pm logo

தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை.
தமிழாக்கம்: பண்டித நடேச சாஸ்திரியார்

Measure for Measure (a tale from Shakespeare)
Tamil Translation by Natesa Sastriyar
(in Tamil, Unicode format)


Acknowledgements:
Our sincere thanks to the Tamil Heritage Foundation for providing us wit scanned image version of this work.
This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
Ms. Deeptha, S. Karthikeyan and V.S. Kannan
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in Unicode format
This page was placed online first on 10 August 2007.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை
தமிழாக்கம்: பண்டித நடேச சாஸ்திரியார்
Tamil Translation of "Measure for Measure"
a Tale from Shakespeare

Source:
தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை.
இஃது லண்டன் கதாசபை மெம்பர், பண்டித நடேச சாஸ்திரியாரால் இயற்றப்பட்டது.
(Reprinted from the "JANAVINODINI" with the permission of the M.S.B. & V.L.Society.)
Madras: Srinivasa Varadachari & Co, 1893.
Price - 2 Annas.
Madrs: Printed by Srinivasa Varadachari & Co, Mount Road, 1893

வியன்னா (Viennna) நகரத்தில் நற்குணமுள்ள அரசனொரு வனிருந்தான். சட்டம் ஒருவாறாயிருக்க, தன்னுயிரைப்போல மன்னுயிரைக் காக்கும் குணத்தை மேற்கொண்டு ஜனங்களுக்கு ஒருவித வருத்தமும் உண்டாகாதபடி செங்கோல் செலுத்தி வந்தான். ஆனதுபற்றிப் பிரஜைகள் ஒவ்வொரு சமயத்தில் சட்டத்தை மீறும்படியாகவும் நேரிட்டுக்கொண்டிருந்தது. அத்தேசத்தில் கிரமமாய்க் கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் வாழ்வானேயானால் அவன் கொலை செய்யப்படுவான் என்ற ஓர் சட்டமிருந்தது; ஆயினும் அது எழுத்தில்மட்டும் இருந்ததேயன்றி வழக்கத்தின்கீழ் வரவேயில்லை. அதனால் சில சமயங்களில் அக்கிரமமான கலியாணங்கள் நடந்ததையும், தான் நல்லவனாகவே யிருந்தும் ஜனங்கள் கெட்ட நடக்கை உடையவர்களாவதையும் அரசன் கண்டு, தான் கொஞ்ச காலம் தனது ராச்சியத்தை யாரிடமாவது ஒப்புவித்துத் தேசாந்தரம் போனால் தான் திரும்பிவருவதற்குள் எல்லாம் சீராக நடக்குமென்றெண்ணி அவ்விதமே செய்யத் தீர்மானித்தான்.

வியன்னா நகரத்தில் அஞ்சீலோ (Angelo) என்றொரு ஞானி இருந்தான். அவன் நற்குண நற்செய்கை யுள்ளவனென்றும் பரோபகாரியென்றும் பெயர் பெற்றிருந்தான். அரசன் அவனைத் தனக்குப் பதிலாக நியமித்துத் தான் போலாண்டு (Poland) தேசத்திற்குப் போவதாகச் சொல்லி ஊரைவிட்டுச்சென்றான். ஆனால் அவன் ஜனங்களுக்குச் சொன்னபடி தேசாந்தரம் போகவில்லை; பட்டணத்திற்கு வெளியே சென்று சந்நியாசி வேஷம் தரித்து, அன்றைய தினமே அத்தேசத்திற்குள் வந்து அஞ்சீலோ செலுத்தும் செங்கோலைத் தூர இருந்துகொண்டே கவனித்து வந்தான். இப்படி அவன் அஞ்சீலோவினிடம் அதிகாரம் ஒப்புவித்த சமயத்தில் கிளாடியோ (Claudio) என்னும் ஒரு வாலிபன் ஜூலியத் (Juliet) என்னும் ஒருபெண்ணை நியாயமாய்க் கலியாணம் செய்துகொள்ளாமல் தகப்பன் வீட்டிலிருந்தவளைச் சொல்லாமல் அழைத்து வந்துவிட்டான். அந்தப் பிசகுக்காக அவன் தலையை வாங்கிவிடும்படி அஞ்சீலோ என்னும் இராஜப்பிரதிநிதி தண்டனை விதித்துவிட்டான். எஸ்கேலஸ் (Escalus) என்றொரு சீமான் எவ்வளவுதூரம் அந்த கிளாடியோவுக்காக வருத்தமெடுத்துக்கொண்டு பேசியும் அந்த இராஜப்பிரதிநிதி கேட்கவேயில்லை; இவ்விதமாய் ஒவ்வொருவரையும் விட்டுவந்தால் சட்டம் என்னத்திற்கென்றும், இந்த கிளாடியோவை அவசியம் சிரச்சேதம் பண்ணிவிட வேண்டுமென்றும் சிபார்சு செய்யவந்த ஒவ்வொருவரிடமும் அவன் சொல்லி மறுத்தான்.

அந்த கிளாடியோ என்னும் வாலிபனுக்கு லூஷியோ (Lucio) என்றொரு சிநேகிதன் இருந்தான். அவன் தன் சிநேகிதனைச் சிறைச்சாலையில் போய்ப் பார்த்தபொழுது கிளாடியோ அவனை நோக்கி, "அப்பா லூஷியோ! என் தங்கையாகிய இஸபெல்லாவை (Isabella) நீ அறிவாயா? அவள் காவித்துணி கட்டிக்கொண்டு மடத்திற்குத் தவசிப்பெண்ணாய்ப் போக உத்தேசித்திருக்கிறாள். அவள் நன்றாய்ப் பேசுவதில் வெகு கெட்டிக்காரி; நான் சொன்னதாய்ச் சொல்லி அஞ்சீலோவினிடம் சென்று என் விஷயமாய்ப் பேசச்சொல்லு. அவள் பேச்சின் அழகைக்கண்டு அரசன் ஒருகால் என்னை மன்னிப்பான்" என்றான்.

லூஷியோவும் தன் சிநேகிதன் தங்கையாகிய இஸபெல்லாவைத் தேடிக்கொண்டு மேற்சொன்ன மடத்திற்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது அவளும் தவசிப்பெண்ணாய் மாறுவதற்கு முன் தான் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை ஒரு முதிர்ந்த தவசியினிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தாள். அம்மடத்தின் வாசலில் லூஷியோ என்பவன் வந்து நின்று "இந்த இடத்தில் எப்பொழுதும் சாந்தமூர்த்திகளே தங்கியிருப்பார்களாக" என்று உரத்துக்கூவினான். அதை உள்ளேயிருந்த விருத்ததவசி கேட்டு என்னவென்று அறிந்துவரும்படி இஸபெல்லாவை யனுப்பினான். இஸபெல்லாவும் தான் இன்னும் காவித்துணி உடுக்காதபடியால் வெளியில் கூச்சமின்றி வந்தாள். அவள் வரவைக் கண்டதும் லூஷியோ மிகவும் மரியாதையுடன், "அம்மணி! இஸபெல்லா என்னும் ஒரு பெண்மணி இவ்விடத்திலிருக்கிறாளாமே. அந்த அம்மாளை நான் பார்த்துத் துரதிர்ஷ்டனான அவள் தமையனைப் பற்றிக் கொஞ்சம் பேசவேண்டும்" என, அதைக்கேட்டு இஸபெல்லா திடுக்கிட்டு, "நான் தான் அந்தப்பெண்; என் தமையனுக்கு என்ன துரதிர்ஷ்டம் நேர்ந்திருக்கிறது" என்றுகேட்டாள். அதற்கு லூஷியோ, "அவன் இப்பொழுது சிறைச்சாலைக் காவலிலிருக்கிறான்; அவன் செய்த குற்றம் ஒருபெண்ணைக் கலியாணம் செய்யாமல் தனித்து அழைத்துவந்து விட்டதேயாம்" என்றான். அதற்கு இஸ்பெல்லா முன்னமேதானே தன் தமையனுக்கும் ஜூலியத்துக்குமிருந்த அன்னியோன்னியத்தை அறிந்தவளாகையால், "அதில் என்ன பிசகு; கிளாடியோ ஜூலியத்தைக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஒருநாளும் ஆக்ஷேபம் செய்யமாட்டானே" என்றாள்.

அதற்கு லூஷியோ "அதெல்லாம் நமது பழைய அரசன் நாளில் குற்றமாகமாட்டாது; இப்பொழுது அவர் ஸ்தானத்தில் வந்திருக்கும் அஞ்சீலோ என்னும் ஞானி இரக்கமற்றவராக இருக்கிறார். கிளாடியோ ஜூலியத்தைக் கலியாணஞ் செய்துகொள்வதாக வெகுவாய்ச் சொல்லியும் அவன் முதலில் செய்த குற்றத்திற்காக அவனைக் கொல்ல நிச்சயித்திருக்கிறார். எங்களால் கூடியமட்டும் இப்புது அரசனுக்குச் சொல்லியாய்விட்டது. இனி நீ தான் அரசனிடம் போய்ப்பேசி உன் தமையனை விடுவிக்கவேண்டும். இதற்காகவே என்னை கிளாடியோ உன்னிடம் அனுப்பினான்" என்றான். அதற்கு இஸபெல்லா முதலில் கொஞ்சம் அதைரியப்பட்டு, பிறகு அகத்தியம்போய்ப் பேசுவதாக ஒப்புக் கொண்டு, பேசிமுடியும் சமாசாரத்தையும் பொழுதுபோகுமுன்னம் சொல்லியனுப்புவதாக லூஷியோவுக்குச் சொல்லி அனுப்பி விட்டாள்.

தான் சொன்ன சொற்படியே இஸபெல்லாவும் உடனே அரசனிடம் சென்று அவன் காலில் விழுந்து தன் தமையனுடைய உயிர்ப்பிச்சை கேட்டாள். அரசன் சட்டத்தையெடுத்துக் காட்டி, சட்டப்படி நான் நடக்கிறவனேயன்றிச் சிபார்சுக்கு இடங்கொடுக்கிறவனல்லனென்று, கொஞ்சமேனும் இடங்கொடுக்காமல் பேசினான். அதற்கு இஸபெல்லா, "சட்டங்கள் எப்படியிருந்தபோதிலும் தயையென்பது மனிதனுக்கு வேண்டும். அது இல்லாவிடில் எவ்வளவுதான் சரியாக நடந்தபோதிலும் அரசர்கள் பாவத்தைக் கட்டிக் கொள்வார்களேயன்றிப் புண்ணியம் பெறவேமாட்டார்கள்" என்றுசொல்ல, அதற்கு அரசன் கொஞ்சமேனும் காதுகொடாமல் "நாளை சாயந்தரத்திற்குள் உன் தமையன் தலையை வாங்கிவிட உத்தரவு கொடுக்கப்போகிறேன்" என்றான். அதற்கு இஸபெல்லா நடுநடுங்கி, "ஐயோ ஆடுகோழிகளைக்கூட இரண்டொருநாள் வைத்திருந்து கொல்லுகிறோமே; அவ்வளவு தாமதங்கூட இல்லாமல் என் தமையனைக் கொல்லவேண்டுமா?" என்று கண்ணும் கண்ணீருமாய் நிற்க, அதைக்கண்டு அஞ்சீலோ கொஞ்சம் மனதிரங்கினவனாய்க் காட்டி, "நாளையதினம் வா, யோசிப்போம்" என்றான். அதைக்கேட்டு இஸபெல்லா களித்துத் தன் தமையன் யமன் வாயிலிருந்து விடுபட்டாற்போல எண்ணி, மறுநாள் அரசனைப்போய்க் காணத் தீர்மானித்துக்கொண்டு வீடு வந்துசேர்ந்தாள்.

இப்படி இவளை வரச்சொன்னதில் அஞ்சீலோ கொண்டகருத்து நல்ல கருத்தல்ல; அவருடைய திடசித்தமும் ஞானமும் இவள் அழகாகிய சூரியன்முன் பனிபோல உருகிவிட்டன. இவளைத் தனது கொடிய காமத்திற்குள்ளாக்கி அதற்குப் பதிலாக இவள் தமையனை விடுவிக்க நினைத்துவிட்டான்.

இவள் மறுநாள் காலையில் தன் தமையனை விடுவிக்கக் கேட்பதற்காக அரண்மனை போய்ச்சேர, அஞ்சீலோ இவளுக்கு ஏகாந்தத்தில் தரிசனம் கொடுத்து, அன்றிரவில் தனிமையாகத் தன் தோட்டத்தில் தன்னுடன்வந்து இருப்பாளேயானால் கிளாடியோவை விடுவிப்பதாகச் சொன்னான். அதைக் கேட்டு இஸபெல்லா மயிர்க்குச்செறிந்து "இதை உண்மையாகப் பேசினீர்களா, அல்லது வேடிக்கையாகவா?" என்று கேட்க, அரசன் "உண்மையாகத்தான் பேசினேன்" என்றான். அதற்கு இஸபெல்லா "நல்லது இப்பொழுது என் தமையனை விடுவிக்காத பக்ஷத்தில் நீர் என்னைக் கேட்ட சங்கதியை ஊர் முடியச் சொல்லி உமது வஞ்சனை குணத்தை வெளிப்படுத்திவிடுகிறேன்" என, "நீ என்ன சொன்னாலும் உன் பேச்சை யார் நம்பப் போகிறார்கள். நான் இதுவரையில் தோஷமற்றவனாயிருந்தது எல்லாருக்கும் தெரியுமாகையால் நீ சொல்வதை யாரும் நம்பார்கள். நான் கேட்டுக்கொண்டதற்கு உடன்படுவாயாகில் உன் தமையன் பிழைப்பான்; இல்லையெனிலோ அவன் மாண்டுபோவான். இதற்கு விடை நாளைக்குள் நீ சொல்லவேண்டும்" என்று அஞ்சீலோ சொன்னான்.

இஸபெல்லா இந்த அநியாயங்களைத் தான் யாரிடம் சொல்லித் துக்கப்படுகிறதென்றெண்ணிக்கொண்டு தன் தமையன் இருக்கும் சிறைச்சாலையை நோக்கிச் செல்ல, அங்கே அவனிடம் ஒரு சன்னியாசி வந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த சன்னியாசி நிஜமான சன்னியாசியல்ல; சன்னியாசிவேஷம் பூண்டுவந்த பெரிய அரசன். இவன் இந்த வேஷத்துடனே தனித்தனியே கிளாடியோவையும் ஜூலியத்தையும் அவரவர் சிறைச்சாலையில் கண்டுபேசி, அவர்கள் செய்த காரியம் குற்றமென்பதை உணரும்படிச் செய்தான். கிளாடியோ இருந்த சிறைச்சாலைக்குச் சமீபத்தில் இஸபெல்லா வந்து "இவ்விடத்தில் நல்ல ஸத்புருஷரும் சாந்தமூர்த்திகளும் இருக்கட்டும்" என்று ஆசிர்வதித்தாள். அதைச் சன்னியாசி வேஷம்பூண்ட அரசன் கேட்டுச் சந்தோஷித்து, நீ யார், இவ்விடம் ஏன் வந்தாய்? என்று கேட்க, இஸபெல்லா என் தமையன் கிளாடியோவினிடம் இரண்டொரு பேச்சுப் பேசவந்தேனென்றாள். அரசனாகிய சன்னியாசி, அப்படியே செய்யென்று சொல்லி, தான் உத்தரவு பெற்றுக் கொண்டு வெளியில் போவதுபோல மறைந்து, இவர்கள் பேசும் பேச்சைக் கேட்க இவர்களுக்குத் தெரியாத ஒரு அறையில் மறைந்து நின்றான்.

இஸபெல்லா, தான் அஞ்சீலோ ராஜனிடம்போய்ப் பேசினதையும், அவன் கிளாடியோவை விடுவிப்பதற்காகத் தன்னைத் தனிமையில் அன்றிரவு அரண்மனையில் வந்துசேரக் கேட்டுக் கொண்டதையும் சொல்லி, "அண்ணா இம்மாதிரி அவமானம் நமது குலத்திற்கு வருவதைக் காட்டிலும் நீ நாளைக்கு பிராணனை விடுவது நலமென்று தோன்றுகிறது" என்றாள். அதற்கு கிளாடியோ "என் பிராணனைவிட உன் மானம் பெரிதா?" என, இஸபெல்லாவுக்குத் தன்னையறியாத கோபமும் துக்கமும் வந்து விட்டது. "மானத்தைவிட நீ பிராணன் பெரிதென்று நினைக்கிறாயே; எவ்வளவு அற்பபுத்தி! இவ்வளவு அற்பபுத்தி உன்னிடம் இருக்குமென்று நான் எண்ணவேயில்லை. நான் சந்தோஷத்துடன் பிராணனை விடுவேனேயல்லாது மானத்தை விடமாட்டேன். நன்றியற்றவனே! நீ கெட்டாய், உன் பிராணனைவிட உன் தங்கையின் மானத்தைக் குறைவாக எண்ணினாயே! உனக்கு இராவணனைப் போலப் பத்துத்தலையிருந்த போதிலும் அவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக வெட்டுப்படப் பார்ப்பேனேயல்லாமல், அவைகளில் ஒன்றையேனும் காப்பாற்ற என் மானத்தை இழக்கமாட்டேன்" என்று இவ்வாறு பேசினாள்.

அப்பொழுது இவர்கள்பின் பதுங்கி நின்ற சன்னியாசியோ! ராஜப்பிரதிநிதியானவன் இவளைக் கெடுக்கவேண்டுமென்று ஒருநாளும் எண்ணங் கொண்டிருக்கமாட்டான். அவன் சொன்ன பேச்சு இவளைப் பரிசோதிப்பதற்காகவேயன்று வேறல்ல. இவள் மரியாதையாய் மறுதலித்து வந்துவிட்டாள். இனி நீயும் நாளையதினம் உன் பிராணனை இழக்கவேண்டியதுதான். அதற்குள் தெய்வத்திற்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகளை நீ மனதிற்குள் செய்துகொள்" என்றான். இப்படி இவர் சொன்னதை கிளாடியோ கேட்டுத் தான் கூச்சமின்றித் தன் தங்கையுடன் பேசினதற்காகத் தன்னையே நொந்துகொண்டு துக்கத்தாலும் வெட்கத்தாலும் ஒன்றும் சொல்ல நாவெழாமல் திகைத்து நின்றான்.

உடனே இஸபெல்லா வெளியில் வந்துவிடவே சன்னியாசியும் அவள் பின்சென்று "உன்னை அழகாய்ச்செய்த ஈசன் உன் குணத்தையும் அழகாய்ச் செய்தானே" என, அதற்கு அவள், நமது அரசன், அஞ்சீலோ நல்லவரென்று நினைத்து மோசம் போய்விட்டாரே; அவர் எப்பொழுது நமது நாட்டிற்குத் திரும்பிவருவாரோ அறியேனே. நான் அவரைக் காண்பேனேயானால் இந்தப் பாவியின் நடத்தையை அவரிடம் வெளிப்படுத்தி விடுவேன்" என்றாள். தான் பேசுவது அரசனோடென்றும், அப்பொழுதே அஞ்சீலோவின் நடத்தையை அரசனிடம் வெளிப்படுத்திவிட்டாளென்றும் அவள் எண்ணவேயில்லை. அவள் சொன்னதைக்கேட்டுச் சன்னியாசி வேஷம்தரித்த அரசன் "அதில் ஒன்றும் பிசகுவரமாட்டாது; பழய ராஜன் தான் திரும்பிவரும்பொழுது எல்லாவற்றையும் தப்பாமல் விசாரித்துக்கொள்வார். நான் ஒன்று சொல்லுகிறேன், நீ அதைக் காதுகொடுத்துக் கேட்பாயானால் உன் மானமும் கெடாது, உன் தமையனும் பிழைப்பான். இன்னும் ஒருவருக்கு உபகாரமும் செய்ததாகும்" என்றான். இஸபெல்லா அதைக்கேட்டதும், மானம்மட்டும் கெடாதபக்ஷத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்னை என்ன செய்யச்சொல்லுகிறீர்களென, அதற்குச் சன்னியாசி வேஷம்பூண்ட பெரிய அரசன் பின்வருமாறு சொல்லலானான். "முன்னே ப்ரடரிக் (Frederick) என்றொரு போர்வீரன் இருந்தான். அவனுக்கு மரியானா (Mariana) என்றொரு தங்கையிருக்கிறாள். அவளை அஞ்சீலோவுக்கு அவள் தமையனானவன் கலியாணஞ்செய்து கொடுத்து அவளுக்கு கொடுக்கவேண்டிய சீதனத்தையெல்லாம் ஒரு கப்பலில் ஏற்றி இந்த ஊருக்குக் கொண்டுவந்துக் கொண்டிருந்தார்; நடுச்சமுத்திரத்தில் கப்பல் ஒருபாறையில் மோதி உடையவே, அந்தச் சீதனங்களுடன் அந்த வீரன் கடலில்மாண்டான். தன் பெண்சாதிக்குச் சேரவேண்டிய ஆஸ்தி சேராததினால் அஞ்சீலோ அவளை ஒரு குற்றத்தைச்சாட்டித் தள்ளிவைத்திருக்கிறார். அந்தப்பெண் தனது தமையனையும் ஆஸ்தியையும் நீரில் இழந்ததுபோல நிலத்தில் புருஷனையும் இழந்து துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள். ஆகையினால் இஸபெல்லாவே! நாம் இருவருமாய்ச் சேர்ந்து ஓர் தந்திரம் செய்ய வேண்டும்: நீ அஞ்சீலோவினிடம் சென்று அவர் குறிக்குமிடத்திற்கு இன்று இரவு தனிமையாய் வருவதாக ஒப்புக்கொண்டு வந்துவிடு; உனக்குப்பதிலாக மரியானாவை நாம் அவள் புருஷனிடம் அனுப்பிவிடுவோம். இப்படி நாம் செய்வது ஒரு பாவத்திலும் சேர்ந்ததாகாது. அஞ்சீலோ அவளைக் கலியாணம்செய்த புருஷனல்லாவா. ஒரு புருஷனுடன் அவன் நற்குணமுள்ள பெண்சாதியைச் சேர்த்துவைப்பது நமக்கு எவ்வளவோ புண்ணியம்" என்றிவ்வாறு சன்னியாசி சொல்ல, இஸபெல்லா அதைக்கேட்டுச் சந்தோஷமடைந்து சன்னியாசியின் நற்குணத்தை மெச்சி, அப்பொழுதே அவன் சொன்ன ஏற்பாட்டை முடித்துவைக்க அஞ்சீலோவினிடம் சென்றாள். அரசனும் தான் செய்த ஏற்பாட்டை மரியானாவினிடம் சொல்ல அவள் வீடு சென்றான். இதற்கு முன்னமேதானே தன் சன்னியாசி வேஷத்துடன் அவளைக்கண்டு அவள் துக்கத்தைக் கேட்டிருந் தவனாகையால் பெரிய அரசன் இவ்விஷயத்தில் இவ்வளவு சிரமப்படும்படியாயிற்று.

இஸபெல்லாவானவள் அஞ்சீலோவைக்கண்டு சொல்லிவிட்டுச் சன்னியாசி சொல்லியிருந்தபடி மரியானா வீட்டிற்கு வந்துசேர்ந்தாள். அங்கு இவள் வரவை எதிர்பார்த்திருந்த சன்னியாசியும் ராஜப்பிரதிநிதி என்ன சொன்னாரென்று கேட்க, அதற்கு இஸபெல்லா, தான் காரியத்தைச் சரிவர முடித்து வந்துவிட்டதாகச் சொல்லி, அரண்மனைக்கருகில் செங்கற்சுவரால் மதிள் எடுத்த ஒரு தோட்டமிருக்கிறதென்றும், அதன் மேற்புறத்தில் திராக்ஷைக்கொடியால் போடப்பட்ட ஒரு பந்தலிருக்கிறதென்றும், அவ்விடத்தில் தான் இராத்திரிக்கு வந்து சேரவேண்டுமென்றும் இவைமுதலாய் அஞ்சீலோ சொன்ன செய்திகளைச் சொல்லி, அவன் கொடுத்த தோட்டக் கதவுகளின் இரண்டு திறவு கோல்களையும் காண்பித்தாள். அதைச் சன்னியாசி வாங்கி மரியானாவினிடத்திற் கொடுத்து " நீ இவள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு செய்வாயேயானால் உன் புருஷனை அடைவாய்" என்றான். மரியானா அதுகேட்டு மிகச் சந்தோஷமடைந்து இன்னும் வேறு ஏதாவது சங்கேத முண்டோவென்று கேட்க, அதற்கு இஸபெல்லா, ஒன்றுமில்லை, ஆனால் நீ அவரைவிட்டுத் திரும்பிவரும்பொழுது மெதுவாய், என் தமையனைமாத்திரம் மறக்கக்கூடாதென்று சொல்லி வரவேண்டியதென்றாள்.

அரசனுடைய சங்கேதப்படியே இஸபெல்லாவுக்குப் பதிலாக மரியானா அஞ்சீலோ குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றாள். நாம் இவ்வளவு செய்தும் கிளாடியோவுக்கு உயிர்தங்குமோ தங்காதோவென்று பயந்து சன்னியாசி சிறைச்சாலைக்குச் சென்றான். இவன் அவரிடம் சென்றது அந்த கிளாடியோவினுடைய பாக்கியமென்றே சொல்லவேண்டும். ஏனெனில் அஞசீலோ தன் காரியத்தைமட்டும் சரிவர நடத்திக்கொண்டு கிளாடியோவைத் தான் முதலில் உத்தரவு செய்திருந்தபடியே கொலை செய்துவிடச் சிறைச்சாலைச் சேவகனுக்குக் கட்டளை அனுப்பி விட்டான். வந்த உத்தரவை அரசன் கண்டு திகைத்துச் சிறைச்சாலைச் சேவகனைப்பார்த்து, இந்த கிளாடியோவைக் கொலை செய்யக்கூடாதென்றும், அன்றுகாலையில் சுரத்தால் இறந்து போன ஒரு வியாதிக்காரன் தலையை கிளாடியோ தலையென்று அஞ்சீலோவினிடம் வெட்டியனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். இதற்குச் சிறைச்சாலைச்சேவகன் கொஞ்சமேனும் சம்மதிக்கவில்லை. ஏனெனில் அவன் சன்னியாசியைச் சன்னியாசியாகவே எண்ணினானேயல்லது அரசனாகவாவது அல்லது அரசனிடத்திலிருந்து உத்தரவுபெற்று வந்தவனாகவாவது எண்ணவில்லை. இப்படி இவன் தான் சொன்ன பேச்சைக்கேட்காமல் போகவே சன்னியாசி, கிளாடியோ உயிரை ஒரு நாளும் வாங்கக்கூடாதென்று பெரிய அரசன் செய்த உத்தரவு அவர் முகருடன் தன்னிடம் இருப்பதாகவும், அதற்குப் பயந்து சேவகன் நடவாதபக்ஷத்தில் அச்சேவகன் உயிரைத் தான் வாங்கிவிடக்கூடுமென்றும் சொன்னான். அதைச் சிறைச்சாலை மனிதன் கேட்டுப்பயந்து நீர் அந்த உத்தரவைக் காட்டுவீரேயானால் நான் இந்த கிளாடியோவை அவர் திரும்பி வருகிறவரையில் காப்பாற்றிவைப்பேன் என்றான். உடனே சன்னியாசி சிறிதுதூரம் சென்று ஒரு காகிதத்தில் எழுதவேண்டிய உத்தரவை எழுதி, தானே அரசனாகையால் தான் மறைவாய் வைத்திருந்த முகரை அதில் பதித்து அதை ஒரு உறையில் போட்டுச் சிறைச்சாலைச் சேவகனிடம் கொண்டுவந்து கொடுத்தான். அப்பத்திரிகையைக் கண்டதும் சேவகன் நடுங்கி, இவனைஅரசனுடைய தூதனாக எண்ணிச் செத்தவன் தலையைவெட்டி அஞ்சீலோவுக்கு அனுப்பிவிட்டு கிளாடியோவைக் காப்பாற்றி வைத்தான்.

இவ்விதமாகச் சிறைச்சாலையில் ஒரு உயிரைக்காப்பாற்றின பிறகு அரசன், தான் தேசாந்தரம் போகச் சில சங்கடங்களால் சரிப்படவில்லையென்றும், மறுநாள் காலையில் வியன்னா நகரத்துக்கு வந்து சேருவனென்றும், அஞ்சீலோ அப்பட்டணத்து முதல் வாசற்படியிலே தன்னைவந்து பார்க்கவேண்டுமென்றும், அந்த ஊரார்கள் தங்களுக்கு ஏதாவது குறைகள் உண்டானால் வந்து சொல்லிக்கொள்ளவேண்டுமென்றும் ஒரு கடிதத்தைத் தன் பிரதிநிதிக்கு எழுதினான்.

பொழுது விடியுமுன்னமே இஸபெல்லா சிறைச்சாலைக்குச்சென்று தன் தமையன் கிளாடியோ பிழைத்திருக்கிறானாவென்று விசாரிக்க, அங்கு இவளுக்காகவே தனது சன்னியாசி வேஷத்தைக் கலைக்காமல் நின்ற அரசன், கிளாடியோ சுவர்க்கத்திலிருக்கிறான், அவன் தலையை நடுராத்திரியிலேயே வெட்டி அஞ்சீலோவினிடம் அனுப்பிவிட்டார்கள் என்றான். பெண்கள் சிகாமணியாகிய இஸபெல்லா அதுகேட்டுக் கீழே விழுந்து தன் தமையனுக்காகத் தான் செய்த உபாயம் ஒன்றும் பலிக்காமல் போனதைப்பற்றியும், சன்னியாசி சொன்ன சொல்லும் பொய்யாய்ப் போனதைப்பற்றியும் புலம்பினாள். அதற்கு அரசன், அவளுக்குத் தைரியம் சொல்லிப் பொழுதுவிடிந்தவுடன் அரசன் வரப்போகிறார், அவரிடம் உன் பிரியாதைச் சொல்லிக் கொள்ளுவாயேயானால் உனக்கு நியாயம் கிடைக்குமென்று உபதேசித்து, மரியானா வீட்டிற்குச் சென்றான். அவளுக்கும் நடந்துகொள்ளவேண்டிய விஷயத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் பட்டணத்திற்கு வெளியே போய்விட்டான். ஊரைவிட்டு வெளியே போனதும் தன் சன்னியாசி வேஷத்தை மாற்றி அவ்வுடைகளைத் தன் வேலைக்காரனிடம் ஒப்புவித்துத் தனது உண்மையான இராஜவேஷம்பூண்டு பட்டணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான். இவன் வரப்போகிற சமாசாரத்தைக் கேட்டுக் களித்து அந்த ஊர் ஜனங்களெல்லாம் அவனை எதிர்கொண்டு அழைக்க அப்பட்டணத்து முதல்வாசற்படியிலேயே வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் பழைய அரசனைக் காணவே அவர்களுக்குண்டான சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அஞ்சீலோவும் அவ்விடம் வந்து தனது அதிகாரத்தை அரசனிடம் ஒப்புவித்தான். இப்படி இருக்கையில் இஸபெல்லாயென்னும் பெண்பிள்ளை தனக்கு ஓர் பிரியாது இருக்கிறதென்று அரசன்முன் வந்துநின்று, நியாயத்தின் அவதாரமே! என் அரசே! நான் சொல்வதைச் சற்றுக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். நான் கிளாடியோவென்னும் ஒரு பாவியின் தங்கை. அவன் தான்செய்த குற்றத்திற்காகக் கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான். அவனை விடுவிக்கும்பொருட்டு நான் எவ்வளவு வேண்டியும் அஞ்சீலோ அரசன் கேட்காமல், நான் அவனது காமவேட்கைக்கு உட்பட்டால் என் தமையனைக் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொன்னான்.

அதன்பேரில் என் தமையனுக்காக நான் என் மானத்தை இழந்தேன். ஐயோ! இந்தப்பாவி என் மானத்தை மாத்திரங் கெடுத்துவிட்டானேயன்றித் தான் சொன்ன வாக்கைக் காப்பாற்றவில்லை; என் தமையனைக் கொன்றுவிட்டான் என்று கண்ணும் கண்ணீருமாய்ப் புலம்பிக்கொண்டு நின்றாள். அதை அரசன் கொஞ்சமேனும் நம்பாதவன்போல இவள் சொல்வது என்னவென்று அஞ்சீலோவை கேட்க, அதற்கு அந்த மகாபிரபு, தமையன் இறந்ததனால் இவளுக்குப் பித்தம் மேலிட்டிருக்கிறது போலத் தோன்றுகிறதென்றான். இதற்குள் மரியானா என்பவள் ஓடிவந்து பெருமைதங்கிய மகாபிரபுவே! ஆகாயத்தில் சூரியன் உதித்தாற்போலும், சுபாவத்தில் உண்மை யுதித்தாற் போலும், உண்மையிற் புத்தி யுதித்தாற்போலும் விளங்கும் என் அரசே! இவள்சொல்வது பொய். இவள் மானத்தை என்றைய தினம் அஞ்சீலோ அழித்ததாகச் சொல்லுகிறாளோ, அன்றைய தினம் நான் அவருடன் இருந்தேன். இவைகளுக்கெல்லாம் சாக்ஷி பரமயோகி (Lodowick) என்னும் ஒரு சன்னியாசி என்றாள். இந்தப்பேர் அரசன் தான் சன்னியாசிவேஷம் பூண்டபொழுது வைத்துக்கொண்டது. இப்படி இவர்கள் கூறினதும் அவன் சொல்லிப் போனபடியேயன்றிவேறல்ல. இவைகளைக்கொண்டு இஸபெல்லாவின் நடத்தையின் சுத்தமும் நற்குணமும் அரசன் ஜனங்களுக்குக் காட்ட நினைத்தான்.

ஆனால் இவ்விதமாகத் தன் துர்நடத்தையை வெளிப்படுத்த இம்மூவர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது அஞ்சீலோவுக்குச் சிறிதும் தெரியாது. இவ்விருவர்களும் சொல்வதில் இருந்த வித்தியாசத்தைக்கண்டு அஞ்சீலோ தான்தப்பித்துக்கொள்ள வழிபார்த்தான். "நான் இதுவரையில் சிரிப்பாய்ப்பொறுத்துக் கொண்டிருந்தேன், இனிச்சும்மா இருப்பது சரியல்ல; இவர்களை யாரோ என் பெயரைக் கெடுக்கும்படி ஏவிவிட்டிருக்கிறார்கள்" என்று அஞ்சீலோ சொல்லவே, அதற்கு அரசன் எஸ்கேலஸ் என்னும் பிரபுவைப்பார்த்து, ஐயா, நீங்கள் அஞ்சீலோ என்பவனுடன் கூட உட்கார்ந்து இவர்மேல் வந்திருக்கும் குற்றத்தை விசாரியுங்கள். நான் வெளியேபோய் அந்த சன்னியாசியைக் கண்டுபிடித்து வருகிறேனென்று சொல்லி வெளியே சென்றான்.

அதுகேட்டு அஞ்சீலோ தன்மேல்வந்த குற்றத்தைத் தானே விசாரிக்கவந்ததே என்று மிகவும் மனமகிழ்ந்து, அரசன் திரும்பிவருமுன் விசாரித்துமுடிக்க அவ்விரண்டு பெண்களையும் தன்முன் வரவழைத்து, அவர்களைச் சில கேள்விகள்கேட்க ஆரம்பித்தான். எஸ்கேலஸ் அஞ்சீலோ குற்றமற்றவனென்றும், சன்னியாசி யொருவன் பேச்சைக்கேட்டு இந்தப் பெண்கள் இப்படி நிந்திக்கிறார்களென்றும் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே சன்னியாசியும் அங்குவந்து தோன்றினார். அவரைக் கண்டதும் எஸ்கேலஸ் "நீங்களா அஞ்சீலோ பிரபுவைத் தூஷிக்கும்படி இவ்விரண்டு பெண்களையும் ஏவிவிட்டது என்று கேட்க, அதற்கு அவன், அரசனெங்கே? அவருடன் பேசவேண்டுமேயல்லாது உம்முடன் நான்பேசவரவில்லை" என்றான். அதற்கு எஸ்கேலஸ், இந்தச் சங்கதியை விசாரிக்க அரசன் எங்களுக்கு உத்தரவு செய்துபோயிருக்கிறார், சொல்லும் என, அதற்குச் சன்னியாசி, இந்தக் குற்றத்தை உங்களிடம் விசாரிக்கும்படி அரசன் எப்படி விட்டார்? நான் இந்த ஊரிலே கொஞ்சநாளிலேயே எவ்வளவோ குற்றங்கள் கண்டுபிடித்து அவைகளை வாய்விட்டுப் பேசினேன். அதற்கு எஸ்கேலஸ் என்பவர் என்னைச் சிறைச்சாலைக்கு அனுப்புவதாகச்சொன்னார் என்று சொல்லித் தன் சன்னியாசி வேஷத்தைக் கலைத்து அரசனாகத தோன்றினான். இப்படி இவன் ஆனறு கண்டு முதலில் நடுங்கினது அஞ்சீலோவே. அச்சபையிலிருந்த மற்றவர்கள் அனைவரும் என்ன நடக்குமோவென்று பிரமித்து நின்றார்கள்.

அரசன் குணவதியாகிய இஸபெல்லாவைப் பார்த்து, "என் பெண்ரத்நமே, உன் சன்னியாசி இப்பொழுது உன் அரசனாக மாறிவிட்டான். ஆனால் இன்னும் உனக்கு உபகாரம் செய்யவிரும்புகிறான். உன்குறை என்னவென்று கேட்க, அதற்கு அவள், நான் என் தாழ்ந்த நிலைமையிலிருந்துகொண்டு தங்களை இன்னாரென்று அறியாமல் செய்துவந்த பிழைகளைப் பொறுப்பீர்களாக" என்று கேட்டுக்கொண்டாள். அதற்கு அவன், கிளாடியோ இன்னும் பிழைத்திருக்கிறான் என்பதைக் காட்டிக்கொள்ளாமால், என்னசெய்தும் உன் தமையனைக் காப்பாற்றக்கூடாமற் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான். இதற்குள் அஞ்சீலோவுக்குத் தான்செய்த ஒவ்வொரு சங்கதியையும் அரசன் மறைவிலிருந்து அறிந்துகொண்டதாகத் தெரியவே, அவன் அவர் காலில்விழுந்து நான்செய்த குற்றங்களைப்பற்றி இங்கு விசாரித்து என் கெட்டுப்போன மானத்தை இன்னும் கெடுப்பானேன். இந்தக்ஷணமே எனக்குக் கொலையை விதித்து என்னைத் தண்டியுங்கள். நான்செய்த பாவத்தை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்றிருந்தேன். ஈச்வரரூபமாய் நீங்கள் பார்த்துவிட்டீர்களே என்றான். அதற்கு அரசன் "உன் குற்றங்களெல்லாம் நன்றாய்த்தெரிந்துவிட்டது. கிளாடியோவுக்கு நீ விதித்த தண்டனையை நான் இப்பொழுது உனக்கு விதிக்கும்படியாயிற்று என்றுகூறி, மரியானாவை நோக்கி, இவனைவிட நல்ல புருஷன் உனக்கு வேறொருவன் கிடைக்கமாட்டானா என்றான். அதற்கு மரியானா, "எனக்கு இவர் கிடைத்தால்போதும், எனக்கு மங்கலியப்பிச்சை கொடுங்கள்" என்று அரசன் காலில்விழுந்து அஞ்சீலோவின் உயிரைப் பிச்சைகேட்டாள்.

அஞ்சீலோ காலில் இஸபெல்லா விழுந்து கிளாடியோ உயிரைக் கேட்பதற்குப் பதிலாக அந்தக் கொடும்பாவியான அஞ்சீலோவின் உயிரையே அவன் பெண்சாதி பிச்சை கேட்கும்படியாய் முடிந்தது. பின்பு தான் செய்வதுமாத்திரம் போதாதென்று மரியானா இஸபெல்லாவைப் பார்த்து "தாயே நீயும் அரசன் காலில் விழுந்து என் புருஷன் பிராணனை இரக்ஷித்துக்கொடுப்பாயாக" என்று கேட்டுக்கொள்ள, அவளும் தன் மானத்தைக் கெடுக்க முதலில் நினைத்த கொடும்பாவியாகிய அஞ்சீலோவுக்கிரங்கி அரசன் காலில் விழுந்து அஞ்சீலோவை விடுவிக்கக் கேட்டுக்கொண்டாள். இதற்குத் தகுந்த உத்தரம் சொல்லுமுன் சிறைச்சாலையிலிருந்த கிளாடியோவை அரசன் வரவழைத்து இஸபெல்லாவை நோக்கி, என் பெண்மணியே, உன் கையை நீட்டு; உன் நற்குணங்களுக்கு நான் தாஸனாய்விட்டேன்; இதோ உன் தமையனைக் கொலைசெய்யாமல் காப்பாற்றி வைத்திருந்தேன். இன்றுமுதல் நீ எனக்கு ராணியாகி உன் தமையனையும் என் தமையனாய்ப்பண்ணு என்று சொல்லி அவளைத் தன் சிங்காதனத்தில் தூக்கிவைத்துக்கொண்டான்.

உடனே அஞ்சீலோவைப்பார்த்து, நீ கொண்ட எண்ணங்கள் கெட்டவைகளாயிருந்தபோதிலும் உன்னை மரியானா என்னும் பெண்மணி நிமித்தம் மன்னிக்கிறேன். அவளுக்காக உன் உயிரை நான் இப்பொழுது திருப்பிக்கொடுக்கிறேன். நீ கொஞ்சகாலம் அதிகாரத்திலிருக்கும்போது உன்னுடைய இருதயம் எவ்வளவு கடினமாயிருந்தது! இனிமேலாவது தயை தாக்ஷிணியம் என்பதை நீ அறிஎன்று சொல்லி அவனை விடுதலை பண்ணினான். அதே நிமிஷத்தில் அரண்மனையில் மூன்று கலியாணங்கள் நடந்தன. கிளாடியோ என்பவன் ஜூலியெத்தையும், அரசன் இஸபெல்லாவையும், அஞ்சீலோ மரியானாவையும் கலியாணம் செய்துக்கொண்டார்கள். இஸபெல்லா காவித்துணியைக் கட்டிக்கொள்ளாமலிருந்தபடியால் அரசனைக் கலியாணம்செய்துகொள்ள யாதொரு தடையுமில்லாமல் இருந்தது.

தனது நற்குண நற்செய்கைகளினால் அந்நாட்டிலுள்ள பெண்டுகளையெல்லாம் அவள் சீர்திருத்திவைத்தாள். ஜூலியத்தைப்போலப் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டைவிட்டு ஓடிப்போய்விடவாவது, கிளாடியோவைப்போலப் புருஷர்கள் சிறையில் அகப்பட்டுக்கொண்டு விழிக்கவாவது சிறிதும் இடமில்லாமற்போயிற்று. தயாநிதியான அந்த அரசனும், நற்குணமுள்ள இஸபெல்லா என்னும் பெண்ணைத் தன் பெண்சாதியாகப்பெற்று நீடுழிகாலம் சுகித்துவாழ்ந்திருந்தான்.

"நாம் பிறருக்களப்பதுதான் நமக்கும் அளக்கப்படும்."


This page was last revised on 30 October 2021.
Feel free to send corrections and comments to the Webmaster (pmadurai AT gmail.com)