731 |
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: விளக்கம் (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். "நற்றவஞ் செய்வார்க்கு இடம்; தவம் செய்வார்க்கும் அஃது இடம்" (சீவக. நாமக. 48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.) -- |
732 |
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேய்த்தாரானும் விரும்பத் தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின் மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. விளக்கம் (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில்கிளி அக்கண்அரசண்மையோடு ஆறு.' இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிக விளைவதாயிற்று.) --- |
733 |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. விளக்கம் (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத் தொகுதியும். தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.) --- |
734 |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. விளக்கம் (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலை படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.) --- |
735 |
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. பல் குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. விளக்கம் (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி, புலி கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம் மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.) --- |
736 |
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்ட விடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப எல்லா நாட்டினும் தலை என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் ('அறியாத, குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை ரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகாரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.) --- |
737 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. இருபுனலும் -'கீழ் நீர், மேல் நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயவமாம். விளக்கம் (ஈண்டுப் 'புனல்' என்றது துரவு கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே ஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண்-ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) --- |
738 |
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (பிணியின்மை, நிலநலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும், நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும், அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.) --- |
739 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. விளக்கம் (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. "பொருள் செய்வார்க்கும் அஃது இடம்" (சிந். நாம 48.) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறின்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.) --- |
740 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று. விளக்கம் ('வேந்து அமைவு' எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும், அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவை இல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.) --- |
741 |
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற்செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித் தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது. விளக்கம் (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வௌவாமல் வைத்துச் செல்லவேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தால் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் பொற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
742 |
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். br> மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்புள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. விளக்கம் (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலமும் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) --- |
743 |
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் ('அமைவு', 'நூல்' என்பன ஆகுபெயர் - உயர்வு - ஏணி யெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, "வளைவிற் பொறியும் அயிற்செறி நிலையும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெத்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும், கல்லிடு கூடையும், தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும், கவையும் கழுவும் புதையும் புழையும், ஐயவித் துலாமும் கைபெய ரூசியும், சென்றெறி சிரலும், பன்றியும் பணையும், எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும்,கோலும் குந்தமும் வேலும் சூலமும்" (சிலப். அடைக் 207-216) என்றிவை முதலாயின.) --- |
744 |
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். சிறு காப்பின் பேர் இடத்து ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. விளக்கம் (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி, 'சிறுகாப்பின்' என்றும், அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வந்து கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) --- |
745 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. விளக்கம் (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும்' அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும்; பதணப்பரப்பும் முதலாயின. --- |
746 |
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். எல்லாப் பொருளும் உடைத்தாய - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக் காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. விளக்கம் (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமைபற்றி, 'நல்லாள்' என்றார்.) --- |
747 |
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தௌ¢ந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. விளக்கம் (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும் உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும் வாயாவாயின.) --- |
748 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். முற்று அற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும், பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப் பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. விளக்கம் (உம்மை, சிறப்பும்மை. 'பற்றின் கண்ணே ஆற்றி' என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும் படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.) --- |
749 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. விளக்கம் (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப் பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து, எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.) --- |
750 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற் சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாய விடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். விளக்கம் (வாளா இருந்தாலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.) --- |
751 |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. விளக்கம் (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.) --- |
752 |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். விளக்கம் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு) --- |
753 |
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். விளக்கம் (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி, 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்று எண்ணிய தேயத்துச் சென்று என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
754 |
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். விளக்கம் (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட் பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.) --- |
755 |
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். br> அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை, புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. விளக்கம் (அவற்றொடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர் போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.) --- |
756 |
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். உறு பொளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரைத் திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். விளக்கம் (உறுபொருள்; வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்தூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம்-கலத்தினும் காலினும் வரும் வண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.) --- |
757 |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. அன்பு ஈன் அருள் என்னும் குழவி-அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். விளக்கம் (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார் மேற்செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செலிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் 'செல்வச் 'செவிலி' என்றும் கூறினார்.) --- |
758 |
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். விளக்கம் ('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று' என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமது போலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.) --- |
759 |
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூறியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. விளக்கம் ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கு எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூறியது இல்' என்றும் கூறினார்.) --- |
760 |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தார்க்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்- மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். விளக்கம் (காழ்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.) --- |
761 |
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை-யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். விளக்கம் (ஈண்டுப் 'படை' என்றது, அந்நான்கண் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.) --- |
762 |
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்-தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை, தொல்படைக் கல்லால் அரிது-அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான், அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்-கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க' [பு.வெ.மா.தும்பை.-2] என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.) --- |
763 |
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்-எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும்-அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். விளக்கம் (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.) --- |
764 |
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. அழிவு இன்றி-போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி-பகைவரால் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கணதுவே படை-தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. விளக்கம் (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை: கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்-பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என ஏறு," [பு.வெ. மா. வாகை, 22] என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.) --- |
765 |
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. கூற்று உடன்று மேல் வரினும். கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. விளக்கம் ('மருந்தில் கூற்று' ஆகலின், [புற. நா.3] உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.) --- |
766 |
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம்-படைக்கு அரணாவது. விளக்கம் (இவற்றான் முறையே பகைவரைக் கடிதிற் கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற் காத்தலும், "அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சா'மை [பு.வெ.மா. வஞ்சி 20] முதலியனவும், அறைபோகாமையும், ஆகிய செய்கைகள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.) --- |
767 | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து-மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக்கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை-அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது. விளக்கம் (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன; உரம் முதல் கோடி ஈறாயின. வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டல விரி இரண்டும், அசங்கதவிரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும். அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க. இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.) --- |
768 |
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். தானை-தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும்-பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன் மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப் பொலிவானே பெருமை எய்தும். விளக்கம் ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.) --- |
769 |
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்-தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படைவெல்லும்-படை பகையை வெல்லும். விளக்கம் (விட்டுப் போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உதறுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.) --- |
770 |
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். நிலை மக்கள் சால உடைத்து எனினும். போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல்-தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாத வழித் தானை நில்லாது. விளக்கம் (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.) --- |
771 |
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். விளக்கம் ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1 --- |
772 |
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று விளக்கம் ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.) --- |
773 |
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. தறுகண் பேராண்மை என்ப-பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு [என்ப]-அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். விளக்கம் ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை-உபகாரியாம் தன்மை. அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி. [பு.வெ.மா. வஞ்சி. 3]) --- |
774 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்-கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும்-தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். விளக்கம் (களிற்றோடு போக்கல்-களிய்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றை யல்லது எறியான் என்பதூஉம், சின மிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. [பு.வெ.மா. தும்பை. 16]) --- |
775 |
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். விளக்கம் (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.) --- |
776 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. தன் நாளை எடுத்து-தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்-அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன், விளக்கம் (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத --- |
777 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்-துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து-கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. விளக்கம் ('வையத்தைச் சூழும்' எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல்- அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.) --- |
778 |
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். விளக்கம் (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்" [புறநா. 31] என்றும், "புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" [புறா. 68] என்றும் கூறினார்.) --- |
779 |
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? விளக்கம் (இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.) --- |
780 |
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. விளக்கம் (மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால், துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.) --- |
781 |
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பின் செயற்கு அரிய யா உள: நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்து கொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள? நட்புச் செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால் செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும் முதலிய அரிய ஆகலின், 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினை வாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். விளக்கம் (நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இரு வகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழா'லின் அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது துணைவலி என 'வலியறிதலுள்' உதவி பற்றி வருஞ் செயற்கையே யாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.) --- |
782 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. நீரவர் கேண்மை பிறை நிறை நீர-அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர-மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். விளக்கம் ('நீரவர்' என்றார், இனிமை பற்றி, கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின் அறிதலும் ஆம்.) --- |
783 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும்-நூற் பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். விளக்கம் (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.) --- |
784 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. நட்டல் நகுதற் பொருட்டன்று= ஒருவனோடு ஒருவன் நட்புச்செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடல் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு= அவர்க்கு வேண்டாதன செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. விளக்கம் பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான், வேண்டப்படுவது அன்மையின், அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின் 'மேற்சென்று' என்றும். இன்சொற்கு மீளாமையின் 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். :இதனால் நட்பின் பயன் கூறப்பட்டது. |
785 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். நட்டல் நகுதற்பொருட்டன்று-ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு-அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. விளக்கம் (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.) புணர்ச்சி பழகுதல் வேண்டா-ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்-இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.) புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். "இன்றே போலக நும் புணர்ச்சி" [புறம். 58] என்றதும் அதனை. பழகுதல்-பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம் [புறநா. 217]. நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி யொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும் பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.) --- |
786 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. முகம் நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் அலர நட்குமதே நட்பாவது, விளக்கம் (நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார். இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.) --- |
787 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின், அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே, ஒருவனுக்கு நட்பாவது. விளக்கம் ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர்' விளக்கம் (நாலடி. 301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு 'யாக்கை அழிவின்கண்' என்றும் உரைப்பாரும் உளர்.) --- |
788 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. விளக்கம் (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.) --- |
789 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கோட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை- அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. விளக்கம் (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்குமேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.) --- |
790 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - 'இவர் நமக்கு இத்துணை யன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையம்' என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். விளக்கம் ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.) |
791 |
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை-ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை. விளக்கம் (ஆராய்தல்: குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு-ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும், அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை,' என்றும் கூறினார்.) --- |
792 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக் கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். விளக்கம் ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேல வாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) --- |
793 |
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-அவனோடு நட்புச் செய்க. விளக்கம் (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இன்னும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பர் அறிந்து யாக்க' என்றும் கூறினார்.) --- |
794 |
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின் கண் பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. விளக்கம் (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியை அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம்; இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்க என்பதாம்.) --- |
795 |
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல். அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக் கருதின்சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; 'ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. விளக்கம் ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.) --- |
796 |
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. விளக்கம் (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பது பற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.) --- |
797 |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். விளக்கம் நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார். விளக்கம் (நாலடி. 180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.) --- --- |
798 |
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற் கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. விளக்கம் (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.) --- |
799 |
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். விளக்கம் (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.) -- |
800 |
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. விளக்கம் (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.) --- |
801 |
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. விளக்கம் ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின, சிதைத்தல் - விலக்கல், இதனான், 'பழைமையாவது காலஞ்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு,' என்பது கூறப்பட்டது..) --- |
802 |
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை. விளக்கம் (வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்..) --- |
803 |
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிக்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? விளக்கம் (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது..) --- |
804 |
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். விளக்கம் (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பது போல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது..) --- |
805 |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க. விளக்கம் ('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது, அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது..) --- |
806 |
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். விளக்கம் (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும். --- |
807 |
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். விளக்கம் ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது..) --- |
808 |
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு, நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம். விளக்கம் (பிழையாவன: சொல்லாது நற்பொகுள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமை வல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது..) --- |
809 |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை, விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக் குறித்து விரும்பும். விளக்கம் ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி, 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்..) --- |
810 |
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். விளக்கம் (தம் பண்பாவது செய்யாத முன்போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையம் விகாரத்தால் தொக்கன. அத் திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது..) --- |
811 |
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. விளக்கம் ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர் 78) என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) -- |
812 |
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? விளக்கம் (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.) --- |
813 |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும், பொது மகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர். விளக்கம் (நட்பு-ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.) --- |
814 |
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல் வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. விளக்கம் (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்..) --- |
815 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. விளக்கம் (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் 'கேண்மை' என்னும் பெயர் கொண்டது; 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது..) --- |
816 |
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்- அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று. விளக்கம் ('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்..) --- |
817 |
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக் கோடி மடங்கு நல்ல. விளக்கம் (நட்பு: ஆகு பெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்..) --- |
818 |
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாதாகச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. விளக்கம் (முடியாதாகுதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒரு கால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார். நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது..) --- |
819 |
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. விளக்கம் (வினை சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை; இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை..) --- |
820 |
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின் கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க விளக்கம் (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது..) --- |
821 |
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். விளக்கம் (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்' என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும் உளர். --- |
822 |
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். br> இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் ''பெண் மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்'' விளக்கம் (வளையாபதி புறத்திரட்டு - பேதைமை, 18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல் இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.) -- |
823 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை விளக்கம் (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர் எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.) --- |
824 |
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்ட பொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். விளக்கம் (நகையது வகை பற்றி 'இனிய' என்றும் அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய் அவர் கொடுமை கூறப்பட்டது.) --- |
825 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல் பாற்று அன்று - யாதொரு கருமத்தினும் சொல்லால் தௌ¢தல் முறைமைத்தன்று, நீதி நூல். விளக்கம் ('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¢தல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.) --- |
826 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். விளக்கம் ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார். 'ஒல்லை உணரப்படும் என்றார்.) --- |
827 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க-பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. விளக்கம் (தம் வணக்கம் அன்று என்பது தோன்ற 'சொல் வணக்கம்' என்றும், வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லியது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான், ஒன்னாரது குறிப்பும் அவரினானாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¢யற்க', என்பது கூறப்பட்டது.) --- |
828 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். விளக்கம் (தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார், 'ஒடுங்கும்' என்பார். பவைர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும் அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¢யற்க' என்பது கூறப்பட்டது.) --- |
829 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச் செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி விளக்கம் ('நின்று' என்பதூஉம், 'அரச நீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார், அதன்மேல் வைத்துக் கூறினார் 'சாவ' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது ''கோட்டின்வாய்ச் சாக்குத்தி'' (கலித்: முல்லை. 5) என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.) --- |
830 |
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. விளக்கம் (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வௌ¢ப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, 'ஆமளவெல்லாம் நீக்குக' என்பது பெற்றாம்.) --- |
831 |
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். விளக்கம் (கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள். தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.) --- |
832 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். விளக்கம் (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.) --- |
833 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாட வேண்டுமவற்றை நாடாமையும்; நார்இன்மை - யாவர் மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். விளக்கம் (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுமவை - கருமங்களில் செய்வன தவிர்வன முறிதல் : கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.) --- |
834 |
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். ஓதி - மன மொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. விளக்கம் (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) --- |
835 |
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்பள்ளே செய்து கொள்ள வல்லனாம். விளக்கம் (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புகளிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பம் ஊழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.) --- |
836 |
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வாளுயின்; பொய்படும் ஒன்றோ புனை பூணும் - அதுவும் புரைபடும்; தானும் தளை பூணும். விளக்கம் (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.) --- |
837 |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. பதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியா நிற்பர். விளக்கம் (எல்லா நன்மையுஞ் செய்து கோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றற்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.) --- |
838 |
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். விளக்கம் ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது. --- |
839 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. விளக்கம் (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.) --- |
840 |
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும அமளிக் கண்ணே வைத்தாற் போலும். விளக்கம் (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.) --- |
841 |
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை;பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப் பொருள் இல்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். விளக்கம் (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும், நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இம்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.) --- |
842 |
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே; வேறொன்றும் இல்லை. விளக்கம் (ஒரோவழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இன்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன.இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது..) --- |
843 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. விளக்கம் (பகைவர் தாம் அறிந்த தொன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும் எக்காலத்தும் செய்ய மாட்டாமையின், அவர்க்கும் செய்தல் அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல் அறிவர் என்பது கூறப்பட்டது.) --- |
844 |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 'வெண்மை எனப்படுவது யாது?' எனின், 'ஒண்மை உடையம் யாம்!' என்னும் செருக்கு. வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். விளக்கம் ('வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற் காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.) --- |
845 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன் கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். விளக்கம் (வல்லது என ஏழாவது இறுதிக்கண் தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ!' என்பது.) --- |
846 |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். விளக்கம் (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.) --- |
847 |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். விளக்கம் ('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம்-பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி 'அருமறை சோரும்' என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.) --- |
848 |
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் -அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவு ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். விளக்கம் (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீக்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.) --- |
849 |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும். விளக்கம் (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவ தன்று என்பதாம்.) --- |
850 |
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் - உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத் தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்து அலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்; வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். விளக்கம் (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி 'உண்டு என்பது' என்றும், தானே வேண்டிய கூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல் வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.) --- |
851 |
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பார§க்கும் நோய். எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.) --- |
852 |
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. விளக்கம் (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று) --- |
853 |
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். விளக்கம் (தகவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர்; ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.) --- |
854 |
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். விளக்கம் (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள் இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.) --- |
855 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லு¡க்கும் தன்மை யவர். இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து 'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக் கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர்யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? விளக்கம் (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) --- |
856 |
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - 'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது' என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். விளக்கம் (மிகுதல் - மேம்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.) --- |
857 |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். இகல் மேவல் இன்னா அறிவினவர் - இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினையுடையார்; மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற்பொருளை அறியமாட்டார். விளக்கம் (இன்னா - அறிவு - தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றி - வழி நின்றார்க்கு உளதாவது. காணப்படும் பயத்ததாகலின் 'மெய்ந்நூல்' னப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், 'காணார்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) --- |
858 |
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்கின் ஊக்குமாம் கேடு. இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றிவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன் கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும். விளக்கம் (எதிர்தல் - ஏற்றுக் கோடல். சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.) --- |
859 |
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. ஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். விளக்கம் இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம். |
860 |
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு- மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். விளக்கம் (இன்னாதன - வறுமை, பழி, பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.) --- |
861 |
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. வலியார்க்கு மாறு ஏற்றல் ஒப்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. விளக்கம் ('வலியார்' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின், அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்க நோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.) --- |
862 |
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன், ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? விளக்கம் (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலிவளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.) --- |
863 |
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. அஞ்சும் - ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். விளக்கம் ('தஞ்சம்', 'எளியன்' ஒரு பொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.) --- |
864 |
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன்அல்லன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன் மேற் சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. விளக்கம் (நிறை - மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும் மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.) --- |
865 |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. வழி நோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றாற்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. விளக்கம் (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும், தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும், இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.) --- |
866 |
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். காணாச் சினத்தான் - தன்மையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். விளக்கம் (காணாதசினம் என்பது விகாரமாயிற்று. முன்னேனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.) --- |
867 |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும. சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும். விளக்கம் (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின. அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.) --- |
868 |
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து. குணன் இலனாயக் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல்தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. விளக்கம் (குணம் - இளைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும். துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.) --- |
869 |
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். br> அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா- அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா. விளக்கம் (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணிடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.) --- |
870 |
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை-நீதி நூலைக் கல்லாதானோட பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-எஞ்ஞான்றும் புகழ் மேவாது. விளக்கம் (சிறு பொருள்-முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.) --- |
871 |
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. விளக்கம் (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.) --- |
872 |
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. விளக்கம் ('சொல்' ஆகுபெயரான் நீதி நூல்மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று. வந்ததாகினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.) --- |
873 |
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். விளக்கம் (தனிமை - சுற்றம், நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க, அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற் கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகை போடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.) --- |
874 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்து கொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது; பெருமையுள்ளே தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. விளக்கம் (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல்: அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.) -.--- |
875 |
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையோ எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. விளக்கம் (பொருந்தியது - ஏனையதனை வேறதற்கு ஏற்றது: அப்பொழுது அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்து கொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.) --- |
876 |
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்; அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. விளக்கம் ('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது) --- |
877 |
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்தனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. விளக்கம் ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.) --- |
878 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். விளக்கம் (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போல் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.) --- |
879 |
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. முள் மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கை கொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். விளக்கம் ('களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக; அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும்' என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல். இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.) --- |
880 |
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கும் மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. விளக்கம் (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) --- |
881 |
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். நிழல் நீரும் இன்னாத இன்னா ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அது போலத் தழுவவேண்டுவனவாய தமரியல் புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். விளக்கம் (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.) --- |
882 |
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக. விளக்கம் (பகைவர்: ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.) --- |
883 |
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர். விளக்கம் ('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாது என்பதாம்.) --- |
884 |
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும். மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். விளக்கம் (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.) --- |
885 |
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். விளக்கம் (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும் முதலாயின.) --- |
886 |
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. விளக்கம் (பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) --- |
887 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார். விளக்கம் (செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடுவந்தது என்பது போலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைபாரும் உளர்.) --- |
888 |
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. உட்பகை உற்ற குடி-முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். விளக்கம் ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ்செய்வது போன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலி தேய்ந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) --- |
889 |
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். விளக்கம் (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.) --- |
890 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். விளக்கம் ('குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.) --- |
891 |
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக் கொண்டனயாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண்தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. விளக்கம் (ஆற்றல் என்பது பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும்; அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொது வகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.) --- |
892 |
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவனுக்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். விளக்கம் (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம். அவையெல்லாம் தாமே செய்து கொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.) --- |
893 |
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க. விளக்கம் (அப்பெரியாரைக் ''காலனும் காலம் பார்க்கும் பாராது - வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்'' விளக்கம் (புறநா. 41) என்றார் பிறரும். நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.) -- |
894 | கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்-மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கை காட்டி அழைத்தால் ஒக்கும். விளக்கம் (கையால் விளித்தல் - இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர் முதலிய கோடற்கு உரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக் கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) --- |
895 |
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். விளக்கம் (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங் கொடுப்பாரில்லை; உளராயின், இவர் இனி ஆகார் என்பது நோக்கி அவனோடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர்; அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.) --- |
896 |
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். விளக்கம் (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையை உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின்; (குறள் -6) அது கூடாதாகலான், அதற்கு ஏழுவாய பிழை செய்யற்க என்பதாம்.) --- |
897 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? விளக்கம் (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) --- |
898 |
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடுமாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியோடு மாய்வர். விளக்கம் (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். ''மல்லல் மலையனைய மாதவர்'' [சீவக. முத்தி. 191] என்றார் பிறரும். நிலை பெற்றார் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.) --- |
899 |
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடைய தன் பதம் இழந்து கெடும். விளக்கம் (''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.) --- |
900 |
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். சிறந்தது அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். விளக்கம் (சார்பு -அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உள்ளார் என்பது கூறப்பட்டது.) --- |
901 |
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார்; தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். விளக்கம் (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம்: அஃது அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்லவிடாமையின், விடற்பாற்று என்பதாம்.) --- |
902 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். விளக்கம் (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலம் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண, அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.) --- |
903 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். விளக்கம் (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சி யொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம்; ஆகவே, எல்லாக் குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்' என்றார்.) --- |
904 |
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. விளக்கம் ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.) --- |
905 |
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். விளக்கம் (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.) --- |
906 |
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும்; ஆண்மையிலர். விளக்கம் (அமரர்போல வாழ்தலாவது, பகைத்து வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது, கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற்கு குற்றம் கூறப்பட்டது.) --- |
907 |
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. விளக்கம் ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.) --- |
908 |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர். நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். விளக்கம் ('நல்நுதலாள்' என்பதனை, "அமை ஆர் தோள்" (குறள். 906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்த ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.) --- |
909 |
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாக. விளக்கம் (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப்பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின என்பது தோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.) --- |
910 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது. விளக்கம் ("இடன் இல் பருவத்தும்" [குறள் 218] எனவும், "இடன் இன்றி இரந்தோர்க்கு" [கலித். பாலை.1] எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப் பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம் மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.) --- |
911 |
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். விளக்கம் (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.) -- |
912 |
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக. விளக்கம் (பண்பு சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும், அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பது தோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.) --- |
913 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும். விளக்கம் (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.) --- |
914 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். விளக்கம் (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.) --- |
915 |
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதி நன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார். விளக்கம் (மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்து புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்' என்றும் கூறினார்.) --- |
916 |
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். விளக்கம் (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தந்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.) --- |
917 |
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினார் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். விளக்கம் (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார் தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.) --- |
918 |
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. மாய மகளிர் முயக்கு - உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பது தோன்ற அவர் மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.) --- |
919 |
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது; விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். விளக்கம் (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.) --- |
920 |
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. விளக்கம் (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைப்பற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கிப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.) --- |
921 |
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். கள் காதல் கொண்டு ஒழுகுவார்-கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். விளக்கம் (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார்; தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.) --- |
922 |
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். கள்ளை உண்ணற்க-அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்-அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண். விளக்கம் (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.) --- |
923 |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது-யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றச் சான்றோர் முகத்து என்? -ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்? விளக்கம் (மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண் அழியும்;அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று; ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ? என்பதாம்.) --- |
924 |
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு . கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். விளக்கம் (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.) --- |
925 |
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்-ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து-அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. விளக்கம் (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் "பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று" --- |
926 |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்-உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார்-அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்பட்டார்; அவர்தாமே யாவர். விளக்கம் (உறங்கினார்க்கும் கள்உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.) --- |
927 |
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். கள் ஒற்றிக் கண் சாய்பவர்-கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்: உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்-உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். விளக்கம் (உள்ளூர்- ஆகுபெயர். 'உண்டு' என்பது அவாய் நிலையான வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.) --- |
928 |
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். களித்து அறியேன் என்பது கைவிடுக-மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும்-அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவின் மிக்கு வெளிப்படுதலான். விளக்கம் ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.) --- |
929 |
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. களித்தானைக் காரணம் காட்டுதல்-கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குறித்தானைத் தீத்துரீஇ அற்று . நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினல் நாடுதலை யொக்கும். விளக்கம் ('களித்தானை' என்னும் இரண்டாவது, "அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ" (கலித். மருதம். 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற் போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.) --- |
930 |
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. கண் உண்ணாப் போழ்தில் களித்தானை-கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்தபொழுதின் கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல்-காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்! விளக்கம் (சோர்வு-மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.) --- |
931 |
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற் பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். விளக்கம் (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.) --- |
932 |
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. ஒன்று உய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல்-பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. விளக்கம் (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.) --- |
933 |
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப் போய்ப் பகைவர் கண்ணே தங்கும். விளக்கம் (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத் தொகை. ஆயம்-வடமொழித் திரிசொல். காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின், அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.) --- |
934 |
சிறுமை பலசெய்து சீரழ§க்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. விளக்கம் (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும் கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.) --- |
935 |
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். இல்லாகியார்-முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார்-கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலைனையும் மேற்கொணடு கைவிடாத வேந்தர். விளக்கம் (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.) --- |
936 |
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். சூது என்னும் முகடியான் மூடப்பட்டார்-தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். விளக்கம் (செல்வங்கெடுத்து நல்வுகுர கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகள் நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே, ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.) --- |
937 |
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். விளக்கம் ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.) --- |
938 |
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. சூது-சூது; பொருள் கெடுத்து-தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ-பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும் . இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். விளக்கம் (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும்; தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும், ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.) --- |
939 |
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். ஆயம் கொளின்-அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று ஐந்தும்; அடையாவாம்-அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். விளக்கம் (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம்-அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.) --- |
940 |
இழத்தொறூஉம் காதல§க்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்-சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந் தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். விளக்கம் (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவம மாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க. இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும கூறப்பட்டன.) --- |
941 |
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று நோய் செய்யும் - ஆயுள்வேத முடையாரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும். விளக்கம் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன இன்பம் செய்தற்காரணம் முன்னர்கூறுப.) --- |
942 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்த பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். விளக்கம் (குறிகளாவன-யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமைதோன்ற நின்றது.) --- |
943 |
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. அற்றால் அளவு அறிந்து உண்க= முன் உண்டது அற்றால் பின் உண்பதனை அறும் அளவறிந்து அவ்வளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது= இறப்பவும் பலவாய பிறயாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப பெற்றான், அதனை நெடுங்காலம் கொண்டுசெலுத்து நெறி அதுவாகாலான். விளக்கம் இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும், அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின் 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். பெற்றால் என்று பாடம்ஓதுவாரும் உளர். |
944 |
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறு கொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. விளக்கம் (அற்றது அறிந்த என்னும் பெயத்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப் பசித்து' என்றார். பசித்தால் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறு கொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.) --- |
945 |
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான் அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. விளக்கம் (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற்செல்லாதாயிற்று இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன. --- |
946 |
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்த அவ்வாறே உண்பவன்மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும். விளக்கம் (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறை உண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள். அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்' என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.) -- |
947 |
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவின்றி ஒருவன் மிக உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். விளக்கம் (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) --- |
948 |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோய் நாடி-மருத்துவனாயின் ஆதுரன் மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி-பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. விளக்கம் (காரணம்: உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன்-நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்த செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு, 'அது தணிக்கும் வாய்' என்றார். "கழுவாயும் உள"[புற. 34] என்றார் பிறரும். பிழையாமை-பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.) --- |
949 |
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். கற்றான்-ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல்- அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன் செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. விளக்கம் (ஆதுரன் அளவு-பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு-சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம்-மேற் சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்த செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.) --- |
950 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து. மருந்து-பிணிக்கு மருந்தாவது; உற்றவன் - அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து-அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. விளக்கம் (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார். 'நான்குகூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன்வகை நான்காவன. பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் எற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதுல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவை யெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின், இத்தொகுதியையும் 'மருந்து' என்றார்; ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும் என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.) --- |
951 |
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. விளக்கம் ('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம். --- |
952 |
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். விளக்கம் (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.) --- |
953 |
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.) --- |
954 |
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். விளக்கம் ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.) --- |
955 |
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். விளக்கம் (தொன்று தொட்டு வருதல்) விளக்கம் ('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.) --- |
956 |
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார். மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். விளக்கம் (அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.) --- |
957 |
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதக்கண் மறுப்போல் உயர்ந்து. குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும. விளக்கம் (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.) --- |
958 |
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். விளக்கம் (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) --- |
959 |
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அது போலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். விளக்கம் (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.) --- |
960 |
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. விளக்கம் (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்" (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல. "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்" எல்லாரும் அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.) --- |
961 |
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. விளக்கம் (அமையாமை - இறத்தல். 'குடிபிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநூல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.) --- |
962 |
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். விளக்கம் (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.) --- |
963 |
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. விளக்கம் (பணியாமை தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமை சிறப்புக் கூறப்பட்டது.) --- |
964 |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனினின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர அனையர் - தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர். விளக்கம் (அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.) --- |
965 |
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். விளக்கம் ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.) --- |
966 |
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. இகழ்வார்பின் சென்று நிலை - மனத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது? விளக்கம் (புகழ் பயப்பதனை 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்ற என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற்கு குற்றம் கூறப்பட்டது.) --- |
967 |
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தல§ன் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று . அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. விளக்கம் (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு; அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.) --- |
968 |
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? விளக்கம் ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப் பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப் பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊண்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.) --- |
969 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர். விளக்கம் (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.) --- |
970 |
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவானவூர்தி - எய்துவர்," விளக்கம் (புறநா. 27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
971 |
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இனி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். விளக்கம் (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. "ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்வான்" [நாலடி. செல்வம் நிலையாமை. 9] என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' [குறள். 26] என்றாராயினும், ஈண்டு அவை அளவிறந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு, "உள்ள வெறுக்கை" என்றும், அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளி ஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.) --- |
972 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். விளக்கம் (வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய் அளவிறந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.) --- |
973 |
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்; கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் - அவை செய்து பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். விளக்கம் (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமைமாத்திரத்தானும் செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.) --- |
974 |
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். விளக்கம் (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.) --- |
975 |
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். விளக்கம் ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை' உடையவர் என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.) --- |
976 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப் பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினையாம் கோடும் என்னும் கரத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. விளக்கம் (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.) --- |
977 |
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின். சிறப்புத் தானும் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண் படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின். இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம். விளக்கம் (தருக்கினை மிகச் செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.) --- |
978 |
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை விளக்கம் (என்றும்) தன்னை வியந்து அணியும்-மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். விளக்கம் (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்படடன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை' (குறள். 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. 'ஆம்' என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக் கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.) --- |
979 |
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். பெருமை பெருமிதம இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக் கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல், விளக்கம் ('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.) --- |
980 |
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். விளக்கம் (மறைத்தலும் கூறலும ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகு பெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.) --- |
981 |
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.) --- |
982 |
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. விளக்கம் (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.) --- |
983 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு - யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு - எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. விளக்கம் (எண் 'ஓடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.) --- |
984 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். விளக்கம் (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.) --- |
985 |
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே. விளக்கம் (ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன் கூறினார்.) --- |
986 |
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துரை அல்லார் கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். விளக்கம் (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.) --- |
987 |
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? சிறப்பு உம்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை, வினா, எதிர்மறிப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.) --- |
988 |
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின். சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப் பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது விளக்கம் (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார் சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். ''பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'' (புறநா. 350) என்றார் பறிரும். ஏகதேச உருவகம்.) --- |
989 |
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்-சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்-ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம் திரியார். விளக்கம் (சாண்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும். அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். "பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ" (புறநா. 330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.) --- |
990 |
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலத்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். விளக்கம் ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான், அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர் இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
991 |
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.) -- |
992 |
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. விளக்கம் (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.) --- |
993 |
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. உறுப்பு ஒத்தல் மக்கல் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல். விளக்கம் (வடநூலார் 'அங்கம்' என்றமையின் 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன் மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று; வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.) --- |
994 |
யனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். விளக்கம் ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு, நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், 'அதனைப் பாராட்டும்' என்றார்.) --- |
995 |
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. விளக்கம் ('பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.) --- |
996 |
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். விளக்கம் ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பது பட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும், அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.) --- |
997 |
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மைபோலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். விளக்கம் (அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது; ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட்பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.) --- |
998 |
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார் மாட்டும்; பண்பு ஆற்றராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். விளக்கம் (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.) --- |
999 |
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். விளக்கம் (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.) --- |
1000 |
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற்போலும். விளக்கம் ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம் மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.) --- |
1001 |
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். விளக்கம் (வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல். அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற் செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) --- |
1002 |
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். விளக்கம் (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.) --- |
1003 |
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே. விளக்கம் (இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.) --- |
1004 |
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? விளக்கம் (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், ' என் எண்ணுங்கொல்லோ'' என்றார். ஓகாரம் - அசை. இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) --- |
1005 |
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. விளக்கம் (இன்பத்தினும் அறம் சிறந்தமையின், கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.) --- |
1006 |
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயினான்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். விளக்கம் (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர். நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.) --- |
1007 |
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைத் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. விளக்கம் (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.) --- |
1008 |
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். விளக்கம் ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அன்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.) --- |
1009 |
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். விளக்கம் (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.) --- |
1010 |
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரே வறங்கூர்ந் தனையது உடைத்து. சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து. விளக்கம் (துனி - வெறுப்பு; அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்பு படாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.) --- |
1011 |
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். விளக்கம் ('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும் உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) --- |
1012 |
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே; அவையல்ல. விளக்கம் (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.) --- |
1013 |
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட, அதனை விடாது. விளக்கம் ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) --- |
1014 |
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை. சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். விளக்கம் (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.) --- |
1015 |
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர். விளக்கம் (ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
1016 |
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். விளக்கம் (பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.) --- |
1017 |
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். விளக்கம் (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.) --- |
1018 |
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து விளக்கம் ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.) --- |
1019 |
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். விளக்கம் (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.) --- |
1020 |
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று. அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். விளக்கம் (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.) --- |
1021 |
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன் குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. விளக்கம் ('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்' என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமையன்மையானும், அவை உரையன்மை அறிக.) --- |
1022 |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால், குடி நீளும் - ஒருவன் குடி உயரும். விளக்கம் (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.) --- |
1023 |
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். குடி செய்வல் என்னும் ஒருவற்கு - 'என் குடியினை உயரச் செய்யக் கடவேன்' என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். விளக்கம் (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்பட்டது.) --- |
1024 |
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ வேண்டாமல், தானே முடிவெய்தும். விளக்கம் (குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது. --- |
1025 |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். விளக்கம் (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.) --- |
1026 |
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். விளக்கம் (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினை யாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.) --- |
1027 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். விளக்கம் (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.) --- |
1028 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. விளக்கம் (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - 'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ?' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.) --- |
1029 |
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு. குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ? விளக்கம் (''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.) --- |
1030 |
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண் மகன் பிறவாத குடியாகிய மரம். விளக்கம் (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்; ''தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன, ஓங்குகுலம் நைய அதனுட்பிறந்த வீரர், தாங்கல் கடன்'' [சீவக. காந்தருவ. 6] என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.) --- |
1031 |
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் தலை உழவே - ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. விளக்கம் (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
1032 |
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார்உலகத்தாருக்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். விளக்கம் ('காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு'' (பட்டினப் 283-4) என்றார்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை, கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின்' 'ஆணி' என்றார், 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.) --- |
1033 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவரைப் பின் செல்கின்றவர். விளக்கம் ('மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.) --- |
1034 |
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினையுடையராய தண்ணளியுடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் - பலவேந்தர் - குடை நிழலதாய மண் முழுதினையும் தம் வேந்தர்குடைக்கீழே காண்பர். விளக்கம் (அலகு - கதிர்; அஃது ஈண்டு ஆகு பெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போன்றலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி; ஒற்றுமை பற்றித் 'தங்குடை என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்; ''ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே'' [புறநா. 35] என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண் முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; ''இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்'' [சிலப். நாடுகாண். 149] என்றார் பிறரும்.) --- |
1035 |
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். விளக்கம் ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.) --- |
1036 |
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. விளக்கம் (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.) --- |
1037 |
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும். விளக்கம் (பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்,' 'சான்று' என்பன திரிந்து நின்றன.) --- |
1038 |
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர் கால்யாத்தலினும் நன்று. விளக்கம் (ஏர் - ஆகுபெயர். காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல், உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர் கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.) -- |
1039 |
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன் கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும். விளக்கம் (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி, இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.) --- |
1040 |
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும். விளக்கம் (உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.) --- |
1041 |
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. விளக்கம் (இன்னாதது - துன்பஞ் செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று.) --- |
1042 |
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். விளக்கம் ('இன்னாமையென ஒருபாவி' என்பதற்கு மேல் ''அழுக்காறென ஒரு பாவி'' [குறள்.168] என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.) -- |
1043 |
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. தல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். விளக்கம் (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். ''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்'' [மணி 11 - 76] என்றார் பிறரும். தோலாவது ''இழுமென் மொழியால் விழுமியது நுவறல்'' [தொல். பொருள். செய்யுள். 239] என்றால் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் 'உடம்பு' கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.) --- |
1044 |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். இற்பிறந்தார் கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். விளக்கம் (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளி வருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.) --- |
1045 |
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். விளக்கம் (குரை - இசை நிறை. செலவு-விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.) --- |
1046 |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல் கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். விளக்கம் (பொருளின்மையைத் தலைப்படுதலாவது, 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும்' என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.) --- |
1047 |
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். விளக்கம் (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.) --- |
1048 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ; வந்தால் இனி யாது செய்வேன்? விளக்கம் (அவ் வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள். 1045) துன்பங்கள், நெருநல்மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.) --- |
1049 |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. விளக்கம் ('நெருப்பினும் நிரப்புக் கொடிது,' என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.) --- |
1050 |
துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்: உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். விளக்கம் (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார். நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப்பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி, 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.) --- |
1051 |
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். விளக்கம் ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர் கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.) --- |
1052 |
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅ வரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். விளக்கம் (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதி யொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.) --- |
1053 |
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. விளக்கம் (''சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு'' [குறள். 963] என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய் அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.) --- |
1054 |
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது சுரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். விளக்கம் (உம்மை - ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெடவாராமையின் 'ஈதலே போலும்' என்றார். ஏகாரம் - ஈற்றசை.) --- |
1055 |
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம் பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே; பிறிதொன்றான் அன்று. விளக்கம் (அவர் இல்லையாயின். மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.) --- |
1056 |
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம் விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். விளக்கம் (கரத்தல், ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி, 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.) --- |
1057 |
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. விளக்கம் (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், ''உள்ளுள் உவப்பது உடைத்து'' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.) --- |
1058 |
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். விளக்கம் (ஐகாரம், அசைநிலை ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், ''ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர்,'' என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) --- |
1059 |
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்து கோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார்மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. விளக்கம் (தோற்றம் - ஆகுபெயர். 'மேவுவார்' என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின், அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.) --- |
1060 |
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி 'இவன் எனக்கு ஈகின்றிலன்' என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். விளக்கம் (யாவர்க்கும் தேட வேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.) --- |
1061 |
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது 'இவர் வரப்பெற்றோம்' என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. விளக்கம் (நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின். உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.) --- |
1062 |
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. விளக்கம் (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.) --- |
1063 |
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. விளக்கம் (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமைத் தீர்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.) --- |
1064 |
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற்சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளா தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. விளக்கம் (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.) --- |
1065 |
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில். தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும்; உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. விளக்கம் (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.) --- |
1066 |
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில். ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு இளிவந்தது இல் - அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிந்தது பிறிது இல்லை. விளக்கம் (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும் இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.) --- |
1067 |
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - 'யாது சொல்லி?' எனின், நுமக்கு இரக்க வேண்டுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி, விளக்கம் (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.) --- |
1068 |
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி -'இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும்,' என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். விளக்கம் (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதற்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.) --- |
1069 |
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார்முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும். விளக்கம் (''இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.'' (நாலடி. 305) என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.) --- |
1070 |
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? விளக்கம் (உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்?' என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல், சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர் கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்து நிற்கும்? இரண்டானும் போமேயன்றோ?' என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.) --- |
1071 |
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. விளக்கம் (முழுதும் ஒத்தல் தேற்றே காரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.) --- |
1072 |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ் மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர் போல அவை காரணமாகத்தம் நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். விளக்கம் (நன்று என்பது சாதியொருமை உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும், இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலாம், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.) _--- |
1073 |
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். விளக்கம் (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.) --- |
1074 |
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர§ன் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். கீழ்-கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். விளக்கம் (அகப்பட்டி; அகமாகிய பட்டி; பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார்; ''நோதக்க செய்யும் சிறுபட்டி'' (கலித். குறிஞ்சி.15) என்றார் பிறரும்.) --- |
1075 |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். விளக்கம் (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப் படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.) --- |
1076 |
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்டமறைகளை இடந்தோறும் தாங்கிக் கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். விளக்கம் (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.) --- |
1077 |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு; ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத்தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். விளக்கம் (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.) --- |
1078 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். சொல்லப் பயன்படுவர் சான்றோர் - மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். விளக்கம் (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.) --- |
1079 |
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காணவற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். விளக்கம் (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில் மேல் நின்றன; அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப்படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.) --- |
1080 |
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக் கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேற எத்தொழிற்கு உரியர்? விளக்கம் (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும். கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒகு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.) --- |
பொருட்பால் முற்றிற்று