தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
குறிஞ்சி மலர் - பாகம் 1 (அத்தியாங்கள் 1-12)
kuRinjci malar (novel) /part 1
of nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. G. Chandrasekaran of Chennailibrary.com and
Gowtham Pathippagam for providing us with a e-copy of this work and permission
for its inclusion as par of the Project Madurai etext collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2010.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
குறிஞ்சி மலர் - பாகம் 1 (அத்தியாங்கள் 1-12)
Source
குறிஞ்சி மலர்
நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்)
தமிழ்ப் புத்தகாலயம்,
சென்னை/17, 16ம் பதிப்பு, 1998
KURINJI MALAR
Tamil social novel
by NAA. Parthasarathy
&169; Sundaravalli Parthasarathy
16th Ed, 1998,
Tamil Puthakalayam,
Pondy Bazar, T.Nagar, Chennai-60017
சிறப்புரை (மு. வரதராசன்)
அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.
அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.
நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.
புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.
இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.
'குறிஞ்சி மலர்' வெல்க!
மு. வரதராசன்
குறிஞ்சி மலர்
முன்னுரை
என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.
சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்.
தமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்! அப்படியே படைத்திருப்பதாகவும் நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே?' என்பதுதான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாசகர்களோ 'மிக மிக நல்ல காரியம்' என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல, என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். 'நல்லது செய்தோம்' என்று பெருமைப்பட்டேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின, சான்று கூறின.
சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும்.
இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்கே காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று.
தமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.
குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.
அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.
நமது தமிழ்நாட்டின் சான்றாண்மைக்கும் இருப்பிடமான பேராசிரியர் மு.வ. அவர்கள் எக்காலத்துக்கும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும்.
குறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளிபரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.
அன்பன்,
நா. பார்த்தசாரதி
(மணிவண்ணன்)
--------------
குறிஞ்சி மலர்
1
மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்
மெல்லப் போனதுவே!
பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.
பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.
அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே!
கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. 'அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில்? நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்!'
இன்று எங்கே அந்தத் தமிழ்? எங்கேயந்த அறிவின் மலை? பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே! அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா? இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.
குளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.
உடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.
இயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.
பூரணி பெருமூச்சு விட்டாள்! அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.
பூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கர்ப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா! அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.
அப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே! நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.
குழந்தைபோல் என்னை அணைத்துத் தலையைக் கோதிக் கொண்டே, "பூரணி! நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது? துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா! இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா?" என்று அறிவுரை கூறினாரே! தம்முடைய துன்பங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல - சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட்படுத்தாமல் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்துவிட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மைவிட்டு நீக்கி விட்டவர், அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.
"அப்பா போய்விட்டார்" என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். "நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்" என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.
மரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால்! செத்துப்போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.
சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, "என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே?" என்று கேட்டேன்.
"ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
நான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, "திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா" என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.
அதைக் கேட்டு, "இதோ வந்துவிட்டேன், அப்பா" என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.
அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.
"பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்
ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்!"
தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. "அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா?" என்று கவலையோடு கேட்டேன்.
அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். "நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!" என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.
நான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி 'ஓ'வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.
அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லா கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.
வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.
"நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா" என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.
அப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல... ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு! வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.
ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.
'எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா - அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.
பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.
பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.
எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.
திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.
அந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது! தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனதுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனதுக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் - என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.
இப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழையும், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர்! ஆனால் அப்படிச் செய்யவில்லையே! ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.
பின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார்? யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார்? தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் - அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.
அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.
அந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி 'அப்பா' என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான்.
பூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும் நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி.
மஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனதுக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.
பூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.
மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள்.
"ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?"
மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.
"ஓ! பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா? இரு பார்க்கிறேன்." குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து "சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு" என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் "வருகிறோம் அக்கா" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.
வாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய ரோஜாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.
வழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விபரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.
கடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.
'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்' என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.
இத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.
"இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது."
பூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா? உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.
அந்தக் கடிதத்தையும் செக்கையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.
பூரணி உள்ளே போய் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் 'அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி! தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது' என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் தபால் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த தபால் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனதில் நிம்மதியும் பிறந்தது.
திரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் 'அம்புலிமாமா'வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.
"வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது."
கடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.
"அக்கா இந்தாங்க" என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.
'பெண்ணே! வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.'
அப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா? அவள் மனதில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.
----------------------
குறிஞ்சி மலர்
2
"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"
-பரிபாடல்
குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா!
பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.
பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.
'முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா!' என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.
வீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மணம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் 'செக்' அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.
'பூரணி! குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்'. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. 'அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்' என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். 'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.
இதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடி பீரோக்களும் அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அலமாரிகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அலமாரிக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறார் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள்.
அப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேஜை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேஜைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார்.
அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்?
குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் 'சேமநிதி' (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.
மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.
அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சினைகள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது! மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும்.
நாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும்.
அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். 'பிராவிடண்டு பண்டு' பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு 'வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக'த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரை பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலைப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா?
மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.
மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.
சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும்.
நகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது? வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.
"அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்!
"ஆகட்டும் மங்கை! தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது."
"நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா?" சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.
"நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு." குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் - அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு.
பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள்.
வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.
"அடடே! பூரணியா... வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே! மதுரைக்கா?" கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல்.
"ஆமாம் தாத்தா! குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்." பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு "இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, 'அம்மையார்க் கிழவி', 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது" என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
"பூரணி! இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.
"அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்" என்று கிளம்பினாள் பூரணி.
"அப்படி என்ன அவசரம் அம்மா?" என்று கிழவர் குறுக்கிட்டார்.
தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.
அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா.
பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. "ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் 'பிராவிடண்டு பண்டு' விஷயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை" என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள்.
ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன! சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா!' என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.
கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை! வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே! ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு.
ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு - பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது.
புது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.
"வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்" என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர்.
பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.
"தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.
"எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!" என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.
அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். "இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!" என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு' என்பது அர்த்தம்போலும்!
பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், "அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி" என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். "அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே" என்று வேதனையோடு கூறுவார் அப்பா.
புதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு 'அந்திக்கடை வீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.
அந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.
நான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, "இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன.
அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள்.
மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவும் இருந்தார்.
பூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். "உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா..."
பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.
---------------------
குறிஞ்சி மலர்
3
"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"
-நற்றிணை விளக்கம்
துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. "தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ.
துன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல்? எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும்? விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ? மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே! முளைத்து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய மணத்தையும் பரப்பும் சிறப்பும் வாய்ந்த அந்தச் செடிகளைப் போல் சில பேருக்கு உருவாகும் போதே இலட்சியம் தானாக அமைந்துவிடுகிறது.
பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.
பூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
பூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது.
"சிறுபிள்ளைக் கைதானே அம்மா! மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு" என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான்.
"அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்" என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்தாலும் 'பாலு' என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் 'தவறு தன்னுடையதில்லை' என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.
திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.
"ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். "கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்" என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்.
வைத்தியர் சிரித்தார். "உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர்.
அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா?
பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. "உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் "அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். "நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?" என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர்.
'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன? பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின.
"அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?" அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.
"இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்" என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது.
பூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்துவிடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்துவிட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன. அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?
காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது? நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே!
ஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.
வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில மில்களும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது.
வீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே.
"அரசு! வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி.
பனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் ஜன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுக்கள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்துக் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி.
கோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் 'ஓம்' என்ற பெரிய எழுத்துக்கள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த 'ஓம்' இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த 'ஓமை' உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த 'ஓம்' மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் 'ஓம்' என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த 'ஓம்'.
வீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.
தேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம்.
வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.
கமலா - அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் - மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக 'கமலா' என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு 'பூரணியா?' என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள்.
"உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா?"
"அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்" என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.
"வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்."
"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்" பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை.
"உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா. ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித் தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணீர் பட்டபாடு. நான் என்ன உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா? சாதாரண விவசாயியின் பெண். என்னை விட்டுவிடு. கரையில் ஒரு ஸ்டோர் இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற்போல் நடந்து செல்ல சமயமே வாய்த்ததில்லை."
"நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."
"தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன?
கமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். "சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே" என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் 'கூடை தட்டிப் பறம்பு' என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள்.
"இதுதான் அந்த ஸ்டோர். ஊரைவிட்டு விலகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்" கமலா சொல்லி முடித்தாள்.
வாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஸ்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஸ்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்துவாறு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான்.
"செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை. இப்போ எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே ரூம் தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஒரு ஆளு அட்வான்ஸோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு". நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்' என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.
"இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா? இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது" என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.
"எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.
"இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா! சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும்..." என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் 'சுர்ர்' ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.
மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.
திடீரென்று, "ஐயோ! சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே" என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.
-------------------------
குறிஞ்சி மலர்
4
"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!"
ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள்.
இந்தக் கலவரத்திலும் கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.
மூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும்போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே? திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், 'அகப்பட்டுக் கொள்வோமோ' என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக்குண்டுகள் போல் கண்விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.
பூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ? கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். "சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது?" என்று எண்ணியே பூரணி அவனைப் போகவிட்டாள்.
அருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.
"காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது? முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே! மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி! உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்துவிட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு வீட்டில் போய் நிற்பேன்" என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.
"போதும் கமலா! ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந் நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா, மாற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்" என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.
கீழ இரத வீதி திருப்பத்தில் வந்ததும், தெருவிளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன.
வளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா.
வெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக் கீறல் மாதிரி அந்த அழகிய முன்கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராதது போல் முகம் மலரச் சிரித்தாள்.
"அடி அசடே! இதற்கெல்லாமா அழுவார்கள்? பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற்பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அதுவரையில் உன் அம்மாவுக்குத் தெரிந்து விடாமல் பார்த்துக்கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது" என்று அந்தச் சங்கிலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.
"சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாம்."
"கைகளில் இரணம் படாமல் தான் எதையும் செய்து விட ஆசைப்படுகிறோம். ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவதில்லை."
இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற்போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால்தான் முடியும்.
கமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்தபோது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப்பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்துவிட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள்.
கவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.
"தேடிச்சோறும் நிதம்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்
வாடப்பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, விட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப்போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு - இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஓர் உணர்ச்சிப் பொறியைத் தூண்டியது.
நீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஓசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் லாரிகள் போகும் சத்தம் அதிர்ந்து ஓயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களில் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு இப்படி எண்ணத்தில் திளைப்பது அவளுக்குப் பழக்கம். "சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா? துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா? பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா? இதையெல்லாம் விட பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது." குளிர்ந்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்தபோது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற்போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவளமல்லிகைப் பூ மலர்கிறபோது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர்களைச் சுற்றி ஒருவகை ஞானமணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.
கண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரி சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.
காலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்துவிட்டுப் போனார். அன்று சனிக்கிழமை திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிறவரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றிவிட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு முதல் நாள் இரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுத்த சங்கிலியைச் செம்மைப்படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி.
பத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன பயன்? உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, "இதற்கு நான் என்ன தரவேண்டும்?" என்று கேட்டாள் பூரணி.
"ஐந்து ரூபாய் கொடு, குழந்தை". பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ? பண்பட்ட குடிப்பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், ரத வீதியில் மலைப்பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.
நல்லவேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா.
"பூரணி உனக்குத் தெரியுமா செய்தி! உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல்!"
இதைக்கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக்களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற்போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற்போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். "நான் கொலை செய்துவிட்டேனா?" என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்துவிட்டது.
பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். "இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?"
"நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?"
"மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்."
"மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?"
"திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!"
"மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்."
"அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?"
"சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?"
கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.
"மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறார்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?"
"ஒன்றுமில்லை தாத்தா! இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.
"நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா."
கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே ரயில்வே லயனில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று எக்ஸ்பிரஸ்களில் அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு எக்ஸ்பிரஸ்களுக்கு அந்தப் பற்றும் இல்லை.
வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. ஓட்டலில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, "அக்கா ரொம்பப் பசிக்கிறது" என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவஸ்தைகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.
ஓட்டலில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.
"நீ சாப்பிடலையா அக்கா?" என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.
"சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்."
பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.
"உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா."
"போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் 'சாப்பிட்டாயிற்று' என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?"
-இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.
"அக்கா! தபால்காரர் கொடுத்துவிட்டுப் போனார்" என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.
வழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.
"நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம்! மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அஸ்திவாரத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது" என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.
சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.
கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.
பானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா? அழுகையும் குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பதுதானே அழுகை! நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.
அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். 'பெண்ணே! நீ வாழு! வாழச்செய்!' என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.
குளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.
"சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனதில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.
கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.
நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.
அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின.
ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. "நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது" என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு?
ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.
அந்த இடத்தில் - அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு லாரியும் வடக்கேயிருந்து இன்னொரு லாரியும் மற்ற இரு புறமும் கார்களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.
இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே? கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.
----------------------
குறிஞ்சி மலர்
5
சோதியென்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்
சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையிதென்னே!
-- பாரதி
மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.
"புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா! இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன்ஹால் ரோடு முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் கார் நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்."
தெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.
"உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன்? தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்..."
"நன்றி இருக்கட்டும். காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே? நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்."
"இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது!"
"நீ என்ன சொல்கிறாய்? எதைப் பற்றிச் சொல்கிறாய்?"
"வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்! அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது."
இதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.
"இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ!"
"பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது? அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?"
அந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.
"நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா! பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ!"
தன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.
அதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.
"நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் மன்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்."
பூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
"உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது."
"உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா?"
"என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை?"
அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.
சிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. 'வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி.
மெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, "இது தானப்ப முதலி தெருதானே?" என்று அம்மாளைக் கேட்டாள். 'ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள். விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.
குழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.
"என்னம்மா இப்படிப் பார்க்கிறாய்? நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா! ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது."
"உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்?"
"அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது. டிரைவர் இருக்கிறான். இந்த பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய காருக்கு சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது?"
"இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு?" இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.
"இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி! பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்."
பூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேஸ்வரி அம்மாள் பார்த்துவிட்டாள்.
"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம்! பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு."
"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி."
"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து."
மங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. 'பின் குஷ'னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.
தன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின்
"நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்" என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேஜையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். "உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி?"
"இல்லை."
"பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது" என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.
"மன்னிக்க வேண்டும் அம்மா! உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா? தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும்? அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்."
"ஏ அப்பா! பெரிய குறும்புக்காரியாக இருக்கிறாயே! உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே."
பூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.
"உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்."
தந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.
சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.
"வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது?"
"போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய்? எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். டிரைவரிடம் சொல்லி காரிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்." என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.
அன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது - மங்களேஸ்வரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுக்கள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.
மங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.
"இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்" என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.
பியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். "கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்."
"போடி அசட்டுப் பெண்ணே? உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது."
"செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்."
"எல்லோருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது."
"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்."
"பார்த்தாயா? பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை!"
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.
ஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். "கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா" என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்கு கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.
"பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்" என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது? யாரிடமும் சொல்லவில்லை.
மங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேஸ்வரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி அம்மாள், "இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்" என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.
"இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே" என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.
"செல்லம்! உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா" என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.
"இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்" என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.
"இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்" என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.
"உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்" என்று கூறி தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.
கடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.
'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே! கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய்? வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்?'
பூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது. தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.
எக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். "அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே" என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.
-------------
குறிஞ்சி மலர்
6
நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி
பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேஸ்வரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும் துடித்திருக்கிறது! வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா? 'நியூஸ் ரிப்போர்ட்டர்கள்' வாழும் நூற்றாண்டு அல்லவா இது? 'நடுத்தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்' என்று 'நியூஸ்' எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது? கைகள் யாருடையவை? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதல்லவா? ஆச்சரியகரமான அந்த இளைஞனைச் சந்திக்கலாம் வாருங்கள்.
அதோ, அந்த நாற்சந்திக்கு மிக அருகில் கிழக்கைப் பார்த்த வாயில் அமைந்த 'அச்சாபீஸ்' ஒன்று தெரிகிறதே; அதற்குள் நுழைந்து அங்கே நடப்பதைக் கவனிக்கலாம்.
'மீனாட்சி அச்சகம் - எல்லாவிதமான அச்சு வேலைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். குறித்த நேரம் - குறைந்த செலவு' என்று பெரிய விளம்பரப் பலகை வெளியே தொங்குகிறது. அப்போது சரியான பிற்பகல் நேரம். அச்சகத்து முகப்பு அறையைத் தெருவிலிருந்து பார்த்தாலும் அறையிலிருந்து தெருவைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிகிற விதத்தில் அது அமைந்திருக்கிறது. வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அச்சகத்தின் உரிமையாளர் போல் தோற்றமளிக்கும் முதியவர் ஒருவர் இறங்கி வேகமாக உள்ளே வருகிறார். முகப்பு அறைக்குள் நுழைகிறார். மேஜையில் எதையோ தேடுகிறார். நோட்டுப் புத்தகம் போல் பெரிய டைரி ஒன்று விரிந்து கிடக்கிறது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார். படிக்கப் படிக்க முகத்தில் சிடுசிடுப்பும் சீற்றமும் பரவுகின்றன.
"இந்தச் சமூகம் எங்கே உருப்படப் போகிறது? உச்சி வெயிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கைப் பார்க்கத்தான் எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா? பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழுகின்றனவே. ஐயோ! என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம்! எல்லாம் வாழ்ந்த பெருமைகள், வாழ்கின்ற பெருமை ஒன்றுமில்லை.
இன்று என் கண்கள் இந்த்த் தெருக்களில் எதைப் பார்க்கின்றன? ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழ்மையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே! அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா? ஏன் விழுந்தாள்? யாரால் விழ நேர்ந்தது? அடே, அரவிந்தா! நீ கவிஞன். உன்னுடைய உள்ளம் இன்னுமா துடிக்கவில்லை? இதைக் கண்டுமா கொதிக்கவில்லை? பாடு, துடிப்பதெல்லாம் திரட்டி ஏதாவது பாடி வை. நீ அச்சாபீஸில் 'புரூப்' திருத்தப் பிறந்தவனா? இல்லை, இல்லவே இல்லை. நீ கவி உள்ளம் படைத்தவன். சமூகத்தைத் திருத்தி நேர் செய்யப் பிறந்தவன்."
படித்துக் கொண்டே வந்த முதியவரின் முகம் சீற்றத்தின் எல்லையைக் காட்டியது. அவ்வளவு சினத்தையும் கையில் சேர்த்து மேஜை மேலிருந்த மணியை ஓங்கிக் குத்தினார். இரண்டு, மூன்று முறை அப்படிக் குத்தி மணி அதிர்ந்த பின் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து அடக்க ஒடுக்கமாக நின்றான்.
"அந்தக் கழுதை அரவிந்தன் இருந்தால் உடனே கூப்பிடு, வரவரப் பைத்தியம் முற்றித்தான் போய்விட்டது பையனுக்கு!"
சிறுவன், அரவிந்தன் என்று பெயர் குறிக்கப்பெற்ற ஆளைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காக அச்சகத்தின் உட்புறம் ஓடினான். பலவிதமான அச்சு எந்திரங்களின் ஓசைக்கிடையே அச்சுக் கோர்ப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஓர் அழகிய வாலிபனைப் போய் கூப்பிட்டான் சிறுவன். சிவந்த நிறம், உயர்ந்த தோற்றம். காலண்டர்களில் கண்ணனும் இராதையுமாகச் சேர்ந்து வரைந்துள்ள ஓவியங்களில் குறும்பும் அழகும் இணைந்து களையாகத் தோன்றுமே கவர்ச்சியானதொரு கண்ணன் முகம் அதுபோல் எடுப்பான முகம் அந்த வாலிபனுக்கு. கதர் ஜிப்பாவும் நாலு முழம் வேட்டியுமாக எளிமையில் தோன்றினான் அவன்.
"சார் முதலாளி வந்திருக்காரு. உங்களைக் கூப்பிடறாரு. மேஜை மேலிருந்து எதையோ எடுத்துப் படிச்சுட்டு ரொம்பக் கோபமாயிருக்காருங்க..."
தேடி வந்த சிறுவன் பின் தொடர வாலிபன் முன்புறத்து அறையை நோக்கி விரைந்தான். மனத்தில் துணிவையும் நம்பிக்கையையும் காட்டுகிற மாதிரி அவனுடைய நடை கூட ஏறு போன்று பீடு நடையாக இருந்தது!
முன்புறத்து அறை வாசலில் அவன் தலை தென்பட்டதோ இல்லையோ! அவர் சீறிக் கொண்டு இரைந்தார்.
"அரவிந்தா! இதென்னடா இது உளறல்? உன்னை இங்கே நான் 'ப்ரூப்' திருத்துவதற்காகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். சமூகத்தைத் திருத்துவதற்காக அல்ல."
அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடன், அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே வெட்கத்தோடு தலை குனிந்தான். அப்போதும் அந்த முகத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. நீள முகம். அதில் எழிலான கூரிய நாசி எடுப்பாக இருந்தது.
"என்னடா நான் கேட்கிறேன், பதில் சொல்லாமல் கல்லடி மங்கன் மாதிரி நிற்கிறாய்? பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடைபெறுகிறதோ?"
"இல்லை சார்!... இன்றைக்கு மத்தியானம் இங்கே எதிர்த்தாற்போல் நடுத்தெருவில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த நான் ஏதோ மனதில் தோன்றியதையெல்லாம்..."
"மனத்தில் தோன்றியதையெல்லாம் அப்படியே கவிதையாகத் தீட்டிவிட்டாயோ?"
"அதில்லை சார். இப்படி ஏதாவது தோன்றினால் அதை இந்த டைரியில் எழுதி வைப்பது வழக்கம்."
"ஆகா! எழுதி வைக்காமல் விட்டுவிடலாமா பின்னே? அப்புறம் உலகத்துக்கு எத்தனை பெரிய நஷ்டமாகப் போய் விடும். போடா கழுதை; அச்சுக்கு வந்திருக்கிற வேலைகளை யெல்லாம் தப்பில்லாமல் செய்து நல்ல பேர் வாங்க வழியில்லை. கவி எழுதுகிறானாம் கவி. உருப்படாத பயல்."
சொல்லிவிட்டு நோட்டுப் புத்தகத்தை அவன் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார் மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நோட்டுப் புத்தகம் கீழே விழுந்து விடாமல் இரண்டு கைகளாலும் எட்டிப் பிடித்துக் கொண்டான் அரவிந்தன். அவனுக்கு அந்த நோட்டுப் புத்தகம் உயிர் போன்றதல்லவா? எத்தனை எத்தனை உயர்ந்த குறிப்புகளையும் உணர்ச்சிகளைத் துண்டு துண்டாக வெளியிடுகிற கவிதைகளையும் அவன் அந்த நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களில் செல்வம் போல் எழுதி வைத்திருக்கிறான். அவருக்குத் தெரியுமா அதன் அருமை?
நோட்டை வீசி எறிந்த சூட்டோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அச்சுவேலை நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் தான் எழுதியிருந்த கவிதைகளைத் தானே ஒரு முறை கள்ளத்தனமாக ரசித்து விடும் ஆவலுடன் அவசர அவசரமாக நோட்டைப் பிரித்தான் அரவிந்தன். 'நிலவைப் பிடித்து' என்று தொடங்கிய முதல் இரண்டு வரிகளை மனத்துக்குள்ளேயே விரைவாகப் படித்த பின் மற்ற வரிகளை சத்தத்தோடு வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான்.
"தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்"
படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக் காட்சிகளாய் நின்றன. அசை போடுவதுபோல் பாட்டை மறுபடியும் மறுபடியும் சொல்லி இன்புற்றான். 'நான் கூட நன்றாகத்தான் பாடியிருக்கிறேன். என்ன சந்தம், என்ன பொருளழகு' என்று தனக்குத்தானே பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அதற்குள் முதலாளியின் அதிகாரக் குரல் அவனை விரட்டியது. நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு உள்ளே ஓடினான்.
"ஏம்பா அரவிந்தா? அந்த நாவல் புத்தகம் ஒண்ணு வேலை செய்ய எடுத்துக் கொண்டோமே 'அயோக்கியன் எழுதிய அழகப்பனின் மர்மங்கள்' என்று..."
"சார்... சார்... தப்பு அழகப்பன் எழுதிய 'அயோக்கியனின் மர்மங்கள்' என்பதுதான் சரியான தலைப்பு."
"ஏதோ ஒரு குட்டிச் சுவரு... அது எத்தனை பாரம் முடிந்திருக்கிறது."
"பத்துப் பாரம் முடித்தாகிவிட்டது."
"பத்தா! சரி... சுருக்கப் பார்த்து விரைவாக முடி. எதற்குச் சொல்கிறேன் என்றால், நானே சொந்தத்தில் பெரிதாக ஒரு வெளியீட்டு வேலை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். அது சம்பந்தமாக நீ கூட இன்று ஓர் இடத்துக்குப் போய் வர வேண்டும். இந்த நாவலை முடித்துக் கொண்டால் வேறு அதிக வேலையின்றி என் திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஓய்வாக இருக்கும்."
"ஓ! அதற்கென்ன சார், இதை இன்னும் இரண்டே நாட்களில் முடித்து விடுகிறோம்."
பெரியவர் கோபம் தணிந்து அரவிந்தனிடம் நிதான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அவர் பேச்சுக் காட்டியது. எப்போதுமே அவர் இப்படித்தான் காரணமின்றி இரைவார். உடனே தோளில் கைவைத்துப் பேசவும் ஆரம்பித்து விடுவார். சீக்கிரமே கோபம் மறந்து போகும் அவருக்கு. சில சமயத்தில் உரிமையோடு அளவுக்கு மீறி இரைந்து பேசிக் கடிந்து கொண்டாலும் அரவிந்தன் மேல் அவருக்குத் தனி அபிமானமும் பாசமும் உண்டு. அரவிந்தனுக்கு வீடு வாசல் எல்லாம் அதுதான். இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு அங்கேயே நாலு நியூஸ் பிரிண்ட் காகிதத்தை விரித்து அதிலேயே படுத்து உறங்கிவிடுகிறவன் அவன்.
'மீனாட்சி அச்சகம்' என்ற நகரத்தின் புகழ்பெற்ற அச்சகத்துக்கு மானேஜர், புரூப் ரீடர், கணக்கு எழுதுபவர் எல்லாம் அரவிந்தன் தான். சமயங்களில் 'பில் கலெக்டர்' கூட அவன் தான். எந்த வேலையை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அரவிந்தனுக்கு அத்துபடி. அவனுக்கு நல்ல முகராசி உண்டு. விநயமும் அதிகம். சுறுசுறுப்பு ஒரு நல்ல மூலதனம். அரவிந்தனிடம் அது குறைவின்றி இருந்தது. அவனால் எதையும் செய்யாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு. அப்படி ஒரு கூர்மை. அப்படி ஒரு துறுதுறுப்பு.
'டைரி' எழுதுகிற பித்து அவனுக்கு அதிகம். டைரி என்ற பெயரில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்களைத் தைத்துப் பைண்டு செய்து வைத்துக் கொள்வான். ஒன்றில் பொன் மொழிகளாக குறித்து வைத்துக் கொள்வான். இன்னொன்றில் தனக்குத் தோன்றுகிறதை அப்போதைக்கப்போது கிறுக்கி வைத்துக் கொள்வான். மூன்றாவது நோட்டில் வரவு, செலவு, அச்சக சம்பந்தமான நினைவுக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். இந்தக் கவி எழுதுகிற கிறுக்கு ஒரு நெறியாகவே அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. திடீர் திடீர் என்று வரும் அந்த வேகம் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கையில் எந்தக் காகிதம் கிடைத்தாலும் அந்த வேகத்தை மனத்தில் தோன்றுகிறபடி எழுத்தில் எழுதித் தணித்துக் கொண்டாக வேண்டும். நன்றாக முற்றிவிட்ட ஆமணக்கினால் வெடிக்காமல் இருக்க முடியாது. அதுபோலத் தான் அரவிந்தனின் கவிதை வேகமும். எழுதாவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி ஒரு அழகிய வேகமாகும் அது. அச்சக முதலாளியின் நாற்காலியில் அவர் இல்லாதபோது உட்கார்ந்து இது மாதிரி ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். மறந்து நோட்டுப் புத்தகத்தை அங்கேயே அவருடைய மேஜையில் வைத்து விட நேர்ந்து, எதிர்பாராத சமயத்தில் அவரும் வந்து பார்த்துவிட்டால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வான். அவரும் ஏதோ கோபத்தில் பேசி விடுவாரேயொழிய மனதுக்குள் 'பயல் பிழைத்துக் கொள்வான். கொஞ்சம் மூளைக் கூர் இருக்கிறது. எதை எதையோ கிறுக்கி வைத்தாலும் கருத்தோடு அழகாக கிறுக்கி வைக்கிறானே' என்று அவனைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுகிறவர்தான்.
மீனாட்சிசுந்தரம் உள்ளே மெஷின்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரவிந்தன் மனத்திலோ குடை பிடித்த மங்கையும் குமிண் சிரிப்பு முகமுமாக மத்தியானம் மயங்கி விழுந்த பெண் உலா வந்து கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து மெல்ல நழுவினான். மறுபடியும் முன்புற அறைக்கு வந்து ஒளித்து வைத்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து முதலில் எழுதியிருந்த கவிதை வரிகளுக்குக் கீழே,
"குடையைப் பிடித்த கரம் - மனக்
கொதிப்பைச் சுமந்த முகம் - பெரும்
பசியில் தளர்ந்த நடை"
என்று பதற்றத்தோடு அவசரம் அவசரமாக எழுதி முடித்தான்.
"கோவிந்தா தியேட்டர்காரர்கள் ஏதோ சுவரொட்டி அடிக்க வேண்டுமென்றானே; பேப்பர் அனுப்பினாயா?"
"இல்லை சார், காலையிலே வந்தான், 'நீங்களே உங்கள் கணக்கில் கடனாகப் பேப்பர் வாங்கி அடித்துக் கொடுத்தால் பின்னால் கொடுத்துவிடுகிறேன்' என்றான். 'அதெல்லாம் உனக்குச் சரிப்படாது. சாயங்காலம் பேப்பரோடு வா, இல்லையானால் நீயே ஆர்ட் பேப்பர் மாதிரி மழமழவென்று வெலுப்பாயிருக்கே. உன்னையே மெஷினில் விட்டு அடித்துவிடுவேன்' என்று பயமுறுத்தி அனுப்பினேன்."
"சமர்த்துதான் போ. இந்த வாயரட்டைக்கு ஒன்றும் குறைவில்லை."
அரவிந்தன் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஃபோர்மேன், அச்சுக்கோப்பவர்கள், இரண்டு டிரெடில்மேன் உட்பட எல்லோரும் அரவிந்தனின் நகைச்சுவையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனின் குறும்புக்கு இணையே இல்லை. யாருடைய குற்றத்தையும் எவருடைய தவறுகளையும் ஒளிவு மறைவின்றிப் பளிச்சென்று நாலுபேருக்கு முன்னால் உடைத்து விடுவான். தன்னிடம் குற்றமோ பொய்களோ போன்ற அழுக்குகள் இல்லாததால் அவனுக்கு மற்றவர்களிடம் பயமே இல்லை. இதனால் எல்லோருக்கும் அவனிடம் பயம். அவனுக்கு முன்னால் தப்புச் செய்ய பயம். தப்பாகப் பேசப் பயம். தீயவை எல்லாவற்றுக்குமே அவன் முன் பயம் தான்.
ஒரு சமயம் தொடர்ந்தாற் போல் ஓர் அச்சுக் கோப்பவன் (கம்பாஸிடர்) ஈய எழுத்துக்களைத் திருடித் தன் 'டிபன் பாக்ஸில்' போட்டுக் கடத்திக் கொண்டிருந்தான். அரவிந்தனுக்கு இது தெரிந்துவிட்டது.
மறுநாள் காலை அந்த அச்சுக்கோப்பவன் தன் இடத்துக்கு வந்த போது அங்கே கீழ்க்கண்டவாறு, கம்போஸ் செய்து வைத்திருந்தது.
'நாலே நாட்களில் 150 'க'னாக்களையும் 200 'அ'னாக்களையும் 70 'லை'யன்னாக்களையும் 'டிபன்ஸெட்' மூலம் கடத்திய தீரனே! இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா? அல்லது இதற்கு மேல் நீயே 'கம்போஸ்' செய்து கொள்ளலாம்.'
அரவிந்தன்
இதைப் படித்துவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் அந்த ஆள். உடனே வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அரவிந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஒரு சினிமா தியேட்டர்காரரிடம் நிறைய பாக்கி விழுந்துவிட்டது. அவருடைய தியேட்டருக்கு அடித்து அனுப்பிய சுவரொட்டிகளில் அச்சகத்தின் பேர் போடுகிற மூலையில் 'உங்கள் பாக்கி விஷம் போல் ஏறிவிட்டது; கடிதம் எழுதியும் பில் அனுப்பியும் எனக்கு அலுத்துப் போயிற்று. விரைவில் பாக்கியைத் தீருங்கள். வேறு வழியில்லாததால் உங்கள் செலவில் உங்கள் பேப்பரிலேயே இதைக் 'கம்போஸ்' செய்து அனுப்புகிறேன்' என்று சிறிய எழுத்துக்களில் அச்சிட்டுக் கீழே அச்சகத்தின் பெயரையும் போட்டு அனுப்பிவிட்டான் அரவிந்தன். சுவரொட்டி ஒட்டப்பட்டபோது ஊரெல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது. மறுநாளே ஓடோடி வந்து பாக்கியைத் தீர்த்துவிட்டுப் போனார் சினிமா தியேட்டர்காரர்.
இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிர்வாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன் பேசும்போது சுற்றி நிற்பவர்களின் கண்களெல்லாம் அவன் முகத்தில்தான் ஆவலோடு பதிய முடியும். அரவிந்தனுக்குப் பிடிக்காதவை காலர் வைத்த ஆடம்பரமான சட்டைகள் அணிவதும், எட்டு முழம் வேட்டி கட்டுவதும். எளிமையை எல்லாவற்றிலும் விரும்புகிற சுபாவமுள்ளவன் அவன். தமிழ்நாட்டுச் சூழ்நிலையே எளிமைக்கு ஏற்றது என்று வாதாடுவான்.
"இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்" என்று அடிக்கடி புன்னகையோடு கூறுவான் அரவிந்தன். காந்தியக் கொள்கைகளைப் போற்றுவதில் விருப்பமும் மதிப்பும் கொண்டிருந்தான் அரவிந்தன். கைப்பிடிக்குள் அடங்கிவிடுகிறாற்போல் ஒரு சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகம் எப்போதும் அவனுடைய சட்டைப் பையில் இருக்கும்.
"அரவிந்தா! இப்படி வா. உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்" என்று அவனை அன்போடு முன்னறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்.
உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவனை உட்காரச் செய்து தம் திட்டத்தை விவரித்தார். விளையாட்டுப் பிள்ளை போல் தோன்றினாலும் அவனுடைய திறமையில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் செய்யமாட்டார். அவர் அன்று கூறிய புதுத்திட்டத்தை அரவிந்தன் முழு மனத்தோடு வரவேற்று ஒப்புக்கொண்டான்.
"நிச்சயமாக இந்தத் திட்டம் நமக்கும் பயன்படும், நாட்டுக்கும் பயன்படும். சிறந்த தமிழ் அறிஞர்கள் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டுப் பரப்ப வேண்டியது அவசியம்தான். சாமர்த்தியமாக வெளியிட்டு விற்றால் நமக்குக் கைப்பிடிப்பு இருக்காது."
"அப்படியானால் முதலில் இதோ இந்த முகவரிக்குப் போய் உரியவர்களைப் பார்த்து ஆகவேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்து பேசிவிட்டு வா" என்று முகவரியை நீட்டினார் அவர்.
"நான் ஏழரை மணிவரை இங்கேயே இருக்கப் போகிறேன். காரிலேயே போய்விட்டு வந்துவிடு அரவிந்தா..."
அவருக்குத் தெரியாமல் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டான் அரவிந்தன்.
"நினைவு வைத்துக்கொள். இப்போது நீ போகிற இடத்திலிருந்துதான் முதலில் நாம் வெளியிடப் போகிற நூல்கள் கிடைக்க வேண்டும்; காரியத்தைப் பழமாக்கிக் கொண்டு வா..." என்று வாசல் வரை உடன் வந்து கூறி அவனைக் காரில் ஏற்றி அனுப்பினார் மீனாட்சி சுந்தரம்.
மருள் மாலைப்போதின் ஒளி மயங்கிய மாலை, அழகு மதுரை நகரின் தெருக்கள் எப்படி இருக்கிறதென்று கவியின் கண்ணோடு அனுபவித்துக் கொண்டே காரில் விரைந்தான் அரவிந்தன்.
திண்டுக்கல் ரோட்டின் அருகில் மேற்கே திரும்பியதும் டிரைவர், "எங்கே போகணுங்க?" என்று இடம் கேட்டான். அரவிந்தன் இடத்தைச் சொன்னான். வேகத்தில் மனம் துள்ளியது. நினைவுகள் உல்லாசத்தில் மிதந்தன. 'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி' என்று வாய் இனிமையில் தோய்த்த குரலை இழுத்துப் பாடியது. மனம் அந்த முகத்தை நினைத்தது. இதழ்களில் குறுநகை நிலவியது.
மங்களேஸ்வரி அம்மாள் வீட்டு டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டித் திருப்பியனுப்பிய பூரணி வீடு பூட்டியிருப்பது கண்டு திகைத்து நின்றாளல்லவா? அந்த சமயத்தில் இன்னொரு சிறிய கார் அவ்வீட்டு வாசலில் வந்து நின்றது.
"பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் வீடு இதுதானே?"
பூட்டிய கதவைப் பார்த்துக் கொண்டு மலைத்துப் போய் நின்ற பூரணி, விசாரிக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினாள். திரும்பிய முகத்தைப் பார்த்து அரவிந்தன் ஆச்சரியத்தில் திளைத்தான். அதே முகம். அதே அழகு. நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த வதனம்! அன்று நண்பகலில் அச்சகத்துக்கு எதிரே தெருவில் மயங்கி விழுந்தபோதே அவன் மனத்திலும் மயங்கி விழுந்த அதே பெண். அவனுக்குக் கவிதை தந்த வனப்பு, கனவு தந்த முகம், கற்பனை தந்த சௌந்தர்யம், அந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது.
"நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" - சிறிது சினத்துடன் கேட்டாள் பூரணி.
"நான் மீனாட்சி அச்சகத்திலிருந்து வருகிறேன். என் பெயர் அரவிந்தன். புத்தகங்கள் வெளியிடுகிற விஷயமாகப் பேராசிரியரின் பெண்ணைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும்" என்றான்.
சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய அரவிந்தன் கையில் நோட்டுப் புத்தகத்தோடு வாசல் திண்ணையின் மேல் தானாக எடுத்துக் கொண்ட உட்காரும் உரிமையோடும் துணிந்து அமர்ந்துவிட்டான்.
பூரணிக்கு அப்போது ஒரே கசப்பான மனநிலை. 'உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள், அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்' என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புதுமண்டபத்து புத்தக வெளியீட்டாளர் மேலிருந்த கோபம் அத்தனை புத்தக வெளியீட்டாளர் மேலும் திரும்பியது. அரவிந்தன் வந்த விதம், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து பேசத் தொடங்கிய விதம் ஒன்றும் இவளுக்குக் கவர்ச்சியளிக்கவில்லை. உதடுகள் துடிக்க, அழகிய முகம் சிவக்க அரவிந்தனை வார்த்தைகளால் சாடினாள் அவள்.
"புத்தகமுமாயிற்று; புடலங்காயுமாயிற்று. புண்ணாக்கு விற்கிறவர்கள் எல்லாம் புத்தகம் வெளியிட வந்துவிடுகிறார்கள். இப்போது யாரையும் நம்ப முடிவதே இல்லை. வரும்போது சிரிக்கச் சிரிக்க அரிச்சந்திரன் போல் உண்மை பேசுகிறார்கள். கடைசியில்..." அவள் முடிக்கவில்லை, அரவிந்தன் இடைமறித்துக் குறுக்கிட்டான். அவன் முகத்தில் சிரிப்பு மாறிவிட்டது.
"நிறுத்துங்கள்; உங்கள் மனநிலை இப்போது சரியில்லை போலிருக்கிறது. இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீற வேண்டியதில்லை." திண்ணையிலிருந்து எழுந்து விறுவிறுவென்று நடந்துபோய் காரில் உட்கார்ந்து கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டான் அரவிந்தன். கார் தூசியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தது. கோபத்தோடு ஏதோ சொல்ல வாய் திறந்த பூரணி, அந்தச் சொற்களை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். தான் தெருவில் மயங்கி விழுந்தது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வினா அவள் மனத்தில் பெரியதாய் எழுந்தது. திரும்பினால், திண்ணையில் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் அவன் கையில் கொண்டு வந்த நோட்டுப் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுப் போயிருந்தான்.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் விரைந்து இறங்கி 'மிஸ்டர் அரவிந்தன்' என்று அவள் எழுப்பிய குயிற்குரலின் ஒலி எட்ட முடியாத தூரத்திற்கு, கார் போயிருந்தது. அந்த முகமும், அந்தச் சிரிப்பும், காளையைப் போல் நடந்து போய்க் காரில் ஏறிய விதமும், அப்போதுதான் அவள் நினைவை நிறைத்தன. ஒரு கணம்தான்; ஒரே கணம் தான் அந்த நினைவு. அடுத்த வினாடி சொந்தக் கவலைகள் வந்து சேர்ந்தன. பூட்டியிருக்கும் வீடு, தங்கையும் தம்பிகளும் எங்கே போனார்களென்று தெரியாத திகைப்பு, எல்லாம் வந்து அவள் மனத்தில் சுமை பெருக்கி அழுத்தின.
-----------------
குறிஞ்சி மலர்
7
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்
-- கம்பன்
பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட நோட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: "பூரணி! சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும் போது 'பூரணி வந்தால் என் வீட்டுக்கு வரச்சொல் அவளை' என்று என்னிடம் சொன்னாள்."
"அது சரி காமு, அவள் தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு தம்பிகளையும் குழந்தைகளையும் எதற்காக அழைத்துக் கொண்டுப் போகவேண்டும்?"
"அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா. வண்டி வைத்து அழைத்துக் கொண்டுப் போனாள். பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும்."
"இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள்" என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்றுகொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய கார்களையும், லாரிகளையும் முருகன் சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கரங்களுக்கும் நான்கு எலுமிச்சை பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய கார்களை ஓட்டிக் கொண்டு போகும் அழகே அழகு.
பூரணி, கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புதுக்கார் கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புது கார் வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக்கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா? அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் சாகவில்லை என்று எழுதி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளே, அந்தப் புது பணக்காரன் தான் இப்போது இந்தப் புது காருக்குள் உட்கார்ந்திருந்தார்.
இவருடைய புதுக்காரின் சக்கரங்களில் இன்று எலுமிச்சம் பழங்கள் நசுங்குகின்றன. இதற்கு முன்பு எத்தனை ஏழைகளின் உள்ளங்கள் இவர் காலடியில் நசுங்கி இருக்கின்றன? உள்ளக் குமுறலோடு இவ்வாறு போகிற போக்கில் நினைத்தாள் அவள். சந்நிதி வாயிற் பிச்சைக்காரக் கும்பல் புதுக்கார் 'வள்ளலை' மொய்ப்பதையும் அவர் முகம் கடுத்துச் சீறி அவர்களை விரட்டுவதையும் கூட பூரணி கண்டாள். அன்று நடுப்பகல் வரை மதுரை நகரத்துப் பெரிய கட்டிடங்களிலெல்லாம் நுழைந்து தான் ஒரு வேலைக்குப் பிச்சை கேட்பது போல் மன்றாடிக் கொண்டு திரிந்தது நினைவில் உறுத்திற்று அவளுக்கு.
பூரணியைப் பார்த்ததும் கமலா மிகவும் கோபித்துக் கொண்டாள். "வரவர நீ மிகவும் பெரியவளாகிக் கொண்டு வருகிறாய். உனக்குத் தன்மானம் அதிகம். எவ்வளவு துன்பமானாலும் நெருங்கிப் பழகியவர்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்துக் கொள்ளத் தெரிகிறது. நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு எங்களால் அப்படி இருக்க முடிகிறதா, அம்மா? நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ?"
கமலாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பூரணி தலை குனிந்தாள். குழந்தை மங்கை உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.
"அக்கா, நீங்க பேசாம விட்டுட்டுப் போயிட்டீங்க. கமலா அக்கா சாயங்காலமா எங்களை இங்கே அழைச்சிட்டு வந்து சோறு போட்டாங்க." மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா? குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்துவிட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.
"இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்டதற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா. உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, 'அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்' என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று. இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள். எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்."
"உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக்கிறதே? அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா?" என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.
"அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும்."
"ஊரில் என்ன காரியமோ?"
பூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை. முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.
பூரணிக்குப் புரிந்துவிட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி.
"ஓ! அப்படியா செய்தி? தை பிறக்கப் போகிறதல்லவா? இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்?"
மலர மலரச் சிரிப்பு அதிகமாகிக் கொண்டு வளருகிற ஒருவட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும்போதே கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மைதான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.
கமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.
"சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்" என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள்.
"வீட்டுக்காவது, புறப்படுகிறதாவது? வீட்டில் என்ன வைத்திருக்கிறது? எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. 'என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங்களைப் படித்தால் அறிவுப்பசி தீரும். வயிற்றுப்பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணிதான் நான் இவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரில் இல்லை. வருகிறவரை உன்னைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந்தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய்விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விடமாட்டேன்."
"விடவேண்டாம் கமலா! நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்வாயா நீ?"
"கேளேன், என்ன கேள்வியோ?"
"வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பாற்றி விட முடியுமென்று நினைக்கிறாய்?" கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. துன்பங்களைச் ஜீரணிக்கும் சிரிப்பு அது.
"அதுவா பேச்சு? ஏதோ உனக்கு வேலை கிடைக்கிறவரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி."
"என்னவோ நீ சொல்கிறாய் கமலா. எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக்கொடுக்காமல் உதவுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஓட்டப்படுகிற ஜட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்."
தம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேஸ்வரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லிவிட்டாள்.
கமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலேயிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச் சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்குகளையும் ஒளிப்புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங்கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவது கூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் 'ஓம்' சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற்போல் ஊரைச்சுற்றியிருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப்பரப்பு மின்னிற்று.
தன் பேச்சைக் கேட்டுக்கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் தூங்கிவிட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வரவில்லை. 'ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்கும் என்றைக்கும் விடியப்போகிறதோ? முருகா! நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்துவிடு! அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லல. உன்னுடைய ஊரில் உன் திருக்கோயிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத்தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று; கைவிட்டுவிடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.'
பூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற்கண்டவாறு நெஞ்சுக்குள் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக்கண்கள் உணர்ந்தன.
காரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற்போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் 'அரவிந்தன்' என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லி பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடியவில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா? அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததால் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.
தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், 'ஙொய்' என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேஜை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேஜை விளக்கு அணையவில்லை.
படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது பூரணிக்கு. அரவிந்தன் என்ற அறிவுத் துடிப்பு மிகுந்த இளைஞன், வாழ்க்கையில் விதவிதமான வர்ணங்களைத் தான் கண்டு கேட்டு உணர்ந்த அனுபவத்தோடு தீட்டியிருந்தான். அந்த அனுபவக் குறிப்புகளும் தோன்றிய போதெல்லாம் எழுதப்பட்ட கவிதைகளும் இடமும் நிறமும் பொருந்தும்படி நன்றாக வரையப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் புதையல் வைத்திருப்பவன் அதைத் தனிமையில் திறந்து பார்த்து மகிழ்கிற மாதிரி அரவிந்தனின் அனுபவங்களைப் படித்து மகிழ்ந்தாள் பூரணி. தான் மயங்கி விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்தபோது தான், மாலையில் 'நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால் அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை' என்று அவன் கூறியதன் காரணம் அவளுக்கு விளங்கியது. ஓர் இடத்தில் மனம் கொதித்து வெறி கொண்டாற் போன்று சில வாக்கியங்கள் எழுதியிருந்தான் அரவிந்தன்.
"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."
இந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சினைகளை எண்ணி ஓர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும், குணமும், குறிக்கோளும் அவளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன்? என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற் போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கைகளின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல் பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.
அந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மேஜைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக்கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.
தூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமையான கனவு ஒன்று கண்டாள் அவள். அரவிந்தன் அவளுடைய கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போகிறான். இரண்டு பேரும் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறுகிறார்கள். வெள்ளி நெகிழ்ந்து உருகிய குளம்போல் வானில் முழுநிலவு உலா வருகிறது. நல்ல காற்று வீசுகிறது. இந்த மாதிரி ஒரு காதல் ஜோடியைக் காண்பதற்கென்றே ஊழி ஊழியாகத் தவம் செய்து வானில் காத்துக் கொண்டிருந்தவை போல் நட்சத்திரங்கள் கண் நிறையக் குறும்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கந்தர்வப் பெண்கள் தத்தம் காதலனைச் சந்திக்கப் போகிற விரைவில் நழுவவிட்ட வெள்ளைச் சல்லாத் துணிகளைப் போல் அங்கங்கே நிலவொளிரும் நீலவானிடையே வெண் மேகங்கள் தெரிகின்றன.
"பூரணி! இந்த வானிலும், நிலவிலும் மென் சீதக் காற்றிலும் காவியம் இருக்கிறது. அழகு இருக்கிறது. இவையெல்லாம் உனக்காகவும் எனக்காகவும் இருக்கின்றன" என்று அவள் காதருகில் புன்னகையோடு சொல்கிறான் அரவிந்தன். அந்தப் புன்னகையில் நயங்கள் பொலிகின்றன.
"இல்லை, அரவிந்தன். நீங்கள்... பொய் சொல்கிறீர்கள். உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன." பூரணி அரவிந்தனை மறுக்கிறாள்.
"நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே."
"அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!"
இப்படி இன்னும் என்னென்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். மலைமேல் ஏற ஏறப் பூரணிக்குக் கால் வலிக்கிறது. அரவிந்தனின் சுந்தரமணித் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தடுமாறி விழாமல் நடக்கிறாள் அவள்.
"அதோ எதிரே தொலைவில் பல நிறத்து வைரக் கற்களை அள்ளி இறைத்த மாதிரி விளக்குகள் தெரிகின்றனவே. அதுதான் மதுரை" என்று அரவிந்தன் சொல்கிறான். அவள் பார்ப்பதற்காக நிமிர்ந்து திரும்புகிறாள். கீழே கால்கட்டை விரல் மலைப்பாறையில் எற்றிவிடுகிறது. இரத்தம் கசிந்து விரல் மாதுளைப் பூவாக மாறுகிறது. அரவிந்தன் குனிந்து அந்த விரலைப் பற்றுகிறான். அவன் கையெல்லாம் சிவப்பாகின்றது. துணியைக் கிழித்துச் சுனை நீரில் நனைத்துக் கட்டுப் போடுகிறாள்.
"உங்கள் கையெல்லாம் இரத்தமாகிவிட்டதே! கழுவிக் கொள்ளுங்கள்."
"எதற்காகக் கழுவவேண்டும்? இந்த இரத்தத்தால் உலகத்துப் பெண் குலத்தின் துன்பக் காவியத்தை எழுதிவிடப் போகிறேன் பூரணி" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் அரவிந்தன்.
பூரணி கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். கால் கட்டை விரலில் உண்மையாகவே வலித்தது. ஈரம் கசிவதுபோல் ஒரு பிரமையும் உணர்வில் ஏற்பட்டது. எழுந்திருந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சுவரோரமாக இருந்த காய்கறி நறுக்கும் அரிவாள் மணையில் கட்டைவிரல் உரசியிருந்தது. விளக்கைப் போட்ட ஓசையில் கமலாவும் விழித்துக் கொண்டாள்.
"என்னடி பூரணி?"
"தூக்கத்தில் அரிவாள்மணை இருந்த பக்கம் காலைப் போட்டுவிட்டேன் போலிருக்கிறது."
"அடிபாவி! பார்த்து படுத்துக் கொள்ளக்கூடாதோ? இன்னும் கொஞ்ச நேரம் விழித்துக் கொள்ளாமலிருந்திருந்தால் கட்டை விரலே போயிருக்குமே?" என்று சினந்து கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள் கமலா. வெட்டுப்பட்ட இடத்தில் சிறிது ஈரச் சுண்ணாம்பு தடவித் துணியைச் சுற்றினாள்.
விட்ட கனவு மறுபடியும் தொடராதா என்ற ஏக்கத்தோடு படுத்துக் கொண்டாள் பூரணி.
காலையில் பூரணியும் கமலாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கச் சென்றார்கள். போகும்போது பூரணிக்குக் குடியிருக்க இடம் பார்ப்பதற்காக இரண்டு மூன்று பெரிய ஸ்டோர்களுக்குப் போய் விசாரித்தாள் கமலா. பெரிய இரத வீதியில் மூன்று அறைகளும் கிணறும் வசதியாக அமைந்து தெற்கு நோக்கி வாசலுள்ள சிறிய வீடு ஒன்று கிடைத்து விட்டது. மாதம் பதினெட்டு ரூபாய் வாடகை. பூரணிக்காக தன் கையிலிருந்து வீட்டுக்கு முன்பணம் கொடுத்தாள் கமலா. பத்து இருபது குடிகளுக்கு நடுவே மாட்டிக் கொள்ளாமல் சிறிதாக இருந்தாலும் தனி இடமாகக் கிடைத்ததே என்று பூரணி மன நிறைவு பெற்றாள். இடம் கமலாவின் வீட்டிற்கு அருகிலும் இருந்தது. அவர்கள் இருவரும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு திரும்பினார்கள். கமலாவின் வீட்டு வாசல் திண்ணையில் ஓதுவார்க்கிழவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அரவிந்தனைக் கண்டதும் பூரணி தலைகுனிந்து கொண்டே ஒதுங்கி நடந்து உள்ளே சென்றாள்.
"பூரணி! இவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று அங்கே வீட்டுக்குத் தேடிக் கொண்டு வந்தார். நீயும் குழந்தைகளும் இங்கே வந்திருப்பதாக காமு சொன்னாள். அதுதான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன் அம்மா."
"கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கள் தாத்தா! இதோ வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே மறைந்தாள் பூரணி.
"நேற்று வந்தபோது அந்த வீட்டு வாசல் திண்ணையில் என்னுடைய நோட்டுப் புத்தகம் ஒன்றை மறந்து போய் வைத்துச் சென்றுவிட்டேன். அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று தான்" என்று அரவிந்தன் எழுந்து நின்று கொண்டு சொன்னதும் உள்ளே போகிற வேகத்தில் அவளுக்குக் கேட்டது. இரவில் கண்ட கனவை நினைத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு அந்நோட்டுப் புத்தகத்தோடு அவள் வெளியே வந்தாள்.
அவள் வெளியே வந்த போது, ஓதுவார்க்கிழவர் கோயிலுக்குப் போயிருந்தார். அவருக்குக் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போக வேண்டிய நேரம். தனியாக உட்கார்ந்திருந்த அரவிந்தன், நோட்டுப் புத்தகமும் கையுமாக அவளைப் பார்த்ததும் வாங்கிக் கொள்வதற்காகக் கை நீட்டிக் கொண்டு எழுந்திருந்தான். பூரணி அதை அவன் கையில் கொடுத்துவிட்டு, "உட்காருங்கள், எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லையே" என்று கேட்டாள்.
'இந்த நோட்டுப் புத்தகத்தை இவள் படித்திருப்பாளோ?' என்று கூசித் தயங்கிக் கொண்டே கையில் வாங்கிய அரவிந்தன், அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கூச்சம் அடைந்தான். 'இவள் மயங்கி விழுந்தது பற்றி நான் இதில் எழுதியிருப்பதையெல்லாம் படித்திருப்பாள் போலிருக்கிறது. அது சம்பந்தமாகத்தான் தன்னை ஏதாவது கேட்பாள்' என்று எண்ணி வெட்கமும் தயக்கமுமாக மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தான். பனித்துளி நீங்காத செந்தாமரைப் பூப்போல் குளித்த ஈரம் புலராமல் தென்படும் அந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் அரவிந்தன். அந்த முகத்தில் தான் அவனுடைய கவிதைகள் பிறந்தன. அந்த முகத்துக்குத்தான் லட்சிய வெறியும், கவிப்பித்தும் கொண்ட அவள் மனம் இளகி நெகிழ்ந்தது. அந்த முகத்தில் அப்படி என்னதான் இருக்குமோ?
"நேற்று உங்களிடம் என்னென்னவோ சொல்லி ஆத்திரமாகப் பேசிவிட்டேன். அதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." மன்னிப்புக் கேட்கும் பணிவான இனிய குரலைக் கேட்டான் அரவிந்தன். அவனுடைய கூச்சம் நீங்கிச் சற்றே துணிவு வந்தது. நன்றாக நிமிர்ந்து நேராகவே அவள் முகத்தைப் பார்த்தான். பூரணியும் பார்த்தாள். கருத்தால் கவர்ந்து கண்விழிப் புகுந்து கனவெல்லாம் அளித்த குறுநகைக் கள்வனைத் தன் விழிகளால் பருகினாள். கல்பகோடி காலமாக அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தது போல் ஓர் அன்பின் தாகம் அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது.
"உங்கள் நோட்டுப் புத்தகத்தை முழுவதும் நான் படித்தேன். அதற்காகவும் மன்னிக்க வேண்டும்!"
"பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்."
"எல்லாம் நன்றாக இருந்தன. விடிய விடிய அவற்றைத் தூக்கம் விழித்துப் படித்தேன் நான்."
"அப்படியா? உங்களைப் பற்றிக்கூட ஏதோ கிறுக்கியிருந்தேன்."
"அதையும் பார்த்தேன்."
"தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் தான்!" அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக்கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:
"அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்."
"நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி. இதோ முகவரி" என்று விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடைபெற்றுப் போகும்போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய்விட்டானா, என்ன?
அன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்கு சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கரசுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறி பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய்விட்டாள்.
---------------------
குறிஞ்சி மலர்
8
"நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே"
-- தேவாரம்
"முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு..." என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமலா, ஓதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டுவிட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி.
அன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே புது வீடு பார்த்துவிட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத்தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல்தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில்தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது. அங்கே சிரிப்பு இல்லை. சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்றி இருந்தது.
தன்னுடைய எந்தத் துன்பங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாளோ அவை தெரிந்துவிட்டன; அவளுடைய வீட்டில் பசியும், ஏழ்மையும், பரிவும், வேதனையும் நிறைந்திருப்பதை உலகம் தெரிந்து கொண்டுவிட்டது; உலகம் என்றால் என்ன? கமலம் தெரிந்து கொண்டுவிட்டாள். இந்த அனுதாபத்தைத் தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம். நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே! மிகவும் நெருங்கிப் பழகிய சிநேகிதி செய்கிறாள். அந்த உதவியை வாய் கூசாமல் மறுத்துவிட்டு வீட்டுக்குள் அடைந்து பட்டினி கிடக்க அவளுக்கு ஏது உரிமை?
சந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப் பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும்பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான்.
பலவித நினைவுகளோடு மங்களேசுவரி அம்மாளின் காரில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மௌனமாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப் புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது கார். வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் சிமெண்டுக் கட்டிடங்களுடன் கூடிய மில் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ்நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவுவரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒருவாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது.
மங்களேஸ்வரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். "இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன் தெரியுமா?"
"தெரியாது. நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு."
"உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்."
பூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். கார் வடக்கு ஆவணி மூலவீதியில் 'மதுரை மங்கையர் கழகம்' என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. "வா உள்ளே போகலாம்" என்று பூரணி பின் தொடர உள்ளே சென்றாள் மங்களேஸ்வரி அம்மாள். கட்டிட வாயிலில் வேறு சில கார்களும் வரிசையாய் நின்றன.
உள்ளே மங்களேஸ்வரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கௌரவமும் என்ன ஆவது? "பூரணி! இவர்கள் எல்லோரும் இந்த மங்கையர் கழகத்தின் நிர்வாகிகள். இவர்களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா!" என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை கை கூப்பினாள்.
"நான் சொன்னேனே, அது இந்தப் பெண் தான். காலஞ்சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாக தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்துவிடலாம் என்று நினைக்கிறேன்" என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேஸ்வரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே?" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். "வயதில் என்ன இருக்கிறது? இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்களுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப் பின்னும் தெரியாத அவ்வளவு அனுபவ ஞானமும் சிந்தனையும் இவள் பெற்றிருக்கிறாள். இவளுடைய தந்தை இவளுக்குப் பூரணி என்று பெயரிட்டிருக்கிறார். இவளது படிப்பும், அறிவுக் கூர்மையும் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே வாய்த்திருக்கின்றன."
"நீங்கள் சொன்னால் சரிதான்; விளையாட்டுக்காகவோ பொழுது போக்குக்காகவோ நாம் நமது மாதர் சங்கத்தில் இந்த வகுப்புக்களைத் தொடங்கவில்லை. உண்மையாகவே நல்ல விதமான மாறுதல்களையும், வளர்ச்சியையும் நமது பெண்கள் இதன் மூலம் பெறவேண்டும்."
மங்களேஸ்வரி அம்மாளும், மற்றவர்களும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது பூரணி அமைதியாகவும், அடக்கமாகவும் உட்கார்ந்திருந்தாள். அங்கேயிருந்த பெண்களின் முகங்களையும் தோற்றங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றின் மூலம் அவர்களுடைய உள்ளங்களையும் குணங்களையும் அனுமானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவளைப் போல் கூர்ந்து பார்க்கும் கண்களும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் உள்ளவளுக்கு ஒவ்வொரு முகமும் ஓர் உலகம்; ஒவ்வொரு முகமும் ஒரு சுவை; ஒவ்வொரு முகமும் ஓர் அனுபவம்; ஒவ்வொரு முகமும் ஓர் வாழ்க்கை; ஒவ்வொரு முகமும் ஓர் அழகு; ஒவ்வொரு முகமும் ஓர் புத்தகம்; அவற்றை அவள் பார்த்துப் படித்துச் சிந்தித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
மங்கையர் கழகத்துக்குள் நுழைகிற இடத்துக்கு நேர் எதிரே தூய்மையே பேருருவெடுத்துப் பெரிதாய் மலர்ந்து சித்திரமானாற் போலச் சாரதாமணி தேவியாரின் படம் மாட்டியிருந்தது. சுவர்களில் விவேகானந்தர், பரமஹம்சர், திருவள்ளுவர் போன்ற வேறு பெரியோர்களின் படங்களும் காட்சியளித்தன. சாரதாமணி தேவியாரின் படத்துக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குத்துவிளக்குகள் பொற்சுடர் பூத்து எரிந்து கொண்டிருந்தன. சந்தன வில்லைகளைக் கொளுத்தி வைத்திருந்ததால் கட்டிடம் முழுவதும் சந்தனப் புகை மணந்தது. சில பெண்கள் வைத்திருந்த மல்லிகைப் பிச்சிப் பூக்களின் மணமும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்த மணங்களும், எதிரே புனிதமான சாரதாமணி தேவியாரின் ஓவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப்பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணியமெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்திலிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி.
"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா, அம்மா?" இந்தக் கேள்வி, தன்னை நோக்கிக் கேட்கப்பட்டதும் பூரணி சாராதாமணி தேவியாரின் படம் அளித்த சிந்தனைத் தூய்மைகளிலிருந்து கீழிறங்கிக் கேள்வி கேட்ட அம்மாளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துப் பதில் கூறினாள்.
"ஆகவில்லை."
"அப்படியா? வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?"
இந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும் வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது? அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக 'தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது? கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா?' என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.
"பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும். ஞானம் பிறவியிலேயே வருவது. அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற்போல் கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டாம்" என்று மங்களேஸ்வரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி.
அந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டால் பட்டம் பெற்றவர்கள் மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூசவேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம் பூரணிக்கு அந்த வினாடியே உண்டாயிற்று. சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள் அவள்.
மங்களேஸ்வரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேஸ்வரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறவரை சாரதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக்கொண்டு நின்றது.
மாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது.
"பூரணி! என்னால் முடிந்தவரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டேன். மாதர் சங்கத்தில் எல்லோரும் வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா."
"நீங்கள் சொல்லவே வேண்டாம். நான் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவேன்."
அந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காண முடிந்தது.
"பூரணியக்கா! நீங்க தினம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. ரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற்போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம் பரிசுத்தமாகப் போயிடுது" என்று களங்கமின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம்.
"செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்" என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.
"இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா" என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். "டிரைவரைக் காரை எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு" என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி.
"என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப் படித்து மனதில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பின்பு பஸ் ஏறிக்கொள்வேன். எனக்குக் காரும் வேண்டாம், டிரைவரும் வேண்டாம்."
தெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலகமிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக்கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை! களை இருப்பதில்லை! நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. 'மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு' என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தியிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடைபாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல்நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மிக அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்பு சிரித்தது அவள் மனத்தில். காலையில் விசிட்டிங் கார்டு வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன? இப்பொழுது பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே!
பூரணி சற்று நெருங்கி ஜன்னல் அருகே நின்று பார்த்தாள். உள்ளேயிருந்து தற்செயலாகத் திரும்பிய அரவிந்தன் அவள் வாய் திறந்து கூப்பிடுவதற்கு முன்பே அவளைப் பார்த்து விட்டான்.
"ஓ! நீங்களா? ஏது இந்த நேரத்தில்... நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்?" என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். 'அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல், வீட்டுக்குப் போயிருக்கலாமே' என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள்.
"உள்ளே வாருங்களேன்... வாசலில் நிற்பானேன்?" கதவைத் திறந்துவிட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனதில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப்புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேஜை மேல் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலைவாழைப் பழமும், கிளாஸ் நிறைய பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
"இதெல்லாம் என்ன?"
"இவை என்னுடைய இரவு உணவு". உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பதில் கூறினான் அரவிந்தன்.
"இந்தச் சிறிய வாழைப்பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு?"
இதைக்கேட்டு அரவிந்தன் சிரித்தான்.
"போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?"
"அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினிக் கிடக்க வேண்டுமென்பதில்லையே?"
"தவறு! நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த உணர்வுக்கு மூன்றே அணாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனிதமான தாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம்? வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்?" அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும்போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு.
"நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள்" என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான்.
"கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?"
அந்தக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க அந்த முகத்திலே ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடைய கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள்.
வெளியில் போய்ப் பக்கத்துப் பால்கடையில் இன்னொரு கிளாஸ் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து "இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைக்கும் போது, "உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவளுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய்விடுகிற அளவுக்கு வலுத்துவிட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது.
"அடடா! உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பஸ் போக்குவரத்து சரி. அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது?" என்று பரபரப்பாக கூறிக்கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி.
"மழை பெய்கிறதே. எப்படிப் போவீர்கள்? நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசி பஸ் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?"
"எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே? வேறென்ன செய்வது?" அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான்.
"இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பஸ் ஸ்டாண்டு வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி பஸ் போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன்.
"ஒரு குடைதானே இருக்கிறது. நீங்கள் எப்படி வருவீர்கள்? வீணாக நனைய வேண்டாம். நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்" என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டுவிட்டான்.
"அதனால் பரவாயில்லை! எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும் மழையும் வானம் பூமிக்குத் தரும் சௌபாக்கியங்கள். அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்!" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். 'மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்?' என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெருவிளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
அழகிய சிவந்த நெற்றியில் முத்து முத்தாக நீர்த்துளி உருள அலை அலையாக வாரிப் படிந்த தலையில் ஈரம் மினுமினுக்க அரவிந்தன் வந்து கொண்டிருந்தான்.
"நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்" என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்புமயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்ர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தது.
அடுத்த கணம் தன்னுணர்வுடன், "வேண்டாம்! இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்" என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள்.
அவர்கள் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்ஷாவிலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்பவில்லை. தயங்கினாள். "நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்" என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பஸ் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.
"நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்."
"திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா?"
"திருப்பரங்குன்றம் வரை என்ன? உங்களோடு இப்படியே கன்னியாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்" என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு கார் வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்துவிட்டது. கோபத்தோடு அந்தக் கர்வம் பிடித்த கார்க்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார்.
------------------
குறிஞ்சி மலர்
9
"பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்பு
பூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்
பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்
பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி"
-- சது.சு.யோகி
அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த இரவில்தான் அரவிந்தனின் எல்லையற்ற மனப்பரப்பை அவள் கண்டுணர்ந்தாள். அந்த இரவில் தான் மீனாட்சி அச்சக உரிமையாளர் அவளைச் சந்தித்துத் தம் காரிலேயே திருப்பரங்குன்றத்தில் கொண்டு போய் விட்டு அரவிந்தனோடு திரும்பினார். அரவிந்தனும் அவளும் பஸ் நிலையத்துக்கு வெளியே மழையில் நின்று கொண்டிருந்த போது நல்ல வேளையாக அவர் வந்து உதவினார். அந்தப் பெரியவரின் உதவி அவளுக்கு வாழ்நாள் நெடுகிலும் தொடர்ந்து கிடைக்க இருந்ததற்கு அது ஓர் அடையாளமா?
அதன் பின்னர் கடந்த சில வாரங்களில் அவள் வாழ்விலும் அவளைச் சூழ்ந்திருந்த வாழ்விலும் தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. மாளிகை போல் பெரிய வீட்டில் இருந்து பழகிவிட்ட பின் சிறிய இடத்தில் புதிதாகக் குடியேறிய வீட்டில் குறுகிய வசதிகளைப் பழக்கப்படுத்திக் கொண்டாள் அவள். செல்வத்தோடும் வசதிகளோடும் வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டியதில்லை. ஆனால் ஏழ்மையோடும் வசதி குறைவுகளோடும் வாழப் பழகிக் கொள்ள முயற்சி தானே வேண்டும். சிறிய தம்பிக்கு கைக்கட்டு அவிழ்த்தாயிற்று. ஏறக்குறைய கை சரியாகிக் கூடி விட்டது. அவன் முன் போல் தன் அண்ணனோடு பள்ளிக்கூடம் போகத் தொடங்கிவிட்டான். புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் பொய்யும் புளுகுமாகக் கணக்குக் காண்பித்து பூரணி எதிர்பார்த்திருந்த தொகைக்குச் சரிபாதி கூடத் தேறாத ஒரு தொகையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார். அரிய முயற்சியின் பேரில் அப்பாவின் சேமிப்பு நிதியில் கல்லூரிப் பங்குக்கு உரிய ஒரு பகுதி வந்து சேர்ந்தது. சாதாரணமாக மாதக் கணக்கில் காலந்தாழ்த்தி கிடைக்க வேண்டிய பணம் அது. அனுதாபமுள்ளவர்களின் உதவியாலும், கல்லூரி முதல்வர் காட்டிய அக்கறையாலும் தான் அவளுக்கு அவ்வளவு விரைவில் கிடைத்ததென்று சொல்ல வேண்டும். மீனாட்சி அச்சக உரிமையாளரும், அரவிந்தனும் அவளுடைய தந்தையின் நூல்கள் ஒழுங்காகவும், முறையாகவும் வெளி வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
காலையில் வீட்டு வேலைகளும் மாலையில் மங்கையர் கழகத்தில் வகுப்பு நடத்தும் வேலைகளும் இருந்ததனால் பூரணிக்கு ஓய்வு அதிகமாக இல்லை. துன்பங்களையும் கவலைகளையும் நினைத்தே குமுறிக் கொண்டிருந்த அவள் மனத்தில் சற்றே அமைதி நிலவியது. மின்சார விசிறி ஓடத் தொடங்கி விட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது. நிற்கும் போதுதான் பிளவுகள் தெரிகின்றன. ஒரு செயலுமின்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போதுதான் உலகம் பெரிய துன்பங்களும் மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுபட்டுத் தெரிகிறது. உழைப்பு ஒரு நல்ல மருந்து. அதில் மனப்புண்களும், கவலைகளும் ஆறுகின்றன. சோர்வும் தளர்வும் ஒடுங்கிவிடுகின்றன.
கமலாவின் பெற்றோர்கள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசிக்கொண்டு திரும்பி விட்டார்கள். அடுத்து எல்லா ஏற்பாடுகளும் தொடர்ந்து நிகழலாயின. கமலாவின் பெற்றோர் ஊர் திரும்பிய மறுநாளைக்கு அடுத்த நாள் மாலையே பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தார்கள். கமலாவின் தாயாருக்கு உதவியாக உடன் இருந்து வந்தவர்களுக்கு உபசாரம் செய்வதற்காகப் பூரணியும் அன்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். பூரணி தன் கைகளால் தானே கமலாவுக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டி, பார்க்க வந்தவர்களுக்கு முன்னால் கொண்டு போய் அழகுப் பதுமையாய் நிறுத்தினாள். கமலாவை அழகு புனைவதும், அழகு பார்ப்பதுமாக அந்த ஒருநாளை விளையாட்டுத்தனமான மகிழ்ச்சியில் கழித்தாள் பூரணி. கமலாவின் திருமணம் உறுதியாயிற்று. அதே தை மாதம் திருமணத்துக்கென்று நாளும் குறித்துவிட்டார்கள்.
இது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் பூரணிக்கு மிகவும் வேண்டியவர்கள் வீட்டில் இன்னொரு திருமணமும் அவசரமாக முடிவாயிற்று. ஓதுவார்க்கிழவர் பெரிய இடமாக ஆங்கிலப் படிப்பும் படித்துப் பெரிய வேலை பார்க்கும் பையனைத் தன் பேத்தி காமுவிற்குப் பார்க்க முடியாது. அவருக்கு அவ்வளவு வளமான வசதிகள் எல்லாம் இல்லை. உறவுக்குள்ளேயே கோயிலில் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பையனைப் பிடித்துக் காமுவுக்கு முடிபோட ஏற்பாடு செய்துவிட்டார். கமலாவின் திருமணம் நிகழ இருந்த அதே நாள் தான் காமுவின் திருமணத்துக்கும் ஓதுவார்க் கிழவர் பார்த்திருந்தார். அவசரமாகப் போய்ச் சேரவேண்டிய கடிதத்தை உடனே தபாலில் சேர்த்துவிடத் துடிக்கிறாற் போல் அந்தத் தை மாதத்தின் முகூர்த்தங்களுள் தத்தம் பெண்களை வாழ்க்கைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் பெற்றோர்களைத் தன்னைச் சுற்றிலும் கண்டாள் பூரணி. அப்படி அவசரப்படவும் துடிக்கவும் யார் இருக்கிறார்கள் அவளுக்கு. அவளுக்கு அவள் தான் இருக்கிறாள். ஓதுவார் வீட்டுத் திருமணத்துக்கு முன் தாம்பூலம் மாற்றிக் கொள்கிற அன்று அவளும் போயிருந்தாள். அப்போது ஓதுவார் வீட்டுப் பாட்டி "என்னடி பெண்ணே? இப்படி எத்தனை நாளைக்கு மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்குமாக நடந்து ஒண்டிப் பிழைப்புப் பிழைக்கப் போகிறாய்? கமலாவுக்கும் எங்கள் வீட்டுக் காமுவுக்கும் உன்னைவிடக் குறைந்த வயதுதான் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ, இப்படியே இருந்துவிடலாமென்று பார்க்கிறாயா? யாராவது ஒரு நல்ல பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அவன் நிழலில் போய் இருந்து கொண்டு தம்பிகளையும் தங்கையையும் படிக்க வைக்கலாமே! இல்லாவிட்டால் இப்படித்தான் நீ மட்டும் தனி மரமாக நின்று கொண்டு இருக்கப் போகிறாயா? உனக்கு உன் மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள்? நீயாகத்தானே தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்" என்று பூரணியின் அருகில் வந்து நீட்டி முழக்கிக் கொண்டு கேட்டாள்.
பூரணி ஏதும் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்து மௌனமாக இருந்தாள். 'எதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லையோ, எந்த இடத்தைப் பற்றி பேசும்போது என் வார்த்தைகள் வெற்றோசையாய் ஆற்றலற்றுப் போகின்றனவோ, எந்த உணர்ச்சியைத் தேடும்போது என் சொற்களின் பொருளுணர்ச்சி மங்கிவிடுகிறதோ - அந்த உணர்வை - அந்த இடத்தை இந்தப் பாட்டி விளக்கச் சொல்லிக் கேட்கிறாள். எப்படி விளக்குவேன்? எங்கிருந்து விளக்குவேன்?' என்று ஏங்கிக் குமைந்தாள் பூரணி. அன்று முழுவதும் இந்த எண்ணம் அவள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்கிற நாய்கள் மாதிரி ஏன் இப்படித் தானும் பறந்து கொண்டு மற்றவர்களையும் பறக்க அடிக்கிறார்கள். இப்படித் திருமணம், வளைகாப்பு, குழந்தை - குடும்பம் - மறுபடியும் திருமணம், வளைகாப்பு என்று ஓட ஓட விரட்டுவது தான் வாழ்க்கையா? இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா? என்று நினைத்தபோது ஏதோ ஓருணர்வு கல்லாகக் கனத்துப் பரவி அவள் நெஞ்சை இறுக்கி நசுக்குவது போல் இருந்தது. அன்று இரவு படுக்கையில் தலையணை நனைத்து ஈரமாகும்படி நெடுநேரம் அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
பூரணி ஒவ்வொரு நாள் மாலையும் மங்கையர் கழகத்துக்குப் போய் அதே வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நாள் தவறாமல் அரவிந்தனைச் சந்திக்க நேரமிருக்காது அவளுக்கு. இரண்டொரு நாள் கழகத்து வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது அவனைப் பார்க்க நேரிடும். அப்படிப் பார்க்கும் போது சிறிது நேரம் பேசிவிட்டு வருவாள். சில நாட்களில் பகலில் அரவிந்தனே திருப்பரங்குன்றத்துக்கு வந்து அவள் தந்தையின் வெளிவர வேண்டிய நூல்களுக்கான கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போவான். இன்னும் சில நாட்களில் மங்களேஸ்வரி அம்மாளும் இளைய பெண் செல்லமும் வந்தார்கள். முருகனை தரிசனம் செய்துவிட்டு பூரணியின் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.
புதிய வீட்டில் ஓர் அறையை முழுவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அப்படியும் இடம் போதவில்லை. நெருக்கடியோடு சிரமப்பட்டுப் புத்தகங்களை அதற்குள் அடுக்கியிருந்தாள். புத்தகங்களைத் தவிர நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார இடமிருக்கும் அங்கே. தம்பிகளுக்குச் சாப்பாடு போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பின் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புத்தக அறைக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும் பூரணிக்கு. அப்பா சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உலகில் மூழ்கிவிடுவாள் அவள். அப்படி மூழ்கினால் தான் தினந்தோறும் மங்கையர் கழகத்து வகுப்புகளில் தன்னிடம் படிக்கும் பெண்களுக்குப் புதுப்புதுக் கருத்துக்களைச் சொற்பொழிவு செய்ய அவளால் முடியும். குழந்தை மங்கையர்க்கரசியால் அவள் படிப்புக்கு இடையூறு இருக்காது. வீட்டுக்குள்ளேயோ, வெளியில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனோ விளையாடப் போய்விடுவாள் அவள். சில சமயங்களில் கமலாவாவது காமுவாவது அரட்டைப் பேச்சுக்கு வருவார்கள். திருமணம் நிச்சயமான பின்பு இரண்டு பெண்களுமே வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். அதனால் பூரணிக்குக் கிடைப்பதற்கரிய தனிமை கிடைத்திருக்கிறது. அந்தத் தனிமையில் அவளுடைய மனத்தின் குறிக்கோள்கள் மேலும் நன்றாக மலர்ந்தது. தன் இலட்சிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டாள் அவள்.
திருமண நாளன்று பூரணி இரண்டு வீடுகளிலும் மாறி மாறி இருந்து உதவினாள். கமலாவின் வீட்டில் அவள் இருந்து செய்யாவிட்டாலும் செய்வதற்கு வேறு மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் ஓதுவார் வீட்டுத் திருமணம் ஏழைத் திருமணம். குறைவான ஏற்பாடுகளுடன் நடந்தது. பூரணி அங்கே தான் அதிக நேரமிருந்து உதவினாள். வந்தவர்களுக்குச் சந்தனம், வெற்றிலை பாக்குக் கொடுத்தாள். ஓடியாடிச் சாப்பாடு பரிமாறினாள். அந்த இரண்டு வீட்டுத் திருமணங்களிலும் எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிகிறார் போலவும், எல்லா காரியங்களிலும் அவளே முன் நின்று செய்கிறாள் போலவும் வந்திருப்பவர்களுக்குத் தோன்றும்படி பம்பரமாகச் சுழன்றாள் அவள். இரண்டு வீட்டுத் திருமணங்களுக்கும் வந்திருந்த எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவள் இவள் ஒருத்திதான். கமலாவின் கணவனுக்கோ வடக்கே எங்கோ வேலை. திரும்பவும் ஒருமுறை வந்து கூட்டிக் கொண்டு போக வசதிப்படாதாம். திருமணம் முடிந்த நாலாவது நாளோ, ஐந்தாவது நாளோ கூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான். கமலாவை வழியனுப்ப இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. ஓதுவார்க் கிழவருடைய மாப்பிள்ளை உறவுக்காரனாக இருந்தாலும் வேறு ஊர்க்காரன். தெற்குச் சீமையில் ஏதோ ஒரு சிறிய ஊரில் கோயிலில் ஓதுவார் அவன். ஒரு வாரத்தில் அவனும் காமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். அன்றும் இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. தோழிகளை வடக்கிலும் தெற்கிலுமாக வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பொழுதுகளில் அவள் மனம் நலிந்து வருந்தியது. நல்ல கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது யாராவது உடனுக்குடன் அடித்துத் தட்டி எழுப்பிவிடுகிற மாதிரி அந்தப் பிரிவுகள் அவளை வேதனையுறச் செய்தன. என்னென்னவோ எண்ணினாள் அவள்.
வாழ்க்கையே இப்படித் தொடர்ந்து வழியனுப்பிக் கொண்டிருக்கிற ஒரு சடங்குதான் போலும். ஊருக்கு வழியனுப்பினால் பிரயாணம்! உயிர்களை வழியனுப்பினாலும் அது ஒருவகைப் பிரயாணம். தோழிகள் ஊருக்குப் போன பின் இரண்டு மூன்று நாட்களுக்கு அவள் உள்ளம் இத்தகைய நலிவுள்ள நினைவுகளையே நினைத்தது.
ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு தாங்களாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். சில நாட்கள் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.
அன்று அவள் இரவில் வீடு திரும்பிய போது தம்பிகள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். வழக்கமாக அவள் வருகிற நேரத்துக்குத் தூக்கிப் போயிருக்க வேண்டிய குழந்தை மங்கையர்க்கரசி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் முகம் நெடுநேரம் அழுதாற்போல் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்து கன்னம் நனைந்து ஈரக்கறை தெரிந்தது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. பூரணி எங்கேயாவது போய் விட்டு வீடு திரும்பினால், "அக்கா வந்தாச்சு" என்று வீடெல்லாம் அதிரும்படி உற்சாக மழலைக் குரல் எழுப்பியவாறே துள்ளிக் குதித்தோடி வந்து அவல் கால்களைக் கட்டிக் கொள்ளும்.
அந்தக் குழந்தை அன்று அவளைக் கண்டவுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பூரணி இந்தப் புதுமையின் காரணம் புரியாமல் தம்பி திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள்.
"இவளுக்கு ஏதோ கோபமாம். சாப்பிடமாட்டேன்கிறா. முரண்டு பிடிக்கிறா" என்றான் திருநாவுக்கரசு. பூரணிக்கு அந்தக் குழந்தையின் கோபம் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்தது. சமாதானப்படுத்திச் சாப்பிட வைப்பதற்காக அருகில் சென்றாள் பூரணி. குழந்தை வெறுப்பைக் காட்டுகிறார்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே மங்கையர்க்கரசியின் மோவாயைத் தொட்டு முகத்தைத் திருப்பிக் கேட்டாள் பூரணி.
"உனக்கு என்னடி கோபம்?"
"நீயொன்றும் எங்கூடப் பேசவேண்டாம் போ..." பூரணியைப் பிடித்துத் தள்ளுவது போல் இரண்டு பிஞ்சுக் கைகளையும் ஆட்டினாள் குழந்தை. ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு.
"யார் மேலே எதற்காகக் கோபம் உனக்கு?"
"எல்லாம் உம் மேலதான்."
"எதுக்காக? நான் உனக்கு என்ன செய்தேன்?" பதில் இல்லை. குழந்தை பொருமியழுதாள். சொற்கள் அழுகையில் உடைந்து நைந்து கரைந்து போய்விட்டன. பூரணியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தையைத் தழுவினாற் போல் அணைத்து எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள் அவள். கை, கால்களை உதைத்துக் கொண்டு அவள் அணைப்பிலிருந்து திமிர முயன்றாள் குழந்தை. இதமாகச் சொல்லி அழுகையை நிறுத்திச் சாப்பிடுவதற்குத் தட்டைப் போட்டு உட்கார்த்தினாள்.
"அண்ணன் அடித்தானா உன்னை?"
"இல்லை..."
"விளையாடறபோது தெருவிலே கிழே விழுந்தியா?"
"இல்லை..."
"பின்னே எதற்காக இப்படி அழவேண்டும் நீ?"
"ஓதுவார் வீட்டிலே அந்தப் பாட்டிக் கிட்டப் பேசிக்கிட்டிருந்தேன். 'ஏம் பாட்டி, உங்க காமுவைச் சிவப்பா கழுத்திலே தங்கச் செயின், ருத்திராட்சம் எல்லாம் போட்டுக்கிட்டிருந்தாரே ஒருத்தர், அவரோட இரயில்லே ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டீங்களே இனிமே அவ இங்கே வரமாட்டாளா?' அப்படின்னு கேட்டேன்."
"நீ அந்தப் பாட்டியைக் கேட்டியா?"
"ஆமாம்!"
"ம்...ம்... அப்புறம்?"
"அதுக்கு அந்தப் பாட்டி சிரிச்சுக்கிட்டே வந்து வந்து..." இதைச் சொல்லும் போது குழந்தை மறுபடியும் விசும்பத் தொடங்கிவிட்டாள்.
"அழாமல் முழுவதும் சொல்லு கண்ணு! நீ சமர்த்து குழந்தையில்லையா?"
"உங்க பூரணியக்காவும் ஒருநாள் அப்படித்தான் போவாங்க. பொண்ணுன்னு பொறந்தா என்னிக்காவது ஒருநாள் இப்படி ஒருத்தரோடு போய்த்தான் ஆவணும். நீ கூட வளர்ந்து பெரிசானா அப்படித்தான்னு அந்தப் பாட்டி சொன்னாங்க..."
பூரணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டால் தான் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தில் குழந்தைக்கு நம்பிக்கை குறைந்து, சொல்வதை நிறுத்திவிடுவாளோ? என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
"அந்தப் பாட்டிக்கு நீ என்ன பதில் சொன்னே?"
"எனக்கு இதைக் கேட்டதும் அந்தப் பாட்டி மேலே ஒரே கோவமாயிரிச்சி. 'எங்க பூரணியக்கா ஒண்ணும் அப்படியில்லே என்னிக்கும் எங்களோடதான் இருப்பாங்க. உங்க காமுவுக்குத் தலைமயிர் கொஞ்சம், தெத்திப்பல்லு, குண்டு மூஞ்சி அதனாலே தான் அவள் ரயிலேறிப் போயிட்டா. எங்க அக்கா ரொம்ப அழகு. போகமாட்டாங்க. நீங்க பொய் சொல்றீங்க'ன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி அடி அசடே! அழகுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க."
"அப்புறம்?"
"அப்புறம் ஒண்ணுமில்லே... எனக்கு அழுகை அழுகையாய் வந்திடுச்சி. அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து சாவி வாங்க வந்ததும் நான் அண்ணனோட வந்திட்டேன்."
"ஏங்க்கா... ஓதுவார்ப் பாட்டி சொன்னாப்போலே நீ செய்வியா? எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போயிடுவியா?"
பூரணி கலகலவென்று நகைத்தாள். குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்தாள். "அசடே! விளையாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுதுகொண்டு வரலாமா? நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் மங்கை. நீ சாப்பிடு!" என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூக்கண்களும் பூஞ்சிரிப்பும், பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற்போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விஷயத்துக்குக் கூட பெரிய துக்க உணர்வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப்பரப்பெல்லாம் இதமளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும்பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம்! உணர்ச்சி நிழல்களின் பொய்ச் சாயல்கள் படியாத புனிதக் கண்ணாடியா அந்த உள்ளம்!
பூரணி அன்றிரவு தன் அருகிலேயே குழந்தை மங்கையர்க்கரசியைப் படுக்க வைத்துக் கொண்டு கதையெல்லாம் சொன்னாள்.
"ஏங்க்கா, காமுதான் ரயிலேறி ஊருக்குப் போனா. கமலா எதுக்காகப் போகணும்? அவளும் ஊருக்குப் போயிட்டாளே" என்று திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல கேட்டாள் குழந்தை.
'ஏ அறியாக் குழந்தையே! பெண்கள் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து போய்த் தாய் - தந்தையராகித் தாய் - தந்தைகளை உண்டாக்க வேண்டியவர்கள். அவர்கள் பிறக்குமிடத்தில் தங்கினால் உலகத்தின் உயிர் மரபு அற்றுப் போகும்' என்று தத்துவம் சொல்லியா விளக்க முடியும்?
"பேசாமல் தூங்கு மங்கை. நேரமாகிவிட்டது. எல்லாம் காலையில் கேள். சொல்கிறேன்" என்று மழுப்பிவிட்டுக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் பூரணி. மறக்கவே முடியாத விதத்தில் இந்தக் குழந்தைத்தனமான நிகழ்ச்சி அவள் மனத்தில் பதிந்து கொண்டது.
ஒரு வாரத்துக்குப் பின் ஒருநாள் பகல் அவள் மனம் வருந்தத்தக்க துயர நிகழ்ச்சியொன்று அவளது வீட்டைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.
நண்பகல் பதினொரு மணி இருக்கலாம். தம்பிகள் சாப்பிட்டு விட்டுப் பகல் சாப்பாடும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். குழந்தை மங்கை நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு மர நிழலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். பூரணி அப்போதுதான் தன் கை வேலைகளையும் உணவையும் முடித்துக் கொண்டு படிப்பறைக்குள் நுழைந்திருந்தாள். குழந்தை எந்த நேரத்தில் திரும்பி வருவாளோ? எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் படிப்புத் தடைப்படும் என்று எண்ணி வாயிற் கதவைத் தாழிடாது சாத்தியிருந்தாள் பூரணி.
மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அன்று திருக்குறள் சொல்லிக்கொடுக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதென்றால் கரும்பலகையில் பதவுரை, பொழிப்புரை எழுதிப் போட்டுச் சொல்லித் தருகிற படிப்பை அவள் சொல்லித் தருவதில்லை. அப்படிச் சொல்லித் தருவதற்கு அது பள்ளிக்கூடமும் அன்று. அங்கே பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையுள்ள சிறிய பெண்கள் பலரும் வகுப்புகளுக்கு வருகிறார்கள். மணமாகித் தாயானவர்களும் அதில் இருக்கின்றனர். எனவே மனத்தை மலர்விக்கும் சொற்பொழிவுகளாகச் செய்து தன் வகுப்புகளைச் சிறப்புற நடத்தினாள் பூரணி. வகுப்புகள் தொடங்கப் பெற்ற மூன்று நாட்களிலேயே அவளுடைய சொற்பொழிவுகளுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாயிற்று. கேரம் விளையாடுவதும் வம்பளப்புமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அவள் ஒரு புதிய உலகினைக் காட்டினாள்! ஒரு புதிய அறிவுச் சுமையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம். அவள் ஊட்டியது தமிழ்ச்சுவை! மங்கையர் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளங்களில் அவள் ஒவ்வொரு நாளும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து கொண்டிருந்தாள். முதலில் சாதாரணமாக எண்ணியவர்களும் பின்பு அவளுடைய நாவன்மையைக் கண்டு வியந்தனர்.
இந்தப் பெருமித நினைவுகளுடன் திருக்குறள் புத்தகத்தை விரித்துச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்பு எடுக்கலானாள் பூரணி.
சாத்தியிருந்த வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ நடந்து வருகிற ஒலி கேட்டது. வேறு யார் இந்த நேரத்தில் இங்கே வரப்போகிறார்கள்? குழந்தைதான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிகமற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். "வாருங்கள்... அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே?"
"உட்காருவதற்காக இங்கே நான் வரவில்லை. என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்."
"யார் மேல் ஆத்திரம்?"
"ஒன்றும் தெரியாதது போல் பேசவேண்டாம். நான் ஒருவன் புத்தகங்களை வெளியிட்டு விற்றவை பாதியும், விற்காதவை பாதியுமாகத் திணறிக் கொண்டிருக்கும் போது நீ என்னை ஒரு வார்த்தை கூடக் கேளாமல் எவனோ ஒரு மீனாட்சி அச்சகமோ, காமாட்சி அச்சகமோ வைத்திருப்பவனுக்கு வெளியிடுகிற உரிமையைத் தரலாமா?"
நாற்பது வயதுக்கும் அதிகமாகத் தோன்றிய அவருக்குப் பேசும் போது மீசை துடித்தது. பூரணி அடக்கமாக அவருக்குப் பதில் சொன்னாள்.
"மன்னிக்க வேண்டும் அய்யா! நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லை. நீங்கள் உண்மைகளை மட்டும் என்னிடம் பேசுங்கள். பொய்களை நான் கேட்கத் தயாராயில்லை."
"எது பொய்?"
"அப்பாவின் புத்தகங்களை விற்றது பாதியும் விற்காதது பாதியுமாக வைத்துக் கொண்டு நீங்கள் திணறுவதாகச் சொல்கிறீர்களே, அது முழுப்பொய்; பல பதிப்புகள் விற்றவைகளை மறைக்கிறீர்கள். உங்கள் கணக்கும் உங்கள் பேச்சும் ஊழல். அப்பா உங்களை மன்னித்தார். நான் மன்னிக்க விரும்பவில்லை. எனக்கு வயிறு இருக்கிறது. நான் வாழ வேண்டியிருக்கிறது."
"என்னைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. நான் பொல்லாதவன். போக்கிரி! கேள்விப்பட்டிருப்பாய். இல்லாவிட்டால் இப்போது சொல்வதிலிருந்து தெரிந்து கொள். மீனாட்சி அச்சகத்துக்காரன் புத்தகம் போட்டு விற்பதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்."
"அதில் சந்தேகமென்ன? நிச்சயம் பார்க்கத்தான் போகிறீர்கள்?" இந்தக் கணீரென்ற புதுக்குரல் யாருடையது என்று திரும்பினார் அவர்.
பூரணியும் வியப்பு மலர தலை நிமிர்ந்து பார்த்தாள். ஓசைப்படாமல் வந்து கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் தான் அவருக்கு இந்த அறைகூவலை விடுத்தான். எரித்துவிடுவது போல் சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்தார் அவர். திருத்திச் சரிபார்த்த அச்சுப் படிகளை (புரூஃப்கள்) பூரணியிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தான் அவன்.
"ஓகோ நீயா...?" அவர் உறுமினார். அவனைத் தெரியும் அந்த மனிதருக்கு.
"வாழ்வில் அறம் வேண்டும், ஒழுக்கம் வேண்டும், பண்பும் நியாயமும் வேண்டுமென்று பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தம் புத்தகங்களில் வரிக்குவரி எழுதியிருக்கிறார். நீங்கள் அந்தப் புத்தகங்களைக் கொண்டே அவரை அறமின்றி, ஒழுங்கின்றி, நியாயமின்றி ஏமாற்றினீர்களே! இவ்வளவு காலம் ஏமாற்றினது போதாதா?" என்று அரவிந்தன் கூறிக்கொண்டே வந்த போது அவன் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. அவனுக்குச் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அவனுடைய இளமைத் துடிப்பு மிக்க உரமான கைகள் அந்தக் கொடியவனை கீழே தள்ளிப் பந்தாடியிருக்கும். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுக்கப் பூரணி ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விட்டாள்.
--------------------------
குறிஞ்சி மலர்
10
உடல்குழைய என்பெலாம் நெக்குருக
விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற
ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே
ஓர் உறவும் உன்னியுன்னிப்
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற...
-- தாயுமானவர்
இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது லேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. ரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடையாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்துவிடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.
அன்று தன் வீட்டில் புது மண்டபத்து முரட்டு மனிதனிடம் அரவிந்தன் வாங்கிய அறை தன் முகத்திலேயே விழுந்தது போல் உணர்ந்து, வெதும்பித் துடித்தாள் பூரணி. விழிகளில் நீரரும்பித் துக்கம் ஊற்றெடுத்து வர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி நின்றாள் அவள். காந்தத்தில் இணையும் ஊசி போல் அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற்காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் போய் இணைந்தது.
"நீங்கள் எதற்கு அழுகிறீர்கள்? அரிச்சந்திரனுடைய தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடிய வரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக் கொண்டு சும்மா இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப் பற்றிய உண்மையோ, அவர்களுக்கும் கோபம் தான் வருகிறது" என்று அவளிடம் கூறினான் அரவிந்தன். அடித்தவர் நின்று கொண்டிருக்கவில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்று விட்டார். மிகச் சில விநாடிகளே அரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள். நீர் கிழிய எய்த வடுபோல் அந்த நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள்.
பூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த மூக்கைக் கழுவிக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்த போதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்துவிட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும்போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது.
'அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந்தீர்கள். இன்று எனக்காக நாகரிகமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தரயிருக்கிறேனோ இந்தப் பாவி' என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள்.
இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் டைரியில் அரவிந்தன் கீழ்க்கண்டவாறு எழுதினான்:
"உண்மையைச் சொன்னதற்காக ஒரு கயவன் மூக்கில் இரத்தம் ஒழுகும்படி அறைந்தான். வாழ்க்கை ஓர் உயர்தரமான செருப்புக் கடை. அங்கே சோறு போட்டுத் துணி உடுத்தி, உயிருள்ள தோல்களைப் பதனிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தத் தோலுக்குள் பண்புகள் பொதிந்து வைக்கப் பெறவில்லை. கயமைதான் கனத்துக் கிடக்கிறது."
கூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும், நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம். பயிற்சியும் கருத்தாழமும் உள்ள பாவலன் இயற்றிய கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மேலும் ஒரு புது அழகு புரிவது போல் பழகப் பழக அரவிந்தனின் புதுப்புது பண்புகள் பூரணிக்குப் புரிந்தன.
ஒருமுறை அவள் அரவிந்தனைத் தேடிக்கொண்டு அச்சகத்துக்குப் போயிருந்தாள். அரவிந்தன் இல்லை. முதலாளி மீனாட்சிசுந்தரமும் அவனும் எங்கோ காரில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றும், சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அச்சகத்து ஆட்கள் அவளிடம் கூறினர். காத்திருந்துப் பார்த்துவிட்டுப் போகலாமா? நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா? என்று பூரணி தயங்கிக் கொண்டிருந்தபோது வாயிலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். மீனாட்சிசுந்தரம் அவளை முகம் மலர வரவேற்றார்.
"வா அம்மா! நீ வந்து நாழிகையாயிற்றா? சிறிது நேரத்துக்கு முன்புதான் நாங்களே இங்கிருந்து வெளியேறினோம். வேறொன்றுமில்லை, சும்மா இவனை அழைத்துக் கொண்டு துணிக்கடை வரையில் போய்விட்டு வந்தேன். நீயே சொல் அம்மா. இராப்பகல் பாராமல் உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ? இத்தனை வயதான பிள்ளை 'கொள்ளுக் கொள்'ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்? உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம்? 'மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு...?"
அரவிந்தன் அவருக்குப் பின்னால் ஸ்வெட்டரும் போர்வையும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். 'அரவிந்தன் மேல் தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம்! எவ்வளவு உரிமை!' என்றெண்ணி வியந்தாள் பூரணி.
இது நடந்து பத்துப் பனிரண்டு நாட்களுக்குப் பின் பஸ் நிலையத்துக்கு வடப்புறம் மேம்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். 'என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும்தானா இருக்கும்? வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்' என்று நினைவை மாற்றிக் கொள்ள முயன்றாள். 'இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது' என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாகச் சிரித்தான். ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை.
"இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம்?"
"நீங்கள் என்னைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள். நான் எல்லோரைப் பற்றியும் கவலைப்படுகிறேன். மூன்று கோடி தமிழருக்குள் ஒவ்வொரு கோடியிலும் ஏழ்மையைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்ந்து விடுகிறது. முப்பது கோடி இந்தியர்களில் எல்லோருமா இந்நாட்டு மன்னர்களாக இருக்கிறார்கள்? பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்."
"அரவிந்தன் நீங்கள் அபூர்வமான மனிதர். உங்களிடம் வாதம் புரிய என்னால் முடியாது. உங்களுடைய சிந்தனைகள், செயல்கள் எல்லாவற்றையும் சாதாரண மனத்தால் அளவிட முடிவதில்லை" என்று பூரணி கூறியபோதும், பதில் சொல்லாமல் அவள் முகத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டு நின்றான் அரவிந்தன். இன்னொரு நாள் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற பாதையில் மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி அருகில் விந்தையான சூழ்நிலையில் அரவிந்தனைப் பார்த்தாள் அவள். பரட்டைத் தலைகளும் ஒட்டுப்போட்டும், ஒட்டுப் போடாமலும் கிழிந்த ஆடைகளுமாக அப்பகுதியில் வாழும் அநாதைக் குடும்பங்களின் சிறுவர், சிறுமியர்கள் அரவிந்தனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அந்தக் குழந்தைகளின் முகங்கள் அரவிந்தனை நோக்கி மலர்ந்திருந்தன. பக்கத்து மரத்தடியில் உட்கார்ந்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்த ஒரு கூடைக்காரியிடம் போய் அந்த ஒரு கூடைப் பழத்தையும் மொத்தமாக விலைபேசி அக்குழந்தைகளுக்குப் பங்கிட்டு அளித்தான் அவன். பஸ் நிலையத்தில் இறங்கி மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் இரயிலில் அவசரமாக ஒரு கடிதத்தை தபால் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தக் காட்சியைக் கண்டாள் பூரணி. அரவிந்தன் தன்னைக் கண்டுவிடாமல் சிறிது விலகி ஒரு மரத்தின் மறைவில் ஒதுங்கி நின்று அதைப் பார்த்தாள் அவள். அவன் தன்னுடைய அந்த அன்பு விளையாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது அவளும் பின்னால் நடந்தாள். அரவிந்தன் அவள் வருவதைப் பார்க்கவில்லை. மிக அருகில் நெருங்கி, "இதோ இன்னும் ஓர் அநாதைக் குழந்தை பாக்கி இருக்கிறது. ஏதாவது கொடுத்துவிட்டுப் போகக் கூடாதா? கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்" என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாக சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். 'நீங்களா அநாதைக் குழந்தை? உங்களுக்குத்தான் என்னையே கொடுத்து விட்டேனே' என்று பதில் சொல்ல நினைத்தான் அரவிந்தன்.
ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். 'புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?'
மெல்ல நகர்வது போலத் தோன்றினாலும் காலம் வேக வேகமாகத் தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஓய்வு இருந்தது. அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளியானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார்.
வேனிலைக் கழிப்பதற்காக மங்களேஸ்வரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள்.
"அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்க வேண்டும். இப்போது வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா" என்று சொல்லி அந்த அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளையில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான்.
இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே உலாவப் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாளமாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள்வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாதிரி பேர் செதுக்கும் கல்தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான்.
"பேர் செதுக்கணுமா? ஐயா பேர்..."
அரவிந்தன் பூரணியின் முகத்தைப் பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டணா நாணயத்தை எடுத்து அந்தக் கல்தச்சனிடம் கொடுத்தாள்.
"பேர்களைச் சொல்லுங்க அம்மா!"
பூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத்தாளை எடுத்து அரவிந்தன் - பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற்போல் எழுதி நாணத்தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு இரண்டணாவுக்கும் நாலணாவுக்கும் பேரம் பேசுகிற ஆட்களைத்தான் அந்தக் கல்தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும்! அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்! வேறு பெயர்களே செதுக்கப் பெறாத ஒரு தனிப் பாறையில் தனிச்சிறப்போடு கூடிய சித்திர எழுத்துக்களில் அந்த இரண்டு பெயரையும் செதுக்கினான் அவன். தச்சன் செதுக்கி முடிந்ததும் அரவிந்தன் பூரணியிடம் கூறினான் - "நம்முடைய பெயர்களை உயர்ந்த இடத்தில் உயர்ந்த விதத்தில் தனியாகச் செதுக்கியிருக்கிறான். பேர் பரவுவதற்காகவும், பேர் நிலைப்பதற்காகவும் எத்தனையோ மனிதர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அரை ரூபாய் செலவில் பேரை நிலைக்க வைத்திருக்கிறீர்கள்."
அரவிந்தன் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அவளுடைய அந்த செழிப்பான கன்னங்களில், சிரிக்கும் இதழ்களில், மலர்ந்த விழிகளில், பிறை நெற்றியில் எங்கும் நாணம் பூத்து நளினச் சாயம் மணந்தது. பூரணி பலமுறை தன்னை ஒருமையில் 'நீ, உன்னை' என அழைத்தால் போதும் என்று வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அரவிந்தன், 'நீங்கள், உங்களை' என்று பன்மையிலேயே அவளை அழைத்துக் கொண்டு வந்தான். மீண்டும் மீண்டும் அவன் அப்படி அநாவசியமாக மரியாதை கொடுக்கும் போதெல்லாம் கடிந்து கொண்டும், அன்புக் கோபம் கொண்டும் பிணங்கியும் பேச மறுத்தும், அவனை வழிக்குக் கொணர்ந்து ஒருமையில் உரிமையோடு கூப்பிடும்படி மாற்றினாள் பூரணி. அவளுடைய அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அரவிந்தனும் அவளை ஒருமையில் உரிமையோடு அழைக்க இணங்க வேண்டியதாயிற்று.
அந்தக் கோடையில் கிடைத்த விடுமுறைக் காலம் இவ்வாறு அரவிந்தனுடன் நெருங்கி மனம் விட்டுப் பேச வாய்ப்பளித்தது பூரணிக்கு. சில நாட்களில் அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போவார்கள். அப்படிப் போயிருந்த ஒரு நாளில் கோயிலுக்குள்ளேயே உள்ள ஒரு குளத்தின் கரையில் அரவிந்தன் ஒரு கருத்துச் சொன்னான். அந்தக் குளக்கரையில் உப்பும், மிளகும், சர்க்கரையும் சேர்த்து முடிச்சு முடிச்சாகத் தனித்தனியே கட்டி விற்பார்கள். அவற்றை வாங்கித் தண்ணீரில் போட்டால், அவ்வாறு போட்டுப் பிரார்த்தனை செய்கிறவர்களின் பாவங்களும், நோய்களும் கரைந்துவிடும் என்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுகளை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். "நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம் பூரணி. நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்துவிட ஆசைப்படுகிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவைகளை கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்" என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, "சமூகம், பிரச்சினைகள், ஏழ்மை, வறுமை எப்போது பார்த்தாலும் இதே பல்லவிதானா? அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்?" என்று அவனைக் கேட்டாள்.
"என்ன செய்வது பூரணி? நான் பிறந்த வேளை அப்படி" என பதில் சொல்லிவிட்டு மேலே வெறித்துப் பார்த்தான் அரவிந்தன்.
இப்படி எத்தனன எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம்தான் அரவிந்தனை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று.
கோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சிப் பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக் கொண்டிருந்தது. மங்கையர்க் கழகத்தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும் செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டுதான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லரை காசுக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்குப் பஸ் செலவு ஆயிற்று. எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிர்வாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செலவ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கலானாள். பலவேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை லட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த லட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது. திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற ரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான்.
அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லோரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று 'திலகவதியார் சரித்திரம்' பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம் பற்றிக் கதை கதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார் அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும்போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்தபோது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்றபோதும் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார் 'உலகத்திலேயே பெரிய சோகக்கதை இதுதான் அம்மா! இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத்தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார் பூரணி. ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீரால் பலமுறை எழுதி எழுதி அழித்திருப்பாரம்மா அவர். ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்த மாதிரி புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.' இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும்போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையான கண்ணீர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது.
"திருவாரூரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு, பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம், வலது கையில் தம்பியைப் பிடித்துக் கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவமிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலேயே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்து தந்தை வந்து சொல்கிறார்:
"திலகவதி! சோழநாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கிவிட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்."
திலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய், தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இன்பமாக, மண அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டு களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப் போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிகைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்தி வந்தது. சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர்மூச்சுக் காற்றையே விட்டுவிட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ? 'அக்கா நான் இருக்கிறேனே, எனக்காக வாழுங்கள்' என்று கெஞ்சினான் தம்பி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டைபோல் விதியின் கைகளில் அறைபட்டாள் திலகவதி. அந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது."
இந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கை தோய்ப்பதுபோல் மங்களேஸ்வரி அம்மாவின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்:
"திலகவதிக்கும், கலிப்பகையாருக்கும் மணம்தானே பேசினார்கள்? அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக் கூடாது?"
"நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா! ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும்போதே, அவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவார்கள் இந்த நாட்டுப் பெண்கள். 'அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது'. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடுகிறது" - என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பலபேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிறதென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. 'அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்துவிட்டீர்களே அக்கா' என்று மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, "காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கிறாங்க, உங்களைக் கூப்பிடுறாங்க" என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது.
"இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி" என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிர்வாகிகள் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பிரமை எழுந்தது.
காரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்தபோது அந்த அம்மா 'வா' என்று கூடச் சொல்லாதது ஒரு மாதிரிப் பட்டது பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, 'உட்கார்' என்று கூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள்.
"இந்தா! இந்தக் கழகத்தில் இதுவரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில்தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக்குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை."
சொல்லிவிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது. "கடவுளே! நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும்" என்று குமுறினாள் அவள்.
--------------------------
குறிஞ்சி மலர்
11
மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்
கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.
-- பாரதிதாசன்
மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே? அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்று தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப்போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.
"இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய்? இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா?"
பூரணிக்குக் கண்களில் நீர் மல்கிவிட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்; "உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப் பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று என்னென்னவோ எழுதியிருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ளவேண்டும்? இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை."
"நெருப்பில்லாமல் புகையுமா? யார் இந்த அரவிந்தன்? அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் பழக்கம்? எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்?"
"அவர் ஓர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும் அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன். பழகுகிறேன். இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது."
"மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறு விதமாகத்தான் சொல்லும்."
இதற்கு மேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள்.
"வா பூரணி! இன்றைக்கு உன் பேச்சு பிரமாதமாக இருந்ததென்று இப்போதுதான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே? நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்..." என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.
"என்னவோ போலிருக்கிறாயே! உடம்புக்கு என்ன? முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா?" என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேஸ்வரி அம்மாள். மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி.
"அம்மா! உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றிப் பேசச் சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்."
"என்னம்மா செய்தி? யார் என்ன கூறினார்கள் உன்னிடம்?"
பூரணி நடந்த விவரங்களைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேஸ்வரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப் படித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, "இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி?" என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.
புதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சியையும் பற்றிச் சொன்னாள் பூரணி.
"உனக்கு அவர் மேல் சந்தேகமா?" என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.
"வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா? இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்."
"உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே. மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கெனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்யும்போதே 'வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை' என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும் வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா?"
"போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள்தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச்சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமூகத்தில் இல்லை" என்றாள் பூரணி.
"ஆத்திரப்படாதே பூரணி! நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்துவிடு. இதை ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரி குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்க மாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்."
"அக்கா! எடுத்துக்குங்க..." என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்தபோது பூரணிக்குத் தோன்றியது, 'ஐயோ! இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்?" என்று நினைக்கிறபோதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப் பற்றிப் பிறர் மனங்களில் உருவாகியிருக்கும் மதிப்புத்தான். ஒருமுறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக் கொள்ள முடியாத பொருள் அது.
பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
"வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே" என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு போய்விட்டாள் வசந்தா. அவளிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று தன்னையே நொந்து கொள்ள வேண்டிய நிலையாகி விட்டது பூரணிக்கு. விடைபெற்றுக் கொண்டு புறப்படும் போது மறுபடியும் பூரணியை எச்சரித்து அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள்.
"மறுபடியும் இப்படி ஏதாவது வம்பு வந்து சேராமல் பார்த்துக் கொள் அம்மா! உன்மேல் யாரும் அப்பழுக்குச் சொல்லும்படி நேரக்கூடாது. இந்தச் செய்தியைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக்கூடாதென்று காரியதரிசி அம்மாளிடம் சொல்லிவிடுகிறேன் நான்."
அந்த அம்மாளின் எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது பூரணியின் மனநிலை சரியாக இல்லை. புதுமண்டபத்து வியாபாரியின் சூழ்ச்சிகளையும் முரட்டுத் தனத்தையும் பற்றி அவள் ஓரளவு அறிந்திருந்தாள். சிலந்தி கூடு போட்டுக் கொண்டு உயிர்களைப் பிடித்துக் கொண்டு அழிக்கிற மாதிரிப் பிறரை அழிப்பதில் கூடத் திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்கிறவர் அவர். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ? அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது! வாழ்க்கையில் வெறுப்புகள் இருக்கின்றன! வாழ்க்கையில் சுயநலம் இருக்கிறது! வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். 'ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது' என்று அரவிந்தன் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. 'கேவலம் முட்டாள்தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்றால் சந்தேகங்களுக்கிடையே தான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்?'
வழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோயிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையையும் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள். கோயிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையணாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல். சொந்தத் தலையில் எண்ணையோ, பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூ விற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்துபோல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள். இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். 'இங்கே போ', 'இங்கே போ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் நுழைகிற வழியில் நல்ல காற்று பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங்களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோயிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற்போல் விண்மீன்கள் சிதறிய கருநீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. 'உலகத்துத் துன்பங்களைப் பகற்போதெல்லாம் கண்டு கண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள்' - நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.
"பூரணி! இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோயில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்தனுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள். மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு பார்த்தவனுக்கு. அப்படி ஓர் ஆணோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கை கோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.
தேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக் கொள்ளி எறும்பு போல் இரண்டுங்கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமானத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்து பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந்தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல் எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் 'பூரணி' என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை, தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங்குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால்... அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்துவிட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்துவிட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். "பாவி! எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய்? இது அடுக்குமா உனக்கு" என்று அவள் உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.
'அடி பூரணி! இவ்வளவு வன்மைகூட உன் மலர் மனதுக்கு உண்டா? கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே? அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய்? எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய்? நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய்? உனக்காகத் தன்னையே கொடுத்தானே அவன் பெரியவனாகப் படவில்லை உனக்கு; நீ பெரிய வஞ்சகி.'
மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கில் ரிக்ஷாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது.
ரிக்ஷாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்தபோது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர்வேட்டுகள் அதிர்ந்தன. மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப்போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே உட்கார்ந்து வேதனையளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை. எப்படி ஆறும்? யாருடைய மனத்தைப் புண்படுத்தும்போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கிவிட்டு ஓடி வந்திருக்கிறாள். அப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.
மறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, "நீ பேசாமல் படுத்துக்கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்பட வேண்டாம்..." என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத்துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்ல முடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண்டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.
வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள். அவளுக்குக் கூட கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டதுபோல் எதைச் சாப்பிட்டாலும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லா புலன்களுக்கும் பரவிவிட்டதா, என்ன? இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். "இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ?"
"யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா! தம்பிகள் பள்ளிக்கூடம் போய்விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை."
"பார்த்தாயா? இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே? அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை? நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்துவிட்டேனே" என்றாள் மங்களேஸ்வரி அம்மாள். 'வேலை போய்விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின் மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகுகிறேன்' என்று மங்களேஸ்வரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேஸ்வரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்.
"நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா?"
"சொல்ல என்ன இருக்கிறது. 'நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன்' என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி."
காரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. 'ஒருவேளை கோயிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காமலிருக்கும்போதே தானாக அப்படிக் கற்பனை செய்து கொண்டு பதறி ஓடி வந்திருக்கலாமோ?' என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.
"அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு" என்று செல்லம் கூறியபோது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும்போது உண்டாகிற ஆறுதல் அது.
"மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்தமட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது" என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விபரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா? அவளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடமெல்லாம் பறையறைவதற்கு?
யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் பிரதிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன், அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன்! நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, 'அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்' என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடி கூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனிமேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனால் மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.
ஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம்? ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: "அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா? அந்தப் பெரியவர் தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்."
"எந்தப் பெரியவர்?"
"அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டு வந்து விட்டாரே - அந்த அச்சகத்தின் சொந்தக்காரர்..."
"அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்?"
"அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. 'என்ன சமாசாரம்?' என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். 'நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவை பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு' என்று கூறியனுப்பினார். பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது?
-------------------
குறிஞ்சி மலர்
12
"எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட
முன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்
பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்
என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!"
உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. 'அவன் ஊரில் இல்லை' என்று தம்பி அச்சகத்துக்குப் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது.
'அரவிந்தன் எங்கே போயிருக்கலாம்? எங்கே போனால் என்ன? போகும் போது என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய்விட்டது? அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா? ஐயோ! அன்றைக்குக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப்பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன்? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின் தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறுமனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒருபோதும் தயாராயில்லை.
அச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். "புதிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கம்பெனிக்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச் சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் மாலை உன்னைக் கோயிலில் சந்தித்ததாகச் சொன்னானே? அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம்.
பூரணி கேட்டாள், "என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்."
"வருகிற நாள்தான்! அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை" என்று மறுமொழி கூறினார் அவர். 'அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத்தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன்மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று, என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை உற்றுக்கண் திறந்தது.
"இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா! உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள்? நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா? பணமோ, வேறு வகை உதவிகளோ எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல் கேளம்மா. நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்" என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சிசுந்தரம்.
"அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசியமானால் சொல்கிறேன். 'அவர்' ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்" என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச்சொல்லித் தானே வலுவில் வேண்டிக்கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள்.
மறுநாள் காலை எழுந்திருந்தபோது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பதுபோல் தோன்றியது. அன்று காலை மங்களேஸ்வரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்தபோது காரியதரிசி அம்மாளும் உடன் வந்திருந்தாள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களை மறந்து, பார்த்து அனுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேஸ்வரி அம்மாளுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள்.
"நானும் துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்கு சாத்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும், பேயையோ, பூதத்தையோ பார்த்துவிட்டவள் போல் பதறிக் கொண்டு எழுந்து போய்விட்டாய்! நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு? ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு அப்படி ஒரு கடிதம் வரும்போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்" என்று காரியதரிசியம்மாள் சொல்லியபோது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்ததென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேஸ்வரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு "நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்" என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பிவிட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித்தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அக்கா ஓர் ஐந்து ரூபாய் வேண்டும்."
முகத்தை மறைத்தாற்போல் தூக்கிப் பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்துகொண்டு நின்றான்.
"இப்போது எதற்கடா பணம்? போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்?"
"சம்பளத்துக்காக இல்லையக்கா. பரீட்சை நெருங்குகிறது! கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும்போது மை கசிகிறது..."
பூரணி தம்பியின் முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு.
"ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது? குளித்தாயோ இல்லையோ? தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே? அதற்காக இப்படியா இருப்பாய்? காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய். மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை. வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கேதான் படிக்கிறாயோ, என்னதான் செய்கிறாயோ?"
தம்பி தலையைக் குனிந்தான்! கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது.
"அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ. சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வரவர உன் போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு" என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால்தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக்கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. "அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு எங்கெங்கோ போய்விடுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், 'அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்' என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா" என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது.
அவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்கவில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக்கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள். 'இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது' என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக்கொண்டு அலமாரிக் கதவைச் சாத்தியபோது "உள்ளே வரலாமா?" என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள்.
அரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய் கதறியிருப்பாள். அன்று கோயிலில் அவனிடம் அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோயிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் 'வாருங்கள்' என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பிரயாண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பியிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக் கத்தி நுனிபோல் கூராக இருக்குமே, அதுபோல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன்.
"உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது இப்போது? நான் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் உன்னைக் கோயிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத்தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய்விட்டாய்..." என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத்தொடங்கியபோது பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்துகொள்கிற முறை.
'உங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன்? பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்! அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தைதான் போலும்' என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டான். 'காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றிவிட்டுத்தான் போனேன்' என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான்.
"இதெல்லாம் எதற்கு?" என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி. அன்பு கனிய அவன் கூறலானான்:
"இன்றைக்குக் காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி! அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது? உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய் விட்டேன். நேரே இங்குதான் வருகிறேன்."
"நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வரமாட்டேன் என்கிறது. உடம்புக்கு ஒன்றுமில்லை... மனக்குழப்பங்களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம்..."
இவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்தபோதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். "இவன் இருக்கிறானே என்பதற்காக நீ மனம்விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த்தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். 'ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப்பயல் போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே' என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை, முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே, அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர்களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம்..."
அரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கை கூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. "அக்கா! உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். 'எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான்! அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா? இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் 'அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள்' என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இதுதான். எனக்குத் தெரியும்" என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்துகொண்டது.
"இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி" என்று அரவிந்தன் அப்போதும் சிரித்துக் கொண்டுதான் சொன்னான்.
"அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது." பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். "இந்தா! நீயும் படி" என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு? அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு.
"இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோயிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப் பார்த்ததும் பேசாமல் இருந்தால் நல்லதென்று முட்டாள்தனமாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. அப்போதிருந்த ஆத்திரத்தில் அப்படியே செய்துவிட்டேன். அதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு உண்டோ இல்லையோ? நீங்கள் என்னை மன்னித்துதான் ஆகவேண்டும்."
இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். முருகானந்தம் கொதிப்போடு பூரணியை நோக்கிக் கூறினான், "அக்கா! அண்ணன் உங்களை மன்னித்துவிடலாம். ஆனால் உங்களையும் அண்ணனையும் பற்றி இப்படி ஒரு கடிதம் எழுதின கைகளை நான் மன்னிக்க முடியாது. அந்தக் கீழ்மை நிறைந்த விரல்களை என் கைகளாலேயே தேடிப்பிடித்து முருங்கைக் காயை முறிப்பது போல் முறித்தெறிய வேண்டும்."
"பொறு முருகானந்தம்! காலம் வரும். இந்த மொட்டைக் கடிதம் எழுதியதற்கே அந்தக் கைகளின் மேல் நீ இத்தனை ஆத்திரப் படுகிறாயே? அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்" என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. "நீ சும்மா இரு அரவிந்தா! கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வருந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா?" என்று குமுறலோடு பேசினான் முருகானந்தம்.
"பூரணி! முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகுதூரம்" என்றான் அரவிந்தன்.
"உணர்ச்சிவசப்பட்டாலும் நன்றாகப் பேசுகிறாரே! உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இளைஞர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே?" என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள்.
"எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற்கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற்சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு" என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான்.
"அப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளாதே தம்பீ! உன் வாயிலிருந்து தப்புத் தப்பாக வெளிப்படுகிற கருத்துக்களுக்கும் நான் தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப்போகிறாள்."
பூரணி இதைக் கேட்டு கலகலவென நகைத்தாள். அரவிந்தனிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள், முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச்சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால், முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்தனின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது. முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே வெறி மையமாக இருந்தது.
காலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ? இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி.
"நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய்? தேநீர் வேண்டாம்..." என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. "வருகிறேன் அக்கா" என்று ஆயிரங்காலம் பழகிவிட்டாற்போன்ற உரிமையோடு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம்.
அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஓதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது.
"என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிச்சடையாக விட்டுவிட்டாய்? சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி! வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ? இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை" என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா! என் வாழ்வில் மனநிறைவே இல்லையா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே! நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன்? எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள்.
ஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். 'அண்ணன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை' என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஓதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லி சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி. அவன் போய்ப் பார்த்துவிட்டு "அண்ணனை அங்கே காணவில்லை" என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோரு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. 'எங்கே போய்த் தேடுவது? எப்படித் தேடுவது?' என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தபோது, மங்களேஸ்வரி அம்மாளின் கார் வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது, பயமாகவும் இருந்தது.
"பூரணி! இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் போட்டுவிட்டுப் போய்விட்டாளடி! காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு" என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள்.
--------------------
End of part 1 (first 12 chapters)
This file was last updated on 3 December 2011
Feel free to send corrections to the webmaster.