pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு"
பகுதி 24 (2771 - 2809) - திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு &
பகுதி 25 (2810-2914) : திருக்கற்குடிமாமலைமாலை


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 24 (2771 - 2809)
tirunjAnacuvAmikaL AnantakkaLippu & part 25 (2810-2914)
tirukkaRkuTimAmalaimAlai
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Swaminathan Narayanan, V. Devarajan and V.S. Kannan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online first on 20 June 2007.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 24 & 25

"பிரபந்தத்திரட்டு" - பகுதி 24 (2771 - 2809)
திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு


ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர்சம் பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி

2771
பார்புகழ் காழி நகரிற் - சிவ
பாத விருதயர் செய்த தவத்தாற்
சீர்புகழ் மிக்க மகவா - ஐயர்
திருவ ருளாலவ தாரஞ்செய் தாரால்.        (ஆனந்த)     1

2772
கூடும் பருவமோர் மூன்றி - லம்மை
கொங்கை சுரந்த கொழுஞ்சுவைத் தீம்பா
னாடுபொன் வள்ளத்தி னூட்ட - உண்டு
ஞானசம் பந்த ரெனப்பொலிந் தாரால்        (ஆனந்த)     2

2773
சொல்லு மயனரி யாலு - மென்றுஞ்
சுட்டி யறியப் படாத பொருளை
யொல்லுஞ்செந் தாமரை யன்ன - செங்கை
யோர்விர லாற்சுட்டிக் காட்டிநின் றாரால்        (ஆனந்த)     3

2774
வைதிக சைவந் தழையப் - பெரு
மண்ணுல காதி மகிழ்சிறந் தோங்க
வுய்திற மாந்தமிழ் வேதந் - தோ
டுடைய செவியனென் றாரம்பித் தாரால்        (ஆனந்த)     4

2775
விண்ணும் புவியுங்கொண் டாடுந் - தமிழ்
தேவ மொழியும் பொழுதொற் றிடுமா
றெண்ணுந் திருக்கோலக் காவி - லைந்
தெழுத்தும் பொறித்தபொற் றாளம்பெற் றாரால்        (ஆனந்த)     5

2776
என்னென் றியானுரை செய்கே - னைய
ரேழிசை யோங்க வினிமை ததும்பப்
பன்னும் புகழ்த்திரு வாக்காற் - கொடும்
பாலை குளிர்நெய்த லாகிய தென்னின்        (ஆனந்த)     6

2777
மூவுல கும்புகழ் தில்லை - வளர்
மூவா யிரர்கண நாதராய்த் தோன்றப்
பாவு மிசையுரு வாய - புகழ்ப்
பாணருக் காங்கறி வித்துநின் றாரால்        (ஆனந்த)     7

2778
மும்மை யுலகும் புகழச் - செழு
முத்தின் சிவிகை குடைதிருச் சின்னஞ்
செம்மை யரத்துறை மேய - தேவ
தேவ னருளச் சிறப்பிற்பெற் றாரால்        (ஆனந்த)     8

2779
. தாரை திருச்சின்ன மெல்லாம் - பர
சமயத்தின் கோளரி வந்தன னிந்தப்
பாரையுய் விப்பவன் வந்தான் - ஞானப்
பாலறா வாயன்வந் தானென வூதும்.        (ஆனந்த)     9

2780
முந்திய மாமறை யின்க - ணைய
முற்று மொழிய மொழிந்து மறையோர்க்
கந்தியின் மந்திர மோரிற் - றிரு
வைந்தெழுத் தேயென் றருளிச்செய் தாரால்        (ஆனந்த) )     10

2781
அண்டர் புகழ்ந்துகொண் டாடும் - பாச்சி
லாச்சிரா மத்தெம் மடிகண்மு னன்பு
கொண்ட மழவன் மகளைப் - பற்று
கொடிய முயலக நோயொழித் தாரால்        (ஆனந்த)     11

2782
கொங்கி னடியரைச் சார்ந்த - வெங்
குளிர்ப்பிணி யாதி குலைந்தொழி வெய்த
வெங்கும் புகழ்திரு நீல - கண்ட
மீற்றி னுறுதமிழ் வாய்மலர்ந் தாரால்        (ஆனந்த)     12

2783
தாவில்பட் டீச்சரத் தையர் - நன்கு
தந்த மணிமுத்துப் பந்தர் விரும்பி
மேவு திருச்சத்தி முத்தத் - தி‍டை
மெய்ம்மையிற் பெற்றனர் வெங்குரு வேந்தர்        (ஆனந்த)     130

2784
தந்தை கருத்து முடிப்பான் - வளஞ்
சார்பொழி லாவடு தண்டுறை யார்பா
லந்தமின் முத்தமி ழாள - ருல
வாக்கிழி யாயிரம் பொன்னிற்பெற் றாரால்        (ஆனந்த)     14

2785
நீலகண் டப்பெரும் பாணர் - திரு
நெஞ்ச முவந்து நெடுங்களி கூரக்
கோலத் தரும் புரத்தி - லிசை
கோலிய யாழ்மூரி வாய்மலர்ந் தாரால்        (ஆனந்த)     15

2786
மாங்குயில் கூவும் வளஞ்சேர் - திரு
மருகலிற் பிள்ளையார் வாக்கெழு முன்னே
தூங்கி யெழுந்தவன் போல - விடத்
தோய்வா லிறந்தவன் றானெழுந் தானால்        (ஆனந்த)     16

2787
வீழி மிழலைப் பிரானா - ரெங்கள்
வித்தகர் சண்பை விரகர்முன் றோன்றிக்
காழியிற் றோணியின் மேவும் - வண்ணங்
காட்டுகின் றோமென்று காட்டப்பெற் றாரால்.        (ஆனந்த)     17

2788
காமரு வீழி மிழலை - யமர்
கண்ணுத லாரடி யார்க்கமு தாக
மாமரு வோர்செம்பொற் காசு - தினம்
வைக்கப்பெற் றார்சண்பை வந்த விரகர்        (ஆனந்த)     18

2789
.மன்னிய மாமறைக் காட்டிற் - சண்பை
வந்த கவுணியர் வாய்திற வாமுன்
றுன்னிக் கதவ மடைத்த - திறஞ்
சொல்லி னெவரே வியப்படை யாதார்.        (ஆனந்த)     19

2790
மானியா ரன்பு மமைச்சிற் - புகழ்
வாய்ந்த குலச்சிறை யாரன்பு மோர்ந்தே
யானி யிலாமறைக் காட்டி - னின்று
மாலவாய் மேவ வெழுந்தன ரையர்.        (ஆனந்த)     20

2791
செழுமணி யானத் திவர்ந்து - திருச்
சின்ன முழங்கத் திசைதொறு மொய்த்து
வழுவி லடியவர் போற்ற - ஆல
வாய்வந்து காட்சி கொடுத்தனர் யார்க்கும்        (ஆனந்த)     21

2792
கூடலின் மேய பிரானார் - கழல்
கும்பிட் டடியவர் கூட்டங் குலாவ
வாட லமைச்ச ரமைத்த - திரு
வார்மட மேவி யமர்ந்திருந் தாரால்        (ஆனந்த)     22

2793
தீய வமணக் கொடிய - ரையர்
திருமடத் திற்செய்த தீமை யருளான்
மேய வழுதி யுடம்பு - பற்றி
வெஞ்சுர மாகத் திருவாய் மலர்ந்தார்        (ஆனந்த)     23

2794
செம்மையில் கூனொடு வெப்பு - நின்ற
சீர்நெடு மாறற்கு நீங்கப் பொலிவு
வெம்மை யமணர்க்கு நீங்க - ஐயர்
மேதகு நீறு திருக்கைதொட் டாரால்        (ஆனந்த)     24

2795
அருகர் முகமு மனையா - ரழ
லாங்கிட்ட வேடு மொருங்கு கருகப்
பெருகிய சைவர் முகமு - மையர்
பேரழ லேடும் பசந்தன காணாய்.         (ஆனந்த)     25

2796
அண்ணுங் கொடிய வமண - ரோரெண்
ணாயிர ருங்கொடுங் கூர்ங்கழு வேற
வெண்ணு முயிர்களீ டேற - வையை
யாற்றிட்ட வேடெதி ரேறிய தம்மா.         (ஆனந்த)     26

2797
உள்ள நிகரப் புறமு - மிக்
கோங்கிருண் மூடிக் கொடுவினை பூண்ட
கள்ள வமணர்கள் யாருங் - கண்
கலங்கிக் கழுமரத் தேறினர் மாதோ.         (ஆனந்த)     27

2798
நந்திய சீர்மலை மங்கை - கொங்கை
ஞானமுண் டார்திரு வாய்மலர் சொல்லே
யுந்தி விடுநெடுங் கோலாச் - சுழ
லோடங் கரையரு குற்றது நோக்காய்.         (ஆனந்த)     28

2799
வித்தகர் தந்திரு முன்ன - ரூது
மெய்த்திருச் சின்னமெண் ணாது தடுத்த
புத்தன் றலையுருண் டோடச் - சினம்
பொங்கி யுருமொன்று வீழ்ந்தது கண்டாய்.         (ஆனந்த)     29

2800
வெங்குரு வேந்தர் திருமுன் - வாத
மேன்மேலுஞ் செய்து மெலிவுற்றுத் தோற்றே
அங்குறு புத்தரெல் லோரும் - சைவ
ராகின ரைய ரடிமலர் போற்றி.         (ஆனந்த)     30

2801
நாடுல கத்தெவர் பெற்றார் - திரு
நாவுக் கரசுஞ் சிவிகையைத் தாங்கிக்
கூடுமன் போடு மகிழ்ந்து - தவங்
கூடிற் றெனவருங் கோதற்ற பேறு.         (ஆனந்த)     31

2802
மன்னன் றிருவீரட் டானங் - காழி
மாமறைக் கன்று மகிழ்ச்சியிற் லெலப்
பன்னும் புகழ்த்தம்பி ரானார் - நடம்
பண்ணிய மேன்மைத் திருவரு ளோரின்.         (ஆனந்த)     32

2803
உய்ய வெமையெடுத் தாள்வார் - திரு
வோத்தூரில யார்க்கு மதிசய மேவ
வையர் திருவருள் வாக்காற் - பல
வாண்பனை பெண்பனை யாயின மாதோ.         (ஆனந்த)     33

2804
கச்சியின் மேற்றளி மேய - கருங்
கண்ணனங் கண்ணுத லெண்ணுரு மேவ
வுச்சியின் மாதவர் சூடு - மைய
ருண்மைத் திருவாக் கியற்றிய தோராய்.         (ஆனந்த)     34

2805
பெற்றனர் யாவர் பெறுவ - ரறம்
பேணு திருவாலங் காட்டுறை யையர்
பற்றுங் கனவினிற் றோன்றி - நம்மைப்
பாட வயர்த்தனை யோவென் றருள.         (ஆனந்த)     35

2806
மேவு சமயம் பலவுஞ் - சைவ
மேபொரு ளென்று விரும்பிக்கொண் டாடத்
தூவு மெலும்புபெண் ணாக - அருள்
சொல்லி னதிசய மல்லதெ னுண்டாம்.         (ஆனந்த)     36

2807
நாட்டும் புகழின் மலிந்த - திரு
ஞானசிந் தாமணி நல்லெழி லென்றுங்
காட்டும் பெருமண நல்லூர் - மணங்
காணவந் தார்சிவம் பூணச்செய் தாரால்.         (ஆனந்த)     37

2808
ஆரண மாகமம் வாழ்க - புக
ழாறு முகத்திரு ஞானசம் பந்த
காரண தேசிகர் வாழ்க - நெடுங்
கால மவரடி யார்களும் வாழ்க.     38

2809
ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர் சம்பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி.

திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு முற்றிற்று.
-----------

சிறப்புப்பாயிரம்.
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய தெய்வநாயகம் பிள்ளையவர்களியற்றியது.
(* இது பழைய பதிப்பைச்சார்ந்தது.)

நேரிசையாசிரியப்பா.
2809

மாமலி பொருனை வளஞ்சுரந் தளிக்கும்
பாமலி பெரும்புகழ்ப் பாண்டிநன் னாட்டின்
மிளிர்மணி குயிற்றிய வொளிர்மணி மாடத்
தும்ப ருலாவும் வம்பலர்க் குழலார்
முகமதிக் குருகி நகநிலா மணியிற்       5

புரிசெய் குன்றஞ் சொரிபுனல் பெருகி
வீசுவளி துறுத்த மாசறக் கழுவும்
பீடமர் வளஞ்சால் கூடன்மா நகரிற்
பிறவிப் பகைக்குள முறவுடைந் தடைந்தே
யொழியா வன்பின் வழிபடு மடியார்       10

மலவிருள் குமைக்கு நலமலி கதிரெனப்
போற்றிப் புவனஞ் சாற்றவீற் றிருக்கு
மீன மிலாத்திரு ஞானசம் பந்த
வருளா சிரியன் றிருவடிக் கன்பாய்ப்
பூவிரி பொழிற்குலைக் காவிரி புரக்கு       15

மளவிலா வளம்புனை வளவனன் னாட்டிற்
பத்தியிற் றவறா வுத்தம வணிகக்
குலமக டனக்கு நலமலிந் தோங்குந்
தாயா யளித்த தம்பிரா னென்று
மாயா வருளிற் கோயில்கொண் டமரத்       20

துரிசிரா திலங்குந் திரிசிராப் பள்ளியிற்
கடன்மருங் குடுத்த தடநெடும் புடவியி
லுற்றநூல் யாவுங் கற்றவ னென்றுந்
தோலா நாவின் மேலோர் வகுத்துத்
தந்தருள் பலபிர பந்த மென்பன       25

வெல்லாஞ் சொல்ல வல்லோ னென்று
முமிழ்சுவை யாரியத் துற்றபல் புராணமுந்
தமிழின்மொழி பெயர்க்கத் தக்கோ னென்றுந்
தனையடைந் தவரை நினைதரு தனைப்போல்
வல்லவ ராக்க நல்லதன் னியற்கையா       30

மெலியா வன்பிற் சலியா னென்று
மற்றவர் பிறரைச் சொற்றன போலா
துற்ற குணங்கண் முற்ற வுணர்ந்து
செப்பமுள் ளோர்பலர்க் கொப்பயா னுள்ளன
நினைந்துரை செய்வது புனைந்துரை யன்றெனக்       35

காட்சியின் விளக்கி மாட்சியி னமர்வோன்
கற்றவர் குழுமி யுற்றபே ரவையிற்
கனக்குநுண் ணறிவிலா வெனக்குமோ ரொதுக்கிடந்
தந்தமீ னாட்சி சுந்தரப் பெரியோன்
வனைந்து புனைந்த மாநலஞ் செறித்து       40

வைத்த பதிற்றுப் பத்தந் தாதியு
மூன மொழித்தரு ளானந்தக் களிப்புந்
துதித்திடு மச்சிற் பதித்துத் தருகெனத்
தகவுளோ ரென்றுந் தங்கப் பெற்றுத்
துகளிலா தோங்குந் தொண்டைமண் டலத்திற்       45

கயல்செறி புனல்சேர் வயல்செறி பண்ணையிற்
குடமருள் செருத்தற் றடமருப் பெருமைக
ளொருங்கு குழீஇயெம் மருங்கினு முலாவல்
விண்மூ டிருங்கருங் கொண்மூ வினங்கண்
மேவுசீர்த் தம்மிறை காவலிற் பொலிவுறு       50

மிந்நில மென்றகத் துன்னிச் சூழ்ந்து
தயங்குவள நோக்கி யியங்குதல் கடுக்கும்
வயங்குபூ விருந்த வல்லிநன் னாட
னாடகத் தியன்ற மாடந் தோறும்
வண்டமர் புரிகுழ லொண்டொடி மடவார்       55

மாந்தளிர் கவற்றி யேந்தெழில் வாய்ந்த
காற்சிலம் பணியு மரைமே கலையு
முன்னும் பின்னு முறையி னொலித்தன்
மாறாப் பம்மன் மாநக ராளி
மதியெழச் சிறக்கும் வானக மென்னத்       60

துதியுறக் கொளுமுயர் துளுவவே ளாளர்
குலஞ்சிறப் படையக் கலஞ்சிறப் பப்புனை
வாகார் தருபுக ழேகாம் பரவே
ளீட்டு தவப்பயன் காட்டவந் துதித்தோன்
பிறங்குசீர் விசாகப் பெருமா ளையனென்       65

றறங்குல வுலக மறைபுல வன்பாற்
றீந்தமி ழுணர்ந்தறி வேய்ந்தகுண சீல
னெட்டுத் திசையினு முட்டும் புகழா
னடைபிற ழான்பெருங் கொடையொடு பிறந்தோன்
கவிநயந் தெரிதலிற் குவிதரா வுணர்வினன்       70

மற்றைநற் குணமெலாம் பெற்றதா யானோன்
கங்கைபொற் கடுக்கை வெங்கண்வா ளரவந்
திங்கள்சேர் வேணி யங்கண னருச்சனை
மங்கலின் மலர்கொடு பங்க மறப்புரி
துங்கனாம் விசய ரங்கபூ பாலன்       75

கவின்றவுண் மகிழ்வொடு நவின்றன னாக
மின்னுமிந் நூல்கள்செய் வினைமுத லானோ
னென்னா சிரிய னாகவிந் நூல்கட்
குரிமையா னோன்றற் குறுமா சிரிய
னாகலி னொற்றுமை யறிந்துநின் றெனையிவ       80

னேவலு நன்றியா னேவப் படுதலு
நன்றுநன் றென்றுளந் துன்றுபே ருவகை
கதித்தெழ வன்பிற் பதித்து முடித்தன
னிலக்கண விலக்கிய நலக்க வுணர்ந்தோ
னென்னுடை நட்பனா விலங்கு
நன்னயத் தியாக ராசநா வலனே.       86

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
-----------

"பிரபந்தத்திரட்டு" - பகுதி 25 (2810-2914)
திருக்கற்குடிமாமலைமாலை

சிவமயம்
நிருத்தவிநாயகர். விருத்தம்.

2810
திருவளர் செம்பொன் மாளிகை யுடுத்துத்
        திகழ்தருங் கற்குடி மலைவாழ்,
மருவள ரிதழி மாலையெம் பிராற்கு
        மாலையென் றொருபிர பந்தங்,
கருவள ரளக்கர் நீந்துவா னியற்றக்
        கருணைமா மதம்பொழி முகச்சீ,
ருருவளர் நிருத்தக் கணேசர்பொற் பாத
        முளத் றுவைத் துன்னுது முவந்தே.     1

2811       அஞ்சனக்கணம்மை

பங்கய மலர்த்று மிரவியிற் கரமும்
        படரிராக் கதிரினிற்கலையு,
மங்கியிற்சூடு மறலிற்றண் மையுஞ்செய்
        யலரின்வா சமுமென வரவுங்,
கங்கையு மிலைந்த சடைப்பிரான் குணமாய்க்
        கருதுல களித்தருள் புனிதை,
மங்கையர்க் கரசி யானவஞ் சனக்கண்
        மடவா றிருவடி போற்றி.     2

2812       சைவசமயாசாரியார்

பூசுரர் விளங்கும் புகலிகா வலனார்
        புண்ணியப் பாதமுமுலகம்,
பேசுசீர் நாவுக்கரசர்பொற் றாளும்
        பெருகுமா நதிவழி தருமா,
மாசுதீர் பதிகம் பாடுநா வலர்தா
        மரைமல ரடியும்வண் கதிர்போற்,
றேசுசெய் வாத வூரர்பொற் கழலுஞ்
        சிறியனேன் சந்தைவிட் டகலா.     3

2813 நமச்சிவாயதேசிகர்.

அகழுமா கடல்சூ ழுலகின்மன் பதைக
        ளடர்புறச் சமயர்பொய் யுரைவிட்,
டிகழுமா றில்லாப் பதிபசு பாச
        மிஃதிஃ தெனத்தெளிந் துய்யப்,
புகழுமான் மழுவு நுதற்கணுங் கரந்து
        பொங்கருள் வடிவெடுத் துவந்த,
திகழுமா வடுதண் டுறைநமச் சிவாய
        தேசிகன் றிருவடி போற்றி. 3
நூல்.

2814
மலர்தலை யுலகிற் புன்னெறிச் சமயர்
        வாய்ப்பிதற் றுரை மனங் கொளாது,
பலர்கொள்பூ தியுங்கண் மணியுமைந்
        தெழுத்தும்பற்றியா னுய்யுமா றருள்வாய்,
வலனுடைத் திகிரிப் படையினான்
        வணங்க வரமுகி ‍லெனவுள மதித்துக்,
கலபமா மயில்கள் களிசிறந்தாடுங்
        கற்குடி மாமலைப் பரனே. 1 2815 பண்வழுக் குற்ற வீர்ஞ்சொலர் மையற்
        பரப்பினை நயந்துபா ராட்டிப்,
புண்வழுக் குற்ற மெய்யினைச் சுமந்தேன்
        பொய்யினைப் போக்குநா ளுளதோ,
வெண்வழுக் குறுவா னவர்கள்பொன் மோலியிணைந்
        திணைந் துரிஞவீழ் துகளாற்,
கண்வழுக் குறுவின் மேருவேபோலுங்
        கற்குடி மாமலைப் பரனே.       2

2816
இட்டமா விரையாக் கலிபிழைத் தாரென்
        றிருங்கிளைதந்தை தாய் மனையாள்,
பட்டபால் வாய்ச்சே யொறுத்தகோட்
        புலியார்பத்திபெற் றுய்யுநா ளுளதோ,
வட்டமாய் நடுப்பொன் மானந்தாங்குதலால்
        வரத்தகா தவருங்கண் டனாதிக்,
கட்டறுத் துய்ய வருட்குறியாகுங்
        கற்குடி மாமலைப்பரனே       3

2817
நளிமனம் வாக்குக் காயமூன் றாலு
        நனிமுயன் றவர்கொணின் னருளை,
யொளிர்பசும் பொன்செய் கொழுக்கொடு
        வரகுக்குழுதயான் கொள்வது முளதோ,
குளிறுமா மேகந் தவழ்ந்துறைபிலிறறுங்
        குளிர்க்குடைந் தாலென வுடலிற்,
களிவரக் காந்தட் டழல்வளர்த் தணைக்குங்
        கற்கு‍டி மாமலைப்பரனே       4

2818
மங்கைமூக் கரிந்த தொன்றுமோ போது
        மாமலர் தொட்டது கரமென்,
றங்கையுந் துணித்த வன்பரோ வடியா
        ரஃதிலா வெமர்களோ வடியார்,
பங்கமி றவத்தா னினதுசா ரூபம்
        பயனுறப் பெற்றென வானக்,
கங்கையு மதியு முடிதரித் தோங்குங்
        கற்கு‍டி மாமலைப்பரனே       5

2819
புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார்
        பொன்னடித் தாமரைச் செருப்பு,
மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ்
        வழிப்புலாய்க் கிடப்பினு முய்வே,
னெண்ணுவ தினியா திமையவருலக
        மிறுதிநா ளழிவது நோக்கிக்,
கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங்
        கற்கு‍டி மாமலைப்பரனே       6

2820
மறைநெறி வழாத புகலிகா வலனார்
        வளங்கொளோத் தூரிலாண் பனைகாய்,
நிறைதர வருள்கால் யானுமோர் பனையாய்
        நிற்பினு முய்வனென் செய்வே,
னிறைவநின் றனக்குப் போர்வையுமுடையு
        மீந்தவென் றாதரித் தாற்போற்,
கறையடி புலிகள் பயிலவீற்றிருக்குங்
        கற்கு‍டி மாமலைப்பரனே       7

2821
மண்பொழி தானக் களிற்றொடு பாகர்
        மடிந்தது போதுமோவெனையும்,
புண்பொழிவாளாற்கொல்லுமென் றவர்
        வாழ் புரங்குடியிருப்பினு முய்வே,
னொண்பொழி லேத்தச் சிவானந்த வெள்ள
        மூற்றெழத் தவஞ்செயு மடியார்,
கண்பொழி நீரோ டருவிநீர் பாயுங்
        கற்கு‍டி மாமலைப்பரனே       8

2822
யாதனின் யாத னினீங்கியா னோத
        லதனின தனினிலனெனமுன்,
னோதிய ‍பெரியோர் வார்த்‍தையும் பேணா
        துழல்கொடியேற்கருள் குவையோ,
மேதகு புழுகு நானமு முகிலும்
        விரைதருமாரமு நூற்றுக்,
காதநாற் றிசையுங் கமழ்தருந் தெய்வக்
        கற்குடி மாமலைப் பரனே.       9

2823
சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குத்
        தவறுறேல் சைவ சித்தாந்த,
மோவுறே லெனமுன் வாய்மலர்ந் தவர்த
        முரைவழி நிற்குமாறருள்வாய்,
பாவிய பாகற் கோட்டினிற் பற்றிப் படர்கறிக்
        கொடியினைவணக்கிக்,
காவளர் சார லருவிகல் லெனப்பாய்
        கற்குடி மாமலைப்பரனே.       10

2824
மெல்வினை ஞானம் வல்வினை
        ஞான மிளிரிவை பத்திவை ராக,
நல்வினை யென்ப ரவற்றிலோர் வினையு
        நண்ணிலேன் றீவினை யன்றிச்,
செல்வழி யருள்வா யகத்திரு டனைநின்
        றிருவருளோட்டல்போற் புறத்துக்,
கல்லரு மிருளை யராமணி யோட்டுங்
        கற்குடி மாமலைப் பரனே.       11

2825
மெய்யெலா முரோமஞ் சிலிர்ப்பவென்
        புருக விழிகணீர் சொரியவன் புருவா,
யையநின் புகழே பேசிடார் நாவா
        யளக்கரின் மிதக்குநாவாயே,
தெய்வமங் கையர்கள் சுனைகுடைந் தேறித்
        திருமகப்பெறுவரம் வேண்டிக்,
கைகளேந் துதல்போற் காந்தள்கண்
        மலருங்கற்குடி மாமலைப் பரனே.       12

2826
செயிரறு நினது திருவருள் காட்டுந்
        திறத்தினாற் காண்பதை யன்றிப்,
பயிறரு கல்வி கேள்வியா னின்னைப்
        பளகறக் காணவும் படுமோ,
வயிரமா மலைச்செம் மணிக்குவால் பச்சை
        மணிக்குவா லொடுபிறங் கிடுதல்,
கயிலைநீ யுமையோ டிருப்பது தெரிக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       13

2827
ஏந்தறற் செறுவிற் செந்நெலுட் பதடி
        யென்னவிப் புவியிடைப் பிறந்த,
மாந்தருட் பதடி யானயான் மூல மலத்தொட
        ரறுத்துய்வ தென்றோ,
பாந்தளின் மிசைக்கண் படுக்குமா யவன்போற்
        பரப்பிய தழலெனப் பூத்த,
காந்தளி னருகு யானைகண் படுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       14

2828
கல்லினால் வல்லப் பலகையால் வாளாற்
        கமரினாற் சாணையாலன்பர்,
புல்லுமும் மலமும் போக்கிநின் னடிக்கண்
        புகுந்தனர்யான்புகு மாறென்,
வெல்லும்வான் சைவம் விட்டுப்புன் சமயம்
        விரும்புவார் போற்பல கந்தங்,
கல்லுவார் மணிக ளகழ்ந்தெறிந்தெடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       15

2829
வேணவா வெகுளி முதற்களை கட்டு
        வேரற மனச்செயி லன்பாம்,
பேணறல் பாய்த்திப் பத்தியாம் பைங்கூழ்
        பிறங்கயான் வளர்த்துய்வ தென்றோ,
மாணுறு வட்டப் பளிக்கறை மதிபோல்
        வயங்கலா லுடுக்கண் மதனைக்,
காணவந் தாற்போல் வேரன்முத் திமைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       16

2830
சூதினாற் பொருள்செய் துன்னடி யார்க்கே
        துறுத்த மெய் யன்பரோ மூர்க்கர்,
வாதினாற் பொருள்செய் துண்டுடுத் துவக்கு
        மறத்தொழி லெமர்களோ மூர்க்கர்,
சீதளக் கதிரோ னெனவுல கேத்தத்தினமும்
        வெண் மதிமலர் ததைந்த,
காதநீள் சுனையின் மூழ்கிநின்றேறுங்
        கற்குடி மாமலைப் பரனே.       17

2831
துன்றிய பூத விருளொரு பொருளுந்
        தோன்றக்காட் டாதுபோ லிரண்டு,
ளொன்றினை யேனுங் காட்டிடா வனாதி
        யுறுமலமொழித்துய்வ தென்றோ,
நன்றுநின் னுருவங் கண்டுகண்
        புனல்பெய்நற்றவர்க் கருகுநி லாக்கல்,
கன்றலின் மதியைக் கண்டுதண்புனல்பெய்
        கற்குடி மாமலைப் பரனே.       18

2832
தரணியான் மாக்க ளுடற்குரி மைகளிற்
        றலைக்குமே லிலாதது போல,
வுரவுசெய் நின்ற னருட்குமே லிலையென்
        றுண்மையோ ரறிவர்யான் வலனோ,
பொருள்செய்நம் மகளார் கதுப்பினுக் கிணையாப்
        புகறகா தெனக்கறுத் துவந்த,
கருளினைத் துரந்தெக்காலமும் பகல்செய்
        கற்குடி மாமலைப் பரனே.       19

2833
சேரர்நின் கயிலைக் கெழுந்தநாட் பரிக்குந்
        திருப்பரி யுருக்கொண்டே னெனினு,
மோருமென் கிளையு முய்யுமெற் குறுமோ
        வுதிக்குமாற் பரிக்குமஃ துறுமோ,
பாரவில் வயிரப் படையினாற் சுமந்த
        பகையற வடுத்துற வுறல்போற்,
காரணைந் திரவி வெப்பற வுறைபெய்
        கற்குடி மாமலைப் பரனே.       20

2834
அன்றுநன் புகலூர் மணிமுதற் றோற்றி
        யரசினைச் சோதனைசெய்த,
தென்றுமெம் போல்வா ருய்பொருட் டன்றோ
        விதனையுமெண்ணிலன் சிறியே,
னொன்றுமும் முனிவர் தமிழ்வளர் வரையென்
        றொருமுனித் தமிழ்வரைத் தென்றற்,
கன்றுபன் மலர்வா சனையொடுற் றுலவுங்
        கற்குடி மாமலைப் பரனே.       21

2835
பிறைவடங் கிடந்த பொம்மல்வெம் முலையார்
        பெருங்களி மயக்கிடை வீழ்ந்து,
நிறைபொறி யிலானை யாண்டதென் னென்று
        நினைவெறுப் பாரிலை யருள்வா,
யிறைபிர ணவகுஞ் சரமுமை பிடியீ
        ரெச்சமும் யானையா னைக்கோ,
கறையடி வதியு மிடமெனக்கரிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       22

2836
வறியவ ரகட்டும் பசித்தழ லவிய
        வல்சியீந் திடுதலோ மாயாக்,
குறியுடைச் செல்வர்க் கீதலோ வறமக்
        கொள்கைதேர்ந் தெனைப்புரந் தருள்வாய்,
சிறியபுன்சுரர்நன் றிலரென நின்னைத்
        தேடுவார் போற்பல்வா னரங்கள்,
கறிகறித் துமிழ்ந்து குளிர்சுனை நேடுங்
        கற்குடி மாமலைப் பரனே.       23

2837
பொற்புறு சபையின் மாதரார் நடனம்
        புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
        தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
        மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
        கற்குடி மாமலைப் பரனே.       24

2838
தட்பமே மிகுந்த சாகரம் புனிதத்
        தடநதிப் புனலலா லெவரும்,
பெட்புறா திழிக்கு மங்கணப் புனலும்
        பெருகிடின் வெறுப்பது முளதோ,
கொட்புறு மனத்தேன் பிதற்றுரை யுங்கொள்
        குகைதொறு முறைதவர்க் குறுவெங்,
கட்பணி யுமிழ்ந்த மணிவிளக் கெடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       25

2839
மைக்கணார் முதலா மாயகா ரியங்கண்
        மயலென வெறுத்தெனதுள்ள,
மெய்க்கணின் னடியார் பாதமே பற்றி
        விடாவிருப் புடனுறவருள்வாய்,
மொய்க்குமீ னுவரி புகுந்தறன் மடுத்து
        முழங்கிவந்தணைதரு முகிலைக்,
கைக்களி றோடிப் பிடியென வணைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       26

2840
வேடமே பொருளா வுயிரளித் தவரை
        மெய்ப்பொரு ளென்பருய் திறத்தோர்,
மாடமின் மக்கண் மெய்ப்பொரு ளென்று
        மயங்முவேற் குய்திற மெவனோ,
பேடைமா மயின்மீ நோக்கியே யகவப்
        பெருமகண் மகிழ்நனூர் தியெனக்,
காடுடைத் தருக்கோ னூர்தியையுய்க்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       27

2841
பனிமதி நுதலெம் பிராட்டிமேற் கடைக்கண்
        பாய்த்திநீ யாடுமா னந்தத்,
தனிநடங் காண வருள்வையேன் மற்றோர்
        தவமுமோர் பேறும்வேண் டுவனோ,
நனியரம் பையர்தங் குழைகள்கொண்டெறிய
        நறுவிளக் கோட்டுவா னரமக்,
கனிகள்கைப் பறித்து மீச்செல வெறியுங்
        கற்குடி மாமலைப் பரனே.       28

2842
வளிமுதன் மூன்றும் பயிறர விடக்கால்
        வகுத்தவிப் புழுக்குடி லந்தோ,
விளிவுறக் குலையு முன்னராண் டிடினுண்
        டெனக்கினியெப்பிறப் புறுமோ,
துளிமுகிற் கூந்தற் சசிபுல வியினாற்
        றுரந்தமுத்தாரமா நடஞ்செய்,
களிமயிற் கழுத்திற் பரிசிலின் வீழுங்
        கற்குடி மாமலைப் பரனே.       29

2843
மன்னெகப் புளக முடலெலாம் புதைப்ப
        மழைபொழி தருங்கணி னடியா,
ரினநகத் திரிவே னாணஞ்சற் றில்லே
        னென்செய்கேனருள்செயூ டலினாற்,
சினமதக் களிறு தொடர்ந்திட
        வோடுஞ்சிறுபிடி குறமட மாதர்,
கனதனத் திடியுண் டஞ்சிமீண் டணைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       30

2844
தடித்தெழு மன்பே யுருவமாம் வேடர்
        தம்பிரா னோவென்றி முன்னீ,
பொடித்தமுப் புரத்தும் வலியதோ வெய்ய
        பொய்யினேன் றீவினை யுரையாய்,
கொடிச்சிய ரேன லிடித்திடு முலக்கைக்
        கொம்புபட் டுடைந்திழி பாகற்,
கடிச்செழு நறவவ் வுரற்குழி நிறைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       31

2845
தேயுநுண் மருங்கு லிறுத்தெழு முலையார்
        சீறடிச் சிலம்பொலி நேடி,
யாயுமென் செவிநின் குஞ்சித பாதத்
        தணிசிலம் பொலியறிந் திடுமோ,
பாயுமம் புலியின் குழவியும் வானப்
        பரப்பிடை யுதித்திரு ளனைத்துங்,
காயுமம் புலியின் குழவியுந் தவழுங்
        கற்குடி மாமலைப் பரனே.       32

2846
பந்தமார் கிளைக ளறத்துணித் துரிமைப்
        பண்புடை மனையைநிற் களித்த,
வெந்தையா ரவரோ பிறர்மனை நயக்கும்
        யாங்களோ நின்னடிக் கன்பர்,
முந்துமா தவத்து முனிவரே போல
        முடிச்சிகை வளர்த்துவன் கிராதர்,
கந்தமே யுண்டு கலையத ளுடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       33

2847
நண்ணிமுன் னாலங் காட்டிற்குத் தலையா
        னடந்திடு மம்மையோ நினது,
புண்ணியத் தலத்திற் காலினா னடந்தும்
        புகாப்பெரும் படிறனோ பேயார்,
விண்ணியை யமர ரவியுணா விரும்பி
        விரித்திரு கைகளு மேந்தக்,
கண்ணிய யாக முறுவர்செய் சாரற்
        கற்குடி மாமலைப் பரனே.       34

2848
மதித்துனை யுள்ளச் சினகரத் திருத்தி
        வாழ்ந்தவர் வாயிலா ரல்லர்,
துதித்துனைப் புகழாக் கொடியவெம் மனோரே
        துயரும்வா யிலாரிஃ துண்மை,
யுதித்தசெங் கதிர்மீச் செல்பொழு தேத்த
        வுறுந்திசைப் பாலரோ டுற்ற,
கதித்தகூற் றினைமுத் திட்டிட வுயர்ந்த
        கற்குடி மாமலைப் பரனே.       35

2849
ஏத்தியன் புறுநின் னடியரை நின்னை
        யிகழ்ந்துரை யாடி யுமத்தி,
நாத்தியென் றுரைத்து நான்பர மென்று
        நந்துவார் மாட்டெனைக் கூட்டேல்,
பூத்திரள் சிந்திச் சூழ்பவர் பாவம்
        போதல்போற் கயக்கருந் தானங்,
காத்திர ளுடுத்த சாரனின் றோடுங்
        கற்குடி மாமலைப் பரனே.       36

2850
பொருந்திய சாந்தம் பொற்பணி முனிந்து
        புண்ணிய நீறுகண் டிகையே,
தருந்திரு வெனவுட் கொள்ளுநா ளென்றோ
        சாரலிற் குடாவடி தவழ்த,
லருந்தவ ரியற்றும் பெருமகஞ் சிதைப்பா
        னடுத்தவர் சாபத்திற் கஞ்சிக்,
கருந்தயித் தியர்க ளிரிவது கடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       37

2852
அருந்தலை விரும்பி யணைத்தலைக் காண
        லவாவலை யுயிர்த்தலைக் கேட்க,
வருந்தலை யெல்லா நின்னடிக் காக்கி
        வருந்தலை மையுமெனக் குளதோ,
முருந்தலை சாரற் றேக்கடிப் படுத்த
        மொய்ம்மயி ரெண்கின்மேற் கிராதர்,
கருந்தலை வைத்து முடங்கத ளுறங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       38

2852
மன்னுசெங் கதிரோ னன்றியு மவன்கல்
        வாய்த்தழ றோன்றுமோ வதுபோற்,
பன்னுநின் னருளை யன்றியெவ் வுயிரும்
        பளகறு முத்தியிற் புகுமோ,
மின்னிடை யெயிற்றி மாதர்தண் சுனைத்தம்
        விளங்குருக் கண்டறற் குடிகொள்,
கன்னிய ரெனக்கை கூப்பிநின் றழைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       39

2853
சந்திரற் றரித்த நின்றிரு முடியிற்
        றழலா வையுமுடன் வைத்தாய்,
வந்தது புகழே யன்பரோ டெனைநீ
        வைப்பினும் வருவதுபுகழே,
யிந்திரன் மயங்க நீன்மணிச் சுடர்மே
        லெழீஇயொரு முனிவனே போல்வெண்,
கந்தடு களிற்றைக் கருங்களி றாக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       40

2854
தெளியுநின் கருணை மரகதக் கொழுந்தே
        சிவணுமென்பசியபுனேடிக்,
குளிர்பய னுதவுங் கோவினை யருத்தேன்
        கோதினையருத்துவேற் குளதோ,
வொளிசெய்பொன் னுலகிற் கொடுமுடி யுரிஞ
        வுதிரும்பொற் றுகளிடை மூழ்கிக்,
களிறுமா தங்கப் பெயர்ப்பொருள் விளக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       41

2855
தேகமே நானென் றுனியிரு சார்புந்
        திடமுறக் கொண்டவத் தைகளுள்,
ளேகியே யுழன்று திரியுநா ளொழிந்துன்
        னிணையடிவணங்குநா ளுளதோ,
போகுயர் குடுமிக் கருகிருந் தெயினர்
        பொன்னுல கத்தவ ரிசைக்குங்,
காகுளி துத்தந் தாரங்கேட் டுவக்குங் கற்குடி மாமலைப் பரனே.       42

2856
பணியும்வெள் ளெலும்பு நரம்பும்பூண் டதற்குன்
        பாலெவர் வினாவினர் தகாதென்,
றணிதர விடையார்க் கருளினை யெனையுமாளினத்
        தன்மையாய் விடுமால்,
பிணிமுகச் சாயற் கொடிச்சியர்வதுவைப்
        பெருநல நுகரமங் கலநாள்,
கணியெனக் கணிக ளேடவிழ்த் துரைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       43

2857
மல்லலம் புவியிற் கூற்றினைக் கடத்தல்
        வயங்குநின் றிருவடித் துணையே,
புல்லிய நெறியார்க் கன்றிமற் றல்லாப்
        புல்லிய நெறியினர்க் காமோ,
வல்லியங் குழலா ருறுவெறி யாட்டி
        லணிகெழுமுருகியந் துவைக்கக்,
கல்லெனு மொலியே செல்லொலி மழுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       44

2858
பஃறலைப்பாய லான்முதற் றேவர்
        பகுத்தொதுக் கிடநந்தியோச்சுஞ்,
சுஃறொலிச் சூரல் கண்டுகை யேந்தித்
        துதிக்குநின் றிருமுனென் றுறுவேன்,
சிஃறொழில் களுஞ்செய் யாதுசெய் நின்னைத்
        தெளிதவர் புரிமகப் புகைபாற்,
கஃறெனுங் கானிற் குயினொடு தவழுங்
        கற்குடி மாமலைப் பரனே.       45

2859
மையினுங் கழிந்த கருங்குழன் மடவார்
        மயக்கினை நயந்து மட் சுமையா,
மெய்யினுட் புகுந்து பொய்யினுட் சுழலும்
        வீணனுக்கெங்ஙன மருள்வாய்,
வையினுட் பழகு நெடுங்கணைக் கிராதர்
        வயங்கெழு தொண்டகந் துவைப்பக்,
கையினுட் குணிலென் றொளிர்பிறையெடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       46

2860
கொடும்பசித் தழலு ணனிமுழு கியும்பொற்
        குடமெடுத்தாட்டினா ரன்ப,
ரடும்பலூ ணுண்டுங் கைதொழ வருந்து
        மடியனுக்கெங்ஙன மருள்வாய்,
விடுஞ்சுடர்க் கற்ப மாமலர் பறித்து
        மேலவர்கண்வழி விரும்பிக்,
கடும்புட னிறங்க வேரல்க ளோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       47

2861
மறையவர் திருவை வைதிகர் துணையை
        வருபர சமயகோ ளரியைக்,
குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக்
        கொழுந்தினைத் துதிக்குமா றருள்வாய்,
நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க
        ணன்குமை திலகந்தீட் டுதற்குக்,
கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங்
        கற்குடி மாமலைப் பரனே.       48

2862
மைக்கருங் கடலிற் கன்மிசை மிதந்து
        மாறினின் னருட்கட லழுந்து,
மெய்க்கணெம் பெருமா னாவினுக் கரசை
        விளம்பிலேனெங்ஙன முய்வே,
னைக்கரு நெடுங்க ணாய்ச்சிய ருறிக்க
        ணளையெடுத் தவனென நிலவைக்,
கைக்கருங் களிறு கவளமென் றெடுக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       49

2863
நின்னுடைத் தோழப் பெருந்தகைப்
        பிரானை நிகரறுமுதுகிரிச் செம்பொன்,
மன்னுமாற் றிட்டுக் குளத்தினி
        லெடுத்தவள்ளலைப் பரசுமா றருள்வாய்,
துன்னுசெந் தினையின் குரல்கவர்குருகின்
        றொகுதியைக் கவண்கயிற் றெயினக்,
கன்னியர் மணிவைத் தெறிந்தெறிந் தோட்டுங்
        கற்குடி மாமலைப் பரனே.       50

2864
துதிகரைந் துனக்குன் னடியருக் கன்பு
        துறுத்தலே முத்தியென் றெண்ணேன்,
மதிசெயு நானே பரமெனு மாயா
        வாதியு மாயின னழகே,
திதியவன் பிரம னின்னமுந் தேடத்
        திகழுநின்னுருவென வோங்கிக்,
கதிரொளி மழுக்குங் கோபுரம் பலசூழ் கற்குடி மாமலைப் பரனே.       51

2865
ஆணவ மகன்ற வறிவன்றி யுருவி
        லையநீ பல்லுருக் கொண்டு,
பேணுபன் னாமம் புனைந்துபல் லிடத்தும்
        பிறங்குத லுயிர்கட்கென் றறியேன்,
மாணநின் னடியு முடியுங்காண் கினுமம்
        மாலயனிவற்றடி முடியுங்,
காணரி தெனச்செய் பொன்மதில் பலசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       52

2866
தினகரன் பூத விருள்விடக் கிரணஞ்
        செலுத்தல்போற் சிறியன்மும் மலமா,
மினவிருள் விடநீ யருள்செலுத் திடினுண்டின்றெனின்
        விடலென்று மின்றாந்,
தனபதி நகரி லதிகமீ தென்னத்
        தவழ்சுடர் மணிபல பதித்த,
கனகமா ளிகைகள் பலவுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.       53

2867
நவையறு மாசி னாமமப் பூதி நாயனார்
        தாஞ்செயு மறங்க,
ளவையினன் கெழுதி யுய்ந்தனர் யானின்
        றளவுஞ்சொல் லியுமறியேனாற்,
சுவைதரும் பல்பூக் கறித்துவாய் குதட்டித்
        துணர்த்தபைஞ்சூதமா நீழற்,
கவையடி மேதி துயில்வய லுடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       54

2868
தாலிகொண் டுறுநெற் கொளச்செலும் பொழுது
        தக்ககுங் கிலியங்கொள் புனிதர்க்,
கேலுமன் பனந்தங் கோடிகூற் றொருகூறெய்தினு
        மையமின் றுய்வேன்,
மாலிருங் கடந்த களிற்றின மறைய
        வளர்கதிர்க் குலைச்செழுஞ் சாலிக்,
கால்கள்பாய் பழனம் பலவுடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       55

2869
தூரமாஞ் செல்வச் செருக்கர்பி னடந்து
        தொடர்ந்துளந் திகைப்பதை யொழிந்து,
சீரிய நின்மெய் யன்பரைத் தொடர்ந்து
        திகைப்பறச் செல்லுநா ளுளதோ,
வாரிசத் தடத்தை யுழக்கிய பகட்டு
        வாளைபாய்ந் துறுகருக் கலங்கக்,
காரினைக் கலக்குங் கணியுடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       56

2870
கூற்றினை யுதைத்துங் காமனை விழித்துங்
        கொன்றநின் றனக்கன்பு செய்யார்,
மாற்றறுங் கூற்றின் றண்டமுங் காம
        வருத்தமு மெங்ஙன மொழிவார்,
தாற்றிளங் கமுகின் கழுத்திறப் பாயுந்
        தகட்டகட் டிளநெடு வாளைக்,
காற்றடம் பணைக ணனியுடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       57

2871
மின்னுசெந் தழலாய் நின்றுமென் பாதி
        மிலைந்துமல் லறநுதல் விழித்து,
முன்னுநஞ் சயின்றுந் தெரிக்குநிற் கயன்மா
        லொப்பெனக் கரைநரும் வாழ்க,
பன்னுகூன் குலைய குறுங்கழுத் தரம்பைப்
        பழங்கனிந் தொழுகிய செழுந்தேன்,
கன்னலின் படப்பை நனைக்குந்தண் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       58

2872
இயல்புடை யோகத் திருந்தநா ளெவரு
        மெவையுமின் புணர்ப்பற விருந்த,
செயலுணர்ந் துமையைப் புணர்ந்தரு ணீயே
        தெளிபர மென்பது தெளிந்தே,
னயலுறு முளரி மணந்தமக் கிலாத
        தறிந்துநெற் கதிர்தலை வணக்குங்,
கயலுடைப் பழனக் கணியுடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       59

2873
பராபர நினது மேனியிற் பட்ட
        பாண்டியன் கைப்பிரம் படிதான்,
சராசர மனைத்தும் படுதலா னீயே
        தறபர னெனவுளந் துணிந்தே,
னிராவெனத் திரியுங் கவையடிக் கயவா
        யெருமைகள் கன்றுளிப் பொழிபால்,
கராமலை மடுக்க ணிறைதரும் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       60

2874
பங்கயா சனனுந் திருநெடு மாலும்
        பாகசா தனனும்வா னவரு,
மெங்குநா டியுங்கா ணரியநின் பாத
        மெளியதன் பருக்கென வுணர்ந்தேன்,
கொங்குலாந் தடத்திற் சலஞ்சல முகுத்த
        கொழுங்கதிர் முத்தம்வில் வீசிக்,
கங்குலை மழுக்கும் பணைமருங் குடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       61

2875
ஐயவென் னுள்ள வெள்ளமிந் திரிய
        வடற்குலை யுடைத்ததி விரைவிற,
செய்யநின் பாத பங்கயக் கடலிற்
        சேர்தரப் படருநா ளென்றோ,
நெய்யணி கூந்த லுழத்தியர் நெடுங்க
        ணிழலற லிடைக்கண்டு மள்ளர்,
கையினாற் கயலென் றரித்திடுங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       62

2876
கட்டுவீ டருள்வோ னீயெனத் தெளிந்து
        கரிசுறு புன்றெய்வப் பற்று,
விட்டுனை யடைந்தேற் கெப்பற்று மறுத்துன்
        மெய்ப்பற்றைப் பற்றுமாறருள்வாய்,
வட்டவாய்க் கமல மதுமடை யுடைக்க
        மள்ளர்கள் கரும்படு மினிய,
கட்டியா லடைக்குங் கணிமருங் குடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       63

2877
விரிதனு கரண புவனபோ கங்கள்
        வினைவழிக் கொடுத்தவை துய்த்த,
பரிவுயி ரறப்பி னொடுக்கிமீட் டாக்கும்
        பரிவினுங் கதிதர லெளிதே,
நெரிமருப் பெருமை கரும்பினைக்
        குதட்ட நேரிழி சாறவ னிரப்புங்,
கரிசறு மகணி மருங்குடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       64

2878
செறிபிறப் பென்னும் பேதைமை நீங்கச்
        சிறப்பெனுஞ் செம்பொருள் காண்ப,
தறிவெனத் தெரிக்குங் குறட்பொரு ளறிந்து
        மறிகிலன் போற்பிற காண்பேன்,
வெறிமலர்ப் பணைநெற் பச்சிளங் கதிர்கள்
        விண்ணகத் தேனுநா நீட்டிக்,
கறிசெய வளரும் படுகர்சூழ் பழனக்
        கற்குடி மாமலைப் பரனே.       65

2879
வெம்பிய காமம் வெகுளியுண் மயக்கம்
        வேரறப் பறித்துநின் பதமே,
நம்பியென் புருக வனபுசெய் நாளு
        நாயினேற் குள்ளதோ வருள்வாய்,
பம்புபன் மலர்கண் மருதவேந் துறையப்
        பன்மணி குயிற்றிய பைம்பொற்,
கம்பலம் விரித்தாற் போலடர் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       66

2880
வையமும் வானு முய்யவன்
        புருவாய் வாதவூர் வந்தவ தரித்த,
வையனன புரையை நயந்துபா ராட்டு
        மவ்வள வாவதெற் கருள்வாய்,
செய்யதா மரையின் பன்மல ரொளிர்த
        றிகழ்தர விழித்துவச் சிரத்த,
கையினான் கிடத்தல் போன்மெனும் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       67

2881
ஒழுக்கமன் பருளா சாரநற் சீல
        முறவுப சாரம்வந் தித்த,
லிழுக்கிலா வாய்மை தவந்துற வடக்க
        மிவைகளி லொன்றும்யா னறியே,
னழுக்கிலா வமுத முடுக்கள போற்
        சிதற வணிமதி மேற்பெரு வாளை,
கழுக்கடை யெனப்பாய் படுகர்சூழ் தெய்வக்
        கற்குடி மாமலைப் பரனே.       68

2882
நின்னுரை வழியே நிற்பவர் நில்லார்
        நீளற மறஞ்சுவர்க் காதி,
மின்னுபோ கத்தா னரகத்தாற் றொலைத்து
        வீட்டுய்ப்போ னீயெனத் தெளிந்தேன்,
மன்னிய தென்னம் பழம்பல வீழ
        வருக்கையின் பழங்கிழிந் திழிதேன்,
கன்னலங் கழனி பாய்தரும் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       69

2883
மானிடப்பிறவி வந்தது மனத்தால்
        வாக்கினாற் காயத்தாற் பணிசெய்,
தானிடத் தைந்து மாடுநின் னடிக்கீ
        ழமரவென் றறிந்திலன் சிறியேன்,
கூனுடைக் குலைய குறுங்கழுத் தரம்பைக்
        கொழுங்கனி யிழிந்ததேன் கருப்பங்,
கானிடைப் பாயும் படுகர்சூழ் தெய்வக்
        கற்குடி மாமலைப் பரனே.       70

2884
பொருள்செய்சன் மார்க்க நெடுஞ்சக
        மார்க்கம் புத்திர மார்க்கமின் பாக்கு,
மிருமைசெய் தாத மார்க்கமிம் மார்க்கத்
        தியானொரு மார்க்கமு மறியேன்,
பருமர கதமுத் தந்துகிர் கண்டம்
        பாளைசெம் பழத்தினாற் காட்டிக்,
கருமுகி லணவுங் கமுகடர் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       71

2885
கொச்சையர்க் குயர்மா னியுமர சினுக்குக்
        குலவுமப் பூதியுமுலக,
நச்சுசுந் தரருக் குதியரும் போல
        நான்சிறந் துய்வதெந் நாளோ,
வச்சணங் கயில்வேற் கண்ணுழத் தியர்நெல்
        லரிதருங் கொடும்புற விரும்பைக்,
கச்சப வெரிநிற் றீட்டிடுங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       72

2886
படர்புகழ்க் காழிப் பிள்ளையார்க் கிவனைப்
        பாரெனச் சற்றுநீ மொழிந்தாற்,
பிடகன்மாத் தலையி லுருமுவீழ்த் தவரென்
        பெருவினைக் கும்மது வீழ்ப்பா,
ரடுமடைப் பள்ளி யுலைக்கழு நீர்செய்
        யாவிகால் குளம்பல நிரம்பக்,
கடலுடைத் தென்னப் பாயுமென் பால்சூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       73

2887
நயந்தரு நாவுக் கரசருக் கிவன்பா
        னாட்டம்வை யென்னினப்பூதி,
பயந்தசேய்க் குற்ற விடந்தொலைத் தவரென்
        பாசவல்விடத்தையுந் தொலைப்பார்,
வயந்தரு மள்ள ருடைப்பினை யூரு
        வரைகுவி நவமணி வாரிக்,
கயந்தலை யெனநின் றடைத்திடுங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.      74

2888
பழிதபு குணவன் றொண்டருக் கிவன்பாற்
        பார்வைசெ யென்பையேற் கராவாய்க்,
குழியினின் றொருசேய் மீட்டவர் சனனக்
        குழியினின் றென்னையு மீட்பார்,
வழிமதுப் பொழிபூங் கொடிகடாய் வளைப்ப
        வளைந்துபைங் கழைகணின் றிடுதல்,
கழிவில்கைக் கொடுவேள் பொரல்பொருங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.      75

2889
அருவமா யுருவ மாயரு வுருவா யனைத்துயிர்க்
        குயிருமா யறிவாய்ப்,
பொருள்படு மறைக்குந் தெரிவரி யாயாம்
        புராணநிற் றெரிதலெற் கெளிதோ,
சுருள்விரி யரம்பைக் குருத்துமீ யசைந்து
        சுரர்மினார் கலவியெய்ப் பாற்றுங்,
கருள்படு பொதும்பர்ப் படுகர்சூழ் தெய்வக்
        கற்குடி மாமலைப் பரனே.       76

2890
செவியினாற் கேட்டு மறிகிலே னின்னைத்
        தெரிந்தவர் போற்பல பிதற்றிக்,
குவிதரக் கவியும் புனைவனுன் னிடினென்
        குணமெனக் கேநகை தருமா,
லவிருநெற் பணையின் ஞெண்டுகள் கிளைத்த
        வளவில்பல் வளையெலா நிரம்பக்,
கவிழிணர்ச் சூதத் தாதுகுங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       77

2891
அருமறை தெரிதண் டீசர்பா லென்னை
        யடைக்கலம் புகுத்துவையானால்,
வெருவறத் தந்தை தாடுணித் தவரென்
        வெம்பவத் தாளையுந் துணிப்பார்,
மருவிய வுணவு கொடுவரச் சென்ற
        மடவனச்சேவலை நோக்கிக்,
கருவுயிர்த் துறைபே டலமருங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       78

2892
நானவார் கூந்தற் பரவையார் மனைக்கு
        நள்ளிரு ணாப்பணீ தூது,
போனநா ளாரூர் மறுகிலோ ரெறும்பாய்ப்
        பொருந்தினும் வருந்திடா துய்வேன்,
கூன்முது கிப்பி யுயிர்த்தவெண் முத்தங்
        குவிதரக் கயிலையே யென்று,
கான்மலர் தூவிச் சுரர்தொழுங் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       79

2893
கெடுத்திடு முலோகா யதன்முத லான
        கீழ்ப்படுஞ் சமயர் பொய் யுரையை,
யடுத்திடும் படியெப் பிறப்பெனக் குறினு
        மருளனின் னடிக்கன்பே யருள்வாய்,
மடுத்தவெண் குருகோர் முடக்கிழ நாரை
        வாய்க்கொளு முணவினைத் தட்டக்,
கடுத்திடா தறவோர் போலுறை கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       80

2894
தரிசனங் கொடுத்தா ளுயர்ந்தவ னீயான்
        றாழ்ந்தவ னியல்பினெப்பொருளுந்,
தெரிபவ னீயா னீதெரி விக்கத் தெரிபவ
        னின்னடிக் கடியே,
னரிசிதர்ந் தயில்கொன் றாள்வழக்
        கறுக்கு மங்கணார் முகமதி கண்டு,
கரிசறக் குமுத மலருமென் பால்சூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       81

2895
பொருவினின் பூசை யென்னும்புண் ணியத்தாற்
        பொலிசிவ ஞானம்பெற் றடங்கி,
மருவுற மேல்கீழ் தருமறம் பாவ மாற்றிநின்
        னடிக்கணென் றுறுவேன்,
குருமலர்ச் செந்தேன் புலியடிப் பைங்காய்க்
        கோழரை யரம்பையைச் சாய்த்துக்,
கருநிறக் கவரி நீந்தப்பாய் கணிசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       82

2896
யானது செய்தேன் பிறரிது செய்தார்
        யானென தென்னுமிக் கோணை,
ஞானவா ரழலால் வெதுப்புபு நிமிர்த்து
        நான்செவ்வே நிற்கவென் றருள்வாய்,
மீனுண வளித்து விரிசிறை நாரை
        மென்மடப் பெடையொடு திளைக்குங்,
கானகன் மென்பூந் தடத்தமென் பால்சூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       83

2897
மூதறி வுடையோர் புகழ்சிறுத் தொண்டர்
        முளரித்தா ளடைந்திலே னடைந்தான்,
மேதகு சேயை யறுத்தவர் வெறுத்தென்
        வினையினை யறுக்கவஞ் சுவரோ,
மாதர்மென் றடத்தில் வெள்ளிதழ்க் கமல
        மலரினை மடவனச் சேவல்,
காதலி னணைக்கப் பெடைதுயர் பணைசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       84

2898
பெருகிய வெள்ளந் திரைக்கட லன்றிப் பிபீலிகை யளையினும் புகல்போ,
லுருகிய வன்ப ரன்றியென் பாலு முன்னருள் புகுவது வழக்கால்,
பருதிய யிரமோர் கடலிடைத் தோன்றும் பானமைபோ லொவ்வொரு மடுவிற்,
கருதுசெங் கமலம் பலமலர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே.       85

2899
உயிரெலா நின்ன தடிமையெப் பொருளு
        முன்னுடை மைப்பொரு ளென்னச்,
செயிரற வுணர்ந்த நின்னடி யவாதாள்
        சிறியனே னடைந்துய்வ தென்றோ,
குயிலெனப் பேசுங் கடைசியர் வதனக்குறுநகை
        மதிநில வென்னக்,
கயிரவங் கருதி மலர்பணை யுடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       86

2900
பாவியேன் சிந்தை நின்னடிக் காக்கிப்
        பணிவிடைக் கிருகையுமாக்கி,
நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி
        நவையற வுய்யுநா ளுளதோ,
வாவியிற் பொலிவெண் டாமரை மலர்போன்
        மதியுறப் பெருக்கெடுத் தொழுகுங்,
காவிரிப் புனல்பாய் நெடும்பணை யுடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       87

2901
மிடைத்தம ருடற்றும் பலகுண மறுத்து
        மிகுசிவா னந்தமூற் றெடுப்பக்,
கிடைத்துனைக் காண வாணவ வெழினி
        கீழயான் பெறுவதெந் நாளோ,
வுடைப்பினை மள்ள ரடைக்குமுன் வராலவ்
        வுடைப்படை படவுடை மடையின்,
கடைத்தலை வெடிபோய் விழும்பணை யுடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       88

2902
ஐந்துபே ரறிவும் பார்வையாய் முடிய
        வடுத்திடு கரணமீ ரிரண்டுஞ்,
சிந்தையாய் முடிய நின்றிரு ந்டனந்
        தரிசிக்கு நாளுமெற் குளதோ,
விந்திர தருவோ ரளிக்குந்தே னளியா
        வியல்பினை நோக்கிவெண் மலராற்,
கந்தவார் பொழில்க ணகைக்குமென் பால்சூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       89

2903
பூப்பயி னந்த வனம்பல வியற்றேன்
        பொருந்தல கிடேனினா லயத்தி,
லாப்பிகொண் டைதா மெழுகிடே னெங்ங
        னடியனே னுய்யுமா றருள்வாய்,
வீப்பயி லளிகண் மூக்குழ வழிதேன்
        விரிகடற் படுமுவ ரகற்றுங்,
காப்பயின் மென்பான் மருங்குடுத் தோங்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       90

2904
அவாவெனப் படுவ வெவ்வகை யுயிர்க்கு
        மணியவெவ் விடத்து மெஞ்ஞான்றுந்,
தவாவரு பிறப்பின் வித்தென வுணரேன்
        றண்ணரு ளெங்ஙனம் பெறுவே,
னுவாமதி தவழுஞ் சோலையி லிளைஞ
        ரொளிர்கத லியைமறை மாதர்,
கவானென வணைக்கு நெடும்பணை யுடுத்த
        கற்குடி மாமலைப் பரனே.       91

2905
மலைக்கொடி படருங் கற்பக தருவே
        வயங்கருண் மழை பொழி முகிலே,
புலைக்கொடி யனையா ளென்றுமெய் யாவிப்
        பொய்யினே னடையுநா ளென்றோ,
நிலைக்கொடி யாட வுலகங்கொண் டாட
        நிறைமலர்ச் செங்கொடி யாடக்,
கலைக்கொடி யாடு மாளிகை பலசூழ்
        கற்குடி மாமலைப் பரனே.       92

2906
அற்குடி கொண்ட விரைநறுங் கூந்த
        லணிமுலை யெம்பிராட்டி யையான்,
சொற்குடி கொண்ட யாப்பினா லன்பாற் றுதித்திடப்
        பெறுநன்னா ளென்றோ,
விற்குடி கொளும்பொன் னுலகமேத் தெடுப்ப வியனொளி
        குடிகொள்பன் மணியென்,
கற்குடி கொளச்செய் நற்குடி மலைதாழ்
        கற்குடி மாமலைப் பரனே.       93

2907
பல்லெலாந் தெரித்துச் சொல்லெலாந் துறுத்துப்
        பாட்டெலாம் பாடினீர் யாமு,
மில்லெலா மாய்ந்தோங் கொடுப்பதற் கிலையென்
        னிவர்கள்பாற் புலவரென் பெறுவார்,
சொல்லெலாந் திருவைந்தெழுத்திவண் வாழ்வோர்
        தொழிலெலாம் பணிவிடை யென்றுங்,
கல்லெலாஞ் சிவலிங் கம்மெனச் சுரர்தாழ்
        கற்குடி மாமலைப் பரனே.       94

2908
பொற்பக மலர்ந்த மாதரர் மையற்
        புணரியி லழுந்திடா துனக்கே,
யற்பக மலர்ந்து சிவானந்தப் புணரி
        யழுந்திடு மாறெனக் கருள்வா,
யெற்பக மலர்ந்த குவட்டுறும் யானை
        யீர்ங்கவு ளளிகளைக் கையாற்,
கற்பக மலர்ந்த குழையெடித் தோச்சுங்
கற்குடி மாமலைப் பரனே.       95

2909
புவிமுழு தளந்தோ னேடியுங் காணாப்
        பொன்னடித் தாமரை காண்பான்,
குவிமனத் தோடு மகம்படித் தொண்டு
        கொண்டியா னுய்வதெந் நாளோ,
வவிர்தரு பிறையைக் கண்டவில் வேட
        ரவாவொடு கொடிச்சியர் தமது,
கவினுத லென்னப் பொட்டணிந் துவக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       96

2910
மன்றினின் னடனங் கண்டகண் கொண்டு
        மற்றினிக் காண்பதி யாதென்,
றொன்றிய சிந்தை யுறுதிகொள் ளுவனே
        லுய்குவே னெனக்கது போதுங்,
குன்றவ ரேனற் குரல்களை யறைக்கட்
        கொண்டுபோய்க் குவித்தடும் யானைக்,
கன்றினான் மிதிப்பித் துதிர்தினை யளக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       97

2911
நனியிடை யறாம லுன்னடி நினைக்க
        நாயினேற் கருளுவை யாயி,
னினிவரு கதிரெங் கெழினுமெண் ணேன்யா
        னிருப்பனீ தருளிட வேண்டுந்,
துனியறு களிற்றின் கோடுபட் டுடைந்து
        சுட்டபொன் போற்பல வருக்கைக்,
கனிபழங் கீண்டு சுளைபல வுதிருங்
        கற்குடி மாமலைப் பரனே.       98

2912
நீதிசேர் சைவத் தடைந்தவ ரடையா
        நின்றவ ரடைபவர் தமக்கியான்,
பாதகக் குழிசித் தொடர்பற வடிமைப்
        படும்பரி சென்றுநீ யருள்வாய்,
கோதில்கற் பகத்தி னறுங்குள கருத்திக்
        கொழுமத யானையங் கூந்தற்,
காதலம் பிடியைப் புலவிதீர்த் தணைக்குங்
        கற்குடி மாமலைப் பரனே.       99

2913
சைவமே பொருண்மற் றவையல வென்று
        சார்திரு நீறுங்கண் டிகையுந்,
தெய்வவைந் தெழுத்தும் பற்றறப் பற்றத்
        திருவரு ளென்றெனக் கருள்வாய்,
பைவளர் மணியைத் தழலென நினைந்து
        பாவடிப் பருமநல் வேழங்,
கைவளர் கடநீர் மழையெனப் பொழியுங்
        கற்குடி மாமலைப் பரனே.       100

2914
வெண்பா.
நிலமாலை கொண்ட நெடுஞ்சடையி லென்பின்
குலமாலை யுஞ்சேர்த்துக் கொண்டாய் -- பலமேலோர்
சொன்மாலை கொள்செவியிற் றூக்கற் குடியாயென்
புன்மாலையுங் கொளது போல்

திருக்கற்குடிமாமலைமாலை முற்றிற்று.


This file was last revised on 01 Nov. 2021.
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com)