pm logo

pAratitAcan paTaippukaL
tamizacciyin katti
(in tamil script, unicode format)

தமிழச்சியின் கத்தி (கவிதைத்தொகுப்பு)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
EText input : Ms.Suhitha Arasu, Toronto, Ontario, Canada.
Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India.
HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This file was last revised on 21 May 2003
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தமிழச்சியின் கத்தி (கவிதைத்தொகுப்பு)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

உள்ளுறை

1 . சுதரிசன் சிங்க் துடுக்கு 21. சேரிக்குள் சென்றாள்
2. சுதரிசன் சூழ்ச்சி 22. மன்னனைக் கண்டாள்
3. திம்மன் பூரிப்பு 23. இருமாதரும் அழைத்தார்கள்
4. சுதரிசன் நினைவு 24. சேரித்தலைவன் செங்கான்
5. அவன் பொய்யுரை 25. செங்கான் உண்ண அழைத்தான்
6. சுப்பம்மா தொல்லை 26. சோற்றில் நஞ்சு
7. திம்மன் ஆவல் 27. உண்ண எழுந்தாள்
8. காடு 28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்
9. சிங்கம் 29. மன்னன் வந்தான்
10. சுப்பம்மா 30. திம்மன் நான் என்றான்
11. பொன்துளிர் 31. அத்தான் என்றெதிர் வந்தாள்
12. வானப்படம் 32. மறவர் திறம் பாடு
13. புதிய சிப்பாய் 33. குதிரைவீரர் வருகின்றார்கள் .
14. அன்றிரவு 34 . மேற்பார்வையாளன்
15. மகிழ்ந்திரு 35. அவள் பிடிப்பட்டாள்
16. சுதரிசன் மயக்கம் 36. தேசிங்குக்குச் சேதி எட்டிற்று
17. சுப்பம்மா நிலை 37. சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்
18. திம்மன் நிலை 38. தேசிங்கு முன் வந்தாள்
19. சுதரிசன் நிலை 39. முற்றிய பேச்சு
20. இங்கே செல்லாது 40. தேசிங்கு சினம்
--------

1. சுதரிசன் சிங்க் துடுக்கு

அகவல்

தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!
-------

2. சுதரிசன் சூழ்ச்சி

எண்சீர் விருத்தம்
சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்;
      தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான்.
எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல்
      ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை!
இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்;
      இளித்தவா யால்"உம்உம்" எனக்கேட் கின்றான்!
கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்;
      கனிஇதழாள் வரமகிழ்வான்; போனால் நைவான்!

உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும்
      ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித்
தளதளத்த கனியாகிப் போன தாலே
      தாங்காத நிலையடைந்தான். சூழ்ச்சி ஒன்றை
மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்;
      'வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று
குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த
      குதிரையினைப் பார்த்துவா' என்று சொன்னான்.

'விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த
      விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா
மருந்தேனும் வந்தவர்கள் பசித் திருக்க
      வாயில்இடான் தமிழன்;இது பழமை தொட்டே
இருந்துவரும் பண்பாகும். எனினும் வந்தோன்
      எவன்அவனை ஏன்நம்ப வேண்டும்' என்று
துரும்பேனும் நினையாத தாலே இந்நாள்
      தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்!

'குதிரைகண்டு வருகின்றேன்' என்று திம்மன்
      குதித்துநடந் தான்!சென்றான்; சுதரி சன்சிங்க்
முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து
      முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல்
அதிராத மொழியாலே அதிரும் ஆசை
      அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே
'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ
      ஏதுக்கு நாணுகின்றாய்' என்று சொன்னான்.

'ஏன்'என்று வந்துநின்றாள். 'சுப்பம் மாநீ
      இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே
நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா?
      நகைகிடைக்கும் நல்லநல்ல ஆடை யுண்டு.
மான்அங்கே திரிவதுண்டு மயில்கள் ஆடும்
      மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே;
கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே
      கடுந்துன்பம் அடைகின்றாய்' என்று சொன்னான்.

'இல்லையே! நான்வேல னோடு தானே
      இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக' என்று
சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்;
      துயரத்தை வௌிக்காட்டிக் கொள்ள வில்லை;
இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம்
      எட்டிப்போய் நின்றபடி 'போனார் இன்னும்
வல்லை' என்று முணுமுணுத்தாள். சுதரி சன்சிங்க்
      வந்தவழி யேசென்றான் தோழ னோடே!

'சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச்
      சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால்
தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம்
      சாயாதே' எனஎண்ணிச் சுதரி சன்சிங்க்
அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால்
      அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்:
'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய்.
      அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை

தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர்
      தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார்.
திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு
      சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை;
விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன்
      வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ?
கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும்.
      காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற் காதே.

இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான்
      என்றாலும் தனியாக இருத்தல் தீது!
'குளக்கரைக்குப் போ'என்றேன் நீயும் போனாய்
      கோதையொடு தனியாக நாங்கள் தங்க
உளம்சம்ம தித்ததா? வந்தோம் உன்பால்!
      உனக்குவௌி வேலைவந்தால் போக வேண்டும்.
இளக்கார மாய்ப்பேசும் ஊர்பெண் ணென்றால்
      உரைக்கவா வேண்டும்?நீ உணர்ந்தி ருப்பாய்.

ஒருமணிநே ரம்பழகி னாலும் நல்லார்
      உலகம்அழிந் தாலும்மறந் திடுவ தில்லை.
பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்
      பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான்
      உனைக்கூட்டிப் போவ'தென முடிவு செய்தேன்.
வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை
      மறுதிங்கள் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை.

இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை
      இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி
வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு!
      வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு!
கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
      கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!
      பிறகென்ன? வரட்டுமா? என்றான்; சென்றான்.
--------

3. திம்மன் பூரிப்பு

தென்பாங்கு-கண்ணிகள்
'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
      நாமென்ன நூறுசெல விட்டோம்?
சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன்
      சூதற்ற நல்லஉளம் கொண்டோன்;
பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம்
      பங்கில்அவன் நல்லஉள்ளம் வைத்தான்.
புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி
      போய்அலுவல் நான்புரிய வேண்டும்.

என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன்
      இன்பமனை யாளும்உரைக் கின்றாள்:
'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம்
      தெற்குவௌிப் புன்செய்விளை யாதா?
சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில்
      சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும்.
என்னஇருந் தாலும்சுபே தாரை - நான்
      என்வரைக்கும் நம்பமுடி யாது.

நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட
      நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும்
பங்கமென்று நாமும்அறி வோமே - இதில்
      பற்றுவைக்க ஞாயமில்லை' என்றாள்.
'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல்
      தட்டிநடக் காதிருக்க வேண்டும்.
பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப்
      பொட்டலில் கவாத்துசெய்வ தற்கே!

தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல
      சீனியும் கசக்குமடி பெண்ணே.
தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன்
      செய்தனையும் குத்தகைக்கு விட்டுப்
பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல
      பெட்டையையும் சேவலையும் விற்றுச்
சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல
      செஞ்சிக்குடி ஆவமடி' என்றான்.

நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து
      நம்மிடத்தில் தங்குவதி னாலே
காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன்
      கைந்நிறையக் காசுதரு கின்றேன்.
வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த
      வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும்;
காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு
      கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு!

கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல
      கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய்;
மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல
      மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும்.
சீருடைய தாகிய தென்பாங்கு - கறி
      செய்துவிடு வாய்இவைகள் போதும்.
நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல
      நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு.

பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன்
      பக்குவம் கெடாதுவறுப் பாயே.
தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந்
      தூணைஒத்த தாய்இரண்டு வாங்கு;
வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று
      வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான்.
தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத்
      தக்கபொருள் அத்தனையும் சேர்க்க!
--------------

4. சுதரிசன் நினைவு

எண்சீர் விருத்தம்
செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க்
      செஞ்சியிலே தன்உடலும் வளவ னூரில்
வஞ்சியிடம் நினைவுமாய் இருந்தான். அன்று
      மலைக்கோட்டை காத்துவரும் சிப்பாய் மாரைக்
கொஞ்சமுமே தூங்காமல் விடியு மட்டும்
      குதிரைமேல் திரிந்துமேற் பார்வை பார்க்கும்
நஞ்சான வேலையிலே மாட்டிக் கொண்டான்!
      நள்ளிரவில் சுதரிசன்சிங்க் தென்பால் வந்தான்.

'தெற்குவா சல்காப்போன் எவன்காண்' என்று
      செப்பினான் சுதரிசன்சிங்க். 'ரஞ்சித்' என்று
நிற்கும்சிப் பாய்உரைத்தான். சுதரி சன்சிங்க்
      'நீதானா ரஞ்சித்சிங்க்! கேட்பா யப்பா.
முற்றிலுமே அவள்நினைவால் நலிந்தே னப்பா
      அன்னவளை மறப்பதற்கு முடியாதப்பா.
விற்புருவ அம்புவிழி பாய்ந்த தோஎன்
      விலாப்புறத்தில் தானப்பா; செத்தே னப்பா.

அப்படியோர் மங்கையினைப் பார்த்த தில்லை.
      நானுந்தான் ஆனபல்லூர் சுற்றி யுள்ளேன்!
ஒப்படியென் றால்அவளோ ஒப்ப மாட்டாள்.
      உருப்படியை இவ்விடத்தில் கொண்டு வந்து
கைப்பிடியில் வைத்துவிட்டால் என்க ருத்துக்
      கைகூடும். பொழுதுவிடிந் ததும்நா னங்கே
எப்படியும் போய்ச்சேர வேண்டும்' என்றான்
      இன்னும்அவன் கூறுகின்றான் அவளைப் பற்றி;
--------------

5. அவன் பொய்யுரை

பஃறொடை வெண்பா
'என்மீதில் ஆசைஅவட் கில்லா மலும்இல்லை;
என்மீதில் ஆசையே இல்லா தவள்போலே
ஏன்நடந்தாள் என்றுகேள்; என்னை இன்னானென்று
தான்அறிவ தற்குள்தன் னைக்காட்டிக் கொள்வாளா?
மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல்
கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை!
அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்?
என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும்
வீட்டுக்கா ரன்மேல் விருப்பமுடை யாள்போலும்
காட்ட நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து
நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே!
வஞ்சி திறமை வரைதல் எளிதா?
குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி
உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல்.
மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை.
ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்;
உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான்
கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி!
'தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி
சன்கணவன் ஆவதென்றோ' என்பதவள் கவலை.
இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்;
பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா!
சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான்
காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா!
மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும்
கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்!
யாவரும் தம்அடிமை என்னும் இரண்டுதடும்
கோவைப் பழமிரண்டின் கொத்து! நகைமுல்லை!
அன்னம் பழித்தும் அகத்தில் குடிபுகுந்தும்
பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்!
கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப்
பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை
கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள்
பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா!
அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள்
என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு!
நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால்
கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப்
பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை
மூச்சுடையேன் கண்டுவிட்டேன்; செத்தால் முகமறப்பேன்'
என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி
ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி ஒருசேவல்
நெட்டைக் கழுத்தை வளைக்க நெடும்பரியைத்
தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா
அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக்
கண்ட இனியகற் கண்டு!
-----------

6. சுப்பம்மா தொல்லை

கலிவெண்பா
அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்;
'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது
தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு
மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால்
இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று
தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச்
சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில்
செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில்
வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க்
பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று
தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள்.
'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச்
செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர்
அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி
அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார்.
அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன்
திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்.
ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை
வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்;
தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம்
அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில்
இப்போது கையில் இருப்பாக - முப்பத்து
மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே
யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால்
யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை.
ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில்
ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள்
இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை
வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே
கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான்.
'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள்.
வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று
தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை
என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே
ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ
கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்;
'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்'
என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா
ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள்
செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை
அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள்
முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே.
சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல்
கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல்
தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா?
என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?'
என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள்.
திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன
பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள்
தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன
இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே
'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான்.
'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்'
என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே
'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே
பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான்.
கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது
வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை
காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக்
கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான்.
அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில்
அரிசி எடுத்தாள். அவனும் அரிசி
பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய
குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால்
மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ
இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப்
புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல்
திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில்
திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும்
வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு
மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக்
காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக்
கீச்சென்று பேசாக் கிளி.
-------------

7. திம்மன் ஆவல்

தென்பாங்கு-கண்ணிகள்
காலை உணவருந்திச் - சுதரிசன்
      காய்ச்சிய பால்பருகி
ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில்
      ஓய்ந்து படுத்திருந்தான்.
'வேலை கிடைக்கும்என்றீர் - உடனே
      விண்ணப்பம் போடுவதா?
நாலைந்து நாட்களுக்குப் - பிறகு
      நான்அங்கு வந்திடவா?'

என்றுதிம் மன்வினவச் - சுதரிசன்
      'யாவும் முடித்துவிட்டேன்;
இன்று கிளம்பிவந்தால் - நல்லபயன்
      ஏற்படும் அட்டிஇல்லை.
ஒன்றும் பெரிதில்லைகாண் - திம்ம,நீ
      ஊருக்கு வந்தவுடன்
மன்னர் இடத்தினிலே - உன்னையும்
      மற்றுன் மனைவியையும்

காட்டி முடித்தவுடன் - கட்டளையும்
      கையிற் கிடைத்துவிடும்.
வீட்டுக்கு நீவரலாம் - சிலநாள்
      வீட்டிலே தங்கியபின்
போட்ட தலைப்பாகை - கழற்றிடப்
      போவதில் லைநீதான்;
மாட்டிய சட்டையினைக் - கழற்றியும்
      வைத்திடப் போவதில்லை.

எண்பது பேருக்குநான் - உதவிகள்
      இதுவ ரைக்கும்செய்தேன்;
மண்ணில் இருப்பவர்கள் - நொடியினில்
      மாய்வது திண்ணமன்றோ!
கண்ணிருக் கும்போதே - இவ்வரிய
      கட்டுடல் மாயுமுன்னே
நண்ணும் அனைவருக்கும் - இயன்றிடும்
      நன்மைசெய் தல்வேண்டும்.

வண்டியினை அமர்த்து - விரைவினில்
      மனைவி யும்நீயும்
உண்டி முடிந்தவுடன் - வண்டிதான்
      ஓடத் தொடங்கியதும்
நொண்டி எருதெனினும் - செஞ்சியினை
      நோக்கி நடத்துவித்தால்
கண்டிடும் பத்துமணி - இரவினில்
      கட்டாயம் செஞ்சிநகர்.

வீட்டையும் பேசிவிட்டேன் - இருவரை
      வேலைக் கமைத்துவிட்டேன்;
கோட்டையிற் சிப்பாயாய் - அமரும்
      கொள்கையி லேவருவார்
காட்டு மனிதர்அல்லர் - என்றுநான்
      கண்டித்துப் பேசிவிட்டேன்.
கேட்டு மகிழ்ந்தார்கள் - நிழல்போல்
      கிட்ட இருப்பார்கள்.'

திம்மன் இதுகேட்டான் - கிளம்பிடத்
      திட்டமும் போட்டுவிட்டான்!
'பொம்மை வரும்'என்றதும் - குழந்தைகள்
      பூரித்துப் போவதுபோல்
'உம்'என்று தான்குதித்தான் - விரைவினில்
      உண்டிட வேண்டுமென்றான்.
அம்முடி வின்படியே - தொடங்கினர்
      அப்பொழு தேபயணம்!
-----------

8. காடு

எண்சீர் விருத்தம்
'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
      நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன்
காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக்
      கதைஇழுக்க மனைவியைக்கை யோடி ழுத்துத்
தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச்
      செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான்.
வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும்
      வௌிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை!

குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு
      கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான்.
முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்;
      முன்நிலவும் அடங்கிற்று. முத்துச் சோளக்
கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள்.
      காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில்.
உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே
      உணர்ந்தார்கள்; பின்அதனை அருகில் கேட்டார்.

மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்;
      விரைவாகச் சிலர்வருவ தாய் உணர்ந்தார்.
சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்;
      தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்;
எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை.
      எலிக்கண்போல் எரிந்ததுவண் டியின் விளக்கும்;
இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள்;
      எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு!

பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே
      பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன்
இறங்கி'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்.
      'எங்கிருந்து வருகின்றீர்?' என்றார் வந்தோர்.
'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்;
      பெயர்எனக்குச் சீனன்'என்றான் வண்டிக் காரன்.
'உறங்குபவர் யார்உள்ளே?' என்று கேட்டார்.
      உளறலொடு திம்மன்'நான் வளவ னூர்தான்'

என்றுரைத்தான். 'இன்னும்யார்?' என்று கேட்டார்.
      'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன். கேட்ட
கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்!
      'காரியந்தான் என்ன' வென்றார். நடுங்குந் திம்மன்
தன்கதையைக் கூறினான்; கேட்டார். அன்னோர்
      சாற்றுகின்றார்: 'திம்மனே மோசம் போனாய்;
பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப்
      பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்;

தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத்
      தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
      தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
      சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ!
அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி
      அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும்
      நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து
வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல
      வீணரல்லயாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
      சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே!
இல்லயெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்;
      என்ன'என்றார். திம்மன்,'விடை தருவீர்' என்றான்.

'போகின்றாய்?போ! பிறன்பால் வால்கு ழைக்கப்
      போ!அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ!
போ!கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம்
      போக்கப்போ! ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள்.
சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத்
      தமிழர்மறம்! தமிழர்நெறி!'என்றார். நங்கை
'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று
      போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்!

ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி!
      அவற்றில்ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்.
'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க!
      தமிழச்சி உன்கத்தி வெல்க!' என்றார்.
வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை.
      மாட்டுவண்டி சென்றதுசெஞ் சியினை நோக்கி!
பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப்
      பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்!
------------

9. சிங்கம்

தென்பாங்கு-கண்ணிகள்
'காட்டு வழிதனிலே சிங்கமே! - எம்மைக்
      காட்டிக் கொடுத்துவந்த சிங்கமே!
ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே! - உங்கள்
      உள்ளம் பதைத்ததென்ன சிங்கமே?
நீட்டிய உங்கள்கத்தி கள்ளரைக் - கண்டு
      நெட்டுக் குலைந்ததென்ன சிங்கமே?
கூட்டி வழிநடந்து வந்திரே' - என்று
      கூறிச் சிரித்தான்அத் திம்மனும்!

'அங்கே வழிமறித்த யாவரும் - திரு
      வண்ணா மலைநகர வீரர்கள்;
இங்கே எமக்கவர் விரோதிகள் - தக்க
      ஏற்பாட்டி லேஎதிர்க்க வந்தவர்;
உங்கட் கிடர்புரிய எண்ணிடார் - இந்த
      உண்மை தெரியும்எனக் காதலால்
எங்கே உமைவிடுத்த போதிலும் - உங்கட்
      கிடரில்லை' என்றனன் சுதரிசன்!
------------

10. சுப்பம்மா

எண்சீர் விருத்தம்
இவ்வாறு கூறிப்பின் சுதரி சன்சிங்க்
      இதோகாண்பீர் செஞ்சிமலை சார்ந்த சிற்றூர்!
அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவிர்
      அமைதியாய் இருந்திடுவீர்; உணவு யாவும்
செவ்வையுற ஏற்பாடு செய்வேன்; என்றன்
      சேவகத்தை நான்பார்க்க வேண்டு மன்றோ?
எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன்' இங்கே
      எவற்றிற்கும் எற்பாடு செய்வேன்' என்றான்.

கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்;
      கழறியது போலவே உணவுந் தந்தான்;
வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம்
      வராதிருந்தாள்; அவளுடைய நெஞ்ச மெல்லாம்
பொய்வேலைச் சுதரிசன்செய் திடஇ ருக்கும்
      பொல்லாங்கில் இருந்தது!குத் துக்கத் திக்கு
மெய்யாக வேலைஉண்டோ? அவ்வா றொன்றும்
      விளையாமை வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.
--------------

11. பொன்துளிர்

எண்சீர் விருத்தம்
சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின்
      துணைவனின்ஒன் றேமுக்கால் தூக்கம் எல்லாம்
தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம்
      துளிர்த்ததுபொற் றுளிர்கிழக்கு மாம ரத்தில்!
அப்போதில் சுப்பம்மா 'அத்தான்' என்றாள்;
      'அவசரமா' எனத்திம்மன் புரண்டான் ஆங்கே.
'இப்படிப்போ' என்றுபகல் இருளைத் தள்ளி
      எழுந்துவந்து திம்மனெதிர் சிரித்த தாலே.

'அம்மா'என் றிருகையை மேலே தூக்கி
      'ஆ'என்று கொட்டாவி விட்டுக் குந்தித்
திம்மன்எழுந் தான்!அவனும், சுப்பம் மாவும்
      சிறுகுடிசை விட்டுவௌிப் புறத்தில் நின்றே
அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை
      அரும்புகின்ற நேரத்தில் பொற்கதிர் போய்ச்
செம்மையுறத் தழுவியதால் மலைகோட் டைமேல்
      சிறுகுவிரித் தெழுங்கருடக் கொடியைக் கண்டார்.
----------

12. வானப்படம்

தென்பாங்கு - கண்ணிகள்
'பொன்னான வானப் படத்தில் - வியிரப்
      புதிதான வண்ணம் குழைத்துத்
தன்னேர் இலாதமலை எழுதித் - திகழ்
      தளிர்படும் பூஞ்சோலை எழுதி
உன்னை மகிழ்வித்த காட்சி - எனக்கும்
      உவகை கொடுத்ததடி பெண்ணே'
என்றுரைத் தான்நல்ல திம்மன் - அந்த
      ஏந்திழை தான்புகல் கின்றாள்:

'விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை
      மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான்
ஒண்ணீழல் செய்திடும் சோலை - யதனை
      ஒளியில் துவைத்ததும் காண்க!
கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு
      காட்டப் புரிந்ததும் கதிர்தான்!
மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி
      வாய்த்திட்ட அறிவாகும்' என்றாள்.

மங்கையும் திம்மனும் இயற்கை - அழகில்
      வாழ்கின்ற போதிற்சு பேதார்
செங்கையில் மூட்டையொடு வந்தான் - 'புதுமை
      தெரியுமோ உங்களுக்' கென்றான்.
அங்காந்த வாயோடு திம்மன் - விரைவில்
      'அதுவென்ன புகலுவீர்' என்றான்!
'சிங்கன் முயற்சி வீணாமோ? - புதிய
      சிப்பாயும் நீயாகி விட்டாய்.

இந்தா இதைப்போடு! சட்டை! - இதுவும்
      எழிலான சல்லடம்! மாட்டு!
இந்தா இதைப்போடு! பாகை! - இன்னும்
      இந்தா இடைக்கச்சை! கட்டு!
செந்தாழை மடல்போன்ற கத்தி - இடையில்
      சேர்த்திறுக் கித்தொங்க வைப்பாய்!
வந்துபோ என்னோடு திம்மா! - விரைவில்
      வா'என் றழைத்தனன் சிங்கன்!
------------

13. புதிய சிப்பாய்

எண்சீர் விருத்தம்
'சுதரிசன்சிங்க் செய்தநன்றி பெரிது கண்டாய்!
      சுப்பம்மா விடைகொடுப்பாய்' என்றான் திம்மன்.
இதற்கிடையில் சுதரிசன்சிங்க் 'நாளைக் குத்தான்
      இங்குவர முடியும்நீ' என்று ரைத்தான்.
'அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ
      அறிமுகமில் லாவிடத்தில்?' என்றாள் அன்னாள்.
'இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப
      ஏற்பாடு செய்கின்றேன்' என்றான் சிங்கன்.

'சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே
      சிறிதும்உனக் கேன்கவலை?' என்றான் திம்மன்.
'இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ
      இரு'என்று சிங்கனுரைத் திட்டான். திம்மன்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப்
      புறப்பட்டான் சிங்கனொடு! சுப்பம் மாவும்
சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு
      துணைவன்போ வதுகண்டு சொக்கி நின்றாள்!
-----------

14. அன்றிரவு

அகவல்
மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச்
சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக்
குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்!
சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த
குப்பும் முருகியும் செப்பினார் தேறுதல்.
குப்பு 'மங்கையே, சிப்பாய் இப்போது
வருவார்; அதற்குள் வருத்தமேன்?' என்றாள்.
முருகி, 'இதற்கே உருகுகின் றாயே
சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர்
மாசக் கணக்காய் வாரக் கணக்காய்
வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்;
எப்படி உன்னுளம் ஒப்பும்?' என்றாள்.
கோதைசுப் பம்மா கூறு கின்றாள்:
'புயற்காற்று வந்து போகாது தடுப்பினும்
அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது;
நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது;
பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே!
வீட்டை விட்டவர் வௌியே செல்வது
கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே!
அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம்.
அயல்போ வாரெனில் அதுவும் எங்கே?
வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து
வீடு, மற்றொரு வீடு, தோப்பு
மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே
இப்போ தென்ன இருக்கும் மணி?அவர்
எப்போது வருவார்?' என்று கேட்டாள்!
குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி
விளக்கு வைக்கும் வேளை என்றாள்!
குப்பு, முருகி, சுப்பம்மா இவர்
இருந்த இடமோ திருந்தாக் குடிசை!
நாற்பு றம்சுவர் நடுவி லேஓர்
அறையு மில்லை. மறைவு மில்லை.
வீட்டு வாசல், தோட்ட வாசல்
இருவா சல்களும் நரிநுழை போலக்
குள்ள மாகவும் குறுக லாகவும்
இருந்தன. முருகி எழுந்து விளக்கை
ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள்.
குப்பு மகிழ்ந்து குந்தினாள் சாப்பிட.
சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்:
'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்;
முதலில் நீங்கள் முடிப்பீர்' என்றனள்.
குப்பு 'வாவா சுப்பம் மாநீ
இப்படி வா!நான் செப்புவ தைக்கேள்.
வருவா ரோஅவர் வரமாட் டாரோ?
சிப்பாய் வேலை அப்படிப் பட்டது.
உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால்
உண்பார்; உணவு மண்ணாய் விடாது.
சொல்வதைக் கேள்'என்று சொல்லவே மங்கை
'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள்.
காலம் போகக் கதைகள் நடந்தன.
முருகி வரலாறு முடிந்ததும் குப்பு
மாமியார் கதையை வளர்த்தினாள். பிறகு
மூவரும் தனித்தனி மூன்று பாயில்
தலையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர்.
அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய்
'என்னடி முருகி' என்ற ஒருகுரல்
கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய்
'ஏனிந் நேரம்' என்று வரவேற்று
வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள்.
இருவரு மாக ஒரேபாய் தன்னில்
உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த
சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது!
சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்?
முருகியும் அவனும் அருகில் நெருங்கி
உரையாடு கின்றனர். உறவும் உண்டோ?
என்று பலவா றெண்ணி இருக்கையில்
முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான்.
குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச்
சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள்.
'மேல்என் னென்ன விளையுமோ? கண்ணிலாள்
போல்இவ் விருளில் புரளு கின்றேன்;
சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள்
பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ?'
என்று நினைத்தாள்; இடையில் கத்தியை
இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள்.
கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும்
சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில்
ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள்.
கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக்
கருதினாள்; ஆயினும் களையுண் டானதால்
இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக்
கரும்பாம் பாம்துயில் கவர
இரவு போயிற்றே! இரவு போயிற்றே!
------

15. மகிழ்ந்திரு

தென்பாங்கு -- கண்ணிகள்
நீரடை பாசியில் தாமரை பூத்தது       போலே - நல்ல

நீலத் திரைகடல்      மேலே - பெருங்

காரிருள் நீக்கக் கதிர்வந்து பூத்ததி       னாலே

வாரிச் சுருட்டி எழுந்தனன் சிங்கனப்       போது - உடை

மாற்றினன் தன்னுடல்      மீது - அவன்

நேரில் அழைத்தனன் வந்துநின் றாளந்த       மாது.

'ஆயிரம் பேரொடு திம்மனும் அங்கிருக்      கின்றான் - கவாத்

தாரம்பம் செய்திருக் கின்றான் - அவன்

ஞாயிறு செல்லத்திங் கட்கிழ மைவரு       கின்றான்.

போயிருந் தாலென்ன அச்சம் உனக்கென்ன     இங்கு? - ந

பொன்போலப் பாயில்உ றங்கு - இரு

தாய்மாரும் உண்டு துயர்செய்வ தெந்தக்கு       ரங்கு?

ஆவிஉன் மேல்வைத்த திம்ம னிடத்திலும்      சென்று - நான்

ஆறுதல் கூறுவேன்       இன்று - நீ

தேவை இருப்பதைக்கேள்இங்குத் தங்குதல்       நன்று.

கோவை படர்ந்திட்ட கொய்யாப் பழந்தரும்       தோட்டம் - இங்குக்

கூவும் பறவையின் கூட்டம் - மிக

நாவிற்றுப் போகும்
இனிக்கும் பழச்சுளை       ஊட்டம்.

தெற்குப் புறத்தினில் ஓடி உலாவிடும்      மானும் - அங்குச்

செந்தினை மாவோடு தேனும் - உண்டு      சற்றே ஒழிந்திடில்

செல்லுவ துண்டங்கு நானும்!

சிற்றோடை நீரைச்
சிறுத்தையின் குட்டி      குடிக்கும் - அதைச்

செந்நாய் தொடர்ந்து       கடிக்கும் - அங்கே

உற்ற வரிப்புலி நாயின் கழுத்தை       ஒடிக்கும்.

மாங்குயில் கூவிஇவ் வண்ணத் தமிழ்மொழி      விற்கும் - இந்த

வையமெலாம் அதைக்      கற்கும் - களி

தாங்காது தோகை விரித்தாடி மாமயில்      நிற்கும்.

பாங்கிலோர் காட்டில் படர்கொடி ஊஞ்சலில்      மந்தி - ஒரு

பாறையின் உச்சியை      உந்தி - உயர்

மூங்கில் கடுவனை முத்தமிடும் அன்பு       சிந்தி

கைவைத்த தாவில்
பறித்திட லாகும்ப       லாக்காய்- நீ

கால்வைத்த தாவில்க லாகும்ப ளாக்காய் - வெறும்

பொய்யல்ல நீஇதைப் போயறி வாய்காலப்       போக்காய்.

ஐவிரல் கூட்டி இசைத்திடும் யாழ்கண்ட       துண்டு - யாழின்

அப்பனன் றோவரி லாகும்ப வண்டு? - மக்கள்

உய்யும் படிக்கல்ல வோஇவை செய்தன       தொண்டு?

'போய்வரு வேன்'என்று சொல்லிச் சுதரிசன்       போனான் - அந்தப்

பூவையின் மேல்மைய லானான் - அவன்

வாய்மட்டும் நல்லது; உள்ளம் நினைத்திடில்       ஈனன்.

தூய்மொழி யாளும் சுதரிச னைநம்ப      வில்லை - என்று

தொலையுமோ இப்பெருந்      தொல்லை - என்று

வாய்மொழி இன்றி இருந்தனள் அக்கொடி      முல்லை. -----------

16. சுதரிசன் மயக்கம்

அறுசீர் விருத்தம்
சுதரிசன் தொலைந்தான்! அன்னோன்
      கூத்திமார் இரண்டு பேரும்
'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
      என்றுபக் கத்தில் குந்தி
சுதரிசன் புகழை யெல்லாம்
      சொல்லிடத் தொடங்கி னார்கள்.
புதுத்தொல்லை யதனில் மங்கை
      புழுவாகத் துடிக்க லானாள்.

அழகுள்ள ஆளாம் எங்கும்
      அவன்போலே அகப்ப டாராம்!
ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
      ஒருநூரா யிரமும் உண்டாம்!
ஒழுகுமாம் காதில் தேனாய்
      ஒருபாட்டுப் பாடி விட்டால்!
எழுதினால் ஓவி யத்தை
      எல்லாரும் மயங்கு வாராம்!

நடுப்பகல் உணவா யிற்று;
      நங்கைக்குக் கதை யுரைக்க
எடுத்தனர் பேச்சை. நங்கை
      'தப்புவ தெவ்வா' றென்று
துடித்தனள். 'எனக்குத் தூக்கம்
      வருகின்ற' தென்று கூறிப்
படுத்தனள்; கண்கள் மூடிப்
      பகற்போதைக் கழித்து விட்டாள்.

'பகலெலாம் கணவ ருக்குப்
      பலபல வேலை யுண்டு.
முகங்காட்டிப் போவ தற்கும்
      முடியாதா இரவில்?' என்று
நகம்பார்த்துத் தலைகு னிந்து
      நங்கையாள் நலிவாள்! அந்த
அகம்கெட்ட மாதர் வந்தே
      'சாப்பிட அழைக்க லானார்.'

உணவுண்டாள் நங்கை அங்கே
      ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
முணுமுணு என்று பேசி
      இருந்திட்ட இருமா தர்கள்
அணுகினார் நங்கை யண்டை
      அதனையும் பொறுத் திருந்தாள்!
தணல்நிகர் சுதரி சன்சிங்க்
      தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்.

எதிரினில் சுதரி சன்சிங்க்
      உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
புதுமலர் முகமேன் வாடிப்
      போனது? சுப்பம் மாசொல்!
குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
      குந்திக்கொண் டிருக்கின் றாயே?
அதைஉரை' என்றான். நங்கை
      'அவர்எங்கே?' என்று கேட்டாள்.

'திம்மனைச் சிங்கம் வந்தா
      விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
செம்மையாய் இருப்பாய்' என்றான்.
      இதற்குள்ளே தெருவை நோக்கி
அம்மங்கை முருகி சென்றாள்
      அவள்பின்னே குப்பும் போனாள்.
'உம்'என்றாள்; திகைத்தாள் நங்கை!
      சுதரிசன் உளம் மகிழ்ந்தே,

'நங்கையே இதனைக் கேட்பாய்
      நானுன்றன் கணவ னுக்கே
இங்குநல் லுத்தி யோகம்
      ஏற்பாடு செய்து தந்தேன்;
பொங்கிடும் என்னா சைக்குப்
      புகலிடம் நீதான்; என்னைச்
செங்கையால் தொடு; மறுத்தால்
      செத்துப்போ வதுமெய்' என்றான்.

'நான்எதிர் பார்த்த வண்ணம்
      நடந்தது; நங்கை மாரும்
யான்இங்குத் தனித்தி ருக்க
      ஏற்பாடு செய்து போனார்;
ஏன்என்று கேட்பா ரில்லை
      இருக்கட்டும்' என்று வஞ்சி
தேன்ஒத்த மொழியால் அந்தத்
      தீயன்பால் கூறு கின்றாள்:

'கொண்டவர்க் குத்தி யோகம்
      கோட்டையில் வாங்கித் தந்தீர்;
அண்டமே புரண்டிட் டாலும்
      அதனையான் மறக்க மாட்டேன்.
அண்டையில் வந்துட் கார்ந்தீர்
      அடுக்காத நினைவு கொண்டீர்;
வண்கையால் 'தொடு' மறுத்தால்
      சாவது மெய்யே என்றீர்.

உலகில்நான் விரும்பும் பண்டம்
      ஒன்றுதான்; அந்தச் செம்மல்
தலைமிசை ஆணை யிட்டுச்
      சாற்றுவேன்: எனது கற்பு
நிலைகெட்ட பின்னர் இந்த
      நீணில வாழ்வை வேண்டேன்.
மலையும்தூ ளாகும் நல்ல
      மானிகள் உளந் துடித்தால்!

கொண்டஎண் ணத்தை மாற்றிக்
      கொள்ளுவீர்; நரியும் யானைக்
கண்டத்தை விரும்பும்; கைக்கு
      வராவிடில் மறந்து வாழும்!
கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
      கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்
      குறைவிலா அறிவு வாய்ந்தோர்.'

என்றனள். சுதரி சன்சிங்க்
      ஏதொன்றும் சொல்லா னாகி
'நன்றுநீ சொன்னாய் பெண்ணே!
      நான்உன்றன் உளம்சோ தித்தேன்;
இன்றிங்கு நடந்த வற்றைத்
      திம்மன்பால் இயம்ப வேண்டாம்.'
என்றனன் கெஞ்சி னான்;'போய்
      வருகின்றேன்' என்றெ ழுந்தான்.

இருளினில் நடந்து போனான்
      எரிமலைப் பெருமூச் சோடு!
இருளினை உளமாய்க் கொண்ட
      இருமாதர் உள்ளே வந்தார்.
அருளினால் கூறு கின்றாள்
      சுப்பம்மா அம்மா தர்க்கே:
'ஒருபோதும் இனிநீர் இந்த
      உயர்விலாச் செயல்செய் யாதீர்.

ஆயிரம் வந்திட் டாலும்
      அடாதது செயாதீர்; ஆவி
போயினும் தீயார் நட்பிற்
      பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
தாயினும் நல்லார் என்று
      தான்நினைத் திருந்தேன். தாழ்வை
வாயினால் சொல்லிக் காட்ட
      வரவில்லை என்னே என்னே!

கண்ணகி என்னும் இந்தத்
      தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டி ருப்பீர்;
      அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
      பெரும்பண்பே உமக்கும் வேண்டும்;
எண்ணமேன் இவ்வா றானீர்?
      திருந்துங்கள்' என்று சொன்னாள்.

'யாம்என்ன செய்து விட்டோம்?
      எம்மிடம் நீதான் என்ன
தீமையைக் கண்டு விட்டாய்?
      தெரிவிப்பாய்; தெருவிற் சென்றோம்
சாமிக்குத் தெரியும் எங்கள்
      தன்மை.நீ அறிய மாட்டாய்!
ஏமுரு கியேஇ தென்ன
      வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.

'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
      தெருவிற்குச் சென்றால் என்ன?
பங்கமோ இதுதான்? மேலும்
      பயந்துவிட் டாயா? சிங்கு
தங்கமா யிற்றே! சிங்கு
      தறுதலை யல்ல பெண்ணே.
எங்களை இகழ்ந்த தென்ன?'
      என்றனள் முருகி என்பாள்.
----------

17. சுப்பம்மா நிலை

அறுசீர் விருத்தம்
விடிந்தது சுப்பம் மாவும்
      விழித்தனள்; திம்ம னில்லை.
வடிந்தது கண்ணீர்! மெய்யும்
      வாடிற்று! நுண்ணி டைதான்
ஒடிந்தது! தேனி தழ்தான்
      உலர்ந்தது! தூளாய் உள்ளம்
இடிந்தது! 'செய்வ தென்ன'
      என்றெண்ணி இருந்தாள் மங்கை!

காலையில் உணவை உண்டார்
      அனைவரும்! முருகி சொன்னாள்:
'மாலையில் வருவோம் நாங்கள்
      மைத்துனர் வீடு சென்று
மூலையில் தூங்கி டாதே;
      முன்கத வைமூ டிக்கொள்;
வேலையைப் பார்; சமைத்துக்
      கொள்'என்றாள்; வௌிச்சென் றார்கள்.

தனிமையில் இருந்தாள் அந்தத்
      தனிமயில்! கணவன் என்ற
இனிமையில் தோய்வாள் அந்த
      எழில்மயில்! மீண்டும் தீயன்
நனிமையற் பெருக்கால் என்ன
      நடத்திட இருக்கின் றானோ?
இனிமெய்யாய் இங்கி ருத்தல்
      சரியல்ல!' எனநி னைத்தாள்.
-----------

18. திம்மன் நிலை

எண்சீர் விருத்தம்
கோட்டையிலே அடைப்பட்டுக் கிடந்தான் வீட்டில்
      கோழிஅடை பட்டதுபோல் அந்தத் திம்மன்!
ஓட்டையிலே ஒழுகுவது போலே நீரை
      ஒழுகவிடும் இருவிழியும், உடைந்த நெஞ்சும்,
வாட்டமுறும் முகமுமாய் இருந்தான். என்றன்
      மனைவிநிலை எப்படியோ? இங்கு வைத்து
வாட்டுகின்றார்! கவாத்தெங்கே? வீணில் தூங்க
      வலுக்கட்டா யம்செய்யும் வகைதான் என்னே!

ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும்.
      இல்லைஎனில் எனக்கிந்த நிலைஎ தற்கு?
மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே
      வம்பன்இது செய்தானோ? சுப்பம் மாவும்
தீதேதோ கண்டதால் அன்றோ, அன்று
      செப்பினாள் 'அவனைநான் நம்பேன்' என்று!
'தாதுசிங்கைக் கேட்கின்றேன்; வீடு செல்லத்
      தக்கவழி கூறுவான்' என்று சென்றே

'எதற்கிங்கே நான்பத்தொன் பதுநாள் தங்கி
      இருப்ப'தென்று வினவினான். அந்தச் சிப்பாய்
'அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த
      அதிகாரி வைத்ததுதான் சட்ட' மென்றான்.
மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக
      வெறுங் கட்டை அதுவுங்கை விட்டதைப் போல்
கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே
      குந்தினான் கண்ணீரைச் சிந்தி னானே!

கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு
      கொடியவால் காட்டியெனை அஞ்ச வைத்தால்
காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு
      கண்விழித்தால் சுப்பம்மா நிலைஎன் ஆகும்?
'தோட்டமுண்டு; வயலுண்டு; போக வேண்டாம்
      தொல்லை'என்று சொன்னாளே கேட்டே னாநான்?
கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள்
      கெட்டேனே' என்றலறிக் கிடந்தான் திம்மன்!
-----------

19. சுதரிசன் நிலை

தென்பாங்கு - கண்ணிகள்
மாவடு வொத்த விழிக்கும் - அவள்
      மாம்பழம் போன்ற மொழிக்கும்
காவடிப் பிச்சைஎன் றேனே - அந்தக்
      கள்ளி மறுத்துவிட் டாளே!
தூவடி என்உடல் மீதில் - உன்
      தூயதோர் கைம்மலர் தன்னை
ஆவி நிலைத்திடும் என்றேன் - அவள்
      அட்டி உரைத்துவிட் டாளே!

என்று சுதரிசன் எண்ணி - எண்ணி
      ஏங்கி இருந்தனன்! பின்பு
ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி - மிக
      ஊக்கம் மிகுந்தது நெஞ்சில்!
பின்புறக் கோட்டையை நாடிச் - சில
      பேச்சுக்கள் பேசிட ஓடித்
தன்துணை வர்களைக் கண்டான் - கண்டு
      தன்கருத் துக்களைச் சொன்னான்.

கோட்டையில் வேறொரு பக்கம் - வந்து
      குப்பு, முருகியைக் கண்டான்.
நாட்டம் அனைத்தும் உரைத்தான் - அவர்
      நன்றென்று கூறி நடந்தார்.
'பாட்டு நிகர் மொழியாளை - என்
      பக்கம் திருப்பிடச் செய்வேன்
காட்டுவேன் வேடிக்கை' என்றே - சிங்கன்
      கையினை வீசி நடந்தான்.
--------

20. இங்கே செல்லாது

தென்பாங்கு - கண்ணிகள்
தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
      துப்பாக்கி சூழ்ந்தது போல் - துயர்
தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர்
      தாங்கி நடந்தது போல்
ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல்
      ஏற்பட்டு வந்தது போல் - நொடி
ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை
      ஆட்கள் பலர் சூழ்ந்தார்!

தீய முருகியுங் குப்பும் இருந்தனர்
      சேயிழை பக்கத் திலே - வீட்டு
வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு
      வந்தது பேச்சுக் குரல்!
'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன்
      அடித்துக்கொண் டோடி வந்தீர் - நீர்
தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும்
      சூழ்ச்சி தெரியா தோ?'

என்று வௌியினில் கேட்ட குரலினை
      இவ்விரு மாதர் களும் - உயிர்
கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர்
      குரலிது வென்றுரைத் தார்.
புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும்
      பொத்தென வேஎழுந் தார் - அவர்
சின்ன விளக்கை அவித்துக் கதவைத்
      திறந்தனர் ஓடிவிட் டார்!

மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள்
      வாய்ந்த இடத்தி னிலே - பின்னர்
அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல்
      அலைவந்து மோது கையில்
மங்கையின் மேல்ஒரு கைவந்து பட்டது.
      *வாள்பட்ட தால் விட்டது. - அட
இங்குச்செல் லாதென்று மங்கைசொன் னாள்!வந்த
      இழிஞர்கள் பேச வில்லை.

* சுப்பம்மாமேல் ஒரு கைபட்டது. உடனே சுப்பம்மாவின்
வாள் அக்கையின்மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது.

மேலும் நடப்பது யாதென்று மங்கை
      விழிப்புடன் காத்திருந் தாள் - அந்த
ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக
      உணர்ந்து நெஞ்சந் துடித்தாள்!
மூலைக்கு மூலை வழிபார்த் தாள்புகை
      மொய்த்த இருட் டினிலே - அவள்
ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட
      என்னென்ன வோ புரிந்தாள்.

கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன!
      கூட்டத்தி லே ஒருவன் - 'சொல்
ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்;
      'அன்னமே' என்றழைத் தான்.
கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது
      கொல்புகை நீங்கிய தால் - 'முன்
ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை
      அன்னம் அறிந்தவ ளாய்

கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும்
      கையைத் தொடாதே யடா! - இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
      மூச்சுப் பெரிதில்லை காண்!'
குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்
      கொண்டிது கூறி நின்றாள் - வந்த
தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர்
      கூடத் தொலைந்து விட்டார்.
-----------

21. சேரிக்குள் சென்றாள்

எண்சீர் விருத்தம்
எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள்
      இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே
இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே
      என்நெஞ்சு வெந்ததுண்டு தோழி மாரே
மட்டற்ற நாவறட்சி தோழி மாரே
      வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழி மாரே
எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே
      என்றுநடு வீதியிலே கூவி நின்றாள்.

சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து
      சேதிதெரிந் திடநினைத்த சேரி மக்கள்
ஓரொருவ ராய்வந்தார் வௌியில்; 'அம்மா
      உற்றதென்ன உன்றனுக்கே? உரைக்க வேண்டும்.
நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்;
      நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே
கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக்
      கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்!' என்றார்.

'திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச்
      சிறுதடுக்கும் இட்டுநீர் குடிக்கத் தந்த
பெரியீரே! என்அருமைத் தோழி மாரே!
      பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம்
தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ?
      செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம்
ஒருமுனையிற் பெற்றதீ முழுதும் தீர்க்கும்
      என்னுமோர் உண்மையினை மறக்க லாமோ?

குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே!
      கொல்புலியால் ஒருவன்இடர் பலர்க்கும் அன்றோ?
இளக்காரம் தாராமல் தீமை ஒன்றை
      இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும்.
களாப்புதரும் தன்னகத்தே இடங் கொடுத்தால்
      கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி!
விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை;
      வௌியானைக் கொட்டும்தே னீக்கள் வாழும்!

சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே
      துணைவருக்குச் சிப்பாயின் உத்தி யோகம்
உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே
      ஒளித்துவைத்தான்; எனைவிட்டுப் பிரித்து வைத்தான்.
இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை
      எடுத்தாள எண்ணமிட்டான். சூழ்ச்சி யெல்லாம்
புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப்
      பொசுக்கினான் நான்கலங்கிப் போவே னென்று.

தீஎரியும் நேரத்தில் தீமை வந்து
      சீறுகின்ற நேரத்தில் எனைஇ ழுத்துப்
போய்அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை!
      புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி
தோயுமடா உன்மார்பில் என்று காட்டித்
      'தொலையில்போ' என்றேன்நான்! சென்றான் அன்னோன்.
நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர்
      நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன்.

உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை
      உட்புறத்தை நான் அடைய வேண்டும். அங்கே
துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின் றாரா?
      துயரின்றி இருக்கின் றாரா துணைவர்?
முயல்வதே என்கடமை; உளவு தன்னை
      மொழிவதுதான் நீங்கள்செய்யும் உதவி' என்றாள்.
'துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி
      தூங்கிடுக விடியட்டும்' என்றார் அன்னோர்.

'கண்மூட வழியிலையே! விடியு மட்டும்
      காத்திருக்க உயிரேது? தோழி மாரே
விண்மூடும் இருட்டென்றும் பகல்தா னென்றும்
      வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே?
மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல்
      மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப்
பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை?
      பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர்' என்றாள்.

'கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம்
      காலையிலே ஆகட்டும்; இரவில் போனால்
செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது;
      சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார்.
மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள
      வீட்டையோ கோட்டையையோ அறிவ தெங்கே?
ஐயாவைக் காணுவதும் முடியா' தென்றார்
      அரிதான மாண்புடையாள் 'சரிதான்' என்றாள்.
------------

22. மன்னனைக்கண்டாள்

தென்பாங்கு -- கண்ணிகள்
தேசிங்கு மன்னன் - சில
      சிப்பாய்க ளோடு
பேசிச் சிரித்தே - தன்
      பெருவீடு விட்டு
மாசற்ற தான - புனல்
      மடுவிற் குளிக்க
வீசுங் கையோடு - மிக
      விரைவாய் நடந்தான்!

எதிர்ஓடி வந்தாள் - நல்
      எழிலான மங்கை.
'சுதரிசன் சிங்கன் - என்
      துணையைப் பிரித்தான்;
மதில்வைத்த கோட்டை - தனில்
      வைத்தே மறைத்தான்;
எதைநான் உரைப்பேன்? - அவன்
      எனையாள வந்தான்.

குடிபோன வீட்டை - அக்
      கொடியோனும் நேற்று
நடுவான இரவில் - அவன்
      நாலைந்து பேரால்
முடிவாய்ந்த மன்னா! - அனல்
      மூட்டிப் பொசுக்கிக்
கடிதாக என்னை - அவன்
      கைப்பற்ற வந்தான்.

தப்பிப் பிழைத்தேன் - இதைத்
      தங்கட் குரைக்க
இப்போது வந்தேன் - இனி
      என்க ணவரைநான்
தப்பாது காண - நீர்
      தயைசெய்ய வேண்டும்
ஒப்பாது போனால் - என்
      உயிர்போ கும்'என்றாள்.

'சுதரிசன் சிங்கன் - நம்
      சுபேதாரும் ஆவான்;
இதை அவன்பாலே - சொல்
      ஏற்பாடு செய்வான்.
இதையெ லாம்சொல்ல - நீ
      ஏனிங்கு வந்தாய்?
சதையெலாம் பொய்யே - இத்
      தமிழருக்' கென்றான்.

தேசிங்கு போனான் - சில
      சிப்பாய்கள் நின்று
'பேசினால் சாவாய் - நீ
      பேசாது போடி.
வீசினாய் அரசர் - வரும்
      வேலையில் வந்தே
பேசாது போடி' - என்று
      பேசியே போனார்.

என்ற சொற்கேட்ட - அவ்
      வேந்தி ழைதீயில்
நின்ற வள்போல - ஒரு
      நெஞ்சம் கொதித்து
'நன்று காண்நன்று! - மிக
      நன்று நின்ஆட்சி!
என்றே இகழ்ந்து - தணல்
      இருகண் கள்சிந்த

படைவீடு தன்னை - அவள்
      பலவீதி தேடி
கடைசியிற் கண்டு - நீள்
      கதவினைத் தட்டி
'அடையாத துன்பம் - இங்
      கடைகின்ற என்னை
விடநேர்ந்த தென்ன? - நீர்
      விள்ளூவீர்' என்றாள்.

'கொண்டோன் இருக்க - அவன்
      கொடுவஞ் சகத்தால்
பெண்டாள எண்ணி - மிகு
      பிழைசெய்த தீயன்
உண்டோ என்அத்தான் - அவன்
      உம்மோடு கூட?
எண்ணாத தென்ன - எனை?
      இயம்புவீர்' என்றாள்.

'உள்ளி ருக்கின்றீர் - என்
      உரைகேட் பதுண்டோ?
விள்ளு வீர்'என்றாள் - அங்கு
      விடை ஏதுமில்லை.
பிள்ளை போல்விம்மிப் - பெரும்
      பேதையாய் மாறி
தெள்ளு நீர்சிந்தும் - கண்
      தெருவெ லாம்சுற்ற

கோட்டையை நீங்கி - அக்
      கோதையாள் சேரி
வீட்டுக்கு வந்து - தன்
      வெறுவாழ் வைநொந்து
மீட்டாத வீணை - தரை
      மேலிட் டதைப்போல்
பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப்
      படுத்துக் கிடந்தாள்!
-----------------


23. இருமாதரும் அழைத்தார்கள்

தென்பாங்கு -- கண்ணிகள்
'எப்படி இங்குவந்தாய்? - சுப்பம்மா
      எழுந்திரு விரைவாய்.
இப்படி நீஇளைத்தாய் - அவர்கள்
      இன்னல் புரிந்தாரோ?
செப்படி அம்மாநீ - உனக்கோர்
      தீமையும் வாராமல்
மெய்ப்படியேகாப்போம் - எமது
      வீட்டுக்கு வா'என்றனர்.

முருகியுங் குப்பும் - இப்படி
      மொழிந்து நிற்கையிலே
'வருவது சரியா - உங்களின்
      வழக்கம் கண்டபின்னும்?
தெரியும் சென்றிடுவீர்' - என்றுமே
      சேயிழை சொல்லிடவே
அருகில் நில்லாமல் - அவர்கள்
      அகன்று விட்டார்கள்.
----------

24. சேரித்தலைவன் செங்கான்

எண்சீர் விருத்தம்
சேரிவாழ் செங்கானை இரண்டு பேரும்
      தெருவினிலே தனியிடத்தில் கூட்டி வந்து
சேரிக்கு நீதலைவன் உன்வீட் டில்தான்
      சேயிழையும் இருக்கின்றாள். அவள்இப் போதில்
ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம்
      அவளுக்குப் பொல்லாங்காய்த் தோன்றும் போலும்.
நேரில்அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த
      நெறியற்ற செய்கையினால் வெறிச்சி யானாள்.

இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே
      இவ்விடத்தில் அனுப்புகின்றோம்; சாப்பி டட்டும்.
அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே
      அனுப்புவதாய்ச் சம்மதித்தோம். இதையெல் லாம்நீ
மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால்
      மறுபடிநீ பெருந்துன்பம் அடைய நேரும்.
இங்கேவா இதையும்கேள்; அவள்இ ருக்கும்
      இல்லத்தில் மற்றவர்கள் இருக்க வேண்டாம்.'

என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட
      இணக்கமுறும் செங்கானும் உரைக்க லுற்றான்:
'அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம்
      அதிகாரி கள்கலந்த செயல்க ளென்று!
நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து
      நீயார்என் றொருவார்த்தை கேட்ட தில்லை.
சென்றுவரு வீர்;நீங்கள் சொன்ன தைப்போல்
      செய்கின்றேன்' என்றுரைத்தான்; சென்றார் தீயர்.
-----------

25. செங்கான் உண்ண அழைத்தான்

தென்பாங்கு -- கண்ணிகள்
ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில்
      அல்லி மலர்ப் பொய்கையாம்
மேனி முழுக் காட்டியே - வரு வாயம்மா
      வெம்பசி தீர்ப்பா யம்மா.
கூனல் அவரைப் பிஞ்சு - பொறித் தோம்;சுரைக்
      கூட்டு முடித்தோம் அம்மா;
ஏனம் நிறை வாகவே - கருணைக் கிழங்
      கிட்டுக் குழம்பும் வைத்தோம்.

சென்று வருவா யம்மா - புன லாடியே
      தின்று துயில்வா யம்மா.
என்றுசெங் கான் சொல்லவே - அந்த ஏந்திழை
      ஏகினள் நீரா டினாள்.
அன்னவள் சோறுண் டனள் - அவள் நெஞ்செலாம்
      அன்னவன் மேல் வைத்தனள்.
தின்பன தின்றா னதும் - அந்தச் சேயிழை
      செங்கா னிடம் கூறுவாள்:

'உண்டு களைப்பா றினோம் - மற வேனையா
      உரைப்பது கேட்பீ ரையா.
அண்டி இருந்தேன் உமை - ஒரு நாளுமே
      அன்பு மறவே னையா;
சண்டிச் சுதரி சன்சிங்க் - இன்றி ராவிலும்
      தையல் எனைத் தேடியே
கொண்டதன் எண்ணத் தையே - நிறை வேற்றிடக்
      கூசிட மாட்டா னையா.

அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன்
      ஆன துணை செய்குவீர்'
இம்மொழி கள்கூறி னாள் - அந்த ஏந்திழை!
      இயம்பிடு கின்றான் செங்கான்:
'எம்மைத் துரும் பாகவே - நினைக் கின்றனர்
      இங்கே அதிகா ரிகள்
வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார்
      வெள்ளையை வெள்ளை என்றால்!

தீய வடநாட் டினர்! - இவர் ஏதுக்கோ
      செஞ்சியில் வந்தா ரம்மா.
நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில்
      நல்லவர் ஒப்பா ரம்மா.
தீயும் புயற் காற்றுமே - இவர் நெஞ்சிலே
      செங்கோல் செலுத்து மம்மா.
ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான்
      உண்டாயிற் றம்மா' என்றான்.
----------

26. சோற்றில் நஞ்சு

தென்பாங்கு -- கண்ணிகள்

'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே
உண்ணக் கொடுத்து விடடி! - அடி
கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால்
கொல்லாது; சோற்றில் இடடி!

தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக்
கெண்டை விழிகள் சுழலும்; - அடி
தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி
உண்டாக மண்ணில் உழலும்.

இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி
ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச்
செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து
வந்தே நுழைகுவேன் கண்ணே!'

அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத்
தந்த மயக்க மருந்தைக் - குப்பும்
அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு
வந்தாள் திரும்பி விரைந்தே.
-----------

27. உண்ண எழுந்தாள்

பஃறொடை வெண்பா

குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட
செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச்
சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான்.
யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால்
நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக்
கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன்
கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும்.
'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது
கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே
உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார்.
சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்!
நங்கை எழுந்தாள் நலிந்து.
------------

28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்

தென்பாங்கு -- கண்ணிகள்
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
      வட்டித்துக் கூப்பிட்ட போது
சூழ நடந்தசுப் பம்மா - தன்
      துணைவன் நினைப்போடு வந்தாள்!
ஆழும் அலைகட லுக்குள் - சூழல்
      ஆயிரம் வாய்த்திடக் கூடும்;
ஏழைத் துணைவனை எண்ணி - நையும்
      ஏந்திழை எப்படிக் காண்பாள்?

சோற்றினை உண்டனள் நங்கை - நீர்
      தூக்கிப் பருகிய பின்னர்
காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள்
      கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி
      மாறி மயங்கி விழுந்தாள்.
சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று
      சொல்லி விழுந்தனள் மண்ணில்!

தன்னிலை தன்னைவிட் டோட - அதைத்
      தான்தொடர்ந் தேபற்றி வந்து
மின்னல் அசைவது போலத் - தன்
      மேனி தள்ளாட எழுந்தாள்.
சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று
      திம்மனை எண்ணி விழுந்தாள்.
பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில்
      புக்கு மறைந்திடு முன்னே

மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை
      மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள்.
சொல்லினில் தீயைக் கலந்து - சில
      சொற்களைச் சொல்லினள் மெல்ல:
'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற்
      காற்றினில் நீர்வேண்டு கின்றான்.
வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன்
      வாழ்வினை மீட்பவர் இல்லை!'

இவ்வுரை சொன்ன மறத்தி - மயக்
      கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்!
செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி
      தீர்ந்தன! வேர்வையின் நீரில்
அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை
      ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந்
      திட்டது கட்டுக் குலைந்தே!

செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன
      செய்வதென் றேஅறி யாமல்
அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின்
      அக்கம்பக் கம்சொல்லப் போனான்.
சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான்
      செல்'என்று கூறினன் சிங்கன்.
செங்கான் பயந்து நடந்தான் - அந்தச்
      சின்னக் குடிசையின் பின்னே.

சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற
      சேதிகள் யாவும் தெரிந்தான்.
அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன்
      அண்டினன்! மற்றவர் இல்லை.
பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல்
      பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும்
      வண்ணம் பொழிந்தது மாரி!

காட்டை முறித்திடும் காற்றும் - அவன்
      கையை முறிப்பது போலே
தோட்டத்து வாசலி னோடு - சென்று
      தூள்பட வைத்தது வீட்டை!
கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம்
      கும்பிடத் தக்கஓர் தாயைத்
தீட்டுப் படாத நெருப்பை - விரல்
      தீண்டக் கடித்திடும் பாம்பை

ஒட்டுற வில்லா வடக்கன் - உல
      கொத்தது காணாத தீயன்
எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர்
      'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக்
      கோதை கிடந்திட்ட போது
தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி
      சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!

பொழுது விடிந்திட வில்லை! - இன்னும்
      பொற்கோழி கூவிட வில்லை!
எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர்
      இருவர் இருந்திடும் வீட்டில்
நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை
      நோக்கி யிருந்தஅச் செங்கான்
அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப்
      பம்மாவைக் கண்டிட நின்றான்.

போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும்
      பொழுதோ வெளுத்திட வில்லை.
போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல்
      போயிற்று! நல்லுயிர் தானும்
போயிற்றுப் போவதன் முன்னே - சென்று
      போக்கிடு வேன்அவ னாவி!
வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன்
      வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.

'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில்
      உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
கண்டதும் இப்பாழும் கண்தான் - இக்
      கையில் வலியில்லை தாயே.
அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர்
      அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்.
அண்டையில் நில்லாது போடா - என்ற
      அவன்சொல்லை மீறா திருந்தேன்.

இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன்
      இங்கிருந் தேபுறப் பட்டான்.
புரட்டனோ டேகினேன் நானும் - கால்
      பொத்தென்ற சத்தமில் லாமல்!
திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு
      சென்றனன் நானிங்கு வந்தேன்.
கருத்துக் கலங்கினேன் தாயே! - என்
      கடமையை நான்செய்ய வில்லை.

சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர்
      சீறிக் குதித்தனர் தாயே!
சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ
      தீயெனச் சீறிநிற் கின்றார்.
ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி
      ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த
      வடக்கரை' என்றனன் செங்கான்.

ஓடினள் சிங்கனை நோக்கி - உடன்
      ஓடினர் சேரியின் மக்கள்!
ஓடினன் செங்கானும் அங்கே - உம்
      உம்என்று தட்டினள் கதவை.
நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின்
      நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச்
      சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!

காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான்
      கையோடி ருந்திட்ட தாலே
'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு
      பழிமாத ரும்தீர்ந்து போனார்.
தேம்பாத அழுகையும், நீரின் - துளி
      தெரியாத கண்களும் கொண்டாள்
வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை
      விடியாத முன்னமே சேர்ந்தாள்.

கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங்
      கொட்டாவி விட்டுக் கிடந்தார்.
பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப்
      பாவையும் காவல் கடந்தாள்.
கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக்
      கோலமல் லால்விழிப் பில்லை.
பூட்டும் படைவீடு கட்குள் - நெடும்
      புன்னை மரத்திற்கு நேரில்

தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும்
      சாத்திக் கிடந்ததைக் கண்டாள்.
'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை
      இன்னுமோ தூக்கம்என் அத்தான்?
ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும்
      உள்ளம் படைத்தனன் கேளீர்!
என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை
      ஈடழித் தான்வெறும் பேடி!

செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத்
      தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்.
அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன்
      ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை
      என்னென்ன செய்தனன்? காணேன்!
அந்தோ எனக்கூவி மங்கை - அவள்
      அங்குமிங் கும்பறக் கின்றாள்.
---------

29. மன்னன் வந்தான்

எண்சீர் விருத்தம்
காட்டுதீப் போலேசு பேதார் சாவு
      கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
      குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள்
      புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே
      கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.

'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால்
      படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான்
'படைவீரன் அல்லாது பிறரே என்றால்
      பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
      காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்?
நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
      நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!

போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
      புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
      விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
      கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை!
வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
      மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!

கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
      கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ!
காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
      கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்!
நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
      நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
      உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?

மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார்
      வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?'
      என்றுபல வாறெண்ணி இருக்கும் போது
'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி
      வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்:
'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
      என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:

திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில்
      தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
      அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி
செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
      சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்
திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத்
      திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்

திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
      செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித்
திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன
      சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்.
அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
      அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச்
      சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!

குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன்
      கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு
நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான்.
      நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்!
அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான்.
      'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க்
      துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே.
-----------

30. திம்மன் நான் என்றான்

எண்சீர் விருத்தம்
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
      'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள்.
'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன்.
      'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன்.
'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
      சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான்.
திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி.
      தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.

பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப்
      போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த
      மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான்.
'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்;
      செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
      வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.

இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான்.
      'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்!
'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்!
      'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான்.
'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன்.
      'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன்.
பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன்.
      'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே

பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன்.
      'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன்.
'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத்
      தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்!
*நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
      நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
      கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.

*இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.

'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
      அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்!
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
      தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை
      அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்!
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
      தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்

நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை.
      நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
      தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
      வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா?
      சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.

அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன்
      இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்.
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
      கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
      பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்
      சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்.
-----------

31. அத்தான் என்றெதிர் வந்தாள்

எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
      'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
      உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
      தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
      கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.

பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
      பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
      மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
      தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
      வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.

முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
      முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
      கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
      முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
      பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.

செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
      திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
      படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
      வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
      தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!

தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
      தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
      விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
      பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
      மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.

கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
      காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
      தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
      விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
      ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'

என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
      இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
      கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
      'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
      'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.

'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
      நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
      தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
      'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
      'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!

'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
      மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
      சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
      போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
      வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'

என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
      இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
      கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
      நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
      அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!

தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
      சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
      துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
      அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
      நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.

'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
      ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
      ஊராளும் அரசறிய உலகம் காண
துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
      சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
      திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'

என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
      இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
      உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
      கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
      'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்

தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
      தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
அமைவான குரலாலே கூறு கின்றாள்;
      'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
      நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
      நற்றமிழக் கையாலே கொன்று போட்டு

திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
      செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
      பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
      தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
      பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.

பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
      பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
      உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
      வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
      தனியாக உலவினான் புலியைப் போலே!
----------

32. மறவர் திறம் பாடு

நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே!
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.

அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!

தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!

நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்:
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!

ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!

ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!
------------

33. குதிரைவீரர் வருகின்றார்கள்

எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
      நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
      தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை
      நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
      குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.

சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும்
      செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர்
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
      ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
      நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி
      ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.

பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும்
      பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
      ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
      கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம்
      தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.

இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர்
      இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக்
கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும்
      கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே'
என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும்
      இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்!
      பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார்.
----------

34. மேற்பார்வையாளன்

தென்பாங்கு -- கண்ணிகள்

ஏறித் - தலைக் கட்டோடு வந்தனன்       சீறி!

எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன்       போலே - இமை

கொட்டாமல் பார்த்தனன்       மேலே!

சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத்       தாவிச் - சிரித்

திட்டனர் அன்னோனை       மேவி!

திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன்       என்றே - திம்மன்

பட்டாவை ஏந்தினன்       நன்றே!

சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப்       பம்மா - அங்குச்

சற்றும்இ ருப்பாளோ       சும்மா?

வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட

மேற்கிளை விட்டுக்       குதித்தாள் - பகை

அற்றிட நெஞ்சம்       கொதித்தாள்.

சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன       மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன       கைகள்

முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி       காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன்       பாரில்

உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன்       ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள்       மேவி.

மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில்       விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக்       கொழுந்து.

சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும்       கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே       கொண்டார்.

பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள்       மேலே - மிகச்
சிற்றின நாய்களைப்       போலே! ---------


35. அவள் பிடிப்பட்டாள்

எண்சீர் விருத்தம்

திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
      சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
      அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும்
      வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்;
      முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள்.
---------

36. தேசிங்குக்குச் சேதி எட்டிற்று

தென்பாங்கு -- கண்ணிகள்

செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே
      தேசிங்கு வீற்றிருந்தான்.
அஞ்சி அருகினிலே - இருந்தார்
      அமைச்சர் மற்றவர்கள்.
பஞ்சு பெருந்தீயைப் - பொசுக்கப்
      பார்த்தும் இருப்பீரோ?
செஞ்சிப் படிமிதித்தார் - இங்குள்ள
      சிப்பாய் தனைமடித்தார்.

சென்று பிடித்தாரோ? - அல்லது
      செத்து மடிந்தாரோ?
ஒன்றும் தெரியவில்லை--நடந்த
      தொன்றும் தெரியவில்லை.
என்று துடிதுடித்தான் - தேசிங்கன்.
      இருவர் சிப்பாய்கள்
நின்று தலைவணங்கி - அவ்விடம்
      நிகழ்ந்தவை உரைப்பார்.

திம்மனும் சுப்பம்மா - எனுமோர்
      சேயிழை யும்எதிர்த்தார்.
நம்மவர் சிற்சிலபேர் - இறந்தார்.
      நம்அதி காரியின்மேல்
திம்மன் அவன்பாய்ந்தான் - ஒருசொல்
      செப்பினன் அப்போது
'செம்மையில் என்னிடமே - சிக்கினாய்
      தேசிங்கு மாய்க'என்றான்

என்றுசிப் பாய்உரைத்தார் - தேசிங்கன்
      'என்னை மடிப்பதுதான்
அன்னவ னின்நினைப்போ? - சரிதான்
      அப்படியா அடடே!
இன்று பிழைத்தேன்நான் - அடடே
      என்றுபு கன்றவ னாய்ப்
'பின்னும் நடந்ததென்ன? - இதனைப்
      பேசுக' என்றுரைத்தான்.

திம்மன் மடிந்துவிட்டான் - மனைவி
      சேயிழை சிக்கிவிட்டாள்.
செம்மையில் அன்னவளின் - இரண்டு
      செங்கையைப் பின்இறுக்கி
நம்மவர் இவ்விடத்தை - நோக்கியே
      நடத்தி வருகின்றார்.
திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம்
      திறத்தில் என்றுரைத்தார்.
----------

37. சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்

தென்பாங்கு -- கண்ணிகள்

கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக்
      கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்!
போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில்
      போற்பரவி மேற்புரளும் நீண்ட குழலும்
தீட்டிவைத்த வேலின்முனை போன்ற விழியும் - வந்து
      சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள்
'கோட்டையினில் யாரிடத்தில் கொண்டு செல்கின்றீர் - என்னைக்
      கூறிடுவீர்' என்றவுடன் கூறு கின்றனர்:

'ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர்
      அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்ட தில்லையோ?
தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று
      சொன்னமொழி கேட்டனள் வியப்ப டைந்தனள்.
'ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன்
      அங்குவந்த பேர்வழியை ஒத்தி ருந்ததால்!
வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த
      மன்னன்நினை வாய்அவனை வெட்டி மடித்தோம்.

செஞ்சியினி லேஇருக்கும் செந்த மிழர்கள் - பெற்ற
      தீமையின்னும் தீரவில்லை. என்க ணவரோ
செஞ்ச்ிமன்னன் தீர்ந்தனன் இனித் தமிழர்க்கே - ஒரு
      தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார்.
செஞ்சியினை ஆளுகின்ற அவ்வ டக்கரை - என்
      செவ்விழிகள் காணும்;என்கை காண வசமோ?
மிஞ்சும்என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ? - என
      மெல்லிஅவள் நெஞ்சில்வெறி கொண்டு நடந்தாள்.
-----------

38. தேசிங்கு முன் வந்தாள்

எண்சீர் விருத்தம்

புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த
      விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த
எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல்
      இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக்
கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல்
      கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன்
உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான்.
      அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்!
--------------

39. முற்றிய பேச்சு

தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான்
      உன்னை அனுப்பிவைத்தான்?
மண்ணிடை மாண்டானே - தெரியா
      மனிதன் உன்உறவா?
எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன்
      இந்தக் கலகமடீ?
திண்மை உனக்குளதோ?' - என்றந்தத்
      தேசிங்கு சொன்னவுடன்,

'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர்
      பொய்த்தொழில் செய்வதில்லை.
மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர்
      மெய்பதைத் திட்டதில்லை.
கையினில் வாளாலே - உனது
      காவல் தலைவன்தலை
கொய்தவர் யார்எனிலோ - எனையே
      கொண்டவர் என்றறிவாய்!

யாரும் அனுப்பவில்லை - எமையே
      இட்டுவந் தான்ஒருவன்
சேரியில் ஓர்குடிசை - தந்துமே
      தீய இருமாதர்
கோரிய வேலைசெய்வார் - எனவே
      கூட இருக்கவிட்டான்.
சீரிய என்துணைக்கே - அவன்ஓர்
      சிப்பாய் உடைகொடுத்தான்.

கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக்
      கூட்டிவ ராதிருந்தான்.
வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம்
      மிஞ்சும் மருந்தையிட்டான்.
ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும்
      அற்ற நிலையினிலே
காட்டு மனிதன்அவன் - எனது
      கற்பை அழித்தானே!

கற்பை அழித்தானே - தன்னைத்தான்
      காத்துக்கொள் ளும்திறமை
அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை
      ஆருக்கி ருக்கவில்லை?
வெற்பை இடித்துவிடும் - உனது
      வீரத்தை யும்காணும்
நிற்க மனமிருந்தால் - நின்றுபார்
      நெஞ்சைப் பிளக்கும்என்கை!

குற்றம் புரிந்தவர்யார்? - உனது
      கோலை இகழ்ந்தவர்யார்?
கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது
      கருத்தை மேற்கொண்டவன்!
சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே'
      என்றெனைச் சொல்லுகின்றாய்.
நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல்
      நாவுக்குத் தீமை' என்றாள்.

'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை
      சிப்பாய்க ளைமடித்தாய்?'
என்று வினவலுற்றான் - அதற்கே
      ஏந்திழை கூறுகின்றாள்:
'என்னருங் கற்பினுக்கே - உன்னரும்
      இன்னலின் ஆட்சியையும்
உன்னரும் ஆவியையும் - தரினும்
      ஒப்பில்லை' என்றுரைத்தாள்.

'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை
      ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?
இந்து மதத்தவன்நான் - மதத்தின்
      எதிரி நானல்லவே!
சொந்த அறிவிழந்தாய் - பிறரின்
      சூதையும் நீஅறியாய்.
இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின்
      இன்னல் தவிர்ப்பவன்நான்.'

சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா
      சொல்லுகின் றாள்சிரித்தே:
'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு
      திப்புவின் பேரினையும்
சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல
      தொல்லையில் மாட்டிவிட்டார்;
மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின்
      மேன்மைதனை அழித்தார்.

அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல்
      ஆரும் தமிழ்நாட்டில்
இன்றும் இருக்கவில்லை - பிறகும்
      இருக்கப் போவதில்லை.
அன்று தொடங்கிஇந்தத் - தமிழர்
      அன்புறு நாடுபெற்ற
இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த
      இன்னல்கள்' என்றுரைத்தாள்.

'ஆளும் நவாபினையோ - தமிழர்
      ஆரும் புகழுகின்றார்;
தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின்
      தேசிங்கின் பேருரைத்தால்!
நாளும் வரும்;வடக்கர் - தொலையும்
      நாளும் வரும்;அதைஎம்
கேளும் கிளைஞர்களும் - விரைவில்
      கிட்டிட வேண்டும்'என்றாள்.
-------------

40. தேசிங்கு சினம்

எண்சீர் விருத்தம்
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த
      நலமற்ற தமிழர்மட்டும் வாழ மாட்டார்.
தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை;
      சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு!
நாள்வரட்டும் எந்தநாள்? தமிழர் வெல்லும்
      நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள்
வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி
      மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?' என்றான்.

'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
      தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய்.
இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால்
      சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்!
      உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்;
      எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.

யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்!
      இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்!
நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி
      நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
      துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்!
நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
      நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!

வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத
      வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த
வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
      வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்:
நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த
      நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
      கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.

ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
      அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்;
காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
      கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
      கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
      தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!

அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்!
      அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்.
பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
      பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன்
      முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
      செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.

கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக்
      கண்ணாலே எச்சரிக்கை செய்து மன்னன்
'இட்டுவா கொலைஞரைப்போய்! இதையும் கேட்பாய்
      எல்லார்க்கும் எதிரினிலே பொது நிலத்தில்
பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து
      பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு
வெட்டுவிப்பாய் ஒருகையை; மறுநாட் காலை
      வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில்

முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர்
      மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு;
கொதிநீரைத் தௌித்திடுக இடைநே ரத்தில்;
      கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு
வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை;
      மந்திரியே உன்பொறுப்பு நிறைவே றச்செய்!
இதுஎன்றன் முடிவான தீர்ப்பே!' என்றான்.
      எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்:

'மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன்
      முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ!
நீளுதடா என்நெஞ்சில் வாள்!வாள்! உன்றன்
      நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்!
நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து
      ைத் தின்னுமடா அந்தச் சாவே!
ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை!
      அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை!'

என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்!
      எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை
ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில்
      ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார்.
குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே!
      குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி
நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்!
      நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!

பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்!
      பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்!
'ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன்?' என்றான்.
      இரக்கத்தை 'வா'என்றான். அன்பை நோக்கி
'ஆச்சியே எனக்கருள்வாய்' என்று கேட்டான்.
      'அறமேவா' எனஅழைத்தான்! அங்கே வேறு
பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்!
      பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான்.
------------

தமிழச்சியின் கத்தி முற்றும்.


This webpage was last revised on 24 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).