தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, "ஐயோ! இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே?" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா?
இதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும்? சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே! இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்?
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் இரண்டு
சந்திப்பு
மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச்சி தோன்றியது; கண்களில் அளவில்லாத ஆர்வம் காணப்பட்டது. எவ்வளவுதான் பார்த்த பிறகும் கேட்ட பிறகுங்கூட அவனுடைய இருதய தாகம் தணிந்ததாகத் தெரியவில்லை. பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, அந்தத் தாகம் அடங்காமல் பெருகிக் கொண்டிருந்ததென்று தோன்றியது. அந்த அதிசயமான சிற்பக் காட்சிகளையும், உயிருள்ள ஓவியங்களையும் பார்க்கும்போது, ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் இசை அமுதத்தைப் பருகும் போதும் அவன் அடைந்த அனுபவம் ஆனந்தமா? அல்லது அசூயையா? அல்லது இரண்டும் கலந்த உணர்ச்சியா? இரத்தின வியாபாரிக்குப் பக்கத்தில் தலையிலும் தோளிலும் மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒரு குள்ளன் போய்க் கொண்டிருந்தான். அவனுடன் இரத்தின வியாபாரி ஜாடை காட்டிப் பேசுவதைப் பார்த்தால் குள்ளனுக்குக் காது செவிடு என்று ஊகிக்கலாம். அவன் செவிடு மட்டுமல்ல - ஊமையாகக்கூட இருக்கலாமென்றும் தோன்றியது. தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியப்படுத்த முடியாமலிருக்கும் பொருட்டே நமது இரத்தின வியாபாரி அத்தகைய ஆளைப் பொறுக்கி எடுத்திருக்க வேண்டும்.
ஆமாம்; அந்த இளம் வர்த்தகங்களின் நடவடிக்கைகள், கவனித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவனவாய்த் தான் இருந்தன. அவன் ஆங்காங்கு சிற்பக் காட்சியோ, சித்திரக் காட்சியோ உள்ள இடத்தில் சிறிது நேரம் நிற்பான். சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்ப்பதோடல்லாமல் பக்கத்தில் நிற்கும் சிற்பிகளையும் கவனிப்பான். அவர்களில் யாராவது ஒருவன் தனித்து நிற்க நேர்ந்தால் அவனை நெருங்கி முதுகைத் தட்டி "உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வருகிறாயா?" என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும்? அவன் சொற்படியே கொஞ்சம் தனியான இடத்துக்கு அவர்கள் வருவார்கள். அவர்களிடம் அவ்வர்த்தகன் கடல்களுக்கு அப்பால் தான் வசிக்கும் தேசத்தைப் பற்றியும், அந்த தேசத்தின் வளத்தையும் செல்வத்தைப் பற்றியும் பிரமாதமாக வர்ணிப்பான். கரிகாலச் சோழச் சக்கரவர்த்தியின் காலத்தில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் தான் அத்தேசத்தில் வசிக்கிறார்களென்றும், அவர்களுக்குத் தாய்நாட்டிலுள்ளவை போன்ற திருக்கோயில்களும் சிற்பங்களும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையே கிடையாதென்றும் எடுத்துச் சொல்வான்.
"அந்தத் தேசத்துக்கு நீ வருகிறாயா? வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்!" என்று சொல்லி, குள்ளன் தூக்கிக் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பிடி இரத்தினக் கற்களை எடுத்து அவர்களிடம் காட்டுவான். இரத்தின வியாபாரியின் பேச்சிலேயே அநேகமாக அந்தச் சிற்பி மயங்கிப் போயிருப்பான். கை நிறைய இரத்தினக் கற்களைக் காட்டியதும் அவன் மனத்தை நிச்சயப்படுத்திக் கொண்டு தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிப்பான். அப்படிச் சம்மதம் தெரிவிக்கும் ஒவ்வொருவரிடமும் பெரிய இரத்தினம் ஒன்றைப் பொறுக்கிக் கொடுத்து, "அடுத்த அமாவாசையன்று புலிக் கொடி உயர்த்திய கப்பல் ஒன்று இந்தத் துறைமுகத்துக்கு வரும். அந்தக் கப்பலுக்கு வந்து இந்த இரத்தினத்தைக் காட்டினால் கப்பலில் ஏற்றிக் கொள்வார்கள்" என்பான் நமது இளம் வர்த்தகன்.
கலைத் திருவிழா நடந்த மூன்று தினங்களிலும் ரத்தின வியாபாரி மேற்சொன்ன காரியத்திலேயே ஈடுபட்டிருந்தான். மூன்றாவது நாள் விஜயதசமியன்று அவன் வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். (எதிர்பாராததா? அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா? நாம் அறியோம்.) ஆம்; அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நங்கை முன் போலவே பல்லக்கில் சென்ற காட்சிதான். மூன்று வருஷத்துக்கு முன்பு பார்த்ததற்கு இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது மாறுதல் தோன்றியது. அன்றைக்கு அவளுடைய முகம் சூரியன் அஸ்தமித்த பிறகு நீலக் கடலில் உதயமாகும் பூரண சந்திரனைப்போல் பசும்பொன் காந்தியுடன் பிரகாசித்தது. இன்றோ அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் அஸ்தமிக்கும் சந்திரனைப் போல் வெளிறிய பொன்னிறமாயிருந்தது. அப்போது முகத்தில் குடிகொண்டிருந்த குதூகலத்துக்குப் பதிலாக இப்போது சோர்வு காணப்பட்டது. விஷமம் நிறைந்திருந்த கண்களில் இப்போது துயரம் தோன்றியது. இந்த மாறுதல்களினாலே அந்த முகத்தின் சௌந்தரியம் மட்டும் அணுவளவும் குன்றவில்லை; அதிகமாயிருந்ததென்றும் சொல்லலாம்.
வீதியோடு போய்க் கொண்டிருந்த இரத்தின வியாபாரி தனக்குப் பின்னால் கூட்டத்தில் ஏதோ கலகலப்புச் சத்தம் உண்டாவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். காவலர் புடைசூழ ஒரு சிவிகை வருவதைக் கண்டான். அச்சிவிகையில் இருந்த பெண் தன் இருதய மாளிகையில் குடிகொண்டிருந்தவள்தான் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டான். அச்சமயத்தில் அவன் நெஞ்சு விம்மிற்று, கண்களில் நீர் தளும்பிற்று. இம்மாதிரி சந்தர்ப்பம் நேருங்கால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்து வைத்திருந்ததெல்லாம் சமயத்துக்கு உதவவில்லை. வீதி ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான். பல்லக்கின் பக்கம் பார்க்காமல் திரும்பி வேறு திசையை நோக்கினான். அவன் இருந்த இடத்தைச் சிவிகை தாண்டியபோது தன்னை இரண்டு விசாலமான கரிய கண்கள் கூர்ந்து நோக்குவதுபோல் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அளவு மீறிப் பொங்கிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்லக்கு கொஞ்சதூரம் முன்னால் போன பிறகுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பல்லக்கில் உட்கார்ந்திருந்த பெண் தன்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அடுத்த கணம் அவனுடைய கண்கள் மறுபடியும் கீழே நோக்கின.
ஆனால் பல்லக்கு மேலே போகவில்லை; நின்றுவிட்டது. பல்லக்குடன் போய்க் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் இரத்தின வியாபாரியை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், "அப்பா! தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ!" என்றான். இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. 'இந்தப் பெண் யாராயிருக்கும்? எதற்காக நம்மை அழைக்கிறாள்? நம்மை அடையாளங் கண்டு கொண்டாளோ? அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே? இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ? ஐயோ! அவ்விதம் இருந்துவிட்டால்...! இரத்தின வியாபாரி பல்லக்கை நெருங்கி வந்து அந்தப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அப்பப்பா! அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது? பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும்! ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஐயா! நீர் யார்? இந்த தேசத்து மனுஷர் இல்லை போலிருக்கிறதே?" என்றாள்!
"ஆம். தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்தீவில் வசிப்பவன் இரத்தின வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்" என்று மளமளவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப்போல் மறுமொழி கூறினான் இரத்தின வியாபாரி. அவனுடைய படபடப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "எந்த தீவு என்று சொன்னீர்?" என்றாள். "செண்பகத் தீவு - செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?" "செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்." இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முககாந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை...? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.
அப்போது குந்தவி, "நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா?" என்று கேட்டாள். "ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்." "இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்" என்றாள் குந்தவி. அரண்மனை! இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது? அந்தச் சிணுக்கத்தைக் குந்தவி கவனித்தாளோ, என்னவோ தெரியாது. எதையோ மறந்து போய் நினைத்துக் கொண்டவள் போல், "ஆமாம்; சாயங்காலம் கட்டாயம் அரண்மனைக்கு வாரும். சக்கரவர்த்தியின் குமாரி குந்தவி தேவிக்கு இரத்தினம் என்றால் ரொம்பவும் ஆசை கட்டாயம் உம்மிடம் வாங்கிக் கொள்வாள். ஒருவேளை இந்த மூட்டையிலுள்ள இரத்தினங்கள் அவ்வளவையும் வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்ளலாம்" என்றாள். இரத்தின வியாபாரி பெருமூச்சு விட்டான். மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான். "அப்படி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விற்றுவிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. இந்தத் தேசத்தில் இன்னும் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டிய இரத்தினங்களை நீங்கள் வாங்கிக் கொண்டால் போதும்" என்றான்.
"அதற்கும் நீர் அரண்மனைக்குத்தான் வந்தாக வேண்டும். கட்டாயம் வருகிறீரா?" "வருகிறேன்; ஆனால் அரண்மனைக் குள் வந்து யார் என்று கேட்கட்டும்." "குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள்." "தடை ஒன்றும் இராதே?" "ஒரு தடையும் இராது. இருக்கட்டும், இப்படி நீர் இரத்தின மூட்டைகளைப் பகிரங்கமாக எடுத்துக் கொண்டு சுற்றுகிறீரே! திருடர் பயம் இல்லையா உமக்கு?" "நன்றாகக் கேட்டீர்கள்! நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப் பயமும் உண்டா?" என்றான் இரத்தின வியாபாரி. குந்தவி புன்னகையுடன், "அப்படியா? எங்கள் சக்கரவர்த்தியின் புகழ் அப்படிக் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பரவியிருக்கிறதா? சந்தோஷம். நீர் சாயங்காலம் அவசியம் அரண்மனைக்கு வருகிறீர் அல்லவா?" என்று கேட்டாள். "கட்டாயம் வருகிறேன்" என்றான் வியாபாரி. பிறகு, குந்தவியின் கட்டளையின் பேரில் பல்லக்கு மேலே சென்றது. இரத்தின வியாபாரி நின்ற இடத்திலேயே நின்று பல்லக்கு ஜனக்கூட்டத்தில் மறையும் வரையில் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன அப்பா? எத்தனை நேரம் ஒரே பக்கம் பார்ப்பாய்? கண்விழி பிதுங்கப் போகிறது" என்று ஒரு கடூரமான குரலைக் கேட்டு அந்த இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போல் துள்ளித் திரும்பிப் பார்த்தான். ஒரு கருநிறக் குதிரைமேல் சாக்ஷாத் மாரப்ப பூபதி அமர்ந்து தன்னை ஏளனப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் மூன்று
மாரப்பன் புன்னகை
விக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள். அவர்களுக்கிடையில் மாரப்ப பூபதியும் சில சமயம் அவனுடைய நினைவுக்கு வருவான். அப்போது விக்கிரமனுடைய உள்ளமும் உடலும் அருவருப்பினாலும் அவமானத்தினாலும் சுருங்கிப்போகும். சித்தப்பா தன்னை வஞ்சித்து நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாரென்று சிராப்பள்ளி மலையில் அவன் புலிக்கொடியை உயர்த்த முயன்ற அன்றைத் தினமே வெளியாகிவிட்டது. அந்த முயற்சிக்கு மாரப்ப பூபதி பூரண உதவி செய்வதாய் வாக்களித்திருந்ததற்கு மாறாக அவர் அச்சமயம் அருகில் வராமலே இருந்துவிட்டது மாத்திரமில்லை - அவரே முன்னதாகப் பல்லவ சேனாதிபதிக்குத் தகவல் தெரிவித்தவர் என்பதும் அவனைச் சிறைப்படுத்திக் காஞ்சிக்குக் கொண்டு போன வீரர்களின் பேச்சிலிருந்து தெரிந்துவிட்டது.
ஆகையால், மாரப்ப பூபதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் விக்கிரமனுடைய உள்ளம் கசந்ததோடு, நாவும் கசந்தது. சோழ வம்சத்தில் இப்படிப்பட்ட மனிதர் ஒருவரும் பிறந்ததை எண்ணி எண்ணி அவன் மனம் குன்றினான். இவ்வாறு அவனுடைய அருவருப்புக்கும் அவமான உணர்ச்சிக்கும் காரணமாயிருந்த மாரப்ப பூபதி, இப்போது சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று எதிரில் நின்றதும், விக்கிரமனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? இரத்தின வியாபாரியின் முகத்தில் தோன்றிய திகைப்பை மாரப்ப பூபதி கவனித்தவனாய், "ஏனையா இப்படி மிரளுகிறீர்? ஏதோ திருடனைப் பற்றிப் பேச்சு நடந்ததே? ஒருவேளை நான் தான் திருடன் என்று நினைத்துக் கொண்டீரோ?" என்று சொல்லி மீண்டும் ஏளனச் சிரிப்பு சிரித்தான். இதற்குள் விக்கிரமன், ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். "இந்த நாட்டுத் திருடர்கள் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஐயா! நான் இந்த நாட்டான் அல்ல. ஆனால் நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப்புரட்டே கிடையாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நீர் திருடராயிருக்க முடியாது" என்றான்.
"அசலூர்க்காரனாயிருந்தாலும் அகம்பாவத்தில் மட்டும் குறைச்சல் இல்லை. நீர் எந்தத் தேசம், ஐயா? உமது பெயர் என்ன? எதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர்?" என்று பூபதி கேட்டான். "உமக்குத் தெரிந்தேயாக வேண்டுமானால் சொல்கிறேன். என் பெயர் தேவசேனன்; இரத்தின வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்." "ஓகோ! இரத்தின வியாபாரம் செய்வதற்கா வந்திருக்கிறீர்? அப்படியா சமாசாரம்? இரத்தின வியாபாரி ஒவ்வொரு கல் தச்சனாகக் கூப்பிட்டு எதற்காக இரகசியம் பேச வேண்டும்? பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கலைத்து அழைத்துப் போகிறவர்களுக்கு நரசிம்ம சக்கரவர்த்தி என்ன தண்டனை விதிப்பார் தெரியுமா?" "எனக்குத் தெரியாது! ஐயா! நான்தான் அயல் நாட்டான் என்றேனே? இவ்வளவு விசாரணை புரியும் நீர் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?" மாரப்ப பூபதி கடகடவென்று சிரித்தான். "நான் யார் என்று தெரியவில்லையா? நல்லது; வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்தில் உயிரைவிட்ட பார்த்திப மகாராஜாவுக்கு உடன்பிறந்த சகோதரன் நான்! தற்சமயம் சோழ நாட்டின் பிரதம சேனாதிபதி!"
இப்படிச் சொல்லியபோது இரத்தின வியாபாரியின் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று மாரப்பன் உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியாமல் போகவே "என்னுடைய கீர்த்தி உம்முடைய காதுக்கு எட்டியிராவிட்டாலும் வீராதி வீரரும் சூராதி சூரருமான பார்த்திப மகாராஜாவின் புகழ் கண்டிப்பாக எட்டியிருக்க வேண்டுமே? அந்தப் பெயரைக் கூட நீர் கேட்டதில்லையா? அப்படி எந்தக் கண்காணாத தேசத்து மனுஷர் ஐயா நீர்?" என்று கேட்டான். இரத்தின வியாபாரி சற்று யோசிப்பவன்போல் காணப்பட்டான். பிறகு அவன் மாரப்பனை ஏறிட்டுப் பார்த்து, "ஆமாம். பார்த்திப மகாராஜாவின் புகழை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய புதல்வர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் செண்பகத் தீவுக்கு அரசர், நான் அவருடைய பிரஜை. ஆகையால் பார்த்திப மகாராஜாவைப் பற்றிக் கெடுதலாகவோ பரிகாசமாகவோ எதுவும் என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்!" என்றான்.
மாரப்பனுடைய முகத்தில் இப்போது சிறிது திகைப்புக் காணப்பட்டது. ஆயினும் அவன் உடனே சமாளித்துக் கொண்டு கூறினான்! "ஓஹோ! அவ்வளவு ராஜபக்தியுள்ள பிரஜையா நீர்? உம்முடைய முகத்தில் விழித்தாலே புண்ணியம், ஐயா! அதனால்தான் உம்மை விட்டுப் போகவே மனம் வரமாட்டேன் என்கிறது. ஆமாம், உமது பெயர் என்னவென்று சொன்னீர்?" "தேவசேனன்." "தேவசேனன் - ஆகா! என்ன திவ்யமான பெயர்! - இவ்வுலகில் பெயர், புகழ் எல்லாம் பொய் என்று சொல்வது எவ்வளவு பிசகு? உம்முடைய பெயருக்காகவே உம்மிடம் இரத்தினம் வாங்கலாம். இருக்கட்டும்; கோமகள் குந்தவி தேவி இரத்தினம் வாங்குவதற்குத்தானே உம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்?" "கோமகள் குந்தவி தேவியா? யாரைச் சொல்கிறீர்?" என்று இரத்தின வியாபாரி உண்மையான வியப்புடனே கேட்டான். "இப்போது பல்லக்கில் போனாளே. அந்தத் தேவியைத்தான்!" "அவள் குந்தவி தேவியின் தோழி மாதவி அல்லவா?"
"ஓஹோ! உன்னிடம் அப்படி ஒரு பொய் சொல்லி வைத்தாளாக்கும். அப்பாவுக்கு ஏற்ற பெண்தான். நீ இந்தத் தேசத்து மனுஷன் அல்லவென்று நிச்சயமாய்த் தெரிகிறது. அல்லது இந்தத் தேசத்தைவிட்டு வெளியேற்றப் பட்டவனாயிருக்க வேண்டும்...." இந்த இடத்தில் மாரப்பபூபதி தனக்குதானே பேசிக் கொண்டான். பிறகு திடீரென்று தேவசேனனை உற்றுப் பார்த்து, "ஆமாம்; உங்கள் தேசத்து ராஜா விக்கிரமன் என்று சொன்னீரே? அவனுடைய தாயார் அருள்மொழி ராணிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அவனுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். இந்தக் கேள்வியினால் மாரப்பபூபதி என்ன எதிர்பார்த்தானோ, அது சித்தியாகிவிட்டது. இத்தனை நேரமும் மாறாமல் பதுமை போலிருந்த இரத்தின வியாபாரியின் முகம் மாறிவிட்டது. அளவிலாத பீதியுடனும் ஆத்திரத்துடனும், "என்ன? அருள்மொழி ராணிக்கு என்ன?" என்று அவன் அலறிக் கொண்டு கேட்டான். மாரப்பன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அதே சமயத்தில், அவர்களுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் ஒரு பெரும் கோலாகல கோஷம் எழுந்தது. "வாதாபியை அழித்து வாகை சூடிய நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "ஐய விஜயீ பவ!" என்று ஏககாலத்தில் அநேகம் குரல்களிலிருந்து வாழ்த்தொலிகள் கிளம்பி ஆரவாரித்தன. "சக்கரவர்த்தி வருகிறார், சக்கரவர்த்தி வருகிறார்" என்று பலர் பேசுவது காதில் விழுந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் நான்கு
வழிப்பறி
சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில் விழுந்ததும், மாரப்பபூபதி குதிரையைச் செலுத்திக் கொண்டு அவசரமாக அங்கிருந்து நழுவிச் சென்றான். தேவசேனன் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சக்கரவர்த்தியைத் தான் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு திசையை நோக்கி நின்றான். ஆனால் பட்டத்து யானை அவன் நின்ற இடத்துக்கு நேராக வீதியில் சென்றபோது அவனுடைய உறுதி கலைந்தது. சோழ வம்சத்தின் பரம வைரியானாலும், உலகெல்லாம் புகழ் பரப்பிய வீராதி வீரரல்லவா நரசிம்ம சக்கரவர்த்தி? அவனை அறியாமலே அவனுடைய பார்வை அவர்மீது சென்றது. அச்சமயத்தில் சக்கரவர்த்தியும் அவன் நின்ற பக்கமாகத் தம்முடைய கண்ணோட்டத்தைச் செலுத்தினார். அந்தக் கண்ணோட்டத்தின் போது இரத்தின வியாபாரியின் முகமும் ஒரு விநாடி நேரம் அவருடைய பார்வைக்கு இலக்காயிற்று. ஆனால், அப்படிப் பார்க்கும்போது அவருடைய கண்களில் தினையளவேனும் மாறுதல் காணப்படவில்லை. கண்ணிமைகள் சிறிது மேலே போகக் கூட இல்லை. அவனுடைய முகத்தைத் தாண்டிக்கொண்டு அவருடைய பார்வை அப்பால் சென்றுவிட்டது.
பட்டத்து யானையும் மேலே சென்றது. இரத்தின வியாபாரி பெரும் ஆபத்திலிருந்து தப்பியவன்போல் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். ஜனக்கூட்டம் எல்லாம் போகும் வரைக்கும் சற்று நேரம் அங்கேயே நின்று அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. முக்கியமாய் மாரப்ப பூபதியை அங்கே சந்தித்ததை எண்ணியபோது நெஞ்சம் துணுக்கமுற்றது. சித்தப்பாதான் இப்போது சோழநாட்டுச் சேனாதிபதியாமே! அவருடைய துரோகத்துக்குக் கூலி கிடைத்து விட்டதாக்கும்! தன்னிடம் ஏன் அவ்விதம் பேசினார்? ஒருவேளை அடையாளங் கண்டு கொண்டிருப்பாரோ? அந்தப் பெண் உண்மையில் சக்கரவர்த்தியின் குமாரிதானா? அப்படியானால் தன்னிடம் எதற்காகப் பெயரை மாற்றிக் கூறினாள்! அரண்மனைக்கு வரும்படி ஏன் வற்புறுத்திச் சொன்னாள்? நாலு புறத்திலும் தன்னை அபாயங்கள் சூழ்ந்திருப்பதாகத் தேவசேனனுக்குத் தோன்றியது. இனிமேல் மாமல்லபுரத்தில் இருந்தால் விபரீதங்கள் நேரலாம் என்று நினைத்தான். மேலும், அருள்மொழித் தேவியைப் பற்றி மாரப்ப பூபதி மர்மமாகச் சொன்னதை நினைத்தபோது அவனுடைய நெஞ்சு துடித்தது. முதலில் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்க்க வேண்டும். மற்றக் காரியங்கள் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
மாமல்லபுரத்தில் ஒரு குதிரையை வாங்கிக் கொண்டு உறையூருக்கும் போகலாம் என்ற உத்தேசம் விக்கிரமனுக்கு இருந்தது. அந்த உத்தேசத்தை இப்போது கைவிட்டான். குதிரை வாங்குவதற்குப் பிரயத்தனம் செய்தால் அதனால் என்ன விளையுமோ, என்னமோ? மாரப்பன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டால், அவனிடமிருந்து தப்புவது கஷ்டமாகலாம். நல்ல வேளையாக அந்தச் சமயத்திலேயே சக்கரவர்த்தி வீதியிலே வந்தார்! அருள்மொழியைப் பற்றி மாரப்பன் ஏதோ சொன்னதும் தான் பதறிவிட்டது விக்கிரமனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை தன்மேல் சந்தேகம் கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி வஞ்சகமாகப் பேசினாரோ? இன்னும் ஒரு வினாடிப் பொழுது சக்கரவர்த்தி வராதிருந்தால் சித்தப்பா தன்னைக் கண்டுபிடித்திருப்பார்! கண்டுபிடித்து என்ன செய்திருப்பாரோ?- என்பது மறுபடியும் விக்கிரமனுக்கு நினைவு வந்தபோது அவனை என்னவோ செய்தது, மாமல்லபுரத்துக்கு அவர் எதற்காக வந்திருக்கிறார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதுவாயிருந்தாலும் அவர் இப்போது இங்கே இருப்பது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அவர் அங்கு இருக்கும்போதே, தான் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்.இன்றைக்கே இவ்விடமிருந்து கிளம்பி விட வேண்டும். வழியிலே எங்கேயாவது குதிரை கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.
இவ்விதம் தீர்மானம் செய்துகொண்டு விக்கிரமன் அவனுடைய உண்மைப் பெயராலேயே இனி நாம் அழைக்கலாம். தான் தங்கியிருந்த சத்திரத்தை நோக்கி விரைந்து சென்றான். போகும்போது முன்னும் பின்னும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். குதிரைச் சத்தம் கேட்டால் உடனே கூட்டத்தில் மறைந்து கொண்டான். இவ்விதம் சென்று சத்திரத்தை அடைந்ததும், அங்கு வழிப் பிரயாணத்திற்காகத் தான் சேகரித்து வைத்திருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு குள்ளனையும் மூட்டைகளைச் சுமந்து வருவதற்காக அழைத்துக் கொண்டு கிளம்பினான். தான் சத்திரத்துக்குள்ளே சென்றிருந்தபோது, குள்ளன் வெளியில் காத்திருந்த ஒரு மனிதனுடன் சமிக்ஞை மூலம் ஏதோ பேசியதை அவன் கவனிக்கக்கூட இல்லை. விக்கிரமன் குள்ளனுடன் மாமல்லபுரத்தை விட்டுக் கிளம்பிய போது அஸ்தமிக்க ஜாமப் பொழுது இருக்கும். நகர வாசலைக் கடந்து அவன் வெளியே ராஜபாட்டையில் நடக்க ஆரம்பித்த சமயம் மாலைக் கதிரவனின் கிரணங்கள் பசும்பொன் நிறத்தை அடைந்திருந்தன. அந்தக் காலத்தில் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி நகருக்கும், காஞ்சியிலிருந்து உறையூருக்கும் ராஜபாட்டைகள் சென்றன. மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி செல்லும் பாதையானது எப்போதும் ஜனங்களின் போக்குவரவினால் ஜே ஜே என்று இருக்கும். குதிரைகள் மீதும் யானைகள் மீதும் பல்லக்குகளிலும் ஜனங்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். அந்த ராஜ பாதை நெடுகிலும் ஒன்றுக்கொன்று வெகு சமீபத்தில் ஊர்கள் உண்டு. கோவில்களும், மடாலயங்களும், சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும், பலவிதக் கடைகளும், பாடசாலைகளும் நெடுகிலும் காணப்படும். இதனாலெல்லாம் வெளிநாடுகளிலிருந்து புதிதாக வருகிறவர்களுக்கு மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி வரையில் ஒரு பெரிய நகரந்தானோ என்று தோன்றும்.
இத்தகைய ராஜபாட்டையிலிருந்து இடையிடையே பிரிந்து சென்ற குறுக்குப் பாதைகளும் ஆங்காங்கு இருந்தன. இந்தக் குறுக்குப் பாதையில் ஒன்று மாமல்லபுரத்துக்குக் கொஞ்ச தூரத்துக்கப்பால் பிரிந்து அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்றது. மாமல்லபுரத்திலிருந்து நேரே உறையூருக்குப் போக விரும்புவோர் இந்தக் குறுக்குப் பாதை வழியாகப் போனால் காஞ்சிக்குக் கொஞ்ச தூரம் தெற்கே உறையூர் ராஜபாட்டையை அடையலாம். குறுக்கு வழியில் செல்வதால் மூன்று காததூரம் அவர்களுக்கு நடை மீதமாகும். ஆனாலும், அந்தக் காட்டுப்பாதை வழியாக ஜனங்கள் அதிகமாகப் போவதில்லை. முக்கியமாக, இரவில் யாருமே போகமாட்டார்கள். அந்தப் பாதையில் சில இடங்களில் துஷ்ட மிருகங்களின் தொல்லை அதிகமாயிருந்தது. இதுமட்டுமல்லாமல், பிரசித்தமான பத்திரகாளி கோயில் ஒன்றும் அந்த வழியில் இருந்தது. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு மாறாக இந்தப் பத்திரகாளி கோயிலில் 'சாக்தர்' 'கபாலிகர்' முதலியோர் சில சமயம் நரபலி கொடுப்பது வழக்கம் என்ற வதந்தி இருந்தபடியால், இரவு நேரத்தில் அந்தப் பாதை வழியாகப் போக எப்பேர்ப்பட்ட வீரர்களும் தயங்குவார்கள்.
இதையெல்லாம் அறிந்திராத விக்கிரமன் குள்ளனால் வழி காட்டப்பட்டவனாய், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் அந்தக் குறுக்குக் காட்டுப்பாதை பிரியும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். குள்ளன் அந்தப் பாதை வழியாகப் போகலாமென்று சமிக்ஞையால் சொன்னபோது, விக்கிரமன் முதலில் கொஞ்சம் தயங்கினான். பிறகு, 'பயம் என்ன?' என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தக் குறுக்குப் பாதையில் இறங்கினான். உறையூருக்குச் சீக்கிரத்தில் போய் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமானது அவனுடைய மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அதோடு இன்னொரு காரணமும் சேர்ந்தது. அந்த முச்சந்திக்குச் சற்று தூரத்தில் குறுக்குப் பாதையில் நாலுபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை விக்கிரமன் பார்த்தான். அவன் குறுக்குப் பாதையில் இறங்கியவுடனே மேற்சொன்ன நால்வரும் எழுந்திருந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள். தான் கொஞ்சம் சீக்கிரமாக நடந்தால் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும், வழித் துணையாயிருக்குமென்றும் விக்கிரமன் எண்ணியவனாய் அந்தப் பாதையில் வேகமாக நடக்கலானான். ஆனால் குள்ளன் வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் மெதுவாகவே நடந்தபடியால், விக்கிரமனுடைய எண்ணம் நிறைவேறுவதாயில்லை.
அந்தப் பாதையில் போகப்போக இருபுறங்களிலும் காடு அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. முன்னிருட்டுக் காலமாதலால், நாலா புறத்திலிருந்தும் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாய் இருட்டி விட்டது. ஆனால் வானம் துல்லியமாயிருந்தபடியால், வழி கண்டுபிடித்து நடப்பதற்கு அவசியமான வெளிச்சத்தை விண்மீன்கள் அளித்தன. மற்றபடி பாதையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தபடியால் ஒரே அந்தகாரமயமாயிருந்தது. அந்தக் கனாந்தகாரத்தில் அந்த வனாந்தரப் பிரதேசத்தில் எண்ணில் அடங்காத மின்மினிகள் பிரகாசித்துக் கொண்டிருந்த காட்சியானது வனதேவதைகள் தங்களுடைய மாயாஜால சக்தியினால் தீபாலங்காரம் செய்தது போலத் தோன்றியது. நேரம் ஆக ஆக, விக்கிரமனுடைய தீரம் மிகுந்த உள்ளத்தில் கூடச் சிறிது பதைபதைப்பு உண்டாகத் தொடங்கியது. காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும். இந்தக் காட்டுப் பாதை இப்படியே எவ்வளவு தூரம் வரை போகும். இரவில் எங்கே தங்கலாம் என்னும் விஷயங்களை அந்த ஊமைக் குள்ளனிடம் விக்கிரமன் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான். ஆனால் இருள் காரணமாகக் குள்ளனுடன் சமிக்ஞை மூலம் சம்பாஷணை நடத்துவது எளிதாக இல்லை.
இருட்டி சுமார் ஒரு ஜாமப் பொழுது ஆகியிருக்கும். விக்கிரமன் அப்பால் போக இஷ்டப்படவில்லை. இருண்ட அந்த வனப்பிரதேசத்தில் தன்னைத் திடீரென்று தாக்கும் பொருட்டு அபாயங்கள் பல மறைந்து காத்திருப்பதாக அவனுடைய இருதய அந்தரங்கத்தில் ஏதோ ஒரு குரல் சொல்லிக் கொண்டே இருந்தது. திரும்பி இராஜபாட்டைக்கே போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. போகப் போக இந்த எண்ணம் ரொம்பவும் வலுப்பட்டது. மேலே நடக்க அவனுடைய கால்கள் மறுத்தன. குள்ளனுடைய தோளைத் தட்டி நிறுத்தித் தானும் நின்றான். அவன் நின்ற அதே சமயத்தில் எங்கேயோ வெகுதூரத்தில் 'டக் டக்' 'டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. குள்ளன் அதைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. இவன் செவிடனாய் இருந்தால் அவ்வளவு லேசான சத்தம் எப்படி இவனுக்குக் கேட்டது? உடனே விக்கிரமன் தன் அரையில் மேலங்கியினால் மறைக்கப்பட்டுக் கட்டித் தொங்கிய உடைவாளைப் பளிச்சென்று கையில் எடுத்தான். அந்தக் காரிருளில், நெய் தடவித் தீட்டப்பட்டிருந்த கத்தியானது பளபளவென்று மின்னிற்று. விக்கிரமன் குள்ளனுடைய தலையிலிருந்த பரட்டை மயிரை ஒரு கையினால் பற்றிக் கத்தியை ஓங்கி, அடேய்! உண்மையைச் சொல்லு! நீ நிஜமாகச் செவிடன்தானா? உனக்குக் காது கேட்பதில்லையா? உண்மையைச் சொல்லாவிட்டால் இங்கேயே இந்த க்ஷணமே இந்த வாளுக்குப் பலியாவாய்?" என்றான்.
குள்ளன் உரத்த குரலில் சிரித்தான். 'கக் கக், கக் கக்' என்ற ஒலியை எழுப்பிய அந்தச் சிரிப்பின் பயங்கரமானது, விக்கிரமனுடைய உடம்பின் இரத்தத்தை உறைந்து போகும் படி செய்தது. இதனால் விக்கிரமன் ஒரு கணம் திகைத்து நின்றபோது, குள்ளன் அவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டு, ஒரு பத்தடி தூரம் பாய்ந்து சென்றான். அங்கு நின்றபடி இரண்டு கைகளையும் வாயினருகில் குவித்துக் கொண்டு மிகக் கோரமான நீடித்த சத்தத்தை உண்டாக்கினான். மனிதக் குரலுமில்லாமல், மிருகங்களின் குரலுமில்லாமல், கேட்பதற்குச் சகிக்க முடியாத அருவருப்பை உண்டாக்குவதாயிருந்த அந்தச் சத்தத்தைத் தூர இருந்து கேட்பவர்கள், 'பேய் பிசாசுகள் ஊளையிடுகின்றன' என்று எண்ணிப் பீதி அடைந்தார்களானால், அதில் ஆச்சரியம் அடைவதற்கு இடம் இராது. அந்தச் சத்தத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய உடம்பு ஒரு நடுக்கம் நடுங்கிற்று. ஆனாலும் உடனே அவன் சமாளித்துக் கொண்டு, அந்த க்ஷணமே அக்குள்ளனை வெட்டிக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் பாய்ந்து சென்றான். அதே சமயத்தில் பாதையில் ஒரு பக்கத்திலிருந்து மரங்களின் மறைவிலிருந்து நாலு பேர் பாய்ந்து ஓடிவந்தார்கள். அவர்களுடைய கைகளில் கத்திகளைக் கண்டதும் விக்கிரமனுக்கு நெஞ்சில் பழையபடி துணிவும் தைரியமும் பிறந்தன. இருட்டினாலும், தனிமையினாலும், குள்ளனுடைய பயங்கரக் கூவலினாலும், மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் அடைந்திருந்த விக்கிரமனுக்கு கத்திகளைக்கண்டவுடன், இது மனித உலகத்தைச் சேர்ந்த காரியந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டது.
எனவே, பீதியும் போய்விட்டது. உடனே தன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தான். வந்த நால்வரும் விக்கிரமனை ஏக காலத்தில் தாக்கத் தொடங்கினார்கள். விக்கிரமன் சக்ராகாரமாகச் சுழன்று அவர்களுடன் போரிட்டான். அவனுடைய கத்தியின் முதல் வீச்சிலேயே ஒருவன் படுகாயம் பட்டுக் கீழே விழுந்தான். இன்னொருவனுடைய கத்தி அடிபட்டுத் தூரப் போய் விழுந்தபோது குள்ளன் மேலே விழுந்தது. அவன் 'வீல்' என்று கத்திக் கொண்டு தரையில் சாய்ந்தான். கத்திச் சண்டையில் விக்கிரமன் சாதாரண மனிதனல்ல என்று தெரிந்து கொண்ட மற்ற இருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் அவனுடைய கத்தி வீச்சுக்குள் வராமல் தூர நின்றே சண்டையிட்டார்கள். அவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்ததிலிருந்து யாரையோ அவர்கள் எதிர்பார்த்தது போலத் தோன்றியது. அதற்குத் தகுந்தாற்போல் குதிரைக் காலடிச் சத்தம் அதிவிரைவாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் குதிரை வந்துவிட்டது. குதிரையின் மேல் ஓங்கிய கத்தியுடன் ஒரு வீரன் உட்கார்ந்திருப்பது நட்சத்திர வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. விக்கிரமனுடன் போரிட்டவர்களில் ஒருவன் "எஜமானே! சீக்கிரம்!" என்று கத்தினான். 'குதிரையின் மேல் வருகிறவன் இவர்களுடைய எஜமானன் போலும்! நம்முடைய முடிவு நெருங்கிவிட்டது' என்று எண்ணினான் விக்கிரமன். ஏற்கனவே அவன் சண்டையில் களைப்புற்று வந்தான் எனினும் இ ந்த இரண்டு பேரையும் எப்படியாவது சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் குதிரையின் மேல் புதிதாக வந்த மூன்றாவது மனிதனோடும் எப்படிச் சண்டையிட்டுச் சமாளிக்க முடியும்?
விக்கிரமனது உள்ளத்தில் "அன்னையைப் பார்க்காமல் போகிறோமே!" என்ற எண்ணம் உதித்தது. பல்லக்கிலிருந்த கனிவு ததும்பிய கண்களுடன் தன்னைப் பார்த்துப் பேசிய பெண்ணின் நினைவும் வந்தது. உடனே, பட்டத்து யானை மேல் வந்த சக்கரவர்த்தியின் முகம் அவன் மனக்கண்ணின் முன் தோன்றியது. "நரசிம்ம மகா சக்கரவர்த்தியின் ஆட்சியா இவ்வளவு லட்சணமாயிருக்கிறது! பல்லவ சாம்ராஜ்யத்தில் வழிப்பறியும் கொள்ளையுமா?" என்று நினைத்தான். "இப்படிப்பட்ட சக்கரவர்த்தியா நமது சோழ நாட்டை ஆளுகிறார்?" என்ற எண்ணத்தினால் உண்டான ஆத்திரத்துடன் கத்தியை ஓங்கி வீசினான். இருவரில் ஒருவன் வீழ்ந்தான். அதே சமயத்தில் குதிரை மீது வந்த வீரன் தன்னுடைய கத்தியை இன்னொருவன் மீது செலுத்த அவனும் மாண்டு வீழ்ந்தான். விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அவ்வீரன் தன்மீது வீசவேண்டிய வாளைத்தான் தவறுதலாய் அவன்மீது செலுத்திவிட்டானோ என்று நினைப்பதற்கு இல்லை. ஏனெனில் தான் மேலங்கி அணிந்திருந்தபடியாலும் அவர்கள் வெறும் உடம்பினராயிருந்த படியாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது. அப்படியானால் இந்த வீரன் யார்! இவர்களால் எதிர்பார்க்கப்பட்டவன் இல்லையா? அச்சமயம் குதிரை மேலிருந்து கீழே குதித்த அவ்வீரன், "ஐயா! நீர் யார்? இந்த இருட்டில் தனி வழியே வந்த காரணம் என்ன?" என்று வினவினான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் ஐந்து
ஒற்றர் தலைவன்
நல்ல சமயத்தில் வந்து தன்னைக் காப்பாற்றிய குதிரை வீரனிடம் விக்கிரமனுக்கு நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வீரனுடைய கேள்விக்கு மறு மொழியாக, "ஐயா! நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல சமயத்தில் நீங்கள் வந்து உதவி செய்தீர்கள்" என்றான். "வியாபாரியா நீர்? துலாக்கோல் பிடிக்கும் கையா இவ்வளவு லாவகமாய்க் கத்தி சுழற்றுகிறது? நம்ப முடியவில்லை, ஐயா! என்ன வியாபாரம் செய்கிறீரோ?" "இரத்தின வியாபாரி நான்; கத்தியை உபயோகிக்கவும் பழகியிருக்கிறேன்..." "அழகுதான்! இரத்தின வியாபாரியா இம்மாதிரி காட்டு வழியில் தனியாகக் கிளம்பினீர்? அதுவும் இரா வேளையில்...." "நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழைக் கேட்டு ஏமாந்து போனேன். அவருடைய ஆட்சியில் திருட்டுப் புரட்டே கிடையாது என்று கடல்களுக்கு அப்பால் உள்ள தேசங்களில் எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்...." "ஓகோ! வெளிநாட்டிலிருந்து வந்தீரா! நினைத்தேன் அப்போதே. எந்த நாட்டிலிருந்து வருகிறீர், ஐயா?" "எனக்குச் செண்பகத் தீவு." "செண்பகத் தீவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்டில் இரத்தினங்கள் அதிகம் உண்டு என்று. நல்லது; இரத்தின வியாபாரம் செய்ய வந்த நீர் முதலில் காஞ்சிக்கல்லவா போக வேண்டும்? இவ்வளவு அவசரமாக உறையூர்க்குக் கிளம்பியது ஏனோ?" "சொல்லுகிறேன், ஐயா! ஆனால் தாங்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தவில்லையே!" "நான் யாராயிருந்தால் என்ன?" "என் உயிரைக் காப்பாற்றியவர் யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?"
"உம்முடைய உயிரை நான் காப்பாற்றவில்லை; நீரே தான் காப்பாற்றிக் கொண்டீர். மூன்று பேரை வேலை தீர்த்த உமக்கு இன்னும் ஒருவனைத் தீர்ப்பது பிரமாதம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் யாரென்று சொல்லுகிறேன். காஞ்சி சக்கரவர்த்தியைப் பற்றி நீர் கேள்விப்பட்டது பொய்யாகப் போயிற்று என்றீரே? அந்தச் சக்கரவர்த்தியின் ஊழியர்களில் ஒருவன் நான்; ஒற்றர் படைத்தலைவன். நீர் தனியாக இந்தக் காட்டு வழியே போகிறீர் என்று எனக்குத் தகவல் வந்தது. ஏதாவது அபாயம் நேரலாம் என்று எதிர்பார்த்து உடனே புறப்பட்டு வந்தேன்..." "அப்படியா? என்ன விந்தை? சக்கரவர்த்தியின் ஒற்றர் படை அவ்வளவு திறமையாகவா வேலை செய்கிறது? அப்படியானால், நான் எண்ணியது தவறு..." "செண்பகத் தீவில் நடக்கும் ஆட்சியைப் போல் அவ்வளவு திறமையாக இங்கே அரசாங்கம் நடக்காமலிருக்கலாம், ஐயா! ஆனாலும், எங்களால் முடிந்தவரையில் கொலை, களவு நடக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். பார்க்கப் போனால், இரவில் தனிவழியே வந்து நாலு உயிர்களின் மரணத்துக்குக் காரணமாயிருந்ததின் பொருட்டு உம்மை நான் பிடித்துக் கொண்டு போய்ச் சக்கரவர்த்தியின் முன்னால் நிறுத்த வேண்டும்." விக்கிரமனுடைய கை அப்போது அவனுடைய வாளை இறுக்கிப் பிடித்ததை நட்சத்திரங்களின் மங்கிய ஒளியில் அவ்வீரன் கவனித்தான்.
"வேண்டாம் ஐயா, வேண்டாம். அவ்விதம் செய்கிற உத்தேசம் எனக்கு இல்லை. அயல் தேசத்திலிருந்து வந்தவரானதால், இந்த வழியின் அபாயம் தெரியாமல் வந்துவிட்டீர். உம்மைப்போல் வேண்டுமென்று விபத்தில் அகப்பட்டுக் கொள்கிறவர்கள் இல்லாமற்போனால், அப்புறம் எங்களுக்குத்தான் என்ன வேலை இருக்கும்? ஒற்றர் படைத் தலைவன்தான் எதற்காக? நல்லது; நான் வந்த வேலை ஆகிவிட்டது. பார்க்கப் போனால் நான் வந்திருக்க வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் உம்மை நீரே காப்பாற்றிக் கொள்ளக் கூடியவராயிருக்கிறீர். நான் போய் வருகிறேன்" என்றான் அவ்வீரன். விக்கிரமனுடைய உள்ளம் குழம்பிற்று. அவ்வீரனுக்குத் தான் தகுந்தபடி நன்றி செலுத்தவில்லையென்று அவன் கருதினான். அன்றியும், அவ்வீரனுடன் இன்னும் கொஞ்சம் சிநேகம் செய்துகொண்டு உறையூர் போவதற்கு அவனுடைய குதிரையை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையும் உண்டாயிற்று. இரவை எங்கே, எப்படிக் கழிப்பது என்ற கவலையும் தோன்றியது. "அப்படியன்று. அந்தச் சமயத்தில் தாங்கள் வந்திராவிட்டால், ஒருவேளை நான் உயிரிழந்திருப்பேன். எனக்கு உயிர் அளித்தவர் தாங்கள்தான். அதோடு இன்னொரு உதவியும் தாங்கள் எனக்குச் செய்ய வேண்டும்" என்றான் விக்கிரமன்.
"என்னிடம் யாராவது உதவி கேட்டால், அதை மறுக்கும் வழக்கம் கிடையாது. உதவி கேட்காதவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை. "உறையூருக்கு நான் அவசரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் தாம் உதவி செய்ய வேண்டும். உங்கள்...." "நீர் கேட்கப்போவது தெரிகிறது, என் குதிரையைக் கேட்கிறீர். ஆனால், இந்த இராத்திரியில் இனிமேல் இக்காட்டு வழியில் போனால், உம்முடன் குதிரையும் துஷ்ட மிருகங்களுக்கு இரையாக வேண்டியதுதான், உம்மைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் குதிரையைப் புலிக்கு ஆகாரமாக்க எனக்கு இஷ்டமில்லை." "வேறு என்ன யோசனை சொல்கிறீர்கள்?" "இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிற்பியின் வீடு இருக்கிறது. என்னுடன் வந்தால், அங்கே படுத்திருந்துவிட்டு அதிகாலையில் எழுந்து போகலாம்." விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியே செய்யலாம்" என்றான். கீழே கிடந்த மூட்டைகளை எடுத்துக் குதிரைமேல் வைத்துக் கட்டினார்கள். பிறகு, வீரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் புகுந்து செல்ல, விக்கிரமனும் அவன் பின்னால் சென்றான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் ஆறு
சிற்பியின் வீடு
அடர்ந்த காட்டின் வழியே ஒரு கொடி வழி சென்றது. பட்டப்பகலிலேயே அந்த வழியில் இருள் சூழ்ந்திருக்கும். நடுநிசியில் கேட்கவேண்டியதில்லை. பெரிய பாதையில் ஆங்காங்கு எட்டிப் பார்த்த நட்சத்திர வெளிச்சம் கூட இந்தக் கொடி வழியில் கிடையாது. அப்படிப்பட்ட இருளில், முன்பின் தெரியாத யாரோ ஒருவனைப் பின்தொடர்ந்து காட்டுக்கொடி வழியில் செல்லும்போது விக்கிரமனுடைய தீர நெஞ்சம்கூட 'திக் திக்' என்று அடித்துக்கொண்டது. வழியோ மிகவும் குறுகலானது. இருபுறத்திலும் தழைத்திருந்த மரக்கிளைகளும் செடிகளும் கொடிகளும் அடிக்கடி விக்கிரமன் மேல் உராய்ந்தன. வெகு சமீபத்திலிருந்து ஆந்தைகளும் கோட்டான்களும் கர்ண கடூரமான குரலில் சத்தமிட்டன. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. அதைக் கேட்ட குதிரை கனைத்தது. ஒற்றர் தலைவன் அப்போது குதிரையைத் தட்டிக் கொடுத்தான். அது, "நான் இருக்கிறேன்; பயப்படாதே!" என்று சொல்வது போலிருந்தது.
முதலில் குதிரையும், பிறகு ஒற்றர் தலைவனும் பின்னால் விக்கிரமனுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் ஒரு மரத்தின் வேரில் கால் தடுக்கி விக்கிரமன் கீழே விழுந்தான். ஒற்றர் தலைவன் அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டான். அப்போது விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. 'ஆகா! இது எத்தகைய இரும்புக் கை! இந்தக் கையில்தான் எவ்வளவு வலிவு! இந்த ஒற்றர் தலைவன் சாதாரண மனுஷன் இல்லை. மகா வீரனாயிருக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒவ்வொரு வேலைக்கும் சரியான ஆளைத்தான் தெரிந்திருக்கிறார்' என்று எண்ணினான். இன்னும் எவ்வளவு தூரம் இந்தக் கொடி வழியாகப் போகவேண்டுமோ என்று விக்கிரமன் எண்ணிய சமயத்தில் சட்டென்று இருள் சிறிது அகன்று வானம் தெரிந்தது. எதிரில் ஒரு கட்டடம் இருப்பது லேசாகப் புலப்பட்டது. "நான் சொன்ன இடத்துக்கு வந்து விட்டோ ம். இந்த வீட்டில் இரவைக் கழிக்கலாம். பொழுது விடிந்ததும் நீர் கிளம்பலாம்" என்றான் ஒற்றர் தலைவன். 'ஆகட்டும்; ஆனால் இது யாருடைய வீடு? இப்படிப்பட்ட அடர்ந்த காட்டின் நடுவே யார் வீடுகட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். எதற்காக?" என்று விக்கிரமன் வியப்புடன் கேட்டான்.
இந்த வீட்டைக் கட்டியவர் இப்போது இல்லை. அவர் இருந்தபோது இங்கே இவ்வளவு அடர்ந்த காடாகவும் இல்லை. அது பெரிய கதை; இராத்திரி உமக்குத் தூக்கம் வராவிட்டால் சொல்கிறேன்" என்றான் ஒற்றர் தலைவன். பிறகு, அவன் வீட்டண்டை நெருங்கிக் கதவை இடித்தான். வீட்டின் சமீபத்தில் வந்ததும் விக்கிரமன் அது சாதாரண வீடு அல்ல வென்பதைக் கண்டான். சித்திர மண்டபமோ, அல்லது சிற்பக் கோயிலோ என்று சொல்லும்படியாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. கதவைத் திறந்தவள் ஒரு தொண்டுக் கிழவி. அவள் கையில் ஒரு கல் விளக்கு இருந்தது. கிழவி கதவைத் திறந்ததும் முன்னே நின்ற ஒற்றர் தலைவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள். அப்போது அவளுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன. இடது கையின் ஆட்காட்டி விரலை அவன் லேசாகத் தன் உதடுகளின் மேலே வைத்து உடனே எடுத்துவிட்டான். அந்தச் சமிக்ஞையின் கருத்தைக் கிழவி உணர்ந்திருக்க வேண்டும். உடனே அவளுடைய முகத்திலிருந்து வியப்புக் குறி மாறிவிட்டது. "வாருங்கள், ஐயா!" என்று சொல்லிவிட்டு, கிழவி கதவை நன்றாய்த் திறந்தாள்.
இருவரும் உள்ளே பிரவேசித்தார்கள். அந்த வீட்டுக்குள் அடிக்கடி சென்று பழக்கப்பட்டது போல் குதிரை உள்ளே நுழைந்தது. அது நேரே கூடம், முற்றம் எல்லாவற்றையும் தாண்டிப் பின்புறக் கதவண்டை போய் நின்றது. கிழவி அங்கே சென்று அந்தக் கதவையும் திறந்தாள். குதிரை தானாக அதன் வழி புகுந்து சென்றது. ஒற்றர் தலைவன் அப்போது விக்கிரமனைப் பார்த்து, "இந்தக் குதிரையின் அறிவை என்னவென்று சொல்வது? முன்னொரு தடவை இங்கே நான் வந்தபோது பின்கட்டில் குதிரையைக் கட்டியிருந்தேன். இம்முறை அதுவே தன் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டு போகிறது. நானும் போய் அதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு வருகிறேன்; நீர் இங்கேயுள்ள சிற்ப வேலைகளைப் பார்த்துக்கொண்டிரும்" என்று சொல்லிவிட்டுப் பின் கதவு வழியாகப் புகுந்து சென்றான். கிழவியும் கல் விளக்குடன் அவனைத் தொடர்ந்தாள். சுவரிலிருந்து மாடத்தில் நந்தா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் விக்கிரமன் சுற்று முற்றும் பார்த்தான். அது நிச்சயமாக வீடு அல்ல - சிற்ப மண்டபம் தான் என்று அவனுக்குத் தோன்றிற்று. எங்கே பார்த்தாலும் அற்புதச் சிற்பத் திறமை வாய்ந்த சிலைகள் காணப்பட்டன. சுவர்களில் பல வர்ணங்களில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் காட்சியளித்தன. அவை வரையப்பட்டு அநேக வருஷங்கள் ஆகியிருக்க வேண்டுமென்றாலும் ஓவியங்களின் உயிர்க்களை சிறிதும் குன்றவில்லை.
சிலைகளிலும் சித்திரங்களிலும் முக்கியமாக ஒரு பெண்ணின் உருவம் அதிகமாய்க் காணப்பட்டது. அந்த உருவத்தில் தெய்வீக சௌந்தரியத்தின் களை தோன்றிற்று. நாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் பாவங்களிலும் அந்தப் பெண் உருவத்தின் சிலைகளும் ஓவியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் அழகையும், கலைத்திறனையும் கண்டு விக்கிரமன் பிரமிப்பை அடைந்தான். உறையூர் சித்திர மண்டபத்திலும் மாமல்லபுரத்துக் கலை விழாவிலும் தான் முன்னர் பார்த்த சித்திரங்கள், சிற்பங்கள் எவையும் இந்தப் பாழடைந்த மண்டபத்துக்குள் மறைந்து கிடக்கும் சிற்பங்களுக்கு அருகில் கூட வரமுடியுமா என்று வியந்தான். இவற்றையெல்லாம் அமைத்த மகா சிற்பி எவனோ என்று அறிந்துகொள்ள அவன் துடிதுடித்தான். இதற்குள் ஒற்றர் தலைவன் குதிரையின் போஷாக்கைக் கவனித்துவிட்டு உள்ளே வந்தான். விக்கிரமன் அவனை நோக்கி, "ஐயா! என்ன ஆச்சரியமான சிற்பங்கள் இவை! எந்த மகா சிற்பி இவற்றை அமைத்தவன்? தெய்வீக அழகு பொருந்திய ஒரு பெண்ணின் உருவம் இங்கே அதிகமாய்க் காணப்படுகிறது! அந்தப் பெண் உண்மையாக இருந்தவளா? அல்லது சிற்பியின் சிருஷ்டியா? இந்த அற்புதச் சிற்பங்கள் எல்லாம் ஏன் இந்த இருண்ட காட்டுக்குள் கிடக்க வேண்டும்? ஏன் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி செய்யக் கூடாது? இதை எல்லாம் எனக்கு விவரமாய்ச் சொல்ல வேண்டும்" என்றான்.
"நான் தான் சொன்னேனே, அது பெரிய கதை என்று. மிஞ்சியுள்ள இரவைத் தூக்கமின்றித் கழிக்க உனக்கு இஷ்டமிருந்தால், சொல்கிறேன். எனக்குப் பசி பிராணன் போகிறது. இதோ பாட்டி பொரிமாவும் வெல்லமும் கொண்டு வருகிறாள், முதலில் சாப்பிடுவோம்" என்றான் ஒற்றர் தலைவன். அவ்விதமே இருவரும் சாப்பிட்டார்கள். சாப்பிடும் போது, "தங்கள் பெயர் இன்னதென்று இன்னும் எனக்குச் சொல்லவில்லையே" என்றான் விக்கிரமன். "என் பெயர் வீரசேனன். உம்முடைய பெயர்?" விக்கிரமன் சிறிது வியப்புடன், "என் பெயர் தேவசேனன்" என்றான். "ரொம்ப நல்லது; நம் இருவருக்கும் பெயர் ஒற்றுமை இருக்கிறது. ஆகையால், நீர் மனம் விட்டு என்னிடம் பேசலாம். உறையூருக்கு நீர் இவ்வளவு அவசரமாகப் போக விரும்பிய காரணம் என்ன? இரத்தின வியாபாரம் செய்வது உமது நோக்கமாயிருந்தால், முதலில் காஞ்சி நகருக்கல்லவா போக வேண்டும்?" ஒற்றர் தலைவனிடம் நன்றியும் அன்பும் கொண்டிருந்த விக்கிரமனுக்கு இப்போது சந்தேகமும் பயமும் தோன்றின. ஒருவேளை இவன் நம்முடைய உண்மையைக் கண்டுபிடித்து விட்டால்? கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும். "என்னுடைய தாயார் உறையூரில் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் ஆவலில்தான் சீக்கிரமாய்ப் போக விரும்புகிறேன்." "இதென்ன? நீர் செண்பகத் தீவைச் சேர்ந்தவர் என்றல்லவா சொன்னீர்?"
"என்னுடைய சொந்த ஊர் உறையூர்தான். சில வருஷங்களுக்கு முன்பு பொருள் தேடுவதற்காகச் செண்பகத் தீவு சென்றேன். உறையூர் பல்லவ ராஜ்யத்துடன் சேர்ந்துவிட்டபிறகு, அதன் பழைய செழிப்பெல்லாந்தான் போய் விட்டதே? இராஜ குடும்பம் இல்லாத ஊரில் இரத்தின வியாபாரம் என்ன நடக்கும்?" இராஜ குடும்பத்தைப் பிரஸ்தாபித்தால், ஒரு வேளை ராணி அருள்மொழியைப்பற்றி வீரசேனன் ஏதாவது சொல்லக்கூடுமென்று விக்கிரமன் எதிர்பார்த்தான். ஆனால், அவனுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதன் பின் வீரசேனன் சாப்பிட்டு முடியும் வரையில் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்த பிறகு, விக்கிரமன் மறுபடியும் அந்தச் சிற்ப மண்டபத்தின் கதையைச் சொல்லும்படி கேட்டான். "ஐயா, தேவசேனரே, உமக்கு மரணத்தில் நம்பிக்கை உண்டா?" என்று ஒற்றர் தலைவன் கேட்டபோது, விக்கிரமனுக்கு ஒன்றும் புரியவில்லை. "இதென்ன கேள்வி? மரணத்தில் நம்பிக்கை உண்டா? என்றால்...?"
"அதாவது மனிதர்கள் உண்மையில் மரணமடைகிறார்கள் என்பதாக நீர் நினைக்கிறீரா? 'உயிர் போய்விட்டது' என்று நாம் சொல்லும்போது, உண்மையில் உயிர் போகிறதா? அல்லது உடல் மட்டும் போய் உயிர் இங்கேயே இந்த உலகத்திலேயே, சுற்றிக் கொண்டிருக்கிறதா? இறந்து போனவர்கள் நம்மைப்பற்றி நினைக்கிறார்களா? நம்மைப் பார்க்க வருகிறார்களா? நம்முடைய நடவடிக்கைகளை அவர்கள் கவனிப்பதுண்டா?" விக்கிரமனுக்கு ஏனோ தன்னுடைய தந்தை பார்த்திப மகாராஜாவின் நினைவு வந்தது. அவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தது. அவர் இப்போது இவ்வுலகில் இருந்து தன்னுடைய செயல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறாரா? "எனக்கும் உங்களைப் போல் சில சமயம் தோன்றுவதுண்டு. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பாரைத்தான் காணோம்." "எனக்கென்னவோ, மரணம் என்பதே பொய் என்று தோன்றுகிறது. மரணத்துக்காக விசனப்படுவதும் பெரும் மூடத்தனம் என்று நினைக்கிறேன். இதோ இந்த வீட்டில் முப்பது வருஷத்துக்கு முன்னால் ஆயனச் சிற்பியும், அவருடைய மகள் சிவகாமியும் வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் இங்கே ஜல்ஜல் என்ற சதங்கை ஒலியும், கல்கல் என்று கல்லுளி ஒலியும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருக்கும். சிவகாமி அற்புத நடனம் ஆடுவாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்துப்பார்த்து ஆயனச் சிற்பி சித்திரம் எழுதுவார்! சிலைகள் அமைப்பார்...."
"ஓகோ! இந்தத் தெய்வீகக் களையுள்ள பெண் அந்தச் சிவகாமிதானா?" "ஆமாம்; அப்போது நான் இங்கே அடிக்கடி வருவதுண்டு. மகேந்திர சக்கரவர்த்தியின் காலம்... அவருடைய புதல்வருக்கு அச்சமயம் உம்முடைய வயதுதானிருக்கும். அவருடன் - நரசிம்மவர்மருடன் - நானும் வருவேன். தூரத்தில் வரும்போதே, இந்த வீட்டுக்குள்ளிருந்து சதங்கையின் ஒலி கிளம்புவது கேட்கும். ஆயனரும் சிவகாமியும் இப்போது இங்கே இல்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதோ! உற்றுக் கேட்டால் சதங்கையின் ஒலியும் கல்லுளியின் ஒலியும் என் காதுக்குக் கேட்கின்றன...." விக்கிரமனுடைய ஆவல் அளவுகடந்து பொங்கிற்று. ஆயனரையும் சிவகாமியையும் பற்றி விவரமாய்ச் சொல்ல வேண்டுமென்று வீரசேனரை வேண்டிக் கொண்டான். அவரும் விவரமாகச் சொன்னார். ஆயனருடைய அபூர்வ சிற்பத் திறமையைக் குறித்தும், அவருடைய பெண்ணின் அற்புத சௌந்தரியத்தைப் பற்றியும், அவளுடைய நடனக்கலைத் திறனைப் பற்றியும் சொன்னார். நரசிம்ம சக்கரவர்த்தி, இளவரசராயிருக்கும் காலத்தில் அவருக்கும் சிவகாமிக்கும் ஏற்பட்ட தெய்வீகக் காதலைப்பற்றி லேசாகக் குறிப்பிட்டார். வடக்கேயிருந்து இராட்சதப் புலிகேசி படையெடுத்து வந்ததினால் அந்தக் காதல் தடைப்பட்டது பற்றியும், சிவகாமியைப் புலிகேசி சிறைபிடித்துச் சென்றது பற்றியும் விவரித்தார். சிவகாமியை விடுவிக்க நரசிம்மர் செய்த முயற்சிகளையும் சிவகாமியின் சபதத்தையும், அதை நரசிம்மர் நிறைவேற்றி வைத்ததையும், இவ்வளவுக்கும் பிறகு சிவகாமி தன்னுடைய காதல் பூர்த்தியாக முடியாத காதல் என்பதை உணர்ந்து நெஞ்சு உ2டைந்ததையும் பற்றிச் சொன்னார்.
கதையைக் கேட்டுக் கொண்டு வரும்போது, விக்கிரமன் பல தடவை கண்ணீர் விட்டு விட்டான். நரசிம்ம சக்கரவர்த்தியின் மேல் அவனுக்கிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவரிடம் அவனுக்கு அபிமானமே உண்டாகிவிட்டது. பார்த்திப மகாராஜாவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நினைத்துக் கொண்டு, நரசிம்மர் தன்னுடைய குலப்பகைவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். கதை முடிந்த சமயம், வெள்ளி முளைத்துவிட்டது. ஒரு நாழிகைப் பொழுதுதான் அவர்கள் தூங்க முடிந்தது. பட்சிகளின் உதயகீதத்தினால் எழுப்பப்பட்ட விக்கிரமன் கண் விழித்தபோது, முதல் நாள் இரவின் சம்பவங்கள் எல்லாம் கனவோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. சுற்றுமுற்றும் பார்த்து, "கனவல்ல; எல்லாம் உண்மைதான்" என்று நிச்சயம் பெற்றான்.
"ஐயா, தேவசேனரே! குதிரை சிரமபரிகாரம் செய்து கொண்டு சித்தமாயிருக்கிறது. நம்மைப்போல் அது இரவில் கண் விழிக்கவில்லையல்லவா? நீர் காலைக் கடன்களை முடித்ததும் உறையூருக்குக் கிளம்பலாம்" என்று ஒற்றர் தலைவனின் குரல் வெளியிலிருந்து கேட்டது. அவ்விதமே காலைக் கடன்கள் முடிந்து, கிழவி அளித்த எளிய உணவையும் உட்கொண்டபின் விக்கிரமன் வீரசேனரிடம் விடை பெற்றான். அப்போது அவன், "ஐயா! உமக்கு நான் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன். என் உயிரைக் காப்பாற்றியதற்குப் பிரதி ஒன்றும் செய்யமுடியாது. ஆனாலும் குதிரையை இலவசமாகப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. குதிரைக்கு ஈடாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கைப்பிடி இரத்தினங்களை அள்ளிக் கொடுத்தான்.
"நீர் சொல்வது தவறு, என் அருமைக் குதிரையை நான் உமக்குத் தானம் செய்யவில்லை; இரவலாகத்தான் கொடுத்திருக்கிறேன். உறையூரில் உமது காரியத்தை முடித்துக் கொண்டு இதே இடத்தில் வந்து திருப்பிக் குதிரையை ஒப்புவிக்க வேண்டும்" என்றான் ஒற்றர் தலைவன். "அப்படியே செய்கிறேன்; ஆனாலும் என்னுடைய நன்றிக்கு அறிகுறியாக இந்த இரத்தினங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றான் விக்கிரமன். வீரசேனன் அதற்கிணங்கி இரத்தினங்களைப் பெற்றுக் கொண்டான். விக்கிரமன் குதிரை மீதேறியதும், ஒற்றர் தலைவன் குதிரையைத் தட்டிக்கொடுத்து, "ஐயா! இந்தக் குதிரை அடிக்கடி உறையூருக்குப் போய்ப் பழக்கமானது. அதற்கே பாதை நன்றாகத் தெரியும். அதன் வழியே விட்டு விட்டால் உம்மைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். நீர் வழி விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்றான். குதிரை காட்டுப் பாதையில் போகத் தொடங்கியது. சிற்பியின் வீடும் ஒற்றர் தலைவனும் மறையும் வரையில் விக்கிரமன் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான். காலை வெளிச்சத்தில் அந்த ஒற்றர் தலைவனைப் பார்த்தபோது ஆஜானுபாகுவான அவனது கம்பீரத் தோற்றமும் முகப்பொலிவும் விக்கிரமனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. வெகுநேரம் வரையில் அந்தத் தோற்றம் அவனுடைய மனத்தைவிட்டு அகலவில்லை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் ஏழு
சிதறிய இரத்தினங்கள்
விக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளை பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அவனுடைய கண்களில் நீர் ததும்பிற்று. பிறகு, அங்கு வந்த கிழவியைப் பார்த்து, "அம்மா! இந்தப் பிள்ளை மறுபடியும் ஒருவேளை இங்கு வந்தானானால் அவனுக்குத் தங்குவதற்கு இடங்கொடு; ஆனால் என்னுடைய இரகசியத்தை மட்டும் உடைத்து விடாதே! மறுபடியும் ஐந்தாறு நாளில் நான் வருகிறேன்" என்றான். "அப்படியே சுவாமி" என்றாள் கிழவி. பிறகு ஒற்றர் தலைவன் அந்தச் சிற்ப மண்டபத்தின் பின்புறம் சென்றான். அங்கே விக்கிரமன் ஏறிச் சென்றது போலவே தத்ரூபமாய் இன்னொரு குதிரை இருந்தது. அதன்மேல் வெகு லாவகமாக ஏறி உட்கார்ந்து அவ்வீரன் கிளம்பினான். விக்கிரமன் போன வழியாக அவன் போகாமல் முதல் நாள் இரவு வந்த காட்டுக்கொடி வழியில் புகுந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் வழிப்பறிக்கு ஆளான இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
ஒற்றர் தலைவன் அவ்விடத்தை நெருங்கி அங்குமிங்கும் உற்றுப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. உற்றுப் பார்க்கப் பார்க்க அவனுடைய அதிசயம் அதிகமாயிற்று. ஆச்சரியத்துக்குக் காரணம் என்னவென்றால் முதல்நாள் இரவு இரத்தின வியாபாரியின் வாளுக்கும், தன்னுடைய வாளுக்கும் இரையாகி விழுந்தவர்களின் உடல்கள் அங்கே காணப்படவில்லை! அவ்விடத்தில் மிகவும் அருவருப்பான, கோரக்காட்சி ஒன்றை ஒற்றர் தலைவன் எதிர்பார்த்தான். இரவில் காட்டுமிருகங்கள் இரை தேடி அங்கு வந்திருக்குமென்றும், அவை இரை உண்ட பிறகு மிகுந்த எலும்புக் கூடுகள் சகிக்க முடியாத காட்சியாக இருக்குமென்றும் அவன் எண்ணினான். ஆனால் அங்கே அப்படியொன்றும் காணப்படவில்லை. காட்டு மிருகங்கள் எலும்பைக்கூட விழுங்கியிருக்குமா? அல்லது உடல்களை அப்படியே இழுத்துக் கொண்டு போயிருக்குமா? அப்படிப் போயிருந்தால், அந்த ஆட்களின் துணிமணிகள் வாட்கள் எல்லாம் எங்கே? - "நாம் போன பிறகு இங்கே யாரோ வந்திருக்கிறார்கள்! என்னமோ நடந்திருக்கிறது!" என்று ஒற்றர் தலைவன் எண்ணினான்.
உடனே அவன் குதிரையிலிருந்து குதித்து இன்னும் கவனமாக அங்குமிங்கும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான். சட்டென்று ஒரு பொருள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவனுடைய முகத்தில் அப்போது வியப்பு மட்டுமல்லாமல், கேள்விக்குறியும் தோன்றியது. அந்தப் பொருள் என்னவெனில், ஒரு மண்டை ஓடுதான்! நேற்று அங்கு இறந்து விழுந்தவர்களின் மண்டை ஓடாக அது இருக்க முடியாது. அது மிகப் பழமையான மண்டை ஓடு. "நேற்று நாம் போன பிறகு இங்கு வந்தவன் கபாலிகனாயிருக்க வேண்டும். அவன் கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையிலிருந்து தான் இது விழுந்திருக்க வேண்டும். அவனோ, அவர்களோதான், இங்கே செத்து விழுந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்!" என்று ஒற்றர் தலைவன் எண்ணமிட்டான்.
இன்னும் அவ்விடத்தில் அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது ஓரிடத்தில் இரத்தினங்கள் கொஞ்சம் சிதறிக் கீழே கிடப்பதைக் கண்டான். குள்ளன் இரத்தின மூட்டைகளைக் கீழே போட்ட போது, ஒரு மூட்டை அவிழ்ந்து போய்ச் சிதறி இருக்கவேண்டும். அந்த இரத்தினங்களைத் திரட்டி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஒற்றர் தலைவன் குனிந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்ச தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது! சத்தத்திலிருந்து நாலைந்து குதிரைகளாவது வருகின்றன என்று தோன்றியது. ஒற்றர் தலைவன் உடனே விரைந்து குதிரைமேல் ஏறி அதைச் செலுத்திக் கொண்டு பக்கத்திலிருந்த காட்டுக்குள் புகுந்தான். குதிரையைக் கொஞ்ச தூரத்தில் விட்டு விட்டுத் தான் மட்டும் இறங்கி வந்து சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் நன்கு மறைந்து கொண்டான். அவன் மறைவிலிருந்த போதிலும், பாதை அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது.
அந்த இடத்துக்கு வந்ததும் குதிரைகள் சடேரென்று நிறுத்தப்பட்டன. ஆறு குதிரைகள் மேல் ஆறு வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் மீது ஒற்றர் தலைவனின் பார்வை விழுந்ததும், அவனுடைய புருவங்கள் நெரிந்து ரொம்பவும் மேலே போயின. அவன் முகத்தில் அப்போது வியப்பு, அருவருப்பு, கோபம் எல்லாம் கலந்து காணப்பட்டன. அந்தத் தலைவன் வேறு யாருமில்லை; மாரப்ப பூபதிதான். வேகமாக வந்து கொண்டிருந்த குதிரையைச் சடேரென்று முதலில் நிறுத்தியவனும் மாரப்ப பூபதிதான். அவன் நிறுத்தியதைப் பார்த்துத்தான் மற்றவர்கள் சடேர், சடேரென்று தத்தம் குதிரைகளை நிறுத்தினார்கள். மாரப்ப பூபதி கீழே இறங்கினான். சற்று முன்னால் ஒற்றர் தலைவன் உற்றுப் பார்த்ததைப் போலவே அவனும் அங்குமிங்கும் பார்த்தான். முதலில் மண்டை ஓடுதான் அவனுடைய கவனத்தையும் கவர்ந்தது.
பிறகு, முதல் நாள் இரவு நடந்த வாட் போரின் அறிகுறிகளைக் கவனித்தான். ஆங்காங்கு இரத்தக் கறை இருந்ததையும் பார்த்தான். உடல்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அடையாளங்களும் தெரிந்தன. இரத்தினங்கள் அவனுடைய கண்களில் பட்டதும் அவற்றை ஆவலுடன் கைகளில் திரட்டி எடுத்துக் கொண்டான். அந்த இரத்தினங்களைப் பார்த்தபடியே கலகலவென்று சிரித்தான். தன்னுடன் வந்த மற்றவர்களைப் பார்த்து, "பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று" என்றான். இன்னும் சிறிது நேரம் அவனும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டு நின்றார்கள். பிறகு, மாரப்ப பூபதி குதிரை மேல் ஏறினான். எல்லாக் குதிரைகளும் நாலுகால் பாய்ச்சலில் புறப்பட்டன.
மாரப்பனும் அவனுடைய ஆட்களும் போன பிறகு, ஒற்றர் தலைவன் தன் குதிரை இருந்த இடம் சென்று அதன் மேல் ஏறிக்கொண்டு, நேற்றிரவு தான் வந்த வழியிலே திரும்பிச் செல்லத் தொடங்கினான். குதிரை அக்காட்டுப் பாதையின் வளைவு ஒன்றைத் தாண்டியதும் உடம்பைச் சிலிர்த்தது. ஒற்றர் தலைவன் குதிரையை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் காணப்பட்ட ஒரு சிறு பாறைக்குப் பின்புறத்தில் கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டான். காட்டுப் பாதையில் கிடந்த உடல்கள் என்னவாயின என்னும் மர்மம் வெளியாயிற்று. தானும் இரத்தின வியாபாரியும் போன பிறகு அங்கு வந்தவர்கள் அவ்வுடல்களை அப்புறப்படுத்தி இந்தப் பாறை மறைவில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாராக இருக்கும்?
அவ்விடத்தில் அதிக நேரம் நிற்காமல் ஒற்றர் தலைவன் மேலே குதிரையை விட்டுக் கொண்டு சென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் இராஜபாட்டையை அவன் அணுகினான். அவ்விடத்தில் அதே சமயத்தில் மாமல்லபுரத்திலிருந்து இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. பரிவாரங்களுக்கு மத்தியில் குந்தவி தேவியின் பல்லக்கும் வந்தது. பல்லக்கின் பக்கத்தில் ஒரு கம்பீரமான வெண்புரவி மீது நரசிம்ம சக்கரவர்த்தியின் புதல்வன் மகேந்திரன் வீற்றிருந்தான். இதையெல்லாம் தூரத்திலேயே கவனித்துக் கொண்ட ஒற்றர் தலைவன், அவ்விடத்தில், குதிரையைச் சற்று வேகமாகவே தட்டிவிட்டான். இராஜ பரிவாரங்களையோ பரிவாரங்களுக்கு மத்தியில் வந்தவர்களையோ சற்றும் பொருட்படுத்தாதவனாய் அவர்களுக்குச் சற்று முன்னதாகவே, இராஜபாட்டையில் சந்திப்பைக் கடந்து காஞ்சியை நோக்கிச் சென்றான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் எட்டு
வேஷதாரி
ஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள். குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன. மகேந்திரனுடைய தோற்றத்தில், குந்தவியின் மென்மையும் வனப்பும், நரசிம்மவர்மரின் கம்பீரமும் வீரமும் கலந்து பொலிந்தன. அண்ணனும் தங்கையும் அச்சாலையில் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. ஓர் ஆண்டு காலமாக நரசிம்மவர்மருடைய ஸ்தானத்தில் யுவராஜா மகேந்திரன் இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அப்படியிருந்தும், மேற்கூறிய குதிரை வீரன் இராஜ பரிவாரங்களைக் கண்டு ஒதுங்கி நிற்காமலும் மரியாதை செய்யாமலும் முன்னால் விரைந்து சென்றது எல்லாருக்குமே வியப்பை அளித்தது. "அண்ணா! அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா? என்ன கம்பீரமான வடிவம்! அவன் யார் தெரியுமா?" என்று குந்தவி கேட்டாள். "எனக்குத் தெரியவில்லையே, தங்காய்! அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார்! இதற்குள் எவ்வளவு தூரம் போய்விட்டது!" என்றான் மகேந்திரன். "காஞ்சிக்குத்தான் போகிறான் போல் தோன்றுகிறது.
ஒருவேளை அயல் தேசத்தானோ, என்னமோ? இல்லாவிடில், இப்படி நம்மைக் கண்டும் நிற்காமல் போக மாட்டான். நாலு நாளைக்கு முன்பு துறைமுகத்துக்கு வந்த கப்பலின் அயல்தேசத்தார் ரொம்ப பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆகையினால் தான் தெரியாத முகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன!" என்று குந்தவி சொன்னாள். "குந்தவி, செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியைப் பற்றிச் சொன்னாயே; அவன் வரவேயில்லையே?" என்றான் மகேந்திரன். "இல்லை" என்று சொன்னபோது, குந்தவியின் குரலில் மிகுந்த ஏமாற்றம் தொனித்தது. "எப்படியும் காஞ்சி அரண்மனைக்கு அவன் வராமலா போகிறான்? கண்டிப்பாக வருவான்." குந்தவி இதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லவில்லை; மௌனமாயிருந்தாள். தன்னுடைய சந்தேகம் உண்மையாயிருக்குமானால், அவன் அரண்மனைக்கு வரமாட்டான் என்று எண்ணினாள். குந்தவியின் மனக்கண்ணின் முன்னால், மூன்று வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்து வீதியில் அவள் பார்த்த சோழ ராஜகுமாரனுடைய முகமும், நேற்று மாமல்லபுரத்துத் தெருவில் சந்தித்த இரத்தின வியாபாரியின் முகமும் மாறிமாறித் தோன்றின. அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மனிதர்களா? அப்படியானால் அந்த முக ஒற்றுமை மிகவும் அதிசயமான ஒற்றுமைதான்!
குந்தவியின் மௌனத்தையும், அவளுடைய முகவாட்டத்தையும் மகேந்திரன் கவனித்தான். "தங்காய்" என்று அருமையாக அழைத்தான். "என்ன, அண்ணா!" "ஒரு மாதிரியாக இருக்கிறாயே, ஏன்?" "ஒன்றுமில்லை, அண்ணா!" "நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன், சொல்லட்டுமா?" "சொல்லு, அண்ணா!" "அப்பாவிடம் நான் சொல்லப் போகிறேன்; இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பாரத்தை அவர்தான் சுமக்க வேண்டும், என்னால் முடியாது என்று." "ஏன், அப்படிச் சொல்லுகிறாய், அண்ணா!" "அவர் இருக்கும்போது நான் இராஜ்யம் ஆளுவது, சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பூனை உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது! தேசத்தில் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்." "கிடையவே கிடையாது, அண்ணா!" "அதோடு எனக்கு வேறொரு முக்கிய காரியமும் இருக்கிறது. இன்னொரு தடவை கடற்பிரயாணம் செய்ய வேண்டும்." "இலங்கைக்கு மறுபடியும் போகப் போகிறாயா?" "இல்லை, செண்பகத்தீவுக்குப் போகப் போகிறேன்." "என்ன அண்ணா, சொல்கிறாய்?"
"ஆமாம், விக்கிரமனை மன்னிக்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்கப் போகிறேன். பிறகு செண்பகத் தீவுக்கும் நானே போய் அவனை அழைத்து வரப் போகிறேன். தங்காய்! நான் இந்த நாட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வருஷம் ஆகிறது. இதுவரையில் ஒரு தடவையாவது நீ சிரித்து நான் பார்க்கவில்லை; உன் முகத்தில் சிரிப்பைப் பார்த்து விட்டுத்தான் இனிமேல் வேறு காரியம் பார்ப்பேன்!" என்றான் மகேந்திரன். இதைச் சொல்லும்போது, அவனுடைய நாத்தழுதழுத்தது. அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. குந்தவியின் கண்களில் நீர் ததும்பப் பார்த்தது. அவள் சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "அப்பா சம்மதிக்க மாட்டார்!" என்றாள். "நான் சம்மதிக்கச் செய்கிறேன். நேற்றே அப்பாவிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இராத்திரி அவர் வரவேயில்லை. இன்று அவரை அவசியம் கேட்கப் போகிறேன்." "அப்பா சம்மதித்து நீ செண்பகத் தீவுக்குப் போனாலும் என்ன பிரயோஜனம்?" "என்ன பிரயோஜனமா? எனக்கு ஒரு மைத்துனன் கிடைப்பானல்லவா?" "அது நடக்காத காரியம், அண்ணா! அந்தக் கர்வம் பிடித்த சோழ ராஜகுமாரன், பல்லவர் குலப்பெண்ணை மணக்கச் சம்மதிக்கமாட்டான்!" என்றாள் குந்தவி.
அப்போது மகேந்திரன் கலகலவென்று சிரித்தான். "தங்காய்! எப்போதாவது உன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதுண்டா?" என்று கேட்டான். "போ, அண்ணா!" என்றாள் குந்தவி. "போகிறேன் தங்காய், போகிறேன். செண்பகத்தீவுக்குப் போய் அந்தச் சோழ ராஜகுமாரனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லாவிட்டால் நான் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் பேரன் அல்ல!" என்றான் யுவராஜா மகேந்திரன். குந்தவியும் மகேந்திரனும் காஞ்சியை அடைந்ததும், அரண்மனையில் அவரவர்களுடைய பகுதிக்குச் சென்றார்கள். குந்தவி தன்னுடைய அந்தப்புர அறைக்குள் பிரவேசித்த போது, அங்கே சக்கரவர்த்தி வந்தால் உட்காருவதற்காகப் போட்டிருந்த ஆசனத்தில் வேற்று மனுஷன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள்! அந்த வேற்று மனுஷன், காட்டுக்குறுக்குப் பாதை வழியாக வந்து இராஜபாட்டையில் தங்களைத் தாண்டிச் சென்ற வீரன்தான் என்பது நினைவுக்கு வர ஒரு நிமிஷம் பிடித்தது. இதனால் அவளுடைய ஆச்சரியம் பன்மடங்கு பெருகியதோடு கோபம் பொங்கிற்று.
"யார் ஐயா, நீர்? என்ன தைரியத்தினால் அந்தப்புரத்துக்குள் நுழைந்தீர்?" என்றாள். "தேவி! பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் நான். என் பெயர் வீரசேனன். தங்களிடம் ஒரு துப்பு விசாரிப்பதற்காக வந்தேன்!" என்று அம்மனிதன் சொன்னதும், குந்தவியின் முகத்திலிருந்த கோபம் ஒரு நொடியில் குதூகலமாக மாறியது. "அப்பா! இதென்ன வேடிக்கை?" என்று கூச்சலிட்டுக் கொண்டே குந்தவி ஓடிப்போய் ஒற்றர் தலைவனுடைய தோள்களைக் கட்டிக்கொண்டு அவனுடைய பொய் மீசையைக் களைந்தெறிந்தாள். அப்போது ஒற்றர் தலைவர் இருந்த இடத்தில் நரசிம்மவர்ம சக்கரவர்த்தி காட்சியளித்தார். "உங்களுடைய குரலைக் கொண்டுதான் அப்பா, கண்டுபிடித்தேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திராது. எப்படி அப்பா இவ்வளவு நன்றாக வேஷம் போட்டுக் கொள்கிறீர்கள்?" என்று குந்தவி கேட்டாள். "குழந்தாய்! என் தந்தை மகேந்திர சக்கரவர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளில் இதுதான் மிகவும் அருமையான வித்தை!" என்றார் சக்கரவர்த்தி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் ஒன்பது
விபத்தின் காரணம்
சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. "இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்" என்று கேட்டாள். "ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்...." என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். "இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?" என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள். "சந்தேகமில்லை. குந்தவி! நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுபேருக்கு மரணம் சம்பவித்தது!" என்று சக்கரவர்த்தி சொன்னதும் குந்தவிக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"இதென்ன, அப்பா! எனக்கு ஒன்றும் தெரியாதே!" "ஆமாம்; உனக்கு ஒன்றும் தெரியாதுதான். அயல்தேசத்திலிருந்து வந்த இரத்தின வியாபாரி ஒருவனை நீ அரண்மனைக்கு வரச் சொன்னாயா?" "ஆமாம்? சொன்னேன், அது குற்றமா?" "அவனிடம் நீ யாரென்று உண்மையைச் சொல்லாமல், குந்தவி தேவியின் தோழி என்று சொன்னதுண்டா?" "உண்மைதான்; அதனால் என்ன?" "அதனால்தான் ஆபத்து வந்தது. அந்த இரத்தின வியாபாரிக்கு நீதான் சக்கரவர்த்தியின் மகள் என்று யாரோ பிறகு சொல்லியிருக்கிறார்கள். அவன் இதில் ஏதோ அபாயம் இருக்கிறதென்று மிரண்டு போய் விட்டான். மிரண்டு அன்றிரவே உறையூருக்குக் குறுக்குக் காட்டுப் பாதை வழியாகக் கிளம்பிப் போனான்....." "உறையூருக்கா?" என்று குந்தவி கேட்ட குரலில் மிக்க ஆச்சரியம் தொனித்தது. "இல்லை, அப்பா! இரத்தின வியாபாரி காஞ்சிக்கு வராமல் உறையூருக்குப் போவானேன் என்று யோசித்தேன். அங்கே அரண்மனையில்கூட ஒருவரும் இல்லையே!" "அந்த இரத்தின வியாபாரியின் தாயார் உறையூரில் இருக்கிறாளாம். அவளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினானாம்...."
குந்தவி ஏதோ சொல்ல வாயெடுத்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு மௌனமானாள். அந்த இரத்தின வியாபாரி உண்மையில் விக்கிரமன்தானோ என்று அவள் மனத்தில் தோன்றியிருந்த சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. அந்தச் சந்தேகம் தன் தந்தைக்கும் ஒருவேளை தோன்றியிருக்குமோ என்று எண்ணினாள். தான் ஏதாவது பிசகாகப் பேசி அவருடைய மனத்தில் சந்தேகத்தை எழுப்பக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டாள். "என்ன, அம்மா! யோசனை செய்கிறாய்?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! பழைய ஞாபகங்கள் வந்தன. உறையூருக்கு முன் தடவை நாம் போயிருந்ததை நினைத்துக் கொண்டேன்... இருக்கட்டும் அப்பா! அப்புறம் அந்த இரத்தின வியாபாரியின் கதையைச் சொல்லுங்கள்" என்றாள்.
"காட்டுப் பாதையில் இரவில் போகும்போது அவனைத் திடீரென்று நாலு பேர் வளைத்துக் கொண்டு வாளால் தாக்கினார்கள். ஆனால் அந்த இரத்தின வியாபாரி லேசுப்பட்டவன் அல்ல; மூன்று பேரை அவனே தீர்த்துவிட்டான். நாலாவது ஆள் இந்த வாளுக்கு இரையானான்!" என்று சக்கரவர்த்தி தம் வாளைச் சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும், "நீங்கள் எப்படி அங்கே அந்தச் சமயம் போய்ச் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள் குந்தவி. "இல்லாவிட்டால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய முடியுமா, குழந்தாய்?" "ரொம்பத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள்! 'நரசிம்ம சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் திருட்டுப் புரட்டே கிடையாது!' என்னும் கீர்த்தி என்ன ஆயிற்று? காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இவ்வளவு சமீபத்தில் திருடர்கள் ஒரு அயல் தேசத்து வியாபாரியைத் தாக்குவது என்றால்...!"
"நானும் உன்னைப் போல்தான் அவர்கள் திருடர்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், உண்மையில் அவர்கள் திருடர்கள் இல்லை." "பின்னே யார் அவ்வளவு துணிச்சலாகக் காரியம் செய்தவர்கள்?" "திருட்டையும் வழிப்பறியையும் காட்டிலும் பயங்கரமான விஷயம் குழந்தாய்!" "என்ன, அப்பா!" "அந்த இரத்தின வியாபாரியை நன்றாய்ப் பார்த்தாயல்லவா?" "பார்த்தேன்." "அவனைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" குந்தவி மென்று விழுங்கிக் கொண்டு, "ஒன்றும் தோன்றவில்லையே!" என்றாள். "அவன் முகத்தில் இராஜ களையைக் கூடவா கவனிக்கவில்லை?" என்று சக்கரவர்த்தி கேட்டபோது குந்தவிக்கு அவர் விக்கிரமனைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தினால் உள்ளம் பதறியது. சக்கரவர்த்தி அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே, "நரபலி கொடுப்பவர்களுக்கு இந்த மாதிரி இராஜலட்சணம் பொருந்தியவன் கிடைப்பது மிகவும் அருமை!" என்றார். "ஐயோ!" என்று அலறினாள் குந்தவி. "அப்பா! நமது நாட்டில் இன்னுமா இந்தப் பயங்கரம்?" என்று கேட்டாள்.
"ஆமாம், குழந்தாய்! இந்தப் பயங்கர மூடநம்பிக்கைகளை வேரறுப்பதற்கு முயன்றுதான் வருகிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் வேரைக் களைத்தால் இன்னொரு இடத்தில் முளைத்து எழும்புகிறது." "பாவம்! அந்த சாது இரத்தின வியாபாரிக்கு இப்படிப்பட்ட ஆபத்து வந்ததே! நீங்கள் அச்சமயம் அங்கே போயிராவிட்டால் என்ன ஆகியிருக்கும்?" "அவன் அப்படியொன்றும் சாது இல்லை, குந்தவி. அவனும் ஒரு திருடன்தான்; அதனால்தான் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டான்!" என்றார் சக்கரவர்த்தி. குந்தவிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. "நிஜமாகவா, அப்பா! இந்த இரத்தினம் எல்லாம் அவன் திருடிக்கொண்டு வந்ததா?" என்று கேட்டாள். "இல்லை, குந்தவி! அவன் இரத்தினம் திருடவில்லை. வேறொரு திருட்டுத்தனம் மாமல்லபுரத்தில் செய்யப் பார்த்தான்! நமது சிற்பிகள் சிலருக்கு ஆசைகாட்டி அவன் வசிக்கும் தீவுக்கு அழைத்துக் கொண்டு போக முயன்றான். இது எப்பேர்ப்பட்ட குற்றம் தெரியுமா, குழந்தாய்! இந்தக் குற்றத்துக்குத் தண்டனை என்ன தெரியுமா?" "தெரியும் அப்பா!"
"ஆகையினால்தான் அவன் தன்னுடைய முயற்சி வெளிப்படாதிருக்கும் பொருட்டு மூட்டை தூக்குவதற்கு ஒரு ஊமைக்குள்ளனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். ஆனால் அந்தக் குள்ளன்மேல் எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவன் கபாலிகர்களின் ஆள் என்று. அது உண்மையாகிவிட்டது. குள்ளன் இரத்தின வியாபாரியை ஏமாற்றி உறையூருக்கு வழி காட்டுவதாகச் சொல்லிக் காட்டுப்பாதை வழியாக அழைத்துப் போனான். நான் மட்டும் சரியான சமயத்தில் போய்ச் சேர்ந்திராவிட்டால்....?" சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். "அப்புறம் என்ன நடந்தது; அப்பா! இரத்தின வியாபாரி இப்போது எங்கே?" "சக்கரவர்த்தி, பின்னர் நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லி அவனைத் தம்முடைய குதிரை மீதே உறையூருக்கு அனுப்பி வைத்ததையும் தெரிவித்தார். குந்தவி சற்றுப் பொறுத்து, "இரத்தின வியாபாரி தங்களை இன்னாரென்று தெரிந்து கொண்டானா?" என்று கேட்டாள். "அவனுக்குத் தெரியாது. ஏன் கேட்கிறாய்?" என்றார் சக்கரவர்த்தி. "ஒன்றுமில்லை; வேஷம் எவ்வளவு தூரம் பலித்தது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்." பிறகு குந்தவி, "அப்பா! ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றிருந்தேன்" என்றாள்.
"என்ன அம்மா!" "அண்ணா உறையூரே பார்த்ததில்லையல்லவா? நானும் அவனும் உறையூருக்குப் போக எண்ணியிருக்கிறோம்." "ஆகா! ஆனந்தமாய்ப் போய்விட்டு வாருங்கள். உறையூர் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் மாரப்ப பூபதியைப் பார்த்தேன். அவன் எங்கே வந்தான்? உனக்கு ஏதாவது தெரியுமா?" "தெரியும், மாரப்ப பூபதியை நானும் அண்ணாவும் தான் வரச் சொல்லியிருந்தோம்..." "என்னத்திற்காக?" என்று சக்கரவர்த்தி அதிசயத்துடன் கேட்டார். "அச்சுதவர்மர் தமக்குத் தேகம் மெலிந்துவிட்டதென்றும், இராஜ்ய காரியங்களைக் கவனிக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார். அதன்மேல் அண்ணா மாரப்ப பூபதியை வரவழைத்து அவனுக்குச் சோழ நாட்டின் சேனாதிபதி பதவியைத் திரும்பவும் கொடுத்திருக்கிறான்." "ஓகோ!" என்றார் சக்கரவர்த்தி மறுபடியும் அவர் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு அவருடன் பேசுவதில் பயனில்லையென்று, குந்தவி யாழை எடுத்துச் சோகம் பொருந்திய இசையை எழுப்பலானாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பத்து
காட்டாற்று வெள்ளம்
சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?" மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அற்புத சிற்பக் கனவுகளைப் போல் தோன்றி வளர்ந்து வந்தன.
ஒருபுறம் இப்படிப்பட்ட அன்பு - மதங்கள் பெரும்பாலான ஜனங்களிடையே பரவி வருகையில், மிகச் சிலரான மக்களிடையே நரபலியைத் தூண்டும் பயங்கரமான கபாலிகம், சாக்தம், பைரவம் என்னும் மதங்கள் எப்படியோ இரகசியமாக வேரூன்றி வந்தன. இந்த மதங்களை ஆரம்பித்தவர்கள் மிதமிஞ்சிய மூடபக்தியை வளர்த்தார்கள். மூடபக்தி காரணமாக அவர்கள் காளிக்கோயில்களிலும், துர்க்கைக் கோயில்களிலும் தங்களுடைய சிரங்களைத் தாங்களே அநாயாசமாக வெட்டி எறிந்து கொண்டார்கள்! இப்படித் தங்களைத் தாங்களே பலிக்கொடுத்துக் கொள்வதால் அடுத்த ஜன்மத்தில் மகத்தான பலன்களை அடையலாமென்று நம்பினார்கள். இம்மாதிரி நம்பிக்கைகளை வளர்ப்பதற்குப் பூசாரிகளும் இருந்தார்கள். ஆங்காங்கு அடர்ந்த காடுகளிலும், மனிதர்கள் எளிதில் புகமுடியாத மலைப் பிராந்தியங்களிலும் காளி கோயில்களையும், துர்க்கைக் கோயில்களையும் இவர்கள் நிறுவினார்கள்.
மகேந்திர பல்லவரின் காலத்தில் வடக்கே வாதாபியிலிருந்து புலிகேசி என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது, அவனுடைய சைன்யங்களுடனே மேற்கூறிய பயங்கர மதங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. பிறகு, புலிகேசி திரும்பிப் போன அடியோடு ஒரு முறையும், நரசிம்ம பல்லவர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்ற காலத்தில் ஒரு முறையும், தமிழகத்தில் கொடும் பஞ்சங்கள் தோன்றி ஜனங்களை வருத்தின. இந்தக் காலங்களில் மேற்கூறிய நரபலி மதங்கள் அதிகமாக வளர்ந்தன. இந்த மூட மதங்களை வேரோடு களைவதற்கு நரசிம்ம சக்கரவர்த்தி பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். குருட்டு மத நம்பிக்கையை ஒழிப்பதற்குத் தண்டோ பாயம் மட்டும் பயன்படாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தங்களுடைய கழுத்தைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் சித்தமாயிருப்பவர்களை எந்த விதத்தில் தண்டிக்க முடியும்? ஆகையால்தான் அவர் சென்ற இரண்டு வருஷமாகத் தமது மூத்த குமாரனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டுத் தாம் மாறுவேடம் பூண்டு, நாடெங்கும் சஞ்சரித்து, மேற்படி மதங்கள் எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன, எங்கெங்கே அந்த மதங்களுக்கு வேர் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனாலேதான் விக்கிரமனுக்கு நேர்வதற்கிருந்த பேராபத்திலிருந்து அவனைச் சக்கரவர்த்தி காப்பாற்றுவதும் சாத்தியமாயிற்று.
ஆனால், விக்கிரமனோ தனக்கு நேர இருந்த அபாயம் எப்படிப்பட்டதென்பதை அறிந்து கொள்ளவில்லை. தன்னைத் திருடர்கள் தாக்கியதாகவே அவன் எண்ணியிருந்தான். ஒற்றர் தலைவனிடம் விடைபெற்று அவனுடைய குதிரைமீது ஏறிச் சென்ற விக்கிரமனுடைய உள்ளத்தில் பல விதமான எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய உள்ளத்தில் முதன்மையாக இருந்தது. ஒற்றர் தலைவனின் உயர்ந்த ஜாதிக் குதிரை எவ்வளவோ விரைவாகச் சென்றும், அவனுடைய உள்ளத்தின் வேகம் காரணமாக, "குதிரை இன்னும் வேகமாய்ப் போகக் கூடாதா?" என்று தோன்றியது. பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா? ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னை அகப்படுத்துவதற்காக இப்படி குதிரையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறானோ?
பின்னும், ஒற்றர் தலைவன் கூறிய நரசிம்ம சக்கரவர்த்தியின் இளம் பிராயத்துக் காதற் கதை அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது. காட்டின் மத்தியில் இருந்த சிற்பியின் வீட்டில், சிவகாமி நடனமாடுவதும், அதைப் பார்த்துப் பார்த்துச் சிற்பி சிலை அமைப்பதும், இதையெல்லாம் நரசிம்மவர்மர் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பதுமான மானசீகக் காட்சியில் அவன் அடிக்கடி தன்னை மறந்தான். இவ்வளவுக்கும் நடுவில், பல்லக்கில் இருந்தபடி தன்னை ஆர்வம் ததும்பிய பெரிய கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்த பெண்ணின் பொன்னொளிர் முகமும் அவன் மனக்கண் முன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகு ததும்பும் முகத்தையுடையவளின் நெஞ்சில் வஞ்சனை இருக்க முடியுமா?- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார்? சக்கரவர்த்தியின் மகளா? அல்லது தோழிப் பெண்ணா?
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும் இடையிடையே ஊர் கண்ட இடங்களில் இது சரியான வழிதானா என்று கேட்டுக் கொண்டும் விக்கிரமன் போய்க் கொண்டிருந்தான். ஒற்றர் தலைவன் கூறியபடியே குதிரை தானாகவே சரியான உறையூர்ப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த வியப்புடன் மகிழ்ச்சியும் அளித்தது. இதனால் ஒற்றர் தலைவனிடம் அவனுடைய நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாயின. அவன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பதை நினைத்து, இரவிலே பிரயாணம் செய்யக்கூடாதென்றும், இருட்டுகிற சமயத்தில் ஏதேனும் ஒரு கிராமத்துச் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டே சென்றான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாகவே அவனுடைய பிரயாணத்துக்கு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டு விட்டது.
திடீரென்று கிழக்கே வானம் கருத்தது. கருமேகங்கள் குமுறிக் கொண்டு மேலே வந்தன. குளிர்ந்த காற்று புழுதியை அள்ளி வீசிக் கொண்டு அடித்தது. தூரத்தில் மழை பெய்து தரை நனைந்ததினால் கிளம்பிய மணம் பரவி வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழையே வந்துவிட்டது. அற்பசொற்பமாக வரவில்லை; இடியும் மின்னலுமாய் நாலு புறமும் இருண்டு கொண்டு வந்து 'சோ' என்று சோனாமாரியாகப் பொழிந்தது. வானம் திடீரென்று பொத்துக் கொண்டு வெகுநாள் தேக்கி வைத்திருந்த ஜலத்தையெல்லாம் தொபதொபவென்று பூமியில் கொட்டுவது போலிருந்தது. சொட்ட நனைந்து குளிரால் நடுங்கிய விக்கிரமன் ஒரு மரத்தடியில் சற்று நேரம் ஒதுங்கி நின்று பார்த்தான். மழை நிற்கும் வழியாயில்லை. நேரமாக ஆக இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கன மழையோடு இரவின் அந்தகாரம் சேர்ந்து விட்டால் கேட்கவேண்டியதில்லை. எனவே எப்படியாவது மேலே போக வேண்டியதுதான் என்றும் கிராமம் அல்லது கோவில் ஏதாவது தென்பட்டதும் அங்கே தங்கி விடலாமென்றும் எண்ணி விக்கிரமன் குதிரையை மேலே செலுத்தினான்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. பார்க்கும்போது தண்ணீர் முழங்காலளவுதான் இருக்குமென்று தோன்றியது. காட்டாற்றில் மளமளவென்று வெள்ளம் பெருகிவிடுமாதலால் சீக்கிரம் அதைத் தாண்டி விடுவதே நல்லது என்று நினைத்து விக்கிரமன் குதிரையை ஆற்றில் இறக்கினான். கொஞ்ச தூரம் போனதும், பிரவாகத்தின் வேகம் அதிகரித்தது. குதிரை வெள்ளத்தின் குறுக்கே போக முடியாமல் நீரோட்டத்துடன் போக தொடங்கியது. பிரவாகமோ நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகிக் கொண்டிருந்தது. முன்னால் போகலாமா பின்னால் திரும்பிக் கரையேறி விடலாமா என்று விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, குதிரை பிரவாகத்தில் நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிக் குதிரைக்கும் ஆபத்து என்று எண்ணமிட்டவனாய் விக்கிரமன் வெள்ளத்தில் பாய்ந்தான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினொன்று
பழகிய குரல்
குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான். சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. "ஐயோ! அது வெள்ளத்தில் போயிருக்குமே?" என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்ல வேளை! குதிரையாவது பிழைத்ததே!" என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் 'ஓ' வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்! தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே!
அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, "அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்" என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! - அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா! திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், "என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா!" என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? - ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?
விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது... அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்... ஐயோ! மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை.... விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?... இது என்ன பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?.... இது என்ன வீண் பிரமை?... அம்மா! அம்மா!..." விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.
விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், - "மகாராஜா" என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா? கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. "பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?" என்றான் விக்கிரமன். "மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா? அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்... உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! - ஆகா! வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்..."
ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது. விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் - அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?" என்றான்.
"எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா....!" அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. "பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- 'இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?" என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!" என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.
"பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்... இல்லை! இல்லை! காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்... இருக்கட்டும், பொன்னா! என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! - மகாராணி சௌக்கியமா?" என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன்.
மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். "ஐயோ, பொன்னா! என்ன விபத்து நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா" என்று பதைபதைப்புடன் கேட்டான். அப்போது பொன்னன், "இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை...." என்றான். விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது! "அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?..." "மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது." இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பன்னிரண்டு
சூரிய கிரகணம்
விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர் வழங்கி வந்தது. மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.
பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக் கூறினான்:- விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன் புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது. இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப் பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள். காஞ்சி நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்ழூகெல்லாம் அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று சூரிய கிரகணம் - சம்பூர்ண கிரகணம் - பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும், அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். புண்ணிய தினத்தன்று காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள். சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக் கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப் பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும், இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின் மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச் சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.
இப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன், சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன. பட்டப் பகலில், மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான் அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.
வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி பொன்னனிடம், "எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!" என்றாள். "இவ்வளவுதானா உன் தைரியம்?" என்று பொன்னன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது. ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத் திறந்தாள். 'குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!" என்று கூவினாள். ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.
பொன்னனும், வள்ளியும் 'ஓ'வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த பரஞ்சோதி அடிகள், "என்ன? என்ன?" என்றார். பொன்னன், "ஐயோ! மகாராணி அலையில் போய்விட்டாரே!" என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும் வள்ளியையும் நோக்கி, "நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!" என்றார். அச்சமயத்தில் சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் "அப்பா!" "அம்மா!" "மகனே!" என்ற கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், "ஹரஹர" "சம்போ" என்னும் கோஷங்களும் எழுந்தன. அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக் கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதிமூன்று
கபால பைரவர்
அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும் விஷயம் தன் தாயின் நினைவுக்கு வந்து அதன் பயனாகத்தான் அப்படி அவள் வெறிகொண்டு பாய்ந்திருக்க வேண்டும் என்று விக்கிரமன் எண்ணினான். பொன்னன், தானும் பரஞ்சோதி அடிகளும் தேவியைத் தேடியதைப் பற்றிச் சொல்லி வந்தபோது விக்கிரமன், "பொன்னா! சீக்கிரம் சொல்லேன்? மகாராணி அகப்பட்டாரா?" என்று கதறினான். "இல்லையே, மகாராஜா! அகப்படத்தானே இல்லை! அப்புறம் மகாராணியைத் தரிசிப்பதற்கு இந்தப் பாழும் கண்கள் கொடுத்து வைக்கவில்லையே!" என்று பொன்னனும் கண்ணீர் விட்டான். "பின்னே மகாராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சற்று முன்பு சொன்னாயே? எனக்கு ஆறுதலுக்காகச் சொன்னாயா? - ஐயோ! இந்தச் செய்தியைக் கேட்கவா நான் கப்பலேறி கடல் கடந்து வந்தேன்!" என்று விக்கிரமன் புலம்பினான். அப்போது பொன்னன், "பொறுங்கள் மகாராஜா! குறையையும் கேளுங்கள். மகாராணி உயிரோடுதான் இருக்கிறார்; சந்தேகமில்லை, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வந்துவிட்டீர்கள், இனிமேல் என்ன கவலை?" என்றான் பொன்னன்.
பிறகு நடந்த சம்பவங்களையும் தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறலுற்றான். அலைகளுக்கு மத்தியில் அடர்ந்த இருளில் பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியை வெகுநேரம் தேடினார்கள். மகாராணி அகப்படவில்லை. "பொன்னா! தேவியைச் சமுத்திரராஜன் கொண்டு போய் விட்டான்!" என்று பரஞ்சோதி அடிகள் துக்கம் ததும்பும் குரலில் கூறினார். பொன்னன் 'ஓ' என்று அழுதான். இனிமேல் ஒருவேளை அகப்பட்டாலும் உயிரற்ற உடல்தான் அகப்படுமென்று இரண்டு பேருடைய மனத்திலும் பட்டுவிட்டது. உயிரற்ற உடலை அலைகளே கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். இனியும் தேடுவதில் ஒரு உபயோகமுமில்லை. இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு இரண்டு பேரும் கரை ஏறினார்கள். அவர்கள் கரைக்கு வந்த சமயத்தில் கிரகணம் விட ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தகாரத்தை அகற்றிக் கொண்டு சூரியனுடைய ஒளி நாலாதிக்குகளிலும் ஸ்தாபித்து வந்தது. மாரிக்காலத்து மாலை வேளையைப்போல் தோன்றிய அச்சமயத்தில், பரஞ்சோதியாரும் பொன்னனும் கரையேறியபோது அங்கே வெடவெடவென்று குளிரில் நடுங்கிக் கொண்டு நின்ற பரஞ்சோதியாரின் பத்தினியும் வள்ளியும், "வாருங்கள்! சீக்கிரம் வாருங்கள்!" என்று கூவினார்கள்.
அவர்கள் விரைவில் அருகில் நெருங்கியதும், யாரோ ஒரு ஒற்றைக் கை மனிதன் அப்போதுதான் கடலிலிருந்து கரையேறியதாகவும், அவன் அந்த ஒற்றைக் கையினால் ஒரு ஸ்திரீயைக் தூக்கிக் கொண்டு போனதாகவும், மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அருள்மொழி ராணி மாதிரி இருந்ததென்றும், தாங்கள் கையைத்தட்டிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மனிதன் ஜனக் கூட்டத்தில் சட்டென்று மறைந்து போய்விட்டதாகவும் சொன்னார்கள். ஒரே படபடப்புடன் பேசிய அவர்களிடமிருந்து மேற்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே சற்று நேரம் ஆகிவிட்டது. முன்னால் அலைகடலில் அருள்மொழி ராணியைத் தேடிய பொன்னனும் பரஞ்சோதியாரும் இப்போது மறுபடியும் ஜனசமுத்திரத்தில் ராணியைத் தேடத் தொடங்கினார்கள், இதுவும் நிஷ்பலனே ஆயிற்று. மாநிலத்திலுள்ள மாந்தர் யாவரும் திரண்டு வந்திருந்தது போல் தோன்றிய அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் ஒற்றைக் கை மனிதனையும் அவர்கள் காணவில்லை! அவன் ஒரு கையினால் தூக்கிச் சென்ற அருள் மொழி ராணியையும் காணவில்லை. எவ்வளவோ தேடியும் அகப்படாமற் போகவே, திருவெண்காட்டு நங்கையும் வள்ளியும் பார்த்ததாகச் சொன்னதிலேயே அவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. அது ஒரு வேளை அவர்களுடைய பிரமையாயிருக்கலாமென்று நினைத்தார்கள். ஆனால், அம் மூதாட்டியும் வள்ளியுமோ தாங்கள் நிச்சயமாய்ப் பார்த்ததாக ஆணையிட்டுக் கூறினார்கள்.
மற்கண்ட வரலாற்றைச் சொல்லி முடித்தபிறகு அருள்மொழி ராணி இன்னும் உயிரோடுதானிருக்கிறார் என்று தான் நம்புவதற்குக் காரணம் என்னவென்பதையும் பொன்னன் கூறினான். வள்ளியும் அவனும் சில தினங்கள் வரையில் திருச்செங்காட்டாங்குடியிலிருந்து விட்டு, அருள்மொழி ராணியைப் பற்றிய மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமலே திரும்பி உறையூர் சென்றார்கள். அங்கே போய்ச் சில நாளைக்கெல்லாம் சிவனடியார் வந்து சேர்ந்தார். மகாராணியைப் பற்றிய வரலாற்றைக் கேட்டு அவர் பெருந்துயரம் அடைந்தார். ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய விவரம் அவருக்குப் பெரும் வியப்பையளித்தது. வள்ளியைத் திரும்பத் திரும்ப அவளுக்கு ஞாபகம் இருக்கும் விவரத்தையெல்லாம் சொல்லும்படி கேட்டார். கடைசியில் அவர், "பொன்னா! வள்ளி சொல்லுவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. ராணியை ஒற்றைக் கை மனிதன்தான் கொண்டு போயிருக்கிறான். ராணி உயிருடன் இருக்கிறாள் என்பதிலும் சந்தேகமில்லை. அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றார். பிறகு அவர், "அந்த ஒற்றைக் கை மனிதன் யார், தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாதே சுவாமி!" என்று பொன்னன் சொன்னபோது சிவனடியார், "அவன்தான் கபாலருத்திர பைரவன், கபாலிக மதக் கூட்டத்தின் தலைமைப்பூசாரி. தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை அவன் பரப்பிக் கொண்டு வருகிறான். அதைத் தடுப்பதற்குத்தான் நான் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வருகிறேன். எங்கேயோ ஒரு இரகசியமான இடத்தில் அவன் ரணபத்திர காளி கோயில் கட்டியிருக்கிறானாம். அந்த இடத்தைக் கண்டு பிடித்தோமானால், அங்கே அநேகமாக நமது ராணியைக் காணலாம்" என்றார்.
இதைக் கேட்டுப் பொன்னன் நடுநடுங்கிப் போனான். "ஐயோ! மகாராணியை ஒரு வேளை காளிக்குப் பலி கொடுத்திருந்தால்...." என்று அலறினான். "இல்லை பொன்னா, இல்லை! கேவலம் ஒரு பலிக்காகக் கபால பைரவன் இவ்வளவு சிரமம் உள்ள ஒரு காரியத்தில் தலையிட்டிருக்க மாட்டான். வேறு ஏதோ முக்கிய அந்தரங்க நோக்கம் இருக்கிறது. ஆகையால், ராணியை உயிரோடு பத்திரமாய் வைத்திருப்பான். ரணபத்திர காளி கோயில் இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்' என்றார் சிவனடியார். இதன்மேல் பல்லவ, சோழநாடுகளைப் பொன்னனும் சிவனடியாரும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதியை ஒவ்வொருவர் தேடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பொன்னன் வள்ளியைத் தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிட்டு, சோழநாடு முழுவதும் தேடி அலைந்தான். பிறகு, காவேரியின் அக்கரைக்கு வந்து தேடத் தொடங்கினான்.
மாதக் கணக்காகத் தேடி அலைந்ததற்குக் கடைசியாக நாலு நாளைக்கு முன்புதான் பலன் கிடைத்தது. அந்தக் காட்டாற்றின் கரையோடு பொன்னன் மேற்கே மூன்று, நாலு காத தூரம் போன பிறகு ஒரு பெரிய மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த மலை அடிவாரத்தில் வெகுதூரம் அடர்த்தியான காடு சூழ்ந்திருந்தது. அவன் வழி பிடித்துக் கொண்டு வந்த காட்டாறானது அந்த மலை உச்சியிலிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டுமென்றும், அந்த மலை கொல்லி மலையின் ஒரு பகுதியாயிருக்கலாமென்றும் பொன்னன் ஊகித்தான். அந்த வனப்பிரதேசத்தைப் பார்த்தவுடனேயே, இதற்குள் எங்கேயாவது ரணபத்திர காளியின் கோயில் இருக்க வேண்டுமென்று பொன்னனுக்குத் தோன்றியது. அந்த மலைக்கு உட்புறத்தில் காட்டுமிராண்டி ஜனங்கள் வசிப்பதாகப் பொன்னன் கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் சில சமயம் மலைக்கு வெளியில் வந்து நரபலி கொடுப்பதற்காக மனிதர்களைக் கொண்டு போவதுண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, பொன்னன் அந்த வனப் பிரதேசத்தில் நாலாபுறத்திலும் தேடி அலைய ஆரம்பித்தான். ஆனால், எந்தப் பக்கத்திலும் அதிக தூரம் காட்டுக்குள் புகுந்து போவதற்குச் சாத்தியப்படவில்லை.
கடைசியாக, காட்டாறு பெருகி வந்த வழியைப் பிடித்துக் கொண்டு போனான். போகப் போக ஆறானது குறுகி சிறு அருவியாயிற்று. அந்த அருவியின் வழியாக மலைமேல் ஏறிச் செல்வது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. சில இடங்களில் பெரிய பெரிய பாறைகள் கிடந்தன. சில இடங்களில் ஆழமான மடுக்கள் இருந்தன. இன்னும் சில இடங்களில் முள் மரங்கள் அடர்த்தியாகப் படர்ந்து, புகுந்து போக முடியாமல் செய்தன. வேறு சில இடங்களில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டியதாயிருந்தது. பொன்னன் இதற்கெல்லாம் சிறிதும் சளைக்காமல் ஏறிச் சென்று கொண்டிருந்தான். காலையிலிருந்து மத்தியானம் வரையில் இவ்விதம் ஏறி மிகவும் களைத்துப்போன பொன்னன் கடைசியாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்தான். "இனிமேல் இறங்கிப் போக வேண்டியதுதான்; வேறு வழியில்லை. இராத்திரியில் இந்த வனப் பிரதேசத்துக்குள் அகப்பட்டுக் கொண்டால் காட்டு மிருகங்களுக்கு இரையாக நேரலாம்" என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மனிதப் பேச்சுக் குரல் கேட்டது. அந்த நிர்மானுஷ்யமான காட்டில் மனிதக் குரலைத் திடீரென்று கேட்டதில் பொன்னனுக்கு ஒரு பக்கம் திகிலுண்டாயிற்று. இன்னொரு பக்கத்தில் ஒருவேளை நாம் தேடிவந்த காரியம் சித்தியாகப் போகிறதோ என்ற எண்ணத்தினால் ஆவலும் பரபரப்பும் அளவில்லாமல் பொங்கின. எதற்கும் ஜாக்கிரதையாயிருக்கலாம் என்று பொன்னன் பக்கத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாறைக்குக் கீழே சரேலென்று ஒளிந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் மேலேயிருந்து இரண்டு மனிதர்கள் இறங்கி வருவது தெரிந்தது. ஆனால் எப்பேர்ப்பட்ட மனிதர்கள்? அவர்கள் மனிதர்கள்தானா? ஒருவன் மனிதன்தான், சந்தேகமில்லை. ஆனால், அவ்வளவு பயங்கரத் தோற்றம் கொண்ட மனிதனை அதற்கு முன்னால் பொன்னன் பார்த்ததேயில்லை. அவனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தை அளித்தவை முக்கியமாக அவனுடைய உருட்டி விழிக்கும் பார்வையுடைய சிவந்த கண்கள்தான். இன்னும், அவனது உயர்ந்து வளர்ந்த உடலின் ஆகிருதி, நீண்ட பெரிய மீசை, தலையில் அடர்த்தியாக வளர்ந்து சுருட்டை சுருட்டையாகத் தொங்கிய செம்பட்டை மயிர், நெற்றியில் அப்பியிருந்த செஞ்சந்தனம், அதன் மத்தியில் இரத்தச் சிவப்பான குங்குமப் பொட்டு - இவையெல்லாம் அவனுடைய தோற்றத்தின் பயங்கரத்தை அதிகமாக்கின. அவன் ஒரு கரிய கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்தான். ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டியபோது அந்தப் போர்வை நழுவிற்று. அப்போது பொன்னன் "ஹோ!" என்று கதறி விட்டிருப்பான். ஆனால், பயத்தினாலேயே அவனுடைய தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. பொன்னனுக்கு அவ்வளவு ஆச்சரியத்தையும், பயத்தையும் உண்டாக்கிய காட்சி என்னவென்றால், அந்த மனிதனுக்கு ஒரு கை இல்லாமலிருந்தது தான்! அதாவது வலது தோளுக்குக் கீழே முழங்கைக்கு மேலே அவனுடைய கை துண்டிக்கப்பட்டு முண்டமாக நின்றது.
"அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்றதாக வள்ளியும் திருவெண்காட்டு அம்மையும் கூறியவன் இவன்தான்! 'கபால ருத்திர பைரவன்" என்று சிவனடியார் கூறியவனும் இவன்தான்!" என்று பொன்னனுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. கபால பைரவனின் தோற்றம் மட்டுமல்ல, அவனுடன் இருந்த இன்னொரு மனிதனின் தோற்றமும் பொன்னனுக்குத் திகைப்பை அளித்தது. ஆமாம்; அவனும் மனிதன்தான் என்பது அருகில் வந்தபோது தெரிந்தது. ஆனால், அவன் விபரீதமான குள்ள வடிவமுள்ள மனிதன். பத்து வயதுப் பையனின் உயரத்துடன், நாற்பது வயது மனிதனின் முதிர்ந்த முகமுடையவனாயிருந்தான். அவ்வளவு குள்ளனாயிருந்தும் அவன் கபால பைரவனைப் பின்பற்றி அந்த மலைப் பாறைகளில் அதிவிரைவாகத் தாவித் தாவிச் சென்றது, பொன்னனுடைய வியப்புடன் கலந்த திகிலை அதிகரிப்பதாயிருந்தது. பொன்னன் கூறிய வரலாற்றில் மேற்கண்ட இடத்துக்கு வந்ததும், விக்கிரமனும் அளவில்லாத ஆவலைக் காட்டினான். அந்தக் குள்ளனை நன்றாக விவரிக்கும்படி சொன்னான். பொன்னன் அவ்விதமே விவரித்துவிட்டு, "மகாராஜா! என்ன விசேஷம்? இம்மாதிரி யாரையாவது நீங்கள் வழியில் பார்த்தீர்களா, என்ன?" என்று கேட்டதற்கு, விக்கிரமன், ஆமாம்; பொன்னா, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். உன்னுடைய வரலாற்றைச் சொல்லிமுடி" என்றான்.
"இனிமேல் அதிகம் ஒன்றுமில்லை மகாராஜா! அருவிப் பாதையில் அவர்கள் இருவரும் வெகுதூரம் இறங்கிப் போய்விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு நான் மேலே வந்தேன். அவர்கள் இருப்பிடத்தையும் காளி கோயிலையும் கண்டுபிடித்து விடலாம்; ஒருவேளை மகாராணியையே பார்த்தாலும் பார்த்துவிடுவோம் என்ற ஆசையுடன் அந்த அருவிப்பாதையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினேன். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் என் ஆசை பாழாகிவிட்டது. ஏனென்றால், மேலே கொஞ்ச தூரம் போனதும் அருவியானது மூன்று ஆள் உயரத்திலிருந்து செங்குத்தாக விழுந்தது. பாறையும் அங்கே செங்குத்தாக இருந்தது. அவ்விடத்தில் பாறையின் மேலே ஏறுவதோ, மேலே இருந்து கீழே இறங்குவதோ மனிதர்களால் முடியாத காரியம். அப்படியானால் இவர்கள் எப்படி வந்தார்கள்? மேலேயிருந்து யாராவது கயிறு அல்லது நூலேணி தொங்கவிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்துக்கும் நான் ஒளிந்திருந்த இடத்துக்கும் மத்தியில் எங்கேயாவது இரகசிய வழி இருக்கவேண்டும். ஆனமட்டும் தேடிப் பார்த்தேன் மகாராஜா, பிரயோஜனப்படவில்லை. எப்படியும் போனவர்கள் திரும்பி வருவார்களென்று நினைத்து, மலை அடிவாரத்துக்கு வந்து மூன்று தினங்கள் காத்திருந்தேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. அதன்மேல் சிவனடியாரிடம் தெரிவித்து யோசனை கேட்கலாமென்று கிளம்பி வந்தேன். நல்ல சமயத்திலே வந்தேன் மகாராஜா!" என்று பொன்னன் முடித்தான்.
"ஆமாம்.... நல்ல சமயத்தில்தான் வந்தாய், பொன்னா! இல்லாவிட்டால் இத்தனை நேரம் நான் ஒரு வேளை என் தந்தையிருக்குமிடம் போய்ச் சேர்ந்திருப்பேன்" என்றான் விக்கிரமன். "எனக்கும் ஒருவேளை அந்தக் கதிதான் நேர்ந்திருக்கும், மகாராஜா! எப்படிப் பெருகி வந்தது பெருவெள்ளம், அவ்வளவும் அந்த மலையிலிருந்துதானே வந்திருக்கிறது? மழை பிடித்தபோது அங்கே நான் அகப்பட்டுக் கொண்டிருந்தேனேயானால்... தங்களை எங்கே பார்த்திருக்கப் போகிறேன்! மகாராணியைத்தான் எப்படித் தேடப் போகிறேன்?" "மகாராணி அந்த மலையில் இருக்கிறார் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா பொன்னா?" என்று கேட்டான் விக்கிரமன். "ஆமாம், மகாராஜா! முன்னே, சிவனடியார் சொன்னபோதுகூட எனக்கு அவ்வளவு நம்பிக்கைப்படவில்லை. ஆனால் அந்த ஒற்றைக்கை பைரவனைப் பார்த்த பிறகு, நிச்சயமாக மகாராணி பிழைத்துத்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டாகிறது." "எப்படியோ என் உள்ளத்திலும் அந்த நம்பிக்கை இருக்கிறது; பொன்னா! என்னைப் பார்க்காமல் அம்மா இறந்து போயிருப்பார் என்று என்னால் நினைக்க முடியவேயில்லை. சென்ற ஆறுமாதமாக மகாராணி என் கனவில் அடிக்கடி தோன்றி வருகிறார். தை அமாவாசையன்று என் பெயரைக் கூவிக்கொண்டு கடலில் பாய்ந்ததாகச் சொன்னாயே, கிட்டத்தட்ட அந்த நாளிலிருந்துதான் அடிக்கடி அவர் கனவில் வந்து என்னை அழைக்கிறார். அவர் உயிரோடுதானிருக்க வேண்டும். ஐயோ, இந்த நிமிஷத்தில் கூட, அவர் என்னைக் கூவி அழைக்கிறார் பொன்னா! அம்மா! அம்மா!" என்று அலறினான் விக்கிரமன். அப்போது பொன்னன் சட்டென்று விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "மகாராஜா! பொறுங்கள்!" என்றான். பிறகு, "அதோ கேளுங்கள், ஏதோ சத்தம் கேட்கிறது, மனிதக்குரல்!" என்று காதோடு கூறினான். உண்மையிலேயே அந்த இருண்ட மண்டபத்துக்கு வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினான்கு
காளியின் தாகம்
பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு மின்னல் மின்னிற்று. மின்னலில் அந்த இருவருடைய முகத்தையும் பார்த்ததும், பொன்னனுடைய உடம்பெல்லாம் ஒரு தடவை பதறிற்று. வந்தவர்களில் ஒருவன் மாரப்ப பூபதி; இன்னொருவன்...ஆம், கபால ருத்ர பைரவன்தான்! அவர்களை அவ்விதம் திடீரென்று பார்த்த பேரதிர்ச்சியை ஒருவாறு பொன்னன் சமாளித்துக் கொண்டு விக்கிரமன் இருந்த இடத்தின் அருகில் சென்று அவரைத் தொட்டு மெல்லிய குரலில், "மகாராஜா!" என்றான். விக்கிரமன், "இதென்ன, பொன்னா? ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்பதற்குள், பொன்னன் விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "இரைய வேண்டாம்! பெரிய அபாயம் வந்திருக்கிறது; எதற்கும் சித்தமாயிருங்கள்!" என்று காதோடு சொன்னான். விக்கிரமன் இடுப்பைத் தடவிப் பார்த்து, "ஐயோ! வாள் ஆற்றோடு போய்விட்டதே!" என்று முணுமுணுத்தான். வந்தவர்கள் இருவரும் அந்த மண்டபத்தின் வாசல் திண்ணையில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். அவர்களுடைய பேச்சு உள்ளே இருந்தவர்களின் காதில் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் அரைகுறையாகவும் விழுந்தது.
அவர்களில் ஒருவனுடைய குரலைச் சட்டென்று விக்கிரமனும் தெரிந்து கொண்டான். திடுக்கிட்டு அவன் எழுந்திருக்கப் போனபோது பொன்னன் அவனைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது. "மகாப் பிரபோ! காளிமாதா எனக்கு இன்னும் என்ன ஆக்ஞாபித்திருக்கிறாள்? கிருபை கூர்ந்து சொல்ல வேண்டும்" என்றது மாரப்பனின் குரல். இதற்குப் பதில் கூறிய குரலானது கேட்கும்போதே மயிர்க் கூச்சல் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ஒருவேளை பேய், பிசாசுகள் பேசுமானால் இப்படித்தான் அவற்றின் குரல் இருக்கும் என்று எண்ணும்படியிருந்தது. "மாதா உனக்கு இன்னும் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள். உன்னிடம் இன்னும் பெரிய பெரிய காரியங்களையும் எதிர்பார்க்கிறாள். அன்னைக்கு ரொம்பவும் தாகமாயிருக்கிறதாம். ராஜ வம்சத்தின் இரத்தம் வேண்டுமென்கிறாள்!" "ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த அரசிளங் குமரனைக் காளிக்கு அர்ப்பணம் செய்ய முயன்றேன். எப்படியோ காரியம் கெட்டுப் போய்விட்டதே....."
"உன்னாலேதான் கெட்டது; அந்த ராஜ குமாரனுக்காக நானே வந்திருந்தேன். நீ குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாய்." "மன்னிக்க வேண்டும் பிரபோ...ஆனால் ராஜ குமாரன் வருகிறான் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? "மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறாயே? காளிமாதா சொல்லித்தான் தெரிந்தது. அருள்மொழி ராணியின் வாய்மொழியாக மாதா எனக்குத் தெரிவித்தாள். 'அதோ கப்பலில் வந்து கொண்டிருக்கிறான்! கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்?' என்று ராணி சொன்னாள். நான் வந்தேன்! அதற்குள்ளாக நீ நடுவில் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாய்." "பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ஆனால், 'தாகம்' 'தாகம்' என்று கதறிக் கொண்டிருக்கிறாள்! ராஜ குல ரத்தம் வேண்டும் என்கிறாள்! இந்த அமாவாசை போய்விட்டது. துலா மாதப் பிறப்பிலாவது தாயின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.... அவனை நீ எப்படியாவது தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்...." "கொண்டு வந்தால்...." "கொண்டு வந்தால் உன் மனோரதம் நிறைவேறும். பூபதி! காளி மாதாவைச் சரணமாக அடைந்தவுடனே உனக்குச் சேனாதிபதிப் பதவி கிடைக்கவில்லையா? இன்னும்...." "இன்னும் என்ன சுவாமி?" "இன்னும் மிகப் பெரிய பதவிகள் உனக்கு நிச்சயம் கிடைக்கும்." "பெரிய பதவிகள் என்றால்..."
"சோழநாட்டின் சிம்மாசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மாதா கையில் கிரீடத்தை வைத்துக் கொண்டு உன் தலையில் சூட்டக் காத்திருக்கிறாள்." "அவ்வளவுதானா, பிரபோ!" "அதைவிடப் பெரிய பதவியும் அன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள்." "அது என்னவோ?" "என்னவா? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் தான்!" "ஆ!" என்றான் மாரப்ப பூபதி. சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. "ஆனால், அப்படிப்பட்ட மகத்தான பதவி லேசில் கிடைத்துவிடாது. அதற்குத் தகுந்த காணிக்கை காளி மாதாவுக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்." "அடியேனிடம் மாதா என்ன எதிர்பார்க்கிறாள்?" "முதலில் பார்த்திபன் மகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்." "செய்கிறேன்; அப்புறம்?" "வரும் துலா மாதப் பிறப்பன்று...." "சொல்லுங்கள், பிரபோ!" "காளி மாதா சந்நிதிக்கு நீ வரவேண்டும்..." "வந்து..." "உன்னுடைய தலையை உன்னுடைய கையினாலேயே வெட்டி மாதாவுக்கு அளிக்க வேண்டும்!" "ஐயோ!" என்று மாரப்பன் அலறினான். "அளித்தால் அடுத்த ஜென்மத்தில் காஞ்சி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இல்லாவிட்டால்...." "இல்லாவிட்டால் என்ன பிரபோ!" "ஆத்ம பலிக்கு ஈடான இன்னொரு மகா பலி அளிக்க வேண்டும். அளித்தால் இந்த ஜென்மத்திலேயே சக்கரவர்த்தி பதவி கிட்டும்." "அது என்ன பலி, சுவாமி!" "அந்த விபூதி ருத்திராட்சதாரியைப் பலிக்குக் கொண்டு வர வேண்டும்...."
"பிரபோ! இராஜ வம்சத்து இரத்தத்தை விரும்பும் காளி மாதா கேவலம் ஒரு விபூதி ருத்திராட்சதாரியைப் பலி கொள்ள விரும்புவானேன்?" என்று மாரப்பன் கேட்டான். "பூபதி! உனக்கு தெரிந்தது அவ்வளவுதான்; அந்தப் போலி ருத்திரா ட்சதாரி - உண்மையில் யார் தெரியுமா உனக்கு?" "யார் பிரபோ!" என்று பூபதி வியப்புடன் கேட்டான். "பூபதி! அது மகா மர்மம் - யாரும் அறிய முடியாத இரகசியம் - இதோ அடிக்கும் இந்தக் காற்றின் காதிலே கூட விழக் கூடாது. அருகில் வா! காதோடு சொல்கிறேன்..." சொல்ல முடியாத வியப்புடனும் பயத்துடனும் மேற்படி சம்பாஷனையின் பெரும் பகுதியைக் கேட்டுக் கொண்டு வந்த விக்கிரமனும் பொன்னனும் இப்போது செவிகளை மிகக் கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டார்கள். ஆனால் ஒன்றும் காதில் விழவில்லை. திடீரென மாரப்பன் இடி இடி என்று சிரிக்கும் சத்தம் கேட்டது. "பூபதி! ஏன் சிரிக்கிறாய்? மாதாவின் வார்த்தையில் உனக்கு அவநம்பிக்கையா?" என்று கபால பைரவர் கோபக் குரலில் கேட்டார். "இல்லை பிரபோ! இல்லை!" என்றான் மாரப்பன். "பின்னர், ஏன் சிரித்தாய்?" "அந்தச் சிவனடியாரைக் கைப்பற்றிக் கொண்டு வரும்படி இன்னொரு தேவியிடமிருந்தும் எனக்குக் கட்டளை பிறந்திருக்கிறது, அந்தத் தேவி யார், தெரியுமா?" "யார்?" "தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவி தேவிதான்!" "ரொம்ப நல்லது. காளி மாதா தன் விருப்பத்தைப் பல விதத்திலும் நிறைவேற்றிக் கொள்கிறாள்!" என்றார் மகா கபால பைரவர். இந்தச் சமயத்தில் சற்று தூரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், இரைச்சலும் ஆரவாரமும் கேட்டன. பொன்னன் சத்தமிடாமல் நடந்து வாசற்படியருகில் வந்து எட்டிப் பார்த்தான். ஐந்தாறு குதிரை வீரர்கள் தீவர்த்தி வெளிச்சத்துடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் மனதிற்குள், "இன்று மகாராஜாவும் நாமும் நன்றாய் அகப்பட்டுக் கொண்டோ ம்!" என்று எண்ணினான். அவனுடைய மார்பும் 'பட்பட்' என்று அடித்துக் கொண்டது. சட்டென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டான்.
அதே சமயத்தில் மாரப்ப பூபதி, "மகாபிரபோ! அதோ என்னுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்; நான் போக வேண்டும்" என்றான். "நானும் இதோ மறைந்து விடுகிறேன். மாதாவின் கட்டளை ஞாபகம் இருக்கட்டும்...." "மறுபடியும் எங்கே சந்திப்பது?" "வழக்கமான இடத்தில்தான். சித்ரகுப்தன் உனக்காகக் காத்திருப்பான்." இதற்குள் இரைச்சலும் ஆரவாரமும் அருகில் நெருங்கி விட்டன. "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்." "அப்படியே பிரபோ!" இதற்குப் பிறகு சற்று நேரம் பேச்சுக் குரல் ஒன்றும் கேட்கவில்லை. திடீரென்று கொஞ்சதூரத்தில், "சோழ சேனாதிபதி மாரப்பபூபதி வாழ்க! வாழ்க!" என்ற கோஷம் கேட்டது. பொன்னனும் விக்கிரமனும் மண்டபத்துக்கு வெளியில் வந்து பார்த்தபோது, தீவர்த்திகளின் வெளிச்சத்தில் குதிரைகள் உறையூர்ச் சாலையில் விரைவாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். "மகாராஜா, எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்து தப்பினோம்?" என்று சொல்லிப் பொன்னன் பெருமூச்சு விட்டான்.
விக்கிரமன், "பொன்னா! என்ன துரதிர்ஷ்டம்? நான் ஏறிவந்த குதிரை, அதன் மேலிருந்த இரத்தினப் பைகள் எல்லாம் ஆற்றோடு போய்விட்டதினால்கூட மோசம் இல்லை; என் உடைவாளும் போய்விட்டதே! என்ன செய்வேன்?" என்றான். "மகாராஜா!" "என்ன, பொன்னா?" "ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. மகாராணி ஸ்தல யாத்திரை கிளம்பும்போது என்னிடம் ஒரு பெட்டியை ஒப்புவித்தார்கள். உங்களிடம் கொடுக்கும்படி...." "என்ன பெட்டி அது? சீக்கிரம் சொல்லு பொன்னா!" "அதில் உங்கள் குலத்தின் வீர வாள் இருக்கிறது. பிடியில் இரத்தினங்கள் இழைத்தது...." "நிஜமாகவா, பொன்னா? ஆகா! முக்கியமாக அந்த வாளுக்காகத்தானே நான் இப்போது தாய் நாட்டுக்கு வந்தேன்! என் தந்தை போருக்குக் கிளம்பும்போது அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பட்டாக்கத்தியையும் திருக்குறள் சுவடியையும் எனக்குக் காட்டி, 'இவைதாம் நான் உனக்கு அளிக்கும் குலதனம்!' என்றார். எங்கள் மூதாதை - பரத கண்டத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆண்டு, கடல் கடந்த தேசங்களிலும் ஆட்சி செலுத்திய கரிகாலச்சோழர் - கையாண்ட வாள் அது. பொன்னா! பத்திரமாய் வைத்திருக்கிறாயல்லவா?"
"வைத்திருக்கிறேன். சுவாமி!" "எங்கே?" "வசந்தத் தீவில் புதைத்து வைத்திருக்கிறேன்." "அங்கே ஏன் வைத்தாய்?" "வேறு எங்கே வைப்பேன். மகாராஜா?" "சரி பொன்னா! நாம் இப்போது வசந்தத் தீவுக்குப் போய் அந்த வாளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? ஒன்பது வருஷத்துக்கு முன்னால் சொன்னது நேற்றுத்தான் சொன்னது போலிருக்கிறது. 'விக்கிரமா! இந்தக் கரிகாலச் சோழரின் வீரவாளை வேறொரு அரசனுக்குக் கப்பம் செலுத்தும் கையாலே தொடக்கூடாது. ஆகையினால்தான் என் வாழ்நாளில் நான் இதை எடுக்கவேயில்லை. நீ எப்போது ஒரு கையகலமுள்ள பூமிக்காவது சுதந்திர மன்னனாகிறாயோ, அப்பொழுது இந்த வாளை எடுத்துக்கொள்' என்றார். பொன்னா! நான் இப்போது செண்பகத் தீவின் சுதந்திர அரசன் அல்லவா? இனி அந்த வாளை நான் தரிக்கலாம்...." "மகாராஜா! செண்பகத்தீவுக்கு மட்டுந்தானா? சோழ நாட்டுக்கும் நீங்கள்தான் அரசர்...." "அதற்கு இன்னும் காலம் வரவில்லை பொன்னா! ஆனால் சீக்கிரத்தில் வந்து விடும். நாம் உடனே செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு இருக்கின்றன.
அந்த வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயங்கர நரபலிக் கூட்டத்திலிருந்து மகாராணியை விடுவித்து அழைத்துப் போக வேண்டும். இவற்றுள் முதலில் எதைச் செய்வது, அப்புறம் எதைச் செய்வது என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும்." அவர்கள் மேலும் யோசனை செய்து, முதலில் உறையூருக்குப் போய் வசந்தத் தீவிலிருந்து வீர வாளை எடுத்துக் கொள்வதென்றும், பிறகு திரும்பி வந்து சிவனடியாரைத் தேடிப் பிடித்து அவருடைய உதவியுடன் மகாராணியைக் கண்டுபிடிப்பதென்றும் தீர்மானித்தார்கள். இருவரும் மிகவும் களைத்திருந்த படியால் அன்றிரவு இந்த மண்டபத்திலேயே உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து உறையூருக்குப் போவதென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் விக்கிரமனுக்கு ஏற்கனவே கடுமையான சுரம் அடித்துக் கொண்டிருந்ததென்பதையாவது, பொழுது விடிவதற்குள் அவன் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைமையை அடைவானென்பதையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினைந்து
திரும்பிய குதிரை
குந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் பெறுவாள். சந்தேகம் வந்தால் அவரைத்தான் கேட்பாள்; ஏதாவது குதூகலிக்கக் கூடிய விஷயம் நேர்ந்தாலும் அவரிடம் சொல்லிப் பகிர்ந்து கொண்டால்தான் அவளுக்குப் பூரண திருப்தி உண்டாகும். ஒரு கதையோ, கவிதையோ, நன்றாயிருந்தால் அவரிடம் சொல்லி அனுபவிக்க வேண்டும்; ஒரு சித்திரமோ சிற்பமோ அழகாயிருந்தால் அவருடன் பார்த்து மகிழவேண்டும். இப்படியெல்லாம் வெகுகாலம் வரையில் மகளும் தந்தையும் இரண்டு உடம்பும் ஒரே உள்ளமுமாக ஒத்திருந்தார்கள்.
ஆனால், அந்தக் காலம் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையே இப்போதெல்லாம் ஒரு மானசீகத் திரைபோட்டது போலிருந்தது. தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளான சோழ ராஜகுமாரனுடைய ஞாபகம் குந்தவியின் மனத்தை விட்டு அகலவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவனை மறக்க முடியவில்லை. அந்த ராஜகுமாரனைப் பற்றிக் குந்தவி பேச விரும்பினாள். ஆனால் யாரிடம் பேசுவது? இத்தனை நாளும் தன்னுடைய அந்தரங்க எண்ணங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் தந்தையிடமே சொல்லி வந்தாள். ஆனால் சோழ ராஜகுமாரன் விஷயமாக அவரிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எப்போதாவது ஏதாவது கேட்டாலும் தன் எண்ணத்தைச் சிறிதும் அறிந்து கொள்ளாதது போலவே அவர் மறுமொழி சொல்லி வந்தார். தனக்குத் தாயார் இல்லையே என்ற குறையைக் குந்தவி இப்போதுதான் உணர ஆரம்பித்தாள்.
அந்தக் குறையை ஒருவாறு நீக்கிக் கொள்வதற்காக அவள் விக்கிரமனுடைய அன்னையுடன் சிநேகம் கொள்ள விரும்பினாள். ஆனால், அருள்மொழியைக் குந்தவி சந்தித்த அன்றே அவள் பரஞ்சோதியடிகளுடன் தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டதைப் பார்த்தோம். யாத்திரையின் போது ஒரு சமயம் அவர்கள் மாமல்லபுரத்துக்கும் வந்திருந்தார்கள். சில தினங்கள் அந்தக் கலாக்ஷேத்திரத்தில் இருந்தாள். அடிக்கடி அருள்மொழி ராணியைப் பார்த்தாள். ராணி அவளிடம் மிகவும் பிரியமாகவே இருந்தாள். ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கலக்கவில்லை. எப்படிக் கலக்க முடியும்? தன்னுடைய ஏக புதல்வனைக் குந்தவியின் தந்தை கண்காணாத தீவுக்கு அனுப்பிவிட்டதைப் பற்றி அருள்மொழியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. குந்தவிக்கோ தன் தந்தைமேல் அணுவளவேனும் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை. தந்தையினிடத்தில் அவளுக்கு இருந்த ஒப்பில்லாத பிரியத்தோடு அவரைப் பற்றி அவளுக்கு ரொம்பப் பெருமையும் உண்டு. இதிகாசங்களில் வரும் சூரிய, சந்திர வம்சத்துச் சக்கரவர்த்திகளைப் போல் பெருமை வாய்ந்தவர் தன் தந்தை; வடக்கே நர்மதை நதிவரையில் சென்று திக்விஜயம் செய்தவர்; ராட்சஸப் புலிகேசியை வென்று வாதாபியை அழித்தவர்; அப்படிப்பட்டவரின் கீழ் சிற்றரசனாயிருப்பதே அந்தச் சோழ ராஜகுமாரனுக்குப் பெருமையல்லவா? இருநூறு வருஷமாகச் சோழர்கள் பல்லவ சக்கரவர்த்திகளுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வரவில்லையா? இப்போது மட்டும் என்ன வந்தது?
இவ்விதம் அந்த இரண்டு பேருடைய மனோபாவங்களிலும் வித்தியாசம் இருந்தபடியால் அவர்கள் மனங் கலந்து பேச முடியவில்லை. ஒருவரிடம் ஒருவரின் அன்பு வளர்ந்தது. ஆனால் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒரு முக்கியமான பகுதி பூட்டப்பட்டுக் கிடந்தது. ஒருநாள் அருள்மொழி ராணி ஓரளவு தன் இருதயத்தின் கதவைத் திறந்தாள். குந்தவியின் தந்தைக்குத் தன்னை மணஞ் செய்து கொடுப்பதாகப் பேச்சு நடந்ததையும், தான் அதைத் தடுத்துப் பார்த்திப மகாராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டதையும் கூறினாள். விக்கிரமனுடைய பிள்ளைப் பிராயத்தில் அவனுக்குக் குந்தவியை மணம் முடித்து வைக்கத் தான் ஆசைப்பட்டதையும் தெரிவித்தாள். அப்போது குந்தவியின் உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது. ஆனால், பிறகு ராணி, 'அதெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. பாக்கியசாலியான வேறொரு ராஜ குமாரனை நீ மணந்து சந்தோஷமாய் வாழ்வாய்!" என்று சொன்னபோது குந்தவிக்குக் கோபமே வந்தது.
"இல்லை அம்மா! எனக்கு இல்லறத்தில் பற்று இல்லை. உலகத்தைத் துறந்து நான் சிவவிரதையாகப் போகிறேன்" என்றாள் குந்தவி. அவள் அவ்விதம் கூறியதன் கருத்தை ராணி அறிந்து கொள்ளவில்லை. பிறகு ஒரு சமயம் குந்தவி, இளவரசர் விக்கிரமன் பல்லவ சாம்ராஜ்யத்துக்குக் கப்பம் செலுத்த இசைந்தால் இன்னமும் திரும்பி வந்து சோழ நாட்டுக்கு அரசராகலாமே என்று சொன்னபோது, அருள்மொழி ராணியின் முகம் அருவருப்பினால் சிணுங்கிற்று. "அதைக் காட்டிலும் விக்கிரமன் செத்துப் போனான் என்று செய்தி எனக்குச் சந்தோஷத்தையளிக்கும்!" என்றாள். மாமல்லபுரத்தில் அருள்மொழி ராணி தங்கியிருக்கும்போது தான் ஒரு நாளைக்குப் பழைய சிவனடியார் வந்து மகாராணியைப் பார்த்துப் பேசினார். அவர் பேசிவிட்டு திரும்பிப் போகும் சமயத்தில் குந்தவி அவரைப் பார்த்தாள். உடனே பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்துவிட்டன. ராணியிடம் சென்று அந்தச் சிவனடியார் யார் என்று கேட்டாள். யார் என்று ராணியினால் சொல்ல முடியவில்லை. "யாரோ பெரியவர். என் பதி வீரசொர்க்கம் சென்ற பிறகு இவர்தான் எங்களுக்குக் குலதெய்வமாயிருந்து வருகிறார்!" என்றாள்.
குந்தவி மனதிற்குள், "குல தெய்வமில்லை; குலச் சனியன்!" என்று நினைத்துக் கொண்டாள். பின்னால் அருள்மொழித் தேவி காவேரி சங்கமத்தில் கடலில் மூழ்கிய செய்தியும், அவளை யாரோ தூக்கிச் சென்றதாக வதந்தியும் காதில் விழுந்தபோது, "தூக்கிக் கொண்டு போனவர் அந்தப் போலிச் சிவனடியாராய்த் தானிருக்க வேண்டும். ஏதோ கெட்ட நோக்கத்துடன் அந்த வேஷதாரி இத்தனை நாளாய் மகாராணியைச் சுற்றியிருக்கிறான்!" என்று நிச்சயம் செய்து கொண்டாள். இந்தத் துர்ச் சம்பவத்துக்குச் சில காலத்துக்கு முன்புதான் குந்தவியின் தமையன் இலங்கையை வெற்றி கொண்டு திரும்பி வந்திருந்தான். அவன் தன் சகோதரியிடம் அளவற்ற வாஞ்சை வைத்திருந்தான். குந்தவி தன் உள்ளத்தை ஓரளவு திறந்து காட்டுவதும் சாத்தியமாயிருந்தது. தன் சகோதரியின் மனோநிலையை உணர்ந்து மகேந்திரன் தானே செண்பகத் தீவுக்குப் போய் விக்கிரமனை எந்தச் சாக்கிட்டேனும் திருப்பி அழைத்து வரத் தீர்மானித்தான். இந்த எண்ணத்துடனே அவன் சக்கரவர்த்தியிடம் சாவகம், காம்போஜம் முதலிய கீழ்ச் சமுத்திரத் தீவுகளுக்குப் படையெடுத்துச் செல்ல அனுமதி கேட்டான். சக்கரவர்த்தி இதற்குச் சம்மதியாமல், தமக்கே கடற் பிரயாணம் செய்யும் உத்தேசம் இருக்கிறதென்றும், அதனால் மகேந்திரன் யுவராஜ பதவியை வகித்துப் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பை வகிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். மகேந்திரனால் இதை மறுக்க முடியவில்லை.
இந்த நிலைமையில், குந்தவியின் வற்புறுத்தலின் மேல் மகேந்திரன் மாரப்ப பூபதியைச் சோழ நாட்டின் சேனாதிபதியாக்கியதுடன், அவனை மாமல்லபுரத்துக்கும் தருவித்தான். சிவனடியாரை அவன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், அவர் மூலமாக ராணி அருள்மொழித்தேவி இருக்குமிடத்தை அறிய வேண்டு மென்றும் மாரப்ப பூபதிக்குக் கட்டளை பிறந்தது. அதோடு குந்தவியும் மகேந்திரனும் உறையூர் வசந்த மாளிகையில் சில காலம் வந்து தங்கப் போவதாகவும், அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறையூர் போவதற்குச் சக்கரவர்த்தியும் சம்மதம் கொடுக்கவே, மகேந்திரனும் குந்தவியும் மற்றப் பரிவாரங்கள் புடைசூழ ஒரு நாள் பிரயாணம் கிளம்பினார்கள். விக்கிரமன் காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டுத் தப்பிப் பிழைத்த அன்றைக்கு மறுநாள் உச்சிப் போதில், அந்தக் காட்டாற்றுக்குச் சுமார் ஒரு காத தூரத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குந்தவி பல்லக்கிலும், மகேந்திரன் குதிரை மேலும் அமர்ந்து பிரயாணம் செய்தார்கள்.
மகேந்திரன் தன்னுடைய இலங்கைப் பிரயாணத்தைப் பற்றியும் அங்கே தான் நடத்திய யுத்தங்களைப் பற்றியும் தங்கைக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். இலங்கை நாட்டின் நீர்வள நிலவளங்களைப் பற்றியும் வர்ணித்தான். குந்தவி வியப்புடன் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆனாலும் இடையிடையே அவளுடைய ஞாபகம் செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியின் மீது சென்று கொண்டிருந்தது. இது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரத்தின வியாபாரி வராமல் போனதினால்தான் என்ன, எதற்காகத் தன் மனம் அவ்வளவு கவலையுறுகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவன் தனக்குச் செண்பகத் தீவு என்று சொன்னபடியால்,சோழ ராஜகுமாரனைப் பற்றி அவனிடம் விசாரிக்கும் ஆவல்தான் காரணம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
"இல்லை; இல்லை; அவர்கள் இருவருக்கும் உள்ள முக ஒற்றுமைதான் காரணம்!" என்று ஒரு மனம் சொல்லிற்று. "ஆனால் அது உண்மையா? அல்லது நம்முடைய கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டனவா? உண்மையில் அத்தகைய முகஒற்றுமையிருந்தால், அப்பா அதைக் கவனித்திருக்கமாட்டாரா? கவனித்திருந்தால் அவனை வழிப்பறிக்காரர் களிடமிருந்து காப்பாற்றி உறையூருக்கு அனுப்பி வைத்திருப்பாரா? அதெல்லாம் இல்லை; நம்முடைய பிரமைதான் காரணம்!" என்று இன்னொரு மனம் சொல்லிற்று. இத்தகைய எண்ணங்களுக்கு மத்தியில், "உறையூரில் ஒருவேளை அந்த ரத்தின வியாபாரியைச் சந்திப்போமா?" என்ற நினைவும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் குந்தவி தன் மனத்திற்குள் எண்ணமிட்டுக் கொண்டும், ஒரு காதில் மகேந்திரனுடைய பேச்சைக் கேட்டு 'ஊங்' கொட்டிக் கொண்டும் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு எதிரே திடீரென்று தோன்றிய ஒரு காட்சி அவளை ஒரே அடியாகத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனைக்கும் அந்தக் காட்சி வேறொன்றுமில்லை; சேணம் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு உயர்ந்த ஜாதிக் குதிரை முதுகில் ஆள் இல்லாமல் தனியாக வந்து கொண்டிருந்த காட்சிதான்.
அதைக் கண்டு ஏன் அவ்வாறு குந்தவி திடுக்கிட வேண்டும்? - அவளுக்கே தெரியவில்லை. குதிரை இன்னும் அருகில் வந்தது. அது அவளுடைய தந்தையின் குதிரைதான் என்பது ஐயமறத் தெரிந்தது. சில சமயம் சக்கரவர்த்தி அதில் ஏறி வந்திருப்பதை அவளே பார்த்திருக்கிறாள். அது எப்படி இங்கே வந்தது? ஒருவேளை, அப்பாதான்...? அவ்விதம் இருக்க முடியாது. அப்பாவிடம் காஞ்சியில் விடை பெற்றுக் கொண்டு தானே கிளம்பினோம்? நமக்கு முன்னால் அவர் எப்படி வந்திருக்க முடியும்? வந்திருந்தாலும் குதிரை ஏன் இப்போது தனியாக வருகிறது? சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இரத்தின வியாபாரிக்குக் குதிரையும் கொடுத்து அனுப்பியதாக அப்பா சொன்னாரல்லவா? குதிரைக்குப் பதிலாக அவன் கொடுத்த இரத்தினங்களையும் காட்டினாரல்லவா? ஆமாம்; இரத்தின வியாபாரி ஏறிச் சென்ற குதிரையாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால், அது ஏன் இப்போது தனித்து வருகிறது? இரத்தின வியாபாரி எங்கே? அவன் என்ன ஆனான்? குந்தவியின் அடிவயிறு அப்படியே மேலே கிளம்பி அவளுடைய மார்பில் புகுந்து மூச்சை அடைத்து விட்டது போலிருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினாறு
ஆற்றங் கரையில்
குந்தவியின் முகத்தில் தோன்றிய மாறுதலை மகேந்திரன் கவனித்தான். "என்ன தங்காய்! என்ன" என்றான். தனித்து வந்த குதிரையை வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தாள் குந்தவி. அவள் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. இதைக் கவனித்த மகேந்திரன், "தங்காய்! அதோ வருகிறது குதிரைதானே புலி, சிங்கம் அல்லவே? எதற்காக இப்படிப் பயப்படுகிறாய்?" என்று கேட்டான். குந்தவிக்கு ரோசம் பிறந்தது; பேச்சும் வந்தது. "புலி, சிங்கமாயிருந்தால் தானென்ன, அண்ணா! நீ பக்கத்திலே இருக்கும்போது?" என்றாள். "பின் ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்! - பேய் பிசாசுகளைக் கண்டதைப் போல!" "அண்ணா! அந்தக் குதிரை யாருடைய குதிரை தெரியுமா?" "தெரியாது; யாருடையது?" "அப்பாவினுடையது!" "என்ன?" "ஆமாம்; இதே மாதிரி உயர் ஜாதிக் குதிரைகள் இரண்டு அப்பாவிடம் இருக்கின்றன. இது புஷ்பகம்; இன்னொன்று பாரிஜாதம்." "அப்படியா? இது எப்படி இங்கே தெறிகெட்டு வருகிறது? அப்பாவிடந்தான் நாம் காஞ்சியில் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோமே? அவர் இந்தக் குதிரையில் வந்திருக்க முடியாது?" "செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்கு அப்பா தம் குதிரையை கொடுத்ததாகச் சொன்னார்." "ஓஹோ!" இதற்குள் குதிரை மிகவும் நெருங்கி வந்துவிட்டது. மகேந்திரன் கட்டளைப்படி உடன் வந்த வீரர்களில் ஒருவன் குதிரையைப் பிடித்துக் கொண்டான். அதைத் தன்னருகில் வரும்படி குந்தவி கூறி, அதன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது. பிறகு, அக்குதிரையையும் பிரயாண கோஷ்டியோடு கொண்டு போனார்கள்.
"அண்ணா! அந்த இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்திருக்கும்?" என்று குந்தவி மிக்க கவலையுடன் கேட்டாள். இரத்தின வியாபாரியை விக்கிரமன் என்பதாகக் குந்தவி சந்தேகிக்கிறாள் என்னும் விஷயம் மகேந்திரனுக்குத் தெரியாது. ஆகையால் அவன் அலட்சியமாக, "பல்லவ சக்கரவர்த்தியைச் சுமந்த குதிரை கேவலம் ஒரு வியாபாரியைச் சுமக்குமா? எங்கேயாவது கீழே தள்ளிக் குழியும் பறித்துவிட்டு வந்திருக்கும்!" என்று சிரித்தான். குந்தவியின் உள்ளம் துடித்தது. ஆனால் ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ஓர் ஆறுதலான எண்ணமும் உண்டாயிற்று. உண்மையிலே இந்தக் குதிரை அவனைத் தள்ளிவிட்டு வந்திருக்குமானால் அவன் சோழ ராஜகுமாரனாக இருக்க மாட்டான். சாதாரண வர்த்தகனாய்த் தானிருப்பான்- ஆனால் அந்த இரத்தின வியாபாரியின் தீரத்தைப் பற்றியும் போர்த்திறமையைப் பற்றியும் அப்பா ரொம்பச் சொன்னாரே? ஐயோ! அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? - இவ்வளவு அறிவுள்ள பிராணியான குதிரைக்குப் பகவான் பேசும் சக்தி மட்டும் கொடுக்காமல் போய்விட்டாரே? அந்தச் சக்தி இருந்தால் இரத்தின வியாபாரிக்கு என்ன நேர்ந்தது என்ற இரகசியத்தை அது வெளியிடுமல்லவா? - புஷ்பகத்துக்குப் பேசும் சக்தி திடீரென்று ஓர் அற்புதத்தினால் வந்து விடாதா என்று ஆசைப்பட்டவளைப் போல் குந்தவி அதன் முதுகை அடிக்கடி தடவிக் கொண்டு வந்தாள்.
இப்படிப் பிரயாணம் நடந்து கொண்டிருக்கையில், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சுற்றுப்புறக் காட்சியின் தோற்றத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. தரை ஈரமாயிருந்தது, அங்கங்கே பள்ளமான இடங்களில் நீர் தேங்கியிருந்தது. மரங்கள் பளிச்சென்று இருந்தன, காற்றும் குளிர்ந்து வந்தது. "தங்காய்! நேற்று இங்கெல்லாம் பெருமழை பெய்திருக்கிறது. காஞ்சியில் ஒரு துளிகூட விழவில்லையே?" என்றான் மகேந்திரன். அதைப்பற்றியேதான் குந்தவியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறு அவளுக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது, நேற்று மாலை திடீரென்று இந்தப் பக்கத்தில் பெரும் புயலும் மழையும் அடித்திருக்கிறது. அதில் புஷ்பகமும் இரத்தின வியாபாரியும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குதிரை எப்படியோ தப்பிப் பிழைத்து வந்திருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ பாவம்! அவனுக்கு என்ன நேர்ந்ததென்பது வழியில் எங்கேயாவது தெரியவருமா? விபத்து நடந்த இடத்தைப் புஷ்பகம் காட்டுமா? ஒருவேளை உயிர்போன அவனுடைய உடலைக் காணும்படியாக நேருமோ? ... சிவசிவ!....அந்தச் சகிக்க முடியாத நினைப்பினால் குந்தவி கண்களை மூடிக் கொண்டாள். இவ்விதம் ஈரமான பிரதேசங்கள் வழியாக அரைக்காத தூரம் போன பிறகு சூரியன் அஸ்தமிக்க ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் காட்டாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். நேற்று மாலை அந்தக் காட்டாறு அளித்த காட்சிக்கு இப்போதைய காட்சி நேர்மாறாயிருந்தது. நேற்று அங்கே ஊழிக்காலத்து மகாப் பிரளயத்தைப் போல, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜலப் பிரவாகமாய்,பிரம்மாண்டமான சுழல்களுடனும் ஹோ என்று பேரிரைச்சலுடன் அலைமோதிக் கொண்டு போன வெள்ளம் பார்க்கப் பீதிகரமான காட்சியை அளித்தது.
இன்று அதே பிரதேசம் பிரளயத்துக்குப் பிறகு ஏற்படும் புது உலக சிருஷ்டியில் நவ மோகனத்தைப் பெற்றிருந்தது. காட்டாற்றின் மத்தியில் முழங்காலளவு ஜலம் சலசலவென்ற சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. அஸ்தமன சூரியனின் பொற்கிரணங்கள் பசுமரக் கிளைகளின் வழியாக வந்து ஓடும் ஜலத்தில் தவழ்ந்து விளையாடி வர்ண ஜாலங்களைக் காட்டின. நதிக்கரைப் பறவைகள் மதுரகானம் செய்துகொண்டு மரங்களில் உள்ள கூடுகளை நோக்கி வந்தன. அழகும், அமைதியும், ஆனந்தமும் அங்கே குடி கொண்டிருந்தன. ஆனால் குந்தவியின் உள்ளத்திலோ நேற்று அங்கே அடித்த புயலும் மழையும் இப்போது குமுறிக் கொண்டிருந்தன. நேற்று அந்தக் காட்டாற்றில் பெருவெள்ளம் பெருகியிருக்க வேண்டுமென்று அவள் தெரிந்து கொண்டாள். நதிக்கரை மரங்களின் அடிமரத்தில் தண்ணீர்ப் பிரவாகத்தின் புது அடையாளம் நன்றாகப் பதிந்திருந்தது. தாழ்ந்த கிளைகளில் வெள்ளத்தில் வந்த வைக்கோல் முதலியவை சிக்கிக் கொண்டிருந்தன. காட்டாற்று வெள்ளமாதலால் மளமளவென்று பெருகியிருக்க வேண்டும். இரத்தின வியாபாரியின் கதியை ஒருவாறு குந்தவி இப்போது ஊகித்தாள். காட்டாற்று வெள்ளத்தின் சக்தியை அறியாமல் அவன் நதியில் இறங்கியிருப்பான். அல்லது அவன் இறங்கிய பிறகு பிரவாகம் திடீரென்று பெருகியிருக்கும். குதிரை எப்படியோ தப்பி கரையேறியிருக்கிறது. பாவம்! அது வெகுநேரம் கரையிலேயே இரத்தின வியாபாரியை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவன் கரைக்கு வராமல் போகவே காஞ்சியை நோக்கிக் கிளம்பியிருக்கிறது. இரத்தின வியாபாரி - ஐயோ! - பிரவாகத்துக்கு இரையாகியிருக்க வேண்டும். அடாடா! தாயாரைப் பார்ப்பதற்காக அவசரமாக உறையூருக்குப் போவதாக சக்கரவர்த்தியிடம் சொன்னானாமே? அவனுக்கு இந்தக் கதியா நேரவேண்டும்?...
இப்படிக் குந்தவி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் பல்லக்கு நீரோட்டத்தின் அருகில் வந்தது. எல்லாரும் ஜலத்தில் இறங்கினார்கள். ஆனால் புஷ்பகம் மட்டும் நீரில் இறங்கத் தயங்கிற்று. நதிக்கரைக்கு வந்ததிலிருந்தே அதனுடைய தயக்கம் அதிகமாயிருந்ததை எல்லாரும் கவனித்தார்கள். அதைப் பிடித்து வந்த போர் வீரன் நீரோட்டத்தில் இறங்கும்படியாக அதைப் பலவந்தப்படுத்தினான் குதிரையும் இறங்கிற்று. அவ்வளவுதான்; உடனே அது ஒரு திமிறு திமிறிக் கொண்டு போர் வீரனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டது. வந்த கரையை நோக்கித் திரும்பி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடியது. கரையையடைந்ததும் அது நிற்கவில்லை. வேகம் இன்னும் அதிகமாயிற்று. வில்லிலிருந்து கிளம்பிய இராமபாணம் என்பார்களே, அதுமாதிரி நாலு கால் பாய்ச்சலில் பறந்து ஓடி எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே காஞ்சி செல்லும் சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரையில் சென்று மறைந்தது. "புஷ்பகம் என்று அப்பா பெயர் வைத்தது சரிதான். தரையில் அதன் கால்கள் தொட்டதாகவே தெரியவில்லையே!" என்றான் மகேந்திரன்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினேழு
தீனக்குரல்
ராஜ பிரயாணிகளும் பரிவாரங்களும் அந்தக் காட்டாற்றங்கரையில் உணவு அருந்தினார்கள். விதவிதமான பட்சணங்களும் பான வகைகளும் குந்தவி, மகேந்திரன் இவர்கள் முன் வைக்கப்பட்டன. மகேந்திரன் உற்சாகமாகச் சாப்பிட்டான். குந்தவிக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உணவுப் பொருள்களை ஆற்றங்கரைக் காக்கைகளுக்கு வீசி எறிந்து அவை பறந்து வந்து கௌவிக் கொள்வதைப் பார்த்து மகிழ்ந்தாள். இந்த மகிழ்ச்சியும் வெளிப்படையானதுதான். மனத்திலே அந்த காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி மாண்டு போன இரத்தின வியாபாரியின் நினைவு பெரிய பாரமாயிருந்தது. ஆம்; இறந்து போனவன் இரத்தின வியாபாரிதான், - சோழ நாட்டு இராஜகுமாரன் அல்ல என்று குந்தவி ஒருவாறு முடிவு செய்து கொண்டிருந்தாள். தன் உள்ளத்தைக் கவர்ந்த சுகுமாரனுக்கு அத்தகைய கதி நேர்ந்தது என்ற எண்ணத்தை அவளால் சகிக்க முடியவில்லை; ஆகையால் அதில் நம்பிக்கையும் பிறக்கவில்லை.
உணவருந்திச் சற்று இளைப்பாறிவிட்டு எல்லாரும் கிளம்பிக் கரையேறிய போது குந்தவிக்கு ஒரு நினைவு தோன்றியது. அகால மரணமடைந்தவர்களின் ஆவி அவர்கள் இறந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மையா? ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமா? நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ? - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல்,'அம்மா! அம்மா!' என்பது போல் அவளுக்குத் தோன்றியது. குந்தவியின் தேகம் சிலிர்த்தது. அது தன்னுடைய சித்தப் பிரமையா? அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா? அண்ணாவிடம் கேட்கலாமென்று வாயெடுத்தாள். ஆனால் பேசுதவற்கு நா எழவில்லை.
இது என்ன அதிசயம்? பல்லக்கு மேலே போகப் போக, அந்தக் குரல் கெட்டியாகி வருகிறதே? இரத்தின வியாபாரியின் ஆவி தங்களைத் தொடர்ந்து வருகிறதா, என்ன? இன்னும் சற்று தூரம் போனதும், "அம்மா! அம்மா!" என்னும் அந்த அபயக் குரல் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அது நிஜமான மனிதக் குரலாகவே தொனித்தது. ஒருவாறு குந்தவி சமாளித்துக் கொண்டு "அண்ணா! ஏதோ தீனக்குரல் கேட்பது போலிருக்கிறதே? உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்டாள். "ஆமாம், தங்காய்! யாரோ, 'அம்மா! அம்மா!' என்று அலறும் குரல் கேட்கிறது" என்று மகேந்திரன் சொல்லிக் குதிரை மேலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான். "அதோ அந்த மண்டபத்திலிருந்து குரல் வருவது போலிருக்கிறது!" ஆற்றங்கரையிலிருந்து கூப்பிடு தூரத்திலேதான் விக்கிரமன் தங்கிய மகேந்திர மண்டபம் இருந்தது. சாலையில் அந்த மண்டபம் இருக்குமிடம் நெருங்கியதும், குரல் அங்கிருந்துதான் வருகிறது என்று ஐயமறத் தெரிந்தது. குந்தவி பல்லக்கை அந்த மண்டபத்தருகே கொண்டு போகச் சொன்னாள். ஏதோ ஒரு அதிசயத்தைக் காணப் போகிறோம்- என்ற எண்ணத்தினால் அவளுடைய நெஞ்சம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. மண்டபத்திலிருந்து வந்த குரல் விக்கிரமனுடையது தான் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள். அன்று காலையில் பொன்னன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, தனக்கு முன்னமே விக்கிரமன் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். "பொன்னா! கிளம்பலாமா?" என்று கேட்டான் விக்கிரமன். இருவரும் கலந்து யோசித்து, வெய்யிலுக்கு முன்னால் புறப்பட்டுச் சாலையோடு நடந்து போவது என்றும், வழியில் வண்டி கிடைத்தால் வைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
ஆனால், கிளம்பிய விக்கிரமன் சில அடி தூரம் நடப்பதற்கு முன்னமே அவன் தள்ளாடுவதைப் பொன்னன் கவனித்தான். "மகாராஜா...." என்று அவன் ஏதோ கேட்க ஆரம்பிப்பதற்குள்ளே விக்கிரமன் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். பொன்னன் பரபரப்புடன் விரைந்து விக்கிரமனை அணுகி, "ஐயோ! என்ன மகாராஜா? உடம்புக்கு என்ன?" என்று கேட்டான். "தலையை அசாத்தியமாய் வலிக்கிறது, பொன்னா! ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை!" என்றான் விக்கிரமன். பொன்னன் அவனுடைய உடம்பைத் தொட்டுப் பார்த்து விட்டு, "ஐயோ! மகாராஜா! உடம்பு கொதிக்கிறதே! இராத்திரி நன்றாய்த் தூங்கினீர்களா?" என்று கேட்டான். "இல்லை; என்னவெல்லாமோ ஞாபகங்கள். சரியாகத் தூக்கம் வரவில்லை." "ஜுரந்தான் காரணம், மகாராஜா! பாவி நான் கும்பகர்ணனைப் போல் தூங்கினேன். என்னை எழுப்பியிருக்கக்கூடாதா? - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள்!" என்று சொல்லி விக்கிரமன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு அணைத்துக் கொண்டபடியே மீண்டும் மண்டபத்திற்குள் கொண்டு சேர்த்தான். பிறகு, பொன்னன் நதிக்கரைப் பக்கம் ஓடிச் சென்று அங்கே சிந்திக்கிடந்த வைக்கோலையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்தான். வைக்கோலைப் பரப்பி அதன் மேல் விக்கிரமனைப் படுத்துக் கொள்ளச் செய்தான்.
மேலே என்ன செய்வது என்று இருவரும் யோசனை செய்தார்கள். சாலையோடு போகும் மாட்டு வண்டிக்காகக் காத்திருந்து, ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு அடுத்த ஊருக்குப் போவதென்றும், அங்கே வைத்தியம் பார்த்துக் கொண்டு கொஞ்சம் உடம்பு தேறியதும் கிளம்புவதென்றும் தீர்மானித்தார்கள். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "ஐயோ! இச்சமயம் வள்ளி இங்கே இல்லாமல் போனாளே? ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா?" என்று பொன்னன் அடிக்கடி எண்ணமிட்டான், ஜுரமாகக் கிடக்கும் விக்கிரமனுக்கு வேண்டிய சிசுருஷை செய்ய அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் 'தாகம்''தாகம்' என்று பறந்தான். அந்த மண்டபத்தின் பின்புறத்தில் பிரயாணிகள் சமையல் செய்துவிட்டு எறிந்திருந்த மண்சட்டிகள் சில கிடந்தன. அவற்றில் ஒரு சட்டியைப் பொன்னன் எடுத்துக் கொண்டு போய் நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். பொற்கிண்ணத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய மகாராஜா இந்தப் பழைய மண்சட்டியில் குடிக்க வேண்டியதாயிற்றே என்று பொருமினான்.
நேரமாகிக் கொண்டேயிருந்தது. ஜுரமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. பொன்னனுக்கு ஒரு பக்கம் பசி எடுத்தது. இன்னது செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பிற்று. மகாராஜாவுக்கு வைத்தியம் செய்யாமல், தானும் சாப்பிடாமல் இருந்தால் இரண்டு பேரும் அங்கேயே மடிய வேண்டியதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப் போய் வைத்தியனையும் அழைத்துக் கொண்டு ஒரு வண்டியையும் அமர்த்திக் கொண்டு வரவேண்டியது. அதுவரையில் விக்கிரமனைச் சோழரின் குலதெய்வமான முருகக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். விக்கிரமனும் வேறு வழியில்லையென்று இதற்குச் சம்மதிக்கவே, பொன்னன் மீண்டும் மீண்டும் மண்டபத்தைக் திரும்பிப் பார்த்துக் கொண்டு விரைவாக நடந்தான். பொன்னன் போன பிறகு விக்கிரமனுக்கு இன்னும் ஜுரம் அதிகமாயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நல்ல நினைவு தப்பிவிட்டது. மனத்தில் என்னவெல்லாமோ குழப்பமான எண்ணங்கள் குமுறின. வாய் என்னவெல்லாமோ சம்பந்தமில்லாத சொற்களைப் பிதற்றியது. அளவில்லாத வலியினால் உடம்பை முறித்துப் போட்டது. வர வரப் பலவீனம் அதிகமாயிற்று. கடைசியில் வாயிலிருந்து குமுறிய சொற்கள் வருவது நின்று,"அம்மா! அம்மா!" என்ற கதறல் மட்டும் தீனமான குரலில் வரத் தொடங்கியது.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் குந்தவியின் பல்லக்கு அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. குந்தவி அவசரமாகப் பல்லக்கிலிருந்து இறங்கி மண்டபத்தின் வாசற்படியில் வந்து நின்று உள்ளே பார்த்தாள். ஆமாம்; இரத்தின வியாபாரிதான். அவனுடைய பால் வடியும் முகம் தாப ஜ்வரத்தினால் கோவைப் பழம் போல் சிவந்திருந்தது. விசாலமான கண்கள் ஒரு கணம் மேல்நோக்கித் திருதிருவென்று விழிப்பதும் மறுபடி மூடுவதுமாயிருந்தன. "அம்மா! அம்மா!" என்று வாய் அரற்றிற்று. இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவியின் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிப் புரட்சியை உள்ளபடி விவரிப்பது இயலாத காரியம். வியப்பு, மகிழ்ச்சி, துக்கம், இரக்கம் ஆகிய பல்வேறு மாறுபட்ட உணர்ச்சிகள் ஒன்றோடொன்று கலந்து போராடின. எல்லாவற்றிற்கும் மேலாகப் பரபரப்பு விஞ்சி நின்றது. "அண்ணா! அண்ணா! இவன் இரத்தின வியாபாரிதான், அண்ணா! இவனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது, வைத்தியரைக் கூப்பிடு" என்று கூச்சலிட்டாள். ராஜப் பிரயாணிகளுடன் கூடப் பிரயாணம் செய்த ராஜ வைத்தியர் வந்து பார்த்தார். "கடுமையான விஷ ஜுரம்; உடனே சிகிச்சை செய்ய வேணும். குணமாவதற்குப் பத்து நாள் பிடிக்கும்" என்றார். பாவம்! இவனை நம்முடன் அழைத்துப் போகலாம் அண்ணா! செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா?" என்றாள் குந்தவி.
பிறகு காரியங்கள் வெகுதுரிதமாக நடந்தன. இராஜ வைத்தியர் ஏதோ மருந்து எடுத்துக் கொண்டு வந்து விக்கிரமனுடைய நாவில் தடவினார். பின்னர் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குந்தவியின் பல்லக்கில் போட்டார்கள். குந்தவி குதிரை மீது ஏறிக் கொண்டாள். மறுபடியும் பிரயாணம் ஆரம்பமாயிற்று. பொன்னன் போன இடத்தில் வெகு கஷ்டப்பட்டு ஒரு வைத்தியனைத் தேடிப் பிடித்தான். வண்டியும் அமர்த்திக் கொண்டு மகேந்திர மண்டபத்துக்கு வந்து, "மகாராஜாவுக்கு எப்படியிருக்கிறதோ?" என்று திக்திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள உள்ளே வந்து பார்த்த போது மண்டபம் சூனியமாயிருக்கக் கண்டான். அவன் தலையில் திடீரென்று இடி விழுந்தது போல் இருந்தது.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பதினெட்டு
பராந்தக புரத்தில்
சூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். இளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப் போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் கலங்கியிருந்த படியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவான்.
இப்படி ஒரு தடவை அவன் திரும்பி மண்டபத்தை நோக்கி வந்தபோது, மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பெரிய இலுப்ப மரத்துக்குப் பின்னால் ஒரு உருவம் மறைவதைக் கண்டான். அது ஒரு சித்திரக்குள்ளனின் வடிவமாகத் தெரிந்தது. கொல்லி மலையில் அருவிப் பாதையில் தான் அன்று பார்த்த பயங்கர உருவங்கள் பொன்னனுக்கு ஞாபகம் வந்தன. நேற்றிரவு இருளில் நடந்த சம்பாஷனையும் நினைவு வந்தது. "ஓஹோ! மகாராஜா நரபலிக்காரர்களின் கையிலேதான் அகப்பட்டுக் கொண்டார்" என்று எண்ணியபோது, பொன்னனுக்கு வந்த ஆத்திரத்துக்கும் துயரத்திற்கும் அளவேயில்லை. இந்த ஆத்திரத்தையெல்லாம் அந்தக் குள்ளன் மேல் காட்டி விடுவது என்ற நோக்கத்துடன் பொன்னன் இலுப்ப மரத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றான். தன்னைப் பிடிக்க வருகிறான் என்று தெரியாமல் மறைந்து நின்ற குள்ளன் மேல் திடீரெனப் பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு குலுக்குக் குலுக்கினான்.
முதலில் சற்றுத் திகைத்த குள்ளன் விரைவில் சமாளித்துக் கொண்டு, "என்ன அப்பா! என்ன சமாசாரம்? எதற்காக இவ்வளவு ஆத்திரம்?" என்று கேட்டான். "அடே குள்ளா! மகாராஜா எங்கே?" என்று பொன்னன் அலறினான். "மகாராஜாவா? அது யாரப்பா, மகாராஜா?" உடனே பொன்னனுக்குத் தன்னுடைய தவறு ஞாபகம் வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு, "அந்த மண்டபத்தில் படுத்திருந்தவர் எங்கே?" என்று கேட்டான். குள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, "ஐயையோ! என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே!" என்றான். பொன்னனுக்கு இந்தக் கேலி ரசிக்காமல் குள்ளனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். துடுப்புப் பிடித்த வைரமேறிய அந்தக் கையின் அடி குள்ளன் மேல் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ, தெரியாது. ஆனால், அதற்குள்ளே குள்ளன் உடம்பை ஒரு நெளி நெளித்துப் பொன்னனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மறுகணம் மாயமாய் மறைந்தான். பொன்னன் அளவிட முடியாத கோபத்துடன் அங்குமிங்கும் ஓடினான். இதற்குள் இருட்டிவிட்டபடியால் பத்தடி தூரத்துக்கு மேல் கண் தெரியவில்லை. மேலும் இந்த இடத்தில் நாலாபுறமும் புதர்களாயிருந்தன. எனவே குள்ளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக்க மனச்சோர்வுடன் பொன்னன் திரும்ப யத்தனித்த போது, திடீரென்று அந்த இலுப்ப மரத்தின் மேலேயிருந்து "ஊ" என்று ஆந்தை கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது. பொன்னன் திகிலுடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அடர்ந்த மரக்கிளையில் இருண்ட குள்ளவடிவம் காணப்பட்டது. இன்னொரு தடவை "ஊ" என்று அழகு காட்டுவது போல் அவ்வுருவம் கூவிற்று.
பொன்னனுக்கு அப்போது வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அந்த மரத்தை வேரோடு பிடுங்கிச் சாய்த்து விடலாம் என்று எண்ணினான். அப்போது குள்ளன், "அடே புத்தியற்றவனே! மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான். பொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,"அடே முரடா! நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா? உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்" என்றான். "என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்" என்று பொன்னன் சிரித்தான். "ஏண்டா சிரிக்கிறாய்? ஜாக்கிரத்தை! காளியின் கோபத்துக்கு ஆளாவாய்!" அப்போது பொன்னன், "நான் சேர்ந்துவிட்டேன், அப்பா, சேர்ந்துவிட்டேன். ஆனால் என்ன பிரயோசனம்? கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே! ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன்?" என்றான். அப்போது குள்ளன் வியப்புடன், "அப்படியா! என்ன கட்டளையிட்டிருந்தார்?" என்று கேட்டான். "இந்த மண்டபத்தில் படுத்திருந்தவனைப் பத்திரமாய்க் கொல்லி மலைக்குக் கொண்டு வரச் சொன்னார். நேற்று ராத்திரி இந்த இடத்தில்தான் கட்டளை இட்டார். ஐயோ! தவறிவிட்டேனே?" என்று பொன்னன் அழுகிற குரலில் கூறினான். "அடடா! முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா? நீ வருவதற்குச் சற்று முன்னால், காஞ்சிக் சக்கரவர்த்தியின் மகனும் மகளும் இந்த வழியே போனார்கள். அவர்கள் அந்த மண்டபத்தின் அருகில் நின்றார்கள். மண்டபத்திலிருந்து ஒருவனை எடுத்துக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
இந்தக் கேள்வி பொன்னன் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் வைத்தியனையும் கட்டை வண்டியையும் அழைத்து வந்தபோது எதிரில் குதிரை, பல்லக்கு முதலிய ராஜ பரிவாரங்கள் வருவதைக் கண்டு ஒதுங்கி நின்றான். குதிரைமேல் குந்தவி தேவியைக் கண்டதும் அவளுடைய கண்ணில் பட்டு விடாமல் வண்டியின் பின்னால் நன்றாய் மறைந்து கொண்டான். பல்லக்கை அவன் கவனிக்கவில்லை. இப்போது அதெல்லாம் பளிச்சென்று ஞாபகம் வந்தது. குள்ளன் சொல்வது உண்மையாயிருக்கலாமென்று தோன்றிற்று. "ஏனப்பா மௌனமாயிருக்கிறாய்! என்ன யோசிக்கிறாய்?" என்று குள்ளன் மரத்தின் மேலிருந்து கேட்டான். பொன்னன் அவனைப் பார்த்து, "என்ன யோசிக்கிறேனா! உன்னை எப்படிக் காளிக்குப் பலி கொடுப்பது என்றுதான் யோசிக்கிறேன்" என்று கூறி, கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன்மேல் வீசி எறிந்தான்.
குள்ளன் அப்போது முன்னம் விக்கிரமன் கத்தியை ஓங்கியவுடன் செய்ததைப் போல் வாயைக் குவித்துக் கொண்டு, தீர்க்கமான ஒரு கூச்சலைக் கிளப்பினான். அந்தப் பயங்கரமான ஒலியைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலெடுத்தது. அங்கிருந்து அவன் ஒரே ஓட்டமாக உறையூர்ச் சாலையை நோக்கி ஓடத் தொடங்கினான். அந்தக் காட்டாற்றங்கரையிலிருந்து சுமார் காத தூரத்திலிருந்த பராந்தகபுரம் என்னும் ஊரைப் பொன்னன் அடைந்தபோது, இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். ஆனால் அங்கே தீவர்த்தி வெளிச்சமும் வாத்திய முழக்கமுமாய் ஏக தடபுடலாயிருந்தது. பொன்னன் என்னவென்று விசாரித்த போது, சக்கரவர்த்தியின் திருக்குமாரரும், திருக்குமாரியும் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு வரவேற்பு உபசாரங்கள் அவ்வூர்க் கோயிலில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக ஊருக்கு வெளியே கூடாரங்கள் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.
அவர்கள் ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பொன்னன் விரைந்து சென்றான். ஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்தன. யுவராஜா மகேந்திரனும் குந்தவி தேவியும் கோயிலுக்குப் போயிருந்தபடியால் இங்கே அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. சில காவற்காரர்கள் மட்டும் அங்குமிங்கும் நின்றார்கள். பணிப்பெண்களும் ஏவலாளர்களும் கூடாரங்களுக்குள் படுக்கை விரித்தல் முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு புறத்தில் கிளுவைச் செடிகளால் ஆன உயரமான வேலி அமைந்திருந்தது. அந்த வேலி ஓரமாகப் பொன்னன் சென்றான். ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
"ஏண்டி, மரகதம்! திருவெண்ணெய் நல்லூரில் போய் இரவு தங்குவதற்காக அல்லவா ஏற்பாடு இருந்தது? இங்கே எதற்காகத் தங்கியிருக்கிறோம்?" என்று ஒருத்தி கேட்டாள். "உனக்குத் தெரியாதா என்ன? வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்...." "ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி? அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே?" "அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நமது தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்." "அடி மரகதம்! இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி!" "என்ன மர்மம்!" "கட்டாயம் இருக்கிறது; இல்லாவிட்டால் வழியில் அநாதையாய்க் கிடந்தவனுக்கு இப்படி இராஜ வைத்தியமும் இராஜோபசாரமும் நடக்காதடி மரகதம்!" "சீச்சீ..."
"அவனை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வைத்தியம் பார்த்து அனுப்பி வைக்கச் சொல்லலாமல்லவா? நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும்?" "ஆமாண்டி, தங்கம்! அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், உனக்குச் சொல்லமாட்டேன்." "சொல்லாமற் போனால், நான் உன்னோடு பேசப் போவதில்லை." "இல்லையடி, கோபித்துக் கொள்ளாதே, இங்கே கிட்ட வா, சொல்லுகிறேன். யார் காதிலாவது விழப்போகிறது!" "சொல்லு பின்னே..." "உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ? அந்த இராஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்." "ஓகோ! அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும்?" "ஆமாம்." "ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி?" "பார்க்காமலென்ன? நான்தானே அவனுக்கு மருந்து கொடுக்கிறேன்!" "அவன் இளம் வயதாமேடி?" "ஆமாம்; அதனாலென்ன?" "ரொம்ப அழகாயிருக்கிறானாமே? முகத்தில் களை சொட்டுகிறதாமே?" "அதற்காக...." "எனக்கென்னமோ மரகதம், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்...." "அடி, பாவி! தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன்!" "சண்டாளி! தேவியைப் பற்றி நான் என்னடி சொன்னேன்?" "ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே!"
"சீ! தேவியைப் பற்றிச் சொல்வேனாடி? அப்படிப்பட்ட இளம் ரூபவானுக்குப் பக்கத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு, மருந்தும் கொடுக்கச் சொன்னால் நீ இலேசுப்பட்டவளாடி? பெரிய மாயக்காரியாச்சே! வேறு ஏதாவது மருந்து கொடுத்து விட்டாயானால்... ஐயையோ! கிள்ளாதேடி!...." இப்படிப் பேசிக் கொண்டே பணிபெண்கள் இருவரும் வேலி ஓரத்திலிருந்து அப்பால் போய் விட்டார்கள். பொன்னன் மேற்கண்ட சம்பாஷணையில் ஒரு வார்த்தை விடாமல் மிகவும் கவனமாய்க் கேட்டான். அவன் மனதில் வெகுகாலமாக அறிந்திராத மகிழ்ச்சி உண்டாயிற்று. இன்னும் கொஞ்ச தூரம் வேலி ஓரமாகப் போனான். ஒரு கூடாரத்தில் கொஞ்சம் கலகலப்பாயிருந்தது. அங்கே வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உற்று நோக்கினான். தீவர்த்தி வெளிச்சத்தில், கட்டிலில் விக்கிரமன் படுத்திருப்பதும், பக்கத்தில் வைத்தியர் உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டுப் பொன்னன் அங்கிருந்து திரும்பினான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் பத்தொன்பது
பொன்னனின் சிந்தனைகள்
பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாக வல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?
அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது? பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம்? அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா? இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.
மறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, "பகவானே! எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான். அவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. குந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும்? ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா? அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா? - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ? குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர்? அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா?
ஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக் கிறோமே? அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்?.... சிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக் கிறாராமே? இது எதற்காக?
அந்தச் சிவனடியார்தான் யார்? அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா? அல்லது கபட சந்நியாசியா? சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா? அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா? இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா! - ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான். இன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார்! தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே? அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது? ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
சிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல - அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் - மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை - தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று. அந்த வேஷதாரி யார்? அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா? அவரை நம்பலாமா, கூடாதா? அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன? கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்?
இதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை சிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக "சுவாமி! தாங்கள் யார்?" என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.
திரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் இருபது
பொன்னனும் சிவனடியாரும்
சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா? இந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் பொன்னன் முகத்தில் வெளிப்படுத்திய போதிலும் வார்த்தைகளினால் வெளியிடவில்லை. வெளியிடுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவனைப் பார்த்தவுடனேயே, சிவனடியார், "பொன்னா! எவ்வளவு சரியான சமயத்தில் வந்தாய்? இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன். உறையூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரம் கழித்து வந்திருந்தாயானால் என்னைப் பார்த்திருக்க மாட்டாய்..." என்று பரபரப்புடன் பேசிக் கொண்டே போனார். திண்ணையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும், "பொன்னா! சீக்கிரம் உன் சமாசாரத்தைச் சொல்லு! ரொம்ப முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். மகாராணியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று கேட்டார்.
பொன்னன், "தெரிந்தது, சுவாமி!" என்றான். பிறகு, தான் கொல்லிமலை அடிவாரத்துக்குப் போனது. அருவியைப் பிடித்துக்கொண்டு மேலேறியது, அங்கே ஒற்றைக் கை மனிதனும் குள்ளனும் வந்ததைக் கண்டு மறைந்திருந்தது. அவர்கள் திரும்பி வருவார்களென்று எதிர்பார்த்து மூன்று நாள் காத்திருந்துவிட்டுத் திரும்பியது ஆகிய விவரங்களைச் சொன்னான். காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனைக் காப்பாற்றியது முதலியவற்றைச் சொல்லவில்லை. சிவனடியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமென்று இருந்தான். ஒற்றைக் கை மனிதனுடைய தோற்றத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி சிவனடியார் கேட்க, பொன்னன் அவ்விதமே அவனுடைய பயங்கரத் தோற்றத்தை வர்ணித்து விட்டு, "சுவாமி! அந்த மனிதன் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "பொன்னா! பார்த்திப மகாராஜாவின் பத்தினி அந்தக் கொல்லி மலையிலேதான் எங்கேயோ இருக்கிறாள் சந்தேகமில்லை. இதுவரையில் எனக்கு அர்த்தமாகாத விஷயங்கள் பல இப்போது அர்த்தமாகின்றன. அந்த மனிதன் யார் என்றா கேட்கிறாய்? - மகா புருஷர்களும் பக்த சிரோமணிகளும் தோன்றிய இந்தப் புண்ணிய நாட்டில் நரபலி என்னும் பயங்கர வழக்கத்தைப் பரப்பி வரும் மகா கபால பைரவன்தான் அவன். நானும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். அவனை நேருக்கு நேர் காண வேண்டுமென்று. இன்று வரையில் முடியவில்லை. அவனைப் பற்றி இன்னொரு சந்தேகம் எனக்கிருக்கிறது. பொன்னா! ஏன் என் கண்ணில் அகப்படாமல் அவன் தப்பித் திரிகிறான் என்பதை ஒருவாறு ஊகிக்கிறேன்; எல்லா உண்மையையும் சீக்கிரத்தில் நாம் இரண்டு பேருமாகக் கண்டுபிடிக்கப் போகிறோம்.
"பொன்னா! அதற்கு முன்னால் நமக்கு இன்னும் முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. உனக்கு இப்போது ரொம்பவும் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் சொல்லப் போகிறேன். சோழநாட்டு இளவரசர் திரும்ப வந்திருக்கிறார்" என்று சொல்லிச் சிவனடியார் பொன்னனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார். அவனுடைய முகத்தில் சிறிது வியப்புக் குறி காணப்பட்டதே தவிர, குதூகலமும் மகிழ்ச்சியும் தோன்றாதது கண்டு, சிவனடியார், "என்ன பொன்னா உனக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். பொன்னன் இன்னும் சிறிது ஜாக்கிரதையுடன், "தங்களுடைய வார்த்தையில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுமா, சுவாமி? ஆனால், இவ்வளவு அபாயத்துக்குத் துணிந்து இளவரசர் ஏன் வந்தார் என்றுதான் கவலையாயிருக்கிறது" என்றான். "உண்மைதான் பொன்னா! இளவரசருக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது. உறையூருக்குப் போகும் பாதையிலேதான் ஏதோ நேர்ந்திருக்கிறது. நாம் உடனே கிளம்பிப் போய்ப் பார்க்க வேண்டும். அருள்மொழித் தேவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இளவரசரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார். பொன்னன் இப்போது உண்மையாகவே பேராச்சரியம் அடைந்தவனாய், "சுவாமி! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?
இளவரசரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? அவருக்கு வழியில் ஆபத்து என்று என்ன முகாந்திரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். "பொன்னா! இதென்ன உன்னிடம் இந்த மாறுதல்? நான் சொல்வதில் சந்தேகப்பட்டு முகாந்திரம் கேட்கக் கூட ஆரம்பித்து விட்டாயே? - நல்லது, சொல்கிறேன் கேள்! இளவரசரை நானே பார்த்தேன்; பேசினேன். நான்தான் உறையூருக்கும் அனுப்பினேன்...." "எதற்காக சுவாமி?" "எதற்காகவா? ஜன்ம தேசத்தைப் பார்த்துவிட்டு வரட்டும் என்றுதான். பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பிவரும் போதுதான். இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய்நாட்டுக்கு வரும்போது, பாலைவனப் பிரதேசமாயிருந்தாலும், அது சொர்க்க பூமியாகத் தோன்றும். வளங்கொழிக்கும் சோழ நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா? உங்கள் இளவரசருக்கு திரும்பவும் இந்நாட்டை விட்டுப் போகவே மனம் வராதபடி செய்ய வேணுமென்று விரும்பினேன்; பார்த்திப மகாராஜாவுக்குப் போர்க்களத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு. ஆனால் வழியில் இப்படி விபத்து ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஐயோ பகவானே! நாளை அருள்மொழி ராணி கேட்டால் நான் என்ன செய்வேன்!"
"சுவாமி! இளவரசருக்கு என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று பொன்னன் கேட்டான். "இன்றைக்கு ரொம்பக் கேள்விகள் கேட்கிறாயே, பொன்னா! என்ன ஆபத்து நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நேர்ந்து மட்டும் இருக்கிறது. அதோ அந்தக் குதிரைக்கு, பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால், அது சொல்லும்.... ஆமாம், இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டுதான் உங்கள் இளவரசர் கிளம்பினார். இதே இடத்திலிருந்துதான் புறப்பட்டார். ஆனால், இரண்டு நாளைக்குப் பிறகு குதிரை மட்டும் தனியாகத் திரும்பி வந்திருக்கிறது. இளவரசருக்கு எங்கே, என்ன நேர்ந்தது என்பதை நாம் இப்பொழுது உடனே போய்க் கண்டுபிடிக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயல்லவா, பொன்னா! உனக்குக் குதிரை ஏறத் தெரியுமா?" என்று சிவனடியார் கேட்டார். "தெரியும் சுவாமி! ஆனால், நான் தங்களுடன் வருவதற்கு முன்னால் தங்களிடம் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான் பொன்னன். "என்ன?" என்று சிவனடியார் தம் காதுகளையே நம்பாதவர் போல் கேட்டார். "ஆமாம் இன்னும் சில விவரங்கள் தெரியவேண்டும். முக்கியமாகத் தாங்கள் யார் என்று சொல்ல வேண்டும்" என்றான். சிவனடியாரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "ஓஹோ! அப்படியா?" என்றார்.
"சற்று முன்னால் சாலையிலிருந்து தாங்கள் குதிரைமீது வந்ததை நான் பார்த்தேன். அப்போது வேறு உருவம் கொண்டிருந்தீர்கள்; இந்த வீட்டுக்குள்ளேயே போய் வெளியே வரும்போது வேறு ரூபத்தில் வந்தீர்கள். ஆனால், இந்த இரண்டு உருவங்களும் தங்களுடைய சொந்த உருவம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகம் சுவாமி, எனக்கு வெகுநாளாகவே உண்டு. ஆனால், இப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. உண்மையில் தாங்கள் யார் என்று சொன்னால்...." "சொன்னால் என்ன?" "சுவாமி, மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... தாங்கள் அறிந்து கொள்ள விரும்பக்கூடிய விஷயம் எனக்குத் தெரியும், அதைச் சொல்லுவேன், இல்லாவிட்டால் என் வழியே நான் போவேன்...." சிவனடியார் சற்று யோசித்தார். பொன்னனுடைய முகத்தில் உள்ள உறுதிக் குறியைக் கவனித்தார். "பொன்னா! அவசியம் நீ தெரிந்து கொண்டுதான் தீர வேண்டுமா?" "ஆமாம், சுவாமி." "அப்படியானால், சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. பரம இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்" என்றார். "அப்படியே செய்கிறேன், சுவாமி." "போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்வாயா?" "பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்கிறேன், சுவாமி!"
"அப்படியானால், இதோ பார்!" என்று சிவனடியார் அன்று போர்க்களத்தில் பார்த்திபன் முன்னால் செய்தது போல தம்முடைய ஜடா மகுடத்தையும் மீசை தாடிகளையும் நீக்கினார். பொன்னன், "பிரபோ! தாங்கள் தானா?" என்று சொல்லி, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். "இதற்கு முன்னால் வள்ளி உனக்குச் சொல்லவில்லையா? பொன்னா!" என்று சிவனடியார் (மீண்டும் ஜடாமகுடம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு) கேட்க, "வள்ளி பெரிய கள்ளியாயிற்றே? நிஜத்துக்கு மாறான விஷயத்தைச் சொன்னாள். தங்களைத்தான் அவள் சொல்கிறாளா என்று நான் சந்தேகித்துக் கேட்டேன். இல்லை தாங்கள் பார்த்திப மகாராஜா என்று ஒரு பெரிய பொய் புளுகினாள். அவளை இலேசில் விடுகிறேனா, பாருங்கள்! எனக்கும் இப்போது ஒரு பெரிய இரகசியம் தெரியும். அதை அவளுக்குச் சொல்வேனா?" என்றான். பிறகு, பொன்னன் காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கி இளவரசரைக் காப்பாற்றியது முதல் அவரைக் குந்தவிதேவி தன் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றது வரையில் எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாய்ச் சொன்னான். இதற்கு முன்னாலெல்லாம் எதற்கும் ஆச்சரியம் அடையாதவராயிருந்த சிவனடியார் இப்போது அளவிட முடியாத வியப்புடன் பொன்னன் கூறிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "பொன்னா! உங்கள் இளவரசரைப் பற்றிய கவலை தீர்ந்தது விக்கிரமன் பத்திரமாயிருப்பான். நாம் அருள்மொழி ராணியைத்தான் தேடி விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
அத்தியாயம் இருபத்தொன்று
வஸந்தத் தீவில்
ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?" என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். "இறங்குவேன் அப்பா!" என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. "ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?" என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.
விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, "வெற்றி வீரனாய்த் திரும்பி வா!" என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. "இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்" என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.
விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. "ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?" என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் 'இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!' என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான்.
கண்கள் திறந்துதானிருக்கின்றன - ஆனால் பார்வை மட்டும் இல்லை. "ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?" என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. "ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!" என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. 'ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.
இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். "இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?" பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே? தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று - உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.
இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை. பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.
காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப