கல்கியின் அலை ஒசை
பாகம் 1- பூகம்பம்

kalkiyin2 alai Ocai
Part-I (pUkampam)

In tamil script, unicode format




Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format. Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999 - 2004

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்கியின் அலை ஒசை
பாகம் 1 - பூகம்பம்

உள்ளுறை -அத்தியாயங்கள்
1.001 தபால்சாவடி மின்பதிப்பு
1.002 தாயின் உள்ளம் மின்பதிப்பு
1.003 பம்பாய்க் கட்டிடம் மின்பதிப்பு
1.004 வாசலில் ரகளை மின்பதிப்பு
1.005 கிட்டாவய்யர் குடும்பம் மின்பதிப்பு
1.006 மந்திராலோசனைமின்பதிப்பு
1.007 பத்மாபுரம் மின்பதிப்பு
1.008 சௌந்தர ராகவன் மின்பதிப்பு
1.009 கதவு திறந்தது மின்பதிப்பு
1.010 காமாட்சி அம்மாள்மின்பதிப்பு
1.011 "என்னைக் கேட்டால்....."மின்பதிப்பு
1.012 கராச்சியில் நடந்தது மின்பதிப்பு
1.013 வானம் இடிந்தது மின்பதிப்பு
1.014 வண்டி வந்தது மின்பதிப்பு
1.015 ராஜத்தின் ரகசியம் மின்பதிப்பு
1.016 தேவி பராசக்தி மின்பதிப்பு
1.017 துரைசாமியின் இல்லறம் மின்பதிப்பு
1.018 மூன்று நண்பர்கள் மின்பதிப்பு
1.019 மோட்டார் விபத்து மின்பதிப்பு
1.020 அம்மாஞ்சி அறிமுகம்மின்பதிப்பு
1.021 சீதாவின் காதலன் மின்பதிப்பு
1.022 கன்னத்தில் ஒருஅறை மின்பதிப்பு
1.023 இது என்ன ஓசை? மின்பதிப்பு
1.024 நெஞ்சு விம்மியதுமின்பதிப்பு
1.025 கண்கள் பேசின மின்பதிப்பு
1.026 மலர் பொழிந்தது!மின்பதிப்பு
1.027 இடி விழுந்தது! மின்பதிப்பு
1.028 நிச்சயதார்த்தம் மின்பதிப்பு
1.029 பீஹார்க் கடிதம் மின்பதிப்பு
1.030 இதுவா உன் கதி? மின்பதிப்பு
1.031 மதகடிச் சண்டை மின்பதிப்பு
1.032 காதலர் உலகம் மின்பதிப்பு
1.033 அத்தையும் மருமகனும் மின்பதிப்பு
1.034 கலியாணமும் கண்ணீரும் மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை
பாகம் 1 - பூகம்பம்

முதல் அத்தியாயம்
தபால்சாவடி

சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல, இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்து விட்டது. கிழக்கு மேற்காக வந்த சாலை வடதிசை நோக்கித் திரும்பிய முடுக்கிலே ராஜம்பேட்டைக் கிராமத்தின் தபால்சாவடி எழுந்தருளியிருந்தது. அதன் வாசற்கதவு பூட்டியிருந்தது. தூணிலே இரும்புக் கம்பியினால் கட்டித் தொங்க விடப் பட்டிருந்த தபால்பெட்டி திக்கற்ற அநாதையைப்போல் பரிதாபத் தோற்றம் அளித்தது.

சற்றுத் தூரத்தில் ஒரு கட்டைவண்டி 'லொடக்' லொடக்' என்ற சத்தத்துடனே சாவகாசமாக அசைந்து ஆடிய வண்ணம் சென்றது. வண்டிக்காரன், 'அய் அய்' என்று அதட்டி மாடுகளை முடுக்கினான். தபால் சாவடிக்கு எதிரே சாலையின் மறுபக்கத்தில் ஒரு மிட்டாய்க் கடை. அந்தக் கடையின் வாசலில் அப்போது ஆள் யாரும் இல்லை. உள்ளேயிருந்து 'சொய் சொய்' என்ற சத்தம் மட்டும் கேட்டது. அந்தச் சத்தத்தோடு கடைக்குள்ளிருந்து வந்த வெங்காயத்தின் வாசனையும் சேர்ந்து மிட்டாய்க் கடை அய்யர் மசால் வடை போட்டுக்கொண்டிருந்தார் என்பதை விளம்பரப்படுத்தின. ஆலமரக் கிளையில் நிர்விசாரமாகக் குடியிருந்த பறவைகள் உல்லாசமாகக் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன.

அதோ 'டக்கு டக்கு' என்ற பாதக் குறட்டின் சத்தம் கேட்கிறது. வருகிறவர் ஸ்ரீமான் கே.பி. பங்காரு நாயுடு பி.பி.எம். அவர்கள்தான். பி.பி.எம் (B.P.M.) என்றால் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். பிராஞ்சு போஸ்டு மாஸ்டர் என்று அறிந்து கொள்க. கிராமத்துப் போஸ்டு மாஸ்டருக்குச் சம்பளம் சொற்பந்தான். ஆனால், அவருடைய அதிகாரம் பெரியது. அவருடைய உத்தியோகப் பொறுப்பு அதைவிட அதிகமானது. "ஜில்லா கலெக்டராகட்டும்; ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரேயாகட்டும்; இந்தத் தபால் ஆபிஸுக்குள் அவர்களுடைய அதிகாரம் செல்லாது! இன்னொருவருக்கு வந்த கடிதத் தைக் கொடு என்று கவர்னர் கேட்டாலும், 'மாட்டேன்' என்று சொல்ல எனக்கு அதிகாரம் உண்டு!" என்று நாயுடுகாரு பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வார்.

இதோ அருகில் வந்து விட்டார் போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு. தபால் சாவடியின் பூட்டில் திறவுகோலைப் போட்ட உடனே கதவு திறந்து கொள்கிறது. பங்காரு நாயுடு அவருடைய சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கிறார். ஆனால், வாசற் படியைத் தாண்டியதும் மேலே அடி வைக்க முடியாமல் பிரமித்துப் போய் நிற்கிறார். தபால்கார பாலகிருஷ்ணன் உள்ளே சாவதானமாக உட்கார்ந்து நேற்று வந்த தபால்களை வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். போஸ்டு மாஸ்டர் திகைத்து நின்றதைக் கண்ட பாலகிருஷ்ணன், "ஏன் ஸார், இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்! நான் என்ன பேயா, பிசாசா?" என்று கேட்டான். "நீ-நீ-வந்து-வந்து...எப்படி அப்பா நீ உள்ளே புகுந்தாய்?" என்று பங்காரு நாயுடு தடுமாறிக் கொண்டே கேட்டார்.

"எனக்கு இக்ஷிணி வித்தை தெரியும் ஸார்! கொஞ்சநாள் நான் பீதாம்பர ஐயரின் சிஷ்யனாயிருந்தேன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்தச் சுவருக்குள்ளே நுழைந்து வெளியிலே போய் விடுவேன்!" "உண்மையைச் சொல், அப்பனே? விளையாடாதே!" "என்ன ஸார், அப்படிக் கேட்கறீங்க! விளையாடுவதற்கு நான் என்ன பச்சைக் குழந்தையா?" "போஸ்டாபீஸ் கதவு பூட்டி யிருக்கும்போது எப்படி உள்ளே வந்தாய்? சொல், அப்பா!" "கதவு பூட்டியிருந்ததா, ஸார்! பார்த்தீங்களா, ஸார்!" "பின்னே? இப்பத்தானே சாவியைப் போட்டுத் திறந்தேன்?" "சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தீங்க! ஆனால், கதவைத் திறந்தீங்களா என்று கேட்டேன்." "பூட்டைத் திறந்தால் கதவைத் திறந்ததல்லவா, தம்பி! என்னவோ மர்மமாய்ப் பேசுகிறாயே?"

"ஒரு மர்மமும் இல்லீங்க, ஸார்! நேற்று சாயங்காலம் ஒரு வேளை கொஞ்சம் 'மஜா'விலே இருந்தீங்களோ, என்னமோ! நாதாங் கியை இழுத்து மாட்டாமல் பூட்டை மட்டும் பூட்டிக்கிட்டுப் போய்விட்டிங்க!" போஸ்டு மாஸ்டர் சற்றுத் திகைத் திருந்துவிட்டு "பாலகிருஷ்ணா! கடவுள் காப்பாற்றினார், பார்த்தாயா? நீ புகுந்தது போலத் திருடன் புகுந்திருந்தால் என்ன கதி ஆகிறது!" என்று சொல்லி உச்சிமேட்டை நோக்கிக் கும்பிட்டார். "கதி என்ன கதி? அந்தத் திருட்டுப் பயலின் தலைவிதி வெறுங்கையோடே திரும்பிப் போயிருப்பான்! இங்கே என்ன இருக்கிறது, திருட்டுப் பசங்களுக்கு? அதுபோகட்டும் ஸார் தபால்பெட்டியின் சாவியை இப்படிக் கொடுங்க!"

சாவியை வாங்கிக் கொண்டு போய்ப் பாலகிருஷ்ணன் தபால் பெட்டியைத் திறந்து அதிலிருந்த தபால்களை எடுத்துக் கொண்டு வந்தான். தபால்களின் மேலே ஒட்டியிருந்த தலைகளில் 'டக் - டக்' 'டக் - டக்' என்று தேதி முத்திரை குத்த ஆரம்பித்தான். போஸ்டு மாஸ்டர் ஒருசிறு தகரப்பெட்டியில் இருந்த தபால்தலைகளை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடிரென்று தலையை நிமிர்த்தி, "ஏனப்பா, பாலகிருஷ்ணா! தேதியைச் சரியாக மாற்றிக் கொண்டாயா?" என்று கேட்டார். பாலகிருஷ்ணன் முத்திரை அடிப்பதை நிறுத்திவிட்டு, "என்ன கேட்டிங்க, ஸார்?" என்றான். "முத்திரையில் தேதியைச் சரியாய் மாற்றிக் கொண்டாயா" என்பதாகக் கேட்டேன். "இன்றைக்குத் தேதி பதினைந்துதானே சார்!" "தேதி பதினைந்தா? நான் சந்தேகப்பட்டது சரிதான்!" "பின்னே என்ன தேதி, ஸார்!" "பதினாறு அப்பா, பதினாறு!" "கொஞ்சம் உங்கள் எதிரிலே இருக்கிற சுவரிலே பாருங்க, ஸார்!"

பாலகிருஷ்ணன் காட்டிய இடத்தில் தினகரன் காலண்டர் மாட்டியிருந்தது. அது 1933-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 15தேதி என்று காட்டியது. "அட பரந்தாமா! வருஷத்தைக்கூட இதைப் பார்த்துப் போட்டுவிட்டாயோ?" "பின் எதைப் பார்த்துப் போடுகிறது? காலண்டர் காட்டுகிற வருஷம் மாதம் தேதிதானே போட்டுத் தொலைக்க வேணும்?" "அட கேசவா! இது போன வருஷத்துக் காலண்டர் அல்லவா? வருஷம், தேதி இரண்டும் பிசகு!" பங்காரு நாயுடு எழுந்து போய்க் காலண்டரில் வருஷத்தையும் தேதியையும் மாற்றினார். இப்போது அந்தக் காலண்டர் 1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 16தேதி என்று காட்டியது.

சாலையில் பெட்டி வண்டி ஒன்று இரு பெரும் காளைகளால் இழுக்கப்பட்டு ஜம் ஜம் என்று சென்றது. "பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டி போகிறது, ஸார்!" என்றான் பாலகிருஷ்ணன். "ஆமாம்; ஜனவரி மாதம் பதினாறு தேதி ஆகிவிட்டது அல்லவா? ஜனவரி வசூலிக்கப் பட்டாமணியம் புறப்படுவது நியாயந்தானே?" என்று பங்காரு நாயுடு ஒரு பழைய சிலேடையைத் தூக்கிப் போட்டார். "ஏன் ஸார்! கிட்டாவய்யர் பெண்ணுக்கு எப்போது கல்யாணமாம்? உங்களுக்குத் தெரியுமா?" "பாலகிருஷ்ணா! உனக்கு என்ன அதைப்பற்றிக் கவலை?" "கவலையாகத்தான் இருக்கிறது. கலியாணம் ஆகிவிட்டால் அந்தக் குழந்தை புருஷன் வீடு போய்விடும்!" "போனால் உனக்கு என்ன?"

"ஏதோ இந்த விடியா மூஞ்சித் தபாலாபீஸுக்கு அந்தக் குழந்தை இரண்டிலே, மூன்றிலே வந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆபீஸ் கொஞ்சம் கலகலப்பாயிருக்கிறது. லலிதா புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் இங்கே ஒரு காக்காய்கூட வராது. நீங்களும் நானும் எதிரும் புதிருமாய் உட்கார்ந்து ஈ ஓட்ட வேண்டியதுதான்?" "பாவம்! இந்த ஆபீசுக்கு ஈயாவது வரட்டுமே பாலகிருஷ்ணா! அதை ஏன் ஓட்ட வேண்டுமென்கிறாய்?" "ஈயை ஓட்டாமல் என்னத்தைச் செய்வது? அதை நான் ஓட்டாவிட்டால் இங்கே இருக்கிற பசையையெல்லாம் அது ஒட்டிக் கொண்டு போய்விடும். பாருங்கள், ஸார்! நான் தேவபட்டணம் தபாலாபீஸில் வேலை பார்த்தபோது மாதம் பிறந்து ஏழாந் தேதிக்குள்ளே நூறுக்குக் குறையாமல் மணியார்டர் வந்து குவியும்!" "யாருக்கு? உனக்கா?" "எனக்கு என்னத்திற்கு வருகிறது? கொடுத்து வைத்த மவராசன் மகன்களுக்கு வரும்." "யாருக்கோ மணியார்டர் வந்தால் உனக்கு என்ன ஆயிற்று?"

"மணியார்டர் ஒன்றுக்கு அரைக்கால் ரூபாய் வீதம் நூற்றரைக்கால் இருபத்தைந்து ரூபாய் நம்பளுக்குக் கிடைக்கும்." "நூற்றரைக்கால் இருபத்தைந்தா? கணக்கிலே புலிதான்!" "தேவபட்டணத்தில் நூற்றரைக்கால் இருபத்தைந்துதான். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் நூற்றரைக்கால் ஏழரைகூட ஆகாது!" "போதும்! போதும்! வேலையைப் பார், பாலகிருஷ்ணா! தங்கவேலு அதோ வந்துவிட்டான்." வெளியே சற்றுத் தூரத்தில் 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இரண்டாம் அத்தியாயம்
தாயின் உள்ளம்

ராஜம்பேட்டை அக்கிரகாரத்து வீடுகளில் சரிபாதி வீடுகளுக்கு மேலே பாழடைந்து கிடந்தன. உருப்படியாக இருந்த வீடுகளில் பட்டாமணியம் கிட்டாவய்யரின் வீடு இரட்டைக் காமரா அறைகளுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. வீட்டின் முன்கட்டில் செங்கல் - சிமெண்ட் தளம் போட்ட கூடத்தில் உட்கார்ந்துகொண்டு சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்குச் சடை பின்னிவிட்டுக்கொண்டிருந்தாள். பின்னல் முடியும் சமயத்தில், தபால் ஆபீஸ் பங்காரு நாயுடுவும் பாலகிருஷ்ணனும் கேட்ட 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்னும் சத்தம் அந்த வீட்டுக்குள்ளேயும் நுழைந்து லேசாகக் காதில் விழுந்தது. "எத்தனை நேரம், அம்மா! சீக்கிரம் பின்னி விடேன்!" என்றாள் லலிதா. "மெதுவாகத்தான் பின்னுவேன்; என்ன அப்படி அவசரமாம்? பதை பதைக்கிற வெய்யிலிலே தபாலாபீஸுக்கு ஓட வேண்டுமாக்கும்! தபால் வந்திருந்தால் எங்கே போய் விடும்? தானே பாலகிருஷ்ணன் கொண்டு வந்து தருகிறான்!"

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னல் முடிந்து விட்டது. அதைத் தூக்கிக் கட்ட போகும் சமயத்தில் லலிதா சடக்கென்று பிடுங்கிக்கொண்டு எழுந்தாள். "நான் கட்டிக்கொள்கிறேன், அம்மா!" என்று சொல்லிக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள். "லலிதா! லலிதா! இங்கே வா! வா என்றால் வந்துவிடு. வராவிட்டால்...நீ.. மாத்திரம் போய்விடுவாயோ? அப்புறம் திரும்பி இந்த வீட்டில் அடி வைத்தால்..."

இவ்விதம் சரஸ்வதி அம்மாள் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும்போதே பட்டாமணியம் கிட்டாவய்யர் வீட்டுக்குள்ளே நுழைந்தார். அப்பாவைப் பார்த்ததும் குழந்தை லலிதா தயங்கி நின்றாள். அவளுடைய தேகம் பூங்கொடியைப்போலத் துவண்டது. கபடு சூது அறியாத அவளது குழந்தை முகத்தில் வெட்கமும் சலுகையும் போட்டியிட்டன. லலிதாவின் தாயார் கணவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவளைப் பார்த்துக் கிட்டாவய்யர், "என்ன தடபுடல், சரசு? எதற்காகச் சத்தம் போடுகிறாய்? எப்பொழுது பார்த்தாலும் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதானா உனக்கு வேலை?" என்று கடுமையான குரலில் கேட்டார்.

"ஆமாம்; உங்கள் செல்லக் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதான் எனக்கு வேலை. இப்படி நீங்கள் இடம் கொடுத்துக் கொடுத்து..." "...இடம் கொடுத்துக் கொடுத்துச் சர்வ அசடாக ஆக்கி விட்டேன். போகட்டும்; உன் வயிற்றிலே பிறந்தபோது அவள் சமத்தாகப் பிறந்தாள் அல்லவா? அதுபோதும். இந்த கலாட்டாவெல்லாம் இப்போது எதற்காக என்று கேட்கிறேன். லலிதா என்ன செய்துவிட்டாள்?" "எத்தனையோ தடவை சொல்லியாச்சு! தபால் ஆபீஸுக்குத் தனியாக ஓடுவேன் என்கிறாள். வருகிற தபால் வழியிலா நின்றுவிடும்? தை பிறந்துவிட்டது; இந்த வருஷம் எப்படியாவது குழந்தைக்குக் கலியாணம் பண்ணியாக வேணும்...." "போதும், நிறுத்து! கலியாணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" கலியாணம் பண்ணும் வயதான பெண்ணை யாராவது தனியாக அனுப்புவார்களா?" "அனுப்பினால் என்ன? பூகம்பமா வந்துவிடும்? தபால் ஆபீஸ் இரண்டு பர்லாங் தூரம்கூட இல்லை. வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கிற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது... லலிதா! நீ போய் வா! எனக்கு ஏதாவது தபால் வந்திருந்தால் அதையும் வாங்கிக்கொண்டுவா!"

அவ்வளவுதான்; அம்மாவைக் கடைக்கண்ணால் ஒரு தடவை பார்த்துவிட்டு லலிதா மானைப்போல் துள்ளி வாசலில் ஓட்டம் பிடித்தாள். "நானும் பார்த்தாலும் பார்த்தேன், பெண்ணுக்கு இப்படிச் செல்லம் கொடுக்கிறவர்களைப் பார்த்ததே யில்லை. பம்பாய்க்குப் போய்விட்டு வந்ததிலிருந்து அப்பாவும் பெண்ணும் இப்படியாகிவிட்டீர்கள். இதெல்லாம் என்னத்தில் போய் முடியப் போகிறதோ, என்னமோ?" என்று சரஸ்வதி அம்மாள் முணுமுணுத்தாள். "எல்லாம் சரியாகத்தான் முடியும்; நீ வாயை மூடிக்கொண்டிரு! மாப்பிள்ளை மட்டும் பெரிய படிப்புப் படித்தவனாய் வேண்டும் என்கிறாயே; அதற்குத் தகுந்தபடி பெண்ணைப் பழக்க வேண்டாமா? வீட்டுக்குள்ளே பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நாளைக்கு..." இதற்குள்ளே வாசலிலிருந்து யாரோ ஒருவர் வருகிற காலடி சத்தமும் கனைப்பும் கேட்டன.

சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் பின்னால் ஒதுங்கிச் சென்று தூண் ஓரத்தில் நின்றாள். வந்த மனிதர் கிட்டாவய்யரின் நெருங்கிய நண்பரும் உறவினருமான சீமாச்சு அய்யர். அந்த நண்பர்களுடைய பேச்சு ஒரு தனி ரகமாயிருந்தது. "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "தெரியுமா ஓய்?" "என்ன தெரியுமா?" ஓய்?" "காலையில் பட்டணத்திலிருந்து நம்முடைய அத்தான் கலியாணசுந்தரம் வந்தான். வரும்போது கையில் பத்திரிகை கொண்டு வந்தான். அதில் எல்லாம் சக்கைப் போடாகப் போட்டிருக்கிறது, ஓய்!" "என்ன போட்டிருக்கிறது, ஓய்?" "பீஹார் மாகாணத்தில் பூகம்பமாம்!" "என்ன? என்ன? என்ன?"

"பிரமாதமான பூகம்பமாம்! உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ரொம்ப இருக்கலாம் என்று பயப்படுகிறார்களாம்... பத்திரிகை பூராவும் இந்த ஒரு விஷயந்தான்! சக்கைப்போடு!" "சீமாச்சு! இது என்ன அதிசயம்?" "எது என்ன அதிசயம்?" "நீ வருகிறதற்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலேதான் பூகம்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்?" "என்ன பேசிக் கொண்டிருந்தீர்?" "சரசுவிடம் குழந்தை தபாலாபீஸுக்குப் போனால் பூகம்பமா வந்துவிடும்? என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி வாய் மூடுவதற்குள் நீ உள்ளே நுழைந்து 'பீகாரில் பூகம்பம்' என்கிறாய்!" "பிராமணர் வாக்கு உடனே பலித்துவிட்டதாக்கும்! நீர் என்ன சாமானியப் பட்டவரா! பெரிய வைதிக பரம்பரை. அதர்வண வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். ஓய்! உம்மைக் கூப்பிடுகிறாப்போல இருக்கிறது!"

தூண் மறைவிலே நின்று கொண்டிருந்த சரஸ்வதி அம்மாள் சற்று முன்புறமாக வந்து கிட்டாவய்யரைத் திரும்பிப் பார்க்கும்படி செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதை கவனித்து விட்டுத்தான் சீமாச்சுவய்யர் அவ்விதம் சொன்னார். "சரசு! இப்படி முன்னால் வந்து தைரியமாகச் சொல்லேன்! நம்ம சீமாச்சுவிடம் என்ன சங்கோஜம்?" சரஸ்வதி அம்மாள் ஈனசுவரத்தில், "அவர் என்னமோ பூகம்பம், கீகம்பம் என்று சொல்லுகிறாரே? குழந்தை தனியாகப் போயிருக்கிறாளே! உடனே நீங்களாவது போய் அழைத்து வாருங்கள்! இல்லாவிட்டால் ஆள் அனுப்புங்கள்" என்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

மூன்றாம் அத்தியாயம்
பம்பாய்க் கட்டிடம்

கிட்டாவய்யர் பட்டணத்து நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அந்த ஆசையின் அறிகுறியாகச் சில காலமாய் அவர் தமது மனைவியைப் பெயர் சொல்லி நாலு பேருக்கு முன்னால் கூப்பிடவும் அவளுடன் சங்கோசமின்றிச் சம்பாஷிக்கவும் ஆரம்பித்திருந்தார். பீஹார் பூகம்பத்தையும் லலிதா தபால் ஆபீஸ் சென்றதையும் சம்பந்தப்படுத்திய தமது மனைவியின் பேதமையை எண்ணியபோது அவர் முகம் புன்னகை பூத்து மலர்ந்தது. "சரசு! பீகாரிலே பூகம்பம் வந்தால் இவ்விடத்தில் நமக்கு என்ன வந்தது? வீண் காபரா செய்யாதே!" என்று சொன்னார். "இது என்ன பேச்சு! பூகம்பம் பீஹாரிலிருந்து இவ்விடம் வர எத்தனை நேரம் செல்லும்?" "அதெல்லாம் ஒன்றும் வராது, நம் ஊருக்கும் பீஹாருக்கும் ஆயிரத்தைந்நூறு மைல் தூரம், தெரியுமா? வீணாக அலட்டிக் கொள்ளாதே!" "ஆமாம்! நான் வீணாக அலட்டிக் கொள்கிறேன். நீங்கள்..."

இந்தச் சமயத்தில் சீமாச்சுவய்யர் மத்தியஸ்தம் செய்ய ஆரம்பித்தார். "ஓய்! பெற்ற மனம் பித்து என்று கேட்ட தில்லையா? பெற்ற தாய்க்கு அப்படித்தான் கவலையாயிருக்கும்; நம்மைப் போன்ற தடியர்களுக்கு நிர்விசாரம்!" என்றார். "ஆமாம், ஆமாம்! உலகத்தில் ஒருவரும் பெண்ணைப் பெறவில்லை. இவள்தான் அதிசயமாகப் பெற்றாள்! 'பூவரசை மரத்தைத் தேள் கொட்டிற்று - புளியமரத்துக்கு நெறி கட்டியது' என்ற கதையாக, பீஹாரில் பூகம்பம் என்றால், அதற்காக நாம் பயப்பட்டுச் சாக வேண்டும் என்கிறாள். பெண்கல்வி வேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறது."

மறுபடியும் சீமாச்சுவய்யர் குறுக்கிட்டு, "ஓய்! மத்தியானம் சாப்பாட்டுக்கு மேலே ஒரு 'கழுதை' ஆட்டம் போடலாமா?" என்றார். "பேஷாய்ப் போடலாம்; இங்கேயே சாப்பிடலாமே, ஓய்!" என்றார் கிட்டாவய்யர். "வேண்டாம்! அப்புறம் நம்முடைய வீட்டில்..." என்று சொல்லிக்கொண்டே சீமாச்சுவய்யர் வெளியேறினார். கிட்டாவய்யர் கொல்லைக் கிணற்றடிக்குக் குளிப்பதற்குச் சென்றார். சரஸ்வதி அம்மாள் வீட்டு வாசலுக்குச் சென்று குழந்தை லலிதா பீஹார் பூகம்பத்துக்குத் தப்பிப் பத்திரமாய் வந்து சேர வேண்டுமென்ற கவலையோடு அவள் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கிரகாரத்தின் வீதி திரும்பிக் கொஞ்ச தூரம் போனதும் பெரிய சாலை இருந்தது. சாலையோடு அரை பர்லாங்கு தூரம் நடந்தால் தபால் சாவடி இருந்தது. லலிதா ஓட்டமும் நடையுமாகச் சென்று ஐந்து நிமிஷத்தில் தபால் ஆபீசை அடைந்தாள்.

அவள் உள்ளே போவதற்குள் ரன்னர் தங்கவேலு தபால் மூட்டையைக் கொண்டு போய்ப் போஸ்டு மாஸ்டர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்திருந்தான். நாலு அடி நீளமும் மூன்று அடி அகலமும் உள்ள அந்த மேஜையில் நாலாயிரம் இடத்தில் மை கொட்டிய அடையாளங்கள் காணப்பட்டன. போஸ்ட் மாஸ்டர் பேனாவை மேஜைமேல் தீட்டிவிட்டுத் தான் எழுதுவது வழக்கமோ என்று சொல்லும்படி தோன்றியது. தபால்கார பாலகிருஷ்ணன் ரன்னர் தங்கவேலுவைப் பார்த்து, "ஏன் அப்பா இத்தனை நேரம்? வழியில் எங்கேயாவது படுத்துத் தூங்கிவிட்டு வந்தாயோ!" என்றான். "தினம் உனக்கு இது ஒரு கேள்வி. ஐந்து மைல் ஜிங்கு ஜிங்கு என்று ஓடிவந்து பார்த்தால் தெரியும்!" என்றான் தங்கவேலு. "சும்மா இருங்க, அப்பன்மார்களே! இதோ கிட்டாவய்யர் வீட்டுக் குழந்தை வருகிறது!" என்று சொல்லிவிட்டுப் பாங்காரு நாயுடு தம் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். லலிதா ஓடி வந்ததினால் ஏற்பட்ட மூச்சு இரைப்புடனே, "போஸ்டு மாஸ்டர்! எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கிறதா?" என்று கேட்டாள்.

போஸ்டு மாஸ்டர் அப்போதுதான் அவளுடைய வரவை அறிந்தவர்போல் நிமிர்ந்து பார்த்து, "ஓகோ! நீயா குழந்தை? கொஞ்சம் உட்காரு! தபால் கட்டை உடைத்துப் பார்த்துச் சொல்கிறேன்!" என்றார். "இன்னும் கட்டு உடைக்கவில்லையா? ஸார்!" "கட்டும் உடைக்கவில்லை; குட்டும் உடைக்கவில்லை!..." "சீக்கிரம் உடைங்கோ, ஸார்!" "என்ன அம்மா அவ்வளவு அர்ஜண்டு?" "அர்ஜண்டுதான், ஸார்! இன்றைக்கு பம்பாயிலிருந்து எனக்குக் கடிதம் வரும்." "இவ்வளவுதானே? ஹூம்! பம்பாயிலிருந்தானே? இதற்கா இவ்வளவு அவசரம்? ஒருவேளை சிங்கப்பூரிலிருந்து கடிதம் வருகிறதாக்கும் என்று பார்த்தேன்." "சிங்கப்பூர் ரொம்ப ஒசத்தியா? எங்க பம்பாயிலே...." "உங்க பம்பாய் மட்டும் ஒசத்தியா? எங்க சிங்கப்பூரிலே" "எங்க பம்பாயிலே, விக்டோ ரியா டெரிமினஸ் ஸ்டேசனை நீங்கள் பார்த்தால் அப்படியே அசந்து போய் விடுவேள், ஸார்!"

"எங்க சிங்கப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு உறைபோடக் காணாது உங்க விக்டோ ரியா டெர்மினஸ்! தெரியுமா குழந்தை!" "எங்க பம்பாயிலே எட்டு மாடி வைத்த வீடு இருக்கு, ஸார்!" "ஹூம்? இவ்வளவுதானா? சிங்கப்பூர்லே இருபத்து நாலு மாடி வைத்த வீடு இருக்கே?" "எங்கே பம்பாயிலே மச்சு வைத்த மோட்டார் பஸ் இருக்கே?" "எங்க சிங்கப்பூரிலே மாடி வைத்த ரிக்ஷா வண்டி இருக்கே?" "எங்கே பம்பாயிலே வழவழவென்று தார் ரோடு இருக்கே?" "ஹூம்! எங்க சிங்கப்பூரிலே ரப்பர் ரோடு போட்டிருக்கே?" "உம் வந்து, வந்து, எங்க பம்பாயிலே அத்தங்கா இருக்காளே?" "ஹூ!...எங்கே சிங்கப்பூரிலே அய்யங்கார் இருக்காரே?" "உங்களோடு போட்டி போட என்னால் முடியாது! தபால் கட்டைப் பிரிங்கோ, ஸார்!" "நிஜமாய்ப் பிரிச்சு விடட்டுமா?" "நிஜமாய், சீக்கிரமாய்ப் பிரிங்கோ ஸார்! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு, ஸார்!" "இதோ உடைச்சுட்டேன், குழந்தை!" என்று சொல்லிக் கொண்டே போஸ்டு மாஸ்டர் தபால் கட்டைப் பிரித்துத் தபால்களின் விலாசத்தை ஒவ்வொன்றாய்ப் பார்க்கத் தொடங்கினார். "ஆச்சா! இதோ இருக்கிறது குழந்தை, பம்பாய்க் கடிதம்! ஆனால் விலாசம் தப்பா இருக்கே! உங்க அப்பா பேரல்லவா...."

"இங்கே கொடுங்க ஸார், பார்க்கலாம். இது எங்க அப்பாவுக்குத்தான், எங்க அத்திம்பேர் எழுதியிருக்கார். இன்னும் பாருங்க, ஸார்! எனக்குக் கட்டாயம் லெட்டர் இருக்கும்!" "ஆஹா! இதோ ஒன்று இருக்கு; இதுவும் அப்பாவுக்குத் தான்." "இங்கே கொடுங்கள்! ஆமாம்; இதையும் அப்பாவிடம் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஏதாவது கடிதம் இருக்கா என்று பாருங்கோ, ஸார்!" என்று ஏமாற்றமான குரலில் கூறினாள் லலிதா.

போஸ்ட் மாஸ்டர் எல்லாத் தபால்களையும் பார்த்தபிறகு கடைசியாக அடியில் இருந்த கடிதத்தைப் பார்த்து, "ஆகா! இதோ இருக்கு உன் தபால்! எல்லாவற்றுக்கும் அடியிலே போய் உட்கார்ந்திருக்கு!" என்று சொல்லிவிட்டு எடுத்துக் கொடுத்தார். லலிதா ஆவலோடு அக்கடிதத்தை வாங்கிக் கொண்டு வாசற்பக்கம் குதித்தோடினாள். தபாலாபீசின் வாசலிலேயே உறையை உடைத்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:- என் பிரியமுள்ள உயிருக்கு உயிரான தோழி லலிதாவுக்கு அத்தங்காள் சீதா அன்புடன் எழுதியது. போன ஞாயிற்றுக்கிழமை நான் எழுதிய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும். அதை எழுதும்போது மிகவும் சந்தோஷமாயிருந்தேன். வரிந்து வரிந்து நாலு பக்கம் எழுதித் தள்ளினேன். நான் எழுதும்போது அம்மா வந்து பார்த்துவிட்டு, 'சீதா! இவ்வளவு நீளமாய்க் கடிதம் எழுதுவதற்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கும்?' என்று கேட்டாள். 'அம்மா! நாலு பக்கம் எழுதியும் இன்னும் சமாசாரம் முடிய வில்லை. தொடர்கதை மாதிரி அடுத்த வாரம் எழுதப் போகிறேன்' என்றேன். அம்மா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகிதமாயிருங்கள்!' என்றாள். அப்போது அம்மாவின் கண்ணில் கண்ணீர் சுரந்திருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். 'இது என்ன அம்மா? எதற்காகக் கண்ணீர் விடுகிறீர்கள்?' என்று நானும் வருத்தமாகக் கேட்டேன். 'ஒன்றுமில்லை சீதா! எனக்கு இந்த உலகில் சிநேகிதிகளே இல்லை. நீயாவது ஒரு நல்ல சிநேகிதியைப் பெற்றிருக்கிறாயே என்பதாகச் சந்தோஷப் பட்டேன், வேறொன்றுமில்லை' என்றாள்.

'அது எப்படி அம்மா! சந்தோஷத்தினால் யாராவது கண்ணீர் விடுவார்களா?' என்று மறுபடியும் கேட்டேன். 'எத்தனையோ கதைப் புத்தகங்கள் படிக்கிறாயே, சீதா! ஆனந்தக் கண்ணீர் என்று கேட்டதில்லையா?' என்றாள். 'நானும் லலிதாவும் சிநேகிதமாயிருப்பதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா?' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். 'ஆமாம், சீதா! யார் கண்டார்கள்? எனக்கு ஏதாவது காலைத் தலையை வலித்ததென்றால் உனக்கு வேறு துணை யார் அம்மாவினுடைய மனத்திற்குள் எங்களுக்கு வரப்போகிற விபத்து தெரிந்ததோ, என்னமோ? லலிதா! நான் மேலே என்னத்தை எழுதுவேன்? சென்ற கடிதம் எழுதின மறுநாளே அம்மா சுரமாகப் படுத்துக் கொண்டாள். 'சாதாரண சுரம், இரண்டு நாளில் சரியாய்ப் போய்விடும்' என்று அம்மா சொன்னதை நம்பிச் சும்மா இருந்து விட்டோ ம். மூன்றாம் நாள் அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் வந்து டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் 'டைபாய்டு சுரம் என்று சொல்லிவிட்டார்' 'இந்த அம்மாள் போஷாக்குக் குறைவினால் ரொம்பவும் மெலிந்து போயிருக்கிறாள். இத்தனை நாள் கவனியாமல் இருந்துவிட்டிர்களே?' என்று அப்பாவை டாக்டர் கேட்டபோது எனக்குச் 'சுருக்' என்றது. அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது.

லலிதா! அதையெல்லாம் இப்போது எழுதி என்ன பிரயோசனம்! அம்மாவுக்கு உடம்பு ரொம்ப அதிகமாகி விட்டது. 'கடவுள் அருள் இருந்தால் பிழைப்பாள்!' என்று அப்பாவிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். கடவுளின் அருள் இருக்குமா, லலிதா! அல்லது கடவுள் என்னை அநாதையாக விட்டுவிட்டு அம்மாவை அவரிடம் அழைத்துக்கொண்டு விடுவாரா? மாமாவுக்கு அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். உடனே, புறப்பட்டு வரும்படி நீயும் சொல்லு. மாமா வந்தால் ஒருவேளை அம்மா பிழைத்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்வாள். அடுத்த வாரக் கடிதம் உனக்கு எழுதுவேனோ என்னமோ தெரியாது, கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் எப்போதும் உன் நினைவாகவே இருப்பேன். உன் அருமைத் தோழி, சீதா.

தபால் சாவடித் திண்ணையில் நின்றபடியே மேற்படி கடிதத்தைப் படித்த லலிதாவின் உள்ளம் உருகிவிட்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று, விம்மி அழத்தொடங்கினாள். விம்மிய சத்தம் தபால் ஆபீஸுக்குள்ளே கேட்டது. போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு, போஸ்டுமேன் பாலகிருஷ்ணன், ரன்னர் தங்கவேலு ஆகிய மூன்று பேரும் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். "என்ன அம்மா! என்ன?" என்று கவலையுடன் கேட்டார்கள். கையில் பிரித்து வைத்திருந்த கடிதத்தைப் பார்த்து விட்டு, "குழந்தை! கடிதத்தில் ஏதாவது துக்க சமாசாரம் இருக்கிறதா?" என்றார்கள். "ஆமாம் பம்பாயிலிருக்கிற என்னுடைய அத்தைக்கு உடம்பு சரியில்லையாம்!" என்றாள் லலிதா. "இதற்கு ஏன் அம்மா அழவேண்டும்? உலகத்தில் எத்தனையோ பேருக்கு உடம்புக்கு வருகிறது சொஸ்தமாகிவிடவில்லையா?" என்றார் போஸ்டு மாஸ்டர். பிறகு, "பாலகிருஷ்ணா! இந்தக் குழந்தையைக் கிட்டாவய்யரின் வீடு வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுவா!" என்றார். "ஆகட்டும், ஸார்! வா அம்மா!" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் புறப்பட்டான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நான்காம் அத்தியாயம்
வாசலில் ரகளை

கிட்டாவய்யரின் மனைவி சிறிது நேரம் வாசலில் கால்கடுக்க நின்று லலிதாவை எதிர்பார்த்தாள். பிறகு சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்து பார்த்தாள். வீதியோடு யாராவது புருஷர்கள் சென்றால் உடனே எழுந்து ரேழியில் போய் நின்று கொள்வாள். இரண்டொரு தடவை வீட்டுக்கு உள்ளேயும் போய் விட்டு வந்தாள். கடைசியாக லலிதா கையில் பிடித்த கடிதத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் துணைக்குத் தபால்கார பாலகிருஷ்ணனுடனும் வருகிறதைப் பார்த்ததும் சரஸ்வதி அம்மாள் மனம் கலங்கி விட்டாள். பாய்ந்து சென்று குழந்தையைத் தாவி கட்டிக்கொண்டு, "அடிப்பெண்ணே! என்னடி விஷயம்? நான் பயப்பட்டது சரியாய்ப் போய்விட்டதே?... பாலகிருஷ்ணா! குழந்தை ஏன் அழுகிறாள்? தடுக்கி விழுந்து விட்டாளா?" என்று அலறினாள். மனக் குழப்பத்தினால் அக்கம் பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள் வாசலில் வந்து நிற்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அம்மா இவ்விதம் கேட்டதும் லலிதாவின் தேம்பல் அதிகமாயிற்று. ஆனால் பாலகிருஷ்ணன், "அதெல்லாம் ஒன்றுமில்லை, அம்மா! பம்பாயிலிருந்து ஏதோ கடிதம் வந்திருக்கு! அதைப் படித்துவிட்டுக் குழந்தை அழுகிறது!" என்றான். "இவ்வளவுதானே? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது? லலிதா! என்ன தான் இருந்தாலும் நீ எதற்காக அழவேண்டும்," என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். இதற்கும் லலிதாவிடமிருந்து பதில் வராமல் போகவே சரஸ்வதி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "யாராவது செத்துக்கித்துத் தொலைந்து போய்விட்டார்களா என்ன? நீ சொல்லாவிட்டால் நானாகப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று லலிதாவின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கினாள்.

கொல்லைக் கிணற்றில் விச்ராந்தியாகக் குளித்துவிட்டு அப்போதுதான் வீட்டுக் கூடத்துக்கு வந்து கிட்டாவய்யர் வாசலில் நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு விட்டு வெளியே வந்தார். தான் சொன்னதைக் கேளாமல் லலிதா தபாலாபீசுக்குப் போனதற்காக அவளைத் தம் மனைவி அடிப்பதாக எண்ணிக் கொண்டு, "இந்தா சரசு! குழந்தையை அடிக்க வேண்டுமானால் இப்படித்தானா நாலு பேர் சிரிக்கும்படி தெருவிலே நின்று கொண்டு அடிக்கவேண்டும்? உள்ளே வந்து கதவை இழுத்துத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அடித்துக் கொன்றுவிடு, தெருவிலே வேண்டாம்" என்றார். "நான் ஒன்றும் உங்கள் குழந்தையை அடிக்கவும் இல்லை; கொல்லவும் இல்லை. தபாலாபீசிலிருந்து வரும்போது அழுது கொண்டே வந்தாள். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாதபடியால் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தை வாங்கிப் படிக்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்கள் வந்து, 'அடிக்கிறாய்' 'கொல்லுகிறாய்' என்கிறீர்கள். நீங்களும் உங்கள் பெண்ணும் எப்படியாவது போங்கள். என் வயிற்றில் இவள் பிறக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்" என்று சரஸ்வதி அம்மாள் உரக்கச் சத்தம் போட்டுக் கத்திவிட்டு விடுவிடு என்று உள்ளே போனாள். கோடை இடி இடித்து ஆலங்கட்டி மழை பெய்து விட்டது போலிருந்தது.

மனைவியின் கோபத்தைக் கிட்டாவய்யர் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "பாலகிருஷ்ணா! என்ன சமாசாரம்? குழந்தை எதற்காக அழுகிறாள்?" என்று கேட்டார். அதன் விவரத்தைத் தெரிவித்து விடை பெற்றுக்கொண்டு திரும்பத் தபாலாபீஸுக்குப் போனான். ஐயர் வீட்டில் காப்பி சாப்பிடச் சொன்னால் சாப்பிடுவதற்குத் தயாராக அவன் வந்திருந்தான். ஆனால் அங்கு நடந்த ரகளையைப் பார்த்து விட்டு உடனே திரும்பினான். தபாலாபீசை அடைந்ததும் "ஸார்! பட்டாமணியம் கிட்டாவய்யர் இவ்வளவு சாதுவாயிருக்கிறாரே? அவருக்கு வாய்த்த சம்சாரம் ரொம்பப் பொல்லாத அம்மா, ஸார்! சற்று நேரத்துக்குள் எவ்வளவு ரகளை பண்ணிவிட்டாள்!" என்றான். "என்னடா பாலகிருஷ்ணா இப்படிச் சொல்கிறாய்? கிட்டாவய்யர் சம்சாரம் பரம சாதுவாயிற்றே! இருக்கும் இடமே தெரியாதே! நான் எத்தனையோ தடவை போயிருக்கிறேன் அந்த அம்மாளின் குரலைக்கூடக் கேட்டதில்லையே?" என்றார் நாயுடு.

"உங்கள் துரதிர்ஷ்டம் ஸார், அது! இன்றைக்கு நீங்கள் வந்திருந்தால் பார்த்திருப்பீர்கள்! அடே அப்பா! தாடகை சூர்ப்பனகை எல்லாரும் அப்புறந்தான்! மொத்தத்திலே பெண் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறதே கஷ்டந்தான்!" என்றான் பாலகிருஷ்ணன். "பாலகிருஷ்ணா! நான் சொல்வதைக் கேள். நீ பிரம்மசாரி, அதனால் உனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஒவ்வொரு பெண் பிள்ளையிடத்தும் தாடகையும், சூர்ப்பனகையும் குடிகொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி லக்ஷ்மியும் சரஸ்வதியும் சீதையும் அருந்ததியும் இருக்கிறார்கள். புருஷன் யாரைக் கூப்பிடுகிறானோ அவர்கள் வெளிவருவார்கள். சூர்ப்பனகையை விரும்பினால் சூர்ப்பனகையும் சீதையை விரும்பினால் சீதையும் வருவார்கள். ஏதாவது பைத்தியக்காரத்தனமான எண்ணம் எண்ணிக் கலியாணம் பண்ணிக் கொள்ளாமலிருந்து சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாதே!" என்றார் நாயுடு. "ஆகக்கூடி, கலியாணம் செய்துகொள்வதென்பது சமையல் செய்து போடுவதற்காக என்றுதானே சொல்கிறீர்கள்! நான் கலியாணம் செய்து கொண்டால், 'லவ் மாரியேஜ்' தான் செய்து கொள்வேன்!" என்று பாலகிருஷ்ணன் சொல்லிவிட்டு அப்போது பிரபலமாகியிருந்த சினிமாப் பாட்டைச் சீட்டியடிக்கத் தொடங்கினான்.

இங்கே கிட்டாவய்யர் தம் குழந்தையை அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு, "லலிதா! ஏன் அழுகிறாய்? கடிதத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறது, அம்மா?" என்று கேட்டார். லலிதா விம்மலையும் தேம்பலையும் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு, "அப்பா! அத்தைக்கு உடம்பு ரொம்ப சரிப்படவில்லையாம், சீதா எழுதியிருக்கிறாள். உங்களுக்கும் இதோ கடிதம் வந்திருக்கிறது" என்று சொல்லித் தான் கொண்டு வந்திருந்த இரண்டு கடிதங்களையும் அவரிடம் கொடுத்தாள். கிட்டாவய்யர் முதலில் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்த்தார். உடனே அவருடைய கண்களிலும் நீர் பெருகத் தொடங்கியது. உள்ளே சென்று சாய்மான நாற்காலியில் சாய்ந்தார். சரஸ்வதி அம்மாள் சற்று நேரத்துக்கெல்லாம் சாந்தமான குரலில், "சாப்பிட வரலாமே!" என்றாள்.

கிட்டாவய்யர் அது காதில் விழாதவர்போல் மௌனமாகயிருந்தார். "ஏன் கவலையாயிருக்கிறீர்கள்? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது?" என்று சரஸ்வதி அம்மாள் மீண்டும் கேட்டாள். "ராஜத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம்" என்றார் கிட்டாவய்யர். "உடம்பு சரிப்படாவிட்டால் என்ன? தானே சரியாய்ப் போய்விடுகிறது. இதற்காகச் சாப்பிடாமல் இருக்கப் போகிறீர்களா? வாருங்கள்! குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள்." "இல்லை, சரசு! குழந்தைகள் சாப்பிடட்டும், எனக்கு இப்போது சாப்பாடு இறங்காது. ராஜத்துக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம், 'டைபாய்டு சுரமாம், பிழைப்பதே..." "பிழைப்பதே புனர் ஜன்மந்தான். போன வருஷமும் இப்படித்தான் கடிதம் எழுதியிருந்தார்கள். போய்ப் பார்த்தால் ஒன்றும் இல்லை. உங்களுக்கு நானூறு ஐந்நூறு ரூபாய் செலவு வைப்பதில் அவர்களுக்குத் திருப்தி போலிருக்கிறது." இதைக் கேட்ட கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து கோபமாக எழுந்தார். அப்போது பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதம் கீழே விழுந்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஐந்தாம் அத்தியாயம்
கிட்டாவய்யர் குடும்பம்

ராஜம்பேட்டை கிட்டாவய்யர் அவருடைய தந்தைக்கு ஒரே புதல்வர். தகப்பனார் அகண்ட காவேரிக் கரையில் தேடி வைத்திருந்த பல ஏக்கரா நன்செய் நிலத்துக்கும் கிராம முனிசீப் வேலைக்கும் உரிமை அடைந்தார். வளமான பூமி; பொன் போட்டால் பொன் விளையக்கூடியது. ஆயினும், அந்நிலத்தில் பொன்னைப் போடாமல் பொன்னைக் காட்டிலும் சிறந்த சம்பா நெல், கதலி வாழை, வெற்றிலை, கரும்பு முதலியவை பயிராக்கி வந்தனர். தகப்பனார் காலத்திலேயே அவருடைய சகோதரிகள் இருவருக்கும் கலியாணம் ஆகிவிட்டது. ஆகவே அவர் குடும்பத்தலைவரான பிறகு குடும்பத்துக்கும் பெரிய செலவு ஒன்றுமில்லை. எனினும் தான தர்மங்களிலும் பொதுக் காரியங்களிலும் சிநேகிதர்களுக்கு உதவி செய்வதிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலும் தாராளமாகப் பணம் செலவழித்துக் கொண்டிருந்தபடியால் தகப்பனார் காலத்துக்குப் பிறகு சொத்து விருத்தியடையவில்லை. புதல்வி லலிதாவுக்கு மட்டும் வருஷத்துக்கு ஒரு வயது வீதம் கூடிக்கொண்டே யிருந்தது. சென்ற வருஷமே கலியாணம் செய்திருக்க வேண்டும். இந்த வருஷமும் கலியாணம் செய்யாமலிருந்தால் குடிமூழ்கிப் போய்விடும் என்பது அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளின் திடமான அபிப்பிராயம்.

சென்ற வருஷம் கிட்டாவய்யர் லலிதாவின் கலியாணத்தில் அதிக சிரத்தை காட்டாததின் காரணம், அவர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்கு பிரயாணம் செய்ய நேர்ந்ததுதான். கிட்டாவய்யரின் சகோதரிகளில் ஒருத்தி அவருக்கு மூத்தவள். அந்த அம்மாளுக்குச் சமீப கிராமம் ஒன்றில் வைதிக குடும்பத்தில் கலியாணமாகியிருந்தது. கிட்டாவய்யரின் தங்கை ராஜமோ பம்பாயில் இருந்தாள். சிறு பிராயத்தில் ராஜம் கிட்டாவய்யரின் வாஞ்சைக்குப் பெரிதும் உரிமை பெற்றிருந்தவள். அவளுடைய கலியாணத்தின் போது கிட்டாவய்யர் காட்டிய உற்சாகத்துக்கும் பெருமைக்கும் அளவே கிடையாது. ராஜத்தை மணந்த மாப்பிள்ளையைப் பல தடவை "அதிர்ஷ்டக்காரன்" என்று அவர் பாராட்டியதுண்டு. ஆனால், யாரும் அறிய முடியாத தெய்வ சித்தத்தினால் ராஜத்தின் அதிர்ஷ்டம் அவ்வளவு சரியாக இல்லை. கலியாணம் ஆன உடனேயே மாப்பிள்ளை துரைசாமிக்குப் பம்பாயில் ரயில்வே காரியாலயத்தில் நல்ல உத்தியோகம் ஆயிற்று. கொஞ்ச காலத்துக்குப் பிறகு ராஜம் பம்பாய்க்குப் போனாள்.

ராஜத்தின் இல்வாழ்க்கை அவ்வளவு ரம்மியமாக இல்லை என்று சீக்கிரத்திலே தெரிய வந்தது. ஆனாலும் விவரம் இன்னதென்று தெரியவில்லை. மான உணர்ச்சி அதிக உள்ளவளான ராஜம்மாள் தன்னுடைய கஷ்டங்களைப் பகிரங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. பம்பாய்க்கும் ராஜம் பேட்டைக்கும் போக்குவரவு அடிக்கடி இருக்க முடியாதல்லவா? நாளடைவில் கடிதப் போக்குவரவு கூட நின்று போயிற்று. சிற்சில சமயம் கிட்டாவய்யர், "ராஜம் எப்படியிருக்கிறாளோ?" என்று எண்ணி ஏங்குவார். அப்போது அவருடைய கண்களில் கண்ணீர் துளிக்கும். கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அவள் தலைவிதி அப்படி!" என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் தம் காரியத்தைப் பார்க்கத் தொடங்குவார்.

இந்த நிலையில், ஒரு வருஷத்துக்கு முன்னால் ராஜத்திடமிருந்து கடிதம் ஒன்று வந்தது; உருக்கமான கடிதம் அது. இத்தனை வருஷமாக எவ்வளவோ பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருந்தும் தன்னுடைய மனவேதனை தீர்ந்தபாடில்லை என்று ராஜம் எழுதியிருந்தாள். வர வரத் தன் உடம்பு நிலையும் மோசமாகி வருகிறதென்றும் கூடிய சீக்கிரம் வந்து தன்னை ஒரு தடவைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்றும் தமையனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். "வரும் போது மன்னியையும் லலிதாவையும் அழைத்து வர வேணும். சீதா அவளுடைய அம்மங்காளைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள்" என்றும் எழுதியிருந்தாள்.

கிட்டாவய்யருக்குத் தம் மனைவியைப் பம்பாய்க்கு அழைத்துப் போக விருப்பமில்லை. ஆனால் சரஸ்வதி அம்மாளின் மனோநிலை அதற்கு நேர்மாறாக இருந்தது. லலிதாவுடன் பம்பாய்க்குப் போவதில் அவள் துடியாக நின்றாள். குழந்தைகளுக்குத் தலைமொட்டை போடுவதற்காகத் திருப்பதி யாத்திரை போனதைத் தவிர அந்த அம்மாள் பிரயாணம் அதிகமாகச் செய்ததில்லை. பிரயாணம் செய்ய ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் இப்போது பம்பாய்க்குப் போவதில் ஆத்திரம் காட்டினாள். காரணம் லலிதாவுக்கு வயது பதினாலு ஆகியிருந்ததுதான். "நாலு இடத்துக்குப் போய்ப் பார்த்தால் தானே நல்ல வரனாகக் கிடைக்கும்? இந்தப் பட்டிக்காட்டிலேயே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

ஆகவே கிட்டாவய்யர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்குப் போனார். சரஸ்வதி அம்மாள், லலிதா, லலிதாவின் தம்பி சுண்டு ஆகியவர்களும் போயிருந்தார்கள் பிரயாணம் வெகு உற்சாகமாயிருந்தது. துரைசாமி ஐயர் ஸ்டேஷனுக்கு வந்து அவர்களைத் தாதரில் இருந்த தம் ஜாகைக்கு அழைத்துச் சென்றார். பம்பாயில் தங்கியிருந்தபோது லலிதாவும் சுண்டுவும் வெகு குதூகலமாயிருந்தார்கள். லலிதாவும் அவளைவிட ஒரு வயது மூத்தவளான சீதாவும் பிராண சினேகிதர்களானார்கள். ஒருவரையொருவர் மறப்பதில்லையென்றும் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டார்கள்.

லலிதாவுக்கும் சுண்டுவுக்கும் பம்பாய் நகரத்துக் காட்சிகளையெல்லாம் காட்டுவதில் சீதாவுக்கு அளவில்லாத பெருமை; சொல்ல முடியாத உற்சாகம். மிருகக்காட்சிச் சாலையாகட்டும், மியூஸியம் ஆகட்டும், ரயில்வே ஸ்டேஷன்கள் ஆகட்டும், தாஜ்மகால் ஹோட்டல் ஆகட்டும், எட்டு மாடியுள்ள மாளிகைகள் ஆகட்டும், மலபார் குன்றிலுள்ள மச்சுத் தோட்டம் ஆகட்டும் - லலிதா பார்த்ததையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போனபடி நிற்பாள். சீதாவோ, அடிக்கடி, "இங்கே வாடி! இதைப் பாரடி! இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள். ஓடி வாடி! ஓடி வா!" என்று அவசரப்படுத்துவாள்; கையைப் பிடித்து இழுப்பாள்; முதுகைப் பிடித்துத் தள்ளுவாள்; "சீ! அசடே!" என்று சில சமயம் வையவும் வைவாள். ஆனால், இதையெல்லாம் லலிதா பொருட்படுத்தவில்லை. சீதாவிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த அளவில்லாத பிரியமும் அவளாலேதானே இந்தப் பம்பாய்க் காட்சிகளையெல்லாம் பார்க்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியும் சேர்ந்து சீதா இழுத்த இழுப்புக்கெல்லாம் லலிதா பம்பாயில் தங்கிய நாட்களில் எப்போதும் ஒரே உற்சாகமாயிருந்தாள். இதற்கு முன் எந்த நாளிலும் அவள் அவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லை.

ஆனால் கிட்டாவய்யரும், அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளும் வெவ்வேறு காரணங்களினால் லலிதாவுக்கு நேர்மாறான மனோநிலையை அடைந்திருந்தார்கள். ராஜத்தின் வாழ்க்கை ஏமாற்றமும் மன வேதையும் நிறைந்தது என்று கிட்டாவய்யர் அறிந்து கொண்டார். ஆனால் அதன் காரணங்களை அவர் தெளிவாக அறிய முடியவில்லை. அவர்கள் பம்பாயில் தங்கியிருந்த நாட்களில் துரைசாமி அபூர்வமாகவே வீட்டுக்கு வந்தார். வந்தபோதெல்லாம் முக மலர்ச்சியோடு மரியாதையாகவே பேசினார். இரவு நேரங்களில் பெரும்பாலும் 'டியுடி' இருக்கிறதென்பதாய்ச் சொல்லி அவர் வீட்டிற்கு வருகிறதில்லை.

ராஜத்தின் கஷ்டங்களைக் கிட்டாவய்யர் அறிந்து கொள்ள முயன்றார். பணக்கஷ்டம் இருப்பது பிரத்யட்சமாகத் தெரிந்தது. ராஜத்தின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொங்கிய திருமாங்கல்யத்தைத் தவிர வேறு ஆபரணம் என்பதே கிடையாது. கிட்டாவய்யர் எதிர்பார்த்தபடி ராஜம் அதிகமாக மெலிந்து படுத்த படுக்கையாக இல்லை. சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டுதான் இருந்தாள்.

கிட்டாவய்யர் ராஜத்தைக் கேட்டபோது, "எனக்கு உடம்பு ஒன்றுமில்லை, அண்ணா! உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் அப்படி எழுதியிருந்தேன்" என்றாள். கிட்டாவய்யர் இதனால் ஏமாந்து விடாமல் மேலும்மேலும் கேள்விகள் கேட்டு உண்மை அறிய முயன்றார். "ஏன் அம்மா, ராஜம்! உன் அகத்துக்காரருக்கு ஏதேனும் கெட்ட பழக்கம் உண்டோ ? குடி, கிடி...." "குடி, குதிரை பந்தயம் இன்னும் எல்லாம் உண்டு, அண்ணா! அதை யெல்லாம் ஏன் கேட்டு என் வயிற்றெரிசலைக் கிளப்புகிறாய்?" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று கண்ணீர் வடித்தாள். கிட்டாவய்யர் அவளுக்குத் தேறுதல் கூறிக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார். சூதாட்டங்களோடு கூடச் சிற்றின்ப விவகாரங்களிலும் துரைசாமி ஈடுபவதுண்டு என்று ராஜத்தின் சிற்சிலவார்த்தை களிலிருந்து கிட்டாவய்யர் ஊகித்தார். ஆனால் தங்கையிடம் இதைப்பற்றி அதிகம் கேட்பதில் உள்ள விரஸத்தைக் கருதி நிறுத்திக் கொண்டார்.

துன்பப்பட்டிருந்த ராஜத்தினிடம் கிட்டாவய்யர் காட்டிய பிரியத்தையும் அநுதாபத்தையும் பார்க்கப் பார்க்க, சரஸ்வதி அம்மாளின் உள்ளத்தில் குரோதப் புகை கிளம்பத் தொடங்கியது. ராஜத்தின் கஷ்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக அவளிடம் அவர் தனியாகப் பேசும் போதெல்லாம் சரஸ்வதி அம்மாள் அங்கே தேடிக்கொண்டு வந்து சேருவாள். "சரசு! நீ போ!" என்றால், "இரகசியம் என்ன இரகசியம்? நல்ல வெட்கக் கேடு!" என்று கன்னத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு திரும்பிச் செல்வாள். "அந்தப் பிராமணர் பரமசாது! தங்கக் கம்பி; பார்ப்பதற்கு மகாராஜா மாதிரியிருக்கிறார். இந்தத் துக்கிரிதான் இப்படிக் குடித்தனத்தைப் பாழாக்கியிருக்கிறாள்!" என்று முணுமுணுப்பாள். தன் புதல்வி லலிதாவைக் காட்டிலும் ராஜத்தின் மகள் சீதா சிவப்பாகவும் இலட்சணமாகவும் இருப்பதைப் பார்க்கப் பார்க்கச் சரஸ்வதிக்கு ஆத்திரம் பொங்கியது. சீதா கலகலவென்று பேசுவதும் சிரிப்பதும் இவளுக்குக் குரோதத்தை உண்டாக்கியது. லலிதா எப்போதும் சீதாவைப் பின்தொடர்ந்து போவதும், அவள், "சீ! போடி! வாடி!" என்று அதட்டுவதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவேயில்லை.

இந்த நிலைமையை ராஜம் ஒருவாறு அறிந்துகொண்டு தன்னுடைய இனிய பேச்சினாலும் உபசாரத்தினாலும் மன்னியைக் கூடுமான வரையில் சாந்தப்படுத்தி வந்தாள். லலிதாவின் பேரில் ரொம்பவும் அதிகாரம் செலுத்தாதபடி சீதாவுக்கு அடிக்கடி எச்சரிக்கை செய்து வந்தாள். இதனாலெல்லாம் சரஸ்வதி அம்மாளின் மனம் சாந்தம் அடையவில்லை. லலிதா சீதா இவர்களின் தோற்றத்தை அவளுடைய உள்ளம் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. லலிதா மாநிறமானவள்; சீதாவின் மேனியோ வெண்பட்டினையொத்த சந்தன வர்ணங்கொண்டது. சாமுத்திரிகா இலட்சணம் அறிந்தவர்கள் ஒருவேளை சீதாவைவிட லலிதாதான் அழகுடையவள் என்று சொல்லக்கூடும். ஆனால் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு இருவரில் சீதாதான் அழகி எனத் தோன்றும். லலிதாவின் கண்கள் நீண்டு சாந்தம் குடிகொண்டு தாமரை இதழின் வடிவை ஒத்திருந்தன. சீதாவின் கண்களோ அகன்று வட்ட வடிவமாய்க் குமுத மலரையொத்திருந்தன. அவளுடைய கண்ணிமைக் குள்ளே கருவிழிகள் அங்குமிங்கும் சுழன்று சஞ்சல புத்தியைக் காட்டின என்றாலும், பார்ப்பவர்களை உடனே பிரமிக்கச் செய்யும் தன்மை வாய்ந்திருந்தன.

சீதா பம்பாய்ப் பட்டிணத்தின் நாகரிகத்தில் பிறந்து வளர்ந்தவள். லலிதாவோ பட்டிக்காட்டிலேயே இருந்தவள். அதற்குத் தகுந்தபடி அவர்களுடைய நடை உடை பாவனைகள் அமைந்திருந்தன. சீதாவின் காதுக்கருகில் தொங்கிய சுருட்டை மயிர் ஒன்றே போதும், அவளுடைய முக வசீகரத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு. அவளுடைய பேசுந் திறமையைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருப்பாள். லலிதா ஒருவார்த்தை சொல்லுவதற்குள் சீதா பத்து வார்த்தை சொல்லிவிடுவாள். 'கான்வெண்ட்' பள்ளிக் கூடத்தில் படித்தவளாதலால் பேசிக் கொண்டேயிருக்கும் போது திடிரென்று ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடி லலிதாவைத் திகைக்கப் பண்ணி விடுவாள்.

இவ்வளவுக்கும் மேலாக லலிதாவைவிடச் சீதா ஒரு வயது அதிகமானவள். ஆகையால் அவளிடம் யௌவனத்தின் சோபை பிரகாசிக்கத் தொடங்கியிருந்தன. இப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, லலிதாவைக் காட்டிலும் சீதா வசீகரம் பெற்றிருப்பதேன் என்பதாகச் சரஸ்வதி அம்மாளால் நிர்ணயிக்க முடியவில்லை. மொத்தத்தில் தன் புதல்வியைக் காட்டிலும் தன் நாத்தனாரின் மகள் அதிக அழகு பெற்று விளங்குகிறாள் என்பதை மட்டும் அவள் உள்ளம் உணர்ந்தது. இது காரணமாக அந்த அம்மாளின் சுபாவமே மாறிவிட்டது.

ராஜம்பேட்டை போஸ்டுமாஸ்டர் பங்காருநாயுடு சரஸ்வதி அம்மாளைப்பற்றிக் கொடுத்த அபிப்பிராயம் ஒரு வருஷத்துக்கு முன்னால் வரையில் உண்மையாயிருந்தது. பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து சரஸ்வதி அம்மாளின் இயற்கையின் கோபதாபங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. லலிதாவைச் சிங்காரிப்பதிலும் அழகுபடுத்துவதிலும் முன்னைக் காட்டிலும் லலிதாவுக்குக் கிடைத்த அடிகள், திட்டுகளுக்குக் கணக்கேயில்லை. அதிலும், சீதாவின் பேச்சை லலிதா எடுத்து விட்டால், அன்று வீடு அமர்க்களம்தான்! பலமுறை தலையில் பட்டுப் பட்டென்று குட்டுகள் விழுந்த பிற்பாடும் லலிதாவுக்கு மட்டும் புத்தி வரவேயில்லை. அத்தங்காள் சீதாவைப்பற்றி யாரிடமாவது ஏதாவது பெருமையடித்துக் கொள்ளாவிட்டால் அவளுக்கு அன்றிரவு தூக்கம் வராது; அப்படித் தூங்கினாலும் சொப்பனத்தில் அக்கிரகாரத்துப் பெண்களிடம் தன் பம்பாய் அத்தங்காளைப் பற்றி ஏதாவது சொல்லியே தீருவாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஆறாம் அத்தியாயம்
மந்திராலோசனை

கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து எழுந்த போது கீழே விழுந்த கடிதத்தை எடுத்து நின்ற வாக்கிலேயே அதைப் பிரித்துப் படித்தார். பாதி படிக்கும் போதே, "சீச்சீ! இங்கிலீஷ் படித்தவர்களுக்குப் புத்தியே இருப்பதில்லை. அதிலும் மதராஸில் குடியேறிவிட்டால், அவர்களுக்கு தலைகால் புரிகிறதில்லை சுத்த கர்வம் பிடித்தவர்கள்!" என்றார். சரஸ்வதி அம்மாளுக்கு, 'நீங்கள் இங்கிலீஷ் படிக்காவிட்டால் படித்தவர்களை எதற்காகத் திட்டுகிறீர்கள்?" என்று சொல்லத் தோன்றியது. ஆனாலும் 'மதராஸ்' என்றதும் அவளுடைய நினைவு வேறு பக்கம் திரும்பியது. கடிதத்தின் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவலினால் நாவை அடக்கிக் கொண்டாள். கிட்டாவய்யர் கடிதத்தை முழுதும் படித்தபிறகு, "கடிதம் யார் எழுதியிருக்கிறார்கள்? என்ன எழுதியிருக்கிறது?" என்று கேட்டாள்.

கிட்டாவய்யருக்குத் தன் மனைவி பேரில் ஏற்பட்டிருந்த அற்ப கோபம் இதற்குள் மாறி மதராஸ்காரர்களின்மீது திரும்பியிருந்தது. ஆகையால் சரஸ்வதி அம்மாளின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். "பழைய மாம்பலத்தில் இருக்கிறானே, ஒரு பிரகஸ்பதி, அவன் எழுதியிருக்கிறான். அவனுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்!" "ஓகோ! உங்கள் சின்ன மாமா எழுதியிருக்கிறாரா? என்ன எழுதியிருக்கிறார்?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். அவளுடைய குரலில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கிட்டாவய்யர், "பட்டணத்தில் பத்மாபுரத்தில் ஒரு நல்ல வரன் இருக்கிறது என்று சீமாச்சு சொன்னான் அல்லவா? அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி சொல்லியிருந்தேன். பிள்ளையின் தாய் தகப்பனாரைப் போய்ப் பார்த்தானாம். அவர்கள் பெண்ணை மதராஸுக்கு அழைத்துக் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்கிறார்களாம்! மதராஸ்காரர்களுக்கே தலையில் மூளை இராது போலிருக்கிறது. சந்தைக்கு மாட்டைக் கொண்டு போவது போல் பெண்ணை அழைத்துக் கொண்டு போக வேண்டுமாம்! அப்படியாவது அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறார்களா? பெண்ணையும் கொடுத்துத் தட்சணையாகப் பணம் கொடுக்க வேண்டுமாம்! அவர்கள்தான் அப்படிப் புத்தியில்லாமல் சொன்னார்கள் என்றால், இவனுக்கு எங்கே புத்தி போயிற்று? 'லலிதாவை இங்கே ஒரு தடவை அழைத்துக் கொண்டு வருவது நலம்' என்று எழுதியிருக்கிறான்! நலமாம் நலம்! நலத்தை ரொம்பக் கண்டுவிட்டான் இவன்!" என்று கிட்டாவய்யர் சரமாரியாகப் பொழிந்தார்.

"இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது. கோபம், பாவம், சண்டாளம் என்று நீங்களே அடிக்கடி சொல்வீர்களே? உங்கள் சின்ன மாமா யோசிக்காமல் எழுதக் கூடியவர் அல்ல. அப்படிக் குழந்தையை அழைத்துக்கொண்டு போனால் அவர்கள் வீட்டுக்கா நேராகப் போகப் போகிறோம்? உங்கள் சின்ன மாமா வீட்டில்தானே போய் இறங்குவோம்? அங்கே வந்து பார்க்கச் சொன்னாலும் போயிற்று! இதற்காக நீங்கள் இவ்வளவு கோபித்துக் கொள்வானேன்?" என்று சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாந்த உபதேசம் செய்தாள்.

லலிதாவுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்பதில் சரஸ்வதி அம்மாளுக்கு இருந்த ஆர்வம் சில சமயம் அவளை ரௌத்ராகாரம் கொள்ளச் செய்தது; வேறு சில சமயம் அபாரமான சாந்த குணத்தை மேற்கொள்ளும்படியும் செய்தது. "அதெல்லாம் முடியாத காரியம், கண்ட முட்டாள் பயல்களுக்கு முன்னால் நம்ம லலிதாவை அழைத்துக் கொண்டு காட்டுவதா? அப்படி என்ன இப்போது வந்துவிட்டது? இவன் இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர். ஒரு பையன் வந்து பெண்ணைப் பார்ப்பது, அப்புறம் பெண் வேண்டும், வேண்டாம் என்று சொல்வது - இதுவே ஆபாசமான காரியம். பெண்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவது ரசாபாசமான விஷயம்!..."

சரஸ்வதி அம்மாள் குறுக்கிட்டு, "இப்போது என்ன குடி முழுகிவிட்டது? எதற்காகக் கோபித்துக் கொள்கிறீர்கள்? எல்லாவற்றுக்கும் கோடி வீட்டுக்காரரை யோசித்துக்கொண்டு தீர்மானம் செய்தால் போகிறது!" என்றாள். கோடி வீட்டுக்காரர் என்று சரஸ்வதி அம்மாள் குறிப்பட்டது சீமாச்சுவய்யரைத்தான். அவரைக் குறிப்பிட்டவுடனே கிட்டாவய்யரின் கோபம் அடங்கிவிடும் என்று அந்த அம்மாள் நன்கறிந்திருந்தாள். அவள் நினைத்தபடியே ஆயிற்று. கிட்டாவய்யர் அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு வெளிக் கிளம்பினார்.

மேலக்கோடி வீட்டுத் திண்ணையில் ஏற்கனவே மூன்று பேர் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். சீமாச்சுவய்யர் என்கிற சீனிவாச அய்யர் கையில் சீட்டுக்கட்டுடன் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவய்யரும், அப்பாத்துரை சாஸ்திரிகளும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் தலைக்கு ஒரு ஏட்டைப் பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டாவய்யர் வந்ததும் சாஸ்திரிகள் பத்திரிகையிலிருந்து தலையைத் தூக்கி, "ஐயர்வாள்! தெரியுமா சமாசாரம்? பீஹாரிலே பெரிய பூகம்பமாமே?" என்றார்.

பஞ்சுவய்யர், "அது என்ன அவருக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்? பூகம்பத்தை உண்டாக்கினதே அவர்தானே! லலிதா தபால் ஆபிஸுக்குப் போனால் பூகம்பா வந்துவிடும் என்று இவர் சம்சாரத்திடம் சொல்லிக்கொண்டேயிருந்தாராம். அடுத்த நிமிஷம் சீமாச்சு 'பீகாரிலே பூகம்பம்' என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றானாம். முனிபுங்கவரின் வாக்கு அந்த க்ஷணமே பலிதமாகி விட்டது!" என்றார்.

"ஒரு காலத்திலே பிராமணனுடைய வாக்குப் பலித்துக் கொண்டுதான் இருந்தது! இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது. நானும்தான் கேட்கிறேன், அந்தப் பெண் குழந்தை தபாலாபீசுக்குப் போகாவிட்டால் என்ன முழுகிப் போகும்? தபாலாபீசுக்குப் போக அய்யர் வீட்டில் ஆள் இல்லையா? தேள் இல்லையா?" என்றார் சாஸ்திரிகள். சீமாச்சு ஐயர் குறுக்கிட்டு, "ஆள் இல்லாவிட்டாலும் தேள் நிறைய இருக்கிறது! சட்! சும்மா இருங்காணும்! லலிதா தபாலாபீசுக்குப் போனதினால் என்ன முழுகிப் போய்விட்டது? அதைத்தான் சொல்லுமே? உலகம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது என்று உமக்குத் தெரியுமா?" என்றார்.

"நீங்கள் இப்படி முன்னேற்றம், பின்னேற்றம் என்று பேசப்போகத்தான் ஊரிலே பூகம்பம் வருகிறது!" என்றார் சாஸ்திரிகள். "நாம் இங்கே பேசுகிறதற்காகப் பூகம்பம் பீஹாரிலே வருவானேன்?" என்று கேட்டார் பஞ்சுவய்யர். "அந்தப் பூகம்பம் இங்கே வருவதற்கு எத்தனை நேரம் ஆகும்? பகவான் கிருபை செய்தால் அடுத்த நிமிஷம் இங்கேயே வந்து விடுகிறது!"

"பூகம்பம் வருகிறதோ, இல்லையோ, மகாத்மா நம்முடைய மாகாணத்துக்கு வரப்போகிறாராம்!" என்று சொல்லிப் பஞ்சுவய்யர் பத்திரிகையில் போட்டிருந்த கொட்டை எழுத்துத் தலைப்பைக் காட்டினார். "எதற்காக வருகிறாராம் தெரியுமா? கோயில்களையெல்லாம் பதிதர்களுக்குத் திறந்துவிடுவதற்காக வருகிறாராம்! பூகம்பம் ஏன் வராது என்று கேட்கிறேன். பூகம்பம் மட்டும்தானா வரும்? பூகம்பம், புயற்காற்று, பெருமழை, பிரளயம், மகாப் பிரளயம் எல்லாந்தான் வரும், வந்து உலகமே அழிந்து போகும்!"

"ஓய்! சாஸ்திரிகளே! பஞ்சாதி சொல்கிற வாயினால் இப்படித் துர்வாக்குச் சொல்லி வைக்காதீர்! தப்பித் தவறிப் பலித்து வைக்கப் போகிறது!" என்றார் பஞ்சுவய்யர். "அந்தப் பயம் நமக்கு வேண்டாம். அப்பாதுரை சாஸ்திரிகள் வாக்குப் பலிக்கிறதாயிருந்தால் இந்த ஊர் இப்படியா இருக்கும்? 'தீர்க்க சுமங்கலிபவா' என்று இந்த மகான் எத்தனை பேருக்கு ஆசீர்வாதம் பண்ணியிருக்கிறார்! அவருடைய ஆசீர்வாதம் பெற்றவர்கள் எல்லாரும் சுமங்கலிகளாயிருக்கிறார்களா? இந்த ஊரில் மாஜி சுமங்கலிகள்தானே அதிகமாகியிருக்கிறார்கள்!" என்று சீமாச்சுவய்யர் சற்றுக் கிருக்காகப் பேசினார். "இந்த வீண் வம்பு கிடக்கட்டும், சீமாச்சு! நான் உன்னிடம் ஒரு யோசனை கேட்பதற்காக வந்தேன்!" என்றார் கிட்டாவய்யர். "முன்னமே சொல்லியிருக்கக்கூடாதோ? வா, உள்ளே போகலாம் என்று சீமாச்சு சொல்ல இருவரும் உள்ளே கூடத்துக்குச் சென்றார்கள். பம்பாயிலிருந்தும் மதராஸிலிருந்தும் வந்திருந்த கடிதங்களைப் பற்றிக் கிட்டாவய்யர் விவரமாகச் சொல்லி, "உன்னுடைய யோசனை என்ன?" என்று கேட்டார். சீமாச்சுவய்யர் தம்முடைய அபிப்பிராயத்தைக் கூறினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஏழாம் அத்தியாயம்
பத்மாபுரம்

சென்னைப் பட்டினத்தின் ஒரு புதிய பகுதியான பத்மாபுரத்தைப் பற்றி அறியாதவர்கள், அறியாதவர்களே ஆவர். தினப்பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும் பத்திரிகையில் நகர நிகழ்ச்சிக் குறிப்புகளில் 'பத்மாபுரம்' என்ற பெயரைக் கட்டாயம் படித்திருப்பார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் ஏதேனும் ஒரு கூட்டம் கட்டாயம் நடந்தே தீரும். அந்தக்கூட்டத்தில் யாரேனும் ஒரு அரசியல் நிபுணரோ அல்லது பிரசித்தமான சமூகப் பிரமுகரோ அல்லது இலக்கிய மகாவித்வானோ உபந்நியாசங்கள் செய்தே தீருவர். திங்கட்கிழமை தினப்பத்திரிகைகளில் முக்கியமான இடத்தில் இரண்டு பத்தியை மேற்படி உபந்நியாசங்கள் அடைத்துக் கொண்டு மற்றச் செய்திகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடும்.

பிரசங்க சாகர உபந்நியாச ரத்னாகர படாடோ ப பயங்கர பிருந்தாவனச்சாரியாருக்கு எண்பத்தேழாவது அஸ்திபூர்த்தி விழா ஒரு சமயம் வந்தது. அதை இந்தப்பரந்த உலகத்தில் யாருமே கவனியாமல் இருந்து விட்டார்கள். ஆனால், பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தார் சும்மா விட்டுவிடவில்லை. "உலகமெல்லாம் கொண்டாடாமல் விட்டாலும் நாங்கள் கொண்டாடுவோம். மேதாவியின் பெருமையை எங்களைப் போன்ற மேதாவிகளால் தான் அறிய முடியும்; மற்றவர்களாலே எப்படி முடியும்?" என்று சொன்னார்கள். எண்பத்தேழு அங்குல நீளம், எண்பத்தேழு அங்குலம் அகலம், எண்பத்தேழு அங்குல உயரமுள்ள ஒரு மகத்தான பிரசங்க மேடையை அமைத்தார்கள். எண்பத்தேழு கால் நட்டுப் பந்தல் போட்டார்கள். ஐன்ஸ்டின், ரோமன் ரோலண்டு, ரொனால்டு, கால்மென், பெர்னாட்ஷா, மிக்கி மவுஸ் முதலிய உலகப் பிரமுகர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப் பினார்கள். அன்று மாலையில் பத்மாபுரத்தில் பார்த்தால் ஒரே அல்லோல கல்லோலமாய் இருந்தது. அன்றைய கூட்டத்தில் தினப்பத்திரிகை நிருபர்கள் மட்டும் பதினைந்து பேர் வந்திருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.அந்தப் பதினைந்து பத்திரிகை நிருபர்களும் பத்மாபுரத்தில் சொந்த வீட்டிலோ அல்லது வாடகை வீட்டிலோ குடியிருப்பவர்கள். எனவே, அவர்கள் சபையோர்களாகவும் விளங்குவார்கள்! பத்திரிகை நிருபர்களாகவும் தங்கள் கடமையைச் செய்வார்கள்.

பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் கூட்டம் என்றால் எப்படிப்பட்ட பிரமுகர்களும் உடனே பிரசங்கம் செய்ய ஒப்புக்கொள்வதின் இரகசியம் இதுதான். பத்மாபுரத்தில் முப்பது பேர் அடங்கிய சபையில் பிரசங்கம் செய்வதும் சரி, வேறு எங்கேயாவது முப்பதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் பிரசங்கம் செய்வதும் சரி என்பது உபந்நியாசகர்களின் உலகத்தில் சகலரும் அறிந்த உண்மை. ஆகவே பத்மாபுரம் சங்கத்திலிருந்து பேசுவதற்கு அழைப்பு வந்துவிட்டதென்றால் ஹைகோர்ட் ஜட்ஜுக்கள் என்ன, அரசியல் தலைவர்கள் என்ன, பேராசிரியர்கள் என்ன, பிரசங்க காளமேகங்கள் என்ன, சங்கீத கலாநிதிகள் என்ன - யாராயிருந்தாலும் பெருமிதம் அடைந்து மகிழ்வார்கள். பத்மாபுரம் பற்றி எதற்காக இவ்வளவு வர்ணனை? - என்று வாசகர்கள் கேட்கலாம். என் அன்பார்ந்த தமிழ்நாட்டுச் சகோதர சகோதரிகளே! பத்மாபுரத்தைப் பற்றி நாம் இத்தனை தூரம் வர்ணிப்பதற்குத் தகுந்த முகாந்திரம் இருக்கிறது. அசைக்க முடியாத காரணங்கள் இருக்கின்றன. (கேளுங்கள் கேளுங்கள்!) சரிதான்! பத்மாபுரத்துப் பிரசங்க ஆவேசம் நம்மையும் பிடித்துக் கொண்டது; மன்னிக்கவும்.

நம்முடைய கதையின் பிரதான கதாநாயகனான ஸ்ரீ சௌந்தரராகவன் தற்சமயம் பத்மாபுரத்தில் இருக்கிறான் என்று சொன்னால், அதற்கு மேலே வேறு என்ன சொல்ல வேண்டும்? பத்மாபுரத்தைப் பற்றி எவ்வளவு வர்ணனை செய்தாலும் அதிகமாகி விடாதல்லவா? பத்மாபுரத்தில் மொத்தம் பன்னிரண்டு வீதிகள் உண்டு. ஒவ்வொரு வீடும், முன்னாலும், பின்னாலும் இருபுறமும் தோட்டமுள்ள பங்களாக்கள். அநேகமாக எல்லா வீடுகளும் மச்சு வீடுகள். மாடி இல்லாத வீட்டைப் பத்மா புரத்துப் பன்னிரண்டு வீதிகளிலும் தேடினால் ஒருவேளை எங்கேயாவது ஒன்று இரண்டு இருக்கலாம். அவையும் மற்றப் பெரிய மச்சு வீடுகளுக்கு மத்தியில் தாம் இருப்பது பற்றி வெட்கப்பட்டுக் கொண்டு சுற்றிலுமுள்ள மரங்களினால் தங்களை மறைத்துக் கொண்டு நிற்கும்.

பத்மாபுரத்து மாடி வீடுகளுக்குள்ளே ஒரு மாடி வீடு தனி அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நின்றது. அதனுடைய வாசல் கேட்டின் இரு பக்கத் தூண்களிலும் இரண்டு கரும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றில் "தேவி ஸதம்" என்றும், இன்னொன்றில் "ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரி பி.ஏ. பி.எல். மாஜி சப்ஜட்ஜ்" என்று எழுதப்பட்டிருந்தன.

பத்மாபுரத்தில் வசித்த பிரமுகர்களிலே ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் முதன்மை பெற்றவர். பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் எந்தக் கூட்டத்திலும், பிரசங்க மேடைக்குப் பக்கத்தில் போடப்படும் கௌரவ நாற்காலிகளிலே முதல் நாற்காலியில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகளையும் அவருடைய வெள்ளிப் பூண் போட்ட கைத்தடியையும் காணலாம். ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாரை இன்னும் சில இடங்களிலேயும் அந்தக் காலத்து மனிதர்கள் கண்டிருக்கலாம். ஆங்கில தினப் பத்திரிகைகளில் நேயர்களின் கடிதப் பத்தியில் அடிக்கடி அவருடைய பெயர் தென்படுவதுண்டு. முக்கியமாக ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியும் பேராசிரியர் பரிவிராஜக சர்மாவும் அவ்வப்போது நடத்திக் கொண்டிருந்த யுத்தங்கள் உலகப் பிரசித்தமானவை.

எப்போதாவது காந்தி மகாத்மாவோ பண்டித மதன்மோகன் மாளவியாவோ ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தங்களுடைய பொதுப் பேச்சுக்களில் பகவத் கீதையைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார்களானால், வந்தது விபத்து. உடனே ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியார் தமது கைத்தடியை எடுத்துச் சுவரின் மூலையில் சாத்திவிட்டுக் கையிலே தம்முடைய 'ஆய்வந்த' உலக்கைப் பௌண்டன் பேனாவை எடுத்துக் கொள்வார்; எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்குவார். எழுதுவார், எழுதுவார், அப்படியே எழுதுவார். எழுதியதைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கையில் மறுபடியும் தடியை எடுத்துக் கொண்டு பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போய்ப் பத்திரிக்கை யாசிரியரை நேரிலே பார்த்துத் தமது கடிதத்தைக் கொடுப்பார். கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிய வேண்டுமா? காந்திஜிக்காவது, மாளவியாஜிக்காவது, ராதா கிருஷ்ணனுக்காவது பகவத்கீதையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை என்பதாக ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு அவர் குறிப்பிட்ட பகவத்கீதை சுலோகத்துக்கு அர்த்தம் இப்படி என்று எடுத்துக் காட்டுவார். அந்தச் சுலோகத்தை அவர்கள் தப்பாகக் கையாண்டுயிருப்பதை எடுத்துக்காட்டி, இனிமேல் மேற்படியாளர்கள் வேறு எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் பகவத்கீதையைப் பற்றி மட்டும் பேசவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து முடித்திருப்பார்.

சாஸ்திரிகளின் கடிதம் பிரசுரமான இரண்டு நாளைக்கெல்லாம் பரிவிராஜக சர்மாவின் கடிதம் பிரசுரமாகும் என்று வாசகர்கள் நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது வீண் போகாது. சர்மாவின் கடிதமும் அச்சில் வரும். அதில் சர்மாவானவர் காந்திஜியையும் மாளவியாவையும் பற்றிச் சாஸ்திரியார் எழுதியிருப்பதை ஒப்புக்கொண்டு பலமாக ஆதரிப்பார். "அவர்களுக்கெல்லாம் பகவத்கீதையைப் பற்றி ஒன்றும் தெரியாது; ஒன்றுமே தெரியாது; தங்களுக்குப் பகவத்கீதையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, "ஆனால்" என்று ஆரம்பிப்பார். ஆரம்பித்து ஓர் அதிசயமான கேள்வியைப் போடுவார். "ஆனால் நமது ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிக்கு மட்டும் பகவத்கீதையைப் பற்றித் தெரியுமா? பகவத்கீதையை அவர் குருமுகமாகப் பாடங்கேட்டதுண்டா? பாராயணம் செய்ததுண்டா? பகவத்கீதையைக் கண்ணாலாவது அவர் பார்த்தது உண்டா? அப்படிப் பார்த்திருந்தாரானால் பகவத்கீதையின் பதினோராவது அத்தியாயத்தில் இருபத்தேழாவது சுலோகத்தை குறிப்பிட வந்தவர் இருபத்தெட்டாது சுலோகத்தை எதற்காக குறிப்பிட்டார்? அதையாவது சரியாகக் குறிப்பிட்டாரா? இருபத்தெட்டாவது சுலோகத்தில், 'அர்ச்சுனா! என்னைப் பார்!' என்று பகவான் அருளியதாகச் சொல்லியிருப்பது எவ்வளவு அசம்பாவிதம்? 'என்னைப் பார்!' என்று பகவான் சொன்னாரா?

சாஸ்திரியாரே! பகவத்கீதைப் புத்தகத்தை எடுத்துக் கண்ணையும் கண்ணாடியையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு பாரும், பாரும், ஐயா பாரும்! 'என்னைப் பார்!' என்றா பகவான் சொல்லியிருக்கிறார்? அப்படிச் சொல்லியிருந்தால் அவர் பகவான் ஆவாரா? 'என்னைப் பார்ப்பாயாக!' என்றல்லவோ பகவான் சொல்லியிருக்கிறார்? 'என்னைப் பார்!' என்பதற்கும் 'என்னைப் பார்ப்பாயாக!?' என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் ஆனைக்கும் பூனைக்கும் எருமைக்கும் எறும்புக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்பது தெய்வீக சமஸ்கிருத பாஷையில் அ, ஆ படித்திருக்கும் குழந்தைக்குக் கூடத் தெரியவரும். ஆனால் இரண்டு குட்டிச்சுவர்களுக்கு ஆன வயதாகியிருக்கும் பத்மலோசன சாஸ்திரிக்கு அது எங்கே தெரியப்போகிறது? சம்ஸ்கிருதம் என்பது என்னவென்று அவருக்குத் தெரிந்தால் அல்லவா பகவத்கீதையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்? 'என்னைப் பார்!' என்பதற்கும், 'என்னைப் பார்ப்பாயாக!' என்பதற்குமுள்ள அஜகஜாந்தரமான வித்தியாசத்தைச் சாஸ்திரியாரால் எப்படித் தெரிந்து கொள்ளமுடியும்!"

இப்படியாகப் பேராசிரியர் பரிவிராஜக சர்மா வெளுத்து வாங்கியிருப்பார். ஆனால் இந்த வெளுப்புக்கெல்லாம் பயந்து போகிறவரா சாஸ்திரியார்? 'வெளுப்பானுக்கு வெளுப்பான் வண்ணாரச் சின்னான்' என்பதுபோலச் சாஸ்திரியார் மறுபடியும் பேனாவை எடுப்பார். சர்மாவின் கடிதத்தையும் அவருடைய யோக்யதையையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெறிந்து இன்னொரு கடிதம் எழுதிப் பத்திரிகைக் காரியாலயத்துக்கு எடுத்துச் சென்று பத்திரிகையாசிரியரை நேரில் பார்த்து அதைப் பிரசுரிக்கச் செய்வார். இவ்விதம் குறைந்தபட்சம் ஆறுமாதம் சாஸ்திரியாருக்கும் சர்மாவுக்கும் வாதப்போர் நடந்த பிறகு, "இத்துடன் இந்த விவாதம் முற்றுப் பெற்றது" என்று பத்திரிகையாசிரியர் குறிப்பு எழுதி முடிப்பது வழக்கம்.

ஆனால் நாளது 1934-ம் வருஷம் ஜனவரி மாதம் பிறந்து தேதி இருபத்தொன்று ஆகியும் இதுவரையில் அவர்களுக்குள் விவாதம் ஒன்றும் ஆரம்பமாகவில்லை. இதற்குக் காரணம் சில காலமாக ராவ்பகதூர் பத்மாலோசன சாஸ்திரியார் தமது இரண்டாவது குமாரனாகிய 'சௌந்தரராகவனைப்' பற்றிக் கவலையில் ஆழ்ந்திருந்ததுதான். சாஸ்திரியின் மூத்த குமாரனாகிய சங்கரநாராயணனைப் பற்றி ஏற்கனவே சாஸ்திரியாருக்கு ஒரு வகையில் ஏமாற்றம் உண்டாகியிருந்தது. சங்கரநாராயணன் நல்ல புத்திசாலிதான்; பள்ளிக்கூடத்திலும், கலாசாலையிலும் நன்றாகப் படித்து நல்ல மார்க்குகள் வாங்கி முதல்வகுப்பிலேயே எப்போதும் தேறிக் கொண்டு வந்தவன்தான்; சாஸ்திரியாருக்குப் புதல்வனாய்ப் பிறந்து படிப்பிலே சோடையாகி விடுவானா? பி.ஏ. பரீட்சையில் தேறி, எம்.ஏ பரீட்சையிலே தேறி பி.எல். பரீட்சையிலும் எம்.எல் பரீட்சையிலும் பிரமாதமாகத் தேறி, அப்புறம் பாஸ் செய்தவற்கு வேறு பரீட்சையில்லையே என்று சில காலம் தவித்துவிட்டுப் பிறகு வக்கீல் தொழிலில் இறங்கினான். அவனுடைய பிரசித்திப் பெற்ற பிரபல மாமனாராகிய அட்வகேட் தான் வியாக்ரமய்யரின் ஆதரவிலே தொழிலை ஆரம்பித்தான், இதுதான் விபரீதமாக முடிந்தது. அட்வகேட் வியாக்ரமய்யர் தம்மிடம் தொழில் கற்கவந்த மாப்பிள்ளையை அப்படியே விழுங்கிக் கொண்டு விட்டார். அதாவது மாமனார் வீட்டிலேயே மாப்பிள்ளை ஐக்கியமாகிவிட்டான்.

நடை உடை பாவனை எல்லாம் வைதிக பாணியிலிருந்து நவநாகரிகத்துக்கு மாறிப் போய்விட்டது. அவனுடைய மனைவியின் அபிப்பிராயத்தை அனுசரித்துத் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றிச் 'சுத்த கர்நாடகம்' என்று நினைக்கக் கூடிய அளவுக்கு அவனுடைய மனதும் மாறிப் போய்விட்டது. இன்னும் ராவ் பகதூர் சாஸ்திரியார் அடிக்கடி பத்திரிகைகளில் நடத்திவந்த விவாதங்களை அவன் ஆட்சேபித்து கண்டிக்கும் அளவுக்கு நிலைமை மிஞ்சிப் போய்விட்டது. ஒரு தடவை அவன் தன் தகப்பனார் எழுதும் பத்திரிகைக் கடிதங்களைப் பற்றி 'ரிடிகுலஸ்' என்ற சொற்றொடரைப் பிரயோகித்தபோது, இத்தனை காலமும் ஒருவாறு அதனுடைய அதிகப் பிரசங்கத்தைப் பொறுத்துக் கொண்டிருந்த சாஸ்திரியாருக்கு இனிமேல் பொறுக்க முடியாது என்று ஆகிவிட்டது. "ஆமாம் அப்பா, சங்கரா! நான் 'ரிடிகுலஸ் தான்; உன் தாயாரும் மிஸஸ் ரிடிகுலஸ் தான்! நீயே அதிமேதாவி! அட்வகேட் வியாக்ரமய்யரின் சாட்சாத் சீமந்த மாப்பிள்ளையல்லவா? நீ எங்களுக்குப் பிள்ளை இல்லை. பிறக்கும்போதே வியாக்ரமய்யரின் மாப்பிள்ளையாகப் பிறந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறேன். போ! போ! என் முகத்தில் இனிமேல் விழிக்காதே!" என்று சாஸ்திரிகள் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். சாஸ்திரிகளுக்குக் கோபம் வந்தால் வந்ததுதான்; யாராலும் அதை மாற்ற முடியாது. ஆகையால் ஏற்கனவே மாமனார் வீட்டில் பதினாலு அணா ஐக்கியம் அடைந்திருந்த சங்கரநாராயணன் எம்.ஏ., எம்.எல் இப்போது பதினாறு அணா ஐக்கியமாகி மன நிம்மதி அடைந்தான்.

சாஸ்திரியாரின் இளைய குமாரன் சௌந்தரராகவனும் தமையனைப் போலவே மகா புத்திசாலி. கலாசாலைப்படிப்பு பரீட்சையெல்லாம் அவனுக்குத் தண்ணீர்ப்பட்டபாடாயிருந்தது. பி.ஏ. ஆனர்ஸ் வகுப்பில் பொருளாதார விஷயத்தை எடுத்துக் கொண்டு மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறினான். அவன் தேறிய வருஷத்தில் இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையைப்பற்றிப் பத்திரிகைகளில் சர்ச்சை நடந்து கொண்டு வந்தது. ஒருரூபாய்க்குப் பதினெட்டுப் பென்ஸ் கிடைத்தால் நல்லதா பதினாறு பென்ஸ் கிடைத்தால் நல்லதா என்பது பற்றிச் சர்ச்சை. பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதும் ஆற்றலைத் தகப்பனா ரிடமிருந்து பெற்றிருந்த சௌந்தரராகவன் மேற்படி பொருளாதார விவாதத்தைப்பற்றித் தானும் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதினான், அது பிரசுரமாயிற்று. நாட்டில் பல பொருளாதார நிபுணர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இந்திய சர்க்காரின் பொக்கிஷ இலாகா அதிகாரிகளின் கவனத்தைக்கூடக் கவர்ந்தது. அந்த இலாகாவின் தலைமை அதிகாரி இவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இவன் அவரைப் போய்ப் பார்த்தான். அந்தப் பேட்டியின் பயனாக இந்திய சர்க்காரின் வரவு செலவு இலாகாவில் சௌந்திரராகவனுக்கு உத்யோகம் கிடைத்தது. எடுத்தவுடனேயே சம்பளம் மாதம் 750 ரூபாய். மேலே எங்கேபோய் நிற்கும் என்பதற்கு வரையறையே கிடையாது.

ஆகவே தமது இளைய புதல்வனைப் பற்றிப் பத்மலோசன சாஸ்திரி பெருமைப்படுவதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. அப்படியிருக்க அவர் கவலைப்படுவதற்குக் காரணம் என்ன? வேறு ஒன்றுமில்லை; அவனுடைய கலியாணத்தைப் பற்றித்தான். சாதாரணமாகப் பெற்றோர்கள் பெண்களின் கலியாணத்தைப் பற்றிக் கவலைப்படுவதுதான் வழக்கம். பத்மலோசன சாஸ்திரியின் கவலை இதற்கு நேர்மாறாயிருந்தது. தம் அருமைப் புதல்வனின் கலியாணத்தைப் பற்றிக் கவலைப்பட்டார். மூத்த பிள்ளை தேவலை என்று இரண்டாவது பிள்ளை செய்து விடுவான் போலிருக்கிறதே என்று மிகவும் கவலைப்பட்டார். அவருடைய வாழ்க்கைத் துணைவி காமாட்சி அம்மாள் அவரைக் காட்டிலும் அதிகமாகக் கவலைப்பட்டார். இவர்கள் கீழ் வீட்டில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் நாம் மேல் மச்சுக்குச் சென்று நம் கதாநாயகனைச் சந்திக்கலாம்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

எட்டாம் அத்தியாயம்
சௌந்தர ராகவன்

ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமும் அதற்குத் தகுந்த வாட்டசாட்டமும் சிற்பி செதுக்கியதுபோல் கம்பீரமாக அமைந்த முகமும் கச்சிதமாகக் கிராப் செய்து நன்கு படியும்படி வாரிவிட்ட தலையும் நாகரிகமான உடையுமாக இதோ மேஜையருகில் நாற்காலியில் அமர்ந்திருப்பவன்தான் நம் கதாநாயகன் சௌந்தரராகவன். அவன் எதிரே மேஜைமீது யாரிடமிருந்தோ அவனுக்கு வந்த கடிதம் ஒன்று இருந்தது. இவன் எழுதத் தொடங்கியிருந்த கடிதம் ஒன்று அதன் பக்கத் திலே கிடந்தது. ஸ்வீடன் தேசத்துப் பேராசிரியர் இப்ஸன் எழுதிய நாடகத் தொகுதிப் புத்தகம் ஒன்று இருந்தது. அதன் அடியில் அன்று வந்த தினப் பத்திரிகையும் இருந்தது. இவற்றைத் தவிர அழகாகச் சட்டமிட்டு மேஜைக்கு அலங்காரமாக விளங்கிய புகைப்படம் ஒன்றும் காணப்பட்டது.

சௌந்தரராகவன் அழகிய நீல நிறப் பௌண்டன் பேனா வைத்திருந்தான். அவனுடைய அழகிய களை பொருந்திய முகத்தில் இப்போது கோபத்தோடு ஏமாற்றமும் துயரமும் குடிகொண்டிருந்தன. அடிக்கடி அவனுக்குப் பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. அறிவொளி திகழ்ந்த அவனுடைய கண்ணில் வெகு தூரத்திலுள்ள எதையோ பார்க்கும் கனவு மயக்கம் காணப்பட்டது. மேஜை மீதிருந்த புகைப்படத்தைச் சற்று நோக்குவோம். ஆகா! அவள் ஒரு வடநாட்டுப் பெண்; அழகிற் சிறந்த யுவதி. பிராயம் இளம் பிராயமாகத்தான் இருக்கவேண்டும்; ஆயினும் அவளுடைய முழுமதி முகத்தில் உலக அனுபவத்தினாலும் உள்ளத்தின் சிந்தனையினாலும் ஏற்படும் முதிர்ச்சி தோன்றியது.

இவள் யார்? இந்த வடநாட்டு நங்கையின் புகைப்படம் ராவ்பகதூர் பிரம்மஸ்ரீ பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வனுடைய மேஜையின்மீது ஏன் இருக்கிறது? அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து இவன் எதற்காகப் பெருமூச்சு விடுகிறான்? நல்லது; மேஜையின் மீதுள்ள கடிதங்களைப் பார்த்து ஏதேனும் விவரம் கண்டுபிடிக்க முடியுமா? என்று பார்ப்போம். கடிதங்கள் மேஜைமீது பிரித்தே வைக்கப்பட்டிருந்தால், ராகவனுடைய தோள் மேலாக அவற்றைப் படிப்பதில் நமக்கு சிரமம் ஏற்படாது. முதலில் ராகவனுக்கு வந்திருந்த கடிதத்தைப் பார்க்கலாம். எழுத்தைப் பார்த்ததும் அது ஒரு பெண்மணியின் கடிதம் என்று தெரிந்து விடுகிறது. ஆங்கிலத்திலே எழுதப்பட்டிருந்த கடிதந்தான். நம்முடைய வாசகர்களின் வசதிக்காக அதைத் தமிழ்ப் படுத்தித் தருகிறோம்.

ஜி.ஐ.பி.மார்க்கம் 21-1-34 ஸ்ரீ சௌந்தரராகவன் அவர்களுக்கு, நமஸ்தே. தாங்கள் பம்பாய்க்கு எழுதிய கடிதம் நான் ரயிலுக்குப் புறப்படுகிற தருவாயில் கிடைத்தது. ஆகையால் ஓடுகிற ரயிலில் இருந்து கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாகபுரி ரயில்வே ஸ்டேஷனில் இதைத் தபால் பெட்டியில் போடலாமென்று உத்தேசித்திருக்கிறேன். தங்களுடைய கடிதம், நான் தங்களைப் பிரிந்த பிறகு தங்களுடைய மனோநிலை இன்னதென்பதை நன்கு வெளியிடுகிறது. அதை அறிந்து நான் மிகவும் வருந்தினேன். தங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்வது, கூடிய சீக்கிரத்தில் தாங்கள் என்னை மறந்து விட வேண்டும் என்பதே.

தாங்கள் ஆண் மகன்! இவ்வுலகத்தில் தாங்கள் செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. அவற்றில் தீவிரமாகக் கவனம் செலுத்தினால் தங்கள் மனோநிலை மாறிவிடும். மனதை மாற்றிக் கொள்வதற்கு வேறு ஒரு நல்ல மார்க்கமும் இருக்கிறது. தங்களுக்குத் தெரியாவிட்டால் தயவுசெய்து தங்களுடைய பூஜ்ய மாதாஜியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கோருகிறேன்.

தங்களுடைய தாயாரிடம் எனக்கு அளவில்லாத பக்தியும் மதிப்பும் ஏற்பட்டன. துர்பாக்கியத்தினால் அவருக்கு மருமகளாக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனால் அவரிடத்தில் என்னுடைய பக்தி சிறிதும் குறைந்துவிடவில்லை. ஸநாதன ஹிந்து தர்மமே உருவெடுத்ததுபோல் என் கண்களுக்குத் தோன்றிய அந்த மூதாட்டி இந்தப் பதிதையின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். தினந் தினம் புதுமலர் எடுத்துத் தேவிபராசக்தியைப் பூஜை செய்த அவருடைய புனிதமான கரங்களினால் என்னுடைய பாதங்களைத் தொட்டு, 'பெண்ணே! உன்னை வேண்டுகிறேன்! என் கோரிக்கையை நிறைவேற்று!' என்று கேட்டுக் கொண்டார். அப்படியே செய்வதாக அவருக்கு நான் வாக்குறுதி கொடுத்தேன். அதை நான் அவசியம் நிறைவேற்றுவேன். உலக வாழ்க்கையில் நான் இன்னும் என்னென்ன தீய காரியங்களைச் செய்து என்னுடைய பாவ மூட்டையைப் பெருக்கிக் கொண்டாலும், தங்களுடைய தாயாருக்குக் கொடுத்த வாக்கை அவசியம் நிறைவேற்றி வைப்பேன். அந்த ஓர் எண்ணமாவது இந்த உலக வாழ்க்கையாகிய பெரும் பாரத்தைச் சுமப்பதற்கு வேண்டிய மனோதிடத்தை எனக்கு அளித்துக் கொண்டிருக்கும். அன்பரே!... இப்படி நான் தங்களை அழைப்பதில் தவறு ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். தவறாயிருந்தாலும், இதுவே கடைசித் தடவையாக அத்தவறை நான் செய்வதாக இருக்கலாம். அதற்காக ஆண்டவன் என்னை மன்னித்து விடுவார்.

பம்பாய்க்குத் தாங்கள் எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்னால் பல சமயங்களில் எழுதியிருந்த கடிதங்களையும் தீயில் போட்டு எரித்துவிட்டேன். அவற்றை வைத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்? தாங்களும் தயவு செய்து அவ்விதமே செய்யக் கோருகிறேன். நான் எழுதிய பழைய கடிதங்களையும், இந்தக் கடிதத்தையும், என்னுடைய புகைப்படம் ஒன்று வைத்திருந்தீர்களே அதையும் சேர்த்துத் தீயில் போட்டு எரித்துவிடக் கோருகிறேன். அவற்றை வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? உன்னதமான மலையில் ஏறத் தொடங்குகிறவர்கள் தங்களிடம் உள்ள சாமான்களில் உபயோகமில்லாத வற்றைக் கழித்து விடுவது தான் நல்லது. நாம் இருவரும் இப்போது புதிய பாதையில் போகத் தொடங்கியிருக்கிறோம். புனர் ஜன்மம் எடுத்துப் புதிய வாழ்க்கை தொடங்குகிறோம் என்றே சொல்லலாம். உலகத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தையை எப்படிச் சுமையே இல்லாமல் கடவுள் அனுப்பி வைக்கிறார், பாருங்கள்! பூர்வ ஜன்மத்துப் பழைய மூட்டை முடிச்சுகளை யெல்லாம் தூக்க வேண்டியதாயிருந்தால் குழந்தையானது தன் வாழ்க்கையைச் சௌகரியமாகத் தொடங்க முடியுமா? அம்மாதிரியே நாமும் நம்முடைய புது வாழ்க்கையைத் தொடங்கும்போது பழைய சுமைகளையெல்லாம் தீயிலே போட்டு எரித்துவிடலாம்.

இந்தக் கடிதத்தை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அடுத்தபடி ரெயில் நிற்கும் ஸ்டேஷன் நாகபுரி என்று அறிகிறேன். வண்டி நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சில சில வரிகளாக இத்தனை நேரமும் இதை எழுதிவந்தேன். பக்கத்திலே இருப்பவர்கள், 'என்ன இப்படிப் பிரமாதமாக எழுதுகிறாய்? ஏதாவது பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுகிறாயா?' என்று அடிக்கடி கேட்பதற்குப் பதில் சொல்லச் சங்கடமாயிருந்தது. நானாவது பத்திரிகைக்குக் கட்டுரை எழுதவாவது? அதற்குப் பிறந்தவர்... சீ! ஏதேதோ பழைய ஞாபகங்கள் வருகின்றன. என்னுடைய பிரயாணத்தின் நோக்கத்தைப் பற்றி எழுதி இதை முடிக்கிறேன்.

பீஹாரில் ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தைப் பற்றித் தாங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அதன் பலனாக பீகாரில் மக்களுக்கு விளைந்திருக்கும் கோர விபத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையின் விபரீத கோபத்தினால் கனவிலும் நினைத்திருக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பீகார் மக்களுக்குச் சேவை செய்யத் தொண்டர்கள் தேவை என்று பீகாரின் தலைவர் பாபு ராஜேந்திரபிரஸாத் விண்ணப்பம் விடுத்திருக்கிறார் அல்லவா? அதற்கிணங்க, பம்பாயிலிருந்து தொண்டர் கோஷ்டிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் புறப்பட்ட தொண்டர் கோஷ்டியில் நானும் சேர்ந்து கொண்டிருக்கின்றேன்...

இந்த ஜன்மம் எடுப்பதற்கு யாருக்கேனும் ஏதாவது உதவி செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவே நான் மனச் சாந்தி அடைவதற்குச் சாதனமாயிருக்கும். வேறு வழியில் நான் மன நிம்மதி அடைய முடியாது. இயற்கையின் கடுஞ்சோதனைக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்குச் சேவைச் செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த அற்ப உயிரை இறைவன் காணிக்கையாக ஏற்றுக்கொண்டால் அதைக் காட்டிலும் திருப்தியான காரியம் வேறு எதுவும் இராது. தங்களுக்கு என்னால் நேர்ந்த பலவித சங்கடங்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து என்னைச் சீக்கிரத்தில் மறந்து விடுங்கள் என்று மறுபடியும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்ஙனம், தாரிணி.

மேற்கண்ட கடிதத்தைப் படித்துவிட்டுச் சௌந்தரராகவன் பெருமூச்சு விட்டதைப்பற்றி வாசகர்கள் வியப்படைய மாட்டார்கள். சர்வகலா சாலையின் கடுமையான பரீட்சைகளிலெல்லாம் அநாயாசமாக விடை எழுதி வெற்றி பெற்ற மேதாவி இந்தக் கடிதத்துக்குப் பதில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் திணறியது பற்றியும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு, தாங்கள் கருணை கூர்ந்து ரயிலில் பிரயாணம் செய்த வண்ணம் எழுதி அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. அதில் தாங்கள் எழுதியிருந்த வார்த்தை ஒவ்வொன்றும் என் நெஞ்சைப் பிளந்து எப்படி வேதனை செய்தது என்பதை நீ அறிந்தாயானால்... அதைப் பற்றி உனக்கு எழுதி என்ன பயன்? இரும்பையும் கல்லையும் ஸநாதன தர்மத்தின் கொடும் விதிகளையும் ஒத்த உன்னுடைய ஈரமில்லாத இருதயம் என்னுடைய மன வேதனையை எப்படி அறியப் போகின்றது?.... இவ்வளவுடனே ராகவன் எழுதத் தொடங்கிய கடிதம் நின்று போயிருந்தது. மேலே என்ன எழுதுகிறது என்று யோசித்து ஏதேதோ எழுதிப் பார்த்துச் சரியாகத் தோன்றாமையால் வரிவரியாக அடித்திருந்தான். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், பூஜை வேளையில் கரடி விடுகிறது என்ற பழமொழிக்கு உதாரணமாகும்படியாக, வாசலில் ஒரு குரல், "ஸார்!" என்று கேட்டது.

ராகவன் சற்றுக் கோபத்துடன் எழுந்து வந்து மச்சுத் தாழ்வாரத்தின் ஓரமாக நின்று பார்த்தான். பங்களாவின் தெரு வாசற்கதவண்டை இரண்டு பிராமணோத்தமர்கள் நின்று கொண்டிருக்கக் கண்டான். "யார் அது!" என்ற ராகவனின் குரலைக் கேட்டு அவர்கள் இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் நமது நண்பர் ராஜம்பேட்டை கிராம முனிசீப் கிட்டாவய்யர்; இன்னொருவர் பழைய மாம்பலம் வாசியான கிட்டாவய்யரின் சின்ன மாமா சுப்பய்யர்.

சுப்பய்யர் முகத்தைப் பார்த்ததும் அவர் தன் தகப்பனாருக்குத் தெரிந்தவர் என்பதை அறிந்திருந்த ராகவன் "ஓகோ! அப்பாவைப் பார்க்க வந்தீர்களா? இதோ கதவைத் திறக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவனுடைய முகம் மறைந்ததும் சுப்பய்யர் கிட்டாவய்யரின் கையைத் தொட்டு, காதோடு ரகசியமாக, "இந்தப் பையன்தான் மாப்பிள்ளை; பார்த்தாயல்லவா?" என்றார். "பையன் முதலில் மாப்பிள்ளையாகட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்றார் கிட்டாவய்யர்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஒன்பதாம் அத்தியாயம்
கதவு திறந்தது

வாசலில் வந்து நின்றவர்கள் யாசகர்கள் அல்ல, சந்தா வசூலிக்க வந்தவர்கள் அல்ல, பொங்கல் இனாம் கேட்க வந்தவர்களும் அல்ல என்பது நிச்சயமான பின், 'தேவி ஸதனத்'தின் வாசற் கதவு திறக்கப்பட்டது. "வாருங்கள், ஐயா! வாருங்கள், நீங்கள்தானா? யாரோ என்று பார்த்தேன். இந்தக் காலத்தில் வாசற் கதவைத் திறந்து வைக்க முடியவில்லை. திறந்தால் போச்சு! யாராவது வீண் ஆட்கள் திறந்த வீட்டில் நாய் நுழைகிறதுபோல நுழைந்து விடுகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே பத்மலோசன சாஸ்திரி வந்தவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

"உட்காருங்கள்! ஏன் நிற்க வேண்டும்?... பாதகமில்லை சுப்பய்யரே! சோபாவிலேயே தாராளமாக உட்காருங்கள். நீங்கள் உட்கார்ந்ததினால் சோபா தேய்ந்தா போய்விடும்? அந்த மாதிரி 'நாஸுக்கு' ஆசாமிகளைக் கண்டால் எனக்குப் பிடிக்கிறதேயில்லை. தரையில் ஆயிரம் ரூபாய் ரத்தினக் கம்பளத்தை விரிப்பார்கள். அப்புறம் யாராவது அதில் கால் வைத்து நடந்துவிட்டால், 'ஐயையோ! அழுக்காய்ப் போகிறதே!' என்று அவஸ்தைப் படுவார்கள். இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து ஸோபா வாங்கிப் போட்டுவிட்டு அதன் மேலே அழுக்கும் சிக்கும் பிடித்த உறையைப்போட்டு மூடி வைப்பார்கள்: உங்களுக்குத் தெரியுமா? நான் ராமநாதபுரம் ஜில்லாவிலே ஸப்ஜட்ஜ் உத்தியோகம் பார்த்தபோது ஒரு தனிகர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டின் தூணுக்கு உறை போட்டு வைத்திருந்தது. ஸார்! தூணுக்கு உறை போட்டு வைத்திருந்தது! கரும் சலவைக் கல்லில் தூண்! ஒவ்வொரு தூணுக்கு செலவு ஐயாயிரம் ரூபாய்! அவ்வளவு வேலைப்பாடான தூணைச் செய்துவிட்டு அதை உறையைப் போட்டு மூடி வைத்து விடுகிறார்கள்! எப்படியிருக்கிறது கதை? பரவாயில்லை, "நீங்கள் உட்காருங்கள்" என்று பத்மலோசன சாஸ்திரியர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார். சுப்பய்யரும் கிட்டாவய்யரும் இடம் பார்த்து மெதுவாக உட்கார்ந்து கொண்டார்கள்.

சாஸ்திரிகள் சிறிது மூச்சுவிட்ட சமயம் பார்த்துச் சுப்பய்யர் "போன ஞாயிற்றுக்கிழமை சர்வக்ஞ சங்கத்தின் பாகவத உபந்நியாசம் நடந்ததே? அதில், ரொம்ப ரஸமான கட்டம் எது தெரியுமா? தாங்கள் பாகவதருக்கு உபசாரம் சொன்ன கட்டந்தான். ஆஹா! எவ்வளவு கச்சிதமாய் பேசினார்கள், போங்கள்! பேசினால் அப்படி அழகாகப் பேசவேண்டும்; இல்லாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்! எல்லாரும் பேசுகிறார்களே!" என்றார். சுப்பய்யருக்கு இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டு உத்தியோகம். யாராயிருந்தாலும் சமயம் கிடைத்தபோது ஒரு நல்ல வார்த்தை சொல்லி வைத்தால் எப்போதாவது பயன்படும் என்பது அவருடைய நம்பிக்கை. இந்தக் கல்யாணம் மாத்திரம் நிச்சயமானால் மாப்பிள்ளைப் பிள்ளையாண்டானைப் பத்தாயிரம் ரூபாய்க்கு இன்ஷியூர் செய்து விடுவது என்று மனதிற்குள் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், சாஸ்திரிகள் இலேசான ஆள் அல்ல; முகஸ்துதிக்கு மசிந்து ஏமாந்து போகிறவரும் அல்ல. "ஆமாம் ஐயா" ஆமாம்! உம்மைப் போல இதுவரை தொண்ணூறு பேர் இப்படி என்னை ஸ்தோத்திரம் செய்து விட்டார்கள். அபாரமாய்ப் பேசி விட்டேன் என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள். ஆனால், நான் பேசியதன் தாத்பரியம் யாருடைய மனதிலாவது பதிந்ததோ என்றால், கிடையவே கிடையாது!...." என்று சாஸ்திரிகள் கூறி வந்தபோது, "அது என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று சுப்பய்யர் குறுக்கிட்டுக் கேட்டார்.

"எது என்ன எப்படிச் சொல்கிறீர்கள் - எல்லாம் சரியாய்த் தான் சொல்கிறேன். ஏதடா, காவேரி நதி தீரத்திலிருந்து ஒரு பௌராணிகரை அழைத்திருக்கிறோமே, அவருக்கு ஏதாவது மரியாதை செய்து அனுப்ப வேணுமென்று யாருக்காவது தோன்றுகிறதோ? - தானாகத் தோன்றாவிட்டாலும் நான் சொன்ன பிறகாவது தோன்ற வேண்டாமா? ஊஹூம். இன்று வரையில் ஒரு காலணா ஒருவரும் கொடுத்தபாடில்லை. பட்டணவாசம் அப்படியாக ஜனங்களின் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது ஏதோ நம்முடைய கிராமாந்தரங்களிலே மட்டுந்தான் இன்னமும் தான தர்மம் என்பது கொஞ்சம் இருந்து வருகிறது. பட்டணங்களிலே தர்மம் அடியோடு பாழ்த்துப் போய்விட்டது. ஒரு சமாச்சாரம் சொல்கிறேன், கேளுங்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரைத் தெரியுமோ இல்லையோ?... சொல்லும் சுப்பய்யரே? ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரை உமக்குத் தெரியுமா என்று கேட்கிறேன்..."

'பேஷாகத் தெரியும். ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்காரைத் தெரியாமலிருக்குமா?" என்று பெரிய போடாகப் போட்டார் சுப்பய்யர். "ஓய் சுப்பய்யரே! உம்முடைய குட்டு வெளியாகிவிட்டது பார்த்தீரா? - சுந்தரம் அய்யங்கார் என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. நான் சொல்லுகிற ஜட்ஜின் பெயர் வேறே ஒன்று. 'பகலிலே பக்கம் பார்த்துப் பேசு, இராத்திரியிலே அதுவும் பேசாதே' என்று பழமொழி இருக்கிறதோ, இல்லையோ? அதனாலேதான் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று அசல் பெயருக்குப் பதிலாக ஒரு புனைப் பெயரைக் கற்பனை செய்து சொன்னேன். நீரும் ஏமாந்து போனீர் இருக்கட்டும்; ஹைக்கோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்கார் ஒரு தர்மப் பள்ளிக் கூடத்துக்கு ஐயாயிரம் ரூபாய் நன்கொடை தருவதாக ஒப்புக்கொண்டார், கையெழுத்தும் போட்டார். பத்திரிகைகளிலே பெயரும் வெளியாகிவிட்டது ஆசாமி என்ன செய்தார் தெரியுமோ?... நான் சொல்கிறேன், சுப்பய்யரே? நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுக்காதவன் நீசன்! ஆனால் அவனையாவது ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

பணம் கொடுப்பதாகக் கையெழுத்துப் போட்டு விட்டுக் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிறவன் பெரிய சண்டாளன். அவனையும், போனால், போகிறதென்று சேர்த்துக் கொள்ளலாம். நன்கொடை கொடுப்பதாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு நல்ல பெயரை வாங்கிக் கொண்ட பிறகு பணத்தைக் கொடுக்காமல் செத்துப் போய் விடுகிறானே, அவன் அதமாதமன்! அவன் இந்த உலகத்தையும் ஏமாற்றிவிட்டுச் சொர்க்க லோகத்தையும் ஏமாற்றப் பார்க்கிறான். இந்த ஹைகோர்ட் ஜட்ஜு சுந்தரமய்யங்கார் அந்த மாதிரி செய்துவிட்டார். நன்கொடைப் பணத்தைக் கொடுக்காமல் ஆசாமி வைகுண்டத்துக்கே போய்விட்டார்! கொஞ்ச நாள் கழித்து அவருடைய அருமைப் புதல்வனிடம் மேற்படி நன்கொடை விஷயமாகப் போயிருந்தோம். தகப்பனார் இருபது லட்ச ரூபாய்க்கு மேல் இந்தப் பையனுக்கு ஆஸ்தி சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். தகப்பனார் கொடுத்த வாக்கைப் பிள்ளையாண்டான் நிறைவேற்றக் கூடாதோ? 'அதெல்லாம் முடியவே முடியாது' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். பணம் கேட்கப் போன எங்களுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது. 'அப்பா! லக்ஷ்மணா! நீ இப்படிக் கண்டிப்பாகச் சொல்வதாயிருந்தால் ஓர் ஏற்பாடு செய்கிறோம். 'ஹைகோர்ட் ஜட்ஜ் சுந்தரமய்யங்கார் வாக்குப் பரிபாலன நிதி' என்பதாக ஒரு நிதி ஆரம்பிக்கிறோம். உன் தகப்பனாரிடம் நாங்கள் ரொம்ப மரியாதை உள்ளவர்கள்.

அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது நாங்கள் முயற்சி செய்தாக வேண்டும்!" என்றோம். அதற்கு அந்தப் பிள்ளையாண்டான் என்ன சொன்னான் தெரியுமா? 'பேஷான ஏற்பாடு! அப்படியே செய்யுங்கள் அதற்கு என்னுடைய பூரண சம்மதத்தையும் அநுமதியையும் கொடுக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை; அந்த நிதிக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே வசூலானால் அதிகப்படி தொகையை என்னிடம் சேர்ப்பித்துவிட வேணும், தெரியுமா? என் தகப்பனாருக்கு நான் ஏக புத்திரன். வேறு வாரிசு கிடையாது!' என்றான் அந்தக் கருமியின் மகன்! நாங்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினோம். நான் சொல்கிறேன் சுப்பய்யர்வாள்! "நிறையப் பணம் சம்பாதித்துத் தான தர்மம் செய்யாமல் அப்படியே பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்களே, அவர்களுக்கெல்லாம், நிறைய மரண வரி போட்டுச் சொத்தைச் சர்க்காரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேலே உள்ள சொத்துக்களுக்கெல்லாம் முக்கால் பங்குக்குக் குறையாமல் வரிபோட்டுச் சர்க்கார் எடுத்துக் கொண்டு விட வேண்டும்!" என்று சொல்லிச் சாஸ்திரியார் கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினார்.

சாஸ்திரியார் கடைசியில் சொன்ன வார்த்தைகளிலிருந்து, அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சொத்து இருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட சுப்பய்யர் அர்த்த புஷ்டியுடன் கிட்டாவய்யரை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கவனித்த சாஸ்திரியார் உடனே "அதெல்லாம் இருக்கட்டும், சுப்பய்யரே! யாரையோ நீர் அழைத்து வந்திருக்கிறீர்; நான் வேறு என்னமோ பேசிக் கொண்டிருக்கிறேனே? இவர் யார், சொல்லவில்லையே? பார்த்தால் பெரிய மனுஷராகத் தோன்றுகிறது. காவேரி ஜலம் சாப்பிட்டு வளர்ந்தவர் என்று முகத்திலே எழுதி ஒட்டியிருக்கிறது உண்டாம், இல்லையா?" என்று கேட்டார்.

"முன்னமே தங்களுக்குச் சொல்லியிருந்தேனே, ராஜம்பேட்டை பட்டாமணியம் என்று, அந்தக் கிட்டாவய்யர்தான் இவர்! நேரில் ஒருதடவை வந்துவிட்டுப் போகும்படி கடிதம் எழுதியிருந்தேன், வந்திருக்கிறார்!" என்றார் சுப்பய்யர். "சுப்பய்யரே! நன்றாயிருக்கிறது! இவர் இன்னார் என்று முன்னமே சொல்லியிருக்கக் கூடாதோ? காரியமாக ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டு இத்தனை நேரம் வெறும் வம்புப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்து விட்டிரே! போகட்டும், இவர்தான் ராஜம்பேட்டை பட்டாமணியமோ? நான் சொன்னேனே பார்த்தீரா? முகத்தில் காவேரி தீரத்தின் களை பிரகாசிக்கிறது என்று சொன்னேனோ இல்லையோ? ரொம்ப சந்தோஷம்! இவர்தான் கிட்டாவய்யராக்கும்! பட்டாமணியம் உத்தியோகம் மட்டுந்தானா? அதற்கு மேலே நிலம் நீச்சு, கொடுக்கல், வாங்கல் ஏதாவது உண்டோ ?"

"எல்லாம் உண்டு; அய்யர்வாளுக்கு அகண்ட காவேரிப் பாசனத்தில் அறுபது ஏக்கரா நன்செய் நிலம் இருக்கிறது; அவ்வளவும் இரு போகம்." "ரொம்ப சந்தோஷம். பண்ணையார் இவ்விடம் வந்த காரியம் என்னமோ? பட்டணம் பார்ப்பதற்காக வந்திருக்கிறாரோ?" "பண்ணையார் முன்னமேயே பட்டணம் பார்த்திருக்கிறார். பம்பாய்கூடப் பார்த்திருக்கிறார். இப்போது வந்திருப்பது மாப்பிள்ளைப் பார்ப்பதற்காக!"

"ஓகோகோ! மாப்பிள்ளை பார்ப்பதற்காக வந்திருக்கிறாரா? பலே பலே! இன்ஷியூரன்ஸ் வேலையோடே இந்த வேலையும் வைத்துக் கொண்டிருக்கிறீரா? இதுவரையில் எத்தனை வீட்டுக்கு அழைத்துப் போனீர்? எத்தனை மாப்பிள்ளைகளைக் காட்டினீர்? இந்த நவநாகரிக காலத்திலே 'மாப்பிள்ளை பீரோ' என்றும் 'கல்யாணக் கம்பெனி' என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்களாமே? நீரும் அப்படி ஏதாவது கம்பெனி வைத்திருக்கிறீரோ?" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஐயர்வாள்! எனக்குத் தெரிந்தது இந்த ஒரே இடந்தான்! நேரே இவ்விடத்துக்குத் தான் இவரை அழைத்து வந்தேன். போன தடவை இந்த விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தபோது தாங்களும் வீட்டிலே அம்மாளும் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து பையனுக்குக் காட்டி விட்டால் தேவலை என்று சொன்னீர்கள், ஞாபகம் இருக்கிறதல்லவா?"

"ரொம்ப சரி, ஞாபகம் வருகிறது, இரைந்து பேசாதீர். மாடியிலே பையன் இருக்கிறான், அவன் காதிலே விழுந்து வைக்கப் போகிறது!... என்னுடைய அபிப்ராயம் அதுதான். இந்த விஷயத்திலே நான் கூடக் கொஞ்சம் 'மாடர்ன்' ஆசாமியென்றே வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்க வேணும், பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடித்திருக்க வேணும். அப்புறம் பையனாவது பெண்ணாவது, 'இப்படி என்னைக் கெடுத்து விட்டிர்களே!' என்று கேட்பதற்கு இடம் இருக்கக் கூடாது. பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கக்கூடாது. பிள்ளை முகத்தைத் துருத்திக்கொண்டு நிற்கக் கூடாது. சாஸ்திரமும் இதைத்தான் சொல்கிறது. இந்தக் காலத்திலே வரதட்சணை கிரதட்சணை என்று சொல்கிறார்களே, அதெல்லாம் சுத்த 'நான்ஸென்ஸ்!' எனக்குப் பிடிக்கிறதேயில்லை. சாஸ்திரத்துக்கு சர்வ விரோதம். நான்கூடப் பையனுக்கு வரதட்சணை கேட்கிறதாயிருந்தால், 'முப்பதினாயிரத்தைக் கொண்டுவா!' 'ஐம்பதினாயிரத்தைக் கொண்டுவா!' என்று கேட்கலாம்.

ஒன்றுமில்லாத வறட்சிப் பயல்கள் எல்லாம் இந்தக் காலத்தில் அப்படிக் கேட்கிறார்கள். நம்முடைய யோக்யதைக்கு அதெல்லாம் சரிக்கட்டி வருமா? என்னுடைய சமாசாரமே ஒரு தனி மாதிரி. எனக்குத் தர்மந்தான் பெரிது; பணம் பெரிதல்ல. இல்லாவிட்டால் இவ்வளவு காலம் உத்தியோகம் பார்த்துவிட்டு இப்போது இப்படிக் கடனாளியாக இருப்பேனா? என்னைப் போல உத்தியோகம் பார்த்தவர்கள் இரண்டு கையையும் நீட்டி லஞ்சம் வாங்கி ஒவ்வொருவரும் நாலு வீடு ஐந்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். நான் இந்த ஒரே ஒரு வீடுதான் கட்டியிருக்கிறேன். இதற்கும் கடன் வாங்க வேண்டி யிருந்தது. கோ ஆபரேடிவ் சொஸைடிக்குக் கொடுக்க வேண்டிய கடன் பதினையாயிரம் ரூபாய் இன்னும் கொடுக்கப் படவில்லை. யாராவது பெண்ணைக் கொடுக்க வருகிறவர்கள் அந்தக் கடனை அடைத்து வீட்டை மீட்டால், அவர்களுடைய பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல வீடாயிற்று! ஆனால், அது அவர்களுடைய இஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் வரதட்சணை என்று காலணா கை நீட்டி வாங்க மாட்டேன்..."

சுப்பய்யர் குறுக்கிட்டு, "ஐயர்வாள்! அதைப்பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டியதேயில்லை. பெண்ணின் கல்யாணத்துக்கென்று கிட்டாவய்யர் முப்பதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்து விட்டார். லௌகிக விஷயங்கள் எல்லாம் ஒரு குறைவும் இல்லாமல் திருப்திகரமாய் நடந்துவிடும்" என்றார். "லௌகிகம் கிடக்கட்டும், ஐயா, லௌகிகம்! கல்யாணம் என்பது பரமவைதிக விஷயம், அக்கினி சாட்சியாக விவாகம் செய்து கொண்ட பிறகுதான் பிராமணனுக்கு வைதிக கிரியைகள் செய்ய உரிமை ஏற்படுகிறது. ஆனால், பிள்ளையையும் பெண்ணையும் கேட்காமல் கலியாணம் நிச்சயம் செய்யும் காலம் போய் விட்டது. பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்க வேண்டும்; பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடித்திருக்க வேண்டும்; அதுதான் முக்கியமான விஷயம். பண்ணையார் கல்யாணப் பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறாரோ?..."

இத்தனை நேரமும் வாய் திறக்க வழியில்லாமல் உட்கார்ந்திருந்த கிட்டாவய்யர் இப்போது கொஞ்சம் தைரியம் அடைந்து, "அழைத்து வரலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். அதற்கு இந்தத் தடவை சௌகரியமில்லாமல் போய்விட்டது. என்னுடைய தங்கை பம்பாயில் இருக்கிறாள். அவளுக்குக் கொஞ்சம் உடம்பு அசௌகரியம் என்று கடிதம் வந்தது. அவளைப் பார்ப்பதற்காகப் பம்பாய் போகிறேன். தாங்கள் சொன்னால், பம்பாயிலிருந்து திரும்பி வந்ததும் கிராமத்துக்குப் போய்க் குழந்தையை அழைத்து வருகிறேன்!" என்றார்.

"அதற்கென்ன, சௌகரியம்போல் செய்யுங்கள்! அவசரம் ஒன்றுமில்லை. இப்போதுதானே தை பிறந்திருக்கிறது? ஆனால் பிள்ளையாண்டானுக்கு ரஜா முடிவதற்குள் கல்யாணம் நடந்தாக வேண்டும். அதிகமாய்த் தாமதிக்க இடமில்லை. பையனுடைய தாயார் வேறு ரொம்ப அவசரப்படுகிறாள்! கையிலே முப்பது ஜாதகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். தினம் ஜோசியரை வரவழைப்பதும் பொருத்தம் பார்ப்பதுந்தான் அவளுக்கு இரண்டு மாதமாக வேலை. காமாட்சி! இங்கே கொஞ்சம் வந்துவிட்டுப்போ!" என்று சாஸ்திரிகள் சத்தம் போட்டுக் கூவினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தாம் அத்தியாயம்
காமாட்சி அம்மாள்

வீட்டின் பின்கட்டிலிருந்து, "இதோ வந்து விட்டேன்" என்று ஸ்திரீயின் குரல் கேட்டது. சாஸ்திரிகள், "வா! வா! நீ வந்தால்தான் விஷயம் முடிவாகும்!" என்று உரத்துக் கூவினார். மறுபடியும் சுப்பய்யரைப் பார்த்துச் சாஸ்திரிகள் கூறினார்:- "இந்தக் கல்யாண 'டிபார்ட்மெண்'டை நான் அகத்துக்காரியிடமே ஒப்படைத்து விட்டேன். காமாட்சியைப் போல் பரம சாதுவை இந்தத் தேசத்திலே பார்க்கமுடியாது. நான் படுத்திய பாட்டையெல்லாம் பொறுத்துக்கொண்டு இத்தனை நாள் காலம் தள்ளியிருக்கிறாளே, இதிலிருந்தே தெரியவில்லையா...""

"போதுமே! நம்ம வீட்டுக் கதையையெல்லாம் யாரோ வந்தவர்களிடம் சொல்வானேன்?" என்று கூறிக்கொண்டே அந்தச் சமயம் ஸ்ரீமதி காமாட்சி அம்மாள் அங்கு வந்து சேர்ந்தாள். அவனைப் பார்த்தவுடனே, தாரிணியின் கடிதத்தில் அந்த அம்மாளைப் பற்றி வர்ணித்திருந்தது முற்றும் சரியென்று நமக்குத் தோன்றும். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், முகத்தில் சாந்தமும், கண்களில் பிரகாசமும், குடித்தனப் பாங்கான நடை உடை பாவனைகளும் அந்த அம்மாளை நல்ல குடிப் பிறப்புக்கும் தெய்வபக்திக்கும் இந்து தர்மத்தின் பண்பாட்டுக்கும் சிறந்த பிரதிநிதி என்று தோன்றச் செய்தன. அந்த அம்மாளைப் பார்த்துச் சுப்பய்யர், "வாருங்கோ, அம்மா! இவ்விடம் 'யாரோ' ஒருவரும் இல்லை. நான்தான் வந்திருக்கிறேன்; இதோ இந்தப் பிராமணர், நான் சொன்னேனே; அந்த ராஜம்பேட்டை கிராம முன்சீப் கிட்டாவய்யர்!" என்றார். "சந்தோஷம்! குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாரோ?" என்று காமாட்சி அம்மாள் கேட்டாள்.

இந்தத் தடவை அழைத்து வரவில்லை. இவருடைய தங்கைக்குப் பம்பாயில் உடம்பு சரியில்லையென்று கடிதம் வந்திருக்கிறது அதற்காகப் பம்பாய் போகிறார். திரும்பி வந்ததும் தாங்கள் சொன்னால் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொல்கிறார். ஜாதகம் கொண்டு வந்திருக்கிறார். ஜாதகம் பொருத்தமாக இருந்து மற்ற எல்லா விஷயங்களும் பேசித் திருப்திகரமாக முடிந்துவிட்டால் பெண்ணைக் கூட்டிக் கொண்டுவருவதில் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது? சென்னைப் பட்டணம் என்ன காடா, பாலைவனமா? நான் பட்டணம் பார்ப்பதற்கு என்று அழைத்து வந்தாலும் போச்சு. மற்ற விஷயங்கள் எல்லாம் பேசி முடித்தால்..." "மற்ற விஷயங்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது. உங்களுக்கு எது இஷ்டமோ எப்படி இஷ்டமோ அப்படிச் செய்யுங்கள்! பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து காட்டிப் பையனுக்குப் பிடித்துப் போய்விட்டால், அப்புறம் ஒரு பேச்சும் வேண்டியதில்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியதுதான்" என்றாள் காமாட்சி அம்மாள்.

இப்படி அவள் சொல்லி வாய் மூடும் சமயத்தில் மேல் மாடியிலிருந்து மச்சுப் படி வழியாக யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. இறங்கி வந்தவன் நம் கதாநாயகன் ராகவன்தான். சற்று முன்னால் கவலையும் வேதனையும் குடிகொண்டிருந்த அவனுடைய முகத்தில் மேற்படி கல்யாணப் பேச்சு இலேசான புன்னகையை உண்டாக்கியிருந்தது. மச்சுப் படியில் சத்தம் கேட்டது, கீழே பேசிக் கொண்டிருந்த நாலு பேருடைய கண்களும் அந்தப் பக்கம் நோக்கின. இறங்கி வருகிறவன் ராகவன் என்று அறிந்ததும் அவனுடைய பெற்றோர்களின் நெஞ்சில் சிறிது துணுக்கம் உண்டாயிற்று. 'ஏதாவது நாம் பிசகாகப் பேசிவிட்டோ மோ? இதன் காரணமாக ஒருவேளை உத்தேசித்த காரியம் கெட்டுப் போய்விடுமோ?' என்று கவலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

இறங்கி வந்த பையனைக் கிட்டாவய்யர் கண் கொட்டாத ஆர்வத்துடன் பார்த்தார். அவனுடைய கம்பீரமான தோற்றமும் சுந்தரமான முகமும் அந்த முகத்தில் ஒளி வீசிய அறிவின் களையும் கிட்டாவய்யரின் மனதைக் கவர்ந்தன. "இந்தப் பையன் மாப்பிள்ளையாகக் கிடைத்தால் நம்முடைய பாக்கியந்தான்; லலிதா அதிர்ஷ்டசாலிதான்!" என்று அவர் எண்ணிக் கொண்டார். ராகவன் கீழ் மச்சுப் படிக்கு வந்து தரையில் இறங்கும் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. நாலு பேரையும் பொதுப்படையாக ஒரு முறை ராகவன் பார்த்துவிட்டு, "ஏதோ கல்யாணம் நிச்சயம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது?" என்றான். "ஏதோ கல்யாணமாவது? உன்னுடைய கல்யாணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்!" என்று சாஸ்திரிகள் தைரியமாக ஒரு போடு போட்டார். அன்னியர்களின் முன்னிலையில் ராகவன் மரியாதையாகப் பேசுவான் என்பது அவருக்கு நன்கு தெரிந்த விஷயம்.

"ஓகோ! அப்படியா சமாசாரம்; என்னைக் கேட்காமலே எனக்குக் கல்யாணம் செய்துவிடுவதாக உத்தேசமா?" என்றான். "நன்றாயிருக்கிறது! உன்னைக் கேட்காமல் நிச்சயம் செய்கிறதா? எங்களை என்ன அப்படி நினைத்துவிட்டாய், ராகவா?" என்றார் சாஸ்திரிகள். "எல்லாம் உன்னைக் கேட்டுக்கொண்டு உன் அபிப்பிராயப்படி செய்வதாகவே உத்தேசம். குழந்தை! கலியாணம் என்பது சாதாரண விஷயமா? இன்றைக்குச் செய்து நாளைக்கு மாற்றக்கூடிய காரியமா? உன்னைக் கேட்காமல் தீர்மானிப்பதற்கு நீ என்ன பச்சைக் குழந்தையா?" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்தக் காலத்திலே பச்சைக் குழந்தையைக்கூடக் கலியாண விஷயத்திலே கட்டாயப்படுத்த முடிகிறதில்லை! பத்து வயதுப் பெண் குழந்தை 'எனக்கு இந்த ஆம்படையான் வேண்டாம்' என்று துணிச்சலாகச் சொல்கிறது!" என்றார் சுப்பய்யர். இதைக் கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தார்கள். ராகவனுடைய முகங்கூட மலர்ந்தது.

அந்தச் சந்தோஷமான சந்தர்ப்பம் பார்த்துச் சாஸ்திரிகள் கூறியதாவது: "வெறுமனே சுற்றி வளைத்துக்கொண்டிருப் பானேன்? விஷயத்தைச் சொல்லிவிட்டால் போச்சு! ராகவா! நம்ம சுப்பய்யர் முன்னொரு தடவை சொன்னாரல்லவா? அந்த இராஜம்பேட்டைப் பண்ணையார் இவர்தான். பெண்ணுக்கு வரன் பார்க்க வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடலாம் என்று நாங்கள் யோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போது நீயே வந்துவிட்டாய். உன் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடு. பாக்கி விஷயம் எல்லாம் 'ஸெட்டில்' ஆகிவிட்டால், பெண்ணை இங்கேயே அழைத்துக் கொண்டு வந்து காட்டுவதாகச் சொல்லுகிறார். நல்ல குலம், நல்ல கோத்திரம், எனக்கும் உன் அம்மாவுக்கும் ரொம்ப பிடித்தமான சம்பந்தம். ஆனால் எங்களுக்குப் பிடித்திருந்து என்ன பிரயோஜனம்! கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் நீ அல்லவா? பெண்ணை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லி அனுப்பலாமா? உன் அபிப்பிராயம் என்னவோ, சொல்லிவிடு! வெறுமனே இவர்களை அலைக்கழிப்பதில் பிரயோஜனமில்லை. உண்டு என்றால் உண்டு என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட வேண்டும். "ராகவனுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது; கடுகடுப்புத் தோன்றியது. தகப்பனார் பேச ஆரம்பித்த வுடன் தலையைக் குனிந்து கொண்டவன் இப்போது தலைநிமிர்ந்து அவரைப் பார்த்தான், "அப்பா! நான் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் இவர்களுடைய ஊருக்கு நானே போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டாம்!" என்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினோறாம் அத்தியாயம்
"என்னைக் கேட்டால்....."

ராகவன் சொன்னதற்குப் பதிலாக எதுவும் சொல்வதற்கு அங்கிருந்தவர்களில் யாருக்கும் நா எழவில்லை. அவனும் பதிலுக்குக் காத்திராமல் வீட்டின் பின்கட்டை நோக்கி விடுவிடு என்று நடந்து சென்றான். அவன் மறைந்த பிறகு காமாட்சி அம்மாள் கிட்டாவய்யரைப் பார்த்து, "நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். ராகவனை வழிக்குக் கொண்டு வருவதற்கு நான் ஆயிற்று. எல்லாவற்றுக்கும் நீங்கள் பம்பாய்க்குப் போய்விட்டுச் சீக்கிரம் திரும்பி வந்து சேருங்கள்!" என்றாள்.

ராகவன், 'நான் போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன்!' என்று சொன்னது கிட்டாவய்யருக்கு மிக்க சந்தோஷம் அளித்தது. பெண்ணை மாப்பிள்ளைக்குக் காட்டுவதற்காகப் பட்டணம் அழைத்துக்கொண்டு வரும் காரியம் அவருக்குப் பிடிக்கவேயில்லை. அது நம்முடைய கௌரவத்துக்குக் குறைவு என்று கருதினார். அதோடு தம் அருமைப் புதல்வியை அம்மாதிரி சந்தைக்கு அழைத்துக் கொண்டு போவது போல அழைத்துப் போய், யாரோ முன்பின் தெரியாத பையன் அவளைப் பார்த்து, 'வேண்டும்' 'வேண்டாம்' என்று சொல்ல இடங் கொடுக்கும் விஷயம் அவர் மனதுக்குப் பெரிதும் கஷ்டம் தந்திருந்தது. ஆகவே இப்போது ராகவன் 'நானே இவர்கள், ஊருக்குப் போய் பெண்ணைப் பார்க்கிறேன்' என்று சொன்னதை நினைத்துக் களிப்படைந்தார்.

காமாட்சி அம்மாள் கூறியதற்குப் பதிலாக உற்சாகமான குரலில் "ஆகட்டும்; பம்பாய்க்குப் போய்விட்டுக் கூடிய சீக்கிரம் திரும்பி விடுகிறேன். சௌகரியப்பட்டால் மாப்பிள்ளை என் பின்னோடேயே வரலாம்; நானே அழைத்துப் போகிறேன்!" என்றார். "அதற்குள்ளாகவே மாப்பிள்ளை உறவு கொண்டாட ஆரம்பித்து விட்டாயா, கிட்டா? ஓஹோஹோ!" என்றார் சுப்பய்யர். "அதற்கென்ன? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் அவ்விதமே நடந்து விடுகிறது. இவர் என்னைக் கூப்பிட்ட சமயம் நான் பூஜை அறையில் படங்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். இவர் 'காமாட்சி' என்று என்னைக் கூப்பிட்ட போது ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துக்குச் சாத்தியிருந்த பூமாலையிலேயிருந்து ஒரு செண்பகப் புஷ்பம் உதிர்ந்தது. நல்ல சகுனம் என்று நினைத்துக் கொண்டேன்" என்றாள் காமாட்சி அம்மாள்.

"அப்படியானால், இந்தக் கல்யாணம் நடந்த மாதிரியேதான்! சுப்பய்யரே, இவ்வளவு நாளாக ராகவனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்று எத்தனைப்பேர் இந்த வீட்டைத் தேடி வந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கும். அவ்வளவு பேரையும் தட்டிக் கழித்து வந்தவள் இந்த மகராஜிதான். எப்போது இவளுடைய வாயினாலேயே 'இந்தக் கலியாணம் நடக்கும்' என்று சொல்லிவிட்டாளோ, அப்போது கட்டாயம் கலியாணம் நடந்தே தீரும்" என்றார் சாஸ்திரிகள். "எல்லாம் ஒரு நல்லதற்காகத்தான் இருக்கும்! பரஸ்பரம் இவ்வளவு நல்ல சம்பந்தம் வாய்க்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறபோது, வேறு இடத்தில் கலியாணம் எப்படி நிச்சயமாகும்? கிட்டா கூடத்தான் போன வருஷ மெல்லாம் நூறு வரன் பார்த்தான். ஒன்றும் மனதுக்குத் திருப்திகரமாயில்லை என்று தள்ளிவிட்டான். இந்த வீட்டுக்குள் கால் வைத்ததும் எப்படியோ கிட்டாவின் மனதுக்குப் பிடித்துவிட்டது. தங்களிடம் ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும், சாஸ்திரிகளே! நம்ப அம்மாளிடத்திலும் அப்படியே ஒரு தெய்வீகம் இருக்கிறது."

"ஓய் சுப்பய்யரே! பலே பேர்வழியாயிருக்கிறீரே! இப்படியெல்லாம் முகஸ்துதி செய்து என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று உத்தேசம்? அம்மாளிடம் ஏதாவது இன்ஷியூரன்ஸுக்கு அடி போட்டிருக்கிறீரோ?" என்று சாஸ்திரிகள் ஆரம்பித்ததும் சுப்பய்யர் பயந்து போனார். பேச்சின் நடுவில் குறுக்கிட்டு, "தயவு செய்து மன்னிக்க வேண்டும், எனக்கு ஆபீஸுக்கு நேரமாகி விட்டது. இப்போது நாங்கள் போய் வருகிறோம்; இனிமேலேதான் அடிக்கடி சந்திக்க வேண்டியதாய் இருக்குமே?" என்று சொல்லிக் கொண்டே சுப்பய்யர் எழுந்ததும், கிட்டாவய்யரும் எழுந்தார். அவர்களை வீட்டு வாசல் வரையில் கொண்டு போய் விடுவதற்காகச் சாஸ்திரிகளும் எழுந்தார். அந்தச் சமயத்தில் காந்திக் குல்லா தரித்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் நாலு பேர் திடுதிடுவென்று வீட்டுக்கு உள்ளே நுழைந்து வந்தார்கள். "யார் நீங்கள்?" என்று சாஸ்திரிகள் திடுக்கிட்டுக் கேட்டார். "ஸார்! பீஹார் பூகம்ப நிதிக்காகப் பணம் வசூலிக்கிறோம். தங்களால் இயன்றதைக் கொடுக்க வேண்டும்" என்று அந்தத் தொண்டர்களிலே ஒருவர் கூறினார்.

சாஸ்திரிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "பீஹாராவது பூகம்பமாவது? அதெல்லாம் இங்கு ஒன்றும் கொடுப்பதற்கில்லை!" என்று கண்டிப்பாகக் கூறினார். "அப்படிக் கண்டிப்பாகச் சொல்லக் கூடாது! லட்சக்கணக்கான ஜனங்கள் வீடு இழந்து சொத்து இழந்து...." "உயிரை இழந்து தவிக்கிறார்கள்! எல்லாம் தெரியும். அப்பா! என்னை நிரட்சரகுட்சி என்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறாயோ பூகம்பத்துக்கு மறுநாளே நான் பாபு ராஜேந்திர பிரஸாதுக்குத் தந்தி மணியார்டரில் என்னுடைய நன்கொடையை அனுப்பிவிட்டேன்! நீங்கள் போய் வேறு யாராவது நாலு பேரைப் பாருங்கள்! வீண் பொழுது போக்க வேண்டாம்!" என்றார் சாஸ்திரிகள்.

"நாலு பேரைப் பார்ப்பதற்கு நீங்கள் சொல்ல வேண்டுமாக்கும்? " முணுமுணுத்துக் கொண்டே தொண்டர்கள் சென்றார்கள். "பார்த்தீர்கள் அல்லவா; ஒரு நிமிஷம் கதவைத் திறந்து வைத்தால் போதும்! பூகம்பம், எரிமலை, புயற் காற்று, காங்கிரஸ் கான்பரன்ஸ் என்று சொல்லிக் கொண்டு யாராவது யாசகம் கேட்க வந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கே உற்சவம், இங்கே பஜனை என்று கையில் சந்தாப் புத்தகத்துடன் வந்து விடுகிறார்கள். கொடுத்துக் கொடுத்து எனக்கும் சலித்துப் போய்விட்டது. மேலும் நான் என்ன பண்ணையாரா? ஜமீன்தாரா? நன்செய் நிலம் பொன்னாக விளைகிறதா! ஏதோ வெள்ளைக்கார கவர்ன்மெண்டின் புண்ணியத்திலே மாதம் பிறந்ததும் பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புண்ணியவான்கள் சுயராஜ்யம் சம்பாதித்து விட்டால், நம்ப பென்ஷன் வாயிலே மண் விழுந்தாலும் விழுந்துவிடும்! கராச்சி காங்கிரஸிலே மாதம் ஐந்நூறு ரூபாய்க்கு மேலே யாருக்கும் சம்பளமே கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறார்களாம்! தெரியுமோ, இல்லையா?

அப்படியே நாம் இந்தத் தொண்டர்களிடம் ஏதாவது பணம் கொடுக்கிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள்.கொடுத்த பணம் பீஹார் நிதிக்கு நேரே போய்ச் சேருகிறதென்று நிச்சயம் உண்டா? என்னைக் கேட்டால் பூகம்பம் போன்ற விஷயங்களில் மனிதன் தலையிடவே கூடாது என்று சொல்வேன். பகவானே பார்த்துச் செய்திருக்கிற காரியத்தில் சுண்டைக்காய் மனுஷன் தலையிட்டு என்ன செய்துவிட முடியும் ஸார்....? "இவ்விதம் பேசிக்கொண்டே பத்மலோசன சாஸ்திரிகள் கிட்டாவய்யரையும் சுப்பய்யரையும் அழைத்துக் கொண்டு வாசற்பக்கம் போனார். அவர்கள் வீட்டை விட்டு இறங்கிய உடனே கதவைச் சாத்திப் பலமாகத் தாளிட்டு விட்டுத் திரும்பினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பன்னிரண்டாம் அத்தியாயம்
கராச்சியில் நடந்தது

'தேவி ஸதன'த்தின் பின்கட்டில் ஒரு புறத்தில் சமையல் அறையும் அதற்கு எதிர்ப்புறத்தில் காமாட்சி அம்மாளின் பூஜை அறையும் இரண்டுக்கும் மத்தியில் விசாலமான கூடமும் இருந்தன. கூடத்தின் நடுவில் ஊஞ்சல் போட்டிருந்தது. ராகவன் பின்கட்டுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து தாயாரின் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் கீழே தரையைத் தொட்டதும், லேசாக ஊஞ்சல் ஆடியது. ஊஞ்சலுடன் அவனுடைய உள்ளமும் ஊசலாடியது.

கடலில் மூழ்கிச் சாகப் போகிறவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு நிமிஷத்தில் வெள்ளித் திரையில் தோன்றுவது போல் மனக்கண் முன்னால் தோன்றி மறையும் என்று சொல்வார்கள். அம்மாதிரி இச்சமயம் ராகவனுடைய மனக்கண் முன்னால் சிற்சில சம்பவங்கள் அதிக வேகமாகத் தோன்றின. காரிருள் சூழ்ந்திருக்கும் வேளையில் மின்னல் வெளிச்சத்தில் தோன்றி மறையும் காட்சிகளைப்போல் அச்சம்பவங்கள் தோன்றி மறைந்தன. புதுடில்லியில் பொக்கிஷ இலாகாவின் தலைமை உத்தியோ கஸ்தரைப் பார்த்துவிட்டு ராகவன் ஊருக்குத் திரும்ப எண்ணியபோது கராச்சி வழியாகப் போவது என்று தீர்மானித்தான். கராச்சியில் அந்த வருஷம் காங்கிரஸ் மகாசபை கூடியது. அனேகமாக இந்திய இளைஞர்கள் எல்லாரையும் போல் ராகவன் கலாசாலை மாணாக் கனாயிருந்த போது தேசீய சுதந்திரத்தில் ஆவேசம் கொண்டிருந்தவன், அதோடு சமூக சீர்த்திருத்தப் பற்றும் கொண்டிருந்தான். இந்திய தேசத்திலிருந்து சாதி - சமய வேற்றுமைகளையெல்லாம் ஒழித்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆகையால், புது டெல்லிக்குப் போன காரியம் ஆன பிறகு கராச்சிக்குச் சென்று காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பார்வையாளனாக ஆஜராகி நடவடிக்கைகளைக் கவனித்தான். அப்படிக் கவனித்ததினால் அவனுக்கு நம் தேசீயத் தலைவர்களைப் பற்றிய விஷயத்தில் மதிப்பு அதிகமாகவில்லை. "உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது? அமெரிக்க நாட்டில் போர்டு மோட்டார் தொழிற்சாலையில் நிமிஷத்துக்கு முன்னூறு மோட்டார்கள் உற்பத்தி யாகின்றன! இப்பேர்ப்பட்ட இயந்திர யுகத்தில் இவர்கள் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே! மணிக்கு 300 கஜம் நூல் நூற்பதாமே! கடவுளே! இப்படிப்பட்ட தலைவர்களால் இந்தியா எந்தக் காலத்தில் முன்னேறப் போகிறது?" என்று எண்ணி அலுப்படைந்தான்.

பிறகு இயந்திர யுகத்திற்கு அறிகுறியாக அந்த நாளில் கருதப்பட்ட ஆகாச விமானம் பார்க்கச் சென்றான். அப்போது கராச்சியில் புதிதாக ஆகாச விமானக் கூடம் கட்டியிருந்தார்கள். வாடகை விமானங்கள் வந்திருந்தன. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஆகாச விமானத்தில் ஐந்து நிமிஷ பிரயாணம் செய்யலாம். விமானம் ஆகாசத்தில் இரண்டாயிரம் அடி உயரம் விர்ரென்று ஏறிக் கராச்சி நகரைச் சுற்றி ஒரு தடவை வட்டமிட்டுவிட்டு மறுபடி கீழே வந்து இறங்கும்.

விமான கூடத்துக்குப் போனபோது ராகவன் விமானத்தில் ஏறுவது என்னும் நிச்சயத்தோடு போகவில்லை ஏதோ பார்க்கலாம் என்று போனான். அங்கே போன பிறகு கட்டாயம் ஏறியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஆகாச விமானம் ஏறுவதையும் இறங்குவதையும் வேடிக்கை பார்ப்பதற்காக ஜனங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் ராகவனுக்குப் பக்கத்தில் மூன்று வடநாட்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிலே ஒரு ஸ்திரீ கொஞ்சம் வயதானவள். மற்ற இருவரும் இளம் பெண்கள். ஒருத்தி கட்டையாயும் குட்டையாயும் மாநிறமாயும் இருந்தாள். அவளை இலட்சணமானவள் என்று சொல்ல முடியாது. இன்னொரு பெண்....? ஆகா....? அவளை வர்ணிப்பது சாத்தியமில்லை. கார்த்திகை மாதத்துப் பூரண சந்திரனுடைய சந்தன நிறக் கிரணங்கள் ஒரு மந்திரவாதியினுடைய மந்திரத்தினால் பெண் உருக்கொண்டது போலத் தோன்றினாள். பனிக் காலத்துக் காலை நேரத்தில் புல் நுனியில் நிற்கும் முத்துப் பனித்துளிகள் காலைச் சூரிய கிரணங்களினால் ஒளி பெற்றுத் திகழ்வதுபோல் அவளுடைய கண் விழிகள் பிரகாசித்தன. பாலகோபாலன் அன்னை யசோதையிடம் வெண்ணெய் கேட்பதற்காகத் தவழ்ந்து செல்லும்போது அவனுடைய அறையில் கட்டியிருந்த கிண்கிணிகள் ஒலிப்பது போல் அந்தப் பெண்ணின் குரல் ஒலித்தது.

அத்தகைய போதை தரும் இன்பக் குரலில் அப்பெண், "நீங்கள் மதராஸ்காரரா?" என்று ஆங்கில பாஷையில் கேட்ட போது, ராகவன் மிக ரஸித்த ஷெல்லி - கீட்ஸ் கவிதைகளைக் காட்டிலும் இனிமை வாய்ந்த கவிதையாக அந்த வார்த்தைகள் அவன் செவியில் தொனித்தன. தன்னைத்தான் அப்பெண் கேட்கிறாள் என்பதை ராகவன் உணர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. அதற்கு அவன் பதில் சொல்லியப் பிறகு, "நீங்கள் விமானத்தில் ஏறிப் பார்க்கப் போகிறீர்களா?" என்று அப்பெண் கேட்டாள். "ஆம்; அதற்காகத்தான் வந்திருக்கிறேன்!" என்று ராகவன் பளிச்சென்று பதில் சொல்லி, "நீங்களும் விமானம் ஏறுவதற்காக வந்தீர்களா?" என்று கேட்டான் "நீங்கள் முதலில் ஏறிப் போய்விட்டு வந்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண்.

அவள் பக்கத்திலே இருந்த இன்னொரு பெண் அவள் காதில் ஏதோ முணுமுணுக்கவே இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். அவ்விதம் கலந்தெழுந்த சிரிப்பில் ராகவனுடன் பேசிய பெண்ணின் சிரிப்பொலி மட்டும் தனிப்படப் பிரிந்து ராகவன் காதில் விழுந்து அவனைப் பரவசப்படுத்தியது. அந்த இரு பெண்களுக்குமிடையே தோற்றத்திலும், மேனி நிறத்திலும், குரலிலும் எத்தனை வித்தியாசம் என்று ராகவன் எண்ணி எண்ணி வியந்தான். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து இருவரில் அழகியின் பெயர் தாரிணி என்றும், இன்னொருத்தியின் பெயர் நிருபமா என்றும் தெரிந்து கொண்டான். மற்றும் அவர்கள் கராச்சி காங்கிரஸில் ஸ்திரீ தொண்டர் படையில் சேர்ந்து சேவை செய்வதற்கு வந்தவர்கள் என்றும், காங்கிரஸ் கூட்டம் முடிந்த பிறகு தன்னைப் போலவே அவர்களும் ஊர் சுற்றிப் பார்க்கிறார்கள் என்றும் அறிந்தான்.

ராகவன் ஆகாச விமானத்தில் ஏறி வானத்தில் வட்டமிட்ட போதெல்லாம் அவனுடைய நினைவு மட்டும் பூமியிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. சரியாகச் சொல்வதாயிருந்தால், கீழே பூமியில் நின்ற தாரிணியைச் சுற்றிச் சுற்றி அவன் மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். விமானம் இறங்கியதும் ராகவனுடைய கண்கள் அந்த மூன்று பெண்களும் நின்ற இடத்தைத் தேடின. ஒரு கணம் அவர்கள் அங்குக் காணப்படாதிருக்கவே அவனுக்கு உலகமே இருண்டுவிட்டதாகத் தோன்றியது. சற்றுத் தூரத்தில் இன்னொரு இடத்தில் அவர்கள் நிற்பதைப் பார்த்தவுடனே உலகில் மறுபடியும் சூரியன் பிரகாசித்தது. ராகவன் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றான். தாரிணி ஆவல் ததும்பிய முகத்துடனே அவனைப் பார்த்து, "எப்படி இருந்தது?" என்று கேட்டாள்.

ராகவன் தன்னுடைய மனது பூமியிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்னும் உண்மையைச் சொல்லாமல் வானப் பிரயாணத்தின் சுகங்களைப் பற்றி, 'அற்புதரசம்' தோன்ற வர்ணித்தான். "நீங்களும் ஏறப்போகிறீர்கள் அல்லவா?" என்று கேட்டான். தாரிணி ஏமாற்றம் தொனித்த குரலில், "இல்லை; இவர்கள் இருவரும் பயப்படுகிறார்கள்! என்னையும் போகக் கூடாது என்கிறார்கள்!" என்றாள். "பயப்பட வேண்டிய "அவசியமே இல்லை; ஸீட்டுகள் அதிகம் உள்ள விமானமாயிருந்தால் நானே உங்களை அழைத்துப் போவேன். ஆனால் இந்த விமானத்தில் ஒரே ஸீட்டுதான் இருக்கிறது. விமானியைத் தவிர ஒருவர்தான் ஏறலாம்!" என்று ராகவனும் ஏமாற்றமான குரலில் கூறினான். "சரி இனிமேலாவது நாம் போகலாமல்லவா?" என்று மற்றொரு பெண் கேட்க, தாரிணி ராகவனைப் பார்த்து, "நாங்கள் போகவேண்டும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள். சற்றுத் தூரத்திலுள்ள டாக்ஸி காரில் அவர்கள் ஏறும்போது, தான் நின்ற திசையைத் தாரிணி பார்த்ததாக ராகவனுக்குப் பிரமை உண்டாயிற்று. பிரமை என்று ஏன் கருத வேண்டும்? உண்மையாகவே இருக்கலாமல்லவா?

ஆகாச விமானம் ஏறிய அநுபவத்துக்குப் பிறகு ராகவன் கப்பல் பிரயாண அநுபவத்தையும் பெறுவதற்கு விரும்பினான். கராச்சி காங்கிரஸுக்கு வந்திருந்தவர்களிலே பலர் கடல் மார்க்கமாகப் பம்பாய்க்குச் சென்றார்கள். ராகவனும் ஸிந்தியா கம்பெனிக்குச் சொந்தமான கப்பல் ஒன்றிற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறினான். அந்தக் கப்பல் கடலோரமாக மட்டும் ஓட்டுவதற்குரிய சிறிய கப்பல். அதிக மூட்டை முடிச்சுக்கள் பெட்டி படுக்கைகள் உணவுக் கூடைகள் ஆகியவற்றுடன் சகசகவென்று ஜனங்கள் நெருங்கி நிறைந்திருந்தார்கள். அந்த வடக்கத்தி ஜனங்களின் அழுக்குத் துணிகளையும் ஆபாச வழக்கங்களையும் 'ஆஓ' என்ற கூச்சல்களையும் ராகவன் பார்த்துவிட்டு, 'கடவுளே! இதில் எப்படி முப்பத்தெட்டு மணி நேரம் பொழுது போக்குவது?' என்பதாக எரிச்சல் அடைந்தான். ஆனால் கப்பல், புறப்படும் சமயத்தில் அவசரமாகப் படகில் வந்து ஏணியில் ஏறிக் கப்பலில் இறங்கிய மூன்று ஸ்திரீகளைக் கண்டதும் ராகவனுடைய மனோபாவம் அடியோடு மாறிவிட்டது. அந்த ஆபாசமான அழுக்கு நிறைந்த பழைய ஓட்டைக் கப்பல் தட்சணமே கந்தர்வ பூமியாக மாறிவிட்டது. ராகவனைக் கப்பலில் பார்த்ததும் தாரிணிக்கும் ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டதென்று அவளுடைய முகபாவத்திலிருந்து தெரிய வந்தது. அந்த ஆச்சரியத்திலே சந்தோஷம் கலந்திருந்தது என்பது ராகவனுடைய பார்வைக்குத் தெரியாமல் போகவில்லை.

ராகவன் வடநாட்டுக்கு யாத்திரை வந்தது அதுதான் முதல் தடவை தாரிணியோ பம்பாய் வாசி. எனவே வடநாட்டைப் பற்றியும், வடநாட்டின் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் தாரிணியிடம் ராகவன் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. தாரிணியும் சென்னை மாகாணத்தைப் பற்றிப் பல விஷயங்கள் ராகவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாள். ஆகவே இருவருக்கும் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. ஆனால் பேசுவதற்கு விஷயங்கள் அவர்களுக்கு அவ்வளவு அவசியமாகத் தேவையில்லைதான்! அருகில் இருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமென்ற மனோ நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் கப்பலில் எல்லாப் பக்கங்களிலேயும் நெருங்கியிருந்த மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதிருக்கும் பொருட்டு அவர்கள் ஏதோ போலப் பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது. இத்தகைய சம்பாஷணைப் பாசாங்குகளின் போது தாரிணிக்குத் தமிழ்ப் பேசத் தெரியும் என்பதை அறிந்து ராகவன் அளவற்ற வியப்பும் களிப்பும் அடைந்தான்.

கப்பலில் தாரிணியையும் அவளுடைய தோழியையும் போல் இன்னும் சில தேச சேவிகைகளும் இருந்தார்கள். தாரிணியின் அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே அவள் பக்கத்தில் இருந்தாள் போலத் தோன்றிய நிருபமாவுக்குத் தேக சௌந்தரியம் இல்லாவிட்டாலும் இனிமையான குரல் இருந்தது. அவளுடைய தலைமையில் மற்ற தேச சேவிகைகளும் சேர்ந்து ஹிந்தி தேசிய கீதங்களைப் பாடினார்கள். அப்போது மிகப் பிரபலமாயிருந்த, "ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா!" என்ற தேசியக் கொடி கீதத்தைப் பாடினார்கள். பிரபல உருது கவியான ஸர் முகம்மது இக்பால் பாடிய, "ஸாரே ஜஹா (ன்ஸே) அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்றும் தேசிய கீதத்தையும் பாடினார்கள். இந்த கீதங்கள் எல்லாம் தெய்வ லோகத்தில் கந்தர்வ கன்னிகைகள் பாடும் கீதங்களாகவே ராகவனுக்குத் தோன்றின. இரண்டாவது கீதத்தின் பொருளைத் தாரிணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். முதல் அடியின் பொருள், "உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் நம்முடைய ஹிந்து ஸ்தானம் சிறந்தது" என்று அறிந்ததும் "சந்தேகம் என்ன? உன்னைப் போன்ற பெண்கள் இந்த நாட்டில் பிறந்திருக்கும் போது உலகில் வேறு எந்தத் தேசம் இந்தியாவுக்கு இணையாக முடியும்?" என்று சொன்னான். அதைக் கேட்டுத் தாரிணி கன்னங்கள் குழியப் புன்னகை செய்த தோற்றம் ராகவன் மனக்கண் முன்னால் இன்றைக்கும் அழியா வர்ணத்தில் தீட்டிய அஜந்தா சித்திரத்தைப் போல் நின்றது.

இவையெல்லாம் நடந்து இப்போது ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகின்றன. இதற்கிடையில் தாரிணிக்கும் ராகவனுக்கும் அடிக்கடி கடிதம் போய் வந்து கொண்டிருந்தது. அவை காளிதாசனும் கம்பரும் தாகூரும் பாரதியும் பெருமைப்படும்படியான கவிதை உணர்ச்சி ததும்பிய கடிதங்கள். கடிதங்கள் எழுதுவதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. ராகவன் ஒருமுறை பம்பாய்க்குப் போயி ருந்தான். தாரிணி அவனை எலிபெண்டாத் தீவுக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்குள்ள குகைச் சிற்ப அற்புதங்களையெல்லாம் காட்டினாள். பிறகு தாரிணி டில்லிக்குப் போனாள். புது டில்லியில் உத்தியோகம் பார்த்த ராகவன் டில்லி மாநகரின் பழைய கோட்டை கொத்தளங்கள் பிரம்மாண்டமான மசூதிகள், மொகலாய மன்னர்களின் ஒப்பற்ற அழகு வாய்ந்த பளிங்குக்கல் அரண் மனைகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாரிணியை அழைத்துப் போய்க் காட்டினான். அப்போதெல்லாம் அவர்கள் கேவலம் இந்த மண்ணுலகின் கடினமான கட்டாந்தரையில் காலால் நடக்கவில்லை. கற்பனை உலகத்தில் ஆனந்த சாகரத்தின் அலைகளின் மேலாக மிதந்து கொண்டே சென்றார்கள்.

அப்புறம் ஆக்ராவில் உள்ள உலக அற்புதங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குப் போவது பற்றி இருவரும் யோசித்தார்கள். அதைச் சில காலம் தள்ளிப் போடலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். யார் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்ற பயத்துக்கு இடமில்லாமல் இருவரும் சதிபதிகளாய்க் கைக்கோத்துகொண்டு போய் ஷாஜஹானின் ஒப்பற்ற காதற் கனவைப் பார்த்துவர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். சுருங்கச் சொன்னால், இந்த மூன்று வருஷ காலமும் ராகவனுடைய வாழ்க்கையில் கிருத யுகமாக இருந்தது. ஒருபுறம் அவன் உத்யோக ஏணியில் படிப்படியாக ஏறிக்கொண் டிருந்தான். அவனுடைய இலாகாத் தலைவரான பெரியதுரை அவனைத் தம்முடன் சீமைக்கு அழைத்து போவதாகச் சொல்லியிருந்தார். மற்றொரு புறத்தில் ராகவன் காதல் மயமான கற்பனைக் கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவன் எந்தப் பக்கம் பார்த்தாலும் தங்க ரேகைகள் படர்ந்திருக்கக் கண்டான். இடைவிடாமல் அவனுடைய செவிகளில் தேவலோகத்து மதுர வீணாகானம் பாய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தான். பழைய டில்லி நகரத்தின் குப்பையும் கூளமும் துர்நாற்றமும் நிறைந்த குறுகிய வீதிகளில் அவன் நடந்தபோது கூட மொகலாய மன்னர்கள் உபயோகித்த ஒப்பற்ற அத்தரின் வாசனையையும் அந்த மன்னர்களின் அந்தப்புர நாரீமணிகள் குளித்த பன்னீரின் நறுமணத்தையும் கற்பனை உணர்ச்சியால் முகர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

ஆகா! அந்த இன்பத்துக்கெல்லாம் இப்போது முடிவு வந்து விட்டதே? எப்படி வந்தது? எதனால் வந்தது? நம்பவே முடியவில்லையே? வந்திருந்தவர்கள் விடை பெற்றுச் சென்ற பிறகு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்கு வந்தாள். கவலை தோய்ந்த முகத்துடன் ராகவன் ஊஞ்சலில் உட்கார்ந்து இலேசாக ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஊஞ்சலுக்கு எதிரே சுவர் ஓரமாகக் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். தன்னுடைய வருகையை எதிர்பார்த்துத் தன் மகன் அங்கே காத்துக் கொண்டிருக்கிறான் என்பது காமாட்சி அம்மாளின் உள் மனதுக்கு முன்னமே தெரிந்திருந்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதின்மூன்றாம் அத்தியாயம்
வானம் இடிந்தது

ராகவன் பேசத் தொடங்குவதற்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. பேசத் தொடங்கிய போதும் அவன் கேட்க விரும்பியதை உடனே கேட்க முடியவில்லை, பேச்சை வேறுவிதமாக ஆரம்பித்தான். "அம்மா! அங்கே யார்? இன்னும் யாராவது வந்திருக்கிறார்களா? புதிய குரல் ஏதோ கேட்டதே?" என்றான். "ஆமாண்டா, அப்பா! பீஹாரிலே பூகம்பம் என்று சொல்லி உண்டிப் பெட்டியுடனே நாலு காந்தி குல்லாக்காரர்கள் வந்தார்கள். உன்னுடைய அப்பாவின் சமாசாரம் தெரியாதா? ஒன்றும் கிடையாது என்று சொல்லி விரட்டிஅடித்து விட்டார்!" இதைக் கேட்டதும் ராகவனுடைய முகம் சுருங்கியதைக் காமாட்சிஅம்மாள் கவனித்தாள். ஆனால், அதன் காரணத்தை அவள் நன்கு உணர முடியவில்லை.

சற்று நேரம் ராகவன் முகத்தைத் தொங்கப் போட்ட வண்ணம் இருந்தான். காமாட்சி அம்மாளும் அவனிடம் பேச்சுக் கொடுக்கப் பயந்து கொண்டு சும்மா இருந்தாள். ராகவன் இன்னும் ஏதோ முக்கியமான விஷயம் தன்னைக் கேட்கப் போகிறான் என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக்குத் தெரிந்திருந்தது. திடீரென்று அவன் தலையைத் தூக்கித் தாயாரை ஏறிட்டுப் பார்த்து "அம்மா! அப்பாவும் நீயுமாகச் சேர்ந்து என் வாழ்க்கையைக் கெடுத்துவிட உத்தேசித்திருக்கிறீர்களா? நான் சந்தோஷமா யிருப்பதில் உங்கள் இருவருக்கும் இஷ்டமில்லையா? அப்பாவின் சுயநலம் உன்னையும் பிடித்துக் கொண்டு விட்டதா?" என்று ஆத்திரம் நிறைந்த குரலில் கேட்டான்.

இந்த மாதிரி கேள்வியைத்தான் காமாட்சி அம்மாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால், அவள் கொஞ்சமும் பரபரப்பு அடையாமல் சாவதானமாகப் பதில் சொன்னாள். "ராகவா! உன் அப்பா சமாசாரத்தை என்னிடம் கேட்காதே! என்னைப் பொறுத்த வரையில் கேள், சொல்கிறேன். உன்னைப் பெற்ற நாளிலிருந்து இன்று வரையில் இந்த இருபத்து நாலு வருஷமாக, உன்னுடைய சந்தோஷத்தைத் தவிர எனக்கு வேறு எண்ணமே கிடையாது! உன்னுடைய சந்தோஷத்துக்காக என்னை என்ன செய்ய வேண்டும் என்கிறாயோ, அதைச் சொல்! கிணற்றில் விழச் சொன்னால் விழுந்து விடுகிறேன்; விஷத்தைக் குடிக்கச் சொல்கிறாயா, குடித்து விடுகிறேன். ஆனால், உன்னுடைய சந்தோஷத்தைக் காட்டிலும் என்னுடைய சுய நன்மையைப் பெரியதாகக் கருதுகிறேன் என்று மட்டும் சொல்லாதேடா அப்பா!" என்று கூறிவிட்டுக் கண்களில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.

மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராகவனைப் பார்த்துக் காமாட்சி அம்மாள் மறுபடியும், "எதனால் அப்படிக் கேட்டாய், ராகவா? என்ன காரணத்தினால் என்னைச் சுயநலக்காரி என்று சொல்கிறாய்?" என்றாள். "எனக்குப் பிடிக்காத பெண்ணை என் தலையில் கட்டிவிடப் பார்க்கிறாயே, அதற்குப் பெயர் என்ன....?" என்று ராகவன் பொருமினான். "ராகவா! நீ எவ்வளவோ தெரிந்தவன்; படிப்பிலே இணையில்லையென்று இந்திய தேசமெங்கும் பேர் வாங்கியவன். அப்படியிருந்தும் என் பேரில் தவறான பழியைப் போடுகிறாயே? உனக்குப் பிடிக்காத பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளும்படி நான் சொல்வேனா? எப்போதாவது சொன்னதுண்டா? உன் அப்பா எது வேணுமானாலும் சொல்வார். வீடு கட்டிய கடன் பாக்கியை அடைப்பதற்கு உனக்கு வரும் வரதட்சணையை அவர் நம்பியிருக்கிறார். அவர் பணத்தாசை பிடித்தவர், ஆனால் நான் எப்போதாவது பணத்தைப் பெரிதாய் நினைத்ததுண்டா? ராகவா வாசலில் வருகிற பிச்சைக்காரப் பெண்ணை உனக்குப் பிடித்திருந்து அவளைக் கலியாணம் பண்ணிக்கொள்கிறேன் என்று நீ சொன்னால், அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். செல்வச் சீமானுடைய பெண்ணைக் காட்டிலும் அவளை அதிக அன்போடு வரவேற்பேன். உனக்குப் பிடிக்காத பெண்ணை ஒரு நாளும் கலியாணம் செய்து கொள்ளும்படி சொல்ல மாட்டேன். உன் அப்பா சொல்கிறார் என்று நீ சம்மதித்தால்கூட நான் சம்மதிக்க மாட்டேன்!" என்று காமாட்சி அம்மாள் கூறியபோது அவளுடைய கண்களிலிருந்து மீண்டும் கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

"இந்த மாதிரி நீ கண்ணீர்விட ஆரம்பித்தால் நான் உன்னோட பேசவே தயாராயில்லை. எங்கேயாவது போய்த் தொலைகிறேன் சமுத்திரத்திலே விழுந்து சாகிறேன். இல்லாவிட்டால் ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்கிறேன்...." "வேண்டாமடா ராகவா! வேண்டாம்! இப்படியெல்லாம் சொல்லாதே! நான் இனிமேல் கண்ணீர் விடவில்லை. நீ கேட்க வேண்டியதைக் கேள்; செய்ய வேண்டியதைச் செய்!" என்று கூறிக் காமாட்சி அம்மாள் மீண்டும் நன்றாய்க் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். "நான் சந்தோஷமாயிருப்பதுதான் உன்னுடைய விருப்பம் என்றால், தாரிணியை ஏன் அப்படி விரட்டி அடித்தாய்?" என்று ராகவன் மிக்க எரிச்சலுடன் கேட்டான்.

"ஐயையோ! இதென்ன வீண் பழி! நானா அந்தப் பெண்ணை விரட்டி அடித்தேன்? உண்மையாகச் சொல், ராகவா! நான் விரட்டி அடித்தால் அவள் போய்விடக் கூடிய பெண்ணா....?" "அவள் ஏன் அவ்வளவு அவசரமாகப் போகவேண்டும்? நான் வெளியே போய்த் திரும்புவதற்குள்ளே அவள் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பறந்தோடிப் பம்பாய் மெயில் ஏறிவிட்டாளே? அப்படி அவள் மிரண்டு ஓடும்படி ஏதோ நீ சொல்லித்தானே இருக்க வேண்டும்?" "ராகவா! ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாகச் சொல்லுகிறேன், அவளை ஒரு வார்த்தைகூட நான் தப்பாகச் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவள் நீ வருகிற வரையில் இருந்து உன்னிடம் புகார் சொல்லியிருக்க மாட்டாளா? அவள் என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? பயந்தவளா? உன் பேரில் அவளுக்கு உண்மையில் அன்பு இருந்தால் அப்படி நான் சொன்னதற்காகப் போய் விடுவாளா? யோசித்துப் பார்?" ராகவன் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்த பிறகு, "பின்னே என்னதான் இங்கே உண்மையில் நடந்தது, நான் இல்லாதபோது; நீ என்ன சொன்னாய்? அவள் என்ன சொன்னாள்?"

"ஐயையோ! அவள் சொன்னதையெல்லாம் சொல்வதற்கு என் நாக்குச் கூசும். அவள் என்னவோ நினைத்துக் கொண்டு வந்தாளாம். வந்து பார்த்த பின் ரொம்ப ஏமாற்றமாய்ப் போய் விட்டதாம். நானும் உன் அப்பாவும் ரொம்பக் கர்நாடகமாம்? எங்களைப் பற்றி அவள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் உன்னைச் சுத்த அசடு என்று சொன்னாள், ராகவா! முதல் கிளாசிலிருந்து எம்.ஏ. பரீட்சைக்குப் பரீட்சை மெடலும் பரிசும் வாங்கிய உன்னை 'அசடு' என்று சொன்னாள் ராகவா! அதுதான் எனக்குப் பொறுக்கவில்லை. புடவை கட்டிக் கொண்ட பெண் யாரைப் பார்த்தாலும் நீ பின்னோடு பல்லைக் காட்டிக் கொண்டு போகிறாயாம்! உனக்கு நல்ல புத்தி சொல்லி அடக்கி வைக்கும்படி சொல்லிவிட்டுப் போவதற்காக மதராஸுக்கு வந்தாளாம். இன்னும் என்னவெல்லாமோ கர்ண கடூரமாகச் சொன்னாள். என்னால் பொறுக்கவே முடியவில்லை!" என்று சொல்லிக் கண்களைப் புடவைத் தலைப்பினால் மூடிக் கொண்டு காமாட்சி அம்மாள் விம்மினாள். ராகவனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் கோபம் அம்மாவின் பேரில் வந்ததா என்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை.

தாரிணியின் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு விஷயம் ராகவனுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. "அழுகையை நிறுத்து அம்மா! இன்னும் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்! தாரிணியின் கால்களை எதற்காகவாவது நீ தொட்டதுண்டா? தொட்டு அவளை ஏதாவது கேட்டுக் கொண்டாயா?" என்றான் ராகவன். "ஓகோ! அதை அவள் உனக்கு எழுதியிருக்கிறாளா? என்னமெல்லாம் பொய், புனை சுருட்டுச் சேர்த்து எழுதியிருக்கிறாளோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடந்ததை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். அவள் உன்னைப் பற்றி அலட்சியமாய் பேசிய பிறகு எனக்குக் கொஞ்சம் பயமாய்ப் போய்விட்டது. அதனால் நான் அவளிடம், "பெண்ணே! என் பிள்ளைக்கு இந்தப் பக்கத்தில் ஆயிரம் பேர் இருபதினாயிரம், முப்பதினாயிரம் பணத்துடன் பெண்ணைக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், ராகவனுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது, எப்படியாவது அவன் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்பதுதான் என் பிரார்த்தனை. சாதி, குலம் நடவடிக்கை யெல்லாம் வித்தியாசமாயிருந்தாலும் ஏதோ எங்கள் பாஷையாவது நீ பேசுகிறாயே, அதுவரையில் சந்தோஷந்தான். ஒரே ஒரு பிரார்த்தனை உனக்குச் செய்து கொள்கிறேன். என்னையும் என் குழந்தையையும் பிரித்து விடாதே! அவன் ஒருவனுக்காகத்தான் இந்த உயிரை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அவன் நன்றாயிருக்க வேண்டுமென்றுதான் அல்லும் பகலும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன். அவனும் நீயும் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் என்னையும் உங்களோடு அழைத்துக் கொண்டு போ! உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்து கொண்டிருப்பதுதான் எனக்கு இந்த வாழ்க்கையில் இனிமேல் சந்தோஷம்! இந்த ஒரு வரத்தை எனக்குக் கொடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!' என்று சொல்லி அவளுடைய காலைத் தொட்டேன். உடனே, 'டாம்! நான்ஸென்ஸ்!' என்றெல்லாம் உன் அப்பா திட்டுவது போல் என்னைத் திட்டினாள். அதோடு, 'உங்களுக்கு வயதாச்சே புத்தி எங்கே போச்சு! நானோ சாதி, மதம் ஒன்றும் இல்லாதவள். கர்நாடக வைதிகமாகிய உங்களுக்கும் எனக்கும் எப்படிச் சரிக்கட்டி வரும்? உங்கள் பிள்ளைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லித் திருத்துங்கள்!' என்று சொல்லிவிட்டு விடு விடு என்று போய்விட்டாள். அப்பா, ராகவா!' நான் சொல்வதை நம்புவது உனக்குக் கஷ்ட மாய்த்தானிருக்கும். அவள் ஏன் அப்படி அவசரப்பட்டுக்கொண்டு போனாள் என்று எனக்கே புரியவில்லை. அவள் இங்கே இருந்தபோது யாரோ ஒருவன் வந்து கதவைத் தட்டி, 'தாரிணி அம்மாள் இங்கே இருக்கிறாளா?' என்று கேட்டான். இவள் அவசரமாய் எழுந்து போய் ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். கடிதத்தைப் படித்ததும் அவள் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 'நான் போய் வருகிறேன். உங்கள் பிள்ளையைக் கெடுத்துவிடுவேன் என்று பயப்படவேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் நடந்து வாசலில் நின்ற காரில் ஏறிக்கொண்டு போய்விட்டாள். போகும் அவசரத்தில் அவளுக்கு வந்த கடிதத்தைக்கூடக் கீழே போட்டுவிட்டுப் போய்விட்டாள். அதை நான் எடுத்து வைத்திருக்கிறேன்; நீ வேணுமானாலும் அதைப் பார்!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி அம்மாள் எழுந்து போய் அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். ராகவன் அந்தக் கடிதத்தை வாங்கிக் கைகள் நடு நடுங்க நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளப் படித்துப் பார்த்தான். அதில் சுருக்கமாக நாலைந்து வரிகள்தான் எழுதியிருந்தன.

"என் கண்ணே! என்னுடைய காரியம் நான் நினைத்ததைக் காட்டிலும் சீக்கிரம் ஆகிவிட்டது. இன்று மாலை மெயிலில் அவசியம் பம்பாய் புறப்படவேண்டும். உடனே ஹோட்டலுக்கு வர முடியாவிட்டால், ரயில்வேஸ்டேஷனில் வந்து சேர்ந்து கொள். உனக்கும் டிக்கட் வாங்கி விடுகிறேன். மிஸ்டர் ராகவன் காதல் தமாஷ் எப்படி இருக்கிறது? ராகவனுக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது போதும். இன்னும் அவனுக்குத் தண்டம் வைக்காதே; ஏதாவது விபரீதத்தில் முடியப் போகிறது!" இதைப் படித்து வருகையில் ராகவனுடைய கண்கள் சிவந்து நெருப்புப் பொறி பறந்தது. அவனுடைய நெஞ்சில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கியது; கொல்லன் துருத்தியில் வரும் காற்றைப்போல் அவனுடைய மூச்சு கொதித்துக் கொண்டு வந்தது. கடிதத்தைப் படித்து முடித்ததும் ஆகாசம், பூமி, திக்குத் திகாந்தம் எல்லாம் தாறுமாறாக வெடித்தன. பட்டப் பகலில் இருள் கவிந்தது வானத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் பொலபொலவென்று உதிர்ந்து ராகவன் தலைமீது விழுந்தன.

இத்தகைய உணர்ச்சிகளுக்கெல்லாம் உள்ளான ராகவன் சற்று நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டுத் திடீரென்று எழுந்தான். அம்மாவின் முன்னிலையில் தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். "என்னைப்போல் மூடன் யாரும் இல்லை, தாரிணி சொன்னது சரிதான். அவளுடைய காலைப் பிடிக்கும்படியான நிலையில் உன்னை வைத்தேன் அல்லவா? இந்த க்ஷணம் முதல் நீதான் எனக்குத் தெய்வம். நீ என்ன சொல்லுகிறாயோ அதைக் கேட்கிறேன். நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்கிறாயோ, அவளையே கலியாணம் செய்து கொள்கிறேன்!" என்றான். இவ்விதம் சொல்லிவிட்டுக் கையில் உள்ள கடிதத்துடன் விடு விடு என்று நடந்து மச்சுக்குப் போனான். அங்கே மேஜை மேலே இருந்த தாரிணியின் கடிதத்தையும் தாரிணிக்குத் தான் எழுத ஆரம்பித்திருந்த கடிதத்தையும் சேர்த்துச் சுக்குச்சுக்காகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டான். காமாட்சி அம்மாள் பூஜை அறைக்குள்ளே சென்று ஸ்ரீராம பட்டாபிஷேக படத்துக்கு முன்னால் பயபக்தியுடன் நமஸ்காரம் செய்து எழுந்தாள். இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதிநான்காம் அத்தியாயம்
வண்டி வந்தது

இந்தக் கதையின் வாசகர்களை இப்போது நாம் பம்பாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. பம்பாய்க்கு மட்டுமல்ல... கல்கத்தாவுக்கும் கராச்சிக்கும் டில்லிக்கும் லாகூருக்கும் கூட நம்முடன் வாசகர்கள் வர வேண்டியதாயிருக்கும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் அவ்வளவு தூரதூரமான இடங்களில் இருந்து கொண்டு அங்கங்கே நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்படி யாகவும் நேரிடக் கூடும்!

பம்பாய் நகரின் ஒரு பகுதியான தாதரில், அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீதி. அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீடு. பல வீதிகள் ஒரே மாதிரியாயிருப்பதாலும் பல வீடுகள் ஒன்றைப்போல் இருப்பதாலும் அடையாளங் கண்டுபிடிக்க முடியாதவை என்று சொன்னோம். நாம் குறிப்பிடும் வீடு ஐந்து மாடிக் கட்டிடம். அதைப்போல் அந்த வீதியின் இரு பக்கங்களிலும் அநேக கட்டிடங்கள் இருந்தன. ஒன்றைப்போல ஒன்று அச்சில் வார்த்ததுபோல் தோற்றமளித்தன. வீதி முனையிலிருந்து மூன்றாவது வீடு நாம் குறிப்பிடும் வீடு என்று அடையாளம் வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் ஒவ்வொரு மாடியிலும் பத்துக் குடித்தனங்கள் வீதம் மொத்தம் ஐம்பது குடித்தனங்கள்; ஜனத்தொகை மொத்தம் முந்நூறுக்குக் குறைவு இல்லை. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அறைகளிலோ மூன்று அறைகளிலோ குடியிருந்தன. குடியிருக்கும் அறைகளைத் தவிர ஒரு குளிக்கும் அறையும் உண்டு.

அந்த வீட்டில் நாலாவது மாடியில் மூன்று அறைகளும் ஒரு குளிக்கும் அறையும் சேர்ந்த ஜாகையில் கிட்டாவய்யரின் சகோதரி ராஜம்மாள் சென்ற இருபது வருஷ காலமாக வசித்து வந்தாள். ஹிந்து சமூகப் பெண் குலத்தின் உத்தம குணங்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து உருவெடுத்தாற்போன்ற அந்த மாதரசி கலியாணமாகிக் கணவனைக் கைப்பிடித்துப் பம்பாய்க்கு வந்த பிறகு அந்த மூன்று அறைக்குள்ளேயே தன்னுடைய ராஜ்ய பாரத்தைச் செலுத்தி வந்தாள். இருபது ஆண்டு இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த மூன்று அறைக்குள்ளேயே அவள் அனுபவித்தாள். குழந்தைகளைப் பெற்று வளர்த்ததும் அங்கேதான். குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு அலறி அழுததும் அங்கேதான். கூடிக்குலாவிச் சிரித்துக் களித்ததும் அங்கேதான். கணவனுடைய விசித்திர நடவடிக்கைகளை எண்ணி உள்ளம் வெதும்பி இதயம் வெடித்துக் கண்ணீர் பெருக்கியதும் அதே இடத்தில்தான்.

அந்த மூன்று அறைகளில் ஒன்றிலே தற்சமயம் ராஜம்மாள் படுத்த படுக்கையாகி, பிழைப்போம் என்ற நம்பிக்கை யையும் இழந்து, இருபது தினங்களுக்கு மேலாகப் படுத்திருந்தாள். வீட்டில் வைத்திய சிகிச்சைகளுக்கும், பணிவிடைக்கும் அவ்வளவு வசதி போதாது என்று அவளை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதாக அவளுடைய கணவர் துரைசாமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆஸ்பத்திரிக்குப் போக ராஜம் கண்டிப்பாக மறுத்து விட்டாள். "இருபது வருஷமாக இருந்த இடத்திலேயே இருந்து கண்களை மூடுகிறேன்; ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டேன்" என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.

பத்து வருஷத்துக்கு முன்னால் ஒரு மகாராஷ்டிர வேலைக்காரி, வீட்டுச் சில்லறை வேலைகள் செய்வதற்காக வந்தாள். ராஜத்தை அவளுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. வீட்டு வேலைகளை எல்லாம் அவளே இப்போது செய்தாள். ராஜம் படுத்துக் கொண்ட பிறகு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டதோடு ராஜத்துக்குக் கஞ்சி வைத்துக் கொடுப்பது மருந்து கொடுப்பது முதலிய காரியங்களையும் அந்த வேலைக்காரியே செய்து வந்தாள். கூடிய வரையில் குழந்தை சீதா அவளுக்கு உதவி புரிந்து வந்தாள். சீதா பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி ஒரு வருஷம் ஆயிற்று. ராஜம்மாள் மிக்க முன் யோசனையுடன் குழந்தையை எந்த மாதிரி இடத்தில் கலியாணம் செய்து கொடுக்க வேண்டியிருக்குமோ என்னவோ என்று எண்ணி, அவளைச் சமையல் முதலிய வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு வந்தாள். அது இப்போது மிக்க சௌகரியமாயிருந்தது. இதோ இந்தக் குறுகலான மாடி வராந்தாவில் கைப்பிடிச் சுவர் ஓரமாக நின்று கீழே வீதியைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது யார்?.. சந்தேகம் என்ன? அகன்று விரிந்த அவளுடைய வட்ட வடிவமான கண்களிலிருந்தே தெரிந்து விடுகிறதே! லலிதாவின் அருமை அத்தங்காள் சீதாதான் அவ்வளவு ஆவலுடன் வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அடுத்த நிமிஷமே தீர்ந்து விடுகிறது. உள்ளே இருந்து, "சீதா!" என்று ஒரு தீனக்குரல் கேட்கிறது. "அம்மா! இதோ வந்துவிட்டேன்!" என்று வீணைக் குரலில் கூவிக்கொண்டு சீதா உள்ளே ஓடுகிறாள். மூன்று அறைகளில் ஒன்றில் படுத்திருக்கும் தாயாரின் அருகே செல்கிறாள். "சீதா! ஏதோ கார் சத்தம் கேட்டதே!" என்று ராஜம்மாள் தன் மெலிந்த முகத்திலே ஆர்வம் ததும்பக் கேட்கிறாள். "இல்லை, அம்மா! அது வேறு எங்கேயோ போகிற கார். இன்னும் நேரமாகவில்லை, அம்மா! ரயிலே இப்போது தான் வந்திருக்கும்! ஸ்டேஷனிலிருந்து இங்கே வரக் கால்மணி நேரமாவது வேண்டாமா! இப்படி அவசரபட்டால் என்ன செய்கிறது?" என்று கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டுகிறாள் சீதா. இதற்குள் மறுபடியும் கார் சத்தம் கேட்கவே, சீதா வராந்தாவுக்கு ஓடி வந்து வீதிப்புறம் எட்டிப் பார்த்தாள். ஒரு மோட்டார் வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. "அம்மா! மாமா வந்தாச்சு! நான் கீழே போய் அழைத்து வருகிறேன்!" என்று கூவிக்கொண்டே சீதா மாடிப்படிகளின் வழியாக ஓர் எட்டில் இரண்டு மூன்று படிகளைத் தாண்டிக் கொண்டு இறங்கினாள். இரண்டு மச்சு இறங்கியதும் கையில் தோல் பையுடன் டாக்டர் வருவதைப் பார்த்துத் தயங்கி நின்றாள். "டாக்டர்! உங்கள் வண்டியா இப்போது வந்தது! ஊரிலேயிருந்து மாமா வந்து விட்டாராக்கும் என்று நினைத்தேன்!" என்றாள். "ஓகோ! உன் மாமா இன்றைக்கு வருகிறாரா? அவர் வந்த பிற்பாடாவது உன் அம்மாவுக்கு உடம்பு சரியாகிறதா, பார்ப்போம்!" என்றார் டாக்டர். வழக்கம்போல் சீதா டாக்டர் கையிலிருந்து தோல் பையை வாங்கிக் கொண்டாள். பிறகு இருவரும் மௌனமாக மேலே ஏறி வந்தார்கள்.

நாலாவது மாடி வராந்தாவுக்கு வந்ததும் சீதாவின் ஆவல் அவளை மறுபடியும் வீதிப் பக்கம் எட்டிப் பார்க்கச் செய்தது. அச்சமயம் ஒரு கோச்சு வண்டி வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. அந்த வண்டியிலிருந்து தன் தகப்பனாரும் மாமாவும் இறங்குவதைச் சீதா பார்த்தாள். உடனே சீதாவின் மௌனம் கலைந்து விட்டது. "அம்மா! அம்மா! மாமா வந்தாச்சு! நிஜமாகவே வந்தாச்சு!" என்று கூவிக்கொண்டு உள்ளே போனவள், "முதலில் வந்தது மாமா இல்லை, அம்மா! டாக்டர் வந்தார்! டாக்டரை அழைத்துக்கொண்டு நான் மேலே வந்தேன். மேலே வந்ததும் வீதியில் பார்த்தால், அப்பாவும் மாமாவும் கோச்சு வண்டியில் வந்து இறங்குகிறார்கள். ஒரு டாக்ஸி வைத்துக்கொண்டு வரக்கூடாதோ? அதனால்தான் இவ்வளவு தாமதம்...." என்று கடிகாரம் அலாரம் மணி அடிப்பது போலப் பொழிந்தாள் சீதா. "அதனால் என்ன, சீதா? ஒருவேளை டாக்ஸி கிடைத்திராது. நீ மறுபடியும் கீழே போக வேண்டாம், அம்மா! இங்கேயே டாக்டருக்கு ஒத்தாசையாயிரு! அவர்கள் வந்து விடுவார்கள்" என்றாள் ராஜம். சீதா கொஞ்சம் அதிருப்தியுடன் அங்கேயே இருந்தாள். டாக்டர் வழக்கம் போலத் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்தார். முதுகிலே குழாயை வைத்துப் பார்த்தார்; தொண்டைக்குள் டார்ச் விளக்குப் போட்டுப் பார்த்தார். எல்லாம் பார்த்துவிட்டு, 'பிரிஸ்க்ரிப்ஷன்' மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் துரைசாமியும் கிட்டாவய்யரும் வந்து விட்டார்கள்.

ராஜத்தைப் பார்த்ததும் கிட்டாவய்யர் திகைத்துப் போனார். கிராமத்தை விட்டுப் புறப்படும்போது கிட்டாவய்யர் உற்சாகக் குறைவுடன் கிளம்பினார். ஆனால், சென்னையில் பத்மலோசன சாஸ்திரி வீட்டுக்குப் போய் 'மாப்பிள்ளைப் பைய'னைப் பார்த்ததின் காரணமாக அவருக்குக் கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. வரன் நிச்சயமானதாகவே வைத்துக் கொள்ளலாம் என்று சுப்பய்யர் உறுதி சொல்லியிருந்தார். ஆகவே, சென்னையிலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டபோது கிட்டாவய்யர் உற்சாகமாயிருந்தார். அந்த உற்சாகம் காரணமாக, 'ராஜத்துக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமாயிராது. சரசு சொன்னமாதிரி கொஞ்சம் அதிகப் படுத்தியே கடிதத்தில் எழுதியிருக்கலாம்' என்று அவருடைய மனம் எண்ணத் தொடங்கியது.

ஸ்டேஷனில் அவரைச் சந்தித்த துரைசாமியும் 'காபரா'ப் படுத்தும் முறையில் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே பல நாள் காய்ச்சலினால் உலர்ந்து மெலிந்து போயிருந்த ராஜத்தைத் திடீரென்று பார்த்ததும் கிட்டாவய்யரின் அன்பு நிறைந்த உள்ளம் பெரும் துன்பத்துக்கு உள்ளாயிற்று. ராஜத்தின் உடல் மெலிவு மட்டுமல்ல; அவளுடைய முகத்தோற்றத்தில் பிரதிபலித்த ஏதோ ஒரு சாயல், 'இவள் பிழைப்பது துர்லபம்' என்ற எண்ணத்தைக் கிட்டாவய்யரின் மனதில் உண்டாக்கியது. அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'ராஜம் பிழைப்பாள்' என்று உறுதி பெற விரும்பியவராய், கண்ணீர் ததும்பிய கண்களுடன் கிட்டாவய்யர் டாக்டரை நோக்கினார்.

"என்ன, டாக்டர்? ராஜத்துக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டார். "நீங்கள் இன்று வந்து விட்டீர்கள் அல்லவா? இனிமேல் ஒருவேளை சீக்கிரம் குணமாகிவிடும். உங்கள் சகோதரிக்கு உடம்புக் கோளாறு காற்பங்கு; மனக் கோளாறு முக்காற்பங்கு; 'எனக்கு உடம்பு குணமாகாது' என்று இந்த அம்மாள் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டிருக்கிறாள். நான் மருந்து கொடுத்து என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் பிரயத்தனம் செய்து உங்கள் சகோதரிக்கு மனோதைரியம் உண்டாக்குங்கள், அப்போது உடம்பும் சரியாய்ப் போய்விடும்." இவ்விதம் சொல்லிவிட்டு டாக்டர் புறப்பட்டார். அவரைக் கொண்டு போய் விடுவதற்காகத் துரைசாமியும் கூடச்சென்றார். கிட்டாவய்யர் தம் அருமைச் சகோதரியின் அருகில் சென்று உட்கார்ந்து, "ராஜம்! டாக்டர் சொன்னதைக் கேட்டாயல்லவா? தைரியமாயிருக்க வேண்டும். அம்மா! வீணாக மனதை அதைரியப்படுத்திக் கொள்ளக்கூடாது!" என்றார்.

"அண்ணா! டாக்டர் சொல்லுவதை நீ நம்புகிறாயா? என்னைப் பார்த்தால் பிழைப்பேன் என்று தோன்றுகிறதா!" என்று ராஜம் நேரடியாகக் கேட்டதும் கிட்டாவய்யரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதுவரைக்கும் அவருடைய கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீர் இப்போது கலகலவென்று கொட்டியது. அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "நானே உன்னை அதைரியப்படுத்துகிறேன்! இத்தனை நாளும் உன்னைக் கவனியாமல் இருந்து விட்டேனே என்பதை நினைத்தால் எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது" என்றார்.

"அண்ணா! உன் பேரில் என்ன தவறு? இத்தனை நாளும் என்னை நீ கவனித்து ஆகக்கூடியது ஒன்றுமில்லை. என்னுடைய விதிக்கு நான் பிறந்தவள். நீ என்ன செய்வாய்? ஒருவேளை நீ இப்போது வராமல் இருந்து விடுவாயோ என்றுதான் பயந்து கொண் டிருந்தேன். எப்படியாவது நீ வருகிறவரையில் உயிரோடு என்னை வைத்திருக்க வேண்டும் என்றுதான் பகவானை பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய். என் மனத்திலுள்ளதை உன்னிடம் சொல்லி விட்டால், பாரம் தீர்ந்தது, அப்புறம் நிம்மதியாகக் கண்ணை மூடிப் பரமாத்மாவின் பாதாரவிந்தத்தை அடைவேன்!"

மீறி வந்த துக்கத்தையும் விம்மலையும் அடக்கிக் கொண்டு கிட்டாவய்யர், "சீ, பைத்தியமே! இது என்ன இப்படிப் பேசுகிறாய்? அதெல்லாம் உனக்கு ஒன்றும் வராது. சீதாவுக்குக் கல்யாணம் பண்ணிப் பேரன் பேத்திகள் பெற்றெடுத்துச் சௌக்கியமாயிருப்பாய்!" என்றார். அவநம்பிக்கையைக் குறிப்பிடும் சோகப் புன்னகை புரிந்தாள் ராஜம். மரணச் சாயல் படர்ந்திருந்த அவளுடைய முகத்துக்கு அந்தப் புன்னகை ஒரு கணம் உயிர் ஒளி அளித்தது. அறையில் கதவண்டை சீதா கண்ணீருடன் நின்று தங்களுடைய சம்பாஷணை யைக் கேட்டுக் கொண்டிருப்பதை ராஜம் கவனித்தாள். கையினால் சமிக்ஞை செய்து அவளை அருகில் அழைத்தாள். "சீதா! ஊரிலிருந்து மாமா வந்திருக்கிறாரே? காப்பி போட்டுக் கொடுக்க வேண்டாமா?" என்று ராஜம்மாள் சொன்னதும், சீதா, "இதோ ஒரு நிமிஷத்தில் போட்டுக் கொண்டு வருகிறேன் அம்மா!" என்று சமையலறைப் பக்கம் ஓடினாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினைந்தாம் அத்தியாயம்
ராஜத்தின் ரகசியம்

சீதா அப்பால் சென்றதும், ராஜம், "அண்ணா! பிற்பாடு எப்படி இருக்குமோ என்னமோ? அவகாசம் கிடைக்குமோ? கிடைக்காதோ? நான் சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிடவேண்டும். அதற்கு முன்னால் ஒரு காரியம் இருக்கிறது! பெட்டி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா? அதைக் கொஞ்சம் கொண்டு வா!" என்றாள். அவளுடைய பரபரப்பின் காரணத்தைச் சிறிதும் அறியாத கிட்டாவய்யர், "பெட்டி கொண்டு வந்திருக்கிறேன். ராஜம்! தாழ்வாரத்தில் இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன இப்போது அவசரம்? மெதுவாய்க் கொண்டு வந்தால் போச்சு. பெட்டி நல்ல கனம்; அதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியாது! "என்றார். "அதற்காகச் சொல்லவில்லை, அண்ணா! வேறு காரணம் இருக்கிறது. பெட்டியை உள்ளே கொண்டு வா! அப்படியே வாசலில் எட்டிப் பார்த்து இவர் டாக்டரோடு காரில் ஏறிக் கொள்கிறாரா என்று கவனித்து வா! அநேகமாக மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போவார்!" என்றாள் ராஜம்.

"நீ எதற்காக இவ்வளவு அதிகமாய்ப் பேசவேண்டும்? நான் அடுத்த ரயிலுக்குப் போகிறதாக உத்தேசமில்லை! மெதுவாகப் பேசிக் கொள்ளலாமே!" என்று கிட்டாவய்யர் சொல்லுவதற்குள்ளே, ராஜம்மாள், "அண்ணா! உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், கொஞ்சம் நான் சொல்லுகிறபடி செய்! ரொம்ப முக்கியமான விஷயம், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் பிறகு என் மனது நிம்மதியடையும். சொல்லி முடிகிறவரையில் பெரிய பாரமாயிருக்கும். சீக்கிரமே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா!" என்றாள். இதற்குமேல் அவளோடு விவகாரம் செய்வதில் பயனில்லையென்று கிட்டாவய்யர் அறைக்கு வெளியே சென்று தாழ்வாரத்தின் ஓரமாக எட்டிப் பார்த்தார். ராஜம் எதிர்பார்த்தபடியே துரைசாமி காரில் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டார். தாழ்வாரத்தில் வைத்திருந்த பெட்டியை அறைக்குள் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.

"அண்ணா! கொஞ்சம் கதவைச் சாத்து! சீக்கிரம் பெட்டியை இங்கே என் பக்கத்தில் கொண்டு வா!" என்றாள். கிட்டாவய்யர் அப்படியே செய்தார்; செய்துவிட்டு, ராஜம்மாள் செய்த காரியத்தை வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தார். ராஜம் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தலைமாட்டில் வைத்திருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை அவசரமாக எடுத்தாள். தலையணை உறையைக் கழற்றிவிட்டு ஒரு பக்கத்தில் போட்டிருந்த தையலை அவசர அவசரமாகப் பிரித்தாள். தலையணைப் பஞ்சுக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள். முதலில் இரண்டு கத்தை ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தன. பிறகு மிக அழகிய வேலைப்பாடு அமைந்த ரத்தின மாலை ஒன்று வெளிவந்தது. மாலையில் தொங்கிய பதக்கத்தில் வைரங்கள் ஜொலித்தன. வைரங்களுக்கு மத்தியில் பொன்னிறக் கோமேதகம் ஒன்று கண்ணைக் கவர்ந்தது.

"அண்ணா! அண்ணா! இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டையும் இந்த ரத்தின மாலையையும் உன் பெட்டிக்குள்ளே பத்திரமாக வை! சீக்கிரம் வை!" என்றாள். கிட்டாவய்யர் தயங்கினார், அவர் உள்ளத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்கள் உதித்தன. "ராஜம்! இது என்ன?" என்றார். "இது ஒன்றையும் நான் திருடிவிடவில்லை, அண்ணா! முதலில் உன் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வை! பிறகு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்; சொல்லித்தான் ஆகவேண்டும்!" கிட்டாவய்யர் ஏதோ விசித்திரமான கனவு காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின மாலையையும் எடுத்துப் பெட்டிக்குள்ளே வைத்தார். பெட்டியைப் பூட்டிவிட்டுத் தலை நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தார்.

ராஜம் மறுபடியும் ஒரு தடவை புன்னகை புரிய முயன்றாள். அந்த முயற்சியின் பலன் கிட்டாவய்யருக்கு விபரீதமாகப் பட்டது. "ராஜம்! உடம்புக்கு ஏதாவது செய்கிறதா? மறுபடியும் டாக்டரைக் கூப்பிடச் சொல்லட்டுமா?" என்று ஆதுரமாய்க் கேட்டார். "வேண்டாம்! வேண்டாம்! டாக்டர் வந்து என்னத்தைச் செய்து விடுவார், பாவம்! அவர்தான் உன்னிடம் சொல்லி விட்டாரே? இனிமேல் மனோ தைரியந்தான் எனக்கு மருந்து! கதவைத் திறந்துவிட்டு வா; எல்லாம் சொல்லுகிறேன்!" என்று ராஜம் கூறிப் பழையபடி தலையணையில் சாய்ந்து கொண்டாள். இத்தனை நேரம் உட்கார்ந்தபடி பேசிய காரணத்தினால் அவளுக்கு மூச்சு வாங்கிற்று.

கிட்டாவய்யர் படுக்கையின் அருகில் வந்து உட்கார்ந்து கவலையுடன் அவளைப் பார்த்தார். "அண்ணா! நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லாமல் சாகமாட்டேன். சொல்லாமல் செத்தால், என் நெஞ்சு வேகாது!...." "ராஜம்! இப்படி யெல்லாம் பேசாமல் இருக்க மாட்டாயா? நீ சும்மா இருந்தாலே போதும்! நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை!" என்றார் கிட்டாவய்யர். ராஜம் சற்று நேரம் சும்மா இருந்தாள். மூச்சு வாங்கியது நின்றது, சிறிது களைப்பு நீங்கியது. "நீ ஒன்றும் கேட்க மாட்டாய்! ஆனால் நான் சொல்லித் தீர வேண்டும். இப்போது கொடுத்தேனே, இந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் சீதாவின் கலியாணத்திற்காகக் கொடுத்திருக்கிறேன். ரத்தின மாலையும் கலியாணத்தின்போது அவளுக்குப் போடுவதற்காகத்தான். அண்ணா! நீயே சொன்னாய், - இருபது வருஷமாக உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லையென்று. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேண்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப் பக்கத்திலேயே நல்ல வரனாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். ஆகட்டும் என்று வாயைத் திறந்து சொல்லு. சொன்னால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். டாக்டர் சொன்னது போல் ஒரு வேளை உடம்பு குணமானாலும் ஆகும்!" என்றாள்.

"ராஜம்! இப்படி நீ என்னைக் கேட்க வேண்டுமா? சீதாவை அப்படி நிராதரவாய் விட்டுவிடுவேனா? லலிதாவைப் போல் சீதாவும் என்னுடைய பெண் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் நம்ம பக்கத்திலேயே வரன் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறேன். நீயும்கூட இருந்து பார்த்துச் சந்தோஷப்படப் போகிறாய். ஆனால், சீதாவின் கலியாணத் துக்காக நீ உன் அகத்துக்காரருக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்துக் கொடுக்க வேண்டுமா? கிராமாந்தரத்து ஸ்திரீகள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கேள்விப்பட் டிருக்கிறேன். வீட்டுச் சாமான்களை விற்றும் செட்டுப் பிடித்தும் நாட்டுப் புறத்து ஸ்திரீகள் பணம் சேர்த்து வைப்பதுண்டு. அந்த மாதிரி நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மனுஷருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார்? உன்னைப்பற்றி என்னஎன்று எண்ணுவார்? என்னைப் பற்றித் தான் என்ன நினைப்பார் எனக்குப் பிடிக்கவே இல்லை!"

"கொஞ்சம் இரு அண்ணா! நீபாட்டுக்குப் பேசிக் கொண்டே போகாதே! அப்படியெல்லாம் நான் தப்புக் காரியம் பண்ணமாட்டேன். அவருடைய பணத்திலிருந்து காலணா நான் எடுத்தது கிடையாது. நம்ம வீட்டில் நீங்கள் எனக்குச் செய்து போட்ட நகைகளையும் ஆரம்பத்தில் இவர் எனக்குப் பண்ணிப் போட்ட நகைகளையும் விற்று அவருக்குக் கஷ்டம் வந்தபோது கொடுத்திருக்கிறேன். வீட்டுச் செலவுப் பணத்திலிருந்து எப்படிப் பணம் மிச்சம் பிடிக்க முடியும்? இந்தப் பம்பாய் பட்டணத்தில் குடித்தனம் பண்ணிப் பார்த்தால் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். இந்தப் பணமும் ரத்தின மாலையும் சீதாவின் கலியாணத்துக்கு என்றே தெய்வத்தின் கிருபையால் கிடைத்தவை. கேட்டால் உனக்குக் கதை மாதிரி இருக்கும். நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து எனக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்றுதான் உனக்குத் தெரியுமே! தமிழிலே வெளியான அவ்வளவு கதைப் புத்தகங்களும் நான் படித்திருக்கிறேன். ஹிந்தி பாஷையிலும் அநேக கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாளும் இந்த மூன்று அறையிலேயே அடைந்து கிடக்கும் நான் வேறு என்னத்தைதான் செய்வது? எப்படிப் பொழுது போக்குவது? நான் படித்திருக்கும் ஆயிரம் கதைகளில் நடந்த அதிசயங்களைக் காட்டிலும் அதிசயமான சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் உண்மையாகவே நடந்தது. அதை உனக்குச் சொல்லப் போகிறேன். வேறு யாருக்கும் இது தெரியாது. சீதாவுக்குக் கூடத் தெரியாது...."

இந்தச் சமயத்தில் கையில் காப்பியுடன் வந்தாள் சீதா, அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வரலாமோ, கூடாதோ என்று அவள் தயங்கியதாகக் காணப்பட்டது. "வா! அம்மா!" என்று தாயார் ஈனக் குரலில் கூறியதும் தைரியமடைந்து உள்ளே வந்தாள். கிட்டாவய்யர் அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டு, "நீ கொஞ்சம் சாப்பிடுகிறாயா?" என்று ராஜத்தைப் பார்த்துக் கேட்டார். "கொஞ்சம் கொடு! இத்தனை நாளும் நான் உயிரை வைத்துக் கொண்டிருப்பது டாக்டர் கொடுத்த மருந்தினால் அல்ல; இந்தக் காப்பியினாலேதான்!" என்றாள் ராஜம். பின்னர் சீதாவைப் பார்த்து, "குழந்தாய்! வாசலில் அப்பா வந்துவிட்டாரா என்று பார்! ஒரு வேளை சாப்பிடக்கூட மருந்து இல்லை, அப்பா மருந்து வாங்கிக்கொண்டு வந்த உடனே ஓடி வந்து சொல்லு!" என்றாள். அந்தக் குறிப்பைச் சீதா அறிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறி மச்சுப்படிகளின் வழியாகக் கீழே சென்றாள்.

ராஜம் கிட்டாவய்யரைப் பார்த்து, "அண்ணா! இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை இவரிடம், அதாவது சீதாவின் அப்பாவிடம், நீ ஒருநாளும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொல்லக்கூடாது; வீட்டிலே மன்னியிடம் கூடச் சொல்லப்படாது. சொல்லுவதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொடு; வேண்டாம், சத்தியம் வேண்டாம். நீ சொன்ன சொல்லை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். யாரிடமும் சொல்லாதிருப்பா யல்லவா?" என்று சொல்லி நிறுத்தினாள். "சொல்லவில்லை! சொல்லவில்லை. நீயே என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் நல்லது. பேசினால் உனக்கு இரைக்கிறது! இப்படி உனக்கு தொந்தரவு கொடுப்பதற்குத்தானா நான் பம்பாய்க்கு வந்தேன்?" "எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை; கேள்!" என்றாள் ராஜம்.

"எனக்கு இந்தத் தடவை உடம்புக்கு வந்து இருபது நாளாயிற்று, நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் படுத்துக்கொண்ட அன்றைக்கு வெள்ளிக்கிழமை, சாயங்காலம் அம்பிகையின் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணினேன். சியாமளா தண்டகம் ஸ்தோத்திரம் சொன்னேன். 'அம்மா! தாயே பராசக்தி! நீதான் என் குழந்தை சீதாவைக் காப்பாற்ற வேண்டும். நல்ல இடத்தில் குழந்தைக்குக் கலியாணம் ஆகக் கிருபை செய்யவேண்டும்' என்று வேண்டிக் கொண்டேன். உடம்பு ஏதோ மாதிரி இருந்தது; படபடவென்று வந்தது. தலை சுழலுவது போலத் தோன்றியது. உடனே இந்த அறைக்கு வந்து இதே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சீதா அவளுடைய சிநேகிதியைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்தாள். இவர் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. உனக்குப் போன தடவையே சொல்லியிருக்கிறேனே! சில நாளைக்கு இவர் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்; சில நாளைக்கு வரவே மாட்டார். இன்றைக்கு வருகிறாரோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணைச் சுற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. அது தூக்கமா அல்லது மயக்கமா என்று எனக்குத் தெரியாது, கண்கள் மூடிக் கொண்டன. அப்புறம் கொஞ்ச நேரம் ஒன்றுமே தெரியவில்லை.

"இப்படி ஒரு மணிநேரம் போயிருக்க வேண்டும் என்று பிற்பாடு கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மயக்கம் தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது வெறுமனே சாத்தியிருந்த என் அறைக் கதவு திறந்தது. அந்தச் சத்தம் கேட்டுத்தான் என் மயக்கம் கலைந்திருக்க வேண்டும். "கதவைத் திறப்பது சீதாவா அல்லது சீதாவின் அப்பாவா என்று எண்ணினேன். அதற்குள் கதவு நன்றாய்த் திறந்தது. சீதாவும் இல்லை, அவள் அப்பாவும் இல்லையென்று தெரிந்தது. ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள், கிட்டத்தட்ட என் வயதுதான் இருக்கும். வடக்கத்தியாள் போலத்தான் இருந்தாள். தலையில் முக்காடு போட்டிருந்தாள். கையில் ஒரு சின்னத் தோல் பெட்டி வைத்திருந் தாள். என் சமீபமாக வந்து, 'ராஜம்மாள் என்கிறது நீ தானா?' என்று கேட்டாள். ஹிந்தி பாஷையில் தான். இருபது வருஷமாக இந்த ஊரில் இருந்ததினால் எனக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். ஆயினும் வந்திருப்பவள் யாரோ என்னமோ என்ற தயக்கத்தினால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.

"உடனே அவள் கொஞ்சம் பதட்டமான குரலில், இதோ பார், அம்மா! ஒரு முக்கியமான காரியமாக நான் வந்திருக்கிறேன். வீண் பொழுது போக்க நேரம் இல்லை. இராஜம்பேட்டை ராஜம்மாள் என்கிறது நீதானா? துரைசாமி ஐயரின் சம்சாரம்?' என்றாள். 'ஆமாம்' என்று ஈனஸ்வரத்தில் சொன்னேன். 'அதை எப்படி நான் நம்புகிறது' என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ நாலு புறமும் பார்த்தாள். சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள் அவள் கண்ணில் பட்டன. சமீபத்தில் சென்று பார்த்தாள். அண்ணா! உனக்கு இங்கிருந்தே தெரிகிறதல்லவா? அந்தப் படங்களில் ஒன்று எனக்குக் கலியாணம் ஆன புதிதில் நானும் அவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். இன்னொன்று மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் அவரும் சீதாவும் எடுத்துக் கொண்டது. இரண்டாவது படத்தை உற்று பார்த்துவிட்டு, 'இதில் இருக்கிற பெண் யார்? உன் மகளா?' என்று 'அந்த ஸ்திரீ கேட்டாள், ஆமாம்' என்று சொன்னேன். இன்னும் சற்றுப் படத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சடார் என்று திரும்பி என் அருகில் வந்தாள். என் முகத்தை உற்றுப் பார்த்து, 'ஆமாம், நீ ராஜம்மாள்தான்!' என்றாள். அப்போது அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் ஜொலித்த களையையும் அவளுடைய கண்களின் காந்த சக்தியையும் என்னால் சொல்லி முடியாது. 'இவ்வளவு அழகான ஸ்திரீயும் உலகத்தில் உண்டா?' என்று எண்ணி நான் திகைத்துப் போனேன். அந்த ஸ்திரீ தன்னுடைய கைப் பெட்டியை அதோ இருக்கிற அந்த மேஜை மேலே வைத்து விட்டுச் சடசடவென்று நடந்து போய்க் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு வந்தபோது என் மனத்தில் பீதி உண்டாயிற்று. எழுந்து ஓடிப் போகலாமென்று தோன்றியது. அதற்கும் துணிச்சல் ஏற்படவில்லை. கை காலை அசைக்கவே முடியவில்லை. மந்திரத்தினால் கட்டுண்ட சர்ப்பம் என்பார்களே, அம்மாதிரி இருந்தேன். அந்த ஸ்திரீ கதவைத் தள்ளிட்டு வந்து என் பக்கமாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று மேஜை மேலிருந்த தோல் பெட்டியைத் திறந்தாள். எதை எதையோ எடுத்து மேஜைமேல் பரப்பினாள். எடுத்து வைத்ததில் சிலவற்றை மறுபடியும் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள். மற்றவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு அருகில் வந்தாள்.

'ராஜம்மா! உனக்கு நான் இப்போது சொல்லப்போவது ஆச்சரியத்தை உண்டாக்கலாம் ஆனால், ஆச்சரியம் ஒன்றும் இல்லை. விஷயம் என்னவென்று பிற்பாடு சொல்லுகிறேன். முதலில் இந்த ரூபாயையும் ரத்தினமாலை யையும் வாங்கிக் கொள். ரூபாய் இரண்டாயிரம் இருக்கிறது. ரத்தின ஹாரம் ரொம்ப மதிப்புள்ளது. பணம், ஹாரம் இரண்டும் என்னுடைய மகளின் ஸ்ரீதனத்துக்காகக் கொடுக்கிறேன். ஒன்றும் யோசிக்காதே! வாங்கிக்கொள்!' என்றாள். ஒரே சமயத்தில் என்னை அதிசயம், ஆனந்தம், பயம் எல்லாம் பிடுங்கித் தின்றன. குழந்தை சீதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் வருகிறதே என்று சந்தோஷமாயிருந்தது. இவள் யார், இவள் எதற்காகக் கொடுக்கிறாள் என்று ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அவளுடைய பேச்சைத் தட்ட எனக்கு மனோதிடம் இல்லை. கையிலே வைத்துக்கொண்டே, 'இந்தா! பிடி!" என்று இரண்டு தடவை சொன்ன பிறகு இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டேன். 'பத்திரமாய் வை!' என்றாள். 'ஆகட்டும்; அப்புறம் பெட்டியில் வைக்கிறேன்' என்று சொல்லிவிட்டுத் தலையணையின் கீழே ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின ஹாரத்தையும் தள்ளினேன்.

பிறகு அவள், 'ராஜம்மா! இம்மாதிரி நான் பணமும் ஹாரமும் கொண்டு வந்து கொடுத்தது உனக்கு ஆச்சரியமா யிருக்கலாம். இவள் யார் முன்பின் தெரியாதவள் இம்மாதிரி கொடுப்பதற்கு என்று நீ நினைக்கலாம். உனக்கு என்னைத் தெரியாதுதான், ஆனால் உன்னை ரொம்ப நாளாக எனக்குத் தெரியும். வெகு காலத்துக்கு முன்னால் உனக்கு நான் ஒரு கெடுதல் பண்ணினேன்; வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ தெய்வாதீனமாக அப்படி நேர்ந்துவிட்டது. அதற்குப் பரிகாரமாகத்தான் இந்தப் பணத்தையும் ஹாரத்தையும் கொடுத்திருக்கிறேன். இவற்றை நீ பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து கலியாணத்தின் போது உன் மகளுக்குக் கொடுக்க வேண்டும்! ஆனால், இப்படி நான் கொடுத்தேன் என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொன்னாலும் உன் புருஷனிடம் சொல்லவே கூடாது, தெரிகிறதா?" என்றாள். நான் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமித்துப் போயிருந்தேன். 'என்ன பேசாமலிருக்கிறாய், ராஜம்மா! நான் சொன்னதெல்லாம் தெரிந்ததா?' என்று சிறிது கடுமையான குரலில் கேட்டாள். 'தெரிந்தது' என்று முணுமுணுத்தேன். 'நான் சொன்னபடி செய்வாயா?' என்றாள். நான் சும்மாயிருந்தேன். உடனே அந்த ஸ்திரீயின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது; பத்திரகாளியாக மாறினாள். கண்கள் நெருப்புத் தணலைப்போல் ஆயின. கைப்பெட்டிக்குள்ளேயே கையை விட்டு எதையோ எடுத்தாள்; எடுத்த வஸ்து பளபளவென்று ஜொலித்தது. அது என்னவென்று நினைக்கிறாய், அண்ணா!" என்று ராஜம் கேட்டு நிறுத்தினாள்.

ராஜம் சொல்லிவந்த கதையைப்பற்றி இன்னது நினைப்பதென்று தெரியாமல் கிட்டாவய்யர் ஸ்தம்பித்துப் போயிருந்தார். ராஜம் சரியான ஞாபகத்துடன் பேசுகிறாளா என்று அடிக்கடி அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் ரத்தின ஹாரமும் சற்று முன் தாம் வாங்கிப் பெட்டியில் வைத்தது என்னவோ உண்மை. ஆகையால் கதையும் ஒருவேளை நிஜமாக இருக்கலாமல்லவா? "எனக்கு எப்படி அம்மா, தெரியும்? தெரிய வேண்டிய அவசியமும் இல்லை; நீ பேச்சை நிறுத்தினால் போதும். ராஜம்! டாக்டர் சொல்லிவிட்டுப் போனது நினைவில்லையா?"

"ஆகா! டாக்டர் இருக்கட்டும் டாக்டர்! இன்னும் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது; அதையும் கேட்டு விடு! அந்த ஸ்திரீ தோல் பெட்டியிலிருந்து எடுத்தது வேறு ஒன்றுமில்லை. கூர்மையாக வளைந்திருந்த ஒரு சின்னக் கத்தி. அதை எடுத்து அவள் என்னுடைய கண் முன்னால் காட்டினாள். 'பார்த்தாயா, ராஜம்மா நன்றாகப் பார்த்துக்கொள். நான் நல்லவர்களுக்கு நல்லவள்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவள். நான் சொன்னபடி எல்லாம் நீ செய்ய வேண்டும். உன் அகத்துக்காரரிடம் ஒரு வார்த்தை கூட நான் வந்தது பற்றிச் சொல்லக் கூடாது. சொன்னதாகத் தெரிந்ததோ; ஒரு நாளைக்கு இந்தக் கத்தியால் உன்னை ஒரே குத்தாகக் குத்திக் குடலைக் கிழித்து விடுவேன்! ஜாக்கிரதை" என்றாள், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்று பிரகாசித்த அந்தக் கத்தியைப் பயங்கரத்துடன் பார்த்த வண்ணம் இருந்தேன். 'பயப்படாதே, ராஜம்! பயப்படாதே! நான் சொன்னபடி செய்தால் உனக்கு ஒன்றும் வராது!' என்று அந்த ஸ்திரீ சொல்லிக் கொண்டிருக் கையில் யாரோ மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. அவள் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். 'யார் உன் புருஷனா?' என்று மெல்லிய குரலில் கேட்டாள். 'இல்லை, மகள்!' என்று சொன்னேன். அவளுடைய கலவரம் நீங்கிற்று. சீதா அறைக் கதவின் அருகில் வந்து கதவைத் தட்டினாள். 'அம்மா! காரியமாயிருக்கிறாயா? கதவைத் திற!' என்றாள். நான் படுத்திருந்தபடியே, 'சீதா! படத்துக்குப் பக்கத்தில் விளக்கு எரிகிறதா பார்! இன்று வெளிக்கிழமை அல்லவா? முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக்கொண்டு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லு!' என்றேன். 'சரி, அம்மா' என்று சீதா சமையலறைக்குள் போனாள்.

"அந்த ஸ்திரீ அவசர அவசரமாகத் தோல் பெட்டியைப் பூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 'ராஜம்மா! ஜாக்கிரதை! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்!' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். கதவைத் திறந்து கொண்டு வெளித் தாழ்வாரம் சென்று அங்கிருந்து அவள் மச்சுப்படி இறங்கும் சத்தமும் கேட்டது. அப்புறந்தான் எனக்கு உயிர் வந்தது. கொஞ்சம் தைரிமும் வந்தது. இவ்வளவும் ஒருவேளை கனவில் காண் கிறோமோ என்று தோன்றியது. தலையணையின் அடியில் கையை விட்டுப் பார்த்தேன். நோட்டுக் கத்தையும் ரத்ன ஹாரமும் இருந்தன. கனவு காணவில்லை, உண்மையாக நடந்தவைதான் என்று நம்பிக்கை பெற்றேன். இதற்குள் சீதா அறைக்குள் வந்தாள். 'அம்மா! யாராவது வந்திருந்தாளா என்ன? சத்தம் ஏதோ கேட்டதே! - ஏன் அம்மா இந்த நேரத்தில் படுத்திருக்கிறாய்?' என்று கேட்டுக் கொண்டே வந்தவள், இந்த மேஜையைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். பிரமிப்புக்குக் காரணம் மேஜையின்மேல் பளபளவென்று ஜொலித்த கத்திதான்! போகிற அவசரத்தில் அந்த ஸ்திரீ அதை எடுத்துப் போக மறந்து விட்டாள். நானும் கவனியாமல் இருந்துவிட்டேன். 'அம்மா! இது ஏதம்மா கத்தி, இதன் பிடி வெகு விசித்திரமாயிருக்கிறதே?' என்று கத்தியை எடுக்கப்போனாள் சீதா. எனக்கு ஒரே திகிலாய்ப் போய்விட்டது. 'வேண்டாம் சீதா வேண்டாம்! அந்தக் கத்தியைத் தொடாதே!' என்றேன். என்னுடைய குரலின் படபடப்பைக் கவனித்த சீதா கத்தியைத் தொடாமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

இதற்குள் மறுபடியும் மாடிப்படி ஏறும் சத்தம் தடதடவென்று கேட்டது. கத்தியை மறைத்து வைக்கலாமா, அறைக் கதவைத் தாளிடச் சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அந்த ஸ்திரீ புயற்காற்றுப் புகுவதைப்போல் அறைக்குள் புகுந்தாள். நேரே மேஜையருகில் வந்து கத்தியை லபக்கென்று எடுத்துத் தோல் பெட்டியில் வைத்துக் கொண்டாள். பிறகு சீதாவின் முகத்தையும் என் முகத்தையும் இரண்டு மூன்று தடவை மாறி மாறிப் பார்த்தாள். 'ராஜம்மா இந்தப் பெண் உன் குமாரியா?' என்று கேட்டாள். 'ஆமாம்' என்று சொன்னேன். உடனே சீதாவை அவள் கட்டிக்கொண்டு உச்சி முகந்து கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தாள்! கடவுள் உன்னை நன்றாக வைக்கட்டும். ஆண் பிள்ளைகளின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்!' என்றாள். பிறகு என்னைப் பார்த்து 'ராஜம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்! ஜாக்கிரதை!' என்று சொல்லிவிட்டு மறுபடியும் அறையை விட்டுச் சென்றாள். அவள் காலடிச் சத்தம் மறைந்ததும் சீதா என் அருகில் வந்து, 'இது யாரம்மா இந்தப் பைத்தியம்!' என்று கேட்டாள். 'அப்படிச் சொல்லாதே, சீதா! இவள் பைத்தியமில்லை, ரொம்ப நல்ல மனுஷி. இவளுக்கும் எனக்கும் வெகு நாளைய சிநேகிதம்' என்றேன். 'சிநேகிதம் என்றால் நான் பார்த்ததே கிடையாதே!' என்றாள் சீதா. 'நீ பிறப்பதற்கு முன்னால் இவளும் நானும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். அப்புறம் பரேலுக்கு இவள் குடி போய் விட்டாள். அதிகமாக இந்தப் பக்கம் வர முடிவதில்லை' என்றேன். பொய்தான் சொன்னேன், என்னவோ அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது..." இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், தம் மனதிற்குள், "இது மட்டுந்தானா பொய்! இத்தனை நேரம் இவள் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்தான்! பாவம்! சீதாவுக்காகக் கணவனுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்து விட்டு இந்தக் கதையைக் கற்பனை செய்திருக்கிறாள்," என்று எண்ணிக் கொண்டார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினாறாம் அத்தியாயம்
தேவி பராசக்தி

கதையோ கற்பனையோ என்று கிட்டாவய்யர் சந்தேகப்படும்படி ராஜம்மாள் கூறிய வரலாறு அத்துடன் முடியவில்லை. ராஜத்தையும் சீதாவையும் அதிசயக் கடலில் மூழ்க அடித்து விட்டு அந்த ஸ்திரீ கீழே இறங்கிப் போன சிலநிமிஷத்துக் கெல்லாம் துரைசாமி வந்து சேர்ந்தார். ராஜத்தைப் பார்த்து "இங்கு யாராவது வந்திருந்தார்களா, என்ன? நான் மச்சுப்படி ஏறி வந்தபோது ஒரு 'ஜெனானா' ஸ்திரீ, முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு தடதடவென்று இறங்கி ஓடினாளே?" என்றார்.

ராஜம் சீதாவைக் குறிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு "இங்கு ஒருவரும் வரவில்லையே!" என்றாள். "போகட்டும்; சாயங்கால வேளையில் நீ ஏன் படுத்திருக்கிறாய்? உனக்கு ஏதாவது உடம்பா, என்ன?" என்று கேட்டார் துரைசாமி. "அதெல்லாம் எனக்கு உடம்பு, கிடம்பு ஒன்றுமில்லை. ஏதோ படபடவென்று வந்தது, படுத்துக் கொண்டேன்" என்றாள் ராஜம். துரைசாமி அருகில் வந்து ராஜத்தின் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தார்! அவருடைய கை ஏன் இவ்வளவு ஜில்லிட்டிருக்கிறது என்று ராஜம் எண்ணினாள். "அசடே! உடம்பு ஒன்றுமில்லை என்கிறாயே! 103 டிகிரி சுரம் இருக்கும் போலிருக்கிறதே! இதோ தெர்மா மீட்டர் எடுத்துக்கொண்டு வருகிறேன்!" என்று துரைசாமி தம்முடைய அறைக்குச் சென்றார். அவர் அப்பால் போனதும் சீதா அம்மாவைத் தொட்டுப் பார்த்து விட்டு, "ஆம் அம்மா! அப்பா சொன்னது சரிதான்! உடம்பு கொதிக்கிறதே?" என்றாள். ராஜத்துக்கும் தனக்குச் சுரந்தான் என்று தெரிந்து விட்டது. உடனே ஒரு சந்தேகம் உதித்தது. சற்று முன் நடந்ததெல்லாம் சுரத்தின் வேகத்திலே தனக்குத் தோன்றிய பிரமையோ என்று எண்ணினாள். அந்த எண்ணம் அவளுக்கு மிக்க வேதனை அளித்தது. அவளுடைய முப்பத்தைந்து பிராயத்தில் இன்று ஒருநாள் அவளுடைய வாழ்க்கை கதைபோல் ஆகியிருந்தது. கதைகளில் நடப்பது போன்ற அதிசயச் சம்பவம் அன்று நடந்திருந்தது. அது பொய்யாய், கானல் நீராய் வெறும் பிரமையாய்ப் போவதாயிருந்தால், அவளுக்கு ஏமாற்றமாயிராதா?

சந்தேகம் தோன்றிய ஒரு நிமிஷ நேரத்துக்கெல்லாம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வழி தோன்றியது. தலையணை யடியில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தாள். ரூபாய் நோட்டுக் கத்தையும் ரத்தின ஹாரமும் கையில் தட்டுப்பட்டன. பிரமையல்ல, உண்மைதான் என்று நிச்சயம் செய்துகொண்டாள். சீதாவை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டு, "சீதா! அப்பாவிடம் ஒன்றும் சொல்லாதே! காரணம் பிற்பாடு சொல்கிறேன்" என்று காதோடு சொன்னாள். சீதாவும் குறிப்பை அறிந்து கொண்டு, "சரி அம்மா!" என்றாள். துரைசாமி தெர்மாமீட்டர் கொண்டு வந்து வைத்துப் பார்த்தார், சுரம் 104 டிகிரி இருந்தது. "ஏதோ இந்த வருஷத்துக்கு இன்னும் நீ படுத்துக் கொள்ளவில்லையே என்று பார்த்தேன். படுத்துக்கொண்டாயல்லவா?" என்றார் துரைசாமி. பிறகு அவசரமாக டாக்டரை அழைத்து வரச் சென்றார்.

அன்று படுத்த ராஜம் இருபது நாளைக்குமேல் ஆகியும் எழுந்திருக்கவில்லை. முதலில் 'இன்புளூயன்ஸா' என்றார் டாக்டர். ஐந்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு என்று சந்தேகமாயிருக்கிறது; பார்க்கலாம்" என்றார். பத்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு இல்லை; 'காலா ஹஸார்' என்று ஒரு புது சுரம் இப்போதெல்லாம் வருகிறது ஒருவேளை அதுவாயிருக்கலாம்" என்றார். கடைசியில், இது உடம்பைப் பற்றியே வியாதியே இல்லை; மனோ வியாதிதான் என்று முடிவு கூறினார். ஆயினும் தினம் தினம் மருந்து எழுதிக் கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

இவ்வளவையும் ஓரளவு அவநம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், "போதும் ராஜம்! நிறுத்து! பாக்கியை நாளைக்குச் சொல்லலாம்!" என்றார். இதற்குள் டாக்டருடன் மருந்துக் கடைக்குச் சென்ற துரைசாமியும் மருந்து வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். முன்னதாக அவருடைய வரவைத் தெரிவித்துக் கொண்டே சீதா அந்த அறைக்குள்ளே பிரவேசித்தாள். தனது மனைவியும் மைத்துனரும் இருந்த நிலையைப் பார்த்துவிட்டுத் துரைசாமி, "அண்ணா அருமையாக வந்திருக்கிறீர்களே என்று மொச்சு, மொச்சு என்று பேசிக் கொட்டினாளாக்கும். அதிகமாகப் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அவள் பேசாதபடி நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் சொன்னால் கேட்பதில்லை" என்றார்.

கிட்டாவய்யர் தம் மனத்திற்குள், "நல்ல வேலை நமக்கு இடுகிறார்? அகண்ட காவேரியில் வரும் வெள்ளத்தை அணை போட்டு நிறுத்து என்று சொல்வது போலிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டார். வழக்கம்போல் அடுத்த நாளும் டாக்டர் வந்தார். தமக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே ராஜம் வியாதியாய்ப் படுத்துக் கொண்டாள் என்ற பாவத்துடனே வழக்கமாகச் சோதனை களைச் செய்தார். "நான் சொன்னது சரிதான்; அண்ணா வந்ததில் தங்கைக்குக் கொஞ்சம் உடம்பு சௌகரியமாய்த்தான் இருக்கிறது!" என்றார். ஆனாலும் காகிதமும் பேனாவும் எடுத்துப் பத்துவிதமான மருந்துகளை வரிசையாக எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.

அன்றைக்கும் டாக்டரின் காரில் துரைசாமி மருந்து வாங்கப் போன பிறகு, கிட்டாவய்யர், தங்கையின் சமீபத்தில் போய் உட்கார்ந்தார். "ராஜம்! நீ அதிகமாய்ப் பேச வேண்டாம் ஆனால், ஒரு விஷயம் கேட்கிறேன்; அதற்கு மட்டும் யோசித்துப் பதில் சொல்! நீ கொடுத்த பணத்தையும் நகையையும் சீதாவுக்காக உபயோகப்படுத்த வேண்டியதுதானா? அவை கிடைத்த விதத்தைப் பற்றி நீ சொன்ன விவரம் அவ்வளவு திருப்திகரமாயில்லையே! அதாவது கோயில் குளம் அல்லது தர்ம காரியத்துக்குக் கொடுத்து விடுகிறேனே! சீதாவுக்கு நான் கலியாணம் பண்ணி வைக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். யாரோ வழியிலே போகிற ஸ்திரீ கொடுத்தது நமக்கு என்னத்திற்கு? அவள் யாரோ, என்னமோ, எப்படி இந்தப் பணமும் நகையும் அவளுக்குக் கிடைத்ததோ? அவள் கத்தியை வைத்து விட்டுத் திரும்பி வந்து எடுத்துப் போனதாக நீ சொன்னதெல்லாம் அவளைப்பற்றி என்னவெல்லாமோ சந்தேகத்தை உண்டாக்குகிறது. நன்றாய் யோசித்துச் சொல்லு!" என்றார்.

"நன்றாய் யோசித்து விட்டேன், அண்ணா! ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாக யோசித்து விட்டேன். உன்னைப் போலவே நானும் ஏதாவது தான தர்மத்துக்குக் கொடுத்து விடலாமென்று யோசித்தேன். பீஹார் பூகம்ப நிதிக்குக் கொடுத்து விடலாம் என்று கூட எண்ணினேன். உனக்குத் தெரியும் அல்லவா, அண்ணா! நீதான் பத்திரிகை படிக்கிறவன் ஆயிற்றே? எத்தனையோ பெரிய பட்டிணங்கள் எல்லாம் ஒரே நிமிஷத்தில் மண்ணோடு மண்ணாகி விட்டதாம். அங்கே ஜனங்களின் கஷ்டத்தைக் கேட்கச் சகிக்க வில்லை. அந்த நிதிக்குக் கொடுத்து விடலாமா இந்தப் பணத்தை என்று நினைத்தேன்.ஆனால், அப்படிச் செய்ய மனது வரவில்லை அது சீதாவின் சீதனம் - வேறு விதமாய்ச் செலவழிக்க எனக்குப் பாத்தியதை இல்லை என்று தோன்றியது. பூகம்ப நிதிக்கு நீ ஏதாவது கொடுத்தாயா, அண்ணா?" என்று கேட்டாள்.

"அதெல்லாம், பெரிய விஷயம் அம்மா! நீயும் நானும் கொடுத்துத்தானா ஆகப் போகிறது?" "அப்படியில்லை ஏதோ நாமும் மனுஷ ஜன்மந்தான் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? நம்மாலானதை நாம் செய்கிறது?" "ஆகட்டும்; அப்படியே செய்யலாம். சீதாவின் விஷயத்தை இப்போது பேசி முடிக்கலாம்; அந்தப் பணத்தையும் நகையையும்...." "சீதாவுக்குக் கிடைத்த அந்தச் சீதனம் சாதாரண சீதனமல்ல, அத்துடன் தெய்வத்தின் ஆசிர்வாதமும் சேர்ந்திருக்கிறது, அண்ணா!" "அது எப்படிச் சொல்கிறாய்? அந்த ஸ்திரீ யார், எப்படிப் பட்டவள் என்று எதுவும் தெரியவில்லையே?" ராஜம் சற்று நேரம் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, கண்ணைத் திறந்து கிட்டாவய்யரை ஏறிட்டுப் பார்த்து, அந்த ஸ்திரீ யார் என்று எனக்குத் தெரியும், அண்ணா!" என்றாள்.

"தெரியுமா? பின்னே ஏன் யாரோ என்று சொன்னாய்? அவள் யார்?" "இத்தனை நாளாக அவள் யார் என்று தெரியவில்லை; அதனால் 'யாரோ' என்றேன். நேற்று இரவு நான் கண்ட கனவிலே இந்த ஸ்திரீ இன்னார் என்று தெரிந்தது." "அப்படியா, அம்மா! யார் என்று தெரிந்ததா?" "அவள் 'தேவி பராசக்தி' அண்ணா! என்னுடைய இருபது வருஷப் பிரார்த்தனை வீண் போகவில்லை?" என்றாள் ராஜம். அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. இதனால் கிட்டாவய்யருடைய மனம் இன்னும் அதிகமாகக் குழம்பியது. "டாக்டர் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது. இவளுக்கு மனத்திலேதான் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார். உடம்பாயிருந்தாலும் மனதாயிருந்தாலும் சீக்கிரத்தில் ராஜத்தைக் குணப்படுத்தி அருளும்படி அவளுடைய குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அதற்கு மறு நாளும் டாக்டர் வந்தார். வழக்கம்போல் சோதனை செய்து பார்த்தார். "இன்றைக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை!" என்றார். பிறகு 'பிரிஸ்கிருப்ஷன்' எழுதுவதற்குக் கையில் காகிதமும் பேனாவும் எடுத்தார் ஆனால் ஒன்றும் எழுதவில்லை. திடீரென்று ஏதோ தோன்றியவரைப் போல் காகிதத்தையும் பேனாவையும் கீழே வைத்தார்.

"மிஸ்டர் துரைசாமி! ஒரு விஷயம் சொல்லட்டுமா?" என்றார். "பேஷாகச் சொல்லுங்கள்! கேட்பானேன்?" என்றார் துரைசாமி. "உங்கள் சம்சாரத்துக்கு இனிமேல் இந்த மருந்துகளினாலெல்லாம் உபயோகமில்லை!" "பின்னே என்ன மருந்து உபயோகம்? ஆயுர்வேதம் பார்க்கலாம் என்கிறீர்களா?" "ஆயுர்வேதத்திற்குப் போனால் அவ்வளவுதான். இந்த அம்மாளை யமனிடம் ஒப்புவிக்கிற மாதிரிதான்!" "பின்னே என்ன சொல்கிறீர்கள்?"

"உங்கள் மனைவிக்கு இப்போது கொடுக்க வேண்டிய மருந்து இடமாறுதல்தான். இந்தப் பம்பாய் நகரத்தில் இருபது வருஷமாக இருந்திருக்கிறார்கள் அல்லவா? வேறு ஊருக்குப் போய்ச் சில நாள் இருந்துவிட்டு வரட்டும். உங்கள் மைத்துனர் கிட்டாவய்யர் கிராமவாசிதானே? அவரோடு கூட்டி அனுப்புங்களேன்!" "எனக்குக் கொஞ்சங்கூட ஆட்சேபமில்லை. கிட்டாவய்யர் அழைத்துப் போவதாயிருந்தால்...." "அழைத்துப் போவதாயிருந்தால் என்ன? திவ்யமாக அழைத்துப் போகிறேன். போன வருஷமே அழைத்துப் போகிறேன் என்று சொன்னேன். இவர்தான் அனுப்பவில்லை...." "நானா அனுப்பவில்லை? உங்கள் தங்கைதான் 'போக மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள்."

"இந்த வருஷமும் அதையேதான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். "இந்தப் பிடிவாதம் உனக்கு ஆகாது. அம்மா!ஊர் மாறாவிட்டால் உனக்கு உடம்பு குணமாகாது." "டாக்டர்! இருபது வருஷமாக இந்த இடத்தில் இருந்து விட்டேன். பாக்கி இருக்கும் சில நாளும் இங்கேயே இருந்து விடுகிறேன்." "அப்புறம் உங்கள் இஷ்டம்; நான் என்ன சொல்லட்டும்?" என்று டாக்டர் கூறி மறுபடியும் காகிதத்தையும் பேனாவையும் எடுத்து வரிசையாக மருந்துகளை எழுதினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினேழாம் அத்தியாயம்
துரைசாமியின் இல்லறம்

டாக்டருடைய யோசனை ராஜத்தைத் தவிர மற்ற எல்லாருக்கும் பிடித்தமாயிருந்தது. கிட்டாவய்யர் ராஜத்தைத் தம்முடன் ஊருக்கு வரும்படி அடிக்கடி வற்புறுத்தினார். அவருடன் சேர்ந்து துரைசாமியும் சொன்னார். இந்த இருவரையும் விட அதிகமாகச் சீதா தன் தாயாரிடம் மன்றாடினாள். "ஊருக்குப் போய் வரலாம் அம்மா! எனக்கு லலிதாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!" என்பதாக நிமிஷத்துக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், ராஜம்மாள் இதற்கெல்லாம் இணங்குவதாக இல்லை. இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு துரைசாமியின் சுபாவத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. கிட்டாவய்யர் வந்த புதிதில் சாந்தமாகவும் எல்லாரிடமும் பிரியமாகவும் இருந்தவர் திடீரென்று வெறி கொண்டவர் போல் காணப்பட்டார். வீட்டில் அதிகமாகத் தங்குவதில்லை, யாருடனும் பேசுவதில்லை. ராஜத்தின் உடம்பைப் பற்றிக் கவனிப்பதில்லை; சீதாவின் பேரிலும் எரிந்து விழுந்தார். பாத்திரங்களையும் சாமான்களையும் தடார் படார் என்று வீசி எறிந்தார்.

ஒரு நாள் இரவு ராஜம் படுத்திருந்த அறைக்குள்ளே பெரிய ரகளை நடந்தது. துரைசாமியும் ராஜமும் முதலில் சாவதானமாகப் பேசத் தொடங்கினார்கள். கிட்டாவய்யரும் சீதாவும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால், அவர்கள் தூங்கவில்லை. துரைசாமிக்கும் ராஜத்துக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக அவர்களுடைய காதில் விழுந்து கொண்டிருந்தது. சற்று நேரத்துக்குள் சம்பாஷணையின் ஸ்வரம் ஏறியது. வார்த்தைகள் வரவரக் கடுமையாயின. "நான் செத்துப் போனால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும்!" "ஒரு வழியாகச் செத்துத் தொலைந்து போய் விடேன்! உயிரோடிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்?" இப்படிப்பட்ட கொடூரமான பேச்சுக்கள் கேட்டன.

கிட்டாவய்யருக்குத் தன் மனைவியின் சுபாவத்தில் சில நாளாக ஏற்பட்டிருந்த மாறுதல் ஞாபகம் வந்தது. அதைப் பற்றி அவர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் இந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையைக் காட்டிலும் தம்முடைய இல்வாழ்க்கை எவ்வளவோ மேலானதல்லவா என்று எண்ணித் திருப்தி அடைந்தார். திடீரென்று ராஜத்தின் அறையில் 'பட், பட், பட்' என்று சத்தம் கேட்டது. "ஐயோ! வேண்டாமே ஐயோ! வேண்டாமே!" என்று ராஜம் அலறினாள். ராஜத்தைத் துரைசாமி அடித்துக் கொல்லுகின்றார் என்று நினைத்துக் கொண்டார் கிட்டாவய்யர். நிலைமை மிஞ்சிவிட்டது இனித் தாம் சும்மா படுத்துக் கொண்டிருக்கக் கூடாதென்று ஒரு நொடியில் தீர்மானித்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். அறைக் கதவு வெறுமனே சாத்தியிருந்தபடியால் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தார்.

அறைக்குள் அவர் கண்டது அவர் நினைத்ததற்கு மாறாக இருந்தது. துரைசாமி ராஜத்தை அடிக்கவில்லை; அவர் தம்முடைய தலையிலேதான் 'பட், பட், பட்' என்று போட்டுக் கொண்டிருந்தார். அதை நிறுத்துவதற்குத்தான் ராஜம், "வேண்டாமே! வேண்டாமே!" என்று கத்தினாள். அந்த ஒரு கண நேரத்தில் கிட்டாவய்யருக்கு ஒரு பெரிய உண்மை புலனாயிற்று வீட்டின் ஒரு சிறிய பலகணியின் வழியாக வெளியே பார்த்தால் விஸ்தாரமான மைதானமும் தொலை தூரத்திலுள்ள மரங்களும் மலைத் தொடர்களும் மலைச் சிகரத்துக்கு மேலே வானில் உலாவும் மேகங்களும் தெரிவது போலக் கிட்டாவய்யருக்கு இந்த ஒரு சம்பவத்திலிருந்து அந்தத் தம்பதிகளின் இருபது வருஷத்து இல்வாழ்க்கையின் இயல்பு தெரிய வந்தது. இதுவரையில் மாப்பிள்ளை துரைசாமி தன் சகோதரியைக் கொடுமைப்படுத்துவதாக அவர் நினைத்து ராஜத்தினிடம் இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது கொடுங் கோன்மை செலுத்துவது உண்மையில் ராஜம்தான் என்பதை அறிந்து துரைசாமியிடம் இரக்கம் கொண்டார்.

கிட்டாவய்யரைக் கண்டதும் துரைசாமி தம் தலையில் அடித்துக் கொள்வதைச் சட்டென்று நிறுத்தினார்; ராஜமும் அலறுவதை நிறுத்தினாள். துரைசாமியின் அருகில் சென்று கிட்டாவய்யர் உட்கார்ந்து "மாப்பிள்ளை! இப்படிச் செய்யலாமா!" என்று சாந்தமான குரலில் கூறினார். இதற்குப் பதிலாகத் துரைசாமி சத்தம் போட்டுக் கத்தினார். "ஆமாம், ஸார்! 'இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?' என்று என்னிடந்தான் சொல்லுவீர்கள். இவளுடைய மூடப் பிடிவாதத்தை மாற்ற உங்களால் முடியவில்லை யல்லவா! 'ஊர் மாறினால்தான் இவள் பிழைப்பாள்' என்று, டாக்டர் கண்டிப்பாகச் சொல்கிறார். இவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? என் காலடியிலேயே கிடந்து செத்துப் போக வேண்டுமாம்! அப்போதுதான் இவளுக்கு நல்ல கதி கிடைக்குமாம்! இவளுடைய எண்ணம் எப்படி இருக்கிறது, பாருங்கள்! குழந்தை சீதாவுக்குக் கல்யாணம் செய்து பார்க்க வேண்டுமே என்ற ஆசைகூட இவளுக்குக் கிடையாது! 'செத்துப் போகிறேன்' 'செத்துப் போகிறேன்' என்று இருபத்து நாலு மணி நேரமும் இதுவே ஜபம்!- உண்மையாகவே இவள் செத்துத் தொலைந்து போய்விட்டால் தாயில்லாப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்கிறது? சீதாவுக்குக் கல்யாணம் செய்து வைத்து இவள் போய்த் தொலைந்தாலும் பாதகமில்லை?"

இந்தச் சண்டமாருதப் பேச்சுக்கு முன்னால் என்ன பதில் சொல்வது என்று கிட்டாவய்யர் திகைத்து நிற்கையில் ராஜம்மாள் அவருடைய உதவிக்கு வந்தாள். மூச்சு வாங்கிக் கொண்டே அவள் பேசினாள்: "நான் உன்னுடன் ஊருக்கு வருகிறேன், அண்ணா! நாளைக்கே புறப்படத் தயார். நான் இந்த வீட்டில் இருந்து இவர் காலடியில் நிம்மதியாகச் சாவது இவருக்குப் பிடிக்கவில்லை. அங்கே மன்னியிடம் இடிபட்டுப் பேச்சுக் கேட்டுத்தான் சாகவேண்டுமாம். அகண்ட காவேரிக் கரையிலேதான் என்னை வைத்துக் கொளுத்த வேண்டுமாம்!..." "ராஜம்! என்ன இப்படி உளறுகிறாய்? உனக்கு மூளை அடியோடு பிசகிவிட்டதா! ராஜம்பேட்டையில் இருக்க உனக்கு இஷ்டமில்லாவிட்டால் உன் தமக்கை வீடு பக்கத்து ஊரில் இருக்கிறதே. அங்கே இருக்கலாமே? உன் பேரில் எங்களுக் கெல்லாம் என்ன விரோதமா? டாக்டர் சொன்னபடியினால் தானே எல்லோரும் வற்புறுத்து கிறோம்? கொஞ்சம் மனசைச் சாந்தப்படுத்திக் கொண்டு யோசித்துப் பேசு அம்மா!" என்றார் கிட்டாவய்யர்.

"சாந்தமாக யோசித்துத்தான் சொல்லுகிறேன், அண்ணா! ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்! நான் உன்னோடு புறப்பட்டு வருகிறேன்! நிச்சயமாகத்தான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம். "இவளுடைய பிடிவாதத்துக்கு என்ன காரணம் தெரியுமா, ஸார்! இவள் இங்கே இருந்துதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாளாம்! இல்லாவிட்டால் நான் குடித்துக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விடுவேனாம்! அப்படி இவள் மனத்திற்குள்ளே எண்ணம்! அவ்விதமெல்லாம் நான் கெட்டுப் போகிறவனாயிருந்தால் இவளால் என்னைத் தடுத்துவிட முடியுமா?..." "நான் தான் ஊருக்குப் புறப்படுகிறேன் என்று சொல்லி விட்டேனே! இன்னும் என்னத்துக்காக இந்தப் பேச்செல்லாம்? அண்ணா நீ போய்ப் படுத்துக்கொள்!... சீதா! சீதா!" என்று ராஜம் கூவினாள்.

"ஏன் அம்மா!" என்று வெளியிலிருந்தே சீதா கேட்டாள். "இன்னும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாயா? இங்கே வா, அம்மா!" என்றாள் ராஜம். சீதா குதித்துக் கொண்டே உள்ளேவந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. அப்பாவும், அம்மாவும் இந்த மாதிரிச் சண்டை போடுவது வெகு சகஜமாகையால் அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. சண்டையின் முடிவாக ஊருக்குப் போகிற விஷயம் முடிவானது அவளுக்கு அளவில்லாத குதூகலத்தை அளித்திருந்தது! "சீதா உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறி விட்டது. ஊருக்குப் போகவேண்டும், லலிதாவைப் பார்க்க வேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாயே? கடைசியாக நாம் ஊருக்குப் போகிறதென்றே தீர்மானமாகிவிட்டது சந்தோஷந்தானே?"என்றாள் ராஜம்."ரொம்ப சந்தோஷம், அம்மா!"என்றாள் சீதா.

அன்று இரவிலிருந்து ராஜத்தின் உடம்பு விரைவாகத் தேறி வந்தது. கிட்டாவய்யர் பம்பாய்க்கு வந்த எட்டாவது நாள் அவரும் ராஜம்மாளும் சீதாவும் விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மதராஸ் மெயிலில் ஏறினார்கள். துரைசாமி ஸ்டேஷனுக்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவர்களை ரயில் ஏற்றி விட்டார். விக்டோ ரியா டெர்மினஸ் ஸ்டேஷன் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டு பிளாட்பாரங்களில் ஏக காலத்தில் ரயில் வண்டிகள் வரும் சத்தமும், புறப்படும் சத்தமும், வண்டிகள் கோக்கப்படும் சத்தமும், ஆயிரக்கணக்கான பிரயாணிகள் பல பாஷைகளில் சம்பாஷிக்கும் சத்தமும் 'சாவாலா'க்களின் கூவலும், 'பாணி வாலா'க்களின் கூக்குரலும், போர்ட்டர்களின் ஆர்ப்பாட்டமும், பத்திரிகைச் சிறுவர்களின் ஆரவாரமும் சேர்ந்து காது செவிடுபடும்படியான பெரும் கோஷமாக எழுந்து கொண்டிருந்தன. வெள்ளைக்காரர்களும், வெள்ளைக் காரிச்சிகளும், குஜராத்திகளும், மராட்டிகளும், பார்ஸிகளும், மதராஸிகளும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், கிழவர்களும் ஒருவரோடொருவர் மோதி இடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றிலும் ராஜத்தின் கவனம் செல்லவில்லை. அவ்வளவு சத்தங்களிலே எதுவும் அவளுடைய காதில் விழவும் இல்லை. அவளுடைய இரு கண்களும் துரைசாமியின்மீது ஏகாக்கிரக பாவத்துடன் படிந்திருந்தன. துரைசாமி சொன்ன வார்த்தைகளையே அவளுடைய காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன. ரயில் புறப்படும் சமயத்தில் கிட்டாவய்யர் ரயில் வண்டியின் கதவு அருகில் நின்று துரைசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பேசிக் கொண்டிருந்தபோதே அவருடைய கவனம் வேறு பல விஷயங்களின் மீதும் சென்று கொண்டிருந்தது. முக்கியமாகப் பத்திரிகை விற்ற பையன்கள் கூக்குரல் போட்டுக் கத்திய ஒரு விஷயம் அவர் காதில் விழுந்து மனத்திலும் பதிந்தது.

"ரஜனிபூர் மகாராஜாவைக் கொல்ல முயற்சி" "ஒரு பெண் பிள்ளையின் சாகசம்" "கையில் கத்தியுடன் கைது செய்யப்பட்டாள்" என்று அந்தப் பத்திரிகை விற்ற பிள்ளைகள் ஆங்கிலத்திலும் ஹிந்துஸ்தானியிலும் கூச்ச லிட்டார்கள். கிட்டாவய்யர் தமக்குத் தெரிந்த இங்கிலீஷ் ஞானத்தைக் கொண்டு விஷயத்தை ஒருவாறு அறிந்து கொண்டார். துரைசாமியுடன் பேசிக்கொண்டிருந்த போதே, "இது என்ன மகாராஜா கொலை விஷயம்?" என்று கேட்டார்."பம்பாயில் இந்த மாதிரி எவ்வளவோ நடக்கும்! நமக்கென்ன அதைப் பற்றி?" என்று துரைசாமி கூறியபோது அவருடைய முகம் கறுத்துச் சுருங்குவதைக் கிட்டாவய்யர் கவனிக்கும்படி நேர்ந்தது.

இதற்குள்ளே வண்டி புறப்படும் நேரம் வந்துவிட்டது. ரயில் நகரத் தொடங்கிய பிறகு துரைசாமி உணர்ச்சி மிகுந்த குரலில் உரத்த சத்தம் போட்டுக் கூறியதாவது: "ராஜம்! கூடிய சீக்கிரம் நான் அங்கே வந்து உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறேன். வீண் கவலைப்படாதே! நான் சரியாக இருப்பேன்! சீதா! அம்மாவைச் சரியாகப் பார்த்து கொள்! நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் கிட்டாவய்யர்! போய் வருகிறீர்களா? ஜாக்கிரதை! இரயில் வண்டியின் உட்புறம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள்! ராஜம்! உடம்பு ஜாக்கிரதை!" துரைசாமி உண்மையாகவேதான் அவ்விதமெல்லாம் சொன்னார். "சீக்கிரத்தில் ஊருக்கு வந்து உங்களை அழைத்து வருகிறேன்" என்று அவர் கூறியதும் மனப்பூர்வமாகத்தான். ஆனால் மனிதன் ஒருவிதத் திட்டம் போட்டிருக்க விதி வேறு விதமாகத் திட்டம் போடுகிறதை உலகில் பார்க்கிறோமல்லவா!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பதினெட்டாம் அத்தியாயம்
மூன்று நண்பர்கள்

தேவபட்டணத்தின் தேரோடும் மாடவீதியில் எதிர் எதிராக இரண்டு மச்சு வீடுகள் இருந்தன. இரண்டு வீடுகளிலும் வாசல் தாழ்வாரத்திற்கு இரும்புக் கம்பியினால் அடைப்புப் போட்டிருந்தது. இரண்டு வீட்டு வாசற் புறத்திலும் ஒவ்வொரு போர்டு தொங்கிற்று. ஒரு போர்டில், "ஆர், ஆத்மநாதய்யர்,பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்றும் இன்னொரு போர்டில், "என். தாமோதரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்று எழுதியிருந்தது ஆத்மநாதய்யரும், தாமோதரம் பிள்ளையும் நெடு நாளைய சிநேகிதர்கள், தேவபட்டணத்தில் பெரிய வக்கீல்கள். இருவரும் பெரிய குடும்பிகள்; நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள்; ஆனாலும் பெரிய வீடு கட்டிக் கொஞ்சம் கடன்பட்டிருந்தார்கள். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுடைய அந்தஸ்தில் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. 'பப்ளிக் பிராஸிகியூடர்' பதவிக்கு இருவரும் பிரயத்தனம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் தெரிந்துதான் பிரயத்தனம் செய்தார்கள். "தாமோதரம் பிள்ளைக்கு எந்தக் காரணத்தி னாலாவது கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று ஆத்மநாதய்யர் கேட்டார். "ஆத்ம நாதய்யருக்கு ஒருவேளை கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று தாமோதரம் பிள்ளை சொன்னார். ஊரில் இன்னும் பல வக்கீல்களும் தத்தமக்குப் பதவிக்காகப் பிரயத்தனம் செய்தார்கள். கடைசியில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பப்ளிக் பிராஸிகியூடர்' வேலை கிடைத்தது. இதைக் குறித்து அபார சந்தோஷமடைந்து முதன் முதலில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பார்ட்டி' கொடுத்தவர் ஸ்ரீ ஆத்மநாதய்யர்.

சந்தோஷம் ஒருபுறம் இருந்தபோதிலும் ஆத்மநாதய்யரின் மனத்தில், "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் இந்த ஒரு விஷயத்தில் நமக்கு விட்டுக் கொடுக்கவில்லை பார்த்தாயா?" என்ற எண்ணம் இருந்தது. தாமோதரம் பிள்ளையின் மனத்திலோ, "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் கடைசியில் நம்மோடு போட்டியிட முன் வந்தார் அல்லவா?" என்ற எண்ணம் இருந்தது. இம்மாதிரி எண்ணத்தை இருவரும் தங்கள் மனதிற்குள் வைத்துக்கொண்டு மற்றபடி முன் மாதிரி சிநேகமாகப் பழகி வந்தார்கள். ஆனால் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதான இந்த மனிதர்களைப் பற்றி நமக்கு இப்போது என்ன கவலை? இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் கவனிக்கலாம். தாமோதரம் பிள்ளை வீட்டின் மூன்றாவது மச்சில் ஒரு நாள் முன்னிரவில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து மூன்று வாலிபர்கள் உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் ஒருவன் தாமோதரம் பிள்ளையின் மூத்த மகனான அமரநாதன்; இன்னொருவன் ஆத்மநாதய்யரின் சீமந்த புத்திரனான பட்டாபிராமன். மூன்றாவது வாலிபன் நமது ராஜம்பேட்டை கிட்டாவய்யரின் திருக்குமாரன் சூரிய நாராயணன். முதல் இருவரும் இந்த வருஷத்தில் பி.ஏ. பரீட்சை எழுதுவதற்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் வயது இருபது ஆனவர்கள். சூரியநாராயணன், அவர்களுக்கு இரண்டு வயது சின்னவன். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குத்தான் படித்துக் கொண்டிருந்தான்; ஏனெனில் கொஞ்சம் வயதான பிறகே அவனை ஹைஸ்கூல் படிப்புக்காகக் கிட்டாவய்யர் தேவபட்டணத்துக்கு அனுப்பினார்.

ஆத்மநாதய்யர் கிட்டாவய்யரின் வக்கீல்; நெடுநாளைய சிநேகிதர். ஆகையால் பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி அவரிடம் கிட்டாவய்யர் சொல்லியிருந்தார். சூரியநாராயணன் ஹோட்டலில் சாப்பிட்டான். படிப்பதற்கு வசதியிருக்கும் என்று ஆத்மநாதய்யர் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தான். "அமர்நாத்! நம்ம சூரியா நாளைக்கு ஊருக்குப் போகிறான் தெரியுமோ, இல்லையோ?" என்றான் பட்டாபி. "அப்படியா? இப்போது ஊரில் என்ன விசேஷம்? பரீட்சை நெருங்கிவிட்டதே!" என்றான் அமரநாத். "மதராஸிலிருந்து யாரோ பெண் பார்க்க வருகிறார்களாம்; அதற்காக என்னை வந்துவிட்டுப் போகும்படி அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சூரியா. "யாரோ பெண் பார்ப்பதற்கு வந்தால் உனக்கு என்னடா வந்தது? நீ பெண்ணா? அல்லது யாரோவா?" என்றான் அமரநாதன். "என்ன இப்படிக் கேட்கிறாய்? இவனுடைய தங்கைக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிறதாயிருந்தால் இவன் அங்கே இருக்க வேண்டாமா?" என்றான் பட்டாபிராமன். "யார்? சூரியாவின் தங்கை லலிதாவுக்கா கல்யாணம்? அவளைப் பார்ப்பதற்காகவே மதராஸ்காரன் வருகிறான்? அழகாயிருக்கிறதே! ஏனப்பா பட்டாபிராமா! சூரியாவின் தங்கையை நீ கட்டிக்கொள்ளப் போகிறாய் என்றல்லவா எண்ணியிருந்தேன்....?" "சீ! சீ! என்ன இப்படி உளறுகிறாய்? அதுவும் சூரியாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு."

"உளறல் என்னடா உளறல்? உண்மையைச் சொன்னால் உளறலா? சூரியாவைத்தான் கேட்கிறேனே? எனக்கு என்ன பயம் ஏண்டா, சூரியா? நம்ம பட்டாபிராமன் தினம் பொழுது விடிந்தால் லலிதாவைப் பற்றியே எண்ணி எண்ணி உருகிக் கொண்டிருக்கிறானே!- அப்படியிருக்கும்போது லலிதாவைப் பார்க்க மதராஸிலிருந்து ஒருவன் வருவானேன்?" என்றான் அமரநாத். "அதெல்லாம் எனக்கென்ன தெரியும், ஸார்! என்னைக் கேட்டுக் கொண்டா ஏற்பாடு செய்கிறார்கள்? ஒருவேளை பட்டாபிக்கு ஜாதகப் பொருத்தம் சரியில்லையோ என்னமோ?" என்றான் சூரியா. "ஜாதகம் பார்க்கிறது, கீதகம் பார்க்கிறது என்றெல்லாம் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நம்முடைய தேசம் பாழாய்ப் போகிறது நடக்கிற கல்யாணம் எல்லாம் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறார்கள். ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு நடப்பதென்ன? 100-க்கு 90 தம்பதிகளின் இல்வாழ்க்கை நரகமாயிருக்கிறது. எத்தனையோ பெண்கள் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ளே விதவைகளாகித் தொலைகிறார்கள். விதவைகளோடு நிற்கிறார்களா? எத்தனையோ காரியங்களுக்கு அபசகுனமாக எதிரே வந்து காரியங்களைக் குட்டிச் சுவராக்கு கிறார்கள். இந்தத் தேசத்திலேயுள்ள ஜாதகங்களை யெல்லாம் திரட்டித் தீயிலே போட்டுப் பொசுக்கினால் எவ்வளவு நன்மையுண்டு!" என்று குட்டிப் பிரசங்கம் செய்தான் அமரநாத்.

"எல்லாம் வாய்ப் பேச்சுத்தான்; உன் தகப்பனார் கூடப் பெரிய 'சூனா மானா' மாதிரிதான் பேசுகிறார். ஆனால், போன வருஷம் உன் சகோதரியின் கல்யாணம் நடந்ததே, பிராமணப் புரோகிதரைக் கூப்பிட்டுத்தானே நடத்தினார்? அப்புறம் 'ஜோஸ்யத்தில் எனக்கு நம்பிக்கையேயில்லை; சுத்த ஃபிராடு!' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், பப்ளிக் பிராஸிகியூடர் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டதும் சப்தரிஷி வாக்கியம் என்னும் ஏட்டுச் சுவடி வலையில் விழுந்து விட்டாரா இல்லையா?" "பட்டாபி! இது என்ன வாதத்தில் சேர்ந்தது? என் அப்பா செய்யும் காரியங்களுக்கெல்லாம் நான் ஜவாப்தாரியா?" என்றான் அமரநாத். "ரொம்ப சரி! அது போலவே சூரியா தங்கையின் கல்யாணத்துக்கும் ஜாதகத் தடைக்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய ஜாதகத்தைக் கேட்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை. கலியாண விஷயத்தில் என்னுடைய திடமான கொள்கை உனக்குத் தெரியாதா? பி.ஏ. பாஸ் செய்து விட்டுக் குறைந்த பட்சம் மாதம் இருநூறு ரூபாய் சொந்தத்தில் சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்ட பிறகுதான் நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே?"

"அடே, இந்தக் கதையெல்லாம் யாரிடம் அளக்கிறாய்? சென்ற வருஷத்தில் கிட்டாவய்யரும் அவருடைய குமாரியும் உன் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தபோது நீ என்ன பாடுபட்டாய் என்று எனக்குத் தெரியாதா! வீட்டின் உள்ளேயிருந்து வெளியிலும், வெளியிலிருந்து உள்ளேயும் குட்டி போட்ட பூனை போல் நிமிஷத்துக்கு ஒரு தடவை போய் வந்து கொண்டிருந்தாயே? அதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்றா நினைத்தாய்?" "அமரநாத்! உன்னிடம் நான் இந்தப் பேச்சை எடுத்ததே தப்பு. சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்." "அதெல்லாம் முடியாது, அப்பா, முடியாது! கோர்ட்டில் கேஸ் தாக்கல் செய்து விட்டால் அப்புறம் வாதியின் இஷ்டம் போல் வழக்கை வாபஸ் பெற முடியுமா? பிரதிவாதியும், கோர்ட்டாரும் சம்மதித்தால்தானே முடியும்? நான் கேஸை வாபஸ் கொடுக்கச் சம்மதிக்கவில்லை, பட்டாபி! லலிதாவைப் பற்றி நீ அந்த நாளில் வர்ணனை செய்ததெல்லாம் எனக்கு நினைவில்லை என்றா நினைக்கிறாய்? கம்பனும் காளிதாஸனும் வெட்கிப் போகும்படி வர்ணனை செய்தாயே? ஒரு கவிகூடப் பாடியது எனக்கு நினைவிருக்கிறதே! 'ஒரு நாள் குமுத மலர்கள் நிறைந்திருந்த குளக்கரையோரமாக லலிதா சென்றாள். கூம்பியிருந்த குமுத மலர்கள் எல்லாம் கலீரென்று சிரிப்பது போல் மடலவிழ்ந்து மலர்ந்தன. லலிதாவின் சௌந்தரிய வதனத்தை அந்தக் குமுதங்கள் பூரணச் சந்திரன் என்று நினைத்துக்கொண்டு விட்டதுதான் காரணம்?' என்று நீ ஒரு கவி பாடவில்லையா? நிஜமாகச் சொல்லு!"

"அப்பா! அமரநாத்! போதும், இத்துடன் நிறுத்து. வீணாக என் மானத்தை வாங்காதே. உன் பரிகாசப் பேச்சைப் பற்றிச் சூரியா ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறான்!" என்று பட்டாபிராமன் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டே சொன்னான். "தப்பாக நினைத்துக் கொண்டால் நினைத்துக் கொள்ளட்டும். நினைத்துக்கொண்டு என் தலையையா வாங்கி விடப் போகிறான்? அப்படி வாங்குவதாயிருந்தாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன். சூரியா! இருந்தாலும் உன் அப்பா செய்கிற காரியம் கொஞ்சமும் நன்றாயில்லை. நம்ப பட்டாபிராமன் இருக்கும்போது உன் அப்பா எதற்காக வேறு வரன் தேடவேண்டும்? இவனுக்கு என்ன குறைவு?" இத்தனை நேரமும் முகச் சிணுக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தச் சூரியா இப்போது, "நானும் உண்மையைச் சொல்லி விடட்டுமா? எனக்கும் அப்பாவின் ஏற்பாடு பிடிக்கவில்லை. லலிதாவைப் பட்டாபிராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். லலிதாவுக்கும் அதுதான் சந்தோஷமாயிருக்கும். யாரோ முன்பின் தெரியாத ஆசாமியின் கழுத்திலே லலிதாவைக் கட்டுவதற்கு ஏன் முயற்சி செய்கிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே எனக்கு அது பிடிக்கவில்லை" என்றான்.

"நான் ஒருவன் இருக்கிறேன், என் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனையேயில்லாமல் இரண்டு பேரும் பேசுகிறீர்களே! லலிதா விஷயமாக எனக்கு அத்தகைய எண்ணம் கிடையவே கிடையாது, ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். யாரோ ஒரு முன்பின் தெரியாத மனிதன் வருவது - பெண்ணை அவன் முன்னால் கொண்டு நிறுத்துவது - அவன் சாமுத்திரிகா லட்சணம் எல்லாம் சரியாயிருக்கிறதா - என்று பார்ப்பது - அப்புறம் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லுவது - இவையெல்லாம் மிகப் பிசகான காரியங்கள், இதே மாதிரி 'வேண்டும்; அல்லது வேண்டாம்' என்று சொல்லுகிற உரிமை பெண்ணுக்கும் இருந்தாலும் பாதகமில்லை! ஆனால் பெண்ணுக்கோ வருகிறவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் தைரியம் கிடையாது..." "அதென்னப்பா, அப்படிச் சொல்கிறாய்? பெண் பார்க்க வந்தவனைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எத்தனையோ பெண்கள் சொல்லித்தானிருக்கிறார்கள். அதனால் பல கலியாணங்கள் நின்று போயிருக்கின்றன."

"அப்படியெல்லாம் கதைகளிலே நடந்திருக்கும். உண்மை வாழ்க்கையிலே நடப்பதில்லை." இதுவரை நடந்திருக் கிறதோ, இல்லையோ, இப்போது அப்படிச் செய்தாலென்ன என்றுதான் கேட்கிறேன். சூரியா! நான் சொல்லுகிறதைக் கேள்! நீ உன் தங்கையிடம் சொல்லி, வந்து பார்க்கிறவனை, 'எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லப் பண்ணிவிடு!" என்றான் அமரநாத். "அப்படியெல்லாம் செய்யாதே, சூரியா! லலிதா விஷயத்தில் என்னுடைய மனத்தை தவறாக அறிந்து கொண்டு அமரநாதன் சொல்கிறான். ஒரு மரத்திலே ஓர் அழகான புஷ்பம் மலர்கிறது. 'அது அழகாயிருக்கிறது; கண்ணுக்கினிய காட்சியாயிருக்கிறது!' சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? சிலர் அப்படிப்பட்ட ஆசை கொண்டவர் களாயிருக்கலாம். ஆனால் என்னுடைய கருத்து அதுவல்ல. மரத்திலே பூத்திருக்கும் புஷ்பத்தைப் பார்த்தே நான் சந்தோஷப்படத் தயார். யாராவது அந்த மலரைப் பறித்துத் தலையில் வைத்துக் கொண்டாலும் என்னால் பார்த்துச் சந்தோஷப் படமுடியும்!"

"நீ சொல்வது சுத்த ஹம்பக்! அப்படி அழகான மலரை மரத்திலேயே விட்டு வைக்கத் தயாராயுள்ள மானிடர் வெகு அபூர்வம். அதுமட்டுமல்ல! மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொள்வதாயிருந்தால், அதற்குத் தகுதியானவர்களின் தலையில் சூட்டப்பட்டால்தானே அழகாயும் பொருத்தமாயும் இருக்கும்? அதுதான் சந்தோஷமளிக்கும் காட்சி. அவலட்சணம் பிடித்த கழுதைக்கு அழகிய பூவைச் சூட்டினால் அதை எப்படிப் பார்த்து அநுபவிக்க முடியும்? கழுதையினாலேயே முடியாதே! பூவைக் காகிதம் என்று நினைத்துக்கொண்டு தின்றுவிடப் பார்க்குமே. மற்றவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து எப்படிச் சந்தோஷப்பட முடியும்?" என்றான் அமரநாத். "உம்மோடு என்னால் விவகாரம் செய்ய முடியாது, ஸார்! ஆனாலும் நான் சொல்கிறதுதான் சரி!" என்றான் பட்டாபிராமன். "சூரியா! நீ என்ன சொல்கிறாய்?" என்று அமரநாதன் கேட்டான். "நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்!" என்றான் சூரியா. "பார்த்தாயா, பட்டாபி! மெஜாரிட்டி அபிப்பிராயம் உனக்கு விரோதமாயிருக்கிறது! என்ன செய்வது?" என்றான் அமரநாத்.

"உலகத்தில் மெஜாரிட்டியார் முட்டாள்கள் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறாரே, தெரியாதா?" என்றான் பட்டாபி. "அப்பனே! 'பெரும்பான்மையோர் முட்டாள்கள்' என்று சுவாமி விவேகானந்தர் சொல்லலாம்; ஆனால் நீயும் நானும் சொல்லக்கூடாது! வருங்காலத்தில் மெஜாரிட்டிதான் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம்? பெரும்பான்மையோரை அலட்சியம் செய்கிறவன் உலகில் முன்னுக்கு வரவே முடியாது. பெரும்பான்மை மக்களின் இஷ்டப்படி நடக்க முடியாவிட்டால் அவர்களை ஏமாற்றியாவது பிழைக்க வேண்டும்!" என்றான் அமரநாத்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

பத்தொன்பதாம் அத்தியாயம்
மோட்டார் விபத்து

மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச் சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்று போய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர் கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும் அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக் கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவு தாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்கு நினைவு வந்து கொண் டிருந்தது.

ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப் பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்று எழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிரா விட்டால் இத்தனை நேரம் போய்ச் சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?- என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டி வந்தது.

"பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப் போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்! மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள் கிறதுதானே!" என்று புகார் சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான். மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலே சென்றது. அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார்கார் வாங்க வேணும்!" என்றான். "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப்பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாக ஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில் ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒரு திரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீது உராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டு சாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்து தரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந் தவர்கள் சறுக்குமரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டுவந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலே சாமான்கள் உருண்டு விழுந்தன.

இத்தகைய கட்டைவண்டி விபத்தை உண்டாக்கிய மோட்டார்வண்டி அதை மறைப்பதற்கு ஒரு பெரிய புழுதித் திரையையும் உண்டாக்கிவிட்டு மறுகணமே தூரத்தில் மறைந்து போய்விட்டது. புழுதி மறைந்தபடியால் மேற்படி விபத்தைப்பற்றி நடந்ததைக் காட்டிலும் அதிகமாகச் சூரியா மிகைப்படுத்தி எண்ணிக் கொண்டான். "முருகா! ஓட்டு! ஓட்டு! வண்டி குடையடித்து விட்டது போலிருக்கிறதே! சீக்கிரம் ஓட்டு!" என்று பதறிக்கொண்டே கூறினான். முருகனும் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சம்பவம் நடந்த இடத்துக்குச் சமீபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். "சின்னய்யா! நம்ம அத்தை அம்மாபோல இருக்கிறதே! பம்பாய் அம்மாவும் அவங்க பொண்ணுங்கூட இருக்காங்களே! சாமி ஆண்டவனே! ஒருத்தருக்கும் ஒண்ணும் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று வண்டிக்காரன் சொன்னது ஒன்றும் சூரியாவின் காதில் விழவில்லை. வண்டியிலிருந்து அவன் பளிச்சென்று குதித்துக் குடையடித்த வண்டியை நெருங்கி ஓட்டமாக ஓடினான்.

குடை சாய்ந்த வண்டியின் பின்புறச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பம்பாய் ராஜம்மாள் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மூட்டைகள் சிதறிக் கிடந்தன. ஒரு தகரப் பெட்டி இன்னும் வண்டிக்குள்ளேயே இருந்து கொண்டு தானும் கீழே விழலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ராஜம்மாளுக்கு வண்டிச் சட்டத்தைத் தான் விட்டால் அந்தப் பெட்டி தன் தலையில் விழுந்து விடும் என்ற பயம் தோன்றியிருந்தது. ஏற்கெனவே நோயினால் மெலிந்திருந்த அவளுடைய முகம் மேற்படி பயத்தினால் வெருண்ட தோற்றம் அளித்தது. ஆனால், அவளுடைய பயத்துக்குக் காரணம் இது மட்டுந்தானா? "அம்மா! அம்மா! இதோ நான் வெள்ளத்தில் முழுகப் போகிறேன். என் மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! இதோ முழுகப் போகிறேன்!" என்று அவளுடைய செல்வக் குமாரி சீதா அலறிக்கொண்டிருந்ததும் ராஜம்மாளின் பீதிக்கு ஒரு காரணமாயிருக்கலாமல்லவா?

ராஜத்துக்கு நாலைந்து அடி தூரத்தில் தரையில் விழுந்திருந்த இன்னொரு ஸ்திரீ, "ஐயோ! அப்பா!..." என்று முனகிக் கொண்டே மெதுவாக முயன்று எழுந்து உட்கார்ந்தாள். "மோட்டார் சத்தம் கேட்டவுடனேயே 'வண்டியை ஒதுக்கி ஓட்டடா' என்று அடித்துக் கொண்டேன் கேட்டால்தானே?" என்று வண்டிக்காரனுக்கு வாய் நிறைந்த ஆசீர்வாதங்களைச் செய்தாள். பிறகு, "ராஜம்! உனக்குக் காயம் கீயம் ஒன்றும் படவில்லையே!" என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள். ஏதோ பயங்கரமான பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்த சூரியா மேற்கூறிய காட்சியை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு நொடிப் பொழுதில் நிலைமையைத் தெரிந்து கொண்டான். வண்டிக்குச் சற்றுத் தூரத்தில் எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்த ஸ்திரீ தன்னுடைய மூத்த அத்தை அபயாம்பாள் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் ஒரு நிமிஷத்துக்கு மேல் நிற்கவில்லை.

சாலையில் ஓரத்தில் இருந்த நீர் ஓடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு, "அம்மா! நான் முழுகப் போகிறேன்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது அவனுடைய கண்களும் கவனமும் சென்றன. இரண்டே எட்டில் ஓடைக் கரைக்கு ஓடிச் சென்றான். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடேதான். ஓடையில் விழுந்து மேற்கண்டவாறு கூச்சலிட்டுக் கொண்டே காலினாலும் கையினாலும் தண்ணீரை அடித்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த இளம் பெண், ஓடைக் கரையில் வந்து வியர்க்க விருவிருக்க நின்ற வாலிபனைப் பார்த்தாள். உடனே கூச்சலிடுவதையும் தண்ணீரைக் காலாலும் கையாலும் அடிப்பதையும் நிறுத்தினாள். ஏதோ, ஓர் ஆபூர்வமான அதிசயக் காட்சியைப் பார்ப்பது போல் சூரியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அப்படிப் பார்த்தவண்ணம் கலகலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி செவியில் விழுந்தபொழுது அமுதமுண்ட குயிலின் கீதம் ஆயிரம் பதினாயிரம் வர்ண மலர்களாக மாறி மேலே விழுவது போன்ற உணர்ச்சி சூரியாவுக்கு உண்டாயிற்று.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபதாம் அத்தியாயம்
அம்மாஞ்சி அறிமுகம்

சிரிப்பின் ஒலியைக் கேட்டதினால் அடைந்த திகைப்பு நீங்கியதும் சூரியா தன்னுடைய தவறை உணர்ந்தான். ஓடையில் விழுந்திருந்த பெண்ணைத் தான் கரை சேர்க்க எண்ணியது எவ்வளவு பைத்தியக் காரத்தனம் என்பதை அறிந்தான். அவள், "முழுகப் போகிறேன்" என்று கத்தியது வெறும் விளையாட்டுத் தான் என்பதும் தெளிவாயிற்று. ஓடையில் முழங்கால் அளவு தண்ணீருக்குமேல் இல்லையாகையால் அந்தப் பெண்ணுக்கு அபாயம் ஒன்றும் ஏற்படக் காரணம் கிடையாது. சாலைக்கு மண் போடுவதற்காகச் சாலையின் ஓரத்தில் மண் எடுத்து எடுத்துப் பள்ளமாயிருந்தது. நாளடைவில் அப்பளத்தில் தண்ணீர் தேங்கிச் சாலைக்கும் நன்செய் நிலத்துக்கும் இடையே நீண்ட ஓடையாக மாறியிருந்தது. நீர் ஓடையின் அகலம் சுமார் பதினைந்து அடிதான். ஆழமோ எந்த இடத்திலும் மூன்று அடிக்குமேல் இராது. மழை காலத்தில் பெய்யும் மழையும் வயல் களிலிருந்து வடிந்த தண்ணீருமாகச் சேர்ந்து நீரோடையில் வருஷத்தில் பத்து மாதத்துக்குக் குறையாமல் தண்ணீர் நிற்கும். நீண்ட காலம் இப்படித் தண்ணீர் நின்ற காரணத்தினால் அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் மண்டிப் படர்ந்து கொழுகொழுவென்னும் இலைகளோடும் அழகிய மலர்களோடும் விளங்கின. மாலை வேளையானதால் அம்மலர்கள் நன்றாக இதழ் விரிந்திருக்கவுமில்லை; அடியோடு கூம்பவும் இல்லை. அரைவாசி விரிந்திருந்த அல்லி.... செங்கழுநீர்ப் புஷ்பம் ஒவ்வொன்றும் ஓர் அழகிய வர்ணப் பளிங்குக் கிண்ணத்தைப் போல் காட்சியளித்தன.

ஓடையின் மேலாகச் சாலை ஓரத்து ஆலமரக் கிளைகள் தழைத்திருந்தன. அஸ்தமனச் சூரியனின் பொற்கிரணங்கள் அந்தப் பசுங் கிளைகளின் வழியாக நுழைந்து வந்து நீல நிற ஓடை நீரில் லீலை புரிந்தன. சற்று தூரத்தில் பொன்னிற நெற் கதிர்களைத் தாங்க முடியாமல் வயலில் சாய்ந்திருந்த நெற்பயிர்களும் இன்னும் அப்பால் மரகதப் பசுமை வாய்ந்த அடர்ந்த தென்னந்தோப்புகளும் காணப்பட்டன. இந்த இயற்கை வர்ணக் காட்சிகளை எல்லாம் சூரியாவினுடைய கண்கள் பார்த்து, புகைப்படக் கருவி படம் பிடிப்பது போலப் பிடித்து, அவனது உள் மனத்தில் பதியச் செய்தன. அவ்வளவு இயற்கை எழில் களும் அந்த நீல நிற ஓடையில் விழுந்த ஜலகன்னிகையின் முகத்தின் அழகைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக ஏற்பட்ட செயற்கைச் சித்திரங்களாகச் சூரியாவுக்குத் தோன்றின. தன்னுடைய வாழ்நாள் உள்ளளவும், தன் உடம்பில் உயிர் இருக்குமளவும், தன் மனத்திற்கு நினைக்கும் சக்தி இருக்குமளவும், இந்த நிமிஷத்திலே தான் பார்க்கும் காட்சியைத் தன்னால் மறக்க முடியாது என்று சூரியாவின் உள் மனத்தில் ஒரு பகுதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

ஜலகன்னிகை சிரிப்பை நிறுத்தி, "பெரியம்மா! இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டவுடனே, சூரியா கனவு லோகத்திலிருந்து இந்தப் பூவுலகத்துக்கு வந்தான். "இவன்தான் உன் அம்மாஞ்சி சூரியா! பார்த்தால் தெரியவில்லையா, சீதா! கிடக்கட்டும், நீ கரை ஏறு. "ஓகோ லலிதாவின் அண்ணாவா, பெரியம்மா!" "ஆமாண்டி பெண்ணே! லலிதாவின் தமையன்தான். நீ சீக்கிரம் கரையேறி வந்து சித்தாடை உடுத்திக் கொள்!" என்று அபயாம்பாள் சொல்லி விட்டுப் பின்னர் சூரியாவைப் பார்த்து, "நீ எங்கே இருந்தடா அப்பா, வருகிறாய் - இவர்கள்தான் உன் பம்பாய் அத்தை ராஜமும் அவளுடைய பெண்ணும். இவர்களை நீ பார்த்ததேயில்லையே!" என்றாள். தேவப்பட்டணத்திலிருந்து வருகிறேன் அத்தை!" என்று சொல்லிக்கொண்டே சூரியா ஓடக் கரையிலிருந்து இப்பால் வந்தான். "ஒருவருக்கும் காயம்படவில்லையே, அத்தை?" "ஏதோ நல்ல காலமாய்ப் போச்சு! இங்கே இந்த வண்டிக்குச் சத்தத்தைக் கொடுத்து அனுப்பிவிடலாம். நம்முடைய வண்டியிலேயே எல்லாரும் போய்விடலாம்" என்றான்.

இதற்குள் சீதா ஓடையிலிருந்து கரையேறி வந்தாள். "பெரியம்மா! அம்மாஞ்சியை அறிமுகம் செய்து கொள்வதற்குச் சரியான இடந்தான். இந்த ஓடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாயில்லாதது மட்டும் ஒரு குறை!" என்று சொல்லிக் கொண்டே சூரியாவை ஒரு விஷமப் பார்வை பார்த்தாள். பிறகு அம்மாவின் அருகில் சென்று, "பெட்டியிலிருந்து வேறு புடவை எடுத்துக் கொள்கிறேன், அம்மா! உனக்கு ஒன்றும் காயம் கீயம் இல்லையே!" என்று கவலையுடன் கேட்டாள். "எனக்கு ஒன்றுமில்லை சீதா! ஆனாலும் நீ இப்படி முழுகப் போகிறேன், என்று கூச்சல் போடலாமா? ஒரு நிமிஷம் நான் கதி கலங்கிப் போய்விட்டேன்!" என்றாள் ராஜம். "நீ இனிமேல் என்னைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், அம்மா! அம்மாஞ்சி சூரியா இருக்கிறபோது உனக்கு என்ன கவலை? என்னை இந்த முழங்கால் மட்டும் ஜலத்திலிருந்து காப்பாற்று வதற்காக அம்மாஞ்சி ஓடிவந்த வேகத்தை நீ பார்த்தாயோ, இல்லையோ?" என்று சொல்லிக் கொண்டே சீதா சூரியாவை மறுபடி ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். "இந்தப் பெண்ணுக்கு எப்போது பார்த்தாலும் சிரிப்புத் தான்; எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்!" என்றாள் ராஜத்தின் தமக்கை.

சூரியா சொன்னபடி எல்லோரும் ஒரே வண்டியில் ஏறிப் போகவில்லை. ராஜம்மாளுக்குத் தன் மருமகனோடு தனியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம். இதற்குள் இரண்டு வண்டிக்காரர்களுமாகக் குடையடித்த வண்டியை நிமிர்த்திச் சாலைக்குக் கொண்டு வந்து மாட்டையும் மெள்ளப் பூட்டி விட்டார்கள். ராஜம்மாள் வற்புறுத்தியதன் பேரில் அவளும் சூரியாவும் வாடகை வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சீதாவும் அவளுடைய பெரியம்மாவும் பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டிகள் ராஜம்பேட்டையை நோக்கி ஜாம் ஜாம் என்று சென்றன. சீதா பெரியம்மாளிடம், "அம்மாஞ்சியைப் பார்த்தால் லலிதாவை அச்சடித்தது மாதிரி இருக்கிறது; அம்மாஞ்சிக்குப் புடவை கட்டிவிட்டால் லலிதா என்றே பார்க்கிறவர்கள் நினைப்பார்கள். பெரியம்மா! ஒருவேளை அவர்கள் இரண்டு பேரும் இரட்டைக் குழந்தைகளோ?" என்றாள் சீதா. "சீ சீ! அசடே! என்ன சொல்கிறாய்! லலிதாவைவிடச் சூரியா மூன்று வயது பெரியவன். என் மனத்திற்குள்ளே நான் என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால்....." "என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாய், சொல்லேன்! "அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? தொழுவூர் அய்யனார் கிருபை வைத்தால் நடக்கும்!" அது யார் பெரியம்மா, தொழுவூர் அய்யனார்?" என்றாள் சீதா. "உனக்குத் தெரியாதா? நம் குடும்பத்தின் குல தெய்வம்! ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்.

"ஓகோ! அப்படியா? நான் என்ன நினைத்தேன் சொல்லட்டுமா, அத்தை! அய்யர்களிலே பணக்காரர்களுக்கு 'அய்யனார்' என்ற பட்டப் பெயரோ என்று நினைத்தேன்." "சீதா! எதற்கும் ஒரு குதர்க்கம் பேசுகிறது என்று வைத்துக் கொண்டிருக்கிறாய். இது நன்றாயில்லை, பெரியவர்கள் சொல்கிறதைப் பயபக்தியோடு கேட்டுக் கொள்ளவேணும்." சீதா உடனே கையைக் கட்டிக் கொண்டு, "ஆகட்டும்" அப்படியே செய்கிறேன். அய்யனாரால் இப்போது என்ன காரியம் ஆகவேணும்?" என்று கேட்டாள். "நான் நினைத்தது கை கூடினால் ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்." "நீ நினைத்துக் கொண்டிருப்பது என்ன சொல்லு, பெரியம்மா!" அபயாம்பாள் வண்டிக்காரனுக்குக் கேளாதபடி தன் குரலை மெல்லியதாக்கிக் கொண்டு, "உன்னைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று தான்; கிட்டா உடனே சம்மதித்து விடுவான்; நான் சொன்னால் தட்ட மாட்டான். ஆனால் அந்த ராட்சஸி இருக்கிறாளே?" "அது யார் ராட்சஸி, பெரியம்மா!" "உன் அம்மாமி சரஸ்வதிதான்! அவள் சம்மதிப்பதுதான் சந்தேகம். பெரிய இடமாய் இருக்கணும்; எதிர் ஜாமீனும் சீரும் செனத்தியும் வீடு கொள்ளாமல் வரணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் பகவான் புண்ணியத்திலே...." "பெரியம்மா! நீ சொல்லுவது தப்பு, சரஸ்வதி அம்மாமி சொல்லுவது தான் சரி, சூரியாவைப் பார்த்தால் என்னுடைய அண்ணாவோ தம்பியோ என்று சந்தேகப்படும்படி இருக்கிறது. அப்படிப் போய் யாராவது கலியாணம் திட்டம் செய்வார்களா? பெண்ணுக்கும் பிள்ளைக்கும் குறைந்தது ஐந்து வருஷமாவது வித்தியாசம் இருக்க வேண்டாமா?"

"ஐந்து வருஷம் என்னத்துக்கு வித்தியாசம்? இரண்டு வருஷம் இருந்தால் ஏதேஷ்டம். உன் தாத்தாவுக்கு அதாவது எங்க அப்பாவுக்குப் பதினாலு வயதிலே கலியாணம் நடந்ததாம். அப்போது அம்மாவுக்கு வயது பதிமூன்றுதான். உன் பாட்டி எத்தனை குழந்தை பெற்றாள் தெரியுமா? பதினேழு பெற்றாள்." "அதெல்லாம் அந்தக் காலம், பெரியம்மா! இந்த நாளிலே இருபது வயதுக்குக் குறைந்த எந்தப் பிள்ளையும் கலியாணம் பண்ணிக்க மாட்டான்; அப்படிப் பண்ணிக் கொண்டாலும் அவர்கள் சந்தோஷமாயிருக்க மாட்டார்கள்!" "ஏன் சந்தோஷமா இருக்க மாட்டார்கள்? பேஷாக இருப்பார்கள். உன் அம்மாமி மாத்திரம் சம்மதித்தால் கலியாணம் நடந்து விடும். ஆனால் அவள் எங்கே சம்மதிக்கப் போகிறாள்! ரொம்பப் பேராசை அவளுக்கு, ஆனால் குழந்தைகள் மட்டும் தங்கக் கம்பிகள் தான்! அப்பாவின் குணத்தைக் கொண்டு அவர்கள் பிறந்திருக்கிறார்கள்!" "பெரியம்மா! பிறத்தியாரைப் பற்றி அவர்கள் இல்லாத போது குறை சொல்லக் கூடாது. அது ரொம்பப் பிசகு, மாமியைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய்? சரஸ்வதி மாமி ரொம்ப நல்லவள். என்னிடம் எவ்வளவு பிரியமாயிருக்கிறாள் தெரியுமா?" என்றாள் சீதா. "அசட்டுப் பெண்ணே! நீயும் உன்னுடைய அம்மாவைப் போலவேதான் இருக்கிறாய். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறாய். மாமியின் சுபாவம் போகப் போகத் தெரியப் போகிறது பார்!" என்றாள் அபயாம்பாள்.

முதலில் சூரியாவுக்கு சீதா ஏறிய வண்டியில் தானும் ஏறவில்லையே என்று இருந்தது. அந்த ஏமாற்றம் ஒரு கணத்துக்குமேல் இருக்கவில்லை. சீதாவுடன் பேசிக் கொண்டு போவதற்கு அடுத்தபடியாகப் பம்பாய் அத்தையுடன் பேசிக்கொண்டு பிரயாணம் செய்வது அவனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. "அத்தை! நீங்கள் எங்கே போய் விட்டு வருகிறீர்கள்? ராஜம்பேட்டையில் இருப்பதாக வல்லவா நினைத்தேன்? 'லலிதாவைக் கலியாணத்துக்காகப் பார்க்க வருகிறார்கள்; நீயும் வந்து விட்டுப்போ!' என்று அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்ற ஆசையினால் தான் நான் வந்தேன். போன வருஷம் லலிதா பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து உங்களைப் பற்றியும் சீதாவைப் பற்றியும் ஓயாமல் ஏதாவது புகழ்ந்து கொண்டே யிருப்பது அவளுக்கு வழக்கமாகி விட்டது! அதிலிருந்து எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாயிருந்தது" என்று சூர்யா தன்னுடைய வழக்கத்தைவிட அதிகப் படபடப்புடன் வார்த்தைகளைக் கொட்டினான்.

"இங்கேதான் ஒரு வாரத்துக்கு மேலே இருந்தோம். சூர்யா! அக்கா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அதற்கு வரவேண்டுமென்று ரொம்பச் சொன்னாள்; போய்விட்டுத் திரும்பினோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று. நல்ல சமயத்துக்கு நீ வந்தாய்!" என்றாள் ராஜம். "நான் வந்து என்ன செய்து விட்டேன்? ஒன்றுமில்லையே!" "அப்படிச் சொல்லாதே, அப்பா! வண்டி குடை கவிழ்ந்ததும் எனக்கு ஒரே பயமாய்ப் போய் விட்டது, அதுவும் இந்த அசட்டுப் பெண் விளையாட்டுக்காக, 'முழுகப் போகிறேன்; முழுகிக் கொண்டிருக்கிறேன்' என்று கத்தினதும் எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது. உன்னைக் கண்ட பிறகுதான் தைரியம் உண்டாயிற்று. வேண்டுமென்கிற மனுஷாள் பக்கத்தில் இருந்தாலே எப்படிப்பட்ட ஆபத்திலும் ஒரு தைரியந்தானே?"

"அத்தை! என்னைப் பார்த்ததும் நான் வேண்டும் என்கிறவன் என்று உனக்குத் தெரிந்து விட்டதா? என்னை இதற்கு முன்னால் நீ பார்த்ததே கிடையாதே!" "எத்தனை நாள் பிரிந்திருந்தாலும் பார்க்காதிருந்தாலும் இரத்த பாசம் என்பது ஒன்று இருக்கிறதல்லவா? உன்னைப் பார்த்ததுமே எனக்குத் தெரிந்து போய் விட்டது. சூர்யா! உன்னுடைய வயதில் உன் அப்பா உன்னைப் போலவே இருந்தார். நீ தலையைக் கிராப் செய்துகொண்டிருக்கிறாய்; உன் அப்பா குடுமி வைத்துக் கொண் டிருந்தார் மற்றபடி தத்ரூபம் அதே மாதிரி இருக்கிறாய். திடீரென்று உன்னைப் பார்த்ததும் எனக்குப் பழைய காலத்து நினைவு வந்தது. வண்டி குடையடித்ததைப் பார்த்து விட்டு அண்ணாதான் ஓடி வருகிறார் என்று நினைத்தேன். அண்ணா உன் பிராயமாக இருந்த நாளிலேதான் எனக்குக் கலியாணம் நடந்தது. நேற்றுப் போல் இருக்கிறது; ஆனால், அதெல்லாம் நடந்து வருஷம் இருபது ஆகிவிட்டது!" என்று ராஜம் சொல்லுகையில் அவளுடைய கண்கள் கலங்கின.

"அத்தை! கலியாணம் ஆகிப் புக்ககத்துக்குப்போன பிறகு நீ இந்த ஊருக்கு வரவே இல்லையாமே? ஏன் அப்படி?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; வரவேயில்லை. உன் அத்திம்பேரின் சுபாவந்தான் காரணம். இப்போது கூட வரமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்போது வந்திரா விட்டால் உங்களையெல்லாம் எங்கே பார்க்கப் போகிறேன்? இந்த ஊரையெல்லாந்தான் மறுபடி எந்தக் காலத்தில் பார்க்கப் போகிறேன் சூரியா? சீதாவைவிட இரண்டு வயது குறைவாயிருந்த போதே எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. அப்போது போனவள் இப்போதுதான் திரும்புகிறேன். ஆனாலும் இந்தச் சாலையும் ஓடையும், வயலும் வரப்பும், தோப்பும் துரவும், கோயிலும், குளமும் அப்படியே எல்லாம் ஞாபகம் இருக்கின்றன. இந்தச் சாலை வழியாக இதே மாதிரி மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு எத்தனை உற்சவங்களுக்கும் கலியாணங்களுக்கும் போயிருக்கிறேன் தெரியுமா? அதையெல்லாம் நினைத்தால் சந்தோஷமாயுமிருக்கிறது; துக்கமாயு மிருக்கிறது!" என்றாள் ராஜம். சூரியாவும் அப்போது சந்தோஷமும் துக்கமும் கலந்த மனோநிலையை அடைந்தான். அத்தைக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்ல வேண்டுமென்று நினைத்தான். ஆனால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்தொன்றாம் அத்தியாயம்
சீதாவின் காதலன்

மறுநாள் ராஜம்பேட்டை அக்கிரகாரத்தில் பெரிதும் பரபரப்புக் குடிகொண்டிருந்தது; சாயங்காலந்தான் மதராசிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த போதிலும் அன்று காலையிலிருந்தே யாருக்கும் வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. பாதிப் பேருக்கு மேல் அவரவர்கள் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் வேலையாயிருந்தவர்கள் ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை வாசலுக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். ஊரிலேயே இப்படி இருந்ததென்றால் கிட்டாவய்யர் வீடு எப்படி இருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? காலையில் காப்பி சாப்பிடுவதற்கே சீமாச்சுவய்யர் வந்து விட்டார். "என்ன ஓய்? என்ன ஓய்?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு சாயங்காலம் வரப்போகிறவர்களை வரவேற்பதற்கான காரியங்களைச் சுறுசுறுப்பாகக் கவனித்தார். இன்னும் பலர் ஒரு வேலையும் இல்லாமல் கிட்டாவய்யர் வீட்டுக்கு வருவதும் போவதுமாயிருந்தார்கள். "இன்று சாயங்காலந்தானே வருகிறார்கள்?" என்ற கேள்விக்கு ஆயிரந்தடவைக்கு மேல் கிட்டாவய்யர் 'ஜவாப்' சொல்லித் தீரவேண்டியதாயிருந்தது.

சரஸ்வதி அம்மாள் காலை நாலரை மணிக்கே எழுந்து பரபரப்பாக எல்லாக் காரியங்களையும் கவனிக்கத் தொடங்கினாள். பலபலவென்று பொழுது விடிவதற்குள்ளே வீடு மெழுகி வாசல் பெருக்கிக் கோலமும் போட்டாகிவிட்டது. அப்புறம் உக்கிராண அறையிலிருந்து சமையலறைக்குப் போவதும், தரையில் இருந்த சாமானைப் பரணியில் தூக்கிப் போடுவதும், பரணியில் இருந்த சாமானைத் தரையில் இறக்கி வைப்பதும், அங்கங்கே உள்ளவர்களை ஏதாவது அதிகாரம் பண்ணுவதுமாயிருந்தாள். "இன்றைக்கே இந்தப் பாடாயிருக்கிறதே; நாளைக்குக் கலியாணம் என்று வந்தால் எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ?" என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொண்டாள். அபயாம்பாளையும் ராஜம்மாளையும் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வந்தது பற்றிச் சரஸ்வதி அம்மாள் தன் திருப்தியைத் தெரிவித்தாள். "ஏதோ சிரமத்தைப் பார்க்காமல் நேற்றே புறப்பட்டு வந்துவிட்டீர்களே! என்னுடைய பாரம் பாதி குறைந்தது. இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு நீங்கள் வந்திராவிட்டாலும் பாதகமில்லை! ஆனாலும் வந்தது தான் சந்தோஷமாயிருக்கிறது. இதற்குத்தான் நமக்கு என்று நாலு மனுஷாள் வேணும் என்கிறது. நான் ஒண்டிக்காரி என்னத்தையென்று கவனிப்பேன்? எங்க அம்மாவினாலும் ஓடியாடி முன்னேயெல்லாம் போல் இப்போது காரியம் செய்ய முடிகிறதில்லை. நீங்கள் வந்து தான் காரியம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவே நடக்காது என்று சொல்கிறேனா? அது ஒன்றும் கிடையாது. ஆனாலும் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்ததுதான் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறது!" என்று மிகப் பெரிய தமிழ்ப் புலவர்களைப் போல் இரு பொருள் வைத்துப் பேசுவாள்.

உடனடியாகத் தன் தாயாரிடம் போய், "கேட்டாயா அம்மா! குறுக்கே நெடுக்கே வீட்டிலே எங்க போனாலும் இரண்டு நாத்தனார்மார்களும் நிற்கிறார்கள். ஒரு காரியமும் செய்ய முடிகிறதில்லை. அந்தப் பெண் சீதா, ஒரு நிமிஷம்கூட விடமாட்டேன் என்று லலிதாவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள்! இவர்கள் இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு வரவில்லையென்றால் யார் குறைபடப் போகிறார்கள்? தலைக்கு மேலே எனக்கு இருக்கிற வேலையில் இவர்களை வேறே நான் விசாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் பொல்லாப்பு வந்து சேரும். ஏதோ ஒத்தாசைக்கு நீயாவது வந்து சேர்ந்தாயே, அதைச் சொல்லு! இல்லாவிட்டால் நான் தவித்துப் போயிருப்பேன்!" என்று மற்றவர்களுக்குக் காதில் விழுந்தும் விழாமலும் இருக்கும்படி கூறுவாள். சரஸ்வதி அம்மாள் சொன்னபடியே லலிதாவும் சீதாவும் இணைபிரியாமல் ஒருவரையொருவர் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் சாயங்காலம் சீதா வண்டியிலிருந்து இறங்கியவுடன் லலிதா அவளை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்றாள். அப்புறம் ஒருவரையொருவர் ஒரு நிமிஷமும் பிரியவில்லை. இராத்திரி இருவரும் படுத்துக் கொண்டது கூட ஒரே பாயில் ஒரே தலையணையை வைத்துக் கொண்டுதான். இதெல்லாம் உதவாது என்று லலிதாவின் தாயார் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை. அன்றைக்குப் பொழுது விடிந்து எழுந்ததிலிருந்து இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசிய வண்ணம் இருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு என்னதான் விஷயம் இருக்கும் என்று மற்றவர்களுக்கெல்லாம் வியப்பாயிருந்தது.

சீதா - லலிதா இவர்களின் நடத்தையைக் காட்டிலும் அதிகமான வியப்புக்கு உரியதாயிருந்தது சூரியாவின் நடவடிக்கை தான். முன் தடவையெல்லாம் அவன் ஊருக்கு வந்தால் வீட்டுக்குள் அதிகம் தங்கவே மாட்டான். கையோடு ஏதேனும் புத்தகம் கொண்டு வந்திருப்பான். எங்கேயாவது மூலையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். "ரொம்பப் படிக்காதேடா, அப்பா! கண்ணுக்குச் சூடு!" என்று அவனுடைய தாயார் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டான். அம்மா ஏதாவது கேட்டால் அதற்கு அவன் பதில் சொல்வதே அபூர்வம். பெண் பிள்ளைகள் அதிகமாகப் புழங்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் அவன் வருவதே கிடையாது. அப்படிப்பட்டவன் இந்தத் தடவை வீட்டு வாசலுக்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டிருந்தான். அடிக்கடி சீதாவும் லலிதாவும் இருக்கும் இடத்துக்கு வருவான். "ஏது? இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஒரு நிமிஷங்கூட விட்டுப் பிரிய மாட்டீர்கள் போலிருக்கிறதே! நாளைக்குக் கலியாணம் ஆகிப் புக்ககம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?" என்பான். பெரும்பாலும் லலிதாதான் பதில் செல்லுவாள். "நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம். உனக்கென்ன அதைப் பற்றி?" என்பாள்.

சில சமயம், "பெண்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? போய் உன் காரியத்தைப் பார்!" என்பாள். "என் காரியம் வேறு ஒன்றுமில்லையே! உன்னை விசாரித்துக் கொள்வதுதான் எனக்கு இப்போது வேலை! தங்கைக்குக் கலியாணம் என்றால் தமையன் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? உலகம் சிரிக்காதா?" என்பான் சூர்யா. "ஆமாம்; நீ ரொம்ப இங்கு வந்து வெட்டி முறித்து விடுகிறாயாக்கும்? போடா போ!" என்பாள் லலிதா. "அவனை ஏண்டி விரட்டியடிக்கிறாய்? ஏதோ உன்பேரில் உள்ள பிரியத்தினால் தானே வருகிறான்?" என்பாள் சீதா. இந்தச் சமயத்தில் லலிதாவின் சின்னத் தம்பி சுண்டுப் பயல் குறுக்கிடுவான். "ஏன் பொய் சொல்லுகிறாய், அண்ணா! நீ லலிதாவைக் கவனித்துக் கொள்வதற்காகவா இப்படி வளைய வந்து கொண்டிருக்கிறாய்? பம்பாய் அத்தங்காளைப் பார்ப்பதற்குத்தானே வீட்டுக்குள் சுற்றுகிறாய்? எனக்குத் தெரியாது என்று நினைத்தாயோ?" என்று குட்டை உடைத்து விடுவான். "சீ! கழுதை சும்மாயிரு!" என்பான் சூரியா. "நான் கழுதையென்றால் நீ கழுதையின் அண்ணாதானே!" என்பான் சுண்டுப் பயல். விவகாரம் முற்றிச் சூரியா சுண்டுவின் சிண்டைப் பிடிக்க ஓடுவான். ஆனால் மறு நிமிடம் திரும்பி வந்து விடுவான். சூரியாவின் தொந்தரவிலிருந்து தப்புவதற்காகவே லலிதாவும் சீதாவும் அன்று மத்தியானம் சாப்பாடு முடிந்தவுடனே குளத்தங்கரை 'பங்களா'வுக்குச் சென்றார்கள்.

சீதா பம்பாயிலிருந்து வந்ததும் ராஜம்பேட்டையில் ஒரு வாரம் இருந்தாள். அந்த ஒரு வாரம் சீதாவும் லலிதாவும் அடிக்கடி குளத்தங்கரைப் பங்களாவுக்குப் போவார்கள். பிறருடைய தொந்தரவு இல்லாமல் தங்களுடைய மனோரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பகலெல்லாம் பேசினாலும் பேச்சு முடியாது. சூரியன் அஸ்தமித்த பிறகுகூட வீட்டுக்குத் திரும்பமாட்டார்கள். பங்களாவுக்கு எதிரில் இருந்த குளத்தங்கரைப் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு பேச்சைத் தொடங்குவார்கள். அந்த இளம் பெண்கள் அப்படி என்னதான் முடிவில்லாத அந்தரங்கம் பேசுவார்களோ என்று வானமாதேவி தன்னுடைய லட்சக்கணக்கான நட்சத்திரக் கண்களில் அதிசயம் ததும்பப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அத்தகைய மோகன முன்னிரவு வேளையில் சீதாவைப் பார்த்து லலிதா, "அத்தங்கா! நான் எத்தனை தடவை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாயே? நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்? எப்போது உனக்குக் கலியாணம்!" என்று கேட்டாள். சீதா ஆகாயத்தை நோக்கியவண்ணம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அவள் லலிதாவைப் பார்த்துச் சொன்னாள். "என் கலியாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்றால் நீ கேட்கவில்லை. பதில் சொன்னால்தான் விடுவாய் போலிருக்கிறது. நல்லது; என்னுடைய அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் கேள். அம்மா சொன்னாலும் சரி, அப்பா சொன்னாலும் சரி, அவர்கள் இஷ்டப்படி நான் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிக்க மாட்டேன்.

எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே'சரி' என்று சொல்லி விடுவேனா? ஒருநாளும் மாட்டேன், லலிதா! உனக்கு லைலா - மஜ்னூன் கதை சொன்னே னல்லவா? அது ஞாபகமிருக்கிறதா? மஜ்னூவை லைலா என்ன கேட்டாள்? 'இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும்' என்று கேட்டாள். மஜ்னூவும் 'கொண்டு வருகிறேன்' என்று போனான். ஆனால் நான் அவ்வளவு அற்பமான பொருளைக் கேட்கமாட்டேன். என்னை மணந்து கொள்கிறேன் என்று வருகிறவனுக்கு இராத்திரி வேளையில் நட்சத்திர மயமான ஆகாசத்தைக் காட்டுவேன். எனக்குப் பிடித்த பன்னிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, 'அந்த நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்பேன். அவன் போய் இன்னொருவன் வருகிறான் என்று வைத்துக்கொள். அவனைப் பார்த்து, 'முள் இல்லாத ரோஜாச் செடியிலிருந்து மல்லிகைப்பூ மணமுள்ள செண்பக மலர் எடுத்து மாலை கட்டிக்கொண்டு வர உன்னால் முடியுமா? கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்று சொல்வேன். அவன் போய் இன்னொருவன் வந்தால், 'வான வில்லின் வர்ணங்களையும் தோகை மயிலின் சாயலையும் கலந்து ஒரு அற்புதமான வர்ணச் சித்திரம் எழுதிக் கொண்டு வா! கொண்டு வந்தால் உன்னை நான் மணந்து கொள்வேன்!' என்பேன்....."

சீதா அடுத்தபடி என்ன சொல்லலாம் என்று ஒரு கணம் யோசித்தபோது லலிதா, "அத்தங்கா! இது என்ன பேச்சு? இப்படியெல்லாம் நீ கேட்டால் யாரால் கொண்டுவரமுடியும்? உன்னைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். உனக்குக் கலியாணமே ஆகாது!" என்று சொன்னாள். "அப்படியா நினைத்தாய் லலிதா!" ஒரு நாளும் இல்லை. மூடர்கள் எல்லாரும் நான் கேட்டதைக் கொடுக்க முடியாது என்று போய் விடுவார்கள். கடைசியாகப் புத்தியுள்ளவன் ஒருவன் வருவான். வந்து அவன், 'இதோ பார்! நீ கேட்டதையெல்லாம் கொண்டு வந்து விடுவேன். ஆனால் உனக்கு நான் வேணுமா? அல்லது வெறும் நட்சத்திரமும் பூவும் காற்றும் வேண்டுமா? என்னையே உனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்திருக்கிறேனே? அவையெல்லாம் எதற்கு?' என்று கேட்பான். மறுவார்த்தை பேசாமல் அவனைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதிப்பேன்." "அம்மம்மா! அவ்வளவு பொல்லாத மோசக்காரியா நீ?" "இதில் மோசம் என்ன வந்தது, லலிதா? பின்னே என்னவென்று நினைத்தாய்? மஜ்னூ இந்தியா தேசத்துக் கிளியுடன் திரும்பி வந்தபோது லைலாவைக் காணாமல் பைத்தியம் பிடித்து ஊர் ஊராய் அலைந்தான். என்னை உண்மையில் காதலிப்பவனை அந்த மாதிரி நான் பைத்தியமாக அடிக்க வேண்டும் என்கிறாயா?"

சீதாவின் தர்க்கம் லலிதாவின் மூளையில் ஏறவில்லை எனவே, அவள், "சரி! நீ இஷ்டப்படி செய், அம்மா! உன்னோடு பேசி என்னால் ஜயிக்க முடியுமா?" என்றாள். ஆனால் இன்றைக்கு லலிதாவும் சீதாவும் குளத்தங்கரைப் பங்களாவுக்குச் சென்று தனிமையை அடைந்த பிறகும் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாகத் தொடங்கவில்லை. இரண்டு பேருடைய மனத்திலும் ஏதோ ஒரு தடங்கல் இருந்து தாராளமாகப் பேச முடியாமல் தடை செய்தது. "லலிதா! இன்றைக்கு நாம் இங்கு வந்தது சரியல்ல. இதற்குள் மாமி நம்மைத் தேட ஆரம்பித்திருப்பாள். நான்தான் இங்கு உன்னை அழைத்து வந்துவிட்டேன் என்று என்னைத் திட்டினாலும் திட்டுவாள்!" என்று சீதா ஆரம்பித்தாள். "உன்னை எதற்காகத் திட்ட வேண்டும்? வேணுமானால் அம்மா என்னைத் திட்டட்டும்; நான் அதற்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன்!" என்றாள் லலிதா. சாப்பிட்ட உடனே உனக்குத் தலை வாரிப் பின்னவேண்டும் என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள். தாழம்பூ வைத்துப் பின்னுவதற்கு ஒரு மணி நேரமாவது ஆகுமல்லவா? அவர்களோ சாயங்காலம் ஐந்து மணிக்கே வந்துவிடப் போகிறார்களாம்! நாம் இங்கே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்றாள் சீதா.

"அதென்னமோ, அம்மா! இந்த ஏற்பாடெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. என்னைவிட நீ ஒரு வயது மூத்தவள் அல்லவா? உன் கலியாணத்தை முடிவு செய்து விட்டல்லவா என் கலியாணத்தைப் பற்றிப் பேசவேண்டும்? அப்பாகூட இப்படிச் செய்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எனக்கு என்ன இவ்வளவு அவசரம் கலியாணத்துக்கு? இன்றைக்குத்தான் பாரேன்! இவ்வளவு தடபுடலும் ஆர்ப்பாட்டமும் எதற்காக என்று எனக்குத் தெரியவேயில்லை. இதைப் பற்றிச் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மா சண்டைக்கு வரப் போகிறாளே என்று பயமாயிருக்கிறது...." இந்தச் சமயத்தில், "யாருக்கு என்ன பயம்? நான் ஒருவன் இருக்கிறபோது யாரும் பயப்பட வேண்டியதில்லை" என்று சொல்லிக்கொண்டே பங்களாவுக்குள் பிரவேசித்தான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்திரண்டாம் அத்தியாயம்
கன்னத்தில் ஒருஅறை

சில வருஷங்களுக்கு முன்பு கிட்டாவய்யர், "கொஞ்சம் சுகவாசியாயிருக்க வேண்டும்; நாகரிகமாக வாழ்க்கை நடத்தவேண்டும்" என்று எண்ணியபோது ஊர்க் குளத்தங்கரையில் அவருக்கிருந்த மேட்டு நிலத்தில் ஒரு சவுக்கண்டி கட்டினார். கூரைக்குக் கீத்தும் விழலும் போட்டார். நாலு புறமும் பிளாச்சு வேலி எடுத்தார். முன் பக்கத்தில் குரோடன்ஸு களும் பின் பக்கத்தில் மல்லிகை முல்லை முதலிய புஷ்பச் செடிகளும் வைத்து வளர்த்தார். குளத்தங்கரைப் பங்களா என்றும் கிராம முனிசீப் சவுக்கண்டி என்றும் பெயர் பெற்ற அந்த இடத்தைத் தம்முடைய சொந்த ஆபீசாகவும் நண்பர்களுடன் சல்லாபம் செய்யும் இடமாகவும் வைத்துக் கொண்டிருந்தார். முக்கியமாகக் கோடை காலத்தில் அந்தக் குளத்தங்கரைப் பங்களா ஜிலுஜிலுவென்று காற்று அடித்துக் கொண்டு வெகு சுகமாக இருக்கும். நாலு பேர் வருவதற்கும் சீட்டுக் கச்சேரி போடுவதற்கும் மிக்க வசதியாயிருக்கும். அதெல்லாம் சவுக்கண்டி கட்டிய புதிதில் சில காலந்தான் நடந்தது. அப்புறம் பங்களா வர வரச் சிதிலம் ஆகிப் பாழடைந்து கிடந்தது. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணம் நடக்க வேண்டியதை முன்னிட்டுக் கிட்டாவய்யர் அந்தச் சவுக்கண்டியைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்.

திடீரென்று பங்களாவுக்குள்ளே நுழைந்த சூரியாவைப் பார்த்து லலிதா எரிச்சலுடன், "இங்கேயும் வந்துவிட்டாயா? இங்கே ஒருவரும் பயப்படவும் இல்லை; வீராதி வீரன் சூரியாவின் உதவியும் வேண்டியதில்லை! பொம்மனாட்டிகள் பேசிக் கொண்டிருக்குமிடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை? சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாயே?" என்றாள். "பெரிய பொம்மனாட்டிகள் நீங்கள்! வாயாடித்தனத்தைப் பார்! அத்தங்கா! நீயே சொல்லு! அண்ணாவிடம் தங்கை இப்படித் தானா பேசுகிறது! நாளைக்குக் கலியாணம் ஆகி இவள் புருஷன் வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் யார் இவளைத் தேடிக்கொண்டு போகப் போகிறார்கள்? ஏதோ இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறந்தவீட்டு மனுஷர்களிடம் பிரியமாயிருக்கக் கூடாதோ? பொம்மனாட்டிகளின் சுபாவமே இப்படித்தான்! அவர்களுக்கு மனதில் கொஞ்சமாவது வாஞ்சை என்பதே கிடையாது!" என்றான் சூரியா. "ஆமாம்! நீ ரொம்பப் பெரிய மனுஷன்; பொம்மனாட்டிகளின் சுபாவத்தை ரொம்பக் கண்டு விட்டாய்! வாயை மூடு!" என்று லலிதா மேலும் கடுமையாகப் பேசினாள். அப்போது சீதா குறுக்கிட்டு, "லலிதா! அண்ணாவின் மேல் எதற்காக இப்படி எரிந்து விழுகிறாய்? யாருக்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்று தெரிவதில்லை; தெரிந்தாலும் அதைப் பாராட்டுவதில்லை. சூரியாவைப் போல் எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்று நான் எவ்வளவோ ஏங்கிக் கிடக்கிறேன்! நீயானால் இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறாய்" என்றாள்.

"சரியாய்ப் போச்சு! நீயும் சூரியாவின் கட்சியிலே சேர்ந்து கொண்டாயா?" என்றாள் லலிதா. சூரியா குதூகலத்துடன், "பின்னே எப்போதும் உன் கட்சியையே பேசுவாளோ? சீதா உனக்கு எப்படி அத்தங்காளோ அப்படியே எனக்கும் அத்தங்காள் தானே" என்றான். "நான் ஒருத்தருடைய கட்சியும் பேசவில்லை; நியாயத்தைத் தான் சொன்னேன். நீங்கள் தமையனும் தங்கையும் தயவு செய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்!" என்று சீதா இதோபதேசம் செய்தாள். "நான் ஒன்றும் சண்டை போடவில்லை. இவன் என்னத்துக்காக இப்போது இவ்விடம் வந்தான் என்று கேட்டேன். அவ்வளவுதானே?" "காரியம் இல்லாமல் நான் வரவில்லை, லலிதா! அத்தை சீதாவைத் தேடினாள். இங்கே இருந்தால் அனுப்பும்படி சொன்னாள், அதனாலேதான் வந்தேன். பம்பாய் அத்திம்பேரிட மிருந்து கடிதம் வந்திருக்கிறதாம். சீதா பேருக்கு வந்திருப்பதால் அவள் வந்துதான் உறையைப் பிரிக்கவேண்டும் என்று அத்தை காத்திருக்கிறாள்! நாகரிமுள்ள மனிதர்களுக்கும் பட்டிக்காட்டு மனிதர்களுக்கும் இதுதான் வித்தியாசம், நம் ஊரிலேயானால் பிறத்தியாருக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பார்கள்!" என்றான் சூரியா.

"அத்தை கூப்பிட்டாள் என்று முன்னாலேயே சொல்வதுதானே? இதற்கு இவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுவானேன்? வா சீதா! நாம் போகலாம்!" என்றாள் லலிதா. "நீ என்னத்துக்காக இப்போது போகிறாய்? சீதா போய் விட்டுச் சீக்கிரம் வந்து விடுகிறாள். அதுவரையில் நாம் பேசிக் கொண்டிருக்கலாம்!" என்று சூரியா சொன்னான். "ஆமாம், லலிதா! நீ இங்கேயே இரு! நான் போய் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சீதா புறப்பட்டாள். இரண்டு காரணங்களை முன்னிட்டுச் சூரியா லலிதாவை அங்கேயே இருக்கச் சொன்னான். முதலாவது, அத்திம்பேரிடமிருந்து வந்த கடிதத்தை அத்தையும் சீதாவும் தனியாகப் படிக்கப் பிரியப்படுவார்கள். லலிதா கூடச் சென்றால், கடிதத்தைத் தானும் படித்துப் பார்க்க வேண்டுமென்று தொந்தரவு செய்வாள். அம்மாவும் பெண்ணும் ஒரு நிமிஷம் தனித்திருந்து பேசுவதற்கு விடமாட்டாள். இரண்டாவது, லலிதாவிடம் அவளுடைய கலியாணத்தைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்ல வேண்டுமென்று சூரியா விரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அப்புறம் சௌகரியம் கிடைக்காது என்று எண்ணினான். லலிதாவுக்குச் சூரியாவின் மேல் வாஞ்சை இல்லை என்பது கிடையாது. ஆனால் அவள் அன்று சாயங்காலம் 'அவர்கள்' வரும் போது தான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சீதாவிடம் பேசித் தெரிந்து கொள்ள விரும்பினாள்.

அதற்குத் தடையாக சூரியா வந்து சேர்ந்தபடியால் அவ்வளவு கோபம் அவன் பேரில் அவளுக்கு வந்தது. வீட்டுக்குத் தானும் போனால் திரும்பி வரமுடியாது. சீதாவிடம் தனியாகப் பேசவும் முடியாது. ஆகையால் சீதா போய்விட்டு வருவதே நல்லது என்று குளத்தங்கரைப் பங்களாவில் இருக்கச் சம்மதித்தாள். மற்றபடி சூரியாவுடன் பேசுவதற்கு வேண்டிய பொறுமை அவளிடம் அப்போது இல்லை. சூரியா எப்படித்தான் பேச்சை தொடங்குவது என்று யோசித்தான். யோசித்து தவறான முறையிலேயே தொடங்கினான். "லலிதா உன் அத்தங்காளைப் பற்றி, அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ அளந்து கொண்டிருந்தாயே? எல்லாம் பொய்!" என்று சொன்னான். "எது பொய்?" என்றாள் லலிதா. "எல்லாந்தான்! 'பம்பாய் அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள்! ரதி என்றால் ரதிதான்' என்று எவ்வளவோ வர்ணனை செய்தாய்? அது மட்டுமா? பம்பாயிலிருந்து உன் அத்தங்காள் வந்த பிறகு கூடப் பக்கம் பக்கமாய்க் கடிதம் எழுதினாயே?" "ஆமாம் எழுதினேன். அதிலேயெல்லாம் என்ன தப்பு?" "உன்னுடைய அத்தங்காள் ரொம்ப அழகோ?" "அழகு இல்லையோ?" "இல்லவே இல்லை; சுத்த அவலட்சணம் எந்தக் குருடன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள..." மேலே சூரியா பேச முடியவில்லை. ஏனெனில், "என்ன? யார் அவலட்சணம்?" என்று சொல்லிக் கொண்டே தன் தமையனின் கன்னத்தில் பளீர் என்று அறைந்தாள்!

கொஞ்ச நாளைக்கு முன்னேயாயிருந்தால் சூரியா லலிதாவின் ஒரு அறைக்குப் பதிலாக அவளுடைய தலையில் ஆறு குட்டுக் குட்டியிருப்பான்! இப்போது அப்படியெல்லாம் செய்யவில்லை. கன்னத்தில் விழுந்த அறை அவனுக்கு உற்சாகத்தை உண்டு பண்ணியது என்று தோன்றியது. மலர்ந்த முகத்துடன் "அடே அம்மா! அத்தங்காளிடத்தில் எவ்வளவு கரிசனம்? சிநேகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? நான் வெறுமனே சொன்னேன். லலிதா! உன் அத்தங்காள் நல்ல இலட்சணமாய்த்தான் இருக்கிறாள்; புத்திசாலியாயுமிருக்கிறாள். ஆனால் அழகும் அறிவும் இருந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கு நல்ல இடத்தில் கலியாணம் ஆவதற்கு இந்தக் காலத்தில் பணம் அல்லவா வேண்டியிருக்கிறது?" "ஆமாம்; நம் ஊர்க்காரர்களுக்குப் பணம், பணம், பணம். பணந்தான் பெரிது! பணத்துக்காக உயிரை விடுவார்கள். இங்கிலீஷ்கார தேசத்திலேயெல்லாம் இப்படி இல்லையாமே? அங்கே ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கலியாணம் செய்து கொள்வார்களாம். ஏழைப் பணக்காரர் என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்களாம். நம் ஊர்ப் பிள்ளைகள், நீங்களும் இருக்கிறீர்களே! இங்கிலீஷ்காரர்களைப் பார்த்துத் தலையைக் கிராப் செய்து கொள்ளவும் கால் சட்டை மேல் சட்டை போட்டுக் கொள்ளவும் தஸ்புஸ் என்று இங்கிலீஷ் பேசவும் கற்றுக் கொள்கிறீர்கள். கல்யாணம் என்றால் மட்டும், 'பதினாயிரத்தைக் கொண்டு வா! இருபதினாயிரத்தைக் கொண்டு வா!' என்கிறீர்கள். இங்கிலீஷ்காரர்களிடமிருந்து நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் துப்பு இல்லை!" என்று லலிதா பொரிந்து கொட்டினாள்.

"லலிதா! முன்னேயெல்லாம் உன்னை ஒரு வார்த்தை பேசச் சொல்வது பிரம்மப் பிரயத்தனமாயிருக்குமே! எப்போது இவ்வளவு பெரிய வாயாடி ஆனாய்? உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிற ராஸ்கல் என்ன பாடுபடப் போகிறானோ தெரியவில்லையே?" "அண்ணா! உனக்கு என்மேல் கோபமாயிருந்தால் யாரையோ பிடித்து எதற்காக வைகிறாய்?" "அப்பப்பா! இனிமேல் வரப்போகிற புருஷனுக்கு இதற்குள் பரிந்து கொண்டு வந்துவிட்டாயா? போனால் போகட்டும், லலிதா! உன்னிடம் ஒரு விஷயம் சொல்வதற்காகவே முக்கியமாக வந்தேன். அதை இப்போது சொன்னால்தான், சொன்னது; அப்புறம் ஒரு வேளை சந்தர்ப்பம் கிடைக்காது." "என்ன சொல்ல வேணுமோ அதைப் பளிச்சென்று சொல்லேன்! மூடுமந்திரம் என்னத்திற்கு?" "மூடு மந்திரம் ஒன்றும் இல்லை, லலிதா! உன்னுடைய நன்மைக்காகவே ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். சாயங்காலம் யாரோ மதராஸிலிருந்து உன்னைப் பார்க்க வருகிறார்கள் அல்லவா? 'மாப்பிள்ளை'யாக வரப்போகிறவனை உனக்குப் பிடித்திருந்தால் சரி; பிடிக்கவில்லையென்றால் தைரியமாகச் சொல்லிவிடு. அப்பா அம்மா சொல்வதற்காகவோ, வெறுமனே சங்கோசப்பட்டுக்கொண்டோ , வாயை மூடிக்கொண்டு இருந்துவிடாதே! தெரிந்ததா? கலியாணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏதாவது ஒரு சாமான் நமக்குப் பிடிக்காவிட்டால் அதை எறிந்து விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்; கலியாண விஷயம் அப்படியல்ல. ஒரு தடவை முடிந்து போனால் முடிந்துபோனது தானே! அப்புறம் மாற்ற முடியாதல்லவா?" "சரி! அண்ணா! நானே அப்படித்தான் மனத்திற்குள் தீர்மானம் பண்ணி வைத்திருக்கிறேன். ஒரு வேளை எனக்குப் பிடிக்காவிட்டால், நீ என் கட்சியில் இருப்பாய் அல்லவா?" "கண்டிப்பாய் இருப்பேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டாம்!" என்றான் சூரியா.

வீட்டுக்குப் புறப்பட்ட சீதா சவுக்கண்டியின் வெளி 'கேட்டி'ன் அருகே தயங்கி நின்றாள். 'மறுபடியும் இங்கே திரும்பி வருவானேன்? லலிதாவையும் அழைத்துக்கொண்டு போய் விட்டால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றியது. எனவே, திரும்ப சவுக்கண்டிக்குள் வருவதற்காக நாலு அடி எடுத்து வைத்தாள். இதற்குள் உள்ளே தமையனும் தங்கையும் பேசியது காதில் விழுந்தது. தன்னைப் பற்றிச் 'சுத்த அவலட்சணம்' என்று சூரியா கூறியது அவள் உள்ளத்தில் ஆங்காரத்தை உண்டாக்கிற்று. அதற்குப் பதிலாக லலிதா பளீரென்று கன்னத்தில் அறைந்த சத்தமும் அவள் காதில் விழுந்தது. தன்னுடைய உத்தேசத்தை மறுபடியும் மாற்றிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றாள். குளத்தங்கரையிலிருந்து கிட்டாவய்யரின் வீடு குறுக்கு வழியாகச் சுமார் அரை பர்லாங்கு தூரந்தான் இருக்கும். அந்த தூரம் போவதற்குள் ஆங்காரம் கொண்ட சீதாவின் உள்ளம் எண்ணாததெல்லாம் எண்ணியது. 'இந்தத் தறுதலைப் பையனுக்கு நான் அவலட்சணமாம்! 'என்னைக் குருடன் தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம்!' அம்பிகே! தாயே! சூரியாவைப் போன்றவர்கள் வெட்கித் தலை குனியும்படியாக உயர்ந்த பதவியிலுள்ள சீமான் என்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள மாட்டானா?" என்று அவளுடைய குழந்தை உள்ளம் ஆத்திரத்துடன் பிரார்த்தனை செய்தது. அன்று காலையிலிருந்து வீட்டில் நடந்து கொண்டிருந்த தடபுடல்களையெல்லாம் பார்த்துவிட்டு, 'இப்படியெல்லாம் நமக்கு நடக்கப் போகிறதா?' என்று சீதா ஏக்கமடைந்திருந்தாள். சூரியா வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தன.

அதே சமயத்தில் லலிதா தன்னிடத்தில் எவ்வளவு அபிமானம் கொண்டிருக்கிறாள் என்பதையும் சீதா ஞாபகப்படுத்திக் கொண்டாள். தன்னைப்பற்றித் தமையன் சொன்ன வார்த்தையைப் பொறுக்காமல் அவன் கன்னத்தில் அறைந்து விட்டாளே? இதுவல்லவா அன்பும் சிநேகமும்! இப்படிப்பட்ட அன்புக்கும் சிநேகத்துக்கும் தன்னால் என்ன பிரதி செய்ய முடியும்? தற்காலத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பிரதி உபகாரம் செய்யக்கூடிய காலம் ஒரு சமயம் வராமலா போகும். சற்று நேரத்துக்கெல்லாம் சுண்டுப் பயல் குளத்தங்கரைப் பங்களாவுக்கு ஓடிவந்தான். "அடி லல்லு! அம்மா அழைத்து வரச் சொன்னாள். உனக்குத் தலைவாரிப் பின்னி அலங்காரம் செய்ய ஆரம்பிக்க வேணுமாம். மணி மூன்று ஆகிவிட்டது, இன்னமும் நீ இங்கே உட்கார்ந்திருக் கிறாயே? அண்ணாவுடன் அந்தரங்கம் பேசுவதற்கு இதுதானா சமயம்?" என்று கீச்சுக் குரலில் கத்தினான். "இந்தப் பிள்ளை பண்ணுகிற அதிகாரத்தைப் பார்!... சுண்டு! சீதா அத்தங்கா அங்கேதான் இருக்கிறாளா? இங்கே வருவதாகச் சொல்லவில்லையா!" என்று கேட்டாள் லலிதா. "சீதா அத்தங்காவுந்தான் உன்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னாள், இங்கே அவள் வரமாட்டாளாம். ஏன் என்று தெரியவில்லையா? மிஸ்டர் கே. சூரிய நாராயண அய்யர்வாள் இங்கே விஜயம் செய்திருப்பதனால்தானே!" என்று சுண்டு சொல்லிவிட்டுச் சூரியா தன்னை அடிக்க வந்தால் அவனிடம் அகப்படாமல் தப்பி ஓடுவதற்குத் தயாரானான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து மூன்றாம் அத்தியாயம்
இது என்ன ஓசை?

சரஸ்வதி அம்மாளும் சீதாவும் லலிதாவை வீட்டுக்கு வரும்படி சொல்லியனுப்பியது உண்மைதான். அவள் வந்ததும் அலங்காரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில், சீதா மிகவும் உற்சாகம் காட்டினாள். சட்டாம்பிள்ளை உத்தியோகம் பார்த்தாள் என்று சொல்லலாம். இந்த மாதிரி தலை பின்னிச் சடை போட வேண்டும். இப்படி முன் வகிடு எடுக்க வேண்டும், இப்படி முன்னால் இரண்டு சுருட்டை மயிரைத் தொங்கவிட வேண்டும், இந்த வர்ணப் புடவைக்கு இந்த நிற ரவிக்கைப் போட்டுக் கொள்ள வேண்டும், அதே நிறத்தில் தலையில் பூவும் கையில் வளையல்களும் இருக்க வேண்டும் - என்றெல்லாம் வாயினால் பிரசங்கம் செய்து கொண்ட சீதா கையினால் காரியமும் செய்துகொண்டிருந்தாள். லலிதாவை அலங்காரம் செய்யும் விஷயத்தில் சீதா காட்டிய தீவிர உற்சாகத்தைக் கண்டு சரஸ்வதி அம்மாளின் கடின இதயம்கூட அவள் விஷயத்தில் சிறிது இளகிவிட்டது. 'அடுத்தாற்போல் சீதாவுக்கும் ஒரு வரனைப் பார்த்து நிச்சயம் செய்துவிட வேண்டும். ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணமும் வைத்துக் கொண்டாலும் நல்லதுதான். ஆனால் சாஸ்திரப்படி செய்யலாம் என்கிறார்களோ, என்னமோ? செய்யலாம் என்று சொன்னால் ரொம்ப நல்லது செலவோடு செலவாய்ப் போய்விடும். ஆனால் அதற்காக முகூர்த்தத்தை ரொம்ப நாள் தள்ளிப் போடக் கூடாது. சித்திரை மாதத்திலாவது கலியாணத்தை நடத்தி விட்டால்தான் எல்லா விஷயங்களுக்கும் சௌகரியமாயிருக்கும்!" என்று மற்றவர்கள் காதிலும் விழும்படியாகச் சரஸ்வதி அம்மாள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

"ஏன் அம்மா! என் கலியாணம் நிச்சயமாகிவிட்ட மாதிரியே பேசுகிறாயே?" என்றாள் லலிதா. "அதிலே கூடச் சந்தேகமா என்ன?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அதுதான் மாமி, நானும் சொல்லுகிறேன்! மதராஸிலிருந்து வருகிறவர்கள் வெறுமனே ஜம்பத்துக்காக வருவார்களா? அல்லது நம்ம லலிதாவைப் பார்த்துவிட்டு யாராவது 'பிடிக்கவில்லை' என்றுதான் சொல்வார்களா? அப்படிச் சொல்கிறவர்களுக்குத் தலையில் கொம்பாமுளைத்திருக்கும்? லலிதா மாதிரி பெண் கிடைப்பதற்குப் பூர்வ ஜன்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டாமா!" என்று சீதா கூறியதும் சரஸ்வதி அம்மாளைப் பூரிக்கச் செய்தது. "வருகிறவர்கள் சொல்கிறது இருக்கட்டும். நான் 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டால்?" என்றாள் லலிதா. "அசடே! பேசாமலிரு, யார் காதிலாவது விழப் போகிறது! சூரியா பேத்துகிறதைக் கேட்டுக் கொண்டு ஏதாவது உளறாதே!" என்று சரஸ்வதி அம்மாள் கோபமாய்ச் சொன்னாள். "நானும் அதுதான் இவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், மாமி! பார்க்கிறதுக்கு முன்னாலேயே 'பிடிக்காமலிருக்கும்' என்று எதற்காக நினைத்துக்கொள்ள வேண்டும்! மாமாவோ நேரில் பார்த்துவிட்டு வந்து 'மாப்பிள்ளை மன்மதன் மாதிரி இருக்கிறார்!' என்று சொல்லுகிறார். மன்மதனைவிட அழகாய் எங்கே போய் மாப்பிள்ளை பிடிக்கிறது. மாமி! இந்த விஷயத்திலே மட்டும் லலிதா கொஞ்சம் அசட்டு பிசட்டு என்று பேசிக்கொண்டிருக்கிறாள்; அது எனக்குப் பிடிக்கவே இல்லை. இவள் அண்ணாவின் துர்போதனைதான் காரணம் போலிருக்கிறது!" என்றாள் சீதா.

"கேட்டாயா, லலிதா உன் அத்தங்காள் சொல்கிறதைக் கேட்டுக்கொள். சூரியா ஏதாவது உளறினால் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதே! அவனுக்கு இந்த விஷயமெல்லாம் என்ன தெரியும். யாரோ அவனுக்குத் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்! சீதாதான் நல்லமாதிரி யோசனை சொல்கிறாள். அவளுடைய புத்திமதியைக் கேட்டுக்கொள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். லலிதாவை அலங்காரம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம் பம்பாய் ராஜம்மாள் சூரியாவைக் கூப்பிட்டு அனுப்பி "அப்பா! நான் பிறந்து வளர்ந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. குளத்தங் கரையில் அண்ணா பங்களாக் கட்டியிருக்கிறானாமே! அங்கே போய்ச் சற்று நேரம் காற்று வாங்கிவிட்டு வரலாமா?" என்றாள். "ஆகட்டும் அத்தை, போகலாம்" என்றான் சூரியா. இருவரும் பங்களாவை அடைந்தார்கள். ராஜம்மாள் பங்களாவின் திறந்த ஜன்னல் வழியாக நெடு நேரம் குளத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "எனக்குக் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு ரொம்பப் பிரியம். வினாத் தெரிந்த நாளிலிருந்து கலியாணம் ஆகும்வரையில் ஒரு நாள்கூட இந்தக் குளத்தில் குளிக்காமல் இருந்தது கிடையாது. பம்பாய்க்குப் போனதிலிருந்து "குழாய் ஜலந்தான் 'கங்கை காவேரி' என்று ஆகிவிட்டது" என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட்டாள்.

"அத்தை! உங்களுக்கு நீந்தத் தெரியுமாமே? அது உண்மையா? பெரிய அத்தை சொன்னாள்" என்றான் சூரிய நாராயணன். "உண்மைதான் சூரியா! அப்பா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் யரோ ஒரு ஸ்திரீ காவேரி வெள்ளத்தில் போய்விட்டாள், என்று செய்தி வந்தது. அதுமுதல் 'பெண்களுக்கும் கட்டாயம் நீந்தத் தெரியவேண்டும்' என்று சொல்லி அப்பா, அதாவது உன் தாத்தா எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தார். இந்தக் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய்விடுவேன். சில சமயம் காவேரியில்கூட நீந்தியிருக்கிறேன். புண்ணிய காலங்களிலும் பண்டிகை தினங்களிலும் வண்டி கட்டிக்கொண்டு எல்லோரும் காவேரிக்குக் குளிக்கப் போவோம். அப்பா, அண்ணா, அக்கா எல்லோருமாகப் போவோம். நான்தான் வீட்டுக்குக் கடைக்குட்டிப் பெண். எல்லாருக்கும் என் பேரில் ஆசை அதிகம்...." ராஜம்மாள் கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அந்தப் பழங்கதையெல்லாம் இப்போது எதற்கு? என்னமோ உளறினேன். இருக்கட்டும், சூரியா! நீ இந்த வருஷம் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் படிக்கிறாயாமே? அப்படித்தானா?" என்றாள். ராஜம்மாளின் கண்ணில் கண்ணீர் ததும்புவதைப் பார்த்துச் சூரியாவும் பேச்சை மாற்ற விரும்பினான். "ஆமாம், அத்தை! முன்னேயெல்லாம் மெட்ரிகுலேஷன் என்பார்கள். இப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று அதற்குப் பெயர். எங்க அம்மாவுக்குப் பத்தாவது என்று சொன்னால்தான் தெரியும்!" என்றான்.

"ஆமாம், சூரியா! நீ ஒரு வக்கீல் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாயாம். அந்த வக்கீலுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானாம்; பி.ஏ. படிக்கிறானாமே - வாஸ்தவந்தானா?" என்று ராஜம்மாள் கேட்டாள். "வாஸ்தவந்தான் அத்தை! அதற்கு என்ன இப்போது?" என்று சூரியா கேட்டபோதே அவன் மனத்தில் அந்தக் கேள்விக்குப் பதிலும் உதித்தது? வக்கீலின் பிள்ளைக்குச் சீதாவைக் கொடுக்கலாம் என்பதற்குத்தான் அத்தை அவனைப் பற்றிக் கேட்கிறாள் என்று தெரிந்துவிட்டது. அந்த எண்ணம் ஊசியால் குத்துவது போல் சுரீர் என்ற வேதனையை அவனுக்கு உண்டாக்கியது. "சூரியா! உன் அத்திம்பேர் ஒரு மாதிரி மனுஷர் என்று கேட்டிருப்பாய். எனக்கோ உடம்பு சரியாகவே இல்லை. இந்தப் பெண் சீதாவுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமென்று கவலையாயிருக்கிறது அண்ணாவிடம் சொல்லித்தான் இருக்கிறேன். ஆனால் அவனுக்கு எத்தனையோ ஜோலி. யாராவது நல்ல வரனாகத் தெரிந்தால் பார்த்துச் சொல், சூரியா! அதற்காகத்தான் முக்கியமாக உன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னேன்."

"அத்தை! இது என்ன பிரமாதம்? சீதாவின் சமர்த்துக்கும் அழகுக்கும் வரன்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே வேண்டாம்!" என்று சூரியா கூறினான். அதே சமயத்தில் தன்னுடைய மனத்திற்குள் "நான் ஒருவன் இருக்கிறேனே? வேறு வரனைத் தேடுவானேன்?" என்று சொல்லிக்கொண்டான். இதை வெளிப்படையாக அத்தையிடம் சொல்லிவிடலாமா என்றுகூட மனத்தில் நினைத்தான், ஆனால் சங்கோசம் குறுக்கிட்டது. "சீதா சமர்த்து என்று உனக்குத் தோன்றுகிறதா, சூரியா! எதிலிருந்து அவ்வாறு சொல்கிறாய்? வயது பதினாறு பிறந்திருக்கிறது; இன்னும் விளையாட்டுத்தனம் கொஞ்சம்கூடப் போகவில்லை. ஓடையில் விழுந்ததும் 'ஓகோ' என்று கூச்சல் போட்டாளே, பார்த்தாயல்லவா?" என்றாள் ராஜம்மாள். "அதனால் என்ன அத்தை, சிறு பிராயத்தில் பெண்கள் அப்படிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால்தானே நன்றாயிருக்கிறது? அழுமூஞ்சியாயிருந்தால் யாருக்குப் பிடிக்கும்? பம்பாய்க்குப் போய் வந்த பிறகு லலிதாவின் சுபாவம்கூட மாறியிருக்கிறது. அதற்கு முன்னாலெல்லாம் அம்மாவுடன் சண்டை பிடிப்பதும் அழுவதுமாகவே இருப்பாள்; கலகலப்பாகவே இருக்கமாட்டாள். இந்த ஒரு வருஷமாகச் சிரித்து விளையாடிக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறாள்" என்றான் சூரியா.

"இந்த அசட்டுப் பெண் உன் தங்கையையும் தன்னைப் போல் ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும்படி செய்து விட்டாளாக்கும்." "அடிக்கடி சீதாவை 'அசடு அசடு' என்று சொல்கிறீர்களே அத்தை! அவள் முகத்திலே சமர்த்து என்று எழுதி ஒட்டியிருக்கிறதே! எதுவரையில் படித்திருக்கிறாள்?" "படிக்கிறதிலே சீதா சமர்த்துத்தான் சூரியா. பள்ளிக்கூடத்தில் எப்போதும் முதல் மார்க்குத்தான். ஒரு தடவை காதால் கேட்ட பாட்டை அப்படியே பாடி விடுவாள், இந்தப் பக்கங்களில் எட்டாவது என்று சொல்லுகிறார்களே அதுவரையில் படித்திருக்கிறாள். இங்கிலீஷ் நன்றாகத் தெரியும், கதை சொல்லச் சொன்னால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகந் தெரியாத பெண்ணாயிருக்கிறாள். யாரிடமும் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த வருஷம் லலிதாவின் கல்யாணத்தோடு சேர்த்துச் சீதாவுக்கும் நடத்திவிட்டால் என் மனத்துக்கு நிம்மதியாயிருக்கும். மேற்படி சம்பாஷணையின் நடுவில் சூரியாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது அத்தைக்குச் சீதாவைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் போலிருக்கிறது; அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வரனைப் பற்றிய பேச்சை எடுத்திருக்கிறாள் என்று நினைத்தான். ஆனாலும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று எண்ணினான். அத்தை அந்த விஷயத்தைப் பற்றிப் பட்டவர்த்தனமாகக் கேட்ட பிறகு கொஞ்சம் 'பிகு' பண்ணிக் கொண்டு அரை மனதாகத் தன்னுடைய சம்மதத்தைத் தெரியப்படுத்துவது என்று தீர்மானித்தான்.

எனவே, சிறிது அலட்சிய பாவத்துடன், "இங்கே என்ன அப்படி ஒசத்தியான வரன் கிடைத்துவிடப் போகிறது. அத்தை! பம்பாயில் இல்லாத வரனா? அங்கேயே பார்க்கக் கூடாதா?" என்றான். "பம்பாயில் வரன் இருக்கலாம், சூரியா! ஆனால் சீதாவை இந்தப் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம், நம்முடைய குடும்பத்தில் நான் ஒருத்தி பம்பாயில் வாழ்க்கைப் பட்டது போதும் என்று இருக்கிறது. மறுபடியும் நீ தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போனதும் அந்த வக்கீலாத்துப் பையனின் ஜாதகம் வாங்கி அனுப்புகிறாயா, சூரியா? அந்தப் பையன் பெயர் என்ன?" "அவன் பெயர் பட்டாபிராமன், அத்தை! பையன் கெட்டிக்காரன்தான்; பி.ஏ. படிக்கிறான். ஆனால் சொத்து அதிகம் கிடையாது. ஒரு வீடு இருக்கிறது; அதன் பேரில் கடன். இந்த இலட்சணத்துக்கு ஏராளமான வரதட்சணை வர வேண்டும் என்று அவன் அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பட்டாபியைவிடச் சிலாக்கியமான வரன்கள் இருக்கின்றன; நான் பார்த்துச் சொல்கிறேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்" என்றான் சூரியா. "எவ்வளவோ பெரிய வரன்கள் இருக்கலாம்! ஆனால் நமக்குச் சரியாக வரவேண்டாமா, சூரியா? இந்த நாளில் பிள்ளைகளைப் பெற்றவர்கள் எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டுதான் வரதட்சணை கேட்கிறார்கள். நாளைக்கு உனக்குத்தான் கலியாணப் பேச்சு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அண்ணாவும் மன்னியும் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைந்து வரதட்சணை வாங்குவார்களா?..."

வரதட்சணை வாங்குவதைப் பற்றி ஒரு பெரிய கண்டனப் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று சூரியா எண்ணினான். கலியாண விஷயத்தில் தன்னுடைய தீர்மானமான கொள்கையை வெளியிடவும் உத்தேசித்தான். ஆனால் அதற்குள் அத்தையின் முகபாவம் மாறுவதைக் கவனித்தான். ராஜம்மாளின் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது. "சூரியா! இது என்ன ஓசை!" என்று கேட்டாள். ஓசையா? என்ன ஓசை? எனக்கு ஓசை ஒன்றும் கேட்கவில்லையே?" என்றான் சூரியா. "கவனித்துக் கேள், சூரியா! சமுத்திரத்தில் அலை ஓசை மாதிரிச் சத்தம் கேட்கவில்லையா?" சூரியாவின் காதிலும் அப்போது அந்த ஓசை கேட்டது. பங்களாவுக்கு வெளியில் எட்டிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு விஸ்தாரமான சவுக்கு மரத் தோப்பு காணப்பட்டது. இளவேனிற் காலத்தின் இனிய தென்றல் அந்தத் தோப்பில் பிரவேசித்து நெருங்கிய சவுக்கு மரக்கிளைகளின் வழியாக நுழைந்து சென்றபோது உண்டான சத்தந்தான் அப்படிச் சமுத்திரத்தின் அலை ஓசை போன்ற பிரமையை உண்டாக்கியது! இதைத் தெரிந்து கொண்ட சூரியா, "அத்தை! அலையும் இல்லை; ஓசையும் இல்லை! அதோ அந்தச் சவுக்குத் தோப்பின் கிளைகள் காற்றில் அசைவதுதான் அலை ஓசை போன்ற சத்தத்தை உண்டாக்குகிறது." அது உண்மையென்று தெரிந்து கொண்ட பிற்பாடு ராஜம்மாளின் முகம் சிறிது தெளிவடைந்தது. "இருந்தாலும் அத்தை! நீ என்னத்திற்காக அவ்வளவு பயங்கரமடைந்தாய்? அலை ஓசையாயிருந்தால்தான் என்ன?" என்று சூரியா கேட்டான். "என் மனது இப்போது ரொம்பவும் கலங்கிப் போயிருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்!" என்றாள் ராஜம்மாள். சற்றுத் தூரத்திலிருந்து 'பாம்' 'பாம்' என்று மோட்டார்க் கொம்பின் சத்தம் கேட்டது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து நான்காம் அத்தியாயம்
நெஞ்சு விம்மியது

மோட்டார் வண்டியின் சத்தம் கேட்டதும், சூரியா, "மதராஸ்காரர்கள் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது அத்தை! ஐந்து மணிக்குத்தான் வருவதாக இருந்தது, நாலரைக்கே வந்து விட்டார்களே!" என்றான். "ஆமாம், அப்பா! வேளை நெருங்கி வரும்போது எல்லாம் சீக்கிரமாகவே நடந்துவிடும். வேளை வராவிட்டால் ஒன்றும் நடவாது! வா, போகலாம்!" என்றாள் ராஜம்மாள். "நாம் அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்? அவர்கள் ஏதாவது செய்துகொள்ளட்டும். எனக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை!" என்று சூரியா அலுத்துக்கொண்டான். "நன்றாயிருக்கிறது! குடும்பத்தில் இருபது வருஷத்துக்குப் பிறகு கலியாணம் நடக்கப்போகிறது. பெண்ணுக்குத் தமையன் நீ! எல்லாவற்றையும் நீயல்லவா நடத்தி வைக்க வேண்டும்? நான் இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லையென்றாலும், சமயத்தில் இல்லாமற் போனால் யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் புறப்படு, போகலாம்!" என்றாள் ராஜம்.

போகும் வழியில் சூரியா, "அத்தை! பம்பாயிலிருந்து கடிதம் வந்ததே! ஏதாவது விசேஷம் உண்டா? அத்திம்பேர் தானே கடிதம் எழுதியிருக்கிறார்? அவர் இந்தப் பக்கம் இப்போது வரமாட்டாரா?" என்று கேட்டான். "விசேஷம் ஒன்றுமில்லை, வடக்கே பாட்னா என்று ஒரு பட்டணம் இருக்கிறதாமே? ஒரு வேளை உத்தியோக காரியமாக அங்கே போக வேண்டி யிருக்கும் என்று எழுதியிருக்கிறார். திரும்பப் போகும்போது இங்கே வந்தாலும் வருவாராம். அதற்குள்ளே சீதாவுக்கு ஒரு வேளை கலியாணம் நிச்சயமாகிவிட்டால்....." "அத்தை! நீ கூடப் பட்டிக்காட்டு ஸ்திரீகளைப் போல் ஓயாமல் 'கலியாணம்' 'கலியாணம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே? எதற்காக இவ்வளவு கவலை?" "கவலைப்பட வேண்டிய காரியம், சூரியா! அதனால்தான் கவலைப்படுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். இருவரும் அக்கிரகாரத்தின் வீதியை அடைந்த போது மோட்டார் வண்டி சீமாச்சுவய்யரின் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டார்கள்.

கிட்டாவய்யரின் வீட்டில் லலிதாவினுடைய அலங்காரத்தின் கடைசிக் கட்டம் நடந்து கொண்டிருந்தது. சீதாவின் பரபரப்பைச் சொல்லி முடியாது லலிதாவின் ஒரு கை வளையைக் கழற்றி இன்னொரு கையில் போடுவதும் ஒரு விரலில் உள்ள மோதிரத்தைக் கழற்றி இன்னொரு விரலில் போடுவதும் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து எடுத்துச் சரிப்படுத்தி வைப்பதும் முன் தலையையும் வகிட்டையும் சீப்பினால் இலேசாக அப்படியும் இப்படியும் வாரி அழகு பண்ணுவதும் நெற்றிப் பொட்டைப் பத்துத் தடவை மாற்றி மாற்றி வைப்பதுமாயிருந்தாள். சூரியாவைக் கண்டதும் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா! இத்தனை நேரமும் எங்கேடா போனாய்? அத்தையோடு அரட்டையடிப்பதற்கு இதுதானா சமயம்? அவர்கள் சொன்ன நேரத்துக்கு அரைமணி முன்னதாகவே வந்துவிட்டார்கள். டிபன் கொண்டு கொடுப்பதற்காக உன்னைப் பார்த்தால் ஆளைக் காணோம். சீமாச்சு மாமாவோ 'நேரமாச்சு!' என்று குதிக்கிறார். கடைசியில் பரிசாரகனிடம் கொடுத்தனுப்பிச் சுண்டுவையும் கூடப் போகச் சொன்னேன். இப்போதுதான் போகிறார்கள் நீயும் போ! மாப்பிள்ளைக்கு நீயே கவனித்து டிபன், காப்பி எல்லாம் கொடு! ரவா கேசரி செய்து அனுப்பியிருக்கிறேன், பரிமாற மறந்துவிடப் போகிறான். நீ போய்க் கவனித்துக்கொள்! போ சீக்கிரம் போ!" என்று விரட்டி அடித்தாள்.

"நான் ஒன்றும் போகவில்லை; எத்தனை பேர் போக வேண்டுமாம்? இதற்குள்ளே இவ்வளவு தடபுடல் எதற்காகப் பண்ணுகிறாய் என்று தெரியவில்லை!" என்றான் சூரியா. "கேட்டாயல்லவா பிள்ளையின் சமர்த்தை? அப்பாவைப் போலத்தான் பிள்ளையும் இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் எப்படித்தான் நாளைக்குக் கலியாணம் பண்ணிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை!" இதற்குள் சீதா, "சூர்யா! அம்மா சொன்னதைக் கேட்டால் என்ன? மாப்பிள்ளையை நீ கவனியாமல் பின்னே யார் கவனிப்பார்கள்?" என்றாள். "எல்லோருமாகச் சேர்ந்து அதற்குள் 'மாப்பிள்ளை' என்று ஸ்திரப்படுத்தி விடுகிறீர்களே! இன்னும் அந்த மேதாவி வந்து லலிதாவைப் பார்த்தாகவில்லை!" என்றான் சூரியா. "அதுதான் நானும் சொல்கிறேன்!" என்றாள் லலிதா. "நீ பேசாமலிரு லலிதா!" என்றாள் அவள் தாயார் சரஸ்வதி அம்மாள். "அம்மாஞ்சி! நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற பட்சத்தில் நான் போய் வந்தவர்களுக்கு டிபன் பரிமாறி விட்டு வருகிறேன்! நீ போகிறாயா, நான் போகட்டுமா? ஆண் பிள்ளையா இலட்சணமா ஜம்மென்று போக; 'மாப்பிள்ளை, ஸார்! வாருங்கோ!' என்று கையைப் பிடித்துக் குலுக்க! அதை விட்டு இங்கே என்னத்தைச் செய்கிறாய்?" என்றாள் சீதா. "அப்படிச் சொல், சீதா! இந்த வீட்டிலேயே நீ ஒருத்திதான் சமர்த்து. நீ மட்டும் இன்றைக்கு இல்லாவிட்டால் இந்தப் பெண்ணின் தலையை வாரிப் பின்னி விடுகிறதற்குள்ளே என்னை என்ன பாடுபடுத்தியிருப்பாள், தெரியுமா? உனக்கும் ஒரு வரனைப் பார்த்துக் கலியாணம் நிச்சயம் பண்ணிவிட்டால் தான் எனக்கு மனது நிம்மதியாகும்?"

"அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு, மாமி! இன்றைக்கு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். உங்கள் பிள்ளை போகிற வழியாகக் காணவில்லையே?" "எல்லோரும் இன்றைக்குப் புதிதாக வந்தவர்களைப்பற்றி இவ்வளவு கரிசனம் காட்டுகிறீர்களே தவிர வீட்டு மனுஷனை யார் கவனிக்கிறீர்கள்? எனக்குக் கூடத்தான் பசியாயிருக்கிறது. யாராவது என்னை 'டிபன் சாப்பிடு' என்று சொல்லுகிறீர்களா? இந்த உலகமே இப்படித்தான்? மகா மோசம்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா வெளியேறினான். சீமாச்சுவய்யரின் வீட்டுக்குச் சூரியா போய்ச் சேர்ந்த போது மதராஸிலிருந்து வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளைப் பையன், அவனுடைய தகப்பனார், தாயார், சுப்பய்யர் ஆக நாலு பேர் வந்திருந்தார்கள் என்பதைச் சூரியா கவனித்துக் கொண்டான். அவர்களோடு உட்கார்ந்து சுண்டுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சீமாச்சுவய்யர் அவர்களையெல்லாம் உபசரிப்பதில் ஈடுபட்டிருந்தார். சூரியா தாழ்வாரத்தின் தூணைப் பிடித்துக்கொண்டு மௌனமாய் நின்றான். அவனைக் கவனித்த மாஜி ஸப் ஜட்ஜ் சாஸ்திரியார், "இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டார். "இவன்தான் பெண்ணின் தமையன் சூரியநாராயணன்; எஸ்.எஸ்.எல்.சி படிக்கிறான்!" என்றார் சீமாச்சுவய்யர்.

சௌந்தரராகவன் எம்.ஏ. தலைநிமிர்ந்து பார்த்துவிட்டு, "எஸ்.எஸ்.எல்.சி தாராளமாய்ப் படிக்கட்டும்; அதற்காக ஏன் இவ்வளவு கோபமாயிருக்க வேண்டும்!" என்றான். சௌந்தரராகவன் ஹாஸ்யமாகச் சொன்னதை சூரியா, ரஸிக்கவில்லை. "எனக்கு என்ன கோபம்? நீங்கள் தான் வருகிற போதே கோபமாய் வந்திருப்பது போலத் தோன்றுகிறது. அதனால், நான் பரிமாற வருகிறதையெல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்கிறீர்கள். கலியாணம் ஆன பிற்பாடல்லவா கோபதாபமெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும்? இப்போது எதற்கு?" என்றான் சூரியா. "பலே அப்பா, பலே!" என்றார் ஸ்ரீ பத்மலோசன சாஸ்திரியார். "காமாட்சி! பார்த்தாயல்லவா பையனுடைய பேச்சை? இந்தக் காவேரித் தண்ணீரில் ஏதோ மகிமை இருக்கிறது என்று நான் சொன்னது இப்போதாவது உண்மையென்று உனக்குப் படுகிறதா?" என்று கேட்டார். "இந்தக் காலத்திலேயே பிள்ளைக் குழந்தைகள் எல்லோரும் சமர்த்தாகத்தானிருக்கிறார்கள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "பெண் குழந்தைகள் மட்டும் இலேசா இருக்கிறார்களா, என்ன? இவன் தங்கையோடு நீங்கள் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் தெரியும்! என்ன ஓய்! சுப்பய்யரே! நான் சொல்கிறது என்ன?" என்று சீமாச்சுவய்யர் இன்ஷூரன்ஸ் சுப்பய்யரை சாட்சிக் கூண்டுக்கு அழைத்தார். "எல்லாம் இன்னும் கால்மணியில் தெரிந்து விடுகிறது!" என்று பட்டுக் கொள்ளாமல் சொன்னார் சுப்பய்யர்.

லலிதாவின் அலங்காரம் ஒரு விதமாக முடிவடைந்தது. "சீதா! இனிமேலாவது நீ போய் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்ளேன்!" என்றாள். "எனக்கென்னடி இப்போது வந்திருக்கிறது! இதோ பார்! காதண்டை இந்தச் சுருட்டை மயிர் இப்படித் தொங்கினால் நன்றாயிருக்கும்!" என்று சீதா மறுபடியும் லலிதாவின் முகத்தை அழகுப்படுத்தத் தொடங்கினாள். "எல்லாம் இவ்வளவு போதும்! நீ போகிறாயா, மாட்டாயா? நீ மட்டும் முகம் அலம்பிப் பொட்டு வைத்துக் கொண்டு நல்ல புடவையும் கட்டிக் கொள்ளாவிட்டால் நான் காமரா உள்ளுக்குப்போய்க் கதவை இழுத்துத் தாள் போட்டுக்கொண்டு விடுவேன். யார் கதவை இடித்தாலும் திறக்க மாட்டேன். பெண் பார்க்க வந்தவர்கள் பார்க்காமலே திரும்பிப் போக வேண்டியதுதான்?" "சீதா! அவள் சொல்லுகிறதைத்தான் கேளேன்! இவ்வளவு பிடிவாதம் எதற்கு? நீயும் தோழிப் பெண்ணாகப் பக்கத்தில் நிற்கவேண்டுமென்று லலிதா ஆசைப்படுகிறாள் போலிருக்கிறது. முகத்தில் எண்ணெய் வழியக் கந்தலைக் கட்டிக்கொண்டு நின்றால் சரியாயிருக்குமா?" என்றாள் சீதாவின் பெரியம்மா. "ஆமாம், சீதா! உன் பெரியம்மா சொல்கிறதைக்கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி! இப்படி எல்லோரும் சேர்ந்து சொன்னால் நான் என்ன செய்கிறது?" என்று சொல்லிக்கொண்டு சீதா தன்னுடைய அலங்காரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாளின் தாயார் அவளைக் கூப்பிட்டுக் கொல்லைக்கட்டுக்குத் தனியாக அழைத்துக் கொண்டு போனாள்.

ஏதோ ரகசியமாகச் சொன்னாள்; அதற்குச் சரஸ்வதி அம்மாள், "உனக்கு அலாதியாக ஏதேனும் தோன்றும்! பேசாமல் இரு! கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடாது!" என்று பதில் சொன்னது எல்லாருடைய காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்தது. சீதா தன் புடவையை மாற்றிக்கொண்டு முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு வந்தாளோ, இல்லையோ, சரஸ்வதி அம்மாள் அவளைப் பார்த்து, "சீதா! சீதா! உன் மாமா வாசலிலேயே நிற்கிறார் பார்! அவரைக் கொஞ்சம் உள்ளே கூப்பிடு! அவர்கள் வருகிற போது குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் சொல்லாமல் இவர் பாட்டுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாரே!" என்றாள். அப்போது அபயாம்பாள், "அவன் சொல்கிறது என்ன? நமக்குத் தெரியாதா? அவர்கள் வந்து உட்கார்ந்ததும் குழந்தை கையில் வெற்றிலை பாக்குத் தட்டோ டு வரவேண்டியது. தட்டை வைத்துவிட்டு எல்லோருக்கும் சேர்ந்து ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டியது. பிறகு கூடத்துக்கு வந்து நிற்க வேண்டியது. யாராவது ஏதாவது கேட்டால் கணீரென்று பதில் சொல்ல வேண்டியது!" என்று சொன்னாள். "எல்லாவற்றுக்கும் நீ மாமாவைக் கொஞ்சம் கூப்பிடு சீதா!" என்றாள் சரஸ்வதி அம்மாள். சீதா வாசற்பக்கம் சென்று பார்த்தாள். மாமாவும் இன்னும் ஊரார் சிலரும் தெருவில் போட்டிருந்த கோடைப் பந்தலில் நின்று கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் மாமாவைக் கூப்பிடலாமா, கூடாதா என்று யோசித்துக்கொண்டு சீதா வாசற்படியருகில் சிறிது தயங்கி நின்றாள். இதற்குள் மோட்டார் வண்டி வந்து வீட்டு வாசலில் நின்றது. லலிதாவைப் பார்க்க வருகிற மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று தெரிந்துகொள்ளச் சீதாவின் மனத்தில் எழுந்த ஆவல் அவளை அப்படியே நிற்கும்படிச் செய்தது.

மோட்டாரிலிருந்து முதலில் ஒரு பெரியவர் இறங்கினார். அடுத்தாற்போல் ஒரு யௌவன புருஷன் இறங்கினான். அவன் தான் மாப்பிள்ளையாயிருக்க வேண்டும். அடடா! எவ்வளவு களையாயிருக்கிறான்! லலிதா அதிர்ஷ்டசாலிதான்; சந்தேகமில்லை. சீதாவின் நெஞ்சு விம்மித் தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் வரும் போலிருந்தது. தலை சுழன்றது; சட்டென்று சமாளித்துக் கொண்டாள். சமாளித்துக் கொண்டு பார்த்தபோது அந்த யௌவன புருஷன் தன்னை நோக்குவதைக் கண்டாள். 'என்னைக் கல்யாணப் பெண் என்று நினைத்துக் கொள்ளப் போகிறாரே!' என்ற எண்ணம் உண்டானதும் வெட்கம் பிடுங்கித் தின்றது. இரண்டே பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, "அவர்கள் வந்தாச்சு!" என்றாள் சீதா. பிறகு லலிதாவின் அருகில் சென்று அவளைக் கட்டிக் கொண்டு காதோடு, "அடியே! உனக்கு வந்திருக்கும் அகமுடையானைப் பார்த்துவிட்டேன்; ரொம்ப அழகாயிருக்கிறார். மாமா சொன்னபடி மன்மதன்தான்!" என்றாள். "சீ!போடி!" என்றாள் லலிதா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஐந்தாம் அத்தியாயம்
கண்கள் பேசின

வீட்டு ரேழியில் திடுதிடுவென்று மனிதர்கள் வரும் சத்தம் கேட்கவே பெண்கள் எல்லாரும் காமரா உள்ளுக்கும் சமையல் உள்ளுக்கும் விரைந்து போய் மறைந்து கொண்டார்கள். சற்றுப் பொறுத்துச் சரஸ்வதி அம்மாள் மட்டும் வெளியே வந்து, சம்பந்தி அம்மாளாகப் போகிற காமாட்சி அம்மாளை நெருங்கி, "வாருங்கள்!" என்று அழைத்தாள். தயாராகப் போட்டிருந்த நாற்காலிகளில் வந்து புருஷர்கள் எல்லாரும் உட்கார்ந்தார்கள். சற்று நேரம்வரை மௌனம் குடிகொண் டிருந்தது. "என்ன ஓய்! குழந்தையை வரச் சொல்லுகிறதுதானே!" என்றார் சீமாச்சுவய்யர். "நீர்தான் சொல்லுமே, ஓய்", என்றார் கிட்டாவய்யர். சீமாச்சுவய்யர் சடசடவென்று காமரா அறைப் பக்கம் சென்று, "குழந்தையை வரச்சொல்லுங்கள்! கையிலே வெற்றிலை பாக்குத் தட்டை எடுத்து வரச் சொல்லுங்கள்! ஐந்தரை மணி முதல் ஆறு மணி வரையில் நல்ல வேளை. மணி ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது சீக்கிரம் வரட்டும்!" என்று இரைந்தார். காமரா உள்ளில் ஏதோ வாதப் பிரதிவாதம் நடந்ததாகத் தோன்றியது. சீமாச்சுவய்யர் மறுபடியும், "அதனால் என்ன? சீதாவும் வரட்டுமே? நீங்களும் வாருங்களேன்! எல்லோரும் வரவேண்டியதுதான். மாப்பிள்ளையும் பெண்ணும் இன்றைக்கே இரகசியம் பேசப்போகிறார்களா? அதற்கெல்லாம் பிற்பாடு நாள் இருக்கிறது!" என்றார்.

இதன் பேரில் லலிதாவும் சீதாவும் அறையிலிருந்து வெளிப்பட்டார்கள். லலிதா கையில் வெற்றிலைத் தட்டுடன் குனிந்த தலை நிமிராமல் நடந்தாள். சீதா அவளுடைய ஒரு கையைத் தன்னுடைய கையில் கோத்துக்கொண்டு ஓரளவு அவளைத் தள்ளிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சீதா தலையைக் குனிந்து கொண்டு நடக்கவில்லை. வந்திருந்தவர் களைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். அந்தக் கண்ணோட்டத்தில் மாப்பிள்ளையின் முகத்தையும் பார்த்தாள். தான் எதிர்பார்த்ததுபோல் அவன் லலிதாவைப் பார்க்காமல் தன்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. கனவிலே நடப்பதுபோல் நடந்து வந்த லலிதா, வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்ததும் அவர்கள் எதிரில் இருந்த முக்காலிப் பலகையில் வெற்றிலைத் தட்டை வைத்தாள், பிறகு நமஸ்காரம் செய்தாள். லலிதா நமஸ்கரித்தபோது மறுபடியும் மாப்பிள்ளை என்ன செய்கிறான் என்று சீதா பார்த்தாள். மாப்பிள்ளை லலிதாவைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தன்னைப் பார்ப்பதைக் கண்டாள். வெறுமனே பார்த்ததோடு இல்லை; புன்னகையும் புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகை ஜோதிமயமாக்கின! - சீதாவின் இதயமாகிய உலகத்தைத்தான்!

லலிதா நமஸ்கரித்துவிட்டு எழுந்த போது அவளுக்கும் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்ற அடங்காத ஆசை உண்டாயிற்று. மடங்கியிருந்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு பார்த்தாள். அவளுடைய பார்வையில் பத்மலோசன சாஸ்திரி தட்டுப்பட்டார். "ஐயோ! இவரா!" என்ற பீதி ஒரு கணம் உண்டாயிற்று. "சீ! இவராயிராது; இவர் மாப்பிள்ளையின் தகப்பனார் போலிருக்கிறது" எனத் தெளிந்து பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள். இந்தத் தடவை அவள் பார்த்தது சௌந்தரராகவனைத்தான். ஆனால் சௌந்தரராகவன் அச்சமயம் இதழ்களில் புன்னகையுடன் வேறு எங்கேயோ அவளுடைய தோளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். லலிதா மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டாள். "எந்தக் குழந்தையை இப்போது பார்ப்பதற்காக வந்திருக்கிறோம்? தலையிலே சடைவில்லையும் திருகுப்பூவும் வைத்துப் பின்னிக் கொண்டிருக்கிறாளே, அந்தக் குழந்தைதானே?" என்று பத்மலோசன சாஸ்திரி தமது கம்மலான கன சரீரத்தில் கேட்டார். அது யமதர்ம ராஜனின் குரலைப்போல் லலிதாவின் காதில் விழுந்தது. அவள் பார்த்திருந்த சத்தியவான் - சாவித்திரி நாடகத்தில் யமதர்ம ராஜன் அத்தகைய குரலில்தான் பேசினான்!

சாஸ்திரியின் சம்சாரம் காமாட்சி அம்மாள், "அழகாய்த்தானிருக்கிறது உங்கள் கேள்வி! பார்த்தால் எந்தப் பெண் என்று தெரியவில்லையா? நமஸ்காரம் செய்ததிலிருந்துகூடத் தெரியாமலா போச்சு!" என்றாள். "இல்லேடி! தெரியத்தான் தெரிகிறது! இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமிருக்கக்கூடாதே என்று கேட்டேன். இருக்கட்டும் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ? எதுவரை படித்திருக்கிறாள்?" "நன்றாய்க் கேட்டேளே ஒரு கேள்வி? எழுதப் படிக்கத் தெரியுமாவா? அப்பாவின் பட்டாமணியம் வேலையில் பாதி அவள் தானே பார்க்கிறாள்? அவள் படிக்காத கதைப் புத்தகம், நாவல் பாக்கி இல்லை. இங்கிலீஷ் சக்கைப் போடாகப் பேசுவாள். நாளைக்கு மாப்பிள்ளை பேசிப் பார்த்தால் தெரிந்து போய் விடுகிறது!" என்றார் சீமாச்சுவய்யர். இதைக் கேட்ட சாக்ஷாத் மாப்பிள்ளை சௌந்தரராகவன், "நாளைக்கு என்று ஏன் ஒத்தி வைக்க வேண்டும்? இன்றைக்கே பேசிப் பார்த்துவிட்டால் போகிறது!" என்றான். "அப்படிப் போடுங்க ஒரு போடு, மாப்பிள்ளை! ஆனாலும் நாங்கள் எல்லாரும் பட்டிக்காட்டு மனுஷாள்தானே? அவ்வளவு நாகரிகம் இன்னும் இங்கேயெல்லாம் பரவவில்லை. கலியாணம் ஆகிப் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால் பத்து நாளில் எல்லா நாகரிகமும் பழகிக் கொள்கிறாள். என்ன ஓய்! கிட்டாவய்யரே! நான் சொல்றது என்ன?"

அப்போது சப் ஜட்ஜ் சாஸ்திரி "கிட்டாவய்யரைக் கேட்பானேன்? நானே சொல்கிறேன். எனக்கும் இந்தக் காலத்து நாகரிகம் அவ்வளவாகப் பிடிக்காது. என் சம்சாரம் என்னை விடக் கர்நாடகம், மாட்டுப்பெண் இங்கிலீஷ் படித்துப் பாஸ் பண்ணி உத்தியோகம் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படவில்லை. இருந்தாலும் பிள்ளையாண்டான் இந்தக் காலத்துப் பையன் பாருங்கோ! படித்த பெண்ணாயிருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது இயல்புதானே! போகட்டும் குழந்தைக்குப் பாடத் தெரியுமா, சிட்சை கிட்சை உண்டா?" என்றார். "என்ன ஓய், கிட்டாவய்யரே! பதில் சொல்லுமே ஓய்! எல்லாவற்றுக்கும் நான்தானா பதில் சொல்ல வேண்டும்?" கிட்டாவய்யர் உடனே "குழந்தைக்குச் சங்கீத சிட்சையில்லை; கிராமாந்திரத்தில் அதற்கு வசதி கிடையாது. ஆனால் நன்றாகப் பாடுவாள். நானே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு!" என்றார். "ஓகோகோ! அப்படி வாருங்காணூம் வெளியிலே! நீரே பாட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறீரா? தீக்ஷிதர் கிருதி ஏதாவது தெரியுமா?" "பேஷாகத் தெரியும்!... லலிதா! 'மாமவ பட்டாபிராமா' பாடு" என்றார் கிட்டாவய்யர்.

இத்தனை நேரமும் லலிதா தலைகுனிந்தபடியே இருந்தாள், இப்போது அப்பாவின் குரல் வந்த திசையை நோக்கி இரக்கம் ததும்பிய முகத்துடன் பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டாள். "தீக்ஷிதர் கிருதி தெரியாவிட்டால் வேண்டாம். சியாமா சாஸ்திரி கிருதி தெரிந்தால் பாடட்டும்." "ஆகா! சியாமா சாஸ்திரிக் கிருதியும் குழந்தைக்குத் தெரியும், 'ஸரோஜ தளநேத்ரி' பாடு அம்மா!" லலிதா அதற்கும் மௌனமாகவே இருந்தாள். "இல்லை பட்டணம் சுப்பிரமணிய அய்யர் கீர்த்தனம், தியாகராஜ கீர்த்தனம் எது தெரிந்தாலும் பாடட்டும்." "அதுதான்னா சரி! தீக்ஷிதர் கிருதி என்றால் அது சேலம் ஜில்லா தாம்பக் கயிறு மாதிரி நீண்டு கொண்டே இருக்கும். உனக்குச் சங்கல்பமே டீதோ மனஸா' தெரியுமோ, அதைப் பாடு! இல்லாவிட்டால் 'மருகேலரா' கீர்த்தனம் பாடு!" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லாவிட்டால் தியாகராஜ கிருதியில் பல்லவியும் தீக்ஷிதர் கிருதியில் அநுபல்லவியும் சியாமா சாஸ்திரி கிருதியில் சரணமும் பாடட்டுமே!" என்றான் சௌந்தரராகவன். புருஷர்கள் கோஷ்டியில் சிறு சிரிப்பின் சத்தம் உண்டாயிற்று. ஸ்திரீகளிடையே கசமுச என்ற பேச்சின் ஓசை ஏற்பட்டது. சூரியாவின் கண்ணில் தீப்பொறி பறந்தது.

ஒன்றுக்கும் லலிதா மசிகிற வழியாக இல்லை. சீதா இரகசியம் பேசுகிற குரலில், "ஏண்டி இப்படிப் பேசாமல் இருக்கிறாய்! ஒரு பாட்டுப் பாடடி!" என்று தூண்டினாள். அப்படித் தூண்டியும் பயனில்லாமற் போகவே மாப்பிள்ளைப் பையனைப் பார்த்தாள். அவனும் அதே சமயத்தில் அவளைப் பார்த்தான். அவர்களுடைய மனத்தில் இருந்ததை பரஸ்பரம் அவர்களுடைய கண்களின் பேச்சினால் தெரிந்து கொண்டார்கள். "இந்தப் பட்டிக்காட்டுச் சங்கோசப் பிராணியைக் கலியாணம் செய்துகொண்டு நான் என்னத்தைச் செய்வது?" என்று சௌந்தரராகவனின் கண்கள் கூறின. பதிலுக்கு, "ஆமாம்! உங்களுடைய நிலைமை கஷ்டமானதுதான்! என்னுடைய மனப்பூர்வமான அநுதாபம்" என்று சீதாவின் கண்கள் தெரியப்படுத்தின. "சீதா! நீயும் லலிதாவோடு சேர்ந்து ஒரு பாட்டுப் பாடேன்! குழந்தை தனியாகப் பாடக் கூச்சப்படுகிறாள்!" என்றார் சுப்பய்யர். "ஆமாம்; சீதா! நீயும் சேர்ந்து பாடு!" என்று சரஸ்வதி அம்மாள் பக்கத்தில் வந்து நின்று கூறினாள். சீதா பளிச்சென்று, "எங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்த பாட்டு ஒன்றும் இல்லையே!" என்றாள்.

"அப்படியானால் நீயேதான் ஒன்று பாடேன். அவள் தைரியப்படுத்திக் கொண்டு அப்புறம் பாடட்டும்?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "யோசித்துப் பார்க்கிறேன்- ஏன் லலிதா! 'நகுமோ கனலேனி' உனக்குத் தெரியுமல்லவா? இரண்டு பேரும் சேர்ந்து பாடுவோம்! என்ன! பேசாமலிருந்து விடாதே!" என்று சொல்லி விட்டுச் சீதா கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தாள். லலிதா பல்லவியில் பாதியில் சேர்ந்து கொண்டாள். ஆனால் அவளுடைய குரல் எடுபடவில்லை. சீதாவின் குரல்தான் மேலோங்கி நின்றது. சீதா அனுபல்லவியை எடுத்து மேலே ஜம்மென்று போனபோது லலிதாவும் கூடப் பாட முயன்றாள். ஆனால் குரல் 'கிறீச்' என்று அபஸ்வரமாகக் கேட்டது. சட்டென்று நிறுத்திவிட்டுச் சீதாவின் கையை உதறி விடுவித்துக் கொண்டு விடுவிடு என்று காமரா உள்ளே நோக்கிச் சென்றாள் லலிதா. எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. கிட்டாவய்யர் கோபக்குரலில், "இது என்ன லலிதா?" என்று அதட்டினார். சரஸ்வதி அம்மாள் லலிதாவின் கையைப் பிடித்து நிறுத்தி "அசட்டுப் பெண்ணே! தினம் கச்சேரி செய்வது போல் மூன்று மணி நேரம் பாடுவாயே? இன்றைக்கு என்ன வந்தது?" என்றாள். லலிதா தாயாரின் கைகளையும் உதறிவிட்டு உள்ளே சென்றாள். சீதா, பாவம், ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள். பிறகு மாப்பிள்ளைப் பையனை ஒரு தடவை கண்ணைச் சுழற்றிப் பார்த்துவிட்டுத் தானும் உள்ளே போய்விட்டாள்.

எழுந்திருந்த கிட்டாவய்யரைப் பத்மலோசன சாஸ்திரிகள் உட்காரச் செய்தார். "பரவாயில்லை; குழந்தையைத் தொந்தரவு படுத்த வேண்டாம். குரல் கேட்டு விட்டது, வெகு இனிமையாயிருக்கிறது, போதும். இன்னொரு நாள் சாவகாசமாகக் கேட்டுக் கொள்ளலாம்!" என்றார். "பெண் ஊமையில்லை என்று தெரிந்துவிட்டது அல்லவா? அதுவே போதுமானது!" என்று 'கிருதக்'காகச் சொன்னான் சௌந்தரராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதே, அப்பா" என்று காமாட்சி அம்மாள் கண்டித்துவிட்டு எழுந்து உள்ளே போனாள். பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் தனித்தனியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு சம்பந்திகள் தங்கள் ஜாகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஆறாம் அத்தியாயம்
மலர் பொழிந்தது!

அன்று இரவு மாப்பிள்ளை சம்பந்தி வகையறாவுக்காகச் சாப்பாடு கொண்டு வைத்து விட்டு வந்த பரிசாரகன் சங்கரனைப் பார்த்துச் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா, சங்கரா! அவர்கள் என்னடா பேசிக் கொண்டிருக்கிறார்கள்? ஏதாவது உன் செவிட்டுக் காதில் விழுந்ததா?" என்று கேட்டாள். "காதில் ஒன்றும் விழவில்லை அம்மா! விழுந்த வரையில் அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றான்?" "என்னடா உளறுகிறாய்? காதில் ஒன்றும் விழவில்லை, அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றால்?" "ஏதோ சில வார்த்தை அரைகுறையாகக் காதில் விழுந்தது. பணங்காசைப் பற்றித்தான் பேச்சு. பதினாயிரமாம்! பதினையாயிரமாம்! இவ்வளவு படித்தவர்கள் - பெரிய மனிதர்களே இப்படி இருந்தால்.... "அதனால் என்னடா மோசம்? பிள்ளையைப் பெற்றவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். நாளைக்கு நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கலியாணம் என்றால் நாம் மட்டும் பணங்காசு இல்லாமல் பண்ணிக் கொண்டு விடுவோமா?

அதிலேயும் அந்தப் பிராமணர் கொஞ்சம் கடிசல் என்று கேள்வி. அப்படியெல்லாம் வாய் கூசாமல் ரொம்பக் கேட்கக் கூடாது என்று பிள்ளைக்குத் தாயார் ஒருவேளை சொல்லிக் கொண்டிருப்பாள். என்னைக்கேட்டால் பேச வேண்டியதை யெல்லாம் இப்போதே பேசிக் கறார் செய்து கொண்டு விடுவதுதான் நல்லது என்பேன். அப்புறம் புகாருக்கு இடம் இருக்கக் கூடாது பார்!" இவ்விதம் சரஸ்வதி அம்மாள் வாய் ஓயாமல் பேசினாள். எனினும் அவளுடைய மனத்தில் இருந்த பரபரப்பு அடங்கவில்லை. சீதாவைக் கூப்பிட்டு, "குழந்தை! அவர்கள் இறங்கியிருக்கிற வீட்டுக்குப் போய் வேண்டியதெல்லாம் வந்து விட்டதா? இன்னும் ஏதாவது வேண்டுமா?' என்று சம்பந்தியம்மாளை விசாரித்து விட்டு வருகிறாயா? அதோடு சீமாச்சு மாமாவை இங்கே உடனே வரச் சொல்லு!" என்றாள். சீதா அவர்கள் இறங்கியிருந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது வழியில் சீமாச்சுவய்யர் வந்து கொண்டிருந்தார். ஆயினும் அவள் திரும்பாமல் மேலே சென்றாள். வீட்டின் முன்புறத்து ஹாலில் சௌந்தரராகவன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தான். சீதாவைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்து, "நீ மட்டும் வந்தாயா? உன் தோழியையும் அழைத்துக்கொண்டு வந்தாயா?" என்று கேட்டான்.

சீதா சிறிது தயங்கிவிட்டுப் பிறகு, "நான் மட்டுந்தான் வந்தேன்! நீங்கள்தான் லலிதாவைக் காபராப்படுத்தி விட்டீர்களே?" என்று சொன்னாள். "அவள் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறாளா" அல்லது அழுகையை நிறுத்தியாச்சா?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "அழவும் இல்லை ஒன்றும் இல்லை; எதற்காக அழ வேண்டும்!" "அவளைப் பாடச் சொன்னதற்குப் பாடத்தான் இல்லையே? ஒருவேளை அழ ஆரம்பித்து விட்டாளோ என்று பார்த்தேன். போகட்டும்; நீயாவது இந்த மட்டும் வாயைத் திறந்து பேசுகிறாயே? சந்தோஷம். அவளைப்போல் நீயும் பேசாமடந்தையாயிருந்தால் ஆபத்துதான்" என்றான். "என்னையும் யாராவது பெண் பார்ப்பதற்கென்று வந்திருந்திருந்தால் நானும் பேசாமடந்தையாகத்தான் இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, இதற்குமேல் அங்கே நிற்கக் கூடாது என்று எண்ணிச் சீதா உள்ளே சென்றாள். அவளுடைய நெஞ்சு எக்காரணத்தினாலோ படபடவென்று அடித்துக் கொண்டது. காமாட்சி அம்மாளும் சாஸ்திரிகளும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், சீதாவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார்கள். "குழந்தை! எங்கேயம்மா வந்தாய்?" என்று காமாட்சி கேட்டாள். "சாப்பாடு எல்லாம் சரியாய் வந்ததா என்று மாமி பார்த்து விட்டு வரச் சொன்னாள்!" என்றாள் சீதா. "எல்லாம் சரியாய் வந்து சேர்ந்தது என்று சொல்லு. அவ்வளவுதானே?"

"அவ்வளவுதான் மாமி! லலிதாவைப் பற்றி ஒரு வார்த்தை நானே சொல்ல வேண்டுமென்று வந்தேன். இன்றைக்கு ஏதோ அவள் பேசாமல் நின்றாளே என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்க லலிதாவைப் போல் இந்தப் பூலோகத்திலேயே சமர்த்து கிடையாது. கலகலவென்று பேசிக் கொண்டிருப்பாள். பாட்டு என்னை விட எவ்வளவோ நன்றாய்ப் பாடுவாள். குரல், குயிலின் குரல்தான்! இன்றைக்கு என்னமோ கலியாணத்துக்குப் பார்ப்பதற்கு என்று புது மனுஷர்கள் வந்ததும் கொஞ்சம் பயந்து போய் விட்டாள். அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது!" "இந்தப் பெண் வெகு பொல்லாத பெண்ணாயிருக் கிறாளே?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "அதனால்தான் உங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது போலிருக்கிறது;- இவள் தான் ஒருவேளை கலியாணப் பெண்ணோ என்று!" "அதனால்தான் என்ன; இவளுக்கும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே; ஏனம்மா, உன் தகப்பனாருக்குப் பம்பாயில் என்ன உத்தியோகம்?" என்று சாஸ்திரிகள் கேட்டார். "எங்க அப்பாவுக்கு ரயில்வேயில் உத்தியோகம், மாமா." "சம்பளம் என்னவோ?" "சம்பளம் மாதம் முன்னூறு ரூபாய். ஆனால் எவ்வளவு சம்பளமாயிருந்தால் என்ன? எல்லாம் செலவுக்குத்தான் சரியாயிருக்கிறது. என்னைப் பார்த்தாலே தெரிந்து விடுமே?"

"லலிதாவைப் போல் நகைநட்டுப் போட்டுக் கொள்ளவில்லை என்று அவ்விதம் சொல்கிறாயா? ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் நீயும் ஒரு நாளைக்கு வேண்டிய நகை நட்டுக்கள் பூட்டிக் கொள்வாய்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இராமச்சந்திர மூர்த்தியின் அருள் கேவலம் நகை நட்டுக்குத்தானா வேண்டும்" என்றார் சாஸ்திரிகள். "நகை நட்டுக்குந்தான் வேண்டும்; மற்ற எல்லாவற்றுக்குந்தான் வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது! இருக்கட்டும், சீதா! உன் கலியாணத்தைப்பற்றி உன் அப்பா ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லையா? வரன், கிரன் பார்க்கவில்லையா?" "மாமி! எங்க அப்பா 'எர்லி மாரியேஜ்' கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவர், நானும் எங்க அப்பா கட்சிதான். ஆனால் அம்மா மட்டும் ஓயாமல் வரன் வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். உங்களிடத்தில் கூட நாளைக்கு ஏதாவது சொன்னாலும் சொல்லுவாள் நீங்கள் கவனிக்க வேண்டாம்!...." "ஏன், அம்மா அப்படிச் சொல்கிறாய்? காலா காலத்தில் உனக்கும் கலியாணம் நடக்க வேண்டியதுதானே?" என்றாள் காமாட்சி. "நடக்க வேண்டியதுதான். ஆனால் ஐயாயிரத்தைக் கொண்டு வா, பத்தாயிரத்தைக் கொண்டு வா என்று கேட்கிறார்களே, அதற்கு எங்க அப்பா எங்கே போவார்? அதனால்தான் நான் கலியாணமே பண்ணிக் கொள்வதில்லை என்று வைத்திருக்கிறேன்."

"பெண்ணாகட்டும்; பிள்ளையாகட்டும் இப்படியல்லவா பெற்றவர்கள் விஷயத்தில் பயபக்தியோடு இருக்க வேண்டும்?" என்றார் சாஸ்திரிகள். "லலிதா மட்டும் என்ன! அப்பா அம்மா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள், மாமா! நாளைக்கு உங்கள் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் உங்களிடத்திலும் அப்படியே நடந்து கொள்வாள். நீங்கள் புறப்பட்டு வந்த பிறகு நான் அவளிடம் என்ன சொன்னேன், தெரியுமா? 'லலிதா! கலியாணம் ஆன பிற்பாடு மாமனாரும் மாமியாரும்தான் அப்பா அம்மா என்று நினைத்துக்கொள். சொந்தத் தாய் தகப்பனார் கூட அப்புறந்தான்!' என்று சொன்னேன். லலிதாவும் 'அதற்கு என்னடி சந்தேகம்?' என்றாள். கேட்டீர்களா! மாமி! இந்தக் காலத்து மாட்டுப் பெண்களைப் போல் மட்டு மரியாதையில்லாமல், தாட்பூட் என்று லலிதா நடந்து கொள்ள மாட்டாள். நான் ஏதோ சிறு பெண் சொல்லுகிறேனே என்று வித்தியாசமாய் நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் லலிதாவைக் கல்யாணம் செய்து கொள்ள உங்கள் பிள்ளை கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ள லலிதாவும் கொடுத்து வைத்தவள்தான்! சந்தேகமில்லை." "இந்தப் பெண் அபார சமர்த்தாயிருக்கிறாளே!" என்றார் சாஸ்திரிகள். இதைக் கேட்டுச் சீதாவின் உள்ளம் குதூகலம் அடைந்தது.

அதற்குமேல் அங்கே பேசிக்கொண்டு நிற்பது நியாயமில்லை என்று உணர்ந்தாள். "மாமி! நான் போய் வருகிறேன். ஏதாவது தப்பாய்ச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். போகும்போது வழியில் முன் இருந்த இடத்திலேயே இருந்த ராகவன், "நீ அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வக்கீல் வைத்திருந்தால் கூட நீ உன் தோழியின் கட்சியைப் பேசியது போல் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். உன்னைச் சிநேகிதியாகப் பெறுவதற்கு உன் தோழியும் ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!" என்றான். "தாங்க்ஸ்" என்றாள் சீதா. "எனக்கு எதற்குத் தாங்க்ஸ்? நான் அல்லவா உனக்குத் தாங்க்ஸ் சொல்ல வேண்டும்?" "நீங்கள் இப்போது தாங்க்ஸ் கொடுத்தால் நான் பெற்றுக் கொள்ளமாட்டேன். நாளைக்குக் கலியாணம் நிச்சயம் செய்து விட்டுக் கிளம்பினால் அப்போது பெற்றுக் கொள்வேன்." "கலியாணம் நிச்சயம் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதற்கு இரண்டு கட்சியின் சம்மதம் அல்லவா வேண்டியதாயிருக்கிறது" என்று ராகவன் கூறிவிட்டுப் புன்னகை புரிந்தான். அதற்குப் பிரதியாகச் சீதாவும் புன்னகை செய்துவிட்டுப் புறப்பட்டாள். சௌந்தரராகவனுடைய வார்த்தைக்கும் புன்சிரிப்புக்கும் பொருள் என்ன என்பது அவள் மனத்திற்குத் தெளிவாகவில்லை. ஆனால் அவளுடைய அந்தராத்மாவுக்கு ஒரு வேளை அவற்றின் பொருள் தெரிந்திருக்கலாம்.

ஒரு விஷயம் நிச்சயம், கிட்டாவய்யரின் வீடு நோக்கிச் சீதா சென்று கொண்டிருந்தபோது வான வெளியில் தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் நின்று அவள் மீது மணம் மிகுந்த நறுமலர்களைத் தூவினார்கள். தேவலோகத்து இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு அமர கன்னியர் இன்ப கீதங்களைப் பாடினார்கள். அந்தக் கீதங்களுக்கும் இணங்க ஆனந்த நடனமாடிக்கொண்டே சீதா அவ்வீதியில் நடந்தாள், தனக்கு என்ன நேர்ந்துவிட்டது. ஏன் தன் உள்ளம் இவ்வளவு உற்சாகமடைந்திருக்கிறது. இது நாள் வரையில் அனுபவித்தறியாத இந்தப் பொங்கி வரும் மகிழ்ச்சியின் மூலாதாரம் எங்கே?- என்றெல்லாம் அவள் ஆராய்ந்து சிந்தனை செய்யவில்லை. உள்ளக் களிப்பும் உடம்பின் பூரிப்பும் ஒன்றாகி நினைவு அழிந்து மெய் மறந்த நிலையில் நடந்து சென்றாள். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் ஒருவாறு பிரமை நீங்கிற்று. சரஸ்வதி அம்மாளிடம் நேரே சென்று, "மாமி! நீங்கள் கவலைப்பட வேண்டாம். லலிதாவைப் பற்றி நான் புகழ்ந்த புகழ்ச்சியில் சம்பந்திகள் அப்படியே சொக்கிப் போய் விட்டார்கள். மாப்பிள்ளை கூடக் கேட்டுக் கொண்டுதானிருந்தார். நாளைக்கு அவசியம் கலியாணம் நிச்சயம் செய்து கொண்டுதான் போவார்கள்" என்றாள்.

சரஸ்வதி அம்மாள் உள்ளம் நிறைந்த நன்றி உணர்ச்சியோடு, "உன்னுடைய சமர்த்துக்கு மற்றவர்கள் திருடப் போக வேண்டியதுதான்! வயதானவர்களுக்கெல்லாம் உன்னுடைய சமர்த்தில் ஒரு பங்கு இருக்கக்கூடாதா? வந்த மனுஷர்களை யாராவது போய் எட்டிப் பார்க்கிறார்களா பார்! எல்லாரும் இந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீமாச்சு மாமா என்ன சொன்னார் தெரியுமா? இந்த வரன் நிச்சயமாகும் என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! இவரை யார் கேட்டார்கள்? ஏதாவது, 'அபிஷ்டு' என்று சொல்லி வைப்பதே சிலருக்குத் தொழில்!" என்று கூறினாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஏழாம் அத்தியாயம்
இடி விழுந்தது!

கிட்டாவய்யர் வீட்டு வாசலில் போட்டிருந்த கோடைப் பந்தலில் ராஜம்பேட்டைத் திண்ணை மகாசபை கூடியிருந்தது. சிலர் பந்தலின் கீழே பெஞ்சிகளிலும் சிலர் திண்ணை விளிம்பிலும் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளேயிருந்து வந்த கிட்டாவய்யரைப் பார்த்துப் பஞ்சு அய்யர், கேட்டீர்களா! ஐயர்வாள்! உங்களுடைய பையன் சூரியா ஒரே போடாய்ப் போடுகிறானே. நாலு நாள் கல்யாணம் நடத்துகிறதும் கல்யாணத்துக்காக ஏகப்பட்ட ரூபாய் செலவு பண்ணுகிறதும் ரொம்பப் பிசகாம். வரதட்சணை கேட்கிறது, வாங்குகிறது எல்லாம் வெறும் மூடத்தனமாம்!" என்றார். "அவன் சொல்வதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்திலே எல்லாருந்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஏழைகள் கஷ்டப்படுகிறபோது வீண் ஆடம்பரத்திலே பணம் செலவழிக்கிறது நியாயமல்லவென்று பேசுகிறார்கள்!" என்று கிட்டாவய்யர் தம்முடைய குமாரனைத் தாங்கிப் பேசினார். "அதோடு நிறுத்தினால் பரவாயில்லையே? பணத்தை வீணாகச் செலவழிக்கக் கூடாது, செட்டாயிருக்க வேண்டும் என்று சொன்னால் சொல்லட்டும்! அப்பாபாடு பிள்ளைபாடு என்று விட்டு விடலாம். சூரியா பெரிய சோஷலிஸ்ட் மாதிரின்னா பேசறான்? குடியானவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறார்களாம். அவர்கள் உழைப்பினால் வருகிற பணத்தை நாம் ஆடம்பரத்திலே செலவழிக்கிறோமாம். 'இதெல்லாம் ரொம்ப நாள் நடக்காது!' என்று எச்சரிக்கை வேறே பண்ணுகிறான்!"

"பின்னே என்னங்காணும்! இப்படியே சதகோடி வருஷம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீரா? உலகம் போகிற போக்கு உமக்குத் தெரியவில்லை. 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்ற பிரசாரம் நடந்து வருகிறது. நீங்கள் கிணற்றுத் தவளைகளாய் இருக்கிறீர்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "அப்பா! சீமாச்சு! நீயும் அவன் கட்சியில் சேர்ந்து விட்டாயா? இன்றைக்கு, 'உழுகிறவனுக்கு நிலம்' என்பார்கள். நாளைக்கு 'அறுக்கிறவனுக்கு நெல்லு!' என்பார்கள். அப்புறம் 'கொத்தனுக்கு வீடு!' 'வண்ணானுக்கு வேஷ்டி' 'டிரைவருக்கு மோட்டார்' 'டாக்டருக்கு மருந்து' 'போர்ட்டருக்கு ரயில் வண்டி' என்றெல்லாம் ஏற்படும். 'சமைக்கிறவனுக்கு சாதம்' என்று சொன்னாலும் சொல்வார்கள். விநாசகாலே விபரீத புத்தி!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "பட்டாமணியத்துக்கு வரிப்பணம் என்றும் ஏற்பட்டு விட்டால் எனக்கு ரொம்ப சௌகரியமாயிருக்கும், சாஸ்திரிகளே! இதிலேயெல்லாம் ஆத்திரப்பட்டு என்ன பிரயோசனம்? எது எது எப்போது நடக்க வேண்டுமோ அது அது நடந்துதானே தீரும்? காலத்திற்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கொள்ள வேண்டியதுதானே!" என்றார் கிட்டாவய்யர். "மாறிக்கொள்கிறோம், ஐயர்வாள்! மாறிக் கொள்கிறோம்! சரியான காரியமாயிருந்தால் காலத்தை யொட்டி மாற வேண்டியதுதான். முன்னேயெல்லாம் சிரார்த்தம் என்றால் மத்தியானம் மணி மூன்று ஆகும். இப்போது மணி பத்துக்கெல்லாம் பிராமணாளுக்கு இலை போடவேணும் என்கிறார்கள், அதை ஆட்சேபிக்கிறோமோ? காப்பி சாப்பிட்டு விட்டுத்தான் சிரார்த்தம் பண்ணுவேன் என்கிறான் கிரகஸ்தன். காலத்திற்கேற்ப இந்த மாறுதலையெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் ஆனால் 'உழுகிறவனுக்குத்தான் நிலம்' என்கிற கொள்கை உமக்கு ஏற்கச் சரியாயிருக்கிறதா என்று கேட்கிறேன்" என்றார் சாஸ்திரிகள்.

"சரியோ இல்லையோ, உலகம் ஒப்புக்கொண்டால் நாம் மட்டும் தடைசெய்து என்ன பிரயோஜனம்!" என்றார் கிட்டாவய்யர். "உலகந்தான் ஒப்புக் கொள்ளட்டும்; பிரம்மதேவனே ஒப்புக்கொள்ளட்டும். சரியில்லாததை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? காந்திமகாத்மா இதைத்தானே படித்துப் படித்துச் சொல்கிறார்? 'நீ ஒருத்தனாயிருந்தாலும் உனக்குச் சரியென்று தோன்றுகிறதைச் செய்!' என்கிறார். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சுயபுத்தியை உபயோகிக்க வேண்டாம். யாரோ எவனோ சொல்கிறதை அப்படியே ஒப்புக்கொள்ளு என்கிறீர்கள்." "உங்களை யார் ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள்?" "யார் சொல்கிறார்கள்? இப்போது சூரியாதான் சொன்னான், நமக்குத்தானே அவன் பிரசங்கம் செய்தான்?" "எல்லாம் இப்போது அப்படித்தான் சொல்லுவான் காணும்! கிட்டி முட்டி வரும்போது வேறு விதமாய்ச் சொல்வான். எங்கே? கிட்டாவய்யர் நிலத்தில் சூரியாவுக்கு உள்ள பங்கை உழுகிறவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுவானா, கேளுங்கள்!" என்றார் சீமாச்சுவய்யர். "சீமாச்சு மாமா! எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பேன். அல்லது நானே வயலில் இறங்கி உழுவேன். அப்போது நிலம் என்னுடையதாயிருக்கும்" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுடா தும்மட்டிக்கா பட்டா என்றானாம். நீ மட்டுந்தான் உழுவாய் என்று நினைத்தாயோ? அத்தகைய காலம் வந்தால் நாங்கள் எல்லோரும் இடுப்பிலே துணியை வரிந்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விட மாட்டோ மா?" என்றார் பஞ்சுவய்யர்.

"அது வரையில் காத்திருப்பானேன், இப்போதிருந்தே நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ளலாமே என்று சொன்னேன். நாமே உழுது பயிரிடுவது என்று ஏற்பட்டால் இப்படியெல்லாம் நாலு நாள் கல்யாணத்துக்கு ஆடம்பரச் செலவு செய்ய முடியுமா?" என்றான் சூரியா. "ஆகக்கூடி, சூரியாவின் பாயிண்ட் என்னவென்று இப்போது தெரிகிறது. லலிதாவின் கலியாணத்துக்கு அதிகமாகச் செலவு செய்துவிடக்கூடாது என்று அப்பாவுக்குப் புத்திமதி சொல்கிறான் அவ்வளவுதானே, சூரியா" என்றார் சீமாச்சுவய்யர். "இல்லவே இல்லை, அப்பாவிடத்தில் அப்படியெல்லாம் தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேச மாட்டேன்!" என்றான் சூரியா. "அப்படியே சூரியா சொன்னாலும் நான் அதைக் கேட்க மாட்டேன். குடும்பத்தின் சொத்தில் புருஷர் குழந்தைகளைப் போல் பெண் குழந்தைகளுக்கும் சமபாகம் கொடுக்க வேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் பேசுகிறார்களே! லலிதாவுக்குச் சொத்தில் என்ன பாகம் உண்டோ , அதைத்தான் கலியாணத்துக்குச் செலவழிக்கப் போகிறேன்" என்றார் கிட்டாவய்யர். "ஒரு விஷயம், அப்பா! லலிதாவுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்; என்னுடைய கட்சியும் அதுதான். ஆனால் லலிதா சொத்தின் பாகத்தை நம் இஷ்டப்படி செலவழிக்க நமக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? அதை அவளுக்கே எழுதி வைத்து விடுவதாயிருந்தால் எனக்குப் பூரண சம்மதம். வீண் ஆடம்பரக் கலியாணச் செலவுகளிலும் வரதட்சணையிலும் செலவு செய்வதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்?" என்றான் சூரியா.

"நீ ஆட்சேபித்தால் ஆட்சேபிக்க வேண்டியதுதான். ஊருக்கெல்லாம் ஒரு வழி, நமக்கு ஒரு வழி என்றால் நடக்கிற காரியமா?" "அது இருக்கட்டும், ஐயர்வாள்! எனக்கு ஒரு சந்தேகம். அதை ஒருவரும் தீர்த்து வைக்கிற வழியாக இல்லை. 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்கிறார்களே? உண்மையிலேயே உழுகிறது யார்? மாடு அல்லவா கலப்பையை இழுத்துப் போய் உழுகிறது? அப்படியானால் உழுகிற மாட்டுக்குத்தான் நிலம் சொந்தம் என்றல்லவா ஏற்படுகிறது?" என்றார் பக்கத்து வேளாளர் தெருவிலிருந்து வந்திருந்த கர்ணம் வேலாயுத முதலியார். "கணக்குப்பிள்ளை! நல்ல போடு போட்டீர்! ஏண்டா சூரியா, இதற்கு என்னடா பதில் சொல்கிறாய்?" என்றார் சீமாச்சுவய்யர். சூரியா சிறிது திகைத்துத்தான் போனான் பிறகு "இது விளையாட்டுக் கேள்வி, நிலம் மாட்டுக்குச் சொந்தமாயிருக்க முடியாது. மாட்டை ஓட்டுகிற உழவனுக்குத்தான் சொந்தமாயிருக்க முடியும்" என்றான். "நீ சொல்கிறதற்குச் சரி என்றே வைத்துக்கொள்வோம். சீமையிலேயெல்லாம் உழுகிறதற்கு டிராக்டர் என்று ஒரு மெஷின் வந்திருக்கிறதாம். 'ஒரு டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா நிலம் உழலாமாம். அவ்விதம் டிராக்டரைக் கொண்டு ஐந்நூறு ஏக்கரா உழுகிறானே, அவனுக்கு அந்த ஐந்நூறு ஏக்கராவும் சொந்தம் என்று ஏற்படுமா? அப்படியானால் சொல்லு! நான் எப்படியாவது ஒரு டிராக்டர் வாங்கி விடுகிறேன். அதை ஓட்டவும் கற்றுக்கொண்டு விடுகிறேன்!" என்றார் வேலாயுத முதலியார்.

சூரியா சிறிது நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்:"நான் கூறியது ஒரு விதத்தில் தப்புத்தான். 'உழுகிறவனுக்கு நிலம்' என்று சொல்வது அவ்வளவு சரியல்ல. நிலம் உண்மையில் சர்க்காருடையது." "நல்ல காரியம்! நிலமெல்லாம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் என்கிறாயா? ஏற்கெனவே அவன் வசூலிக்கும் வரிப்பளு தாங்க முடியவில்லை!" "இப்போது வெள்ளைக்கார சர்க்காராயிருக் கிறபடியால் இப்படிச் சொல்கிறீர்கள். இந்தியாவில் கூடிய சீக்கிரம் சுயராஜ்ய சர்க்கார் ஏற்பட்டே தீரும். அப்போது நிலமெல்லாம் சர்க்காருக்குப் பொதுவாயிருந்தால் தேச மக்களின் பொதுச் சொத்து என்று ஏற்படும். ஆபீஸ் குமாஸ்தாவும் பள்ளிக்கூட உபாத்தியாயரும் சர்க்கார் சம்பளம் பெறுவதுபோல் உழவர்களும் சம்பளம் பெறுவார்கள். கலப்பையில் மாட்டைக் கட்டி உழுதாலும் சரிதான்; டிராக்டரை ஓட்டி உழுதாலும் சரிதான்." "அப்பொழுது நம்மைப் போன்ற மிராசுதாரர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? வாயிலே விரலை வைத்துக் கொண்டு நிற்பதோ?" என்று பஞ்சுவய்யர் கொஞ்சம் ஆத்திரமாய்க் கேட்டார். "உங்களுக்கு - பிராமணாளுக்கு,- பரவாயில்லை. ஐயர்வாள்! எங்கேயாவது போய் எந்த உத்தியோகமாவது பண்ணிப் பிழைத்துக் கொள்வீர்கள்! ஒன்றுமில்லாவிட்டால் ஹோட்டலாவது வைத்து விடுவீர்கள்! எங்கள் பாடுதான் ஆபத்தாய்ப் போய்விடும்! என்றார் வேலாயுத முதலியார்.

மேற்கண்டவாறு திண்ணைப் பார்லிமெண்ட் சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சீமாச்சுவய்யரின் தர்மபத்தினி அன்னம்மாள் விடுவிடுவென்று நடந்து வந்து கிட்டாவய்யரின் வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே ஒரு பயங்கர பூகம்பம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆத்திரம் நிறைந்த குரல்களில் ஒரே கூச்சல். யாரோ விம்மி விம்மி அழுகிற குரலும் கேட்டது. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் சரஸ்வதியின் தாயார், "இந்தக் குடி கேடிகளை வரச் சொல்ல வேண்டாமென்று சொன்னேனே, கேட்டாயா? பெண் பார்க்க வருகிறதற்கு முன்னாலே மெனக்கெட்டு உன்னைத் தனியாக அழைத்துப் போய்ச் சொன்னேனே அதையாவது கேட்டாயா? 'கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய் விடாது' என்று சொன்னாயே! இப்போது கொண்டு போய் விட்டதேடீ? என்ன செய்யப் போகிறாய்? எல்லாரும் என்னை அசடு, பைத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! நான் அசடுமில்லை பைத்தியமும் இல்லை. நீதான் சுத்த நிர்மூடம்! இல்லாவிட்டால் பூனைக்குட்டியை மடியிலேயே கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பாயா?" என்று பிரசங்கமாரி பொழிந்த சத்தம் கேட்டது. அதற்குச் சரஸ்வதி அம்மாள், 'இந்த மாதிரி அநியாயம் நடக்கும் என்று யார் அம்மா கண்டது?.... அடே சுண்டு! உங்க அப்பாவைக் கூப்பிடு. இங்கே வீடு பற்றி எரிகிறது, அங்கே என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? கூப்பிடடா உடனே" என்றாள். இதுவும் அங்கிருந்த எல்லாருடைய காதிலும் விழுந்தது. கிட்டாவய்யர் அவசரமாகவும் கோபமாகவும் எழுந்து வீட்டுக்குள்ளே போனார்.

"என்னடி இங்கே ரகளை? இடி யார் தலையிலே விழுந்து விட்டது?" என்று கேட்டார். "ஆமாம்; இடிதான் விழுந்து விட்டது?" என் தலையிலே, உங்கள் தலையிலே, குழந்தை லலிதாவின் தலையிலே, எல்லாருடைய தலையிலும் விழுந்து விட்டது. சீமாச்சு மாமாவாத்து மாமி என்ன சொல்லுகிறாள் என்று கேளுங்கள்! அழகான மனுஷாளைச் சென்னைப் பட்டினத்திலிருந்து வரவழைத்தேளே, அவர்களுடைய காரியத்தைக் கேளுங்கள். பம்பாயிலிருந்து அருமைத் தமக்கையைச் சீராட்டக் கூப்பிட்டுக் கொண்டு வந்தீர்களே! அதன் பலன் என்ன ஆயிற்று என்று கேளுங்கள்!"- இவ்விதம் சரஸ்வதி அம்மாள் கூச்சல் போட்டாள். "ஆகட்டும் எல்லாம் கேட்கிறேன். நீ மட்டும் கொஞ்சம் மெதுவாய்ப் பேசு! யாருக்கோ பிராணன் போய்விட்ட மாதிரி சத்தம் போடாதே!" என்றார் கிட்டாவய்யர்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து எட்டாம் அத்தியாயம்
நிச்சயதார்த்தம்

கிட்டாவய்யரின் அதட்டலுக்குச் சிறிது பயன் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளே கூச்சல் கொஞ்சம் அடங்கியது. பிறகு விஷயம் இன்னது என்பதும் வெளியாயிற்று. சீமாச்சுவய்யரின் மனைவி அன்னம்மாளின் காதில் மதராஸிலிருந்து வந்திருந்தவர் பேசிக்கொண்டிருந்து அரை குறையாக விழுந்தது. அதிலிருந்து மாப்பிள்ளைப் பையன் லலிதாவைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படவில்லையென்றும், சீதாவைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்றும் தெரிந்தன. பையனுடைய தாயாரும் தகப்பனாரும் முதலில் அவனுடைய மனத்தை மாற்றப் பார்த்தார்கள். பையன் பிடிவாதமாயிருந்தபடியால் கடைசியில் அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தைக் கிட்டாவய்யரிடம் எப்படிப் பிரஸ்தாபம் செய்வது என்று அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். இன்ஷுரன்ஸ் சுப்பய்யரிடம் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். இப்போதே விஷயத்தைச் சொல்லி 'உண்டு இல்லை' என்று நிச்சயப்படுத்திக் கொண்டு போகிறதா அல்லது ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டுப் போய் விவரமாகக் கடிதத்தில் எழுதுவதா என்பதைப் பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் கேட்டவுடன் சாதுவான கிட்டாவய்யருக்குக் கூட ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஆத்திரத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் சீமாச்சுவய்யரைப் பார்த்து, "என்ன ஓய்! நான் அப்போதே சொன்னேனே, பார்த்தீரா! மதராஸ்காரன்களுடைய யோக்கியதை தெரிந்ததா?" என்றார்."தெரியாமல் என்ன ஓய்? நானுந்தான் அப்போதே சொன்னேனே? ஆனாலும் இந்தப் பிரம்மஹத்தி சொல்கிறதை வைத்துக்கொண்டு ஒன்றும் நாம் தீர்மானித்து விடக்கூடாது. இந்தச் சோழன் பிரம்மஹத்திக்கு ஏதாவது கலகம் பண்ணி வைப்பதே தொழில். அவர்கள் வேறு சொல்லியிருப் பார்கள்! இவளுடைய செவிட்டுக் காதில் வேறு ஒன்று விழுந்திருக்கும்; எல்லாவற்றுக்கும் நான் போய் விஷயம் இன்னதென்று ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். ஏ சோழன் பிரம்மஹத்தி! இப்படி வந்து தொலை! இருக்கிற பிராப்தங்கள் போதாது என்று நீ ஒருத்தி வந்து சேர்ந்தாயே? ஏ எழரை நாட்டுச் சனியனே! வருகிறாயா? இல்லையா?" என்று இம்மாதிரி சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை அருமையாக அழைக்க, அம்மாளும்,

"என்னை எதற்காக இப்படிப் பிடுங்கி எடுக்கிறீர்கள்?" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டாள். இருவரும் வீதியில் போகும் போதுகூட, சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை வாழ்த்திய குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சீமாச்சு அய்யர் மேற்கண்டவாறு தமது மனைவியைத் திட்டியதானது அங்கேயிருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் ஓரளவு மனத் தெளிவை உண்டாக்கியது. "இந்தப் பிராமணர் எதற்காக அன்னம்மாளை இப்படி வைகிறார்? அவள் என்ன செய்வாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "பின்னே, யார்தான் என்ன செய்வார்கள்? எந்தக் காரியமும் பிராப்தம் போலத் தானே நடக்கும்?" என்றார் கிட்டாவய்யர். "இவர்கள் வேண்டாம் என்றால் லலிதாவுக்குக் கல்யாணம் ஆகாமல் போய் விடுமோ? எனக்கு மட்டும் உத்தரவு கொடுங்கள், நாளைக்கே ஆயிரம் வரன் கொண்டு வருகிறேன்!" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள். "போதும்; போதும்! இனிமேல் இந்த வருஷம் என் பெண்ணுக்குக் கலியாணம் என்கிற பேச்சே வேண்டாம். முதலிலே, வந்தவர்கள் எல்லோரும் ஊருக்குப் போகட்டும்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். இந்தச் சமயத்தில் ராஜம்மாள், "அண்ணா! குற்றம் என் பேரில். நான் துரதிர்ஷ்டக்காரி, எங்கே போனாலும் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது!" என்றாள். "ஏதாவது உளறாதே! உன்னை யார் இப்போது என்ன சொன்னார்கள்?" என்றார் கிட்டாவய்யர்.

"அந்தப் பெண் உள்ளே விசித்து விசித்து அழுது கொண்டிருக்கிறது! சீதா என்ன செய்வாள்? வந்திருந்தவர்களின் முன்னால் வரமாட்டேன் என்றுதான் அவள் சொன்னாள். லலிதாதான் 'நீ வராவிட்டால் நானும் போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள். மன்னியாவது தடுத்தாளா? அதுவும் இல்லை!" என்றாள் பெரியம்மாள் அபயாம்பாள். "நான் ஒரு அசடு, என் பெண் பெரிய அசடு - என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே! நீங்கள் எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இருந்தீர்களே? சொல்கிறதுதானே?" என்று சரஸ்வதி அம்மாள் சீறினாள். "போதும் வாக்கு வாதம்! நிறுத்துங்கள்! அழுகிற குழந்தையைப் போய் யாராவது சமாதானம் செய்யுங்கள்!" என்றார் கிட்டாவய்யர். "அழுகை என்ன அழுகை! எதற்காக அழ வேண்டும்? செய்கிறதையும் செய்துவிட்டு ஜாலம்வேற!" என்றாள் சரஸ்வதி அம்மாள். உள்ளே, சீதாவைச் சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்த லலிதாவின் காதில் இதெல்லாம் விழுந்தது. அம்மா சொன்ன கடைசி வார்த்தையைக் கேட்டதும் லலிதா ஆங்காரத்துடன் வெளியில் வந்தாள். "அப்பா! நான் சொல்கிறதைத் தயவு செய்து கேளுங்கள். இன்றைக்கு வந்த பிள்ளையை நான் ஒருநாளும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை வெட்டிப் போட்டாலும் மாட்டேன்.

முன்னாலிருந்தே எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் நீங்கள் ஒருவரும் கேட்கவில்லை. அம்மா அனாவசியாமாகச் சீதாவைக் கோபித்துக் கொள்கிறாள். இது தெய்வத்துக்கே பொறுக்காது. சீதா முகத்தை அலம்பிக் கொள்ளக் கூட மாட்டேன் என்றாள்; என்னுடன் வருவதற்கும் அவள் இஷ்டப்படவில்லை. நான்தான் வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்தேன். அப்படியிருக்க அவளைக் கோபித்துக்கொண்டு என்ன பயன்? இப்படி யெல்லாம் நீங்கள் அநியாயமாய்ச் சீதாவின் பேரில் பழி சொல்லுவதாயிருந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்; இல்லாவிட்டால் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்!" என்று லலிதா ஆத்திரமும் அழுகையுமாய்ப் பேசினாள். இவ்விதம் லலிதா தன் தோழிக்காகப் பரிந்து பேசியது எல்லாருடைய மனத்தையும் இளகச் செய்தது. ஆனால் சரஸ்வதியின் கோபத்தை மட்டும் அதிகப்படுத்தியது. "போ, இப்போதே போய்க் கிணற்றில் விழு! எனக்குப் பெண்ணே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்!" என்று சொன்னாள். "அடாடாடா! இதெல்லாம் என்ன பேச்சு? இப்போது ஒன்றும் தீர்மானமாகி விடவில்லையே? சீமாச்சுதான் போயிருக்கிறானே? விஷயத்தைக் தெரிந்து கொண்டு அவன் வரட்டுமே?" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள்.

"சீமா மாமா என்னத்தை வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வரட்டும்! அந்தப் பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் நான் பண்ணிக் கொள்ளப் போவதில்லை. சத்தியமாய்ப் பண்ணிக் கொள்ளப் போவதில்லை!" என்று லலிதா சபதம் செய்தாள். "லலிதா! இதென்ன நீ கூட இப்படி எல்லாம் பேசுகிறாயே?" என்றார் கிட்டாவய்யர். "அவள் சுயமாகவா பேசுகிறாள்? சொல்லிக் கொடுத்தல்லவா பேசுகிறாள்?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மன்னி! என்னைப்பற்றிச் சொல்கிறாயா? நான் ஒரு பாவமும் அறியேனே! லலிதாவுடன் நான் அரை நிமிஷம் பேசக் கூட இல்லையே!" என்றாள் ராஜம்மாள். "நான் உங்களையொன்றும் சொல்லவில்லை. என் பிள்ளையைத்தான் சொல்கிறேன். சூரியாவின் துர்போதனை தான் இப்படி லலிதாவைப் பைத்தியமாக அடித்துவிட்டது. அவனுடைய புத்தியையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள்....!" இத்தனை நேரம் சும்மா கேட்டுக் கொண்டு நின்ற சூரியா இப்போது சம்பாஷணையில் தலையிட்டான். "என்னுடைய புத்தி சரியாகத்தான் இருக்கிறது. இந்த முட்டாள்தனமெல்லாம் வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன்; யாரும் கேட்கவில்லை. அம்மா! உங்கள் காலத்தில் நீங்கள் எல்லாரும் கலியாணம் பண்ணிக்கொண்டு திண்டாடுகிறது போதும்.

எங்களை எங்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள். லலிதாவுக்குப் பிடித்திருந்தால் கலியாணம் பண்ணிக் கொள்வாள். இல்லாவிட்டால் பிரம்மதேவன் வந்து சொன்னாலும் பண்ணிக்கொள்ள மாட்டாள். லலிதாவுக்குச் சொன்னது தான் சீதாவுக்கும்! மதராஸிலிருந்து வந்திருக்கும் மகா பிரகஸ்பதியைச் சீதாவுக்கும் பிடிக்காவிட்டால், பிடிக்கவில்லை என்று தைரியமாய்ச் சொல்லி விடட்டும். இதற்காக அவள் விம்மி அழ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" என்று சொன்னான் சூரியா. சூரியாவின் உள்ளம் அப்போது உண்மையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மதராஸிலிருந்து பெண் பார்க்க வந்த மகா பிரகஸ்பதியை அவனுக்கு ஏற்கெனவே பிடிக்கவில்லை. அந்தப் பிரகஸ்பதி லலிதாவுக்குப் பதிலாகச் சீதாவை மணந்து கொள்ள விரும்புகிறான் என்ற செய்தி கேட்டதும் அந்தக் கொந்தளிப்பு தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஜுவாலை விட்டுப் பொங்கியது. காமரா உள்ளின் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சீதா இன்னமும் விம்மிக் கொண்டிருந்தாள். லலிதா அவளுக்கு ஆறுதல் கூறிச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் கபடமற்ற லலிதாவிற்குச் சீதாவின் மனோநிலை என்ன தெரியும்? உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தை மறைத்துக் கொள்வதற்காகவே சீதா விம்மினாள். அவளுடைய மனக் கண் முன்னால் உலகமே ஒரு ஆனந்த நந்தவனமாகத் தோன்றியது.

அந்த நந்தவனத்திலிருந்த மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தமிட்டன; சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது. இத்தகைய ஆனந்த நந்தவனத்தில் சீதாவின் உள்ளம் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எங்கேயோ கடல் பொங்கி மலைபோல் அலைகள் கிளம்பி மோதி விழும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் சீமாச்சுவய்யர் கிட்டாவய்யருக்கு ஆள் விட்டு அனுப்பினார்; கிட்டாவய்யர் போனார். அவரிடம் சப் ஜட்ஜ் சாஸ்திரியாரும் அவருடைய சக தர்மினியும் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். "உங்கள் குமாரிக்கு ஒரு குறையும் இல்லை கிளி மாதிரிதான் இருக்கிறாள். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களின் போக்கே தனியாயிருக்கிறது. 'முதலிலே சீதாவைப் பார்த்தேன்; பார்த்தவுடனே அவளைப் பிடித்துவிட்டது. கலியாணம் பண்ணிக்கொண்டால் அவளைத்தான் பண்ணிக் கொள்வேன்' என்று பிள்ளையாண்டான் சொல்லுகிறான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்; கேட்கவில்லை. உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் நாளைக்கே நிச்சயதார்த்தம் செய்து விடலாம்.

பெண்ணுக்காவது பெண்ணின் தாயாருக்காவது பிடிக்காவிட்டால் அதையும் சொல்லி விடுங்கள்; இதில் வலுக்கட்டாயம் ஒன்றுமில்லை" என்றார்கள். கிட்டாவய்யர் திகைத்துப் போனார். ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. "அதற்கென்ன? பெண்ணின் தாயாரைக் கேட்டுவிட்டுச் சொல்லுகிறேன்" என்று புறப்பட்டார். புறப்பட்டவர் நேரே வீட்டுக்கு வரவில்லை. சீமாச்சுவய்யரையும் சுப்பய்யரையும் குளத்தங்கரைப் பங்களாவுக்கு அழைத்துப் போய் யோசனை செய்தார். அவர்கள் இருவரும், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! உங்கள் பெண்ணுக்கு என்ன? நூறு வரன் பார்த்துச் சொல்கிறோம். அந்த பம்பாய் பெண்ணுக்கு வரன் கிடைப்பதுதான் கஷ்டம். பணம் காசு இல்லாமல் பண்ணிக் கொள்கிறேன் என்கிறார்கள். வேண்டாம் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? அதனால் யாருக்கு என்ன லாபம்? நாளைக்கே 'பாக்கு வெற்றிலையைப் பிடி!' என்று நிச்சயதார்த்தம் செய்து விடுவதுதான் சரி!" என்றார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த ஆத்திரம் தணிந்து விட்டபடியால் கிட்டாவய்யருக்கு அதுதான் நியாயம் என்று தோன்றியது. ஆனால் இதைத் தம்முடைய பாரியாளிடம் எப்படி சொல்லிச் சரிக்கட்டுவது என்று யோசித்துக்கொண்டு இரவு ஒரு மணிக்கு வீடு திரும்பினார். அதற்கு வழி அவருடைய புதல்வன் சூரியா சொல்லிக் கொடுத்தான்.

தூக்கம் பிடியாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவுக்கு அதற்குள் மனம் தெளிவடைந்திருந்தது. யார் கண்டது? ஒருவேளை கடவுளுடைய விருப்பம் இவ்விதமிருக்கலாம். டில்லியில் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் பார்க்கும் சௌந்திரராகவன் தன்னைக் காட்டிலும் சீதாவுக்கு தக்க வரன் என்பதில் சந்தேகம் என்ன? அத்தங்காளின் அதிர்ஷ்டம் இந்த விதமாக அவனைக் கொண்டு விட்டிருக்கிறதோ என்னமோ? சீதாவின் வாழ்க்கை இன்பத்திற்குக் குறுக்கே நிற்கத் தனக்கு என்ன உரிமை? அன்றிரவு தாமோதரம் பிள்ளை வீட்டு மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவனுடைய நண்பன் பட்டாபிராமன் சொன்னது சூரியாவுக்கு நினைவுக்கு வந்தது. "செடியில் உள்ள புஷ்பத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தே நான் சந்தோஷப்படுவேன். அதைப் பறித்துக் கசக்கி முகர வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாது" என்று பட்டாபி சொன்னான் அல்லவா! அடடா! எவ்வளவு தாராளமான உள்ளம் அவனுக்கு! அந்தக் கொள்கையைத் தானும் ஏன் பின்பற்றக்கூடாது? கிட்டாவய்யர் இரவு ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்ததும் சூரியா, "அப்பா! அவர்கள் என்ன சொன்னார்கள்? என்ன முடிவு ஆயிற்று!" என்று கேட்டான்.

"இன்னும் நீ தூங்கவில்லையா, சூரியா? உங்களிடம்தான் யோசனை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அன்னம்மாள் சொன்னது உண்மைதான். 'சீதாவைத்தான் கலியாணம் பண்ணிக் கொள்வேன்' என்று அந்தப் பையன் சொல்கிறான். அவனுடைய அப்பா அம்மாவும் அதற்குச் சம்மதித்து விட்டார்கள். பணங்காசு சீர்வகையறா ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உன் தமையன் கங்காதரனைக் காட்டிலும் உன்னுடைய யோசனையைத்தான் நான் மதிக்கிறேன். அவனுக்குப் படித்துப் பரீட்சை பாஸ் செய்யத் தெரியுமே தவிர உலக விவகாரம் தெரியாது. நீ அப்படியில்லை? நாலும் தெரிந்தவன், உன் அபிப்பிராயத்தைச் சொல்!" என்றார். "அப்பா! இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டபடியால் இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். நம்முடைய வக்கீல் ஆத்மநாத ஐயரின் பிள்ளை பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கலியாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போன வருஷம் நீங்கள் எல்லோரும் தேவப்பட்டணத்திற்கு வந்து வக்கீல் வீட்டில் சில நாள் இருந்தீர்கள் அல்லவா? அப்போது பட்டாபி லலிதாவைப் பார்த்திருக்கிறான். லலிதாவை அவனுக்குப் பிடித்திருக்கிறது. வேறு வரன் பார்ப்பது பற்றி அவனுக்கு வருத்தம்.

அவன் மட்டும் என்ன, வக்கீல் ஐயர்வாளுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம்தான். 'நாங்கள் எல்லாம் உங்க அப்பாவுக்கு இலட்சியமா? பெரிய இடமாய்ப் பார்ப்பார்! தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளிர்ச்சி!' என்று ஜாடைமாடையாகச் சொன்னார்!" என்றான் சூரியா. "வாஸ்தவந்தான்! வக்கீல் ஆத்மநாதய்யரின் பிள்ளை நல்ல வரன்; எனக்கு அது ஞாபகம் இல்லாமற் போகவில்லை. ஆனால் உன் அம்மா 'இன்னும் பெரிய இடமாகப் பார்க்க வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். எனக்கென்னமோ பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கொடுப்பதற்குப் பூரண சம்மதம். அதைப் பற்றி யோசித்து முடிவு செய்வோம். சீதா விஷயம் என்ன சொல்கிறாய்?" என்று கிட்டாவய்யர் கேட்டார். "சீதா விஷயம் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவளுக்கும் அத்தைக்கும் சம்மதமாயிருந்தால் சரிதான். பணங்காசு அதிகம் செலவில்லாமல் இவ்வளவு நல்ல இடம் கிடைத்தால் சந்தோஷப்பட வேண்டியதுதானே? அதனால் நமக்கும் நல்ல பெயர் ஏற்படும்!" என்றான் சூரியா. "அப்படியானால், சூரியா, நீதான் உன் அம்மாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அவள் பத்ரகாளி அவதாரம் டுத்திருக்கிறாள். நான் சொன்னால் தங்கையின் பெண்ணுக்குப் பரிந்துகொண்டு சொல்லுகிறேன் என்று நினைத்து இன்னும் அதிக ஆத்திரப்படுவாள்!"

"அதற்கென்ன அப்பா! கட்டாயம் நான் அம்மாவைச் சரிக்கட்டிவிடுகிறேன்" என்றான் சூரியா. சூரியா ஏற்றுக்கொண்ட காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆயினும் கடைசியில் வெற்றி பெற்றான். முக்கியமாக மதராஸ் பையனுக்கு லலிதாவைக் கொடுத்தால் அவன் டில்லி எங்கே, லாகூர் எங்கே என்று தூர தேசங்களுக்குப் போய்க் கொண்டிருக்க நேரிடும் என்றும், வக்கீல் பிள்ளைக்குக் கொடுத்தால் பக்கத்தில் இருப்பாள் என்றும் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்றும் சூரியா கூறியது சரஸ்வதி அம்மாளின் மனசை மாற்றிவிட்டது. மறுநாள் சாயங்காலம் எல்லாருடைய சம்மதத்தின் பேரில் மதராஸ் பத்மாபுரம் மாஜி சப் ஜட்ஜ் பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வன் சிரஞ்சீவி சௌந்தரராகவனுக்குப் பம்பாய்த் துரைசாமி ஐயர் குமாரி சீதாவைப் பாணிக்கிரணம் செய்து கொடுப்பதாய் நிச்சயதார்த்தம் ஆயிற்று. பம்பாய்த் துரைசாமி ஐயர் இதற்கு ஆட்சேபம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று ராஜம்மாள் சம்பந்திகளுக்கு உறுதி கூறியதின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்த வைபவத்தில் லலிதாதான் எல்லாரிலும் அதிகக் குதூகலமாக இருந்தாள். ராகவனை 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு அவனிடம் பேசக்கூட ஆரம்பித்து விட்டாள். சீதாவின் மனோநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி நாம் தற்போது ஒன்றும் சொல்லாமல் நேயர்களின் கற்பனா சக்திக்கே விட்டுவிடுகிறோம்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இருபத்து ஒன்பதாம் அத்தியாயம்
பீஹார்க் கடிதம்

கலியாணம் நிச்சயம் பண்ணிக்கொண்டு சௌந்தரராகவன் சென்னைக்குத் திரும்பியபோது மிக உற்சாகமாயிருந்தான். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய ஆனந்த அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது என்ற எண்ணம் அவன் மனத்தில் குடிகொண்டிருந்தது. தாரிணிக்கும் தனக்கும் ஏற்பட்ட சினேக சம்பந்தத்தை ஒரு மாயக்கனவு என்று தீர்மானித்து அதை மறக்கப் பிரயத்தனப்பட்டதுடன் அநேகமாக மறந்தும் விட்டான். ஆனால் அந்த சம்பந்தத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தும் இரண்டு கடிதங்கள் ராகவன் சென்னை திரும்பிய மூன்றாவது நாள் வந்தன. முதற்கடிதத்தின் மேல் உறையில் எழுதியிருந்த விலாசக் கையெழுத்தைப் பார்த்தவுடனேயே ராகவனுக்கு அதை எழுதியது யார் என்று தெரிந்து விட்டது. முத்து முத்தான அந்த வட்ட வடிவக் கையெழுத்து தாரிணியின் கையெழுத்துத்தான். ஒரு பக்கம் அந்தக் கடிதத்தைப் பிரிக்க ஆர்வமும் இன்னொரு பக்கம் அதில் என்ன எழுதியிருக்குமோ என்ற தயக்கமும் அவன் மனதைக் கலக்கின. கடைசியில் பிரித்துப் பார்த்தான்.

முஸபர்பூர்,(பீஹார்) 9-2-34
அன்பரே!
ரயிலிருந்து தங்களுக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்கலாம். அதுவே தங்களுக்கு நான் எழுதும் கடைசிக் கடிதம் என்று எண்ணியிருந்தேன். இங்கு வந்து நிலைமையைப் பார்த்த பிறகு எதனாலோ மறுபடியும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும் அது கைகூடவில்லை. இப்போது நான் இயற்றிவரும் தொண்டில் தங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கிக் கொண்டிருக்கிறது. இக்காரணங்களினாலேயே தங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்தேன். இங்கே பூகம்ப நிவாரணத் தொண்டர்களின் முகாமில் எல்லாரும் தூங்கிய பிறகு நான் மட்டும் மங்கலான கிரோஸின் எண்ணெய் விளக்கின் அருகில் உட்கார்ந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். பீஹாருக்கு நான் வந்து பத்து தினங்கள் ஆகின்றன. இந்தப் பத்து நாளும் நான் கண்ட காட்சிகள், அம்மம்மா, - ஆயிரம் வருஷம் உயிரோடிருந்தாலும் மறக்க முடியாதவை. இந்த ஜென்மத்திலே மட்டும் அல்லாமல் அடுத்த ஜன்மத்திலும், அதற்கடுத்துவரும் ஜன்மங்களிலும் கூட மறக்க முடியாது என்று தோன்றுகிறது. பகலில் பார்த்த காட்சிகளை இரவில் மறுபடியும் என் கனவில் காண்கிறேன். பகலில் மன உறுதியினால் உணர்ச்சியை அடக்கிக் கொள்கிறேன். ஆனால் கனவில் அது சாத்தியப்படவில்லை. சில சமயம் பயங்கரத்தினால் அலறிக் கொண்டும் சில சமயம் பரிதாபத்தினால் தேம்பி அழுதுகொண்டும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறேன்.

திருஷ்டாந்தமாகச் சில சம்பவங்களைச் சொன்னால் என்னுடைய மனோநிலையைத் தாங்களும் அறிந்து கொள்வீர்கள். முஸபர்பூரில் பாபு லக்ஷ்மி நாராயண பிரசாத் என்று ஒரு பிரமுகர். பீஹார் மாகாணத்தில் நடக்கும் கதர்த்தொண்டின் தலைவர் இவர். ஒரு மாதத்திற்கு முன்பு இம்மாகாணத்தில் உள்ள சர்க்கார் சங்கக்கிளை ஸ்தாபனங்களைப் பார்வையிடுவதற்காகப் புறப்பட்டார். ஒரு மாதம் ஆனதும் மனைவி மக்களின் நினைவு வந்தது. ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று கிளம்பினார். வரும் வழியில் உலகம் தலை கீழாகத் திரும்புவது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது. அது பூகம்ப அதிர்ச்சி என்று தெரிந்து கொண்டதும், "ஐயோ! வீட்டில் தனியாக மனைவி மக்களை விட்டு வந்தோமே! அவர்களுடைய கதி என்னவாயிற்றோ?" என்று திடுக்கிட்டார். பதைபதைப்புடன் வீடு திரும்பினார். அவருடைய பதைபதைப்புக்குக் காரணம் இருந்தது. அவருடைய வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கும்பல், மண்ணும் கல்லும் மரத்துண்டுகளும் உடைந்த ஓடுகளும் கிடந்தன. ஆகா! அவருடைய மனைவி மக்கள் எங்கே? அலறினார்; பதறினார். மண்ணையும் கல்லையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். மற்றும் பல தொண்டர்கள் அவருக்கு உதவி செய்தார்கள். ஐயோ! என்ன கோரம்! என்ன பரிதாபம்! அந்தக் கும்பலுக்கு அடியில் அவருடைய மனைவியும் குழந்தைகளும் மடிந்து நசுங்கி உருத் தெரியாத பிணங்களாகக் கிடந்தார்கள். பாபு லக்ஷ்மி நாராயண பிரஸாத் இப்போது பைத்தியம் பிடித்தவராக, "என் பெண் எங்கே? பிள்ளை எங்கே?" என்று கேட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்.

மாங்கீர் என்னும் பட்டிணத்தில் பிரபாவதிதேவி என்று ஒரு ஸ்திரீ இருந்தாள். பாவம்! அவள் கைம்பெண்! கணவர் விட்டுப்போன சொற்ப சொத்தைக்கொண்டு குழந்தைகளைத் தைரியமாகக் காப்பாற்றி வந்தாள். கைக்குழந்தை தொட்டிலில் தூங்கியது. இன்னொரு குழந்தை கூடத்தில் விளையாடியது. பிரபாவதி சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு குலுக்கல், வீடு சுழன்றது; சமையல் பாத்திரம் கவிழ்ந்தது; கொல்லைப்புறத்தில் தடதடவென்று சத்தம் கேட்டது. கொல்லைத் தாழ்வாரத்தில் கன்றுக்குட்டி கட்டியிருந்ததை எண்ணிக் கொண்டு ஓடினாள். அவள் கொல்லைப்புறம் செல்வதற்குள் கன்றுகுட்டி இருந்த இடத்தில் கூரைஇடிந்து விழுந்து மேடு போட்டிருந்தது. இதற்குள் வீட்டின் முன்கட்டிலும் அதே மாதிரி சத்தம் கேட்டு ஓடினாள். இரண்டு குழந்தைகள் மேலும் வீடு இடிந்து விழுந்து அடியோடு மூடி மேடிட்டு விட்டது. "ஐயோ!" என்று அலறிக்கொண்டு பிரபாவதி வாசல் பக்கம் ஓடி வந்தாள். "என் குழந்தைகளை இழந்தேனே! பூமி வெடித்து என்னையும் விழுங்கி விடாதோ?" என்று கதறினாள். அந்தப் பதிவிரதையின் வாக்கு உடனே பலித்தது. அவள் நின்ற இடத்தில் பூமி விரிந்து பிளந்தது. அதற்குள் விழுந்து பிரபாவதி மறைந்தாள். சீதாதேவி பிறந்த மிதிலை ராஜ்யந்தான் இப்போதைய பீஹார் என்பதை அறிந்திருப்பீர்கள். சீதையைத் தன்னிடத்தே ஏற்றுக்கொண்ட பூமாதேவி இன்று பீஹார் மாகாணத்தில் எத்தனையோ உத்தம பத்தினிகளை விழுங்கி விட்டாள்.

அன்பரே! இத்தகைய பூமிப் பிளவு ஒன்றை நான் அருகில் நெருங்கிப் பார்த்தேன். பக்கத்திலிருந்தவர்கள் தடுத்தும் என் மனம் கேட்கவில்லை. பள்ளத்தின் ஓரமாகச் சென்று குனிந்து பார்த்தேன். பள்ளம் கீழே ஆழம் கணக்கிட முடியாதபடி அதல பாதாளம் வரையில் போகிறது. கொஞ்ச தூரத்துக்குக் கீழே ஒரே கன்னங் கரிய இருள். அதற்குக் கீழே எவ்வளவு தூரம் போகிறது என்று சொல்ல முடியாது. அதிக நேரம் உற்றுப் பார்த்தால் மயக்கம் வந்து தலை சுற்றுகிறது. பூகம்பம் இன்னும் எத்தனையோ விசித்திரங்களையெல்லாம் இங்கே உண்டாக்கியிருக்கிறது. மேட்டுப் பிரதேசங்கள் திடீரென்று பள்ளமாகிப் பெரிய ஏரிகளைப் போல் தண்ணீர் ததும்பி நிற்கின்றன. ஏரிகள் இருந்த இடத்தில் தண்ணீர் அடியோடு வற்றிக் கட்டாந்தரை ஆகியிருக்கிறது. குடிசைகளும் வீடுகளும் பிரும்மாண்டமான மாளிகைகளும் கம்பெனிக் கட்டிடங்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இடிந்தும் விழுந்தும் எரிந்தும் கிடக்கின்றன. மொத்தம் 25,000 ஜனங்கள் பூகம்பத்தில் மாண்டிருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். மாண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள், தப்பிப் பிழைத்தவர்களில் லட்சக்கணக்கான ஜனங்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தலைக்கு மேலே கூரையின்றி, உட்காரவும் இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்பரே! இதையெல்லாம் தாங்கள் வந்து பார்த்தீர்களானால் இப்படிப்பட்ட மகத்தான துரதிர்ஷ்டத்தையடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் வாழ்க்கையில் வேறு என்ன பெரிய காரியம் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வருவீர்கள். பூகம்பத்தினால் ஏற்பட்ட கஷ்ட நிவாரணத் தொண்டுக்காக இந்தியாவின் நாலா பக்கங்களிலிருந்தும் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். எல்லாரும் பாபு ராஜேந்திர பிரஸாத்தின் தலைமையில் வேலை செய்கிறார்கள். பாபு ராஜேந்திர பிரஸாத் ஓர் அற்புத மனிதர். அவருடைய சாந்தம், அடக்கம், அன்பு, தொண்டு செய்யும் ஆர்வம் - இவற்றுக்கு நிகரேயில்லை. ஒரு வாரத்துக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இங்கு வந்தார். நாம் இருவரும் முதல் முதலில் சந்தித்தோமே, கராச்சி நகரில்; அங்கே நடந்த காங்கிரஸில் பண்டித ஜவஹர்லால் நேருவை நான் பார்த்தேன். அதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இப்பேர்ப்பட்ட மகா புருஷர் என்று அறிந்து கொள்ளவில்லை. மாபெரும் தலைவர் தாம் என்கிற உணர்ச்சியேயில்லாமல் தொண்டர்களோடு தொண்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆகா! என்ன ஆர்வம்? என்ன அவசரம்? எத்தனை சுறுசுறுப்பு? அவர் நடப்பதே கிடையாது; ஒரே ஓட்டந்தான்.

நேற்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. பூகம்பத்தினால் இடிந்து விழுந்து நாசமான ஒரு தெருவின் வழியாக நேருஜி போய்க் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு தீனமான சத்தம் கேட்டது. நாய்க்குட்டி குரைக்கும் குரல் போலிருந்தது. நேருஜி அங்கேயே நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அதே குரல் கேட்டது. உடனே நேருஜி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார். இடிந்து விழுந்து மேடிட்டுக் கிடந்த கல்லையும் மண்ணையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி மற்றத் தொண்டர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். அரை மணி நேர வேலைக்குப் பிறகு அவர்கள் தேடிய காட்சி தென்பட்டது. மர விட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்து ஒரு சிறு கூரையைப் போலாகிக் கீழே காலி இடம் உண்டுபண்ணியிருந்தது. அந்த இடத்தில் பாவம்! ஒரு சிறுவன் இறந்து கிடந்தான். இறந்த குழந்தையைக் காத்துக்கொண்டு அந்த நாய் இருந்தது. இத்தனை நாளும் அது எப்படித்தான் உயிர் வைத்திருந்ததோ தெரியாது! மேலே மூடியிருந்தவற்றை எடுத்தவுடனே நாய் வெளியே ஓடி வர வேண்டுமே! கிடையாது! செத்துக் கிடந்த சிறுவனை முகர்ந்து பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றது.

கடவுளே இந்த மாதிரி எத்தனையோ பயங்கர சம்பவங்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு உலகத்து நாடோ டி வாழ்க்கையில் யாருக்குத்தான் மனம் செல்லும்! மனித வாழ்க்கை எடுத்ததின் பயன் இம்மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்குச் சேவை புரிவதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தாங்களும் இங்கு வந்து பார்த்தால் என்னைப் போலவேதான் எண்ணுவீர்கள். ஏற்கெனவே எத்தனையோ விஷயங்களில் நம்முடைய அபிப்பிராயங்கள் ஒத்திருந்தன அல்லவா? சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு, மோட்டார்கள், டீ பார்ட்டிகள் - இவற்றில் எல்லாம் என்ன சுகம் இருக்கிறது? இங்ஙனம், தாரிணி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பதாம் அத்தியாயம்
இதுவா உன் கதி?

தாரிணியின் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தபோது சௌந்திரராகவனின் உள்ளத்தில் பழைய அன்பும் ஆர்வமும் ததும்பிக் கொண்டிருந்தன. பூகம்பத்தினால் விளைந்த விபரீத நிகழ்ச்சிகளைப் பற்றிப் படித்தபோது அவனுடைய மனம் இளகிற்று. கடிதத்தின் கடைசிப் பகுதி இளகிய மனத்தை மறுபடியும் கல்லாக மாற்றியது. சௌந்திரராகவனுடைய மனதிற்குள் தன்னைப் போன்ற ஒரு புத்திசாலி இந்தியா தேசத்தில் இதுவரை பிறந்ததில்லை என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. தாரிணி அவனிடம் கொண்டிருந்த காதல் அந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்ந்திருந்தது. இப்போது அவள் தனக்கு மனித வாழ்க்கை எடுத்ததின் பலனைப் பற்றிய போதனை செய்ய ஆரம்பித்தது ஆத்திரத்தை உண்டாக்கியது. அதிகப்பிரசங்கி! சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு முதலியவை குறித்து இவள் என்ன நமக்கு உபதேசிப்பது? நல்லவேளை! இப்படிப்பட்ட அதிகப்பிரசங்கியுடன் நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளாமல் தப்பினோம்! மூத்தோர்சொல் வார்த்தை 'அமிர்தம்' என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? கலியாண விஷயத்தில், அம்மா சொன்னதை கேட்கத் தீர்மானித்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? அப்பா அடிக்கடி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான்.

பெண்கள் வீட்டுக்குள்ளேயிருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம். தேசத்தொண்டு என்றும் பொதுஊழியம் என்றும் சொல்லிக்கொண்டு ஸ்திரீகள் வெளியில் கிளம்புவது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அது எங்கே கொண்டு விடும் என்று யார் சொல்ல முடியும், தாரிணியின் விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோ ம். அவளுடைய முக வசீகரமும் வெளி மினுக்கும் நம்மை ஏமாற்றிவிட்டன. பார்க்கப் போனால் சீதாவைக் காட்டிலும் தாரிணி அழகிலே அதிகம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் இல்லை. அல்லது சமர்த்திலேதான் சீதா குறைந்து போய் விடுவாளா? அதுவும் இல்லை! அன்றைக்குத் தன் அப்பா, அம்மாவிடம் சீதா எவ்வளவு சாதுர்யமாகப் பேசினாள்? அழகோடும் சமர்த்தோடும் சீதா அடக்கம் என்னும் அருங்குணத்தையும் அணிகலனாகப் பூண்டிருப்பாள். குடும்ப வாழ்க்கைக்கு தகுந்தபடி நடந்து கொள்வாள். பெரியவர்களிடம் பயபக்தியோடு இருந்து நல்ல பெயர் வாங்குவாள். பணம் பணம் என்று ஜபம் செய்து கொண்டிருந்த அப்பாவையே மனம் மாறும்படி செய்து விட்டாளே! அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, 'பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வேண்டிய பணம் நீ சம்பாதித்துக் கொள்வாய். இந்த மாதிரி சமர்த்துப் பெண் கிடைப்பது துர்லபம். உனக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சொல்லி விட்டாரே?

கடவுளுடைய கருணை தன்னிடத்தில் பூரணமாய் இருக்கிறது; ஆகையினாலே தான் தாரிணியோடு தன் வாழ்நாள் முழுவதையும் பிணைத்துக் கொண்டு திண்டாடாமல் இந்த மட்டும் தப்ப முடிந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில்தான் என்ன? கடவுளுடைய சித்தந்தானே லலிதாவைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவை முதலில் கொண்டு வந்து விட்டது? ஆனால் இந்த விஷயத்தில் கடவுளின் சித்தத்தைக்கூட இரண்டாவதாகத்தான் சொல்ல வேண்டும். அம்மாவுக்குத்தான் முதல் நன்றி செலுத்த வேண்டும். அம்மா மட்டும் அவ்வளவு பிடிவாதமாயிருந்திராவிட்டால், தான் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாளெல்லாம் திண்டாட நேர்ந்திருக்கும்? இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ராகவனுடைய கவனம் உறை பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதத்தின் மீது சென்றது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அதில் அடங்கியிருந்த விஷயம் அவனைத் திடுக்கிட்டுத் திகைக்கும்படி செய்தது. அது முஸபர்பூர் பூகம்பத் தொண்டர் படை முகாமிலிருந்து வந்து கடிதம். அதில் எழுதியிருந்தாவது:

முஸபர்பூர் 12-2-34
அன்பார்ந்த ஐயா,
வருத்தம் தரும் ஒரு விஷயத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. பம்பாயிலிருந்து வந்த ஒரு தேச சேவிகை - தாரிணி என்னும் பெயர் கொண்டவள் - இந்த முகாமில் தங்கிப் பூகம்பத்தினால் நஷ்டமடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்து வந்தாள். அவளுடைய உயர்ந்த குணங்களினால் இங்கே எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவளாயிருந்தாள். நேற்று மத்தியானம் விடுதியில் சாப்பிட்டுவிட்டுப் போனவள் இரவு திரும்பி வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவளிடம் ஒரே ஒரு துர்ப்பழக்கம் இருந்தது. பூகம்பத்தினால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பூமிப்பிளவுகளுக்குப் பக்கத்தில் போய் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக நேற்றுப் பிற்பகல் தாரிணியைப் பார்த்தவர்கள் அத்தகைய பிளவு ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று அவள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். எவ்வளவோ தேடிப் பார்த்தும் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. "அன்று ஜனககுமாரி பூமிக்குள் போனதுபோல் நானும் போய்விட விரும்புகிறேன்" என்று தாரிணி அடிக்கடி சொல்வது வழக்கம். அவளுடைய விருப்பம் நிறைவேறி விட்டதென்ற வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. தாரிணியின் உற்றார் உறவினர்கள் பற்றி எங்களுக்கு யாதொரு தகவலும் இல்லை.

அவளுடைய டைரியில் தங்கள் விலாசம் குறிக்கப்பட்டிருந்தபடியால் இதைத் தங்களுக்கு எழுதுகிறோம். தாரிணியின் பந்துக்களைத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களுக்கும் அறிவிக்கக் கோருகிறோம். ஒருவேளை தாரிணி எங்கேயாவது வழி தப்பிப் போயிருந்து திரும்பி வந்து விட்டால் தங்களுக்கு உடனே தெரியப்படுத்துகிறோம். இங்ஙனம், சரளாதேவி. இந்தக் கடிதத்தின் முதல் சில வரிகளைப் படிக்கும் போதே ராகவனுக்குத் தாரிணிமீது ஏற்பட்டிருந்த ஆத்திரமெல்லாம் மாறிவிட்டது. அவனுடைய இருதயத்தில் அன்பும் இரக்கமும் ததும்பின. கடிதத்தை முடிக்கும்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. எழுந்து சென்று பூட்டியிருந்த அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த தாரிணியின் படத்தை எடுத்தான். வெகுநேரம் அதை உற்று பார்த்துக் கொண்டேயிருந்தான். தாரிணியின் பேச்சுக்களும் முக பாவங்களும் நடை உடை பாவனைகளும் ஒவ்வொன்றாகவும் சேர்ந்தாற்போலவும் அவன் மனக் கண் முன்னால் வந்து கொண்டிருந்தன. "அடடா! இதுவா உன் கதி?" என்று எண்ணியபோது ராகவனுடைய கண்ணில் ததும்பிய கண்ணீர் வழிந்து தாரிணியின் படத்தின் பேரில் முத்து முத்தாக உதிர்ந்தது. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தில் ஓர்அதிசயமான நிம்மதியும் உண்டாயிற்று. அப்புறம் ஒருவாரம், பத்துநாள் வரையில் முஸ்பர்பூரிலிருந்து வேறு ஏதேனும்- நல்ல செய்தி கொண்ட கடிதம் - ஒருவேளை வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்தகைய கடிதம் ஒன்றும் வரவேயில்லை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து ஒன்றாம் அத்தியாயம்
மதகடிச் சண்டை

ராஜம்பேட்டைத் தபால் சாவடியின் சுவரில் மாட்டியிருந்த காலெண்டர் ஏப்ரல் மாதம்! 1 தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். "பாலகிருஷ்ணா! இது என்ன தொல்லை? தலையைக் காணோம் அப்பா!" என்றார் பங்காரு நாயுடு. "அதுதான் இருக்கே, ஸார்" என்றான் பாலகிருஷ்ணன். "இருக்கா? எங்கே இருக்கு?" "கழுத்துக்கு மேலே தொட்டுப் பாருங்க ஸார்!" "இந்தத் தலையைச் சொல்லவில்லை, தம்பி! இது போனாலும் பரவாயில்லையே? தபால் தலையையல்லவா காணவில்லை?" "எத்தனை தலை, என்னென்ன தலை காணவில்லை?" "இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்!" "இவ்வளவுதானே? மசால்வடைக் கணக்கில் எழுதிவிடுங்க!" "உன் யோசனையைக் கேட்டால் உருப்பட்டால் போலத் தான். இருக்கட்டும்! இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய்?" "பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்!" "ஒரு கலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா? மொத்தம் ஆயிரம் கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம்!" "இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்!" "பின்னே நடக்காமல்? எல்லாம் நிச்சயம் ஆகிக் கடுதாசி கூட அச்சிட்டு அனுப்பிவிட்டார்களே!"

"கடுதாசி அச்சிட்டால் சரியாப் போச்சா? நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்." "நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய்?" "சும்மாதான் கேட்டுவச்சேன்!" "இதுதான் உனக்கு ஜோலி போலிருக்கிறது. அதனாலே தான் மூன்றுநாள் கடிதங்களை டெலிவரி செய்யாமல் வைத்திருக்கிறாய். பட்டாமணியம் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிடு, அப்பா! ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்." "பிரமாத முக்கிய விஷயம்! அது கிடக்கட்டும், ஸார்! இரண்டு நாள் முன்னே பின்னே கொண்டு போய்க் கொடுத்தால் தலையா போய்விடும்?" "தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி! கிட்டாவய்யர் நல்ல மனுஷர்! நமக்குக்கூடக் கலியாணத்துக்குக் கடிதாசி வைத்திருக்கிறார். ஒருவேளை கலியாணச் சாப்பாடு பலமாகக் கிடைக்கும் நீ வரப்போகிறாய் அல்லவா?" "நான் வரமாட்டேன். நம்மைத் தனியாக வைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள்? இந்தப் பாப்பராச் சாதியே இப்படித்தான்."

"பிராமணத் துவேஷம் பேசாதே தம்பி! சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும் க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்..." "நிறுத்துங்கள், ஸார்! இந்தப் பழங்கதையெல்லாம் யாருக்கு வேணும்? எல்லாம் பிராமணர்களே எழுதி வச்ச கட்டுக்கதை தானே! இந்தக் காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள்!" "அப்படியானால் சாஸ்திரமெல்லாம் பொய்யா? சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்!- என்று வசனம் சொல்கிறதே!" "வெள்ளைக்காரன் கூடத்தான் கிரகணத்தைக் கண்டுபிடித்துச் சொல்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தும் சாஸ்திரங்களைத் தீயிலே போட்டுக் கொளுத்த வேண்டும்!" "நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப் போகிறாயோ?" "சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் போகிறேன்; காங்கிரஸ் கூட்டங்களுக்கும் போகிறேன்." "அப்படி என்றால் நீ உருப்பட்டாற்போலத்தான், போனால் போகட்டும். பட்டாமணியார் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அந்தப் பம்பாய் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் கூடக் கடிதங்கள் இருக்கின்றன."

"அந்தப் பம்பாய்ப் பெண் இருக்கிறதே! அது சுத்த அரட்டைக்கல்லி! நான் முந்தாநாள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து, டா, டூ போட்டுப் பேசிற்று. 'இந்தா, அம்மா! டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம்!' என்று சொல்லி விட்டேன்." "கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன் கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்!" "எட்டு நூறு சம்பளக்காரனாயிருந்தால் என்ன? எட்டாயிரம் சம்பளக்காரனாயிருந்தால் என்ன? யாராயிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்! டியூடி என்றால் டியூடி! சிநேகம் என்றால் சிநேகம்! அப்படி அந்தப் பம்பாய் பெண்ணுக்குக் கலியாணம் நடக்கிறது என்பதும் நிச்சயமில்லை; நின்னு போனாலும் போய்விடும்." "அப்படி உன் வாயாலே நீ எதற்காகச் சொல்கிறாய்!" "பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க?" இவ்விதம் சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் தபால் பையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

பாலகிருஷ்ணன் வெளியே போய்ச் சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியநாராயணன் தபால் சாவடிக்கு வந்தான். போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடுவைப் பார்த்து, "எங்கள் வீட்டுக்கு ஏதாவது கடிதம் இருக்கிறதா, ஸார்?" என்று கேட்டான். "ஓ! இருக்கிறதே! உனக்கு, அப்பாவுக்கு, பம்பாயிலிருந்து வந்திருக்கிற அம்மாவுக்கு, அந்த அம்மாளின் பெண்ணுக்கு - எல்லாருக்கும் இருக்கிறது. பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எதிரே அவனைப் பார்க்கவில்லையா?" "பார்க்கவில்லையே? எதிரே காணவில்லையே?" என்று சொல்லிக்கொண்டே சூரியா வெளியேறினான். அப்போது சூர்யா வெகு உற்சாகமான மனோநிலையில் இருந்தான். அவன் இஷ்டப்படியே எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தன. அவனுடைய முயற்சியினால் லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இதில் இரு தரப்பாருக்கும் வெகு சந்தோஷம். சீதாவின் கலியாணத்தைத் தனியாக எங்கேயாவது ஒரு கோயிலில் நடத்தி விடலாமென்று பம்பாய் அத்தை சொன்னாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதிப்பார்கள் போலிருந்தது. சூரியா அது கூடாது என்று வற்புறுத்தி இரண்டு கலியாணமும் ஒரே பந்தலில் நடத்தவேண்டுமென்று திட்டம் செய்தான்.

இதனாலெல்லாம் உற்சாகம் கொண்ட சூரியா கலியாண ஏற்பாடுகளில் மிகவும் சிரத்தை கொண்டு அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தானே பல காரியங்களைச் செய்து வந்தான். நல்ல வேளையாக எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையும் முடிந்து விட்டது. முகூர்த்தத் தேதிக்குப் பத்து நாள் முன்னதாகவே சூரியா கிராமத்துக்கு வருவது சாத்தியமாயிற்று. மாப்பிள்ளை அழைப்புக்கு 'டிரஸ்' வாங்குவது சம்பந்தமாகச் சூரியா பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதற்குப் பட்டாபியின் பதிலை எதிர்பார்த்து இன்று தபால் சாவடிக்கு வந்தவன் ஏமாற்றமடைந்தான். திரும்பிப் போகும் போது சாலையில் இருபுறமும் பார்த்துக்கொண்டு போனான். பாலகிருஷ்ணன் எங்கேயாவது சாலை ஓரத்தில் மரத்தின் மறைவில் உட்கார்ந்து சுருட்டுக் குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா? அவன் எதிர்பார்த்தது சரியாயிற்று. சாலைத் திருப்பம் ஒன்றில் வாய்க்கால் மதகடியில் பாலகிருஷ்ணன் உட்கார்ந்து ஒரு கடிதத்தைக் கவனமாகப் படித்துக் காண்டிருந்தான். எவ்வளவு கவனமாக என்றால், சூரியா அவனுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து நின்றதுகூட அவனுக்குத் தெரியவில்லை. சூரியாவுக்கு அப்போது ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. ஆகையால் 'பாலகிருஷ்ணா' என்று கூப்பிடப் போனவன் அடக்கிக்கொண்டு கீழே பாலகிருஷ்ணன் பக்கத்தில் கிடந்த கடிதத்தின் உறையை உற்றுப் பார்த்தான். அதில் பம்பாய் அத்தையின் விலாசம் எழுதியிருந்தது.

சூரியாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "அடே இடியட்! என்னடா செய்கிறாய்?" என்று கர்ஜித்தான். பாலகிருஷ்ணன் திடுக்கிட்டுத் திரும்பி, "என்னடா என்னை 'இடியட்' என்கிறாய்? நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்!" என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. "என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்?" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையை வைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும் குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. "ஐயோ! இது என்ன? சூரியாவும் தபால்கார பாலகிருஷ்ணனும் சண்டை போடுகிறார்களே!" என்று லலிதா கூவினாள். "ஆமாண்டி! இது என்ன வெட்கக்கேடு?" என்றாள் சீதா. ராஜம்மாள் மிக்க வருத்தத்துடன், "சூரியா! சூரியா! இது என்ன நடுரோட்டில் நின்று சண்டை? நிறுத்து!" என்று கூவினாள். ராஜம்மாளின் குரல் கேட்டதும் இருவரும் சண்டையை நிறுத்தி வெட்கிப் போய் நின்றார்கள்.

"சூரியா! வா, வண்டியில் ஏறிக்கொள்ளு! வீட்டுக்குப் போகலாம்!" என்றான் பாலகிருஷ்ணன். "அத்தை! இது விளையாட்டுச் சண்டை! நீங்கள் போங்கள்! நான் இதோ பின்னோடு வருகிறேன்" என்றான். "நிச்சயந்தானா?- பாலகிருஷ்ணா! சூரியா சொல்கிறது உண்மையா?" என்று அத்தை கேட்டாள். "ஆமாம், அம்மா! நாங்கள் சும்மாத்தான் சண்டை போட்டோ ம்!" என்றான் பாலகிருஷ்ணன். வண்டி மேலே நகர்ந்தது, சீதா லலிதாவைப் பார்த்து, "நீ இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாயே, லலிதா! உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனை அசடாயிருக்கிறான்?" என்றாள். "அப்படிச் சொல்லாதே, சீதா! சூரியா ஒன்றும் அசடு இல்லை. ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்; அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து, "ஆமாம், அம்மா! நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்ச நாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார்!" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, "பாலகிருஷ்ணா! உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே? பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா? அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா!" என்றான். "தப்புத்தான்; ஒப்புக் கொள்கிறேன் ஆனால் நல்ல எண்ணத்துடனேதான் செய்தேன்.

இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உனக்கும் அது தெரியும்!" என்று சொல்லிப் பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல் நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. "இந்த மாதிரிக் கடிதம் இது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான். "நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்று எழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப் பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்ன? உனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்துவிடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடி! தெரியுமா?"

"நான் உன்மேல் கை வைத்தது தப்பு என்றுதான் முன்னேயே சொன்னேனே! இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம் நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு. நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்!" என்றான் சூரியா. "அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்!" என்றான் பாலகிருஷ்ணன்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து இரண்டாம் அத்தியாயம்
காதலர் உலகம்

சீதாவும் லலிதாவும் கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து ஆனந்தமயமான கனவு லோகத்தில் சொர்க்க சுகத்தை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். பசும்புல் தரையில் அழகிய பட்டுப் பூச்சிகள் வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரிப் பதைப் போல அவர்கள் இந்திரபுரியின் நந்தவனத்தில் யதேச்சையாக அலைந்து திரிந்தார்கள். தேவலோகத்து பாரிஜாத மரங்களிடையே அவர்கள் தேன் வண்டுகளாக உலாவித் திரிந்து பாரிஜாத புஷ்பங்களில் கசிந்த இனிய தேனைத் தேவாமுதத்தோடு பருகி மகிழ்ந்தார்கள். மாயா லோகம் போன்ற மேக மண்டலங்களுக்கு மேலே நின்று அவர்கள் ஆடிக் களித்தார்கள். நட்சத்திரங்களிடையே வட்டமிட்டு ஒருவரையொருவர் ஓடிப் பிடித்தார்கள். ஆகாச கங்கையைக் கையினால் அள்ளி ஒருவர் மேல் ஒருவர் தெளித்து மகிழ்ந்தார்கள். பசுமரக் கிளைகளில் இரு கிள்ளைகளாகி உட்கார்ந்து யாழிசை போன்ற மழலை மொழி பேசிக் கொஞ்சினார்கள். கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து இருவருடைய உள்ளங்களும் உடல்களும் அதிசயமான வளர்ச்சி பெற்றிருந்தன. முகங்கள் புதிய காந்தி பெற்று விளங்கின. மேனியில் புதிய மெருகு தோன்றித் திகழ்ந்தது.

தினம் பொழுது புலரும் போது அவர்களுக்கு மட்டும் ஒரு புதுமையான சௌந்தரியத்துடன் புலர்ந்தது. சூரியன் என்றுமில்லாத ஜோதியுடன் உதயமானான். அந்தி மயங்கிய நிழல் படர்ந்து வரும் மாலை நேரத்தின் மோகத்தையோ வர்ணிக்க முடியாது. ஆகா! இரவின் இன்பத்தைத்தான் என்னவென்று சொல்வது? வானத்தில் பிறைச் சந்திரன் பிரகாசித்தால் அதன் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்; முழு மதியா இருந்தாலோ உள்ளம் கடலைப்போல் பொங்கத் தொடங்கிவிடும். சந்திரனே இல்லாத இரவு மட்டும் அழகில் குறைந்ததா, என்ன? அடடா, கோடானு கோடி வைரங்களை வாரி, இறைத்ததுபோல் சுடர்விடும் நட்சத்திரங்களோடு வானம் விளங்கும் காட்சிக்கு இணை வேறு உண்டோ ? விழித்திருக்கும் வரையில் மூச்சு விடாமல் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். தூங்கினாலோ எத்தனை இன்பமயமான கனவுகள்? சீதாவின் அன்னை அகண்ட காவேரியில் வேனிற் காலத்தில் ஓடும் பளிங்கு போல் தெளிந்த ஊற்று நீரில் குளிக்கும் ஆனந்தத்தைப் பற்றி ஒரு நாள் சொன்னாள். தன்னுடைய இளம்பிராயத்தில் அவ்விதம் அடிக்கடி சென்று குளிப்பதுண்டு என்று கூறினாள்.

மாமா கிட்டாவய்யரை மிகவும் நச்சுப்படுத்திச் சீதா காவேரியில் போய்க் குளித்து வர அனுமதி பெற்றாள். தோழிகள் இருவரும் ராஜம்மாளும் வண்டி கட்டிக் கொண்டு காவேரியில் குளிக்கச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் கண்ணன் வாழ்ந்திருந்த காலத்தில் கோபாலரும் கோபியரும் யமுனையில் இறங்கிக் கண்ணணோடு நீர் விளையாடியபோது அடைந்த ஆனந்தத்துக்கு இணையான ஆனந்தத்தைச் சீதாவும் லலிதாவும் அன்று அடைந்தார்கள். அவ்விதம் அகண்ட காவேரியில் குளித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் சூரியாவும் பாலகிருஷ்ணனும் குஸ்திச் சண்டை போடும் காட்சியைக் கண்டார்கள். சீதாவுக்கும் லலிதாவுக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் அது மறந்து போய்விட்டது. மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் அந்தரங்கம் பேசுவதற்குத் தனி இடத்தை நாடி அவர்கள் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். அந்த வருஷம் கார்த்திகை மாதத்தில் நல்ல மழை பெய்திருந்தபடியால் பங்குனி மாதக் கடைசியானாலும் குளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது. குளத்தில் தவழ்ந்து வந்த குளிர்ந்த தென்றல் சீதாவையும் லலிதாவையும் பட்டப் பகலிலேயே காதலரின் கனவு லோகத்துக்குக் கொண்டு போயிற்று.

அவர்களுடைய சம்பாஷணை அன்று பரிகாசத்தில் ஆரம்பமாயிற்று. "லலிதா? நலங்கின்போது உன்னைப் பாடச் சொல்வார்கள். 'மாமவ பட்டாபிராமா' கிருதியை நீ கட்டாயம் பாட வேண்டும். இல்லாவிட்டால் நான் உன்னோடு 'டூ' போட்டு விடுவேன். அப்புறம் பேசவே மாட்டேன்!" என்றாள் சீதா. "முதலில் நீ 'மருகேலரா ஓ ராகவா' கீர்த்தனத்தைப்பாடு! அதைக் கேட்டுத் தைரியப்படுத்திகொண்டு நானும் பாடுகிறேன். நீ தைரியசாலி, சீதா! எனக்கு அவ்வளவு தைரியம் இல்லையே! என்ன செய்வது?" என்றாள் லலிதா. "அடி திருடி! உனக்கா தைரியமில்லை என்கிறாய்? ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒருவருக்கும் தெரியாமல் அல்லவா நீயும் மிஸ்டர் பட்டாபிராமனும் கலியாணம் நிச்சயம் செய்துகொண்டு விட்டீர்கள்? தைரியம் இல்லாமலா அப்படிச் செய்தாய்?" "அதெல்லாம் ஒன்றுமில்லை. சீதா! நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை பேசிக்கொண்டது கூட இல்லையே?" "பேசிக் கொள்ளவில்லையா? அது எப்படி லலிதா? பொய் சொல்லாதே! வாயினால் நீ பேசினால்தான் பேச்சா?

கண்களினால் பேசினால் பேச்சு இல்லையா! போன வருஷம் நீ தேவபட்டணத்துக்குப் போயிருந்ததையெல்லாந்தான் சொன்னாயே? அதைவிட வாய்ப் பேச்சு என்னத்திற்கு, லலிதா? சீதையும் ராமரும் என்ன செய்தார்கள்? கலியாணத்திற்கு முன்னால் அவர்கள் வாயினாலா பேசிக் கொண்டார்கள்? மிதிலாபுரியில் இராமர் வீதியோடு போய்க்கொண்டிருந்தார். சீதா கன்னிமாடத்தில் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள். ஒருவரையொருவர் கண்ணாலே மட்டும்தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் அழியாக் காதல் ஏற்படுவதற்கு அது போதவில்லையா?" "போதாது என்று நான் சொல்லவில்லை. பேசுவதற்குத் தைரியம் இருந்தால் பேசக்கூடாது என்பது இல்லையே? உன் கலியாணம் நிச்சயமான பிறகு, உன்னை அவர் அழைத்துக் கேட்டதற்குப் பதில் சொன்னாயே? அதை நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது சீதா! அதை இன்னொரு தடவை சொல்லேன். எனக்கு மறுபடியும் அதைக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!" "அதற்கென்ன பேஷாகச் சொல்கிறேன் இன்னும் பத்துத் தடவை நீ கேட்டாலும் சொல்கிறேன். நிச்சயதார்த்தம் ஆன பிறகு அவர்கள் - எனக்கு மாமனாராகவும் மாமியாராகவும் வரப்போகிறவர்கள் - என்னைக் கூப்பிடுவதாக அழைத்துச் சென்றார்கள்.

ஒரு பக்கத்தில் எனக்குச் சந்தோஷமாயிருந்தது. மற்றொரு பக்கத்தில் என்ன கேட்பார்களோ என்னமோ என்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் பேச்சைத் தட்ட முடியாமல் போனேன். அந்த மாமி என்னைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆசிர்வதித்தாள். 'நீ தான் எங்கள் வீட்டுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாம். உன்னால்தான் எங்கள் குலம் விளங்கப் போகிறது' என்று ஏதேதோ சொன்னாள். மாமனாரோ நீளமாக ஏதேதோ பேசிக்கொண்டேயிருந்தார். என்னுடைய அழகுக்காகவும் சமர்த்துக்காகவுந்தான் வரதட்சணையில்லாமலும், சீர் இல்லாமலும் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொள்வதாக அவர் சொன்னது மட்டும் எனக்குப் புரிந்தது. அதே சமயத்தில் என்னுடைய கவனம் எல்லாம் மாப்பிள்ளையிடம் சென்றிருந்தது. பிறகு மாமனாரும் மாமியாரும் சற்றுத் தூரமாகப் போனார்கள். நானும் போவதற்கு ஆயத்தமானேன். உடனே மாப்பிள்ளை என்னைப் பார்த்து, "சீதா! போவதற்கு அவசரப்படாதே. சற்றுப் பொறு, உன்னை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்; பதில் சொல்லுவாயல்லவா?" என்றார்.

நான் தலை குனிந்து மௌனமாயிருந்தேன். அவர் மறுபடியும், 'நேற்றைக்கெல்லாம் கலகலவென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு இன்றைக்குத் திடீரென்று பேசா மடந்தையானால் நான் விடமாட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டது எதற்காக?' என்று கேட்டார். அப்போது அவரை நிமிர்ந்து பார்த்தேன். நான் சொல்லப் போகும் பதிலை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது 'அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்கவேண்டும்? நீங்கள்தான் என் சிநேகிதியைப் பார்ப்பதற்காக வந்து விட்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படுவதாகச் சொன்னீர்கள்!' என்றேன். இதைக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். ஆனால் உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, 'அப்படியானால் இந்தக் கலியாணத்தில் இஷ்டமில்லையென்கிறாயா? இப்போது ஒன்றும் முழுகிவிடவில்லை; கலியாணத்தை நிறுத்தி விடலாம். உனக்கு மனதில்லை என்றால் சொல்லி விடு' என்றார். 'ஆமாம் எனக்கு மனதில்லைதான். என் மனது என்னிடத்தில் இல்லை. நேற்று சாயங்காலம் மோட்டாரிலிருந்து இறங்கியபோதே தாங்கள் என் மனதை கவர்ந்து கொண்டு விட்டீர்களே? இப்போது எப்படி எனக்கு மனது இருக்கும்?" என்றேன்.

அப்போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே லலிதா; குதூகலம் ததும்பியது. 'நான் எத்தனையோ பி.ஏ. எம்.ஏ., படித்த பெண்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். உன்னைப்போல் சமர்த்தான பெண்ணைப் பார்த்ததேயில்லை. உன்னை இப்போது பிரிந்து போக வேண்டுமே என்றிருக்கிறது!' என்று அவர் சொன்னார் என் வாய்க்கொழுப்பு நான் சும்மா இருக்கக் கூடாதா? 'இப்போது இப்படிச் சொல்கிறீர்கள், நாளைக்கு ஊருக்குப் போனதும் மறந்து விடுகிறீர்களோ, என்னமோ? 'பி.ஏ. எம்.ஏ' படித்த பெண்கள் அங்கே எத்தனையோ பேர் இருப்பார்கள்!' என்று சொன்னேன். 'அதற்குள்ளே புகார் சொல்ல ஆரம்பித்து விட்டாயா? பி.ஏ.யும் ஆச்சு; எம்.ஏ.யும் ஆச்சு? அவர்கள் எல்லாம் உன் கால் தூசி பெறமாட்டார்கள். உன்னைத் தவிர எனக்கு வேறு ஞாபகமே இராது?!' என்று அவர் கூறியபோது என் மனம் குளிர்ந்தது. இருந்தாலும் கிறுக்காக 'துஷ்யந்த மகாராஜா சகுந்தலையிடம் இப்படித்தான் சொன்னார். ஊருக்குப் போனதும் மறந்துவிட்டார்' என்றேன். 'சீதா! என்று அவர் அன்பு கனிய என்னை அழைத்து, 'துஷ்யந்தன் ராஜன்; அதனால் அவன் எது வேணுமானாலும் செய்வான். நான் சாதாரண மனிதன்தானே?' என்றார். 'நீங்கள்தான் எனக்கு ராஜா!' என்று நான் சொன்னேன். 'துஷ்யந்தன் தேசத்துக்கு ராஜா; நான் உனக்கு மட்டுந்தான் ராஜா. ஆகையால் உன்னை என்னால் மறக்க முடியாது; அடையாளந் தருகிறேன் அருகில் வா' என்றார் ஏதோ மோதிரம் அல்லது பவுண்டன் பேனா இப்படி ஏதாவது தரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு அவர் அருகில் போனேன். அவர் எனது வலது கையைத் தமது இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு கையில் முத்தம் கொடுத்தார். லலிதா; லலிதா அதை நினைத்தால் இப்போதுகூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதடி" இவ்விதம் சீதா சொல்லிவிட்டுப் பின்வருமாறு பாடினாள்;

"எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடந்தனிலே
தண்ணென் றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி
எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன் தான் யாரெனச் சிந்தை செய்தேன்!
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி!

சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் நடந்த சம்பாஷணையை ஐந்தாவது தடவையாகக் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனம் புயல் அடிக்கும்போது அலைகடல் பொங்குவது போலப் பொங்கியது. தன் மணாளன், பட்டாபிராமன் தன்னிடம் இப்படியெல்லாம் காதல் புரிவானா, இவ்வாறெல்லாம் அருமையாகப் பேசுவானா என்று அவள் உள்ளம் ஏங்கியது. அந்த எண்ணத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டு, "சீதா நீ துஷ்யந்தனைப் பற்றிச் சொன்னாயே அது மட்டும் சரியல்ல. சகுந்தலை துஷ்யந்தன் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. துஷ்யந்தன் பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. அவன் ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த, தாய் தகப்பன் அறியாத பெண்ணை மணந்து கொண்டானே? அது ஆச்சரியமில்லையா?" என்றாள் லலிதா. "அது ஆச்சரியந்தான், ஆனால் அதைப்போல எத்தனையோ நடந்திருக்கிறது. அனார்கலி கதை உனக்குத் தெரியுமா லலிதா? 'மங்கையர்க்கரசியின் காதல்' என்றும் புத்தகத்தில் அந்த அற்புதமான கதை இருக்கிறது" என்றாள் சீதா. "எனக்குத் தெரியாதே! அது என்ன கதை சொல்லு!" "அக்பர் பாதுஷாவின் பிள்ளை சலீம் தன்னை இளம் பிராயத்தில் வளர்த்த தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் காதலித்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்து கொடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்த ரோஜாப்பூப் புதர் மறைவிலிருந்து அக்பர் பாதுஷா கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு பட்டத்துக்கு வரவேண்டிய குமாரர் ஒரு தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா என்று அவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே அனார்கலியைப் பிடித்துச் சிறையில் அடைக்க உத்தரவு போட்டுவிட்டார். 'அனார்கலி' என்றால் பார்ஸீக பாஷையில் 'மாதுளை மொக்கு' என்று அர்த்தமாம். அது சலீம் அவளுக்கு அளித்த செல்லப் பெயர். சிறையில் அடைபட்ட அனார்கலி சலீமையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை வந்து விடுவிப்பான். விடுவித்து மணம் புரிந்துகொள்வான் என்று ஆசையோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அக்பர் பாதுஷா செத்துப்போய் சலீம் பட்டத்துக்கு வருவதற்கு வெகுகாலம் ஆயிற்று. கடைசியில் சலீம் சக்கரவர்த்தி ஆனதும் முதல் காரியமாக அனார்கலியை விடுதலை செய்யப் போனான். அதற்குள் அனார்கலிக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது. சலீமை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 'உங்களையெல்லாம் இங்கே யார் வரச் சொன்னார்கள்? என்னை விடுதலை செய்ய நீங்கள் யார்? சலீம் வந்து என்னை விடுவிக்கப் போகிறார். அதுவரையில் நான் இங்கேயே இருப்பேன்' என்றாள். இதைக் கேட்டு சலீம் மனம் உடைந்து போனான். அனார்கலியும் பிறகு சீக்கிரத்தில் இறந்து போனாள்."

இதைக் கேட்டபோது லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது. "ஏனடி அழுகிறாய், அசடே?" என்றாள் சீதா. "எனக்கென்னமோ, வருத்தமாயிருக்கிறது அம்மா! அவர்களுடைய உண்மையான காதல் எதற்காக இப்படித் துக்கத்தில் முடியவேண்டும்?" என்றாள் லலிதா. "காதற் கதைகள் அநேகமாக அப்படித்தான் முடிகின்றன. ரோமியோ ஜுலியட் கதையைப் பாரேன்! அவர்களுடைய காதலைப்போல் உலகத்திலேயே கிடையாது. ஆனால், கடைசியில் இரண்டு பேரும் செத்துப் போகிறார்கள்." "இரண்டு பேரும் ஒரு வழியாகச் செத்துப்போய் விட்டால் பாதகமில்லை, சீதா! ஒருவர் செத்து ஒருவர் இருந்தால் எவ்வளவு கஷ்டமாயிருக்கும்? சலீமைப் பார்! பிறகு அவன்தானே ஜஹாங்கீர் பாதுஷா ஆகி நூர்ஜஹானைக் கலியாணம் செய்து கொண்டான்? நூர்ஜஹான் உலகத்தில் எவ்வளவு பிரசித்தமான அழகியாய் இருந்தால் என்ன? அதற்காக, அவனால் அனார்கலியை எப்படி மறக்க முடிந்தது?"

"சில புருஷர்கள் அப்படித்தான், லலிதா! ஆனால் எல்லோரும் அப்படியில்லை. ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானைப் பார்! அவன் மும்தாஜ் என்பவளைக் கலியாணம் செய்து கொண்டான். அவள் செத்துப் போன பிறகும் அவளை ஷாஜஹான் மறக்கவில்லை. அவளுடைய ஞாபகார்த்தமாகத் தாஜ்மகால் கட்டினான். தன் அரண்மனையிலிருந்து எப்போதும் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பார்த்து கொண்டே செத்துப் போனான். இந்தக் காதல் ரொம்ப உயர்வாயில்லையா, லலிதா!" "உயர்வுதான்; ஆனாலும் சாவித்திரி சத்தியவான் கதை தான் எனக்கு எல்லாவற்றிலும் அதிகம் பிடித்திருக்கிறது. இராஜ்யத்தை இழந்து காட்டுக்கு வந்து குருட்டுத்தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த சத்தியவானைச் சாவித்திரி காதலித்தாள். ஒரு வருஷத்திற்குள் சத்தியவான் செத்துப் போய் விடுவான் என்று தெரிந்தும் அவளுடைய உறுதி மாறவில்லை. யமனுடனேயே வாதாடிப் போன உயிரைக் கொண்டு வந்தாள். இதுவல்லவா உண்மையான காதல்? லைலா மஜ்னூன், அனார்கலி கதைகளைவிட நம் தேசத்துக் கதைகள் உயர்ந்தவைதான்."

"அப்படி நம் நாட்டில் கதைகள் என்று பார்த்தால், சுப்ரமண்ய ஸ்வாமிக்கும் வள்ளிக்கும் நடந்த காதல் கலியாணத்தைப்போல் ஒன்றுமே கிடையாது. வள்ளி குறப்பெண்; சுப்ரமண்யரோ சாஷாத் பரமசிவனுடைய குமாரர்; தேவ சேனாதிபதி அப்பேர்ப்பட்டவர் குறவர் குடியைத் தேடிவந்து வள்ளியை மணந்து கொண்டார் என்றால், அது எப்பேர்ப்பட்ட அதிசயம்? மணந்தது மட்டுமா! ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சுப்ரமண்யர் தமக்குப் பக்கத்தில் வள்ளியையும் வைத்துக் கொண்டிருக்கிறார். கேவலம் ஒரு குறத்தியை எல்லோரும் கும்பிடும் தெய்வமாக்கிவிட்டார்! உண்மையான காதலுக்கு இதைக் காட்டிலும் வேறு என்ன கதை இருக்கிறது. லலிதா! சுப்ரமண்ய ஸ்வாமி- வள்ளி கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுப்ரமண்ய ஸ்வாமியைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைக் கொஞ்சம் பாடேன்" என்றாள். லலிதா பின்வரும் காவடிச் சிந்தைப் பாட ஆரம்பித்தாள்:- "பாளை வாய்க் கமுகில் வந்தூர் வாளை பாய் வயல் சூழ்செந் தூர் பாலனம் புரிய வந்த புண்ணியா!" சீதா குறுக்கிட்டு, "இது இல்லை, லலிதா! 'பொன் மயில்' என்று ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைப் பாடு!" என்று சொன்னாள். "சரி" என்று சொல்லி லலிதா ஆரம்பித்தாள்.

"பொன் மயில் ஏறி வருவான் - ஐயன்
பன்னிரு கையால் தன்னருள் சொரிவான் (பொன்)
செங்கதிர் வேலன் சிவனருள் பாலன்
மங்கை வள்ளி மணாளன்
பங்கயத்தாளன் தீனதயாளன் (பொன்)
புன்னகை தன்னால் இன்னல்கள் தீர்ப்பான்
புன்மை இருள் கணம் மாய்ப்பான்
கன்னலின் இனிய தண்தமிழ் அளிப்பான்" (பொன்)

பாட்டு முடியுந்தருணத்தில், "பலே பேஷ்! லலிதா நீ இவ்வளவு நன்றாய்ப் பாடுகிறாயே? அன்றைக்கு மதராஸ்காரர்கள் வந்தபோது மட்டும் பாடவே மாட்டேன் என்று வாயை இறுக மூடிக் கொண்டாயே? அது ஏன்?" என்று கேட்டுக்கொண்டே சூரியா உள்ளே வந்தான். அவனைத் தொடர்ந்து ராஜம்மாளும் உள்ளே வந்தாள். சூரியாவுக்குச் சீதா பதில் சொன்னாள். "அன்றைக்கு அவளுக்குப் பாடப் பிடிக்கவில்லை; அதனால் பாடவில்லை. நாளைக்குக் கலியாணத்தின்போது! 'மாமவ பட்டாபிராமா' கீர்த்தனம் பாடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்!" சூரியா, "சபாஷ்! அதுதான் சரி. பட்டாபிராமனுக்கு அப்படித்தான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும்!" என்றான். லலிதாவுக்கு நான் நளன் - தமயந்தி கதை சொல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சீதா லலிதாவைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பங்களாவை விட்டு வெளியேறினாள். அந்தரங்கம் பேசக்கூடிய ஏகாந்தமான இடத்தைத் தேடி அவர்கள் சென்றார்கள். லலிதாவும் சீதாவும் போனபிறகு ராஜம்மாள் சூரியாவைப் பார்த்து, "குழந்தை! சாலையோரத்திலே தபால்காரனோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாயே அது எதற்காக? எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது என்னிடம் உண்மையைச் சொல்லு!" என்றாள். "அத்தை! அவசியம் சொல்லித்தான் தீரவேண்டுமா? அது உங்கள் சம்பந்தமான விஷயந்தான். ஏற்கனவே உங்களுக்கு எவ்வளவோ கவலை. மேலும் உங்களைத் துன்பப்படுத்துவானேன் என்று சொல்ல வேண்டாமென்று பார்த்தேன்!" என்றான் சூரிய நாராயணன். "அப்பா, சூரியா! இனிமேல் என் மனத்தை வருத்தப்படுத்தக்கூடிய விஷயம் உலகில் ஒன்றுமே இருக்க முடியாது. எத்தனையோ வருத்தங்களையும் கஷ்டங்களையும் அநுபவித்து அநுபவித்து என் மனத்தில் சுரணையே இல்லாமல் போய் விட்டது. எவ்வளவு வருத்தமான விஷயமாயிருந்தாலும் என்னை ஒன்றும் செய்துவிடாது தயங்காமல் சொல்லு!" என்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து மூன்றாம் அத்தியாயம்
அத்தையும் மருமகனும்

சூரியா சற்று நேரம் அல்லிக் குளத்தையும் அதற்கப்பாலிருந்த சவுக்க மரத் தோப்பையும் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கூறினான்? "பார்க்கப் போனால் அப்படியொன்றும் பிரமாத விஷயம் இல்லை. வருத்தப்படுவதற்கு அவசியமும் இல்லை, மொட்டைக்கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது கையெழுத்து, காலெழுத்து ஒன்றும் இல்லாத கடிதம். பொறாமையினாலும் துவேஷத்தினாலும் நல்ல காரியத்தைக் கெடுப்பதற்காகச் சிலர் அப்படிக் கடிதம் எழுதுவதுண்டு. அந்த மாதிரிக் கடிதம் உங்களுக்கு வந்திருக்கிறது, அத்தை! அதைத் தபால்கார பாலகிருஷ்ணன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். பெரிய போக்கிரி அவன், அதனாலேதான் அவனோடு சண்டை போட்டேன்." "நான்கூட அந்தப் பையனை இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன்! நல்ல பிள்ளையாய்த் தோன்றினான்! அவன் விஷயம் இருக்கட்டும்... கடிதத்தில் என்ன எழுதியிருந்தது! அதைச் சொல்லு!" "என்னமோ கன்னாபின்னா என்று எழுதியிருந்தது! அதைச் சொல்லத்தான் வேண்டுமா அத்தை?" "யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது? உன் அத்திம்பேரைப் பற்றியா? அல்லது என்னைப் பற்றியா?" "உங்கள் இருவரைப்பற்றியுமில்லை!"

"அப்படியானால் சீதாவைப்பற்றியா? எந்தப் பாவி என்ன எழுதியிருந்தான்?..." என்று ராஜம்மாள் கூறியபோது அவளுடைய குரலில் அளவில்லாத கோபம் கொதித்தது; முகத்தில் ஆக்ரோஷம் பொங்கியது. "இல்லை, இல்லை! சீதாவைப்பற்றியும் இல்லை. சீதாவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? என்ன எழுத முடியும்? அத்தை நீங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சீதாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் பெற்றது உங்களுடைய பாக்கியந்தான்!" ராஜம்மாளின் முகம் மறுபடியும் மலர்ந்தது. சீதாவைப் பற்றியும் ஒன்றும் இல்லையா? பின்னே யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டாள். "சீதாவுக்கு வரன் பார்த்து முடிவு செய்திருக்கிறோமே, அந்த மாப்பிள்ளையைப் பற்றித்தான் எழுதியிருந்தது!" "என்ன சூரியா! மாப்பிள்ளையைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று ராஜம்மாள் பரபரப்போடு கேட்டாள். "அதை சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, அத்தை! ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதானே? ராகவன் பம்பாயிலே ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சிநேகம் வைத்துக் கொண்டிருந்தானாம். அவள் ஒரு நாள் பத்மாபுரத்துக்கு வந்து அவனோடு சண்டை போட்டு ரகளை பண்ணிவிட்டாளாம்; ஊரெல்லாம் சிரித்ததாம். இன்னும் அவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் - அவனுக்குப் போய்ப் பெண்ணைக் கொடுக்கலாமா என்று எழுதியிருந்தது."

ராஜம்மாள் பெருமூச்சு விட்டாள். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பின்னர், "இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?" என்று கேட்டாள். "மாப்பிள்ளையின் தாயாரையும் தகப்பனாரையும் பற்றிக் கேவலமாய் எழுதியிருந்தது. அந்தப் பிராமணர் ரொம்பப் பணத்தாசை பிடித்தவராம். அந்த அம்மாள் ரொம்பப் பொல்லாதவளாம். முதல் நாட்டுப் பெண்ணை ரொம்பப் படுத்தியபடியால் அவள் பிறந்து வீட்டோ டு போய்விட்டாளாம். பிற்பாடு அவள் புருஷனும் அவளோடு போய் விட்டானாம். இப்படிப்பட்ட சம்பந்தம் உங்களுக்கு எதற்காக என்று எழுதியிருந்தது. ராஜம்மாள் மறுபடியும் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு "சூரியா! இன்னும் ஏதாவது உண்டா?" என்றாள். "வேறு முக்கியமாக ஒன்றும் இல்லை. 'இந்த மாதிரி இடத்தில் பெண்ணைக் கொடுப்பதைவிடக் கிணற்றிலே பிடித்துத் தள்ளிவிடலாம்' என்றும் 'கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க வேண்டாம்' என்றும் இம்மாதிரி ஒரே பிதற்றலாக எழுதியிருந்தது. அத்தை! உங்கள் பெயருக்கு இனிமேல் கடிதம் வந்தால் என்னிடமே கொடுக்கும்படி பாலகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? இனிமேல் கடிதம் வந்தால் உங்களிடமே கொடுக்கச் சொல்லி விடட்டுமா?"

"சூரியா! உனக்கு வயது அதிகமாகாவிட்டாலும், நல்ல யோசனைக்காரனாயிருக்கிறாய். மன்னிகூட அடிக்கடி இதைப் பற்றித்தான் சொல்லிச் சந்தோஷப்படுகிறாள். 'என் மூத்த பிள்ளை கங்காதரன் ஒரு மாதிரிதான். அவனுக்குக் குடும்பத்தின் விஷயத்தில் அவ்வளவு அக்கறை போதாது. தங்கைக்குக் கலியாணம் நாலு நாள்தான் இருக்கிறது. இன்னும் வந்து சேரவில்லை, பாருங்கள்! அடுத்தாற்போலச் சூரியா எவ்வளவு பொறுப்பாக எல்லாக் காரியமும் செய்கிறான்!' என்று இன்றைக்குக் காலையில்கூட உன் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். உன் அம்மா சொன்னது ரொம்ப சரியான விஷயம். உன்னிடம்தான் நானும் யோசனை கேட்கப் போகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சூரியா? அதில் உள்ளது உண்மையாக இருக்குமென்று உனக்குத் தோன்றுகிறதா?" என்று கேட்டாள் ராஜம்மாள். "நான் அப்படி நினைக்கவில்லை, அத்தை! யாரோ பொறாமை காரணமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்காகக் கலியாணத்தைத் தடங்கல் செய்வது சரியல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்னமோ? மேலும் அத்திம்பேருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வாரோ, என்னமோ? அவர் இன்னும் வந்து சேரவில்லையே?"

"அத்திம்பேரிடமிருந்து நாலு நாளைக்கு முன்னால் கடிதம் வந்தது. கலியாணத்துக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுவதாக எழுதியிருக்கிறார். டில்லியில் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தாராம். மிகவும் திருப்திகரமாகச் சொன்னார்களாம். ரொம்பக் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கியிருப்பதாகவும் மேல் உத்தியோகஸ்தர்களுக்கு மாப்பிள்ளை பேரில் ரொம்பப் பிரியம் என்றும் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் ஆகும் என்றும் சொன்னார்களாம்." "அத்தை நான் சொன்னது சரிதானே? யாரோ பொறாமைக்காரர்கள்தான் இப்படியெல்லாம் எழுதியிருக்க வேண்டும்." "இந்தக் காலத்தில் நல்ல வரன் கிடைப்பது எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. எத்தனையோ பேர் இப்படிப்பட்ட நல்ல வரனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்திருப்பார்கள். கலியாணம் நிச்சயம் ஆகாதபடியால் அவர்கள் பொறாமைப்பட்டு இப்படி எழுதியிருக்கலாம்." "அப்படித்தான் இருக்கும்; சந்தேகமேயில்லை."

"மாமியார், மாமனார் விஷயங்கூட விசாரித்தேன். காமாட்சி அம்மாள் பேரில் ஒரு பிசகும் இல்லை என்றும், மூத்த நாட்டுப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள் என்றும் தெரிந்தது. புருஷன் வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எப்போது பிறந்தகத்துக்குப் போனாளோ, அப்போதே குணம் சரியில்லை என்று தெரியவில்லையா? 'என்னோடு வந்து எங்க அப்பா வீட்டில் இருந்தால் இரு; இல்லாவிட்டால் நீ எனக்குப் புருஷன் இல்லை' என்று சொல்லிவிட்டாளாம். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி யாயிருக்க வேண்டும்?" "தாடகை - சூர்ப்பனகை போன்றவளாய்த்தான் இருப்பாள்!" "ஒருவேளை அந்தப் பெண்ணே விஷமத்துக்காக இப்படியெல்லாம் யாரையாவது கொண்டு எழுதச் சொல்லியிருக்கலாம்." "அப்படியும் இருக்கக்கூடும்!" "ஆகக்கூடி, கலியாணத்தை நடத்திவிட வேண்டும் என்றுதானே நீயும் நினைக்கிறாய், சூரியா!" "கட்டாயம் நடத்தியேதான் தீரவேண்டும். இவ்வளவு ஏற்பாடு நடந்த பிறகு இனிமேல் ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது." "அப்படியே அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதில் ஏதாவது உண்மையா யிருந்தாலும் நாம் என்ன செய்யமுடியும், சூரியா! இந்த உலகத்தில் நாமாகச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது? பகவானுடைய சித்தம் எப்படியோ அப்படித்தான் எதுவும் நடக்கும். சீதா இந்த உலகத்தில் சந்தோஷமாயும் சௌக்கியமாயும் இருக்க வேண்டும் என்று பராசக்தியின் சித்தம் இருந்தால் அப்படியே நடக்கும். இந்தக் கலியாணம் நடக்க வேண்டும் என்பது பகவானுடைய விருப்பமாயிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது."

"அதில் என்ன சந்தேகம், அத்தை! லலிதாவைப் பார்க்க வந்தவன் எப்போது சீதாவைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னானோ, அதிலிருந்தே இது பகவானுடைய செயல் என்று ஏற்படவில்லையா!" "என் மனத்தில் இருந்ததையே நீயும் சொன்னாய், சூரியா! அந்த இரண்டு மூன்று நாளும் எனக்கு எவ்வளவு குழப்பமாயிருந்தது தெரியுமா? மன்னியின் மனது வேதனைப்படப் போகிறதே என்று நினைத்து நினைத்து எனக்குத் தூக்கமே வரவில்லை. நீதான் எப்படியோ உன் அம்மாவின் மனத்தைத் தேற்றிச் சரிப்படுத்தினாய். நீ மட்டும் இங்கே இருந்திராவிட்டால் எல்லாம் ஒரே குழப்பமாய்ப் போய்விட்டிருக்கும். உன்னுடைய அப்பாவுக்குக் கூட அன்றைக்கு ஆங்காரம் வந்து விட்டது. நீதான் அந்த வக்கீல் வீட்டுப் பிள்ளையைப் பற்றி உடனே எடுத்துச் சொல்லி அண்ணாவையும் சாந்தப்படுத்தினாய். நீ இங்கே வந்திராவிட்டால் எப்படி ஆகிப் போயிருக்கும்? இதைப்பற்றியெல்லாம் யோசிக்க யோசிக்க என் மனத்தில் இது பகவானுடைய சித்தத்தினால் நடைபெறுகிறது என்று நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது."

"யாரோ அசூயை பிடித்தவர்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதற்காகக் கடவுளுடைய விருப்பத்துக்கு நாம் தடங்கல் செய்வதா? கூடவே கூடாது." "என் எண்ணமும் அதுதான் சூரியா! நீ அந்தத் தபால்காரப் பையன் பாலகிருஷ்ணனிடம் செய்திருக்கும் ஏற்பாடுதான் நல்லது. யார் யாரோ எழுதும் பொய்க் கடிதங்களைப் படித்து என் மனத்தைக் கெடுத்துக் கொள்வானேன்? என் பெயருக்கோ, சீதா பெயருக்கோ வரும் கடிதங்களையெல்லாம் நீயே வாங்கிக் கொள். படித்துவிட்டு எங்களிடம் கொடுக்கக் கூடியதாயிருந்தால் கொடு; இல்லாவிட்டால் கிழித்து எறிந்துவிடு. இன்னும் உன் அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நீ வாங்கிப் பார்ப்பது நல்லது. எனக்கு எழுதியதுபோல் அண்ணாவுக்கும் யாராவது எழுதி, அவருடைய மனதும் கலங்கிப் போகலாமல்லவா?"

"ஆம், அத்தை! அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நானே வாங்கிப் பார்ப்பது என்றுதான் எண்ணியிருக்கிறேன்." "சூரியா! நீ செய்யும் உதவிக்கு நான் என்ன பதில் செய்யப்போகிறேன்! நீ என்றைக்கும் சௌக்கியமாயிருக்க வேண்டும் உனக்குப் பெரிய உத்தியோகம் ஆகவேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்." "பெரிய உத்தியோகமா? எனக்கா? அந்தமாதிரி ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. அத்தை! நாம் பிறந்த தேசத்துக்காகப் பாடுபட வேண்டும், ஏழை எளியவர்களுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என் மனத்தில் உள்ள ஆசை. பெரிய உத்தியோகம் பண்ணவேண்டும் என்றோ, நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. பரோபகாரத்துக்காகப் பாடுபடும் மனமும் சக்தியும் எனக்கு ஏற்பட வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், அத்தை!" "சூரியா! நீ இந்த வயதிலேயே இவ்வளவு பரோபகாரியாயிருக்கிறாயே? பெரியவன் ஆகும்போது எவ்வளவோ பரோபகாரம் செய்வாய். ஆனால் நம்முடைய சொந்தக் காரியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும். "அது சரிக்கட்டி வராது, அத்தை! சொந்தக் காரியத்தைக் கவனித்தால் பரோபகாரம் செய்ய முடியாது. பரோபகாரம் செய்தால் சொந்தக் காரியம் கெட்டுத்தான் போகும்" என்றான் சூரியா.

சற்று நேரம் குளத்தங்கரைப் பங்களாவில் மௌனம் குடி கொண்டு இருந்தது. அந்த மௌனத்தினிடையே சவுக்கு மரத்தோப்பில் காற்றுப் புகுந்து அடிக்கும் சத்தம் கடல் அலை சத்தத்தைப் போலக் கேட்டது. "அத்தை! முன்னொரு நாள் இந்த அலை ஓசை போன்ற சத்தத்தைக் கேட்டு நீங்கள் பயந்தீர்கள். காரணம் அப்புறம் சொல்கிறேன் என்றீர்கள்" என்றான் சூரியா. அப்போது ராஜம்மாளின் முகத்தை மேகத்திரை மறைப்பது போலத் தோன்றியது. "சொல்லுகிறேன், சூரியா! இந்த நிமிஷத்தில் நானும் அதைச் சொல்ல வேண்டும் என்றே எண்ணினேன். இங்கே வருவதற்கு முன்னால் பம்பாயில் நான் வியாதிப்பட்டுப் படுக்கையாய்க் கிடந்தேன் அல்லவா? அப்போது சுர வேகத்தில் என்னவெல்லாமோ பிரமைகள் எனக்கு உண்டாகும். காணாத காட்சிகளையெல்லாம் காண்பேன். அவற்றில் சில காட்சிகள் இன்பமாயிருக்கும்; சில பயங்கரமாயிருக்கும். நானும் சீதாவும் சமுத்திரக் கரையில் நிற்கிறோம். சீதா சமுத்திரத்தில் இறங்கிப் போகிறாள். 'போகாதேடி! போகாதேடி!' என்று நான் கத்துகிறேன். ஓ என்ற அலை ஓசையினால் நான் கத்தும் குரல் அவள் காதில் விழவில்லை. மேலும் சமுத்திரத்தில் போய்க் கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அவள் மேல் மோதுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்காக நானும் கடலில் இறங்குகிறேன். எனக்கு நீந்தத் தெரியுமல்லவா? அலைகளை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நீந்திப் போகிறேன்.

ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருந்த இடமே தெரியவில்லை! அலைகளின் பேரிரைச்சலுக்கு மத்தியில் 'சீதா! சீதா!' என்று அலறுகிறேன். என்னுடைய கைகளும் சளைத்துப் போய் விடுகின்றன; அந்தச் சமயத்தில் கையில் ஏதோ தட்டுப்படுகிறது அது சீதாவின் கைதான். அவளுடைய கையைப் பிடிக்கிறேன்; வளை உடைகிறது கை நழுவப் பார்க்கிறது. ஆனாலும் நான் விடவில்லை, கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். இம்மாதிரி பல தடவைக் கண்டேன். சூரியா! ஒவ்வொரு தடவையும் பிடித்துக்கொள்ளும் சமயத்தில் பிரக்ஞை வந்துவிடும். அவ்வளவும் உண்மையாக நடந்தது போலவே இருக்கும் இன்னும் அதை நினைத்தால் எனக்குப் பீதி உண்டாகிறது; உடம்பு நடுங்குகிறது. சவுக்குத் தோப்பின் சத்தத்தைக் கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது." சற்றுநேரம் பொறுத்துச் சூரியா, "இதையெல்லாம் நீங்கள் சீதாவிடம் எப்போதாவது சொன்னீர்களா!" என்று கேட்டான். "ஆமாம் சொன்னேன்! அவளை ஜாக்கிரதையாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறேன்.""அத்தை! இதை நீங்கள் சீதாவிடம் சொல்லியிருக்கக் கூடாது!" என்றான் சூரியா.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

முப்பத்து நான்காம் அத்தியாயம்
கலியாணமும் கண்ணீரும்

ராஜம்பேட்டை அக்கிரகாரம் திமிலோகப்பட்டது. கிட்டாவய்யர் வீட்டுக் கலியாணம் என்றால் சாதாரண விஷயமா? விவாக தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே மேளம் கொட்டியாகிவிட்டது. பிறகு ஊரில் எந்த வீட்டிலும் அடுப்பு மூட்டப் படவில்லை. எல்லாருக்கும் சாப்பாடு கிட்டாவய்யர் வீட்டிலேதான். வீதி முழுவதும் அடைத்துப் போட்டிருந்த பந்தலில் ஊர்க்குழந்தைகள் சதா காலமும் கொம்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாட்டுச் சதங்கைகளில் சத்தம் கேட்டவண்ணமாக இருந்தது. வண்டிகளுக்கும் ஓய்ச்சல் ஒழிவென்பதே கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் இரண்டு கலியாணத்துக்குச் சம்பந்திகளும் வந்துவிட்டார்கள். பிறகு ஊருக்கு உற்சவத்தோற்றம் உண்டாகிவிட்டது. தேர்த் திருவிழா மாதிரி ஜே ஜே என்று ஏகக்கூட்டம். ஜான வாச ஊர்வலம் மேளதாளங்களுடனும் மத்தாப்பு வாண வேடிக்கைகளுடனும் அமோகமாக நடந்தது. இவ்வளவு குதூகலத்துக்கும் உற்சாகத்திற்குமிடையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் எல்லாரும் கொஞ்சம் மனச் சஞ்சலத்தை உண்டாக்கி வந்தது. அது சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர் இன்னும் வந்து சேரவில்லையே என்பதுதான். ஆனால் இது காரணமாகச் சீதாவின் கலியாணத்தை நிறுத்தி வைக்கும் பேச்சு ஏற்படவில்லை. ராஜம்மாளின் மனம் எத்தகைய வேதனை அடைந்திருந்ததென்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் அவள் அதை வெளியில் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய கணவர் வந்து சேராவிட்டாலும் கலியாணத்தை நடத்திவிட வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டாள். இந்தக் கலியாணத்தை மனப்பூர்வமாக ஆமோதித்து துரைசாமி ஐயர் எழுதியிருந்த கடிதம் அவளுக்கு இந்த விஷயத்தில் மிக்க ஒத்தாசையாயிருந்தது.

அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த பிறகு சம்பந்திகளுக்குச் சிறிது ஏற்பட்டிருந்த தயக்கமும் நீங்கிவிட்டது. பிறகு எல்லாருமே ரயில்வே உத்தியோகத்தைப் பற்றிப் பரிகாசமாகப் பேசி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர், "எனக்குச் சீமந்தக் கலியாணம் வருகிறது. மூன்று நாள் லீவு வேண்டும்!" என்று கேட்டதற்கு வெள்ளைக்கார மேல் உத்தியோகஸ்தர், "அதெல்லாம் முடியாது; சீமந்தக் கலியாணத்தைப் பர்த்திக்கு ஆள் போட்டு நடத்திக் கொள்!" என்று பதில் சொன்னாரல்லவா? இந்தக் கதையை பலவிதமாக மாற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். இரவு பத்து மணிவரையில், அதாவது கடைசி ரயிலுக்குக் கூடத் துரைசாமி வரவில்லையென்று ஏற்பட்ட பிறகு கிட்டாவய்யர் தம் சகோதரியுடன் ஆலோசனை செய்தார். ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளும் அவளுடைய கணவரும் சீதாவைக் கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. "சீதா கொடுத்து வைத்த புண்ணியசாலி; அதனாலேதான் வைதிக ஆசார அனுஷ்டானமுள்ள தம்பதிகள் அவளைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க நேர்ந்திருக்கிறது" என்று ராஜம்மாள் தன் மனத்தைத் திருப்தி செய்துகொண்டாள்.

அபயாம்பாளுடைய பெருமைக்கோ அளவேயில்லை. 'இப்படி அந்தப் பிராமணர் பண்ணிவிட்டாரே?" என்று புகார் சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ஓடி ஓடிக் காரியங்களைச் செய்தாள். "நாளைக்குப் பொழுது விடிந்தால் நான் பட்டுப்பாயில் உட்கார்ந்தேயிருக்க வேண்டும். ஒரு காரியமும் செய்ய முடியாது. இன்றைக்குச் செய்தால்தான் செய்தது!" என்று பறந்தாள். கிட்டாவய்யர் தாம் செய்யவேண்டிய காரியங்களிலெல்லாம் லலிதாவையும் சீதாவையும் சரி சமமாகப் பாவித்தே, சகல கலியாண ஏற்பாடுகளும் செய்தார். பெண்ணுக்கு முகூர்த்தப் புடவையாகட்டும், மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியாகட்டும், ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாங்கியிருந்தார். ஆனால், வீட்டு ஸ்திரீகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சீர்வரிசைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்தது. சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்கு ஒரு விதமாகவும் சீதாவுக்கு ஒரு விதமாகவும்தான் செய்தாள். சரஸ்வதி அம்மாளின் தாயார் இந்த வித்தியாசம் காட்டுவதில் மும்முரமாக இருந்தாள். ஆனால் ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளோ அந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் அக்கறை காட்டினாள். அடிக்கடி ராஜம்மாளிடம் வந்து "இதென்னடி அநியாயம்? இந்த மாதிரி ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் தடவுவது உண்டா? இரண்டு கண்களையும் சமமாகப் பாவிக்க வேண்டாமா?

இப்படிப் பாரபட்சம் செய்கிறாளே மன்னி? மன்னி செய்கிறது ஒரு பங்கு என்றால் அவள் அம்மா செய்கிறது மூன்று பங்கா யிருக்கிறது. நானும்நீயும் இந்த வீட்டில் பிறந்தவர்கள்தானே? லலிதாவுக்கு இருக்கிற பாத்தியதை சீதாவுக்கு இல்லாமல் போய்விட்டதா" என்று புலம்பினாள். அவளைச் சமாதானப்படுத்துவது ராஜம்மாளுக்குப் பெரும் வேலையாயிருந்தது. "நீ வாயை மூடிக் கொண்டு இரு, அக்கா! அந்த மனுஷர் இப்படி வருவதாகச் சொல்லி வராமல் மோசம் பண்ணிவிட்டதற்கு ஏதோ இந்த மட்டில் நடக்கிறதே என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் யாருக்கு யார் இவ்வளவு தூரம் செய்வார்கள்? அண்ணாவின் நல்ல குணத்தினால் இதுவாவது நடக்கிறது! இல்லாவிட்டால் என் கதி என்ன? பகவானுடைய அருளால் எனக்கு வாய்த்திருக்கிற மாப்பிள்ளையும் சம்பந்திகளும் 'அது இல்லை; இது இல்லை' என்று குற்றம் சொல்லாதவர்கள். அப்படியிருக்க நீ எதற்காக வீணில் அலட்டிக் கொள்கிறாய்? நடந்தவரையில் சந்தோஷப்பட வேண்டாமோ!" என்று ராஜம்மாள் அக்காவுக்கு ஆறுதல் கூறினாள்.

சீதாவுக்கு மனதிற்குள் எவ்வளவோ குறை இருக்கத்தான் செய்தது. அப்பா வராமல் இருந்துவிட்டாரே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. லலிதாவுக்குச் செய்கிற மாதிரி தனக்குச் செய்வாரில்லையே என்று துக்கம் பீறிக் கொண்டு வந்தது. அந்த மாப்பிள்ளை சம்பந்திகளுக்கு நடக்கிற உபசாரங்கள் தன்னை மணக்க வந்த மணவாளனுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் நடக்கவில்லையே என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதையெல்லாம் சீதா மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "நடக்கட்டும்! நடக்கட்டும். லலிதாவுக்கு எவ்வளவு வேணுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் அடைந்த பாக்கியம் அவளுக்கு ஏது? என் கணவருக்கு அவள் கணவன் இணையாவானா?" என்று எண்ணி முகமலர்ச்சியுடன் இருந்து வந்தாள்.

இவர்கள் எல்லாரைக் காட்டிலும் அதிகமான மன வேதனைக்கு உள்ளாகியிருந்தான் சூரியா. இதற்குக் காரணம் கலியாணத்திற்கு முதல் நாள் ராஜம்மாள் பெயருக்கு வந்த ஒரு தந்திதான். வழக்கம்போல் தபால் வாங்குவதற்குத் தபால் ஆபீஸுக்குப் போயிருந்தபோது, தபால் ரன்னர் தனியாகக் கொண்டு வந்திருந்த தந்தியையும் அவன் வாங்கிக் கொண்டான். அதைப் பிரித்துப் படித்ததும் அவன் திடுக்கிட்டுச் சொல்ல முடியாத மனக் குழப்பத்துக்கு ஆளானான். "கலியாணத்தை நிறுத்திவிடவும், காரணம் நேரில் வந்து தெரிவிக்கிறேன் துரைசாமி" என்று அந்தத் தந்தியில் எழுதியிருந்தது. அது விஷயமாக என்ன செய்வது என்று சூரியாவுக்கு இலேசில் தீர்மானம் செய்ய முடியவில்லை. சீதாவின் கலியாண விஷயமாக மொட்டைக் கடிதங்களை எழுதிய விஷமிகள் இந்தத் தந்தியையும் கொடுத்திருக்கலாம். ஏன் கொடுத்திருக்கக்கூடாது? அநேகமாக உண்மை அப்படித்தான் இருக்கும்.ஆனால் தந்தியை மற்றவர்களிடம் காட்டினாலும் அதைப் பற்றிச் சொன்னாலும் பெருங்குழப்பம் உண்டாகிவிடும்.

அது பொய்த் தந்தி என்று அவர்கள் நம்புவது கடினம். எல்லா ஏற்பாடுகளும் நடந்து சம்பந்திகளும் வந்து இறங்கிய பிறகு கலியாணத்தை நிறுத்துவது என்பது எவ்வளவு அசம்பாவிதம்? சீதாவும் அவள் தாயாரும் எவ்வளவு துக்கம் அடைவார்கள்? எல்லாருக்குமே எவ்வளவு அசந்துஷ்டி உண்டாகும்? சம்பந்திகள்தான் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன சொல்வார்கள்? சுற்றுப்புறத்துக் கிராமவாசிகள் எல்லாம் கேலி பண்ணிச் சிரிப்பார்களே? ஒரு பொய்த் தந்தி இவ்வளவு விபரீதங்களையும் விளைவிப்பதற்கு இடங்கொடுத்து விடுவதா? எது எப்படியிருந்தபோதிலும் இந்தத் தந்தியை இப்போது எல்லாரிடமும் காட்டிக் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்று சூரியா முடிவு செய்தான். இராத்திரிக்குள் எப்படியும் துரைசாமி ஐயர் வந்து விடக்கூடும். அவர் வந்த பிறகு அப்படி அவசியமாயிருந்தால் கலியாணத்தை நிறுத்திக் கொள்ளட்டும். அப்போது கூட அவரைக் காரணம் கேட்டு வாதாடிப் பார்ப்பது தன்னுடைய கடமை. எது எப்படியானாலும் தந்தியைப் பற்றி இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாது. ராத்திரியும் துரைசாமி ஐயர் வராவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு முடிவு செய்திருந்த சூரியா ராத்திரி வந்து சேரும் வண்டியிலும் துரைசாமி ஐயர் வராமற் போகவே முன்னைக் காட்டிலும் அதிகக் குழப்பத்தில் ஆழ்ந்தான். ஜானவாஸ ஊர்வலம் எல்லாம் நடந்த பிறகு தந்தியைப் பற்றிப் பிரஸ்தாபிப்பது மேலும் கஷ்டமாகிவிட்டது. யாரோ ஒரு முட்டாள் மடையன், பொறாமைப் பிசாசு, கொடுத்திருக்கக் கூடிய பொய்த் தந்தி காரணமாக இவ்வளவு ஏற்பாடுகளும் நின்று போவதால் சீதாவுக்கும் ராஜம்மாளுக்கும் ஏற்படக்கூடிய அதிர்ச்சியை நினைத்தபோது சூரியாவுக்குத் தந்தியைக் கொடுக்கும் தைரியம் தனக்கு வரவே வராது என்று தோன்றிவிட்டது. "கடவுள் விட்ட வழி விடட்டும்; நடந்தது நடக்கட்டும்; தந்தியை அமுக்கி விடுவதுதான் சரி" என்று முடிவு செய்தான். ஆனால் அமுக்கிய தந்தி அவனுடைய மூளைக்குள் இருந்து தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. இரவில் ஒரு கணமும் தூக்கமில்லாமல் செய்து கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடிவதற்குள் கலியாண முகூர்த்தத்துக்குரிய ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. பத்து மணிக்குள்ளே முகூர்த்தமாகையால் ஒரே பரபரப்பாகக் காரியங்கள் நடைபெற்றன. "முகூர்த்தம் வந்து விட்டது! சீக்கிரம்! சீக்கிரம்!" என்று தலைக்குத் தலை கூச்சல் போட்டார்கள். மாப்பிள்ளைகள் இரண்டு பேரும் காசி யாத்திரை புறப்பட்டுப் பத்து அடி தூரம் போகக்கூட இடங்கொடுக்கவில்லை.

"எல்லாம் சட்பட் என்று நடந்தன. கன்னிகாதான - திருமாங்கல்ய தாரணத்துக்கு உரிய நல்ல முகூர்த்தம் வந்தது. இரட்டை நாதஸ்வரங்கள் காதைத் துளைக்கும்படி கிறீச்சிட தவுல் வாத்தியங்களை அடித்த அடியில் வீடெல்லாம் கிடுகிடுக்க, வேத மந்திர கோஷங்கள் வானை அளாவ, வீட்டு ஸ்திரீகள் நூற்றெட்டு அபஸ்வரங்களுடன் "கௌரீ கல்யாணம்" பாட, சீதாவின் கழுத்தில் ஸ்ரீ சௌந்திரராகவன் திருமாங்கல்யத்தைக் கட்டினான். அதே சமயத்தில் பட்டாபிராமன் லலிதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி முடிச்சுப் போட்டான். திருமாங்கல்யதாரணம் ஆனபிறகு பரபரப்பும் சத்தமும் ஓரளவு அடங்கின. வீட்டுக்குள்ளே அத்தனை நேரம் நெருக்கி அடித்துக்கொண்டு வியர்க்க விருவிருக்க உட்கார்ந்திருந்தவர்கள் இனித் தங்களுடைய பொறுப்புத் தீர்ந்தது என்பது போலக் கொஞ்சம் காற்று வாங்க வாசற்பக்கம் சென்றார்கள்; சூரியாவும் வெளியே வந்தான். காலையிலிருந்து உள்ளுக்கும் வாசலுக்கும் ஆயிரம் தடவை நடந்திருந்த சூரியாவின் மனம் இப்போது சிறிது அமைதி அடைந்தது. "கலியாணம் நடந்துவிட்டது. இனி மாறுவதற்கில்லை" என்ற எண்ணம் அவனுக்கு அந்த நிம்மதியை அளித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வண்டி மாட்டின் சதங்கை சத்தம் 'ஜில் ஜில்' என்று கேட்டது. தெரு முனையில் கிட்டாவய்யரின் பெட்டி வண்டி வந்தது. முதல் நாள் மாலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் காத்துக் கொண்டிருந்த வண்டிதான்.

அது வெற்று வண்டியாக வரவில்லை. உள்ளே உட்கார்ந்திருந்தவர் பம்பாய் அத்திம்பேராகத்தான் இருக்க வேண்டும். சூரியா பரபரப்புடன் வண்டியை எதிர் கொண்டழைப்பதற்கு முன்னால் சென்றான். கலியாணப் பந்தலின் முகப்பில் வண்டி நின்றது. வண்டியில் இருந்தவர் இறங்குவதற்குள்ளே சூரியா, "அத்திம்பேரே! என்ன இப்படிச் செய்து விட்டீர்களே! உங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இங்கே எல்லாருடைய கண்ணும் பூத்துப் போய் விட்டது!" என்று சொன்னான். வண்டிக்குள் இருந்தது துரைசாமி ஐயர்தான். அவர் சூரியாவை ஏற இறங்கப் பார்த்தார். "என் பெயர் சூரியா. சீதாவின் அம்மாஞ்சி நான்?" என்று சூரியா தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். "ஓகோ! கிட்டாவய்யரின் இரண்டாவது பையனா?" "ஆமாம், அத்திம்பேரே! ஏன் இத்தனை தாமதமாய் வந்தீர்கள்? பதினைந்து நிமிஷந்தான் ஆயிற்று திருமாங்கல்ய தாரணம் நடந்து. பெரிய அத்தையும் அவளுடைய அகத்துக்காரரும் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள்." "என்ன? என்ன? திருமாங்கல்யதாரணமா! யாருக்கு? எப்போது?" "ஏன்? லலிதா, சீதா இரண்டு பேருக்குத்தான்." "சீதாவுக்கா? சீதாவுக்குக் கூடவா? மாப்பிள்ளை யார்?"

"சௌந்தரராகவன் தான்! என்ன அத்திம்பேரே? உங்களுக்குக் கலியாணக்கடுதாசி வரவில்லையா? ஆனால் உங்களுக்குத்தான் முன்னமே தெரியுமே? தில்லியிலிருந்து எழுதியிருந்தீர்களே!" "நான் ஒரு தந்தி கொடுத்திருந்தேனே?" என்று துரைசாமி ஐயர் கேட்ட போது அவருடைய பேச்சுக் குளறியது. "தந்தியா? ஒன்றும் வரவில்லையே? என்ன தந்தி?" என்று சூரியா துணிச்சலாகக் கேட்டான். சீதாவின் கலியாணத்தை நிறுத்தி விடும்படி தந்தி கொடுத்திருந்தேன். அது வரவில்லையா?" சூரியா தன் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டே, "அத்திம்பேரே! இப்போது நினைவு வருகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் ஒரு தந்தி வந்தது. கலியாணத் தடபுடலில் அதை நான் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. அதை அத்தையிடம் கொடுக்கவும் சந்தர்ப்பப் படவில்லை. இதுதானா நீங்கள் கொடுத்த தந்தி?" என்று சட்டைப்பையில் துழாவித் தந்தியை எடுத்துக் கொடுத்தான்.

துரைசாமி ஐயர் தந்தியைப் பிடித்துப் பார்த்தார். "ஆமாம் இதுதான்! ஆகா! இது ஏன் நேற்றைக்கே வரவில்லை? பட்டிக்காடு ஆனபடியால் இப்படித் தாமதித்து வந்ததாக்கும். எல்லாம் கடவுளுடைய செயல், நாம் என்ன செய்யலாம்? சூரியா! இந்தத் தந்தியைப்பற்றி ஒருவரிடமும் சொல்லாதே" என்றார். "ஆம் அத்திம்பேரே! இனிச் சொல்லி என்ன பிரயோஜனம்? நடந்தது நடந்து விட்டது!" என்றான் சூரியா. "ஆமாம்; நடந்தது நடந்து விட்டது, கடவுளுடைய சித்தம் அப்படி!" என்று சொல்லி விட்டுத் தந்தியைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார் துரைசாமி. இதுவரை சீதா அடிக்கடி தன் கடைக் கண்ணால் மாப்பிள்ளை சௌந்தரராகவனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று வாசலில் வாசற்படி வழியாகத் தன் தந்தை வருவதைப் பார்த்தாள். அவ்வளவு நேரமும் அவள் மனத்திற்குள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிக்கொண்டு வந்துவிட்டது. விசித்து விசித்து விம்மி விம்மி அழத்தொடங்கினாள். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகியது.

ராஜம்மாள் உணர்ச்சி மிகுதியினால் செயலற்றுத் தூணோடு தூணாக நின்றாள். ஆகையால் அவளால் பெண்ணைத் தேற்றுவதற்கு முடியவில்லை. அந்தக் கடமையை, சீதாவைச் சற்று முன்னே கன்னிகாதானம் செய்து கொடுத்த அபயாம்பாள் செய்தாள். "அசடே! எதற்காக அழுகிறாய்! அப்பாதான் வந்து விட்டரே! இந்த மட்டும் வந்தாரே என்று சந்தோஷப்படு!" என்றாள். சீதாவின் மாமியாரும் அருகில் வந்து தேறுதல் கூறினாள். பக்கத்தில் உட்கார்ந்து சீதாவின் புடவைத் தலைப்பையும் மாப்பிள்ளையின் அங்கவஸ்திரத்தின் முனையையும் முடிச்சுப்போட முயன்று கொண்டிருந்த சுண்டுப்பயல் கூடத் தேறுதல் கூறினான். "அழாதே! அத்தங்கா! அழுதால் கண்மையெல்லாம் கன்னத்தில் வழிந்துவிடும்!" என்று சொன்னான். துரைசாமி ஐயர் வந்து சீதாவின் அருகில் உட்கார்ந்து, "அழாதே அம்மா! ரயில் இப்படி மோசம் செய்து விட்டது! இல்லாவிடில் நான் வராமல் இருப்பேனா?" என்று சொல்லிச் சீதாவின் முதுகை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

அப்படியும் அழுகை நிற்காததைக் கண்ட சௌந்தரராகவன் இலேசாகத் தன் மனைவியின் கரத்தை தொட்டு, "சீதா!" என்றான். சீதாவின் கண்ணீர்ப் பெருக்கு உடனே நின்றது. அவள் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்த தன் வட்டமான பெரிய கண்களால் சௌந்தரராகவனை ஒரு தடவை பார்த்தாள். அந்த பார்வையில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடந்தன. வாயினால் விவரிக்க முடியாத இதயத்தின் மர்மச் செய்திகள் எவ்வளவோ அந்தப் பார்வையில் செறிந்திருந்தன. காதல் என்னும் அகராதியின் உதவி கொண்டு சௌந்தரராகவன் அந்தப் பார்வையின் பொருள்களை அறிந்து கொண்டான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


This webpage was last updated on 7 June 2004
Please send your comments to the webmasters of this website.