பேரூர் பச்சைநாயகியம்மை ஆசிரியவிருத்தம் சீர்கொண்ட வதனமும் கார்கொண்ட முகிலெனத் திரள்கொண்ட பைங்கூந்தலுஞ் சிலைகொண்ட கருவமும் விலைகொண்ட புருவமுஞ் செங்கையிற் கொண்டகிளியும் ஏர்கொண்ட பண்மொழியுங் கூர்கொண்ட வேல்விழியும் எழில்கொண்ட நுண்பணிகளும் இடைகொண்ட கலையுமவ் விடைகொண்ட மேகலையும் ஏழ்கொண்ட புவிதாவியே தார்கொண்ட மணிமுடியும் நார்கொண்ட வடியுஞ் சயங்கொண்ட மால்முதலினோர் தலைகொண்ட தேகமோர் நிலைகொண்ட பாகமும் தனங்கொண்ட திருமார்பமும் பார்கொண்ட வடியரொடு நேர்கொண்டு நீசேவை பாலிப்ப தெந்தநாளோ பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சை மரகதவல்லியே | 1 |
கூடவோ நின்னடியர் குழுவுண்டு அவர் வயிற்கூடியன் பளாவிக் கொண்டுநன் காராய்ச்சி செய்யவோ நூலுண்டு கோதெலாந் தீரநித்தம் ஆடவோ காஞ்சிநன் னதியுண்டு நின்னடி யருச்சிக்கவோ பச்சிலை யங்கங்கு முண்டுநாடொறுமுச் சரிக்கவோ வைந்தெழுத் துண்டுதலையிற் சூடவோநின் னடித்தா மரைக ளுண்டுமெய் தோமறவணிந்து கொளவோ சுண்ண வெண்ணீற்றொடு கண்மணியுண்டு நின்கோவில் சூழவோ கால்களுண்டு பாடவோ நாவுண்டு கவலையுற் றடியனேன் பாழுக்கிறைத் தல்நன்றோ பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே | 2 |
அணிகிற் றிலேன்மெயிற் கவசமாய் நீற்றையே யாய்ந்திற்றிலேன் வேதநூல் அடக்கிற்றி லேன்பொறி புலன்கள் காஞ்சீநதியி லாடிற்றிலேன் சீற்றமோ தணிகிற்றி லேன்காம மாதிமேற் கொண்டொன்று தருகிற்றிலே னெவர்க்கும் தாங்கிற் றிலேன்சைவ தவவேட மாதிய தரிக்கிற்றிலேன் மெஞானம் துணிகிற்றி லேன்பரம் பொருளாகு நீயென்று துய்த்திற்றிலே னலின்பம் தூவிற்றி லேன்மலர்கள் நாவிற் பராவியே சொல்கிற்றி லேன்நினாமம் பணிகிற்றி லேநின்பதத் தைநான் கிற்பனோ பரமசுக வாழ்வு பெறவே பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே . | 3 |
வேதங்க ளோதிலென் னாகம முணர்ந்துமென் மேனி சருகா யுலர்ந்து வெவ்விரத மாற்றிலென் பன்னதிக ளாடிலென் மென்மெல நடந்து சென்று காதங்கள் பலவானபூவலஞ் செய்துமென் கந்தமூ லங்கள் தின்று காலங் கழிக்கிலென் முழைபுக்க மூடிகங் கடுப்ப வேகுகை புக்கிலென் பூதங்கள் பணிதம் பனாதிகை வந்துமென் பூவுலகி லட்ட சித்தி பூரண மதாயிலென் அன்னைநின் னருளினாற் போதமுற் றுன்னை யேத்திப் பாதங்கள் வந்தனைசெயாராயின் முத்தியம் பதிவயிற் குறுக லெளிதோ பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே. | 4 |
ஆவிநீ யாவிகட் கன்புநீ தென்புநீ யானந்த மாகி யுறையு மம்மைநீ யப்பனீ துன்பனீ யின்பநீ யாதியின் பாதி யாகுந் தேவநீ மணியுநீ யொளியுநீ வெளியுநீ தெள்ள முதமின் சுவையுநீ தெருளுநீ மருளுநீ யருளுநீ பொருளுநீ சித்தாந்த முத்தி முதனீ பூவினீள் வாசநீ புனலுநீ கனலுனீ புவியுநீ யெவையு நீகாண் புன்மையேன் வன்மையே னன்மையே யின்மையேன் புல்ல னேன்கல் லாப்பெரும் பாவிநா னுன்றன்மை யித்தன்மை யென்னவே பாவித் திறைஞ்ச வசமோ பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே | 5 |
ஞாலமீ தினினுள்ள மானுடச்சிறுவர்களை நற்றாயர்செந் நெறிக்கண் ணாட்டி னாலும்மவர்க ளோட்டந்து மண்ணுகர நாடியே செல்லுமாறு போலவே நாயினே னுண்ணின் றுநீயருட் போதமொரு சிறிதுதவியே புத்தியி லுணர்த்துகினு மதையொருவி முன்புபோற் புன்மையே செய்துழலுவேன் ஏலநா மிவனைவிட லாமென நினைந்துநீ என்னைவிடி லுன்னின்மிக்கார் இன்மையான் மென்மையேன் றன்மையென் னாகுமினி யேவர்துணை யாவரந்தோ பாலனா னன்னைநீ யாதலான் மாறாத பட்சம்வைத் தருள்செய்குவாய் பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே. | 6 |
வள்ளியாம் பெயர்கொள் குறத்திக்கு வாய்த்ததொரு மாமி சிவகாமி செம்பொன் மாடத்தி மேடத்தி மலையத்தி வாணத்தி பாணத்தியோ டெள்ளரும் வேதப்ப றைச்சியம் பலவச்சி யேகச்சி வேகச்சிசிற் றிடைச்சி கைக்கொளுமம் படைச்சியென் றிவ்வுலக மேத்திப் பணிந்து தொழவு முள்ளபடிவள்ளலோ டள்ளிருட் புரைவேட வுருவோடு திரிதந்துமிவ் வுலகிலுள்ள இழிகுலத் துருவெலாம் பெற்றுநின் னுளத்தினிடை யமைய விலையோ பள்ளியாய்ப் பண்ணையிடை நென்னாற்று நட்டிடும் பரிசென்கொல் பகறி யன்னாய் பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே. | 7 |
நிலமைபெறு காலவன் பட்டிமுனி யாதியோர் நிருத்தநேர் கண்டு தொழலால் நீசனாய்த் திரிசுமதி யாதியோற் பவமெலாம் நீங்கி யுயர்கதி சேறலால் குலசேகரச் சேர னாதியோர் தாங்கரிய கொடிய பிணிநீங் கியுறலால் குரக்கு முகமாற்றியும் அரக்கவுரு மாற்றியும் கோதற்ற வரமருள் கையான் மலரகித மாக்கவும் பலபிணிக ணீக்கவும் வரமுத வியுயிர் காக்கவும் வஞ்சினம் போக்கவும் நெஞ்சிடை நினைக்கிலிம் மானில வரைப்பதனிலே பலதலமு மித்தலத் தொருதிலமு மொப்பெனப் பகரவும் படுமே கொலாம் பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே. | 8 |
சுட்டியே காட்டுதற் கரியபர சிவமருள் சுரக்கு நற்கொடி யாவதுஞ் சுவன்மீதி லேறுவது மானான தன்மையால் சுடர்மேனி மீது கன்றுக் குட்டியே றிடுகுளம் பொடுகொம்பின் வடுவினாற் கோதற்ற திருவெண்ணீறு கோமயத்தா லைந்தும் ஆடலாற் தேவரது கோப்பூசை நேசமுறலாற் கட்டியே தேனே கரும்பே தெளமுதேயென் கண்ணே கணுக்குண் மணியே கற்பினா லொப்பற்ற நீவேத நூற்படி கணவன்மகிழ் பொருண் மகிழ்ந்து பட்டியே நின்மனையும் ஊருமாய்க் கொண்டனைகொல் பட்டீசர்தந் துணைவியே பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே | 9 |
நேசத்தொ டெண்ணான்கு பேரறமு மிருநாழி நெற்கொண்டு செய்தருளுநீ நெஞ்சிலுனை யுணராது சிறிதே நினைக்குமென் நினைவு பெரிதாக்க லரிதோ காசற்ற காழிமா முகிலையுண் பாலினாற் கவிதைமழை பொழிவித்தநீ கல்லாத வென்னைக் கடைக்கணித் துத்தமிழ்க் கவிதை சொல்வித்த லரிதோ மாசற்றவடியவர் பிறப்பொடு மிறப்பையு மாற்றி யொருவர்க் காயமா வாசியிடை மதிதந்து விருள்போக்கு நீயென் மனத்திடைக்குடி கொண்டிடும் பாசக்குழா மெலாம் நாசப்படும் பரிசு பண்ணுவதுனக் கருமையோ பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சை மரகத வல்லியே. | 10 |