சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
சருக்கம் 6 (வம்பறா வரிவண்டுச் சருக்கம்) / 3ம் பகுதி 3155-3634

periya purANam of cEkkizAr
Canto 2, Carukkam -6 part 2
(vampaRA varivaNTuc carukkam)
In tamil script, unicode/UTF-8 format




Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5, FireFox Mozilla,..) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.



Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
-முதற் காண்டம் / 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் - 3ம் பகுதி

6.2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் (3155 - 3563)
6.3 திரு மூல நாயனார் புராணம் (3564 - 3591)
6.4 தண்டியடிகள் புராணம் (3592 - 3617)
6.5 மூர்க்க நாயனார் புராணம் (3618 - 3629)
6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634)


6.2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் (3155 - 3563)

திருச்சிற்றம்பலம்

3155 நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும்
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான்
பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால்
6.2.1
3156 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு
6.2.2
3157 விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்
உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள்
6.2.3
3158 நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக்
காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்
6.2.4
3159 இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான்
மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்
6.2.5
3160 அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார்
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்
6.2.6
3161 புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க்
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று
துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்
6.2.7
3162 நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு
இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத்
தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு
மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன்
6.2.8
3163 திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்
6.2.9
3164 தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்
6.2.10
3165 செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின்
இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல்
பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்
6.2.11
3166 ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப்
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்
6.2.12
3167 வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார்
6.2.13
3168 ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி
நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப்
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல்
காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்
6.2.14
3169 அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து
செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்
6.2.15
3170 நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்
6.2.16
3171 குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட
அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று
6.2.17
3172 மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்
6.2.18
3173 விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும்
தண்ண்஢லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று
6.2.19
3174 ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்
6.2.20
3175 பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி
மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்
புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்
6.2.21
3176 தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச்
செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர்
6.2.22
3177 பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார்
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர்
6.2.23
3178 கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி
மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின்
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின்
ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து
6.2.24
3179 குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து
வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல்
6.2.25
3180 அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து
நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு
இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்
6.2.26
3181 நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும்
போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார்
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப்
போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார்
6.2.27
3182 வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார்
6.2.28
3183 அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார்
மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்
6.2.29
3184 நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள்
செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக்
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்
6.2.30
3185 குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண்
அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்ச
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்
6.2.31
3186 தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப்
பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்
6.2.32
3187 மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி
ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக்
கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்
6.2.33
3188 தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால்
சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்
6.2.34
3189 பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி
6.2.35
3190 வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து
மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி
ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார்
6.2.36
3191 செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார்
நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா
6.2.37
3192 ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்
6.2.38
3193 அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக்
கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத்
தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப்
படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார்
6.2.39
3194 கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்
6.2.40
3195 வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும்
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக்
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை
6.2.41
3196 சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால்
மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி
நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார்
6.2.42
3197 அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச்
செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்
6.2.43
3198 நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி
மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து
6.2.44
3199 இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்
6.2.45
3200 செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார்
6.2.46
3201 சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார்
6.2.47
3202 சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப
மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால்
6.2.48
3203 துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார்
6.2.49
3204 சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம்
பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி
6.2.50
3205 தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து
6.2.51
3206 பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே
எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும்
பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர்
6.2.52
3207 செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்
6.2.53
3208 வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி
அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும்
உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்
6.2.54
3209 வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள்
அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார்
6.2.55
3210 பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி
வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை
6.2.56
3211 பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி
நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன்
மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து
6.2.57
3212 வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார்
6.2.58
3213 படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய
விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத்
தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்
6.2.59
3214 வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும்
மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார்
6.2.60
3215 செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி
தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள்
6.2.61
3216 புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில்
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில்
6.2.62
3217 விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார்
6.2.63
3218 சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார்
தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்
6.2.64
3219 மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன்
அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை
முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்
6.2.65
3220 பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து
மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார்
6.2.66
3221 செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார்
6.2.67
3222 அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்
தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்
6.2.68
3223 நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய
சொல்லூத்஢யமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார்
6.2.69
3224 அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக்
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின்
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர்
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்
6.2.70
3225 தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்
சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்
6.2.71
3226 மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து
நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்
6.2.72
3227 அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக்
குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து
6.2.73
3228 அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி
தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து
பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்
6.2.74
3229 செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர்
எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்
6.2.75
3230 மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
6.2.76
3231 வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித்
தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
6.2.77
3232 சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார்
6.2.78
3233 சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று
6.2.79
3234 அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால்
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால்
முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல்
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்
6.2.80
3235 நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
6.2.81
3236 இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
6.2.82
3237 அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்
பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார்
6.2.83
3238 கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்
6.2.84
3239 பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக்
கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்
குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்
6.2.85
3240 கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச்
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப
6.2.86
3241 அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்
6.2.87
3242 உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக்
குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்
6.2.88
3243 அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார்
6.2.89
3244 காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ
ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார்
6.2.90
3245 அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால்
என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்
6.2.91
3246 ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து
மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில்
6.2.92
3247 வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார்
6.2.93
3248 செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார்
6.2.94
3249 ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச்
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார்
6.2.95
3250 அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே
6.2.96
3251 அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில்
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்
6.2.97
3252 நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று
ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்
6.2.98
3253 அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார்
6.2.99
3254 வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து
கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார
6.2.100
3255 செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு
மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு
6.2.101
3256 நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்
இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன
குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச்
சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல
6.2.102
3257 கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்
6.2.103
3258 கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம்
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி
நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார்
6.2.104
3259 தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
6.2.105
3260 நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட
6.2.106
3261 பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன்
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்
6.2.107
3262 அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்
6.2.108
3263 என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர்
வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில்
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார்
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று
6.2.109
3264 மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று
வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்
6.2.110
3265 மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்
சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்
6.2.111
3266 பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன்
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்
6.2.112
3267 ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின்
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்
நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து
நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய
6.2.113
3268 பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள
6.2.114
3269 மடித்து ஆடும் அடிமைக்கண் என்று
எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள்
வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை
சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு
எனும் களிப்பால் நயந்து பாடி
6.2.115
3270 மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து
திரு வீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள்
தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன்பதியை
வணங்கிப் போய் மறலி வீழத்
தாள் ஆண்மை கொண்டவர் தம்
கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்
6.2.116
3271 கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை
இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப்
புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்
மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
6.2.117
3272 கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக்
கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது
ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி
ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
6.2.118
3273 திருப் பதிகம் பாடியே சென்று அங்கு
எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில்
உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே
உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப்
போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென்
கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான்
நாட்டு முள்ளூரில் கலந்த போது
6.2.119
3274 கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய
துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின்
தொடைமாலை மலரச் சாத்தித்
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்
கொள் பாடியினை எய்தச் செல்வார்
6.2.120
3275 எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை
எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு
செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள்
பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை
எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
6.2.121
3276 காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து
6.2.122
3277 எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி
நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி
மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும்
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார்
6.2.123
3278 செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும்
மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு
எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப்
பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்
6.2.124
3279 மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத
சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து
தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்
6.2.125
3280 பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப்
பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்
6.2.126
3281 நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்
தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல
6.2.127
3282 என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்
நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று
6.2.128
3283 ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன்
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப்
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்
6.2.129
3284 மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி
முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர்
கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்
6.2.130
3285 நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று
மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ
சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர்
6.2.131
3286 முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்
பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து
6.2.132
3287 முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்
6.2.133
3288 ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக்
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
6.2.134
3289 கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால்
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார்
6.2.135
3290 ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து
மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க
நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்
6.2.136
3291 மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும்
பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்
6.2.137
3292 கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித்
திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார்
விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்
6.2.138
3293 வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து
அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச்
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார்
6.2.139
3294 அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப்
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம்
தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன்
துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்
6.2.140
3295 பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
6.2.141
3296 இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும்
வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும்
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார்
6.2.142
3297 பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும்
கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்
துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார்
6.2.143
3298 விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக்
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார்
6.2.144
3299 அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
6.2.145
3300 திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின்
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
6.2.146
3301 வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
6.2.147
3302 தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து
பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய்
மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்
6.2.148
3303 நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல்
பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த்
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்
6.2.149
3304 நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
6.2.150
3305 அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில்
ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்
மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார்
6.2.151
3306 மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
6.2.152
3307 அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக்
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்
6.2.153
3308 திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
6.2.154
3309 மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று
தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய்
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்
6.2.155
3310 உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி
பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்
கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார்
6.2.156
3311 வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென்
பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார்
மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து
6.2.157
3312 குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன்
வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி
6.2.158
3313 ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்
சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன்
காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என
6.2.159
3314 வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப்
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச்
சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி
6.2.160
3315 எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப்
பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால்
6.2.161
3316 சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக்
கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார்
6.2.162
3317 சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர்
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
6.2.163
3318 குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு
வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப்
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்
6.2.164
3319 கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி
உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்
6.2.165
3320 அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று
மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக்
கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார்
6.2.166
3321 சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்
பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்
6.2.167
3321 திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப்
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்
6.2.168
3323 திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப்
பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச்
செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார்
6.2.169
3324 மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
6.2.170
3325 நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப்
பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்
6.2.171
3326 தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள்
தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி
வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே
எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்
6.2.172
3327 தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித்
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார்
6.2.173
3328 பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய்
நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி
ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக்
கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்
6.2.174
3329 அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக்
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்
6.2.175
3330 வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்
மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்
6.2.176
3331 மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச்
செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார்
6.2.177
3332 வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக்
கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப்
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக்
கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்
6.2.178
3332 இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார்
6.2.179
3334 வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே
நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்
6.2.180
3335 திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே
பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண்
உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி
6.2.181
3336 முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
6.2.182
3337 வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச்
சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்
6.2.183
3338 அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்
இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார்
6.2.184
3339 மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப்
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார்
6.2.185
3340 ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார்
6.2.186
3341 ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்
சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு
வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர்
6.2.187
3342 கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்
6.2.188
3343 வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்
6.2.189
3344 சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம்
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
6.2.190
3345 ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்
6.2.191
3346 அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
6.2.192
3347 பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர்
ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார்
6.2.193
3348 செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
6.2.194
3349 மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப்
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர்
சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்
6.2.195
3350 தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும்
அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்
6.2.196
3351 வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
6.2.197
3352 வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து
திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்
6.2.198
3353 அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார்
தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார்
6.2.199
3354 அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள
எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார்
வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்
6.2.200
3355 வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி
அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர்
6.2.201
3356 ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச்
சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்
6.2.202
3357 வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன்
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்
6.2.203
3358 ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப்
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்
6.2.204
3359 பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத்
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்
கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்
6.2.205
3360 இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநித்திதையார்
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர்
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்
6.2.206
3361 நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்
பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார்
ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்
6.2.207
3362 மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கிலியார்
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலையாயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்
6.2.208
3363 சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார் தம் கண் மனைவியார்க்கு உரைப்பார்
6.2.209
3364 வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார்
6.2.210
3365 தாயாரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் திரு அருளே
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்(று)
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்
6.2.211
3366 பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது எனத்
தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்து தை வந்தது நீங்க
வாங்கு சிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என்? என்றார்
6.2.212
3367 என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என
6.2.213
3368 அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுகப்
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான்
சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார்
6.2.214
3369 தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான்
மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்
6.2.215
3370 தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச்
செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப்பி
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார்
6.2.216
3371 அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப்
பணம் கொள் அரவச் சடையார் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார்
6.2.217
3372 பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடம் சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று
6.2.218
3373 பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே
மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்
சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார்
6.2.219
3374 சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமை காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி
6.2.220
3375 யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்
தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில்
6.2.221
3376 காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து
6.2.222
3377 பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மென் கொடி அனையார்
வண்டுமருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்
6.2.223
3378 அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயிலுள் புகுந்தார்
6.2.224
3379 அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப்
பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து
தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீகத் தடம் நிகழ் பூந்திருமண்டபத் தின் உள் புகுந்தார்
6.2.225
3380 அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து
மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார்
6.2.226
3381 கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச்
சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை
காவாதவர் பால் போய் விழத் தம் பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்துற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்
6.2.227
3382 இன்ன பரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப்புதியமதி
தன்னுள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும்
6.2.228
3383 அங்கு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன
இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார்
6.2.229
3384 மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனை வருத்தித்
தன்னார் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே
என்னாருயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப்
பொன்னார் இதழி முடியார் முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார்
6.2.230
3385 மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஓற்றியூர் அமர்ந்த
இலகு சோதி பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்
6.2.231
3386 மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண்
கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்(கு)
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என
6.2.232
3387 அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் என் நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன்யான்
தண்ணிலா மின் ஒளிர் பவளச் சடையீர் அருளும் எனத் தளர்வார்
6.2.233
3388 மதிவாண் முடியார் மகிழ் கோயில் புறத்தோர் மருங்கு வந்து இருப்பக்
கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார்
முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய
6.2.234
3389 உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்டகவலை ஒழிக என்ன
6.2.235
3390 அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி அளித்தீர் உயிர் காக்க
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி
மன்றல் மலர்ச் சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்
6.2.236
3391 ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலியாராம்
தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்
6.2.237
3392 தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து) அடியேன் உய்ய எழுந்து அருளும்
பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்
6.2.238
3393 சாரும் தவத்துச் சங்கிலி! கேள்; சால என்பால் அன்புடையான்
மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை இரந்தான்
வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்
6.2.239
3394 ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண்
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய
சீத மலர் தாமரை அடிக்கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்
6.2.240
3395 எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான் இமையோர்
தம் பிரானே அருள் தலைமேல் கொண்டேன் தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்
கொம்பின் ஆகங்கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்
6.2.241
3396 பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திருவாரூரின் கண் அவர் தாம் மகிழ்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார் பீர் என்றார் குன்றா விளக்கு அனையார்
6.2.242
3397 மற்றவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன் தொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்
அற்றமுறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி
6.2.243
3398 வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித்
தூய மனம் மகிழ்து இருந்த தோழனார் பால் அணைந்து
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால்
ஆயதொரு குறை உன்னால் அமைப்பதுள என்று அருள
6.2.244
3399 வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்(கு)
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இவ்விரவே செய்த என அருள் செய்தார்
6.2.245
3400 என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள
6.2.246
3401 வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் எனக் குறிப்பால்
தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்
6.2.247
3402 சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்(கு)
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில்விடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்
6.2.248
3403 தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள
உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம்பிரானே! அரியது இனி எனக்கு என்? என ஏத்தி
6.2.249
3404 அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச்
செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ?
துஞ்சிருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்
6.2.250
3405 சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே
கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள
6.2.251
3406 மற்றவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிய அரியீர்
அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப்
பெற்றது யான் எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார்
6.2.252
3407 தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ்விரவின் கண்
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி
6.2.253
3408 நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்
6.2.254
3409 சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக்
கோயிலின் முன் காலம் அது ஆகவே குரித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்
6.2.255
3410 நின்றவர் அங்கு எதிர் வந்த நேர் இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் ஒதுங்கி உட்புகுந்தார்
6.2.256
3411 அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்!
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத்
திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச்
சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்
6.2.257
3412 எம் பெருமான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள்
தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும்
6.2.258
3413 மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனமருள்வார்
ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில்
ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ்க் கீழ் அவர் போதப் போய் அணைந்தார்
6.2.259
3414 தாவாத பெருந் தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார்
பூவார் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார்
6.2.260
3415 மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக்
காவியினேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப்
பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்
6.2.261
3416 திருநாவலூராளி தம் உடைய செயல் முற்றிப்
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப்
பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்
6.2.262
3417 வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து
கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர
6.2.263
3418 அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள
நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்
6.2.264
3419 நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்
6.2.265
3420 மண்ணிறைந்த பெரும் செல்வத்து திரு ஒற்றியூர் மன்னும்
எண்ணிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக்
கண்ணிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார்
6.2.266
3421 பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே
வண்டமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்
6.2.267
3422 யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும்
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண்
ஊழியாம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம்
6.2.268
3423 இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால்
சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல
6.2.269
3424 பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார்
6.2.270
3425 வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான்
ஒண்ணுதலார் புடை பரந்த ஒலக்கம் அதன் இடையே
பண்ணமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்
கண்ணுற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார்
6.2.271
3426 பூங்கோயில் அமர்ந்தாரை புற்றிடங்கொண்டு இருந்தாரை
நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார்
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்
6.2.272
3427 மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்
6.2.273
3428 பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர்
தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால்
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்
6.2.274
3429 செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்
மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால்
இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானை
எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து
6.2.275
3430 அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல்
பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார்
மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே
எய்து வெம் துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி
பணிந்து சாலவும் பல பல நனைவார்
6.2.276
3431 அங்கு நாதர் செய் அருளது ஆக
அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால்
போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில்
சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையில் பாடி
6.2.277
3432 தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து
அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களை எனப் பரவிக் குறித்த
காதலின் நெறிக் கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட
மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக்
காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார்
6.2.278
3433 அணைந்த தொண்டர்கள் உடன்
வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த
கைத்தலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன்
தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி
இணங்கிலா மொழியால் உளோம் போகீர்
என்று இயம்பினார் ஏதிலார் போல
6.2.279
3434 பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்
6.2.280
3435 முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்
பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாய
என்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்று
மன்னு பெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்
6.2.281
3436 அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பர் உடன்
பங்கயப் பூந்தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித்
தங்குவார் அம்மைத் திரு தலையாலே வலம் கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திருவாலங் காட்டின் அயல்
6.2.282
3437 முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்
6.2.283
3438 தேன் நிலவு பொழில் கச்சிக் காமக் கோட்டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால்
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன்
வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன் தொண்டர்
6.2.284
3439 பதொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய் தொல் உலகம்
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுதில் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி
6.2.285
3440 ப விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்
6.2.286
3441 பபங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச்
செங்கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு
மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்
6.2.287
3442 பஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்
6.2.288
3443 பபாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன்
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச்
சூடிய அஞ்சலியினராய்த் தொழுது புறம் போந்து அன்பு
கூடிய மெய்த்தொண்டர் உடன் கும்பிட்டு இனிது அமர்வார்
6.2.289
3444 பமா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப்
பூ மலிவார் சடையாரைப் போற்றி அருளது ஆகத்
தே மலர்வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார்
பாமலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி
6.2.290
3445 ப அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று
சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்
6.2.291
3446 பமன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப்
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார்
அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்
6.2.292
3447 பஅங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்
தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செங்கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு
6.2.293
3448 பஅந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்
6.2.294
3449 பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள்
விரவி மழ விடை உயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி
உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி
அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார்
6.2.295
3450 அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்
6.2.296
3451 திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய்
விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல்
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருளவேண்டும் என வணங்குவார்
6.2.297
3452 பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார்
விரவிய இப் பிணி அடையத் தவிப்பதற்கு வேறு ஆக
வரமலர் வண்டறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக்
கரவில் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார்
6.2.298
3453 மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி
அக்கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்
6.2.299
3454 கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டு பெரும் கதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
6.2.300
3455 பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது
எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய்
கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்
6.2.301
3455 பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது
எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய்
கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்
6.2.301
3456 அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார்
நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்
6.2.302
3457 பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்
6.2.303
3458 ஆறணியுஞ் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்டாத்து உள் இடை தெரிந்து
மாறில் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார்
6.2.304
3459 ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்
6.2.305
3460 சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக்
கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்து
தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்
6.2.306
3461 வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித்
தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்
6.2.307
3462 திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த
பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதைக் கண்களால் பருகுதற்கு
மருவார்வத்துடன் மற்றைகண் தாரீர் என வணங்கி
6.2.308
3463 மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்
6.2.309
3464 பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச்
சீத மலர்க் கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய்
6.2.310
3465 விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி
எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த
செந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்
6.2.311
3466 காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகை கோயில்
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து
சீலம் உடைய அன்பர் உடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார்
6.2.312
3467 நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல் கங்குலாகிக் கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீதூரப் புல்வார் சில நாள் போன அதன்பின்
6.2.313
3468 செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்
6.2.314
3469 மென் பூஞ்சயனத்து இடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார்
பொன் பூந்தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார்
என்பூடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்
6.2.315
3470 ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப்
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்
6.2.316
3471 நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார்
6.2.317
3472 மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர்
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்லச் செல விட்டார்
6.2.318
3473 நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்னேரிடையார் முன் எய்தி
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார்
6.2.319
3474 பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத்துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார்
6.2.320
3475 போந்து புகுந்த படி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்த சிந்தை ஆகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமகக் கடலுள்
6.2.321
3476 அருகு சூழ்ந்தார் துயின்று திருஅந்தயாமம் பணி மடங்கிப்
பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்
6.2.322
3477 முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளி
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப்
பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்
6.2.323
3478 அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத்
தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய
6.2.324
3479 தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார்
6.2.325
3480 விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று
6.2.326
3481 அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய
வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம்
கொடியேர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து
6.2.327
3482 நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரனாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என
6.2.328
3483 அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித்
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே
பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார்
6.2.329
3484 எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண்ணகைப் பரவை முகில் சேர் மாடத்து இடை செல்ல
நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார்
6.2.330
3485 அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவரியர்
வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி
தொண்டனார் தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்து அருள
6.2.331
3486 தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன்போக
6.2.332
3487 அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ்விருடிகளும்
மருவு நண்பின் நிதிக் கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப்
பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத
6.2.333
3488 மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும்
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர்க்கண் பரவையார் திருமாளிகையை நேர் நோக்கி
6.2.334
3489 இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின்தொடர
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம்
பிறை கொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது
6.2.335
3490 பெரு வீரையினும் மிக முழங்கிப்பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர்
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாமால்
6.2.336
3491 ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூடத்தம்
பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார்
6.2.337
3492 சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாகும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து
6.2.338
3493 பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்திப்
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே
பாதி மதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்
6.2.339
3494 மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை
முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண்
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணிமார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார்
6.2.340
3495 கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன
அங்கயல் விழியினாரும் அதனை நீர் அருளிச் செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி
6.2.341
3496 என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்
பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன
நன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார்
6.2.342
3497 பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி
இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்
6.2.343
3498 நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி
நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னையான் வேண்டிக் கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளிச் செய்தார்
6.2.344
3499 அரு மறை முனிவரான ஐயரைத் தையலார் தாம்
கருமம் ஈதாக நீர் இக் கடைத் தலை வருகை மற்(று)உம்
பெருமைக்குத் தகுவது அன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார்
6.2.345
3500 நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்
தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம்
வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்
6.2.346
3501 தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர்
நாதரை அறிவிலாதே நன்நுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உட் கொள்வார்
6.2.347
3502 போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ
நாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான்
ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்
சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று
6.2.348
3503 வழி எதிர் கொள்ளச் செல்வர் வரவு காணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார்
6.2.349
3504 பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போன
அரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில்
இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்
6.2.350
3505 சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார்
6.2.351
3506 அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார்
நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தம் இல்லம் நண்ணிக்
கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்
6.2.352
3507 அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று
6.2.353
3508 வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்
நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்
6.2.354
3509 ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்றுவலிய ஆள் கொண்டபற்று என்
நேவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்
6.2.355
3510 தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக்
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார்
6.2.356
3511 மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்தாமும்
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடித் தொழும்பன் ஏனைப்
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற
6.2.357
3512 அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப்
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்
முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப்
பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்
6.2.358
3513 மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்பு
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதவர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்
6.2.359
3514 கண் துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டு அணைந்த வரை யான் உட்கெண்டிலேன் பாவியேன் என்று
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில்
6.2.360
3515 வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மை
அறிவுறு கோலத் தோடும் அளவில் பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து
6.2.361
3516 பாரிடத் தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே
பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால்
சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே
6.2.362
3517 ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்
6.2.363
3518 அரி அயற்கு அரியர் தாமுமாய் இழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம் முன் போல் மாறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்
6.2.364
3519 பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த
இரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ என்பார்
6.2.365
3520 துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது
அளிவரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல் வீராகி
எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்
6.2.366
3521 நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்
6.2.367
3522 ஆதியும் மேலும் மாலயன் நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார்
பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்
6.2.368
3523 அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர்
மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார்
6.2.369
3524 அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார்
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூரப்
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி
முன்புற நேரும் கண் இணை தானும் முகிழாரால்
6.2.370
3525 அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம்
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள்
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார்
6.2.371
3526 எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத்
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம்
நம்பி இனப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன
6.2.372
3527 நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார்
6.2.373
3528 என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அச் சே இழை பால் என்று அருள் செய்து
வென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ
6.2.374
3529 தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது
6.2.375
3530 முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம் சிகரம் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட
6.2.376
3531 மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும்
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல
6.2.377
3532 இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும்
மை வளர் நெடுங்கணாரும் மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்
6.2.378
3533 பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக்
காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித்
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத்தாமும்
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்
6.2.379
3534 வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும்
தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார்
6.2.380
3535 இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த
திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றி சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சிவாய்ப்ப
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்
6.2.381
3536 ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங்கொண்டு ஆண்ட
நீரணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி
பாரணி விளக்கும் செஞ்சொல்பதிக மாலைகளும் சாத்தி
தாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்
6.2.382
3537 நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று
தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார்
6.2.383
3538 நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்
6.2.384
3539 காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய பாததாமரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது வருவது ஆகி
ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று
6.2.385
3540 நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று
6.2.386
3541 அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவி அங்குஇருந்தான் தன்னை
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி
6.2.387
3542 ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோன் ஆர் தாம் எண்ணிப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவர் ஆகி
வேறினி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங்கொன்றை
ஆறிடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து
6.2.388
3543 நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி
வாடுறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்
6.2.389
3544 ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து
பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்
6.2.390
3545 சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய
எந்தமையாளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றி
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு
6.2.391
3546 எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம்
தம் பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து
6.2.392
3547 மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே
6.2.393
3548 வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர்
6.2.394
3549 அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வரும்தி செப்பி விட்டார்
6.2.395
3550 நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டு
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார்
6.2.396
3551 மற்றவன் இங்கு வந்து தீர்பதன் முன் நான் மாயப்
பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால்
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே
6.2.397
3552 கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும்
பொருவரும் கணவரோடு போவது புரியும் காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்
6.2.398
3553 கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப்
புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்
துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்
6.2.399
3554 செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி
மெய்மையாம் விருப்பின்னோடும் மேவி உள் புகுந்து மிக்க
மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது
6.2.400
3555 பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்ற
ஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார்
6.2.401
3556 மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத்
தீது அணை வில்லை ஏறும் என் மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்
6.2.402
3557 வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்
6.2.403
3558 கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற
ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்
6.2.404
3559 மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற
6.2.405
3560 இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவரும் மகிழ்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
6.2.406
3561 சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்
மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால்
6.2.407
3562 அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில்
தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே
செங்கண் மால் விடையார் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினேடும்
6.2.408
3563 நள்ளிருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப்புக்கேன்
உள்ளுணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப
6.2.409
திருச்சிற்றம்பலம்


6.3 திரு மூல நாயனார் புராணம் (3564 - 3591)

திருச்சிற்றம்பலம்

3564 அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்
நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்
6.3.1
3565 மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்
6.3.2
3566 மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர்
பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை
அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்
6.3.3
3567 கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார்
6.3.4
3568 நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித்
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்
6.3.5
3569 நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்
கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர்
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார்
6.3.6
3570 எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச்
செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்
6.3.7
3571 தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்
6.3.8
3572 காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார்
6.3.9
3573 அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப்
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள்
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார்
6.3.10
3574 அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான்
வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை
வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான்
6.3.11
3575 மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து
சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ
உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார்
6.3.12
3576 இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்
6.3.13
3577 பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால்
6.3.14
3578 ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம்
காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப்
பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார்
6.3.15
3579 வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச்
சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார்
6.3.16
3580 போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார்
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள்
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார்
6.3.17
3581 அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர
இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப்
பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார்
6.3.18
3582 இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள்
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார்
6.3.19
3583 பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில்
வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார்
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார்
6.3.20
3584 பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல்
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி
மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார்
6.3.21
3585 இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள்
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார்
6.3.22
3586 தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்
கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார்
6.3.23
3587 சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச்
செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார்
6.3.24
3588 ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி
மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த்
தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று
பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார்
6.3.25
3589 ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய
ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம்
ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து
6.3.26
3590 முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்
6.3.27
3591 நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம்
மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி
அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்
6.3.28
திருச்சிற்றம்பலம்


6.4 தண்டியடிகள் புராணம் (3592 - 3617)

திருச்சிற்றம்பலம்

3592 தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார்
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக்
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும்
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்
6.4.1
3593 காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே
பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர்
சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார்
6.4.2
3594 பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில்
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி
நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில்
6.4.3
3595 செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால்
அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார்
6.4.4
3596 குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின்
இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய்
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார்
6.4.5
3597 நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி
அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி
எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார்
மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார்
6.4.6
3598 மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம்
தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள்
பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி
ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார்
6.4.7
3599 அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார்
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன
மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார்
6.4.8
3600 வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறுகாணேன் யான் அதுநீர் அறிதற்கார் என்பார்
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார்
6.4.9
3601 அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித்
தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார்
6.4.10
3602 வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி
ஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார்
6.4.11
3603 பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது
அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள்
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார்
6.4.12
3604 நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்
6.4.13
3605 தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக்
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித்
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்
6.4.14
3606 வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார்
6.4.15
3607 மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத்
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப்
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி
6.4.16
3608 அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல்
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்
6.4.17
3609 அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார்
மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர்
6.4.18
3610 ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார்
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார்
6.4.19
3611 தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான்
6.4.20
3612 தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர்
அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக்
கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி
6.4.21
3613 குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார்
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோ ம் என்பாமதி-கெட்டீர்
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார்
6.4.22
3614 பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார்
காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார்
6.4.23
3615 அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம்
சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான்
6.4.24
3616 மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே
உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்
6.4.25
3617 கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட
எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர்
உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம்
6.4.26
திருச்சிற்றம்பலம்


6.5 மூர்க்க நாயனார் புராணம் (3618 - 3629)

திருச்சிற்றம்பலம்

3618 மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்
நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு
6.5.1
3619 செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார்
6.5.2
3620 கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்
6.5.3
3621 தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்
6.5.4
3622 இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார்
6.5.5
3623 அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார்
6.5.6
3624 பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் ஦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில்
6.5.7
3625 இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார்
6.5.8
3626 முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில்
6.5.9
3627 சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்
காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்
6.5.10
3628 நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும்
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின்
பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார்
6.5.11
3629 வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்
6.5.12
திருச்சிற்றம்பலம்


6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634)

திருச்சிற்றம்பலம்

3630 சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார்
6.6.1
3631 யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்
6.6.2
3632 எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்
6.6.3
3633 சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்
6.6.4
3634 துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்
6.6.5
3635 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே
6.6.6
திருச்சிற்றம்பலம்

வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 24 May 2005