சபாபதிமுதலியார் இயற்றிய
மதுரை மாலை
maturai mAlai of
capApati mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Nalini Karthikeyan, Subramanian Karthik and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 16 Sept. 2010.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சபாபதிமுதலியார் அவர்கள் இயற்றிய
மதுரை மாலை
Source:
"மதுரை மாலை"
இது மதுரையம்பதி மகாவித்துவான்
சு. சபாபதிமுதலியார் அவர்கள் இயற்றியது.
சென்னைக் கிறித்தவகலாசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
வி.கோ. சூரியநாராயணசாஸ்திரியார், பி.ஏ.,
சென்னைப் பண்டித மித்திர யந்திரசாலையிற் பதிப்பித்தது.
1901.
ஆக்கியோன் பெயர்.
நேரிசை வெண்பா
மாமதுரை மாலை மடக்கோ டியமகமுங்
காமர் சிலேடையுங் காட்டிமுதற் - பாமருவத்
தண்டமிழா சானெஞ் சபாபதிப்பேர் வள்ளல்சவைக்
கண்டமிழ்தாத் தந்தான் கனிந்து.
வி.கோ.சூரியநாராயணசாஸ்திரியார், பி.ஏ.
பதிப்புரை
இந்நூல் செந்தமிழ்ப்பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிற்
கோயில்கொண்டருளிய சொக்கலிங்கப் பெருமாள்மீது எமது தமிழ்நூற்போதகாசிரியர்
தாம் திருக்குளந்தை நகரைவிட்டு மதுரைபோந்தவுடன் 1867-ஆம் ஆண்டு பாடியது.
இப்புலவர் பெருமான் 1837-ஆம் வருடம் சித்தாந்தரைவர் மரபிலே பிறந்து
தக்க பருவத்திலே நல்லாசிரியரை யடுத்துக் கல்விகற்று அறிவினுங் குணத்தினும்
மேம்பட்டு விளங்கி மதுரைத் துரைத்தனத்தார் வித்தியாசாலையிற் செந்தமிழ்ப் புலமை
இருபத்தீராண்டு நடாத்தி 1889-ஆம் ஆண்டு உபகாரச்சம்பளம் பெற்று முன்னையினும்
மிக்க உள்ளக்கிளர்ச்சியோடும் பற்பல மாணாக்கர்கட்கும் தமிழிலக்கண விலங்கியங்கள்
போதித்துவந்தவர். இவர் வடமொழியும் ஆங்கிலமொழியும் ஒருங்குகை வந்தவர்;
கணிதநூல்வல்ல கட்டுரையாளர்; தருக்கநூல்லவல்ல தண்டமிழ்வாணர்; அறிவுநூல்
பயின்ற அருங்கலைக் குரிசில்; நற்குணச்செல்வர். இத்தகைய புலவர்தலைமணி,
சென்ற 1898-ஆம் ஆண்டு தமது அறுபத்தோராம் வயதிலே ஆனித்திங்களில்
ஆலவாய்ப் பெருமானடிகள் திருவடிநீழலிற் கலந்தருளினார்.
யாம் இவரிடம் 1885-ஆம் வருடந்தமிழ்நூல்கள் கற்கப்புகுந்தனம். அப்போழ்தத்து
எம்முடன் படித்தோர் இருபதின்மர். அவர்களுட் சிலரிடமிருந்து இம் 'மதுரைமாலை'யின்
பிரதிகளைப்பெற்று எமது பிரதியோடு மொப்பிட்டுப் பார்த்துழிச் சில பாடபேதங்களுங்
காணப்பட்டன. அவற்றையும் ஆங்காங்குப் பகங்களினடியிற் குறித்திருக்கின்றனம்.
இவர் திருக்குளந்தையிலிருந்துழி அவ்வூர் முருகபிரான்மீது பாடிய ' திருக்குளந்தை
வடிவேலன் பிள்ளைத்தமிழ்' என்பது 1896-ஆம் வருடம் வடகரை ஜமீன்தாரராகிய
ஸ்ரீ இராமபத்திரநாயுடு அவர்கள் காருண்யோபகாரத்தால் அச்சிடப்பெற்று வெளிப்போந்தது.
இனி இப்போது அச்சிடப்படும் இந்நூலின் கண்ணே முதலைம்பது பாடல்களும்
முன்னீரடிகளும் பின்னீரடிகளுந் தனித்தனி யமகமடக்கு வாய்ந்தனவும் இறுதியைம்பது
பாடல்களும் முன்னீரடிகள் சிலேடையும் பின்னீரடிகள் யமகமடக்கும் வாய்ந்தனவுமாமாறு
காண்க. இவ்வாறு சிறிதேனும் இடர்படுதலின்றிச் சொற்பொருணயங்கள் பொதுளக்
கற்பனை செறிய யாத்தமைத்த இம்மாலையைக் கண்ணுற்று யாவருங் களிசிறந்த லொருதலை.
இதன்பினர் இவர் யமகமாச்செய்துள 'திருப்பரங்குன்றத்தந்தாதி' விரைவிற் பிரசுரித்து
வெளியிடப்படும்.
சென்னை, 20-6-1901
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி, பி.ஏ.
-----------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
மதுரை மாலை
காப்பு
விநாயகர் வணக்கம்
நேரிசை வெண்பா.
தென்மதுரைத் தேமாலை செப்பவாக் கென் றனக்கு
நன்மதுரச் சித்திபெற நல்குமே - முன்மதுவின்
கோட்டையுடைக் குஞ்சரனற் கோலமிடற் றானருளோர்
கோட்டையுடைக் குஞ்சரநற் கோ.
திருஞான சம்பந்தர் வணக்கம்
நேரிசை வெண்பா
வருமுத்தப் பந்தரிடை வந்துகர ணங்க
வருமுத்தப் பந்தர்தமை வாழ்த்தித் - தருஞான
சம்பந்த நாதன் றனியமிழ்தத் தாடவெழூஉஞ்
சம்பந்த நாதன் சரண்.
நூல்
நேரிசை வெண்பா
மாவளத்தி னாடுமூர் வாவியளி தேங்கமல
மாவளத்தினாடு மதுரையே - மேவுளப்பு
ணாறா தரித்தா ரகத்தெனையாற் றும்பரர்மே
லாறா தரித்தா ரகம். 1
மன்னாக்கு திக்கு வயக்கொடியி னீர்க்கயல்விண்
மன்னாக்கு திக்கு மதுரையே - மின்னுகழை
மானத் தவர்க்கா மனைக்கடுத்தா ரிந்திரவி
மானத் தவர்க்கா மனை. 2
மாணிக் கவிரும் வரப்பிடைமுத் தஞ்சொரிசெய்ம்
மாணிக் கவிரு மதுரையே - வேணிக்கட்
கங்கா தரனார்தங் காப்புடையார் மாலும்விதி
கங்கா தரனார் தங் காப்பு. 3
வைகைத் தமரர் மறையவர்க்கிந் தன்பாடும்
வைகைத் தமர மதுரையே - மெய்கையிலேய்
மாவளைவிற் றாராரார் வைப்பினில்வே ணிக்கடுக்கை
மாவளைவிற் றாராரார் வைப்பு. 4
மானச்சங் கூரு மடவார்கண் டத்தொலிசெய்ம்
மானச்சங் கூரு மதுரையே - பானச்சம்
பூவணத்தா னத்தன் புரம்பாதி கொள்ளுமறைப்
பூவணத்தா னத்தன் புரம். 5
மாசந் தவறா விதைக்கருமாற் றுஞ்சாறு
மாசந் தவறா மதுரையே - பேசந்தக்
கூற்றைமுடிச் சார்வான் குடிகெடுநஞ் சுண்டுபிறைக்
கூற்றைமுடிச் சார்வான் குடி. 6
வாவித் தலையார் மணிப்பவள வல்லிகந்தி
வாவித் தலையார் மதுரையே - மேவுமல
ரேடகத்தா னந்த னிடம்வலமா மெம்மிறைவ
னேடகத்தா னந்த னிடம். 7
வாங்கலைச்சங் கத்தார் மணித்தடப்பீ டத்தேய
வாங்கலைச்சங் கத்தார் மதுரையே - தீயகுறலான்
மன்ன வருக்கா மனையாம லாள்பாண்டி
மன்ன வருக்கா மனை. 8
மாகந்திக் காடு வளர்நகர்பெற் றிக்கொடிபோய்
மாகந்திக் காடு மதுரையே - வாகந்தி
யோதக் கடையாரா ரூரரெனை வெற்றபொய்யா
யோதச் சடையாரா ரூர். 9
வண்ணத்தே ரோடு வழங்குபணை மாநகர்வாய்
வண்ணத்தே ரோடு மதுரையே - நண்ணுமணிப்
பாலுளருந் தும்பையார் பற்றொளைவாய்ப் பாம்பர்முடிப்
பாலுளருந் தும்பையார் பற்று. 10
வள்ளையினம் பாகுசொரி மங்கையர்கண் காதோடி
வள்ளையினம் பாகு மதுரையே - தொள்ளையினேய்
வீற்றுக் கடம்படியான் வீடா தருள்பெருமான்
வீற்றுக் கடம்படியான் வீடு. 11
வாரிக் களிக்குமது வண்டினமார் மாமலர்ச்செய்
வாரிக் களிக்கு மதுரையே - வேரிப்பூந்
தார மலையார் தலம்பாதி யாயினர்வாழ்
தார மலையார் தலம். 12
மந்தா னிலங்குலவ மாக்குலவு நல்லாரா
மந்தா னிலங்கு மதுரையே - வந்தேநம்
போதத் திருப்பான் புரிந்தடியு றார்தநெறி
போதத் திருப்பான் புரி. 13
மாவிழவங் காட்டார் மலர்வாவி யெய்தியம்மான்
மாவிழவங் காட்டு மதுரையே - பூவிளரி
தாரக் கடுக்கையார் சாரநறை மாரிபொழி
தாரக் கடுக்கையார் சார். 14
வார்கம்பளத்தா மணிக்குலைப்புற் பாசொளியார்
வார்கம் பளத்தா மதுரையே - வீரிலெனை
யேற்றுக் கொடியான்பா டில்களைப்பாப் பூண்டருளு
மேற்றுக் கொடியான்பா டில். 15
மத்தி னளையா மருவுரவோர் நெஞ்சகங்கா
மத்தி னளைய மதுரையே - முத்திக்
கழற்றா மரையுடையான் காப்பணிநீற் றான்மேற்
கழற்றா மரையுடையான் காப்பு. 16
வானப் படியா மடங்ககழ்சூழ் கோபுரமேல்
வானப் படியா மதுரையே - மானகுளத்
தஞ்சக் கரத்தாத்தர் சார்புள்ளோர் தங்களுக்கோர்
தஞ்சக் கரத்தாத்தர் சார்பு. 17
மஞ்சந் தனமா மடவியர்ச்சேர் மைந்தர்மரு
மஞ்சந் தனமா மதுரையே - கஞ்சனரி
யங்க மலம்வருவா னார்வத்தோ டாடியென்னு
ளங்க மலம்வருவா னார்வு. 18
வாணிகள மாவூர் வளப்புலவோர் துன்றுகங்க
வாணிகள மாவூர் மதுரையே - கோணி
யரும்பா சுரமிகைத்தா ரார்வளைவார் மாணிக்
கரும்பா சுரமிகத்தா ரார்வு. 19
வைகைக் கணையா மதனிடும்பூத் துற்றெழுநீர்
வைகைக் கணையா மதுரையே-பொய்மமனத்துக்
கைவளவ னைக்கடுத்தார் காப்புறஞ்சேர் குன்றுவளர்
கைவளவ னைக்கடுத்தார் காப்பு. 20
வையம் பராவும்விழி மாலினிமுன் னோர்காக்க
வையம் பராவு மதுரையே-செய்யசடை
புல்லம் படர்வான் புரந்தரனார் போற்றவரும்
புல்லம் படர்வான் புரம். 21
மையணியா ருங்கா முறும்விழியார் வண்டலயர்
மையணியா ருங்கா மதுரையே-செய்யபிர
மாகங்கை யானம் மனையொருபால் வள்ளல்சென்னி
மாகங்கை யானம் மனை. 22
மால்வளவ னன்றாழ் மடுவிழநம் மானாடு
மால்வளவ னன்றாழ் மதுரையே-பாலளவு
மோதநஞ்ச மைத்திட்டா னூர்குறட்கா வொண்களத்தி
னோதநஞ்ச மைத்திட்டா னூர். 23
மானமணங் கோட்டுபிறை வார்குழல்வேண் டக்காழி
மானமணங் கோட்டு மதுரையே-யீனமல
மந்தமரு கத்த னகத்துயிர்கூட் டாரருளா
னந்தமரு கத்த னகம். 24
மல்லிகைகு நந்த மதுமழைசோர் காவின்மைந்தர்
மல்லிகைக்கு நந்த மதுரையே-புல்லுமலம்
பாற்றமா வப்பர்பதி கம்புனைவர் பற்றுமுடிப்
பாற்றமா வப்பர் பதி. 25
வைகையினே டேறு மலரிடைக்கா ழிக்கோன்முன்
வைகையினே டேறு மதுரையே-யுய்கையரு
ணம்பரம ராடனகர் நாடுமறை காணரியார்
நம்பரம ராட னகர். 26
மாதவிந யத்தார் மலர்ப்பொழிலா டுங்கமல
மா கவிந யத்தார் மதுரையே-பூதகண
வந்தாங்கத் துள்ளா னகமிரட்ட வாடுவனெ
னந்தரங்கத் துள்ளா னகம்.. 27
வந்தனம்பா லிக்கிரச மன்னுமற வோர்க்கூட்டி
வந்தனம்பா லிக்கு மதுரையே - சந்த
வரவவிடை யாள்வா ரகந்தத்த ராழி
யரவவிடை யாள்வா ரகம். 28
வாசவனச் சந்தீர்க்கும் வைகையினா டிப்பழிபோய்
வாசவனச் சந்தீர் மதுரையே-நேசமல
ரெய்துவந்திக் காள னிடமடி த்தா னன்பினடி
யெய்துவந்திக் காள னிடம். 29
மாணிக்க வரக்கூர் மதிமலியென் றெம்மான்முன்
மாணிக்க வாக்கூர் மதுரையே-சேணிற்கும்
புல்லத் திருப்பான் புரவுடையாள் புல்லாடி
புல்லத் திருப்பான் புரம். 30
வானவிலை வாங்கும் வரிநுதலா ரோர்மொழிக்கே
வானவிலை வாங்கு மதுரையே-யீனமற
வென்பக்கு வந்தா னிடம்படுசெங் கட்கடையா
னென்பக்கு வந்தா னிடம். 31
மஞ்சரங்க மாவேய் மணிக்கொடிசேர் மன்றுதொறு
மஞ்சரங்க மாவேய் மதுரையே-விஞ்சுசடா
பாரத்து வாசத்தார் பற்றுடையார் வீடுபெறும்
பாரத்து வாசத்தார் பற்று. 32
வாரிசங்க மங்கூர் மலரிதழ்வா விக்குளெழு
வாரிசங்க மங்கூர் மதுரையே-பேரிசங்கா
நோரிப் பரியைவிற்றா னூர்ந்துவளை பூட்டினன்மு
னோரிப் பரியைவிற்றா னூர். 33
வாரங் குசத்தார் மதகரியூர் மைந்தர்மட
வாரங் குசத்தார் மதுரையே-சாரங்கச்
செவ்வாக் கமருமத்தன் றேமலரா னையன்மறைச்
செவ்வாக் கமருமத்தன் றேம். 34
மாவால வாய்ப்பேர் மணிபொறுக்கிப் பூம்பயிர்செய்ம்
மாவால வாய்ப்பேர் மதுரையே-மேவாலம்
போதகங்காட் டத்தன் புரிச்சுமடு கொள்ளுமுடிப்
போதகங்காட் டத்தன் புரி. 35
மாசங் கராவாழி யென்றடியர் மாசொருவ
மாசங் கராவாழ் மதுரையே-நீசநெறி
வேய்வனத்தி யாகத்தான் விட்டவெழு மாவுரிதோல்
வேய்வனத்தி யாகத்தான் வீடு. 36
வண்ணமணத் தாருவடி மைந்தரைமா னாரியக்க
வண்ணமணத் தாரு மதுரையே-நண்ணவருட்
போதந் தரிப்பான் புலமடங்கப் பாசம்வெளிப்
போதந் தரிப்பான் புலம். 37
மாவனனேர் காட்டுமலிதலம்வாய் சைவமென
மாவனனேர் காட்டு மதுரையே-மேவும்
பரதத்து வந்தான் பதிதானென் றேயாள்
பரதத்து வந்தான் பதி. 38
மண்டவமோங் கற்கேய் மணிக்கோயிற் சூளிகையார்
மண்டவமோங் கற்கேய் மதுரையே-யெண்டவராய்
மாவா ரணத்துரியான் வைப்பரிய வெண்கோட்டு
மாவா ரணத்துரியான் வைப்பு. 39
மாவா ரணிய மலர்செறிதெய் வக்கடம்ப
மாவா ரணிய மதுரையே-கோவாரு
மோர்தருவா னத்தனம ரூரனத்த னுய்தரவுள்
ளோர் தருவா னத்தனமரூர். 40
வானவரைத் தாக்குமெயில் வண்பொறியு மோடியெழு
வானவரைத் தாக்கு மதுரையே-கானார்
பணியம் பணியான் பதிதரக்கா லோடிப்
பணியம் பணியான் பதி. 41
மங்கலமாக் கூடல்புரி வாழ்க்கையரோ வாதுபுரி
மங்கலமாக் கூடன் மதுரையே-கங்கை
யுருக்குதலை யாடகத்தா னூர்தருவே ணிச்சீ
ருருக்குதலை யாடகத்தா னூர். 42
வல்லிக் கொடிக்குமிசை மந்திகடா விச்சுவையேய்
வல்லிக் கொடிக்கு மதுரையே-புல்ல
விலங்கையிலை யத்த னிடக்கையினான் வாழு
மிலங்கையிலை யுத்த னிடம். 43
மாறனுக்குக் குன்றா வளத்தினவா மோர்பாற்பொன்
மாறனுக்குக் குன்றா மதுரையே - யேறிவரப்
பொற்றவரங் கத்தான் புலமெனத்தாங் கையன்வரைப்
பொற்றவரங் கத்தான் புலம். 44
மங்களகாத் தார மணிநகரெம் மான்றிருநா
மங்களகாத் தார மதுரையே - பொங்கத்
தருமவிடைப் பாலார் தலங்குறுமா லோடோர்
தருமவிடைப் பாலார் தலம். 45
வையத் திறைகொள் வரச் செழியன் மன்னவர்தம்
வையத் திறைகொண் மதுரையே- வெய்யகுறை
நேரத் திரத்தா நிலையடியார்க் கீந்தருண்மா
னேரத் திரத்தா னிலை, 46
மாடகல ருந்தா பதநிலைவாய் மன்னுகத்தர்
மாசகல ருந்தா மதுரையே - தேசவிரு
மிட்டவங்க லிங்கத்தா ரில்குணத்தோ ரிக்குழுவா
லிட்டவங்க லிங்கத்தாரில் 47
வாரங் கவிரும்வட்கு வாய்மலர்ப்பொ னன்னமட
வாரங் கவிரு மதுரையே -நேர்பிறைச்சீர்
குன்றமலை யானார் குடிவளர்மா ணிக்கதனக்
குன்றமலை யானார் குடி. 48
வாசவலங் காரமுலை மங்கையர்கொங் கைக்குடைவேள்
வாசவலங்கார மதுரையே - வீசமர்நே
ரேந்தலத்த னாடு மிடங்கமுறாச் சோதிலிங்க
வேந்தலத்தா னாடுமிடம் 49
வாரச்சா லிக்காடு மாவாசங் காலோடி
வாரச்சா லிக்கா மதுரையே - சீரச்சார்
தாரகமா னார்தந் தலங்கிடைப்பூந் தையல்பங்கார்
தாரகமா னார்தந் தலம். 50
சிலேடை.
பேசுவிழ வும்புதுப்பூப் பெய்தருவந் தாமரையும்
வாசவனங் கண்ணேர் மதுரையே - நேசமுட
னங்கிக் கணனா ளலர்விடச்சா டுங்குளத்தே
யங்கிக் கணனா ளகம். 51
தெள்ளுகழ கங்குறளுஞ் செவ்வழியுஞ் சேணகரும்
வள்ளுவரி யம்பார் மதுரையே - விள்ளடியர்க்
கங்கங் கடுப்பான்முன் னாரிசைப்பா ணப்பகையி
ணங்கங் கடுப்பா னகம். 52
காவலருஞ் சோலைக் கருங்குயிலும் யோகினரு
மாவிரதங் கொள்ளு மதுரையே - மேவுகற்ப
மாநீற்றி னானிறைவன் மாயனயன் போற்றிடுபெம்
மானீற்றி னானிறைவன் வைப்பு. 53
மன்னுமறை யோர்தனதன் வட்குகுடி மாதர்குயம்
வன்னிகரஞ் சேரு மதுரையே - முன்னுகரு
மாநாக மெய்திடத்தார் வன்கணையுற் றார்பாதி
மானாக மெய்திடத்தார் வாழ்வு. 54
துன்றுபுன லும்புறமுந் தோகையர்தங் கூர்விழியு
மன்றவரம் பைத்தா மதுரையே - யொன்றா
வரைவிலைக்காட் டத்தா மணிமுடியிற் கொள்ளா
வரைவிலைக்காட் டத்தார் மனை. 55
சோலையுலாந் தென்றலுமிற் றுன்றுகொடியுஞ்சுரும்பு
மாலையவாந் தெய்வ மதுரையே-சீலமுறு
மாவன்ப ரைக்களிப்பான் மன்னுவிப்பான் பாகமறை
மாவன்ப ரைக்களிப்பான் வாழ்வு. 56
சாதரங்கக் குன்றுந் தடமறுகும்பேர்யாறு
மாதரங்கஞ்சூழு மதுரையே - காதரமுட்
டண்டலைமா லைப்பூணார் தம்மிடத்தார் மாலயனார்
தண்டலைமா லைப்பூணார் சார்பு. 57
சீர்க்கமறை யம்பதிநற் செல்வத் திருவுடையார்
மார்க்கமங்க வந்தூர் மதுரையே - பார்க்குணவ
மானவடி வைத்தளிப்பார் மாதவர்க டம்மையருண்
மானவடி வைத்தளிப்பார் வாழ்வு. 58
சந்தத் தனிமறையுந் தாணுபற்றுந் தாழ்விசும்பும்
வந்தித் தலைச்சார் மதுரையே - நக்கத்
திரியம் பகனாமன் செய்தொழின்மூன் றாக்குந்*
திரியம் பகனாமன் சேர்வு.
* "தெள்ளுபுனற்சூடும்" என்பதூஉம் பாடம். 59
கோபால ரும்பூங் குளனுமதிக் கோமானு
மாபால னஞ்செய்ம் மதுரையே - காபாலன்
மெய்க்காட்டிட் டானிருக்கு மேவரியான் காலானம்
மெய்க்காட்டிட் டானிருக்கும் வீடு. 60
அண்டரும்பூஞ் செய்யுமணி யார்நகரெம் மானரவு
மண்டலமா ருஞ்சீர் மதுரையே - பண்டுவரு
மம்புலிக்கோ மானக னாருமொளி பம்புமுடி
மம்புலிக்கோ டீரகைம். 61
ஓது மடமு முயர்விழவும் வீரர்கையு
மாதவரை யாரு மதுரையே - பூத
வடியவரைக் காப்போ னகந்தந்தான் போற்று
மடியவரைக் காப்போ னகம். 62
ஏரணவு மைந்தரும்போ ரெய்திடமுஞ் சூழகமும்
வாரணமே யுஞ்சீர் மதுரையே - யாரணனற்
றாமோ தரனார் தபோதனர்போற் றிப்புகழைத்
தாமோ தரனார் தலம். 63
பொய்கைப் பொழில்விட் புனல்பொலிநற் பூதரங்கள்
வைகைக் குறவா மதுரையே - செய்யபசும்
பொன்னா டுடையான் புரிந்திலர்வோன் பூம்பொருனைப்
பொன்னா டுடையான் புரி. 64
மோனப் பெரியருஞ்செய்ம் முத்து முதுக்குடியு
மானத் துறவேய் மதுரையே - வானகங்கை
யோங்காரத் தத்தனா ரோதுமறைக் காதியதா
மோங்காரத் தத்தனா ரூர். 65
விட்டாவு குன்றமன்ற மெல்லிழையார் தம்முலைசூழ்
வட்டார மாகு மதுரையே - யொட்டாருட்
சம்பரனஞ் சம்பரித்தான் றன்னையெரித் தானந்தஞ்
சம்பரனஞ் சம்பரித்தான் சார்பு. 66
மின்னவிர்சேற் கண்ணுமைவிண் மேதகுசங் கச்சீர்ப்பா
மன்னவா தஞ்சேர் மதுரையே - நன்னரணி
நாகப்பாம் பார்மே னகருங்கா லுண்ணுவிட
நாகப்பாம் பார்மே னகர். 67
தேனனையா ரும்மாடற் செவ்வியருஞ் சேணகரு
மானதனை யேதேர் மதுரையே - வானவழ
லஞ்செவியா னம்மா னகங்கையான் றேடுடைய
வஞ்செவியா னம்மா னகம். 68
கோடகயா ழுங்குளணுங் கோமறுகு மாமணியார்
மாடகமே யுஞ்சீர் மதுரையே - நாடுகறைக்
கண்டனங்க னைக்கடுத்தான் காப்பாவன் பூங்கணையைக்
கண்டனங்க னைக்கடுத்தான் காப்பு. 69
ஓதங்க மன்னருமுள் ளூரெயிலும் பேரரங்கு
மாதங்க நேரு மதுரையே - மோதும்
வனத்தா மரையுரியான் வாழ்த்துமன்ப ருள்ள
வனத்தா மரையுரியான் வாழ்வு. 70
வெள்ளனமு மீக்குடியும் வின்மகர குண்டலமும்
வள்ளலையுற் றாருமதுரையே - யெள்ளுமடந்
தங்குளத்திற் கண்ணார் தடமதில்கண் மூன்றெரித்த
தங்குளத்திற் கண்ணார் தலம். 71
மேவலர்க்கெ யிற்பொறிசார் *மெல்லிழைமே லத்தரன்பு
மாவிசைக்க லாடமதுரையே - பாவொளியா
ரஞ்சக் கரத்தானல் லஞ்சக்க ரத்தான்போற்
றஞ்சக் கரத்தா னகம்.
* "மேவலர்க்குக் காப்பீழ" என்பதூஉம் பாடம். 72
கானருவி யிங்கரும்பின் கண்ணுமலைச் சாரலுமேல்
வானார மோடு மதுரையே - மானா
கட்டோட்டுக் கஞ்சத்தான் கண்ணா தெனக்கருள்காற்
கட்டோட்டுக் கஞ்சத்தான் காப்பு. 73
வீட்டயலிற் சீர்நதியில் வீரருறு போர்விருப்பில்
வாட்டங்கங் கையார் மதுரையே - கோட்டுமுடி
போனகங்கைக் கொண்டார்ப் புரிகடுக்கை சூடிவிட
போனகங்கைக் கொண்டார் புரி. 74
பூவையர்கூத் துத்தேர்காப் போதத்தோர் விண்ணமரர்
மாவசித்த லைச்சார் மதுரையே - மேலொளிவி
மாநகத்தன் மானகத்தன் மாறிலங்கை மன்னனைக்காய்
மாநகத்தன் மானகத்தன் வாழ்வு. 75
வேரிச்சந் தாறுநெய்தல் வீறுரு மாலைகளும்
வாரிக் கடுக்கு மதுரையே - தேரினழன்
மெய்யா னினைத்தரித்தான் வீடுறவே ளைக்கொடியா
மெய்யா னினைத்தரித்தான் வீடு. 76
வானங் குடியுமிலு மாதர்நடை யும்புறனு
மாநந் தனமார் மதுரையே - யீனர்மன
மாக வணங்குரியா ரானனமோ ரைந்தரிட*
னாக வணங்குரியா ரார்வு.
*"மோரைந்தர்பங்கின்" என்பதூஉம் பாடம். 77
தொண்டர்கையு மாதர் தொகையுமவர் தூமுகமும்+
வண்டலையி லாரு மதுரையே - மண்டுசுவைச்
சாமவெங்கா னத்தினான் சார்த்தூலத் தோலனெலாஞ்
சாமவெங்கா னத்தினான் சார்.
+ "ஒண்டொடியா ருந்தே னூறுபுனலுங் காமுகிலும்
வண்டலையி லாடு மதுரையே" என்பதூஉம் பாடம். 78
கொல்லையும்பூம் பந்தரும்பாண் கோதையர்தங் கூட்டமுமா
வல்லியங்க ளாரு மதுரையே - மெல்லி
யரவப் பணியானொன் றாவதிலென் பார்ச்சே
ரரவப் பணியா னகம். 79
தேசலஞ்சார் செய்யகழி செந்நெறிச்சை வச்சீரம்
மாசலஞ்ச லஞ்சார் மதுரையே - மூசொளியா
னாதவிந்து வானார் நதிச்சடையி லேதரித்தார்
நாதவிந்து வானார் நகர். 80
தாக்குமருத் துப்பணிக்குஞ் சார்நகர்க்கு முத்தர்கட்கு
மாக்கலைமா னண்ணு மதுரையே - யாக்கவரை
வண்ணவளை விற்றார் மணித்தோளி னார்பலசீர்
வண்ணவளை விற்றார் மனை. 81
பாகங்கரியும் பரவெயிலுங் சூழிடமு
மாகந் தரிக்கு மதுரையே - தோகை
யகத்த னகத்த னடிபோற் றடிய
ரகத்த னகத்த னகம். 82
துன்னச் சமண்குழுவுஞ் சொன்மறையுந் தொன்னகரு
மன்னச்சந் தத்தேய் மதுரையே - பன்னுங்
கடுக்கையின மாலைக் கலங்கலெனத் தேற்றுங்
கடுக்கையின மாலையான் காப்பு. 83
கன்றுநறை யும்பொழிலுங் காலுமொளி யின்னிரையு
மன்றவள மாரு மதுரையே - துன்றவியா
மாவேற்று வாகனனார் வைப்பொழிய வேயறுத்தான்
மாவேற்று வாகனனார் வைப்பு. 84
அண்டருங்கீழ் நாகருநீ ராங்கமலப் பூங்காடு
மண்டலத்தி னாடு மதுரையே - மிண்டுநஞ்சின்
மான்றோ லிடுவான் மனையயன்மா லைக்காய்மன்*
மான்றோ லிடுவான் மனை.
* "மனையயனை மாலினையாள்" என்பதூஉம் பாடம். 85
மொய்யம் பொலிநகரும் வேந்தர்குழா மூரிமதன்
வையம் பணியேய் மதுரையே - வெய்யவிட
மாவரவ கங்கணத்தன் மாணிக்க வாசகற்கோர்
மாவரவ கங்கணத்தன வாழ்வு. 86
வாணிக் கழகமுமெம் மான்பரவும் வண்ணமுத்து
மாணிக் களிக்கு மதுரையே - கோணுமன
மானமனைக் கொன்றா னகத்துறுபா லர்த்தெறுமுன்
னானமனைக் கொன்றா னகம். 87
பூமணத்த தாமரையும் பொய்கையும்பைம் பொன்னிலமு
மாமணத்த வாகு மதுரையே - சீர்மணக்கும்
வந்தியையா ளத்தன் மணிமுடிமட் கூடைகொள
வந்தியையா ளத்தன் மனை. 88
அன்போது பக்குவரு மார்தடமு மூர்வலமு
மன்போ தகஞ்சேர் மதுரையே - முன்போது
மாதவனஞ் சத்தினான் வாழ்த்திடவுட் கொண்டபிர
மாதவனஞ் சத்தினான் வாழ்வு. 89
செய்யபொழி லும்மடவார் செங்கணுமிக் கூடினரு
மையலையார் நந்த மதுரையே - மொய்கிரண
மன்னாக வில்லினன்சூழ் மன்னாக வில்லினன்வாழ்
மன்னாக வில்லினன்மேல் வைப்பு. 90
போதத் துயர்கழகம் பொன்னனையாஅள் பொன்மடவார்
வாதத் திடையா மதுரையே - மாதர்குய
மாய வலஞ்சுழியா னாரவருள் செய்குவன்மே
லாய வலஞ்சுழியா னார்வு. 91
மானக் கொடியுமட வார்முகமும் வண்ணமுத்தும்
வானத்த வாந்தென் மதுரையே - தானங்கி
யானவனப் பன்பே ரணிகயிலை யென்னவரு
மானவனப் பன்பே ரகம். 92
பன்னுதமி ழுந்தவமும் பாவையர்கட் கண்மலரு
மன்னவை யிலாகு மதுரையே - துன்னுறுநோக்
கந்தத் திருப்பா னரியயனே னோரையுஞ்சுட்
டந்தத் திருப்பா னகம் 93
தண்டாத வள்ளல்களுஞ் சார்மறுகுஞ் சாலிகளும்
வண்டான் மாறா மதுரையே- தொண்டினுழ
வாரப் பணிவிடையான் மாதவர்போற் றும்பரன்சீர்
வார்ப் பணிவிடையான் வாழ்வு. 94
தூய்மையினார் வண்குடியுஞ் சூழெயிலு மாதர்கணும்
வாய்மையினார் நந்த மதுரையே -யாய்களமா
மாவிந்த நஞ்*சமைப்பான் மன்னிசைப்பா ணர்க்குமுடி
மாவிந்த நஞ்*சமைப்பான் வாழ்வு.
*சார்ந்தான். 95
உய்கைக் கமிழ்துமுடி யொண்மறையும் விண்முழுதும்
வைகைக் கமல மதுரையே - பொய்கடுக்கும்
பத்தரைக்காக் குங்கொடியான் பற்றுகையான் வென்று திக்கின்
பத்தரைக்காக் குங்கொடியான் பற்று. 96
நாரம் பொலிதடமு நற்றவருஞ் செய்களும்பூ
வாரம் பினையார் மதுரையே - நேர
வரிவையம்பா கத்தா னடற்புரமுன் காயு
மரிவையம்பா கத்தா னகம். 97
தந்திரயோ கர்க்கொழிவுஞ் சார்நகரும் விண்ணகமும்
மந்திரமுன் னாறு மதுரையே - முந்துமதன்
மாணிக்கம் விற்றான் வளைப்பமுடித் தோன்முடிக்கு
மாணிக்கம் விற்றான் மனை. 98
பாவையர்நோக் குந்தா பதருமளிப் பெம்மானும்
மாளரநே ருஞ்சீர் மதுரையே - மேவுறுபொன்*
வண்ணத்தார் மன்றன் மலர்ப்புயன்மா வெள்ளிபுனை
வண்ணத்தார் மன்றன் மனை.
* மேவிதழி. 99
கட்டிக் கரும்பனையார் கால்பொதி பாலிப்பர்தன்ம
வட்டித் தனங்கூர் மதுரையே - கொட்டுபொடி
யங்கதத்தா னந்தி யவிர்சடையான் கங்கணமா
வங்கதத்தா னந்தி யகம். 100
மதுரை மாலை முற்றிற்று.
-----
திருச்சிற்றம்பலம்
செய்யுண்முதற்குறிப்பகராதி.
அண்டருங்கீழ் 85
அண்டரும்பூஞ் 61
அன்போது 89
உய்கைக் 96
ஏரணவு 63
ஓதங்க 70
ஓது 62
கட்டிக் 100
கன்றுநறை 84
காவலருஞ் 53
கானருவி 73
கொல்லையும்பூம் 79
கோடகயா 69
கோபால 60
சந்தத் 59
சாதரங்கக் 57
சீர்க்கமறை 58
செய்யபொழி 90
சோலையுலாஞ் 56
தண்டாத 94
தந்திரயோ 98
தாக்குமருத் 81
துன்றுபுன 55
துன்னச் 83
தூய்மையினார் 95
தெள்ளுகழ 52
தென்மதுரைத் 5
தேசலஞ்சார் 80
தேனனையா 68
தொண்டர்கையு 77
நாரம் 97
பன்னுதமி 93
பாகங் 82
பாவையர்நோ 99
பூமணத்த 88
பூவையர்கூத் 75
பேசுவிழ 51
பொய்கைப் 64
போதத் 91
மங்கலமாந் 42
மங்களகாத் 45
மஞ்சந் 18
மஞ்சரங்க 32
மண்டவமோங் 39
மத்தி 16
மந்தா 13
மல்லிகைக்கு 25
மன்னாக்கு 2
மன்னுமறை 54
மாகந்திக் 9
மாசகல 47
மாசங் 36
மாசந் 6
மாணிக்கவா 30
மாணிக்கவி 3
மாதவிரு 27
மால்வளவ 23
மாவளத்தி 1
மாவன்னேர் 38
மாவார 40
மாவால 35
மாவிழவங் 14
மாறனுக்குக் 44
மானக் 92
மானச்சங் 5
மானமணங் 24
மின்னவிர்சேர் 67
மேலவர்க்கெ 72
மையணியா 22
மோய்யம் 86
மோனப் 65
வண்ணத்தே 10
வண்ணமணத் 37
வந்தனம்பா 28
வருமுத்தப் 5
வல்லிக் 43
வள்ளையினம் 11
வாங்கலைச்சங் 8
வாசவலங் 49
வாசவனச் 29
வாணிகள 19
வாணிக் 87
வாரங்க 48
வாரங்கு 34
வாரச்சா 50
வாரிக் 12
வாரிசங்க 33
வார்கம் 15
வாவித் 7
வானங் 77
வானப் 17
வானவரை 41
வானவிலை 31
விட்டாவு 66
வீட்டயலிற் 74
வெள்ளனமு 71
வேரிச்சந் 76
வைகைக் 20
வைகைத் 4
வைகையினே 26
வையத் 46
வையம் 21
----------
This file was last revised on 13 Nov. 2021.
Feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).