வீரபத்திரக் கவிராயரவர்கள் இயற்றிய
சிவசுப்பிரமணியக்கடவுள் "குறவஞ்சி"
kuravanjci on civacupramaNiyar of kunRAkkuTi
by vIrapatrak kavirAyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S Elango, V. Devarajan, S. Karthikeyan, Nalini Karthikeyan,
R. Navaneethakrishnan, V. Ramasami and R. Rajasankar.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வீரபத்திரக் கவிராயரவர்கள்
குன்றாக்குடி சிவசுப்பிரமணியக்கடவுள்மேல்
பாடிய "குறவஞ்சி"
கணபதி துணை
Warning:
* words marked with asterisk in this etext are best guesses of the source. Quality of the image used as reference is so poor that accuracy of the word
cannot be ensured.
Source:
குன்றாக்குடியிலெழுந்தருளியிருக்கும்
சிவசுப்பிரமணியக்கடவுள் "குறவஞ்சி"
இது புகழேந்தி குலத்தில் அவதரித்த
குன்றாக்குடித் திருவண்ணாமலை யாதீனம்
மகாவித்வான் வாணிதாச வீரபத்திரக் கவிராயரவர்களால்
இயற்றப்பெற்று
மேற்படியார் பௌத்திரர் வீரபத்திரக் கவிராயரால்
கும்பகோணம் ஸ்ரீ ஹயவதன விலாச பிரஸில்
*1914 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது.
------------
உ
கடவுள் துணை
நூலாசிரியர் சரித்திரச் சுருக்கம்
பாண்டியதேசத்திலே இராமநாதபுரம் சமஸ்தானம் அபிராமமென்னு நகரிலே புகழேந்திப்புலவர் மரபில் வேளாளர் குலத்திலே சுமார் நூற்றறுபது வருடங்கட்கு முன்னே அதிதீவிர புத்திசாதுரியமுள்ளவரும் ஏகசந்தைக்கிராகியுங் கணக்கில் மிக நிபுணரும் பற்பல கிராமக் கணக்கர்களுக்குந் தலைமையுற்றவரும் ஓர் பெரிய அதிகாரிமுன் இவர் அந்தச் சித்ரகுப்தனே யாகுமென யாவரும் அதிசயிக்கும்படி யொரு வெள்ளேட்டைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டு பற்பல கிராம கணக்கைக் கொஞ்சமுந் தவறின்றி வாசித்துக் கீர்த்தி பெற்றவருமாகிய அங்கப்ப பிள்ளையென்பவ ரொருவரிருந்தார். அவர் முத்திருளாயியென்னுமோர் கன்னிகையை மணம் புரிந்து முறையேயில்லற தருமத்தை நடாத்தி இவ்விருவர்செய்யும் பூர்வபுண்ணியமே யோருருக் கொண்டுவந்ததன்ன புகழேந்திகுல தீபம் போலோர் மகவைப் பயந்து அம்மகவுக்கு வீரபத்திரனென்ன நாமகரணந்தரித்து ஐந்தாவதாண்டில் வித்யாப்பியாசஞ் செய்விக்க ஓதியுணர்ந்த தன் புத்ரனுக்குப் பிதா தம் உத்யோகத்துக்குத்தக்க வழிகளைக் கற்பிக்கவே யவைகளைக் கவனியாது பரம்பரையான வித்வத் தொழிலிலேயே தன்மனம் ஊக்கமாக இருப்பதையு நிகண்டுமுதலிய இலக்கியங்களைக் கற்பதையுங் கவிபாடுந் திறமையையுந் தந்தையுற்றுணர்ந்து தன்மனைவியை யழைத்து இவனம்முடைய உத்யோகத்தொழிலுக்கு அருகனல்ல. இவன் மனம் நம்முடைய பரம்பரையான வித்வத் தொழிலையே நாடிக்கொண்டிருப்பதால் இவனைப் புதுக்கோட்டைச் சமஸ்தானம் இராயபுரத்தில் நம்முடைய பந்துக்களில் சுப்பிரமண்யக் கவிராயரென்பவ ரொருவரிருக்கிறார். அவரிடமழைத்துக்கொண்டு போய் விடவேண்டுமென்கிற எண்ணத்தை யுரைத்துச் சில நாளிருந்து இந்த அங்கப்பபிள்ளையென்பவருஞ் சிவ பதவி யடைந்தனர். அப்பொழுதிக் குழந்தைக்கு வயதொன்பதாயின..............
பின்னர் அவர் மனைவியாரும் அவ்வூரிற் சிலநாட்டங்கியிருந்து கணவன் மொழிந்ததை நினைத்து தன்புதல்வனை யழைத்துக் கொண்டு சிவகங்கை மார்க்கமாக இராயபுரத்துக்கு வரும் வழியில் திருவுடையார்பட்டியென்னு மோர் ஊரின் குளத்தருகிற்றங்கித் தந்ததாபன முதலியன செய்து கட்டமுதருந்தின பிற்பாடு ஓரிடத்திருந்திளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்பாலவ்வூரிற் றக்கசமு சாரியும் பெருந்தன்மையும் பரோபகாரியுமான சூரியக்கோனென்பவன் வந்து நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர் எவ்வூருக்குச் செல்கிறீரென இந்த அம்மாளுந் தன் குடும்ப விருத்தாந்தங்களையும் இப்பொழுது தன் குழந்தையைத் தானழைத்துச் செல்லு மெண்ணத்தையுந் தெரிவிக்கவே யவைகளைக்கேட்ட சூரியக்கோனென்பவன் சொன்னதாவது அம்மணீ யிந்தக் குழந்தைக்குப் படிப்பு ஏதேனும் வருமாவென நன்றாய் வாசிப்பா னென்றோர் சுவடியை யெடுத்துக் கொடுத்து வாசிக்கச் செய்தனள்.
அதனைக் கேட்ட சூரியக்கோனுஞ் சந்தோஷமடைந்து அம்மணீ யென்னுடைய குழந்தைகள் பேரன்மார்க ளிருப்பதால் என்வீட்டைத் தங்கள் வீடுபோற் பாவித்து இக்குழந்தையைக் கொண்டு படிப்புச் சொல்லிக் கொடுக்கலாமா வெனக் கேட்கவே இவ்விருவரு மதற்குடன்படுவதைச் சூரியக்கோனறிந்து தன்கூடவே யழைத்துச் சென்று தனியாக இவர்களிருப்பதற்கு வீடொன்றமைத்துக் கொடுக்க அவ்வீட்டிலிருந்து கொண்டு பிள்ளைகட்குப் போதிக்கும் உபாத்திமைத் தொழில்புரிந்து வரும் நாளையிலோர் நாள் குன்றாக்குடித் திருவண்ணாமலை யாதீன மடாலயத்திற் குருபூஜை காலஞ்சமீபத்த படியாலிந்தச் சூரியக்கோனுக்கும் அங்கிருந்து திருமுகம் வரவே வழக்கப் பிரகாரங் கொண்டுபோகும் பதார்த்தங்கள் யாவுஞ் சேகரித்து உபாத்தியாயராகிய இக்குழந்தையையு மழைத்துக்கொண்டு போகும் வழியிற் குன்றாக்குடியின் வரலாறு சுவாமிபேர் தர்மகர்த்தாவாக இருக்குந் தம்பிரானவர்கள் பேர் முதலியவைகளைத் தன் உபாத்தியாயராகிய இக்குழந்தைக்கு விபரமாகத் தெரிவித்துச் சென்று வணங்கித் தான் கொண்டுபோன வரிசைகளை வைத்துக் கண்டுகொண்டனன்.
இது நிற்கச் சூரியக்கோ னென்பவனை ஸ்ரீலஸ்ரீ தம்பிரானவர்கள் நோக்கி யுன்னுடன் கூடவந்திருக்கு மிந்தச் சிறுவன் யாரென்று வினவவுந் தம்பிரானவர்கள் சொல்லி வாய்மூடு முன்னர் தன்னூர் பேர் தன்தந்தையின் வரலாறுl தாயார் தன்னை யழைத்துக்கொண்டு வந்திருக்குங் காரணம் யாவும் எழுதாமலே யோர் செய்யு ளினதிவிரைவா யமைத்துரைக்கக் கேட்ட தம்பிரானவர்க ளுள்ளத்தடங்கா மகிழ்ச்சி பொங்க ஆச்சரிய முடையராய்ச் சூரியக்கோனை நோக்கி யிக்குழந்தை நம்மிடமே யிருக்கட்டும் நீபோய்வாவென வேண்டிய மரியாதை செய்தனுப்பவே யாதவ சிரேஷ்டனாகிய சூரியக்கோனுக்குத் தன் உபாத்தியாயரை விட்டுப் பிரிய மனம் வராமல் வருத்தமுற்றவனாய்த் தம்பிரானவர்கள் கட்டளையை மீறி நடக்க முடியாதவனாகத் தன்னூர்க்குச் சென்றனன்.
பிறகு சூரிடக்கோன் வீட்டிலிருந்த இவர் தாயாரையுந் தம்பிரானவர்களால் வரவழைத்து இவரையும் இவர் தாயாரையும் இராயபுரத்துக்குச் சுப்பிரமணியக் கவிராயரிடம் அனுப்பினர். அது முதலிவர் பந்துக்களு மடத்துக்கு வரப்போக இருந்தனர். அக்காலத்திலிவருக்கு வயது பன்னிரெண்டாகும். இவர் சரஸ்வதி யனுக்ரகத்தா லெச்செய்யுளும் இடர்ப் படாமலே பாடுவதில் வல்லவர். இவர் திறமையைக் கண்டு மெச்சாதவ ருலகத்தி லொருவரு மில்லை. இக்குழந்தையின் செய்கையை வெண்பாப்புலிக் கவிராயர் கேள்வியுற்று இப்புவியினம்மைவிட வேறொரு வனுமுளனோ வெனச் செருக்கடைந்தவராய் ஸ்ரீல ஸ்ரீ தம்பிரானவர்க ளிருக்குமிடத்துக்குள் வரக்கண்ட தம்பிரானவர்க ளுபசரிக்கவும் அவரை நோக்கி ஹே சபாபதி யிங்கோர் வித்வத் சிறுவன் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தனம் அவ னெங்கேயென்று வினவ வித்வா னிங்கில்லை சகலமும் அவடந்தானென்று விடை கூறுவதை யறிந்த வெண்பாப்புலிக் கவிராயர் கோபங்கொண்டு அவ னெங்கிருந்தாலு மழைத்துவர வேண்டுமென்று போதை வெறியாலுரைக்கவே யதைத் தம்பிரானவர்கள் கேட்டு அவன் சிறு குழந்தை விளையாடப் போயிரப்பா னென அவனை நா மவசியம் பார்க்கவேண்டும் மறுக்கின் வசைபாடுவோ மென்றுரைக்கக் கேட்ட தம்பிரா னவர்களு மக்குழந்தையை வரவழைத்தருகில் விடவே யச்சிறுவனை வெண்பாப்புலி நோக்கி நீயாவித்வானென அக்குழந்தையும் ஆம் நான்தான் வித்வானென்றுரைக்க உனக்கென்ன பாடவரு மென்று வெண்பாப்புலிக் கவிராயர் வினவ அக்குழந்தையும் நானெவையும் பாடுவே னென்ற சற்றும் அஞ்சாமல் விடைகூறுவதை யறிந்து அகம்பாவ மேலிடவே சிறுபயலா யிம் மூன்றுஞ்செப்பு என்றோர் சமஸ்தியைச்சொல்லி நாமிந்த மயின்மலையைப் பிரதட்சணஞ் செய்து வருவதற்குள் முன் மூன்றடி முடித்துச் சொல்லை யாவன ஏன் அவ்வளவு தாமதம் இப்பொழுதே கேட்டுக் கொண்டு போகலாமேயெனப் பாடியவெண்பா.
அற்பனுக்குச் செய்நலமு மாரணங்குக் குட்புலனு
மிப்புவியி னான்பெரியோ னென்பவனு - மெய்ப்பரம்
அறிவனுக்குக் கேடாகுமாராய்ந்து பார்க்கிற்
சிறுபயலா யிம்மூன் றுஞ்செப்பு.
எனவே சமஸ்தி முடிந்திருப்பதையும் அதி னமைந்திருக்கு மூன்று வித விஷயங்களையுஞ் சொன்னயம் பொருணயங்களையுமறிந்து திடுக்கிட்டு வெண்பாப்புலிக் கவிராயருக்கு மார்பில் வேல்கொண்டு தைத்ததுபோற் றைத்து அச்சமு நாணுமதிகரிக்கத் தம்பிரானவர்களை நோக்கி யிவர்பேர் யாதென்ன இவர் பேர் வீரபத்திரனென்றுரைக்கக் கேட்ட வெண்பாப்புலிக் கவிராயரும் நமது கெருவத்தை யடக்கும் பொருட்டு அந்தச் சரஸ்வதியே யிவ்வுலகத்தி னிவ்வுருக்கொண்டு தான் வந்தனளோ அல்ல திந்த மயூரகிரிக்கடவுளே இந்த வீரப்புலியைச் சிருஷ்டித்து நம்மைச் செயிக்கும்படி விடுத்தனரோ யாதோ தெரிகிலேமென் றையுற்றவராய் நாம் வெறும்புலியிவர் வீரப்புலியானதா லிந்த வீரப்புலியிருக்குமிடத்துக்கு நாமுள்ளவரை யொருநாளுமணுகே மெனவும் இன்று முதலிவர்க்கு வாணிதாசனெனவும் வாக்களித்துச் சென்றனர்.
அன்று முதல் மயூரகிரிநாதர் பரிபூரண கிருபையாலே தம்பிரானவர்க ளபிமானம் பெற்று ஸ்ரீலஸ்ரீ திருமெஞ்ஞான பண்டார சந்நதியவர்களைத் தமிழாசிரியராகக் கொண்டு இலக்கிய இலக்கணங்களினும் வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களிலு மிக்க தேர்ச்சியும் இய லிசை நாடக மென்னு முத்தமிழினும் பெரும்பாலும் அடைமொழியின்றி நவரச மொழுகும்படி பாடுஞ் சாமர்த்தியமும் பண்டித பாமரர்களுக்கும் ரஞ்சன முண்டாகும்படி பிரசங்கிக்கும் வல்லபமு முள்ளவராயிருந்து இராயபுரத்திற் சுப்பிரமணியக்கவிராயர் புத்ரியை விவாகம் புரிந்து குன்றாக்குடித் திருவண்ணாமலை யாதீன மடாலய வித்வான் வாணிதாச வீரபத்திரக் கவிராயரென்னப் பற்பல வித்வான்களும் புகழ்ந்துகூற வந்தவிருந்தினர்கட் கமுது புரிவித்தும் வரும்விருந்தை வழிபார்த்தலும் உடையராய்த் தமதில்லற விருத்தியை வழுவுதலின்றி நடாத்தி அகமது மகிழ உறவினர் புகழத் தனகனக வஸ்துவாகனங்கள் பெருக வாழ்ந்துவருநாளையி லிவருக்கு வயது முப்பத்திரண்டாகும்.
அப்பொழுது ஸ்ரீலஸ்ரீ சபாபதித் தம்பிரானவர்கள் வேலாயுதத் தம்பிரானவர்கள் மனோபீஷ்டப் பிரகாரம் இவ்வித் வசிரேஷ்டருந் திருவாரூர் மனுநீதிச்சோழன் றேரூர்ந்த சரித்திரமும் வள்ளி கல்யாண விலாசமும் பாடியும் பின்னர் குன்றாக்குடிச் சிவசுப்ரமணியக்கடவுள் பேரிற் றலைவன் பவனிவரவு, மகளிர்காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்த தலைவனைக்கண்டு மயங்கல், திங்கள், தென்றன, முதலிய, உபாலம்பனம் பாங்கியுற்றதென்னென வினவல், தலைவி பாங்கியோடுற்றது கூறல், பாங்கி தலைவனைப்பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்துகூறல், தலைவி பாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவனடையாளங்கூறல்,குறத்தி வரவு தலைவி குறத்தியை மலைவன முதலியன வினவல், குறத்தி மலைவள நாட்டுவள முதலியன கூறல், தலைவன் தலவளங் கினை வள முதலியன கூறல், குறிசொல்லி வந்தமை கூறல் தலைவி குறிவினவல், குறத்தி தெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு புள் வரவு கூறல், கண்ணிருத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத்தேடல், குறவன் பாங்கனோடு குறத்தி யடையாளங்கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன்னணி முதலியன கண்டையுற்று வினவலும், ஆங்காங்குக் குறத்தி
விடைகூறலு மாகக் கூறல், முதலிய இவ்வகையுறுப் புக்களையுடைய குறவஞ்சி ப்பிரபந்ததைப்பாடி யரங்கேற்றி அதற்காக ஸ்ரீலஸ்ரீ சபாபதித் தம்பிரானவர்கள் வேலாயுதத் தம்பிரானவர்களால் ௸ தேவஸ்தானம் கிராமங் காட்டாத்தாங்குடியில் நாயகப்பிறப்பானென்னும் ஓர் சர்வமான்னிய கிராமத்தை விட்டுக்கொடுக்கப்பெற்றும் குதிரை பல்லக்கு சால்வை தோடாக்கள் முதலியன பரிசளிக்கப்பெற்றும் ஐந்து கோயிற்றிருவிழாக் கட்டளைகளும் தினந்தோறுங் குன்றாக்குடிச் சிவ சுப்ரமணியக் கடவுள் கோவிற் பிரசாதங்களும் ஸ்தல மரியாதைகளும் நடைபெற்று வந்தன இன்றும் அம்முறையே நடைபெற்று வருகின்றன
அஃதான்று விஸ்வகுல சிரேஷ்டர்களான கண்ணாளர்கள் தங்கள் சாதியார்பேரில் குறவஞ்சிப்பிரபந்தம் ஒன்று பாடவேண்டுமென்று கேட்கவே யவர்க ளபீஷ்டப்பிரகாரம் இவ்வித்வ சிகாமணியும் மாந்தைக்குறவஞ்சி யென்னுமோர் பிரபந்தத்தைச் செய்தரங்கேற்றி யன்னவர்கள் சிவிகை தொட்டுவரவே சிவிகையேறி ஊர்வலம் வந்தும் வருடந்தோறுங் குடிக்கொருபணந் தருவதாகக் கூறுசாதனமுங் கொடுக்கப் பெற்றும் இன்னும் அவர்களால் அநேக மரியாதைகளுந் தரப்பெற்றவர் இக்கவிராயரவர்களால் அநேக அருமையான நூல்கள் செய்திருப்பதிற் சிற்சில் பிரபந்தங்கள் அக்னி பாதையாற் றவறிப்போய் விட்டனவகப் புலப்படுகின்றன
இது நிற்க சமிவன் க்ஷேத்திரமென்கிற கோவிலூரிற் றிருப்பணி புரியுங்கம்மாளர்கள் தங்கள் குலத்தார்பேரிற் பாடியிருக்கு மாந்தைக் குறவஞ்சிப் பிரபந்தத்தை மறுமுறை பிரசங்கித்துக் கேட்கவேண்டுமென்ற அவாவுற்றுத் தங்களெண்ணத்தை கவிராயரவர்களுக்குத் தெரிவிக்கவே அதற்கவருமப்படியே செய்வோமென உடனே விஸ்வ குலோத்தமர்களும் ஆண்டவரென்கின்ற முத்துராமலிங்க சுவாமிகள் முன்பொருங்கெய்திச் சுவாமி குன்றாக்குடித் திருவண்ணாமலையாதீன மடாலய வித்வன்வர்கள் எங்கள் குலத்தார்பேரில் மாந்தைக் குறவஞ்சி யென்னுமோர் பிரபந்தஞ் செய்திருக்கின்றனர் அதை மறுமுறை கேட்கவேண்டுமென்கின்ற எண்ணத்தை நாங்கள் கொண்டிருப்பதால் பரிசளித்தல் முதலியவற்றிற்கு ரூபாயிருநூறு வரையில் வேண்டுமானதால் கொடுக்கும்படி உத்தரவாகவேணுமென்று கேட்கவே அதற்கச் சுவாமிகளும் அவர்கள் கருத்துங்கிணங்காது மறுதலிக்க அப்பொழுது அச்சுவாமிகள் சமீபத்திலிருந்த வேறொருசுவாமியா ரிக்கண்ணாளர்களை நோக்கி நீங்கள் சொல்லுங் கவிராயர் வேதாந்தக் குறவஞ்சி பாடுவாரோவென அதற்கு அவர்கள் சொன்னதாவது இந்தக் கவிராயரவர்கள் எந்தச் சாஸ்திரங்களிலும் வல்லரானதால் தாங்களிப்போது சொன்ன வேதாந்தக் குறவஞ்சியும் பாடுவாரென்றுரைக்கக் கற்றுப் புராணாதிகளைச் செய்வாரே யன்றி வேதாந்த சாஸ்திரங்க ளெவ்விதம் வரும் நீங்கள் சொல்வது சுத்தப்பிசகு நந்தவனத் தாண்டிக்கும் முயல் வேட்டைக்கும் ஒவ்வுமாவென்றி கழ்ச்சியாகப் பேசுவதையெல்லாம் கண்ணாளர்களாலிக் கவிராயரவர்கள் கேட்டறிந்து உடனே பாடியனுப்பிய செய்யுள்
தொகுத்தமறை கடந்தமெய் நூலுணர்வறியா வுயிர்கள்பவத் தொடக்கு நீங்க
மிகுத்த கல்வி யுயர்த்து முத்துராமலிங்க தேசிகர் மென் முகங்கண்டேகி
அகத்தியன் காலகத்திருந்தான் வாணியுந் தாமரையகமே யார்ந்தாள் வேதன்
வகுத்திடுநந் தொழிலினியே தென்றுதந்தை யுந்தியினுள் வசிக்கின் றானே
என்னுமோர்செய்யுளைப் பாடியனுப்பவே யச்செய்யுளை
ஆண்டவராகிய சுவாமிகள் வாங்கிப்பார்த்து வித்வானகள் போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடிற் றூற்றினுந் தூற்றுவ ரானதா லிக்கவியின் மற்றெதெல்லாஞ் சரி மறைகடந்த மெய்நூ லென்றிருப்பது பெருங்குற்றமாகு மென்றுரைக்கக் கேட்ட கம்மிய அறிஞர்கள் தேசிகரைப்பார்த்து இக்கவிராயர் மகாவித்வானானதா லிவர் கலவியிற் சிறிதுங் குற்றமிராது.. ஏதோ அந்த இடத்தில் வினயமாக இருக்கலாம் அவரை யிவ்விடம் அழைத்து வருகிறோமெனவே அதற்குச் சுவாமிகளும் அவர் வித்வானாக இருப்பதா லிதற்காக வரவழைப்பது மரியாதையல்ல கோவிலுக்குச் சுவாமி தரிசனத்துக்கு அவர் ஒருவாறு வந்தாலும் வரக்கூடும் அக்காலத்திற் சந்தித்துக் கொள்ளுவோமெனவே யிச்சமாச்சாரங்களை யெல்லாம் கம்மியர்களாலுணர்ந்த அப்புலவர் சிகாமணியும் அன்றிரவிற் கோவிலுக்கு சுவாமிதரிசனத்துக்குச் சென்றனர்.
அக்காலையி லாண்டவராகிய தேசிகருங் கோவிலுக்கு வரவே இருவருஞ் சந்தித்துக் கவிராயரவர்களுக்குக் கிரமப்படி கோவிலில் நடத்தவேண்டிய மரியாதைகளு நடப்பித்துச் சுவாமிகளுங் கவிராயரவர்களும் அங்கோரிடத்திருக்கக் கவிராயரவர்கள் வேதாந்தசாஸ்திரப் பிரசங்கஞ்செய்ய அதனைக்கேட்ட சுவாமிகளு மற்றோரும் பிர்ம்மானந்தப் பரவசமுள்ளவராகி யிருக்க மறைகடந்த மெய்நூலென்றிருப்பதிற் குற்றமுரைத்த சுவாமிகளுக்கு மறைகள் தந்த மெய்நூலென் றெடுத்துக்காட்டிச் சமாதானஞ்செய்யவே தேசிகரு மனமகிழ்ந்து மிகமிகப் புகழ்ந்து கம்மியர் கருத்தின்படி இருநூறு ரூபாயளித்துத் தமது முன்னிலையில் மாந்தைக் குரவஞ்சிப் பிரபந்தத்தை பிரசங்கிக்கக் கேட்டுக் கவிராயரவர்களுக்கு தாமும் மரியாதை செய்தனுப்பினர்.
பின்போர்நாள் தொண்டைமான் புதுக்கோட்டைச் சமஸ்தானத்தை யரசுபுரிகின்ற மகாராஜர் அவர்களிடஞ் சென்று அனேக தமிழ்வித்வான்களுக்குள் இவர் முதலாவது சம்பாவனை தரப்பெற்றவர் விப்பிரகுலத்திற் றோன்றிய ஓர் வித்வான் தக்க சன்மானம் பெறவேண்டுமென்கின்ற அவாவுடனே வந்து சமஸ்தானங் கார்பார்தானப்பிள்ளையைக் கண்டு தங்கள் பேரிலோர் அஷ்டநாக பந்தக்கவி பாடிக்கொண்டு வந்திருக்கிறேனெனத் தெரிவிக்கவே யவ்வார்த்தையை யப்பிள்ளையுங்கேட்டு அது பாடுகிறதாக இருந்தால் எவ்வளவு நாளையிற் பாடி முடியுமெனக் கேட்க அப்பிராமணனும் ஆறு மாதஞ்
செல்லுமென அப்படியானால் வித்வான்களையும் வைத்துக்கொண்டு மேற்படி கவியைக் கேட்கவேண்டு மென்கின்ற எண்ணமுள்ளவரா யிருக்கையில் குன்றாக்குடியிலிருக்குந் திருவண்ணாமலையாதீன மடத்து வித்வானாகிய இவ்வீரபத்திரக் கவிராயரும் ஏதோ காரியார்த்தமாகப் புதுக்கோட்டைக்கு வந்தவர்
இந்தத் தானப்பிள்ளையைக் கண்டு பேசிக்கொண்டு போகவேண்டுமென்கின்ற எண்ணங்கொண்டு இவர் கிரகத்துக்கு வரவே பிள்ளையுங் கவிராயரை யுபசரித்திருக்கச் செய்து ஐயா, அஷ்டநாகபந்தம் பாடுகிறதாக இருந்தால் எத்தனை மாஸ்தைக்குட் பாடலாமென கவிராயரும் அதென்ன மாதக் கணக்கா வேண்டும் இப்பொழுதே பாடலாமென பிள்ளையும் அது எவ்விதம் பாடக்கூடும் அஷ்டநாகபந்தம் பாடுவது சிரமமல்லவா என கவிராயரும் சிரமமுள்ளவர்களுக்குச் சிரமந்தானென்று உடனே யைந்து நிமிஷத்துக்குள் மேற்படி அஷ்டநாகபந்தம் பாடி முடித்துக்காட்ட வேதானப்பபிள்ளையும் வியந்து பிராமணனை வரவழைத்து இந்தச் சமாசாரங்கள் முழுவதுஞ் சொல்லி உபாயமாகச் சன்மானஞ்செய்ய அதனை யப்பிராமணன் வாங்காது கோபமுடனே தன்னூர்க்கு வந்து அவ்வந்தணன் மந்திரவாதியானதால் மந்திரத்தால் ஓர் சர்ப்பத்தை யிக்கவிராயர் பேரில் விடுப்ப அந்தச் சர்ப்பமானது வந்து இவர் நிரபராதியானதா லிவரைத் தீண்டுதற்கஞ்சி யிவரெங்கு சென்றாலும் எங்கிருந்தாலும் எந்த இடத்திற் படுத்திருந்தாலும் இவர் கண்களுக்கு மாத்திரம் புலப்படுகிறதே யல்லாமல் வேறில்லை இதைக்கண்டு அச்சமேலிடக் கவிராயரு மிக்க கவலையடைந்து நாளுக்கு நாள் தேகமெலிந்துகொண்டு வர இவரும் ஸ்ரீமயூரகிரி வாசகராகிய சுப்ரமண்யக் கடவுண்மீது அனேக கவிகளைப் பாடவே யடியார் குறைகளைத் தீர்த்து அவரவர் மனோபீஷ்டத்தை நிறைவேற்றி யாதரிக்கும் பரம கருணாநிதியாகிய முருகக்கடவுள் மனமிரங்கிச் சொப்பனத்திலோர் பெரியவர் போலச்சென்று, ஏ கவிஞ இக்கொடிய சர்ப்பம் உன்னை
விட்டகன்று விடும் நீயொன்றுக்குங் கவலைப்பட வேண்டாம் இது முதற்கொண்டு நீகாஷாய வஸ்திர தாரண்ஞ் செய்துகொள்ளென்றுரைத்து மறைந்தருளினார்
அப்பால் கவிராயர் விழித்துப்பார்த்துச் சொப்பனத்தி லருளிச்செய்ததை நினைத்து நினைத்து உள்ளத்தடங்காத மகிழ்ச்சியைக் கொண்டவராக இருந்தாலும் நாங்குடும்பியாக இருப்பதால் எவ்விதங்காஷாயந் தரித்துக்கொள்வதென் றையுற்றவராய மீண்டும் அம்முருகப்பிரான்மீது கவிகளைப் பாடுவதாயினர் அக்கடவுள் சர்வஜீவ தயாபர மூர்த்தி யாகையால் கவிராயர் மீது பிறகுங் கருணைகூர்ந்து குன்றாக்குடியில் வசிக்குந் திருவண்ணாமலையா தீன தர்மகர்த்தாவாகிய ஸ்ரீலஸ்ரீ வேலாய்யுதத் தம்பிரானவர் கள் பாற் கனவிற் சென்று நமதன்பனே உன் ஆதீனமடத்துக் கவிஞனுக்கு இப்போழுது நேர்ந்திருக்கு மிடையூறு நீங்க வேண்டி நாம் அவன் கனவிற் சென்று அவனைக் காஷாய வஸ்திர தாரணஞ் செய்துகொள்ளும்படி தெரிவித்தோம் அதற்கவண் நான் குடும்பியானதா லெவ்விதமிக் காரியத்தை செய்வதென்று உடன்படாமலிருக்கிறதுந் தவிர நம்மையும் பாடுகிறான். ஆனதால் நீயாவது காஷாய வஸ்திரத்தை அவனுக்களித்து தரித்துக் கொள்ளும்படி செய்வாயெனந் தெரிவித்து உடனே மறைந்தருளினர்.
அப்பால் ஸ்ரீலஸ்ரீ தம்பிரானவர்கள் நித்திரை விட்டெழுந்து சொப்பனத்திற் கண்டதைக் கருதிப் பேருவகையுற்றவராய்க் கவிராயர் வரவை யெதிர்நோக்கி யிருந்தனர், அப்பாற் கவிராயரும் மடத்துக்கு வரவே தம்பிரானவர்களிவரை நோக்கி இது சுவாமி உத்தரவென்று காஷாய வஸ்திரத்தை யெடுத்துத் தமது திருக்கரத்தாற் கவிராயர் கையிற்கொடுக்க யாதொரு தடையுஞ்சொல்லாமல் கவிராயர் தமதிருகரத்தால் வாங்கித் தரித்துக்கொண்டனர் அப்பொழுதிவருக்கு வயது அறுபதுக்குமேலாகும் இவர்க்கு புத்திரர்கள் சபாபதிக் கவிராயர் முத்துசாமிக் கவிராயர் என இருவரிருந்தனர் இவர்களில் இளையகுமாரர் முத்துசாமிக் கவிராயர் காஷாய வஸ்திரதாரணஞ் செய்துகொண்டவர்
ஓர் நான் திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் உற்சவத்திற்குபோன காலத்தில் அன்று தினம் சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பிகை அன்னவாகனத்திலும் எழுந்தருளி வரவே இத் திருக்கோலம் அமைந்திட ஒர் செய்யுள் பாட வேண்டுமென்று இவரை நோக்கி அவண் வந்த மற்றைய வித்வான்கள் வேண்டிக்கொள்ள உடனே பாடிய செய்யுள்
பூவுடையார் தழுவுமணிப்புயமுடையா ரமரர்களும் போற்றப் பூவி
னாவுடையாளன் பருக்காயனஞ்சுமந்து வரப்பரிவுற் றருளி னோக்கிச்
சேவுடையார் ககனமதிச்சிரமுடையார் திருக்கோளநாதர் தாமும்
மாவுடையாராய்ப் பணியாரமுஞ்சுமந்து வீதியினில் வருகின்றாரே.
எனப்பாடவும் யாவரும் உவகை கூர்ந்தனர்.
ஒரு காலத்தில் ஒரு வருடம் மழையில்லாமல் நாடெங்கும் பஞ்சமாக இருந்ததால் ஸ்ரீலஸ்ரீ வேலாயுதத் தம்பிரானவர்கள் தமது கிராமக் குடிகளடையுந் துன்பத்தைச் சகிக்காமல் மேற்படி தம்பிரானவர்களும் மடத்து உத்தியோகஸ்தர்களும் இக் கவிராயர் சகிதம் காட்டரத்தங்குடி சென்று கிராம தேவதையாகிய பொய்சொல்லா மெய்யரென்னும் ஐயனாருக்கு அபிஷேகாதிகள் செய்வித்து பிராமண போஜனமு நடாத்தி தம்பிரானவர்களும் இக்கவிராயரை அழைத்து மழைபெய்யும்படி தங்கள் வாக்கினால் ஓர் கவி சொல்லவேண்டுமெனப் பாடிய கவி
வெண்பா.
தருணமிது வாகுந்தான் மாரிபெய்யக்
கருணைசெய்யாதிருக்கலாமா-வருணனிடம்
நீருரைத்துப் பொய்சொலா மெய்யரே யிந்நிமிடம்
மாரிபெய்யச்செய்வீர் வரம்
என்று ஓர் கவி கவிராயரவர்கள் வாக்கினாற்பாடவுமே உடனே ஆகாயத்தில் மேகங்களெல்லாந் திரண்டு கருத்து மின்னல் குமுறலுண்டாகி ஆறுமாத ஜெலங்காணும்படியாக மழையைப் பெய்தன. இதைக்கண்ட ஸ்ரீலஸ்ரீ தம்பிரானவர்களும் அதிசயித்து உள்ளத்தின் மகிழ்ச்சி பொங்கக் கவிராயரவர்களுக்கு
மகரகண்டி சால்வை தோடா முதலிய பரிசளித்து யாவருங் குன்றக்குடியை வந்தடைந்தனர். நாடெல்லாம் க்ஷரமநீங்கி ஷேமகர முண்டாயின. இப்பெற்றிய பலவற்புதச் செயல் செய்துகொண்டிருந்த கவிராயவர்கள் தமது76-ம் ஆண்டில் சிவபதமடைந்தனர்.
சரித்திரம் முற்றுப்பெற்றது.
மயூரகிரி வாசகர் துணை.
----------------
உ
சிவமயம்
சிறப்புப்பாயிரங்கள்
இஃது காரைக்குடியிலிருக்கும் மழவை
சிதம்பரபாரதியவர்களியற்றியது.
செய்யகுன் றைப்பதிவாழ் செவ்வேள் குறவஞ்சித்
துய்யதமிழ் நாடகத்தைச் சொல்லினான் -- வையமகிழ்
வீரபத்தி ரக்க வினைசெய் யரக்கனைவெல்
வீரபத்தி ரக்கவிஞ னே.
---------
இஃது மேற்படியார் கனிஷ்டபுத்திரர்
இராமஸ்வாமிஐயரவர்க ளியற்றியது
மாவள மோங்கு மதுரைமா நகரைத்
தாவள மாகத் தனிவீற் றிருக்கும்
எந்நாட் டினுமுயர் தென்னா டெனப்பெயர்
பன்னாட் கொண்ட பாண்டிநன் னாட்டுட்
டிகிரியிற் குலவுஞ் சிகண்டிமால் வரையும்
பகர்தரு மதுநதி பாய்ந்துநெல் விளையு
நிலவள நீர்வள நிறைபல வளங்களு
நலமிகு நியம நாட்டினிற் சீர்சால்
குன்றாக் குடியாய்க் குலமுயர்ந் தோங்கக்
குன்றாக் குடியுறுங் குமரன் மீது
பண்ணமை பத்தி பரவுசற் பாத்திரன்
கண்ணிய மோங்கு கங்கா கோத்திரன்
சார்ந்தெவ் வுலகுந் தழைக்கு மெய்ப்புக
ழேந்தி வங்கிஷத் தினிதுற வுதித்தோன்
வெண்பாப் புலிக்கவி வினவுஞ் சமஸ்தியைப்
பண்பாய்ப் பாடிப் பரிசுற வென்றவன்
ஒருக்கான் மழையிலா துலகந் தவிக்கக்
கருக்கொடு மழைவரக் கவியுரைத் திட்டே
பஞ்சலட் சணங்களைப் பறந்திட வடித்துப்
பஞ்சலட் சணங்களைப் பழுதறக் கற்றோன்
புதுவை மன்ன வன்பாற் போந்துயர் வித்வ
சதசுமுன் மரியா தையும்பெறு தீரன்
பாணியிற் பொருந்தும் வீணையிற் றிருந்து
மலர்வாணி தாச னலவர்க ணேசன்
விண்ணா ரமரர் விரும்பித் தொழுந்திரு
வண்ணா மலையா தீனம டாலய
வித்துவான் வீர பத்திரக் கவிஞன்
கண்டொடு கனியோ கரும்பி னிரதமோ
அண்டர்க் கமுதோ வமைந்தபா கோவெனச்
செஞ்சொற் றிகழ்குற வஞ்சித் தமிழைப்
பாடினன் பாடிப் பலகவிவாணர்
கூடிய சபையார் குகன்சந் நிதியி
னரங்கேற் றவு நல் வரங்கள்பா லிப்ப
உத்தமன் வேலா யுதமுனி யுடனே
சத்திய வான்குழந் தாபுரிக் கரசும்
மனமகிழ்ந் தினிதின் வழங்குவாம் பரியுங்
கனக தண் டிகையுங் கைக்கணை யாழியு
மகர கண்டியும் வயிரக் கடுக்கனும்
பகரும் பீதாம் பரந்தோ டாவும்
வழாதைந்து கோயின் விழாக்கட் டளைகளும்
என்று மதியு மிலங்குநாட் காறும்
என்று மழியா திருந்திடு வளஞ்சேர்
சிறப்பார் நாயகப் பிறப்பா னேந்தற்
றானியம் விளைந்து தழைக்குஞ் சர்வ
மானிய மும்பல வரிசையும் பெற்றோன்
தன்குலத் தலைமை சாலவான் கவிஞர்
மன்குல மணியென மருவினன் மாதோ.
----------------------
இஃது மேற்படி சிதம்பரபாரதியவர்கள் பெளத்திரரும்
அஷ்டாவதானம் மீனாட்சி சுந்தரமய்யரவர்கள்
புத்திரருமான சிதம்பரய்யர்க ளியற்றியது
குறவஞ்சி நூலைக் குலப்புலவ ரும்பாங்
குறவஞ்சி யேதலைகள் கோட்ட முறைவரைந்தான்
புத்தமுதோ வென்னமயிற் பூதரவேண் மேல்வீர
பத்ரகவி தாசர பமே
-------------
இஃதுமேற்படியூர் சதாவதானம் வாலசுப்ரமணய
ஐயரவர்கள் இயற்றியது
வெண்பா.
பதமார் குறஞ்சிப் பாவைபங்கற் கென்றும்
பதமார் குறஞ்சிப் பாவி-- லிதமாமென்
றாய்ந்தமைத்தான ண்ணன்பே ராதரித்த தாற்குன்றை
வாய்ந்த கவி வீரபத்ர மால்
----------
இஃது மேற்படி கனிஷ்டர் சாமிநாத ஐயரவர்களியற்றியது
குறவஞ்சி கொண்கனூர் குன்றாக் குடியான்
குறவஞ்சி மேற்காதல் கொள்ள -- முறைசொற்றான்
சேணிற்செல் வாக்காற்செழிக்குநீர் பார்க்குதவும்
வாணிதாச வீரபத்ர மால்
------------
இஃது தேவை ஸ்ரீவன்றொண்டர் மாணாக்கருள்
ஒருவராகிய காரைக்குடி ராம-கு-ராம
சொக்கலிங்கச்செட்டியாரவர்க ளியற்றியது
புறவஞ் சிவந்த மலர்வாவி மாட்டுமுற் போந்து சம
ணறவஞ்சி வந்தரு மாயூர வெற்ப னகமகிழ
நறவஞ்சி வந்தனை செய்தோ டியல்புற நற்றமிழாற்
குறவஞ்சி வந்தறைந் தான்வீர பத்திரக் கூர்ங்கவியே
--------
இஃது இராயபுரத்திலிருக்கும் மழவைத் திருவிளையாடற்
சுப்ரமண்யபாரதியவர்கள் புத்ரர்
இராமசுவாமி ஐயரவர்களியற்றியது.
கார்படி வடிவாய்க் கைக்கோ டணிந்து
மேர்பெறு திகிரியு மேந்தி யெத் திசையுங்
காண்குற வாய்ந்த கமலமா விழியுஞ்
சேண்படு பொன்னகஞ் செறிந்துமாத ங்க
வம்பரப் போர்வை யணிபெற விசைந்து
மும்பர்மா னிகரா யோங்கிய மயூர
கிரியெனெஞ் ஞான்றுங் கேள்கிளர் வேலணிந்
தரியமா வரங்க ளன்பருக் கருள்வோன்
அற்புத லீலைக ளாங்காங்கியற்றி
விற்பன விவேகியர் மெய்யகத் திருப்போன்
தேவரு மோவருஞ் செய்யு முத் தொழின்
மூவருங் காணா முதல்வ னோர்குற
வஞ்சிக் கவரவுறும் வலியுணர்ந் தேகுற
வஞ்சிப்ர பந்தம் வகுத்தன னோர்நாள்
வெண்பாப் புலிக்கவி விளம்புஞ் சமஸ்தியைப்
பண்பாய் முடித்த பராபல்ய வாக்கி
மழைவளங் குன்றி மன்னுயிர் வாடித்
தழைபயிர் சாம்பித் தரித்திடா காலத்
தாங்குயர் மாரி யழைத்து மோர்பாவாற்
பாங்கெலா வளமும் பரப்பிய வரகவி
தளவ நகைத்திருத் தழூஉம்பொன்னி நாடான்
வளவர்கோன் வாயில் வரும்புக ழேந்திப்
புலவர் பரம்பரை பொலிந்திடத் தோன்றித்
தலைமைசேர் வாணி தாச வீர
பத்திரக் கவியெனும் பாவலர் சிகாமணிச்
சித்திர நாமச் சீர்த்திபெற் றோனே
---------
இஃது மேற்படி யூரிலிருக்கும் இந்நூலாசிரியர் பௌத்திரர்
வீரபத்திரக்கவிராயர் இயற்றியவை
தேன்பாய மலர்செறியக் கொண்டலையுந் தண்டலையுஞ் செழிக்க வோங்கி,
வான்பாயுஞ் செவ்வழிப்பண் பாடிமது கரம்பாயும் வழியின் வேயிற்,
கூன்பாயு மந்திகள்வே ழம்பரிற்பாய் தண்டலையுங் குரவை யார்ப்பான்,
மீன்பாயுந் தாமரையுமேற்பாயுங் கழனிகளு மிக்கபாண்டி. (1)
என்னாட்டுட் கற்றதனா லாயபலன் கூட்டுண்ணு மெழினாவல்லோர்,
பொன்னாட்டும் புகழ்நாட்டு நேமநன் னாட்டுடைய புனிதன் குன்றை,
மன்னாட்டுந் தோகைமயிற் கிரிமருவுஞ் சண்முகவேள் வரமன் பர்க்குப்,
பன்னாட்டுன் புறலகற்றியாண்டருளுளெங்குமர குரு பரன்மீ தன்பால். (2)
குறுமுனி நேர் புகழேந்தி வழித்தோன்ற லுயர்கங்கா குலத்தில் வந்தோன்,
சிறுபயலா யிம்மூன்றுஞ் செப்பெனுமீற்றடிகொடுபா முடியத் தேர்ந்தே,
தறுகணிறு மாப்புறும்வெண் பாப்புலி நண் பாப்புலியே தாழவைத்தோன்,
மறுவறுமைந் திலக்கணமொ டிலக்கியமும் வழுவறக்கற் றுணர்ந்தமாண் பன் (3)
அருணகிரி யாதீனத் தேவசிகா மணிக்குருவி னருளா லுற்ற
வான்முறையின் வந்தசபா பதிமுனிவே லாயுதமா முனிநாட் டொட்டே,
பிரபலமார் தருமைந்து கோயில்விழாக்கட்டளைகள் பிசகா வண்ணஞ்,
சருவமா னியங்குதிசை சிவிகைமுதற் பலவரிசை தரப்பெற் றிட்டோன். (4)
சொல்யாழின் னிசைகருங்கட் பிணைமருங்கு லிழைசாயற்றோகை வள்ளி,
கல்யாண மனுநீதிச் சோழன்றே ரூர்சரிதங் கனிசெந் தேனிற்,
பல்யாணர் புகழ்மாந்தைக் குறவஞ்சி முதலிய நூல் பகர்ந்தோன் றான,
மல்யானை வெங்கலமாக் கடைபுகுந்தா லெனப்ரசங்க மதுர வாக்யன். (5)
திரணமும்வான் றுளியின்றி வளங்குன்றப் பயிர்வாடுஞ் செயல்கண் டின்னோன்,
றருணமிது வாமெனவோர் கவியுரைப்ப மழைபொழிந்து தழையச்செய்தோன்,
கருணிகர்தம்முதல்வனெனவெள்ளேடொன் றினைக்கொண்டோர் கழக முன்ன
ரருமையுறப் பற்பலகி ராமவா ரிக்கணக்கை யறையக் கண்டோர். (6)
சித்திரகுப் தனுமிவனே யெனச்சொல்லி யதிசயிக்குந் திறமைபூண்ட,
வுத்தமசற் குணந்திகழுங் கப்பவள்ளல் செய்தவத்தா லுதவுஞ் செல்வப்,
புத்திரனா மலர்வாணி தாசனெனப் பூவுலகிற் பொருந்தும்வீர,
பத்ரகவி ராசனுயர் குறவஞ்சித் தமிழிதனைப் பாடினானால். (7)
---------
இஃது
குன்றாக்குடியிலிருக்கும் அப்பாப்பிள்ளையெந்று
பெயர்வழங்கும்சாமிநாத பிள்ளையவர்க ளியற்றியது.
மாகுன்றை வாணருக்கு மன்னுகுற வஞ்சியின்ப
மேகுன்றா தென்ன விரித்துரைத்தான்--பாகமுறு
மிக்க கலை வாணி மேவுருவாம் வீரபத்ரத்
தக்ககவி ஞன்னறிந்தே தான்.
-------------
இஃது
திருநெல்வேலிவண்ணார்பேட்டை பண்டித ஸ்ரீ
சுந்தரமூர்த்திபௌராணிகரவர்கள் இயற்றியது
பொன்மணக்கு முயர்குன்றாக் குடிவாழ்சுப் பிரமணியப் புத்தேட் கென்று,
சொன்மணக்குங் குறவஞ்சிப்பாமாலை யெவ்வழகுந் துன்றத் தந்தான்,
கன்மணக்கு மக்குன்றாக் குடியிலவரு கவிஞர்மணி கனிந்து பாவின்,
மின்மணக்குமுயர்வீரபத்திரமாக் கவிஞனெனு மேலோன் றானே.
--------------
இஃது
மூவல் ப. சிங்காரவேற்பிள்ளையவர்களியற்றியவை.
பொன்மருவு மாலையினா ளுலவாத மாதவத்தாற் புதல்வி யாகுங்,
கன்மருவு கன்னியினாற் சென்னிமதிப் பெருமானெங்கருத்துளென்று,
மன்மருவு மைமுகனா லறுமுகனா லரசாளவையமாகித்,
தென்மருவு பாண்டிநன் னாடதனு ளபிராமத்திருவூ ரொன்றாம். (1)
அகழேந்தியி ன்னுயிர்க்குக் காவல் புரியந்நகரி னமுதப்பாவோன்,
புகழேந்தி யென்னவரும் புகழேந்தி யவன்மரபுபொலிந்து தோன்றத்,
திகழேந்து கங்கைகுல வங்கப்பக்குரிசில்செய் திறந்த தாகும்,
புகழேந்து புண்ணியத்தின் பயனொத்துப் புவித்தலத்தோர் போற்ற வந்தோன். (2)
புவிக்கினிய நற்குணமா மெக்குணமுந் தனக்கென்னப் பொறுக்கு மேலோன்,
கவிக்கினிய நாவலன்ச பாபதிமுத் துச்சாமிக் கவிஞ ராகச்,
சவிக்கினிய கண்ணிரண்டே யெனப்புதல்வ ரிருவரையுந் தந்து வாழ்ந்தோன்,
செவிக்கினிய சமயகவி மழைபொழியு மதுவென்னத் தெளியச் சொல்வோன். (3)
குலமருவு மருணகிரி யாதீன முனிவர்வாழ் குன்றை யூராந்
தலமருவு கவிஞனா யுலகன்பு மின்புமிவை தழைபே ரின்ப
நலமருவா வெனத்துணிந்து முருகனடிக் கவிபுனைந்து நலகற்
றரசவ், வலனருளால் வரப்புனையத் துறவடைந்து நல்லிண
க்கமருவக் கண்டோன். (4)
கற்புடைய ரிருதிறத்த ரெனக்கூற மதியாது கடமை மாதர்
கற்புடைமை கடவாரேன் மழையேவல் செய்யுமெனுங் கவிஞர் நாண,
வெற்புடைய வேல்விடுத்த நாயகனையுட்கொளீஇ விளங்கயாரும்,
பொற்புடைய சொற்கவியினான்மழையை வளமருவப் பொழிவித் தானால். (5)
குறவஞ்சி யணைந்தருளிக் குறைதீர்க்குங் குன்றைநகர்க் குமரனுக்குக்
குறவஞ்சி கூறியிட்டான் கவியஞ்சிப் புலவோர்தங்குறையிலா வாய்,
திறவஞ்சி வாழ்த்திடவிம் மண்ணுலகும் விண்ணுலகுஞ்செம்மை யாய,
துறவஞ்சி வழுத்திடுநல் வீரபத்திரக்கவிஞன் சொல்வோர் வாழி. (6)
------------
இஃது
சிவகிரி மகாலிங்கப் புலவரவர்களியற்றியது
நாள்விரிபூ முகத்தினிரு வல்லிபுல்லுங் கதம்பன்மயி னாக மன்னும்,
வேள்விசய வேலவன்மேற் குறவஞ்சி விதியநந்தன் வேலை யுண்டோன்,
வாள்விரவி ரவியுமெச்சப் புலவர்களுக் கின்னமுதாய் மருவச் சொற்றான்,
கேள்வியினா லுயர் வீரபத்ரகவிச் சாபமெனக் கிளத்து வோனே.
-------
இஃது சிவகெங்கை இராமாயணப்பிரசங்கம்
அரு முத்துக்கிர்ஷ்ணபிள்ளை யவர்கள் மாணாக்கரும்
மேற்படியூர் சவுளிக்கடை வெள்ளைச்சாமி சேருவைகாரருமான
பெரியசாமிசேருவைகாரரவர்களாலியற்றியது
சுறவஞ்சி யொதுக்குந் தூய சுனைதொடர் புனத்தின் வள்ளிக்,
குறவஞ்சி கொழுநன் குன்றாக் குடியமர் குழகன்மீது
நறவஞ்சி தறும்பூந் தாரோன் நறுவமு தென்னச் சொற்றான்
குறவஞ்சி யதனைவீரபத்திரக் குரிசின் மாதோ,
----------
மேற்படியூர் சவுளிக்கடை ஆதிமூலம்பிள்ளை,
அவர்கள் குமாரர் காத்தய்யா பிள்ளையவர்களியற்றியது
புறவஞ்சி மிட்டசனத் தனங்கை காந்தட்
பூவபரஞ் சியையொத்துப் பொலியு மேனிக்
குறவஞ்சிக் கொடிபடர்கொம் பாகும் குன்றாக்
குடிவேண்மே லுவரியினைக் குடித்தோ னும்பா
ருறவஞ்சி மலையிரங்கா துறைவோ நாமென்
றுணருமிய லுறும்வீர பத்ரதீரன்
குறவஞ்சிப் பிரபந்த வமுதைத் தந்திக்
குவலயத்துப் புலவருண்ணக் கொடுத்திட்டானால்.
---------------------------------
உ
கணபதி துணை.
குன்றாக்குடி சிவசுப்ரமண்யக்கடவுள் பேரில் குறவஞ்சி.
குன்றாக்குடிக் குறவஞ்சி.
தோகையடி விநாயகர் காப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பூதலமெ லாம்புகழும் பூதரத்தி லுயர்சிகண்டிப் பொருப்பில் வாழு
நாதரெனுங் குமரகுரு பரன்மீதிற் குறவஞ்சி நவிலக் கங்கை
சீதமதி யரவிதழித் தொடையணியுஞ் செஞ்சடிலச் சிவனா ரீன்ற
காதலனாந் தோகையடிக் கணபதிபங் கயமலர்த்தாள் காப்ப தாமே
பரமசிவவணக்கம்.
எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம்.
மேடமணு கிடபமுற்றோன் மிதுன பாணி
மிசைகடகம் பூண்டுசிங்க மீதூர்கன்னி
யோடுதுலா நறையெனப்பல் லுயிர்க்கு ளோங்கி
யொளிவிருச்சிகந்துலக்கியுலவுந் திங்கட்
குடியைம்பூ வைக்கருப்புத் தனுசி லாரத்
தொடுமகரத்தனையெரித்தோன் றுணைத்தாள் போற்றி
நாடுகும்ப முலைமீனக் கண்ணி வள்ளி
நாதர்குன்றைக் குறவஞ்சி நவில்கின் றேனே.
நாமகள் வணக்கம்.
அறுசீர்க்கழிநெடி லடியாசிரியவிருத்தம்.
புதியமல ரொழுகியதே னதிவழியாய்ப் பழனமதிற் புகுந்து செந்நெற்
கதிரின்முத்த மதியெனவுங் கதிநேம நாட்டுயர்சி கண்டிவெற்பின்
அதிபதியாங் குமரகுரு பரன்மீதிற் குறவஞ்சி யதனைச் சாற்ற
விதிதிருநா வுரைதருபா ரதிபதமென் னிதயமலர் மிசைவைப் பேனே,
அவையடக்கம்.
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
ஓதியபன் னூலணர்ந்தோ ருவகைபொங்கி
மழலையின் சொல் லுவந்துகேட்பா
ராதலினா லென்சொலையும் புன்சொலா
யினுமின்சொ லாமென் றோர்ந்து
கோதகற்றிக் குணம்பொருத்திக் கொள்ளுவர்தள்
ளாரெனவுங் குறித்துப் பானு
சீதமதி சூழ்சிகண்டிச் செவ்வேண்மேற்
குறவஞ்சி செப்பி னேனே.
------------.
தோடையம்.
இராகம் நாட்டை - ஜம்பைதாளம்.
1. தக்கிடதிக்கிடகிடதகதகுர் ததிமி-தகுர் தவென
மிக்கவுநடிக்குமயில்-வெற்பில்வருநீதர்
குக்குடக்கொடிக்குகன்மேற்-குறவஞ்சித்-தமிழ்க்கூறக்
கைக்கயமு-கக்கடவு-ளைக்கருது-வேனே-ஆ.ஆ.ஆ.ஆ.
2. தணத்தண-ஜெணுதஜெணு-தரிதஜெக-தரிதவெனப்
பணவரவின்மிசைநடஞ்செய்-பச்சைமயி-லோன் - மேற்
குணமுலவு-செந்தமிழாற்-குறவஞ்சித்-தமிழ்க்கூறக்
கணபதிபின் - னவனுபய - கழறுதிசெய் - வேனே. ஆ.ஆ.
3. அமணர்களைக்கழுமுனையிலறையவரும் இறைவன்மேற்
றமிழிலிசைக் குறவஞ்சி தழைக்கயான் சாற்றக்
கமுகையொத்த மிடறையுற்ற கன்னிசவுந்தரவல்லிதன்
னிமலர்தே னதியரனை நிதந்துதுசெய் வேனே. ஆ.ஆ.
4. அண்டபகி ரண்டமுக டதிரவுடு வுதிரவிசை
கொண்டுசிறை புடைத்துநி தங் கூவுசே வலன்மேற்
றண்டமிழிற் குறவஞ்சி சாற்றமலைக் கொழுந்தரனும்
எண்டிசைவணங்குமிடும்பேசுவரனுந்துணையே. ஆ.ஆ.
------------------
மங்களம்.
இராகம் நாதநாமக்கிரியை - ஆதிதாளம்.
மங்களமே ஜெய மங்களம் எங்கள்
மாயூரகிரியானுக்கு மங்களம்.
1. துங்கமலை நீதனுக்குச் சொற்றமிழ் வினோதனுக்குச்
செங்கமலப் பாதனுக்கு மங்களம் எங்கள்
சிகண்டிமலை நாதனுக்கு மங்களம்.
2. சத்துருசம் மாரனுக்குச் சங்கரிகு மாரனுக்குச்
சித்திரவில் தாரனுக்கு மங்களம் எங்கள்
சிகண்டிமலை வீரனுக்கு மங்களம்.
3. அன்பர்பா லுரியானுக்கு மசடர்பாற் றரியானுக்குத்
தென்பழனா புரியானுக்கு மங்களம் எங்கள்
சிகண்டிக் கிரியானுக்கு மங்களம்.
4. மருவுமனங்கலையானுக்கு வாய்த்தவெண்ணெண் கலையானுக்குச்
செருவிலென்று மலையானுக்கு மங்களம் எங்கள்
சிகண்டிமலையானுக்கு மங்களம்.
கட்டியக்காரன்வருகிற விருத்தம்.
ததியளை யுண்டதாமோ தரன்றிரு மருகன் றண்டே
னதிபுடை சூழவாழு நற்சிகண் டிப்பொ ருப்பின்
பதியெனுங் குமரமூர்த்தி பவனியெச் சரிக்கைகூறக்
கதிசபை யதனிற் கட்டியக் காரனுந் தோன்றினானே.
இராகம் சௌராஷ்டிரம் - ரூபக தாளம்.
கண்ணிகள்.
1. மாமன் பூமன் காமனும்
வையகத்தோருந்துதி செய்யச்செங் கோல்பெறும்
மாமன் குமரமூர்த்தி
வாசற்கட்டியக்காரன் றோன்றினனே.
2. திட்டமாமுண் டாசுகட்டிச்
செங்கையிற் பிரம்புங்கொண் டதட்டிக்
கட்டழகா னானகெட்டிக்
கட்டியக்காரனுந்தோன்றினனே.
3. மத்தகெஜம் போலேகீசி
வக்கணைப் பேச்சுக்கள் பேசி
கைத்தலவேத் திரம்வீசிக்
கட்டியக் காரனுந்தோன்றினனே.
4. வட்டப்பொட்டிட் டுக்குறுக்கில்
வரிந்து கச்சையிறுக்கிக்
கட்டியே மீசைமுறுக்கிக்
கட்டியக்காரனுந் தோன்றினனே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்,
சிறுமதலை யறுவரெனச் சரவணத்தில்
விளையாடித் திரியுங் காலை
விறலரிசேர தரியரனை வினவவுன்றன்
மதலையென விரும்பிக்கொங்கை
நறவினிய பாலருளி வளர்க்கவருங்
குமரமயி னாகஞ் சுற்றித்
துறவரிமை யவர்மனிதர் யாவருஞ்சூ
ழப்பவனி தோன் றினாரே.
--------------
ஸ்ரீ சிவசுப்ரமண்யக்கடவுளார் மயின்மீதிலேறிப்
பவனி வருகிற தரு
இராகம் உசேனி - சாப்பு தாளம்.
பல்லவி
பவனிவந்தனரே முருகையர்
பவனிவந்தனரே
அநுபல்லவி.
பவனிவந்தன ரவனியுந்தொழ
எவனமங்கையர் நவநடஞ்செய பவனி
சரணங்கள்.
1 செஞ்சொல் வலவரும் விஞ்சையர்களொடு
கஞ்சன்முகிலுமிறைஞ்ச மயிலினில் பவனி
2. தேவரும்புவி யாவருந்தொழ
மாவுறுஞ்சிகி மேவியன்பொடு பவனி
3. பருவமங்கைய ரிருவருஞ்சொன
வுருவெனுங்கதி குருபரன்றிருப் பவனி
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
பிரணவமா கியபொருளை யையன் காதிற்
பேசுமயின் மலைமுருகர் பவனி கண்டு
கிரணதின கரர்கோடி தோற்ற மோவென்
கிளிமொழியார் பலருமயக் குற்று முத்தர
பரணமுலை பிடித்தணைகிலாரோ வென்னப்
பைந்தொடியார் கணத்தினதி ரூபமென்னுங்
கருணைபொழி வதனமோ கினிமிக் கான
காதல்கொடு ஜோதியில கவும் வந்தாளே.
--------------
தரு
இராகம் நாதநா மக்கிரியை - ரூபதாளம்.
குமரகுரு பரன்முருக சரவணோற்பவவென்னுங்
கொண்டாடி யதிகமயல் கொண்டாடிப் பாடி
அமரருல கமருமின்போ லமருவியவிரதி
அதிரூப மோகமா தாசிவந் தாளே.
---------
வேறு தரு
காம்போதி ராகம் - ஆதிதாளம்.
பல்லவி
அதி ரூப மோகி னியும் வந்தாளே
அரிவையி ரதிமத னடியிணை தொழுதிடும் (அதிரூப)
அநுபல்லவி
நிதியார் பணிகள் பூட்டி
நெற்றியிற்றிலகந் தீட்டி
மதிபோல்மு கக்கண்ணாட்டி
மயின்மலை முருகய்யனுயர் திருநாட்டில் (அதி)
சரணங்கள்.
1 கொந் தார்மலர் குழலிற் சூடிக்
குளிர்நவ ரசமொழு கிய மிருது - மொழியுரைக்
குயில்போலினிய ராகம் கூடி
சந்தத கீதம்பாடிச் சரச மயில் போலாடிக்
கந்தி கண்டங்கண்ணாடி
கவுளென வளருமின் னிருதனகிரீடி (அதிரூப)
2 அன்னம் போலே யிலங்கும் நடையாள்
அழகது பெறுவளை நிகர்தரு மிருகன
மார்ந்துவ*ரிசேர் விழிக்கடையாள்
பின்னுங் குழற்சடையாள்பிடிக்கு ளடங்கு மிடையாள்
வன்னத் துகிலுடையாள்
வடிவுன கதலியின் மலியிருதுடையாள் (அதிரூப)
3 தத்தை போலவு மொழி கொஞ்சி
சவுமிய குணநன் னய மிலகிய மதி யெழில்
சார்ந்துதேமல் படர்ந்த நெஞ்சி
சித்தச னுங்கண் டஞ்சித் தினமும் பணியு மஞ்சி
முத்துமோ கனவஞ்சி
முருகய்யர் தனைநித மருவமால் மிஞ்சி (அதிரூப)
விருத்தம்
அந்தா மின்னோ நூலோ ஆரண மோ மருங்க
திந்திர தனுவோ புரூர மெனவினை ஞோர் மயங்கச்
சுந்தரச் சிகண்டி *நாகத் துரைமைய லுறுமின் னாட்குத்
தந்திர முரைக்கும் பிராண சகிவந்து தோன்றினாளே.
---------
தரு
இராகம் மத்தியமாவதி - அடதாளம்.
பல்லவி
சகிமா துவந்தாள் உல்லாச
சகிமாதுவந்தாள்.
அநுபல்லவி.
சகிமாதுவந்தனள் முகில்போலவேவளர்
சிகிநாகமேவிய குகன்வாழும் நாட்டில் சகிமாது
சரணங்கள்.
1 மயிலோ விருவிழி அயிலோ மொழிசெழுங்
குயிலோ குழையிரு வெயிலோவென்றிலகிட (சகிமாது)
2 கடித்தே யனுராகம் படித்தே கனங்குழன்
முடித்தே மலர்ச்செண்டுகைப்பிடித்தேமதிநுதற் (சகி)
3 புகழ்சேர் மயூரநன் னகமீதின் மேவிய
குகன்வாழும் நாட்டில திகரூபமாகிய (சகிமாது)
விருத்தம்.
வந்திடும் சகியை நோக்கி மலர்மடந் தையின் மிக்கான
சுந்தர நிறைந்து வாழுஞ் சுரதவி னோத மாது
கந்தவேள் பவனிகண்டு கனமயல் மிகவுங் கொண்டு
சிந்தையே மயங்கி யிந்தத் தேவரார் சொல்லென் பாளே.
----------
தரு.
இராகம் எதுகுலகாம்போதி-ஆதிதாளம்.
பல்லவி.
இந்தா ஒரு மயின்மிசை வருகிறா-ரிவராரடிமானே.
அநுபல்லவி.
செந்தா மரை மகளுயர் மயின்மலைச்
சேவல னேயென்று பாவலர் துதிசெய்ய (இந்தா)
சரணங்கள்.
1. கருணை பொழி விழியுங் கண்டேமன
முருகுதே யதிமயல பெருகுதே
அருகி லுறையுமிரு பருவ மங்கையருடன்
அதிக மதுரவுரை யிதமொடுபேசி (இந்தா)
2. தித்தித் திருக் குமவ ரிதழுண்ண
மெத்தவு மனதாசை முற்றுதே
சித்தமிரங்கி யொரு முத்தந் தாராரோ வெனத்
தெகிட்டா மயலென் னெஞ்சிற் புகட்டி யிங்கிதமாக (இ)
3. சந்தன மொடு கந்த மணிந்ததி
விந்தைய தாகவ ணைந்திடவே
சிந்தையிலத் தயவுபொ ருந்தா ரோகுன்றைத்
தேசிக னெனப்புவி ராசருந் துதிசெய (இந்தா)
விருத்தம்.
அவரவர் மனத பீஷடம் அருண்மயி னகத்தி லேவாழ்
பவரவர் பவனி கண்டன் பாகிமோ கித்த மின்னாள்
நவரச வினிய சொற்பிரா ணசகியை வினவி வார
திவரெவ ரெனவுங்கேட்கு மேந்திழைக் கியம்பு வாளே.
-------------
தரு.
இராகம் தோடி - ரூபகதாளசாப்பு.
பல்லவி.
மானே யறி யாயோ சொல்லு வேனே இனி நானே.
அநுபல்லவி.
தேனே செறி மாநதி சூழ் குன்றைத்
தேசிக னென்றிந்தக் காசி*னி போற்றுதல். (மானே)
சரணங்கள்.
1 *உருகன் ப*ர்க னருகின் புறு
முருகன் செந்திரு மருக னென்றுநீ (மானே)
2 வேதன் பணிபாதன் குன்றை
நாதன் சிவகுரு நாதனென்று நீ (மானே)
3 வையந் துதி செய்யுங் கும
ரையன் பன்னிரு கைய னென்று நீ (மானே)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
செனலிறைக்குந் தானமொளிர் தண்பணையுந்
தேனதியுஞ் செழிக்க வோங்கிப்
புனலிறைக்கு முகிறவழு மயின்மலைவே/
ளெனச்சகியும் புகன்ற போதே
மினலிடைக்கொம் பனைமயங்கி மயன்மீறி
யைங்கணையால விரைந்து சாடுங்
கனலிறைக்குங் கொடையாகிக்கனலிறைக்குஞ்
செழுமதியைக் கதஞ்செய் வாளே.
-----------
தரு.
இராகம் பந்துவராளி - ஆதிதாளம்.
பல்லவி.
மதியாமலே இங்குவந்தாய் - வெண்ணிலாவே வந்து
மதிமோசம் போகாதே - வெண்ணிலாவே.
அநுபல்லவி.
கதிர்வே லணியுஞ்செங்கைக் கடவுள் சிகண்டிமலைக்
கந்த வேளைநான ணைந்தவேளை யென்செய்வாய். (மதியா)
சரணங்கள்
1 கனலா யென்றனை வந்துசாடுறதுங் குகனைக்
கண்டவு டன்மலைவா யோடுறதும்.
புனலா கியவுனக் கென்னவீம் பிதுசும்மா
பூச்சிகாட்டி யாழமு நீச்சுங் காட்டியிப் போது (மதியா)
2 திங்களாயுலகெங்கும் நிறைந்தாயே - யிப்போ
திங்கென்முன்னே ஞாயிறாக வந்தாயே
நங்கையர்க்கு முகமாகப் பொங்கமுற் றிலங்கியநின்
நன்மதி தனைமறந்து துன்மதியா கவிப் போது (மதி)
3 தரணிபன் போலமா தரைக் காய்ந்தாயே - காய்ந்தந்
தாமாய்க் களங்கமுற்றுத் தேய்ந்தாயே
சரவணோற் பவர்குன்றை முருகர் கனிவாய் முத்தந்
தந்தணைய வரும்போ தெந்தனை யென்செய் குவாய். (ம)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
அலையி றைக்குங் கடல்சுவற வயில்விடுத்தோன்
குன்றைமுர கயன்மேல் மாலாய்ச்
சிலையிருக்கும் புருவமின்னாள் செழுமதியைச்
சினந்துதென்றற றேரைத் தூறிக்
கலைமுனிக்கு மிடமான தாலேயென்
கனதனத்தைக் கருதி யுன்றன்
மலையமென்ன வருகிறையோ மலையமன்று
போவெனவும் வகை சொல்வானே.
------------
தரு
இராகம் தோடி - ஆதிதாளம்.
பல்லவி.
தென்றலேவந்துசீறாதே -யுன்-சேதிநானறியேனோ.
அநுபல்லவி.
நன்று நன்று குன்றை-நாகக்குமரரெந்தன்
நாதராய்வரி-லேதுசெய்குவாய் (தென்றலே)
சரணங்கள்.
1 அகத்தினிலீ டில்லையென்று
மகத்துவங் கொடுவந்தாய் தென்றலே.
தொகுத்துப் புவியோருந்தன்
முகத்தைப் பார்த்துப்பார்த்துத்
தூத்தூவென்ன நிதந் துப்பும்பெற்று நாணாத (தென்ற)
2 காலே நீமதத் தாலேயென்முன்
கடுகிவந்துவந்து முடுகாதே
யேலவேயென தல்குற் கோலவரவுக்குன்னை
இரையாக்கிடுவன்றென்
வரைவாய்க் குடிகொண்ட (தென்ற)
சுற்றிச்சுற்றிவந்து மெத்தச்சினந்து சீறித்
துடுக்காய்மோ துகிறதடுக்காமோ
வெற்றிமயிலேறு முத்தையரெனைக்கூடி
மேவும்வேளையில்வந்துலாவி விடாயாற்றுவாய் (தெ)
விருத்தம்.
மாவுடனே பணியாரந் தருநெடுமால்
மருகன்மயின் மலையில் வாழுஞ்
வேவலன்மே லாசைகொண்ட மோகினிதென்
றலைப்பழித்துத் தேமா வென்னுங்
காவிலுறுங் குயிலேயங் கமிலான்சின்
னத்தொழஞலாய்க் கருதி வந்து
கூவியென்செய் வாய்பெரிய தனம்பொறுத்த
வெனையெனவுங் கூறுவாளே.
------------------
தரு
இராகம் மோகனம்-ஆதிதாளம்.
பல்லவி.
குயிலே உனக்கிந்தக் கொடுமையேது செழுங்--குயிலே.
அநுபல்லவி.
மயிலாகிய குன்றத்தயிலானெனை மரு--வயிலே நீசெய்யும்
பயிலாவதென் செய்யுங் (குயிலே)
சரணங்கள்.
உன்னியுன்னிக் கூவுங்குயிலே கூவி
யென்னப*லனை*க் கண்டாய் குயிலே
சின்னமாக்கினவன் றன்னுடமொழி கேட்டுச்
சினந்து கூவுகிறாயுன் கனந்தா னென்னபோ (குயிலே)
கொடியதிடம் வளர்ந்த குயிலே--இந்தக்
கொடியபுத்தி கற்றாய் குயிலே
துடியாக நீவந்து பிடிவாதஞ் செய்யாதே
சொன்னேன் சொன்னேன் என்னுடன் பகையாதே (குயிலே)
மாமின் சிகண்டிமலைக் குயிலே--குமார
சாமியிதோ வருகிறார் குயிலே
தேமாமல ரோடைந்து பூமாரிபொழி கன்னற்
சிந்தனை வெல்லுமென் சிந்தனை யறியாயோ (குயிலே)
விருத்தம்.
வாலையிலே சூர்தடிந்த சிகண்டிமலைக் குகன்மார்பில் வாழ்க தம்ப
மாலையிலே மாலைவைத்து மாலையிலே மதியாலே மதிமயங் குங்
காலையிலே யிரதமெனக் கடுகியுற்று வருமதனைக் கடுகி மங்கை
வேலையிலே வேலைவிட்ட வேள்வரிலென் செய்வையென விளம்புவாளே
-----------
தரு.
இராகம் சாவேரி--ஆதிதாளம்.
பல்லவி.
மன்மதப்பயலே யென்வல்லமை அறியாயோ
வந்துநிலை நற்பாயோ.
அநுபல்லவி.
நன்மைதருஞ்சிகண்டி யின்மலைச்சிவகுரு
நாதரெனைச்சேர்ந்தா லேதுசெய்குவாய்போடா (மன்மத)
சரணங்கள்.
விற்கரும் பானதென்றன் சொற்கரும் பைக்கண்டு
மிகவுந் தலைகுனியுமே--யென்றன்
நற்கண்சு ரும்பைக்கண்டுன் விற்கண் கருஞ்கரும்பு
நாணுமென் பதைநெஞ்சிற் றோணா தெதிர்வந்தாயே (மன்மத)
குடையாகிய மதியென் சடைநாகங் கண்டுடலங்
குறைந்துமலைவா யோடுமே
கடுகி வருகின்றவுன் படைகளெல்லா மெனது
கணமாம் அல்லாது வேறேகுணமாம் படைகளுண்டோ (மன்மத)
காற்பலத் தேரேறி யார்ப்பரித் தோடிவந்தென்
கருத்தை யுருக்கி நின்றாயே
பார்ப்போ மினிமேற்குன்றை வேற்பர னிங்கேவரிற்
பஞ்சபாணாநீயுங் கெஞ்சவல்லவோ வேணும். (மன்மத)
விருத்தம்.
ஞாயிறெனத் திங்களுறச் செவ்வாயம் புதனத்த
னங்கன் றூவத்
தூயவியா ழங்கைதொடாள் வெள்ளித்தா லத்தினமு
துமுணாள் பெற்ற
தாயுமே ச*நிதமினாள் மயலானா ளென்றுகுன்றைச்
சாமி பாற்சென்
றேயெனது நேயமெலாஞ் சொல்லெனமோ கினிசகிமுன்
னியம்பு வாளே.
-----------
தரு.
இராகம் ஆனந்தபையிரவி--ஆதிதாளம்.
பல்லவி.
தூதுசென்றிப்போதென் சேதியைச்
சொல்வாயே சொல்லச் செல்வாயே
அநுபல்லவி.
பூதம்புகழ் நாதன் சிகண்டிமலைப்
புண்ணிய ரெனுஞ்சுப்பிர மண்ணியர் சமுகத்தில் (தூது)
சரணங்கள்.
விண்மதி யாலெந்தன் பெண்மதி யானது
மெத்த மயங்குதென் முத்துத் துரையவர்
தண்மதி யானனங் கண்மதி யானனந்
தாலத்திற் பாலொடுவைத் தாலத்திலு ஞ்செல்லேனே (தூது)
பன்னீர் கொதித்திடும் வெந்நீ ராகுதே
பாகிலை யுமின்சொல்லாய் பாகிலையு மருந்தேன்
பன்னீர் காங்கொடவள் வெந்நீர் தடவிலப்
பைந்தொடிக்கு மாரனம் பைந்தொடிக லில்லையென்று (தூது)
சங்கம லைகடல்மு ழங்கம லைவாகிவி
தனத்தழுந் துமென்னிரு தனத்தழுந் திச்சேரவே
செங்கம லைவளருந் துங்கம லையுயருஞ்
செவ்வேளைக் கண்டுஇவ் வேளைத ருணமென்று (தூது)
விருத்தம்.
கதிசுரபிக் குலங்களைத்திண் குவடெடுத்தங் கனந்தடுத்துக்
காக்குங் கோவும்
விதிசுரருந் துதிகுமார்க் கிவையுரைத்தந் தார்கொணர்வை
மின்னே யென்னும்
மதிசுரத மோகினிசொற் படிசகிசென் றனள்பின்மயி
லசலத் தோங்குந்
துதிசுரசங் கிதநடனத் தொருகுறமின் வருகிறசுந்
தரஞ்சொல் வேனே.
---------------
அகவல்.
சிலையென மேருச் சிலையினை வளைத்துங்
கலையெனப் புலியுரி கவின்றரப் புனைந்
வெள்ளியங் கிரிமிசை மேவி யுமையுடன்
உள்ளியங் குவகை யொடுவீற் றிருக்குங்
காலையி னுமைதங் கணவனைப் பணிந்தோர்
பாலக னினிது பாலித் துலகின்
முத்தொழி லியற்று முறையருள் செயுமெனச்
சத்தியிற் பாதிதனையொரு பாகம்
வைத்தொரு பங்கை மகவுரு வாக்கி
வீரிய புயபெல விசாகன் குகனெனப்
பேரிவை புனைந்திப் பெரும்புவ னங்கள்
சிருட்டி முதலவாஞ் செய்வினை யைந்துந்
தெருட்டி நடாத்தெனத் தென்கயி லாய
நகத்திடப் பாலோர் நல்லகந் தகிரி
யக*த்துறை யென்றே யருளிவா கனமாய்
மயிலொன் றருளவும் வரமிவை பெற்றே
அயிலவ னினிதாங் கமர்ந்துலகத்தில்
யோகநீர் வாக வுசிதராய் மன்னுஞ்
சாகத் தீவிற் றனியர சாளுஞ்
சூரன் முதலிய துணைவர் மூவருந்
தீரமாந் தவசு செய்திட வென்றே
காஞ்சி வனத்திற் கனதவம் புரியும்
வாஞ்சையை நோக்கிய வாறிது வெனவு
மாலு மயனு மயிலிடம் வழுத்தச்
சீலமார் குகனைச் சிகண்டியு மிறைஞ்சி
யென்னரும் பதவி்க் கிடறுறா வாறு
நின்னருள் யான்பெற நீசெயென் றிரப்ப
நன்றென விரங்கி நாதன் கருணையாய்க்
குன்றன புயச்சூர்க் கொற்றவர் தம்மை
வரவழைத் தருகினில் வளர்பத மளித்திட
நிருபரு மந்நெறி நிலவுறு நாளையில்
அண்டவா பாணனவ் வரசரை நோக்கிக்
கொண்டன்மே னியனுங் குலவு வேதாவும்
சேந்தன் வாகனஞ் சேவற் கொடியென
வாந்தகை பெறவென வாசைமீக் கொண்டு
நீருனும் பதவியை நீக்கினா ரெனவுஞ்
சூரரும் வெகுளிநெஞ் சுடையரா யுறுநாள்
அரியயன் கயிலைவா ழண்ணலை யிறைஞ்சியக்
கிரியினார் குகன்மருங் கெய்திவி சாகன்
தேசிகங் கண்டு தெரிசனை புரிய
வாசலி னவரவர் வாகன நிறுத்திச்
சன்னிதி புகவுஞ் சமயமி தென்றே
யுன்னியே கபட வுபாயம தாக
அசுரர்கண் மயிலிடத் தன்னமுங் கலுழனும்
புஜபெலம் பேசுதென் புகலச் சிகண்டியுஞ்
சினத்துட னெதிர்ந்து செயகரு டனையும்
அனைத்தையும் விழுங்கிய தறிந்துவி சாகன்
வெகுண்ட சுரன்றனை மேதினி யதனிற்
றகுமுன் பிறவியாய்த் தானமை யெனவிச்
சாபமீய்ந் தெழின்மயில் தன்னையும் வெகுண்டு
நீபடி மீதி னிலவிய பாண்டி
தேச மதனிலே செழித்தபன் னான்கு
வாசமாந் தலங்களின் வளந்தரும் புத்தூர்
அடுத்த குணதிசை யார்ந்தயோ சனையின்
அடுத்தடுத் தரசவா ரணியத் துனது
மீதுநா முறைகவோர் வெற்பென வாகுதி
போதியென் றுரைப்பவப் போதினிற் போந்தே
மாதுறத் தோன்றிய மயூரமா மலையான்
பாற்கட லமுதினும் பார்க்கவின் னமுதந்
தீர்க்கமாய் நிறையுந் தேனா றுடையான்
பூத்தடங் குடையும் பூவையர் முகத்தின்
காந்தியை மதியெனக் கமலங்கள் குவிதரக்
கொங்கையை நாணிக் குவிந்து கொழுகுதென்
றங்கதை நகுதல்போ லாம்பலு மலர
அளியெலாம் வனிதைய ரானனங் களையே
நளினமென் றேமன நாடிவந் தார்ந்திட
நாசியைச் சம்பக நம்பகை யிதுவென
யோசனை யாய்வெருண் டோடியே பூங்கா
வடவியிற் புக்கியம் மலர்மேல் வீழ
மடலுறு மலர்த்தேன் வழிந்ததி னுடனே
மிகுந்துவா னரங்கள் விசையுடன் குதிகொளத்
தகர்ந்திடுங் கனிகளிற் றங்கிய நறவு
நித்தமுங் கழனியி னிறைவுறப் பாய்ந்து
நித்திலங் கொழிக்கு நேமநன் னாடன்
நிலவுபன் மணிக ணிறைத்திழைத் திடுவா
னுலவுமா டங்களி னொளிபரப் புதலைக்
கதிரோன் கண்டிது மதியோ வெனவும்
மதியோன் கண்டிது கதிரோ வெனவும்
சோபிதமான சுவணவெற் போவெனக்
கோபுர முந்திகழ் குன்றைமா நகரான்
அஷ்டகெஜ மெட்டுநிலை விட்டுவீ றிட்டுவாய்
விட்டல றிடக்குமுறும் வெள்ளைவா ரணத்தான்
அணிகழ லடியி னானடஞ் சேடன்
மணிமுடி மிசைபுரி மாமயிற் பரியான்
தடப்பந் தார்முலைத் தையலார் மயல்கொளுங்
கடப்பந் தாருரங் கமழ்தர வணிந்தோன்
அகமதிற் கனிவுற் றடிதொழு மனத்தார்
செகமயக் கிருளைச் சிறையினா லடித்துக்
கனகுரற் கூவிக் கதிதரு ஞானத்
தினகரன் காட்டிய சேவற்ப தாகையான்
கொண்டலிடி யேறெனக் குமுறியே சதமகன்
அண்டமுஞ் செவிடிட அதிருமும் முரசான்
நெஞ்சிற் சடாட்சர நினைந்துசற் றுந்தொழா
வஞ்சரைக் காலர்கை வசஞ்செயா ணையினான்
தீதுசெய் சமணரைத் தென்மதுரை தன்னிலே
வாதினால் வென்றருள் மயூரகிரி நாதன்
உரைநற் றமிழ்க்கவிஞ னுக்குருகி வேலினால்
வரையைத் துளைத்திடு மயூரகிரிநாதன்
படிமீது பொங்கிவரு பாவையுஞ் சுவறவே
வடிவேலை யேவிய மயூரகிரி நாதன்
அழல்விழி தரும்பொறிக ளாறெனப் பொய்கையினின்
மழலைவடி வாகிய மயூரகிரி நாதன்
கலையினுயர் தமிழிலக் கணமுரைக் கவும் வழியை
மலையமுனி வர்க்கருண் மயூரகிரி நாதன்
மதிபருதி திசைமாறி வரினுமுரை வழுவாது
பதியரிச் சந்திரபூ பதியை நிக ராகவுஞ்
சேடன்முடி கிடுகிடென் றாடவெழு துகள்வான
மூடவுமி ரவிமாவு மோடவழி யிலதா
யுறத்தணத ணத்திமித தர்ச்செணுத செணுதசெணு
தத்திமிதிதிமித திமிதவென நிர்த்தமொடு வெற்றிகொடு
தாவியே வீரமொடு லாவியே சேணுலவு
வான்றருக் குலமவைக ளீன்றநற் கனிகள்பல
தான்றகர்த் ததனிலிழி தேன்றிரைப் புனல்களென
வுஞ்சொரிய மிஞ்சியே யஞ்சிலர்கள் கெஞ்சவே
தரியலார் மகுடமுடி தவிடுபொடி யாகவே
பரிநடாத் தியசெய பராக்கிரம சாலி
வங்கர் கலிங்கர் தெலுங்கினர் கொங்கணர்
மகதர்கள் குகுதர்கள் புகழ்தரு செகதல
மன்னிய வரசரு மின்னிய திறைசெய
மாபுரிசை சூழ்குழந் தாபுரியின் மேவியாபிர
தாபமத ரூபகிரி தீபமென வேபிரபல
மிகுநமசி வாயமுகின் மகனெனவு மேன்மைபெறு
செகதலந ராதிபதி சுகுர் தகுண சாலநிதி
மேதினியை யாளுமொரு வேண்முத்து விசையரகு
நாதக்க வுரிவல்ல வப்பெரிய வுடையார்வ
சீகரசு பாகரசு சீகரகு ணாகரன்
செங்கோல்பெ றுங்கனக சிம்மாச னதிபுகழ்
மங்காம லுயர்முத்து வடுகநா கேந்திரனருள்
போசனென வருமெங்கள் போதகுரு சாமிமக
ராசனுக் கருள்புரிம யூரகிரி நாதன்
கல்வியறி வாகமக் கட்டுறுநி தானமும்
நல்வகைப் பயனைநிதம் நாடியமெஞ் ஞானமும்
தன்மமே ஜெயமென்று சார்ந்தசிந் தனையும்
நின்மலர்ப தாம்புய நினைக்கும்வந் தனையும்
புனிதமுங் கனமும் பொருந்தி யெஞ்ஞான்றும்
நனிதரு திருவண் ணாமலை யாதின
சைவசித் தாந்தமா தவநிறைந் திலகுந்
தெய்வசி காமணித் தேசிகர் வரன்முறை
பெற்றமெஞ் ஞானசுப் பிரமணிய ரென்னு
நற்றவ குருவையெந் நாளும் பணிகுவோ
னங்கயற் கண்ணாட் கதிமோக நாதனென்
சங்கர னிதமுந் தழைக்குங் கூடலும்
யோகம் பிரியா ருளத்திற் குடிகொளும்
பாகம் பிரியாள் பதிமங்கை பாகரும்
மீனிற் பொலிவிழி மெல்லிய லென்னுந்
தேனிற் பொலிமொழி தேவுக்ர நாகருங்
கால வடுகக் கடவுளு மயிலார்
வேலணி யுங்கர வேளுமெந் நாளும்
நம்பிரா னென்னவிந் நானிலந் தொழவளர்
தென்பிரான் மலையெனத் திகழ்சிவஸ் தலமும்
அவகாமி யந்தனை யகற்றிஞா னந்தருஞ்
சிவகாமி யம்பிகை திருத்தளிம கேசரும்
நயனனு தலைவயி ரவமூர்த் தியுமுயர்
செயமிகு புதுவையுஞ் சிவதரும புரியுஞ்
செங்கதிரை நிகர்வேல் சிறக்குங் கரத்தண்ணல்
துங்கமலை யுடனெழில் துலங்குதே னாட்சிவாழ்
தலமுடன் சீருலவு சதுர்வேத மங்கையெனு
மிலகுதல முடனே யிசைந்தவெழு தலமுமேன்
மேலுந் தழைத்திடவு மேன்மைபெறு மதிகார
சீலந் தரித்தருள் சிவக்ஞான போதகன்
ஆழிசூ ழுலகின்மீ தார்குன்றை நகரினும்
ஊழிதொறு மழிவிலா தோங்குபுகழ் புண்யநிலை
நிற்கட்டு மென்றே நினைத்தல்செய் தெழில் குலவு
கற்கட்டுமடமுங் கவின்றரப் பிரதிட்டை
செய்சபா பதிமுனி மதிக்குமதி யூகியாய்
மெய்வசன விஸ்தார வேலாயு தேந்திரமக
ராசரிஷி தானுமெந் நாளுந் தழைத்தோங்கும்
வாசற்க விஞனென வரிசைபெற் றுயர்மகிமை
நித்தமும் பெறுவாணி தாசனென வருவீர
பத்திரக் கவிஞன் பகர்ந்தகுற வஞ்சியின்
பாமாலை சூடியருள் பாலிக்கு நீதன்
மாமாலை யன்றொழு மயூரகிரி நாதன்
பனுவலைப் பாடிப் பரிவுட னாடிக்
கனமலர் சூடிக் கவிழ் கண்ணாடி
கக்கத் திடுக்கிய கனகுறக் கூடையுஞ்
சிக்கென மருங்கிற் சேர்த்த பட்டாடையுங்
கண்டார் கழலும் வண்டார் குழலுங்
கரும்பு ருவமுறு கரும்பு ருவமுங்
கரியின மருப்பைப் பெரியபொ ருப்பைக்
கதிர்பொற்கு டத்தை மதன்மகு டத்தைக்
கஞ்சநற் போதை வஞ்சகச் சூதைக்
கைத்தா ளத்தைக் கடிந்திடங் கொண்டு
பணைத்துத் தடித்துப் பருத்துக் கனத்துத்
துணைக்கச் சணைத்துச் சுவர்க்கமெனு நாமமதை
யேந்திய தனத்தி லிலங்குமுத் தாரமும்
மாந்தர்கள் தொடரும்வசனவிஸ் தாரமும்
ஆலிலை யெனவும் மைந்தவு தரமுஞ்
சாலவே பவளந் தனைநிக ரதரமும்
அன்னமென் னடையும் அரம்பைநேர் துடையும்
பின்னலார் சடையும் பிறங்குதுகி லுடையுஞ்
செவியினிற் குழையுஞ் செங்கா வளையும்
நவமணி யிழையும் நன்முகக் களையுஞ்
சங்கிணை களமுஞ் சசிவகிர் குளமும்
அங்கச னுளமு மாசைகொள் வளமும்
நிதம்பப் பணமுங் நிறைசற் குணமுங்
கதம்ப மணமுங் கனககங் கணமுஞ்
சன்னையும் பயிலுஞ் சாற்றுரைக் குயிலும்
வன்னமெய் மயிலும் மனங்களிப் பொயிலும்
பாடகச் சரணமும் பானுவின் கிரணமும்
ஈடிலா பரணமும் எவரந்தக் கரணமுங்
கண்டுகுறி விண்டு காமனை வெகுண்டு
பண்டரு மிரண்டு பார்வைவரி வண்டு
காலிற்சி லம்பு கலகல கலெனப்
பாலத் திலகம் பளபள பளெனத்
தங்க வணிகள் தகதக தகெனக்
குங்கும கெந்தங் குமுகுமு குமெனச்
சேகுசெந் தரிசெக தரிசெக தரியென
லாகுகொண் டேயபி நயத்துட னடித்துச்
செயங்கதிர் குன்றைச் செவ்வேண் மயலால்
மயங்கிட வஞ்சி மனத்துய ராற்ற
வெயின்மலி பொன்னின் மேருவை நிகரும்
மயின்மலை வருகுற வஞ்சிவந் தனளே.
அகவல் முற்றிற்று.
--------------
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பணங்காட்டி யாடரவக் கொடியவிட
மெனச்சீறிப் படரே கூறிக்
கணங்காட்டிப் பொருசூரை வென்றகுன்றைக்
குகனாட்டிற் கனகக் கொங்கைக்
குணங்காட்டிக் குயில்போலுங் குரல்காட்டிக்
குயினேருங் குழலுங் காட்டி
மணங்காட்டி யிரதிக்கு மணங்காட்டி
குறவஞ்சி வருகின்றாளே.
-------------
தரு.
இராகம் கலியாணி-அடதாளசாப்பு
பல்லவி.
வஞ்சிவந்தாள் மலைக்குற வஞ்சிவந்தாள்
அநுபல்லவி
அஞ்ச லெனத்தினஞ் செஞ்ச ரணைத்தொழு
மண்டர்க் கருளஞ்சி கண்டிக் குமரய்யன்
ரஞ்சி தக்கன மிஞ்சு புகழெழில்
நாட்டு நேமநன் னாட்டி லேகுற (வஞ்சி)
சரணங்கள்.
நத்து மிளைஞர்கள் நத்து மழகுள்ள
சித்திர முலையும்வி சித்திரமே
கத்தி லுயரள கத்தின் மலர்கண்
முடித்தி னிதொடு நடித்து வேடுவர் (வஞ்சி)
கண்ட தரமொடு கண்ட சரமது
கண்ட வர்கள் பிரமை கொண்டிடக்
கொண்டல் நிகரெழில் கொண்டு வளருசி
கண்டி யுயர்வே தண்ட னைத்தொழும் (வஞ்சி)
கந்த முலவுசு கந்த வாடைமி
குந்து வீசுமு குந்தனார்
சந்த தியெனும்வ சந்த னணிமகு
டந்த னைநிகர்கு டந்து லங்கவும். (வஞ்சி)
-----------
வேறு தரு.
இராகம் நாதநாமக்கிரியை--ஆதிதாளம்.
பல்லவி.
வஞ்சியும் வந்தனளே--மலைக்குற
வஞ்சியும் வந்தனளே.
அநுபல்லவி.
மஞ்சுலவுஞ்சிகண்டி மலைமுருகையனித மிலகிய நாட்டில் (வஞ்சி)
சரணங்கள்.
கொங்கைக் குடங்களசைந்தாட மதுவையுண்டு
கொண்டை வரிவண்டுகள் பாட அழகைக்கண்டு
அங்கசன்பணிந்தோட அதிக மயலிளைஞர் மதியினில் நீட (வஞ்சி)
அத்தர்கதம்பங்களும்பூசி யின்னாரையெல்லாம்
அம்மேயம்மேயென்றுபேசி
நித்தம்புகழுங்காசினியிலுய ரரிவையரி லுமக ராசி (வஞ்சி)
முல்லைமுகையைந கைவெல்லக் கஞ்சமுறைநான்
முகனோதிமம்போலவுமெல்ல நடைநடந்து
அல்லைநிகருநல்ல அளகமின் னார்மனத் துள்ளகுறி சொல்ல (வஞ்)
விருத்தம்.
பெருகுறி வெண்ணையுண்ட பிறான்றிரு மருகனன்னா
ளொருகிர வுஞ்சவெற் பையும் பொடி படுத்தும் வேலான்
முருகுறு கடம்பன் குன்றை முருகய்யன் புகழைப்பாடி
வருகுற வஞ்சிசெவ்வேள் வாசலின் வளஞ்சொல்வாளே.
--------
தரு
இராகம் அசாவேரி--அடதாள சாப்பு.
பல்லவி.
வாசலிது வாசலிது வானவர்க்கு மேன்மைதரும் (வாசலிது)
அநுபல்லவி.
தேசுலவுஞ் சிகண்டிமலை செழிக்குஞ் செவ்வேண்முருகர்
நேசமுட னெந்நாளும் நிலவுமணி வாசலிது (வாசலிது)
சரணங்கள்.
பிரணவமந் திரப்பயனின் பெருமைதனே நிருமலர்க்குக்
கருணையுடனுரைத்தருளுங் கடவுளுறை வாசலிது (வாசலிது)
முத்தமிழைத் தென்பொதிகை முனிக்குவரும் படியுபதே
சித்தருளுமெங்கள்குரு தேசிகனெந்நாளும்வளர். (வாசலிது)
பாண்டவர்கள் பகைதடிந்து பாராளச் செய்யவருள்
ஆண்டவன்சி கண்டிமலை ஆறுமுகன் வாசலிது. (வாசலிது)
விருத்தம்.
மாதிவள மோதிவர மயின்மலைவா ழயிற்கரன்மேல்
மயல்கொண் மின்னா
ளேதிவள மோதியதா ரெனமகிழ்ந்து கண்ணுற்றி
யார்நீ பெண்ணே
சோதிவள ராறுமுகத் தோன்றல்புகழ் சொற்றாயே
துலங்கு முன்றன்
சாதிவளம் யாதறிய நீதிவழு வாதபடி
சாற்றென் றாளே.
வசனம்.
அகோ வரராய்பெண்ணே நீயானால் மயூரகிரிவாசகருடைய
பெருமையைக் கூறிவந்தாயே நீயோ தேவரம்பைபோல யிருக்
கிறாய் நீயார் உன்னுடைய சாதியென்ன நன்றாய்த் தெரியும்படி
சொல்லுவாய் பெண்ணே.
ஆனாலென்னுடைய சாதிதெரியும்படியாய்ச் சொல்லுகிறேன்
கேளடியம்மே
---------
தரு.
இராகம் முகாரி--ஆதிதாளம்.
பல்லவி.
சாதி யெங்கள்குறச் சாதி யேநல்ல சாதிமற்றரை விசாரி.
அநுபல்லவி
பாதிமதிநுதல் மாதொரு பாகன்றன்
பாலரெனுங் குன்றை வேலரைப்போற்றிய (சாதி)
சரணங்கள்.
மறையவர் சாதியைப் பார்த்திலடி லவர்
வாணியச் சாதியிற் சேர்க்கையாம்
இறைவர்கள் சாதியைப் பார்க்கிலார்க்குமே
லாதவச் சாதியென் றேற்றுவா ரம்மே. (சாதி)
அடவுடன் காராளர் சாதி யஞ்சாலி
அறுத்தறுத் துடன்கட்டுஞ் சாதியாம்
படியிற்கோ வசியர்கள் சாதி தான்மெத்தப்
பட்டிக் குலமிகுத்த சாதியாம் அம்மே. (சாதி)
தரணியில் வணிகர்தஞ் சாதி யாருக்குந்
தனங்காட்டி விலைபேசுஞ் சாதியாம்
திரமாக ஆராய்ந்து பார்த்தி டிற்சூத்
திரச்சாதி கடைப்பட்ட சாதி யாமம்மே (சாதி)
யெந்தன் சாதிக்கிணை யெந்தச் சாதியாகிலு
மீடென்று நீநினை யாதே சிவன்
மைந்தரெ னவேவந்த மாயூரகிரிச்சுப்பிர
மண்ணியர்க் குரிமையுடன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் (சா)
விருத்தம்.
போரினிற் கதிரொளித்த புசபெலன் மருக னீபத்
தாரினைத் தரித்தோன் குன்றைச் சண்முகக் கடவுள் நாட்டிற்
காரிய விதமாய்ச் சாதிக் கனமுரைத் தருளும் வேட
நாரியே யுங்கள் சாதி நடத்தையைச் சாற்றுவாயே.
வசனம்.
அகோவரராய் குறமகளே உன்னுடைய சாதிவளங்கேட்டு
மகாசந்தோஷமாச்சுது உன்சாதியினுடைய நடத்தையைச்
சொல்வாய் குறமகளே.
ஆனால்ச்சொல்லுகிறேன் கேளடியம்மே.
----------
தரு
இராகம் நாதநாமக்கிரியை--ஆதிதாளம்.
கண்ணிகள்.
சாதிமுறைசொல்லச்சொல் றாயம்மே-யினிச்
சாற்றுறேன் சாற்றுறேன் கேளடி நீயம்மே (அம்மே)
ஆதியாந்தெய்வக்குறச் சாதியம்மே-வேறே
யார்க்கும்வ ராதெங்கள் நீதியம்மே (அம்மே)
கூடைதெத்திக்குறம் படித்திடுவோ-மெங்குங்
குடியிருக்கக்குடிசி லடித்திடுவோம். (அம்மே)
சாடையிலேகொன்னிப் பேசிக்கொள்வோம்-மெங்கள்
சாத்திரத்திலார்க்குங்குறி பார்த்துவிள்வோம் (அம்மே)
கறுத்தச்செவத்தவெள்ளைத் தினைவிரைப்போம்-காக்கை
கழுகுதின்னும்வேடரை யிழுக்குரைப்போம் (அம்மே)
குறத்திபுளிக்குடிக்கக் குறவனையே-மருந்து
குடிக்கச்சொல்வோமடி கொம்பனையே (அம்மே)
பின்னொருசாதியிலும் பெண்ணெடுக்கோ-மெங்கள்
பெருமையறியாரிடத் துரைகொடுக்கோம் (அம்மே)
யின்னமெங்கள் முறைசொல்லி முடியாதே-கும
ரேசர்மீதினிற்கொண்ட ஆசைமாதே
விருத்தம்.
ஒருமலைவுமனதிலுறா வசுரனடுங் கிச்சூத
வுருவா யோசை
தருமலையும் பலமணியுந் தவழ்பரவை யிடை முளைக்குஞ்
சரிதை கண்டு
செருமலையுஞ் சிகிநகவே ணாட்டிலுன்சா திமுறைசொற்றாய்
தினம்நீ கண்டு
வருமலையின் பெருமையுநின் மலைவளமுங் குறமயிலே
வழுத்து வாயே.
வசனம்.
அகோ வாராய் குறமகளே உன்னுடைய சாதிநடத்தை
கேட்டு மகாசந்தோஷமாச்சுது நீயறிந்தமலையும் அதினுடைய
வளங்களையுஞ் சொல்லிக்கொண்டு வருவாய் குறமகளே.
ஆனால்ச்சொல்லுகிறேன் கேளடியம்மே.
மலை வளப்பம்.
-------------
தரு.
இராகம் கேதாரகௌளம் ரூபகதாள சாப்பு.
பல்லவி.
எந்தன்மலைக் கிணைசொல்மலை-எந்தமலை யம்மே.
அநுபல்லவி.
மந்திரச டாட்சரசி வாநந்த பரிபூர்ண
சுந்தரச்சி கண்டிமலைச் சுப்பிரமண்ணிய சுவாமிவளர் (எந்த)
சரணங்கள்
தினகார்ம தியும்வலஞ்செய் கனகமலை யம்மே-ஒரு
தென்னன்செண்டி னாலடிக்கச் சிதறுமலை யம்மே
கனகதித ருங்கயாலா யநகமலை யம்மே அது
காரணமாங் கொஞ்சமதிக் காரன்மலை யம்மே-யம்மே (எந்த)
அருணகிரி யெனுநாம கிரணமலை யம்மே-அது
அன்னமறி யாதுமலை வானமலை யம்மே
கருமுகிலூ ருங்கடோ ரகிரிவளங்கே ளம்மே-அது
கலைமுனிக்கம் மணக்கோலங் காட்டுமலை யம்மே யம்மே (எந்த)
இந்நிலத்திலே யுயருங் கன்னிமலை யம்மே அதில்
எந்நாளுங் கோளர்குடி யிருக்குமலை யம்மே
வன்னமுள்ள பன்னுதமிழ் வல்லமுனி வாழ்பொதிகை
மால்வரையை யெல்லோருங் கால்வரையென் றுரைப்பாரம்மே (எ)
வாலமதி தனைக்குழந்தைக் கோலமதிக் கயந்தனரு
மருப்பைநிக ராகுமென விருப்பமொடு சாடும்
சீலமதி மானினங்கள் சாலமதித் தேரூர்ந்து
செழுமானைத் தங்களுட குலமானென நாடும் ( எந்தன்)
அகத்துணினைத் தவர்பவங்க ளகற்றுமலை யம்மே உயர்
அண்டரர்முனி வோர்கள்துதி கொண்டமலை யம்மே
அகத்தியர்க்கு மகத்துவமிகும் அரியதமிழ்தெரியச் சொல்லும்
அய்யனெனுந் துங்ககிரி அய்யன்முரு கய்யன்வளர் (எந்தன்)
விருத்தம்.
அங்கக னவரைவாட்டு மசுரரை யயிலான் மாட்டும்
இங்கிதக் குகன்மாயூரத் தெழினமலை வளங்கள்கோட்டுக்
கொங்கைநீ நவிலக்கேட்டுக் குளிர்ந்தனன் குறவர்வீட்டு
மங்கையே யுந்தனாட்டு வளஞ்சொல்லிக் காட்டுவாயே.
வசனம்.
அகோவராய் குறமகளே உன்னுடைய நாட்டுவளஞ் சொல்
லுவாய் குறமகளே.
-----------
தரு.
இராகம் மோகனம்-சாப்புதாளம்.
பல்லவி
எங்கள்நேமநாட்டுவளம்போ-லெங்குங்காணேணம்மே
அநுபல்லவி.
செங்கமலை மேவிவளர் துங்கமலை வேலருயர் (எங்கள்)
சரணங்கள்.
கோதெனவு மோதுவது மாதருட ஓதியைச்
சூதுபொரு மென்பதுப யோதரடி யம்மே (எங்கள்)
முண்டகத்தை யண்டியுற்ற வண்டரன்றியேதுட்ட
மிண்டகத்தின் வண்டரில்லை விண்டலத்தினும்அம்மே (எ)
அரும்பொருளைக் கன்னமிட விரும்புவரல் லாலொருவர்
பெரும்பொருளைக் கன்னமிட விரும்புவரில் லையம்மே (எங்)
சேற்றுறுக வலையன்றி வேற்றொருக வலையில்லை
நாற்றிசையும் போற்றியதே னாற்றினெழி லேபுடைசூழ் (எ)
விருத்தம்.
அமத்தியே வானோரஞ்ச லாற்றிடும் பொருப்புத் தம்பாற்
சுமத்திய கையன்குன்றைச் சுப்பிரமண் யேசர்நாட்டிற்
சமத்துரைத் தனைநீகண்ட தலமுணர்ந் தவையெல்லாமோ
திமத்தியல் நடையாய்வேடச் சிறுமிநீ யியம்புவாயே
வசனம்.
அகோவாராய்குறமகளே உன்னுடைய நாட்டுவளங்கே
ட்டு மகாசந்தோஷமாச்சுது நீயறிந்துவந்த தெய்வஸ்தலங்களை
யெல்லாம் சொல்லுவாய் குறமகளே.
ஆனால்ச்சொல்லுகிறேன் கேளடியம்மே
-----------
தரு
இராகம் பெலகிரி ரூபசாப்பு தாளம்.
பல்லவி.
அறிந்த தெய்வஸ்தலங்க ளதனைக் கேளடி யம்மே நான் (அறி)
அநுபல்லவி.
சிறந்தபுகழ்சேர்குன்றை செவ்வேன்நாட்டம்மேநான் (அறி)
சரணங்கள்.
கனதைதருமபாண்டியிற் கதிக்குங் கூடற்பதியும்
புனிதமுலவுதிருப் புனல்வை குற்றாலமுடன் (அறிந்த)
நீடுபுகழாப்பனூ ரேடகந்திருநெல்வேலி
பாடல்பெறுராமீசம் ஆடானையுடனின்னம் (அறிந்த)
வரங்குன்றா தருள்திருப் பரங்குன் றமுஞ்சுளிகை
சரங்கொண்ட கொன்றைவனத் திரங்கொண்ட புத்தூருடன்
யானைப்பவமகற்றுங் கானைப்பதியுடனே
கூனற்பிறையார்கொடுங் குன்றம்பூவணமுடன் (அறிந்த)
உத்தரகோசமங்கைத்தலமுமறிவேன்
உத்தரதேசத்திலுமுள்ள தலங்களின் யான் (அறிந்த)
குருந்துறையரன்வாசப் பெருந்துறைப்பதியுடன்
திருந்துமாரூர்வேறு தில்லைசீ காழியுடன் (அறிந்த)
இன்னந்தெய்வஸ்தலம னேகமறிவேனம்மே
சொன்னமயூரகிரியென் சொந்தஸ்தலம் அம்மே நான் (அறிந்த)
விருத்தம்.
மிஞ்சிய சமரிற்சூரை வென்றவன் மயினகத்தில்
ரஞ்சிதக் குமரமூர்த்தி நாட்டினிற் குறவர்மாதே
சஞ்சல மின்றித்தெய்வத் தலமுணர்ந் தவெலாஞ்சொற்றாய்
வஞ்சிநின் றலவிசேட மகிமையை வழுத்துவாயே.
வசனம்.
அகோவாராய்பெண்ணே குறமகளே. நீயறிந்ததெய்வஸ்த
லங்களெல்லாங்கேட்டு மகாசத்தோஷமாச்சுது உன்னுடையதெ
ய்வஸ்தலமகிமையை நன்றாய்ச்சொல்வாய் குறமகளே.
ஆனால்ச்சொல்லுகிறேன். கேளடியம்மே.
-------------
தரு.
இராகம் அடாணா--தாளம் ரூபக சாப்பு
பல்லவி.
தலமகிமைசொல்லுகிறேன்கேளடியம்மே.
அநுபல்லவி.
கலைமுனியும்பணியவரு கந்தவேளுகந்தகுன்றைத் (தல)
சரணங்கள்.
அட்டரணசூரருட கொட்டமடக்கியகந்த
சஷ்டியனுட்டித்தோரிடர் விட்டகலநீங்கும் (தலமகிமை)
நித்தமொருதரங்கிரியைச் சுற்றிவலஞ்செய்வோர்பவ
மத்தனையுமகற்றிப்பர முத்திவழிகாட்டும் (தலமகிமை)
மகரமதிப்பூசத்தில ரகரவெனுங்காவடிவ
ருகிறதும்பரிசுகள்வரும் பகரமும்பொற்சிகரமுஞ்சூழ் (தலமகி)
சித்திரமுடன்மீனமதி உத்திர உற்சவத்தில்வரும்
பத்தருளத்திருந்துகன சித்துவிளையாடும் (தலமகிமை)
வீரமொடுகார் நிறமயூரமிதழால்வகிர்ந்த
தீயமதிலாடியவர் கோரவினைதீரும் (தலமகிமை)
அரவணிப்பெம் மானருளவரவணைத்தம்மையுமூவிரு
சிரவணலைத்தருமகிமைச் சரவணப்பொய்கையுஞ்சிறந்த (தல)
நாடியந்தத்தீர்த்தமதி லாடியவர்கோடிசென்ம
நீடியகன்மும்விலகி யோடிநலஞ்சேரும் (தலமகிமை)
சகலபவமோசன சண்முகநதி வையாபுரியில்
அகமகிழ்ந்துமூழ்கினவர்க் கிகபரசாதகமுமெய்தும் (தலமகி)
கனத்தமயில்நகத்திலிருந் தனைத்தையுங்காத்தளிக்குமுரு
கனைத்தொழுதுமனத்திலென்றும் நினைத்தவையெலாங்கொடுக்கும் (தலமகிமை)
விருத்தம்
மின்னிய வயிலாற்சூரை வென்றவன் சிகண்டிவெற்பு
மன்னிய தலத்திலுள்ள மகத்துவ முரைத்தாய்கொஞ்சிக்
கொன்னிய மொழிகள்பேசுங் குறவர்தம் மரபிற்றோன்றும்
மன்னிநீ யறிந்தவித்தைப் பயனெல்லாமியம்புவாயே.
வசனம்
அகோவாராய் குறமகளே உன்னுடைய தெய்வஸ்தலவிசே
டங்கேட்டு மகாசந்தோஷமாச்சது நீயறிந்த சாலவித்தைகளைச்
சொல்லுவாய் குறமகளே.
--------------
தரு.
இராகம் மணிரெங்கு-ஆதிதாளம்
கண்ணிகள்
சாலவித்தை மெத்தவுண்டு கேளடியம்மே-நல்ல
சாதகவித் தையும்ரச வாதமுண்டம்மேயம்மே
மூலிகைத்தொழிலிலெனைப் போலேயாரம்மே-அதை
மூதலிக்க வோவினியென் சேதிபாரம்மே யம்மே
கொக்குச்சினை யிற்குயிலி ருக்கச்செய்கு வேனம்மே
குக்குடமும் வாரணமாகக்கழறுவேன் ஒரு
கைக்குளேழு கடலைய டக்கச்செய்கு வேன் வெகு
காருடவித் தையுமுண்டு பாரடியம்மே யம்மே
வேங்கையுமிங் கேபணிசெய்து தூங்கிடச் செய்வேன்மத
வேழமுந்தும் பியாகவிந் நாளேசெய்குவேனம் மே
பாங்குடனெட்டுவரையுந் தாங்குவேனம் மேஅந்தப்
பச்சிலைமூ லிகைவெகு உச்சிதமம் மே யம்மே
ஆனையிட பமேறவு நானேசெய்குவே னம்மே
ஆமையிற்பா லுங்கறக்க லாமேயம்மம்மே யம்மே
வானமதி லேகிமீள நானறிகு வேனாட்டி
வஞ்சியர்நி னைத்தகுறி யுஞ்சொலுவேனம்மே
சாந்தமாய்ம ழுவைக்கையிலேந்து வேனம்மே எனைத்
தப்பியவித்தையு முண்டோ ஒப்பியம்மே யம்மே
வேந்தர்புகழ் மயின்மலைச் சேந்தனூரம்மே யெற்கு
மிஞ்சிப்பசிக்கிது கொஞ்சங்க ஞ்சிவாரம்மே அம்மே.
விருத்தம்.
தாதைவாய் புதைத்துநிற்பத் தக்கமந் திரங்கன்னத்தி
லோதையன் குன்றைவேலர்க் குரியநாட் டினிலேவித்தை
யாதையுந் தெரிந்துவேட ரகத்தினிற் றுலங்குந்தெய்வக்
கோதையே யெனதுநெஞ்சக் குறிப்பறிந் துரைசெய்வாயே.
வசனம்.
அகோவாராய் குறமகளே நீயறிந்தசித்துவித்தைகளை
யெல்லாங் கேட்டு மகாசந்தோஷமாச்சுது என்மனதிலே நினைத்
திருக்கிற குறியைச் சொல்லுவாய் குறமகளே.
ஆனால்ச் சொல்லுகிறேன் கேளடியம்மே
--------------
தரு
இராகம் கனடா-ஆதிதாளம்
கண்ணிகள்
சாந்துபன் னீர்கலந்து புலுகு-கொண்டு
தரையிற்ச திரமாக மெலுகு
வாய்ந்த சித்திரமாய்க் கோலமிலுகு=மரு
மலர்ப்பந்தற் சோடினையாய்க் கொலுகு
செங்கரும் பாலெங்கணு நிரைத்துக்=குளிர்
செவ்வாழைத் தோகைகளை நிறுத்து அம்மே
தொங்கியகுஞ் சம்போலேமங் கொத்துக்=கொண்டு
தோரணங் கட்டியலங் கரித்து அம்மே
பிள்ளையாரொன் றுமஞ்சளினாலே-நீதான்
பிடித்துமெ ழுகினதின் மேலே
மெள்ளவும்வைத் திடற்கு மேலே-மலர்
வேண்டுமருச் சனைக்கொருக் காலேஇன்னஞ்
சொல்லுறேன்கே ளம்மேபணி யாரம்-வடை
தோசைமுத லாயபல காரம் அம்மே
வெல்லம் அவற் கடலைசிங் காரம்-அதை
மின்னேகொண்டு வந்திடுப சாரம் அம்மே
பச்சரிசியிற்கல்லாஞ்சு பார்திது-குறுணி
பதக்கெள்ளுப் பொரித்தொக்கச் சேர்த்து
இச்சையாய்வெல் லப்பாகத்தில் வார்த்துத் தேங்கா
யினையுடைத் துத்தோடறப் பேர்த்து அம்மே
பொடிப்பொடி யாய்நறுக்கிக் கொட்டு-அவற்
பொரியுங்கொண் டுவாரெண்டு தட்டு
வடக்குவாய்ச்செல்லிக்கும் பொங்கலிட்டுக்-குடத்தில்
மதுவும்வைத் துக்குட்டியும் வெட்டு
நிரை நாழி மீதுவிளக்கேற்றிப்-பசுவின்
னெய்யைவிட்டுக் கொண்டுவந்தால் நேத்தி
குறைவில்லா மலேயென்றன் சாத்தி-ரத்தின்
குறியையறி யலாம் பிரார்த்தி
தாம்பூலந்தக்கணைசாம்பிராணி-யொரு
தாம்பூரத் தகடொன்று பாணி
மேம்புலத் துறுமிந்தி ராணி-கூட
மெச்சுமென் குறிதான்வெகு திராணி
இத்தனையுங் குறையாமல்ச் செய்யே-உந்தன்
இதையத்தி னிலுறுதி வையே அம்மே
உத்தமியே யுந்தனிரு கையே-மன
துள்ளகுறி யெல்லாஞ்சொல்லு மெய்யே
விருத்தம்.
தடவுட னிருதராவி தனைத்திருக் கரத்தின்மேவும்
திடவுடன் பிடியாற்றாக்கிச் சிகண்டிசே வலுமாய்க்கொண்ட
கடவுடன் குன்றைவேடக் கன்னிநீ சொன்னதெல்லாம்
அடவுடன் கொணரந்தேனெந்தன் அகத்துறுங்குறிசொல்வாயே
வசனம்.
அகோவாராய் குறமகளே நீ சொன்னபிரகாரமே சகல
பதார்த்தமுங் கொண்டுவந்து வைத்திருக்கிறேன் இனிமேலா
வது என்மனதிலே நினைத்திருக்கிற குறியைச் சொல்வாய் குற
மகளே.
ஆனால்ச் சொல்லுகிறேன் கேளடியம்மே.
------------
அகவல்
சிவனருள் சுதனே திரிவித மதனே
நவமது ரிதனே நளினபொற் பதனே
திருமரு மகனே திரியம் பகனே
கருமிப முகனே கவுரிதன் மகனே
தெருளுரை மனத்தினிற் சிறந்ததா ரகனே
அருளுரை தோகை யடிவிநா யகனே
அயின்மலை யெனுமுர வசுரர்மேல் விடுத்த
மயின்மலை யினவெனும் வானவர் தொழவுங்
கடாட்சமீய்ந் தன்பர் களைத்தினம் புரக்குஞ்
சடாட்சரப் பொருளாஞ் சரவணோற் பவனே
ஆரணப் பொருள்விசா லாட்சிபங் கினராங்
காரணப்பொருளெனுங் காசிவிசு வேசனே
சவுந்தர வல்லிநித் தந்தய வொடுமரு
வவுந்தர ணியில்வரு மதுநதி யீசனே
சீதரன் சோதரி சிவகாம வல்லிநன்
மாதொரு பாகனென் மலைக்கொழுந் தீசனே
கூளிவே தாளியங் கூர்த்த சூலாயுதக்
காளியெனும் வீரமா காளியங் காளியே
கொட்டமிடு துட்டக் கொடும்பேய்கள் தெண்ட
னிட்டிடு மலர்த்தா ளிடும்பே சுரனே
மாதவ னரனருள் மகவெனத் தோன்றும்
ஆதன மழகிய ரெனுமய்ய னாரே
முக்கியமிகு செஞ்சடா முனியாண்டி யப்பா
உக்கிரமொடு தாணியடி யுறையுங் கறுப்பா
கவுரிச கோதரன் கண்மணி யெனவும்
புவிபுகழ் வேந்தப் புலிக்கறுப் பய்யா
சந்திவீ ரப்பா சமையக் கறுப்பா
*ர சத்தமா தாக்களே
துர்க்கைசா முண்டி சுதினகாமுண்டி
உக்கிரமா காளி ஓங்கார சத்தி
பொம்மகா தேவி பூமிகா தேவி
நம்மகா தேவி நாடகாதேவி
அஞ்சனா தேவி அனுமந்த ராயா
ரஞ்சிதா கோபி ரணவீர பத்திரா
உங்கடம் பாதம் உளத்தில்நான் மறவேன்
மங்கைதன் குறியை வகுத்துரைப் பீரே.
விருத்தம்.
சொலுக்குறு தியராங்குன்றைச் சுப்பிர மணியர்நாட்டிற்
கலுக்குறு வளைக்கையாய்நின் காரியம் செயம்செயம்பார்
சிலுக்குறு மயிற்கூச்சிட்டென் றேகத்தை யெல்லாம்போட்டுக்
குலுக்குறு தெய்வம்வந்துன் குறியெல்லாம் கூறுதம்மே
வசனம்.
ஆனால்ச்சொல்லுறேனடியம்மே.
நீ நினைச்சு வச்சகுறி யெக்குநல்லாய்த் தோணுறு நல்லாய்
த்தோணுறு என்குறி முகத்துத்தெய்வமும் நல்லாய்வந்து முன்
னிக்குறு உச்சுச்சூ உச்சுச்சூ அம்மே அம்மே அம்மே கேளற்றி
யம்மே.
-----------
தரு.
இராகம் கேதாரகௌளம்--ஆதிதாளம்.
கண்ணிகள்.
நீ நினைச்சுவைச்சகுறிதோ ணுது அம்மே
நேமித்தகாரியமெல்லாந் தாமிதமில்லாதே யிங்கே
நிமிஷத்திலேவரக்காணுது அம்மே
யானினிச்சொல்லுறேன் கேளடியம்மே உந்தன்
அதிஷ்டமேயதிஷ்டம்பின்னார்க்குமுனைப்போ லுண்டோ
அவனியின் மாதரிற் செம்மையம்மே
கிச்சுக்கிச்செங்குதேபல்லவியேது யிதின்
கிழக்கேயிருந்தொருபேய்வழக்குஞ்சொல்லிக்கொண்டிதோ
கிட்டக்கிட்டவருகுதிப்போதுசீச்சீ
அச்சமில்லையதினாலேமாதே எந்தன்
அரியமனஞ்சோதிக்கவருதுவந்தால்வரட்டும்
அதினாலென்னபோவொன்றெண்ணாதே
செல்லக்கைவரையள்பார்க்கநீட்டம்மேயுந்தன்
செங்கையிற்கொண்டவரைபோல்மங்கையரிற்கண்டதில்லை
செயஸ்தம்பம் நீயினி நாட்டம்மே அம்மே
வெல்லப் பிள்ளையாரைத்துதி செய்யம்மே நீதான்
விரும்புங்காரியமெல்லாம் வரும்படி யானவகை
மிச்சமாய்ச்சொல்லுதேயுந்தன்கையம்மே அம்மே
சங்குசக்கரரேகை தங்கம்மே இது
தனரேகையுடனேவிற் பனரேகைகண்ட ரேகை
தங்கும்புருடரேகை பொங்கம்மே
இங்குன்கவலையைநீ தீரம்மே நிதம்
எங்கள்குல தெய்வமெனுந்துங்கமலைவேலருனை
இப்போதேயணையவருவா ரம்மே
சந்தேகமில்லையினிப்பாரம்மே யெந்தன்
சாத்திரத்தினேத்தியையிம்மா த்திரைப்போ திலறியென்
சந்ததிக்குக்கொஞ்சங்கஞ் சிவாரம்மே
மைந்தனுச்சிக்கெண்ணையருள் வாயம்மே கொஞ்சம்
வாய்க்குப்பாதிச்சருகுபாக்குப்புகலைக்காம்பும்
வக்கணையாயெக்கித்தினித் தாயம்மே.
வசனம்.
அகோவாராய்அம்மே உன்னுடைய முகக்குறி கைக்குறி
மெய்க்குறியும் பார்க்கிற போதேநீநினைச்சகுறி யெக்குத்தானே
தோணிப்போச்சுறுநீநினைச்சபடிக்குஉன்னுடைய ஆசைநாயகரா
கிய மயூரகிரிச் சுப்பிரமணியக்கடவுளார் உன்னைக்கூடியணையவே
ண்டிக் கிருபைகூர்ந்து சோபனவார்த்தையும் மணமாலிகையும்
இதோவருகுது சுகமேவாழ்ந்து கொண்டிரடியம்மே.
விருத்தம்.
மனதினிலன் பொடுநினைத்த படிமருவ
மயின்மலைவேள் வருவா ரென்றே
தனதொடுதெய் வக்குறமின் புகன்றகுறி
நிலவரமாஞ் சாட்சி யாகக்
கனதையுடன் றூதுசென்ற சகிமாதுங்
கடப்பமலர்த் தார்கைக்கொண்டு
வனிதையெனும் அதிரூப மோகினிமுன்
வந்தினிது வழுத்து வாளே.
----------
தரு.
இராகம் ஆனந்தபைரவி--ஆதி தாளம்.
கண்ணிகள்.
மாதேநின் னுரையின்வழி தூதேகி யான்சென்ற
வகைவிபர மியாவையுமு வகையுடன் சொல்லுவேனே
மாதேவ தேவர்மயின் மீதேறிப் பவனிவர
மையல்நீ கொண்டதுவுங் கைவல்லியங் கண்டேனே
சுபசோப னங்கொண்டு வருகிறேனீயுமுத்துத்
துரைச்சியென்று சொல்வதற்குக் குறைச்சலுமுண் டாமோ
உபதேச குருவாகித் தாதைதனைப் பணிவித்த
உம்பர்பெரு மான்சன்னிதிச் சம்பிரமங்கள் கேளாய்
சீதரன் போலவளச் சிம்மாசனாதிபதி
தென்குழந் தாபுரி செழிக்கவரு நீதன்
பூதலம் புரக்குமெங்கள் போதகுரு சாமியெனும்
பூபதிசெங் கோல்நிதமும் பொங்கமுட னோங்க
ஆதிகொடுங்கிரிமுதல் ஆறுதல முங்கூடல்
அங்கயற் கண்ணிசொக்க லிங்கருடன் வாழும்
ஊதியம தாகிய விழாபூசைக் கட்டளை
உயர்பிரம னூரும்வள மோங்கிடவெந் நாளும்
சைவசித் தாந்தவே தாகமம்வ ழாதுசிவ
சமயபரி பாலன்கிரு பாலகுண சீலன்
தெய்வசிகா மணியென்னுந் திருவணா மலையாதீன
தேசிக ருரைக்குமுப தேசவகை யாலும்
பரதேசி முத்திரையகு தார்விசா ரணைபெறுசு
பாஷிதசு சீலன்வே லாயுத யோகி
திரமா யியற்றுமுய ரதிகார சட்டங்கள்
செயும்படி நடாத்துமுத்தி யோகர்நெறி யாலும்
காலகா லங்களபி ஷேகநை வேத்தியமொடு
கட்டளை வழாதியற்றக் கதிக்குஞ்சன்னி தானம்
மாலயன் முதலினோர் வந்து நிதந்தொழுதேத்த
வரம்வேண்டு வனவருள் மகாசன்னி தானம்
தென்கோடி யாதிபதி தொண்டமா னார்செயுமுச்
சிக்காலக் கட்டளை சிறக்குஞ்சன்னி தானம்
*ன்காம கே**வெனுந் திருப்புனல்வை முதன்மையர்சே
னாபதிக் குருபணிப்ர தாபசன்னி தானம்
கார்த்திகைக்குக் கார்த்திகைபி ரார்த்தனைசெய் வோர்நினைக்குங்
*கருத்தின்வழி யருள்புரியுங் கருத்தன்சன்னி தானம்
மூர்த்திகர மேன்மேலு முக்கியமுட னுண்டாக*
முத்தியடி றார்க்கருள்சண் முகவர்சன்னி தானம்
ச*ன்னிதியின் கை*போக மென்னசொல்வேனினிய
தையலே நீயதிஷ்டசாலியடிமானே
நின்னுடைய மனம்போலு மன்னவர்க்கு மிருந்தமன
வே*சமுமுகவிசு வாசமும் விலாசமுங்கண்டேனே
கண்டுசமை யம்பார்த்துக் கொண்டு நின்னெழில்சொல்வேன்
கருத்தறிந்து முகநோக்கிக் கருணையுட னேரே
வண்டுமது வுண்டுமயல் கொண்டுளருந் தண்கடப்ப
மாலைதந் தாருனைப்போல் மாலையுங்கொண் டாரே
வசனம்.
அகோவாராய் *அதிரூபமோகினிப்பெண்ணே ஸ்ரீமயூரகிரி
வாசகராகிய சரவணோற்பவர், சண்முகர், கார்த்திகேயர், கங்கை
புத்திரரென்னுஞ், சுப்பிரமணியக்கடவுளார் உன்பேரிற் பரி
பூர்ணகிர்பையாய் உன்னுடன் கூடிவிளையாட வருகிறோமேன்று
திருவுளம் பற்றியருளிக் கடப்பமாலிகையுந் தந்தார் வாங்கிவந்
தேன் வந்தேன் இந்தா வாங்கிச்சிரசின்பேரில்த் தரித்துக்கொள்ளுவாய் பெண்ணே.
மகாபாக்கியம் அப்படியேவாங்கித் தரித்துக்கொள்ளுகிறேனடிசகியே.
விருத்தம்.
இவ்விதஞ் சகிமின்கூறி யீய்ந்தனள் கடப்பந்தாரைச்
செவ்விதா மோகினிப்பெண் சிந்தையின் மகிழ்ச்சி பொங்க
*வவ்வியே கண்ணிற்சாத்தி மார்புறப் புல்கிவேட
மைவிழி வஞ்சிக்கான வரிசைகள் செய்கின்றாளே
------------
தரு.
இராகம் பந்துவராளி-அடதாள சாப்பு
கண்ணிகள்.
தூதுசென்ற சகிமின்னாள்-வந்து
சுபசோபனவசனஞ்சொன்னாள்
காதினிலவ்வுசைகொண்டுமுன்னாள்த்-தவங்
கைமேற்பலிதமானதிந்நாள்
என்றுமனதிலின்பக் கண்டாள்-சகி
என்னுயிர்த்துணையாமெனவிண்டாள்
மன்றலார்கடப்பந்தார்கைக்கொண்டாள்-சிரம்
வைத்துமகிழ்ந்தனளமொழிக்கண்டாள்
முத்துவர்ணச்சருகைச்சேலை-ரத்ன
மூக்குத்தியுமோகனம்
அஸ்தகடகமுந்தங்கவோலை-முத
லாபரணங்களும்அன்பாலே
திறமுடனேபுவியிற்பேரே-சொல்லச்
செய்தனுப்பிவள்கனசீரே
குறமினனேகினபின்புநேரேகுன்றைக்
குகன்மங்கையைவந்தணைந்தாரே
விருத்தம்.
மைக்கண்மா தரரைக்* குன்றை வள்ளல்வந்தணைந்துநாளு
மிக்கமா மகிட்சியாக விளங்கிய வளஞ்சேர்நாட்டிற்
பக்கிகள்* பிடிக்குமான *பருவனைப் பிரிவுங்கொண்டு
சிக்கென வேட்டையாடச் சிங்கனுந் தோன்றினானே
--------------
சிங்கன் வருகிற தரு
இராகம் பந்துவராளி-ரூபகதாளச்சாப்பு.
பல்லவி.
சிங்கன் வந்தானே-கெடிக்குறச்- சிங்கன் வந்தானே
அனுபல்லவி.
சிங்கன் வந்தானே துங்கமலைமேவு
மிங்கிதவேலரி லங்குநாட்டிற்குகுறச் (சிங்கன்)
சரணங்கள்.
கச்சைதனைக்குறுக்கினிற்சல்லடத்திறுக்கி
அச்சமறவுறுக்கிமெச்சிமீசைமுறுக்கி (சிங்கன்)
கொண்டைக்கழகாய்க்கெட்டிக் கெண்டையுறுமாற்கட்டிச்
சொண்டுபேசிப்பகட்டிக்கொண்டவையையதட்டிச் (சிங்க)
சிக்குவலையடித்துப் பக்கித்திரள்பிடித்தி
டக்கள்ளினைக்குடித்து வக்கணைகள்படித்துச் (சிங்கன்)
சுரருலகைமதிக்கும் அரசவனங்கதிக்கும்
உரியகுன்றைப்பதிக்கு மரரைநிதந்துதிக்குஞ் (சிங்கன்)
விருத்தம்.
துதித்திடு மன்பர்நெஞ்சிற் றுலங்கிய தீபமாகக்
கதித்திடு மயூரவெற்புக் கங்கையன் வளருநாட்டில்
மதித்திடுஞ் சிங்கனுக்கே வற்றொழில் புரிந்துபாடிக்
குதித்துன்னி நடந்தொய்யாரக் குறப்பயல் தோன்றினானே.
இராகம் சௌராஷ்டகம் -- ஆதிதாளம்.
கண்ணிகள்
(1) சிட்டுத்தட்டுச்சேவற்கூடுங் கையிற்கொண்டு
சிக்கெனக்கொக்குப்பிடிக்கமுக்கூடும்
வட்டமிட்டகண்ணிக்காடுங் கொண்டுசிங்கன்
வங்கணக்குறப்பயல் வந்தனனே.
(2) பதுங்கிஒதுங்கிக்கிடந்து மெள்ளவுன்னிப்
பாயும்புலிபோலெட்டிப்பாய்ந்துநடந்து
மதங்கொள் சிங்கனைத்தொடர்ந்து சொற்படிகேள்க்கும்
வங்கணக்குறப்பயல் வந்தனனே.
(3) பனுக்கிச்சினுக்கிப்பேசிக் காட்டினிலுள்ள
பக்கிவரவுஞ்சன்னை யொக்கக்கீசி
வனக்கண்ணிவலைவீசி வேட்டைகளாட
வங்கணக்குறப்பயல் வந்தனனே
(4) தந்தனச்சங்கீதம்பாடி மயின்மலைச்
சண்முகக்கடவுளரைக் கொண்டாடி
மந்திரத்திலதிமோடிச் சிங்கனுக்கேற்ற
வங்கணக்குறப்பயல் வந்தனனே.
விருத்தம்.
சிகிதனை மலையாய்ச்செய்து சிறக்குந்தே *சிகனச்சார்வா*
சுகிதனக் குதவுநாணாய்த் தொடுத்தவன் மதலைநாட்டிற்
சகிதமாய்ச்சிங்கன்வார்த்தை தவறிடா தியற்றும்பாங்கன்
விகிதமாய் வரவும்வேட்டை மேல்*மனம்*வியம்பினானே.
-------------
தரு.
இராகம் கண்டை - ஆதிதாளம்.
பல்லவி.
பக்கிவருகுதய்யே- கனமோடு- பக்கிவருகுதய்யே.
அநுபல்லவி.
தக்கபுகழ்சேரு மிக்கமயூரகி
ரிக்குமரேசர்த ழைக்கும்நேமநாட்டிற் (பக்கி)
சரணங்கள்.
சொக்குத்திரள்வெகுவாய்த் திரண்டொரு
மிக்கச்சென்றுவிகுவாய்ப் பரந்திதோ
பொக்கனவேநடு வுக்கோட்டைகீழையூ
ருக்குளத்தண்ணீரில் முக்குளித்துக்கன (பக்கி)
நாற்றிசையும்ஓடி யிரைதரு
நீர்த்தடங்கள்தேடிப் பரந்தெழில்
ஆத்தங்குடிவயற் சேற்றில் நடுஞ்சம்பா
நாற்றினெடுங்கயல் பார்த்துமகிழ்ந்தின்னம் (பக்கி)
மண்டிஒருக்காலே அங்கங்குதி
ரண்டுகடற்போலே சாளிவயல்
அண்டையிலும்உய்யக் கொண்டான்சிறுவயல்
கண்டவயலிலுங் கெண்டைகளைத்தேடி (பக்கி)
கட்டழகன்தொண்டமான் உச்சிக்காலக்
கட்டளைக்குத்தினந்தான் அவன்
திட்டஞ்செய்மஞ்சினிப் பட்டிஅரண்மனைப்
பட்டிவயிலிலுங் கிட்டியிதோவெகு (பக்கி)
-------------
வேறு தரு.
இராகம் புன்னாவராளி--ஆதிதாளம்.
பல்லவி.
பக்கிமேயுதய்யே பாரய்யே--மெய்யே--பக்கிமேயுதய்யே
அநுபல்லவி.
தொக்கிலே வேட்டைக்கரிகள்
மொக்கலா மொக்கலாமிதோ (பக்கி)
சரணங்கள்.
திக்கெங்கும்புகழ்சேர்குன் றைக்குடிக்கோயில்பபண்ணைச்
செய்க்குளுல விக்கயற்க ளைக்குதக்கி மொக்கிக்கக்கிப் (பக்கி)
பண்ணுலவியபிச்சைப் பண்ணைவெறியன்வயற்
கண்ணுலாவிய தண்ணிலேதொகை
யெண்ணிலாவகை நிண்ணமீனிலே (பக்கி)
பாங்குலவியசிறு மாங்குடிவயலினி
லோங்கியதன் மீன்களையெல் லாங்கவரு மாங்குருகு (பக்கி)
வேறு தரு.
இராகம் கலியாணி-ஆதிதாளம்.
பல்லவி.
வந்துசேருதய்யே பரவையெல்லாம் வந்துசேருதய்யே.
அநுபல்லவி.
வந்துசேருதய்யே சுந்தரஞ்சேர்துங்க
மாமயுரகிரிச் சாமிநாதர்நாட்டிற்
கொந்துகொந்தாகப்ப ரந்தெழுந்துமீனைக்
கொக்குமொக்கிவிக்கிச் செய்க்குள்க்கக்கித்தக்கி (வந்து)
சரணங்கள்.
கார்த்திகைக்கட்டளைச் சாத்தனேந்தலழ
கானயிடையனேந்தல் மீனைமிகவுமேய்ந்து
சாற்றுஞ்சிவரியேந்தல் சிங்கமங்கைவயலுந்
தழைக்குநெற் குப்பைவயல்விளக்கும்ப ளச்செய்யிலும் (வந்து)
ஓங்குபுகழ்நியமம் ஒகந்தாவயலில்விளக்
கும்பளமிருமா நிலம்புகுந்துபல
வான்குடிச்செங்கணி வயலில் த்திருவிளக்கு
மானிய மெனுமிரு மானிலந் தன்னிலும் (வந்து)
இலகும்அரம்பைகள் செலகிரீடைசெய்தற்
கேற்றமதுரநவ தீர்த்தமுஞ்சிறந்த
உலகடியூரணி நலமுங்கண்டுபிள்ளையா
ரூழியேந் தற்பெருச் சாளியேந்தலிலும் (வந்து)
நீடுபுகழ்சேர்குடிக் காடன்வயலில்த்தேவ
னேரியுடன்மணியத் தூர்வயலிலுங்கஞ்சம்
நாடுமேரிசுன்ன வோடைகுமிழியாங்குண்டை
நத்தித்தத்திப்பற்றிச் சுற்றிக்கத்திக்கெற்றி (வந்து)
ஏருலாவியபி டாரியேந்தல்விப்பிர
னேரியுடனிடும்ப னேரிகுறும்பன்வயல்
வாரிநேர் வலைய னேரிமீனைக்கண்டு
வாஞ்சை தோஞ்சு சாஞ்சு பாஞ்சு ராஞ்சு மேஞ்சு (வ)
மாபழனஞ்சேர்சிந் தாவடியேந்தலும்
வைய்யாபுரிக்கண்மாய்ச் செய்யவயலிலுஞ்
சோபிதமாமது ராபுரிக்கரைத்தென்னந்
தோப்பின் றாப்பு வாய்ப்பு மூப்பு றாப்பு றாப்புள் (வந்து)
மாரணசூரசம் மாரகெம்பீரகு
மாரசாமிவாழ்ம யூரநாகநாட்டிற்
கார்புயல்போல்பக்கி சேரவாடைப்பொடியைக்
காற்றுப்பார்த்துத் தூத்தச் சாத்துக் கேத்தவாத்தும்
-----------
வேறு தரு.
இராகம் தோடி ரூபகதாள சாப்பு
பல்லவி.
பேசாதய்யே அய்யேபொறுபொறு சற்றே பொறுபொறு
பேசாதய்யே அய்யேபொறுபொறு சற்றே பொறுபொறு
அனுபல்லவி.
தேசுயருஞ் சிகண்டிமலைச் செவ்வேள் தனதுபண்ணைச்
செய்களோரத்தில்வந்து சேருது பக்கி
கேருது மீனை வாருது வேட்டை நேருதுபொறு (பேசா)
சரணங்கள்.
கூடியே பக்கிகள்ராகம் பாடிக் கயலைத்தேடி நாடிப்
படிபுகழ்குன்றாக் குடிவயலினில்ப்
பக்கிமிக்கப்புக்கிக் கிக்கிக்கிக்கியெனப்
பதுங்குது பயந் தொதுங்குது கதுகுதுங்குது மொதுமொதுங்குது பொறு (பே)
நாற்றிசையும் புகழ்சேர்குன்றைக் கார்த்திகேயன் பண்ணைச்சாத்தி வயக்கலிற்
கண்டைமீனைக்கண்டு கொண்டுமண்டியண்டிக்
காற்குட் டாக்கி நீக்கிமுக்கிற்றூக்கி நோக்கிக்
களிக்குது தின்று நெளிக்குது ஒன்றுமுளிக்குதுசிலதொளிக்குதுபொறு (பேசா)
எண்டிசையும்பிச்சைப் பண்ணையில்ப் பண்டைய நாள்முதலுண்டானசெய்களும்
பார்த்துப்பதுங்கி ஒட்டைக காத்தான்வயற்புக்கிப்
பக்குங்கொக்கும் எக்கும் ஒக்கும் மொக்கச்சிக்கும்
பாரையே செங்கால்நாரையேகுகன்பேரையேயெண்ணிநேரையேபொறு(பேசா)
---------------
வேறு தரு.
இராகம் கல்யாணி ஆதிதாளம்.
கண்ணிகள்.
பொறுபொறுபக்கி மிகுதியடா வரும் புட்குலத்தைத் துகைமதியடா
முருகர்தாளினைத் துதியடா கண்ணி முறையாய்ச்சொல்லுறேன்பதியடா (1)
கதிக்கும் பிச்சைப்பண்ணைக்குரிமையாய்ச்சொக்கநாதன்வயக்கலிற்பெருமையாய்
மதிக்குமீனாம்பிகைவயலிலே சுப்பிரமண்ணியவயக்கலின்செயலிலே (2)
நாயகர்வயக்கல் நடவிலே செங்கால் நாரைவருமந்தக்கடலிலே
சாயாமல்க்கண்ணியை நாட்டடாசேவல்த் தட்டினிலேகண்ணிபூட்டடா. (3)
மருதநாயகர்திருத்தலாம் அதில்வரிசையாய்க் கண்ணிபரத்தலாம்
குருகினங்களும் வரத்தடா கைகூசாமல்க் கண்ணியைப்பரத்தடா. (4)
தியாகராஜவயல்வரப்பிலே பக்கிசேரவருமெத்தபரப்பிலே
வாகுடன்கண்ணிகளுண்டா பக்கி வாரதிரட்சியைகாணடா. (5)
சங்கரலிங்க முனீஸ்வர வயல்தன்னில் வரும்பக்கிமீசுரம்
அங்கனேகண்ணியைத்திருத்தடா பக்கியவளவும்நமக்குருத்தடா. (6)
சாமிசபாபதிவயலிலே குன்றைச்சண்முகமூர்த்திதன்செயலிலே
சீமூதமாய்பக்கிவருதடா அதைச்சென்றுபிடிப்பதேவிருதடா. (7)
இன்னம்பலவுளசெய்யடா அதற்கேற்றதோர்கண்ணிகள்வய்யடா
மன்னியகைவலைவீசடா பக்கிவர வரச்சன்னைகீசடா. (8)
ஆவலுடன் கண்ணிநாட்டடா சொல்லும் ஆரெழுத்தைமனஞ்சூட்டடா
சேவலன்பாதத்தைநேரடா இதோசிக்குது பக்கிகள்பாரடா. (9)
-------------
வேறு தரு.
இராகம் பரசு--ஆதி தாளம்.
பல்லவி.
சிக்கிக்கொண்டுதையே பரவையெல்லாஞ்
சிக்கிக்கொண்டுதையே.
அநுபல்லவி.
சிக்கிக்கொண்டுதையே சிகண்டிமலைக்குமர
தேசிகனைத்தொழுதுவீசும் வலைக்கண்ணிக்குள் (சிக்கிக்)
சரணங்கள்.
காசினியிற்கொடிய பாசமெனுமூவகை
யாசைவலையிற்சிக்கு மாசர்மனம்போலவும் (சிக்கிக்)
கலைசிறிதுமறியாப் புலறிவினமாதர்கள்
கலவிமயக்கத்தினிற் குலவிச்சிக்கியதுபோற். (சிக்கித்)
முருகர்பதத்தினிலன் புருகுமனத்திலின்பம்
பெருகுமானந்தப்பொரு ளருகிற்சிக்கியதுபோற் (சிக்கித்)
----------------
வேறு தரு.
இராகம் கல்யாணி -- சாப்பு தாளம்
பல்லவி.
தேலிவிட்டுப்போயினுமய்யே பரவை யெல்லாந்
தேலிவிட்டுப்போயினுமய்யே.
அநுபல்லவி.
கேலிவிட்டுபோயினுமய்யேவாலிபத்திற்சூரைவென்ற
வேலரைத்துதியாச்செல்வம்போலவும்பக்திவர்க்கங்கள். தே.
சரணங்கள்.
நாடியேபைந்தமிழ்ப்பொருள் தேடி யேசிங்காரகவி
பாடியபா வலரைக்கண் டோடி யவுலுத்தர்போலுந் (தேலி)
மெட்டியவிழிவலையாற் கட்டியமாதர்மயக்கை
விட்டுமுனிவோர்வனத்திற் பொட்டெனசெல்வன போலும்
ரஞ்சி தமயிற்கிரிவலஞ் செய்வோர் பூர்வசென்மத்தின்
சஞ்சலமும்போன துபோல்மிஞ்சி யபக்கிகலெள்ளாம். (தேலி)
விருத்தம்.
தொய்யிலெழு தியகளபச்சுவண மேருச்
சுவர்க்கவிரு மாதருட துணைவன் கூர்வேற்
கையன்மயி னகக்குமரக் கடவுணாட்டிற்
கலந்து வயற்களில்னாட்டுங் கண்ணிக் குள்ளே
பய்யவந்து சிக்கிப்பல் பக்கியெல்லாம்
பறந்தோடித் தேலியபின் பரிந்து சிங்கன்
மையல்கொடு செய்யகுறச் சய்யல் பேசும்
வங்கணச்சிங் கியைத்தேடி வழுத்துவானே.
-----------
தரு.
இராகம் புந்நாகவராளி --ஆதிதாளம்.
பல்லவி.
சிங்கியெங்கே காட்டடய்யே யென்வங்கணச்
சிங்கியெங்கே காட்டடய்யே.
அநுபல்லவி.
சிங்கியெங்கேகாட்டடய்யே யிங்கிதநேமநன்னாட்டில்த்
துங்கமலைவேலரிரு செங்கழலிணை யைப்போற்றும் (சிங்கி)
சரணங்கள்.
(1) முத்தமிட் டுக்கொள்ளுவாளய்யே மருவச்சொல்லி
மெத்தமெத் தந்துள்ளுவாளய்யே
அத்திமத்தகத்தையொத்த சித்திரத் தனத்தையுற்ற (சிங்)
(2) மிஞ்சிமிஞ்சிப்பேசு வாளய்யேசரசந்தனிற்
கொஞ்சிக்கொஞ்சியேசுவாளய்யே
வஞ்சகஞ்செய் நெஞ்சவஞ்சி ரஞ்சிதஞ்சே ருஞ்செழுஞ்சொற்
(3) பக்கிபொ றிச்சிட்டுத்தருவாள் கலவிசெய்ய
அக்கரையாய்க்கிட்டவருவாள் சய்யோகமதில்
சற்கரைக்கி னிக்க*மிக்க சொற்குலுக்குமுக்கியவற்க (சிங்கி)
(4) கூசிமொழி பேசிநொடிப்பாள் குன்றைக்குமர
தேசிகன்மேற்சிந்துபடிப்பாள் குங்குமகந்தம்
வாசமிக வீசவுமுல் லாசவித மேசெயுமென் (சிங்கி)
விருத்தம்.
விற்புரூர மின்னாரென்னு மெல்லிய சிருவச்*சோயு
மற்புயன் சிகண்டிச்சுப்பிர மண்ணியர் வளரு நாட்டிற்
கற்புள சிங்கிமீதிற் காதலா கிரிமேற்கொண்ட
அற்புதச் சிங்காசிங்கி க்கடையாளஞ் சாற்றுவாயே.
------------
தரு.
இராகம் காம்போதி -- ஆதிதாளம்.
பல்லவி.
வங்கணக்காரியென் சிங்கிக் கடையாளஞ் சற்றே
வழுத்தக்கேளடி*அய்யே.
அநுபல்லவி.
செங்கமலைவளருந் துங்கமலைக்குமர
தேசிகர்நேமநாட்டிலே மேட்டிமையான (வங்கண)
சரணங்கள்.
(1) கச்சிருக்குமுலையி னிச்சிருக்குமடய்யே
காரியக்காரிவகைக் காரியிங்கிதக்காரி
குச்சிருக்குங்குழலில் மொச்சிருக்கும்வண்டருங்
கோலமுமெத்தவுண்டய்யே மெய்யேசொன்னேன் (வங்)
(2) ஆருக்குந்தெரியாமல் ஊருக்குளிருக்குமோ
ரடையாளமுண்ட திடையாழங்கண்ட
பேருக்குந்தெகுட்டாதே பாருக்குள வள்வலுப்
பேச்சுக்காரியடையே மெய்யேசொன்னேன் (வங்கண)
(3) மெல்லச்சிரிக்கிற்பல்லு முல்லைப்பூப்போ லுங்கன
மெட்டுமிரட்டும்விழி மெட்டுஞ்சிந்தூரப்பொட்டுஞ்
சொல்லுமவளுரையை வெல்லும்பேர்களுண்டோ
தோகைமயிலட அய்யே மெய்யே சொன்னேன் (வங்கண)
(4) கந்தபரிமளமி குந்துபூசுவள் வலுக்
காயக்கமுண்டுமுக மாயக்கனநயத்தென்
சிந்தையுருகக்குன்றைக் கந்தர்பதந்துகித்துச்
சிந்துபடிப்பளடய்யே மெய்யேசொன்னேன் (வங்கண)
விருத்தம்.
செங்கதிர்வெண் மதியவனும் புடைசூழ் கின்ற
சிகண்டிமலைக் குருபரதே சிகர்க்கன் பான
சங்கினங்க டவம்பமன நேம நாட்டிற்
றழைத்திடுஞ்சிங் கனும்பகன்ற படியே சிங்கிக்
கங்கடையாளங்களெல்லா மறிந்து பாங்கன்
அவனியெல்லாநி தேடியுங்கண் டழைத்து வந்து
சிங்கன்முன்காட் டிடமனது சந்தோ ஷித்துச்
சிங்கியைச்சிந் தித்திவைகள் செப்பு வானே
--------------
தரு.
இராகம் புன்னாகவராளி சாப்புதாளம்
கண்ணிகள்.
இத்தனை நாளாக யெனைத்தனி யாகவைத்
தெங்கே போயிருந்தாய் சிங்கி-பாரில்
இப்படித் தானெனைத் தப்பிப் பிரிந்துநீ
யெந்த நாளிருந்தாய் சிங்கி
நித்திலஞ் செந்நெல்லில் நித்தமும் விளைகின்ற
நேமநாட்டிற்சென்று சிங்கா-மாதர்
நெஞ்சக் குறிசொல்லிச் சஞ்சரித்துக்கன
நிதிபெறப் போனேண்டா சிங்கா
குறியுரைப் பதேநம்ம நெறியென்ன லாமந்திர
*கூறையுங் காறையு மேது குறக்
*கூடை மிதத்தியார்க்குங் கொடுத்துக் கஞ்சிவாங்கிக்
குடிக்கு நமக்கடி சிங்கி
அறியாம லேகள்ளு வெறியா லுளராதே நாட்
டரிவையர்க் குக்குறி சொன்னேன் எந்தன்
அருமை யறிந்தவர்கள் பெருமை யுடனே தந்த
அரிய கூறைகாறை காண் சிங்கா
கொண்டைக்கு மேலேயோர் பண்ட மென்னமோபோலே
குறுகுறென்று விழித்துக் கொண்டு அதோ
குக்கி யிருக்குதந்த வக்கணை தனையெக்குக்
கூறடி வங்கணச் சிங்கி
தண்டமிழ் செறிசி கண்டிக்கு கன்மோகனத்
தைய லார்க்குக்குறி சொன்னேன் அந்தச்
சந்த மடவார்கள் தந்தரெத்தின மிழைத்த
தமனியக் கொண்டை காண் சிங்கா
ஐந்தலை நாகமுன் கொந்தள கத்தில்நின்
றாடுவ தென்னடி சிங்கி--சற்றும்
அஞ்சாதே உன்மன தென்செய்வே னென்மன
தஞ்சுதே வஞ்சகச் சிங்கி
சுந்தரன் தென்குழந் தைப் போதகுருசாமி
துரைமகி ழக்குறிசொன்னேன் அவர்
தோகைநல் லார்மகிழ்வாகத் தந்தசடை
நாக மிதுவடா சிங்கா
என்னடி புன்னைக்காய் தன்னிலே பித்தாளை
யிட்டணிந்த தென்ன சிங்கி--நமக்
கேற்குமோ நங்குலத்தார்க்கு மிதுவெலாம்
ஏச்சென் றறியாயோ சிங்கி
நன்னய மாதவன் வேலாயுதமுனி
நாதன் வாழ்கக்குறி சொன்னேன் அந்த
நற்றவன் தந்திடும் ரத்தின மணிருத்தி
ராக்ஷக் கண்டியடா சிங்கா
நெத்திக்கு மேலொரு துத்திப்பூப் பூத்ததில்
நேரே படர்ந்த தென் சிங்கி--யிந்தச்
சித்திர மான விதத்தை நீயெக்குத்
தெரிய வுரையடி சிங்கி
பத்தியு டன்கூடல் ஸ்தானிகன் விக்கிரம
பாண்டியற் குக்குறி சொன்னேன் அவன்
பைந்தொடி யார்மெச்சித் தந்தரத்தினமணிப்
பைம்பொற் சுட்டி யடா சிங்கா
மோடிய தாகச் செவிக ளிரண்டையு
மூடிக் கிடப்பதென் சிங்கி--இந்த
முக்கியந் தன்னைநீயெக் குத்தெரியமொ
ழிந்தாலா காதோடி சிங்கி
கூடல் கொடுங்குன்ற ஸ்தானீக னென்குப்பு
தேசிகர்க் குக்குறி சொன்னேன் அப்போ
கொண்டாடி யேகுல சேகர மால்தந்த
கொந்தள ஓலைகாண் சிங்கா
கூரிய மூக்குக் குமிழிலப் புடலம்பூக்
கொத்தோடே தூங்கு தென சிக்கி--யிந்தக்
கோப்பையு முந்தன்மின் னாப்பையுங் கண்டு
கொடாதவ ராரடி சிங்கி
தாரணி போற்றுங் கொடுங்குன்ற மேவிய
ஸ்தானீகர்க் குக்குறி சொன்னேன் அவர்
தந்திடு மூக்குத்தித் தொங்கல் விலைமதியாத்
தரள மிதுவடா சிங்கா
கண்டத்தி லேஅல்லித் தண்டைத் தரித்திடக்
காரிய மேதடி சிங்கி--யிந்தக்
காரணத் தையெக்குத் தோரணை யாகக்
கருதுவாய் வங்கணச் சிங்கி
மண்டலம் போற்றும் புதுவை ஸ்தானிகர்க்கு
வாகுட னேகுறி சொன்னேன் அந்த
மன்னவர் தந்திடுஞ்சொர்ன த்தினாலே
வனைந்த கொடியடா சிங்கா
சாதக மாகவே தூது வளம்பழம்
தன்னையுங் கோர்த்துநீ சிங்கி--அதைத்
தாட்டிகமாக அணிந்திட்ட மேன்மையைச்
சாற்றடி வங்கணச் சிங்கி
நீதர் திருக்கோள நாதர்தன் கோயில்ஸ்தா
னீகருக்குங் குறிசொன்னேன் அவர்
நேசத்து டன்தந்த சாதிப் பவளநி
லவிய கோவைகாண் சிங்கா
கொங்கைக் குடத்தினிற் சங்கம் பழத்தினைக்
கொத்துக் கொத்தாகவே சிங்கி--மனங்
கூசாமல்க் கோருத் தணிந்திடும் விந்தையைக்
கூறடி வங்கணச் சிங்கி
யென்குல தெய்வமாந் துங்க மலைக்கும
ரேசர்தங் கோயில்ஸ்தானீகர் நிதம்
எந்த னருமை யறிந்து மகிழ்ந்தவ
ரீய்ந்தமுத் தாரங்காண் சிங்கா
சிற்றிடை யைச்சுற்றி ஒட்டிக் கிடக்கிற
சித்திர மென்னடி சிங்கி - இந்தச்
சேதியை யெக்குத் தெரியும் படிக்குநீ
செப்பவு மாகாதோ சிங்கி
சத்தி யுமைவாழ் சிராசை யின்மேவிய
ஸ்தானீகரக் குக்குறிசொன்னேன் அவர்
சம்பிரம முடன்மெச்சிக் கெம்பீர மாய்த்தந்த
தங்க ஒட்டியாணங்காண் சிங்கா
பய்யப் பயிலுமென் சய்யோக வஞ்சிநின்
பாச முலைமார்பிற் சிங்கி--யேதோ
பச்சுப்பச் சென்றுமுழிச்சுக் கனமாய்ப்
படர்ந்து கிடக்குதென் சிங்கி
வய்யம் புகழும் பிரமனூர் மேவு
மகாஏனங் கட்குமூ ரவர்க்குங் குறி
வைத்ததெல் லாஞ்சொன்னேன் மெய்த்தவர் தந்திடும்
வச்சிரப் பதைக்கங்காண் சிங்கா
மண்டல மிட்டொரு குண்டலப் பூச்சியை
வக்கணை யாய்க்கையில்ச் சிங்கி -- பூணும்
வாறென்ன கூறின்ன வாறென்ன மோகன
வங்கணக் கொங்கணச் சிங்கி
அண்டர் பணியுமங் கைப்பதி ஸ்தானீக
ரானவர்க் குக்குறிசொன்னேன் அவர்
அத்தமி ரைஞ்ஞூறு பெற்றிட வுந்தந்த
அஸ்த கடகங்காண் சிங்கா
மின்னட்டை தன்னை முழங்கைக்கு மேலாக
வீக்கிக் கிடக்குதென் சிங்கி-இதை
மேசையென் றெண்ணிய காரிய மார்செய்
விசித்தித மீதடி சிங்கி
சொர்னக்கா ளீசுர தேசிகர்க் கும்வளர்
சுப்பிரமணிய தேசிகர்க்குங் குறி
சொன்னதி னாலவ ரென்னைமெச் சித்தந்த
சொர்னக்கை வந்திகாண் சிங்கா
யெத்தனை யோபளிச் சென்றுந் தனூலிடை
யெல்லா மறைத்ததென் சிங்கி--இதை
எக்குத் தெரியும்ப டிக்குச்சு றுக்கி
லியம்படி வங்கணச் சிங்கி
முத்தய மால்துணை வாலசுப்பிரமண்ணிய
முக்கியனுக் குக்குறிசொன்னேன் அவர்
முப்பது பொன்பெற அப்போதே தந்திடு
முத்து வர்னச்சேலைகாண் சிங்கா
மங்கையே நின்கை விரல்களைச் சுத்தி
வளைந்து கிடப்பதென் சிங்கி-இந்த
மார்க்கத்தை யெந்தன்முன் தீர்க்கமுடனே
வழுத்தடி வங்கணச் சிங்கி
வெங்கள நம்பியார் சுப்பிரமண்ணிய
வேதனுக்குக் குறிசொன்னேன் அவர்
மெச்சியே தந்திடும் கச்சிதமானவி
ரற்கணை யாழிகாண் சிங்கா
காலினில் ஊமைச்சிக் கூட்டினைக் கோர்த்துக்
கலகல வென்றணி வானேன் என்ன
காயக்க மோமுகமாயக் கள்ளிசுறுக்
காகச்சொல் வாயடி சிங்கி
ஞாலம்புகழ்காணிக்கன் சோலைமலை
ராசனுக் குக்குறி சொன்னேன் மன
ரம்மியமுடன்குறி செம்மையென் றேயவர்
நல்குப தசாங்காண் சிங்கா
ஓவிய மானநின் பூவடி மீதில்
ஒலித்துக் கிடப்பதென் சிங்கி-அதை
உள்ளப டிக்குநீ விள்ளுவ தேமெத்த
உத்தம மாமடி சிங்கி
கோவிலுத் தியோகர் வயிராவி தலத்
தார்க்குக் குறிசொன்னேன் சிங்கா-அவர்
கொண்டாடித் தந்திடுந் தண்டை சிலம்பு
கொலுசுக ளீதடா சிங்கா
இந்தப் படிக்குக் குறிசொல்லப் போனநீ
என்னை நினைத்தாயோ சிங்கி--உன்னை
யெண்ணி யெண்ணி மனம் புண்ணாகித் தேடி
யிரங்கித் திரிந்தேனே சிங்கி
அந்தப் படிக்கு நானுந்தனைத் தேடி
அலைந்து திரிந்தேனே சிங்கா--நீ
யறியாம லேகள்ளு வெறியால்த் திரிந்திட்டா
லார்மேல்க் குறையடா சிங்கா
ஆகட்டும் போன துபோகட்டு மேலினி
யாகிலு நாமிருவோருங் கூடி
ஆசைக் கலவியுல்லாசத்து டன்விளை
யாட வரலாமோ சிங்கி
தாகத்துடனறு போகத்தி லேமன
தாகத் திரும்பினேன் சிங்கா--யினிச்
சந்தித்த பின்னுந் தடங்க லுண்டோகூடித்
தானனு போகிப்போம் சிங்கா
தன்னைமிஞ் சிக்காம சன்னத மென்னைத்
தலைசுற்றி யாட்டுதே சிங்கி--இனித்
தாமதசஞ் செய்யாதே காமினிநீ யென்மேல்த்
தயவுசெய் வாயடி சிங்கி
அன்னியம் பொலென்னைச் சொன்னது தானென்ன
ஆக்கப் பொருத்தநீ
ஆறப்பொறுக்காதோ மீறக் கிணற்று நீரை
யாறிழுத்துப் போமோ சிங்கா
பள்ளத் தண்ணீரினை வெள்ளங் கொண்டுபோகுதோ
பதறாதே யென்றாயே சிங்கி--இந்தப்
பயிலும் ஒயிலும் மொழிக் குயிலு மெத்தப்பகட்டிப்
பசப்பு மெங்கேபடி த்தாய் சிங்கி
உள்ளத்தை நான்சொன்னால்க் கள்ளத்தை நீஎண்ணி
யுரைக்கின்ற முறையென்ன சிங்கா-வாழும்
உலக மதனிலெந்தன் குலமு நலமுமின
முறைக்குந் தெரியாதோடா சிங்கா
நேசத்துடன் பரி யாசத்தி லேசொல்லும்
நீதியில் லாமலே சிங்கி--வேறே
நிந்தையென் றெண்ணாதே சிந்தையுடன்
நித்தமும் வாழ்வோமே சிங்கி
ஆசைக் கலவியுல் லாசத்து டன்செய்வ கூடி
னன்புடன் கூடியே சிங்கா குன்றை
ஆறுமு கன்பதங் கூறியே வாழியென்
றாடுவோம் வாருங்காண் சிங்கா
விருத்தம்.
அந்தணர் வேள்விவாழி ஆரண நான்கும்வாழி
தந்திர ஆகமஞ்சொல் சைவமும் வாழிவாழி
சந்திர சூரியரும்வாழி தமிழ்வல்லோர் மிகவும்வாழி
சுந்தரச் சிகண்டிக்கந்த சுவாமிதாள் வாழிதானே
குன்றாக்குடி குறவஞ்சி முற்றிற்று.
-----------------------------------------------------------
This file was last updated on 29 December 2010.
Feel free to send corrections to the webmaster.