தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
குறிஞ்சி மலர் - பாகம் 2 (அத்தியாங்கள் 13-25)
kuRinjci malar -part 2 (novel)
of nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. G. Chandrasekaran of Chennailibrary.com and
Gowtham Pathippagam for providing us with a e-copy of this work and permission
for its inclusion as par of the Project Madurai etext collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2010.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
குறிஞ்சி மலர்
Source
குறிஞ்சி மலர்
நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்)
தமிழ்ப் புத்தகாலயம்,
சென்னை/17, 16ம் பதிப்பு, 1998
KURINJI MALAR
Tamil social novel
by NAA. Parthasarathy
&169; Sundaravalli Parthasarathy
16th Ed, 1998,
Tamil Puthakalayam,
Pondy Bazar, T.Nagar, Chennai-60017
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
குறிஞ்சி மலர் - பாகம் 2 (அத்தியாங்கள் 13 - 25)
குறிஞ்சி மலர்
13
பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?
-- குண்டலகேசி
வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில் கடிகாரத்தையும் மனதில் ஆசைகளையும் கட்டிக்கொண்டு எதற்கோ, எங்கோ விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டம் பெருகியும், தனித்தும், பொங்கியும், புடைபரந்தும், வற்றாமல், வாடாமல் உயிர்வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிற துடிப்பு, சந்தித்து விசாரித்துக் கொள்ளும் குரல்கள், பிரிந்து விடைபெறும் குரல்கள், கடைகளின் வியாபாரம், பேரம் பேசுதல், கார்கள், ரிக்ஷா, குதிரை வண்டிகள் ஓடும் ஒலிகள் - வாழ்க்கையை அஞ்சல் செய்து ஒலி பரப்புவது போல் ஒரு தொனி, இந்த வீதியில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பவர்களுக்குக் கூடக் கேட்கும்.
அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கலகலப்பான வீதியில் இரு சிறகிலும் பொய்கள் பூத்து மின்னுவதுபோல் விளக்குகள் தோன்றின. மனத்தில் சிந்தனை முறுக்கேறி நிற்கிற சில சமயங்களில் அரவிந்தன் அச்சகத்து வாசலில் நின்று ஒருவிதமான நோக்கமுமின்றிக் கவின்கண்களால் இந்தக் காட்சிகளைப் பருகிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று அவனால் நெடுநேரம் அப்படி நின்று வீதியின் அழகை அனுபவித்து நோக்க முடியவில்லை. உள்ளே அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் கிடந்தன. அன்று காலையில் தான் அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். ஏறக்குறைய நண்பகல் வரை திருப்பரங்குன்றம் சென்று பூரணியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதில் நேரம் கழிந்துவிட்டது. பின்பு மாலையில் அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தோடு வரவு செலவுக் கணக்கு, புதிய அச்சு இயந்திரங்கள், இவைபற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டான். திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகள் குவிந்திருந்தன. உடனிருந்து அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்கும் உதவுவதற்கும் முருகானந்தத்தை வரச் சொல்லியிருந்தான் அவன். இரவு ஒன்பது மணிக்கு மேல் முருகானந்தத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் விழித்திருந்து வேலைகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த அரவிந்தன் முருகானந்தத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக் கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால்.
"இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?" என்று கேட்டான் அரவிந்தன்.
"அதெல்லாம் வரும்போது ஓட்டலில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும் பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். படுக்கை இங்கே தான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று" என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் மில்லில் வேலை. அவன் தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையில கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஓர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன். தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்துகொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறியிருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத்தான் அந்தத் தொழிலில் பெரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.
அரவிந்தனின் நட்பும், பழக்கமும் முருகானந்தத்திற்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையும், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழ்மையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டது போல் உணர்ந்து குமுறிக் கொதிக்கிற பண்பு, சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துக்களையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரியனுக்கு முன் பணிவான மாணவனைப் போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப் போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத் திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத்தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.
அரவிந்தனுக்கு அச்சுப் பிரதிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம் வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக் கொண்டுவிடுவான். வேலை முடிந்து படுத்துக் கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்துமணி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.
"நீ கொஞ்சம் விரைவாகவே வந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்... இந்தா, இதை நீ வைத்துக்கொண்டுப் படி. நான் சரி பார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்" என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் பிரதிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.
அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு "தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக் கொண்டு போகிற போது மணிபர்ஸை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனுமில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அதுதான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்காணோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடைப் பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தேன். இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்" என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம்.
"சரி... சரி... நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே" என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்திவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய 'தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி' என்னும் புத்தகத்துக்கான அச்சுப்பிரதிகள் அவை. முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள்.
"கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்." சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. "காலி புரூஃபில் மட்டும் இவ்வளவு அதிகமாகப் பிழைகள் இருக்கின்றனவே? இதற்கு என்ன காரணம்?" என்று அரவிந்தனைக் கேட்டான் முருகானந்தம்.
"இந்தக் காலி புரூஃப் படிக்கும்போதெல்லாம் நான் நம்முடைய தமிழ்நாட்டுச் சமூக வாழ்வை நினைத்துக் கொள்வேன் முருகானந்தம். காலியில் திருத்தவேண்டிய பிழைகள் அதிகமாயிருக்கும். நம்முடைய சமுதாய வாழ்விலும் இன்றைக்குத் திருத்தம் பெறவேண்டிய தவறுகள் மிகுதி..." என்று முருகானந்தத்தின் கேள்விக்கு ஆழமான ஒப்பு நோக்கோடு மறுமொழி சொன்னான் அரவிந்தன்.
"உண்மை! ஆனால் இதைப் பேனாவினால் திருத்தமுடியாது அரவிந்தன். ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாரதி பாடினானே அப்படியொரு யுகப்புரட்சி ஏற்பட்டால் தான் விடியும். இன்றைக்குள்ள நம்முடைய சமுதாய வாழ்வில் எந்த அறநூல் மருத்துவராலும் இன்னதென்று கண்டுபிடித்துக் கூறமுடியாத எல்லா நோய்களிலும் சிறிது சிறிதாக இணைந்த ஏதோ ஒரு பெரிய நோய் இருக்கிறது. தீய வழியால் ஆக்கப் பெறுவோரைக் கண்டும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெறுதலைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்கிறார்கள். சூடு சொரணையற்றுப் போயிருக்கிறார்கள்..." என்று முருகானந்தம் சொற்பொழிவில் இறஙகிவிட்டபோது, அரவிந்தன் குறுக்கிட்டு வேலையை நினைவு படுத்தினான்.
"தம்பி! இந்தக் கனல் கக்கும் கருத்துக்களை எல்லாம் இங்கேயே சொல்லித் தீர்த்துவிடாதே. பொன்னகரத்து மேடைகளிலும், பிட்டுத்தோப்புப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதற்கு மீதம் வைத்துக் கொள். இங்கே வேலை நடக்க வேண்டும். நேற்று இரவெல்லாம் இரயிலில் பயணம் செய்து வந்த அலுப்பு என்னால் தாங்க முடியவில்லை. பன்னிரண்டு மணிக்காவது நான் படுத்தாக வேண்டும்."
முருகானந்தம் அடங்கினான், வேலை தொடர்ந்தது. வாயிற்புரம் யாரோ ஒரு பையன் வந்து தயங்கி நிற்பதை முருகானந்தம் பார்த்துவிட்டான்.
"வாசலில் யாரோ பையன் வந்து நிற்கிற மாதிரி இருக்கிறது. இங்கே அச்சகத்தில் வேலைப் பார்க்கிற பையன் எவனையாவது வரச் சொல்லியிருந்தாயா நீ?" என்று முருகானந்தம், அரவிந்தனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, 'சார்' என்று குரல் கொடுத்தான் வெளியில் நின்ற பையன்.
"நான் யாரையும் வரச் சொல்லவில்லையே? ஒருவேளை தந்திப் பியூனோ என்னவோ? போய்ப்பார்" என்று அரவிந்தனிடமிருந்து பதில் வந்தது.
முருகானந்தம் வெளியே எழுந்துபோய் நின்று கொண்டிருந்த பையனை விசாரித்துக் கொண்டு வந்தான். "பையன் உன்னைப் பார்க்க வந்ததாகத்தான் கூறுகிறான். நீ போய் என்னவென்று கேள் அரவிந்தா."
அரவிந்தன் எழுந்து போய் பார்த்தான். பூரணியின் தம்பி திருநாவுக்கரசு அழுக்குச் சட்டையும் வாரப்படாத தலையுமாக நின்றுகொண்டிருந்தான்.
"என்னடா இந்த நேரத்தில் வந்தாய்?"
"ஒன்றுமில்லை, அக்கா உங்களிடமிருந்து ஒரு அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாங்க... அவசரம்..." பையன் வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிச் சொன்னான். அவன் விழித்துப் பார்த்த கண்களில் - பார்வையில் ஏதோ பொய்மை மருட்சியைக் கண்டான் அரவிந்தன்.
"ஏண்டா ஐந்து ரூபாய்க்காக இராத்திரிப் பத்து மணிக்குமேல் உன்னை இங்கே துரத்தினாளா உன் அக்கா. நான் காலையில் அங்கே வந்து அக்காவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேனே. அப்போது அக்கா என்னிடம் பணம் வேண்டுமென்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கையிலிருந்ததைக் கொடுத்துவிட்டு வந்திருப்பேனே."
பையன் மேலும் விழித்தான். அவன் நின்ற நிலை, கேட்ட விதம், உருட்டி உருட்டிக் கண்களை விழித்த மாதிரி எல்லாம் அரவிந்தனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் சட்டைப் பையிலிருந்து ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
"இந்தா இதைக்கொண்டு போ. காலையில் நான் அக்காவைப் பார்க்க வருவேன்."
பதில் ஒன்றும் சொல்லாமல் நோட்டை வாங்கிக் கொண்டு நழுவினான் திருநாவுக்கரசு. சிறிது நேரம் அவன் போவதைப் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அரவிந்தன், "முருகானந்தம் கொஞ்சம் இங்கே வா..." என்றான். உள்ளிருந்து முருகானந்தம் வந்தான்.
"வேலை இருக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் சொல்லுகிறபடி ஒரு காரியம் செய். இந்தப் பையனைப் பின் தொடர்ந்து போய்க் கண்காணித்துக் கொண்டு வா."
"யார் இந்தப் பையன்?"
"அதைப்பற்றி இப்போதென்ன? சொல்கிறேன். முதலில் நீ புறப்படு."
முருகானந்தம் புறப்பட்டான். அவனை அனுப்பிவிட்டு உள்ளே திரும்பி தானாகவே அச்சுப் பிரதிகளைத் திருத்தத் தொடங்கினான் அரவிந்தன். பூரணியின் தம்பியைப் பற்றிய சந்தேகத்தினால் கலவரமுற்றிருந்த அவன் மனம் அழகியசிற்றம்பலம் தத்துவச் செறிவோடு ஆராய்ந்து எழுதியிருந்த கருத்துக்கள் சில்வற்றை அச்சுப்பிரதியில் கண்டு அவற்றில் இலயித்தது. பண்பாடுமிக்க அவ்வுயரிய கருத்துக்களில் அவன் மூழ்கிவிட்டான் என்றே சொல்லலாம். "வாழ்க்கையில் இறுதி நாள் ஒன்றைத்தான் சாவு என்று உலக வழக்குப்படி கூறுகிறோம். ஆனால் மனித ஆயுளின் நிறைவான காலத்துக்குள் ஒவ்வொரு பருவத்தின் முடிவும் ஒரு சாவு. ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பமும் ஒரு புதுப்பிறவி. குழந்தைப் பருவம் அழிந்தால் பிள்ளைப் பருவம் பிறக்கிறது. பிள்ளைப் பருவம் அழிந்தால், வாலிபப் பருவம் பிறக்கிறது. வாலிபப் பருவம் இறந்தால் முதுமை பிறக்கிறது. இப்படி ஒரு பருவம் அழிந்து அடுத்த பருவம் பிறக்கும் காலம் மனிதனுடைய பழக்கங்களும் அனுபவங்களும் மாறுகிற காலம். இந்த மாற்றத்தினால் அழிவது மரணம். புதிதாகச் சேர்வது பிறவி. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து அழித்தவை மரணம்தான். ஆனால் அதற்காக நாம் அழுவதில்லை. அது நமக்குப் புரியாத தத்துவம்" என்று எழுதி குண்டலகேசியிலிருந்து ஒரு செய்யுள் எடுத்து உதாரணம் காட்டியிருந்தார் பேராசிரியர். உடனே அந்தச் செய்யுளையும் அந்த வாக்கியங்களையும் தனது டைரியில் குறித்துக் கொண்டு விட வேண்டுமென்ற ஆர்வம் அரவிந்தனுக்கு உண்டாயிற்று. பேராசிரியர் அழகிய சிறம்பலம் மட்டும் உயிரோடு இருந்து தமிழ்நாட்டின் சார்பில் மேற்கு நாடுகளில் பயணம் செய்திருந்தால் மேலைநாட்டார் மறுபடியும் ஒரு விவேகானந்தரைப் பார்த்திருப்பார்கள். அவருடைய ஆங்கில அறிவிற்கும், தமிழ் அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும் நாடு அவரை மிகவும் குறைவாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டு விட்டதே" என்று ஓர் ஏக்கம் அரவிந்தன் மனத்தில் அப்போது படர்ந்தது. அவன் நெட்டுயிர்த்தான். பழகத் தொடங்கிய புதிதில் ஒருநாள், "உங்கள் தந்தையார் விட்டுச் சென்ற பணிகளில் பெரும் பகுதி உங்களால் நிறைவேற வேண்டும். அதற்குரிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைவின்றிக் கற்றிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்" என்று பூரணியிடம் சொல்லியிருந்தான் அவன். அப்போது அவள் சிரித்துக் கொண்டே "நீங்கள் என்னைப் பற்றி மிகப்பெரிய கனவுகள் காண்கிறீர்கள்" என்று தன்னடக்கமாகப் பதில் சொல்லிவிட்டாள்.
"அப்படிச் சொல்லக்கூடாது. உங்களால் அது முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது" என்று அப்போது தான் வற்புறுத்திச் சொன்னதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அரவிந்தன். அதன் பின் தங்களுடைய பழக்கம் அன்பும் நெருக்கமும் பெற்று இத்தகைய உறவாக மாறியதையும் நினைத்தான். தொடக்கத்தில் பூரணியின் உறவு இந்த விதத்தில் இப்படித் தன்னோடு நெருங்குமென அவன் எண்ணியதே இல்லை. அவனைப் பெருமை கொள்ள வைத்த உறவு இது. இத்தகைய சிந்தனையோடு பேராசிரியரின் அந்த வாக்கியங்களைத் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த அவன் அச்சகத்தின் பின்புறமிருந்து ஏதோ ஓசை கேட்கவே திகைப்புடன் எழுதுவதை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்கலானான். யாரோ சுவரில் கால் வைத்து ஏறுகிற மாதிரி 'சர சர'வென்று ஓசைகேட்டது.
அச்சகத்தில் வலது பக்கம் ஓர் ஓட்டல், இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் ஓட்டலுக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. ஓட்டலின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த இடத்தில் நுழைகிற துணிவு வேறு யாருக்கும் இருக்க முடியாது. அச்சகத்தின் பின் பக்கத்துச் சுவர் அவ்வளவாகப் பாதுகாப்பானதில்லை. பழைய சுவர் என்ற குறை மட்டுமில்லை, அதிக உயரமில்லை என்ற குறையும் கொண்டது. பின்பக்கத்துத் தாழ்வாரத்தில் தான் விசாலமான இடம். தைத்தல், பைண்டிங் போன்ற வேலைகளுக்கு வசதியாகப் புத்தகத்துக்கென்று அச்சாகிய 'பாரங்கள்' அங்கேதான் அடுக்கப்பட்டிருந்தன. கொல்லைக் கதவுக்கு அடுத்தாற்போல் உள்பக்கம் மல்லிகை, அந்திமந்தாரைச் செடிகள் அடங்கிய ஒரு சிறு நிலப்பகுதி உண்டு. இந்த இடத்துக்கு அடுத்து உள்பகுதிதான் அச்சு யந்திரங்களும், 'பைண்டிங்' பகுதியும் அடங்கிய பரந்த தாழ்வாரம். இவ்விடத்தை நம்பிக்கையின் பேரில் காவல் பயமில்லாமல் வைத்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.
பக்கத்து ஓட்டல் வேலை நாட்களில் இரவு பன்னிரண்டு மணியானாலும் மாவரைக்கிற 'கடமுட' ஒலியும் பாத்திரம் கழுவுகிற ஓசையுமாகக் கொல்லைப்பக்கம் கலகலப்பாயிருக்கும். மறுநாள் ஓட்டலுக்கு வாராந்திர விடுமுறையாதலால் அன்று அந்தக் கலகலப்பு இல்லை. அரவிந்தன் தயங்கிக் கொண்டு நிற்கவில்லை. வாசற்கதவை உள்பக்கமாகத் தாழிட்டுவிட்டுக் கொல்லை பக்கம் விரைந்தான். நீண்ட வீடு அது. போகும்போதே ஒவ்வொரு பகுதிக்கும் உரிய மின் விளக்கைப் போட்டுக் கொண்டு போனான். அந்த அச்சகத்தில் இரவு நேரங்களில் தனியாக இருக்கிறபோது இப்படி ஓர் அனுபவம் இதுவரையில் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இன்று ஏற்படுகிறது. முதன்முதலாக ஏற்படுகிறது.
அவன் கடைசி விளக்கைப் போட்டுவிட்டுச் செடிகள் இருந்த பக்கம் நுழைந்தபோது மல்லிகைச் செடிகளின் ஓரமாகப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன் திடுமென விளக்கு ஒளி பாய்வதையும் யாரோ வருவதையும் உணர்ந்து திரும்பி ஓடிச் சுவரில் ஏறிவிட்டான். "யாரது?" என்று பெருங்குரலில் இரைந்து கொண்டு விரைந்தான் அரவிந்தன். சுவருக்கு மேல் விளிம்பிலிருந்து ஒரு பழைய செங்கல் சரிந்து அரவிந்தனின் கால் கட்டை விரலில் விழுந்ததுதான் மீதம். ஆள் அகப்படவில்லை. இன்னாரெனக் கண்டுகொள்ளவும் முடியவில்லை. பின்புறம் குதித்து ஓடும் ஒலி கேட்டது. அவன் சுவர் ஏறின இடத்தில் கீழே மல்லிகைச் செடியின் அருகில் மண்ணெண்ணெயில் முக்கிய ஒரு துணிச்சுருளும் தீப்பெட்டியும் கிடப்பதைக் கண்டான் அரவிந்தன். வந்தவன் என்ன காரியத்துக்காக வந்திருக்க வேண்டுமென்று அதைக் கண்டபோதுதான் அவன் உணர்ந்தான். கொல்லையில் அந்த ஓசை கேட்டதும் வந்து பார்க்காமல் தான் இன்னும் சிறிது நாழிகைப்போது அலட்சியமாக இருந்திருந்தால் தாழ்வாரத்தில் அச்சிட்டு அடுக்கியிருக்கும் பேராசிரியரது நூற்பகுதிகளின் சாம்பலைத்தான் காண முடியும் என்ற பயங்கர உண்மை அவனுக்குப் புரிந்தது. இந்தவிதமான எதிர்ப்புகளும் பகைகளும் மீனாட்சி அச்சகத்துக்கும் அவனுக்கும் இப்போதுதான் முதன் முதலில் ஏற்படத் தொடங்குகிற புதிய அனுபவங்கள்.
பின்புறம் அந்த இருளில் கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு துரத்த முடியாதென்று பட்டது அவனுக்கு. கதவுக்கு அப்பால் தரையில் கால் வைக்க முடியாத ஆபாசம்! வந்தவன் எல்லா ஆபாசங்களுக்கும் துணிந்துதான் வந்திருக்க வேண்டும். வாசல் பக்கம் ஓடி ஓட்டலில் யாரையாவது எழுப்பித் துணைக்குக் கூட்டிக்கொண்டு சந்து வழியாகப் போய்த் தேடிப் பார்க்கலாமா என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. அச்சகத்துக் கதவை அடைத்துப் பூட்டிக்கொண்டு ஓட்டலில் ஆளை எழுப்பிப் போய்த் தேடுவதற்குள் காலம் கடந்த முயற்சியாகி விடும். 'முருகானந்தம் வரட்டும் அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு இரவு இங்கேயே தாழ்வாரத்தில் படுக்கலாம்' என்று துரத்தும் முயற்சியைக் கைவிட்டான் அவன். எவ்வளவுதான் துணிவு உள்ளவனாயிருந்தாலும் மனத்தில் இனம் புரியாத பயம் எழுந்தது. நடக்க இருந்ததை நினைத்துப் பார்த்தபோது உடல் நடுங்கியது. வந்தவனுடைய விருப்பம் நிறைவேறியிருந்தால் எவ்வளவு பேரிழப்பு ஆகியிருக்கும்? இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டு அச்சிட்ட நூல்களெல்லாம் அழிந்திருக்குமே.
வாயிற்புறக் கதவு தட்டப்பட்டது. விளக்குகளை அணைக்காமல் முன்புறம் வந்து கதவைத் திறந்தான் அரவிந்தன். முருகானந்தம் திரும்பியிருந்தான்.
"சுத்த காலிப்பையன். மங்கம்மாள் சத்திரத்துக்குப் பின் பக்கம் தெருவிளக்கின் அடியில் மூணு சீட்டு விளையாடப் போய்விட்டான். நீ ஒன்றும் சொல்லவில்லையே என்றுதான் பேசாமல் பார்த்துக் கொண்டு வந்தேன். இல்லாவிட்டால் முதுகில் பலமாக நாலு அறை வைத்து இங்கே இழுத்து வந்திருப்பேன். சிறு வயதிலேயே விடலைத்தனமாக இப்படிக் கெட்டுப் போகிற பிள்ளைகளின் தொகை ஊருக்கு ஊர் இப்போது அதிகரித்திருக்கிறது" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தன் திகைத்தான். "பேராசிரியருடைய பிள்ளை இப்படி ஆவதா?" என்ற வேதனை வாட்டியது. வேதனையோடு அரவிந்தன் கூறினான், "முருகானந்தம்! சிரமத்தைப் பாராமல் மறுபடியும் ஒரு நடை போய் நான் சொன்னேனென்று அந்தப் பையனைக் கூப்பிடு. அடி, உதை ஒன்றும் வேண்டாம். காலையில் திருப்பரங்குன்றத்தில் பார்த்தோமே அந்தப் பெண்ணின் தம்பி அவன். பேராசிரியர் பையன். அவன் வந்து பணம் கேட்டபோதே எனக்குச் சந்தேகமாயிருந்தது. அதுதான் உன்னைப் பின்னால் அனுப்பினேன். விரைவாகப் போய் அவனை அழைத்து வந்துவிடு."
அரவிந்தன் வேண்டுகோளை மறுக்க இயலாமல் மறுபடியும் போனான் முருகானந்தம். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளின் கார் அச்சகத்து வாசலில் வந்து நின்றது. பூரணியும் அந்த அம்மாளும் காரிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் முகங்களில் கவலையும் பரபரப்பும் குடி கொண்டிருந்தன.
பூரணியின் தம்பியைப் பற்றி அறிந்ததனாலும் அச்சக்த்தின் பின்புறம் நடந்த நிகழ்ச்சியாலும் மனம் குழம்பிப்போய் இருந்த அரவிந்தன், அவர்களைப் பார்த்து மேலும் குழப்பமடைந்தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு வரவேற்றான். மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி அரவிந்தனிடம் விவரமாகச் சொல்லி, என்ன செய்யலாம், எப்படித் தேடலாம் என்று கேட்டாள் பூரணி. அந்த நள்ளிரவில் தன்னைத் தேடிக்கொண்டு திருப்பரங்குன்றம் வந்து அந்த அம்மாள் கூறிய செய்தியைக் கேட்டபோது தன் தம்பி காணாமற்போனதும் கெட்டுத்திரிவதும் மறந்துவிட்டது அவளுக்கு. வயது வந்து பெண்ணைக் காணாமல் கலங்கித் தவிக்கும் அந்த அம்மாளின் துயரம் தான் பெரிதாகத் தோன்றியது. "என்னைப் போலவே இந்த அம்மாளும் ஆண்பிள்ளைத் துணையில்லாது குடும்பத்தைக் கட்டிக் காக்கிறவர்கள். எவ்வளவோ பணவசதியும், தைரியமும் உள்ளவர்கள்; இந்தச் சம்பவத்தினால் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இடிந்துபோய் என்னிடம் வந்து கதறினார்கள். நான் என்ன செய்வேன்? உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள்; மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள்" என்று அரவிந்தனிடம் கூறி உதவி கோரினாள் பூரணி. "போலீஸில் சொல்லிப் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லலாமா? அல்லது செய்தித்தாள்களில் படத்தோடு விளம்பரம் போடலாமா?" என்று பதற்றத்தில் தோன்றிய வழிகளை எல்லாம் கூறினாள் அந்த அம்மாள். இப்படி ஒரு நிலையில் தாயின் வேதனை தாங்க முடியாதது.
"பதற்றப்படாதீர்கள் அம்மா! பெண் வயது வந்தவள் என்கிறீர்கள். இப்படியெல்லாம் படம், விளம்பரம், போலீஸ் என்று போனால் பின்னால் பெண்ணின் வாழ்க்கை வம்புக்கு இலக்காகிவிடும். நடந்ததை நீங்களே பெரிதுபடுத்தின மாதிரி ஆகிவிடும். நிதானமாக யோசித்து ஒரு வழி செய்யலாம்" என்றான் அரவிந்தன்.
பின்பு பூரணியைத் தனியாக உட்புறம் அழைத்துப் போய், "உன் தம்பி சங்கதி தெரியுமோ?" என்று தொடங்கி நடந்ததையெல்லாம் அரவிந்தன் சொன்னான். முருகானந்தத்தை அனுப்பியிருப்பதையும் கூறினான்.
"விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை" என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். "காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீஸ் லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு லாரியில் ஏறிவிட்டான்" என்று முருகானந்தம் கூறியதும் "அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?" என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன்.
--------------------------------
குறிஞ்சி மலர்
14
"கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி
எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும்
அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்
சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக
வருமெனவே சொல்லினாலும்
நற்போதும் வாராது ஆங்கவர்
குணமே மேலாக நடக்குந்தானே"
மதுரை நகரத்து வீதிகளில் தேய்ந்து நள்ளிரவு கொலுவிருக்கும் அந்த நேரத்தில் ஒலிகள் தேயாத ஒரு வீதியில் ஒளிகுன்றா ஓர் அச்சகத்து முன் அறையில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். திருத்தப் பெற்றவையும், திருத்தப் பெறாதவையுமாக அச்சுப் பிரதிகள் மேசைமேல் தாறுமாறாகக் கிடந்தன. அவை சிதறிக் கிடந்தவிதம் அங்கிருந்தவர்களின் அப்போதைய மனநிலையையே காட்டுவதுபோல் இருந்தது.
அரவிந்தன் கூறிய விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு முருகானந்தம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் முகக் குறிப்புத் தீவிரமான சிந்தனையைக் காட்டிற்று. எல்லாவற்றையும் இழந்து பறிகொடுத்துவிட்டாற்போல் சோர்ந்து உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். பூரணி அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் முருகானந்தத்தைப் பார்த்தான்.
"முருகானந்தம்! சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன வழி? பூரணியும் இந்த அம்மாளும் நம்மை நம்பிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டாமா? உனக்கு இந்த அம்மாளின் மனநிலையைப் புரிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டும் இப்படி ஒரு வழியும் சொல்லாமல் இருக்கிறாயே? சிறு பையன் காசு திருடியதையும் சீட்டு விளையாடியதையும் காலி கும்பலோடு சேர்ந்து கொண்டு திரிவதையும் இன்று கண்டிக்காமல் இன்னும் ஒரு மாதம் கழித்துக் கண்டித்து வழிக்குக் கொண்டு வந்தாலும், கெட்டுப்போவது ஒன்றுமில்லை. ஆனால் வயது வந்த ஒரு பெண், திருமணமாகாதவள் தனியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பிப் போனதென்பது எத்தனை பெரிய கொடுமை. பெற்ற மனம் என்ன பாடுபடும் முருகானந்தம்?"
"எல்லாம் புரிகிறது அரவிந்தன். ஆனால் இந்த நேரத்துக்கு மேல் எங்கே போய் என்ன செய்ய முடியும்? நடந்தது வெளியில் தெரியவிடாமல் பெண்ணைக் கண்டுபிடித்து வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கல்லூரியில் படிக்கிற பெண் என்கிறார்கள். யாரும் ஏமாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்க முடியாது. விவரம் தெரிந்து வேண்டுமென்று தானாகவே போயிருப்பதுதான் சாத்தியம். அப்படியானால் எந்தக் காரணத்துக்காக யாரோடு போயிருக்கலாமென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேடிப் பார்க்க கிளம்புவதற்கு முன் காணாமல் போயிருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்களைப் பற்றி இந்த அம்மாளிடம் நாம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றையும் விளங்கிக் கொள்ள இயலாது. எனக்குக் கொஞ்சம் சிந்திக்க நேரம் கொடு. மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகப்போகிறது. பெண்ணின் படத்தை வாங்கிக் கொண்டு இவர்களை வீட்டுக்கு அனுப்பு. கவலையில்லாமல் கூடியவரையில் நிம்மதியாக வீட்டுக்குப் போய் இருக்கச் சொல்லு. என்னால் முடியுமானால் இந்த அம்மாளுடைய பெண் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்துவிடுவேன். உதவி செய்ய நான் தயங்கவில்லை. அதை வகையாகச் செய்ய வேண்டும் என்று தான் தயங்குகிறேன். அவசரப்பட்டு எதையாவது செய்து அந்தப் பெண் ஓடிப்போய் விட்டாளாமே என்று ஊரெல்லாம் அவப்பெயர் பரவும்படி ஆகிவிடக் கூடாது" என்று முருகானந்தம் நிதானமாகக் கூறிய விவரங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகத்தான் இருந்தன. பூரணி, மங்களேஸ்வரி அம்மாளிடம் இருந்து வசந்தாவின் புகைப்படத்தை வாங்கி அதன் பின்புறமே தேவையான விவரங்களையும் அடையாளங்களையும் குறித்து அரவிந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி மேஜையின் இழுப்பறையில் பத்திரமாக வைத்தான்.
"அம்மா நீங்களும் என்னோடு திருப்பரங்குன்றம் வந்துவிடுங்கள். உங்கள் மனநிலை சரியில்லை. கவலைகளால் குழம்பியிருக்கிறீர்கள். உங்களை இப்போது வீட்டுக்குத் தனியாக அனுப்ப எனக்குப் பயமாயிருக்கிறது" என்று அந்த அம்மாளையும் தன்னோடு வருமாறு அழைத்தாள் பூரணி. அதற்கு அந்த அம்மாள் இணங்கவில்லை. "காய்ச்சல் உடம்போடு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளுமுன் உன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தது போதாதா? என் தலைவிதி; எனக்குப் பெண்ணாகப் பிறந்தவள் இப்படிப் புத்திக்கெட்டுப் போனால் அதற்கு நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்; இன்னும் இது போதாதென்று உன் வீட்டில் வேறு வந்து உன் தலையில் என் கவலையையும் சுமக்க வைக்க வேண்டுமென்கிறாயா? என்னைப் பற்றி உனக்குப் பயமே வேண்டாம் பூரணி! இந்த அசட்டுப் பெண்ணுக்காக இசகு பிசகாக நான் எதுவும் செய்து கொண்டு விடமாட்டேன். அன்றொரு நாள் நீ என்னை முதன்முதலாகச் சந்தித்த போது பெண்கள் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழகி இன்றைய நவீன நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாதாடினேன். நீ ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தை கடைசி வரை வன்மையாக மறுத்தாய். அதன் உண்மை இன்று எனக்குப் புரிகிறது பூரணி."
"பழைய கதையை எல்லாம் எதற்கம்மா இப்போது கிளப்புகிறீர்கள்? நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம். உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகத்தான் என்னோடு வருமாறு அழைக்கிறேன்."
"அப்படிச் செய்வதற்கில்லை பூரணி! செல்லத்தை வீட்டில் தனியாக விட்டிருக்கிறேன். சமையற்காரி துணைக்குப் படுத்துக் கொண்டாளோ இல்லையோ? நேரமானாலும் பரவாயில்லை. உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட பின் நான் திரும்பி விடுகிறேன்" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள் மங்களேஸ்வரி அம்மாள். தங்கை மங்கையர்க்கரசியையும், தம்பி சம்பந்தனையும், கமலாவின் தாயிடம் சொல்லி, அவர்கள் வீட்டில் படுக்கச் செய்துவிட்டுத் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருந்தாள் பூரணி. இனி இந்நேரத்துக்கு மேல் திருப்பரங்குன்றம் போனால் கமலாவின் வீட்டுக்குப் போய் குழந்தைகளை எழுப்பி தன் வீட்டுக்கு அழைத்துப் போக முடியாது. இரண்டுங்கெட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் போய் கதவைத் தட்டித் தூக்கத்தைக் கெடுப்பது நன்றாக இராது. அவள் மட்டும் தனியாக வீட்டில் போய்ப் படுத்துக் கொள்வதும் இயலாது. அந்த அம்மாளைத் திருப்பரங்குன்றத்துக்கு அழைப்பதற்குப் பதிலாகத் தானே அந்த அம்மாளோடு மதுரையில் தங்கிவிட்டால் என்ன என்று நினைத்துத் தயங்கியது பூரணியின் உள்ளம்.
"என்னைக் கொண்டு போய்விடுகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மா. இவ்வளவு நாழிகைக்கு மேல் நான் அங்கே போய் என்ன செய்யப்போகிறேன்? உங்களோடு உங்கள் வீட்டிலேயே இருந்துவிடுகிறேன்" என்று பூரணி தன் விருப்பத்தை வெளியிட்டபோது மங்களேஸ்வரி அம்மாள் இரட்டை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள். அவர்கள் காரில் ஏறிக்கொண்டனர். வழியனுப்புவதற்காக நிற்பது போல் அரவிந்தனும் முருகானந்தமும் அச்சகத்து வாயிற்படிக்குக் கீழே நடைபாதை மேடையில் கார் அருகே நின்றனர். கார் புறப்பட இருந்தபோது முருகானந்தம் மிக அருகில் நெருங்கி "பூரணியக்கா நாளைக்குக் காலையில் நானும் அரவிந்தனும் இந்த அம்மா வீட்டுக்கு வருகிறோம். மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பதற்றமடையாமல் இருக்கச் சொல்லுங்கள். எங்களால் ஆனதைச் செய்கிறோம். அநேகமாக நாளைக் காலையில் நாங்கள் வரும்போதே உங்கள் தம்பியையும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமென்று நினைக்கிறேன். வருத்தப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்" என்றான். அவன் கூறியதைக் கேட்ட மங்களேஸ்வரி அம்மாள், "இதென்ன பூரணி? உன் தம்பியைப் பற்றி இவர் என்னவோ சொல்லுகிறாரே, அவன் எங்கே போய்விட்டான்?" என்று திகைப்போடு வியந்து வினவினாள். அந்த அம்மாள் அகாலத்தில் தன்னைத் தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் வந்து வசந்தா காணாமற் போய் விட்ட செய்தியைத் தெரிவித்தபோது தன் தம்பி திருநாவுக்கரசு பற்றிச் சொல்வதற்குத் தோன்றவேயில்லை பூரணிக்கு. பெரிய துன்பத்தோடு பரபரப்படைந்து ஓடி வந்திருக்கிறவர்களிடம் சிறிய துன்பத்தைச் சொல்லி தன் வருத்தத்தில் அவர்களும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டாமே என்றுதான் அவள் சொல்லாமல் இருந்து விட்டாள். தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு உடனே அச்சகத்துக்கு வந்தாள் அவள். நல்லவேளையாக அந்த நேரத்துக்கு முருகானந்தம் அங்கு இருக்கவே அவளுடைய வேலை எளிதாகப் போயிற்று.
இப்போது முருகானந்தம் கூறியதிலிருந்து அந்த அம்மாளே ஏதோ புரிந்து கொண்டு தம்பியைப் பற்றிக் கேட்கிறாள். வலுவில் கேட்கும்போது எப்படிச் சொல்லாமல் இருப்பது? அச்சகத்து வாயிலிருந்து புறப்பட்ட கார் தானப்ப முதலித் தெருவில் அந்த அம்மாள் வீட்டு வாயிலில் போய் நிற்பதற்குள் சில விநாடிகளில் தம்பி திருநாவுக்கரசின் நடத்தை மாறுதல்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.
பூரணியையும் மங்களேஸ்வரி அம்மாளையும் அனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய அரவிந்தனும் முருகானந்தமும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்குச் செய்தி ஒன்றுமே இல்லாதது போல் வீற்றிருந்தனர். இந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு அரவிந்தன் கூறலானான்.
"உனக்கு இன்னும் ஒரு புதிய செய்தி சொல்லப் போகிறேன், முருகானந்தம். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்த அச்சகமும் இதில் நிறைந்துள்ள அறிவுச் செல்வங்களும் தீப்பிடித்து எரிவதற்கும், அழிவதற்கும் ஏற்பாடு நடந்ததென்று சொன்னால் இப்போது நீ நம்புவாயா?"
"தெளிவாகப் பேசு. நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை, அரவிந்தன்!"
முருகானந்தத்துக்கு நன்றாக விளங்கும்படி பின்புறம் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி எல்லாவற்றையும் கூறினான் அரவிந்தன்.
"பாவி! இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவனை எப்படியப்பா தப்பிப் போகவிட்டாய்? நல்ல சமயத்தில் நான் இல்லாமற் போய்விட்டேனே! ஆளைப் பிடித்துச் சுவரிலேயே அறைந்து கொன்றிருப்பேன். சொப்பனத்தில் கூட இனி இந்த மாதிரி கெட்ட வேலை செய்ய வரும் துணிவு அவனுக்கு உண்டாகாமல் பண்ணியிருப்பேனே" என்று கொதிப்படைந்து கூறினான் முருகானந்தம். அதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான்.
"ஆளைப் பிடித்துக் கட்டி வைத்து உதைத்த பின் இம்மாதிரிக் கெட்ட செயல் செய்யும் துணிவு குன்றுவதற்குப் பதிலாக அதிகமாகிவிட்டால் என்ன செய்வாய் முருகானந்தம்? கையில் சிராய்ந்து இரத்தம் வருகிறதே என்பதற்காகக் கையைக் குத்தி நுனியில் கொண்டுபோய்த் துடைத்தால் இரத்தம் குறையுமா அப்பா? கீழ்மைக்குணம் என்பது உள்ளிப் பூண்டைப் போன்றது. கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை எருவாகப் போட்டுப் பன்னீரை தண்ணீராகப் பாய்ச்சினாலும் உள்ளிப்பூண்டு விளைகிறபோது அதன் பழைய நாற்றம்தான் வரும். கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்று பழமொழி உண்டு. நாளைக்கே முதலாளியிடம் சொல்லி ஓட்டலுக்கும் இதற்கும் நடுவிலிருக்கிற சந்துக்கு ஒரு கதவோ சுவரோ போட ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் செய்ய முடிந்தது அதுதான்..."
"யாரோ வேண்டுமென்று சொல்லி ஏவிவிட்டுத்தான் இது நடந்திருக்கிறது அரவிந்தன்! நீ சொல்லுகிறபடி பார்த்தால் குப்பை அள்ள வருகிற தோட்டியும் ஓட்டல் வேலையாட்களையும் தவிர வேறு ஆட்கள் கொல்லைப் பக்கம் புழங்குவதில்லை என்று தெரிகிறது. ஓட்டல் ஆட்கள் இந்த வம்புக்கு வர மாட்டார்கள். தோட்டியே காசுக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ய ஒப்புக் கொண்டிருக்கலாம். எதற்கும் காலையிலே விசாரித்து விடலாம்."
"விசாரித்துத் தெரியப்போவதை நான் இப்போதே சொல்லி விடுகிறேன். கேட்டுக்கொள். எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரே பகைவர், அந்தப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர்தான். அந்த நாளிலிருந்து தொழில் முறையில் மீனாட்சி அச்சகத்துக்கும் அவருக்கும் புகைச்சல் உண்டு. எங்கள் முதலாளியை அவருக்குக் கட்டோடுப் பிடிக்காது. இப்போது பேராசிரியரின் நூல்களை நாங்கள் அவருடைய கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து விடுவித்து நியாயமாக வெளியிடத் தொடங்கியிருப்பதால் பழைய புகைச்சல் வளர்ந்திருக்கிறது. எதையும் செய்வதற்குக் கூசாத மனிதர் அவர். இருக்கட்டுமே! நாம் முறையான வழியிலேயே நேர்மையாகப் போகலாம். ஒரு நாள் அவரையே சந்தித்து இப்படியெல்லாம் செய்யலாமா? என்று நானே நியாயத்தைக் கேட்கத்தானே போகிறேன்."
"நியாயத்தைக் கேட்கிற ஆளா அவர்? மறுபடியும் அவரிடம் அறை வாங்கிக் கொண்டு வராதே. இந்தத் தடவை நீ அவருக்கு அறை கொடுத்துவிட்டு வா. அதற்குப் பலம் இல்லையானால் அவரிடம் நியாயம் கேட்கப் போகிறபோது என்னையும் உடன் அழைத்துப் போ. நான் கொடுக்கிறேன் அவனுக்கு! நியாயமாம், நியாயம்! இந்தத் தலைமுறையில் நியாயத்தைப் பற்றிப் பேசுவதுதான் நாகரிகம் அப்பனே. கடைப்பிடிப்பது அநாகரிகம்!" கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி முழங்கை மணிக்கட்டில் இறுக்கிச் சுற்றியவாறே மேலும் பேசினான் முருகானந்தம்.
"அந்தப் புதுமண்டபத்து ஆளிடமிருந்து பேராசிரியரின் புத்தகங்களைக் காப்பாற்றியதற்காக உனக்கும், உங்கள் முதலாளிக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் அரவிந்தன். பத்து பன்னிரண்டு நாட்களுக்கு முன் என் சிநேகிதன் ஒருத்தன் அந்த புதுமண்டபத்துக் கடையிலிருந்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட புத்தகம் ஒன்று வாங்கி வந்தான். தனிப்பாடல் திரட்டு என்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் தலைப்பிலிருந்து உள்ளே இறுதிப் பக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் தனிப்பாடல் திருட்டு என்று அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளிலும் இந்தத் தவறு இருக்கத்தானே செய்யும்? தமிழுக்கு எத்தனை பெரிய பாவம் இது?"
"தமிழுக்கு பாவம் ஏது? எல்லா பாவமும் அவருக்குத்தான். ஒருவகையில் அவர் வெளியிட்டிருக்கும் புத்தகத்திற்குத் தனிப்பாடல் திருட்டு என்று பெயர் இருப்பதே பொருத்தம் தான். அவர் சொந்தமான ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஒப்பு நோக்கி அதைப் பதிப்பிக்கவில்லை முருகானந்தம், வேறு ஒருவர் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக முயன்று பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு புத்தகத்தை அப்படியே ஒரு மாதத்தில் காப்பியடித்துத் திருடி வெளியிட்டு விட்டார். மலிவுப் பதிப்பு என்று பெயராம்! எது மலிவோ? பிழையோ? அல்லது விலையோ? தெரியவில்லை. அதனால் அவர் செய்த காரியத்துக்கு ஏற்பத்தான் புத்தகத்தின் பெயரும் வாய்த்திருக்கிறது" என்று குறும்பு பேசினான் அரவிந்தன்.
அன்று அவர்கள் இருவரும் கொல்லைப் பக்கத்துத் தாழ்வாரத்தின் அருகிலேயே படுத்துக் கொண்டார்கள். அவர்கள் படுக்கும்போது மணி ஒன்றரை இருக்கும். களைப்பும் அலுப்பும் உடல் தாங்காமல் நிறைந்திருந்தாலும் மனக்குழப்பத்தால் தூக்கம் உடனே அணுக மறுத்தது. படுக்கையில் சாய்ந்து முழங்கையை முட்டுக் கொடுத்து தலையை நிமிர்த்திக் கொண்டு முருகானந்தம் கேட்டான், "பூரணியக்காவுக்கும் இந்த அம்மாளுக்கும் என்ன உறவு? இந்த அம்மாள் யார்?"
மங்களேஸ்வரி அம்மாளைப் பற்றி பூரணியிடமிருந்து, தான் தெரிந்து கொண்டிருந்தவற்றை முருகானந்தத்திற்குச் சொன்னான் அரவிந்தன்.
"இவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படியா புத்தி போகவேண்டும்? இந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கிற பையன்களும், பெண்களும் தவறு செய்யக் கூசுகிற தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்களே அரவிந்தன், இதற்கு என்ன காரணமென்று உன்னால் சொல்ல முடியுமா? தமிழ்ப் பண்பாட்டின் உருவாய் வாழ்ந்தவருக்குப் பிள்ளையாய் பிறந்து தமிழ்ப் பெண்மையின் இலட்சியம் போல் நம்மிடையே வாழும் பூரணியக்காவின் கண்காணிப்பில் வளரும் பையன் இப்படி ஆகிவிட்டானே! செல்வமும், செல்வாக்கும் நற்பண்பும் உள்ள மங்களேஸ்வரி அம்மாளின் பெண் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறாளே! குருத்துவிடும் வயதிலேயே கெட்டுப் போகத்துணியும் இத்துணிச்சல் இவர்களுக்கு எங்கே கிடைத்தது?"
அரவிந்தன் நெடுமூச்சு விட்டான். முருகானந்தத்தின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிந்தித்தான். சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் முருகானந்தத்தை நோக்கிச் சொல்லலானான்:
"வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு மேல்நாட்டு வாழ்வின் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் கற்பித்து அனுப்பிவிடுகிறார்கள். வட்டமான டப்பாவுக்கு சதுரமான மூடி போடுகிற மாதிரி ஏழை நாட்டில் ஆடம்பரக் கனவுகள் சிறிதும் பொருந்தமாட்டேனென்கின்றன."
அரவிந்தனை இந்த மாதிரிக் கருத்து வெள்ளமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக் கேட்பதில் முருகானந்தத்துக்குத் தனி ஆனந்தம். மனம் உருகித் துடிப்போடு இப்படி அவன் பேசுகிற சந்தர்ப்பங்கள் எப்போதாவது அத்திப்பூத்த மாதிரிதான் வாய்க்கும். அப்படி வாய்க்கிற நேரங்களில் அந்த அறிவு வெள்ளத்தில் நன்றாக மூழ்கி எழுந்துவிடுவது முருகானந்தத்தின் வழக்கம். அரவிந்தன் மேலும் தொடர்ந்தான். "நீதான் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறாயே, முருகானந்தம்! ஓடிப்போதல், பணத்தை எடுத்துக் கொண்டு தனியே போதல் என்று இளைஞர்களையும் யுவதிகளையும் பற்றி எவ்வளவு சேதிகள் வருகின்றன? அவ்வளவுமா பொய்யாக இருக்கும்? எப்படி எப்படி எந்தச் சமயங்களில் தவறு செய்யலாமென்பதைச் செய்தித்தாள்களே கற்றுக் கொடுக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?"
"நீ சொல்வது உண்மைதான் அரவிந்தன். ஒழுக்கத்தைப் பற்றிய ஆர்வம் இளைஞர்களிடையே குன்றிவிட்டது. ஆனால் அதற்கு இளைஞர்கள் மட்டும்தான் காரணமென்று நினைக்கிறாயா?"
இதற்கு அரவிந்தன் பொருத்தமாகவும், நன்றாகவும் பதில் சொன்னான். இப்படிக் கேள்வியும் பதிலுமாகச் சிறிது நேரம் விவாதம் செய்துவிட்டு அவர்கள் உறங்கிப் போனார்கள்.
காலையில் அரவிந்தன் விழிக்கும்போது கொல்லையில் முருகானந்தம் யாருடனோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். போய்ப் பார்த்தபோது பின்புறம் குப்பை அள்ள வருகிற தோட்டியை அவன் விரட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோட்டி தனக்கு ஒரு பாவமும் தெரியாதென்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தான். முருகானந்தம் தனக்கு இருந்த கோபத்தில் தோட்டியைக் கீழே தள்ளி மிதித்துவிடுவான் போலிருந்தது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அரவிந்தன் எழுந்து போய்த் தோட்டிக்கு அடியும் உதையும் விழாமல் காப்பாற்றினான்.
"அவன் என்னப்பா செய்வான்? செய்திருந்தாலும் உன்னிடம் நான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பானா? நாம் ஒழுங்காகச் சுவரைப் பெரிதாக்கிச் சந்து வழிக்குக் கதவும் போட்டுவிட்டால் யாரும் நுழைய முடியாது அப்புறம்" என்று முருகானந்தத்தைச் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தான் அரவிந்தன்.
"மயிலே மயிலே இறகு போடு - என்றால் போடாது அரவிந்தன். கன்னத்தில் கொடுத்தால் உண்மையைக் கக்கியிருப்பான். நீ எழுந்திருந்து வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய். போய்த் தொலையட்டும். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கிற காரியத்தையாவது இன்று காலையிலிருந்து தொடங்கலாம்" என்று அன்று செய்ய வேண்டிய வேலையை நினைவுபடுத்தினான் முருகானந்தம்.
அரவிந்தன் மேசை இழுப்பறையைத் திறந்து வசந்தாவின் படத்தை எடுத்து முருகானந்தத்திடம் தந்தான். அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தவுடன் முருகானந்தம் வியப்பால் துள்ளினான் அவன் முகம் அகன்று மலர்ந்தது.
"அடி சக்கை! இப்படியல்லவா வகையாக மாட்டிக் கொள்ள வேண்டும்" என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளியாயின.
அதைக்கேட்டு அரவிந்தன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். "என்னடா முருகானந்தம்? இந்தப் படத்திலிருக்கிற பெண்ணை இதற்கு முன்பே உனக்குத் தெரியுமா?"
"பெண்ணைத் தெரியாது. இந்தப் படத்தை நன்றாகத் தெரியும். இதோ பார் வேடிக்கை..." என்று சொல்லிக் கொண்டே ஒரு மணிபர்ஸை எடுத்துப் பிரித்தான். அதில் சிறிய அளவில் எடுக்கப்பட்ட வசந்தாவின் புகைப்படங்கள் இரண்டும் அவள் கையொப்பத்தோடு கூடிய கடிதம் ஒன்றும், மூன்று நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மணிபர்ஸின் மேற்பாகம் வெளியே தெரிகிறார் போன்ற 'மைக்கா' உறைக்குள் ஓர் ஆண் படமும் இருந்தது. மணிபர்ஸின் சொந்தக்காரனுடைய படமாக இருக்க வேண்டும் இது. கடிதத்தைப் பிரித்து அரவிந்தனுக்குப் படித்துக் காட்டினான் முருகானந்தம்.
"அன்புடையீர் வணக்கம்.
உங்கள் விண்ணப்பத் தாளும் நிபந்தனைகள் அடங்கிய விவரமான கடிதமும் கிடைத்தன. புதிய முகங்களைச் சினிமாவில் அறிமுகப்படுத்த நடிப்புக் கலையை வளர்க்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். என்னுடைய ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி உடை அழகுப் போட்டிகளிலும் பலமுறை நான் பரிசு வாங்கியிருக்கிறேன். எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தணியாத ஆசை. என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு முதல் படத்திலேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமென்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். நிபந்தனையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொகையை எப்போது வேண்டுமானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறேன். நீங்கள் எப்போது இங்கே வருவதாயிருந்தாலும் வருகிற சேதியும், தங்கும் இடமும் எழுதுங்கள். கவரிலேயே எழுதுங்கள். எது எழுதினாலும் தயவு செய்து கார்டில் எழுத வேண்டாம். நான் உங்களைச் சந்திக்கிறேன்.
தங்கள்,
வசந்தா.
கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தான் அரவிந்தன். "நாலு எழுத்து படித்து விவரம் தெரிந்த பெண்களுக்கு இன்று இருக்கிற சினிமாப் பித்துக்கு அளவே இல்லை. ஒவ்வோர் இளம் பெண்ணும் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது தன்னை ஒரு நடிகையாக, அல்லது நடிகையைப் போல் நினைத்துக் கொண்டு தான் பார்க்கிறாள். அந்தக் கலையில் சேர்ந்தவர்களின் நடிப்பைப் பார்த்து ரசிப்பதோடு திருப்தி அடையலாம். ஆனால் எல்லோரும் கவர்ச்சி நிறைந்த அந்தக் கலைப்பள்ளத்தில் கண்ணை மூடிக்கொண்டு குதித்துவிடத் துடிக்கிறார்களே! இந்த மோகம் கன்றிய வெறிக்கு மருந்தை எங்கே தேடுவது?"
"மருந்தை அப்புறம் தேடலாம்! முதலில் அந்த ஆளைத் தேடிக் கைக்கு விலங்கு மாட்டி உள்ளே தள்ளவேண்டும். எல்லாம் புத்திசாலித்தனமாகச் செய்த பயல், இந்த மணிபர்ஸ்ஸை மட்டும் என் கடையில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். நேற்று நான் கடை பூட்டுமுன், தற்செயலாக இதைப் பிரித்துப் பார்த்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. அது நினைவிருந்ததனால் தான் நீ கொடுத்த படத்தைப் பார்த்த அளவில் கண்டுபிடித்தேன்" என்று முருகானந்தம் கூறியதைக் கேட்டு, "அது சரி தம்பி! படத்தையும் மணிபர்ஸையும் வைத்துக் கொண்டு ஆளை எப்படி நீ கண்டுபிடிப்பாய்? கடிதம் உறையின்றி இருக்கிறதே? முகவரியும் எழுதப்பெறவில்லையே" என்று சந்தேகத்தை வெளியிட்டான் அரவிந்தன்.
"பயல் இன்னும் நாலைந்து மாதங்களாவது நான் தைத்துக் கொடுத்த உடையைப் போட்டுக் கொண்டுதானே திரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கிறது நம்மிடம். கண்டுபிடித்துவிடலாம் பயப்படாதே" என்று முருகானந்தம் அரவிந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த போது பூரணி உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு தந்தி உறை இருந்தது. உறையிலிருந்து தந்தியை எடுத்து அவள் அரவிந்தனிடம் தந்தாள். தந்தி விடியற்காலம் நான்கு மணிக்குத் திருச்சியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.
'திரும்பி வர வழிச் செலவுக்குப் பணமில்லை. திருச்சி இரயில் நிலையத்தில் இருக்கிறேன். வந்து அழைத்துப் போகவும். விவரம் நேரில் - வசந்தா."
தந்தி மங்களேஸ்வரி அம்மாள் பேருக்கு வந்திருந்தது. அரவிந்தன் படித்துவிட்டு முருகானந்தத்திடம் கொடுத்தான்.
-------------------------
குறிஞ்சி மலர்
15
"மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!"
-- கவிமணி
பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான்.
"சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே மதுரையில் என்னிடம் உடைகள் தைத்து வாங்கிக் கொண்டு இந்த மணிபர்ஸையும் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். இந்தத் தடவை நிச்சயமாக அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணப் போகிறான் பாருங்கள். அக்கா... நான் இவனைச் சும்மா விடப்போவதில்லை. எப்படியாவது கண்டுபிடித்து உள்ளே தள்ளப் போகிறேன்" என்று மணிபர்ஸின் மைக்கா உறைக்குள் இருந்த ஆணின் படத்தை பூரணிக்குக் காட்டிச் சினமாகப் பேசினான் முருகானந்தம். அப்போது அருகிலிருந்த அரவிந்தன் பூரணியின் முகத்தை நோக்கி முறுவல் செய்தவாறு கேட்கத் தொடங்கினான்:
"நீ என்னவோ நாள் தவறாமல் தமிழ்நாட்டுப் பெண்மையின் சிறப்பையும் பண்பாட்டையும் பற்றி உங்கள் மங்கையர் கழகத்தில் சொற்பொழிவுகள் செய்வதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்! வளர்கின்ற தலைமுறையைச் சேர்ந்த புதுப்பெண்கள் எப்படி இருக்கிறார்கள் பார்த்தாயா? தொட்டியில் வளரும் குரோட்டன்ஸ் செடி மாதிரி வேரூன்றிக் கொள்ள இடமில்லாமல் வெறும் கவர்ச்சி மட்டும் நிறைந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பதிவின்றி வாழ்கிறார்களே! சினிமாவில் நடிக்க இடம் வாங்கித் தருகிறேன் என்றவுடன் படிப்பு, குடும்பப் பெருமை, செல்வாக்கு எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஆணுடன் கிளம்புகிற அளவுக்கு அசடாய்ப் பைத்தியமாய் நிலையிழந்து ஓடலாமா ஒரு பெண்? பாதி வழியில் ஏமாந்து, பணத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பி வரச் செலவுக்கு இல்லாமல் பெற்றவளுக்குத் தந்தி கொடுக்க வெட்கமாக இராதா ஒரு பெண்ணுக்கு! தப்பு செய்த மனமும் கைகளும் அதற்காகக் கூச வேண்டாமோ?"
"பெண் தன்னைப் பற்றி அதிகக் கவலை கொள்ள நேராமல் சமூகத்தின் பொது அறங்களே அவளுடைய நிறைக்குக் காவலாகி அவளைக் காத்த காலத்தில் கூட அவளுக்கு அந்தக் கூச்சமும் வெட்கமும் இருந்தது! ஆனால் இன்றோ சமூகத்தின் பொது அறங்கள் மாறி வளர்ந்துவிட்டன. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. அசட்டு ஆசைகளால் ஏமாறக்கூடாது. ஆனால் இவள் ஏமாந்துவிட்டாள். நான் கருத்துக்களைக் கூறும் முறையிலும், சொற்பொழிவு செய்வதிலும் கேட்பவர் பின்பற்றத் தூண்டும் சக்தி குறைவு என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று தோன்றுகிறது அரவிந்தன்! என் ஆற்றலை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்றாள் பூரணி. அரவிந்தனுடைய அந்தப் பேச்சு, 'பிறருக்கு வழிகாட்டியாகிற ஆற்றலை உன்னிடம் நீ இன்னும் அதிகமாகத் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்' என்று தன்னை மென்மையாகக் குத்திக் காட்டியது போல் தொனித்தது பூரணிக்கு. இந்தப் பேச்சை இதற்கு மேல் வளர்க்காமல், "நானும் அந்த அம்மாளும் காரில் திருச்சிக்குப் புறப்படுகிறோம். எங்களோடு உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உடன் வந்தால் நல்லதென்று அந்த அம்மா கருதுகிறார்கள்" என்று நடக்கவேண்டிய காரியத்தை அவசரப்படுத்திக்கொண்டு சொன்னாள் பூரணி.
"முருகானந்தம்! நீ இவர்களோடு திருச்சிக்குப் போய்விட்டு வா. தையற்கடைச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ. கடை வேலையாட்கள் வந்தால் நான் சாவியைக் கொடுத்து விடுகிறேன்" என்று முருகானந்தத்தைப் புறப்படச் சொன்னான் அரவிந்தன்.
"நான் எதற்கு அரவிந்தன்? அந்த அம்மாவும் பூரணியக்காவும் போனால் போதுமே. துணைக்கு கார் டிரைவர் இருப்பான்."
"இல்லை, நீ கட்டாயம் போக வேண்டும். ஏதாவது வம்பு வந்தாலும் சமாளிப்பதற்கு நீதான் சரியான ஆள். மறுக்காமல் போய்விட்டு வா. கார் பெரியது. மணிக்கு ஐம்பது மைல் போனால் எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம்." அரவிந்தன் இவ்வாறு வற்புறுத்தவே முருகானந்தத்தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தையற்கடைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். போகும்போது பூரணி அரவிந்தனிடம் கூறினாள்:
"நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும் அரவிந்தன். முடிந்தால் இந்தப் பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண்டிக்க வேண்டும். எக்கேடு கெட்டுப் போகட்டும் என்றுதான் பேசாமல் இருக்க முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உடன்பிறந்த பாசம் எதையாவது நினைத்து வேதனைப்படச் சொல்கிறது"
"யார், உன் தம்பி திருநாவுக்கரசைப் பற்றித்தானே சொல்கிறாய். நான் பார்த்து அழைத்து வருகிறேன். நீ போய் வா" என்றான் அரவிந்தன்.
பூரணியையும் முருகானந்தத்தையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான் அரவிந்தன். முதல்நாள் மாலைக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தபோது அவன் உள்ளம் தெளிவிழந்து தவித்தது. பூரணியின் தம்பி கெட்ட பழக்கங்களால் இப்படி ஆகிவிட்டானே என்று நினைக்கும் போது துயரமும் கவலையும் கொண்டான். அச்சகத்தின் பின்பக்க வழியாக நெருப்பு வைக்கும் தீயநினைவோடு வந்து போன ஆளை எண்ணியபோது பொறாமையின் சிறுமையை எண்ணி வேதனை கொண்டான். தாயைக் கதிகலங்கச் செய்துவிட்டுப் பணத்தோடு ஓடிப்போன மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி எண்ணியபோது அனுதாபமும் இரக்கமும் உற்றான். குழப்பமான மன நிலையோடு அறையிலிருந்தவாறே வெளியே நோக்கின அவன் கண்கள். எதிரே சன்னலுக்கு நேர் கிழக்கே பூமியைப் பிளந்துகொண்டு மேலெழுந்து நிற்கும் சத்தியம்போல் கோபுரம் விடியற்காலை வானத்தின் பின்னணியில் அற்புதமாய்த் தெரிந்தது. கூடலழகப் பெருமாள் கோயிலுக்கு வைகை நதியிலிருந்து திருமஞ்சன நீர் சுமந்து செல்லும் யானையின் மணியோசை காலைப்போதின் அமைதி கவிந்த வீதியெல்லாம் நிறைத்துக் கொண்டு ஒலிப்பது போல் அழகாக ஒரு பிரமை. எதிர்ப்பக்கம் ஒரு வீட்டு மாடியிலிருந்து சங்கீதம் பழகும் இளம் பெண் ஒருத்தி உலகத்தின் இன்பமயமான சௌந்தர்ய சக்திகளையெல்லாம் தட்டி எழுப்புவது போல் வீணையையும் தன் குரலையும் இனிமைக்கெல்லாம் இனிமையான ஒரு பேருணர்வில் குழைத்து உதயராகம் பாடிக்கொண்டிருந்தாள். குழாயடியில் குடங்கள் மோதும் விகாரமான ஓசையும் வாய்கள் மோதும் வசைமொழிகளுமாக இது மண்ணுலகம் தான் என்று நினைவுபடுத்துகிறார்போல் ஓர் அடையாளம் அற்புதமான இந்த வைகறைச் சூழ்நிலையில் மலர்வதற்குத் துடிக்கிற அரும்புகள் போல் அவன் மனத்தில் சில நினைவின் அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்தன. சட்டைப் பையிலிருந்து எப்போதும் தன்னிடம் இருக்கும் சிறிய திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அந்தச் சமயத்தில் தன் மனத்தில் அரும்பியிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ற சில குறட்பாக்களைத் தேடிப் படித்து அவற்றின் உணர்வில் ஆழ்ந்தான். இந்த மாதிரி மனநிலை அடிக்கடி உண்டாகும் அவனுக்கு. சித்தப்பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருப்பான். சில வேதனை நிறைந்த சிந்தனைகளின் போது கண்கள் கலங்கி விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட உருக்கமான மனநிலை முற்றும் போது அவன் மன விளிம்பில் கவிதைகளுக்கான செழிப்புள்ள சொற்கள் ஒன்றுகூடி உருவாகி வெளிவரத் துடிக்கும். கருவிலிருந்து வெளிவரத் துடிக்கும் நிறைமாதத்துக் குழந்தைபோல் இந்த வேதனை அவனது மனத்தின் இரகசியம். இத்தகைய சிந்தனைச் சூழ்நிலையில் உள்ளத்தின் மலர்ச்சியையும் சேர்த்து அவன் முகத்தில் பார்க்கலாம். கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறாற்போல் மலர்ந்த முகத்தோடு ஒரு விவேகானந்தர் படம் பார்த்திருப்பீர்களே! அந்த முகத்தில் உங்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைத்துவிடுகிற ஏதோ ஒரு களை இருக்கும். சிந்தனையில் பார்க்கும் போது அரவிந்தனின் முகத்தில் நிலவும் ஒளி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
மூழ்கிச் சிந்திக்கிறபோது உடம்பில் வேர்க்கும் அவனுக்கு. ஆனால் அந்த சிந்தனை முடிகிறபோதோ, காயரும்பாக இருந்த பிச்சிமொட்டு இறுக்கம் நெகிழ்ந்துபோய் பிச்சிப்பூவாக மலர்கின்றபோது மணக்குமே ஓர் அற்புத மணம், அதுபோல் மணக்கும் அவன் உள்ளம். மணத்தின் சிறப்பால் மோர்ந்து பார்க்கிறவர்களையெல்லாம் பித்துக்கொள்ளச் செய்வதனால்தான் இந்தப் பூவுக்குப் பிச்சி, பித்திகை என்று பெயர் வந்திருக்கலாமோ? என்று அரவிந்தன் நினைப்பான். இந்தப் பூ அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. இதன் மணத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் துள்ளும் அவனுக்கு. 'கடவுள்' உலகத்தைப் படைக்கும்போதே இன்ன இன்ன துர்நாற்றங்கள் உலகத்தில் உண்டாகலாம் என்பதை அனுமானம் செய்துகொண்டுதான் உலகத்தில் மணமுள்ள பூச்செடிகளைப் படைத்தார் என்று கற்பனை செய்து அரவிந்தன் ஓர் அழகான கவிதை எழுதியிருந்தான். எப்போதோ அதை அவனுடைய நோட்டுப் புத்தகத்தில் படித்துவிட்டுப் பூரணி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.
"இன்னோர் அபூர்வமான அழகு உங்களுக்குத் தெரியுமா அரவிந்தன்? அப்பா தமிழ்ச் சொற்களின் ஒலி வனப்புப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தபோதே எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார். 'பூ, மலர்' இந்த இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும், சொல்வதற்காக வாய் திறக்கும் போது உங்கள் உதடுகளே பூ மலர்வதுபோல் மலர்ந்து பிரியும். ப, ம இந்த இரண்டு எழுத்துக்களையும் உதடு மலராமல் சொல்லவே முடியாது."
தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் 'தமிழ்' என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன.
அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற உறவுகளுக்கும் காரணம். ஒருவருக்கொருவர் தத்தம் இலட்சியங்களையும், உள்ளங்களையும் உணர்ந்து பழகிய அன்புப் பழக்கம் ஓர் உறவு. அது அந்தரங்கமான உறவு. இதயங்களுக்கு மட்டுமே புரிந்த உறவு அது. வாழ்க்கையின் நடைமுறையில் ஆண்களும் பெண்களும் முகத்தையும் உடம்பையும் பார்த்துக் கொள்கிற இச்சைக் காதல் அன்று அது. மெல்லிய மன உணர்வுகளில் நுணுக்கமாகப் பிறக்கும் காவியக் காதல் அவர்களுடையது. மூன்றாவது நிலை அறிவுக்கடலாய் விளங்கும் அவள், தமிழில் நுணுக்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது அவன் சாதாரண மாணவனைப் போல் ஆகிக் கேட்டுக்கொண்டிருக்கிற உறவு. அரவிந்தன் கவிஞன். சிந்தனையாளன். இலட்சியவாதி. அழகன். எல்லாமாக இருந்தும் ஞானச்செல்விபோல் அவள் தமிழை வாரி வழங்கும்போது அவள் முன் தன் கம்பீரங்களை மறந்து சிறுபிள்ளைபோல் கேட்டுத் தெரிந்து கொள்வதே இன்பமாக இருந்தது அவனுக்கு. முருகானந்தம் தன்னிடம் அப்படி இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். நண்பனைப் போல் தோளோடு தோள் பழகினாலும் சில சமயங்களில் முருகானந்தம் தன்முன் மாணவனாக அமர்ந்து விடுவதைப் போன்று, தன் இதயம் கவர்ந்து, தனக்கு இதயம் கொடுத்தவளாகப் பழகினாலும் பேராசிரியராகிய தந்தையிடம் கற்றிருந்த பேருண்மைகளைப் பூரணி பேசும்போது அவன் குழந்தைபோலாகிக் கேட்டுக் கொண்டிருந்து விடுவதிலேயே இன்பம் கண்டான்.
அன்று காலை எண்ணங்கள் அலைபாயும் நிலையற்ற மனநிலையோடு இருந்தபோது இவ்வளவும் நினைவுற்றான் அவன். தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கீழ்க்கண்டவாறு எழுதினான்.
'பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசைகளை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்துவிட்டாலே போதும், துடிதுடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்துவிடுமாம் அந்த அசுணப் பறவை.'
'வாழ்வின் தீமை நிறைந்த கெட்ட செய்திகளை உணரும் போது இந்த அசுணப் பறவைபோல் நாமே அழிந்து விட்டாலென்ன என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நேற்றுதான் எத்தனை கெட்ட செய்திகளை உணரும்படி நேர்ந்து விட்டது. அந்தச் சிறுபையன் திருநாவுக்கரசு எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த மாதிரி கெட்டுப் போய்விட்டான் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது. அவனாவது சிறு பையன். கண்டித்துப் பயமுறுத்தி வழிக்குக் கொண்டுவந்து விடலாம். குதிர்மாதிரி வளர்ந்த பெண்ணுக்கு ஓடிப்போக தைரியம் வந்திருக்கிறது! 'பெண்கள்' நம்முடைய சமுதாயப் பண்ணைக்கு விதை நெல்லைப் போன்றவர்கள். வருகின்ற தலைமுறைகளை நன்றாகப் பயிர் செய்ய வேண்டியவர்கள். விதை நெல்லே கெட்டுச் சீரழிந்தால் விளைவு என்ன ஆகும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாரத புண்ணிய பூமியின் பெருமையெல்லாம் கங்கையும் காவிரியும் போலப் புனிதமாகப் பாய்ந்து வரும் அதன் தூய தாய்மைப் பிரவாகத்தில் அல்லவா இருக்கிறது? இந்தப் பெண்மையின் புனித வெள்ளத்தில் அழுக்குகள் கலந்தால் என்ன ஆகும்? விதை நெல்லையே அழித்துக் கொண்டிருக்கிறோமா நாம்?"
உள்ளே யாரோ நடந்து வருகிற மிதியடி ஒலி கேட்கவே அரவிந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்தான். அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவசர அவசரமாக நோட்டுப் புத்தகத்தை மூடி மேஜை இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து நின்றான் அரவிந்தன்.
"என்னடா அரவிந்தன்! நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆங்கிலப் படமாக இருந்ததினால் சீக்கிரம் விட்டுவிட்டான். திருப்பிப் போகிறபோது பார்த்தால் இங்கே அச்சகத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதே! அவ்வளவு நாழிகை உறக்கம் விழித்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?"
மீனாட்சிசுந்தரம் உள்ளே வருகிறபோது மேற்படி கேள்வியோடு வந்தார். அவருக்கு அவன் பதில் சொல்லுவதற்குள் மேலும் அவரே தொடர்ந்தார்: "என்னதான் வேலை மலையாகக் குவிந்து கிடந்தாலும் இராத்தூக்கம் விழிக்கிற பழக்கம் உதவாது. நேற்று இரவு சினிமா விட்டுப் போகும்போது இங்கே விளக்கு எரிவதைப் பார்த்தவுடனேயே காரை நிறுத்தி இறங்கி உன்னைக் கண்டித்துவிட்டுப் போக நினைத்தேன். நீ தூக்கம் விழித்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டானை வேற துன்பப்படுத்துகிறாயே?"
"உட்காருங்கள், எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று அவரை உட்காரச் செய்துவிட்டு எதிரே நாற்காலையைப் பிடித்துக் கொண்டு நின்றவாறே கூறலானான் அரவிந்தன்.
அவன் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலில் 'ஐயா' என்று குரல் கேட்டது. அரவிந்தன் வெளியே எட்டிப் பார்த்து தையற்கடை வேலையாள் வந்திருப்பதைக் கண்டான். முருகானந்தம் கொடுத்துவிட்டுப் போயிருந்த சாவியை அந்த வேலையாளிடம் அளித்து, "முருகானந்தம் திருச்சிக்குப் போயிருக்கிறான். சாயங்காலத்துக்குள் வந்துவிடலாம். வழக்கம் போல் கடையைத் திறந்து வேலையைக் கவனித்துக் கொள்ளச் சொன்னான்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றியோ, பூரணியின் தம்பியைப் பற்றியோ மீனாட்சிசுந்தரத்திடம் விவரிக்கவில்லை. அச்சகத்தின் பின்புறம் இரவில் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லி சுவர் எழுப்பி கதவு போட வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். அச்சகத்தின் பின் பக்கத்தில் முதல் நாளிரவு நடக்க இருந்த கொடுமையைக் கேள்விப்பட்டபோது, மீனாட்சிசுந்தரம் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டார். சிறிது நேரம், அரவிந்தனுக்குப் பதிலே கூறவில்லை. அவர் முகத்தில் திகைப்பும், வேதனையும் தோன்ற இருந்தார் அவர்.
"நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்வதில்லையே அப்பா. அறிவுக் களஞ்சியமாகிய பேராசிரியரின் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டால் நல்ல கருத்துகள் நாட்டில் பரவுமே என்று தான் இந்த வெளியீட்டு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டேன். இதற்காக என்மேல் இவ்வளவு விரோதமும் பொறாமையும் கொள்ள வேண்டுமா?" என்று நொந்து கூறினார் அவர்.
உடனே கொத்தனாரை அழைத்துக் கொண்டு வந்து சுவர் எழுப்பிக் கதவும் அமைக்க ஏற்பாடு செய்தார். அரவிந்தன் அவரிடம் ஒரு மணி நேரம் வெளியே செல்ல அனுமதி வாங்கிக் கொண்டு போய் அந்தப் பையன் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கொடுத்து அழைத்து வந்தான். "இன்னும் நாலைந்து நாட்களில் பெஞ்ச் கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது பையனை அழைத்து வந்து என்ன அபராதம் போடுகிறார்களோ அதைக் கட்டிவிட்டுப் போகவேண்டும்" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனிடம் கூறியனுப்பினார். வரும்போதே அந்தப் பையன் மனத்தில் பதியும்படி இதமாக அறிவுரை சொல்லிக் கொண்டு வந்தான் அரவிந்தன். பையன் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தவாறே உடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
பையனோடு அரவிந்தன் அச்சகத்துக்குத் திரும்பியபோது கொல்லைப் பக்கம் சுவர் எழுப்புகிற வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. செங்கல்கள் வந்து இறங்கியிருந்தன. சிமெண்டு மூட்டைகள் அடுக்கியிருந்தன. மீனாட்சிசுந்தரம் அருகில் நின்று சிற்றாட்களையும் கொத்தனாரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். உட்புறம் அச்சகத்து வேலையாட்களும் வந்து வழக்கம்போல் தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அரவிந்தன் நீராடி உடை மாற்றிக் கொண்டான். திருநாவுக்கரசையும் உள்ளே அழைத்துப் போய் முகங்கழுவித் தலை சீவிக்கொள்ளச் செய்தான். காலிப் பையனுக்குரிய தோற்றத்தை மாற்றிப் பள்ளிக்கூடம் போகிற பையன் மாதிரி ஆக்கின பின்பே அரவிந்தனுக்கு நிம்மதி வந்தது. சிற்றுண்டி வரவழைத்து இருவரும் சாப்பிட்டனர். "தம்பி! இந்த விநாடியோடு உன் கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விடு. பழையபடி உன்னைப் படிக்கும் மாணவனாக்கிக் கொள். மார்ச் மாதத்துக்கு இன்னும் அதிக நாளில்லை. இந்தப் பரீட்சை தவறினால் இன்னும் ஓராண்டு வீணாகிவிடும். இரவு-பகல் பாராமல் உழைத்துப் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டாயானால் புதிய ஆண்டில் கல்லூரிப் படிப்புக்கு நுழையலாம். உன் குடும்பத்து நிலையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. உன் அக்கா எவ்வளவு காலம் இப்படித் தானே உழைத்து உங்களைக் காப்பாற்ற முடியும்? நீ படித்த பின் உன் தம்பி படிக்க வேண்டும். தங்கை படிக்க வேண்டும். எல்லாவற்றையும் உன் அக்கா ஒருத்தியே தாங்கிச் சமாளிக்க முடியுமா? வீட்டுக் கஷ்டம் தெரிந்து அதற்கேற்ப உன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் அப்பா!" என்றெல்லாம் மனத்தில் உறைக்கும்படி சொல்லித் திருநாவுக்கரசைப் பசுமலையிலுள்ள அவன் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். பையனைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லித் தனியாக அனுப்பினால் மறுபடியும் "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்" என்கிற மாதிரி எங்கேயாவது ஊர்சுற்றக் கிளம்பி விடுவானோ என்று அரவிந்தன் சந்தேகப்பட்டான். அதனால் தான் அச்சகத்தில் மேசை நிறையக் குவிந்து கிடந்த வேலைகளையெல்லாம் திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டுவிட்டுத் தானும் பையனோடு பசுமலைக்குச் சென்றான்.
மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறிஸ்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள்.
அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காளியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான்.
"சார்! இந்தப் பையன் விஷயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழியவில்லை. நான் இவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்" என்று அரவிந்தன் பேச ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் அவநம்பிக்கைத் தோன்ற நகைத்தார். அவருடைய தலைக்கு மேலே சிலுவையில் அறைந்த கோலத்தில் ஏசுநாதரின் அழகுருவம் கண்களில் கருணையும், உடம்பில் இரத்தமும் ஒழுகிடக் காட்சி தந்தது. அரவிந்தனின் பார்வை அந்தப் புண்ணிய மூர்த்தியின் படத்தில் பதிந்தது. தலைமையாசிரியர் அவனுக்கு மறுமொழி கூறலானார்:
"இந்தப் பையனைப் பற்றிச் சொல்வதற்கு இனிமேல் என்ன இருக்கிறது? ஒழுக்கத்தையும் நல்ல நடத்தையையும் உன்னிப்பாக ஒவ்வொரு வினாடியும் கவனிக்கும் இங்கேயே வழிகெட்டுப் போய்விட்ட பையனை இனி என்ன செய்வது? பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி. எழுதும் ஒரு மாணவன் குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது பள்ளிக்கூடம் வந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதில் கால்வாசி நாட்கள் கூட இந்தப் பையன் பள்ளிக்கு வரவில்லை. ஆகவே இனிமேல் இவன் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வந்தாலும் அரசாங்கப் பரீட்சை இந்தத் தடவை எழுத முடியாது. அப்படி முடியாதிருக்கிறபோது வீணுக்குச் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு இங்கு வருவது அநாவசியம். மறுபடியும் புதிதாக அவனை அடுத்த ஆண்டில் இங்கே சேர்த்தாலே போதும்."
"சார்! நீங்கள் அப்படிச் சொல்லிவிடக்கூடாது. இந்தப் பையன் பெரிய தமிழ்க் குடும்பத்துப்பிள்ளை. பழக்கக் கேடுகளால் இப்படி ஆகிவிட்டான். இனி ஒருபோதும் கெட்ட வழியில் போகாமல் கவனித்துக் கொள்கிறோம். எப்படியாவது இந்தத் தடவை..." என்று அரவிந்தன் குழைந்து வேண்டிக் கொண்டதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
"மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது. ஆனால் இது கல்வித்துறையின் சட்டம். இந்தப் பையனுக்காகவோ, உங்களுக்காகவோ நான் இதை மாற்றுவதற்கில்லை" என்று சிரித்தவாறே கூறிவிட்டு மேசை மேலிருந்த காகிதக் கட்டு ஒன்றைப் பிரித்துக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் தலைமையாசிரியர். அரவிந்தன் மேலே நிமிர்ந்து பார்த்தான். இயேசுநாதருடைய படத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கண்களில் கருணையும் மார்பின் குருதியும் அதிகமாகி வளர்ந்துகொண்டு வருவதுபோல் தோன்றியதோ என்னவோ!
"வருகிறோம்" என்றான் அரவிந்தன்.
"செய்யுங்கள்" என்று குனிந்த தலை நிமிராமல் மறுமொழி கூறினார் அவர். திருநாவுக்கரசுடன் வெளியேறினான் அரவிந்தன். "தம்பி பார்த்தாயா? முட்டாள்தனமாகப் பள்ளிக்கூடத்துப் படிப்பை அது முடிகிற தறுவாயில் பாழாக்கிக் கொண்டு விட்டாயே? இன்னும் ஓராண்டு காலம் காத்திருந்து உன்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க உன் அக்காவால் முடியுமா?" என்று பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து கீழிறங்கிய போது அரவிந்தன் ஏக்கத்தோடு கூறிய சொற்கள் பையனின் செவிகளில் விழுந்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் கல்லடிமங்கன் போல் தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தான்.
'எப்படியும் இந்தப் பையனைத் திருத்தி நல்ல வழியில் கொண்டு வந்து விடவேண்டும். சிறிது காலத்துக்கு அச்சகத்திலேயே நம்மோடு பக்கத்தில் வைத்துக் கொண்டு நம் கவனத்திலேயே ஆளை உருவாக்கிவிடலாம்' என்று அரவிந்தன் மனத்தில் அப்போது ஒரு தீர்மானம் உண்டாகியிருந்தது.
திரும்பியதும் முதல் வேலையாகத் திருநாவுக்கரசை உள்ளே அழைத்துப் போய் 'பைண்டிங்' பகுதியில் உட்கார்த்தி அச்சடித்த பாரங்களை மடித்து அடுக்கச் சொன்னான். 'பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்' என்று அச்சகத்து போர்மேன் இடத்திலும் கூறிவிட்டு வந்தான்.
"தம்பி! எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கும் வெளியேறிச் செல்லக்கூடாது. வேலையைக் கவனமாகப் பார்" என்று பையனிடமும் எச்சரித்தான். சிறிது நேரம் கழித்து அச்சகத்தில் உட்புறம் சுற்றிப் பார்த்துவிட்டு முன்புறத்து அறைக்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரவிந்தனைக் கேட்டார்.
"என்னப்பா இது? பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பையன் இங்கே உட்கார்ந்து தாள் மடித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையா? போர்மேனிடம் கேட்டால் நீ கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறான்!" என்றார் அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரம்.
அரவிந்தன் அவருக்கு எல்லா விவரங்களும் சொன்னான். "அடப்பாவமே? அவருக்கு இப்படிப் பிள்ளையா வாய்த்தது?" என்று அதைக் கேட்டு அவரும் அலுத்துக் கொண்டார். அவன் தனது ஏற்பாட்டை அவரிடம் கூறி இணங்க வைத்தான்.
நடுப்பகல் பன்னிரண்டேகால் மணி சுமாருக்கு வேர்க்க விறுவிறுக்க அலைந்த கோலத்தோடு முருகானந்தம் வந்து சேர்ந்தான். அரவிந்தன் அவனைக் கேட்கும் முன் அவனே கூறலானான். "நான் நினைத்தபடி நடந்திருக்கிறது அரவிந்தன்! அந்தப் பெண் வசந்தாவை ஏமாற்றி அழைத்துப்போன ஆள் திருச்சி வெயிட்டிங் ரூமில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு ஊருக்குள் யாரையோ பார்த்துவிட்டு உடன் திரும்பி வருவதாகவும், அடுத்த எக்ஸ்பிரஸில் சென்னை போகலாமென்றும் கூறிச் சென்றானாம். சென்றவன் திரும்பவே இல்லையாம். பணத்தையும் சாமர்த்தியமாகக் கேட்டு அவளிடமிருந்து முன்பே வாங்கிக் கொண்டானாம். விடியற்காலை நான்கு மணிவரை காத்துப் பார்த்து ஏமாந்த பின் கையில் மீதமிருந்த சில்லறையைத் திரட்டித் தந்தி கொடுத்ததாம் அந்தப் பெண். பயல் நம்மிடம் மணிபர்ஸைக் கோட்டவிட்ட ஆள்தானாம். என்னிடமிருந்த போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்..." என்று முருகானந்தம் கூறியவுடன், "இப்போது எங்கே அவர்கள்? காரில்தானே திரும்பினீர்கள்?" என்று அவனைக் கேட்டான் அரவிந்தன்.
"பாவம்யா அந்தப் பெண்! சினிமா நடிப்பு ஆசையில் முதலில் ஏமாந்து போய்விட்டது. இப்போது குமுறிக் குமுறி அழுகிறது. எல்லோரும் அந்த அம்மாள் வீட்டில் தான் இருக்கிறார்கள். பூரணியக்காதான் ஏதேதோ சமாதானம் கூறி அந்தப் பெண்ணை நடந்ததெல்லாம் மறக்கச் சொல்கிறார்கள்" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. சந்தேகத்தை முருகானந்தத்திடமே கேட்டான். "பணம் இரண்டாயிரம் ரூபாய் பறிபோனதைத் தவிர வேறு ஒரு வம்பும் இல்லை" என்று அவன் பதில் கூறிய பின்பே அரவிந்தனுக்கும் நிம்மதி வந்தது. பெண்களின் தூய்மை என்பது ஐசுவரியத்தைக் காட்டிலும் மகத்தானதாயிற்றே.
"பொல்லாத காலம் அப்பா இது! மங்கையராகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டுமென்று கவிமணி பாடியிருப்பதாக நீ அடிக்கடி சொல்வாய் அரவிந்தன்! இந்தக் காலத்தில் பெண், பெண்ணாகப் பிறவாமல் இருக்கத் தவம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்ணாக இருப்பது மிகவும் அருமையான பாதுகாப்புக்குரிய காரியமாயிருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தையல் கடைக்குப் போனான் முருகானந்தம். அவனை அனுப்பிவிட்டு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் வீட்டுக்குப் போனான்.
இது நடந்து பதினைந்து நாட்களுக்குப் பின் ஒருநாள் முருகானந்தத்தின் தையல் கடையில் யாருக்கோ அவசரமாக 'கோட்'டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.
"ஏய் டெய்லர்! உன்னைத்தானே!" என்று வாயிற்புறமிருந்து ஒரு குரல் ஆணவத்தோடு அதிகார அழைப்பு விடுத்தது. முருகானந்தம் திரும்பிப் பார்த்தான். 'பளிச்'சென்று அவன் கண்களில் பதிந்து உறைந்தது அந்த முகம். கொதிப்பும் சினமுமாகச் சிவந்து போக இருந்த முகத்தில் செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே "வாருங்கள் சார்! உங்கள் மணிபர்ஸ் தானே? அது பத்திரமாக இருக்கிறது. முந்நூறு ரூபாயை பதினைந்து நாள் மறந்து போய் பேசாமல் இருந்து விட்டீர்களே? அடடா! வாசலிலேயே நிற்கலாமா சார்! நீங்கள் எவ்வளவு பெரிய சினிமா டைரக்டர் என்பது அப்புறம் தான் எனக்குத் தெரிந்தது. அடேய் பையா! அப்புறம் பித்தானுக்கு ஓட்டைப் போடலாம். ஓடிப்போய் சாருக்கு காப்பி வாங்கி வா. பெரிய சினிமா டைரக்டர் இவர்" என்று வந்தவரை அட்டகாசமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தான் முருகானந்தம். வந்தவருக்கோ பயமாயிருந்தது அந்த அபூரவ மரியாதை.
"மணிபர்ஸை எடு எனக்கு நேரமில்லை. அவசரமாகப் போகணும்..." வந்தவர் அவசரப்படுத்தினார்.
"எப்போதும் அவசரந்தானா சார் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்துப் போகலாம்! இவ்வளவு நாள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் பணம் மட்டுமா தருவது? வட்டியும் சேர்த்துத் தருகிறேன் சார்" என்று கூறிக்கொண்டே வந்த முருகானந்தம் குபீரென்று முகத்தில் கடுமை குடிபுக... "அயோக்கிய நாயே?" என்று சீறிக்கொண்டு அந்த ஆளுடைய மார்புச் சட்டையைப் பனியனோடு பிடித்து உலுக்கித் தூக்கி நிறுத்தினான்.
---------------------
குறிஞ்சி மலர்
16
அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
-- திருக்குறள்
முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த 'தோல் பெல்ட்'டைக் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று சொல்ல முடியாது.
"போலீஸ் இருக்கிறது, சட்டம் இருக்கிறது, கை வலிக்க நீ ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், விடு..." என்று தன்னைக் கைப்பற்றி விலக்க முயன்ற அரவிந்தனையும் மீறிக்கொண்டு பாய்ந்தான் முருகானந்தம்.
"விடு அரவிந்தன். இந்த மாதிரி ஏமாற்றுக்காரப் பயல்களைச் சும்மா விடக்கூடாது. எங்கள் தையல் கடையிலே சில முரட்டுத் துணிகளைத் தைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்துக் கசக்கி உலர்த்திப் பண்படுத்தினால்தான் தையல் நன்றாக வரும். அதுமாதிரி அடித்து உதைத்து அவமானப்படுத்தினால் தான் இப்படிப்பட்ட பயல்களுக்குப் புத்தி வரும்" என்று கூறிவிட்டு அந்த ஆளை நோக்கி, "ஏண்டா, சினிமாவில் நடிக்கும் ஆசை காட்டி இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறாய்? கைவண்டி இழுத்தாலும் ஒருவரை ஏமாற்றாமல் மானமாக உழைத்துப் பிழைக்கலாமேடா! எப்படியடா உனக்கு இந்தப் புத்தி வந்தது?" என்று கையை ஓங்கிக் கொண்டு போனான்.
அரவிந்தனோடு வாயிலில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து சிலரும் வந்து சமாதானம் செய்து முருகானந்தத்தின் ஆத்திரத்தை அடக்கினர். ஆளை இழுத்துக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைத்துக் காப்பு மாட்டச் செய்த பின்புதான் முருகானந்தத்தின் கோபம் தணிந்தது. கடந்த நாலைந்து ஆண்டுகளில் பல ஊர்களில் பல பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டு அந்த ஆள் இதே வகையைச் சேர்ந்த மோசடிகளைச் செய்து வந்திருப்பதாகவும், போலீஸார் தேடிக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்ததாகவும் பல உண்மைகள் அப்போது வெளியாயின.
இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சிக்குப் பின் பூரணி சமயம் வாய்த்த போதெல்லாம் மங்களேஸ்வரி அம்மாளிடம் வசந்தாவைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தாள். "உங்கள் மூத்த பெண் பலவீனங்கள் நிறைந்தவளாயிருக்கிறாள். அவளுடைய மனத்திண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெண்ணுக்கு உடல் பூஞ்சையாகவோ, வலிமையற்றதாகவோ இருப்பது இயற்கை. ஆனால் மனம் நிறைவுடையதாக இருக்க வேண்டும். இதை உணர்த்துகிறாற் போலவே நம்முடைய முன்னோர்கள் பெண்ணின் மனத் தூய்மைக்கு 'நிறை' என்று அழகாகப் பெயரிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வைப் பழக்கிவிட்டால் உங்கள் பெண் மாறி விடலாம் என்று நினைக்கிறேன். தயங்காமல் விரைவில் திருமணம் செய்துவிடுங்கள். அவளை ஒழுங்காக்குவதற்கு அதுவே சரியான வழி. அடுத்தாற்போல் உங்கள் இளைய பெண் செல்லத்தைப் பற்றி இப்படிப் பயப்படவேண்டாம். அந்தப் பெண் வழி தவற மாட்டாள் என்பதை இன்றைக்கே இந்த வயதிலேயே அவளைப் பார்த்துப் புரிந்து கொண்டு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்னால்" என்றாள் பூரணி.
"நீ சொல்வது நியாயமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் திருமணம் என்பது நினைத்தவுடன் முடிகிற காரியமா? நல்ல இடமாகப் பார்த்து ஒப்படைக்க வேண்டுமே" என்று ஏக்கத்தோடு கூறினாள் மங்களேஸ்வரி அம்மாள். அந்த அம்மாளின் தோற்றத்தில் இப்போது பழைய ஒளி இல்லை. மனக் கவலைகளாலும், அவமானத்தாலும் குன்றிப்போயிருந்தாள். வீடு, வாசல், கார், செல்வம், செல்வாக்கு என என்ன இருந்தாலும் மன நிம்மதியில்லாமல் கலகலப்பாக இருக்க முடியாதென்பது அந்த அம்மாளுடைய நிலையிலிருந்து பூரணிக்குப் புரிந்தது. அந்தப் பெண் வசந்தாவும் பழைய திமிர், கலகலப்பு எல்லாம் மாறி புதுப்பிறவி போல் மாடியறையில் அடைந்து கிடந்தாள். கல்லூரிக்குப் போவது நின்று போய்விட்டது. செழிப்பும் மங்களமுமாக இருந்த அந்த வீடு, அந்தக் குடும்பம், நல்ல இருட்டில் விளக்கும் அணைந்த மாதிரி மங்கியிருந்தது. தினசரி மாலையில் மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் ஒரு நடை அந்த அம்மாள் வீட்டுக்குப் போய் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள் பூரணி.
மனிதர்களுடைய நாவுக்குள் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான். உப்பு, புளிப்பு போன்ற அறுசுவைகளை விடத் தனக்கு அதிகம் விருப்பமான ஏழாவது சுவை ஒன்றை மனிதனாகவே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை. மங்கையர் கழகத்தில் சிலரிடம் இந்தச் சுவைக்கு வரவேற்பு அதிகம். பூரணியிடம் ஒருநாள் வகுப்புகள் முடிந்தவுடன் சில பெண்கள் மங்களேஸ்வரி அம்மாளின் மூத்த பெண்ணைப் பற்றி ஒரு தினுசாகச் சிரித்து கொண்டே கேட்டார்கள். மூடி மறைத்து இரகசியமாக்கிவிட முயன்றிருந்தும், 'அந்தப் பெண் எங்கோ ஓடிப்போய்விட்டு வந்தாள்' என்று ஒருவிதமாகக் கை, கால் முளைத்துப் பரவிவிட்டிருந்தது செய்தி. விசாரித்தவர்கள் பூரணியிடம் படிக்கிறவர்களானாலும் அவளுக்குச் சமவயதுடையவர்களும், அதிக வயதுடையவர்கள் சிலருமாகக் கண்டிப்புக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அவள் அவர்களுக்குக் கடுமையாகவே மறுமொழி கூறினாள்.
"இங்கே எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் சம்பளம் தருகிறார்கள். வம்பு சொல்லிக் கொடுப்பதற்கு அல்ல; தயவு செய்து பாட சம்பந்தமான சந்தேகங்களை மட்டும் என்னிடம் கேளுங்கள்."
கேட்டவர்கள் வாய்கள் அடைந்தன. அவளை விட மூத்தவர்கள், அவளை விடச் செல்வத்தால் உயர்ந்தவர்கள், அவளிலும் சிறந்த அழகிய தோற்றத்தையுடையவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மனம் வைத்தால் அவளுடைய வேலைக்குச் சீட்டுக் கிழித்து வெளியே கூட அனுப்பலாம். ஆனால் அத்தகைய இழிவான நினைவு அவர்கள் மனத்தில் கூடத் தோன்ற முடியாதபடி பூரணியின் தோற்றத்தில் ஏதோ ஒரு புனிதமான கம்பீரம் இருந்தது. அந்த முகம், அந்தக் கண்கள், அந்த அற்புதமான சொற்பொழிவு இவைகளால் அவள் தன்னை அவர்கள் மனத்தில் பதித்துக் கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் ஒரு மாதிரி இருந்த மங்கையர் கழக நிர்வாகிகள் கூட இப்போது அவள் ஞானம் கனிந்த நாவன்மைக்கும், தூய தோற்றத்துக்கும் முன் தவறாக நினைப்பதற்கே கூசினர். ஆனால் அவளுக்கு இத்தனை பெருமையும் கிடைப்பதற்குப் பாடுபட்ட மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டு நிலை நேர்மாறாக மாறியிருந்தது. வெளியே தலைகாட்டுவதற்கே கூசி வெட்கப்பட்டாள் அந்த அம்மாள். குடிப்பெருமை என்பது நல்ல பால் வெண்கலத்தில் வார்த்த மணியைப் போன்றது. அதில் எங்கேயாவது ஒரு மூலையில் கீறல் விழுந்தாலும் ஒலி கெட்டுவிடுகிறதே - என்று தனக்குள் எண்ணி வருந்தினாள் பூரணி.
சிறிது காலமாக அவள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகவும் ஒழுங்குள்ளதாகவும் கட்டுப்பாட்டோடு செயலாற்றிக் கொள்ளப் பயன்படுத்தினாள். மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருவதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்ட அன்று அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் அவள் உள்ளத்தில் உறைத்துத் தைத்திருந்தன. "நீ நாள் தவறாமல் தமிழ்ப் பெண்மையின் சிறப்பைப் பற்றி உங்கள் கழகத்தில் பேசுகிறாய்! அதனால் என்ன பயன்! கெட்டுப் போகிறவர்கள் கெட்டுப் போய்க்கொண்டுதானே இருக்கிறார்கள்" என்று அவன் வேடிக்கையாகக் குத்திக் காட்டிப் பேசியதை மெய்யாகவே தன்னை நோக்கி விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அறிவுத் துடிப்பு நிறைந்த அவள் நெஞ்சத்தில் 'உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்துக்கு நீ ஏதாவது புதிதாகச் செய். பெரிதாகச் செய். உன்னையும் உன் சொற்பொழிவுகளையுமே நீ ஏன் ஓர் இயக்கமாகச் செய்து கொள்ளக்கூடாது?' என்று ஓர் உள்ளுணர்வு கிளர்ந்தது. வளம் நிறைந்த நல்ல மண்ணில் முளைத்த துளசிச்செடி போல் பசுமை தழைத்து மணம் பரப்பி நாளுக்கு நாள் புனிதமாக வளர்ந்தது இந்த உள்ளுணர்வு. மனத்தில் ஞானம் மலர மலர அவளுடைய முகப்பொலிவு அற்புதமாக வளர்ந்தது. அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளை ஏற்றுக் கொண்டு நடத்தத் தொடங்கிய காலத்தில் அங்கும் இங்குமாக சிலருக்குத்தான் மதுரையில் அவளைத் தெரிந்திருந்தது. இப்பொழுது அவளை நகரம் முழுவதும் அறிந்திருந்தது. சுற்றுப்புறத்து ஊர்களிலும் அவள் பெயர் பரவியிருந்தது. அவளுடைய இந்த இணையற்ற வளர்ச்சிக்குப் பாடுபட்ட பெருமையில் மூவருக்குப் பங்கு உண்டு. அரவிந்தன் - அவள் வளர்ச்சிக்கு உற்சாகம் தந்தான். மீனாட்சிசுந்தரம் - அவளுடைய தந்தையின் நூல்களையெல்லாம் வெளியிட்டு நன்றாகவும், நிறையவும் விற்று உதவினார். அதனால் அவளுடைய வாழ்க்கைக் கவலைகள் குறைந்து அமைதி கிடைத்தது. எப்படியோ கெட்டுச் சீரழிய இருந்த தம்பி திருநாவுக்கரசையும் அச்சகத்தில் படிப்படியாகத் தொழில் பழக்கி உழைப்பாளியாக மாற்றி வளர்த்திருந்தார்கள், அரவிந்தனும் அவரும். அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேஸ்வரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் - வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான்.
வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். ஒழுக்கமும், அறமும், பண்பாடும் நிறைந்த ஒரு புதிய சமுதாய இயக்கத்தை தன் கைகளின் உழைப்பால் தோற்றுவிக்க வேண்டுமென்ற தாகம் நாளுக்கு நாள் அவளுக்குள் முறுகி வளர்ந்தது. அந்தப் பெரிய மதுரை நகரத்தில் அவளுடைய செல்வாக்கை அவளே உணர்ந்து கொள்ளத் தக்க ஒரு சந்தர்ப்பத்தை அரவிந்தனும் முருகானந்தமும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அந்த ஆண்டில் கார்த்திகை மாதம் மதுரையில் பயங்கரமான மழை. பஸ்நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்தில் இருந்த அரிஜனங்களின் குடிசைகள் எல்லாம் இந்த மழையில் விழுந்துவிட்டன. ஒதுங்க இடமின்றி நடைபாதைகளில் தவித்தார்கள், திக்கற்ற ஏழை மக்கள். அரவிந்தனும் முருகானந்தமும் பொதுநலப்பணியில் ஆர்வமுள்ள வேறு சில இளைஞர்களும் சேர்ந்து அந்த ஏழை மக்களுக்கு ஏதாவது நிதி உதவி செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு முன்வந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு பூரணியைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் கூறியவற்றைக் கேட்டு மலர்ந்த முகத்துடன் கட்டாயம் செய்ய வேண்டிய உதவிதான் இது! என்னாலானதை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். இதோ..." என்று உள்ளே சென்று பீரோவைத் திறந்தாள் பூரணி. பழைய வறுமை நிலைகளின்போது விற்றவை போக மீதமிருந்த ஒன்றிரண்டு தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். "இந்தாருங்கள்! இப்போதெல்லாம் இவைகளை நான் அணிந்து கொள்வதே இல்லை. உங்களுடைய நல்ல காரியத்துக்கு இவை பயன்படட்டும்" என்று சிரித்துக் கொண்டே அரவிந்தன் கைகளில் அவற்றைக் கொடுத்தாள்.
அரவிந்தன் புன்முறுவல் பூத்தான். அவள் கொடுத்த நகைகளை அவன் அப்படியே அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.
"ஏன், இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா?"
"உன்னிடமிருந்து நாங்கள் இதைவிடப் பெரிய உதவியை எதிர்பார்க்கிறோம். முருகானந்தத்தைக் கேள், சொல்வான்."
பூரணி விவரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் முருகானந்தத்தின் முகத்தைப் பார்த்தாள்.
"அக்கா! எங்களுடைய திட்டத்துக்கு நீங்கள் இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் இங்கே வந்திருக்கிறோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு தியேட்டர் வாடகைக்குப் பேசியிருக்கிறோம். பத்து, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று ரூபாய் விகிதத்தில் கட்டணம் போட்டு டிக்கெட் விற்க ஏற்பாடாகியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விரிவானதொரு பொருள் பற்றி நீங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும் அக்கா."
"நீங்கள் எல்லோரும் விளையாடுகிறீர்களா என்ன? இதென்ன நாடகமா? சினிமாவா? அல்லது பாட்டுக் கச்சேரியா? சொற்பொழிவுக்கு எங்காவது வசூல் கிடைக்குமா? தியேட்டர் வாடகைக்குக் கூட வசூலாகாமல் கைப்பிடிக்கப் போகிறது. இந்த வீண் யோசனையை விட்டுவிட்டு வேறு காரியம் பாருங்கள்" என்று அவர்களைக் கடிந்து கொண்டாள் பூரணி.
"உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது, அக்கா. வசூல் கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு? 'சம்மதம்' என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள் போதும். மற்றதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்."
பூரணி தயங்கினாள். 'என்ன சொல்லட்டும்' என்ற கேள்வி தொக்கி நிற்கும் முகக் குறிப்போடு அரவிந்தனை ஒரு தடவை பார்த்தாள்.
"என்ன பார்க்கிறாய்? முருகானந்தம் சொல்வதுபோல் சம்மதமென்று சொல்லிவிடுவதுதான் நல்லது. இதைத்தவிர வேறு ஏற்பாடு எங்களிடம் இல்லை. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஒரு கணிசமான தொகை உதவி நிதியாகத் தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றான் அரவிந்தன்.
அவள் சம்மதித்தாள். சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தனக்காக அத்தனை கூட்டம் கூடி அவ்வளவு வசூல் ஆகுமா என்பது மட்டும் அவளுக்குச் சந்தேகமாகவே இருந்தது.
அரவிந்தன், முருகானந்தம் ஆகியோரும் நண்பர்களும் டிக்கெட் விற்பனையில் முனைந்து ஈடுபட்டனர். 'வீடிழந்த ஏழை மக்களின் குடியிருப்பு நிதிக்காகப் பூரணியின் சொற்பொழிவு என்று பெரிய பெரிய சுவரொட்டி விளம்பரங்கள் அச்சிடப்பெற்று வீதிக்கு வீதி, சுவருக்குச் சுவர் ஒட்டியிருந்தார்கள். 'தனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? தான் அவ்வளவு விளம்பரப் பெருமைகளுக்கு உரியவளா?' என்று நினைக்கும்போது அவளுக்கே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
வியாழக்கிழமை மாலைக்குள்ளேயே பெரும்பகுதி டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாக முருகானந்தம் வந்து மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மதுரை நகரத்தில் பெரிய பஞ்சாலைகளில் கூலி வேலை செய்யும் பெண்களிலிருந்து மங்கையர் கழகத்துக்குக் காரில் வந்து அழுக்குப்படாமல் இறங்கித் தமிழ்ப் படிக்கும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் வரை அத்தனை பேரும் வற்புறுத்தல் இல்லாமல் தாங்களே விரும்பிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பதாகவும் அவனே தெரிவித்தான்.
"இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடந்தது அக்கா. உங்கள் மங்களேஸ்வரி அம்மாளிடம் மூன்று பத்து ரூபாய் டிக்கெட்டுகள் கிழித்துக் கொடுத்தேன். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு பேசாமல் உள்ளே போனார்கள். சிறிது நேரத்துக்குள் ஏதோ ஒரு 'செக்' எழுதிக் கொண்டு வந்தார்கள். அந்த 'செக்'கை வாங்கிப் பார்த்தவுடன் நான் மலைத்துப் போனேன். 'முப்பது ரூபாய்க்குத்தான் டிக்கெட் தந்திருக்கிறேன்' என்று சொல்லி நான் தயங்கினேன். 'பரவாயில்லை! நான் என் நிலைக்கு இவ்வளவாவது உதவி செய்ய வேண்டும். வாங்கிக் கொள்ளுங்கள். இதை யாரிடமும் சொல்லிப் பெருமைப் பட வேண்டாம். உங்கள் பெயர்ப் பட்டியலில் ஓர் அன்பர் ஆயிரம் ரூபாய் என்று மட்டும் எழுதிக் கொள்ளுங்கள் போதும். பெயர் போட வேண்டாம்' என்று பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார்கள்."
இதை முருகானந்தம் சொல்லியபோது பூரணிக்குப் பெருமிதமாக இருந்தது. "செல்வம் நிறைந்தவர்கள் துன்பங்களால் வேதனைப்படும்போது பிறருக்குத் தருமம் செய்து ஆறுதல் தேட வேண்டும். பழைய காலத்தில் செல்வர்களுக்குச் சாந்தியளித்து மனநிம்மதி தந்த கருவி வள்ளன்மை என்ற கருவிதான். இன்றோ கேளிக்கைகளால் நிம்மதி தேட முயல்கிறார்கள். மங்களேஸ்வரி அம்மாள் போல பழைய முறையில் தருமம் செய்து நிம்மதி தேடுபவர்கள் மிகச் சிலர்தான் இன்று இருக்கிறார்கள்" என்று முருகானந்தத்திடம் பூரிப்புடன் கூறினாள் பூரணி.
"செய்தித் தாள்களில் நீங்கள் என்ன பொருள் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்று அறிவிப்புக் கொடுக்க வேண்டும் அக்கா" என்று கேட்டான் முருகானந்தம்.
பூரணி சிறிது நேரம் சிந்தித்தாள். பின்பு ஒரு சிறிய காகிதத்தை எடுத்து 'கவிகள் காணாத பெண்மை' என்று எழுதி அவன் கையில் கொடுத்து அனுப்பினாள்.
ஓதுவார்க் கிழவர் வீட்டு காமுவைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை பூச்சூட்டலும், வளைகாப்பும் நடைபெற இருந்தன. "எங்கேயாவது கூட்டம் சொற்பொழிவு என்று கிளம்பிவிடாதே; என்ன வேலை இருந்தாலும் ஒரு நடை வந்துவிட்டுப் போ" என்று அந்தப் பாட்டி தள்ளாத காலத்தில் சிரமத்தைப் பாராமல் தானே நேரில் வந்து பூரணியை அழைத்துவிட்டுப் போயிருந்தாள். எனவே வெள்ளியன்று மாலை மங்கையர் கழகத்துக்குப் புறப்படுமுன் பூரணி, அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
முழங்கை நிறையக் கண்ணாடி வளையல்கள் குலுங்கிடத் தலை தாங்காமல் பூச்சூடிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் காமு. சுற்றிலும் பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. தாயாகிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தில் அதிக அழகில்லாத காமுவின் முகத்தில் கூட ஒரு புதிய ஒளி படர்ந்திருப்பதைப் பூரணி பார்த்தாள். புதிதாக ஒரு நல்ல கவிதையை எழுதி வெளியிடத் துடிக்கும் கவியின் முகம்போல் உலகத்துக்குப் புதிய உயிர் ஒன்றைக் கொண்டுவரத் தவமிருக்கும் தாய்மையின் ஒளி காமுவின் தோற்றத்தில் இருந்தது. கூடை நிறைய வைத்திருந்த பூவில் இரண்டு முழம் தன் கையாலேயே கிள்ளிப் பூரணியின் கூந்தலில் வைத்துவிட்டாள் ஓதுவார்ப் பாட்டி. அந்த வயது முதிர்ந்த சுமங்கலி தன் கூந்தலைத் தீண்டிப் பூ வைத்தபோது பூரணிக்கு உடல் சிலிர்த்தது. 'அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படித் தினம் என் தலையைத் தொட்டுப் பின்னிப் பூ வைப்பாளே' என்று உள்ளத்தில் அம்மாவும், அம்மாவைப் பற்றிய நினைவும் பரவிட மெல்லக் கண் கலங்கி நின்றாள் அவள்.
"பாட்டி! என்னை மறந்திட்டீங்களே? உங்களுக்கு எத்தினி ஓரவஞ்சனை. அக்கா தலைக்கு மட்டும் உங்க கையால பூ வைச்சீங்க. என்னைக் கவனிக்காமப் போறீங்களே" என்று மங்கையர்க்கரசி விளையாட்டாகச் சொல்லிச் சிரிக்கவே, கூடம் முழுவதும் பெண்களின் நளின நகையொலி அலை அலையாக எழுந்து 'கிண்கிணி' நாதம் பரப்பியது.
"நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ" என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி.
அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றார் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில் நீட்டி முழக்கி இழுபட்ட குரலில் பூரணியை நோக்கி, "ஏண்டியம்மா, இது உன் பெண்ணா? என்ன வாய்? இந்த வயதிலேயே இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறதே" என்று அசட்டுப் பிசட்டென்று மங்கையர்க்கரசியைச் சுட்டிக்காட்டிக் கேட்டு வைத்தாள்.
"பெண் இல்லை, அவளுடைய தங்கை" என்று யாரோ சொன்னார்கள். கூட்டத்தில் பெண்களின் ஏளன நகை ஒலி மறுபடியும் எழுந்து ஓய்ந்தது. தன்னுடைய புகழ், தன்னுடைய உலகத்தை விலைகொள்ளும் அபார ஞானம், நெருப்புக் கொழுந்து போன்ற பரிசுத்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் அப்பால் அந்தச் சாதாரணப் பெண்களிடம் இருக்கிற ஏதோ ஒன்று தன்னிடம் இல்லாமல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய உள்ளத்தில் ஒரு மூலையில் அந்த ஏதோ ஒன்றின் இல்லாமைக்காக மின்னற்கோடு போல் ஓர் ஆற்றாமை தோன்றி ஒரு கணம் நின்று மறைந்தது.
"சும்மா வந்து வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு நழுவிடப் பார்க்காதே, ஏதாவது இரண்டு பாட்டுப் பாடிவிட்டுப் போ பூரணி" என்று காமுவே உரிமையோடு எழுந்து வந்து அவளைக் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டாள். அவள் உள்ளம் பாடுகிற உற்சாகத்திலா அப்போது இருந்தது? மறுக்க முடியாமல் தேவாரத்தில் ஒரு பதிகத்தைப் பாடி முடித்தாள் பூரணி.
"கொல்லர் தெருவில் ஊசி விற்கிறார்போல ஓதுவார் வீட்டிலேயே தேவாரத்தையும் பாடி ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறாயே? வேறு ஏதாவது பாடு" என்று மேலும் வம்பு செய்தாள் காமு. அவளுடைய உற்சாகத்தை முறித்தெடுத்து விட்டுப் புறப்பட முடியாமல் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டு பாடிவிட்டு, "எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். தங்கை மங்கையர்க்கரசி கடைசி வரை உன்னோடு இருப்பாள், நான் வருகிறேன்" என்று எழுந்திருந்தாள் பூரணி.
'பாட்டியிடமும் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டுப் போய்விடலாம்' என்று உட்பக்கம் போனவள் மற்றொரு அதிர்ச்சியையும் தன் செவிகளில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கே பாட்டி வேறு யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள். பேச்சு தன்னைப் பற்றியது போல் தோன்றவே, பூரணி வெளியிலேயே தயங்கி நின்றாள்.
"யாரு அந்தப் பெண்? கோயில் மாடு மாதிரி வளர்ந்திருக்கு. கல்யாணம் ஆகவில்லை என்கிறாயே?"
"தமிழ் வாத்தியார் அழகிய சிற்றம்பலத்தின் பெண். பூரணின்னு பேர். அதுக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை. ஒரு தம்பி படிப்பை விட்டுவிட்டுச் சீர்கெட்டுக் கடைசியாகப் பிரஸ்ஸிலே வேலை செய்யறான். மற்ற இரண்டு பேரும் படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லை. அந்தப் பெண் தான் வளர்த்துக் காப்பாத்தணும். கல்யாணமாவது கார்த்தியாவது. தெருத் தெருவாகப் பிரசங்கம் செஞ்சிட்டிருக்குது அது. நானும் சாடை மாடையா இரண்டு தரம் கேட்டேன். அதுக்குக் கல்யாணத்தைப் பத்தியே நெனைப்பிருக்கிறதாத் தெரியவில்லை. பேர், புகழ் எல்லாம் சம்பாதிச்சிருக்கு. சுவரெல்லாம் அது பேரை கலர் நோட்டீஸ் அடிச்சு ஒட்டியிருக்கான். எது இருந்து என்ன? அதது வயசில ஆகணும். அது மனசிலே என்ன நினைச்சிட்டிருக்குதோ?"
இலட்சியங்களினால் மலர்ந்து ஆயிரமாயிரம் புனித எண்ணங்களில் தோய்ந்திருந்த அந்தப் பரந்த உள்ளத்தில் ஈட்டியாகக் குத்தியது, அந்த உரையாடல். மனத்தில் அந்தப் புண்ணைத் தாங்கிக் கொண்டு சிறிது நேரம் இருந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் பூரணி. ஞாயிற்றுக்கிழமையன்று 'கவிகள் காணாத பெண்மை'யைப் பற்றிப் பேசுவதற்காகச் சிந்தனைகளைத் தொகுத்துக் கோர்வைப்படுத்திக் கொண்டிருந்த உள்ளத்தில் உல்லாசம் பாழ்பட்டு உளைச்சலும், அலுப்பும் வந்து தளரச் செய்தன. ஓதுவார் வீட்டு வளைகாப்புக்குப் போனால் தன் மனத்தில் இவ்வளவு பெரிய ஆழமான புண்கள் உண்டாகும் என்று தெரிந்திருந்தால் அவள் போயே இருக்க மாட்டாள்.
'ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம். அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். செல்வமும் செல்வாக்கும் சம்பாதிக்கலாம்! ஆனால் சாதாரண உலகத்தில் சாதாரண மனிதர்கள் வாழும் சாதாரண வாழ்க்கையைச் சம்பாதித்துக் கொள்ளாதவரை, சாமானிய உலகில் அவளைப் பெண்ணாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே' என்று நைந்து எண்ணினாள் அவள். பெரிய வாழ்வைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள் அவள். மிகச் சிறிய வாழ்க்கையை அவசரமாக நினைவுபடுத்தினார்கள் அவர்கள். அரவிந்தனோடு பழகத் தொடங்கிய புதிதில் இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசையும், அவசரமும் அவள் மனதில் உண்டாயிற்று. இன்னும் கூட அழகிய இலட்சியக் கனவாக அரவிந்தன் அவள் மனத்தில் பதிந்திருக்கிறான். ஆனால் அவள் இப்போது தாகம் கொண்டு துடிக்கவில்லை. அந்த வாழ்வுக்கு அரவிந்தனும் அப்படித் தாகம் முற்றித் துடித்ததாகத் தெரியவில்லை. இருவரும் அன்பால் ஒன்று சேர்ந்தார்கள். இப்போதோ அகல்விளக்கின் சின்னஞ்சிறு சுடரிலிருந்து குத்துவிளக்கின் பெரிய சுடர்களை ஏற்றி ஒளிர விடுவதுபோல் சிறிய அன்பிலிருந்து பெரிய பொது காரியங்களைச் செய்து சமூகத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கொளுத்தப் பெறாத ஊதுவர்த்திபோல் உள்ளங்களில் மட்டும் மணந்து வெளியே மணக்காமல் இருந்தது, அந்த அன்பு! மங்கையர்க்கழகத்து மொட்டைக் கடித நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஆனால் உலகம் அதைவிட விழிப்பாக இருந்து தொலைக்கிறதே!
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. தியேட்டர் நிறையப் பெண்கள் கூடியிருந்தார்கள். பூரணி பேசுவதற்காக எழுந்து நின்றாள். அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லத்திடம் ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையைக் கொடுத்துப் பூரணிக்குப் போடச் சொன்னான். வளையலணிந்த கரங்கள் தட்டப்படும் ஒலி தியேட்டரை அதிரச் செய்தது. பூரணி பேசத் தொடங்கினாள். கூட்டத்தில் அமைதி நிலவியது. "இது ஏழைகளின் உதவி நிதிக்கான கூட்டம். துன்பப் படுகின்றவர்களுக்கு உதவ நாம் கடமைப்பட்டவர்கள். 'துன்பப்பட்டு அழுகின்றவர்களின் கண்ணீர் உலகத்தை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த படை' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அழச்செய்து பிறரை வருத்துகிறவர்கள் பதிலுக்குத் தாங்களே அழவேண்டிய சமயம் வரும். நீங்களெல்லோரும் இந்த நிதிக்கு உதவி செய்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது" என்று முன்னுரை கூறிவிட்டுத் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிப் பேச முற்பட்டாள் அவள். இனிமையும் எடுப்பும் மிக்க அவள் குரல் தேன் வெள்ளமாய்ப் பொங்கியது. பேச்சினிடையே அவள் உணர்ச்சி வசப்பட்டாள். ஒரே ராகத்தை வளர்த்து விரிவாக்கிப் பாடும் நல்ல இசைக் கலைஞனைப் போல் அவள் சொற்பொழிவு வளர்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கிற அளவு அமைதி. "உலகத்துக் கவிகளெல்லாம் தத்தம் காவியங்களுக்கு நாயகியாக எத்தனையோ பெண்களைப் படைத்தார்கள். ஆனால் காவியப் பெண்கள் சித்திரத்துத் தாமரைபோல் வாடாமலும் கூம்பாமலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மை வாழ்வில் பெண் படுகிற வேதனைகள் அதிகம். பெண் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் அதிகம். கண்ணகிக்கும், சாகுந்தலைக்கும், சீதைக்கும் காவியங்களில் ஏற்பட்ட துன்பங்களை ஊழ்வினையின் பெயர் சொல்லி மறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய வாழ்வின் நிகழ்கால வீதிகளில் தான் பெற்ற குழந்தையைத்தானே விற்க வரும் பெண்ணை அல்லவா பார்க்கிறோம்? பெண்களில் வாழ்வு உண்மைத் தாமரைபோல வாடுவதாயிருக்கிறது. கவிகள் அதை சித்திரத்தில் எழுதி ஏமாற்றியிருக்கிறார்கள். துன்பங்களிடையே நாம் இருக்கிறோம். அவற்றைத் தகர்க்க வேண்டும்?" பேச்சுத் தடைபட்டது. கண் விழிகள் வெளிறின. அடித்தொண்டையிலிருந்து இதயத்தை வெளியே இழுத்தெறிந்து விடுவதுபோல் ஓர் இருமல் இருமினாள் பூரணி. கமலப் பூப்போன்ற அவள் வலது கை இருமிய வாயைப் பொத்திக் கொண்டது. இருமி முடித்தவள் தனது உள்ளங்கையைப் பார்த்தாள். அதில் இரண்டு துளி ரத்தம் மின்னியது. முருகானந்தம் சோடாவை உடைத்து எடுத்து வந்தான்.
-----------------------
குறிஞ்சி மலர்
17
"எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,
எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.
எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!
எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!"
பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. 'அம்மா' என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில் அடித்துக் கொண்டு போகப்படும் தளர்ந்த தாமரையின் இதழ்களைப் போல் அவளுடைய தன் நினைவு மெல்ல மெல்ல நழுவி உதிர்ந்து கொண்டிருந்தது. அவளுடைய இதயத்தில் அடி மூலையிலிருந்து தீனக்குரலாய் மெல்ல எழுந்த 'அம்மா' என்ற அந்த ஒரே ஒரு சொல் தியேட்டரின் எல்லாத் திசைகளிலுமிருந்து பல்லாயிரம் அனுதாபக் குரல்களாக மாறி எதிரொலித்தன. உடம்பும் உள்ளமும் உணர்வெனப்பட்ட யாவும் அந்த ஒளிப்புனல் வெள்ளத்தில் கரையத் துவண்டு நெளிந்து விழும்படி நாற்காலியில் கழற்றிப்போட்ட பூமாலையைப் போல் அவள் உடல் சாய்ந்து சரிந்திருந்தது. அவள் கனவு மண்டலத்தில் இருந்தாள்.
'அம்மா அம்மா!' நெஞ்சு தாங்க முடியாத வேதனையால் வாய்பேசத் துடிக்கும்போது, பிறக்கின்ற முதல் வார்த்தை 'அம்மா' என்ற வார்த்தைதானா? துக்கத்தின் போதும் வாயில் பிறக்கின்ற அழைப்பு, தாயை நோக்கித்தானோ? உடம்பிலோ மனத்திலோ வலியின் வேதனையை உணர்ந்து வாய் அம்மா என்ற சொல்லை உணர்கிறதே! இடுப்பிலும் வலியை உணர்ந்த போது 'அம்மா' என்று அலறி முனங்கித் துடித்து அழைத்திருப்பாள்.
மனிதர்கள் வலியின்போது பிறந்தவர்கள். வலியைப் பிறருக்கு அளித்து வலிக்காமல் பிறந்தவர்கள். பிறந்தவுடன் கேட்கும் முதல் சொல் 'அம்மா' என்பது. இறக்கப் போகும்போது தான் அரற்றுகிற சொல்லும் இதுதான்! தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியேறும்போது தாய் 'அம்மா' என்று முனகும் வேதனைச் சொல்தான் உயிரின் செவி உணர்ந்த முதல் ஓசை. உலகத்தின் கர்ப்பத்திலிருந்து உயிர்விடுபட்டுப் போகும் போது மனிதன் தன் வாயால் தான் வருகிறபோது கேட்ட இதே சொல்லை மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டுப் போகிறானா? எப்படியானால் என்ன? 'அம்மா' என்ற இந்தச் சொல்லில் அமுதம் இருக்கிறது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இந்த வார்த்தையை உருவேற்றி அடைய முடிகிறது. இது தெய்வத் திருமொழி. நினைவழிந்த அந்நிலையில் திடீரென்று தான் குழந்தையாகிவிட்டது போன்று உணர்கிறாள் பூரணி. பட்டுப் பாவாடை புரள மொட்டு மலரிதழ் விரித்தாற்போல் சிரித்துக் கொண்டு சின்னஞ்சிறு சிட்டுக் குருவி போல் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் அவள். அம்மா அவளுடைய தலைமுடியை அவிழ்த்து எண்ணெய்த் தடவிப் பின்னுகிறாள். அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்த அப்பா வீட்டுக்குள் நுழைகிறார். பூரணி தன் மலர்ந்த கண்கள் விரிய அப்பாவை ஆவலோடு பார்க்கிறாள்.
"பார்த்துக் கொண்டே இரு! நான் சொல்வதை எதிர்காலத்தில் நீயே உன் கண்களால் காணப்போகிறாய். உன் பொண்ணுக்கு வாய்த்திருக்கும் கண்கள் அற்புதமானவை. பூரணமானவை. அவள் இந்தக் கண்களாலேயே தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஆட்டிப் படைக்கப் போகிறாள். இப்படிக் கண் உள்ளவர்கள் தெய்வீக அம்சம் உள்ளவர்கள்" என்று அப்பா அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதைக் கேட்டு அம்மாவும் சிரிக்கிறாள்.
"கண்ணேறு படக்கூடாது என்று சொல்வார்கள். குழந்தைக்கு உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது" என்று சொல்கிறாள் அம்மா.
"யாருடைய கண்ணும் இவளை எதுவும் செய்துவிட முடியாது. அசுத்தங்களையும், குற்றங்களையும் இவளுடைய கண் பார்வையே அழித்துவிடும். நீ கவலைப்படாதே" என்று சொல்லி அம்மாளின் மடியிலிருந்த பூரணியைத் தூக்கி வாரி அணைத்துக் கொள்கிறார் அப்பா. அப்பாவும், அம்மாவும் தென்படாமல் மறைகிறார்கள். கனவுத் தோற்றம் மாறுகிறது.
அன்புமயமாயிருந்த அந்த அம்மா இன்று எங்கே போய்விட்டாள்? கனவு நிலையில் பூரணியின் கண் முன் கவிந்த குடைபோல் வான விதானம் தெரிகிறது. சாம்பல் நிறமான ஆகாயத்தில் நீலமும் சிவப்புமான மேகங்கள் அழித்து அழித்துக் கோலம் போடுவதுபோல் விளையாடிக் கொண்டிருக்கையில் அவற்றின் நடுவேயிருந்து திடீரென்று வானத்தில் யானைத் தந்தங்கள் முளைத்தாற்போல் இரண்டு வளையணிந்த சிவப்புக் கரங்கள் நீள்கின்றன. மேகங்களுக்கிடையே சரத் காலத்துச் சந்திரனைக் கண்டதுபோல் அம்மாவின் முகத்தைக் காண்கிறாள் பூரணி. அடடா! வானமே ஒரு முகமாக மாறினாற்போல் அந்த முகம் தான் எத்தனை பெரிதாகத் தெரிகிறது.
"அம்மா! நீ எங்கிருந்து என்னைக் கைநீட்டி அழைக்கிறாய்? நான் எங்கிருந்து அதனை உணர்கிறேன்? நீ எங்கிருந்து என்னை எண்ணுகிறாய்? நான் எங்கிருந்து உன்னை எண்ணுகிறேன்? எனக்கு எதுவுமே விளங்கவில்லையே? என் உடம்பின் கனம் ஏன் இப்படிக் குறைந்து கொண்டே வருகிறது? எலும்பும் தோலும் சதையுமாக வாழும் புண்ணாகி, வளரும் புண்ணாயிருந்த இந்த உடம்பு மணமும் மென்மையுமாய் ஒரு சிறு பூவாக மாறிப் பூத்துவிட்டதா? என்னுடைய பூவுடம்பு காற்றில் மேலே மேலே பறந்து வானத்தை நிறைத்துக் கொண்டு தெரியும் அம்மாவின் கைகளையும் முகத்தையும் நோக்கிப் பறந்து போகிறதா? ஏன் இப்படி நான் பூவாகிறேன். ஐயோ! முகத்தில் யாரோ ஒரு கந்தர்வப் பெண் அமுதத்தை அள்ளித் தெளிக்கிறாளே!
சோடாவை உடைத்துக் கொண்டு வந்த முருகானந்தம் பூரணி நாற்காலியிலேயே மூர்ச்சையாகியிருப்பதைக் கண்டு சோடா நீரை கையில் கொட்டி முகத்தில் மெல்லத் தெளித்தான். மேடையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம். பல நிறத்துப் பூக்களைச் சிந்தின மாதிரி கூடிக் குவிந்துவிட்டது. பூரணி கண் மலர்ந்து பார்த்தாள். மூச்சு இழைந்தது. நெஞ்சில் வலியின் வேதனை விழிகள் திறந்து திறந்து சொருகின. 'என்ன ஆயிற்று? தங்கக் குத்துவிளக்கு மாதிரி நின்று பேசிக் கொண்டிருந்தாளே! எந்தப் பாவியின் கண் பட்டதோ?' என்று மேடையருகில் ஒரு வயதான அம்மாள் அனுதாபத்தோடு யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தாள். கூட்டம் அலைமோதிற்று. அத்தனை கண்களும் மேடையில் நாற்காலி மேல் சாய்ந்து கிடந்த அவளையே பார்த்து இரங்கி நின்றன. நினைப்பும் நினைப்புமற்ற நிலையுமாக இருந்த அவள் செவியில் சுற்றிலும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் விழுந்தன.
"பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாகியிருக்கிறதாம். 'ஏழைகளின் குடிசை உதவி நிதி' என்று இந்தப் பெண் தன்னுடைய சொற்பொழிவினாலேயே இவ்வளவு சேர்த்துக் கொடுத்து விட்டாளே. என்ன வாக்கு! என்ன சொற்சாதுரியம்! எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்?"
"இது எல்லோருக்கும் வந்துவிடுமா? கருவிலேயே திரு அமைய வேண்டும் என்பார்கள். பழம் பிறவியிலேயே குறைவாக எஞ்சிப்போன ஞானத்தை அடைகிற மாதிரி ஒரு பசி வேண்டும். நாமும் இருக்கிறோமே; அடுப்பங்கரையிலும், புடவைக் கடையிலும், இல்லாவிட்டால் சினிமாக் கொட்டகையிலும் திரிகிறதற்கே போது காணவில்லை."
"மீனாட்சியம்மன் கிருபையால் இந்தப் பெண்ணுக்கு ஒரு குறைவுமில்லாமல் நெடுங்காலத்துக்கு இவள் நன்றாக இருக்க வேண்டும்" இப்படி எத்தனையோ குரல் அவளை வாழ்த்துகின்றன. புகழ் மாலை சூட்டுகின்றன, வியக்கின்றன.
ஓதுவார் வீட்டு வளைகாப்பில் கேட்ட வார்த்தைகள் மனத்தில் உண்டாக்கிய புண்ணை இப்போது செவியில் விழும் இப்புகழ் வார்த்தைகள் ஆற்றுகின்றனவா? தியேட்டரில் தன்னைச் சுற்றிலும் கேட்கும் உரைகள் அவள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன! மெதுவாக அவளுக்கு உணர்வு வந்தது. உடலில் சிறிது தெம்பு பிறந்தது. தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றாள். தூக்கக் கிறக்கத்திலோ, கனவிலோ எழுப்பி நடத்திக் கொண்டு போகிற மாதிரி நடத்தித் தியேட்டர் வாசலில் கார் ஏறச் செய்து டாக்டர் வீட்டுக்கு அவளை அழைத்துப் போனார்கள். அரவிந்தன் பதறித் தவித்தான். டாக்டர் தைரியம் சொல்லுகிற வரை அவனுக்கும் முருகானந்தத்துக்கும் சுயநினைவே வரவில்லை. தியேட்டரிலிருந்து செல்லம் வீட்டுக்கு ஓடிப்போய் தகவல் கூறினாள் போலிருக்க்றது. மங்களேஸ்வரி அம்மாள் பதறிப்போய் ஓடி வந்தாள். செய்தி கேள்விப்பட்டு அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரமும் வந்தார். திருப்பரங்குன்றத்திலிருந்து சொற்பொழிவுக் கேட்கத் தியேட்டருக்கு வந்திருந்த சிலர் திரும்பச் சென்று ஏதோ சொல்லியிருக்கிறார்கள். 'பூரணி பாதி சொற்பொழிவில் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள்' என்பது போல் செய்தி பரவிவிட்டது. வீட்டில் இருந்த தம்பி சம்பந்தனும் மங்கையர்க்கரசியும் அதைக் கேள்விப்பட்டுப் பயத்தில் கதறி அழத் தொடங்கிவிட்டார்கள்.
"அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்" என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான்.
அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லோரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர், அரவிந்தனிடம் வந்து கூறினார்.
"பயப்படுகிறார்போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங்கங்கள் வீதம் தொண்டையைக் கெடுத்துக் கொண்டால் பயப்பட வேண்டிய நோயாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வருமுன் காக்க வேண்டும்'. நான் சொல்கிற யோசனைப்படி செய்யுங்கள். குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது இந்தப் பெண்ணுக்கு முழு அளவில் ஓய்வு தேவை. எங்காவது நல்ல இடத்துக்கு அழைத்துச் சென்று ஒய்வு பெற செய்யுங்கள். ஊட்டமான உணவும், உற்சாகம் நிறைந்த சூழ்நிலையும் கிடைக்க வேண்டும். தாமதமின்றி இதைச் செய்து விடுவது நல்லது."
டாக்டர் கூறியதன் அவசியத்தை அரவிந்தனும் உணர்ந்தான். அந்த ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் மதுரையிலும் பக்கத்துச் சிற்றூர்களிலும் அலைந்து பல பொற்பொழிவு செய்திருக்கிறாள் அவள். வேளைக்கு உணவில்லை. தூக்கமில்லை. சொற்பொழிவைத் தவிர சமூகப் பொதுப்பணிகளுக்காக வேறு அலைந்திருக்கிறாள். கார் வசதி, இரயில் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் மலேரியா பரவி தினம் நான்கு பேர்கள் வீதம் இறந்து கொண்டிருந்தார்கள். மதுரை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் இருந்தது அந்தக் கிராமம். பத்திரிகையில் செய்தி பார்த்தவுடன் அரவிந்தன் அந்தக் கிராமத்துக்குப் புறப்பட இருந்தான். பூரணி அவனை முந்திக் கொண்டுவிட்டாள்.
"எல்லாப் பொதுக்காரியங்களையும் நீங்களே எடுத்துக் கொண்டால் அப்பாவின் புத்தக வேலைகள் என்ன ஆவது? இந்தக் கிராமத்துக்கு நான் போய்வருகிறேன்" என்று மலேரியா ஒழிப்பு மருந்தோடு அவளே புறப்பட்டுப் போய் அந்தக் கிராமத்தில் இருந்து பணிபுரிந்துவிட்டு வந்தது, இப்போது அரவிந்தன் நினைவில் படர்ந்தது. 'அவளுக்கு ஓய்வு அவசியம்தான்! இல்லாவிட்டால் அவள் நிரந்தரமான நோயாளியாகி விடுவாள்!' என்று நினைத்து அஞ்சினான் அரவிந்தன். காற்று மாறுவதற்காக அவளை எந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று அரவிந்தனும் மங்களேஸ்வரி அம்மாளும் கலந்து ஆலோசனை செய்தனர்.
"வசந்தாவும் செல்லமும் என் வயிற்றில் பிறந்த பெண்கள். பூரணி எனக்கு வயிற்றில் பிறவாத பெண். அவள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு இல்லாத உபகாரமா! கொடைக்கானல் மலையில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. என் கணவர் இருக்கிறபோது வாங்கினார். அப்புறம் எப்போதாவது கோடையில் நானும் குழந்தைகளும் போனால் தங்குவது உண்டு. இப்போது அது காலியாகத்தான் இருக்கிறது. பூரணிக்கு அங்கே வசதி செய்து கொடுத்துவிட்டால் ஆறு மாதமோ ஒரு வருடமோ விருப்பம்போல் இருக்கலாம். இடமும் ஆரோக்கியமான இடம். அவளுக்கும் உற்சாகமாக இருக்கும்" என்றாள் அந்த அம்மாள்.
"பூரணியை உயர்ந்த இடத்தில் போய் இருக்கச் செய்ய வேண்டுமென்கிறீர்கள் அப்படித்தானே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அரவிந்தன்.
"அவள் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டியவள் தானே?" என்று இரட்டைப் பொருள்படவே அந்த அம்மாளிடமிருந்து பதில் வந்தது அவனுக்கு. பூரணியின் தம்பி, தங்கை இருவரையும் யார் பார்த்துக் கொள்வதென்று பிரச்சினை எழுந்தது. அந்தப் பொறுப்பையும் மங்களேஸ்வரி அம்மாளே எடுத்துக் கொண்ட போது எப்படி நன்றி கூற்வதென்று தெரியாமல் திணறினான் அரவிந்தன். இந்த ஏற்பாட்டை பூரணியிடம் கூறியபோது, "நான் உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் உங்களுக்கு அதிக உதவிகளில்லை. உங்கள் உதவிகளை நான் அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வே ஒரு நோய்போல் ஆகிவிட்டது" என்று அவர்களிடம் ஏங்கிச் சொன்னாள் அவள். குரல் தளர்ந்திருந்தது. தொண்டை கட்டியிருந்ததனால் உடைந்த குரலில் பேசினாள். இரண்டு மூன்று நாட்களில் தோற்றமும், பேச்சும் தளர்ந்து நலிந்திருந்தாள் அவள். கவின் நிறைந்த அவளுடைய கண்களில் கீழிமைகளுக்கு அடியில் கருவளையம் போட்டிருந்தது. ஏதாவது சொல்வதற்கு வாய் திறந்தால் வார்த்தைகளை முந்திக்கொண்டு இருமல் பொங்கிப் பொங்கி வந்தது.
வரையறை இல்லாமல் சொற்பொழிவுகளுக்காகவும் பொதுப்பணிகளுக்காகவும், அவள் ஊர் ஊராக அலையத் தொடங்கியபோதே, அவளை ஓரளவு கட்டுப்படுத்தாமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான் அரவிந்தன்.
"நீயாகத்தான் இவ்வளவையும் இழுத்துவிட்டுக் கொண்டாய்! உடம்பையும் ஓரளவு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் நீ. உன்னுடைய உடல் நலமாக இருந்தால்தானே நீ இன்னும் நெடுநாட்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடலாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டான் அரவிந்தன்.
புதன்கிழமை அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படுவது என்று ஏற்பாடு ஆகியிருந்தது. காற்று மாறுவதற்காக அவள் கொடைக்கானலில் தங்கியிருக்கும் காலத்தில் அவளுடைய உதவிகளுக்காக யாரை உடனிருகக்ச் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.
"வெளியில் வருவதற்குக் கூசிக்கொண்டு கிடக்கிறாள் என் மூத்த பெண். ஏதாவது கேட்டால் என்னோடு பேசுவதும் இல்லை. தனக்குத்தானே அழுகிறாள். நடந்ததை மறந்து கலகலப்பாக பேசமாட்டேன் என்கிறாள். உன்னோடு சிறிது காலம் இருந்தால் மாறலாமே என்று என் மனத்தில் நம்பிக்கை உண்டாகிறது. அவளை உன்னோடு அனுப்பட்டுமா கொடைக்கானலுக்கு. இந்த சித்திரையில் அவளுக்கு எப்படியும் திருமண ஏற்பாடு செய்து விடலாம் என்று இருக்கிறேன். அதுவரையில் வேண்டுமானால் உன்னோடு கொடைக்கானலில் இருக்கட்டுமே. இப்போது அவளே உன் அருமையைப் புரிந்து கொண்டிருக்கிறாள். உன்னோடு அவள் வர ஒப்புக்கொள்வாள்" என்று மங்களேஸ்வரி அம்மாள் கூறினாள்.
"ஒரு நோயாளியோடு இன்னொரு நோயாளியையும் கூட்டி அனுப்பப் பார்க்கிறீர்களே அம்மா இது நியாயமா?" என்று முருகானந்தம் வேடிக்கையாக அந்த அம்மாளிடம் கேட்டான்.
"என்னப்பா செய்வது? அவளை மெல்ல மாற்றி வழிக்குக் கொண்டு வர முடியுமானால் அது பூரணியால் தான் முடியும் போலிருக்கிறது. பூரணியாலேயே முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது. நான் அவளை எப்படியோ வளர்த்துச் செல்லம் கொடுத்துப் பாழாக்கிவிட்டேன்" என்று அவனுக்கு அந்த அம்மாள் மறுமொழி கூறினாள்.
வசந்தாவைத் தவிர ஒரு சமையல்கார அம்மாளையும் பூரணியோடு உடன் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தாள் மங்களேஸ்வரி அம்மாள். மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தால் பூரணி.
"உனக்கில்லாத விடுமுறையா பூரணி. நீ போய் உடம்பைத் தேற்றிக் கொண்டு வா அம்மா. இப்படி வரவழைத்து விட்டுக் கொண்டு எல்லோரையும் கவலையில் ஆழ்த்திவிட்டாயே, நீ சுகமடைந்து வந்தாலே போதும் எங்களுக்கு" என்று நேரிலேயே வந்து அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் காரியதரிசி.
"அக்கா எங்களையெல்லாம் விட்டு நீ மட்டும் போறியே!" என்று புறப்படும்போது பூரணியின் காலைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள் தங்கை மங்கையர்க்கரசி. தம்பி சம்பந்தம் கண்களில் நீர் மல்க நின்றான்.
"புறப்படும்போது இப்படியெல்லாம் அழக்கூடாது அம்மா! நீ ஒரு குறைவுமில்லாமல் எங்கள் வீட்டில் இருக்கலாம்" என்று மங்கையர்க்கரசியைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். அரவிந்தன், பூரணி கார் ஏறுமுன் அவளிடம் கூறலானான். "புது இடமாயிற்றே என்று தயங்கிக் கொண்டே போகாதே. போய் நிம்மதியாக ஓய்வு கொண்டு இரு. முடிந்தால் அடுத்த மாத நடுவில் நானும் முருகானந்தமும் அங்கே வந்து பார்க்கிறோம். போய்ச் சேர்ந்ததற்குக் கடிதம் போடு. உடல் நலத்தைப் பற்றியும் அடிக்கடி எங்களுக்கு எழுது. பணம் வேண்டுமானாலும் ஒரு வரி கடிதம் எழுதினால் உடனே அனுப்புகிறோம். எழுதிக் கேட்பதா என்று கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிடாதே."
"அக்கா! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கை கூப்பினான் முருகானந்தம்.
"அந்தக் குடிசை உதவி வேலையை உடனே தொடங்கிவிடுங்கள் அரவிந்தன். வசூல் ஆன தொகையைக் கண்ட ஆட்களிடம் கொடுத்து ஏழைகளை ஏமாற விட்டுவிடாதீர்கள். நீங்களும் முருகானந்தமும் கூட இருந்து செய்யுங்கள். இந்தச் சமயத்தில் இங்கே உங்களோடு கூட இருந்து அந்தப் பொதுத் தொண்டில் நானும் ஈடுபட முடியாமல் இப்படி எங்கோ புறப்பட்டுப் போகிறேனே என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று நினைவு படுத்தினாள் பூரணி.
"நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது" என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன்.
பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேஸ்வரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில் ஏறுவதற்கு முன்னால் ஓரிடத்தில் ஆற்றின் கரையோரமாக ஒரு தோப்பில் இறங்கி உணவை முடித்துக் கொண்டார்கள். உணவை முடித்துக் கொண்டதும் அவர்கள் மறுபடியும் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.
வளைந்து, நெளிந்து, முடிவற்று, ஊர்ந்து கொண்டிருக்கும் கருநாகம் போன்ற மலைப்பாதையில் கார் ஏறியது. பாதையின் இருபுறமும் எதேச்சையாய்க் கவனிப்பாரற்றுக் கிடக்கும் செல்வம் போல் இயற்கையின் கொள்ளை கொள்ளையான அழகுக் காட்சிகள். கீழே அதலபாதாளத்துக்கு இறங்கும் நீலப்பசுமை விரிந்த பள்ளத்தாக்குகள். மேலே வீறுகொண்டு வீங்கிய மலைக் கொடுமுடிகள். எத்தனை நிறத்துப் பூக்கள்! எத்தனை விதமான கொடிகள்! எவ்வளவு பெரிய மரங்கள்! எட்டிப் பிடித்து இழுத்துத் தடவுகிறாற்போல் மிக அருகில் மேகம் தவழும் ஆகாயம். கார் வளைவுகளிலும் திருப்பங்களிலும் திரும்பும் போதெல்லாம் 'இதோ இங்கேதான் நான் இருக்கிறேன்' என்று ஓடிவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் புதிய புதிய இயற்கைக் காட்சிகள். குலை தள்ளிய தாய்மைக் கோலம் காட்டும் மலை வாழைத் தோட்டங்கள், கொத்துக் கொத்தாய்க் கொடி முந்திரிப் பழங்கள் தொங்க திராட்சைக் கொடி படர்ந்த பசும் பந்தல்கள், எல்லாம் வனப்பின் வெள்ளமாய்த் தெரிந்தன. 'கை புனைந்து இயற்றாக் கவின் பெருவனப்பு' என்று இயற்கை அழகை நக்கீரர் வர்ணித்ததை நினைத்துக் கொண்டாள் பூரணி. மலை வாசத்தின் சிறப்புக்களைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. எழுதியிருக்கும் உருக்கமான கட்டுரை அவளுக்கு நினைவு வந்தது.
'கொடைக்கானல் இத்தனை அழகாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை, வசந்தா! போன கோடையின் போது உன் அம்மா கூப்பிட்டார்கள். நான் வராதது எத்தனை நஷ்டம் என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது' என்று தன் அருகில் மௌனமாக வீற்றிருந்த வசந்தாவின் பக்கம் திரும்பிக் கூறினாள் பூரணி.
அலுப்படைந்து சலித்தாற் போன்ற குரலில் வசந்தா பதில் சொன்னாள். "முதல் தடவை வருவதனால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எனக்கு என்னவோ வருடந்தவறாமல் பார்த்துச் சலித்து விட்டது. நாங்கள் இலங்கையில் இருக்கும் போது அப்பா ஒவ்வோர் ஆண்டு மார்ச் மாதம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார். ஜூலையில் தான் மறுபடியும் இலங்கை திரும்புவோம். அப்பாவின் நினைவுக்காகத்தான் அம்மா இன்னும் இங்கிருக்கிற பங்களாவை விற்காமல் வைத்துக் கொண்டிருக்கிறாள்."
"கண்டிப்பாக விற்கக் கூடாது. உங்கள் அம்மாவிடம் நான் சொல்லிவிடப் போகிறேன். உங்கள் அப்பாவுக்கு இருந்த இயற்கை இரசனை உங்கள் அம்மாவுக்கு இல்லையா, என்ன?"
"அப்பாவுக்கு இந்த மலைப் பங்களாவில் ஒரே பித்து. பங்களாவுக்கு முன்னால் ஒரு பெரிய ரோஜா தோட்டம் போட்டிருக்கிறார். அவர் இருந்தவரை ஆசைப்பட்டு ஒரு பூக்கூட பறிக்க முடியாது. பூக்களைச் செடியிலிருந்து பறிப்பதை அறவே வெறுப்பார் அப்பா."
இவ்வாறு மெல்ல மெல்ல வசந்தாவின் அமைதி மூட்டத்தைக் கலைத்துத் தன்னோடு கலகலப்பாகப் பேசிக் கொண்டு வரச் செய்திருந்தாள் பூரணி. சமையற்கார அம்மாள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சண்பகனூர் வந்தது. வெண்பட்டு நூலிழைகள் ஆகாயத்திலிருந்து இறங்குகிற மாதிரி சாரல் விழுந்து கொண்டிருந்தது. கம்பீரமாக எழுந்து கோணிக்கொண்டு மாடு முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு சிகரம் தெரிந்தது. "இதுதான் இங்கே உயர்ந்த சிகரம். இதைப் பெருமாள் மலை என்பார்கள்" என்று பூரணியிடம் கூறினாள் வசந்தா. மலைச்சாரலை வரை வரையாகப் பாத்தி கட்டி ஏதேதோ பயிர் செய்திருந்தார்கள்.
பச்சை நிறத்துச் சல்லாத் துணியால் திரையிட்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, அதை சற்றே விலக்கி எட்டிப் பார்த்து மெல்லென நகைப்பது போல் மலைகளுக்கிடையே அழகாகத் தெரிந்தது கொடைக்கானல் நகரம். நகரின் நடுப்பகுதியான ஏரியின் தென்புறத்தில் மலைச்சரிவில் அரண்மனையைப் போல் கட்டியிருந்த வீட்டின் முன் போய் கார் நின்றது. நீல இருள் கவிந்த அந்தச் சாரல் பெய்யும் சூழலில் எட்டாயிரம் அடிக்கு மேல் உயர்ந்த ஒரு மலை நகரத்தில் திருமண வீட்டின் அழகு பொலிவுற்றுத் தெரிந்தது. அவற்றையெல்லாம் பார்த்துப் பூரணியின் உள்ளம் சிறு குழந்தைபோல் உற்சாகத் துள்ளல் பெற்றது. மனதுக்குப் புத்தம் புதிய சுறுசுறுப்பு வந்து விட்டது போலிருந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக அந்த மலை நகரத்தின் அழகுகளைச் சுற்றிப் பார்த்தாள் அவள். வந்த அன்றைக்கு மறுநாள் அரவிந்தனுக்கும் மங்களேஸ்வரி அம்மாளுக்கும் கடிதங்கள் எழுதினாள். அரவிந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், அந்தச் சூழ்நிலையில் சில புதிய நூல்களைப் படித்து சிந்திக்க விரும்புவதாகவும், அவற்றை மதுரை தமிழ்ச் சங்கத்து நூல் நிலையத்திலிருந்து எடுத்து அனுப்பினால் உதவியாயிருக்கும் என்று எழுதியிருந்தாள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு எழுதிய கடிதத்தில் வசந்தாவை உற்சாகமாகவும் கலகலப்பாகவும் மாற்றிக் கொண்டு வருகிறேன். சித்திரையில் முகூர்த்தம் பாருங்கள். அதற்கு முன்பே மாப்பிள்ளையையும் பார்த்து விடுங்கள் என்று எழுதியிருந்தாள்.
நான்கு தினங்களுக்குப் பின் அவள் பெயருக்கு ஒரு பெரிய புத்தகப் பார்சல் வந்தது. அரவிந்தன் கடிதமும் எழுதியிருந்தான். அதே தபாலில் வசந்தாவின் பெயருக்கு ஒரு கவர் வந்திருந்தது. அப்போது அவள் கடைவீதிக்குப் போயிருந்ததனால் பூரணியே அந்தக் கவரையும் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். உறையின் மேல் வசந்தாவின் பெயரை எழுதியிருந்த கையெழுத்து மங்களேஸ்வரி அம்மாளுடைய எழுத்தாகத் தெரியவில்லை. செல்லத்தின் கையெழுத்தாக இருந்தது. மனத்தில் சந்தேகம் தட்டினாலும் பூரணி அதைப் பிரிக்கவில்லை. அவள் கடையிலிருந்து வந்ததும் அவளிடமே கொடுத்துவிட்டாள். சந்தேகம் மட்டும் பூரணியிடம் தங்கியது.
அன்று அந்தக் கடிதத்தை வசந்தா படித்தபின் அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் பூரணிக்கு வியப்பளித்தது. வசந்தாவின் இதழ்கள் அடிக்கடி ஏதோ பாட்டை முணுமுணுத்தன. கூந்தல் ரோஜாப்பூக்களைச் சுமந்தது. இதழ்களில் சிரிப்பு. முகத்தில் புதிய மலர்ச்சி; நடையில் உல்லாச மிதப்புத் தெரிந்தது. மாலையில் "அக்கா! இன்று ஏரிக்குப் போய் படகில் சுற்ற வேண்டும்" என்று வசந்தாவே வலுவில் வந்து பூரணியை வற்புறுத்தினாள்.
"இன்று உனக்கு என்ன வந்துவிட்டது வசந்தா? உற்சாகம் பிடிபடாமல் துள்ளுகிறதே?" என்று வியந்து வினவினாள் பூரணி.
-----------------------
குறிஞ்சி மலர்
18
பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)
இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர்.
-- குமரகுருபரர்
மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறார் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக் கொட்டிக் குவித்தாற்போல் மஞ்சள் குளித்து மயங்கிய இந்த மாலைப் போதுதான் எவ்வளவு மயக்கம் தருகிறது! தமிழில் மருள்மாலை என்று இதற்குப் பெயர் வாய்த்தது எத்தனை பொருத்தமானது? தமிழ்ச்சங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்கு அருகே கையில் துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தான் அரவிந்தன். அன்றைக்குச் சந்தை நாள் போலிருக்கிறது. திருவிழாக் கண்டதுபோல் வீதி கொள்ளாமல் மக்கள் கூடிக் கொண்டும், சிதறிக்கொண்டும் இருந்தார்கள். இரண்டு பக்கத்து நடைபாதைகளிலும் கூடைக்காரிகளின் கும்பல் தரைமேல் ஹோலிப் பண்டிகை கொண்டாடின மாதிரி தாறுமாறாகத் துப்பின வெற்றிலைச்சாறு - கால்களைப் பதித்து நடக்கக் கூசிற்று. மழை வந்து விட்டால் கைகளில் தூக்கிச் சுமக்க நேரிடுமே என்று செருப்பணியாமல் வந்திருந்தான் அரவிந்தன். பாதங்களைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் மிகவும் விருப்பமுள்ளவன் அவன். வாதா மரத்தின் பழுத்த இலைகளைப் போல் நல்ல பாதங்கள் அவனுக்கு. செம்பொன் நிறம். அதில் அழகாகவும் அளவாகவும் விரல்கள். நீளமும் அகலமுமான பெரிய பாதங்கள் அவை.
எப்பொழுதாவது அரவிந்தனின் பாதங்களைக் கவனிக்க நேருகிறபோது அவனோடு சம வயதுள்ள நண்பர்கள், "பெண்பிள்ளைகளின் பாதங்களைப்போல் எப்படி அப்படி கால்களை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்கிறாய்" என்று கேலியாகக் கேட்பதுண்டு. பித்த வெடிப்பும், சேற்றுப்புண்ணுமாக முரடு தட்டிப்போன முருகானந்தத்தின் பாதங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கால்களைக் கவனி தம்பி; உன்னைப் போலவே அவையும் முரடாகிக் கொண்டிருக்கின்றன' என்பான் அரவிந்தன்.
"எனக்கு இந்த அழகுக் கவலையே உண்டாவதில்லை அரவிந்தன்! எங்கள் வீடு இருக்கிற பகுதிக்குப் பெயர்தான் பொன்னகரம் என்று பிரமாதமாக வைத்துவிட்டார்கள். உண்மையில் பொன்னரகம் தான் அது. சேறும் சகதியும், மேடும் பள்ளமுமான அந்தத் தெருக்களில் நடக்கிற கால் இப்படியில்லாமல் வேறு எப்படி இருக்கும்?" என்று முருகானந்தத்திடமிருந்து பதில் வரும்.
பூரணி கொடைக்கானலில் இருந்து படிப்பதற்காகக் கேட்டிருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவதற்காகவே அரவிந்தன் அப்போது தமிழ்ச்சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஏராளமான நூல்கள் நிறைந்த பெரிய நூல் நிலையம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்தது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் இந்தத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்தார். இதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்பாக, மூன்று தமிழ்ச்சங்கங்களும் அழிந்த குறையைத் தீர்ப்பதற்காக இராமநாதபுரம் அரச குடும்பத்தினரும் பாண்டித்துரைத் தேவர் என்ற பெயருள்ளவருமான வள்ளலும் இந்த நான்காம் சங்கத்தைத் தோற்றுவித்தார்கள். செந்தமிழ் வளர்த்த சேதுபதி அரசர்களோடு பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்துக்கு இளமையிலிருந்தே நட்புறவுண்டு. ஒவ்வொரு நவராத்திரி விடுமுறையின்போதும் இராமநாதபுரத்தில் கலைமகள் விழாக் கவியரங்கத்துக்குச் சென்று சிறந்த மரியாதைகளோடு திரும்பி வருவார் அழகிய சிற்றம்பலம். அப்பாவின் அந்த உறவும் பெருமையும் இப்போது பூரணிக்குப் பயன்பட்டன. தன் வீட்டில் இல்லாத சில அரிய நூல்களை அவள் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தில் எடுத்துப் படிப்பது வழக்கமாயிருந்தது.
பூரணி கொடைக்கானலிலிருந்து எழுதியிருந்த கடிதத்தையும், புத்தகங்களைப் பற்றிய குறிப்பையும் காட்டியவுடனே நூல் நிலையத்தில் சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அரவிந்தன் அவற்றைப் பையில் நிரப்பிக் கொண்டு திரும்பினான். அச்சகத்தில் போய் அந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி கொடைக்கானலுக்கு மறூநாள் காலை பார்சல் செய்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு விரைந்தான் அவன். சந்தை சிறிது சிறிதாகக் கலைந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தை என்று பேர்தானேயொழிய வியாழக்கிழமையிலும் சந்தை கூடும். அங்கே தேசிய இயக்கக் காலத்தின் சின்னமாகத் 'திலகர் சதுக்கம்' என்ற புதுப்பெயரையும் ஏற்றுக்கொண்டிருந்தது அந்த சந்தை மைதானம். சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறிகளை விற்று முடித்தபின், மாலை ஆறரை மணிக்கு மேல் அரசியல் சந்தை கூடுகிற இடமாக மாறிவிடும் அது. அதாவது பொதுக்கூட்டங்கள் அங்கே நடைபெறும். உணர்ச்சிமயமான பேச்சாளர்கள் தங்கள் முதல் இல்லாத சரக்கை விற்கிற இடமும் அதுதான். இப்படிப் பகலில் காய்கறியும் இரவில் அரசியலும் விலை போய்க் கொண்டிருந்த அந்த இடத்தின் வாயிலில் வீதி வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தை அங்கே சந்தித்தான் அரவிந்தன்.
"என்ன அரவிந்தன்! தமிழ்ச் சங்கத்தையே பைக்குள் வாரி அடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாய் போலிருக்கிறதே" என்றான் முருகானந்தம்.
"ஒன்றுமில்லையப்பா, பூரணி கொடைக்கானலிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லி எழுதியிருந்தாள். அவளுக்கு அனுப்புவதற்காக வாங்கிக் கொண்டு போகிறேன்."
"எனக்குக்கூட கடிதம் வந்தது..." என்று சிரித்துக் கொண்டே களிப்போடு பேச்சைத் தொடங்கிய முருகானந்தம் மின்சாரத் தொடர்பு அற்றதும் பட்டென்று ஒலி நிற்கிற வானொலி மாதிரி உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்தினான். சொல்ல வேண்டாமென்று இருந்ததை வாய்தவறிச் சொல்லியது போன்ற உணர்வு அவன் முகத்தில் நிலவியது. அரவிந்தன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உல்லாசமும் தடுமாற்றமும் கலந்த நூதனமானதொரு குழப்பத்தோடு தோன்றினான் முருகானந்தம். அரவிந்தனின் பார்வையைத் தன் முகத்தில் தாங்கிக் கொள்ள இயலாதவன் போல் தலையைச் சாய்த்துக் கொண்டு எங்கோ பராக்குப் பார்த்தான் அவன். மலராத பூவின் மகரந்த மணம்போல் அப்போது அவனுடைய முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் நாணமும் கூச்சமும் கலந்து நிற்பதை அரவிந்தன் கண்டான்.
"உனக்கு யாரிடமிருந்து கடிதம் வந்தது முருகானந்தம்? தனியாக உனக்கு வேறு கடிதம் எழுத இயலவில்லை என்றும், உன்னிடம் தன் வணக்கத்தைக் கூறும்படியும் உன்னுடைய பூரணியக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருக்கிறாளே அப்பா?"
இந்தக் கேள்விக்குப் பின் முருகானந்தத்தின் உல்லாசத் தடுமாற்றம் இன்னும் அதிகமாயிற்று. அரவிந்தன் விடவில்லை மேலும் அவனைத் துளைத்தெடுத்தான்.
"என்னப்பா தம்பி, என்ன சங்கதி? முகம் ஒரு மாதிரிக் கோணிக் கொண்டு போகிறது. கடிதம் வந்திருக்கிறது என்கிறாய். யார் எழுதினதென்று கேட்டால் பதில் சொல்லாமல் பராக்குப் பார்க்கிறாய்?"
"ஒன்றுமில்லை அரவிந்தன் வந்து..."
"வந்தாவது, போயாவது. ஆண்பிள்ளையாய் இலட்சணமாய்க் கூச்சமில்லாமல் பேசு ஐயா."
"அந்தப் பெண் வசந்தா கொடைக்கானல் போய்ச் சேர்ந்ததும் என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தான் வாய் தவறி உன்னிடம்..."
"சொல்லிவிட்டாயாக்கும்! பலேடா தம்பி. காதல் கதை ஆரம்பமாகியிருக்கிறதா? எத்தனை நாட்களாக இந்தக் கடிதம் எல்லாம் வந்து போகிறதப்பா?"
"சத்தியமாகச் சொல்கிறேன் அரவிந்தன், எனக்கு ஒரு வம்பும் தெரியாது. அந்தப் பெண்ணாகத் தான்..."
"டேய்! டேய்! சத்தியம் என்கிற வார்த்தை ரொம்பவும் பெரிது. அதை இங்கே இழுக்காதே. இது சாதாரண காதல் விவகாரம்" என்று வேடிக்கை பண்ணினான் அரவிந்தன். முருகானந்தம் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தான்.
"ஓகோ! அப்படியா சங்கதி! பதில் எழுதி விட்டாயோ இல்லையோ!"
எழுதி விட்டேன் என்பது போல் தலையாட்டினான் முருகானந்தம். அரவிந்தன் சிரித்தவாறே மேலும் கூறினான்.
"இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது, அப்பனே! சினிமா வம்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு வரத் திருச்சி போய் திரும்பின அன்றிலிருந்தே நீ தானப்ப முதலித் தெருவுக்கு அடிக்கடிப் போகத் தொடங்கிவிட்டாயே; 'அந்த அம்மா ஏதோ தைப்பதற்குத் தருகிறேன் என்று வரச் சொன்னதாக' அல்லவா போய்க் கொண்டிருந்தாய்? இதுதானா அந்தத் தையல் வேலை".
"இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்" என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம்.
"இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் - இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயோ?" என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத்திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத்தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பிவிட்டாலும் பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்தபோது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அரவிந்தனுக்கு.
'இந்தத் தொடர்பைப் பற்றி மங்களேஸ்வரியம்மாள் என்ன நினைப்பார்? பூரணி என்ன நினைப்பாள்? முருகானந்தத்தின் பெற்றோர்கள் தான் என்ன நினைப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? நாலு தடவை சந்தித்து சிரித்துப் பேசியும் பழகி விட்டால் மனத்தில் இந்த அசட்டுத்தனமான கனவுகள் உண்டாகிவிடுகின்றன. இராத்திரி அச்சகத்துக்கு வந்தால் முருகானந்தத்தைக் கண்டிக்க வேண்டும்?' என்று தீரச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், அரவிந்தன்.
'செல்வத்திமிரும் இறுமாப்பும் நிறைந்தவள். ஆடம்பா அசட்டுத்தனங்களும், வெளிப்பகட்டும் உள்ளவள்' என்றுதான் வசந்தாவைப் பற்றிப் பூரணி சொல்லி இருந்தாள். அத்தகைய இறுமாப்பு நிறைந்த பெண் உள்ளம் அதற்கு நேர்மாறான கொள்கைகளும் சாதாரண வாழ்க்கை வசதிகளும் உள்ள முருகானந்தத்தை நோக்கி எப்படி மலர்ந்தது? எவ்வாறு நெகிழ்ந்தது? சிந்திக்க சிந்திக்க அந்த இருவரின் இணைப்பு விளங்காப் புதிராகவே தோன்றியது அவனுக்கு. 'கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபலம் என்ற உணர்வே! உனக்குத்தான் பெண் என்று மறுபெயர் சூட்டியிருக்கிறார்கள்' என்னும் கருத்துப்பட 'ஹாம்லெட்' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. உலகத்து அறிஞர்களின் பொன்மொழிகளைக் குறித்து வைக்கும் தனது நோட்டுப் புத்தகத்தில் இக்கருத்தைக் குறித்திருந்தான் அவன். எல்லாப் பெண்களையும் இந்தச் சட்டத்தில் அடக்க விருப்பப்படவில்லை அவன் மனம். 'பூரணியைப் போல் அறிவு வளர்ச்சியிலும் தொண்டு, தியாகங்களிலும் கரைந்து போய் சொந்தச் சபலங்களை மறந்து விடுகிறவர்களும் இருக்கிறார்களே!' அரவிந்தனின் சிந்தனை எதிரே வந்து கை நீட்டிய ஓர் இளைஞனால் கலைந்தது.
"சார், சாப்பிட்டு ஏழு நாளாச்சு சார்! ஊருக்குத் திரும்பிப் போகலாமென்றால் கையில் காசு இல்லை சார். ஏதாவது உதவி செய்யுங்க சார். வயிற்றுப் பசி தாங்கமுடியலை சார். இன்னும் சிறிது நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் இப்படியே நடுவீதியில் செத்துப் போய் விழுந்து விடுவேன் போலிருக்கிறது சார்" என்றான் அந்த இளைஞன் கண்ணீரும் கம்பலையுமாக.
வேகமாக நடந்து கொண்டிருந்த அரவிந்தன் நின்றான். துவண்டு ஒடிந்து விழுந்து விடுகிறாற்போல நின்ற அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தான். நாலைந்து தடவைகள் ரப்பரால் அழித்து எழுதின காகிதம் மாதிரி வாலிபம் வீறுகுன்றிச் செழிப்பற்ற முகம். தொடர்ந்து பல நாட்களாகக் குளிக்காத தோற்றம். வேர்வையேறி அழுக்கடைந்த சட்டை வேட்டி. குழிந்து இமையடியில் பள்ளம் வாங்கிப் பஞ்சடைந்த கண்கள். இந்த நாட்டு ஏழ்மை ஏக்கங்களுக்கும், பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும் பிரதிநிதியாக வந்தவன் போல் நின்றான் அந்தப் பஞ்சை வாலிபன். தன்னை காண்பவரிடத்தில் இரக்கத்தை உண்டாக்கும் குழைவைத் தன் முகத்திலும் தோற்றத்திலும் கைகளிலும் காட்டினான் அவன். அரவிந்தன் கேட்டான். "உனக்கு என்ன ஊர் அப்பா?"
இராமநாதபுரம் சீமையில் வறட்சியும் பஞ்சமும், நித்திய ஆட்சிபுரியும் பகுதியைச் சேர்ந்த ஒர் ஊரைச் சொன்னான் அந்த வாலிபன்.
"எதுவரை படித்திருக்கிறாய்?"
"எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறேன் சார்! டைப்ரைட்டிங் தெரியும். சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன். தேறவில்லை வேலை தேடி மதுரைக்கு வந்தேன், சார்!"
அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'படித்துப் பரீட்சை எழுதிவிட்டு மனத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோடு பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து இறங்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இன்று இந்த நாட்டில் பெரிய நகரத்தின் ஆரவாரமிக்க தெருக்களில் வயிற்றுக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுடைய மானத்தைக் காப்பாற்றாத வரையில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது இந்த நாட்டில்' என்று கொதித்தது அவன் உள்ளம்.
"சார், பசி பொறுக்க முடியவில்லை!" தனது இடது கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலது கையை நீட்டினான் அவன். ஜிப்பா பையில் கையை விட்டு முழு ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் வைத்து, "ஏதாவது வாங்கிச் சாப்பிடு, அப்பா!" என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தான் அரவிந்தன். தன்னையே அந்த இளைஞனின் நிலையில் வைத்து எண்ணிப் பார்த்து வருந்தினான் அவன். 'மீனாட்சி அச்சகமும், கருணையும் பெருந்தன்மையும் உள்ள அதன் உரிமையாளரும் தடுத்தாட் கொண்டிருக்காவிட்டால் தான் இப்படி ஏதாவது ஒரு பெரிய நகரத்தின் புழுதி படிந்த தெருக்களில் வயிற்றுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டியவன் தானே' என்பதைச் சிந்தித்த போது மேலும் நெகிழ்ந்து குழைந்தது அவன் உள்ளம்.
கையில் தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்கள் கனத்தை விட மனத்தில் அதிகமாகக் கனத்த சிந்தனையோடு அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். அச்சகத்து வேலை நேரம் முடிந்து வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
"நீங்க தமிழ்ச் சங்கத்துக்குப் புறப்பட்டுப் போனப்புறம் 'ஐயா' வந்தாருங்க. இப்போ கீழாவணி மூலவீதிப் பேப்பர்க் கடைக்குப் போயிருக்காரு. நீங்க வந்தால் உங்களை எங்கேயும் வெளியே போய்விடாமல் இங்கேயே இருக்கச் சொன்னாரு. உங்ககிட்ட ஏதோ முக்கியமான சங்கதி கலந்து பேசணுமாம்" என்று அச்சகத்து ஊழியன் (ப்யூன்) அரவிந்தனிடம் வந்து சொன்னான். அப்போது அரவிந்தனுடைய மனத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் தெருவில் சந்தித்த இளைஞனைப் பற்றியதாக இருந்தது. அதிலிருந்து தற்காலிகமாகத் தன்னை மீட்டுக் கொண்டு, "நான் இங்கேதானப்பா இருக்கப் போகிறேன். இன்றைக்கு வெளியில் எங்கும் போகப் போவதில்லை. நீ உள்பக்கம் போய் அங்கே நம் திருநாவுக்கரசு இருந்தால் நான் கூப்பிட்டேனென்று வரச்சொல்" என்று ஊழியனிடம் சொல்லி அனுப்பினான் அவன். சிறிது நேரத்தில் பூரணியின் தம்பி திருநாவுக்கரசு வந்து நின்றான்.
"சார், என்னைக் கூப்பிட்டீர்களாமே?"
"ஆமாம்! இந்தா இந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி பார்சல் செய்வதற்கேற்ற முறையில் வைத்துவிடு. நாளைக் காலையில் உன் அக்காவுக்கு அவற்றை அனுப்ப வேண்டும்".
கையோடு புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசு உள்ளே சென்றான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு 'பசி பசி' என்று பரிதாபமாகக் கதறி நின்ற அந்த வாலிபன், மறுபடியும் நினைவின் வட்டத்தில் வந்து அரவிந்தனை வாட்டினான். நெஞ்சு நெகிழ்ந்து உருகியவாறே தனது குறிப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினான் அரவிந்தன்.
"தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே என்லார்ஜ் செய்தால் அந்தக் குறைகளும் பெரிதாகத் தெரிகிற மாதிரித்தான் இருக்கிறது இப்போதுள்ள பாரத நாட்டு வாழ்க்கை 'வளர்ச்சி'! இந்த நாட்டு இளைஞர்கள் சோர்வும் பசியும் ஏமாற்றமும் அவநம்பிக்கைகளும் கொண்டு படிப்புக்கேற்ற வேலையின்றி உழைப்புக்கேற்ற புகலிடம் இன்றி வேதனைப்படுகிறார்கள். இரயிலின் முன் விழுந்தும் மரக்கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டும் நஞ்சு தின்றும் சாவதற்கா இவர்கள் பிறந்தார்கள்?" பேனா வெள்ளைக் காகிதத்தைக் கிழித்து விட்டு நின்றது. மை இல்லை. நல்ல கருத்துகள் மனத்துக்குள் வெள்ளமாகப் புரண்டு வருகிற நேரத்தில் வரண்டு போய்த் தொல்லை மிகக் கொடுக்கும் பேனாவின் மேல் கோபம் வந்தது அரவிந்தனுக்கு. அதை அப்படியே முறித்துப் போட்டுவிடலாமா என்று சினம் தோன்றியது. எழுதும்போது பேனாவில் மை இல்லாமல் போகிற இடையூறு போல் பெரிய இடையூறு உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது என்ற கொதிப்புடன் மேசை இழுப்பறையைத் திறந்து அவன் மைக்கூட்டை எடுத்தான். நீர் வறண்டு தரை தெரியும் வெய்யிற் காலத்து வானம் பார்த்த பூமிக் கிணறு மாதிரி மைக்கூடும் காலியாக இருந்தது. பொறுக்க முடியாத எரிச்சல் மூண்டது அவனுக்கு. அந்த எரிச்சலோடு இரைந்து கத்தி, ஊழியனை மை வாங்கி வரச் சொல்லலாமெனக் கூப்பிட்டான். பின்புறம் ஏதோ கை வேலையாக இருந்ததனால் ஊழியன் உடனே வரவில்லை. "எல்லாப் பையன்களுக்கும் காது அடைத்துப் போய்விட்டது. நாமே போய் வாங்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்து வெளியேறி மேலக்கோபுரத் தெருவில் திரைப்பட நிலையத்துக்கு அருகில் இருந்த 'ஷாப்'பில் போய் மைப்புட்டி வாங்கிக் கொண்டு திரும்பினான். புதுப்படம் போட்டிருந்தார்கள் போலும். திரைப்பட நிலையத்தின் முன் 'கியூ' வரிசை நீண்டிருந்தது. தற்செயலாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் மேற்சென்ற அரவிந்தனின் பார்வை வியப்புடன் ஒரு முகத்தின் மேல் நிலைத்துப் பதிந்தது. கோபுரம் சரிந்து விழுவது போல் மனத்தில் ஓர் உணர்வு உடைந்து சரிந்தது. நெற்றி சுருங்கப் பார்த்தான் அவன்.
ஏழு நாட்களாகப் பட்டினி கிடந்து சாவதாகப் பஞ்சைப் பாட்டுப்பாடி அரவிந்தனுடைய அனுதாபத்தையும் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு போனானே, அந்த வாலிபன் வாயில் 'சிகரெட்' புகை சுழலச் சினிமா பார்ப்பதற்காக பன்னிரண்டரையணா டிக்கெட் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அதைக் கண்டதும் உலகமே தலைகீழாகச் சுழல்வது போலிருந்தது அரவிந்தனுக்கு. முருகானந்தமாயிருந்தால் அந்த வாலிபனை வரிசையிலிருந்து வெளியே இழுத்துச் செம்மையாக உதைத்திருப்பான். அரவிந்தனுக்கும் மனம் குமுறிற்று. அருகில் போய் அவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்ற துடிப்பும் கூட ஏற்பட்டது. ஆனால் வரிசை நகர்ந்ததன் காரணமாக அதற்குள் அந்த வாலிபன் உட்பக்கம் முன்பாகப் போயிருந்தான்.
'எக்கேடும் கெட்டுத் தொலையட்டும்! இவர்கள் உருப்படப் போவதில்லை. இரயிலுக்குப் போகிற அவசரம் போலப் பரபரப்போடு பலப்பல தவறுகளைச் செய்து இரவும் பகலும் பாழாக்கித் தங்கள ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சிந்தனையில்லாமல் கோயில் காளைகள் போல் திரிகிற இந்த விடலைக் கும்பல் எந்த வழியால் உய்யப் போகிறது? இவர்களைத் திருத்துவதற்கு மகாத்மாக்கள் பிறக்கவேண்டும். வெறும் மனிதர்களால் முடியாது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பதவியுடையவர் வாரத்துக்கு ஒருமுறை தான் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். மாதம் முப்பது ரூபாய் வாங்குகிற கூலியாள் வீட்டில் மனைவி குழந்தையும் பட்டினி கிடக்க ஒரே படத்துக்கு ஏழு தடவைகள் போகிறான். கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது? அப்போதே அந்த வாலிபனிடம் ஒரு ரூபாயை முழுசாகத் தூக்கிக் கொடுத்திருக்கக் கூடாது. நானே ஓட்டலுக்குக் கூட்டிப் போய்ச் சாப்பாடு பண்ணி அனுப்பி வைத்திருக்க வேண்டும். பரவாயில்லை, எனக்கு இதுவும் ஒரு பாடம் தான். சுலபமாக நம்பி ஏமாறதபடி என்னை நான் விழிப்பாக வைத்துக் கொள்வேன் இனிமேல்' என்று நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி வருவதைத் தவிர அரவிந்தனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அச்சகத்தில் போய் உட்கார்ந்து புத்தகப் பார்சலோடு கிடைக்குமாறு தனித் தபாலில் பூரணிக்கு ஒரு கடிதமும் எழுதினான். முருகானந்தம்-வசந்தா கடிதத் தொடர்பு வேறு அவன் மனத்தை உறுத்திச் சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆயினும் அதுபற்றி அவன் பூரணிக்கு ஒன்றும் எழுதவில்லை. மீனாட்சிசுந்தரம் ஏதோ முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டுமென்று தன்னை இருக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறாரே. அது என்ன விஷயமாக இருக்குமோ, என்னும் சந்தேகங்களைப் பின்னலாயிற்று அவன் மனம்.
அரவிந்தன் மீனாட்சிசுந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாள் வந்தாள். 'இரண்டு மூன்று முக்கியமான கடிதங்கள் மங்கையர் கழகத்துக்கு வந்திருப்பதாகவும் அவற்றுக்குப் பூரணியைக் கலந்து கொண்டுதான் பதில் எழுதவேண்டும்' என்றும் சொல்லிப் பூரணியின் கொடைக்கானல் முகவரியை அரவிந்தனிடம் கேட்டாள் அந்த அம்மாள்.
"நேரில் நீங்களே போகப் போகிறீர்களா, அம்மா?" என்று புத்தகங்களை அந்த அம்மாள் மூலமே அனுப்பிவிடும் குறிப்போடு கேட்டான் அவன்.
"இல்லை, கடிதம் எழுதிக் கலந்து கொள்ளத்தான் முகவரி கேட்டேன்" என்று அம்மாள் கூறிவிடவே புத்தகம் கொடுத்தனுப்புவது சாத்தியமில்லையென முகவரி மட்டும் எழுதிக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனாள் அந்தப் பெண்மணி.
'உடல்நலமில்லாமல் ஓய்வு கொள்ளப் போன இடத்திலும் கூட பூரணியைக் கவலையின்றி நிம்மதியாய் இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான் அரவிந்தன். இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. மணி ஏழே முக்காலை எட்டிய சமயம், சிறிது நேரத்தில் மீனாட்சிசுந்தரம் வந்து சேர்ந்தார்.
"இப்படி உள்ளே வா அரவிந்தன்! நான் பேசவேண்டிய விஷயம் மிக அந்தரங்கமானது. உன்னுடைய உதவியில்லாமல் இந்தத் தீர்மானத்தையும், நினைவையும் நான் நிறைவேற்றிக் கொள்வதற்கில்லை. இதனால் நமது தொழிலும் செல்வாக்கும் பெருகலாம். எத்தனையோ இலாபங்களும் சௌகரியங்களும் சுலபமாகக் கிடைக்க இது ஒரு வழி" விஷயத்தை விண்டு சொல்லாமல் பூடகமாகவே பேசிக் கொண்டு போனார் அவர். "என்ன விஷயமென்று நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவருடைய மேசைக்கு முன்னால் நின்றான் அரவிந்தன்.
"முதலில் நீ உட்கார்ந்து கொள்!"
அரவிந்தன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான்.
"நான் கேட்பதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே! பூரணி நீ சொன்னால் எதையும் தட்டமாட்டாள் அல்லவா?"
எதற்காக, ஏன், என்ன நோக்கத்தோடு இதை அவர் கேட்கிறாரென விளங்காமல் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான்.
--------------------------
குறிஞ்சி மலர்
19
குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனை
வண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்
கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே.
-- திருஞானசம்பந்தர்
"நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்..."
இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப் பின்புறம் கோர்த்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மனத்தில் திட்டங்களும் தீர்மானங்களும் உலாவும் போது கால்களையும் இப்படி உலாவவிட்டுப் பழக்கம் அவருக்கு.
"என்னப்பா இது? நான் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறேன், உன்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடப் பதில் வரவில்லையே!"
"நீங்கள் சொல்வது என்னவென்று நான் சரியாக விளங்கிக் கொள்வதற்கு முன்னால் எப்படிப் பதில் பேச முடியும்?"
"அதுதான் சொன்னேனே, அரவிந்தன்! பூரணி நீ சொன்னால் எதையும் மறுக்காமல் சம்மதிப்பாள் அல்லவா? முதலில் இது எனக்குத் தெரிய வேண்டும்."
"நான் சொன்னால் தான் கேட்பாள் என்பதென்ன? நீங்கள் சொன்னாலும் கேட்கக்கூடியவள் தானே?"
"அப்படியில்லை! இந்தக் காரியத்தை நீதான் என்னைக் காட்டிலும் தெளிவாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். ஒப்புக் கொள்ளச் செய்யவும் முடியும்!"
"எதற்கு ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும்?"
"அவசரப்படாதே! நானே சொல்லிக் கொண்டு வருகிறேன். கவனமாகக் கேள்!"
தனது கூர்ந்து நோக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று சேர்த்து அவர் முகத்தையே பார்த்தான் அரவிந்தன். அவர் தொடர்ந்தார். "இன்னும் ஏழெட்டு மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது."
"ஆமாம் வருகிறது."
"அரசியல் துறையில் ஈடுபடுகிறவர்களும், பதவி வகிக்கிறவர்களும், இன்று நாட்டில் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் புகழும் குவித்து மாமன்னர்களைப் போல் வாழ்கிறார்களென்பதை நீயே நன்கு அறிவாய்."
"அறிவேன், அதற்காக..."
"நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் இப்போது சொல்ல இருப்பதைக் கேட்பதற்கு முன்னாலேயே அதன்மேல் உனக்கு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டாகிவிட்டாற்போல் தோன்றுகிறதே?"
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் மேலே சொல்லுங்கள்."
"நான் உன்னை எதற்காகவோ வற்புறுத்தி ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே! நல்ல சமயத்தில் இந்த யோசனை என் மனத்தில் உருவாயிற்று. நகரத்தில் முக்கியப் பிரமுகர்கள் எல்லோருக்குமே இந்த யோசனைப் பிடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று ஆமோதித்துக் கூறி எல்லோருமே ஒத்துழைப்பதாகச் சொல்கிறார்கள். பணச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் தாங்க முடியும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது"
"நீங்கள் தேர்தலுக்கு நிற்கப் போகிறீர்களா?"
"நானா? விளங்கினாற் போலத்தான் விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பாவா என்கிறாயே. நான் நின்றால் ஜாமீன் தொகை இழக்க வேண்டியது தான். எனக்கு ஏது அத்தனை பேரும் புகழும்?"
"பின் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?"
"இன்னும் உனக்குப் புரியவில்லையா, அரவிந்தன்? பூரணியை வடதொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தலாம் என்பது என் திட்டம். அவள் நின்றால் நிச்சயம் ஆகிவிடும். மேடை மேடையாகப் பேசிப் புகழும் பெருமதிப்பும் பெற்றிருக்கிறாள். அவள் போய்ப் பேசாத கிராமங்கள் இல்லை. அநேகமாகத் தொகுதியின் எல்லாப் பிரதேசங்களிலும் அவளை நல்லமுறையில் தெரிந்திருக்கிறது."
"சுதந்திரம் பெறுகின்றவரை தொண்டாக இருந்த அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. பூரணியைப் போன்ற ஒரு நல்ல பெண்ணைச் சூதும் வாதும் நிறைந்த அழுக்கு மயமான அரசியல் பள்ளத்தில் இறங்கச் சொல்கிறீர்களே! இப்போது அவள் பெற்றிருக்கும் பேரும் புகழும் அவளுடைய தமிழறிவுக்காகவும், தன்னலமற்ற சமூகத் தொண்டுக்காகவும், தன்னலமற்ற பேரறிஞர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் என்பதற்காகவும் அவளை அடைந்தவை. அரசியலில் ஈடுபடுவதன் காரணமாகவே அவள் இவற்றை இழக்க நேர்ந்தாலும் நேரலாம். தவிர இந்த நூற்றாண்டில் முதல் இல்லாமல் லாபம் சம்பாதிக்கிற பெரிய வியாபாரம் அரசியல் தான். பண்புள்ளவர்கள் அந்த வம்பில் மாட்டிக் கொள்ளாமல் சமூகப் பணி செய்து கொண்டிருப்பதே நல்லது. மேலும் பூரணி இப்போது முழு நோயாளியாகி ஓய்வு கொள்ளப் போயிருக்கிறாள். அவள் கொடைக்கானலிலிருந்து திரும்ப மாதக்கணக்கில் ஆகும் அவளுடைய நிம்மதியைக் குலைத்து இதில் கவனம் செலுத்தச் செய்வது நல்லதாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?"
"அவளுக்கு ஒரு சிரமமும் இல்லையே? வந்து அபேட்சை மனுத்தாக்கல் செய்து விட்டுப் போனால், மறுபடியும் தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது திரும்பவும் வந்து நாலு இடங்களில் பேசினால் போதும். மற்ற காரியங்களையெல்லாம் நாம் பார்த்துக் கொள்கிறோம். நீ இருக்கிறாய். அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டான் இருக்கிறான். ஒரு நாளைக்கு நூறு கூட்டம் போட்டு பேசச் சொன்னாலும் அந்தப் பையன் சளைக்காமல் பேசுவான். பிரச்சாரமே அதிகம் வேண்டாம். ஒரு பெண் தேர்தலுக்கு நிற்கிறாள் என்பதே போதும். பூரணியைப் போல் இத்தனை பேருள்ள பெண் நிற்கிற போது போட்டியிருந்தாலும் வலுவிழந்து போகும். நீ என்ன நினைக்கிறாய் அரவிந்தன்? இதில் உனக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?"
"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால்..."
"ஆனால் என்ன ஆனால்?... தைரியமாக எனக்கு நல்ல முடிவு சொல்! பூரணியைப் போல் நல்லவர்கள் நுழைவதாலேயே அரசியல் நிலை சீர்திருந்தலாமல்லவா! தான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகிற புனிதத் தன்மைதான் அவளிடம் இருக்கிறதே! அப்படி இருக்கும் போது நாம் ஏன் அஞ்சவேண்டும்?"
"நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது."
"இதோ பார், அரவிந்தன்! இந்தக் காரியத்தை இவ்வளவு அலட்சியமாக நீ கருதலாகாது. என் மானமே இதில் அடங்கியிருக்கிறது. நகரத்துப் பெரிய மனிதர்கள் அடங்கிய கூட்டத்தில் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். பூரணியை நிறுத்தினால் தான் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்குமென்று எல்லோரும் நம்புகிறார்கள். அடுத்த ஞாயிறன்று தேர்தல் பற்றிய தீர்மானங்களுக்காக மறுபடியும் நாங்கள் சந்திக்கிறோம். அன்று அவர்களுக்கு இதுபற்றி உறுதி சொல்வதாக நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன்." மீனாட்சிசுந்தரத்தின் குரல் திட்டமாக உறுதியாக - சிறிதளவு கண்டிப்பும் கலந்து ஒலித்தது.
"இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் போதுமான அரசியல்வாதிகளும் தலைவர்களும் இப்போதே இந்த நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் விவேகானந்தர் போல், ராமலிங்க வள்ளலார் போல் ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் ஆன்ம எழுச்சியையும் உண்டாக்குகிற ஞானிகள்தான் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் இந்த நாட்டில் தோன்றவில்லை. தயவு செய்து பூரணியையாவது இந்த வழியில் வளர விடுங்கள்? அரசியல் சேற்றுக்கு இழுக்காதீர்கள்." சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினான் அரவிந்தன். இவ்வளவு உறுதியாக வேறெந்தக் காரியத்துக்கும் அவன் இதற்குமுன் அவரிடம் மன்றாடியதில்லை. அவரை எதிர்த்துக் கொண்டு கருத்து மாறுபட்டு வாதாடியதுமில்லை. அவர் அவனுக்குப் படியளப்பவர். அவரிடம் பணிவும் நன்றியும் காட்ட வேண்டியது அவன் கடமை. அவருக்கு அறிவுரை கூறுவது போல், அவருக்கு முன்பே தன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு பேசலாகாது. ஆயினும் உணர்ச்சிவசப்பட்டுச் சற்று அதிகமாகவே பேசியிருந்தான் அவன்.
மீனாட்சிசுந்தரம் அயர்ந்து விடவில்லை. அவன் அருகே வந்தார். மெல்லச் சிரித்தார். வாஞ்சையோடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். தணிந்த குரலில் அவனை நோக்கிக் கூறலானார். "அரவிந்தன்! பச்சைக் குழந்தை மாதிரி அநாவசியமான கவலையெல்லாம் நினைத்துக் கலங்குகிறாயே! உன்னைப் போலவே எனக்கும் பூரணியின் எதிர்கால நலனில் மிகவும் அக்கறை உண்டு. அவளுக்குக் கெடுதல் தருவதை நான் கனவில் கூட நினைக்க மாட்டேன். வெற்றியைத் திடமாக நம்பிக் கொண்டு தான் நானும் இதில் இறங்குகின்றேன். ஆயிரக்கணக்கில் பணம் தண்ணீர் போல் செலவழியும். நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலம் முழுவதும் விற்றுத் தேர்தலில் போடப்போகிறேன். வைகைக் கரையில் அயனான நன்செய் விலைபோகிறது. பூரணியைத் துன்பப்படுத்துவதற்கா இவ்வளவு செய்வேன்? இத்தனை வருஷங்களாகப் பெற்ற பிள்ளை போல் என்னிடம் பழகுகிறாயே? உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படியானால் அப்புறம் உன் இஷ்டம்."
சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு ரோஜாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். "இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு போச்சு" என்று அரவிந்தன் மட்டும் தான் அங்கிருப்பான் என்னும் எண்ணத்தில் இரைந்து கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த முருகானந்தம் மீனாட்சிசுந்தரம் இருப்பதைக் கண்டு கூச்சமடைந்தான்.
"வா தம்பி! நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உனக்கு ஆயுசு நூறு! இப்போதுதான் சற்று முன் அரவிந்தனிடம் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று அவரே தாராளமாக வரவேற்ற பின்புதான் முருகானந்தம் கூச்சம் தணிந்து இயல்பு நிலையை அடைந்தான். தன்னுடைய கோடைக்கானல் கடிதப் போக்குவரவு விவகாரத்தை மீனாட்சிசுந்தரம் வரை எட்டவிட்டு அவரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு தன்னை விசாரிக்க அரவிந்தன் காத்திருக்கிறானோ என்னும் தயக்கமும் முருகானந்தத்தின் கூச்சத்துக்கு ஒரு காரணம். அப்படி இல்லை என அப்போதே தெரிந்தது. "இப்போது அவசரமில்லை அரவிந்தன்! உனக்கு நிதானமாக யோசிக்க கொஞ்ச நேரம் தருகிறேன். நீ இந்தத் தம்பியையும் கலந்து சிந்தித்துக் கொண்டு நாளைக்குக் காலையில் எனக்கு முடிவு சொன்னால் போதும். அப்புறம் உன்னையே கோடைக்கானலுக்கு அனுப்புகிறேன். பூரணியையும் ஒரு வார்த்தை கேட்டுத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம். எனக்கு வீட்டுக்குப் போக நேரமாயிற்று. நான் வருகிறேன். காலையில் பார்க்கலாம்" என்று அவர்கள் இருவரையும் தனிமையில் அங்கு விட்டுவிட்டுக் கிளம்பினார் மீனாட்சிசுந்தரம். அவரை வழியனுப்பும் பாவனையில் எழுந்திருந்த அரவிந்தனும் முருகானந்தமும், வாயில் வரை உடன் போய்விட்டுக் கார் புறப்பட்டதும் உள்ளே திரும்பி வந்தார்கள். திரும்பியதும் கன்னத்தில் கையூன்றியபடி முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல் தெரிய நாற்காலியில் சாய்ந்தான் அரவிந்தன். அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் புரியாமல் முருகானந்தம், "என்னப்பா இது? கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்தில் கையூன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டாய்? 'பெரியவர்' என்ன சொல்லிவிட்டுப் போகிறார் உன்னிடம்? ஏதோ என்னையும் கலந்து கொண்டு காலையில் முடிவு சொல்லும்படிக் கூறிவிட்டுப் போகிறாரே என்ன அது?" என்று கேட்டான்.
'முருகானந்தம்-வசந்தா தொடர்பு எப்போது எந்தவிதத்தில் ஆரம்பமாகிக் கடிதங்கள் எழுதிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது' என்று அவனையே விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்டிக்க வேண்டுமென்று அரவிந்தன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த நினைவே முற்றிலும் மறந்து போய்விட்டிருந்தது அவனுக்கு. மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தும் விஷயம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனதிலிருந்து அவன் அதைப் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விட்டான்.
முருகானந்தம் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் மீனாட்சிசுந்தரம் தன்னிடம் கூறியவற்றைச் சுருக்கமாக அவனுக்குச் சொன்னான் அரவிந்தன். அவன் நினைத்தது போல் முருகானந்தம் வருத்தமோ, திகைப்போ அடையவில்லை.
"பூ! இதற்குத்தானா இப்படிக் கவலைப்படுகிறாய்? மகிழ்ச்சிப்பட வேண்டிய செய்தி இது! பூரணியக்கா அரசியலில் புகுந்தால் அரசியலில் இருக்கிற களங்கங்கள் அழிந்து அரசியலுக்கே நல்ல பேர் ஏற்பட்டுவிடும். உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நன்றாகச் சிந்தித்துக் காரணத்தோடு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது இந்த முடிவு" என்று உற்சாகம் பொங்க மறுமொழி தந்தான் முருகானந்தம். உடனே அரவிந்தன் சினமடைந்து பேசலுற்றான்.
"நீங்கள் எல்லோரும் அரசியல் இயக்கம் வளரவேண்டுமென்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். நானோ ஒழுக்கமும் பண்பாடும் வளர்வதற்கு ஓர் இயக்கம் வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த இரண்டாவது இயக்கத்தை வேரூன்றி வளர்க்க இன்று இந்தத் தேசத்தில் ஆளே கிடைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீ என்றுமே அரசியல்வாதி என்பது எனக்குத் தெரியும் முருகானந்தம். உன்னிடமிருந்து இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்."
"இரண்டையும் வேறு வேறு இயக்கங்களாக நீ நினைப்பதால் தான் உனக்கு இந்தக் குழப்பம் உண்டாகிறது அரவிந்தன். முதல் இயக்கம் சரியாக இருந்தால் இரண்டாவது இயக்கமும் சரியாயிருக்கும். பூரணி அக்காவிடம் இந்த இரண்டு இயக்கங்களுக்குமே பாடுபடத் தகுதி இருக்கிறது. இதை நான் உறுதியாய் நம்புகிறேன்."
"தகுதி இருக்கிறது என்பதற்காக அவளுடைய நிம்மதியையும், சுகத்தையும் பாழாக்கலாமா? அவளுக்கு எப்போதுமே தன் சுகத்தைக் கவனித்துக் கொள்ளத் தெரியாது. அன்றைக்குத் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்துப் பேசியதன் விளைவை நீயே பார்த்தாயே! அப்படி இருந்தும் இந்த ஆறு மாத ஓய்வு முடிந்து வந்தவுடன் அவளைத் தேர்தல் போர்க்களத்தில் குதிக்கச் செய்ய திட்டமிடுகிறீர்களே!" இதைச் சொல்லும்போது அரவிந்தனின் குரலில் பூரணியிடம் அவனுக்குள்ள பாசம் முழுவதும் கனிந்து ஒலித்தது. பூரணியின் மேல் இவ்வளவு அதிகமாக அனுதாபப்படுகிற உரிமைகூட அவனுக்குத்தான் உண்டு. அவன், அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறொருவருக்கும் இனி என்றும் கிடைக்க முடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அனுதாபத்தை மறைக்க முடியாமல் தவித்தான்.
"இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது. பூரணியக்காவைப் போல் பண்பும் ஞானமும் உள்ள ஒருவர் அதில் ஈடுபடுவது எல்லாத் துறைகளுக்கும் நல்லது தான் அரவிந்தன்" இப்படி நீண்ட நேரம் ஏதேதோ பல நியாயங்களை எடுத்துச் சொன்னான் முருகானந்தன். அரவிந்தன் பேசி அவன் மாணவ நிலையிலிருந்து கேட்பது தான் வழக்கம். அன்று அவ்வழக்கம் மாறியமைந்து விட்டது.
"இதில் எனக்கென்ன வந்ததப்பா? அவரும் சொல்கிறார். நீயும் அதையே ஒத்துப் பாடுகிறாய். அவளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்" என்று மறுப்பின் வேகம் குறைந்து தளர்ந்தாற்போல் பட்டுக்கொள்ளாமல் சொன்னான் அரவிந்தன்.
மறுநாள் மீனாட்சிசுந்தரம் வந்த கேட்டபோதும் இதே மாதிரி மனம் தழுவாமல், பட்டுக் கொள்ளாத விதத்தில்தான் பதில் சொன்னான் அவன். ஆனால் அவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் கடுமையாக வற்புறுத்தினார்.
"யாருக்கு வந்த விருந்தோ என்கிறார் போல் நீ இப்படி ஒட்டுதல் இல்லாமல் பேசுவதாயிருந்தால் நான் இப்போதே இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விடுவேன். ஒன்றும் தலைக்குக் கத்தி வந்து விடாது. நாலு பெரிய மனிதர்களுக்கு நடுவில் என் மானம் போகும். போனால் போகட்டும். உங்களுக்கெல்லாம் இல்லாதது எனக்கு மட்டும் என்ன. நீ இதற்கு ஒத்துக் கொண்டு எனக்கு உதவி செய்வதாயிருந்தால் இரண்டு நாட்கள் கழித்துக் கோடைக்கானல் போய்க் கேட்டுச் சம்மதம் வாங்கிக் கொண்டு வா. முடியாவிட்டால் முடியாதென்று இப்போதே சொல்லிவிடு."
அரவிந்தன் அரைமனத்தோடு கோடைக்கானல் போய்ப் பூரணியைக் கேட்டுக் கொண்டு வர இணங்கினான். இணங்காவிட்டால் அவர் ஆளை விட மாட்டார் போல் இருந்தது.
மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் வையைக் கரைமேல் உள்ள 'திருவேடகம்' என்ற அழகிய ஊராகும். அது தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரையில் குடியேறி விட்டாலும், நிலங்கரைகள், தோப்புத்துரவு, ஒரு வீடு எல்லாம் அங்கு அவருக்கு இருந்தன. வீட்டைத் தேவாரப் பாடசாலைக்கு விட்டிருந்தார். பத்து பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு போட்டுத் தேவாரம் கற்றுக் கொடுத்து வரும் பாடசாலை ஒன்றைத் தம் பொறுப்பில் அங்கு நடத்தி வந்தார் மீனாட்சிசுந்தரம். குடும்பத்தில் பரம்பரைக் கட்டளை போல் அந்தப் பாடசாலைக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்கப் பெற்றிருந்தது. அவருடைய முப்பாட்டனார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலை அது. இன்னும் ஒழுங்காக நடந்து கொண்டு வருகிறது.
திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விஷயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை அவனையும் கூட்டிக் கொண்டு திருவேடகத்துப் புறப்பட்டு விட்டார் அவர்.
மதுரைச் சீமையில் சோழவந்தானுக்கு அருகிலிருந்த வையை நதியின் வடபுறமும், தென்புறமும் அமைந்துள்ள பசுமை மயமான கிராமங்களின் அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது. 'வையை' என்னும் 'பொய்யாக் குலக்கொடி' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறாரே, அந்த வையை நல்லாளின் சீரிளமைத்திறம் காணவேண்டுமானால் தென்னஞ்சோலைகளுக்கு நடுவே அவள் அன்ன மென்னடை நடந்து கன்னிமை ஒயில் காட்டிக் கலகலத்து ஓடும் இப்பகுதியில் காண வேண்டும். பசுமைப் பூத்து எழுந்த வனத்தின் தூண்களை நட்டுப் பயிர் செய்தாற்போல் வாழைத் தோட்டங்கள், போகம் போகமாய் வெறும் நிலம் காண நேரமின்றிப் பசுமை காட்டி விளையும் நெற்கழனிகள், பசுமை குன்று புடைத்தெழுந்தாற் போல செறிந்து தெரியும் கொடிக்கால்கள். அந்தப் பகுதியில் வையைக் கரையின் ஒவ்வொரு கிராமமும் ஓர் இன்பக் காவியம். ஒவ்வொரு காட்சியும் ஒரு சொப்பன சௌந்தரியம். இந்தப் பகுதியின் வையைக் கரை மண்ணில் பிறந்தவரைப் போல் பெருமையும் கர்வமும் கொள்ளத் தகுதியுடையவர் வேறெங்குமே இருக்க முடியாதென்பது மீனாட்சி சுந்தரம் அவர்களின் திடமான எண்ணம். திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு அருகில் சமணர்களோடு புனல்வாதம் புரிந்த காலத்தில் அவர் இட்ட ஏடு வையை நதியை எதிர்த்துச் சென்று கரையேறிய தலமாதலால் அந்த ஊருக்குத் 'திரு ஏடகம்' என்று பெயர் ஏற்பட்டிருந்தது. இதற்கு முன்பும் இரண்டு மூன்று அதிகாலையில் அவரோடு திருவேடகத்துக்குக் காரில் வந்திருக்கிறான் அரவிந்தன். அங்கு வரும்போதெல்லாம் அவனைக் கவர்ந்து மனதை அடிமை கொள்வன அந்தத் தேவாரப் பாடசாலையும், அதன் இயற்கைச் சூழ்நிலையும் தான்.
நகரச் சந்தடியின் ஓசை ஒலியற்ற அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்தப் பெரிய தென்னஞ்சோலைகளுக்குள்ளிருந்து தலைநீட்டும் கோபுரத்தின் அருகேயிருந்து தெய்வமே குரல் எடுத்து அழைப்பது போல், 'குண்டலந்திகழ்தரு காதுடைக் குழகனை' என்று அற்புதமான பண்ணில் ஞானசம்பந்தரின் பாடலை இளங்குரல்கள் பாடுகிற ஒரே ஒலிநாதம் என்கிற மதுரசக்தியே விண்ணிலிருந்து அந்தத் தோப்புக்குள் சன்னமாக இழைந்து குழைந்து உருகிக் கொஞ்சமாய் அமுத இனிமையுடன் ஒழுகிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கும். இந்த அனுபவத்தில் தோய்வதை அரவிந்தன் பேரின்பமாகக் கருதினான். தொலைவிலிருந்து பார்க்கும் போது ஊர் தெரியாது. தென்னை மரங்களின் பரப்புக்கு மேலே அந்தப் பசுமைப் பரப்பையே தனமாகக் கொண்டு முளைத்துப் பூத்தாற் போல் கோபுரம் மட்டும் தெரியும். அங்கு வரும்போதெல்லாம், 'இந்தக் கோபுரம், இந்தத் தேவாரக் குரல் ஒலி, இந்த எளிமை அழகு பொங்கும் தெய்வீகச் சிற்றூர்கள் இவைதான் தமிழ்நாட்டின் உயிர், பெருமை எல்லாம். இவை அழிந்த தமிழ்நாடு தமிழ்நாடாக இராது. இந்தப் பழைய அழகுகள் அழியவே கூடாது. இவற்றைக் கொண்டு பெருமைப்பட என்றும் தமிழன் கூசக்கூடாது, என்று மனமுருக அரவிந்தன் நினைப்பான். ஆனால் ஆடம்பர ஆரவாரங்களைக் கொழுக்கச் செய்து மனங்களை வளர்க்காமல் பணத்தை மட்டும் வளர்க்கும் நகரங்களின் வாழ்க்கை வேகத்திலும், அவசரத்திலும் இந்த அழகுகளைத் தமிழர்கள் மறந்தும், மறைத்தும் எங்கோ போய்க் கொண்டிருப்பதை நினைக்கும்போது அவன் உள்ளம் நோகும். 'ஏடகம் கண்டு கைதொழுதால் கவலை நோய் அகலும்' என்று சம்பந்தர் பாடியிருந்தார். உண்மையிலேயே கவலையைப் போக்குகிற ஏதோ ஒரு ஆற்றல் அந்த ஊரின் செயற்கை அழுக்குகள் படியாத இயற்கை அழகில் இருப்பதை அரவிந்தன் உணர்ந்தான். நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் ஆள் புழக்கமற்ற பெரிய தென்னந்தோப்பு ஒன்றில் பேதைப் பருவத்துச் சிறுமி ஒருத்தி தனியாகப் புகுந்து மருண்டு ஓடுவது போல் வையை நதி அந்தப் பிரதேசத்தில் பாய்ந்தோடுகிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே! ஆற்றின் இருகரையும் நிறைய ஆணவம் பொங்கிடப் பாய்கிற வழக்கம் வையையிடம் இல்லை. புது மணப்பெண் நடந்து செல்லுகிற மாதிரி ஒல்கி ஒசிந்து ஓர் ஓரமாகப் பாய்ந்து செல்வது வையையின் அடக்கத்துக்கு ஓர் அடையாளமோ?
தேவாரப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீனாட்சி சுந்தரமும், அரவிந்தனும் ஏடகநாதரை வழிபடச் சென்றார்கள். அம்மன் சந்நிதியில் பூக்கட்டி வைத்துப் பார்ப்பதென்று திட்டம். 'ஏலவார் குழலி அம்மை' என்று எழில் வாய்ந்த தமிழ்ப்பெயர் திருவேடகத்து அம்மனுக்கு. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கட்டியதாக தல வரலாறு கூறும் அந்தக் கோயிலை பின்னாளில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பெரிதாக்கி அழகுபடுத்தி இருந்தார்கள். தமிழ்நாட்டுத் திருத்தலங்களில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு கல்தூணும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்குமே!
கோயிலுக்குள் மீனாட்சிசுந்தரம் அவனைக் கேட்டார். "என்னுடைய வழக்கம் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. இந்தக் கோயிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்தபின் முடிவு நன்றாக இருந்தால் நான் எதையுமே நிறுத்த மாட்டேன். எப்பாடுபட்டாவது அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவேன். இப்போது இங்கே அம்மனுடைய தீர்ப்பு எப்படி ஆகிறதோ அப்படியே செய்வதற்கு நீயும் இணங்குகிறாய், நீயும் கட்டுப்படுகிறாய் அரவிந்தன்! என்ன? உனக்குச் சம்மதந்தானே?"
அரவிந்தனுக்குச் சமய நம்பிக்கை உண்டு, ஆனால் சடங்குகளில் நம்பிக்கை குறைவு. அந்தச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்கலாகாதே என்பதற்காகச் 'சம்மதந்தான்' என்று சொல்லி வைக்க வேண்டியதாயிற்று அவர்கள் ஏலவார் குழலியம்மன் சந்நிதிக்கு முன் நின்றார்கள்.
"இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை" என்று சொல்லிப் பூக்களை அவனிடம் காட்டி விட்டு இலையில் வைத்து ஒரே அளவாக முடிந்து குலுக்கிப் போட்டார் அவர். எலிவால் பின்னலும் அழுக்குப் பாவாடையுமாக அம்மன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கூப்பிட்டு, "இந்த இரண்டு பொட்டலங்களில் உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடு, பாப்பா!" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம். சிறுமி சிரித்துக் கொண்டே இரண்டு முடிச்சுக்களையும் பார்த்து இரண்டில் எதை எடுப்பதென்று தயங்கி நின்றாள். பின்பு குனிந்து ஒரு முடிச்சை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.
"என்ன பூ என்று நீயே பிரித்துப் பார், அரவிந்தன்!" என்று அவனுடைய கையில் அதை அப்படியே கொடுத்தார் அவர். அரவிந்தனின் உள்ளம் ஆவலும் துடிப்பும் கொண்டு தவித்தது! தவிப்போடு பிரித்தான்.
வெள்ளை வெளேரென்று பச்சை இலைக்கு நடுவே நந்தியாவட்டைப் பூ சிரித்தது! 'நீ தோற்றுவிட்டாய்' என்று சொல்வது போல் சிரித்தது! மீனாட்சிசுந்தரமும் சிரித்தார்.
"தெய்வசித்தமும் என் பக்கம் தானப்பா இருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவே முடியும்! நீ நாளைக்குக் காலையில் கோடைக்கானல் புறப்படுகிறாய். உன்னோடு அந்த முருகானந்தத்தையும் அழைத்துக் கொண்டு போ. இருவரும் எப்படியோ எடுத்துச் சொல்லி பூரணியைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும். உன்னால் முடியும்! நான் இன்று மாலையே உங்கள் வரவு பற்றிப் பூரணிக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து விடுகிறேன்..." என்று பெருமை பொங்கச் சொன்னார் அவர். அரவிந்தன் மௌனமாக 'ஆகட்டும்' என்பது போல் தலையசைத்தான்.
அவர்கள் இருவரும் திருவேடகத்திலிருந்து மதுரை திரும்பி வந்தனர். 'ஒரு முக்கியமான காரியமாகச் சந்தித்துப் பேசிவர அரவிந்தனை அனுப்புவதாக' அன்று மாலையில் கோடைக்கானலுக்கு தந்தி கொடுத்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.
------------------------
குறிஞ்சி மலர்
20
"ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்
பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்
தானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்"
-- தேவாரம்
மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்டஸ் மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச் செல்கின்றவர்களும், படகு செலுத்த வந்தவர்களுமாக ஏரிக்கரையில் நல்ல கூட்டம். நடக்க இயலாதவர்களையும் உட்கார வைத்துக் காற்று வாங்க அழைத்துச் செல்லும் குதிரைக்காரர்கள் தத்தம் மட்டக் குதிரைகளோடு நின்றனர்.
பூரணியும் வசந்தாவும் ஏரியில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரையில் படகில் சுற்றிவிட்டுக் கரையேறினார்கள். குளிருக்கு அடக்கமாக இருவரும் முழுநீளக் கம்பளிக் கோட்டு அணிந்திருந்தார்கள்.
"அக்கா! சிறிது நேரம் இந்தக் குதிரையில் ஏறிச் சவாரி செய்ய வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா? இரண்டு குதிரைகள் வாடகைக்குப் பேசுகிறேன்" என்று உற்சாகத் துள்ளலோடு நடந்து கொண்டே கேட்டாள் வசந்தா. அந்தப் பெண் இருந்தாற் போலிருந்து துள்ளித் திரியும் புள்ளிமான் குட்டியாக மாறிவிட்டாளே என்று வியந்தாள் பூரணி. கார் காலத்து முல்லைப் பூப்போல் ஒரு பெண்ணின் முகத்திலும், விழியிலும், நடையிலும் இத்தனை புது வனப்புப் பொலிய வேண்டுமானால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பூரணி அந்தக் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஆனால் படித்த பெண்ணிடம் நேரடியாக அதைப் பற்றிக் கேட்பது அநாகரிகமாக முடிந்துவிடுமே என்றும் தயங்கினாள். எனவே 'அந்தக் கடிதம் யாரிடமிருந்து வசந்தாவுக்கு வந்தது? அதில் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக என்ன இருக்கிறது?' என்பன போன்ற ஐயங்களை வாய்விட்டுக் கேட்காமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
"படகில் சுற்ற வேண்டுமென்றாய்! சுற்றியாயிற்று இப்போதென்னடா என்றால் குதிரையேறிச் சுற்ற வேண்டுமென்கிறாய்? மறுபடியும் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதே வசந்தா. இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். உன் மகிழ்ச்சியின் காரணத்தை நானும் அறிந்து கொள்ளலாமா?" என்று மெதுவாக அவளிடம் கேட்டாள் பூரணி.
வசந்தாவின் முகம் அழகாகச் சிவந்தது. இதழ்களில் நகை சுரந்து நின்றது. "போங்கள் அக்கா, எதையோ சொன்னால் வேறு எதையோ கேட்கிறீர்கள் நீங்கள். நான் குதிரையில் ஏறிச் சுற்றப் போகிறேன்" என்று பூரணிக்குப் பதில் சொல்லிவிட்டுக் குதிரைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் வசந்தா.
"அழகுதான் போ! குதிரையேறிச் சுற்றுவதற்கு நீயும் நானும் பச்சைக் குழந்தையா என்ன?"
"நீங்களும், நானும் மட்டுமில்லை அக்கா? இந்த மலைக்கு வந்துவிட்டால், எத்தனை வயதானாலும் பச்சைக் குழந்தையின் உற்சாகம் வந்து விடும். அதோ அங்கே பாருங்கள்."
வசந்தா சுட்டிக் காட்டிய திசையில் பூரணி பார்த்தாள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும், அவள் கணவர் போல் தோன்றிய வெள்ளைக்காரரும் செழிப்பாக உடற்கட்டுள்ள செவலைக் குதிரைகளில் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். உண்மைதான்! மலைச்சரிவிலும் கடற்கரையிலும் மனிதனுக்கு வயது மறந்துவிடுகிறது என்பது சரியாயிருக்கிறதென்று நினைத்துக் கொண்டாள் பூரணி.
வசந்தா மட்டும் குதிரையில் சுற்றி விட்டு வந்தாள். 'கோக்கர்ஸ் வாக்' என்று மலை உச்சியில் ஒரு சாலை சரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் மதுரைச் சீமையின் தரைப்பகுதி ஊர்கள் ஒளிப்புள்ளிகளாய் இருளில் தெரிந்தன. அதையும் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். ஏழரை மணியாவதற்குள்ளேயே குளிர் அதிகமாகி மலையை மஞ்சு மூடத் தொடங்கியிருந்தது. பூரணிக்கு குளிர் தாங்க முடியவில்லை. அன்று இரவு சாப்பாட்டை விரைவில் முடித்துக் கொண்டு அரவிந்தன் அனுப்பியிருந்த புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படித்து முடித்து விடலாமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
அங்கே தோட்டத்தில் மரு தோன்றிச் செடிகள் (மருதாணி) நன்றாகத் தழைத்து இலை விட்டிருப்பதைப் பூரணி வந்த அன்றே கவனித்தாள். கையில் மருதோன்றி அரைத்து அப்பிக் கொண்டு மறுநாள் காலை உள்ளங்கை பவழமாகச் சிவந்திருப்பதைக் கண்டு மகிழ்வதில் சிறு வயதிலிருந்து அவளுக்குப் பித்து உண்டு. அப்பா இறந்த பின் இவ்வளவு காலமாகக் கைக்கு மருதோன்றி இட்டுக் கொள்ளும் வாய்ப்பே ஏற்படவில்லை. அவளுக்குப் பலவிதமான வாழ்க்கைக் கவலைகளால் அந்த நினைப்பே வந்ததில்லை. அப்பா இருந்தால் கணக்குப் பாராமல் இரண்டு படி மூன்று படி என்று மருதோன்றி இலையைப் பைநிறைய வாங்கிக் கொண்டு வந்து கொட்டுவார்.
"உன்னுடைய சிவப்புக் கைகளுக்கு அது தனி அழகு அம்மா! அரைத்து இட்டுக் கொள். உள்ளங்கையில் பவளம் பூத்த மாதிரி மருதாணி நிறம் தெரிய வேண்டும்" என்று சொல்லி அவ்வளவையும் அரைத்து அப்பிக் கொண்டால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிப்பார் அப்பா. கோடைக்கானல் பங்களாத் தோட்டத்தில் அந்தச் செடியைப் பார்த்ததும் அவளுக்கே ஆசையாக இருந்தது. உடனே சமையற்கார அம்மாளிடம், "பாட்டி! உங்களால் முடிந்தால் ஒருநாள் சாயங்காலம் இந்த மருதாணியை நிறையப் பறித்து வெண்ணெய் போல் நன்றாக அரைத்து வைத்திருங்கள். படுத்துக் கொள்ளும் போது கையில் அப்பிக் கொண்டு படுத்துவிடலாம்" என்று அவள் சொல்லி வைத்திருந்தாள்.
சமையற்கார அம்மாளுக்கும் அன்று தான் அதைச் செய்வதற்குக் கை ஒழிந்தது போலும். படிக்கும் தாகத்தோடு மதுரையிலிருந்து வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணிக்கு அன்று படிக்க முடியாமலே போய்விட்டது.
"கைகளில் நன்றாக நிறம் பற்ற வேண்டுமானால் சீக்கிரமாகப் போட்டுக் கொண்டு தூங்கப் போய்விட வேண்டும்" என்று, பூரணியையும், வசந்தாவையும் உட்கார்த்தி உள்ளங்கையிலும், நகங்களிலும் கால் பாதத்தைச் சுற்றியும் மருதாணிக் காப்பு இட்டு ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டாள் சமையற்கார அம்மா. குளிரோடு மருதாணி ஈரமும் கைகளில் குறுகுறுத்தது. நெடுநேரம் பேசிக் கொண்டே படுத்திருந்த வசந்தாவும் பூரணியும் தங்களை அறியாமலேயே நன்றாக உறங்கிப் போய்விட்டார்கள்.
மறுநாள் காலை சிவப்பு நிறம் பதித்த உள்ளங்கைகளையும் நகங்களையும் அழகுபார்த்துக் கொண்டே பூரணி படிப்பதற்காகப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் படித்துக் கொண்டிருந்தபோது தபால்காரன் வந்து மங்கையர் கழகத்து முத்திரையோடு கூடிய உறையைக் கொடுத்துவிட்டுப் போனான். உறை கனமாக இருந்தது. உள்ளே இரண்டு மூன்று கடிதங்களை இணைத்து அதோடு தானும் ஒரு கடிதம் எழுதிப் பூரணிக்கு அனுப்பியிருந்தாள் காரியதரிசி அம்மாள்.
அவளுடைய புகழ் எங்கெங்கே பரவியிருக்கிறதென்பதையும் அவளது அறிவுச் செல்வத்தை எங்கெங்கோ உள்ள மக்கள் நுகர்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கடிதங்கள் அவளுக்கு உணர்த்தின. பூரணிக்கு அறிவின் பெருமிதம் மனம் நிறையப் பொங்கிற்று.
யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவதற்குப் பூரணியை அனுப்பி வைக்க வேண்டுமென்று மங்கையர் கழகத்துக் காரியதரிசியைக் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு கடிதம். நான்குமாதம் கழித்துக் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசியப் பெண்கள் பேரவையில் அவள் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கோரியது இன்னொரு கடிதம். தை மாதம் மலாயாவில் கோலாலம்பூரிலுள்ள தமிழர்கள் நடத்தும் பொங்கல் விழாவுக்கு வர வேண்டுமென்று மற்றொரு கடிதத்தில் கேட்டிருந்தது. 'உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்ராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால ஓய்வு உனக்கு இருக்கிறது. அது போதுமென்று நினைக்கிறேன். நீ இவைகளில் கலந்து கொண்டால் உனக்கு மட்டுமல்லாமல் நமது கழகத்திற்கும் பெருமை கிடைக்கிறது. 'பாஸ்போர்ட்' (வெளிநாட்டுப் பயண அனுமதி), 'விசா' முதலியவற்றுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய தாள்களும் இவற்றோடு அனுப்பியுள்ளேன். அவற்றை நிறைவு செய்து கையொப்பமிட்டு அங்கேயே சிறிது அளவில் உனது புகைப்படமும் எடுத்து உடன் அனுப்பினால் மற்ற ஏற்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். இந்தச் சந்தர்ப்பங்களை நீ இழக்கக்கூடாது. நன்றாகச் சிந்தித்து முடிவு செய். இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு மீனாட்சி அச்சகத்திலிருந்து உனது கோடைக்கானல் முகவரியைப் பெற்றுக் கொண்டேன்' என்று காரியதரிசி அம்மாள் எழுதி இருந்தாள்.
இரண்டு மூன்று முறை அந்தக் கடிதங்களைத் திரும்பத் திரும்பப் படித்தாள் பூரணி. சிந்தனையில் ஆழ்ந்தாள். கடுமையான பின்னக்கணக்கில் ஒழுங்காகவும் முழு எண்ணாகவும் விடை கிடைக்காதது போல் அவள் சிந்தனை ஒரு முழுமையான முடிவுக்கு வராமல் சுழன்றது.
'வாய்ப்பு வரும் போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்' என்று எப்போதோ அரவிந்தன் சொல்லியிருந்ததையும், அப்போது தான் அவனுக்கு மறுமொழி கூறியதையும் நினைத்தாள். இதை நினைத்த போது அவளது மாதுளை மொட்டுப் போன்ற இதழ்களில் நளின மென்னகை மெல்லெனத் தோன்றி மறைந்தது. அந்தச் சமயத்தில்தான் வசந்தா வந்தாள்.
"என்ன அக்கா, நீங்களாகவே சிரித்துக் கொள்கிறீர்கள்! எங்கே கொஞ்சம் முழங்கையை நீட்டுங்கள். அளவெடுத்துக் கொள்கிறேன். 'சீஸனு'க்காகப் புதிது புதிதாய் வளையல் கடைகள் வந்திருக்கின்றன. நான் போய் வளை அடுக்கிக் கொண்டு வரப் போகிறேன். உங்கள் கைக்கும் அளவு கொடுத்தீர்களானால் வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்" என்று அளப்பதற்காகப் பட்டு நூலை நீட்டிக் கொண்டே பூரணிக்கு அருகில் வந்து அமர்ந்தாள் வசந்தா. பூரணி அவள் ஆர்வத்தை மறுக்கக்கூடாது என்பதற்காகத் தன் முழங்கையை நீட்டினாள். மஞ்சள் கொன்றை நிறம் மின்னும் அந்த வனப்பான முன்கையும் வெண்ணெயைத் தீண்டினாற் போல் மென்மையான வெண்ணிற உள்ளங்கையில் சிவப்பு இரத்தினம் பதித்தாற்போல மருதோன்றிச் சிவப்பும் வசந்தாவுக்கே பொறாமையூட்டுவது போல் அழகு பொலிந்தன. ஒவ்வொரு விரல் நுனியும் ஒரு பவழ மணியாகி விட்டாற்போல் மருதோன்றி நிறம் பற்றியிருந்தது பூரணிக்கு.
"உங்கள் கையில் நன்றாக நிறம் பற்றியிருக்கிறதே அக்கா! இதோ என் கையைப் பாருங்கள்! நிறமே பற்றவில்லை" என்றாள் வசந்தா. பூரணிக்கு அதைக் கேட்டுச் சிரிப்பு வந்து விட்டது. "சில தேகவாகு அப்படி! மருதாணி பற்றாது" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.
வசந்தா வளைக்கடைக்குப் புறப்பட்டுப் போனபின் பூரணி மீண்டும் தன் நினைவுகளால் சூழப் பெற்றாள். கண்களை மெல்ல மூடிக்கொண்டு அரவிந்தனுடைய முகத்தை மனதில் நினைத்தாள். கண் முன் நிற்கிற உருவத்தைத்தான் திறந்த கண்களால் பார்க்க முடியும். கண் முன் நிற்காத உருவத்தைக் கண்களை மூடிக் கொண்டால்தான் காணமுடியும். கண்களை மூடிக்கொண்டு கண்முன் இல்லாத உருவத்தை மானசீகமாகக் காண முயல்வதற்குத்தான் தியான ஆற்றல் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தத் தியான ஆற்றல் எல்லோருக்கும் அமைவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாகக் கிடைக்கிற ஆற்றல் அது. பூரணிக்கு இந்த ஆற்றல் அதிகம். இன்று கூடக் கண்களை மூடிக்கொண்டு அம்மாவின் முகத்தை நினைத்தால் நினைத்தவுடன் அச்சுப்போல் அப்படியே அம்மாவின் முகம் உருவெளியில் தோன்றும். அப்பாவின் முகமும் அப்படித்தான். வேறுபட்ட கருத்துள்ள பலப்பல நூல்களைப் படித்து அவ்வளவையும் நினைவு வைத்துக் கொண்டு சிந்திக்கிற அறிவாளி போல் முகங்களை நினைவு வைத்துக் கொண்டு மனதுக்குள்ளேயே அவற்றைப் புரட்டிப் பார்க்கும் அற்புத சக்தியுள்ளவள் பூரணி.
ஒளியரும்பி மலர்ந்த கண்களும், நகையரும்பிச் சிரிக்கும் இதழ்களும், கூர்மையரும்பி நீண்ட எழில் நாசியுமாக அரவிந்தனின் அழகு முகம் அவளுடைய மூடிய கண்களுக்கு முன் உருவொளியில் தோன்றியது. பாலும் வெண்மையும் போல் சிரிப்பிலிருந்து தன்னையும், தன்னிலிருந்து சிரிப்பையும் பிரித்துக் கொள்ள முடியாத அரவிந்தனின் இதழில் இளநகை ஊறி வழிகிறது. சிவப்பு மொட்டு மலர்வது போல் அந்த வாய் மலர்கிறது.
"பூரணி! நீ உலகத்து வீதிகளில் உன்னுடைய புகழையும், நீ பிறந்த தமிழ்நாட்டின் புகழையும், பரப்புவதற்குப் பிறந்தவள்" என்று அவளை நோக்கிக் கூறுகிறான் அவன். 'எனக்கு அவ்வளவு சக்தி உண்டா?' என்று மலைக்கிறாள் அவள். "உன்னைப் பற்றி நீ நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் உன் ஆற்றல் பெரிதுதான். பூவின் வாசனை பூவுக்குத் தெரியாது" என்கிறான் அவன்.
நெஞ்சில் வந்து தைக்கும் அழகான புன்சிரிப்பு மட்டும்தான் அரவிந்தனுக்குச் சொந்தமென்பதில்லை. அழகான வாக்கியங்களில் அழகாக உரையாடும் திறமையும் அவனுக்கே சொந்தம் போலும்.
"அரவிந்தன்! நீங்கள் தீர்க்கதிரிசிதான். என்னைப் பற்றி எனக்கு எவ்வளவு அதிகமாகத் தெரியுமோ அதை விட அதிகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. பூவின் வாசனை பூவுக்குத் தெரியாதிருக்கிறது. நான் பூவா? அப்படியானால் நீங்கள் யார்? அப்பப்பா! எத்தனை பெரிய குறும்புக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்? சில வார்த்தைகளில், சிறிய வார்த்தைகளில் இவ்வளவு அர்த்தம் வைத்துப் பேசுகிற வித்தையை நீங்கள் எங்கே கற்றீர்கள்? நீங்கள் கவியல்லவா? எதையுமே சாதாரணக் கண்களால் உங்களுக்குப் பார்க்கத் தெரியாது. சாதாரணமாகப் பேசத் தெரியாது! சாதாரணமாக நினைக்கவும் தெரியாது!"
பூரணி கண்களைத் திறந்து பார்த்தாள். எதிர்ச் சுவரில் சுவரையே அடைத்துக் கொண்டு பெரிய நிலைக் கண்ணாடி. அதில் தெரிவது அவளுடைய அழகுதானா? எண்ணெய் நீராடியிருந்தாள். கூந்தலை விரித்து நுனி முடிச்சுப் போட்டிருந்தாள். கருமேகக் காடு விரிந்தாற் போல் கூந்தல் தரையினைத் தொடுகிறது. அந்தப் பெண் வசந்தா விளையாட்டாக ஒரு சிகப்பு ரோஜாவைப் பறித்து வலது பக்கத்துக் காதுக்கு மேல் விரித்த குழலில் சொருகி விட்டிருந்தாள். அந்தச் சிவப்புப் பூ கருங்கூந்தலில் எடுப்பாகத் தெரிந்தது. பூரணி இனம் புரியாததொரு பூரிப்பை உணர்ந்தாள். தான் இத்தனை பெரியவளாக இவ்வளவு அழகுகளை நிறைத்துக் கொண்டு எப்போது எப்படி வளர்ந்தோம் என்று அவளுக்கே மலைப்பாக இருந்தது. தனக்குத் தெரியாமலே தான் வளர்ந்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மனம் வளரவும் அறிவு பெருகவும் உழைத்துப் படித்ததும் கவலைப்பட்டதும் அவளுக்கு நினைவிருந்தன. உடம்பைப் பற்றி அவள் நினைத்ததில்லை; கவலைப்பட்டதில்லை. ஆனால் மனத்தையும் அறிவையும் போல அதுவும் வளர்ந்து செழுமையடைந்திருக்கிறதே! அவள் படாத கவலையைத் தானே எடுத்துக் கொண்டு வளர்ந்தது போல் வளர்ந்து வளமாகியிருக்கிறதே. செழிக்க வேண்டுமென்ற நினைப்பில்லா விட்டாலும் ஆற்றங்கரை மரம் தானாகச் செழிப்பது போல் தன் உடல் செழித்திருப்பதை உணர்ந்தாள் அவள்.
சமீபகாலத்தில், அப்பாவின் மறைவுக்குப் பின் இத்தனை பெரிய கண்ணாடியில் இத்தனை புதிய நினைவுகளோடு இவ்வளவு தனிமையில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே அவளுக்கு ஏற்பட்டதில்லை. உடம்பைப் பொறுத்தவரையில் அப்பாவின் மடியில் உட்கார்ந்து, 'ஆத்திசூடி' சொன்ன காலத்துச் சிறுமியாகவே இன்னும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். 'அப்படி இல்லை? நீ வளர்ந்திருக்கிறாய்' என்கிறது இந்தக் கண்ணாடி.
அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை.
கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து 'மருந்து சாப்பிட வேண்டிய நேரம்' என்று நினைவுபடுத்திய போது தான் பூரணி இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள். மதுரையில் அவள் உடல்நிலையைப் பரிசோதித்துக் காற்று மாற வேண்டுமென்று கூறிய டாக்டர், ஏதோ 'டானிக்'குகள், மாத்திரைகள் எல்லாம் நிறையக் கொடுத்து அனுப்பியிருந்தார். பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை. டாக்டர் அறிவுரைகளுக்கு ஏற்பப் பூரணியைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பு வசந்தாவிடமும் சமையற்கார அம்மாளிடமும் விடப்பட்டிருந்தது.
பூரணி உள்ளே போய் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சாய்வு நாற்காலியில் வந்து சாய்ந்து கொண்டாள். கடல் கடந்தும் நெடுந்தொலைவுக்குப் பயணம் செய்தும், ஆற்ற வேண்டிய அந்த சொற்பொழிவுகளை, ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தனக்கு மிகவும் அந்தரங்கமான எவரிடமாவது கலந்தாலோசித்து முடிவு செய்தால் நன்றாக இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது.
இந்தச் சமயத்தில் அரவிந்தன் அருகில் இருந்தால் அவரைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம். என்னுடைய காரியங்களைத் திட்டமிடும் உரிமையைத் துணிந்து அவரை நம்பிக் கொடுத்து விடலாம் என்று எண்ணினாள் அவள். அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு விந்தையான நினைவும் எழுந்தது.
'இந்த அரவிந்தனிடம் அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது? எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும் அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரிபாதி பங்கு கொண்டவர் போல் இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன் என்னுடைய ஊனிலும், உயிரிலும், அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்? நானே தெரிந்து கொள்ள முடியாமல் எனக்குள்ளே வந்து நல்லனவும் தீயனவும் பகுத்துணரும்படி என்னைச் சிந்திக்க வைக்கிறீர்களே!' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். 'ஆணுக்கும் பெண்ணுக்கும் எண்ணங்களின் கலப்பில் உண்டாகும் தெய்வீகப் பேருணர்ச்சியாகக் கவிகள் பாடி வைத்திருக்கிறார்களே, அந்த உணர்ச்சியைத்தான் இந்த அரவிந்தனிடம் நான் காண்கிறேனோ' - இப்படி நினைத்தபோது பூரணிக்கு மெய்சிலிர்த்தது. மலர்கின்ற தாமரையைப் போல் இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு விகசித்தது.
'எப்போதோ ஒரு பிறவியில் இந்த அரவிந்தனும் நானும் அன்றில் பறவைகளாக இருந்து காதல் வெற்றி பெறாமல் அழிந்திருக்கிறோமோ? எவனாவது கொடிய வேட்டுவன் எங்களை அம்பெய்து கொன்று எங்களையும் எங்கள் கனவுகளையும் அழித்து விட்டானா?' - தாபம் என்கிற உணர்வு என்னவென்று இப்போது அவளுக்குச் சிறிது சிறிதாகப் புரிந்தது.
மலையின் சீத மென்காற்று இதமாக வீசியது! எண்ணெய் நீராடிய அலுப்பில் இனிய நினைவுகளோடு சாய்வு நாற்காலியிலேயே கண்ணயர்ந்து விட்டாள் பூரணி. அந்த மலைத் தொடர்களைக் கடந்து ஓடோடிச் சென்று 'என்னுடைய மனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நீங்கள் பெரிய திருடர்' என்று சிரித்துக் கொண்டே அரவிந்தனிடம் கூறிவிட வேண்டும் போலத் தேகத்திலும் இதயத்திலும் ஒரு தவிப்பை உணர்ந்தாள்.
அவள் எவ்வளவோ படித்திருக்கிறாள். அவளுடைய இதயம் துன்பங்களால் பக்குவப்பட்டிருக்கிறது. அன்பைக் கூட அந்தரங்கமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவள் அவள். ஆனால் இப்போது இந்தக் கணத்தில் அவள் உணருகிற தாபத் தவிப்பை எந்தப் பெண்ணும், எந்தக் காலத்திலும் தவிர்த்திருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றியது. ஊர் ஊராகப் பொதுப்பணிக்கும் சொற்பொழிவுகளுக்கும், அலைந்து கொண்டிருந்த காலத்தில் அவள் மறந்திருந்த அல்லது அவளை மறந்திருந்த இந்தத் தவிப்பு காய்ந்த மரத்தில் நெருப்புப் போல் இந்த ஓய்வில் இந்தத் தனிமையில் அவளை வாட்டுகிறதே! மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதற்குக் காரணமான சில உணர்ச்சிகள் உண்டு. அவற்றை வென்றுவிடுவது எளிமை அல்லவென அவள் நினைத்தாள்.
பகல் உணவுக்கு வசந்தா அவளை எழுப்பினாள். சாப்பாடு முடிந்ததும், பூரணியை உட்கார்த்தி தான் வாங்கி வந்திருந்த வளையல்களை அவளுக்கு அணிவித்தாள் வசந்தா. முன் கைகளை மறைத்துக் கொண்டு, 'கலின் கலின்' என்று கைகளை ஜலதரங்கம் வாசிப்பது போல் வளையல்கள் நாதமிட்டன.
"அக்கா! இந்தக் கோலத்தில் கலியாணப் பெண் மாதிரி அழகாக இருக்கிறீர்கள்" என்று சொல்லிச் சிரித்தாள் வசந்தா. பூரணி எதை மறக்க முயன்று கொண்டிருந்தாளோ அதை அதிகமாக்கினாள் வசந்தா. உடம்பு கொள்ள முடியாமல் மனத்திலும் இடம் போதாமல் நிரம்பி வழிகிற இந்தப் பூரிப்பை எங்கே போய்க் கொட்டுவது?
கொட்டுவதற்கு இடம் இருந்தது! இரண்டு நாட்களுக்கு எங்கும் அசைவதில்லை என்று தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு படித்துத் தீர்ப்பதென்று கண்டிப்புடன் உட்கார்ந்தாள் பூரணி. தாகூரின் கீதாஞ்சலி, இராம தீர்த்தர், விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவு நூல்கள், சி.இ.எம். ஜோடின் அறிவு நூல்கள் இவற்றின் சிந்தனை உலகில் நீந்தினாள். எச்.ஜி.வெல்ஸ், ஷா போன்றோரின் நூல்களும் சில இருந்தன.
இரண்டாவது நாள் மாலை சி.இ.எம். ஜோடினது 'நாகரிகத்தின் கதை' (தி ஸ்டோரி ஆஃப் சிவிலிசேஷன்) என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் கருத்தெல்லாம் அவள் ஒன்றிப் போய் ஈடுபட்டிருந்த போது வாசலில் தந்தி பியூன் குரல் கொடுத்தான். வசந்தா ஓடிப்போய் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு வந்தாள். 'ஒரு முக்கியமான காரியமாக அவளைச் சந்தித்துப் பேசுவதற்கு மறுநாள் அரவிந்தனை அனுப்புவதாக' மீனாட்சி சுந்தரம் தந்தி கொடுத்திருந்தார்.
தன்னுடைய நினைவுகளுக்கு ஏதோ மந்திரசக்தி எற்பட்டுவிட்டது போல் வியப்பாயிருந்தது பூரணிக்கு. எவருடைய வரவை அவள் விரும்பினாளோ அவர் தானாகவே வருகிறார். தனக்காகவே நேருகிறதோ இந்த அற்புதமெல்லாம் என்று கருதிக் களித்தாள் அவள். இரவெல்லாம் கனவுகளில் நீந்தினாள்.
பூரணி மறுநாள் காலையில் சீக்கிரமே நீராடிவிட்டு வாயிற்புறமாகக் கார் வருகிற சாலைக்கு நேரே புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அரவிந்தனுடைய வரவுக்காகவே அன்று கோடைக்கானல் அவ்வளவு அழகாக இருக்கிறதோ என்று அவள் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று.
அன்று அவள் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தலை பின்னி மல்லிகைப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். 'இந்த அழகு அலங்கார ஆசைகளெல்லாம் சாதாரணப் பெண்களுக்கு அசட்டுத் தனமாக உண்டாவது போல் தனக்கும் உண்டாகி விட்டதே!' என்று நினைக்கும் போதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனால் ஏனோ அன்று அப்படியெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நீலமேக நிறத்தில் வெள்ளைப் பூப்போட்ட கைத்தறிப் புடவை ஒன்றை தழையத் தழையக் கட்டிக் கொண்டு தோகையை விரித்துக் கொண்டிருக்கும் மயில் போல் வீற்றிருந்தாள் பூரணி.
பதினொரு மணிக்கு அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரத்தின் கார் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது.
கைகளில் வளையல்களும், மனத்தில் குதூகலமும் பொங்க எழுந்து நின்றாள் பூரணி. கண்கள் அந்த முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு அகன்று விரிந்தன. இதழ்களில் அரவிந்தனுக்காகவே இந்தச் சிரிப்பை சிரிக்க வேண்டுமென்று சிரித்தது போல் ஒரு மோகனச் சிரிப்புடன் காரருகே சென்றாள் அவள். மனம் ஆவலினால் வேகமாக அடித்துக் கொண்டது. நெஞ்சுக்குள் கள்ளக் குறுகுறுப்பு ஐஸ் கட்டியை ஒளித்து வைத்தது மாதிரி பனி பரப்பிற்று.
காரிலிருந்து மீனாட்சிசுந்தரம் இறங்கினார். முருகானந்தம் இறங்கினான்; அரவிந்தன் வரவில்லை! அவளுடைய நெஞ்சில் மலர்ந்திருந்த ஆசைப் பூக்கள் உதிர்ந்தன. ஏமாற்றத்தால் வந்தவர்களை 'வா' என்று சொல்லாமல் இருந்துவிடலாகாதே என்பதற்காக 'வாருங்கள்' என்று சிரிக்க முயன்றவாறு அவர்களை வரவேற்றாள். "உடம்பெல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று விசாரித்த மீனாட்சிசுந்தரத்தினிடம், "உங்களோடு அரவிந்தன் வரவில்லையா? அவர் வருவதாக அல்லவா நேற்றுத் தந்தி கொடுத்தீர்கள்?" என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டாள் அவள்.
"வரவில்லை! இன்று காலையில் அவன் அவசரமாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் போகும்படி நேர்ந்து விட்டது. உள்ளே வா! விவரம் சொல்லுகிறேன்" என்றார் மீனாட்சிசுந்தரம்.
--------------------------
குறிஞ்சி மலர்
21
நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான்...
-- புகழேந்தி
முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது.
அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்; தாயாதிச் சண்டைகள் நிறைந்தவர்கள், சொத்துச் சேர்ப்பதும் பணத்துக்கு மரியாதை செலுத்துவதும் தவிர வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்று நினைப்பவர்கள். இந்த அத்தியாயத்தைத் தொடங்குமுன் அரவிந்தன் இளமைப்பருவம் பற்றியும், பெற்றோர் பற்றியும், பிறந்த ஊர் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அவனுக்கு நோயாளியான சிற்றப்பா ஒருவர் ஊரில் இருந்தார். தனக்கு அவர் ஒரு நன்மையும் செய்ததில்லை என்பதை அரவிந்தன் உணர்ந்திருந்தான். தந்தைக்கும் தன் குடும்பத்துக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிற்றப்பா செய்திருக்கிற கொடுமைகளை, துரோகங்களை, ஏமாற்றுக்களை அரவிந்தன் பலமுறை நினைத்துப் பார்த்துக் கொதிப்பு அடைந்திருக்கிறான். அந்தக் கொதிப்பின் காரணமாகவே மதுரைக்கு வந்து படித்துப் பெரியவனாகி, தனக்கென்று ஒரு வாழ்வை வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன். அவனுடைய தந்தை தாராளக் கையாக இருந்தவர், தான தருமங்களுக்கு வாரி இறைத்தவர். சிற்றப்பா கருமி, அநாவசியமாகக் கால் காசு செலவழிக்க மாட்டார். அவசியத்துக்காகக் கூட சிந்தித்தே செலவழிப்பார். வட்டியும் முதலுமாக ஏறிப் போய் கடன் வாங்கினவன் திணறும் போது அவனுடைய நிலங்களையோ, வீடு, நகை போன்ற பொருள்களையோ கடனுக்கு ஈடாகப் பறிமுதல் செய்து விடுவார். முக்கால் வட்டியும், முழு வட்டியும் கூசாமல் வாங்குவார். அப்பா நாளுக்கு நாள் கைநொடித்து ஏழையாகப் போய்க் கொண்டிருந்த போது, சிற்றப்பா பணக்காரராகி மாடி வீடு கட்டினதன் இரகசியம் இதுதான் என்பதை வயது வந்த பின் அரவிந்தன் தெரிந்து கொண்டிருந்தான்.
கடைசிக் காலத்தில் அரவிந்தனின் தந்தைக்கு எமனாக நின்றவரும் அவருடைய தம்பிதான். 'உடன் பிறந்த தம்பிதானே? எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வது போல் நம்மிடம் நடந்து கொள்ளமாட்டான். மூத்தவன் என்றும், அண்ணன் என்றும் தம்மை மதிக்கக் கடமைப்பட்டவன் அல்லவா?' என்று எண்ணிக் கொண்டு தம்பியிடம் விவசாயச் செலவுக்காகச் சில ஆயிரம் கடன் வாங்கினார் அரவிந்தனின் தந்தை. அந்த ஆண்டு விளைச்சல் சுகப்படாததனால் அவரால் தம்பிக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
"என்ன இருந்தாலும் நீ எனக்கு உடன்பிறப்புத்தானே அப்பா! கடவுள் புண்ணியத்தில் செட்டாகச் சேர்த்து வைத்துக் கொண்டு நன்றாகயிருக்கிறாய். என்னைப் போல் வாரியிறைத்துவிட்டு நிற்கவில்லை நீ. அடுத்த மகசூலில் உன் கடனை அடைத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள். ஏதோ என் போதாத காலம் விளைச்சல் சரியில்லை" என்று தம்பியை வீடு தேடிப் போய்க் கெஞ்சினார் அரவிந்தனின் தந்தை. ஆனால் அவருடைய தம்பி அதற்கு இணங்கவில்லை. மனைவி சொல் கேட்டுக் கொண்டு அண்ணனிடம் மரியாதையின்றிப் பேசினார்.
"சொன்னபடி வாங்கின கடனைக் கீழே வைத்து விட்டு மறுவேலை பார். பணத்துக்கும் உடன்பிறப்புக்கும் சம்பந்தமில்லை."
"ஏண்டா! நீ பணத்தோடுதான் பிறந்தாயா? என்னோடு பிறக்கவில்லையா? பெண்பிள்ளை பேச்சைக் கேட்டுக் கொண்டு மூத்தவன் என்கிற மதிப்புகூட இல்லாமல் இப்படி என்னிடம் கண்டிப்புப் பண்ணலாமா?"
"இதெல்லாம் எதற்கு அண்ணா வீண் பேச்சு? பணம் என்றால் கண்டிப்பில்லாமல் முடியாது."
அவர் பெரிய மானி. வேறு வழியில்லாமல் போகவே தம்முடைய சொத்து என்று மீதமிருந்த கொஞ்ச நிலத்தையும் விலைக்கு விற்றுத் தம்பிக்குக் கடன் கொடுத்து நல்லவரானார் அரவிந்தனின் தந்தை. அவருக்கும் அவர் மனைவிக்கும் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் காலந்தள்ளிப் பிறந்த கடைசிக் கொழுந்துதான் அரவிந்தன். செல்லப் பிள்ளையாக வளர்த்தார்கள் அந்தக் குழந்தையை.
சிற்றப்பாவின் கடனால் மனம் ஒடிந்து தந்தை நிலத்தை விற்கிறபோது, அரவிந்தனுக்குப் பத்து வயது. ஓரளவு நினைவு தெரிந்த காலம்தான் அது. உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்போ நாலாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரே ஆஸ்தியாக மீதியிருந்த நிலத்தை விற்று விட்டபின் அதே ஏக்கத்தில் படுக்கையானார் அரவிந்தனின் தந்தை. அவர் காலமான தினம் இன்னும் அவன் மனத்தில் துக்கப் புண்ணின் வடுவாகப் பதிந்திருக்கிறது. ஒரு விவரமும் சொல்லாமலேயே அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துப் போய் மொட்டை அடித்துவிட்டுப் பிஞ்சுக்கை நோகக் கொள்ளிச் சட்டிக் காவடியைச் சுமக்கச் செய்து அப்பாவின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு அழைத்துப் போன நிகழ்ச்சி இன்னும் மறக்க இயலாது. பொருமிப் பொருமி அழுதுகொண்டே நடந்து போன அன்றைய நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் கண்கலங்கிவிடும். அரவிந்தனுக்கு அவனுடைய பிஞ்சுப் பருவத்து வாழ்க்கையில் அடுத்த பேரிடி அம்மாவின் மரணம். பன்னிரண்டு வயதுச் சிறுவனாகி ஆரம்பப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்த தறுவாயில் தாயையும் இழந்து அநாதையானான் அவன். சமுத்திரத்தின் வேகமும் ஆழமும் தெரியாமல் கரையோரமாகக் காகிதத்தில் கப்பல் செய்துவிடலாமா என்று பேதைத்தனமாக எண்ணும் குழந்தை போல் வாழ்க்கைக்கு முன்னால் அநாதையாக நின்றான் அரவிந்தன். எப்படியாவது வாழவேண்டும் என்ற ஆசையும், எப்படி வாழ்வது என்ற மலைப்புமாகத் தவித்தது உலகம் தெரியாத இந்தப் பூ உள்ளம். ஊர்க்காரர்களுடைய பழிக்கு அஞ்சிச் சிற்றப்பா சிறிது காலம் அவனை வீட்டில் வைத்துக் கொண்டார். சித்தி கொடுமையே உருவானவள். "தண்டச்சோறு கொட்டிக் கொள்கிறாயே கடன்காரா! தின்கிற சோற்றுக்கு வேலை வேண்டாமோ! இந்த எருமை மாடுகளையெல்லாம் நன்றாக மேய்த்துக் கொண்டு வா" என்று பள்ளிக்கூடம் போகவிடாமல் தடுத்து மாடு மேய்க்கிற வேலையை அவன் தலையில் கட்டினாள், சித்தி. மாடுகளை மேயவிட்டு வயல்வரப்புகளிலே அமர்ந்து பச்சைப் பிள்ளையாகிய அவன் மனத்தவிப்பு அடங்கக் குமுறிக் குமுறி அழுத நாட்கள் கணக்கிலடங்கா. "அப்பா! அம்மா! என்னை ஏன் இப்படி அநாதைப் பயலாக இந்த உலகத்தில் விட்டுச் சென்றீர்கள்? சித்தியிடம் அடி வாங்கவும், சிற்றப்பாவிடம் திட்டு வாங்கவுமா விட்டுப் போனீர்கள்?" என்று தனக்குத்தானே புழுங்கி அவன் நொந்த நாட்கள்தாம் எத்தனை!
சிற்றப்பாவுக்கும் சித்திக்கும் குழந்தையில்லை! சித்தி தன் உறவுவழிப் பெண் ஒருத்தியை வீட்டோடு அழைத்துக் கொண்டு வைத்து வளர்த்து வந்தாள். அரவிந்தனை அவர்கள் பிள்ளைக் குழந்தையாக எண்ணி வளர்க்கவில்லை. மாட்டுக் கொட்டத்திலே மாடுகள் வளரவில்லையா அப்படி அவனையும் விட்டு விட்டார்கள்! அவன் மாட்டுக் கொட்டத்திலேயே சாப்பிட்டான். அங்கேயே ஒரு மூலையில் உறங்கினான். விடிந்ததும் மாடு பற்றிக் கொண்டு போனான். ஒருநாள் மாடுகளை மேயவிட்டு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்து விட்டதால், பக்கத்து நெல்வயலில் ஒரு பக்கமாக மாடுகள் வாய் வைத்து விட்டன. வயல்காரன் சிற்றப்பாவிடம் போய்ச் சொல்லிவிட்டான். சாயங்காலம் அவன் மேய்ச்சல் முடிந்து திரும்பினதும் மூக்கு முகம் பாராமல் அடித்து விட்டார் சிற்றப்பா. சித்தி வாயில் வராத வார்த்தையெல்லாம் சொல்லி வைத்தாள். அன்று தான் அவனுடைய கண்களும், மனமும் திறந்தன. இனி, இந்த வீட்டில் தான் இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது. எங்காவது ஓடிப்போய் விட வேண்டும் என்ற துணிவு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று. இரவு எல்லோரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்? வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டிருந்தான் என்றே கூறலாம். அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான். மதுரை இரயில் நிலையத்துக்கு அருகில் அந்த நாளில் 'பீமவிலாசம்' என்ற பெரிய ஓட்டல் இருந்தது. அதன் முதலாளி தங்கமான மனிதர். அவர் தம் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் அவனை அனுமதித்தார். ஓட்டலுக்கு அருகில் இரயில் நிலையத்தில் மேற்குப் புறத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தான் அரவிந்தன். அவனோடு படிக்கிற மாணவர்கள் ஐந்து மணிக்கு மேல் அதே ஓட்டலுக்குச் சிற்றுண்டி உண்ண வருவார்கள். அழுக்குத் துணியும் கையுமாக மேசை துடைக்க நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு கேலி செய்வார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். வகுப்பிலே அவனுக்கு 'டேபிள் கிளீனர்' என்ற பட்டப் பெயர். பல்லைக் கடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் அரவிந்தன். சில நாட்களில் உடைமாற்றிக் கொள்ள நேரமிருக்காது. ஓட்டலில் வேலை செய்த அழுக்குகள் படிந்த உடையோடு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். சில ஆசிரியர்கள் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக நகைப்பார்கள். பையன்கள், "டேய் டேபிள் கிளீனர், முதலில் உன்னைக் 'கிளீன்' பண்ணிக்கோடா!" என விசில் அடித்துக் கேலி பேசுவார்கள்.
பதின்மூன்று வயதிலிருந்து இருபதாவது வயது வரை உள்ள காலம் அவனுடைய வாழ்க்கையைக் கடுமையான உழைப்பினால் மலர்வித்த காலம். கேவலமோ ஏளனமோ பாராமல் அவன் உழைத்துத் தன்னை வளர்த்துக் கொண்ட காலம் அது. தெருத் தெருவாகத் தினசரிப் பேப்பர்களைக் கூவி விற்று அதில் கிடைக்கும் கமிஷனைப் பள்ளிச் சம்பளமாகக் கட்டியிருக்கிறான். அச்சாபீஸில் தாள் மடித்திருக்கிறான். வேறு ஒரு வேலையும் கிடைக்காத இரண்டொரு சமயங்கள் மூட்டை தூக்கிக் கிடைக்கிற கூலியைக் கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். அவனுடைய வயதில் அப்படி அவனைப் போல் உழைத்து முன்னுக்கு வருவது என்பது எல்லோருக்கும் முடியாத காரியம். அவன் பிடிவாதமாக முன்னுக்கு வந்தவன்.
இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். 'உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனுடைய தமிழாசிரியர் ஒருவர் அவனை மீனாட்சி அச்சக உரிமையாளரிடம் அழைத்துப் போய் சிபாரிசு செய்ததும், அவன் அங்கு சேர்ந்து தன் திறமையாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்ததும் காலத்தின் போக்கில் நிகழ்ந்து நிறைந்தவை. தான் நினைத்தபடியே உழைத்து மேல்நிலைக்கு வந்து விட்டதை நினைக்கும் போது அரவிந்தன் ஆச்சரியம் கொள்வான். தன்னைப் போன்றவர்களுக்காகவே, 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்' என்று திருவள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறாரோ என்று நினைத்து நினைத்து வியப்புக் கொள்வான் அவன்.
அன்று கோடைக்கானலுக்குப் புறப்படுகிற நேரத்துக்கு அந்தத் தந்தி வந்தபோது துன்பங்கள் நிறைந்த தன் இளமை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சித்திரங்கள் போல் நினைவு வந்தது அரவிந்தனுக்கு. அவற்றை நினைக்கத் தூண்டியது அந்த தந்திதான்.
"சிற்றப்பா இறந்து விட்டார்! உடனே புறப்பட்டு வரவும்" என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். கடைசிக் காலத்தில் அந்தச் சிற்றப்பா நீரிழிவு வியாதியால் படுத்த படுக்கையாகி விட்டார். தன் பிறந்த வீட்டு வழியில் எவரையாவது தத்து எடுத்துக் கொள்ளச் செய்து சொத்துகள் எல்லாம் கைமாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பகற்கனவு கண்டு கொண்டிருந்த சித்தி அவரையும் முந்திக் கொண்டு இறந்து போயிருந்தாள். தனியாக நோயுடன் கிராமத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய காலமும் முடிந்து விட்டதென்று இதோ இந்தத் தந்தி சொல்லுகிறது. அரவிந்தன் மதுரையில் இருப்பது கிராமத்தில் உறவினர்களுக்குத் தெரியும். சிறுமைகளும், பணத்தாசையும் நிறைந்த அவர்களோடு நெருங்கிப் பழகவே இப்போது அவனுக்கு அருவருப்பு ஏற்பட்டிருந்தது. 'இந்தத் தந்தியைக் கொடுத்த உறவினர்கள் என்ன பொருளில் எதற்காக அவனுடைய பெயருக்குக் கொடுத்திருக்கிறார்கள்' என்பது அவனுக்குப் புரிந்தது.
அவருக்கு வேறு வாரிசு இல்லை. 'அவன் போய்த்தான் கொள்ளி வைக்க வேண்டும். அவர் தான் அன்று அந்தப் பச்சைப் பிள்ளை வயதில் அவனை அடித்துத் துரத்தினார். அவர் துரத்தியிராவிட்டால் இன்று இப்படி ஆகியிருக்க முடியாது. அவன் சிற்றப்பாவும், சித்தியும் படுத்தி அனுப்பிய கொடுமையில் தான் அவனுக்கு 'வாழவேண்டும், தன் முயற்சியால் வளர வேண்டும்' என்ற வைராக்கியமே உண்டாயிற்று. அந்த வைராக்கியமே அவனை வளர்த்தது.
'மறுபடியும் அவருடைய வீட்டு வாயிற்படியை மிதிப்பதில்லை' என்ற வைராக்கியத்தோடு அன்று அவன் கிளம்பியிருந்தான். அந்த உறுதியான பிடிவாதத்தின் பயனை இன்று அவன் அடைந்து விட்டான். ஆனால் சிற்றப்பா ஊரையெல்லாம் ஏமாற்றி உறவினரை வஞ்சித்து மற்றவர்கள் எல்லாம் ஏழையாகும்படி பிறரை அழச் செய்து பணமும், நிலமும் சேர்த்தாரே, அதன் விளைவை அடையாமலே செத்துப் போய்விட்டாரே? சாவாவது நன்றாக வந்ததோ? நீரிழிவு நோயோடு எழுந்து நடமாட முடியாமல் திணறி வேதனைப்பட்டு, 'நான் விரைவில் சாக வேண்டும்' என்று வருந்திச் சாவுக்கு ஏங்கச் செய்து வந்த சாவு அல்லவா அவருடைய சாவு? 'மனிதர்கள் என்னவோ பணத்தாலேயே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு போய்விடலாம்' என்று பார்க்கிறார்கள். பணம் ஓர் அழகான சொப்பனம். கனவு எத்தனை அழகாயிருந்தாலும் விரைவில் அதிலிருந்து விழித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிற்றப்பாவைப் போல் ஆக வேண்டியதுதான்' என்று தந்தியைப் படித்து விட்டு நினைத்துக் கொண்டான் அவன். சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். 'ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?' என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள் அவர்கள் இருவரும். இந்த இலட்ச ரூபாயையும் சொத்தையும் பற்றித்தான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றியது. அதே செல்வத்தினால் அவனுடைய தந்தை அழிந்தார் என்பதையும், அவன் அவமதிக்கப்பட்டு ஓடி வந்தான் என்பதையும் அவர்கள் நினைக்கவில்லை. அரவிந்தனின் முகம் கடுமையாக மாறியது.
"எவனாவது அநாதைப் பிணத்துக்குப் போடுகிற மாதிரி கோவிந்தா கொள்ளிப் போட்டுவிட்டுப் போகட்டும். யாருக்கு வேண்டும் இந்த நாய்க்காசு?" என்று தந்தியைக் கிழித்தெறிந்தான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம்தான் அவனைத் தனியாக அழைத்துச் சென்று பக்குவமாக உபதேசம் செய்தார்.
"அடே அசடு! மரணம் என்பது எத்தனை பெரிய காரியம். அதில் போய்ப் பழைய கோபதாபங்களையும், குரோதத்தையும் காட்டிக் கொண்டிருக்கலாமா? பேசாமல் நான் சொல்லுகிறபடி கேளு! நீ இன்று கோடைக்கானல் போக வேண்டாம். நானும் முருகானந்தமும் போய்க் கொள்கிறோம். நீ புறப்பட்டு உன் கிராமத்துக்குப் போய் சிற்றப்பாவின் காரியங்களை நடத்தி விட்டு வா. இல்லாவிட்டால் எவனாவது மூன்றாவது முறைத் தாயாதிக்காரன் கொண்டு போவான். அந்தச் சொத்து உன் கைக்கு வந்தால் நல்ல காரியத்துக்குச் செலவு செய்யேன். அதற்காக ஒரேயடியாக வேண்டாம் என்று கண்களை மூடிக் கொண்டு வெறுப்பானேன்?" என்றார் மீனாட்சிசுந்தரம்.
"அந்த வீட்டு வாயிற்படியில் கால் எடுத்து வைக்க நினைக்கவே கூசும்படி அத்தனை கெடுதல் எனக்குச் செய்திருக்கிறாரே அவர்!"
"செய்திருக்கட்டுமே, அப்பா! அவருடைய பணத்தை நல்ல காரியத்துக்குச் செலவழித்து அத்தனைக்கும் பழிவாங்கி விடேன் நீ."
என்னென்னவோ சமாதானங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி அரவிந்தனை வழிக்குக் கொண்டு வந்தார் மீனாட்சிசுந்தரம். காலையில் அந்த நேரத்துக்குச் சரியாக இராமேசுவரம் போகிற இரயில் இருந்தது. முருகானந்தமும் அவரும் அரவிந்தனைக் காரில் கொண்டு போய் இரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிற்றப்பனுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய ஊருக்குப் புறப்பட்டான் அவன். போகும்போது இரயிலில் அவன் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்தது. நினைவுகளே பெருங்காற்றாக மாறி அந்தக் காற்றில் நெஞ்சினிடையே மூளும் சிந்தனைக் கனல் கொழுந்து பாய்ச்சிச் சுடர் பரப்பிற்று. எதை எதையோ எண்ணிக் கொண்டு பயணம் செய்தான் அவன்.
'மீனாட்சிசுந்தரமும், முருகானந்தமும் கோடைக்கானல் போகிறார்களே! அவர்கள் சொல்லிப் பூரணி தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டு விடுவாளா? இந்தச் சமயத்தில் இந்தப் பெரிய காரியத்துக்கு இணங்கலாமா, வேண்டாமா என்று பூரணி முடிவு செய்ய என்னுடைய கருத்தையல்லவா கேட்பாள்? பார்க்கலாமே என்னைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்கிறாளா? அல்லது மீனாட்சிசுந்தரம் விவரம் சொல்லிய அளவில் ஒப்புக் கொண்டு விடுகிறாளா? இந்தச் சந்தர்ப்பத்தில் நானே போய் அவளைச் சந்தித்து நல்லது கெட்டது இரண்டையும் சீர்தூக்கித் தேர்தலில் நிற்கலாமா நிற்கலாகாதா என்று தீர்மானம் செய்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தியில் நானும் முருகானந்தமும் புறப்பட்டு வருவதாகத்தான் கொடுத்திருக்கிறார். நான் இங்கே இந்தக் கிழவனுக்குக் கொள்ளி வைக்க வந்தாயிற்று. என்னை எதிர்பார்த்துப் பெரிதும் ஏமாற்றமடைந்திருப்பாள் பூரணி' என்று நினைத்தான் அரவிந்தன். எதற்கோ ஆசைப்பட்டுக் கொண்டு அநாவசியமாகப் பூரணியைத் தேர்தலில் வம்புக்கு இழுக்கும் மீனாட்சிசுந்தரத்தின் மேல் கோபம்தான் வந்தது அவனுக்கு. 'நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த மட்டும் அவருடைய இந்த எண்ணத்தைத் தடுத்துவிட முயன்றேன். முடியவில்லையே? பிடிவாதமாகத் திருவேடத்துக்கு கூட்டிக் கொண்டு போய்ப் பூக்கட்டி வைத்தும் பார்த்து உறுதி செய்து கொண்டு விட்டாரே' என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.
இரயிலிலிருந்து இறங்கி அவன் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. உறவினர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான பாட்டிமார்கள் அவனிடம் போலியாக அழுதுகொண்டே துக்கம் விசாரிக்க வந்தார்கள். மற்றவர்கள் சம்பிரதாயமாக அழுகையெல்லாம் இல்லாமல் வாய் வார்த்தையில், "சிற்றப்பா காலமாகி விட்டாரே தம்பி!" என்று தொடங்கி விசாரித்தார்கள். விசாரித்தவர்களை விட விசாரித்தோமென்று பேர் பண்ணியவர்கள் தான் அதிகம்.
'கணித பாடத்தில் சரியான விடை வந்தாலும் வழி எழுதாத கணக்குத் தப்புக்குச் சமம்தான். செல்வமும் செல்வாக்கும் அறவழியில் ஈட்டப்படாமல் வேறு வழியில் குவிக்கப்பட்டிருந்தால் வழி எழுதாத கணக்கைப் போல் அவை மதிப்பிழந்து நிற்கின்றது' என்பதை அன்று அங்கே சிற்றப்பாவின் ஈமச் சடங்கிலே கண்டான் அரவிந்தன். உள்ளூரில் நல்லவர்கள் யாரும் மயானம் வரை கூட உடன் வரவில்லை. தன்னைப் பற்றிக் கூடச் சிலர் ஊரில் கேவலமாகப் பேசிக் கொண்டதாக அரவிந்தன் காதுக்குத் தகவல் வந்தது. நேரிலும் கேள்விப்பட்டான். "பணம் அல்லவா பேசுகிறது. இந்தப் பையன் அரவிந்தனுக்காகவா இத்தனை பாடுபட்டுச் சேர்த்து வைத்தான் கருமிப்பயல்" என்று அவன் காதுபடவே ஒருவர் சொன்னார். அவருக்குத் தாயாதிப் பொறாமை.
"என்னவோ விரோதம்! அவன் கொள்ளி போட வரமாட்டான் என்றீரே. சொத்து ஐயா! சொத்து! நாய் மாதிரி ஓடி வந்திருக்கிறான் பாரும்" என்று வேறு ஒருவர் பேசியது காதில் விழுந்த போது அரவிந்தனுக்கும் மனம் புண்பட்டது. 'தன்னைப் பற்றி இவ்வளவு சர்வ சாதாரணமாக மதிப்பிடுகிறார்களே அவர்கள்' என்று தான், அவன் வருந்தினான். கேதத்துக்கு (அந்திமக்கிரியை) மதுரையிலிருந்து இரண்டொரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மதுரை நகரின் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர். வயது முதிர்ந்தவர். நீண்ட நாட்கள் அனுபவசாலி. ஈமச் சடங்கு முடிந்து மயானத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் கூறிய செய்தி அரவிந்தனைத் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அவன் பரம ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருந்த செய்தியை எல்லோருக்கும் நடுவில் அவர் வெளிப்படையாக விசாரித்தார்.
"என்னப்பா தம்பி, உன் முதலாளி அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்கிறாராமே? உனக்குத் தெரிந்திருக்குமே?"
அவருடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அரவிந்தன் தயங்கியபோது அவரே மேலும் கூறினார். அவர் வாயிலாக முக்கியமான தொரு செய்தி வெளிவந்தது.
"மீனாட்சிசுந்தரம் இதில் எல்லாம் கெட்டிக்காரர் தான் அப்பா. விவரம் தெரிந்துதான் செய்வார். ஆனால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். எதற்கும் அவர் காதில் போட்டு வை. அந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடைக்காரன் இருக்கிறான். முரடன், எதற்கும் துணிந்தவன், அவனே நிற்கப் போவதாகக் கேள்வி" என்று அவர் கூறிக் கொண்டே வந்த போது அரவிந்தன் குறுக்கே மறித்து, "யார் தாத்தா அந்தப் புத்தகக் கடைக்காரர்?" என்று கேட்டான். அவன் சந்தேகம் சரியாயிருந்தது. அவர்களுக்கு விரோதியான அந்த ஆளின் பெயரைத்தான் கிழவர் கூறினார். 'அவன் மிகவும் மும்முரமாகத் தேர்தலில் இறங்கி இருப்பதாகவும்' அவர் கூறினார். அப்போதே புறப்பட்டுப் போய்க் கோடைக்கானலில் அவர்களுக்கு இச்செய்தியை அறிவித்து விட வேண்டும் போல் அரவிந்தனுக்குத் துடிப்பு உண்டாயிற்று.
----------------------
குறிஞ்சி மலர்
22
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தேன்
வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
-- திருவருட்பா
தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல் அவளும் எவ்வளவோ திறமையாகத்தான் மறைக்க முயன்றாலும் மீனாட்சிசுந்தரம் அதைத் தம் கூர்மையான பார்வையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்ப விட்டுவிடவில்லை. பெண், இரசம் பூசிய கண்ணாடியைப் போன்றவள். தன்னில் படிகிற அல்லது படுகிற எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்க முடிவதில்லை. மறக்கவோ மறுக்கவோ கூட முடிவதில்லை.
"மதுரையில் மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், என் தங்கை எல்லோரும் சுகந்தானே? மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா? அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?" என்று தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாறே விசாரித்தாள், பூரணி.
"அவசரம்தான்! இல்லாவிட்டால் இப்படி உடனே புறப்பட்டு வருவேனா?" என்று தொடங்கி நீளமான அடிப்படை போட்டுத் தாம் வந்த நோக்கத்தை அவளிடம் தெரிவித்தார் அவர்.
பூரணியின் முகபாவம் மாறியது. நெற்றியில் சிந்தனை நிழல் கவிழ்ந்தது. அவருக்கு ஒரு பதிலும் கூறாமல் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவள். பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்கிற காலத்தில் இவள் முகத்தில் வருகிற அழகு அப்போது வந்திருந்தது. முருகானந்தமும் மீனாட்சிசுந்தரமும் அவளிடமிருந்து என்ன மறுமொழி வரப்போகிறதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
"ஏதோ தெய்வமே பார்த்து 'இதை நீ செய்' என்று தூண்டின மாதிரித் தற்செயலாக என் மனத்தில் இந்தச் சிந்தனை உண்டாயிற்று அம்மா! அரவிந்தனிடமும் இதோ இந்தப் பையன் முருகானந்தத்திடமும் சொன்னேன். அரவிந்தன் முதலில் ஏதோ தடை சொன்னாலும் பின்பு ஒருவாறு சம்மதித்து விட்டான். முருகானந்தத்துக்கும் முற்றிலும் பிடித்திருக்கிறது என் முடிவு. நீ வேறு விதமாகப் பதில் சொல்லி விடாதே. சாதகமான பதிலைத்தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்" என்று அவளுடைய சிந்தனை தம் கருத்துக்கு எதிர் வழியில் மாறி விடாதபடி அரண் செய்து கொள்ள முயன்றார் மீனாட்சிசுந்தரம்.
பூரணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்ல நகைத்தாள். நகையில் வினாப் பொருள் நிறைந்திருந்தது. "என்னை இந்த மாதிரி வம்பில் மாட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?"
"இதில் வம்பு என்னம்மா இருக்கிறது? உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா? அல்லது அரசியல்தான் உன்னை ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றதா? இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ!"
இதைக் கேட்டு மீண்டும் பூரணியின் இதழ் ஓரத்தில் நகை பூத்தது. உள்ளே கனிவு உண்டாகிற காலத்தில் பழங்களின் மேற்புறத்தில் மின்னுமே ஒருவகை வனப்பு, அதைப் போல சிந்தனைக் கனிவு அவள் முகத்தை அற்புதமாக்கியிருந்தது. எந்நேரமும் எங்கோ எதையோ, யாரிடமிருந்தோ தேடிக் கொண்டே இருப்பது போன்ற அவளுடைய அழகிய கண்களிலும் உள்ளத்தின் சிந்தனைக் கனிவு ஊடுருவித் தெரிந்தது. புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும் போது வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெரிதாகிக் கொண்டு வருகிறது. 'இன்னும் மேலே போக வேண்டும், இன்னும் மேலே போகவேண்டும்' என்பது போல் மேலே போகிற வெறி பேய்த்தனமாகப் பற்றிக் கொள்கிறது. அந்த வெறிக்கு ஆளாகிவிடாமல் விலகித் தப்பித்துக் கொள்ள வேண்டிய இடத்தில்தான் அப்போது நிற்பதாகத் தோன்றுகிறது பூரணிக்கு. 'நீ தப்பித்துக் கொள்ள வேண்டாம். அதில் ஈடுபட்டு விடு' என்று மாட்டிவிடப் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். 'மாட்டிக் கொண்டு விடாதே! தப்பித்துக் கொள்' என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது? எதைச் செய்யாமல் இருப்பது?
"அக்கா! இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் என்ன இருக்கிறது? நீங்கள் இந்த வழியில் வெற்றி பெற்று முன்னேறினால் ஏழைகளும் அனாதைகளும் நிறைந்துள்ள இந்த நாட்டுக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம்" என்று மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவு தரும் முறையில் அவளை நோக்கிக் கூறினான் முருகானந்தம்.
அவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மேலும் சிந்தித்தாள். அப்பா இறந்து போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பாயிருந்தாலும் அது தன் மனத்துக்கு ஏற்காவிட்டால் அதைத் துணிந்து இழந்துவிடும் தன்மை அப்பாவுக்கு உண்டு. நெஞ்சின் உரம்தான் அவருடைய வாழ்க்கையில் அவர் சேர்த்திருந்த பெரிய செல்வம். எந்த வியாபாரியின் பண உதவியை அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் அவள் ஏற்றுக் கொள்வதற்குக் கூசி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளோ, அந்த வியாபாரியைத் தம் வாழ்நாளிலேயே துச்சமாக மதித்து வந்தார் அப்பா. 'அப்பாதான் செத்துப் போய்விட்டார், அப்பாவின் தன்மானம் இன்னும் இங்கே சாகவில்லை' என்று இறுமாப்போடு எழுதி அந்தப் பண உதவியை மறுத்துத் திருப்பி அனுப்பி வைத்தாள் அவள். இறந்து போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அப்பாவை அரசியல் துறையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டு தாமே பணம் உதவி செய்ய முன்வந்தார் அந்த வியாபாரி. அப்போது அவருக்கு அப்பா கூறியனுப்பிய மறுமொழி பூரணிக்கு இன்னும் நினைவிலிருந்தது.
"நான் உங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பதற்காக நீங்கள் எனக்குப் பிழைக்க வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா? நாளை முதல் தமிழ்ப் படிப்பதற்கு மட்டும் நீங்கள் இங்கு வந்தால் போதும், எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டாம்" என்று சொற்களில் கடுமையும் முகத்தில் சிரிப்புமாகப் பதில் சொல்லிவிட்டார் அப்பா. அதைக் கேட்டு அந்த வியாபாரி மேலும் கூறினார். "நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இவ்வளவு படித்திருக்கிற நீங்கள் வாழ்க்கையிலும் அதற்கேற்ற வசதிகளையும், சௌகரியங்களையும் அடைய வேண்டுமென்றுதான் இந்த வழியைக் கூறினேன்."
"ஒரு சௌகரியமும் ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாமே சௌகரியமாகவும் வசதியாகவும் தான் இருக்கும். 'யாவை யாதும் இல்லார்க்கு இயையாதவே' என்று என்னைப் போன்றவர்களுக்காகச் சொன்னது போல் கம்பன் சொல்லி வைத்திருக்கிறான். ஐயா நான் ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறவன். நல்லவனாகவே வாழ்ந்து விட நினைக்கிறவன். நீங்கள் சொல்லுகிறது போல் முன்னேற்றம் பெற வல்லவனாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. இனி என்னிடம் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்" என்று வன்மையாகச் சொல்லி மறுத்தார் அப்பா. சிறுசிறு கிளைகளையும், சுவடுகளையும் உதிர்த்துவிட்டு மேல்நோக்கி நெடிதாய் வளரும் சாதித் தேக்கு மரம் போல் சில்லரை ஆசைகளை உதிர்த்து விட்டு உயர்ந்த குறிக்கோள்களினால் உயர்ந்து நின்றவர் அப்பா. அவரைப் பற்றி நினைக்கிறபோதே தன் உள்ளம் சுத்தமாகி விட்டதைப் பூரணி உணர்ந்தாள். கல்லூரி வகுப்பறையில் சொற்பொழிவுகளுக்கான பொதுமேடையில், வீட்டில், படிப்பறையில், எங்கே நின்றாலும், எங்கே இருந்தாலும், தம்மைச் சூழ்ந்து கொண்டு தூய்மையும் ஒழுக்கமும் கொலுவிருப்பது போலத் தோற்றமளித்தார் அப்பா. மனோரஞ்சிதம் தான் பூத்திருக்கிற இடத்தில் நாற்புறமும் நெடுந்தொலைவுக்கு மணப்பது போல் தம்மையும் தம்முடைய சூழ்நிலையையும் காண்கிறவர்கள் மனத்தில் கூட மணப்பவர் அவர்.
அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி.
"நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள சூழ்நிலையில் கேட்கவே வேண்டாம். அறிவு தோற்று உணர்ச்சிகள் வெல்லும் காலம் இது. பண்பு தோற்றுப் பரபரப்பு வெல்லுகிற காலம், அன்பு தோற்று ஆசைகள் வெல்லுகிற காலம், நிதானம் தோற்று வேகம் வெல்லுகிற காலம். இந்தக் காலத்தில் அரசியல் வாழ்க்கையில் எதிர்நீச்சுப் போட என்னைத் தூண்டுகிறீர்கள் நீங்கள்."
"உன்னால் முடியும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு தான் தூண்டுகிறேன், அம்மா! அரவிந்தனுக்கும் உனக்கும் ஒரே மனப்பாங்குதான் போலிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவனிடம் தெரிவித்தபோது ஏறக்குறைய நீ இப்போது கூறிய தடைகளைத்தான் அவனும் சொன்னான். ஆனால் நான் கூறிய சமாதானங்களைக் கேட்டுவிட்டு என் தீர்மானத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டான். உன்னையும் ஒப்புக் கொள்ள வைப்பதாகச் சொன்னான். சிற்றப்பாவின் காரியங்களுக்காக அவன் கிராமத்துக்குப் போகும்படி நேரிட்டிருக்காவிட்டால் அவனே இங்கு வந்து உன்னைச் சம்மதிக்கச் செய்திருப்பான். அவன் வந்திருந்தால் என்னுடைய வேலை சுலபமாகியிருக்கும். உனக்கு இத்தனை சிரமப்பட்டு நானே விளக்கம் சொல்ல வேண்டியிராது. அவன் பாடு, உன் பாடு என்று விட்டிருப்பேன்."
வைரம் பாய்ந்த மரத்தில் ஸ்குரு ஆணி இறக்குகிற மாதிரி மீனாட்சிசுந்தரம் அவள் மனத்தில் தம் கருத்தைப் பதித்துவிட முயன்றார். இலங்கை, மலாயா முதலிய இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றி பூரணி அவரிடம் கூறினாள். அவர் கேட்டதைப் பற்றி ஒரு முடிவும் சொல்லவில்லை. "உன் பேரில் அபேட்சை மனுத் தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். திருவேடகத்துக்குப் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்ததில் நல்ல பூவே கிடைத்திருக்கிறது. நீ என்னைக் கைவிட்டு விடாதே அம்மா!" என்று சுற்றிச் சுற்றித் தம் வேண்டுகோளையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவள் பிடிகொடுத்துப் பேசவில்லை.
"நீ இலங்கை, மலாயா எல்லா இடங்களுக்கும் போய்ப் புகழ்பெற்று வா, அம்மா! அதனால் எங்களுக்கெல்லாம் பெருமைதான். அவற்றோடு இந்தப் பெருமையையும் நாங்களாகப் பார்த்து உனக்கு அளிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள். இதில் வெற்றி பெற உன்னால் முடியும். வெற்றி பெற்றால் இதனால் நீயும் உயர்வு அடையலாம். நாடும் உயர்வு பெறும்" என்றார்.
"பார்க்கலாம்! எனக்குச் சிந்திக்க நேரம் கொடுத்தால் நல்லது. 'வந்தோம், உடனே கேட்டுச் சம்மதம் பெற்றவுடன் திரும்பலா'மென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு, மூன்று நாட்கள் இருந்துதான் போகவேண்டும் நீங்கள். கோடைக்கானல் மூன்று தினங்கள் தங்குவதற்குக் கூடத் தகுதியில்லாத ஊரா, என்ன?" என்று கேட்டாள் பூரணி.
"இரண்டு, மூன்றுநாள் தங்குவது பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை, அம்மா! நீ விரும்பினால் இதுபற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே!"
அவர் இவ்வாறு கூறியதும் அவளுடைய முகத்தில் நுண்ணிய அளவில் நாணம் பரவிற்று. தலை சற்றே தாழ்ந்தது. இதழ்களும் கண்களும் மோன மென்னகை புரிந்தன. அவர் அவளை அப்போது நன்றாகக் கவனித்தார்.
தம்முடைய செல்வாக்கைவிட, செல்வத்தை விட ஏதோ ஒரு பெரிய அற்புதத்தால் மாயம் செய்து அவளுடைய உள்ளத்தை அரவிந்தன் ஆண்டு கொண்டிருப்பதை மீனாட்சிசுந்தரம் அந்தக் கணத்தில் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். 'சாதாரணமாக ஒரு பெண்ணின் உள்ளத்தை ஆள்வதற்கே ஆற்றல் வேண்டும். இவளைப் போன்ற அபூர்வமான பெண்ணின் இதயத்தையும் ஆள்கிற அளவுக்கு நம் அரவிந்தனுக்கு ஏதோ பெரிய கவர்ச்சியிருக்கிறது. அது முகத்தின் கவர்ச்சி மட்டுமன்று; முகத்தில், பேச்சில், பழக்க வழக்கங்களில் எல்லாவற்றிலும் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய மாயம் வைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்தன்' என்று எண்ணினார். அப்படி எண்ணியபோதுதான் அவன் அவருடைய உள்ளத்திலும் மிகப் பெரியவனாக உயர்ந்து தோன்றினான். பல ஆண்டுகளுக்கு முன் 'எங்கிருந்தோ வந்தான்' என்பது போலப் போட்டுக் கொள்ள மறுசட்டையின்றி அனாதை இளைஞனாகத் தம்மிடம் வேலைக்கு வந்த பழைய அரவிந்தனையும், தன்னையும் வளர்த்துக் கொண்டு, அவருடைய அச்சகத்தைய்ம் வளர்த்து விட்டிருக்கும் இப்போதைய அரவிந்தனையும் ஒரு கணம் தம் மனத்தில் ஒப்பிட்டுப் பார்த்தார் மீனாட்சிசுந்தரம். நெடுந்தொலைவில் நெடுநாட்களாகப் பிரிந்து போய்விட்ட தம் மூத்த பிள்ளையான ஒருவனைப் பற்றி நினைப்பது போல் பாசம் பொங்கிற்று அவர் மனத்தில்.
"உன் அந்தரங்கம் எனக்குப் புரிகிறது பூரணி. ஒரு நடை வந்துவிட்டுப் போகச் சொல்லி அரவிந்தனுக்குத் தந்தி கொடுக்கிறேன் அம்மா!" என்றார் அவர்.
"சிற்றப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன் அங்கிருந்து அவர் புறப்பட்டு வர முடியுமோ, முடியாதோ? தந்தி கொடுத்தால் என்ன நினைப்பாரோ?" என்று சந்தேகம் தெரிவித்தாள் அவள்.
"அப்படியில்லை, அம்மா? தந்தி கொடுத்தால் அவன் நிச்சயம் புறப்பட்டு வருவான். இன்று மரணச் சடங்கு முடிந்திருக்கும். நாளைக் காலையில் மயானத்துக்கும் போய்ப் 'பாலூற்றலை' முடித்தால் அப்புறம் பதினோறாவது நாள் கருமாதிக் காரியங்களுக்குத்தான் அவன் போக வேண்டியிருக்கும். நான் தந்தி கொடுக்கிறேன்" என்று பூரணியிடம் கூறிவிட்டு முருகானந்தம் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பினார் மீனாட்சிசுந்தரம். அவன் அங்கே இல்லை. உட்கார்ந்திருந்த நாற்காலி வெறுமையாக இருந்தது.
"இந்தப் பிள்ளை எங்கே போனான்? தபால் ஆபீசுக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லலாமென்று பார்த்தேன்! பரவாயில்லை, நானே காரை எடுத்துக் கொண்டு போய்விட்டு வந்து விடுகிறேன்" என்று எழுந்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.
"வேண்டாம்! சிறிது நேரத்துக்கு முன்புதான் இங்கே தோட்டத்துப் பக்கமாகச் சுற்றிப் பார்க்க எழுந்து போனதைப் பார்த்தேன். இதோ கூப்பிடுகிறேன். அவரே போய் வரட்டும்! உங்களுக்கு எதற்குச் சிரமம்?" என்று பூரணி எழுந்திருந்து தோட்டத்துப் பக்கம் போனாள். தோட்டத்தில் ஒருவரும் இல்லை. வீட்டுக்குள் வந்து வசந்தாவை அவளுடைய அறையில் தேடினாள். அவளையும் காணவில்லை. பூரணி சமையற்கார அம்மாளிடம் கேட்டாள்.
"இங்கேதான் இருந்தாள்! அந்தப் பெரியவரோடு வந்திருந்த பிள்ளைக்கு தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாளே! தோட்டத்தில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நன்றாகப் பாருங்கள்" என்றாள் சமையற்கார அம்மாள். மறுபடியும் தோட்டத்துக்குப் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் பூரணி. அங்கிருந்து மேடான ஓர் இடத்திலிருந்து பார்த்தால் ஏரி மிக அருகில் நன்றாகத் தெரியும். பூரணி ஏரியில் பார்த்தபோது முருகானந்தமும் வசந்தாவும் படகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. பூரணி தனக்குள் சிரித்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.
"நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!" என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. 'இந்த உறவை மங்களேஸ்வரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்?' என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். 'முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத்தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுப் பெற முடியும்?' என்று தயங்கிற்று பூரணியின் மனம். கதைகளில் நம்ப முடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒருவகையில் தற்செயலாகவும் விரைவாகவும் நிகழ்கிற நிகழ்ச்சியாகப்பட்டது அவளுக்கு. முதல்நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்க முடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். 'பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய், இறைவா! அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய்!' என்று நினைத்தாள் அவள். பத்து நிமிடங்களில் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.
எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட உட்காரலாமென்று வசந்தாவையும், முருகானந்தத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பூரணி. சிறிதுநேரத்தில் சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.
"இவர் இதற்கு முன்னால் கோடைக்கானலுக்கு வந்ததில்லையாம் அக்கா! அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பித்தேன். சாயங்காலம் 'பில்லர் ராக்ஸ்' மலைப்பகுதிக்குப் போகத் திட்டம் போட்டிருக்கிறோம்" என்றாள் வசந்தா.
"ஆகா! தாராளமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். என்னை மட்டும் கூப்பிடாதீர்கள். எனக்கு வர ஒழிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு மெல்லச் சிரித்தாள் பூரணி. முருகானந்தத்தின் முகத்தில் மிக மென்மையானதும் நுணுக்கம் நிறைந்ததுமான புதிய அழகு ஒன்று வந்து பொருந்தியிருப்பதைப் பூரணி கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். ஓர் இளம் பெண்ணின் உள்ளத்தை வெற்றி கொண்டு விட்டோம் என்ற பெருமையில் ஆண் பிள்ளைக்கு உண்டாகிற இன்பமயமான கர்வத்தின் அழகா அது? பகல் உணவு முடிந்ததும் கோடைக்கானலுக்கு அருகில் பட்டி வீரன் பட்டியில் தமக்கு நெருங்கிய நண்பராகிய காப்பித் தோட்ட முதலாளி ஒருவர் இருப்பதாகவும், போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மாலை ஏழு மணிக்குத் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டு மீனாட்சிசுந்தரம் காரில் புறப்பட்டுப் போய்விட்டார். பூரணி புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.
மாலை மூன்றரை மணிக்கு வசந்தாவும், முருகானந்தமும் அவளிடம் வந்து சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வசந்தா அத்தனை அழகாக அலங்காரம் செய்து கொண்டு பூரணி இதற்கு முன்பு பார்த்ததில்லை. முருகானந்தம் தனது முன் நெற்றியில் வந்து அடங்காப்பிடாரி போல் சுருண்டிருக்கிற தலை மயிரை அன்று வெளியே புறப்படுகிறபோது அழகாக வாரி விட்டுக் கொண்டிருந்த அதிசயத்தையும் பூரணி கவனித்தாள். 'காதல் என்னும் உணர்வுக்கு இத்தனை தூரம் மனிதர்களைக் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக்கி விடுகிற சக்தியும் உண்டோ?' என்று எண்ணி வியந்தாள் அவள். 'இந்தக் குழந்தைகளின் இந்தப் பிள்ளைத்தனமான அன்பை, ஏழ்மை ஏற்றத்தாழ்வுகள் இடையே புகுந்து கெடுத்து விடக்கூடாதே' என்ற ஏக்கமும் உண்டாயிற்று பூரணிக்கு. பங்களா வாசலில் இறங்கி, பட்டுப் பூச்சிகள் பறந்து போவதைப் போல் அவர்கள் போவதைப் பார்த்து மனம் மலர்ந்தாள் பூரணி. நியாயமான காதல் உணர்வு என்பது உலகத்துக்கே அழகு உண்டாக்குகிற ஒரு புனிதசக்தி என்று அந்தச் சமயத்தில் அவளுக்குத் தோன்றிற்று. படிப்பு, பண்பு, புகழ், உலகம் மதிக்கிற பெருமை எல்லாமாக ஒன்று சேர்ந்து எந்த ஓர் அன்பு விளையாட்டைத் தானும் அரவிந்தனும் விளையாட முடியாமல் செய்திருந்தனவோ, அந்த விளையாட்டை முருகானந்தமும் வசந்தாவும் கண் காண விளையாடத் தொடங்கி விட்டதைப் பூரணி உணர்ந்தாள்.
மீனாட்சிசுந்தரம் கோடைக்கானலிலிருந்து கொடுத்த தந்தி அன்று இரவு பத்து மணி சுமாருக்கு அரவிந்தனுக்குக் கிராமத்தில் கிடைத்தது. மூன்று கல் தொலைவுக்கு அப்பால் தான் தந்தி நிலையம் இருந்தது. தந்தி அங்கே வந்து, அங்கிருந்து சைக்கிளில் ஆள் கொண்டு வந்து தர வேண்டும், அரவிந்தனுடைய கிராமத்துக்கு. எனவே மெல்லவும் தாமதமாகவும் அந்தத் தந்தி வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கவில்லை.
'நீ அருகில் இல்லாமல் இவளைச் சம்மதிக்கச் செய்ய முடியாது போலிருக்கிறது. ஒரு நடை வந்து விட்டுப் போ' என்ற கருத்துத் தோன்ற அமைந்திருந்தது தந்தி வாசகம். 'நான் அருகில் இல்லாமல் என்னைக் கலந்து கொள்ளாமல் அவள் அவருக்குச் சம்மதம் தரவில்லை' என்று உணர்ந்தபோது அவனுக்குக் களிப்புத்தான் உண்டாயிற்று. அவள் அப்படித் தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்றுதானே அவனுடைய அந்தரங்கத்தின் ஆவல் துடித்தது! அந்தத் தந்தி வராவிட்டாலும் மறுநாள் காலை மயானத்தில் 'பால்தெளி' முடிந்ததும் அவனே மதுரை போய் அங்கிருந்து கோடைக்கானல் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தான். பூரணியை மீனாட்சிசுந்தரம் எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்த இருக்கிறாரோ அதே தொகுதியில் தான் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரரும் நிற்கப் போகிறார் என்று மதுரை உறவினர் தெரிவித்த போது அரவிந்தன் கோடைக்கானல் போய் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டுவிட்டான்.
'பால் தெளி' முடிந்த அன்று பகலில் அரவிந்தன் மதுரை புறப்பட்ட போது கேதத்துக்கு வந்திருந்த அரசியல் பிரமுகரும் அவனோடு மதுரை வந்தார். முதல்நாள் ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய போது, 'பூரணி நிற்கப் போகிற தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும்' என்று அவனிடம் கூறியவர் அவர் தான். அரவிந்தன் அவரை மிகவும் நல்லவரென எண்ணியிருந்தான். ஆனால் கிராமத்திலிருந்து மதுரை திரும்பியதும் அவனைத் தமது வீட்டுக்கு அழைத்துப் போய்ச் சுய உருவத்தைக் காட்டினார் அவர். அரவிந்தன் திகைத்துப் போனான். அத்தனை பயங்கரமும் அரசியலில் இருக்குமோ? ஐயோ அரசியலே!
'வாடிய பயி
ரைக் கண்டால் நான் வாடினேன். பசித்தவனைக் கண்ட போதெல்லாம் நோயை உணர்ந்தேன். ஏழைகளையும் இளைத்தவர்களையும் கண்டபோது நானே ஏழையாய் இளைத்தேன்!' என்று இராமலிங்க வள்ளலார் பாடிய பாட்டின் கருத்துத்தான் இந்த நாட்டில் ஒரு அரசியல் தொண்டனின் இலட்சியமாக இருக்க வேண்டுமென அவன் எண்ணியதுண்டு. ஆனால் அவனுடைய சத்தியத்தை ஐயாயிரம் ரூபாய் விலைக்கு ஏலம் கூறி விற்கப் பார்த்தார் அந்த முதிய அரசியல்வாதி. அவன் மருண்டான். இப்படி அனுபவம் இதற்குமுன் அவனுக்கு ஏற்பட்டதில்லையே?
---------------------
குறிஞ்சி மலர்
23
கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து - இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
-- சித்தர் பாடல்
ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் 'பேய்க்கரும்பு' என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச் சுவைதான் இராது. பெரிய மனிதர்களைப் போல் தோன்றிக் கொண்டு பெருந்தன்மை சிறிதுமில்லாத கயவர்களாய்க் கொடியவர்களாய் வாழும் மனிதர்கள் சிலர் நல்ல அரிசியில் கல்போல் சமூகத்தில் கலந்திருக்கிறார்கள். இவர்கள் வெளித் தோற்றத்துக்குக் கரும்பு போல் தோன்றினாலும் உண்மையில் சுவை வேறுபடும் பேய்க் கரும்பு போன்றவர்கள் தான்.
கிராமத்திலிருந்து தன்னோடு மதுரைக்கு வந்த அந்தப் பெரிய மனிதரின் சுய உருவம் புரிந்த போது அரவிந்தனுக்கு உள்ளம் கொதித்தது. உள்ளக் கருத்து ஒன்றும் கள்ளக் கருத்து ஒன்றுமாக வாழ்ந்து ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய கொடியவர்களை உலகம் உணர்ந்து கருவறுக்கும் காலம் என்று வரப் போகிறதென்று குமுறினான் அவன். அந்த ஆளை முதலிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதற்காகத் தன்னை நொந்து கொண்டான். புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்குப் போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலத்துச் சமுதாய வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சரியான கருவியாக இருக்கிறது. காரணம்? ஒவ்வொரு மனிதனும் குழப்பங்கள் நிறைந்த ஒரு புத்தகமாக இருக்கிறான். படித்துப் புரிந்து கொள்வது அருமையாக இருக்கிறது.
அரவிந்தனும் அந்த முதியவரும் மதுரையை அடைந்தபோது மாலை மூன்றரை மணி இருக்கும். கிராமத்திலிருந்து புறப்படும் போது இரயிலில் மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அவர் முதல் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அவனையும் முதல் வகுப்புக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார்.
"சீ! சீ! பட்டிக்காட்டுக் கும்பல் புளிமூட்டை மாதிரி அடைந்து கிடக்குமே மூன்றாம் வகுப்புப் பெட்டியில்? நிற்கக் கூட இடம் இருக்காது. அந்த டிக்கெட்டை இப்படிக் கொடு. திருப்பிக் கொடுத்துவிட்டு முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து பேசிக் கொண்டே போகலாம்" என்றார்.
"அதனால் என்ன பரவாயில்லை, எனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்து பழக்கம் கிடையாது. நீங்கள் முதல் வகுப்பில் வாருங்கள். நான் மூன்றாம் வகுப்பிலே வருகிறேன். மதுரையில் இறங்கினதும் சந்திப்போம்" என்று அவரை மறுத்துவிட்டு விலகிச் செல்ல முயன்றான் அரவிந்தன். அவர் விடவில்லை.
"பழக்கம் இல்லையாவது, ஒன்றாவது தம்பி! புதுச் சொத்து எல்லாம் வந்திருக்கிறது, பணக்காரனாயிருக்கிறாய். ஸ்டேட்டஸ் (கௌரவம்) குறைகிறாற் போல் நடந்து கொள்ளலாமா? இந்தக் காலத்தில் புகழும் கௌரவமும் சும்மா வந்து விடாது. பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் அப்பனே!" ஒரு தினுசாகச் சிரித்தவாறே கண்களைச் சிமிட்டிக் கொண்டே, அவனை நோக்கி இப்படிச் சொன்னார் அவர்.
அவருடைய இந்தச் சொற்கள் அரவிந்தனின் செவியில் கீழ்மைப் பண்பின் ஒரே குரலாக ஒலித்தன. 'இத்தனை வயதான மனிதர் இவ்வளவு அனுபவங்களும் பெற்று முதிர்ந்த நிலையில் பேசுகிற பேச்சா இது? வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக முடிவு செய்திருக்கிறார். பல பேருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஒரு மனிதர் இப்படியா பேசுவது?' என்று வருந்தினான் அரவிந்தன். செல்வத்தை முதலீடாக வைத்துக் கொண்டு போலியான வழியில் புகழும், கௌரவமும் ஈட்ட முடிகிற காலமாக இது இருந்த போதிலும், அவரைப் போன்ற பொறுப்புள்ள ஒருவர், அதைப் பொன்மொழி போல் எடுத்துத் திருவாய் மலர்ந்தருளியது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதர் மேல் அவனுடைய மனம் கொண்டிருந்த மதிப்பில் ஒரு பகுதி குறைந்துவிட்டது. ஆனாலும் அவர் அவனை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய விடவில்லை. வலுக்கட்டாயமாக அவனது பயணச் சீட்டைப் பறித்துக் கொண்டு போய் முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வந்தார். அவன் மிகக் கண்டிப்போடு மறுக்க முயன்றான். முடியவில்லை. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் முதல் வகுப்புப் பெட்டியில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டு விட்டார். வண்டியும் புறப்பட்டு விடவே, அவன் அங்கேயே இருக்க வேண்டியதாகப் போயிற்று. இரயிலின் இருபுறமும் பசுமையான வெற்றிலைக் கொடிக்கால்கள் நகர்ந்தன.
"நான் என்னப்பா செய்வது? பேச்சுத் துணைக்கு வேறு ஆள் இல்லை. தனியாகப் போவதற்கு என்னவோ போலிருக்கிறது. உன் கொள்கையைப் பலாத்காரமாக மாற்றி விட்டேனே என்று என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே" என்று சிரித்து மழுப்ப முயன்றார் அந்தக் கிழவர். பதுங்கிப் பம்மிப் பாய வருகிற காலத்தில் வேங்கைப் புலியின் முகத்தில் தோன்றுகிற தந்திரமும் குரூரமும் இணைந்த சாயலைக் கண்டிருந்தால் அந்தக் கிழவரின் முகத்தைக் காண வேண்டிய அவசியமில்லை. அதே சூழ்ச்சிக் களையோடு கூடிய முகம் தான் அவருக்கும் வாய்த்திருந்தது. மதுரையில் அவரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு அரவிந்தனுக்கு ஏற்பட்டிராவிட்டாலும் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சிறுவயதிலிருந்தே ஊர் உறவுகளிலிருந்து விலகி அநாதை வாழ்க்கை வாழ்ந்து விட்டதனால் அவனுக்குத் தன்னூர் ஆட்களிடம் பழக்கமே இல்லை. அதிலும் இப்போது முதல் வகுப்பில் அவனோடு வந்து கொண்டிருக்கிற இந்த மனிதர் சிறுவயதிலேயே ஊரைவிட்டு, நாட்டை விட்டு பர்மாவுக்குப் போய் வட்டிக்கடை வைத்துப் பணம் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தவர். திரும்பி வந்தபின் கிராமத்துக்குப் போகாமல் பலவிதமான வாழ்க்கை வசதிகளுக்காக மதுரையிலே பங்களா கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார். அவருடைய சொந்தப் பெயரைச் சொன்னால் மதுரையில் தெரியாது. 'பர்மாக்காரர்' என்றால் நன்றாகத் தெரியும். வாலிப வயது முடிந்து நடுத்தரப் பருவத்தையும் கடந்து முதுமையை எட்டப்போகிற தருணத்தில் விநோதமான விதத்தில் அவர் பர்மாவிலிருந்து திரும்பியிருந்தார்.
வட்டிக்கடை வைத்துச் சேர்த்த பணமும் பகட்டும், வாழ்ந்து சோர்ந்திருந்த முதுமையும் மட்டுமின்றி; பச்சைக் கிளிபோல் எழில் கொஞ்சும் பர்மியப் பெண் ஒருத்தியையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார் அவர். பர்மாவுக்குப் போகும்போது ஒற்றைக் கட்டையாகப் போனவர் அவர். அதற்காக எப்போதும் ஒற்றைக் கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்குகிற போது எத்தனையோ நினைவுகள் தானாகவும் எளிதாகவும் நிறைவேறிவிடுகின்றன. உள்ளத்தைப் பித்துக் கொள்ளச் செய்யும் வனப்பு வாய்ந்த பர்மியப் பெண்களின் அழகில் மயக்கமும் சபலமும் கொண்டு ஏங்கிய நாட்கள் அவருடைய பர்மா வாழ்வில் அதிகமானவை. கடைசியில் தாயகம் திரும்புவதற்கு முந்தின ஆண்டில் அவருடைய ஆசை நிறைவேறி விட்டது. தம்முடைய வயதில் மூன்றில் ஒரு பங்கு வயது கூட ஆகாத ஒரு பர்மியப் பெண்ணை அவர் மணந்து கொண்டார். அனுமதியும் பெற்றுத் தம்மோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். விளையாடுவதற்குப் பிரியமான பொம்மை வாங்கிக் கொண்டு வந்ததுபோல் களிப்புடன் வந்தார் அவர். கொள்ளக் குறையாத செல்வத்தையும் கொள்ளை அழகு கொஞ்சும் மனைவியையும் இட்டுக் கொண்டு மதுரை திரும்பியபின் அவருக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய யோகங்கள் அடித்தன. பொது வாழ்வில் பல நண்பர்களும் சங்கங்களும் சேர்ந்து அவரைப் பெரிதுபடுத்தினர். பிரமுகராக்கினர். செல்வாக்கும் புகழும் அரசியலுக்கு அழைத்தன. அதிலும் நுழைந்து பதவியும் பகட்டுமாக வாழ்ந்தார் 'பர்மாக்காரர்'.
மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய காம்பவுண்டுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனி 'எஸ்டேட்' ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் 'பர்மாக்காரர் எஸ்டேட்' என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பர்மாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான். ஆனால் பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்லோரும் அங்கீகரித்துக் கொண்டு போற்றவும் உதவி செய்தது. அதனால் வளர்ந்து வளம் பெற்றிருந்தார் அவர்.
அவரைப் பற்றி அரவிந்தன் அறிந்திருந்தவை இவ்வளவுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு உறவு முறையைக் கருதிப் 'பர்மாக்காரர்' வந்து போகிறாரா? அல்லது பணக்காரருக்குப் பணக்காரர் என்ற முறையில் விட்டுக் கொடுக்கக் கூடாதென்பதற்காக வந்தாரா' என்று நினைத்து வியந்தான் அரவிந்தன். முதல்நாள் மயானத்திலிருந்து திரும்பும் போது பர்மாக்காரர் தன்னிடம் பூரணி தேர்தலில் நிற்கப் போவது பற்றி அனுதாபத்தோடு எச்சரித்ததும் மீனாட்சிசுந்தரத்தைப் பற்றி விசாரித்ததும் இயல்பான நல்லெண்ணத்தால்தான் என்று சாதாரணமாக எண்ணியிருந்தான் அவன். பர்மாக்காரருடைய கீழ்மைத் தனமான பேச்சுக்களும், வயது வந்த முதுமைக்கும், பொறுப்புக்கும், பொருந்தாமல் அடிக்கடி அவர் கண்களைச் சிமிட்டிக் குறும்பு செய்வதும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே ஒழிய, அவர் கெட்டவராகவும், பயங்கரமான சூழ்ச்சிக்காரராகவும் இருப்பாரென்று அவன் நினைக்கக் கூட இல்லை. அவருடைய முகத்துக்குத் தான் புலியின் களை இருந்தது. இரண்டு இதழோரங்களிலும் கடைவாய்ப் பல் நீண்டிருப்பதன் காரணமாக எத்தனையோ சாது மனிதர்களுக்குக் கூட இப்படிப் புலிமுகம் இருப்பதை அரவிந்தன் கண்டிருக்கிறான். எனவே சிந்தித்துப் பார்த்தபின் அது கூட அவனுக்குப் பெரிய தப்பாகப் படவில்லை. இரயில் பயணத்தின் போது கூட அவர் அவனிடம் நெருக்கமாகவும் அன்பாகவும் தான் நடந்து கொண்டார். மதுரை நகரத்து அரசியல் நிலைமையைப் பற்றி, மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப் போகும் நோக்கம் பற்றித் தனக்குத் தெரியாத இரகசியம் எல்லாம் அவருக்குத் தெரிந்திருப்பதைக் கண்டு அரவிந்தனே அயர்ந்து போனான். யாரைப் பற்றிப் பேசினாலும் ஒருவிதமான அலட்சியத்தோடு தூக்கி எறிந்து பேசினார் அவர். "உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் இன்றைக்குத்தான் ஏதோ கொஞ்சம் வசதியா இருக்கிறான் அப்பா. இந்தப் பிரஸ் வைக்கிறதுக்கு முன்னாலே சண்முகம் மில்ஸ்னு ஒரு மில்லிலேயே நிறையப் பங்கு (ஷேர்) வாங்கினான். மில் திவாலாப் போச்சு. அப்போதே ஆள் மஞ்சள் கடுதாசி நீட்டி ஐ.பி. கொடுத்து விட்டுத் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போயிருக்கணும். எனக்கு நல்லாத் தெரியும்" என்று அவன் மனம் விரும்பாத வழியில் கீழான பேச்சை ஆரம்பித்தார் பர்மாக்காரர். முதல் வகுப்பில் உட்கார்ந்து மூன்றாவது வகுப்பு விஷயங்களைப் பேசினார் அவர்.
"எல்லாப் பணக்காரர்களுமே அப்படித்தான் ஐயா! ஒரு சமயம் கைநொடிக்கும். ஒரு சமயம் வளரும்" என்று அவருடைய பேச்சை வேறு வழிக்குத் திரும்ப முயன்றான் அரவிந்தன்.
"அதுக்கு இல்லை தம்பி! இந்தக் காலத்தில் ரொம்பச் சின்ன ஆளுங்க எல்லாம் வேகமாக மேலே வந்திடப் பார்க்கிறாங்க. இந்த பூரணிங்கற பொண்ணு ஏதோ தமிழ்ப் பிரசங்கம், மாதர் கழகமின்னு பேர் வாங்கி நாலுபேருக்குத் தெரிஞ்ச ஆளாயிட்டுது. இதனோட தகப்பன் அழகியசிற்றம்பலம் கஞ்சிக்கில்லாமே பஞ்சைப் பயலா மதுரைக்கு வந்தான். நம்ம வக்கீல் பஞ்சநாதம் பிள்ளைதான் அப்போ காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவர். போனால் போகுதுன்னு இந்த ஆளுக்குத் தமிழ் வாத்தியாரா வேலை போட்டுத் தந்தானாம் பஞ்சநாதம்! இப்போ என்னடான்னா உங்க முதலாளி, அந்த ஆளோட பெண்ணைத் தேர்தலிலே நிறுத்த வந்திட்டார்."
அரவிந்தன் முகத்தைச் சுளித்தான். அவனுடைய உள்ளத்தில் தெய்வங்களுக்கும் மேலாக அவன் நினைத்திருந்த பெரியவர்களைப் புழுதியில் தள்ளி புரட்டுகிறாற் போல் நாவு கூசாமல் பேசினார் பர்மாக்காரர். வாயடக்கமில்லாமல் இப்படித் தாறுமாறாகப் பேசுகிறவர்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. 'பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் சன்மார்க்கமில்லை. பிறருடைய தீமையைப் பேசாமலிருப்பது கொல்லாமையைக் காட்டிலும் உயர்ந்த சன்மார்க்கம்' என்று நினைக்கிறவன் அரவிந்தன். சிறிது சிறிதாகத் தமது பேச்சாலேயே அவனுடைய உள்ளத்தில் மதிப்பிழந்து கொண்டிருந்தார் பர்மாக்காரர்.
மதுரை நிலையத்தின் கலகலப்பினிடையே புகுந்து இரயில் நின்றது. அவருடைய பர்மாக்கார மனைவியும், அவளுடன் அவருக்குப் பிறந்தவளான ஒரே மகளும் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தான் அரவிந்தன். பர்மிய இரத்தமும் தமிழ் இரத்தமும் கலந்த அழகில் அவருடைய மகள் காண நன்றாக இருந்தாள். தமிழ்நாட்டுக் கோலத்தில் நிலவு முகமும், மயக்கும் விழிகளுமாக நின்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மட்டும் மதுரைக்கு வந்து இத்தனை காலமான பின்னும் பர்மியத் தோற்றமும் அதற்கேற்ற அலங்காரங்களும் மாறவில்லை. கவிதை உணர்வின் புனிதமான எழுச்சியோடு அவர்கள் தோற்றங்களை அரவிந்தன் பார்த்தானே தவிர, வேறு விரசமான நினைவே இல்லை. அவன் மனதுக்கு விரசமாக நினைக்கவும் தெரியாது.
"நம்ப உறவுக்காரப் பிள்ளையாண்டான். 'அரவிந்தன்' என்று தங்கமான பெயர். இவனுடைய சிற்றப்பாவின் கேதத்துக்காகத் தான் நான் போயிருந்தேன்" என்று பெண்ணுக்கும் மனைவிக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
"நான் என்னவோ பர்மாவில் போய் பணத்தைத் திரட்டிக் கொண்டு வரலாம்னு போனேன் அப்பா! திரும்புகிற காலத்தில் இதோ இருக்கிறாளே, இந்தப் பொல்லாதவள் என் மனத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவிட்டாள். நான் இந்த அழகியையே கொள்ளையடித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டேனப்பா" என்று மிகவும் நகைச்சுவையாக மனைவியை அவனுக்கு அறிமுகம் செய்தார். அப்போது அந்தப் பர்மிய நங்கை சற்றே தலைசாய்த்து சிவந்த முகம் மேலும் சிவக்க ஒரு நாணப் புன்னகை பூத்தாள். உலகத்து மகாகவிகளின் நளின எழில்கள் யாவும் அந்தப் பர்மிய நங்கையின் சிரிப்பில் போய் இணைந்து கொண்டனவோ எனும்படி அழகாயிருந்தது அந்தச் சிரிப்பு.
"எனக்குக் கோடைக்கானல் போக வேண்டும். இப்படியே பஸ் நிலையத்துக்குப் போனால் நாலு மணிக்குக் கோடைக்கானல் போகிற கடைசி பஸ் இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். பதினாறாம் நாள் காரியத்துக்கும் நீங்கள் கண்டிப்பாய் வந்துவிட வேண்டும்" என்று இரயில் நிலையத்திலிருந்தே பர்மாக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட முயன்றான் அரவிந்தன். இரயிலில் அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட பின்பு அவரிடமிருந்து விரைவில் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு.
"நீ ஏனப்பா, பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாய். இவ்வளவு தூரம் வந்தவன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கோடைக்கானலுக்கு நாளைக்காலையில் போகலாம் தம்பி இப்போது வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்றார் பர்மாக்காரர். அவருடைய மகளும் தந்தையின் பக்கம் பேசி அவனை வரச்சொல்லி வற்புறுத்தினாள். அரைகுறைத் தமிழ்ச்சொற்களோடு கூடிய குயில் குரலில் அவருடைய பர்மிய மனைவியும் அவனை நோக்கி ஏதோ கூறினாள்.
'பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பர்மாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துக்களுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா' என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பர்மாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த கடிகாரம் போல் நேரம் பார்த்து, அளவு பார்த்து உள்நோக்கத்தோடு அவர் சிரித்துப் பழகுகிறாரா? அந்த மனிதரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு விடுவதற்காகவாவது அவருடைய வீட்டுக்குப் போய் வருவதென்று முடிவு செய்து கொண்டு இணக்கம் தெரிவித்தான் அரவிந்தன். இரயில் நிலைய வாயிலில் அவருடைய புதிய கார் பெரிதாக, அழகாக நின்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது.
"நான் சொல்றேன் இதுதான், தம்பி! இதுவரைக்கும் நீ எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இனிமேல் உனக்குன்னு ஒரு அந்தஸ்து வேணும்! இலட்ச ரூபாய்ச் சொத்துக்கு வாரிசாயிருக்கிறாய்! அதுக்குத் தகுந்த உறவு, பழக்கம் எல்லாம் உண்டாகணும். அந்த மீனாட்சி அச்சக வேலையை நீ விட்டு விடலாம் என்கிறது என் அபிப்பிராயம். நீயே சொந்தத்தில் நாலு பிரஸ் வைத்து நடத்துகிற வளமை உனக்கு வந்தாச்சு. இனிமேல் எதுக்கு அந்தப் பொறுக்கிப் பயல் வேலை? என்ன? நான் சொல்வது சரிதானே?" என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தார் பர்மாக்காரர். அவன் கார் சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கூறியதை இலட்சியம் செய்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
கார் வையைப் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாலத்தின் மேல் போக நேர்கிற போதெல்லாம் அரவிந்தனுக்கு ஒரு விந்தையான சிந்தனை உண்டாகும். 'இந்தப் பாலம் இலட்சாதிபதிகளும், பங்களாவாசிகளும் நிறைந்த வடக்கு மதுரையையும், சாதாரண மக்களின் நெருக்கடி நிறைந்த தெற்கு மதுரையையும் இணைக்கிறது. ஆனால் இந்த இரண்டு மதுரைகளின் மண் தான் இணைகிறதே ஒழிய மனம் இணையவில்லை. அதற்கு வேறொரு புதிய பாலம் போடவேண்டும். அது பண்பாட்டுப் பாலமாக இருக்கும்' என்று எண்ணுவான்.
அமெரிக்கன் கல்லூரியின் சிவப்பு நிறக் கட்டிடங்கள், தல்லாகுளம் பெருமாள் கோயிலின் பட்டையடித்த மதிற்சுவர் எல்லாவற்றையும் வேகமாகப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு கார் விரைந்தது. எதிரே நீலவானத்தின் சரிவில் மங்கிய ஓவியம்போல் அழகர் மலைக் குன்றுகள் தெரிந்தன.
கார் 'பர்மாக்காரர் எஸ்டேட்'டில் நுழைந்தது. அரவிந்தன் மலைத்துப் போனான். அப்பப்பா? எத்தனை அழகான இடம்! எவ்வளவு பெரிய தோட்டம்! எத்தனை விதமான பூந்தொட்டிகள்! எவ்வளவு பெரிய மாளிகை! ஒரு பெரிய ஊரையே குடி வைக்கலாம். அவ்வளவு விரிவான நிலப்பரப்பில் தோட்டமும் மாளிகையும் அமைந்திருந்தன.
சிற்றுண்டி, தேநீர் உபசாரமெல்லாம் பிரமாதமாக நடந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட எழுந்தான் அரவிந்தன்.
"என்னப்பா பறக்கிறாய்? இனிமேல் நாளைக் காலையில் தானே கோடைக்கானல் போகப் போகிறாய்! உன்னை என் நண்பர் ஒருத்தருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். கொஞ்சம் இரப்பா, அந்த நண்பருக்கு டெலிபோன் செய்து வரவழைக்கிறேன்" என்று யாருக்கோ டெலிபோன் செய்தார் பர்மாக்காரர். அவர் டெலிபோனில் பேசிய விதம், கண் சிமிட்டிக் கொண்டே கள்ளச் சிரிப்புச் சிரித்த விதம், எல்லாமாகச் சேர்ந்து மொத்தமாக அரவிந்தன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தைக் கிளப்பின. சிறிது சிறிதாக அவருடைய அந்தப் புலிமுகம் உண்மையாகவே புலிமுகமாய் மாறிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. 'நீ ஏதோ வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறாய்' என்பது போல் அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.
'மதுரை மீனாட்சி கோயிலில் வடக்குக் கோபுரத்தில் உட்பக்கம் சில தூண்கள் இருக்கின்றன. அவற்றுக்கு 'இசைத்தூண்கள்' என்று பெயர். அந்தத் தூண்களுக்கு அருகில் நெருங்கி அவற்றைத் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி கேட்கும். அதே போல் அருகில் நெருங்கி இதயத்தைத் தட்டிப் பார்க்கும் போதல்லவா மனிதனுடைய சுயமான உள்ளத்தின் ஒலி கேட்கிறது' என்று நினைத்து மருட்சியோடு பர்மாக்காரர் எஸ்டேட்டின் மாளிகைக்குள் அவரெதிரே வீற்றிருந்தான் அரவிந்தன். மருட்சி இருந்தாலும் அவன் தைரியத்தை இழந்துவிடவில்லை.
சிறிது நேரத்தில் அவனுக்காக வரவழைப்பதாக பர்மாக்காரர் டெலிபோன் செய்த நண்பர் வந்து சேர்ந்தார். அந்த ஆளைக் கண்டதும் அரவிந்தன் திகைத்தான். அவர் அவனுக்கு இனிமேல் தான் அறிமுகம் ஆகவேண்டிய ஆள் இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான். வேறு யாருமில்லை. அன்றொரு நாள் பூரணியின் வீட்டில் அவனைக் கன்னம் சிவக்க அறைந்துவிட்டுப் போனாரே, புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர், அவர் தான் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். அதன் பின் அங்கு நிகழ்ந்தவையெல்லாம் துப்பறியும் மர்மக் கதைகளில் நடப்பது போல் நிகழ்ந்தன. அரவிந்தன் வற்புறுத்தப்பட்டான். பயமுறுத்தப்பட்டான்.
அவர்கள் தன்னிடம் பேசியவற்றிலிருந்து அரவிந்தன் சில உண்மைகளைப் புரிந்து கொண்டான். பர்மாக்காரர் சிற்றப்பாவின் கேதத்துக்கு வந்திருந்தபோது மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப்போவது பற்றிக் கேட்டது, தன்னிடமிருந்து வாயளப்பு அறிவதற்காகவே என்பது இப்போது அவனுக்கு நன்றாக விளங்கிவிட்டது. பர்மாக்காரர் தம்முடைய ஆளாக, அதே தொகுதியில் புது மண்டபத்து மனிதரை நிறுத்த இருக்கிறார் என்பதும் அவனுக்கு விளங்கிற்று. இரயிலில் அவர் தன்னிடம் பேசித் தெரிந்து கொண்ட உண்மைகளும், தன்னைக் கோடைக்கானலுக்கு அன்றே போகவிடாமல் தடுத்ததும் எதற்காக என்பது அரவிந்தனுக்கு இப்போது புரியத் தொடங்கியது. புலிமுகம் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவனை நோக்கிப் பேசியது: "தம்பி! நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. எனக்குத் தெரியாமல் ஒரு காரியம் நடந்துவிட முடியாது. உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நேற்றுப்பயல்! எங்களுக்குப் பரம வைரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யத் தொடங்கிவிட்டான் அவன். நீ நம் வழிப்பையன். பேசாமல் நான் சொல்கிறபடி கேள், உனக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் தருகிறேன். அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்காமல் செய்து விடு. இது உன்னால் முடியும். அந்தத் தொகுதியில் நான் இவரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்."
அரவிந்தன் நெற்றிக்கண் திறந்த சிவபெருமான் போல் கனல் விழிகளோடு அவர்களை முறைத்துப் பார்த்தான். ஐம்பது புத்தம் புதிய நீல நோட்டுகளை எண்ணி நீட்டினார் அவர். அரவிந்தன் விறுட்டென்று எழுந்து நின்றான்.
"சாக்கடையில் கொண்டுபோய்ப் போடுங்கள் அந்தப் பணத்தை. இதன் நாற்றம் சாக்கடையைக் கூட அசுத்தமாக்கி விடும்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இடது புறங்கையால் நோட்டுக் கற்றையை அலட்சியமாகத் தட்டிவிட்டான் அரவிந்தன். மின்சார விசிறியின் காற்று வேகத்தில் அவன் தட்டிவிட்ட புது நீல நோட்டுக்கள் சுழன்று பறந்தன. அவன் பணத்துக்குப் பறக்கவில்லை; பணம் எடுக்க ஆளின்றிப் பறந்தது.
அவர்கள் முகம் சிவக்க அவனை வெறித்து நோக்கினர். பர்மாக்காரரின் முகம் புலிப் பார்வையின் கடுமையில் அதிகமான இறுதிக் கடுமையை எய்தியது. புது மண்டபத்து மனிதரின் கண்கள் நெருப்புக் கோளங்களாயின.
"இந்தாப்பா, பலராம்! இந்தப் பையன் ஏதோ முறைத்து விட்டுப் போகிறான். நீ வந்து கொஞ்சம் பையனைக் கவனி" என்று யாரையோ கூப்பிட்டார் பர்மாக்காரர். எழுந்து வெளியேறிவிட்ட அரவிந்தன் வாயிற்படியிலிருந்து இறங்கி உட்பக்கம் திரும்பிப் பார்த்தான். அரிவாள் நுனிபோல் மீசையும், தடித்த உடம்புமாகக் கொழுத்த மனிதன் ஒருவன், உள்ளேயிருந்து வந்தான். திரைப்படங்களிலும் கதைகளிலும் கண்டது வாழ்க்கையிலும் இப்போது வருவதை உணர்ந்தான் அரவிந்தன். பெரும்புள்ளிகள் இம்மாதிரி 'அடி ஆட்கள்' வைத்திருப்பது பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு.
நெஞ்சின் வலிமைதான் பெரிது என நினைத்திருந்த அவன் முதன்முதலாகத் தன் வாழ்வில் உடம்பின் வலிமையைக் காட்டிப் போராட வேண்டிய சமயம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஜிப்பாவின் கைகளை மேலே மடித்துவிட்டுக் கொண்டான். கவிதைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் எழுதிய கைகள் போருக்குப் புடைத்து நின்றன.
----------------
குறிஞ்சி மலர்
24
பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்த
மேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை
-- திருவிருத்தம்
இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும் 'பர்மாக்காரர்' நகரில் புகழும் பதவியும் பெற்று, நேர்மையானவர் போல் காட்டிக் கொள்வது இந்த விதத்தில் தான் என்பது என்று அரவிந்தனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிவிட்டது.
பிறரை வெறுப்பதற்கும், கடுமையாகப் பகைத்துக் கொண்டு அடி, உதைகளில் இறங்குவதற்குங் கூட ஒருவகை முரட்டுச் சாமர்த்தியம் வேண்டும். ஆனால் அன்பின் நெகிழ்ச்சியும், கலைகளின் மென்மைப் பண்பும் கலந்த மனமுள்ளவர்களுக்கு இந்த முரட்டுத்தனம் வராது. அரவிந்தன் சிறு வயதிலிருந்தே இந்த முரட்டுத்தனம் உண்டாகாமல் வளர்ந்தவன்.
முருகானந்தமோ இந்த முரட்டுத்தனத்தையே வீரமாக்கிக் கொண்டவன். பர்மாக்காரர் எஸ்டேட் மாளிகையில் அவரால் ஏவப்பட்ட முரட்டு அடியாள் தன்னை நோக்கிக் கைகளை ஓங்கிக் கொண்டு வந்தபோது அரவிந்தன் பதில் தாக்குதலுக்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும், தயாரானானே ஒழிய, அவன் மனம் முரட்டு வெறி கொள்ளவில்லை. இத்தகைய கொடுமைத் தாக்குதல்களுக்கு அந்த முரட்டு வெறி உண்டாகாவிட்டால் வெற்றியில்லை. எமகிங்கரனைப் போல் கைகளை ஓங்கிக் கொண்டு வந்த அந்த புண்ணாக்குத் தடியனிடம் மாட்டிக் கொண்டிருந்தால் அரவிந்தனால் போரிட்டுத் தப்பியிருக்க முடியாதுதான்!
ஆனால் போரிடாமல், புண்படாமல் தப்பிக்க அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது அரவிந்தனுக்கு. மென்மைக் குணம் படைத்த நல்ல மனிதர்களை அந்த மென்மைக்கு ஊறு நேராமலே தெய்வ சித்தம் காப்பாற்றி விடுகிறது என்பது எத்தனை பொருத்தமான உண்மை! தெய்வ சித்தமோ அல்லது தற்செயலான சந்தர்ப்பமோ எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, அந்தச் சமயத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த முரடன் அடித்துக் கீழே தள்ளிவிட அரவிந்தனை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரிய கார் காம்பவுண்டுக்குள் நுழைந்து வேகமாக மாளிகை முகப்புக்கு வந்து நின்றது. கண்ணியமானவர்களாகவும், செல்வம் நிறைந்தவர்களாகவும் தோன்றிய யாரோ இரண்டு, மூன்று பேர்கள் பர்மாக்காரரை நோக்கிக் கைகூப்பிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.
அவ்வளவுதான், நாடகத்தில் காட்சி மாறுகிறாற் போல் உடனடியாக அங்கு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. "வரவேணும்! வரவேணும்!" என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் வந்தவர்களை எதிர்கொண்டழைக்க ஓடி வந்தார்கள். "பலராம்! உள்ளே போய் அம்மாவிடம் காப்பி, பலகாரத்துக்குச் சொல்லு" என்று தடியனை வேறு காரியத்துக்குத் திருப்பி விட்டார் பர்மாக்காரர். 'தன்னைப் பற்றி வந்தவர்களுக்கு முன்னால் அரவிந்தன் ஏதாவது கண்டபடி கூச்சல் போட்டு மானத்தை வாங்கிவிடப் போகிறான்' என்ற பயத்தினால் அவரே முந்திக் கொண்டார். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்தோடு அவனை நோக்கி, "நீ போய்விட்டு நாளைக்கு வா தம்பி! இப்போது நேரமில்லை எனக்கு" என்றாரே பார்க்கலாம்! ஒரே விநாடியில் காட்சியை மாற்றி நடித்து விட்ட அந்தச் சாமர்த்தியத்தை எப்படி வியப்பதென்றே அரவிந்தனுக்குத் தெரியவில்லை.
அவன் பயத்தையும், வியப்பையும், இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளையும் மனத்தில் சுமந்து கொண்டே அந்தப் பெரிய தோட்டத்திலிருந்து வெளியேறிச் சாலைக்கு வந்தான். சிறிது நேரத்தில் பஸ் வந்தது. கையை நீட்டிப் பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொண்டான். வெளியூரிலிருந்து மதுரை திரும்பும் பஸ் அது. வையைப் பாலத்து இறக்கத்தில் யானைக்கல்லில் இறங்கிக் கொண்டான் அரவிந்தன். இரவு மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. சில்லறை விற்பனைக்காகப் பலாப்பழம், மாம்பழம் முதலிய பழங்களை மொத்தத்தில் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் 'பழக்கமிஷன் மண்டிகள்' நிறைந்த யானைக்கல் பிரதேசம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரெல்லாம் பலாப்பழமும், மாம்பழமுமே நிரம்பிக் கிடப்பது போல் அந்தப் பகுதிக்கென்றே ஒருவகைப் பழமணம் சொந்தமாயிருந்தது. பலாப்பழத்தின் உடைந்த சக்கைகளும், அழுகின பழச் சிதறல்களுமாக, வீதியே பழக்கடைகளுக்கு அடையாளம் சொல்லி வழிகாட்டுவது போல ஒரு தோற்றம். அரவிந்தன் நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் பர்மாக்காரர் எஸ்டேட்டில் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. தேர்தல் காலங்களில் ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைப்பது, தனியே கூட்டிச் சென்று மிரட்டி பயமுறுத்துவது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு என்று அரவிந்தன் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாதிரிப் பயங்கரச் சூழ்ச்சிகளையும் செயல்களையும் பற்றித் தேர்தலை ஒட்டிய காலத்துச் செய்தித்தாள்களில் சில செய்திகளும் படித்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் இன்றைய உலகில் சர்வசாதாரணமாக நடைபெற இடமிருக்கிறது என்பதையே அவன் நம்பியது கிடையாது. ஒப்புக்கொண்டதும் இல்லை. ஆனால் இன்று தன்னுடைய வாழ்க்கையில் தானே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டுத் தப்பி வந்திருப்பதை நினைத்தபோது அவனுக்கு உடல் புல்லரித்தது. மென்மையான பழத்துக்குள்ளே வன்மையான கொட்டை பொதிந்திருப்பது போல அன்பாலும் அறத்தாலும் அப்பாவியாக வாழ்கிறவர்களின் நடுவே கொடுமையாலும் சூழ்ச்சியாலும் வாழ முயல்கிறவர்கள் இலைமறை காய் என இருக்கிறார்கள் என்பதை இன்று அவன் நம்பினான். ஒப்புக் கொண்டான். அனுபவித்தும் உணர்ந்து விட்டான்.
யானைக் கல்லில் இறங்கி நேர் மேற்கே செல்லுகிற சாலையில் நடந்து கொண்டிருந்த அரவிந்தன் பழைய சொக்கநாதர் கோவில் வாயில் தெற்கே திரும்பிய போது யாரோ கைதட்டிக் கூப்பிட்டார்கள். வெறும் கைத்தட்டலாக மட்டும் இருந்தால் அரவிந்தன் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான். கைத்தட்டலோடு "அதோ அரவிந்த மாமா போகிறாரு" என்று பழக்கமான குரல் ஒன்றும் சேர்ந்து ஒலிக்கவே அவன் திரும்பிப் பார்த்தான். பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி, மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், சம்பந்தன் எல்லோரும் கோயிலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்கள். கீழே வீதியில் அந்த அம்மாளுடைய கார் நின்று கொண்டிருந்தது. சிறுமி மங்கையர்க்கரசி தான் அவன் பாதையோரமாகப் போவதை முதலில் பார்த்து அடையாளங்கண்டு கூப்பிட்டிருக்கிறாள்.
"சுகமாயிருக்கிறீர்களா? எங்கேயாவது வெளியூர் போயிருந்தீர்களா? பூரணி கோடைக்கானல் போன பின்பு நீங்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லையே; இப்போது கூட நான் உங்களைப் பார்க்கவில்லை. இந்தப் பெண்தான் நீங்கள் போவதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். அப்புறம் கைதட்டி அழைத்தேன்" மங்களேசுவரி அம்மாள் அன்போடு அவனை விசாரித்தாள். முதுமையின் பொறுப்பும் கண்ணியமான பண்புகளும் நிறைந்த அந்த அம்மாளின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததுமே கைகள் குவித்து வணங்கினான் அரவிந்தன். 'வயது ஆக ஆகப் பெண்களிடமிருந்து பெண்மையின் மயக்கும் அழகு கழன்று தாய்மையின் தெய்வீக அழகு வந்துவிடுகிறது' என்று அவன் படித்திருந்தான். மங்களேசுவரி அம்மாளின் முகத்தில் மூப்பின் நலிவையும் மறைத்துக் கொண்டு ஒரு தாய்மைப் பொலிவு தென்படும். அந்த கௌரவமான அழகை வணங்காமலிருக்க அரவிந்தனால் முடியாது. பாரத நாட்டின் பெண்ணின் பெருமையே இந்தத் தாய்மை அழகுதான் என நினைப்பவன் அவன்.
அவன் தன்னைப் பற்றி அந்த அம்மாள் விசாரித்ததற்கு மறுமொழி சொன்னான். சிற்றப்பாவின் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குப் போய்விட்டு வந்ததையும், மறுநாள் அவசரமாகக் கோடைக்கானல் போவதற்கு இருப்பதையும் விவரித்தான். மீனாட்சிசுந்தரம் முருகானந்தத்தோடு பூரணியைச் சந்திப்பதற்காகக் கோடைக்கானல் போயிருக்கிறார் என்பதையும் அந்த அம்மாளிடம் சொன்னான். 'என்ன காரியமாகச் சந்திக்க அவர் அங்கே போயிருக்கிறார்' என்பதை அந்த அம்மாளும் கேட்கவில்லை. அவனும் அதைப் பற்றிச் சொல்லவில்லை.
"நான் கூட இந்தக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது. பூரணி போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்புறம் ஒன்றும் தகவலே இல்லை. மூத்த பெண்ணையும் அவள் கூட அனுப்பியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று வரன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. உங்களுக்கு ஒன்றும் அவசரமான காரியமில்லாவிட்டால் கொஞ்சம் வீட்டுக்கு வாருங்களேன். இராத்திரிச் சாப்பாட்டை அங்கே வைத்துக் கொள்ளலாம். எனக்கும் உங்களிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் வேண்டிக் கொண்டபோது, அரவிந்தனால் மறுக்க முடியவில்லை.
"நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்" என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். "பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில் எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான்.
மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி வெள்ளம் இறைந்து கிடந்தது. கார் அவற்றிடையே புகுந்து விரைந்து கொண்டிருந்தது. நகரத்துக்குப் பல்லாயிரம் வாய்கள் முளைத்துத் தாறுமாறாகக் குரலெழுப்பிப் பாடிக் கொண்டிருப்பதுபோல் ஒலிபெருக்கிகளும், சினிமா வசன இசைத் தட்டுக்களும் மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தன. ஒன்றரை நாள் இந்த நகரத்துச் சந்தடிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் சீமையின் வறண்ட கிராமம் ஒன்றில் இருந்துவிட்டு வந்த அரவிந்தனுக்கு இப்போது நகரமே சிறிது புதிதாய்ப் பெரியதாய் மாறியிருப்பது போல் பிரமை தட்டியது. வெளியூர் சென்றுவிட்டு மதுரை திரும்பும் போதெல்லாம் இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
தானப்ப முதலித் தெருவில் மங்களேசுவரி அம்மாள் வீட்டு வாயிலில் கார் நின்றதும் அரவிந்தன் இறங்கினான்.
"உள்ளே வாங்க அரவிந்தமாமா!" என்று மங்கையர்க்கரசி அவனைத் தன் பூங்கையால் பிடித்து இழுத்தாள். இந்தச் சிறுமியிடம் அரவிந்தனுக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. பூரணியின் தங்கை என்பதற்காகவோ, பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் கடைசிப் பெண் குழந்தை என்பதற்காகவோ மட்டும் ஏற்பட்ட பிரியமில்லை. அது உயிர் பெற்று நிற்கும் தங்கக் குத்துவிளக்குப் போல் முகமும், கண்களும், சிரிப்பும், கைகளும், கால்களும் எல்லாம் பூக்களாலேயே படைத்துப் பூக்களின் மணமூட்டினாற் போல மாயக் கவர்ச்சி வாய்ந்த சிறுமி இவள். எந்நேரமும் மருட்சியும் வியப்பும் கலந்து கனிந்து, கவிந்து, வெள்ளை அல்லி இதழில் கருப்புத் திராட்சை உருள்வது போல் இந்தச் சிறுமியின் கண்களுக்கு ஓர் அழகு வாய்த்திருந்தது. பெண் குழந்தைகளின் கண்களிலிருந்து இந்த மருட்சியும் வியப்பும் மாறிக் கள்ளத்தனம் குடிகொள்கிற வயது வந்தாலும் மங்கையர்க்கரசிக்கு இந்த அழகு மாறாதது போல் அவ்வளவு நிறைவாகவும், பதிவாகவும் இருந்தது. 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும்' என்று குழந்தை அழகைப் பற்றி வர்ணித்திருக்கிறார்களே, அந்த அழகுக் குறுகுறுப்பு, சிறுமியான பின்பும் இந்தப் பெண்ணிடமிருந்து போகவில்லை. அதுதான் அரவிந்தனைக் கவர்ந்தது. பூரணியின் விழிகளிலும் இந்த அழகு உண்டு. ஆனால் அது அறிவொளி கலந்த அழகாயிருந்தது.
வெகு நாட்களாகவே சந்திக்க வாய்ப்பின்றிப் பிரிந்து விட்ட சொந்தத் தம்பியை அன்போடு உபசாரம் செய்தாள் மங்களேஸ்வரி அம்மாள். செல்வச் செழிப்புக்குரிய ஆணவமே சிறிதும் இல்லாமல் இந்த அம்மாள் எப்படி இவ்வளவு அன்பு மயமாக நெகிழ்ந்துவிட முடிகிறதென்று அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பழகுகின்றவர்களோடு ஒட்டிக் கொள்ளும்படி செய்து விடுவதன் காரணமாக அன்புக்குத் தமிழில் 'பசை' என்று ஒரு பெயர் உண்டு. மனிதர்களுடைய மனங்களை இணைத்துத் தொடுத்து விடுகிற சக்தி அன்புக்கு இருப்பதால் 'நார்' என்றும், அன்புக்கு ஒரு பெயருண்டு. அந்த அம்மாள் அன்பு மயமாகப் பழகிய விதத்தைக் கண்டபோது 'பசை', 'நார்' என்னும் சொற்களுக்கு அன்பு என்னும் பொருள் அமைந்த நயம் பற்றிப் பூரணி எப்போதோ தன்னிடம் கூறியிருந்த விளக்கம் அரவிந்தனுக்கு நினைவு வந்தது.
சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு மங்கையர்க்கரசியும் செல்லமும், சம்பந்தனும் தூங்கிப் போனார்கள். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். ஒளிவு மறைவு இல்லாமல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"என்னவோ, பித்துப் பிடித்த மாதிரி இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெருக்கமும், உறவும் கொண்டாடிக் கவலையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே! நீங்கள் இருக்கிறீர்கள். பூரணி இருக்கிறாள். நீங்கள் இருவரும் தான் எனக்கு அந்தரங்கமானவர்கள் என்று மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டேன். பணத்தையும், செல்வாக்கையும், புகழையும் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் கிடைப்பார்கள். துன்பங்களையும், வேதனைகளையும் பங்கு கொண்டு தாங்கி நிற்கத்தான் யாரும் கிடைக்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. கடவுள் உங்கள் இருவருக்கும் தங்கமான மனத்தைக் கொடுத்திருக்கிறார். உலகத்தை எல்லாம் ஒரு குடும்பமாக எண்ணி அன்போடும், அனுதாபத்தோடும் பழகுகிற பக்குவம் உங்கள் இரண்டு பேருடைய மனத்துக்கும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது. பூரணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதே ஒரு விசித்திரமான நிகழ்ச்சி. அவள் அதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன். அவளை முதன் முதலாக நான் சந்தித்த தினத்திலிருந்து என்னுடைய மூத்த பெண்ணாக வரித்துக் கொண்டு விட்டேன். அவள் மூலமாகத் தான் நீங்கள் எனக்குப் பழக்கமானீர்கள் அரவிந்தன். நீங்கள் வித்தியாசம் வைத்துக் கொண்டு பழகக்கூடாது. பூரணி இந்த வீட்டின் மூத்த பெண்ணானால், நீங்கள் இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. இந்த வீட்டிலும், இதன் சுகபோகங்களிலும் என் வயிற்றில் பிறந்த வசந்தாவுக்கும் செல்லத்துக்கும் எத்தனை பாத்தியதை உண்டோ அவ்வளவு உங்களுக்கும் உண்டு. நான் பணத்தோடு பிறக்கவில்லை, நான் பணத்தோடு போகப் போவதும் இல்லை. இப்படியெல்லாம் வாழ நேரும் என்று கனவில் கூடச் சின்ன வயதில் நான் எண்ணியதில்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து 'அவருக்கு' வாழ்க்கைப்பட்டேன். இலங்கை மண்ணில் போய் உழைப்பினாலும் முயற்சியினாலும் உயர்ந்து இத்தனை பணத்தையும், இத்தனை துக்கத்தையும், இந்தப் பெண்களையும் எனக்குச் சேர்த்து வைத்துச் சென்று விட்டார் அவர். பணமும் பெருமையும் இருந்து என்ன செய்ய? இந்தப் பெண் வசந்தாவுக்கு ஒரு 'நல்ல இடம்' அகப்படாமல் தவிக்கிறேன்" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் மங்களேசுவரி அம்மாள்.
அந்த அம்மாள் கூறியவற்றைக் கேட்ட போது அரவிந்தன் மனம் குழைந்தான். அந்த அபூர்வமான அன்பும், பாசமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. 'பர்மாக்காரர் போல் இதயமே இல்லாதவர்கள் வாழ்கிற உலகத்தில் இவ்வளவு அற்புதமான பெருமனம் படைத்த இந்தத் தாயும் அல்லவா இருக்கிறாள்' என்று நினைத்தான் அவன். முருகானந்தம்-வசந்தா தொடர்பை அந்த அம்மாளிடம் குறிப்பாகச் சொல்லி சம்மதம் பெற வேண்டிய சமயம் அதுதான் என்று அரவிந்தனுக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் பரந்த மனம் அந்த மணத்தை மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் என்று அவன் உள்ளம் உறுதியாக நம்பியது. அரவிந்தன் அந்த அம்மாளிடம் கேட்டான்.
"அம்மா! உங்கள் பெண் வசந்தாவின் திருமணத்துக்காக சிரமப்படுவதாகக் கூறுகிறீர்களே! சிரமப்பட வேண்டிய காரணம் என்ன?"
"உங்களுக்குத்தான் தெரியுமே! அசட்டுத்தனமாகச் சினிமாவில் சேர்கிறேன் என்று போய் எவனுடனோ அலைந்துவிட்டு ஏமாந்து திரும்பினாள். ஊரில் அது கை, கால் முளைத்து தப்பாகப் பரவியிருக்கிறது. பெண்ணின் தூய்மையில் நமக்கெல்லாம் நம்பிக்கை நன்றாக இருக்கிறது. ஆனால் ஊரார் அதிலேயே சந்தேகப்படுகிறார்கள். எங்காவது ஒரு வரன் முடிவாகும் போலிருந்தால் யாராவது இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் குறுக்கே புகுந்து கலைத்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் அவர்களுக்கு என்னதான் பெருமையோ தெரியவில்லை" என்று ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கூறினாள் அந்த அம்மாள். அரவிந்தன் ஆறுதல் கூறினான்.
"சினிமாவில் நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு இரயிலில் பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?"
"அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின் அநியாயப் பழியை சுமப்பேன்?" - இதைச் சொல்லும் போதே அந்த அம்மாளின் குரல் கரகரத்து நைந்தது. தூய்மையான அந்தத் தாயின் கண்களில் நீர்மணிகள் அரும்பிச் சோகம் படர்வதை அரவிந்தன் கண்டுவிட்டான். அவனுடைய உள்ளம் உருகியது. அந்தத் தாயின் தவிப்பு அவனுடைய உணர்வைக் கரைத்தது. அப்போது அரவிந்தனுடைய மென்மையான உள்ளத்தில் ஓர் இளங்கவியின் குமுறல் எழுந்தது.
'உத்தர ராமாயணத்தில் சீதையை ஊராருக்காக இராமன் சந்தேகமுற்றபோது அந்த அபவாதத்தைப் பொறுமைக்கெல்லாம் எல்லையான பூமியே பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மண்மேனி வழி திறக்கப் புண்ணாகப் பிளந்து உள்ளே ஏற்றுக் கொண்டதைப் போல இந்தச் சமூகத்தில் ஒவ்வோர் அப்பாவிப் பெண்ணுக்கும் துன்பம் வரும்போது அந்தத் துன்பம் அவளை அணுகவிடாமல் பூமியே பிளந்து ஏற்றுக் கொண்டு விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்? சமூகத்தின் பழிகளுக்கு நடுவே அபலையாய் சபலையாய் ஆதரவு இழந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சீதைதான். "நல்வழி தா எனக்கு மண் மகளே!" என்று சீதை மண் புகுந்தது போல் பழிகளிலிருந்து விடுபட்டுப் பிரகிருதியின் அடிமடியில் சரண் புகுந்து விடுகிற தெம்பு இந்தத் தவத்திரு நாட்டுப் பெண்களிடம் இன்று இல்லாமற் போயிற்றே?' என்று கொதித்து வேதனைப்பட்டான் அரவிந்தன்.
"நான் இப்படிப் பளிச்சென்று கேட்பதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது அம்மா! என்னையும் பூரணியையும் போலவே நீங்களும் முற்போக்கான கருத்துள்ளவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் கூச்சமும் தயக்கமும் இல்லாமல் இப்படி உடனே உங்களைக் கேட்கிறேன். தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். உங்களை விடத் தாழ்வான - குறைந்த பொருளாதார நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்து இளைஞன் ஒருவனை உங்கள் பெண்ணுக்குக் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?" என்று மெல்ல சிரித்துக் கொண்டே அந்த அம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான், அரவிந்தன். அந்த அம்மாளும் சிரித்துக் கொண்டே பதில் கூறலானாள்.
"அரவிந்தன்! என்னைப் பற்றி இந்தச் சந்தேகம் உங்களுக்குத் தோன்றி இருக்கவே கூடாது. பணத்துக்காகவும், பகட்டுக்காகவும் மனிதர்களை மதிக்கிற குணம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பணக்காரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டது போல், என் பெண், பணக்கார குடும்பத்திலிருந்து ஏழைக் கணவனுக்கு வாழ்க்கைப்படட்டுமே! என் பெண் விரும்பாத இடத்தில் அவளை வற்புறுத்தித் தள்ளக்கூடாது என்ற ஒரு நோக்கம் தவிர வேறு ஏற்றத்தாழ்வை நான் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் என்னவோ பூரணியையும் உங்களையும் தான் மிகவும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கக் காரணமில்லை. நான் உங்களையெல்லாம் விட முற்போக்கானவள் என்பதைப் பூரணி ஒருவாறு புரிந்து கொண்டிருப்பாள். என் பெண் மாறுபட்ட சூழ்நிலையிலும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவளை ஆண்கள் கல்லூரியில் சேர்த்தேன். உங்கள் பூரணியோ, 'பெண் மாறுபட்ட சூழ்நிலைகளில் அதிகம் பழகலாகாது' என்ற கருத்துடையவள். இந்த வயதான கோலத்தையும் நெற்றியில் விபூதிப் பூச்சையும் கண்டு என்னை மிகவும் பழைய காலத்துக்குச் சொந்தமானவளாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற வசந்தா மனம் விரும்பி உண்மையான அன்புடன் எந்த இளைஞனோடு பழக நேர்ந்தாலும், அதை வரவேற்று மணம் செய்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு முற்போக்காக எண்ணி வைத்துக் கொண்டிருந்தவள் நான். அழகு நிறைந்த சந்ததியினரும், வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் மணங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நான் நம்புகிறேன்" என்று இவ்வாறு அந்த அம்மாள் உணர்ச்சிகரமானதொரு சொற்பொழிவு செய்வது போல் மறுமொழி கூறியதைக் கேட்டபோது அரவிந்தனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. 'இந்தப் பழமையான முதிய தோற்றத்துக்குள் இவ்வளவு புதுமையான இளமையான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றனவே' என ஆச்சரியப்பட்டான். 'முருகானந்தம் கொடுத்து வைத்தவன் தான்' என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது. 'இந்த முருகானந்தம் பயல் பொதுமேடைகளிலும், தொழிற்சங்கங்களிலும் பேசிப் பேசிச் சாதித்த சாதனைகள் கூடப் பெரிதில்லை. வசந்தா என்ற பெண்ணின் மனத்தை இளக்கி நெகிழச் செய்து தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானே, இது பேசாமலே சாதித்த மகத்தான சாதனை' என்று வேடிக்கையாகத் தோன்றிற்று அவனுக்கு. அந்த அம்மாள் மேலும் கூறினாள்.
"ஏழைப்பட்ட வரன் ஆயிற்றே என்று தயங்க வேண்டாம் அரவிந்தன்! உங்களுக்குத் தெரிந்த இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். வசந்தாவின் கல்யாணத்துக்கு உங்களையும் பூரணியையும் தான் மலைபோல் நம்பியிருக்கிறேன் நான். நீங்கள் சுட்டு விரலால் காட்டுகிற வரனுக்கு அவளை மணம் முடித்து கொடுத்துவிட நான் தயார்."
"அப்படியானால் உங்கள் பெண்ணுக்கு இப்போதே திருமணம் முடிந்த மாதிரிதான் அம்மா!" என்று புன்னகையோடு கூறினான் அரவிந்தன். அந்த அம்மாள் முகம் மலர்ந்தது.
"விவரம் சொல்லுங்கள் அரவிந்தன்?"
"நாளைக்குத்தான் கோடைக்கானலுக்கு நீங்களும் வரப் போகிறீர்களே, அம்மா! பூரணியையும் உடன் வைத்துக் கொண்டு அங்கே பேசி முடித்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் பெண்ணுக்காக நான் கூறப் போகிற வரனைப் பூரணிக்கும் தெரியும்" என்று குறும்புச் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன். வரனைப் பற்றிச் சொல்லுமாறு மங்களேசுவரி அம்மாள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவன் கூறவில்லை. "அந்த இரகசியத்தை நாளைக்குக் கோடைக்கானலில் தான் வெளிப்படுத்த முடியும்" என்று விளையாட்டுப் பிடிவாதத்தோடு மறுத்துவிட்டான்.
அவர்கள் நேரம் கழிவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டார்கள். இரவு நெடுநேரமாகியிருந்தது.
"மாடியறையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். காலையில் இங்கிருந்தே காரில் கோடைக்கானல் புறப்பட்டு விடலாம்" என்றாள் அந்த அம்மாள்.
"இல்லை! நான் அச்சகத்துக்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கே வந்துவிடுகிறேன். அந்தப் பையன் திருநாவுக்கரசு தான் தனியாக இருப்பான். நான் இப்போது அங்கே சென்றால், அந்தப் பையனிடம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அச்சகத்தைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நாளைக்குப் புறப்பட வசதியாயிருக்கும்" என்று அச்சகத்துக்குக் கிளம்பி விட்டான் அரவிந்தன்.
மறுநாள் காலை கோடைக்கானலுக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். வானில் மப்பும், மந்தாரமுமாக வெய்யிலே இல்லாமல் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. மங்களேசுவரி அம்மாள், குழந்தைகள், அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து வந்ததைக் கண்டபோது பூரணிக்கு, மதுரையே கோடைக்கானலுக்கு வந்துவிட்டது போலிருந்தது. உடனே திரும்பி விடுவதாகச் சொல்லிவிட்டுப் பட்டிவீரன்பட்டிக்குப் போயிருந்த மீனாட்சிசுந்தரம் இன்னும் திரும்பவில்லையாதலால் அன்று தேர்தல் பற்றி முடிவு செய்யவில்லை அவர்கள். அவருடைய வரவை எதிர்பார்த்தனர்.
அன்று மாலையில் முருகானந்தமும், மங்களேசுவரி அம்மாள், வசந்தா, குழந்தைகள் எல்லோரும் ஏரிக்கரைக்கு உலாவப் போயிருந்தார்கள். அரவிந்தனும், பூரணியும் மட்டும் தமிழ் முருகன் கோயில் கொண்டிருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாலை நேரத்தில் மலைச்சாலையில் நடப்பது இன்பமாக இருந்தது.
பகல் என்னும் கணவனை இழந்த மாலை என்னும் மேல்திசைப் பெண், பால்வடியும் வாயையுடைய பிறை என்னும் பிள்ளையை இடுப்பில் ஏந்தி நின்று, விதவைக் கோலத்தில் புலம்புகிறாற் போல் தோன்றும் மாலைப் போதாக இருந்தது அது. கோடைக்கானலுக்கு வந்தபின் பூரணியின் நிறம் வெளுத்திருப்பதாகவும் அழகு அதிகமாயிருப்பதாகவும் அரவிந்தனுக்குத் தோன்றியது.
"அலைச்சல் அதிகமோ? நீங்கள் கருத்திருக்கிறீர்களே!" என்றாள் பூரணி. "ஆமாம்!" என்று புன்முறுவல் பூத்தான் அரவிந்தன்.
"முன்பு ஒருமுறை நாமிருவரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்லுகிறோம் இல்லையா?" அரவிந்தனுக்கு மெய்சிலிர்த்தது. எத்தனை அர்த்தம் நிறைந்த கேள்வி இது? 'நாங்கள் இருவரும் உயர உயரப் போவதற்காகவே பிறந்தவர்களா?' மீண்டும் சிலிர்த்தது அவனுக்கு.
-------------------
குறிஞ்சி மலர்
25
பொன்காட்டும் நிறம்காட்டிப்
பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப்
பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி
முகில்காட்டும் குழல்காட்டி
நன்பாட்டுப் பொருள் நயம்போல்
நகைக்கின்றாய் நகைக்கின்றாய்
பண்பாட்டுப் பெருமையெலாம்
பயன்காட்டி நகைக்கின்றாய்.
-- அரவிந்தன்
கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலைகளே வாய் திறந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் பூக்கள் பூத்திருக்கும். அந்த அழகிய சூழலில் பசும்புல் நிறைத்துப் படர்ந்த ஒரு மேட்டின் மேல் அரவிந்தனும் பூரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மரத்தில் இரண்டு பச்சைக் கிளிகள் சிறிது தொலைவு இணையாகப் பறப்பதும், கிளைக்குத் திரும்புவதுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. எங்கோ மிக அருகிலிருந்து சற்றைக்கொருமுறை குயில் கூவியது. அந்தக் குயில் ஒலி ஒருமுறை கேட்டு இன்னொரு முறை ஒலிக்குமுன் இருந்த இடைவெளி விநாடிகள் அதன் இனிமையை உணர்வதற்கென்றே கேட்போருக்குக் கொடுத்த அவகாசம் போல் அழகாயிருந்தது. செம்பொன் மேனிச் சிறுகுழந்தைகள் அவசரமாக ஓடி வந்து கள்ளச் சிரிப்போடு முகத்தை நீட்டிவிட்டுப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிற மாதிரி, பெரிய பெரிய ரோஜாச் செடிகள் தத்தம் பூக்கள் காற்றில் முன்புறம் ஆடிக் கவிழ்வதும், விரைவாகப் பின்னுக்கு நகர்வதுமாகக் காட்சியளித்தன. வான விரிப்பும், மலைப்பரப்பும், திசைகளும், எங்கும், எல்லாம் அழகு மயமாயிருந்தன. ஊழியில் அழிந்து அமிழ்ந்து மீண்டும் மேலெழுந்து மலர்ந்த புது யுகத்துப் புவனம்போல் எங்கும் அழகாயிருந்தது. தனிமையின் இனிமையில் தோய்ந்த அழகு அது!
எதையோ இரண்டாம் முறையாக நினைத்துக் கொண்டு சிரிக்கிறவன் போல் அரவிந்தன் சிரித்தான். அந்தச் சிரிப்பைப் பூரணி கண்டுகொண்டாள்.
"எதற்காகச் சிரிக்கிறீர்கள் இப்போது?" என்று கேட்டாள் பூரணி.
"ஒன்றுமில்லை, பூரணி! சற்று முன் நீ சொல்லியதை மறுபடியும் நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. 'நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்கிறோம்' என்று நீ என்ன அர்த்தத்தில் கூறினாய்?"
"ஏன், நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள், அரவிந்தன்?"
"எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது பூரணி! உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக்கூடாது" என்று அவன் சிரித்தபடியே இந்தச் சொற்களைக் கூற முயன்றாலும், கூறும்போது ஏதோ ஒரு விதமான உணர்வின் அழுத்தம் அவனையறியாமலே, அவன் உணர்வு இல்லாமலே அந்த சொற்களில் கலந்து விட்டது. எப்படிக் கலந்தது, ஏன் கலந்தது, எதற்காகக் கலந்தது என்பதை அவனே விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தான். பூரணி அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இமையாமல் பார்த்தாள். மெல்லச் சிரித்துக் கொண்டே பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான்.
"ஏன் இப்படித் தோன்றக் கூடாதோ? உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நான் தான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடுவேன்" என்று கூறிக் கொண்டே அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தைச் செல்லமாக இழுத்துப் பறித்தாள் பூரணி. அதை அவள் பிரித்துப் படித்து விடாமல் திரும்பப் பறிக்க முயன்றான் அரவிந்தன். முடியவில்லை. மான் துள்ளி எழுந்து பாய்வது போல் எழுந்து ஓடி விட்டாள் பூரணி. சிறிது நேரத்துக்கு முன் அவள் தன்னை நோக்கிச் சிரித்த சிரிப்பின் அழகை ஒரு கவிதையாக உருவாக்கி அந்த நோட்டுப் புத்தகத்தில் அவசரமாய் எழுதியிருந்தான் அரவிந்தன். அதை அவளே படித்து விடலாகாதே என்பதுதான் அவன் கூச்சத்துக்குக் காரணம். ஆனால் அவள் அதைப் பிரித்துப் படித்தே விட்டாள். 'பொன் காட்டும் நிறம் காட்டிப் பூக்காட்டும் வழிகாட்டி நகைக்கின்றாய்' என்ற அந்தக் கவிதை அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. கற்கண்டை வாயிலிட்டுக் கொண்டு சுவைக்கிற மாதிரி வாய் இனிக்க, நெஞ்சு இனிக்க அவள் அந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். குறும்பு நகையோடு அவனை நோக்கிக் கேட்டாள்.
"உங்களோடு பழகுவதே பெரிய ஆபத்தான காரியமாக இருக்கும் போலிருக்கிறதே! பேசினால், சிரித்தால், நின்றால் நடந்தால் எல்லாவற்றையும் கவிதையாக எழுதி விடுகிறீர்களே?"
"என்ன செய்வது? நீயே ஒரு நடமாடும் கவிதையாக இருக்கிறாயே பூரணி!" என்றான் அவன்.
"அது சரி, 'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன்காட்டி நகைக்கின்றாய்' என்று எழுதியிருக்கிறீர்களே, அதற்கு என்ன பொருள்?" - தலையைச் சற்றே சாய்த்து விழிகளை அகலத் திறந்து நோக்கி மெல்லிய நாணம் திகழ அவனைப் பார்த்தும் பாராமலும் கேட்டாள் பூரணி. அவனும் புன்னகையோடு மறுமொழி கூறினான். "உன்னுடைய சிரிப்பிலும் பார்வையிலும் மிகப் பெரிதாக, மிகத் தூய்மையாக ஏதோ ஓர் ஆற்றல் தென்படுகிறது. அந்த ஆற்றலின் உன்னதத் தன்மையை எப்படிச் சொல்லால் வெளியிடுவதென்பது எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் அப்படிக் கூற முயன்றிருக்கிறேன்."
அருகில் நெருங்கிவந்து நோட்டுப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிக் கொள்ளாமல் தனக்கு மிக அருகில் நீண்டிருக்கும் அவளுடைய வலது கையைச் சிரித்துக் கொண்டே பார்த்தான் அரவிந்தன். பவழ மல்லிகைப் பூவின் காம்பு போல் மருதாணிச் சிவப்பேறிய உள்ளங்கையையும் நகங்களையும், நீண்ட நளின மெல்லிய விரல்களையும் புதுமையாய் அப்போதுதான் பார்க்கிறவனைப் போல் பார்த்தான் அவன்.
"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?"
"பெண்ணின் விரல்களில் நளினம் இருக்கிறது. அதை மின்னலில் செய்திருக்கிறார்கள்" - என்று கூறிக் கொண்டே அவளிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான் அரவிந்தன்.
"ஆண்களின் மனத்தில் கொடுமை இருக்கிறது. அதைக் கொடுமையால் செய்திருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் என்னைக் கேட்காமல், என் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், 'என்னைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்கச் செய்வதாக' நீங்கள் மீனாட்சிசுந்தரத்தினிடம் வாக்குக் கொடுப்பீர்களா?"
"நேற்று வரை அவருக்கு அப்படி வாக்களித்ததை எண்ணி நானே நொந்து கொண்டிருந்தேன் பூரணி! ஆனால் நேற்று மாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் மனத்தையே வேறு விதமாக நினைக்கச் செய்துவிட்டது. பிடிவாதமாக நீ தேர்தலில் நிற்கவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்."
"நேற்று மாலையில் என்ன நடந்தது?" என்று கேட்டாள் பூரணி.
பர்மாக்காரரோடு கிராமத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய மாளிகையில் தான் அடைந்த அனுபவங்கள் வரை எல்லாவற்றையும் பூரணிக்குச் சொன்னான் அரவிந்தன். வியப்போடு எல்லாவற்றையும் கேட்டாள் பூரணி.
"மனிதர்கள் ஏழைமையின் காரணமாகத்தான் தீயவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்களே! இந்தப் பர்மாக்காரர் ஏன் இப்படிச் சூழ்ச்சியும், கெடுதலுமாக வாழ்கிறார்? இவருக்கு என்ன ஏழைமை? இன்று இந்தத் தேசத்தைச் சூழ்ந்து நிற்கும் அத்தனை பிரச்னைகளையும் வசதியுள்ளவர்கள்தாம் உண்டாக்கி வளர்த்திருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது பூரணி! ஏழைகள் அப்பாவிகள், வயிற்றுக்குப் போராடுவதற்கே அவர்களுக்கு நேரமில்லை. சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் நினைக்க அவர்களுக்கு நேரம் ஏது?"
"கீழான மனமும், கீழான எண்ணங்களும் கொண்டவர்கள் எத்தனை உயர்ந்த மேலான சூழ்நிலைகளிலிருந்தாலும் பழைய கீழ்மை வாசனைதான் இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சரின் அற்புதமான உபகதை ஒன்று உண்டு. அதை நீங்கள் படித்திருக்கிறீர்களோ, இல்லையோ சொல்லட்டுமா அரவிந்தன்?"
"சொல்லேன்! கேட்கிறேன்."
"ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன்.
"அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள் தங்குவதற்காக ஒழித்துக் கொடுத்தான். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவன் தங்களுக்காக ஒழித்துக் கொடுத்த அறைக்குள் சென்றனர். அந்த அறை 'கமகம'வென்று நறுமணம் வீசியதைக் கண்டு நாலுபக்கமும் பார்த்தார்கள். ஒரு மூலையில் சில பூக்கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை வாடிக்கையாகக் கொடுக்கும் சிலருக்கு மறுநாள் காலையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டவை. ஆனால் மீன் வாசனையோடு பழகியவர்களுக்கு நறுமணம் வீசும் வாசனை எப்படிப் பிடிக்கும்? அந்த வாசனை பிடிக்காததனால் அவர்களால் அதைப் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. வாசனைகைலும் பரிமள சுகந்தங்களிலுமே பழகியவர்களுக்கு, நாற்றத்தின் நடுவே எவ்வாறு தூக்கம் வராதோ, அவ்வாறே, நாற்றத்திலேயே பழகிவிட்ட அவர்களுக்கு வாசனையின் நடுவே தூக்கம் வரவில்லை. அவர்களில் ஒரு புத்திசாலிப் பெண் மற்றவர்களைப் பார்த்து ஒரு யுக்தி சொன்னாள்.
"நமக்குத் தூக்கமோ வருவதாக இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்தில் வைக்கவும் முடியாது. நம்மிடத்திலுள்ள மீன்கூடைகளைக் கொஞ்சம் நனைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டால் இந்தப் பூவாசனையும் மீறிக் கொண்டு நமக்குப் பழக்கமான நாற்றம் உண்டாகும். உடனே சுகமாய்த் தூங்கிவிடலாம்" என்றாள். யாவரும் அவளுடைய யோசனையை ஏற்று அப்படியே செய்து தமக்குப் பழக்கமான நாற்றத்தை உண்டாக்கிக் கொண்டு தூங்கினார்களாம். 'பழக்கமான வாசனை' என்று சொல்லுகிறோமே, அது இத்தகையதுதான் அரவிந்தன்! "உங்களைத் துன்புறுத்த நினைத்த பர்மாக்காரரையும் புதுமண்டபத்து மனிதரையும் இந்த உபகதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்."
'எத்தனை அற்புதமான கருத்துக்களை மனத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் கூடுகிறார்போல் இவள் சொற்பொழிவுகளுக்குக் கூட்டம் கூடுவதின் இரகசியம் இந்தக் கருத்தழகு மிக்க பேச்சுத்தானே' என்று உள்ளத்துக்குள் வியந்து கொண்டான் அரவிந்தன்.
"அரவிந்தன்! நானாகவே என்னைப் பற்றி உங்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்கிறேனே என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி ஒரு கம்பீரமான கனவுத் தோற்றம் உண்டாகும். பசியும், நோய்களும், வறுமையும், வாட்டமும் கொண்டு தவிக்கும் இலட்சக்கணக்கான ஆண், பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே நான் கையில் ஒரு தீபத்தை ஏந்திக் கொண்டு செல்கிறேன். என் கைத் தீபத்தின் ஒளி பரவி, பசியும் நோயும் அழிகின்றன. வறுமையும், வாட்டமும் தொலைகின்றன. இலட்சக்கணக்கான முகங்களில் என்னையும் என் தீபத்தையும் கண்டவுடன் மலர்ச்சி பொங்குகிறது. நான் மேலே மேலே முடிவற்று நிலையற்று அந்த ஒளி விளக்கோடு நடந்து கொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க அந்த விளக்கின் சுடர் பெரிதாகிறது. சுடர் பெரிதாகப் பெரிதாகச் சுற்றிலும் பரந்து தென்படும் மக்கள் வெள்ளம் என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களுக்கு அனுதாபப்படவும், இரக்கம் கொண்டு உழைக்கவுமே நான் பிறந்திருப்பதாக என்னுள் மிக ஆழத்திலிருந்து ஒரு புனிதக் குரல் ஒலிக்கிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல நினைவு மலராப் பருவத்திலேயே இரக்கத்துக்குரிய ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்வதற்கென்று நான் பிறந்திருக்கிறேன் என்று ஒரு தன் விழிப்பு அடிக்கடி என்னுள் உண்டாகிறது. இதயத்தின் அந்தரங்கமான பகுதியிலிருந்து ஏதோ ஒரு பேருணர்வு கண் திறந்து பார்த்துத் திடீர் திடீர் என்று என்னைப் பரீட்சை செய்கிறது. அப்படி அந்தப் பேருணர்வு என்னைப் பரீட்சை செய்யும்போது தற்சமயம் நான் செய்து கொண்டிருப்பனவெல்லாம் மிகச் சிறிய காரியங்கள் போலவும், பெரிய காரியங்களை இனிமேல் தான் செய்ய வேண்டும் போலவும் ஒரு துடிப்பை உணர்கிறேன். அதை உணரும் போது எனக்கு அழுகை வருகிறது."
பூரணி ஆவேசமாக இதைச் சொல்லிக் கொண்டு வரும்போது அவள் முகத்தில் தெய்வீகமானதொரு பேரொளி பூத்துப் பரவுவதையும் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் உருள்வதையும் அரவிந்தன் கண்டான். அப்போது அவளையும் அவள் முகத்தையும் பார்த்தால் இனம்புரியாப் பரவசம் உண்டாவது போலிருந்தது அவனுக்கு. 'இத்தகைய விநோத உணர்வுதான் 'கௌதம புத்தர்' என்ற ஞானியை உண்டாக்கிற்று. இந்தத் தன்விழிப்புப் பரிட்சையில்தான் புத்தர் பிறந்தார். இந்த மாதிரிக் கண்ணீரோடு தான் அரண்மனையின் சுகபோகங்களிலிருந்து கீழ் இறங்கி நடந்தார்' என்றெண்ணியபடி பயபக்தியோடு அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். அப்போதே தன்னைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக அழியா அழகு ஒன்று அவள் உள்ளத்தில் வளர்ந்து கொண்டிருப்பது அரவிந்தனுக்கு புரிந்தது. 'பக்கத்தில் அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசுகிறபோது அவளுடைய புற அழகும் சாதாரணமான பெண்தன்மையும் தான் தோன்றின. ஆனால் அந்த மனத்தின் அழகைக் காண நேர்கிற போதெல்லாம், தான் வெகு தொலைவுக்கு விலகித் தாழ்ந்து இறங்கிப் போய்விட்டது போல் தோன்றுகிறது. ஒரே காலத்தில் இரண்டுவிதமான பூரணிகளோடு பழகுகிறோமோ?' என்று அரவிந்தன் மருண்டான்.
'உணர்ச்சிகளும், ஆசைகளும், அன்பும், பெண்மையும் நிறைந்த பூரணி என்னும் அழகு மங்கை வேறு, கையில் தீபத்தை ஏந்திக் கொண்டு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே பாதை வகுத்துக் கொண்டு நடந்து செல்வதாகக் கனவு காணும் பூரணி வேறு. இதில் எந்தப் பூரணி அவனைக் காதலிக்கிறாள்? எந்தப் பூரணியை அவன் காதலிக்கிறான்? இந்த இரண்டு பூரணிகளில் அவனுடைய மானிடக் கைகளினால் எட்டிப் பறிக்க முடிந்த சாமானிய உயரத்தில் பூத்திருக்கும் பூரணி யார்? அல்லது பிஞ்சு அரும்புகிற காலத்தில் பூவிதழ்கள் கழன்று கீழே விழுந்து விடுவதைப் போல் இந்த இரண்டு பேரில் முடிவாகக் கனிகின்ற பூரணி ஒருத்தியாகத்தான் இருக்க முடியுமா?' நீண்ட நேர மௌனத்துக்குப் பின் அரவிந்தன் அவளிடம் மெல்லக் கேட்டான். "அரசியலில் பங்கு கொள்ள நேரிடுவதால் உன்னுடைய இந்த இலட்சியக் கனவு கலைந்து பாழாகிவிடும் என்று நீ பயப்படுகிறாய்?"
"பயப்படவில்லை! ஆனால் தயங்குகிறேன். நீங்களும் அவரும் சேர்ந்து வற்புறுத்தினால் அந்தத் தயக்கத்தைக் கூட நான் உதறிவிடும்படி நேரலாம்."
"நீ அப்படித்தான் செய்ய நேரிடும் போலிருக்கிறது பூரணி!"
"பார்க்கலாம்!"
இதன்பின் அவர்கள் வேறு செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். முருகானந்தம்-வசந்தா காதலைப் பற்றிக் குறிப்பாகச் சொன்னாள் பூரணி.
"உனக்கு முன்னாலேயே அந்த இரகசியம் எனக்குத் தெரியும் பூரணி. நண்பனின் காதல் வெற்றி பெறுவதற்கான சம்மதத்தையும் ஒருவாறு அந்த அம்மாளிடமிருந்து பெற்றுவிட்டேன்" என்று தொடங்கி முதல்நாள் மதுரையில் மங்களேசுவரி அம்மாளுக்கும் தனக்கும் நடந்த பேச்சுக்களைச் சொன்னான்.
"அந்த அம்மாளின் முற்போக்கு மனப்பான்மையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஏற்றத்தாழ்வை எண்ணித்தான் நானும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். அது இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முடிந்தால் இன்றைக்கு இரவே அந்த அம்மாளிடம் பேசி முடிவு செய்து விடலாம். நாம் இருவரும் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்" என்றாள் பூரணி.
"முடிவெல்லாம் ஏற்கெனவே செய்த மாதிரிதான். 'மாப்பிள்ளை முருகானந்தம்தான்' என்கிற ஒரு இரகசியத்தை மட்டும் இன்னும் நான் வெளியிடவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அரவிந்தன். மாலையில் மெல்ல இருள் சூழ்ந்து சிலேட்டுப் பலகை நிறத்துக்கு மங்கத் தொடங்கியது. வெண்மை நுரைத்துப் பொங்கினாற் போல் மஞ்சு சூழ்ந்தது. அரவிந்தனும், பூரணியும் குறிஞ்சியாண்டவர் மலைப்பகுதியிலிருந்து எழுந்து நடக்கலாயினர். மலைப் பகுதிகளில் எல்லாப் பசுமையும் கலந்து மணக்கும் ஒருவித மணமும் குளிரும் கலந்த அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இரண்டுபேரும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். அரவிந்தனோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்தபோது பூரணி தன் உள்ளத்தில் சில ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தாள்.
இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய மனம் தாழ்வு உணர்ச்சி கொள்ளும்படி செய்து விட்டேனே? இவர் என்னைப் பற்றி இன்று என்னென்ன நினைத்திருப்பாரோ? என்னைப் பற்றி அழகு அழகாகக் கவிதை எழுதினாரே? அதைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் சொல்லக்கூடத் தோன்றாமல் போய்விட்டதே. சே! சே! அன்பு வெள்ளமாக நெகிழ்ந்துவிடத் தெரிய வேண்டாமோ இந்த உள்ளத்துக்கு? அன்று தலை நிறையப் பூவும், கைகள் நிறைய வளையல்களும், மனம் நிறைய இவரைப் பற்றிய தாகமுமாக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் பித்துப் பிடித்தவள் போல் வீற்றிருந்தேனே! அந்த ஏக்கம், அந்த நெகிழ்ச்சி இன்று இவரருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த போது, உரையாடினபோது எங்கே போனது? பக்திக்கும் காதலுக்கும் அகங்காரம் இருக்கலாகாது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது எத்தனை உண்மை! என்னுடைய அகங்காரத்தைக் குத்திக் காட்டும் நோக்கத்தோடுதான் 'உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே தங்கிவிடுவேன்' என்றாரா? அல்லது வேடிக்கையாகச் சொன்னாரா? பரமஹம்சருடைய கதையையும், என்னுடைய இலட்சியக் கனவுகளையும் உண்மையாகவே மனம் உருகித்தான் இன்று இவரிடம் கூறினேன். இவர் என்னிடம் கலகலப்பாகப் பேச முடியாமல் போனதற்கு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித்தனமும் ஒரு காரணமோ? குறும்புப் பேச்சும் சிரிப்புமாக மனம் விட்டுப் பழகும் இவர், இன்று நான் இவற்றையெல்லாம் கூறியபின் எதையோ குறைத்துக் கொண்டு ஏதோ ஓர் அளவோடு பழகுவது போல் அல்லவா தெரிகிறது?
அவள் மனத்தின் சிந்தனைத் தவிப்புத் தாங்கமுடியாத எல்லையைத் தொட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருவரும் வழிப்போக்கர் போல் நடந்து செல்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அந்த அவசியமற்ற மௌனத்தை அவளே துணிந்து கலைத்தாள். "இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் வருகிறீர்கள்? என் மேல் எதுவும் வருத்தமோ?"
இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். அவன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் அவள் உள்ளம் தவித்தது.
"நன்றாயிருக்கிறதே கதை! நீ ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது. அதனால்தான் பேசவில்லையே தவிரப் பேசாமலே நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நான் ஒன்றும் தீர்மானம் செய்து கொள்ளவில்லையே?"
'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன் காட்டி நகைக்கின்றாய்' என்று அவளுடைய சிரிப்புக்கு, இலக்கணம் வகுத்துச் சொன்னாற்போல் அரவிந்தன் பாடினானே, மெய்ப்பிப்பது போல் நகைத்தாள் பூரணி.
"அனுப்பியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்தாயா பூரணி?"
"எல்லாவற்றையும் மனந்தோய்ந்து அனுபவித்துப் படித்தேன். இந்த மலைப்பிரதேசத்துச் சூழ்நிலையே படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிகமாக சுறுசுறுப்பை அளிக்கிறது."
வானம் நன்றாக இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூற்றல் விழுந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே மீனாட்சிசுந்தரம் பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய கார் முன்புறம் நின்று கொண்டிருந்ததிலிருந்தே அதைத் தெரிந்து கொண்டார்கள். மங்களேசுவரி அம்மாள் முதலியவர்களும் ஏரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அன்று இரவும், மறுநாளும் அவர்கள் சேர்ந்து பேசி முடிவாகச் சில தீர்மானங்களைச் செய்து கொண்டார்கள். நீண்ட நேர விவாதத்துக்கும் மறுப்புகளுக்கும் பிறகு பூரணி தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் அளிக்க வேண்டியதாயிற்று. அரவிந்தனே தன்னை வற்புறுத்தி வேண்டிக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்ட போது அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவள் நிற்க மறுத்துவிட்டால் பர்மாக்காரருடைய கெடுபிடிகளுக்கும், மிரட்டலுக்கும் பயந்துவிட்டதாக ஆகும் என்பதையும் அரவிந்தன் முன்பே குறிப்பாக அவளுக்குச் சொல்லியிருந்தான். எப்படியோ தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை அவளை அந்தப் பொறியில் மாட்டி வைத்துவிட்டது.
கூச்சத்தோடு நழுவ முயன்ற முருகானந்தத்தை இழுத்து வந்து, "இவன் தான் அம்மா உங்க மாப்பிள்ளை! சந்தேகமிருந்தால் உங்கள் பெண்ணையே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்" என்று அரவிந்தன் கூறியபோது வசந்தா சிரிப்பும் நாணமும் நிறைந்த முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு உள்ளே எழுந்து ஓடிவிட்டாள். திடீரென்று ஆரம்பமாகிய அந்த நாடகத்தைக் கண்டு திணறி வெட்கப்பட்டுப் போனான் முருகானந்தம். வசந்தா அறைக்குள்ளிருந்தே ஒட்டுக் கேட்டுப் பூரித்துக் கொண்டிருந்தாள்.
"திருப்பரங்குன்றம் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விடலாம்" என்று மீனாட்சிசுந்தரம் கூறியதை மங்களேசுவரி அம்மாள் ஒப்புக் கொள்ளவில்லை.
"மூத்த பெண்ணின் கல்யாணம் வீட்டிலேயே நடக்க வேண்டும். ஏனோ தானோ என்று கோயிலில் நடத்தி முடிக்க மாட்டேன். இலங்கையிலிருந்து மதுரை வந்த பின் வீட்டில் ஒரு சுபகாரியமும் நடக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை என் வீட்டில்தான் செய்யப் போகிறேன்."
"என்னடா முருகானந்தம்! உனக்குச் சம்மதந்தானே?" என்றான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தின் முகம் அற்புதமாய்ச் சிரித்தது.
"திருமணத்துக்காக வசந்தாவுக்குத் தைக்கும் புதுத் துணிகளை மட்டும் முருகானந்தத்திடம் கொடுத்து விடுங்கள்" என்று கூறி அவன் முகத்தை இன்னும் அற்புதமாய்ச் சிரிக்க வைத்தாள் பூரணி. திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பமானதும் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே ஒரு புதுக்களையும் மங்கலமும் சேர்ந்துவிட்டாற் போலிருந்தது.
மறுநாள் இலங்கை, மலேயா, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்து வந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவுகளுக்குப் போகச் சம்மதம் தெரிவித்து மங்கையர் கழகத்துக்கு மறுமொழி எழுதிவிட்டாள் பூரணி. எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளிநாட்டுப் பயண அனுமதியை 'இண்டர்நேஷனல் பாஸ்போர்ட்டாக' வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன். பாஸ்போர்ட்டுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக அன்று மாலை பூரணியை அங்குள்ள ஒரு புகைப்பட நிலையத்துக்கு அழைத்துப் போயிருந்தான் அரவிந்தன். அந்தப் புகைப்பட நிலைய உரிமையாளர் அவர்களைப் புதுமணம் புரிந்து கொண்ட இளம் ஜோடியாக எண்ணியதால் ஏற்பட்ட நளினமான குழப்பங்களில் சிறிது நேரம் இருவருமே நாணிக் கூசி நிற்கும் நிலையாகி விட்டது. பூரணியைப் பாஸ்போர்ட் அளவு படம் எடுத்தபின், அவர்கள் இருவரையும், அருகில் ஒன்றாக நிறுத்தி ஒரு படமும் எடுத்துக் கொண்டார் உரிமையாளர். இரண்டு பேருமே பார்க்க இலட்சணமாக இருந்ததினால் காட்சி அறையில் (ஷோரூமில்) அந்தப் படத்தை வைக்கலாம் என்பது அவர் விருப்பமாயிருந்தது.
புகைப்பட நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த இந்த இன்பக் குழப்பங்களால் நெஞ்செல்லாம் மெல்லிய நினைவுகளும் கனவுகளும் குமிழியிட அரவிந்தனும் பூரணியும் வீடு திரும்பியிருந்தார்கள். அப்போது மங்களேசுவரி அம்மாளும் மீனாட்சிசுந்தரமும் வீட்டு வாயிலிலேயே அவர்களை எதிர்கொண்டனர்.
"உன்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும். கொஞ்சம் இப்படி என்னோடு வருகிறாயா?" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணியை தனித்து அழைத்துப் போனாள்.
அதே வார்த்தையை அரவிந்தனிடம் கூறி அவனை வேறொருபுறம் தனியாக அழைத்துக் கொண்டு போனார் மீனாட்சிசுந்தரம். இருவர் நெஞ்சிலும் பெரிதாய்ப் புரிந்தும் புரியாததுமாய்க் கேள்விக்குறிகள் பூத்துப் பொலிந்து நின்றன.
----------------
end of chapter 25/end of part 2
------------------
This file was last updated on 4 December 2011
Feel free to send corrections to the webmaster