கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
பாகம் 2, அத்தியாயம் 22-41
mAntarukkuL teivam - part 2, Chapters 22-41
of kalki kirushNamUrti
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for scanned image version of the
work. This work was prepared via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance in the preparation of this workAshok Paskalraj, S.
Karthikeyan, M. Kavinaya, R. Navaneethakrishnan,
Santhosh Kumar Chandrasekaran, S Sriram, Thamizhagazhvan, V. Devarajan and
Nalini Karthikeyan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
பாகம் 2, அத்தியாயம் 16 - 27
source:
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
கல்கி
முதற் பதிப்பு - 1956
Printed by Dr. V. R. Murty, At The Homeopathy Press,
Homeo House, Kumbakonam.
-----------------------------------------------------------
22. "வளருதே தீ"
பெஜவாடாவில் போட்ட திட்டம் ஒருவாறு நிறைவேறி விட்டது. அடுத்தாற்போல் என்ன? "ஒரு வருஷத்திற்குள் சுயராஜ்யம்" என்று காந்தி மகாத்மா சொன்னாரே? ஜூனமாதம் 30-ஆம் தேதியோடு அரை வருஷம் ஆகிவிட்டதே! மிச்சமுள்ள ஆறு மாதத்தில் சுயராஜ்யம் கிடைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன வழி? அடுத்த திட்டம் என்ன?
அடுத்த திட்டம் என்ன வென்பதைக் காந்தி மகாத்மா சொன்னார்: "(1) அன்னியத் துணி பகிஷ்காரம்; (2) மது விலக்கு;- இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்குப் பிறகும் பிரிட்டிஷார் பணிந்து வரா விட்டால், கடைசி ஆயுதமான சட்டமறுப்பு இருக்கிறது. அதை வருஷக் கடைசியில் உபயோகிக்கலாம்" என்றார்.
ஜூ
லை மாதம் 28-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கத்தினர்கள் அவ்வளவு பேரும் வெள்ளைக் கதர் உடையும் வெள்ளைக் கதர்க் குல்லாயும் அணிந்து வந்தார்கள். பெஜவாடா திட்டத்தை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம் என்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர்கள் வந்திருந்தார்கள். இதற்குள்ளே ஆங்காங்கு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேர்தல்கள் நடந்திருந்தன. வந்திருந்த அ.இ.கா. கமிட்டி அங்கத்தினர்களும் புதியவர்கள். மிகப் பெரும்பாலும் காந்தி மகாத்மாவிடம் பரிபூரண பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். ஆகையால் இந்த அ.இ.கா கமிட்டிக் கூட்டம் பம்பாய்ப் பொது மக்களியையே பெருங்கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியிருந்தது. பம்பாய் வாசிகள் தேசீய நெறி கொண்டிருந்தார்கள். எங்கே
நோக்கினாலும் காந்தி குல்லா மயமாகக் காணப்பட்டது. தலைவர்கள் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜே கோஷம் செய்தார்கள். காந்தி மகாத்மாவைக் கடவுளின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குப் பம்பாய்வாசிகள் அவரிடம் பக்தி கொண்டு விட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிவித்த காந்திஜியின் சித்திர படங்களும் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் பதினாயிரக் கணக்கில் செலவாயின.
இத்தகைய சூழ்நிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிக் காந்தி மகாத்மா கூறியபடி அன்னியத் துணி பகிஷ்காரத் தீர்மானத்தை ஒப்புகொண்டது. ஆகஸ்டு மாதம் 1உயிலிருந்து காங்கிரஸ்வாதிகளும் காங்கிரஸ் அநுதாபிகளும் பொதுமக்களும் அந்நியத் துணியை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது.
மேற்படி தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற்காக மகாத்மா காந்தி ஆகஸ்டுமீ 1உ பம்பாயில் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். சௌபாத்தி கடற்கரையில் பம்பாய் நகரமே திரண்டு வந்துவிட்டது போன்ற ஜன சமுத்திரம் கூடியிருந்தது. சுமார் ஐந்து லட்சம் ஜனங்களுக்குக் குறையாது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்ற இரண்டு தினங்களாகப் பம்பாயில் வீடுவீடாகச் சென்று அன்னியத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து கடற்கரையில் பிரசங்க மேடைக்குக்
கொஞ்ச தூரத்தில் குவித்திருந்தார்கள். காந்தி மகாத்மா அந்தக் கூட்டதில் பேசினார்.
"இந்தியாவில் அடிமைத்தனம் அன்னியத் துணி மூலமாகவே வந்தது. பிரிட்டிஷார் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு தான் இந்தியாவுக்கு வந்தார்கள், வந்த இடத்தில
அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபித்து கொண்டார்கள். நம்முடைய அடிமைத்தனத்துக்கு அறிகுறியா யிருப்பது அன்னியத் துணிதான். நம்முடைய அவமானத்தின் சின்னம்மாயிருப்பதும் அன்னியத் துணியே. இந்தியாவின் தரித்திரத்துக்குக் காரணம் அன்னியத் துணி.ஆகையால், இங்கே தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் அந்நியத் துணிக் குவியலில் நான் இப்போது தீ மூட்டப் போகிறேன். இந்தக் கூட்டத்தில் யாரேனும் உடம்பில் விதேசித் துணி அணிந்திருந்தால் அதை நான் மூட்டும் தீயிலே கொண்டு வந்து போட்டு விடுங்கள். இந்த விதேசித் துணிக் குவியல் எரிந்து சாம்பராவது போல் நம்முடைய அடிமைத்தனமும் எரிந்து சாம்பராகட்டும்!"
இவ்விதம் மகாத்மா காந்தி பேசிவிட்டு விதேசித் துணிக் குவியலில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பு வைத்தார். பெரிய பிரம்மாண்டமான போர் போலக் கிடந்த அன்னியத் துணிக்குவியல் எரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்தவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிச் சட்டைகளையும் அன்னிய நாட்டுக் குல்லாய்களையும் கொண்டு வந்து எரிகிற தீயில் போட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பதினாயிரம் குல்லாக்களும் சட்டைகளும் வேறு ஆடைகளும் வந்து விழுந்தன. 'நீ முந்தி, நான் முந்தி' என்று ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் முண்டிக்கொண்டு வந்து, குல்லாய்களையும் துணிகளையும் நெருப்பிலே போட்டார்கள். சிலர் தாங்கள் வைத்திருந்த குடையின் துணி அன்னியத் துணியினால் ஆனது என்ற காரனத்தினால் குடைகளையும் தீயில் வீசி எறிந்தார்கள்.
"வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ! தீ! இந்நேரம்!"
என்று பாரதியார் வேள்விப் பாட்டில் பாடியிருப்பதை லட்சக் கணக்கான பம்பாய் வாசிகள் பிரத்யட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். நூற்றைம்பது வருஷ காலமாக இந்தியாவைப் பீடித்திருந்த அன்னிய ஆட்சியும் அடிமைத்தனமும் அந்த விதேசித் துணிக் குவியலைப்போல் பொசுங்கிப் போய் விட்டதாகவே எண்ணிக் குதூகலத்துடன் வீடு திரும்பினார்கள்.
* * *
சென்ற 1920-ஆம் வருஷம் இதே ஆகஸ்டுமீ 1உ தான் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். காந்திஜியின் யுத்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு அளித்திருந்த ‘கெயிஸரி ஹிண்ட்’ என்னும் அபூர்வமான கௌரவப் பதக்கத்தைச் சர்க்காருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக அன்று பம்பாய் பொதுக்கூட்டத்தில் அறிவித்து விட்டுத் தேசமெங்கும் சுற்றுப்பிரயாணம் கிளம்பினார்.
அதேமாதிரி இந்த 1921 ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதியன்று பம்பாயில் அன்னியத் துணிக் குவியலைக் கொளுத்திவிட்டுச் சுற்றுப் பிரயாணம் தொடங்கினார். மௌலானா முகம்மதலியையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டர். பிஹார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். காந்தி மகானும் மௌலானா முகம்மதலியும் சென்ற இடமெல்லாம் திரள் திரளாக மக்கள் கூடினார்கள். பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மலை மலையான அன்னியத் துணிக் குவியல்களும் தீக்கிரையாயின.
இவ்விதம் வடநாட்டில் ஆகஸ்டு மாதம் முழுவதும் செப்டம்பர் முற்பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு மகாத்மாவும் மௌலானாவும் சென்னை மாகாணத்துக்குப்
பிரயாணம் ஆனார்கள். செப்டம்பர் மாதம் 14ம் தேதி கல்கத்தாவிலிருந்து சென்னை மாகாணத்துக்குப் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வழியில் வால்ட்டேர் ஜங்ஷனில் ரயில் நின்றது. மகாத்மாவும் மௌலானாவும் பிரயாணம்செய்யும் காலங்களில் வழியில் ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷனுக்கு அருகில் ஜனங்கள் திரண்டு நிற்பது வழக்கம். இருவரும் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று காத்திருந்த ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்து ரயிலில் ஏறிக்கொள்வார்கள். அது மாதிரியே வால்ட்டேரில் ரயில் இருப்பத்தைந்து நிமிஷம் நிற்கும் என்று தெரிந்துகொண்டு தலைவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வெளியில் காத்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குச் சொன்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சில அடி தூரம் சென்றதும் முன்னால் சென்ற மகாத்மா பின்னால் வந்த
மௌலானா தம்மை உரத்த சத்தமிட்டு அழைப்பதைக்கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைக்காரப் போலீஸ் அதிகாரிகளும் ஐந்தாறு இந்தியப் போலீஸ்காரர்களும் மௌலானா முகம்மதலியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.
மௌலானா தம் கையில் வைத்திருந்த நோட்டீசைப் படித்துக் கொண்டிருப்பதையும் மகாத்மா பார்த்தார். ஆனால் அவர் முழுதும் நோட்டீசைப் படித்து முடிப்பதற்குப் போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளில் ஒருவர் மௌலானாவின் கையைப் பிடித்து இழுத்தார். காந்தி மகாத்மாவின் அஹிம்சா நெறியில் பயிற்சி பெற்றிருந்த மௌலானாவும் உடனே படிப்பதை நிறுத்திப் போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்றார். போகும்போது காந்திஜியைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டுக் கையை வீசி ஆட்டிச் சமிக்ஞையினால் 'போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார்.
மௌலானா அவ்விதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுச் சென்றபோது காந்திமகானுக்குத் தம்முடைய ஆத்மாவிலேயே ஒரு பகுதி தம்மை விட்டுப் பிரிந்து போவது போலிருந்தது.
மகாத்மா காந்திக்கும் அலி சகோதரர்களுக்கும் இந்திய அரசியல் துறையில் ஏற்பட்டிருந்த நட்பு உலக சரித்திரத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அலி சகோதரர்கள் வீராவேசமே உருக்கொண்டவர்கள். சாந்தம், அஹிம்சை, - இவற்றின் உயர்வைப் பற்றி என்றும் எண்ணாதவர்கள். இஸ்லாமிய சமய நெறியும் முஸ்லிம்களின் சரித்திரப் பண்பும் அவர்களை முற்றும் வேறு விதத்தில் பக்குவப் படுத்தியிருந்தன. ஆனாலும் அந்த அதிசய சகோதரர்கள் மகாத்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டு அவரை மனமொழி மெய்களினால் பின்பற்றினார்கள். "நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறவன்!" என்று காந்தி மகாத்மா ஒரு தடவை சொன்னார்.
அதாவது மௌலானாவின் அன்புக்கு அவ்வளவு தாம் கட்டும் பட்டவர் என்று கூறினார். அம்மாதிரியே அலி சகோதரர்களும் மகாத்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள்.
அந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் லார்டு ரெடிங் கவர்னர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக வந்தார். மகாத்மாவைச் சந்தித்துப் பேச விரும்புவதகாத் தெரிவித்தார். மகாத்மாவும் ரெடிங்கைப் பார்க்க விரைந்து சென்றார். "நீங்கள் அஹிம்சா தர்மத்தைப் போதிக்கிறீர்களே! உங்கள் சிஷ்யர்கள் எல்லாரும் அதை அனுசரிப்பார்களா?" என்று லார்ட் ரெடிங் கேட்டார்.
"என் சிஷ்யர்களுக்கு நான் உத்தரவாதம்!" என்றார் மகாத்மா. "அப்படியானால் இதைப் பாருங்கள்!" என்று சொல்லி லார்ட் ரெடிங் மௌலானா முகம்மதலியின் பிரசங்கம் ஒன்றின் ரிபோர்ட்டை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு பகுதி மௌலானா முகம்மதலி பலாத்கார முறைகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் செய்யக்கூடிய முறையில் இருந்தது. "இந்த மாதிரி தப்பர்த்தம் செய்யக்கூடியவாறு கூட என்னைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடாதுதான். இதற்குப் பரிகாரம் நான் தேடித் தருகிறேன்!" என்றார் மகாத்மா. அந்தப்படியே மகாத்மா காந்தி மௌலானா முகம்மது அலியை உடனே சந்தித்து "பலாத்கார முறைகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத்
தெளிவுபடுத்தி விடுங்கள்!" என்றார். மகாத்மாவின் சொல்லுக் கிணங்கி மௌலானா ஒரு அறிக்கை விட்டார். ரெடிங்-காந்தி சந்திப்பு பற்றிய விவரங்கள் யாருக்கும் அச்சமயம் தெரிந்திருக்க வில்லை. ஆகையால் "மௌலானா முகம்மதலி பயந்து விட்டார்!" என்றும், "மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!" என்றும் தேச விரோதிகள் பலர் எக்காளம் கொட்டினார்கள். மௌலானா இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மகாத்மாவின் விருப்பத்தின்படி நடக்கவேண்டியது தம் கடமை
என்று எண்ணிப் பொறுமையுடனிருந்தார்.
பிறகு கார்டு ரெடிங்கின் சர்க்காரும் "மௌலானா முகம்மதலி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதின் பேரில் அவர் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது" என்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இது காந்திஜிக்கே பொறுக்கவில்லை. உடனே காந்திஜி லார்ட் ரெடிங்குக்கு எழுதி அநுமதி பெற்று அவர்களுடைய சந்திப்பின் விவரங்களையும் தாம் மௌலானாவுக்குக் கூறிய புத்திமதியையும் வெளிப்படுத்தினார். மௌலானா முகம்மதலி 'பயந்துபோய் மன்னிப்புக் கேட்கவில்லை' என்பதை அப்போது அனைவரும் அறிந்து கொண்டனர்.
இவ்விதம் தமக்கு நேர்ந்த அபகீர்த்தியைக் கூடப் பொருட்படுத்தாமல் மௌலானா முகம்மதலி மகாத்மாவின் சொல்லை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரைத் தம்மிடமிருந்து பிரித்துக் கைது செய்து போலீஸார் கொண்டுபோனது மகாத்மாவைக் கலங்கச் செய்துவிட்டது. ஆயினும் அந்தக் கலக்கமானது மகாத்மா காரியம் செய்வதைத் தடைசெய்ய வில்லை. ஜனக்கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு மகாத்மா
நேரே சென்று மக்களை அமைதியாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார். திரும்பவும் மௌலானாவைச் சிறைப்படுத்தி யிருந்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துப் பேச அநுமதி கேட்டார். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மௌலானாவுடன் பிரயாணம் செய்த பீகம் முகம்மதலியும் மௌலானாவின் காரியதரிசியும் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு அப்போதுதான் வெளியில் வந்தார்கள். அவர்கள் மௌலானாவை 107-வது பிரிவின்படியும் 108-வது பிரிவின்படியும் கைது செய்திருப்பதாக விவரம் தெரிவித்தார்கள்.
கன்னிங் காம் என்ற பெயர் தமிழ் நாட்டில் பலருக்கு நினைவிருக்கும். சென்னையில் பின்னால் உப்புச் சத்தியாக்கிரஹம் நடந்தபோது தடபுடலான அடக்கு முறையைக் கையாண்டு கொடுமைக்குப் பெயர் பெற்ற மனிதர். இவர் அச்சமயம் சி.ஐ.டி.போலீஸ் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாயிருந்தார். மௌலானா முகம்மதலியைக் கைது செய்யும் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. விசாகப்பட்டினம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மேற்படி கன்னிங்காமுக்கு அனுப்பிய உத்தரவின் விவரம் பின்வருமாறு:-
"முகம்மது அலி அமைதியாகவும் நன்னடத்தையுடனும் இருப்பதற்காக அவரிடம் 107, 108-வது பிரிவுகளின் கீழ் ஜாமீன் கேட்க வேண்டியிருப்பதால். மேற்படி முகம்மது அலியைக் கைதுசெய்து என் முன்னால் கொண்டுவந்து ஒப்புவிக்கவேண்டியது. இதில் தவறவேண் டாம். 14உ செப்டம்பர் 1921.
(ஒப்பம்) ஜே.ஆர்.ஹக்கின்ஸ்,
ஜில்லா மாஜிஸ்ட்ரேட், விசாகப்பட்டினம்"
மேற்படி உத்தரவைப் பற்றித்தெரிந்து கொண்டதும் மகாத்மா காந்தி ரயில் ஏறித் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். ரயிலில் பிரயாணம் செய்துகொண்டே மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி உருக்கமான கட்டுரை ஒன்று "எங் இந்தியா"ப் பத்திரிகைக்கு எழுதினார். அந்தக் கட்டுரை யின் கடைசிப் பகுதி பின்வருமாறு:-
"அலி சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்ன? பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றை உடனே விட்டொழிப்பதுதான். அலி சகோதரர்களுடைய தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை, சத்தியம், இடைவிடாச் செயல் திறமை ஆகியவற்றையும் அனைவரும் மேற்கொண்டால் சுயராஜ்யம் அடைவது பற்றிச் சந்தேகம் என்ன? ஜில்லா மாஜிஸ்ட்ரேட் போலீஸ் அதிகாரிக்குப் போட்ட உத்தரவின் கடைசியில் "இதில் தவறவேண்டாம்!" என்று கண்டிருந்தது. அந்த உத்தியோகஸ்தர் அதை நிறைவேற்றுவதில் தவறவில்லை! மேலேயிருந்து வரும் உத்தரவை நிறைவேற்றுவதில் அநேக ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயிரையே அர்ப் பணம் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கிலீஷ் சாதியின் பெருமை. காங்கிரஸ் இந்தியர்களுக்கு அவ்விதமே 'உத்தரவு' இட்டிருக்கிறது. 'உத்தரவு' 'கட்டளை' 'புத்திமதி' – எப்படி வைத்துக்கொண்டாலும் சரிதான். 'அதில் தவறவேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விதம் நாம் செய்யப் போகிறோமா? மிச்சமுள்ள சில மாதங்களில் நாம் தீவிரமாக வேலை செய்து, 'காங்கிரஸ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் தவறவில்லை' என்று நாம் நிரூபிக்கவேண்டும்."
-----------------------------------------------------------
23. கராச்சி விசாரணை
மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி மகாத்மா எழுதிய கட்டுரையில், "அலி சகோதரர்கள் இணை பிரியாத இரட்டையர்கள். அவர்களைப் பிரித்து வைக்க
முடியாது. ஆகையால் முகம்மதலியைக் கைது செய்தவர்கள் ஷவுகத் அலியையும் கைது செய்தே தீர்வார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை என்பது இரண்டு
நாளைக்குள் தெரிய வந்தது.
மௌலானா முகம்மதலியை விசாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் கைது செய்தது ஒரு காரணார்த்தமாகத்தான். 17-ம் தேதியன்று மேற்படி 107,108 பிரிவு ஜாமீன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அந்த க்ஷணமே கராச்சியிலிருந்து வந்திருந்த வாரண்டின்படி மௌலானா முகம்மதலியை மீண்டும் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு போனார்கள்.
அதே தேதிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த மௌலானா ஷவுகத் அலி, டாக்டர் ஸைபுடீன் கிச்லூ, பீர்குலாம் முஜாதீக், மௌலானா நிஸார் ஆமத், மௌலானா ஹுசேன் ஆமத். ஜகத்குரு சாரதாபீட சங்கராச்சாரியார் ஆகியவர்களையும் கைது செய்தார்கள். எல்லாரையும் கராச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
இப்படி அவர்களை யெல்லாம் கராச்சிக்குக் கொண்டு போனதின் காரணம் என்னவென்றால், ஜூலை மாதம் 8ம் தேதி கராச்சியில் அகில இந்திய கிலாபத் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில், அதுவரை காங்கிரஸில் செய்திருந்த தீர்மானங்களையெல்லாம் விடக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேறியது.
"கிலாபத் விஷயமாக பிரிட்டிஷ் சர்க்கார் நீதி வழங்காதபடியால் இனிமேல் மதப் பற்றுள்ள எந்த முஸ்லிமும் சைன் யத்தில் சேவை செய்வதும், சைன்யத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு உதவி செய்வதும் மார்க்க விரோதமாகும்" என்பது அந்தத் தீர்மானத்தின் கருத்து.
கல்கத்தாவிலும் நாகபுரியிலும் நிறைவேறிய ஒத்துழையாமைத் தீர்மானத்தில் சைன்ய சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சைன்யத்தில் உள்ளவர்களை வேலையை விடும்படி செய்வதற்குக் காலம் வரவில்லை என்று கருதப்பட்டது. அது மட்டுமல்ல. மற்ற ஒத்துழையாமைத் திட்டங்களையெல்லாம் பிரிட்டிஷ் சர்க்கார் ஒருவேளை அலட்சியமாகக் கருதி விட்டு வைக்கலாம். ஆனால் சைன்ய சேவையை விட வேண்டும் என்று சொன்னால் உடனே மிகக் கடுமையான அடக்குமுறை தொடங்குவார்கள். அதனுடைய பலாபலன்கள் இப்படியிருக்கு மென்று ஊகிப்பது கடினம். ஆகையால் அதைக் கடைசித் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மாவும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள்.
ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வளவு தூரம் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. "முஸ்லிம்கள் இனிமேல் பிரிட்டிஷ் சைன்யத்தில் சேர்ந்து சேவை செய்வது பாவம்" என்று கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்துடன் நின்றுவிட வில்லை. அச்சமயத்தில் அங்கோராவில் முஸ்தபா கமால் பாட்சாவின் தலைமையில் புதிய துருக்கி அரசாங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த அங்கோரா அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் போர் தொடுத்தால், "இந்திய முஸ்லிம்கள் உடனே சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கி இந்தியாவில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்றும் ஒரு தீர்மானம் நிறைவேறியது.
இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிய கராச்சி மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். தமது தலைமை யுரையில் மேலே கூறிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். மௌலானா ஷவுகத் அலி முதலியவர்கள் மேற்படி தீர்மானங்களை
ஆதரித்துப் பேசினார்கள்.
இவ்விதம் இராஜத் துவேஷப் பிரசாரம் செய்த காரணத்துக்காகவே மேற் கூறிய ஏழு தலைவர்களும் பல இடங்களில் கைது செய்யப்பட்டுக் கராச்சியில் விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டனர்.
காந்திஜி வால்ட்டேரில் மௌலானா முகம்மதலியைப் பிரிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். மௌலானாவின் மனைவியான பீகம் முகம்மதலியும் மகாத்மாவுடன் சென்னைக்கு வந்தார். அலி சகோதரர்கள் மிக்க மத வைராக்கியம் உள்ளவர்கள். ஆகவே பீகம் முகம்மதலி இஸ்லாமிய வழக்கப்படி கோஷா முறையை அனுஷ்டித்தார். முகமூடி இல்லாமல் வெளியில் புறப்படுவதில்லை. அப்படிப்பட்ட கோஷாப் பெண்மணி தமது கணவர் தொடங்கிய வேலையைத் தாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதிய மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யலானார்.
சென்னை வந்து சேர்ந்ததும் காந்திஜிக்கு மௌலானா முகம்மதலி கராச்சித் தீர்மானம் காரணமாகக் கைதியானார் என்னும் செய்தி கிடைத்தது. அன்று மாலையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம். ஜல சமுத்திரத்தின் கரையில் ஜன சமுத்திரம் திரண்டிருந்தது. மகாத்மாவும் பீகம் முகம்மதலியும் கூட்டத்துக்கு வந்தார்கள். மக்களின் ஆவேசத்தையும் பரபரப்பையும் சொல்லி முடியாது. ஆரவாரம்
கொஞ்சம் அடங்கிய பிறகு மகாத்மா காந்தி பேசினார். பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறியைப் போல் சுடர் விட்டது.
"மௌலானா முகம்மதலியை எந்தக் குற்றத்துக்காகக் கைது செய்தார்களோ அதே குற்றத்தை நான் இப்பொது செய்யப் போகிறேன்!" என்று காந்தி மகாத்மா கூறியதும் அங்கே திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கும் ரோமாஞ்சலி உண்டாயிற்று.
கராச்சியில் மௌலானா முகம்மது அலி என்ன பிரசங்கம் செய்தாரோ, அதையே மகாத்மா காந்தி வார்த்தைக்கு வார்த்தை சரியாக அந்த மாபெருங் கூட்டத்தில் சொன்னார். கராச்சி தீர்மானங்களின் வாசகத்தையும் எடுத்துக் கூறினார். "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நானும் செய்து விட்டேன். என்னையும் சர்க்கார் கைது செய்யட்டும்!" என்றார் காந்தி மகான்.
பொது மக்கள், "இதுவல்லவோ சிநேகம்? இதுவல்லவா சகோதர பாவம்!" என்று எண்ணி வியந்தார்கள். தம்முடைய அருமைச் சகோதரரும் சகாவுமான முகம்மது அலியை மகாத்மா காந்தி ஆதரித்து நின்ற மேன்மைக் குணம் மக்களைப் பரவசப் படுத்தியது.
பிறகு சென்னைக் கடற்கரையில் தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருந்த மலை போன்ற விதேசித் துணிகளுக்கு மகாத்மா தீ மூட்டினார். கூட்டத்திலிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் மேலிருந்த விதேசித் துணிகளைக் கொண்டு வந்து தீயிலே போட்டார்கள். அத்தனை பெரிய துணிக்குவியலும் அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பராயிற்று.
சென்னைக் கடற்கரையில் மகாத்மா மேற்கண்டவாறு பேசிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்த தேசத் தலைவர்கள் "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நாங்களும் செய்தே தீருவோம்!" என்று சொன்னார்கள்.
ஆகவே காந்திஜியும் மற்றும் ஐம்பது பிரபல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டுக் கையெழுத்துப் போட்டு அக்டோபர் மாதம் 4 - ஆம் தேதி ஒரு விக்ஞாபனத்தை வெளியிட்டார்கள். அக்டோபர் மாதம் 6 - ஆம் தேதி "யங் இந்தியா" வில் மேற்படி விக்ஞாபனமும் கையெழுத்துக்களும் பிரசுரிக்கப்பட்டன.
"அலி சகோதரர்களூம் மற்றவர்களும் எதற்காகக் கைது செய்யப் பட்டார்கள் என்பதைப் பம்பாய் சர்க்கார் 1921 - ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 15 - ஆம் தேதி வெளியிட்டுள்ளா அறிக்கையில் விளக்கியிருக்கிறார்கள்; மேற்படியார்கள் கைது செய்யப்பட்டதை உத்தேசித்து, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புவதாவது:-
ராணுவத்திலோ, சிவில் நிர்வாகத்திலோ கலந்து ஜனங்கள் சர்க்காருக்குத் தொண்டு செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தாராளமாக அபிப்பிராயம் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும், தார்மீகத் துறையிலும் இந்தியா சீர்குலைந்திருப்பதற்குத் தற்போதுள்ள இந்தியா சர்க்காரே காரணமாகும். மக்களுடைய தேசீய அபிலாஷைகளை அடக்கி ஒடுக்குவதற்குப் போலீஸையும் ராணுவத்தையும் சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ரௌலட் சட்டக் கிளர்ச்சியைச் சொல்லலாம். இந்தியாவுக்கு ஒரு தீமையும் செய்தறியாத அராபியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள் முதலியோருடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய ராணுவத்தையும் இந்திய சர்க்கார் உபயோகித்திருக்கிறது.
இத்தகைய சர்க்காரில் சிவில் உத்தியோகஸ்தராகவும் சேனையில் சிப்பாயாகவும் தொண்டு செய்வது தேசீய கௌரவத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். ஆகையால், சர்க்காருடனுள்ள தொடர்பை அறவே ஒழித்து விட்டு, ஜீவனத்திற்கு வேறு ஏதாவது வழியைத் தேடிக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்திய சிப்பாயினுடையவும் சிவில் உத்தியோகஸ்தருடையவும் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
(ஒப்பம்) எம்.கே.காந்தி அபுல்கலாம் ஆஸாத்; அஜ்மல்கான் (டில்லி; லஜபதிராய் (லாகூர்); மோதிலால் நேரு (அலஹாபாத்); சரோஜினி நாயுடு (பம்பாய்): அப்பாஸ் தயாப்ஜி, என்.ஸி. கேல்கர், வி.ஜே.படேல், வல்லபாய் படேல் (அஹமதாபாத்); எம்.ஆர்.ஜயகர் (பம்பாய்); டி.வி.கோகலே(பூனா); எஸ்.ஜீ.பேங்கர், ஜவாஹர்லால்
நேரு (அலஹாபாத்); கங்காதர தேஷ்பாண்டே (பெல்காம்); லக்ஷ்மி தாஸ் தேர்ஸி, உமர் சோபானி, ஜம்னாலால் பஜாஜ், எம்.எஸ். ஆனே (அம்ரோதி); எஸ்.இ.ஸ்டோக்ஸ், கோட்கார் (சிம்லா); எம்.ஏ. அன்ஸாரி (டில்லி); கலிக்குஸ்ஸமான் (டில்லி); கே.எம். அப்துல் கபூர் (டில்லி); அப்துல் பாரி (லக்ஷ்மண்புரி); கிருஷ்ணாஜி நீல்கண்ட்
(பெல்காம்); கி. இராஜகோபாலாச்சாரி (சென்னை); கொண்டா வெங்கடப்பையா (குண்டூர்); ஜி.ஹந்ஸர்வோத்தமராவ் (குண்டூர்); அகஸுயா ஸாராபாய், ஜீதேந்திரலால் பானர்ஜி, எம். ஹெச். கித்வாய் (டில்லி); சியாம் சுந்தர சக்கரவர்த்தி (கல்கத்தா); ராஜேந்திர பிரசாத் (பாட்னா); ஆஸாத் சோபானி, ஹஸரத் மோஹானி (கான்பூர்); மஹாதேவ் தேஸாய், பி.எப்.பரூச்சா, யாகூப் ஹஸன், பி.எஸ். முஞ்ஜே, ஜெயராம்தாஸ்
தௌலத்ராம், எம்.ஆர். சோல்கர் (நாகபுரி); வி.வி. தர்தானே, எ.ஹெச், சித்திக் காத்ரி (பம்பாய்); கூடார் ராமச்சந்திர ராவ் (ஆந்திரா) மியா முகம்மது ஹாஜிஜான் முகம்மது சோட்டானி.
மேற்படி விக்ஞாபனத்தில் ச்ரி. சி. ஆர். தாஸின் கையெழுத்து காணப்படாதது பலருக்கும் வியப்பை அளித்தது. தந்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதந்தான் அதற்குக் காரணம் என்று தெரியவந்தது. எனவே, ச்ரி சித்தரஞ்சன தாஸின் கையெழுத்தும் பிற்பாடும் அந்த விக்ஞாபனத்தில் சேர்ந்தது.
அந்தப் புகழ்பெற்ற 1921 - ஆம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் முக்கிய துணைவர்களாக விளங்கிய தலைவர்கள் யார் யார் என்பதை மேற்படி விக்ஞாபனத்தின் கீழே வெளியாகியுள்ள கையெழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
டில்லியில் ஹக்கீம் அஜ்மல்கான் தலைமையில் கிலாபத் கமிட்டி கூடி சைன்யத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறச் சொல்வது முஸ்லிம்களின் மதக் கடமை என்று தீர்மானம் செய்தது.
தேசமெங்கும் ஆயிரக் கணக்கான கூட்டங்களில் பிரசங்கிகள் மௌலானா முகம்மதலியின் கராச்சி பேச்சையொட்டிப் பேசினார்கள். மேடையிலிருந்து ஒரு பிரமுகர் அந்தப் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதும் திரளான மக்கள்
திரும்பிச் சொல்வதும் சர்வசாதாரணமாக நடக்கலாயிற்று.
இவ்வளவு கிளர்ச்சி தேசத்தில் நடந்து கொண்டிருக்கையில் கராச்சியில் மௌலானா முகம்மதலி மீதும் மற்ற அறுவர்மீதும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அலி சகோதரர்களும் மற்ற முஸ்லிம் தலைவர்களும்"எங்கள் மதக் கடமையைச் செய்தோம். சர்க்கார் சட்டம் எப்படியிருந்தாலும் எங்களுக்கு அக்கரையில்லை" என்ற முறையில் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு
வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
"கவலை வேண்டாம், அலி சகோதரர்கள் சின்னச் சிறையிலும் நாம் பெரிய சிறையிலும் இருக்கிறோம். இரண்டு சிறைக் கதவுகளையும் உடைத்து விடுதலை செய்யும் சக்தி நம் கையில் இருக்கிறது!" என்று காந்தி மகான் கூறினார்.
-----------------------------------------------------------
24. முழத்துண்டு விரதம்.
தமிழ் நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உண்டு. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை நின்றவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். அந்த சத்தியாக்கிரஹப் போரில் தமிழ்நாட்டு
வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்து அழியாப் புகழ்பெற்றாள்.
ராவ்லட் சட்டத்தை எதிர்த்து எப்படி இயக்கம் நடத்துவதென்று மகாத்மா காந்தி யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சென்னை வந்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி அகில இந்திய ஹர்த்தால் நடத்தவேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தங்கியிருந்த போது மகாத்மாவின் மனதில் உதயமாயிற்று.
இவற்றைக் காட்டிலும் மகாத்மாவின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாக்கிய ஒரு சம்பவம் 1921 செப்டம்பரில் மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த போது நிகழ்ந்தது.
அந்தநாளில் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்காகச் செல்வோர் தங்கள் பிரசங்கத்துக்கு முக்கியமாகக் கையாண்ட விஷயம் ஒன்று உண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் இங்கிலீஷ்காரர்கள் துணிமூட்டையைத் தோளிலே சுமந்துகொண்டு இந்தியாவில் துணி விற்க வந்ததிலிருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார்கள். ஆங்கில நாட்டுத் துணியோடு இந்திய சுதேசித் துணி போட்டி போடாமலிருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் கையாண்ட முறைகளைச் சொல்வார்கள். இந்தியாவில் கைத்தறியில் உற்பத்தியான துணிகளின் மேன்மையைப் பற்றிப் பேசுவார்கள். டாக்கா மஸ்லின் துணியின் நயத்தைப்பற்றியும், ஒரு பீஸ் மஸ்லினை ஒரு மோதிரத்துக்குள் அடைத்த கதையைப் பற்றியும், அவுரங்க
ஜீப்பின் குமாரி டாக்கா மஸ்லின் உடுத்திக்கொண்ட வரலாற்றைக் குறித்தும் விஸ்தாரமாகச் சொல்வார்கள். அத்தகைய அதிசயமான துணிகளை நெய்த கைத்தறிக்காரர்களின் கட்டை விரல்களை ஆங்கிலேயர் துண்டித்தெறிந்த அக்கிரமக் கொடுமையைப் பற்றி இரத்தம் கொதிக்கும்படி ஆத்திரமாய்ப் பேசுவார்கள்.
"இங்கிலீஷ் ராஜ்யம் இந்தியாவில் லங்காஷயர் துணி வியா பாரத்துக்காகவே ஏற்பட்டது. இப்போதும் லங்காஷயரின் நன்மையை முன்னிட்டே இந்தியா ஆளப்பட்டு வருகிறது. என்றையதினம் இந்தியர்கள் அன்னியத் துணியை வாங்குவதை அடியோடு நிறுத்துகிறார்களோ, அன்றைக்கே இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் மூட்டைகட்டி விடுவார்கள்!" என்று கூறுவார்கள்.
இவ்வாறெல்லாம் அந்தநாளில் காங்கிரஸ் வாதிகள் பிரசாரம் செய்ததில் பெரிதும் உண்மை இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனாலேயே 1905-1906-ல் வங்காளத்தில் ஒரு தடவை சுதேசி இயக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ் துணிகளைப் பகிஷ்கரிப்பதுதான். இந்த இயக்கத்துக்கு அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது பம்பாய்--ஆமதாபாத் ஆலை முதலாளிகளின் பேராசையாகும். சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆலைத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.
இதன் பலன் என்ன ஆயிற்று என்றால், கொஞ்ச காலத்துக்கெல்லாம் பொது மக்களில் பலருக்குச் சுதேசி இயக்கத்தின் பேரில் பற்று விட்டுப் போய்விட்டது.
இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் காந்தி மகான் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவின் அடிமைத்தனம் போக வேண்டுமானால். இந்தியர்கள் அன்னியத் துணி வாங்குவதையும் அணிவதையும் அடியோடு நிறுத்தியே யாகவே்ண்டும். ஆனால், முன்னொரு தடவை நடந்ததுபோல் ஆலைமுதலாளிகள் பொதுமக்களின் தலையில் கையை வைத்துக் கொள்ளை லாபம் தட்டுவதையும் தடுக்க வேண்டும். இதற்குச் சாதனமாக மகாத்மா காந்தி கைராட்டை இயக்கத்தைக் கைக்கொண்டார். கை ராட்டையில் நூல் நூற்று அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நெய்த கதரையே உடுத்தவேண்டும் என்று சொன்னார். இப்படிக் கதர் உடுத்துவதை வற்புறுத்துவதால் ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்ல. மகாத்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றக் கைராட்டையும் கதரும் தகுந்த உபகரணங்களாயிருந்தன. மகாத்மா காந்தி தற்கால நவநாகரிக வாழ்க்கையை வெறுத்தார். ஆடம்பர சுகபோக வாழ்க்கையை வெறுத்தார். கைராட்டையும் கதரும் எளிய வாழ்க்கை முறையின் சின்னங்களா யிருந்தன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் உடலை உழைத்துப் பாடுபடவேண்டும்
என்று மகாத்மா கருதினார். அப்படி எல்லாரும் உடல் உழைப்பைக் கைக்கொள்ளக் கைராட்டை நல்ல சாதனமாயிருந்தது. இயந்திர நாகரிகம் மனித சமூகத்தின் ஆத்மீக அழிவுக்குக் காரணமாகும் என்பது காந்திஜியின் கொள்கை. கைராட்டை இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்பதற்கு ஆயுதமாயிருந்தது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களில் வாழும் மக்களை மகாத்மா 'தரித்திர நாராயணர்'களாகக் கண்டார். அவர்களுடைய வறுமையை நினைத்து உருகினார். வருஷத்தில் ஆறு மாதம் கிராமவாசிகள் வேலையில்லாமலிருக்கிறார்கள் என்பதும் மகாத்மாவுக்குத் தெரிந்தது. லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு வேலையில்லாத நாட்களில் வேலை கொடுக்கக்
கூடியது கைராட்டினம் ஒன்றுதான் என்பதை மகாத்மா கண்டார். அநாதை ஸ்திரீகளும் வயதான மூதாட்டிகளும் பிறரை அண்டாமலும் பட்டினி கிடக்காமலும் 'இஷ்டமுடன் தம் குடிசை நிழலிலிருந்து நூல் இழைத்துப் பிழைக்கலாம்' என்று கண்டார். இத்தகைய காரணங்களினால் கைராட்டினத்தை மகாத்மா காந்தி 'காமதேனு' என்று போற்றினார். அதைக் குறித்து இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தார்.
இந்தியா தேசத்தின் சிறந்த அறிவாளிகளில் சிலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டைப் பிரசாரம் பிடிக்கவில்லை. அவ்விதம் பிடிக்காதவர்களில் ஒருவர் மகாகவி ரவீந்திரநாத தாகூர். மகாத்மாவிடம் மகாகவி எத்தனையோ அபிமானமும் மரியாதையும் கொண்டிருந்தவர். 'மனித சமூகத்தை ரட்சிக்க அவதரித்த மகாபுருஷர்களில் ஒருவர் மகாத்மா காந்தி' என்று டாக்டர் தாகூர் பலமுறையும் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் காந்திஜியின் கைராட்டைப் பிரசாரத்தை
மகாகவி தாகூர் விரும்பவில்லை. இராட்டைப் பிரசாரத்தைப் "பிற்போக்கு இயக்கம்" என்று தாகூர் பகிரங்கமாகக் கூறிக் கண்டித்தார். "இயந்திரங்களினால் மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. காந்திஜி அந்த முன்னேற்றத்தை
யெல்லாம் புறக்கணித்து இந்திய மக்களைப் பல நூறு வருஷம் பின்னால் கொண்டு போகப் பார்க்கிறார்" என்று டாக்டர் தாகூர் சொன்னார்.
காந்தி மகான் மகாகவி தாகூரைக் 'குருதேவ்' என்று போற்றி வந்தவர். தென்னாப்பிரிக்காவில் தம்முடன் டால்ஸ் டாய் பண்ணையில் வாழ்ந்தவர்களை இந்தியா வந்ததும் முதன் முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கே மகாத்மா அனுப்பினார் அல்லவா? ஆனபோதிலும் கைராட்டை இயக்கத்தைப் பற்றியவரையில் மகாத்மா காந்தி குருதேவரின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. "வானத்தில் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டு பறக்கும் வானம்பாடிக்குப் பூமியிலுள்ள கஷ்டங்கள்
எப்படித் தெரியும்? குருதேவர் தாகூர் மகாகவி; அவருக்கு ஏழைகளின் பட்டினிக் கொடுமை இத்தகையது என்று தெரியாது. தெரிந்திருந்தால் கைராட்டைதான் ஏழைகளின் காமதேனு என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்" என்று காந்தி மகான் அணுவளவும் தமது கொள்கையிலிருந்து வழுவாமல் தாகூருக்குப் பதில் கூறினார்.
1921-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பூரணமாய் நடத்திவிட வேண்டும் என்று காந்திஜி கருதியிருக்கிறார். செப்டம்பரில் அத்திட்டம் நிறைவேறி விட்டால் அடுத்து வரும் மாதங்களில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி வருஷக் கடைசிக்குள் சுய ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று உத்தேசித்திருந்தார்.
வால்ட்டேரில் மௌலானா முகம்மதலி சிறைப்பட்டது மகாத்மாவின் சுயராஜ்ய தாகத்தைப் பன்மடங்கு ஆக்கியது. விதேசித் துணி பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆர்வமும் பெருகிற்று. இந்த ஆர்வத்துடனே தான் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடன் மௌலானா ஆஜாத் சோபானி என்னும் முஸ்லிம் பெரியாரும் பிரயாணம் செய்தார்.
காந்திஜி கோஷ்டியார் ஏறிய ரயில் விழுப்புரம் சென்றது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்குக் கைராட்டையும் கதரையும் பற்றி எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியப் படவில்லை. கூட்டத்தில் அவ்வளவு இரைச்சல். "உட்காருங்கோ!" "சத்தம் போடாதேங்கோ!" என்று நூற்றுக் கணக்கான குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன. ஜனங்கள் போட்ட இரைச்சலுடன் இரைச்சலை அடக்க முயன்றவர்களின் கூப்பாடும் சேர்ந்து ஏக இரைச்சலாகிவிட்டது. காந்திஜி ஒரு
வார்த்தைகூட அக்கூட்டத்தில் பேச முடியவில்லை. ரயில் வண்டி மேலே சென்றது.
பறங்கிப் பேட்டையில் மிஸ் பீடர்ஸன் என்னும் ஐரோப்பிய அம்மையார் ஆரம்பித்திருந்த ஆசிரமத்துக்கு மகாத்மா அஸ்திவாரம் நாட்டினார். பிறகு கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணத்தில் மகாத்மாவைத் தரிசிக்க நாற்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேரும் காந்திஜியைப் பக்கத்தில் சென்று பார்க்க முயன்றார்கள். கூட்டத்தில் எழுந்த
கூச்சலையும் கூப்பாட்டையும் சொல்லி முடியாது. கும்பகோணம் கூட்டத்திலும் மகாத்மாவினால் பேச முடியவில்லை. அங்கிருந்து திரிசிராப்பள்ளிக்குச் சென்றார்.
திரிசிராப்பள்ளியில் தேச பக்தர் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்களின் வீட்டில் மகாத்மாவுக்கு நிம்மதி கிடைத்தது. "மகாத்மாவுடன் ஏழு மாதம்" என்னும் நூலில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பிரயாணத்தின் போது மகாத்மாவின் காரியதரிசியாகத் தொண்டு செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ். அவர் மேற்கூறிய புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:-
"திரிசிராப்பள்ளி ஸ்டே ஷனை அடைந்ததும் எங்களுக்கெல்லாம் மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ரயில்வே நிலையத்தில் ஏராளனமான ஜனங்கள் கூடியிருந்தபோதிலும் இரைச்சல் என்பதே கிடையாது. அன்றைக்கு மகாத்மாவின்
மௌன தினம். ரயிலை விட்டு அமைதியாக இறங்கி ஜாகைக்குப் போக முடிந்தது. இங்கே ஜனங்களிடம் காணப்பட்ட அமைதியும் ஒழுங்கும், வழியெல்லாம் ஜனக்கூட்டத்தின் அமளியினால் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ரயில்வே நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள டாக்டர் ராஜனுடைய வீட்டில் எங்களுக்கு ஜாகை. டாக்டர் ராஜன் அப்போது மாகாண காங்கிரசின் காரியதரிசி.
அவருடைய வீடு ஏறக்குறைய ஓர் ஆசிரமமாக மாறியிருந்தது. தம்முடைய குடும்பத்தில் யாரும் இனிக் கடையில் துணி வாங்கக்கூடாது என்றும் அவரவர்களுடைய தேவைக்கு வேண்டிய நூல் அவர்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு விட்டதாக டாக்டர் ராஜன் மகாத்மாஜியிடம் தெரியப்படுத்தினார். டாக்டர் ராஜனுடைய வீடு திருச்சி நகரத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தோட்டத்தின்
நடுவில் இருந்தது. புயலிலும் சண்டமாருதத்திலும் அடிபட்டுத் திண்டாடிய கப்பல் ஒரு அமைதியான துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தால் பிரயாணிகள் எவ்வளவு ஆனந்தம் அடைவார் களோ அவ்வளவு ஆனந்தம் நாங்களும் அடைந்தோம்.
இவ்வாறு திருச்சியில் டாக்டர் ராஜனுடைய கண்டிப்பான பாதுகாப்பின் காரணமாக மகாத்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வும் அமைதியும் கிடைத்தது. ஆனால் அமைதி வெளியில் இருந்ததே தவிர அவருடைய மனதில் நிம்மதி ஏற்படவில்லை. விதேசித் துணியைப் பகிஷ்கரிப்பதிலும் கதரைப் பெருக்குவதிலும் அவருடைய மனதில் குடிகொண்டிருந்த தாபத்தை அவர் மக்களுக்கு வெளியிட விரும்பினார்.
ஆனால் ஜனங்களோ மகாத்மாவை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். மாபெருங் கூட்டம் கூடி மக்கள் போட்ட கூச்சலினால் மகாத்மாவின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழுவதே இல்லை.
"ஐயோ! நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றனவே. இவ்வளவு ஜனக்களும் வந்து கூட்டம் கூடிக் கூச்சல் போட்டு விட்டு என்னைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்களே? கைராட்டையைப் பற்றியும் கதரைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வாறு சொல்வேன்? என் இதயக் கொதிப்பை இவர்களுக்கு எவ்வாறு வெளியிடுவேன்?" என்று மகாத்மா யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் பொதுக் கூட்டங்களில் ஓரளவு அமைதி நிலவியது. திருச்சியிலிருந்து மகாத்மா திண்டுக்கல்லுக்குப் போனார். அங்கே பழைய கதைதான். கூட்டம் பிரமாதம்; கூச்சலும் பிரமாதம். மகாத்மாவினால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குப் போனார். மதுரை மகாத்மாவுக்கு அளித்த வரவேற்பு மற்ற ஊர் வரவேற்புகளையெல்லாம் தூக்கி அடித்து விட்டது. அவ்வளவு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஆனால் பொதுக் கூட்டத்தைப் பற்றிய வரையில் பழைய கதையேதான்! அமைதியை நிலைநாட்ட மதுரைத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். மகாத்மாவும் முயன்று
பார்த்தார். ஒன்றும் பயன்படவில்லை. மகாத்மா பிரசங்கம் செய்யாமலே கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லும்படி நேர்ந்தது.
மதுரையில் அன்றிரவு மகாத்மாவின் ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர்
இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணா விரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொன்கிறவர் அல்லவா 'மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்னதியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது.
மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களிள் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத்துணி உடுத்திக்கொண்டு வந்தார். அவரைப்பார்த்து மகாத்மா "நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு நாள் சொன்னபிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?" என்று கேட்டார். "கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால் கதர் கிடைக்கவில்லை;" என்றார் அந்தப் பிரமுகர்.
அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனதில் அவர் தேடிக் கொண்டிருந்த சாதனம் உதயமாகி விட்டது. "ஆஹா! இவர் கதர் கிடைக்கவில்லை என்கிறார் நாமோ இடுப்பில் பத்துமுழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?" என்று தோன்றியது.
அதே சமயத்தில் தமிழ் நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள் கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புறங்களில் வேலை செய்பவர்கள்
பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். "இது ஏன்?" என்று காந்திஜி தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கேட்டார். "ஒருதுணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை" என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்து போயிருந்தது.
இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, மகாத்மா காந்தி அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார்.
"இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றப்படி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம் போல் யோசித்து முடிவு செய்வேன்" என்றார்.
இவ்விதம் சொல்லிவிட்டு, பத்துமுழ வேஷ்டி--சட்டை-- குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். தம்முடைய சகாக்களைப் பார்த்து "புறப்படலாம் காரைக்குடிக்கு!" என்று சொன்னார்.
மகாத்மாவின் சீடர்கள் கதி கலங்கிப் போனார்கள். இது ஒரு விபரீதமான விரதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு இப்போது விரதம் எடுத்துக்கொண்டாலும் அதை மகாத்மா நிரந்தரமாகவே கொண்டு விடுவார் எந்று
பயந்தார்கள்! அவர்களில் ஒருவர் ஓடிப்போய் ராஜாஜியையும் டாக்டர் ராஜனையும் அழைத்து வந்தார். ராஜாஜியும் டாக்டர் ராஜனும் எவ்வளவோ காரணங்களைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் மகாத்மா தமது உறுதியைக் கைவிட
விரும்பவில்லை. அதன் பேரில், இத்தகைய விரதம் எடுத்துக் கொன்வதைக் கொஞ்சநாள் தள்ளியாவது போடும்படி ராஜாஜியும் டாக்டர் ராஜனும் வேண்டிக்கொண்டார்கள். அதற்கும் மகாத்மா இணங்கவில்லை.
விடாமல் வாதம் செய்த ராஜாஜியைப் பார்த்து மகாத்மா, "உங்களுடைய வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. ஆனால் நான் செய்வது தான் சரி என்பதில் எனக்குலவலேசமும் சந்தேகமில்லை" என்று சொன்னார்.
அன்று அதிகாலையில் மூன்று மணிக்குத் தாம் விழித்துக் கொண்டதாகவும், தூக்கமும் விழிப்புமாயிருந்த நிலையில் இந்த யோசனை தமக்குத் தோன்றியதாகவும், அது தம்முடைய அந்தராத்மாவின் கட்டளையென்றும், அதை மீற முடியாது என்றும் மகாத்மா தெரிவித்தார்.
பிறகு நடந்ததைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் எழுதியிருப்பதாவது:-
" மகாத்மாஜி இடுப்பில் மட்டும் ஒரு முழ அகலத் துணி ஒன்றை உடுத்திக் கொண்டு காரைக்குடிக்குப் புறப்படத் தயாரானார். மகாத்மாவையும் அவருடைய சகாக்களையும்
ஏற்றிச் செல்வதற்கு வாசலில் நாலு மோட்டார் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. மதுரைமா நகரின் ஜனங்களும் அதிகாலையிலேயே எழுந்து மகாத்மாவைத் தரிசிப்பதற்குச் சாலையின் இரு புறமும் வந்து மொய்த்துக்கொண்டு நின்றார்கள். மகாத்மா அரைத் துணி ஒன்றுடனே, சட்டை குல்லா அங்க வஸ்திரம் ஒன்றுமில்லாமல், மோட்டார் வண்டியில் போய் ஏறிய போது, அவருடைய சகாக்களும் சீடர்களும் உணர்ச்சி வசப் பட்டுத் தலை குனிந்து நின்றார்கள். திறந்த மோட்டார் வண்டி அதன் பிரயாணத்தைத் தொடங்கிய போது உதய சூரியனின் செங்கிரணங்கள் மகாத்மாவின் மார்பிலும் தலையிலும் விழுந்தன.மகாத்மாவின் தாமிர வர்ணத் திருமேனி ஒரே ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது.
பின்னர் தமிழ்நாடெங்கும் மகாத்மா காந்தி முழத்துண்டு அணிந்தே பிரயாணம் செய்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த ஜனங்கள் பரவசமடைந்தார்கள். மகாத்மா வின் பிரசங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இனி இல்லை. சட்டை அணியாத மகாத்மாவின் புனிதத் திருமேனியைத் தரிசித்த உடனேயே ஜனங்கள் மகாத்மாவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கை ராட்டைக்கும் கதருக்கும் மகாத்மாவின் புதிய கோலமே மிகச்சிறந்த பிரசார சாதனமாயிற்று, ஆயிரம் கட்டுரைகளினாலும் பதினாயிரம் பிரசங்கங்களினாலும் சாதிக்க முடியாததை மகாத்மாவின் தவக்கோலம் சாதித்து விட்டது.
-----------------------------------------------------------
25. இதய தாபம்
முழத்துண்டு விரதம் கொண்ட காந்தி மகான் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குப் போனார். காந்திஜியின் விரதத்தைப் பற்றிய செய்தி அவருக்கு முன்னாலேயே திருநெல்வேலிக்குச் சென்று விட்டது. அதை அறிந்த திருநெல்வேலி மக்கள் பக்தி பரவசமாயிருந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களைக் கட்டுக்குள்ளே வைப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். ஆகையால் பெருந் திரளான மக்கள் கூடியிருந்தும் பொதுக் கூட்டத்தில் அமைதியும் நிசப்தமும் நிலவியது. இதைக் குறித்துக் காந்திஜி திருநெல்வேலி ஜனங்களைப் பெரிதும் பாராட்டினார். “இந்தமாதிரி ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்தியா தேசமெங்கும் நிலை நாட்டப் பட்டு விட்டல், நம்முடைய இயக்கம் வெற்றி அடைவது பற்றி எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை” என்று மகாத்மா கூறினார். பின்னர் இராட்டையின் தத்துவத்தைப் பற்றித் தம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.
காந்திஜி ஒரு ஊருக்குப்போய் ஜாகையில் இறங்கியவுடனே அவரைப் பார்ப்பதற்கு அந்த ஊர்ப் பிரமுகர்கள் பலர் வருவது வழக்கம். அப்படி வருகிறவர்கள் எல்லாரும் காந்திஜியிடம் பக்தி கொண்டவர்கள் என்றோ அவருடைய போதனைகளைக்
கடைப்பிடிக்கிறவர்கள் என்றோ சொல்ல முடியாது. “கந்திஜியைப் பார்த்துப் பேசினேன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்காகவே பலர் வந்து சேர்வார்கள். இப்படிப்பட்ட வீண் பெருமைக்காரர்கள் வந்து மகாத்மாவைப் பார்த்துப் பேசுவதற்குத் திருநெல்வேலியில் ஒரு தடை ஏற்பட்டது.
மௌலானா ஆஸாத் ஸோபானி காந்திஜியுடன் பிரயாணம் செய்தார் அல்லவா? காந்திஜி முழத்துண்டு விரதம் கொண்டது பற்றி மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும்போது மௌலானா ஆஸாத் யோசனை செய்தார். இஸ்லாமிய மதக் கொள்கையின்படி இன்றியமையாத உடையை மட்டும் அணிந்து கொண்டு மற்றதை யெல்லாம் அவரும் புறக் கணித்தார். இடுப்பில் லுங்கியும் மேலே 'வெயிஸ்ட் கோட்"டும்
அணிந்துகொண்டு அசல் முஸ்லிம் 'பக்கிரி'யைப் போல் தோற்றம் கொண்டார். திருநெல்வேலியில் காந்திஜி தங்கிய ஜாகையில், அவர் தங்கியிருந்த அறைக்கு வெளிப்புறத்து அறையில் இவர் உட்கார்ந்து கொண்டார். மகாத்மாவைப்
பார்க்க வருகிறவர்களிடம், "உங்கள் உடம்பின் மேல் உள்ள விதேசித் துணிகளைக் இங்கே களைந்து எறிந்துவிட்டு உள்ளே மகாத்மாவைப் பார்க்கப் போங்கள்!" என்று சொன்னார்.
வந்தவர்களில் சிலர் மனப்பூர்வமாக விதேசித் துணிகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ஒரு சிலர் வேறு வழியில்லாத படியால் மனமின்றிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர்
விதேசித் துணிகளைக் கொடுக்க மனமில்லாமல் "மகாத்மாவைப் பார்க்கவேண்டாம்" என்று திரும்பி ஓடியே போய்விட்டார்கள். இவ்வாறு வீணர்கள் வந்து மகாத்மாவின் ஓய்வைக் கெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டை திருநெல்வேலியில் ஏற்பட்டது.
விதேசித் துணிகளைத் தியாகம் செய்யத் துணிந்து காந்திஜியைத் திருநெல்வேலியில் வந்து பார்த்தவர்களில் ஒருவர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகாணத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக்கும் இன்னல்களைப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னார். தீண்டாதார் ஹிந்துக்களா யிருந்த போதிலும் அவர்கள் ஹிந்து ஆலயங்களில் விடப்படுவதில்லை யென்ற அநீதியைப் பற்றி உருக்கமாகக் கூறினார். இந்த அநீதியைப் போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்த வாதிகள் ஆலயப் பிரவேச இயக்கம் ஆரம்பிக்க விரும்புவதாவும் அவர்
தெரிவித்தார்.
"என்ன மாதிரி இயக்கம் ஆரம்பிக்க உத்தேசம்?" என்று காந்திஜி கேட்டார். "முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் நடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய தீண்டார் கும்பலை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் பிரவேசிப்போம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற ஹிந்துக்களும் தடுத்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. பலவந்தமாகப் பிரவேசித்தே தீர்வோம்" என்றார் வந்தவர்.
"கலகம் நேர்ந்தால்?" என்று மகாத்மா கேட்டார். "கலகம் நேர்ந்தாலும் நேரட்டும் அதற்காக நாம் என்ன செய்வது?" என்றார் வந்த மனிதர். அது சரியான மனோபாவம் அல்ல என்பதை மகாத்மா காந்தி அவருக்கு எடுத்துக்காட்டினார்.
"தீண்டாமை பெரிய அநீதிதான். ஹிந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங்கொடுமைதான். ஆனால் அநீதியையும் கொடுமையையும் பலாத்காரத்தினால் போக்க முடியாது. தீண்டாமை போக வேண்டுமானால் சாதி ஹிந்துக்களின் மனம் மாற வேண்டும். பலாத்காரத்தினால் சாதி ஹிந்துக்களின் மனதை மாற்ற முடியாது. குரோதமும் துவே ஷமும் அதிகமாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது
மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினால் செல்லுங்கள் இதுதான் சரியான முறை. இப்போது நான் இந்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக்
கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப் பிரவேச இயக்கத்தையும் முன்னின்று
நடத்துவேன்!" என்றார் காந்திமகான்.
தீண்டாமையின் கொடுமையைப் பற்றி ஏற்கனவே மகாத்மாவுக்குத் தெரிந்துதானிருந்தது. தீண்டாமை விலக்கைக் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். ஆயினும் மேற்படி சம்பாஷணையின் பயனாக மகாத்மாவின் மனம் தீண்டாமை விலக்குப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பிற்பாடு மகாத்மா காந்தி பேசிய இடங்களில் எல்லாம் தீண்டாமை விலக்கைப் பற்றியும் அதிகமாக
வற்புறுத்திப் பேசலானார்.
பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்க நேர்ந்தபோது, காந்திஜி தீண்டாமை விலக்கிலும் ஆலயப் பிரவேச இயக்கத்திலும் பூரணமாகக் கவனம் செலுத்தியதை நாம் அறிவோம் அல்லவா? காந்தி மகாத்மாவின் பெரு முயற்சியினால் ஹிந்து சமூக்துக்கு ஏற்பட்டிருந்த தீண்டாமை என்னும் நோய் நம்முடைய காலத்திலேயே தொலைந்து ஒழிந்து போனதைப் பார்த்தோம்.
திருநெல்வேலியிலிருந்து மகாத்மா திரும்பி மதுரை- திருச்சி வழியாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோட்டில் அச்சமயம் சிறந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய ஸ்ரீ ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஈரோட்டில் சிற்றாற்றாங்கறையில் ஒரு விசாலமான ஆலமரத்தின் அடியில் பொதுக்கூட்டம் மிக அமைதியாக நடந்தது. பல சமூகங்களின் சார்பாக வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழைகளில் உபசாரப் பத்திரங்கள் மகாத்மாவுக்கு அளிக்கப்பட்டன. வெள்ளிப் பெட்டிகளையெல்லாம் பொதுக்கூட்டத்தில் ஏலம் போட்டுக் கிடைத்த பணம் திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்க்கப் பட்டது. மகாத்மாவுக்கு எங்கே எந்த விதமான பரிசுப்
பொருள் கிடைத்தாலும் அங்கேயே ஏலம் போட்டு ஏதேனும் ஒரு பொது நிதியில் சேர்த்துவிடுவது வழக்கம்.
பொது நிதிகள் சேர்ப்பதில் மகாத்மாவுக்கு இணையான ஆற்றல் வாயந்தவர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் பல பெண்மணிகள் மகாத்மாவை தரிசிக்கப் பக்தியுடன்
வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா? தம்மைப் பார்க்கவரும் பெண்மணிகளைப் பார்த்து "இந்த நகைகளை எதற்காகச் சுமக்கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்து விடுங்கள். நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன்" என்று காந்திஜி கூசாமல் கேட்டு விடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு பெண்மணிகள் மகாத்மாவின் அருகில் போய் அவரைத் தரிசித்துப் பேச வேண்டும் என்ரு ஆசைப்படுவது குறைந்து போயிற்று.
ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போய்ப் பிறகு காந்திஜி சேலத்துக்குப் போன போது ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவராயிருந்தார். அவர் தமது குடும்பத்துடன் மகாத்மாவைப் பார்ப்பதற்கு வந்தார். டாக்டர் நாயுடுவின் குமாரி, ஏழு வயதுப் பெண்.
கையில் பொன் வளையல்கள் அணிந்திருந்தாள். மகாத்மாஜி அதைப் பார்தததும் "இந்த வளையல்கள் உனக்கு என்னத்திற்கு? எனக்குக் கொடுத்துவிடு!" என்றார். மகாத்மா கூறியதை ஸ்ரீ நாயுடு தமிழில் குழந்தைக்குச் சொன்னார். குழந்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். "நான் விளையாட்டாகக் கேட்டேன். அம்மா! நீயே வைத்துக்கொள்!" என்று மகாத்மா பலதடவை சொல்லியும் அந்தக் குழந்தை கேட்கவில்லை. மகாத்மாவிடமிருந்து வளையல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.
நாகபுரி காங்கிரஸின் அக்கிராசனர் சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் அல்லவா நியாயமாக, அந்த வருஷத்தில்காங்கிரஸ் வேலைகள் எல்லாம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெறவேண்டும். அதற்குப் பதிலாக
மகாத்மாவிடமும் அவருடைய சகாக்களிடமும் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு வந்துவிட்டது. எனினும், பெருந் தன்மைமிக்க மகாத்மா சேலத்தில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார்.
சேலம் நகர சபையார் காந்தி மகாத்மாவுக்கு மிக வேலைப் பாடமைந்த சந்தன மரப்பெட்டி ஒன்றில் உபசாரப் பத்திரம் வைத்துக்கொடுத்தார்கள். அந்தச் சந்தன மரப்பெட்டி அப்போது சென்னைக் கவர்னராக வந்திருந்த லார்ட் வில்லிங்டனுக்காக செய்யப்பட்டது. ஆனால் அதை வில்லிங்டனுக்கு கொடுப்பதற்குள்ளே ஒத்துழையாமை இயக்கம் தோன்றிவிட்டது! தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தலைமை வகித்த ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் ஜில்லா அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றது. மற்ற எந்தத் தமிழ் நாட்டு நகரத்தைக்காட்டிலும் சேலத்தில் அதிகமான வக்கீல்கள் தங்கள் தொழிலை நிறுத்தி மகாத்மாவின் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட சேலத்தில் நகரசபையும் தேசீய மனப்பான்மையும் கொண்டிருந்தது. கவர்னருக்கு வரவேற்பு அளிக்கும் உத்தேசத்தை அடியோடு கைவிட்டுச் சேலம் நகர சபையார் கவர்னருக்காகத் தயாரித்திருந்த சந்தனப் பெட்டியை மகாத்தமா காந்திக்குக் கொடுத்ததில் வியப்பில்லையல்லவா?
லார்டு வில்லிங்டனுக்கு அந்தப் பெட்டியைக் கொடுத் திருந்தால் லேடி வில்லிங்டன் இந்தியாவிலிருந்து கொண்டு போன எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களுடன் அதுவும் இங்கிலந்துக்குப் போயிருக்கும். ஆனால் மகாத்த்மாவுக்குக் கொடுத்த பெட்டி சேலத்திலேயே ஏலத்துக்கு விடப்பட்டு விட்டது.
தமக்காகச் செய்த பெட்டியை மகாத்மா பெற்றுக் கொண்டார் என்ற விவரம் லார்டு வில்லிங்டனுக்குத் தெரியாமலிருக்க முடியுமா? தெரிந்துதானிருக்கும். அதை அவர்
ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தாரா என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் ஒன்று தெரியும். லார்டு இர்வின் 1931-ஆம் வருஷக் கடைசியில் வைஸராய் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து போனதும் லார்டு வில்லிங்டன் அந்தப் பதவிக்கு வந்து சேர்ந்தார். லார்டு வில்லிங்டன் செய்த முதற்காரியம் லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுதான்! மகாத்மா காந்திக்கு பேட்டி கொடுக்கவும் லார்டு வில்லிங்டன் இணங்க வில்லை. “சட்ட மறுப்பைக் கைவிட்டுச் சரணாகதி அடைந்தால் தான் பேட்டி கொடுக்கமுடியும” என்றார். ‘அதற்கு இஷ்டம் இல்லாவிட்டால் போங்கள் சிறைக்கு என்றார். இதைப்பற்றிப் பின்னால் விவரமாகப் பார்ப்போம்.
சேலத்தில் காங்கிரஸ் ஊழியர்கள் பலர் மகாத்மாவைப் பேட்டி கண்டார்கள். மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றிக் கேட்டார்கள். "இங்கிருந்து நேரே நான் குஜராத்துக்குப் போகிறேன். அடுத்த மூன்று மாதமும் குஜராத்தில் தான் இருப்பேன். சாத்வீகச் சட்ட மறுப்புப் போரை ஆரம்பிப்பதற்குக் குஜராத்தைத் தயார் செய்வேன்!" என்று மகாத்மா காந்தி சேலம் காங்கிரஸ் ஊழியர்களிடம் கூறினார்.
"ஒரு வருஷத்தில் சுயராஜ்யம்" என்று மகாத்மா கூறினார் அல்லவா? அந்தத் தவணை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க மகாத்மாவின் இதய தாபமும்
அதிகமாகிக் கொண்டிருந்தது. வேறு எந்தக் காரியத்திலும் அவருடைய மனது செல்லவில்லை. சுயராஜ்யத்துக்காக நடத்த வேண்டிய இறுதிப் போரைப் பற்றியே மகாத்மா காந்திஜியின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது.
-----------------------------------------------------------
26. பர்தோலி – ஆனந்த்
இந்தியாவின் சுதந்திர சரித்திரத்திலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் "பர்தோலி" என்னும் பெயர் மிகவும் முக்கியமானது. பாரத நாட்டுக்குப் பர்தோலிதான் விடுதலை தேடித்தரப் போகிறது என்று 1921 - ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் நம்பியிருந்தார்கள். காந்திஜி இந்தியாவின் சுதந்திரத்துக்கான இறுதிப் போரைப் பர்தோலியிலேதான் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானித்திருந்தார். மகாத்மா
எண்ணியபடி பர்தோலியில் இறுதிப் போர் நடைபெறவில்லை. ஆயினும் பர்தோலியின் மூலமாகக் காந்தி மகானுடைய சத்திய ஜோதி சுடர்விட்டு ஒளிர்ந்தது. இது எப்படி என்பதை இந்த அத்தியாயத்திலும் வரும் அத்தியாயங்களிலும் பார்க்கப்
போகிறோம்.
செப்டம்பர் மாதக் கடைசியில் சேலத்துக் காங்கிரஸ் தொண்டர்களிடம் காந்திஜி "வருகிற மூன்று மாதமும் நான் குஜராத்திலேயே இருப்பேன்" என்று சொன்னார் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? - ஒத்துழையாமைத் திட்டம் மகாத்மா காந்தி எதிர்பார்த்தபடி பூரணமாக நிறைவேறவில்லை. வக்கீல்களில் நூற்றுக்கு ஒருவர் தான் தொழிலை நிறுத்தினார்கள். மாணவர்களிலும் நூற்றுக்கு ஒருவர் வீதந்தான் சர்க்கார் கல்வி நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். சட்டசபைகளிலோ, அதிகார வர்க்கத்தார் சொல்லுகிறபடி கையைத் தூக்கும் அங்கத்தினர்கள் நிறைந்திருந்தார்கள். ஸர். திவான்பகதூர், ராவ் பகதூர் பட்டதாரிகளில் மிக மிகச் சிலரே பட்டங்களைத் துறந்தார்கள். நாடெங்கும் மகாத்மா சென்ற இடங்களில் எல்லாம் அன்னியத் துணிக் குவியல்கள் எரிக்கப்பட்டன. ஆயினும் மகாத்மா காந்தி விரும்பிய அளவு இராட்டையும் கதர் இயக்கமும் பரவவில்லை.
இவ்விதம் மகாத்மா காந்தி கூறிய திட்டங்களைச் சரிவர நிறைவேற்றாமலிருந்த போதிலும், நாடெங்கும் பொதுமக்கள் போக்குக்கும் மகாராஷ்டிரத் தலைவர்களின் மனப் போக்குக்கும் இருந்த வேற்றுமை நன்கு வெளியாயிற்று. மகாத்மா தயாரித்திருந்த அறிக்கையை வரி வரியாகவும் வார்த்தை வார்த்தையாகவும் ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸ்ரீ கேல்கர், ஸ்ரீ ஜயக்கர், டாக்டர் மூஞ்சே ஆகியவர்கள் ஆட்சேபித்தார்கள். காந்திஜியின் கட்சியைத் தாங்கி நின்று மேற்படி ஆட்சேபங்களுக் கெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ராஜாஜி பதில் சொன்னார். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவும் ஒருவாறு சமரசப்படுத்த முயன்றார்கள். கடைசியாக, சிற்சில மாறுதல்களுடன் மகாத்மா காந்தி தயாரித்த அறிக்கை எல்லாத் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பலம் பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காருடன் மகாத்மா ஒரு மகத்தான இறுதிப் போராட்டத்தைத் தொடங்க யத்தனித்துக் கொண்டிருந்தார். இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய தலைவர்கள் சிலர் சில்லறை ஆட்சேபங்களையெல்லாம் கிளப்பிக்கொண்டிருந்தது மகாத்மாவின் மனதை ஓரளவு புண்படுத்தியது. ஆயினும் இதைப் பற்றி அதிகமாக நினைப்பதற்குச் சாவகாசம் இருக்கவில்லை. ஏனெனில்
அன்றைய தினமே, "காந்திஜியைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி ஒன்று பரவியது. இது காந்திஜியின் காதுக்கும் எட்டியது. "அலி சகோதரர்கள் செய்த அதே
குற்றத்தை நானும் செய்கிறேன்" என்று மகாத்மா காந்தி சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டில் அதே பேச்சைப் பேசியிருந்தார் அல்லவா? ஆகையால் தம்மைக் கைது செய்யலாம் என்ற வதந்தியைக் காந்திஜி நம்பவேண்டியதாக இருந்தது. ஆகவே, "என்னைக் கைது செய்தால்" என்னும் தலைப்புப் போட்டு அன்றிரவே "எங் இந்தியா" வுக்கு ஒரு கட்டுரை எழுதினார்.
ஆனால் கைது செய்யப்படுவதற்காகப் பம்பாயிலேயே காத்திருக்க மகாத்மா விரும்பவில்லை. அவர் போட்டிருந்த திட்டத்தின்படி மறுநாள் காலையில் ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். கொலாபா ஸ்டேஷனில் எண்ணற்ற ஜனங்கள்
வந்திருந்து மகாத்மாவை வழி அனுப்பினார்கள். வந்திருந்தவர்கள் அவ்வளவு பேர் தலையிலும் வெள்ளைக் கதர்க் குல்லா (காந்தி குல்லா) விளங்கியது கண்டு மகாத்மா திருப்தியடைந்தார். ஆயினும் மக்களுடைய இந்த உற்சாக மெல்லாம் நல்ல முறையில் உபயோகப்பட்டு நல்ல பலனை அளிக்கவேண்டுமே?
பம்பாயிலிருந்து ஆமதாபாத் சென்று சில தினங்கள் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் மகாத்மா தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே குஜராத்தின் பற்பல பகுதிகளிலும் நடந்து வரும் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளலானார்.
ஆங்காங்கு வேலை செய்து கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் ஆசிரமத்துக்கு வந்து மகாத்மாவுக்கு நிலைமையை அறிவித்தார்கள். இப்படி வந்தவர்களில் இருவர் சூரத் நகரத்திலிருந்து வந்தவர்கள். ஒருவருடைய பெயர்
கல்யாண்ஜி. இன்னொருவரின் பெயர் தயாள்ஜி. இந்த இரண்டு பேரும் மகாத்மாவின் பரம பக்தர்கள். தேசத்துக்காகப் பரிபூரணத் தியாகம் செய்தவர்கள். ஸ்ரீ தயாள்ஜி தம்முடைய சொத்து முழுவதையும் (ஒரு ரூபாய் கூடத் தமக்கென்று வைத்துக் கொள்ளாமல்) திலகர் சுயராஜ்ய நிதிக்குக் கொடுத்து விட்டவர். இவர் சூரத் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஸ்ரீ கல்யாண்ஜி மேற்படி கமிட்டியின் காரியதரிசி. இருவரும் சூரத்தில் இரண்டு "சுயராஜ்ய ஆசிரமங்கள்" நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பல இளைஞர்கள் தேசத் தொண்டுக்குப் பயிற்சி செய்விக்கப் பட்டார்கள். பயிற்சி முடிந்ததும் அத்தொண்டர்கள் ஜில்லாவின் பலபகுதிகளிலும்
வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டு வந்தார்கள்.
இவ்வளவு அருமையான வேலை செய்து வந்த தயாள்ஜியும் கல்யாண்ஜியும் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா திரும்பி வந்த செய்தி அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். சூரத் ஜில்லாவில் நடந்திருக்கும் நிர்மாண வேலைகளைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். முக்கியமாக, சூரத் ஜில்லாவைச் சேர்ந்த பர்தோலி தாலுகாவில் மகாத்மாவின் நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி யிருக்கின்றன
வென்றும், அங்கே பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் கல்யாண்ஜி, தயாள்ஜி இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட இன்னொரு மனிதர் முன்வந்தார். அவர் பெயர் அப்பாஸ் தயாப்ஜி. அவர் தொண்டு கிழவர். பரோடா சமஸ்தான ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து விலகியவர். எல்லையற்ற தேசபக்தி வாய்ந்தவர்; காந்திஜியிடம் இணையில்லா அன்பு கொண்டவர்; இவர் கெயிரா ஜில்லாவில் ஆனந்த் என்னும் தாலுகாவில் பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை முதன் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மகாத்மாவிடம் அன்பு நிறைந்த கோபத்துடன் அப்பாஸ் தயாப்ஜி பேசினார். அவர்
கூறியதாவது:-
"நீங்கள் கூறிய நிபந்தனையெல்லாம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஏதாவது நிபந்தனை உண்டானால், சொல்லி விடுங்கள். எல்லாவற்றையும் இப்போதே ஒரேயடியாகச் சொல்லி விடுங்கள். புதிய புதிய நிபந்தனைகளை நினைத்து நினைத்துக் கொண்டு சொல்லாதீர்கள். நீங்கள் இதுவரையில் சொன்ன காரியம் எதை நாங்கள் நிறேவேற்ற வில்லை? திலகர் சுயராஜ்ய நிதிக்கு என்ன பணம் கேட்டீர்களோ, அதைக் கொடுத்து விட்டேன். என்னைப் பாருங்கள்! வயது எனக்கு எழுபத்தைந்துக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் நீங்கள் சொன்னதற்காக நானே இராட்டையில் நூல் நூற்கிறேன். முரட்டுக் கதர்த்துணி உடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனந்த் தாலுகாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் போனேன். அப்படிப் போனதினால் என் கிழ உடம்பிற்குள்ளேயிருக்கும் எலும்புகள் எல்லாம் இன்னும் வலிக்கின்றன. ஆயினும் நான் பொருட்படுத்தவில்லை. கிராமங்களில் ஜனங்கள் அவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். இன்னும் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறார்கள்.
நீங்களே நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சால்ஜாப்பு மட்டும் சொல்ல வேண்டாம். தள்ளிப் போட வேண்டாம். மூன்று வருஷத்துக்கு முன்னால் கெயிரா ஜில்லாவில் நீங்கள் வரிகொடா இயக்கம் ஒரு தடவை நடத்தினீர்கள். ஆகையால் கெயிரா ஜனங்கள் ஏற்கெனவே உங்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முறைகளில் பயிற்சி பெற்றிருக் கிறார்கள். ஆகையால் கெயிரா ஜில்லாவுக்குத்தான் இப்போது நீங்கள்ல் முதல் பெருமையைக் கொடுக்க வேண்டும். ஆனந்த் தாலுகாவில்தான் பொது ஜனச் சட்ட மறுப்பை முதலில் ஆரம்பிக்க வேண்டும்.
அப்பாஸ் தயாப்ஜி இவ்விதம் பேசியபோது குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களுடைய மனமெல்லாம் உருகி விட்டன. வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்த இம்மனிதர், இவ்வளவு தள்ளாத வயதிலும், சிறைபுகவும் கஷ்டப்படவும் தயாராக முன் வந்திருப்பதை நினைத்து வியந்தார்கள்.
ஆனால் காரியத்திலேயே கண்ணாயிருந்த சூரத்காரர்கள் விட்டுக்கொடுத்து விடவில்லை. அவர்கள் பர்தோலியிலேதான் சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஸ்ரீ கல்யாண்ஜி கூறியதாவது:-"ஆங்கிலேயர் முதன் முதலில் சூரத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தார்கள். சூரத்திலேதான் முதன் முதலில் அவர்கள் வியாபாரக் கிடங்குகள் ஏற்படுத்திக் கொண்டு கோட்டையும் கட்டிக் கொண்டார்கள்.
இங்கிருந்துதான் அவர்களுடைய வியாபாரம் பெருகிற்று; அரசியல் ஆதிக்கமும் பரவிற்று. ஆகையால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவு செய்யும் கடைசி இயக்கத்தைச் சூரத் ஜில்லாவில் தொடங்குவதுதான் நியாயம். விஷம் எந்த வழியாக ஏறியதோ, அந்த வழியாகத்தான் இறங்க வேண்டும் இங்கிலீஷ்காரர்கள் எந்த வாசல் வழியாக முதலில் நுழைந்தார்களோ, அந்த வாசல் வழியாகவே அவர்களை வெளியேற்ற வேண்டும். சூரத் அப்போது செய்த பாவத்துக்கு இப்போது பிராயச் சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் கூறிய எல்லாவித நிபந்தனைகளையும் பர்தோலியில் நிறைவேற்றியிருக்கிறோம். நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்."
ஸ்ரீ கல்யாண்ஜியின் வாதமும் அவருடைய பிடிவாதமும் எல்லாருடைய மனதையும் கவர்ந்தன. கடைசியில் மகாத்மா காந்தி சொன்னதாவது:- "ஆகட்டும், நான் நேரில் வந்து பர்தோலி, ஆனந்த் இரண்டு தாலுகாக்களையும் பார்க்கிறேன். பார்த்த பிறகு, எந்தத் தாலுகா அதிகத் தகுதி பெற்றிருக்கிறதோ அங்கே இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இரண்டு தாலுகாக்களும் தயாராயிருந்தால் இரண்டிலும் ஆரம்பித்து விடுவோம்."
இவ்விதம் இரு தரப்பாரும் திருப்தி யடையும்படி மகாத்மா பதில் கூறியதுடன், தாம் வந்து பார்ப்பதற்குள்ளே இன்னும் தீவிரமாக வேலை செய்து வைக்கும்படியும் சொல்லி அனுப்பினார்.
-----------------------------------------------------------
27. தாழி உடைந்தது!
1921 - ஆம் வருஷத்தின் முடிவுக்குள் இந்தியாவின் விடுதலைக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க மகாத்மா விரும்பினார். அந்தப் போராட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு என்னும் ஆயுதத்தை உபயோகிக்க எண்ணியிருந்தார். ஆனால் இந்த ஆயுதத்தை உபயோகிப்பது நெருப்புடன் விளையாடுவதைப்போல் கடினமானது என்பதைக் காந்தி மகான் அறிந்திருந்தார். ஆகையால் எல்லாவிதமான முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள அவர் விரும்பினார்.
அந்த நாளில் தேசமெங்கும் தேசீய உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. எனவே பர்தோலி - ஆனந்த் தாலுகாக்களில் மகாத்மா பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்தவுடனே நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உற்சாகிகள் அந்த இயக்கத்தை
ஆரம்பித்து விடலாம். ஆனால் பர்தோலி - ஆனந்தில் பொது ஜனங்கள் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். அப்படி தயார் செய்யப் படாத இடங்களில் சட்ட மறுப்பு ஆரம்பித்து விட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.
ஆகையால், சட்டமறுப்பு சம்பந்தமான நிபந்தனைகளை ஐயமறத் தேசத்துக்கு அறிவித்து விட வேண்டியது அவசியம் என்று காந்திஜி கூறினார். இதற்கு ஒரு சந்தர்ப்பம் நவம்பர் 4 - ஆம் தேதி டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்
கூட்டத்தில் கிடைத்தது.
சட்டமறுப்பு சம்பந்தமாக முடிவான தீர்மானம் செய்வதற்காகவே இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டது. முதல் நாள் காரியக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மகாத்மா தயாரித்திருந்த நகல் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இந்த நகல் தீர்மானத்தில் காந்திஜி சட்ட மறுப்புத் தொடங்குவதற்கு மிகக் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒரு பகுதியில் பொதுஜனச் சட்டமறுப்பு
தொடங்குவதாயிருந்தால் அந்தப் பகுதியில் 100 - க்கு 90 பேர் கதர் அணிகிறவர்களாயிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட முறையில் யாரேனும் சட்டமறுப்புச் செய்ய விரும்பினால் அவருக்கு இராட்டையில் நூற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகள்
சில தலைவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. ஸ்ரீ என்.சி.கேல்கர், ஸ்ரீ வித்தல் பாய் படேல் ஆகியவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பண்டித மோதிலால் நேருவும், ஸ்ரீ லஜபதிராயும் நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திவிட முயன்றார்கள். தேசபந்துதாஸ் இக்கூட்டத்தில் மகாத்மாவைப் பூரணமாக ஆதரித்தார்.
சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி இந்தியாவுக்கு விடுதலை தேடித்தரக்கூடியவர் மகாத்மா காந்தி ஒருவர்தான் என்று எல்லாத் தலைவர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும் மகாத்மா காந்தி நடத்தவேண்டிய இயக்கத்துக்கு அவர் கூறிய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளச் சில தலைவர்கள் விரும்பவில்லை! கடைசியில் பண்டித மோதிலால் நேருவின் யோசனையின் பேரில் "100 - க்கு 90 பேர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்"என்னும் நிபந்தனை "மிகப் பெரும்பாலோர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்" என்று மாற்றப்பட்டது
.
4-ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்படி சமரசத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் வரி கொடாமை உள்பட பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கும் உரிமையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அளித்தது. ஆனால் அதற்கு இன்னின்ன நிபந்தனைகள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.
இப்படி நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேறிய போதிலும் மகாத்மாவின் மனதில் நிம்மதி ஏற்படவில்லை. சட்ட மறுப்புக்குத் தாம் விதிக்கும் நிபந்தனைகளில் மற்றத் தலைவர்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை என்று மகாத்மாவின் மனதில்சந்தேகம் உதித்திருந்தது. எனவே அவசரப்பட்டு எங்கேயாவது சட்டமறுப்பு ஆரம்பித்து விட்டால் காரியம் கெட்டுப்போய் விடுமே? தாம் நடத்த எண்ணியுள்ள இயக்கமும் தடைப்பட்டு விடுமே?-- இந்தக் கவலையினால் மகாத்மா காந்தி டில்லியில் கூடியிருந்த தலைவர்களைப் பார்த்து விநயமாக வேண்டிக் கொண்டதாவது-
"பொது ஜனச் சட்டமறுப்பு என்பது பூகம்பத்தைப் போன்றது. எந்தப் பிரதேசத்தில் பொதுஜனச்
சட்டமறுப்பை ஆரம்பிக்கிறோமோ, அங்கே அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும். அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு போலீஸ் காரனும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் வேலையைவிட்டு விலகிவிடுவார்கள். போலீஸ் ஸ்டே ஷன்கள், கோர்ட்டுகள்,
அரசாங்கக் காரியாலயங்கள் எல்லாம் பொதுஜனங்களின் உடைமையாகிவிடும். இப்படிப்பட்ட பேரியக்கத்தை நடத்துவது எளிய காரியமல்ல. இயக்கம் நடத்தும் இடத்தில் பரிபூரணமான அமைதி நிலவ வேண்டும். பலாத்காரத்தை ஜனங்கள்
அடியோடு மறந்துவிட வேண்டும். என்னவிதமான கஷ்டம் நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டும். அந்தப்பிரதேசத்தில் அஹிம்சை நிலவினால் மட்டும் போதாது. ஏதேனும் ஒரு இடத்தில் பொதுஜனச்
சட்டமறுப்பு நடந்தபோதிலும் நாட்டில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். எங்கேயாவது ஒரு மூலையில் அஹிம்சைக்குப் பங்கம் நேரிட்டாலும்
பொதுஜன சட்டமறுப்பு வெற்றியடையாது; இயக்கத்தை நடத்தவே முடியாது. ஆகையால் உங்களையெல்லாம் நான் ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். நான் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்து நடத்தும்போது நீங்களும் உடனே சட்டமறுப்பை ஆரம்பித்து விடவேண்டாம். பர்தோலியில் நடக்கும் இயக்கத்தைக் கவனித்து வாருங்கள். கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மாகாணங்களையும் சட்ட மறுப்புக்குத்
தயார் செய்யுங்கள். ஆனால் இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டாம். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் வேண்டும் உதவி இதுதான். பர்தோலியின் அநுபவத்தைப்
பார்த்துக்கொண்டு அடுத்த தாலூகாவில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இவ்விதமே ஒவ்வொரு பிரதேசமாக இயக்கத்தை விஸ்தரித்துக் கொண்டு போகலாம். ஜனங்களைச் சரிவரத் தயார்ப் படுத்தாமல் சட்ட மறுப்பை அவசரப்பட்டு ஆரம்பித்து எங்கேயாவது பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் இயக்கம் படுதோல்வியடையும். இயக்கத்தை நிறுத்தவேண்டிய தாகிவிடும். பொதுஜனச் சட்ட மறுப்புக்கு இன்றியமையாத நிபந்தனை பொது ஜன அமைதி, ஆகையால் அவசரப்பட்டுச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டாம். மாகாணங்களுக்குக் காங்கிரஸ் அந்த உரிமை கொடுத்திருந்த போதிலும் அதை உபயோகப்படுத்த வேண்டாம். பர்தோலியைக் கவனித்து வாருங்கள்!"
இப்படியெல்லாம் மகாத்மா காந்தி படித்துப் படித்துச் சொன்னார்; திருப்பித் திருப்பி எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தலைவர்களிலே சிலர் "மகாத்மா எதற்காக இவ்வளவு பயப்படவேண்டும்?" என்று எண்ணினார்கள். அவ்விதமே சொன்னார்கள். சட்ட மறுப்புக்கு மகாத்மா விதித்த கடுமையான நிபந்தனைகளை ஆட்சேபித்தார்கள். ஆயினும் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.
ஆனால் காந்திமகானுடைய எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்று வெகு சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. மகாத்மா காந்தி தமது சொந்த இடமாகக் கருதிப் பெருமை கொண்டிருந்த பம்பாய் நகரத்தின் மூலமாகவே அந்தப் படிப்பினை வெளியாயிற்று. பயங்கரமான ரூபத்தில் வெளியாயிற்று.
முந்தைய 1920-ஆம் வருஷத்தின் மத்தியில் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது பிர்ரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் அதை அலட்சியம் செய்தனர். "முட்டாள்தனமான திட்டங்களுக்குள்ளே மிக முட்டாள்தனமான திட்டம்" என்று லார்டு செம்ஸ்போர்டு அதைக் குறிப் பிட்டார். ஆயினும் இங்கிலாந்தின் இராஜ தந்திரிகளுக்கு 'எது எப்படியாகுமோ' என்ற கவலை கொஞ்சம் இருந்தது. மாண்டகு-செம்ஸ்போர்டு திட்டத்தின்படி ஏற்பட்ட புதிய சட்டசபைகளை ஆரம்பித்து வைப்பதற்கு வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைப்பதென்று முதலில் உத்தேசித்திருந்ததை முன் ஜாக்கிரதையாக மாற்றிக் கொண்டார்கள். வேல்ஸ் இளவரசரைச் சங்கடமான நிலைமைக்கு உள்ளாக்க விரும்பாமல் அவருக்குப் பதிலாகக் கன்னாட் கோமகனை (டியூக் ஆப் கன்னாட்) அனுப்பினார்கள். கன்னாட் கோமகன் விஜயம் செய்து புதிய சட்ட சபைகளைத் திறந்து வைத்து "மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்; ஒத்துழையுங்கள்' என்ற பல்லவியையும் பாடிவிட்டுப் போனார்.
பிறகு ஒத்துழையாமை இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பலம் பெற்று வந்தது. அந்த இயக்கம் பெரும் பொது ஜனக் கிளர்ச்சியாக மாறியது. கடைசியாக இப்போது பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து விடுவதென்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டு விட்டார்கள்.
இத்தகைய நிலைமையில் புதிய வைஸ்ராய் லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசர் விஜயத்தை நடத்தி வைக்க உறுதிகொண்டார். வேல்ஸ் இளவரசர் வந்தால், அவருக்காக நடைபெறும் உபசாரக் களியாட்டங்களிலும் ஆடம்பர வைபவங்களிலும் பொது மக்கள் பிரமித்துப் போய்விடுவார்கள் என்றும், அதன் மூலம் காங்கிரஸில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் குலைத்து விடலாம் என்றும் லார்ட் ரெடிங் கருதினார். இந்திய மக்களின் பரம்பரைக் குணமான இராஜ விசுவாசம் மேலோங்கி மகாத்மாவின் சட்ட மறுப்பு இயக்கத்தை அமுக்கிவிடும் என்று லார்ட் ரெடிங்கும் அவருடைய சகாக்களும் பகற்கனவு கண்டார்கள். ஆகவே, வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைக்கும்படி ஆங்கில இராஜ தந்திரிகளை இந்திய அதிகார வர்க்கத்தினர் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்கள்.
எனவே, 1921-ஆம் வருஷக் கடைசியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்னும் நிச்சயமான செய்தி வெளியிடப்பட்டது. இதைக் காந்தி மகானும்
மற்றக் காங்கிரஸ் தலைவர்களும் விரும்பவில்லை. வேல்ஸ் இளவரசரைக் கூட்டி வருவதற்கும் படாடோப வரவேற்புகளை நடத்துவதற்கும் இது சமயமல்ல என்று தலைவர்கள் கருதினார்கள். அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆட்சியைப் பலப் படுத்துவதற்கும் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்கும் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தை உபயோகப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள். எனவே இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்து வெளியிட்டார்கள். நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்குவதாக இருந்தது. அன்றையதினம் இந்தியா தேசமெங்கும் ஹர்த்தால் நடைபெறவேண்டும் என்றும் பிறகு இளவரசர் விஜயம் செய்யும் முக்கிய நகரங்களில் அன்றன்றைக்கு ஹர்த்தால் செய்யவேண்டும் என்றும் மக்களுக்குக் காங்கிரஸ் கட்டளையிட்டிருந்தது. இந்தக் கடமையை வற்புறுத்தி மகாத்மா காந்தி "எங் இந்தியா"வில் எழுதியிருந்ததோடு பல கூட்டங்களில் பேசியிருந்தார். "வேல்ஸ் இளவரசர் மீது தனிப்பட்ட முறையில் நமக்குக் கோபம் ஒன்றுமில்லை. அவரை அவமரியாதை செய்யும் எண்ணம் லவலேசமும் இல்லை. ஆனால் அன்னிய ஆட்சியின் சின்னமாக வேல்ஸ் இளவரசர் வருவதாலும், அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்காக வருகிறபடி யாலும் அவருடைய வரவேற்புக் கொண்டாட்டங்களில் இந்திய மக்கள் கலந்துகொள்ள முடியாது. நம்முடைய அதிருப்தியை வெளியிடுவதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பதும் அவசியமாகிறது" என்று காந்தி மகான் வற்புறுத்தியிருந்தார்.
பம்பாய் நகரத்தில் காந்தி மகானுக்கு எல்லையற்ற செல்வாக்கு இருந்தது என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். பம்பாய் வாசிகளில் பெரும்பாலோர் மகாத்மாவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அவருடைய வாக்கை வேதவாக்காக மதிக்கத் தயாராயிருந்தார்கள். ஆகையால் நவம்பர் 17-ஆம்தேதியன்று வேல்ஸ் இளவரசர் பம்பாயில் வந்து இறங்கும் தினத்தில் பரிபூரண ஹர்த்தால் நடத்துவதற்குப் பம்பாய் வாசிகள் ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தி மகாத்மாவின் கொள்கைகளைப் பம்பாய் வாசிகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்பது பின்னால் நடந்தவிபரீதங்களினால் வெளியாயிற்று
டில்லியிலிருந்து திரும்பி ஆமதாபத்துக்கு வந்த மகாத்மா நேரே பர்தோலி-ஆனந்த் தாலுகாக்களுக்குப் போய்ப்பரிசீலனை செய்ய உத்தேசித்திருந்தார். ஆனால் பம்பாய்த் தலைவர்கள் காந்திமகானுக்குச் செய்திமேல் செய்தி அனுப்பினார்கள்; தந்தி மேல் தந்தி அடித்தார்கள். நவம்பர் 17-ஆம் தேதி பம்பாய்க்கு வந்து விட்டுப் பிறகு பர்தோலிக்கு போகும்படி அவர்கள் மகாத்மாவை கேட்டுக் கொண்டார்கள். அந்த முக்கியமான தினத்தில் பம்பாய் நகரம் தீவிர கொந்தளிப்பை அடையுமாதலால் அன்றைக்கு மக்களுக்கு வழிகாட்டி நடத்த மகாத்மா பம்பாயில் இருக்க வேண்டும் என்று பம்பாய்த் தலைவர்கள் கோரினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கி மகாத்மாவும் பம்பாய்க்கு 17-ஆம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தார்.
17-ஆம் தேதி காலையில்தான் வேல்ஸ் இளவரசரும் பம்பாய்க் கடலோரத்தில் உள்ள ‘இந்தியாவின் வாசல்’ என்று அழைக்கப்படும் கோபுர மண்டபத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். இளவரசரை வரவேற்பதற்காகப் பிரமாதமான ஆடம்பர ஏற்பாடுகளை அதிகார வர்க்கத்தார் செய்திருந்தார்கள். இது காரணமாக ஏற்படக்கூடிய ஒரு விளைவைப் பம்பாய்க்காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது வேல்ஸ் இளவரசர் இறங்கும் தினத்தில் ஹர்த்தாலும் நடப்பதால் வேலையில்லாத ஜனங்கள் வேடிக்கை பார்க்கும். ஆகையால் இளவரசர் இறங்குமிடத்துக்கு வந்து கூட்டம் போடக்கூடும். அப்படியானால், ஹர்த்தாலின் நோக்கம் நிறைவேறாமற் போவதோடு
கோபங்கொண்ட ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு
விடக்கூடும். இம்மாதிரி யெல்லம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, பம்மாய்த் தலைவர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இளவரசர் இறங்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் பம்பாய் நகரின் இன்னொரு எல்லையில் அதேசமயம் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தார்கள். எல்பின்ஸ்டன் ஆலையை யொட்டியிருந்த விஸ்தாரமான மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மகாத்மா காந்தி தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆகையால் லட்சக் கணக்கான ஜனங்கள் அங்கே கூடி விட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம் அரே தலை மயமாகக் காணப்பட்ட அந்த ஜன சமுத்திரத்தின் மத்தியில் மேடைமீது நின்று மகாத்மா பேசினார். அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசினார். "சீக்கிரத்தில் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் பயனாகச் சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும். ராணுவத்தை ஏவி ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்படியும் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி, ஜனங்கள் பொறுமையாயிருக்கவேண்டும். எவ்வளவு கோபமூட்டும் காரியம் நடந்தாலும் ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கக் கூடாது. பம்பாய்வாசிகளை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்வது இதுதான்!" என்று காந்திஜி வேண்டிக் கொண்டார். அந்தோ! மகாத்மா இவ்வளவு உருக்கமாக வேண்டிக்கொண்ட அரைமணி நேரத்துக்குள்ளே பொது மக்களின் உற்சாகம் எல்லை கடந்துவிட்டது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைவதுபோன்ற துயரமான
சம்பவங்கள் பம்பாயில் ஆரம்பமாகி விட்டன!
-----------------------------------------------------------
28. கோட்டை தகர்ந்தது!
நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காலையில் வேல்ஸ் இளவரசர் 'இந்தியாவின் வாசல்' என்று சொல்லப்படும் பம்பாய்க் கடற் கரை மண்டபத்தில் வந்து இறங்கினார். அதிகார வர்க்கத்தார் பிரமாத வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் குறிப்பிட்ட திட்டத்தின்படி நடைபெற்றன. பம்பாய்ப் பொதுமக்களில் மிகப் பெரும்பாலோர் அந்த வைபவங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு சாரார் கலந்துகொண்டனர். பம்பாய் மிகப்பெரிய நகரம். பார்ஸிகளும், ஆங்கிலோ இந்தியர்களும், கிறிஸ்துவர்களும் லட்சக்கணக்காக அந் நகரில் வசித்தனர். பம்பாயில் இருந்த சாராயக் கடைகள் பெரும்பாலும் பார்ஸிகளால் நடத்தப் பட்டன. மேலும் பார்ஸி வகுப்பினர் ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஆகையால் சில மகத்தான தேசீயத் தலைவர்கள் பார்ஸி வகுப்பினராயிருந்த போதிலும், அவர்களில் பெரும்பாலோர் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற இரு வகுப்பாரிலும் எப்போதும் அரசாங்க பக்தர்கள் அதிகம்.
எனவே, இளவரசர் விஜயத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இட்டிருந்த கட்டளையை மீறிப் பம்பாயிலிருந்த பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கிறிஸ்துவர்களும் வரவேற்பு வைபவங்களில் கலந்துகொண்டார்கள். வேல்ஸ் இளவரசரை வரவேற்று விட்டுத் திரும்பி வந்தவர்களும் அதே சமயத்தில் பம்பாய் நகரின் மற்றொரு மூலையில் நடந்த மகாத்மாவின் பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பியவர்களும் சாலைகளில் பல விடங்களில் எதிரிட்டுக்கொள்ள நேர்ந்தது. அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது.
இளவரசரை வரவேற்றுவிட்டு வந்த பார்ஸிகளின் தலைகளிலிருந்த விதேசிக் குல்லாய்களையும் அவர்களுடைய உடம்பின் மீதிருந்த விதேசித் துணிகளையும் சிலர் பலவந்தமாக நீக்கித் தீயிலே போட்டார்கள். அதற்கு எதிர்ப்புச் செய்தவர்களை மக்கள் அடிக்கவும் செய்தார்கள். சாலைகளில் போன மோட்டார் வண்டிகளின்மீது கற்கள் எறியப்பட்டன. பொதுவாக, மோட்டாரில் வருகிறவர்கள் எல்லாரும் இளவரசர் வரவேற்பிலிருந்து திரும்புகிறார்கள் என்ற எண்ணத்தின் பேரில் மக்கள் மோட்டார்களைத் தாக்கினார்கள். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இத்தகைய சம்பவங்கள் வரவரக் கடுமையாகின. ஆத்திரங்கொண்டிருந்த ஜனங்களைச் சில விஷமிகள் தூண்டிவிடவும் ஆரம்பித்தார்கள். சாராயக் கடைகளுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தீ வைத்தார்கள். மோட்டார்களும் டிராம்களும் எரிக்கப்பட்டன. சில பார்ஸி பெண்மணிகளும் தாக்கப் பட்டனர்.
இம்மாதிரி செய்திகளைக் கேள்விப்பட்டதும் மகாத்மாவின் மனம் துடிதுடித்தது. தாம் எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை யெல்லாம் வீணாகி விட்டதே. செய்த எச்சரிக்கையெல்லாம் பயனின்றிப் போய்விட்டதே என்று அவர் உள்ளம் பதைத்தது.
உடனே மோட்டாரில் வெளிக்கிளம்பினார். பலாத்காரச் செயல்கள் நடப்பதாகத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் பறந்து சென்றார். அங்கங்கே ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகும்படி சொன்னார். இப்படி நகரைச் சுற்றிக்கொண்டு வருகையில்
ஓரிடத்தில் ஆறு போலீஸ்காரர்கள் தடியால் அடிபட்டுத் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். உடனே காரை நிறுத்திவிட்டு அருகில் போய்ப் பார்த்தார். நாலுபேர் செத்துக் கிடந்தார்கள். இரண்டு பேர் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டதும் மகாத்மாவின் இருதயம் பிளந்து விடும்போலாகி விட்டது. அந்தச் சமயத்தில் சுற்றிலும் நின்ற ஜனங்கள் வந்திருப்பவர் மகாத்மா என்று
அறிந்ததும் "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று கோஷமிட்டார்கள். மகாத்மாவுக்கு அந்தக் கோஷம் கர்ணகடூரமாயிருந்தது! அஹிம்சையைப் பற்றித் தாம் மக்களுக்குச் செய்த உபதேசமெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகி விட்டதே என்று எண்ணி வேதனைப் பட்டார். கோஷம் செய்தவர்களைக் கடும் சொற்களால் கண்டித்தார். குற்றுயிராயிருந்த இரண்டு போலீஸ் காரர்களையும் எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.
இவ்விதம் பல இடங்களிலும் சுற்றி ஜனங்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு இரவு வீடு திரும்பினார். ஆனால் பம்பாய் நகரமெங்கும் கலகமும் கொலையும் தீ வைத்தலும் நடப்பதாக மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. காந்தி மகான் பக்கத்திலிருந்த துணைவர்களிடம் "நான் கட்டிய ஆக்யக் கோட்டை யெல்லாம் தகர்ந்துவிட்டதே!" என்று வாய்விட்டுப் புலம்பினார். மேலும், மகாத்மா கூறியதாவது:--
"நான் பம்பாய்க்கு இச்சமயம் வந்து சேர்ந்ததும் கடவுளுடைய ஏற்பாடுதான். பம்பாய்க்கு வருவதற்கு எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. பர்தோலிக்கு நேரே போக விரும்பினேன். பம்பாய் நண்பர்கள் வற்புறுத்தியபடியால் வந்தேன். அப்படி வந்து இதையெல்லாம் நேரில் பார்த்திராவிட்டால் ஜனங்கள் இவ்வளவு பயங்கரமாக நடந்துகொள்வார்கள் என்று நம்பியிருக்கமாட்டேன். எல்லாம் போலீஸாரின் பொய் அறிக்கைகள் என்று எண்ணியிருப்பேன். அந்த மட்டும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நல்ல சமயத்தில் எனக்கு எச்சரிக்கை செய்தார். பொது மக்கள் இன்னும் அஹிம்சையை நன்றாக உணரவில்லையென்பதையும் ஆகையால் பொது ஜனச் சட்ட மறுப்புக்கு அவர்கள் தயாராகவில்லையென்பதையும் எனக்குக் கண்முன்னே கடவுள் காட்டிவிட்டார்!"
இவ்வாறு சொல்லி மகாத்மா காந்தி தமது புதல்வர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை உடனே சூரத்துக்குப் புறப்பட்டுப்போகச் சொன்னார். பம்பாயில் இப்படிப்பட்ட விபத்து நேர்ந்து விட்டபடியால் தமது பர்தோலி பிரயாணத்தை ஒத்திப்போட்டிருப்ப தாகவும், பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்குரிய ஆயத்தங்களை யெல்லாம் நிறுத்தி வைக்கும்படியும் ஸ்ரீ தேவதாஸிடம் சொல்லி அனுப்பினார். அன்றிரவெல்லாம் மகாத்மா காந்தியும் அவருடைய துணைவர்களும் ஒரு கண நேரங்கூடக் கண்ணயரவில்லை.
-- --
-
மறுநாள் 18ம் பொழுது விடிந்தது. முதல் நாள் இரவு 11 மணிக்குப் பிறகு பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லையென்று செய்தி வந்தது. அன்று காலை 10 மணி வரைக்குங்கூட பம்பாய் நகரமெங்கும் அமைதி நிலவி வருவதாகப் பல இடங்களிலிருந்தும் செய்தி வந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி, முதல் நாள் சம்பவங்களைபப்பற்றி "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத ஆரம்பித்தார். "ஒரு பெருங் கறை" என்பதாக அக்கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்தார். பம்பாய்ச் சம்பவங்கள் தமது மனதைப் புண்படுத்திவிட்டது பற்றியும் அவை காரணமாகப் பொதஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடவேண்டி நேர்ந்தது பற்றியும் எழுதினார். இந்தக் கட்டுரையைப் பாதி எழுதிக்கொண்டிருக்கையில் பரேல் என்னுமிடத்திலிருந்து அவசர டெலிபோன் செய்தி ஒன்று வந்தது. அங்கேயுள்ள ஆலைத் தொழிலாளர்கள் அக்கம் பக்கத்திலுள்ள பார்ஸி சமூகத்தாரைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து வருவதாகவும் மகாத்மா உடனே வந்து அவர்களைத் தடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். மகாத்மா தாம் எழுத ஆதம்பித்த கட்டுரையை முடித்து விட்டுக் கிளம்ப எண்ணி, முதலில் மௌலானா ஆஸாத் ஸோபானியையும், மௌலானா முகம்மது அலியின் மைத்துனரான ஜனாப் மோஸம் அலியையும் பரேலுக்குப் போகும்படி சொன்னார்.
பரேல் தொழிலாளர்கள் அன்றைக்குப் பார்ஸிகளைத் தாக்கயத்தனித்ததற்குக் காரணம் ஒன்று இருந்தது. அன்று காலையில் பம்பாயில் அமைதி குடிகொண்டிருந்ததல்லவா?
அது புயலுக்கு முந்தைய அமைதியைப் போன்றதேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் ஆங்காங்கு கலகங்கள் ஆரம்பித்தன. இந்தத் தடவை ஆரம்பித்தவர்கள் பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களுமாவர். முதல் நாள் அவர்களைத் திடீரென்று ஹிந்து-முஸ்லிம்கள் தாக்கினார்கள். ஆனால் இராத்திரிக்கு இராத்திரியே அவர்கள் மறுநாள் பழி வாங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் உபயோகிக்கவும் சர்க்காரிடம் அநுமதி பெற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்; காலை ஒன்பது மணிக்கு மேலே பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கும்பல் கும்பலாகக் கிளம்பி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். ஹிந்து முஸ்லிம்களில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.
இதை யறிந்ததும் ஹிந்து முஸ்லிம்கள் பழையபடி தடிகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். கண்ட இடங்களிலெல்லாம் பார்ஸிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள். பார்ஸிகள் வசிக்கும் இடங்களைத் தேடிப் போகவும் தொடங்கினார்கள். "அடியைப் பிடியடா பாரத பட்டா!" என்று நேற்று நடந்த பயங்கரமான சம்பவங்கள் இன்றும் ஆரம்பமாயின.
மௌலானா ஆஸாத் ஸோபானியும் ஜனாப் மோஸம் அலியும் காந்திஜியின் விருப்பத்தின்படி பரேல் பகுதிக்கு மக்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சென்றார்கள் அல்லவா? அவர்களில் ஜனாப் மோஸம் அலியும் அவருடன் சென்றவர்களில் இருவரும் அரைமணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் காயமாகி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி அவர்கள் மகாத்மாவிடம் சொன்னார்கள். பார்ஸிகளும்
ஆங்கிலோ-இந்தியர்களும் யூதர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தார் அவர்களை வழியில் வளைத்துக் கொண்டு தாக்கினார்களாம். அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி சுக்கு நூறாகி விட்டதாம்! உயிரோடு திரும்பி வருவதே பெரிய காரியம் ஆகிவிட்டதாம்! மௌலானா ஆஸாத் ஸோபானி வேறொரு வண்டியில் போனபடியால் அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அடுத்தாற்போல் இன்னும் சில கிலாபத் இயக்கத் தொண்டர்கள் அதேமாதிரி அடிபட்டு மேலெல்லாம் இரத்தம் ஒழுகத் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு மண்டையில் பட்ட அடியினால் மூளை கலங்கிப் போயிருந்தது. "நாங்களும் எங்கள்
இரத்தத்தைக் கொடுத்தோம்!" "நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்" என்று அவர் இடைவிடாமல் கூச்சல் போட்டார்.
மகாத்மா அச்சமயம் "ஒரு பெருங்கறை" என்ற கட்டுரையை "எங் இந்தியா" வுக்கு எழுதிக் கொண்டிருந்தார். பின்வருமாறு அவர் எழுதினார்:-
”இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே ஆறு ஹிந்து முஸ்லிம் தொண்டர்கள் மண்டைஉடைபட்டு இரத்தக் காயங்களுடன் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவர் மூக்கு எலும்பு உடைந்து உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் வந்திருக்கிறார். இவர்கள் பரேலில் தொழிலாளிகளின் டிராம் வண்டிகளைத் தடை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சாந்தப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் பரேலுக்கு அவர்களால் போய்ச்சேர முடியவில்லை; அவர்களுக்கு நேர்ந்தது என்ன வென்பதை அவர்களுடைய காயங்களே சொல்லுகின்றன.
“ஆகவே, பொதுஜனச்சட்டமறுப்பை ஆரம்பிக்கலாம் என்னும் என் நம்மிக்கை மண்ணோடு மண்ணாகி விட்டது. சட்டமறுப்புக்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை, அத்தகைய நிலைமை பர்தோலியில் குடிகொண்டிருப்பது மட்டும் போதாது. பம்பாயில் பலாத்காரம் தலை விரித்தாடும்போது பர்தோலியையும் பம்பாயையும் தனித் தனிப் பிரிவுகளாகக் கருதமுடியாது.
“ஒத்துழையாமைத் தலைவர்கள் பம்பாய்ச் சம்பவங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அவர்கள் நகரத்தில் பல பகுதிகளிலும் சென்று ஜனங்களைச் சாந்தப்படுத்த முயற்சி செய்தது உண்மைதான்; பல உயிர்களைக் காப்பாற்றி யிருப்பதும் உண்மைதான். ஆனால் இதைக்கொண்டு நாம் திருப்தியடைவதற் கில்லை. இதைக் காரணமாய்ச் சொல்லி வேறிடத்தில் சட்ட மறுப்பை நடத்தவும் முடியாது. நேற்று நமக்கு ஒரு சோதனை நாள். அந்த சோதனையில் நாம் தவறி விட்டோம். வேல்ஸ் இளவரசருக்கு எந்த விதமான தீங்கும் நேராமல் பாதுகாப்பதாக நாம் சபதம் செய்தோம். இளவரசரை வரவேற்பதற்காகப் போயிருந்த ஒரு தனி மனிதருக்கு அவமானமோ, பலாத்காரமோ நேர்ந்தாலும்,
நம்முடைய சபததில் நாம் தவறியதேயாகும். இளவரசரின் வரவேற்புக்கு போகாமலிருக்க நமக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை வரவேற்புக்குப் போக மற்றவர்களுக்கு உண்டு.மற்றவர்களின் உரிமைக்குப் பங்கம் செய்தது நம்முடைய விரத பங்கமே யாகும். என்னுடைய சொந்தப் பொறுப்பையும் நான் தட்டிக் கழிக்க முடியாது. புரட்சி ஆவேசத்தை உண்டாக்கியதில் மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிகமாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அந்த ஆவேசத்தை நான் கட்டுக்குள் நிலை நிறுத்திவைக்க இயலாதவனாகி விட்டேன். அதற்கு நான் பிராயச் சித்தம் செய்தாக வேண்டும். இந்தப் போராட்டத்தைத் தார்மீக அடிப்படையிலேயே நான் தொடங்கி யிருக்கிறேன். உபவாச விரத்திலும் பிரார்த்தனையிலும் நான் பூரண நம்பிக்கை உள்ளவன். ஆகவே, இனிமேல் சுயராஜ்யம் சித்தியாகும் வரையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இருபத்திநாலு மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறேன்.
"பம்பாய்ச் சம்பவங்களினால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சீர்தூக்கிப் பார்த்து பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்யவேண்டும். பொது மக்களிடையில் பரிபூரண அஹிம்சை நிலவினாலன்றி
என்னால் சட்ட மறுப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்னும் முடிவு எனக்கு மிக்க வருத்தமளிக்கிறது. இது என்னுடைய சக்தியின்மைக்கு அத்தாட்சிதான். ஆனால் நாளைக்கு என்னை ஆளும் இறைவன் முன்னால் நிற்கும்போது, என்னுடைய உண்மையான யோக்யதையுடன் நிற்க விரும்புகிறேனே யல்லாமல் உள்ளதைக் காட்டிலும் அதிக சக்திமானாக வேஷம் போட்டுக்கொண்டு நிற்க விரும்பவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாடான பலாத்காரத்தை நான் எதிர்ப்பது போலவேபொது மக்களின் கட்டுப்பாடற்ற பலாத்காரத்தையும் எதிர்க்கிறேன். இந்த இருவகை பலாத்காரங்களுக்கு மிடையில் நசுக்கப்பட்டு உயிர் துறக்க நேர்ந்தால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை!"
மேற்கண்டவாறு மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையில் வாரா வாரம் அவர் திங்கட்கிழமை உபவாசம் இருக்க நேர்ந்த காரணம் இன்னதென்பதைக் காணலாம். ஆனால் இவ்விதம் வாரத்துக்கு ஒரு நாள் உபவாச விரதம் மகாத்மாவின் ஆத்ம
சோதனைக்கு மட்டுமே பயன்படுவதாயிற்று. மக்களைத் தூய்மைப் படுத்துவதற்காக அவர் இன்னும் நீண்டகால உபவாச விரதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. ஏன்? பம்பாய்
நிலைமை காரணமாகவே அவர் நீடித்த உண்ணாவிரதம் இருக்கும்படி ஆயிற்று. அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
29. "என் மதம்"
மகாத்மா காந்தி "எங் இந்தியா"வுக்குக் கட்டுரை எழுதி முடித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் மௌலானா ஆஸாத் ஸோபானி திரும்பி வந்து சேர்ந்தார். தாம் காந்தி குல்லா அணியாததால் விபத்து ஒன்றுமில்லாமல் தப்பிப் பிழைத்து வந்ததாக அவர் சொன்னார். பார்ஸிகளும் கிறிஸ்துவர்களும் காந்தி குல்லா அணிந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாக்கி அடிப்பதாகத் தெரிவித்தார்.
மற்றொரு பக்கத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு பார்ஸிகளையும் கிறிஸ்துவர்களையும் தாக்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் சர்க்காருடைய அநுமதி பெற்றுத் துப்பாக்கிகளும் ரிவால்வர்களும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். ஹிந்துக்கள்-முஸ்லிம்களிடம் தடிகள்தான் ஆயுதங்களாக இருந்தன. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக யிருந்தனர். இவ்விதமாக இருதரப்பிலும் பலாத்காரச் செயல்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகி வந்தன.
சில பார்ஸி இளைஞர்கள் துப்பாக்கி சகிதமாக ஸ்ரீ கோவிந்த வஸந்த் என்னும் மிட்டாய்க் கடைக்காரரின் வீட்டுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் செய்தி மகாத்மாவின் ஜாகையை எட்டியபோது அந்த ஜாகையில் வசித்த மகாத்மாவின் சகாக்கள் பெருங் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த மாதிரி முரட்டுப் பார்ஸி இளைஞர்கள் சிலர் மகாத்மாவின் ஜாகைக்குள்ளும் புகுந்து அவரைத் துன்புறுத்த முற்பட்டால் என்ன செய்கிறது? மகாத்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு பம்பாயில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்து-முஸ்லிம்கள் அப்போது பார்ஸிகளின்மீது பழிவாங்கத் தொடங்குவதை யாராலும் நிறுத்த முடியாது.
இப்படிக் காந்தியின் சகாக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ தன்னைப் பற்றிச் சிந்திக்கவே யில்லை. இந்தப் பலாத்காரப் பிசாசின் தாண்டவத்தை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தனை செய்தார். அவர் வெளியேறிச் சென்று ஜனங்களுக்கு நற்போதனை செய்வதால் பலன் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றவில்லை. முதல் நாள் அவ்விதம் செய்து பார்த்ததில் பலன் ஏற்படவில்லையல்லவா?
மகாத்மாவின் அநுதாபமெல்லாம் பார்ஸிகள் பக்கத்திலேயே இருந்தது. ஏனெனில் முதலில் அவர்களைப் பலாத்காரமாகத் தாக்கத் தொடங்கியவர்கள் ஹிந்து-முஸ்லிம்கள்தான். முதலில் தாக்கியது மட்டும் அல்ல; செய்யத் தகாத மதத் துவேஷக் காரியம் ஒன்றையும் செய்து விட்டார்கள். பார்ஸிகள் தங்களுடைய மதத்தைத் தொந்தரவின்றிக் கடைப்பிடிப்பதற்காக ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் இந்தியாவைத் தேடி வந்தவர்கள். அராபிய முஸ்லிம்கள் பாரஸீகத்தை வென்றபோது,
முஸ்லிம் ஆட்சியில் மத சுதந்திரம் இராது என்று இந்தியாவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கோரிய மத சுதந்திரம் கிடைத்தது. பார்ஸிகள் அக்னி தேவனைக் கடவுள்என்று பூஜிப்பவர்கள். ஆகையால் என்றும் அணையாத தீயை
அவர்கள் தங்கள் கோயிலில் வைத்து வளர்த்துப் பூஜித்து வந்தார்கள். வேல்ஸ் இளவரசர் விஜயத்தன்று நடந்த களேபரத்தில் ஹிந்து முஸ்லிம்கள் அந்தப் பார்ஸிக் கோயிலில் புகுந்து அணையா நெருப்பை அணைத்து விட்டார்கள். இதுதான் பார்ஸி சமூகத்தினருக்கு என்றுமில்லாத ஆத்திரத்தை மூட்டிவிட்டது. தங்கள் மத சுதந்திரத்துக்குப் பங்கம் நேரிடுவதைப் பொறுப்பதைக் காட்டிலும், பம்பாயிலுள்ள பார்ஸிகள் அனைவரும் உயிரை இழக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள். இந்த விவரங்களை அறிந்த காந்திஜி பார்ஸிகள்மீது குற்றம் இருப்பதாக எண்ணவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் ஹிந்து-முஸ்லிம்கள் என்றே கருதினார்.
அன்று இரவு வெகு நேரம் வரையில் பம்பாய்ப் பிரமுகர் அடிக்கடி வந்து மகாத்மாவிடம் கலவர நிலைமையைப் பற்றிச் சொல்லி வந்தார்கள். இரவு வந்த பிறகும் கலவரங்கள்
அடங்கின வென்று தெரியவில்லை. பார்ஸி-கிறிஸ்துவ சமூகத்தினரிடமிருந்து மகாத்மாவுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவரால் தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இன்னல்களைப் பற்றி அக்கடிதங்களில் எழுதியிருந்ததுடன் மகாத்மாவை வெகுவாக நொந்திருந்தார்கள். சிலர் வசைமாரியும் பொழிந்திருந்தார்கள். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் அடிபட்டவர்களும் உறவினர்களை இழந்தவர்களும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்கள். இதெல்லாம் மகாத்மாவின் மனவேதனையை அதிகமாக்கி விட்டன.
அன்றிரவு கடைசியாக வந்த ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் காந்திஜியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இரவு பத்தரை மணிக்கு மகாத்மா படுத்தார். ஆனால் அவர் தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும்? அதே அறையில் மகாத்மாவின் காரியதரிசியான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரும் படுத்திருந்தார். அவர் சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.
இரவு மணி 3-30 இருக்கும். மகாத்மா எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸும் விழித்துக் கொண்டார். "பென்ஸிலும் காகிதமும் கொண்டு வாரும்!" என்றார் மகாத்மா. உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கொண்டு வந்தார். மகாத்மா விரைவாக ஏதோ எழுதினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அதன் பிரதிகள்
மூன்று எடுக்கச் சொன்னார். மகாத்மா எழுதியது பம்பாய் வாசிகளுக்கு ஒரு விண்ணப்பம். அதில் மிகக் கடுமையான ஒரு விரதத்தைத் தாம் எடுத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். பம்பாயில் கலவரம் நிற்கும் வரையில் தாம் உணவருந்தா விரதம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
விண்ணப்பத்தின் முழு விவரம் பின்வருமாறு:-
"பம்பாய் நகரின் ஆடவர்களே! பெண்மணிகளே! சென்ற இரண்டு தினங்களாக என் மனம் படும் வேதனையை நான் வார்த்தைகளால் உங்களுக்கு விவரிக்க முடியாது. இரவு 3-30-க்கு அமைதியான மன நிலையில் நான் இதை எழுதுகிறேன். இரண்டு மணி நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்த பிறகு நான் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
பம்பாயில் உள்ள ஹிந்து-முஸ்லிம்கள் பார்ஸிகளுடனும் கிறிஸ்துவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுகிற வரையில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை.
சென்ற இரண்டு தினங்களில் பம்பாயில் நான் பார்த்த சுயராஜ்யம் நாற்றம் எடுத்து என் மூக்கைத் துளைக்கிறது. பம்பாயில் கிறிஸ்தவர்கள், பார்ஸிகள்-யூதர்கள் சிறு தொகையினர். பெரும்பாலானோரான ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை மேற் கண்டவர்களுக்குப் பெரும் அபாயமாய் முடிந்திருக்கிறது. ஒத்துழையாதாரின் அஹிம்சையைவிட மோசமாகிவிட்டது. அஹிம்சை என்று வாயால் சொல்லிக்கொண்டு நம்முடன் மாறுபட்டவர்களை நாம் துன்புறுத்தி யிருக்கிறோம். இது கடவுளுக்குத் துரோகமாகும். கடவுள் ஒருவரே. சிலர் வேதத்தின் வாயிலாகவும் சிலர் குர்-ஆன் மூலமாகவும் வேறு சிலர் (பார்ஸிகள்) ஸெண்டவஸ்தா மூலமாகவும் கடவுளை அறியப்
பார்க்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறியப் பார்க்கும் கடவுள் ஒருவரேதான். அவர் சத்தியத்தின் வடிவம்; அன்பின் உருவம். இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கவே நான் உயிர் வாழ்கிறேன். இல்லாவிட்டால் உயிர் வாழ்வதிலேயே எனக்கு விருப்பமில்லை.
நான் எந்த இங்கிலீஷ்காரனையும் வெறுக்க முடியாது; வேறு எந்த மனிதனையும் வெறுக்க முடியாது. இங்கிலீஷ்காரன் இந்தியாவில் அமைத்திருக்கும் ஸ்தாபனங்களை எதிர்த்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் அமைப்பை நான் கண்டிக்கும்போது அந்த அமைப்பை நடத்தும் மனிதர்களை வெறுக்கிறேனென்று தப்பாக நீங்கள் உணரக்கூடாது. நான் என்னை நேசிப்பது போலவே இங்கிலீஷ்காரனையும் நேசிக்கிறேன். இதுதான் என் மதம். இதை நான் இந்தச் சமயத்தில் நிரூபிக்கா விட்டால் கடவுளுக்குத் துரோகம் செய்தவனாவேன்.
பார்ஸிகளைப் பற்றி நான் என்ன சொல்ல? பார்ஸிகளின் கௌரவத்தையும் உயிர்களையும் ஹிந்து-முஸ்லிம்கள் பாதுகாக்கா விடில், சுதந்திரத்துக்குச் சிறிதும் தகுதியற்றவர்களாவோம். சமீபத்திலேதான் அவர்கள் தங்களுடைய தாராள குணத்தையும் சிநேகப் பான்மையையும் நிரூபித்தார்கள். பார்ஸிகளுக்கு முஸ்லிம்கள் முக்கியமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் நிதிக்குப் பார்ஸிகள் ஏராளமாய்ப் பணம் உதவியிருக்கிறார்கள். ஆகையால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பூரண பச்சாதாபம் காட்டினாலன்றி பார்ஸிகளின் முகத்தில் என்னால் விழிக்க முடியாது. இந்தியக் கிறிஸ்துவர்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்தாலன்றி கிழக்காப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் தற்காப்புக்காகவோ, பழிவாங்குவதற்காகவோ செய்திருக்கும் காரியங்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.
என் நிமித்தமாகவே பம்பாயிலுள்ள இந்தச் சிறுபான்மைச் சகோதர சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. அவர்களுக்குப் பூரண பரிகாரம் செய்து கொடுப்பது என் கடமை. ஒவ்வொரு ஹிந்து முஸ்லிமின் கடமையும் ஆகும். ஆனால் என்னைப் பின்பற்றி வேறு யாரும் பட்டினி விரதம் தொடங்க வேண்டாம். இதய பூர்வமான பிரார்த்தனையின் காரணமாக உபவாசம் இருக்கத் தோன்றினால்தான் உபவாசம் இருக்கலாம். அதற்கு அந்தராத்மாவின் தூண்டுதல் அவசியம். ஆகையால் ஹிந்து முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அவரவர்கள் வீட்டிலிருந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்கட்டும்.
என்னுடைய சகாக்கள் என்பேரில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அது வீண்வேலை. அதற்குப் பதிலாக நகரெங்கும் சென்று கலகம் செய்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயலவேண்டும். நம்முடைய போராட்டத்தில் நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நம்முடைய இருதயங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
என் முஸ்லிம் சகோதரர்களுக்கு விசே ஷமாக ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பரிபூரணமாகப் பாடுபட்டு வருகிறேன். கிலாபத் இயக்கத்தை ஒரு பரிசுத்த இயக்கமாகக் கருதி அதில் ஈடுபட்டிருக்கிறேன். அலி சகோதரர்களிடம் என்னைப் பூரணமாக ஒப்புவித்திருக்கிறேன். பம்பாயில் நடந்த இந்த நாள் இரத்தக்களரியில் முஸ்லிம்கள் அதிகப் பங்கு எடுத்திருப்பதாக அறிந்து என் மனம் வருந்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமையும் நான் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன். இந்த இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்த அவர்கள் முழு முயற்சியும் செய்யவேண்டும்.
கடவுள் நமக்கு நல்லறிவையும் நல்ல காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தையும் அளிப்பாராக.
இங்ஙனம், உங்கள் ஊழியன்,
'எம். கே. காந்தி'
மேற்கண்ட விண்ணப்பத்தை மகாத்மா காந்தி எழுதிக்கொடுத்தார். அதை இங்கிலீஷ், குஜராத்தி, மராத்தி. உருது ஆகிய நாலு பாஷைகளிலும் அச்சிட்டுப் பம்பாய் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார்கள். இந்த முயற்சிக்கு ஒரு நாள் முழுதும் ஆகி விட்டது. பலன் இன்னும் தெரிந்தபாடில்லை. மகாத்மாவோ தண்ணீரைத் தவிர வேறொன்றும் அருந்த வில்லை. ஒரு நிமிடங்கூடச் சும்மா இருக்கவும் இல்லை. ஊழியர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். தாங்கள் செய்த காரியங்களைச் சொல்லி விட்டு, செய்ய வேண்டியதற்கு யோசனை கேட்டுக் கொண்டு போனார்கள். "உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அமைதி யடைந்திருக்கிறது. களைப்பே தெரியயவில்லை!" என்று மகாத்மா அடிக்கடி தம் சகாக்களிடம் உண்ணாவிரதம் ஆரம்பித்ததோடு மகாத்மா நிற்கவில்லை. ஸ்ரீ தேவதாஸ் காந்திக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். தம்முடைய உண்ணாவிரதத்தினாலும் பம்பாய்க் கலகம் நிற்காமற் போனால் அஹிம்சையை நிலை நாட்டுவதற்காகத் தமது குமாரனைப் பலியாக அனுப்பப் போவதாகச் சொன்னார்.
இதைக் கேட்ட மகாத்மாவின் சகாக்கள் பெரிதும் வருத்த மடைந்தார்கள். அமைதியை நிலை நாட்டுவதற்காகப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். ஸ்ரீமதி சரோஜினி நாயுடு,
மௌலானா ஆஸாத் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ பரூச்சா ஆகியவர்கள் பம்பாய் நகரமெல்லாம் பம்பரம் போலச் சுழன்றார்கள். ஜனங்களின் பலாத்காரம் காரணமாக மகாத்மா பட்டினி கிடப்பதை எடுத்துரைத்தார்கள். எங்கேயாவது கலகம் நடக்கும் போலிருப்பதாகச் செய்தி வந்தால் அந்த இடத்துக்குப் பறந்து ஓடினார்கள். ஜனங்களிடம் பேசிக் கலகம் நேராமல் தடுத்து அமைதியை நிலை நாட்டினார்கள்.
மறுநாள் 20-ஆம் தேதி மகாத்மாவின் ஜாகையில் பம்பாய்ப் பிரமுகர்களின் கூட்டம் ஒன்று நடந்தது. ஹிந்து, முஸ்லிம், பார்ஸி பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அமைதி நிலைநாட்டும் வழிகளைப் பற்றி விவாதங்கள் நடந்தன. பார்ஸிகள் சிறு பான்மையாரானபடியாலும், முதலில் தாக்கப்பட்டவர்களான படியாலும், சமாதானத்துக்குப் பார்ஸிகள் சொல்லும் நிபந்தனை களை மற்ற வகுப்பார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி சொன்னார். அதை முதலில் மற்றவர்கள் மறுத்தார்கள். மகாத்மா வற்புறுத்தியதால் இணங்கினார்கள். பார்ஸிகளிடம் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்புவித்ததும் அவர்களும் நியாயமான நிபந்தனைகளையே சொன்னார்கள். மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அன்று சாயங்காலம் மோட்டார் லாரிகளில் ஹிந்து- முஸ்லிம்-பார்ஸி பிரமுகர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஏறிக்கொண்டு நகரெங்கும் சுற்றினார்கள். சமூகங்களுக்குள் நல்லபடியான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்துக் கொண்டே போனார்கள். இவ்விதம் எல்லாப் பிரமுகர்களும் தீவிர முயற்சி செய்ததின் பயனாக, இரண்டு நாளில் பம்பாய் நகரமெங்கும் பூரண அமைதி ஏற்பட்டு விட்டது.
21-ஆம் தேதி இரவு பம்பாயில் பலாத்கார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. 22-ஆம் தேதி காலையில் மகாத்மாவின் ஜாகையில் மறுபடியும் எல்லா சமூகப் பிரதிநிதிகளும்கூடி மகாத்மாவை உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.
"இந்த அமைதி நீடித்திருப்பதற்குப் பிரயத்தனம் செய்வதாக நீங்கள் அனைவரும் சேர்ந்து வாக்குறுதி கொடுத்தால் என் விரதத்தை முடிவு செய்கிறேன்" என்று மகாத்மா கூறினார். அவ்வாறே பிரமுகர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதன் பேரில் சில திராட்சைப் பழங்களையும் ஒரு ஆரஞ்சுப் பழத்தையும் அருந்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை முடிவுசெய்தார்! பம்பாய் மக்கள் அனைவரும் அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மகிழ்ந்தார்கள்.
-----------------------------------------------------------
30. சிறைகள் நிரம்பின
பம்பாய்க் கலகங்கள் மகாத்மாவுக்கு ஆத்ம வேதனையை உண்டு பண்ணியிருந்தன. ஆனால் அந்தக் கலகங்கள் நிறுத்தப் பட்ட விதம் அவருக்குத் திருப்தியை அளித்தது. போலீஸ் முயற்சியினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் கலகம் அடக்கப்பட்டிருந்தால் அதில் மகாத்மாவுக்குச் சிறிதும் திருப்தி ஏற்பட்டிராது. ஆனால் சமூகத் தலைவர்களின் முயற்சிகளினாலேயே கலகங்கள் நின்று அமைதி ஏற்பட்ட படியால் மகாத்மாவுக்கு மீண்டும் சாத்வீகச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அதற்கு முன்னால் சில முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கண்டார். நவம்பர் 23-ஆம்
தேதி பம்பாயிலே கூடிய காரியக் கமிட்டியாரிடம் அந்த ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.
முந்தைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மாகாணங்களுக்குப் பொதுஜனச் சட்ட மறுப்புத் தொடங்கும் உரிமை கொடுத்திருந்தது அல்லவா? அந்த உரிமையை எந்த மாகாணமும் உபயோகிக்க வேண்டாம் என்று காரியக் கமிட்டி தீர்மானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பர்தோலியில் தாம் இயக்கம் தொடங்கும்போது தேசத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அமைதியைப் பாதுகாத்து வந்தால் அதுவே தமக்குப் பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்னொரு முக்கியமான திட்டத்தையும் காரியக் கமிட்டியின் முன்பு மகாத்மா பிரேரேபித்தார். அதாவது தேசமெங்கும் பல தொண்டர்படை ஸ்தாபனங்கள் அப்போது இருந்தன. அந்த ஸ்தாபனங்களை யெல்லாம் ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், கிலாபத் தொண்டர்கள், கால்ஸா (சீக்கியத்) தொண்டர்கள் என்று தனித்தனி அமைப்பாயிராமல் ஒரே அகில இந்தியத் தேசீய தொண்டர் படை ஸ்தாபனம் ஆக்க வேண்டும். இதில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு தொண்டரிடமும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை :
1. "தொண்டர் படைத் தலைவர்களின் கட்டளைக்குத் தயங்காமல் கீழ்ப்படிந்து நடப்பேன்.
2. சொல்லிலும் செயலிலும் அஹிம்சா தர்மத்தைப் பாது காப்பேன்.
3. அமைதியைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் ஏற்படும் அபாயங்களுக்குத் தயங்காமல் உட்படுவேன்."
இந்தமாதிரி வாக்குறுதி கொடுத்த தொண்டர்களைக் கொண்ட படைகளை நாடெங்கும் அமைத்து விட்டால், பம்பாயில் நடந்தது போன்ற கலவரம் வேறெங்கும் உண்டாகாமல் தடுக்கலாம் என்றும், அப்படி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதமில்லாமல் உடனே அமைதியை நிலை நாட்டி விடலாம் என்றும் மகாத்மா தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அவ்விதமே தீர்மானம் செய்தார்கள்.
இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலருக்குப் பொது ஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடுவதில் அதிருப்தி இருந்தது. முக்கியமாக, தேசபந்து தாஸும், ஸ்ரீ வி ஜே. படேலும் பொதுஜனச் சட்ட மறுப்பைத் தள்ளிப் போடுவதை ஆட்சேபித்தார்கள். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவுங் கூடத் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னதின் பேரில் ஸ்ரீ வி. ஜே. படேலைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.
பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆசிரமத்திலும் அதிருப்தி கொண்ட ஒரு கூட்டத்தார் மகாத்மாவின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் சூரத் ஜில்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களுந்தான். அந்த ஜில்லாவில் பர்தோலி ஆனந்த் தாலூகாக்களில் நவம்பர் 23-ஆம் தேதியன்று பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. பம்பாய்க் கலவரம் காரணமாக மகாத்மா அதை ஒத்திப் போட்டுவிட்டார். "பம்பாயின் குற்றம் காரணமாக எங்களைத் தண்டிப்பானேன்?" என்று சூரத் ஜில்லாக்காரர்கள் கேட்டார்கள். மகாத்மா பழையபடி அவர்களுக்குத் தம் கொள்கைகளை விளக்கிச் சொன்னார்.
"சுயராஜ்யம் சூரத் ஜில்லாவுக்கு மட்டும் நாம் கோர வில்லையே? இந்தியா தேசத்துக்கே கேட்கிறோமல்லவா? ஆகையால் இந்தியா தேசமெங்கும் அஹிம்சை பாதுகாக்கப் பட்டால்தான் பர்தோலியில் நான் இயக்கம் நடத்த முடியும்" என்றார். அவ்விதம் இந்தியா தேச மெங்கும் அமைதியை நிலை நாட்டுவதற்காகத் தேசீயத் தொண்டர் படை திரட்டும் திட்டம் போட்டிருப்பதைப் பற்றியும் கூறினார். "அந்த வேலை நடக்கிறபடி நடக்கட்டும். அதற்கிடையில் பர்தோலி தாலூக்காவுக்கு நான் வந்து சுற்றிப் பார்க்கிறேன். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக் கிறார்களா என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார்.
மகாத்மா வருவதாகச் சொன்னதே சூரத் ஜில்லாக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மகாத்மாவும் பர்தோலிக்குச் சென்று சில தினங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார். கிராமம் கிராமமாகப் போய்ப் பார்த்தார். அங்கங்கே பார்த்ததும் கேட்டதும் மகாத்மாவுக்குத் திருப்தி அளித்தது. சட்ட மறுப்புப் போருக்கு அவர் கூறிய நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேறி யிருந்தன.
பர்தோலி தாலூகாவில் சகல ஜனங்களும் கதர் உடுத்தியிருப்பதை மகாத்மா கண்டு மகிழ்ந்தார். ஒரு கிராமத்திலாவது சர்க்கார் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை யென்றும், தேசீய பாடசாலைகளுக்கே எல்லாப் பிள்ளைகளும் போகிறார்கள் என்றும் அறிந்தார். தாலூகாவில் ஒரு கள்ளுக்கடை கூடக் கிடையாது. எல்லாவற்றையும் அடியோடு மூடியாகி விட்டது. சர்க்கார் கோர்ட்டுகளுக்கு யாருமே போவதில்லை. தகராறுகளைப்
பஞ்சாயத்துக்களின் மூலமாகவே தீர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் காந்திஜிக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. பிரயாணத்தின் போது அங்கங்கே கண்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்பாடி மகாத்மா எச்சரித்தார்.
உதாரணமாக ஒரு கிராமத்தில் சாதி ஹிந்துக்கள் ஒரு பக்கமாகவும் தீண்டாதார் இன்னொரு பக்கமாகவும் நின்றிருந்தார்கள். மகாத்மா இதைக்குறிப்பிட்டுக் காட்டியதும் எல்லாரும் ஒரே இடத்தில் கலந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
பர்தோலி சுற்றுப் பிராயணத்தினால் மொத்தத்தில் மிகவும் உற்சாகத்தை அடைந்து மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்கு திரும்பி வந்தார். தேசமெங்கும் அமைதி காக்கத் தகுந்த
தேசீயத் தொண்டர் படைகள் அமைக்கப் பட்டவுடனே பர்தோலியில் இயக்கம் ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது.
ஆனால் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்தாரோ இல்லையோ, தேசமெங்கும் சிறிதும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்த நிலைமையும் மகிழ்ச்சி தரத்தக்க நிலைமைதான். தேசமெங்கும் தொண்டர் படை அமைப்பதற்குச் செய்த ஏற்பாட்டின் காரணமாக அந்த விசே ஷ நிலைமை உண்டாயிற்று. லார்ட் ரெடிங் சர்காரின் ஆத்திர புத்தியினாலும் அந்தப் புதிய
நிலைமை ஏற்பட்டது. பம்பாயில் வேல்ஸ் இளவரசர் வந்து இறங்கிய அன்றைக்கு ஆரம்பித்த கலவரம் மகாத்மாவின் மனதைப் புண்பாடுத்தியதல்லவா? அதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கலவரத்தின் பூர்வாங்கமான பாரிபூரண ஹர்த்தால் லார்ட் ரெடிங்கின் மனதைப் புண்பாடுத்தியது. பம்பாயில் மட்டுமல்ல; அதற்குப் பிறகு
வேல்ஸ் இளவரசர் சென்ற பெரிய நகரங்களில் எல்லாம் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. நல்ல வேளையாக அங்கெல்லாம் கலவரங்கள் ஒன்றும் விளயவில்லை. மகாத்மாவின் உண்ணாவிரதமே எச்சரிக்கையா யிருந்து மற்ற இடங்களில்
கலவரம் நடைபெறாமல் காப்பாற்றியது.
ஆனால் பம்பாய்க் கலவரத்தைப் பற்றி லார்ட் ரெடிங் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. பம்பாயில் ஹர்த்தால் பரிபூரணமாக நடந்ததையும் இன்னும் மற்ற இடங்களில் நடந்து வருவதைப் பற்றியுந்தான் அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. "வேல்ஸ் இளவரசரை இப்போது வரவழைக்க வேண்டாம்!" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார்! அந்த நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போகும்படி தேசத்தில் காரியங்கள் நடந்து வந்தபடியால் லார்ட் ரெடிங்கின் ஆத்திரம் பொங்கிற்று. அந்த ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது, மகாத்மாவின் வளர்ந்து வரும் சக்தியை எந்த இடத்திலே தாக்குவது என்று லார்ட் ரெடிங் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
பம்பாயில் நடந்தது போல் நடந்து விடாமல் தேசமெங்கும் அமைதியைப் பாதுகாப்பதற்காகத் தேசீயத் தொண்டர் படைகளை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்த தல்லவா? அதன்படி தேசத்தின் பல பாகங்களிலும் தொண்டர் படைகள் அமைக்கத் தொடங்கினார்கள்.
"தொண்டர் படைகளை அமைப்பது சட்ட விரோதமான காரியம்" என்று லார்ட் ரெடிங்கின் சர்க்கார் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அமைதியைக் காப்பதற்காகத் தொண்டர் படைகள் ஏற்படுகின்றன என்பதை அதிகார வர்க்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்காரை எதிர்க்கவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப் படுத்தவுமே தொண்டர் படைகள் அமைக்கப்படுவதாக அதிகார வர்க்கத்தார் சொல்லி, தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் ஆக்கினர்.
அதே சமயத்தில் வேறு சில அடக்குமுறை பாணங்களும் அதிகார வர்க்கத்தின் தூணியிலே யிருந்து வெளிவந்தன. 'இராஜத்வே ஷக் கூட்டச் சட்டம்' என்று ஒரு சட்டம் இருந்தது. அதன்படி இராஜாங்கத்துக்கு விரோதமான பொதுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாதென்று தடுக்கலாம்.. மீறிக் கூட்டம் போட்டால் பலாத்தாரமாய்க் கலைக்கலாம். அல்லது கைது செய்யலாம். இதைத் தவிர, பழைய 144-வது பிரிவும் இருந்தது. தனிப்பட்ட தலைவர்கள் மீது வாய்ப்பூட்டு உத்திரவு போட இது உதவிற்று. இவ்விதமாக அந்தப் பிரசித்தி பெற்ற 1921-ஆம் வருஷத்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியா தேசமெங்கும் எல்லாவித அடக்குமுறைச் சட்டங்களையும் அதிகார வர்க்கம்
பிரயோகித்தது. இவ்விதம் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில் என்ன செய்வது என்று நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் யோசனை கோரி மகாத்மாவுக்குத் தந்திகள் வந்தன.
அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டியதுதான் என்று காந்திஜி யோசனை கூறினார். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்கும் விஷயம் வேறு; அதிகார
வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் விஷயம் வேறு. முன்னது இந்தியா தேசத்தின் சுதந்திரத்துக்காக; இரண்டாவது ஜீவாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக. அங்கங்கே அமைதிக்குப் பங்கம் நேரும் என்ற பயம் இல்லாவிட்டால் தனிப் பட்ட தலைவர்களும் தொண்டர்களும் அநியாய உத்தரவுகளை மீறலாம் என்று மகாத்மா தெரிவித்தார். அவ்வளவுதான். தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சில நாளைக்குள் அந்தப் புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி அலைமோதிப் பரவியது.
பம்பாய்க் கலவரம் காரணமாகப் பர்தோலி இயக்கத்தை மகாத்மா நிறுத்தி வைத்ததால் தேசத்தில் உண்டான மனத் தளர்ச்சி பறந்து போய்விட்டது.
டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி காந்தி மகாத்மா பர்தோலியிலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் லாகூரில் டிசம்பர் 4-ஆம் தேதி லாலா லஜபதி ராய் கைது செய்யப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. லாலாஜியுடன் பண்டித சந்தானம், டாக்டர் கோபிசந்த் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிந்தது. லாலாஜிக்குப் பதிலாக ஜனாப் ஆகா ஸப்தார் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டி
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் லாகூரிலிருந்து வந்த செய்தி கூறியது. எல்லாவற்றிலும் முக்கியமாக லாகூரில் ஒருவித கலவரமோ, குழப்பமோ ஏற்படவில்லை.
இதைப்பற்றி மகாத்மா தமது சகாக்களிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, லக்ஷ்மணபுரியிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கே பண்டித ஹரகர்நாத மிஸ்ரா, மௌலானா ஸலாமதுல்லா, சௌதரி கலிகுஸூமான் ஆகியவர்கள் கைதியானார்கள். லக்ஷ்மணபுரியிலும் அமைதி நிலவியது.
மறுநாள் 7-ஆம் தேதியன்று கல்கத்தாவில் ஸ்ரீ ஜிஜேந்திர லால் பானர்ஜியும், அஸ்ஸாமில் ஸ்ரீ பூக்கர்ன, ஸ்ரீ பர்தொலாய் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்தது. 7-ஆம் தேதி இரவு மகாத்மா ஆசிரமவாசிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பர்தோலியில் பிரயாணம் செய்தது போல் ஆனந்த் தாலுகாவில் 12-ஆம் தேதி பிரயாணம் தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். பிறகு எல்லாரும் தூங்கப் போனார்கள்.
இரவு 11 மணிக்கு "தந்தி!" "தந்தி!" என்ற கூக்குரல் எல்லாரையும் எழுப்பிவிட்டது. காந்தி மகானும் விழித்துக் கொண்டார். இரண்டு தந்திகள் அலகாபாத்திலிருந்து வந்திருந்தன. பண்டித மோதிலால் நேரு, பண்டித ஜவாஹர்லால் நேரு, பண்டித சாமலால் நேரு, ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உடனே மகாத்மாவின் குமாரர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அனுப்பவேண்டுமென்றும் ஸ்ரீ மகா
தேவதேஸாய் தந்தி அடித்திருந்தார்.
இந்த முக்கியமான செய்திக்குப் பிறகு தூக்கம் ஏது? பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன்? மகாத்மா காந்தியைக் கைது செய்வதும் சாத்தியமேயாகும்.
இந்த எண்ணங்கள் எல்லாம் மகாத்மாவின் மனதில் மின்னல்போலத் தோன்றின. உடனே காந்திஜி என்ன செய்தார் தெரியுமா? ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அழைத்து
உடனே அலகாபாத்துக்குப் புறப்படச் சொன்னார். பிறகு "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத உட்கார்ந்தார். அந்த கட்டுரையின் தலைப்பு "அன்பு-பகைமை அல்ல" என்பது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதத்துக்கு நம்முடைய பதில் ஆயுதம் அன்புதானே தவிர, பகைமை அல்ல என்ற கருத்துடன் மகாத்மா "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுதினார். ஒருவேளை, தம்மைக் கைது செய்துவிட்டாலும் இந்தியப் பொது மக்கள் அன்பு நெறியையே கடைப்பிடிக்கவேண்டும் என்று அதில் குறிப்பாகத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------
31 . பூஜை வேளையில் கரடி
"பண்டித மோதிலால் நேருவை எப்போது கைது செய்து விட்டார்களோ, அப்போது தேசபந்து தாஸையும் சீக்கிரத்தில் கைது செய்து விடுவார்கள். பிறகு என்னையும்
அதிக காலம் வெளியில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்!" என்று மகாத்மா ஆசிரம வாசிகளிடம் உற்சாகத்துடன் கூறினார். "அப்படி எங்களையெல்லாம் கைது செய்து விட்டாலும் ஆமதாபாத் காங்கிரஸை நிறுத்திவிடக் கூடாது. எப்படியும் காங்கிரஸ் நடந்தே தீரவேண்டும்" என்றும் தெரிவித்தார்.
மகாத்மா அப்பொழுது உற்சாகத்தின் சிகரத்தில் இருந்தார். இது ஆசிரம வாசிகளிடம் அவர் அவ்வப்போது குதூகலமாகப் பேசியதிலிருந்தும் உரக்கச் சிரித்ததிலிருந்தும் வெளியாயிற்று. பண்டித நேரு முதலியவர் கைது செய்யப்பட்டதனால் அலகாபாத்துக்கு யாரையாவது அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அலகபாத்தில் அப்போது "இன்டிபென்டெண்ட்" என்னும் தினப்பத்திரிக்கை பிரபலமாயிருந்தது. நேரு குடும்பத்தினர் அதை நடத்தினார்கள். அதன் ஆசிரியர் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் மதுரையைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர். (தற்சமயம் பிரபல எழுத்தாளராயிருக்கும் ஸ்ரீ போத்தன் ஜோசப்பின் சகோதரர்.) அதோடு, மகாத்மாவிடம் மிக்க பக்தி கொண்டவர். அவர் ஆசிரியராயிருந்த "இன்டிபென்டெண்ட்" மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தது. எனவே, நேரு குடும்பத்தாருடன், ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பும் கைது செய்யப்
பட்டார். பண்டித மோதிலால் நேருவுக்கு ஆறு மாதமும் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்புக்கு இரண்டு வருஷமும் சிறைவாசம் விதிக்கப்பட்டதாக மறு நாளே செய்தி வந்தது. (அப்போதெல்லாம் அரசியல் வழக்குகள் சட் பட்டென்று தீர்ந்து போயின. ஏனெனில் ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் கோர்ட்டுகளில் வக்கீல் வைத்து வழக்காட மறுத்தனர். ஆகவே மாஜிஸ்ட்ரேட்டுகள் உடனுக்குடன் தீர்ப்புக்கூறித் தண்டனை விதித்தார்கள்.)
"இண்டிபெண்டெண்ட்" பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதில் உதவி செய்வதற்காக யாரையாவது அனுப்பும்படி ஸ்ரீ மகாதேவ தேஸாய் மகாத்மாவுக்குத் தந்தி யடித்திருந்தார். அதற்கிணங்க மகாத்மா ஸ்ரீ பியாரிலாலையும் ஸ்ரீ தேவதாஸையும் அலகாபாத்துக்கு உடனே புறப்படச் சொன்னார். ஸ்ரீ தேவதாஸ் அலகாபாத்தில் கைது செய்யப்படக் கூடும் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஸ்ரீ தேவதாஸ் மகாத்மாவிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக வந்து நமஸ்காரம் செய்தார்.
அப்போது மகாத்மா உரக்கச் சிரித்த வண்ணம் ஸ்ரீ தேவ தாஸுக்கு ஆசி கூறியதுடன் அவர் நமஸ்கரித்து எழுந்ததும் அவர் முதுகில் பலமாக ஒரு 'ஷொட்டு'க் கொடுத்தார். அதன் சத்தம் ஆசிரமம் முழுவதும் கேட்டது! அதிலிருந்து ஆசிரம வாசிகள் அனைவரும் மகாத்மா எவ்வளவு குதூகலமாயிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
உண்மையிலேயே மகாத்மா குதூகல மடையக்கூடிய முறையில் தேசமெங்கும் அப்போது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. லார்ட் ரெடிங்கின் சர்க்கார் கையாண்ட முறைகள் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் தேசமெங்கும் சாத்வீகச் சட்டமறுப்பு இயக்கம் நடப்பதற்குச் சாதனமாயிருந்தன.
"தேசீயத் தொண்டர்படை திரட்டுவது சட்ட விரோதம்" என்று அதிகார வர்க்கத்தார் உத்தரவிட்டனர். உடனே ஒவ்வொரு முக்கியமான நகரத்திலும் பிரபல தலைவர்கள் தொண்டர் படையில் சேர்ந்து கையொப்பம் இட்டார்கள். சேர்ந்தவர்களின் பெயர்கள் பத்திரிகையில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டன; அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டன.
சிற்சில நகரங்களின் காங்கிரஸ் ஆதரவில் பொதுக் கூட்டங்கள் கூட்டக் கூடாதென்று அதிகாரிகள் உத்திர விட்டனர். உடனே அந்த நகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். வேறு சில இடங்களில் 144-வது பிரிவின் பிரகாரம் பேசக் கூடாது என்று அதிகாரிகள் சில பிரபல தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு உத்திரவு போட்டார்கள். அத்தனைய உத்திரவை மீறிப் பேசப் போவதாக மேற்படி தலைவர்கள் அதிகாரிகளுக்குத்
தெரிவித்தார்கள்.
இவ்வாறு தேசமெங்கும் பிரபல காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுவதற்குச் சர்க்கார் நடவடிக்கைகளே வசதி செய்து கொடுத்தன. அந்த வசதிகளைத் தலைவர்களும் ஊழியர்களும் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். ஆனால் எங்கேயும் கலகம், கலவரம் எதுவும் நிகழவில்லை. பொது மக்களின் உள்ளத்தின் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆயினும் அவர்கள் பெரிய பெரிய சமூகத் தலைவர்களும் பிரமுகர்களும் சிறைபுகும் அதிசயத்தைக் கண்டு திகைத்துப்போயிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகத்தை வேண்டாத வழிகளில் பிரயோகிக்கவில்லை.-இந்த நிலைமை காந்திஜிக்கு எல்லையற்ற உற்சாகம் அளித்ததில் வியப்பில்லை அல்லவா?
மேலும் மேலும் நாலா பக்கங்களிலிருந்தும் பலர் கைதியான செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. பண்டித நேரு கைதியானதற்கு மறுநாள் கல்கத்தாவில் தேசபந்துதாஸின் தர்மபத்தினி ஸ்ரீ வஸந்தி தேவியும் அவருடைய சகோதரி ஸ்ரீமதி ஊர்மிளா தேவியும் கைதியானார்கள்! இவ்விதம் இரண்டு பெண்மணிகள்!-அதிலும் எத்தகைய பெண்மணிகள்,-சிறைப்பட்ட செய்தி இந்தியா தேசத்தையே ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டது.
மகாத்மா சந்தோஷத்தினால் குதித்தார். ஆசிரமத்துப் பெண்மணிகளைப் பார்த்து "உங்களில் யார் யார் சர்க்கார் விருந்தாளிகளாகத் தயார்?" என்று கேட்டார். எல்லாரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். அவர்களில் சிலர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் சிறை அநுபவம் பெற்றவர்கள். அவர்களைப் பார்த்து மகாத்மா, "இந்தத் தடவை வங்காளத்துச் சகோதரிகள் உங்களை முந்திக் கொண்டு விட்டார்களே!" என்று பரிகாசம் செய்தார்.
பத்தாந்தேதி இரவு பத்து மணிக்குமேல் மகாத்மா படுத்துத் தூங்கிய பிறகு, "தந்தி! தந்தி!" என்ற குரல் கேட்டது. மகாத்மா விழித்து எழுந்தார். மற்றவர்களை முந்திக்கொண்டு அவரே வாசலில் போய்க் கையெழுத்துப் போட்டுத் தந்தியைப் பிரித்துப் படித்தார். எதிர்பார்த்தபடியே தந்தியில் மிக மிக முக்கியமான செய்தி இருந்தது.
தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் ஸஸ்மால், பத்மராஜ் அக்ரம்கான் ஆகியவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது. தேசபந்து தாஸ் அந்த மாதக் கடைசியில் ஆமாதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகாசபையில் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே; இது மிக முக்கியமான செய்தி அல்லவா? அந்தச் செய்தியைக் கேட்டு விட்டு ஆமதாபாத்திலிருந்து தலைவர்கள் வந்தார்கள். (காங்கிரஸை முன்னிட்டு அப்போது குஜராத் தலைவர்கள் அனைவரும் ஆமதா பாத்தில் தங்கியிருந்தார்கள்.) ஸ்ரீ வல்லபாய், ஸ்ரீ மாவ்லங்கர், தயால்ஜி, கல்யாண்ஜி முதலியவர்கள் வந்தார்கள். மேலே நடக்கக்கூடிய சம்பவங்களைப் பற்றியும் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியும் அவர்கள் மகாத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்றிரவு ஆசிரமத்தில் 'சிவராத்திரி' கொண்டாடப் பட்டது. மறுநாளும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் சிறை புகுந்த செய்திகள் வந்து கொண்டிருந்தன.
சென்னையிலிருந்து ராஜாஜி தாம் வேலூரில் 144-வது பிரிவை மீறியதாகத் தந்தி அனுப்பினார். "மிகவும் சந்தோஷம். உங்களுக்குப் பூரண தண்டனை கிடைக்குமாக!" என்று மகாத்மா பதில் தந்தி அடித்தார். அடுத்த சில நாளைக்குள் கல்கத்தாவில் இரண்டாயிரம் தொண்டர்கள் சிறைப்பட்டார்கள். டில்லியில் ஜனாப் ஆசப் அலி முதலியவர்கள் சிறை புகுந்தார்கள். பஞ்சாப்பில் மிச்சமிருந்த ஆகா ஸப்தார், ஸத்தியபால் முதலிய வர்களும் சிறைப்பட்டார்கள். தேசமெங்கும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம், இரண்டாயிரம், பதினாயிரம், இருபதினாயிரம், என்று போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலைமையைக் கண்டு வைஸ்ராய் லார்டு ரெடிங் திகைத்தார்; திணறினார். தம்முடைய திகைப்பையும் திணறலை யும் வெளியிட்டுச் சொன்னார். கல்கத்தாவில் டிசம்பர் 14-ஆம் தேதி லார்டு ரெடிங்குக்கு ஐரோப்பிய வர்த்தக சங்கத்தார் உபசாரம் அளித்தனர். அதற்குப் பதில் சொல்லும்போது லார்ட் ரெடிங் தமது திகைப்பைப் பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டார்:-
"சமூகத்தில் ஒரு பகுதியாரின் காரியங்கள் எனக்கு அர்த்தமாகவில்லை யென்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து இதைப்பற்றி யோசித்தும் எனக்கு அது விளங்கவில்லை. சர்க்காரைச் சண்டைக்கு இழுக்கும்படியாக, வேண்டுமென்று சிலர் சட்டங்களை மீறுகிறார்கள்; தங்களைக் கைது செய்யும்படி சர்க்காரைக் கட்டாயப் படுத்துகிறார்கள். இதில் அவர்களுக்கு என்ன லாபம் கிட்டப் போகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன். இன்னமும் எனக்குத் திகைப்பாக வும் குழப்பமாகவுமே இருக்கிறது!"
இவ்விதம் லார்ட் ரெடிங் பகிரங்கமாகச் சொன்னார். அவர் தமது ஆங்கிலப் பேச்சில் Puzzled and Perplexed என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இந்த வார்த்தைகள் ஒத்துழையாமை இயக்கத்தின் சரித்திரத்தில் மிகப் பிரபலமாயின. "மகாத்மாவின் இயக்கம் லார்ட் ரெடிங்கைத் திகைத்துத் திண்டாடிப் போகும்படிச் செய்தது" என்று ஆயிரக் கணக்கான மேடைகளில் காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் பெருமிதத்தோடு எடுத்துச் சொன்னார்கள்.
இப்படி லார்ட் ரெடிங் திகைத்துத் திணறி நின்ற வேளையில் பூஜை வேளையில் கரடியை விட்டு அடித்ததுபோன்ற ஒரு முயற்சி நடைபெற்றது. இந்தியாவின் அரசியலில் "மிதவாதிகள்" என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். கொஞ்ச காலமாக அவர்கள் இருந்த இடம் தெரியாமலிருந்தது. இப்போது அவர்கள் "நாங்களும் இருக்கிறோம்" என்று முன் வந்தார்கள். "நிலைமை மிஞ்சி விட்டது. இதை இப்படியே விட்டிருந்தால் வெள்ளம் தலைக்கு மேலே போய்விடும். உடனே ராஜிப் பேச்சுத் தொடங்கவேண்டும். நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம். இருதரப்பினரும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!" என்று கூறிக்கொண்டு மிதவாதப் பிரமுகர்கள் ராஜி செய்து வைப்பதற்கு முன் வந்தார்கள். இவ்விதம் பூஜைவேளையில் புகுந்த கரடியின் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
32. மாளவியா மத்தியஸ்தம்.
காந்தி மகாத்மா இந்தியாவின் அரசியல் தலைமை ஏற்றதிலிருந்து மிதவாதிகளின் மனதில் நிம்மதி யில்லாமற் போய்விட்டது. பெஸண்ட் அம்மையாரும் மிதவாதிகளுடன் சேர்ந்துகொண்டார். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் மிகப் பெரும் தவறான இயக்கம் என்று அவர்கள் கருதினார்கள்.
ஆரம்பத்தில் மிதவாதிகள் ஒத்துழையாமை இயக்கம் நாட்டில் செல்வாக்குப் பெறாமல் புசுபுசுத்துப் போய்விடும் என்று நினைத்தார்கள். மூன்று வகைப் பகிஷ்காரம் எதிர் பார்த்த அளவு வெற்றியடையாதது குறித்து ஓரளவு மகிழ்ச்சியுடன் அலட்சியமாய்ப் பேசினார்கள். ஆனால் 1921-ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த இயக்கம் பொது ஜனங்களிடையில் அடைந்து வந்த செல்வாக்கு மிதவாதிகளைத் திகைப்படையச் செய்தது. நாளுக்கு நாள் ஒத்துழையாமை இயக்கம் பலம் பெற்று வருவதை எழுத்துக்களும் பாமர ஜனங்களின் மனதில் கிளர்ச்சி எழுப்பி வந்ததையும் அவர்கள் நல்லதென்று நினைக்கவில்லை. ஆயினும், இதனாலெல்லாம் என்ன நடந்து
விடப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நவம்பர் கடைசியிலும் டிசம்பர் ஆரம்பத்திலும் நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் மிதவாதிகளைத் திக்கு முக்காடும் படி செய்துவிட்டன.
வேல்ஸ் இளவரசர் விஜயத்தைப் பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது மற்றொரு பெருந்தவறு என்று மிதவாதிகள் கருதினார்கள். அந்தப் பகிஷ்காரம் ஒருநாளும் காரியத்தில் நிறைவேறாது என்றும் சொல்லி வந்தார்கள். ஆனால் வேல்ஸ் இளவரசர்போன இடமெல்லாம் பொதுமக்கள் பூரண பகிஷ்காரத்தைக் கைக்கொண்டது மிதவாதிகளைக் கொஞ்சம் விழிப்படையச் செய்தது. "ஓகோ! ஜனங்களின் உணர்ச்சி இப்படி இருக்கிறதா? மகாத்மாவின் செல்வாக்கு இவ்வளவு பெருகியிருக்கிறதா!" என்று அதிசயித்தார்கள்.
பின்னர் அதிகார வர்க்கத்தார் கையாண்ட தீவிர அடக்குமுறைகள் மிதவாதிகளை வேறொரு வகைக் கலக்கத்துக்கு உள்ளாக்கின . அடக்குமுறைகளினால் மக்களின் எழுச்சியை அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தோன்றியது. மேலும் பண்டித மோதிலால் நேரு முதலிய பிரமுகர்கள் சிறைப்படுத்தப் படுவதைப் பார்த்துக்கொண்டு அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. பலர் உண்மையிலேயே வேதனை அடைந்தார்கள். வேறு சிலருக்கு "இப்போது நாம் இந்த அடக்கு முறைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா யிருந்துவிட்டோமானால் நாளைக்கு எப்படிப் பொதுமக்களின் முன்னால் நம்மடைய முகத்தைக் காட்டமுடியும்!" என்ற கவலை உண்டாயிற்று.
ஆகக்கூடி, மிதவாதிகள் தீவிரமாக யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த நிலைமையில் தாங்கள் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதினார்கள். ஆகவே, "நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம்" என்று முன்வந்தார்கள். "இரண்டு தரப்பிலும் சிற்சில பிசகுகள் நடந்திருக்கின்றன. போனதெல்லாம் போகட்டும். அவற்றை மறந்துவிடுவோம். எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து வட்டமேஜை மகாநாடு யடத்துவோம் ஒரு சமரசமான முடிவுக்கு வருவோம்!" என்றார்கள்.
அதாவது தேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மகா தியாகங்களினால் ஏற்பட்டிருந்த நிலைமையில், தாங்கள் அடியோடு இழந்து விட்டிருந்த செல்வாக்கை மீண்டும் ஒருவாறு நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று பார்த்தார்கள். மிதவாதப் பத்திரிகைகள் முதலில் எழுதத் தொடங்கின:- "இரண்டு தரப்பிலும் விட்டுக்கொடுத்து சமரசமாகப் போக வேண்டும். இல்லாவிட்டால், தேசம் குட்டிச்சுவராகப் போய் விடும்" என்று.
பிறகு மிதவாதச் சங்கங்கள் அதே கருத்துடைய தீர்மானங்கள் செய்தன. இந்திய சட்டசபையில் அங்கத்தினராயிருந்த மிதவாதக் கட்சியினர் சிலர் "காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் சமரசம் ஏற்படுவது மிக அவசியம்" என்று வற்புறுத்தி ஓர் அறிக்கை விட்டார்கள்.
ஆனால் இதெல்லாம் போதாது என்று மிதவாதிகள் கண்டார்கள். 'கழுவுக்கேற்ற கோமுட்டி' யாக யாராவது ஒருவரைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள். அவ்விதம் பண்டித மதனமோகன மாளவியாவைப் பிடித்தார்கள். பண்டித மாளவியா அச்சமயத்தில் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருந்தார். காந்திஜியிடத்தில் அவருக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவருடைய தேச பக்தி தீவிரமானது. அவர் மிதவாதக் கட்சியில் சேர்ந்தவர் அல்ல; காங்கிரஸிலேயே ஒட்டிக்கொண்டிருந்தவர். ஆனால் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. முக்கியமாக, கலாசாலைப் பகிஷ்காரத்தை அவர் ஆட்சேபித்தார். பல கோடி ரூபாய்கள் நன்கொடைகள் வசூல் செய்து பண்டித மாளவியா காசி சர்வகலாசாலையை ஏற்படுத்தியிருந்தார். மகாத்மாவே அந்தச் சர்வகலாசாலைக்குச் சர்க்காருடன் இருந்த தொடர்பை ரத்து செய்துவிட்டுப் பூரண தேசீய சர்வகலாசாலை ஆக்கிவிடவேண்டும் என்று சொன்னார். இதற்கப் பண்டித மாளவியா இணங்கவில்லை.
மற்ற மிதவாதத் தலைவர்களின் உள்ளங்களைக் காட்டிலும் மாளவியாவின் உள்ளம் சர்க்காரின் அடக்குமுறையினால் அதிகம் கலங்கிக் கொந்தளித்தது. ஆகையால் எப்படியாவது ஒரு சமரசம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு அதில் ரொம்ப சந்தோஷம் உண்டாகும். இதை அறிந்த மிதவாதிகள் பண்டித மாளவியாவைத் தங்களுடைய கருவியாக்கிக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.
ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் பம்பாய் நகரைச் சேர்ந்தவர். டாக்டர் பெஸண்ட் அம்மையின் சிஷ்யர். பண்டித ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஐக்ய மாகாணவாசி; அப்போதும் இப்போதும் மிதவாதி. (இன்றைக்கு அவர் ஸ்ரீ கோகலே ஆரம்பித்த இந்திய ஊழியர் சங்கத்தின் தலைவர்.) இவர்கள் இருவரும் பண்டித மாளவியாவைப் பார்த்துப் பேசினார்கள். மகாத்மாவுக்கும் சர்க்காருக்கும் சமரசம் உண்டு பண்ணிவைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
ஏற்கனவே இன்னொரு நண்பர் பண்டித மாளவியாவிடம் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். (மாளவியா பிறகு விடுத்த அறிக்கையில் 'ஒருநண்பர்' என்று குறிப்பிட்டருக்கிறார். இவ்விதம் அவர் குறிப்பிட்டிருப்பது அச்சமயம் வைஸ்ராய் நிர்வாக சபையில் அங்கத்தினராயிருந்த ஸர் தேஜ்பகதூர் சப்ரூவாக இருக்கலாம் என்பது சிலருடைய ஊகம். நேரு, ஸப்ரூ, மாளவியா மூவரும் அலகாபாத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் என்பது ஞாபகம் இருக்கவேண்டும்.)
வேல்ஸ் இளவரசர் காசி ஹிந்து சர்வகலாசாலைக்கு டிசம்பர்- 14 விஜயம் செய்தார். அதே சமயத்தில் லார்ட் ரெடிங்கும் வந்திருந்தார். லார்ட் ரெடிங்குடன் மாளவியா பேட்டி கண்டு பேசினார். அதன்பேரில் அவருக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் ராஜி செய்து வைக்கத் தாம் ஒரு முயற்சி செய்யவேண்டியதுதான் என்று தீர்மானித்தார். உடனே அலகபாத்துக்க வந்து சில நண்பர்களிடம் கலந்து பேசிவிட்டு மகாத்மாவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். அந்தப் பிரசித்திபெற்ற தந்தியின் விவரம் வருமாறு:--
அலகாபாத்
16-12-21
வருகிற 21-யன்று வெஸ்ராயைப் பேட்டி கண்டு வட்டமேஜை மகா நாடு கூட்டும்படி வற்புறுத்தப் போகிறோம். ஏழு பேர் அடங்கிய பிரதிநிதிக் கூட்டமாக வைஸ்ராயைப் பார்ப்போம். இதை முன்னிட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிலைமையை நேரில் உங்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் அங்கே வருகிறார்கள். சர்க்கார் வட்டமேஜை கூட்ட ஒப்புக்கொண்டு தலைவர்களையும் விடுதலை செய்ய இணங்கினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை வாபஸ் வாங்கவும் சட்ட மறுப்பை நிறுத்தி வைக்கவும் உங்கள் சார்பில் நான் வாக்குறுதி கொடுப்பதற்கு அநுமதிவேண்டும். 21-வரையில் கல்கத்தா விலாசம் நெம்பர் 31, பர்தோலா தெரு.
மாளவியா.
இந்தத் தந்தி மகாத்மாவைத் தூக்கி வாரிப் போட்டது. தேசமெங்கும் சட்ட மறுப்பு இயக்கம் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த ராஜிப் பேச்சு குறுக்கிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. லார்ட் ரெடிங்கின் அந்தரங்க சுத்தியில் பல காரணங்களினால் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ராஜிப் பேச்சும் வட்டமேஜை மகா நாடும் அச்சமயத்தில் வெறும் ஏமாற்றமாக முடியும் என்று அவர் கருதினார். கல்கத்தாவுக்கு வேல்ஸ் இளவரசர் 24- வருவதாக இருந்தது. கல்கத்தா நகரம் ஒன்றிலாவது இளவரசர் பகிஷ்காரம் இல்லாமலிருந்தால் அதிகார வர்க்கத்துக்கு மிகவும் திருப்தியாயிருக்கும். அந்த விஜயம் சரிவர முடிந்த பிறகு லார்ட் ரெடிங் வட்டமேஜை மகாநாட்டில் "ஒன்றும் செய்ய முடியாது" என்று கையை விரித்துவிடக்கூடும் அல்லவா? அப்படித்தான் நடக்கும் என்று மகாத்மாவின் அந்தராத்மா அறிவுறுத்தியது. ஏனெனில், ரெடிங் சர்க்கார் உண்மையிலேயே மனம் மாறி சமரசத்துக்கு வரவேண்டிய அளவுக்குத் தேசத்தில் இயக்கம் இன்னும் பலம் பெறவில்லை என்று மகாத்மா கருதினார். அப்படிச் சர்க்கார் இறங்கி வருவதற்கு மேலும் தீவிர இயக்கம் நடத்தியாகவேண்டும். பொதுமக்கள் அதில் ஏராளமாகப் பங்கு எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.
ஆகவே அப்போதிருந்த நிலைமையில் சமரசப் பேச்சுத் தொடங்குவதற்கு மகாத்மா சிறிதும் இஷ்டப்படவில்லை. ஆயினும் பண்டித மாளவியாவின் தந்திக்கு உடனே பதில்
அனுப்பாமல் ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் வரட்டும் என்று காத்திருந்தார்.
அவர்களும் வந்தார்கள். வந்து மகாத்மாவிடம் சமரஸ முயற்சியின் நோக்கம் என்னவென்பதைச் சொன்னார்கள். "நீங்கள் ஒரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறீர்கள்; சர்க்கார் இன்னொரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறார்கள். இரண்டு பக்கத்துப் பிடிவாதத்துக்குமிடையில் தேசம் குட்டிச்சுவராகப் போகிறது. அப்படி அடியோடு தேசம் குட்டிச்சுவராகாமல் தடுத்துக் காப்பாற்ற நாங்கள் இந்த ராஜி முயற்சி தொடங்கியிருக்கிறோம். அதற்காகக் கல்கத்தாவில் லார்ட் ரெடிங்கைப் பேட்டி காணப் போகிறோம். நீங்கள் உங்கள் பக்கத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதற்கு முன்வந்தால் லார்ட் ரெடிங்கும் விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவோம்" என்று அவர்கள் சொன்னார்கள்.
"லார்டு ரெடிங் விட்டுக்கொடுக்க முன் வருவார் என்பதற்கு உங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிகிறதா? அதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா?" என்று காந்திஜி கேட்டார். "ஆமாம்; இருக்கிறது. ஆனால் நீங்களும் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்றார்கள் சமரசத் தூதர்கள். "நான் எந்த விதத்திலே விட்டுக்கொடுக்கவேண்டும்?" என்று மகாத்மா காந்தி கேட்டார்.
"இப்போது தேசத்தில் நடக்கவேண்டும் சட்ட மறுப்பை நீங்கள் நிறுத்த வேண்டம். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்தவேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் செய்தால் சர்க்காரை அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்கச் செய்வோம். அதோடு அரசியல் பிரச்னையைத் தீர்த்து வைக்க வட்டமேஜை மகாநாட்டைக் கூட்டும்படியும் வற்புறுத்துவோம்" என்றார்கள்.
இதற்கு மகாத்மா சொன்னார்:-- "நீங்கள் சொல்லும் சமரச யோசனை அவ்வளவு நியாயமாகத் தோன்றவில்லையே? 'நீ அரிசி கொண்டுவா! நான் அவல் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்போம்' என்பதுபோல அல்லவா இருக்கிறது? சர்க்காரின் அடக்குமறைச் சட்டங்களினாலேதான் இப்போது நடக்கும் தனி நபர் சட்ட மறுப்பு நடந்து வருகிறது. 'தொண்டர் படை சேர்க்கக்கூடாது' 'பொதுக்
கூட்டம் நடத்தக்கூடாது' என்பது போன்ற சட்டங்களைச் சர்க்கார் பிரயோகிக்காவிட்டால், இப்போது நடக்கும் சட்ட மறுப்பும் நடைபெறாது. ஆகவே 'சட்ட மறுப்பை நிறுத்தினால் அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்குகிறோம்' என்பதில் அர்த்தமில்லை. ஒத்துழையாமை இயக்கமும் நான் பர்தோலியில் ஆரம்பிக்கப்போகும் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கமும் வேறு விஷயங்கள். பஞ்சாப்-கிலாபத் அநீதிகளை நிவர்த்தித்துச் சுயராஜ்யம் தரவும் அரசாங்கத்தார் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த இயக்கங்களை நிறுத்தமுடியும். இல்லாவிட்டால் நடத்தியே தீரவேண்டும். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்த முடியாது. வேல்ஸ் இளவரசர் சொந்த முறையில் இங்கே வரவில்லை. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்துக்குப் பலம் கட்டுவதற்காகவே வருகிறார். ஆகவே தேசத்தின் கோரிக்கைகள் நிறைவேறினால் அன்றி வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை நிறுத்தமுடியாது!"
இவ்விதம் மகாத்மா சொன்னதைக் கேட்ட ஜம்னாதாஸூம் குன்ஸ்ரூவும் மேலும் தங்களுடைய வாத சக்தியையெல்லாம் உபயோகப்படுத்தினார்கள். கடைசியில் "நீங்கள் சமாதானப்பிரியர் என்று நினைத்தோமே? அதற்கு மாறாகப் பேசுகிறீர்களே? சமாதானப் பேச்சுப் பேசுவதினால் என்ன கெட்டுப் போய்விடும்?" என்றார்கள்.
"ஒன்றும் கெட்டுப்போகாது. நியாயமான சமாதானத்துக்கு நான் எப்போதும் தயார்" என்றார் மகாத்மா. "அப்படியானால் வட்டமேஜை மகாநாடு கூடுவதில் உங்களுக்கு ஆட்சேபம் என்ன?" என்று கேட்டார்கள். "ஒரு ஆட்சேபமும் இல்லை" என்று சொன்னார் மகாத்மா.
"கூடினால் நீங்களும் அதில் கலந்து கொள்வீர்கள் அல்லவா?"
"தனிப்பட்ட முறையில் பே ஷாகக் கலந்து கொள்வேன். ஒரு நிபந்தனையும் போடாமல் வட்டமேஜை மகாநாட்டுக்கு வர நான் தயார். அது போலவே என்னிடமும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது" என்றார் மகாத்மா.
இந்தப் பதில் ஜம்னாதாஸூக்கும் குன்ஸ்ரூவுக்கும் மகிழ்ச்சி அளித்தது. "மகாத்மா வட்ட மேஜை மகாநாட்டுக்கு வரச் சம்மதித்து விட்டார். வேறு என்ன வேண்டும்?" என்ற மனத் திருப்தியுடன் அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடனே காந்தி மகாத்மா பண்டித மாளவியாவின் கல்கத்தா விலாசத்துக்கு ஒரு தந்தி அடித்தார். அது வருமாறு:-
சபர்மதி
19-12-21
ஜம்னாதாஸையும் குன்ஸ்ரூவையும் பார்த்துப் பேசினேன். தயவு செய்து அடக்கு முறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அரசாங்கத்தார் உண்மையிலேயே மன மாறுதல் பெற்று பஞ்சாப், கிலாபத், சுயராஜ்ய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கவலைகொண்டால் அல்லாமல் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் ஒன்றும் விளையாது.
காந்தி.
பண்டித மதன்மோகன் மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு; பக்தியும் உண்டு. மாளவியா தேச விடுதலைக்கு விரோதமாகப் பிரிட்டிஷாரோடு சேர்ந்து விடுவார் என்ற எண்ணம் மகாத்மாவுக்கு அணுவளவும் இல்லை. ஆனால் தேசமெங்கும் பெரிய பெரிய தலைவர்கள் - நேரு, தாஸ் போன்றவர்கள் - சிறை புகுந்ததினால் மாளவியாவின் மனம் கனிந்திருந்தது என்பது மகாத்மாவுக்குத் தெரிந்திருந்தது. "ஐயோ! இப்பேர்ப்பட்ட பிரமுகர்கள் எல்லாரும் சிறைக்குப் போகிறார்களே?" என்ற கவலையினால், மாளவியாஜி இந்த மத்தியஸ்த முயற்சியில் தலையிட்டிருக்கிறார் என்று காந்தி மகாத்மா நம்பினார்.
ஆனால் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் பெருமையே நேரு, தாஸ் போன்றவர்கள் சிறைக்குச் சென்றதுதான். அதனாலேயே சத்தியாக்கிரஹ இயக்கம் தேசத்தில் அளவிலாத பலம் பெற்று வந்தது. சிறைக்குச் சென்ற தலைவர்களும் தங்களுடைய தியாகத்தைக் குறித்து எல்லையற்ற பெருமிதத்தோடுதான் இருப்பார்கள். சிறைக் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் சலித்துவிட மாட்டார்கள். புடம்போட்ட தங்கத்தைப்
போல் சிறைக் கஷ்டங்களினால் அவர்களுடைய ஆத்ம சக்தி மேலும் பிரகாசத்தை அடையும் - இத்தகைய கொள்கைகளில் நிலைபெற்ற காந்தி மகான் பண்டித மாளவியாவின் மனக்கவலையைத் தீர்க்கும் பொருட்டே "அடக்கு முறையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம்" என்று தந்தி கொடுத்தார்.
மகாத்மா காந்தி மாளவியாவுக்குத் தந்தி அடித்த அதே 19-ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு இன்னொரு தந்தி வந்தது. அது சிறைக்குள்ளிருந்த தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் இருவரும் கையொப்பமிட்டு வந்தது. அந்தத் தந்தியில் கண்ட விஷயம் மகாத்மாவின் மனதை உண்மையாகவே திடுக்கிடச் செய்து விட்டது. தாஸ்-ஆஸாத் தந்தியில் கண்ட விஷயம் என்ன வென்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
33. தாஸ் - ஆஸாத் தலையீடு
இந்தியாவின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான வருஷம் 1921-ஆம் வருஷம். அந்த வருஷத்திலேதான் இந்தியா தேசத்தில் இமயமலை முதல் கன்னியா குமரி வரையில் மக்கள் விழித்தெழுந்தனர். அன்னிய ஆட்சியை எதிர்த்து நிற்கத் துணிந்தனர். அந்தத் துணிச்சலை மக்களுக்கு உண்டாக்கிய ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தியவர் மகாத்மா காந்தி. அந்த வருஷத்தில் மகாத்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய மக்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவராயிருந்த தலைவர் யார் என்று கேட்டால், வங்காளத்தின் முடிசூடா மன்னராக அப்போது விளங்கிய தேசபந்து சித்தரஞ்சனதாஸ் அவர்கள்தான். அவர் நெடுநாளைய தேசபக்தர். ஸ்ரீ அரவிந்த கோஷ் மீது புரட்சி இயக்க வழக்கு நடந்த போது அவர் பக்கம் ஆஜராகி வாதித்துப் புகழ் பெற்றவர். வருஷத்திற்கு ஆறு லட்சம் ரூபாய் வக்கீல் தொழிலில் அவருக்கு வருமானம் வந்தது என்பது தேசத்தில் பிரசித்தமாயிருந்தது. அப்படிப் பட்ட வருமானமுள்ள தொழிலை அவர் ஒத்துழையாமை இயக்கங் காரணமாகக் கைவிட்டார் என்பது இந்திய மக்களை ஆச்சரியக் கடலில் மூழ்க அடித்து, அவரிடம் எல்லையற்ற பக்தியையும் மதிப்பையும் அளித்திருந்தது. அத்தகைய மாபெருந் தியாகி அந்த வருஷத்தில் ஆமதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு 1921-ஆம் வருஷம் முழுவதும் அவர் மகாத்மாவைப் பரிபூரணமாக ஆதரித்து நின்றார். இதனால் வங்காளம் ஒத்துழையாமை இயக்கத்தில் முதன்மை ஸ்தானம் வகித்தது. நெடுகிலும் அவருக்குப் பக்க பலமாக நின்று வேலை செய்த முஸ்லிம் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத். தேசபந்து தாஸ் வங்காள மாகாண காங்கிரஸுக்கும் மௌலானா ஆஸாத் வங்காள கிலாபத் கமிட்டிக்கும் தலைவர்களா யிருந்தார்கள்.
வேல்ஸ் இளவரசர் டிசம்பர் கடைசி வாரத்தில் கல்கத்தா வருவதாகத் தேதி குறிப்பிடப் பட்டிருந்தது. இளவரசர் சென்றிருந்த மற்ற இந்திய நகரங்களில் போலவே கல்கத்தாவிலும் மாபெரும் ஹர்த்தால் நடத்தும்படி காங்கிரஸ் – கிலாபத் ஸ்தாபனங்கள் ஏற்பாடுகள் செய்துவந்தன. இந்த நிலையில் வங்காள மாகாண சர்க்கார் தேசீயத் தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் என்று தெரியப்படுத்தினார்கள்.
இதற்காக 1906-ஆம் வருஸத்தில் பலாத்காரப் புரட்சி ஸ்தாபனங்களைப் கலைப்பதற்காகச் செய்யப்பட்ட 'கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட்' என்னும் சட்டத்தை உபயோகப் படுத்தினார்கள். இளவரசர் விஜயம் செய்யும்போது ஹர்த்தால்
நடப்பதைத் தடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.
அந்த நோக்கத்தை அறிந்து, மேற்படி அநியாயச் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யக் காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு நகரத்திலும் பிரபல காங்கிரஸ் தலைவர்கள் தங்களைத் தொண்டர் படையில் பதிவு செய்து கொண்டு அதை விளம்பரப் படுத்தினார்கள். பண்டித நேரு முதலியவர்கள் ஐக்கிய மாகாணத்தில் செய்ததுபோல் கல்கத்தாவில் தேசபந்துதாஸ், மௌலானா ஆஸாத் முதலியவர்கள் சட்டத்தை மீறினார்கள். அவர்கள் உடனே கைது செய்யப்பட்டார்கள். வங்காளிகள் உணர்ச்சி மிக்கவர்கள்; தேசீயப் போரில் எப்போதுமே முன்னணியில் நின்றவர்கள். தேசபந்து தாஸும் அவருடைய மனைவியும் சகோதரியும் கைது செய்யப்பட்ட போது வங்காளிகளின் மனோநிலை எப்படியிருக்கும் என்று கேட்கவேண்டுமா? ஒரே கொந்தளிப்புத்தான். ஆகவே நாட்டின் மற்ற எந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமான தேசத் தொண்டர்கள் டிசம்பரில் சிறைப்பட்டார்கள்.
வருஷந்தோறும் டிசம்பர் கடைசியில் கவர்னர் ஜெனரல் பதவி வகிப்பவர் கல்கத்தாவுக்குச் சென்று அங்கு வசிக்கும் ஏராளமான ஐரோப்பியர்களின் மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி லார்டு ரெடிங் கல்கத்தா சென்றார். வேல்ஸ் இளவரசர் விஜயமும் அதே சமயத்தில் சேர்ந்து கொண்டது. கவர்னர் - ஜெனரல் லார்ட் ரெடிங்கும், வங்காள கவர்னர் லார்ட் ரொனால்ட்ஷேயும் காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசினார்கள். அந்தப் பேச்சில் ஒன்றில் தான் லார்ட் ரெடிங் "எனக்கு ஒன்றும் புரியவில்லை; என் மனம் குழம்புகிறது" என்றார். மொத்தத்தில் அவர்களுடைய பேச்சுக்களில் கவலை தொனித்தது. கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நடைபெறுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற ஆவலும் வெளிப்பட்டது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலேதான் பண்டிதமாளவியா ராஜி பேசுவதற்காகக் கல்கத்தா சென்றார். அங்கே மூன்று முறை லார்ட் ரெடிங்கைப் பேட்டிகண்டு பேசினார். அந்தப் பேச்சுகளிலிருந்து ராஜிசெய்து வைக்க இடம் இருக்கிறது என்று கருதினார். மகாத்மாவிடமிருந்து பதில் இன்னும் வரவில்லை. பதில் வரும் வரையில் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. சிறைக்குள்ளேயிருந்த தேச பந்து தாஸ்- மௌலானா ஆஸாத் இவர்களைப் பார்த்துப் பேசுவதற்குச் சென்றார். ரெடிங்குடன் தாம் நடத்திய சம்பாஷணையைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தார். மாளவியாவின் மத்தியஸ்தப் பேச்சுக்கு அவர்கள் செவி கொடுத்தார்கள். ஒருவாறு அவருடைய கட்சியை ஒப்புக்கொண்டார்கள். "அப்படியானால், உங்கள் அபிப்பிராயத்தை மகாத்மாவுக்குத் தெரிவியுங்கள்" என்றார் மாளவியா. "சரி" என்றார்கள் தாஸும், ஆஸாதும். மகாத்மாவுக்கு ஒரு தந்திச் செய்தி எழுதினார்கள். அது வங்காள கவர்மெண்டின் அநுமதியடன் அவசர 'லைன்கிளியர்' தந்தியாக மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்டது.
அந்த அவசரத் தந்தியின் வாசகம் பின் வருமாறு:--
கல்கத்தா
19-12-29
பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியானால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம் என்று நாங்கள் சிபார்சு செய்கிறோம்:--
(1) காங்கிரஸ் எழுப்பியிருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் பற்றி ஆலோசிக்கச் சர்க்கார் மகாநாடு கூட்டவேண்டும்.
(2) சமீபத்தில் வெளியான சர்க்கார் அறிக்கையையும் போலீஸ் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.
(3) புதிய சட்டத்தின் கீழ்ச் சிறைப்பட்ட எல்லாக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
கல்கத்தா பிரஸிடென்ஸி ஜெயில் சூபரிண்டெண்டு மேற்பார்வைக்கு உடனே பதில் அனுப்புங்கள்.
சி. ஆர். தாஸ்
ஏ.கே. ஆஸாத்
மேற்கண்ட தந்தி மகாத்மாவைத் திடுக்கிடச் செய்து விட்டது.
மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு. தாஸ் - ஆஸாத் இவர்களிடம் மிக்க அபிமானம் உண்டு. ஆயினும் அவர்கள் மூவரும் லார்ட் ரெடிங்கின் மாய வார்த்தையில் ஏமாந்துபோய் விட்டார்கள் என்றே காந்திஜி கருதினார். காந்தி மகானுக்குச் சத்தியமே தெய்வம். அஹிம்சையே மதம். நேர்மையே உயிர். ஆயினும் அவர் அரசியலில் மகா நிபுணத்துவம் வாய்ந்தவர். சூழ்ச்சி செய்து அவரை ஏமாற்றி விட முடியாது.
தாஸ் - ஆஸாத் தந்தியில் உள்ள குறை என்ன என்பது மகாத்மாவுக்கு அதைப் படித்த உடனே தெரிந்துவிட்டது. ரெடிங் - ரோனால்ட்ஷே கூட்டத்துக்குத் திடீரென்று காங்கிரஸ் தலைவர்களிடம் அன்பு பிறந்துவிட வில்லை. வேல்ஸ் இளவரசர் பகிஷகாரத்தினால் அவர்கள் பெரிதும் சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தனர். அதிகார வர்க்கத்தின் மதிப்பே அதனால் போய்விடுவதாயிருந்தது. கல்கத்தா ஒரு நகரத்திலாவது பகிஷ்காரம் தடுக்கப்பட்டால் அவர்களுடைய மதிப்பு ஓரளவு காப்பாற்றப்படும்.
இதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அந்தச் சூழ்ச்சியில் மாளவியா விழுந்தது மட்டுமல்ல; தாஸையும், ஆஸாதையும்கூட விழப்பண்ணிவிட்டார். வேல்ஸ் இளவரசர் விஜயத்தை முன்னிட்டே தொண்டர் படைகளைச் சட்டவிரோத ஸ்தாபனங்கள் என்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவை மீறிச் சட்ட மறுப்புச் செய்து காங்கிரஸ் தலைவர்கள் சிறை புகுந்தனர்.
பகிஷ்காரத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் வாபஸ் வாங்குவதாயிருந்தால், சர்க்கார் தொண்டர் படைகளை ஆட்சேபிக்க வேண்டிய அவசியமே இல்லை. தடை உத்தரவை வாபஸ் வாங்குவதில் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இளவரசர் பகிஷ்காரத்தைத் தடுப்பது அவர்களுடைய முக்கிய நோக்கம். காங்கிரஸே பகிஷ்காரத்தை எடுத்துவிடும் பட்சத்தில் சர்க்காரின் நோக்கம் நிறைவேறி விடுகிறது.
தடை உத்தரவுக்கு அவசியம் என்ன?
ஆகவே மாளவியாவின் ராஜியை ஒப்புக்கொண்டால் காங்கிரஸ்தான் விட்டுக் கொடுத்ததாகுமே தவிர, சர்க்கார் எந்த விதத்திலும் விட்டுக் கொடுத்தது ஆகாது.
வட்டமேஜை மகாநாடு கூட்டுவதாகச் சர்க்கார் ஒப்புக் கொள்வதைப் பற்றி எந்தவித நம்பிக்கையும் கொள்ளமுடிய வில்லை. வெறும் ஏமாற்றமாகவே முடியலாம். சர்க்கார் கூட்டும் வட்டமேஜையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரையும் மிதவாதிகள் - அதிகார வர்க்க பக்தர்கள் பலரையும் அழைக்க லாம். அழைத்து "சட்ட மறுப்பைக் காங்கிரஸ் கைவிட வேண்டும்; சர்க்கார் கொடுக்கும் சீர்திருத்தங்களைப் பெற்றுத் திருப்பியடைய வேண்டும்" என்று ஒரு அத்தியாயம் உபதேசம் செய்து அனுப்பலாம். இதனால் தேசம் அடையும் நன்மை என்ன? இத்தனை நாளும் தேச மக்கள் செய்த தியாகமெல்லாம் வீண் போனது ஆகாதா?
எனவே, தாஸ் - ஆஸாத் யோசனையை மகாத்மாவினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆயினும் அவர்கள் பேரில் மகாத்மாவுக்குப் பெருமதிப்பு இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றிக்கு அவர்கள் பெரிதும் காரணமானவர்கள். எனவே, "உங்கள் யோசனையை நிராகரிக்கிறேன்" என்று பதில் அனுப்பிவிட வில்லை. அவர்களுடைய நிபந்தனைகளோடு இன்னும் சில நிபந்தனைகளையும் சேர்க்க வேண்டும் என்று மகாத்மா காந்தி பதில் அனுப்பினார். அந்தப் பதில் தந்தியின் வாசகம் பின்வருமாறு:--
சபர்மதி
19-12-21
உங்கள் தந்தி கிடைத்தது. வட்டமேஜை மகாநாட்டின் தேதியும், மகாநாட்டுக்கு யார் யார் அழைக்கப்படுவார்கள் என்பதும் முதலிலேயே சொல்லப்பட வேண்டும். கராச்சி கைதிகள் உள்பட, 'பத்வா' கைதிகளையும் சர்க்கார் விடுதலை செய்யவேண்டும். உங்களுடைய நிபந்தனைகளோடு மேற்கண்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம்.
எம். கே. காந்தி
இந்தத் தந்தியில் மகாத்மா காந்தியின் அரசியல் திறத்தோடு அவருடைய சிநேக தர்மத்தின் சிறப்பையும் நேயர்கள் காணலாம்.
மகாநாடு கூட்டும் தேதி, மகாநாட்டுக்கு யார் அழைக்கப்படுவார்கள் என்பதை லார்ட் ரெடிங் சொல்ல வேண்டி ஏற்பட்டால் அவருடைய நோக்கம் உண்மையானதுதானா என்பது தெரிந்துவிடும். பின்னால் சால்ஜாப்புகள் சொல்லி ஏமாற்ற முடியாது.
அடுத்தபடியாக, உண்மையில் காங்கிரஸின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் லார்ட் ரெடிங்குக்கு இருக்குமானால், இப்போது கைதியானவர்களை மட்டும் விடுதலை செய்வது போதாது. ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு சிறைப் பட்டவர்கள் எல்லாரையும் விடுதலை செய்யவேண்டும். முக்கியமாக, அலி சகோதரர்களை விடுதலைசெய்ய வேண்டும், என்று மகாத்மா வற்புறுத்தினார்.
'பத்வா கைதிகள்' என்பவர்கள் பிரிட்டிஷ் சைன்யத்திலிருந்து உண்மையான முஸ்லிம்கள் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும், சைன்ய சேவை செய்வது மதத்துரோகம் என்றும் அறிக்கை பிறப்பித்த முஸ்லிம் உலமாக்கள் மௌல்விகள் முதலியோர் இதே விதமான குற்றத்துக்காவே அலி சகோதரர்கள் முதலிய கராச்சி கைதிகளும் தண்டிக்கப் ட்டார்கள். அலி சகோதரர் முதலியோரை விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலையை மட்டும் கோருவதை மகாத்மா விரும்பவில்லை. அது சரியான அரசிய் முறையும் அல்ல, சிநேக தர்மத்துக்கு உகந்ததுமல்ல என்று கருதினார். லார்ட் ரெடிங்குக்கு உண்மையில் காங்கிரஸுடன் ராஜி செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் அலி சகோதரர்களை விடுதலை செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்குச் சரியான பதில் வரவில்லை. சர்க்கார் சார்பில் லார்ட் ரெடிங்கும் சொல்லவில்லை; மத்தியஸ்தம் செய்ய முயன்றவர்களும் சொல்லவில்லை. ஆனால் எல்லாருக்கும் மகாத்மாவின் பேரில் கோபம் வந்தது! தேசபந்துவுக்குக்கூடப் பிரமாத கோபம் வந்தது! "நாம் சொன்னதை மகாத்மா காந்தி உடனே அப்படியே ஒத்துக்கொள்ள வில்லையே?" என்று ஆத்திரப்பட்டார். அப்பேர்ப்பட்ட மகா தியாகியான தேசத் தலைவருக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் ஏற்பட்டன என்று யாரால் சொல்லமுடியும்?
ஸ்ரீ தாஸ் சிறைக்குள் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெளியிலே அவருடைய ஸ்தானத்தை வகித்து வந்த ஸ்ரீ சியாமசுந்தர சக்கரவர்த்தி என்னும் வங்கத்தலைவர் ஸ்ரீ தாஸைப் பேட்டி காணச் சென்றார். அவரிடம் தேசபந்து தம் மனோ நிலையை வெளியிட்டார். தேசபந்துதாஸ் அச்சமயம் வங்க நாட்டின் முடிசூடா மன்னராக விளங்கியவர். அவருடைய கருத்தை ஆதரிப்பது தம் கடமை யென்று ஸ்ரீ
சியாமசுந்தர சக்கரவர்த்தி கருதினார். ஆகையால் பின்வரும் தந்தியை அவர் மகாத்மாவுக்குக் கொடுத்தார்.
கல்கத்தா
20-1-21
வங்காளத்தின் அபிப்பிராயம் வட்ட மேஜை மகாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஜனங்களின் சார்பாகப் போரை நிறுத்தி வைக்கிறோம் என்று உறுதி கொடுக்க வேண்டியது நியாயமேயாகும். நீங்கள் கோரும் கைதிகளின் விடுதலையை மகாநாடு கூடுவதற்கு முன்னால் எதிர்பார்க்கலாம். உடனே பதில் தெரிவிக்கவும்.
சியாமசுந்தர்.
இதே மாதிரி இதே தேதியில் பண்டித மாளவியாவும் மகாத்மாவுக்குத் தந்தி கொடுத்தார். "வட்ட மேஜை மகாநாடு பற்றிய விவரங்கள் முடிவானால் ஹர்த்தாலை வாபஸ் பெறவும் ஒத்துழையாமை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும் ஒப்புக் கொள்ளவேண்டும்; ஒப்புக்கொள்வதாக உங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டார்.
இதற்குள் கல்கத்தா வந்து சேர்ந்த ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும், "மாளவியாவுக்கு நீங்கள் கொடுத்த தந்தியைப் பார்த்து எங்கள் இருதயம் உடைந்து போய்விட்டது! உங்களிடம் சம்பாஷித்ததிலிருந்து ராஜிப் பேச்சுக்கு நீங்கள் தயார் என்ற எண்ணத்துடன் திரும்பி வந்தோம். தயவு செய்து யோசியுங்கள்" என்று தந்தி அடித்தார்கள்.
மேற்கூறிய எல்லாத் தந்திகளுக்கும் ஏறக்குறைய ஒரே விதமாகவே மகாத்மா காந்தி பதில் அனுப்பினார்.
"வட்டமேஜை மகாநாட்டுக்கு நான் நிபந்தனையின்றி வரத் தயார். ஆனால் என்னிடத்திலும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது. சர்க்காரின் அதிகாரத் துஷ்பிரயோகம் நின்றால் இப்போது நடக்கும் தனிப்பட்ட சட்டமறுப்பு தானே நின்று போகும். வட்டமேஜை மகாநாட்டின் மூலம் காங்கிரஸ் கோரிக்கைகள் நிறைவேறினால் ஒத்துழையாமை இயக்கமும் நின்றுவிடும். மற்றப்படி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக இப்போது ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிக் கேட்பது நியாயமும் இல்லை."
மகாத்மாவின் இந்தப் பிடிவாதம் மிதவாதிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. லார்ட் ரெடிங்குக்கு அது பெரும் ஏமாற்றமாகவே இருந்திருக்க வேண்டும். ஏன்? தேசபந்துதாஸ் முதலிய சில காங்கிரஸ் தலைவர்கள் கூட மகாத்மாவின் மீது மனஸ்தாபப் பட்டார்கள். "நல்ல சந்தர்ப்பத்தைக் காந்திஜி கைநழுவ விட்டு விட்டார்" என்று சொன்னார்கள். இதிலிருந்து பிற்காலத்தில் பல அரசியல் விளைவுகள் முளைத்து எழுந்தன.
-----------------------------------------------------------
34. சர்வாதிகாரி காந்தி
பண்டித மாளவியாவும் மற்றும் சில மிதவாதப் பிரமுகர்களும் ஒரு கோஷ்டியாகச் சென்று டிசம்பர் 21 லார்டுரெடிங்கைப் பேட்டி கண்டார்கள். லார்டு ரெடிங் அவர்களுடைய ராஜி மனப்பான்மையை மிகவும் பாராட்டினார். இந்த மாதிரியே
மற்ற இந்தியத் தலைவர்களும் நடந்துகொண்டால் ஒரு தொல்லையும் இல்லை யென்றும், தம்முடைய சர்க்காரும் ராஜிக்குத் தயாராயிருப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் அந்த மிஸ்டர் காந்தி இவ்வளவு வெறும் பிடிவாதமாக இருக்கும்போது தாம் என்ன செய்யமுடியும் என்று சொல்லி அகலக்கையை விரித்தார்.
டிசம்பர் 24- வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு விஜயம் செய்தபோது அந்த மாபெரும் நகரில் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. அன்று கசாப்புக் கடைக்காரர்கள் கூடக்
கடையை மூடி வேலை நிறுத்தம் செய்தார்கள். மிதவாதிகளின் ராஜிப் சே்சுக்கு லார்ட் ரெடிங் செவி சாய்ப்பது போல் நடித்ததின் நோக்கம் டிசம்பர் 24- கல்கத்தாவில் வேலை நிறுத்தம் நடைபெறக்கூடாது என்பது தான். அந்தச் சூழ்ச்சி பலிக்காமற் போயிற்று. எனவே அதற்குப் பிறகு லார்ட் ரெடிங்கும் ராஜிப் பேச்சுகளில் எவ்விதமான சிரத்தையும் காட்டவில்லை.
ஆனால், பாவம், பண்டித மாளவியாஜியின் சபலம் இன்னும் அவரை விட்டபாடில்லை. ஆமதாபாத் காங்கிரஸுக்குச் சென்று அங்கேயும் ராஜி யோசனை மூட்டையை அவிழ்த்தார். பிற்பாடு 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தின் மத்தியில் பம்பாயில் மித
வாதிகள் ராஜிப்பேச்சு மகாநாட்டைக் கூட்டினார்கள். இவற்றைக் குறித்துப் பின்னால் பார்க்கலாம்.
ராஜி முயற்சிகள் என்னும் லார்ட் ரெடிங்கின் இராஜ தந்திர சூழ்ச்சிப் படலம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஆமதாபாத் காங்கிரஸுக்கு மகத்தான ஏற்பாடுகள் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன. மேற்கூறிய ராஜி முயற்சிகளைப் பற்றித் தேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலோருக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுடைய கவனமெல்லாம் ஆமதாபாத்தில் கூடும்
காங்கிரஸ் மகாசபையில் என்ன முடிவுகள் ஆகப் போகின்றனவோ என்பதிலேயே சென்றிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆமதாபாத்தை நோக்கிப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரயிலேறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ராஜி முயற்சிகளைப் பற்றிச் சில செய்திகள் அரைகுறையாகக் கிடைத்தன. ஆனால் பிரதிநிதிகள் யாருமே ராஜிப் பேச்சை அச்சமயத்தில் விரும்பவில்லை. வங்காளத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் கூட விரும்பவில்லை.
இதை, வங்காளத்தின் பெயரால் மகாத்மாவுக்குத் தந்தி அனுப்பிய ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தியே பின்னால் ஒப்புக் கொண்டார். 1923-ஆம் வருஷத்தில் மேற்படி கல்கத்தா ராஜி முயற்சி பற்றி ஒரு விவாதம் பத்திரிகைகளில் எழுந்தது. மகாத்மா காட்டிய பிடிவாதத்தினாலேயே காரியம் கெட்டுப் போய்விட்டது என்றும், இல்லாவிடில் அப்போதே வெற்றி கிட்டியிருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். பத்திரிகைகளில் இதைப்பற்றிக் காரசாரமாக விவாதம் நடந்தபோது ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி 1923 ஜூன் 19-ஆம் தேதி வெளியான தமது "ஸர்வெண்ட்" பத்திரிகையில் "என்னுடைய பலவீனத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்ற தலைப்புக் கொடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் 1921-ஆம் வருஷக் கடைசியில் நடந்த சதுரங்கப் போராட்டத்தைப் பற்றி விவரமாக எழுதி, அதில் தம்முடைய பங்கு என்ன என்பதையும் சொல்லியிருந்தார். இந்தச் சதுரங்கத்தின் முக்கிய ஆட்டக்காரர்கள் லார்டு ரெடிங், காந்திஜி, பண்டித மாளவியா, தேசபந்து தாஸ் ஆகியவர்கள் அல்லவா?
ஸ்ரீ சியாம் சுந்தர் சக்கரவர்த்தி இது சம்பந்தமாக எழுதியதாவது:-
"நான் பண்டித மாளவியாவுடன் ராஜதானி சிறைச் சாலையின் வாசல் வரையில் சென்றேன். மாளவியா உள்ளே போனார். அங்கே தேச பந்து தாஸுடன் மாளவியாவும் தாஸின் குடும்பத்தார் சிலரும் இருந்தார்கள். மகாத்மாவின் தந்தியைக் குறித்துத் தாஸ் மிகவும் கலக்கமடைந்திருந்தார். எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தாலன்றி ராஜி செய்து கொள்வது உசிதமல்ல வென்று என் அபிப்பிராயத்தைத்
தெரிவித்தேன். மாளவியா மறுபடியும் போய் லார்ட் ரெடிங்கைப் பார்த்துவிட்டு வந்தார். மகாத்மாவின் தந்தி லார்ட் ரெடிங்குக்குக் கோபமூட்டி யிருப்பதாகவும் 'பத்வா' கைதிகள் விஷயமான பேச்சை எடுக்கவே லார்ட் ரெடிங் விடவில்லை யென்றும் மாளவியா தெரிவித்தார். மாளவியாவும் தாஸும் எவ்வளவு மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்த நான் என்னுடைய பொறுப்பில் மகாத்மா காந்திக்கு ஒரு தந்திச் செய்தி அனுப்புவதாகச் சொன்னேன்! தேசபந்து தாஸ் இச்சமயம் ஒரு ராஜி செய்து கொள்வதை முக்கியமாய்க் கருதுவதால் மகாத்மா புனராலோசனை செய்ய வேண்டும் என்று தந்தி அடிப்பதாய்ச் சொன்னேன். அதற்கு ஸ்ரீ தாஸ் 'என் பெயரைச் சொல்ல வேண்டாம். வங்காளத்தின் அபிப்பிராயம் இது என்பதாகத் தந்தி அடியுங்கள்' என்றார். இது வங்காளத்தின் அபிப்பிராயம் அல்ல வென்றும் உண்மை
எனக்குத் தெரிந்துதானிருந்தது. ஏனெனில் ஆமதாபாத் காங்கிரஸுக்குப் போகும் வழியில் கல்கத்தாவுக்கு வந்திருந்த வங்க மாகாண காங்கிரஸ் பிரதிநிதிகள் என்னைப் பார்த்துப் பேசினார்கள். இந்த நிலைமையில் ராஜிப் பேச்சை அவர்கள் விரும்பவில்லை. அரசியல் கைதிகளில் சிலரைச் சிறையில் விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலைக் கோருவதையும் அவர்கள் விரும்ப வில்லை. இது நன்றாகத் தெரிந்திருந்தும் தேச பந்து தாஸின் வார்த்தையைத் தட்ட முடியாமல் நான் காந்திஜிக்குத் தந்தியடித்தேன். நான் என்ன தந்தி கொடுத்தாலும் காந்திஜி எது சரியோ அதைத்தான் செய்வார் என்ற நம்பிக்கை என் மனதிற்குள் இருந்தது. ......"
இவ்விதம் ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தி 1923-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுதினார். மகாத்மாவிடம் ஸ்ரீ சக்கரவர்த்தியின் நம்பிக்கை வீணாகவில்லை. அவருடைய தந்திக்குப் பிறகும் மகாத்மா தம் கொள்கையிலிருந்து நகரவில்லை.
வங்காளப் பிரதிநிதிகளைப் பற்றி ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி கூறியிருப்பது மற்ற மாகாணங்களின் பிரதிநிதிகளின் விஷயத்திலும் உண்மையாக இருந்தது. யாரும் அவசரப்பட்டு ராஜி செய்து கொள்ள விரும்பவில்லை. அதோடு காங்கிரஸ் பிரதிநிதிகள் மிகப் பெரும்பாலோர் மகாத்மாவின் தலைமையில் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர் காட்டும் வழியைப் பின்பற்றவும் அவர் சொல்லும் திட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் ஒப்புக் கொள்ளவும் நாடெங்குமுள்ள காங்கிரஸ் வாதிகளுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்று ஆமதாபாத் காங்கிரஸில் நன்கு வெளி யாயிற்று.
ஃ ஃ ஃ
ஆமதாபாத் காங்கிரஸ் பல அம்சங்களில் மிகச் சிறப்புக் கொண்டதாகும். புதிய காங்கிரஸ் அமைப்பின்படி நடந்த முதலாவது காங்கிரஸ் அதுதான். முன்னேயெல்லாம் யார் வேணுமானாலும் வரையறையின்றிக் காங்கிரஸ் பிரதிநிதிகளாக வந்துவிடலாம். ஆனால் புது அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளே ஆமதாபாத் காங்கிரஸுக்கு வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒத்துழையாமை இயக்கத்துக்காக மகத்தான தியாகங்களைச் செய்த தேச பக்தர்கள். பிரதிநிதிகள் ஆறாயிரம் என்று வரையறுக்கப்பட்ட படியால் காரியங்களை நடத்துவது இலகுவா யிருந்தது. அதே சமயத்தில் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வந்து நடவடிக்கைகளைக் கவனிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.
ஆமதாபாத் மகாத்மாவின் சொந்த ஊர். சத்தியாக்கிரஹ ஆசிரமம் இருந்த சபர்மதி நதிக்கரையிலேதான் காங்கிரஸும் நடந்தது. மகாத்மாவின் செல்வாக்கு இணையற்றிருந்த காலம் ஆகையால் கங்குகரை யில்லாத உற்சாகத்துடனே காங்கிரஸ்
ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் மகாத்மா காந்தியின் விருப்பத்தின்படி நடைபெற்று வந்தன.
நாகபுரி காங்கிரஸில் நாற்காலிகளுக்காக மட்டும் 70000 ரூபாய் செலவாயிற்று. ஆமதாபாத்தில் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தரையிலேயே உட்கார வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. காங்கிரஸ் பந்தல், பிரதிநிதிகளின் ஜாகைகள் எல்லாவற்றுக்கும் மேற்கூரைக்குக் கதர்த்துணி உபயோகிக்கப் பட்டது.
காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கும் விடுதிக்குக் “காதிநகர்” என்று பெயர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் தனித் தனிப் பகுதிகள் விடப்பட்டன. காதி நகரின் மத்தியில் காந்திஜியின் ஜாகை அமைக்கப்பட்டது.
ராஜிப் பேச்சு சம்பந்தம்மான தந்திப்போக்குவரவுக்கிடையே டிசம்பர் 22-ஆம் தேதி மகாத்மாகாந்தி சபர்மதி ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டுக் காதி நகரில் தம் ஜாகைக்கு வந்து சேர்ந்தார். காங்கிரஸ் ஏற்பாடுகளை நேர்முகமாய்க் கவனிப்பதற்கும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கலந்து பேசுவதற்கும் சௌகரியமா யிருக்கும் என்று தான் காதி நகருக்கு மகாத்மா காந்தி தம்முடைய ஜாகையை மாற்றிக் கொண்டார்.
22-ஆம் தேதியிலிருந்தே காதி நகரில் ஜனக்கூட்டம் நிறைய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களுக்குள் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தொண்டர்களுமாகக் காதி நகரில் ஒரு லட்சம் பேர் சேர்ந்து விட்டார்கள்.
கிலாபாத் மகாநாடும் அதே இடத்தில் நடந்தபடியால் அதற்கு வேண்டிய ஜாகை வசதிகளும் செய்யப்பட்டன. காதி நகரைக் காட்ட்டிலும் அதிக அலங்காரமாகவே கிலாபத் நகர் அமைக்கப்பட்டது.
காங்கிரஸ் மகாசபைக்கு அந்த வருஷம் தலைவராகத் தேர்ந் தெடுத்திருந்த தேசபந்துதாஸ் சிறை புகுந்து விட்டார். அவருக்குப் பதிலாக, கிலாபாத் மகாநாட்டின் தலைவர் ஹக்கிம் அஜ்மல்கானே காங்கிரஸுக்கும் தலைமை வகித்தார். அந்த நாளில் ஏற்பட்டிருந்த ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
ஆமதாபாத் காங்கிரஸ் நடந்த வாரத்தில் காதி நகரிலும் கிலாபத் நகரிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தேசத்தில் சுதந்திரம் இன்னும் ஒரு லட்சியமாகவே இருந்தது. ஆனால் சீக்கிரத்தில் அடையப் போகும் இலட்சியமாகக் காட்சி தந்தது. ஆகையினால் அதன் மகிமை பிரமாதமாயிருந்தது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளும் இறங்கி யிருந்த பகுதியிலிருந்து காலையில் 'பிரபாத் பேரி' என்னும் காலை பஜனை கோஷ்டி கிளம்பியது. ஒவ்வொரு கோஷ்டியாரும் தத்தம் தாய் மொழியில் தேசீய கீதங்களைப் பாடிக்கொண்டு காதி நகர் முழுவதிலும் வலம் வந்தார்கள். பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம்,
ஐக்கிய மாகாணம், குஜராத், மகாராஷ்டிரம், பீஹார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, தமிழ், மலையாளம், கொங்கணம் ஆகிய மாகாணப் பிரதிநிதிகளின் பஜனை கோஷ்டிகள் பாடிக் கொண்டு சென்ற போது, "இது குஜராத் கோஷ்டி" "இது ஆந்திரா கோஷ்டி"
என்று மற்ற மாகாணத்தவர் பேசிக் கொண்டார்கள். செந் தமிழ் நாட்டில் பாரதியார் என்னும் கவி தெய்வீகமான தீர்க்க தரிசனம் வாய்ந்த தேசீய கவிதைகளைப் பாடியிருக்கிறார் என்பது அப்போதுதான் சில வட இந்தியர்களுக்குத் தெரிய வந்தது.
மற்ற மாகாணத்தார் இசையோடு அமைதியான தேசீய கீதங்களை பாட, தமிழ் நாட்டான் மட்டும் ஆவேச வெறியோடு பாரதி கீதங்களைப் பாடிப் போவதைப் பார்த்து மற்ற மாகாணத்தார் நின்று கவனித்தனர்.
இப்படிக் காங்கிரஸ் பிரதிநிதிகள், சிதம்பரத்தின் கோபுரத்தைக் கண்டு களிப்படைந்த நந்தனைப்போல் ஆனந்த வெறி
கொண்டிருக்கையில், மகாத்மாவின் விடுதியில் முக்கிய ஆலோசனைகளும் விவாதங்களும் நடந்து வந்தன. ஒவ்வொரு
மாகாணத்திலிருந்தும் வந்த முக்கியப் பிரதிநிதிகளிடமிருந்து அந்தந்த மாகாணத்தில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியும்
காங்கிரஸ் வேலைத் திட்டங்களைப் பற்றியும் காந்திஜி விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
இதைத் தவிர இன்னும் இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
1. பண்டித மதன்மோகன் மாளவியாவின் ராஜிப் பிரேரணைகள்.
2. மௌலானா ஹசரத் மோகினி காங்கிரஸ் இலட்சியத்தைப் 'பரிபூரண சுதந்திரம்' என்று மாற்றுவதற்குக் கொண்டு வர விரும்பிய பிரேரணை.
பண்டித மாளவியாவுக்கு இன்னும் சபலம் விடாமல், ராஜிப் பிரேரணைகளை ஆமதாபாத்திலும் கிளப்புவதற்கு வந்திருந்தார். லார்ட் ரெடிங்கின் போக்கு எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ராஜிக்குத் தயார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவர் சொன்னார்.
விஷயாலோசனைக் கமிட்டியில் பண்டித மாளவியாவுக்குப் பேச இடம் கொடுக்கப்பட்டது. பண்டித மாளவியா எப்போதும் வெகு நீளமாகப் பேசுகிறவர். அதிலும் இந்தச் சந்தர்ப்பத்தில் தம்முடைய கட்சியை மிகவும் சாங்கோபாங்கமாக அவர் எடுத்துச்சொன்னார். அவரை ஸ்ரீ ஜெயகரும் ஜனாப் ஜின்னாவும் மட்டும் ஆதரித்தார்கள். மகாத்மாவோ பண்டித மாளவியாவிடம் தமது மரியாதையைத் தெரிவித்துவிட்டு, அவருடைய வாதங்களுக்குப் பதிலாக, ராஜிப் பேச்சு சம்பந்தமான தந்திப் போக்குவரவுகளை மட்டும் படித்தார். விஷயாலோசனைக் கமிட்டியார் ஏறக்குறைய ஒருமுகமாக மகாத்மா அனுசரித்த முறையே சரியானது என்று ஒப்பம் வைத்தார்கள்.
இதற்கிடையி்ல் பண்டித மோதிலால் நேரு, லாலா லஜபதிராய் ஆகியவர்களிடமிருந்து சிறைக்குள்ளேயிருந்து கடிதம் வந்தது. "நாங்கள் சிறையில் இருப்பதை முன்னிட்டு நீங்கள் ராஜிப் பேச்சுக்கு இணங்கவேண்டாம். போராட்டத்தை இறுதிவரை நடத்தியே தீரவேண்டும்" என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆகக்கூடி மகாத்மா அனுசரித்த முறைக்குக் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பரிபூரண ஆதரவு கிடைத்தது.
இன்னொரு பக்கத்தில் மௌலானா ஹஸரத் மோகினி என்னும் முஸ்லிம் மதத் தலைவர் காங்கிரஸ் திட்டத்தை இன்னும் தீவிரமாக்க விரும்பினார். "பிரிட்டிஷ் சம்பந்தமே அற்ற சுதந்திரமே காங்கிரஸ் இலட்சியம்" என்று மாற்ற மௌலானா ஹஸரத் மோகினி பிரேரணை கொண்டுவந்தார்.
இதைப்பற்றி மகாத்மா கடுமையாகவே பேசினார். இதைக்கொண்டு வந்தவரும் இதை ஆதரிப்பவர்களும் பொறுப்பற்றவர்கள் என்றார். "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியா சமஉரிமையும் சுயராஜ்யமும் பெற்றால் அதன் விளைவு என்ன? இந்தியாவின் ஜனத்தொகைதானே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் அதிகம்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நாம் ஆட்டி வைக்கலாமே?" என்று சொன்னார். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதைவிட்டு, இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கிக்கொண்டு போவதில் பயனில்லை, என்பது மகாத்மாவின் கருத்து.
தேசபந்து தாஸ் சிறைப்பட்டிருந்தபடியால் அவரது தலைமைப் பிரசங்கத்தை ஸ்ரீமதி சரோஜினி தேவி வாசித்தார். ராஜிப் பேச்சு ஆரம்பிக்கும் முன்னாலேயே தேசபந்து எழுதிய பிரசங்கமாதலால் அதில் ஆவேசம் நிறைந்திருந்தது. ச்ரிமதி சரோஜினிதேவி வாசித்த முறையினால் அது மேலும் மகிமை அடைந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேசபந்துதாஸ்; அவருக்குப் பதிலாக அக்கிராசனம் வகித்தவர் ஹக்கிம் அஜ்மல்கான். ஆனால் உண்மையாக ஆமதாபாத் காங்கிரசின் தலைவராக விளங்கியவர் காந்திஜிதான். அவரைச் சுற்றியே எல்லாம் சுழன்று கொண்டிருந்தன. அவருடைய ஜாகையிலேதான் முக்கியமான யோசனைகள் எல்லாம் நடந்தன. அவர் வாக்கை வேதவாக்காகக் கருதி மற்றப் பிரதிநிதிகள் பக்தியுடன் ஒப்புக்
கொண்டார்கள்.
இதற்கு முன்னெல்லாம் காங்கிரஸ் மகாசபைகளில் முப்பத்திரண்டு, நாற்பத்தெட்டு என்று தீர்மானங்கள் நிறைவேறுவதுண்டு. ஆனால் ஆமதாபாத் காங்கிரஸில் ஒன்பது தீர்மானங்கள்தான் நிறைவேறின. அவற்றிலும் இரண்டுதான் மிக முக்கியமானவை.
ஒரு முக்கிய தீர்மானத்தில் இந்தியாவுக்குச் செய்யப்பட்ட அநீதிகளையும் அவற்றை நிவர்த்திக்க ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த அவசியத்தையும் சொல்லியிருந்தது. தொண்டர்களின் அமைதியான நடவடிக்கைகளைப் பிரிட்டிஷ சர்க்கார் அடக்குவதற்காகக் கையாண்ட அடக்குமுறைப் பாணங்களைக் கண்டித்தது. குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காகப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தொடுத்துள்ள அடக்குமுறைச் சட்டங்களை மீறுவது தர்மம் என்றும், இதற்காகத் தொண்டர் படை அமைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டது. தொண்டர்கள் கையெழுத்திட வேண்டிய வாக்குறுதிகளையும் வகுத்தது. மனோ வாக்கு காயங்களினால் அஹிம்சையை அனுசரிக்கவேண்டும் என்னும் நிபந்தனையில் மனதை எடுத்து விடவேண்டும் என்று சில கிலாபத் தலைவர்கள் முயன்றார்கள். இதை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை; மற்றப் பிரதிநிதிகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
அடுத்த முக்கிய தீர்மானம் ஒத்துழையாமை. சட்டமறுப்பு இயக்கங்களை நடத்துவதற்கு மகாத்மாவைச் சர்வாதிகாரியாக நியமித்ததாகும். சர்க்கார் அடக்குமுறைக் காரணமாகக் காரியக் கமிட்டியையோ அகில இந்திய கமிட்டியையோ கூட்டுவது அசாத்தியமாகலாம். எனவே அந்த ஸ்தாபனங்களின் அதி காரங்கள் எல்லாம் மகாத்மா விடமே ஒப்படைக்கப்பட்டது. மகாத்மாவையும் சர்க்கார் கைது செய்தால் தம்முடைய ஸ்தானத்தில் இன்னொருவரைச் சர்வாதிகாரியாக நியமிக்கும் அதிகாரத்தையும் மகாத்மாவுக்குக் காங்கிரஸ் கொடுத்தது.
முதலாவது முக்கிய தீர்மானத்தைப் பிரேரித்தபோது மகாத்மா பேசிய பேச்சு, பிரதிநிதிகள் – பார்வையாளரிடையே ஆவேசத்தை உண்டு பண்ணியது. மொத்தத்தில், ஆமதாபாத் காங்கிரஸின்போது தேசீய இயக்கத்தின் உற்சாகம் இமயமலையின் சிகரத்தையொத்து உயர்ந்திருந்தது. அடுத்த 1922 - ஆம் வருஷம் பிப்ரவரியில் அந்த உற்சாகம் பாதாளத்துக்கே போய்விட்டது!
-----------------------------------------------------------
35. பம்பாய் நாடகம்
காந்தி மகாத்மாவைக் காங்கிரஸின் சர்வாதிகாரியாக நியமித்துவிட்டு ஆமதாபாத் காங்கிரஸ் கலைந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பிரசித்திபெற்ற 1921 – ஆம் ஆண்டு முடிவுற்றது.
1927 - ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் மகாத்மாவின் உள்ளம் மூன்றுவித காரணங்களால் அலைப்புற்றுத் தத்தளிக்கும்படி நேர்ந்தது. ஒரு பக்கம் சர்க்காரின் தீவிர அடக்குமுறை; இன்னொரு பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சி. மூன்றாவது பக்கத்தில் பொதுமக்களின் வரம்பு மீறிய செயல்கள் -இந்த மூன்றுவித எதிர்ச் சக்திகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு காற்று மழைகளுக்குச் சலியாத மலையைப் போல் மகாத்மா நின்றார்.
ஆமதாபாத் காங்கிரஸுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அடக்கு முறையைக் கையாளத் தொடங்கி விட்டனர். ஏறக்குறைய இருபத்தையாயிரம் தேசபக்தர்கள் 1921 - ஆம் வருஷ முடிவுக்குள் சிறைபுகுந்து விட்டார்கள். ஆனால் 1922- ஆம் வருஷம் பிறந்த பிறகு அதிகார வர்க்கத்தார் கையாண்ட அடக்கு முறை விபரீதங்கள் அதற்கு முன் நடந்ததையெல்லாம் தூக்கியடித்து விட்டன. தேசத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் போலீஸாரின் அட்டூழியங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் படிக்கப் படிக்கமகாத்மாவின் எல்லையற்ற பொறுமைகூட எல்லை கடந்துவிடும் போலாகிவிட்டது. "அடுத்தது துப்பாக்கிதான்!" என்ற தலைப்பில் மகாத்மா ஒரு கட்டுரை எழுதினார். இதன் கருத்து,"அடுத்தபடியாக சர்க்கார் செய்யக்கூடியது துப்பாக்கிப் பிரயோகந்தான்! ஆகையால் அதற்கு நாம் தயாராயிருக்க வேண்டும்" என்பது தான். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் தீயைக் கக்கியது. தபோபலம் கொண்ட முனிவருடைய வார்த்தைகள்
அக்கினி மயமாக வருவதுபோல் காந்தி மகாத்மாவின் பேனாவிலிருந்தும் வார்த்தைகள் வந்தன.
காசியில் சில தொண்டர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. தொண்டர்கள் அபராதம் கொடுக்க மறுத்தார்கள். அபராதத்தைப் பலாத்காரமாக வசூலிப்பதற்ககப் போலீஸார்
வீடுகளில் புகுந்து சாமான்களைக் கைப்பற்றினார்கள். ஸ்திரீகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார்கள். இன்னும் சில இடங்களில் போலீஸார் வீடுகளில் ஜப்தி செய்யப் புகுந்தபோது தடுத்தவர்களை அடித்தார்கள். மேற்படி செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு மகாத்மா எழுதியதாவது: --
"அடுத்தபடியாக அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கைக்கொள்வார்கள். திக்கற்ற பாமர ஜனங்கள்மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் வரையில் நாம் காத்திருக்கக் கூடாது. கவர்ன்மெண்ட அதிகாரிகள் ஜனங்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு போவதை நம் மக்கள் பார்த்துக் கொண்டு வெகு காலம் பொறுமையாயிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் கூடாது. ஆகையால் அதிகாரிகளுடைய கோபத்தை யெல்லாம் நம்முடைய தலைமேல் நாமே இழுத்து வருவித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, அஹிம்சையை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டு எவ்வளவு தீவிரமான சட்டமறுப்புச் செய்யலாமோ, அதை
உடனே செய்தாக வேண்டும்.
"கவர்ன்மெண்டின் நோக்கம் என்ன? நாம் இயக்கத்தைக் கைவிட்டுச் சரணாகதி அடையவேண்டும் அல்லது பலாத்காரத்தைக் கொள்ளவேண்டும் என்பதுதான் சர்க்காருடைய நோக்கம். அவர்களுடைய வலையில் நாம் விழக்கூடாது. அதாவது, பணிந்துவிடவும் கூடாது; பலாத்காரத்தைக் கைக்கொள்ளவும் கூடாது. சாத்வீக சட்ட மறுப்பினால் நம்முடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை வருவித்துக்
கொள்ளவேண்டும்.
"தொண்டர்களுடைய உறுதிமொழிப் பத்திரத்தில் 'சாவுக்கும் தயாராயிருப்போம்' என்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையைக் கடைப்பிடிக்கச் சமீபத்தில் அவசியம் எதுவும் நேராது என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமா யிருப்பதாகத் தெரிகிறது. நம்மை இப்போதே பூரணமாகப் பரிசோதித்துவிட இறைவன் விரும்புகிறார் போலும். கடவுளுடைய பெயரால் அந்த இறுதிப் போராட்டத்தை ஆரம்பிப்போம்."
மேலே கண்டவாறு மகாத்மா காந்தி எழுதினார்.இதிலிருந்து அச்சமயம் காந்திஜியின் மனப்போக்கை நாம் அறியலாம். அதாவது அதிகார வர்க்கத்தாரின் கொடூரமான அடக்குமுறைகளினால் ஜனங்கள் அத்துமீறிச் சாத்வீக வரம்பைக் கடந்து விடுவார்களோ என்ற பயம் காந்திஜிக்கு இருந்தது. அந்த பயத்தை உண்டாக்கும்படியான சில சம்பவங்களும் நாட்டில் அங்குமிங்கும் நிகழ்ந்து வந்தன. உதாரணமாக, வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு ஜனவரி மாதம் 13 உ விஜயம் செய்த போது பொது ஜனங்களில் ஒரு சாரார் வரம்புமீறிய காரியங்களைச் செய்து விட்டார்கள். அன்றைய தினம் மற்ற நகரங்களில் நடந்தது போலவே சென்னையிலும் ஹர்த்தால் நடந்தது. ஆனால் ஒரு சிலர் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவில்லை. வில்லிங்டன் சினிமாவின் சொந்தக்காரர் ஒரு பார்ஸி கனவான். அவர் சினிமாவை அன்று மூட மறுத்து விட்டார். தவிர, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேல்ஸ் இளவரசரின் வரவேற்பில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர். வில்லிங்டன் சினிமாவைப்
பொது ஜனங்கள் தாக்க முயன்றபோது அந்தச் சினிமாவின் சொந்தக்காரர் ஜனங்கள்மீது துப்பாக்கியால் சுட்டார். ஜஸ்டிஸ் கட்சியின் அப்போதைய தலைவரான ஸர் பி.டி. தியாகராஜ செட்டியாரின் வீட்டை ஜனங்கள் முற்றுகையிட்டுத் தொல்லை
விளைவித்தார்கள். இதையெல்லாம் அறிந்ததும் மகாத்மா மிகவும் மனம் வருந்தினார். அன்றைய தினம் சென்னையில் நடந்த அசம்பாவிதங்களைப்பலமாகக்கண்டித்து "எங் இந்தியா" வில் எழுதினார்.
இவ்விதம் ஒரு பக்கத்தில் சர்க்கார் அடக்கு முறைகளையும் மற்றொரு பக்கத்தில் பொது ஜனங்களின் பலாத்காரத்தையும் எதிர்த்து நின்ற காந்திமகான் மூன்றாவது பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சிக்கும் பதில் சொல்ல வேண்டி
நேர்ந்தது.
கல்கத்தாவிலும் ஆமதாபாத்திலும் தோல்வியுற்ற பண்டித மாளவியா அத்துடன் தம் முயற்சியை நிறுத்தவில்லை. பம்பாய்க்கு வந்து அங்கே தம் முயற்சியை மீண்டும் ஆரம்பித்தார். பம்பாயில் பண்டித மாளவியாவுக்கு அப்போது முக்கிய துணைவராயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பம்பாய் நகரத்தின் பொது வாழ்வில் அப்போது ஜனாப் ஜின்னா மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகித்து வந்தார். காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் ஜனாப் ஜின்னாவுக்கு அதுவரையில் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் மகாத்மாவின் சட்ட மறுப்பு முறையை ஜனாப் ஜின்னா ஒத்துக் கொள்ளவில்லை. கிலாபத் இயக்கத்தில் அவருக்குச் சிறிதும் உற்சாகம் கிடையாது. அலி சகோதரர்களை அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காது.
மகாத்மா காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸின் போக்கே வேறு விதமாகப் போய்க் கொண்டிருந்ததைப் பலமிதவாதிகள் விரும்பாததுபோல் ஜனாப் ஜின்னாவும் விரும்பவில்லை. ஆகவே பண்டித மாளவியாவும் ஜனாப் ஜின்னாவும் சேர்ந்து ஜனவரி மாதம் 14 - ஆம் தேதி 15 - ஆம் தேதிகளில் பம்பாயில் சர்வ கட்சி அரசியல் மகாநாடு ஒன்று கூட்டினார்கள். இந்தியாவில் அரசியல் துறையில் பிரபலமாயிருந்தவர்களை யெல்லாம் இந்த மகாநாட்டுக்கு அழைத்தார்கள். மகாத்மாவையும் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களையும்கூட அழைத்தார்கள். ஆனால் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பழுத்த மிதவாதிகள்; அல்லது பட்டம் பதவிகளில் ஆசை கொண்ட அரசியல் பிரமுகர்கள். தேசபக்தி, தேசீயக் கிளர்ச்சி,- இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய பதவிகளைப் பெறுவதற்காகவே என்று எண்ணங் கொண்டவர்கள்.
மகாத்மாவின் சகாக்களான காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் அப்போது சிறையில் இருந்தார்கள். தேசபந்துதாஸ், பண்டிதநேரு, லாலா லஜபதிராய், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சிறைப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமையில் பம்பாயில் சர்வ கட்சி மகாநாடு கூடிற்று. மகாத்மாவும் மகாநாட்டுக்கு வந்தார்.
மேற்படி மகாநாட்டில் ஒத்துழையாமை வாதிகள் நேர்முகமாகக் கலந்து கொள்வதில் பயனில்லையென்று தீர்மானித்தார்கள். ஆனால் மகாநாட்டைப் பகிஷ்காரம் செய்யவேண்டியதுமில்லை. அழைக்கப்பட்டவர்கள் போகலாம். அப்படிப் போகிறவர்களில் மகாத்மாகாந்தி ஒருவர் மட்டும் காங்கிரஸின் சார்பாகப் பேசினால் போதுமானது. வேறு யாரும் பேச வேண்டியதில்லை.
லோகமானிய திலகருக்குப் பிறகு மகாராஷ்டிரத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீ என்.சி.கேல்கர் இந்த யோசனையைச் சொன்னார். அதை மற்றவர்களும் ஆதரித்தார்கள். மகாத்மாவும் அதுவே சரி என்று ஒப்புக் கொண்டார்.
சர்வகட்சி மகாநாட்டுக்கு ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஸர் சங்கரன் நாயர் பழைய காலத்துக் காங்கிரஸ் வாதிகளில் ஒருவர். ஒரு வருஷம் காங்கிரஸுக்கு அக்கிராசனமும் வகித்திருக்கிறார். சர்க்கார் உத்தியோகத்துக்கு
அப்போதெல்லாம் காங்கிரஸ் ஒரு ஏணியாக உபயோகப்பட்டு வந்தது. அந்த ஏணியில் ஏறி உச்சியை அடைந்தவர் ஸர் சங்கரன் நாயர். இந்திய சர்க்காரின் நிர்வாக சபையில்
அங்கத்தினராக உத்தியோகம் பார்த்து 'ஸர்' பட்டமும் அடைந்தவர். இப்போது அவர் 'மாஜி தேச பக்தர்' என்ற நிலைமையில் இருந்தார். அதிகார வர்க்கத்தின் பரம பக்தராயிருந்தார். மகாத்மாவையும் அவருடைய ஒத்துழையாமை சட்ட மறுப்பு
இயக்கங்களையும் தீவிரமாக விரோதித்தார். அத்தகைய மனிதரைச் சர்வ கட்சி மகாநாட்டுக்குச் சபாநாயகர் ஆக்குவதாகச் சொன்னார்கள். ஆயினும் அதை மகாத்மா காந்தி ஆட்சேபிக்கவில்லை.
முதல் நாள் மகாநாடு கூடியதும் பண்டித மாளவியா தமது முகவுரைப் பிரசங்கத்தைச் செய்தார். சுருக்கமாகப் பேசுவதற்கு மகாத்மா எப்படிப் பேர் போனவரோ அப்படியே பண்டித மாளவியா நீளமான பிரசங்கம் செய்வதில் பெயர் போனவர். அவர் அன்று ஆதிகாலத்திலிருந்து, அதாவது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தொடங்கினார். பிறகு காங்கிரஸ் ஆரம்பித்த வரலாற்றுக்கு வந்தார். பிறகு ஹோம்ரூல் இயக்கம், ரவுலட் சட்டம், பஞ்சாப் படுகொலை, கிலாபத் அநீதி, ஒத்துழையாமை இயக்கம் எல்லாவற்றையும் பற்றிச் சாங்கோபாங்கமாகப் பேசினார். மகாத்மாவின் பெருமையையும் தேசத்தில் அவருடைய செல்வாக்கையும் பாராட்டித் தற்போது தேசத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் ஒத்துழையாமை இயக்கத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் ராஜி ஏற்பட வேண்டிய அவசியத்தைப் பற்றி வற்புறுத்தினார். இதற்காகப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு வட்ட மேஜை மகாநாடு கூட்டவேண்டும் என்றும் அதை வற்புறுத்தவே இந்த சர்வகட்சி மகாநாடு கூட்டியதாகவும் தெரியப் படுத்தினார்.
பிறகு மாளவியாவின் பிரேரணையின் பேரில் ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைமைப் பீடத்தில் அமர்ந்தார். அவர் சில வார்த்தைகள் கூறிய பிறகு, ஜனாப் ஜின்னா அந்த மகாநாட்டைக் கூட்டியவர்கள் தயாரித்திருந்த நகல் தீர்மானங்களைப் பிரேரணை செய்தார். அத்தீர்மானங்களைச் சில மிதவாதிகள் ஆமோதித்தார்கள்.
மகாத்மாவின் அபிப்பிராயத்தைச் சொல்லும்படி கேட்டதின் பேரில் அவர் பேச எழுந்தார். தாம் காங்கிரஸின் சார்பாகவோ தனிப்பட்ட முறையிலோ அந்த மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வரவில்லையென்பதை முதலில் தெளிவு படுத்தினார். மகாநாடு கூட்டிய தலைவர்களின் நல்ல நோக்கத்தை ஒப்புக்கொண்டு பாராட்டினார். ஆனால் ஜனாப் ஜின்னா பிரேரேபித்த தீர்மானங்களினால் உத்தேசித்த பலன் விளையாது என்று தெரிவித்தார்.
பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று விஷயங்களையும் ப்ற்றிக் காங்கிரஸின் கோரிக்கைகள் என்னவென்பதை விளக்கி மேற்படி கோரிக்கைகள் குறைக்க முடியாத அடிப்படைக் கோரிக்கைகள் என்பதை வற்புறுத்தினார். ஆயினும் சர்க்கார் வட்டமேஜை கூட்டுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லையென்றும் அதில் காங்கிரஸ் கலந்து கொள்ளுவதற்குக் காங்கிரஸின் நிபந்தனைகள் என்னவென்றும்
விளக்கினார்.
ஜனாப் ஜின்னாவின் நகல் தீர்மானங்கள் பண்டித மாளவியா குன்ஸ்ரூ முதலியவர்கள் கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு அனுப்பிய தந்திகளை யொட்டியிருந்தன. மகாத்மாவே தமது பழைய பல்லவியையே மறுபடியும் வற்புறுத்திப் பாடினார். அதாவது வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாகப் புதிய அடக்கு முறைச் சட்டங்களின் கீழ் (அதாவது கிரிமினல்லா அமெண்ட்மெண்ட் சட்டம், இராஜத் துவே ஷக் கூட்டச் சட்டம் இவற்றின் கீழ்க்) கைது செய்தவர்களை மட்டும் விடுதலை செய்தால் போதாது. அலி சகோதரர்கள் உள்ளிட்ட பத்வா கைதிகளையும் மற்றும் 124ஏ, 144 முதலிய சாதாரணச் சட்டப் பிரிவுகளின் கீழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் சமீபத்தில் கையாண்டு வரும் அடக்கு முறைக் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, அந்தக் கொடுமைகளைச் செய்ததற்காக அதிகார வர்க்கத்தார் உண்மையான பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், எல்லாக் கைதிகளையும் விடுவித்தால் உண்மையான பச்சாதாபம் கொண்டதற்கு அறிகுறியாயிருக்கும் என்றும் தெரிவித்தார்.
மகாத்மாவின் பேச்சைச் சபைத் தலைமை வகித்த ஸர் சங்கரன் நாயர் கொஞ்சங்கூட விரும்பவில்லை. அதிலும் அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், சைன்யத்தின் ராஜ பக்தியைக் கலைக்கப் பார்த்த அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டும் என்று காந்திஜி சொன்னது சங்கரன் நாயருக்குப் பொறுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் தாஸானு தாஸனாகும் மனோ நிலையை அச்சமயம் ஸர் சங்கரன் நாயர் அடைந்திருந்தார். "ஆகையால், அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்டவாவது? மகாத்மாவல்லவா மன்னிப்புக் கேட்கவேண்டும்?" என்று கர்ஜித்தார். பிறகு இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட மகாத்மாவுடன் எந்தவிதமான சம்பந்தமும் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள தமக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு மகாநாட்டின் தலைமை ஸ்தானத்தைக் காலி செய்து மகாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. மகாத்மாவைத் தாக்கி ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். "மகாத்மாவும் அராஜகமும்" என்ற புத்தகமும்; எழுதினார்.
மகாநாட்டிலிருந்து ஸர் சங்கரன் நாயர் எழுந்து போனதைப் பின்பற்றி வேறு யாரும் போகவில்லை. அந்த நாடக நிகழ்ச்சியை மற்ற மிதவாதிகள் விரும்பவும் இல்லை. உண்மையில் அவர்களில் பெரும்பாலோர் மகாத்மா கூறியதின் நியாயத்தை ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஸர் சங்கரன் நாயருக்குப் பதிலாக ஸர். விசுவேசவரய்யாவைச் சபைத் தலைமை வகிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு தடைபட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.
மகாத்மாவின் கருத்தையொட்டித் தீர்மானங்கள் திருத்தி எழுதப்பட்டன. முக்கியமாக, அலி சகோதரர்களையும் பத்வாக் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று சேர்க்கப் பட்டது. ஆனால், மகாத்மாவின் பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யக் கோரிக்கைகளை, சர்வ கட்சி மகாநாடு அப்படியே ஒப்புக்கொள்ள வில்லை.
"மகாத்மா கோரிக்கைகளின் நியாயங்களைப் பற்றி இந்த மகாநாடு யோசனை செய்யவில்லை. அவை சர்க்கார் கூட்டும் வட்ட மேஜையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை. அந்த வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாக அலி சகோதரர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. ஜனாப் ஜின்னாகூட அதை ஒப்புக் கொண்டார்.
மகாநாட்டின் இரண்டாம் நாள் இரவு ஜனாப் ஜின்னா மகாத்மாவை அவருடைய ஜாகையில் வந்து பார்த்து "உங்களுடைய தீர்க்க திருஷ்டியையும் உறுதியையும் ரொம்பவும் பாராட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். சர்வ கட்சி மகாநாட்டுத் தீர்மானங்கள் லார்ட் ரெடிங் சர்க்காருக்கு அனுப்பப்பட்டன. ஜனாப் ஜின்னா பதில் கோரி தந்தி மேல் தந்தி அடித்தார். பண்டித மாளவியா மறுபடியும்
லார்ட் ரெடிங்கை நேரிலேயே பேட்டி கண்டு பேசினார்.
ஒன்றும் பயன்படவில்லை. ஏனெனில் காந்திஜியுடன் ஒரு ராஜி செய்து கொள்ள வேண்டிய அவசியம் லார்டு ரெடிங்குக்கு இல்லாமற் போய்விட்டது. வேல்ஸ் இளவரசர் சுற்றுப் பிரயாணம் அதற்குள் முடிந்துவிட்டது. காங்கிரஸ் ஆணையினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நாடெங்கும் வெற்றிகரமாக நடந்துவிட்டது. இதனால் கோபங்கொண்டிருந்த லார்ட்ரெடிங் எப்படியும் மகாத்மாவைத் தொலைத்து அவருடைய இயக்கத்தை நசுக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஆகவே பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாடு என்னும் நாடகத்தினால் பயன் எதுவும் விளையவில்லை.
-----------------------------------------------------------
36. வைஸ்ராய்க்கு இறுதிக் கடிதம்
பம்பாயில் மகாநாடு கூட்டிய தலைவர்கள் அந்த மகாநாட்டின் தீர்மானத்தை வைஸ்ராய் ரெடிங் ஏற்றுக்கொள்ளுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆகையால் வைஸ்ராயிடமிருந்து பதில் வருவதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று மகாத்மா காந்தியைக் கேட்டுக் கொண்டார்கள். மகாத்மாவும் அதற்குச் சம்மதித்தார். ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரையில் காத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆகவே பம்பாயிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கே அம்மாதம் 28-ஆம் தேதி வரையில் காத்திருந்தார்.
ஆனால் வைஸ்ராய் ரெடிங் சாதகமான பதில் அனுப்புவார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்குக் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜி ஏற்பாடு எதுவும் நடப்பதை மகாத்மா விரும்பவும் இல்லை. அப்படி ராஜி ஏற்படுமானால் அதை வகிப்பதற்குத் தேசம் தகுதி பெறவில்லை என்று மகாத்மா கருதினார். (இன்றைக்குக்கூட நம்மில் பலர் தேசம் பூரண தகுதி பெறுவதற்குச் சிறிது முன்னாலேயே சுயராஜ்யம் வந்துவிட்டது'
என்று கருதுகிறோம் அல்லவா?)
மகாத்மாவின் உள்ளம் அக்காலத்தில் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதை "நவஜீவன்" பத்திரிகைக்கு அவர் அப்போது எழுதிய ஒரு கட்டுரையினின்றும் அறியலாம். அக்கட்டுரையில் மகாத்மா எழுதியதாவது:-
ராஜி வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால் நான் உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். ராஜி ஏற்பட்டுவிட்டால், அதன் பலனாக என்ன நேரிடுமோ? ராஜி ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவவிட மாட்டேன். ஆயினும் இந்தியாவின் பலம் இவ்வளவுதான் என்பதை நான் அறிந்திருப்பதால், ராஜியை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நாம் சரியானபடி சோதனைக்கு உள்ளாகி அதில் தேறி வெளி வந்தாலன்றி, ராஜியினால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.
தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து குழந்தை பிறக்க வேண்டும். முன்னாலேயே பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து போய்விடும். போர்ச்சுகல் தேசத்தில் மின்னல் புரட்சி நடந்து ஒரு நொடியில் அரசாங்கம் மாறிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அங்கே அரசாங்கம் அடிக்கடி மாறிக்கொண்டே யிருக்கிறது. நிலையான அரசியல் அமைப்பு இன்னமும் ஏற்பட்ட பாடில்லை. 1909-ஆம் வருஷத்தில் துருக்கியில் திடீர்ப் புரட்சி நடந்து அரசாங்கம் மாறியது. அது குறித்து உலகமெல்லாம் துருக்கிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பின. ஆனால் அது ஒன்பதுநாள் விந்தையாக முடிந்து மாயக்கனவைப்போல் மறைந்து விட்டது. அதற்குப் பிறகு துருக்கி எவ்வளவோ அனுபவங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. அந்தத் தேசம் இன்னும் என்னென்ன அநுபவிக்க வேண்டுமோ, யார் கண்டது? இதையெல்லாம் நினைக்கும் போதுதான் இந்தியாவில் நாம் தயாராவதற்கு முன்னால் ராஜி ஏற்பட்டு விடப் போகிறதே
என்று பயப்பட வேண்டி யிருக்கிறது."
இவ்விதம் "நவஜீவன்" பத்திரிகையில் மகாத்மா எழுதினார். இந்திய மக்கள் இன்னும் சுதந்திரத்துக்குத் தகுதி பெறவில்லை. சுயராஜ்யம் ஆளுவதற்கு வேண்டிய வலிமையும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் பெறவில்லை என்ற எண்ணம் மகாத்மாவுக்கு இருந்தது. லார்ட்ரெடிங்கும் வேறொரு விதத்தில் இதே எண்ணம் கொண்டவராயிருந்தார். ஆகையால் அவர் பம்பாய் மகாநாட்டின் தீர்மானத்துக்கு இணங்கி வரவில்லை. பம்பாய் மகாநாட்டை நடத்தியவர்களுக்கு ஜனவரி 30-ல் லார்ட் ரெடிங்கினிடமிருந்து பதில் வந்தது. அந்தப் பதில் "இல்லை" என்பது தான். அதாவது வட்ட மேஜை மகாநாடு கூட்ட முடியாது என்பதுதான். அது விஷயமாக வைஸ்ராயைச் சந்தித்துப் பேச அநுமதி வேண்டுமென்று மிதவாதத் தலைவர்கள் கோரியிருந்தார்கள். அந்தக் கோரிக்கையைக்கூட வைஸ்ராய் ரெடிங் மறுதளித்துவிட்டார்.
ஜனவரி 27-ஆம் நாள் மகாத்மா பர்தோலி போய்ச் சேர்ந்திருந்தார். 31-ஆம் நாள் சூரத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. அதற்குள் வைஸ்ராயின் பதிலும் தெரிந்து போய்விட்டது. ஆகவே பர்தோலியில் பொதுஜன சட்டமறுப்பு ஆரம்பிப்பதற்கு மகாத்மாவுக்குக் காரிய கமிட்டி அதிகாரம் கொடுத்தது.
மறுநாள் அதாவது 1922-ஆம் வருஷம் பிப்ரவரி மீ 1 தேச சரித்திரத்தில் பிரசித்திபெற்ற இறுதிக் கடிதத்தை மகாத்மாகாந்தி வைஸ்ராய்க்கு எழுதினார். அந்த முக்கியமான கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:-
மேன்மை தங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு
ஐயா ,
பம்பாய் மாகாணத்தில் சூரத் ஜில்லாவில் பர்தோலி ஒரு சிறு தாலுகா. அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 87,000 தான். பிப்ரவரி 29 பர்தோலி தாலுகா வாசிகள் ஸ்ரீவித்தல் பாய் படேல் அவர்களின் தலைமையில் மகாநாடு கூடினார்கள். சென்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தின் பேரில் நிபந்தனைகளை நிறைவேற்றித் தகுதி பெற்று விட்டபடியால் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். இந்தத் தீர்மானத்துக்கு நானே பெரிதும் பொறுப்பாளியானபடியால், எதற்காக பர்தோலி வாசிகள் இத்தகைய தீர்மானத்தைச் செய்தார்கள் என்பதைத் தங்களுக்கும் பொது மக்களுக்கும் விளக்கிக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கிலாபத், பஞ்சாப், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று பிரசனைகள் விஷ்யமாகவும் இந்தியாவின் கோரிக்கையை இந்திய சர்க்கார் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மறுப்பு சர்க்காரின் பெருங் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றவாளி சர்க்காரை எதிர்த்துப் புரட்சி செய்ய இந்தியா தேசம் தீர்மானித்திருக்கிறது. அந்தத் தீர்மானத்துக்கு ஒரு அறிகுறியாகவே மேற்படி அ.இ.கா. கமிட்டி நிபந்தனைகளுக்குட்பட்டு முதன் முதலில் பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருந்தோம்.
துரதிர்ஷ்டவசமாக, பம்பாயில் சென்ற நவம்பர் 17 கலவரங்கள் நிகழ்ந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தின. அதன் காரணமாக பர்தோலி சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்திப்போட நேர்ந்தது. இதற்கிடையில் தேசமெங்கும் இந்திய சர்க்காரின் உடந்தையின் பேரில் கொடுமையான அடக்குமுறை நடந்திருக்கிறது. வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஐக்கிய மாகாணத்திலும், பஞ்சாப்பிலும், டில்லியிலும் அத்தகைய அடக்குமுறை அமுல் நடந்திருக்கிறது. அதிகாரிகளின் மேற்படி நடவடிக்கைகளை 'அடக்குமுறை' என்று சொல்வதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அவசியத்துக்கு அதிகமான நடவடிக்கைகள் எல்லாம் 'அடக்குமுறை' தான் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்துக்களைச் சூறையாடுதல், குற்றமற்ற ஜனங்களைத் தாக்குதல், சிறையில் கைதிகளுக்குக் கசையடி முதலிய குரூர தண்டனைகள் – இவையெல்லாம் சட்டத்துக்குட்பட்ட நாகரிக நடவடிக்கைகள் ஆகமாட்டா. ஹர்த்தால் விஷயத்தில் சில இடங்களில் ஒத்துழையாதார் பயமுறுத்தலைக் கையாண்டிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதற்காக அதிகாரிகள் கையாண்ட கொடிய முறைகளை எந்தவிதத்திலும் நியாயம் என்று சொல்லமுடியாது. பலாத்கார நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களை, சாத்வீக தொண்டர் படைகளைக் கலைக்கவும் பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கவும் சர்க்கார் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் அடக்குமுறை என்றுதான் சொல்லியாக வேண்டும்.
ஆகவே இப்போது தேசத்தின் முன்னால் உள்ள அவசரப்பிரச்னை பேச்சு சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் - கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்டுவதுதான். தற்போதைய நிலையில் பம்பாயில் கூடிய மாளவியா மகாநாட்டில் எவ்விதத்திலும் கலந்துகொள்ள ஒத்துழையாதார் விரும்பவில்லை. ஆயினும் தேச மக்களுக்கு வீண் துன்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த மகாநாட்டின் முடிவுகளை ஒப்புக் கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நான் யோசனை கூறினேன்.
ஆனால் தாங்கள் அந்த மகாநாட்டின் முடிவுகளை அடியோடு நிராகரித்து விட்டீர்கள். இத்தனைக்கும் தங்களுடைய கல்கத்தா பிரசங்கத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை யொட்டியே அம் முடிவுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆகவே மக்களின் மூலாதார உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு தேசம் சாத்வீக சட்ட மறுப்பு முறையை ஏதேனும் ஒரு விதத்தில் கையாளும்படி ஏற்பட்டு விட்டது. வேறு வழி ஒன்றுக்கும் இடமில்லாமல் தாங்கள் செய்துவிட்டீர்கள். அலி சகோதரர்கள் தங்கள் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்த காலத்தில் இந்திய சர்க்கார் ஒரு வாக்குறுதி அளித்தனர். அதாவது ஒத்துழையாதார் பலாத்காரத்தில் இறங்காத வரையில் அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை யென்று கூறினார்கள். அந்த வாக்குறுதி காற்றிலே போய்விட்டது. அதைச் சர்க்கார் கடைபிடித்திருந்தால் பொதுஜன சட்ட மறுப்பை இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போட்டிருக்கலாம். அதற்குத் தாங்கள் இடம் வைக்கவில்லை. சட்டமில்லா அடக்குமுறைச் சட்டங்களைச் சர்கார் கையாளுவதினால் பொது ஜனச் சட்ட மறுப்பை உடனே ஆரம்பிப்பது அவசியமாகிவிட் டது. நான் பொறுக்கி எடுக்கும் பிரதேசங்களில் மட்டும் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி அநுமதி கொடுத்திருக்கிறது. நான் இப்போதைக்குப் பர்தோலியைத் தேர்ந்தெடுக்கிறேன். தவிர, குண்டூர் ஜில்லாவில் சுமார் நூறு கிராமங்கள் கொண்ட பிரதேசத்துக்கும் சட்ட மறுப்பைத் தொடங்குவதற்கு நான் ஒருவேளை அநுமதி கொடுக்ககூடும்.
ஆனால் பொதுஜனச் சட்டமறுப்பு உண்மையில் ஆரம்பமாவதற்கு முன்பு கடைசி முறையாகத் தங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்திய அரசாங்கத்தின் தலைவராகிய தாங்கள் அரசாங்கத்தின் முறையை மாற்றிக் கொள்ள இணங்குங்கள்.
பலாத்காரமற்ற நடவடிக்கைகளுக்காகச் சிறைப்பட்டிருக்கும் கைதிகளை யெல்லாம் விடுதலை செய்யுங்கள். அத்தகைய பலாத்காரமற்ற நடவடிக்கைகளைத் தடை செய்வதில்லை யென்று உறுதி சொல்லுங்கள். பத்திரிக்கைகளுக்கு விதித்திருக்கும்
கட்டுப்பாடுகளை அகற்றுங்கள். அபராதங்களையும் சொத்துப் பரிமுதல்களையும் திருப்பி அவரவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்படி தங்களைக்கேட்கும்போது உலகத்தில் நாகரீகமடைந்த தேசங்களின் அரசாங்கங்கள்
செய்வதைத்தான் தாங்களும் செய்யும்படி நான் கோருகிறேன்.
இந்தக் கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் மேற்கண்டவாறு தாங்கள் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடும்படி நான் யோசனை சொல்லுவேன். சிறைப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுதலையாகித் தேசத்தின் புதுநிலைமையைப் பற்றி யோசித்து முடிவு செய்யும்படி கூறுவேன். அரசாங்கத்தார் மேற்கண்டவாறு அறிக்கை பிறப்பித்தால், பொதுஜன அபிப்பிராயத்தை அங்கீகரிக்க அரசாங்கத்தார் உண்மையான விருப்பமுள்ளவர்கள் என்பதற்கு அது அறிகுறியாயிருக்கும் ஆகவே பொதுஜனச் சட்டமறுப்பைத் தள்ளி வைத்துப் பொதுஜன அபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தும் வேலைகளிலே மேலும் ஈடுபடும்படி தேசத்துக்கு நான் யோசனை சொல்வேன்.
இங்ஙனம்
தங்கள் உண்மை ஊழியனும் நண்பனுமான
பர்தோலி, 1-2-1922 எம்.கே.காந்தி
இந்த இறுதிக்கடிதம் பிப்ரவரி 4-ஆம் தேதி தேசமெங்கும் பிரசுரமாயிற்று. பொதுஜனங்களிடையில் மின்சார சக்தி பரவியதைப் போன்ற உற்சாகம் உண்டாயிற்று. மிதவாதத் தலைவர்களோ "வைஸ்ராய்க்கு இப்படியும் கடிதம் எழுதலாமா?" என்று தேள்கொட்டியவர்களைப்போல் துடித்தனர். வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதும்போது 'May it please Your Lordship' என்று ஆரம்பிப்பது வழக்கம். வெறும் சம்பிரதாய மரியாதைகளை அனுசரிக்க அது காலமில்லையென்று கருதி மகாத்மா, "ஸார்!" என்று கடிதத்தை ஆரம்பித்திருந்தார். இதையும் சில மிதவாதப்
பிரமுகர்கள் கண்டித்தார்கள். இன்னும் கொஞ்ச காலம் மகாத்மா அவகாசம் கொடுத்திருந்தால் லார்ட் ரெடிங்கைச் சரிக்கட்டி வட்டமேஜை மகாநாடு கூட்டும்படி செய்திருக்கலாம் என்றும் மிதவாதப் பிரமுகர்கள் வெகுகாலம் சொல்லி வந்தார்கள்.
பிப்ரவரி 4-ஆம் தேதி பிரசுரமான மகாத்மாஜியின் கடிதத்துக்குப் பதிலாக இந்திய சர்க்கார் பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார்கள். அதிகார வர்க்கத்தினர் குதர்க்க சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்கள் என்பது தெரிந்த விஷயந்தானே? ஆகையால் குற்றங்களை யெல்லாம் காங்கிரஸின் மீது சுமத்தும் முறையில் மேற்படி அறிக்கையில் வாதமிட்டிருந்தார்கள். மகாத்மாவின் கோரிக்கைகள் எவ்வளவு அநியாயமானவை என்று நிரூபிப்பதற்குப் பிரயத்தனம் செய்திருந்தார்கள். அத்தகைய அநியாயமான கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியாதென்றும்,
அவற்றைக் குறித்து விவாதிக்கவும் முடியாதென்றும் சொல்லிவிட்டு அவற்றைக் குறித்து தேசத்தில் அபாயகரமான குழப்பம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்குப் பொதுமக்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று
அந்த அறிக்கையை முடித்திருந்தார்கள்.
-----------------------------------------------------------
37. பேரிடி விழுந்தது!
மகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும்? இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி
வரும்படியாக உபதேசித்தார்.
பர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து
கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். "பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம்
ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.
பர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா? ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.
பர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய
துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள்
தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ "எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.
ஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், "தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.
பர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், "நாராயணா! நாராயணா! இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா?" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்? அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. "ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும்? இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்?" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக "ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்!" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.
இவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.
காந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.
இப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ஒரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.
பம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும்? மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும்! சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதன்
பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்?
இத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜி தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-
அந்தரங்கம் (பிரசுரத்துக்கு அல்ல)
பர்தோலி, 8-2-1922
பிரிய நண்பரே!
பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.
தங்கள்
உண்மையுள்ள,
(ஒப்பம்) எம். கே. காந்தி
காந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.
ஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.
மறுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.
காரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.
தென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா?
ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. "காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா!" என்று கூக்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுஙங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.
-----------------------------------------------------------
38. நெருப்பைக் கொட்டினார்கள்
சௌரி சௌரா பயங்கரச் சம்பவத்துக்காக மகாத்மா பிப்ரவரி 12 - ஆம் தேதி உபவாசம் ஆரம்பித்து ஐந்து நாள் விரதம் இருந்தார். 17 - ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் உண்ணாவிரத பூர்த்தி பாரணைக்காகக் கொஞ்சம் பாலும் சில திராட்சைப் பழங்களும் ஆரஞ்சு ரஸமும் கொண்டு வந்தார். காந்திஜி ஸ்ரீமத் ராமதாஸ் என்னும் இன்னொரு சீடரை அழைத்துப் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கவனமாகச் சிரவணம் செய்தார். அச்சமயம் பாபு ராஜேந்திர பிரஸாத், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஸ்ரீமதி அனசூயாபென் முதலியவர்கள் மகாத்மாவின் அருகில் இருந்தார்கள். மகாத்மாவின் கண்ணில் என்றுமில்லாத வண்ணம் சில கண்ணீர்த் துளிகள் துளிர்த்து வழிவதை அவர்கள் பார்த்து மனம் உருகினார்கள். சௌரி – சௌரா காந்திஜியின் மனதை எவ்வளவு புண்படுத்தி யிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆம்; அதில் வியப்பு என்ன?
எந்த இயக்கத்தினால் இந்தியாவக்குக் கதிமோட்சத்தை அளிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு மகாத்மாகாந்தி அல்லும் பகலும் அனவரதமும் வேலை செய்து வந்தாரோ, அந்த இயக்கத்தை இப்போது ஆரம்பிக்க முடியாமற் போய்விட்டதல்லவா?
இதனால் மகாத்மாவின் மனம் எவ்வளவு தூரம் புண்ணாகி யிருக்கவேண்டும் என்று அறியாது அரசியல் வாதிகளும் தேசபக்தர்களும் அவருடைய தலைமீது நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் காந்திஜி பொறுமையாகச் சகித்துக்கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமான ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. மகாத்மா உபவாசம் நிறுத்திய மறுநாள் அதாவது பிப்ரவரி 18௳ மௌலானா முகமதலியையும் டாக்டர் கிச்லூவையும் பீஜப்பூர் சிறையிலிருந்து தூலியா சிறைக்குக் கொண்டு போனார்கள். அந்த ரயில் பாதையின் மத்தியில் பர்தோலி ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. இதை அறிந்த மகாத்மா ரயில்வே நிலையத்தில் அவர்களைப் பார்த்து விட்டு வரும்படி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரை அனுப்பினார். ஸ்ரீ கிருஷ்ண தாஸ் சில ஆரஞ்சுப் பழங்களையும் எடுத்துக்கொண்டு பர்தோலி ரயில் நிலையத்துக்குப்
போனார். மௌலானாவைச் சந்தித்துக் காந்திஜி முதல் நாள்தான் உபவாச விரதத்தை முடித்திருந்தபடியால் அவர்களைப் பார்க்க வரவில்லை யென்று கூறினார்.
ஆனால் மௌலானாவுக்கு இது சமாதானம் அளிக்கவில்லை. மகாத்மாவை ரயில் நிலையத்தில் சந்திக்க அவர் எவ்வளவோ ஆவலாயிருந்தார். மகாத்மா வரவில்லை யென்று அறிந்ததும் மௌலானா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. பர்தோலியை விட்டுப் புறப்படுவதற்குள் எப்படியாவது மகாத்மாவைப் பார்க்க விரும்புவதாக ஸ்ரீகிருஷ்ணதாஸிடம் மௌலானா கூறினார். ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஓடோடியும்
சென்று காந்திஜியினிடம் மௌலானாவின் விருப்பத்தைத் தெரிவித்தார். மகாத்மா தம்முடைய பலவீனத்தை மறந்து உடனே புறப்பட்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். மகாத்மாவைக் கண்டதும் மௌலானா முகம்மதலியும் டாக்டர் கிச்லூவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்திஜி அருகில் வந்ததும் அவரை அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் உகுத்தார்கள். தாங்கள் சிறையாளிகள் என்பதையும் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதையும் ஒரு நிமிஷம் மறந்தே விட்டார்கள். ஆரம்ப உணர்ச்சிப் பெருக்குக் கொஞ்சம் குறைந்ததும் மௌலானா "பாபுஜி! 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளக் கூடியவர் வேறு யார்? சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று திரும்பத் திரும்ப மௌலானா கோஷித்துக்கொண்டே போனார். தலைவரிடம் இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் கண்டவர்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் தளும்பியது.
இந்த நிகழ்ச்சியினால் மகாத்மாவுக்கு ஓரளவு மனச்சாந்தி ஏற்பட்டது. ஆனால் இவ்வாறு மகாத்மா கைக்கொண்ட முறையே சரியானது என்று கருதியவர்கள் மிகச் சிலர் தான். மற்றவர்கள் அதை ஒபபுக்கொள்ளவில்லை. மகாத்மா காந்தி செய்தது பெரிய தவறு என்றும், காரியசித்தி அடையும் சமயத்தில் மகாத்மா தேசத்தைப் பின்னுக்கு இழுத்து விட்டார் என்றும் சொன்னார்கள். மகாத்மாவுக்கு இந்தியாவின சுதந்திரத்தைக் காட்டிலும் அஹிம்சா தர்மப்பிரசாரமே பெரிது என்றார்கள். தேசமெங்கும் பரிபூரண அஹிம்சை நிலவும் வரையில் காத் திருப்பது என்றால், இந்த யுகத்தில் இந்தியா சுதந்திரம் அடையப் போவதில்லை என்று சொன்னார்கள்.
இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர தேசத்துப் பத்திரிகைகளிலே அதிகமாக வெளியாயின. டில்லியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் பூரண நம்பிக்கைக்கு உகந்த சகாக்களும் அவரைப் பலமாகத்
தாக்கினார்கள்.
பர்தோலி வரிகொடா இயக்கத்தையும் இந்தியா முழுவதிலும் தனிச் சட்ட மறுப்பையும் கூட நிறுத்தி வைத்து நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவது என்று காரியக் கமிட்டியில் தீர்மானம் செய்யப்பட்டது அல்லவா? அதை ஊர்ஜிதம் செய்வதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி டில்லியில் பிப்பரவரி 24-ஆம் தேதி கூடியது. அதற்காக 22-ஆம் தேதியன்று மகாத்மா காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் பர்தோலி மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.
"பொதுஜனச் சட்ட மறுப்பை இப்போது ஆரம்பிக்க முடியாமல் நீடித்துத் தள்ளிப்போட நேர்ந்ததற்கு நீங்கள் பொறுப்பாளிகள் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் நன்கு நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் இந்தியா ஒரு தேசம். எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நேர்ந்தால் அது தேசம் முழுவதையும் பாதிக்கிறது. ஆகையினாலேயே சௌரி-சௌரா நிகழ்ச்சி காரணமாக பர்தோலி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்காக நீங்கள் மனச் சோர்வு அடையக்கூடாது.
பலாத்கார யுத்தத்தில் தலைவன் படைகளை 'முன்னேறுங்கள்' என்றால் முன்னேற வேண்டும். 'பின்வாங்குங்கள்' என்றால் பின்வாங்கியே தீர வேண்டும். இது அஹிம்சைப் போருக்கும் பொருந்தும். ஆகையால் கொடுக்கவேண்டிய வரிகளையெல்லாம் காலாகாலத்தில் கொடுத்துவிடுங்கள். எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள். நிர்மாணத் திட்டத்தில் முழு உற்சாகம் காட்டி வேலை செய்யுங்கள். நிர்மாண வேலையின் மூலமாகச் சுதந்திரத்தின் சாராம்சத்தை நாம் அடைந்தவர்களாவோம்!*
பர்தோலி வாசிகளுக்கு எவ்வளவோ ஏமாற்றமும் மனத்தாங்கலும் இருந்த போதிலும் அவர்கள் மகாத்மாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். பர்தோலி வாசிகளைப்போல் இந்தியா முழுவதும் காந்தி மகாத்மாவின் போதனைக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.
அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக மகாத்மாஜி டில்லிக்குப் பிப்ரவரி 23-ஆம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவருக்குப் பல கடிதங்கள் காத்திருந்தன. சிறைக்குள்ளேயிருந்து பல நண்பர்களும் சகாக்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். டில்லி, லக்நௌ, ஆக்ரா முதலிய ஊர்களின் சிறைகளிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவையெல்லாம் பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்துக் கண்டிப்பதாகவே இருந்தன. அந்தச் சமயத்தில், அவ்வளவு தூரம் சர்க்காரை அறை கூவி அழைத்த பிறகு பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவதை யாரும் ஆதரிக்கவில்லை. அ.இ.கா. கமிட்டி கூட்டத்துக்கு நேரில் ஆஜரானவர்களும் அவ்விதமே மகாத்மாவுடன் மாறுபட்டார்கள். சுவாமி சிரத்தானந்தர், "இந்தியா முழுவதும் அமைதியை எதிர்பார்ப்பது என்பது நடவாத காரியம்; ஆகையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டு வேறு முறைகளைப் பார்க்க வேண்டியதுதான்!" என்றார். வங்காளத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிக்க அதிருப்தி தெரிவித்தார்கள். மகாத்மா நிர்மாணத் திட்டத்தை அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக அவர்கள் சொல்லி, "மிட்னாபூரில் ஜனங்கள் கதர் கட்டிக் கொள்ளாமலே சர்க்காருடன் போர் நடத்தி யூனியன் வரியை ரத்து செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்." என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார்கள். இதனாலெல்லாம் மகாத்மா முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கூடத் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை யென்ற நம்பிக்கையை அடைந்தார். ஆகையால் பர்தோலி சட்டமறுப்பை நிறுத்தி வைத்தது ரொம்பவும் சரியான காரியம் என்ற முடிவுக்கு வந்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஹக்கீம் அஜ்மல்கானின் அக்கிராசனத்தின் கீழ் கூடியது. மகாத்மா முதலிலேயே தம்முடைய கருத்தை வெளியிட்விட்டார். "பரிபூரண அஹிம்சையில்லாமல் என்னால் இயக்கத்தை நடத்த முடியாது. உங்களுடைய கருத்து மாறுபட்டிருந்தால் நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்றார். இதை அநேகர் விரும்பவில்லை. மகாத்மாவின் தலைமை இல்லாமல் இந்தியாவின் விடுதலை கை கூடாது, எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று அவர்கள் கருதினார்கள். பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்த சுவாமி சிரத்தானந்தரே இந்தக் கூட்டத்தில் "மகாத்மாஜி! நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும்? தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை!" என்றார். ஆனால் காந்திஜியின் தலைமையை இழப்பதற்கம் ஒரு சிலர் தயாராயிருந்தார்கள். மகாராஷடிரத்தைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேயும் கல்கத்தாவிலிருந்து வந்த ஸ்ரீ ஜே. என். சென்குப்தாவும் மகாத்மாவின் பேரில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.
ஒரு கமிட்டி நியமித்து, ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு, தேசத்துக்கு நேர்ந்த தீமைகளையெல்லாம் விசாரிக்கச் சொல்லவேண்டும் என்று டாக்டர் மூஞ்சே பிரேரணை செய்தார். ஸ்ரீ அப்யங்கர், மௌலானா ஹஸரத் மோகினி முதலியவர்கள்
தீவிரமாக டாக்டர் மூஞ்சேயை ஆதரித்தார்கள். வேறு சிலர் மகாத்மாவை ஆதரித்துப் பேசலானார்கள். வாதப் பிரதி வாதங்கள் முற்றி மனக் கசப்பு வளரும் போலிருந்தது.
இச்சமயத்தில் ஹக்கீம் அஜ்மல்கான் உடம்பு சரியாயில்லையென்று சொல்லி எழுந்து போனார். மகாத்மாவையே தமக்குப் பதிலாகச் சபையை நடத்தும்படி ஏற்படுத்திவிட்டுப் போனார். மகாத்மா தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் நிலைமையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஏனெனில், தம்மைத் தாங்கிப் பேச விரும்பிய யாரையம் மகாத்மா பேசவதற்கு அனுமதிக்கவில்லை. தம்மீது குற்றங் கூற விரும்பியவர்கள் தங்களுடைய மனதைத்திறந்து சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல அநுமதித்தார். இதனால் சபையில் ஒர பெரிய மாறுதல் ஏற்பட்டது. குற்றங் கூறியவர்களுக்கும் கொஞ்ச நேரத்தக் கெல்லாம் அலுத்துப் போய்விட்டது. டாக்டர் மூஞ்சே தங்கள் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மகாத்மாஜி தமது கட்சியை எடுத்துச் சொல்லவேண்டும் என்றம் கேட்டுக்கொண்டார். மகாத்மாஜி அதற்க இணங்க வில்லை. "நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. சபையோர் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை யொட்டித் தீர்மானிக்கட்டும். என்னுடைய திட்டம் பிடிக்காவிட்டால் நான் விலகிக் கொள்ளத்
தயார்" என்ற மட்டும் சொன்னார். வோட்டுக்கு விடப்பட்ட போது டாக்டர் மூஞ்சேயின் தீர்மானமும் ஸ்ரீ ஜே. எம். சென்குப்தாவின் தீர்மானமம் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தன. பர்தோலி தீர்மானம் மகாத்மாவே ஒப்புக்கொண்ட சிற்சில மாறுதல்களுடன் நிறைவேறியத. இதன் பிரகாரம் பொதஜனச் சட்டமறுப்பு யோசனை இப்போதைக்குக் கைவிடப்பட்டது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தனிப்பட்ட சட்டமறுப்புத் தொடங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது; அதற்குரிய நிர்மாணத் திட்ட நிபந்தனைகள் முன்னைவிடக் கடுமையாயின.
டில்லியிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதிக்குத் திரும்பி வந்தார். இனி கதர் உற்பத்தி, தேசீயக் கல்வி, தீண்டாமை விலக்கு, ஹிந்து மஸ்லிம் ஒற்றுமை ஆகிய நிர்மாணத் திட்டங்களில் தம்முடைய பூரண கவனத்தையும் செலத்தத் தீர்மானித்து மகாத்மா அந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மகாத்மாஜி பிறருடைய பாவங்களக்கு உண்ணாவிரத பிராயச்சித்தம் செய்து, அஹிம்சா தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பொதுஜனச் சட்ட மறுப்பையும் நிறுத்தி வைத்த பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்த முன்வந்தனர். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் இந்த இழிதகைமையான செயலைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
39. கைதிக் கூண்டில்!
டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலிருந்து மகாத்மா சபர்மதி சத்யாக்கிரஹ ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். அவருடைய உள்ளம் அமைதி இழந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவாக மகாத்மாவின் தீர்மானத்துக்கு அதிக வோட்டுக்கள் வந்தது பற்றி அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ, பலருடைய மனதிலும் பலாத்காரம் குடியிருப்பதைக் கண்டேன். ஆகவே, எனக்குத் தோல்வி ஏற்படவேண்டும் என்றே பிரார்த்தித்தேன். நான் அதிகமாகப் பயப்படுவது பெரும்பான்மை வோட்டுப் பலத்தைக் கண்டுதான். என்னை ஆதரிப்பவர்கள் வெகு சிலராயிருக்கும் சமயங்களிலேயே என்னால் மிகவும் முக்கியமான வேலை செய்ய முடிந்திருக்கிறது" என்ற காந்திஜி டில்லியிலிருந்து திரும்பி வந்ததும் "எங் இந்தியா"வில் குறிப்பிட்டார். மேலும் காந்திஜி எழுதியதாவது:--
"காங்கிரஸ் ஊழியர்களில் ஓரளவு ஏமாற்றத்தையும் உற்சாகக் குறைவையும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சண்டமாருத எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஊளியர்களிடையில் நிர்மாண திட்டத்தை நிறை வேற்றுவதில் உற்சாகத்தையே காணவில்லை. 'இது என்ன சமூக சீர்திருத்த இயக்கமா?' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா?' என்றும் கேட்டார்கள்.
ஆகவே அஹிம்சையின் அடிப்படையைப் பெரும்பாலோர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை யென்றே ஏற்பட்டது.
அ.இ.கா. அங்கத்தினர்களுக்கு நான் எச்சரிக்கை செய்தேன்:- 'உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம்; நிராகரித்து விடுங்கள்' என்று. அப்படி எச்சரிக்கை செய்த பிறகும் பெரும்பான்மையோர் என்னுடைய பிரேரணையை மாறுதல் ஒன்றுமின்றி ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அவர்கள் இனித் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். சட்ட மறுப்புப்போரை இப்போதைக்கு மறந்துவிட்டு நிர்மாண வேலையில் ஈடுபட வேண்டும். நம்முடைய கால் தவறியபடியால் வழுக்கி விழுந்து விட்டோம். இப்போதாவது நாம் ஜாக்கிரதையடைந்து நமது காலை ஊன்றி வைக்காவிட்டால் வெள்ளம் நம்மை அடித்துக் கொண்டே போய்விடும்"
இவ்வாறு காந்திஜ காங்கிரஸ் தீவிரவாதிகளையும் அவசரக்காரர்களையும் நிதானப்படுத்துவதில் தமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கையில், அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். தேசமெல்லாம் சோர்வு குடிகொண்டிருக்கும் இந்தச் சமயமே மகாத்மாவைக் கைது செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஒருவாறு வெளிப்பட்டுப் போயிற்று. "மகாத்மாவைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி பரவியது. இது மகாத்மாவின் காதிலும் விழுந்தது. உடனே காந்திஜி "நான் கைது செய்யப்பட்டால்" என்ற கட்டுரையை எழுதினார். மார்ச்சு 9-ஆம் தேதி "எங் இந்தியா" வில் இக்கட்டுரை வெளியாயிற்று.
நாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அத வெற்றியாகும். 'அஹிம்சைப் புரட்சி யென்பது ஒருநாளும் நடவாத காரியம்' என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். சர்க்காரும் சர்க்காரை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோஷங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக் கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன். அதற்கு மேலே, காங்கிரஸின் நிர்மாண திட்டங்கள் எல்லாம் 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்" வேகத்தில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன். அஹிம்சை, சமூக ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, கதர், இந்த நாலு திட்டங்களும் சுயராஜ்யத்தின் நாலு தூண்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இவ்விதம் பொது மக்களின் கடமையைக் குறிப்பிட்டு விட்டு மகாத்மாஜி மேற்படி கட்டுரையைப் பின்வருமாறு முடித்திருந்தார்.:--
"தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புவதினால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன். முதலாவது என்னிடம் 'மாயமந்திர சக்திகள்' இரப்பதாகச் சலெர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும். இரண்டாவதாக ஜனங்கள் என்னுடைய தூண்டதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள். அவர்களுக்காகச் சுதந்திரப் பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும். மூன்றாவது,
என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணமாகம். நாலாவது சுயநல காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப் பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா?". காந்திஜி இவ்விதம் எழுதிய கட்டுரை வெளியான இரண்டு தினங்களுக்கெல்லாம் அந்த மகான் கோரிய ஓய்வை அவருக்குக் கொடுக்க அதிகார வர்க்கத்தார் முன் வந்தார்கள்.
மார்ச்சு 8-ஆம் தேதியன்று மகாத்மா கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதைக் குறித்து ஆசிரமவாசிகள் சிறிதும் பரபரப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஜனாப் சோடானி சாகிப்பின் கோரிக்கையின் பேரில் 8-ஆம் தேதி மகாத்மா ஆஜ்மீருக்குச் சென்றார். 10-ஆம் தேதி திரும்பி வந்தார். அன்றைக்கு ஆஜ்மீரிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த தந்திச் செய்தி சந்தேகாஸ்பதமா யிருந்தபடியால் ஆசிரமவாசிகள் சிறிது பரபரப்பை அடைந்தார்கள். எங்கேயோ வெளியூரில், தாங்கள் இல்லாத இடத்தில், மகாத்மாவைக் கைது செய்து கொண்டுபோய் விடுவார்களோ என்ற கவலை உண்டாயிற்று. ஆகையினால் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி முதலியவர்கள் மகாத்மாஜி திரும்பி வரவேண்டிய வண்டியை எதிர்நோக்கிச் சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து சென்றார்கள்.
ஒரு சமயம் காந்திஜி பின்வருமாறு எழுதினார்:- "எனக்கும் ஹிந்து மதத்துக்குக் உள்ள பாந்தவ்யம் எனக்கும் என் பத்தினிக்கும் உள்ள பாந்தவ்யத்தைப் போன்றது. ஸ்ரீமதி கஸ்தூரிபாயிடம் நான் பல குறைகளைக் காண்கிறேன். ஆனாலும் அந்தக் குறைகளையுடையவளிடம் அசைக்க முடியாத நேசமும் பற்றும் எனக்கு உண்டு. இதுபோலவே ஹிந்து மதத்தில் நான் பல குறைகளைக் கண்டாலும் அதனிடம் எனக்குள்ள அபிமானம் மிக ஆழ்ந்த அபிமானம், அதை ஒரு நாளும் அசைக்க முடியாது."
காந்திஜி இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாயை ஹிந்து மதத்துக்கு ஒப்பிட்டது ஹிந்து மதத்துக்கே கௌரவம் அளிப்பதாகும் என்று நாம் கருதுகிறோம். காந்தி தமது பத்தினியிடம் பல குறைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய அன்னை
கஸ்தூரிபாயிடம் நாம் ஒரு குறையையும் காணவில்லை. நாம் காண்பதெல்லாம் அவருடைய பெருமைதான். காந்திஜி தேசத்தின் முடிசூடா மன்னராய் விளங்கியபோதும் தேசமெல்லாம் காந்திஜியைக் குற்றங் கூறிக் கோபித்துக்கொண்ட
போதும் அன்னை கஸ்தூரிபாயின் பக்தி அவரிடம் ஒரேவிதமாக மாறாமலிருந்தது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் கஸ்தூரி பாய் உட்பட்டார். அவர் கொடுத்த கஷ்டங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் அநுபவித்தார். ஆனால் தமக்குத் தெரியாமல்
தம் கணவரைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுவார்களோ என்ற எண்ணம் மட்டும் அவரைத் துணுக்கத்துக்கு உள்ளாக்கியது. சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து ஓடினார். நல்லவேளையாக, பயந்தபடி ஒன்றும் நடைபெறவில்லை. காந்திஜி குறிப்பிட்ட ரயிலில் வந்து இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டும் தமாஷ் செய்து கொண்டும் காந்திஜி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.
அன்று மாலைப் பிரார்த்தனை ஆசிரமத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக சிரத்தையும் உருக்கமும் உள்ளதாக நடை பெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் பலருடைய கண்களில் நீர் ததும்பியது. ஆனால் மகாத்மாவோ வழக்கத்தைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் ஆசிரமத்துக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்களில் தாமும் ஒரு குழந்தையைப்போல் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, வழக்கம்போலக் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஆமதாபத்திலிருந்து பல நண்பர்கள் வந்து ஊரில் பரவியுள்ள வதந்தியைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் காந்திஜி தைரியம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.
அப்படி வந்தவர்களில் கடைசியாகத் திரும்பிப் போனவர்கள் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஜனாப் ஷுவாயிப் குரேஷீ, ஸ்ரீமதி அனசூயாபென் ஆகியவர்கள். இவர்களில் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் "எங் இந்தியா" பத்திரிகையின் பதிப்பாளர். இவர்கள் மூவரும் இரவு பத்து மணிக்கு மகாத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்கள் போனவுடனே மகாத்மாவும் வேலையை நிறுத்திவிட்டுப் படுக்கப் போக எழுந்தார். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஜனாப் குரேஷியும் ஸ்ரீமதி அனசூயாபென்னும் மட்டும் திரும்பி வந்தார்கள். ஆசிரம எல்லையிலிருந்து ஆமதாபாத் புறப்படும் இடத்தில்
போலீஸ் சூபரிண்டெண்டும் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றும், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைக் கைது செய்து விட்டார்கள் என்றும், மகாத்மாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். இந்தச் செய்தி ஒரு நிமிஷத்துக்குள் ஆசிரமம் முழுவதும் பரவிவிட்டது. ஆசிரமத்தில் வசித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வந்து மகாத்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.
மகாத்மா நீண்டகாலமாகச் செய்த தவம் நிறைவேறியவரைப்போல் சந்தோஷமடைந்தார். ஜனாப் ஷுவாயிப் குரேஷியிடம், "இராஜகோபாலாச்சாரியார் விடுதலையாகி வருகிற வரையில் நீங்கள் 'எங் இந்தியா' வைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வந்ததும் அவரிடம் ஆசிரியப் பொறுப்பை ஒப்புவித்து விடுங்கள்!" என்று சொன்னார்.
ராஜாஜி டிசம்பர் கடைசியில் வேலூரில் 144-வது உத்திரவை மீறியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைந்தார். அவர் விடுதலையாகும் தேதி நெருங்கியிருந்தது.
காந்திஜி தீர்க்கமாக யோசித்து, "நான் சிறைப்பட்டால் என் கொள்கைக்கு இணங்க 'எங் இந்தியா'வை நடத்தக்கூடியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்" என்று முடிவுகட்டித் தெரிவித்திருந்தார். அதையே இப்பொழுதும் சொன்னார்.
பிறகு ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி அவர்களை உற்சாகப்படுத்தி சிரிப்பூட்டி விடைபெற்றார். இது முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து "வைஷ்ணவ ஜனதோ" கீதத்தைப் பாடும்படி சொன்னார். பிள்ளைப் பிராயத்தில் மகாத்மாவின் உள்ளத்தில் பதிந்த இந்தக் கீதத்தை ஒவவொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் மகாத்மா பாடச் சொல்வது வழக்கம். அவ்வாறே இச் சமயத்திலும் அந்தக் கீதத்தைப் பாடச்சொல்லிக் கேட்ட பிறகு மகாத்மா பிரயாணமானார்.
அந்தச் சமயத்தில் மௌலானா ஹஸரத் மோஹினி வந்த சேர்ந்தார். இவர் மகாத்மா காந்தியைப் பலதடவையும் எதிர்த்துப் போராடியவர். ஆமதாபாத் காங்கிரஸிலேகூட
எதிர்த்தார். அப்படிப்பட்டவர் இப்போது கண்ணுங்கண்ணீருமாக வந்தார். இச்சமயத்தில் அவர்வந்தது மகாத்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அஹிம்சை அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு இனிப் பூரண ஆதரவு தருவதாக மௌலானா கூறினார்.
காந்திஜியையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள். அங்கே பலமான இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட இரு அறைகளில் அவர்கள் அடைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு இரும்புக் கட்டில், ஒரு கயிற்று மெத்தை, ஒரு தலையணை, ஒரு ஜமக்காளம், ஒரு கம்பளம் இவை இருந்தன. அறைகளுக்கு வெளியே தாழ்வாரம் இருந்தது.
இந்தச் சிறை வாசல் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் இன்னம் சில ஆசிரமவாசிகளும் சென்றார்கள். சிறைக்குள்ளே காந்திஜியை அனுப்பிக்தைவைச் சாத்திப் பூட்டும் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் தமது பதியின் அருகில் இருந்துவிட்டுப் பின்னர் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.
காந்திஜியின் உள்ளத்தில் அன்றிரவு அமைதி குடிகொண்டிருந்தது. ஆனால் அன்னையின் உள்ளம் எப்படித் தத்தளித்தது என்பதை யாரால் விவரிக்க முடியும்? "இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக!" என்று அன்னையின் மனம் கஷ்டப்பட்டிருந்தால் அதில் வியப்பு ஒன்று மிராது. ஆனால் அவ்விதம் மனம் கஷ்டப்பட்டதாக ஸ்ரீமதி கஸ்தூரி பாய் அணுவளவும் காட்டிக்கொள்ளவில்லை.
மறுநாள் மார்ச்சு 11 - ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி.எஸ். அவர்களின் கோர்ட்டுக்கு மகாத்மாவையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் அழைத்துச் சென்றார்கள். "எங் இந்தியா" பத்திரிகையில் 29-9-'21, 15-12-'21, 23-2-'22 தேதி இதழ்களில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்படுகிறதென்று தெரியவந்தது. மேற்படி கட்டுரைகளின் தலைப்புகள் "இராஜ விசுவாசத்தைக் கெடுத்தல்", "புதிரும் விடையும்", "சிங்கத்தின் பிடரி குலுங்குகிறது" என்பவையாகும். இந்தக் கட்டுரைகள் கோர்ட்டில் படிக்கப்பட்டன. இவை "எங் இந்தியா"வில் வெளியாயின என்பதற்கும் "எங் இந்தியா" வின் ஆசிரியர் மகாத்மாகாந்தி, பதிப்பாளர் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் என்பதற்கும் சம்பிரதாயமான சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் சார்பீல்டு, ஜில்லா போலிஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹீலி, ஒரு ஸப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஸி.ஐ.டி. உத்தியோகஸ்தர் ஆகியவர்கள் சாட்சி சொன்னார்கள். சாட்சியங்களைப் பதிவுசெய்த பிறகு மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி,எஸ். குற்றப் பத்திரிகையைப் படித்தார். ஆமதாபாத் செ ஷன்ஸ் ஜட்ஜு மிஸ்டர் சி. என். புரும்பீல்டு ஐ.சி.எஸ். மன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற வேண்டும் என்று முடிவு கூறினர்.
1922-ஆம் வருஷத்திலே கூட ஒரு ஜில்லாவின் பிரதம உத்தியோகஸ்தர்கள், ஜட்ஜுகள் முதலியோர்கள் ஐரோப்பியர்களாகவே இருப்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக. அதைக் கவனித்தால்தான் மகாத்மாஜியின் தலைமையில் இந்தியாவின் விடதலைப் போர் வெற்றி அடைந்து இன்று நம்மை நாமே ஆண்டுகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மகத்தான சாதனை என்பது தெரியவரும்.
-----------------------------------------------------------
40. தண்டனை.
ஆமதாபாத் செ ஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 18-ஆம் தேதி அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் விசாரணை நடந்தது. முப்பது கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த மகத்தான தலைவர் கைதிக் கூண்டிலே நின்றார். அவர் பெயர் ஸ்ரீ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்னிய நாட்டிலிருந்து வந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவர் நீதிபதியின் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் மிஸ்டர் ஸி. என். புரூம்பீல்டு ஐ. சி. எஸ்.
மேற்படி வழக்கு விசாரணையின் விவரங்கள் பத்திரிகையில் வெளியானபோது கைதிக் கூண்டிலே நின்றது மகாத்மா காந்தியா அல்லது பிரிட்டிஷ் சர்க்காரா என்றும் சந்தேகம் தோன்றும்படி யிருந்தது.
பாவம்! ஜில்லா ஜட்ஜ் மிஸ்டர் புரூம்பீல்டு திணறிப் போனார்! அவருடைய திணறலுக்கு அறிகுறி அவர் கூறிய தீர்ப்பில் தெளிவாக இருந்தது. பம்பாய் சர்க்காரின் அட்வகேட் ஜெனரல் ஸர். ஜே.டி. ஸ்ட்ராங்மான் அரசாங்கத்தின் சார்பாக மேற்படி வழக்கை நடத்தினார். எதிரிகளான காந்தி மகாத்மாவுக்கும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கருக்கும் வக்கீல் கிடையாது. எதிர் வழக்காடுவதாக அவர்களுக்கு உத்தேசமேயில்லை.
ஆரம்பத்தில் நீதிபதி குற்றப் பத்திரிகை வாசித்துக் காட்டினார். "எங் இந்தியா" வில் எழுதிய மூன்று கட்டுரைகளக்காக எதிரிகள் பேரில் 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பேரில் துவே ஷத்தை உண்டாக்குதல், வெறுப்பை வளர்த்தல் அநீதியைப் பெருக்குதல் ஆகியவை மேற்படி பிரிவின்கீழ் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்கள். இவற்றின் கருத்தை நீதிபதி விளக்கிச் சொல்லிவிட்ட, "மிஸ்டர் காந்தி!" நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது விசாரிக்கப்பட விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
மகாத்மா:- குறிப்பிட்ட குற்றங்கள் எல்லாவற்றையும் செய்ததாக ஒப்புக் கொள்கிறேன். குற்றப் பத்திரிகையில் அரசரின் பெயரை குறிப்பிடாமல் விட்டிருக்கிறது. இது சரியான காரியம்.
நீதிபதி:- மிஸ்டர் பாங்கர்! நீங்கள் குற்றவாளி என்று ஒப்புக் கொள்கிறீர்களா! அல்லது கோர்ட்டில் விசாரணை கோருகிறீர்களா?
பாங்கர்:- குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன்.
இந்தக் கட்டத்தில் அட்வகேட் ஜெனரல் ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் குறுக்கிட்டார். "எதிரிகள் குற்றவாளிகள் என்று ஒப்புக்கொண்ட பொதிலும் முழு விசாரணையையும் நடத்த வேண்டும் என்ற நான் கோருகிறேன். சாட்சிகள் விசாரிக்கப் படவேண்டும்" என்றார்.
நீதிபதி:- நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. எதிரிகள் குற்றவாளி என்று ஒபபுக்கொண்ட பிறகு சாட்சி விசாரணை எதற்கு? தண்டனை விஷயம் தீர்மானிக்கப் படவேண்டும். அது சம்பந்தமாக நீங்கள் சொல்வதையும் மிஸ்டர் காந்தி சொல்வதையும் கேட்கத் தயாராயிருக்கிறேன்.
இதைக் கேட்டுக் காந்திஜி புன்னகை புரிந்தார். விசாரணைச் சடங்குகள் அவசியமில்லை என்னம் அபிப்பிராயமே மகாத்மாவுக்கும் இருந்தது. பிறகு ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் எதிரிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்களை எடுத்துச் சொன்னார். குறிப்பிட்ட இந்த மூன்று கட்டுரைகளும் ஏதோ யோசியாமல் எழுதப்பட்ட விஷயங்கள் அல்லவென்றும், நெடுநாளாகவே மிஸ்டர் காந்தி அரசாங்க துவேஷப் பிரசாரம் செய்து வந்திருக்கிறார் என்றும் எடுத்துக் கூறினார். "எங் இந்தியா" பத்திரிகையிலிருந்து இன்னும் சில கட்டுரைகளைத் தம் கட்சிக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டார். "இந்தக் கட்டுரைகளில் மிஸ்டர் காந்தி அஹிம்சையை வற்புறுத்தி யிருக்கிறார் என்பது உண்மைதான். அதனால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா? இந்தக் கேள்விக்குச் சௌரி சௌராவிலும், சென்னையிலும், பம்பாயிலும் நடந்த சம்பவங்கள் பதில் சொல்லுகின்றன. இந்தச் சம்பவங்களினால் எவ்வளவோ பேர் கஷ்ட நஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்துக் கோர்ட்டார் தண்டனையைத் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறி முடித்தார்.
நீதிபதி:-- மிஸ்டர் காந்தி! தண்டனை சம்பந்தமாக நீங்கள் ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்களா?
காந்திஜி:-- நான் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புகிறேன்.
நீதிபதி:-- வாக்குமூலத்தை எழுத்தில் எழுதிக்கொடுத்து விட்டால் ரிகார்டில் சேர்த்துக் கொள்வேன்.
காந்திஜி:-- வாக்கு மூலம் எழுதியிருக்கிறேன். கோர்ட்டில் படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன்.
மகாத்மாவின் விருப்பத்தின்படி வாக்கு மூலத்தைக் கோர்ட்டில் படிப்பதற்கு நீதிபதி சம்மதம் கொடுத்தார்.
எழுதியிருந்த வாக்கு மூலத்தைப் படிப்பதற்கு முன்னால் மகாத்மா வாய்மொழியாகச் சில வார்த்தைகள் சொன்னார்.
"அட்வகேட் ஜெனரல் என்னைப்பற்றி கூறியவற்றை நான் முழுதும் ஒப்புக்கொள்கிறேன். இப்போதுள்ள அரசாங்க முறையின் மீது அப்ரீதியை உண்டாக்குவதில் நான் அளவில்லாத ஆத்திரம் கொண்டிருந்தேன். "எங் இந்தியா"வுக்கு ஆசிரியராவதற்கு முன்னாலேயே இந்த வேலையை ஆரம்பித்து விட்டேன். பம்பாய், சென்னை, சௌரி-சௌரா சம்பவங்களுக்கு என் பேரில் அட்வகேட் ஜெனரல் பொறுப்புச் சுமத்துவதையம் நான் ஒப்புக்கொள்கிறேன். நெருப்புடன் விளையாடுகிறேன் என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. அஹிம்சை என்னுடைய மதத்தின் முதற்கொள்கை; கடைசிக் கொள்கையும் அதுவே. ஆனாலும் என்னுடைய தேசத்துக்கு மகத்தான தீங்கிழைத்த ஆட்சி முறையை என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே இந்தப் போரில் துணிந்திறங்கினேன். என்னுடைய நாட்டு மக்கள் சில இடங்களில் வெறி கொண்டு பயங்கரச் செயல்களை நிகழ்த்திவிட்டார்கள். அதன் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. இந்தக் குற்றத்துக்கு அதிகமான தண்டனை எதுவோ அதை எனக்கு விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ..... "
உலக சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நடை பெற்றிருக்கின்றன. ஆனால் எந்தக் கோர்ட்டிலாவது, எந்த வழக்கிலாவது, இப்படிக் 'குற்றவாளி' என்று கைதிக்கூண்டில் நின்றவர் ஒருவர், "எவ்வளவு அதிகமான தண்டனை உண்டோ அதை எனக்கு அளிக்க வேண்டும்!" என்று கேட்டதுண்டா? கிடையாது. இத்தகைய விந்தை இந்தப் புண்ணிய பூமியிலே தான் நடந்தது. ஆமதாபாத் செ ஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு 18 - ஆம் தேதி நடந்தது.
காந்திஜி பின்னர் தாம் எழுத்து மூலம் ஏற்கனவே தயாரித்திருந்த வாக்கு மூலத்தைப் படித்தார். அந்த வாக்கு மூலத்தில், தாம் எப்படிப் பூரண இராஜ விறுவாசியாகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக ஏமாற்றமடைந்து, முடிவில் அரசாங்கத்தின்மேல் விரோதத்தைப் பரப்புவதையே தம்முடைய வாழ்க்கை இலட்சியமாகக்கொள்ள நேர்ந்தது, என்பதை விவரித்தார்.
அந்த வாக்கு மூலத்தில் காந்திஜி கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தின் ஒளியினால் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளையும் இந்திய மக்களின் மாசுகளையும் ஒருங்கே தகிக்கும் அக்கினி ஜ்வாலையாக அந்த வாக்குமூலம் திகழ்ந்தது.
"தென்னாப்பிரிக்காவில் 1893-ஆம் ஆண்டில் என்னுடைய பொது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. அந்த நாட்டில் பிரிட்டிஷ் அதிகாரத்துடன் எனக்கேற்பட்ட முதல் அனுபவம் அவ்வளவு சந்தோஷகரமாயில்லை. நான் இந்தியனாயிருந்த காரணத்தினால் எனக்கு மனித உரிமைகளே இல்லை என்று அறிந்தேன்.
இதனால் நான் திகைப்படைந்து விடவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி நல்ல ஆட்சிதான் என்றும், இந்தியர்களை நடத்தும் முறை அதில் ஏற்பட்ட சிறு கேடு என்றும், அந்தக் கேட்டைப் போக்கிவிடலாம் என்றும் நம்பினேன். ஆகையால் சர்க்காருடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்தேன்.
1899-ல் போயர் யுத்தம் ஏற்பட்ட போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கே அபாயம் நேர்ந்தது. அந்த நிலைமையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு என் மனப் பூர்வமான ஊழியத்தை அளித்தேன். போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தொண்டர்படை திரட்டினேன். 1906-ஆம் ஆண்டில் ஸூலூ கலகத்தின்போதும் அத்தகைய ஊழியம் புரிந்தேன். இந்த ஊழியங்களுக்காகத் தென்னாப் பிரிக்கா சர்க்கார் எனக்கு மெடல்கள் வழங்கினர். இந்திய சர்க்காரும் 'கெய்ஸரி ஹிண்ட்' தங்கப் பதக்கம் எனக்கு அளித்தார்கள். இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் யுத்தம் மூண்ட போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். லண்டனில் வசித்த இந்தியர்களைக்கொண்டு யுத்த சேவைக்குத் தொண்டர் படை திரட்டினேன். கடைசியாக 1918-ல் டில்லியில் நடந்த யுத்த மகா நாட்டில் லார்ட் செம்ஸ்போர்டு செய்த விண்ணப்பத்தை முன்னிட்டு, என் உடல் நலம் கெட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், கெயீரா ஜில்லாவில் சேனைக்கு ஆள் திரட்டும் வேலை செய்தேன். இந்த ஊழியங்களையெல்லாம் நான் செய்த போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் என்னுடைய நாட்டாருக்குப் பூரண சம அந்தஸ்துக் கிடைக்கப்போகிறதென்று எதிர்பார்த்தேன்.
ராவ்லட் சட்டத்தின் மூலம் எனக்கு முதலாவது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அச்சட்டம் என்னுடைய ஜனங்களின் சுதந்திரத்தை அடியோடு பறிப்பதாயிருந்தது. பிறகு பஞ்சாப் பயங்கர சம்பவங்கள் தொடர்ந்தன. இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரிட்டிஷ் முதல் மந்திரி அளித்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டதையும் கண்டேன்.
இவ்வளவுக்கும் பிறகு கூட, அமிருதசரஸ் காங்கிரஸில் மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஒப்புக்கொண்டு நடத்திவைக்க வேண்டும் என்று நான் போராடினேன். அதன் மூலம் பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்குப் பரிகாரம் கிடைக்கும்
என்று நம்பினேன்.
என்னுடைய நம்பிக்கை பாழாயிற்று. பஞ்சாப் கொடுமைகளுக்குக் காரணமாயிருந்த அதிகாரிகள் அவர்களுடைய உத்தியோகங்களில் நீடித்திருந்தார்கள். புதிய சீர்திருத்தங்களின் மூலம் இந்தியாவின் செல்வம் மேலும் சுரண்டப்படும் என்பதும் இந்தியாவின் அடிமைத்தனம் நீடிக்கும் என்பதும் தெளிவாயின."
பிரிட்டிஷ் ஆட்சியினால் இந்தியா அடைந்துள்ள தீங்குகளை மகாத்மா விவரித்து விட்டும் மேலும் கூறியவதாவது:-
"இந்திய மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களுக்குள்ளே 124-ஏ முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. இந்திய மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தேச பக்தர்கள் பலர் மேற்படி சட்டத்தின்கீழ்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப் பட்டதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். தனிப்பட்ட அதிகாரி யார் பேரிலும் எனக்கு வெறுப்பு கிடையாது. அரரரிடத்திலும் எனக்கு அப்ரீதி கிடையாது. ஆனால் இந்தியாவில் முன் நடந்த எந்த ஆட்சியைக் காட்டிலும் அதிக தீங்கு செய்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி முறையை வெறுப்பது என்னுடைய கடமை. இந்த ஆட்சி முறையில் விசுவாசம் வைப்பது பாவம். எனக்கு விரோதமான சாட்சியங்களாகக் குறிப்பிட்ட கட்டுரைகளை எழுதியது நான் செய்த பெரும் பாக்கியம்.
சட்டப் பிரகாரம் நான் செய்திருப்பது பெருங்குற்றந்தான்; ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அது என்னுடைய பரம தர்மம். ஆகவே நீதிபதியாகிய தாங்கள் என்னை குற்றமற்றவன் என்று கருதினால் தங்களுடைய உத்தியோகத்தை ராஜினாமா செய்ய வேண்டும். என்னைக் குற்றவாளி என்று கருதினால் சட்டப்படி அதிகமான தண்டனை எது உண்டோ, அதை அளிக்கவேண்டும்"
இவ்விதம் மகாத்மா காந்தி உலக சரித்திரத்திலேயே பிரசித்தி பெறக்கூடிய வாக்குமூலத்தைப் படித்து முடித்தார். சற்று நேரம் கோர்ட்டில் நிசப்தம் நிலவியது. கோர்ட்டில் இம்மாதிரி வாக்கு மூலத்தை யாரும் அதுவரை கேட்டதுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை.
பின்னர், நீதிபதி புரூம்பீல்டு தமது கடமையை நினைவு படுத்திக்கொண்டு ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைப் பார்த்து நீங்கள் ஏதாவது சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீ பாங்கர், "குறிப்பிட்ட கட்டுரைகளை அச்சிட்டுப் பிரசுரித்தது என்னுடைய பாக்கியம் என்று கருதுகிறேன். நான் குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன். தண்டனையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.
நீதிபதி புரூம்பீல்டு பின்வரும் தீர்ப்பை எழுதிக் கோர்ட்டில் படித்தார்:-
"மிஸ்டர் காந்தி! குற்றவாளி என்று ஒப்புக்கொண்டதால் என்னுடைய வேலையை ஒரு விதத்தில் சுலபமாக்கிவிட்டீர்கள். ஆனாலும் உங்களுக்குத் தண்டனை என்ன கொடுப்பது என்பது எந்த நீதிபதியையும் திணறச் செய்யக் கூடிய கடினமான
பிரச்னைதான். சட்டமானது மனிதர்களுக்குள் பெரியவர்கள் சின்னவர்கள் என்ற பேதம் காட்டக்கூடாது. ஆனபோதிலும் நான் விசாரித்திருக்கிற அல்லது விசாரிக்கக் கூடிய பிற குற்றவாளிகளுடனே உங்களை ஒன்றாகப்பாவிப்பது இயலாத காரியம். கோடிக் கணக்கான உங்கள் தேச மக்கள் உங்களை மாபெரும் தலைவராகவும் மகத்தான தேச பக்தர் என்றும் கருதுகிறார்கள் என்பதை நான் மறந்துவிட முடியாது. உங்களுடைய அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டவர்களும் உங்களை உயர்ந்த இலட்சியங்களுடைய உத்தம புருஷராகக் கருதுகிறார்கள். எனினும் நான் உங்களை ஒரே ஒரு முறையில்தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட பிரஜை; சட்டத்தை மீறிக் காரியம் செய்ததாக நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் பலாத்காரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்திருப்பதை நான் மறந்துவிட வில்லை. பல சமயங்களில் பலாத்காரம் நிகழாமல் தடுப்பதற்கும் முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுடைய அரசியல் பிரசாரத்தின் இயல்பும், யாரிடையே பிரசாரம் செய்தீர்களோ அவர்களுடைய இயல்பும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தும் உங்களுடைய பிரசாரம் பலாத்காரத்திலேயே வந்துமுடியும் என்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.
உங்களைச் சுதந்திரமாக விட்டுவைப்பது எந்த அரசாங்கத்துக்கும் முடியாத காரியமாக செய்துவிட்டீர்கள். இதைக் குறித்து இந்தியா தேசத்தில் உண்மையாக வருத்தப்படாதவர்கள் யாருமே இல்லை. உங்களுக்கு நான் செலுத்தவேண்டிய கடமையையும் பொது நன்மைக்காக நான் செய்யவேண்டிய கடமையையும் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனை விஷயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். பன்னிரண்டு வருஷங்களூக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே விதமான வழக்கு ஒன்று இதே சட்டத்தின் கீழ் நடைபெற்றது. பால கங்காதர திலகரின் வழக்கைச் சொல்லுகிறேன். அவர் மீது முடிவாக விதிக்கப்பட்ட தண்டனை ஆறு வருஷம் வெறுங்காவல். ச்ரி திலகருடன் உங்களை ஒப்பிட்டு நடத்துவது நியாயமே என்று நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். ஒவ்வொரு குற்றத்துக்கும் இரண்டு வருஷம் வீதம் மொத்தம் ஆறு வருஷம் வெறுங்காவல் தண்டனை உங்களுக்கு அளிப்பது என் கடமை என்று கருதி அவ்விதமே தீர்ப்பளிக்கிறேன். ஆறு வருஷத்துக்கு முன்னதாகவே இந்தியாவின் நிலைமையில் ஏற்படும் மாறுதலினால் உங்களுடைய தண்டனைக் காலத்தைக் குறைத்து அரசாங்கம் உங்களை விடுதலைசெய்வது சாத்யமானால் அதன்பொருட்டு என்னைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இராது."
இந்தியாவை அரசு புரிய வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் ஒரு சிலர் தீர்க்க திருஷ்டியும் பெருந்தன்மையும் படைத்தவர்களாயிருந்திருக்கிறார்கள். அவர்களில் மிஸ்டர் புரூம்பீல்டும் ஒருவர். மகாத்மாவின் பெருமையையும் அவருடைய தலைமையில் இந்தியா சுதந்திரம் அடையப் போகிறது என்பதையும் ஒருவாறு மிஸ்டர் புரூம்பீல்டு உணர்ந்திருந்தார். அத்தகைய உத்தம புருஷரைத் தண்டிக்க வேண்டி யிருக்கிறதே என்று கஷ்டப்பட்டுக் கொண்டே அவர் தீர்ப்பளித்திருப்பது நன்றாய்த் தெரிகிறதல்லவா?
பின்னர், ஸ்ரீ சங்கர்லாலுக்கு ஒரு வருஷம் வெறுங்காவலும் ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி அளித்தார். தீர்ப்பைக் கேட்ட பிறகு காந்திஜியும் தம்முடைய திருப்தியைப் பின் வருமாறு தெரிவித்துக் கொண்டார்:-
"ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். லோகமான்ய பாலகங்காதரதிலகருடன் என்னை ஒப்பிட்டுக் கூறியதைப் பெறற்கரும் பேறாகவும் கருதுகிறேன். எனக்குத் தாங்கள் கொடுத்திருக்கும் தண்டனையைக் காட்டிலும் குறைவாக வேறு எந்த நீதிபதியும் கொடுத்திருக்க முடியாது. தாங்கள் என்னை நடத்தியதைக் காட்டிலும் மரியாதையாக யாரும் நடத்தி யிருக்கவும் முடியாது!"
இதைக் கேட்டுவிட்டு நீதிபதி புரூம்பீல்டு கோர்ட்டை விட்டுச் சென்றார். மனதில் பெரும் பாரத்துடனேதான் அவர் சென்றிருக்க வேண்டும். காந்திஜியோ முகமலர்ச்சியுடன் தம்மைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தார். ஆசிரம வாசிகளும் நண்பர்களும் அவருடைய பாதங்களைத் தொட்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.
இப்படிச் செய்கையில் சிலர் கண்ணீர் விட்டார்கள்; சிலர் விம்மி அழுதார்கள். காந்திஜி ஒவ்வொருவருக்கும் ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லி தைரியப்படுத்தினார். ஸ்ரீ சங்கர்லால் பாங்கரும் புன்னகையுடன் விளங்கினார். அவர் குதூகலமாயிருப்பதற்குக் கேட்பானேன்? உலக சிரேஷ்டராகிய உத்தம புருஷருடன் கைதிக் கூண்டில் நின்று தண்டனை அடைந்து சிறை செல்லுவதற்கு எவ்வளவு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்?
நண்பர்கள் அனைவரும் மகாத்மாஜி வற்புறுத்தியதன் பேரில் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றார்கள். பிறகு போலீஸார் மகாத்மாவையும் ஸ்ரீசங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள்.
-----------------------------------------------------------
41. சிறை வாழ்வு
பூனாவுக்குச் சமீபத்தில் எரவாடா என்ற பெயரையுடைய ஊர் ஒன்று இருக்கிறது. அந்த ஊரைப் பற்றியாவது அதில் உள்ள பெரிய சிறைச் சாலையைப் பற்றியாவது அதற்கு முன்பு பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும் அந்த ஊரைப் பற்றி அதிகமாகச் சிந்தித்ததில்லை. திடீரென்று எரவாடா சிறை இந்தியா தேசத்தின் கவனத்தைக் கவர்ந்தது. சரித்திரத்திலே தனக்கு ஓர் இடத்தையும் சம்பாதித்துக் கொண்டது.
காந்திஜியின் விசாரணை, தீர்ப்பு எல்லாம் முடிந்ததும் அவரைச் சபர்மதி சிறையிலிருந்து எரவாடாவிலிருந்த பெரிய சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.
சிறைக் கதவு மூடியதும் மகாத்மாவின் உள்ளத்தில் நீண்ட காலமாக அவரை விட்டுப் பிரிந்திருந்த சாந்தி மீண்டும் வந்து குடிகொண்டது. அவ்வாறே வெளியில் இந்தியா தேசத்தின் நாடு நகரங்களிலும் அமைதி குடிகொண்டிருந்தது.
காந்திஜி ஆறு வருஷம் தண்டனை அடைந்த செய்தி மக்களின் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை உண்டாக்கியது. ஆயினும் அதன் காரணமாக நாட்டில் எங்கும் கலகம் அல்லது குழப்பம் ஏற்படவில்லை. கடையடைப்பு, ஹர்த்தால் முதலியவையும் நடைபெறவில்லை. இது விஷயத்தில் காந்திஜியின் இறுதிக் கட்டளையை நாட்டு மக்கள் பரிபூரணமாக நிறைவேற்றி வைத்தார்கள்.
"நான் சிறைப்பட்டால் கடையடைப்பு வேண்டாம்; கூட்டமும் வேண்டாம்!" என்று காந்திஜி திருப்பித் திருப்பி வற்புறுத்தியிருந்தது மக்களின் மனதைப் புண்படுத்தியிருந்தது. அதைக் காட்டிலும் சௌரி சௌரா சம்பவங் காரணமாக மகாத்மா மேற்கொண்ட பிராயச்சித்தமும் மக்களின் கண்களைத் திறந்திருந்தது.
'அஹிம்சை' என்று மகாத்மா சொல்வது ஏதோ காரணார்த்தமாக வெளிக்குச் சொல்லும் விஷயம் அல்லவென்பதையும், அஹிம்சை அவருடைய ஜீவிய தர்மம் என்பதையும் மக்கள் அறிந்துகொண்டு விட்டார்கள். அவ்விதம் அறிந்துகொண்டிருந்ததைக் காந்திஜி சிறைப்பட்ட சமயத்தில் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மாஜி திரும்பி வந்ததிலிருந்து அவர் விஷயத்தில் இந்திய அரசாங்கத்தார் தனி மரியாதையுடனேயே நடந்து வந்தார்கள். அவருடைய நடவடிக்கைகளைத் தடை செய்ய நேர்ந்த காலங்களிலும் சர்வ ஜாக்கிரதையுடன் காரியம் செய்தார்கள். இரண்டு மூன்று தடவை அவரைக் கைது செய்து உடனே விட்டு விட்டார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து மகாத்மாவைத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது இதுதான் முதல் தடவை! இந்த விசாரணையின் போது நீதிபதி புரூம் பீல்டு வெகு கண்ணியமாக நடந்து கொண்டார். மகாத்மாவை மிக்க மரியாதையுடன் நடத்தினார். தீர்ப்பிலேயே "மகாத்மா மற்ற சாதாரணக் கைதியைப் போன்றவர் அல்ல" என்பதையும் குறிப்பிட்டார்.
இதனாலெல்லாம் சிறையிலும் மகாத்மாவைச் சரியாக நடத்துவார்கள் என்றும் அவருக்கு அவசியமான சௌகரியங்களைச் செய்து கொடப்பார்கள் என்றும் அனைவரும் எதிர்பார்த்தார்கள். முப்பத்தைந்து கோடி மக்களின் ஒப்பற்ற தலைவரை சிறையிலே அடைத்தாலும், அங்கேயும் சமஅந்தஸ்துள்ள அரசரை நடத்துவதுபோல் அல்லவா நடத்த வேண்டும்! உலகத்தை உய்விக்க வந்த அவதார புருஷர் என்று கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தலைவரை எவ்வளவு மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா?
ஆம்; சொல்ல வேண்டியதில்லைதான். இந்திய அதிகார வர்க்கத்தார் எவ்வளவு மோசமானவர்களாயினும் அவர்களுக்குக்கூட இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எல்லாரும் நினைத்தது தவறு என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது! அந்த விஷயத்தை அவர்களுக்கு வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் நேரிட்டது. இந்த அவசியத்தை நேரில் பார்த்து வற்புறுத்திச் சொன்னவர் நம்முடைய தலைவர் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.
காந்திஜியின் விசாரணை நடைபெற்ற சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் வேலூர் சிறைச் சாலையில் இருந்தார். காந்திஜி சிறைப்பட்ட சில தினங்களுக் கெல்லாம் ராஜாஜி விடுதலையடைந்தார். அவரும் மகாத்மாவின் கடைசிப் புதல்வரான ச்ரி தேவதாஸ் காந்தியும் மகாத்மாவைப் பேட்டி காண்பதற்காகப் பூனாவுக்குப் போனார்கள். சிறையில் மகாத்மாவைக் கண்டு பேசினார்கள். அங்கே கண்டதும் கேட்டறிந்ததும் அவர்களுடைய மனதைப் பெரிதும் புண்படுத்தின. மகாத்மாவைச் சிறையில் சரியானபடி நடத்தவில்லை யென்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். மறுநாள் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கை விடுத்தார். "எங் இந்தியா" வில் ஒரு கட்டுரையும் எழுதினார். உண்மையுடனும் உணர்ச்சி வேகத்துடனும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் சாராம்சம் பின்வருமாறு:-
"கைதிக் கூண்டில் நின்ற மகாத்மாவைப் பார்த்து நீதிபதி புரூம்பீல்டு மிக அழகான சில வார்த்தைகளைச் சொன்னார். இதுவரை உங்களைப்போன்ற ஒருவரை நான் விசாரித்ததும் இல்லை; இனி விசாரிக்கப்போவதுமில்லை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் உங்களை ஒரு மகா தேசபக்தராகவும் மாபெருந் தலைவராகவும் எண்ணிப் போற்றுகிறார்கள். உங்களுடன் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களும் உங்களை உத்தம இலட்சியங்களையுடைய சத்புருஷர் என்று மதிக்கிறார்கள்.'
"இவ்விதம் நம்முடைய எதிரி என்று நினைக்கக்கூடியவர் பகிரங்கமாகச் சொன்னதிலிருந்து மகாத்மாவின் உடலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள சிறை அதிகாரிகள் தங்களுக்கு எப்பேர்ப் பட்ட மகா பாக்கியம் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்; அற்பத்தனமான பழி வாங்கும் நோக்கத்துடன் காந்திஜியைச் சிறையில் நடத்த மாட்டார்கள் என்று நம்பினோம். இப்படியெல்லாம் எதிர்பார்த்த தில் மிகப் பெரும் ஏமாற்றம் அடைந்தோம்.
"காந்திஜியின் கடைசிப் புதல்வர் ஸ்ரீ தேவதாஸும் நானும் மகாத்மாவின் விசாரணையின்போது கோர்ட்டில் இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. எங்கள் கடமையில் ஈடுபட்டிருந் தோம். ஆகையால் ஏப்ரல் 1- மகாத்மாவைச் சிறை விதிகளின்படி பேட்டி கண்டு வருவதற்காகச் சென்றோம். சிறை வாசலில் நின்று இரும்புக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில நிமிஷத்துக்கெல்லாம் அரைத் துணி மட்டும் உடுத்த அந்த மெலிந்த உருவம் குதித்தோடி வந்ததைக் கண்டதும் எங்கள் இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. ஜெயில் சூபரிண்டெண்டின் அறைக்குள் அவரை இட்டுச் சென்று, எங்களையும் அங்கு வரச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். அதிகார வர்க்க அமுல் சட்டத்தின் பிரகாரம்
சிறையின் அரசராகிய சூபரிண்டெண்ட் துரை தம்முடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். மகாத்மாஜியோ நின்று கொண்டே எங்களுடன் பேசும்படி நேர்ந்தது. பேச்சின் நடுவே ஜெயில் சூபரிண்டெண்டும் ஜெயிலரும் அடிக்கடி குறுக்கிட்டபடியால் எங்களுடைய சம்பாஷணையின் நேரமும் எதிர் பார்த்ததைவிட நீண்டு விட்டது.
"என்னதான் மூடி மறைக்கப் பார்த்தாலும் எங்களுக்கு உண்மை இன்னதென்பது தெரிந்து விட்டது. அதனால் அளவில்லா ஏமாற்றமும் உண்டாயிற்று. சிறை அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பு எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளவில்லை யென்பதைக் கண்டோம். நீதிபதி புரூம்பீல்டின் பண்பாடு இவர்களுக்கில்லை. ஆகையால் காந்திஜி எப்படிப் பட்டவர் என்பதையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. கெயிஸரையும், நெப்போலியனையும்
விட எத்தனையோ மடங்கு உயர்ந்த மகான் என்பதை இவர்கள் அறியவில்லை. உலகமே போற்றி வணங்கக்கூடிய அவதார புருஷர் நம்மிடைய பொறுப்பில் விடப்பட்டிருப்பது நம் பூர்வ ஜன்ம பாக்கியம் என்று இவர்கள் பெருமையடையவில்லை. சோக்ரதர் என்ன, கௌதமபுத்தர் என்ன, ஏசுநாதர் என்ன, இப்படிப்பட்ட மகா புருஷர்களின் வரிசையில் சேர்த்து மண்ணுலகும் விண்ணுலகும் வணங்கக்கூடிய பெரியவருக்குச் சிசுருஷை செய்யும் பேறு கிடைத்ததே என்று எண்ணி இவர்கள் இறும்பூது கொள்ளவில்லை. ஏசுவையும் சோக்ரதரையும் கஷ்டப் படுத்தியவர்கள் அறியாமையில் மூழ்கியவர்கள் ஆனால் காந்திஜி எத்தகையவர் என்பதை அவருடைய எதிரிகள்கூட உணரும்படி உலகப் பிரமுகர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே காந்திஜியைச் சிறையில் கஷ்டப்படுத்தும் இந்த அற்ப அதிகாரிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது இந்தப் பெரும் பொறுப்பை இந்த அற்ப புத்தியுள்ள சிறை அதிகாரிகளிடம் ஒப்புவித்து விட்ட சர்க்காரைப் பற்றித்தான் என்னவென்று கூறுவது!
"காந்திஜி தம்முடைய சொந்தப் படுக்கையை உபயோகிக்கவும் அநுமதிக்கப்படவில்லை. சிறையில் கொடுக்கும் தம்பளியில் படுத்துக் கொள்கிறார். தலையணை கூடக் கொடுக்க வில்லை.
"காந்திஜி பெரும்பாலும் பழ உணவு அருந்தி வாழ்கிறவர் என்பது பிரசித்தம். ஆயினும் சிறையில் அவருக்கு இரண்டு ஆரஞ்சுப்பழம் எண்ணிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் வெள்ளாட்டுப் பாலும் அளந்து கொடுக்கிறார்கள். இந்தச் சொற்ப உணவைக்கொண்டே காந்திஜியும் வற்றி உலர்ந்து போன உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார். அவருக்குப் போதிய உணவு தரவில்லையே என்பதற்காக நான் வருத்தப்பட வில்லை. ஆனால் சிறை அதிகாரிகள் இந்தத் தெய்வ மனிதரை அறிந்து நடக்கத் தெரியாத குருடர்களாயிருக்கிறார்களே என்றுதான் வருந்துகிறேன்.
"தூக்குத் தண்டனை கைதிகளை தனி அறையில் அடைத்திருப்பதுபோல் மகாத்மாஜியையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இரவில் அறையில் போட்டுப் பூட்டிவிடுகிறார்கள். வராந்தாவில் படுக்கும்படி விட்டால் ஓடிப்போய் விடுவார் என்ற பயம் போலும்! பக்கத்தில் பேச்சுத் துணைக்கு ஒரு மனிதரும் கிடையாது. அவர் வழக்கமாகப் பாராயணம் செய்யும் மதநூல்கள் வேண்டுமென்றால் சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டுமாம்! படிக்கப் புத்தகமும் இல்லாமல் பேச்சுத் துணைக்கு ஆளும் இல்லாமல் தனி அறையில் மகாத்மாஜியை வைத்திருப்பது என்றால், இதை வெறுங்காவல் என்று சொல்ல முடியுமா? கடுங்காவலை விடக் கேடானது ஆகாதா?
இதெல்லாம் ஏமாற்றமாகவும் துயரமாகவுமே இருக்கிறது. ஆயினும் நம்முடைய பெருந்தலைவரை இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றும் செய்துவிட மாட்டா என்று நாம் ஆறுதல் அடையலாம். அரசாங்கத்தின் அற்பத்தனத்தைக் கண்டு நாம் கோபம் கொள்ளக் கூடாது. அது நம் தலைவரின் போதனைக்கு மாறானது. பொறுமையைக் கடைப்பிடித்து மகாத்மாவின் கட்டளைகளைக் காரியத்தில் நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமது கடமை."
இவ்விதம் ராஜாஜி விடுத்த அறிக்கையானது தேசமெங்கும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிகார வர்க்கத்தின் தூங்கும் மனச்சாட்சிகூட விழித்து எழுந்தது. மகா வீரனாகிய நெப்போலியனை ஸெண்ட் ஹெலீனா என்னும் தீவில் சிறைப்படுத்தித் துன்புறுத்திய பழிச்சொல் பிரிட்டிஷாரை ஏற்கனவே அடைந்திருக்கிறது. மகாத்மாவைச் சிறையில் கேவலமாக நடத்தினார்கள் என்னும் அபகீர்த்தியும் தங்களை வந்து அடைவதற்குப் பிரிட்டிஷாரே விரும்பவில்லை. உடனடியாக மகாத்மாவை நடத்தும் விதத்தில் சில நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன. ஆனால் செய்த தவறை ஒப்புக்கொண்டால் அதிகார வர்க்கத்தின் மதிப்புக்குப் பங்கம் வந்து விடுமல்லவா? ஆகையால் ராஜாஜியின் அறிக்கையில் கண்ட விஷயங்களை மறுத்துச் சர்க்கார் அறிக்கை ஒன்றும் வெளி வந்தது. அதில் காந்திஜிக்குச் சிறையில் செய்து கொடுத்திருக்கும் சௌகரியங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால் இம்மாதிரி முழுப் பூசினிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியம் ராஜாஜியிடம் பலிக்குமா? மீண்டும் ராஜாஜி விடுத்த அறிக்கையில், சர்க்கார் அறிக்கையை வரிவரியாக எடுத்துப் பிய்த்து வாங்கிவிட்டார். அந்த அறிக்கையில்
குறிப்பிட்ட வசதிகள் எல்லாம் தாம் மகாத்மாவைச் சந்தித்த பிறகு செய்து கொடுத்தவையாகவே இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்.
முடிவில் *காந்திஜியைச் சிறையில் நல்லபடியாக நடத்துவதற்கு ஏற்பாடு ஆயிற்று. இதை அறிந்த தேசமக்கள் ஒருவாறு மன அமைதி பெற்றனர்.
-------------
"மாந்தருக்குள் ஒரு தெய்வம்" இரண்டாம் பாகம் முற்றுப் பெற்றது.
This file was last updated on 26 July 2011.
Feel free to send corrections to the webmaster