இலக்கிய தீபம்
எஸ். வையாபுரிப்பிள்ளை

ilakkiya tIpam by S. Vaiyapuri Pillai
In tamil script, Unicode/UTF-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned
images version of this work for preparation of machine-readable text.
This etext has been prepared via Distributed-Proofreading implementation
and we thank the following for this help in the preparation of the etext:
S. Govindarajan, S.Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, V. Devarajan and Sakthikumaran.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இலக்கிய தீபம்
ஆசிரியர்: எஸ். வையாபுரிப்பிள்ளை, பி.ஏ., பி.எ.ல்.,

சென்னை ஸர்வகலாசாலைத் தமிழ்லெக்ஸிகன் பதிப்பாசிரியர் 1926-'36
சென்னை ஸர்வகலாசாலைத் தமிழ்-ஆராய்ச்சித்துறைத் தலைவர் 1936-'46
திருவிதாங்கூர் ஸர்வகலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் 1951-
வெளியிடுவோர்:
பாரிநிலையம்,
59. பிராட்வே-சென்னை 1.
முதற்பதிப்பு நவம்பர்: 1952
விலை ரூ.3-0-0
சங்கர் பிரிண்டர்ஸ் 114, பிராட்வே சென்னை-1

வெளியிடுவோர் குறிப்பு

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் ஆராய்ச்சியுரைத்தொகுதி ஒன்றை வெளியிடுவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

பேராசிரியர் அவர்களைத் தமிழுலகில் அறியாதார் யார்? அவர்கள் பதிப்பாசிரியராக விளங்கிப் பதிப்பித்து வெளியிட்ட தமிழ்ப்பேரகராதி (தமிழ் லெக்ஸிகன்) நம் தமிழிற்கு ஒரு செல்வமன்றோ? அகராதி மட்டுமா? அகராதி நிலையில் பண்டை நாளில் உதவிய எத்தனையோ நிகண்டுகளை அவர்கள் பரிசோதித்து வெளியிட்டுள்ளார்கள். அச்சில் வாராத பல தமிழ்-இலக்கிய இலக்கண நூல்களைப் பிழையற அச்சு வாகனமேற்றியும், தமிழன்னைக்குப் பெரும்பணி புரிந்துள்ளார்கள்.அவர்களுடைய பதிப்புக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறந்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. அந் நூல்களுக்கு அவர்கள் எழுதியுள்ள முன்னுரைகள் ஆராய்ச்சி நலம் சிறந்து விளங்குகின்றன.

இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, கவிதை ஆராய்ச்சி என்றிப் படியாகப் பல துறைகளிலும் ஆராய்ந்து,வையாபுரிப் பிள்ளையவர்கள் சிறந்த பொருள்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் இலக்கிய ஆராய்ச்சி பற்றிய பதினாறு கட்டுரைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இக்கட்டுரைகளெல்லாம் தமிழ் மணமும்,ஆராய்ச்சி நலமும் செறிந்து கற்பார்க்குப் பெருவிருந்தாய் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் இதுவரைப் பிறரால் அறியப்படாத புதிய முடிபுகள் பல ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளன. தமது கொள்கைகளை நிறுவும் பொருட்டு ஆசிரியர் தரும் காரணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் முறைப்பட அமைந்து கற்பார் மனத்தைக் கவர்கின்றன.

ஆராய்ச்சிக்குரிய ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருத்தல் இயல்பே. பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சி முடிபுகள் பற்றியும் அபிப்பிராய பேதம் கொள்வோர் உண்டு. ஆனால், அங்ஙனம் மாறுபட்டுரைப்போர் யாரும் இதுவரை தக்க காரணஙகளோ ஆதாரங்களோ காட்டி மறுக்கவில்லை. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்பற்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து, உண்மையெனத் தாம் நன்கு தெளிந்த பின்பே அதனை வெளியிட முன்வருவது பேராசிரியரவர்களின் இயல்பு. இதன் உண்மையை, மெய்ப்பொருள் காண வேண்டுமென்ற நோக்கோடு இந்நூலைக் கற்பவர் யாரும் நன்கு உணர்வர் என்பது திண்ணம்.

ஆராய்ச்சிகளை மிகத் தெளிந்த நடையில், கருத்துக்களெல்லாமே செவ்விதின் விளங்க எழுதியுள்ளமை மிகவும் போற்றத் தக்கதாம்; கருத்தின் தெளிவு உரைநடையில் நன்கு பிரதி பலிக்கிறது. பேராசிரியர் அவர்களின் தமிழ்-உரை நடையில் தெளிவும் இனிமையும் எங்கும் ததும்புகின்றன.

'இலக்கிய தீபம்' இதுவரையில் வெளிவாராத புத்தகம். இதனை முதன் முதல் வெளியிடும் பேற்றை எங்களுக்கு அளித்த பேராசிரியர் அவர்களுக்கு எமது நிலையத்தின் நன்றியும், வணக்கமும் உரியவாகுக. இதுபோன்றே பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள இலக்கிய ஆராய்ச்சி, மொழி-ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி முதலிய பிற நூல்களையும் அடுத்து ஒவ்வொன்றாக வெளியிட எண்ணியுள்ளோம். தமிழன்பர்களின் ஆதரவு எங்களுக்கு உற்றதுணையாய் உதவும் என்று நம்புகிறோம்.

'இலக்கிய தீபம்' தமிழன்னையின் திருக்கோயிலில் நந்தா விளக்காய் நின்று என்றும் ஒளிர்வதாக.

பாரி நிலையத்தார்

முன்னுரை

இலக்கிய தீபம் என்னும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தவை. இவற்றை ஒருசேரத்தொகுத்து இப்போது வெளியிட்டுள்ளேன்.

இலக்கியங்களின் இயல்பையும் வகையையும் குறித்துப் பொதுப்பட முதலாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனைக் கருதியே 'இருவகை இலக்கியம்' என்ற கட்டுரை இந்நூலின் தொடக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

நமது பண்டை இலக்கியங்களைப் பாட்டும் தொகையும் என்றல் மரபு. பாட்டு என்பது பத்துப்பாட்டுள் அடங்கியவை. இவை இன்ன என்பதை
என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது. இங்ஙனமே, தொகை யென்பது எட்டுத்தொகையெனப் பெயர் சிறந்த தொகுப்பு நூல்களை யாம். இத்தொகை நூல்கள் இன்னவென்பதை
என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது.

பத்துப்பாட்டில் அடங்கிய பாட்டுக்களின் காலமுறையை ஆராய்வது இரண்டாவது கட்டுரை. இத்தொகுதியில், முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை நக்கீரர் இயற்றியது என்பர். இப் பெரும்புலவரே பத்துப்பாட்டில் எட்டாவதாக உள்ள நெடுநல்வாடையையும் இயற்றினர் என்பர். இவ் விருநூல்களின் ஆசிரியர்களும் வேறு வேறாக இருக்கவேண்டுமென்பது எனது துணிபு. இவர்களைப்பற்றியும் இவ் விருநூல்களைப் பற்றியும் அமைந்தவை அடுத்த இரண்டு கட்டுரைகள்.

பத்துப்பாட்டின் ஈற்றயலில் வைக்கப்பட்டுள்ள பட்டினப்பாலையை அரங்கேற்றியது பற்றி ஒரு சரித்திரச் செய்தி சாசன வாயிலாகத் தெரியவருகின்றது. இதனை விளக்குவதே ஐந்தாவது கட்டுரை.

இனி, தொகை நூல்களைத் தொகுத்த காலமுறையைப்பற்றி்த் தெரிந்துகொள்வது அவசியம். இதனை ஆராய்ந்து துணிவது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. தொகை நூல்களுள் இரண்டு நூல்கள் மிகப் பற்பட்டவை என்று கருதுவற்குச் சான்றுகள் உள்ளன. இவை கலித்தொகையும் பரிபாடலுமாம். ஏனையவற்றில் அகத்திணை பற்றியன நான்கு; புறத்திணை பற்றியன இரண்டு. அகத்திணைபற்றிய நூல்களுள் குறுந்தொகை மிகச் சிறந்தது. இக்குறுந்தொகையைப் பொருளாகக் கொண்டு எழுந்ததே ஏழாவது கட்டுரையாகும். இக்குறுந்தொகையில் காணும் ஒரு சரித்திரக் குறிப்பைப் பற்றியது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. இந்நூலில் வரும் ஒரு செய்யுளின் பொருள்பற்றியது ஒன்பதாவது கட்டுரை.

புறத்திணை பற்றிய நூல் இரண்டனுள், பதிற்றுப்பத்து முழுவதும் சேரர்களுக்கு உரியது. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இதுவரை அகப்படாத தொன்றாம். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகார உரையிலிருந்து தெரிந்து புலப்படுத்துவது பத்தாவது கட்டுரை. பிறிதொரு புறத்திணை நூலாகிய புறநானூற்றில் சரித்திரச்செய்திகள் பல உள்ளன, சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இரு கிடைத்தற்கரிய கருவூலம். இந்நூலின் கண்ணிருந்து இரண்டு சரித்திரச் செய்திகளையெடுத்து 11, 12-ம் கட்டுரைகள் வியவகரிக்கின்றன.

சங்கநூல்களால் பண்டைக் காலத்திற் சிறப்புற்று விளங்கிய நகரங்களின் வரலாறுகள் நன்கு புலப்படுகின்றன. இவ்வாறு புலப்படும் இரண்டு நகர வரலாறுகள் 13, 14-ம் கட்டுரைகளில் அமைந்துள்ளன.

சங்கச் செய்யுளென்று இதுவரை பெரும்பாலாரும் கருதிவந்துள்ள நூல்களுள் 'முத்தொள்ளாயிரம்' என்பது ஒன்று. இந்நூல் இலக்கியச் சுவையில் சிறந்து மேம்பட்டு விளங்குவது. இந்நூலைக் குறித்தும் இதன் காலத்தைக் குறித்தும் இறுதிக் கட்டுரைகள் இரண்டும் விளக்குகின்றன.

இக்கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி உரித்தாகும்.

கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் என்னோடு ஒத்துழைத்தும், சென்னையிலிருந்து அச்சுத்தாள்களைத் திருத்தியும் பிறவாறும் துணைபுரிந்தவர் சென்னை ஆர்ட்ஸ் காலேஜ் தமிழாசிரியர் திரு.வித்துவான் M. சண்முகம் பிள்ளையாவர். இங்கே திருவனந்தபுரத்தில் எனக்கு உதவிபுரிந்து வந்தவர் திருவனந்தபுரம் யூனிவர் ஸிட்டி காலேஜ் தமிழாசிரியர் திரு. R. வீரபத்திரன் M.A., L.T., ஆவர். இவ்விருவருக்கும் எனது ஆசி.

இந்நூலை அழகிய முறையில் அச்சியற்றி வெளியிட்ட பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி.

நான் எழுதிய பிற கட்டுரைகளும் தொகுதி தொகுதியாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். இம்முயற்சிகளில் என்னை ஊக்குவித்துவரும் தமிழ்த் தெய்வத்தை மனமொழி மெய்களால் வணங்குகிறேன்.

திருவனந்தபுரம்
ஸர்வகலாசாலை.       எஸ். வையாபுரிப் பிள்ளை
25.10.52

உள்ளுறை


இலக்கிய தீபம்
ஆசிரியர்: எஸ். வையாபுரிப்பிள்ளை

1. இருவகை இலக்கியம்

தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் என்றால், அகப்பொருள் பற்றிய இலக்கியம், புறப்பொருள் பற்றிய இலக்கியம் என்றுதான் பொதுப்படக் கருதுவோம். முன்னது காதல் துறைகளையும், பின்னது போர், ஈகை முதலியவற்றிற்குரிய துறைகளையும் பொருளாகக் கொண்டவை.

இப் பாகுபாட்டினைக் காட்டிலும் மிக ஆழ்ந்து செல்லும் வேறொரு பாகுபாட்டினையே 'இருவகை இலக்கியம்' என்ற தலைப்புத் தொடர் இங்கே கருதுகிறது. இலக்கியம் என்பது ஒரு கலை (art). இது கலைஞன் உள்ளத்தில் தோன்றும் முறை தனிப்பட்டது; இலக்கியமாகப் பரிணமிக்கும் முறையும் தனிப்பட்டது; இதன் நோக்கமும் தனிப்பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும், வெளியாகும் முறையும், இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறுபட்டவையாகும்.

'கலை' என்று கூறப்படுவதற்கு அழகு-உணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. 'சாஸ்திரம்' என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் இன்றியமையாதனவல்ல. அறிவிற்குரிய விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டு வகையான படங்களை வரைதல் கூடும். ஒன்று ஓவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம்; இன்னொன்று மாளிகையமைக்கும் கொற்றன் (Architect) வரைந்து கொள்ளும் அமைப்புப் படம் (Plan). சித்திரத்திற்கும் அமைப்புப் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு.

கம்ப ராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, "அழகு-உணர்ச்சி ததும்புகிறதா? காவிய இன்பம் சிறந்தோங்குகிறதா?" என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப்பிடுவோம். இப் பெருநூல் பற்றி, "தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறினறித் தெரிவிக்கிறதா?" என்ற கேள்வி தான் உண்டாகும். இது ஒரு சாஸ்திரம். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களைக் கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டிக்வின்ஸி கூறியுள்ளார். இவர் கூறியுள்ளதன் திரண்ட கருத்து வருமாறு:

இலக்கியம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருள்களைப் பரப்புவது. எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத் தொகுத்து வழங்குகிறோம். இவற்றிலே இரண்டு இயல்புகளைக் காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித் தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றோடு சிறிதும் இணங்காதபடி அதனைத் தூரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. இவற்றுள் ஒன்றை அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல்-இலக்கியம் (Literature of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது: ஆற்றல்-இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது; பின்னது, உணர்ச்சியின் மூலமாக, போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது.

அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,"அதிற் கூறப்பட்டன சரியா? உண்மையா? தருக்க நெறியோடு பொருந்துமா?" என்று நோக்குதல் வேண்டும். ஆற்றல்-இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,"கலை ய்ணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா? இன்பம் விளவிக்கிறதா?" என் நோக்குதல் வேண்டும்.

ஆனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒரு சேரக்கலந்து வரும் சிறந்த இலக்கியங்களுமுள்ளன. திருவள்ளுவரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாம்.

2. பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன் முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). இதன் உள்ளுறையான நூல்கள் இன்னவென்பது,
என்ற பழஞ்செய்யுளால் விளங்கும். இந்நூல்கள் சங்க காலத்துப் புலவர்களால் இயற்றப்பெற்றுச் சில நூற்றாண்டுகட்குப் பின்னர்த் தொகுக்கப் பட்டன. பத்துப்பாட்டு என்ற பெயரும், தொகுக்கப்பட்டபின்னரே வழங்கத் தொடங்கியிருத்தல்வேண்டும். இப்பெயர் - வழக்கு நிலைத்துவிட்டபின்னர்ப் பன்னிருபாட்டியலார்,
என்ற இரண்டு சூத்திரங்களை அமைத்தனர். பத்துப்பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு; இதன் கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக் காஞ்சி; இதன் கண் 782 அடிகள் உள்ளன.
----
[1]. என்றனர் தொல்காப்பியரும். (செய்யுளியல்,150)
----
இப்பாட்டுகள் பற்றிய விவரங்களனைத்தும் அடுத்த பக்கத்தில் தந்துள்ள பட்டிகையிற் காணலாம்.

அட்டவணை
நூற்பெயர் அடி ஆசிரியர் பாடப்பெற்றோர் பிறகுறிப்புகள்
1. முருகாற்றுப்படை 317 நக்கீரர் முருகக்கடவுள்
2. பொருநராற்றுப்படை 248 முடத்தாமக்கண்ணியார் கரிகாற்பெருவளத்தான்
3. சிறுபாணாற்றுப்படை 269 நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடன் எழுவர் பூண்ட கை செந்நுகம் (113) ஒப்பிடுக: புறம்.158
4. பெரும்பாணாற்றுப்படை 500 கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையன்
5. முல்லைப்பாட்டு 103 நப்பூதனார் மிலேச்சர்(60-66)
6. மதுரைக்காஞ்சி 782 மாங்குடிமருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நன்னன் குறிக்கப்பட்டுள்ளான்
7. நெடுநல்வாடை 188 நக்கீரர் மேற்படி மிலேச்சர்(31-5)
8. குறிஞ்சிப்பாட்டு 261 கபிலர் பாடப்பெற்றோர் ஆரியவரசன் பிரகத்தன் கபிலரை நக்கீரர் குறித்துள்ளனர் (அகம் 78,141)
9. பட்டினப்பாலை 301 கடியலூர்உருத்திரங்கண்ணனார் கரிகாற்பெருவளத்தான்
10.மலைபடுகடாம் 583 இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசீகனா நன்னன் சேய்நன்னன்

இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப்பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பாலதன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு மேற்கொண்ட நோக்கம்.

அடுத்து வரும் ஆறாம் பக்கத்தில் தந்துள்ள பட்டிகையினின்றும் ஒரு சில செய்திகள் புலப்படுகின்றன. பொருநராற்றுப்படையும் பட்டினப்பாலையியற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியருமாவர். எனவே இம்மூன்று நூல்களும் சம காலத்தனவாம்.

மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியன. நெடுநல்வாடையை இயற்றியவர் நக்கீரர்; இப்பெயருடையார் முருகாற்றுப்படையையும் இயற்றியவராகக் கூறப்படுகிறார். மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய்நன்னன். இவன்,
எனக் குறிக்கப்படுகின்றான். இந் நன்னனே, மதுரைக்காஞ்சியில், எனக் குறிப்பிடப்பட்டவனாதல் தகும் [2]. எனவே இந் நான்குநூல்களும் சமகாலத்தன என்று கொள்ளலாம். மலைபடுகடாம் இந்நானகினுள் முற்பட்டதாகலாம்.
----
[2]. இக்கருத்தே பச்செந்தமிழ் 4-ம் தொகுதியில் (பக்கம் 183-193) நன்னன் வேண்மான் என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.
----
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியரான கபிலரை,
என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுரைக்காஞ்சி முதலிய நான்கு நூல்களுக்கும் குறிஞ்சிப்பாட்டு முற்பட்டதாதல் வேண்டும்.

மேலும், கரிகாற்பெருவளத்தானது தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியுள்ளார் (புறம்,4). இவரது முதுமைக்காலத்து இளைஞராயிருந்தவர். கபிலர் என்பது பதிற்றுப்பத்தில் இவர்கள் பாட்டுக்களின் வைப்புமுறையால் விளங்கும். எனவே, கபிலரது குறிஞ்சிப்பாட்டுக் கரிகாலனது காலத்திலே தோன்றியதெனக் கொள்ளலாம். இங்ஙனம் கொள்ள இயைபு இருத்தலால், பொருநராற்றுப்படை முதலிய மூன்றனோடு குறிஞ்சிப்பாட்டும் சமகாலத்ததாகும். புறம் 53-ல் எனக் கூறுகிறான். இவ் இரும்பொறை தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவன (புறம்,17). நெடுஞ்செழியனுக்குரிய மதுரைக்காஞ்சி கபிலரது குறிஞ்சிப் பாட்டுக்குப் பிற்பட்டது என்பது இதனாலும் வற்புறுத்தப்படுகிறது.

முல்லைப்பாட்டின் காலமுறையைத் தெரிதற்கு மேற்குறித்தனபோன்ற சான்றுகள் இல்லை. ஆனால், முல்லைப்பாட்டு என்ற பெயர், குறிஞ்சிப்பாட்டு என்பதனைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெயரமைப்பு முல்லைப் பாட்டுப் பிற்பட்டதென்பதனை யுணர்த்துகின்றது. அன்றியும் அதன்கண் சில அரிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
என்பது முல்லைப்பாட்டுப் பகுதி. இங்கே யவனரது கைத்தொழிற் சிறப்பு ஒன்றும், மிலேச்சரது செய்தியொன்றும் உணர்த்தப்படுகின்றன. நெடுநல்வாடையிலும் யவனரது பிறிதொருகைத்தொழிற் சிறப்பும் மிலேச்சரது பிறிதொரு செய்தியும் காணப்படுகின்றன. என்பதும், என்பதும் நெடுநல்வாடைப் பகுதிகள். முற்பகுதியுள் மாக்கள் ஆவார் மிலேச்சர் என்று உரை கூறப்பட்டுளது. யவனர், மிலேச்சர் முதலினோரது தொடர்பு அருகியல்லது பண்டைத் தமிழகச் சரித்திரத்திற் காணப்பெறாத தொன்றாம். சங்க இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புக் கிடைப்பது மிக அருமை. இவ்வகைக் குறிப்புக்கள் காணும் நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே. நெடுநல்வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றி யிருத்தல் கூடும்.

இவ்வூகம் வேறுசில காரணங்களாலும் உறுதி யடைகின்றது. இரண்டு நூல்களிலும் ஒத்த கருத்துக்களும் தொடர்களும் காணப்படுகின்றன. என்ற முல்லைப்பாட்டு என்ற நெடுநல்வாடைக் கருத்தோடு ஒத்தமைந்தது.
என்ற தொடர் ஈரிடத்தும் (முல்லை. 16, நெடுநல். 155) வருகின்றது.

முல்லைப்பாட்டு இங்ஙனமாக, சிறுபாணாற்றுப்படை, என்ற அடிகளிற் கடையெழு வள்ளல்களின் வரலாற்றை இறந்த காலச்செய்தியாக உரைக்கின்றது. ஆகவே, இவ்வள்ளல்களின் காலத்திற்குப் பின்னர் இந்நூல் இயற்றப் பெற்றதாதல் வேண்டும். பரணர், கபிலர், முடமோசியார், ஔவையார், வன்பரணா முதலியவர்கள் வள்ளல்களின் சமகாலத்தவராய் வாழ்ந்து அவர்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர்கள் காலத்திற்குப் பின்பு தோன்றியதெனல் வேண்டும். இச்சிறுபாணாற்றுப்படையை, இங்ஙனமே கூர்ந்து ஆராயின், பத்துப்பாட்டினுள் ஏனை ஒன்பது ஆசிரியர்களுக்குப்பின் நத்தத்தனார் வாழ்ந்து சிறு பாணாற்றுப்படையை இயற்றினார் என்பதே துணிவாகும்.
மேற்குறித்த காரணங்களாற் பத்துப்பாட்டுக்களும் கீழ்க் காட்டியபடி காலம்பற்றி மூன்று தொகுதிகளாக அமைகின்றன. இத்தொகுதிகளுள் இரண்டாவதனைச் சார்ந்த நெடுநல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். இவர் முதற்றொகுதியில் இரண்டாவதன் பாட்டுடைத் தலைவனான கரிகால்வளவனை அகம் III.ல், எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இருவரும் சமகாலத்தினர் என்று கொள்வதற்குரிய சான்று யாதும் இச்செய்யுட் பகுதியிற் காணப்படவில்லை. ஆதலால் நக்கீரர் கரிகால்வளவனுகுப் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் தகும். இவராற் பாடப்பட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குப் பிற்பட்டகாலத்தவன் என்ற முடிவு பெறப்படுகிறது. இம்முடிபு வேறொரு காரணத்தாலும் உறுதியடைகிறது. கரிகாலனைப் பாடிய புலவர்களுள் ஒருவரேனும் நெடுஞ்செழியனைப்பாடவில்லை.

இங்ஙனமாக, முதற்றொகுதிநூல்கள் இரண்டாந்தொகுதி நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டனவாதல் தெளிவாகின்றது. ஆனால் பின் தொகுதியில் திருமுருகாற்றுப்படையின் காலம் மீண்டும் ஆராய்தற்குரியது. இதனை இயற்றியவர் நக்கீரர் என்ற பெயருடையவரெனினும் நெடுநல்வாடை ஆசிரியரின் வேறாவர் என்றும், பிற்பட்ட காலத்தவர் என்றும் கருதுதற்குரிய சான்றுகள் பல உள்ளன. இவற்றை முருகாற்றுப்படை பற்றி யான் எழுதியுள்ள அடுத்த கட்டுரையில் நன்கு விளக்கியுள்ளேன். ஆதலால் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டுள் இறுதியில் இயற்றப்பெற்றதெனக் கொள்ளல்வேண்டும்.

எனவே, கீழ்கண்டவாறு கலமுறை யொன்று பெறப்படுகின்றது. இவற்றுள், சிறுபாணாற்றுப்படை முதல் எட்டு நூல்களுக்கும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியிருக்கலாம். முருகாற்றுப்படை இவற்றிற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டு இயற்றப் பெற்றதாதல் வேண்டும்.

சங்க இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இம்முறை பெரிதும் பயன்படவல்லது.

3. திருமுருகாற்றுப்படை

ஆற்றுப்படையென்ற நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தின் கண்ணேயே காணப்படுகின்றது. என்பது புறத்திணையியற் சூத்திரம் (36)

அரசர்கள் முதலியோர் வாழ்ந்துவந்த நகர்கட்குச்சென்று அவர்களுடைய புகழைப் பாடி மகிழ்வித்துப் புலவர்கள் ஆதரவு பெற்றுவந்த பண்டைகால்த்தே இவ்வகைப் பிரபந்தங்கள் தோன்றுதல் இயல்பே. ஏனெனின், ஆற்றுப்படைகள் அரசர் முதலியோர் மாட்டுச்சென்று பாடிச் செல்வம் பெறுதலையே நூற்பொருளாகக் கொண்டுள்ளன. சங்ககாலத்தே பல ஆற்றுப்படைகள் தோன்றின. கூத்தராற்றுப்படை என்பது மலைபடுகடாத்திற்கு வழங்கிய ஒருபெயர். பாண ராற்றுப்படை வகையிற் சிறுபா ணாற்றுப்படை, பெரும்பா ணாற்றுப்படையென இரண்டு நூல்கள் உள்ளன. பொருந ராற்றுப்படை யென்பதும் பத்துப்பாட்டினுள் ஒன்றென்பது யாவரும் அறிந்ததே. விறலி யாற்றுப்படை யென்பது தனிநூலாகக் காணப்படவில்லை. ஆனால் இவ்வகைப்பாட்டு, புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் வந்துள்ளது. 'சேயிழை பெறுகுவை' (புறம்-105), 'மெல்லியல்விறலி' (புறம்-133) என்ற செய்யுட்களை உதாரணமாகக் காட்டல் தகும்.

கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப்பற்றிய ஆற்றுப் படைச்செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் உலாவாழ்வு கருதிய (லௌகிகச்) செய்யுட்களாம். பாட்டுடைத்தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச்செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாகியுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம்பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும். இரவலர் வாழ்வு எவ்வகையான் நோக்கினும் இழிவானதே. அறநூற் பெரும்புலவராகிய வள்ளுவரும், என்று கூறினர். இச்சிறு பயன் பெறுதற்பொருட்டுத் தம்மையும் தமிழையும் இழிவு படுத்திக்கொள்ளுதல் பெருமக்கள் வெறுக்கத்தக்க தாகவே இருக்கும். இதனை நக்கீரர் உணர்ந்து ஆற்றுப் படையின் நோக்கத்தையே முழுதும் வேறு கொண்டு அவ்வகை நூல்களுக்குப் புதியதொரு கௌரவத்தைக் கொடுத்தனரென்றுதான் நாம் கொள்ளவேண்டும். இங்ஙனம் இயற்றிய புதுநூல் முருகாற்றுப்படையாகும்.

இப் புது நூலினைக் குறித்துப் பண்டைக்காலத்துத் தமிழறிஞர்க்குள்ளே விவாதம் நடைபெற்றது. இது நச்சினார்க்கினியாது புறத்திணையியலுரையால் நமக்கு விளங்குகிறது. ஒரு சிலர் புலவராற்றுப்படை யென்பதே நூற்பெயராதல் வேண்டும் என்றனர். நூலினகத்தே (அடி 284) வழிப்படுக்கப்பட்டவன் "முதுவாயிரவலன்" ஆகிய புலவன் என்பது இவர் காட்டிய காரணமாதல் வேண்டும். சிறுபாணாற்றுப்படையிலும் (அடி 40), பதிற்றுப்பத்திலும் (66), புறநானூற்றிலும் (48,180) 'முதுவாயிரவல' என வருதல் நோக்கத்தக்கது. 48-ம் புறப்பாட்டுப் 'புலவராற்றுப்படை' யெனவே துறை குறிக்கப் பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் இப்பெயர் வழங்கவில்லை யென்றும், 'கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யார்' என்றும் கூறி மறுக்கின்றார். முருகாற்றுப்படை யென்பதற்கு "முருகன்பால் வீடுபெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை ஆற்றுப்படுத்ததென்பது" பொருளெனவும் அவர் கூறுவர். அப்பொருளைத்தான் நாமும் கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் பிற ஆற்றுப் படைகளெல்லாம் ஆற்றுப்படுக்கப் பட்டாராற் பெயர் பெறுதலும், அந்நெறிக்கு மாறாக முருகாற்றுப் படையொன்றே பாட்டுடைத் தலைவனாற் பெயர் பெறுதலும் மனங்கொளத்தக்கன. புலவராற்றுப் படையென்ற பெயரால் நூல் நுதலிய சமயப்பொருள் விளங்கமாட்டாது போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இந்நூல் வழங்கலாயிற் றென்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இப் புதுவழக்குப் பரவிவிட்ட காரணத்தினால் பழைதாகிய புலவராற்றுப் படை யென்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாகல் வேண்டும்.

மேற் குறித்த விவாதமேயன்றி, தொல்காப்பியர் வகுத்த ஆற்றுப்படையிலக்கணத்தில் முருகாற்றுப்படை அடங்காதெனவும் விவாதம் நிகழ்ந்திருத்தல்வேண்டும். நச்சினார்க்கினியர் தமது வழக்கப்படி சொற்களை அலைத்துப் பொருள் கொண்டு இந்நூலும் அடங்குமெனச் சாதித்துள்ளார். 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்' எனவும், 'ஆற்றிடைக்காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம்......சொன்ன பக்கமும்' எனவும், இரண்டாகப் பிரித்துக் கூட்டிப் பின்னதற்கு "இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே, தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்தும் பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றார் பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச்சென்று அக்கந்தழியினைப் பெறும்படி சொன்ன பக்கமும்" என்று பொருளுரைத்தார்.இது பொருளன்று என்பதனைச் சான்று காட்டிநிறுவ வேண்டா. 'கூத்தர் முதலாயினோர் நெறியிடையே காட்சி மாறுபாடு தோன்றி.........சொன்ன பக்கமும்' எனச் சேர்த்தே கொள்ளுதல் வேண்டும். இளம்பூரனர் இவ்வாறே கொண்டார். காட்சி மாறுபடுதலாவது பெருவளம் பெற்றுவரும் தமது காட்சியும் வறுமைப்பிணியால் வருந்தித் தள்ளாடிவரும் ஆற்றுப் படுக்கப் படுவார் காட்சியும் தம்முள் மாறுபடுதல். இதுவே செம்பொருள். எனவே முறுகாற்றுப் படையைத் தொல்காப்பியச் சூத்திரம் கருதிற்றன்றெனலே தகுதி. இதனால் தொல்காப்பியருக்கு யாதோரிழுக்குமின்று.

இந்நூல் தோன்றியதனைக் குறித்து ஒரு வரலாறு வழங்குகினறது. திருப்பரங்குன்றத்திற் சரவணப் பொய்கையின் கரையில் ஓர் அரசமரம் நின்றது. அதிலுள்ள இலை நீரில் வீழ்ந்தால் மீனாகவும் நிலத்தில் வீழ்ந்தால் பறவையாகவும் மாறும். ஒருகால் ஓர் இலை பாதி கரையிலும், பாதி நீரிலுமாக விழுந்தது. கரையில் விழுந்த பகுதி பறவையாகவும், நீரில் விழுந்தது மீனாகவும் அமைந்த விசித்திரப் பிராணியாக அந்த இலை மாறிற்று. பறவைப் பகுதி ஆகாயத்திற் பறக்கவும் மீன் பகுதி நீருள் மூழ்கவும் முயன்றன. அப்போது அங்குக் கரையிற் பூசை செய்து கொண்டிருந்த நக்கீரர் ஏகாக்கிர சிந்தனையில் வழுவி இந்த அதிசயத்தைக் கண்ணுற்று இரண்டனையும் விடுவிக்க வந்தனர். சிவ பூசையில் வழுவிய காரணத்தால் ஒரு பிரமராட்சசு நக்கீரரைப் பிடித்துக் கொண்டுபோய், ஒரு குகையில் அடைத்து விட்டது. அக் குகையில் இவரைப் போல் வழுவிய 999 பேர்கள் ஏற்கனவே அடைபட்டிருந்தனர். இவரையும் சேர்த்து ஆயிரம் பேராகவே, அவ்வளவு பேரையும் உண்டுவிடவெண்ணி அப் பிரம்ராட்சசு நீராடி வருவதற்குப் போயிற்று. அப்பொழுது நக்கீரர் முருகாற்றுப் படையைப் பாட, முருகப்பிரான் அவரைக் குகையினின்றும் விடுவித்தனர். இந்நூலை ஓதுவாருக்கு வேண்டும் வரங் கொடுப்பேம் என்றும் முருக்ப்பிரான் அருள் செய்தனர்.

இவ் வரலாறு சில வேறுபாடுகளுடன் முதன் முதலாகத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடலிற் காணப்படுகிறது (44,23-28). 'குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய்' என்றுவரும் வெண்பாவும் நக்கீரர் இயற்றியதாகவே இத் திருவிளையாடல் கூறும். ஆனால் ஒரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இவ் வரலாற்றுக்குரிய செய்யுட்கள் சில பிரதிகளில் இல்லை. எனவே இவைகள் பிற்காலத் தொருவராற் சேர்க்கப் பெற்றனவென்று கருதலுக்கு இடமுண்டு. இந்திரன் முடிமேல் வளையெறிந்த சரிதத்திற்கும் நக்கீரர் செயலுக்கும் யாதோர் இமையுமில்லாமையும், இச்செய்யுட்களை நீக்கியவிடத்துக் கதை செவ்வனே நிகழுமாறும் ஈண்டு நோக்கத் தக்கன. அருணகிரிநாதர்,
'கீரனுக்குகந்து.........
உலக முவப்ப வென்று னருளாலளிகுகந்த
பெரியோனெ'
(திருப்புகழ். சமாஜப் பதிப்பு, செய் 352) எனவும், 'மலைமுகஞ் சுமந்த புலவர் செஞ்சொல்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா' (திருப்புகழ், 1201) எனவும் கூறுதலே முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் வரலாற்றைச் சிறிது காணலாம். திருப்புகழாசிரியர் காலம் 15-ம் நூற்றாண்டாகும். திருவாலவாயுடையார் திரு திருவிளையாடற்புராணம் 13-ம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்றிய தாகலாம் என அந்நூலைப் பதிப்பித்த டாக்டர். உ.வே.சாமிநாதையர் கருதினர். இக்கால வரையறை கொள்ளத்தக்கதன்றெனவும் 16-ம் நூற்றாண்டுக்கே அந்நூல் உரியதெனவும் ஓர் ஆராய்ச்சியாளர் முடிவுசெய்துள்ளார். இவர் கூறுவனவே ஒப்புக்கொள்ளத்தக்கன. எவ்வாறு நோக்கினும் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்களில் முருகாற்றுப்படை வரலாறு காணப்பெறவில்லை. எனவே, இவ்வரலாறு 13-ம் நூற்றாண்டு முதல் கர்ணபரம்பரையாய் வழங்கத் தொடங்கிய தெனக்கொள்ளலாம்,

இதுபோன்ற வரலாறுகளால் முருகாற்றுப்படை ஒரு சமய நூலாய் முடிந்து பெருமையிற் சிறந்து விளங்கிற்று. நக்கீரரும் பொய்யடிமையில்லாத புலவர்களுள் ஒருவராய்ப் போற்றப்பட்டனர். இவரது பொய்யற்ற புலமையை விளக்குதற்கும் ஒரு வரலாறு தொன்றியது. என்ற குறுந்தொகை செய்யுள் பற்றியது இவ்வரலாறு. இச்செய்யுள் இறையனார் என்ற புலவர் இயற்றியது;

"இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டுநின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப்பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோற்ற நலம்பாராட்டியது" என்ற அகத்துறையிற் பாடிய பாட்டு. இதனைத் தருமியென்னும் பிரமசாரிக்கு ஆலவாயிற் சோமசுந்தரக்கடவுள் சிந்தா சமுத்தியாகப் பாடியளித்து, அவன் பொற்கிழி பெறும்படி செய்தாரென்றும், இப்பாட்டிற்குக் குற்றங் கூறத் துணிந்த நக்கீரரைத் தண்டித்துப்பின் அருள் புரிந்தாரென்றும் ஒரு புது வரலாறு புறப்பட்டுவிட்டது. நக்கீரர் தாமே எழுதியதெனப்படும் இறையனார் கனவியலுரையில் இச்செய்யுளைக் குறித்துத் 'தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த் திற்றாயிற்றுப் போந்தபொருள்' (பவானந்தர் கழகம் 2-ம் பதிப்பு. பக். 49-50) எனக் காணப்படுகின்றது. இங்ஙனமிருப்பவும் இந்நக்கீரரை யுளப்படுத்தி மேற்சுட்டிய வரலாறு எழுந்தது வியப்பேயாகும். இவ்வரலாற்றின் கண் நக்கீரர் சங்கறுக்கும் குலத்தினரென்று சொல்லப்படுகிறது.

இவ்வரலாறு கல்லாடம் முதலிய ஒருசில நூல்களில் நக்கீரரை யுளப்படுத்தாது வழங்கியுள்ளது. உதாரணமாக, எனக் கல்லாடத்தில் வந்துள்ளது (1,10-12).

திருநாவுக்கரசு சுவாமிகளும், என்று கூறியுள்ளார். இவ்வடிகள் தருமியின் பொருட்டு இறைவனே புலவனாகச் சங்கமேறிப் பாடியருளினானென்று பொருள்படுமாறு அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. நக்கீரர் செயலே கூறப்படவில்லை.

ஆகவே நக்கீரரை யுளப்படுத்தாத சரிதமொன்று நாவுக்கரசரது காலத்திற்கு முன்பு, கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி வழங்கி யிருக்கவேண்டும். அவரை யுளப்படுத்திய சரிதம் சுமார் 13-ம் நூற்றாண்டளவில் வழங்கத் தொடங்கியிருக்கலாம். இப் பிற்காலச் சரிதத்தானும் நக்கீரர் புலமைத் திறனையும், அஞ்சா நெஞ்சுரனையும் தமிழ்மக்கள் போற்றினார்கள்.
நக்கீரர் சாபானுக்கிரக சக்தியுடையரெனவும் நம்மவர்கள் கருதினார்கள். இக் கருத்திற்கியையக் கடைச்சங்கத்தைப் பற்றிய ஒரு வரலாறும் எழுந்தது. இக் காலத்திற் போலவே கடைச்சங்க காலத்தினும் தென்மொழி வடமொழிப் போரொன்று நிகழ்ந்தது. இப்போர் முடிவு பெறும் வரையிற் சங்கத்தாராகிய பட்டிமண்டபத்தார் அம்மண்டபத்தின் தெற்குவாயிலைத் திறவாது அடைத்துவிட்டனர். அவருள் தலைவராக நக்கீரனார் நின்று வாதத்தை நிகழ்த்திவந்தனர். எதிர்க்கட்சியில் ஒருவன் 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்று கூறினான். இஃது உலகம் பொறுக்கமாட்டாத சொல்லாதலால் உடனே மரணமாய் வீழ்ந்தனன். இறந்தவனைஅ எழுப்பினால் உமது தமிழ்க்கட்சியைஒப்புவோம் என்று எதிர்க்கட்சியினர் கூற, என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி உயிர்ப்பித்தனர். இதனிடையில் வடமொழிக் கட்சியிலுள்ள வேட்கோவனான் குயக்கோடன் தமிழ்க் கட்சியினரைக் குறித்து ஆனந்தச் செய்யுள் கூறிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி நக்கீரர், என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி இறந்துபடச் செய்தனர். இவ் வரலாற்றை 'இவை தெற்கண்வாயில் திறவாது பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் [ஒருவன்] சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின' எனப் பேராசிரியர் செய்யுளியலுரையில் (சூ. 178) கூறுவதிலிருந்து ஊகிக்கலாம். இதனைச் சிறிது வேறுபடுத்தித் தமிழ் நாவலர் சரிதை உரைக்கின்றது. அதில் 'நக்கீரர் நாடத்துக் குயக்கொண்டானைச் சாகப்பாடிய அங்கத வெண்பா' எனத் தலைப்புத் தரப்பட்டுள்ளது. இது நுணுகி நோக்கத்தக்கது. 'நாடத்து' என்பது பொருள்படுமாறில்லை; அது 'நாடகத்து' என்று இருத்தல்வேண்டும்போலும். இவ்வூகம் உண்மையொடு பட்டதாயின் 'நக்கீரர் நாடகம்' என்ற நூலொன்று வழங்கிய தென்றும், அதன்கண் இந்த வரலாறு கூறப்பட்டிருந்த தென்றும் நாம் கொள்ளலாம்.

'நக்கீரர் நாடகம்' போன்றதொரு நூல் முற்காலத்தில் வழங்கிவந்த தென்பதற்கு வேறொருசான்றும் உள்ளது. யாப்பருங்கல் விருத்தியுரையில் (பக். 133) 'இந் நக்கீரர் வாக்கினுள கடையிரண்டடியும் மூன்றாமெழுத்தொன்றெதுகை வந்தவாறு காண்க' எனக் காணப்படுகிறது. இச் செய்யுள் நக்கீரர் நாடக பாத்திரமாகவேனும் கதாபாத்திரமாகவேனும் வந்துள்ள ஒரு நூலிற் குரியதாதல் வேண்டும். 'தமிழறியும் பெருமாள் கதை' என்று இக்காலத்து வழங்கும் நூலில் மேலைச் செய்யுள் சிறிது வேறுபாட்டுடன் நக்கீரர் கூறியதாக அமைந்துள்ளது. இதுவும் எனது ஊகத்தை வலியுறுத்துகிறது. யாப்பருங்கல விருத்தியில் இச் செய்யுள் பயின்று வருதலினாலே தமிழறியும் பெருமாள் கதையைப் போன்றதொரு கதை சுமார் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் வழங்கி வந்ததெனக் கொள்ளலாம்.

இவ் வரலாறுகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் தோன்றி நக்கீரரது பெருமையையும் புகழையும் வளர்ப்பனவாயின. இவற்றுள் ஒன்றேனும் அவரது உண்மைச் சரிதத்தோடு தொடர் புடையதெனக் கொள்ளுதற்கில்லை.

இனி நக்கீரர்பெயரால் வழங்கும் நூல்கள் முதலிய வற்றை நோக்குவோம். அவை வருமாறு. மேற்குறித்த நூல்களுள் திருமுருகாற்றுப்படை முதல் கண்ணப்பதேவர் திருமறம் வரையுள்ள பத்து நூல்களும் 11-ம் திருமுறையில் அடங்கியுள்ளன. இந் நூல்களுள் திருமுருகாற்றுப்படை யொழிய ஏனையவெல்லாம் சங்ககாலத்திற்குப் பிற்பட்டன வென்பது தெளிவாம். பிரபந்தவகையை நோக்கினாலும், யாப்பு வகையை நோக்கினாலும், சொல்லின் உருவத்தை நோக்கினாலும், வடசொற்களின் அளவை நோக்கினாலும், கையாளப் பட்டுள்ள நடையை நோக்கினாலும் வரலாற்றுக் குறிப்பினை நோக்கினாலும் இவ்வுண்மை எளிதிற் புலப்படும்.

அந்தாதி, மும்மணிக்கோவை முதலியன மிகப்பிற்பட்ட பிரபந்த வகைகளாம். அந்தாதி முதலியவற்றைப் 'புதிதாகத்தாம் வேண்டியவாற்றாற் பலசெய்யுளுந் தொடர்ந்து வரச்செய்வ'தாகிய விருந்து என்பதன்பாற் படுப்பர் பேராசிரியர் (தொல்.செய்.239, உரை). கலித்துறை என்னும் பாவினம் திருவலஞ்சுழி மும்மணிக்கோவையிற் பயின்று வந்துள்ளது. இது மிகப் பிற்பட்டவழக்கென்பது செய்யுள் வரலாறு அறிந்தாரனைவர்க்கும் உடன்பாடாம். கயிலை பாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில், நான்(96), நாங்கள்(44), உன்(14,59), உனகு(77), இத்தனை(17), எத்தனையும்(86), ஆனாலும் (30,55), காட்டுமின்கள், சூட்டுமின்கள் (36), கண்டிடுவான், உண்டிடுவான்(18), மன்னவனே(46), இருப்பன் (65) முதலிய பிற்கால உருவங்களூம், அம்மான்(2), பேசு (27,9,79), அணுக்கர் (12), கிறி (12) முதலிய பிற்காலச் சொற்களும், சரணம் (4), தேவாதிதேவன் (5), ஈசன் (9,38,62), தீர்த்தன், பாசுபதம், பார்த்தன்(13), பாவித்தும்(14), தயா(14), நேசம்(17), பாதம்(18), சேமத்தால் (25), தீர்த்தம்(29), மூர்த்தி(29), கங்காளர்(30), பாலன் (33), நாதன்(34), நாமம்(38), பரமன்(49,99), பசுபதி(50), காயம்(56), தியானிப்பார்(60), பத்தர்(71,83,86), ஆதரித்த(72), பாவம்(76), பாதாளம்(88), சங்கரன்(89), பாதாரவிந்தம்(99) முதலிய வடசொற்களும், விண்ணப்பம் (75,77), நக்கன் (88) முதலிய பாகதச்சொற்களும் வந்துள்ளன. இவ்வந்தாதியினகத்தே கோச்செங்கட்சோழன் (32), மார்க்கண்டன் (33), உபமன்யு(81), சலந்தரன்(84) முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன. இவையனைத்தும் சங்கநூல்களிற் காணப்படாதன; பிற்கால நூல்களிற் பெருவழக்கின. கோபப்பிரசாதத்தில் கண்ணப்பர், சண்டேசர், சாக்கியர், கோச்செங்கட்சோழர் வரலாறுகளும் கூறப்படுகின்றன. இவையும் சங்ககாலத்து நூல்களில் அறியப்படாத வரலாறுகள்.

அன்றியும், முற்கூறிய அந்தாயிற் சில செய்யுட்கள் பழைய கருத்துக்களைப் பொன்னேபோற் போற்றுகின்றன. உதாரணமாக, என்பது, என்ற அப்பர்வாக்கை நினைப்பூட்டுகிறது. என்பது, என்ற திருக்குறளை அடியொற்றி வந்துள்ளது. என்பது, என்பவற்றின் பொருளை யுட்கொண்டு வந்துள்ளது. என்பது, என்பது போன்ற முத்தொள்ளாயிரச் செய்யுட்களின் முறையைப் பினபற்றி அமைந்தது.

செய்யுள் நடைநோக்கினும் இப்பிரபந்தங்களின் நடை பிற்பட்ட காலத்த தாகும். என்ற செய்யுள் மிக அழகாயுள்ளது. இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லும் (காளத்தி,ஈசன் என்பன தவிர) சஙகச் செய்யுட்களிற் காணக் கூடியனவே. எனினும் இதன் நடைவேறு; சங்கச் செய்யுட்களின் நடைவேறு. தமிழ் நடையைக் கூர்ந்து ஆராய்வோர் இது பிற்பட்ட நடையென எளிதிற் கூறிவிடுவர். 'வேறாக வந்திருந்து என்பது நடையின் வேற்றுமையைத் தெற்றெனப் புலப்டுக்கின்றது.

மேற்காட்டிய காரணங்கள் 11-ம் திருமுறையிலுள்ள அந்தாதி முதலிய நூல்கள் சங்க காலத்திற்குப் பிற்பட்டன வென்பதையும், இவற்றை இயற்றிய நக்கீர தேவநாயனார் சங்கப் புலவராகிய நக்கீரர் அல்லரென்பதையும் தெளிவிக்கப் போதியவை. கற்றறிவாளர் எளிதில் ஒப்புக்கொள்ளும் இம் முடிபினைக் குறித்து இன்னும் பல கூறுதல் வேண்டற்பாலதன்று. இந் நக்கீரதேவநாயனார் இயற்றியருளிய திருவெழு கூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்படுதலின் இவரது காலம் 11-ம் நூற்றாண்டிற்குமுற்பட்டது. கண்ணப்பர் சரித்திரத்திற்குக் கொடுக்கும் தலைமையால், இவரை மாணிக்கவாசக சுவாமிகள் காலமாகிய 9-ம் நூற்றாண்டினராகக் கொள்ளுதல் பொருந்தலாம். சுவாமிகளும் 'கண்ணப்ப னொப்பதோரன்பின்மை கண்டபின்' (திருவாசக. 218) என்று கூறினர்.

இலக்கண ஆசிரியராகிய ஒரு நக்கீரரும் நமக்குப் புலப்படுகிறார். "அடிநூல்" என்ற செய்யுளிலக்கணமொன்று யாப்பருங்கல விருத்தியிற் காட்டப்பட்டுள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர் என்வும் குறிக்கப்பட்டுள்ளது இதினின்றும், என்ற சூத்திரம் மட்டுமே இப்போது நமக்குக் கிடைப்பது. நூற்பாவால் இஃது இயன்றதா தல்வேண்டும். இதனைப் பின்பற்றிக் கலிவிருத்தத்தால் இயன்ற பிறிதொருநூலும் முற்காலத்து வழங்கியதாதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில் 414-ம் பக்கத்தில் வரும் என்று வருஞ் செய்யுளால் இது தெரியவருகின்றது'[1]. இவ்விருத்தியுரையில் 'நாலடி நாற்பது' (பக். 32,121) என வொருநூல் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கலக்காரிகையில் இந்நூல் அவிநயரது யாப்பதிகாரத்துக்கு அங்கமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இது வெண்பாவினால் இயன்ற நூலென்பது விருத்தியுரை மேற்கோள்களால் விளங்கும். இதனை நக்கீரர் இயற்றியதாகக்கொண்டு நற்றிணைப் பதிப்பாசிரியர் அதன் முன்னுரையிற் குறித்தனர். டாக்டர் சாமிநாதையரவர்களும் தமது பத்துப்பாட்டுப்பதிப்பிற் பாடினோர்வரலாறு கூறுமிடத்தில் 'நக்கீரர் நாலடிநாற்பது' எனவே எழுதியுள்ளார்கள். இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரம் காணக்கூடவில்லை.
----
[1] 'அடிநூல்' நத்தத்தனார் இயற்றியதாக யாப்பருங்கலக்காரிகையுரைப் பதிப்பு ('அருகிக்கலி'-42) தெரிவிக்கின்றது. அடிநூலைப் பின்பற்றி யெழுந்த கலிவிருத்த நுலில் 'நக்-கீரனாரடி நூலுள்ளுங்கேட்பவே' எனக்காணுதலால், 'நத்தத்தனார்' என்பது பிழை யாதல்வேண்டும்.
----

இறையனார் களவியலுக்கு உரைகண்டவரும் இவர் தாமோ என ஐயுறற்கு இடமுண்டு. இவராகவே யிருப்பின் இவரது காலம் பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலைவராகிய நெடுமாறர்காலமாகும்; அஃதாவது 7-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். வேறொரு விஷயமும் இங்கே கூறுதற்குரியது. யாப்பருங்கலவிருத்தியில் (பக்.217) 'நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவுமெல்லாம் தூங்கிசைச் செப்பலோசை..........முத்தொள்ளாயிரத்து வண்ணத்தால்வருவனவுமெல்லாம் ஒழுகிசைச் செப்பலோசை'என்று காணப்படுகிறது [2.]
----
[2.] திருநெல்வேலி, ஸ்ரீ நெல்லையப்பக் கவிராயரவர்களது வீட்டிலிருந்து கிடைத்த யாப்பருங்கலபிரதியில் (பக்.113) 'நக்கீரர்' என்பது காணப்படவில்லை.
----

இங்கே நாலடி நானூறு, முத்தொள்ளாயிரம் என்பன நூற்பெயர்களாம். 'நாலடியார்' என இக்காலத்து வழங்கும் கீழ்க்கணக்கு நூலே நாலடிநானூறென்பது. மயிலைநாதர்'அளவினாற்பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடிநானூறு முதலாயின' என்பர் (சூ.48,உரை). காரிகையுரைகாரர் 'திருவள்ளுவப் பயன், நாலடிநானூறு முதலாகிய கீழ்கணக்குள்ளும்' என்பர் (40.உரை). நாக்கீரர் நாலடிநானூறு என்பது இறையனார் களவியல் என்பது போல, நக்கீரர் இயற்றிய நாலடி நானூறு எனப் பொருள் படுதல்வேண்டும் [3]. இஃது உண்மையாயின், இந் நக்கீரர் பெருமுத்தரையர் காலத்தவராவர். ஏனெனின் பெருமுத்தரையரை இரண்டிடங்களில் (200,296) நாலடி குறிப்பிடுகின்றது. இப்பெருமுத்தரையரது காலம் 7-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். இவர் செந்தலைச் சாசனத்தால் அறியப்படும் பெரும்பிடுகு முத்தரையராவர் (புதுக்கோட்டை மான்யுவல், வால்யூம் II,பகுதி I, பக்கம் 563-7), முற்குறித்த காலத்தோடு இதுவும் ஒத்துவருதலால், களவியலுரைகண்ட நக்கீரரே இந்நாலடி நானூற்றை இயற்றியவரென்பது அமைதியுறுகின்றது. நாலடி சமணநூலாதலின், இவர் சமணராதல் வேண்டும்.
----
[3]. இதனை ஒப்புக்கொள்வதிற் பல தடைகள் உள்ளன. ஆனால் நக்கீரர் நாலடி நாநூறு என்பதற்கு வேறு பொருள் கூறுதல் ஏலாது. யாப்பருங்கல வுரைக்குத் திருந்திய பதிப்பு வெளிவரின் இதனைத் தெள்ளிதின் அறியக்கூடும்.
----
முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் மிக முற்பட்டவராக இருக்கவேண்டும் என்பது ஆற்றுப்படையின் நடையைநோக்கிய அளவிலே எளிதில் ஊகிக்கத்தகும். இதன் நடை சங்கச்செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது. எனினும், சில வழக்காறுகள் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. என்ற இடத்தில் முடிமார் என்பதனை ஆறனுருபு தொக்க பெயராகக் கொண்டு, 'முடிப்பவருடைய மனத்திலே' எனப் பழைய உரையின் ஆசிரியரும், நச்சினார்க்கினியரும் பொருளெழுதினர்.வேறு பொருள் கொள்ளுதலும் அமையாது. எனவே, ஆற்றுப்படையின் ஆசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் வேண்டும். இப்பிரயோகம் இலக்கணத்தோடு பொருந்துவதன்றென்பது. என்ற தொலாப்பியச்சூத்திரமும் அதன் உரைகளும் நோக்கியறியலாம். அன்றியும், இலக்கணத்திற்குப் பொருந்தாமையோடு, சங்க இலக்கியவழக்கிற்கும் [4] முற்றும் மாறாகவுள்ளது. முருகாற்றுப் படையிலேயே பிறிதோரிடத்து (வரி-173) 'பெறுமுறைகொண்மார்........ வந்துடன்காண' என வழக்கொடு பொருந்திய பிரயோகமும் காணப்படுகின்றது.
----
[4]. செப்பங்கொண்மார் (குறுந்.16). செய்வினைமுடிமார் (குறுந்.309). பேண்மார் (அகம்.35) கொண்மார் (அகம்.67) உயம்மார்(அகம்.207). சாஅய்மார் (கலி.80) எள்ளுமார் (கலி.81) கொண்மார் (புறம்.15) அறுமார் (புறம்.93) உண்மார் (புறம்.163) இறுமார் (புறம்.232), இடுமார் (புறம்.325) முதலிய பிரயோகங்கள் யான் கூறியதனைத் தெளிவிக்கும். மயிலைநாதர் தமது நன்னூலுரையில் (326)' பாடனமாரெமரே (புறம் 375), எனப்பெயரொடு முடிதலும் கொள்க' என்றனர். இது சிந்தித்தற்குரியது.
----

இந்நூல் வேறோரிட்த்து(வரி-168) 'ஒன்பதிற்றிரட்டியுயர்நிலை பெறீஇயர்' என வருகின்றது. இங்கே 'பெறீஇயர்' என்ற சொல் கவனித்தற்குரியது. இவ்வாய்பாட்டுச் சொற்கள் எச்சமாகச் சில இடங்களிலும் [5] (தொல்.வினை.29) வியங் கோளாகப் பல இடங்களிலும் [6] (நன்னூல்,337) வருகின்றன. வேறு பொருள்களில் இவை வந்தனவாகத் தெரியவில்லை. இவ்வழகிற்கு மாறாகப் 'பெற்றவர்' என்னும் பொருளில் முறுகாற்றுப்படையில் வந்துள்ளது. வேறு பொருள் கூறுதல் ஏலாதாகலின், இதுவும் ஆசிரியர் கருதிற்றே யாதல்வேண்டும்.
----
[5]. உணீ இயர் (அகம்.106).உடீஇயா (அகம்.50) ----
[6]. நிலீஇயரோ (புறம்.2), செலீஇயா, நிலைஇயா (புறம்.24); பணியியர், செலியா; இலியர்(புறம்.6), பெறீஇயர் (குறுந்.75) பெறீஇயரோ (குறுந்.83,227); இறீஇயர் (அகம்.49); படீஇயர் (அகம்145); தவர்அலியரோ.அறாஅலியரோ (அகம்.338) பணீஇயர் (நற்.10). ----

இவ்வாறே மற்றோரிடத்துப் 'பெறலரும் பரிசில் நல்குமதி' (295) எனக் காணப்படுகின்றது. 'மதி' என்பது முன்னிலைக்குரிய அசைச்சொல்லாகும். இது, என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரப்படும். 'விடுமதி' (புறம் 382) 'நீத்த லோம்புமதி' (நற்றிணை, 10) முதலிய வழக்குக்களையும் காண்க. தன்மை, படர்க்கைகளில் இகும், சின் என்ற இரண்டு சொற்களும் வருமேயன்றி 'மதி' வருதல் இல்லை. இது,

அவற்றுள், என்னுஞ் சூத்திரத்தால் அறியலாகும். நச்சினார்க்கினிர் 'மதி' படர்க்கையிடத்தும் வரும் என்பதனைத் 'தகுநிலையுடைய (இடை.27) என்பதனானாதல், 'அவ்வச் சொல்லிற் கவையவை' (இடை.48) என்ற சூத்திரத்தானாதல் அமைத்துக்கொள்க என்று கூறினர். இது தம் கொள்கைக்குத்தாமே யாதாரம் ஆவதன்றிப் பிறிதில்லை. 'நல்கு' என்பதனை முற்றாக்கிநிறுத்து 'மதிபலவுடன்' என்றியைப்பது இலக்கண இலக்கிய வழக்குகளைப் புறக்கணித்தல் கூடாதென்னுங் கருத்தால் வலிந்து பொருள் கூறுதலேயாகும்; அது கொள்ளத் தக்கதன்று. ஆசிரியரது பெருந்தகுதியை நோக்கி இப்பிரயோகங்களை 'ஆர்ஷம்' எனக் கொள்ளுதலே தக்கதாகும். அவர் கருதியதும் படர்க்கைப் பொருளே யாம்.

சங்க நூல் வழக்கோடு இங்ஙனம் மாறுபடுதலேயன்றி, நக்கீரர் இயற்றிய மற்றைச் சங்கச் செய்யுள் வழக்கொடும் மேற்காட்டிய பிரயோகங்கள் முரணுகின்றன [7]. இவற்றை நோக்கும்போது இவ்வாற்றுப்படையை இயற்றியவர் தொகை நூல்களிற் காணப்படுபவரும், நெடுநல்வாடையின் ஆசிரியருமாகிய நக்கீரரின் வேறாவரெனத் தோன்றுகிறது.
----
[7] 'ஒழுகுமதி' எனப் புறத்திலும் (56) 'ஓம்புமதி' என நற்றிணையிலும் (358) வருகின்றன. 'நிலைஇயா' எனப் புறத்திலும்(56), 'தேயர்' என நற்றிணையிலும்(197) காண்கின்றன.'தருமார்'(141)', 'அயர்மார்' (205), 'நிறுமார்'(889) என அகத்திலும், 'அயர்மார்' என நற்றிணையிலும்(258), 'பெய்ம்மார்'(54), 'புணர்மார்'(67) 'அயர்மார்'என நெடுநல்வாடையிலுமுள்ளன. ஈண்டெல்லாம் இச்சொற்கள் மேலை முருகாற்றுப்படை வழக்கொடு மாறுபடுகின்றன.
----

இதற்கேற்ப, இருவரது உலகமும் வெவ்வேறாக உள்ளன. தொகை நூற்கவிஞருள் ஒருவராகிய நக்கீரர் சங்கப்புலவர்கள் பிறரோடொப்ப, அரசர்கள், குறு நிலமன்னர் முதலியோரது ஆதரவில் வாழ்ந்துவந்தவர்.பாண்டியர்களுள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவரது காலத்தரசன். இவன் ஆலங்கானத்துச் செருவில், என்ற செய்தியை நக்கீரர் அறிவுறுத்துப் புகழுகிறார். நெடுநல்வாடை என்னும் அழகிய செய்யுள் இவ்வாலங்கானத்துச் செருவையே குறித்ததென நச்சினார்க்கினியர் கூறினர். இவன் 'முதுநீர் முன்றுறை முசிறியை' முற்றுகையிட்ட செய்தியொன்றும் அகநானூற்றுச் செய்யுளால்(57) விளங்குகிறது.

இப்பேரரசன் பசும்பூட் பாண்டியன் (அகம்.253), பசும்பூட்செழியன் எனவும் வழங்கப்பட்டான். இது ஒரு புறநானூற்றுச் செய்யுளால் (76) புலனாகின்றது. கடற்கரையில் இவனுகுரிய மருங்கூர்ப் பட்டினத்தின் அழகையும், ஆவணத்தின் சிறப்பையும் பாராட்டிக் கூறுகிறார் (அகம்.227, நற்றிணை,258,358); இப்பட்டினம் தழும்பன் என்பவனது ஊணூருக்கு 'உம்பர்' உள்ளது (அகம்.227) கொங்கர்கள் இவனால் துரத்தியடிக்கப் பட்டார்கள்; அவ்வெற்றியால் பல நாடுகள் இவன் வசமாயின(அகம்.253). பெருங்குளம் ஒன்றை அமைத்துத் தனது நாட்டுக் கழனிகள் பயிர் செழிக்கச் செய்தனன்; இக்குளம் வாணன் என்பவனது சிறுகுடி என்னும் ஊர்க்கருகில் இருந்தது (நற்.340). மோகூர்மன்னனும் (மதுரைக்காஞ்சி.508) நெடுஞ்செழியனது வாய்மொழி கேட்பவனுமாகிய (மதுரைக். 772) பழையன்மாறன் கூடற்போரிலே கிள்ளிவளவனை வென்று கோதைமார்பன் என்னும் சேரன் மகிழும்படி வளவனது நாடுகள் பலவற்றைக் கவர்ந்து பாண்டிய நாட்டைப் பெருகச் செய்தனன் (அகம். 346). கூடல் நகரின் நாளங்காடியிலே பலவகை நறும் பண்டங்களும் வைக்கப் பெற்றிருந்ததனாலே இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது (அகம்.93). இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனும் நக்கீரர் காலத்தவனே. இவன் நெடுஞ்செழியனுக்கு எம்முறையினன் என்பது விளங்கவில்லை; ஒருகால் மகனாயிருப்பினும் இருக்கலாம். இந் நன்மாறனை நக்கீரர் (புறம். 56) பூவை நிலைத்துறையில், எனத் தெய்வங்களோடு ஒப்பிட்டு, என வாழ்த்துகின்றார்.

சோணாட்டில் உறந்தப் பிரதேசம் தித்தனுக்கு உரியதா யிருந்தது (புறம்.395). இவ்வுறந்தை நிதியாற்பெயர் சிறந்திருந்தது (அகம்.396). அங்கே அறங்கெழு நல்லவை யொன்றிருந்தது (அகம்.93). இந் நகரின் கீழ்பாலுள்ள பிடவூரில் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் வாழ்ந்து வந்தனன் (புறம்.395). காவிரிப்பூம் பட்டினத்தில் பொலம்பூட்கிள்ளி அரசு புரிந்து வந்தனன். இவன் கோசரதுபடையை அழித்து அவர்கள் நாட்டைக் கைப்பற்றினன் (அகம்.205) பழையன்மாறனால் இக்கிள்ளி தோல்வியுற்றான் (அகம்346). இடையாறு என்னும் நகர் முற்காலத்தில் கரிகால் வளவனுகு உரிமையாயிருந்து நக்கீரர் காலத்தும் சிறப்புற்றிருந்தது (அகம்.141). காவிரி பாயும் கூற்றமொன்றில் எவ்வி அரசு புரிந்துவந்தான் (அகம்.126). இவன் சொல்லைக் கேளாது திதியனுக்குரிய காவன் மரமாகிய புன்னையை விரும்பி அவனோடு அன்னி யென்பவன் பொருதழிந்தான் (அகம்.126).

சேரநாட்டிற் கோக்கோதைமார்பன் அரசு புரிந்து வந்தான் (அகம்.346). இவனுக்கு வானவரம்பன் என்றொரு பெயரும் வழங்கியது (அகம். 389). இவனது தலைநார் தண்ணான் பொருநையின் கரையிலுள்ள கருவூர் (அகம்.95). தொண்டியிலே குட்டுவன் அரசுபுரிந்தான் (அகம்.290).

மூவேந்தரும் பாரியின் பறம்பை முற்றுகையிடக் கபிலர் தமது மதித்திறத்தால் தூரத்தே நின்று நெற்கதிர்கள் கொணர்வித்துப் பஞ்சத்தை நீக்கினார் என்ற பழஞ்செய்தியை நக்கீரர் வியந்து பாராட்டுகின்றனர்(அகம்.78).

தொண்டைநாட்டிற் பொலம்பூட்டிரையன் கடற்கரைப் பட்டினமாகிய பவத்திரியில் அரசாண்டுவந்தனன்(அகம். 340). வேம்பியென்னும் நகரில் முசுண்டையென்னும் குறுநிலத்தரசன் சிறந்து விளங்கினான் (அகம்.249). அயிரியாற்றைத் தன்னகத்தே கொண்டநாட்டிலே வடுகர் பெருமகனாகிய எருமை யென்பவன் வாழ்ந்து வந்தனன்(அகம்.253). சிறுகுடி யென்னும் நகரிலே அருமன் என்ற ஒரு போர்வீரன் விளங்கினன் (நற்.367). கோடை யென்னும் மலையிலே மழவர் என்ற ஓரினத்தவர் இருந்தனர். இவர்கள் மயிற்றூவியாற்செய்த மாலையை அணிந்து வந்தனர் (அகம்.249).

யவனர்கள் மதுவை இயற்றிப் பக்குவப் படுத்தித் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு அரசர் முதலியோரை உண்பித்துக் களிக்கும்படி செய்தனர் (புறம்.56).

இந் நக்கீரருக்குத் தமிழ்நாடு தம்மைப் போன்றார் பெறும் பரிசிலின்பொருட்டு உளதாகிய உலகமாகத் தோன்றிற்று. இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈதலே அரசன் மேற் கொள்ளவேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர் (புறம்.56).செல்வத்துப் பயன் ஈதலே (புறம்.189) என வற்புறுத்துகின்றார். இப் பரிசிலின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களிலும் வள்ளல்கள் ஊர்களிலும் சுற்றித்திரிந்து பாடியிருக்கின்றார். தெய்வங்களைக் கூட மக்கட் பிறப்புவரை இழித்துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடற்குரிய பொருள்களாகி விடுகின்றனர். மகளிர் பொற்கலத்தில் ஏந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித்தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசி கூறுகின்றார்.

இவ்வுலகத்திற்கும் ஆற்றுப்படை யியற்றிய நக்கீரர் மன வுலகத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மறந்தும் பொருட்பரிசில் அவ்வுலகில் இல்லை. அரசர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் யாரும் அங்கில்லை. முத்தியாகிய பரிசிற்கே தாம் முயன்று பிறரையும் அவ்வழிச் செலுத்துகின்றார். 'தாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்பதே இவரது கொள்கை.கீழ் மக்களது அநாசாரமான வழிபாட்டினும் தெய்வங் கொள்கை கண்டு இன்புறுகிறார். யாண்டும் இறைவனுண்மையை உள்ளூர உணர்கின்றார். எனப் பறை கொட்டுகிறார். அவனது திருவிளையாடல்களைப் புராண வுலகிற் கண்டு களிக்கின்றார். இவர் முற்கூறிய நக்கீரரின் முற்றும் வேறாவர் என்பது சொல்லவும் வேண்டுமோ? தாம் வழிபடுந் தெய்வத்தோடு மக்கட் பிறப்பினனொருவனை இந் நக்கீரர் ஒப்புக்கூறுவரா என்பதையும், தெய்வபத்தியிற் சிறந்த இப்புலவர், 'மதுவைப் பொற்கலத்தேந்தி மகளிர் ஊட்ட மகிழ்ச்சியோடு இனிது ஒழுகுவாயாக' என ஓரரசனை வாழ்த்துவரா வென்பதையும் சிந்தித்தல் வேண்டும்.

தொகைநூற் புலவராகிய நக்கீரர் சிறந்த கவித்வம் படைத்தவர். அவரது நெடுநல்வாடை சங்கச் செய்யுட்களில் முன்னணியில் வைத்தற்குரிய தகுதி வாய்ந்தது. இவ்வரிய செய்யுளில்வரும் சில செய்திகள் இவரது காலத்தை ஒருவாறு அறுதியிடுவதற்கு உதவுகின்றன. மதுரை மாடமோங்கிய மல்லல் மூதூராக விளங்குகின்றது. அதன் தெருக்கள் ஆறுகிடந்தனபோன் றுள்ளன. அங்கே மிலேச்சர்கள் மாலைப்பொழுதில் தேறலையுண்டு, மழை தூற்றிக்கொண்டிருக்கவும் அதனைப் பொருட்படுத்தாது தெருக்களில் திரிகின்றார்கள். அரசனது அரண்மனை மிக்க அழகு வாய்ந்துள்ளது. அதனை மனைநூல் விதிப்படி ஒரு நன்னாளில் தொடங்கி இயற்றினர். வாயில் நிலையின் உத்தரக் கற்கவி நடுவே திருவும் அதன் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரக் கற்கவி எனப்படுகின்றது. 'உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற செருகுதல் பொருந்தின பெரியமரம்' என்பது பொருள். அரண்மனையிற் கர்ப்பகிருகம் ஒன்று மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இம்மனைப்பகுதி, என்று கூறப்படுகிறது. அந்தப்புரத்தில் அரசியிருக்கும் கட்டிலின் மேற்கட்டியில், எழுதப்பட்டுள்ளது.

மேற்காட்டிய அடிகளிலே மனையமைப்பிற்குரிய வடமொழிப் பெயர்க் குறிப்புக்கள் வந்துள்ளன. மேஷ ராசியிலிருந்து தொடங்கிப் பன்னிரு ராசிகளிலும் சூரியன் செல்கின்றமை குறிக்கப்பட்டிருக்கிறது. உரோகிணி நக்ஷத்திரமும் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர்களிடமிருந்து ராசியைப் பற்றிய அறிவு சுமார் கி.பி.200-ல் தமிழ் நாட்டிற் புகுந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இதற்கேற்ப, யவனரும் நக்கீரரால் குறிப்பிடப்படுகின்றனர். எனவே சுமார் கி.பி.250-ல் நக்கீரரால் நெடுநல்வாடை இயற்றப்பட்டிருக்கலாம். கபிலர், பாரி, கரிகாலன் முதலியோர்களெல்லாம் இந்நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்டவராகலாம். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இவராகவிருக்கலாம். சங்க காலப் புலவர் இவரேயாதல் வேண்டும்.

முருகாற்றுப்படை இயற்றப்பெற்றகாலத்தில் பௌராணிகச் செய்திகள் தமிழ் நாட்டிற் பரவிட்டன. சங்க காலத் தமிழ்வழக்காறுகளும் நன்குணரப்படவில்லையென்பதும் மேலே காட்டப்பட்டது. ஆதலால், சங்கப் புலவராகிய நக்கீரருக்குப் பல நூறாண்டுகளின்பின் அவர் பெயர் கொண்ட பிறரொருவரால் முருகாற்றுப்படை இயற்றப் பட்டதாகலாம். இவ்வாற்றுப்படை 11-ம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதும் இப்பிற்காலத்தையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை நக்கீர தேவநாயனார் என 11-ம் திருமுறை கூறும்.

பத்துப்பாட்டு சங்க நூலாயிற்றே! அதன் கண் உள்ள ஒரு நூல் சங்ககாலத்திற்குப்பின் தோன்றியதெனக்கூறல் அமையுமோ? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். ஆனால், சில குறிப்புக்கள் ஞாபகத்தில் வைக்கத் தகுந்தன. தொகை நூல்களிற் பெரும்பாலனவற்றைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் இவரென்று அவ்வத் தொகுதியின் இறுதியிற் காணப்படுகின்றது. எஞ்சியுள்ளன முற்றும் அகப்படவில்லையாதலால் அவைபற்றி இவ்விவரங்கள் அறியக்கூடவில்லை. பத்துப்பாட்டு அங்ஙனமன்று. முற்றுங் கிடைத்துவிட்டது; எனினும் இவ்விவரங்கள் காணப்படவில்லை.

இதனால், தொகை நூல்களோடொப்ப அவை தொகுக்கப் பெற்ற காலத்தில் பத்துப்பாட்டுத் தொகுக்கப் பெறவில்லை யென்பது தெளிவு.'பத்துப் பாட்டு' என்ற பெயரும் இத்துணிபினையே ஆதரிக்கின்றது. தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் அமைந்துள்ளதைப்போல முருகாற்றுப்படை முதலாவது வைக்கப் பெற்றிருப்பதை நோக்கினால், அவற்றைப் பின்பற்றி இந்நூல் முற்படக் கோக்கப்பட்டதாதல் வேண்டும். பத்துப்பாட்டிற் செய்யுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப் பெயர் கொண்டே இளம்பூரணர் முதலியோர் எடுத்தாண்டுள்ளார்கள். களவியலுரையில் கடைச்சங்க வரலாறு கூறுமிடத்துப் பத்துப் பாட்டு என்பது குறிக்கப்படவில்லை. மலைபடு கடாத்தின் உரையில் (அடி-145) "சங்கத்தார் நீக்காது கோத்தற்குக் காரணம்" என்று பொதுப்பட எழுதிச் செல்வது கோத்தார் இவரெனக் கூற வியலாமையையே புலப்படுத்துகிறது. எனவே சௌகரியங் கருதி ஒரு முறையில் எழுதிக்கோத்த நீண்ட பாடல்களைப் பிற்காலத்தார் 'பத்துப் பாட்டு' என வழங்கலாயினர் என்றலே அமைவுடைத்தெனத் தோன்றுகிறது. இவ்வழக்கு கி.பி.14-ம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைத்துவிட்டதென்பது மயிலைநாதர் 'பத்துப்பாட்டு, பதிணெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுள்ளும்' (நன்.387, உரை) எனக் கூறுவதால் விளங்கும். 'பாட்டு' எனக்குறிப்பிடும் வழக்காறும் நாளடைவில் உளதாயிற் றென்பது' பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டுகொள்க.' எனப் பேராசிரியர்(தொல்.செய்.60) கூறுவதால் அறியலாகும்.

மேலெழுதியவற்றாற் பெற்ற முடிபுகள் கீழே தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன:

காலம் நூல்கள் சமயம்
1. சங்க-நக்கீரர் / கி.பி.250 நெடுநல்வாடை,
தொகைநூற் செய்யுட்கள்
1
2.இலக்கண-நக்கீரர் / கி.பி.650 அடிநூல், களவியலுரை சமணம்
3. நக்கீரதேவநாயனார் / கி.பி.350 முருகாற்றுப்படை முதலிய
11-ம் திருமுறைப் பிரபந்தங்கள்
சைவம்

முருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத்தவிரப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. பண்டையுரை காரர்கள் மீது சுமத்தப்பட்ட உரைகளும் அச்சிலிருகின்றன. உதாரணமாக, தி.சன்முகம்பிள்ளை யவர்களால் பார்த்திப வருஷ மேடரவியில், சென்னை ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் 'பரிமேலழகருரை'யென ஓருரை பதிப்பிக்கப்பட்டது. இதனையே மாகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் பத்துப் பாட்டின் 3-ம் பதிப்பில்' வேறுரை' என அடிக்கிறிப்பிற் காட்டி யிருக்கின்றார்கள். பரிமேலழகர் இவ்வுரையை இயற்றவில்லை யென்னுங் கருத்தோடுதான் இதனை 'வேறுரை'ன ஐயரவர்கள் குறித்துள்ளாரென நினைக்கிறேன். இதனைப் போன்றே 'உரையாசிரியருரை' என ஏட்டுப் பிரதியில் எழுதப் பெற்ற ஓருரையுளது. இதனை மதுரைத் தமிழ் சங்கப் பிரசுரமாக யான் வெளியிட்டுள்ளேன். உரையாசிரியர் என்று சிறப்பித்டுச் சொல்லப்படும் இளம் பூரணவடிகள் இவ்வுரையை இயற்றியவரல்லர் என்பது உரையின் நடையை நோக்கிய அளவிற் புலனாம்.

ஆனால் ஏட்டுப்பரதி 994-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 30-ம் தேதி எழுதப்பெற்றது. எனவே இற்றைக்கு 134 வருஷங்களுக்கு முன் பிரதி செய்ததாகும். எப்பொழுது இவ்வுரை வகுக்கப் பெற்றது என்பது அறியக்கூடவில்லை.இவ்வுரையும் நச்சினார்க்கினியர் உரையும் பெரிதும் ஒத்துச் செல்கின்றன. 'வசிந்துவாங்கு நிமிர்தோள்' (106-ம் அடி) என்ற தன் உரையில் 'வளையவேண்டுமிடம் வளைந்து நிமிர வேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்' என நச்சினார்க்கினியர் தமக்கு முற்பட்ட உரைகாரர் ஒருவரைக் குறிப்பிடுன்றார். 'உரையாசிரியர்' உரையில் இப்பொருளே காணப்படுகிறபடியால், இவ்வுரை நச்சினார்க்கினியர்க்கு முந்தியது எனக்கொள்ளுதல் அமையும். உத்தேசமாக கி.பி. 14-ம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப்பெற்றதாகலாம்.

இது ஒரு சிறந்த பழையவுரையாகும். யாவரும் அறியக்கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப்பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வுரையால் இதுகாறும் கருகலாயிருந்த ஓர் அரிய தொடருக்கு இப்போது பொருள் விளங்குகிறது. 216-ம் அடியிலுள்ள 'தலைத்தந்து என்பதற்கு 'முதற்கைகொடுத்து' என நச்சினார்க்கினியர் எழுதினர். புறநானூறு 24-ம் செய்யுளில் 'தலைக்கை தரூஉந்து' என்பதற்கு அதன் பழையவுரைகாரர் 'முதற்கை கொடுக்கும்' என்றெழுதினர். 73-ம் கலியுள் 'துணங்கையுட் டலைக்கொள்ள' என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே ......தலைக்கை கொடுத்தற்றொழிலை......கொள்கையினாலே" என நச்சினார்க்கினியர் விளக்கினார். ஆனால் தலைக்கை கொடுத்தல் அல்லது முதற்கை கொடுத்தல் என்பதன் பொருள் இதுகாறும் விளங்கியபாடில்லை. இவ்வுரைக்காரர் ‘அவர்கள் (மகளிர்கள்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து’ என்றெழுதுகின்றார். இவ்வுரை பழய வழக்காற்றினை யுணர்ந்து எழுதியதாகத் தோன்றுகிறது; பொருளும் விளங்குகின்றது.

முருகாற்றுப்படை எவ்வளவு பிற்பட்ட காலத்ததாயிருப்பினும், அது சைவ நன்மக்களுக்குப் பாராயண நூலாய் அமைந்துவிட்டது. சிறந்த ஓர் இலக்கியமாகவும் அதுகொள்ளற்குறியது. அதனைப் பொருளுணர்ந்து கற்றல் தமிழ் மக்கள் அனைவர்க்கும் கடனாம்.

4. நெடுநல்வாடையும் நக்கீரரும்@


@ ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி 1912-ல் எழுதிப் பாளையங் கோட்டை சைவ சபையில் பேசப்பட்டது. பின்னர். 1937-ல் திரு. ச.த. சற்குணர் B.A., அவர்களின் அறுபதாவது ஆன்டு விழா மலரில் வெளிவந்தது.

செந்தமிழணங்கு தன் மக்களாகிய சங்க மருவிய சான்றோரைத் துணைக்கொண்டு தனது நெறிவழியே செல்ல, காலமென்னும் ஆறலை கள்வன் வழிமறித்து அவளது அணிகலன்களையெல்லாங் கவர்ந்துகொள்ள முயன்றனன். துணை வந்த சான்றோர்கள் அவனைத்தகைப்பவும், அவன் அதிக்கிரமித்து ஆபரணங்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டனன். ஒரு சிலவே எஞ்சின. இவற்றை சேகரித்து அச் சான்றோர்கள் தம் அருமைத் தாயாராகிய தமிழ் மடவரலது கையிலுய்ப்ப, அம்மடவரல் தானும் பிற்காலத்துள்ள தனது மக்கட்கென வழிமுறையே உரிய மாநிதியாக உதவியவைகளில் "பத்துப்பாட்டு" என்னும் அரும்பெறல் மணிக்கோவையும் ஒன்றாம்.

இம்மணிக் கோவையினுள்ளே ஏழாவது மணியாக நின்று மிளிர்வது நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட 'நெடுநல்வாடை.' இம்மணியினது உயர்வைப் பரிசோதித்தற்குச் சிறந்த ரத்ன பரிசோதகன் ஒருவன் வேண்டுமென்பது மலையிலக்கு. அங்ஙனமிருப்பவும், யான் அத்தொழிலை மேற்கொண்டது தமிழரசியார் மாட்டு எனக்கு உள்ள பக்தியினது பெருவலி ஈர்த்துச் செல்லுதலானென்க.

பாட்டுடைத் தலைவன்

நக்கீரனாரென்னும் புலவர்பெருமான் தலையாலங் கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவனாகக்கொண்டு இயற்றியது இந்நூல். பாண்டியன் நெடுஞ்செழியன் பகைப்புறஞ் சென்று மண்டமர் தசையோடு கண்படை பெறாது பாசறைக் கண்ணேயிருப்ப அவனோடு இன்புற்றிருக்கப் பெறாது அரண்மனையிலே தனித்திருந்து தனது இன்னுயிர்த் தலைவனது பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சழிந்து வருந்திக் கொண்டிருக்குந் தலைவியை அவன் விரைவில் அடையக் கடவனென்று கொற்றவையைப் பரவுவாள் கூறியதாக அமைந்துள்ளது இப்பாட்டு.

இனி, பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையொடு பொருது அவனைச் சிறைப்படுத்தி அவற்கு உதவியாக வந்த திதியன் முதலிய எழுவரையும் விண்ணுலகேற்றிய வீரனாவன். இவன் முன்னோரெல்லாம் போரில் தலை நின்று புகழ் நிறுவிய சிறப்பினரென்பது, என்னும் புறநானூற்றுச் செய்யுளால் (18) நன்கு அறியக் கிடக்கின்றது. இவன் தலையாலங்கானத்தில் செருவென்ற வீரனென்பது, என்ற அடிகள் (புறம், 23) விளக்குகின்றன. இவன் வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும், பழைய வேளிருடைய முத்தூற்றுக் கூற்றத்தையும் கைக் கொண்டவனென்பது, என்னுஞ் செய்யுட்பகுதி (புறம்.24)தெரிவிக்கின்றது. இவன் செருவென்ற பொழுது பகைவரது முரசங் கைக்கொண்டானென்பது, என்னும் வரிகள் (புறம்.25) புலப்படுத்துகின்றன.
என்னும் அடிகள் (புறம்.72) இவனுக்குத் தமிழ் புலவர்கள் மாட்டுள்ள அன்பினையும் நன்குமதிப்பினையும் இவனது ஈகைக் குணத்தையும் மதுரைகாஞ்சி இயற்றிய மாங்குடி மருதனார் இவனது வாயிற்புலவர் என்பதையும் நன்கு வலியுறுத்துகின்றன. இவன்செருவென்ற காலத்தில் ஆண்டின் இளையவனென்பது, என்னும் அடி (புறம்.78) உணர்த்துகிறது. இவ்வாறே இவன் தற்பெருமையுடையானல்ல னென்பது புறநானூற்று 77-ம் செய்யுளாலினிது பெறப்படுகின்றது. இவனது குணாதிசயங்கள் இவ்வாறுள்ளன. இனி இவன் வாழ்ந்து அரசு புரிந்த காலம் இதுவென நிச்சயிக்க முயலுவோம்.

காலம்

பண்டைக்கால ஆராய்ச்சியிற்றலையிட்ட அறிஞர்களுக்குள்ளே, டாக்டர். S. கிருஷ்ணசாமியையங்காரவர்கள் முன்னணியில் நிற்பாராவர்.இவர்கள் "கடை வள்ளலார் காலம்" என்றதோர் வியாசம் வெளியிட்டுள்ளார்கள். அதில் கடைச்சங்கப் புலவர்கள் என்று கருதப்பட்டவர்களுட் பலர் கி.பி.100 முதல் 300 வரையிலுள்ள காலத்தில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தார்களென்றும், அப்போது பாண்டியர்களில் நெடுஞ்செழியனும், அவன் மகன் இளஞ்செழியனும் அவன் மகன் தலையாலங்காலத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழர்களில் கரிகாற் பெருவளத்தானும் அவன் பௌத்திரன் கோக்கிள்ளியும், சேரர்களிற் செங்குட்டுவனும் அரசுபுரிந்து வந்தனர் என்றும் நிறுவியிருக்கிறார்கள் [1]. இவர்கள் காலஞ்சென்ற ஸ்ரீ வி. கனகசபைப் பிள்ளையவர்களைப் பின்பற்றியே இம்முடிபிற்கு வந்துள்ளார்கள். ----
[1]. இங்குக் குறித்த முறைகளெல்லாம் வெற்றூகங்களேயாம். ஆதாரம் எதுவும் இல்லை.
----
பிள்ளையவர்கள் கரிகாற் பெருவளத்தானுக்கும் கோக்கிள்ளிக்கும் இடையில் நலங்கிள்ளி யென்டொருவன் இருந்ததாகக் கொள்வார்கள். இலங்கையரசனான முதற்கஜபாகு கண்ணகி யென்னும் பத்தினிக் கடவுட்குச் செங்குட்டுவன் கோயிலமைத்தபோது வந்திருந்தான் என்றும், அவனும் இளஞ்செழியனும், உறையூர்க்கிள்ளியும் அக்கடவுட்குத் தனித்தனியே கோயிலமைத்தார்களென்றும் சிலப்பதிகாரத்தால் விசதமாகின்றது. கஜபாகுவின் காலம் கி.பி. 171-193 என்று இலங்கைப் புராதன சரித்திரமாகிய மகாவம்சத்தினைப் பதிப்பிட்ட கெய்கர் (Geiger) கூறுவர். இதனாலே இளஞ்செழியனுக்குப் பின் அவன் மகன் நெடுஞ்செழியன் அரசாட்சி செய்தது கி.பி. 225-ஐ அடுத்த காலம் என்பது தெளிவாகின்றது.

இறையனா ரகப்பொருளுரை உக்கிரப் பெருவழுதி யார்காலத்து நக்கீரர் இயற்றினாரென்பது கன்னபரம்பரைச் செய்தி. இவ்வரசன்றான் முதல் நெடுஞ்செழியன் என்பது ஐயங்காரவர்களுக்கும் பிற அறிஞர்களுக்கும் கருத்தாகும். அங்ஙனமே கொண்டால், இவனது பௌத்திரனான தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் காலத்தும் நக்கீரர் இருந்து அவனது வென்றிச் சிறப்பைப்பற்றி நெடுநல்வாடை யியற்றினார் என்பது போதரும். இதற்கேப்ப இளஞ்சென்னியைப்பற்றி அவன் கண்ணகியார்க்குக் கோயில் சமைத்தானென்ற செய்தியன்றி வேறொன்றும் நூல்களிற் காணப்படாமையாலே இவன் சிறிது காலந்தான் உயிர் வாழ்ந்து அரசு புரிந்தான் என்பது வெளியாகின்றது. 'பொருநனு மிளையன்' என்று புறம் 78-ல் நெடுஞ்செழியன் குறிக்கப்படுவதால், அவன் தலையாலங்கானத்துப் போர் புரிந்தபோது இளங்காளையா யிருந்தானென்று யான்மேலே சுட்டியதும் ஈண்டைக்கு அமைவுடைத்தாதல் காணப்படும். ஏனெனில், அவன் முதியனான பின்றையே போர் நிகழ்த்தினானெனின், நக்கீரர் அத்துணைக்காலம் உயிர் வாழ்தல் அசம்பாவிதமாகலான். இக்கூறியவற்றையுற்று நோக்கும் போது உக்கிரப் பெருவழுதியும் ஆண்டில் இளைஞனாகவே யிறந்திருத்தல் வேண்டும், அல்லாக்கால் அவன் விருத்தனா யிருக்கும்போது நக்கீரர் இளைஞராயிருந்தாராகல் வேண்டும். இவர் சங்கப் புலவர்களுக்குள்ளெல்லாம் தலைமை பெற்றாராகலின் இவ்வாறு கொள்ளுதல் அத்துணைப் பொருத்த முடையதன்று.

இக்காரணங்களால் நக்கீரர் ஆண்டின் முதியவராயிருந்தபோது நெடுநல் வாடை யியற்றினாரென்பதும் அப்பாட்டுடைத் தலைவனது காலம் 3-ம் நூற்றாண்டின் முற்பகுதியாயிருக்கலா மென்பதும் நிச்சயித்தல் தகும்.

இந்நூலில் வரும் ஜோதிஷக் குறிப்பும் பிற செய்திகளும் இத்துணிவினையே வலியுறுத்துகின்றன,

தலைக்குறிப்பாராய்ச்சி

இனி, நெடுநல்வாடை யென்ற செய்யுளின் தலைக்குறிப்பைப்பற்றி சிறிது சிந்தனை செய்வோம். இப்பெயர் நெடிதாகிய நல்லதோர் வாடையென விரிதலில் பண்புத்தொகையாகும். பகைவர்மேற் சென்ற தலைவனைப் பிரிந்து இராக்காலங்களிற் சிறிதும் இமை பொருந்தப் பெறாளாய் இருக்கும் தலைவி மிகவும் வருத்தத்தோடு உயிர் தாங்குபவளாதலியற்கை. மற்றைய காலங்களைக் காட்டினும் வாடைக் காலத்தில் நுகர்ச்சி விருப்பம் மிகுதி நிகழ்வதாகும். ஆதலால் அக்காலத்தே அது நுகரப் பெறாதது மட்டுமின்றி இன்னுயிர் மணாளன் தன்னருகிருக்கவும் பெறாதாளாகிய தலைவிக்கு ஒவ்வொரு நொடியும் ஓரூழியாகத் தோன்றும் என்பது வெளிப்படை. ஆகவே, அவட்கு இக்காலம் நெடியதோர் வாடைக் காலமாயிற்று. தலைவற்கோவெனில், அவனது விருப்புப் போகத்தின்கண் மட்டும் நிகழ்வதொன்றன்று. பல அரசர்கட்குள் ஒருவன் எனப் பொதுவாக வைத்தெண்ணப்படுதலை வேண்டாது, அவருளெல்லாம் தலைமை பெற்றானிவன் என்று புகழப்படு தலைவேண்டி, போகத்தின்கண்மனமற்று, தன்னோடொப்ப வீற்றிருந்த அரசர்கள்மேற் படையெடுத்து வேற்றுப் புலத்துப் போதலை மேற்கொள்ளுகின்றான். பிற அவாவின் கண் எவ்வளவு தூரம் இவன் பற்றறுகின்றானோ அவ்வளவு தூரம் தான் மேற்கொண்ட தொழில் மேலேயே கருத்துக்கொண்டு மனவலிமையுடையனாகின்றான்.

ஆகவே, அவனது நோக்கத்தை முற்றுற முடித்தற்கு மனவெழுச்சியை யூக்குதலினாலே, இஃது அவற்கும் நல்லதோர் வாடைக்காலமாயிற்று.

இச்செய்யுள் தானும் தலைவன் பிரிந்தமைகூறி, போர்க்களத்தே அவனை வெற்றியெய்த வைத்தலின், இது பாலையும் அதற்குப் புறனாய வாகைதிணையுமாயிற்று. பாலையினது இயல்பு பிரிதல்; வாகையினது இயல்பு பகைவரை வெல்லுதலும் வெல்லுதல் நிமித்தமும் ஆம்.

நூலிற் பொதிந்த பொருள்

இனி நெடுநல்வாடை யென்னும் செய்யுளிற் பொதிந்த பொருளினைச் சுருங்க வுரைக்கின்றேன். தலைவி, தலைவன் பிரிந்தமையை ஆற்றாளாய், அவன் வரும் வழிமேல் விழி வைத்துக் கழிக்கும் குளிர்கால இரவினுள் ஒன்றைப் புலவர் பெருமானாகிய நக்கீரர் வருணிக்க எடுத்துக்கொண்டார். இரவுப் பொழுதை வருணிக்க எடுத்துக்கொண்டதன் காரணம் என்னென்று சிறிது சிந்தித்தல் வேண்டும். பகற் போதில், ஈண்டெடுத்துக்கொண்ட அரசியைப் போலும் ஒரு தலைவி தோழியர் பலர் தம்மைப் புடைசூழ இருப்பர்.இவர் பிரிவினால் வருந்துவதை அவர்கள் கண்ணுற்றால், தேறுதல் சொல்லுதல் ஒருதலை. அன்றியும், அரசியர்க்குக் கணவனது நினைவுண்டாகா வண்ணம் பகற் காலத்துப் பற்பல ஆடல் பாடலள் நிகழும். மேலும் பகற் பொழுது போகந் துய்த்தற்குரிய காலமுமன்று: தத்தம் இருக்கை ஏகுதலினாலே, தனிமையாயிருக்க நேர்ந்த தலைவிக்கு ஊற்றுக்கண் போலும் அவளது நெஞ்சிலே நினைவு ஒன்றன்பின்னொன்றாய் உதித்துக் காமம் கைம்மிக அளக்கொணாத் துயர அளக்கரில் விழுதலின், அக்காலம் நெடியதாய்த் தோன்றுமென்க.

இவ்வண்ணமாகத் தலைவிக்குநெடியதாயும், தலைவற்கு நல்லதாயும் உள்ளது வாடை. தலைவியை நோக்கும் போது அகத்திணையாகவும் தலைவனை நோக்கும்போது புறத்திணையாகவும் இச் செய்யுள் அமைந்தது.நூலின் கண்ணும், வாடைக் காலத்தை வருணித்தபின்னர், தலைவிக்கு இரவு நெடியதாயவாறும், தலைவற்கு அக்காலம் நல்லதாயிருகுமாறும், தலைக்குறிப்புச் சொற்களை நிறுத்த முறையிலே கூறுதல் ஈண்டுநோக்கிக் கொள்க. மேற் கூறியவற்றால், இந்நூல், அகமும் புறமும் விரவி வந்து இனிமைபெற்றுள்ளது என்பது தெளிவாம். அகம் ஈன்றதில் ஒரு சிறு வேறுபாடு நோக்குதற்குரியது. சுட்டி யொருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகமாயிற்று (தொல். அக்த். 54.) 'வேம்புதலையொத்த நோன்காழெஃகம்' என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று. எனவே, புறத்தோடு இயைவதற்கு ஓர் இடைப்பட்ட தன்மையை இவ்வகம் கொண்டுள்ளது. ஒரு செய்யுளில், அகத்தை மட்டும் அல்லது புறத்தைமட்டுங் கூறினால், அஃது இத்துணைச் சிறப்புப் பெறாதென்பது சொல்லாமே அமையும்.

இப்போது கார் காலமாகையால் மேகம் பருவம் பொய்யாமல் புதுப் பெயலைப் பொழிந்து சிறிது இடைவிடிருக்கின்றது. ஆறு முதலியன பெருக்கெடுத்து ஓடுகின்றன. இடையர்கள் பசுநிரைகளைத் தம் ஊர்க்கு அண்ணிய இடத்திலே மேய்த்துத் தம்மூரின் கண்ணேயே தங்கப்பெறாமையாலே வருந்துகிறார்கள். அவர்கள் வெள்ளத்தை முனிந்து தூரவிருக்கும் மேட்டு நிலத்தின்கண்ணே தம் பசுநிரைகளை மேயவிட்டுப் போகட்டு, பற்பறை கொட்டக் குளிர் தாங்கமாட்டாது நடுங்குகிறார்கள்; பலரும் ஒருங்குகூடி நெருப்பெழுப்பித் தம் கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கன்னத்திலே உய்த்துக்குளிர் ஒருவாறு நீங்கி யிருக்கிறார்கள். விலங்குகள் இரை தேடற்றொழிலை மறந்து ஒடுங்கி யிருக்கின்றன. குரங்குகள் குளிர் மிகுதியால் நடுக்கமெய்தி உறுப்புகளைச் சுரித்து வலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் கொடுமையால் பறவைகள் நிலத்தே வீழ்கின்றன.எனினும், கொக்குக்கூட்டமும் நாரைகளும்பு துப்புனல்வரும் வேகத்திற்கு ஆற்றாதுவிலகி, ஓடுதலில்லாத நீர் இருக்கும் இடங்களிற் பாயுங் கயல் முதலிய மீன்களின் மேற்கருத்து வைத்தனவாய்த் தத்தித் தத்தி இயன்றமட்டும் பறந்து வந்து இரை கொள்ளுகின்றன. பசுக்கள் தம் கன்றுகளின் மேல் இயற்கையிலேயே கொண்ட அன்பை மறந்து, அவைகளை உதறி உதைக்கின்றன. அமோகமாய் வருஷித்த மேகமும் இப்போது சிறு துவலையாகப் பிலிற்றுதற்குக் கற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று.

இவ்விதமான கிராமாந்தரங்களிலிருந்து நாம் நகர்ப்புறமணுகியதும், வயற்புறங்கள் தோறும் நீர் வளத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி இறைஞ்சி நிற்பதையும், அடிபருத்த கமுகினது பாளைவிரிந்த தாறுகளில் பசிய காய்கள் நீர்திரண்டு புறம் பருத்து முற்றிக் குலை குலையாய்த் தொங்குவதையும், பூக்கள் நிரம்பிய குளிர்ச்சியான சோலைகளிற் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து தழுவி நிற்ப அவைகளிலிருந்து மழைத் துளிகள் இடையறாது வீழ்ந்து கொண்டிருப்பதையுங் காணப் பெறுகின்றோம். இத்தகைய இரவில் அரசியார் கண்படுக்கும் பள்ளியறைக்கு நாம் சென்று அவ்விடத்து அவரெய்துறும் பருவரலுக்குள்ளுடைந்து அநுதபித்தலியலும். அங்கே சென்று எய்துதற்கு, நகரத்திற்கு வெகுதூரத்திலுள்ள கிராமப் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு நம்மையுமுடன்கொண்டு போதுகின்றார் நக்கீரர்.

புலவரோடு கூட நகர்க்குள் நாம் பிரவேசித்ததும் மாலைக்காலமாகின்றது. தெருக்கள் ஆறு கிடந்ததுபோல அகன்று நெடியதாயிருக்கின்றன. அங்கே அழகிய திண்ணிய தோளினையும் தேகப் பயிற்சியால் சதைகள் ஏறப்பெற்று முறுக்குண்ட மேனியையுமுடைய மிலேச்சர்கள் கள்ளுண்ட மகிழ்ச்சியால் தலைதடுமாறி மழைத் துவலையை யும் சிறிதுங் கருதாதவராய், பகல் கழிந்து விட்டமையையும் நோக்கா தவராய், துகில்களை முன்னும் பின்னும் நால விட்டுக் கொண்டு, தமக்கு வேண்டிய விடத்தெல்லாம் திரிவதைக் காண்கின்றோம். தெருவில் இருமருங்குமுள்ள மடவரல் மகளிர் பருவத்தின் தன்மையால் இரவும் பகலும் தெரியாதவராய் மயங்கி, பின் பூந்தட்டிலே இட்டு வைத் திருக்கும் பிச்சிப்போதுகள் மெல்லென முகையவிழ்ந்து நறுமணங் கமழுகையினாலே அந்திகாலமாயிற்றென்பதை யுணர்ந்து, இரும்பினால் செய்த தகளியில் நெய்வார்த்துத் திரியிட்டு விளக்கேற்றி, நெல்லும் மலருந் தூவிக் கை தொழுகின்றார்கள். அங்காடிகளெல்லாம் மாலைக்காலத்தே மிகச்சிறப்புடனே விளங்குகின்றன.

இங்ஙனம் பொழுதறிந்து கோடற்கு வகைதெரியாத மனையுறை புறவுகள் தம் பேடுகளுடனே இரைதேடற்குச் செல்லாது, ஒரே நிலையிலிருந்து கடுத்த காலானது ஆறும்படியாக இடம் மாறி மாறிப் பெயர்ந்து, கபோதகத்தலையில் இருக்கின்றன. வேனிற்காலத்தே உபயோகப்படும் தண்ணறுஞ் சாந்தமும் சிலாவட்டமும் இப்போது குளிர்ச்சி மிகுதியினால் மகளிர்க்கு வேண்டப்படாது கழிய, அவர்தங் குற்றேவலாளர்கள் கொள்ளின் நிறத்தை யொத்த சாத்தம்மியிற் கஸ்தூரி முதலிய பசுங்கூட்டு அரைக்கின்றார்கள். அம்மகளிர் மாலை யணிந்து கோடலை விரும்பாதவராய்ச் சின்மலர் பெய்து முடித்தலை வேண்டி, தம் கூந்தற்கு அகில் முதலியவற்றா லுண்டாகும் நறும்புகையை ஊட்டுகின்றார்கள். கைவல் கம்மியன் அழகுபெற இயற்றிய ஆலவட்டங்கள் உறையிடப்பட்டுச் சிலம்பியினது வெள்ளிய நூல் அவைகளிலே பற்றிப் படர்ந்திருப்ப முளைக்கோலிலே தொங்குகின்றன. வேனிற் காலத்துத் துயில் கொள்ளும் மேன்மாடத்தின் அறைகளில் தென்றற் காற்று மெல்லெனத்தவழும் சாளரங்கட்கு எதிரே நின்று உலாவாது, அச்சாளரங்களை நன்கு பொருந்த அடைத்துத் தாழிட்டு, இளையோரும் முதியோரும் வாடைக் காற்றின் கொடுமைக் காற்றாது நெருப்பினை யெழுப்பிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேனிற்காலத்து ஆடற்றொழிலை விரும்பும் மகளிர், அவ் ஆடலை இப்போது துறந்து, பாடலை விரும்பி யாழினையெடுத்து, அதன் நரம்புகள் குளிர்ச்சியாலே நிலைகுலைந்திருப்பக்கண்டு தம்மார்பகத்தே தடவி வெம்மையூட்டி, பண்ணுமுறை நிறுத்துகின்றார்கள்.

இவ்விதமாக, காலமழை செறிந்த வாடைகாலத்து நிகழ்வன முழுமையுங் கண்குளிரக்கண்டு சிறிது தூரம் சேறலும், அரண்மனையின் கோபுரவாயிலை யடைகின்றோம். அரசனது பெரும் பெயர்க்கு ஒப்ப மனைவகுத்தது போல அரண்மனை விளங்கியது. அதன் கோபுரம் பெரியதொரு குன்றினைக்குடைந்து வாயிலமைத்ததுபோன்ற தோற்றமுடையதாய், வென்றெழு கொடியோடு வேழஞ்சென்று புகும்படியாக உயர்ந்த நெடு நிலையுடையதாயும் நிற்கின்றது. உத்திரக்கற்கவியிலே நடுவே திருவும் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவைக் கைக்கொண்ட இரண்டு பிடியும் அமைக்கப்பட்டிருகின்றன. நிலையிலே அமைந்திருக்கும் கதவுகளிரண்டும் கம்மியனது வேலைப்பாட்டின் திறத்தால் புகையுமுட்புக இடைவெளியின்றி நன்றாய்ப் பொருந்தியிருக்கின்றன. ஆனால் புலவரது பெருங்கருணைக்குப் பாத்திரராகிய நாம் அவருடன் உட்செல்லப்பெற்று அரண்மனை முற்றத்தை அடைகின்றோம். அவ்விடத்தே மணல் பரப்பியிருக்க, கவரிமாவும் அன்னமும் அதில் தாவித் திரிகின்றன. குதிரைகள் பந்தியிலேயே நிற்க நேர்ந்ததனை வெறுத்து உணவைக் குதட்டுங் குரலும், வெள்ளிய நிலா முற்றத்தே மகரவாயாகப்பகுத்த வாயிலிருந்து கலங்கின மழைநீர் வந்துவிழும் ஓதையும், மயில்கள் செருக்கி ஆரவாரிக்கும் இசையும் செறிந்து மலையினிடத்து ஓசைபோல ஒரே ஓசையாய் கேட்கப்படுகின்றதேயன்றி, மற்றைக் காலங்களிற் போல வேறுபடுத்து அறியக்கூடிய ஆடல் பாடல் முதலிய இன்னோசை கேட்கப்பெறுகின்றிலம்.

இனி, அரண்மனையினுள்ளே பிரவேசித்ததும் நாம் காணுங்காட்சி நம்மைப் பெரிதும் வசீகரிக்கின்றன. யவனர்கள் தொழில்முற்ற இயற்றிய பாவைகள் நெய் வார்க்கப்பட்ட தகளியில் விளக்கமேந்தி அழகிதாகக் கட்டுக்கள் தோறும் நிற்கின்றன. கட்டுக்களை ஒவ்வொன்றாய்க் கடந்து அரிதினியன்ற அந்தப்புரத்தை யடைகின்றோம். அது, வரைகண்டன்ன தோற்றத்தை யுடையதாய், வரையிலே இந்திரதனுசு கிடந்தாற்போல வீழ்ந்து கிடக்கும் கொடியினதாய், கரியதிண்ணிய தூண்களையும், செம்பிலே செய்யவல்ல தொழில்கள் பலவும் அமைந்த சுவரினையுங்கொன்டு கவினுற விளங்குகின்றது. கர்ப்பக்கிரகத்தினுள்ளே, புலவர் சிறிதும் அஞ்சாது நம்மையிட்டுக் கொண்டு சென்று அரசரது சயனக் கிரகத்தினுள்ளே நம்மை உய்க்கின்றார்.

இவ்வழகிய அறையின் கண்ணே, நாற்பத்திற்றியாண்டு சென்றயானையினது தந்தத்தினை யளவுதகச்செத்தி இலைத் தொழில் இடையிடையே பெய்து அமைத்த பெரியதோர் கட்டில் காண்கின்றோம். ஒழுக மெல்லிதாய்த் திரண்ட கால்களிலே யமைத்துள்ள குடங்கள், மெல்ல அசைந்து நடக்குமியல்பினராகிய கர்ப்பிணிகளது பால்கட்டி வீங்கிய ஸ்தன்னிய பாரங்களை யொத்து விளங்குகின்றன. மூட்டுவாய் சிறிதுந் தெரியாதபடி நன்கு பொருந்தின சாளரங்களை ஆணி கொண்டு மேற்கட்டியில் தைத்துக் கட்டிலைச் சுற்றி முத்துவடம் நாற்றியிருக்கின்றது. கட்டிலின் நடுவிடத்திலே புலிவடிவம் பொறித்த அழகிய நிறம் பொருந்திய தகடு ஒன்று பரப்பியிருக்கின்றது. மெல்லிய உரோம முதலியன உள்வைத்த மெத்தை யதன்மேல் இடப்பட் டிருக்கின்றது. அன்னத்தூவிகளைப் பரப்பி, ஒள்ளிய துகிலொன்றும் அதில் விரித்திருக்கின்றது.

இன்னணமமைந்த படுக்கையின் மேலே ஓர் பெண்மணி படுத்திருப்பக் காண்கின்றோம். கருத்தொருங்கிக் கணவன் மேலே நினைவு வைத்தவளாய்க் கிடத்தலின், மனோ பாவகத்தினாலன்றிச் சரீரியாய் நாம் அங்கிருந்த போதிலும் நம்மை யறியக்கூடாத நிலைமையிலிருந்தாள். முத்தாரங்களைச்சுமந்து அழகு பெற்றுத்தோன்றிய அவள் மார்பிடத்தே, திருமாங்கல்ய மட்டும் தாழ்ந்து அசைந்து கிடப்பதையன்றி வேறோரணியும் காணக்கூடவில்லை. புனைதல் செய்யாமல் அவளது அளகம் நுதற்புறத்திலே யுலறிக் கிடக்கின்றது. ஒளி மிகுந்த குழைகள் கவின் பெறக்கிடந்த அவள் காதிலே ஒரு சிறு தாளுருவி அழுந்திக் கிடக்கின்றதே யன்றி வேறொன்றுமில்லை. பொற்றொடி கிடந்து தழும்பேறியிருந்த அவளது முன் கையிற் சங்கினாற் செய்த வளைகள்தாம் காணப்படுகின்றன். அவ்வணங்கனாரது திவ்ய சரீரத்திலே மெல்லிய பட்டாடை யொன்றுமின்றிச் சாதாரணமான புடைவையொன்றுதான் இருக்கின்றது. இவ்விதமாக, வண்ணங்களைக் கொண்டு எழுதப்பெறாது வடிவமட்டுங் காட்டப்பட்ட சித்திரம் போன்று அவள் படுக்கையிற் கிடந்தாள். இயற்கை வனப்பு வாய்ந்த சிலதியர்கள் அரசியினது திருவடியை வருடி நிற்கின்றார்கள். அவட்கு ஆற்றாமை மிகுந்ததினாலே, நும் இன்னுயிர்த் தலைவர் விரைவில் வந்து நும்மை அடைகுவர் எனப் பலவாறாக அவர்கள் இன்னுரை இயம்பியும், அவைகளைக் கருத்துட் கொள்ளாளாய் மிகக் கலங்கி, கட்டிலின் திரையிலே மெழுகுசெய் படத்தில் சந்திரனோடு பிரிவின்றி அமைத்திருக்கும் உரோகிணியைப் பார்த்து நெட்டுயிர்க்கின்றாள். கடைக்கண்ணில் கண்ணீர் மல்கித் ததும்பி வழிகின்றது. அதனைத் தன் விரலிற் சேர்த்தித் துளி துளியாகத் தெளித்து, தனிமையாகப் போக்கருந் துயரப்புணரியில் அழுந்திக்கிடக்கின்றாள். நன்று; இத்துணைத்துன்பத்திற்குக்காரணமான அரசன் யாண்டுளன்?

அரசன் இருக்குமிடத்தை அறிவுறுத்தற்குப் புலவர் நாட்டைக் கடந்து வெகு தூரத்திற்கு நம்மை இட்டுக் கொண்டு செல்கின்றார். அங்கே பகைப்புலத்திலே கார் காலத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான் அரசியின் காதற்கணவன். இந் நள்ளிரவில் இனிய கனாக்கண்டு நித்திரை செய்துகொண்டிருக்கின்றானா? இல்லை. அவனும் தன் தலைவியை நினைத்துக் காமவசத்தனாய் உழல்கின்றானா? இல்லை; இல்லை. அவ்வினிய செயலுக்கு இப்பொழுது இவன் உடன்படான் என்று அறிக. யானையொடு மலைந்து வென்றி கொண்ட வீரர்களது விழுப்புண்களைக் கண்டு அவற்றைப் பரிகரித்தற்குப் புறம்பே போதருகின்றான். வடதிசைக் கண்ணிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றிற்கு எதிர்ப்பட்ட விளக்கினது சுடர் தெற்காகச் சாய்ந்து எரி கின்றது. தனது தோளிலிருந்து நழுவி வீழ்ந்த துகிலை ஒரு பக்கத்தே அணைத்துக்கொண்டு, தனது உறை கழித்த வாளினை ஏந்தி வருபவன் தோளிலே தன் கையை அமைதியோடு சேர்த்தி யுள்ளான். இங்ஙனம் நடக்கும்போது அவன் யுத்தத்திற்குச் சன்னத்தனாய் இருப்பதைத் தெரிவிப்பன போலச் சேணமிட்ட குதிரைகள், மழைத்துளியை உதறிப் போகட்டுக் கனைக்கின்றன. தனக்கு முன்னாலே செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே காட்ட, அவர்களுக்கு அகமலர்ச்சி யுண்டாகும் வண்ணம் சுமுகனாய் இன்சொற் சொல்லித் தன்னுயிரினுமினியராகிய சிலரோடு பாசறைப் புறத்தே திரிதருகின்றான்.

இவ்வண்ணமா யுள்ளது தலைவி தலைவனது நிலைமை. இதனைக் கண்ணுற்றவர்களும் யாவர்தாம் போர்நன் முடிவெய்தப்பெற்று அரசன் விரைந்து திரும்புதலை விரும்பாதவர்?

செய்யுள் நலம்

இதுவே செய்யுளிற் குறித்துள்ள பொருள். இனி செய்யுளினது நலத்தைச் சிறிது நோக்குவோம். பாட்டிற் சொல்லக்கருதிய தலைமைப் பொருளைப் பலவேறு பிரிவு படுத்துச் சிதைவுறுக்காமல் ஒருமைப் படுத்தி யாவரும் எளிதின் உணரக் கூடிய இயல்பும் இனிமையும் பெறும்படி அமைத்த ஆற்றலும், அவ்விஷயத்தைத் தோற்றுவாய் செய்து சிறிதும் இடர்ப்படாமல் செய்யுட் போக்கிலேயே வளர்த்து முதிர்ச்சியடைவித்த திறனும், செய்யுட்பொருள் நிகழ்தற்கு இடனாகிச் செய்யுட்குத் துணையாயமைந்த இயற்கையினது நலன்களை உண்மையின் வழாமல் மனங் களிப்ப வருணித்த அருஞ்செயலும், கருதிய பொருள் கற்பார் மனத்திற் பதிந்துகிடந்து இன்புறுவித்தலையே வேண்டி, அதற்கேப்ப ஒவ்வொரு வரியையும் அமைத்த கூர்த்த அறிவும், சுவையறி நுட்பமும், பெரிதும் வியக்கற் பாலனவேயாம்.

பிற்கால நூல்களிற் பயிற்சி மிக்குள்ளானொருவன் இச்செய்யுளைக் கற்பானாயின் அவன் காணும் வேறுபாடு மிகுதியாயிருக்குமென்பதில் ஐயமில்லை
.
பிற்காலச் செய்யுட்களிற் பெரும்பாலன எதுகை மோனையாதி கட்டுக்களினாற் பிணிவுறுக்கப்பட்டு,பொருள் வளமின்றி, மிகைபடக்கூறல், கூறியது கூறல் என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளும்படி உள்ளன. அவை கவிதையினது உண்மை இயல்பறியாது சுவை யில்லாத சொற்களை இடர் படுத்துப் புணர்த்தி யாக்கப்பட்டவைகளே. 'சொன்னயமும் பொருணயமும் தொனி நயமும் துறுமி விளங்கா நின்ற" என்று ஆக்கியோனே எழுதின முகவுரைகளிற் காணலாமன்றி, செய்யுள் நூலினுள்ளெ இவைகளைக் காண்பது அரிதினுமரிது. ஓசை நயத்தில் இவ்வகைச் செய்யுட்களிற் காண்பவை யெல்லாம் எதுகையும் மோனையும் முறைப்பட வரலேயாம். இவ்வித விதிகட்கு உட்பட்டமையால், இவை ஓசை வேறுபாடின்றி ஒரே ஓசையினையுடையவாய் கற்போர் மனத்தினைச் சலிப்படையச் செய்கின்றன. சங்கச்செய்யுட்களோ வெனில், பொருள் வளத்தைப் பெரிதுங் கருதி, பொருட்கேற்பச் சொற்களையமைத்து, சொற்களிலும் சுவையுடைய சொற்களையே பிரயோகிக்கப்படுத்தி, பொருட்பொருத்தமுற ஓசையினை அடிக்கடி வேறுபடுத்து, கற்றார் மனம் களிகூர்ந்து தளிர்க்கும் வண்ணம் இயற்றப்பட்டனவாகும். நமது நெடுநல்வாடையில் மிலேச்சர்கள் கட்குடித்து வெறிகொண்டு மழையில் விரைவாக இறுமாந்த நெஞ்சினர்களாகத் திரிகின்றதனை, என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வடிகள் விரைந்து இறுமாந்து செல்லும் நடையைச் செவ்விதில் புலப்படுத்துகின்றமை காண்க. நெடுநல் வாடையிற் சுவையுடைச் சொற்களை ஆசிரியர் பிரயோகித்திருக்கின்றார் என்பதை, முதலிய உதாரணங்களால் அறிக.

வடமொழிக்கலப்பும் பிற்றைக்காலத்து நூல்களில் மிகுதியாகக் காணப்படும். சங்க நூல்களிலே, பொதுவாக நூற்றுக்கு ஐந்து விழுக்காட்டிற்குமேற் காணப்பெறுவதில்லை. நெடுநல் வாடையில் சற்றேறக்குறைய 610 முழுப்பதங்கள் இருக்கின்றன. இவைகளில் சுமார் 50 வடமொழிச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே இங்கே நூற்றுக்கு எட்டு வீதந்தான் பிற மொழிச் சொற்கள் உள்ளன வென்பது போதரும்.

பிற்றைக்காலத்து நூல்களிலே அழகு செய்வனவாக கருதப்படுகின்ற அலங்கார வகைகள் மிகுதியுங் காணப்படுகின்றன. அவைகள் உண்மையான செய்யுட்களை சுவைத்தறிந்த ஒருவனுக்கு மிகவும் அருவருப்பைத் தருகின்றன. உண்மையின் வழுவியும் சில விடங்களில் உண்மைக்கு முற்று மாறாகவும் பொருளினது தகுதியை நோக்காமலும், உலகின் கண்ணுள்ள பொய்களை யெல்லாந்திரட்டிக் கவிஞர்கள் அலங்காரம் கற்பிக்கின்றனர்; இயற்கை வனப்பின்கண் ஈடுபட்டு நூலியற்றினாரல்லர்; உயர்வு நவிற்சியணியையே சிறந்ததாகக் கொண்டாடுவர். சங்க இலக்கியங்களிலே ப்யின்று வரும் அணிகளெல்லாம் உண்மையின் வழுவுதல் இன்று. உயர்வு நவிற்சியைக் காண்பது துர்லபம். பொருளினது தகுதிக்கு ஏற்ப உவமானங்கள் காணப்படும். பசும்புற் றரையிலே வெள்ளிய மலர்களை ஆங்காங்குப் பெய்தவிடத்து அது எவ்விதமாய் ஒருவனை இன்புறுத்துமோ அவ்விதமாகவே சங்க நூல்களிற் காணப்படும் அணிகளும் இன்புறுத்தும். சங்கப் புலவர்கள் இயற்கை வனப்பினை நன்கு ஆராய்ந்தவரென்பது தெள்ளிதிற் புலப்படும். அக்காலத்துக் கவிஞர்கள் கூறும் உவமானங்களைக் கேட்டமாத்திரத்தில் பெரியதோர் வியப்புண்டாவதன்றி மனோபாவக வுணர்ச்சியும் கூர்ந்து நுண்மை யடையும். ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டநூலிலே 17 உவமானங்கள் ஆசிரியர் தருகின்றார். அதில் ஒவ்வொன்றும் மிக அழகியதாக அமைந்துள்ளன. உதாரணமாக, முதலியவைகளைக் காண்க. தலைவனைக் காணப் பெறாது வருந்திக் கவினழிந்து கிடக்கும் தலைவிக்கு, என உவமை கூறினார். கம்பர் பெருமானும் இவ்வித சந் தர்ப்பத்தில், என்று கூறுகின்றனர். இவ்விரண்டினது தாரதம்மி யத்தை துலைநாவன்ன மனநிலையோடு சீர்தூக்கியறிக.

செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற்காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படும். பல்வகையவாகிய அணிகளையும் பூண்ட ஒரு மங்கை உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப் பட்டுக் குறுகுறு எனத் திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ள முடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு நடக்கும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுள்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர்; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்பதில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும்; ஆனால் உண்மையினுயர்ந்த ரத்னங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக் கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணிகலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டு விப்பது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம்.

செய்யுளின் ஓசையை நன்கு கவனித்தால், அது செங்கீதத்தில் மிகுதியும் பயிலாது சிறிது பயின்று மெல்லிய குரலோடு ஒருவன் பாடுவானாயின் அஃது எத்துணை இன்பம் பயக்குமோ அத்துணை இன்பந்தான் தருவதாயுள்ளது. சங்கச் செய்யுள்களெல்லாம் சுவையூறிய செழுந்தமிழ்ச் சொற்களால் அமைக்கப்பட்டு விழுமிய ஓசையுடையன வாயிருக்கின்றன. செல்லாறுதோறும் பொருளாழ்ந்து, கற்றோர்க்கு இதயங் களிக்கும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கின்றன.ஓசையைக் கருதினால், அது சங்கீத ஞானமும் பயிற்சியும் நிரம்பிய ஒருவனிடத்துக் கண கண வென்று சாரீரம் பேசுவது போல், மிக்க இனிமையாய், இழைந்து செல்வதால், அழகாய் இருக்கின்றது; கேட்கக் கேட்க ஆசை கிளருகின்றது. உதாரணமாக, என்று வரும் அடிகளை உற்று நோக்குக.

பிற்றைக் காலத்து நூல்களிற் பலவும் சமயவுணர்ச்சி மிக்க நாளிற் றோன்றினமையாலே அதன் பேராற்றலால் செய்யுட்களெல்லாம் வலித்து ஈர்க்கப்பட்டு அதன் வழிச்செல்கின்றன. பண்டைக்கால நூல்களிலே இவ்வியல்பு காணக் கிடையாது. இதனால் தமிழ்மொழிக் குண்டாகிய ஏற்றமுந் தாழ்வும் இங்கே விரிக்கிற் பெருகும்.

பண்டைக்கால வழக்க வொழுக்கமும் நாகரிகமும்

இனி, இந்நூலிலிருந்து உணரத்தக்க பண்டைக் காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் சிறிது நோக்குவோம். அக்காலத்தில் சிற்ப சாஸ்திரம் வல்லுநர் நல்ல மங்கள சமயம் பார்த்து அந்நேரத்தில் திக்குத் தேவதைகளை வணங்கி மனைவகுத்து வந்தனர். அரண்மனை முதலியன மிகவும் உயர்ந்தனவாய், சாளரங்களுள்ள மேல்நிலைகள் பல உடையனவாய் கட்டப்பட்டன. விசிறி முதலியன இயற்றுதலிலும் இடைவெளி சிறிதுமின்றிப் பலகைகளைப் புணர்த்து முறைமையிலும் கைவல்லுநர்களாய் இருந்தார்கள். வண்ணங்கொண்டு படம் முதலியன தீட்டுவதினும் சிறந்தவர்களாய் இருந்தார்களென்பது என்பதனானும், என்பதனானும் அறியக் கிடக்கின்றது.கிரேக்கர் முதலிய பிறதேசத்தாரோடு அக்காலத்தவர்கள் பழகியிருந்தார்கள்; கிரேக்கர் முதலியோர் இங்கே வியாபாரத்திற்காக வருவது வழக்கமா யிருந்தது. இது என்ற அடிகளால் புலப்படுகின்றது. சங்கீதத்தினும் நாட்டியத்தினும் அவர்கள் ப்யிற்சி மிக்குடையவர்களாயிருந்தனர். என்ற அடியால் இது விளங்குகின்றது. அக்காலத்திலுள்ளவர் வான சாஸ்திரம் முதலியவற்றை நுட்பமாய் அறிந்திருந்தனர். என்றும், என்றும், என்றும் வருவனவற்றால் இது உணரப்படும். அரசன் போர் வீரரை வித்தியாசம் பாராட்டாது சமமாய் நடத்தி வந்தானென்பதும் போரிலே புண்பட்ட வீரர்கள் புறக்கணிக்கப் படாராய்த் தக்கவாறு பாதுகாக்கப்பட்டு வந்தார்களென்பதும் நூலின் கடையடிகளால் விளங்குகின்றன. மக்கள் தாமும் குளிர் காலத்து நெருப்பெழுப்பிக் குளிர் காய்வது இருட்டியவுடன் பெண்கள் விளக்கினை

நெல்லும் மலருந் தூவிக் கைதொழுதலும் அக்காலத்து வழக்கம். இதனை, என்றும், என்றும் வரும் அடிகளால் உணரலாம்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர்

இனி, இந்நூற்கு உரைசெய்த நச்சினார்க்கினியரைப் பற்றிச் சிலவார்த்தைகள் சொல்லி நக்கீரனாரது சரித்திரத்தைக் கூறுகின்றேன். நச்சினார்க்கினியர் 15-ம் நூற்றாண்டினிறுதியில் அல்லது 16-ம் நூற்றாண்டில் இருந்தவரென்பது பலருடைய கருத்தாகும். அவர் மதுரைவாசியாகிய ஓர் அந்தணர். தென்மொழியிலும் வடமொழியிலும் பயிற்சி மிக்குள்ளவர். அவரது உரைத்திறமும் கூர்த்த அறிவும் பெரிதும் வியக்கற்பாலவாம். அவர் பத்துப் பாட்டுத் தவிர, கலித்தொகை, சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய அரும்பெரு நூல்களுக்குச் சிறந்த உரைசெய்திருக்கின்றார். இத்துணைப் பெருமையாளராகிய இவர் பத்துப் பாட்டின்கண் ஒரோ விடங்களில் செய்யுளை அலைத்து முன்பின்னாகக் கூட்டிச் சொன்முடிபு காட்டிப் பொருள் கொள்ளுவர்.இதனை மாட்டு என்பதன்பா லாக்குவர். இது செய்யுளியற்கைக்கு மாறாதல் நன்குணரப்படும். இந்நெடுநல்வாடையிலும் ஏறக்குறைய பத்து இடங்களில் ஏலாவுரை உரைத்துள்ளார்.

ஆசிரியர் நக்கீரர்

இனி நக்கீரரைப் பற்றிச் சிறிது கூறி எனது ஆராய்ச்சியை முடிக்கின்றேன்.[2] இவர் மதுரைக்கணக்காயனார் மகனா ரென்றே பெரும்பாலும் குறிக்கப்படுவர். கணக்காயர் என்போர் நூல் கற்பிக்கும் ஆசிரியர். 'கணக்காயர் ஒத்துரைப்போர்' என்பது திவாகரம். எனவே, இவர் தந்தையார் நூல்கற்பிக்கும் ஆசிரியருள் ஒருவராயிருந்தாரென்பது தெளிவாம். இவர் சங்கறுப்போர் குலத்திலுள்ளோரென்று சொல்லப்படுவர். அதற்கு ஆதாரம் திருவிளையாடற் புராண முதலியன.
----
[2] முருகாற்றுப்படை பற்றி யான் நிகழ்த்தியுள்ள ஆராய்ச்சியில் நக்கீரரைக் குறித்து விரிவாக எழுதியுள்ளேன். ----

இக்குலத்தவர் முற்காலத்தே தனியே குடியிருந்து வந்தவரென்பது மணிமேகலையில் என்ற அடிகளால் விளங்குகின்றது. அகநானூற்றிலே 24-ம் பாட்டிலே பிராமணரில் ஒருவகையினர் இத்தொழிலை முற்காலத்துச் செய்தார்க ளென்று வெளிப்படுகின்றது. நக்கீரர் என்ற சொல் 'வாக்மி' என்னும் பொருளில் வந்த வடமொழித் திரிபானபெயர் என்று செந்தமிழ்ப் பத்திராசிரியர் கருதுகின்றார். கீர்-சொல். இனி இவரியற்றிய நூல்கள் முருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும், பதினொராந் திருமுறையிற் சில பிரபந்தங்களுமாம். இவரது பெருமையை இறைவன் இயற்றிய செய்யுளிற் பிழை கண்ட வழியும் குற்றம் குற்றமேயென்று சாதித்து, பின் இறைவன் பெருமையை யுணர்ந்து அடியராயினாரென்று வரும் கதை நன்கு விளக்குகின்றது. இக்கதைதான் அவரது அழிவில்லாப்பெரும் புகழுக்கு அறிகுறியாக நின்று நிலவுகின்றது. நெடுநல்வாடையின் ஆசிரியரது புகழினை எடுத்துப்பேசி முடிக்குந் திறம் அரிய தொன்றாம். ஆதலின், இம்மட்டோடு நிறுத்துகின்றேன்.

இக்கட்டுரையின் கண்ணே, பாட்டுடைத் தலைவன் சிறப்பும், அவன் இருந்து அரசியற்றிய காலமும், நக்கீரனார் இச்செய்யுளை இயற்றிய காலமும், செய்யுளின் தலைக்குறிப்பின் பொருளும், அழகும், நூலிற் பொதிந்த பொருளும், செய்யுளின் நலங் கூறுமுகத்தால் பண்டைக்காலச் செய்யுட்கும் பிற்பட்ட காலத்துச் செய்யுட்கும் உள்ள வேறுபாடுகளும், நூலியற்றிய காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பட்டன. பின், நச்சினார்க்கினியர் உரைத்திறமும் நக்கீரரது சரித்திரமும் பெருமையும் குறிப்பிக்கப்பட்டன.

5. பாலையின் அரங்கேற்று மண்டபம்

பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16-கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது. என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர சோழன் உலாவிலும், என இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு தூதும், என்று கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங்கேற்றுவதற்குப் பதினாறு தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு: இச்சாசனம் திருச்சி ஜில்லாவிலுள்ள திருவெள்ளறையில் செதுக்கப்பட்டுள்ளது. இன்றுகாறும் இது வெளியிடப்படாதது. இதில் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் ராஜ ராஜனுக்கும் நிகழ்ந்த போர் ஒன்று கூறப்பட்டுள்ளது என்பது சரித ஆராய்ச்சியாளர் கருத்து.

இச்செய்யுளில் கண்ணன் என்றது கடியலூர் உருத்திரங் கண்ணனாரை. அரமியம் என்றது அரண்மனை முற்றத்தை. இங்குக் குறித்த போர் நிகழ்ச்சியால் அரண்மனைப் பகுதிகளில் பதினாறு கால் மண்டபம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் அழிவுற்றன. மிகப் பூர்வகாலத்தே பட்டினப்பாலை அரங்கேறிய மண்டபம் ஆதலாலும், அதற்கு அழிவு செய்யின் தமிழிலக்கிய ஞாபகச் சின்னமொன்றினை அழித்ததாக முடியும் ஆதலாலும், அது அழியாது பாது காக்கப் பட்டது போலும்! இதனால் தமிழிலக்கியச் சின்னங்களை நம் மூதாதையர் எவ்வாறு போற்றிவந்தனர் என்பது விளங்கும்.

இனி, பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற தொகைக்கும் ஓர் இயைபு இருத்தல் நோக்கத்தக்கது. பதினாறு கோடிப் பொன் இந்நூற்குப் பரிசிலாக வழங்கப்பட்ட தென்பது வரலாறு. பதினாறு தூண்களுள்ள ஒரு மண்டபத்தின்கண் இந்நூல் அரங்கேற்றப்பட்ட தென்பது இச்சாசனத்தால் புதுவதாக அறியப்படும் வரலாறு. ஒருகால் பதினாறு கோணங்களிலும் தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணிலும் சில பொற்காசுகளைத் தூக்கியிட்டு, பதினாறு கோடிப் பொன் என அவற்றை வழங்கினர் என்று நாம் கொள்ளலாம். இங்கு, பதினாறு கோடிப்பொன் என வந்துள்ளதும், பதிற்றுப்பத்தில் காப்பி யாற்றுக் காப்பியனாருக்கு 40-நூறாயிரம் பொன்னும், காக்கைபாடினியார் நச்செள்ளை யாருகு 9-துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும், கபிலருக்கு நூறாயிரம் பொற்காசும், அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், பெருங்குன் றூர்கிழாருக்கு 32-ஆயிரம் பொற்காசும் பரிசிலாக அளிக்கப்பட்டன என வந்துள்ளனவும் உயர்வு நவிற்சி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இராச ராஜன்உலாவின் கண்ணிதோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகக் கூறுவதும் உயர்வு நவிற்சியாகவே கொள்ளத்தக்கது. என்ற திருக்குறளைப் பின்பற்றி இவ்வாறு புனைந்து கூறினார்கள்போலும்! அன்றியும் ஒவ்வொரு சிற்றரசனும் தன் நாட்டிலுள்ள யானை முதலியவற்றை முற்காலத்தில் பரிசிலாக வழங்கிவந்தனன். இதற்கு மாறாக பொன்னை வழங்கத் தொடங்கியது புலவர்களுக்கு எத்தனையோ அருமையாகத் தோன்றி யிருத்தல் வேண்டும். இவ்வருமைப் பாட்டினைத் தெரிவித்ததற்கு இவ்வுயர்வு நவிற்சி ஆளப்பட்டது எனக் கொள்ளுதலும் தகும்.

இது எவ்வாறாயினும், மேற் குறித்த சாசனச் செய்யுள் ஓர் அரிய இலக்கிய வரலாற்றை உணர்த்துகின்றது என்பதற்கு ஐயமில்லை.


6. தொகை நூல்களின் காலமுறை

தமிழிலுள்ள நூல்களுள் மிகப் பழைமையானவை தொகை நூல்கள் எனப்படும். இவற்றுள் அடங்கியவை எட்டு நூல்களாம். இவை இன்னவென்பது
என்ற வெண்பாவினால் அறியலாம். ஒவ்வொரு தொகை நூலும் ஓர் அரசரது ஆணையின் படி ஒரு புலவரால் தொகுக்கப் பட்டதாகும். பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்ற மூன்று நூல்களும் முற்றும் அகப்படாமையினாலே, இவை தொகுக்கப்பெற்ற விவரங்கள் அறியக்கூடவில்லை. கலித்தொகை முற்றும் அகப்பட்டுள்ள தெனினும், அதனைத் தொகுத்தாரும் நெய்தற்கலியை இயற்றினாரும் நல்லந்துவனார் என்னும் ஒரு செய்தியன்றி வேறொன்றும் தெரியமாட்டாது. இத்தொகை பற்றிப் பின்னர் நோக்குவோம். அக நானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை என்ற நான்கு நூல்களையும் குறித்துச் சில விவரங்கள் அவற்றின் இறுதியிற் காணப்படுகின்றன.

கீழ்க்கண்ட நூல்களுள், ஐங்குறு நூறுதவிர ஏனைய மூன்றும் அடிகளின் எண்முறை பற்றித் தொகுக்கப் பட்டுள்ளன.
--------------------
தொகை நூல்களின் காலமுறை
நூல் அடியளவு
சிறுமை பெருமை
தொகுத்தார் தொகுப்பித்தார்
1. ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூட லூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
2. குறுந்தொகை 4 - 8 பூரிக்கோ
3. நற்றிணை 9 - 12 பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி
4 அகநானூறு 13 - 31 மதுரை உப்பூரி கிழார் மகனார் உருத்திரசன்மர் பாண்டியன்உக்கிரப் பெருவழுதி

இவற்றைத் தொகுத்தாருள் ஒருவர் மதுரை நகரினர். தொகுப்பித்தாருள் இருவர் பாண்டியர்; எனவே இவ்விருவரும் மதுரையிலேயே இவ் இலக்கியத் தொகுப்பு முயற்சியைச் செய்வித்தனரென்று கொள்ளலாம். இவ்வாறு தொகுக்கப்பட்டவை நற்றிணையும் அகநானூறும் ஆம். 'குறுந்தொகை முடித்தான் பூரிக்கோ' என்று காணப்படுகிறது. இப்பூரிக்கோ மதுரை உப்பூரி குடிகிழான் என்பவரோடு குடிப்பெயரினால் தொடர்யுடையார் என்று நினைத்தல் தகும். எனவே பூரிக்கோவும் மதுரை நகரினரென்று கொள்ளலாம். இக்காரணத்தால், குறுந்தொகையும் மதுரையில் தொகுக்கப்பட்டதெனல் பொருந்துவதே.

குறுந்தொகை 270-ம் செய்யுளைப் 'பாண்டியன் பன்னாடு தந்தான்' என்பவன் இயற்றினானெனக் காணப்படுகிறது. நற்றிணையில் இரண்டு செய்யுட்களை (98,301) இயற்றியவன் பாண்டியன் மாறன் வழுதி எனக் காணப் படுகிறது. முற்கூரிய பன்னாடு தந்தானுக்கு மாறன் வழுதி என்ற பெயரும் உள்ளது; பிறர் யாருக்கும் இப் பெயருள்ளதாகத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுப்பித்தான் 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்று கூறப்படுவது இதனை நன்கு விளக்குகிறது. எனவே, பன்னாடு தந்தானும் மாறன் வழுதியும் ஒருவரே என்று கொள்ளுவதற்குச் சான்று உளது.

மேற் கூறியபடி 'பன்னாடு தந்தான்' குறுந்தொகைச் செய்யுளொன்றை இயற்றியவனாதலினால், இந்நூலைத் தொகுத்த காலத்துக்கு முன்பாகவேனும் அல்லது சம காலத்திலேனும் இவன் வாழ்ந்தவனாதல் வேண்டும். நற்றிணையைத் தொகுத்தவனும் இவனேயாவன். ஆகவே, இவ்விரண்டு நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தில் தொகுக்கப் பட்டனவென்று கொள்ளலாம். இங்ஙனமாயினும், முதலில் தோன்றியது குறுந்தொகையென்பது வேறொரு செய்தியால் தெளிவாகின்றது. இத்தொகை நூற் செய்யுட்களிலே நான்கினை (9,356,378,396) இயற்றியவர் கயமனார் என்ற புலவர். இப்பெயர் என்ற செய்யுள் காரணமாகப் பிறந்தது என்று கொள்ளலாம். டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களும் இக்கருத்தே கொண்டுள்ளார்கள் என்பது அவர்களது குறுந்தொகைப் பதிப்பின் முகவுரையால் (பக்.3) அறியலாகும். குறுந்தொகையைத் தொகுத்தார் யாதாமொரு காரணத்தால் இயற் பெயரை நீக்கி இப்பெயரைக் கற்பித்து வழங்கியிருக்கலாமென்றல் பொருத்தமுடையதே.

இப்பெயர் நற்றிணைப் புலவர்கள் வரிசையுள்ளும் காணப்படுகிறது. எனவே, காரணப் பெயரின் விளக்கத்தைக் காட்டியமைந்த குறுந்தொகையும், அப்பெயரை எடுத்தாண்ட நற்றிணையும், முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் கொண்ட தென்பதும் நற்றிணை நூல் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டதென்பதும் கற்றார் அறிவர். இந்த அடியளவும் இம்முறையையே ஆதரிக்கிறது. ஒரே தலை முறையில் இரண்டு நூல்களும் சற்று முன்பின்னாகத் தோன்றின என்று கொள்ளுதல் பலவகையாலும் பொருத்த முடையதாம்.

இனி, அகநானூற்றை நோக்குவோம். இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப் பெருவழுதி. இவன் இயற்றிய செய்யுட்கள் அகநானூற்றிலும்(26), நற்றிணையிலும் (98) காணப்படுகின்றன. எனவே, நற்றிணை தொகுக்கப் பெற்ற காலத்தேனும் அல்லது சிறிது முன்பாக வேனும் உக்கிரப் பெருவழுதி வாழ்ந்தவனாதல் வேண்டும். இவன் அகநானூறு தொகுத்த காலத்தும் இருந்தவன். ஆதலால் இவன் இருந்த காலத்தேயே நற்றிணையும் அகநானூறும் தொகுக்கப் பெற்றன என்று கொள்ளலாம். இரண்டு நூல்களும் பெரும்பாலும் சம காலத்தன என்று கொள்ளுதல் பொருத்த முடைத்தாம். இங்ஙனமாக, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகை நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தன என்பது விளங்கும். எனினும், குறுந்தொகை முற்பட்டும், நற்றிணை இதன் பின்னும், அகநானூறு இதற்குப் பிற்பட்டும் தொகுக்கப்பட்டன என்று ஒருவாறு துணியலாம். அகநானூற்றின் அடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அடியளவும் இத் தொகுப்பு முறையையே வலியுறுத்துகிறது.

இனி ஐங்குறு நூற்றை நோக்குவோம். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை. யானைகட்சேய் 'மேலோருலகம்' எய்திய செய்தியை புறம் 229-ம் செய்யுள் குறிக்கின்றது. இதனால், புறநானூறு தொகுக்கப் பெற்றதற்கு முன்பே ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றதாதல் ஒரு தலை.

இதனையடுத்து, புறநானூற்றைக் கவனிப்போம். இந்நூல் ஐங்குறு நூற்றின் பின் தொகுக்கப்பட்டதாதல் ஐயத்திற்கிடனின்றித் தெளிவாயுள்ளதென மேலே காட்டப்பட்டது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகைகளுக்கும் இது பிற்பட்டதா என்பதை நோக்குதல் வேண்டும்.

ஓரேருழவன், கயமனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131,9,210,392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம்பற்றி அமைந்துள்ளன என்பது விளங்குகிறது. எனவே, இந்நூலி லேயே இப்புலவ்ர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப் பட்டன வென்று கொள்ளுதல் வேண்டும். இப்பெயர்கள் புறநானூற்றுச் செய்யுட்களிலும் (193,254,278,249) வருகின்றன. ஆதலால் குறுந்தொகைக்குப் பிற்படத் தொகுக்கப்பட்டது புறநானூறு. நற்றிணையிலும் (277) தும்பிசேர்கீரனார் என்ற பெயர் காரணம் பற்றி அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சம காலத்தில் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றியிருத்தல் வேண்டு மென்பது மேலே காட்டப்பட்டது.எனவே புறநானூறு இம்மூன்றிற்கும் பின் தோன்றியிருத்தல் வேண்டும். அன்றியும் இந்நூல் அகநானூறு என்றதனோடு பெயரமைப்பில் ஒத்துள்ளது. இக்காரணத்தாலும் இந்நூல் அகநானூற்றின் பின் தொகுக்கப்படடதெனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி பதிற்றுப்பத்தினை எடுத்துக் கொள்வோம். ஐங்குறுநூறு தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்று இரங்கிக் கூறியதாகக் காணப்படுகின்றது.இதற்கேற்ப, கபிலர் வடக்கிருந்ததைக் குறிக்குஞ் செய்யுளொன்றும் (236) புறநானூற்றில் காணப்படுகிறது. இக்கபிலர் யானைக்கட்சேய் தொகுத்த ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பற்றிய செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் செல்வக்கடுஙகோ வாழி யாதன் மீது 7-ம் பத்தையும் பாடியவர். எனவே, யானைக்கட் சேய்க்கு முற்பட்டவர் கபிலர். இவர் பாடிய ஐங்குறு நூற்றுப் பகுதியும் சேய்க்கு முற்பட்டாதல் வேண்டும். பெரும்பாலும் ஐங் குறு நூறு தொகுக்கப் பெற்றதும் பதிற்றுப் பத்துக்கு முன்பேயாகலாம். பதிற்றுப்பத்தில் 6-ம் பத்தைப் பாடயவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார். இப்புலவர் பெயர் முதன் முதலில் குறுந்தொகையில் காரணம் பற்றி வழங்கப்பட்டதென்று முன்னமே கூறியுள்ளேன். எனவே, குறுந்தொகையின் பின் பதிற்றுப் பத்துத்தொகுக்கப் பட்டிருக்க வேண்டு மென்பதும் எளிதிற் புலப்படும்.

பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும் பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவனாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற்றின் முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்.

குறுந்தொகைக்கு ஐங்குறு நூறு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா என்று துணிதற்கு யாதொரு சான்றும் காணப்படவில்லை. யானைகட் சேய் இறந்தசெய்தியைக் குறித்த கூடலூர்கிழார் குறுந்தொகையில் மூன்று செய்யுட்களை (166,167,214) இயற்றியுள்ளார். யானைகட் சேய் 17-ம் புறப்பட்டால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனது காலத்தவனென்பது அறியலாம். நெடுஞ்செழியன் தானும் புறத்தில் ஒரு செய்யுள் (72) செய்துள்ளான். இச் செய்யுளில் குறிக்கப்படுகிற மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சிப் புலவன் (119) எனவும், மாங்குடி கிழார் எனவும் காஞ்சிப் புலவனார் (நற்.123) எனவும் வழங்கப்பட்டாரெனத் தெரிகின்றது. இவர் அகநானூறு (89),குறுந்தொகை (164,173,302), நற்றிணை (120,123) புறநானூறு (24,26,313,335,372,396) என்ற நான்கு நூல்களிலும் செய்யுட்கள் இயற்றியுள்ளார். இச்செய்திகளை ஊன்றி நோக்கினால் இங்குக் குறித்த நூல்களனைத்திற்கும் முற்பட்டு ஐங்குறுநூறு தொகுக்கப்பட்ட தாகலாமென்று கொள்ளுதல் பொருந்தும். மேலும் ஐங்குறுநூறு தொகுத்தற்கு எளிதாயுள்ளது. அடியின் சிற்றெல்லை குறுந்தொகையிற் காட்டிலும் குறைந்துள்ளது. இக்காரணங்களை நோக்கும்போது ஐங்குறு நூறு முதலில் தோன்றியது என்று கொள்ளலாம். குறுந்தொகை,நற்றிணை என்ற இரண்டு நூலிலுமுள்ள செய்யுட்களுக்குத் திணைவகுக்கப்படவில்லை. ஏட்டுப்பிரதிகளிலும் காணப்படவில்லை. டாக்டர் ஐயரவர்களுடைய குறுந்தொகைப் பதிப்பு இதனை நன்கு புலப்படுத்துகிறது. ஒரு சில குறுந்தொகைப் பதிப்புகளிலும் நற்றிணைப் பதிப்பிலுங் காணப்படுந் திணைவகுப்பு பதிப்பாசிரியர்கள் கொடுத்துள்ளதேயாகும். அகநானூறு திணை வகுப்பை நன்கு தழுவியுள்ளது. என்ற செய்யுளால் இதன் உண்மை தெளியலாம். இங்ஙனம் அமைத்தற்கு ஐங்குறுநூறு காரணமாயிருந்ததெனல் பொருந்துவதே. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சமகாலத்துத் தொகுக்கப் படிருக்க வேண்டுமென்று முன்னர்த் துணிந்தோம். இத்துணிபோடு பொருந்த ஐங்குறு நூறு எல்லாவற்றிலும் முற்படத் தொகுக்கப்பட்டதென நாம் கொள்ளலாம். ஐங்குறு நூற்றுப் புலவர்கள் இன்னாரென்பது என்ற செய்யுளால் அறியலாம். இவர்கள் தொகை நூலிற் பாடிய செய்யுட்களின் விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது:

----------
ஐங்குறு நூறு
3.
திணை புலவர்அகம் குறுந்தொகை நற்றிணை புறம்
1. மருதம் ஓரம்போகி 286,316 10,70,122,127,384 20,360 284
2. நெய்தல் அம்மூவன் 10,35,140, 280,370,390 49,125,163, 303,306,318, 327,340,351, 397,4014,35,76,138, 275,307,315, 327,395,397
குறிஞ்சி கபிலன் 2,12,18,42, 82,118,128, 158,`182,203, 218,238,248, 278,292,318, 332,382 13,18,25,38,42,87,95,100,106,115,121,
142,153,187,198,208,225,
241,246,249,259,264,288,8,14,105-111,113-124,143,
200-202,236,337,347
பதிற்றுப் பத்து-VII, குறிஞ்சிப் பாட்டு
4. பாலை ஓதலாந்தை 12,21,329
5. முல்லை பேயன் 234 533,339,359, 400

மேலே பொருந்துவதாகலாம் என்று நாம் கொண்டமுடிபோடு முரணுவதாக இவ்விவரத்தில் யாதும் காணப் படவில்லை. ஐஙகுறுநூற்றின் பின்னும், குறுந்தொகை முதலியவற்றின் பின்னும் தோன்றியது பதிற்றுப்பத்தென முன்பு கண்டோம். எனவே, தொகை நூல்களைக் கால முறையில் கீழ்வருமாறு அமைக்கலாம்: தொகை நூல்களில் எஞ்சியுள்ள கலித்தொகையும் பரிபாடலும் தோன்றிய காலமுறை எளிதில் வரையறுக்கக் கூடியதன்று. நல்லந்துவனார் நெய்தற் கலியை இயற்றினார் என்பது
என்ற 142-ம் கலியின் உரைப்பகுதியால் அறியலாம். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே யென்பர்.
என்று வரும் உரைப்பகுதிகள் இதற்குச் சான்றுகளாம். என்ற பிற்காலச் செய்யுளும் இதனை வலியுறுத்தும். ஒவ் வொரு திணைக்குமுரிய கலிச் செய்யுட்களை இயற்றினார் இன்னின்னரென ஒரு செய்யுள் கூறுகின்றது. அது வருமாறு: இச்செய்யுள் ’இன்னிலை’ ’ஊசிமுறி’ முதலிய நூல்களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ்சென்ற த.மு.சொர்ணம் பிள்ளையவர்கள் முதன் முதலில் வெளியிட்டது. தொகை நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரியர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச்செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் ஏட்டுப்பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன் முதலில் வெளியிட்ட ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாததனோடு, இச்செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லுந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினார்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற்றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற்குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றிலேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண்டியனுக்கும் யாதோர் இயைபும் இல்லை. ஆனால் குறிஞ்சிக் கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாகவுள்ளது இச் செய்யுள்.

இக்காரணங்களால் இச் செய்யுளை இயற்றியவர் சொர்ணம்பிள்ளை யென்றே தோன்றுகிறது. இதனை நம்பி எடுத்தாளுதல் கூடாது. இவ்வாறு கூறுவதனால் கலித்தொகை தொகுக்கப்பட்ட தென்பதனை மறுத்ததன்று. தொகுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். தொகுக்கப்பட்டதாயின், ஒவ்வொரு திணைக்கு முரிய செய்யுட்களை இயற்றிய புலவர் இன்னாரெனத்தெரிதற்குத் தற்காலத்தில் இயலவில்லை யென்றதனோடு நாம் அமைய வேண்டும். ஆனால், இப் புலவர்களனைவரும் பாண்டி நாட்டைச் சார்ந்தவர்களென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். பாலைக் கலியில் (30) எனவும், குறிஞ்சிக்கலியில் (21) எனவும், மருதக்கலியில் (33) எனவும், முல்லைக்கலியில் (4) எனவும், நெய்தற் கலியில் (26) எனவும் வருதலால் இது தெரியலாகும். இவர்கள் ஒரே காலத்தவர்களென்பதும் இந் நூலினைக் கற்றாரனைவரும் ஒப்புக்கொள்வர்.

கலித்தொகை போன்றே, பரிபாடலும் சில சிக்கலான வினாக்களுக்கு இடந்தருகின்றது. இவ்வினாக்கள் பரிபாடற் செய்யுட்களை இயற்றிய புலவர்கள் பற்றியும், நூற்பொருள்கள் பற்றியும், நூலகத்துள்ள மொழியாட்சி பற்றியும் எழுவனவாம்.

இவை போன்ற விஷயங்களை யெல்லாம், கலித்தொகை பரிபாடல் பற்றிய அளவில், ஆராய்ந்து தனியே யொருகட்டுரை வெளியிட எண்ணுகிறேன்..

7. குறுந்தொகை #

#கரந்தைத் தமிழ்ச் சஙகத்தின் வெள்ளிவிழா வெளியீடாகிய 'கரந்தைக் கட்டுரை' என்ற தொகுதியில் 1938-ம் வருடம் வெளிவந்தது.

1 .
.
நிகழும் ஆண்டு தமிழன்னையின் திருவுள்ளத்தை மகிழ்வித்த ஓர் நல்யாண்டாகும். அவளுடைய பேருடைமைகளுள் ஒன்றாகிய குறுந்தொகை நூற்றுக்கணக்கான வருடஙகளாக ஏறியிருந்த துருமுதலிய மலினங்கள் போகப் பரிசோதிக்கப் பெற்று இரண்டு திங்கட்கு முன்னர்த்தான் அவள்பால் உய்க்கப் பெற்றது. இப்பொழுது அவள் மிக்க ஒளியுடனும் பெருமிதத்துடனும் விளங்குகின்றாள். நவமணிகளும் இழைக்கப்பெற்ற அவளது திருமுடியும், பலவகை யணிகளும் மிளிரும் அவளது தெய்வத்திருமேனியும், நமக்குக் கண் கொள்ளாத காட்சியாயுள்ளன..
.
தமிழ்மொழிக்கு இத்துணைச் சிறப்புத் தரத்தக்க பேரிலக்கியத்தை ஆராய்ந்து அதன் நயங்களை உணர வேண்டுவது அவசியமாகும். இந்த அவசியம் பற்றியே இந்நூலைக் குறித்து யான் பேச முன்வந்தது..
.
இந்நூல் தொகை நூல்களைச் சார்ந்ததாகும்..
.
தொகை யென்ற வழக்கு உரைகாரர்கள் பலராலும் கூறப்பட்டதே யாகும். 'தொகைகளினுங் கீழ்க்கணக்குக்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க' என்றார் நச்சினார்க்கினியர் (தொல்.அகத். 6, பக்.19) அவர் தாமே 'தொகைகளிலும் கீழ்க் கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக' என்று பிறிதோரிடத்திங் கூறினர் (தொல். புறத்.26 பக்.321).

இவ்விரண்டாவது இடம் பிறிதோர் அரிய செய்தியையும் நமக்குப் புலப்படுத்துகின்றது. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இப்பொழுது அகப்படவில்லை யென்பது யாவரும் அறிவர். அந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முழுமையும் இங்கே தரப்பட்டுள்ளதெனக் கருத இடமுளது. அது 'எரியெள்ளுவன்ன' என்ற உதாரணச் செய்யுளாம். பேராசிரியர் 'பாட்டுந் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு' என்பர் (தொல், மரபி. 94 பக். 1355). பாட்டு என்றது பத்துப் பாட்டினை. நன்னூற்கு உரையெழுதிய மயிலைநாதர் என்னும் சைனமுனிவர் இத்தொகை நூல்கள் எட்டாவன என்பதை 'ஐம்பெரும்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுள்ளும் விரிந்த உரிச் சொற்பனுவல்களுள்ளும் உரைத்தவாறு அறிந்து வழங்குக' (பக்.265) என்ற உரை வாக்கியத்தால் நமக்கு அறிவுறுத்துகின்றார். இவ்எட்டு நூல்களும் இன்ன என்பதை, என்ற பழைய செய்யுள் நமக்கு உணர்த்துகின்றது. எனவே தொகை நூல் எட்டனுள் இரண்டாவதாகக் கூறப்படுவது இக்குறுந்தொகை.

தொகை நூல்களுள்ளே வேறொன்றற்கு மில்லாத பெருமை குறுந்தொகை பெற்றுள்ளது. இதன்கணுள்ள செய்யுளொன்று இறைவனாலே இயற்றப்பட்ட தென்னும்படி அத்துணை யழகுவாய்ந்து நக்கீரர் சரிதத்தோடு பிணைப்புண்டு கிடக்கின்றது. இச்செய்தி தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே. யான் குறிப்பிடுஞ் செய்யுள், என்பது. இதனை யியற்றியவர் இறையனார் என்று பெயர் சிறந்த ஒரு தமிழ்ப்புலவர். இப்பெயருடையாரொருவர் இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலை யியற்றியுள்ளா ரென்பது நாம் அறிந்து மகிழத்தக்க ஒரு செய்தியாம். இவ்வாறு கொள்ளுதலால், நமது தெய்வபக்திக்கு யாதோரிழுக்குமின்று. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும்.

மேலே சுட்டிய குறுந்தொகைச் செய்யுள்பற்றி யெழுந்த சரிதத்தை விரிவாகக் கூறவேண்டும் ஆவசியகம் இல்லை. ஆனால் அச்சரிதத்தின் உட்கிடையைக் குறித்துச் சில சொல்ல வேண்டுவது இன்றியமையாததென நினைக்கின்றேன். செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவாதிருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ்விரு கொள்கைகள் பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது.

இச்சரிதத்தோடு மட்டும் இந்நூலின் பெருமை அமைந்து விடவில்லை. உரைகாரர்கள் பலரும் சங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார்கள். 'அங்ஙனம் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப் படுகின்றது' எனக் குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ சாமிநாதையரவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இந்நூலினின்றும் சுமார் 1000 மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நூல் முற்காலத்தே மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்ததென்பது தெளிவாம்.

நூலின் பெருமை நோக்கியும், அது மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்தமை நோக்கியும், இதற்குப் பேராசிரியர் உரையெழுதினர். உரையெழுதினாரென்பது கேவலம் கன்னபரம்பரைச் செய்திமட்டும் அன்று; நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றில், எனக் காணப்படுகின்றது. இதனால் பேராசான் தமது கல்விப் பரப்பும் அறிவுத் திறனும் விளங்கும்படி மிகச் செவ்வியவுரையொன்று இயற்றினாரென்பதும், அவர் 20 செய்யுட்களுக்கு உரை யெழுதவில்லையென்பதும் புலனாகும். விடப்பட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரையியற்றினார் என்பது மேலைப் பகுதியின் இறுதியடி தெரிவிக்கின்றது. இச்செய்தி, என்ற வெண்பாவினாலும் அறியக்கிடக்கின்றது. மேலே காட்டிய உரைச் சிறப்புப் பாயிரத்தில் 'பேராசான்' என்று கூறப்பட்டுள்ளதேயன்றித் தொல்காப்பிய வுரை முதலியன இயற்றிப் பெயர் சிறந்து விளங்கிய பேராசிரியரென்பது தெளியப்படவில்லை. இப்பேராசான் என்பவர் பேராசிரியரே யென்பது அவரது உரைக் கருத்தைத் தழுவி நச்சினார்க்கினியர் எழுதிய உரைப்பகுதி யொன்று நன்கு தெரிவிக்கின்றது. அகத்திணையியல் 46-ம் சூத்திரவுரையில் 'பேராசிரியரும் இப்பாட்டில் (யானே யீண்டையேனே; குறுந்.54) மீனெறி தூண்டிலென்பதனை ஏனையுவம மென்றார்' என வருகின்றது. எனவே குறுந்தொகைக்குப் பேருரை கண்டவர் பேராசிரியரே யென்பது ஐயமின்றித் தெளியலாம்.

இனி, 'தொல் பேராசான்' என்று மேலைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுதலின், நச்சினார்க்கினியருக்கு மிக முற்பட்டவரென்று ஒருவாறு தெரியலாம். இருவருக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகக் கொள்ளின், அது மிகவும் பொருந்துவதேயாம். நச்சினார்க்கினியர் 16-வது நூற்றாண்டில் வாழ்ந்தவரென ஒருவாறு அறுதியிடப்படுகின்றது. ஆகலின், குறுந்தொகை யுரைகாரராகிய பேராசிரியர் 13 அல்லது 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் வேண்டும். இக்கால வரையறை தொல்காப்பிய வுரைகாரராகிய பேராசிரியருக்கும் பொருந்துவதாகலின், இரண்டு நூல்களுக்கும் உரையாற்றியவர் ஒருவரேயெனத் துணியத்தகும்.

வேறொரு செய்தி இங்கே மனங்கொள்ளுதற்குரியது. தொல்காப்பியச் செய்யுளிலுரையிற் பலவிடங்களிற் பேராசிரியரது கருத்தைப் பின்பற்றி நச்சினார்க்கினியர் எழுதிச் செல்கின்றார். ஆகவே, பேராசிரியரிடத்துப் பெருமதிப்பு உடையவர் இவரென்பது போதரும். இங்ஙனம் தம்மால் மதிக்கப்பட்டா ரொருவரது உரையை நச்சினார்க்கினியர் முற்றுவித்தாரென்றல் பெரிதும் ஏற்புடைத்தாதல் காணலாம்.

பேராசிரியர் 20 செய்யுட்களுக்கு ஏன் பொருளெழுதாது விடுத்தனர் என்ற கேள்வி நமக்கு எழுதல் இயல்பே. அதற் குரிய விடையை நாம் ஆராய்ந்து தெரிவதில் பயன் யாதுமில்லை. குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீஐயரவர்கள் ஒரு காரணத்தைத் தம் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றார்கள். அக்காரணத்தை யொப்புக் கொள்ளுதலில் எவ்வகைத் தடையுந் தோன்றவில்லை. அதைப்போன்ற ஒத்த தகுதியையுடைய வேறொரு காரணமும் கூறுதல் கூடும். உரைகாரர்கள் பொருள் வெளிப் படையெனத் தாம் கருதுஞ் செய்யுட்களுக்கு உரையெழுதாது விடுதல் மரபு. ஐங்குறுநூற்றிற் பல செய்யுட்களுக்கு உரையின்மையும் ஈண்டு நோக்கத்தக்கது. இங்ஙனம் தாம் வெளிப்படையெனக் கருதிய 20 செய்யுட்களுக்கு உரைவரையாது பேராசிரியர் விடுத்திருப்ப, அவற்றின் அருமைப் பாட்டினை யுணர்ந்து நச்சினார்க்கினியர் தமது புலமையெல்லாந் தோன்ற உரை யெழுதினாரெனக் கொள்ளுதலும் அமையும். காரணம் எதுவாயினும் இரண்டு பேருரைகாரர்கள் குறுந்தொகைக்கு உரையியற்றினாரென்றல் உண்மை. இவ்வுரை இப்பொழுது அகப்படவில்லை. இதனைக் கற்று இன்புறும் பேறு நமக்கு இல்லை யென்று வருந்துவதோடு நாம் அமைந்துவிட வேண்டியதே.

இங்ஙனம் சரிதத்தாலும், பயிற்சி மிகுதியாலும், உரைச் சிறப்பாலும் பெருமையுற்று விளங்கிய குறுந்தொகை இப்பொழுதுதான் நன்கு பரிசோதிக்கப்பெற்று வெளிவந்துள்ளது. இதற்குமுன் ஒரு சில பதிப்புக்கள் வெளிவந்துள்ளமையை நான் மறந்துவிடவில்லை. முதன்முதலாக இந்நூற் பதிப்பில் ஈடுபட்டு வெளியிட்ட பெருமை சௌரிப்பெருமாள் அரங்கன் என்றவருக்கு உரியது. அவர் எத்துணையோ முட்டுப்பாடுகளுக் கிடையில் 1915-ம் வருடத்தில் குறுந்தொகைப் பதிப்பொன்று வெளியிட்டனர். இந்நூலைப் பதிப்பித்தற்குப் பெருந்தகுதி வேண்டு மென்பதைத் தாமே நன்குணர்ந்தவர். ஆனால் தமக்கு இயல்பாக வுரிய தமிழார்வத்தினால் யாதானுமொரு பதிப்பு வெளிவருமாயின், பின்னர் அது திருத்தமடையக் கூடுமென் றெண்ணி இப்பதிப்பிடு முயற்சியிற் புகுந்தவர். அவர் பதிப்பில் பதிப்பாளர்க்கு நேர்ந்த இடுக்கண்கள், கிடைத்த ஓலைச்சுவடிகள் இருந்த அலங்கோலங்கள், அச்சுவடிகளோடு போராடிய போராட்டங்கள், நேரியவாயுள்ள செய்யுட்களிலும் தம் இளங்கண்ணுக்குத் தோன்றிய நூதன வடிவங்கள், உரைகாணுதற்கு முயன்ற பயனில் முயற்சிகள் முதலிய அனைத்தும் நன்கு வெளியாகின்றன. ஒரு சில உதாரணங்கள் காட்டு என்று பதிப்பித்துள்ளார். இது என்று பதிப்பிக்கக் பெறல் வேண்டும். என்று பதிப்பித்துள்ளார். இதில் இரண்டாமடி, என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும். என்று பதிப்பித்தனர். இதன்கண் முதலடி நான்கு சீர்களை யுடையதாதல் உரைகாரர்கள் பலர்க்குங் கருத் தாம். எனவே, என்று அடிவரையறை செய்தல் வேண்டும். என்றிருக்க வேண்டுவது, எனப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. என்றிருக்க வேண்டும் அடிகள், என்று காணப்படுகின்றது. என்றிருக்கற்பாலது, எனப் பதிப்பிக்கப்பட்டது.

பதிப்பிலுள்ள பிழைகள் இவ்வாறுள்ளன. இவர் உரைவகுக்குந் திறத்திற்கு ஓருதாரணம் காட்டுகின்றேன்:
'முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே' (குறுந். 239) என்ற அடிக்கு 'முந்தும் முறைமையாகிய காவலையுடைய மலைக்குரியான் றிறத்து' என்று உரை வகுத்தனர். முந்தூழ் என்பது மூங்கிலின் பெயராகும்.

இங்ஙனமாக எத்தனையோ பெரும்பிழைகள் காணப்படினும் சௌ. அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்களாக வுள்ளோம். முதலாவது, அவர்க்குக் கிடைத்த பிரதிகளின் நிலைமையே பிழைகள் பலவற்றிற்குக் காரணமாயுள்ளது. இரண்டாவது, குறுந்தொகையின் நயத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும்படியாகச் செய்தனர். மூன்றாவது, தமிழறிஞர்களுடைய உள்ளத்தைக் குறுந்தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தனர். நான்காவது, குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டுமென்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தனர். ஒரு சில பதிப்புக்கள் சிற்சில இடங்களில் திருத்தம் பெற்று வெளிவருவதற்கும் காரணமா யிருந்தனர். இவ்வாறு பெருநன்மைகள் பல உண்டாவதற்கு அரங்கனார் காரணமாயிருந்தன ரென்பதை யெண்ணுந்தோறும் அவர்பாற் கௌரவம் பெருகித் தோன்றுகிறது. இப்பொழுதுகூட, அரங்கனார் பதிப்பு ஒருவாறு பயன்படுகிற தென்றே சொல்லவேண்டும். பதிப்பாளர் கடமையை நன்குணர்ந்தவரானமையினாலே ஏட்டுப் பிரதிகளின் நிலைமைகளையெல்லாம் அங்கங்கே கூறிச் செல்வர். இவ்வாறு எழுதுவதனாலுண்டாம் நன்மையைப் பதிப்பாளர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நன்குணர்வார்கள். ஓர் உதாரணத்தால் எனது கருத்தை விளக்குகின்றேன். குறுந்தொகை 266-ம் செய்யுளை யெடுத்துக் கொள்க. இச்செய்யுளைக் குறித்து 'இப்பாட்டு ஆறடியினதாதல் உணர ஒரு பிரதியில் 4,5 அடிகளுக்கு இடம் விடப்பட்டிருக்கிறது' என்று அரங்கனார் எழுதுகின்றார். பின்னர், 1930-ல் 'கலா நிலயத்' தில் குறுந்தொகையைத் தாம் நூதனமா யெழுதிய உரையுடன் ஓர் அறிஞர் பதிப்பித்தனர். அப்பதிப்பில் அரங்கனாரது குறிப்பை அறவே மறந்து விட்டனர். செய்யுளிற் குறையுள்ள தென்பதனை ஓராற்றானுங் குறித்தல் செய்யாது உரையெழுதிச் சென்றனர். சில காலத்திற்கு முன் குறுந்தொகையை யான் ஆராய்ந்த பொழுது, அச்செய்யுளில் ஓரடி குறைந்து விட்டதென்றும், அவ்வடி, என்பதாகு மென்றுந் தெளிந்து கொண்டேன். எனவே,
மேலைச்செய்யுள், என்றிருத்தல் வேண்டுமென்று அறிந்தேன்.

இங்ஙனமாக, அரங்கனாருரையை எப்பொழுதும் போற்றுங் கடப்பாடுடையோம்.

இப்பதிப்பிற்குப் பின் எனது நண்பர் திருவாளர் கா. நமச்சிவாய முதலியாரவர்களால் மூலப்பதிப்பு ஒன்று அச்சிடப்பட்டது. அப்பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை. பின்னர் 1930-ல், புரசைபாக்கத்திலிருந்து எனது நண்பர், திரு டி.என். சேஷாசல ஐயரவர்களால் வெளியிடப்பட்ட 'கலா நிலயத்'தில், திரு இராமரத்னமையரவர் கள் தாம் எழுதிய புத்துரையுடன் ஒரு பதிப்பு வெளியிட்டனர். இது தனிப் புத்தகமாக வெளிவரவெல்லை. இப்பதிப்பிற்குப் பின்னர் 1933-ல், வித்துவான் சோ. அருணாசல தேசிகரவர்களால் மூலம் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டது.

இப்பதிப்புக்க ளனைத்தினும் அங்கங்கே ஒருசில பிழைகள் திருந்தினவென்பது உண்மை. ஆனால் இன்னும் பல பிழைகள் பொதிந்தனவாகவே அவை இருந்தன. இப்பிழைமலிந்த பதிப்புக்களும் மிகுதியாக வாங்கிக் கற்கப்பட்டன. அரங்கனார் பதிப்பு வெளிவந்த பின்னர் 20 ஆண்டுகட்குள் 3 பதிப்புக்கள் தோன்றின வெனின், எத்துணை யளவாகத் தமிழ் மக்கள் இந்நூலை அவாவின] ரென்பது புலனாம். ஆங்கில நூற் பதிப்புக்கள் போலத் தமிழ் நூற் பதிப்புக்களை யெண்ணுதல் தவறு. இந்நாட்டில் வெளிவரும் பதிப்புக்களை யெண்ணின், மேற்குறித்த 3 பதிப்புக்களும் வெகு விரைவில் வெளிவந்தனவென்றே சொல்லவேண்டும். ஓலைச்சுவடிகள் பெற்று ஆராய்ச்சி செய்து இவை வெளியிடப்பட்டனவல்ல. ஆகவே, ஐயரவர்களுடைய பதிப்பு தமிழ் மக்களுடைய பேராவலையெதிர் நோக்கியே வெளிவந்த தென்று கூறவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பதிப்பிற்கு வேண்டும் பொருளுதவி செய்தது மிகவும் பாராட்டத் தக்கது.

நன்று: அச்சின்வாய்த் தோன்றிய வரலாற்றினை இதுகாறுங் கூறினேன். இனி,முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு, குறுந்தொகையெனப் பெயர்கொண்டு வெளிவந்த வரலாற்றினைப்பற்றி ஒருசிறிது கூறலாமென்றெண்ணுகிறேன். பிரதிகளின் இறுதியில், "இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்; இத்தொகை நாலடிச் சிற்றெல்லையகவும் எட்டடிப் பேரேல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகின்றது. அகநானூறு என்ற தொகைநூற் பிரதிகளின் இறுதியில் 'தொகுத்தான், மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன்; தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில் 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள 'முடித்தான்' என்பது தொகுத்தான் என்று பொருள்படுமெனக் கோடலே நேரிது. இஃது உண்மையோடு பட்டதாயின், பூரிக்கோவும் உப்பூரி குடிகிழாரும் ஒருவரேயாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும். இவர்கள் அந்தணரா அல்லது வேளாளரா என்ற வினாவிற்கு விடையிறுத்தல் எளிதன்று. கிழார் என்பதனை நோக்கினால் வேளாளரென்று கொள்ளுதல் வேண்டும்; சன்மன் என்பதனை நோக்கினால் அந்தணரென்று கொள்ளுதல் வேண்டும். ஆனால் 'சன்மன்' என்பது 'ஜந்மந்' என்றதன் தமிழ் வடிவென்று கொள்ளின், இவர்கள் வேளாளராகவே இருத்தல் கூடும்.

அகநானூற்றுக்கு நெடுந்தொகையெனப் பெயருண்மை கற்றாரறிவர். தந்தை தொகுத்ததனைக் குறுந்தொகையெனவும் மகனார் தொகுத்ததனை நெடுந்தொகை யெனவும் வழங்கிழா ரென்றல் ஒருவகையாற் பொருத்த முடையதேயாம். இரண்டு ஆசிரியர்கட்கும் உள்ள தொடர்பு அனர்கள் தொகுத்துள்ள நூற்பெயர்களிலும் விளங்குதல் அமைதியுடையதே. சம காலத்திலேனும் அல்லது மிக அண்ணிய காலத்திலேனும் இரு நூல்களும் தொகுக்கப்பட்டமை மேலைத் தொடர்பும் விளக்குகின்றது.

இவ் இரண்டு நூல்களில் நாலடிச்சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையது குறுந்தொகை; 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் உடையது நெடுந்தொகை.9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் உடையது நற்றிணை. இந்நற்றிணை தொகுக்கப் பெற்றது குறுந்தொகைக்கு முன்னோ பின்னோ என்று தெளிதற்குரிய பிரமாணங்கள் கிடைக்கவில்லை. இவ்வகப்பொருள் நூலும் குறுந்தொகைக் காலத்தினை யடுத்தே தொகுக்கப் பெற்றிருத்தல் வேண்டும்.

தொகை நூலகளுட் பெரும்பாலன பாண்டியர்களால் தொகுப்பிக்கப்பட்டனவெனத் தோன்றுகின்றது. ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும், சேரர்களாலே தொகுப்பிக்கப்பட்டன. சோழ அரசர்களால் தொகுப்பிக்கப்பட்டதாக யாதொரு தொகை நூலும் காணப்படவில்லை. ஆனால் வரையறுத்துச் சொல்லுதற்குரிய ஆதாரமொன்றும் நமக்குக் கிடைக்கவில்லை.

2

குறுந்தொகையின் காலத்தை இனி ஆராய்ந்து கூறலாமென்று எண்ணுகிறேன். குறுந்தொகையின் காலமென்பதில் இரண்டு வேறு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று இந்நூல் தொகுக்கப்பட்ட காலம்; பிறிதொன்று இந் நூற் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலம். இரண்டற்கும் யாதோரியைபும் இல்லை. எனது கருத்தினை ஓர் உதாரணத்தால் விளக்குகிறேன். பன்னூற்றிரட்டு என்னுந் தொகை நூலைப்பற்றித் தமிழ் கற்றாரனைவரும் அறிவர். இது சில வருடங்கட்கு முன்னர் ஸ்ரீபாண்டித்துரைத் தேவரவர்களால் தொகுக்கப்பட்டது. ஆனால், இதன்கண் அடங்கிய செய்யுட்களோ எனின், வெவ்வேறு காலத்திருந்த பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதனையொத்து இரண்டு வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொகைநூல்களின் கால வரையறை குறித்துச் செய்ய வேண்டுவனவா யுள்ளன. இதனை நாம் நன்றாக மனங் கொள்ளுதல் வேண்டும். ஒன்றனைப் பிறிதொன்றனோடு மயங்கவைத்தல் கூடாது. தொகுத்தது, குறிப்பிட்ட ஒரு காலத்தாதல் வேண்டும்; செய்யுட்கள் இயற்றியதோவெனின், பற்பல காலங்களிலாதல் வேண்டும்.

இக்காலத்துப் பதிப்பாளர் சிலர் ஒரு பொருள் பற்றிப் பல ஆசிரியர்கள் பல நோக்குப்பற்றி ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுதலைக் காண்கின்றோம். இத்தொகையை 'Symposium' என ஆங்கிலத்தில் வழங்குவர். இதனைப்போன்றே ஏக காலத்திலே இயற்றித் தொகுக்கபபட்டனவாக, கடைச்சங்கத்துத் தொகை நூல்கள் இருத்தல் கூடாவோ என்று சிலர் ஆசங்கித்தல் கூடும். ஆனால் உற்று நோக்கின், இவ் ஐயுறவிற்கு இடமில்லை யென்பது தெளிவாம். இவ்வகை நூல்கள் தோன்றுதற்குரிய நிலைமை யுண்டாதல் முற்காலத்து அருமையாம். ஏககாலத்தில் சங்கத் தொகை நூற் புலவர்கள் இருந்தனரென்று கொண்டாலும், அவர்கள் பல இடங்களில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்துதற்குரிய சௌகரியங்கள் முற்காலத்தில் இல்லை. உண்மையில் அவர்கள் ஏக காலத்து வாழ்ந்தவர்களுமல்லர். ஒரு சில புலவர்கள் தம் காலத்திற்கு முன்பு வாழ்ந்த புலவர்களையும் அவர்கள் சரித்திரஙகளையும் குறித்துப் பாடியிருக்கின்றனர். இச்செய்யுளைப்பாடிய ஔவையார் வெள்ளிவீதியாரது சரித்திரம் பற்றிப் பாடியமை கவனிக்கத் தக்கது. இவ் இரு புலவர்களும் இயற்றிய செய்யுட்கள் சில நாம் ஆராய்ந்துவரும் குறுந்தொகையிலும் காணப்படுகின்றன. இந்த அழகிய செய்யுளைப் பாடியவர் வெள்ளிவீதியே, காதலென்னுங் கடுந்தீயின் பொறுக்கலாற்றாமையை இத்துணை வேகத்தோடு கூறுகின்றவர் ஔவையாரே. இவ் இருவரும் வேறுவேறு காலத்தினராதல் வெளிப்படை. வேறோர் உதாரணம் புறநானூற்றினின்றும் தருகின்றேன். என்று குமணனென்னும் வள்ளலைப் பெருஞ்சித்திரனாரென்னும் புலவர் பாடினர். இங்குக் குறித்த மோசியார் பாடிய செய்யுட்கள் பல புறநானூற்றின்கண்ணேயே வருகின்றன. அவற்றுளொன்று கீழ் வருவது: இவ் இருவரும் வேறுவேறு காலத்தினர்; எனினும் ஒரு தொகைநூலின் கண்ணே இருவரது செய்யுட்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

மேற்காட்டியன போன்று பல வுதாரணங்கள் காட்டுதல் கூடும். எனவே சமகாலத்தினரது செய்யுட்களைத் தொகுத்த தொகைகளல்ல சங்க இலக்கியங்கள். உண்மை இவ்வாறிருப்பவும். காலவரையறை செய்யப் புகுந்தார் ஒரு சிலர், தொகுத்த காலமும் இயற்றிய காலமும் ஒன்றேனக்கொண்டு, பெரிதும் மயக்கத்தை விளைவித்தனர். புறநானூற்று முதற்பதிப்பின் முகவுரையில்,'இந்நூற் செய்யுட்களால் பாடப்பெற்றவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தா ரல்லர்; ஒரு சாதியா ரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே' என்ற பொருள் பொதிந்த வாக்கியம் வரையப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது.

தொகை நூல்களின் காலவரையறைபற்றிப் பொதுப்படப் பேசும் இந்தச் சந்தர்ப்பத்திலே ஆராய்ச்சியாளர் கொண்டிருக்கும் பிறிதொரு கொள்கையையுஞ் சிறிது ஆராய்தல் நலம். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு என்ற ஐந்து தொகை நூல்களிலும் வருங் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியன. எனவே, இப்பெருந்தேவனாரே இவற்றைத் தொகுத்தவராதல் வேண்டும் என்பர் ஒரு சிலர். பெருந்தேவனாரை 9-ம் நூற்றாண்டினராகக் கொண்டு, தொகைநூல்களும் அக்காலத்தில் தொகுக்கப் பெற்றனவென்றுங் கொள்ளுவர். இது சிறிதும் பொருந்தாமை எளிதில் உணரலாம்.

ஒருவர் இப்பொழுது சில தொகை நூல்கள் தொகுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகைநூலுக்கும் கடவுள் வாழ்த்தாக அப்பர் திருப்பாட்டுகளினின்றும் ஒவ்வொரு செய்யுளை எடுத்துச் சேர்த்திருப்பதாகவும் கருதிக்கொள்க. கடவுள் வாழ்த்துக்கள் அப்பர்சுவாமிகள் செய்தருளியன என்ற ஒரு காரணம்பற்றி இத்தொகை நூல்கள் யாவும் அச் சுவாமிகள் தொகுத்தனவென்று கூறுதல் பொருந்துமா? இதுபோன்றதொரு கூற்றே பெருந்தேவனார் தொகுத்தாரென்று கூறுவதும்.ஐந்து தொகை நூல்களிலும் அப்பெருந் தேவனாரது செய்யுட்கள் காணப்படுதல் பற்றி இம்முடிபுக்கு வருதல் ஒரு சிறிதும் தகாது. கபிலர் என்னும் புலவரது செய்யுட்கள் பரிபாடலொழிய ஏனைத் தொகை நூல்களனைத்தினும் வந்துள்ளன. இதுபற்றி கபுலர் இத்தொகைகளைத் தொகுத்தாரென்று கூறுதல் பொருந்துமா? அன்றியும் முழுவதும் கிடைத்துள்ள தொகை நூல்களிற் காணப்படும் இறுதிக் குறிப்பில் தொகுத்தாரும் தொகுப்பித்தாரும் கொடுகப்பட்டுள்ளமை யாவரும் அறிவர். இவ் இறுதிக் குறிப்பினைக் கற்பிதமென்று தள்ளுவதற்குக் காரணம் யாதும் இல்லை. இக்கூறிய காரணங்களால் பெருந்தேவனார் தொகைநூல் தொகுத்தாரென்னுங் கொள்கை அறவே விலக்குண்டொழிகின்றது.

இனி, குறுந்தொகை தொகுக்கப் பெற்றுள்ள காலத்தை நோக்குவோம். இந்நூலுக்கு உரைவகுத்தார் பேராசிரியர் என்பது முன்னே கூறப்பட்டது. பேராசிரியர், ஒட்டக்கூத்தர் காலத்தினராதல் 'ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது' என்று தமிழ் நாவலர் சரிதையிற் குறிக்கப்பெறும் செய்தியால் விளங்கும். ஒட்டக்கூத்தர் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்பது சரித்திர மொப்பியதோருண்மை. எனவே, பேராசிரியர் காலமும் அதுவேயாக, குறுந்தொகை 12-ம் நூற்றாண்டிற்கு முன்பே தொகுக்கப் பெற்றுள்ளமை தெளிவாம். இனி, தொல்காப்பியத்திற்கு முதல் உரைகாரராகிய இளம்பூரணவடிகள் தமது பொருளதிகார வுரையிலே (களவியல்,12, உரை) 'ஓம்புமதி வாழியோ' என்னும் குறுந்தொகைச் செய்யுளைத் தந்து (235) 'இக்குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது' என்றெழுதினர். எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்பே குறுந்தொகை தொகுக்கப்பட்டிருந்தமை நன்கு விளங்குகின்றது. இவ் உரைகாரர் காலம் 11-வது நூற்றாண்டெனக் கொள்ளுதல் தகும். எனவே, நாம் ஆராயும் நூல் 11-வது நூற்றாண்டிற்கும் முன்னரே தொகுக்கப் பெற்றதாம்.

இனி, வீரசோழிய வுரையிலே 'அளவாற் றொக்கது குறுந்தொகை' (அலங்.36,உரை) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுரையும் வீரசோழியம் என்னும் இலக்கணமும் வீரசோழனென்னும் வீரராசேந்திரன் காலத்து எழுதப்பட்டனவாம். இவ்வரசன் கி.பி.1062-ல் பட்டமெய்தினான். எனவே இக்காலத்திற்கு முன்னரே குறுந்தொகை தொகுக்கப் பெற்றதென்று துணிந்த மேலைமுடிபு பிறிதொரு வகையாலும் உறுதியடைகின்றது.

இனி, இறையனாரகப் பொரு ளுரையிலே கடைசங்க வரலாறு கூறுமிடத்து 'அவர்களாற் (கடைச்சங்கத்துப் புலவர்களாற்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும்.. என்றித் தொடக்கத்தன.' என்று வருகின்றது. இவ்வுரையிலே கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிகேசரியென்றும், நின்றசீர் செடுமாறநாயனார் நன்றும் பெயர் சிறந்த பாண்டியப் பேரரசர்மீது இயற்றிய பாண்டிக்கோவைச் செய்யுள்கள் பல காணப்படுகின்றன. எனவே இவ்வுரை கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதாதல் வேண்டும். எழுதப்பெற்ற காலம் எதுவாயினும், உரைதோன்றிய காலம்பத்துத் தலைமுறைக்கு முன்னென்பது உரை வரலாறு கூறும் பகுதியால் உணரலாகும். எனவே உரை தோன்றிய காலம் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி [1] யாமென்பது அனுமானித்துகொள்ளக் கிடக்கின்றது.
----
[1]. இதனைக் குறித்து எனது காவிய காலத்திற் காண்க.
----

எனவே குறுந் தொகை தொகுக்கப்பெற்ற காலம் 5-ம் நூற்றாண்டிற்கும் முன்னென்பது போதரும். பாண்டிக்கோவையிற் குறுந்தொகைச் செய்யுட்களின் கருத்துக்கள் பல இடங்களிற் காணப்படுதலும் இங்கே நோக்கத்தக்கது. உதாரணம்:- என்ற செய்யுளோடு, என்ற பாண்டிக்கோவைச் செய்யுளை ஒப்பிடுக.

இனி, களவியலுரைகண்ட வரலாறு இன்னும் உறுதியாகக் குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்தை அறுதியிடுவதற்கு உதவுகின்றது. 'உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரையென்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டார் என்க, மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்டதென்க' என்பது அகப்பொரு ளுரைப்பகுதி. இப்பகுதியிலுள்ள பிற்பட்ட வாக்கியத்தில் நமது கவனம் இப்பொழுது செல்ல வேண்டுவதில்லை. முற்பட்ட வாக்கியமே மிக முக்கியமானது. அதன்கண் வரும் உருத்திர சன்மன் அகநானூறு தொகுத்தனென்பது அந்நூலின் இறுதிக்குறிப்பாற் புலனாம். எனவே அகப்பொருளுரை கண்ட காலமும் அகநானூறு தொகுக்கப் பட்ட காலமும் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது ஒருவகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோவாதலாலும் இப்பூரிக்கோ என்பான் உப்பூரிக்குடிகிழானாக இருத்தல் கூடுமாதலாலும், இத்தொகைநூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றதெனக் கொள்ளூதல் தக்கதாகின்றது.

நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களனைத்தும் இம்முடிபினையே வலியுறுத்து வனவாம். தமிழிலக்கியச் சரிதப் போக்கும் நிச்சயமாய்த்தெரிகின்ற சரித்திர விஷயங்கள் முதலியனவும் இம்முடிபினையே கொள்ளும்படி வற்புறுத்துகின்றன. இதனோடு ஒருபுடை யொத்துச்சென்று வேறு வகையான முடிபிறகு நம்மை யுயக்கின்ற ஒரு சில பிரமாணங்களும் இல்லாமற் போகவில்லை. மேற்காட்டிய களவியலுரையின் பிற்பகுதி இத்தகைய பிரமாணங்களுள் ஒன்றாம். அதனை ஆதாரமாகக் கொள்ளின், கடைச்சங்கப் புலவராகிய நக்கீரரும் இக்காலத்து வாழ்ந்தவரென்று கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறு கொண்டு கடைச் சங்ககாலமும் 5-ம் நூற்றாண்டின் தொடக்கமென முடிபு கட்டிய அறிஞருமுளர். ஆனால் இதற்குக் காட்டும் பிரமாண வாக்கியம்பற்றிப் பற்பல ஆசங்கைகள் தோன்றுகின்றன. வாக்கியம் நோக்கிய வளவில் மக்கள் செயலில் தெய்வங்கள் கலந்துறவாடிய செய்தி கூறப்படுகின்றமை காணலாம். இதுபோன்ற ஆதாரங்களை உண்மையெனக் கொள்ளுவார் இக்காலத்து அரியர். ஒருவகையான ஆட்சேபத்திற்கு மிடமின்றிப் பொருத்தமுற்று நிற்பது யான் குறித்த முடிவேயாகும். ஆகவே குறுந்தொகை தொகுக்கப் பெற்றகாலம் 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதியென்றே கொள்ளற்பாலது.

இனி, நூலிலுள்ள செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வரையறுக்க முயலுவோம். பாடினோர் பல காலத்தவரும் பலதேயத்தவருமாவர். ஆதலால் செய்யுட்களியற்றியது குறித்த ஒருகாலத்தன்று என்பது வெளிப்படை. குறுந்தொகையிலுள்ள செய்யுளொவ்வொன்றும் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியம். செய்யுட்களின் ஆசிரியர்களுடைய பெயர்களே மறைந்து விட்டன. 18 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களினும் கால வரையறை செய்ததற்குப் பயன்படும் ஆதாரங்களையுடையன மிகமிகச் சிலவேயாம். அவற்றுளொன்றை யெடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து காலத்தை அறுதியிட்டு அக் காலத்திற்கு முன்னாகப் பின்னாக இந்நூற் செய்யுட்கள் இயற்றப் பெற்றனவென்று கோடலே இயலுவதாம். இந்நெறியையே பின்பற்றி மேல்வரும் ஆராய்ச்சியை நிகழ்த்துகின்றேன்.

முந்திய பிரசங்கத்தில், என்ற செய்யுளைக் குறித்து ஒருசில கூறும்படி நேர்ந்தது. குறுந்தொகையை முதலிற் பதிப்பித்தவராகிய சௌரிப் பெருமாளரங்கனார் 'வெண்கோட்டியானை பூஞ்சுனைபடியும், பொன்மலிபாடிலி பெறீ இயர்' என்று பதிப்பித்தனரென்றும் உண்மையான பாடம் மேலே தந்துள்ளதேயென்றும் பலமுகத்தா லாராய்ந்து தமிழிலும் (கலைமகள்) ஆங்கிலத்திலும் (டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவுமலர் வெளியீடு) சில வருடங்கட்கு முன்னரே என்னால் எழுதப்பட்டது. டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களும் தனிப்பட வாராய்ந்து உண்மைப் பாடத்தை அவர்களது பதிப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். எனது முடியும் அவர்களது பாடமும் ஒன்றாதல் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன்.

இன்று இச்செய்யுளின் பாடபேத விசாரனையிற்புகும் அவசியம் இல்லை. இதன்கண் காணப்படும் சரித்திரச் செய்தியே நாம் ஆராய்தற்குரியது. சோணைநதிக் கரையிலே பொன்மிகுதியாற் சிறப்புற்று விளங்கும் பாடலியென்னும் வளமிக்க நகரத்தை நீ பெறுவாயாக என்று தலைமகன் வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைமகள் கூறுகின்றாள். எனவே, இச்செய்யு ளியற்றப் பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ் சிறந்த பெருநகரமாய் விளங்கிய தென்பது புலனாம். எக்காலத்து இவ்வாறு விளங்கியது? இதனை நிச்சயித்தற்குப் பாடலிபுத்திர நகரத்தின் சரிதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

பாடலியென்பது முதலிற் பெயர் விளக்கமற்ற ஒரு சிற்றூராக இருந்தது. இதற்குக் குஸுமபுரமென்ற பெயர் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லிச்சவி என்னு மரபினர்கள் படையெடுத்துவரவொட்டாது தடுப்பதன் பொருட்டு, அஜாதசத்ரு என்னும் அரசனால் கோட்டை யொன்று கட்டப்பெற்றது. இவ்வரசன் கி.மு. 500 முதல் கி.மு.475 வரை ஆட்சிபுரிந்தான். இவனது பெயரனாகிய உதயன் (உதயணனென்றும் இவனை வழங்கினர்) இச்சிற்றுரை ஒரு நகரமாக்குவதற்கு கி.மு. 450-ல் அடிகோலின னென்று கூறப்படுகின்றது. பின்னர் சந்திரகுப்த னென்னும் மௌரிய வரசன் இதன்கண் சில காலங்களில் வசித்து வந்தான். இவன் கி.மு. 322 முதல் 298 வரை அரசாட்சி செய்து வந்தான். இவ்வரசாட்சிக் காலத்திலே கி.மு. 302-ல் மெகாஸ்தினீஸ் என்னும் கிரேக்க ரொருவர் ஸெல்யூக்கஸ் என்னும் அரசனால் தூதாக அனுப்பப்பெற்று, பாடலிபுத்திரத்திலே வெகுகாலம் வாழ்ந்துவந்தார். இவர் இந்நகரத்தை விஸ்தாரமாக வருணித்திருக்கின்ற்னர்.

இதன் பின்னர் அசோக சக்ரவர்த்தியால் அரசாங்கத் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இச்சக்ரவர்த்தி கி.மு. 273 முதல் 233 வரை அரசாண்டனர். இவர்தாம் தமிழ்த் தேசங்கள் முதலியவற்றிற்கு முதன்முதல் பௌத்த தரிசனத்தைப் பரவச்செய்யும் பொருட்டுத் தூதர்களை அனுப்பி, அங்கங்கே பௌத்தப் பள்ளிகளை நிருமித்தவர். இவர் ஆட்சிபுரிந்து 50 வருஷங்களுக்குப் பின்னர், கி.மு. 185-ல் மௌரிய வமிசம் அழிவுற்றுச் சுங்க வமிசத்தினர் கையில் மகத ராஜ்யமும் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரமும் சென்றன. இவ்வமிசத்தின் முதலரசன் புஷ்யமித்திர னென்பவன்.இவன் காலத்தில் பாக்டீரியா அரசனான இயூக்ரேட்டிஸ் என்பவனது சுற்றத்தானும் காபூல் தேசத்து அரசனுமாகிய மிநாண்டர் என்பவன் வடஇந்தியாவிற் படையெடுத்து வந்து பாடலிபுத்திரத்தையே முற்றுகை செய்வான் போல நெருங்கினான். எனினும் கி.மு. 75-வரை அரசாண்ட சுங்க வமிசத்தினரது தலை நகராகவே பாடலி புத்திரம் இருந்துவந்தது. இவ்வமிசத்திற்குப்பின் காண்வ வமிசத்தினர் கி.மு.27-வரை மகதத்தில் அரசு புரிந்தனர். இவ்வமிசத்திற்குப்பின் மகத தேசம் அதன் தலைநகராகிய பாடலியுடன் ஆந்திரவமிசத்தினர் கைப்பட்டது. இவ்வமிசத்தினர் கி.பி. 225-வரை ஆட்சிபுரிந்தனர். இதற்கப்புறம் பாடலிபுத்திரம் லிச்சவி மரபினரால் கொள்ளப் பட்டதாயிருத்தல் வேண்டும். கி.பி. 320-ம் வருடம் முதற்கொண்டு ஆண்டுவந்த குப்த அரசனுக்குப் பாடலிலிச் சவிகளிடமிருந்தே கிடைத்தது. குப்த அரசனான சந்திரகுப்தன் (320-360) பாடலியைத் தலைநகராகக் கொண்டு அரசு புரிந்து வந்தான். இவனுக்குப்பின் சமுத்திர குப்தனால் (360-375) பாடலி புறக்கணிக்கப்பட்டது. பின்னர் குப்தர்களுக்குரிய முக்கியமான நகரங்களுளொன்றாகப் பாடலி இருந்தபோதிலும் தலை நகரென்ற பதவியை அது இழந்துவிட்டது.

பின்னர் கி.பி.405-411 வரை இநதியாவிலிருந்த சீன யாத்திரிகன் பாடலி நல்ல நிலைமையி லிருந்ததாகவே கூறுகின்றான்.

கி.பி.640-ல் இந்தியாவிற்கு வந்த ஹ்யூன் த்ஸாங் (Hiouen Thsang) பாடலிமுற்றும் அழிந்து விட்டதாகக் கூறுகின்றான்.

இச்சரிதத்தால் அசோக சக்கரவர்த்தி காலத்திற்குப் பின்பு கிறிஸ்துவப்தத்தின் ஆரம்ப காலஙகளில் பாடலியிருந்த நிலைமையை மேலைச் செய்யுள் குறிப்பதாகக் கொள்ளலாம். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலமெனக் கருதுதல் தவறாகாது.

8. குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக்குறிப்பு

I. பாடலிபுத்திரம் என்னும் நகரம் சந்திரகுப்தர் அசோகர் முதலிய சக்கரவர்த்திகளுடைய தலைநகராய் விளங்கியது என்பதும், கி.பி.4-ம் நூற்றாண்டிற்குப்பின் அப்பெரு நகரம் அழிந் தொழிந்தது என்பதும் இந்திய சரித்திரத்தால் நன்கு தெளியப்பட்டனவே. இவ் இருபதாம் நூற்றாண்டில் அந்நகரம் இருந்த இடந்தானும் அறிதற்கரியதாயிற்று. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் லெப்டினன்ட் கர்னல் எல்.ஏ.வாட்டல் (Waddel) எனபவர், இப்பொழுது 'பாட்னா' என்று வழங்கும் பிரதேசத்தில் தோண்டிப் பரிசோதனை செய்து, பாடலிபுத்திரம் அமைந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். தாம் செய்த ஆராய்ச்சியின் வரலாற்றினையும் முடிவினையும் 1892-ம் வருடத்தில் வெளியிட்டனர்.[1] அவருக்குப் பின்னரும் பாடலிபுத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே வந்தன. அவற்றின் முடிவைக் குறித்து வி.எ.ஸ்மித் தமது இந்திய புராதன சரித்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்:
----
[1]. Discovery Of the exact site of Ashoka's classic capital of Pataliputram. ----

'கி.மு. 5-ம் நூற்றாண்டில் நிருமிக்கப்பெற்றுப் பேரரசர்களது தலைநகராய் விளங்கிய பாடலிபுத்திரமானது சோணை நதியின் வடகரையிலே, கங்கையினின்றும் சிலமைல் தூரத்திலே, அவ்விரு நதிகளும் சஙகமித்தலாலுண்டான நீண்ட இடைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இந்தப் பிரதேசத்தில் இப்பொழுது சுதேசியர் வாழ்ந்துவரும் பாட்னா என்னும் பெரிய நகரமும், பங்கிப்பூர் என்னும் ஆங்கிலர் நகரமும், இருக்கின்றன. ஆனால் அவ் இரண்டு நதிகளின் போக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன; பாட்னாவிலிருந்து 12 மைல் தூரத்தேயுள்ள டினப்பூர் என்னும் இராணுவஸ்தலத்தின் அருகே அவை சங்கமிக்கின்றன. தற்காலத்துள்ள நகருக்குக் கீழாகப் புதையுண்டுகிடக்கிற புராதன நகரம், 9 மைல் நீளமும் 1 1/2 மைல் அகலமுமுள்ளதாய், நாற்கோண வடிவினதாய் அமைந்திருந்தது. திண்ணிய மரங்கொண்டியற்றிய மதிலால் அரண்செய்யப்பெற்று, 64 வாயில்களை யுடையதாய், 570 கோபுரங்களால் அலக்கரிக்கப் பெற்றதாய், சோணைநதியின் நீரைப் பாய்ச்சி நிரப்பிய ஆழ்ந்தகன்ற அகழியாற் புறத்தே சூழப்பெற்றதாய் விளங்கியது.'

நமது தேசசரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந் தொகையின் கண்ணே புதை யுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன் முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்தவேண்டியனவாகவே உள்ளன. இவர் காலத்திற்குப்பின் மூன்று பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்பதிப்புக்களிலும் முற்கூறிய குறைபாடு நீங்கவில்லை, இலக்கியச்சுவையும் கவிச்சுவையும் மிக்குள்ள இப்பேரிலக்கியம் இதுகாறும் தக்கவண்ணம் பரிசோதனை செய்யப்பெற்று வெளிவராமலிருப்பது தமிழ்மக்களது துரதிர்ஷ்டமேயாகும். இப்பெருநூல் ஆராய்ச்சிமுறையிற் செப்பஞ் செய்யப்பெற்றுத் திருந்திய பதிப்பாக வெளிவருதலைத் தமிழறிஞர்களனை வரும் பெரிதும் அவாவி யெதிர்நோக்கி யிருக்கின்றனர். இவ் வேணவா விரைவில் நிறைவேற இறைவன் அருள்புரிக. சென்னைச் சர்வ கலாசங்கத்தார் இந்நூலைத் திருத்தமுறப் பதிப்பித்து வெளியிடவேணடுமென்று மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களை வேண்டிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நற்செய்தி தமிழ் மக்களுக்குப் பெருமகிழ்ச்சியை விளைவித்திருக்கின்றது.

II.

இப்பேரிலக்கியத்தின் 75-ம் செய்யுள் பின்வருமாறு அரங்கனாராற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது: இச்செய்யுள் 'தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலை மகள் கூறியது' ஆகுமெனத் துறைக்குறிப்பினால் அறியப்படுகின்றது. இதற்கேற்பவே இளம்பூரணரும், கற்பியல் 6-வது சூத்திரவுரையில், இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டி, 'இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது' என உரைக்கின்றார். நச்சினார்க்கினியர் ஒரு சிறிது வேறு படுத்துக்கூறுவர். இவர் மேலைச்சூத்திரத்திற் காணும் 'பல் வேறுநிலை'களை வகுக்கப்புகுந்து, 'அவன் (தலைவன்) வரவு தோழி கூறிய வழி விரும்பிக் கூறுவனவும்' என்ற நிலையைத் தந்து, இச்செய்யுளை யுதகரித்து, 'இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது' எனத் துறைகாட்டினர்.

எனவே, இச்செய்யுள் தலைவி கூறியதெனல் வெளிப்படை. தனது தலைவன் வருகையை உணர்த்திய வாயில் மிகச்சிறந்ததொரு கொடை பெறுவதாக வெனக் கூறுகின்றாள். இப்பொழுது நாம் ஆராயவேண்டுவன ஈற்றின்கணுள்ள மூன்றடிகளாம். ஏனைய அடிகளின் பொருள் தெளிவாகவேயுள்ளது.

'வெள்ளிய கோட்டையுடைய யானை அழகிய சுனையிடத்துப்படியும். (ஆதலின் பரத்தையர் தனித்தாராய்ச் சென்றாடவிடாது தானும் அவ்விடத்து உறைவன் தலைமகன்). பொன்னின் மிகுதியைப் பெருமையில்லாதோய் பெறுதற்பொருட்டு எவர் வாயிற் கேட்டனை? காதலர் வருகையை (உரைத்தற்கு)' என்று சௌ. அரங்கனார் உரையிட்டிருக்கின்றார்.

இவ்வுரை 'வெண்கோட்டி யானை பூஞ்சுனை படியும்' என்பதனை உள்ளுறையுவமமாகக் கொண்டு, அது பிறிதொரு பொருளைக் குறிப்பாற் பெறவைப்பதாக இவ்வுரைகாரர் கருதுகின்றார். ஆகவே, இவ்வடிக்கு இப்பொருள் நேரானதன்றெனல் தெளிவு. தாம்கொண்ட உள்ளுறை பொருளின்கண்ணும் இவ்வடியில் ஆதாரமில்லாத கருத்துக்களைக் கொண்டு புகுத்துகின்றார். 'பரத்தையர் தனித்தாராய்ச் சென்றாடவிடாது என்றது அங்ஙனம் ஆதாரமின்றிப் புகுத்தியதாகும்.

'பொன்மலி' என்பது 'பொன்னின் மிகுதி' எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவும் வலிந்து கொள்ளப்பட்ட பொருளேயாகும். 'மலி' என்பதனைப் பெயராகக் கொள்ளுதல் பொருத்தமின்றாம். 'பொன்மிக்க' என்று உரைகூறுதலே நேரிதாம்.

'பாடிலி' என்பது 'பெருமையில்லாதோய்' எனக் கொள்ளப்படுகின்றது. 'பாணனைநோக்கிக் கூறு மிடத்து ஒருகால் இப்பொருள் பொருந்துவதாகலாம். ஆனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுள் தலைவி தோழியை நோக்கிக் கூறியதாகத் துறைகாட்டுகின்றனர். எனவே, தோழிக்கும் பாணனுக்கும் பொருந்தக்கூடிய முறையிலேதான் பாடமும் பொருளும் இருத்தல் வேண்டும். 'பாடிலி' என்பதற்குப் 'பெருமையில்லாதோய்' என்பதைக் காட்டினும் வேறு சிறந்த பொருள் காணுதலும் அரிது. தோழியைப் 'பாடிலி' யென இழித்துரைப்பது தமிழ் நூல் வழக்கன்று. ஆதலால், 'பெருமையில்லாதோய்' என்ற பொருளும், அதற்குரிய 'பாடிலி' என்ற பாடமும் கொள்ளத்தக்கன அல்ல.

III.

இனி, உண்மையான பொருள் யாதென ஆராய்வோம். 'பொன்மலி' என்பதற்குப் 'பொன்மிக்க' எனப் பொருள் கொள்ளுதலே நேரிதென மேலே கூறினேன். இது பொருந்துமாயின், இத்தொடர் ஓர் இடப்பெயர்க்கு விசேடணமாதல் வேண்டும். 'வெண்கோட்டியானை...படியும்' என்ற தொடரினையும் விசேடணத் தொடராகவே கொள்ளுதல் நேரிது. இதுவும் ஓர் இடப் பெயரினையே விசேடிக்கவல்லது. இவ் இடம் தன்னகத்து மிக்கு நிரம்பிய பொன்னாலும், தான் அமைந்திருந்த தலத்தின் அருகிலுள்ள நீர்ப்பெருக்கினாலும், முற்காலத்திற் பெரும்புகழ்பெற்று விளங்கியதாக இருத்தல் வேண்டும். அதன் பெயர்தானும் கேட்டவளவிலே உணரக்கூடிய பெருஞ் சிறப்புடையதாயிருத்தலும் வேண்டும். 'படிதல்' 'மலிதல்' என்ற விசேடணங்கள் சென்றியையும் 'பாடிலி' என்றதனோடு ஒலியளவில் மிகவும் ஒத்ததாயிருத்தல் வேண்டும். இத்தன்மைகள் வாய்ந்த இடப்பெயரொன்று முற்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கியதுண்டா?

இவ்வினாவிற்குச் சரித்திர முணர்ந்தார் மிக எளிதில் விடையளித்து விடுவர். 'பாடலி' யென்று வழங்கிய பாடலிபுத்ர நகரமே ஈண்டு ஆசிரியராற் கருதப்பட்டதாதல் வேண்டும். இந்நகரம் பண்டைக்காலத்தில் தனது நிதியாற் புகழ்பெற்று விளங்கியமை என்று வரும் அகநானூற்று அடிகளால் நன்கு உணரக்கிடக்கின்றது. பாடலியிலேயுள்ள பொன்வினைஞர் பல இடங்களிலும் விரும்பிக் கொள்ளப்பட்டன ரென்பது என்ற பெருங்கதை யடியினால் (உஞ்சை. 58,42) அறியலாகும். இதனால் பொன் அங்கே மிகுதியாக வுள்ளமையும் ஊகித்தல் தகும்.

ஆகவே 'பொன்மலி பாடலி பெறீஇயர்' என்பதே உண்மையான பாடமாதல் வேண்டும். பொன் முதலிய நிதியங்களால் மிக்கதும், பேரரசர்களது தலைநகராய் விளங்கியதுமான, இந் நகரைப் பெறுதற்கு விழையுமொரு பேறாகக் கூறுதல் பெரிதும் ஏற்புடைத்தாகும். அங்ஙனம் பெருநகர்களைக் கூறும் வழக்குண்டென்பது எனவும், எனவும், எனவும் வரும் அடிகளால் உணரலாம்.

IV.

'பாடலி' யென்ற பாடமே ஆசிரியர் கருதியதாகுமென்ற முடிபு, இச்செய்யுளின் மூன்றாமடியிற் காணும் பாடத்தாலும் உறுதியடைகின்றது. சில காலத்திற்கு முன்னால் குறுந்தொகையைச் சில கையெழுத்துப் பிரதிகளோடும் ஏட்டுப் பிரதியோடும் ஒப்பிட்டுத் திருத்திக்கொள்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது அண்ணாமலைச் சர்வகலாசாலையில் தமிழாராய்ச்சித் துறையிலுழைத்து வந்த ஸேது ஸம்ஸ்தான மகா வித்வான் ரா. ராகவையங்காரவர்கள் தங்களுடைய பிரதியை எனக்கு அன்புடன் உதவி யிருந்தார்கள். காலஞ்சென்ற தி.த.கனகசுந்தரம் பிள்ளையவர்களுக்குரிய பிரதியொன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. இவ் இரு பிரதிகளிலும் இச்செய்யுளின் மூன்றாவது அடி என்று காணப்பட்டது. பிறிதொரு பிரதியிற் 'சோணை' படியும் என்று பாடம் சிறிது வேறுபட்டிருந்தது. இந்த அடியின் பொருள் 'வெண்மையன கொம்புகளையுடைய யானை சோணைத்துறையிலே மூழ்கித்திளைக்கின்ற' என்பதாம். எனவே, இத்தொடரும் விசேடணமாய் அமைந்து, 'பாடலி' என்னும் இடப்பெயரை விசேடிக்கின்றது. சோணைநதிக் கரையிலே பாடலி நகரம் இருந்ததென்பது சரித்திர-ஆராய்ச்சியால் தெளியப்பட்ட உண்மையே. இது முற்காலத்திலே மிகவும் பிரசித்தியடைந்திருந்தமை பிறிதொரு சான்றாலும் அறியக்கிடக்கின்றது. பாணினீயத்தில் 'யஸ்ய சாயாம:' (2,1,16) என்றொரு சூத்திரம் படிக்கப்படுகின்றது. "ஏதாவது ஒன்றை 'இதுவரை பரவியுள்ள 'தெனக் குறிக்கவேண்டுமிடத்து, சுட்டினாற் கொள்ளலாவதனை நபும்ஸக லிங்க துவிதீய ஏக வசனமாகக் கொண்டு அதற்கு முன் 'அநு' என்ற சொல்லைப் பெய்து கூறுக" என்பது இதன்பொருள். இதற்கு உதாரணமாக 'அநுசோணம் பாடலி புத்திரம்' என்பது மஹா பாஷ்யக்காரராகிய பதஞ்சலியாற் காட்டப்படுகின்றது. இவ்வுதாரணத்தால் பாடலி நகரம் சோணை நதியை அடுத்து விளங்கியது பிரசித்தமான செய்தி யென்பது தெளியலாம். எனவே, 'வெண்கோட்டியனை சோணைபடியும்' என்ற பாடமே கொள்ளத் தக்கதாய் முடிகின்றது. பெரும்பான்மைப் பிரதிகளிற் 'சோனை' என்பதே காணப்பட்ட போதினும், 'னை' 'ணை' என்ற எழுத்துக்கள் பிரதி செய்வோர்களால் ஒன்றற்கொன்று மாறாக எழுதிவிடப்படுமாதலாலும், 'சோணை' என்பதே வடமொழிப் பெயரோடு ஒத்திருப்பதாலும், தமிழ் நூல்களில் இப்பெயர் வந்துள்ள ஒரு சில இடங்களில் 'சோணை' என்றே காணப்படுமாதலாலும், 'சோணை' என்ற பாடமே கொள்ளுதற்குரியது.

குறுந்தொகைப் பிரதிகளிற் காணப்படும் பாடமே தொல்காப்பிய உரைகளிலும் தரப்படுகின்றது. இப்பேரிலக்கணத்திற்கு உரையிட்ட பெரியார்களுள், காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணராவர். இவர் இரண்டிடங்களில் இச்செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டி யிருக்கின்றனர். ஒன்று மேலே சுட்டிய கற்பியல் 6-ம் சூத்திரவுரை. பிறிதோரிடம் கிளவியாக்கத்தில் 18-ம் சூத்திரவுரையாகும். இவ்விரண்டாவது இடத்தில், 'சோனை' என்பது 'சேனை' யெனப் பிரதி செய்தோராற் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது; மற்றைப்படி யாதொரு வேறுபாடும் இல்லை. நச்சினார்க்கினியரும், கற்பியல் 6-ம் சூத்திர உரையில், இச்செய்யுளை உதகரித்திருக்கின்றனர். அவரது பாடமும் பிரதிகளிற் காணப்படும் பாடமே யாகும்.

V.

இனி, 'பூஞ்சுனை படியும்' என்ற பாடம் எவ்வாறு வந்தது என்பதனைச் சிறிது நோக்குதல் வேண்டும். எனக்குக் கிடைத்த பிரதிகளில் ஒன்றிலேனும் இப்பாடம் காணு மாறில்லை. சென்னை அரசாங்க நூல் நிலைய்த்திலுள்ள கடிதப் பிரதியில் மட்டும், 'வெண்கோட்டியானை சொனைபடியும்' என்று முதலில் எழுதிப் பிறகு அதனைத்திருத்தி 'வெண்கோட்டியானை பூஞ்சுனைபடியும்' என்று வரையப் பட்டுளது. இவ்வாறு திருத்துவதற்குரிய காரணமும் எளிதிற் புலப்படக்கூடியதே. ஏடுகளில்'சோனை'யென்பது சொனை' என்றே எழுதப்பெறும். இவ்வாறு எழுதப் பெற்றது 'சோனை' என்ற நதியைக் குறிப்பதாகுமென்பதை யுணரும் ஆற்றல் சாமானியமாக ஏடெழுதுவோர்பாற் காணப்படுவதில்லை. அன்றியும் அந்நதியை,'சோனை' என்பதே தமிழிற் பெருவழக்கு. ஆதலால்' சுனை யென்பதுவே 'சொனை'யென்று தவறாக எழுதப்பெற்று விட்டதெனக் கருதிச் 'சுனை'யென முதலாவது திருத்தப் பட்டது. இவ்வாறு திருத்தியவுடன் அடிநிரப்புதற்கு ஓரசை குறைந்திருப்பது புலப்பட்டிருத்தல் வேண்டும். இக்குறை பாட்டை நீக்குதற்குப் 'பூஞ்சுனை' என்று பாடங் கொள்ளப்பட்டது. இப்பிழை வரலாறு ஏடெழுதுவோரால் எவ்வகைப் பிழைகள் நேரக்கூடுமென்பதனை யொரு சிறிது உணர்த்தக் கூடியதாம். தவறாகத் திருத்திய இப்பாடத்தினையே செள. அரங்கனார் தமது பாடமாகக் கொண்டு பொருள் கூறுதற்கண் பெரிதும் இடர்ப்படுவாராயினார்.

ஆகவே, என்பதே உண்மையான பாடமெனத் தெளியலாம்.

பாடலிபுத்திரம் சோணை நதிகரையில் நிருமிகப்பட்டிருந்த தென்பது சரித்திரக்காரரால் நெடுங்காலமாக அறியப்படாமலிருந்ததோர் உண்மை. இவ்வுண்மையைப் பற்றிய குறிப்பொன்று குறுந்தொகையிற் காணக் கிடக்கின்றமை தமிழ் மக்களாகிய நாம் அறிந்து பெரிதும் இன்புறத்தக்கதாம்.

9. 'எருமணம்'
(குறுந்தொகைச் செய்யுளொன்றின் பொருள்)

குறுந்தொகை என்பது சங்க இலக்கியம் என வழங்கப்படும் தொகை நூல்களுள் ஒன்று. இதன் செய்யுட் சிறப்பை நோக்கி, 'நல்ல குறுந்தொகை' என ஒரு பழம் பாடல் இதனைக் குறிக்கிறது. பண்டைத் தமிழ் நூல்களூக்கு உரையெழுதிய உரைகாரர்கள் பலரும் இந்நூலினை மிகவும் பாராட்டி அங்கங்கே இதனின்றும் மேற்கோள் காட்டியிருகிறார்கள்..
.
இந்நூலின் 380 செய்யுட்களுக்குப் பேராசிரியர் உரையெழுதினர் என்றும், அவர் எழுதாதுவிட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார் என்றும் தெரிகிறது. இவ்வுரை இதுகாறும் அகப்படவில்லை. இதனையிழந்தது நம்மவர்களுடைய துர்ப்பாக்கியம் என்றே சொல்லவேண்டும்..
.
குறுந்தொகையை முதன் முதலாக வெளியிட்ட தமிழறிஞர் செளரிப் பெருமாளரங்கன் என்பவர். இவர் இப் பழையவுரை யில்லாக் குறையைக் கருதி, புதிய உரையொன்று இயற்றினர். இதன் பின்பு திரு. இராம ரத்ந ஐயர் கலாநிலையத்தில் ஓர் உரையெழுதி வெளியிட்டனர். இவ் இரண்டு உரைகளும் செவ்விய உரைகள் எனக் கூற இயலாது. இவ்வுரைகள் மேற்கொண்டுள்ள பாடங்களும் திருத்தமான பாடங்களல்ல..
.
பல சுவடிகளை ஒப்பு நோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூறவிரும்புகிறேன்..
.
இந்நூலில் 113-ம் செய்யுள் 'மாதீர்த்தன் என்ற ஒருவர் இயற்றியது. இப்பெயரை மாதிரத்தன் முதலாகப் பல படியாக வாசிக்க இயலும். உதாரணமாக, 'மாதீரத்தார்' என்று ஸ்ரீ இராமரத்ந ஐயர் எழுதியிருக்கிறார். டாக்டர் ஐயரவர்கள் 'மாதிரத்தன்' எனப் பெயரைக்கொண்டு, மாதீரத்தன்', 'மாதீர்த்தன்' என்ற பாடபேதங்களும் காட்டியுள்ளார்கள். ஆனால், செய்யுளிலே பொய்கை, யாறு என்பனவற்றைச் சிறப்பித்துச் சொல்வதனை நோக்கினால், மாதீர்த்தன் என்பதுவே உண்மைப் பெயராதல் வேண்டும் என்பது விளங்கும். இப் பெயரையே யான் பதிப்பித்த சங்க இலக்கியத்தில் ஆண்டுள்ளேன். செய்யுளில் வரும் தொடர் முதலியவற்றைவைத்து ஆசிரியரைக் குறிப்பித்தல் பண்டைக்காலத்தில் ஒரு வழக்காறாயிருந்தது. தொகை நூல்களில் இவ்வழக்காற்றிற்குப் பல உதாரணங்கள் காட்டல் கூடும். கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், பதடி வைகலார் என்பனவற்றைக் காண்க..
.
இப்புலவர் செய்துள்ளதாகத் தொகை நூல்களில் காணப்படுவது குறுந்தொகையில் வந்துள்ள இந்த ஒரு செய்யுளேயாகும். அது வருமாறு: இது பகற்குறி நேர்ந்த தலைமகனுக்கு குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது..

ஊர்க்கு அருகில் பொய்கையுள்ளது; இப்பொய்கைக்குத் தூரத்திலன்றிச் சமீபத்திலேயே சிறு காட்டாறு ஓடுகிறது; அங்கே உள்ளது ஒரு பொழில். அப்பொழிலில் இரை தேர்தற்பொருட்டு வரும் நாரையல்லது வேறு ஒன்றும் வருவதில்லை. அங்கே கூந்தலுக்கு எரு மணம் கொண்டுவருவதற்காகச் செல்லுவோம். எங்கள் தலைவியாகிய பேதை அங்கே வருவாள்: இதுவே இச் செய்யுளின் பொருள்..
.
இங்கே கொண்டுள்ள 'எருமணம்' என்ற பாடம் பிரதிகளில் காணப்படுவது. ஐயரவர்களும் பிரதிபேதங்கள் கொடுத்துள்ள பகுதியில் 'ஏரு மணம்' என்ற பாடபேதத்தைக் காட்டியுள்ளார்கள் (பக்.120).
.
நூலின்கண்ணே 'எருமண்' என அவர்கள் பாடங் கொண்டார்கள். இதற்கு, 'கூந்தலிலுள்ள எண்ணெய்ப் பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு' என்று கூறி, இக்களிமண்ணையே எருமண் என்று புலவர் வழங்கியதாக விசேடவுரையில் எழுதியிருக்கின்றார்கள். தலைவியரும் தோழியரும் மயிர்ச்சிக்கு முதலியன நீக்குதற் பொருட்டுக் களிமண் கொண்டுவரப் போவார் என்று குறிப்பிடுதல் தலைவி முதலாயினார்க்குச் சிறிதும் தகுதியற்றதாம் என்பது சொல்லவேண்டா..
.
தங்கள் கருத்தை ஆதரிப்பனவாக இரண்டு பிரயோகங்கள் காட்டியுள்ளார்கள். ஒன்று குறுந்தொகையிலேயே 372-ம் செய்யுளில் வருவது. அங்கே 'கூழைபெய் எக்கர்' என்று காணப்படுகிறது. கூழை என்பது கடைப்பகுதி என்ற பொருளில் வந்துள்ளது; எக்கர் என்பது நுண் மணலாகும். இங்கே கூந்தலும் மண்ணும் என்ற பொருள்கள் பொருந்தாமை செய்யுள் நோக்கி அறிந்து கொள்ளலாம். பிறிதோரிடம் பெருங்கதையினின்றும் காட்டப்பட்டுள்ளது. அங்கே 'கூந்தனறுமண்,'(பெருங்.3,40,28) என வந்துள்ளது. நறுமண் என்ற தொடர் நறுமணமுள்ளதாக இயற்றப்பட்ட ஒருவகைக் கலவையேயாகும். கூந்தலைத் தேய்த்துக் கழுவுவதற்குக் கொள்ளும் களீமண் ஆகாது. எனவே, ஐயரவர்கள் கொண்டுள்ள பாடமும் பொருளும் இயையாமை காணலாம்..
.
திரு. இராமரத்ந ஐயர் 'ஏர்மணம்' என்று பாடங்கொண்டு மணம் என்பதனை ஆகுபெயராக்கி, மணமுள்ள மலர்கள் என்று பொருள் கொண்டனர். கூந்தலுக்கு மலர் முடித்தல் இயற்கை என்பது ஒன்றனைமட்டும் கருதி இவ்வாறு பொருள்கொண்டனர் போலும். இது வலிந்து கொள்ளப்பட்ட ஒருபொருள் என்பது எளிதிற்புலப்படும்..
.
நான் கொண்டுள்ள பாடம்'எருமணம்' என்பது. இதற்குச் செங்கழுநீர் என்ற பொருள் உண்டென்பது பிங்கலந்தையால் அறியலாம்.. இது மரப்பெயர்த் தொகுதியில் கண்ட சூத்திரம். அச்சுப்பதிப்பில் இச்சூத்திரம் வேறுபட்டுக் காணப்படினும், 'எருமணம்' என்ற பெயர் அதன் கண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கூந்தலில் பெய்து' முடித்தற்குச் செங்கழுநீர் மலர்கொண்டு வரத் தோழியருடன் தலைவி பொழிலுக்குச் செல்வதாகக் கூறிக் குறியிடம் உணர்த்தியமை தெளிவாம். இதுவே, பொருந்திய பொருள் 'எருமணம்' என்பதே பாடம் என்பது மேற் கூறியனவற்றால் விளங்கும்..
.
இச் சொல்லின் முற்பகுதி யாகிய 'எரு' கன்னடத்திலும் தெலுங்கிலும் உள்ள 'எர' என்ற சொல்லோடு தொடர்புடையதெனத் தோன்றுகிறது. இம்மொழிகளில் இது 'சிவப்பு' என்று பொருள்படும்..
.
இக் குறுந்தொகைச் செய்யுளின் பொருள், என்று வரும் திருக்கோவையார்ச் செய்யுளில் ஒருவாறு அமைந்துள்ளமை காணலாம்..

10. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து.

தொல்காப்பியப் புறத்திணையியலிலே'அமரர் கண்முடியும் அறுவகை யானும்' என்று தொடங்கும் 26-ம் சூத்திரத்தின் உரையிலே நச்சினார்க்கினியர், என்ற அழகிய செய்யுளைத் தந்து 'இது கடவுள் வாழ்த்து' எனக் காட்டியிருகின்றார். எந்நூலுக்குரிய கடவுள் வாழ்த்தென்பது ஆராயத்தக்கது..
.
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது' இது கடவுள்வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து'தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்..

'எரியெள்ளு வன்ன' என்ற செய்யுள் கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்ததெனல் சாலாது; அவை பெரும்பான்மை வெண்பாவினாலும் சிறுபான்மை வெண்செந்துறையாலும் இயன்றுள்ளன வாகலின். அன்றியும் அந்நூல்களனைத்தும் நமக்கு அகப்பட்டுள்ளன; அவற்றில் மேலைச் செய்யுள் போன்றன இடம்பெறுதற்குச் சிறிதும் இயைபில்லை யென்பது அவற்றை நோக்கின மாத்திரையில் அறியக் கிடக்கின்றது. எனவே, இச் செய்யுள் தொகை நூல்களுள் ஒன்றனைச் சார்ந்ததாகல் வேண்டு மென்பது வெளிப்படை. தொகை நூல்களுள் எதனைச் சார்ந்தது? தொகை நூல்கள் எட்டு என்பது யாவரும் அறிவர். அவை இன்னவென்பது, என்னும் செய்யுளால் உணரலாகும். இந்நூல்கள் அகவல், கலிப்பா, பரிபாடல் என்ற மூவகைப் பாக்களால் அமைந்தன. கலிப்பாவினாலியன்ற கலித்தொகையையும் பரிபாடலாலியன்ற பரிபாடலையும் 'எரியெள்ளு வன்ன' என்பது சார்ந்த தன்றென்பது வெளிப்படை. அகவலால் இயன்ற ஏனை ஆறு நூல்களுள் ஒன்றனை இது சார்ந்ததாகல் வேண்டும்..
.
இவ் ஆறு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகம், புறம் என்ற ஐந்தன் கடவுள் வாழ்த்துகளும் அவ்வந்நூலின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வாழ்த்துச்செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச்செய்யுள் இதுவரையில் அகப்படாத முதற்பத்துடன் மறைந்து விட்டது போலும்..
.
'எரியெள்ளு வன்ன' என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமா? அங்ஙனமாயின், அகவலோசை பிழைபடாதா?


11. அதியமான் அஞ்சி

அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. இவனுடைய முன்னோர்களில் ஒருவன், புகழ் பெற்றவன். கரும்பு கொணர்ந்த செய்தி புறம்-392-லும் காணப்படுகிறது. இவனது மூதாதையர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டு தேவர்கள் வந்து தங்கிய ஒருசோலை இவனது ஊரில் இருந்ததெனவும் இப் புறநானூற்றுச் செய்யுளின் உரையில் காண்கின்றது.

இவனைக் குறித்து "எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம், வழுவின்று எய்தியும் அமையாய்" (99) என்கிறது முற்காட்டிய செய்யுள். இதற்குப் பழைய உரைகாரர் என்று பொருள் எழுதினார், புறநானூற்றின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சாமிநாதையர் அவர்கள், "எழுபொறி-ஏழு இலாஞ்சனை; இவை ஏழரசர்க்கு உரியன; இது, 'கேழல்மேழிகலை யாழி வீணைசிலை கெண்டை என்றினைய பல்கொடி' (கலிங. கடவுள்.18) என்பதனாலும் ஒருவாறு விளங்குகின்றது' என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளார்கள். அன்றியும் பாடப்பட்டோர் வரலாற்றில் 'சேரன், சோழன், திதியன், எருமையூரன் இருங்கோ வேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் அரசர் எழுவர்க்குரிய ஏழு இலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன்' என்றும் [1] எழுதினார்கள். இங்குக் கொடுத்துள்ள விவரத்திற்கு ஆதாரம் இருப்பதாகப் புலப்படவில்லை. எழுபொறி நாட்டத்துத் தாயம் அடைந்ததன் பின், 'ஏழு அரசர்களோடு முரணிச் சென்று வெற்றி கொண்டு தன் வலியைத் தோற்றுவித்தான்' என்று செய்யுள் கூறுகின்றது. ஆதலால், இவ்வேழு அரசர்களுக்கும் எழுபொறி நாட்டத் தாயத்திற்கும் நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இருப்பதாகக் கருதக் கூடவில்லை.
----
[1]. இது பிற்பதிப்புக்களில் மாற்றப்பட்டுள்ளது.
----

இங்ஙனமாயின், ஏழிலாஞ்சனை என்பதன் கருத்து விளக்க மெய்தாது நிற்கின்றது என்றுதான் நாம் கொள்ளுதல் வேண்டும். உரைகாரர் "எழுபொறியையும் நாட்டத்தையும் நீங்காத அரச உரிமையை" என்று ஒரு பக்ஷாந்தரம் கூறி, " ஏழரசர் நாடும் கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியுங் கூடிய பொறியோடு கூடி நின்று நன்மையும் தீமையும் ஆராய்தல் எனினும் அமையும்" என்றும் எழுதி யுள்ளனர். இப்பொருளும் ஆராய்ச்சிக்கு உரியதே.

ஆனால்,வடமொழி நூல்களிலே காணப்படும் ஒரு மரபு இங்கே ஒரு விளக்கம் தருகின்றது. இம் மரபு "மானஸாரம்" என்ற சிற்ப நூலில் (அத்.42) காணப்படுகின்றது. சக்கரவர்த்தி, மகாராஜா, நரேந்திரன், பார்ஷிணிகன், பட்டதரன், மண்டலேசன், பட்டபாஜ், பிராகாரகன் அஸ்திர கிராகன் என ஒன்பது வகையினராக அரசர்கள் வகுக்கப்படுகிறார்கள். இவர்களுள் சக்கரவர்த்தியாவான் ஆற்றல் மிக்கவன்; நாற் பெருங்கடலெல்லை வரையும் தனது நாடு பரந்து கிடக்கும்படி ஆணைபுரிவோன்; இதற்கு அறிகுறியாகத் தனது அரண்மனை வாயிலில் வெற்றிமணியுடையவன்; நன்மையுந் தீமையும் ஆராய்ந்து நடுநிலை சிறிதும் குன்றாது முறை செய்பவன்; பெரும் புகழ் வாய்ந்தவன்; செல்வத்தில் சிறந்தவன்; குடிகளை அன்பு கொண்டு ஆள்பவன்; அரசர் அனைவர்களாலும் நன்கு மதிக்கப்படுபவன்; பேரரசன். மகாராஜன் அல்லது அதிராஜன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் ஏழரசர் நாட்டுத் தலைமை கொணடவன்; அறுவகைக் குணங்களுடையவன்; அறுவகை உறுப்புக்களுடையவன்; நீதி நூல்களிலும் ஒழுக்க நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவன்; சூரியன் அல்லது சந்திர வம்சத்தைச் சார்ந்தவன்.

நரேந்திரன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் தன்னின் மெலிந்த பகைவரிடமிருந்து வென்று கொண்ட மூன்று அரசர் நாடுகளுக்குத் தலைவன்; பார்ஷிணிகர், பட்டதரர் முதலிய மனனர்களால் வணங்கப்படுபவன்; ராஜ்ய தந்திர நோக்குடையவன்; பகை மன்னரைப் பணிவிப்பவன்; நற்செயலாளன்; விழா எடுத்து மகிழ்வதில் ஈடுபடுபவன்.

பார்ஷிணிகன் எனப்படுவான் ஓர் அரசுக்குத் தலைவன்; ஒரு கோட்டை யுடையவன் [2]; ஆறு உறுப்புக்களை யுடையவன்; அறிவு மிக்கவன்; காலத்தின் உசிதத்தை அறிபவன்; மூவகைத் தொழிலுடையவன்[3]; தன்கீழடங்கிய சிற்றரசர்களால் தங்கள் தலைவன் என ஏற்றுக்கொள்ளப் பட்டவன்.

இங்ஙனமே ஏனைய ஐவகை அரசர்களுடைய இயல்புகளும் விளங்கக் கூறப்பட்டுள்ளன.
----
[2]. 'ஓ ரெயில் மன்னன்' என்ற சங்கநூல் வழக்கு (புறம் 338) இங்கே அறியத்தக்கது.
----
[3] .படை திரட்டல், படை வகுத்தல், படை மேற் செல்லல் என்பன.
----
அதிராஜனது பிற இயல்புகளையும் மானஸாரத்தில் விளங்கக் காணலாம். இவன் முடி தரித்தற்கு உரியவன்; முகடமைந்த சிம்மாசனம் இவனுக்கு உண்டு. கற்பக விருக்ஷமுந் தோரணமும் இவன் உடையவன்; கவரி, வெண்கொற்றக் குடை, மாலை இம்மூன்றும் இவனது அரச சின்னங்கள்; இவனது சிம்மாசனத்திற்கு ஆறு கால்கள் உண்டு; முத்து மாலையை அணிபவன்; இரண்டு தலை நகரங்கள் உடையவன்; ஆறிலொன்று இறைகொள்பவன். அதிராஜனுடைய இயல்புகளுள் ஒன்றாக ஏழரசர் நாட்டுத் தலைமை குறிக்கப்பட்டமை கவனிக்கற்பாலது. இதனையே, என்ற அடிகள் குறிப்பனவாகக் கொள்ளலாம். இவனுக்கு மானஸாரத்திற் கூறிய கற்பகக்காவுரிமை உண்டென்பது இவ்வடிகளிலே 'பூவார் காவின்' என்பதனால் விளங்கும். உரைகாரர் கூறிய விளக்கக் குறிப்பும் இதனையே ஆதரிக்கிறது

இனி, சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இங்குக் காட்டிய வடநூற் கருத்து உளதெனக்கூறுதல் பொருந்துமோ எனச் சிலர் ஐயுறலாம். கி.பி, 8-ம் நூற்றாண்டில் தோன்றிய வேள்விக்குடி சாஸனத்தில் சுமார் கி.பி.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த களப்பிரன் என்பானைக் குறித்து, என வருகின்றது, எனவே, கி.பி. 5-ம் நூற்றாண்டிற்கு முன்பே அதிராஜர்கள் பலர் இருந்தமை புலப்படுகிறது. எனவே, அதிராஜர் என்பதன்கண் அடங்கிய கருத்துத் தமிழ் நாட்டில் மிகப் பண்டைக்காலந் தொட்டே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்று ஊகிக்கலாம். மானஸாரத்திற்கு[4] முன்புள்ள பல நூல்களிலும் அரசர் கூறுபாடுகளும் இயல்புகளும் கூறப்பட்டிருந்தன என்று கருதுதற்கும் இடமுண்டு. ஏனெனின், அதன்கண் வரும் இவ்வரசர் இயல்புகள் 'வேதபுராண சாஸ்திரங்களினின்று தொகுக்கப்பட்டுள்ளன' என்று ஒரு வாக்கியம் காணப்படுகிறது (42,79-80). ஆனால், மானஸாரத்திற்கு முந்திய நூல்களுள் எதன்கண் இப்பாகுபாடு முதலியன உள்ளன என்பது ஆராய்ந்து தெளியப்படுதல் வேண்டும். தெளிந்தால், சங்க காலத்தில் தானே இவ்வடமொழிக் கருத்துக்கள் தமிழ் நாட்டில் நிலவின என்பது உறுதிபெறும்.
----
[4]. இந்நூலின் காலம் கி பி 500-க்கும் 700-க்கும் இடைப்பட்டதாகலாம் என்பர் (P.K.Acharya: Dictionary of Hindu Architecture and Indian Architecture).
----

தமிழ் மக்களுடைய நாகரிகத்திற்கும் வடமொழியாளர்களுடைய நாகரிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பின் தன்மை தெளிவுபெற இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஆராய்ச்சி பெருகப் பெருக, இரண்டு இனத்தவர்களும் ஆதியில் ஒரே குடும்பத்தினர் என்பதுதான் உண்மையாய் முடியுமெனத் தோன்றுகிறது. சிற்சில தன்மை வேறுபாடுகள் உளவெனின், அவை தென்னாட்டிலும் ஆயற் பிரதேசத்திலும் வாழ்ந்து வந்த முண்டர்கள் முதலிய பூர்வ குடிகளின் கலப்பினால் ஏற்பட்டன போலும். இவ்வகை ஆராய்ச்சியில் முதல் முதலில் நாம் செய்ய வேண்டுவது ஒற்றுமைக் கருத்துக்களை யெல்லாம் ஒருங்கு திர்ட்டுவதாகும். இம்முறையில் அதியமானைப் பற்றிய இக் குறிப்பும் கொள்ளத்தக்கது.

12. மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு

தமிழர்சரிதத்தின் ஆராய்ச்சிவரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன்-செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேல் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு'. மீண்டும் இதனைக்குறித்து ஆராயவேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

முறைப்பட ஆராயுமுன், ஒரு கண்டனவுரையை இங்கே குறிப்பிடாமலிருக்கமுடியாது. காலஞ்சென்ற தஞ்சை ஸ்ரீநிவாஸபிள்ளை யவ்ர்கள் 'சேரன்செங்குட்டுவன்' வெளிவந்த சில மாதங்களுக்குள் விரிந்த ஆராய்ச்சியுரை யொன்று செந்தமிழில் (1915) வெளியிட்டனர். இவ்வுரை நடுநிலைகுன்றாது சரித்திரவுணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது. மௌரியர் படையெடுப்பைக்குறித்து இதிற் காணும் கண்டனத்திற்கு விடைகூறல் எளிதன்று. எனினும், சிற்சில ஐயப்பாடுகள் தோன்ற இடமுண்டு.

'சேரன் - செங்குட்டுவன்' என்ற நூலை மிகவும் பயன்படுத்தியவர்கள் சரித்திர அறிஞர்களே. இவர்களுள் டாக்டர் கிருஷ்ணஸ்வாமியையங்காரவர்கள், இந்நூலிற் காட்டிய சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு, தெற்கே படையெடுத்துவந்தவன் சந்திரகுப்தமௌரியன் அல்லது பிந்துஸாரனாதல்வேண்டுமென்றும் அப் படையெடுப்பு பொதியமலைவரை எட்டியதென்றும் தென்னிந்திய சரித்திரம் எழுதத்துணிந்தனர் (Beginnings of South Indian History, p. 88-103). இந்நிகழ்ச்சிகளின் சமகாலத்தன சங்க இலக்கியங்கள் என்று கொள்ளுதல் பொருத்தமன்று என்பதும், காண்வ வம்சத்தினர் வீழ்ச்சிக்கும் ஆந்த்ர ப்ருத்தியர் எழுச்சிக்கும் இடைப்பட்டகாலத்தில் (அதாவது சுமார் கி.மு.30 க்கும் கி.பி.200 க்கும் இடையில்) அவை தோன்றியனவாதல்வேண்டும் என்பதும் டாக்டர் ஐயங்காரவர்கள் கருத்தாகும். ஸ்ரீ சத்யநாதையர் இப்படையெடுப்பு பிந்துஸாரன்காலத்ததாம் என்பர் (A College Text Book of Indian History vol. I.p.86).

இனி, மௌரியரைக் குறித்துள்ள சங்கநூற் சான்றுகளைக் கவனிப்போம். புறநானூற்றிலே ஒருசெய்யுளும் அகநானூற்றிலே மூன்றுசெய்யுட்களும் மோரியரைக் குறிப்பிடுகின்றன. பிற்கூறிய மூன்றனுள், மாமூலனார் இயற்றியன இரண்டாம். இங்குக் காட்டிய நான்கு செய்யுட்களுள்ளும் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றற்கே பழைய வுரையுள்ளது. அதனை முற்பட உணர்ந்துகொள்வது பெரும் பயன் தருவதாகும். அச்செய்யுள் வருமாறு.

1. புறம்-175. கள்ளில் ஆத்திரையனார். அகம் - 251. மாமூலனார் அகம் - 69. உமட்டூர்கிழார்மகனார் அகம் - 281. மாமூலனார் பரங்கொற்றனார்.

"வென்றிவேலையுடைய விசும்பைத்தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையுமுடைய நிலமுழுதும் ஆண்ட வேந்தரது திண்ணிய ஆர்சூழ்ந்த சக்கர மியங்குதற்குக் குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்றுவிளங்கும் பரந்த இடத்தையுடைய ஆதித்தாண்டிலத்தையொப்ப நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக் கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை" என்பது இதன் பழையவுரை.

இங்கே ஆதித்தமண்டலத்திற்கு ஒப்பாக அறத்துறையாகிய ஆதனுங்கன் கூறப்படுகிறான். ஆதித்த மண்டலம் இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்குகிறது. ஆதனுங்கனும் நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒருபெற்றியே விளங்குகிறான். புலவர் கூறக்கருதிய உவமம் இதுவே. ஆதித்தமண்டலம் வெள்ளிமலைக்கப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய் அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டதாம். அற்றவாயில்தானும் நிலமுழுதும் ஆண்ட வேந்தரது சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப்பட்டதாம். நிலமுழுதும் ஆண்ட இவ்வேந்தர் வென்றிவேலையுடையார்; குடையினையும் தேரினையும் உடையார். 'இவ்வேந்தராவார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்' என்று உரைகாரர் விளக்குகிறார்.

இவ்வுரையை நோக்கிய அளவில் இது உண்மை நிகழ்ச்சியான சரித்திரவரலாறன்று என்பது தெளிவாகும். இது ஒரு பௌராணிக வரலாறு (Mythology). இங்கே குறிப்பிட்ட சக்கரம் ஆஞ்ஞா சக்கரமாதல்வேண்டும்; ஏனெனின், தேரின் சக்கரமெனக் கொள்ளுதற்குரிய குறிப்பு யாதும் காணப்படுமா றில்லை. தேர், சக்கரம் என்ற இரு சொற்களும் பிரிந்து கிடக்கும் முறையும் ஆஞ்ஞாசக்கர மென்பதனையே வலியுறுத்துகிறது.

உரையில் 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனப் பொருள் தருந் தொடர்க்குரிய மூலம் 'மோரியர்' என்பதாகும். இப்பொருள் இச்சொற்கு எவ்வாறுவந்தது? மூலத்தில் இல்லாததனை வருவித்துக் கூறவேண்டும் அவசியமும் யாதும் காணப்படவில்லை. மோரியர் என்பது சேரர், சோழர் என்றாற்போலக் குடிப்பெயராயின் உரைகாரர் மோரியர் என்பதற்கு இச்சொற்பொருள் அமையுமாறும் இல்லை. இனி, புறநானூற்றின் முதற்பதிப்பில் 'ஓரியர்' என்று மூலத்திற் காணப்படுகின்றது. இதற்கேற்பவே உரையிலும் விளக்கப்பட்டுள்ளது. இச்சொல்லிற்கு நிலமுழுதும் ஆண்டவேந்தர் எனச் சொற்பொருள்கொள்ள இடமுண்டா?

வடமொழியில் 'உர்வீ' என்ற சொல்லுக்கு 'அகலிடம்' 'இருபேருலகம்' (விண்ணுலகு, மண்ணுலகு) என்ற பொருள்கள் உள்ளன. இதனோடு 'ஈശ'*என்பதும் சேர்ந்து 'உர்வீശ'* என்று தொடர்மொழியாகி 'இருநிலவேந்தன்' என்று பொருள்படும். 'உர்வீശ'*என்பது ஓரிய என்று திரிந்தது என்று கொள்ளல் தகும். அல்லது 'உர்வீ' எனபதன் தத்திதமாக 'ஔர்விய' 'ஓரிய' எனத் திரிந்தது என்று துணிதலுமாம். இங்ஙனமாங்கால், 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' என்ற பொருள் எளிதிற் பெறப்படுகின்றது. பிறவாறு சொற்பொருள் கூறுதல் ஏலாது. எனவே,'ஓரியர்' என முதற்பதிப்பிற்கொண்ட பாடமே உண்மையானதெனத் தோன்றுகிறது.

'இனி, ஓரியராவார் சக்கரவாள சக்கரவர்த்திகள் விச்சாதரரும் நாகரும் என்ப' என்பது விளக்கவுரைப்பகுதி. இப்பெயர்களை நோக்குமிடத்து இவைகள் ஜைனபுராண வரலாறுகளுட் காணப்படல் வேண்டுமென எளிதில் ஊகிக்கத்தகும். சூளாமணி முதலிய காவியங்களைக் கற்றோர் இதிற் சிறிதும் ஐயுறவு கொள்ளார். ஜைனபுராணங்களுள் புறநானூற்றில் காணப்படுவது போன்ற வரலாறு எங்கேனும் உளதா?

பின்வரும் ஸ்ரீபுராணப்பகுதி இங்கே நோக்கத்தக்கது.

"இப்பால் பரதராஜன் விஜயத்திலே ஒருப்பட்டு ....அஜிதஞ்ஜயம் என்னும் திவ்ய ரதம் ஏறி, தவளச்சத்திரம் கவிப்ப... சக்ர ரத்நம் முன்செல்ல, தண்ட ரத்நங் கைக்கொணடு ஸேநாபதி மேடுபள்ளம் நிரவி மஹாபத மாகஸம தலஞ்செய்து முன்செல்ல (பக்-114-5) ...விஜயார்த்தத்திற்குத் தெற்காக ஸ்தபதி ரத்நத்தால் நிர்மிக்கப்பட்டுப் பன்னிரண்டுயோஜநை நீளமுள்ள நகரியுள் இருந்தனன். இருந்தவனை....க்ருதமாலன் என்னும் தேவன் வந்து நமஸ்கரித்து விஜயார்த்த குஹாத்வாரம் திறத்தற்கும் கடத்தற்கும் உபாயத்தை ஸேநாபதிக்குச்சொல்லி சக்ரலர்த்தியை விடைகொண்டுபோயினன். அவன் போயினபின், ஸேநாபதி . ..ண்தட ரத்நங் கைக்கொண்டு ..வெள்ளியம்பெருமலையது ஜகதீதலத்தையேறி தமிஸ்ர குஹாமுகத்தையடைந்து வடதிசை நோக்கி நின்று தண்ட ரத்நத்தாலே குஹாத்வார கவாடத்தை திறந்தான். (பக் 117-8)

அதற்குபின், சக்ரவர்த்தி மஹா ஸேநையோடுங்கூட ......தமிஸ்ர குஹையை யடைந்து காகிணீ ரத்நத்தால் ஒருயோஜநை இடைவிட்டு இருமருங்கும் ஸூர்ய மண்டல மும் சந்த்ர மண்டலமும் எழுதி அவற்றின் ஒளிகளால் அங்குள்ள பேரிருளகற்றி...........குஹையினுடைய வட திசைக் கவாடமடைந்து அதனைத் திறந்து.........ம்லேச்ச கண்டம் ஜயித்ததற்கு வடதிசை நோக்கிப் போயினன்" (பக். 119)

இப் பகுதியில் நெடுங்குடை, தேர், திகிரி (சக்ரம்) அத் திகிரி திரிதரக் குறைத்த அறைவாய், அங்கே நிறுவிய ஆதித்தமண்டிலம் முதலியனவெல்லாம் இருத்தல் நோக்கத்தக்கது. வித்யா தரசக்ரவர்த்திகள் என்பதற்குப் பதில் பரதசக்ரவர்த்தி குறிப்பிடப்படுகிறார். எனவே, புறநானூற்றில் வந்துள்ளது போன்ற ஒரு வரலாறு ஜைன புராணங்களிற் காணப்படுதல்வேண்டும் எனபதற்கு ஓர் அறிகுறியாக இப்பகுதி உதவுகிறது. புறநானூற்றுக்கதைக்குரிய மூலம் இன்னதென வடமொழியிலும் பிராகிருதத்திலுமுள்ள ஜைனநூல்களை ஆராய்ந்தோரே துணியவியலும்.

மேற்கூறியது பொருத்தமாயின், புறநானூற்றில் இச்செய்யுளைப்பாடிய கள்ளில் ஆத்திரையனார் ஒரு ஜைனப்புலவர் என்பது பெறப்படும். வைதிக சமயத்திற்குரிய புராண வரலாற்றை உட்கொண்டு பக்ஷாந்தரமாக உரைகாரர் ஓர் விளக்கம் எழுதியிருத்தலையும் அவ்விளக்கம் செய்யுளின் சொற்கிடைக்கையோடு பொருந்தா தொழிதலையும் நோக்குமிடத்து, இச்செய்யுளின் ஆசிரியர் ஜைனர் என்பதில் ஐயுறவுகொள்ள இடமில்லை.

இனி, மோரியரைக் குறிக்கும் அகச்செய்யுட்களில் 69-ம் அகப்பாட்டை எடுத்துக்கொள்வோம். என்பது இச்செய்யுட்பகுதி.ஸ்ரீ ராஜகோபாலையங்கார் பதிப்பில் இச்செய்யுளின் முதலடி இரண்டாஞ்சீர் 'நெடுவரை' என்றுள்ளது பிழை. நெடுங்குடை என்று ஏட்டுப் பிரதிகளிற் காணுவதே உண்மைப்பாடம். மோரியர் என்ற பாடந்தான் என்னிடமுள்ள ஏட்டுப்பிரதியிலும் காணப்படுகிறது. ஆனால், இவ்வடியும் புறநானூற்றடியும் ஒத்திருத்தலை நோக்குமிடத்து 'ஓரியர்' என்பதுதான் பொருத்தமெனத் தோன்றுகிறது. மோரியர் என்பது சரித்திரப் பிரசித்திபெற்ற பெயராதலின் ஓரியர் என்ற பாடபேதம் எழுதுவோரால் நேர்ந்த பிழையென்று கருதிப் பதிப்பாசிரியர் அதனைக் காட்டாமல் நீக்கினர் போலும். எங்ஙனமாயினும், இச்செய்யுட்பகுதிக்கும் புறநானூற்றுரைகாரர்கொண்ட பொருளே ஏற்புடையதாகும். உண்மைச்சரித்திர நிகழ்ச்சியைக் கூறுவதாகக் கொள்வதற்கு இச்செய்யுளில் ஆதாரம் யாதும் இல்லை.

இனி, மோரியரை மாமூலனார் குறித்தனரென்று கொள்ளும் இரண்டுசெய்யுட்களுள் முதற்செய்யுளை (அகம்- 251) எடுத்துக்கொள்வோம். ஆராயவேண்டும் பகுதியைக் கீழே தருகின்றேன். இதனை நோகியவளவில் ஒரு சரித்திரச்செய்தியை உணர்த்துவதாகத் தோன்றுகிறது என்பதனை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், சில ஐயப்பாடுகள் தோன்றுகின்றன.

முதலாவது: கள்ளில் ஆத்திரையனாரும் பரங்கொற்றனாரும் பாடிய செய்யுட்களில் ஜைன நூல்கள் சக்ர ரத்நம் என்று கூறும் ஆஞ்ஞாசக்ரம் குறிக்கப்பட்டுள்ளது. மாமூலனார் செய்யுளில் தேர்ச் சக்கரம் (புனைதேர்நேமி) குறிக்கப்பட்டிருக்கிறது. இருவகைச் சக்கரமும் பேரரசின் ஆணைப்பெருமையையே உணர்த்தினும், கதையென்ற அளவில் பிறழ்ச்சிகாணுதல் ஐயுறவை வலியுறுத்துகின்றது.

இரண்டாவது: முற்கூறிய இடங்களில் ஓரியர் அல்லது மோரியர் குறிக்கப்பட்டுள்ளனர்; இங்கே; ‘வம்ப மோரியர்' குறிக்கப்பட்டுள்ளார்கள். வம்பு என்பது 'நிலையின்மை' என்றேனும் 'புதுமை' என்றேனும் பொருள் கொள்ளத்தக்கது. 'வம்பப் பதுக்கை' என்ற புறநானூற்றுத் தொடருக்கு(3) உரைகாரர்'புதிய' என்றே பொருள் எழுதினர். இப்பொருளை இங்குக் கொள்வதாயின், சந்திரகுப்த மெளரியர் முதலானோர் காலத்துக்குப் பிற்பட்டுப் புதிதாகத் தோன்றி,'மெளரியர்'என்று தம்மைக் கூறிக்கொண்ட ஓர் வமிசத்தினர் என்று பொருளாய் விடும். இவ்வகை வமிசத்தினர் முற்காலத்தே தென்னாட்டில் இருந்தனரெனல் சரித்திரச் செய்தி அல்லவா?

மூன்றாவது: நந்தனும் மெளரியரும் ஒருங்கே கூறப்படுகின்றனர். 'மோரியரது தேர்செல்லும்படி வெட்டப்பட்ட கணவாய்க்கு அப்பாலுள்ள பாழான பெருவழியிலே சென்ற தலைவர்க்கு அங்கே நந்தனது பெருநிதி கிடைப்பதானாலும் அதன்பொருட்டுத் தங்கமாட்டார்' என்பது இச்செய்யுட்பகுதியின் பொருள்.நந்தர்களை யழித்துப் பட்டமெய்தியவர்கள் மெளரியர்கள். அந் நந்தர்களுடைய நிதியம் பாடலியிலே கங்கை நீர்க்குக் கீழாகப் புதைத்து வைகப்பட்டுள்ளதென இம் மாமூலரே அகம்265-ல் கூறியுள்ளனர். இந்நிதியம் மெளரியர் தேர் செல்லும்படி யமைந்த மலைக்கு அப்பாபட்ட நீளிடையிலே கிடைக்க இயலுமென்னும்படி மாமூலர் பாடுவாரா? இது ஊன்றி ஆராயத்தக்கது.

நான்காவது: இவ்வடிகளுக்குப் பொதுவாகக் கூறப்படும் பொருள் மற்றைய இடங்களிலுள்ள வரலாறுகளோடு முரண்படுகிறது. மதுரைக்காஞ்சியில், எனவும், எனவும் வந்துள்ளனவற்றால் கோசர்கள் பழையன் மோகூருக்கு அமைச்சராயும், சேனாவீரர்களாயும் அமைந்தவர் என்பது அறியப்படும். இங்ஙனமிருப்ப, மெளரியரது முன்படையாய்க் கோசர் சென்று பகைமுனையைச் சிதைத்த காலையில் அவர்க்கு மோகூர் பணிந்து ஒடுங்காததன் காரணமாக மெளரியரே நேரில்வர நேரிட்டது (Beginnings of South Indian History p.91) என்று மாமூலனார் கூறினாரென்று கொள்ளுதல் மதுரைகாஞ்சியின் கருத்தோடு முரணுவதாகும்.

ஐந்தாவது: குண்டுநீர்க் கூடலுக்குரியனான அகுதை என்பவனுக்குக் (புறம்.347) காப்பாளராகக் கோசர் இருந்தனரென (அகம்.113) நாம் அறிகிறோம். இது பாண்டிநாட்டிற்கோசர் சிலர் வாழ்ந்தனர் என்று உணர்த்தி,அவர் மோகூருக்கு நண்பராவார் என்பதை வற்புறுத்துகிறது. இதனாலும் மோரியருக்குத் துணையாக இவர் அமைந்தவரென்றல் பொருத்தமின்மை காணலாம்.

ஆறாவது: என்ற குறுந்தொகைச் செய்யுளால் (15) கோசர் வஞ்சினங் கூறி அம்மொழியை உண்மைப்பட நிறைவேற்றினரென்பது புலனாம். எனவே, அவரது வெற்றி அரைகுறை வெற்றியப்று, முழுவெற்றியாகும். இந்நிலையில் மோகூர் அவரது பகைவனென்று கொள்ளினும், அவன் பணியாது நின்றான் என்றல் குறுந்தொகையின் கருத்துக்கு மாறுபட்டதாகும்.

ஏழாவது: மாமூலனாரது செய்யுளின் பொருள் ஒருதலையாகத் துணியும்படி விளக்கமுற அமையவில்லை. வம்பமோரியர்க்கும், கோசர், மோகூர் என்பவர்களுக்கும் எவ்வகையான தொடர்பு என்பது தெளிவாக விளங்கவில்லை.

எட்டாவது: சக்கரங்களைக் குறித்துப் பல வரலாறுகள் பண்டைக்காலத்து வழங்கின. அவற்றுள் கீழ்வருவதும் ஒன்று: இங்கே 'திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை' என்றெழுதினர் உரைகாரர். இது போன்று மோரியர் அல்லது ஓரியர் திகிரியின் வரலாறொன்றும் முற்காலத்து வழங்கியிருக்கலாம்.

மேற்கூரியவற்றை ஊன்றிநோக்குமிடத்து இச்செய்யுளைச் சரித்திரச் சான்றாகக் கொள்ளுதல் சிறிதும் ஏற்புடைத்தன்று என்பது புலனாம்.

இனி, மாமூலனார் மோரியரைக் குறிப்பிடும் பிறிதொரு செய்யுளைக் கவனிப்போம். அதனுள் நமக்கு வேண்டும் முக்கியமான பகுதி கீழ்வரும் அடிகளே: டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலிய சரித்திர ஆசிரியர்கள் வடுகரை மோரியரது தூசிப்படையாகக் கொண்டு அவர்கள் முற்படையாகச் செல்ல மோரியர் படையெடுத்துவந்தனர் எனச் சரித்திரம் அமைப்பர். வடுகர் புல்லி என்பவனது வேங்கடமலைக்கு அப்பாலுள்ள மொழிபெயர்தேஎத்து வாழ்ந்தவர் என்பது, என மாமூலனார் பாடிய ஓர் அகப்பாட்டினால் (295) விளங்கும். எனவே, இவர்கள் வடகிழக்கில் உள்ளவர்கள். முன்விவகரித்த கோசர்கள் துளுநாட்டில் வாழ்ந்தவர்கள் (அகம். 15). எனவே, இவர்கள் வடமேற்கில் உள்ளவர்கள். மோரியர்களது படையெடுப்பில் அவர்களுக்கு வேங்கடத்துக்கருகிலிருந்த வடுகரும் துளுநாட்டிலிருந்த கோசரும் துணைபுரிந்தனர் என்று கூறல்வேண்டும். இது போன்றதொரு செய்தி தென்-இந்திய சரித்திரத்தில் முற்காலத்தே நிகழ்ந்ததெனல் பொருத்தமாகுமா?

அகம் 281-ல் வரும் 'வடுகர் முன்னுற' என்பதன் பொருள் ஐயமின்றி வரையறுக்கக்கூடியதாகுமா என்று நோக்குவோம். முன்னுற என்பதற்கு (1) எதிர்ப்பட (2) அணுக (3) பொருந்த (4) பின்பற்ற (5) பட்ர்ந்துசெல்ல என்பன முதலிய பலபொருள் கொள்ளுதல்கூடும். தூசிப் படையாக முன்செல்ல என்ற பொருள் வெளிப் படையான சொற்களால் கூறப்படாவிடின், அப்பொருள் கொள்ளத் தக்கதன்று. மேற்காட்டிய பொருள்களுள் எப்பொருள் இம் மாமூலனாரால் கருதப்பட்டதென ஒருவராலும் துணிய முடியாது. மோரியர் வரவை வடுகர் தடுத்து எதிர்பட்டனர் என்றும் பொருள் கொள்ளலாம். வடுகருக்கும் மோரியருக்கும் யாதொரு தொடர்புமின்றியே பொருள் கொள்ளுதலும் கூடும். வடுகரை எதிர்ப்படச் சென்றனன் என வினைவயிற்சென்ற தலைவனைக் குறித்ததாகக்கூறல் பிற பொருள்களோடு ஒத்த தகுதிவாய்ந்ததே. எனவே, இதுவும் உண்மைச் சரித்திர நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றாக ஏற்றுக் கொள்ளுதற்குரிய தன்று.

முடிவாக, மோரியரைப்பற்றி வந்துள்ள செய்யுட்கள் நான்கனுள் ஒன்று பழையவுரையுள்ள புறப்பாட்டு; இதன்கண் பண்டைக் காலத்தோர் நம்பிவந்ததோர் கதை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பரங்கொன்றனார் செய்யுளும் மாமூலனார் செய்யுளுள் ஒன்றும் (அகம்-281) சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பனவாகக் கொள்ளத்தக்கனவல்ல; புறநானூற்றுச் செய்யுட்பொருளையே உட்கொண்டதெனக் கொள்ளுதல்வேண்டும். இவற்றுள் வந்துள்ள சரித்திர வகுப்பினராகிய வடுகர் கோசர் என்பவர்களுக்கும் மோரியரது வரவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இம்மூன்று செய்யுட்களிலும் குறிப்பிட்டுள்ள சக்கரத்திற்கும் தேருக்கும் யாதோர் இயைபும் இல்லை. அவை ஆஞ்ஞா சக்கரமென்றே கொள்ளத்தக்கன. இங்ஙனமன்றி, அகம் 251-ம் செய்யுளீல் தேரின்சக்கரம் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலோடு கோசர், மோகூர், மோரியர் இவர் தம்முள் சரித்திரத் தொடர்பும் உளதுபோலத் தோன்றுகிறது. ஆனால், பொருள் விளக்கமில்லாதபடி பலவாறான ஐயுறவுக்கேதுவாக இச்செய்யுள் அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சரித்திரம் அமைத்தல் பொருந்தாது.

மௌரியர் மைசூருக்குத் தெற்கே படையெடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் ஒப்புக்கொண்ட விஷயமன்று. சந்திரகுப்த மௌரியன் ஜைனத்துறவியாகித் தென்னாடுவந்து மைசூரிலுள்ள சிரவண பெள்குளத்தில் பட்டினிநோன்பினால் உயிர்துறந்தான் என்று ஜைனவரலாறு கூறும். இவ்வரவைப் படையெடுப்பு எனக் கூறுதல் சிறிதும் தகாது. மைசூர்வரை வெற்றியால் மௌரிய அரசாட்சி பரவியிருந்தது என்பதற்கு இது சான்றாகலாம். சந்திரகுப்தனின் மகனாகிய பிந்துஸாரன் படையெடுத்துவந்து தென்னாட்டை வென்று கொண்டான் என்று தாராநாத் கூறுவர். இவர் சுமார் முன்நூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஓராசிரியர்; இவர் கூறுவது தக்க சான்றாகாது. காரவேலன் சிலாசாஸனத்தால் பிந்துஸாரனது படையெடுப்பு அறியப்படுகிறது என்பர் ஜெயஸவால். இச்சாஸனத்தின் பொருள் நன்கு விளங்கவில்லையென்பது பெரும்பாலோர் கருத்து. அசோக சக்ரவர்த்தி கலிங்கநாடொன்றனையே படையெடுத்துக் கைப்பற்றியவர் என்பது சரித்திரப்பிரசித்தம். இவரது சிலைத் திருவாணைகளும் மைசூர்க்குத் தெற்கில் காணப்பெறாதது அந்நாட்டுவரைதான் இவரது ஆட்சி நடை பெற்றிருந்தது என்பதற்கு அறிகுறியாகும். அன்றியும், இவர் சேர சோழ பாண்டியர்களைத் தம்மொடு நட்புரிமை பூண்ட தனிமுடியரசுகள் எனக் குறிப்பிடுகின்றனர். இங்ஙனமிருப்ப, பாண்டியர் சேனாபதியான மோகூர் கோசருக்குப் பணியாமையினாலே அவருக்குத் துணையாக மோரியர் வந்தனர் என்பது சிறிதும் ஒப்புக்கொள்ளத் தகாததாம்.

மாமூலனார் தம்காலத்துச் சரிதநிகழ்ச்சியைக் குறித்த வரும் அல்லர். டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலினோரும் சமகால நிகழ்ச்சியன்றெனவே கூறினர் (Beginnings of S.I.History p.100). பழங்கதையொன்று மேற்காட்டிய செய்யுட்களின் அடிகளாற் குறிக்கப்பட்டதெனலே பொருத்தமாகும்.

13. காவிரிப்பூம் பட்டினம்

என்று நக்கீரர் அகநானூற்றில் (205) பாடுகிறார். சங்கப் பாட்டுக்களில் பட்டினப் பாலையைத் தவிர, இது ஒன்றே காவிரிப்பூம் பட்டினத்தை அப் பெயரால் நேர்படக் குறிப்பது. இப்பட்டினத்திற்குரிய பிறிதொரு பெயர் புகார் என்பது. இப்பெயரை எனப் பதிற்றுப் பத்தில் (73) அரிசில் கிழாரும் என அகநானூற்றில் (181) பரணரும் என அகநானூற்றில்(110) போந்தைப் பசலையாரும் குறித்துள்ளார்கள். காவிரிப் பேராறு கடலிலே புகுகின்ற இடத்திற்குப் புகாஅர் என்று பெயர். இவ்விரண்டு பெயர்கள் மட்டும்தான் சங்க இலக்கியத்திற் பயின்று வருவன. 8-ம் நூற்றாண்டின் இறுதியிலே காகந்தி என்ற பெயரொன்றும் இதற்கு உளதாயிற்று. இப் பெயர் வரலாற்றைக் குறித்து என மணிமேகலை(22,25-38) விளக்குகின்றது. ககந்தன் என்பவனால் காக்கப்பட்டமையால் காகந்தி எனத் தத்திதப் பெயர் வழங்கிற்றாம். இவன் தந்தையாகிய காந்த மன்னவனைக் குறித்தேனும், இக் ககந்தனைக் குறித்தேனும், இவ்வரலாறு குறித்தேனும் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் வாராமையால் இது பிற்பட்டெழுந்த ஒரு பௌராணிக வரலாறு என்பது தெளிவு. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகட்குப் போலும் இக்கதை தெரிந்துள்ள தெனற்க்குச் சான்று இல்லை. ஆனால் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் தோன்றிய திவாகரத்தில், இப்பெயர் புகுந்து விட்டது. இது போன்றதொரு கதை காவிரியாற்றுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது. கவேரர் என்ற ரிஷி பிரம தேவரைக் குறித்து அரிய தவஞ்செய்து, அவரருளால் விஷ்ணு மாயையைத் தம் புத்திரியாக அடைந்து முக்தி பெற்றனர். பின்பு அக் கன்னி பிரமதேவர் கட்டளையின்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்றதாம். இது காவேரி மாஹாத்மியத்தின் 23-ம் அத்தியாயத்தால் தெரிகிறதென்பர். மணிமேகலையும் எனக் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துள்ளது. காவிரியென்ற பழம்பெயரை 'சாபெரிஸ்' என டாலமி என்ற யவன ஆசிரியர் குறித்தனர். இப்பெயரையே திரித்துக் காவேரி யென மக்கள் வழங்கினர். இங்ஙனம் திரிந்த பெயரைச் சிலப்பதிகாரமும் என இனிதாக அமைத்துப் பாடிற்று. பின்னர் இப்பெயரைத் தத்திதமாகக்கொண்டு, நதிகளை மகளிராகவும் தாயராகவும் கூறும் வழக்குப்பற்றிக் காவேரியை ஒரு புத்திரியாக்கி, அவளுக்குத் தந்தையாகக் கவேரர் என்ற மகரிஷியைப் பௌராணிகர்கள் சிருஷ்டித்துவிட்டனர். காவிரி நதிக்குப் பொன்னி என்ற பெயரொன்றும் உளது. இது என கலிங்கத்துப் பரணியிலும் (581), என விக்கிரம சோழனுலாவிலும் (118), எனக் கம்ப-ராமாயணத்திலும் வருதல் காணலாம். இப்பெயரும் சங்க இலக்கியங்களிற் காணப்படாத தொன்றாம். நாவுக்கரசர் (6,62,6) என அருளிச் செய்துள்ளார். இவர் காலமாகிய கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன் இப்பெயர் வழங்கியதற்குச்சான்றில்லை. இப் பெயர், என்ற காரணத்தால் பிறநதது போலும்.

இப் பெயர் எந்தக் காலத்ததாயிருப்பினும், உண்மையான காரணம்பற்றி எழுந்ததென்பதில் ஐயமில்லை. காவிரி பரந்தோடிய பிரதேச முழுவதும் செல்வமும் அழகும் நிரம்பி இன்பத்தின் விளைநிலனாய் அமைந்துவிட்டது. இது முற்காட்டிய நக்கீரர் முதலினோரது செய்யுட்களால் விளங்கும். இன்பத் துறையிலே மக்கள் வழுவி விடாமற் பாதுகாத்தற்குத் தெய்வமொன்றும் நின்று எச்சரித்து விளங்குவதாயிற்று (அகம். 110). இப் பேராற்றினால் விளைந்த செல்வத்திற்கு ஓர் அளவு கோலாய்ப் பண்டைக் காலத்தில் நிலவியது காவிரிப்பூம் பட்டினம். அக் காலத்தில் பட்டினம் என்று சொன்னாலே காவிரிப்பூம் பட்டினத்தைத் தான் குறித்தது. இதனாலே பட்டினப்பாலை என அடைமொழியின்றியே வழங்கினர். தற்காலத்தில் பட்டணம் என்றால், சென்னையைக் குறிக்கிறதல்லவா? இது போல.

இப் பட்டினம் கடலோடு காவிரி சங்கமமாகுமிடத்தில் இருந்தது. சீகாழிக்குத் தென் கிழக்காகச் சுமார் பத்துமைல் தூரத்திலுள்ள ஓர் மணல் மேடு, இப்பட்டினம் இருந்த இடமாகலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இப்பொழுது அது முற்றும் மறைந்து விட்டது. மறைந்த காரணம் பற்றி மணிமேகலையில் (25, 178-200) ஒரு வரலாறு கூறப்படுகிறது. நாக நாட்டு அரசனது மகள் பீலிவளை என்பவள் நெடுமுடிக் கிள்ளியைக் காந்தர்வத்திற் கலந்துகூடிப் பின்பு பிரிந்து போயினள். அவள் கருவுற்றுப் பெற்றெடுத்த மகனோடு ஒரு நாள் மணிபல்லவத்தில் புத்த பீடிகையை வலஞ்செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு கம்பளச் செட்டியின் மரக்கலம் வந்து தங்கியது. அச்செட்டியின் வசம் தனது மகனை ஒப்புவித்து நெடுமுடிக்கிள்ளியிடம் கொண்டு செல்லச்செய்தாள். அரசனது புதல்வனை அழைத்துவரும் வழியில் மரக்கலம் உடைந்து போய் விட்டது; புதல்வனும் கடலில் அமிழ்ந்து விட்டான். இச் செய்தியை நெடுமுடிக்கிள்ளிக்கு அறிவிக்க, கிள்ளியும் ஆறாத்துயரம் அடைந்து கானலிலும் கடலிலும் கரையிலும் தன் புதல்வனைத் தேடிக் கொண்டிருந்தான். இம்முயற்சியில் இந்திரவிழா நிகழ்த்த மறந்துவிட்டனன். மணிமேகலா தெய்வம் இதனைப் பொறாது, சாபமிட்டனள். இச்சாபத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதாம்.[1] ----
[1] இக் கடல் கோளைக் குறித்து மணிமேகலையொடு ஏறத்தாழ சம காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் யாதும் கூறவில்லை. காவிரிப்பூம் பட்டினம் செல்வச்சிறப்புடன் அக்காலத்தில் விளங்கிற்று என்ற உணர்ச்சியையே இக்காவியம் நமக்குத் தருகின்றது. பெரும்பாலும் இக்கடல்கோள் சரித்திர நிகழ்ச்சியன்றெனத் தோன்றுகிறது. இது பௌத்த ஆசிரியர்களது கற்பனை போலும். சம்பந்தர் காலத்தில் இப்பட்டினம் கடல் கொள்ளப்படாது நன்னிலையிலிருந்த தென்பது அவர் இயற்றிய பதிகங்களால் (I.65; III. 112) விளங்குகிறது. மணல் மேடிட்டு, கப்பல் போக்குவரத்தின்றி, வாணிக மின்றிப் போய், குடிகள் நீங்கினமையால் பட்டினம் அழிந்தது எனக் கொள்ளுதல் உண்மையாகலாம். ----

இந்நகர் இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. அவற்றுள் அதி முக்கியமானது காலாந்தரத்தில் காவிரியாற்றின் கதியானது மாறிவிட்டமை. கடலோடு சங்கமமாகுமிடத்தில் இப்பொழுது இந்நதி மரக்கலம் வந்து செல்லும்படியாக அகன்று காணப் படவில்லை. அணை கட்டியதன் விளைவாக, கொள்ளிடம் என்ற கிளை நதியொன்று பிரிந்து விட்டது. பிரிவுக்கு முன்னிருந்த பேராற்றின் நீர் இப்பொழுது வாய்க்காலளவாக மிகச் சுருங்கிக் கடலிற் பாய்கின்றது. இதனால் பட்டினம் இருந்த இடம் தெரிவது அரிதாயுள்ளது. தொன்மை ஆராய்ச்சியாளர் இப் பிரதேசத்தில் அகழ் பரிசோதனையொன்று நிகழ்த்தினாலன்றி உண்மையறிய வேறு வழியில்லை.

நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப்பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து, 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரேன்' எனச் செலவழுங்கிக் கூறுவதாகச் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும் கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன.

இப் பாட்டிற்குப் பரிசிலாக, 16 கோடிப் பொன் அளிக்கப் பெற்றதெனக் கலிங்கத்துப் பரணி தெரிவிக்கின்றது.
என்பது அந் நூலில்வரும் தாழிசை. வேறோர் அரிய செய்யுள் பட்டினப் பாலையைக் குறிக்கின்றது.
இது திருவெள்ளாறையில் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது; பட்டினப் பாலையை அரங்கேற்றுதற்குப் பதினாறு கால் மண்டபமொன்று அமைக்கப் பட்டிருந்ததென்றும், அதன்கண் உள்ள பதினாறு தூண்களொழிய மற்றை அரண்மனைத் தூண்களனைத்தையும் செயமாறன் என்ற பாண்டியன் ஒரு படையெடுப்பில் அழித்து விட்டனன் என்றும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது. பட்டினப் பாலைக்கும் பதினாறு என்ற எண்ணிற்கும் ஒரு தொடர்பு கற்பிக்கப் பட்டிருந்ததென்பது மேல் இரண்டு செய்யுட்களாலும் விளங்கும் [3]. இந் நூலைப் பாடிய புலவர் உருத்திரன் என்பவரது புதல்வரென்பதும் கண்ணன் என்ற இயற் பெயரினரென்பதும் தந்தையின் பெயரொடு மகன் பெயரைச் சார்த்திச் சொல்லும் முற்கால வழக்கினாலும் சாசனச் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றன. குறுந்தொகையில் 274-ம் செய்யுளைப் பாடியவர் இந்த உருத்திரனார் என்று கருதலாம் இப்புலவர்களது காலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளலாம்.
----
[2]. பத்துப்பாட்டு 3-ம் பதிப்பின் முன்னுரையில் பதினாறாயிரம் பொன் எனக் காணப்படுகிறது. முதற் பதிப்பிற் சரியாய்த் தரப்பட்டிருக்கிறது. ----
[3] இது குறித்து, 'பாலையின் அரங்கேற்று மண்டம்' என்ற கட்டுரை பார்க்க (பக். 68-69)
----

உருத்திரங் கண்ணனாரது பாடலின்படி, காவிரிப்பூம் பட்டினத்தையும் அதில் கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த வாழ்க்கையையும் நாம் சித்திரிக்க முயலுவோம்.

காவிரியாறு, கிரகங்கள் நிலைதிரிந்து வானம் வறண்டு மழை பெய்யாது பொய்த்து விட்டாலும், தான் பொய்யாது என்றும் நீரோடிக் கொண்டிருக்கும். இந் நதியால் வளம் மிகுந்து செழிப்புற்று விளங்கும் சோணாட்டிலே சிறிய பல ஊர்கள் ஆற்றின் கரையில் எங்கும் நிரந்து காணப்படும். இவ்வூர்களில் அகன்ற கழனியிலே நீர் வளத்தால், பொன் கொழித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும்படி நெற்பயிர் ஒருநாளும் குன்றாது விளைந்து கொண்டிருக்கும். இங்கே கரும்பும் மிகுதியாகப் பயிர் செய்யப்படுகிறது. கரும்பு ஆலைகளிலிருந்து எழும் தீயின் வெப்பத்தால் நீர் நிலைகளிலுள்ள ஆம்பல் முதலிய பூக்கள் வாடி நிற்கும். வயலும் குளமும் உள்ள இந்த விளை நிலத்திலே, எருமைக் கன்றுகள் நெற்கதிரைத் தின்று வயிறு புடைத்துத் தளர்ந்து நிழலிடங் கண்டு உறங்கிக் கொண்டிருக்கும். நிழலின் பொருட்டு வெகுதூரம் செல்ல வேண்டுவதுமில்லை. அடுத்துத்தானே காய்கள் காய்த் துக் குலைகுலையாய்த் தொங்கும் தென்னையும், குலை வாழையும், காய்கள் நிரம்பிய கமுகும், நறிய மணம் வீசும் மஞ்சளும், மாமரங்களும், பனைமரங்களும், சேம்பு முதலிய செடிகளும் நிழல் தந்து நிற்கின்றன. கழனிகளினின்று சிறிதகன்று மக்கள் வாழும் ஊர்ப்பகுதி யுள்ளது. இங்குள்ள முற்றத்திலே உலர்வதற்கு நெல் பரப்பி யிருக்கும். அதனைக் கவர்ந்துண்ணவரும் கோழிகளை வெருட்ட, பெண்கள் தங்கள் மகரக் குழைப் பூணினை எறிவார்கள். சிறுவர்கள் அங்கே உருட்டிக் கொண்டிருக்கும் விளையாட்டு-வண்டிகளை இப்பூண்கள் வழிவிலக்கித் தடுக்கும்.
நாட்டின் அகத்துள்ள ஊர்கள் இங்ஙனமாக, இவற்றின் இயல்புக்கு முற்றும் வேறுபட்டதொரு காட்சியைக் கடற்கரையிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் நமக்கு அளிக்கின்றது. முதன் முதலில் நமது கண்ணிற் படுவது அங்குள்ள கழியில் (தற்காலத்தார் காயல் என்பார்) வரிசையாகப் படகுகள் கட்டிவிட்டிருப்பது. இவைகள் தாமணியில் நிறுத்திய குதிரைப் பந்திபோல் இருக்கின்றன. உப்பையேற்றிச் சென்று விற்று, நெல்லை வாங்கிக்கொண்டு இவை வருவன. சிறிது உள்ளாக, மனவெழுச்சி தரும்படியான புதுப் புது விளைவுகளைத் தரும் தோப்புக்களும் பூஞ்சோலைகளும் உள்ளன. அடுத்து உள்ளாகக்காணுவன பொய்கையும் ஏரியும். பொய்கையும் கரையும் பார்த்தால், மேகம் நீங்கிய பெரிய வானில் முறையே சந்திரனும் மகநட்சத்திரமும் போலத் தோன்றுகின்றன. புலவர் ஆகாயக் காட்சிகளை அனுபவித்த திறம் இதில் தெரிகிறது.

அன்றியும் இப் பொய்கை பல நிறமுள்ள வாசனைப் பூக்களால் ஒளியுடன் விளங்குகிறது. ஏரிகளோ என்றால் இவை இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரக்கூடியன என்று மக்கள் கருதினார்கள். இப் பொய்கை முதலியவற்றை அடுத்துப் பின்பாக லக்ஷ்மீகரம் பொருந்திய மதில் போர்க் கதவோடு நிற்கின்றது. இக்கதவிலே, சோழர்க்குரிய புலியடையாளம் அமைந்துள்ளது. மதிலைக் கடந்து உட்புகுந்ததும் புகழும் அறமும் ஒருங்கே நிலைபெறும் அன்ன சத்திரம் எதிரே நிற்கின்றது. இங்கே சோற்றை வடித்த வடிகஞ்சி ஆறுபோல் பரந்தொழுகுகிறது; காளைகள் ஒன்றோடொன்று முட்டிச் சண்டையிடுதலால், அக் கஞ்சியாறு சேறுபடுகிறது; இச்சேறும், ஊர்திகள் அடிக்கடி அங்கும் இங்கும் ஓடுதலினாலே, காய்ந்துதூளாகி, அடுத்துக்காணும் மாளிகையின் சித்திரம் எழுதிய சுவர்களின்மீது படிந்து, அம்மாளிகை புழுதியாடிய யானையை ஒக்கும்படி செய்கிறது.

அடுத்து எருத்துச் சாலைகள் உள்ளன. இச் சாலைகளின் முற்றத்தில் சிறிய குளங்கள் காணப்படுகின்றன. அடுத்து உள்ளாக, சமணர்களும் பௌத்தர்களும் தவம் செய்யும் தவப்பள்ளிகள் இருக்கின்றன. அன்றியும் முனிவர்கள் வேள்வி யியற்றும் இளஞ் சோலைகளும் இடம் பெறுகின்றன. அங்குள்ள குயில்கள் வேள்விப் புகையை வெறுத்து, பெடையோடு பறந்து சென்று, வாசலிற் பூதங்கள் காத்து நிற்கும் காளி கோயிலை அணுகி அங்கே ஆண்டில் முதிர்ந்த முது மரங்களிலே புறாக்களோடு ஒட்டுக்குடி யிருக்கும். இம் முதுமரங்கள் நின்ற இடங்கள் போர்பயிலும் இடமாகவும் பயன்பட்டன. அகன்ற மணல் மேட்டிலே பெருங்கிளையினராகிய சுற்றத்தாரோடு பரதவப் பிள்ளைகள் இறாமீனின் சுட்ட ஊனைத் தின்றும் வேக வைத்த ஆமை இறைச்சியை உண்டும் அரும்பு மலரைத் தலையில் வேய்ந்து ஆம்பற் பூவைச் சூடியும் மகிழ்வர். பின்னர் இப்பிள்ளைகள் பொது வெளியிடங்களிலே, நீல ஆகாயத்தில், நட்சத்திரங்களோடு தொன்றும் கிரகங்களைப் போல, பலராகக் கூடி மற்போரும் படைக்கலப் போரும் புரிவர். ஒருவருக்கொருவர் பின்னிடையாது பின்னும் போரில் மனம் வலியராய், பனைகளும் பன்றிக் குட்டிகளும் கோழிகளும் உறைக்கிணறுகளுமுள்ள புறச்சேரியிலே ஆட்டுக்கிடாய்ப் போரும் சிவற்போரும் நிகழ்த்தி விளையாடுவர். இப்புறச் சேரிய்லுள்ள குடிசைகளின் தாழ்ந்த கூரைகளோடு தூண்டிற் கொம்புகளைச் சார்த்தி வைத்திருக்கும். இது நடு கல்லைச் சுற்றிக் கிடுகு நிரைத்து வேலை ஊன்றி வைப்பது போன்றுள்ளது. இக் குடிசைகளின் நடுவிலே, மணற் பரப்பின்மீது, நிலவு நடுவிற்சேர்ந்த இருள்போல வலையைவிரித்து உலர்த்தியிருப்பர். இம்மணல் முற்றத்திலே, தாழையின் கீழுள்ள வெண்டாளி மலரின் மாலையை யுடையராய், சுறவுக் கொம்பு நட்டு வீட்டோடு சேர்த்திய தெய்வத்தின் பொருட்டு, பௌர்ணமியன்று தாழைப்பூவை அணிந்தும், பனங்கள்ளை யுண்டும் பரதவர்கள் கடலில் மீன் வேட்டத்திற்குச் செல்லாது பெண்களோடு உண்டாடி மகிழ்வர்.

பரதவர்கள் இவ்வாறாக, பட்டினத்திற் செல்வக் குடியிலுள்ள பெண்கள், காவிரியாறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையிலே தமது கணவர்களோடு, தீவினை நீங்க நீராடியும், பின் உவர்ப்பு நீங்க நன்னீரில் மூழ்கியும், நண்டினைப் பிடித்து வருத்தியும், அலைநீரைக் காலால் உழக்கியும், பொம்மையமைத்தும், இந்திரிய நுகர்ச்சிக் குரியவற்றில் ஈடுபட்டு மயங்கி நின்றும் நீங்காத காதலோடு பகலில் விளையாடுவர். இரவுப் பொழுதிலே மாடத்திலே கணவரோடு கூடி யின்புற்ற மங்கையர் தாம் முன்பு உடுத்திருந்த பட்டினை நீக்கி மெல்லிய துகிலை யுடுத்தும், கள்ளினை நீக்கி இனிய மதுவினை யுண்டும், தமது மாலையைக் கணவரும் கணவர் கண்ணியைத் தாமும் மயங்கி யணிந்தும், ஆடல் பாடல்களிற் களித்தும், நிலவுப் பயனை நுகர்ந்தும் நெடுநேரம் போக்கி, கடை யாமத்திலே கண்துயில்வர். இக்கடையாமத்தில் மாடஙகளில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குக்களை இரவின் முற்பொழுதில் படகில் ஏறிக் கடல் மீது சென்ற பரதவர்கள் வினோதார்த்தமாக எண்ணி நோக்குவர். அன்றியும் இக் கடையாமத்திலே காவிரியின் வெள்ளிய மணல் மேட்டிலே துயிலால் கண்ணயர்ந்து கிடந்து, பின் கடலருகுள்ள பெரிய பரதவர் தெருவில் அரசனுக்குரிய பொருளைக் காக்கும் பழம் புகழுடைய காவலாளர்கள், சூரியனது குதிரைகள் போல ஒரு நாளும் தளர்வின்றிச் சுஙகங் கொள்ளுவார்கள். இவ்வாறு சுஙகங் கொள்ளுவதனால், வணிகப் பண்டம் குறைபடுவதில்லை. நீரினின்று வந்த பொருள்களை நிலத்திற் பண்டகசாலையில் ஏற்றவும், நிலத்தில் பண்டகசாலையிலுள்ள பொருள்களை நீரிற் போக்கவும், அளந்துமுடியாத பல்வேறு பண்டங்களும் வரம்பு தெரிய முடியாதபடி ஒன்றொடொன்று கலந்து வந்து குவிந்துள்ளன. இவற்றின் பொதி மூடைகளை மதிப்பிட்டு, சுஙகக் காவலர் புலிப்பொறி யிடுவித்து முற்றப் பரப்பிலே போர் போல அடுக்கிவைப்பர். இப் பொதி மூடைகளின் மீது நாயும் ஆட்டுக் கிடாயும் ஏறிக் குதித்து விளையாடும். முற்றப்பரப்பினை அடுத்து, படிகள் நெருங்கி நெடிதாய் அமைந்த ஏணிகள் சார்த்தின சுற்றுத் திண்ணையும் பல கட்டுககளும் திட்டிவாசலும் பெரிய வாசலும், பெரிய இடைகழியுமுள்ள வானளாவி உயர்ந்த மாடங்கள் தோன்றுவன. நீர் உட்புகாதபடி உயர்ந்த தளத்தோடு கட்டிய மாடங்கள் ஆதலினால், சுற்றுத் திண்ணையும் ஏறிச்செல்வதற்கு நெடிய ஏணியும் அவசியமாயின.

இம் மாடங்களிலே அழகு மிக்க செல்வ மகளிர்கள் பலகணி வாயிலாகக் கைகூப்பி நிற்கின்றனர். மாடஙகளின் மீதிருந்து கூப்பிய கைகள் உயர்ந்தோங்கிய மலைமீது காந்தள் மலர் குவிந்திருப்பது போன்றுள்ளன. எதனை நோக்கிக் கை கூப்புகின்றனர்? அடுத்துச் செல்லும் அங்காடி வீதியிலே வெறியாடும் மகளிரிடத்து ஆவேசித்து நிற்கும் முருகக் கடவுளை நோக்கியே யாகும். இன்னும் அவ் வீதியிலே குழலிசைக்கின்றது; யாழ் ஒலிக்கின்றது; முழவு அதிர்கின்றது; முரசு முழங்குகின்றது; திருவிழா நிகழ்ந்த வண்ணமா யிருக்கின்றது. அன்றியும் இல்லுறை தெய்வங்களுக்கு எடுத்த கொடிகள் ஒருபால்; ஒருபால்,கான்யாற்றுக் கரை மணலிலே கரும்பின் பூக்கள் மேலோங்கி நிற்பதுபோல, நெற்குவித்து வைத்த களஞ்சியத்தின் மீதும் தாழிட்டுக் காத்துவைக்கும் வேறு பல பண்டங்களின் களஞ்சியத்தின் மீதும் அரிசிப்பலி சிதறி, சாணத்தால் மெழுக்கிட்டு, கொம்புகள் நட்டுக் கவித்த கிடுகின் மேலாகவுள்ள துகிற் கொடிகள்; பல கேள்வித் துறைகளிலும் முழுதும் வல்ல நல்லாசிரியர்கள் வாது செய்யக்கருதி யெடுத்த கொடிகள் ஒருபால்; கட்டுத் தறிகளை இளக்க முயலும் யானைகளைப் போல, புகாரின் முன் றுறையிலே அசைந்து நிற்கும் கப்பலின் பாய்மரத்து மேலாக அமைத்த கொடிகள் ஒரு பால்; ஒரு பால் மீனை அறுத்துப் பின் இறைச்சியையும் அறுத்து, அவ்விரண்டினையும் பொரிக்கும் ஓசையினையுடைய முற்றமும் மணலைக் குவித்து மலர் சிதறித் தெய்வத்திற்குக் கொடுக்கும் பலியினையுடைய வாசலும், அருகாக, சிறப்புடைக் கள் விற்கும் இடங்களும், இவற்றில் அடையாளமாகக் கட்டிய கொடிகள். இங்ஙனம் பலவகைக் கொடிகளும் விரவி, பல நிறங்களுடைய பெருங் கொடிகளின் நிழலிலே சூரியன் கதிர் நுழையா தவாறு பட்டினத்தின் எல்லையிடம் உள்ளது.

இந்த எல்லைப்புறத்து, தேவர்களது பாதுகாவலோடு விளங்கும் அகன்ற மறுகுகளிலே செல்வம் தலை தெரியாது கலந்து கிடக்கும்.குதிரைகள் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டன. மிளகு பொதிகள் படகுகளிலே காற்றாற் செலுத்தப்பட்டு வந்தன. வடதிசையினின்று மணியும் பொன்னும், மேல்திசையினின்று சந்தனமும் அகிலும், தெற்கிலிருந்து முத்தும் கீழ்த் திசையினின்று பவளமும் வந்து குவிந்தன. கங்கையிலிருந்தும் காவிரியின் முற்பகுதியிலிருந்தும் சிஙகளத்திலிருந்தும் பலவகைப் பொருள்களும் வந்து நெருங்கின. இவற்றால் கடல் வழியாகவும் நில வழியாகவும் வாணிகம் மிகுதியாய் நடைபெற்று வந்தமை அறியலாம்.

இவ் வாணிக மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர்? கருமமே கண்ணாகக் கொண்டவர்; துன்பத்தைச் சிறிதும் பொருட்படுத்தியவர்களல்லர். கடல்மீது கப்பலிலும் நிலத்தில் சென்றசென்ற இடங்களிலும் க்ஷேம உணர்ச்சியோடு இனிதாகத் துயின்று கழிப்பர். கொலையை முற்றும் நீக்கியவர்கள்; ஆதலால் மீன்கள் வலைஞர் முற்றத்திலும், மிருகங்கள் இறைச்சி விற்பார் மனையிடத்தும், பகை யுண்டென்பதையே கருதாது இனம் பெருகி வாழ்ந்தன. இங்ஙனமே களவையும் முற்றும் நீக்கியவர்கள். தெய்வ பக்தியும் ஆன்றோர் ஆசாரமும் மிகஉடையவர்கள; எனவே தேவர்களைப் பூசித்தும், வேள்வியில் ஆகுதி கொடுத்தும், பசுக்களையும் எருதுகளையும் பேணி வளர்த்தும், அந்தணர்க்கு உண்டாம் புகழை நிலை நிறுத்தியும் வந்தனர். அன்றியும் தரும சிந்தை நிரம்பியவர்கள்; ஆதலால் அரிசியும் கறியும் யாவர்க்கும் உதவி வந்தனர். இவர்கள் புண்ணியம் புரிவதில் எந்நாளும் தவறியதில்லை; அருளுடனே இல்லறத்தில் வாழ்ந்தனர். மேலும் நீதியிலும் நடுவு நிலையிலும் பற்றுள்ளவர்கள். இவர்களது நடுவு நிலைமைக்கு ஒப்பாக உழவர்களுடைய நுகத்தடியின் பகலாணியைத்தான் சொல்லுதல் வேண்டும். இன்னும் உண்மையைக் கடைப் பிடித்தவர்கள். ஆதலால் பழிக்கு அஞ்சி உண்மையையே பேசுவார்கள். தமது வாணிகத் துறையிலும் நன்னெறியையே மேற்கொண்டவர்கள்; ஆதலால் தம்முடையவும் பிறவுமாகிய பலசரக்குகளை விலையொப்பத் தெரிந்து தாம் கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகையாகக் கொள்ளாது, கொடுக்கும் சரக்கைத் தாம் வாங்கும் பொருளுக்குக் குறையாகக் கொடாமல், இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லி வாணிகஞ் செய்து பொருள் ஈட்டுவர். இத்தகையவர்கள்[4] குடியிருக்கும் மனைகள் நெருங்கியமைந்த நிலையாய் வாழும் இவ் வணிகர்களே யன்றி, இப்பதியில் பல்வேறு மொழிகளைப் பேசும் யவனர் சீனர் முதலிய பல அன்னிய இனத்தவர்கள் பல வேறு தேசங்களிலிருந்து வாணிகத்தின் பொருட்டுத் திரளாக வந்து இங்கே கலந்து வாழ்ந்து வந்தனர்.இவர்களது உறைவிடம் பல பல சாதிகளாய் உயர்ந்த அறிவு வாய்ந்த சுற்றத்தினையுடைய விழா எடுக்கும் மூதூரார் இங்கே வந்து குடியேறியது போல உள்ளது.
----
[4] இவர்களை வேத வாணிகர்கள் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றனர். சிந்தாமணியில்(1449) 'மெயந் நிகரிலாதவன் வேத வணிகன்' என வருகின்றது. வைதிக வொழுக்கங்களைப் பின்பற்றிய வணிகர்கள் இப் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். ----

இச்செல்வம் நிரம்பிய பட்டினத்தை ஆட்சி புரிந்தவன் யாவன்? சோழன் திருமாவளவன். இவன் கரிகாற் பெருவளத்தானென்று உரைகாரர் குறிப்பிடுவர்.

இப்பேரரசனை இளமையில் பகைவர்கள் சிறைப்படுத்தி விட்டனர். சிறைச்சாலையில் புலிக்குட்டி கூட்டில் வளர்ந்ததுபோல இவனது பெருமை வயிரம் பாய்ந்து முற்றியது. குழியில் அகப்பட்ட ஆண் யானை சும்மா நிற்குமா? கரையைக் குத்திக் குழியை மேடிட்டு நிரப்பி வெளியேறித்தனது பிடியானையை அடையுமல்லவா? அதுபோல, நுட்பமாக ஆராய்ந்து உபாயத்தைத் தெரிந்து, பகைவர்களுடைய திண்ணிய காவலைக் கடந்து வாட்போர் புரிந்து, பரம்பரையாய் வந்த அரசுரிமையை இவன் எய்தினன். இதனோடு மகிழ்ந்து இவன் அமைந்துவிட வில்லை. யானையும் புரவியும் விரர்களும் மடிந்து வீழவும், பருந்துகள் ஆகாயத்தில் பறந்து உடன் செல்லவும், முரசு முழங்கவும், பூளையோடு உழிஞைப் பூவைச் சூடிப் போர்விரும்பிச் சென்றனன். உழிஞைப் பூ முதலியவற்றை இவன் சூடியது நெருங்கிக் கிடக்கும் குன்றின் மீது புதர் பூத்து நிற்பது போல இருந்தது என்று ஆசிரியர் நகைச் சுவைபடக் கூறுகிறார். இங்ஙனம் சென்று பகைப் புலன்களை அழித்து பகைவரது தூசிப் படையையும் தொலைத்து மேலும் மிகச்சென்று மருத நிலத்துக் குடிகளை யோட்டினன். அன்றியும் முதலைகள் செருக்குற்றுத் திரிந்த பொய்கையில் குவளையும் நெய்தலும் நெருங்கிக் கிடந்தன. அயலிடத்திலே கரும்பும் செந்நெற் பயிரும் முன் ஓங்கி வளர்ந்திருந்தன. இப்பொழுது செருந்தி முதலியன மிக வளர்ந்து நீரற்று வயலும் வாவியும் ஒன்றுபோலாகி, கலை மானும் பிணைமானும் குதித்து வாழ்ந்தன.

முன்பு பகை அரசர்கள் சிறைப்பிடித்து வந்த மகளிர்கள் நீராடி அந்திப் பொழுதில் நந்தா விளக்கேற்றி மெழுகி மலர் தூவிய தறிகள் அமைந்த ஊரம்பலத்திலே ஊர்க்குப் புதியராய் வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். இப்பொழுது தூண்கள் சாயும்படி உராய்ந்துகொண்டு ஆண் யானையும் பெண் யானையும் கூடிவாழ்ந்தன. முன்பு மக்கள் வாசனைப் பூக்களைத் தூவி, தெருவிலே கூத்தரது முழவோடு கூடிய யாழிசைகேட்டு அனுபவிக்கும் பெரு விழா நிகழ்ந்தது. இப்பொழுது அங்கு விழா நீங்கி அச்சம் பொருந்திய வெற்றிடமாகி விட்டது. யாழோசைக்கு மாறாக, நரியின் முழக்கமும் கூகையின் அழுகுரலும் ஆண்டலைப் புள்ளின் கூப்பிடு குரலுமே கேட்கலாயின. எங்கும் நெருஞ்சியும் அறுகம்புல்லும் பரவியிருந்தன. ஆண் பேய்களோடு பிணந்தின்னும் பெண் பேய்கள் தலைமயிரைத் தாழ்த்திவிட்டு நெருங்கிருந்தன. முன்பு மாடத்தின் நெடுங்கடை வாசலிலே நெருங்கியிருந்து விருந்தினர் உண்டொழியாத அட்டிலிடத்தே வெள்ளிய சுவர்களையுடைய வீட்டுத் திண்ணையிலிருந்து பைங்கிளி இனிதாகச் சொற் குழறிக் கொண்டிருக்கும். இப்பொழுது பல்வளம் மிகுந்த இச்செழு நகரிலே வளைந்த வில்லையுடைய செருப்புத் தரித்த வேடர்கள், உடுகின் ஓசைமிக, கூடிக் கொள்ளையிட்டபின் வெறுங் கூடாய்க் கிடக்கும் நெற் களஞ்சியத்தினுள் கூகை நடுப்பகலிற் கூவிக்கொண்டிருக்கின்றன. இவ்வகை ஊர்களின் அழகு தொலையும்படி அவற்றைப் பாழ்படுத்தினான். இவ்வாறு செய்ததனோடு அமையாது இவன் மலைகளை யெல்லாம் வேரோடு பிடுங்கி விடுவானோ, கடல்களைத் தூர்த்து விடுவானோ, வானுலகைக் கீழே வீழ்த்தி விடுவானோ, காற்றை உலவாமற் செய்துவிடுவானோ என்று மக்களெல்லாம் அஞ்சினர்.

இங்ஙனம் தான் நினைத்த போர்த் துறைகளெல்லாம் செய்து முடித்தனன். இதன் விளைவாக, ஒளி நாட்டார் ஒடுங்கிப் பணிந்தனர். அருவாள நாட்டரசர் இவன் ஏவிய தொழிலைச் செய்தனர். வட நாட்டிலுள்ள அரசர்கள் மெலிவுற்றனர். குட நாட்டிலுள்ளவர்கள் மனங்குன்றினர். பாண்டியனது வீரங் குன்றச் சிறீனான். இடைக் குலத்தரசர்கள் கிளை கெடவும் ஐம்பெரும்வேளிர் குலம் அழியவும், பகைவரது மதிலைத் தாக்கும் பெரு முயற்சியுடைய பெருஞ் சேனையின் வீரத்தோடும் வலிமையோடும் கண் சிவந்து கோபித்து நோக்கினான்.

மேற் கூறியவாறு பகையழிக்குந் தொழிலோடு நின்றுவிடவில்லை. தனது நாடு பல வகையிலும் சிறந் தோங்குதற்கு வேண்டும் செயல்களையும் புரிந்தனன். காடுகளை அழித்து மக்களைக் குடியேற்றி நாடாக்கினான்.குளங்கள் தோண்டி வளஞ் செழிக்கச் செய்தான். மாடங்களை யுடைய உறையூரை அளவில் விரிவுறச் செய்தான். கோயில்களோடு பழைய குடிகளையும் நிலைநிறுத்தினான். பெரு வாசலையும் திட்டி வாசலையும் அமைத்து அவற்றின் தலையில் எய்து மறையும் சூட்டுத்தோறும் அம்புக் கட்டுக்களையும் கட்டி வைத்தான். திருவீற்றிருகும் இவனது மதிலின் மின்னொளியினால் பகை வேந்தரது ஒளி மழுங்கி விட்டது. இவர்கள் இவனோடு போர் புரிவோமென்று வஞ்சினம் கூறி வந்து தன்னந் தனியாய் உள்ளோம் என்று கருதிப் புறங்கொடாது தம் தலையிற் சூடிய பசிய மணிகள் இவனது பருத்த வலிமிக்க கழற் காலிற் பொருந்தின.

இங்ஙனம் வீரச் செயலில் மட்டும் ஈடுபட்டு நின்று விட வில்லை. இல்லற இன்பத்திலும் இவன் திளைத்து வந்தான். இவனது இளம் புதல்வர்கள் இவனது சந்தனம் பூசிய மார்பின் மீதிருந்து விளையாடினர். இவனது இளம் மனைவியர்கள் இவனைத் தம் மார்போடு இறுகத் தழுவி இன்புற்றனர். சிங்கம்போன்ற அச்சந் தரும் பேராற்றலுடையவன் இப் பேரரசன்.

இவன் பகைவர் மீது ஓச்சிய வேலைக் காட்டிலும் மிகுதியான வெம்மையுடையது நான் செல்லவேண்டும் காட்டு வழி; இவனது செங்கோலைக் காட்டிலும் மிகுதியாகக் குளிர்ந்திருக்கும் எனது தலைவியின் அகன்ற மெல்லிய தோள்கள். அவள் இங்கே பிரிந்திருக்க, நெஞ்சே!நான் உன்னுடன் வாரேன்; நீ அங்கே போய வாழ்வாயாக.

இது பட்டினப்பாலையின் சுருக்கம். இதிலே காணும் காவிரிப்பூம்பட்டினத்தின் பண்டைச் சிறப்புப் போற்றுதற் குரியதல்லவா?

14. தொண்டி நகரம்.

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிகமிக முற்பட்டு, சுமார் 2000 வருஷங்களுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற் கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரை பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழுலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. எகிப்திய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளூஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி.பி.60. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கேரளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57 1/2 மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.

பெரிப்ளூஸுக்குப் பின், சுமார் கி.பி.150-ல் வாழ்ந்த டாலமி என்பவன், தான் எழுதிய பூமி சாஸ்திரத்தில், இத்தெண்டியைப் பற்றிக் கூறியுள்ளான். இவன் கணித சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூமி சாஸ்திரத்திலும் சஙகீதத்திலும் வல்லவனாயிருந்தவன், இவன் வாழ்ந்த இடம் அலெக்ஸாண்டிரியா நகரமாகும். இவன் காலத்து அரசன் ஆண்டோநைனஸ் பயஸ்.

மேற்குறித்த இரண்டு கிரேக்க ஆசிரியர்களும் இப்பட்டினத்தின் பெயரை திண்டிஸ் எனக் குறித்தனர். இக் கிரேக்கப் பெயருக்கு மூலமான நகரப் பெயர் 'தனுர்' ஆகலாம் என்று டாக்டர் யூல் கூறினர். இவருக்குப் பின் டாக்டர் பர்ணல் கடலுண்டி என்று இப்போது வழங்கும் ஊர் தான் தொண்டி என்றும் இதனைக் கடல்-துண்டி என்று கூறுவதும் உண்டென்றும் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் 'கானலந் தொண்டி' என்று பல இடங்களில் வந்துள்ளது. கடல்-துண்டி என்று கொண்ட முடிவை வற்புறுத்துகிறது. ஆனால் டாக்டர் ஷாவ் 'பொன்னானி' என்பது தொண்டியாகலாம் என்பர்.

தொண்டி எனபது கடலின் கழிக்கு ஒரு பெயராகத் தஞ்சைப் பிரதேசத்திலும் ஈழப் பிரதேசத்திலும் வழங்குகிறது. கடலினின்றும் உட்பாய்ந்த கழியை அடுத்து இப்பழைய பட்டினம் இருந்ததுபற்றி இப்பெயர் தோன்றியது என்று எண்ண இட முண்டு.

இனி, சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப்பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல் கடற் கரையில் வெகுதொலைவில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில்(உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார். "கொர மாண்டல் கோஸ்ட்" (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலேயுள்ள சிறகு அற்ற நாரை 'மலபார் கோஸ்ட்' என்னும் மேல்கடற் கரையிலேயுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலே யுள்ள அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம். அச்செய்யுள் வருமாறு: மேற் கடற்கரையிலுள்ள இத்தொண்டியின் நில அமைப்பு ஒரு செய்யுளில் அழகுறச் சொல்லப்பட்டிருக்கிறது. ul> குலை இறைஞ்சிய கோட்டாழை அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் தெகழிமிசைச் சுடர்ப்பூவின் தண் தொண்டியோர் அடுபொருந (சங்க-1151) என்பது அச்செய்யுட்பகுதி. இங்கே மிகுதியாய்க் காய்த்துக் குலைகள் தாழ்ந்து கிடக்கிற தெங்கின் தோட்டங்களும், அகன்ற வயலிடங்களும், மலையாகிய வேலியும், நிலவுபோல ஒளி விடுகின்ற மணல் நிரம்பிய அகன்ற கானலும், தீத்தோன்றுவதுபோலப் பூக்கள் நிரம்பியிருக்கின்ற கழிநீருமுடைய தொண்டி என்பது இதன் பொருள். ஆகவே குளிர்ந்த தோட்டங்களும், மருத நிலமும், குறிஞ்சி நிலமும் நெய்தல் நிலமும் கலந்து கிடக்கின்ற பிரதேசத்தின் நடுவிலே இப்பழைய நகரம் இருந்தது என்பது விளங்குகிறது. மலர் நிரம்பிய சோலைகள் இந்நகரத்திற்கு அணியாய் இருந்தன. 'தொண்டித் தண்கமழ் புதுமலர்' (சங்க-97) 'முண்டக நறுமலர் கமழுந் தொண்டி' (சங்க-98) என்று வரும் செய்யுளடிகள் இதற்குச் சான்று. இம்மலர்ச் செறிவால் இங்கே இனிய தேனின் நறிய வாசனை எப்பொழுதும் கமழ்ந்து கொண்டிருக்கும்.'கள் நாறும்மே கானலந்தொண்டி' (சங்க-1930) என்பது ஒரு சங்கச் செய்யுளடி.

கடலையடுத்துள்ள ஒரு துறைமுகமாக இது விளங்கிற்று என்பது 'பனித்துறைத் தொண்டி' (சங்க-93), 'துறைகெழு தொண்டி' (சங்க-101) என்ற அடிகளால் புலனாகிறது. கடல் அலைகள் கரையிலே மெல்லெனமோதி, முழவு ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டிருக்கும் என்று அலையின் ஓசையைப் புலவர்கள் அனுபவித்துக் கூறியிருகிறார்கள். 'வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந' (சங்க-1744) 'திரைஇமிழ் இன்னிசை அளைஇ.....இசைக்குந் தொண்டி' (சங்க-92) என்பன அவர்கள் கூறிய இனிய நன்மொழிகள். இக் கடற்கரையிலே உப்பு விளைத்தலும் மீன் பிடித்தலும் மக்கள் தொழில்கள். உப்பை விற்று அதற்கு மாறாகக் கொண்ட நெல்லினாலாகிய வெண்சோற்றினை மீன் வேட்டைமேற் சென்ற தந்தைக்கு அவனது செல்வச் சிறுமிகொடுத்தாள் என்று பொருள்.

பெரிப்ளூஸ் முதலியவற்றிலுள்ள குறிப்புக்களால் தொண்டியில் மரக்கலத்தின் மூலமாக வியாபாரம் நடந்துவந்த செய்தி நமக்குத் தெரிகிறது. இவ்வகை வியாபாரத்தைப் பற்றிய குறிப்பு யாதொன்றும் சங்க இலக்கியத்தில் வெளிப்படையாக காணப்படவில்லை. துறை என்ற பொதுப் பெயரிலிருந்து இவற்றைக் கருதிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதனை அடுத்துள்ள பிறிதொரு பழைய பட்டினமாகிய முசிறி இவ்வகையான ஒரு வணிக ஸ்தலமாக இருந்தது என்பதற்குத் தக்க இலக்கியச் சான்று உள்ளது: இங்கே நன்கலம் என்பது மரக்கலம். கறி என்பது மிளகு.. முற்காலத்து மிளகு மேலை நாட்டினரால் அரிய வியாபாரப் பொருளாகக் கொள்ளப்பட்டிருந்தது.

இங்ஙனமாகவும், தொண்டியைப் பற்றி இவ்வகைக் குறிப்பு இலக்கியங்களிற் காணப் பெறாதது சிறிது வியப்பாகவே இருக்கிறது.

இனி, தொண்டியில் வயற் பரப்பு மிக்குள்ள சிறப்பும் பலப் படியாகச் சங்க இலக்கியங்களிலே விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது. உப்புக்கு மாறாக் நெல்லைப் பெற்று அமுதாக்கும் செய்தி முன்னரே குறிப்பிடப்பட்டது(சங்க-1108. பிறிதொரு செய்யுளில் 'கானலந் தொண்டி நெல்லரி தொழுவர்' (சங்க-2341) என அங்கேயுள்ள அறுவடைச் செய்தி கூறப்படுகிறது. இத் தொண்டியில் விளைந்தது வெண்ணெல். ஒரு செய்யுள் இத் தொண்டி வெண்ணெல் தமிழகம் முழுவதும் பெரும்புகழ் பெற்றிருந்தது என்பதை உணர்த்துகிறது. என்பது அச் செய்யுள். சிறந்த நறு நெய்யும், தொண்டியில் விளைந்த அரிய வெண்ணெல் வெண்சோறும், ஏழு கலத்திலே கலந்து இட்டு கொடுத்தாலும் அது, தலைவன் வருவதைத் தெரிவித்துக் கரைந்த காக்கை செய்துள்ள பேருதவிக்குச் சிறிதும் ஈடாகாது என்பது கருத்து. இதனால் தொண்டி வெண்ணெல் கிடைத்தற்கரிய இனிய உணவுப் பொருள் என்பது நன்கு புலப்படும். வயற்பரப்புக்களில் நிகழும் செய்திகளை ஒரு செய்யுள் அழகாக உணர்த்துகிறது. அங்குள்ள சிறு பெண்கள் வயிரம் பாய்ந்த கரிய உலக்கையைக் குழந்தையாகக் கொண்டு, உயர்தரமான நெல் விளைந்திருக்கும் வயல்களின் வரம்பணையிலே அதனைத் துயிலச் செய்து, விளையாடுகிற தொண்டி என்று மருத நிலச் சித்திரம் ஒன்று வரையப்பட்டுள்ளது: என்பது சங்க இலக்கியம்.

இப் பழைய நகரம் பல தெருக்களை உடையதாய், விழா இன்னிசை யரங்குகள் முதலியன நிகழ்தலினாலே எப்பொழுதும் இன்னொலியுடையதாய் விளங்கியது. 'முழவு இமிழ் இன்னிசை மறுகுதோறிசைக்குந் தொண்டி' (சங்க-92) என்பது ஒரு செய்யுட் பகுதி. அன்றியும் நன்றாக அரண் முதலியவற்றால் பாதுகாக்கப்பட்டது என்பது 'கதவிற் கானலந் தொண்டி' (சங்க-1929) என்ற தொடரால் தெரிய வருகிறது, இது சேரனது பெரு நகரங்களில் ஒன்று. எனவும், எனவும் வரும் அடிகளால் இதனை உணரலாம். இங்ஙனமாக மேற்கடற் கரையிலே பலவகையான நல்ல இயல்புகளோடு பொருந்தி விளங்கியது இந் நகரம். 'தொண்டியன்னநின் பண்புபல கொண்டே' (சங்க-96) என்பது ஒரு செய்யுட் பகுதி.

இந்நகரோடு சார்த்தி இரண்டு வரலாறுகள் காணப்படுகின்றன. ஆடுகோட்பாட்டுச் சேர லாதன் பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஆறாம் பத்தில் புகழப்பெற்றுள்ளான். இவன் தண்டகாரண்யத்தில் வருடை என்று பெயர் வழங்கிய ஒருவகையான ஆட்டைப் பிடித்துத்தொண்டி என்ற நகரத்திற்குக் கொணர்ந்து அதனைக் கொடுப்பித்தான் என்றது ஒரு செய்தி. இதனைக் கூறும் அடிகளை அவற்றின் பின்வரும் அடிகளோடு சேர்த்து நோக்கு மிடத்து யாகஞ் செய்தற் பொருட்டு ஆடு கொடுக்கப்பட்டது என்று ஊகித்தல் பொருந்தும். இச்செய்தியால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் இச்சேரனுக்கு வழங்கியது.

வேறொரு வரலாறும் சங்க நூல்களால் புலனாகின்றது. முற்காலத்திலே தோல்வியுற்ற பகைவனுடைய பற்களைப் பிடுங்கி அவற்றை வெற்றி கொண்டவனது நகர வாசலில் வெற்றிக்கு அறிகுறியாகப் பதித்து வைப்பது வழக்கம். இவ்வகை வரலாறு ஒன்றை ஓர் அகநானூற்றுச் செய்யுள் (சங்க-2136) தெரிவிக்கிறது. இதனோடு ஒத்து, மூவன் என்னும் பேராற்றல் வாய்ந்த பகைவன் ஒருவனைத் தொண்டி நகரத்து அரசனாகிய பொறையன் வெற்றிகொண்டு அவன் பல்லினைத் தனது நகரத்தின் வாயிற் கதவிலே தைத்து வைத்தான் என்ற செய்தி என்ற செய்யுளால் உணரலாகும்.

தொண்டியைப்பற்றி அகநானூற்றில் 3-ம் ஐங்குறு நூற்றில் 10-ம், குறுந்தொகையில் 3-ம், நற்றிணையில் 3-ம், பதிற்றுப்பத்தில் 2-ம், புறநானூற்றில் 2-ம், ஆக 23 செய்யுட்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. இவற்றுள் இரண்டு செய்யுட்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந்தில. மற்றைச் செய்யுட்களை இயற்றிவர்கள் ஒன்பது ஆசிரியர். அவர்கள் அம்மூவனார், காக்கைபாடினியார் ந்ச்செள்ளையார், குடவாயிற் கீரத்தனார், குறுங்கோழியூர் கிழார், குன்றியனார், நக்கீரர்,பரணர், பெருங்குன்றூர் கிழார், பொய்கையார் என்பவர்கள். இப் புலவர்கள் வாழ்ந்து இச் செய்யுட்களை இயற்றிய காலம் கி.பி. 2,3-ம் நூற்றாண்டுகளிலாகலாம்.

தொண்டியின் பெருவாழ்வும் கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிவடைந்து விட்டது என்று ஒருவாறாக நாம் ஊகித்தல்கூடும். சங்க இலக்கியங்களுக்குப் பின்னுள்ள நூல்களில் சேரர்களுக்குரிய இம்மேல்கரைத் தொண்டியைக்குறித்து யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. யாது காரணத்தாலோ இந்நகரம் தனது பண்டை பெருமையை இழந்து வந்திருக்க வேண்டும். ஆனால் இதன் பெயர் தமிழகத்தில் ஒரு மந்திர சக்தியைப் பெற்றிருந்தது என்று சொல்லலாம்.

ஏனென்றால், சேரர்களோடு பகைமை கொண்டிருந்த பாண்டியர்களும் தங்களுக்குரிய துறைமுகப் பட்டினம் ஒன்றைத் தொண்டி எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்த இரண்டாவது தொண்டியைக் குறித்து நாம் முதன் முதலில் அறிவது இறையனார் களவியலுரையிலே வரும் பாண்டிக் கோவையிலே தான். என்பன முதலாகவரும் பாண்டிக் கோவைச் செய்யுட் பகுதிகள் மேற்கூறியதற்குச் சான்று. இக்கோவையின் தலைவன் சம்பந்தர் காலத்தவன். எனவே ஏழாவது நூற்றாண்டில் இம்மீனவன் தொண்டி உளதா யிருந்தது. இதற்கு முன்னும் சங்க காலத்திற்குப் பின்னும், சுமார் ஐந்தாம் நூற்றாண்டளவில், இவ்விரண்டாவது தொண்டி தோன்றியிருத்தல்கூடும். 'வரகுணன் தொண்டியின் வாய்' (யாப்-காரிகை உரை) என்று வரும் பழஞ்செய்யுள் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வரகுணனைக் குறித்ததாகலாம். நந்திக் கலம்பகம் கொண்ட மூன்றாவது நந்தி வர்மன் பாண்டியனது தொண்டி நகரத்தைக் கைக்கொண்டவன் என்று அந்நூலின் 38-ம் செய்யுள் உணர்த்துகின்றது. ஆகவே ஒன்பதாம் நூற்றாண்டில் இந்நகரம் சிறப்புற்று விளங்கியது.

இதற்குப் பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராஜாதி ராஜன் II காலத்து ஆர்ப்பாக்கம் சாசனத்தில் (20-1899) தொண்டி கூறப்பட்டிருக்கிறது. பாண்டி மண்டலத்தை ஈழ மண்டலப் படைகள் பிடித்துக் கொண்டு குலசேசரபாண்டியனை மதுரையி னின்றும் வெருட்டி விட்டன. குலசேகரனுக்கு அபயமளித்த இராஜாதிராஜனுடைய சாமந்தர்களை எதிர்த்து இப்படைகள் சென்று தொண்டிப் பிரதேசத்தில் கடும்போர் புரிந்து வெற்றி கொண்டன. பின்னர் ஈழத்துப் படை முறியுண்டதனால், பாண்டியர்கள் மீண்டும் வலிமையுற்று விளங்கினார்கள். இக்காலத்தும் இத்தொண்டி சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று.

பின்னர் ஒரு காலத்துச் சோழ வம்சத்தைச் சார்ந்தவன் ஒருவன் பாண்டிய நாட்டின்மேல் படை யெடுத்து வந்தான். பாண்டியன் முற்றும் தோல்வியுறும் நிலையில் இருந்தான். அப்பொழுது அவனுக்காக ஆதிவீர ரகுநாத சேதுபதி போர் புரிந்து சோழனை முறியடித்து வெருட்டினார். இந்நன்றியைப் பாராட்டி இத்தொண்டித் துறைமுகத்தைப் பாண்டியன் சேதுபதிக்குக் கொடுத்தான் (நெல்ஸன். 3-115). சேதுபதிகள் தொண்டியைச் சில காலம் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்ததும் உண்டு (நெல்ஸன். 3-144). இதன் பின்னர் விஜய நகரத்து ராயர்களும் மதுரை நாயக்க அரசர்களும் தென்னாட்டை ஆண்டுவந்தனர். அவர்கள் காலத்தும் தொண்டி சேதுபதிகள் கைவசமே இருந்தது. ஆனால் சேதுபதிகளும் சிவகங்கை ஜமீன்தார்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் தொண்டி சிவகங்கை ஜமீன் வசமாயிற்று. ஒரு காலத்து, திண்டுக்கல்லையும் தொண்டியையும் இணைக்கவும், பின் திண்டுக்கல்லையும் மேல்கடற் கரையையும் இணைக்கவும், ஓர் ஆலோசனை கி.பி. 1796-ல் நிகழ்ந்ததுண்டு (நெல்ஸன் 4-24).

சேரர் தொண்டி, பாண்டியர் தொண்டி தோன்றுவதற்குக் காரணமா யிருந்தது போலவே, சோழ குலத்தோர் தொண்டி ஒன்று கீழ்த்திசையிலே கடலுக்கப்பாலுள்ள பிரதேசத்தில் தோன்றுவதற்கும் காரணமாயிருந்தது என்று நினைக்க இடமுண்டு. எனச் சிலப்பதிகாரத்திலே ஊர் காண் காதையில் இச்செய்தி கூறப் பட்டுள்ளது. இங்கே 'கீழ்த்திசையிலே தொண்டி என்னும் பதியிலுள்ள அரசர் என்ற அடியார்க்கு நல்லார் உரையும் 'தொண்டியோர்-சோழ குலத்தோர்' என்ற அவரது குறிப்பும் உணரத்தக்கன. இத்தொண்டி பாண்டிநாட்டுத் தொண்டியாக இருத்தல் இயலாது. ஏனென்றால் தொண்டியினின்றும் புறப்பட்ட மரக்கலத் திரள்கள் கீழ் காற்றினாலே கடலில் செலுத்தப்பட்டு மதுரையை வந்து அடைந்தன என்று இவ்வடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வந்த மரக்கலங்கள் வாரோசு என்னும் கற்பூரவகை முதலிய அயல்நாட்டுப் பொருள்களைக் கொண்டுவந்தன என்றும் அறிகிறோம். இத்தொண்டி சுமத்ரா, ஜாவா முதலிய பிரதேசங்களில் சோழ குலத்தோரால் அமைக்கப்பட்ட ஒரு நகரமாதல் வேண்டும். இதனைக் குறித்து இப்பொழுது யாதும் அறிய இயலவில்லை. கீழ் கடலுக்கு அப்பால் இவ்வாறு தொண்டி எனப் பெயர் பெற்ற நகரம் ஒன்று இருந்தது உண்மை யாயின், நாளிதுவரை அறியப்படாத ஓர் அரிய சரித்திரச் செய்தியைச் சிலப்பதிகாரமும் அதன் உரையும் உணர்த்துகின்றன என்று கருதவேண்டும்.

15. முத்தொள்ளாயிரம்

நமது மூதாதையர் நமக்குத் திரட்டி வைத்துள்ள செல்வங்களுள் பெருஞ் சிறப்பு வாய்ந்தது முத்தொள்ளாயிரம். இப்போது இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இதற்குரிய செய்யுட்கள் சிலபுறத் திரட்டு என்னுந் தொகை நூலுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இச் செய்யுளின் அருமை பெருமைகளையுணர்ந்து முதன் முதல் 1905-ல் செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக இவற்றை வெளியிட்டவர்கள் ஸ்ரீ.ரா. இராகவையங்காரவர்கள்.

இந்நூல் வெளி வந்து 38 ஆண்டுகளாய் விட்டன[1]. இதன் பெயரை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் 'முத்துள்ள யீரம்' என்று தமிழிற் பெயர்த் தெழுதினாரும் உளர். சமீப காலத்தில்தான் இந்நூலின் அழகினையும், இனிமையினையும் தமிழ் மக்களிற் பெரும்பாலார் அறிந்து அனுபவித்து வருகின்றனர். எனது நண்பர் திருவாளர் டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களே இதற்கு முக்கிய காரணமாயுள்ளவர்கள். திரு. முதலியாரவ்ர்களைப் போலக் கவிதை யின்பத்தைப் பிறர்க்கு எடுத்துக்காட்டி அனுபவிக்குமாறு செய்யவல்லவர்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலரேயுள்ளார்கள். ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவியென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு-கருவியாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய நுணுக்கப் பொருள்களை யிட்டு வைப்பதற்குரிய சொற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம் படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல. இக் கவிதைத் தத்துவத்தை நன்குணர்ந்தவர்கள் திரு.முதலியாரவர்கள். இவர்கள் போன்ற ஒரு சிலராலேயே தமிழ் நாட்டில் உண்மைக் கவிதையுணர்ச்சி பரவி வருகிறது.

--------------------
[1] இது 1943-ல் வெளியான கட்டுரை
----------------------

முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் அடங்கிய புறத்திரட்டு என்னுந் தொகை நூலைப் பதிப்பித்து வெளியிடும் பேறு எனக்கு 1938-ல் வாய்த்தது. பல பிரதிகள் பெற்று நன்கு பரிசோதித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்துப் பதிப்பாக இதனை வெளியிட்டேன். இப்பதிப்பில் நான் எழுதிய முன்னுரையால் முத்தொள்ளாயிரம் பற்றிய சில செய்திகளை அறியக்கூடும். இச் செய்திகளில் ஒரு சில ஸ்ரீ இராகவையங்காரவர்களது பதிப்பிலிருந்து கொள்ளப்பட்டன. சில மாதங்களுக்கு முன் நான் செய்துவந்த ஆராய்ச்சியால் சில நூதன விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. அவற்றில் இரண்டினை இங்கே வெளியிட விரும்புகிறேன்.

முத்தொள்ளாயிரத்தில் எத்தனை செய்யுட்கள் உள்ளன?

இக்கேள்வி யாவருக்கும் வியப்பாகத் தோன்றும். ஐந்திணை யைம்பது, நாலடி நானூறு இவற்றில் எத்தனை செய்யுட்கள் உள்ளன என்ற கேள்வியைப் போன்றதல்லவா இதுவெனப் பலரும் நினைக்கக்கூடும். சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் 900 செய்யுட்கள் வீதம் 2700 செய்யுட்கள் அடங்கிய ஒரு நூலென்று சாதாரணமாக நாம் கருதுவோம். ஸ்ரீ இராகவையங்காரவர்களும் இங்ஙனமே அவர்கள் எழுதிய முகவுரையிற் கூறினார்கள். எனது புறத்திரட்டு முன்னுரையில் நானும் இவ்வாறே கொண்டுள்ளேன். முத்தொள்ளாயிரச் செய்யுட் பகுதியைக் கவித்வக் கண்ணால் நோக்கி மூல பாடங்களைத் திருத்தி ரசிகருக்கென உரை வகுத்த திரு டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் 'சேரன் சோழன் பாண்டியன் இவர்கள் மீது பாடிய தொள்ளாயிரம் தொள்ளாயிரமான மூன்று தொள்ளாயிரங்களும் சேர்ந்து ஒரு நூலாகி, முத்தொள்ளாயிரம் என்ற பெயரோடு வழங்கி வந்தது' என்று எழுதி யிருக்கிறார்கள். இதுவே முடிந்தமுடிபாக இன்று வரை பலராலும் கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் சிற்சில ஊகங்களால் இம்முடிபில் எனக்கு ஐயப்பாடு தோன்றியதுண்டு. முதலாவது முத்தொள்ளாயிரம் பழையவுரைகாரர்களால் பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது; ஆனால் ஓரிடத்திலேனும் (2700 செய்யுட்களடங்கிய) அத்தனை பெரிய நூலென்று அது குறிப்பிடப் படவில்லை. இங்ஙனம் குறிப்பிடப் படவில்லை என்பது ஒரு காரணமாக எடுத்துக் கூறுந்தகுதியுடைய தன்று. எனினும் பிறவற்றோடு இதுவும் சேர்ந்து சிறிதளவு சான்றாகப் பயன் படுகிறது. இரண்டாவது சமீப காலம் வரையில் (சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை) முழுவதும் அகப்படுவதாயிருந்த ஒரு இனிய சிறந்த நூலில் மிக மிகச் சிறியதொரு பகுதியே (27-ல் ஒரு பகுதி) இப்போது அகப்படுகிறது என்பது அத்தனை நம்பிக்கைக்கு உரியதாகத் தோன்றவில்லை. நூலை இயற்றிய புலவர் கவிதைத் துறையில் முன்னணியிலுள்ளவர் என்பது இப்போது கிடைக்குஞ் செய்யுட்களால் அறியலாகும். 'இச் செய்யுட்கள் தாம் சிறந்தன; ஏனையவைகளெல்லாம் தகுதியின்மையால் இறந்தொழிந்தன என்றெண்ணுதலும் பொருத்தமன்று. கவிதைச் சிறப்பினை அளந்தறிதற்கு இப்போது கிடைக்கும் செய்யுட்கள் ஒரு கருவி;நூற்பெயர் பிறிதொரு கருவியாகும். நூலை இயற்றிய கவிஞனது பெயர் மளைந்து விட்டது; நூலின் அருமை பெருமைகளைக் கருதி ஆசிரியர் பெயர் கூறாது நூலின் பெயரையே தமிழ் மக்கள் வழங்கிவரலாயினர். இவ்வகைச் சிறப்புடைய நூலில் மிகச் சிறியதொரு பகுதியே இப்போது அகப்படுவதென்றால் அதனை நம் மனம் எளிதில் ஒப்புவதன்று. வேறொன்றும் நாம் இங்கே கவனித்தற்குரியது. இலக்கணம், நாட்டியக்கலை, முதலியன சிற்சில தொகுதி யாரே அறிந்து அனுபவிக்கும் துறைகள். கவிதை அஙஙனமன்று; தமிழ் மக்கள் அனைவரும் கற்று இன்புறத்தக்கது. ஆதலால் முற்கூறிய துறைகளின் பாற்பட்ட நூல்கள் இறந்தொழிதல் எளிது.கவிதைத் துறை நூல்கள் இறந்து மறைதல் அத்துணை எளிதன்று. இதனையும் நாம் ஞாபகத்தில் கொண்டால், முத்தொள்ளாயிரத்தில் சுமார் 100 செய்யுட்களொழியச் சுமார் 2600 செய்யுட்களும் மறைவ்தொழிந்தன என்றல் அசம்பாவிதமாதல் வெளிப்படை. மூன்றாவது தொள்ளாயிரம் என்ற தொகையை யுடைய நூல்கள் பல இருந்தன. 'வச்சத் தொள்ளாயிரம்' 'அரும்பைத் தொள்ளாயிரம்' முதலியன உதாரணங்களாம். இவற்றை நோக்கும்போது தொள்ளாயிரஞ் செய்யுட்களில் நூலியற்றுதல் பண்டை மரபுகளுள் ஒன்றென்று கருதலாமல்லவா?

மேற் கூறியன போன்ற ஏதுக்களால் என் ஐயப்பாடு உறதி பெற்றுக் கொண்டே வந்தது. சமீபத்தில் பாட்டியல் பற்றிய நூல்களை நான் ஆராய நேர்ந்தது. இலக்கண விளக்கப் பாட்டியலில் "எண் செய்யுள்" என்பதொன்று விளக்கப்பட்டுள்ளது. என்பது சூத்திரம் (88) என்பது பிரபந்த தீபிகை.[1]
--------------------------
[1]இதுவரையில் அச்சில் வெளிவாராத நூல். இந்நூலின்(ஏட்டுப்பிரதி ஒன்று மதுரைத் தமிழ் சங்கத்திலுள்ளது.
--------------------------

இலக்கண விளக்கப் பட்டியல் உரையில் 'பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் வெண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன' எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலே உணர்த்தப்படுகிறது. இதன் கண் வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரமாகும். அஃதாவது ஆயிரத்தின் விஞ்சுதல் கூடாது. இத்தனையென்பது நூற்பெயரால் அறியப்படும். முத்தொள்ளாயிரம் என்பதில் தொள்ளாயிரம் என்பது அவ்வெண்ணாதலின் அத்தனை செய்யுட்கள் இருத்தல் வேண்டுமேயன்றி அதனின் மிகுதிப்பட்ட செய்யுட்கள் கொண்டதாக இந்நூலைக் கருதுதல் கூடாது. ஆகவே முத்தொள்ளாயிரத்தில் தொள்ளாயிரஞ் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப் பட்டன வென்பதும் அறியத்தக்கன.
இந்நூலைச் சார்ந்தனவென ஊகித்தற்குரிய செய்யுட்கள் எவையேனும் உளவோ?

தமிழ்ச் சங்கப் பதிப்பில் சேர்க்கப் பெறாத முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் இரண்டு எனது புறத்திரட்டுப் பதிப்புரையில் காட்டியுள்ளேன். அவற்றுள் ஒன்று பொருள் காணவியலாதபடி பிழைபட்டுள்ளது. பிறிதொன்று முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென ஆசிரியர் இளம்பூரணரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு: இங்கே 'ஏற்றூர்தியான்', 'கூற்றக் கணிச்சியான்' என்பன சிவனைக்குறிக்கும். 'வானவன்' என்றது சேரனை.

இச் செய்யுளைப் பூவை நிலைக்கு (தொல்-புறத். 5 உரை) உதாரணமாக இளம்பூரணர் காட்டினார். இவை யிரண்டேயன்றி, வேறோர் அழகிய செய்யுளும் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென ஊகிக்க இடமுண்டு. பேராசிரியர் (தொல்.செய்யுளில் 158 உரை) 'பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிற்சான்றோரு மெனக்கொள்க' என்றெழுதி, இங்ஙனம் வந்தமைக்குக் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய களவழியிலிருந்து ஒரு செய்யுளும், நூற்பெயர்குறிக்கப்படாத செய்யுளொன்றும் தந்துள்ளார். இப் பிற்செய்யுள் முத்தொள்ளாயிரத்துக் குரியதாதல் வேண்டும் என்பது வெளிப்படை. செய்யுளின் துறையும், அழகும் இனிமையும் முத்தொள்ளாயிரச் செய்யுட்களுள் ஒன்று என்னுந் துணிபினையே வற்புறுத்துகின்றன.

தென்னவனாகிய பாண்டியன் யானை மீது உலா வருகின்றான். அக்காட்சியை இளங்கன்னியர் மூவர் கண்ணுறுகின்றனர். ஒருத்தி, 'யானை முகத்தை அலங்கரித்த பொன்முக படாம் அழகிது' என்றனள். மற்றொருத்தி, 'பொன்னோடையைக் காட்டினும் யானை அழகிது' என்றனள். இவ்விருவரும் உலாக்காட்சியைக் கண்டு மகிழ்ந்து அவ்வளவில் அமைந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் எவ்வகையான கவலையுமின்றிப் பரிபூரண சௌக்கிய நிலையில் இருக்கின்றனர். மூன்றாவதொருத்தி உலாக் காட்சியில் ஈடுபடுவதோடமையாமல் யானை மீது உலா வரும் தலைவனது பேரழகிலே மனத்தைப் பறி கொடுக்கின்றாள். அவன் ஆயுதந் தாங்கிவரும் வீரக்கோலம் அவளுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. அவனுடைய அகன்ற மார்பிலே ஆடித் துவண்டு வரும் மாலையைக் குறிப்பாகப் பார்க்கின்றாள். மாலையின் அழகு, அதற்குத் தலைவனது மார்பிலே கிடந்து துவளுமாறு கிடைத்துள்ள நற்பேறு, உலாக் காட்சியில் அதற்குக் கிடைத்துள்ள சமுதாய சோபை, அதனைத் தலைவனது அருளுக்கு அறி குறியாக முன்னையோர் கூறிவரும் மரபு, அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற பேராசை: இவையெல்லாம் அவள் மனக் கோட்டையைத் தகர்க்கின்றன. கோட்டையில் ஒரு சிறு பிளவு ஏற்பட்டு விடுகிறது. அதன் வழியாகப் 'பொன்னோடை, யானை முதலிய எல்லாவற்றைக் காட்டிலும் தென்னவனுடைய திருத்தார் நன்று' என்ற சொற்கள் மூச்சோடு மூச்சாய் இழைந்து வெளிவந்து விடுகிறது. காதலால் மனம் வெதும்பி வருந்துகின்றாள். 'உய்தியில்லாத இந்நோய் உண்டாவதற்குத் தீயேனாகிய நான் என்ன தீங்கு இழைத்து விட்டேன்? எனத் தனது பெருங்காதலை மெல்லச் சுருங்க வெளியிடுகின்றாள். இம்மென்மையும் சுருக்கமும் என்ற அடியில் நன்கு புலப்படுகின்றன. இப்போது செய்யுளைக் கேளுங்கள். தியேன் என்றது தீயேன் என்பதன் குறுக்கம். இது போன்ற அழகிய பல செய்யுட்களையுடைய நமது இலக்கியச் செல்வங்களை நாம் போற்றி வருதல் நமது முதற்பெருங் கடமையல்லவா?

முத்தொள்ளாயிரத்தின் காலம்
கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109 - செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு.

இந்த நூல் தோன்றிய காலத்தைக் குறித்துப் பலரும் பல வேறு கருத்துடையராயுள்ளார்கள். இதன் அருமை பெருமைகளை உணர்ந்து முதல் முதலில் அச்சிற் பதிப்பித்து வெளியிட்ட திரு. ரா.ராகவையங்கார் அவர்கள் 'ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்' என்று மட்டும் குறிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பெற்ற புறத்திரட்டில் சங்ககாலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்த சான்றோர் ஒருவரால் இயற்றப்பெற்ற நூல் என்று இது குறிக்கப்பட்டது. பின்னர்த் தமிழுணர்ச்சியும் கவிநயமும் நம் நாட்டில் மிகப் பெருகும்படிச் சொற்பொழிவுகள் ஆற்றி உழைத்து வருகிற என் நண்பர் திரு. டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் தாம் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் - உரை நூலிலே,'ஏதோ இரண்டாயிர வருஷங்களுக்குமுன் ஒரு கவிஞர்' இயற்றியது இந்த நூல் என்று எழுதினார்கள். இவர்கள் பதிப்பில் சங்ககாலத்துக் கவிஞர் இயற்றியது என்ற கொள்கை வெளிப்படுகிறது. ஆனால் 'ஏதோ' என்று இலேசாக நெகிழ்ந்து கூறுவதிலிருந்து இவர்கள் இந்த நூல் பிறந்த காலத்தைக் குறித்து உறுதியான கொள்கையுடையவர்கள் அல்லர் என்று தோன்றுகிறது. இந்த நூலின் காலத்தை அறுதியிடுதற்கு ஒரு சில சான்றுகள் உள்ளன.

முதலாவது இந்த நூலைக் குறித்துப் பழைய உரைகாரர்கள் கூறுவனவற்றை நோக்குவோம். பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில்(சூ.239) முத்தொள்ளாயிரத்தை உதாரணம் காட்டினர். இவ்வுரைகாரரது காலம் சுமார் 14-ம் நூற்றாண்டாகும். ஆகவே முத்தொள்ளாயிரம் இந்த காலத்திற்கு முற்பட்டது என்பது புலப்படும். உரையாசிரியராகிய இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் (சூ.5) என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க' என்று எழுதிச் செல்லுகின்றார். இவரது காலம் சுமார் 12-ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே இந்தக் காலத்திற்கும் முற்பட்டதாகும் முத்தொள்ளாயிரம். மேற்குறித்த பேராசிரியர் தம் உரைப்பகுதியில், 'முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும்......கலம்பகம் முதலாயினவும் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்துவர இயற்றப்படும் விருந்து என்பதற்கு உதாரணமாம்' என விளக்கினர். இதனால் அந்தாதிச் செய்யுட்கள், கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் தோன்றிய 8-ம் 9-ம் நூற்றாண்டுகளை அடுத்து முத்தொள்ளாயிரமும் புதுவதாக இயற்றப்பட்டதாகும் என்பது வெளியாகின்றது.

அன்றியும், பேராசிரியர் 'பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற்சான்றோரும்’ (தொல்.செய்.158) எனக் கூறினர். பிற்சான்றோர் என்பதனால் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது இந்த நூல் என்பது தெளியலாகும். எனவே கி.பி.500-க்கு மேல் 850-க்குள்ளாக இந்த நூல் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என முன் எல்லையையும், பின் எல்லையையும் ஒருவாறு வரையறுக்கலாம்.

இனி நூலினகத்தே காணப்படும் சான்றுகளை நோக்குவோம். சோழ அரசரது தலைநகராகத் தஞ்சை நகர் சுமார் கி.பி. 850ல் தோன்றியது. இவ்வரசர்களைக் குறித்து இப்போது அகப்பட்ட முத்தொள்ளாயிரப் பகுதியில் பல செய்யுட்கள் உள்ளன. அவற்றில் ஒன்றிலேனும் தஞ்சை நகர் கூறப்படவே இல்லை. உறையூர் என்பது தான் தலைநகராகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே கி.பி.850-க்கு முன்பு இந்த நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சரித்திரச் சான்றாலும் உறுதியடைகின்றது. நூலில் காணப்படாத ஒன்றினைக்கொண்டு இந்தத்துணிபு கொள்ளப்பட்டது. இதனைக்காட்டிலும் நூலிற் காணப்படும் சான்றுகளே வலியுடையன.

சோழ பாண்டியர்களுக்குரிய குதிரைகளின் பெயர்கள் முதல் முதல் திவாகரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சூத்திரங்கள் வருமாறு: இதற்கு முன்னுள்ள நூல்களில் இந்தப் பெயர்கள் வழங்கியனவாகத் தெரியவில்லை. இந்தப் பெயர்களுள் ‘கனவட்டம்’ என்பதும்(புறத்திரட்டு,1515), ‘பாடலம்’ என்பதும் (புறத்திரட்டு,1513) முத்தொள்ளாயிரத்திற் காணப்படுகின்றன. ஆதலால் திவாகரத்தின் காலத்தை அடுத்து, சற்று முன் இந்த நூல் தோன்றியிருக்கலாம் என்று நினைக்க இட்முண்டு. திவாகரத்தின் காலம் சுமார் 10-ம் நூற்றாண்டாகும்.

பிற்காலத்து வழக்கிற் புகுந்த சொற்கள் இந் நூலகத்துக் காணப்படுகின்றன. 'நாணோடு உடன்பிறந்த நான்' (புறத். 1563), 'காணேன் நான்' (புறத். 1535) என்று ஈரிடங்களில் நான் என்ற பிற்பட்ட வழக்கு வந்துள்ளது. இங்ஙனமே 'போது' என்பது 'பொழுது' என்ற பொருளில் வந்துள்ளது. 'நெடு வீதி நேர்பட்டபோது (புறத்.1525) என்று முடியும் புறத்திரட்டுச் செய்யுளைக் காண்க. 'பேர்' என்பது 'என்னையுரையல் என் பேர் உரையல்' (புறத். 1540) என்ற செய்யுளில் காணலாம். இதனையும் 'போது' என்பதனையும் நேமிநாதம் (வெண்பா, 35) பிற்பட்டெழுந்த வழுவமைதிகளாகக் கூறுகின்றது. 'வீணில்' என்பது 'கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்' (புறத். 1541) என ஒரு செய்யுளில் வந்துள்ளது. இதுவும் பிற்காலத்துச் சொல்லென்பது கூற வேண்டா.

இந்தச் சொற்களே அன்றிப் பிற்காலத்து எழுந்த விகுதிகளும் இந்த நூற்செய்யுட்களகத்து மிகுதியாகக் காணப்படுகின்றன. 'ஏல்' என்பது அவ்வாறு வருவனவற்றுள் ஒன்று. இது எனின், எனில், ஏல் என்ற சொற்கள் வரிசையில் இறுதியில் திரிந்து வந்த வடிவம். என ஈரிடங்களில் வருகின்றது. 'ஆர்' என்பதும் பிற்பட்ட வழக்காகும் (நேமிநாதம், 35). 'அல்லால்' (புறத். 1528), 'ஆனக்கால்'(புறத். 1526) முதலிய பிற்பட்ட வடிவங்களும் இந்நூற் செய்யுட்களில் வந்துள்ளமை காணலாம். எதிர்காலத்து வரும் தன்மை ஒருமை விகுதி 'அல்' என்பது. இது பிற்பட்ட காலத்து 'அன்' எனத் திரிந்து பிற்பட்ட நூல்களில் வழங்கப்பட்டது. இவ் 'அன்' ஈறு முத்தொள்ளாயிரச் செய்யுளில் காணப்படுகின்றது. 'புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண் நிற்பன்' (புறத். 1533) என்பது செய்யுள். இவ் 'அன்' ஈற்றைக் குறித்து இளம்பூரணர் (தொல். வினை. 6,உரை) 'உண்பல், தின்பல் எதிர்காலம் பற்றிவரும். இப்பொழுது அதனை உண்பன், தின்பன் என அன் ஈறாக வழங்குப' என்று சொல்லுகிறார். எனவே இவ்வீறு மிகப் பிற்பட்ட காலத்தது என்பது எளிதின் உணரலாம். இளம்பூரணர் காலத்திற்கு 2,3-நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இவ்வழக்குப் பயின்று வந்திருக்கலாம்.

இனி முத்தொள்ளாயிரச் செய்யுட்களில் எடுத்தாளப்பட்டுள்ள ஒரு சில தொடர்களை நோக்குவோம். 'பண்டன்று பட்டினங் காப்பு' (புறத். 1562) என முத்தொள்ளாயிரத்துள் வருவது பெரியாழ்வார் திருமொழியில் (V,2,1-10) 'நெய்க்குடத்தை' என்னும் பதிகத்தில் காணப்படுகின்றது. இது போன்றே 'யார்க்கிடுகோ பூசல் இனி' (புறத். 1519) என்பது நாச்சியார் திருமொழியில் (IX,2) 'ஆர்க்கிடுகோ தோழி அவன் தார் செய்த பூசலையே' என வருகின்றது. இவை பெரியாழ்வார் காலத்தை அடுத்துத் தோன்றியது முத்தொள்ளாயிரம் என்பதை உணர்த்துகின்றன.

முடிவாக, பழமொழி நூலிலிருந்து சில பழமொழிகள் இந் நூலினகத்தே எடுத்தாளப்பட்டுள்ளன. நீரொழுகப் பாலொழுகா வாறு' (புறத். 1521: பழமொழி 243. செல்வக்.) என்ற உதாரணத்தைக் காண்க. பழமொழியாயிருத்தலால் இந்நூலிலிருந்துதான் கொள்ளவேண்டும் என்ற நியதி இல்லையே எனச்சிலர் கூறலாம். மறுக்கமுடியாதபடி ஓர் உதாரணம் உள்ளது என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது. இது பழமொழியில் உள்ளது. (பழமொழி. 351 செல்வக்.) ஆதலால் பழமொழி நூலின் காலத்திற்குப் பின்பு முத்தொள்ளாயிரம் தோன்றியது என்பது உறுதி. பழமொழியின் காலம் சுமார் கி.பி.750 - ஆக இருக்கவேண்டும் என அறுதியிட்டுள்ளேன்.

மேற்காட்டிய காரணங்கள் அனைத்தும் முத்தொள்ளாயிரம் கி.பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது என்று தெளிவிக்கின்றன.
------------------

இந்நூலின் கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் முதலியன



இந் நூலாசிரியர் பதிப்பித்தவை


This file was last updated on 20 December 2008.
Feel free to send corrections to the webmaster.