ponniyin celvan
of kalki
(in tamil script, TSCII format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழர்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext preparation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This Etext file has the verses in tamil script in TSCII-encoding (version 1.7). So you need to have a TSCII-conformant tamil font to view the Tamil part properly. Several TSCII conformant fonts are available free for use on Macintosh, Unix and Windows (95/98/2000/XP/ME) platforms at the following websites:

http://www.tamil.net/tscii/
http://www.geocities.com/Athens/5180/tsctools.html

In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்


நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - பாயுதே தீ!
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - மலையமான் துயரம்
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - மீண்டும் கொள்ளிடக்கரை
நாற்பத்துநான்காம் அத்தியாயம் - மலைக் குகையில்
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - "விடை கொடுங்கள்!"
நாற்பத்தாறாம் அத்தியாயம் - ஆழ்வானுக்கு ஆபத்து!
நாற்பத்தேழாம் அத்தியாயம் - நந்தினியின் மறைவு
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - "நீ என் மகன் அல்ல!"
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - துர்பாக்கியசாலி
ஐம்பதாம் அத்தியாயம் - குந்தவையின் கலக்கம்


நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
பாயுதே தீ!




இத்தனை நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்த சம்புவரையர் இப்போது பாய்ந்து எழுந்து கந்தமாறனுடைய கையைப் பிடித்துக் கொண்டார்.

"அடே மூடா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?' என்றார்.

"தந்தையே! இந்தச் சிநேகிதத் துரோகியைக் கொல்லுவதிலே என்ன தவறு?" என்றான் கந்தமாறன்.

"என்ன தவறா? அதனால், நானும் நீயும் இந்தப் பழைமையான சம்புவரையர் குலமும் அழிந்து போவோம். இவனைக் கொன்று விட்டால் இளவரசரையும், இவனையும் சேர்த்துக் கொன்றுவிட்டதாக நம் பேரில் அல்லவோ பழி சுமத்துவார்கள்? இது கூடவா உனக்குத் தெரியவில்லை?" என்றார் தந்தை.

"அவ்வாறு நம் பேரில் பழி சுமத்தக் கூடிய வல்லமையுடையவன் யார்? அவ்விதம் குற்றம் சுமத்திவிட்டு அவன் உயிருடன் பிழைத்திருப்பானோ?" என்று கேட்டான் கந்தமாறன்.

"ஐயோ! அசட்டுப் பிள்ளையே! உன்னுடைய வீரத்தையும், துணிச்சலையும் இதிலேதானா காட்டவேண்டும்? உன்னுடைய யோசனையை ஆரம்பத்திலிருந்து கேட்டதினாலேதான் இந்த விபரீதம் நம் வீட்டில் நடந்து விட்டது! பெரிய பழுவேட்டரையரையும், மற்றச் சிற்றரசர்களையும் நீதான் இந்த வீட்டுக்கு அழைத்தாய். மதுராந்தகத் தேவர் இரகசியமாக இங்கே வந்ததும் உன்னாலேதான். அது இந்த உன் அருமைச் சிநேகிதன் மூலம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. பிறகு ஆதித்த கரிகாலரைக் காஞ்சியிலிருந்து அழைத்து வந்தவனும் நீதான்! ஐயோ! அதன் விளைவு இப்படியாகும் என்று நான் நினைக்கவே இல்லை! மலையமான் - நமது குலத்தின் பழைமையான விரோதி - பெரியதொரு படையுடன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறேன்?... பழுவேட்டரையரும் இச்சமயம் பார்த்து ஊருக்குப் போய்விட்டார்!..." என்று கூறிச் சம்புவரையர் திரும்பவும் தலையிலே அடித்துக் கொண்டார்.

கந்தமாறன் கண்களில் நீர் ததும்ப, "தந்தையே! தாங்கள் வீணாக வேதனைப் படவேண்டாம். என்னால் நேர்ந்த விபரீதத்துக்கு நானே தண்டனை அனுபவிக்கிறேன்.தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ, அவ்விதம் செய்யக் காத்திருக்கிறேன்!" என்றான்.

"முதலில் இந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் அந்தப்புரத்தில் விட்டுவிட்டு வா! இவள் ஏதாவது உளறினால் வாயிலே துணியை அடைத்துக் கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு வா! இல்லாவிட்டால் இரகசிய அறையில் போட்டுப் பூட்டிவிட்டு வா!" என்றார் சம்புவரையர்.

மணிமேகலை தன் அருமைத் தந்தை அப்போது கொண்டிருந்த ரௌத்ராகாரத்தைப் பார்த்துவிட்டு நடுநடுங்கினாள். வந்தியத்தேவனுக்கு இப்போது உடனே ஆபத்து ஒன்றுமில்லை என்பதையும் தெரிந்து கொண்டாள்.

"தந்தையே! மன்னிக்க வேண்டும். தங்கள் கட்டளைப்படி நடந்து கொள்வேன். கந்தமாறன் என்னைத் தொடவேண்டாம். நானே இதோ தாய்மார்கள் இருக்கும் அந்தப் புரத்துக்குப் போய் விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு விடு விடு என்று அங்கிருந்து நடந்து சென்றாள். கந்தமாறனும் அவளைப் பின்தொடர்ந்து போனான்.

அவர்கள் சென்றவுடனே சம்புவரையர் தம்முடன் வந்திருந்த ஆட்களைப் பார்த்து, "இவனை அந்தக் கட்டில் காலுடன் சேர்த்து, இறுக்கிக் கட்டுங்கள்!" என்று உத்தரவிட்டார்.

அவ்விதமே ஆட்கள் வந்தியத்தேவனை நெருங்கி வந்தபோது அவன் அமைதியாக இருந்தான். கட்டில் காலுடன் சேர்த்துக் கட்டிய போதும் அவன் எவ்விதத் தடங்கலும் செய்யவில்லை. கட்டி முடிந்தவுடனே அவன், "ஐயா! சற்றே யோசித்துப் பாருங்கள்! கரிகாலருடைய அந்தரங்கத்துக்குரிய நண்பன் நான். அவரைக் கொல்லுவதினால் எனக்கு என்ன லாபம்? உண்மையில் அவரைக் கொன்ற பாதகர்கள் சுரங்கப் பாதை வழியாகத் தப்பித்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னை அவிழ்த்துவிட்டால், நானே தங்களுடன் வந்து அவர்களைப் பிடிப்பதற்கு உதவி செய்வேன்! தப்பிச் செல்வதற்கு நான் பிரயத்தனம் செய்யமாட்டேன்!" என்றான்.

"அடே! நீ சொல்லுவது உண்மையானால் கரிகாலர் கொலை செய்யப்படும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாயா?" என்றார் சம்புவரையர்.

"ஐயா? பழுவூர் ராணியும் கரிகாலரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று கொலைகாரர்கள் பிரவேசித்தார்கள். அவர்களைத் தடுக்க நான் யத்தனித்தபோது பயங்கரமான தோற்றமுடைய காளாமுகன் ஒருவன் என் கழுத்தைப் பிடித்து நெறித்தான். நான் நினைவிழந்துவிட்டேன். மறுபடியும் நினைவு வந்தபோது ஆதித்த கரிகாலர் உயிரற்று விழுந்து கிடப்பதைக் கண்டேன்!" என்றான் வந்தியத்தேவன்.

இச்சமயத்தில் அந்த மாளிகைச் சுவருக்கு அப்பால் பெரியதொரு கூச்சல் கேட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கோபக் குரலிலிருந்து எழுந்த கோஷத்தைப் போல் தொனித்தது.

சம்புவரையர் அதைக் காது கொடுத்துக் கேட்டார். வந்தியத்தேவனைப் பார்த்து, "சரி! சரி! நீ சொல்வது உண்மையாகவே இருந்தாலும் சற்று நேரம் நீ இங்கேயே இரு! உன்னுடைய அருமை நண்பராகிய இளவரசருக்குத் துணையாக இரு! அது என்ன கூச்சல் என்று பார்த்துவிட்டுப் பிறகு வருகிறேன்! வந்து உன் கட்சியை முழுதும் தெரிந்து கொள்கிறேன்!" என்று கூறிவிட்டுச் சம்புவரையர் புறப்பட்டார். அவருடன் ஆட்களும் கிளம்பினார்கள். போகும்போது சம்புவரையரின் கட்டளைப்படி அந்த அறையின் கதவைச் சாத்தி வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டுச் சென்றார்கள்.

மறுபடியும் அந்த அறையில் இருள் சூழ்ந்தது. வந்தியத்தேவனுடைய உள்ளத்திலோ சொல்ல முடியாத வேதனை குடி கொண்டது! சில மாதங்களுக்கு முன்னர் அந்தக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குத் தான் வந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டான். வானத்திலே அப்போது தான் பார்த்த தூம கேதுவையும் அதைப்பற்றி மக்கள் பேசிக்கொண்டதையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். வானத்தில் வால் நட்சத்திரம் காணப்பட்டமையால் சுந்தர சோழருடைய இறுதி நாள் நெருங்கிவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். சுந்தர சோழர் நீண்ட நாட்களாக நோய்ப்பட்டுக் கிடந்தபடியால் அவ்வாறு மக்கள் எதிர்பார்த்தது இயற்கைதான். அதனாலேயே அவருக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வரக்கூடியவர் யார் என்பது பற்றியும் ஜனங்கள் பேசினார்கள். இந்த மாளிகையிலேயே சிற்றரசர்கள் கூடி அதைப்பற்றிப் பேசினார்கள். ஆனால் எல்லாரும் எதிர் பார்த்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக முடிந்தது. வாலிப வயதினரும் வீராதி வீரருமான ஆதித்த கரிகாலர் மாண்டு போனார். உயிரற்ற அவரது உடல் இதோ இந்த அறையில் கிடக்கிறது. நோய்ப்பட்டுள்ள சுந்தரசோழர் இன்னும் உயிரோடு இருக்கிறார். ஆனால் இன்னும் நெடுங்காலம் இருப்பாரா? தமது அருமைக் குமாரனின் அகால மரணச் செய்தியை அறிந்த பிறகும் உயிரோடு இருப்பாரா? ஐயோ! மகனைப் பார்க்க வேண்டுமென்று தந்தை எவ்வளவு ஆவல் கொண்டிருந்தார்? தந்தை வந்து தங்கியிருப்பதற்காகக் கரிகாலர் காஞ்சியில் பொன்மாளிகை கட்டினாரே? அந்தப் பொன் மாளிகையில் தந்தையை வரவேற்று உபசரிப்பதற்குக் கொடுத்து வைக்காமல் குமாரர் போய்விட்டரே? இதிலிருந்து இன்னும் என்னென்ன விளையப் போகிறதோ தெரியவில்லை. சோழ சாம்ராஜ்யம் முழுவதும் ஒரே துயர வெள்ளத்தில் முழுகப்போகிறது. அது மட்டுந்தானா? எத்தனை விதமான உட்கலங்கள் விளையப் போகின்றனவோ, யாருக்குத் தெரியும்? சிற்றரசர்களுக்குள் பெருஞ் சண்டை மூளப் போகிறது நிச்சயம். சற்றுமுன்னால் வெளியிலே கேட்ட சத்தம் மலையமானுடைய படைவீரர்கள் போட்ட சத்தமாகத்தான் இருக்கவேண்டும்! அவர்கள் எதற்காக அப்படிக் கோஷமிட்டார்கள்? இந்தக் கடம்பூர் மாளிகையைத் தாக்கப் போகிறார்களா என்ன! எதற்காக? கரிகாலருடைய மரணம் பற்றிய செய்தி ஒருவேளை அவர்களுக்கு எட்டியிருக்குமோ? ஆகா! சம்புவரையர் இதை எப்படிக் சமாளிக்கப் போகிறார்? நம் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திச் சமாளிக்கப் பார்ப்பார். ஆனால் அதை மலையமான் நம்புவாரா? நம்பினாலுங்கூட, சம்புவரையரின் மாளிகையில் இது நடந்திருப்பதால் அவரைச் சும்மா விட்டுவிடுவாரா? முன்னர் இங்கே நடந்த சதியாலோசனையைப்பற்றி மலையமானுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திராவிட்டாலும் ஆழ்வார்க்கடியான் போய் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறான். ஆகையினாலேதான் படை திரட்டிக்கொண்டு வருகிறார். மலையமான் தம் பேரப்பிள்ளை மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பது வந்தியத்தேவனுக்கு நன்றாய்த் தெரியும். இந்தச் செய்தியை அறியும்போது அவர் என்ன செய்வார் என்பது யாருக்குத் தெரியும்? சம்புவரையர் குடும்பத்தையே நாசம் செய்து இந்த மாளிகையையும் அடியோடு அழித்துப் போட்டாலும் போட்டுவிடுவார்.

பாவம்! கந்தமாறன்! நல்ல பிள்ளை! நம்மிடம் எவ்வளவு சினேகமாக இருந்தான்? அவ்வளவு சினேகமும் கொடிய துவேஷமாக அல்லவா மாறிவிட்டது? எல்லாம் அந்தப் பழுவூர் மோகினியின் காரணமாகத்தான்... பார்க்கப்போனால், அவளுடைய கதையும் சோகமயமாக இருக்கிறது. அவள் பேரிலேதான் எப்படிக் குற்றம் சொல்லுவது? எல்லாம் விதி செய்யும் கொடுமைதான்...!

விதி! விதி! மணிமேகலையின் விதியை என்னவென்று சொல்லுவது? என்னிடம் எதற்காக அவள் இவ்வளவு அன்பு காட்டவேண்டும்? என்னைத் தப்புவிப்பதற்காக முன்வந்து, 'நான் கொன்றேன்' என்று ஒப்புக்கொண்டாளே? இத்தகைய அன்புக்கு இணை ஏது?- இதற்குக் கைம்மாறுதான் என்ன செய்யப் போகிறேன்...?

வந்தியத்தேவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். கைம்மாறு செய்வதைப் பற்றி எண்ணுவது என்ன பைத்தியக்காரத்தனம்! மற்றவர்களைப்பற்றி நான் பரிதாபப்படுவதிலேதான் என்ன அர்த்தம் இருக்கிறது? என்னுடைய நிலைமையைக் காட்டிலும் பயங்கரமான பரிதாபமான நிலைமையில் உள்ளவர்கள் வேறு யாரும் இல்லை! ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என்பேரில் குற்றம் சுமத்தப் போகிறார்கள்! நான் அந்தப் பாதகத்தைச் செய்யவில்லை என்று நிரூபிப்பதற்கு எவ்விதச் சாட்சியமுமில்லை. நந்தினியும், ரவிதாஸன் கூட்டத்தாரும் போயே போய் விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பதற்கு யாரும் முயலவில்லை. அவர்களை ஒருவேளை பிடித்தாலுங்கூட நானும் அவர்களுடன் சேர்ந்து சதி செய்யவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்? முடியாது!

பட்டத்து இளவரசரைக் கொலை செய்த துரோகிக்கு என்ன விதமான தண்டனை கொடுப்பார்கள்? வெறுமனே கொலைக்குக் கொலை என்று தண்டனை கொடுத்துவிட மாட்டார்கள்! இம்மாதிரி காரியத்தை இனி யாரும் கனவிலும் செய்ய நினையாத வண்ணம் பயங்கரமான சித்திரவதைத் தண்டனை ஏற்படுத்துவார்கள். என்னவிதமான தண்டனை கொடுத்தாலும் கொடுக்கட்டும். கரிகாலரை நான் கொன்று விட்டதாகப் பழையாறை இளையபிராட்டியும், பொன்னியின் செல்வரும் கருதுவார்கள் அல்லவா? அதைக் காட்டிலும் வேறு என்ன சித்திரவதை கொடுமையாக இருக்கமுடியும்? தெய்வமே! சென்ற மூன்று நான்கு மாத காலத்தில் நான் எவ்வளவோ இக்கட்டுக்களில் தப்பி வந்ததெல்லாம் இந்தப் பயங்கரமான அபகீர்த்திக்கு ஆளாவதற்குத்தானா...?

இவ்வாறெல்லாம் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் அலைமேல் அலை எறிவதுபோல் எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.எவ்வளவு நேரம் இப்படிக் கழிந்தது என்று அவனுக்குத் தெரியாது. இருளடர்ந்திருந்த அந்த அறையில் திடீரென்று மெல்லிய புகைப்படலம் பரவியபோது அவனுடைய எண்ணத் தொடர்பு கலைந்தது. அது என்ன புகை? எங்கிருந்து வருகிறது? என்று யோசிக்கத் தொடங்கினான். சற்று நேரத்துக்கெல்லாம் மிகச் சொற்ப வெளிச்சமும் பரவியது. அந்த வெளிச்சத்தில் ஆதித்த கரிகாலரின் உடல் தெரிந்தது. கதவுகள் சாத்தியபடியே இருந்தன. ஆகையால் விளக்கு வெளிச்சமாக இருக்க முடியாது. பின், என்ன வெளிச்சம்? நாலாபக்கமும் கூர்ந்து கவனிக்கலானான். புகையும் வெளிச்சமும் பக்கத்து வேட்டை மண்டபத்திலிருந்து புகை வருவதற்குக் காரணம் என்ன? ஒருவேளை தீப்பிடித்திருக்குமோ? வேட்டை மண்டபத்தின் வழியாக சுரங்கப் பாதையில் சென்றவர்கள், வேண்டுமென்றே தீ வைத்துவிட்டுப் போயிருப்பார்களோ? அல்லது அவனும் மணிமேகலையும் வேட்டை மண்டபத்துக்குள் வந்தபோது கொண்டு வந்த விளக்கு இந்த விபத்துக்குக் காரணமாயிருக்குமோ-....?

வர வரப் புகை அதிகமாயிற்று.உஷ்ணமும் அதிகரித்து வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வேட்டை மண்டபத்துக்கும் அந்த அறைக்கும் இடையிலிருந்த மரப்பலகைச் சுவர்களின் இடுக்குகளின் வழியாகத் தீயின் ஜுவாலைகள் தெரியத் தொடங்கின. இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் அக்கினி பகவான் தமது ஜோதி மயமான கரங்களை நீட்டித் துழாவிக் கொண்டு இந்த அறைக்குள்ளேயே பிரவேசித்துவிட்டார்!

அக்கினி பகவானுடைய பிரவேசத்தைக் கொஞ்சநேரம் வந்தியத்தேவன் கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனுக்கு ஒரு குதூகலமே ஏற்பட்டது. "நம்முடைய கவலைகளையெல்லாம் அக்கினி பகவான் தீர்த்து வைத்துவிடப் போகிறார். ஆதித்த கரிகாலருக்கும், நமக்கும் ஒரே இடத்தில் தகனக்கிரியை நடந்து விடப்போகிறது!" என்று எண்ணினான். ஆனால் இது சிறிது நேரந்தான் நிலைத்திருந்தது. கரிகாலரைக் கொன்றவன் என்ற குற்றச் சாட்டுடன் இந்த உலகைவிட்டுப் போவதற்கு அவன் இஷ்டப்படவில்லை. சம்புவரையரும் அவருடைய மகனும் அப்படித்தான் வெளியிலே சொல்லுவார்கள். சிலர் அதை நம்பவும் செய்வார்கள். யார் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பொன்னியின் செல்வரும் குந்தவை தேவியும் அவ்வாறு நம்பக் கூடாது. நான் அந்தப் பயங்கரக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவர்களுக்காகவேனும் நிரூபித்தாக வேண்டும். அது மட்டும் அல்ல; வீராதி வீரரான கரிகாலருடைய திருமேனிக்கு இறுதிச் சடங்கு இப்படி நடக்கும்படி விடலாமா? அவருடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும் அவருடைய உயிரற்ற உடம்பையாவது பார்க்க வேண்டாமா...? ஆம், ஆம்! அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவருடைய உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். சக்கரவர்த்தித் திருமகனுக்குரிய மரியாதைகளுடனே இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வழி தேட வேண்டும்!...

அதுவரையில் வந்தியத்தேவன் தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்யவில்லை. அவனை எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்று கூடக் கவனிக்கவில்லை. இப்போது கவனித்தான். முதலில் அவனுடைய முன் கைகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி அந்தக் கயிற்றைக் கொண்டே அவன் உடம்பு முழுவதையும் கட்டிலின் காலோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். குனியவோ நிமிரவோ முடியவில்லை. அவனுடைய பலம் முழுவதும் செலுத்திக் கைக்கட்டுக்களை இழுத்தும் பல்லினால் கடித்தும் அவிழ்த்துக் கொள்ளப் பார்த்தான்; முடியவில்லை. அவ்வாறே உடம்பின் கட்டுக்களைத் திமிறி அவிழ்க்கப் பார்த்தான். அதுவும் முடியவில்லை. ஆனால் அப்படி உடம்பைத் திமிறியபோது கட்டில் அசைந்தது. உடனே ஒரு யோசனை தோன்றியது. கட்டிலை இழுத்துக் கொண்டு வேட்டை மண்டபத்தின் இரகசிய வாசலை நோக்கிச் சென்றான். அது அவ்வளவு எளிதாக இல்லை. அங்குலம் அங்குலமாக நகர வேண்டியிருந்தது. கட்டிலை இழுத்த போதெல்லாம் அவன் உடம்பின் கட்டுக்கள் இறுகி வேதனை உண்டாக்கின. ஆயினும் சகித்துக் கொண்டு சென்றான். வாசலை நெருங்கியபோது சாத்தியிருந்த கதவு இடுக்குகளின் வழியாகத் தீயின் ஜுவாலைகள் வந்து கொண்டிருந்தன.அந்த ஜுவாலைகளில் கையைக் கட்டியிருந்த கயிற்றுக் கத்தையைப் பிடித்தான். கயிற்றில் தீப்பிடித்தது. அதே சமயத்தில் அவனுடைய கைகள் மீதும் நெருப்பு ஜுவாலைகள் வீசிச் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கின. ஆயினும் பொறுத்துக் கொண்டிருந்து, நெருப்புப் பிடித்துக் கைகட்டு அறுபட்டவுடனே உடம்பின் கட்டுக்களை அவசர அவரசரமாக அவிழ்த்துக் கொண்டான். அவிழ்த்து முடிவதற்குள்ளே கட்டிலின் திரைச் சீலைகளிலே தீப்பிடித்துக் கொண்டது. அறையில் புகை சூழ்ந்தது. வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் பற்றி எரிவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவனுடைய கண்களில் முதலில் எரிச்சல் கண்டது. பின்னர் கண்ணீர் ததும்பிற்று. கண் பார்வையே மங்கத் தொடங்கியது.

ஏது? ஏது? நானும் இளவரசோடு இங்கேயே மாண்டு எரிந்து போக வேண்டியதுதான்! ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதானே! இளவரசரைக் காப்பாற்றத்தான் முடியவில்லை; அவரோடு சாகும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்! சீச்ச!. இது என்ன யோசனை? நான் இறப்பது பற்றிக் கவலையில்லை இளவரசருடைய உடல் இங்கு எரிந்து சாம்பலானால் எனக்கு அழியாத பழி அல்லவா ஏற்படும்? என்னை அறிந்தவர்கள் என்னுடைய நினைவு வரும் போதெல்லாம் என்னைச் சபிப்பார்களே! அத்தகைய பழிக்கு இடங்கொடுத்து நான் ஏன் சாகவேண்டும்? இளவரசரின் உடலை எப்படியேனும் வெளியே எடுத்துச் செல்வேன். அவருடைய பாட்டன் மலையமானிடம் ஒப்புவிப்பேன். இளவரசரை நான் கொல்லவில்லை என்றும், கொன்றவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பேனென்றும் உறுதி கூறுவேன். அவ்வாறு ஒப்புக்கொண்ட காரியத்தைச் செய்து முடித்த பிறகு நான் இறந்தால் பாதகம் இல்லை. அதுவரையில் எப்படியாவது இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்...

வந்தியத்தேவன் இப்போது கட்டுக்கள் அனைத்தையும் அவிழ்த்துக் கொண்டு விடுதலை பெற்றான். ஆனால் இது என்ன? கட்டில் தீப்பிடித்து எரிகிறதே! வெப்பம் தாங்க முடியவில்லையே! கண்களைத் திறக்கவே முடியவில்லையே! திறந்தாலும் புகை மண்டிக் கிடப்பதால் ஒன்றுமே தெரியவில்லையே?... ஆயினும் இளவரசரின் உடலைக் கண்டு பிடித்துதான் ஆகவேண்டும். வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்த வண்ணம் பரபரப்புடன் கையை நீட்டி துளாவிக் கொண்டு அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்து தேடினான். தேடிய நேரம் சில நிமிஷந்தான் இருக்கும்; ஆனால் பல யுகங்களைப்போல் அவனுக்குத் தோன்றியது. கடைசியாக இளவரசரின் உடம்பு அவனுடைய கைகளுக்குத் தட்டுப்பட்டது. அந்த உடம்பைத் தூக்கி எடுத்துத் தூக்கி எடுத்துத் தோளின்மேல் போட்டுக் கொண்டான். அப்போதுதான் வெளியே போவது எப்படி என்ற யோசனை உண்டாயிற்று. வேட்டை மண்டபத்துக்குள் போவது இயலாத காரியம்! ஆகா! அங்கே எத்தனையோ காலமாகச் சம்புவரையர்கள் சேகரித்து வைத்திருந்த மிருகங்களெல்லாம் இதற்குள் எரிந்து சாம்பலாகப் போயிருக்கும்!... அந்த அறையிலிருந்து சாதாரணமாக எல்லோரும் வெளியே போவதற்குரிய பிரதான வாசலை அடைந்தான். ஒரு கையினால் கதவை இடித்துப் பார்த்தான் காலினால் உதைத்துப் பார்த்தான்; உடம்பினால் கதவின் பேரில் மோதிக்கொண்டும் பார்த்தான்; "தீ!தீ! கதவைத் திறவுங்கள்!" என்று சத்தம் போட்டுப் பார்த்தான். ஒன்றும் பயன்படவில்லை. சீச்சீ! என்ன அறிவீனம்! யாழ்க் களஞ்சியத்தின் வழியாகத்தான் ஏறிப்போக வேண்டும்! ஐயோ! அதற்குள் அதிலேயும் தீப்பிடிக்காமல் இருக்கவேண்டுமே! இத்தனை நேரம் வீண்பொழுது போக்கி விட்டோமே?

இப்போது அந்த அறை நல்ல பிரகாசமாக இருந்தது. ஆனால் அந்தப் பிரகாசம் பயன்படாதபடி புகை மண்டிக் கிடந்தது. கண்ணைத் திறந்து பார்க்கவே முடியவில்லை. கஷ்டத்துடன் பார்த்தாலும் திக்குத் திசை தெரியவில்லை. யாழ்க்களஞ்சியம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் குறிவைத்துக் கொண்டு வந்தியத்தேவன் ஓடினான். வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அது 'டணார்!' என்ற ஒலியை உண்டாக்கியது. ஆகா! அது எனக்கு நினைவு வந்தபோது பக்கத்தில் கிடந்து கைக்கு அகப்பட்ட திருகுமடல் உள்ள கத்தியாகவே இருக்கவேண்டும். அந்தக் கத்தியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது.அதை எடுத்துக்கொள்ளலாம். வழியில் யாராவது குறுக்கிட்டுத் தடுத்தால் ஒருவேளை அந்தக் கத்தி உபயோகப்பட்டாலும் படும்.

இவ்விதம் எண்ணி அந்தக் கத்தியைக் குனிந்து எடுத்தான். அப்போது எரிந்த கட்டிலிருந்து தெறித்து வந்த ஜுவாலைத் தணல் ஒன்று அவன் தோள்மீது விழுந்தது. அதைத் தட்டி அப்பால் எறிந்துவிட்டு, ஓடிப்போய் யாழ்க்களஞ்சியத்தை அடைந்தான். இவ்வளவு நேரமும் அவன் தோள்மீது சாத்தியிருந்த கரிகாலருடைய தேகத்தை அவனுடைய ஒரு கை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவ்விதம் தோள்மீது சாத்திக்கொண்டே களஞ்சியத்தின் படிகளில் ஏறுவது அசாத்தியம் மேலே கதவு வேறு சாத்தியிருந்தது. எனவே கரிகாலருடைய தேகத்தைக் கீழே நிறுத்தி வைத்துவிட்டு ஏறி மேலேயுள்ள கதவைத் திறந்தான். பாதிக் களஞ்சியத்தில் நின்று கொண்டு குனிந்து எடுத்தான். தெய்வமே! அதற்குள் தீ அக்களஞ்சியத்துக்கும் வந்துவிட்டதே! இன்னும் சில நிமிஷம் தாமதித்திருந்தால், இந்த வழியும் இல்லாமல் போயிருக்கும்!...

வந்தியத்தேவன் மேல் மச்சில் கரிகாலருடைய உடலைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தானும் ஏறி வந்து சேர்ந்தபோது பாதிபிராணன் போனவனாக இருந்தான் இத்தனை நேரம் நெருப்பிலும் புகையிலும் வெந்துகொண்டிருந்தவன்மீது இப்போது குளிர்ந்த காற்று வீசிற்று. சிறிது நேரம் அங்கேயே கிடந்து இளைப்பாறலாமா என்று யோசித்தான். கூடாது, கூடாது! ஒரு நிமிஷங்கூடத் தாமதிக்கக்கூடாது! தீப்பிடித்த அக்கட்டடம் எப்போது இடிந்து விழும் என்று யார் கண்டது? மறுபடியும் கரிகாலருடைய உடலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு மேல்மச்சு வழியாகவே விரைந்து சென்றான். முன்னொரு தடவை போனது போலவே மாட கூடங்களைக் கடந்து சென்றான். ஆனால் முன்னே அவன் தனியாகப் போனபடியால் மாளிகை மச்சிலிருந்து கீழே இறங்கி நிலா முற்றத்தைக் கடந்து மதில் சுவர் மீது ஏறிக் குதித்துப் போவது சாத்தியமாயிருந்தது. இப்போது அது முடியுமா? அவன் மிகவும் களைத்துப் போயிருந்ததுமன்றி ஆதித்த கரிகாலருடைய தேகத்தையும் அல்லவா தூக்கிப் போக வேண்டியிருக்கிறது?

அப்போது அம்மாளிகைக்கு வெளியே நாலா பக்கங்களில் இருந்தும் எழுந்த பெரும் ஆரவாரக் கூச்சல் மீது அவன் கவனம் சென்றது. ஆகா! இது என்ன? மலையமானுடைய வீரர்கள் கோட்டையைத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறதே! முன் வாசல் கதவைத் தாக்கித் தகர்க்கிறார்கள் போலிருக்கிறதே! மதில் சுவர் மீது வீரர் பலர் ஏறிக் குதிக்கிறார்களே! இளவரசர் கொலையுண்டார் என்ற செய்தியை அறிந்ததுதான் மலையமான் கடம்பூர் மாளிகையைத் தாக்கக் கட்டளையிட்டு விட்டாரா? அப்படியானால், கரிகாலருடைய உடலைத் தூக்கிக்கொண்டு வரும் என்னைப் பார்த்தால் அவ்வீரர்கள் என்ன செய்வார்கள்? ஏன்? நான்தான் அவரைக் கொன்றதாக எண்ணிக் கொள்வார்கள்! என்னைச் சின்னாபின்னம் செய்து போடுவார்கள்! ஆகையால் நான் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யார் கண்ணிலும் தென்படாமல் போக வேண்டும். மலையமான் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவரிடம் அவருடைய பேரப்பிள்ளையின் திருமேனியை ஒப்படைத்து விடவேண்டும். அதற்குப் பிறகு நடப்பது நடந்து விட்டுப் போகட்டும்...!

பின்னர், வந்தியத்தேவன் மிக ஜாக்கிரதையாக மாடகூடங்களின் மறைவிலும் அவற்றின் நிழல் படர்ந்திருந்த இருளான இடங்களிலுமே பதுங்கி நடந்து சென்றான்.

கடைசியாக, முதலாவது தடவை அங்கே வந்திருந்தபோது எவ்விடத்தில் நின்று கீழே நடந்த சிற்றரசர்களின் சதியாலோசனையைக் கவனித்தானோ, அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான்.
கீழே எப்படி இறங்குவது என்பதாக யோசித்துக் கொண்டு அவன் அங்குமிங்கும் பார்த்தபோது, சுவர் ஓரத்தில் ஏணி ஒன்று வைக்கப்பட்டிருந்தது புலப்பட்டது. அதுமட்டும் அல்ல. ஏணியின் பக்கத்தில் மனித உருவம் ஒன்றும் தெரிந்தது. அது யாராயிருக்கும்? ஏணியை வைத்துக் கொண்டு யாருக்காகக் காத்திருக்கிறான்? தான் அந்த ஏணி வழியாகக் கீழே இறங்கினால் என்ன நேரும்? என்ன நேர்ந்தாலும் சரிதான்! அந்த ஏணியை உபயோகப்படுத்திக் கொண்டே தீரவேண்டும்! நல்ல வேளையாகக் கையிலே கத்தி ஒன்று இருக்கிறது! எது நேர்ந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தச் சமயத்தில் முன் வாசலுக்கு அருகில் ஆரவாரம் அதிகமாயிற்று. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகவோ என்னவோ, ஏணிக்கு அருகில் நின்ற மனிதன் சற்று அப்பால் போனான்.

ரொம்ப நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணி வந்தியத்தேவன் ஏணி வழியாக விரைந்து கீழே இறங்கினான். அவன் கீழே இறங்கித் தரையில் காலை வைத்ததற்கும் போன மனிதன் திரும்பி வருவதற்கும் சரியாயிருந்தது.

"சாமி! இவ்வளவு நேரம் பண்ணிவிட்டீர்கள்!" என்று அம்மனிதன் கேட்டதும், அவன் இடும்பன்காரி என்பதை வந்தியத்தேவன் தெரிந்துகொண்டான். அதே கணத்தில் இடும்பன்காரி யாரை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருந்தான் என்பதையும் ஒருவாறு ஊகித்துக் கொண்டான்.

இடும்பன்காரி அவன் அருகில் வந்ததும் வியப்புடன், "அடே! நீயா? யாரைத் தோளில் போட்டுக்கொண்டு வருகிறாய்?" என்று கேட்டான்.

"ஆம், அப்பா! நான்தான்! காளாமுகச் சாமியாரின் சீடன்! ரணபத்திரகாளியின் பலியுடனே என்னை முன்னால் அனுப்பினார். அவர் பின்னால் வருகிறார். உன்னை இங்கேயே ஏணியுடன் இருக்கச் சொன்னார்! இதோ பார்! இக்கத்தியை உனக்கு அடையாளங் காட்டச் சொன்னார்!" என்று வந்தியத்தேவன் கூறி, திருகு கத்தியைக் காட்டினான்.

இடும்பன்காரி சிறிது சந்தேகத்துடனேயே, "இத்தனை நாளாக நீ எனக்குச் சொல்லவில்லையே? போனால் போகட்டும். சாமியார் இவ்வளவு நேரம் பண்ணுகிறாரே! எப்படி இங்கிருந்து வெளியே போகப் போகிறோம்? திருக்கோவலூர் வீரர்கள் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே வரவும் தொடங்கிவிட்டார்களே!" என்றான்.

"அதனால் என்ன? கூட்டம் அதிகமானால் நாம் தப்பிச் செல்வது சுலபம். அதெல்லாம் பெரிய சாமியாருக்குச் சொல்லித் தரவேண்டுமா? அவர் எப்படியோ வழி கண்டுபிடிப்பார். நீ இங்கேயே அவர் வரும் வரையில் காத்திரு! நான் போய் நந்தவனத்தில் இருப்பதாகச் சொல்லு!" என்றான் வந்தியத்தேவன்.

இடும்பன் காரியின் மறுமொழிக்குக் காத்திராமல் விடுவிடுவென்று மேலே நடந்தான். இடும்பன்காரியின் கண்ணோட்டத்திலிருந்து மறைந்ததும் அந்த மாளிகையின் முன் வாசல் கோபுரத்தை நோக்கி நடந்தான்.

பக்க தலைப்பு



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
மலையமான் துயரம்




சம்புவரையர் முன் கட்டுக்கு வந்ததும் கந்தமாறனைத் தனியாக அழைத்து, "மகனே! நம் குலத்துக்கு என்றும் நேராத ஆபத்து இன்று நேர்ந்திருக்கிறது!! அதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால் நான் சொல்வதை உடனே நீ தடை செய்யாமல் நிறைவேற்ற வேண்டும்!" என்று கூறினார்.

கரிகாலருடைய மரணம் கந்தமாறனைப் பெரிதும் கலங்கச் செய்திருந்தது. தான் வந்தியத்தேவனைக் கொல்ல நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். "தந்தையே! மூடனாகிய என்னாலேதான் நம் குலத்துக்கு இந்த ஆபத்து நேர்ந்திருக்கிறது. அதற்காக என்னை மன்னியுங்கள். தாங்கள் என்ன கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான்.

"நீ உடனே ஒருவருக்கும் தெரியாமல் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். நான் படுக்கும் அறையில் கட்டிலுக்கு அடியிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று போகிறது உனக்குத் தெரியும் அல்லவா? அது வேட்டை மண்டபத்திலிருந்து போகும் சுரங்கப்பாதையில் இம்மாளிகையின் மதில் சுவரண்டை போய்ச் சேருகிறது..."

"தந்தையே! இந்த இக்கட்டான நிலைமையில் தங்களைத் தனியே விட்டுவிட்டு என்னைச் சுரங்க வழியில் தப்பித்துப் போகச் சொல்கிறீர்களா?" என்றான் கந்தமாறன்.

"பிள்ளாய்! அதற்குள் உன் வாக்குறுதியை மறந்து பேசுகிறாயே? ஆம்; நீ போகத்தான் வேண்டும். கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்துக்கு இப்போது நீ ஒருவன்தான் இருக்கிறாய். அவசியமாயிருந்தால், நீ அந்த மலைக்கே போய் மறைந்து வாழவேண்டும். மதுராந்தகத் தேவருக்குப் பட்டங்கட்டுவது என்று நிச்சயமாகி, நான் உனக்குச் செய்தி அனுப்பிய பிறகுதான் திரும்பி வரவேண்டும்!" என்றார் சம்புவரையர்.

"மன்னிக்க வேண்டும், தந்தையே! மறைந்து வாழ்வது என்னால் இயலாத காரியம். வல்வில் ஓரியின் குலத்துக்கு அத்தகைய கோழையைப் பெற்ற அபகீர்த்தி வேறு வர வேண்டுமா? இந்தக் கணமே என்னுடைய இன்னுயிரைக் கொடுக்கச் சொன்னீர்களானால் கொடுக்கிறேன். ஆனால் ஒளிந்து வாழ ஒருப்படேன்!" என்றான் கந்தமாறன்.

சம்புவரையர் சிறிது யோசனை செய்துவிட்டு, "மகனே! உன்னைச் சோதனை செய்வதற்காகக் கூறினேன். ஓடித் தப்பித்துக் கொள்ளவும், மறைந்து வாழவும் நீ இஷ்டப்படவில்லை. நல்லது; உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய வீரச்செயலிலேதான் உன்னை நான் ஏவப்போகிறேன். சுரங்கப் பாதை வழியாக உடனே வெளியேறிச் செல்! ஆனால் கொல்லி மலைக்குப் போகவேண்டாம்! நேரே தஞ்சாவூருக்குப் போ! பெரிய பழுவேட்டரையர் அநேகமாக அங்கே இருக்கலாம். இருந்தால், அவரிடம் இங்கே நடந்ததைச் சொல்லு! அவர் இல்லாவிட்டால் சின்னப் பழுவேட்டரையரிடமும் மதுராந்தகத் தேவரிடமும் சொல்லு..." என்றார்.

"ஐயா! இங்கே என்ன நடந்தது என்று அவர்களிடம் சொல்லட்டும்?"

"இது என்ன கேள்வி? கரிகாலரின் மரணத்தைப் பற்றிச் சொல்லு! 'நாம் உத்தேசித்திருந்த காரியம் விதிவசத்தினால் வேறு விதமாக நடந்துவிட்டது! கரிகாலர் மாண்டு விட்டார்! மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட இதுதான் தக்க சமயம்' என்று அவர்களுக்குத் தெரியப்படுத்து! மலையமனும், கொடும்பாளூர் வேளானும் அதற்குக் குறுக்கே நிற்பார்கள். நமது பலத்தையெல்லாம் உடனே திரட்டி அந்த இரண்டு பேரையும் அடியோடு அழித்துவிட வேண்டும் என்று கூறு!" என்றார் சம்புவரையர்.

"கரிகாலர் எப்படி மரணமடைந்தார் என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்லட்டும்?" என்றான் கந்தமாறன்.

"வேறு என்ன சொல்கிறது? வாணர் குலத்தைச் சேர்ந்த வந்தியத்தேவன் அவரைக் கொலை செய்துவிட்டான் என்று கூறு! இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்! வந்தியத்தேவன் ஈழ நாட்டுக்குப் போய்த் திரும்பி வந்திருக்கிறான். அங்கே அருள்மொழித் தேவனையும் பிறகு பழையாறையில் இளைய பிராட்டியையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். அருள்மொழித்தேவன் நாகைப்பட்டினத்தில் மறைந்திருந்து இப்போது வெளிப்பட்டிருப்பதாக் ஒரு செய்தி வந்திருக்கிறது. அருள்மொழித்தேவன் சிங்காதனம் ஏறும் ஆசையினால் அண்ணனைக் கொல்லுவதற்கு வந்தியத்தேவனை அனுப்பி வைத்தான் என்ற வதந்தியைச் சோழ நாட்டில் பரப்ப வேண்டும். பழையாறை இளைய பிராட்டியும் இதற்கு உடந்தையென்ற சந்தேகத்தையும் உண்டு பண்ண வேண்டும். இதையெல்லாம் பழுவேட்டரையர்களிடமும் மதுராந்தகத் தேவரிடமும் சொல்லு!... "

"தந்தையே! தாங்கள் சொல்வதே உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா? சிநேகத் துரோகியான வந்தியத்தேவன் அத்தகைய பயங்கரமான எண்ணத்துடனேயே இந்த மாளிகைக்கு வந்திருக்கலாம் அல்லவா?"

"இருக்கலாம், மகனே! ஆனால் பழுவூர் இளைய ராணி திடீரென்று மாயமாய் மறைந்து போனதற்குக் காரணம் கண்டு பிடிக்கவேண்டுமே? அவள் பேரிலும் அவளுக்கு உடந்தையாயிருந்த பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் பேரிலும் வல்லவரையன் வந்தியத்தேவன் குற்றம் சாட்டுகிறானே!..."

"குற்றம் செய்தவன் மற்றவர்கள் பேரில் அதைச் சுமத்தவே பார்ப்பான். இப்போது எனக்கு எல்லாம் விளங்குகிறது. தந்தையே! பழுவூர் இளைய ராணியைப் பழையாறைக் குந்தவை தேவிக்கு எப்போதும் பிடிப்பதேயில்லை. கரிகாலரைக் கொன்றுவிட்டு அதே சமயத்தில் பழுவூர் இளைய ராணியை அபகரித்துக்கொண்டு போவதற்கும் அவள்தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முதன் மந்திரி அநிருத்தரும் இதற்கு உடந்தை போலிருக்கிறது. அதற்காகவே இந்த வந்தியத்தேவனை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்! ஐயோ! அவர்களுடைய சூழ்ச்சியை அறியாமல் மோசம் போய் விட்டோமே?"

"கந்தமாறா! போனதைப் பற்றி வருந்துவதில் பயனில்லை. இனி மேல் நடக்க வேண்டியதைப் பார்க்கவேண்டும். நீ உடனே புறப்பட்டுச் செல்! கரிகாலன் மரணச் செய்தி சுந்தர சோழருக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னால், தஞ்சையில் வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால், பழுவேட்டரையர்களுக்கும் மதுராந்தகருக்கும் தெரியவேண்டும். ஆகையால் நீ விரைந்து செல்! தஞ்சைக் கோட்டைக்குள் போவதற்கும் இரகசியச் சுரங்க வழி உண்டு என்பது உனக்குத் தெரியும் அல்லவா?..."

"தெரியும், தெரியும்!"

"அப்படியானால் உடனே புறப்படு!"

"புறப்படுகிறேன், தந்தையே! என் தங்கை - மணிமேகலை... அவளைப் பற்றித்தான் சிறிது கவலையாயிருக்கிறது."

"வேண்டாம் உனக்கு அந்தக் கவலை! நம்மிடம் அவள் உளறியது போல் வேறு யாரிடமும் உளறுவதற்கு நான் விடமாட்டேன். அப்படி அவள் உளற முற்பட்டால், அவளை என் கையினாலேயே கொன்று விடுவேன்..."

"ஐயோ! அதற்காகத்தான் கவலைப்படுகிறேன். தங்கள் கோபத்தை எண்ணித்தான் பயப்படுகிறேன்..."

"வேண்டாம்! அவளுடைய மனத்தை மாற்றும் வழி எனக்குத் தெரியும். ஆகா! விதி விசித்திரமானதுதான்! முதலில் அவளை நாம் மதுராந்தகத் தேவருக்கு மணம் செய்து கொடுப்பது என்று எண்ணினோம். இடையில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கரிகாலருக்கு மணம் செய்து கொடுக்க உத்தேசித்தோம். கரிகாலர் இன்று பிணமாகக் கிடக்கிறார். நல்லவேளை, மணிமேகலையின் உள்ளம் அவரிடம் சொல்லவில்லை. நமது பழைய உத்தேசத்தையே நிறைவேற்ற வேண்டியதுதான்..."

"ஆனால், தந்தையே! மணிமேகலையின் உள்ளம் இப்போது அந்தச் சண்டாளன் வந்தியத்தேவன் பேரில் அல்லவா போயிருப்பதாகத் தெரிகிறது."

"அதெல்லாம் ஒன்றுமில்லை, மகனே! மணிமேகலைக்குத் தன் மனத்தைத் தான் அறியும் பிராயமே இன்னும் வரவில்லை.அவளை நான் கவனித்துக்கொள்கிறேன். நீ இனி ஒரு கணமும் இங்கே தாமதிக்க வேண்டாம்!"

அச்சமயம் மதில் சுவர்களுக்கு வெளியில் வெகு சமீபத்தில் எழுந்த ஆரவாரத்தைக் கேட்ட கந்தமாறன், "அப்பா! இது என்ன! மலையமான் படைகள் நெருங்கி வருவது போல் காண்கிறதே? மலையமானைத் தாங்கள் மாலையில் பார்த்தபோது அந்தக் கிழவன் என்ன சொன்னான்?" என்று கேட்டான்.

"நல்ல மங்களகரமான செய்தியைத்தான் சொன்னான். மணிமேகலையை ஆதித்த கரிகாலருக்கு மணம் செய்து கொடுக்கப் போகும் செய்தி அறிந்து அக்கிழவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தானாம். அதே மணப்பந்தலில் அவனுடைய மகள் வயிற்றுப் பேத்தி ஒருத்தியையும் மணஞ்செய்து கொடுக்கலாம் என்று அழைத்து வந்திருக்கிறானாம்! அழகாயிருக்கிறதல்லவா? மாளிகைக்கு வரும்படி நான் அழைத்ததற்கு, நாளைப் பொழுது விடிந்ததும் நல்ல முகூர்த்தத்தில் வருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனுடைய வீரர்கள் இப்போதே வரப் போகும் திருமணத்தைக் கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது!" இவ்விதம் கூறிவிட்டுச் சம்புவரையர் சிரிக்கப் பார்த்தார். ஆனால் சிரிப்பு அரை குறையாக வந்துவிட்டது.

"வா! வா! நானே உன்னைச் சுரங்கப் பாதையில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன். வழியில் ஒரு விநாடிகூட நீ தாமதிக்கக் கூடாது. வழியில் எங்கேயாவது குதிரை சம்பாதித்துக் கொண்டு விரைந்து போக வேண்டும்!" என்றார்.

சம்புவரையர் கையில் ஒரு தீபத்தை எடுத்துக் கொண்டார். இருவரும் சுரங்கப் பாதையில் புகுந்தார்கள். விரைவாக நடந்தார்கள். மாளிகையின் மதில் சுவரைக் கந்தமாறன் கடந்த பிறகு, சம்புவரையர் அவனைக் கட்டித் தழுவி ஆசி கூறிவிட்டுத் திரும்பினார். "விளக்கு வேண்டுமா?" என்று கேட்டதற்குக் கந்தமாறன், "வேண்டாம், அப்பா! எனக்கு இந்த வழி நன்றாய்த் தெரிந்தது தானே? கண்ணைக் கட்டிவிட்டாலும் போய் விடுவேன்!" என்றான்.

அவன் சுரங்கப்பாதையில் கண்ணுக்கு மறைந்த பிறகு சம்புவரையர் திரும்பினார். வழியில் வேட்டை மண்டபத்துக்குள் புகுந்தார். அடுத்த அறையில் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காது கொடுத்துக் கேட்டர். ஒன்றும் கேட்கவில்லை. சிலகண நேரம் தயங்கி நின்றார். பிறகு, ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவர்போல், பெருமூச்சுவிட்டார். விளக்கை நன்றாகத் தூண்டி, வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு விரைந்து திரும்பிச் சென்றார்.

திரும்பச் சம்புவரையர் முன்கட்டுக்குச் சென்றதும், அந்தப்புரத்துப் பெண்களையெல்லாம் ஒன்று சேர்த்தார்.

அவர்கள் எல்லோரும் ஏற்கனவே கலங்கிப் போயிருந்தார்கள். கண்ணீருங் கம்பலையுமாகக் கந்தமாறானால் அந்தப்புரத்தில் கொண்டுவந்து தள்ளப்பட்ட மணிமேகலையைக் கேட்டு அவர்கள் ஒருவாறு கரிகாலன் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார்கள்.

"பெண்களே! நம் குலத்துக்கு என்றுமில்லாத பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டது. எந்த நிமிஷத்திலும் நீங்கள் இந்த மாளிகையை விட்டுப் புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும். பல தினங்கள் காட்டிலும், மலையிலும் காலங் கழிக்கவும் துணிவு பெறவேண்டும். எல்லாரும் அவரவர்களுடைய ஆடை ஆபரணங்களை எடுத்துக் கொண்டு நிலா முற்றத்துக்கு வந்து சேருங்கள். அழுகைச் சத்தமோ, புலம்பல் சத்தமோ 'முணுக்' என்று கூடக் கேட்கக் கூடாது! தெரியுமா?" என்று எச்சரித்தார்.

"பின்னர் சம்புவரையர் மாளிகையின் முன்வாசற் பக்கம் வந்தார். முன்வாசல் கோபுரத்தின் மேல் ஏறிக் வெளியிலே என்ன அவ்வளவு ஆரவாரம் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் முன் வாசலை நெருங்கும்போதே வெளியிலிருந்து வீரர்கள் கோட்டை வாசற்கதவுகளை தகர்த்துத் தள்ளிவிட்டு உள்ளே தடதடவென்று புகுந்து கொண்டிருந்தார்கள். வாசற் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்று முடியாமல் கீழே விழுந்து கொண்டிருந்தார்கள்.

இதுவுமல்லாமல் கோட்டையின் மதில்சுவர் மீது ஏறிக் குதித்தும் வீரர்கள் உள்ளே புகுந்து கொண்டிருந்தார்கள்.

சம்புவரையரின் உள்ளத்தில் பெரும் பீதியும் கலக்கமும் ஏற்பட்டன. கரிகாலன் கொலையுண்ட செய்தி ஒருவேளை மலையமானுக்கும் தெரிந்துவிட்டதா, என்ன? இதற்குள் எவ்விதம் தெரிந்திருக்கும்?- தெரிந்தால் தெரியட்டும். எப்படியும் தெரிந்து தானே தீரவேண்டும்? ஆனால் இன்னும் சிறிது நேரத்துக்கு இவர்களை இங்கேயே நிறுத்தித் தாமதப்படுத்தி வைக்கவேண்டும். அரை நாழிகை நேரம் தாமதித்தால் போதுமானது. அதற்குள் நாம் உத்தேசித்த காரியம் நிறைவேறிவிடும்...

கோட்டை வாசலுக்கும் மாளிகை முகப்புக்கும் நடுவில் இருந்த நிலா முற்றத்தின் நடுவில் சென்று சம்புவரையர் கம்பீரமாக நின்றார். அவர் கையிலே கூரிய வாள் மின்னியது. அவருக்குப் பின்னால் ஏழெட்டு வீரர்கள் நெடிய வேல்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அவர்களில் சிலர் கையில் தீவர்த்தி வெளிச்சம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

வாசற் கதவுகளை உடைத்துத் தகர்த்துக்கொண்டு முன்னால் வந்த வீரர்களைத் தொடர்ந்து திருக்கோவலூர் மலையமானும் பார்த்திபேந்திரனும் வந்தார்கள்.

நிலா முற்றத்தின் நடுவில் நின்ற சம்புவரையரைப் பார்த்து விட்டு பார்த்திபேந்திரன் மலையமானுக்கு அவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் சம்புவரையரை நோக்கி வந்தார்கள்.

அருகில் வரும்போதே மலையமான், "சம்புவரையரே! இது என்ன நான் கேள்விப்படுவது? அத்தகைய பாதகத்தையும் செய்வீரா? ஓகோ! இது என்ன? கையில் வாளுடன் நிற்கிறீரே? உமது உத்தேசம் என்ன?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

"அந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கத்தான் நிற்கிறேன். உங்கள் உத்தேசந்தான் என்ன? வாசற் கதவைத் தகர்த்துக் கொண்டு வந்ததின் நோக்கம் என்ன? சற்று முன்னால் நான் வந்து தங்களை அழைத்தேன். நாளைக்கு நல்ல வேளை பார்த்துக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள்..."

"சம்புவரையரே! நல்லவேளை இப்போதே வந்துவிட்டது. அதனாலேதான் வந்தேன். ஆதித்த கரிகாலன் எங்கே? வீர பாண்டியன் தலைகொண்ட வீராதி வீரன் எங்கே? சேவூர்ப் போர்க்களத்தின் வெற்றி வீரன் எங்கே? என் பேரன் எங்கே?" என்று மலையமான் கேட்டார்.

"என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? இளவரசருக்கு இஷ்டப்பட்ட இடத்தில் அவர் இருப்பார். அந்த முரட்டுப் பிள்ளையிடம் நான் எவ்விதப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லையென்றுதான் முன்னமே தங்களிடம் சொன்னேனே? பார்த்திபேந்திரனுக்கும் அது தெரிந்த செய்திதான்!"

"அடே சம்புவரையா! இவ்வாறு வீண் சாக்குப் போக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்காதே! ஆதித்த கரிகாலனை உடனே கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைத்துவிடு! இல்லாவிட்டால் உன்னுடைய இந்தக் கோட்டை கொத்தளம் மாளிகை எல்லாவற்றையும் இடித்துத் தகர்ந்து மண்ணோடு மண்ணாக்கி விடுவேன்!" என்று திருக்கோவலூர் மலையமான் கர்ஜித்தார்.

"பார்த்திபேந்திரா? இந்தக் கிழவன் என்ன பிதற்றுகிறான்? இவனுக்குத் திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டதா? இளவரசரைக் கொண்டுவந்து இவனிடம் ஒப்புவிப்பதற்கு நான் யார்? இவன்தான் யார்? இளவரசரை நான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேனா? அல்லது இவன் இளவரசரைச் சிறைப்பிடித்துக் கொண்டு போகப் போகிறானா?" என்றார் சம்புவரையர்.

பார்த்திபேந்திரன் சிறிது சாந்தமான குரலில், "சம்புவரையரே! பதறவேண்டாம்! கிழவருக்குக் கோபம் வரக் காரணம் இருக்கிறது. இதோ இந்த ஓலையைப் பாருங்கள். தாங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்று கூறிச் சம்புவரையர் கையில் கொடுத்தான்.

அவர் அதைப் பின்னால் பிடிக்கப்பட்ட தீவர்த்தியின் வெளிச்சத்தில் நன்றாக உற்றுப் பார்த்தார்.

"இளவரசர் ஆதித்த கரிகாலன் உயிருக்கு ஆபத்து. உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்" என்று அந்த ஓலையில் எழுதியிருந்தது.

அதைப் படிக்கும்போதே சம்புவரையர் முகமெல்லாம் வியர்த்தது. முன்னர் கரிகாலருடைய சடலத்தைக் கண்டதும் அவருடைய உடல் நடுங்கியது போல் இப்போதும் ஆடி நடுங்கியது.

"இது என்ன சூழ்ச்சி! இது என்ன சதி? யார் இப்படி ஓலை எழுதியிருக்க முடியும்?" என்று தடுமாறினார்.

"ஓலை யார் எழுதினால் என்ன? ஆதித்த கரிகாலரை உடனே இவ்விடம் அழைத்து வா! அல்லது அவர் இருக்குமிடத்துக்கு எங்களை அழைத்துப் போ! இல்லாவிட்டால் என் வீரர்களை விட்டுத் தேடச் சொல்லட்டுமா?" என்று கேட்டார் மலையமான்.

"ஆகட்டும் ஐயா! கரிகாலர் இருக்குமிடத்துக்கு உங்களை அழைத்துப் போகிறேன். பார்த்திபேந்திரா! உனக்கு அந்த இடம் தெரியும். பழுவூர் இளையா ராணியின் அந்தப் புரத்துக்குப் போயிருக்கிறார் என்று சற்றுமுன் அறிந்தேன். அங்கே இவரை நீயே அழைத்துப் போ!" என்றார் சம்புவரையர்.

பார்த்திபேந்திரன், "ஆம், தாத்தா! வாருங்கள்! நானே உங்களை அழைத்துப் போகிறேன்!" என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டுப் பார்த்திபேந்திரன் பழுவூர் இளையராணி நந்தினி தங்கியிருந்த அந்தப்புரம் இருந்த திக்கை நோக்கினான்.

"ஐயோ! இது என்ன?" என்று அலறினான். ஏனெனில், அவன் பார்த்த திக்கில் அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயின் கொழுந்துகளுக்கு மேலே கரிய புகை மண்டலம் அடர்ந்திருந்தது.

அவன் பார்த்த திசையை எல்லாரும் பார்த்தார்கள். "தீ! தீ!" என்ற பீதி நிறைந்த ஒலி எல்லாருடைய கண்டங்களிலிருந்தும் கிளம்பியது.

பார்த்திபேந்திரன் சிறிது திகைப்பு நீங்கியவனாய், "சம்புவரையரே! முதலில் இந்த ஓலையை நான் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன். ஏதோ சூழ்ச்சியும் சதியும் நடந்திருக்கின்றன. - பாட்டா! இந்த சதிகாரர்களை உடனே சிறைப்படுத்தச் சொல்லுங்கள்! நான் போய் இளவரசர் இருக்குமிடத்தைப் பார்த்துத் தேடி அழைத்து வருகிறேன்!" என்று சொன்னான்.

சம்புவரையர் மறுபடியும் பழைய தைரியமான குரலில் "ஆமாம், பார்த்திபேந்திரா! சூழ்ச்சியும் சதியும் நடந்திருக்கின்றன. ஆனால் செய்தவர்கள் நீங்கள். என் அரண்மனையின் கதவைத் தகர்த்துக்கொண்டு புகுந்தீர்கள். உங்கள் வீரர்களை ஏவி விட்டுத் தீ வைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள். இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், அதுவும் உங்களாலேதான் நேர்ந்திருக்க வேண்டும்! ஜாக்கிரதை! இதற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கும் காலம் வரும்!" என்றார்.

பார்த்திபேந்திரன் அவருடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் ஓடினான்.

அதே சமயத்தில் சம்புவரையர் வீட்டுப் பெண்கள் கும்பலாக மாளிகைக்குள்ளேயிருந்து நிலா முற்றத்துக்கு வந்தார்கள். அவர்களுடைய மனக்கலக்கத்தை அவர்கள் முக பாவங்கள் வெளிப்படுத்தின. ஆனால் யாருடைய குரலிலிருந்தும் ஒரு சிறு முனகலாவது விம்மலாவது கேட்கவில்லை.

அவர்களில் சிலருடைய கவனம் மாளிகையின் பின்புறத்தில் வெளிச்சமாகத் தெரிந்த இடத்திற்குச் சென்றது.ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொழுந்து விட்டெரிந்த தீச்சுடரைக் காட்டினார்கள். மணிமேகலையும் அதைப் பார்த்தாள். உடனே "ஐயோ! தீ! தீ! அவர் அங்கு இருக்கிறாரே!" என்று அலறிக் கொண்டு அந்தத் திக்கை நோக்கி ஓடத் தொடங்கினாள். சம்புவரையர் குறுக்கிட்டு அவளை நிறுத்தினார். அவளுடைய முகத்தில் பளார் என்று ஓர் அறை கொடுத்தார். பிறந்தது முதலாவது யாரும் தன்னை இப்படி நடத்தி அறியாதவளான மணிமேகலை - சம்புவரையரின் கண்ணுக்குக் கண்ணான, செல்லப் பெண் மணிமேகலை, - தந்தையை வெறித்து நோக்கிய வண்ணம் ஸ்தம்பித்து நின்றாள்.

சம்புவரையர் சிறிது இரங்கிய குரலில், "அசட்டுப் பெண்ணே! உனக்குத்தான் முன்னமே நான் எச்சரிக்கை செய்திருந்தேனே? ஏன் எனக்குத் கோபம் வரச் செய்கிறாய்?" என்று கூறிவிட்டு, "அதோ பார்! நீ அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்!" என்றார்.

சம்புவரையர் சுட்டிக் காட்டிய திசையிலிருந்து வந்தியத்தேவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தான். அவனுடைய தோளின் பேரில் ஆதித்த கரிகாலன் உயிரற்ற உடலைச் சாத்தி எடுத்துக் கொண்டு வந்தான்.

சம்புவரையருக்கும், அவருடைய மகளுக்கும் நடந்த விவாதத்தில் கவனம் செலுத்திய மலையமானும் இப்போது வந்தியத்தேவனை நோக்கினார். அவன் மெள்ள மெள்ளத் தள்ளாடி வருவதையும் அவனுடைய தோளில் யாரையோ தூக்கிக் கொண்டு வருவதையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார். ஏனோ அவருடைய முதுமைப் பிராயம் அடைந்த உடம்பு நடுங்கியது. உள்ளத்தில் ஒரு விதத் திகில் உண்டாயிற்று. கிட்ட நெருங்கி வந்தவனைப் பார்த்து ஏதோ கேட்க விரும்பினார். ஆனால் நா எழவில்லை; தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்டது.

வந்தியத்தேவன் மலையமானைப் பார்த்துக்கொண்டே அவர் அருகில் வந்தான்.

"ஐயா! இதோ இளவரசர் கரிகாலர்! வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதிவீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் தீக்கிரையாகாமல் கொண்டு சேர்த்தேன். விதியினாலும் சதியினாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்!" என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் கரிகாலரின் சடலத்தை மெதுவாகத் கீழே இறக்கிப் படுக்க வைத்தான்.

உடனே தடால் என்று தானும் கீழே விழுந்து நினைவிழந்தான்.

கிழவர் மலையமான் இளவரசரின் உடலுக்கு அருகில் உட்கார்ந்தார். அவருடைய வீரத் திருமுகத்தைச் சற்று நேரம் உற்று நோக்கினார். திடீரென்று மலை குலுங்குவது போல் அவருடைய உடம்பெல்லாம் குலுங்கி அசைந்தது! அலைகடலின் பேராரவாரத்தைப் போல் அவருடைய தொண்டையிலிருந்து "ஐயோ!" என்ற சோகக் குரல் வந்தது.

தம் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.

"என் செல்வமே! உன்னை மணக்கோலத்தில் பார்க்க வந்தேனே! பிணக்கோலத்தில் பார்க்கிறேனே!" என்று எட்டுத் திசையும் கிடுகிடுத்து நடுங்கும்படியாக் அலறினார்.

பின்னர், அம் முதுபெருங் கிழவர் ஆதித்த கரிகாலன் பிறந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாகக் கூறிப் புலம்பினார். அவன் பிறந்த நாளில் நடத்திய கொண்டாட்டங்களைக் குறிப்பிட்டார். அவன் குழந்தையாயிருந்த போது தமது மடியிலும், கரங்களிலும், தோள்களிலும் கொஞ்சி விளையாடியதைச் சொல்லி அழுதார். அவனுக்கு வேல் எறியவும், வாள் பிடித்துச் சண்டை செய்யவும் தாம் கற்றுக் கொடுத்ததையெல்லாம் சொன்னார். பதினாறாவது பிராயத்தில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் நிகழ்த்திய அசகாய சூரத்தனமான வீர பராக்கிரமச் செயல்களை ஒவ்வொன்றாகக் கூறித் துக்கித்தார்.

"ஐயோ! பாண்டியனோடு நடத்திய அந்த வீரப் போர்களிலே நீ இறந்து வீர சொர்க்கம் அடைந்திருக்கக் கூடாதா? இந்தச் சண்டாளன் சம்புவரையனும், இவனுடன் சேர்ந்த சதிகாரர்களும் செய்த சூழ்ச்சிக்கு இரையாகியா மாண்டிருக்க வேண்டும்? அந்தோ, உன்னை நானே இவன் விருந்தாளியாகப் போகும்படி சொல்லி அனுப்பினேனே? எனக்கு வயதாகி விட்டது. உனக்கு இங்கே நண்பர்கள் வேண்டும் என்று எண்ணி, இவன் மகளை நீ மணந்துகொண்டால், உன் கட்சியில் இருப்பான் என்று நம்பி அனுப்பினேனே? சம்புவரையன் மாளிகைக்கு அனுப்புவதாக எண்ணிக் கொண்டு யமனுடைய மாளிகைக்கு விருந்தாளியாக அனுப்பிவிட்டேனே? நான் அல்லவோ பாதகன்? நான் அல்லவோ உன்னைக் கொன்றவன்?" என்று கூறி மீண்டும் மீண்டும் தம் தலையில் அடித்துக் கொண்டார்.

பின்னர் திடீரென்று சோகத்திலிருந்து விடுபட்டு ரௌத்திராகாரம் அடைந்து சுற்று முற்றும் பார்த்தார். "அடே சம்புவரையா! உண்மையைச் சொல்! இளவரசர் எப்படியடா மாண்டார்? என்ன சூழ்ச்சியடா செய்தாய்? தேவேந்திரனே வந்து எதிர்த்தாலும் நேருக்கு நேர் நின்று அவனை வென்றிருக்க முடியாதே? எத்தனை பேரை அவன் பேரில் ஏவி விட்டாய்? அவர்கள் எங்கே மறைந்திருந்து, எப்படியடா இந்த வீராதி வீரனைக் கொன்றார்கள்? உண்மையைச் சொல்லிவிடு!" என்று கர்ஜித்தார்.

சம்புவரையரும் கோபத்தோடு "கிழவா! உன் முதுமைப் பிராயத்தை முன்னிட்டு பொறுத்திருக்கிறேன். இளவரசர் எப்படி இறந்தார் என்று உனக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும்! இளவரசர் சடலத்தைத் தூக்கிக் கொண்டு வந்தானே, அவனைக் கேட்டால் ஒருவேளை சொல்லுவான்! என்னைக் கேட்பதில் என்ன பயன்?" என்றார்.

"அடே! உன்னுடைய மாளிகையில் உன்னுடைய விருந்தாளியாக இருக்கும்போது இச்சம்பவம் நேர்ந்திருக்கிறது. நீ ஒன்றும் அறியாதவன் போலப் பேசுகிறாய். இதை யார் நம்புவார்கள்? நல்லது; உன்னைச் சுந்தரசோழ சக்கரவர்த்தி கேட்கும்போது இந்த மறுமொழியை அவரிடம் சொல்லு! வீரர்களே! இந்தச் சம்புவரையனைச் சிறைப்படுத்துங்கள். இவனுடைய மாளிகை, மதில் சுவர் எல்லாவற்றையும் இடித்துத் தரையோடு தரை ஆக்குங்கள்!" என்று கிழவர் இடிமுழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டார்.

அப்போதுதான் திரும்பி வந்திருந்த பார்த்திபேந்திரன், மலையமானைப் பார்த்து "ஐயா! இந்த மாளிகையை அழிக்கும் பொறுப்பு நமக்குக் கிடையாது. அக்னி பகவான் அந்த வேலையை மேற்கொண்டு விட்டார்! அதோ பாருங்கள்!" என்றான்.

மலையமான் பார்த்தார். அந்தப் பெரிய மாளிகையில் ஒரு மூலையில் சற்று முன் காணப்பட்ட தீ வெகு சீக்கிரமாகப் பரவி வருவதைக் கண்டார். பிரம்மாண்டமாக வளர்ந்து வானளாவிக் கொழுந்து விட்டெறிந்த அப்பெருந்தீ மாட கூடங்களையும், மச்சு மெத்தைகளையும் கோபுர கலசங்களையும் விழுங்கிப் பஸ்மீகரம் செய்து கொண்டு மேலும் மேலும் இரை தேடி அதன் ஆயிரம் பதினாயிரம் செந்நாக்குகளை நீட்டிக் கொண்டு விரைந்து வருவதைக் கண்டார். அந்த கோர பயங்கரமான காட்சியைப் பார்த்த வண்ணமாகத் திருக்கோவலூர் வீரர்கள் பிரமித்து நிற்பதையும் கண்டார்.

"சரி! சரி! அக்னி பகவான் நமது வேலையை ஏற்றுக் கொண்டு விட்டார். நல்லது, பார்த்திபேந்திரா! உடனே புறப்படுவோம். மூன்று உலகமாளும் சுந்தரசோழ சக்கரவர்த்தி தமது மூத்த மகனைப் பார்க்க வேண்டும் என்று மூன்று வருஷமாகச் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார். என் மகள் வானமாதேவி இளவரசனை அழைத்து வரும்படி எனக்குச் சிபாரிசு மேல் சிபாரிசு அனுப்பிக் கொண்டிருந்தாள். உயிரற்ற இளவரசனின் சடலத்தையாவது அவர்கள் கடைசி முறை பார்க்கட்டும். இந்த வீராதி வீரனுடைய உடலைச் சண்டாள சம்புவரையனுடைய மாளிகையை விழுங்கிய அக்கினிக்கு நாம் இரையாக்க வேண்டாம். தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்வோம். சக்கரவர்த்தியின் சந்நிதானத்தில் கொண்டுபோய்ப் போடுவோம். உயிர்க் களை இழந்த திருமுகத்தையாவது பெற்ற தாயும் தகப்பனாரும் பார்த்துப் புலம்பட்டும். இளவரசனைக் கொன்ற சண்டாளப் பாதகர்களுக்குத் தக்க தண்டனை சக்கரவர்த்தியே விதிக்கட்டும்!" என்றார் மலையமான்.

பக்க தலைப்பு



நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
மீண்டும் கொள்ளிடக்கரை




கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப் பெரியாரின் மடாலயம் இருந்தது. அதன் வாசலில் அரண்மனைப் பல்லக்கு ஒன்றும் பல்லக்குத் தூக்கிகளும் காவல் வீரர்களும் நின்றனர். இவர்களைத் தவிர கிராமவாசிகள் சிறிது தூரத்தில் கூட்டம் கூடி நின்றார்கள். அந்தக் கூட்டத்துக்கு மத்தியில் இரண்டு பேருக்குள் ஏதோ கடுமையான விவாதம் நடந்தது போலவும், அதை அக்கூட்டத்தார் உற்சாகத்துடன் கவனித்துக் கொண்டு வந்ததாகவும் தோன்றியது.

ஜனக் கூட்டத்தைச் சற்று விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தோமானால், நமக்கு முன்னே பழக்கமான இருவர்தான் அங்கே நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவரும். அவர்களில் ஒருவன் திருமலை என்ற ஆழ்வார்க்கடியான் நம்பி, மற்றொருவர் நம் கதையின் ஆரம்பத்திலேயே அவனுடன் படகில் விவாதம் தொடுத்த வீர சைவர்; நம்பியாண்டார் நம்பியின் சைவ மடாலயத்தில் பிரதான காரியக்காரர்.

நம்பியாண்டாரைப் பார்ப்பதற்காக வந்திருந்த பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி அந்த மகானுடன் ஏதோ தனிமையில் பேச விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டதும், மேற்கூறிய வீர சைவப் பெரியார் வெளியேறி வந்தார். ஆழ்வார்க்கடியானைப் பார்த்ததும் அவருக்கு இயற்கையாகவே ஆத்திரம் பொங்கி வந்தது. முன்னொரு தடவை அந்த வீரவைஷ்ணவ சிகாமணியிடம் விவாதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்கிற வண்ணம் அந்த ஆத்திரத்தை மூட்டியது.

"அடே! நாமத்தைப் போட்டு ஊரை ஏமாற்றும் வேஷதாரி வைஷ்ணவனே! இங்கே எங்கு வந்தாய்? எங்கேயாவது பொங்கல் - புளியோதரை கிடைக்குமிடம் பார்த்துக்கொண்டு போவது தானே?" என்றார்.

"பொங்கல் புளியோதரை வேண்டிய மட்டும் சாப்பிட்டு விட்டுத் தான் வருகிறேன். இங்கேயுள்ள சைவ மடத்தில் நீங்கள் எல்லாரும் சாம்பலைத் தின்று உடம்பு வீங்கிப் போய்க் கிடக்கிறீர்கள் என்று அறிந்து வந்தேன். பாவம்! நீங்கள் என்ன செய்வீர்கள்! உங்கள் சிவபெருமான் சாப்பிட அன்னம் கிடைக்காத காரணத்தினாலேதான் விஷத்தை உண்டார்? அப்போது மட்டும் எங்கள் நாராயண மூர்த்தியின் சகோதரி பார்வதி கழுத்தைப் பிடிக்காமலிருந்திருந்தால் உங்கள் சிவனுடைய கதி யாதாயிருக்கும்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அடே வீர வைஷ்ணவனே! நிறுத்து உன் கதையை! உயர உயரப் பறக்காதே! உங்கள் பெருமாள் உயர உயரப் பறந்தும் எங்கள் சிவபெருமானுடைய முடியைக் காண முடியாமல் திரும்பி வந்தாரில்லையா?"

"அது என்ன ஐயா கதை? எங்கள் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வந்து பூமியை ஒரு அடியினாலும் வானத்தை இன்னொரு அடியினாலும் அளந்தபோது உங்கள் சிவனுடைய முடி அந்த அடிக்குக் கீழேதானே இருந்திருக்க வேண்டும்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"உங்கள் மகாவிஷ்ணு பத்துத் தடவை பூலோகத்தில் பிறந்ததிலிருந்தே அவருடைய வண்டவாளம் வெளியாகவில்லையா? அதிலும் எப்படிப்பட்ட பிறவிகள்? மீனாவும் ஆமையாகவும் பிறந்தாரே?" என்றார் வீர சைவர்.

"உமக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! பகவான் மீனாகப் பிறந்தது எதற்காக? கடலில் மூழ்கிப்போன நாலு வேதங்களையும் திருப்பிக்கொண்டு வருவதற்கல்லவோ? ஆகையினாலேதான் எங்கள் ஆழ்வாரும்,
	'ஆனாத செல்வத்து 
	அரம்பையர்கள் தற்சூழ 
	வானாளும் செல்வமும் 
	மண்ணரசும் யான் வேண்டேன் 
	தேனார் பூஞ்சோலை
	திருவேங்கடச் சுனையில் 
	மீனாய்ப் பிறக்கும் 
	தவமுடையே னாவேனே!'
என்று பாடியிருக்கிறார்...!"

"அப்பனே! உங்கள் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்தான்! எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர்! அதை ஞாபகம் வைத்துக்கொள்!"

"ஓகோ! இப்படி வேறே ஒரு பெருமையா? பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான்; துரியோதனாதியர் நூறுபேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே!"

"அதிகப் பிரசங்கி! எங்கள் நாயன்மார்களைத் துரியோதனன் கூட்டத்தோடு ஒப்பிடுகிறாயா? உங்கள் ஆழ்வார்களிலே தான் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எல்லாரும் உண்டு."

"உங்கள் சிவபெருமானுடைய கணங்களே பூகணங்கள் தானே! அதை மறந்துவிட்டீராங்காணும்?..."

இப்படி வீர வைஷ்ணவரும் வீர சைவரும் வாதப்போர் நடத்திக் கொண்டிருந்தபோது இரு தரப்பிலும் சிரத்தையுள்ளவர்கள் இடையிடையே ஆரவாரித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இச்சமயத்தில் மடாலயத்துகுள்ளிருந்து சிவஞான கண்டராதித்தரின் திருத் தேவியான செம்பியன் மாதேவியும் அவரை வழி அனுப்புவதற்காக நம்பியாண்டார் நம்பியும் வெளியே வருவதைக் கண்டு, அக்கூட்டத்தில் நிசப்தம் நிலவியது.

மழவரையன் மகளார் நம்பியண்டாரிடம் விடை பெற்றுக் கொண்டு வந்து ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! இங்கே கூட உன் சண்டையை ஆரம்பித்து விட்டாயா?" என்றார்.

"இல்லை, தேவி! நாங்கள் மற்போர் நடத்தவில்லை; சொற்போர் தான் நடத்தினோம். இந்த வீர சைவ சிகாமணி தான் முதலிலே போரை ஆரம்பித்தார். எங்கள் சொற்போர் இங்கே கூடியிருப்பவர்களுக்கெல்லாம் மிக்க உற்சாகத்தை அளித்தது. அதனாலேதான் மடாலயத்துக்குள்ளே பிரவேசியாமலிருந்தார்கள்" என்றான் திருமலை.

"அப்பனே! தெய்வங்களுக்குள்ளே உயர்வு, தாழ்வு சொல்லி வேடிக்கையாகக்கூட விவாதம் செய்யக்கூடாது. அதனால் சாதாரண ஜனங்களின் உள்ளம் குழப்பத்துக்கு உள்ளாகும்! என் மாமனாராகிய பராந்தக தேவர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்தார். அம்மாதிரியே வீர நாராயணபுரத்திலுள்ள அனந்தீசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்து மான்யம் அளித்தார். அவர் காட்டிய வழியிலேயே நாம் அனைவரும் நடக்க வேண்டும்!" என்று கூறினார் செம்பியன் மாதேவி.

பின்னர் தேவியார் சிவிகையில் ஏறிக்கொள்ளவும், சிவிகை மேற்கு நோக்கிச் சென்றது. காவற்காரர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்தனர். ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ச்ிவிகைக்குச் சமீபமாக நடந்து சென்றான்.

சிறிது தூரம் சிவிகைபோன பிறகு ஆழ்வார்க்கடியன் பெரிய பிராட்டியைப் பார்த்து, "தேவி! நம்பியாண்டாரை நம்பி வந்த காரியம் என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

"என் மனம் கலக்கம் நீங்கித் தெளிவு அடைந்து விட்டது திருமலை! மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதை வேறு வழியில் தடுக்க முடியாவிட்டால் உலகம் அறிய உண்மையைச் சொல்லி விடுவதே முறை என்று நம்பியாண்டார் சொல்லிவிட்டார். நானும் அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உறுதி அடைந்து விட்டேன்" என்றார் செம்பியன் மாதேவி.

"நம்பியாண்டார் அவ்விதம் கூறுவார் என்றுதான் முதன் மந்திரியும் எதிர்பார்த்தார். ஆயினும் தாங்கள் இந்தப் பிரயாணம் வந்தது மிக நல்லதாய்ப் போயிற்று, தாயே! தாங்கள் இந்த விஷயமாக உடனே முடிவு செய்வதற்கு இன்னும் அதிகமான அவசியம் நேர்ந்திருக்கிறது. கடம்பூரிலிருந்து மிகப் பயங்கரமான செய்தி வந்திருக்கிறது. அது இன்னும் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இங்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். எல்லாரும் இளவரசரின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்குப் போயிருப்பார்கள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"திருமலை! இது என்ன சொல்லுகிறாய்? என்ன பயங்கரமான வார்த்தை! எந்த இளவரசர்? என்ன இறுதி ஊர்வலம்?" என்று தேவி கேட்டார்.

"மன்னிக்க வேண்டும், தாயே! சோழ குலத்தில் இதுவரை இம்மாதிரி துர்ச்சம்பவம் நடந்ததில்லை. கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலர் காலமானார். துர்மரணம் என்று சொல்லுகிறார்கள். யாரால் நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று மட்டும் தெரியவில்லை. பலர் பலவாறு சொல்லுகிறார்கள். ஆதித்த கரிகாலர் அகால மரணமடைந்த பிறகு கடம்பூர் அரண்மனைக் முழுவதும் தீப்பட்டு எரிந்து விட்டதாம். இளவரசரின் சடலத்தைத் தஞ்சைக்கு ஊர்வலமாக எடுத்து வருகிறார்களாம். திருக்கோவலூர் மலையமான் கடம்பூர் சம்புவரையரையும் அவருடைய குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழைத்து வருகிறாராம். ஊர்வலத்தில் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேல் முன்னும் பின்னும் வருகிறார்களாம்! அவர்கள் கொள்ளிடக் கரைக்கு வருவதற்குள் நாம் அந்த நதியைக் கடந்து விட வேண்டும்!"

"திருமலை! நீ சொல்லுவது உண்மையிலேயே பயங்கரமான செய்திதான்! வானத்தில் தூமகேது தோன்றியதின் காரணமாக ஜனங்கள் எதிர்பார்த்த விபரீதம் நேர்ந்து விட்டது! ஆகா! அந்த அசகாய சூரனின் கதி இப்படியா முடியவேண்டும்? ஐயோ! சுந்தர சோழருக்கு இது தெரியும்போது என்ன பாடுபடுவார்? நோய்ப்பட்டிருக்கும் சக்கரவர்த்திக்கும் இந்தச் செய்தியினால் ஏதாவது நேராமலிருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. கருணைக் கடலான சிவபெருமான் தான் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார் மழவரையர் மகளார்.

"தாயே! சோழ குலத்துக்கு நேர்ந்திருக்கும் ஆபத்து ஒருபுறமிருக்கட்டும். இந்தத் துர்நிகழ்ச்சியினால் சோழ சாம்ராஜ்யமே சின்னா பின்னமாகி விடலாம் என்று எனக்குப் பயம் உண்டாகிறது."

"அது ஏன் அந்த எண்ணம் உனக்கு உண்டாயிற்று, திருமலை?"

"சோழ நாட்டுத் தலைவர்கள் - சிற்றரசர்களுக்குள்ளே பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு சோழ நாட்டில் உள் சண்டையினால் இரத்த வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும்போது வெளி நாட்டுப் பகைவர்கள் தைரியம் கொண்டு படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள்! அதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா, தாயே!"

"திருமலை! சிற்றசர்கள், தலைவர்களுக்குள்ளே ஏன் சண்டை மூளும் என்று சொல்லுகிறாய்?"

"தங்களுக்குத் தெரிந்த காரணந்தான் தாயே! சிலர் தங்கள் திருக்குமாரரான மதுராந்தகர் அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டும் என்பார்கள். மற்றும் சிலர் அருள்மொழி வர்மர்தான் சிம்மாசனம் ஏறவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே கொடும்பாளூர் வேளாரின் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கின்றன. இளவரசரின் சடலத்துடன் மலையமான் தஞ்சையை நோக்கிப் போகிறார். பழுவேட்டரையரைச் சேர்ந்த சிற்றரசர்கள் சைன்யம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தஞ்சையிலும் தஞ்சையைச் சுற்றிலும் சோழ நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இரத்த வெள்ளம் பெருக்கப் போகிறார்கள். காவேரி முதலிய ஐந்து ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளத்துக்குப் பதிலாக இரத்த வெள்ளம் ஓடப்போகிறது! மகா அறிவாளியான முதன் மந்திரி அநிருத்தரே கலக்கம் அடைந்திருக்கிறார். விஜயாலயரும் ஆதித்தரும் பராந்தகரும் தங்கள் திருக்கணவரான கண்டராதித்தரும் நிலைநாட்டி அரசு புரிந்த சோழப்பேரரசு நம் நாளில் அழிந்து போய்விடலாம் என்றே பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்கு அநிருத்தருக்கே வழி ஒன்றும் தோன்றவில்லை!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"திருமலை! இறைவன் அருளால் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு அத்தகைய விபத்து நேராமல் நான் தடுப்பேன். அதற்கு வழியை நான் அறிவேன். அந்த வழியைக் கடைபிடிக்கலாமா என்று என் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போகத்தான் நம்பியாண்டாரிடம் வந்தேன். மதுராந்தகனுக்கும், அருள்மொழிவர்மனுக்கும் சிங்காதனப் போட்டி ஏற்பட்டால்தானே உள்நாட்டுச் சண்டை மூளும் என்று சொல்கிறாய்?"

"ஆம், தாயே! அத்தகைய சண்டை மூளாமல் எப்படித் தடுக்க முடியும்? ஆதித்த கரிகாலர் பிராயத்தில் சிறிது மூத்தவர் என்ற காரணமாவது இதுவரையில் சொல்லக் கூடியதாயிருந்தது. இப்போது அவரும் போய்விட்டார். தங்கள் திருப்புதல்வரைக் காட்டிலும் அருள்மொழிவர்மர் இளையவர். ஆனால் மலையமானும் வேளாரும் சோழ நாட்டு மக்களும் இனி அருள்மொழிவர்மருக்கே பட்டம் என்று வற்புறுத்தப் போகிறார்கள். பழுவேட்டரையர்கள் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை."

"திருமலை! யார் ஒத்துக்கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி. மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். அதை நான் பார்த்துக்கொள்வேன். மகா புருஷராகிய என்னுடைய பதியின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். மதுராந்தகனுக்குப் பட்டம் இல்லையென்று முடிவானால் உள்நாட்டுச் சண்டையும் இல்லைதானே?"

"ஆம்; அன்னையே! சோழ சாம்ராஜ்யம் சர்வ நாசம் அடையாமல் இச்சமயம் தாங்கள் காப்பாற்றினால்தான் உண்டு. வேறு வழியே கிடையாது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"என்னால் ஆவது ஒன்றுமில்லை. மாதொரு பாகனாகிய மகேசுவரன் எனக்கு அத்தகைய சக்தியை அருள வேண்டும்" என்றார் பெரிய பிராட்டியார்.

சிறிது நேரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள். கொள்ளிடத்தின் ஓடத்துறை சற்றுத் தூரத்தில் தெரிந்தது.

"திருமலை! சற்றுமுன் ஒரு பயங்கரமான செய்தியைக் கூறினாய். ஆதித்த கரிகாலன் உயிர் இழந்தான் என்றாய். மூன்று உலகையும் ஆள வேண்டிய அந்த வீராதி வீரன் இறந்ததே விபரீதமான செய்திதான். இளவரசன் துர்மரணம் அடைந்ததாகக் கூறினாயே? அது எப்படி? தன் உயிரைத் தானே போக்கிக் கொண்டானா? அல்லது யாராவது அவனைக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களா?" என்று பெரிய பிராட்டி வினவினார்.

"தேவி! அதைப் பற்றிப் பலவிதப் பேச்சுக்கள் பரவி வருகின்றன. சம்புவரையர் வீட்டில் இது நடந்தபடியால் அவர் மீது சந்தேகப்பட்டு அவரையும் அவர் குடும்பத்தார் அத்தனை பேரையும் மலையமான் சிறைப்படுத்திக் கொண்டு வருகிறார். சம்புவரையர் மகன் கந்தமாறன் மட்டும் தப்பிச் சென்று விட்டானாம்..."

"சம்புவரையரால் இது நேர்ந்திருக்கும் என்று உண்மையில் எனக்கு நம்பிக்கைப்படவில்லை. எவ்வளவுதான் விரோதமிருந்தாலும் அவருடைய இல்லத்துக்கு விருந்தாளியாக வந்திருந்த சக்கரவர்த்தித் திருமகனைக் கொல்லுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? சம்புவரையர் அப்படிச் செய்திருக்க முடியாது. அவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாராம்? இளவரசர் கரிகாலரின் மரணம் எப்படி நேர்ந்திருக்கும் என்று சொல்லுகிறாராம்?"

"தேவி! பழையாறைக்கு முன்னொரு சமயம் வாணர்குலத்து வீர வாலிபன் ஒருவன் வந்திருந்தானே நினைவிருக்கிறதா? அவனைக் குந்தவைப் பிராட்டியார் ஈழ நாட்டுக்குக் கூட ஓலையுடன் அனுப்பி வைக்கவில்லையா?"

"ஆம்; ஆம்; ஞாபகம் இருக்கிறது. அவனைப் பற்றி என்ன?"

"இளவரசரின் உயிரற்ற சடலத்துக்கு அருகில் அந்த வாலிபன் தான் இருந்தானாம். ஆகையால் அவனேதான் கொன்றிருக்க வேண்டும் என்று சம்புவரையர் சொல்கிறாராம்..."

"திருமலை! அப்படி ஒருநாளும் நேர்ந்திராது. அந்தப் பிள்ளையைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கிறது..."

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன், தாயே! ஆனால் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் வந்தியத்தேவனுக்கு எதிராயிருக்கின்றன!"

"ஐயோ! பாவம்! இளையபிராட்டி அந்த வாலிபனிடம் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தாள். இந்தச் செய்தி தெரிந்தால் அவள் துடிதுடித்துப் போவாள்!"

"தாயே! தங்களிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். தாங்கள் குடந்தைக்குச் சென்றதும் இளைய பிராட்டியைச் சந்தித்துத் தஞ்சைக்கு அழைத்துக் கொண்டு போவது நல்லது..."

"அதுதான் என் உத்தேசம். இளையபிராட்டி எனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிறாள்..."

"மற்றவர்கள் மூலம் பராபரியாக இளையபிராட்டிக்குச் செய்தி தெரிவதற்கு முன்னால் தாங்களே சொல்லிவிடுவதுதான் நல்லது..."

"அப்படியானால் இப்போது நீ என்னுடன் வரப்போவதில்லையா, திருமலை?"

"தேவி! தாங்கள் அனுமதி கொடுத்தால் கொள்ளிடத்தின் தென் கரையில் தங்களிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்..."

"எங்கே போகப் போகிறாய்?"

"இளவரசர் கரிகாலரின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து வருவதற்காகப் போக விரும்புகிறேன்."

"எப்படிக் கண்டுபிடிப்பாய்?"

"தேவி! பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றித் தங்களுக்கு முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அச்சதிகாரர்களில் ஒருவனைக் கொள்ளிடத்தின் தென்கரையில் நான் வரும்போது பார்த்தேன்" என்றான் திருமலை.

"உடனே நீ ஏன் அவனைப் பின் தொடர்ந்து செல்ல வில்லை?"

"கொள்ளிடத்தின் வடகரைக்கு வந்த பிறகுதான் கரிகாலர் மரணத்தைப் பற்றிச் செய்தி தெரிந்தது, அரசி! எனக்கு விடை கொடுங்கள்! சதிகாரர்கள் சாதாரணமாகக் கூடிப் பேசுகிற இடம் எனக்குத் தெரியும்..."

"சரி, போய் வா! இளையபிராட்டி குந்தவையிடம் என்ன சொல்லட்டும்? அவளை நினைத்தால் எனக்கு பெருங் கவலையாயிருக்கிறது."

"வந்தியத்தேவன் மீது குற்றம் சாட்டப்பட்டால் அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள். உண்மைக் குற்றவாளியை நான் எப்படியும் கண்டுபிடித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லுங்கள்!"

"இறைவன் அருளினால் நீ போகும் காரியம் வெற்றி அடையட்டும்!" என்றார் சிவ பக்தியில் சிறந்த பெண் மணியான செம்பியன் மாதேவி.

இதற்குள் கொள்ளிடக் கரை வந்துவிட்டது. பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியும் பரிவாரங்களும் ஏறிச் செல்வதற்காகப் படகுகள் காத்திருந்தன.

ஆழ்வாக்கடியான் வேறொரு சிறிய படகு பிடித்துக் கொண்டு அவர்களுக்கு முன்னால் விரைந்து படகைச் செலுத்தச் சொல்லி, அங்கிருந்து சென்றான்.

பக்க தலைப்பு



நாற்பத்துநான்காம் அத்தியாயம்
மலைக் குகையில்




கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்ததும் ஆழ்வார்க்கடியான் மேற்றிசையை நோக்கிப் போனான். கொள்ளிடத்தின் உடைப்பினால் எங்கும் வெள்ளக் காடாக இருந்ததைப் பார்த்தான். ஆயினும் கொள்ளிடத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வந்ததைப் போல் உடைப்பினால் தண்ணீர் பரவியிருந்த இடங்களிலும் வேகமாகத் தண்ணீர் வடிந்து கொண்டு வந்தது. கடைசியாகத் திருப்புறம்பயத்தை அடைந்தான். அந்த ஊர் மட்டும் அவ்வளவு வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து வியந்தான். ஆதிகாலத்தில் உலகமே பிரளயத்தில் ஆழ்ந்தபோது திருப்புறம்பயம் மட்டும் தண்ணீரில் முழுகாமலிருந்தது என்னும் வரலாறு இதனாலே தான் ஏற்பட்டது போலும் என்று எண்ணிக் கொண்டு பள்ளிப்படைக் காட்டை நெருங்கினான். அங்கே புயலினால் பல மரங்கள் சாய்ந்து விழுந்திருந்த போதிலும் அவன் ஒளிந்து பார்ப்பதற்கு வேண்டிய அடர்த்தியில்லாமற் போகவில்லை. அவ்விதம் பார்த்தபோது, பள்ளிப்படைக் கோயில் வாசலில் ஆண்கள் மூவரும் ஒரு ஸ்திரீயும் நின்று பேசுவது தெரிந்தது. நன்றாய் உற்றுப் பார்த்தபோது, எல்லாரும் அவனுக்கு முன்னாலே தெரிந்தவர்கள் என்று அறிந்தான். அதே பள்ளிப்படைக் காட்டில் முதன் முதலில் சதியாலோசனைக்காகக் கூடியவர்களில் இந்த மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தார்கள். ஒருவன் சோமன் சாம்பவன். இன்னொருவன் கிரமவித்தன். மூன்றாவது ஆள் இடும்பன்காரி. ஸ்திரீ, படகோட்டி முருகய்யனுடைய மனைவி. அவர்களில் இடும்பன்காரி மற்றவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அச்செய்தி அவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. "சரி ! - அப்படியானால் நாமும் பச்சைமலை அடிவாரத்துக்கு உடனே புறப்படலாம். போய்ச்சேர இரண்டு நாள் பிடிக்கும்" என்று சோமன் சாம்பவன் கூறியது ஆழ்வார்க்கடியான் காதில் விழுந்தது.

அவர்களுக்கு முன்னால் தான் அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என்று எண்ணி ஆழ்வார்க்கடியான் திரும்பினான். அவனுடைய மார்புக்கு நேரே சிறிய கத்தியைக் கண்டு திடுக்கிட்டான். அதைப் பிடித்திருந்த கை பூங்குழலியின் கை என்று தெரிந்தது. திகைப்பு நீங்கியது. இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து புன்னகையினால் தங்களின் வியப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சதிகாரர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் என்று தெரிந்த பிறகு ஆழ்வார்க்கடியான், "பூங்குழலி! தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டான்.

"பழி வாங்குவதற்காக வந்தேன்" என்றாள் பூங்குழலி.

"என்ன பழி? எதற்காக?"

"இவர்களிலே ஒருவன் என் அத்தையைக் கொன்றுவிட்டு ஓடி வந்த பாதகன். அப்பாதகனை விடாமல் பின்தொடர்ந்து இவ்விடத்தில் வந்து பிடித்தேன். இங்கே இன்னும் மூன்று பேர் அவனுக்கு முன்னால் வந்திருந்தார்கள். அதிலும் என் அண்ணன் மனைவியை அவர்களுடன் பார்த்ததும் திகைத்துப்போனேன்! அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய். இப்போது என்ன செய்யலாம்? நீ எனக்கு உதவி செய்வதாயிருந்தால், இவர்களை விடாமல் தொடர்ந்துபோய் என் அத்தையைக் கொன்றவனைக் கொன்றுவிட்டு வருவேன்." என்றாள்.

"ஐயோ! பாவம்! உன் அத்தை என்றால், அந்த ஊமை ராணி மந்தாகினிதானே? அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"அத்தையைக் கொல்லவேண்டும் என்று நினைத்துக் கொல்லவில்லை. சக்கரவர்த்தியைக் கொல்ல நினைத்து அவர் மேல் எறிந்த வேலை என் அத்தை தாங்கிக் கொண்டாள்!" என்றாள்.

"ஓகோ! அப்படியா? ஊமை ராணி தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றினாளா? இதெல்லாம் எப்படி நடந்தது? சற்று விவரமாகச் சொல், கேட்கலாம்!"

"விவரமாகச் சொல்லுவதற்கு இதுதானா சமயம்? அவர்கள் தப்பித்துக்கொண்டு போய்விடுவார்களே?"

"பூங்குழலி! அவர்கள் போகுமிடம் எனக்குத் தெரியும். எதற்காக யாரைச் சந்திப்பதற்காகப் போகிறார்கள் என்றும் ஊகித்துக் கொண்டேன். வழியிலே அவர்களைத் தடை செய்யாமலிருப்பதே நல்லது. அவர்கள் போகுமிடத்துக்கு நாமும் போகலாம். அங்கே நான் தெரிந்துகொள்ள விரும்புவதைத் தெரிந்துகொண்ட பிறகு நீ உன் பழியை முடித்துக் கொள்ளலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படியானால் புறப்படு! போகும் போதே தஞ்சாவூரில் நடந்தையெல்லாம் உனக்கு விவரமாகச் சொல்கிறேன்!" என்றாள் பூங்குழலி.

இருவரும் கொள்ளிடத்தைப் படகின் மூலமாகக் கடந்து அக்கரை அடைந்தார்கள். வடமேற்குத் திசையை நோக்கிப் பிரயாணம் செய்தார்கள். மூன்று தினங்கள் இரவும் பகலும் பிரயாணம் செய்த பின்னர் பச்சை மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அந்த அடிவாரத்தில் அடர்ந்த காடு மண்டிக் கிடந்தபடியால் இவர்கள் தேடிச் சென்றவர்கள் எங்கே இருக்கக் கூடும் என்பதை இலேசில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பிரயாசையுடன் பிரயாணம் செய்து வந்ததே வீணாகிவிடுமோ என்று மனச் சோர்வு அடைந்தார்கள்.

திடீர் என்று ஆந்தையின் குரல் ஒன்று கேட்டது. பதிலுக்கு மற்றொரு குரல் அதே மாதிரி கேட்டது.ஆழ்வார்க்கடியானுடைய முகம் மலர்ந்தது. பூங்குழலிக்குச் சமிக்ஞை மூலமாகப் பேசாமல் தன்னுடன் வரும்படி தெரிவித்தான். ஆந்தைகளின் குரல் கேட்ட இடத்தில் இடைவெளி தென்பட்டது. அங்கே ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். சிலர் நெருப்பு மூட்டிச் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்னமே அங்கு இருந்தவர்களும் புதிதாக வந்து சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ வியப்பான செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.

முன்னமே அங்கிருந்தவர்களில் ரவிதாஸனும் ஒருவன். அவன் அப்போது புதிதாக அங்கே வந்து சேர்ந்தவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த மலைக்குகையொன்றைச் சுட்டிக் காட்டி ஏதோ தெரிவித்துக் கொண்டிருந்தான். இதை ஆழ்வார்க்கடியான் கவனித்துக் கொண்டான். மெல்லிய குரலில், "பூங்குழலி! நான் தேடி வந்தவர்கள் அந்த குகைக்குள்ளேதான் இருக்கவேண்டும். நான் மெள்ளக் குகைக்குள்ளே நுழைந்து பார்க்கிறேன். இவர்களில் யாராவது குகையை நெருங்கி வந்தால் நீ ஒரு குரல் கொடு!" என்றான்.

"ஆந்தை கத்துவது போல் என்னால் கத்த முடியாது. குயில் கூவுவதுபோலக் கூவுகிறேன்!" என்றாள் பூங்குழலி.

மலைக் குகைக்குள்ளே காற்றும் வெளிச்சமும் நுழைவதற்காகச் சில பெரிய துவாரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆகையால் உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.

அந்த வெளிச்சத்தில் ஆழ்வார்க்கடியான் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். பெரிய பழுவேட்டரையர் காளாமுகச் சாமியார்களைப் போல் புலித்தோல் உடை தரித்திருந்தார். அவர் பக்கத்தில் மண்டை ஓட்டு மாலை கிடந்தது. அவர் உடம்பிலிருந்து ரத்தம் மிகச் சேதமாகியிருக்க வேண்டும் என்று அவர் முகம் வெளுத்துப் போயிருந்ததிலிருந்து ஊகிக்கும் படியிருந்தது. தரையிலே படுத்திருந்தவர் அப்போதுதான் சுய நினைவு பெற்று எழுந்து உட்கார முயன்றதாகத் தோன்றியது. ஏதோ பயங்கர சொப்பன உலகிலிருந்து அப்போதுதான் விழித்தெழுந்தவர் போல் காணப்பட்டார். அவருடைய கண்கள் திருதிருவென்று விழித்தன.

அவர் பக்கத்தில் நந்தினி இருந்தாள். அவள் ஆபரண அலங்காரங்கள் கலையப் பெற்றுத் தலைவிரி கோலமாக இருந்தாள். ஆயினும் அவளுடைய வசீகர சௌந்தரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. அன்பும் ஆதரவும், பரிதாபமும் பச்சாத்தாபமும் ததும்பிய குரலில், "ஐயா! இந்தக் கஞ்சியை அருந்துங்கள்!" என்று கூறிக் கொண்டே ஒரு மண் பாத்திரத்தை அவரிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

பழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு கணநேரம் எல்லையற்ற இன்பத்துக்கு அறிகுறியான புன்னகை மலர்ந்தது.

"நந்தினி! என் பேரரசி! நீதானா இப்போது பேசினாய்? உன் குரல்தானா இது? நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய்? அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா? எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதே அது உண்மையா? மூன்று ஆண்டு காலமாக என்னைத் தொடவும் மறுத்தவள் கடைசியாக மனமிரங்கி விட்டாயா? எங்கே கொடு! கஞ்சியைக் கொடு! உன் கையினால் கஞ்சி கொடுத்தால் அதுவே எனக்குத் தேவாமிர்தமாகும்!" என்றார்.

இவ்விதம் சொல்லிக்கொண்டே நந்தியின் கையிலிருந்த மண் பாண்டத்தை வாங்கிக் கொண்டவர் திடீரென்று அவளை வெறித்துப் பார்க்கத் தொடங்கினார். அடியோடு மாறிப்போன பயங்கரமான குரலில், "அடி பாதகி! ராட்சஸி! நீதானா? என்னைத் தொடுவதற்கு உனக்குத் தைரியம் வந்ததா? என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா? அப்போது நான் விழித்துக் கொண்டேனா? இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ்சிதானா? அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா? உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ?" என்று கூறிவிட்டு அம்மண்பாண்டத்தை வீசி எறிந்தார். அது தடாலென்று குகைச் சுவரில் மோதிச் சுக்கு நூறாகிச் சிதறி விழுந்தது.

பக்க தலைப்பு



நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
"விடை கொடுங்கள்!"




பெரிய பழுவேட்டரையரின் கோபவெறி நந்தினிக்கு எந்த விதமான வியப்பையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. மூன்று ஆண்டு காலமாக அந்த மகா வீரரான முதுகிழவரை அவள் கையில் பிடித்த கயிற்றின் நுனியில் ஆடும் பாவையைப் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். முதன் முதலாக, இன்றைக்கு அந்தக் கயிறு அறுந்து விட்டது. ஆட்டி வைத்தபடி ஆடிக் கொண்டிருந்த பாவை உயிரும், சுய அறிவும் பெற்றுவிட்டது. இதை நந்தினி எதிர் பார்த்தவளாகத் தோன்றியது. இனி அந்தப் பாவையினால் அவளுக்கு ஆகவேண்டிய காரியமும் ஒன்றுமில்லை.

சிறிதும் பதட்டம் காட்டாமல் நந்தினி எழுந்து பெரிய பழுவேட்டரையரின் முன்னால் நமஸ்கரித்தாள். உணர்ச்சி மிகுதியினால் தழுதழுத்திருந்த குரலில் அவள் கூறினாள்: "சுவாமி என்னுடைய வார்த்தைகள் தங்களுக்குத் தேனையும் தேவாமிர்தத்தையும் விட இனிப்பதாகப் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு நான் கொடுத்த கஞ்சியைப் போலவே என் வார்த்தைகளும் தங்களுக்கு நஞ்சினும் கசப்பாயிருக்கும். ஆயினும், கருணை கூர்ந்து தங்களிடம் இன்று இறுதி விடைபெறுவதற்கு முன்னால் சில வார்த்தைகள் சொல்ல அநுமதி கொடுங்கள். அருமைக் கண்மணி என்றும், ஆசைக்காதலி என்றும் என்னை அழைத்த வாயினால் இன்று பாதகி என்றும், ராட்சஸி என்றும் அழைத்தீர்கள். நான் பாதகிதான், ராட்சஸிதான்! மூன்று வருஷமாகத் தங்களை வஞ்சித்து ஏமாற்றி வந்தேன். வனாந்தரத்தில் அநாதையாக நின்ற என்னை அழைத்து வந்து அரண்மனையில் வைத்தீர்கள். பேரரசிகளும் இளவரசிகளும் எனக்கு மரியாதை செய்யப் பண்ணினீர்கள். தங்கள் உயிருக்குயிரான சின்னப் பழுவேட்டரையரிடம் விரோதித்துக் கொள்ளவும் துணிந்தீர்கள். நாட்டு மக்களும் நகர மக்களும் கூறிய பழிச் சொற்களும் பரிகாஸப் பேச்சுக்களும் தாங்கள் என்னிடம் கொண்டிருந்த அபிமானத்தைப் பாதிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் என்னிடம் நம்பிக்கை வைத்து இணையில்லாச் சிறப்புக்கள் அளித்த தங்களை நான் வஞ்சித்து வந்தேன். அது உண்மைதான். என்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தங்கள் அரண்மனையில் வசித்து வந்தேன்.தங்களுக்குத் தெரியாமல் பல காரியங்களைச் செய்துவந்தேன். சதிகாரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன். கந்தமாறன், பார்த்திபேந்திரன் போன்ற வாலிபர்களின் மதியை மயக்கி அவர்களை என் காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். ஆனால், ஐயா, ஒரே ஒரு காரியத்தில் மட்டும் தங்களை நான் வஞ்சிக்கவில்லை. தங்களை உலகமறிய மணந்த நாளிலிருந்து தங்களையே என் பதியாகக் கொண்டிருந்தேன். தலைமுறை தலைமுறையாக மகாவீரர்களை அளித்து வந்த தங்கள் பழம் பெரும் குலத்துக்கு என்னுடைய ஒழுக்கத் தவறினால் சிறிதும் களங்கம் ஏற்படவில்லை. இனியும் நான் உயிரோடிருந்தால் அத்தகைய களங்கம் தங்களுக்கு ஒருநாளும் ஏற்படாது..."

"நந்தினி! இது என்ன வார்த்தை சொல்லுகிறாய்? என் குலத்துக்கு ஏற்படக்கூடிய களங்கம் வேறு என்ன இருக்கிறது? ஐயோ! என் கையினால்... இந்த என் கையினால்... அடி பாவி! வாள் ஒன்று வைத்திருந்தாயே? அது எங்கே? அதனால் என் கையை நீயே வெட்டி விடு! எனக்கு நீ செய்யக்கூடிய உதவி அது ஒன்றுதான்!...... இல்லை, இல்லை! வேண்டாம்! இந்த கைக்கு இன்னும் ஒரு வேலை இருக்கிறது; மிக முக்கியமான வேலை இருக்கிறது. நான் கூறியதை உண்மை என்று நினைத்து அப்படி ஏதாவது செய்து விடாதே!..."

"சுவாமி! அப்படியொன்றும் நான் செய்யமாட்டேன். எத்தனையோ காலமாக நான் பழி முடிக்க எண்ணி இருந்தவரின் பேரிலேயே அந்த வாளை என்னால் உபயோகிக்க முடியவில்லை. சமயம் நழுவிப் போய்விடுமோ என்று நான் பயந்து மதி மருண்டிருந்த நேரத்தில் தாங்கள் என் உதவிக்கு வந்தீர்கள்..."

"அடி பாதகி! உன் உதவிக்கா நான் வந்தேன்? என்ன வார்த்தை சொல்லுகிறாய்? சண்டாளி! பெண் உருக் கொண்ட பேயே! இம்மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால் நான் அங்கு வந்திருக்கவே மாட்டேன்! தெய்வமே! கொள்ளிடத்து வெள்ளத்திலே நான் முழுகித் தத்தளித்த போதே அந்தப் பாவி யமன் என்னைக் கொண்டு போயிருக்கக் கூடாதா?"

"சுவாமி! தாங்கள் என் உதவிக்கு வரவில்லை. என் காரியத்தில் தங்களை உதவி செய்யும்படி நான் கோரவும் இல்லை. தாங்கள் சோழ மன்னர் குலத்துக்கு உண்மையாக நடக்கவும், சோழ குலத்தின் சேவையில் உயிரைக் கொடுக்கவும் பரம்பரையாக உறுதி பூண்ட குலத்தில் வந்தவர். நானோ சோழ குலத்தின் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்வதாக வந்தவள். ஆகையாலேயே தங்களிடம் என் உண்மை நோக்கத்தை நான் தெரிவிக்கவில்லை. சில சமயம் நான் அவ்விதம் தங்கள் மூலம் என் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமா என்று எண்ணியதுண்டு. யோசித்துப் பாருங்கள். தாங்கள் இன்று 'ராட்சஸி', என்றும், 'பெண்ணுருக் கொண்ட பேய்' என்றும் அழைக்கும் இந்தப் பேதையின் முக சௌந்தரியத்தில் கண்ணையும் கருத்தையும் பறி கொடுத்து அமிர்தமாக மதுபானம் செய்தவரைப் போல் மதியிழந்து பல தடவை தாங்கள் நின்றதில்லையா? அப்போதெல்லாம் தங்களைக் கொண்டே என் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டால் என்ன என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் தங்களை அப்படிப்பட்ட துரோகச் செயல் புரியும்படி செய்து தங்கள் குலத்துக்குக் களங்கம் உண்டாக்க நான் விரும்பவில்லை. இதனாலேயே தங்களைக் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் போகச் செய்வதற்கு நான் அவ்வளவு பாடுபட்டேன். தாங்களும் போனீர்கள். ஆனால் விதியானது தங்களைச் சமயம் பார்த்துத் திரும்பிக் கொண்டு வந்துவிட்டது! தாங்களாக எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் விதியானது தங்களை என் உதவிக்கு நல்ல சமயத்தில் கொண்டு வந்து சேர்ந்தது! ஆம், ஐயா! விதிதான் தங்கள் மனத்தில் என் ஒழுக்கத்தைப் பற்றிச் சந்தேகத்தை மூட்டியது. நான் பழி முடிப்பதைத் தடுப்பது மட்டும் தங்கள் நோக்கமாயிருந்தால், பகிரங்கமாகவே வந்திருப்பீர்கள். நான் ஒழுக்கத் தவறு செய்து தங்களுக்குத் துரோகம் செய்கிறேனா என்று சந்தேகப்பட்டுத்தான் வேஷம் தரித்து இரகசிய வழியில் வந்தீர்கள். அந்த விஷயத்திலாவது தங்கள் சந்தேகம் தீர்ந்து போயிருக்க வேண்டும்! இல்லாவிடில், இப்போதாவது தீர்த்துக் கொள்ளுங்கள். மனைவியும் கணவனும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் தங்களுக்கு உண்மையான பத்தினியாக இருந்தபடியால்தான் எனக்குத் துணை செய்வதற்குத் தக்க சமயத்தில் தங்களை விதி கொண்டுவந்து என்னிடம் சேர்த்தது..."

"நந்தினி! போதும்! நிறுத்து! உன் வார்த்தைகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன. அதைக் காட்டிலும், என்னை ஒரேடியாகக் கொன்று போட்டுவிடு! தடுப்பதற்குக் கூட என் கையில் சக்தி இல்லை; உடம்பிலும் வலிவு இல்லை. வாளினால் கொல்ல உனக்குத் தைரியம் இல்லையென்றால், உண்மையாகவே கஞ்சியில் விஷத்தைக் கலந்து எனக்குக் கொடுத்துவிடு!"

"அரசே! என்னை மன்னியுங்கள் இல்லை... என்னை உங்களால் மன்னிக்க முடியாது. இந்த ஜென்மத்தில் மன்னிக்க இயலாதுதான்! ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்! நாம் இருவரும் மறுஜன்மம் எடுத்து இந்தப் பூமியில் பிறந்தால், அப்போது இந்தப் பிறவியின் நினைவு ஒன்றும் நமக்கு இராது. நான் தங்களை வஞ்சித்துத் தங்கள் அரண்மனையில் வாழ்ந்ததும், தங்களுடைய பொக்கிஷத்தின் பொருளை என்னுடைய பழி முடிக்கும் காரியத்துக்கு உபயோகப்படுத்தியதும், கடைசியாகக் கடம்பூர் அரண்மனையில் விதி வசத்தினால் நேர்ந்த விளைவும், இவையொன்றும் தங்களுக்கும் நினைவு இராது; எனக்கும் நினைவு இராது. இந்த ஜன்மத்தில் தங்களுக்கு நான் செய்த துரோகத்துக்கு அடுத்த ஜன்மத்தில் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். மறுபிறப்பில் நான் தங்களையே மணப்பேன்; தங்களுக்கு உண்மையான வாழ்க்கைத் துணைவியாக இருப்பேன். இந்த வார்த்தைத்தான் இனி இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரையில் எல்லாத் தெய்வங்களிடமும் நான் வேண்டிக் கொள்ளப் போகிறேன்."


பெரிய பழுவேட்டரையர் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடலும் உள்ளமும் நெகிழ்ந்து, "நந்தினி! நீ போய்விடு! உடனே இவ்விடம் விட்டுப் போய்விடு! இன்னும் சிறிது நேரம் இப்படியே நீ பேசிக்கொண்டிருந்தால் என் புத்தியே பேதலித்து விடும்! என் கடமையைக் கைவிடும்படி நேரிடும்! இவ்வளவு காலமும் உன்னால் நேர்ந்த அனர்த்தங்கள் போதும்! இன்னமும் என் புத்தியைச் சிதற அடித்துப் பித்துப் பிடிக்கச் செய்யாதே! போய்விடு, இப்போதே போய்விடு!" என்றார்.

"சுவாமி! மன்னியுங்கள்! என்னுடன் வந்தவர்களின் யோசனையை நான் கேட்டிருந்தால், இதற்குள்ளே இந்தப் பச்சை மலையையும், கொல்லி மலையையும் கடந்து கொங்கு நாட்டுக்குள் சென்றிருப்போம். ஆனால் தங்களிடம் பேசி விடை பெற்றுக் கொள்ளாமல் போக எனக்கு மனம் வரவில்லை. கடம்பூர்க் கோட்டைக்கு வெளியிலே வந்ததும் தாங்கள் மூர்ச்சையடைந்தீர்கள். தங்களை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடும்படி அவர்கள் சொன்னார்கள். அதற்கும் நான் சம்மதிக்கவில்லை. அவர்களையே தங்களைத் தூக்கிச் சுமந்து கொண்டு வரச் செய்தேன். இரவு பகல் நாங்கள் இடைவிடாமல் நடந்து வந்தும் மூன்று நாள் ஆகிவிட்டது. இங்கே வந்த பிறகும் தங்களை விட்டுப் போய் விடலாம் என்று சொன்னார்கள். தங்களுக்கு நினைவு வந்த பிறகு சொல்லிக் கொண்டுதான் பிரிந்து வருவேன் என்று பிடிவாதம் பிடித்தேன். அந்த என் எண்ணம் நிறைவிட்டது. தாங்கள் என்னைக் கொல்லப் பார்த்தீர்கள். அதற்கு நியாயம் இருந்தது. ஆனால் விதி வசத்தினால் வேறு விதமாக நடந்துவிட்டது. என் உயிரை வாங்க எண்ணிய தங்களை நான் உயிர்ப்பித்தேன். சற்று முன் என் கையால் கொடுத்த கஞ்சியை விஷம் என்று சொல்லி விட்டெறிந்தீர்கள். ஆனால் மூன்று தினங்களாகத் தாங்கள் நினைவிழந்திருந்த காலத்தில் இந்தக் கையினாலேதான் தங்கள் வாயில் தண்ணீர் விட்டுக் காப்பாற்றி வந்தேன். மூன்று ஆண்டு காலம் தாங்கள் என்னைத் தங்கள் அரண்மனையின் பேரரசியாக வைத்து இணையற்ற பெருமை அளித்து வந்தீர்கள். அதற்குக் கைம்மாறு இந்த ஜன்மத்தில் நான் செய்ய முடியாது. என்றாலும் இந்த மூன்று நாள் தங்களுக்கு என் கையினால் பணிவிடை செய்யக் கொடுத்து வைத்திருந்தேன். இந்த நினைவு என் உயிர் உள்ள வரையில் எனக்குத் திருப்தி அளித்து வரும். போய் வருகிறேன், ஐயா! விடை கொடுங்கள்!"

"நந்தினி! என்னிடம் ஏன் விடை கேட்கிறாய்? கேட்காமலே போய்விடு! நீ இங்கே தாமதிக்கத் தாமதிக்க, என் புத்தி தடுமாறிக் கொண்டு வரும்!"

"ஆம்; என்னை மறுபடியும் கொல்ல வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றினாலும் தோன்றிவிடும், சுவாமி! தங்கள் கையினால் உயிர் துறக்கும்படி நேர்ந்தால் அதை அடியாள் பெறற்கரிய பாக்கியமாகக் கருதுவேன். ஆயினும் முதலில் என்னைக் கொல்லுவதற்காகத்தானே தாங்கள் மாறுவேடம் பூண்டு வந்தீர்கள்?"

"எதற்காக மாறுவேடம் பூண்டு வந்தேன்? நீ ஏதோ ஒரு காரணம் கூறினாய். உன் ஒழுக்கத்தைச் சந்தேகித்து உண்மையைக் கண்டு பிடிக்க வந்தேன் என்று கூறினாய். அது சரியல்ல. நான் பழுவேட்டரையனாக உன்முன் தோன்றி நீ இரண்டு வார்த்தை என்னிடம் பேசிவிட்டால் என் மனம் இளகிவிடும் என்று பயந்துதான் அவ்வாறு வேடம் போட்டுக் கொண்டு இரகசிய வழியில் வந்தேன். உனக்குப் பேசுவதற்கே இடங்கொடாமல் நீ பிரமித்து நிற்கும்போது உன்மீது கத்தியை எறிந்து கொல்ல எண்ணி வந்தேன். கடம்பூர் அரண்மனை வேலைக்காரன் இடும்பன்காரியை பயமுறுத்தி அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு வந்தேன். அது மட்டுமல்ல, நந்தினி! கிழவன் பழுவேட்டரையன் பொறாமை கொண்டு அவனுடைய இளம் மனைவியைக் கொன்றான் என்ற பழிச் சொல் பரவி ஊர் சிரிக்கக்கூடாது என்று நினைத்துக் காளாமுகனுடைய வேடத்தில் வந்தேன். ஆனால் சற்று முன் நீ கூறியதுபோல், நான் ஒன்று நினைக்க விதி வேறு ஒன்று நினைத்தது. இனி ஒரு தடவை அத்தகைய முயற்சி என்னால் செய்ய முடியாது. ஆகையால் நீ போய்விடு. இதை மட்டும் சொல்லி விட்டுப் போ! அச்சமயம் நான் வந்து குறுக்கிட்டிரா விட்டால், என்ன நடந்திருக்கும்? உன் நோக்கத்தை எப்படி முடிக்க எண்ணியிருந்தாய்?"

"ஆம், ஆம்; அதையும் சொல்லவேண்டுமென்றுதான் காத்திருந்தேன். தங்கள் கோபம் என் புத்தியைக் குழப்பிவிட்டது. சுவாமி! தாங்கள் தஞ்சைக்குப் போகும் போது 'தங்கள் குலதர்மத்துக்கு என் கையினால் களங்கம் நேரிடாது' என்று உறுதி கொடுத்தேன். அதை நிறைவேற்றப் பெரும் பிரயத்தனம் செய்தேன். மணிமேகலை, கந்தமாறன், வந்தியத்தேவன் இவர்களில் ஒருவர் மூலமாக என் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று யுக்திகள் செய்தேன். முக்கியமாக, மணிமேலையை நான் அதிகமாக நம்பியிருந்தேன். வேறு காரணத்துக்காக அங்கே மறைந்து நின்ற வந்தியத்தேவனைக் கொல்வதற்காகக் கரிகாலர் வெறி கொண்டு ஓடுவார்; அப்போது மணிமேகலை அவரைக் கொல்லுவாள்; மணிமேகலையின் மேற் குற்றம் சாரமலிருப்பதற்காக வந்தியத்தேவன் 'நான்தான் கொன்றேன்!' என்று ஒப்புக் கொள்வான்; அதனால் பழையாறை குந்தவையின் பேரில் என் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டதுமாகும்; - இப்படியெல்லாம் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இதற்கெல்லாம் அவசியம் ஏற்படவே இல்லை. இளவரசர் தம் கையினாலேயே தம் உயிரை மாய்த்துக் கொண்டார்..."

"இல்லை, நந்தினி! இல்லை! கரிகாலர் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளவில்லை. என்னைக் கூடவா ஏமாற்றப் பார்க்கிறாய்?"

"சுவாமி! இடும்பன் காரியின் கத்தியைத் தாங்கள் அச்சமயம் எறிந்திராவிட்டால், அடுத்த கணத்தில் கரிகாலர் தம்மைத்தாமே வீரபாண்டியன் வாளினால் மாய்த்துக் கொண்டிருப்பார்..."

"ஆம், ஆம்; ஒரு கணம் நான் தாமதித்து வந்திருந்தால் இந்தப் பெரிய துரோகச் செயலைச் செய்திருக்க மாட்டேன். அதற்கு மாறாக, உன் பேரில் சந்தேகப்பட்டிருப்பேன்.நந்தினி! விதிப்படி நடந்துவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. விதி ஒரு விதத்தில் எனக்கும் நல்லது செய்திருக்கிறது. இருவரும் இன்னொரு ஜன்மம் எடுத்தால், நீ என்னையே வாழ்க்கைத் துணைவனாய்க் கொள்ள விரும்புவதாய்க் கூறினாயே? அதைக் காட்டிலும் இனிமையான வார்த்தைகளை என் வாழ்நாளில் நான் கேட்டதில்லை. உன்னிடம் கூடக் கேட்டதில்லை. என் ஆவி பிரியும் நேரத்தில் நான் அந்த வார்த்தைகளைத்தான் நினைத்துக் கொண்டு சாவேன். ஆம், நந்தினி! இந்தப் பிறவியில் இனி நீயும், நானும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது. ஆகையால் நீ போய்விடு! போவதற்கு முன்னால், நான் ஆத்திரத்தினால் கொட்டியது போகக் கஞ்சி மிச்சமிருந்தால் கொடுத்து விட்டுப் போ! கஞ்சி இல்லாவிட்டால், கொஞ்சம் தண்ணீராவது உன் கையினால் கொடுத்து விட்டுப்போ!" என்றார் பழுவேட்டரையர்.

"ஆகட்டும், ஐயா! இவ்வளவு கருணை செய்ததற்கு என் உயிர் உள்ள வரைக்கும் நன்றி செலுத்துவேன்!" என்று நந்தினி கூறிவிட்டு அடுப்பிலிருந்து கஞ்சி எடுத்துவரச் சென்றாள்.

ஆழ்வார்க்கடியான் அந்தச் சமயம் பார்த்துக் குகையிலிருந்து நழுவிச் செல்ல நினைத்தான். தெரிந்து கொள்ள விரும்பியதையெல்லாம் அவன் தெரிந்து கொண்டுவிட்டான். இனி அங்கிருப்பதில் உபயோகம் இல்லை; அபாயமும் உண்டு. இனிமேல் செய்ய வேண்டியதென்ன என்பதைப் பற்றி வெளியிலே போய் யோசித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டே வெளியேறினான்.

பக்க தலைப்பு



நாற்பத்தாறாம் அத்தியாயம்
ஆழ்வானுக்கு ஆபத்து!




ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் மலையடிவாரத்து மரத்தினடியில் உட்கார்ந்தார்கள்.

"பெண்ணே! நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவரே! நீர் வந்த காரியம் ஆகிவிட்டதென்றால் நீர் போகலாம். நான் வந்த காரியம் இன்னும் பூர்த்தி ஆகவில்லை!" என்றாள் பூங்குழலி.

"நீ என்ன காரியத்துக்காக வந்தாய்?"

"என் அத்தையைக் கொன்ற பாதகனைத் தேடிக் கொண்டு வந்தேன்."

"அவனைக் கண்டுபிடிக்கவில்லையா? அதோ அந்தச் சதிகாரரின் கூட்டத்தில் அவன் இல்லையா?"

"இருக்கிறான்!"

"பின்னே என்ன?"

"அவனைத் தரிசனம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டு போவதற்காக வந்தேனா? கொலைக்குக் கொலை, பழிக்குப்பழி வாங்குவதற்காக வந்தேன்."

"பூங்குழலி! குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு நாம் யார்? அதற்குக் கடவுள் இருக்கிறார்!"

"கடவுள் இருக்கிறாரா, இருந்தாலும் மனிதர்களுடைய துரோகச் செயல்களைத் தண்டிக்கிறாரா என்பதுபற்றி எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."

"கடவுளை விட்டுவிடுவோம். இந்த உலகில் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசர்களுடையது. அரசர்கள் நியமிக்கும் அதிகாரிகள் செய்ய வேண்டியது."

"அரசர்களும், அவர்களுடைய அதிகாரிகளும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால்?"

"செய்யவில்லையென்று நாம் எப்படித் தீர்மானிப்பது?"

"வைஷ்ணவரே! அதோ உள்ள பாதகர்களில் ஒருவன், மேல் மாடியிலிருந்து வேலை எறிந்து அன்பே உருவான என் அத்தையைக் கொன்றான். வாயினால் பேசத் தெரியாதவளும் ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாதவளும் வாழ்க்கையெல்லாம் துர்ப்பாக்கியசாலியாக இருந்தவளுமான ஒரு பேதைப் பெண்ணைக் கொன்றான். சக்கரவர்த்தியும் அவருடைய ராணிமார்களும் தஞ்சைக் கோட்டை அதிகாரியான சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவனைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டார்கள்..."

"பூங்குழலி! சோமன் சாம்பவனைப் பிடிப்பதற்கு யாதொரு முயற்சியும் அவர்கள் செய்யவில்லையா?"

"வாழ்நாளெல்லாம் என் அத்தையை நிராகரித்த சக்கரவர்த்தி அப்போது அவளை மடியில் போட்டுக்கொண்டு அழுதார்.மற்றவர்கள் எல்லோரும் திக்பிரமை கொண்டு நின்றார்கள். 'கொலைகாரனைத் தொடர்ந்து நான் போகிறேன்' என்றதும் சின்னப் பழுவேட்டரையரும் எழுந்து வந்தார்.ஆனால் சுரங்கப்பாதையில் அவர் திரும்பிப் போக நேர்ந்தது."

"அது என்ன?"

"சுரங்கப்பாதையில் நானும் அவரும் சென்றபோது இருளில் ஓர் ஓலக்குரல் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் அந்தக் குரல் வந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து அங்கே இருந்தவனைப் பிடித்துக் கொண்டார். 'இதோ கொலைகாரன் அகப்பட்டு விட்டான்!' என்று கூவினார். 'இல்லை, இல்லை! நான் கொலை செய்யவில்லை!' என்று ஒரு குரல் வந்தது. அது யாருடைய குரல் என்பது சின்னப் பழுவேட்டரையருக்குத் தெரிந்ததும் அவர் திகைத்துப் போய், 'ஐயோ! நீ ஏன் இங்கு வந்தீர்?' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ! தெய்வமே! உம்மை இங்கே யாராவது பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்கள்? நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார்கள்?' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா?' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே! என்னுடன் வா! யாரும் பார்ப்பதற்கு முன் வா!' என்று சொல்லிக் காலாந்தக கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா?" என்றாள் பூங்குழலி.

"பெண்ணே! நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். பிறந்திருந்தால் பெரியதொரு சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாக இருந்திருப்பாய். அது போனால் போகட்டும். இதைக் கேள் ஒரு நியாயம் சொல்லு! ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா?"

"உம்முடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை. கொன்றவன் கொலைக்குற்றம் செய்தவன்தானே!"

"அது எப்படிச் சொல்ல முடியும்? இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர் யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா? இல்லை! இப்போது நீ தொடர்ந்து வந்த சோமன் சாம்பவனை எடுத்துக்கொள். அவன் சக்கரவர்த்தியைக் கொல்வதற்காக வேலை எறிந்தான். ஆனால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறார். உன் அத்தை குறுக்கே வந்து வேலைத்தாங்கி உயிரை விட்டாள். அவள் தற்கொலை செய்து கொண்டவள் தானே? பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும்?"

"வைஷ்ணவரே! உம்முடைய நீதி முறை அதிசயமாக இருக்கிறது..."

"என்னுடைய நீதி குறை மட்டும் அல்ல. சர்வலோக நாயகனான சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் நீதி முறையே விசித்திரமாகத்தான் இருக்கிறது. இந்த உலகில் பாவம் செய்கிறவர்கள் செழிப்புடன் இருக்கிறார்கள். நல்லவர்கள் - புண்ணியாத்மாக்கள் - கஷ்டப்பட்டு உயிரை விடுகிறார்கள். இதற்கெல்லாம் கடவுளுடைய நியாயம் ஏதோ இருக்கத்தானே வேண்டும்?"

"நீரும் உம்முடைய நாராயணும் எப்படியாவது போங்கள். எனக்குத் தெரிந்த நியாயத்தை நான் நிறைவேற்றி விட்டுத்தான் வருவேன்."

"பூங்குழலி! உனக்காக மட்டும் நான் இந்தப் பேச்சை எடுக்கவில்லை. அதோ அந்த மலைக்குகையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆதித்த கரிகாலரைக் கொன்றவர். ஆனால் கரிகாலரைக் கொல்லவேணுமென்று நினைத்துக் கொல்லவில்லை. வேறொருவரைக் கொல்ல நினைத்து எறிந்து கத்தி இளவரசரின் பேரில் விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அவரைக் கொலைகாரர் என்று சொல்ல முடியுமா?"

"வைஷ்ணவரே! என் மூளையைக் குழப்ப வேண்டாம். மலைக்குகைக்குள் இருப்பவர்கள் யார்?"

"சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி, தஞ்சை அரண்மனையில் சர்வாதிகாரி, இருபத்தி நான்கு போர்க்களங்களில் போரிட்டு அறுபத்து நாலு விழுப்புண்களைத் தம் திருமேனியில் சுமந்திருக்கும் வீராதி வீரர், இறை விதிக்கும் தேவர், குறுநில மன்னர் குழுவின் மாபெரும் தலைவர், நந்தினி தேவியின் கணவர் - பெரிய பழுவேட்டரையர் அந்த மலைக் குகையில் வீற்றிருக்கிறார்...!"

இவ்வாறு ஆழ்வார்க்கடியான் பெருங்குரலில் கட்டியும் கூறுவதுபோல் கூறினான். அதே சமயத்தில் ரவிதாஸன், ரேவதாஸன், பரமேசுவரன், சோமன் சாம்பவன் முதலியவர்கள் திடு திடுவென்று ஓடி வந்தார்கள். பூங்குழலி சட்டென்று அப்பால் விலகி நின்றாள். ரவிதாஸன் கையில் குறுந்தடி ஒன்று இருந்தது. அதை ஓங்கிய வண்ணம் ரவிதாஷன், "அடே வேஷதாரி வைஷ்ணவனே! அன்பில் அநிருத்தரின் ஒற்றனே! கடைசியில் எங்களிடம் அகப்பட்டுக் கொண்டாயா? நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோமல்லவா? இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது?" என்றான்.

உடனே ஆழ்வார்க்கடியான், முன்னை விட உரத்த குரலில், "அப்பனே! தேடுகிறவன் யார்? தப்பி ஓடுகிறவன் யார்? எல்லாரும் அந்த சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் குமாரர்கள் தான்! அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா? ரவிதாஸா! நீயும் கேள்! உன்னைச் சேர்ந்தவர்களும் கேட்கட்டும். வேறு வேறு சில்லறைத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு சாக்ஷாத் மகா விஷ்ணுவைச் சரணமடையுங்கள்! பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார்! மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள்! பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள்! எங்கே என்னுடன் சேர்ந்து எல்லாரும் பாடுங்கள், பார்க்கலாம்:-
	"நாராயணனே தெய்வம்
	நாமெல்லோரும் துதிசெய்வம்!" 
என்று பாடத் தொடங்கினான்.

ரவிதாஸன் கல கல வென்று சிரித்துவிட்டு, "ஏனப்பா வைஷ்ணவனே! சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா? பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா?" என்றான்.

ஆழ்வார்க்கடியான் உற்சாகத்துடன், "பரமசிவன் அழிக்கும் தெய்வம். நாராயணன்தான் காக்கும் தெய்வம்! அன்று முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு தவித்த கஜராஜனை எங்கள் நாராயணமூர்த்தி காப்பாற்றியதை மறந்து விட்டீர்களா?" என்றான்.

"அப்பனே! கஜராஜனைக் காப்பாற்றிய விஷ்ணு பகவான் முதலையைக் கொல்லத்தானே செய்தார்? அது போலவே இராவணன், கும்பகர்ணன், இரணியாட்சன், இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா?" என்றான் ரவிதாஷன்.

"எங்கள் பெருமாளின் கையால் வதையுண்டவர்களும் சாக்ஷாத் ஸ்ரீவைகுண்டத்தை அடைவார்கள். இரணியனையும், இராவணனையும், சிசுபாலனையும் கொன்ற பிறகு அவர்களுக்குப் பகவான் வைகுண்ட பதவியை அளித்தார். உங்கள் பரமசிவனோ திரிபுரர்களை ஒரேடியாக நெற்றிக் கண்ணால் எரித்து அழித்துப் போட்டார். அவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்தாரா?"

"சரி, சரி! உன் கதையை நிறுத்து! உன்னுடைய நாராயணன இப்போது உன்னை வந்து காப்பாற்றட்டும்!" என்று சொல்லிக் கொண்டே ரவிதாஷன் தன் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான்.


அந்தச் சமயம் பூங்குழலி ஆழ்வார்க்கடியானுக்கு உதவி செய்ய விரும்பி இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தாள். அதே நேரத்தில் மலைக்குகையிலிருந்து தலைவிரி கோலமாக ஒரு பெண்ணுருவம் ஓடி வருவதைப் பார்த்தாள். ஒரு கணநேரம் அவளைத் தன் அத்தை மந்தாகினி என்று எண்ணிப் பிரமித்து நின்றாள். பின்னர், 'இல்லை, இவள் பழுவூர் ராணி நந்தினி' என்று தெளிந்தாள்.

இதற்குள் நந்தினி ஆழ்வார்க்கடியான் அருகில் வந்து விட்டாள். ரவிதாஸனுடைய ஓங்கிய கைதடியைத் தன் கரங்களினால் தடுத்து நிறுத்தினாள்.

"வேண்டாம்! என் சகோதரனை ஒன்றும் செய்யாதீர்கள்! ரவிதாஸா! நான் உங்கள் ராணி என்பது உண்மையானால் தடியைக் கீழே போடு!" என்றாள்.

ஆழ்வார்க்கடியான் அப்போது, "சகோதரி உனக்கு நன்றி. ஆனால் இவர்களால் எனக்கு எந்தவிதத் தீங்கும் செய்திருக்க முடியாது. நான் வணங்கும் தெய்வமாகிய நாராயணமூர்த்தி என்னைக் காப்பாற்றியிருப்பார்!"என்றான்.

ரவிதாஸன் சிரித்துவிட்டு, "எப்படிக் காப்பாற்றியிருப்பார்? அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா?" என்றான்.

"மந்திரவாதி! என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நல்லது! அதோபார்! சற்றுத் தூரத்தில் தெரியும் அய்யனார் கோவிலைப் பார்! அந்தக் கோவிலுக்கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா? ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும்! அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள்!"

ஆழ்வார்க்கடியான் மேற்கண்டவாறு சொல்லிக் கொண்டே கையினால் சுட்டிக்காட்டிய திக்கை அனைவரும் நோக்கினார்கள். தங்கள் கண்களை நம்பமுடியாமல் திண்டாடிப் போனார்கள்! ஏனெனில் அந்த மண் குதிரை உண்மையாகவே உயிர் பெற்று அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்ததாக அவர்களுக்குத் தோன்றியது. ஒவ்வொரு குதிரையின் பேரிலும் வேல் பிடித்த வீரன் ஒருவன் உட்கார்ந்திருந்தான்!

பக்க தலைப்பு



நாற்பத்தேழாம் அத்தியாயம்
நந்தினியின் மறைவு !




ஓடி வந்த குதிரைகளைப் பார்த்து வியந்தவர்களில் முதலிய சுய உணர்வு பெற்றவன் ரவிதாஸன்தான்.

"தேவி! இந்தப் போலி வைஜ்ணவன் தன் வேலைத் தனத்தைக் காண்பித்துவிட்டான். 'இவன் ஒற்றன், இவனை நம்ப வேண்டாம்!' என்று எத்தனையோ தடவை தங்களுக்கு நான் எச்சரித்திருக்கிறேன். நம்மைப் பிடிப்பதற்கு இவன் தன் ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் இவனால் நம்மைப் பிடிக்க முடியாது. இவனுடைய தெய்வமாகிய நாராயணனே வந்தாலும் முடியாது. வாருங்கள், போகலாம். குதிரைகள் வருவதற்குள் மலை மேல் ஏறிவிடலாம்!" என்றான் மந்திரவாதி.

ஆழ்வார்க்கடியான், "நந்தினி! இந்தப் பாதகர்களுடன் நீ போகாதே! இவர்களுடன் நீ சேர்ந்ததினால் நேர்ந்த விபத்துக்கள் எல்லாம் போதும்!" என்றான்.

நந்தினி ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! நான் வெகு நாளாக ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அது நினைவு இருக்கிறதா? என் அன்னையிடம் அழைத்துப் போகும்படி உன்னை வேண்டிக் கொண்டிருந்தேன். இப்போதாவது என்னை நீ என் தாயிடம் அழைத்துப் போவதாக வாக்களித்தால் உன்னுடன் வருகிறேன். இல்லாவிடில் இவர்களுடன் போகிறேன்" என்றாள்.

"நந்தினி! இனி என்னால் அது இயலாத காரியம்...!" என்று திருமலை சொல்வதற்குள் ரவிதாஸன் குறுக்கிட்டு, "இவன் என்ன அழைத்துப் போவது? நான் அழைத்துப் போகிறேன், வாருங்கள்!" என்றான்.

"ஆமாம்; ஆமாம்; இவன் உன்னை உன் அன்னையிடம் யமலோகத்துக்கு அழைத்துப் போவான்! உன் அன்னையைக் கொன்றது போல் உன்னையும் கொன்று யமலோகத்துக்கு அனுப்பி வைப்பான்! நந்தினி! இந்தப் பாதகர்களுடைய சகவாசம் இனியும் உனக்கு வேண்டாம். இவர்களில் ஒருவன் உன் தாயைக் கொன்றவன்! மந்திரவாதியின் முகத்தைப் பார்! கொலைக்காரன் என்று எழுதியிருக்கிறது!" என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.

ரவிதாஸன் முகத்தில் கொந்தளித்த கோபத்துடன், "பொய்! பொய்!" என்று கத்தினான்.

சற்றுமுன் சாந்தம் குடிகொண்டிருந்த நந்தினியின் கண்களின் வெறியின் அறிகுறி காணப்பட்டது. "திருமலை! இது உண்மையா? என் அன்னை உண்மையிலேயே இறந்துவிட்டாளா? அவளை இனி நான் பார்க்க முடியாதா?" என்றாள்.

"சந்தேகமிருந்தால் இதோ இந்தப் பெண்ணைக் கேட்டுத் தெரிந்துகொள். இவர்களில் ஒருவனான சோமன் சாம்பவன் தான் வேல் எறிந்து உன் அன்னையைக் கொன்றவன். இவள் நேரில் பார்த்தாள். அத்தையைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து வந்தாள்! பூங்குழலி! சொல்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆமாம்! நானே என் கண்ணால் பார்த்தேனே! என் அத்தையைக் கொன்றவனைப் பழி வாங்கவே இங்கு வந்தேன்!" என்றாள் பூங்குழலி.

நந்தினி பைத்தியம் பிடித்தவள்போல் வெறி கொண்ட சிரிப்புச் சிரித்தாள். "பழி வாங்க வந்தாயா? பழி! பழி! நான் ஒருத்தி பழி வாங்கிய இலட்சணம் போதாதா?" என்று சொல்லி விட்டு ரவிதாஸனைப் பார்த்து, "துரோகி! சண்டாளா! இப்படியா செய்தாய்?" என்றாள்.

"ராணி! நீ நினைப்பது தவறு! நான் ஒரு துரோகமும் செய்யவில்லை! சோமன் சாம்பவன் சக்கரவர்த்தியின் மீது வேலை எறிந்தான். அந்த ஊமைப் பைத்தியக்காரி குறுக்கே விழுந்து செத்தாள்! அவள் தலைவிதி! இப்போது நீ என்ன சொல்கிறாய்? எங்களுடன் வரப் போகிறாயா, இல்லையா? அதோ, குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன!" என்றான்.

அவனுடைய வார்த்தைகளை நந்தினி காதில் வாங்கி கொண்டதாகத் தோன்றவில்லை. திடீரென்று கீழே உட்கார்ந்து கொண்டாள். இரண்டு கண்களையும் இரண்டு கரங்களால் பொத்திக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் குலுங்கும்படி விம்மி அழுதாள். அழுகையுடன் வெறிச் சிரிப்பும் கலந்து வந்தது.

ரவிதாஸன் தன் ஆட்களைப் பார்த்து, "ஓடுங்கள்! ஓடிப் போய் மலையேறிக் கொள்ளுங்கள்! இனி ராணியை நம்புவதில் பயனில்லை" என்றான்.

எல்லோரும் ஓடினார்கள்.

ரவிதாஸன், "வைஷ்ணவனே! இந்தா உன் விஷமத்துக்குக் கூலி!" என்று சொல்லிக் கையிலிருந்த தடியினால் வைஜ்ணவனின் தலையில் ஒரு அடி போட்டு விட்டு ஓட்டம் எடுத்தான்.

ஆழ்வார்க்கடியான், "நமோ நாராயணா!" என்று சொல்லித் தலையை ஒரு முறை தடவிக் கொண்டான்.

ஓடியவர்கள் எல்லாரும் மலைக் குகைக்குள் நுழைந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் குகைக்கு மேலே குன்றின் உச்சியில் கானாரி ஆறு அருவியாக மாறி விழும் இடத்தின் அருகே நின்றார்கள்.


அதே சமயத்தில் குதிரைகள் மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தன. சரியான வழியில்லாமல் பெரிய பெரிய பாறைக் கற்கள் எங்கும் பரவிக் கிடந்தபடியால் குதிரைகள் வந்து சேர்வதற்கு இத்தனை நேரம் பிடித்தது.

குதிரைகள் மீது வந்தவர்களில் முன்னால் வந்தவர்கள் சின்னப் பழுவேட்டரையரும் கந்தமாறனுந்தான் என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டான். அவர்களுக்குப் பின்னால் சேந்தன் அமுதன் ஒரு குதிரையின் மீது கயிற்றினால் சேர்த்துக் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தான்.

"வாருங்கள்! வாருங்கள்! நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர்கள்!" என்றான்.

சின்னப் பழுவேட்டரையரும் கந்தமாறனும் குதிரைகளின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கீழே உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்த நந்தினியின் பேரில் முதலில் அவர்கள் கவனம் சென்றது.

கந்தமாறன் நந்தினியின் அருகில் சென்றான். ஏதோ சொல்லப் பிரயத்தனப்பட்டான். ஆனால் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "வைஷ்ணவனே! நீ எப்படி இங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டார்.

"தளபதி! தாங்கள் யாரைத் தேடிக் கொண்டு வந்தீர்களோ, அவரைத் தேடிக் கொண்டு தான் நானும் வந்தேன். பெரிய பழுவேட்டரையர் அதோ அந்தக் குகைக்குள் இருக்கிறார்!" என்றான்.

"நிஜமாகவா? உயிரோடு இருக்கிறாரா?" என்று சின்னப் பழுவேட்டரையர் ஆவலோடு கேட்டார்.

"ஆமாம்; இன்னும் உயிரோடு இருக்கிறார். தங்கள் தமையனாரிடம் அணுகுவதற்கு யமனும் பயப்படுவான் அல்லவா? ஆகையால் அதோ அந்தக் கொலைக்காரர்கள் செய்த முயற்சி தங்கள் தமையனார் விஷயத்தில் பலிக்கவில்லை!" என்று சொல்லிவிட்டுத் திருமலை குன்றின் உச்சியில் நின்ற ரவிதாஸன் முதலியவர்களைச் சுட்டிக் காட்டினான்.

"அவர்கள் யார்? ஏன் அவர்களைக் கொலைக்காரர்கள் என்று சொல்கிறாய்?"

"அவர்கள் தான் மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டத்தாரும். வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்கள். சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றவர்கள் அவர்கள்தான். இளவரசர் ஆதித்த கரிகாலரைக் கொன்ற பாவிகளும் அவர்களேதான்!" என்றான் திருமலை.

கந்தமாறன் குறுக்கிட்டு, "பொய்! பொய்! இளவரசரைக் கொன்றவன் வந்தியத்தேவன்! உன் சிநேகிதன் செய்த குற்றத்தை மறைக்கப் பார்க்கிறாயா?" என்றான்.

"முட்டாளே! சும்மா இரு!!" என்று சின்னப் பழுவேட்டரையர் அவனை அதட்டினார்.பின்னர் வைணவனைப் பார்த்து, "தனாதிகாரியையும் அவர்கள் கொல்லப் பார்த்தார்களா? எப்படித் தப்பினார்?" என்று கேட்டார்.

"இதோ உட்கார்ந்து விம்மிக் கொண்டிருக்கும் பழுவூர் இளைய ராணியின் உதவியினால் தான் தப்பினார்!"

"ஏன் இளைய ராணி அழுது கொண்டிருக்கிறாள்?"

"அவருடைய அன்னை இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்டார். அதனால் அழுகிறார்! இதெல்லாம் பிறகு விசாரித்துக் கொள்ளக்கூடாதா?"

"ஆம், ஆம்! பெரிய பழுவேட்டரையரை முதலில் பார்க்க வேண்டும். நீ போய் நான் வந்திருப்பதைச் சொல்லு!"


சின்னப் பழுவேட்டரையருக்குத் தம் தமையனாரிடம் உள்ள பயபக்தி அச்சமயம் கூடச் சிறிதும் குன்றவில்லை. ஆகையால் திடீரென்று தமையனாரைப் போய்ப் பார்க்க அவர் தயங்கினார்.

"ஐயா! தங்கள் தமையனார் இனி எங்கும் போய்விடமாட்டார். நான் போய்த் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லுகிறேன். அதோ அந்தக் கொலைக்காரர்களைப் பிடிக்கத் தாங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா?"

சின்னப் பழுவேட்டரையர் தம் நெற்றியைக் கையினால் அழுத்திக் கொண்டு "ஆம்! ஆம்! முன்னொரு சமயம் இப்படித் தான் என் புத்தி தவறிவிட்டது! சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றவனைத் தப்பி ஓடும்படி விட்டேன்!" என்றார்.

"அவனும் தப்பிவிடவில்லை. அதோ அந்தக் குன்றின் மேலே தான் இருக்கிறான். உங்கள் ஆட்களுக்குச் சீக்கிரம் கட்டளையிடுங்கள்!"

உடனே தளபதி காலாந்தகக்கண்டர் தம்முடன் வந்த வீரர்களைப் பார்த்துக் கட்டளை பிறப்பித்தார். அவர்கள் குதிரைகள் மீதிருந்து இறங்கிக் கானாரி நதி குன்றின் மீதிருந்து அருவியாக விழும் இடத்துக்கு அருகாமையில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே சேர்ந்ததும் மேலிருந்து பெரிய பெரிய உருண்டைக் கற்கள் கீழே விழ ஆரம்பித்தன. வீரர்கள் அந்தக் கற்கள் தங்கள் தலையில் விழாமல் தப்புவதற்காக அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்தார்கள். இரண்டொருவர் அக்கற்களினால் தாக்குண்டு கீழே விழுந்தார்கள்.

சின்னப் பழுவேட்டரையர், "அவர்கள் எப்படி மேலே ஏறினார்கள் தெரியுமா?" என்று கேட்டார்.

"குகைக்குள் புகுந்து ஏறினார்கள். குகையில் இரகசிய வழி இருப்பதாகத் தோன்றுகிறது. வாருங்கள், போய்ப் பார்க்கலாம்!" என்று ஆழ்வார்க்கடியான் முதலில் சென்றான். காலாந்தககண்டரும் கந்தமாறனும் பின் தொடர்ந்தார்கள்.


குகைக்குள்ளேயிருந்து ஒரு நெடிய கம்பீரமான உருவம் தட்டுத்தடுமாறித் தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தது. குகை வாசலில் நின்று நெருங்கி வருகிறவர்களை உற்றுப் பார்த்தது. தமையனாரை அடையாளம் கண்டு கொள்ளத் தம்பிக்குச் சிறிது நேரம் பிடித்தது.

உடம்பெல்லாம் காயங்களுடன் முகம் வெளுத்துப் பிரேதக் களைபெற்று நின்ற பெரிய பழுவேட்டரையரை அடையாளம் தெரிந்ததும், சின்னப் பழுவேட்டரையர், "அண்ணா!" என்று அலறிக் கொண்டு போய்ப் பெரிய பழுவேட்டரையரைக் கட்டிக் கொண்டார்.

அண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவருடைய வாய், "தம்பி! நீ பலமுறை எச்சரிக்கை செய்தாய்! அதைப் பொருட்படுத்தாமல் மோசம் போனேன்!" என்று தழுதழுத்த மெல்லிய குரலில் முணுமுணுத்தது. அச்சமயம் ஆழ்வார்க்கடியானும் கந்தமாறனும் குகைக்குள் பிரவேசிக்க யத்தனித்தார்கள்.

பெரிய பழுவேட்டரையர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார்.

"கொலைக்காரர்கள் இந்தக் குகைக்குள்ளே புகுந்தார்கள்..."

"எந்தக் கொலைக்காரர்கள்?"

"மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளும்."

"அவர்கள் கொலைகாரர்கள் அல்ல" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

"பார்த்தீர்களா? வந்தியத்தேவன்தான் கொலைகாரன் என்று நான் சொல்லவில்லையா?" என்றான் கந்தமாறன்.

பெரிய பழுவேட்டரையர் அவனை உற்றுப் பார்த்துவிட்டு "இந்த முட்டாள் வாலிபன் எப்படி இங்கே வந்து சேர்ந்தான்?" என்றார்.

"கந்தமாறன் தான் கடம்பூரிலிருந்து செய்தி கொண்டு வந்தான்."

"என்ன செய்தி?"

"இளவரசர் கரிகாலர் இறந்து விட்ட செய்தியைக் கொண்டு வந்தான். நம்முடைய பலத்தை உடனே திரட்டிச் சேர்த்து மதுராந்தகரைச் சிம்மாசனம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சம்புவரையர் இவன் மூலமாகச் செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்!"

"ஆகா! அப்படியா!" என்று பெரிய பழுவேட்டரையர் சிறிதும் உற்சாகமின்றிக் கூறினார்.

பிறகு, "தஞ்சாவூரில் நிலைமை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

"அண்ணா! விவரமாகக் கூற வேண்டும். தாங்கள் மிக்க பலவீனமாக இருக்கிறீர்கள். தயவுசெய்து உட்கார்ந்து கொண்டு பேசலாமா?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.


தனாதிகாரி குகையின் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டார்.

"ஐயா! சற்று இடம் கொடுத்தால் குகைக்குள்ளே போய்க் குன்றின் மேல் ஏற வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்" என்றான் வைஷ்ணவன்.

"எதற்காக?" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

"ரவிதாஸன் கூட்டத்தார் இந்தக் குகையில் புகுந்துதான் குன்றின் மேலே ஏறினார்கள்" என்றான் திருமலை.

பெரிய பழுவேட்டரையர் தலையை அசைத்துவிட்டு "குகைக்குள் போவதில் உபயோகமில்லை, அப்பனே! அவர்கள் மேலேயிருந்து பாறையைப் புரட்டித் தள்ளிக் குகை வழியையும் அடைத்து விட்டார்கள். பாறை என் மேல் விழுவதற்கிருந்தது. என் உயிர் தப்பியதே தெய்வச் செயல்தான்! போங்கள்! நீங்கள் இருவரும் போங்கள்! மலை மேல் ஏறுவதற்கு வேறு வழி இருக்கிறதா, பாருங்கள்!" என்றார்.

ஆழ்வார்க்கடியானும் கந்தமாறனும் அப்பால் சென்ற போது பெரிய பழுவேட்டரையருடைய பார்வை சேந்தன் அமுதன், பூங்குழலி இவர்கள் பேரில் விழுந்தது.

"அவர்கள் யார்? எங்கு வந்தார்கள்?" என்று கேட்டார்.

"அந்தப் பெண் கோடிக்கரைத் தியாக விடங்கரின் மகள் பூங்குழலி. அவள் தன் அத்தையைக் கொன்றவனைத் தேடிக் கொண்டு வந்தாள். அவளைத் தேடிக் கொண்டு சேந்தன் அமுதன் வந்தான். சேந்தன் அமுதன் வழி காட்டித்தான் நாங்கள் இங்கு வந்து தங்களைக் கண்டுபிடித்தோம்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

தஞ்சாவூரில் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்!" என்றார் பெரிய பழுவேட்டரையர். சின்னப் பழுவேட்டரையர் அவ்வாறே சொல்லலுற்றார். மந்திரவாதிக் கூட்டத்தில் ஒருவன் பொக்கிஷ நிலவறையில் ஒளிந்திருந்து சக்கரவர்த்தியைக் கொல்லுவதற்காகச் சமயம் பார்த்திருந்து வேலை எரிந்ததையும் சக்கரவர்த்தியைக் காப்பாற்றுவதற்காக மந்தாகினி தேவி இடையில் புகுந்து உயிரை விட்டதையும் சொன்னார். பிறகு அவர் தொடர்ந்து கூறியதாவது:

"அண்ணா! இதற்கிடையில் கொடும்பாளூர் வேளான் பெரிய சைன்யத்துடன் திடீர் என்று தஞ்சாவூர்க் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கினார். தாங்கள் இல்லாதபடியால் வேளானுடன் போர் தொடங்குவதா, இல்லையா என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை. சக்கரவர்த்தியை யோசனை கேட்கவும் முடியவில்லை. முதன்மந்திரி அநிருத்தர் கோட்டைக்குள்ளே தான் இருக்கிறார். அவர் தாங்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் அதுவரை கோட்டையைப் பாதுகாத்தால் போதும் என்றும் கூறினார். நல்லவேளையாக இச்சமயத்தில் இளவரசர் அருள்மொழிவர்மரும் கொடும்பாளூர் வேளாருடைய மகள் வானதியும் கோட்டைக்குள் வந்து சேர்ந்தார்கள். இளவரசர் யானைப் பாகன் வேடத்தில் வந்தார். வானதி பழையாறை இளைய பிராட்டியிடமிருந்து அவசரச் செய்தி கொண்டு வந்திருப்பதாகக் கூறினாள். வேளானுடைய மகள் கோட்டைக்குள்ளே இருப்பது நமக்கு அனுகூலந்தானே என்று நினைத்து அவன் ஏறி வந்த யானையை உள்ளே விட்டேன். சக்கரவர்த்தியின் அரண்மனை வாயிலிலே யானைப்பாகன் தான் இளவரசர் அருள்மொழிவர்மர் என்று தெரிந்தது. நான் கொஞ்சம் மிரண்டுதான் போய் விட்டேன். அண்ணா! சின்ன இளவரசரிடம் ஏதோ அதிசய சக்தி இருக்கத்தான் செய்கிறது. அவர் திருமுகத்தைப் பார்த்ததும் எனக்கே கை கால் வெலவெலத்து விட்டது. நெஞ்சம் இளகிவிட்டது. என்னை அறியாமல் என் கைகள் கூப்பிக் கொண்டன. அவரை வணங்கி வரவேற்க வேண்டியதாகி விட்டது. சோழ நாட்டு மக்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் என்றால் தலை கால் தெரியாமல் கூத்தாடுவதில் வியப்பில்லைதானே?..."

"போதும் போதும்! அதுதான் தெரிந்திருக்கிறதே! அருள்மொழிவர்மன் கடலில் முழுகி இறந்தான் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று நான் எண்ணியதும் சரியாய்ப் போய்விட்டது. அப்புறம் நடந்ததைச் சொல்லு! இளவரசர் எதற்காக யானைப்பாகன் போல வேஷம் பூண்டு கோட்டைக்குள் வந்தார்?" என்று பழுவேட்டரையர் கேட்டார்.

"இளவரசர் என்று தெரிந்தால் கொடும்பாளூர் வேளான் அவரைத் தடுத்து நிறுத்திக் கொள்வான். கோட்டைக்குள் போக விட மாட்டான். வேளானுடைய படை வீரர்களும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எண்ணி அவ்வாறு மாறுவேடம் பூண்டு வந்தாராம். அந்த வரையில் இளவரசரைப் பாராட்டத்தான் வேண்டும். இளவரசர் சக்கரவர்த்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேதான் மேலேயிருந்து கொலைகாரன் வேல் எறிந்தான். தெய்வாதீனமாக அது அந்த ஊமைப் பைத்தியத்தின் பேரில் விழுந்து அவள் இறந்தாள். சக்கரவர்த்தியின் பேரில் விழுந்து அவர் இறந்திருந்தால் நம்முடைய குலத்துக்கு என்றும் அழியாத களங்கம் ஏற்பட்டிருக்கும்..."


பெரிய பழுவேட்டரையர் தமது வாய்க்குள்ளே "இப்போது களங்கம் ஏற்படவில்லையா என்ன? தீராத களங்கம் ஏற்பட்டுத் தான் விட்டது!" என்று முணுமுணுத்தார்.

"அண்ணா! என்ன சொன்னீர்கள்?" என்று காலாந்தககண்டர் கேட்டார்.

"ஒன்றுமில்லை. மேலே நடந்ததைச் சொல்லு!" என்றார் தனாதிகாரி.

"அப்புறம் ஒரு பெரிய அற்புதம் நடந்தது. வெகு காலமாக நடமாட முடியாமலிருந்த சக்கரவர்த்திக்கு திடீரென்று கால்களில் சக்தி உண்டாகிவிட்டது. ஓடிப்போய் அந்த ஊமையை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு புலம்ப ஆரம்பித்தார். சிறிது நேரம் நாங்கள் எல்லாரும் அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்து நின்று கொண்டிருந்தோம். பூங்குழலி என்னும் இந்த ஓடக்காரப் பெண்தான் 'கொலைகாரனைப் பிடிக்கப் போகிறேன்' என்று கூவிக் கொண்டு ஓடினாள். அவள் நன்றாயிருக்க வேண்டும். அவள் மூலமாகத்தான் இன்று தங்களை இந்த கோலத்திலாவது பார்க்கும் பாக்கியம் கிடைத்தது..."

பெரிய பழுவேட்டரையர் கண்களில் நீர் ததும்ப, "தம்பி! புராண இதிகாசங்களில் தமையனிடம் பக்தியுள்ள தம்பிகளைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் உன்னைப் போல் பக்தியுள்ள சகோதரன் அவர்களில் யாரும் இருக்க முடியாது. போகட்டும்; அப்புறம் நடந்ததைச் சொல்!" என்றார்.

"பூங்குழலியைப் பின்பற்றி நானும் பொக்கிஷ நிலவறையிலுள்ள சுரங்கப்பாதையில் சென்றேன். அங்கே இருட்டில் ஒருவனைக் கைப்பற்றினேன். அவன்தான் கொலைகாரனாயிருக்க வேண்டும் என்று நினைத்தேன். குரலைக் கேட்டதும் மதுராந்தகத் தேவன் என்று தெரிந்தது."

"அவன் எதற்காக நிலவறைப் பாதையில் வந்தானாம்?"

"அது எனக்கும் தெரியவில்லை. கேட்டதற்குச் சரியான மறுமொழியும் சொல்லவில்லை. கொலைகாரன் அவன்தான் என்ற சந்தேகம் யாருக்காவது உண்டாகிவிடப் போகிறதே என்று எனக்குப் பயமாயிருந்தது..."

"ஒருவேளை உண்மை அதுதானோ, என்னமோ?'

"இல்லை, அண்ணா, இல்லை! அந்தச் சாதுப்பிள்ளை அவ்வளவு தூரத்துக்குப் போகக் கூடியவனல்ல. மேலும், வேலை எறிந்து விட்டு ஓடியவனை நானே கண்ணால் பார்த்திருந்தேன். மதுராந்தகன் பொக்கிஷ நிலவறையிலிருந்து வருவதற்கு இலேசில் சம்மதிக்கவில்லை. அவனை மெதுவாகச் சரிப்படுத்தி அரண்மனையில் கொண்டு போய் சேர்த்து விட்டுக் காவலும் போட்டுவிட்டு மறுபடியும் பொக்கிஷ நிலவறைக்குப் போக எண்ணினேன். அதற்குள் வேறு பெரிய சம்பவங்கள் நடந்து விட்டன. 'சக்கரவர்த்தி இறந்து விட்டார்' என்றும், யாரோ அவரைக் கொன்று விட்டார்கள் என்றும் வெளியிலே வதந்தி பரவிவிட்டது. உடனே கொடும்பாளூர் வேளார் அவருடைய படை வீரர்களைக் கோட்டையைத் தாக்கும்படிக் கட்டளையிட்டு விட்டாராம். வேளிர் படையுடன் கைக்கோளர் படையும் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. நமது வீரர்கள் அச்சமயம் ஆயத்தமாக இல்லை. அவர்களுக்குக் கட்டளையிட நானும் கோட்டை வாசலில் இல்லை. ஆகையால் வேளிர் படை, கைக்கோளர் படை வீரர்கள் கோட்டைக் கதவுகளை உடைத்துக் கொண்டும் சுவர்களில் ஏறிக் குதித்தும் உள்ளே வரத் தொடங்கி விட்டனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நான் கோட்டை வாசல் போய் சேர்வதற்குள் பதினாயிரம் வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிட்டார்கள். நம்முடைய வீரர்கள் சுமார் இரண்டாயிரம் பேர்தான். அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களோடு தீரத்தோடு போரிட்டார்கள். நான் போய்க் கட்டளையிட்டுச் சண்டையை நிறுத்தினேன். நமது வீரர்களையெல்லாம் ஒரே இடத்தில் சேர்த்துக்கொண்டேன். இனி கோட்டைக்குள் இருப்பதில் பயனில்லை என்று முடிவு செய்து கொண்டு நமது வீரர்களுடன் வெளிக் கிளம்பினேன். வேளிர், கைக்கோளர் படைகள் எங்களைத் தடுத்து நிறுத்தப் பார்த்தன. தடுத்தவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி அதாஹதம் செய்து கொண்டு வந்து விட்டோம். 'பழுவூர்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காவது மதுராந்தகத் தேவருக்காவது ஒரு சிறிய கெடுதல் நேர்ந்தாலும் கொடும்பாளூர் வம்சத்தைப் பூண்டோடு அழித்து விடுவேன்' என்று பூதி விக்கிரம கேசரிக்கு செய்தி அனுப்பினேன். பிறகு தாங்கள் கடம்பூரில் இருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டு தங்களைச் சேர்வதற்காக விரைந்து வந்தேன். எதிரில் குடமுருட்டி ஆற்றின் கரையில் கந்தமாறன் குதிரை மேல் ஏறிப் பறந்து விழுந்து கொண்டு வந்தான். பழுவூர்ப் பனை கொடியைக் கண்டதும் நின்றான். அவன் கொண்டு வந்த செய்தி என்னை மேலும் திகைக்கும்படி செய்தது.தாங்கள் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குக் கிளம்பி சில நாட்கள் ஆயினவென்றும், தங்களுக்குப் பெரிய சம்புவரையர் செய்தி அனுப்பியிருப்பதாகவும் கூறினான். தாங்கள் தஞ்சைக்கு வந்து சேரவே இல்லையென்று தெரிந்ததும் அவனும் திகைத்துப் போய்விட்டான். பிறகு சம்புவரையர் என்னதான் செய்தி சொல்லி அனுப்பினார் என்று கேட்டேன். இளவரசர் கரிகாலர் இறந்து விட்டார் என்றும், அவரை வந்தியத்தேவன் கொன்றுவிட்டான் என்றும், ஆகையால் மதுராந்தகத்தேவரைச் சிம்மாசனத்தில் அமர்த்த இது தான் தக்க சமயம் என்றும், அதற்கு வேண்டிய முயற்சிகளை உடனே செய்ய வேண்டும் என்றும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஓலை அனுப்பிப் படை திரட்ட வேண்டும் என்றும் பெரிய சம்புவரையர் சொல்லி அனுப்பினாராம். இது எனக்குச் சரியாகப்பட்டது. தாங்களும் நமது பலத்தைத் திரட்டும் வேலையில் தான் ஈடுபட்டிருப்பீர்களென்றும் சீக்கிரத்தில் வந்து விடுவீர்கள் என்றும் நம்பினேன். நமது பழுவூர்ப் படைகளை மண்ணியாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் திருப்புறம்பயம் மேட்டில் கொண்டு போய் நிறுத்தினேன். உடனே ஓலைகள் எழுதச் சொல்லி, மழபாடித் தென்னவன், மழவராயர், குன்றத்தூர்க் கிழார், மும்முடிப் பல்லவராயர், தானதொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையதரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை இராஜாளியர் ஆகியவர்களுக்கெல்லாம் குதிரைத் தூதுவர்களை விரைந்து போகும்படி அனுப்பினேன். அவர்கள் எல்லாரையும் படைகளைத் திரட்டிக் கொண்டு திரும்புறம்பயத்துக்குக் கூடிய சீக்கிரம் வந்து சேரும்படி எழுதியிருக்கிறேன். அண்ணா! தங்களுக்கு சிறிதும் கவலை வேண்டாம்! கொடும்பாளூர் வேளானையும், திருக்கோவலூர் மலையமானையும் மறுபடியும் தலை எடுக்க முடியாதபடி அழித்துப் போட்டு விடுவோம். மதுராந்தகத்தேவரையும் சிங்காதனத்தில் ஏற்றி வைத்துவிடுவோம்!" என்று சின்னப் பழுவேட்டரையர் உற்சாகம் ததும்ப வீர கர்ஜனை புரிந்தார்.

ஆனால் அவருடைய வார்த்தைகள் பெரிய பழுவேட்டரையருக்குச் சிறிதும் உற்சாகம் அளித்ததாகத் தெரியவில்லை. அவருடைய கவனம் திடீரென்று வேறு பக்கம் திரும்பியது.

"தம்பி! அது யார்? முகத்தில் கையை வைத்துக் கொண்டு விம்மி அழுது கொண்டிருப்பது யார்?" என்று கேட்டார்.

"அண்ணா! தெரியவில்லையா? அவர்தான் இளைய ராணி! பாவம்! தங்களைக் காப்பாற்ற முயன்றதில் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருக்கிறார் போலும்! அவரைப்பற்றி நான் குறை கூறியதையெல்லாம் மன்னித்து விடுங்கள், அண்ணா! மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளும் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றும், இளைய ராணிதான் தங்களைத் தொடர்ந்து வந்து காப்பாற்றினார் என்றும் அறிகிறேன். அது உண்மைதானே?" என்றார் காலாந்தகக்கண்டர்.

பெரிய பழுவேட்டரையர், "ஆம்! ஆம்! இளைய ராணி தான் என் உயிரை காப்பாற்றினாள். நந்தினி பணிவிடை செய்திராவிட்டால் என்னை நீ உயிரோடு பார்த்திருக்க மாட்டாய். உலகத்துக்கு உண்மை தெரியாமலே போயிருக்கும்!" என்று கூறினார்.

"இளைய ராணியின் ஒப்பற்ற பெருங்குணம் எனக்கே தெரியாமல் போய்விட்டதே! உலகத்துக்கு எப்படித் தெரியும்?" என்றார் காலாந்தகக்கண்டர்.

பெரிய பழுவேட்டரையர் அதைக் கவனியாமல், "நந்தினி இன்னும் இங்கிருந்து போகவில்லையா? குகைப் படிகள் வழியாக ஏறிச் சென்றவர்களோடு அவளும் போயிருப்பாள் என்றல்லவா நினைத்தேன்?" என்றார்.

"தங்களை விட்டுவிட்டு இளைய ராணி எப்படிப் போவார், அண்ணா!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"அது போகட்டும்! நீங்கள் இந்த இடத்துக்கு நாங்கள் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடித்து வந்தீர்கள்?" என்று பெரியவர் கேட்டார்.

"திருப்புறம்பயம் பள்ளிப்படையருகில் நாங்கள் தங்கியிருந்தோம். கந்தமாறன் கொள்ளிடக் கரையோரமாகக் காவல் புரிந்து கொண்டிருந்தான். அங்கே சேந்தன் அமுதன் படகில் ஏற முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்தான். சேந்தன் அமுதன் முன்னொரு தடவை வந்தியத்தேவன் தப்ப உதவி செய்ததற்காக அவனைச் சில காலம் நான் சிறையில் வைத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கும். அவன் பேரில் கந்தமாறனுக்கு ஏற்கெனவே ரொம்பக் கோபம்.இப்போதும் ஏதோ ஒற்றன் வேலை செய்கிறான் என்று சந்தேகித்துப் பிடித்துக் கொண்டு வந்தான். அவனிடம் விசாரித்தபோது தங்களைப் பற்றித் தெரிந்தது. அவனுடைய மாமன் மகள் பூங்குழலி யாரோ கொலைகாரனைத் தொடர்ந்து தனியே சென்றதைக் கேள்விப்பட்டு இவன் அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டானாம். பூங்குழலி அவனைத் தன்னுடன் வரக்கூடாது என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாளாம். ஆயினும் இவன் அவள் அறியாமல் பின்னோடு தொடர்ந்து போனானாம். அப்போது திருப்புறம்பயம் பள்ளிப்படைக்கருகில் சதிகாரர்கள் சிலர் சேர்ந்து பேசுவதை அவன் ஒளிந்திருந்து கேட்டானாம். அப்போதுதான் தங்களை ரவிதாஸன் கூட்டம் சிறைப் பிடித்துப் பச்சை மலைப் பிராந்தியத்துக்குக் கொண்டு போயிருப்பதாகத் தெரிந்ததாம். பூங்குழலியும் வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியானும் பச்சை மலைக்குப் போவதை அறிந்து கொண்டு இவனும் அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர முயற்சித்தானாம். இதையெல்லாம் கேட்டதும் நானும் கந்தமாறனும் ஐம்பது வீரர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டோம். சேந்தன் அமுதன் தானும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தான். அதுவும் நல்லதுதான் என்று அவனை ஒரு குதிரை மேல் கட்டிப்போட்டு அழைத்து வந்தோம்! வந்தது நல்லதாய்ப் போயிற்று. தங்களைக் கண்டுபிடித்து விட்டோம். இனி என்ன கவலை அண்ணா! உடனே புறப்படுங்கள். தங்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாமல் ஆட்களைக் கொண்டு தூக்கிப் போக ஏற்பாடு செய்கிறேன். இதற்குள்ளே திருப்புறம்பயத்தில் பெரும் சைன்யம் சேர்ந்திருக்கும். தஞ்சாவூர்க் கோட்டையை ஒரு ஜாம நேரத்தில் திரும்பக் கைப்பற்றி விடலாம்!" என்று கூறினார் சின்னப் பழுவேட்டரையர்.

"ஆமாம், தஞ்சாவூருக்கு உடனே போக வேண்டியது தான்!" என்று சொல்லிக் கொண்டே பெரிய பழுவேட்டரையர் எழுந்து நின்றார். நந்தினி தேவி உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்தார்.


அத்தனை நேரமும் ஒரு பாறைக் கல்லின் மீது உட்கார்ந்து விம்மி அழுது கொண்டிருந்த நந்தினி, பெரிய பழுவேட்டரையர் தொண்டையை கனைத்த கர்ஜனையைக் கேட்டுத் திடீரென்று எழுந்து நின்றாள். வெறி கொண்ட கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளுக்கு மிக்க அருகாமையில் நின்ற ஆழ்வார்க்கடியான் மெதுவான குரலில் "நந்தினி! இப்போதாவது உன் சம்மதத்தைச் சொல்! என்னுடன் வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூறு! இந்த நாட்டை விட்டு வடநாட்டுக்குப் போவோம். பிருந்தாவனம் வடமதுரை, அயோத்தி, காசி, ஹரித்வாரம், ரிஷிகேசம் முதலிய க்ஷேத்திரங்களுக்குப் பிரயாணம் செய்வோம். ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு, ஆழ்வார்களுடைய பாசுரங்களைப் பாடிக் கொண்டு, நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமாகக் கழிப்போம். நான் என் அரசாங்க அலுவலை விட்டுவிட்டு உன்னுடன் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்" என்றான்.

நந்தினி கண்களில் நீர் ததும்ப அவனை நோக்கி, "திருமலை! உனக்கு நான் இத்தனை துரோகம் செய்தும் நீ என்னிடம் வைத்த அபிமானம் மாறவில்லை. உனக்கு நீ வணங்கும் நாராயணன் அருள் புரிவார்!" என்றாள்.

அதே சமயத்தில் பூங்குழலி சேந்தன் அமுதனிடம், "அதோ! பழுவூர் இளைய ராணியைப் பார்! என் அத்தையைப் போலவே தோன்றுகிறாள் அல்லவா?" என்று கேட்டாள்.

"ஆம்; தலையை விரித்துப் போட்டுக் கொண்டால், தத்ரூபமாக உன் அத்தை மாதிரியே இருக்கிறது!" என்றான் சேந்தன் அமுதன்.

"இனிமேல் என் அத்தை இவள்தான்; அத்தையிடம் இத்தனை நாள் வைத்திருந்த அன்பை இனிப் பழுவூர் இளைய ராணியிடம் வைப்பேன்!" என்றாள்.

"என்னையும் சேர்த்துக்கொள் பூங்குழலி!" என்றான் அமுதன்.


பெரிய பழுவேட்டரையர் இதற்குள் நந்தினி நின்ற இடத்துக்குச் சமீபமாக வந்து விட்டார்.

அதைக் கண்ட நந்தினி அவருக்கு முன்னால் பூமியில் விழுந்து வணங்கினாள். அவருடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.

பூமியிலிருந்து எழுந்ததும், நந்தினி பெரிய பழுவேட்டரையரை ஒருமுறை பார்த்தாள். சட்டென்று திரும்பினாள். சற்றுத் தூரத்தில் சின்னப் பழுவேட்டரையர் முதலியோர் கொண்டு வந்து நிறுத்தியிருந்த குதிரைகள் மீது அவள் பார்வை விழுந்தது. அவை நின்ற இடத்தை நோக்கி மிக விரைவாக ஓடினாள். எல்லாவற்றுக்கும் முன்னால் நின்ற குதிரையின் மீது தாவி ஏறிக் கொண்டாள். குதிரையின் முகக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு குலுக்குக் குலுக்கித் தட்டிவிட்டாள். குதிரை பாய்ந்து ஓடத் தொடங்கியது.

அதுவரைக்கும் நந்தினியின் நோக்கம் இன்னதென்று அறியாமல் செயலற்று நின்றவர்கள் இப்போது அவளைத் தொடர யத்தனித்தார்கள். சின்னப் பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி எல்லாருமே ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தார்கள்.

பெரிய பழுவேட்டரையர் "நில்லுங்கள்!" என்று ஒரு கர்ஜனை செய்தார். எல்லாரும் மறுபடியும் செயலிழந்து நின்றார்கள். பெரிய பழுவேட்டரையரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பெரிய பழுவேட்டரையர் குதிரை மேல் சென்ற நந்தினியின் உருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றார்.

அதிவேகமாகக் காற்றைப் போல் பறந்து சென்ற அந்தக் குதிரை வெகு விரைவில் மலை அடிவாரத்தின் திருப்பம் ஒன்றில் திரும்பியது.

அவர்களுடைய பார்வையிலிருந்து குதிரை மறைந்தது.

ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம்.

ஒருவேளை, பல ஆண்டுகளுக்குப் பின்னால், வேறு இடத்தில், வேறு சூழ்நிலையில் காணும்படி நேரலாம் யார் சொல்ல முடியும்?

பக்க தலைப்பு



நாற்பத்தெட்டாம் அத்தியாயம்
"நீ என் மகன் அல்ல!"




ஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். வீரர்களைப் போற்றும் குணம் அந்நாளில் தமிழகத்தில் பெரிதும் பரவியிருந்தது. இடையில் சில காலம் சோழ குலம் மங்கியிருந்து. விஜயாலய சோழர் காலத்திலிருந்து மீண்டும் தலையெடுத்ததைக் கண்டோம் அல்லவா? நூறு ஆண்டுகளாக அந்தக் குலத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வீரப் புகழில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு வந்தார்கள். விஜயாலயன் மகன் ஆதித்தவர்மன் பல்லவ குலத்தின் புகழை அழித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான். அவனுடைய மகன் பராந்தகச் சக்கரவர்த்தி மதுரையும், ஈழமும் கொண்ட தென்னாடு முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பராந்தகச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் நால்வரும் ஒருவரையொருவர் வீரத்தில் மிஞ்சினார்கள். அவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டுப் போரில் உயிர் துறந்தான். மூத்த மகனாகிய இராஜாதித்தனோ, சமுத்திரம் போல் பொங்கி வந்த இரட்டை மண்டலக் கன்னர தேவனின் பெரும் படையுடன் தக்கோலத்தில் போர் தொடுத்து, அம்மாபெரும் சைன்யத்தை முறியடித்த பிறகு போர்க்களத்திலேயே வஞ்சனையினால் கொல்லப்பட்டு, 'யானை மேல் துஞ்சின தேவன்' ஆயினான். கண்டராதித்தர் சிவஞானச் செல்வராயினும் அவரும் வீரத்தில் குறைந்தவராக இல்லை. பின்னர் ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயனுடைய குமாரர் சுந்தரசோழர் காலத்தில் தக்கோலப் போருக்குப் பிறகு சிறிது மங்கியிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் மீண்டும் மகோந்நதமடைந்தது.

இவ்வாறு வழி வழியாக வந்த வீர பரம்பரையில் பிறந்தவர்களில் ஆதித்த கரிகாலனுக்கு ஒப்பாருமில்லை, மிக்காருமில்லை என்று மக்களின் ஏகோபித்த வாக்கே எங்கும் கேட்கக் கூடியதாயிருந்தது. பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் புரிந்த வீரதீர சாகசச் செயல்கள் அர்ச்சுனன் மகனான அபிமன்யுவின் புகழையும் மங்கச் செய்து விட்டனவல்லவா?

இத்தகைய வீராதி வீரன் சில வருட காலமாகத் தஞ்சைக்கு வராமல் காஞ்சியிலேயே தங்கியிருந்த காரணம் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. சிற்றரசர்கள் சூழ்ச்சி செய்து மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் நோக்கத்துடன் ஆதித்த கரிகாலனைத் தஞ்சைப் பக்கம் வராதபடி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வதந்தி. முன்னொரு காலத்தில் கரிகால வளவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று இமயமலையின் உச்சியில் புலிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது போல் அதே பெயர் கொண்ட ஆதித்த கரிகாலனும் செய்ய விரும்பிச் சபதம் செய்திருக்கிறான் என்றும், அந்தச் சபதம் நிறைவேறாமல் அவன் தஞ்சைக்குத் திரும்ப விரும்பவில்லையென்றும், அதற்குப் பழுவேட்டரையர் முதலியவர்கள் குறுக்கே நின்று தடுத்து வருகிறார்கள் என்றும் இன்னொரு வதந்தி பரவியிருந்தது.

எனவே, திடீர் என்று ஒரு நாள் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழ நாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே?

ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப் படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.

சுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. "சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை" என்று சிலர் சாசனங்கள் சொல்லுகின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச்சில சாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கோ "ஹா! ஹா!" "ஐயையோ!" என்ற சத்தங்கள் லட்சகணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது. ஆனால் அபிமன்யுவோ பகைவர் கூட்டத்துக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று அஸகாய சூரத்தனங்கள் செய்துவிட்டு உயிரை விட்டான்.

இங்கேயோ ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன.


ஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை. பழுவேட்டரையர்களும் வரவில்லை.

பழுவேட்டரையர்கள் தங்கள் நண்பர்களைச் சைன்யங்களுடன் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவவும் ஆரம்பித்திருந்தது. எனவே ஆதித்த கரிகாலருக்கு வீரமரணத்துக்குரிய முறையில் ஈமச் சடங்குகள் நடந்து, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும் ஜனக் கூட்டம் விரைவாகக் கலையவில்லை.

"மதுராந்தகன் வீழ்க!", "பழுவேட்டரையர்கள் வீழ்க!" என்னும் கோஷங்கள் முதலில் இலேசாக எழுந்தன. நேரமாக, ஆக, இந்தக் கோஷங்கள் பலம் பெற்று வந்தன.

திடீரென்று ஜனக்கூட்டத்தில் ஒரு பகுதியினர் கோட்டைக் கதவுகளை இடித்து மோதித் திறந்து கொண்டு தஞ்சை நகருக்குள் பிரவேசித்தார்கள். முதலில் அவர்கள் பழுவேட்டரையர்களின் மாளிகைக்குச் சென்றார்கள். வெளியிலே நின்று "பழுவேட்டரையர்கள் வீழ்க!" என்று சத்தமிட்டார்கள்.

முதன்மந்திரி அநிருத்தரின் கட்டளையின் பேரில் வேளக்காரப் படை வீரர்கள் ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய நேர்ந்தது.

இதற்கிடையில், மதுராந்தகத் தேவன் அநிருத்தரின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதாக ஒரு வதந்தி பரவியது. ஜனங்கள் அநிருத்தரின் வீட்டைப் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.
"எங்கே அந்தப் பேடி மதுராந்தகன்? வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை!" என்று கத்தினார்கள்.


அச்சமயம் உண்மையாகவே மதுராந்தகன் அநிருத்தரின் வீட்டுக்குள்ளிருந்தான். வெளியிலே ஜனங்களின் கூக்குரலைக் கேட்டுவிட்டு, அவன் நடுநடுங்கினான். அநிருத்தரைப் பார்த்து, "முதன்மந்திரி! என்னை எப்படியாவது கோட்டைக்கு வெளியே அனுப்பி விடுங்கள். ரகசியச் சுரங்க வழியாக அனுப்பி விடுங்கள். என்னை ஆதரிக்கும் நண்பர்களுடனே நான் போய்ச் சேர்ந்து கொள்கிறேன். இந்த உதவியைத் தாங்கள் செய்யும் பட்சத்தில் நான் சோழ சிம்மாசனத்தில் ஏறும் போது தங்களையே முதன்மந்திரியாக வைத்துக் கொள்ளுவேன்" என்று சொன்னான்.

"ஐயா! சிங்காசனம் ஏறுவதைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும்? இன்னும் சுந்தர சோழர் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரே" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

"சுந்தர சோழர் தம் குமாரனுக்கு ஈமக் கடன் செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா? நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார்.நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்?" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்கள் அன்னை குறுக்கே நிற்பதற்கான காரணம் இல்லாமல் போகுமா? அதோ கேளுங்கள், இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா? சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா?" என்று கூறிவிட்டு, "ஆகா! இது என்ன?" என்று அநிருத்தர் வீதியில் எட்டிப் பார்த்தார்.

பழைய கூக்குரலுக்குப் பதிலாக இப்போது "அருள்மொழிவர்மர் வாழ்க!" "பொன்னியின் செல்வர் வாழ்க!" "ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்ற கோஷங்கள் கிளம்பின.

கம்பீரமான குதிரை மேலேறி அருள்மொழிவர்மர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அத்தனை ஜனங்களும் போனார்கள். சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் அநிருத்தர் வீட்டின் வெளிப்புறம் வெறுமையாகி விட்டது. அநிருத்தருக்கு முன்னாலிருந்து மதுராந்தகனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் பொறாமைத் தீயினால் கோவைப்பழம் போலச் சிவந்தன. "ஆகா! இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ?" என்று தனக்குத்தானே சொல்லிப் பொருமிக் கொண்டான்.

அநிருத்தர் "இளவரசே! ஈழத்து இராணியைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து சின்னப் பழுவேட்டரையர் ஓடியபோது, நீர் அந்தப் பாதாளச் சுரங்க வழியில் இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

"பொன்னியின் செல்வன் யானைப்பாகன் வேஷத்தில் அரண்மனைக்கு வந்த போது எனக்கு மிக்க மனச்சோர்வு உண்டாயிற்று. அவனும் நானும் ஒரே சமயத்தில் இந்தக் கோட்டைக்குள்ளிருக்கப் பிரியப்படவில்லை.பழுவேட்டரையர் சுரங்க வழியை எனக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். அதன் வழியாகப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டு அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் சுரங்கப்பாதை வழியாக வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் என்னை நெருங்கி, 'இளவரசே! தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று.

"பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும்? அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே?" என்றேன்.

அந்த மனிதன், "இளவரசே! அது மட்டுமல்ல. தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்" என்றான்.

'அப்படியானால் வா! உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான்.
அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதன்மந்திரி! தங்களை அவன் வந்து பார்த்தானா? என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும்?" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்களுக்கு அதை வெளியிட்டுச் சொல்லும் உரிமை பெற்றவர் தங்கள் அன்னை செம்பியன் மாதேவி ஒருவர் தான். எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் நான் அதைச் சொல்லக் கூடாது" என்றார் அநிருத்தர்.


இந்தச் சமயத்தில் அம்மாளிகையின் வாசலில் மறுபடியும் கலகலப்புச் சத்தம் கேட்டது. முதன்மந்திரி எட்டிப் பார்த்தார்; "ஆகா! இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார்!" என்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் செம்பியன் மாதேவி அநிருத்தரின் வீட்டுப் பெண்மணிகளைப் பார்த்துப் பேசிவிட்டு மேல் மாடிக்கு வந்தார். அந்தத் தேவியின் முகத்தில் அப்போது சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் தேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு "ஐயா! என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது" என்றாள்.

அப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, "நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய்? ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய்? தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா! பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா? சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்?" என்றான்.

"என் குழந்தாய்! பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை. சொல்லுகிறேன் கேள்! மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப் போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது? பூலோக ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ மடங்கு மேலானது சிவலோக சாம்ராஜயம். நாம் இந்த ஊரைவிட்டே போய்விடுவோம் வா. க்ஷேத்திர தரிசனம் செய்து கொண்டு கைலையங்கிரி வரையிலே போவோம். சாக்ஷாத் கைலாசநாதரின் கருணைக்குப் பாத்திரமாவோம்.

"ஆகா! கைலாச யாத்திரை போவதற்குத் தங்களுக்குத் தக்க பருவம்தான். எனக்கு இன்னும் பிராயம் ஆகவில்லை. இந்த உலகத்தின் சுகதுக்கங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் சாம்பலைப் புசிக் கொண்டு 'சிவ சிவா' என்று பைத்தியக்காரனைப் போல் அலைந்து திரியும்படி என்னை நீ வளர்த்துவிட்டாய். அந்தப் பரமசிவனுடைய பெருங் கருணையினாலேயே என்னிடம் இப்போது ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது. அதை ஏன் நான் கைவிட வேண்டும்?" என்று கேட்டான் மதுராந்தகன்.

"அப்பனே! உன்னை நெருங்கி வந்திருக்கும் ராஜ்யம் எத்தனையோ அபாயங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது. நீ சிங்காதனம் ஏறுவதற்கு ஒரு தடை நீங்கிவிட்டது. ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்று சொன்னாய். சற்று முன்னால் இந்த வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்கள் கூச்சலிட்டது உன் காதில் விழவில்லையா? மதுராந்தகா! ஆதித்த கரிகாலன் இறந்ததற்கு நீயும் பழுவேட்டரையர்களுமே காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உன்னை எப்படிச் சக்கரவர்த்தியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்?"

"அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்து விடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள்! கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா? அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன் தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன்.இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்."


செம்பியன் மாதேவி தம் கண்களில் கனல் வீச, "அட பாவி! கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய்? உன்னைப் போன்ற துராசை பிடித்தவனையே அவன் கோவிலில் வைத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறானே. அவனைப்பற்றி நீ மறுபடியும் இப்படிச் சொன்னால் நீ எரிவாய் நரகத்துக்குத் தான் போவாய். உனக்கு இம்மையிலும், மறுமையிலும் கதி மோட்சம் கிடையாது" என்றாள்.

இதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். "அடி பேயே! உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா? இல்லவே இல்லை" என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.

அப்போது செம்பியன் மாதேவி, "அப்பா! உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல" என்றாள்.

மதுராந்தகன் கம்மிய குரலில், "ஆகா! நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார்? நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன்?" என்றான்.

தேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, "ஐயா! தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்" என்றாள்.

முதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: "இளவரசே! தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான் இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்."

ஃஃஃ


செம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்டுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப்பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள்.

செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தார். அப்போது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் 'கோ'வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.

"ஐயா! என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?" என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்று ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது.ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், "அதனால் பாதகமில்லை! பெண்ணே! யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன? சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும், ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம்; சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்!' என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

ஃஃஃ

"மதுராந்தகா! நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரிந்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார்.இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே! தேவி சொல்வதைக் கேள். அதனால் உனக்கு நன்மையே விளையும்" என்றார் அநிருத்தர்.

பக்க தலைப்பு



நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்
துர்பாக்கியசாலி




மதுராந்தகன் சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்த பிறகு திடீரென்று எழுந்து நின்று, அநிருத்தரைப் பார்த்து, "முதன்மந்திரி! இதெல்லாம் உமது சூழ்ச்சி! எனக்கு அப்போதே தெரியும்! சுந்தர சோழரின் மக்கள், அதிலும் முக்கியமாக அருள்மொழிவர்மன் பேரில் உமக்குப் பிரியம் அவனுக்குப் பட்டங்கட்ட வேண்டும் என்பது உம்முடைய விருப்பம். அதற்காக, இப்படியெல்லாம் என் தாயாரிடம் பொய்யும் புனை சுருட்டும் கூறி அவருடைய உத்தமமான மனத்தைக் கெடுத்திருக்கிறீர்! அன்பில் பிரம்மராயரே! உமக்கு என்ன தீங்கு நான் செய்தேன்? எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்யப் பார்க்கிறீர்? உம்முடைய நோக்கத்துக்காக நான் என் தாயாருக்கு பிள்ளையில்லாமல் போக வேண்டுமா? இந்த மாதிரி ஒரு பயங்கரமான பாதகச் சூழ்ச்சி இந்த உலகில் இதுவரை யாரும் செய்திருக்க மாட்டார்களே? விஷ்ணு பக்தர்களின் குலத்தில் வந்த அந்தணராகிய நீர் இப்படிச் செய்ய வேண்டுமா? இல்லை, இல்லை! உமது பேரில் தவறு ஒன்றும் இல்லை. இளைய பிராட்டி குந்தவையும், அருள்மொழிவர்மனும் ஏதோ சூழ்ச்சி செய்து இப்படி உம்மைப் பாதகம் செய்யப் பண்ணியிருக்கிறார்கள்!" என்று கத்தினான்.

அநிருத்தர் சாவதானமான குரலில், "இளவரசே! தங்கள் பேரில் எனக்கு அவ்வளவு துவேஷம் இருந்தால், கொட்டுகிற மழையில் மரத்தடியில் விழுந்து கிடந்த தங்களை எடுத்து வந்திருக்க மாட்டேன். அருள்மொழிவர்மரைப் பற்றியும் தாங்கள் குறைகூற வேண்டாம். ஈழம் கொண்ட அவ்வீரர் இந்த நிமிஷத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்துள்ள படை வீரர்களிடத்திலும் மக்களிடத்திலும் சென்று நல்ல வார்த்தை சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி வருகிறார். அவருடைய சித்தப்பாவாகிய தாங்கள் உயிரோடிருக்கும்போது தாம் சிங்காதனம் ஏறுவது தர்மம் அல்லவென்றும், அம்மாதிரி வீரர்களும் மக்களும் கோரக்கூடாதென்றும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றிச் சரிப்படுத்த முயன்று வருகிறார்" என்றார்.

"அப்படியானால், அப்படியானால், நீங்கள் சற்று முன் சொன்ன செய்தி அருள்மொழிக்குத் தெரியாது அல்லவா?"

"அருள்மொழிக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது!"

"இனிமேல்தான் எதற்காகத் தெரியப்படுத்த வேண்டும். அநிருத்தரே! நீர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்ளும். சக்கரவர்த்தி தங்களுக்கு ஒரு கிராமத்தில் பத்து வேலி நிலந்தானே பட்டயத்தில் எழுதி மானிய சாஸனம் அளித்தார்? நான் உமக்குப் பாண்டிய நாட்டையே பரிசாக அளித்துவிடுகிறேன்...."

"ஐயா! என்னை வாயை மூடிக்கொண்டிருக்கச் செய்வதற்குப் பாண்டிய நாட்டைத் தரவேண்டியதில்லை. தங்களுடைய அன்னையின் கட்டளை ஒன்றே போதும் அவரிடம் சொல்லுங்கள்!"

மதுராந்தகன் தன்னை வளர்த்த அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான்.

"குழந்தாய்! மதுராந்தகா! அநிருத்தர் சொல்வது சரிதான். அவருக்கு இருபது வருஷத்துக்கு முன்னாலிருந்து என் இரகசியம் தெரியும். அன்றைக்கு அவர், 'மகாராணி! இது தங்களுடைய இரகசியம். தாங்கள் யாரிடமாவது சொன்னாலன்றி வேறு எவருக்கும் தெரிய முடியாது. என் வாய் மூலமாக ஒரு நாளும் வெளிப்படாது இது சத்தியம்!' என்று சொன்னார். அதை இன்று வரையில் நிறைவேற்றி வருகிறார். சோழ குலத்துக்கு உண்மையாக நடப்பதாக இவர் சத்தியம் செய்து கொடுத்தவர். ஆயினும் சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் கூடச் சொன்னதில்லை. நீ சோழ சிம்மாசனத்தில் ஏற நான் சம்மதித்தால் இவரும் பேசாமலிருந்திருப்பார்..."

"ஆம், தாயே! பேசாமலிருந்திருப்பேன்; ஆனால் உள்ளதில் பொய்யை வைத்துக் கொண்டு முதன்மந்திரி உத்தியோகம் பார்த்திருக்க மாட்டேன். ஸ்ரீரங்கநாதருக்குச் சேவை செய்யப் போயிருப்பேன்!" என்றார் அநிருத்தர்.

"ஆனால் அதற்கு அவசியம் ஒன்றும் நேரப் போவதில்லை. மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். என் விருப்பத்தை நிறைவேற்றுவான். அவனே இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்! மகனே! 'ஆம்' என்று ஒப்புக்கொள்ளு!" என்றாள் பெரியபிராட்டி செம்பியன் மாதேவி.

"தாயே! அப்படியானால் நான் சிங்காதனம் ஏறத் தடையாயிருப்பது தாங்கள் ஒருவர்தானா? நான் தங்கள் வயிற்றில் பிறந்த மகனில்லையென்றே வைத்துக் கொள்கிறேன். இருபது வருஷத்துக்கு மேலாகத் தங்கள் வயிற்றில் பிறந்த மகனுக்கு மேல் அருமையாக வளர்த்தீர்கள். இப்போது எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்?"

"குழந்தாய்! நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நான்தான் உனக்கு பெருந்தீங்கு செய்துவிட்டேன். இத்தனை நாளும் உன்னை என் வயற்றில் பெற்ற மகனைப் போலவே வளர்த்து வந்துவிட்டு இப்போது 'நீ என் மகன் இல்லை!' என்று சொல்கிறேன். இதனால் உன் மனம் எத்தனை புண்ணாகும் என்பது எனக்குத் தெரியாதா? என் ஆயுள் உள்ள வரையில் இதை நான் வெளியிட்டுச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் என் கணவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நான் புகுந்த சோழ குலத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. சோழ குலத்தில் பிறக்காதவனைச் சோழ குல சிங்காதனத்தில் நான் ஏற்றி வைக்கக் கூடாது. ஏற்றுவதற்கு நான் உடந்தையாகவும் இருக்கக் கூடாது. என் மனம் இதைப் பற்றி வேதனை அடையவில்லையென்றா நினைக்கிறாய்? 'நீ என் மகன் அல்ல' என்று சற்று முன்னால் சொன்னபோது என் நெஞ்சே உடைந்து போய்விட்டது. கடைசி வரையில் சொல்வதற்குத் தயங்கினேன். உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. என்னுடைய கடமை என்ன, தர்மம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே நம்பியாண்டார் நம்பியிடம் போயிருந்தேன். அந்த மகான் தர்ம சூக்ஷமத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார். 'உலகிலுள்ள மாந்தர் அனைவரும் மகாதேவரின் புதல்வர்கள்தான். சிவ பக்த சிரோமணியான தாங்கள் 'சொந்தக் குழந்தை' என்றும், 'வளர்த்த குழந்தை' என்றும் பேதம் பாராட்ட மாட்டீர்கள். தங்களுடைய சொந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் வளர்த்த மகனுக்கே கொடுப்பீர்கள்; ஆனால் இராஜ்யத்தின் சமாசாரம் வேறு. நம்முடைய பொய்யின் மூலம் இன்னொருவருடைய நியாயமான உரிமையைத் தடைசெய்வது பாவமாகும். சோழ குலத்தில் பிறக்காதவனைத் தெரிந்து சோழ சிங்காதனதில் ஏற்றி வைப்பது குலத்துரோகமாகும். தங்கள் மகனிடமும் சக்கரவர்த்தியிடமும் உண்மையைச் சொல்லி விடுவதுதான் தர்மம்' என்று உபதேசித்தார். கேட்டுக் கொண்டு திரும்பி வந்தேன். குமாரா! நீ என் சொந்த மகன் அல்ல என்று சொல்வதில் எனக்குச் சந்தோஷம் இருக்க முடியுமா? சக்கரவர்த்தியிடம் சொல்லும்போதுதான் இதை நான் பெருமையுடன் சொல்ல முடியுமா?"

அச்சமயம் மதுராந்தகன் திடீரென்று எழுந்து செம்பியன் மாதேவியின் காலில் விழுந்து, "அன்னையே! எனக்கு இராஜ்யம் வேண்டாம்; சிங்காதனமும் வேண்டாம்.இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன்; தேசாந்திரம் போகச் சொன்னால் போய்விடுகிறேன். ஆனால் நான் தங்கள் மகன் அல்ல; தங்கள் திருவயிற்றில் பிறந்தவன் அல்ல என்று மட்டும் சொல்ல வேண்டாம்! யாரிடமும் சொல்ல வேண்டாம்! சொன்னீர்களானால் அந்த அவமானத்தினாலேயே என் நெஞ்சு வெடித்து இறந்து விடுவேன்!" என்று கதறினான்.

செம்பியன் மாதேவி கண்களில் நீர் ததும்ப மிகுந்த ஆவலுடன் மதுராந்தகனை வாரி எடுத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

"குமாரா! உன்னை இந்தத் துன்பம் அணுகாதிருக்கும் பொருட்டுத்தான் இந்த உலக இராஜ்யத்தில் விருப்பமில்லாதவனாகவும், சிவலோக சாம்ராஜ்யத்தில் பற்றுள்ளவனாகவும் வளர்க்க முயன்று வந்தேன்; அதில் தோல்வி அடைந்தேன். எந்தப் பாவிகளோ உன் மனத்தைக் கெடுத்து விட்டார்கள். இப்போதும் மோசம் போய்விடவில்லை. நீயாக உன் மனப்பூர்வமாக 'இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம்; சுந்தர சோழரின் மகன் அருள்மொழியே அரசாளட்டும்' என்று நாடு நகரமறியச் சொல்லி விட்டாயானால், 'நீ என் மகன் அல்ல!' என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உன் மனத்தை இப்போது புண்படுத்தியதே எனக்கு அளவிலாத வேதனை தருகிறது. இன்றைக்கு முதன்மந்திரி அநிருத்தரின் முன்னிலையில் ஒப்புக்கொள். மூன்று நாளைக்கெல்லாம் சிற்றரசர்களின் மகாசபை கூடும். அச்சபையின் முன்னிலையிலேயும் ஒப்புக்கொள். 'எனக்கு இராஜ்யம் ஆளும் விருப்பம் இல்லை. சிவபெருமானுடைய கைங்கரியத்திலும், சிவாலயத் திருப்பணியிலும் ஈடுபட விரும்புகிறேன். என் தந்தை தாயின் கட்டளையும் அதுதான்! அருள்மொழிவர்மனுக்கே பட்டம் கட்டுங்கள்!' என்று சொல்லி விடு. 'சோழ இராஜ்யத்துக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை. சிற்றரசர்கள் யாரேனும் துர்ப்புத்தி கூறினாலும் செவி சாய்ப்பதில்லை' என்று சத்தியம் செய்துவிடு! அப்படிச் செய்துவிட்டால் நானாவது, முதன்மந்திரியாவது உன் பிறப்பைக் குறித்த இரகசியத்தை வெளியிடுவதற்கே அவசியம் இராது. நீ எப்போதும் போல் என் கண்ணின் மணியான அருமைப் புதல்வனாயிருந்து வருவாய். நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பரந்த பாரத தேசமெங்கும் யாத்திரை செல்வோம். ஆங்காங்கே சிவாலயத் திருப்பணிகள் செய்வோம். அருள்மொழிவர்மன் என்னிடம் அளவிலாத பக்தி உள்ளவன். உன்னைப் போலவே அவனையும் பெரும்பாலும் நான்தான் வளர்த்தேன். என் பேச்சுக்கு அவன் ஒருகாலும் மறுப்பு சொல்ல மாட்டான்?" என்றார் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி.

மதுராந்தகன் இதைக் கேட்டு நெற்றியை இரண்டு கைகளினாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். "ஆகா! எனக்குப் பிராயம் தெரிந்தது முதலாவது ஏதேதோ உருவமில்லாத நிழல் போன்ற நினைவுகள் அடிக்கடி தோன்றி எனக்கு வேதனை அளித்து வந்தன.அவற்றுக்கெல்லாம் காரணம் இப்போதுதான் தெரிகிறது. என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் யார் உண்டு? என்ன வேளையில், என்ன ஜாதகத்தில் பிறந்தேனோ தெரியவில்லை. ஒரே நாளில் ஒரு கண நேரத்தில் தாய் தந்தையரை இழந்தேன்; குலம் கோத்திரம் இழந்தேன்; ஒரு பெரிய மகா இராஜ்யத்தை இழந்தேன்; ஆயிரம் வருஷத்து வீர பரம்பரையில் வந்த சிங்காதனத்தை இழந்தேன். சிநேகிதர்கள் யாவரையும் இழந்தேன். ஆம்; இந்த உண்மை தெரிந்தால் அப்புறம் எவன் எனக்குச் சிநேகிதனாயிருக்கப் போகிறான்? எனக்குப் பட்டம் கட்டுவதற்காக உயிரைக் கொடுப்பதாய்ப் பிரமாணம் செய்த சிற்றரசர்கள் எல்லாரும் ஒரு நொடியில் என்னைக் கைவிட்டு விடுவார்கள்!... ஆம், என்னைப் போன்ற துர்பாக்கியசாலி இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து யாரும் இருந்திருக்க முடியாது. அம்மா! என் அறிவு குழம்புகிறது. தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள், என் முடிவைச் சொல்லுகிறேன்!" என்றான்.

"குழந்தாய்! நீ யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இதைச் சொல்கிறேன். ஒன்று நீயாக இராஜ்யத்தை துறந்து விடுவதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நீ என் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நாடு நகரமெல்லாம் அறிய நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் நீ சிங்காதனம் ஏற முடியாது. நீ யோசித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்றாள் பெரிய பிராட்டியென்று உலகமெல்லாம் போற்றி வணங்கிய உத்தமி.

அப்போது அநிருத்தர், "அம்மா! இரண்டு நாள் அவகாசம் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை. மந்திராலோசனை சபையும் மகாஜன சபையும் கூடுவதற்கு இன்னும் மூன்று நாள் இருக்கிறது. அதுவரை இளவரசர் நிம்மதியாக யோசித்துப் பார்க்கட்டும்!" என்றார்.

"அம்மா! அம்மா! இந்த ரகசியம் தங்களையும் முதன்மந்திரியையும் தவிர வேறு யாருக்காவது தெரியுமா?" என்று மதுராந்தகன் திடீரென்று தோன்றிய ஆவலுடன் கேட்டான். அவன் உள்ளத்தில் என்ன தீய எண்ணம் தோன்றியதோ, எத்தகைய சூழ்ச்சி முளைவிடத் தொடங்கியதோ, நாம் அறியோம்.

மதுராந்தகனுடைய பரபரப்பு மழவரையர் மகளுக்குச் சிறிது வியப்பை அளித்தது. "எங்களைத் தவிர இன்னும் மூன்று பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. மகனே! அவர்களில் உன் தந்தை சிவநேசச் செல்வரான, என் சிந்தையில் குடிகொண்ட கணவர் - காலமாகி விட்டார். தமக்கையும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகளுக்குத் தெரியும். அவர்களில் ஒருத்தி, - உன்னைப் பெற்றவள் - இரண்டு நாளைக்கு முன்பு சுந்தர சோழர் அரண்மனையில் துர்மரணம் அடைந்தாள். அவளுடைய உயிரற்ற உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தபோதே உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று பார்த்தேன் ஆனால் மனம் வரவில்லை. உன்னை வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் சும்மாயிருந்து விட்டேன். மகனே! உன்னைப் பெற்றவளை நினைத்து நீஅழுவதாயிருந்தால் அழு! உன்னை அவள் பெற்றாளேயன்றி, அப்புறம் உனக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை. உன்னை வந்து பார்க்கவேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. அவள் புத்தி சுவாதீனத்தை இழந்து பிச்சியாகி போய்விட்டாள். அவளை நினைத்து நீ கண்ணீர் விடுவதாயிருந்தால் விடு!" என்று சொன்னாள் தேவி.

"இல்லை, இல்லை. தங்களை தவிர வேறு யாரையும் அன்னையாக நினைக்க என்னால் முடியவில்லை. முன்னாலேயே தாங்கள் சொல்லியிருந்தாலும் அவள் அருகிலே கூடப் போயிருக்கமாட்டேன். இரகசியம் தெரிந்த இன்னொருவர் யார், அம்மா! அந்த இன்னொரு ஊமை ஸ்திரீ யார்?" என்று கேட்டான்.

"அவளுடைய தங்கைதான். இந்தத் தஞ்சைக்கு வெளியில் நந்தவனம் வைத்து வளர்த்து வருகிறவள். என் வயிற்றில் செத்துப் போய்க் கட்டை போல் பிறந்த சிசுவையும் உன்னையும் மாற்றிப் போட்டவள் அவள்தான். பிறவி ஊமையும் செவிடுமாதலால் யாரிடமும் சொல்லமாட்டாள். அவளுக்கும் ஒரு குமாரன் இருக்கிறான். தாயும் மகனும் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்துக்குப் புஷ்ப சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மானியம் கொடுத்து நான்தான் ஆதரித்து வருகிறேன்."

"ஆகா! அவர்களை எனக்குத் தெரியும். தாய், மகன் இருவரையும் தெரியும். மகன் பெயர் சேந்தன் அமுதன்; வந்தியத்தேவன் என்ற ஒற்றன் இங்கிருந்து தப்புவதற்கு உதவி செய்தவன். அம்மா! பிள்ளைக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?"

"தெரியாது, மகனே! தெரியாது! அவனுடைய தாயார் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்வதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள். அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். அவளைத் தவிர, நானும் முதன் மந்திரியுந்தான்!"

மதுராந்தகனுடைய உள்ளத்தில் அச்சமயம் பயங்கரமான தீய எண்ணங்கள் பல தோன்றின. இவர்கள் இருவரும் இவ்வுலகை விட்டு அகன்றால், உண்மையைச் சொல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை என்று எண்ணினான். முதன்மந்திரிக்கு நான் எந்தவிதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை. இந்த மாதரசியோ உண்மையில் என் அன்னை அல்ல. இவர்களிடம் எதற்காக நான் கருணை காட்டவேண்டும்? ஆகா! என் பிறப்பைக் குறித்த இரகசியத்தை அறிவிப்பதாகச் சுந்தர சோழரின் தோட்டத்தில் கூறினானே, அவன் யார்? பொக்கிஷ நிலவறையில் என்னை வந்திருக்கும்படி சொன்னவன் யார்? அவனை மட்டும் நான் சந்திக்கும்படி நேர்ந்தால்? சுந்தர சோழரைக் கொல்ல முயன்று அவன் அந்த ஊமை ஸ்திரீயைக் கொன்றுவிட்டான்; அவன் பேரில் குற்றமில்லை. அவள்தான் என் தாயார் என்று இவர்கள் சொல்லுகிறார்கள். அவள் என் தாயார் என்றால், என் தகப்பனார் யார்? ஒருவேளை...ஒருவேளை... இந்த வஞ்சனை நிறைந்த கிழவியும், இந்த வேஷதாரிப் பிரம்மராயனும் என்னை வஞ்சிக்கத்தான் பார்க்கிறார்களோ? உண்மையில் நான் சுந்தர சோழரின் குமாரன் தானோ?...ஆகா! இந்த உண்மையை எப்படி அறிவது?

"மகனே! நான் போய் வருகிறேன். நன்றாக யோசித்துச் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடு! பெற்ற தாயைவிடப் பதின்மடங்கு அன்புடன் உன்னை இருபத்திரண்டு வருஷம் வளர்த்த நான் உனக்கு கெடுதலைச் சொல்ல மாட்டேன். இந்த நிலையற்ற பூலோக இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிடு! என்றும் அழியாத சிவலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு வழி தேடு!" என்று கூறினாள் பெரிய பிராட்டியார்.

இச்சமயம் அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அருள்மொழிவர்மன் அந்த அறைக்குள் வந்தான். நேரே செம்பியன் மாதேவியிடம் வந்து நமஸ்கரித்தான்.

"தேவி! தாங்கள் தங்களுடைய அருமைப் புதல்வருக்குக் கூறிய புத்திமதியை எனக்குக் கூறிய புத்திமதியாகவும் ஏற்றுக் கொண்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் எனக்கு உரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நான் தியாகம் செய்துவிடச் சித்தமாயிருக்கிறேன். தங்களுடைய ஆசியினால் என் உள்ளம் சிவபெருமானுடைய பாத கமலங்களில் செல்லட்டும். சிவலோக சாம்ராஜ்யத்தில் ஒரு சிறிய இடம் - தங்கள் கணவராகிய மகான் கண்டராதித்தர் இருக்கும் இடத்துக்கருகில், எனக்குக் கிடைக்கட்டும்! அவ்வாறு எனக்கு ஆசி கூறுங்கள்!" என்றான்.

இதைக் கேட்ட செம்பியன் மாதேவியும் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.

"தேவி! சற்று முன்னால் தங்கள் செல்வப் புதல்வரிடம் தாங்கள் சொல்லிக் கொண்டிருந்ததை நான் விருப்பமின்றிக் கேட்கும்படியாக நேர்ந்துவிட்டது மன்னிக்க வேணும். இந்த மாளிகையைச் சுற்றி நின்ற ஜனங்களைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்பி வந்தேன். முதன்மந்திரியைப் பார்த்து மேலே நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவதற்காக இந்த மாளிகையில் நுழைந்தேன். தாங்களும் இங்கு இருப்பதாக அறிந்ததும் 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று' என்று எண்ணிக் கொண்டு வந்தேன். தாங்கள் வழக்கத்தைக் காட்டிலும் உரத்த குரலில் பேசினீர்கள், மதுராந்தகத் தேவரும் சத்தம் போட்டுப் பேசினார். உள்ளே பிரவேசிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நிற்கையில் தங்களுடைய சம்பாஷணையில் ஒரு பகுதி என் காதில் விழுந்தது. தேவி! உயிரோடிருப்பவர்களில் தங்களுக்கும், முதன்மந்திரிக்கும், சேந்தன் அமுதனுடைய அன்னைக்கும் மட்டும் மதுராந்தகருடைய பிறப்பைக் குறித்த இரகசியம் தெரியும் என்று சற்றுமுன் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அது சரியல்ல; எனக்கும் என் தமக்கையாகிய இளைய பிராட்டிக்கும் கூட அது தெரியும். சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த மந்தாகினி தேவியை நான் ஈழ நாட்டில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சித்திர பாஷையின் மூலம் அவர் எனக்கு இதையெல்லாம் தெரிவித்தார். நான் என் தமக்கையாரிடம் கூறினேன். இரண்டு பேரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். என் சிறிய தகப்பனாராகிய மதுராந்தகத் தேவர் தான் சோழ சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர். அவர் தங்களுடைய சொந்த மகனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு ஆதரவுடன் வளர்க்கப்பட்டவர். என்னைக் காவேரி வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியதோடு, பின்னரும் பல முறை உயிர் பிழைப்பதற்கு உதவி செய்த மந்தாகினி தேவி வயிற்றில் பிறந்த புதல்வர். ஆகையால், எப்படிப் பார்த்தாலும் சோழ சிங்காசனத்தில் ஏற உரிமை உள்ளவர். அவருடைய உரிமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நான் அதைத் தீர்த்து வைப்பேன்! சோழ சிங்காசனத்தில் எனக்குள்ள பாத்தியதையைத் தங்கள் பாத தாமரைகளின் ஆணையாகத் தியாகம் செய்வேன். ஆகையால், தாங்கள் மதுராந்தகத் தேவர் தங்கள் புதல்வர் அல்லவென்று சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. மதுராந்தகர் சோழ சிங்காசனத்தைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை!"

இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறியதைக் கேட்டு அந்த அறையில் மூவரும் தங்கள் வாழ்நாளில் என்றும் அடைந்திராத வியப்பையும் பிரமிப்பையும் அடைந்தார்கள்.

அவர்களில் அநிருத்தர் தான் முதலில் அறிவுத் தெளிவு பெற்றார்.

"இளவரசே! தாங்கள் இப்போது கூறிய வார்த்தைகள் காவியத்திலும், இதிகாசத்திலும் இடம் பெற வேண்டும். கருங்கல்லிலும், செப்பேட்டிலும், பொன் தகடுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை. ஆனால் இங்கேயுள்ள நாம் மட்டும் இந்த விஷயத்தைப்பற்றித் தீர்மானம் செய்ய முடியாது. சக்கரவர்த்தியையும், மற்ற சிற்றரசர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னொரு காலத்தில் உண்மை வெளியானால் மக்கள் என்ன சொல்வார்கள் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இளவரசே! மகா சபை கூடுவதற்கு இன்னும் மூன்று தினங்கள்தான் இருக்கின்றன. அதுவரையில் நாம் ஒவ்வொருவரும் நிதானமாக ஆழ்ந்து யோசனை செய்து பார்ப்போம்!" என்றார்.

பக்க தலைப்பு



ஐம்பதாம்அத்தியாயம்
குந்தவையின் கலக்கம்




செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை தேவி. அழகில் ரதியையும், அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள். சுந்தர சோழ சக்கரவர்த்தி முதலாவது சோழ நாட்டின் சாதாரண குடிமக்கள் வரையில் அவளைப் போற்றினார்கள். அரண்மனையில் அவள் காலால் இட்டதைத் தலையினால் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். சிற்றரசர்கள் தங்கள் குலத்தில் வந்த அரசிளங் குமரிகளுக்குக் குந்தவை தேவியின் பணிப்பெண்ணாக இருக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பாரத நாட்டில் அந்நாளில் பேரரசர்களாக விளங்கிய பலரின் பட்டத்துக்குரிய அரச குமாரர்கள் இளைய பிராட்டி குந்தவையின் கைப்பிடிக்கும் பாக்கியத்துக்குத் தவம் கிடந்தார்கள்.

அத்தகைய சகல பாக்கியங்களும் வாய்க்கப் பெற்ற இளைய பிராட்டி அளவில்லாத சோகக் கடலில் மூழ்கி இருந்தாள். ஆதித்த கரிகாலனுக்கு அவள் சொல்லி அனுப்பிய எச்சரிக்கையெல்லாம் பயனிலதாய்ப் போயிற்று. சம்புவரையர் மாளிகைக்குப் போக வேண்டாமென்று அவனுக்கு அவள் அவசரச் செய்தி அனுப்பியிருந்தாள். அவளுடைய வார்த்தைக்கு எப்போதும் மிக்க மதிப்புக் கொடுக்கக்கூடிய அருமைத் தமையன் இந்த வார்த்தையைத் தட்டிவிட்டுக் கடம்பூர் அரண்மனைக்குப் போனான்.அங்கே மர்மமான முறையில் அகால மரணமடைந்தான். நந்தினி, கரிகாலனுக்கும் தனக்கும் அருள்மொழிக்கும் சகோதரி என்றே அவள் நம்பியிருந்தாள். நந்தினி ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் மீது வஞ்சம் கொண்டிருந்தாள் என்பதையும் அறிந்திருந்தாள். நந்தினியின் கையினாலேயே கரிகாலன் மரணம் அடைய நேர்ந்திருந்தால் அதைக் காட்டிலும் சோழ குலத்துக்கு ஏற்படக் கூடிய அபகீர்த்தியும், பழியும் வேறெதுவும் இல்லை. கரிகாலன் மரணத்துக்குப் பிறகு நந்தினி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை.

அருமைத் தமையனைப் பறிகொடுக்க நேர்ந்தது அவளுக்கு எல்லையில்லாத் துயரத்தை அளித்தது. உயிர் பிரிந்து இரண்டு நாளைக்குப் பிறகும் அவனுடைய திருமுகத்தில் குடிகொண்டிருந்த வீரக் களையை நினைத்து நினைத்து உருகினாள்.ஆகா! என்னவெல்லாம் அந்த மகாவீரன் கனவு கண்டு கொண்டிருந்தான்? கரிகால் பெருவளத்தானைப் போல் இமயமலை வரையில் திக்விஜயம் செய்து அம்மாமலையின் சிகரத்தில் புலிக் கொடியை நாட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானே? அப்படிப் பட்டவனுடைய திருமேனி அரை நாழிகைப் பொழுதில் எரிந்து பிடி சாம்பலாகி விட்டது. சோழ நாட்டில் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. அப்படிக் கலந்த மண்ணிலிருந்து வருங்காலத்தில் ஆயிரமாயிரம் வீராதி வீரர்கள் தோன்றுவார்கள். சோழ நாட்டிலிருந்து நாலா திசைகளிலும் செல்லுவார்கள். கடல் கடந்து தூர தூர தேசங்களுக்குச் செல்லுவார்கள். வீரப் போர்கள் புரிந்து சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிப்பார்கள். போகுமிடங்களிலெல்லாம் வானளாவிய கோபுரங்களை உடைய கோவில்களை எழுப்புவார்கள். அவை சோழ நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்து இயம்பிய வண்ணம் கம்பீரமாக நிற்கும். தமிழையும் தமிழ்க் கலைகளையும் சைவ வைஷ்ணவ சமயங்களையும் பரப்புவார்கள். மூவர் தேவாரப் பதிகங்களும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடல் கடந்த நாடுகளிலெல்லாம் ஒலி செய்யும். "வெற்றி வேல்! வீர வேல்!" என்னும் வெற்றி முழக்கங்கள் கேட்கும்.

இவையெல்லாம் வெறும் கனவு அல்ல; நடக்கக்கூடியவை தான். அருள்மொழிவர்மன் பிறந்த வேளையின் விசேஷம் பற்றிப் பெரியவர்களும் சோதிடர்களும் அனுபவம் வாய்ந்த தாய்மார்களும் சொல்லியிருப்பதெல்லாம் உண்மையானால், கரிகாலன் கனவு கண்டவையெல்லாம் அருள்மொழிவர்மன் மூலமாக நினைவாகக் கூடும்.

ஆனால், அதற்கு எத்தனை இடைஞ்சல்கள் குறுக்கே நிற்கின்றன? ஆகா! இச்சிற்றரசர்கள் தங்களுக்குள் பூசல் விளைவித்துக் கொண்டு என்ன விபரீதங்கள் விளைவிப்பார்களோ, தெரியவில்லை. மலையமானும், வேளானும் அருள்மொழிவர்மனைச் சிம்மாசனம் ஏற்றியே தீருவதென்று ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். பழுவேட்டரையர்களும் அவர்களுடைய நண்பர்களும் மதுராந்தகனுக்காகப் படை திரட்டி வருகிறார்கள். சக்கரவர்த்தியோ அடுத்தடுத்து நேர்ந்து விட்ட இரு பெரும் விபத்துக்களால் சோகக் கடலில் ஆழ்ந்திருக்கிறார். யாரிடமும் எதைப்பற்றியும் பேச மறுக்கிறார். இளம் பிராயத்தில் தாம் செய்த பாவத்தை எண்ணி எண்ணிப் பச்சாதாபப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தேறுதல் மொழி சொல்லக் கூட யாருக்கும் தைரியமில்லை. அவருடைய செல்வக் குமாரியாகிய தனக்கே அவரை அணுக அச்சமாயிருக்கிறதென்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேன்!

அருள்மொழிவர்மன் இராஜ்யத்தைத் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறான். மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டி வைத்து விட்டுத் தான் சோழர் படைகளுடன் கடல் கடந்து திக்விஜயம் செய்ய விரும்புகிறான். ஆனால், அதற்கும் எதிர்பாராத முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. ஏது காரணத்தினாலோ, சோழ நாடே போற்றிப் பணியும் முதிய பிராட்டியான செம்பியன் மாதேவி தம் மகனுக்குப் பட்டம் கட்டுவதை ஆட்சேபிக்கிறார். காலஞ்சென்ற தமது கணவரின் கட்டளை என்கிறார்.

இந்தச் சிக்கல்களெல்லாம் எப்படித் தீரப் போகின்றனவோ, தெரியவில்லை.

இப்படிச் சோழர் குலத்தைப் பற்றியும் சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றியும் ஏற்பட்டிருக்கும் கவலைகள் எல்லாம் போதாதென்று குந்தவையை இன்னொரு பெருங்கவலை வாட்டி வதைத்தது. அவளுடைய உள்ளம் கவர்ந்த வாணர்குல வீரனைப் பாதாளச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலனுடைய மரணத்துக்கு அவனைப் பொறுப்பாக்க முயல்கிறார்கள். இதில் அந்தப் பல்லவ குலத்துப் பார்த்திபேந்திரன் பிடிவாதமாக இருக்கிறான். பாட்டனார் மலையமான் ஒருவேளை தான் சொன்னால் கேட்டு விடுவார். ஆனால் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும் ஒருவன் விஷயத்தில் பெண்பாலாகிய தான் எப்படித் தலையிடுவது? தமையனாகிய ஆதித்த கரிகாலனைக் காட்டிலும் வழிப்போக்கனாக வந்த வந்தியத்தேவன் பேரில் தனக்கு அதிக அபிமானம் என்று ஏற்பட்டால், அதைவிட அபகீர்த்தி வேறு என்ன இருக்கிறது? பார்த்திபேந்திரன் வேணுமென்றே அத்தகைய அபகீர்த்தியைப் பரப்பக் கூடியவன். கரிகாலன் கொலையுண்டு கிடந்த இடத்தில் வந்தியத்தேவனைக் கையும் மெய்யுமாகச் சம்புவரையரும், கந்தமாறனும் பிடித்ததாகப் பார்த்திபேந்திரன் சொல்கிறான். இது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் கரிகாலனை ஒரு நிமிடமும் விட்டுப் பிரியக் கூடாது என்று தான் கூறிய வார்த்தையை வந்தியத்தேவர் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆதித்த கரிகாலனைக் கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு முயன்று அதில் வெற்றி காணமுடியாமல் தோல்வியுற்றிருக்க வேண்டும்.

ஆனால் இதைப்பற்றிய உண்மையை எப்படி அறிந்து கொள்வது? வந்தியத்தேவரைத் தான் போய்ப் பார்க்க முயன்றாலும், அவரைச் சிறையிலிருந்து இங்கே தருவித்தாலும் வீண் சந்தேகங்களுக்கும் பழிச் சொற்களுக்கும் இடங்கொடுக்கும். தன்னைப்பற்றி யாரும் எதுவும் சொல்லத் துணியமாட்டார்கள். அப்படிச் சொன்னாலும் கவலையில்லை; ஆனால் கரிகாலனுடைய மரணத்துக்கு அருள்மொழிவர்மனையே காரணமாக்கவும் சில வஞ்சகர்கள் முயன்று வருகிறார்கள். தான் அவசரப்பட்டு ஏதாவது செய்வதால், அவர்களுடைய கட்சிக்கு ஆக்கம் உண்டாகி விடக்கூடாது அல்லவா?

தெய்வமே! தேவி! ஜகன்மாதா! பிறந்ததிலிருந்து ஒரு கவலையுமின்றி வாழ்ந்திருந்த எனக்கு எப்பேர்ப்பட்ட சோதனையை அளித்துவிட்டாய்?....

இவ்வாறெல்லாம் குந்தவையின் உள்ளம் எண்ணி எண்ணிப் புண்ணாகிக் கொண்டிருந்தது. கரிகாலனுடைய மரணச் செய்தியும் வந்தியத்தேவர் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் செய்தியும் வந்தது முதலாவது இளைய பிராட்டி இரவில் ஒரு கணமும் தூங்க முடியவில்லை. இந்தச் சிக்கலான நிலைமை தீர்வதற்கு வழி கண்டுபிடிக்க யோசித்து யோசித்து, பல வழிகளை யோசித்து, ஒவ்வொன்றையும் நிராகரித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய உயிருக்குயிரான தோழி வானதியிடம் கூட மனம் விட்டுப் பேசுவதற்கு மறுத்தாள்.

வானதியும் அவளுடைய மனோநிலையை ஒருவாறு உணர்ந்து கொண்டு ஏதும் பேசாமலும் கேட்காமலும் இருந்தாள். குந்தவைக்குப் பக்கத்தில் பெரும்பாலும் நிழல் போல் தொடர்ந்து இருந்துகொண்டு அந்த நிழலைப் போலவே மௌனமாகவும் இருந்து வந்தாள்.

அவ்விதம் சமயோசிதம் அறிந்து குந்தவையின் சிந்தனைகளில் குறுக்கிடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து வந்த வானதி, அன்றைக்குத் திடீரென்று இளைய பிராட்டியை நெருங்கி, "அக்கா! அக்கா! தங்களைப் பார்ப்பதற்காக ஒரு பெண் வந்திருக்கிறாள். கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள்; பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது!" என்று சொன்னதும் குந்தவைக்கே சிறிது வியப்பாகப் போய்விட்டது.

"அவள் யார்? என்ன விஷயம் என்று நீ கேட்கவில்லையா?" என்றாள்.

கேட்டேன், அக்கா! அதைச் சொன்னால் தங்களுக்கு எரிச்சல் வருமோ, என்னமோ! சம்புவரையர் மகள் மணிமேகலையாம்! சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் சம்புவரையர் குடும்பத்தைச் சிறை வைத்திருக்கிறார்கள். இவள் ஒருவருக்கும் தெரியாமல் வழி விசாரித்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறாள். என்ன காரியம் என்று கேட்டால், தங்களிடம் நேரிலேதான் சொல்வேன் என்கிறாள். அவளுடைய கண்ணீர் ததும்பிய முகத்தை நீங்கள் பார்த்தால் உடனே உங்களுடைய மனம்கூட மாறிவிடும்!" என்றாள் வானதி.

"அப்படியானால், என் மனம் கல்மனம் என்றா சொல்கிறாய்?" என்றாள் குந்தவை கோபமாக.

"தங்களுக்கு உண்மையிலேயே கல்மனம்தான். அக்கா! இல்லாவிட்டால், வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையில் விட்டுவிட்டுச் சும்மா இருப்பீர்களா?" என்றாள் வானதி.

"சரி, சரி, அந்தப் பெண்ணை இங்கே வரச் சொல்!" என்றாள் குந்தவை.

வானதி மானைப்போல் குதித்தோடி மறுநிமிடம் மணிமேகலையை அழைத்துக் கொண்டு வந்தாள்.

பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.