மகாராஜா துறவு
குமாரதேவர் இயற்றியது.
makArAja tuRavu
by kumAra tEvar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading:
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
R. Navaneethakrishnan, P.Thulasimani, V. Ramasami, Vijayalakshmi Periapoilan,
V. Devarajan, S. Karthikeyan, N. Pasupathy and S Subathra
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மகாராஜா துறவு
குமாரதேவர் இயற்றியது.
Source:
குமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய
"முதலாவது மகாராஜா துறவு"
இதற்கு ஸ்ரீமான் சிவஞானசுவாமிகள் பாதசேகரரான
முத்தமிழ்ரத்நாகரம் ம-தி .. பாநுகவியவர்கள் இயற்றிய
பொழிப்புரையோடு,
திருமயிலை-இராமலிங்க முதலியாரவர்களால்,
சென்னை: சிற்றம்பலவிலாஸம் பிரெஸ்ஸிற்
பதிப்பிக்கலுற்றது.
Registered Copyright 1903
------------------
குமாரதேவர்.
இவர் கன்னடதேயத்தவரென் றூகிக்கத் தேவர் என்னும் பட்டமே போதிய சான்றாம். குகை நமசிவாயதேவர், அருணமசிவாயதேவர், விருப்பாக்ஷிதேவர் என கன்னடதேயத் துறவிகளுக்குப் பெயர்வழங்கி வருதலானும், இலிங்கதாரிகளான வீரசைவ அடியவர்களிற் பண்டிரு்ந்த பலருக்கும் கொக்கிதேவர், மடிவாலமாச்ச தேவர் எனத் தேவர்பட்டமே வழங்கி வருதலானும் இவரது மாணவர் குழுவினர் இலிங்கதாரிகளாகவே இருத்தலானும் இவரைக்கன்னட தேயத்தவராக எண்ணுகின்றோம்.
இவர்,கொலை மறுத்தல் -வைராக்கிய சதகம்- வைராக்கிய தீபம்-அவிரோதவுந்தியார் முதலிய நூல்களினாசிரியரான சாந்தலிங்கசுவாமிகளிடம் ஞானோபதேசம் பெற்றுக்கொண்டதாகச் "சாந்தநாயகனை" என்ற இந்நூலின் ஆசிரியவணக்கம் காட்டுகின்றது.
இவரை, அரசன் என உரைப்பதற்கு இவர் காலம் இரண்டுநூறாண்டுகளுக்குட்பட்ட தாதலின், இன்ன இடத்திலிருந்த இன்ன அரசன் எனப் பலருமறிவார்கள். அங்ஙன மொன்றுஞ் சரியாக அறிதற்குஇடமின்மையால் யாம் அதனை எழுதாதுவிடுத்தோம்.
இவர்தமக்கு மெய்ஞ்ஞானோபதேச குருவாக நின்றவள் ஜகதீசுவரியான பார்வதியே எனத் தாமியற்றிய நூல்களு ளுரைத்திருத்தலால், அநுபவ ஞானத்தினை இவர் அம்பிகையின் அருளினால் பெற்றவர் என்றறிகின்றேம். வேதாந்த சித்தாந்தங்களைத் தெய்வவருளா லுணர்ந்த இம்மகானுபாவருக்குத் துறவறத்தி லுள்ள அழுத்தத்தினை இவரியற்றிய துறவு முதலிய பதினாறு சாத்திரங்களு நன்கு விளக்கும்.
இவர் ஜீவன்முத்தராக வுலவியகாலத்தில் திருவாரூர்த் தேரினை ஓடாமல் நிறுத்தின ரெனவும், மந்திரவாதியைத் தண்டித்தன ரெனவும், திருநீறளித்துப் பிள்ளையுண்டாகச் செய்தன ரெனவும், சமைத்த மீனிற் குயிரளித்தன ரெனவும், கருங்கல்லினை மண்டபத்தின்மீ தேறச்செய்தன ரெனவும் இன்னும் பல அற்புதங்களை இயற்றின ரெனவும் எழுதியிருக்கின்றார்கள். பெரியநாயகி அம்மையை உபாஸித்து அம்மஹாதேவியைத் தமது ஞானகுருவாகக் கொள்ளும் ஆற்ற லுடையவருக்கு இவைபோன்றன அற்பத்தினும் அற்பமான காரியங்களாதலின் நாம் அவைகளை ஈண்டுரைத்திலேம்.
சிலர், மகாராஜா என நூலாசிரியர் கூறியுள்ளது அவரையே யென்று கருதுகின்றார்கள். அது என்றும் பொருந்தாதவிஷயமேயாம். இல்லறத்தி னிழிபினையுந் துறவறத்தி னுயர்வினையும் விளக்கிக் காட்டுவான் இத்துறவு நூலினைக் காவியமாகப் பாடியதேயன்றித் தற்புகழ்ச்சியாக வுரைத்ததன்றாம்.
இவர் விதேகமுத்தரானபின்னர் இவர் சீடர்கள் விருத்தாசலத்தில் இவருடலினைச் சமாதியிலமைத்து நித்திய பூசை செய்துவருகின்றார்கள்.
இன்ன வருஷத்திற் பிறந்தார் இத்தனை வருஷமிருந்தார் இன்ன இன்ன இடங்களில் யாத்திரைசெய்தார் என ஒன்றும் சரிவர உரைத்தற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை.
விருத்தாசலத்தினையும் அவ் வசலத்தி லெழுந்தருளியிருக்கின்ற பெரியநாயகியாரையும் சிந்தனை செய்யும் திறங்கேட்கப்படுதலால் இவர் தம் துறவற நிலையைக் காத்தது விருத்தாசலத்திலிருந்தே என்று அறிகின்றேம்.
இவர் பிரஸித்திபெற்ற ஞானபானுவாய் விளங்கியாங் கிவர் மாணவரும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் எனப் பிரஸித்தி யுடையவராய் இப்பொழுதிருக்கும் போரூர்க் குமராலயத்தினை அமைத்தனர். சந்நிதிமுறை முதலிய அநேக நூல்களும் இயற்றியுள்ளார்.
உலகபிரசித்தரான குமாரதேவர்சரிதம் குன்றிலிட்ட விளக்கெனக் குவலய மெங்கும் பரவிநிற்ப
தாதலின் விரிக்காதுவிடுத்தாம்.
சுபம்.
ம.தி. பா.
----------------------
(108-ம் பக்கம் 99-வது செய்யுள்.)
"கனமாம் யாழ்ப்பாணத்தின் கப்பலோட்டம் போல" இனி ஒருசாரார், யாழ்ப்பாணத்துக் கப்பலோட்டத்தில் இக்கரை மறைந்தவுடன் அக்கரையும், அக்க0ர மறைந்தவுடன் இக்கரையும் குறித்த ஒருவிடத்தில் தெரிதல்போல, சீவபோத நீக்கத்தில் சிவபோதமும், சிவபோதநீக்கத்தில் சீவபோதமும் தோன்றும் என்றுங் கூறுவர். இக்கரை யக்கரைகளின் தோற்ற மறைவுக ளுண்மையேனும் அதற்குச் சான்றாகக்கூறும் சிவபோத மாதிய, இந் நூலாசிரியர் இவ்விடத்துப்
பூர்வபக்ஷமாக்கியிருத்தலை "பேதவாதிகளைப்போற் பிரபஞ்சம் வேற தெனவே, ஈதகன்ற தலவே" என்பனவாதி வாக்
கியங்கள் நன்குவிளக்கு மாதலின், அநாதி நித்தமான பசுபதி பாசத் திறங்களை ஆராய்வார் மதமான போதக் கழற்றியாதிய இவர்க்கிவ்விட முடன்பாடன்றாதலின் அவ்வுரை பொருந்தாதென்க.
-----------------------------------------------------------
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சாத்துகவிகள்.
இவை, இந்நூல் உரையாசிரியர் மாணவராகிய கோவிந்தசாமிமுதலியாரவர்களால் இயற்றியன.
கொச்சகக்கலிப்பா
*ரேறு நங்குமர தேவனார் செப்பியரு
ளேரேறு மகராசத் துறவென்னு மெழினூற்கு
நாரேறு முரையொன்றை நங்குரவன் தெய்வத்தை
பேரேறும் பலமுறையாப் பெருக்கிஇளித் தானன்றே.
அத்தகையோன் யாவனெனி லருந்தொண்டை நன்னாட்டின்
னுத்தமமார் குணங்கள்பல வுறுவேளாண் குலமலைமேல்
வைத்தவெழில்விளக்கென்ன வயங்கிசைகொள்பெரும்புகழா
வித்தகனார் மயிலைதனை விளக்கிடமாக் கொளுமாண்பன்.
சண்முகமென் றுலகமெலாந் தகவுரைக்கும் புலவனிடை
மண்மிசையிற் பலநூல்கள் மாண்புறக்கேட் டொளிர்புலவ
னுண்மிசையிற் சிவனடியை யுறவேத்தி யளகையன்போ
லெண்மிசையார் திருமயிலை யிராமலிங்க வெழில்வேளே.
-----------------------------------------------------------
முகவுரை.
கடல்புடை யுடுத்த நெடுநில வரைப்பிற் பிறந்துமிறந்தும் பெருந்துய ரெய்திச் சகடக்காலெனத் தலைதடுமாறா நின்ற எழுவகைத் தோற்றத் தியைபுடையுயிர்களுட் சாலச் சிறந்தது மக்கட் பிறப்பேயாம்: அப் பிறப்பினை யடைந்தும் இல்லற மென்னுங் கருஞ்சேற்றுட் சிக்கி வருந்துவதனால் யாதொரு பயனுந்தராதென்பதனை விளக்குவான் ஆசிரியர் குமாரதேவர் பெரியநாயகியார் திருவருள் வல்லபத்தால் செய்துள்ள மகாராஜா துறவு என்னும் நூல் தக்கதாதலானும், இந் நூலிற் பயிற்சியுடையாருக்கு மூவேடணைத் துன்பங்களு மொழிந்து ஞான முதயமாகித் துறவறமெய்திச் சற்குருவினைத் தேடி யடைந்து ஞானோபதேசம் பெற்று நிரதிசய வின்பத்தினை யெய்தற்குள்ள நன்மார்க்கங்கள் நன்குபுலப்படு மாதலானும், கற்றோர்க்கன்றி மற்றையோர்க்கும் ஈதுபகாரமாமா றிதற்கொரு பொழிப்புரை எளியநடையி லெழுதுதல் நலமெனக் கருதி இப் பொழிப்புரையை எழுதினேன். உபகாரங் கருதி எழுதியுள்ள இச் சிற்றுரையில் எவ்விடத்திலேனும் அவத்தை வயத்தால் முரண்கள் காணப்படுமாயின், அறிஞரவைகளை மன்னிக்குமாறுகேட்டுக்கொள்ளுகிறேன்.
ம.தி.பா.
-----------------------------------------------------------
குருவே துணை.
குமாரதேவ ரருளிச்செய்த
சாத்திரங்கள் பதினாறனுள் முதலாவது
மகாராஜா துறவு.
மூலமும் உரையும்.
பாயிரம்.
கணபதி முதலிய ஐவர் வணக்கம்.
எழுசீர்க்கழிநெடில் விருத்தம்.
அமரர்கள் பரவுந் திருமுது குன்றி
லாழத்துப் பிள்ளையைச் சிகரிக்
குமரசற் குருவை யிமகிரி ராஜ
குமாரியாம் பெரியநா யகியை
முமலமு மொருங்கே யகற்றிடு முக்கண்
முதல்வனைச் சாந்தநா யகனை
நமதெணப் படியே முடிந்திடத் தினமு
நாடிநின் றிறைஞ்சிவாழ்த் திடுவாம்.
(இதன்பொருள்) தேவர்கள் (எந்நாளும்) துதிக்கின்ற ஸ்ரீவிருத்தாசலத்தில் (எழுந்தருளியிராநின்ற) ஆழத்துப்பிள்ளையார் என்னுந் திருநாமத்தினையுடைய மூத்தபிள்ளையாரையும், கோபுரதுவாரத்தி லெழுந்தருளியுள்ள குமாரசுவாமியாகிய ஞாநாசாரியனையும், பர்வதராஜபுத்திரியாகிய பெரிய நாயகியம்மையாரையும், ஆணவம்-காமியம்-மாயை என்னும் மூன்று மலங்களையும் ஏககாலத்தி லகற்றவல்ல மூன்று கண்களையுடைய சிவபெருமானையும், சாந்தலிங்க சுவாமிகளையும், நம்முடைய மநோபீஷ்டம் நிறைவேறும்பொருட்டு நாள்தோறும் தியானஞ்செய்து எதிரில் நின்று துதிப்போமாக.
என்றவாறு.
ஆசிரியர் ஆன்றோ ரொழுக்கத்தை யநுசரித்து நூன்முகத்தை உரைக்கற்பாலனவான § "வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேசம்" என்னும் மூவகை மங்கலங்களுள் நமஸ்காரரூபமென்னும் மங்கலமாக 'இறைஞ்சி வாழ்த்திடுவாம்' என்றார். நிஷ்ப்ரயோஜனமாக வணங்காமல், பிரயோஜனங்கருதி வணங்கினதனை விளக்க, 'நமதெணப்படியே முடிந்திட' என்றார். ப்ராரம்பத்தில் மாத்திரம் தேவதா தியானம் செய்து விட்டுவிடாமல், நூல் நிறைவேறுங்காறும் மேற்குறித்த தெய்வம்-குரு என்னும் இவர்களைச் சிந்தித்தவண்ணமேஇந் நூலெழுதுவேம் என்பார், 'தினமு-நாடிநின்றிறைஞ்சி வாழ்த்திடுவாம்' என்றார். திருமுதுகுன்றமானது பரமேசுவசன் எழுந்தருளியிருக்கின்ற புண்ணிய ரூபமான கோயிலாகவுள்ளதாதலால், தேவர்கள் வழிபடுகின்றனர்.
-------
§ வேதாந்த சூடாமணி
இதற்கு,
"வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
வண்ணலா ராயிழை யாரொடு மமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே" என்னுந்
தமிழ்வேதமே சான்றாகும்.
பரமாசாரியப் பெருந்தகையார் பிரமஞான போதகர்களான, குருமார்களுட் சிறந்தவராதலால், குமாரசுவாமியை 'குமரசற்குரு' என்றார் இதனை,
'யாவருக்கு மெப்பொருட்டு மின்பமெய்த நின்றவர்
மூவருக்கு மின்புறுத்து மூவிரு திறத்தருந்
தாவிலின்ப மெய்தநின்ற தத்துவத்த னென்பவா
லோவிலின்ப வுருவமான வொளிகொள்குமர வீசனை
என்னுந் தணிகைப்புராணத்தா னுணர்க.
பார்வதிதேவியாரென்று விளக்க, 'இமகிரிராஜ குமாரியாம் பெரியநாயகி' என்றார்.
மற்றைய ஆசிரியரைப்போலாது, ஏககாலத்தில் ஆன்மாக்களைத் தன்னடிநிழலில் பக்குவகாலத்திற் சேர்ப்பவர் என்று குறிப்பிக்க 'முமலமு மொருங்கே அகற்றிடுமுக்கண் முதல்வன்' என்றார்.
திருமுதுகுன்று என்பது நடுநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்.
"இமகிரிராஜ புதல்வி" என்பதன் வரலாறு.
பிரமதேவனது மானத புத்திரரி லொருவனாகிய தக்கன் தனது தவப்புதல்வியாகப் பிராட்டியார் அவதரிக்க வேண்டுமென்று பலகாலம் அருந்தவஞ் செய்திருந்தனன். அவ்வாறிருக்கையில், சிவபிரானது கட்டளைபெற்ற உமாதேவியார் காளிந்திநதியிற் கமலாசனத்தின்பேரில் வலம்புரிச் சங்கவடிவாய்ச் சிவ நாமங்களை யுச்சரித்துக் கொண்டிருந்தனர். மாசிமாதத்தில் மகநக்ஷத்திரத்தில், தக்கன் தன்மனைவியாகிய வேதவல்லியுடன் ஸ்நானஞ்செய்து திரும்புகையில், இறைவியாரது வலம்புரிச் சங்கவடிவைக்கண்டு கைகளிற் றாங்க, அது குழந்தைவடி வேற்றமையாற் களித்து, அருகிருந்த மனைவி கையி லளித்து உடன்கொண்டு தனது தக்கமாபுரியை யடைந்தனன். வேதவல்லி, அம்மையாரை வளர்த்து வந்தனள். பிறகு தேவியார் தவஞ்செய்து சிவபிரானை மணந்து திருக்கைலை யடைந்து வீற்றிருந்தனர். இஃதிங்ஙனமிருக்க,
பின்பொருகாலத்தில் தக்கனா லியற்றப்பட்ட யாகத்துக்குத் தன் மாமனாராகிய சிவபெருமானை அழையாது கர்வித்திருந்ததை, திருக்கைலாயகிரியில் சிவபெருமான் திருவோலக்கங்கொண் டெழுந்தருளியிருக்கையில், அவரது வாமபாகத்திலிருந்த பிராட்டியார் உணர்ந்து சிசபெருமானை வணங்கி "தேவரீரைப் பணியாத தக்கன் புதல்வியென்பதையும், அதனா லாகிய தாக்ஷாயணி என்னும் பெயரையும், அவனால் போஷிக்கப்பட்ட உடலையும் இனிச் சகிக்ககில்லேன். ஆதலின் மாற்றியருளவேண்டும்" என வேண்ட, சிவபெருமான் திருவுளத் தோர்ந்து "நம்மிடத் தன்புள்ள இமகிரிராஜனும் நின்னைப் புத்திரியாகப் பெறுதற்பொருட்டு அவ்விமாசலத்துள்ள ஓர் தடாகத்தருகிற் பெருந்தவஞ் செய்கின்றனன். ஆதலின் நீ அவன்பாற் செல்க" எனப் பணிக்க, பிராட்டியார் சென்று அத் தடத்தில் அலர்ந்த ஓர் தாமரைத்
தவிசின்மேல் பிள்ளைமைத் திருக்கோலங்கொண் டெழுந்தருளி யிருந்தனர். அவ் விமையபர்வதராசன் அது கண்டு அடங்கா மகிழ்ச்சிகொண்டு பாடிப் பணிந்து தனது அங்கையாற் றாங்கி அவ் வருமைக் குழந்தையைக் கொண்டுசென்று
தனது மனைவி மேனையாரடெங் கொடுக்க, அவ் வம்மையார் மகிழ்வு மிகுந்து அக் குழந்தையை வாங்கிப் பாலூட்டி வளர்த்துவந்தனர் என்பது புராண சரிதம். (1)
குரு வணக்கம்.
மறைமுடி வதனில் விளங்கிடு மொளியே
மனிதரைப் போலவந் தெனது
சிறைதவிர்த் தாண்ட சிவப்பிர காச
தேசிகன் றன்னைமற் றவன்ற
னறைமல ரடியைப் போற்றிடுஞ் சாந்த
நாயகன் றன்னைமற் றவன்ற
னிறையருள் பெற்ற பழநிமா முனியை
நெஞ்சினு ளிருத்தியே பணிவாம்
(இ-ள்) வேத அந்தத்தில் பிரகாசிக்கின்ற சோதி சொரூபமான பிரமமே மனிதவுருவத்தோடு வந்து என்னுடைய பந்தத்தை நிவர்த்திசெய்து ரக்ஷித்த சிவப்பிரகாசனென்னுந் திருநாமத்தினையுடைய ஞானாசாரியனையும், அச்சிவப்பிரகாச தேசிகனது தேன்பொருந்திய தாமரை மலர்போன்ற திருவடிகளைத் துதிக்கின்ற சாந்தலிங்க சுவாமியையும், அச் சாந்தநாயகனது பூரணகடாக்ஷத்தைப்பெற்ற பழநிசுவாமியையும் மனத்தில் வைத்து வணங்குவாம். ஏ-று. (2)
ஆழத்துப் பிள்ளையார் துதி.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
தொய்யின் முலைக்கோ டிரண்டுகவன்
றுதிக்கை மூன்று விழிதுரிசிற்
றுய்ய சைவ முதன்மதமுந்
துலங்க வருமொண் பிடியுலக
முய்ய வுதவு மொருகளிற்றை
யுலவா விருத்த சைலத்தில்
வையம் பரவு மாழத்து
வாழைங் கரனை மனநினைவாம்.
(இ-ள்) சித்திரமெழுதப்பெற்றுள்ள தனங்களே கொம்புகளும், இரு தொடைகளே தும்பிக்கையும், முக்கண்களும்,
குற்றமில்லாத சைவமுதற்சமயங்களாகிய மதங்களும் விளங்கும்வண்ணம் எழுந்தருளுகிற ஒள்ளிய பார்வதி தேவியாராகிய பெண்யானை, பிரபஞ்சவாசிகள் ஈடேறும்படிப் பெற்றருளிய ஒப்பற்ற (யானையாகிய) கெடாத விருத்தாசலமென்னுந் திருத்தலத்தில் உலகமெல்லாம் வணங்குகின்ற பாதாளத்திலெழுந்தருளியிருக்கிற ஐந்து திருக்கரங்களை யுடைய விநாயகப்பெருமானை மனத்தால் வணங்குவோம். எ-று. (6)
'சைவசமயமே சமயம்' எனத் தாயுமானவரும், 'சைவத்தின் மேற்சமயம் வேறிலை' எனப்பிற பெரியோரும் கூறியிருத்தற் கொப்ப, இவரும் "துய்ய சைவம்" என்றார்.
விருத்தாம்பிகைதுதி.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
இருட்கலி வலியின் ஞானநன் னெறிக
ளிறந்துயிர் கொடுநெறி மேவி
மருட்கொடு கலங்கா வகைகலி யென்றும்
வந்தணு காப்பதி தன்னிற்
றெருட்சத்திக் கருணை யுருவதாய் நின்று
தெளிவிக்கு மிறைவியெங் குருவோ
அருட்கடல் பெரியநாயகி யுலகுக்
கனைமுதல் வியைப்பணிய் திடுவாம்.
(இ-ள்) அந்தகாரமான அஞ்ஞானத்தின் வல்லபத்தால் அறிவுருவமான நல்ல சன்மார்க்கங்க ளழிந்து ஜீவகோடிகள்
தீயவழியிற் சென்று மயக்கம்பொருந்திக் கலங்காதிருக்கும் வண்ணம் (முக்காலத்திலும்) அஞ்ஞானம் வந்து பொருந்துதலில்லாத விருத்தாசலத்தில், ஞானசத்தியான மனோன்மணியும் கிருபாசொரூபியாகச் சகளீகரித்து வந்துநின்று அடியவர்களுக்கு ஞான அஞ்ஞானங்களை விளக்குகிற தலைவியும், எனது குருவும், ஒப்பற்றகிருபாசமுத்திரமும், பெரியநாயகியென்னுந் திருநாம முள்ளவளும், உலகங்களுக்குத் தாயும் தலைவியுமாகவுள்ள விருத்தாபிகையம்மையை வணங்குவாம்.
விருத்தாசலத்தில் எழுந்தருளிநின்று அடியவர்கட்கு அருள்புரியும் பரதேவதையான பெரியநாயகி அம்மையாரைத் துதிக்கப்புகுந்த இத்துறவுநூலாசிரியராகிய ஸ்ரீகுமாரதேவ சுவாமிகள் அம்பிகையைத் தெருட்சத்தி; கிருபாசொரூபி; எங்குரு; அருட்கடல்; பெரியநாயகி; உலகுக்கு அன்னை; முதல்வி என எழுவகைக் காரணக்குறிகளுணர்த்தி வணங்கா நின்றனர்.
இகபரபோகவிராக முடையவர்களாய்த் தம்மையுந் தலைவனையும் அறியவிரும்புவோர்களாய் இவ் விருப்பினால் நிரதி சயவின்பாநுபவ மெய்தநின்ற முமுட்சுக்களுக்கு ஸ்திரமான விராகஸித்தியை உதர்தேசித்து ஒப்பும் உயர்வு மற்றவனாகிய
ஒருவன் அதாவது, தன்னிகரில்லாத் தலைவனாகிய மகாராசன், ஒத்த அன்பும், ஒத்த அழகும், ஒத்த கல்வியும், ஒத்த
குடிப்பிறப்பும் உடையளாக விருந்த மனைவியையும், அகளிடமான அரசபோகாதிகளைநயும், அன்னை தந்தையர்களையும்
வெறுத்து பூர்வாநுபோகமாகவிருந்த சிற்றின்பங்களை ‡வாந்தாசனபுரீஷாதிகளைப்போல வெறுத்துத் துறவுபூண்டு பேரின்பமடைந்த தன்மையைச் சிந்திக்குந்தொறும் மந்த மதிகளும் உலகபோகங்களை வெறுத்துத் துறவடையச் செய்யும் அற்புதமான சரிதமுதலிய பதினாறு நூல்களையும் தமிழில் செய்யும் வண்ணந் தமக்குத் திருவருள் புரிந்த கருணைக் கடலாக வுள்ளவளாதலின், அன்பு மீதூர எழுவகை மொழிகளாற் புகழ்ந்து துதித்தன ரென்க.
---
‡வாந்தாசனம் -எதிரெடுத்த அன்னம்; புரீஷம்-மலம்.
அம்பிகை இயற்கை ஞானமே வடிவமாக உள்ளவளாதலின், 'தெருட்சக்தி' என்றும், ஆன்மாக்களின் பக்குவத்துக்
கீடாக அவர்களிட மெய்தி வலிய அருள்புரிபவ ளாதலின், 'கருணையுருவாய்' என்றும், உலகின்கணுள்ள குடிகளின்
குறைகளை அரசராணையை மேற்கொண்டு நிவிர்த்திக்கும் அமைச்சன்போலாது, தனக்கு மேலொரு தலைமைப் பொருளின்றித் தானே முதன்மையானவளென்று விளக்குவான், 'இறைவி' என்றும், பிற ஆன்மாக்களின்பொருட்டு மானைக் காட்டி மான்பிடிப்பானெய்துமாறு மனிதவுருவுடனே எய்தி நின்று (அல்லது, மனிதர்களாகிய குருமூர்த்திகளின் உள்ளிடத்தில்நின்று) உபதேசிக்குமாறன்றிப் பெரியநாயகி என்னுந் திருப்பெயருடன் எய்தி உண்மையாக நின்று உபதேசம் செய்தன ளாதலின் 'எங்குரு' என்றும், தமது குரவனை இறைவனே எனக் கூறுதல் வழக்கமாயினும், அது உண்மையிற் சிற்சிலவிடங்களில் முரண்படவுங்கூடும்: இவர்க்கு அங்ஙனமின்றி உண்மையில் இறைவியே குருவாதலின் உள்ளபடி யுரைத்தார். இவள் உண்மையான திருவுள்ளம் ஆன்மாக்களை இரக்ஷித்தல் வேண்டுமென்கின்ற தயவாகவே உள்ளதாதலின், 'ஒரு அருட்கடல்' என்றும், திருமகள் முதலிய எல்லாரினுஞ் சிறந்தவளாதலின் 'பெரியநாயகி' என்றும், நாததத்துவமுதல் பிரிதிவுதத்துவ மீறாகவுள்ள அனைத்தும் உண்டாதற் கிவளே காரணியாதலின் 'உலகிற்கு அன்னை' என்றும், அநேக புத்திரர்களை யுடைய மாதாவினும் அவள் கணவனாகிய பிதா சிறந்து முதன்மையுற்று நிற்குமாறுபோலச் சத்தியும் சிவமும், பரிதியும் ஒளியும், பாலும் சுவையும், கடலும் அலையும், தீயும் சூடும்போல வேறுபடாப் பொருளாதலினாற் சிவமே சத்தியும், சத்தியே சிவமும் அன்றி, உண்மையில் இருவகைப்பொருள்க ளிருப்பதாகக் கூறுதல் இவரது பக்ஷம் அன்றா மாதலின் 'முதல்வி' என்றும் கூறினார்.. (4)
சபாநாயகர் துதி.
திங்களார் சடையிற் கங்கைநீர் துளிப்பத்
திருந்திழை யுமையுளங் களிப்பப்
பொங்கரா வொடுநற் புலிமுனி வர்கண்மால்
போதய னமரர்கள் போற்றத்
துங்கநான் மறைக டுதித்திட வைந்து
தொழில்விரிந் திடப்பொது வதனிற்
செங்கழ லதிர நடஞ்செயும் பொருளைத்
தினம்பணிந் திடரொழித் திடுவாம்;.
(இ-ள்) சந்திரன் பொருந்திய சடையில் கங்காசலமானது ததும்பவும், செவ்விய ஆபரணங்களை யணிந்த உமா தேவியார் மனமகிழவும், சீறுகின்ற பாம்புருவமான பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னு மிரண்டுமுனிவர்களும், திருமாலும், தாமரைமலரிலிருக்கின்ற பிரமதேவனும், (மற்றைத்) தேவர்களும் துதிக்கவும், பரிசுத்தமான நான்கு வேதங்களும் துதிக்கவும், (சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்னும்) பஞ்சகிருத்தியங்கள் நடக்கவும் திருச்சிற்றம்பலத்தில் செவ்விய வீரகண்டை முழங்கும்வண்ணம் ஆநந்தத் தாண்டவம்செய்தருளுகின்ற ஸ்ரீநடராஜப்பெருமானை நாள் தோறும் வணங்கித் துன்பத்தை நீக்கிக்கொள்வோம். எ-று.
"பொங்கராவொடுநற் புலிமுனிவர்கள்" என்றது பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களை.
பதஞ்சலிமுனிவர் சரிதம்.
க்ஷீராப்தியில் யோகநித்திரை செ்யும் திருமால் ஒரு நாள் துண்ணென்றெழுந்து "அரகரசங்கர" என்று சிரமேற் கைகூப்பி ஆநந்தக் கண்ணீர் துளித்து அசைவற்றிருக்கக்கண்ட அவரது சயனமாயிருந்த ஆதிசேடன் "தேவரீர் அவ்வாறிருக்கக் காரணம் யாது?" என்று வினவ, திருமால் "எமதிறைவர் தாருகாவனத்தில் நடித்தருளிய இன்பத் தழுந்தினேன்" என, தானும் அந் நடத்தைத் தரிசிக்க விரும்பி அத்திருமால்பால் விடைபெற்று, திருக்கைலையினொருபுறந் தவஞ்செய்து சிவபெருமானால், அத்திரிமுனிவரும் அவர் மனைவி அநுசூயையு மியற்றிய தவத்தால் அவ்வநுசூயையின் அஞ்சலியிற்றோன்றி விழுந்த காரணத்தால் பதஞ்சலி யென்னுந் திருநாமத்தோடு திருத்தில்லை வனமடைந்து வியாக்கிரபாத முனிவருடன் திருநடனதரிசனஞ் செய்தருளினார். இவர் சிரமுந் தாளும் சர்ப்பவடிவாதலின், இப் பெயர் பெற்றனர்.
வியாக்கிரபாதமுனிவர் சரிதம்,
மத்தியந்தனமுனிவரது தவப்புதல்வராகிய மழமுனிவர் தமது தந்தையார்பால் விடைபெற்றுச் சிவபெருமானது திரு
நடனதரிசனங் காணத் திருத்தில்லைவனத்தையடைந்து சிவார்ச்சனை செய்ய, வண்டுபடுதல் முதலிய குற்றங்க ளொழிந்த
மலர் கொய்தற்குப் பொழுதுபுலருமுன் சென்று மரங்களேறிற் பனியாற் கைகளுங் கால்களுஞ் சருக்குமே இரவில் கண் தெரியாதே என்று மனம் வருந்த, சிவபெருமான் அவருக்குக் காட்சிதந்து "யாதுவரம் வேண்டும்" என, மழமுனிவர்
"சுவாமி! கையுங்காலும் புலிபோலப் பெற்று அவற்றிற் கண்களிருக்க வேண்டும்" என, இறைவர் அவ்வாறே பிரசாதித்துச் சென்றனர்.அதுமுதல் அவர் வியாக்கிரபாதர் எனப் பெயரெய்தினார். தாம் விரும்பியவண்ணமே சிவபூசை செய்து கொண்டிருந்து திருநடனந் தரிசித்தனர் என்பதாம்.
பொங்கரா வொடுநற் புலிமுனிவர் என்பதற்குச் சீறுகின்ற அரவும் நல்லபுலியும் முனிவர்களும் என்று கொள்ளினுமாம்.
ஐந்தொழில் விரிந்திட இறைவன் றிருநடனம் புரிகின்றா னென்பதனை,
"பூமலி கற்பகப் புத்தேள் வைப்பு
நாமநீள் வரைப்பி னானில வளாகமும்
ஏனைய புவனமு மெண்ணீங் குயிருள்
தானே வகுத்ததுன் தமருகக் கரமே
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
யனைத்தையுங் காப்பதுன் னமைத்தகைத் தலமே
தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலு
மாற்றுவ தாரழ லமைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்
றூட்டுவ தாகுநின் னூற்றிய பதமே
அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பங்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே
இத்தொழி லைந்துநின் மெய்த்தொழில்".
-- என்பது முதலிய ஆன்றோர் திருவாக்குகளானும் சுருதியாதிகளானு மறிக. (5)
சிவகாமியம்மை துதி.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
அருளுருவா யுயிர்கடமக் கன்னை யாகி
யஞ்ஞானந் தனையகற்றி யமல மாகி
மருளிலதாய் மெய்ஞ்ஞான மாகு முத்தி
வாய்த்திடவே காத்தருளி வானோ ரேத்த
விருள்கெடவே மிளிருமிருங் கழல்க ளார்ப்ப
விறைபுரியுந் திருநடத்தாற் களித்து வாழுந்
தெருண்மருவு மறைநான்கும் பரவுந் தில்லைச்
சிவகாம சுந்தரியைச் சிந்தை செய்வாம்.
(இ-ள்) காருண்யமே வடிவாய், ஜீவகோடிகளுக்கெல்லாம் மாதாவாகி, அவர்களது அஞ்ஞானத்தை நீக்கி, நிர்மலமாய், மயக்கமற்றதாய், உண்மைஞானவடிவாயுள்ள மோக்ஷத்தை அடையும்பொருட்டு உபகரித்துநின்று, தேவர்களெல்லாம் துதிக்க அந்தகார மொழியும்வண்ணம் விளங்குகின்ற பெரிய வீரக்கழல்கள்முழங்க இறைவனாற் செய்யப்படுகின்ற திருநடனத்தால் மகிழ்வடைந்து, அறிவுமயமான நான்கு வேதங்களும் துதிக்கின்ற சிதம்பரத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு வாழ்கின்ற சிவகாமசுந்தரியைத் தியானிப்போமாக.
ஆன்மாக்களுக் கநுக்கிரகம் புரிதலையே பெரும்பொருளாகக்கொண்டு ஸ்ரீ மஹாகைலாயத்தே எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ மஹாசதாசிவப்பெருமானே மும்மல ஸத்தர்களான ஆன்மாக்களை ரக்ஷிக்கும்பொருட்டு சிதம்பர க்ஷேத்திரத்திற் சபாபதி என்னுந் திருப்பெயர்பூண் டெழுந்தருளியிருக்கின்ற நடராஜருடைய பஞ்சகிருத்தியத்தில் வைத்த நோக்க முடையவரும்,--அம் மஹாசதாசிவனார் கொண்ட கோலத்திற் கேற்பத் தாமும் சிவகாமசுந்தரியாய் ஆன்மாக்களைப் பிறவிப் பெருங்காட்டினின்றும் விலக்கித் திருவடி நிழலாகிய பட்டினத்தே சேர்க்கு நோக்குடையளாய் நிற்குமியல்பினளான மனோன்மணி யென்றும், இவளுருவம் கருணைப்பிழம்பே என்றும், அதற்குச் சான்று தம்போல்வாரை
வலிந்தாண்ட திறமே யென்றும் எண்ணும் பேரறிவாளராதலின், 'அருளுருவாய்' என்று தொடுத்துக் 'களித்து வாழும்' என்று முடித்தார்.
சிவகாமசுந்தரி-சிவத்தாற் காமிக்கப்பட்ட சுந்தரி; சிவத்தைக் காமிக்கிற சுந்தரி என்னும் இரண்டு முதலாகப் பல பொருள்களையுந் தராநிற்கும். சிவத்தாற் காமிக்கப்படுகிற சுந்தரி யென்பதே சத்தன் சத்தி என்பவர்களின் உண்மைத் திறமறிந்த ஞானிகளாற் கொள்ளப்பாலதும், ஏனைய பிறராற் கொள்ளற்பாலவுமாம். ஏனெனில், ஒருவன் தனது ஆற்றலினிடத்து லக்ஷிய மற்றவனாக வெந்நாளுமிரான். அங்ஙனமே இறைவன் தனது கருணைத்திறமாகிய பேராற்றலினையே சத்தியாக அமைத்துளான் என வேதாகம புராணேதிகாசங்கள் கூறுகின்றன.
முத்தியென்பது,அநர்த்தநிவிர்த்தியா லுண்டாகும் ஆனந்தபிராப்தியே யென்றும்,--அஞ்ஞான நீங்கிய பொழுதுண்டாகும் மெய்ஞ்ஞானமே யென்றும்,-பந்தநிவிர்த்தியடைதலே யென்றும்,--பந்தநிவிர்த்தி யடைந்து லசிவமாதலே யென்றும்--அப்பி லடங்கிய உப்பென இறைவனிலடங்குத லென்றும் இன்னும் பலவிதமாகவும் உரைக்கின்றார்கள். அஞ்ஞானக் கழற்றியி லுதயமாகின்ற மெய்ஞ்ஞானமே முத்தியென்பது இவ்வாசிரியர் கருத்தாதலின் "அஞ்ஞானந் தனையகற்றியமலமாகி - மருளிலதாய் மெய்ஞ்ஞாமாருமுத்தி" என்றார்.
அஞ்ஞானந்தனை யகற்றலாவது, அகங்கார மமகாரங்களை ஒழித்தல். அகங்காரம் நானென்பது; மமகாரம் என
தென்பது. இது ஆன்மாக்களுக்கு இருவினை ஒப்பும், மலபரிபாகமும் வந்த ஞான்று ஞானசத்தியா-லியற்றப்படுங்கிரியையாம். முத்தியானது அஞ்ஞானஞ் சந்தேகம் விபரீத முதலிய மயக்கங்களி னின்றும் வேறுபட்டதாய்த் தருக்க யுத்திகளா லகற்றவியலாத உண்மையறிவேவடிவமாய்ப் புடமிட்ட பொன்போல அழுக்கற்றதாய் விளங்குவதொன்றாகலின், ஆசிரியரும் 'அமலமாகி-மருளிலதாய் மெய்ஞ்ஞான மாருமுத்தி' என்றார். ( )
விநாயகர்துதி.
கலிவிருத்தம்.
செக்கர் போன்றொளிர் முக்கட் சிலம்பினை
மிக்க பேரருள் வேலையை யோர்கொம்பாற்
றக்க வன்பர்க் குதவுந் தருவினை
யிக்க தைநிறை வேற விறைஞ்சுவாம்.
(இ-ள்) இந் நூல் இடையூறின்றி நிறைவேறும்பொருட்டு, செவ்வானம் போன்ற திருமேனியையும், விளங்குகின்ற
மூன்று கண்களையும் உடையவராய்த் தன்னையடைந்த பக்குவர்களாகிய அன்பர்களுக்குத் தமது ஏகதந்தத்தால் உயர்ந்த
பெரிய அருட்கடலை அளிக்கின்ற கற்பகம் போன்ற விநாயகப் பெருமானை வணங்குவாம்.எ-று
இவ்விநாயகப் பெருமான் பரிபக்குவமுடைய ஆன்மாக்கட்குக் கருணை புரியுந்திறங்காட்ட அவர்தந் திருக்கரத்து
ஆன்மாக்களை வருத்திய கயமுகனை வதைத்த கொம்பினை அமைத்துளார்.இப் பெருமானுடைய திருவுருவ தரிசனமுடையார் அவர் கரத்துள்ள பின்னதந்தத்தால் அவர் கருணைத்திறத்தினைச் சால வறிகின்றனர்.அவ்வறிவினா லவர்கள் விக்கினமின்றி யாவர்களையும் ஆட்கொள்ளும் அம்முதற்கடவுளை நினைத்து ஆநந்தக் கடலி லழுந்துகின்றார்களென்று தொனித்தல் காண்க.
தரு வென்பதற் கிணங்கக் கொம்பென்றார்.
பாரதம்-சௌந்தரியலகரி முதலிய நூற்களின் உற்பவத்திற்கு இவரது கொம்பே காரண மாதலின்,'மிக்க
பேரருள் வேலையை யோர் கொம்பாற்-றக்க வன்பர்க் குதவுந் தரு'என்றார் என்னினும் ஆம்.
எல்லாக் காரியமுஞ் செய்யத் தொடங்குவோர் அஃது நிர்விக்கினமாக நிறைவேறற்பொருட்டு விநாயகரை வணங்குதல் மரபாதலின்,இந்நூலாசிரியரும் தாமெடுத்துக்கொண்ட மகராஜா துறவு மொழிபெயர்ப்பு முட்டின்றி முடிதற்பொருட்டு முதற்கண் விநாயகவணக்கங் கூறினர்
அதன் வரலாறு.
பூர்வத்திற் கயமுகாசுரன் தான் பெற்றுள்ள வரத்தின் இறுமாப்பாற் பிரமாதி தேவர்கட்கெல்லாம் விபத்து செய்து வர தேவர்க ளதனைச் சகியாதவர்களாகி ஒருங்குகூடித் திருக்கைலாய மலையையடைந்து நந்திதேவர் கட்டளை பெற்றுத்
திருச்சந்நிதானத்துட்சென்று சிவபெருமானைத் தரிசித்துத்தமக்கு நேர்ந்த குறைகளை விண்ணப்பஞ்செய்து முறையிட,
"அவன் எம்மை நோக்கி அரியதவஞ்செய்து தேவர்-அசுரர்- மனிதர் மிருகங்கள் முதலினோரால் இறவாதிருக்க வரம்
பெற்றனன். ஆனால் தன துருவாகி வருவோனால் இறவாதிருக்க வரங் கேட்டானிலன். நாம் மாறுபட்ட திருமேனி
யாக யானைமுகத்தோடு சென்று அவனை யடக்குவோம்" என்றவர்கட்கு விடைகொடுத் தனுப்பி, பார்வதி தேவியா
ருடன் அப்பர்வதத் தருகிலுள்ள சித்திரச்சாலையையடைந்து அங்கு விச்சுவகன்மனால் எழுதப்பட்டுள்ள மந்திரவடிவமா
கிய சித்திரங்களைப் பார்வதிதேவியாருக்குக்காட்டி "பெண்ணே! முதலிலுள்ள பிரணவாகாரமாகிய இரண்டு யானைக
ளில், முற்பட்டது திரிமூர்த்திகளையுந் தந்தது. அஃ தெம்வடிவம். அடுத்த சத்திகள் மூவரையுந்தந்தது. அஃ துன்வடி
வம். ஆதலின் யாம் அப் பிரணவச் சித்திரங்களின் வடிவ மாகுதும்" என்று திருவாய்மலர்ந்தருள, உமாதேவியாரும்
அக் கருத்துக் கிசைந்தனர். அப்பொழுது இறைவர் ஆங்கோர் திருவிளையாடலைச் செய்ய, அதனா லப் பிரணவவடிவ
த்தினின்றும் விநாயகர் திருவவதாரஞ் செய்தனர். பிறகு விநாயகரைக் கைலைமலையிற் கொண்டுவந்து மகுடஞ் சூட்டி
"உன்னை வணங்கி யுன தருள்கொண்டு செய்யுங் கருமங்களை நிறைவேற்றவும், வணங்காது செய்யுங் கருமங்களைத்
தவிர்க்கவும்,உனக்கு விக்கினவிநாயக னெனப் பெயர் தந்தோம்"என்று திருவாய்மலர்ந்தருளி,தேவர்களைப் பார்த்து
"இவன் நமது மூத்தபிள்ளை;இவனை எம்மைப்போன் றுபசரியுங்கள்" எனக் கட்டளையிட்டருளினர்.பிறகு தேவர்
கள் கயமுகனது கொடுந்துயர் பொறாது விநாயகக் கடவுளையுபாசிக்க,அவர் அவ்வசுரனோடு போர்செய்து அவ னெவ்
வகை யாயுதங்களாலு மிறவாதவ னாதலின் தமது கொம்பையொடித் தெறிய அவன் பெருச்சாளி வடிவாயினன்.அதனை
விநாயகர் வாகனமாகக் கொண்டனர் என்பது புராண வரலாறு. (7)
சுப்பிரமணியர் துதி
.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கடிகமழ் கரிய கூந்தல்
கனிமொழித் துவர்வாய்த் தெய்வப்
பிடிதனக் கோட்டால் வள்ளிப்
பெண்கொடி படருஞ் செய்ய
படிபுகழ் புயமாங் குன்றிற்
பாயவன் கழுநீர் நீப
மடலவிழ் செழுந்தார்ச் செவ்வேண்
மலரடி வணக்கஞ் செய்வாம்.
(இ-ள்)மணம் வீசுகின்ற கரிய கூந்தலினையும், மதுரமான மொழியினையும்,செந்நிறம்பொருந்திய வாயினையும்
உடைய தேவயானையினது தனமென்னும் கொம்பின்வழி, வள்ளி யென்றும் பெயரினையுடைய பெண்கொடி படருகின்ற செவ்விய உலகம் புகழுகின்ற புயமாகிய மலையில் அகன்றவளவிய இதழினையுடைய செங்கழுநீர்மலர்களாலும்,
கடம்பு மலர்களாலும் கட்டப்பட்ட செழுமையான மாலைகளை யணிந்துள்ள குமாரக்கடவுளின் திருவடிகளை வணங்குவாம். எ-று.
தனக்கோட்டின்வழி வள்ளிக்கொடி படருகின்ற புயக் குன்று என நயம்பட வுரைத்தமை காண்க. (8)
அடியவர் துதி.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
வண்டுழா யலங்கன் மாயவன் மலர்மேல்
வதிந்தநான் முகன்மறை யறியாத்
தொண்டைவாய்க் கெண்டை விழிக்கழை மொழியொண்
டுடியிடை யுமையையோ ரிடத்திற்
கொண்டகோ னருளைப் பொருளெனக் கருதிக்
குலவிய சாதனந் தரித்து
மண்டிய வடியார் யாவர்மற் றவர்தாண்
மனத்தினுஞ் சிரத்தினும் வைப்பாம்.
(இ-ள்.) வளவிய துளவமாலை யணிந்த திருமாலும், தாமரைமலரை யாசனமாக வுடைய பிரமனும், வேதங்களு
முணராத கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கயல்போன்ற விழிகளையும், கரும்பு போன்ற மொழியினையும்,
ஒள்ளிய உடுக்கைபோன்ற இடையினையு முடைய உமா பிராட்டியை இடதுபாகத்திற் கொண்டுள்ள சிவபெருமானது
திருவருளைப் பொருளாக மிகவும் கருதி, விளங்குகின்ற விபூதி ருத்திராக்ஷங்க ளாகிய சைவசாதனங்களைத் தரித்துள்ள அடியவர்கள்யாரோ அவர்கள் பாதங்களை மனத்திலும் சிரத்திலும் வைத்துக்கொள்வோம்.. எ-று. (9)
அவையடக்கம்.
கலிவிருத்தம்.
சசுரர்தம் வலியையுந் தடந்தி ரைக்கட
லகலமும் பின்புளோ ரகழி லஞ்சிதான்
புகழுற விளக்கலே போல விச்செயு
டகைதரு கலைஞர்நூ றனைவி ளக்குமால்.
(இ-ள்) சகரர்களது வல்லபத்தையும், விசாலமான அலைகளையுடைய கடலினது அகலத்தையும், மற்றையர்களால் தோண்டப்படுகிற குளங்கள் கீர்த்திபொருந்தும் வண்ணம் விளக்குந்தன்மையைப்போல், இச்செய்யுட்களும் உயர்வு பொருந்திய கலைஞான வல்லவர்களால் செய்யப்பட்ட நூல்களை விளக்காநிற்கும். எ-று. (10)
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
திங்களொண் கவிகைத் திகிரியந் திணிதோ
டிகழ்கடற் றானைமா ராஜ
னங்கண்மா நிலத்திற் றுறந்துவீ டடைந்த
வரியவிக் காதையைத் தமிழா
லிங்குமா தவத்தோ ரிசையுமென் றிசைப்ப
விசைத்தனன் வீடுறக் கேட்டோர்
கொங்கவிழ் பொழில்சூழ் பழமலை யுறையுங்
குமாரதே வென்னுமா முனியே.
(இ-ள்) ஒள்ளிய சந்திரவட்டக் குடையையும், ஆக்கினாசக்கரத்தையும், விளங்குகின்ற கடலைப்போன்ற சேனைகளையும், அழுத்தமான தோள்களையு முடைய மஹாராஜன், அழகிய இடமகன்ற பெரிய உலகத்தில் துறவுபூண்டு முத்தியடைந்த அருமையான இந்தச் சரித்திரத்தை, இங்குள்ள பெரியோர்கள் தமிழ் யாப்பினால் பாடெனக் கேட்டோர்
வீட்டையும் வண்ணம் பாடினான். (அவன் யாரெனில்), மணம் வீசுகின்ற மலர்கள்விரிந்த பொழில்சூழ்ந்துள்ள விருத்தாசலத்தில் எழுந்தருளியிருக்கின்ற குமாரதேவ ரென்னும் திருநாமத்தினையுடைய மஹாமுனிவன் . எ-று. (11)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
சிவன்றிரு வுருவா மைந்து
சின்மய வெழுத்தும் வாழி
நவந்தரு நீறும் வாழி
நயனநன் மணியும் வாழி
கவின்றருங் குமார தேவன்
கழலிணை யிரண்டும் வாழி
யவன்றிரு வடியார் தம்மோ
டாருயி ரனைத்தும் வாழி.
(இ-ள்.) சிவபெருமானது திருவுருவமாகிய ஞானரூபமாய் விளங்குகின்ற பஞ்சாக்ஷரங்கள் வாழ்க. புதுமையைத்
தருகின்ற விபூதியும் வாழ்க. கண்மணியாகிய உருத்திராக்ஷமும் வாழ்க. குமார தேவரது அழகைத் தருகின்ற இரண்டு
திருவடிகளும் வாழ்க. அவனது திருவடியர் கூட்டத்துடன் அரிய எல்லாவுயிரகளும் வாழ்க. எ-று.
ஸ்ரீ பஞ்சாக்ஷரமானது தன்னொடு பயின்றவர்களைச் சிவ சொரூபமாகச் செய்தல் அநுபவசித்தமாதலின், " சிவன்றிரு
வுருவா மைந்து சின்மயவெழுத்து " என்றார்.
வேறே எவருடையவேனும் உருவமுணர்த்தும் பீஜத்திற்கு, அதாவது மந்திரத்திற்கு ஞானசொரூபம் இயற்கையிலிராது. எதனா லென்னின், மற்றையவர்கள் இறைவனான சிவபெருமானை ஒப்ப இயற்கைஞானமுடைய ரல்லாமையாலென்க.
இப்பஞ்சாக்ஷரம் தூல-சூக்கும-காரணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றற்கொன்று மிகுந்த பலசித்தியை அருள்வதாகவுள்ளது. ஸ்ரீ பஞ்சாட்சரத்தினை ஆசிரியன் முகமாக உணர்ந்து மூன்றரைக்கோடிக் கதிகமாகச் செபித்து முறைப்படி சிவார்ப்பணஞ் செய்பவர்கள் சிவசம்பத்துக்களான அணிமாதி மஹாசித்திகளை ஊழியப்பொருளாகக்கொண்டு விளங்குவர்.
நகாரமாதியாகவும், சிகாரமாதியாகவும் விளங்கும் மந்திரங்களை முறையே தூல சூக்ஷுமங்களென்ப.
ஓங்காரமே காரண பஞ்சாக்ஷர மாகும். அது அகார உகார மகார விந்து நாதங்களான ஐவகையினவாகப் பிரிக்க
நிற்றலின், அதுவே காரண பஞ்சாக்ஷரமெனவும், இதனையே முத்தர் செபித்தலவேண்டும் எனவும் சிவாகமங்களில் கேட்கப்படுகின்றன.
பிரணவத்தினை காரண பஞ்சாக்ஷரமாக அறியாமலும் கொள்ளாமலும் வேறொருவிதமாக இருதலைக்கொள்ளியென
மற்றொரு மந்திரத்தினைக் காரணமென உரைப்பவர்களும் உண்டு. அன்னோர் அம் மந்திரத்தில் மூன்றெழுத்தே நிலவு
தலையும் அது பாசநீக்கத்தில் ஆன்மா பரையின் புருகஷாகாரத்தால் (துணையினால்) சிவனை அடைந்துநிற்கும் இயல்பினை உபதேசிக்கு முறையான மந்திரமெனவும் அறிந்திலர் போலும்.
எத்துணைய கல்விவல்லப மாதிய இருக்கினும் சிவத்தினை யடைந்து சிவமாய் விளங்குதற்குப் பஞ்சாக்ஷரமே இன்றியமையாத பொருளாதலினை பக்குவர்கள் ஆசிரியர் வழித்தாக அறியாதிரார்.
பஞ்சாக்ஷரமே ஞானசொரூப மென்பது, இந்நூலாசிரியர் பக்ஷமாதலின், 'சிவன்றிருவெழுத்து' என்றும், 'சின்மயம்' என்றும் உற்றது கூறினார். பூதிக்குறியல்லாத மற்றைக் குறிகளையுடையோர் உலகினருள் போககாமிகளாகவே காணப்படுவார்கள். இவர்களைக்கண்டவுடன் பிறர்க்குப் புளகாங்கிதமுண்டாதல், கண்ணீர்வார்தல், கரமலர் குவிதல் முதலிய ஆச்சரியப்படத்தக்க செயல்களைத் தராநிற்ப தொன்றன்றாதலினாலும் இதற்கு அத்தகைய இயல்புண் டாதலானும்
'நவந்தரு நீறு' என்றா றென்றும்,
பாசபத்தராய் பிறப்பிறப் பெனுஞ் சலதியுள் தலைதடு மாறிக் கிடக்கு மான்மாக்களைப் பந்தக்கழிவு முதலியவைகளைக் கொடுத்துச் சிவோகமென்னும் அதிசயிக்கத்தக்க நிலையில் நிறுத்துவதாதலால், 'நவந்தரும் நீறு' என்றாரென்றும்,
நீறு,-சைவநீறு, வைணவ நீறு, ஸ்மார்த்த நீறு என ஊன்றியாராய்வார்க்கு மூன்றெனக் காணப்படினும், அந்தந்த முறைப்படி அணிவார்க்கு அது புதுமைதருவ தொன்றாதலின், பொதுமையாகவே 'நவந்தரு நீறு' என்றா ரென்றும், மற்றையவை இரண்டும் பரபக்கத்தனவாய் சைவநீற்றி னளவான புதுமையைத் தரற்பாலதன்மையால், அவைகளை ஒழித்து ஆசிரியர் நவந்தருநீறென்று சைவ விபூதியையே உரைத்தன ரென்றும், ஏனைய பூதிகள் இந்த விபூதியை யொப்பப்
பிறராலும் சிறப்புற ஆக்கப்படாமையும் இவ்விபூதி சைவ மந்திர சொரூபமாய்ச் சைவமந்திரங்களால் ஆக்கப்படுதலை ஆசிரியர் விளக்க 'நவந்தரும்' என்றார் எனவும், இன்னமும் உசிதமான பலவிதமாகவும் பொருள் விளங்கி நிற்கும் என
வும் கூறுமாறு நவமெனு மடைபொலிந்து நிற்றல் காண்க.
நயனநன்மணி-நயனத்தி லுண்டான நல்ல மணி
நயனம் போல்வதான நன்மணி.; நயனத்தி லொளி தந்து நிற்பதான கருவிழிபோன்ற நல்மணி என அம்மணியினிடத்து அடியவர் கொண்டுநிற்கும் அபிமானத்தினை அம்மொழி தெற்றெனவிளக்குதல் காண்க. பஞ்சாக்ஷரமும் திருநீறும் உருத்திராக்கமுமாகிய இம் மூவகைப்பொருள்களையே மோக்ஷசாதனங்களாக மோக்ஷமளிக்கு முதல்வன் தந்து நிற்றலால் அவைகளை அடயெவர்கள் அன்பொடு கைக்கொண்டு நிற்கின்றனர்.
இது துறவுநூலாதலானும், துறவிலும் நிரதிசய வின்பமான சிவசாயுச்சியத்தினை அடைவான் விரும்பி நிற்கும்
தகுதியினர்க் குரியதாதலானும் மோக்ஷ சாதனங்களையும் ஆசிரியனையும் அடியவர்களையும் ஆருயிர்களையும் வாழ்த்தினாரென்க. ஆசிரியனை மெய்க்கடவுளாகக் கொள்ளுதல் இந் நூலுடையார்க் குடன்பாடாதலின், கடவுளை ஈண்டு வேறு கூறினா ரில்லையென்க.
நூலாசிரியரான குமாரதேவருடைய பெயர் கேட்கப் படுதலால், பாயிரமுரைத்தற் குரியாரால் இவ் வாழ்த்துரைக்கப் பெற்றதென்று கோடல் நலம். குமாரதேவ னென்றது முருகக்கடவுளை என்றும், குமாரதேவன் -குமாரனுக்குத் தேவன்; அவன் சிவன் எனவும் பலவாறு கூறுவர். இவ்வாசிரியர் பெரியநாயகி யம்மையின் மாணவராதலால், ஈண்டிஃதே யுண்மையென் றுரைக்க வியலாது. (12)
பாயிர முற்றிற்று
-----------------------------------------------------------
நூல்
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
தருக்கிளர் நைமி சாரணி யத்திற்
றங்கிய முனிவர்கள் சூதன்
வரப்பணிந் தேத்திக் கதைகள்பற் பலவா
வகுத்துரைத் தனைமகா ராசன்
றிருக்கதை யெங்கட் குரைத்திலை யதுநீ
செப்பெனச் சுருதியிற் சொல்லுஞ்
சுருக்கமில் காதை யிதுவெனத் தொகுத்துத்
தோமறக் கேண்மினென் றுரைக்கும். (1)
(இ-ள்) மரங்கள் விளங்குகின்ற நைமிசாரணியத்தில் (தவஞ்செய்துகொண்டு) வாழ்கின்ற சௌநகாதி முனிவர்கள் (இருக்குமிடத்திற்கு) சூதமுனிவர் (ஒருநாள்) வருதலும், (அச்சவுனகாதி முனிவர்கள்) அவரை வணங்கித் துதித்து
சூதரே, எங்களுக்குப் பற்பலவிதமான அநேகங் கதைகளை வகுத்துரைத்தீர் (எனினும்), இதுகாறும் மஹாராஜனது
அழகிய சரித்திரத்தை எங்களுக்குச் சொன்னீர்களில்லை. ஆதலால், அக்கதையைத் தேவரீர் இப்பொழுது கூறியருளுமென்று கேட்கவும், (அச் சூதமுனிவர்) வேதத்திற் சொல்லுகின்ற விசாலமான இக் கதையை நான் சுருக்கிக் கூறுகின்றேன். நீங்கள் பரிசுத்தமான உள்ளத்தோடிருந்து கேட்பீர்களாக வென்று சொல்லத்தொடங்கினார். எ-று.
சூதமுனிவரைக் குறித்துப் பலர் பலவிதமான அபிப்பிராய முரைக்கின்றன ராயினும், இவர் முந்நூலும் தண்ட
கமண்டலங்களும் பஸ்ம ருத்திராக்ஷங்களும் உடையவராக இருக்கின்றார் என இவரை வருணிக்குமிடங்களில் கேட்கப்
படுதலானும், லோமஹர்ஷணரென் றிவருக்கு மற்றொரு பெயரிருத்தலானும் இவரொரு பிராமணரேயாதல் வேண்டும்.
கட்குடி வெறியினா லொருமுறை பலராமனிவரை சூதனென் றிகழ்ந்திருத்தலால் க்ஷத்திரிய, பிராமண, ஸங்கிர
மத்தினா லுண்டான ஜாதியென் றுரைக்கப்படுகின்ற சூத ஜாதியரைச் சேர்ந்தவரா யிருப்பினு மிருக்கலாம். சூத்திர
வகுப்பினரெனச் சிலர் குழறி வழிதல் இவர்விஷயத்தில் வெகு அபத்தமேயாம். உபநிடதாதிகளை இவர் முனிவர்கட்
குரைத்திருத்தலால் பிராமணபீஜமே இவரென்பது ஆன்றோர் துணிபு.
குழைத்ததண் சினைத்தே மாவினொண் கனித்தேன்
குலவிய பலவினற் பலத்தேன்
றழைத்திடு கதலிப் பழமுகுத் திடுதேன்
றான்றிரண் டிலஞ்சியிற் றதும்பி
விழுத்தகு வயலிற் பாய்தர விளையு
மிகுகரு நாடதே சந்தா
னிழைத்தநற் றவத்தா லுயிரெலாம் புரந்தங்
கிருந்தர சாளுமோர் குரிசில். (2)
(இ-ள்) தளிர்களையுடைய தண்ணிய கிளைகளோடு கூடிய தேமாமரங்களிலுள்ள ஒள்ளிய பழங்களின் தேனும், விளங்காநின்ற பலாப்பழங்களின் தேனும், தழைத்துள்ள வழைப்பழங்களொழுக்குகின்ற தேனும் கலந்து, குளங்களில் நிறைந்து புகழத்தக்க வயல்களில் (நீருக்குப் பதிலாகப்) பாய,அதனால் நெல்விளைகின்ற உயர்ந்த கருநாட தேசம்
செய்த நல்ல தவத்தினால் ஒருமன்னவன் எல்லா உயிர்களையும் அங்கிருந்து அரசாண்டு இரக்ஷித்துக் கொண்டிருந்தான்.
கலிவிருத்தம்.
மஞ்சம ரிஞ்சிசூழ் மாபு ரத்திருந்
தெஞ்சலி லெண்டிசை யிறைவர் தாடொழத்
தஞ்சமென் றடைந்தவர் தம்மைக் காத்திகல்
வஞ்சகர்க் காய்மகா ராச மன்னனே. (3)
(இ-ள்.) (அவன் பெயர் யாதென்றால்),மேகந் தவழுகின்ற மதில்சூழ்ந்த மாபுரமென்னும் நகரத்திலிருந்து குறைவற்ற எட்டுத்திக்கிலுமுள்ள எல்லாஅரசர்களும் தமது பாதங்களை வணங்க,அடைக்கலமென்றடைந்தவர்களை இரட்சித்துக்
கொண்டு பகைவர்க ளாகிய வஞ்சகர்களைக் கோபிக்கின்ற மஹாராஜனென்னும் மன்னவன்.எ-று (6)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
தருநிழ லரசு வைகுஞ்
சதமகன் றிருவின் மிக்கா
னுருவினின் மதனின் மிக்கா
னுலகத்தினிற் பலத்த தோளான்
செருவினி லரியே றன்னான்
றேனோடு ஞிமிறும் பாட
முருகுடைந் தொழுகுந் தாரான்
மூவுல களிக்கும் வேலான். (4)
(இ-ன்.) (அவனெப்படிப்பட்டவனென்றால்), கற்பக விருக்ஷநிழலிருந்து அரசாளுகின்ற இந்திரனைக்காட்டிலும்
மிகுந்த செல்வமுடையவன்; உருவத்தில் மன்மதனைப் பார்க்கிலும் பேரழகினையுடையவன்; திரண்ட கல்லைவிடப்
பலமான தோள்களையுடையவன்; போர்முகத்தில் ஆண் சிங்கம் போன்றவன்; ஆண் வண்டுகளுடன் பெண் வண்டுகளும்
பாட, தேனுடைந் தொழுகும்படி மலர்மாலை யணிந்துள்ளவன்; மூன்றுலோகங்களையும் இரட்சிக்கின்ற ஆக்கினா சக்கரத்தையுடயவன். எ-று.
வேல் என்பது,ஆயுதப் பொதுவசனமாதலால்,வேலை ஆக்கினாசக்கர மென்றாம். (4)
கலிவிருத்தம்.
அரசர்வந் திடுதிறை யளக்கு முன்றிலான்
முரசுக ளனுதின முழங்கு மன்றலான்
கரைபொரு திரையெறி கடலந் தனையா
னருவரை மார்பினான் யாளி மொய்ம்பினான். (5)
(இ-ள்.)வேற்றரசர்கள் வந்து தனக்குக் கட்ட வேண்டிய கப்பங்களைக் கொண்டுவந்து அளந்து குவிக்கின்ற தலை
வாயிலையுடையவன்; எக்காலங்களிலும் முரசுவாத்தியங்கள் முழங்கும் மணவினைகளை யுடையவன்; கரையை மோது
கின்ற திரைகளை யுடைய கடல்போன்ற சேனைகளையுடையவன்; அழகிய உத்தம ரேகைகளையுடைய மார்பினையுடையவன்; யானையைப்போன்ற பலமுடையவன். எ.று. (5)
அரசர்தம் முடியுழு தவிருந் தாளினா
னெரிதவழ் திகிரியை யேந்துந் தோளினான்
மருவலர் வலியினை மாற்றும் வாளினான்
றருநிதிக் கொடையினான் றருக்கு நாளிலே. (6)
(இ-ள்.) வேற்றரசர்கள் மகுடங்கள்பட்டுவிளங்குகின்ற (தழும்போடு கூடிய) பாதங்களை யுடையவன். அக்கினி
ஜொலித்துக்கொண் டிருக்கிற சக்கரப்படையைச் சுமந்த தோளினை யுடையவன். பகைவர்கள் செருக்கடைகின்ற
நாளில் பலத்தை ஒழிக்கின்ற வாட்படையினையுடையவன். கற்பகவிருக்ஷத்தைப் போலவும், சங்கநிதி பதுமநிதிகளைப்
போலவும் வரையாதுகொடுக்கும் கொடையினையுடையவன்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கவரியோ டால வட்டங் காரிகை யார்கள் வீசப்
பவளவா யரம்பை யன்னார் பாகடை யுதவ முத்தத்
தவளவா ணகையார் கீதந் தனிநடஞ் செய்ய நின்று
குவலய மன்னர் போற்றக் குரைகடற் றானை சூழ. (7)
(இ-ள்.) அழகினையுடைய பெண்கள் சாமரங்களுடன் ஆலவட்டங்களை வீசவும், பவளம்போன்ற வாயினையுடைய அரம்பா ஸ்திரீகளையொத்த பெண்கள் தாம்பூல மளிக்கவும், முத்துப்போன்ற வெள்ளிய ஒள்ளிய தந்தபந்திகளையுடைய
மாதர்கள் இசையோடுகூடிய ஒப்பற்ற நாட்டியமாடவும், உலகாளு மன்னவர்கள் இருபுறங்களிலும் நின்றுகொண்டு
துதிக்கவும், ஓசையினையுடைய கடல்போன்ற சைநியங்கள் சூழ்ந்து நிற்கவும். எ-று. (7)
இந்திர னால யம்போ லிலங்கிய மண்ட பத்திற்
சுந்தர மிருக ராசன் சுமந்தபூ வணையின் மீது
வந்திருந் தவனி தன்னை மனுநெறிமுறையிற் காத்தே
யந்தமில் போகந் துய்த்தங் கிருந்திடு மரசர் கோமான். (8)
(இ-ள்) தேவராஜனது கொலுமண்டபத்தைப்போல விளங்காநின்ற சபாமண்டபத்தில் அழகிய சிங்கங்கள் சுமந்த
மலரணையின்மீது கொலுவிருந்து உலகத்தை மனுநீதிப்படி இரட்சித்து அளவற்ற போகங்களை அநுபவித்துக்கொண்டு
அம்மாபுரத்தில் வாழ்கின்ற அவ்வரசற்கரசன். எ-று. (8)
தூம்புடைப் பிறையெ யிற்றுத்
துத்தியீ ராயி ரந்தோட்
பாம்பினாற் பரிக்க லுற்ற
பாரினைப் பரிக்கப் பின்னர்
மேம்படு புதல்வர் நந்தம்
வீறுடை வயிற்றில் லென்று
தேம்படு தெரியன் மார்பன்
சிந்தையா குலங்க ளுற்றான். (9)
(இ-ள்) துவாரத்தினையும் பிறைபோன்ற வளைவினையும் புள்ளிகளையும் இரண்டாயிரம் தோள்களையு முடைய
ஆதிசேடனால் சுமக்கப்பட்ட இவ்வுலகத்தை எனக்குப் பின்னர் ஆளுதற்கு உயர்வு பொருந்திய புத்திரர்கள், பெருமை
யினையுடைய நமதுசிறந்தவயிற்றின்வழி உண்டாகவில்லையேயென்று தேன் ஊறுகின்ற மாலையணிந்த மார்பினையுடைய அம் மன்னவன் மனோவியாகுல மடைந்தனன். எ-று (9)
கங்கையே முதலா மிக்கக்
கடவுண்மா நதியிற் றோய்ந்தும்
பங்கயா சனன்மா றிங்கட்
பவளவார் சடையான் றன்னை
யங்கையாற் பூசை செய்து
மதிதிகட் களித்துந் தீயிற்
பொங்குமா குதிக ளீந்தும்
பூவலம் வந்துந் தேவர். (10)
(இ-ள்) (அம்மன்னவன் புத்திராபேக்ஷையால்) கங்கை முதலான சிறந்த தெய்வீகமுடைய பெரிய நதிநீர்களில் மூழ்கியும், தாமரையாசனனாகிய பிரமனையும்,திருமாலையும்,பவளம்போன்ற நீண்ட சடையினையுடைய சிவ பெருமானையும், அழகியகையால் பூசைசெய்தும், பரதேசிகட்கு (அன்ன முதலானவற்றை) அளித்தும், அக்கினிகளிலுயர்ந்த ஆகுதிகளைச்
செய்தும், பூப்பிரதக்ஷணம்செய்தும், தேவர்கட்கு. எ-று.
கடவுண்மாநதிகளாவன:- கங்கை, யமுனை, சரசுவதி நருமதை, சிந்து, காவேரி, க்ருஷ்ணவேணி, தாம்பிரபரணி யாதிய.
இவ்வரசன் திருநீறிடுநெற்றியினனாய் ஸ்மிருதிவழி நடப்பவ னாதலின், அயன் அரி அரன் என்னுந் திரிமூர்த்திகளையும் புத்திரலா பார்த்தமாகத் தன் கைகளாற் பூசை செய்தனன். ஸ்மார்த்த மதத்தினர் திரிமூர்த்திகளைக் காரியேசுவரர்-களென்றும் மாயாப் பிரதிவிம்பர்களென்றும் கருதுபவர்கள். (10)
ஆலயஞ் சாலை யக்கி ராரநந் தனவ னங்கள்
கோலமா ரிலஞ்சி கூபங் குளம்பல செய்து மீரெட்
டேலுமா தானத் தோடே யிரணிய முதலீ ரைந்*து
சாலநற் றான மீந்துந் தருமமெண் ணான்கு செய்தும். (11)
(இ-ள்) கோவில்களையும், சாலைகளையும், பார்ப்பன வீடுகளையும், நந்தனவனங்களையும், அழகு பொருந்திய வாவிகளையும், கிணறுகளையும், தடாகங்களையும், அநேகமாக வுண்டாக்கியும், பொருந்திய சோடச மஹாதானங்களுடன் இணியதான முதலிய உயர்ந்த பத்துவகையான நல்ல தானங்களைச்செய்தும், முப்பத்திரண்டு வகையான தருமங்களைச்
செய்தும். எ-று.
வழியி னிருமருங்கும் அமைக்கப்பெற்ற சோலைக்குச் சாலை என்று பெயர்.
தானங்கள் பதினாறு வகையினவும், பத்து வகையினவுமாம். அறங்கள் முப்பத்திரு வகையினவேயாம். (11)
தவம்பல புரிந்து வேந்தன்
றனையனைப் பூத்த பின்னர்ப்
பலந்தனைத் துடைத்தேன் மேலாம்
பரமநற் பதமு முண்டென்
றுவந்துசா தககன் மத்தோ
டொழிவறு கரும மெல்லா
நவந்தரச் செய்து நாம
நன்மகா ராஜ னென்றே. (12)
(இ-ள்.) அநேகவிதமான தவங்களைச் செய்து அம்மன்னவன் ஒரு புத்திரனைப்பெற்றவனாயினான். ( புத்திரசந்தான
முண்டானதால் அவன்) உடனே இனி நான் பிறவியை யொழித்தேன்; எனக்கு மேலாகிய நல்ல பதமும் உண்டென்று மகிழ்ந்து, ஜாதககர்மங்கள் முதலியனவாகவுள்ள விடாமற் செய்யவேண்டிய எல்லாக் கருமங்களையும் விசேஷமாகவே செய்து, (அப்புத்திரனுக்கு) நல்ல மஹாராஜனென்று நாமகரணஞ் சூட்டி. எ.று.
ஒருவனுக்குப் புத்திர னுண்டானா லவன் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை யடைவானே யன்றி மோக்ஷமடைய
மாட்டான். ஒருவனுடைய பசிப்பிணி ஒழிதற்கு மற்றொருவன் உணவருந்துதல் போலவன்றோ ஆகும் புத்திர சந்தானத்தா லுண்டாகிற மோக்ஷம். ஜனங்கள் சொர்க்காதி போகஸ்தானங்களையும் மோக்ஷஸ்தானமாகக் கருதுதல் வழக்கமாதலின், மகன்றோன்றின ஸந்தோஷத்தால் தந்தை பவமொழிந்தே னென்றான் என்பதனினும், இதற்குப் பிறவியினின்றும் நீங்கினேன் என்பதனினும், பாவத்தினின்றும் விடுபட்டுப் புண்ணிய மிகுதியுடையவ னாதற்குப் புத்திரசனன
மொரு காரணமாதலின், பாவத்தினின்றும் நீங்கினே னென்றான் என்பதே சாலச் சிறப்புடையதாம்.
பவ மொழிதற்கு இருவினை ஒப்பு மலபரிபாகம் சத்திநி பாதம் குருதரிசனம் தத்துவவிசாரம் ஆத்மாநுபவமாதிய
காரணங்களாம். இவையிற்றின் விரிவினை விளக்கமாகப் பின்ன ருரைக்குமிடந்தோறுங் காண்க. (12)
கலிவிருத்தம்.
வேத நீதியிற் கூறு வியன்றர
வோத வெண்ணெண் கலையு முணர்த்துவித்
தேத மற்ற குரவற் கிரணியம்
போது மென்னப் பொழிந்தனன் கொண்டல் போல். (13)
(இ-ள்) வேதமார்க்கத்தில்சொல்லப்படுகின்ற ஞானாதி உயர்குணங்களை அடையக் கற்கின்ற அந்த அறுபத்துநான்கு
கலைகளையும் மேன்மைபெற அறிவித்த குற்றமற்ற ஆசிரியருக்கு மேகத்தைப்போல திரவியங்களை அவர் போதுமென்று
கூறும் வண்ணம் தக்ஷணையாக வளித்தனன். எ-று
குருகுல வாசஞ்செய்து எல்லாக் கலைகளையும் முற்ற உணர்ந்த பிரமசாரியானவன் குருதக்ஷணை கொடுத்துக் குரு
வினை ஸந்தோஷப்படுத்தி ஆசிபெற்றுச் செல்ல வேண்டுமுறைப்படி இம்மாராஜனும் கலைகளை யுணர்ந்து பிரமசரிய விரதமுடித்து தந்தையாலளிக்கப்பெற்ற மிகுதியான திரவியங்களைக் குரு தக்ஷணையாக அளித்து ஆசியும் விடையும் பெற்றுத் தந்தையிடஞ் சென்றார் என்றுணர்க.
முடத்தெங்கு, கழற்குடம், மடற்பானை பருத்திக் குண்டிகை ஆதியவைகளின் குணங்களை யுடையரல்லா நல்லாசிரிய ரென்பார் "ஏதமற்ற குரவர்" என்றார். (14)
கொடிநெ ருங்குங் கொடிஞ்சியந் தேர்பரி
கடிம லிந்த கயமொண் சிவிகையிப்
படியி லூரப் பயிற்றுவித் தாசிலா
வடிவி லங்கு மகற்கு மணஞ்செய்வான். (14)
(இ-ள்) (பின்னர்) கொடிகள் நெருங்கியுள்ள மேன் மொட்டோடு கூடிய அழகிய தேரின்மீதும், குதிரையின்
மீதும், அச்சத்தை மிகுதியாகத்தருகின்ற யானையின்மீதும், ஒள்ளிய பல்லக்கின்மீதும் ஏறி உலகில் வுலாவுதற்குப் பழக்குவித்துக் குற்றமற்ற வடிவத்தோடு விளங்குகின்ற அம்கனுக்கு மணஞ்செய்யும்பொருட்டு. எ-று (14)
மடங்க லன்ன பலமுள்ள மாமன்ன
னிடங்கொ ளெண்ணெழு தேசத் திறைவர்க்கு
முடங்கல் போக்கினன் கண்டு முடிமன்னர்
தடங்கொள் சேனைகள் சூழ்வரச் சார்ந்தனர். (15)
(இ-ள்) சிங்கம்போன்ற பலத்தினையுடைய அப்பெரியவரசன், விசாலமான ஐம்பத்தாறுதேசத் தரசர்களுக்கும் திருமுகமனுப்பினான்.அத் திருமுகத்தைக்கண்ட மகுட மன்னவர்கள் மிகுந்த தமது சேனைகள் தம்மைச் சூழ்ந்துவர அவ்விடத்திற்கு வந்தார்கள்.எ-று
கருநடதேயத்தரசன் அருந்தவஞ்செய்து பெற்று வளர்த்துக் கல்வி பயிற்றி மணமுடித்து அரசனாக்கிவைத்த மகன்
தந்தையையும் அரசினையும் மனைவியையும்வெறுத்துத் துறவு பூண்ட விசேட மொன்றினை விளக்கி அவன் துறவின் வாயிலாகத் துறவறத்தின் பெருமையை விளங்கவைக்கும் விருப்பினராதலின்,ஆசிரியர் மற்றைக்கவிகளைப்போல அதிக கற்பனையாதிகளை உரைக்க விழைந்திலரென் றுணர்க.தெய்வத் திருவருளினரான இவர்க்குக் காவியரீதியிற் சிறப்புறப்பாடத் தெரியாமையா லிங்ஙனம் பாடினார் என்பவர்களுடைய மடமையை அவர்களே விளக்கினவர்களாவார்கள். (15)
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
வடிகொள் வெண்சுதையாற் பித்திகை தீற்றி
வானுற மணிக்கொடி நிரைத்துக்
கடிநறுஞ் சாந்தங் குங்குமந் தன்னாற்
கமழ்தர மறுகெலா மெழுகிப்
பொடிகொள்சிந் துரத்தாற் கோலமே புனைந்து
பூமலர் பொரிநனி சிதறிக்
கொடிகண்மூ தெயின்மேன் மாடமொண்சிகரிக்
கோதறப் புதுக்கியே குலவ. (16)
(இ-ள்) வடிகட்டி யெடுக்கப்பட்ட வெள்ளிய சுண்ணச் சாந்தினால் சுவர்களை மெழுகி, ஆகாயத்தை யளாவும்படி
கொடிகளை நாட்டி, மணம்பொருந்திய நல்ல சந்தனத்தாலும் குங்குமத்தாலும் வீதிகளெல்லாம் வாசனை வீசும்படி மெழுகி, சிந்துரப்பொடியால் கோலமிட்டு, பூத்தமலரும் பொரியும் கலந்து மிகுதியாக இறைத்து, கொடிகளைக் கொண்டுள்ள
பழய மதில்களையும், மேல்மாளிகைகளையும், ஒள்ளிய கோபுரங்களையும் குற்றமற விளங்கும்வண்ணம் புதுக்கி. எ-று.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கதலியுங் கமுகு நட்டுக் காவண மலங்கரித்துப்
புதியதோ ரணங்கள் கட்டிப் பொற்குடஞ் செறித்துத்தீப
மிதமுற வெங்கும் வைத்தே யிந்திர நகரம் போல
மதுமலர்த் தாம நாற்றி மாபுர மலங்க ரித்தார். (17)
(இ-ள்) வாழையும் கமுகும் நட்டு மணப்பந்தலை யலங்கரித்துப் புதியதோரணங்களைக் கட்டிப் பொன்னங்குடங்களை
நிறைத்து மனோகரமாக எவ்விடங்களிலும் தீபங்களை ஏற்றித் தேனொழுகுகின்ற மலராற் கட்டப்பட்ட தூக்கு மாலைகளைத் தொங்கவிட்டு, தேவேந்திர பட்டினத்தைப்போல அந்த மாபுரியை யலங்கரித்தார்கள் . எ-று. (17)
கலிவிருத்தம்.
வில்லி லங்குகை வேந்தர் மரபினி
னல்ல சாமுத்தி ரிகநூ னன்கதாச்
சொல்லி லக்கணத் தோடு துரிசிலா
முல்லை மாலை முருகு விரியவே. (18)
(இ-ள்) வில்லோடு விளங்குகின்ற கையினையுடைய அரசர்குலத்தில் நல்ல சாமுத்திரிக சாத்திரம் உத்தமமானதென்று, கூறப்படுகிற நல்ல இலக்கணத்துடன் குற்றமற்றமுல்லை மலர்மாலையின் மணம் வீசவும். எ-று (18)
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
மூவுல கதனி லுள்ள முகிழ்முலைக்
கருங்கட் செவ்வாய்ப்
பாவைய ரெழிலிற் போதன்
பகுத்தெடுத் துயிரோ டேய
வோவியந் தீட்டி னானென்
றுலகினி லுரைக்கச் செய்ய
பூவுறை திருவி ரும்பும்
பொற்புட னவத ரித்தே. (19)
(இ-ள்) மூன்று லோகங்களிலுமுள்ள குவிந்த கொங்கைகளையும் பெரிய கண்களையும் செவ்விய வாய்களையுமுடைய பெண்களின் அழகில் பிரமன் பங்கிட்டெடுத்து உயிரொடு பொருந்தும்வண்ணம் சித்திரத்தை எழுதினானென்று
உலகிலுள்ளவர்கள்கூற, செந்தாமரைமலரிற் பிறந்த திருமகளும் விரும்பும்வண்ணம் அழகுடன் பிறந்து. எ-று. (19)
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
இலங்கிய வாலொண் டளிர்குழைத் தினிய
விருதனக் கோங்கிணை யரும்பி
நலங்கிள ராம்பல் குமிழிரு குவளை
நண்ணுசெஞ் சரோருகம் பூத்துத்
துலங்கிய புயலைச் சுமந்திரு தாளாற்
றோமிலா மின்னென நுடங்கிப்
பலந்தரப் படருங் கொடியினை வேதப்
பண்பினின் மன்றல்செய் வித்தே. (20)
(இ-ள்.) விளங்காநின்ற ஆலின் ஒள்ளிய தளிர்தளிர்த்து இனிய விரண்டு தனங்களாகிய இரட்டையான கோங்கரும்
புகளரும்பி, நன்மை விளங்குகின்ற ஆம்பலும், குமிழும், இரண்டுகுவளைகளும், பொருந்தியுள்ள செந்தாமரைமலர் பூத்து
விளங்காநின்ற மேகத்தைச்சுமந்து, இரண்டுகால்களால் குற்றமற்ற மின்னலைப்போல அசைந்து பலத்தைத் தரும் வண்ணம் நடக்கின்ற கொடிபோல்பவளை வைதிக முறைப்படி மணஞ்செய்வித்து. எ-று.
ஆம்பல் அதரத்துக்கும், குமிழ் நாசிக்கும், குவளை கண்ணுக்கும், சரோருகம் முகத்துக்கும், புயல் கூந்தலுக்கும்
உவமையாகக் கொள்க. (20)
அருந்ததி கணவன் முதன்முனி வரர்க
ளருமறைக் கிழவர்க டம்மாற்
பொருந்திய கங்கைப் பூம்புன லாட்டிப்
பொன்னவ மணிகளாற் குயின்ற
விரிந்திடு மடங்கன் மென்றவி சேற்றி
மிளிர்நவ மணிமுடி சுவித்துப்
பருந்தடர் வேலான் பௌவமார் புவியைப்
பரியெனத் தோன்றல்பா லளித்தான். (21)
(இ-ள்)வதிஷ்டன் முதலிய முனிசிரேஷ்டர்களையும், அரிய வேதங்களை யுணர்ந்த பிராமணர்களையும் கொண்டு, மந்திரத்தோடு பொருந்திய கங்கைமுதலிய நீர்களாலே அபிஷேகித்து,நவரத்தினங்களாலும் பொன்னாலும் இயற்றப்
பட்ட விளங்குகின்ற சிங்கஞ் சுமந்த மெல்லிய ஆசனத்தின்மீது ஏறியிருக்கச்செய்து,பிரகாசிக்கின்ற புதிய இரத்தின
மகுடத்தைச் சூட்டி,பருந்துகள் மொய்க்கின்ற வேற்படையினையுடைய அம்மன்னவன்,கடல்சூழ்ந்த உலகத்தை நீ
ஆளென்று தனதுமகனாகிய மஹாராஜனிடத்து அளித்தனன். (21)
சோகமே யின்றி யிருந்தனன் வேந்தன்
றோன்றலும் பார்பொது நீக்கி
யேகமாச் செங்கோ லெங்கணுஞ் செல்ல
வெண்டிசை விசயமுஞ் செய்தே
மாகநா டென்னப் போகமே துய்த்து
மடந்தையோ டிருந்தன னென்றான்
வாகைவே லவன்பி னென்செய்தா னென்ன
மறையவர்க் குயர்முனி வகுக்கும். (22)
(இ-ள்) (மஹாராஜனது தந்தை இராச்சியபாரத்தை மகனிடத் தளித்தமையால்) துக்க மற்றவனாக விருந்தனன்.
செங்கோலைக் கைக்கொண்ட)மஹாராஜனும் ஏகசக்கிராதி பதியாய் உலகத்தைப் பொதுமையி னின்று நீக்கி, சிறப்பு
வழியாற் றன்னதாக்கி,தன்னதிகாரம் எவ்விடங்களிலும் செல்லும் வண்ணம் எட்டுத் திக்குகளிலும் சென்று விஜய
மடைந்து சுவர்க்கத்தைப்போல போகத்தை யநுபவித்துக் கொண்டு மனைவியுடன் (வாழ்ந்துகொண்டு)இருந்தனன்
என்று சூதமுனிவர் கூறலும்,சௌனகாதி முனிவர்கள், வெற்றிவேலினை யுடைய அம் மன்னவன் பின்னர் என்ன
செய்தானென்று கேட்க,அதற்கு உயர்ந்த அச் சூதமுனிவர் இவ்வாறு கூறுவாராயினர்.எ-று
மணம் புரிதலும் மகுடஞ் சூடுதலும் உல காளுதலும் போகந் துய்த்தலுமாதிய காரியங்கள் வியப்புடைய விஷய மன்றாதலின், இங்ஙனமிருந்த மன்னவன் பின் யாதுசெய்தனன் என முனிவர் கடாவினார் என்க.
உயர்முனி-ஞானாதி ஒழுக்கங்களா லுயர்ந்தமுனி. (25)
மனைவியுந் தானு மோர்நினை வாகி
மாறுபா டின்றியோர் காலுந்
தனையுணர் யோகி தந்தைதாய் கடவு
டங்களை யனுதின மிறைஞ்சி
யனையவ ருரைத்த நெறிதனி னடந்து
மருத்தங்கண் மனதினிற் றரித்தும்
வினையம துடனே நூன்முறை யவரை
வினவியுஞ் சிலபகல் போக்கி. (23)
(இ-ள்) தானுந் தன் மனைவியும் ஏக மனதுடையவர்களாய் ஒருகாலத்திலும் வேற்றுமைப்படாத சுபாவத்துடன்
ஆத்ம விசாரணை செய்த யோகிகளையும் பிதாமாதாக்களையும் கடவுளையும் தினந்தோறும் வணங்கி,அவர்களால் சொல்லப்பட்ட வழிப்படியே நடந்தும்,சகஸ்திரார்த்தங்களை நிருத்தி யாசனஞ் செய்தும்,வினயத்துடனே(குதர்க்கமின்றி) அநுபவிகளை வினாவியும் சிலகாலத்தைக் கழித்து. எ-று (23)
தனியிட மதனி லிருந்திரு வர்களுந்
தங்களிற் றாமுணர்ந் துசாவித்
துனிசெய்மா மாயைப் பிறப்பது நீங்கிச்
சுகமதை யடைந்தனு தினமு
மினிமைய தாக விருக்கலா ஞானத்
தென்றெணி ஞானிகட் சார்ந்து
நனியவர் பாத பூசனை புரிந்து
நாடொறும் வினவினர் நன்றாய். (24)
(இ-ள்)இவ் விருவர்களும் ஏகாந்தமான (தனித்த) இடத்திலிருந்துகொண்டு,ஒருவருக்கொருவர் தங்களுக்குள்
தாங்களே வினாவியும்,துன்பத்தைத்தருகின்ற பெரியமாயையினா லாகிய பிறப்பினையொழிந்து சுகத்தையடைந்து சதா
காலமும் ஆநந்தரூபமாய் ஞானமார்க்கத்திலிருக்கலாமென்று நினைத்து,ஒரு பிரமஞானியை யடைந்து, அவரது பாதங்களைத் தினந்தோறும் வணங்கிப் பூசித்து அவரிடத்தில் நன்றாய்க் கேட்டார்கள்.எ-று
ஈண்டு ஞானி என்றது போதகனையாம்.இவன் வித்துவ ஸந்நியாஸி யெனவும் பெயர்பெறுவான். (24)
இருவரி லரசன் றனக்கறி வோங்க
விருவகைச் சார்வையு மகற்றிக்
கருவுடற் காவ றனையுங்கை விடுத்துக்
கருத்தசை யாதுமெய் யுணர்வை
மருவிடி லகப்பற் றற்றுமேல் வீடு
வாய்த்திடு மதற்குமெய்ஞ் ஞானக்
குருவரு ளின்றி விளங்கிடா தெனவே
கொண்டனன் மனத்தினிற் றுணிவே. (25)
(இ-ள்) (இவ்வண்ணம் போதகாசிரியரிடத்து சாத்திராப்பியாசஞ் செய்து வந்த)இவ்விருவர்களுக்குள் மஹாராஜனது அறிவானது விர்த்தியானமையினால், இருவகைப் பற்றுக்களையும் விட்டுப் பிறவிக்காதாரமான சரீரபந்தத்தையும் ஒழித்து மனோசலனமின்றி உண்மைஞானத்தையடைந்தால், அகப்பற்றொழிந்து உயர்ந்த முத்தியானது கிடைக்கும். அதற்கு உண்மைஞானியான சற்குருகடாக்ஷமில்லாமல் அந்த ஞானம் பிரகாசிக்காதென்று தன்மனத்திற் றீர்மானித்தனன்.
மெய்ஞ்ஞான குருவென்றது--வேதகனை.இவன் அதி வன்னாச்சிரமியாய் பரிசனவேதியானது தன்னாற் பரிசிக்கப்
பெற்ற தாம்பிரத்தின் களிம்பினை அகற்றிப் பொன்னாக்குமாறு, இவனும் தன்னையடைந்த பக்குவனுடைய பந்தத்தினையும் சீவத்துவத்தையும் அகற்றிப் பிரமத்துவத்தை யுண்டாக்கி வைப்பவனாம். (25)
மனைதனி லாசை பொருந்தியே நின்று
மகிதனின் ஞானியா மெனவே
தனைமிக மதிப்போன் றன்னைவந் தொருவன்
றந்திடு ஞானமென் றிரந்து
வினவன்மட் டையினைப் பருகுவோன் றன்னை
வேண்டித்தென் னம்பழந் தனையே
யினம்பணித் திரிவோன் புத்திபோன் மெனவே
யியம்புவர் முற்றுணர் பெரியோர். (26)
(இ-ள்) சம்சாரத்தில் ஆசைகொண்டு அதிலிருந்து இவ்வுலகில் நான் ஞானியெனத் தன்னை மிகவும் மதிக்கும் (போலி) ஆசிரியனை, (தீவிரதரனாகிய) ஒரு சற்சீடன் அடைந்து, (குரவ) !அடியேனுக்கு ஆத்மஞானத்தை யளித்தருளல் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுதல் (எதுபோலுமெனின்), மட்டையைத்தின்பவனைத் தென்னம்பழ முண்டவனென்று கருதி அவனை யடைந்து,நீ எனக்குத் தென்னம்பழத்தைக் காட்டி அதை உண்ணச் செய்ய
வேண்டுமென்று அவனை விரும்பிக் கேட்டுக்கொள்பவனது அறிவை ஒக்குமென்று எல்லாம் (ஐயந்திரிபறக்கற்று) உணர்ந்த பெரியோர்கள் கூறுவார்கள்.எ-று
துறவினைக் கைப்பற்றாதவனுக்கு ஞானங் கிடையாதேனும் கிடைப்பினும் நிலைபெறாதென்றும்,மோக்ஷகாமிகள்
துறவறத்தினையே கைப்பற்றுதல் வேண்டுமெனவும் இதனாற் பெறுதல் காண்க (26)
வேதவா கமசாத் திரபுரா ணங்கள்
விளங்கவே கற்றுணர்ந் தவற்றைத்
தீதற வெவர்க்குந் தெளிவுற வோதிச்
செப்பிய வந்நெறி யதனிற்
சாதக மிலாத குருவினை யொருவன்
றானடைந் தாநந்தம் வினவ
லேதமாங் கழுதை தன்னைக்குங் குமத்தி
னியல்புகேட் டிடுதல்போன் மென்றே. (27)
(இ-ள்) வேதாகம சாஸ்திர புராணங்களை நன்றாய்க் கற்றுணர்ந்து அவைகளை லக்ஷிய லக்ஷன தோஷமில்லாமல்
யாவர்களுக்கும் குற்றமின்றிக்கூறி, (தான்) சொல்லிய அந்நன்மார்க்கத்தில் அநுபவமில்லாத குருவினை, ஒரு பக்குவியானவன் சென்று பிரமானந்தத்தை (அடையும்படி உபதேசித்தருளவேண்டு மென்று) கேட்டுக்கொள்ளுதல் (எது
போலுமெனின்), குங்குமப்பூவின் றன்மையை (அதனை முதுகிற் சுமந்துசெல்லுகின்ற தொழிலையன்றி அதன் குணத்தை எள்ளளவும் அறியாத) குற்றம் பொருந்திய கழுதையைக் குங்குமப்பூவின்மணம் எப்படிப்பட்டதென்று கேட்குந் தன்மையை யொக்கும்.எ-று (27)
சீவர்க ளிடத்தி லருள்சிவ பத்தி
திருந்திய துறவுமெய்ஞ் ஞான
மாவதோர் வடிவாம் வேதமா முனியை
யமலவா ரணியத்தி லடைந்தே
தேவர்க டேவே துன்பமோர் காலுஞ்
சென்றிடாமுத்திதா னெய்திச்
சாவதும் பிறப்பு நீங்குமோர் நெறியைச்
சாற்றெனத் தாழ்ந்திட முனிவன். (28)
(இ-ள்) ஜீவகாருண்யம்,ஈசுவரபக்தி,பாசவைராக்கியம், பிரமஞானம் என்னும் நான்குமே உருக்கொண்டு வந்தவராகவுள்ள ஒரு வைதீக மாமுனியை,நிருமலமான காட்டிற் சென்றடைந்து, தேவதேவனே! எக்காலத்திலும் துன்பத்தைத் தராத முத்தியையடந்து ஜநந மரணங்களை ஒழித்துக் கொள்ளுகின்ற ஓர் நன்மார்க்கத்தை உபதேசித்தருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுதலும், அம் முனிவர். எ-று.
இருவகைச் சார்வாம் புறப்பற்றை நீக்கி
யிச்சையின் மீட்டதி னினைவு
மொருவியே யுடற்கா வலையுங்கை விடுத்தே
யுட்கர ணங்கள்வா தனையுங்
குருவரு ணெறியே யொடுக்கிடில் வீடுங்
கூடுந்தா னாகவே பவத்தின்
கருவழிந் திடுமிந் நெறியைநீ விரைவிற்
கைக்கொண்டு செல்லென வுரைத்தான். (29)
(இ-ள்.) உயிர்ச்சார்பும் பொருட்சார்புமாகவுள்ள புறப்பற்றை யொழித்து, அவ் வொழிந்த புறப்பற்றில் பின்னும்
மனம் செல்லாமல்,அதனை நினைத்தலையும் ஒழிந்து, சரீராபிமானத்தையும் நீங்கி, அந்தக்கரணங்களின் வாதனைகளையும்
ஆசாரிய உபதேசத்தின்படி ஒடுக்கினால், முத்தியுண்டாகும்; முத்தியுண்டானவுடன் தானாகவே பிறவியின் கருவானது
அழிந்தொழிந்திடும். ஆதலால்,இந்த நன்மார்க்கத்தை நீ சீக்கிரமாகக் கைப்பற்றி உனக்கேற்ற விடத்திற்குச் செல்வாயாக வென்று அந் நல்லாசிரியர் உபதேசித்தனர். எ-று (29)
அந்நெறி குருவா லையமுந் திரிவு
மகன்றிடத் துணிவதாக் கேட்டு
முன்னெறி யான வரசியற் கையினின்
முயன்றனன் சிறி துநா ளொருநாட்
பின்னெறி யதனை நினைந்தனை வரையும்
பெயர்ந்திட விடைகொடுத் தரசன்
மன்னெறிக் கோல மகன்றந்தப் புரத்தில்
வதிந்தன னொருவனாய்த் தனித்தே. (30)
(இ-ள்.) அந்த நன்மார்க்கத்தை ஆசாரியனால் சந்தேக விபரீதங்கள் அகலும்வண்ணம் நிச்சயமாகக் கேட்டுணர்ந்து
(பின்னும் நாட்டை யடைந்து),முன்னே தான் செய்து கொண்டுவந்த அரசாங்கமுறைமையைச் சிறிது காலம் நடத்திக்
கொண்டிருந்து ஒருதினம்,(தமது ஆத்மலாபத்திற் குரிய) வேறு மார்க்கத்தையுத்தேசித்து, சபையிலிருந்த எல்லோரையும் போகும்வண்ணம் விடைகொடுத்தனுப்பிவிட்டு, அம்மன்னவன் தனது அரசகோலங்களையெல்லாம் அகற்றினவனாய்
அந்தப்புரத்திற்குச் சென்று தான் ஏகனாய் ஒரிடத்திலிருந்தனன். எ-று. (30)
அரசர்க ளமைச்சர் புரோகிதர் பெரியோ
ரனை வரு மவ்விடத் தேகி
யரசனை நோக்கி நித்திய கரும
மகன் றுவா ளாவிருந் திடுத
லரசிலக் கணமன் றெனவவர் வேண்ட
வவர்களை நோக்கியே வேந்த
னரசியற் கையினை வேண்டல னென்னை
யறியவே வேண்டின னன்றே. (31)
(இ-ள்.) அரசர்களும்,மந்திரியர்களும்,புரோகிதர்களும் இன்னுமுள்ள மற்றைப் பெரியவர்களுமெல்லாம், அரசனிருக்கும் அவ்வேகாந்தமான விடத்திற்குச் சென்று அவ்வேந்தனைப் பார்த்து (மன்னவ)! நித்தியகருமங்களைச் செய்யாமல் சும்மாவிருத்தல் இராஜலக்ஷண மல்லவென்று கூறுதலும், அவ்வரசன் அவர்களைப் பார்த்து,நான் இராஜலக்ஷணங்களை விரும்பினேனில்லை, என்னை இன்னானென்று உணர்ந்து கொள்ளவே விரும்பினேன்.எ-று.
அமைச்சர் புரோகிதர் முதலியோர் நித்திய கன்மாதியாகிய கிரியைகளின் அழுத்தமுடையவராதலின், நித்திய கருமம் அகன்று இருத்தல் அடாது என்றனர்.
அரசன் ஞானசொரூபத்தின் நாட்டம் வைத்தமையால் கிரியைகளில் உதாஸீனத்துவம் உடையவனானான் என்க.(31)
ஆண்டதோ ரரசு தனிலும்போ கத்து
மாசையற் றேனினி வேண்டேன்
மாண்டதோர் வனத்தி லொருவனாய்த் தனித்தே
மனத்தசை வறுத்துவீ டடைவேன்
பூண்டவென் மனமிங் கினித்திரும் பாது
போகத்தைப் பொருளென வெண்ணி
வேண்டல னீங்க ளரசனா வேறே
விதித்துக்கொ ளுங்களென் றுரைத்தான். (32)
(இ-ள்.) இதுகாறும் ஆண்ட ஒப்பற்ற இராஜரீகத்திலும் அதனாலுண்டாகின்ற போகங்களிலும் நிராசை யுடையவனானேன். இனி அவைகளைவிரும்பேன். மாக்ஷிமை பொருந்திய காட்டில் ஏகனாய்த் தனித்திருந்து மனோசலனத்தை யொழித்து முத்தியை யடைவேன்.மோக்ஷாபேக்ஷையை யடைந்த என்மனம்,இனி விஷய வியாபாரத்தில் திரும்பாது. நான் போகங்களை ஒருபொருளாகக் கருதி அவைகளை விரும்பேன். ஆதலால்,நீங்கள் உங்களுக்கு அரசனாக இன்னொருவனை அமைத்துக்கொள்ளுங்களென்று கூறினான்.
வனம்,காமக்குரோதாதிகளை உண்டாக்காததும் உலகப் பற்றற்ற மௌனிகளால் சஞ்சரிக்கப்பெற்றதுவு மாதலின், "மாண்டதோர் வனம்"என்றா ரென்க
வனத்திலாயினும் சீடர்முதலிய உபசாரகர்களுடனுறில் மனத்திற்கு அசைவுண்டா மாதலின்,அது கூடாதென்பார் "ஒருவனாய்" என்றான் என்க. (32)
ஆதியி னினதுதாதையு நினையே
யரசினி னிளைமையிற் சூட்டத்
தீதின்றி யுனது புயவலி மையினிற்
செகமதைத் தாங்கினை யினிமே
னீதியி னுணிய மதியினா தரவி
னின்னைப்போ லொருவர்மற் றுளரோ
வீதியற் கையதன் றிவ்வுட லுடனே
யிச்செல்வ மன்றிவே றுளதோ. (33)
(இ-ள்.) மன்னவ! உமது தந்தையும் முதலில் நின்னையே இந்நாட்டுக்கரசனாக வாலிபத்திலேயே மகுடஞ்சூட்ட,
இதுகாறும் குற்றமில்லாமல் உனது புஜபல பராக்கிரமத்தால் இவ்வுலகத்தை யாண்டனை. (நீ காட்டிற்குச் சென்றால்), நின்னைப்போல் இனி இவ்வுலகாளத்தக்கவர்கள் நீதியிலும் நுட்பமான சாதுரியத்திலும் வேறொருவரிருப்பரோ? இரார். ஆதலால், இது முறைமையான காரியமன்று.இந்த சரீரத்துடனிருந் தனுபவித்தற் குரிய இச் செல்வத்தை யல்லாமல்
வேறே இருக்கின்றதோ? எ-று.
சரீரமுடைய பிராணிகளுக்கெல்லாம் போகமே பெரும் பொருளெனவும்,அது மகாராசபதவியை யுடைய இவனுக்கு நிரம்பியிருக்கின்ற தென்றும் இவர்க ளெண்ணினவர்களாதலின்,"இவ்வுடலுடனே இச்செல்வமன்றி வேறுளதோ?" என்றனர். அரசன் அப்போகங்களை நுகர்ந்து துன்புருவானவை இவை என வெறுத்து,இன்புருவான ஞானத்தினை விரும்பித் துறவில் மனங்கொண்டு நின்றா ராதலின்,உலகபோகத்தினும் ஞானமே சிறப்புடையதென்பது வெளிப்படை. (33)
அலதுநீ யேகி னவனியுங் காப்பற்
றவத்திலே யலைந்திடும் யாமுஞ்
சலனம துறுவே மித்தகை யெமைநீ
தவிக்கவிட் டேகுதல் கடனன்
றிலகிட வெமக்கீ தருளென வமைச்ச
ரியம்பிட வரசனும் பார்த்தே
உலகமெய் யெனவெண் ணுறுமதி யுடையோர்க்
குரைப்பினு முணர்வுதி யாதால். (34)
(இ-ள்.) அல்லாமலும், நீ போனால் இவ்வுலகமும் ஆளுகையின்றி வீணாய்க் கெட்டொழியும். நாங்களும் சஞ்சலத்தை யடைவோம்.இப்படிப்பட்ட எங்களைத் துன்பப்படும் வண்ணம் இவ்விடத்தில்நிறுத்தி நீ வனஞ்செல்லுதல் முறைமையல்ல. எங்களுக்கு விளங்கும்வண்ணம் இதனைச் சொல்லியருள வேண்டுமென்று மந்திரிகள் கேட்க, (உலகப்பற்றில் சிறிது மனமில்லாத) அம் மன்னவனும் அவர்களை நோக்கி உலகத்தை மெய்யானதாக வெண்ணுகின்ற சத்திய பத்தியுடையவர்களுக்கு (இவ்வுலகம் அனித்திய மென்று எவ்வளவுதான் எடுத்துக்) கூறினும் விவேக முண்டாகாது.
இவ்வர சியற்கை யற்பமற் றிதனா
லெய்திடுந் துன்பமிக் களவின்
றவ்வகை யதனை யூகமின் மையினா
லறிகிலிர் நீங்களின் பென்றே
யெவ்வகை நினைந்தீ ரினியெக்கா லுங்கட்
கீதின்ப மலதெனத் தோன்று
மொவ்வமற் றிதனுக் கூகமே தோன்றா
துங்களுக் குலகயூ குதிக்கும். (35)
(இ-ள்.)இந்த அரசின் தன்மை சொற்பமானது.இதனால் உண்டாகும் துன்பத்திற்கோ அளவில்லை, அந்தத் தன்மையை நீங்கள் ஆலோசனையின்மையால் அறிந்தீர்களில்லை. நீங்கள் இவ் வுலகவாழ்வை இன்பமானதென்று எவ்வண்ணம் நினைத்தீர்கள்? (ஐயோ)! இனி உங்களுக்கு இவ்வுலக வாழ்வு துக்கரூபமானதென்று எக்காலத்திற்றோன்றும்? பொருந்தும் வண்ணம் இதற்கு ஏற்ற யூகம் உங்கள் மனத்தி லுதியாது. உமக்கு உலகம் நித்தியமானதென்னும் யூகமே உதிக்கும்.
யூகையுடையார் செய்யு நிச்சயம் அழியாத தாகவும், யூகை இல்லாதவர்கள் செய்யு நிச்சயம் நிமிஷத்திற்கு நிமிஷம் மாறுபடுவதாகியு முள்ளதால்,ஊகையுடையார்க் குலகம் பொய்யாய் நிற்றலின் அதுவே உண்மையென அறிஞர் கொள்வர். இவைபோன்ற விடயங்களை இங்கு மிக விரித்துரைத்தல் பிரிதிக்ஞா விரோதமாதலின் சுருக்குகின்றோம்.(35)
என்றுமற் றனேக மாவிரித் தரச
னெடுத்தமைச் சர்கடமக் கியம்பி
நின்றுபின் னவரை நிலுமென நிறுத்தி
நிதிதுனும் பொன்மனை விடுத்தே
சென்றுபின் னகர வீதியி னடக்கத்
திரண்டனை வர்களும்பின் றொடர்ந்து
வன்றுய ரடைந்து வாடியே மெலிந்து
வாரியி னோசையி னழுதார் (36)
(இ-ள்.)என்று அநேக விதமாக மந்திரிகளை நோக்கி மன்னவன் விரித்துரைத்து,நீங்கள் நில்லுங்களென்று அவர்களை நிறுத்தி, செல்வங்கள் நிறைந்த பொன்வண்ணமான மாளிகையைத் துறந்துபோய் அவ்வூர் வீதியில் நடந்து செல்லுதலும்.அந் நகரவாசிகளான ஜனங்கள் திரளாகச் சேர்ந்து (அரசனது துறவுகோலத்தை நோக்கி)மிகவும் வருந்தி அவன் பின் தொடர்ந்து வாடி மெலிந்து கடலோசையைப்போல இரைந் தழுதார்கள். எ-று. (36)
அவரவர் வினையி னவரவர் வருவா
ரவரவர் வினையள வுக்கே
யவரவர் போக மென்றதே யாயி
னாருக்கார் துணையதா குவர்க
ளவரவர்தேக முளபொழு துடனே
யாதர வாரென நாடி
யவரவ ரடைத னெறிகன்மத் தடையு
மாதர வாதர வாமோ. (37)
(இ-ள்.) ஒவ்வொருவர்களும் அவரவர்கள்செய்த கருமங்களுக்கேற்பப் பிறப்பார்கள்.அவரவர்களது கன்மவொழிவு
வரைக்குமே அவரவர்களது சுகதுக்கமானால் (ஏ ஜனங்களே)! யாருக்கு யார் துணையாவார்கள்? ஆதலால், அவரவர்களுடைய சரீரங்கள் இருக்கும்பொழுதே இத்தேகாதிப் பிரபஞ்சங்களுக்கு ஆதாரமானவர் யாரென்று ஆலோசித்து ஒவ்வொருவரும் அவ்வாதாரத்தை யடைதலே முறையாம். அதை விட்டுக் கருமத்தாலடையும் ஆதரவானது ஆதரவாகுமோ? எ-று. (37)
வினையுள வளவுங் கூடியே நிற்கும்
வினையகன் றிடிற்பிரிந் திடுமால்
வினையினால் வருமா தரவினி னியற்கை
மெய்யுணர் வத்தகை யலவே
வினையிலை யுங்க ளிடத்தினா னிருக்க
மெய்யுணர் வொன்றையே நாடி
வினையறு கானம் புகுதவே வேண்டி
விரும்பினே னீர்நிலு மிங்ஙன். (38)
(இ-ள்.) (சரீரங்கள்) வினையிருக்கிற காலம் வரைக்கும் சேர்ந்திருக்கும். வினையொழிந்தால் பிரிந்துவிடும். இது
தான்வினையினால் உண்டாகும் ஆதரவு. (இது நிற்க.) இயற்கையான உண்மை ஞானமானது அவ்வண்ணமானதல்லவே. நான் உங்களுடன் வாழ்தற்கு வினையில்லாதவனானேன். ஆதலால், சத்தியமான ஞானமொன்றையே விரும்பி கர்மத்தியாகத்திற்குரிய வனத்தை யடைதலை உத்தேசித்துச் செல்லுகின்றேன். நீங்களெல்லாம் இவ்விடத்திலேயே நில்லுங்கள்.எ-று. (38)
என்றுநல் வேந்த னேதிலார் போல
வேகின னனைவருங் கண்ணீர்
நின்றெதிர் சொரிய வாய்விட்டே யலறி
நின்றனர் தமர்கள்பின் னேகி
யின்றெமை யாவர் காத்தளித் திடுவ
ரினியைநீ யேகுத னீதி
யன்றென வுரைத்தா ரவர்களை நோக்கி
யரசனீ துரைத்தன னன்றே. (39)
(இ-ள்) அந்த நல்லவரசன் இவ்வாறு கூறி அந்தவூருக் கன்னியனைப்போலச் சென்றான். அனைவர்களும் பின்னர் அவன் செல்வதைக் கண்டு கண்ணீர் சொரிந்து வாய்விட்டலறி அழுதுகொண்டு நின்றார்கள்.உடனே அவனது உறவினர்கள் அரசனது பின்னே சென்று (நீ எங்களை விட்டொழிந்து சென்றால்), எம்மை யாவர் காத்து இரக்ஷிப்பார்கள்? நற்குணமுடையாய்! நீ எங்களைவிட்டுப்போதல் நீதியன்றென்று கூறினார்கள். அதற்கு அவ்வரசன் அவர்களை நோக்கி இவ்வாறு புகன்றான்.எ-று (39)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
உறவாகு மெனவெனைநீர் தொடர்பதியல்
பன்றாகு முயிர்கட் கெல்லா
முறவாகு ஞானநனி பகையாகு
மஞ்ஞான முய்த்து நோக்கி
னுறவான வதையடைந்து பகையான
விதைநீங்கி யொருமை யாக
வுறவாத றனக்குத்தா னேயெனமற்
றுறவுவிடுத் துறையு மென்றான். (40)
(இ-ள்.)நீங்கள் என்னை உங்கள் பந்துவென்று பின் தொடர்ந்து வருதல் முறைமையல்ல. உயிர்களுக்கெல்லாம் உறவாகி நிற்பது ஞானமொன்றே.உற்றுநோக்குங்கால் மிகவும் பகையாகவுள்ளது அஞ்ஞானமே. ஆதலால் அந்த ஞானத்தையடைந்து,பகையான இந்த அஞ்ஞானத்தை நீங்கி ஏகைகமாக உறவாயிருத்தல் ஆன்மலாபத்தின் பொருட்டாம்.அதனால் மற்றைய உறவுகளெல்லாம் விட்டொழியும் என்றான்.
தந்தைதா யிருவருந்தம் புதல்வனெனும்
வாஞ்சையினாற் றான்பின் னேகி
மைந்தவா வெங்களிரு வரையுமெவர்
காப்பதற்கு வைத்தாய் நீதான்
சிந்தைதா னுனக்கெங்கே மகனேயுன்
றிருமுகத்தைத் திரும்பிக் காட்டாய்
நொந்துதான் பெற்றவயி றெரிகின்ற
தெனவுரைக்க நோக்கி மன்னன். (41)
(இ-ள்.)பின்னர்,துறந்து செல்பவன் தன் மகனென்னும் விருப்பத்தால் அவனது பிதா மாதாக்களிருவர்களும் அவன் பின்னே சென்று,மைந்தனே!நீ வா;(வயோதிகர்களாகிய)எங்களிருவர்களையும்,வேறே யாரை இரக்ஷிக்கும்படி நீ ஏற்படுத்தினாய்? உன் மனம் எங்கு சென்று பதிந்துள்ளது? மகனே!உனது அழகிய முகத்தைத் திரும்பிக் காட்டுவாயாக. (உன்னை) வருந்திப் பெற்ற வயிறெரிகின்றதே என்று கூறுதலும், அம்மன்னவன் அவர்களைப் பார்த்து. எ-று.(41)
அறிவைநோக் கிடிலதற்குத் தாய்தந்தை
யிலையி்வுட லதனை நோக்கி
லிறையுநீ ருபாதான காரணமன்
றிருமாயை யினிலுண் டாகுங்
குறியிதுவிங் காயி்ன்மண்ணி லெனைப்பெறா
தவரிலையக் கொள்கை நீரு
நிறையுமதி யிலரேநீர் நில்லுமென
விருவரையு நீத்துப் போனான். (42)
(இ-ள்)ஞானத்தை உத்தேசிக்குமிடத்தில் அதற்குப் பிதா மாதாக்களில்லை.இந்தச் சரீரத்தைப்பற்றி விசாரிக்குமிடத்தில் சிறிதும் நீங்கள் உபாதான காரணமல்லீர்.இருவகையான மாயையினின்றும் உண்டாகுவதிவ்வுடலம்.குறிப்பு இவ்வண்ணமானால் உலகத்தில் என்னை(மகனாகப்) பெறாதவர்கள் இல்லை. அவ்வண்ணந்தான் நீங்களும். பூரண ஞானமற்றவர்களே! நீங்கள் நில்லுங்கள் என்று கூறிச் சென்றன்.எ-று. (42)
அரிவையர்க டமக்கிலக்க ணங்கூறு
நூலதனி லதனை யெல்லா
முரிமையா யுடையவளா மினியமனை
தொடர்ந்தேகி யுருகி நின்று
பரிவினுட னடிகள்பணிந் தரற்றியே
பதைபதைத்துப் பனிக்கண் பாயத்
தரியனுமை விடுத்துலக மதனிலொரு
கணமேனுஞ் சாவே னென்றாள். (43)
(இ-ள்.)மகளீரிலக்கணம் கூறப்படும் நூலிலுள்ள நல்லிலக்கண முழுமையும் தன்னதாகவே வுடையவளாகிய அவனுடைய நன்மனைவி, அவனைப் பின்பற்றிச் சென்று மனவுருக்கத்துடன் எதிரில் நின்று,அன்புடன் கால்களில் விழுந்து வணங்கி கூக்குரலிட்டு, துடிதுடியெனத் துடித்துக் கண்ணீரொழுக உம்மைவிட்டு இவ்வுலகத்தில் ஒரு கணப்பொழுதும் இரேன். இறப்பேன் என்றனள். எ-று.
கலவி, சாமுத்திரிக முதலிய நூல்களிலுயர்வுடைய இலக்கணங்களாக உரைக்கப்பெற்றனவெல்லாம் முற்றிலும்
நிரம்பப் பெற்றவளையும் இம்மன்னவன் துறந்தானானால் இவ் விலக்கண நிரம்பாத மற்றைய மாதரைப்பிறர் துறத்தற் கருமையின்மை விளக்குவான் "அரிவையர்க டமக்கிலக்கணங் கூறு நூலதனி லதனை யெல்லா--முரிமையா யுடையவளா-மினியமனை" என்றார். (43)
நின்னுடைய நாயகனை நினதுள்ளே
யுறநோக்கி நிற்க மாட்டா
துன்னுடைய நாயகனென் றென்னையே
கருதிநீ யுழல்வ தென்னே
மின்னனைய விடையாய்கே ளனைவருக்கு
நாயகனோர் மேலா மீச
னன்னவனை யேதேடிப் போகின்றே
னெனவரசற் கரிவை சாற்றும். (44)
(இ-ள்.)மாதே! உனது நாயகனை உனக்குள் பொருந்தும் வண்ணம் பார்த்து அவ்வழி நிற்கமாட்டாமல்(உனது
நாயகனல்லாத) என்னை நாயகனென்று கருதிநீ ஏன் உழலா நிற்கின்றனை? மின்னற்கொடிபோன்ற இடையினையுடைய
மாதே! யான் சொல்வதைக்கேள். எல்லோருக்கும் நாயகனாக வுள்ளவர் ஒப்பற்ற மேலாகிய ஈசனேயாம். அந்த ஈசனையே
நான் தேடிச் செல்லுகின்றேன் என்று கூறிய அரசனை நோக்கி அவன் மனைவி கூறத்தொடங்கினள். எ-று (44)
ஞானமா னதுபொதுவே நூலதனிற்
றுறவதற்கு நவில்வ தில்லா
ளானமா தினையலவோ விடுகவென
வறையும்பதி யான வுன்னை
யீனமா விடுகவென வறையுமதோ
துறவறமிங் கெனக்கென் சொல்லு
மானதா லுமையொழிந்து கதியிலையே
யெனவெணியா னடுத்தே னென்றாள். (45)
(இ-ள்) (சரீரங்களுக்குள்) ஞானம் யாவர்களுக்கும் பொதுவேயாம். துறவு பூண்பவர்களுக்கு சாத்திரத்திற்
சொல்லப்படுவது மனைவியே விடவேண்டியவளென்று கூறா நிற்கும். (இது நிற்க) எனக்கு நாயகனான உன்னை விட்டிருக்கும்படி நூல் கூறாநிற்குமோ? துறவற மெனக் கெங்குள துரைப்பீர்? ஆகையினாலே உம்மைவிட்டு எனக்கு
(வேறு) கதியில்லை யென்றுணர்ந்து நானிங்கு வந்தேன் என்று கூறினாள். எ-று. (45)
ஆகமத்தின் விதிதவறா தறைந்தனைநீ
விவேகியே யாவாய் நானுந்
தேகமுதற் பிரபஞ்ச மதனினசை
விடுத்துவனஞ் செல்லா நின்றே
னாகமுலை யாயெனுரை தடுத்தலுன்றன்
விரதமல நாடு தன்னிற்
போகுதியென் றவளைவிடுத் தேதிலரைப்
போலகன்று போகா நின்றான். (46)
(இ-ள்) மலைகளைப்போன்ற தனபாரங்களை யுடையவளே! ஆகம நூலிற் கூறுகின்ற விதிக்கு மாறாது கூறினை.
ஆதலால் நீ விவேகியேயாவை. யானோ தேகாதிப் பிரபஞ்சங்களில் நிராசையுடையவனாய் கட்டிற்குச் செல்லுகின்றேன்.
நீ பதிவிரதை யாதலால், என் வசனத்தை மீறி நடத்தல் நினக்கு முறைமையல்ல; (ஆதலால் என் சொற்படி) நீ நாட்டிற்குச் செல்லென்று கூறி அவளை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு, வேந்தன் அயலானைப்போல் செல்லாநின்றனன்.
விரிவாய ஞானமதை யுணர்ந்தாலு
மடந்தைபதி விலங்க நிற்ற
லரிதாய தகைமையினா லேங்கியே
பதைபதைத்தங் கவனை நோக்கித்
தரியாது கதறியே வினைதனையே
நொந்துதான் றளர்ந்து நின்று
தெரியாது மறைந்தவிடந் தனின்மிகவு
முருகியே தேம்பி வீழ்ந்து. (47)
(இ-ள்.) பெண்ணானவள் அகண்ட ஞானத்தை யறிந்திருந்தாலும் புருஷனைவிட்டு விலகியிருத்தல் அருமையான காரியமாதலால் (துறந்துசென்ற) அவனைநோக்கி மனநிலை தளர்ந்து கோவென்றழுது தனது பிராரத்துவ கர்மத்தைப்பற்றி வருத்தங்கொண்டவளாய் அயர்ந்துநின்று (தன் கொழுநனாகிய) மஹாராஜன் தன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த விடத்தில்மிகவும் மனமுருகித்தேம்புதலுடன் கீழேவிழுந்து, (47)
வேந்தனே யுனைவிடுத்து முலகமதி
லிருக்கவோ விதித்தா னீசன்
றீர்ந்ததோ வுமக்கெனக்கும் வினைதானு
மின்றளவிற் சேர்ந்து நிற்கும்
போந்தவுமை யெக்காலங் காண்பேனா
னினியெனவே புலம்பி மாதுஞ்
சார்ந்தனள்பின் றிரும்பியே நகரதனின்
மாதுலன்றன் சார்பு தன்னில். (48)
(இ-ள்.) மன்னவனே! உன்னைப் பிரிந்தும் உலகிலிருக்கும் வண்ணம் ஈசன் விதித்தானோ? உமக்கும் எனக்குமுள்ள பந்தவினையானது இன்றோ டொழிந்ததோ? என்னோடு கலந்து நிற்கின்ற (விருப்பத்தினையுடையவரே! என்னைவிட்டு)
விலகிச்சென்ற வும்மை இனி எந்நாள் காண்பேன் என்று புலம்பி அவன் மனைவியும் அவனுடன் போதலைவிட்டுத் திரும்பி ஊரையடைந்து மாமனார்வீட்டிற் சென்றிருந்தனள்.(48)
அரசனந்த நகர்விடுத்துத் தேசநா
டுகளுமகன் றடவி சென்றே
இரவுபக லகநிலையே நிலையாக
விருந்தவர்க ளிடமே சேர்ந்து
பரகுருவி னுபதேசத் தரியபொருள்
வினவியவர் பகரக் கேட்டுத்
திரமனமா யொருவராற் கலங்காத
ஞானியாய்த் தீர னாகி. (49)
(இ-ள்.) மஹாராஜனும் தனதுசொந்தநகரத்தைவிட்டு, தேசங்களையும் நாடுகளையும்கடந்து காட்டையடைந்து இரவும்
பகலும் உண்ணாட்டத்தோ டிருக்கின்ற தபசிகள் வசிக்குமிடத்தை யடைந்து ஞானாசாரியனுபதேசித்த அரிய வாக்கியார்த்தத்தைக் கேட்டு அத்தபோதனர் அதன் மெய்ப்பொரு ளுணர்த்த உணர்ந்து உறுதிப்பட்ட மனமுடையவனாய் யாவராலும் கலக்கமடையாத ஞானியாய் தைரியமுடையவனாய். எ-று.
*அகநிலை என்பதற்குத் தன் நாட்டம் என்றும் பொருள்.
நகர்தனி லேகிப் பிச்சை
நண்ணியே மனைக டோறு
மகமகிழ்ந் தங்கை யேற்றே
யவ்விடத் தருந்தி யாங்கே
செகமுளோர் பேயென் றெண்ணிச்
சிரித்திட நாண மின்றி
யிகபரத் திச்சை யற்றே
யேகனா யுலாவ லுற்றான். (50)
(இ-ள்.) ஊருக்குட் சென்று வீடுகள்தோறும் போய் உணவினைத் தனக்குள்ளே சந்தோஷத்துடன் அழகிய கையிலே வாங்கி அங்குநின்றுண்டு,உலகத்திலுள்ளவர்கள் பைசாசமென்று நினைத்துச் சிரித்திட (அதற்கு) வெட்கப்படாமல் இம்மை மறுமைகளில் ஆசை நீங்கி சிவோஹம்பாவனையுடையவராய் அவண்ணமே சஞ்சரிக்கத் தொடங்கினார்.எ-று.
இராஜ பதவியைக் காட்டிலும் சருவசங்கபரித்தியாக பதவியைச் சிறந்ததாகக் கருதினவ ராதலால்,பிச்சைக்குச்
சென்றபோது மகிழ்வுடையவராவிருந்தனர்."குறைவற்ற செலவமென் றேகோல மாமறை கூப்பிடுமே" என்றபடி,
குறைவற்ற இம் மஹாபதவியை யடைந்தமையால், இனிப் பிறப்படைதலில்லாதவ னானேனென்னுந் தோற்றமுடையவராக விருந்தனர் என்பதைக்குறிப்பிக்க "அகமகிழ்ந்தங்கையேற்றே யவ்விடத் தருந்தி" என்றனர். அதிவன்னா சிரமத்தை யடைந்தவர்கள் ஜாதிபேதமாதிகளை யாராயாமல் பசித்தபோது புசிப்பவர்களாக நூல்கள் கூறுதலால்,மஹா ராஜாவும் அதிவன்னாசிரமத்தை யடைந்தவராகிக் கரதல பிக்ஷுவாக விருந்தனர்.இவ்வாறு நினைத்தவிடத்திற் புசித்தல் இழுக்கன்றோவெனின்,அதிவன்னாசிரமியாவான் எல்லா வஸ்துக்களையும் சிவபெருமானாகவே காண்கிறானாதலால் அவனால் காணப்படுபொருள் சிவமானபோது ஜாதிபேத மெங்குளது? "முற்றுந்துறந்த முதுக்குறைந்தோர் தருமம் ஐயமேற்றுண்டல்" என்று கூர்மபுராணத்தில் கேட்கப் படுதலாலும்,"ஊரெலா மட்டசோறு நம்மதே" என்று மாணிக்க வாசகசுவாமிகள் கூறியிருத்தலாலும், துறவிகளாகிய அதி வன்னாசிரமிகளுக்கு ஜாதிபேதமில்லை யென்க. இனி, அதி வன்னாசிரமிகளுள்ளும் சாதகமுதிர்ந்தவர்க்கே இவ்விதி. அல்லாதவர்களுக்கு நியமவிதியேவிதியேயாம்.நியமவிதியாவது,-- வேற்றுமதத்தின ரிடத்துப் புசித்தல், ஒழுங்கீனமானவர்களது அன்னத்தைப்புசித்தல் முதலியவை கூடாமையாம். இதன் விரிவைச் சிவதருமோத்தரம் சைவசமயநெறி முதலியவைகளா னுணர்க. (50)
பொருந்திவா ழிடமொன் றாகிற்
பொருந்திடும் பற்றென் றெண்ணி
யிருந்தில னோரி டத்து
மெங்கெங்கு மொருவ னாகித்
திருந்திய சமாதி விட்டுத்
திரும்பிடா துறைக்க வுன்னி
யிருந்திருந் திடங்க ளெங்கு
மேகமே நோக்கி நின்றான். (51)
(இ-ள்) ஓரிடத்திலேயே தங்கி யிருப்பதானால் பந்த முண்டாகுமென்று நினைத்து,எவ்விடத்திலும் தங்கினானில்லை. எவ்விடத்தும் ஏகாங்கியாய் சாதகமான நிஷ்டையினின்றும் உலகமுகமாகத் திரும்பாமல் அதிலேயே பதிய நினைத்துப் பிரபஞ்சத்தில் தான் சஞ்சரிக்கு மிடங்களிலெல்லாம் சிவோஹம்பாவனையுடனே நின்றனன். எ-று
எவ்வளவு விரக்தியுடையவனானாலும் ஓரிடத்திலிருப்பனாயின் அவனை ஊரிலுள்ளவர்கள் மஹானென்று மதித்து
வந்துபசாராதிகளைச் செய்வார்கள். செய்தால், அகம்பாவந் தோன்றும். அதுவந்தால் மமகாரந் தோன்றும். இவ்விரண்டு
முண்டானால் மற்றையகுணங்களெல்லாம் சீக்கிரம் வந்து சேரும். அவைகள் வந்துசேர்ந்தால் பிரபஞ்சவாதனைமிகும்.
அதுமிகுந்தால் சமுசாரியாவான் என்பதை உத்தேசித்தே மஹாராஜாவும் ஓரிடத்திலுந் தங்காமலும், செல்லும் போழ்தும் மோதப்ரதாபங்களை ஒன்றிலுங் கொள்ளாமலும், பிரியாப்பிரியங்கள் வராதிருக்கும்படியும் சிவோஹம் பாவனையோடு சென்றனரென்க. இத்தகைய குணங்களைத் துறவிகள் சாதககாலங்களிற் கொள்வார்களானால் எடுத்த சனனத்திலேயே இடையூறின்றிப் பேரின்ப மடையாநிற்பர். (51)
தோன்றிடு முலக மெங்கே
தோன்றிடு மென்ன நோக்கித்
தோன்றிடு நினைவி லென்றே
தோன்றிய நினைவு தானுந்
தோன்றிடு மிடத்தைப் பார்த்துத்
தோன்றிடுஞ் சொரூபத் தென்றே
தோன்றிடும் பொருள்க ளெல்லாஞ்
சொரூபமே யென்று கண்டான். (52)
(இ-ள்.) சட்சுவாதி இந்திரியங்களா லுணரப்படுகிற பௌதிகப் பிரபஞ்சம் எவ்விடத்தில் காணப்படும் என்று
ஆராய்ந்து பார்த்து, இது காணப்படும் பௌதிகவியாபார ப்ரக்ஞையில் என்று (தெளிந்து) தன்னு ளுதித்த அம் மனமும்
உண்டாகிற உற்பத்தி ஸ்தானத்தை நோக்கி இது பிரமத்தினின்று முண்டாயதென்று (உணர்ந்து) காணப்பட்ட இவ்வுலகங்களனைத்தும் அந்த பிரமமே என்று நிஷ்டாமுகமாக நின்று நியதிகளைந்து சிவோஹம்பாவனையாற் கண்டனன்.
விரக்தர்கள் சமாதிகூடுங்கால் வாக்கியசோதனைசெய்து நியதிகளைந்து அநுபவிக்கிற வழக்கப்படி இம் மகாராஜாவும்
தான் நிஷ்டைகூடப் புகுங்கால் ஆதனத்திலிருந்து குரு தியானாதிகளைச் செய்து இரு விழிகளையுந் திறந்து இப்
பௌதிக வுலகத்தை நோக்கி இது எங்கே காணப்படுகிறதென்றெண்ணி மனதிலேதானென் றுணர்ந்து பின்னர்
மனத்தைப்பற்றிச் சிந்தித்து இது பிரமத்தைத்தவிரவில்லை யென்றுணர்ந்து அசிபத லக்ஷியார்த்தமான பிரமத்தைத்
தவிர வொன்றுங் காணப்படவில்லை யென்று தெளிவாக வெண்ணித் தியானித்துத் ததாகாரமாக நிற்கிற வழக்கப்படி
நின்றனுபவித்தனர். (52)
தோன்றிடும் பொருள்க ளுண்டாய்த்
தோன்றியே யின்பமாகித்
தோன்றிடு மதனா லந்தச்
சொரூபமே யென்று கண்டு
தோன்றிடுஞ் சொரூபந் தன்னிற்
றோன்றுமீ தசத்தே யென்று
தோன்றிடுஞ் சொரூபந் தானாய்த்
துளக்கமற் றிருந்தான் வேந்தன். (53)
(இ-ள்) விவகாரதசையில் காணப்படுகிற இப்பிரபஞ்சம், ரஞ்சித படத்தின்கணுள்ள கிரி-நதி முதலியவைகளைப்
போலக் காணப்பட்டு, இன்பரூபமாகப் பார்ப்பவர்களுக்கு இன்பரூபமாகவே விளங்கும். அதுகாரணத்தினால், இம்மன்னவன் காணப்படுகிற இவ் வனைத்தையும் பிரமரூபமாகச் சுருதி யுக்திகளால் அநுபவத்தி லாக்கிக், கிழியி லாரோபிதமான பஞ்சவன்ன சித்திரம்போலப் பிரமத்தி லாரோபிதமான இப்பிரபஞ்சசித்திரம் அசத்தாக உள்ளது என அநுபவத்தால் பிரபஞ்சபாவனையை யகற்றிப் பிரமபாவனையில் அகமேவஸர்வம் (அகம்பிரமாஸ்மி) என யாதொரு சலனமுமில்லாமல் இருந்தனன். எ-று. (53)
கடிநகர் தோறுஞ் சென்றுங்
கானகந் தோறுஞ் சென்றும்
படிவல மாக வந்தும்
பார்வைமா றாட்ட மின்றி
மடிவிலா மனத்த னாகி
மாசிலா நிலைமை பெற்று
முடியுடை வேந்தர் வேந்தன்
முத்தியே வடிவ மானான். (54)
(இ-ள்.) மகுடந்தரித்த அரசர்களுக்கரசனான மஹா ராஜா காவலினை யுடைய ஊர்களுக்குப் போயும், காடுகள்
தோறும் சென்றும், பூப்பிரதக்ஷிணஞ்செய்தும், இலக்ஷியார்த்த வநுஸந்தானத்தில், தவறுத லில்லாமல் அச்சகச நிஷ்டையினின்றுந் திரும்பாதமனமுடையவனாகி ஞான நிலையை (முத்திநிலையை) ப்பெற்றுப் பந்த நிவர்த்தியே யுருவமாக நின்றான்.
காட்டிற் சென்றாலும் நாட்டிற் சென்றாலும் பூப்ரதக்ஷிணஞ் செய்தாலும் அவ்வவ்விடங்களிலுள்ள பௌதிகத் தோற்றத்தாற் பயகம்பனாதிகளும் மோதப்பிர மோதாதிகளும் பெத்தான் மாக்களுக்குண்டாவது சகசம். முத்தான்மாக்களுக் கவ்வாறுண்டவதில்லை. உண்டாகுமானாற் சகசநிஷ்டை குலையும். நிஷ்டை குலைந்தால் பௌதிகப் பிரபஞ்சந்தோன்றும்.
அது தோன்றில் காமக்குரோதாதிகளுண்டாகும். அவையுண்டானால் பழையபடியே பந்தத்தில் மூழ்கித் தத்பத லட்சியார்த்தத்தை மறப்பன். அது மறந்தால் பிறப்பிறப்பையடைவன். இதுபற்றியே சாதகர்கள் எங்குச்சென்றாலும் ததா காரமான நிலையிலேயே நிற்கும்படி விதி யேற்பட்டுளது. அவ்விதிப்படியே இவரும் நடந்தன ரென்பார், 'பார்வை மாறாட்டமின்றி' என்றார். (54)
முத்தியே வடிவ மான
முடியுடை வேந்தர் வேந்த
னெத்திசை தனக்கும் ராஜ
னெமைவிட வேறில் லென்று
சத்திய மாக வெண்ணித்
தன்னிட மதனிற் றன்னைச்
சுத்திசெய் தனைத்து மாகிச்
சுயஞ்சோதி யாகி நின்றான். (55)
(இ-ள்.)அனர்த்த நிவிர்த்தியே உருவமானவனும் மகுடமன்னர்களுக்கெல்லாம் மன்னவனுமாகிய இவன் எவ்வகையதிசைகளுக்கும் அரசன் எம்மைவிட வேறில்லையென்று யதார்த்தமாக நினைத்துத் தனக்கென்று வேதத்தில் விதிக்கப்பட்ட இடமாகிய தொம்பத வாக்கியத்தில் ஜீவனாக நின்ற தன்னைச் சோதனைவழியிற் கூடஸ்தனாகச் செய்து (அஸ்மி வாக்கியத்தால்)தத்பத சோதனையில் பிரமத்தோடு கலந்து காரணப்பிரம ரூபமாக அநுஷ்டிப்பி னின்றனன். எ-று
கன்னனை வேடுகழித்த கதைபோல என்று கூறுகிறபடி குருவும் சிவோஹம்பாவனையாற் சீடனை நோக்கி நீ கேவலம் ஜடரூபமான பிரபஞ்சாதி யுருவமல்லை.நீ என்னுருவமே தான்.எந்தப் பிரமம் நானோ,அந்தப் பிரமமே நீ.இவ்வித அநுஷ்டானத்தால் நீயாகிறாய் என்று உபதேசிக்கிற குருவாக்கிய பரிபாலகனாகிய சீடன் வாக்கியசோதனையா லுண்டான அநுபவாப்பியாசத்திலே நின்று பழகி பிரமமாகவே ஆகிறான். கன்னன் தன்னை யறிதற்கு முன்னுங் குந்தி குமாரனே; அறிந்தபின்னுங் குந்தி குமாரனே. ஆனால் அவனுக்கிடையிலிருந்த வேடுவன் என்னும் பிராந்தி யொழிந்தமையால் ஆநந்தமடைந்தான் என்று உதகரிப்பது வழக்கமாதலால், யாமும் முத்தியென்பதற்கு விடுதலையென்றுள்ள பொருளுக்கேற்ப பந்த நிவிர்த்தி யென்றாம்.
அநுபவம் வந்த பின்பு தனக்குப் பிரமமொன்றைத் தவிர மற்றெதுவும் உள்ளதாகக் காணப்படாமையாலும்,பிரமநாட்டத்திற் காணப்படுவன வுளவேல் இவை தன்னநுபவத்திற் கீழ்ப்பட்ட மாயாகற்பிதமென்றே நிஸ்ஸந்தேகமாக வறிகிறானாதலாலும், தன்னை உண்மையான வரசனென்று மதித்தனன் என்பார் 'சத்தியமாக வெண்ணி'என்றார். (56)
தன்னையே யன்றி யொன்றுந்
தானுதி யாவி டத்தின்
மின்னையே யொத்த வைய
மித்தைகற் பிதம தென்றும்
பொன்னையே யன்றி வேறு
பூடண மிலது போல
வென்னையே யன்றி யொன்று
மில்லெனத் தேர்ந்தான் வேந்தன். (56)
(இ-ள்) பிரமத்தைத் தவிர வேறொன்றுந் தோன்றுதலில்லாத நிஷ்டையில்,மின்னலையொத்த வுலகம் பொய்யும் கற்பனையும் எனவும்,பொன்னினைவிட வேறே ஆபரணமில்லாமையைப்போல பிரமத்தைத் தவிர வேறே யொன்றுமில்லை யென வுணர்ந்தன னரசன். எ-று.
தேகேந்திரியாதிகரண நியதிசெய்து அநுபவ நிலையினின்ற சிஷ்டாசாரசீலன் பிரமமொன்றைத்தவிர வேறொன்றையுங்காணானென்பது சம்பிரதாயம்.குண்டலமுமோதிரமு மரைஞாணும் என விவை உருவாதிகளால் வேறு பேர்களைப் பெற்றாலும் பொன்னைத் தவிர வவைகள் வேறே யில்லை யானாற்போல, காணப்படுகிற வஸ்துக்களெல்லாம் பலவேறு திரிபினவாயினும், அவை பிரமமென வுணர்ந்த ஞானிக்குப் பிரமமாகவே தோன்றுமென்பது நிச்சயம்.சிவோஹம் பாவனையா லவைகள் தானாகவே காணப்படும் முறைப்படி மன்னவனும் அவ் வநுபவத்திலே அமைந்து நின்றா னென்பார், 'என்னையே யன்றி யொன்று மில்லெனத் தேர்ந்தான்' என்றா னென்றனர். (56)
உலகினை வேற தாக
வுணர்ந்திடிற் பந்த மாகு
முலகினைத் தானே யாக
வுணர்ந்திடின் முத்தி யாகு
மிலகிடத் தோன்ற லெல்லா
மென்னினை வேயென் றெண்ணி,
யிலகிடக் கண்டு வேறற்
றிருந்தன னிளைமை வேந்தன். (57)
(இ-ள்) பௌதிகப் பிரபஞ்சத்தை (ப்பிரமத்தைக் காட்டிலும்) வேறானதாக அறிவானானால் அவனுக்குப் பந்தமுண்டாகும். பௌதிகப் பிரபஞ்சத்தை(சிவோஹம்பாவனையால்) தானாகவே யறிவானானால் முத்தியாகும். (அவனுக்குப் பந்த நிவிர்த்தி யுண்டாகும் சட்சுவாதி யிந்திரியங்கலாற்) காணப்படுகிற பிரபஞ்சங்களனைத்தும் (பெத்ததசையில்) எனக்கிருந்த ஸத்தியபுத்தியின் வாஸனையின் பழக்கமேயன்றி வேறில்லை என்று (சமாதியிற் சமாதானமாக நினைத்து அவை) பிரமமாக விளங்குதலை (சிவோஹம் பாவனையாற்) கண்டு பிரமத்துட னேகமாய்ப் பரமார்த்தநிலையி லிருந்தனன் அரசர்க்கரசனாகிய மஹாராஜன்.எ-று.
ஞானியானவன் உலகத்தையுமொரு பதார்த்தமாக அறிவானானால் உடனே யவனுக் கதிலும் விருப்ப முண்டாகும்.
விருப்பமுண்டானாற் பந்தத்துக்கிடமாகும். உலகத்தினையும் பிரமமாகக் கண்டால் அவனுக்குப் பிரமத்தைவிட இது
வேறே யொன்றல்ல வென்னுந் தோற்றத்தால் அதிலுள்ள பந்தம் நிவர்த்தியாகிறது. ஒருவன் முத்தனாதற்கு முன்னேயும் பின்னேயு முலகமுள்ளபடி யிருக்க, பிரமமாகவே கண்டானெனல் எப்படி யெனின், அபக்குவர்களுக்கு பிரபஞ்சமாகவும், பக்குவர்களுக்குப் பிரமமாகவுங் காணுதல் உண்மையாதலின் ஆமென்க.ஒருநாளுணர்ந்ததனாலேயே பிரமமாகயாவையுங் காணமுடியாது.பலநாளுஞ் செய்யு நியதியோடு கூடிய நிஷ்டையாலேயே பிரமமாகக் காணவேண்டிய தாதலால், மன்னவனும் வாக்கிய சோதனையுடனே நிஷ்டை கூடினா னென்பார் " என்னினை வேயென் றெண்ணி--யிலகிடக் கண்டு வேறற் றிருந்தனன்" என்றார். (57)
ஏகசக் கரம தாக விருந்தர சாள்வோன் செல்வப்
போகமுந் திரண மாமப் போதநாட் டரசி யற்கை
யூகபுந் தியினா லாசா னுபதேசத் தாள வந்தச்
சோகமற் றிடுநா டெய்தித் தொழிலெலா முடித்தான் மன்னன். (58)
(இ-ள்.) (தனதானையே உலகமுழுதுஞ்செல்லுதலால்) ஏகசக்கராதிபதி யென்று பேர்பெற்ற அரசனது செல்வத்தாலாகிய போகமும், அலக்ஷியமான ஒரு துரும்புபோலவாகும். (ஆதலால் இம்மன்னவனும்) அந்த ஞான ராஜ்யத்தை (அநுமான அளவையைக்கொண்டு தெளியவல்ல) யூகமான புத்தியைத் துணையாகக் கொண்டு சற்குரு உபதேச முறையால் (பிரமமாகியராஜ்யத்தை) ஆளுதற்குத் தத்பத லக்ஷ்யார்த்தமான அப்பிரமநாட்டையடைந்து நியதிகளைதல் முதலிய எல்லாக்கிரியைகளையும் அவ்வரசன் நிறைவேற்றினான்.
சார்வபௌமனது செல்வபோகமும்,பிரமானந்தாநு போகத்தின் ஒரு அணுவுக்குக்கூட ஒப்பாகா தென்பார்
'திரணமாக' என்றார். முன்னர் அநுபவியாத பிரமாநுபவத்திற் சுகமுண்டென் றொருவன் தான் அநுபவித்தற்கு
முன்னே யறியவேண்டுமானால் யூகபுத்திவேண்டும். யூகபுத்தி யான்மாத்திரமாகாது. முன்னரநுபவித்தறிந்தவரான ஆசான்
வேண்டும். இந்த வித்தையையே பெரியவர்கள் [தொட்டுக் காட்டாத வித்தை-சுட்டுப்போட்டாலும் வராது"]என்பர்.ஆசான் கற்பியாதுபோனால் இந்தவநுபோக நிலையாது. அநுபவம் நிலையாதபோது வீணுழைப்பாக முடியும் என்பதை யெல்லாம் விளக்கவே 'உபதேசத்தாள'என்றார்.()
பந்தம்வீ டென்று மில்லை பரம்பொரு
ளொன்றே யென்றுந்
தந்தஞ்சங் கற்பத் தாலே சாலமோ
கிப்பர் தீயோ
ரந்தமா திகளு மில்லா வரும்பொரு
ணாமே யென்று,
சந்தத நோக்கி யந்தத் தற்பரந்
தானே யானான். (59)
(இ-ள்.)பெத்த நிலையும் முத்திச் சார்பும் முக்காலத்திலு மில்லை.ஏகமான பிரமமே திரிகாலங்களிலும் உள்ளது. அபக்குவிகள் தங்களுக்குள்ள பிராந்தியால்(இரண்டு முளவென) மிக மோகங் கொள்வார்கள்.முடிவும் முதலுமாதிய ஒன்றுமில்லாததும் சாதகத்தாற் காணத்தக்கதுமான பிரமம் (சிவோஹம்பாவனையால்) நாமேயென எப்பொழுதும் இலக்ஷியப்படுத்திப்பார்த்து முற்சொல்லிய பிரமம் (நிஷ்டாவிசேஷத்தால்) தானாகவே விளங்கினான்.எ-று.
காலத்திரயத்திலும் இருப்பது பிரமமேயென்றுணர்ந்து அநுபவிக்கிறவர்களுக்குப் பந்த மென்றும் வீடு என்றும் இரண்டு பொருள் இரா. காணப்படுவன வெல்லாம் பிராந்தி யென்றேமேலோர் துணிந்தநுபவிப்பார்கள்.இவரு மவ்வண்ணமே நின்றநுபவித்தனர் என்பார்"தந்தஞ்சங் கற்பத்தாலே"என்றார். (59)
குறைவிலா நிறைவ தாகிக் குளிர்ந்திளைப் பாறி வேந்த
னிறையள வேனுந் துன்ப மின்றியே யின்ப மாகி
யுறைவிட மின்ன தென்ன வோரிட மின்றி யெங்கு
நிறைவதே யிடமாய் நின்றா னிகரின்மா ராஜன்றானே. (60)
(இ-ள்.)ஒப்பற்ற மகாராஜன் (காலதேசவர்த்தமான பரிச்சேதங்களின்றி விளங்குகிற) பரிபூரண சொரூபமே
சொரூபமாய், அநர்த்தங்களா லுண்டான துனபங்களினின்றும் விடுபட்டு ஆநந்தபிராப்தனாய் சாந்தமானவனாய் இளைப் பாறினவனாய் அவ்வரசன் இவ்விடத்தில்தான் வாசஞ்செய்தல் வேண்டுமென்கிற நியதியின்றி பரிபூரணத்திற் கலந்து நிற்றலே இடமாகக்கொண்டு நின்றனன்.எ-று. (60)
எங்குமாய் நிறைந்து நின்ற வேகராச்
சியம தாள்வோன்
றங்குத லின்றி யெங்குந் தானெனக்
கண்ட தூயோ
னிங்குறைந் தகன்ற பாண்டத் தியல்பினெஞ்
சருவம் பற்றி
யங்குரு வகற்றி நின்றா னானந்தி
யாக வேந்தன். (61)
(இ.ள்.) பரிச்சேத வியல்பில்லாமல் சருவவியாபகமான பிரமமென்னும் நாட்டையாளுபவன், தங்குதலில்லாமல் எவ்விடத்திலும் பிரமமாய்ப்பார்த்து சிஷ்டாசாரத்தைக் கைப்பற்றிய அம்மன்னவன், பெருங்காயமிருந்து நீங்கிய பாத்திரத்தின் தன்மையைப்போல, மனமானது நிர்க்குண தியானத்திற் பழகிச் சகுண வுருவங்களை யொழித்து ஆநந்தாநுபவியாய் அரச னநுஷ்டிப்பில் நின்றனன், எ-று.
பெருங்காயமடைத்துவைத்த பெட்டியிலிருந்து அதை யெடுத் தப்புறப்படுத்தியபின்புங்காயமில்லை யென்று அதன்
மணமில்லாது போவதில்லை. அதுபோலப் பிரமத்தைத்தவிர வொன்றுமில்லையென் றுணர்ந்தும் முன்னந் தனது மனதிற் குடிகொண் டிருந்த காரியப் பிரமாதிகளின் தன்மைகளைமுற்று மொழித்தாலும் பழக்கவாதனை தாக்குமாதலால் அதை ஒழிக்கும்பொருட்டே நிர்க்குண தியானத்தை அப்பியாச காலத்திற் செய்வது வழக்கம். அதை முறையாக இவரும் வாக்கியசோதனைசெய்து நிர்க்குணத்திலேயே நின்றநுபவித்தானந்தரூபி யாயினா ரென்பார், 'அங்குரு வகற்றி நின்றானானந்தி யாக வேந்தன்' என்றார். (61)
சீவன்முத் தர்கள்பா னிற்குஞ் செப்பிய மனத்த ரூப
மேவரும் பரம முத்தி மேவிடி னாச மாகுந்
தாவரு நிலைமை நன்றாச் சற்குரு வருளாற் பெற்றுக்
கேவல மாகி நின்றான் கேடிலா ஞான வேந்தன். (62)
(இ-ள்.)ஜீவதசையினின்றும் விடுபட்டவர்களிடத்தில் உண்டென்று சொல்லப்பட்ட மனத்தினது வாஸனா ரூபம், அபக்குவிகளா லடையக்கூடாத சிறந்த பந்தநிவர்த்தியை யடைந்தா லடியோடொழியும். நித்தியமான பிரமபாக்கிய நிலையை ஐயந்திரிபாதிகளின்றி ஞானாசாரியனது கடாக்ஷத்தால் பெற்று கைவல்யமடைந்து நின்றனன்; நித்யமான பிரம ஞானத்தையுடைய மகாராஜன். எ-று.
தொம்பதவாச்சியத்திணின்றும் நீங்கியதைப்போல தத்பதவாச்சியத்தினின்றும் நீங்கினால் மனோவிகார முதலிய
ஒழியு மென்பார்' பரமுத்தி மேவிடி னாசமாகும்'என்றார்.
இத்தகை ஞானம் பெற்றே யெழின்முனி
யாகி யெங்குஞ்
சித்தனாய்த் திரித றன்னைச் செப்புமுன்
னமைச்சர் தம்முள்
வித்தக னொருவன் கேட்டு வினவிட
வேண்டு மென்றே
கத்தனா மரசைத் தேடிக் கண்டடி
பணிந்து நின்றான். (63)
(இ-ள்.)இவ்விதமான கூடஸ்த பிரம ஐக்கிய ஞானத்தை ஞானாசாரியனிடத்தி லுபதேசமாகப்பெற்று சாஸ்திர
மனனசீலனாய் எவ்விடங்களிலும் சித்ஸொரூபமே ஸொரூபமாக அப்யாஸித்துக் கொண்டுலாவுதலை, உலகத்திலுள்ளவர்கள் கூறுதற்கு முன்னே மந்திரிமார்களுள் ஞானநூலாராய்சசியா லறிவுடையவனாகிய ஒரு மந்திரியானவன் அதைக்கேட்டு இவ்வாறு செய்தற்குக் காரணமென்னவென்று கேட்க வேண்டுமெனத் தனக்குத் தலைவனாகவுள்ள அரசனைத் தேடிக்கண்டு அவனது பாதங்களை வணங்கி எதிர்நின்றனன்.
கத்தனாமரச னென்றதை,இப்போது கடவுளுருவமாக நின்ற மன்னவனை எனினுமாம். ( 63)
பூவணை யாகி வானம் பொருந்துமேற்
கட்டி யாகித்
தீவம தாகி யிந்து செங்கதிர்
வீசுங் காற்று
மேவுசா மரம தாகி விடுதலை
மனைவி யாகிக்
கேவல மின்ப மாகிக் கிளர்ச்சியாய்
நின்றான் வேந்தன். (64)
(இ-ள்.)பூமியே மெத்தையாகவும், ஆகாயமே பொருத்தமான விதானமாகவும்,சந்திரனுஞ் சூரியனும் விளக்காகவும், இயல்பாக வீசாநின்ற காற்றே பொருந்திய சாமரையாகவும், பந்தநிவிர்த்தியே பாரியையாகவும், கைவல்யமே சுகமாகவும், ஆநந்தபிராப்தியா லதிக மகிழ்வுடையவனாகவும் இருந்தனன் மன்னவன். எ-று.
அரசனது பள்ளியறையி லென்றும் நுந்தா விளக்கும் சாமரையும் இருப்பதைப்போல, இத் துறவரசனது பூவணையிலும் சதா வவைக ளிருக்கின்றன வென்பார் 'தீவமதாகியிந்து செங்கதிர்வீசுங் காற்று மேவுசாமரமதாகி'எனறார். மனைவி யில்லாதவனுக்குப் பள்ளியறை இன்பமில்லாமை போலப் பந்தநிவிர்த்தி யில்லாதவனுக்குக் கைவல்ய சுகமுமில்லை யென்பார் 'விடுதலை மனைவி யாகிக்-கேவல மின்பமாகி' என்றார். (64)
ரதமுதற் சேனை சூழ ரத்நசிங் காச னத்தில்
விதவலங் காரத் தோடு வீற்றிருந் தமரும் வேந்த
னுதவுகோ வீணனாய் மேனி யுருத்தெரி யாத நீறாய்
முதல்முடி விரித்து நின்றான் முனிவனா யொருவனாகி. (65)
(இ-ள்.) தேர் முதலிய சைனியங்கள் சூழ்ந்து நிற்க, அரதனங்களிட் டிழைத்துள்ள சிங்கங்களாற் சுமக்கப்பட்ட
ஆசனத்தின்மீது அநேகவிதமான அலங்காரத்துடனே கொலுவிலிருந்த இம் மகாராஜன், (ஆசாரியனால்) அளிக்கப்பட்ட
கீளொடு கௌபீனத்தை மாத்திரம் தரித்திருப்பவனாய் சரீர முழுமையும் விபூதியால் மறைத்து உற்பத்தி நாசங்களை
யொழித்து ஏகரூபமான பிரமரூபமாகி மனனசீல முடைய மஹானாகி நின்றான். எ-று.
இம்மன்னவனுக்கு அரசகோலத்தி லிருந்த ரதமுதற் சேனையாதியும் ரத்தினசிங்காதனமும் விதவலங்காரங்களும்
ஆச்சரியப்படத் தக்கவையன்றாம். துறவுகோலத்தி லுண்டான உதவுகோவணுமும் மேனி உருத் தெரியாத நீறும்
எண்ணியறியவும் ஆலோசிக்கவேண்டியவுமாம்.
தந்தைதாயாராதி யுடற்பற்றினரால் அகங்காரமமகாரங்கள் மலியும்வண்ணம் இவ்வ்வுலகி லிவ்வுடலொடு தோன்றின
சிறிது நாளிற்கட்டப்பட்ட அரைநாணும்,பின்னுஞ் சில மாதங்கள் கழித்தமைக்குஞ் சிகையும் கிரியைக் கருத்தைக் காட்டத் தரிக்கும் பூணூலும் ஆகிய் இவைகள் பந்தவிருத்தியையன்றி பந்தஒழிவை ஒருநாளுந் தராதாதலின்,ஆனந்தமேவடிவமாக
விளங்குகின்ற ஞானாசாரியன் குடுமி-பூணநூல்--அரைநாண் முதலியவகளை ஒழிப்பித்து,இல்லறங்கடந்து துறவறம் புகுந்ததற்கு அடையாளமாகக் கீளுங் கோவணமும் அளித்தலும் பூருவாச்சிரமத்திலுள்ள பேரினை ஒழித்து வேறு பெயர்
துறவறத்திற்கு ஏற்றவாறு அளித்தும் காத்தல் நூலொடு பழகிய நுண்ணறிவாளர்க் கொப்பமுடிந்துள்ள தாதலின், இவ்வாசிரியரும் இம்மன்னவன் ஞானாசாரியரிடத்து முறையே பெற்ற கீளொடுகோவணந் தற்ற தூயவர் என்று விளக்குவான் "உதவுகோவணம்" என்றார்.
தலைமுதல் கால்பரியந்தம் ஓரங்குலமுதல் பலவங்குல நீளமாக விட்டுவிட்டு நீற்றினை நீரிற்குழைத்து வேறு வேறு விதமாக மந்திரங்களை யுச்சரித்துத்தரித்தலினும் ஏகரூபமான சிவபெருமானொருவரையே நினைத்துக் கேசாதிபாதம்வரை உத்தூளித்தல் முத்திகாண்டிகளாயுள்ள பெரியோர்களுக் குடன்பாடும் ஒழுங்குமாக விளங்குதலைக் காட்ட "உருத்தெரியாத
நீறாய்" என்றார். காமாதி பகைகளை ஒழித்து ஞானாதி நினைவினை ஊட்டவல்ல ஒப்பறு பொருளாதலானும் பந்த
நிவிர்த்தியைக் காட்டிநிற்ப தொன்றாதலானும், போககாமிகளான உலகினரினின்றும் முத்தர்களை வேறுபடுத்திக் காட்டுவதாதலானும் ஸ்ரீ சிவபெருமானுடைய திருவுருவ ஸம்பந்தமுள்ளதாதலானும விபூதியை முற்றத் துறந்த முனிவர்கள் மிக வுவந்தணிதலை விளக்குவான் "உருத்தெரியாத நீறு" என்றார். (65)
கரிரத மிவர்த லின்றிக் கானடை யாகி யெங்கு
முரியதோர் மனையூ ணின்றி யூரெங்கு முண்பா னாகி
யரியரா சாங்க கோல மகற்றியே தவாங்க மாகித்
திரியுமவ் வரசைநோக்கிச் செப்பின னமைச்சன் றானே. (66)
(இ-ள்.)யானையின்மீதுந் தேரின்மீதும் ஏறிச் செல்லுதலைவிட்டு,காலாலேயே எவ்விடங்களிலு நடந்துசென்றும்,(பிரதிபந்தமுடைய காலத்தில்)தன்னிடமென் றபிமானிக்க வோரிடத்திலேயே வுண்டுகொண் டிருந்ததுபோலன்றி, ஊரிலுள்ள எவ்விடங்களிலும் பகுப்பின்றி உண்பவனாகியும்,அருமையான இராஜாங்கத்துக்குரிய கோலங்களை யகற்றித் தவத்திற் குரிய விபூதி ருத்திராஷங்களைத் தரித்துள்ள அங்கமுமுடையவனாய்ச் சஞ்சரியாநின்ற அம் மன்னவனைப் பார்த்து அமைச்சனானவன் இவ்வாறு கூறினான்.
யானை ஏறுதல் தேரேறுதல் முதலியவைகளால் யாதொரு பிரயோசனமின் றென்றும்,அவைகளை ஏறி
நடாத்துதற்கு விருப்பங் கொள்ளுதல் கூடாதென்றும், அவைகளை ஏறி நடத்திய மகாராசனே அவைகளை வெறுத் தகற்றியுள்ளானென்றும் முன்னரே இவ்வரசன் துறந்த பொருள்களை வருவித்துரைத்தல் அவனது வைராக்கியத்தினை விளக்குவதுடன் துறவிகள் வாகனமேறி யுலவுதல் கூடாமை என்பதையும் விளக்குதல் காண்க. (66)
அவனியி னினக்கு மேலோ
ரரசனு மில்லை யிந்தத்
தவவடி வாகி யெங்குஞ்
சரித்திட லெற்றி னுக்கோ
நவமதா யுடலி தோடே
நண்ணுவ தெனையீ தன்றி
யிவணெனக் கருள வேண்டு
மெனக்கறி வோங்கு மாறே. (67)
(இ-ள்.)உலகத்தில் உன்னைவிடச் சிறந்த வரசன் வேறொருவனுமில்லை.(அவ்வாறிருக்க), இந்தத் தவரூபத்துடன் எவ்விடங்களிலும் சஞ்சரித்தல் எந்த அபீஷ்டத்தைப் பெறும்பொருட்டு? புதுமையான இந்தச்சரீரத்துடனே (இவ்வரச செல்வமன்றி இதைக்காட்டிலுஞ் சிறந்ததாக) அடையப்படுவதெது? அடியேனுக்கு விவேகமதிகரிக்கும்படி இவ்விடத்தில் என்பொருட்டுச் சொல்லியருளல் வேண்டும்.எ-று
சுகாநுபவத்தினி லுயர்ந்தது அரசபதவியென்று மதித்தவனாதலின்,"நவமதா யுடலி தோடே நண்ணுவ தெனை" என்றான்.
யான் சாத்திரங்களிற் கண்டவையுங் கேட்டவையுமாக உள்ள வியுல்புகளுக்கு ஐயனே!நின்செயல் மாறுபட்டு நிற்பினும் நீ பேரறிவினையுடைய பெருந்தகையாதலின், சிற்றறிவினையுடைய சிறியேன் அறிந்துகொள்ளுமாறு விளங்கவுரைத்தல் வேண்டுமெனப் பணிவொடு கூறினானென்று குறிப்பிப்பார்,"இவணெனக் கருள வேண்டும் எனக்கறிவோங்குமாறு" என்றான் என்றனர். (67)
பதத்தினை வேண்டின் முன்னம்
பற்றிநின் றில்ல றத்தைப்
பதப்பட நிறுத்தி யேகல்
பண்பதா மேலா முத்திப்
பதத்தைவேண் டிடிலோ ஞானப்
பார்வையிற் கூடு நீயெப்
பதத்தினை வேண்டி யிந்தப்
பரதேசி யான தென்றான். (68)
(இ-ள்.)சுவர்க்க முதலிய பதவிகளை விரும்பினால் முதலில் அறத்தைத் துணையாகக் கொண்டுநின்று கிரமமாக இல்லறத்தைப் பரிபாலித்து நிறுத்திச் செல்லுதல் முறைமையாம். உயர்ந்ததான பந்தநிவிர்த்தி யென்னுந் தன்மையை
விரும்பினாலோ ஞானநாட்டத்தாற் கிடைக்கும்.நீ எந்த பதவியை விரும்பி இந்தப் பரதேசிகோலத்தை யடைந்தது
என்று வினவினான். எ-று.
சுருதி ஸ்மிருதிகளிலே உரைக்கப்பட்ட விதி விலக்குகளை அறிந்து அம்முறையில் வழுவுதலின்றி நடந்தவன் சரீர
முடிவில் சுவர்க்க முதலிய பதவிகளை அடைதல் உண்மையாதலின், அதற்கு இத்துறவு முதலிய கஷ்டங்கள் வேண்டுவ
தில்லையே எனக் கருதினவனாதலின், "இல்லறத்தைப்-பதப்பட நிறுத்தி ஏகல் பண்பதாம்" என்றான் எனினுமாம்.
நீ சுவர்க்காதி பதவிகளை விரும்பினால் நின்மகன் நினது குடும்பத்தினை அடையுங்காலத்து நீ அவனுக்கு முடியுஞ்
செங்கோலுமளித்து அவனை அரசனாக்கி நின் மனைவியை முறையே மகனிடம் ஒப்புவித்து வானப்பிரஸ்தாசிர மடையலாமே. அதற்கு இன்னம் அநேக வருஷங்கள் போதல் வேண்டுமே. இதற்குள் அவசரப்பட்டு எதனைக் கருதி இங்ஙனஞ் செய்தனை என்று குறிப்பிப்பான், "இல்லறத்தைப்- பதப்பட நிறுத்தி ஏகல் பண்பதாம்" என்றான் எனினுமாம்.
மேலாம்முத்தி என்றது-மதவாதிகள் உரைக்கும் லோகாந்தரங்களை அடைந்து வாழுதலான சகுணமுத்தியை விலக்கி
விதேகமுத்தியை விளக்குவான் "மேலாமுத்தி" என்றார். அது அத்துவித முத்தி என்ப தவர் பட்சம்.
ஞானப்பார்வையினாலேயேமேலாமுத்திபதத்தை விரும்பினால் அடையலாமென்பது சுருதிசித்தமாயிருக்க நீயேனோ
இங்ஙனம் செய்தனை என அரசன் செய்கையை விபரீதமானதாகக் கருதினவனாதலால், "எப்-பதத்தினை வேண்டி இந்தப் பரதேசியானது" என்றான் என்க.
பரதேசி என்னுஞ் சொல் பலபொருளைத் தருவதாயினும், பரத்தின் தேசுபடிந்தவன் பரதேசி யாதலால்,ஞானிகளான துறவிகளை உலகினர் பரதேசி என்றழைக்கின்றார்கள். துறவறம் புகுந்தானொருவன் தன்னாடுவிட்டு வெகு தூரத்திலுள்ள பிறநாட்டில் சஞ்சரிக்கவேண்டுவது முறையாதலின், துறவிகளை அறிஞர்கள் பரதேசி என் றழைக்கின்றார்கள்.
நிற்க,உலகபோகங்களையன்றி மற்றெவையாலும் பரிசயமற்ற சனங்களும் துறவிகளைப் பரதேசியென்றழைக்கின்றனர். இவர்கள் பரதேசி என ஒருவனை உரைத்தல் துறவி ஞானி என்பனவாதி விஷயங்களைக் கருதி அன்று. அகதி
என்று கருதி உண்ணிகழும் பொருளொடு முரணப் பரதேசி என்பார்கள்.
இங்கு அமைச்சன்,இந்தப் பரதேசியான தென்றான் என்றாசிரியர் அண்மைச்சுட்டமைத் துரைத்தது, அவனுடைய அபக்குவநிலையை விளக்குதற்கேயாம். (68)
அமைவுடை யமைச்சின் மிக்கோ
யடைவுடன் வினவிக் கேட்டா
யிமையள வேனுஞ் சித்த
மிதுவது வெனவோ டாது
சமைவுடன் கேணீ சொன்ன
சங்கைக்குத் தரங்க ணன்றாய்
நமைவிட வேறோர் வேந்து
நாட்டிலை யென்ப தொக்கும். (69)
(இ-ள்) அமைதியாகிய மந்திரித் தொழிலிற் சிறந்தவனே! நீ பொருத்தமாகவே வினாவிநின்றனை. கண்மூடித் திறக்கு நேரமேனும் என் மனம் துவைதப் பொருள்களை நாடாது. உன்னால் சொல்லப்பட்ட ஆக்ஷேபங்களுக்குச் சமாதானங்கள் பொறுமையோடு செவ்வனே கேட்பாயாக.நம்மைக்காட்டிலு மிதரவரசன் நாட்டிலில்லை யென்று நீ கூறியது சரியேயாகும். எ-று.
அமைச்சனே! என்மனம் பலவகை வியாப்ரங்களில் பரக்கச் செல்லாதென் றரசன் கூறியது, நான் இங்கு வருபவர்களுடனெல்லாம் கலந்து வார்த்தையாடு மியல்பினேனல்லேனென்றும், நின்பொருட்டு அகமுகமாக இருந்த என் மனத்தைப் பகிர்முகப்படுத்துகிறேன் என்றும் குறிப்பிக்கும் பொருட்டேயாமென் றுணர்க.
அவ்வமைச்சன் நீதிநூல்களை யன்றி ஞானநூல்களையும் பயின்று அடக்கம் பொறுமையாதிகளை யுடையவனாக வுள்ளவனென்று முன்னமே அறிந்தவனாதலின், 'அமைவுடையமைச்ச' என விளித்தனர்.
'பிறர்தம் மதமேற் கொண்டுகளை' வென்ற முறைப்படி அமைச்ச னுரைத்தனவற்றை யெல்லாம் உண்மை யென
உடன்பட்டுப் பின்ன ரவைகளை மறுத்தல் காண்க. (69)
பதமதை வேண்டி னில்லைப்
பதப்பட நிறுத்தி யேக
லிதமென்ற லொக்கு முத்தி
யெய்துதன் ஞானப் பார்வை.
விதமதிற் றோன்று மென்றாய்
விருப்பமாக் குடும்ப பாரத்
திதமதா யழுந்து வோருக்
கெங்ஙனம் பார்வை தோன்றும். (70)
(இ-ள்.)பதவியை விரும்பினால் இல்லறத்தை முறையாக நிலைபெறச் செய்து போதல் முறைமை யென்றது சரியே. மோக்ஷத்தையடைதல் ஞானநாட்டத்தின் முறைமையினாலே உண்டாகுமென்று கூறினை. மோகலக்ஷணத்துடன்
சமுசாரச் சுமையில் பிரியத்தொடழுந்திக் கிடப்பவர்க்கு எவ்வாறு ஞானநாட்டமுண்டாகும்? எ-று.
துறவியாகிய இவ்வரசனுக்கு சுவர்க்காதி பதங்கள் துச்சமான பொருள்களாக மதிப்பாதலின் அவைகளைக் குறித்து
ஆக்ஷேப ஸமாதானங்களெவையு முரையாது விடுத்துத் தனதநுஷ்டானமும் நித்தியமுமான முத்தியைப்பற்றி முதலில்
கூறத் தொடங்கினவர் மந்திரியின் கருத்தை மறுப்பான், "விருப்பமாக் குடும்ப பாரத்--திதமதா யழுந்துவோருக் கெங்ஙனம் பார்வை தோன்றும்" என மந்திரியின் அபிப்பிராயத்தைக் கண்டித்தனர் என்றறிக. (70)
மனமிரு பொருளைப் பற்ற
மாட்டாதட் டாவ தான
வினமவை புறநோக் கான
வேதினாற் கூடும் வீடு
கனவுண்ணோக் காகு மில்லங்
கருதிய புற நோக் காகு
மனகவிவ் வூகந் தோன்ற
வறைகுவ நாமே கேளாய். (71)
(இ-ள்.)அமைச்சனே! மனமானது ஏககாலத்தில் இரண்டுவிதமன பொருள்களில் வியாபியாது. அட்டாவதானஞ்
செய்பவன் ஒரேகாலத்திற் ஒன்றிறந்த பல பொருள்களில் நினைவுடையவனாக விருக்கின்றனே என்பதால் ஒருக்கால்
நீ இங்ஙனங் கருதலாம். அட்டாவதானத்தில் கருதப்படுகிற பல பொருள்களும் புறநோக்கமென்னும் ஒரு காரணத்தினால்
நிறைவேறுமாதலின், மனம் புறமுகமான ஒரு நிலையிலே நிற்கின்றது. நிற்க, வீடடைதற்கு மிகுந்த எண்ணப்படுகிற
புறநாட்டம் வேண்டும். ஓ பாவரகிதமானவனே! இந்த உலகம் நினக்கு நன்றாய் விளங்கும்வண்ணம் நாமே உரைக்கின்றோம்; கேட்பாயாக. எ-று.
துறவியார் அமைச்சனை நோக்கி 'மனமிரு பொருளைப் பற்ற மாட்டாது' என்றவுடன்,மனமிருபொருளிலேன் பற்றாது? ஏககாலத்தில் அநேகம் பொருள்களில் மனம்பற்றி நிற்கக் காண்கின்றோமே. அட்டாவதானியே அதற்குச் சான்றா மென்றதற்கு, அட்டாவதானம் செய்பவனுடைய மனம் பல பொருளைப் பற்றிநிற்பதென்பது ஆலோசனைக் குறைவென்றும். அது புறநாட்டமாகிய ஒரு தொழிலாலேயே ஆவது என்றும், முத்திக்கு வேண்டுவது உண்ணோக்கமே என்றும்,
இல்லற தருமத்திற்கு வேண்டுவது புறநோக்கென்றும் இருவிதமாக நிற்றலின்,நினது அபிப்பிராயம் இவ்விடங்களுக்கு
முரணுற்று நிற்றலை நீ அறிந்திலை என்பனவாதி அநேக வினா விடைகளை உள்ளமைத்தே ஆசிரியர் விடைமாத்திரமாய்
"அட்டாவதான-வினமவை புறநோக் காகும்" என்றும், "இல்லங் கருதிய புற நோக்காகும்" எனவு முரைத்தனர்.
தென்றிசை நடப்போர் என்பதுமுதல்,என்றுமனேகம் என்னும் பாடல்களளவும் அமைச்சனுக்கு அரசன் இல்லற துறவறங்களின் தாரதம்மியங்களின் வழியாய் பந்தமோக்ஷங்களின் நிலைமைகளை உபதேசித்தல் காண்க. (71)
தென்றிசை நடப்போர் கங்கை
சென்றுதோய்ந் திடுவ ரோதா
னன்றியு மவனி வாழ்க்கைக்
கமைச்சர்க ளுடனே காந்த
மொன்றியே யூகஞ் செய்வோ
ருலகவேந் தாயி னோர்க
ணின்றிதை நோக்கா யில்லி
னிற்பவர் முத்தி சேரார். (72)
(இ-ள்.)(காசிக்குத் தெற்கிலுள்ளவர்கள்) பின்னுந் தென்முகமாகவே செல்லுவார்களானால் (வட நாட்டிலுள்ள) கங்கையாற்றிற் சென்று மூழ்குவார்களோ? அல்லாமலும், உலகவாழ்க்கைக்கு,பிரபஞ்சத்திற்கு அரசர்களாக விருப்பவர்கள் மந்திரிமாருடன் தனித்தவிடத்தை யடைந்தே ஆலோசனை செய்கின்றவர்களாகின்றார்கள்.(ஆதலால் அமைச்ச!) நீ இதனை யோசித்துப்பார்.சமுசாரபந்ததையுடையவர்கள் பந்தநிவிர்த்தியை யடையமாட்டார்கள். எ-று.
இல்லறத்திலிருந்து முத்தியடையக் கருதுதலும் முயற்சித்தலும் உடையவர்கள் குறித்த பலனான முத்தியை அடையவேமாட்டார்கள் என உறுதியாக வுரைத்தற்கு,கங்கா ஸ்நானத்திற்கு விபரீத கமனமான தக்ஷிண யாத்திரையை உதாரணமாக உரைத்தனர். இதனாலேயே துறவறத்திலன்றி இல்லறத்தில் முத்தி சித்திக்காதென்பது இவர் பக்ஷமென அறியலாம். சுருதிக்கும் இது சம்மதமாகும். (72)
பாசந்தான் பகைய தாகப்
பார்வைபெற் றிடிற்பா சத்திற்
பாசந்தான் வைத்துப் பின்னும்
பற்றவுங் கூடு மோதான்
பாசந்தான் பகைய தென்றே
பகருநூன் மட்டே கற்றோர்
பாசந்தான் விடவு மாட்டார்
பரமெலா மெனவாய்ப் போக்கும். (73)
(இ-ள்.)பந்தமானது விரோதமாகக் காணப்பெறுமானால்,பந்தத்தில் விருப்பத்தைவைத்துப் பின்னரும் விரும்பலாகுமோ?பந்தம் ஆன்மலாபத்திற்கு விரோதமானதென்று சொல்லப்பட்ட்ட சாத்திரத்தைமாத்திரம் ஆராய்ச்சி செய்தவர்கள் பந்தநிவிர்த்தியுஞ் செய்யாதபோது தன்னதென்று நின்ற சமுசாரச் சுமைகளை எவ்வாறு நீக்குவார்கள்? எ-று.
ஒருவன் ஒரு பொருளினிடத்தில் பிரியமுடையவனாக இருக்குங் காலத்திலன்றி அப்பொருளினிடத்துள்ள கெடுதிகளையுணர்ந்து அதன் மீது தான் முன்னர்வைத்திருந்த மதிப்போடுங் கூடின பக்ஷமானது கெடுமானாலவனுக்கப் பொருள் பிரியமுள்ள பொருளாகப் பின்னர்த் தோன்றாது.தோன்றா ஞான்று அவ தனுடனிணங்கியிரான்;இது உலகாநுபவம். பந்தத்தினை உயர்ந்ததாகக் கருதுகிற காலத்தில் அதனில் விருப்பமிருக்கும்.முத்திநூலில் பரிசயம் வந்தவுடன் பந்தம் முத்திவிருப்பமுடையவனுக்குக் கொடிய பகையாகத் தோன்றுமேயன்றி நண்புடைப் பொருளாகத் தோன்றாதே. பந்தத்தில் விருப்பத்தைத் தருகிற இல்லற தருமம் முத்தி விருப்பமுடையவனிடத்து எங்ஙனம் நிகழும்?குலமகளென மணந்த ஒருமாது,விலைமகளினும் இழிந்த செயளினளாக நேரிற் கண்ட கணவன் பின்னரவளோடு கூடி வாழ மனவிசைவானோ? இசையான்.அது சுயரூபமானதென அஞ்ஞானதசையிற் கருதி நின்ற பந்தம் மெய்ஞான தசையிற் துக்க ரூபமானதாக அநுபவத்தில் கண்ட முத்திகாமி இல்லற தருமம் முதலியவைகளில் அப்பிரியனாவானேயன்றிப் பிரியமுடையவனாகானே.பிரியமில்லாதாவன் அவ்வில்லறவாழ்க்கையி லிருந்தானென்று கூறுவது வியப்பேயாம். அப்ரியமான பொருளிலவனுக்கு எங்ஙனம் மனம் பற்றும்?பற்றவேபற்றாது. என்றும் உண்மையாகப் பாசத்தைத் துக்கரூபமானதாக அறியாதவர்களே அதனிற்பற்றிநிற்பர் என இல்லறத்திலிருந்து ஞானம் பேசுபவர்களைக் குறித்து அவர்கள் வாசாஞானிகளே யன்றி அநுபவஞானிகளல்லர்என இழித்துரைத்தலை விளக்குவான் 'பின்னும் பற்றவுங் கூடுமோ'என்றும்,'பகருநூன் மட்டே' என்றும்,'பரமெலா மெனவாய்ப்போக்கும்' என்றும் கூறினாரென்றறிக. (73)
அந்தமா தியுமி லாவீ
டடைந்துடற் பிறப்ப றுக்கச்
சுந்தர ஞானம் போதுந்
துறவற மேதுக் கென்றே
மந்ததி காரி யோரை
மதித்துநூ லுரைக்குஞ் செய்தி,
யந்தம தான பேருக்
கத்தகை விளம்பா தென்றும். (74)
(இ-ள்.)முடிவும் முதலுமில்லாத மோக்ஷத்தை யடைந்து சரீர உற்பத்தியை யொழித்தற்கு அழகிய ஞானமொன்றே போதும். துறவறத்தை யெதன்பொருட்டடைவதென மந்த அதிகாரிகளாயுள்ளவர்களை யுத்தேசித்துச் சாத்திரஞ் சொல்லுந்தன்மை, அதிதீவிரதரமுடைய முமூட்சுவைக் குறித்து முக்காலத்திலுஞ் சாத்திர மவ்வாறு கூறாது.எ-று.
அரசனுரைத்தனவற்றைக் கேட்ட அமைச்சன் தேவரீர் இவ்வண்ணமுரைத்தா லது எங்ஙனம் பொருந்தும்?மோக்ஷமடைதற்கு ஆத்மஞானம் போதும்;துறவறம் அவசியமில்லையெனப் பிரபலசுருதிகளுரைக்கின்றனவே என்றான்,அதற்கரசன் சுருதி யங்ஙனமுரைத்ததெல்லாம் மந்தாதிகாரிகளைக் குறித்தென்றும்,"அந்தமதானபேருக் கத்தகை விளம்பாது" என்றுங்கூறினான்.இதனால் அநுபவஞானம் வருதல் வேண்டுமானால் துறவறமே வேண்டுமென்றும்,ஒருமலர்க்குத் துறக்கம் என்பதுபோல, இல்லறத்திலேயே யிருக்கலாம். ஞானம் உண்டானாற்போதும் எனச் சுருதி இல்லறத்திலிருப்பவனை சிக்ஞாலுவாக்குமாறு உபசாராமாகக் கூறியதேயன்றி வேறன்றென்று அறிக என விரிக்க அம்மொழிகள் இடந்தந்து நிற்கும்வண்ணம் "மந்ததிகாரியோரை மதித்து"என்றும், "அந்தம தானபேருக் கத்தகை விளம்பாது" என்றும் அறுதியிட்டுரைத்து ,முத்திக்குத் துறவறமே வேண்டுமெனச் சித்தாந்தித்து,மேல் ஞானத்தினாலறிய நிற்கும் வஸ்துவி னிலக்கணங்களைக் காரண காரிய முறையினால் விளக்குகின்றார்.
மேற்படி வேறு
தோன்றுகின்ற பொருளியல்புந்
தோற்று விக்கும் பொருளியல்புந்
தோன்ற வுனக் கியாமுரைக்கச்
சோக மறவே கேட்டிடுவாய்த்
தோன்று பொருள்க ளநித்தமுமாய்த்
தூய்மை யின்றித் துக்கமுமாய்த்
தோன்றுந் தோற்று விக்கும்பொருள்
சுகமாய்ச் சுத்த நித்தமுமாம். (75)
(இ-ள்.)பிறப்படையாநின்ற பதார்த்தத்தின திலக்கணமும். பிறப்பியா நிற்கிற நிமித்தகாரணமான வஸ்துவினிலக் கணமும் விளங்கும்படி யாமுனக்குச்சொல்ல,துக்கநிவிர்த்தியின் பொருட்டு நீ கேட்கக்கடவை.பிறவியை யடையாநின்ற வஸ்துக்கள் நித்தியத்தன்மையற்றதாய் அபரிசுத்தமானதாய்ச் சோகரூபமாகக் காணப்படும்.பிறப்பிக்கிற(நிமித்தகாரண) வஸ்து ஆநந்தரூபமாய் தூய்மையும் நித்தியத்தன்மையும் உடையதாகும்.எ-று.
காரணம்-நித்தியம்.காரியம்-அநித்தியமெனக் கூறினர்.
பால னான பருவம்போம்
பன்னு குமாரப் பருவம்போங்
கோல மான தருணம்போங்
கோலை யூன்றிக் குனிந்தெழுந்து
காலன் மாய்க்க வனைவர்களுங்
கல்லென் றழுது பேர்மாற்றி
யேலப் பிணமென் றொருபெயரிட்
டிடுகாட் டிடுத லொருதலையே. (76)
(இ-ள்.)சைசவத் தன்மையினையுடைய பருவமு மழியும்.சொல்லாநின்ற கௌமாரபருவமு மழியும்.அழகினையுடைய யௌவனப்பருவமும் போம்.கோலினை யூன்றிக் குனிந்தபடி யெழுந்து (தள்ளாடுஞ் சமயத்தில்) இயமனானவன் கொல்ல,(அப்போது)உரியராவோரெல்லாம் (ஒன்று சேர்ந்து)ஒலியுட னழுது முன்னிருந்த பேரையொழித்துப் பொருந்தும்படிச் சவ மென்று ஒரு புதிய பெயரிட்டுச் சுடலையிற் கொண்டொழித்தல் சிறப்பிலக்கணமாம்.எ-று.
கருவி னின்று மழிந்துபோங்
கண்ட குழந்தை யினுங்குமரப்
பருவந் தனிலும் போந்தருணப்
பருவந் தனிலு மழிந்துபோ
முருவ நடுங்கு மூப்பதினு
மொடுங்கு மெந்தக் காலையினு
மொருவி யழித லியல்பாகு
முலகத் துடலின் வாழ்க்கையுமே. (77)
(இ-ள்.)கருப்பைக்குள் ளிருக்கும்பொழுதும் அழியும், (கருவி லழியாமற்)பிறந்து காணப்பட்ட சைசவத்திலும்,
கௌமாராத்திலும் அழியும்.யௌவன பருவத்திலுங் கெட்டொழியும்.அங்கங்கள் தளர்ந்தசைகிற கிழப் பருவத்திலும்
அழியும்.பௌதிகப்பிரபஞ்சத்தில் சரீரத்தின் ஜீவிதத்துவம் முக்காலத்தினுங் கெட்டொழிதல் இலக்கணமாம். (77)
பஞ்ச பூத மழிந்துபோம்
பானுத் திங்க ளுடுக்கள்போம்
வஞ்ச வசுரர் மடிந்திடுவர்
மாகர் பதம்போம் வல்லரக்கர்
துஞ்சு வார்கள் போகிபதந்
துஞ்சும் பிரமன் பதந்தானுந்
துஞ்சுந் திருமால் பதந்துஞ்சுந்
துஞ்சா தொன்றே பரமபதம். (78)
(இ-ள்.)பஞ்சபூதங்களு மழியும்.சூரியனும் சந்திரனும் நக்ஷத்திரங்களு மழியும்.வஞ்சனையுடைய அசுரர்களும் சாவார்கள்.ஆகாயவாசிகளின்இருப்பிடங்களுமழியும்.வலிய அரக்கர்களு மழிவார்கள்.இந்திரனது பதவியு மழியும்.பிரமாவினது பதவியு மழியும். நாரயணனது பதவியு மழியும்.பரமபதமொன்றே அழியாதது.எ-று.(78)
தோலி ரத்த மெலும்பிறைச்சி
சுக்லமேதை மச்சை யொன்றாய்த்
தூலி கரித்த வுடம்பாகுந்
தொட்ட வெவையுந் தன்வடிவாய்க்
கோலி யடக்கிக் கொளுமிதனைக்
கூறு கூறா நோக்காது
போலி யுணர்வோர் மகிழ்வெய்தும்
புனித மென்றும் பரமபதம். (79)
(இ-ள்.)தோலும்.இரத்தமும்,என்பும், மாமிசமும், சுக்கிலமும், மேதசும், மச்சையுங் கலந்து தடித்ததாயுள்ள இச்சரீரம், தன்னிடத்தில் வந்து பொருந்திய சேர்க்கைப் பொருளாகிய வனைத்தையும்,தானாகவே கருதிக்கொள்ளுகிற இவ் வுடலை,(தோலு-மிரத்தமு-மிறைச்சியுமென்று) வேறுவேறாகப் பாராமல்,சாமானிய அறிவுடையவர்கள் சந்தோஷிப்பார்கள். முக்காலத்திலும் தூய்மையானது சிவபதமேயாம்.எ-று. (79)
அரந்தை யதனை யொழுங்காக
வறையக் கேணீ யவனியெல்லாம்
பரந்த சிருட்டித் திதியொடுக்கம்
பண்பாய் நிகழுஞ் சிருட்டிதனிற்
பொருந்தும் பெரிய துன்பைந்தும்
போய்மாண் டுறில தெண்மடங்கே
யிருந்த திதியு மிரண்டாகு
மிளமை யென்று மூப்பென்றும். (80)
(இ-ள்)துன்பத்தை முறைப்படியே யான் சொல்லக் கேட்பாயாக.உலகமுழுமையும் விரிந்த தோன்றல் வளர்தல்
அழிதல் முறைப்படியேநடக்கும்.அம் மூவகையுள் தோன்றலில்,கருப்பாசயப் பையுள் கட்டுண்டல்,அதில் ஜலம் பூரித்தல், உதராக்கினியால் வருந்துதல்,யோனிவாய்நெருக்குண்டல்,பிரசூதவாயுவினால்உதைபடல் எனப்பொருந்தியபெரிய ஐவகைத்துன்பங்களுள.அழிதலில்,பிறவித்துன்பினும் எண் மடங்கான துன்பங்களுள.வளர்தலில், இளமைத் துன்பென்றும்,முதுமைத்துன்பென்றும் இரண்டுபகுதியனவாம். எ-று.
விருத்த பருவ மிகத்துன்பம்
விளங்கு மிளமை யிரண்டவையின்
வருத்து பிணியின் மிகத்துன்பம்
வளமை யிளமை மூன்றாகுங்
கருத்த தறியாக் குழந்தையென்றுங்
குமார மென்றுங் காளையென்று
மருத்த மறியா ததிற்றுன்ப
மடையும் பாலப் பருவத்தில். (81)
(இ-ள்)கிழத்தன்மையான காலம் மிகவுந் துன்பம்; விளங்குகின்ற இருவகையான இளமைப் பருவங்களிலும் (மற்றைய பருவங்களைவிட)வருத்துகிற வியாதிகளால் அதிகமான துன்பம்.வளப்பமானதாகக் கூறப்படுகிற இளமைப் பருவம் மூன்று பிரிவினதாகும்.அவை அறிவென்பது சற்றுமில்லாத சைசவப் பருவம்,குமாரப்பருவம்,யௌவனப் பருவம் என்று சொல்லப்படுகிற பாலப்பருவத்தில் நூற்பொருள், வாசகப்பொருள்,திருஷ்டிப்பொருள் என்பவைகளைத் தெளிவாக உணருதற்குச் சக்தியின்மையினால் துன் புண்டாகும்.
தந்தை தாய ராசிரியர்
தாங்கண் முனித றனக்கஞ்சிச்
சிந்தை கலங்குங் கவுமாரஞ்
சிறந்த காளைப் பருவத்தின்
முந்து பசிநோய் காமநோய்
முடுகித் தணிக்கப் பொருடேட
விந்த புவனத் திரவுபக
லிடைய றாத தொழிற்றுன்பம். (82)
(இ-ள்.)குமாரப்பருவத்தில் தகப்பனுந் தாயுங் குருவுமாகிய இவர்கள் கோபித்தலுக்குப் பயந்து மனங்கலங்கும். (*கல்வி, வலிமை, அழகு இவைகளால்)சிறப்புற்றதாகச்சொல்லப்படுகிற யௌவனப்பருவத்தில்,அதிகரிக்கிற பசி யெனும்
நோயும், காமவியாதியும் மிகுத்து,அவைகளை விரைந்து சமனஞ் செய்ய திரவியத்தை சம்பாதித்தற்கு இம்மண்ணுலகத்தில் இடைவிடாமல் செய்கின்ற தொழிலாகிய துன்பம்(உண்டாகும்.)எ-று. (82)
பொருளுண் டாகிற் காப்பதனாற்
பொருந்துந் துன்ப மரசாகி
னொருதம் மிகுத்த வரசரா
லுதவுந் துன்ப மொருகுடைக்கீழ்
நிருப னாகி னோய்மரண
நேருமென்னும் பயத்தானும்
வருவ தெனையோ மறுமையினி
லென்றும் வாடித் துன்புறுமே. (83)
(இ-ள்.)திரவியமிருந்தால்,அதைக் காப்பாற்றுவதால் துன்பமுண்டாகும்.அரசனாக விருந்தால்,தன்னைக்காட்டிலும் ஒப்பற்ற பெரிய வேந்தனால் துன்பமுண்டாகும்.(உலக முழுமையும்)ஒரு குடைநிழலி லாளுகிற ஏகச்சக்ராதிபதியாயிருந்தால் பிணியுஞ் சாவுமுண்டாகுமென்னும் பயத்தாலும், (இந்த ஜனனத்திற் சக்கரவர்த்தியாக விருக்கிறோம்) அடுத்த ஜன்மத்தில் எவ்வாறாகுமோ எனவுங்கருதி வருந்தித் துன்பப்படுவான்,எ-று. (83)
மாகர்க் கசுரர் பகையுளது
மகிழ்ச்சி வாட்ட மிகவுமுள
தாகத் தகலா நோயுமுள
தனங்க னுளது நசையுளது
போகத் தழுந்தன் மிகவுளது
பொன்ற லுளது கற்பத்தே
சோகத் திறங்க ளிவையுடைய
துறக்கத் தென்னை சுகமுளதே. (84)
(இ-ள்.)தேவர்களுக்கு அசுரர் பகை யிருக்கின்றது. சந்தாஷமும் துக்கமும் அநேகமாக விருக்கின்றது. உடம்பிலே நீங்காமலிருக்கிற வியாதியு மிருக்கின்றது. மன்மதனுமிருக்கின்றான்.ஆசையுமிருக்கின்றது. (அருந்தல் பொருந்தலாதி) போகங்களில் மிகவும் அழுந்தலுமுண்டு. கற்பகாலத்தில் சாதலு மிருக்கின்றது.துன்ப வரிசைகள் இவ்வண்ணமாக விருக்கின்ற அந்தத் தேவலோகத்தில் என்ன சுகமிருக்கின்றது?(ஒன்றுமில்லை.)எ-று. (84)
தேவர் மனிதர் துன்பத்தின்
றிறங்க ளிவ்வா றாகியிடி
லாவ கீழா மிருகமுத
லரச மீறா மைவகையி
லோவ லில்லாத் துன்புக்கோ
ருவமை யில்லை நிரயத்தி
னோவ துன்பஞ் சொல்வதெனை
நோயே பவத்திற் சுகம்வீடே. (85)
(இ-ள்.)தேவர்களதும் மனிதர்களதும் ஆகிய துன்பங்கள் இவ்வண்ணமாகுமானால்,பிறந்தனவாகவுள்ள தாழ்ந்த ஜாதியாகிய மிருகம் முதல் அசரம் வரைக்கும் உள்ள ஐந்து வகைத் தோற்றங்களில் கெடாத துக்கத்துக்கு ஒப்பேயில்லை. நரகத்திலே வருந்துகிற வருத்தத்தைக் கூறவேண்டுவதென்னை?துன்பமே பிறத்தல்.சுகமே மோக்ஷம்.எ-று.
கீழ் மிருகமுத லசரமீறாம் ஐவகை என்பது,விலங்கு- புள்-ஊர்வன-நீர்வாழ்வன-தாவரம் (85)
மேற்படி வேறு
இந்த விழிவை யுடைய விந்த மாயை யசத்தே
யந்த வுயர்வை யுடைய வந்தப் பிரமஞ் சத்தே
தந்த மனதிற் றேர்ந்தோர் தள்ளி யஃதை நிற்ப
ருந்தன் மனதி னன்றா யூகித் தமைச்ச பாராய். (86)
(இ-ள்.)அமைச்சனே! இக் காணப்படுகிற தாழ்வு பொருந்திய இந்தமாயாரூபமானது அசத்து.அந்தவுயர்வினையுடைய அப் பிரமம் சத்து. தங்கள் தங்கள் மனதில் இதனை யுணர்ந்தவர்(மாயாரூபமான பிரபஞ்சத்தை அனித்திய ரூபமானதென்று) தள்ளி எந்தப் பொருளோடு கலந்து நிற்பார்கள் (என்பதை)நீ உன்னுடைய மனத்தில் செவ்வையாய் ஆலோசித்துப் பார்.எ-று. (86)
பொய்யென் றிதனை யறிந்தோர்
பொருந்தி நிற்ப துளதோ
மெய்யென் றதனை யறிந்தோர்
மேவா திருப்ப துளதோ
வைய முளதோ விதனி
லமைச்ச பாராய் நன்றா
யுய்ய வறிவி லாதோ
ருழல்வர் நீக்க மாட்டார். (87)
(இ-ள்.)இந்த மாயாரூபத்தைப் பொய்யானதென்று அறிந்தவர்கள் அதில் தங்கி நிற்பதுவும் உண்டோ? அந்த
பிரமத்தை நித்தியமானதென்று அறிந்தவர்கள் அதனையடை யாமலிருப்பதுவும் உண்டோ?இதிற் சந்தேக முண்டோ? மந்திரியே! நீ நன்றாய்ப்பார்.முத்தியடைதற்குத் தக்க ஞானமில்லாதவர்கள் அதிலேயே உழலுவார்கள்.(அன்றி) பந்த நிவிர்த்தி செய்துகொள்ளமாட்டார்கள்.எ-று. (87)
பொய்யை மெய்யென் றறிந்து
போத மின்மை யாலே
மெய்யைப் பொய்யென் றெண்ணி
மெலிந்தே யுழல்வ ருலகர்
பொய்யைப் பொய்யென் றறிந்து
போத குருவி னருளின்
மெய்யை மெய்யென் றறிந்தே
மெலிவு தீர்வ ருயர்ந்தோர். (88)
(இ-ள்.)ஞானமில்லாத குறைவினால்,மாயாரூபத்தை நித்தியமானதாக உணர்ந்து, நித்தியமான பிரமத்தை இல்லாததாகக் கருதிப் பிரபஞ்சவாசிகள் வருந்தித் திரிவார்கள். தீவிர பக்குவமுடைய பெரியவர்கள் மாயையை மாயையாகவே அறிந்து,ஞானாசாரியனது கடாக்ஷத்தால் பிரமத்தைப் பிரமமாகவேவுணர்ந்து அனர்த்தநிவிர்த்தியை யடைவார்கள்.
உலகினர் தமக்குப் போதமின்மையால் முரணாக உணர்கின்றனர்.துறவிகளான வுயர்ந்தோர் ஞானகுருவின் கடாக்ஷத்தால் உண்மையாக உணர்கின்றனர். (88)
துன்பந் தோன்றி லெவருந்
துறந்தேக ராய்த் தனித்தே
யின்பந் தேட லியற்கை
யின்ப மென்றே தோன்றி
லன்ப தாக நீங்கா
ரவர்கட் கெங்ஙன் கூடு
நன்ப ரம ஞான
நாட்ட மமைச்ச சொல்லாய். (89)
(இ-ள்.)எவ்விதமான மந்தாதிகாரியும்(சரீரபோக்ஷனை யாதிகளுக்கு)இடையூறு உண்டாகுமானால்,மனைவி மக்கள் முதலானவற்றை யெல்லாந் துறந்து தனித்திருந்து சரீர சுகத்தை நாடுதல் சுபாவதருமம்.அச்சரீர சுகமே சுகமாகக் காணப்படுமானால், (விருப்பம் அதிலாதலால்), அதைவிட்டு நீங்க மாட்டார்கள்.அப்படிப்பட்ட அநதிகாரிகளுக்கு எவ்வண்ணம் நல்ல பிரமமான இலக்ஷியார்த்தத்தில் ததேகத்தியானம் உண்டாகும்?மந்திரியே! நீ கூறக்கடவை.எ-று.
உலகவின்பமேவின்பமாகத்தோற்றினவர்களுக்கு ஞான வின்பம் கைகூடாதென்பது இதனால் விளங்குகின்றது.
இழிவை யுணர்ந்தா லுய*ர்வை
யெவருந் தேடி நோக்கு
மிழிவை யுணரா ருயர்வை
யெய்த நோக்கா ரென்று
மிழிவை யிழிவென் றுணர
வெந்தக் காலம் வாய்க்கு
மிழிவை யுடையோர்க் கமைச்ச
விதனை யூகித் துணராய் (90).
(இ-ள்.)எத்தன்மையானவர்களும் அநுசிதத்தை உணருவார்களானால் உசிதமானதைத் தேடிப் பார்ப்பார்கள். எக்காலத்திலுமே அநுசிதமானதை அநுசிதமானதாக அறியாதவர் உசிதமானதை யடைவற்குப் பாரார்கள்.அபக்குவர்களுக்கு அநுசிதமான பிரபஞ்சத்தை அநுசிதமானதென்று அறிதற்கு எப்பொழுதாகும்?மந்திரியே!நீ இதனை ஆலோசனை செய்தறிவாயாக.எ-று.
சுக துக்ககங்ளி னுயர்வு தாழ்வுகள் புலப்படாதாருக்கு எங்ஙனம் அவைகளின் தாரதம்மியங்கள் தெரியும்? அவை ஒருவனுக்கு வருதல்வேண்டுமானால் அநேககாலஞ் செல்லும். இவ் வுண்மையுணர்ச்சியினருமையை விளக்குதற்கே "எந்தக்காலம் வாய்க்கும்" என்றார். (90)
பேத வாதி களைப்போற் பிரபஞ்சம் வேற தெனவே
யீத கன்ற தலவே யெமையன் றியதில் லென்றே
போத விழியிற் றுறந்த புனிதத் துறவே கண்டாய்
சீத மதிபோற் குளிர்ந்து செனன வெப்பந் தீரும். (91)
(இ-ள்.)துவைதவாதிகளைப்போல பௌதிகப் பிரபஞ்சம் இரண்டாவதான ஒருவஸ்துவென்று(நான்) இங்கு விட்டதல்லவே! ஐக்யாநுபவத்தில் நிற்கும் எம்மைவிட்டுப் பிரபஞ்சம் என இரண்டாவதொன்று இல்லையாகவே,ஞான நேத்திரத்தாற் கண்டு துறந்த நிருமலமான துறவு இதுவே. இதனால் இயற்கையான சீதளத்தினையுடைய சந்திரனைப்போல் குளிர்ந்து பிறவித் துயரமாகிய உஷ்ணம் ஒழியும்.எ-று.
பேதவாதிகள் சுஜாதி விஜாதி சுகதபேத ரஹிதமான பரப்பிரமத்திற்குச் சுஜாதிவிஜாதிசுகதபேதங்களைக் கற்பிப்ப தநுபவ விருத்தமும் சுருதி விரோதமுமென்பது இவர்பக்ஷம்.
இவர் அனைத்தும் ஆத்மவிலாரோபித மெனக் கருதி நிற்பவர்.அதுவுங் கற்பிதமெனக் கொண்டவர். எமையன்றி யதில்லென்றே போதவிழியிற்றுறந்த புனிதத்துறவு என்பதே அவர்தம் மதத்தினை இன்னதென்றதை விளக்கும். (91)
இருந்த விடத்தி லிருந்தே
யெய்த லாமென் றுரைக்கிற்
றிருந்து நிமல மனத்தோர்
தீர ரெனினு மொழிந்தே
பொருந்தி யேகாந் தத்திற்
போத மடக்க வேண்டும்
வருந்து மனத்தோர்க் கென்னை
வாய்க்கு மமைச்ச சொல்லாய். (92)
(இ-ள்.)முன்னிருந்த கிரகாச்சிரமத்தில் இருந்த வண்ணமே முத்தியின்பத்தினை அடையலாமென்று கூறப்படலாமாகில்,(கருமபரிபாகத்தாலும்), சாஸ்திர ஆராய்ச்சியாலும் செவ்வைப்பட்டு நிற்கிற பரிசுத்தமான மனத்தினை யுடைய ஒப்பற்ற வைராக்கியமுள்ளவனாகவிருந்தாலும்,சமுசாரத்தை விட்டு விலகி தனிமையான இடத்தை யடைந்து ஜீவபோதத்தை இலயப்படுத்த வேண்டும்.ஸம்ஸாரதுக்கத்தி லழுந்திய மனதுடையவர்களுக்கு எது கைகூடும்?மந்திரியே!
நீ சொல்.எ-று.
இத்தகைய ஞானத்திற்குத் துறவென்றொன்று வேண்டுவதில்லையே.இந்த நிலைமையை இருந்த விடத்திலேயே அடையலாமே எனச் சங்கித்த அமைச்சனுக் குத்தாரமாகத் துறவிலன்றி அநுபவஞானஞ் சித்தியாது என அறுதியிடுவான் "வருந்துமனத்தோர்க் கென்னை வாய்க்கும்"என்றமையே சால வழகிதாம். (92)
முனமே யனைத்து முடித்து
முழுது முணர்ந்தோ ரில்லி
னினமே சென்று நின்று
மேக நீங்கா ரென்னிற்
றினமே யகமாய் நிற்போர்
செகத்தி னியல்பை யுணரார்
கனமாம் யாழ்ப்பா ணத்தின்
கப்ப லோட்டம் போல. (93)
(இ-ள்.)முதலிலேயே அப்பியாசாதி சகல காரியங்களையு நிறைவேற்றி,முற்றிலுமறிந்தவர்கள் ஸம்ஸாரிகளினது
கூட்டத்தை யடைந்தவர்களாக இருந்தும், பிரமஞானாவநுபவத்தினின்றும் நீங்கார்க ளானால்,எப்பொழுதும் பிரபஞ்ச
நாட்டமில்லாது பிரமநாட்டத்திலேயே நிற்பவர்களாகிய அவர்கள் சிறப்புப்பொருந்திய யாழ்ப்பானத்துக்குச் செல்லும்
கப்பலின் ஓட்டத்தைப் போல,உலகத்தி னிலக்கணத்தையறியமாட்டார்கள்.எ-று.
ஏகாந்தத்திலிருந்து கைவல்ய சுகத்தினை அநுபவித்திலாக்கியபின்னர் இல்லற தருமங்களைப் பார்ப்பவனாக ஒருவனிருக்கலாமே யென்ற அமைச்சனைப்பார்த்து அது பொருந்தாது.அகமுகமான அநுபவிக்குப் பிரபஞ்சந் தோன்றாது; தோன்றாதபோது இல்லறதரும மெங்ஙனநிகழும்? நிகழாது. இதற்கு யாழ்ப்பாணத்துக்கப்பலோட்டமே சான்றென்றனர்.
யாழ்ப்பாணத்துக் கப்பலோட்டமென்றது,யாழ்ப்பாணத்திற்கே பண்டைநாளிற் கப்பலேறிச் செல்வது வழக்கமாக விருந்தமையால்,அக் கப்பலினுள் ளிருப்பவனுக்குக் கப்பலுக்கு வெளியிலுள்ள எந்த விஷயமும் புலப்படாமை பண்டைக் கப்பலின் தன்மை. (93)
ஒருத்தனோ ரிருளன் றன்னை
யொருவேந் தாக்கின் முன்ன
மிருக்கு மிடத்தை நீக்கி
யேக ராச தானி
யிருக்கு மன்றி முன்க
ணிருக்கு மோதான் சொல்லாய்
திருக்கு ஞான முடையோர்
செகத்தை மெய்யென் றுழலார். (94)
(இ-ள்.)ஒருவன் ஒரு வேடனை உயர்ந்த அரசனாகச் செய்தால் அவ்வேடன் தான் முன்னமிருந்த குடிசையோடு கூடிய காட்டையொழித்து ஒழித்து ஒப்பற்ற இராஜதானியாயுள்ளதிலிருப்பானே யல்லாமல்,முன்னிருந்த இடத்தையே இடமாகக் கொண்டு இருப்பானோ?நீ சொல்வாயாக:(அதுபோல்), பிரத்தியக்ஷ ஞானமுள்ளவர்கள் இவ்வுலகத்தை நித்தியமானதாகக் கருதித் திரியமாட்டார்கள்.எ-று (94)
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
மனையினின் றாலும் பொருளுயிர்ச் சார்வின்
வருத்தனங் கெடுதலின் மகிழ்ச்சி
யினிமையில் வாட்டம் விடயவின் பதனி
லெட்டுணை யாயினு மாசை
பினையதிற் றமது பிரவிர்த்தி தானும்
பேசுமிந் நான்குமில் லெனினுந்
தனையுணர் வதற்குச் சாதனஞ் செயுங்காற்
றள்ளியின் னிற்றலே தகுதி. (95)
(இ-ள்.) இல்லறத்திலிருந்தாலும்,திரவிய சம்பந்தத்தாலும், ஜீவசம்பந்தத்தாலும் சோகம்,அவை கெடுதலினால் சந்தோஷம், இனிமையானவிஷயங்களில் வாட்டம், அருந்தல், பொருந்தலாதிய விஷய சுகங்களில் எள்ளளவாவது விருப்பம்,
இதுவன்றி, இவைகளில் தமது முயற்சியுமாகச் சொல்லப்பட்ட இந்த நாலுமே இல்லாதுபோனாலும், தன்னையறிவதற்கு அப்பியாசஞ் செய்கிற காலத்தில் இல்லறத்தைவிட்டு விலகியிருத்தலே முறைமை. எ-று
வருத்தனம்,மகிழ்ச்சி, வாட்டம், ஆசை ஆகிய நான்குமில்லாதவ னாயினும் ஆத்மஞானாநுபவகாலத்தில் கிரகஸ்தனாக இருத்தல் கூடாது.ஏகாரம்-தேற்றம். (95)
தீதுறு மனையின் பினையிகழ்ந் தந்தச்
செம்பொரு ளின்பமே வேண்டிச்
சாதக மதனிற் றொடங்குகால் விடயத்
தடையதாஞ் சாத்திய மான
போதினி லவையுந் தோன்றிடா தந்தப்
பொருவிலா னந்தமே லிடவே
யாதலிற் றுறவின் ஞானமஞ் ஞான
மாகுமென் றறைகுவர் பெரியோர். (96)
(இ-ள்.) குற்றம் பொருந்திய சமுசாரத்திலுள்ள சிற்றின்பத்தை இது ஒரு இன்பமாவென்று வெறுத்து,அந்தச் செவ்விய அருத்த நிச்சயத்தாற்கிடைத்த பிரமானந்தத்தையே விரும்பி,அப்பியாசத்தை அவ்விஷயத்தில் ஆரம்பிக்கும் போது அவ்வொப்பற்ற பிரமாநந்தம் அதிகரித்தலினால் விஷய இன்பம் விரோதமாம்.அப்பிரம இன்பம் கைகூடினவுடனே அந்த விஷயஇன்பங்களும் இன்பமாகக் காணப்படா. ஆகையினால், துறவறத்திலல்லாத ஞானம் அஞ்ஞானமேயாகுமென்று ஞானிகளிற் சிறந்தவர்கள் சொல்லுவார்கள்.
இன்னொரு விதமாகவு முனக்குரைக்கின்றேனெனப் பின்னரும் துறவறத்திலே நிற்றலே ஞானத்திற்குத் தகுதி எனவும், துறவிலா ஞானம் அஞ்ஞானம் எனவும் கூறினர். இது என தபிப்பிராயமாத்திரமன்று. ஆத்மஞானிகளான பெரியோர்களுடைய அபிப்பிராயமுமாமென் றுரைத்தனர்.
இல்லற மதனி லுறைந்துளோ ரிடத்தி
லிருப்பினு ஞானங்கீ ழிரும்பிற்
புல்லிய மாரத் தினமென விளங்கும்
போக்கியில் லினைத்துற வென்னு
நல்லற மடைந்தோ ரிடத்துறை ஞான
நற்றங்க மிசையிரத் தினம்போ
லெல்லை யிலொளியாய் விளங்கிடு மாயி
னில்சிறப் பன்றுஞா னிகட்கே. (97)
(இ-ள்.)ஆத்மஞானமானது கிகஸ்தர்களாக விருப்பவர்களிடத்தில் இருந்தாலும் உலோகங்களில் தாழ்ந்த இரும்பொடு பொருந்திய சிறந்த இரத்தினத்தைப்போல விளங்கும். அதை விட்டு கிரகவாழ்வைத் துறந்த துறவென்னும் நல்லறத்தை அடைந்தவர்களிடத்திலிருக்கிற ஆத்மஞானமானது லோகங்களிற் சிறந்த பொன்னிற் பொருந்திய இரத்தினத்தைப்போல அளவற்ற பிரகாசத்தை யுடையதாகவே விளங்கும்.விசாரிக்குமிடத்து ஞானவான்களுக்கு கிரகஸ்தாசிரமம் சிறந்ததல்ல. எ-று.
ஞானரத்தினம் பிரகாசித்தற்குத் துறவறமாகிய பொன்னம் பதக்கமே தகுந்த இடம்.இல்லறமாகிய இருப்புப் பதக்கம் இடமன்றாம். (97)
முனமனை வர்களு முறைவது மில்ல
முத்தியை யுணர்ந்தறி ஞர்களும்
பினமதி னின்ற படியினாற் சங்கை
பேசுவர் துறவுடை யோரை
யினமதை விடுத்து மில்லற மதுவே
தலையென வியம்புவ துண்டோ
மனமதி லிதனை யூகிநீ யமைச்ச
மகிமையன் றில்லஞா னிகட்கே. (98)
(இ-ள்.) பக்குவா பக்குவர்கள் ஆகிய யாவர்களாலும் துரியாசிரமத்துக்கு முன்னம் இருக்கப்படுவது இல்லறமே;
பந்தநிவிர்த்தியின் வழியை யுணர்ந்து,விவேகிகளும், பின்னும் முன்னோர்களிற்சிலரும் அவ்வில்லறத்திலேயே வாழ்ந்தமையால் துறவிகளை இல்லறத்திலிருந்தா லென்னையென்று சங்கித்துப் பேசுவார்கள். பந்தங்களை யெல்லாம் ஒழித்தும், கிரகஸ்தாசிரமமே சிறந்ததென்று கூறுவது முளதோ? மந்திரியே! நீ இதை மனதினா லாலோசித்துப்பார். இல்லற
வாழ்வு ஆத்மஞானிகட்குச் சிறந்ததன்றாம். எ-று.
உட்கருத்தொன்றும் புறக்கருத்தொன்றுமாக இல்லறத்திலுள்ள விவேகிகள் இவ்வில்லறதுறவற விஷயமாகப் பேசுகின்றார்கள். நீ இதனை ஆலோசிக்கக்கடவை.அங்ஙனமுரைத்தல் பக்ஷபாத மென்பதை விளக்குதற்கே"இனமதை விடுத்து மில்லற மதுவே தலையென வியம்புவ துண்டோ" என்றும்,"மகிமையன் றில்லஞா னிகட்கு"என்றுங் கூறினார்.
ஆடிய சகல மடங்குகே வலமு
மகற்றியே யொளிப்படை கொண்டு
மூடிய விருளை முழுதையும் வீசி
முடிவில்வீ டதனையே யுணர்ந்தோர்
நீடிய ஞால மிசையினிற் பால
னிசமரு ளுடையன்பேய் பிடித்தோன்
கூடிய குணத்*தி னூரிற்போய்க் குடியின்
கூலியா ளினினியல் படைவார். (99)
(இ-ள்.) பிரபஞ்ச விஷயமாகச் சகலாவத்தையையும், அவைகளொடுங்கி நிற்கும் வாதனாரூபமான கேவலாவத்தையையும் ஒடுக்கி,ஞானவாளைத் தாங்கி,தன்னைச் சூழ்ந்து மூடிக்கொண்டிருந்த அஞ்ஞானவிருளை அடியோடு விலக்கி, அழிவில்லாத பந்தநிவிர்த்தியை யறிந்தவர்கள்,உயர்ந்த பூமியினிடத்தில் சிறுவனும், உண்மையான மருளுடையவனும், பைசாசத்தாற் பிடிக்கப்பட்டவனு மாகிய இவர்களுடைய பொருந்திய குணத்துடனே ஊருக்குட்சென்று, வீடுகளிற் கூலியாட்களைப் போன்ற தன்மையையும் அடைவார்கள். விகற்பமாய்வந்தடுப்பது சகலம். மயக்கமாய் வந்தடுப்பது கேவலம். இக்கவிமுதல் சைவசித்தாந்திகளி லொருசாரார்க் குடன்பாடான வாக்கியங்களை உபயோகிக்கின்றனர். (99)
வினைகளோ ரிரண்டுஞ் சமமதாய் ஞான
மேலிடு காலையி னிந்த
மனையின்பங் கான்ற சோற்றிற்கண் டுவர்த்து
மாற்றியே கைவிட வருமேற்
றனையுள படியே யனுபவ மதனிற்
றானுணர்ந் தானந்த மடைந்தோர்
பினையுமவ் விடயம் பூண்பர்க ளெனவே
பேசுதல் வழங்குமோ சொல்லாய். (100)
(இ-ள்.) இருவினை ஒப்புவாய்ந்து ஞானம் அதிகரிக்கிற சமயத்தில் இந்த இல்லறசுகத்தை எதிரெடுத்த அன்னத்தைப்
போலப் பார்த்து வெறுத்துத் தள்ளி அதனை விடவேண்டி வருமானால், தன்னை யதார்தமாய் அநுபவரூபமாக வுணர்ந்து பிரமானந்தத்தை யநுபவிப்பவர்கள் பிரமாநுபவம் வந்த பின்னரும் ஐம்புலவிடயங்களையுடைய இல்லற தருமத்தைக்
கொள்வார்க ளென்று கூறுதல் சகிக்கத்தக்க காரியமோ நீ சொல்வாயாக.எ-று. (100)
விடயவின் பதனி னசையுளோர் தமக்கும்
விரிவதாம் பேரின்பச் சுவையி
னடைவினைச் செவியிற் கேட்டவக் கணமே
யவற்றினை யகற்றிட வருமே
லிடைமுத லீறின் ஞானவா னந்த
மெய்தினோர் களும்பினு மிந்தக்
கடைமனை வாழ்வை நினைவர்க ளென்றாற்
கண்டனர் நகையரோ சொல்லாய். (101)
(இ-ள்.) விஷய வின்பங்களிலே விருப்பத்துடனிருக்கும் மந்த பக்குவர்களும், அகண்டமான பேரின்பத்தின் இனிமையின் தன்மையைச் சிரவணஞ்செய்த அந்த சமயத்திலேயே அவைகளை வெறுக்கவேண்டி வருமானால்,ஆதிமத்யாந்தரகிதமான அறிவானந்த சொரூபனை அடைந்த ஞானிகளும், பின்பும் இந்தக் கீழான இல்லற இன்பத்தை விரும்புவார்களானால், முன்ன ரனுபவித் தறிந்துள்ள அநுபவிகள் சிரிக்கமாட்டார்களோ நீயே சொல்வாயாக. எ-று. (101)
பற்றிலை யாயி னவையினி லிருப்பேன்
பழையவூழ் வினையெனி லாசை
சற்றெனு முதிப்பித் தல்லவோ வூட்டுஞ்
சகவின்பி லிறையெனு மிச்சை
முற்றுணர் ஞானத் தோர்கள்பூண் பர்களோ
முடிவிலா னந்தமே பெருகி
நிற்றலே மீட்டும் விழிப்பினுங் கான
னீரிற்கண் டுண்முக மடைவார். (102)
(இ-ள்.) இல்லற வின்பத்தில் விருப்பமில்லாதபோது அவ் வில்லறத்திலும் அவைபோன்றவைகளிலும் வாழ்தல்
எதற்காக? பிராரத்துவ கன்மமெனில், இச்சையைக் கொஞ்சமாவது உண்டாக்கியல்லவோஅனுபவிக்கச்செய்யும்? பரிபூரண ஞானத்தை யுடையவர்கள் பிரபஞ்சத்திற் சற்றேனும் விருப்ப மடைவார்களோ?நாசமில்லாத ஆனந்தத்தை அநுபவித்து நிற்றலே அவர்களியல்பு.பின்னும் சகமுகமாகமனஞ் செல்லினும்,அதனைக் கானற் சலத்தைப்போல் பொய்த் தோற்றமாகவே பார்த்து அந்தர்முகமாக நிற்பார்கள்.எ-று.(102)
பவமதை யினிமை யெனவெணி விடயம்
பற்றிநின் றுழன்றவர் தாமே
பவமதை யினிமை யலவெணி விடயம்
பற்றறுத் தருட்குரு வடைந்து
பவமதை யறுக்கு நெறியுணர்ந் தருளிற்
பரவின்ப மடைந்தவர் தாமும்
பவமதை யினிமை யெனவெணி னலவோ
பற்றுவர் விடயவின் புரையாய். (103)
(இ-ள்)பிறவியைச் சுகமானதாகக்கருதி,விஷயவின்பத்தை இனிமையாகக்கொண்டு அவைகளுடன் கலந்து கிடந்தவர்களே பிறவியின்பத்தை நல்லதல்லவென்றுகருதி விஷயபோகங்களை அடியோடேநீக்கி,ஞானாசாரியனை யடைந்து
பிறவி நாசத்துக்கேற்ற வழியை ஆராய்ந்து அவனருளால், பரமானந்தவின்பத்தை யனுபவித்தவர்களும் பிறவியை நல்ல
தென்று கருதினாலல்லவோ விஷயவின்பத்தை விரும்புவார்கள்? நீயே சொல்வாயாக.எ_று (103)
கொடிமுதல் வாடும் வேர்முழு தினையுங்
கோதறக் களைந்திடிற் களைந்தும்
படிமிசை கொடிபூ காய்பழ மோங்கல்
பகரதி சயமஃ தினைப்போ
லடிநடு வீறில் பிரமந்தா னாகி
யகப்பற்றை யறுத்தவ ரிடத்து
மடிவுறு மனையில் விரும்பியே நெஞ்சம்
வருத்தன மாதலென் றறைவார். (104)
(இ-ள்.) வேரனைத்தையும் குற்றமில்லாமல் தோண்டியெடுத்துவிட்டால் கொடியின்முதல் முழுமையும் வாடியொழியும்; அவ்வாறு வேரினையெல்லாம் தோண்டியெடுத்தும் பூமியினிடத்தில் கொடியும் பூவுங் காயும் பழமும் அதிகரித்து நிற்றல் சொல்லப்பட்ட ஆச்சரியமேயாம். அதைப்போல், ஆதிமத்தியாந்த ரஹிதமான பிரமமே தானாகி, உட்பற்றை நீக்கினவர்களிடத்தில் அழிவுபடுதலையுடைய சமுசாரத்தில் இச்சைகொண்டு மனமானது பிரவேசிப்பது என்று
கூறுவார்கள். எ.று. (103) (104)
ஆணவ மதனைத் தோய்ந்துட லினைநா
னாமெனத் தினவெரி வவையைப்
பேணலைச் சுகமென் றுண்மகிழ்ந் திடுவோன்
பேரின்பத் தாசைய தாகிப்
பூணவஞ் ஞான மிலையதின் ஞானம்
பொருந்தியச் சொரூபந்தா னாகி
யேணவா னந்தத் தழுந்துவோன் விடய
மெய்திடின் ஞானமே யிலையால். (105)
(இ-ள்.) அகங்காரத்தன்மை யடைந்து தூலசரீரத்தைத் தானென்று நினைத்து அச்சரீராதிகளைப் பாதுகாத்தலையே மனமகிழ்வாகக் கொண்டுள்ளவன் பேரின்பத்தில் விருப்பமுடையவானாகித் துறவறத்தை யடைந்தபின்னர் அவனுக்கு அஞ்ஞான பந்தமில்லை. அத்துறவறத்தில் ஞானத்தையடைந்து தத்பதலக்ஷியார்த்தமாகவுள்ள பிரமமே தானாகி உயர்ந்த பிரமானந்தத்தில் அழுந்தியுள்ளவன் விஷய வின்பத்தைப் பொருளாகக்கொண்டு அநுபவிப்பானானால் அவனுக்கு முன்னம் ஞானமிருந்ததென்பது பொய்யேயாம். எ-று (105)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கனவதனி லுணர் விலது காணுந்தனு
வாதிகளைக் கருதி யேநின்,
றுனுமவரி னிதுகனவென் றுணர்ந்தவர்க
ணசையிலதி னுலகு தன்னிற்
றனதுசுய வுருவதனை யநுபவத்திற்
றானுணர்ந்திச் சகம தெல்லா
மனமதனிற் சாலமென வுணர்ந்தவரிவ்
வுலகின்பின் மைய னீங்கும். (106)
(இ-ள்.) சொப்பனத்திற் கண்ட சரீராதி விஷயங்களைச் சாக்கிரத்தில் அச் சரீராதிகளை உண்மையானதாக நினைத்து சிந்தித்துப் பார்ப்பவர்களைப்போல்,இதைச் சொப்பன தோற்றமென்று அறிந்தவர்கள் விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றார்கள்.பிரபஞ்சத்தில் தனது யதார்த்த சொரூபத்தை அநுபவமாகக் கண்டறிந்து இவ்வுலக முழுமையும் மனத்தினுள் இந்திரசாலம் போன்றதென்று அறிந்தவர்கள் இந்த உலகவின்பத்திலுள்ள மோகத்தை ஒழித்து நிற்பார்கள்.
கதிரவன்முன் னிருளிருக்கு நயனமுடை
யொருவன்குழிக் கண்ணே வீழு
மதிக வலிச் சூரனமர்க் களத்துவெரு
வுவன்கிருத நறையக் கார
மிதமுளபா யசமுநிரம் பருந்தினன்கூழ்
தனிற்செய்வ னிச்சை யென்றால்
விதமிவைநான் கினுக்குங்குறை யதின்ஞானிக்
கிழுக்காகும் விடயஞ் சென்றால். (107)
(இ-ள்.)சூரிய சந்நிதானத்திலே இருள் தங்கி நிற்குமானால்,நல்ல கண்ணுள்ள ஒருவன் குழியில் விழுவானானால், மிகுந்த வலிமையுள்ள ஒரு தீரன் போர்க்களத்தில் பயப்படுவானானால்,நெய்யும் உயர்ந்த பாயஸமும் சர்க்கரைக்கட்டியும் நிறைய உண்ட ஒருவன் கூழை விரும்புவானானால், இந்த நான்கு விதங்களிலும் குறைவைப்போல,பிரமஞானி விஷய சுகத்தில் இச்சைகொள்வானானால் தாழ்வாகும்.(எ-று.) (107)
இங்குறைந்த பாண்டமதின் வாதனையில்
வாதனை களிருக்கு மென்றற்
றுங்கவறி வுடையோர்கட் கின்றியமை
யாததொழி றொடங்கி நிற்ற
லங்கியைத்தம் பனம்வல்லார்க் கனல்*சுடா
ததின்வினைக ளடுக்கா தென்றற்
றங்கும்வினைக் கேதுவாம் விடயமதில்
விருப்பாதி சாரா தென்றல். (108)
(இ-ள்.) பெருங்காயமென்னும் மருந்திருந்த பாண்டத்தைப்போல, ஆசையாதிகளொழிந்தும் வாசனா பழக்கம் இருக்குமென்று சொல்லுதல் ஞான சீலமுள்ளவர்களுக்கில்லை. அவர்களுக்குள்ளது, சுட்டற்ற ஞானானுசந்தானத்தில் நிற்றலேயாம். அக்கினி ஸ்தம்பன வித்தியா சாமர்த்தியம் உள்ளவர்களுக்கு நெருப்புச் சுடமாட்டாது. அதைப்போல, வாதனைகள் வாராதென்று கூறுதல் பொருந்திய வினைக்குக் காரணமாகவுள்ள விஷயங்களில் இச்சை முதலானவைகள் பொருந்தாதென்று கூறுதல். எ-று. (108)
உணர்வுடைய ஞானியெவை புரிந்திடினு
மிழிவிலிழி வுரைத்த தாகி
லிணையிலிரு தீயனென்பர் யூகமில
வதனான்மற் றெவைகள் செய்து
மணைவதிறாழ் வெனுமவனே தீயன்மிக
ஞானமதற் காகுந் தாழ்வோ
நணுகினன்றோ ஞானமொரு வனைஞானி
யெனப்பெயரு நண்ணி நிற்றல். (109)
(இ-ள்.)உணர்ச்சியுள்ளவனென்று சொல்லப்படுகிற ஞானி எவைகளைச் செய்தாலும் தாழ்வில்லை. தாழ்வு சொல்லப்படுமானால் ஒப்பில்லாத இரட்டைக் கொடியவனென்று சொல்லப்படுவான்.ஆலோசனை யில்லாமலே எவ்வித பகிர் வியாபாரங்களைச் செய்தும் வரமாட்டாது கீழ்மையென்னுமவனே கொடியோன்.நன்றாயாலோசித்தால் ஞானத்திற்குத் தாழ்வுளதோ?ஞானமானது ஒருவனை அடைந்தாலல்லவோ (அவனை) ஞானியென்று பெயருமடைந்து நிற்பது.எ-று.
கருவயிற்றை யுடையதுவுங் கனவயிற்றை
யுடையதுவுங் கருதிப் பெண்ணி
னுருவதனைக் குறிப்பதினோக் கிடிற்றோன்று
முளபடியே யுலகு தன்னிற்
குருவையடைந் தவனருளிற் சொரூபத்தை
யனுபவமாக் குறித்து ளோரு
மிருவையத் திடம்பமாய்த் தமைஞானி
யென்போரு மேதிற் றோன்றும். (110)
(இ-ள்.)கருத்தங்கியிருக்கிற வயிற்றினியுடையதுவும், பெருவயிறா யிருப்பதனையும்,பெண்ணினது அவயவத்தைக் குறிப்பினாலே பார்த்தால் தெரியும்.உள்ள வண்ணமே உலகத்தில் ஞானாசாரியனை யடைந்து அவனது கடாஷத்தால் பிரமத்தை அநுபவலஷணமாக லஷித்து ஏகீகப்படுத்தி நிற்பவர்களையும், பெரிய உலகத்திலுள்ள இன்பத்தை இன்பமாகக்
கொண்டு தங்களை ஞானியென்று சொல்லப்படுபவர்களையும் எவ்விதத்திலே காணப்படும். எ-று. (110)
அருச்சுனற்கு மிராமனுக்கு மதிகார
மவைபார்த்தே யறைந்த நூலின்
கருத்தறியாய் ஞானமொன்றே பிரமாணஞ்
சரிதையது கணக்கன் றாகும்
விருத்தமறி வாசார முடையோனே
ஞானியில்லோன் விருத்த னாகுந்
திருத்தமுட னமைச்சவிது துணிவென்றே
யுட்கொள்வாய் தீர னாகி. (111)
(இ-ள்) அருச்சுனனுக்கும் தசரதராமனுக்கும் கண்ணனும் வதிஷ்டனும் பக்குவநோக்கி யுபதேசித்த கீதாவாசிட்டங்களை நீ யுணர்ந்தாயில்லை. ஞானம் ஒன்றுதான் பிரமாணமானது. அவ் விருவருக்கும் உபதேசித்த அது ஞானத்திற் சரியா லட்சணமாம். அது முறைமையல்ல. வைராக்கியலஷணமுள்ள ஞானாசாரத்தைப் பற்றினவனே ஞானி. ஞானத்துக்குக் கிரகி வேறுபட்டவனாம். மந்திரியே! செவ்வையாக இது துணிவானதென்றே தைரியமுடையவனாக எண்ணத்தில் வைக்கக் கடவை. எ-று.
இங்ஙனம் அரசயோகி துறவறத்திலன்றி முத்தி இல்லறத்தில் வராதென, அமைச்சன்--அங்ஙனமாயின் அருச்சுனன் இராமன் என்பவர்கள் ஞானிகளாக இல்லறத்தி லிருந்தார்களே என்றனன். அதற்கு ஞானயோகி அமைச்ச! கீதை வாசிட்ட மென்பவைகளை அருச்சுன இராமர்கள் கேட்ட துண்மையே. அக் கீதாவாசிட்டங்களிற்கூறும் விஷயங்களும் உண்மையாகும். அது ஞானத்திற் சரியை.அருச்சுன விராமர்களின் தேகேந்திரிய வியாபாரங்கள் கீதாசார வாசிட்டங்களை ஒத்தனவன்றாம். ஞானத்தின் ஞானம் என்னும் உயர்நிலையைப் பற்றினவனே ஞானியாவன்.
நீ இன்னும் பக்குவநிலையை அடையாமையால் அந்த உண்மையை அறிந்திலை எனக் கூறியிருத்தல் காண்க.
"நூலின் கருத்தறியாய்"எனவும்,"அறிவாசார முடையோனே ஞானி"எனவும்,"அல்லோன் விருத்தன்"எனவும் கூறியிருத்தலை ஊன்றி ஆராய்வார்க்கு உண்மை புலப்படாநிற்கும். (111)
மேற்படி வேறு
என்றங் கனேக மாய்விரித்தே
யிராச யோகி யுரைசெய்து
நின்று வாக்குத் தனையடக்கி
நிமிடத் தகற்றி மனத்தினையு*
மொன்று மில்லா வெறும்பாழா
யொன்றாஞ் சமாதி தனையடைந்தா
னின்றங் கமைச்சனி துகண்டிந்
நேர்மை புதிதென் றதிசயித்தான். (112)
(இ-ள்.) என்றிவ்வாறு அநேக விதமாக விரித்து இராஜர்களுள் யோகியாகிய அம்மன்னவன் சொல்லி, அசையாதிருந்த வாக்கிந்திரியத்தையும் ஒடுக்கி, மனதையும் நிமிஷத்திற்குள் ஓயச்செய்து, வாக்கிய சோதனையில் ஒன்றுமில்லாமல் சுத்த இன்பமாய் ஏகமாகி நிற்கும் சத்ரூபமான பிரமத்துடனே கலந்து நிற்கிற சமாதியை யடைந்தனன். அவ்விடத்தில் நின்று மந்திரியானவன் அதனைப் பார்த்து இது ஆச்சரியமான விஷயமென்று அதிசயமடைந்தனன்.எ-று. (112)
இந்த வுணர்வு நமக்கின்ன
மெய்த வில்லை நாமிங்கே
யெந்த வுணர்வு கொடுநிற்பே
மென்ன வமைச்சன் யூகித்து
வந்த வழியே தான்றிரும்பி
வளப்ப முடைய மாபுரிக்கே
பந்த முடையோ ருடனிருந்து
பகர்ந்தா னரச னியற்கையெல்லாம். (113)
(இ-ள்.) இவ்வாறு சமாதி கூடத்தக்க அறிவு நமக்கின்னும் உண்டாகவில்லை. நாம் இங்கே எந்த அறிவைக்கொண்டு நிற்கப்போகின்றோமென்று மந்திரியானவன் ஆலோசித்துத் தான்வரும்பொழுது எந்தவழியே வந்தானோ அந்த வழியே திரும்பி வளப்பம்பொருந்திய தனது ஊரையடைந்து பந்துக்களுடனிருந்து மஹாராஜனது தன்மையெல்லாம் கூறினான். (113)
கேட்ட பேர்கண் மிகவியந்து
கிட்டா தென்றே யிம்முனிபோற்
றேட்ட முடனே யவரவர்க
டேடி வந்து பணிந்திடவும்
வாட்ட முடனே தாய்தந்தை
மனையாள் பதத்தில் வீழ்ந்திடவு
நாட்ட மாறு பாடின்றி
நகைசெய் திருந்தா னற்றவனே. (114)
(இ-ள்.)அதனைக் கேட்ட அரசனது உரிமைச் சுற்றத்தினர்கள் மிகவும் ஆச்சரியங்கொண்டு எப்பொழுதும் இவ்விராஜயோகியைப் போன்றவர்கள் கிடைப்பது கஷ்டமென்று காணவேண்டுமென்னும் விருப்பத்துடனே ஒவ்வொருவர்களுந் தேடிவந்து நமஸ்கரிக்கவும், சோகத்துடனே தாயுந் தந்தையும் மனைவியும் காலில் வீழ்ந்து வணங்கவும், நல்ல அந்த ஞானயோகி தமது லட்சியார்த்தப் பொருளினின்றுந் திரும்பாமல் புன்னகையோ டிருந்தனன்.(எ-று.) (114)
வந்த பேர்க ளுடன்வார்த்தை
மலரா திருப்ப வவரறிந்து
பந்தமுடையே நமக்கென்னை பகர்ந்தாற்
றோன்று மெனத் திரும்பித்
தந்த மிடத்திற் சென்றார்க
டவனுஞ் சிறிது நாட்கழித்துத்
தொந்த மொன்று மில்லாத
சுயமா முத்தி தானானான். (115)
(இ-ள்.)அங்கு வந்தவர்களுடனே வாய் பேசாதிருப்பதை யவர்க ளுணர்ந்து நாமோ பந்தமுடையவர்களாக விருக்கின்றோம். நமக்கென்னசொன்னால்தெரியும் என்று கூறிக்கொண்டு தம்தம் இருப்பிடங்களுக்குப் போய்விட்டார்கள். அவ்விராஜயோகியும் சிலதினங்களுக்குப் பின்பு யாதொரு பந்தமுமில்லாத இயல்பாகவே விளங்குகின்ற முத்தியை அடைந்தான்,எ-று.
சுபமாமுத்தி என்றது விதேகமுத்தியை. (115)
மேற்படி வேறு.
இந்தமாராஜன்சென்றவிதிகாசந்தன்னைப்பார்ப்போர்
சிந்தனை யொன்று மின்றித் தீரவே துறவ ராகி
அந்தமு மாதி யில்லா வமலமே வடிவ மாவா
ரெந்தமையருளினாண்டவெழிற்குருபரையேவாழி. (116)
(இ-ள்.)இந்த மகாராஜன் துறவறமடைந்துபோன பழங்கதையைப் படிப்பவர்கள் யாதொரு ஆலோசனையு மில்லாமல் முற்றுந் துறந்தவர்களாய்,முடிவு முதலுமில்லாத பிரம ரூபமே தமது சொரூபமாகுவர்.என்னைக் கிருபையுடனே ஆட்கொண்ட அழகிய ஆசாரிய சிரேஷ்டையாகிய நீ நீடூழி வாழ்வாயாக.எ-று.
எழிற்குருபரை என்றது பெரியநாயகி யம்மையை.(116)
கலிவிருத்தம்.
அரியது துறவற மல்ல தில்லையான்
மருவிய துறவற மொருவி மன்னனா
யுருகெழு முடிகவித் துலக மாள்வது
பெருவிலை மணியினைப் பிண்டிக் கீதலே. (117)
(இ-ள்.) துறவறத்தைவிட அருமையானது இன்னொன்றில்லை.தானிருந்த துறவறத்தைவிட்டு அரசனாக வாகி நிறம் விளங்குகின்ற மணிகளிட்டிழைத்துள்ள மகுடஞ்சூடி உலகத்தை யாள்வது, அதிக விலைமதிப்புள்ள மாணிக்கமணியினை (கேவலமான) பிண்ணாக்கு வாங்கும்பொருட்டுக்கொடுத்தலை யொக்கும். எ-று. (117)
பாயிரம் உட்படத் திருவிருத்தம்-126
மகாராஜா துறவு
மூலமுமுரையும் முற்றிற்று.
This file was last updated on 26 March 2012.
Feel free to send corrections to the webmaster