Holy Bible - Old Testament
Book 21: Ecclesiastes (Qoheleth)
Book 22 : Canticles (in Tamil, Unicode/utf-8 format)
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 21 - சபை உரையாளர் &
புத்தகம் 22 - இனிமைமிகுபாடல்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai
for providing us with the"bamini" Tamil font e-version of this work and for his
help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in unicode/utf-8 format
So you need to have a Unicode font with the Tamil character block and a
unicode-compliant browser to view the Tamil part properly.
Several Unicode Tamil fonts are available free download at
Tamil electronic library website (http://tamilelibrary.org/index.php?download)
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of
electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 21 - சபை உரையாளர்
அதிகாரம் 1.
1. தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை:
2. வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.
3. மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?
4. ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.
5. ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.
6. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.
7. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.
8. அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.
9. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.
10. ஏதேனும் ஒன்றைப்பற்றி,"இதோ, இது புதியது" என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!
11. முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை.
12. சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.
13. இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்!
14. இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.
15. கோணலானதை நேராக்க இயலாது: இல்லாததை எண்ணிக் கையில் சேர்க்க முடியாது.
16. எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்: மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
17. ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்: மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.
18. ஞானம் பெருகக் கவலை பெருகும்: அறிவு பெருகத் துயரம் பெருகும்.
அதிகாரம் 2.
1. இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்: நெஞ்சே! நீ வா!" என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன்.
2. சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்:
3. இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்: மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்:
4. பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்: எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.
5. எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்:
6. தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்:
7. ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்: என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்: ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.
8. வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.
9. இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.
10. என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.
11. நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்: முற்றும் பயனற்ற செயல்களே.
12. நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராய்த்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?
13. ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.
14. ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.
15. மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வணை என்ற முடிவுக்கு வந்தேன்.
16. ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?
17. எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்: யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
18. நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.
19. அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்: யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர்.
20. என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.
21. ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.
22. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?
23. வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்: வேலையில் தொந்தரவு: இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
24. உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.
25. அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?
26. கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்: ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
அதிகாரம் 3.
1. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.
2. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்:
3. கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்:
4. இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்:
5. கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்:
6. தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், துக்கியெறிய ஒரு காலம்:
7. கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்:
8. அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.
9. வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?
10. மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.
11. கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்தியிருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
12. எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.
13. உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.
14. கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.
15. இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.
16. வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.
17. கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
18. மனிதர் விலங்கைப் போன்றவர் என்"பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
19. மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது: மனிதரும் மடிகிறார்: விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை: எல்லாம் வீணே.
20. எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும்.
21. மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?
22. ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.
அதிகாரம் 4.
1. பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை.
2. ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன்.
3. இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை.
4. மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
5. தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.
6. காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.
7. உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.
8. ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை: என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை: தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?
9. தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
10. ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் துக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்: ஏனெனில், அவரைத் துக்கி விட எவருமில்லை.
11. குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்: தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்?
12. தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.
13. வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன்.
14. சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு: அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.
15. ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன்.
16. அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
அதிகாரம் 5.
1. கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை.
2. கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே: எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்: நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்: எனவே, மிகச்சில சொற்களே சொல்.
3. கவலை மிகுமானால் கனவுகள் வரும்: சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.
4. கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்"தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.
5. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
6. வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்: தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான துதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்?
7. கனவுகள் பல வரலாம்: செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.
8. ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.
9. "பொதுநலம்", "நாட்டுத் தொண்டு" என்ற சொற்களும் உன் காதில் விழும்.
10. பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது: செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.
11. சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்பேரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?
12. வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்: ஆனால் அவருக்கு நல்ல துக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் துங்கவிடாது.
13. உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.
14. ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.
15. மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்: வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.
16. இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்: காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.
17. அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.
18. ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்: தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்: அதுவே தகுந்ததுமாகும்.
19. கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.
20. தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.
அதிகாரம் 6.
1. உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.
2. கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.
3. ஒருவருக்கு மறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.
4. அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது: அதன் பெயரை இருள் மூடிவிடும்.
5. அது கதிரவனைக் கண்டதுமில்லை: எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.
6. வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்"டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?
7. வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்: ஆனால் அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.
8. இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?
9. இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவரை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
10. இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.
11. பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?
12. மனிதருடைய வாழ்நாள் குறுகியது: பயனற்றது: நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?
அதிகாரம் 7.
1. விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.
2. விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.
3. சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்: ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்.
4. ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்: மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின்" நினைவே இருக்கும்.
5. மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.
6. மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது: அதனால் பயன் ஒன்றுமில்லை.
7. இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்: கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.
8. ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது: உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்.
9. உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்.
10. "இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?" என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.
11. மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்: இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது.
12. பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்: ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்: அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.
13. கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?
14. வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு: துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: "அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்".
15. என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்"காலம் வாழ்கிறார்.
16. நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?
17. தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?
18. ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.
19. ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.
20. குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.
21. பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.
22. நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.
23. இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்துக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.
24. ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது: மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
25. நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்: ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.
26. சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்: உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.
27. "ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்" என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்: அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.
28. ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.
29. நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.
அதிகாரம் 8.
1. ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.
2. கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.
3. எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.
4. மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, "ஏன் இப்படிச் செய்கிறீர்?" என்று அவனை யார் கேட்க முடியும்?
5. அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.
6. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு: செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?
7. ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.
8. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது: பணம் கொடுத்தும் தப்ப முடியாது.
9. உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது.
10. பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.
11. மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
12. பாவி மறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,
13. தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்: நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.
14. வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்.
15. எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.
16. நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை: ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரலால் புரிந்துகொள்ள இயலாது.
17. மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.
அதிகாரம் 9.
1. இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.
2. விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்"பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.
3. விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள்.
4. ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.
5. ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்: ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது: அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.
6. அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.
7. ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு: களிப்புடனிரு: திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு: தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு.
8. எப்போதும் நல்லாடை உடுத்து. தரையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.
9. இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்"டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.
10. நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்: அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை: சிந்தனை செய்வதுமில்லை: அறிவு பெறுவதுமில்லை: அங்கே ஞானமுமில்லை.
11. உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும்.
12. தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.
13. நான் கண்ட வேறொன்றும் உண்டு: இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
14. சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்: அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
15. அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.
16. வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது: அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
17. மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன் முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று.
18. போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது. ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.
அதிகாரம் 10.
1. கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.
2. தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.
3. மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.
4. மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.
5. உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
6. மூடர்களுக்கு உயர்த்த பதவி அளிக்கப்படுகிறது: செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
7. அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.
8. குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும்.
9. கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.
10. மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.
11. பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.
12. ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார்.
13. அவரது பேச்சு மடமையில் தொடங்கும்: முழு பைத்தியத்தில் போய் முடியும்.
14. மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்: என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.
15. மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.
16. சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய்.
17. உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.
18. சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்: பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.
19. விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்: திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்: பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.
20. தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே: படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்: பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.
அதிகாரம் 11.
1. உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.
2. உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில், எங்கு, எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது.
3. வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின், ஞாலத்தில் மழை பெய்யும். மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும் தெற்கு நோக்கி விழுந்தாலும் விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.
4. காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை: வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை.
5. காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது: அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.
6. காலையில் விதையைத் தெளி: மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.
7. ஒளி மகிழ்ச்சியூட்டும்: கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
8. மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்"தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.
9. இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்: கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.
10. மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்: குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.
அதிகாரம் 12.
1. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. "வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.
2. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,
3. வீட்டுக்காவலர் நடுக்கங்கொள், வலியோர் தளர்வுறு முன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்துபோகுமுன்னும்,
4. தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள், சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
5. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை:
6. வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,
7. மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
8. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்: எல்லாமே வீண்.
9. சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.
10. சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.
11. ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.
12. பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை: மல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.
13. இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்: கடவுளுக்கு அஞ்சி நட: அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.
14. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 22 - இனிமைமிகுபாடல்
அதிகாரம் 1.
1. சாலமோனின் தலைசிறந்த பாடல்
2. தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக! ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!
3. உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது: உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது: எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.
4. உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்: அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்: திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்: திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்!
5. எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்: சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.
6. கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்: நான் கறுப்பானேன்: என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்: திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்: என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!
7. என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!
8. பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ: இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!
9. என் அன்பே, பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.
10. உன் கன்னங்கள் குழையணிகளாலும் உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன.
11. பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்: வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.
12. என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே, என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது.
13. என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென என் மார்பகத்தில் தங்கிடுவார்.
14. என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!
15. என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்!
16. என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
17. நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்: நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள்.
அதிகாரம் 2.
1. சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்: பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.
2. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.
3. காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்: அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.
4. திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்: அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!
5. திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்: கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.
6. இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
7. எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.
8. என் காதலர் குரல் கேட்கின்றது: இதோ, அவர் வந்துவிட்டார்: மலைகள்மேல் தாவி வருகின்றார்: குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
9. என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்: பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்: பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.
10. என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.
11. இதோ, கார்காலம் கடந்துவிட்டது: மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன: பாடிமகிழும் பருவம் வந்துற்றது: காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது:
13. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன: திராட்சை மலர்கள் மணம் தருகின்றன: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."
14. பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை: எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!
15. பிடியுங்கள் எமக்காக நரிகளை: குள்ளநரிகளைப் பிடியுங்கள்: அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன: எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.
16. என் காதலர் எனக்குரியர்: நானும் அவருக்குரியள்: லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.
17. பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக, என் காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!
அதிகாரம் 3.
1. இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்: என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்: தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
7எழுந்திடுவேன்: நகரத்தில் சுற்றிவருவேன்: தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்" தேடினேன்: தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
3. ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். "என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.
4. அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்: விடவே இல்லை: என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்: என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.
5. எருசலேம் மங்கையரே, கலைமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.
6. என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்பண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே!
7. அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.
8. அனைவரும் வாளேந்திய வீரர்! அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்! இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத் தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்!
9. மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்: சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.
10. அதன் பண்களை வெள்ளியால் இழைத்தார்: மேற்கவிகை பொன்: இருக்கை செம்பட்டு: உட்புறம் மெல்லிய தோல்மெத்தை: எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
11. சீயோன் மங்கையரே, பாருங்கள்! மன்னர் சாலமோனையும் அவர் அன்னை அவருக்கு அணிவித்த மணிமுடியையும் காணுங்கள்! அவரது திருமண நாளினிலே, அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே, அவருக்கு அணிவித்த முடியதுவே!
அதிகாரம் 4.
1. என்னே உன் அழகு! "என் அன்பே, என்னே என் அழகு! முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்! கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
2. உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன: அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3. செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்: உன் வாய் எழில் மிக்கது: முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
4. தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து: வரிவரியாய் ஆயிரம் கேடங்கள் ஆங்கே தொங்குகின்றன: அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.
5. உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்: கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.
6. பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்: சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்:
7. என் அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!
8. லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே: லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு: அமானா மலையுச்சியினின்று - செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று- சிங்கங்களின் குகைளினின்று - புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!
9. என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்: என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
10. உன் காதல் எத்துணை நேர்த்தியானது: என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது! உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.
11. மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன: உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன: உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.
12. பூட்டியுள்ள தோட்டம் நீ: என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ: முத்திரையிட்ட கிணறு நீ!
13. மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்: ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு: மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14. நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15. நீ தோட்டங்களின் நீரூற்று: வற்றாது நீர்சுரக்கும் கிணறு: லெபலோனினின்று வரும் நீரோடை!
16. வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின்மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!
அதிகாரம் 5.
1. என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்: என் தங்காய், மணமகளே, நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்: என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்: என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்: தோழர்களே, உண்ணுங்கள்: அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.
2. நான் உறங்கினேன்: என் நெஞ்சமோ விழித்திருந்தது: இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்: "கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது: என் தலைமயிர்ச் சுருள் இரவுத் பறலால் ஈரமானது,"
8என் ஆடையைக் களைந்து விட்டேன்: மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்: மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?"
4. என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்: என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5. எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க: என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது: என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று: தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6. கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு: அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்: என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது: அவரைத் தேடினேன்: அவரைக் கண்டேன் அல்லேன்: அவரை அழைத்தேன்: பதிலே இல்லை!
7. ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்: அவர்கள் என்னை அடித்தனர்: காயப்படுத்தினர்: என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்: கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!
8. எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? "காதல் நோயுற்றேன் நான்" எனச் சொல்லுங்கள்.
>பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே: மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?"
10. "என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்: பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!
11. அவரது தலை பசும்பொன்: தலைமுடி சுருள்சுருளாய் உள்ளது: காகம்போல் கருமை மிக்கது.
12. அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை: பாலில் குளிந்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.
13. அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன: நறுமணம் ஆங்கே கமழ்கின்றது: அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்: அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
14. அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்: அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன: அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு: அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.
15. அவருடைய கால்கள் பளிங்குத் பண்கள்: தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன: அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது: கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.
16. அவரது வாய் இணையற்ற இனிமை: அவர் முழுமையும் பேருவகையே: எருசலேம் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்."
அதிகாரம் 6.
6பெண்களுக்குள் பேரழகியே, உன் காதலர் எங்கே போனார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்? உன்னோடு நாங்களும் அவரைத் தேடுவோம்."
7என் காதலர் தம் தோட்டத்திற்கும் நறுமண நாற்றங்கால்களுக்கும போனார்: தோட்டங்களில் மேய்க்கவும் லீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார்".
3. நான் என் காதலர்க்குரியள்: என் காதலர் எனக்குரியர்: லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.
4. என் அன்பே. நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்: எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்: போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!
5. என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: அவை என்னை மயக்குகின்றன: கிலயாதிலிருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
6. உன் பற்களோ, குளித்துக்கரையேறும் பெண் ஆடுகளின் மந்தைபோல்வன: அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
7. முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
8. அரசியர் அறுபது பேர்: வைப்பாட்டியர் எண்பது பேர்: இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
9. என் வெண்புறா, அழகின் வடிவம் அவள் ஒருத்தியே! அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே: அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்: மங்கையர் அவளைக் கண்டனர்: வாழ்த்தினர்: அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:
10. "யாரிவள்! வைகறைபோல் தோற்றம்: திங்களைப் போல் அழகு: ஞாயிறுபோல் ஒளி: போரணிபோல் வியப்பார்வம்: யாரிவள்!"
11. வாதுமைச் சோலைக்குள் சென்றேன்: பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கப் போனேன்: திராட்சை பூத்துவிட்டதா என்றும் மாதுளைகள் மலர்ந்தனவா என்றும் காணச் சென்றேன்.
12. என்னவென்றே எனக்குத் தெரியவில்லை! மகிழ்ச்சியில் மயங்கினேன்: இளவரனுடன் தேரில் செல்வது போல் நான் உணர்ந்தேன்.
13. திரும்பி வா! திரும்பி வா! சூலாமியளே! திரும்பி வா! திரும்பி வா! நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்! இரண்டு பாசறைகள் நடுவில் ஆடுபவளைப்போல் சூலாமியளை நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?
அதிகாரம் 7.
1. அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!
2. உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்: அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை: உன் வயிறு கோதுமை மணியின் குவியல்: லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.
3. உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை: கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.
4. உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது: உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை: பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை: உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை: தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.
5. உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது: உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது: அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.
6. அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!
7. இந்த உன் வளர்த்தி போணச்சைக்கு நிகராகும்: உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும்.
=ஆம், போணச்சையின்மேல் நான் ஏறுவேன்: அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்" என்றேன்: உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல் மணம் கமழ்க!
9. இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!
10. நான் என் காதலர்க்குரியள்: அவர் நாட்டம் என்மேலே!
11. என் காதலரே, வாரும்: வயல்வெளிக்குப் போவோம்: மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.
12. வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்: திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்.
13. காதற்கனிகளின் மணம் கமழுகின்றது: இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது: புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.
அதிகாரம் 8.
1. நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.
2. உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்: எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்: மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்: என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.
3. இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.
4. எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்: காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
:யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?" கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்: அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.
6. உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக: இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக: ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது: அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது: அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி: அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
7. பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது: வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது: அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்: ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
8. நம்முடைய தங்கை சிறியவள்: அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை: அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?
9. அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்: அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.
10. நான் மதில்தான்: என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன: அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
11. பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்: அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
12. எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது: சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்: இருமறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
13. "தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்: உன் குரலை யான் கேட்கலாகாதோ!"
14. "என் காதலரே! விரைந்து ஓடிடுக: கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"
This page was last updated on 10 feb. 2007.
Please send your comments and corrections to the Webmaster.