pm logo

"நாட்டியக் கலை விளக்கம்"
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்


nATTiyakkalai viLakkam
by yOki cuttAnanta pAratiyAr
In tamil script, Unicode format



Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing online a scanned image version of this literary work.
This etext has been prepared via Distributing Proof-reading implementation of PM.
We thank the following volunteers for their help in the preparation of the etext:
S. Karthikeyan, Nalini Karthikeyan, Balaganapathy, R. Navaneethakrishnan and Sonia .
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This file was first placed online on 6 October 2008.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"நாட்டியக் கலை விளக்கம்"
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

Source:
"நாட்டியக் கலை விளக்கம்"
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
அன்பு நிலயம் இராமச்சந்திர புரம், திருச்சி ஜில்லா
முதற்பதிப்பு, 1944; விலை அணா 9
பதிப்புரிமை: கமர்ஷியல் பிரின்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், ஜி.டி., சென்னை.

பதிப்புரை
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாடியுள்ள ஸ்வரத்துடன் கூடிய "நடனாஞ்சலி" என்னும் கீர்த்தனைத் தொகுதியில் சேர்ப்பதற்காக"நாட்டியக் கலை விளக்கம்" என்னும் இந்நூல் எழுதப் பெற்றது.இவ்வாராய்ச்சி விரிந்து விட்டபடியால், இதனைத் தனி நூலாகவே வெளியிடலானோம்.
நாட்டியக் கலாபிவிருத்தியில் நாட்டமுள்ள அனைவருக்கும், இந்நூல் மிகவும் இன்றியமையாதது. மேலும் "நடனஞ்சலி" என்னும் நூலுக்கு, இது திறவுகோல் போன்றதாகும்.
நாட்டியக்கலை தழைத் தோங்குக!
இராமச்சந்திரபுரம்
20-7-1944 (87-1-1000)
     அன்பு நிலயத்தார்
---------
பொருளடக்கம்
1. எங்கும் நடனம் 2. நடனக்கலையின் வரலாறு
3. வாழ்வே நாட்டியம் 4. உலகெங்கும்
5. பரதநாட்டியம் 6. புனிதக்கலை
7. பரத சாஸ்திர விளக்கம் 8. பரத சாஸ்திரம்
9. நடிகர் இலக்கணம் 10. ஆடலாசிரியன்
11. கவிஞன் 12. இசைவாணன்
13. முழவோன் 14. வாத்தியங்கள்
15. ஆடரங்கம் 16. அவை
17. கலைக்கோல் 18. நவரசங்கள்
19. கலைக்குறிகள் 20. கண்குறிகள்
21. முகக்குறிகள் 22. கைக்குறிகள்
23. காலாட்டம் 24. அங்க ராகங்கள்
25. கரணங்கள் 26. காட்சிகள்

-------------------

"நாட்டியக் கலை விளக்கம்"
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

1. எங்கும் நடனம்.

விண்ணும் மண்ணும் நடனச்சாலையா யிருக்கின்றன; சுற்றிலும் இடைவிடாமல் நடனக்காட்சிகள் நடக்கின்றன. இக்காட்சிகளைக் காணக்காண உள்ளம் பூரிக்கிறது. இரவின் கருந்திரையைப் பிளந்து கொண்டு கம்பிமின்னல் வரும் ஒய்யாரத்தைப் பாருங்கள். மேகமார்பை ஊடுருவிப் பாய்ந்து பாய்ந்து பளிச்சிட்டு நடம்புரியும் மின்னலை இரவெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரவசமாகாத கவி உள்ளமில்லை! மின்னற்கொடியின் நடனத்துடன் மேககர்ச்சனையும் சேர்ந்துவிட்டால், அந்த இன்பத்தைச் சொல்லால் அளக்கமுடியாது! சூரியன் குபுக்கென்று கிழக்கே ஒரு குதிகுதித்தெழுந்து, சாந்த நடனம் புரிந்து, மற்றொரு குதி குதித்துத் தணல்மயமாக மேற்கே மறையும் காட்சியைக்கண்டு நம் உள்ளம் இன்பக் கூத்தாடுகிறது! காற்றுப் பாட்டை வரவேற்று, அதனுடன் கூடிக்குழைந்து குலாவி நடனம்புரியும் மரஞ்செடி கொடிகளைப் பாருங்கள்!காற்றின் வேகத்திற்குத் தக்கபடி பூவும் இலையும் அசைவதைப் பாருங்கள்! இலைகள், முத்திரை காட்டுவது போலவும், காற்று, வீணையை மீட்டும் விரல்கள் போலவுங் காண்கின்றன! மலையிலிருந்து அருவி தடதடவென்று படிகத்தை உருக்கிவிட்டதுபோல் ஆனந்த நடனமாடி வருவதைப் பார்த்தால், நம் உள்ளமும் ஆனந்தக் கூத்தாடும். ஆறு, மேட்டிலும் பள்ளத்திலும் ஜதிமிதித்துச் சென்று, எல்லையற்ற கடலுடன் சேர்ந்து, அலைகளுடன் அலையாக நடம்புரியும் பிரம்மானந்தக் காட்சியைப் பாருங்கள்! ஆ, கடலின் அகண்ட கீதமும், ஆவேச நடனமும் கண்ணுள்ள மட்டும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்; காதுள்ள மட்டும் கேட்டுக்கொண்டே யிருக்கலாம்! உலக வாழ்வே நடனந்தான்!

எல்லா வுயிர்களும் இன்பம் வந்தால் துள்ளிக் குதிக்கின்றன; துன்பம் வந்தாலும் சோகநடன மாடுகின்றன. விருப்புவெறுப்பு, இன்பம் இடர், கசப்பு களிப்பு முதலிய எந்தத் தன்மையும் ஒரு முகக்குறியால், கைக்குறியால், இடுப்பு வளைவால், அங்க அசைவால் நமக்குப் புலனாகின்றது. பேச்சுடன் கைவீச்சும் கால்வீச்சும் முகச்சுளிப்புகளும் இளிப்புகளும் களிப்புகளும் சேர்ந்துதான் உள்ளக்கருத்தை உணர்த்துகின்றன, உயிரே, நமது உள்ளத்தில் 'பட் பட்'டென்று நடம்புரிந்துகொண்டிருக்கிறது. இரத்த நாடிகளெல்லாம் 'ட்ப் ட்ப்' என்று நடம்புரிகின்றன. இந்த நடனம் நின்றால், மனிதர் வாழ முடியாது. ஜடயந்திரங்களும் 'ஓம்' என்று சத்தமிட்டுச் சக்கரஞ்சுற்றி, மின்சாரத்தாலும் ஆவியாலும் நடனம் செய்கின்றன. படச்சுருளை ஓட்டும் மின்சாரப் பொறியை பாருங்கள்! ஒரு சுரங்கத்தில் தங்கங்காய்ச்சும் பெரிய யந்திரங்களின் தாண்டவத்தைப் பாருங்கள்! எந்த யந்திரமும் நடனமாடிக்கொண்டுதான் வேலைசெய்கிறது. இந்தச் சீவயந்திரத்தின் விசை இதயத்தில் நடக்கும் திருவடி நடனமே!
----------

2. நடனக் கலையின் வரலாறு

மனிதன் பேசத்தெரியுமுன்பே முகக்குறி கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சியையும் கருத்தையும் வெளியிட்டான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனகலைக்கு ஒரு வடிவ மீந்தன. சொல்லிற்கேற்ற கைக்குறி கண்குறிகளும், சொல்லாலான இசைகளுக்கேற்ற ஆட்டங்களும் இயற்கையாகவே உண்டாயின.இசைக்கேற்றபடி இராகதாளங்கள் உண்டாயின. இராகதாளங்களுகு, முதலில் குரலும் கைகளும் பயனாயின. பிறகு, மனித அறிவும் சுவையும் முதிர முதிரப் புதிய புதிய இசைக்கருவிகளும் ஆடல்பாடல்களின் முறை வகுப்புகளூம் அபிநயலட்சணங்களும் எழுந்தன. யாழ், குழல், முழவு முதலிய கருவிகள் மனிதக்குரலை இன்புறுத்தித் துணைசெய்தன. இவ்வாறே இயற்கையான நடனம், பல கலைநுணுக்கங்களுடன் வளர்ந்து ஒரு சாத்திரமானது. தகுந்த அருட்புலவர் அதற்கு இலக்கணமும் இலக்கியங்களும் வகுத்தனர். இதுதான் நடனக்கலையின் இயற்கையான வரலாறாகும்.
------------------

3. வாழ்வே நாட்டியம்

வாழ்வே, ஒரு நாட்டியக் கலைதான்: மனித உணர்ச்சிதான் மூளையில் அறிவாகவும், நாவில் பேச்சாகவும், வாக்கில் கவியாகவும் குரலில் பாட்டாகவும், விரலில் கருவியிசையாகவும் நடம்புரிகிறது. உணர்ச்சிதான் முகபாவனைகளாலும், தலை, மார்பு, கைகள், இடுப்பு, கால்கள், அங்கங்களாலும் அபிநயமும் கலந்தே வருகிறது. பேச்சில்லாமல் சாடையாலேயே உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஒருவன் மனதை முகக்குறியும் கைக்குறியும் காட்டும். 'ஹா, என்ன வியப்பு ...அப்பா காரியம் ஒரு வழியாக முடிந்தது. என் இன்பமே வா, வா! என் கண்ணே சாப்பிடு!... ஐயோ, என்கதி இப்படியானதே! ஹா, புலி புலி! பாம்பு பாம்பு! சை, இதென்ன உலகம்! என்ன மனிதன், எல்லாம் அவ்வளவுதான்! விடு கழுதையை! அட மோசக்காரா, இப்படியா செய்தாய்!... நன்றாக வேண்டும், படு, படு!...ஹ...ஹ...ஹ, சிரிப்புத்தான் !... பூசையிலே கரடி ஓட்டுவதுபோல வந்தான்... ஓடு ஓடு, நாழியாயிற்று! இதென்னடீ இந்த மனிதர் அதிசயம்; நன்றாயிருக்கிறதம்மா!... இப்படித்தானுண்டோ? எனக்குப் பிடிக்கவேயில்லை! நாதா நாம் அன்றில்போலிருப்போம்...ஹா, ப்ராணநாதா!' இந்த உணர்ச்சித் தொடர்களை ஒரு கண்ணாடிமுன் பேசிப்பாருங்கள்! பேச்சுக்கேற்ற அபிநயம் தானே வரும். பேசக்கூடத் தேவையில்லை; ஒருவன் தலையில் கைவைத்து முகத்தைக் கோணும்போது, கையை விரிக்கும்போது, அவன் உள்ளம், 'ஐயோ, இப்படிவந்ததே' என்ற சோகத்தை விளக்கும்.இரண்டு காதலர் இரண்டு கைகளையும் அகல விரிக்கும்போது, 'நீயே என் ஆவி;உன்னை என் உயிரில் அணைத்து கொள்வதே இன்பம்!" என்று மனம் அவருள்ளே பேசும். இப்படி இயற்கையாக வருவதே உண்மையான நாட்டியமாகும். அதில் சுருதியும் பாட்டும் போலவே, பேச்சும் அபி நயமும் பொருந்தியிருக்கும்.

நீண்டகாலமாக உலகில் இந்த அபிநய பாஷைதான் வழங்கிவந்தது. இன்னும் சில ஜாதியாரிடையே சைக்கினைதான் உள்ளுண்ர்வை வெளியிடுகிறது. தமிழே அறிந்த ஒருவன். தமிழே அறியாத ஒரு இந்திவாலாவுடன் பேசுவதானால் மொழி பயனாவதில்லை; கைச்சாடையுடம் முகக்குறிகளுமே பயனாகும். அபிநயம், 'பேசா உலகமொழியாக' வழங்குகிறது. அதை மனிதசமுதாயம் நன்றாக உண்ர்ந்தால் எவரும் எவருடனும் பாஷை தெரியாமலே கைக்குறிகளாலும் கரணங்களாலும் முகச்சுளிப்புகளாலும் நன்றாகப் பேசலாம். "கானா காலியா;" என்று பேசத்தெரியாத ஒரு தமிழன், நம் இந்தியாவைப்பார்த்து பத்மகோச முத்திரையாக வலக்கை விரல்களை மடக்கி, வாய்க்கருகே வைத்து சாடை காட்டினால், உடனே இந்திவாலா, "காலியா" என்று பதிற்சொல்லுவான். 'அவன் வயிறு காலியில்லை, நிரம்பிவிட்டது' என்று நாமும் அறிவோம், அல்லது, அவன் ஆம் என்று தலையை அசைத்து வயிற்றைக்காட்டினாலும் போதும். பசித்தவன் வலக்கையால் எக்கிய வயிற்றைக்காட்டி முகஞ்சோர்ந்தாலே. அவன் பசி மிகுந்தவன் என்றறிவோம். காதலர் மனத்தந்தியை முகக்குறிகளாலும் கண்குறிகளாலும் கைச்சாடைகளாலும் அனுப்பி உட்கலப்பெய்துகின்றனர். அவள் ஏழாம் மாடிமேல் நின்றாலும், இவன் முச்சந்திப் புழுதியில் இருந்தாலும், கண்பார்வையாலும் உதட்டு மடிப்புகளாலும் காதல் தந்தி பறந்துபோகிறது; கையும் சேர்ந்துவிட்டால், தந்தியின் வேகத்திற்குக்கேட்க வேண்டியதில்லை! இப்படி இயல்பாக நமது மனித வாழ்வில், ஏன் விலங்கு வாழ்விலே கூட, அபிநய பாஷைதான் முதன்மையாக உணர்ச்சியறியும் சாதனமாயிருக்கிறது.
---------

4. உலகெங்கும்

வாழ்வை இயக்கும் இந்த அபிநய பாஷையை உலகெங்கும், உலகில் உள்ள எல்லா நாட்டினரும் போற்றி வளர்க்கின்றனர். ஒவ்வொரு நாட்டினரும் நாட்டியக்கலையில் அளவற்ற உற்சாகங்கொண்டிருக்கிறார்கள். மனிதவாழ்வின் இன்பச் சிகரத்தில் நாட்டியக் கலைவாணி உலாவுகிறாள். எழுத்தறீவில்லாமல், மொழிவளர்ச்சியில்லாமல், தற்கால நாகரிகத்தை எட்டிப்பாராமல், பிறந்தமேனிக்குத் திரியும் ஆஃப்ரிக்கக் காட்டு மக்களிடையே கூட்டமாகவும் தனித்தும் ஆடிக்களிக்கும் நடனக்கலை விளங்குகிறது. ஆஃப்ரிக்காவில் ஜூலுக்களும் (zulus) ஹாடென்டாட்டுகளு (hottentots) பரவசமாக ஆடிக்களிக்கின்றனர். அவர்கள் வேட்டையாடுவது ஒரு நடனமே. வேட்டைப் பொருளை உண்டுகளித்துக் கைகோத்துக் கூத்தாடுவதும் களிநடனமே. ஆஸ்திரேலியக் காட்டிலும் வனாந்திரத்திலும் வசிக்கும் பழங்குடிமக்களிடையே, கவர்ச்சியான நடனம் உண்டு. ஜாவா மக்களிடையே அற்புதமான நடனக்கலை வளர்ச்சிபெற்றிருக்கிறது. பர்மியருக்கு உற்சாகமளிப்பது நடனம். ஜப்பானியர் தமது நடனக்கலையை அபாரமாக வளர்த்திருக்கிறார்கள். சீனருக்கு நடனம் நாடகம் என்றால் கொண்டாட்டந்தான். பாரசீகர் பாட்டிலும் நாட்டியத்திலும் சொக்குகின்றனர். ஐரோப்பியரைப்பற்றிக் கேட்கவேண்டியதில்லை; வெள்ளையர் கலைமுறையில் நடனம் ஒரு சமுதாயத் தேவையாயிருக்கிறது. ஐரோப்பியர் சண்டையிலும் சமாதானத்திலும் ஆண்பெண் கைகோத்து நடம்புரிகின்றனர். பாட்டும், கொட்டும், விருந்தும், கூட்டமும் சேர்ந்து அவர்கள் கால்களையும் கைகளையும் அசைத்து நடிக்க உற்சாகப்படுத்துகின்றன. பால் (ball-dance) என்னும். கேளிக்கை, பலவகையான கலை நடனங்கள் - எல்லாம் ஐரோப்பியரிடையே முறையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆனால், நாட்டியக்கலையின் உபிரையும், பயனையும், உயர்ந்த இலட்சியத்தையும் கண்டு போற்றியது நமது பாரததேசமேயாகும்; அதிலும் தமிழகமேயாகும்!
---------

5. பரத நாட்டியம்

பாரத நாட்டின் நாட்டியக்கலையே பரதநாட்டியம். முதன்மையாக பரதநாட்டியக்கலை, நமது தமிழகத்திற்கே உரியது. இங்கேதான் அது நல்ல வளர்ச்சி பெற்று இன்னும் பொலிந்து விளங்குகிறது. ஐரோப்பா ஜப்பான் முதலிய நாடுகளின் நடனம் பெரும்பாலும் கொட்டுக்குக்குதிக்கும் கால் கை ஆட்டங்களேயாகும்;புலன்களின் இன்பமே அவற்றின் குறிப்பாகும். நமது நாட்டின் கலை, புலன் மனங்களைக் கடந்து, உள்ளுயிரான சுத்தான்மாவின் இன்பத்திற்கே யாகித் தெய்வவொளி வீசுவதாம். நமது நாட்டின் நடனக்கலை ஜீவான்மா பரமான்மாவைக் கண்டு கலக்கச் செய்யும் ஒரு பக்தி யோகமாகும்!

நாட்டிய வேதத்தைப்பற்றிய ஐதிகக் கதையைக் கேளுங்கள்: இந்திராதி தேவர்கள். ஒரு காலம் நவசானுபவங்களைக் காண ஒரு கலையைச் சிருட்டிக்கும்படி பிரம்மாவை வேண்டுக் கொண்டார்களாம். இருக்கு வேதத்திலிருந்து பொருளும், சாமவேததிலிருந்து பண்ணும். யஜுர் வேதத்திலிருந்து அபிநயபாவங்களும், அதர்வண வேதத்திலிருந்து நவரசமும் எடுத்துத் தொகுத்து, நாட்டியக்கலையாக்கி பிரம்மா பாரத முனிவருக்கு உபதேசித்து, "முனிவரே, இக்கலையை நன்றாக உம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பயிற்றி, உலகில் தெய்வபக்தி பரவசத்தைப் பரப்பும்" என்றாராம். பரதர், ஐந்தாம் வேதமாக நாட்டிய சாத்திரத்தை அறிந்து, தம் நூறு பிள்ளைகளுக்கும் பல மாணவருக்கும் கற்பித்தார். ஆனால், சில அபிநயங்களைப் பெண்களே செய்யமுடியும் என்றறிந்து, அப்ஸர கந்தர்வர்களுக்கும் பயிற்றி, பரதமுனிவர் பரமசிவன்முன் அரங்கேற்றினார். மயன் வகுத்த பெரிய ஆடரங்கில், நாட்டியம் நடந்தது. முதலில் அசுரர்கள் தடுத்தனர். இந்திரன் அவர்களை வென்றோட்டினான். பரமசிவன் பூர்வரங்க பூஜை செய்து, நடனத்தைத் தொடங்கச் செய்தான்.

அவ்வாறே, இன்றும் அரங்க வழிபாடு நடந்தே ஆட்டம் தொடங்குகிறது. பரமேசனே, தண்டு முனிவரைக்கொண்டு தாண்டவமும், பார்வதியைக்கொண்டு லாஸ்யநடனமும் பாரத முனிவருக்குக் கற்பித்தாராம். பாரதமுனிவர் நாட்டியக் கலைக்கு விரிவான இலக்கணம் வகுத்தார். பிரம்மா, நாட்டிய சாத்திரட்தின் நோக்கத்தை இவ்வாறு அருளினாராம்: "இந்த நாட்டியக்கலை, உங்கள் ஐம்புல மகிழ்விற்கு மட்டும் ஏற்பட்டதன்று. இது மூன்றுலகிற்கும் முக்குணவிகாரங்களையும் நவரச பாவனைகளையும் விளக்கி, மனிதர் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் பெறவேண்டியே எழுந்த புனித வேதமாகும். இந்த மனோரம்மியமான ஆடல், தளர்வை நீக்கும்; வீரருக்குவிறலளிக்கும்;அறிவிலிகளுக்கும் அறிவளிக்கும்: புலவர் புலமை வளர்க்கும்; மன்னருக்கு உற்சாகமான விளையாட்டாகும்; மனிதரின் தன்மைகளைச் சுவைபடக் காட்டி, வாழ்விற்குச் சிறந்த படிப்பினையளிக்கும்."

இதைவெறும் புராணக்கதை யென்று ஒதுக்கி விடாதீர்கள்! நம் புராணங்களில் உட்கருத்துகள் நிரம்பியிருக்கின்றன: பிரம்மா நடனக் கலையைச் சிருட்டித்தார் என்றால், ஆதிகாலந்தொட்டே உலக வாழ்விற்கு நடனக்கலை அவசியம் என்பதாகும்.அதை அசுரர் எதிர்த்தார் என்றால், கலையை மாசுறுத்திப் பாழ்பண்ணப் புகுந்தவர்களைத் தெய்வபலங்கொண்டு அடக்கி, நம் பெரியவர்கள் கலையை மாண்புறப் போற்றினர் என்பதாகும்.
--------

6. புனிதக் கலை

நம்முன்னோர் நடனக்கலையை எவ்வளவு பயபக்தியுடன் போற்றினார் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் ஒரு கதை காண்கிறது: இந்திர சபைக்கு அகத்தியர் வந்தார். இந்திரன் அவரை மகிழ்விக்க ஊர்வசியை நடனமாடச் சொன்னான்.தோரிய மடந்தை (ஆடி மூத்தவள்) வாரம் பாடினாள். ஆனால் ஊர்வசி இந்திரகுமாரனான சயந்தன்மேல் காதல் கொண்டு, மயங்கி நின்றாள். அவனும் அவளிடம் மோகங்கொண்டான். இதனால் ஆட்டம்கெட்டது; வீணை மங்கலமிழந்தது. முனிவர் முனிந்தார்; "நீங்கள் மன விகாரத்தால் கலையைக் கெடுத்தால், உலகில் பிறக்கவேண்டியது" என்று சாபங்கொடுத்தார். சய்ந்தன் குழலாகப் பிறந்தான். ஊர்வசி மாதவியாகப் பிறந்தாள். தலைக்கோல் தானத்தில் மாதவி யாடும்போது, குழலான சயந்தன் துணை செய்ததால், சாபம் நீங்கியது. நம் முன்னோர்கள் நாட்டியக்கலையைத் தெய்வ பக்திசாதனமாக்கிப் புனிதமாகக் காத்தனர்.

வேதரிஷிகள் வேள்விகளில் நடனமாடினர். புத்தர், தமது சமயப்பிரசாரத்திற்கு நடனக்கலையையும் பயன்படுத்தினார். மஹாவீரர், தமது சமவ சரணத்திலும் ஸ்ரீ கோயில்களிலும் திவ்விய நடனத்தைப் புகுத்தினார். பாரதம் விராடபருவத்தில், அருச்சுனன் விராடன் புதல்விகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்ததாகக் காண்கிறது. நந்திகேச்வரர் அருளிய அபிநய தர்ப்பணத்தில் நாட்டியக்கலை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் பெறவே ஏற்பட்டதெனச் சொல்லுகிறார். மஹாகவி காளிதாஸன் மாளவிகாக்னி மித்திரம் என்னும் நாடகத்தில் நடனக்கலையை, "நாட்டியக்கலை, தேவர் விழிகளுக்கு இனிய விருந்தாகும். உமாபதியே அதைத் தன் அர்த்தநாரீச வடிவால், தாண்டவம் லாஸ்யம் என இரண்டாக வகுத்தான். முக்குணங்களிற் பிறந்த பலரச பாவனை கொண்ட மனித வாழ்வையும் உணர்வுகளையும் இதில் நேராகக் காணலாம். பலபான்மையுணர்வுள்ள மனிதரை மகிழ்விக்கும் கலை, நாட்டியம் ஒன்றேயாம்" என்று போற்றுகிறான்.

பரத நாட்டியக்கலை நம்முடைய கோயில்களில் தெய்வப் பொலிவுற வளர்ந்து வந்தது. கடவுளுக்கே நம்மவர் நடராஜ வடிவம் தந்து ஆடுந்தெய்வமாக வணங்கினர். கோயில்களில் நர்த்தனமும் தாண்டவமும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது. கோயில் தூண்களிலும் சுவர்களிலும் அழகான நாட்டிய வடிவங்கள் செதுக்கப்பெற்றிருக்கின்றன. மதுரை, சிதம்பரம் கோயில்களில், அபிநய முத்திரைகளும் கரணங்களும் கூடிய நாட்டியக்கலைச் சித்திரங்கள் பல காண்கின்றன. நம் பெரியார்கள் கலையைக் கல்லிற் சமைத்து அழியாப் புத்தகமாக்கினார்கள். அந்தோ! அந்தச் சித்திரங்களின் மேல் இன்று பிசுக்கும் மெழுக்கும் படர்ந்திருக்கின்றன! நாட்டியக்கலை இப்போது உயிர்த்தெழுந்து, மறுமலர்ச்சி பெற்று வருகிறது. நமது சிற்பக்கலைக்கும் மறு மலர்ச்சி வந்து கோயில்கள் அழகுப் பொலிவெய்த வேண்டும்!

--------

7. பரத சாஸ்திர விளக்கம்

நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வகையைச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாரில் ஒருவகை நடனம் நடக்கிறது. மலையாளத்தில் புராணக் கதைகளைக்கொண்ட கதகளி நடத்துகிறார்கள். நடனத்தில் இரண்டு பிரிவுகளுண்டு: ஆண்மையும், உக்கிரமும், வீரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவனையுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய நடனமாகும். தாண்டவம், ஆண்மை; லாஸ்யம், பெண்மை இரண்டும் சிவபார்வதி நடனமாகி, அர்த்தநாரீசருள் அடங்கியுள்ளான. பரதநாட்டியத்தின் நிறைவான கலையெழில் நமது தமிழகத்திலேதான் பொலிந்து விளங்குகிறது. தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி ஜில்லாக்களில், பரதநாட்டியம் இன்றும் ஜீவகளையுடன் விளங்குகிறது.
-------

8. பரத சாஸ்திரம்

பரதம் என்பதை அறிவாளர் பலவகையாக ஆராய்கின்றனர். 'பரதனால் போற்றப்பெற்ற கலை' என்பர் சிலர். 'இராமன் தம்பி பரதன், சகுந்தலை மகன் பரதன், ஜடபரதர், பரதமுனிவர் ஆகிய நான்கு பரதர் இருந்தனர்; இவருள் பிரம்மாவிடம் உபதேசம் பெற்ற பரதரே கலையை வகுத்து நாட்டிய சாத்திரம் எழுதினார்; சகுந்தலை மகன் பரதன் அக்கலையைப் பரவச்செய்தான்'என்பர் வேறு சிலர். பரதம் என்பது தொகுதிச்சொல்:ப பாவம், ர-ராகம் த-தாளத்தைக் குறிக்கும்."பாவ-ராக -தாளஸமன்வய சாத்திரமே, பரதம்" என்று வேதாந்த தேசிகர் சொல்லுவதைப் பலர் ஒப்புவர். 'பரதநாட்டிற்கு உரிய சிறப்பான கலையாதலால் பரதம்' என்பர் ஒரு சாரார். எப்படியோ காலச்சுழலைத் தப்பிப் பிழைத்து, நமக்கு இரண்டு நல்ல நாட்டிய நூல்கள் கிடைத்துவிட்டன. [ஒன்று பரத முனிவரின் "நாட்டிய சாஸ்திரம்"; மற்றொன்று, நந்திகேச்வரர் அருளிய "அபிநய தர்ப்பணம்"] இந்த இரண்டையும் சும்மா படித்தாற்போதாது; தொழில் தெரிந்த புலவரிடம் கற்றாலே பயனுண்டு. பரத சாஸ்திரம் எழுதிய முனிவர் பாணினி காலத்திற்குப் பிறகே இருந்ததாகத் தெரிகிறது. அந்த அரிய நூலுக்கு கலி 4115-ல் (கி.பி 1024). காஷ்மீரில் வசித்த அபிநவகுப்தாசாரியார் என்னும் புலவர் பெரிய விரிவுரை எழுதினார். நாட்டிய சாஸ்திரம் 36 அத்தியாயங்களில், நாடகம். சங்கீதம், கலைநுணுக்கம், இலக்கணம், நாட்டியம் ஆகிய அனைத்தையும் விரிவாக விளக்குகிறது; நடை மிகவும் எளிது:அதில் பரத நாட்டியக் கலையை சுமார் பதின்மூன்று அத்தியாயங்களில் (7-19) பரதமுனிவர் விளக்குகிறார். இக்கலையை பரதர், [நாட்டியம், நிருத்தியம், நிருத்தம்] என மூன்று கூறாகப் பிரிக்கிறார்:
(1) நாட்டியம், நாடகத்திற் பயனாவது; கதைப்பொருளுடன் இணைந்த ரசாபி நயத்தைக் கொண்டது;
(2) ரசம், குணப்பண்புகளைப்பற்றி அபிநயித்தல் நிருத்தியம்;
(3) நிருத்தம், தாளலயத்தை முதன்மையாகக் கொண்ட வரிக்கூத்து; இவற்றில் காதலும் கலைச்சுவையும் சேர்ந்து சுகுமாரமாக நடிக்கும் லாஸ்யநடனமும், எழுச்சியுள்ள வீரம் விளங்க ஆண்கள் நடிக்கும் தாண்டவமும் சேரும்.
தாண்டவம், ஏழுவகையாகும்: இன்பத்தைக் காட்டும் ஆனந்தத் தாண்டவம், மாலையில் ஆடும் சந்தியா தாண்டவம், சிவனும் உமையும் ஆடும் உமா தாண்டவம், சிவகௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஸம்ஹார தாண்டவம். ஆங்கிகம், வாசிகம், ஆஹாரியம் சாத்விகம் என்று நடனம் நான்கு வகையாம். உடல், முகம், உறுப்புக்களைப் பொருளுக்கேற்ப அசைத்தல், ஆங்கிகமாகும். தலை, மார்பு, கை, கால், பக்கம், இடுப்பு- இவை அங்கங்கள். தோட்பட்டை, புஜம், புறங்கை, முன் கை, முதுகு, வயிறு, தொடை, குதிகால், கணுக்கால் - இவை பிரத்யங்கங்கள் அல்லது துணையுறுப்புக்கள்; கண் இமை, விழி, கருவிழி, கண்மணி, புருவம், பொட்டு, மூக்கு, கன்னம், உதடுகள் ஆகியவை உபாங்கங்கள்.இவையனைத்தையும் பண்ணொத்தசைத்தல், சரீர ஆங்கிகமாகும்.முகத்தசைகளை பாவத்திற்கேற்றபடி அசைத்தல், முகஜமாகும். உடலை அலைத்தாடல் சேஷ்டிதமாகும். இவை யெல்லாம் ஆங்கிக நடனமாகும். வாசிகம் ஆடும்போதே வாயால் பாடல், பேசுவதுபோல் உதட்டை அசைத் தல் முதலியனவாம். ஆடையணிகள், பூச்சுகள், அலங்காரங்கள், வேடங்கள் எல்லாம் ஆஹாரியமாகும். தற்காலம் "மேக்கப்" (Makeup) என்பதே அது. பலவிதமான மனோபாவங்களைக் காட்டி நடித்தலே சாத்விகமாகும்.
---------

9. நடிகர் இலக்கணம்

எல்லாருக்கும் இன்பமளிக்கும் இந்த நாட்டியக் கலையைத் தமிழர் பல நூற்றாண்டுகட்கு முன்னரே வளர்த்து வந்தனர். தமிழில் நாட்டிய நூல்கள் இருந்து மறைந்தன. கூத்திலக்கணங்களின் குறிப்புக்கள், நமக்குச் சிலப்பதிகாரம் அரும்பதம், அடியார்க்கு நல்லார் உரைகளாலேதான் தெரிகின்றன. அவையும் "சுத்தானந்தம்" என்னும் கூத்திலக்கணத்தைத் தழுவியன; அந்நூலும் மறைந்தது. இப்போது வடமொழியிலுள்ள நாட்டியசாஸ்திரமும், அபிநய தர்ப்பணமுமே உருப்படியாக நமக்குக் கிடைப்பன.அவற்றுடன் பழந்தமிழ் நூல்களிலுள்ள குறிப்புகளையும், மணிபுரி, கர்பா, ஐரோப்பிய நடனக்கலை ஆராய்ச்சிகளையும் கொண்டே இந்நூலை வகுக்கிறேன்.

நடனக்கலை, அங்கங்கள் நன்றாக வளைந்து கொடுக்கும் இளம்பருவத்தில் பழகத்தக்கது. ஐந்து வயதிலேயே தண்டியக்கொம்பு கொடுத்து. கலைதொடங்கி, பன்னிரண்டு வயதில் நிறைவாகக் கற்கலாம். நல்ல இளம்பொலிவு, உடலுறுதி, கால் வீசியாடக்கூடிய சுறுசுறுப்பு, ஊளைச் சதையின்றி கட்டுமஸ்தான உடல், முகமலர்ச்சி, வசீகரப்புன்னகை, அகன்ற விழிகள், நிவந்த மார்பு, இசைப்பயிற்சி, தாளஞானம், தாய்மொழிப்பயிற்சி, பாட்டின் பொருளுக்கேற்றபடி அபிநயம் பிடிக்கும் திறமை, நற்குணம்.கலையில் ஆர்வம் - இவை நடிகைக்கு இலக்கணமாகும். ஆண் நடிகருக்கும் வசீகரமான உடலும் சுறுசுறுப்பும் வேண்டும். ஆடல் பாடல் அழகு வசீகரம் இருவருக்கும் பொது. பூவிழந்த கண்ணி, ஒற்றைக்கண்ணி பொதுக்கை, எலும்பி, சத்தில்லாதவள், கூனி, இனிய குரலற்றவள், அவலட்சணி - இவர்கள் நாட்டியத்திற்குப் பொருத்தமற்றவர்கள். நடிகன், அறிவும் கல்வியும், கலைத்திறனும் வசீகரமும், இசைப்பயிற்சியும் பெற்றிருக்கவேண்டும். இருபாலாருக்கும் ஒழுக்கம் அவசியமாகும். நடராசமூர்த்தியை வழிபட்டு பக்திப்பாடல்கள் பாடி ஆடிவந்தால், கலை எளிதில் வரும். நடிகர் உண்ணுமுன்பு, அல்லது உண்டு நான்குமணி நேரத்திற்குப் பின்பே நடிக்கவேண்டும்; சுகாதாரத்தைக் காக்கவேண்டும். காயசுத்தி அவசியம்; மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். கலை வெற்றி பெறவேண்டுமானால், இருபாலாரும் இயன்றமட்டும் பிரமசரியம் காக்கவேண்டும். விஷயாதிகளை முடிந்தமட்டும் அடக்கி, ஜீவசக்தியை வீணாக்காமல் வளர்த்தால். அறிவம் திருவும், ஆற்றலும். பலமும் பெருகும். ஆடல் பாடல் தொழிலைக் கொண்டவர்கள் ஏகபதி, ஏகபத்தினி விரதங்காத்தல் மிக்க அவசியமாகும்.
----

10. ஆடலாசிரியன்

ஆடல் பாடல்களுக்குப் புத்தகம் பார்த்துக் காரியம் நடவாது. கடுமையான பயிற்சி வேண்டும்; ஆசிரியர் வேண்டும்; அழகன், புலவன், சமர்த்தன், கற்பனா சக்தி மிக்கவன், சொல்லும் குரலும் இனியன், சாத்திரமறிந்த அனுபோகி, பாட்டு ஆட்டம் வாத்தியம் மூன்றிலும் தேர்ச்சிபெற்றவன், நவரசங்களையும் முத்திரைகளையும் மாசற அறிந்து பயிற்றுந்திறமை கொண்டவனே ஆடலாசிரியனாவான். பரத நாட்டியம், கதகளி, மணிபுரி, கர்பா, ஐரோப்பிய நடனமுறைகளை அவன் அறிந்து, காலத்திற்கும், சபைக்கும் ஏற்றபடி பயனாக்கி, பொது மக்களுக்கு நடனக்கலையால் உள்ளக் கிளர்ச்சியும், உண்மையுணர்ச்சியும் உண்டாக்கவேண்டும். ஆடலாசிரியன், தனியாகவும் கூட்டமாகவும் செய்யும் நடனங்களை அறிந்திருக்கவேண்டும்; தனிப் பதங்களுக்கு அபிநயம் பிடிப்பதுடன், பழைய புதிய கதைகளைக்கொண்டு இசைநாடகம் அபிநயலட்சணத்துடன் நடத்தவேண்டும். நடனக்கலை சும்மா கையுங்காலும் ஆட்டிக்குதிக்கும் கூத்தன்று:அஃது உணர்ச்சியிலெழுந்து, உணர்ச்சியை விளக்கி. உணர்ச்சியைத் தூண்டும் ஒப்பற்ற உணர்ச்சிக்கலை. அதில் பண்ணும் மொழியும் அபிநய உணர்ச்சியுருக்கொண்டு மனவுணர்ச்சியைக் கிளர்த்துகின்றன். அந்த உணர்ச்சியால். சபையோர் தெய்வபக்தி, தேசபக்தி, பொது நலவூக்கம், வாழ்விற்கு உயர்ந்த ஆதர்சம், வீரம தைரியம், கலைச்சுவை, ரசானுபவங்கள், உள்ளன்பு, சமுதாய ஒற்றுமை, ஆன்மநேயம் ஆகிய பயன்களைப் பெறச் செய்யவேண்டும்.
------

11. கவிஞன்

ஆடலாசிரியனுக்குக் கவிஞன் உயிர் போலாவான், கவியின் வாக்கே அபிநயத்தை ஊக்குகிறது. கவிஞன் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும், இராகதாள் லய லட்சணங்களையும் நவரசபாவங்களையும் காலதேச வர்த்தமானங்களையும், நடிகர் திறமைகளையும், உலக வரலாறுகளையும், பண்டைக் கதைகளையும் நன்றாயறிந்திருக்கவேண்டும். அவன் புனையும் பாட்டு, வெறும் சொற்றொடர்களா யிராமல், உணர்ச்சி ததும்பப் பல பாவனைகளில் அபிநயம் பிடிப்பதற்கு ஏற்றதா யிருக்கவேண்டும்; எளிதான சொற்களில் நிறைந்த இசையின்பமும், உயர்ந்த பொருளும், நடிக்க உற்சாகமான மெட்டும் கொண்டதா யிருக்க வேண்டும். இசை நாடகங்களில் இடையிடையே வசனங்களும் விருத்தங்களும் வரலாம்.
---------

12. இசைவாணன்

கவிதைக்கு உயிரளிப்பவன் பாடகன். அவன் ஆடலாசிரியருடன் ஒத்துழைக்க வேண்டும். அவரவர் தாய்மொழியில் பாடல் அமைவதே இயற்கையாகும். இசைவாணன் அகாரசாதனம் செய்து, குரலை இனிமையாகப் பழக்கவேண்டும்.குயிலும் கிளியும் வண்டும், குழலும் யாழும் அமுதம் கொண்ட இனிமைகளைக் குழைத்தெடுத்த குரலும். எழிசைகளில் ஏறியிறங்கிக் காற்றைப்போல் சுதந்தரமாக விளையாடும் பண்ணினிமையும், தெளிவாக மொழிகளை உச்சரித்துப் பொருள் நன்றாய் விளங்கும்படி பாடும் புலமையும். இசைப்புலவனுக்கு வேண்டும். முதன்மையாக நாட்டியப் பாடகன் பதங்களை எல்லாருக்கும் விளங்கும்படி பாடவேண்டும். அப்போதுதான் பாட்டின் பொருளுக்கேற்ற அபிநயச் சுவையை எல்லாரும் உணரமுடியும். பாடகன் இசையொழுங்கிற்கேற்றபடி எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பித்தல், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு ஆகிய எட்டுச் செயல்களைப் புலப்படுத்தவேண்டும். ஆரோகணம், அவரோகணம், டால், ஸ்புரிதம், கம்பிதம், ஆகதம், பிரத்யாகதம் திரிபுச்சம், ஆந்தோளனம், மூர்ச்சனை ஆகிய தசவித கமகலட்சணத்துடன், குரலை வன்மை மென்மை சமநிலை பார்த்து நான்கு காலத்திலும் பாடவேண்டும். அதனோடு பொருளுக்கேற்றபடி பாடலின் நவரச உணர்ச்சியையும் காட்டவேண்டும். பாடும் முறையிலேயே பொருள் எதிரே நடமாடுவதாகச் சபையோர் உணரவேண்டும். அப்போது அபிநயம் உள்ளத்தை அள்ளும். சரளி, ஜண்டை, ஸ்தாயி வரிசைகள், எட்டு அலங்காரங்கள், கீதங்கள், வர்ணங்கள், பல்லவி அனுபல்லவி சரணம்கொண்ட கீர்த்தனங்கள், பதங்கள். ஜாவளிகள், சிந்துகள், பள்ளுகள், தில்லானாக்கள் முதலிய எல்லாவகைப் பாடல்களும் இசைவாணன் அறிந்து சமயத்திற்கேற்றபடி பயன்படுத்தவேண்டும்: பழைய மெட்டுக்களுடன் காலத்திற்கேற்றபடி புதிய மெட்டுக்களும் தெரிந்திருக்கவேண்டும்.

இசைக்கலை மிக்க விரிவானது. ஆரோகண அவரோகணக் கிரமத்தில், நிறைவாக சுத்தமாக அமைந்த இராகங்கள் மேளகர்த்தா ராகங்களாம். ஸ்வரங்கள் குறைந்தும் வளைந்தும் கூடியும் வருவன ஜன்ய ராகங்களாம். மொத்தம் 72 மேளகர்த்தா ராகங்களும். சுமார் 100 ஜன்ய ராகங்களும் உள்ளன. இவற்றைத்தவிர இந்துஸ்தான் ராகங்கள் பல தமிழகத்திலும் கலந்து முழங்குகின்றன. இங்கே நமக்கு நாட்டியக்கலைக்கேற்ற பண்களே குறிப்பு. இந்தநூலுக்கு இலக்கியமாய் அமைந்துள்ள "நடனாஞ்சலி" என்னும் எனது இசை நூலில் எளிதாகப் பாடக்கூடியனவும், கேட்பதற்கு இனிமையாகவும், காலெடுத்து வைத்து நடனமாடத் தோதாகவும், உற்சாகந்தரத் தக்கனவாகவும் உள்ள பண்களையே கையாண்டிருக்கிறேன்.

இதில் வரும் இராகங்கள் பெரும்பாலும் சங்கராபரணம், தோடி, ஹனுமத்தோடி, கன காங்கி, சக்ரவாகம், நடபைரவி, ஆனந்த பைரவி, பைரவி, சிந்துபைரவி, தீர சங்கராபரணம், காம்போதி, எதுகுல காம்போதி, சாவேரி, அசாவேரி, அடாணா, கானடா, உசேனி, ஆரபி, காமாசு, காபி, பியாகு, மாண்டு, நாதநாமக்கிரியை, பரசு, தன்யாசி, சுரட்டி, செஞ்சுரட்டி, நாட்டை, நாட்டைக்குறிஞ்சி, கேதாரம், நீலாம்பரி, ஸஹானா பூர்வீகல்யாணி, கல்யாணி, புன்னாகவராளி, பந்துவராளி, வராளி, பிலகரி, மத்ய மாவதி, மணிரங்கு, ஸ்ரீ, மோகனம், முகாரி, மாஞ்சி, ஹம்ஸத்வனி முதலிய பிரபல ராகங்கவேயாம். இவற்றில் பாடகன் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
-------

13. முழவோன்

பாட்டிற்கு சுருதி மாதா, தாளம் பிதா. தாளமின்றி நடனமில்லை. அபிநயத்திற்குப் பாட்டும், ஆட்டத்திற்குத் தாளமும் வேண்டும். பாட்டிற்கேற்ற தாளம், தாளத்திற்கேற்றபடி மத்தள கெததுக்கள் அமையும். துருவம், மட்டியம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏக தாளங்கள் ஏழாம். இவை ஒவ்வொன்றும் திச்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி பெறும். 7x5=35. இந்த முப்பத்தைந்தும் பஞ்சகதி பேதத்தால் 175 நுட்பத் தாளங்களாக விரியும். இவையும் ஒன்றிலொன்று கலந்து இன்னும் விரியும். அனுத்ருதம், த்ருதம், லகு, குரு, ப்லுதம், காகபாதம் என்ற தாள அங்கங்கள் ஆறும் அறிந்து, அததற்கேற்ற அக்ஷரங்களைக் கணக்கிட்டுத் தாளம் அடிக்கவேண்டும்; தாள்ஜாதி 108-ன் கணிதமும் எடுப்பும், முழுவோனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். "தரிகிட தகஜிமி ததிங்கிணதோம், தளாங்கு தரிகிட தகஜிமி தகஜிமி தாகிடதகதீம் தின்ன தகதகிட தோம்" என்று மனதுட் சொல்லிக் கொண்டே கை புரளவேண்டும். கூத்திற்கேற்றபடி தத்தக்காரங்களை ஒருவர் சொல்லி வரலாம். நர்த்தனம் செய்யும்போது மிருதங்கம் பலமாகக் கேட்கலாம். அபிநயம் பிடித்து, ரசபாவங்களைக் காட்டும்போது அடக்கி வாசிக்கவேண்டும். அப்போதே பாட்டின் பொருள் விளங்கும். முழவாசிரியனுக்கு ஆடல் வகை, பாடல் வகை, இசைநுணுக்கம், இயலிசை நாடகத் தமிழறிவு, தாளப்புலமை, கூத்திலக்கணம் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.
--------

14. வாத்தியங்கள்

நமது நாட்டில் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள் உண்டு. அவற்றுள் பரதநாட்டியத்திற்கு இனிமை தருவன: குழல், யாழ், பிடில், சாரந்தா, ஸிதார் ஆகியவையாம். முற்காலத் தமிழர் யாழ் குழல் இரண்டையும் சிறப்பாகக் கையாண்டனர். அக்காலம் கடாத் தொண்டைக்கு ஒத்தூதும் துருத்தியில்லை. சிறிய நாதஸ்வரம், குழல்போன்ற சத்தமிருந்தால், வைத்துக்கொள்ளலாம். அக்காலம் ஆடி முதிர்ந்த பெண்களே வாரம் பாடினர். நட்டுவன் தைதா தகதிமி என்று தத்தக்காரங்களைச் சொல்லி ஆட்டிவைத்தான். யாழும் குழலும் மத்தளமும் பாட்டுடன் இசைந்து ஆட்டத்திற்கு எழுச்சி தந்தன.

சந்தனம், வேங்கை, மூங்கில், வெண்கலம், கருங்காலி முதலியவற்றால் குழல் செய்யப்படும். வேய்ங்குழலே இனிது, எளிது. குழல் சுமார் 20 விரற்கடை நீளமுடையது; நான்கு விரற்கடை சுற்றளவுடையது. அதன் இடப்புறவாய் அடைத்து வலப்புறவாய் திறந்திருக்கும். முதல் வாயிலிருந்து ஏழு விரற்கடை, வளை வாயிலிருந்து இரண்டு விரற்கடை தள்ளி நடுவிலுள்ள ஒன்பது விரற்கடையில் எட்டுத் துளையிடுவார். ஒன்று தொழிற்படாத முத்திரை. மற்றை எழிலும் ஏழு விரல்களை வைத்து வாசிப்பர். இடக்கையில் நடு மூன்று விரல்கள், வலக்கையில் கட்டைவிரல் தவிர மற்ற விரல்களைத் துளையில் வைத்து வாசிப்பர். மூச்சைப்பெய்து வாசிக்கும் குழல், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் மிகவும் சிரமமானவை.

பாடலாசிரியனை ஒத்த இசையறிவு குழலாசிரியனுக்கும் வேண்டும். ஆரோகண அவரோகணக் கிரமத்தில் வர்த்தனைகளை நான்கு காலத்திலும் வாசிக்கவேண்டும். பாடல்கள் குரலுக்கும் யாழுக்கும் முழுவுக்கும் இசைந்தபடியே, நாட்டிய அபிநயத்தைக் குறித்து, சமயம்போல மெல்லவும் உயர்த்தியும் விரைந்தும் இசைச்செறிவுடன் ஒத்து வாசிக்கவேண்டும் குழலோன். யாழ் பலவகையாகும். தமிழர் நாகரிகமே யாழிசையில் உயிர்க்கிறது. மொஹெஞ்சதாரோபுதை பொருள்களில் யாழ் காண்கிறது. அக்காலம் ஆள் என்று அதன்பெயர் வழங்கியதாம். ஆளைப் பார்த்தே முற்காலத் தமிழர் யாழை அமைத்தனர். இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய யோக நரம்புகள் இணைந்த மேரு தண்டத்தின் அமைப்பைப் போன்றதே யாழ். அது மனிதக் குரலைப்போலவே தசவிதமகங்களுடன் முரலும். பேரி, சகோடம், மகரம், செங்கோடு என யாழ் நான்கு வகையாகும். இவற்றிற்கு முறையே 21, 16, 17, 7 தந்திகள் உண்டு.

இப்போது வழங்கும் வீணை செங்கோட்டியாழ் போன்றதே. கோட்டு, யஸ்ராஜ், ஸித்தார், ஸ்வரகெத்து, தம்பூரா எல்லாம் அதன் வழிவந்தனவே. வீணையின் மார்பில் அனுமந்திரம். மந்திரம், பஞ்சமம், சாரணை ஆகிய நான்கு இசைத்தந்திகள் உள்ளன. இவற்றை இடக்கை விரல்களால் அழுத்தி மீட்டவேண்டும். பக்கத்தில், அனுசாரணை, உயர்பஞ்சமம், உயர் சாரணை ஆகிய மூன்று தந்திகள் உள. இவை சுருதி கூட்டவே பயனாகும். வலக்கை இடைவிடாமல் மேளம் செய்யவேண்டும். வீணையில் இரண்டு ஸ்தாயி மெட்டுக்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் பன்னிரண்டு வீதம் இரண்டிற்கும் 24 மெட்டுக்கள் உண்டு. நான்கு கம்பிகளூக்கும் மொத்தம் 96 மெட்டுக்கள் அல்லது வீடுகள் உள. அக்காலத் தமிழர் யாழில் ஏழு பாலைப்பண்கள் முழக்கினர்; 103 பண்கள் அறிந்திருந்தனர். தேவாரங்களில் இவை அமைந்திருந்தன. நூற்றுக் கணக்கான தேவாரங்களைச் சிதம்பரம் கோயில் மூலையிலிருந்த கறையான் பூச்சிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவை 24 பண்கள் அடங்கிய தேவாரங்களே. மற்றவை யெல்லாம் பிற்காலம் எழுந்த இசை நூல்களில் புகுந்தன. யாழிசைப் புலவன், மேளகர்த்தா ஜன்ய ராகங்களை யெல்லாம் கமக சுத்தமாக மீட்டி, குழலோன் இசைவாணன் முழவோன் இவர்களுடன் ஒத்துழைக்கவெண்டும். விரல், யாழிலும் குழலிலும் தவழ்ந்து முழவதிர இன்னிசை மீட்டி ஆட்டத்தை ஊக்கவேண்டும். ஸித்தார், கிட்டார், கிளாரிநெட், சாக்ஸாபோன், தபேலா, டோலக், கஞ்சிரா, மோர்சிங் முதலிய வாத்தியங்களும் சதிருக்குத் தகுந்தவையே.
------

15. ஆடரங்கம்.

அரங்கிற்கு நல்ல இடம் வேண்டும். கூட்டம் அதிகம் வருமாதலால், ஊரின் சுகாதாரம் கெடாமலிருக்கவேண்டும். கோயில், குளம், பள்ளி, அந்தணர் இருக்கை, ஊருணி, கிணறு, சோலை, புட்கள் முதலியவற்றிற்குத் தீங்கில்லாமல், ஈளை, உவர், களி, சாம்பல் நாற்றம், பொடிமண் இல்லாமல் ஊருக்கு நடுவே, தேரோடும் வீதிகளுக்கு எதிர்முகமாக நிலம் அமைக்கவேண்டும். காலத்திற்கும் மக்கள் கலைச்சுவைக்கும் தகுந்தபடியே இடமும், பொருளும், அரங்கும், காட்சிகளூம், வேடங்களும் அமையவேண்டும். இதற்கு இது என்று கலைவாணரே தீர்மானிக்க முடியும். இக்காலம் கலைச்சுவை பெருகி வளர்ந்திருக்கிறது.

பாட்டு, சதிர் என்றால் ஏராளமான பேர்கள் பார்க்க வருகிறார்கள். அத்தனைபேரும் அடக்கமாக உட்கார்ந்து அமைதியாகக் கேட்கும்படி விசாலமான இடம் அமைய வேண்டும். அரங்கில் வேடங்கட்டும் இடம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே அமைய வேண்டும். ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் வேடம் புனையத் துணைசெய்க! அதற்கு வேண்டிய சாதனங்களெல்லாம் ஒருவர் பாதுகாப்பில் தயாராயிருக்கவேண்டும். சாயங்கள், வர்ணங்கள், முகமூடிகள், கதைக்கேற்ற ஆடையாபரணங்கள், ஆயுதங்கள், காட்சிக்கேற்ற படங்கள், திரைகள், தட்டிகள் ஆகிய இவை கலை நிபுணர்களால் ஜோடிக்கப்பெறவேண்டும். மலை, ஆறு, சோலை, மலர்வனம், கோயில், குளம், சிறுமனை, மாளிகை முதலிய காட்சிகள் திரைப்படமாகவாவது, அட்டைத் தட்டிகளாலாவது, செய்யப்பெற்றுக் காட்சிக்கேற்ற பின்னணிகளாக விளங்கவேண்டும். கண்ணனும் இராதையும் மலர்வனத்தில் சந்திக்கிறார்கள் என்றால் அரங்கில் வனக் காட்சி அவசியம் இலகவேண்டும். அதன்முன் இராதா கிருஷ்ண நடனம் நிகழவேண்டும்.

அரங்கில் ஆடுவதற்குப் போதிய இடம் அளந்துவிட்டு பக்கவாத்தியக்காரருக்குப் பக்கத்தில் வசதியாக இடந்தரவேண்டும். நடிகருக்குப் பின்னே காட்சி ஜோடிப்பு பளிச்சென்று தெரியவேண்டும். ஜோடிப்பில் நடிகர் மறைந்து மறைந்து விளையாடத் தகுந்த திரைகள் வேண்டும். நடிப்பவர் வர, செல்ல, பக்கத்தில் வாயிலும், திரைநடுவிலேயே ஓடியாடப் படுதாக்களும் அமைக்கவேண்டும். அக்கால நடனங்களில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று திரைகள் அமைத்தனர். அரங்கெல்லையில் வாரம்பாடும் தோரிய மடந்தையர், நட்டுவன், இசை வாணன், யாழோன், பிடிலோன், குழலோன், முழவோன், தாளக்காரன், சுருதிக்காரன் ஆகியவர்களே கச்சிதமாக இருக்கவேண்டும். ஓர் ஆட்டம் நடந்ததும் சிறிது இளைப்பாற இருபாலாருக்கும் தனித்தனி இடங்கள் பின்னால் அமைந்திருக்கவேண்டும். ஒரு நடன அணி முடிந்ததும் அதன் நடிகர் இளைப்பாறும்போது, மற்றோரணி இன்னொரு காட்சியை நடத்த வேண்டும்; அல்லது இன்னிசை முழங்கவேண்டும்.
---------

16. அவை

அரங்கின் முன்னே சபை விசாலமாக அமைந்திருக்கும். சபையில் பெண்களுக்குத் தனியாக இடம் அமைக்கவேண்டும். அபிநய தர்ப்பணம் சபை ஒழுங்கைப்பற்றி நன்றாக விளக்குகிறது. சபை ஒரு கற்பகம். அதற்கு வேதங்களே கிளைகள். கலை நூல்களே மலர்கள். புலவர்களே மலரில் தேனுண்ணும் வண்டுகள். சபையில் தகுந்த புலவர், கலைவளர்க்கும் செல்வர், அறிஞர், கவிகள், இரசிகர், ஒழுக்கத்திற் சிறந்த பெரியார் முன்னிலையில் இருக்கவேண்டும். இவர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருப்பார்கள். இவர்களுக்கு இடப்பக்கம், பெண்கள் உரிய இடத்தில் அமர்வார்கள்; பின்புறம் மற்றப் பொது ஜனங்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுக்குத் தட்டுப் பலகைகள் அமைக்கலாம். சபாநாயகன் ஊர்மதிக்கும் உத்தமனாக, கலைத்தேர்ச்சி பெற்றவனாக இருக்கவேண்டும். கூத்துத் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆடுவோர், காட்சி விளக்கம், கட்டண விவரங்களை அச்சிட்டுப் பரப்பவேண்டும்.
-----------

17. தலைக்கோல்

முற்காலம் அரங்கேற்றுவிழா சிறப்பாக நடத்தி, ஆடற்பெண்ணை ஊர்த்தலைவரும் செல்வரும் தலைக்கோலீந்து ஆடச்சொல்வது வழக்கம். புண்ணிய மலைகளில் அறுத்த மூங்கிலால், அல்லது பகைவரிடம் கொண்ட வெண்குடைக்காம்பால் ஏழுசாணுள்ள தலைக்கோல் தயாரித்து, பூண்பிடித்து, அணிவேலைகள் செய்து அலங்கரித்து, மாலைசூட்டி ஊர்வலஞ் செய்துவந்து கவியின் கையில் கொடுத்து வாங்கிச் சபைத்தலைவன், மன்னன், ஆடும் பெண்ணிடந் தருவதுண்டு. தலைக்கோல் விழாவில் மன்னரும், அமைச்சரும், வீரரும், கலைச்செல்வரும் கலந்துகொள்வார்கள். தலைக்கோல் பெற்ற கணிகை, அரங்கில் வலக்காலை முன்வைத் தேறுவாள். ஆடிடம் முக்கோல், நிலையிடம் ஒருகோல், பாடகர்க்கு ஒருகோல், குயிலுவர் நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குப்படி அரங்கில் அவரவர் இடத்தில் இருப்பார்கள். கோல் என்பது வளர்ச்சி பெற்ற ஆளின் 24 பெருவிரல் கொண்ட அளவை. அரங்கின் அகலம் ஏழு, நீளம் எட்டுக்கோல்; மேடை உயரம் ஒருகோல் இருக்கும் முதல் முதல் அரங்கு வழிபாடு நடக்கும். இது தீமையை ஓட்டி நன்மை விளையச்செய்வது. இதை ரங்க பூஜை என்பர். நடனாஞ்சலியில் எல்லாத் தடைகளையும் நீக்கும் ஓங்கார கணபதி பூஜையை முதலிற் செய்யச்சொல்லி யுள்ளது. பிறகு, அலாரிப்பு: "தா அ அம் தித்தாம், க்ருதக தைஇ தந்தாம் தாகதஜணு தளாங்குதரிகிட தோம்...". என்று ஒரு ஆவர்த்தனம் அடித்ததும் நடனமாது சபையில் வந்து குதிப்பாள். பிறகு நடனராஜரான நடராஜா கீதம் நடக்கும். அதன்பிறகு சகல கலைகளுக்கும் நாயகியான கலைமகள் வணக்கம் நடக்கும். அதிலேயே நடனக்கலையின் இலக்கணம் விளங்கும். அதன்பிறகு சப்தம், ஸ்வரஜதி, தான, தாள, பதவர்ணங்கள், பதங்கள், ஜாவளி, தில்லானா, சுலோகம், மங்களம் என்ற வரிசையில் நடனக்காட்சிகள் தொடரும்.
------

18. நவரசங்கள்

நடனக் காட்சிகளுக்கு அபிநய நிறைவுள்ள பாடல்கள் வேண்டும். தனிப்பாடல்கள், அல்லது ஒரு சம்பவம், கதை, இயற்கைக் காட்சி இவற்றை ஒட்டிய பாடல்கள் ஏற்றனவாம். பாடல்களுக்கு இடையே சிறிது வசனங்கள் கலக்கலாம். பாடல்கள் இனிய மெட்டுகளில், விறுவிறுப்பான எளீய நடையில், தாள லட்சணங்களுடன் அமைந்திருக்க வேண்டும்; உள்ளுணர்ந்து பொருளை அனுபவித்து அபிநயம் பிடிக்கவேண்டும். உணர்ச்சிதான் நடனத்தின் உயிர். மனவுணர்ச்சிகள் ஒன்பது சுவைகளுடையன. அவையே நவரசம் ஆகும். அவற்றை முடிந்தமட்டும் விளக்குகிறேன்:-

1. அற்புதம் (அல்லது வியப்புச் சுவை): கண் வாய் கைகளை அகல விரித்தல், அங்காத்தல், கையைக் கொட்டி முகவாய்க்கட்டையில் வைத்தல், உடல் ஒரே நிலையில் தம்பித்தல், ஆச்சரியமாகிப் பேச்சடைத்தல் முதலியவற்றால் காட்டலாம்.

2.. சினம் (கோபம்): மூக்கு விரிதல், கண் சிவத்தல், நெருப்பெழப் பார்த்தல், விழியை உருட்டல், நெற்றி சுருங்கல், புருவங் குவித்தல், கழுத்து விடைத்தல், தலையை வக்கரித்தாட்டல், தசை யிறுகல், விரல்களை மடக்கிக் குத்தல், கை ஓங்கல், உடல் படபடத்தல், நறநறவென்று பல்லைக் கடித்தல், காலை அழுத்தி மிதித்தல் முதலியவற்றால் சினக்குறி காட்டலாம்.

கையால் தடுத்தல், விரல்களை உதறல், முகவிகாரம், பல் இறுகல். கண்டிப்பான பேச்சுக் குரல், ஆத்திரம், சினம், முகச்சுளிப்பு இவற்றால் வெறுப்பைக் காட்டலாம்.
முகவாட்டம், மார்தட்டி அகந்தை பேசல், வயிற்றெரிதல், வயிற்றைத் தடவல், பல்லைக் கடித்தல், கையை நெரித்தல் கண்ணை உருட்டிப் பார்த்தால், மந்தமாகச் சிந்தித்தல், அழுதல், ஆவலாதி, மார்பில் அடித்துக்கொள்ளல் முதலியவற்றால் பொறாமையைக் காட்டலாம்.


3. கருணை: மலர்ந்த முகம். தெளிந்த இன்சொல், அடக்கம், அன்பு, ஆசிகாட்டல் முதலியவற்றால் வெளிப்படும்.


4. குற்சை (அல்லது இழிவுச்சுவை): முகஞ்சுளித்தல், 'சை சை' என்று கையை உதறல், கையை இடித்துக்காட்டல், உம் என்று எரிந்து விழல், பேசல், முதலியவற்றால் இழிவைக் காட்டலாம்.


5. சாந்தம் (அல்லது அமைதிச்சுவை): உதடும் கண்ணும் சாதாரணமாக இருத்தல், முக விகாரமின்மை, சுபாவமா யிருத்தல், தியான பாவனை முதலியவற்றால் விளங்கும்.


6. இன்பம் (அல்லது சிருங்காரம்): காதலின்பம், கடவுளின்பம், வெற்றியின்பம் ஆகிய பலவகை இன்பங்கள் உண்டு. சிருங்காரரசம் என்பதைப் பெரும்பாலும் காதலுக்கே கொள்கின்றனர். சிருங்காரம் என்றால் அழகின்பம், கண்மலர்ந்து, புன் சிரிப்புச் சிரித்து, கைதட்டி, குரலுயர்த்தி இன்பத்தைக் காட்டலாம். இனிய முறுவல், நாணப் பார்வை, கோணப் பார்வை, மெல்லிய குரல் இவற்றால் காதலைக் காட்டலாம்.

7. அச்சம் (பயம்): அஞ்சவரும் பொருளைச் சுட்டி வாயையும் கண்ணையும் அகலத்திறத்தல், புருவஞ் சுருக்கல், கை உயர்த்தல், உடல் நடுக்கம், மார்த்துடிப்பு, பெருமூச்சு, மெல்லிய குரல், பதற்றம் முதலியவற்றால் அச்சச்சுவை காட்டலாம்.

துன்பச்சுவை:- விரிந்த கூந்தல், தலையிற் கைவைத்தல், மயிர் பறித்தல், அழுகை, அலமரல், காலை அழுத்தி மிதித்தல், கண்ணை மேலே பார்த்தல், தலையைத் தொங்கப் போடல், முகத்தை முழந்தாளில் வைத்தல், முன்தானையால் மூடல், கண்ணீர் துடைத்துக்கொண்டு விம்மல், நிலைப்பின்றிப் புலம்பல் முதலியவற்றால் சோகரசம் அல்லது துன்பச் சுவையை விளக்கலாம்.


8. நகைச்சுவையில் உவகைச் சிரிப்பு, பெரு நகை, இடிநகை, கேலிச்சிரிப்பு, வஞ்சப் புன்னகை, வெறிநகை, பைத்தியச்சிரிப்பு இடர்க்கண் நகுதல், செருக்குநகை எனப் பலவகை உண்டு. உதட்டை மலர்த்தியும் வாயை 'ஒ' எனத் திறந்தும் கை கொட்டியும் குதித்தும் நகைச் சுவையைக் காட்டலாம்.

9. வீரம்: வில் தெறிப்பது போலக் கையை முன்னே தாக்கல். மார்பில் வலக்கை வைத்துச் சபதங் கூறல், உரத்த பேச்சு, தைரியம், தலை நிமிர்ந்து விழியை அகற்றல், காலைப் பாய்ச்சலில் வைத்தல் முதலியவற்றால் விளங்கும்.
அற்புதம், கோபம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரம் என ரசங்கள் ஒன்பதாயினும், அவற்றுள் துன்பம், வெறுப்பு, பொறாமை, போன்ற எத்தனையோ உபரசங்கள், உட்பிரிவுகள் உண்டு. குணதொந்த விகாரங்கள் மலிந்த வாழ்வில், ஆயிரக்கணக்கான நுட்ப உணர்ச்சி களைக் காண்கிறோம். இந்த ரசங்களை யெல்லாம் அபிநயபாஷையில் விளக்குவதே பரதநாட்டியத்தின் குறிப்பாகும். அந்த அபிநயபாஷையை இனித் தலை முதல் கால் வரையில் காண்போம். கீழே குறித்த அங்கமுத்திரைகளைத் தக்க ஆசிரியர்களிடம் பயின்றாலே அறியலாம். ஆகையால், இங்கே பெயரளவில் அபிநயக்குறிகளைத் தருகிறேன்.
அடியில் வ்ரும் அபிநயச் சொற்களின் பின்னுள்ள காற்புள்ளி விளக்கத்தையும், அரைப்புள்ளி பயன்களையும் குறிக்கும்.
----

19. தலைக்குறிகள்

1. சமம், இயற்கையான சமநிலை; தியானம், தோத்திரம், திருப்தி, உதாசினம்.
2. துதம். மெதுவாக மண்டையாட்டல்; மன மின்மை, திகைப்பு, நிராதரவு.
3. விதுதம். விரைவாக மண்டையாட்டல்; தடிமன், சூடு, பயம், குடிவெறி.
4. ஆதுதம், சற்று நிவந்து திருப்பல்; பெருமை, பக்கப்பார்வை, செருக்கு.
5. அவதுதம், சற்று நிவந்து தலையைக் குனித்தல்; கேள்வி, 'நில்' எனல், அழைத்தல்; பேச்சு.
6. கம்பிதம், தலை உயர்த்தி அசைத்தல்; அறிமுகமாதல், மனத்தாங்கல், தருக்கம், அச்சுறுத்தல், கேள்வி.
7. அகம்பிதம், தலை உயர்த்தி மெதுவாயசைத்தல்; உபதேசம், விசாரம், எதாவது சொல்லல்.
8. ப்ரகம்பிதம், முன்னும் பக்கத்தும் அசைத்தல்; அற்புதரசம், பாட்டு, பிரபந்தம்.
9. உத்வாஹிதம், சட்டென்று தலை நிமிரல்; பெருமை, என்னால் முடியும் என்பது.
10. அஞ்சிதம், தலையைச் சிறிது பக்கச் சார்பாகத் திருப்பல்; காதல், அருவருப்பு.
11. நிஹஞ்சிதம், தோளையுயர்த்தித் தலைதொடல்; காதலன் காட்சியின்பம், பாசாங்குச்சினம், பிலுக்கு.
12. பாரவ்ருத்தம், ஒரு பக்கந்திருப்பல், பின்னால் பார்த்தல்; இதைச்செய்யெனல், மனக்கசப்பு.
13. உத்க்ஷிப்தம், அண்ணாந்து பார்த்தல்.
14. அதோமுகம், தலைகுனிதல்; நாணம் விசனம், வணக்கம்.
15. லோலிதம், தலைசுழல்; தூங்கி விழல், போதை, மயக்கம்.
16. திர்யோன்னடான்னடம், மேலும் கீழும் ஆட்டல்; உதாசீனம்.
17. ஸ்கந்தானடம், தலையைத் தோளில் இருத்தல்; சிந்தை, மயக்கம், உறக்கம், போதை.
18. ஆராத்ரிகம். தலையை இருபக்கமுந் திருப்பித்தோளில் இடித்தல்: வியப்பு, பிறர் அபிப்பிராயத்தை ஆராய்தல்.
19. பாரிவாபிமுகம், ஒருபக்கத்திலிருப்பவரைக் காணத் திருப்பல்.
20. ஸௌம்யம், அசையாதிருத்தல்; ஆட்டத் தொடக்கம்.
21. ஆலோலிதம், தலையைத் தாராளமா யசைத்தல்; பூத்தரல்.
22. திரச்சினம். மேலே தலை தூக்கி இரு புறமும் பார்த்தல்; நாணம்.
23. ஸௌந்தரியம், இடுப்பையும், வளைத்து மேலும்கீழும் பார்த்தல்; காரணம், தேனீ, யோகம்.
24. பரிவாஹிதம், ஒருபக்கச்சாய்வு; வியப்பு, நகை, தலைவன் நினைவு.

-------

20. கண்குறிகள்

அபிநயத்தின் கண் கண்களே. கண்பார்வை, விழிப்பு, இமைத்தல், புருவ அசைவு-இவற்றிற் பல வகையுண்டு. அவற்றை நேரே பார்த்தறிய வேண்டும். இங்கே பெயர்களைச் சொல்லுகிறேன்.

எட்டுப்பார்வை
1. சமம், நேர்பார்வை.
2. ஆலோகிதம், கூர்ந்த பார்வை.
3. ஸரசி, கோணப்பார்வை.
4. ப்ரலோகிதம், பக்கப்பார்வை.
5. நிமிளிதம், பாதி இமை திறந்த பார்வை, தியானப்பார்வை.
6. உல்லோகிதம், மேற்பார்வை.
7. அவலோகிதம், கீழ்ப் பார்வை
8. அனுவ்ருத்தம், மேலும் கீழும் விரைவாகப் பார்த்தல்.

இவற்றைத்தவிர வேறு சில பார்வைகள் பரத சாத்திரத்தில் சொல்லப் பெற்றுள்ளன:

1. ஸ்நிக்தம், குளிர்ந்த பார்வை.
2. சிருங்காரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், வீரம், சினம், பயானகம், பீபத்ஸம் முதலிய நவரசங்களைக் காட்டும் பார்வைகள்.
3. விஸ்மயம், வியப்பு.
4. திருப்தி
5. தூரப்பார்வை
6. இங்கிதம், மகிழ்வுடன் குறிப்பறிவிக்கும் பார்வை.
7. மலினம்.
8. விதற்கிதம்; விசாலமான நேர் பார்வை.
9. சாங்கிதம், தயக்கப் பார்வை.
10. அபிதப்தம், உதாசினப் பார்வை.
11. சூனியம், வெறுமை.
12. ஹ்ருஷ்டம், களிபார்வை.
13. உக்கிரம், செஞ்சினப் பார்வை.
14. விப்ராந்தம், பர பரத்த பார்வை.
15. சாநதம், அமைதிப் பார்வை.
16. மிளிதம், குவிந்த பார்வை.
17. சூசனம், குறிபார்வை.
18. லஜ்ஜிதம், வெட்கப் பார்வை.
19. முகுளம், மொட்டுப்பார்வை, இன்பக்குறி.
20. குஞ்சிதம், கீழ்ப்பார்வை.
21. ஆகாசப்பார்வை.
22. அர்த்த முகுளம், இன்பப் பார்வை.
23. அனுவிருத்தம், அவசரப்பார்வை.
24. விப்லுதம், குழப்பப் பார்வை.
25. விகோஸம், இமையாப் பார்வை.
26. மதிரம், போதைப் பார்வை.
27. ஹ்ருதயம், நிலைப்பற்ற பார்வை.
28.விசோகம், விசனமற்ற பார்வை.
29. திருட்டம், நடுக்கப் பார்வை.
30. விஷண்ணம், துக்கப் பார்வை.
31. சிராந்தம், களைத்த பார்வை.
32. ஜிஹ்மம், கோணற் பார்வை.
33. சலிலதம், மெல்லிய பார்வை.
34. அகேகரம், சுழற்சிப் பார்வை.

ஒன்பது விழிப்புகள் :
1. ப்ரமண்ம், சுழற்சி. 2. வலனம்.
3. பாடம், தளர்த்தல். 4. கலனம், பரபரப்பு.
5. ஸம்ப்ரவேசம், உட்குவிதல். 6. விவர்த்தனம், ஓரப் பார்வை.
7. ஸமுத்வ்ருத்தம், மேற் பார்வை. 8. நிஷ்க்ரமம், வெளிப் பார்வை.
9. ப்ராக்ருதம், இயல் நோக்கு.

ஒன்பது இமைப்பு:
1. உன்மேஷம், திறத்தல். 2. நிமேஷம், குவித்தல்.
3. ப்ரச்ரம், விரித்தல். 4. குஞ்சிதம், இலேசாகத் தாழ்த்தல்.
5. சமம். 6. விவர்த்திதம், மேலுறுத்தல்.
7.ஸ்புரிதம், இமைத்தல். 8. பிஹிதம், இறுக மூடல்.
9. ஸவிதாடிதம், நோவுற்ற விழி.

புருவம், கண் இமை இவற்றுடன் அசையும். ஆதலால் அதே உணர்ச்சிகளைக் காட்டும்.
1. ஸஹஜம், இயல்பு. 2. பதனம், தாழ்த்தல்.
3.ப்ருகுடி, உயர்த்தல். 4. சதுரம், விசாலித்தல்.
5. உத்க்ஷிப்தம், உயர்த்தல். 6.குஞ்சிதம், வளைத்தல்.
7. இரேசிதம், ஒரு புருவத்தை அழகாக நிவத்தல்.

--------

21. முகக்குறிகள்

மூக்கிலும் பல உணர்ச்சிகளைக் காட்டலாம். மூக்கை அடைத்தல், அகற்றல், விடைத்தல், பெருமூச்சு, ஒரு மூக்கு விடைத்தல், சாதாரணமாக வைத்துக் கொள்ளல் ஆகியவற்றால் மனோதர்மங்கள் புலனாகும். அதே மாதிரி கன்னங்களிலும் உணர்ச்சியைக் காட்டலாம். கன்னம் சமமாதல், தொங்கல், உப்பல், சிவத்தல், அதிர்தல், சுருங்கல் முதலியன மனோபாவத்தைக் காட்டும்.

வாய் அங்காந்தும், அகன்றும், மேலும் கீழும் பக்கத்திலும் இளித்தும், இயல்பாயிருந்தும், உதடுகள் குவிந்தும், விரிந்தும், உயர்ந்தும், தாழ்ந்தும், துருத்தியும், பின்னிழுத்தும், நா உதட்டை நக்கியும், தடவியும், பல்லை வருடியும் பல்லைக்கடித்தும், பல் இளித்தும் நறநறத்தும், இறுக்கியும், உதடை மடித்தும், விரித்தும் பல வகையான முகபாவங்களைக காட்டலாம்.

கழுத்தைச் சமமாக வைத்தும், குனித்தும் உயர்த்தியும், சாய்த்தும், ஒரு பக்கந் திருப்பி நீட்டியும, முன்னே நீட்டியும், பின்னே வளைத்தும், பக்கந் திருப்பியும் பல பாவனைகளை உணர்த்தலாம்.
---------

22. கைக்குறிகள்

முகக்குறிகளுக்கு அடுத்தபடி அவற்றுடன் இணைந்தவை கைக்குறிகள். கண்ணிலும் கையிலுந்தான் நாட்டியக் கலையின் சூட்சுமமும் உள்ளது. அழகு பெறக் காட்டுங்கை, எழிற்கை; தொழில்பெறக் காட்டுவது தொழிற்கை. எழிற் கையும் தொழிற்கையும் சத்வ ராஜஸ தாமஸ குணங்களைக் காட்டும் அகக்கூத்திற்குரியன;பிண்டியும் பிணையலும் புறக் கூத்திற் குரியன. ஒற்றைக்கைக்கும் குவித்தகைக்கும் கூடை என்பர்.
அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழிலும் இரட்டையிற் செய்யும் கைத்தொழிலும் முரண் படாதிருக்கவேண்டும். கைக்குறிகள் ஒற்றைக்கை (அசம்யுக்தம்); பிணைக்கை (ஸம்யுக்தம்)என்று இரண்டு வகையாகும். இவற்றை நேரே ஆசிரியரிடம் பயின்றே அறிய முடியும். ஆதலால் பெயர் மட்டும் இங்கே குறிக்கிறேன்.
ஒற்றைக் கைக்குறிகள்:
1. பதாகம், கொடி. 2. திரிபதாகம், மூன்று விரல் நீட்டல்.
3. கர்த்தரி முகம், கத்தரிக்கோல் முகம். 4. அர்தத சந்திரம், பாதிமதி.
5. அராளம், கோணல். 6. சுகதுண்டம், கிளிமூக்கு.
7. முஷ்டி. 8. சிகரம்.
9. கபித்தம். விளாம்பழம். 10. கடகாமுகம், நண்டுமூஞ்சி.
11. ஸூசீயாஸ்யம், ஊசிமுகம். 12. பத்மகோசம்.
13. ஸர்ப்பசிரம். 14. ம்ருக சிரம், மான் தலை.
15. காங்கூலம். அல்லது லாங்கூலம், பூக்கொய்தல்.
16. அலபத்மம், அசையும் தாமரை.
17. சதுரம், நால்விரல். 18. பிரமரம், தேனீ.
19. ஹம்ஸாஸ்யம், அன்னமுகம். 20. ஹம்ஸபக்ஷம்.
21. மயூரம், மயில். 22. முகுளம், மொட்டு.
23. தாம்ரசூடம். கோழிக் கொண்டை. 24. சந்த்ரகலா.
25. சிம்ஹசிரம். 26. ஸந்தாம்சம், இடுக்கி.
27. ஊர்ணநாபம், எட்டுக் கால் பூச்சி. 28. திரிசூலம்.


பிணைக்கைகள்:
அஞ்சலி, கபோதம்-கர்கடம் ஸ்வஸ்திகம்-கடகாவர்த்தமானம் - நிஷாதம்-டோலம்- புஷ்பபுடம்-மகரம்-கஜதந்தம்-வர்த்தமானம்- அவாஹித்தம்-கர்த்தரி ஸ்வதிஸ்கம், -சகடம்-சங்கம்- சக்ரம்-ஸம்புடம்-பாசம்-கீலகம்-மத்ஸ்யம்- வராஹம்-கூர்மம்-கருடம்-நாகபந்தம்-கட்வா- பேரண்டம்-அலஹித்தம் முதலியன.

பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, வாயு, யமன், வருணன், குபேரன் முதலிய தேவதைகளையும், தசாவதாரங்களையும், அரக்கரையும், நான்கு வருணங்களையும், நவக்கிரகங்களையும் காட்டும் குறிகள் தனித்தனியே உண்டு. கருத்திற்கொண்ட பொருளைக் கைக்குறியாற் காட்டல் பிண்டி. பிண்டி பந்தத்தால் தெய்வங்களைக் குறிக்கலாம்- உதாரணமாக சிவலிங்கத்தை. நடனத்தில் ஒரு தெய்வத்தைக் குறிக்கும் அங்கராகம், கரணம் இவற்றிற்கும் பிண்டியெனப்பெயர். பிண்டியும் பிணையலும் சேர்ந்து எத்தகைய தெய்வப்பொருளையும் விளக்கும். அதேமாதிரி பலவகைப் புட்கள், விலங்குகள், உறவினர்களைக் கைக்குறிகளாலேயே காட்ட முடியும்.
---------

23. காலாட்டம்

ஆடும்போது ஸ்தானகம், ஆலீடம், பிரேரிதம், ஸ்வஸ்திகம், ஸம்ஸூசி, பர்வஸூசி, ஏகபாதம், நாகபத்மம், மோதிதம், முதலிய லட்சணங்கள் காலுக் குண்டு. காலைத்தூக்கிச் சுழற்றுவதற்கு சக்ரம், ஏக பாதம், குஞ்சிதம், ஆகாசம் முதலிய ஆட்டவகைகளுண்டு. நடத்தல், தாவல், நகரல், ஓடல், விரைதல், நடுங்கல், தத்தல், புரளல், துவளல் முதலிய பல நடைகள் உண்டு.

24. அங்க ராகங்கள்

ஸவஸ்திக ரேசிதம, பார்ஸ்வ ஸ்வதிகம், விருச்சிகம், பிரமாம்,
மத்தாக்ஷாலிதம், மதவிலாசிதம், கதிமண்டலம், பரிச்சின்னம்,
பரிவ்ருத்த ரேசிதம், வைசாக ரேசிதம், பராவ்ருத்தம், அலாதகம்,
பார்ஸ்வச்சேதம், வித்யுத் ப்ராந்தம், உத்வ்ருத்தம், ஆலிதம்,
ரேசிதம், அச்சுரிதம், ஆக்ஷிப்தரேசிதம், ஸம்ப்ராந்தம்,
அப ஸர்ப்பம், அர்த்த நிகுட்டகம் ஆக 32.

-----

25. கரணங்கள்

கரணங்கள் 108 ஆகும்:
தாளபுஷ்பபுடம், வர்திதம், வலிதோருகம், அபவித்தம், ஸமானதம்,
லீனம், ஸ்வஸ்திக ரேசிதம், மண்டல ஸ்வஸ்திகம், நிகுட்டம்,
அர்தத நிகுட்டம், கடிச்சன்னம், அர்த்த ரேசிதம், வக்ஷஸ்வஸ்திகம்,
உன்மத்தம், ஸ்வஸ்திகம், ப்ருஷ்டஸ்வஸ்திகம், திக் ஸ்வஸ்திகம்,
அலாதம், கடிஸமம், ஆக்ஷிப்த ரேசிதம், விக்ஷிப்தாக்ஷிப்தம்,
அர்த்த ஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கத்ராசிதம், ஊத்வஜானு,
நிகுஞ்சிதம், மத்தல்லி, அர்த்த மத்தல்லி, ரேசித நிகுட்டம், பாதாப வித்தம்,
வலிதம், கூர்நிடம், லலிதம், தண்டபக்ஷம், புஜங்கத்ராஸ்த ரேசிதம்,
நூபுரம், வைசாக ரேசிதம், ப்ரமரம், சதுரம், புஜங்காஞ்சிதம்,
தண்டரேசிதம், விருச்சிக குட்டிதம், கடிப்ராந்தம், லதா வ்ருச்சிகம்,
சின்னம், விருச்சிக ரேசிதம். விருச்சிகம், வியம்ஸிதம், பார்ஸ்வ நிகுட்டனம்,
லலாட திலகம், க்ராநதம், குஞ்சிதம், சக்ரமண்டலம், உரோமண்டலம்,
ஆக்ஷிப்தம், தலவிலாசிதம், அர்கலம், விக்ஷிப்தம், ஆவர்த்தம்,
டோலபாதம், விவ்ருத்தம், விநிவ்ருத்தம், பார்ஸ்வக்ராந்தம்,
நிசும்பிதம், வித்யுத் ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்திதம், கஜக்ரீடிதம்,
தவஸம்ஸ்போடிதம், கருடப்லுதம், கண்டஸூசி, பரிவ்ருத்தம்,
பார்ஸ்வ ஜானு, க்ருத்ராவலீனம், ஸன்னதம், ஸூசி, அர்த்தஸூசி,
ஸூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், ஸர்பிதம், தண்டபாதம்,
ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தம்,
பர ஸர்ப்பிதம், சிம்ஹ விக்ரீடிதம், ஸிம்ஹாகர்சிதம், உத் விருத்தம்,
உபஸ்ருதம், தலஸங்கட்டிதம், ஜநிதம், அவாஹித்தம், நிவேசம்,
ஏலகாக்ரீடிதம், உருத்வ்ருத்தம், மதக்ஷலிதம், விஷ்ணுக்ராந்தம்,
ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், வ்ருஷ்பக்ரீடிதம், லோலிதம்,
நாகாபஸர்பிதம், ஸகடாஸ்யம், கங்காவதரணம்.

--------

26. காட்சிகள்

கூத்துக்குத் தகுந்த பாடல்கள் ஒரு காட்சியை ஒட்டி அமையவேண்டும். அப்பாடல்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உணர்த்தவேண்டும்; தளர்ந்தவரை வீறு படுத்தவேண்டும்; கலையின்பம் வேண்டுவோருக்குக் கலையின்பம், பேரின்பம் வேண்டுவோருக்குப் பேரின்ப மளிக்கவேண்டும். புராணக்கதைகளுடன் சமுதாயத்திற்கும் மனித முன்னேற்றத்திற்கும் பொருத்தமான கதைகளைப் பாட்டில் அமைக்கலாம்; சமுதாயத்திற்குப் பயனாகும் தொழில் முறைகளைக் காட்சிகளிற் புகுத்தலாம். சரித்திர நிகழ்ச்சிகளைச் சேர்க்கலாம். மனிதவியல்பின் குண்தொந்த விகாரங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒன்பது சுவைகளும் பொருந்தக்காட்டி, இன்னமாதிரி வாழ்ந்தால் மேன்மைபெறலாம் என்று உணரவைக்கலாம்

அக்காலம் மாயவன் ஆடும் அல்லியம், விடையோன் ஆடும் கொட்டி, ஆறுமுகன் ஆடும் குடை, குன்றெடுத்தோன் ஆடும் குடம், முக்கண்ணான் பாண்டுரங்கம், நெடியோன் மல்லாடல், வேள் முருகன் துடியாடல், அயிராணி கடையம், காமன் பேடாடல், மாயவள் மரக்கலம், திருமகள் பாவையாடல் என்று பதினோராடல்கள் வழங்கின. திரிபுர தகனம், சிவபார்வதி நடனம், பைரவியின் கூத்து, குவலயாபீட வதம், பாணாசுரவதம், சூரபத்மவதம், தக்ஷவதம், உஷா கல்யாணம், காமக்கூத்து, காளிக் கூத்து, மோகினியாட்டம், கரகக்கூத்து முதலியவையும் அக்காலம் பரவியிருந்தன.

இந்த நாட்டியக்கலை விளக்கத்தை இலக்கணமாகக் கொண்டுவரும் நடனாஞ்சலி என்ற நூலில், புராணக்காட்சிகள், பல நாட்டுச் சரித்திரக்காட்சிகள், தீர்க்கதரிசிகளின் வரலாறுகள், சமுதாயக் காட்சிகள் ஆகியவற்றைக்கொண்டு பயனுள்ள பல பாடல்களை அமைத்திருக்கிறேன். நாட்டியக்கலை, ஆடல் பாடல் அழகுடன் அருளும் அறமும்தெய்வச் சுவையும் வீரமும், சமுதாய ஒற்றுமையும், தாய் மொழியன்பும், உலக சமாதானமும் தர, ஒரு சாதனமாயிருக்கவேண்டும் என்று கருதியே, இந்நூலை இயன்றமட்டும் கவனமாகச் செய்திருக்கிறேன்.

தமிழன்பர் இதைப் பயன்படுத்தி, நமது மொழியும், நாடும், குழுவும் கலையெழில் பெற்று முன்னேறச்செய்க. ஆடுந்தெய்வம் அருளுக!

பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம்
43 10 அங்கராகங்கள் அங்ககாரங்கள்
43 11, 15 அங்கராகம் அங்ககாரம்

நாட்டியக் கலை விளக்கம் முற்றிற்று

This file was last last revised on 12 Nov. 2021
Feel free to send corrections to the webmaster.