவிழ்க்கும் போதே 'இந்த அக்கிரமம் யார் செய்தது? எதற்காகச் செய்தார்கள்? சற்று முன் சாலையில் வந்து ஏறின மனிதர் யார்? அவர்கள் மத்தியில் ஒரு பெண் பிள்ளையும் போனது போலிருந்ததே! அவள் யார்?' என்றெல்லாம் கேட்டான். 'ஆம், தம்பி, அவர்கள் உன் பெரியம்மாவைக் கட்டி இழுத்துக் கொண்டு போகிறார்கள். அதைத் தடுப்பதற்கு நான் முயன்றேன். அதற்காகத்தான் என்னை இப்படி அடித்துக் கட்டி விட்டுப் போனார்கள். உன் மாமன் மகளும், பெரியம்மாவும் படகிலேறிப் போய்க் கொண்டிருந்தார்கள். படகிலிருந்துதான் பெரியம்மாவைக் கட்டி இழுத்து வந்தார்கள். பூங்குழலியின் கதி என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஓடிப்போய்ப் பார்!' என்றாள். சேந்தன் அமுதன் திடுக்கிட்டுப் பூங்குழலியைத் தேடிக் கொண்டு புறப்பட்டான். அச்சமயம் ராக்கம்மாள், 'கொஞ்சம் பொறு தம்பி! பூங்குழலியும் அந்த ஊமைப்பிசாசும் படகில் ஏறி எங்கே புறப்பட்டார்கள்? உனக்கு தெரியுமா? உன்னை ஏன் விட்டு விட்டுப் போனார்கள்? நீ எங்கே தனியாகக் கிளம்பினாய்?' என்று கேட்டாள். இப்படி அவள் கேட்டது, முக்கியமாக 'ஊமைப் பிசாசு' என்று சொன்னது சேந்தன் அமுதனுக்குப் பிடிக்கவில்லை. 'எல்லாம் அப்புறம் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு, கால்வாயை நோக்கி ஓடிவந்தான். பூங்குழலியையும் அந்த மனிதர்கள் அடித்துப் போட்டிருப்பார்களோ, ஒருவேளை கொன்றே இருப்பார்களோ என்ற பதைபதைப்புடனே வந்தான். பூங்குழலி உயிரோடிருப்பதையும் இரத்தக் காயமில்லாமலிருப்பதையும் பார்த்ததும் அவனுக்கு ஆறுதல் உண்டாயிற்று...

இந்த விவரங்களைக் கூறிவிட்டு, "பூங்குழலி! இப்போது என்ன சொல்லுகிறாய்? உன் அண்ணியின் பேரில் நீ கோபித்துக் கொண்டது தவறுதான் அல்லவா?" என்று சேந்தன் அமுதன் கேட்டான்.

"நீ சொல்லுவதைக் கேட்டால், அப்படித்தான் தோன்றுகிறது. அவளை எந்த இடத்தில் விட்டுவிட்டு வந்தாய்? அங்கே போய்ப் பார்க்கலாம், வா!" என்றாள் பூங்குழலி.

"அவள் அங்கேயே இருப்பாள் என்பது என்ன நிச்சயம்?"

"அங்கே இல்லாவிட்டால் அக்கம்பக்கத்தில் இருப்பாள். இல்லாவிடில் நம்மை தேடிக் கொண்டு வருவாள். அமுதா! நானும் என் அத்தையும் படகில் ஏறி எங்கே புறப்பட்டோம் என்று அண்ணி கேட்டாள் அல்லவா?"

"ஆம், கேட்டாள்."

"நீ அதற்கு மறுமொழி சொல்லவில்லையே? நிச்சயந்தானே?"

"நிச்சயந்தான் 'ஊமைப் பிசாசு' என்று அவள் சொன்னதும் எனக்கு உண்டான அருவருப்பினால் மறுமொழி சொல்லாமலே வந்துவிட்டேன்."

"இனிமேல் நல்ல வார்த்தையாக கேட்டாலும் சொல்லாதே! நாங்கள் எங்கே புறப்பட்டோம் என்பதை அவள் ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாள்? அதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் அல்லவா? அமுதா! அத்தையைப் பிடித்துக் கொண்டு போனவர்களுக்கும் அண்ணிக்கும் தொடர்பு இல்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அண்ணியின் மூலமாக அவர்கள் உளவறிந்து கொண்டு, தங்கள் காரியம் முடிந்ததும், அவளை அடித்துக் கட்டிப் போட்டு விட்டுப் போயிருக்கலாம். அப்படியில்லா விட்டாலும், அண்ணி வேறு ஏதோ துர்நோக்கத்துடனே தான் எங்களைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். ஆகையால் அவளுடன் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்! முழுவதும் அவளை நம்பி மோசம் போய் விடாதே!..."

"பூங்குழலி! உன் அண்ணியின் சந்நிதானத்தில் உன் அண்ணன் ஊமையாக இருந்து விடுவான் என்று சொல்லியிருக்கிறாய் அல் லவா? அதுபோலவே நானும் இருந்து விடுகிறேன், பேச வேண்டியதையெல்லாம் நீயே பேசிக்கொள்..."

இதைக் கேட்ட பூங்குழலி சிரித்தாள்.

"உன் சிரிப்பு என் செவிகளுக்கு இன்னமுதாயிருக்கிறது. திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகத்தைப் போல் இனிக்கிறது." என்றான் அமுதன்.

"ஏதோ தவறிச் சிரித்துவிட்டேன்; அதைக் கேட்டு ஏமாந்து விடாதே! என் உள்ளத்தில் அனல் பொங்குகிறது, நெஞ்சில் நெருப்புப் பற்றி எரிகிறது."

"நெஞ்சின் தாபத்தைத் தணிப்பதற்கு இறைவனுடைய கருணை வெள்ளத்தைக் காட்டிலும் சிறந்த உபாயம் வேறு இல்லை!" என்றான் சேந்தன் அமுதன்.

பக்க தலைப்பு



இருபதாம்அத்தியாயம்
மீண்டும் வைத்தியர்மகன்




சிறிது நேரம் பூங்குழலியும் அவளுடைய அத்தை மகனும் காட்டு வழியில் மௌனமாக நடந்து சென்றார்கள்.

பூங்குழலி ஒரு நெடு மூச்சு விட்டு, "அமுதா! உனக்கும் எனக்கும் ஏதோ ஜன்மாந்தரத் தொடர்பு இருக்குமென்று தோன்றுகிறது" என்றாள்.

"பூர்வ ஜென்மங்களைப் பற்றி இப்போது யாருக்கு என்ன கவலை? இந்த ஜன்மத்தைப் பற்றி ஏதாவது நல்ல செய்தி இருந்தால் சொல்லு!" என்றான் சேந்தன் அமுதன்.

"முந்தைப் பிறவிகளின் சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடரும் என்று சொல்லுகிறார்கள் அல்லவா? அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்; இன்று உச்சி வேளையில் உன்னைப் பிரிந்த போது இனி உன்னைப் பார்க்கப் போவதே இல்லை என்று எண்ணினேன். இரண்டு நாழிகைக்குள்ளாக உன்னை மறுபடி பார்க்கும்படி நேர்ந்தது...."

"அதற்காக வருத்தப்பட வேண்டாம்; இந்தக் காட்டு வழியைக் கடந்து தஞ்சாவூர்ச் சாலையை அடைந்ததும் நான் என் வழியே செல்வேன், நீ உன்னிஷ்டம் போல் போகலாம்..."

"உன்னை நான் அப்படித் தனியே விட்டுவிடப் போவதில்லை. அண்ணியைக் கண்டு பேசிய பிறகு உன்னுடன் நான் தஞ்சாவூருக்கு ரப்போகிறேன். என் அத்தைக்கு நேர்ந்த துன்பத்துக்கு பரிகாரம் தேடப் போகிறேன். சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்தில் சென்று முறையிடப் போகிறேன்..."

"பூங்குழலி சக்கரவர்த்தியின் சந்நிதானத்தை அடைவது அவ்வளவு எளிது என்று கருதுகிறாயா? நம் போன்றவர்கள் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே பிரவேசிக்க முடியாதே?"

"ஏன் முடியாது? கோட்டைக் கதவு திறக்காவிட்டால் கதவை உடைத்துத் திறப்பேன்! அது முடியாவிட்டல் மதில் சுவரில் ஏறிக் குதித்துக் போவேன்..."

"அரண்மனை வாசலில் காவலிருக்கும் சேவகர்களை என்ன செய்வாய்?"

"நான் போடுகிற கூச்சலைக் கேட்டு அவர்கள் மிரண்டு போய் என்னைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போவார்கள்..."

"சின்னப் பழுவேட்டரையரை அப்படியெல்லாம் மிரட்டி விட முடியாது. அவருடைய அனுமதியில்லாமல் யமன் கூடச் சக்கரவர்த்தியை அணுக முடியாது என்று தஞ்சாவூர்ப் பக்கங்களில் ஜனங்கள் பேசிக் கொள்வது வழக்கம். அதனாலேதான் சக்கரவர்த்தி இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சிலர் சொல்லுவதையும் கேட்டிருக்கிறேன்."

"சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாவிட்டால், பழுவேட்டரையர்களையே பார்த்து இந்த அக்கிரமத்துக்குப் பரிகாரம் உண்டா, இல்லையா என்று கேட்பேன்! அவர்கள் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், முதன் மந்திரி பிரம்மராயரிடம் போவேன். அதிலும் பயனில்லாவிட்டால், பழையாறையிலுள்ள ராணிகளிடம் போய் முறையிடுவேன். என் அத்தையின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் வரையில் ஓரிடத்தில் தங்கமாட்டேன். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் இரவு பகல் தூங்க மாட்டேன். அண்ணி என் அத்தையை 'ஊமைப் பிசாசு' என்று சொன்னாள் அல்லவா? நானும் ஒரு பிசாசாக மாறி நாடு நகரமெல்லாம் சுற்றி அலைவேன், 'நீதி!' நீதி' என்று அலறிக் கொண்டு அலைந து திரிவேன்... அமுதா நீயும் என்னோடு வருவாயா...?"

"நிச்சயமாக வருவேன், பூங்குழலி! நீ விரும்பினால் வருவேன். ஆனால் ஏன் நீ உன் மனத்தை இப்படி எல்லாம் குழம்பவிடுகிறாய். எங்கெல்லாமோ வெகு தூரத்துக்குப் போய் விட்டாயே? முதலில் உன் அத்தையைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டியதல்லவா முக்கியமான காரியம்? அவளைப் பிடித்துக் கொண்டு போன துஷ்டர்களிடமிருந்து அவளை விடுதலை செய்ய வேண்டாமா? உன் தந்தை, அண்ணன் முதலியவர்களிடம் சொல்ல வேண்டாமா?..."

"அமுதா! என் அத்தை தெய்வீக சக்தி உள்ளவள். அவளுக்கு யாரும் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாது. தமயந்தி வேடனை எரித்தது போல கண் பார்வையினாலேயே எரித்து விடுவாள். ஆகையால் அவளைப் பற்றிக்கூட எனக்கு அவ்வளவு கவலையில்லை. ஆனால் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய அக்கிரமம் நடக்கிறதே? பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து இந்த நாட்டில் தர்ம ராஜ்யம் நடப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாசிவ பக்தராகிய கண்டராதித்த மன்னர் அரசு புரிந்த நாட்டில், பசுவும் புலியும் ஒரு துறையில் தண்ணீர் குடித்தது என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். சுந்தர சோழரின் அரசாட்சியின் கீழ் சோழ நாட்டில் எந்த ஒரு சிறு பெண்ணும் இரவு பகல் எந்த நேரத்திலும் பயமின்றிப் பிரயாணம் செய்யலாம் என்று பறையறைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் புகழ் பெற்ற இராஜ்யத்தில், ஒரு மூதாட்டியை - காது கேளாத பேசத் தெரியாத ஒரு பேதை ஸ்திரீயை, பட்டப் பகலில் துஷ்டர்கள் பிடித்துக் கொண்டு போவதென்றால், அது எப்படிப்பட்ட அக்கிரமம்? என் அத்தையைப் பற்றிக் கூட எனக்கு அவ்வளவு கவலை இல்லை. இன்றைக்கு என் அத்தைக்கு நேர்ந்தது நாளைக்கு எனக்கு நேரலாம் அல்லவா? இன்னும் இந்த நாட்டிலுள்ள கன்னிப் பெண்கள் பலருக்கும் நேரலாம் அல லவா?"

சேந்தன் அமுதன் இப்போது குறுகிட்டு, "ஆமாம்; அத்தகைய அபாயம் இந்த நாட்டில் இப்போது இருக்கத்தான் இருக்கிறது. சுந்தர சோழர் நோயாளியாகிப் படுத்ததிலிருந்து சோழ நாட்டில் தர்மம் தலைகீழாகி விட்டது. கட்டுக்காவல் அற்றுப் போய்விட்டது. கன்னிப் பெண்களுக்கு அபாயம் எங்கே என்று காத்திருக்கிறது. ஆகையால் கன்னிப் பெண்களெல்லாம் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து கொண்டு விடுவதுதான் நல்லது!" என்றான்.

பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.

"அமுதா! ஒரு கன்னிப் பெண் உன்னைக் கலியாணம் செய்து கொண்டால் அவளை உன்னால் காப்பாற்ற முடியுமா? உனக்கு கத்தி எடுத்துப் போர் செய்ய தெரியுமா?" என்று கேட்டாள்.

"மலர் எடுத்து மாலை தொடுக்கவும் பதிகம் பாடிப் பரமனைத் துதிக்கவுந்தான் நான் கற்றிருக்கிறேன். கத்தி எடுத்து யுத்தம் செய்ய நான் கற்கவில்லை. அதனால் என்ன? துடுப்புப் பிடித்துப் படகு தள்ள நீ எனக்குக் கற்றுக் கொடுத்து விடவில்லையா? அதுபோல் வாள் எடுத்துப் போர் செய்யவும் கற்றுக் கொண்டு விடுகிறேன். மதுராந்தகத் தேவர் சிங்காதனம் ஏறி இராஜ்யம் ஆள ஆசைப்படும்போது, நான் கத்திச் சண்டை கற்றுக் கொள்வதுதானா முடியாத காரியம்?" என்றான் சேந்தன் அமுதன்.

இதற்குள் பூங்குழலியின் அண்ணியைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கே அந்த மாதரசியைக் காணவில்லை. அவளுடைய மண்டையில் பட்ட காயத்திலிருந்து தரையில் சிந்தியிருந்த இரத்தத் துளிகளைச் சேந்தன் அமுதன் பூங்குழலிக்குச் சுட்டிக் காட்டினான்.

"நன்றாக அடித்துவிட்டிருக்கிறார்கள்; அத்தையைப் பிடித்துக் கொண்டு போனவர்களுக்கு அண்ணி உளவு சொல்லவில்லையென்பது நிச்சயமாகிறது. ஆனால் அவள் வேறு யாருக்காக என்ன உளவு பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை எப்படியாவது ண்டுபிடிக்க வேண்டும்!" என்றாள் பூங்குழலி.

"மாமன் மகளே! இதைக் கேள்! இங்கே நடந்திருப்பதெல்லாம் காரணம் தெரியாத மர்மமான காரியங்களாயிருக்கின்றன. இரகசியத்துக்குள் இரகசியமாகவும், சுழலுக்குள் சுழலாகவும் இருக்கின்றன. எல்லாம் இராஜாங்கத்தோடும் இராஜ வம்சத்தாரோடும் சம்பந்தப்பட்ட சிக்கல்களாக இருக்கின்றன. இவற்றைக் குறித்து நீயும் நானும் ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மை நாமே ஏன் சங்கடத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்?"

"அமுதா! எவ்வளவு பெரிய இராஜாங்க விஷயமாயிருந்தால் என்ன? எத்தகைய மர்மமாக இருந்தால்தான் என்ன? என் அத்தை சம்பந்தப்பட்ட காரியத்தில் நான் கவலை எடுத்துப் பாடுபடாமலிருக்க முடியுமா? உன் பெரியம்மாவின் கதியைப் பற்றி நீ சிந்திக்காமலிருக்க முடியுமா?"

"என் மனதில் பட்டதை நான் சொல்கிறேன், பூங்குழலி! நான் பார்த்த ஏழெட்டு மனிதர்களுக்கு நடுவில் ஒரு பெண் பிள்ளையும் சென்றாள் என்று சொன்னேன் அல்லவா? அவள் என் பெரியம்மாவாக இருக்கக்கூடும் என்றும் சொன்னேன் அல்லவா? அவள் நடந்துபோன விதத்தைப் பார்த்தால், கட்டாயப்படுத்தி அவளை அழைத்துப் போனதாகத் தோன்றவில்லை. தன் இஷ்டத்துடனே யதேச்சையாகச் சென்றவள் போலவே காணப்பட்டது..."

"இருக்கலாம், அமுதா! அப்படியும் இருக்கலாம்; என் அத்தையின் இயல்பே அப்படி! எங்கேதான் அழைத்துப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவே அவளே இஷ்டப்பட்டுப் போயிருக்கலாம். அவளுக்கு விருப்பமில்லாவிட்டால், ஆயிரம் பேருக்கு நடுவிலிருந்தும் அவள் தப்பிச் சென்று விடுவாள். கோட்டை கொத்தளங்களும் பாதாளச் சிறைகளும் கூட அவளைப் பத்திரப்படுத்தி வைக்க முடியாது. ஆகையினால்தான், அத்தைக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றி, நான் அவ்வளவு கவலைப்படவில்லையென்று சொன்னேன். அத்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவதே என் முக்கிய நோக்கம். அந்த அநீதி இன்றைக்கு இழைக்கப்பட்டதன்று; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட கொடும் அநீதி! அதற்குப் பரிகாரம் கிடைக்கும் வரையில் எனக்கு நிம்மதி இல்லை!" என்றாள் பூங்குழலி.

"கடவுளே! எவ்வளவு அசாத்தியமான காரியத்தில் உன் மனத்தைப் பிரவேசிக்க விட்டிருக்கிறாய்?" என்று சேந்தன் அமுதன் கூறி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

சற்றுத் தூரத்தில் பேச்சுக் குரல் கேட்டது; ஒரு குரல் பெண் குரலாகத் தோன்றியது. பேசியவர்களைத் தஞ்சாவூர் இராஜபாட்டை சந்திப்பில் அமுதனும் பூங்குழலியும் கண்டார்கள்.

அண்ணி ராக்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தவன் பழையாறை வைத்தியர் மகன் என்று அறிந்ததும் பூங்குழலியின் முகத்தில் அருவருப்பின் அறிகுறி காணப்பட்டது.

ராக்கம்மாள் பூங்குழலியைப் பார்த்ததும், "அடி பெண்ணே! பிழைத்து வந்தாயா? உன்னைக் கொன்று போட்டிருப்பார்களோ என்று பயந்து போனேன். இதோ பார்! உன் அத்தையைக் காப்பாற்ற முயன்றதில் என் மண்டையில் எவ்வளவு பெரிய காயம்? வைத்தியர் மகனிடம் காயத்துக்கு மருந்து ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்?" என்றாள்.

"கரையர் மகளுக்கு ஏதேனும் காயம் பட்டிருந்தாலும் மருந்து போட்டுக் குணப்படுத்துகிறேன்" என்றான் வைத்தியர் மகன்.

பூங்குழலி அவனுக்கு மறுமொழி சொல்லாமல், "அண்ணி! அத்தையைப் பிடித்துக் கொண்டு எந்தப் பக்கம் போனார்கள், உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.

"நான் பார்க்கவில்லை தஞ்சாவூர்ச் சாலையோடு போனதாக இந்த வைத்தியர் மகன் சொல்லுகிறான்..."

"அண்ணி! நானும் அமுதனும் அத்தையைத் தொடர்ந்து போகிறோம். அப்பாவிடம் சொல்லிவிடு! வா, அமுதா!" என்று பூங்குழலி அங்கிருந்து உடனே போகத் தொடங்கினாள்.

அப்போது வைத்தியர் மகன், " ூங்குழலி! சற்று நில்! உங்களால் அவர்களைத் தொடர்ந்து போக முடியாது. இங்கிருந்து சற்றுத் தூரத்தில் காத்திருந்த குதிரைகள் மீதேறி அவர்கள் போகிறார்கள். என்னிடம் குதிரை இருக்கிறது; நான் வாயு வேக மனோ வேகமாய்க் குதிரையை விட்டுக் கொண்டு சென்று அவர்கள் போய்ச் சேரும் இடத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வேன். அதற்குப் பிரதியாக நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். நீயும் உன் அத்தையும் படகில் ஏறிக் கொண்டு எங்கே போவதற்குக் கிளம்பினீர்கள்? அதை மட்டும் சொல்லி விடு!" என்றான்.

பூங்குழலி, "அண்ணி! இவருடைய உதவி எங்களுக்கு தேவையில்லை! நாங்கள் போகிறோம். அப்பாவிடம் மட்டும் சொல்லி விடு!" என்றாள்.

வைத்தியர் மகன் அப்போதும் விடவில்லை. "ஆகா! கரையர் மகளின் கர்வத்தைப் பார்! என் உதவி தேவை இல்லையாம்! பெண்ணே, உனக்கு ஏன் என் பேரில் இத்தனை கோபம்? நீ அரச குமாரனைக் கலியாணம் செய்து கொள்வதை நானா குறுக்கே நின்று தடுத்தேன்? என்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டுப் படகில் ஏற்றிக் கொண்டு போனாயே? அந்த வாணர்குலத்து வந்தியத்தேவனல்லவா உன் ஆசைக்குகந்த இராஜகுமாரனை நடுக்கடலில் தள்ளிக் கொன்று விட்டான்! என் பேரில் கோபித்து என்ன பயன்?" என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா ஹா' என்று பொய்ச் சிரிப்புச் சிரித்தான்.

பூங்குழலி கண்களில் தீப்பொறி பறக்க அவனை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு அமுதனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சாலையோடு மேலே சென்றாள்.

கொஞ்ச தூரம் போனதும், "அமுதா! நீ கத்தி எடுத்துப் போர் செய்யக் கற்றுக் கொண்டதும் முதலில் இந்தத் தூர்த்தனாகிய வைத்தியர் மகனின் உயிரை வாங்க வேண்டும். உன் கத்திக்கு முதலாவது பலி இவன்தான்" என்றான்.

இரவும் பகலும் வழி நடந்து பூங்குழலி சேந்தன் அமுதனும் தஞ்சாவூரை நோக்கிச் சென்றார்கள். ஏழெட்டுக குதிரை வீரர்கள் ஒரு பெண்மணியை அழைத்துச் சென்றதைக் குறித்து வழியில் விசாரித்துக் கொண்டு போனார்கள். பாதி வழி வரையில் கொஞ்சம் தகவல் கிடைத்தது, அப்புறம் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் தஞ்சாவூர் வரையிலும் போய்த் தேடிப் பார்த்து விடுவது என்று போனார்கள்.

சேந்தன் அமுதனுக்கு இந்தப் பிரயாணம் வெகு உற்சாகமாயிருந்தது. பூங்குழலியுடன் பேசிக் கொண்டு சென்றது உற்சாகத்துக்கு ஒரு காரணம்; கத்திப் பயிற்சி பெற்றுக் கொண்டே போனது மற்றொரு காரணம். கோடிக்கரைக்கு அருகிலேயே பூங்குழலிக்குத் தெரிந்த ஒரு கொல்லு பட்டறையில் அவன் ஒரு கத்தி வாங்கிக் கொண்டிருந்தான். போகும் போதெல்லாம் அதைச் சுழற்றிக் கொண்டே போனான். சில சமயம் எதிரில் பகைவன் வருவதாகவும் அவனுடன் சண்டை போடுவதாகவும் எண்ணிக் கொண்டு கத்தியைத் தாறுமாறாக வீசினான். அவ்வப்போது பூங்குழலி அவனுக்குக் கத்தியை இப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும், இப்படிச் சுழற்ற வேண்டும் என்று கற்பித்துக் கொடுத்துக் கொண்டு வந்தாள்.

இதனால் இரண்டு பேருக்குமே பிரயாணம் உற்சாகமாயிருந்தது.

தஞ்சாவூர்க் கோட்டை கண்ணெதிரே தென்பட்ட போது தான் வந்த காரியத்தை எப்படிச் சாதிப்பது என்ற கவலை பூங்குழலிக்கு ஏற்பட்டது. அவளுடைய கவலையைச் சேந்தன் அமுதனும் சேர்ந்து பகிர்ந்து கொண்டான்.

கோட்டைக்குள் பிரவேசிப்பதே பிரம்மப் பிரயத்தனமான காரியமாயிற்றே? பூங்குழலி எண்ணியுள்ள காரியங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றுவது?

வந்தியத்தேவனுடைய அகடவிகட சாமர்த்தியங்களெல்லாம் சேந்தன் அமுதனுக்கு நினைவு வந்தன. அவனுடைய சாமர்த்தியங்களில் பத்தில் ஒரு பங்கு தனக்கு இருக்கக்கூடாதா? அல்லது அந்த வந்தியத்தேவனே இந்தச் சமயம் இங்கே வரக்கூடாதா!....

வந்தியத்தேவனாயிருந்தால் இந்தச் சந்தர்ப்பத தில் எப்படி நடந்து கொள்வான் என்று சேந்தன் அமுதன் சிந்திக்கத் தொடங்கினான்.

அந்தச்சமயத்தில் சாலையில் மூடுபல்லக்கு ஒன்று வந்தது. சூரியன் மேற்குத் திசையில் மறைந்து இருள் சூழ்ந்து வந்த நேரம். மூடுபல்லக்கின் மேல் திரையில் பனை மரச் சித்திரங்கள் காணப்பட்டன.

'ஆகா! பழுவூர் இளையராணியின் பல்லக்குப் போலல்லவா காண்கிறது? கோட்டைக்கு வௌியிலேயே பழுவூர் ராணியைச் சந்தித்து முத்திரை மோதிர இலச்சினையைப் பெற முடியுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்?' என்று அமுதன் எண்ணினான். இதைப் பூங்குழலியிடமும் வௌியிட்டான். அவளும் அது நல்ல யோசனைதான் என்று சொன்னாள்.

ஆனால் மூடுபல்லக்கின் உள்ளே இருக்கும் ராணியை எப்படிப் பார்ப்பது?

சிவிகைக்கு பின்னும் காவலர்கள் போகிறார்களே?

பல்லக்கின் அருகிலே போக முயன்றாலே அவர்கள் தடுப்பார்கள் அல்லவா?

"அமுதா! கவலைப்படாதே! தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் அரைக்காதம் இருக்கிறது. அதற்குள் நமக்கு ஏதேனும் சந்தர்ப்பம் கிட்டாமற் போகாது!" என்றாள் பூங்குழலி.

எதிர்பாராத விதத்தில் அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியது.

பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.