என் சரித்திரம்
பாகம் 2 (அத்தியாங்கள் 26-50)
உ.வே.சாமிநாதையரவர்கள்
en caritiram (autobiography)
part 2, chapters 26-50
of U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank the Tamil Virtual Academy for providing an electronic version of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
என் சரித்திரம்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள்
Source:
என் சரித்திரம்
உ.வே. சாமிநாதையரவர்கள்
1ம் பதிப்பு வெளியீடு எஸ். கல்யாணசுந்தர அய்யர், 1950
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்,
சென்னை, 2ம் பதிப்பு, 1982
உள்ளடக்கம்
26. மாயூரப் பிரயாணம்
27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள்
28. பாடம் கேட்கத் தொடங்கியது
29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
30. தளிரால் கிடைத்த தயை
31. என்ன புண்ணியம் செய்தேனோ
32. தமிழே துணை
33. அன்பு மயம்
34. புலமையும் வறுமையும்
35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்
36. எல்லாம் புதுமை
37. எனக்குக் கிடைத்த பரிசு
38. நான் கொடுத்த வரம்
39. யான் பெற்ற நல்லுரை
40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்
41. ஆறுமுக பூபாலர்
42. சிலேடையும் யமகமும்
43. ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்
44. திருவாவடுதுறைக் காட்சிகள்
45. புலமையும் அன்பும்
46. இரட்டிப்பு லாபம்
47. அன்பு மூர்த்திகள் மூவர்
48. சில சங்கடங்கள்
49. கலைமகள் திருக்கோயில்
50. மகா வைத்தியநாதையர்
அத்தியாயம் 26. மாயூரப் பிரயாணம்
செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருஷம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 டிசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகபட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம் ஒருங்கே என் ஞாபகத்துக்கு வந்தன. உத்தமதானபுரம் பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விஷயங்களால் என் மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருஷ்டி செய்துகொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக்கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம் சொல்லுவது போலவும் நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும் என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்துகொள்வேன்; கனாவும் காண்பதுண்டு.
செங்கணத்தினின்றும் புறப்பட்டது
நல்ல நாளில் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்களிடம் விடைபெற்றுச் செங்கணத்திலிருந்து நாங்கள் புறப்பட்டோம். அந்தப் பக்கங்களில் எங்கள் குடும்ப நன்மையிலும், என் கல்வி அபிவிருத்தியிலும் கருத்துடைய பலர் பல ஊர்களில் இருந்தனர். அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற எண்ணினோம். ஆனால் அது சாத்தியமன்று என்று கருதிக் குன்னத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களிடம் மாத்திரம் சொல்லிக்கொண்டோம். பார்த்த நண்பர்களிடம் மற்றவர்களுக்கும் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம். அங்கிருந்து அரியிலூர் வந்து சேர்ந்தோம்.
அரியிலூரில்
என் முதல் தமிழாசிரியராகிய சடகோபையங்காரிடம் எனக்குக் கிடைக்கப் போகும் பாக்கியத்தைப் பற்றிச் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற எண்ணி அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவர் வெளியே சென்றிருந்தார். ஓரிடத்தில் ஒரு புதிய புஸ்தகம் இருந்தது. அந்த வீட்டை என் சொந்த வீட்டைப்போலவே எண்ணிப் பழகியவனாதலால் அப்புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை, மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திரகவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருஷரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்.
அப்புஸ்தகத்தை ஆவலோடு புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கையில், “வேங்கடராமா, எப்பொழுது வந்தாய்?” என்று சொல்லியவண்ணம் சடகோபையங்கார் உள்ளே வந்தார். அவரை நான் கண்டவுடன் நமஸ்காரம் செய்தேன். பின்பு, நான் பிள்ளையவர்களிடம் படிக்கப் போவதாக அவரிடம் சொன்னேன்.
“நல்ல காரியம். அவர் ஒரு மகா கவி; சிறந்த புலவர்; மிகவும் பெரியவர்; இந்தப் புராணம் அவர் இயற்றியதுதான். இங்குள்ள வக்கீல் பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் சில காலமாக இதனைப் பாடங் கேட்டு வருகிறார். அதனால் இதை நான் படிக்க நேர்ந்தது. வாக்கு மிகவும் கம்பீரமாகச் செல்லுகிறது. அத்தகைய பெரியவரிடத்தில் பாடங் கேட்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரிடம் மனம்கோணாதபடி நடந்துகொண்டு கற்றுக்கொள். நீ எப்போது அவரிடம் போவதாக நிச்சயித்தாயோ அப்போதே உன் கஷ்டமெல்லாம் தீர்ந்ததென்றே சொல்வேன். நன்றாகப் படித்துப் பெரிய வித்துவானாக விளங்க வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
“எல்லாம் நீங்கள் ஊட்டின தமிழ்ச் சுவையினால் உண்டான பயனே!” என்று பணிவாக நான் விடை கூறினேன்.
சில அன்பர்கள் விரும்பியபடி நாங்கள் பத்து நாட்கள் அரியிலூரில் தங்கியிருந்தோம். சடகோபையங்காரிடம் திருவரங்கத்தந்தாதியில் பாடங் கேளாமல் பாக்கியிருந்த செய்யுட்களை அக்காலத்தில் கேட்டுப் பொருள் தெரிந்துகொண்டதன்றி முன்புள்ள செய்யுட்களில் உள்ள சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்தேன்.
கீழைப்பழுவூர்
அரியிலூருக்கு அருகில் உள்ள கீழைப்பழுவூர் என்னும் ஸ்தலத்திலிருந்த செல்வராகிய சபாபதி பிள்ளை யென்பவர் என் தந்தையாரைச் சந்தித்துத் தம் ஊருக்கு வந்து சில தினங்கள் இருக்கவேண்டுமென்று கூறவே, அவர் விருப்பத்தின்படியே அங்கே சென்றோம். ஒரு வாரம் அவ்வூரில் தங்கியிருந்தோம். அவர், தஞ்சையில் வக்கீலாக இருந்த ராவ்பகதூர் கே. எஸ். சீனிவாஸ பிள்ளையின் தமையனார். அவர்களுடைய தந்தையாராகிய சிவசிதம்பரம் பிள்ளைக்கும் என் தந்தையாருக்கும் இளமை முதற் பழக்கம் உண்டு. அவர் எங்கள் குடும்பத்திற்கு அதிக உதவி செய்தவர்.
சபாபதி பிள்ளை தமிழ்ப் பயிற்சியுடையவர். அவர் தஞ்சைவாணன் கோவை மூலமுள்ள புஸ்தகத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் எனக்குக் கொடுத்து உதவினார். செங்கணத்தில் திருக்கோவையாரைப் படித்த காலத்தில் ரெட்டியார் மூலமாக அகப்பொருளிலக்கணத்தை ஒருவகையாகத் தெரிந்துகொண்டிருந்தேன். அதனால் தஞ்சைவாணன் கோவையிலுள்ள பொருளமைதி எனக்கு நன்கு விளங்கியது. அதன் செய்யுள் நடைசிக்கலின்றித் தெளிவாக இருத்தலின் எனக்கு எளிதிற் பொருள் புலப்பட்டது. சில நாட்களில் அதைப் படித்து முடித்தேன்.
உத்தமதானபுரம் வந்தது
அப்பால் அவ்வூரிலிருந்து புறப்பட்டுப் பெரிய திருக்குன்றம் வந்து சிலநாள் தங்கிப் பிறகு உத்தமதானபுரம் சென்றோம். உத்தமதானபுரத்திலிருந்து அப்பால் மாயூரம் செல்ல வேண்டியதுதான். இந்த நிலையில் அதுகாறும் என்னைப் பிரிந்திராத என் பெற்றோர்கள் நான் தனியே மாயூரத்தில் இருக்கவேண்டுமே என்பது பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கினர்.
“நம்முடைய காலநிலை இப்படி இருக்கிறது. குழந்தையைவிட்டு நான் எப்படித் தனியே இருப்பேன்! இவனுக்கு வேண்டிய ஆகாரத்தை அங்கே பிரியத்துடன் யார் செய்துபோடுவார்கள்? இவனுக்குத் தன் கையாலேயே எண்ணெய் தேய்த்துக்கொள்ளக்கூடத் தெரியாதே!” என்று என் தாயார் வருந்தினார்.
“என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலக்ஷேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள ஜனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள். மாயூரத்தில் அப்படி யார் இருக்கிறார்கள்? இவனுக்கே ஆகாரம் முதலிய சௌகரியங்கள் கிடைக்குமோவென்று சந்தேகப்படுகிறேன். அவற்றிற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப் பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது!” என்று என் தந்தையார் வருந்தினார்.
மந்திரோபதேசம்
“ஈசுவர சகாயம் இருந்தால் எல்லாம் கை கூடும” என்ற கொள்கையையுடைவர் என் தந்தையார். சிவபூஜை, மந்திர ஜபம் முதலியவைகளில் அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்குச் சில மந்திரங்களைத் தக்கவர்களைக்கொண்டு உபதேசம் செய்விக்கவேண்டுமென்று அவர் கருதினார்.
உத்தமதானபுரத்திற்கு வடக்கிலுள்ள தியாகசமுத்திரமென்னும் ஊரில் நீலகண்டைய ரென்பவர் கிராமக் கணக்கு வேலைபார்த்து வந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர் சங்கீதப் பயிற்சி உடையவர். கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்கள் பல அவருக்குத் தெரியும். மந்திர சாஸ்திரத்திலும் அவர் வல்லவர். பல தெய்வங்களை உபாசித்து வந்தார். பலவகையான மந்திர ஜபங்களையும் யந்திர பூஜையையும் அவர் செய்து வந்தார். சர்ப்ப விஷத்தைப் போக்குவதில் நிபுணர். நல்லபாம்பு கடித்து மயக்கமுற்ற ஒருவனை ஞாபகமே இல்லாத நிலையில் அவரிடம் எடுத்து வந்தால் பத்து நிமிஷத்தில் மந்திரித்து அவன் தானே எழுந்து நடந்து செல்லும்படி செய்வார்.
என் தந்தையார் அவரிடத்தில் என்னை அழைத்துச் சென்று ஸ்ரீ வல்லபகணபதி மந்திரம், ஸ்ரீ நீலகண்ட மந்திரம், ஸ்ரீ சுப்பிரமணிய ஷடாக்ஷரம் என்பவற்றை உபதேசம் செய்யச் சொன்னார். அவர் அவற்றை உபதேசித்து, “உனக்கு மேலும் மேலும் சௌக்கியம் உண்டாகும்” என்று ஆசீர்வாதம் செய்தார். சில தினம் அவரோடு இருந்து பழகிய பின் அவரிடம் விடைபெற்று உத்தமதானபுரம் வந்து சேர்ந்தோம்.
பிரயாண ஏற்பாடு
மாயூரப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினோம். என் தந்தையார் கையிலோ பணம் இல்லை. அதனை அறிந்து அவர் நண்பரும் உத்தமதானபுரத்துக்கு மிகவும் சமீபமான உத்தமதானி என்னும் ஊரில் இருந்தவருமான சாமு மூப்பனர் என்பவர் செலவுக்காக ரூபாய் இருபத்தைந்து கடனாகக் கொடுத்தார். அந்தத்தொகை அப்பொழுது மிகப்பெரிய சம்பத்தைப்போல உதவியது; என் படிப்புக்கு மூலாதாரமாக இருந்தது. உத்தமதானபுரத்திலும் பக்கத்திலுமுள்ள பந்துக்களிடம் நான் மாயூரம் போவதாக விடைபெற்றுக்கொண்டேன்.
என் தாயார் அப்போது கருவுற்றிருந்தமையால் என் தந்தையார் அவரையும் என்னையும் அழைத்துக்கொண்டு சூரியமூலைக்குச் சென்றார். அங்கே நாங்கள் சில தினம் இருந்தோம். என் மாதாமகர் நான் பிள்ளையவர்களிடம் படிக்கச் செல்வதை அறிந்து மகிழ்ந்து என்னை ஆசீர்வதித்தார்.
மாயூரம் சென்றது
அப்பால் என் தாயாரை அங்கே விட்டுவிட்டு நானும் என் தந்தையாரும் மாயூரம் வந்து சேர்ந்தோம். அவ்வூரில் மகாதானபுரத் தெருவில் என் சிறிய தந்தையார் வேட்டகத்தில் தங்கினோம். அப்பொழுது அங்கே என் சிறிய தாயாரும் வந்திருந்தார். எனக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் சந்தோஷத்தினால் உண்டாகும் படபடப்பு அதிகமாயிற்று. என் தந்தையாருக்கோ வரவரக் கவலையின் அறிகுறி முகத்தில் தோற்றத் தொடங்கியது. பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடிவைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை.
ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண, பாரத, பாகவத காலக்ஷேபம்செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வரவேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன்வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்துவிட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெறவேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது.
மற்ற யாவரும் வேறு வேறு துறையில் என்னைச் செலுத்த எண்ணியபோது என் எண்ணம் நிறைவேறுவது எவ்வளவு கஷ்டமானது! திருவருளின் துணையால் அது நிறைவேறும் நிலைமையில் இருந்தது. “தமிழ்நாட்டிலே இணையற்று விளங்கும் ஒரு தமிழாசிரியரிடம் நான் அடைக்கலம் புகுந்து தமிழமுதத்தை வாரி நுகர்ந்து செம்மாந்து நிற்பேன்” என்ற நினைவில் முன் பட்டபாட்டையும் மேலே என்ன செய்வது என்ற யோசனையையும் மறந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோற்றியது. பிள்ளையவர்கள் முன்னே சென்று அவரைக் கண்ணாரக் கண்டு அவர் பேசுவதைக் கேட்டு அவர் மாணாக்கர் கூட்டத்தில் ஒருவனாகச் சேரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்றேன்.
----------
அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல்நாள்
மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் ஸ்நானம் முதலியன செய்துவிட்டுப் பூஜை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூஜைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூஜையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.
பூஜைக்குப் பின் போஜனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும் அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில் நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.
அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலுள்ள வீட்டில் இருந்து வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.
இருவர்
அங்கே முன்கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி ருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என் தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம். மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?” என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.
உடனே தந்தையார், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறிமாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன், “அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச் சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம் திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.
“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.
என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராஜமுதலியாரென்னும் செங்குந்தச் செல்வர். பிள்ளையவர்களைக்கொண்டு அந்த ஸ்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.
என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.
“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர் விடை கூறினார்.
தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக் கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்காரின் ஆசிரியர். என்னை அவரிடம் படிக்கச் செய்யலாமென்று எந்தையார் நினைத்ததுண்டு. அவருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்றும் மிக்க அடக்கம் உள்ளவரென்றும் கூறி அவருடைய குணவிசேஷங்களைப் பற்றித் தந்தையார் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப்பிள்ளை ஒருவர் வந்தார். அவரிடம் என் தகப்பனார் பிள்ளையவர்களை நாங்கள் பார்க்க வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அங்ஙனமே போய்ச் சொல்ல, பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.
முதற் காட்சி
அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலக்ஷியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.
அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது.
பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக்கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.
வந்த காரியம் என்ன?
அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படி சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.
“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”
“உங்கள் பெயர் என்ன?”
“என் பெயர் வேங்கடஸூப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.
“வேங்கடஸூப்பனென்பது நல்ல பெயர். வேங்கட ஸூப்ரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில்கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”
அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விஷயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.
“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருஷ்ணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.
“இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியுமோ?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.
“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருஷ்ணையரிடம் சிலகாலம் அப்பியாசம் செய்ததுண்டு.”
பரீட்சை
இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிஷங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி ராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை, “தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்” என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல் சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பலகாலமாகப் பிழைபட்ட பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன்வந்தது. என் நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன். நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான் சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை. எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.
“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின் சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” என்னும் பாடலைச் சாவேரி ராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும் சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.
“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான் இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.
“நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான் “பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நிகண்டை மனனம் செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய்விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.
சந்தேகப் பேச்சு
அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.
அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.
“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”
அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.
தவம் பலித்தது
என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது சொன்னேன்; வேண்டிக்கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது.
அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப் படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.
அக்கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர் வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான் இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.
“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.
“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள் செல்வமுள்ளவர்களல்லர். அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது. தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போஷித்துப் பாடஞ்சொல்லி வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு எந்தையார் சொன்னார்.
பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”
எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன் ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பிவிடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பிக்கலாம்.”
என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அஸ்தமன சமயமாகிவிட்டமையால் நாங்கள் மறுநாட் காலையில் வருவதாக விடைபெற்றுக்கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்.
நாங்கள் போகும்போது எங்கள் மனத்தை அமிழ்த்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது. என் தந்தையார் அடிக்கடி, “ஜாக்கிரதையாக இருப்பாயா? தேக சௌக்கியத்தைக் கவனித்துக்கொள்வாயா? கடிதம் எழுதுவாயா? வருத்தப்படாமல் இருப்பாயா?” என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னைத் தனியே விட்டுச்செல்வதற்கு அவர் உள்ளம் ஏவ்வளவு தத்தளித்ததென்பதை அவை விளக்கின.
---------
அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது
பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோஷ உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி நமக்கு ஒரு குறைவும் இல்லை” என்ற நம்பிக்கை என் அந்தரங்கத்திலிருந்து ஒளிவிட்டு வந்தது.
கனவும் பயனும்
என் தந்தையாரும் அன்று இரவு என்னைப் போலவே அமைதியாகத் தூங்கவில்லை. அதற்குக் காரணம் என்னைத் தனியே விட்டுச்செல்ல வேண்டுமே என்ற கவலைதான். அதே ஞாபகத்தோடு அவர் படுத்திருந்தார்.
படுக்கையிலிருந்து காலையில் எழுந்தவுடன், “சாமா” என்று என்னை அழைத்தார். “ராத்திரி நான் ஒரு சொப்பனம் கண்டேன். தம்பதிகளாகிய ஒரு கிழவரும் கிழவியும் வந்து என்னிடம் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, ‘உன் பிள்ளைக்குக் கொடு; அவனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அது முதல் எனக்கு மிக்க தைரியம் உண்டாகிவிட்டது. உனக்கு க்ஷேமம் உண்டாகுமென்றே நம்புகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்று சொன்னார். எனக்கோ அச்சமயத்தில் ஒரு கவலையும் இல்லை. ஆனாலும் அவர் என் கவலையைப் போக்குபவரைப் போலத் தம்முடைய கவலைக்கு ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டார்.
பொழுது நன்றாக விடிந்தது. காலை நியமங்களை முடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றோம். முதற்கட்டில் சைவச்செல்வர்கள் சிலருடன் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் புன்னகையோடு, “வாருங்கள்; உட்காருங்கள்” என்று சொன்னார். முதல் நாள் அவருடைய வார்த்தையில் அயலாரை உபசரிப்பதுபோன்ற தொனி இருந்தது. இரண்டாம் நாளோ அவர் வாய் என் தந்தையாரை வரவேற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் பார்வை என்மேல்தான் விழுந்தது. அவர் குரலில் ஒரு பற்றோடு கூடிய அன்பு தொனித்தது. முதல் நாள் எங்களை அயலாராக எண்ணிய அவர் அன்றைத் தினம் தம்மைச் சேர்ந்தவர்களாகவே எண்ணினார் போலும்!
“இராத்திரி ஆகாரம் சௌகரியமாக இருந்ததா? நீங்கள் தங்கியுள்ள ஜாகை வசதியாக இருக்கிறதா?” என்று வினவினார்.
“எல்லாம் சௌகரியமாகவே இருக்கின்றன. நேற்று ராத்திரி கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். இவனுடைய க்ஷேமத்தைக் குறித்து ஸந்நிதியில் பிரார்த்தனை செய்தேன். ராத்திரி தூக்கத்தில் நான் ஒரு சொப்பனம் கண்டேன்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் “என்ன சொப்பனம் அது?” என்று கேட்கவே தந்தையார் அதை எடுத்துரைத்தார். “இது நல்ல சகுனம். ஸ்ரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் கிழவர், கிழவி என்று சொல்வது இந்த ஸ்தலத்தில் வழக்கம். உங்கள் கனவில் தோன்றியவர்கள் அவ்விருவருமே. நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; இவர் க்ஷேமமாக இருப்பார்” என்று அந்தக் கனவுக்குப் பொருள் கூறினார் அப்புலவர் கோமான்.
என் தந்தையார் தம் கனவில் ஸ்ரீ மாயூரநாதரே எழுந்தருளியதாக நம்பித் திருப்தி அடைந்தார்; நானோ பிள்ளையவர்கள் நேரே இருந்து. “நீங்கள் இனி இவரைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்” என்று கூறியதுபற்றித் திருப்தியுற்றேன்.
பேச்சினிடையே அனுபவ வார்த்தைகள்
அப்பால் அங்கே வந்திருந்த கனவான் ஒருவர் ஆறுமுக நாவலரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார். நாவலர் சிதம்பரத்தைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றதும் அவர் வரவை அறிந்து யாழ்ப்பாணத்து வித்துவான்களும் பிரபுக்களும் கடற்றுறையில் அவரை எதிர்கொண்டழைத்துச் சென்று உபசரித்ததும் பிறவுமாகிய சமாசாரங்களை அவர் சொன்னார். மற்றொருவர் வடலூரில் இராமலிங்க வள்ளலார் இருந்ததையும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் விரிவாகக் கூறினார். பிறகு பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் அரியிலூர் முதலிய ஊர்களைப்பற்றி விசாரித்தனர். அங்கே உள்ளவர்கள் வித்துவான்களிடம் காட்டும் ஆதரவையும் பிறருக்குத் தங்களால் இயன்ற உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏழைகளுக்கும் இருப்பதையும் தகப்பனார் எடுத்துச் சொன்னார்.
“காட்டுப் பிரதேசங்களென்று நாம் சொல்லுகிறோம். அங்கேதான் ஜீவகாருண்யமும் அன்பும் நிரம்பியிருக்கின்றன. நாகரிகம் அதிகமாக ஆகச் சுயநலமும் அதிகமாகின்றது. நாகரிகமுள்ள இடங்களில் உபகார சிந்தையுள்ளவர்களை அருமையாகத்தான் பார்க்கிறோம்” என்று பிள்ளையவர்கள் கூறினர்.
அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவரது அனுபவத்திலிருந்து எழுந்தவை என்று பிற்காலத்தில் நான் அறிந்தேன்.
பரீட்சை
பிறகு நாங்கள் விடைபெற்றுச் சென்று பகல் உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர் திருநாகைப் காரோணப் புராணத்தை வருவித்து என்னிடம் அளித்து. “இதில் ஏதேனும் ஒரு செய்யுளை எடுத்துப் படியும்” என்று சொன்னார். நான் அந்தப் புஸ்தகத்தைப் பிரித்து நாட்டுப் படலத்திலுள்ள ஒரு செய்யுளை அமைதியாக இசையோடு மெல்லப் படிக்கலானேன். நான் படித்த செய்யுள் வருமாறு:
“புன்மை சால்கிழங் ககழ்ந்திடும் போதெதிர் போதும்
அன்மை தீர்மணி சுரையிரும் பாலகற் றிடுவார்
வன்மை மேவிய தாயினு மாண்பறி யாரேல்
மென்மை மேவிழி பொருளினு மிழிந்ததாய் விடுமே” (நாட்டுப்படலம், 38).
முதலில் ஒரு முறை மனத்துள் படித்துப் பார்த்த பிறகே வாய்விட்டுப் படித்தேன். ஆதலால் நான் தடையில்லாமல் படிக்க முடிந்தது. பிள்ளையவர்கள் அந்தச் செய்யுளின் பொருளைத் தெளிவாக எனக்குச் சொன்னார்; பதம்பதமாகப் பிரித்துப் பொருள் கூறினார்; பதசாரமும் சொல்லி விளக்கினார்.
“குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் காட்டில் தங்களுக்கு ஆகாரமாக உதவுகின்ற கிழங்குகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அப்பொழுது பூமியில் புதைந்துகிடக்கும் மணிகள் வெளிவருகின்றன அவற்றைக் கடப்பாறையினாலே ஒதுக்கிவிட்டு மேலும் தோண்டுகிறார்கள். அவர்களுக்குக் கிழங்கினிடம் உள்ள மதிப்பு மணியினிடம் இல்லை. உலகத்தில் எவ்வளவு சிறந்த பொருளாயிருப்பினும் அதன் பெருமையை அறியாதவரிடம் அகப்பட்டால் மிகவும் இழிந்த பொருளைப் போலாகிவிடும்.
“இந்த விஷயம் அப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க் காவியங்களில் நாட்டு வருணனையில் இத்தகைய செய்திகளை அமைப்பது புலவர் மரபு. அப்படி வருணிக்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து வகை நிலங்களையும் அவற்றில் நிகழும் செய்திகளையும் தனித்தனியே விரிவாக வருணிப்பார்கள். இந்த வருணனை, மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் இயல்பையும் செயல்களையும் சொல்லுமிடத்தில் வருகின்றது. வருணனையோடு உலக இயல்பாகிய நீதி ஒன்றும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது.
“அடுத்த பாடலையும் படியும்” என்று பிள்ளையவர்கள் சொல்லவே நான் படித்தேன்:-
“முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச்
செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று
பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும்
அறவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.”
“தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள்.
பிள்ளையவர்கள் இதற்கும் இவ்வாறு பொருள் கூறி, “இந்த இரண்டு செய்யுட்களுக்கும் இப்போது நீர் பொருள் கூறும்” என்று சொன்னார். நான் கேட்டவாறே உரைத்தேன். பிறகு இலக்கண சம்பந்தமான சில சிறு கேள்விகளைக் கேட்டார். நான் விடை சொன்னேன்.
“இந்தச் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?”
“இது கலிநிலைத்துறை”
“வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டுவீரா?”
“ஏதோ தெரிந்த வரையிற் செய்வேன்.”
உடனே சில வெண்பாக்களை எப்படிச் சொன்னால் தளைபிறழ்ந்தனவாகத் தோற்றுமோ அப்படியே சொல்லித் தனித்தனியே சீர் பிரித்துச் சொல்லச் சொன்னார். நான் ஜாக்கிரதையாகச் சீர்பிரித்துச் சொன்னேன்.
“நெல்லுக் கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்”
என்ற செய்யுளைச் சீர்பிரித்துச் சொல்லுகையில், “நெல்லுக்-கிறைத்தநீர்-வாய்க்கால்-வழியோடிப்” என்று தனித்தனியே பிரித்து அலகூட்டிச் சொன்னேன்.
“நெல்லுக்-கிறைத்த-நீர் வாய்க்கால்-வழியோடி, என்று பிரித்தால்தானே மோனை அமைகிறது? நீர் பிரிக்கும்போது மூன்றாம் சீர் வாய்க்கால் என்றல்லவோ ஆகிவிடும்? அப்போது மோனை இராதே!” என்றனர்.
“அப்படியே பிரித்தால் வெண்டளை பிறழ்ந்து விடும். இறைத்த-நீர்வாய்க்கால் என்பது ஆசிரியத்தளையும்: நீர்வாய்க்கால்-வழியோடி என்பது கலித்தளையும் ஆகிவிடும். வெண்பாவில் பிறதளை விரவாது” என்று விடை பகர்ந்தேன்.
“நல்லது. யாப்பிலக்கணத்தை நன்றாகப், படித்திருக்கிறீர்.”
“காரிகை பாடம் சொன்ன ரெட்டியாரவர்கள் மிகவும் தெளிவாக எனக்குக் கற்பித்தார்கள்.”
அப்போது பிள்ளையவர்கள் ரெட்டியாரை மிகவும் பாராட்டிப் பேசினார்.
அன்று பிள்ளையவர்கள் என் தமிழறிவு இவ்வளவினதென்பதை ஒருவாறு பரிசோதித்து அறிந்துகொண்டாரென்றே எண்ணினேன். அவர்கள் வாயிலிருந்து இரண்டு செய்யுட்களுக்குப் பொருள்கேட்டு அப்படியே சொல்லிவிட்டோமென்ற ஒரு திருப்தியும், “இன்றே பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்” என்ற எண்ணமும் எனக்கு உண்டாயின.
“என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம் ஆரம்பித்துவிடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார். அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்துவிட்டதென்றே தோற்றியது.
“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கிவிட்டோமே” என்று நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்லதினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.
“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம் உடன்பாட்டை அவர் தெரிவித்தார்.
பாடம் ஆரம்பித்தது
மறுநாள் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். முதலில் நைடதத்தை அவர் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அதில் சில பாடல்களைப் படிக்கச் செய்து அவற்றின் பொருளைக் கூறினார். அங்கேயுள்ள விசேஷங்களை விளக்கியும் இலக்கணச் செய்திகளைப் புலப்படுத்தியும் வந்தார். நான் அந்த நூலை முன்பே பல தடவை படித்திருந்தும் அவர் கூறிய முறையிற் பாடம் கேட்கவில்லையாதலால் எனக்கு அவருடைய போதனை அதிக இன்பத்தை உண்டாக்கியது. அவர் பாடம் சொல்லும்போது எனக்கு எந்தச் சொல் விளங்காதோ அதற்கு மாத்திரம் பொருள் சொல்வார்; எனக்கு எந்த விஷயம் தெரியாதோ அதை மாத்திரம் விளக்குவார்.
சில பாடல்கள் ஆனவுடன், “இன்னும் சில தினங்களில் இந்த நூலை முடித்துவிடலாம். பிறகு வேறு ஒரு நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டு, “அப்பா சவேரிநாது” என்று கூப்பிட்டார். அவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அங்கே வந்தார்.
“நாளை முதல் இவருக்கு நைடதத்தைப் பாடம் சொல்லி வா” என்று அவருக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே மறு நாள் முதல் நான் அம்மாணாக்கரிடமே பாடங் கேட்டு வரலானேன்.
சவேரிநாத பிள்ளை
சவேரிநாத பிள்ளை என்பது அவர் பெயர். அவர் ரோமன் காதொலிக் கிறிஸ்தவர்; பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வந்தார். அவரைப் பார்த்தால் யாரும் கிறிஸ்தவரென்று சொல்லார். விபூதி அணிந்திருப்பார். பிள்ளையவர்களிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டு. ஆசிரியருடைய குடும்பக் காரியங்களெல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். எப்போதும் உத்ஸாகமுள்ளவராகவே இருப்பார்; வேடிக்கையாகப் பேசுவார். எவ்வளவு துக்கமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் தம்முடைய பேச்சால் அந்த நிலையை மறக்கச் செய்வார்; சிநேகம் செய்வதற்கு யோக்கியமானவர்; தமிழ்ப் பாடலிலுள்ள பொருள்களை ரஸமாக எடுத்துச் சொல்வார்; அடிக்கடி வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவரோடு சேர்ந்து இருந்தால் பொழுதுபோவதே தெரியாது.
நான் அவரிடம் பாடங் கேட்டபொழுது அவருடைய கல்வி ஆழமானதன்று என்ற எண்ணமே எனக்கு முதலிற்பட்டது. அதனால், அவர் பாடஞ் சொல்லும்போது சமற்காரமாக அவர் கூறும் விஷயங்களை அனுபவிக்க முடியவில்லை. இனிமையாகப் பொழுதுபோவதை நான் விரும்பவில்லையே. அதிகமாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே விரும்பினேன். நைடதம் முன்னமே படித்த நூல்தானே? அதை மீட்டும் அவரிடம் கேட்கும்போது அவர் ரஸமாகச் சொன்னாலும், நான் அறியாத கருத்தையோ, இலக்கணத்தையோ அவர் விளக்காமையால் எனக்கு இன்பமுண்டாகவில்லை. சில இடங்களில் நான் அறிந்த விஷயம்கூட அவருக்குத் தெரியவில்லை. அவர் பாடம் சொல்லுவார். நான் இடைமறித்து, “இந்தச் செய்யுள் என்ன அலங்காரம்?” என்று கேட்பேன். அவருக்குத் தெரியாது. “பார்த்துத்தான் சொல்லவேண்டும்” என்று மழுப்புவார். நான் படித்த புஸ்தகத்தில் உரையில் இன்ன அலங்காரம் என்று குறித்திருக்கும். அதை விளக்கும்படி கேட்பேன். “அந்த அலங்காரத்தின் இலக்கணம் இதில் எவ்வாறு அமைந்திருக்கிறது?” என்று வினவுவேன். எனக்குத் திருப்தி உண்டாகும்படி விளக்க அவரால் இயலாது. அவர் என்னைக் கேள்வி கேட்பதுபோய் நான் சந்தேகம் தீர்த்துக்கொள்வதுபோல அவரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்.
“எவ்வளவோ கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம். இங்கு வந்தும் பிள்ளையவர்களிடம் நேரிற் பாடங் கேட்க இயலவில்லையே! எங்கே போனாலும் நம் அதிர்ஷ்டம் நம்மைப் பின்தொடருகிறதே!” என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.
“இந்த நிலை மாறவேண்டும். இதற்கு என்ன வழி?” என்று யோசிக்கலானேன்.
----------
அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோஷத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கஷ்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாஸ்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே?
பாடங் கேட்ட சந்தோஷத்தோடு நானும் என் தந்தையாரும் ஜாகைக்கு வந்து போஜனம் செய்தோம். என் தந்தையார் திண்ணையில் சிரமபரிகாரம் செய்துகொண்டார். நான் அருகில் உட்கார்ந்து ஏதோ புஸ்தகத்தைப் படித்து வந்தேன்.
கோபாலகிருஷ்ண பாரதியாரைக் கண்டது
அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில்கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். அவரைக் கண்டவுடன் என் தகப்பனார் எழுந்து, “பாரதியாரவர்களா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையைவிட்டு இறங்கினார். அக்கிழவர், என் தந்தையாரைப் பார்த்துவிட்டு, “யார்? வேங்கடசுப்பையரா? ஏது இவ்வளவு தூரம்?” என்று கூறியவாறே நாங்கள் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார். என் தந்தையார் அந்த முதியவரை நமஸ்கரிக்கும்படி கூறவே நான் வணங்கிவிட்டு நின்றேன்.
“இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று பாரதியார் கேட்டார்.
“இவன் என் குமாரன்.”
“என்ன செய்துகொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”
“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”
“அப்படியா? சந்தோஷம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”
இந்த விஷயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்.
“இவனுக்குச் சங்கீதத்தில் எந்த மட்டும் அப்பியாஸம் செய்துவைத்திருக்கிறீர்கள்? கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள் வருமா?”
“எனக்குத் தெரிந்த மட்டிலும் சொல்லி வைத்திருக்கிறேன். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களில் எனக்குத் தெரிந்தவைகளிற் சிலவற்றை இவனும் பாடுவான்.”
“அப்படியா! அந்தக் கீர்த்தனங்களைக் கேட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது. எங்கே [1] 'குஸூமகுந்தளாம்பிகையே’ என்ற கீர்த்தனத்தைப் பாடப்பா; கேட்கலாம்” என்று பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அதைப் பாடினேன்.
“நல்லது; பையனுக்குச் சாரீரம் இருக்கிறது. இதை வீண் பண்ணிவிடக் கூடாது. மேலும் மேலும் அப்பியாசம் செய்து வர வேண்டும்” என்று சொல்லிவிட்டு வேறு சில கீர்த்தனங்களையும் பாடும்படி சொன்னார். நான் பாடினேன். என் தகப்பனாரும் சில கீர்த்தனங்கள் பாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றைப் பாடினோம்.
“இந்த மாதிரி கீர்த்தனங்களை இங்கே யார் பாடுகிறார்கள்? இந்தப் பிள்ளை இவ்வளவு நன்றாகப் பாடுவதைக் கேட்க எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது.”
“எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம்தான். இவனை இங்கேயே விட்டுவிட்டுப் போகலாமென்று எண்ணி வந்திருக்கிறேன். தாங்கள் இவனுக்குச் சங்கீத அப்பியாசம் செய்து வைக்கவேண்டும்” என்று என் தகப்பனார் பாரதியாரைக் கேட்டுக்கொண்டார்.
“அதற்கு என்ன தடை? எனக்கும் பொழுது போகும்” என்று அவர் சம்மதித்தார்.
என் தந்தையாரும் பாரதியாரும் பழைய சமாசாரங்களைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சினால் பாரதியார் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களில் எவ்வளவு விருப்பமுடையவரென்பது தெரிந்தது. பின்பு ஜாகைக்கு வந்து பார்ப்பதாக என் தந்தையார் சொல்லவே பாரதியார் விடைபெற்றுச் சென்றார்.
பாரதியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தது
மறுநாள் விடியற்காலையிலேயே நானும் என் தந்தையாரும் பாரதியார் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்றோம். அவர் அக்காலத்தில் தம் மாணாக்கராகிய இராமசாமி ஐயருடைய வீட்டில் வசித்து வந்தார். இராமசாமி ஐயர் மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் கைங்கரியம் செய்வார்.
அன்றே நான் பாரதியாரிடம் சங்கீத அப்பியாசத்தைத் தொடங்கினேன். அது முதல் பெரும்பாலும் தினந்தோறும் விடியற்காலையில் பாரதியாரிடம் போய் வரலானேன். சில நாட்களில் மாலைவேளைகளில் செல்வதும் உண்டு; பிற்பகலில் அவரோடு காவேரித் துறையாகிய துலாக்கட்டத்துக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து வருவேன். துலாக்கட்டத்தில் அக்காலத்தில் முன்சீப் கச்சேரி இருந்தது. மாயூரம் முன்சீபாக வேதநாயகம் பிள்ளை உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் தமிழ் வித்துவானென்று நான் கேட்டிருந்தேன். தூரத்தில் இருந்தபடியே அவர் கச்சேரி பண்ணுவதை நான் சில சமயங்களில் கவனிப்பேன்.
பாரதியாரோடு பழகப் பழக அவர் பெரிய மகானென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அவர் சாரீரம் கம்மலாக இருந்தது. அதனால் அவர் சில வருஷங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று தனியே இருக்கும் நேரங்களில் அதை வாசித்துப் பொழுதுபோக்கி வந்தார். காலைவேளைகளிலும் மாலைவேளைகளிலும் மாயூரநாதர் கோயிலிலுள்ள அகஸ்தீசுவர ஸ்வாமி சந்நிதியில் நெடுநேரம் யோகம் செய்துகொண்டேயிருப்பார்.
வேடிக்கையாகப் பேசுவதிலும் கதைகள் சொல்லுவதிலும் அவர் வெகுசமர்த்தர். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையோடு ஒரு புராண கதையைச் சம்பந்தப்படுத்திச் சொல்வார். பொழுதுபோவதே தெரியாது. பேசும்போது அடிக்கொரு தரம் பழமொழிகள் அவர் வாக்கிலிருந்து வரும்.
அவரிடம் நான் பல கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டேன். அவர் இயற்றிய கீர்த்தனங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களுக்கு உரிய மெட்டையும் ராகதாளங்களையும் அவர் சொல்லிக் காட்டினார். சில சமயங்களில் அவர் மாணாக்கராகிய இராமசாமி ஐயரும் எனக்குக் கீர்த்தனங்களைச் சொல்லித் தருவார்.
அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருஷ்ணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாஸ்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். இவர்களெல்லாம் பாரதியாரிடமும் வந்து செல்வார்கள்.
உணவுக்கு ஏற்பாடு
என் தந்தையார் மாயூரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அந்நகரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று என்னைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே இருந்த வரையில் சிறிய தகப்பனார் வேட்டகத்தில் ஆகாரம் செய்து வந்தேன். என் சிறிய தாயாரும் அப்போது அங்கே வந்திருந்தார். எப்போதும் அந்த வீட்டில் உணவுகொள்வது உசிதமாக இராது என்று எண்ணி என் தந்தையார் வேறு ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.
அக்காலத்தில் மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் அறுபது பிராயம் சென்ற விதவை ஒருத்தி அவ்வூர் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கும் பள்ளிக்கூட மாணவர் சிலருக்கும் சமைத்துப்போட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தாள். பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலையில் பழையதும் பகலிலும் இரவிலும் ஆரோக்கியமான உணவும் அளிக்கப்படும். இதற்காக அந்த அம்மாள் மாதம் ஐந்து ரூபாய்தான் பெற்று வந்தாள். என் சிறிய தாயாராகிய லக்ஷ்மி அம்மாள் அக்கிழவியிடம் சொல்லி எனக்கு ஜாக்கிரதையாக உணவு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
என் தந்தையார் எனக்கு வேண்டிய பணத்தை என்னிடம் அளித்தார். பிறகு அவர் மாயூரத்தைவிட்டுச் செல்ல எண்ணித் தம் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். புறப்படும் தினத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் எனக்குப் பலவிதமான போதனைகளைச் செய்தார். நான் இன்ன இன்னபடி நடந்துவர வேண்டுமென்றும், உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டுமென்றும் பல முறை சொன்னார்.
விடை பெற்றது
புறப்படும் தினத்தன்று காலையில் அவர் என்னுடன் பிள்ளையவர்களிடம் வந்தார்.
“நான் இன்று ஊருக்குப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன். விடைதரவேண்டும்” என்று தகப்பனார் சொன்னார்.
“ஏன்? இன்னும் சில தினங்கள் இருந்து மாயூரநாத ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு போகலாமே.”
“அயலூரில் அயலார் வீட்டில் எவ்வளவு காலம் இருப்பது? என்னுடைய பூஜை முதலிய விஷயத்திற்கு இவ்வூர் சௌகரியமாக இல்லை. தவிர, இங்கே எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. வந்த காரியம் ஈசுவர கிருபையாலும், உங்களுடைய தயையினாலும் நிறைவேறியது. இவனை உங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இவன் இனிமேல் விருத்தியடைவான் என்ற தைரியம் எனக்கு உண்டாகிவிட்டது. நான் என்னுடைய காரியங்களை இனிமேல் கவனிக்க வேண்டாமா?”
“சரி; போய் வாருங்கள். ஞாபகம் இருக்கட்டும்.”
“இவனைப் பற்றி இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும் காரணமில்லாத துன்பமொன்று மனத்தில் உண்டாகிறது இவனை நான் பிரிந்து இருந்ததே இல்லை. இவனுடைய தாய்க்கு இவனை ஒருநாள் பிரிந்திருந்தாலும் சகிக்க முடியாத துயரம் ஏற்படும். இப்போது இவனைப் பிரிந்து செல்வதற்கு மனம் தயங்குகிறது. தனக்கு வேண்டிய காரியங்களைப் பிறர் உதவியின்றிக் கவனித்துக்கொள்ளும் வழக்கம் இவனுக்கு இல்லை. தாங்கள் இவனை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் ஸ்தானத்தில் இருந்து இவனைக் காப்பாற்றுவது தங்கள் கடமை.”
இப்படிச் சொல்லும்போது என் தகப்பனார் கண்களில் நீர் துளித்தது. அதுகாறும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி வருந்தியதை நான் பார்த்ததில்லை. அவர் உள்ளத்துக்குள் மறைந்து கிடந்த அன்பு முழுவதும் அப்போது வெளிப்பட்டது. அவர் கண்களில் நீரைக் கண்டு எனக்கும் மனம் கலங்கியது; கண்ணீர் துளித்தது; துக்கம் பொங்கி வந்தது.
அவரது அன்பை நன்கு உணர்ந்த என் ஆசிரியர் புன்னகை பூத்துக்கொண்டே, “நீங்கள் இவருடைய பாதுகாப்பைக் குறித்துச் சிறிதும் கவலைப்படவேண்டாம். நான் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக ஊருக்குப் போய்வாருங்கள். இவரைப் பார்க்க வேண்டுமென்று எப்போது விரும்புகிறீர்களோ அப்போது இவரை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்களும் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டும்” என்று கூறி விடையளித்தார்.
என் தகப்பனார் ஊருக்குப் புறப்பட்டார். நான் சிறிது தூரம் உடன்சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் சென்ற பிறகுதான் எனக்கு ஏதோ ஒரு புதிய துன்பம் வந்தது போன்ற தோற்றம் உண்டாயிற்று. நான் முன்பு அறியாத ஒன்றை, தாய் தந்தையரைப் பிரியும் துன்பத்தை, அப்போது உணர்ந்தேன்.
மனோதைரியமும் கஷ்டத்தைச் சகிக்கும் ஆற்றலுமுடைய என் தந்தையாரே என்னைப் பிரிந்திருக்க வருந்தினாரென்றால், என் அருமைத் தாயார் எவ்வளவு துடித்து வருந்துவார் என்பதை நினைத்தபோது என் உள்ளம் உருகியது. குன்னத்தில் இருந்த காலத்தில் நான்கு நாள் பிரிந்திருந்து திரும்பி வந்தபோது என்னை அவர் தழுவிக்கொண்டு புலம்பிய காட்சி என் அகத்தே தோற்றியது.
நான் தந்தையாரை அனுப்பிவிட்டு வந்தவுடன் பிள்ளையவர்கள் எனக்குப் பலவிதமான ஆறுதல்களைக் கூறினார்; என்னுடைய துன்பத்தை மாற்றுவதற்குரிய பல வார்த்தைகள் சொன்னார்.
“சில நாட்களில் திருவாவடுதுறைக்குப் போகும்படி நேரும். அங்கே ஸந்நிதானம் உம்மைப் பார்த்து ஸந்தோஷமடையும். நீர் இசைப்பயிற்சி உடையவரென்று தெரிந்தால் உம்மிடம் தனியான அன்பு வைக்கும்” என்று சொல்லித் திருவாவடுதுறை ஆதீன விஷயங்களையும் வேறு சுவையுள்ள சமாசாரங்களையும் கூறினார். அவர் வார்த்தைகள் ஒருவாறு என் துன்பத்தை மறக்கச் செய்தன.
நாளடைவில் தமிழின்பத்தில் அத்துன்பம் அடியோடே மறைந்துவிட்டதென்றே சொல்லலாம்.
..
அடிக்குறிப்பு
1. இக்கீர்த்தனம் உடையார்பாளையம் சிவாலயத்திலுள்ள அம்பிகை விஷயமானது.
----------
அத்தியாயம் 30. தளிரால் கிடைத்த தயை
சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விஷயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விஷயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது எனக்கு ஒரு திருப்தி உண்டாகும். என் இயல்பைப்பற்றிப் பாராட்டுவதனால் உண்டான திருப்தி அன்று; எனக்குக் கற்பிக்கும் தகுதி சவேரிநாத பிள்ளையிடம் இல்லையென்பதை அவர் தெரிந்துகொண்டாரே என்ற எண்ணத்தால் உண்டான திருப்தியே அது.
இளமை முறுக்கு
பிள்ளையவர்கள் அருகில் இருக்கும் சமயங்களில் நான் அடிக்கடி கேள்விகள் கேட்பேன். எப்படியாவது பிள்ளையவர்களே நேரில் எனக்குப் பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது என் நோக்கம். நான் இவ்வாறு கேள்வி கேட்பதனால் சவேரிநாத பிள்ளைக்கு ஒரு சிறிதும் கோபம் உண்டாகவில்லை. வேறொருவராக இருந்தால் என்மேல் பிள்ளையவர்களுக்கு வெறுப்பு உண்டாகும்படியும் செய்திருப்பார். எனது ஆசையும் இளமை முறுக்கும் சேர்ந்துகொண்டன; சவேரிநாத பிள்ளையின் நல்லியல்பு இணங்கி நின்றது. நான் அவரைக் கேள்வி கேட்பது குறைவென்று அவர் நினைக்கவே இல்லை. என்னிடம் அன்பாகவே நடந்து கொள்வார். இனிமையாகப் பேசுவார்; பிள்ளையவர்கள் பெருமையையும் அவர்களிடம் தாம் வந்த காலம் முதல் நிகழ்ந்த பல செய்திகளையும் எடுத்துச் சொல்வார்.
நைடத பாடம் நடந்து வந்தது. பிள்ளையவர்களிடம் பாடம் கேளாமையால் அவரை நேரே கண்டு பேசிப் பழகுவதற்குரிய சமயம் வாய்க்கவில்லை. அவரிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் பயந்தேன்.
தோட்டம் வளர்த்தல்
பிள்ளையவர்கள் இருந்த வீடு அவர் தம் சொந்தத்தில் விலைகொடுத்து வாங்கியது. அவ்வீட்டின் பின்புறத்தில் விசாலமான தோட்டமும் அதன்பின் ஒரு குளமும் உண்டு. அவர் இயற்கைத் தோற்றங்களிலே ஈடுபட்டவர். கவிஞராகிய அவர் பச்சைப் பசும்புல் வெளிகளிலும் பூம்பொழில்களிலும் மரமடர்ந்த காடுகளிலும் ஆற்றோரங்களிலும் இத்தகைய பிற இடங்களிலும் போக நேர்ந்தால் அப்படியே அங்குள்ள காட்சிகளைக் கண்டு இன்புற்று நின்றுவிடுவார். தாம் வாங்கிய புதிய வீட்டின் தோட்டத்தில் மரங்களையும் செடி, கொடிகளையும் வைத்து வளர்த்து வரவேண்டுமென்பது அவர் எண்ணம். சிவபூஜை செய்வதில் நெடுநேரம் ஈடுபடுபவராகிய அவர் தோட்டத்தில் நிறையப் பூச்செடிகளை வைத்து வளர்க்க வேண்டுமென்ற ஆசையுடையவராக இருந்தார். நாரத்தை, மா, முதலிய மரங்களின் பெரிய செடிகளை வேரோடு மண் குலையாமல் தோண்டி எடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றி வருவித்து ஆழ்ந்த குழிகளில் நட்டு வளர்ப்பது அப்பக்கங்களில் உள்ள வழக்கம். என் ஆசிரியரும் அவ்வாறு சில செடிகளை வருவித்துத் தோட்டத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் பாடம் கேட்க வந்தபோது இந்த ஏற்பாடு நடந்து வந்தது.
தளிர் ஆராய்ச்சி
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவைகளில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டுவிட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோஷத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலைவேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்கு ஜலம் விடுவார்.
அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.
மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்கவில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.
அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோஷமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய்விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோஷமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய்விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.
நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தார்.
அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக்கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.
அன்பு தளிர்த்தல்
ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்துவிட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.
ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.
“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”
“[1]ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச் சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.
சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாஜமாகக்கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது.
“நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?
தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும்போது அவரோடு பேசுவது எனக்கு முதல் லாபமாக இருந்தது. அவர் வர வர என் விஷயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விஷயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடைபெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.
நைடதம் முடிந்தது
எங்களுடைய சம்பாஷணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது. நான் ஒரு நாள், பிள்ளையவர்களிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருப்பதை மெல்ல நேரிற் புலப்படுத்தினேன். “நைடதம் முழுவதும் பாடம் கேட்டாகட்டும். பிறகு ஏதாவது நூலைப் பாடம் கேட்கத் தொடங்கலாம்” என்று அவர் கூறியபோதுதான் என் மனத்திலிருந்த பெரிய குறை தீர்ந்தது. “நைடதம் எப்போது முடியும்?” என்று எதிர்பார்த்திருந்தேன். சவேரிநாத பிள்ளை சில செய்யுட்களே பாடம் சொன்னாலும் நான் வற்புறுத்தி மேலும் சில செய்யுட்களைச் சொல்லும்படி கேட்பேன். எப்படியாவது அந்நூலை விரைவில் பூர்த்தி செய்துவிட்டுப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்பதில் எனக்கு அவ்வளவு வேகம் இருந்தது.
நைடதம் எத்தனை காலந்தான் நடக்கும்? ஒரு நாள் அது முடிவு பெறவேண்டியதுதானே? சில நாட்களில் அது முடிந்துவிட்டது. அது நிறைவேறிய அன்றே நான் பிள்ளையவர்களிடம் சென்று, “நைடதம் பாடம் கேட்டு முடிந்தது” என்று சொன்னேன்.
“சரி, நாளைக்கு ஏதாவது பிரபந்தம் பாடம் சொல்லுகிறேன்” என்று அவர் கூறினார்.
முதற் பாடம்
மறுநாட் காலையில் என் ஆசிரியர் தாமே என்னை அழைத்து, “உமக்குத் திருக்குடந்தைத் திரிபந்தாதியைப் பாடம் சொல்லலாமென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அந்நூல் எழுதியிருந்த ஏட்டுச் சுவடியை வருவித்துக் கொடுத்தார். நான் பாடம் கேட்கத் தொடங்கினேன்.
திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது பிள்ளையவர்கள் இயற்றியது. கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகும்பேசுவரர் விஷயமானது. திரிபந்தாதியாதலால் சற்றுக் கடினமாகவே இருக்கும்.
அந்நூலில் நாற்பது பாடல்களுக்கு மேல் அன்று பாடம் கேட்டேன். திரிபு யமக அந்தாதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு பாடல்களுக்கு மேல் பாடம் சொல்பவரை அதுவரையில் நான் பார்த்ததில்லை. பிள்ளையவர்கள் பாடம் சொல்லுகையில் விஷயங்களை விரிவாக உபமான உபமேயங்களோடு சொல்லுவதில்லை. எந்த இடத்தில் விளக்க வேண்டியது அவசியமோ அதை மாத்திரம் விளக்குவார். அவசியமான விசேஷச் செய்திகளையும் இலக்கண விஷயங்களையும் சொல்லுவார். மாணாக்கர்களுக்கு இன்ன விஷயம் தெரியாதென்பதை அவர் எவ்வாறோ தெரிந்துகொள்வார். நான் படித்து வரும்போது எனக்கு விளங்காத இடத்தை நான் கேட்பதற்கு முன்னரே அவர் விளக்குவார்; எனக்குத் தெரிந்ததை அவர் விளக்க மாட்டார். “நமக்கு இது தெரியாதென்பதை இவர் எப்படி இவ்வளவு கணக்காகத் தெரிந்து கொண்டார்” என்ற ஆச்சரியம் எனக்கு உண்டாகும். தம் வாழ்வு முழுவதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிச் சொல்லிப் பழகியிருந்த அவர் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்ப பாடம் சொல்வதில் இணையற்றவராக விளங்கினார்.
நிதிக்குவியல்
அவர் பாடம் சொல்வது பிரசங்கம் செய்வதுபோல இராது. அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக்காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விடவேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிர்ஷ்டம்போல லாபம் கிடைக்கும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.
பசிக்கு ஏற்ற உணவு
எனக்கிருந்த தமிழ்ப்பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத்தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்திவிட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடிவிட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.
அடிக்குறிப்பு
1. பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.
-------------
அத்தியாயம் 31. என்ன புண்ணியம் செய்தேனோ!
திருக்குடந்தைத்திரிபந்தாதியை இரண்டே தினங்களில் நான் பாடங்கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்; ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்துகொள்ளும்படி சொன்னார்; அச்சுப் புஸ்தகங்கள் மிக அருமையாக அகப்படும் அக்காலத்தில் நான் பாடங்கேட்ட புஸ்தகங்களிற் பெரும்பாலானவற்றை ஏட்டிலே எழுதிப் படித்தேன். இப்பழக்கத்தால் ஏட்டில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று.
நான் பாடங்கேட்டபோது சவேரிநாத பிள்ளையும், கனகசபை ஐயரென்னும் வீரசைவரும், அவர் தம்பியாகிய சிவப்பிரகாச ஐயரும் சேர்ந்து பாடங்கேட்டனர். கனகசபை ஐயர் கூறை நாட்டில் ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தார்.
அந்தாதிகள்
குடந்தைத் திரிபந்தாதியைப் படித்தபோது அதை இயற்றியவர் பிள்ளையவர்களே என்று அறிந்து, “ஒரு நூலை இயற்றிய ஆசிரியரிடமே அதனைப் பாடங்கேட்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!” என்று எண்ணி எண்ணி இன்புற்றேன். அதைப் போன்ற பல பிரபந்தங்களையும் பல புராணங்களையும் அவர் இயற்றியுள்ளா ரென்பதைச் சவேரிநாத பிள்ளை சொல்லக் கேட்டிருந்தேன். “ஆதலால் இனி இவர்கள் இயற்றிய நூல்கள் எல்லாவற்றையும் இவர்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாம்” என்ற நினைவிலே நான் ஒரு தனி மகிழ்ச்சியை அடைந்தேன்.
குடந்தைத்திரிபந்தாதி முடிந்தவுடன், பழமலைத்திரிபந்தாதி தொடங்கப்பட்டது. அதனை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களிலே இருந்து அவருடைய புகழைக் கேட்டுக் கேட்டு அவரைப் பற்றிச் சிறந்த மதிப்பு வைத்திருந்த எனக்கு அவர் நூலைப் படிக்கத் தொடங்கியபோது பழைய காட்சிகளெல்லாம் நினைவுக்கு வந்தன. சிவப்பிரகாச சுவாமிகளால் நீராடப் பெற்றனவாகச் சொல்லப்படும் நடை வாவிகளை நினைத்தேன். அவருடைய பரம்பரையினரை நினைத்தேன். ஒரு கவிஞர் இயற்றிய நூலை மற்றொரு கவிஞர் பாடஞ்சொல்ல, அதைக் கேட்கப் பெற்ற என் பாக்கியத்தை நினைத்தேன்.
“சிவப்பிரகாச சுவாமிகள் சிறந்த கவி; கற்பனா சாமர்த்தியம் உடையவர். கவிதா சார்வ பௌமர் என்று அவரைப் பெரியோர்கள் சொல்லுவார்கள். அவர் இயற்றியுள்ள வெங்கைக் கோவையை மந்திரிக் கோவையென்றும் திருச்சிற்றம்பலக் கோவையாரை ராஜாக்கோவை என்றும் சொல்வது வழக்கம். சோணசைல மாலை என்ற பிரபந்தம் மிக்க சுவையுடையது. ஒவ்வொரு செய்யுளிலும் ஏதாவது கற்பனை இருக்கும். ஒரு காலத்தில் சுவாமிகள் திருவண்ணாமலையில் கிரிப் பிரதக்ஷிணம் செய்தபோது ஒரு தடவை வலம் வருவதற்குள் அந்த நூலிலுள்ள நூறு செய்யுட்களையும் செய்து முடித்தார்களாம்” என்று பிள்ளையவர்கள் கூறிவிட்டுப் பாடஞ்சொல்லத் தொடங்கினார். ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரைக் குறித்துப் பொறாமையின்றி மனம் குளிர்ந்து பாராட்டுவது அருமை யன்றோ?
‘போகப் போகத் தெரியும்’
திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் நூறு பாடலைச் சிவப்பிரகாசர் பாடி முடித்தார் என்ற செய்தி எனக்கு அதிக வியப்பை விளைவித்தது. பாடங்கேட்டு முடிந்தவுடன் சவேரிநாத பிள்ளையிடம் பேசுகையில், “சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களை நான் பார்த்திருக்கிறேன். வெங்கனூருக்கு அருகிலுள்ள பிரதேசங்களில் ஊர் ஊராக அவருடைய பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் இந்தச் சமாசாரம் இன்று ஐயா அவர்கள் சொல்லத்தான் கேட்டேன். நூறு பாடல்களை ஒரே சமயத்தில் பாடம் சொல்பவர்களையே காணாமே? அப்படியிருக்க ஒரே சமயத்தில் நூறு செய்யுட்களைக் கற்பனையுடன் பாட வேண்டுமென்றால் அவர் தெய்வப் பிறவிதான் என்பதில் சந்தேகமே இல்லை” என்றேன் நான்.
“ஆச்சரியந்தான். அத்தகைய ஆச்சரியத்தை நாம் இங்கேயே பார்க்கலாம். பிள்ளையவர்கள் சிவப்பிரகாசருக்குக் குறைந்தவரல்லர். நூறு அல்ல, இருநூறல்ல, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான சுவையுள்ள செய்யுட்களை இவர்கள் பாடுவார்கள். எல்லாம் போகப் போக உமக்குத் தெரியவரும்’ என்றார் “அத்தகைய சந்தர்ப்பம் வராதா?” என்று நான் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.
பாட வரிசை
பழமலைத்திரிபந்தாதி முடிந்தது; திருப்புகலூர்த்திரிபந்தாதி ஆரம்பிக்கப்பட்டது. நெற்குன்றவாண முதலியாரென்பவர் பாடிய அதில் என் ஆசிரியருக்கு விருப்பம் அதிகம். அதைப் பாடஞ்சொன்னபோது ஒவ்வொரு செய்யுளிலும் அடிக்கொரு தரம், “என்ன வாக்கு! என்ன நயம்!” என்று பாராட்டுவார்.
அப்பிரபந்தம் முடிந்தவுடன் மறைசையந்தாதியைப் பாடங் கேட்டேன். ஒரே நாளில் அதைக் கேட்டு முடித்தேன். திரிபந்தாதிகளுக்குப் பிறகு பிள்ளையவர்கள் இயற்றிய தில்லையமகவந்தாதி, துறைசையமகவந்தாதி என்பவைகளையும் திருவேரகத்துயமகவந்தாதியையும் கேட்டேன்.
பண்டைக் காலத்தில் பதங்களைப் பிரித்துப் பழகுவதற்கும் பலவகையான பதங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மனனம் செய்வதற்கும் அனுகூலமாக இருக்குமென்று கருதி அந்தாதிகளை மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லி வந்தார்கள். அம்முறைப்படியே நானும் சவேரிநாத பிள்ளையும் பிறரும் பாடங் கேட்போம்.
அந்தாதிகள் ஆன பிறகு பிள்ளைத்தமிழ் வரிசை தொடங்கப் பெற்றது. எனக்குக் கொண்டாட்டந்தான். கால் நூலும், அரை நூலும், ஒரு செய்யுளுமாகப் படித்த எனக்கு வரிசை வரிசையாகப் பிரபந்தத் தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அனாயாசமாகக் கிடைத்தன. சோர்வில்லாமற் பாடங் கேட்டு வந்தேன். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்பவற்றைக் கேட்டேன். திரிபந்தாதியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு யமக அந்தாதியா? அதிலும் இரண்டு, மூன்று. பிள்ளைத் தமிழா? அதிலும் ஐந்துக்குக் குறைவில்லை. பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தங்களில் ஐந்தாறு பிரபந்தங்கள் பாடங் கேட்டேன். அசுவதாட்டியில் நான் பாடங் கேட்டு வந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்படி நான் பாடங் கேட்கும் காலம் ஒன்று வருமென்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. விருத்தாசல ரெட்டியார், “நாங்களெல்லாம் மேட்டுநிலத்துக் கிணற்றில் ஊறும் ஊற்றுக்கள். அவர் காவேரிப் பிரவாகம்” என்று சொன்னது எவ்வளவு உண்மையானது? காவேரிப் பிரவாகமா? கங்காப் பிரவாகமென்று சொல்லலாம்; அதுகூடப் போதாது. “கடல் மடை திறந்தது போன்றது” என்று சொன்னாலும் தகும். ஒவ்வொரு பிரபந்தமும் கேட்டு முடிந்தவுடன் அதனைச் சிந்தித்து இன்புற்று அந்தத் திருப்தியிலே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று பெருமிதம் அடைந்தேன்.
பாடம் சொல்லப் பிறந்தவர்
என் ஆசிரியர் பாடம் சொல்லும்போது கையிலே புஸ்தகம் வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை. அப்பெரியாருக்கு அவ்வளவு செய்யுட்களும் மனப்பாடமாகவே இருந்தன; சிறிதேனும் தடையின்றிப் பாடல்களைச் சொல்வதும் பொருள் சொல்வதும் பதசாரம் சொல்வதுமாகவே அவர் பெரும்பாலான நேரத்தைக் கழிப்பார். “இவர்கள் இதற்காகவே உதித்தவர்கள்” என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாது.
அவரிடம் பாடங் கேட்கும்போது நாங்கள் அடையும் பயன் பலவகைப்படும். நூலுக்குப் பொருளுரைப்பதோடு நூலாசிரியர் சம்பந்தமான வரலாறுகளையும் சொல்வார். பல தனிப்பாடல்களைச் சொல்வார். இன்னும் சந்தர்ப்பத்திற்கேற்ற பல விஷயங்களை இடையிடையே எடுத்துரைப்பார். அவைகளெல்லாம் மிகவும் உபயோகமுள்ள செய்திகளாகவே இருக்கும். நாங்கள் கேட்ட பாடங்களைச் சிந்திக்கும்போதுகூட அவர் அருகிலேயே இருப்போம். அவர் எங்களிடம் அன்போடு பேசுவதும் எங்கள் சௌகரியங்களை அடிக்கடி விசாரிப்பதும் எங்கள் உள்ளத்தைப் பிணித்தன.
உள்ளன்பு
ஒவ்வொரு நாளும் நான் சாப்பிட்டு வந்தவுடன், “சாப்பிட்டாயிற்றா? ஆகாரம் சௌகரியமாக இருந்ததா?” என்று விசாரிப்பார். எண்ணெய் தேய்த்துக்கொள்ளும்படி வற்புறுத்துவார். ஒரு நாள் பிள்ளையவர்கள் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி எண்ணெயை வருவித்தார். அப்போது அருகிலிருந்த என்னைப் பார்த்தார். “உமது முகம் தெளிவாக இல்லையே; கண் சிவந்திருக்கிறதே. எண்ணெய் தேய்த்துக்கொள்ளும்” என்று எண்ணெயும் கொடுத்தார். உடனே நான் சென்று எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்து போஜனம் பண்ணிவிட்டு வந்தேன். பிள்ளையவர்கள் அப்போது என்னைப் பார்த்தவுடனே அருகிலிருந்த ஒருவரிடம் “இப்போது எப்படி இருக்கிறது இவர் முகம்? தெளிவாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டனர். என் முகத்தில் இருந்த தெளிவு என்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான மகிழ்ச்சியை உண்டாக்கியது.
எனக்கு ஏதேனும் வேண்டுமென்று தெரிந்தால், உடனே அவர் வாங்கிக் கொடுப்பார். நான் சாப்பிட்டு வருவதற்கு நேரமானால், “இன்னும் வரவில்லையே?” என்று கவலையோடு இருப்பார். இராத்திரி வேளைகளில் அக்கவலை அதிகமாக இருக்கும்; தெருத் திண்ணையில் அமர்ந்தபடியே என் வரவை எதிர்பார்த்திருப்பார். “ஏன் இவ்வளவு நேரம்? கவலையாக இருந்தது” என்று உள்ளன்போடு விசாரிப்பார். இத்தகைய செயல்களால் நான் அவரது அன்பை அறிந்து உருகினேன். அந்த அன்பிலே நனைந்து தமிழமுதத்தை உண்டு வந்தமையால் என் தாய், தந்தையரைப் பிரிந்திருப்பதனால் உண்டான துயரம் நீடிக்கவில்லை. பிள்ளையவர்களைப் பிரிந்திருக்க நேருமாயின் அதுவே கஷ்டமாக இருக்குமென்று தோன்றியது.
கோபால கிருஷ்ண பாரதியாரிடம் சென்று சங்கீத அப்பியாசம் செய்யும் நேரம், உணவுகொள்ளும் நேரம் ஆகிய சமயங்கள் தவிர மற்றக் காலங்களில் அப்புலவர் சிகாமணிக்கு அருகிலேயே இருந்து வந்தேன்; அருகிலே உறங்கி வந்தேன். அப்படிப் பழகுதலிலே ஒரு தனி இன்பத்தை நான் அடைந்தேன்.
பெயர் மாற்றம்
நான் இவ்வாறு பாடங் கேட்டு வந்தபோது ஒருநாள் ஏதோ விசாரிக்கையில் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உமக்கு ‘வேங்கடராமன்’ என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். நான், “வேங்கடாசலபதி குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே வைத்துக்கொள்வது வழக்கம்” என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன் என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப் புலப்பட்டது.
“உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?” என்று அவர் கேட்டார்.
“எங்கள் வீட்டில் என்னை ‘சாமா’ என்று அழைப்பார்கள்” என்றேன்.
“அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?”
“அது முழுப் பெயரன்றே! சாமிநாதனென்பதையே அவ்வாறு மாறி வழங்குவார்கள்.”
“அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது! உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக்கொள்ளும்” என்று அவர் சொன்னார்.
நான் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டேன். வேங்கடராமனாக இருந்த நான் அன்று முதல் சாமிநாதனாகிவிட்டேன். பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர். அன்புகனிந்த அவர் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே எனக்கு நிலைத்துவிட்டது.
என் பெயர் மாறின சில நாட்கள் வரையில் எனக்குச் சிறிது கஷ்டமாக இருந்தது. “சாமிநாதையர்” என்று யாராவது என்னை அழைத்தால், நான் என்னைத்தான் அப்படி அழைக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்துகொள்ளவில்லை. என் காது ‘வேங்கடராமன்’ என்றும் ‘சாமா’ என்றுமே கேட்டுப் பழகியிருந்தது. யாரேனும் என் பெயரைக் கேட்டால் ‘வேங்கடராமன்’ என்று சொல்ல வாயெடுப்பேன்; சட்டென்று மாற்றிக்கொண்டு ‘சாமிநாதன்’ என்பேன். நாளாக ஆகப் புதிய பெயரே வழக்கில் வந்தது.
விளையாட்டு வேலைகள்
பிள்ளையவர்கள் வீடு பழையது. ஆகையால் அதற்குப் புதிதாக ஓடு மாற்றினார்கள். அப்போது அப்புலவர்பிரான் அருகிலிருந்து கவனித்து வந்தார். தாமே ஓடுகளை வாங்கி வாங்கிக் கொடுத்தார். பார்த்த நானும் ஓடுகளை வாங்கிக் கொடுத்தேன். “இந்த வேலையெல்லாம் உமக்குப் பழக்கம் இராது” என்று அவர் சொன்னார். “எனக்கா? நான் கிராமங்களிலே பழகினவன். அம்மாதிரி வேலைகளை யெல்லாம் நன்றாகச் செய்வேன்” என்று சொல்லி அவரைச் சிரமப்படாமல் இருக்கச் செய்து அவ்வேலையை நான் கவனித்தேன். மூங்கிற் பிளாச்சுகளை வெட்டிக் கொடுத்தேன். என்னுடன் சவேரிநாத பிள்ளையும் அவ்வேலையைச் செய்தார்.
தோட்டத்தில் கிணறு ஒன்று புதியதாக வெட்டப்பட்டது. அப்போது கிணற்று ஜலத்தை வாங்கிக் கொட்டுவதற்காக வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்கள் சென்றார். ஒரு குடம் வாங்கிக் கொட்டுவதற்குள் வேர்த்துப் போய்விட்டது. அவர் தம் தொந்தி குலுங்கத் தளர்ந்த உடம்புடன் அவ்வாறு செய்வதைக் கண்டவுடன் நான் ஓடிச் சென்று அக்குடத்தை வாங்கிக்கொண்டேன். “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி ஜலத்தை வாங்கிக் கொட்டினேன். இத்தகைய காரியங்களைச் சோம்பலில்லாமல் நான் செய்தேன். படிப்பிலேயே பொழுது போக்கிய எனக்கு இவ்வேலைகள் இடையிடையே விளையாட்டைப் போலிருந்தன. சிரமம் தோன்றாமல் சந்தோஷத்துடன் செய்யும் காரியம் எதுவாயிருந்தாலும் அது விளையாட்டுத்தானே?
“சாமிநாதையர் சுறுசுறுப்பாக இருக்கிறார். எல்லா வேலைகளும் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்று பிள்ளையவர்கள் என்னைப் பாராட்டுவார். அப்பாராட்டு உண்மையன்போடு வெளிவருவதாதலின் என் உள்ளத்தைக் குளிர்விக்கும்.
பயனுள்ள பழக்கங்கள்
பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்துகொண்டே இருப்பார்கள்; பிரபுக்கள் வருவார்கள்; வித்துவான்கள் வருவார்கள்; அப்போது நானும் மற்ற மாணாக்கர்களும் அருகிலே இருப்போம். வந்தவர்களோடு பேசிக்கொண்டே இருக்கையில் பல விஷயங்கள் அவர் வாக்கிலிருந்து வரும். எல்லாம் மிகவும் உபயோகமானவைகளாகவே இருக்கும். எங்கள் ஆசிரியர் அவர்களுக்கும் எங்களுக்கும் பழக்கம் பண்ணி வைப்பார். ஏதாவது பாடலைச் சொல்லச் சொல்லுவார்; பொருளும் சொல்லும்படி செய்வார் நான் ராகத்துடன் பாடல் சொல்வதனால் அடிக்கடி என்னைச் சொல்லும்படி ஏவுவார். இத்தகைய பழக்கத்தால் பல பேருக்கிடையில் அச்சமில்லாமல் பாடல் சொல்லும் வழக்கம் எனக்கு உண்டாயிற்று; பாடல்களுக்கு அர்த்தம் சொல்லும் பழக்கமும் ஏற்பட்டது.
ஒரு நாள் தர்மதானபுரம் கண்ணுவையர் என்ற வித்துவானொருவர் வந்தார். அவர் பாரதப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர். அங்கங்கே வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தைப் பிரசங்கம் செய்து சம்மானம் பெற்று ஜீவனம் செய்து வந்தார். அவர் பிள்ளையவர்களிடம் அபிமானமுடையவர். அவர் வந்த காலத்தில் பாரதத்திலிருந்து இசையுடன் செய்யுட்களைக் கணீரென்று சொல்லிப் பிரசங்கம் செய்தார். அத்தகைய பிரசங்கத்தை முன்பு நான் கேட்டதில்லையாதலின் அப்போது எனக்கு ஒரு புதிய இன்பம் உண்டாயிற்று.
மற்றொரு நாள் சபாபதி ஐயர் என்ற ஒரு வித்துவான் வந்தார். அவர் எழும்பூர் திருவேங்கடாசல முதலியாரிடம் பாடம் கேட்டவர். அவர் இராமாயணப் பிரசங்கம் செய்பவர். கூறை நாட்டில் உள்ள சாலிய கனவான்கள் விருப்பத்தின்படி தினந்தோறும் கம்ப ராமாயணம் படித்துப் பொருள் சொல்லி வந்தார். அவர் வந்த காலத்தில் பிள்ளையவர்களிடம் கம்ப ராமாயணத்தைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்; சில சந்தேகங்களையும் தீர்த்துக்கொண்டார்.
இவ்வாறு வரும் வித்துவான்களுடைய சம்பாஷணையால் உண்டான லாபம் வேறு எங்களுக்குக் கிடைத்தது. வந்து செல்லும் வித்துவான்களும் பிரபுக்களும் நாங்கள் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டு வருவது தெரிந்து எங்களிடம் பிரியமாகப் பேசி அன்பு பாராட்டத் தொடங்கினர். அப்பொழுதிருந்த மாணாக்கர்களுள் பிராயத்தில் சிறியவன் நானே; ஆதலின் அவர்கள் என்னிடம் அதிகமான அன்பை வெளிப்படுத்தினார்கள்.
இப்படி என்னுடைய குருகுல வாசத்தில் நாளுக்கு நாள் அறிவும் பலருடைய அன்பும் இன்பமும் விருத்தியாகி வந்தன.
------------
அத்தியாயம் 32. தமிழே துணை
கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் நான் சங்கீதப்பயிற்சி செய்து வருவது என் ஆசிரியருக்கு முதலில் தெரியாது. அதை நானும் தெரிவிக்கவில்லை. பிள்ளையவர்களுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கும் பழக்கமுண்டு. பாரதியார் பெரிய சிவபக்தர் என்ற நினைவினால் அவரிடத்து என் ஆசிரியர் மதிப்பு வைத்திருந்தார்; அவரது சங்கீதத் திறமைக்காக அன்று. தமிழறிவு போதிய அளவு அவர்பால் இல்லையென்ற எண்ணம் பிள்ளையவர்களுக்கு இருந்தது. பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்ற காரணத்தால் என் ஆசிரியர் அச்சரித்திரத்தைப் பாராட்டுவதில்லை. ஆனாலும் அதிற் கனிந்து ததும்பும் பக்திரஸத்தில் ஈடுபட்டு அதற்கும் ஒரு சிறப்புப்பாயிரச் செய்யுள் அளித்திருக்கிறார்.
ரகசியம் வெளிப்பட்டது
எப்பொழுதேனும் இவ்விரு பெரியாரும் சந்திப்பதுண்டு. ஒருமுறை அவ்வாறு சந்தித்தபோது, பிள்ளையவர்கள் பாரதியாருக்கு உவப்பாக இருக்குமென்று கருதி, “என்னிடம் ஒரு பிராமணச் சிறுவர் பாடங் கேட்க வந்திருக்கிறார்; ராகத்தோடு பாடல் வாசிக்கிறார். தாங்கள் ஒருமுறை அவர் படிப்பதைக் கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார். இசையுடன் படிப்பது ஒரு பெரிய காரியமென்றும், அதைக் கேட்டால் பாரதியார் திருப்தி அடைவாரென்றும் அவர் எண்ணினார்.
“அந்தப் பிள்ளையாண்டானை எனக்கு நன்றாகத் தெரியுமே. என்னிடமும் வந்து காலைவேளைகளில் சிக்ஷை சொல்லிக்கொள்ளுகிறான். நல்ல சாரீரம் இருக்கிறது. தங்களிடம் அவன் பாடங் கேட்டு வருவதும் எனக்குத் தெரியும். சங்கீதத்தோடு தமிழ் கலந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று கூறினார் பாரதியார். அவர் கூறிய வார்த்தைகள் பிள்ளையவர்களிடம் வெறும் தமிழ் மாத்திரம் இருப்பது ஒரு குறையென்று தொனிக்கும்படி இருந்தன.
பிள்ளையவர்கள் அச்செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டார். உடனே பாரதியாரிடம் விடைபெற்று நேரே தம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டின் ஒரு பக்கத்தில் நண்பர்களுடன் நான் எதையோ படித்துக்கொண்டிருந்தேன். அவர் வேகமாக என் அருகில் வந்து, “நீர் முடி கொண்டான் பாரதியாரிடம் இசைப் பயிற்சி செய்து வருகிறீராமே!” என்று கேட்டார். அக்கேள்வி என்னைத் திகைக்க வைத்தது. நான் அவரிடம் சொல்லாமல் இசைப் பயிற்சி செய்து வந்தது பிழைதான். பிழையென்று தெரிந்தாலும் நான் உடனே சொல்வதற்கு அஞ்சினேன். பாரதியார் பிள்ளையவர்களை முன்பே சங்கீத விரோதியென்று சொல்லியிருந்ததனாலும் நான் பழகின அளவில் சங்கீதத்தில் அவருக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லையாதலாலும் அந்த அச்சம் எனக்கு உண்டாயிற்று. ‘நின்ற வரையிலும் நெடுஞ்சுவர்’ என்ற எண்ணத்துடன் சங்கீத தெய்வத்தை மறைவாக உபாசனை செய்து வந்தேன்.
இந்த நிலையில் என் ரகசியம் வெளிப்பட்டபோது நான் திகைப்படையாமல் என்ன செய்வேன்? என்ன பதில் சொல்வது? “பழக்கம் விட்டுப்போகாமல் இருப்பதற்காக அவரிடம் கற்றுக்கொள்ளும்படி என் தகப்பனார் சொன்னார்” என்று வாய் குழறிக்கொண்டே சொன்னேன். இயற்றமிழை மாத்திரம் தனித்து விரும்பும் அப்புலவர் தலைவர், “எனக்கு இதுவரையில் அந்த விஷயம் தெரியாது. இசையில் அதிகப்பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கண இலக்கியங்களில் தீவிரமாகப் புத்தி செல்லாது” என்று சொல்லிவிட்டுத் தம் வேலையைக் கவனிக்கச் சென்றார்.
‘அவர் சொன்னது உண்மை’
அவர் கூறிய செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்பதை ஆராய நான் முற்படவில்லை. பாரதியார் அவரைப்பற்றிச் சொன்னது மாத்திரம் உண்மையென்று அன்று உணர்ந்தேன். “இனிமேல் சங்கீதத்தைக் கட்டி வைக்கவேண்டியதுதான்” என்ற முடிவிற்கு வந்தேன். மறுநாள் முதல் பாரதியாரிடம் சங்கீதப் பயிற்சிக்காகச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.
இந்நிகழ்ச்சியால் எனக்கு அதிக மனவருத்தம் உண்டாகவில்லை. சங்கீதம் எங்கள் பரம்பரைச் சொத்து. அதற்காக அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. தமிழறிவோ கிடைத்தற்கரிய பெரும் பேறாக எனக்கு இருந்தது, ஆதலின் அதற்கு முன்னே வேறு எந்தப் பொருளும் எனக்குப் பெரியதாகவே தோற்றவில்லை.
அப்பால் நான் பாரதியாரிடம் சென்று, “படிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாக இருப்பதால் தினந்தோறும் இங்கே வந்து அப்பியாசம் செய்ய முடியாதென்று தோன்றுகிறது. அவகாசமுள்ள வேளைகளில் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று கேட்டுக்கொண்டேன்.
சீகாழிக் கோவை
தமிழ்ப்பாடம் தினந்தோறும் நடைபெற்று வந்தது. பிரபந்தங்கள் பலவற்றை முறையே கேட்டுவந்தேன். ஒரு நாள் என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது, “காஞ்சிப் புராணத்தை நீர் பாடம் கேட்கலாம்; நல்ல நூல். பல அரிய விஷயங்களை அதனால் தெரிந்து கொள்ளலாம்” என்றார்கள். அவருக்கு அப்புராணத்தில் அதிக விருப்பமுண்டு. என்ன காரணத்தாலோ பின்பு அதைத் தொடங்கவில்லை.
“கோவை நூல் ஏதாவது நீர் வாசித்திருக்கிறீரா?” என்று பின்பு பிள்ளையவர்கள் கேட்டார்கள்.
“திருக்கோவையாரும் தஞ்சைவாணன் கோவையும் படித்திருக்கிறேன்” என்று விடை கூறினேன்.
“இப்போது சீகாழிக் கோவை பாடம் கேட்கலாம்” என்று அவர் சொன்னார்.
“அக்கோவையில் ஒரு செய்யுள் எனக்கு முன்பே தெரியும்” என்றேன்.
“எப்படி உமக்குத் தெரியும்?”
“என் சிறிய தந்தையார் முன்பு ஒரு முறை இவ்வூருக்கு வந்தபோது ஐயா அவர்களைப் பார்க்க வந்தாராம். அப்பொழுது ஐயா அவர்கள் சிலருக்குச் சீகாழிக் கோவையைப் பாடஞ் சொல்லி வந்ததை அவர் சிறிது நேரம் இருந்து கவனித்தாராம். ஐயா அவர்கள் பாடஞ் சொல்லியபோது ‘அற்றேமலர்க் குழல்’ என்ற செய்யுளைச் சொல்ல என் சிறிய தந்தையாருக்கு அது மனப்பாடமாகிவிட்டது. அவர் ஊருக்கு வந்து என்னிடம் இச்செய்தியைச் சொல்லியதோடு செய்யுளையும் சொன்னார். நான் அதை அப்போதே பாடம் செய்துகொண்டேன்” என்று சொல்லி அச்செய்யுளையும் கூறினேன்.
“அப்படியா! அந்நூல் முழுவதையும் நீர் பாடங் கேட்டுவிடலாம்” என்று கூறினார்.
நான் பாடங் கேட்பதற்கு அக்கோவையின் பிரதி கிடைக்கவில்லை. பிள்ளையவர்களிடம் இருந்த பிரதி வேறொருவர் வசம் இருந்தது. “கூறை நாட்டுக் கனகசபை ஐயரிடம் பிரதி இருக்கிறது: ஆனால் அதை அவர் எளிதில் கொடுக்கமாட்டார். வேறு யாரிடமாவது இருக்கும்; வாங்கித் தருகிறேன்” என்று அவர் சொன்னார்.
அன்று என் ஆசிரியர் வழக்கம்போல் மத்தியான்ன போஜனம் ஆன பிறகு படுத்துக்கொண்டிருந்தார்.
கூறை நாடு மாயூரத்திலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கும். அவர் துயிலும் சமயமறிந்து நான் கூறை நாட்டுக்கு மிகவும் வேகமாக ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். எப்படியாவது கனகசபை ஐயரிடமிருந்து சீகாழிக் கோவைப் பிரதியை வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றேன். அவரிடம் நயந்து கேட்டு அதை வாங்கினேன். பிள்ளையவர்கள் விழித்துக்கொள்வதற்குள் வந்துவிடவேண்டுமென்று ஒரே ஓட்டமாக மாயூரம் வந்துவிட்டேன். அப்போது ஒரு மணியிருக்கும். அந்த வெயிலின் வெம்மையும் இரண்டு மைல் தூரம் வேகமாகப் போய் வந்த களைப்பும் கோவைப் பிரதி கிடைத்த சந்தோஷத்தில் தோற்றவில்லை.
பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டபோது நான் சுவடியும் கையுமாக எதிரில் நின்றேன்.
“என்ன புஸ்தகம் அது?” என்று கேட்டார் அவர்.
“சீகாழிக் கோவை.”
“ஏது?”
“கனகசபை ஐயருடையது.”
“எப்போது வாங்கி வந்தீர்?”
“இப்போதுதான்.”
“இந்த வெயிலில் ஏன் போக வேண்டும்? அவர் லேசில் தரமாட்டாரே! என்னிடம் சொல்லியிருந்தால் நான் வருவித்துக் கொடுத்திருப்பேனே.”
அக்கோவையைப் பாடங் கேட்க வேண்டுமென்றிருந்த வேகம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டியதென்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஆதலின் அதை உடனே பாடஞ் சொல்லத் தொடங்கினார்.
சீகாழிக் கோவையென்னும் பிரபந்தம் பிள்ளையவர்களாலே இயற்றப் பெற்றது. அவர்களுடைய நண்பராகிய வேதநாயகம் பிள்ளை சீகாழியில் முன்சீபாக இருந்த காலத்தில் என் ஆசிரியர் அங்கே சென்று சில காலம் வசித்தார். அப்போதுதான் அக்கோவையை அவர் இயற்றினார். மற்றக் கோவைகளைக் காட்டிலும் அது சிறிது விரிந்த அமைப்புடையது.
கோவை பாடங் கேட்டு வருகையில் அப்பொழுதப்பொழுது பிள்ளையவர்கள் திருக்கோவையாரிலிருந்தும் வேறு கோவைகளிலிருந்தும் செய்யுட்களை எடுத்துரைத்து அவற்றிலுள்ள நயங்களைச் சொல்வார். கோவைப் பிரபந்தம் ஒரு கதைபோலத் தொடர்ந்து செல்வது; நாயகனும் நாயகியும் அன்பு பூண்டு வாழும் வாழ்க்கையை விரித்துரைப்பது. ஆதலின் அப்பிரபந்தத்தைப் பாடங் கேட்டபோது சிறிதாவது சிரமம் தோற்றவில்லை. அந்தாதிகளையும் பிள்ளைத் தமிழ்களையும் கேட்ட காலத்தில் அங்கங்கே சில இடங்களில் தான் மயங்குவேன்; தெளிவு ஏற்படாது. சீகாழிக் கோவை கேட்கும்போது அம்மாதிரி இல்லை.
சீகாழியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பிரமபுரீசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது அக்கோவை. சிவபக்திச் செல்வராகிய பிள்ளையவர்கள் அப்பிரபந்தத்தில் சிவபெருமான் புகழை வாயாரப் பாடியிருக்கின்றனர். பாடஞ் சொல்லும்போது அங்கங்கே பிரபந்த இயல்பையும் அகப்பொருள் இலக்கண நுணுக்கங்களையும் புலப்படுத்திக்கொண்டே சென்றார். கோவைகளில் ஆரம்பப் பகுதியில் வரும் ‘வறிது நகை தோற்ற’லென்னும் துறையைக் கவிஞன் கூற்றாக அமைப்பது சம்பிரதாயமென்று அவர் சொன்னார். பிற்காலத்தில் எனது தமிழாராய்ச்சியில் அகப்பட்ட கோவைகளில் இந்த அமைப்பைக் கண்டேன். சிலவற்றில் மாத்திரம் அச்செய்யுள் தலைவன் கூற்றாக இருந்தது.
சீகாழிக் கோவை பாடம் நடந்தபோது சவேரிநாத பிள்ளையிடமிருந்து அந்நூல் சீகாழியில் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளையின் உதவியால் அரங்கேற்றப்பட்டதென்பதை உணர்ந்தேன். அக் கோவையைப் பாராட்டி அவர் இயற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் சில உண்டென்றும் சொன்னார். அவற்றுள் மிகவும் நயமான செய்யுள் ஒன்று வருமாறு:-
“விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே
விண்ணோர் மண்ணோர்
துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சி
சுந்த ரப்பேர்
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொல் இக்காழி
வரைப்பில் நீதி
யதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமா
அறைகு வீரே.”
[சீகாழியில் எழுந்தருளியுள்ள ஈசரே, நீர் பலர் இயற்றிய பாமாலைகளைப் பெற்றிருப்பீர். ஆனாலும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய கோவையைப் போல ஒன்று பெற்றதுண்டா? இந்தச் சீகாழி வட்டத்தில் நாம் நீதி பரிபாலனத்திற்கு அதிபதியென்பதை நீர் அறிவீர். நமக்கு முன் சத்தியமாகச் சொல்லும். விதி-பிரமா. புகலி-சீகாழி]
வேதநாயகம் பிள்ளையைப் பற்றிச் சவேரிநாத பிள்ளை பாராட்டிப் பேசினார்; “நான் பிள்ளையவர்களிடத்திலே வருவதற்கு அவரே சிபாரிசு செய்தார். பிள்ளையவர்களிடத்தில் மிக்க அன்பும் மதிப்பும் உள்ளவர், அவர் செய்யுட்களெல்லாம் எளிய நடையில் சாதுர்யமான பொருளை உடையனவாக இருக்கும்” என்று கூறினார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர் தமிழில் அவ்வளவு பற்றுடையவரென்பதைக் கேட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.
பிள்ளையவர்கள் தம் வீட்டிற்குப் பின்புறத்திலுள்ள குளத்தின் படித்துறையில் இருந்து பிற்பகலில் பாடஞ் சொல்லுவார். மேலே ஓடு வேயப்பட்டிருந்தமையின் வெயிலின் கடுமை அங்கே இராது. அப்படித்துறையில் குளிர்ந்த நிழலில் இருந்து பாடஞ் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
சீகாழிக் கோவையைப் பெரும்பாலும் அங்கேயே பாடங் கேட்டேன். அது சில தினங்களில் முடிவடைந்தது. அதைக் கேட்டபோது என் ஆசிரியர் கூறிய செய்திகள் பிற்காலத்தில் என் தமிழாராய்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.
சங்கீத முயற்சியைக் கைவிட்டுத் தமிழே துணையாக இருந்த எனக்கு அக்காலத்தில் சங்கீதத் தொடர்பு அற்றுப் போனது ஒரு குறைவாகத் தோற்றவில்லை. என் கவனத்தை இரண்டு திசைகளிற் பகிர்ந்து செலுத்தாமல் ஒரே திக்கில் செலுத்தியது நல்லதுதானென்ற எண்ணமும் வர வர உறுதியாயிற்று.
------------
அத்தியாயம் 33. அன்பு மயம்
என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேஷங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார்.
செய்யுள் இயற்றும் வழி
“செய்யுள் செய்வதற்கு முன் எந்த விஷயத்தைப் பற்றிச் செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கஷ்டமாக இராதோ அதை அறிந்துகொள்ள வேண்டும். பாட்டில் எதுகையில் இன்னதை அமைக்க வேண்டுமென்பதை வரையறுத்துக்கொண்டு அதற்கேற்ற எதுகையை வைக்க வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து அதற்கேற்றபடி அடிகளைச் சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கிவிட்டு நான்காவது அடிக்கு விஷயமோ வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுவார்.
ஒரு நாள் மாலையில் அவர் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் கனகசபை ஐயரும் சவேரிநாத பிள்ளையும் அருகில் நின்றோம். அப்போது அவர் எங்களை நோக்கி, “உங்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா?” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே?” என்று முதலில் எண்ணினேன். ஆனாலும், மற்றவர்கள் தமக்குத் தெரியுமென்று சொல்லும்போது நான் மட்டும் சும்மா இருப்பதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆதலால், “எனக்கும் தெரியும்” என்று சொன்னேன்.
“ஏதாவது ஒரு பாட்டின் ஈற்றடியைக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியுமா?” என்று ஆசிரியர் கேட்டார்.
“முயன்று பார்க்கிறோம்” என்றோம்.
உடனே அவர் எங்கள் மூவருக்கும் மூன்று வெண்பாக்களுக்குரிய ஈற்றடிகளைக் கொடுத்தார். சவேரிநாத பிள்ளை கிறிஸ்தவர்; ஆகையால் அவருக்கு ஏற்றபடி, “தேவா வெனக்கருளைச் செய்” என்பதையும், கனகசபை ஐயருக்கு, “சிந்தா குலந்தவிரச் செய்” என்பதையும், எனக்கு, “கந்தா கடம்பாகு கா” என்பதையும் கொடுத்தார். நாங்கள் யோசித்து நிதானமாக ஒருவாறு வெண்பாக்களைப் பூர்த்தி செய்தோம்.
எனக்காகப் பிரார்த்தனை
நாங்கள் மூவரும் இந்த மூன்று வெண்பாக்களையும் சொன்னோம். கேட்ட அவர், “நானும் ஒரு பாடல் முடித்திருக்கிறேன்” என்று சொல்லி,
“பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு
கூடக் கருணை கொழித்தருள்வாய்-தேடவரும்
மந்தா நிலந்தவழு மாயூர மாநகர்வாழ்
கந்தா கடம்பாகு கா”
என்று அந்த வெண்பாவையும் சொன்னார். “நம்மோடு சேர்ந்து நமக்கு ஊக்கத்தை உண்டாக்குவதற்காகத் தாமும் ஒரு செய்யுளை இயற்றிச் சொல்லுகிறார்” என்பதை நான் உணர்ந்தேன். தமிழை இன்பந் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்த அப்பெரியார் எங்களுக்கும் தமிழ்க் கல்வியை விளையாட்டாகவே போதித்து வந்தார். பிள்ளைகளுக்கு உத்ஸாக மூட்டுவதற்காகத் தந்தை அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லையா? அதைப் போல அவரும் எங்களுடன் சேர்ந்து செய்யுள் இயற்றினார்.
எங்கள் மூவருக்கும் அவர் கூறிய செய்யுளைக் கேட்டவுடன் ஆனந்தமுண்டாயிற்று. எனக்கு ஒருபடி அதிகமான சந்தோஷம் ஏற்பட்டது. என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த சமஸ்யையையல்லவா தம்முடைய பாட்டிற்கு ஈற்றடியாகக் கொண்டார்? அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா? அது மட்டுமா? அப்பாட்டு ஒரு கவியினது பாட்டாக இருந்தாலும் பொருளமைப்பில் ஒரு மாணாக்கனது பிரார்த்தனையாக வல்லவோ இருக்கிறது? ‘பாடவும் படிக்கவும் அன்பு கூடவும்’ எல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியவர்களே. ஆயினும் என் ஆசிரியர் அத்தகைய பிரார்த்தனையை எவ்வளவோ காலத்திற்கு முன் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர். ஆகையால் அப்போது அந்தப் பிரார்த்தனையை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. குழந்தைக்காகத் தாய் மருந்தை உண்பதுபோல, பாடவும் படிக்கவும் அன்பு கூடவும் வேண்டுமென்று மாயூர நகர் வாழும் கந்தனை நான் பிரார்த்திப்பதற்குப் பதிலாக அவரே பிரார்த்தித்தார். எனக்காகவே அப்பாடல் இயற்றப் பெற்றது.
இத்தகைய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் மகிழ்ந்தேன்; பெருமிதமடைந்தேன்; உருகினேன். அதுமுதல் அச்செய்யுளை நாள்தோறும் சொல்லி வரலானேன். நான் சொந்தமாக இயற்றிய செய்யுள் என் நினைவில் இல்லை. எனக்காக என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளே என் உள்ளத்தில் இடங்கொண்டது.
முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தமிழ்க் கல்வியையே விரும்பி வாழ்ந்த எனக்கு அப்பெருமானிடத்தே பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. மந்திர ஜபத்தால் அவரது உபாஸனையை ஒருவாறு செய்து வந்தாலும் தமிழ்க் கடவுளைத் தமிழ்ச் செய்யுளாலே உபாஸித்துவர வேண்டு மென்ற அவா உண்டானமையால் எந்தத் தமிழ் நூலையாவது தினந்தோறும் பாராயணம் செய்து வர வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குமரகுருபர சுவாமிகள் முருகக் கடவுள் திருவருள் பெற்றவரென்று அறிந்து அவர் இயற்றிய நூல்களில் ஒன்றாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைத் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்து வரலானேன். இப்பழக்கம் உத்தமதானபுரத்திலேயே ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களிடத்தில் வந்த பிறகும் இப்பாராயணம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் என் ஆசிரியர் எனக்காகப் பாடிக்கொடுத்த வெண்பாவும் கிடைத்ததென்றால் எனக்குண்டான திருப்தியைச் சொல்லவா வேண்டும்? அதனையும் ஒரு மந்திரமாகவே எண்ணிச் சொல்லி வந்தேன்.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் பாராயணம் செய்து வருவதால் காலையில் சில நாழிகை பாடங் கேட்க இயலாது. நான் பாராயணம் செய்து வருவது பிள்ளையவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குப் பாடஞ் சொல்ல ஆரம்பிக்கும்போது நான் இல்லாவிடின் எனக்காகக் காத்திருப்பது அவரது வழக்கமாயிற்று. இத்தகைய தாமதம் ஏற்படுவதை மாற்றும் பொருட்டு அவர் ஒரு நாள் என்னிடம், “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை முற்றும் இவ்வாறு பாராயணம் செய்வது நன்மையே; ஆனாலும் தினந்தோறும் செய்து வரும்போது சில நாட்கள் உமக்குச் சிரமமாக இருக்கும். காலையில் சுறு சுறுப்பாகப் பாடம் கேட்பதற்கும் சிறிது தாமதம் நேருகிறது. அதற்கு ஒரு வழி சொல்லுகிறேன். பிள்ளைத் தமிழில் வருகைப் பருவம் மிகவும் முக்கியமானது. நீர் அந்நூலில் வருகைப் பருவத்தின் கடைசி இரண்டு செய்யுட்களை மாத்திரம் பாராயணம் செய்து வந்தாற் போதும். இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு” என்றார். அவர் கூறியது எனக்கு அனுகூலமாகவே தோற்றியது. ஆதலின் அவர் கட்டளைப்படியே நான் அது தொடங்கி அந்த இரண்டு செய்யுட்களை மாத்திரம் தினந்தோறும் சொல்லி வரலானேன்.
தம்பியின் ஜனனம்
பிரஜோற்பத்தி வருஷம் ஆடி மாதம் பிறந்தது. எனக்குப் பதினேழாம் பிராயம் நடந்தது. என் தந்தையாரும் தாயாரும் சூரியமூலையில் இருந்தனர். ஆடி மாதம் மூன்றாந் தேதி திங்கட்கிழமை (17-7-1871) யன்று இறைவன் திருவருளால் எனக்கு ஒரு தம்பி பிறந்தான். இச்செய்தியை எனக்குத் தெரிவித்து அழைத்துச் செல்வதற்காக என் தந்தையாரே வந்தார். என் தாய், தந்தையர் என்னைப் பிரிந்து வருந்துவதை நான் அறிந்தவன். அவ்வருத்தத்தை ஒருவாறு போக்கி ஆறுதல் உண்டாக்கவே கடவுள் இக்குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நம்பினேன்.
பிள்ளையவர்களிடம் என் தந்தையார் இச் சந்தோஷச் செய்தியைத் தெரிவித்தபோது அவர் மகிழ்ந்தார். என்னை நோக்கி, “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பது பழமொழி. குழந்தை சௌக்கியமாக வளர்ந்து உமக்குச் சிறந்த துணையாக இருக்க வேண்டுமென்று சிவபெருமானைப் பிரார்த்திக்கிறேன்” என்றார். அப்பால், சிறிது நேரம் வரையில் என் படிப்பு சம்பந்தமாகப் பேசிவிட்டு, “நான் இவனை ஊருக்கு அழைத்துச் சென்று புண்யாஹ வாசனம் வரையில் வைத்திருந்து பிறகு அனுப்பிவிடுகிறேன்” என்று என் தந்தையார் பிள்ளையவர்களிடம் அனுமதிபெற்று என்னை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
மாயூரத்திலிருந்து சூரியமூலை ஏறக்குறைய 10 மைல் தூரம் இருக்கும். நாங்கள் நடந்தே சென்றோம். எங்கள் பிராயணம் பெரும்பாலும் நடையாகத்தான் இருந்தது. செல்லும்போது தந்தையார் என்னுடைய காலப்போக்கைப் பற்றி விசாரித்தார். நான் கூறிய விடையால் எனக்கிருந்த உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் என்பால் உண்டாகியிருந்த கல்வி அபிவிருத்தியையும் அறிந்தார்.
“நான் வரும்போதே உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வரும் வழியில் மாயூரத்திலிருந்து யாரேனும் எதிரே வந்தால் அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிப்பேன். அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியை உண்டாக்கிற்று. மாயூரத்திலிருந்து வரும் ஒருவரைப் பார்த்து ‘பிள்ளையவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா?’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே! உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஆகா, தெரியுமே. பிள்ளையவர்களைப் பார்த்தவர்கள் அவர்களுடைய மாணாக்கர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே. ஒவ்வொருவரையும் பற்றி வருபவர்களுக்குச் சொல்லி உத்ஸாகமூட்டுவது அவர்கள் வழக்கமாயிற்றே. இப்போது வந்திருக்கும் பிராமணப் பையனிடம் அவர்களுக்கு அதிகப் பிரியமாம். அப்பிள்ளை நன்றாகப் பாடல் படிக்கிறாராம். சங்கீதங்கூடத் தெரியுமாம். பிள்ளையவர்கள் அவரிடம் வைத்துள்ள அன்பு அவரோடு பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்’ என்று சொன்னதைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது உன் அம்மா உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று என் தந்தையார் கூறினார்.
அன்னையின் ஆவல்
நாங்கள் சூரியமூலை போய்ச் சேர்ந்தோம். வீட்டிற்குள் சென்றேனோ இல்லையோ நேரே, “அம்மா!” என்று சொல்லிக்கொண்டே பிரசவ அறைக்கு அருகில் சென்றுவிட்டேன். உள்ளே இருந்து மெலிந்த குரலில், “வா, அப்பா” என்று அருமை அன்னையார் வரவேற்றார்.
“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று அங்கிருந்த என் பாட்டியார் குழந்தையை எடுத்து எனக்குக் காட்டினார். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தேன். அதே சமயத்தில் என் தாயார் அந்த அறையில் இருந்தபடியே என்னை நோக்கிச் சந்தோஷம் அடைந்தார்.
“சாமா, உன் உடம்பு இளைத்துவிட்டதே; வேளைக்கு வேளை ஆகாரம் சாப்பிடுகிறாயா? எண்ணெய் தேய்த்துக்கொள்கிறாயா?” என்று என் தாயார் விசாரித்தார்.
“எனக்கு ஒன்றும் குறைவில்லை. சௌக்கியமாகவே இருக்கிறேன்” என்றேன் நான்.
“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தழுதழுத்த குரலில் என் அன்னையார் கூறினபோது அவருடைய ஹிருதயத்திலிருந்த துக்கத்தின் வேகம் என்னையும் தாக்கியது; என் கண்களில் அதன் அடையாளம் தோற்றியது.
அன்புப் பிணைப்பு
புண்ணியாஹவாசனம் நடைபெற்றது. அதன் பின்பும் சில நாட்கள் அங்கே இருந்தேன். “குழந்தை அங்கே தனியாக இருக்கிறான். வாய்க்கு வேண்டியதைத் தருவதற்கு யார் இருக்கிறார்கள்? ஏதாவது பக்ஷணம் பண்ணிக்கொடுங்கள்” என்று என் தாயார் கூற, அங்கிருந்த ஒவ்வொரு நாளும் விதவிதமான சிற்றுண்டிகளை வீட்டிலுள்ளவர்கள் செய்துகொடுத்தார்கள். நான் உண்டேன். என்னிடம் பிள்ளையவர்கள் வைத்துள்ள அன்பைக் குறித்து நான் விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்டபோது என் தாயாருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.
என் பாட்டனார் பிள்ளையவர்களைப்பற்றி விசாரித்தார். அவருடைய சிவபக்தியையும் பாடஞ் சொல்லும் ஆற்றலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார். அவரியற்றிய சிவோத்கர்ஷத்தை விளக்கும் பாடல்களைச் சொல்லிக் காட்டினேன். நான் சொன்ன விஷயங்களெல்லாம் பாட்டனாருக்கு மிக்க ஆச்சரியத்தை விளைவித்தன.
சூரியமூலைக்குச் சென்றபோது என் தாயாரையும் தந்தையார் முதலியோரையும் குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியிலே சில நாட்கள் பதிந்திருந்தேன். தினந்தோறும் தவறாமல் தமிழ்ப்பாடங் கேட்டு வரும் பழக்கத்தில் ஊறியிருந்தவனாகிய எனக்கு அப்பழக்கம் விட்டுப்போனதனால் ஒருவிதமான குறை சிறிது சிறிதாக உறைக்கத் தொடங்கியது. தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒருவிதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார், தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது! அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன்.
-----------
அத்தியாயம் 34. புலமையும் வறுமையும்
சூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய லாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார்.
பெரிய புராணப்பாடம்
தஞ்சை ஜில்லாவில் சில முக்கியமான தேவஸ்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் ஸ்ரீ மாயூரநாதர் கோயிலும் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயமும் அவ்வாதீனத்துக்கு உட்பட்டவை. ஆதீனகர்த்தராகிய பண்டார சந்நிதிகளின் பிரதிநிதியாக இருந்து, அவர்கள் கட்டளைப்படி தேவஸ்தானங்களின் விசாரணையை நடத்தி வரும் தம்பிரான்களுக்குக் கட்டளைத் தம்பிரான்கள் என்றும் அத்தம்பிரான்கள் தம் தம் வேலைக்காரர்களுடன் வசிப்பதற்காக அமைத்திருக்கும் கட்டிடங்களுக்குக் கட்டளை மடங்களென்றும் பெயர் வழங்கும். மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதியாகப் பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவர் மாயூரம் தெற்கு வீதியில் உள்ள கட்டளை மடத்தில் இருந்து கோயிற் காரியங்களை நன்றாகக் கவனித்து வந்தார். அவர் தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர். அவர் இருந்த கட்டளை மடம், பிள்ளையவர்கள் விடுதிக்கு அடுத்ததாதலால் அடிக்கடி அங்கே சென்று அவருடன் சல்லாபம் செய்து வருவார். அவருக்குப் பிள்ளையவர்களிடம் பெரியபுராணம் பாடம் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்தமையால் அவ்விதமே தொடங்கி முதலிலிருந்து பாடங் கேட்டு வந்தார். வேறு முதியவர் சிலரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். சவேரிநாத பிள்ளையும் கேட்டு வந்தனர்.
நான் சூரியமூலையிலிருந்து வந்த காலத்தில் எறிபத்த நாயனார் புராணத்துக்கு முந்திய புராணம் வரையில் நடைபெற்றிருந்தது. நான் வந்த தினத்தில் அப்புராணம் ஆரம்பமாயிற்று. பெரிய புராணத்தை நான் அதற்கு முன் பாடங் கேட்டதில்லை. நாயன்மார்களுடைய பெருமையை விரித்துரைக்கும் அந்நூலைப் பிள்ளையவர்கள் போன்ற சிவபக்திச் செல்வம் நிறைந்தவர்கள் சொல்லத் தொடங்கினால் இயல்பாகவே பக்தி ரஸம் செறிந்துள்ள அப்புராணம் பின்னும் அதிக இனிமையை உண்டாக்கும் என்பதில் என்ன சந்தேகம்?
நான் பிரபந்தங்கள் பாடங்கேட்ட அளவில் நின்றிருந்தேன்; காவியங்களைப் பாடம் கேட்கும் நிலையை அதுவரையில் அடையவில்லை. ஆதலால் “நமக்கு இப்புராணத்தைப் பிள்ளையவர்கள் பாடம் சொல்வார்களோ” என்று ஐயமுற்றேன்! அன்றியும் அதைக் கேட்பவர்கள் தக்க மதிப்புடையவர்களாகவும் தமிழ்க் கல்வியிலும் பிராயத்திலும் என்னைக் காட்டிலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளவர்கள். “இவர்களோடு ஒருவனாக இருந்து பாடம் கேட்பது முடியாது” என்ற எண்ணமே எனக்கு முன் நின்றது.
அந்நிலையில் என் அருமை ஆசிரியர் என்னை அழைத்து, “பெரியபுராணத்தை நீரும் இவர்களுடன் பாடங் கேட்கலாம்” என்று கூறினார்; அப்போது நான் மெய்ம்மறந்தேன். ஆனந்தவாரியில் மூழ்கினேன். சில நேரம் வரையில் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.
ஒரு பெரிய விருந்தில் குழந்தைகளை விலக்கிவிடுவார்களா? அவர்களையும் சேர்த்துக்கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள்?அப்பெரியபுராண விருந்தில் தமிழ்க் குழந்தையாகிய எனக்கும் இடம் கிடைத்தது.
நாயன்மார்கள் வரலாறு கதையாக இருத்தலினாலும் சேக்கிழார் வாக்கு ஆற்றொழுக்காகச் செல்வதாலும் பெரியபுராணம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. என் ஆசிரியர் பாடம் சொல்லும் முறையினால் நான் அதை நன்றாக அனுபவித்துக் கற்று வந்தேன். பாடம் சொல்லி வரும்போது பிள்ளையவர்களிடமுள்ள சிவ பக்தித்திறம் நன்றாகப் புலப்பட்டது. அவர்களுடைய அந்தரங்கமான பக்தியைப் பெரியபுராணத்திலுள்ள செய்யுட்கள் வெளிப்படுத்தின. நான் அதைப் பாடங் கேட்ட காலத்தில் வெறுந்தமிழை மாத்திரம் கற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய மாதாமகர், தந்தையார் ஆகியவர்களது பழக்கத்தால் என் அகத்தே விதைக்கப்பட்டிருந்த சிவநேசமென்னும் விதை பிள்ளையவர்களுடைய பழக்கமாகிய நீரால் முளைத்து வரத் தொடங்கியது.
ஏட்டிற் கண்ட செய்யுட்கள்
பெரியபுராணப் பாடம் நடந்து வந்தது. ஒருநாள் திருவாவடுதுறையிலிருந்து கண்ணப்பத் தம்பிரானென்பவர் மாயூரத்துக்கு வந்தார். அவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் காறுபாறாக இருந்தவர். அவர் வந்த அன்று தற்செயலாகக் கண்ணப்ப நாயனார் புராணப் பாடம் கேட்டோம். கண்ணப்பத் தம்பிரானும் உடனிருந்து கேட்டு இன்புற்றார். கட்டளை மடத்திலே பாடம் நடைபெற்றது.
அன்றைக்கே அப்புராணத்தை முடித்துவிட வேண்டுமென்று சிலர் வற்புறுத்தினமையால் நாங்கள் வேகமாகப் படித்து வந்தோம். என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடஞ் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.
நெய்யில்லா உண்டி
பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்துகொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரன் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச் சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.
ஆகாரமான பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடைபெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடஞ் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.
வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை. “பெரிய கவிஞர். தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர். தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர். ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர். சில நாள் நெய் இல்லாமல் உண்டார். ஒருவேளை கட்டளை மடத்தில் உண்ட உணவு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.
‘எண்ணெய் இல்லை’
ஒரு நாள் காலையில் அவர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி ஒரு பலகை போட்டுக்கொண்டு அதன் மேல் அமர்ந்தார். ஒரு வேலைக்காரன் அவருக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். அவன் உள்ளே சென்று தவசிப் பிள்ளையை எண்ணெய் கேட்டான். எண்ணெய் இல்லை.
என் ஆசிரியர் எந்தச் சமயத்திலும் பாடஞ் சொல்லும் வழக்கமுடையவராதலின் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்தபடியே பாடஞ் சொல்லத் தொடங்கினார். நானும் பிறரும் புஸ்தகத்தோடு அருகில் இருந்தோம். எண்ணெய் வருமென்று அவர் எதிர்பார்த்திருந்தும் பாடஞ் சொல்லும் ஞாபகத்தில் அதை மறந்துவிட்டார்.
நான் அதைக் கவனித்தேன். எண்ணெய் இல்லையென்பதை அறிந்துகொண்டேன். உடனே மெல்ல ஏதோ காரியமாக எழுபவன் போல எழுந்து வேகமாகக் காவிரிக் கரையிலுள்ள கடைக்கு ஓடிப்போய் என்னிடமிருந்த ரூபாயிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து சமையற்காரனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பாடஞ் கேட்பதற்கு வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்துக் காய்ச்சின எண்ணெய் வந்தது. அவர் தேய்த்துக்கொண்டார்.
இப்படி இடையிடையே நிகழும் சில நிகழ்ச்சிகளால் அவருடைய நிலையை அறிந்தபோது என் மனம் புண்ணாகிவிடும். “புலமையும் வறுமையும் சேர்ந்து இருப்பது இந்நாட்டிற்கு வாய்ந்த சாபம் போலும்!” என்று எண்ணினேன்.
அவர் வாழ்க்கை
பிள்ளையவர்கள் பெரும்பாலும் சஞ்சாரத்திலேயே இருந்தமையால் குடும்பத்தோடு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அவர் தம் மனைவியையும் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையையும் திரிசிரபுரத்தில் தம் சொந்த வீட்டிலேயே இருக்கச் செய்திருந்தார். அவ்வப்போது வேண்டிய செலவுக்குப் பணம் அனுப்பி வருவார். மாயூரத்தில் இருந்தபோது அவருடன் இரண்டு தவசிப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இரண்டு கலம் சம்பளம் திருவாவடுதுறை மடத்திலிருந்து அளிக்கப்பெற்று வந்தது. அவர்களது ஆகாரம் முதலிய மற்றச் செலவுகள் பிள்ளையவர்களைச் சார்ந்தன.
தவசிப் பிள்ளை
அந்த இருவர்களுள் பஞ்சநதம் பிள்ளை என்பவன் ஒருவன். தான் மடத்தினால் நியமிக்கப்பட்டவனென்ற எண்ணத்தினால் அவன் முடுக்காக இருப்பான். “இந்தப் பெரியாருக்குப் பணிவிடை செய்ய வாய்த்தது நம் பாக்கியம்” என்ற எண்ணம் அவனிடம் கடுகளவும் இல்லை. தமிழ் வாசனையை அவன் சிறிதும் அறியாதவன். “ஊரில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்துக் கூட்டம் போட்டுப் பயனில்லாமல் உழைத்துச் செலவு செய்து வாழ்கிறார்” என்பதுதான் பிள்ளையவர்களைப் பற்றி அவனது எண்ணம். பிள்ளையவர்கள்பால் பாடம் கேட்கும் மாணாக்கர்களிடம் அவனுக்கு வெறுப்பு அதிகம். பிள்ளையவர்கள் தம்மிடம் யாரேனும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் அதை அவர் பொருட்படுத்த மாட்டார்; அவனோ மாணாக்கர்களெல்லாம் தன்னிடம் மரியாதை காட்டவேண்டுமென்று விரும்புவான். அவனுக்குக் கோபம் உண்டாக்கிவிட்டால் அதிலிருந்து தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவனுடைய குணங்களை முன்பு நான் அறிந்திலேன்.
நான் படிக்க வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவனை, “பஞ்சநதம்” என்று அழைத்தேன். அவன் பதில் பேசாமலே போய்விட்டான். நான் அவ்வாறு அழைத்ததைக் கவனித்த என் ஆசிரியர் அவன் இல்லாத சமயம் பார்த்து என்னிடம், “அவனை இனிமேல் பஞ்சநதமென்று கூப்பிட வேண்டாம்; பஞ்சநதம்பிள்ளையென்று அழையும். நீ என்று ஒருமையாகவும் பேச வேண்டாம்; நீர் என்றே சொல்லும்; நீங்கள் என்றால் பின்னும் உத்தமம். அவன் முரடன்; நான் அவன் மனம் கோணாமல் நடந்து காலம் கழித்து வருகிறேன்” என்று கூறினார். மனித இயற்கைகள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றனவென்று அறிந்து அது முதல் நான் ஜாக்கிரதையாகவே நடந்து வரலானேன்.
-----------
அத்தியாயம் 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்
திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால ஸ்தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப் பாரட்டிய திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்களைப் பிள்ளையவர்கள் படித்ததில்லை. அவற்றை வருவித்துப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
திருக்குற்றால யமக அந்தாதி
அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்பவர். அவர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் உதித்தவர். அவருடைய தம்பியாரும் மாணாக்கருமான சண்பகக்குற்றாலக் கவிராயர் என்பவர் மூலமாகப் பிள்ளையவர்கள் திருக்குற்றாலத் தலபுராணத்தையும் திருக்குற்றால யமக அந்தாதியையும் வருவித்துத்தாமே படித்து வரத் தொடங்கினார். யமக அந்தாதிக்கு ஒருவாறு பொருள் வரையறை செய்துகொண்டு எங்களுக்கும் பாடம் சொன்னார். குற்றாலத் தலபுராணத்தையும் இடையிடையே படிக்கச் செய்து கேட்டு இன்புற்று வந்தார். அந்நூலின் நடை நயத்தையும் பொருள் வளத்தையும் மிகவும் பாராட்டினார்.
எனக்குத் திருக்குற்றால யமக அந்தாதியில் சில செய்யுட்கள் பாடமாயின; அந்நூலைப் பாடம் சொல்லும்போது பிள்ளையவர்கள், “இதனை இயற்றிய கவிராயர் நல்ல வாக்குடையவர்; இப்போது திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற [1] மகாசந்நிதானம் அக்கவிராயர் பரம்பரையில் உதித்தவர்களாதலால் தமிழிற் சிறந்த புலமை உடையவர்கள். வடமொழியிலும் சங்கீதத்திலும் நல்ல ஞானம் உள்ளவர்கள். அவர்களை நீரும் சமீபத்தில் தரிசிக்கும்படி நேரும்” என்று கூறினார்.
‘குட்டிகளா!’
திருவாவடுதுறையிற் பதினைந்தாம் பட்டத்தில் இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகருடைய குருபூஜை வந்தது. அதற்கு வரவேண்டுமென்று ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களுக்குத் திருமுகம் அனுப்பியிருந்தார். அதற்காக அவர் திருவாவடுதுறை சென்று அங்கே மூன்று தினங்கள் இருந்துவிட்டு வந்தார். வந்தவுடன் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரு நண்பரிடம் சொன்னார். நானும் பிற மாணாக்கர்களும் உடனிருந்து கவனித்தோம்.
“மகாசந்நிதானம் மிகவும் அன்போடு விசாரித்துப் பாராட்டியது. திருவாவடுதுறைக்கே வந்து இருந்து மடத்திலுள்ளவர்களுக்குப் பாடஞ் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டது. அங்கேயுள்ள குட்டிகளும் என்னை மொய்த்துக்கொண்டு, ‘எப்படியாவது இங்கே வந்திருந்து பாடஞ் சொல்லித் தரவேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். நான் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு வந்தேன்” என்று ஆசிரியர் சொன்னார்.
நான் கவனித்து வரும்போது ‘குட்டிகள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிட்டேன். “மடத்தில் குட்டிகள் இருக்கிறார்களா? என்று பிரமித்தேன். குட்டிகள் என்று இளம்பெண்களை யாவரும் கூறும் வழக்கத்தையே நான் அறிந்தவன். பக்கத்திலிருந்த சவேரிநாத பிள்ளையிடம், “குட்டிகள் மடத்தில் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் சிரித்துவிட்டு ‘சிறிய தம்பிரான்களை மடத்தில் குட்டித் தம்பிரான்கள் என்று சொல்வார்கள். அந்தப் பெயரையே சுருக்கிக் ‘குட்டிகள்’ என்று வழங்குவதுமுண்டு” என்று விளக்கமாகக் கூறினார். என் சந்தேகமும் நீங்கியது.
“திருவாவடுதுறையிலே போய் இருந்தால் இடைவிடாமற் பாடஞ் சொல்லலாம். அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள்; அவர்களுடைய பழக்கம் உண்டாகும். சந்நிதானத்தின் சல்லாபம் அடிக்கடி கிடைக்கும். அதைவிடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிள்ளைகளுக்கு ஆகார வசதிகள் முதலியன கிடைக்கும்” என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள். அவர் மாணாக்கர்களுடைய சௌகரியத்தையே முதல் நோக்கமாக உடையவர் என்பது அவ்வார்த்தைகளால் புலப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஆனி மாதத்தில் நடந்தது. அது முதல் “இந்த மகாவித்துவானுடைய மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்தச் ‘சந்நிதானம்’ சிறந்த ரஸிகராகவே இருக்கவேண்டும்” என்று நான் நினைக்கலானேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் பெருமையையும் அதன் தலைவர்களாக உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரது மேன்மையையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த என் மனத்துள் “திருவாவடுதுறைக்கு எப்பொழுது போவோம்!” என்ற ஆவல் உண்டாயிற்று.
ஆறுமுகத்தா பிள்ளை
ஒரு நாள் பட்டீச்சுரத்திலிருந்து ஆறுமுகத்தா பிள்ளை என்ற சைவவேளாளப் பிரபு ஒருவர் வந்தார். அவர் பிள்ளையவர்களைத் தெய்வமாக எண்ணி உபசரிப்பவர். பிள்ளையவர்கள் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில தினங்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து வருவது வழக்கம்.
பிள்ளையவர்கள் செல்வாக்கை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தா பிள்ளை தம்முடைய குடும்பத்தில் உள்ள துன்பங்கள் சிலவற்றை அப்புலவர் பெருமானைக்கொண்டு நீக்கிக்கொள்ளலாம் என்றெண்ணி அவரை அழைத்துச் செல்வதற்கு வந்திருந்தார். என் ஆசிரியர் ஆறுமுகத்தா பிள்ளையிடம் விசேஷமான அன்புகாட்டி வந்தார். அதனால் அவருடைய வேண்டுகோளைப் புறக்கணியாமல் பட்டீச்சுரம் புறப்பட நிச்சயித்தார்.
திருவாவடுதுறைப் பிரயாணம்
“திருவாவடுதுறைக்குப் போய்ச் சந்நிதானத்திடம் விடைபெற்று, அங்கிருந்து பட்டீச்சுரம் போகலாம்” என்று சொல்லி என்னையும் தவசிப் பிள்ளைகளில் ஒருவரான பஞ்சநதம் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளையுடன் ஆசிரியர் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்.
திருவாவடுதுறை மாயூரத்திலிருந்து சற்றேறக்குறையப் பத்து மைல் தூரம் இருக்கும். ஆறுமுகத்தா பிள்ளை ஒரு வண்டி கொணர்ந்திருந்தார். நாங்கள் எல்லோரும் அவ்வண்டியில் ஏறிக்கொண்டு சென்றோம். சில நேரம் வழியில் நடந்து செல்வது உண்டு. பிராயாணத்திற் பிள்ளையவர்கள் திருவாவடுதுறையைப் பற்றிப் பல செய்திகளை என்னிடம் சொன்னார்.
“சந்நிதானம் உம்மைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டாலும் கேட்கும்; சில செய்யுட்களைச் சொல்லும்படி கட்டளையிடலாம்; நீர் நன்றாக இசையுடன் செய்யுட்களைச் சொல்லும்; சந்நிதானத்திற்கு இசையில் விருப்பம் அதிகம். பொருள் கேட்டால் அச்சமின்றித் தெளிவாகச் சொல்லும். சந்நிதானம் உம்மிடத்தில் பிரியம் வைத்தால் உமக்கு எவ்வளவோ நன்மைகள் உண்டாகும்” என்று கூறினார்.
வழியில் எதிரே வருபவர்கள் பிள்ளையவர்களைக் கண்டு மரியாதையாக ஒதுங்கிச் சென்றார்கள். நாங்கள் திருவாவடுதுறையின் எல்லையை அணுகினோம். அங்கே சந்தித்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். சந்தோஷ மிகுதியால் அவரைச் சுற்றிக்கொண்டு க்ஷேமம் விசாரித்தார்கள். மடத்தைச் சேர்ந்த ஓதுவார்களிற் சிலர் பிள்ளையவர்கள் வரவை உடனே சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தனர். தேசிகர் அவரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார்.
சுப்பிரமணிய தேசிகர் தோற்றம்
நாங்கள் மடாலயத்துள் சென்றோம். மடத்தின் உட்புறத்தில் ஒடுக்கத்தின் வடபுறத்தே தென்முகம் நோக்கியபடி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அமர்ந்திருந்தார். மடத்தில் பண்டார சந்நிதிகள் இருக்குமிடத்திற்கு ‘ஒடுக்கம்’ என்று பெயர். சுப்பிரமணிய தேசிகருடைய தோற்றத்திலே ஒரு வசீகரம் இருந்தது. நான் அதுகாறும் அத்தகைய தோற்றத்தைக் கண்டதே இல்லை. துறவிகளிடம் உள்ள தூய்மையும் தவக்கோலமும் சுப்பிரமணிய தேசிகரிடம் நன்றாக விளங்கினர். கவலை என்பதையே அறியாத செல்வரது முகத்தில் உள்ள தெளிவு அவர் முகத்தில் பிரகாசித்தது. அவரது காவியுடை, ருத்திராட்ச மாலை, தலையில் வைத்துள்ள ஜபமாலை ஆகிய இவைகள் அவரது சைவத்திருக்கோலத்தை விளக்கின.
காதில் அணிந்திருந்த [2]ஆறுகட்டி, சுந்தர வேடம், விரல்களில் உள்ள அங்குஷ்டம் பவித்திரம் என்பவைகள், தேகத்திலிருந்த ஒளி, அந்த மேனியிலிருந்த வளப்பம் எல்லாம் அவர் துறவிகளுள் அரசராக விளங்கியதைப் புலப்படுத்தின. அவருடைய தோற்றத்தில் தவப்பயனும் செல்வப் பயனும் ஒருங்கே விளங்கின. அவர் முகமலர்ச்சியிலே, அவருடைய பார்வையிலே, அவர் அமர்ந்திருந்த நிலையிலே, அவரது கம்பீரமான தோற்றத்திலே ஓர் அமைதியும், கண்டாரைக் கவரும் தன்மையும் இயல்பாகவே அமைந்திருக்கும் தலைமையும் ரஸிகத்துவமும் புலப்பட்டன.
அவரைச் சுற்றிப் பலர் உட்கார்ந்திருந்தனர். எல்லோருடைய முகத்திலும் அறிவின் தெளிவு மலர்ந்திருந்தது. எல்லாருடைய முகங்களும் சுப்பிரமணிய தேசிகரை நோக்கியபடியே இருந்தன. பிள்ளையவர்கள் புகுந்தவுடன் தேசிகர் கண்களிலே தோற்றிய பார்வையே அவரை வரவேற்றது. அங்கிருந்த யாவரும் என் ஆசிரியரைப் பார்த்தனர். அவர்களிடையே ஓர் உவகைக் கிளர்ச்சி உண்டாயிற்று.
ஆசிரிய வணக்கம்
பிள்ளையவர்கள் தேசிகரைச் சாஷ்டாங்கமாக வணங்கினர். அவருடைய சரீர அமைப்பு அப்படி வணங்குவதற்கு எளிதில் இடம் கொடாது. சிரமப்பட்டே வணங்க வேண்டும். ஆதலின் அவர் கீழ் விழுந்து நமஸ்காரம் செய்த காட்சி எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. புலவர் சிகாமணியாகிய அவர் புலமைநிலை மிக உயர்ந்தது. பிறரை வணங்காத பெருமையை உடைய அவர் அவ்வாறு பணிந்து வணங்கியபோது அவரது அடக்கத்தையும் குருபக்தியையும் உணர்ந்து பின்னும் வியப்புற்றேன்.
வணங்கி எழுந்த ஆசிரியர், தேசிகரிடம் திருநீறு பெறுவதற்கு அணுகினார். அப்போது நான் அவர் பின்னே சென்றேன். தேசிகர் முன் பிள்ளையவர்கள் குனிந்தார். அவர் அன்புடன் பிள்ளையவர்களது நெற்றியில் திருநீறிட்டு, “உட்கார வேண்டும்” என்றார். வழக்கம்போல் இரண்டாவது முறை பிள்ளையவர்கள் வணங்கத் தொடங்கியபோது. “ஒருமுறை வணங்கியதே போதும். இனி இந்த வழக்கம் வேண்டாம்” என்று தேசிகர் சொல்லவே அவர் மீட்டும் வணங்காமல் அருகில் ஓரிடத்தில் அமர்ந்தார். அமர்ந்த பிறகு, “உங்களிடம் பாடங் கேட்டு வரும் சாமிநாதையரா இவர்?” என்று தேசிகர் என்னைச் சுட்டிக் கேட்டார். “ஸ்வாமி” என்று பிள்ளையவர்கள் சொல்லவே, தேசிகர் என்னையும் உட்காரச் சொன்னார். பெரியோர்களிடத்தில் மற்றவர்கள் ஆம் என்னும் பொருளில் ‘ஸ்வாமி’ என்னும் வார்த்தையை உபயோகிப்பது வழக்கம். நான் என் ஆசிரியருக்குப் பின்னால் இருந்தேன். “நம்மைப் பற்றி முன்னமே நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்களே! இவர்களும் ஞாபகம் வைத்திருக்கிறார்களே” என்று எண்ணி உளம் பூரித்தேன்.
‘நீங்கள் இல்லாத குறை’
தேசிகர் பிள்ளையவர்களுடைய க்ஷேம சமாசாரங்களை முதலில் விசாரித்தார்; பின்பு. “மகாவைத்தியநாதையரவர்கள் இங்கே வந்திருந்தார்கள்; நேற்று மாலையில் சோமாசிமாற நாயனார் கதை பண்ணினார்கள். திருவிடைமருதூர், திருவாலங்காடு முதலிய இடங்களிலிருந்து சம்ஸ்கிருத வித்துவான்களும் வேறு ஊர்களிலிருந்து கனவான்களும் வந்திருந்தார்கள்; நல்ல ஸதஸ்; நீங்கள் இல்லாதது தான் குறையாத இருந்தது; மகாவைத்தியநாதையரவர்கள் பல வடமொழி நூல்களிலிருந்து அருமையான மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்கள். பெரியபுராணம், தேவார, திருவாசகம் முதலிய நூல்களிலிருந்தும் உங்கள் வாக்காகிய சூதசங்கிதையிலிருந்தும் செய்யுட்களை எடுத்துச் சொல்லிப் பிரசங்கம் செய்தார்கள். உங்கள் வாக்கைச் சொல்வதற்கு முன் ‘பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று பீடிகை போட்டுக்கொண்டு செய்யுளை இசையுடன் சொல்லி அர்த்தம் கூறும்போது உங்கள் பெருமை எல்லோருக்கும் விளங்கியது. இப்படி அடிக்கடி உங்கள் வாக்கை எடுத்துக்காட்டினார்கள். அதுமுதல் உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். இங்கேயுள்ள தம்பிரான்களும் பிறரும் உங்கள் வரவை வெகு ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்” என்று உரைத்தார். அப்போது, அவருடைய வார்த்தைகளில் அன்பும் இனிமையும் வெளிப்பட்டன. “உலகம் பெரிது; அதில் உள்ள பெரியோர்கள் அளவிறந்தவர்கள். மனத்தைக் கவரும் அரிய குணங்களும் அநந்தம்” என்று நான் நிமிஷத்துக்கு நிமிஷம் எண்ணமிடலானேன்.
பெருமையின் விரிவு
பிள்ளையவர்களின் பெருமையை நான் முன்பு கேள்வியால் உணர்ந்திருந்தேன். அவரிடம் வந்து சேர்ந்தபின், அவரது பெருமையை நன்கு உணர்ந்தேன்; முற்றும் உணர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் இருந்தது. அது பிழை என்று அப்போது என் மனத்திற்பட்டது. திருவாவடுதுறையில் அந்தத் துறவரசாகிய சுப்பிரமணிய தேசிகர் அவ்வளவு வித்துவான்களுக்கிடையில் என் ஆசிரியர் இல்லாததை ஒரு பெருங்குறையாக எண்ணினார். மகாவைத்தியநாதையர் தேவார, திருவாசகங்களோடு என் ஆசிரியர் வாக்கையும் மேற்கோளாகக் காட்டிப் பொருள் கூறினார் என்ற இச்செய்திகளும் பிள்ளையவர்களிடத்தில் தேசிகர் அன்பு காட்டிய முறையும், “நான் பிள்ளையவர்கள் பெருமையை இன்னும் நன்றாக உணர்ந்துகொள்ளவில்லை” என்பதைப் புலப்படுத்தின.
வித்துவான்களுக்கிடையே கம்பீரமாக வீற்றிருந்து இன்மொழிகளால் என் ஆசிரியரைப் பாராட்டும் தேசிகருடைய தோற்றத்தில் நான் ஈடுபட்டேன். அவருடைய பாராட்டுக்கு உரிய என் ஆசிரியரது பெருமையைப் பின்னும் விரிவாக உணர்ந்து வியந்தேன்; அவ்விருவருடைய பழக்கமும் பெறும்படி வாய்த்த என் நல்வினையை நினைந்து உள்ளம் குளிர்ந்தேன்.
அடிக்குறிப்பு
1. ஆதீன கர்த்தரவர்களை ‘மகாசந்நிதான’ மென்றும் ‘சந்நிதான’ மென்றும்சொல்வது வழக்கம்.
2. ஆறுகட்டி என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறையும் அடக்கியவர் என்பதைக் குறிக்கும் ஓர் ஆபரணம், சுந்தர வேடம் என்பது காதில் அணிந்து கொள்ளும் வட்டமான பொன் ஆபரணம், இது சுந்தரமூர்த்தி நாயனாரால் அணியப்பெற்றதாதலின் இப்பெயர் வந்ததென்பர். சைவாசாரியர் இதை அணிவது வழக்கம்.
---------
அத்தியாயம் 36. எல்லாம் புதுமை
நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன் சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீக்ஷை செய்யவும் கூடும்” என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப் பரீக்ஷித்தால் நாம் தக்கவாறு பதிலுரைப்போம்” என்ற தைரியம் இருந்தது; அவருடைய மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ண வேண்டுமென்ற ஆவலும் இருந்தது. அதனால் தேசிகர் என்னை முன்னுக்கு வரச்சொன்னபோது உண்மையில் நான் ‘முன்னுக்கு வந்த’தாகவே எண்ணினேன்.
சோதனையில் வெற்றி
ஆனால், முன்பழக்கமில்லாத இடம்; பெரிய வித்துவான்கள் கூடியுள்ள சபை; என் ஆசிரியரே பயபக்தியுடன் நடந்துகொள்ளும் கல்வி நிறைந்த பெரியாருடைய முன்னிலை; அவ்விடத்தில் வாயைத் திறப்பதற்கே அச்சமாக இருந்தது. ஆவலும் அச்சமும் போராடின.
“நீர் படித்த நூலிலிருந்து ஏதாவதொரு பாடல் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.
நான் அதை எதிர்பார்த்திருந்தேன். “மிகவும் கடினமான யமக அந்தாதிகளிலிருந்தும் திரிபந்தாதிகளிலிருந்தும் செய்யுட்களைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் சிரமப்பட்டுப் படித்து வருவது தெரிய வரும்” என்று முன்பே நினைத்திருந்தேன். பிள்ளையவர்கள் இயற்றிய திருவாவடுதுறை யமக அந்தாதியிலிருந்து முதலில் ஒரு பாடல் சொல்ல எண்ணி வாயெடுத்தேன். அதைச் சொல்வதற்குமுன் என் ஆசிரியர் முகத்தைப் பார்த்தேன். அவர் சொல்ல வேண்டும் என்பதைத் தம் பார்வையால் குறிப்பித்தார்.
குரல் ஏழவில்லை; உடம்பு நடுங்கியது; வேர்வை உண்டாயிற்று. ஆனாலும் நான் சோர்வடையவில்லை, மெல்லத் திருவாவடுதுறை யமக அந்தாதி (துறைசையந்தாதி)யிலிருந்து, ‘அரச வசனத்தை’ என்ற செய்யுளைச் சொன்னேன். கட்டளைக் கலித்துறையாதலால் நான் பைரவி ராகத்தில் அதைச் சொல்லி நிறுத்தினேன்.
“பொருள் சொல்ல வருமா?” என்று தேசிகர் கேட்டார்.
“சொல்வார்” என்று என் ஆசிரியர் விடையளித்தார். அந்த விடை தேசிகர் வினாவுக்கு விடையாக வந்ததன்று; நான் பொருள் சொல்லவேண்டுமென்று தாம் விரும்புவதையே அந்த விடையால் அவர் புலப்படுத்தினார். நான் அக்குறிப்பை உணர்ந்தேன்.
அர்த்தம் சொல்லி வரும்போது என் நாக்குச் சிறிது தழுதழுத்தது. “பயப்பட வேண்டாம்; தைரியமாகச் சொல்லும்” என்று பிள்ளையவர்கள் எனக்கு ஊக்கமளித்தார். நான் சிறிது சிறிதாக அச்சத்தை உதறிவிட்டு எனக்கு இயல்பான முறையில் சொல்லத் தொடங்கினேன். துறைசையந்தாதியில் மேலும் சில செய்யுட்கள் சொன்னேன்.
“இன்னும் பாடல்கள் தெரிந்தால் சொல்லும்” என்று தேசிகர் கட்டளையிட்டார்.
அப்போது நான் நல்ல தைரியத்தைப் பெற்றேன். நடுக்கம் நீங்கியது. பிள்ளையவர்கள் இயற்றிய திருத்தில்லை யமக அந்தாதியிவிருந்து, “அம்பலவா வம்பலவா” என்ற பாடலைச் சொன்னபோது முன்பு சொன்னவற்றைவிடத் தெளிவாகவும் சொன்னேன். பைரவி ராகத்தின் மூர்ச்சைகளை ஒருவிதமாகப் புலப்படுத்தினேன்.
தேசிகர் முகத்தில் புன்முறுவல் அரும்பியது; அவர் சிரம் சிறிதே அசைந்து என் உள்ளத்தில் உவகையை உண்டாக்கியது. அச் செய்யுளுக்கும் பொருள் சொன்னேன். மேலும் எந்தச் செய்யுளைச் சொல்லலாம் என்று யோசித்தபோது சுப்பிரமணியதேசிகர் திரிகூட ராசப்பக் கவிராயர் பரம்பரையில் தோன்றியவரென்று என் ஆசிரியர் கூறியது நினைவுக்கு வரவே, திருக்குற்றால யமக அந்தாதியிலிருந்து ஒரு செய்யுளைச் சொல்லத் தொடங்கினேன். “புவிதந்த வாரணன்” என்ற பாடலைச் சொன்னேன்.
தேசிகர் அதைக் கவனமாகக் கேட்டார். அவரது பரம்பரைச் சொத்தல்லவா அது? நான் அச்செய்யுளின் அடிகளை இருமுறை, மும்முறை சொல்லி முடித்துப் பொருளும் சொன்னேன்.
“இன்னும் இந்நூலிலிருந்து ஏதாவது சொல்லும்” என்று தேசிகர் கூறினபோது, “நான் எதிர்பார்த்தது பலித்தது” என்ற உற்சாகம் எனக்கு ஏற்பட்டது. மேலும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.
“இது திருக்குற்றால யமக அந்தாதி அல்லவா? இந்தப் பக்கத்தில் இது வழங்குவதில்லையே. இவருக்கு எப்படிக் கிடைத்தது?” என்று சுப்பிரமணிய தேசிகர் கேட்டார்.
பிள்ளையவர்கள், “நெடுநாட்களாக இந்த நூலையும் திருக்குற்றாலப் புராணத்தையும் படிக்க வேண்டுமென்ற அவா அடியேனுக்கு இருந்தது. சண்பகக்குற்றாலக் கவிராயர் அவற்றை வருவித்துக் கொடுத்தார். நான் அந்தாதியை முதலிற் படித்துப் பொருள் வரையறை செய்துகொண்டு இவருக்கும் பாடம் சொன்னேன். குற்றாலப்புராணத்தையும் படித்து வருகிறேன்” என்றார்.
“அப்படியா!” என்று சொல்லி மேலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற குறிப்போடு என்னைத் தேசிகர் பார்த்தார். நான் திருப்புகலூர் அந்தாதியிலிருந்து சில பாடல்களைச் சொன்னேன். அவருடைய முகக்குறிப்பிலே திருப்தியையும் ஆதரவையும் கண்டேனாதலால் நான் வர வரத் தைரியத்தை அடைந்து பாடல்களையும் அவற்றின் பொருளையும் சொல்லி வந்தேன்.
‘நன்றாகப் பாடல் சொல்லுகிறார். நல்ல சாரீரம் இருக்கிறது; சங்கீத ஞானமும் இருக்கிறது. முன்னுக்கு வருவாரென்று தோற்றுகிறது. தங்களிடம் மாணாக்கராக இருக்கும்போது இவர் நல்ல நிலையை அடைவதற்கு என்ன சந்தேகம்?” என்று தேசிகர் கூறினார்.
“சந்நிதானத்தின் முன்பு இவர் வந்தபோதே இவரது நிலை உயர்ந்துவிட்டதென்று அடியேன் தீர்மானித்துக்கொண்டேன். சந்நிதானத்தின் திருவுள்ளத்தில் இவரிடம் கருணை உண்டான பிறகு இவருக்கு என்ன குறை?” என்று பிள்ளையவர்கள் கூறினர்.
தேசிகர் கூறிய வார்த்தைகள் என் செவி நிரம்பப் புகுந்து என் உள்ளத்தில் பூரணமான இன்பத்தை விளைவித்தன. “நாம் சோதனையில் வெற்றி பெற்றோம்” என்ற எண்ணம் அந்த இன்பத்துக்கு ஆதாரமாக இருந்தது.
அதன்பிறகு வேறு விஷயங்களைப்பற்றிப் பிள்ளையவர்களும் ஆதீனத் தலைவரவர்களும் பேசி வந்தனர். அப்பால், “நேரமாகிவிட்டது; தங்கள் பூஜையை முடித்துக்கொண்டு சபாபதி தரிசனத்திற்கு வரவேண்டும்” என்று தேசிகர் கூறவே, அப்புலவர்பிரான் விடைபெற்று எழுந்து ஸ்நானம் செய்யும் பொருட்டு அங்குள்ள தெற்குக் குளப்புரைக்கு வந்தார். நானும் பின் தொடர்ந்தேன். சபாபதி பூஜை என்பது மடத்தில் தினந்தோறும் ஆதீனகர்த்தரவர்கள் செய்யும் பூஜை.
நான் கண்ட காட்சிகள்
நான் நடந்து செல்லும்போது என் கண்கள் ஒரு நிலையில் இல்லை. அங்கங்கே உள்ள காட்சிகள் அவற்றை இழுத்துச் சென்றன. தூய்மை, தவக்கோலம், சிவமணங்கமழும் அமைப்புக்கள் எல்லாம் அங்கே விளங்கின. மடத்தின் தெற்கு வாயிலுக்கு எதிரே ஓர் அழகிய குளம் உண்டு. அதன் கரையில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதையே குளப்புரை என்று வழங்குவார்கள். புரை என்பதற்கு வீடு என்பது பொருள். மலையாளத்தில் இவ்வாறு சொல்வது வழக்கம்.
குளப்புரைக்கு நாங்கள் சென்றோம். அங்கே பிள்ளையவர்களுக்கு வெந்நீர் போடப்பட்டிருந்தது. அவர்கள் அங்கே செல்லும்போது பெரிய தம்பிரான்களும் குட்டித் தம்பிரான்களும் மடத்து உத்தியோகஸ்தர்களும் ஓதுவார்களும் அவரைச் சுற்றிக்கொண்டு க்ஷேம சமாசாரம் விசாரித்தார்கள். பலர், “இனிமேல் இங்கேதானே வாசம்?” என்று வினவினார்கள். அதற்கு விடை கிடைப்பதற்கு முன்பே சில தம்பிரான்கள், “ஐயாவிடம் பாடங் கேட்கவேண்டுமென்று நாங்களெல்லாம் காத்திருக்கிறோம்; ஐயா இங்கே வந்துவிட்டது எங்கள் அதிர்ஷ்டந்தான்” என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார்கள்.
தம்பிரான்களுடைய தோற்றத்தைக் கண்டு நான் விம்மிதமடைந்தேன். “இவ்வளவு நீண்ட சடை இவர்களுக்கு எப்படி வந்தது?” என்று பிரமித்தேன். அவர்கள் அணிந்திருந்த உடையின் அழகும் சடையின்மேல் போட்டிருந்த வஸ்திரத்தின் அமைப்பும் காதில் உள்ள வேடமும் ருத்திராக்ஷமும் விபூதி அணிந்த பளபளப்பான மேனியின் வனப்பும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. அவர்கள் பூண்டிருந்த உடையும் சிவ சின்னங்களும் அலங்காரமான ஆடைகளையும் ஆபரணங்களையும் விஞ்சி நின்றன.
பிள்ளையவர்கள் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்குச் சென்றார்கள். குளப்புரைக்கு வடக்கே பூஜை செய்வதற்காகவே ஓர் இடம் உண்டு. பூஜை மடம் என்று அதைச் சொல்வார்கள். குளத்தின் மேல் புறத்திலும் பூஜை மடம் உண்டு அங்கே பெரிய தம்பிரான்களிற் சிலர் மிக்க நியமத்தோடு மௌனமாகப் பூஜை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தவசிப் பிள்ளைகள் ஈர ஆடையை உடுத்தபடியே பூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தனர். மல்லிகை, முல்லை முதலிய மலர்களையும் வில்வம் முதலிய பத்திரங்களையும் தனித்தனியே வகைப்படுத்தி வெள்ளித் தட்டுகளில் வைத்து உதவினர்.
பூஜை செய்த தம்பிரான்கள் புறப்பட்டனர். சிலர் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜை செய்ய வந்தனர். அங்கே நிருமாலியங்கள் கால்படாத தொட்டி ஒன்றில் குவிக்கப்பட்டிருந்தன.
என் தந்தையாரும் பாட்டனாரும் சிவபூஜை செய்வதை நான் பார்த்துள்ளேன். அதனால் சிவபூஜையென்றால் என் மனத்தே ஒரு பக்தியும் சாந்த உணர்ச்சியும் உண்டாகும். அவர்கள் பூஜையில் இவ்வளவு சாதனங்கள் இல்லை; சாதகர்களும் இல்லை; இங்கே பூஜைமடம் முழுவதும் பூஜை செய்பவர்களது கூட்டமாக இருந்தது. பூஜைக்குரிய திரவியங்கள் குறைவின்றி இருந்தன. அந்த இடம் முழுவதும் சிவபூஜைக் காட்சியால் நிரம்பியிருந்தது.
சைவ ஆதீனமாகிய அவ்விடத்தை, ‘சிவ ராஜதானி’யென்றுகொண்டாடுவர். அங்கே ஆதீனகர்த்தராக இருப்போர் சைவத் துறவிகளுக்கு அரசர். அந்த அரசின் ஆட்சியின்கீழ் வாழும் தம்பிரான்கள் சைவக் கோலம்பூண்ட ஞான வீரர்கள். அவர்களுக்குச் சிவவூஜை செய்வதும் குரு கைங்கரியம் செய்வதும் நல்ல நூல்களைப் படிப்பதுமே உத்தியோகங்கள். தம்பிரான்கள் தம் கடமையை நன்கு உணர்ந்து அந்தச் சிவராஜதானியில் ஒழுங்காகப் பூஜை முதலியவற்றை மிக்க சந்தோஷத்துடன் தவறாமல் செய்து வந்தனர். அவை அவர்கள் நாள்தோறும் செய்யும் வேலைகள். இந்த அமைப்புக்களை நூதனமாகப் பார்த்த எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தன; அமைதியான இன்பத்தை விளைவித்தன. ‘திருவாவடுதுறை, திருவாவடுதுறை’ என்று அடிக்கொருதரம் என் ஆசிரியரும் அவரைப் பார்க்க வருவோரும் சொல்லிப் பாராட்டுவதன் காரணத்தை நான் அப்போது நன்றாக உணர்ந்தேன்.
என் கண்களை அவற்றின் போக்கிலே விட்டுவிட்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து நின்ற என்னிடம் ஒருவர் வந்தார். “ஏன் இங்கே நின்றபடியே இருக்கிறீர்?” என்று அவர் வினவினார். “இக்காட்சிகள் எங்கும் காணாத புதுமையாக இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது எனக்கு வேறிடம் போகவே கால் எழும்பவில்லை” என்றேன்.
“இதுதானா ஆச்சரியம்? நீர் திருவாவடுதுறைக்கு வந்ததே இல்லைபோலிருக்கிறது. மேல்பக்கத்துள்ள அபிஷேகக் கட்டளை மடத்துக்குப் போய்ப் பாரும்; வடக்கு மடத்தைப் பார்த்தால் நீர் மயங்கிவிடுவீர்; அதற்குப் பின்னே உள்ள குளப்புரையிலும் இந்த மாதிரியான காட்சிகளைக் காணலாம். இன்னும் மறைஞான தேசிகர் கோவில், காவிரிப் படித்துறை, நந்தவனங்கள் முதலிய இடங்களைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியப்படுவீரோ தெரியாது” என்று அவர் மிகவும் சாதாரணமாக அடுக்கிக்கொண்டே போனார்.
“ஏது! நாம் பூலோகத்தை விட்டுவிட்டுச் சிவலோகத்தின் ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமென்று தோற்றுகிறதே” என்று எண்ணும்படி இருந்தது அவர் பேசின பேச்சு.
“இந்த உலகத்தில்தான் இருக்கிறோம். நாமும் ஸ்நானம் செய்யவேண்டும்; போஜனம் செய்யவேண்டும்” என்பதை அப்போது எனக்கு உண்டான சிறிய பசி உணர்த்தியது. “இனிமேல் இங்கேயே இருக்கும் சந்தர்ப்பந்தான் வரப்போகிறதே; அப்போது இவர் சொன்ன அவ்வளவு இடங்களையும் பார்க்காமலா விடப்போகிறோம்?” என்ற சமாதானத்தோடு நான் ஸ்நானம் செய்யச் சென்றேன். பிள்ளையவர்கள் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக்கொண்டு மடத்துக்குச் சபாபதியின் தரிசனத்துக்குச் சென்றார்கள்.
விருந்தும் ஆசீர்வாதமும்
ஸ்நானம் ஆனபிறகு நான் நியமங்களை நிறைவேற்றினேன். என்னை ஒரு பிராமணக் காரியஸ்தர் ஆகாரம் செய்யவேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார். பிராமணர்கள் உண்பதற்குரிய சத்திரம் அது. அது சிவாலயத்துக்கு முன் உள்ள திருக்குளத்தின் தென்கரையில் அமைந்த விசாலமான கட்டிடம். அவ்விடத்தில் பலர் கூடிப் பேசிக்கொண்டு மகிழ்ச்சியோடிருந்தனர். அவர்கள் பேச்சு வீண்பேச்சாக இல்லை. சிலர் ஸம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தனர். சிலர் சில கீர்த்தனங்களைப் பாடியபடி இருந்தனர். சிலர் தமிழ்ப்பாடல்களைச் சொன்னார்கள் அவர்களுடைய செயல்களால் அங்கிருந்தவர்களில் சிலர் ஸம்ஸ்கிருத வித்துவான்கள், சிலர் சங்கீத வித்துவான்கள், சிலர் தமிழ்ப் பண்டிதர்கள் என்று அறிந்தேன். இடையிடையே அவர்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டினர்.
நான் அங்கே சென்றவுடன் ஒருவர் என்னை அழைத்தார். “பிள்ளையவர்களுடன் வந்திருக்கிறவரல்லவா நீர்? காலையில் சந்நிதானத்துக்கு முன் பாடல் சொன்னீரே; நாங்களெல்லாம் கேட்டுச் சந்தோஷித்தோம்” என்றார். அருகில் இருந்த சிலர் நகர்ந்து என்னிடம் வந்தார்கள்.
“பாட்டுச் சொன்னபோது பைரவி ராகம் சுத்தமாக இருந்தது; அபஸ்வரம் இல்லை. சந்நிதானம் அதைக் கவனித்துச் சந்தோஷித்தது” என்றார் ஒருவர். அவர் சங்கீத வித்துவானாக இருக்க வேண்டுமென்று நான் ஊகித்தேன்.
“உமக்கு யார் சங்கீத அப்பியாசம் செய்து வைத்தார்கள்?” என்று வேறொருவர் கேட்டார்.
“என் தகப்பனார்” என்று நான் சொன்னேன்.
“அப்படிச் சொல்லும், பரம்பரைவித்தை. அதுதான் சக்கை போடுபோடுகிறீர்” என்று அவர் தம் துடையைத் தட்டிக்கொண்டே சொன்னார்.
“நீர் பிள்ளையவர்களிடம் வந்து எவ்வளவு காலம் ஆயிற்று?” என்று மற்றொருவர் கேட்டார்.
“நாலைந்து மாச காலந்தான் ஆயிற்று” என்றேன்.
“நீர் அதிர்ஷ்டசாலிதான். பிள்ளையவர்களுக்கு உம்மிடம் அதிகப் பிரியம் இருப்பதாகத் தெரிகிறது. அதோடு சந்நிதானத்துக்கும் உம்மைப்பற்றித் திருப்தி ஏற்பட்டிருக்கிறது உமக்கு இனிமேல் குறையே இல்லை” என்றார்.
“வித்தியாதானத்தில் சிறந்த தாதா அந்த மகாகவி அன்னதானத்திலும் சொன்னதானத்திலும் சிறந்த தாதா. இந்த மகா புருஷர் இரண்டு பேருடைய பிரியத்துக்கும் பாத்திரரான உமக்கு இனிமேல் வேறு பாக்கியம் என்ன இருக்கிறது?” என்றார் இன்னுமொருவர்.
இப்படி ஒவ்வொருவரும் உத்ஸாகத்தோடு பேசத் தொடங்கினர். நான் நாணத்தோடு தலை கவிழ்ந்துகொண்டே கேட்டு வந்தேன்.
இலை போட்டதும் இனிய உணவை உண்டு பசி யாறினேன். பின்பு அங்கிருந்த வித்துவான்கள் என்னைச் சில பாடல்கள் சொல்லும்படி கேட்டனர். நான் சொல்லிக் காட்டினேன். அவர்கள் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்தார்கள்.
-----------
அத்தியாயம் 37. எனக்குக் கிடைத்த பரிசு
பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை.
இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது மடத்திலிருந்து ஒருவர் வந்து என்னை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒடுக்கத்தின் மேல் மெத்தையில் ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார். அவர் அருகே பிள்ளையவர்களும் சில தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். நான் அங்கே சென்றவுடன் சுப்பிரமணிய தேசிகர், “போஜனம் செய்தீரா?” என்று அன்புடன் வினவி உட்காரச் சொன்னார். நான் பிள்ளையவர்களுக்குப் பின்னே உட்கார்ந்தேன். அப்போது அங்கிருந்த தம்பிரான்கள் தங்கள் கைகளில் புஸ்தகங்களை வைத்திருந்தனர். அதைக் கவனித்த நான், “பிள்ளையவர்கள் பாடஞ் சொல்ல ஆரம்பித்து விட்டார்களோ?” என்று எண்ணி, “நாம் முன்பே வந்து கவனிக்கவில்லையே” என்று வருந்தினேன்.
சந்தேகம் தெளிதல்
அங்கிருந்த தம்பிரான்கள் எழுத்திலக்கணம் முதலியவற்றைச் சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் பாடங் கேட்டு முடித்தவர்கள். அந்நூல்களில் இடையிடையேயுள்ள உதாரணச் செய்யுட்களுள் சிலவற்றின் பொருள் தம்பிரான்களுக்கு விளங்கவில்லை. தேசிகர் பாடஞ் சொல்லும்பொழுது அத்தகைய இடங்கள் வந்தால், “பிள்ளையவர்கள் வரும்பொழுது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்; ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுவது வழக்கமாம். அச்சமயத்தில் தேசிகருடைய கட்டளையின்படியே தம்பிரான்கள், பிள்ளையவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு வந்தனர். பிள்ளையவர்கள் தட்டின்றி ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாக விடையளித்தனர். தம்பிரான்கள் மிகவும் ஆவலாகச் சந்தேகங்களைக் கேட்டனர். பிள்ளையவர்கள் பொருள்களை விளக்கும்பொழுது தம்பிரான்களைக் காட்டிலும் அதிக ஆவலாகச் சுப்பிரமணிய தேசிகர் கவனித்து வந்தார். சில சமயங்களில் தேசிகரே சந்தேகங்களுள்ள இடங்களைத் தம்பிரான்களுக்கு ஞாபக மூட்டினர்.
அந்த நிகழ்ச்சியை நான் கவனித்தபொழுது எனக்குப் பல புதிய செய்திகள் தெரிய வந்தன. பிள்ளையவர்கள் விளக்கிக் கூறும் செய்திகள் மட்டுமல்ல; ஆதீனத்துச் சம்பிரதாயங்களையும் அறிந்துகொண்டேன். தம்பிரான்கள் கேட்ட சந்தேகங்கள் சுப்பிரமணிய தேசிகருக்கும் விளங்காதனவே. ஆயினும் ஞானாசிரியராகிய அவர் நேரே பிள்ளையவர்களிடம் ஒரு மாணாக்கரைப் போலச் சந்தேகம் கேட்கவில்லை. தம்பிரான்களைக் கேட்கச் சொல்லித் தாம் அறிந்துகொண்டார்; அவர்களையும் அறிந்துகொள்ளச் செய்தார். அச்சந்தேகங்களைத் தெளிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் தேசிகருக்குத் தீவிரமாக இருந்ததையும் நான் அறிந்தேன். இல்லையென்றால் பிள்ளையவர்களிடம் தம்பிரான்களை அனுப்பிச் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாமல்லவா? பிள்ளையவர்கள் அவற்றை விளக்கும்போது தாமே நேரிலிருந்து கேட்க வேண்டுமென்பது அவரது ஆசை. அவர் ஞானாசிரியராகவும் பிள்ளையவர்கள் அவருடைய சிஷ்யராகவும் இருந்தனரென்பதில் ஐயமில்லை. ஆயினும் அச்சமயத்தில் தம் ஞானாசிரிய நிலையையும் ஆதீனத் தலைமையையும் பிற சிறப்புக்களையும் மறந்து தேசிகர் என் ஆசிரியர் கூறியவற்றைக் கவனித்து வந்தார். அன்று காலையில் என் ஆசிரியர் தேசிகரைப் பணிந்த காட்சி தவத்தின் தலைமையை நினைவுறுத்தியது; பிற்பகலில் அப்புலவர் கோமான் தேசிகருக்கு முன் சந்தேகங்களை விளக்கிய காட்சி புலமையின் தலைமையைப் புலப்படுத்தியது.
தம்பிரான்கள் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்டு வந்தார்கள். சில சந்தேகங்கள் மிகவும் கடினமானவை. அப்பகுதிகளைப் பிள்ளையவர்கள் தெளிவிக்கும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கூர்ந்து கவனிப்பார். அவருக்கு விஷயம் விளங்கினவுடன், “நன்றாயிருக்கிறது; மிகவும் பொருத்தமாயிருக்கிறது” என்று பாராட்டுவார். அவருடைய சந்தோஷம் உச்ச நிலையை அடையும்பொழுது, “நல்லதையா!” என்ற வார்த்தைகள் வெளிவரும். பிள்ளையவர்கள் சாதாரணமாகச் சிறிதும் சிரமமின்றி அச்சிக்கல்களை விடுவித்துக்கொண்டே சென்றார்; பணிவோடு மெல்ல விளக்கி வந்தார்; லவலேசமாவது கர்வத்தின் சாயை அவரிடம் தோன்றவில்லை.
அஷ்ட நாகபந்தம்
தம்பிரான்கள் சில புஸ்தகங்களிலுள்ள சந்தேகங்களைக் கேட்ட பிறகு தண்டியலங்காரத்திலுள்ள ஐயங்களை வினவத் தொடங்கினார்கள். அதில் வரும் அஷ்ட நாகபந்தச் செய்யுளை நாகங்களைப் போட்டு அடக்கிக்காட்டும்வண்ணம் கேட்டார்கள். அஷ்ட நாகபந்தமென்பது சித்திர கவிகளுள் ஒன்று. எட்டு நாகங்கள் இணைந்திருப்பதாக அமைந்த சித்திரமொன்றில் செய்யுட்கள் அடங்கியிருக்கும். பிள்ளையவர்கள் காகிதமும் எழுதுகோலும் வருவித்துப் போடத் தொடங்கினர்.
என் அவசரம்
அவர் தொடங்கு முன் நான் ஒரு காகிதத்தில் அந்தச் சித்திரத்தை எழுதி அதற்குள் செய்யுட்களையும் அடக்கிக் காட்டினேன். நான் அவ்வாறு துணிந்து செய்தது தவறென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் தம்முடைய ஆற்றலைச் சமயங்களில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையிருப்பது மனிதர்களுக்கு இயல்புதானே! அந்த ஆசையால் தூண்டப்பெற்று நான் அஷ்ட நாக பந்தத்தை அமைத்தேன்.
அதை நான் போட்டு முடித்ததைப் பார்த்த ஆசிரியர், “நன்றாக இருக்கிறதே! இதை நீர் எங்கே கற்றுக்கொண்டீர்?” என்று கேட்டார். “செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் தெரிந்துகொண்டேன். இன்னும் ரதபந்தம் முதலிய சித்திரகவிகளையும் போடுவேன்” என்றேன்.
எல்லாம் கிடைக்கும்
நான் போட்ட அஷ்ட நாகபந்தத்தைத் தம்பிரான்கள் பார்த்தனர்; சுப்பிரமணிய தேசிகரும் பார்த்தார். “இவர் சுறுசுறுப்பாக இருக்கிறாரே. பல சங்கதிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாரே” என்று சுப்பிரமணிய தேசிகர் சந்தோஷத்தோடு சொன்னார். என்னைப் பார்த்து, “பிள்ளையவர்களிடமிருந்து நன்றாகப் படித்துக்கொள்ளும். இளம்பிராயமாக இருக்கிறது. இவர்களிடம் எவ்வளவோ தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இங்கே வரும்பொழுது உடன் வாரும். உமக்கு வேண்டிய சௌகரியங்கள் கிடைக்கும். கல்யாணங்கூடச் செய்துவைப்போம்” என்று புன்னகையோடு சொன்னார். நான் சிறிது சிரித்தேன்.
“என்ன சிரிக்கிறீர்! கல்யாணம் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும்” என்றார்.
பிள்ளையவர்கள் அப்போது, “இவருக்கு விவாகம் ஆகிவிட்டது” என்றார்.
“அப்படியா, அதுதான் சிரிக்கிறாரோ! ஆனாலென்ன? மற்றக் காரியங்களெல்லாம் நடக்க வேண்டாமா? எல்லாச் சௌகரியங்களையும் பண்ணிவைப்போம்” என்று தேசிகர் சொல்லிவிட்டு, “உமக்குப் படிப்பதற்கு வேண்டிய புஸ்தகங்களை வாங்கிக் கொடுப்போம்” என்றார்.
“சந்நிதானத்தின் கருணை இருந்தால் எல்லாம் கிடைக்கின்றன” என்று ஆசிரியர் கூறினார்.
புஸ்தகப் பரிசு
தேசிகர் உடனே எழுந்திருந்து பக்கத்திலிருந்த பீரோ ஒன்றைத் திறக்கச் செய்தார். அதில் நிறையப் புஸ்தகங்கள் இருந்தன. அதிலிருந்து பல புஸ்தகங்களை எடுத்து வந்து, “கம்பரந்தாதி படித்திருக்கிறீரா? இந்தாரும் படியும். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் இவைகளையெல்லாம் இவர்களிடம் கேட்டுக்கொள்ளும். சிவஞான சுவாமிகள் வாக்கு அற்புதமாக இருக்கும்” என்று சொல்லிச் சில பிரபந்தங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பிரதிகளைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, “இவைகளில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொள்ளும்; மற்றவற்றை உடன்படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடும்” என்று சொன்னார். நான் மிக்க ஆவலோடு ஒவ்வொரு புஸ்தகத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். கை நிறையப் பணம் தந்தால் கூட எனக்கு அவ்வளவு ஆனந்தம் உண்டாயிராது.
“இந்தப் பிரபந்தங்களை எல்லாம் படியும். பின்பு பெரிய புஸ்தகங்கள் தருகிறோம்” என்று சுப்பிரமணிய தேசிகர் அன்போடு உரைத்தார். பிறகு, “எங்கே, தெரிந்த பாடல்களில் எவற்றையேனும் இசையுடன் சொல்லும்; கேட்போம்” என்றார். காலையில் நான் பைரவி ராகத்திற் பாடல்களைச் சொன்னேன். அப்பொழுது வேறு ராகங்களிலே சில செய்யுட்களைச் சொன்னேன். கேட்டு மகிழ்ந்த தேசிகர் ஆசிரியரை நோக்கி, “இவரைச் சங்கீத அப்பியாசமும் பண்ணிக்கொண்டு வரும்படி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
இவ்வாறு சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புவைத்துப் பேசியதையும் புஸ்தகங்களைக் கொடுத்ததையும் கண்ட என் ஆசிரியருக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனை அவர் முகம் நன்கு புலப்படுத்தியது.
‘இங்கே வந்து விடவேண்டும்’
அப்பால் தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி, “இன்று நீங்கள் வந்தமையால் காலை முதல் தமிழ் சம்பந்தமான சம்பாஷணையிலேயே பொழுதுபோயிற்று. நமக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. தம்பிரான்களுக்கும் அளவற்ற சந்தோஷம். அவர்களெல்லோரும் தொடர்ந்து தமிழ் நூல்களைப் பாடங் கேட்க வேண்டுமென்ற ஆவலுடையவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரும் பாடங் கேட்கச் சித்தமாக இருக்கின்றனர் ஏதோ நமக்குத் தெரிந்ததை நாம் சொல்லி வருகிறோம். அதுவும் எப்போதும் செய்ய முடிவதில்லை. ஆதீன காரியங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரபுக்களும் வித்துவான்களும் அடிக்கடி வருகிறார்கள்; அவர்களோடு சம்பாஷணை செய்து வேண்டியவற்றை விசாரித்து அனுப்புவதற்கே பொழுது சரியாகப் போய்விடுகிறது. ஆதலால் இவர்களுடைய தாகத்தைத் தணிப்பதற்கு நம்மால் முடிவதில்லை. நீங்கள் இங்கே வந்திருந்து பாடஞ் சொல்ல ஆரம்பித்தால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும். உங்களுடைய சல்லாபத்தால் நமக்கும் சந்தோஷமுண்டாகும். தவிர இவ்விடம் வருவோர்களிற் பலர். ‘பிள்ளையவர்கள் எங்கே யிருக்கிறார்கள்?” என்று விசாரிக்கிறார்கள். நீங்கள் மாயூரத்தில் இருப்பதாகச் சொல்லுவதற்கு நமக்கு வாய் வருவதில்லை. இந்த ஆதீனத்துக்கே சிறப்பாக இருக்கும் உங்களை இங்கே இருந்து பாடஞ் சொல்லும்படி செய்வது நமது கடமையாக இருக்க, மாயூரத்திலிருக்கிறார்களென்று சொல்வது உசிதமாகத் தோற்றவில்லை. வருகிறவர்களில் மாயூரம் வரக்கூடியவர்கள் வந்து உங்களைப் பார்த்துச் செல்லுகிறார்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்கவில்லையே என்ற குறையுடன் சென்றுவிடுகிறார்கள். ஆகையால் நீங்கள் இனிமேல் உங்கள் மாணாக்கர்களுடன் இங்கேயே வந்துவிட வேண்டியதுதான்” என்றார்.
பிள்ளையவர்கள், “சந்நிதானத்தின் திருவுளப்பாங்கின்படியே நடப்பதுதான் அடியேனுடைய கடமை” என்று கூறினார்.
ஆறுமுகத்தா பிள்ளையின் அச்சம்
அப்போது பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்து வந்த ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று எழுந்தார்; பண்டார சந்நிதிகளை நமஸ்காரஞ்செய்து எழுந்து நின்று வாய்புதைத்துக்கொண்டே, “ஐயா அவர்களைப் பட்டீச்சுரத்திற்கு அழைத்துக்கொண்டு சென்று சிலகாலம் வைத்திருந்து அனுப்பும்படி சந்நிதானத்தில் உத்தரவாக வேண்டும். அவர்களால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. அதனால்தான் அடியேன் மாயூரம் சென்று ஐயா அவர்களை அழைத்து வந்தேன்” என்றார். சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களிடம் பேசியவற்றைக் கேட்ட அவருக்கு, “நம் காரியம் கெட்டுப் போய்விட்டால் என்ன பண்ணுவது! பிள்ளையவர்கள் இங்கேயே தங்கிவிடப் போகிறார்களே!” என்ற பயம் பிடித்துக்கொண்டது.
சுப்பிரமணிய தேசிகர் அவர் கருத்தை உணர்ந்துகொண்டார். குறுநகையுடன், “அப்படியே செய்யலாம்; அதற்கென்ன தடை? பிள்ளையவர்கள் எல்லோருக்கும் சொந்தமல்லவோ?” என்று சொன்னார். அப்போதுதான் ஆறுமுகத்தா பிள்ளைக்கு ஆறுதல் உண்டாயிற்று.
விடையளித்தல்
“சரி. பட்டீச்சுரம் போய்ச் சில காலம் இருந்துவிட்டு இங்கே வந்துவிடலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களுக்கு விடைகொடுக்கவே என் ஆசிரியர் எழுந்து பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்று மடத்திற்கு வெளியே வந்தார்.
தம்பிரான்களும் வேறு சிலரும் அவருடன் வந்தார்கள். சிலர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “இதுதான் சாக்கு என்று ஐயா அவர்களை நீண்டகாலம் பட்டீச்சுரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாம்” என்றனர். அப்பால் பேசிக்கொண்டே சிறிது தூரம் யாவரும் வந்தனர். சிலர் என்னிடம் வந்து, “உம்முடைய ஊர் எது? என்ன என்ன புஸ்தகம் பாடம் கேட்டிருக்கின்றீர்?” என்று கேட்டனர். நான் தக்கவாறு பதில் உரைத்தேன். சிலர் நான் படித்த நூல்களில் சில சந்தேகங்கள் கேட்டனர். அன்று காலையிலிருந்து சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் என்னிடம் காட்டிய அன்பு எல்லோருடைய உள்ளத்திலும் என்பால் ஒரு மதிப்பை உண்டாக்கிவிட்டது. இல்லாவிடின் சிறு பையனாகிய என்னிடத்தில் தம்பிரான்கள் வந்து சந்தேகம் கேட்பார்களா! “நாம் படித்தது எவ்வளவு கொஞ்சம்? அதற்கு ஏற்படும் பெருமை எவ்வளவு அதிகம்? எல்லாம் இந்த மகானை அடுத்ததனால் வந்த கௌரவமல்லவா?” என்று எண்ணினேன். “நாம் இவர்களிடம் வந்து சில மாதங்களே ஆயின. தமிழ்க் கடலின் ஒரு மூலையைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இவர்களிடமிருந்து பாடங் கேட்டு நல்ல அறிவை அடைந்தால் நமக்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்” என்ற நினைவினால் “என்ன கஷ்டம் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்ற உறுதியை மேற்கொண்டேன்.
பஞ்சநதம் பிள்ளையின் செயல்
உடன் வந்தவர்கள் சிறிது தூரம் வந்து பிள்ளையவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்கள். எங்களுக்காக ஆறுமுகத்தா பிள்ளையவர்கள் கொணர்ந்திருந்த வண்டியில் அவரும் பிள்ளையவர்களும் ஏறிக்கொண்டனர். நான் ஏறப் போகும்பொழுது அங்கே நின்ற தவசிப் பிள்ளையாகிய பஞ்சநதம்பிள்ளை வெகுவேகமாக என்னிடம் வந்தார். என் கையிலிருந்த புதிய புஸ்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பிடுங்கினார். ‘எனக்கு வேண்டுமே’யென்று நான் சொன்னபொழுது, “இவ்வளவும் உமக்கு எதற்கு? ஒவ்வொன்று இருந்தால் போதாதோ?” என்று சொல்லி ஒவ்வொரு பிரதியை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை அவர் வைத்துக்கொண்டார். சுப்பிரமணிய தேசிகரிடம் நான் முதன்முதலாகப் பெற்ற பரிசல்லவா அவை? பஞ்சநாதம் பிள்ளை அவற்றைப் பறித்தபோது அவர் கன்னத்தில் இரண்டு அறை அறைய வேண்டுமென்ற ஆத்திரம் எனக்கு முதலில் உண்டாயிற்று. அவரிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டுமென்று பிள்ளையவர்கள் எனக்கு எச்சரிக்கை செய்ததை நான் மறக்கவில்லை. ஆதலால் ஒன்றும் பேசாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு வண்டியில் ஏறினேன்.
காலை முதல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் தமிழறிவின்பால் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் முதல் தம்பிரான்கள் காரியஸ்தர்கள் வரையில் யாவரும் வைத்திருக்கும் மதிப்பையும் மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அறிந்து வியந்த நான், அவ்வளவு பேர்களுக்கு இடையில் சிறிதேனும் மரியாதை தெரியாமலும் தமிழருமையை அறியாமலும் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பஞ்சநதம் பிள்ளையினது இயற்கையைக் கண்டபோது, “ஆயிரம் வருஷங்கள் நல்லவர்களோடு பழகினாலும் தம் இயல்பை விடாதவர்களும் உலகில் இருந்துதான் வருகிறார்கள்” என்று சமாதானம் செய்துகொண்டேன்.
இரட்டைமாடு பூட்டிய அந்த வண்டி சாலையில் வேகமாகப் போகத் தொடங்கியது.
-----------
அத்தியாயம் 38. நான் கொடுத்த வரம்
திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறுமுகத்தா பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில் தங்கினோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாட் காலையில் பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார்.
சிவக்கொழுந்து தேசிகர் பெருமை
பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் ஜாகை சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர் சிறந்த ஸ்தலமென்பதையும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரென்னும் வித்துவான் அதற்கு ஒரு புராணம் இயற்றியுள்ளாரென்பதையும் கூறினார். சிவக்கொழுந்து தேசிகரைப் பற்றிய பேச்சு வரவே அவர் இயற்றிய செய்யுட்களைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் மிகவும் பாராட்டிக் கூறினார்.
சுப்பையா பண்டாரத்தின் வீட்டில் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் என் ஆசிரியருக்கும் விருந்து நடந்தது. ஆசிரியர், சுப்பையா பண்டாரத்தைப் பார்த்து, “சாமிநாதையருக்கு ஆகாரம் செய்விக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று சொன்னார். அவர், “மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் நல்ல பிரசாதங்கள் கிடைக்கு” மென்று கூறி என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
திருவிடைமருதூர் ஆலயம் திருவாவடுதுறை ஆதீன விசாரணைக்கு உட்பட்டது. அவ்வாலய நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு ஒரு தம்பிரான் உண்டு. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த கட்டளை மடமும் இருக்கிறது. அவ்வூர் திருவாவடுதுறைக்கு ஆறு மைல் தூரத்தில் இருப்பதால் சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் ஆதீனகர்த்தர் திருவிடைமருதூர்க் கட்டளை மடத்தில் வந்து தங்கி இருப்பது வழக்கம்.
கட்டளைத் தம்பிரான்
திருவிடைமருதூரில் கட்டளை விசாரணையில் முன்பு சுப்பிரமணியத் தம்பிரா னென்பவர் இருந்தார்; அவர் ஆலய நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காக நடத்தி வந்ததோடு பல திருத்தங்களைச் செய்து நல்ல பெயர் பெற்றார். திருவாவடுதுறை யாதீனத்தின் விசாரணைக்கு உட்பட்டுப் பல ஆலயங்கள் இருப்பதால் ஓர் ஆலயத்தில் இருந்து நிர்வாகம் செய்த தம்பிரானை வேறோர் ஆலயத்துக்கு மாற்றுவதும் சிலரை மடத்தின் அதிகாரிகளாக்கி அவர்கள் ஸ்தானத்திற் புதிய தம்பிரான்களை நியமிப்பதும் ஆதீனத்து வழக்கம். திருவிடைமருதூரில் கட்டளைத் தம்பிரானாக இருந்த முற்கூறிய சுப்பிரமணியத் தம்பிரானை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தைச் சேர்ந்த ஆளுடையார் கோயிலின் நிர்வாக அதிகாரியாக மாற்றினார். அவர் அங்கே சென்றபின் இடையே சில காலம் ஒரு தம்பிரான் இருந்து திருவிடைமருதூர் ஆலய விசாரணையைக் கவனித்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் பூஜை, போஜனம் செய்துகொண்டும் படித்துக்கொண்டும் இருந்துவரும் சில தம்பிரான்களுக்கு மடத்தில் ஏதேனும் உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகும். அதனை அறிந்து ஆதீனத் தலைவர் இடையிடையே சமயம் நேரும்போது சில மாதங்கள் அவர்களைக் கட்டளை முதலிய வேலைகளில் நியமிப்பது வழக்கம். நாங்கள் போனபோது திருவிடைமருதூரில் இருந்த தம்பிரான் அத்தகையவர்களில் ஒருவர்.
சுப்பையா பண்டாரம் என்னை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் கொட்டாரத்தின் முகப்புத் திண்ணையில் கட்டளைத் தம்பிரான் ஒரு திண்டின் மேல் சாய்ந்தபடி வீற்றிருந்தார். கொட்டாரமென்து நெல் முதலிய தானியங்கள் சேர்த்து வைக்குமிடம். அவருக்கு ஒரு புறத்தில் உத்தியோகஸ்தர்கள் நின்றிருந்தனர். கணக்கெழுதும் ஏடுகளுடன் சில காரியஸ்தர்கள் பணிவோடு நின்றனர்.
தம்பிரானுடைய விபூதி ருத்திராட்ச தாரணமும் காவி உடையும் தோற்றப் பொலியும் அவர்பால் ஒரு மதிப்பை உண்டாக்கின. அவர் சடை மிகவும் பெரிதாக இருந்தது. கட்டளை, காறுபாறு முதலிய உத்தியோகங்களைப் பார்க்க விரும்பிச் சில தம்பிரான்கள் மிக்க நிர்வாகத் திறமையுடையவர்கள்போலக் காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வர்க்கத்தைச் சேர்ந்த அத்தம்பிரான் அடிக்கடி தமது மார்பைப் பார்த்துக்கொண்டும் நிமிர்ந்த முகத்திலும் உரத்த குரலிலும் அதிகார முடுக்கைக் காட்டிக்கொண்டும் இருந்தனர்.
சுப்பையா பண்டாரம் என்னை அழைத்துச் சென்று தம்பிரான் முன்னேவிட்டு அஞ்சலி செய்தார். தம்பிரான், “எங்கே வந்தீர்? இவர் யார்?” என்று கேட்டபோது, “பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள். என் ஜாகையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இவர் படித்து வருகிறார். இவருக்கு இங்கே மடைப்பள்ளியில் ஏதேனும் பிரசாதம் கொடுக்கும்படி சாமியிடம் சொல்ல வேண்டுமென்று என்னை அனுப்பினார்கள்” என்று விடை அளித்தார்.
தம்பிரான் எங்களை நிமிர்ந்து பார்த்தார். “பிள்ளையவர்களா வந்திருக்கிறார்கள்? அவர்கள் கட்டளை மடத்துக்கு வரக் கூடாதா?” என்று கேட்டார்.
“அவர்கள் தளர்ச்சியாக இருக்கிறார்கள். என் ஜாகையில் இருந்தால் படுத்துக்கொண்டே இருக்கலாம். யாரேனும் கால் பிடிப்பார்கள். மடத்துக்கு வந்தால் சாமிக்கு முன் படுத்துக்கொள்வதும் கால், கை பிடிக்கச் சொல்வதும் உசிதமாக இருக்குமா? அதனால்தான் என் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்” என்று சுப்பையா பண்டாரம் விடையளித்தார்.
“சரிதான். மடத்திலே பழகினவர்களுக்குந்தான் மரியாதை தெரியும். அவர்கள் நம்மிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறார்களென்பது நமக்குத் தெரியாதா?” என்று தம்பிரான் சொன்னார்.
பிறகு அங்கே நின்ற மடைப்பள்ளிக் காரியஸ்தரைப் பார்த்தார்; ‘சாமி” என்று வாயைப் பொத்திக்கொண்டே அந்தப் பிராமணர் முன்னே வந்தார்.
“என்ன?” என்று தம்பிரான் கேட்டார்.
“இவர் வந்திருக்கிறார்; இவருக்கு உபசாரத்துடன் பிரசாதம் கொடுக்க வேண்டும்” என்ற அர்த்தம் அந்தக் கேள்வியின் தொனியிலேயே அடங்கியிருந்தது.
“சாமி” என்று காரியஸ்தர் மறுபடியும் சொன்னார். “சரியாகக் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்ற அர்த்தத்தை அவர் குரல் உள்ளடக்கியிருந்தது.
“ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்; தெரியுமா?” என்று தம்பிரான் விளக்கமாக உத்தரவிட்டார்.
காரியஸ்தர் அதனை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக மீட்டும், “சாமி” என்று சொல்லிவிட்டு என்னை அழைத்துச் சென்றார்.
அர்த்தஜாம பூஜை நடப்பதற்குச் சிறிது முன்பு நான் போனேன். ஆதலால், ஆலயத்தினுள்ளே சென்று சுவாமிக்கு முன் நமஸ்காரம் செய்தேன். காரியஸ்தர் அவசரப்படுத்தினார். தரிசனத்தை நான் சுருக்கமாகச் செய்துகொண்டு மடைப்பள்ளிக்குள் அவருடன் புகுந்தேன்.
பசியும் ஆவலும்
இரவு பத்துமணி ஆகிவிட்டமையாலும் திருவாவடுதுறையிலிருந்து வந்த சிரமத்தாலும் எனக்குப் பசி அதிகமாகத்தான் இருந்தது. கோவில் பிரசாதங்கள் மிகவும் சுவையாகவும் பரிசுத்தமாகவும் இருக்குமென்ற எண்ணத்தால் என் நாக்கில் ஜலம் ஊறியது. காரியஸ்தர் மிக்க விநயத்தோடு என்னை அழைத்துச் செல்லும்போதே, நம்முடைய பசிக்கும் ருசிக்கும் ஏற்ற உணவு கிடைக்கும் என்ற ஆவலோடு சென்றேன்.
மடைப்பள்ளியில் வழிதெரியாதபடி இருட்டாக இருந்தது. தட்டுத்தடுமாறி உள்ளே போனவுடன், காரியஸ்தர் என்னை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி அருகில் ஒரு கைவிளக்கைக் கொணர்ந்து வைத்தார். அவர் உத்தரவுப்படி ஒருவர் ஒரு பெரிய தட்டில் பலவகையான பிரசாதங்களை எடுத்து வந்து என் முன்னே வைத்தார்.
அந்தத் தட்டைப் பார்த்து மலைத்துப் போனேன். “இவ்வளவு எதற்கு?” என்று கேட்டேன்.
“ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியஸ்தர் சொன்னார்.
“என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன்.
“சர்க்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரஸம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்; பசியும் சேர்ந்ததால் அவர் சொல்லச் சொல்ல உடனே சாப்பிட வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று.
தெய்வப் பிரசாதம்
மடைப்பள்ளியில் இலைபோட்டு உண்பதும் எச்சில்செய்வதும் அனாசாரம்; ஆகையால் கையில் கொடுத்தால் எச்சில் பண்ணாமலே உண்பேனென்று நான் சொல்லிவிட்டு முதலில் புளியோரையைக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே காரியஸ்தர் என் கையில் சிறிது புளியோரையை எடுத்து வைத்தார். மிக்க ஆவலோடு கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்கொண்டேன். வெறும் புளிப்பு மாத்திரம் சிறிது இருந்தது; உப்பு இல்லை; காரமோ, எண்ணெயின் மணமோ தெரியவில்லை.
“என்ன இது?” என்றுகேட்டேன்.
“இதுவா? இதுதான் புளியோரை” என்றார் அவர்.
நான் வாயில்போட்ட பிரசாதத்தில் கல் இருந்தது; உமியும் இருந்தது. அவற்றை வெளியே துப்புவதற்கு வழியில்லை. மடைப்பள்ளியில் துப்பலாமா? உடனே எழுந்திருந்து வெளியே வந்து துப்புவதும் சுலபமன்று. பல இடங்களைத் தாண்டிக்கொண்டு ஆலயத்துக்கு வெளியே வரவேண்டும்.
புளியோரையென்று அவர் சொன்ன பிரசாதத்தை ஒருவாறு கடித்துமென்று விழுங்கினேன். அடுத்தபடியாக அவர் சர்க்கரைப் பொங்கலை அளித்தார். அதில் தீசல் நாற்றமும் சிறிது வெல்லப் பசையும் இருந்தன. வாயில் இடுவதற்கு முன் வெளியே வந்துவிடும்போல் தோற்றியது. பிறகு வெண்பொங்கல் கிடைத்தது. அதில் இருந்த உமியையும் கல்லையும் மென்று விழுங்குவதற்கே அரை மணிநேரம் ஆகிவிட்டது. என் பசி இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது. கண்ணையும் காதையும் கவர்ந்த அப்பிரசாதங்கள் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வதற்கு மாத்திரம் ஏற்றவையாக இருந்தன. ஜனங்கள் வீண் சபலப்பட்டு அவற்றை உண்ணப் புகுவது சரியன்றென்பதை வற்புறுத்தின. தேங்குழலும் அதிரசமும் வடையும் ஒருவிதமாகத் தங்கள் பெயர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தன. மற்றப் பிரசாதங்களை நோக்க அவை சிலாக்கியமாகப்பட்டன. அவற்றில் சிலவற்றை வயிற்றுக்குள் செலுத்திவிட்டுக் கையைச் சுத்தம் செய்துகொண்டு எழுந்தேன்.
‘ஒரு வரம் கொடுங்கள்’
இருட்டில் தட்டுத்தடுமாறி வந்தபோது என் காலில் ஜில்லென்று ஏதோ ஒரு வஸ்து தட்டுப்பட்து. கயிறோ, பாம்போ அல்லது வேறு பிராணியோ என்று திடுக்கிட்டுப் பயந்து காலை உதறினேன். “இங்கே வெளிச்சம் கொண்டு வாருங்கள்” என்று கத்தினேன். ஒருவர் விளக்கை எடுத்து வந்தார். காலின் கீழ் நோக்கினேன்; ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன்.
என்னை அழைத்து வந்த காரியஸ்தர் என் காலைப் பிடித்துக்கொண்டு நமஸ்காரம் பண்ணியபடியே கிடந்தார். ஈரமுள்ள அவர் கை எதிர்பாராதபடி என் காலிற்பட்டதுதான் என் பயத்துக்குக் காரணம்.
காரியஸ்தருக்கு அறுபது பிராயத்துக்கு மேலிருக்கும். அவர் என்னை வணங்கியதற்குக் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. “இதுவும் ஒரு சம்பிரதாயமோ?” என்று நான் சந்தேகப்பட்டேன்.
“ஏன் ஐயா இப்படிப் பண்ணுகிறீர்?” என்று படபடப்புடன் கேட்டேன்.
“தங்களை ஒரு வரம் கேட்கிறேன். அதைத் தாங்கள் கொடுத்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என் தலை போய்விடும்! நான் காலை விடமாட்டேன். கேட்ட வரத்தைக் கொடுப்பதாக வாக்குத் தத்தம் செய்தால் எழுந்திருப்பேன்.
எனக்கு விஷயம் புரியவேயில்லை; ஒரே மயக்கமாக இருந்தது; “இவர் இன்றைக்கு நம்மைத் தெய்வமாகவே எண்ணிவிட்டாரா என்ன? இவர் கொடுத்த பிரசாதம் தெய்வர்களுக்கே ஏற்றவை. இப்போது நம்மை இவர் நமஸ்கரிக்கிறார்; வரம் கேட்கிறார். இவையெல்லாம் நாடகம் மாதிரி இருக்கின்றனவே!” என்று எண்ணி, “எழுந்திரும் ஐயா, எழுந்திரும்! வரமாவது கொடுக்கவாவது!” என்று கூறினேன். அவர் விட்டபாடில்லை.
“நீங்கள் வாக்களித்தாலொழிய விடமாட்டேன்.”
“சரி, நீர் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று நான் சொன்னவுடன் அவர் மெல்ல எழுந்திருந்தார்; கை கட்டி, வாய் புதைத்து அழாக்குறையாகச் சொல்லத் தொடங்கினார்.
“இன்று பிரசாதமொன்றும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. கிரமமாக வரவேண்டிய சமையற்காரன் இன்று வரவில்லை. அதனால் ஒன்றும் நேராகச் செய்ய முடியவில்லை. இந்த விஷயம் சாமிக்கு (கட்டளைத் தம்பிரானுக்கு)த் தெரிந்தால் என் தலை போய்விடும். சாமிக்கு இவ்விஷயத்தைத் தாங்கள் தெரிவிக்கக் கூடாது. தெரிவித்தால் என் குடும்பமே கெட்டுப்போய்விடும். நான் பிள்ளைகுட்டிக்காரன் மகாலிங்கத்தின் பேரைச் சொல்லிப் பிழைத்து வருகிறேன். என் வாயில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்” என்று என் வாயில் உமியையும் கல்லையும் பிரசாதமாகப் போட்ட அந்த மனுஷ்யர் வேண்டிக்கொண்டார்.
“சரி, அப்படியே செய்கிறேன்; நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று நான் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.
‘இந்த மாதிரி எங்கும் இல்லை’
ஜாக்கிரதையாக அம்மடைப்பள்ளியிலிருந்து விடுபட்டுக் கொட்டாரத்துக்கு வந்து தம்பிரானைப் பார்த்தேன்.
“என்ன? வெகுநேரமாகிவிட்டதே; காரியஸ்தர் அதிக நாழிகை காக்க வைத்துவிட்டாரோ?” என்று அவர் கேட்டார்.
“இல்லை; பிரசாதங்கள் பலவகையான இருந்தன; ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்கே நேரமாகிவிட்டது.”
உமியையும் கல்லையும் மெல்லுவதற்கு அந்த இரவு முழுவதும் வேண்டியிருக்குமென்பது எனக்கல்லவா தெரியும்?
“எப்படி இருந்தன?”
“இந்த மாதிரி எங்கும் கண்டதில்லை.”
“எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இதற்கு முன் ஒழுங்கீனமாக இருந்தது. நாம் வந்த பிறகு திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் கவனிப்பவர் கவனித்தால் நன்றாகத்தானிருக்கும், நிர்வாகமென்றால் லேசானதா?”
தம்பிரான் தம்மைப் புகழ்ந்துகொண்டபோது, “இன்னும் இவர் தம் பிரதாபத்தை விவரிக்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது!” என்ற பயமும் மெல்ல முடியாமல் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த கற்களை ஆலயத்துக்கு வெளியே துப்ப வேண்டுமென்ற வேகமும் என்னை உந்தின.
“பிள்ளையவர்கள் நான் வரவில்லையென்று காத்திருப்பார்கள். போய் வருகிறேன். விடை தரவேண்டும்” என்று நான் சொல்ல, “சரி, பிள்ளையவர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்லும். அவர்களுக்கும் ஒரு நாள் பிரசாதங்களை அனுப்புவதாக எண்ணியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
“இந்தத் தண்டனை அவர்களுக்கு வேண்டாமே” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு நான் வந்துவிட்டேன். தம்பிரானிடம் நான் பேசியதைக் கவனித்த காரியஸ்தர் மீண்டும் உயிர் பெற்றவர் போலவே மகிழ்ச்சியுற்றார்.
பிள்ளையவர்களிடம் வந்தவுடன் “சாப்பிட்டீரா? இங்கெல்லாம் உமக்கு ஆகாரம் திருப்தியாக இராது” என்று அவர் சொன்னார். நான் நிகழ்ந்ததைச் சொல்லாமல், “போதுமானது கிடைத்தது” என்று சொல்லிவிட்டுப் பாடம் கேட்கத் தொடங்கினேன்.
-----------
அத்தியாயம் 39. யான் பெற்ற நல்லுரை
மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து.
தியாகராச செட்டியார்
தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் காலேஜில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லோரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். காலேஜில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு எவ்வளவு கௌரவம் இருந்ததோ அவ்வளவு கௌரவம் அவருக்கு உண்டு. பிள்ளையவர்களிடம் படிக்க வந்த பிறகு செட்டியாரைப் பற்றிய பேச்சு இடையிடையே நிகழும். அவர்களோடு பழகுபவர்களும் செட்டியாரது அறிவுவன்மையைப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருப்பதுண்டு. ஆதலால், செட்டியாரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று என் ஆசிரியர் எண்ணியது எனக்கு மிக்க சந்தோஷத்தை உண்டாக்கிற்று. இடைவழியில், நான் அவரிடம் படிக்கச் செல்வதாக முன்பு எண்ணியிருந்தேனென்பதையும் அவரைப் பார்க்கும் விருப்பம் எனக்கு அதிகமாக உண்டு என்பதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன்.
கும்பகோணம் வந்ததும் நேரே செட்டியார் வீட்டிற்கு வண்டி சென்றது. செட்டியார் சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். நாங்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை. ஆதலின் அவ்வீட்டுத் திண்ணையில் நாங்கள் இருந்தோம்.
எங்கள் வரவை அறிந்த செட்டியாருடைய மாணாக்கர் ஒருவர், விரைவில், வெளியே சென்று அவரை அழைத்து வந்தார். அவர், “ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? உள்ளேபோய் இருக்கக் கூடாதா? சாமான்களை எல்லாம் இறக்கி உள்ளே வைக்கச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். வந்தவுடன் பிள்ளையவர்களை அவர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
அவர் தோற்றம்
அவரைப் பார்த்தேன். பளபளவென்றிருந்தது அவர் தேகம். நல்ல சிவப்பு; அதிக உயரமும் இல்லை; குட்டையும் இல்லை. நல்ல பலம்பொருந்திய தேகக்கட்டு. அவர் நடையில் கம்பீரமும் பார்வையில் தைரியமும் பேச்சில் துணிவும் புலப்பட்டன. அவர் இடையில் தோய்த்துலர்ந்த ஒரு துண்டை உடுத்திருந்தார். யாரையும் அவர் லக்ஷியம்செய்ய மாட்டாரென்றும் மிக்க கண்டவாதியென்றும் முன்பு நான் கேள்வியுற்றிருந்தேன்; அதற்கு ஏற்றபடியே அவர் நடையும் பேச்சும் இருந்தன. அவர் பிள்ளையவர்கள் முன் பணிந்து எழுந்தபோது, அவ்வளவு தைரியத்திலும் அலக்ஷியத்திலும் இடையே அப்பணிவு நன்றாக வெளிப்பட்டது. செட்டியார் எங்களுடன் வந்திருந்த பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து, “சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்யும்” என்று சொன்னார். அப்போது பிள்ளையவர்கள் இடைமறித்து, “நாங்கள் ஆகாரத்திற்குப் பட்டீச்சுரம் போவதாக எண்ணியிருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு என்னைச் சுட்டிக்காட்டி, “இவர் காலையில் ஏதேனும் சாப்பிடுவது வழக்கம். இவருக்கு எங்கேனும் ஆகாரம்பண்ணுவித்தாற் போதும்” என்றார். செட்டியார் உடனே என்னைத் தமக்குத் தெரிந்த ராகவாசாரியார் என்பவர் வீட்டிற்கு அனுப்பி ஆகாரம் செய்யச் சொன்னார். நான் ஆகாரம் செய்து வந்தவுடன் செட்டியார், “இவர் யார்?” என்று பிள்ளையவர்களைக் கேட்டார். தம்மிடம் நான் சில காலமாகப் பாடம் கேட்டு வருவதை அவர் சொன்னார்.
அன்று அமாவாசையாதலால் விரைவில் பட்டீச்சுரம் போய்ப் பூஜை முதலியன செய்ய எண்ணிய என் ஆசிரியர் உடனே புறப்படத் தொடங்கினார். அப்போது செட்டியார் பெரிய தாம்பாளமொன்றில் இரண்டு சீப்பு வாழைப்பழத்தையும் சீனாக் கற்கண்டுப் பொட்டலத்தையும் எடுத்து வந்து ஆசிரியர் முன்பு வைத்தார். ஆசிரியர் பழங்கள் சிலவற்றையும் சிறிதளவு கற்கண்டையும் எடுத்துக்கொண்டார். உடனிருந்த நாங்களும் எடுத்துக்கொண்டோம். எங்களோடு செட்டியாரும் வேறு சிலரும் கொஞ்சதூரம் வந்தனர்.
செட்டியார் என்னிடம் பேசியது
நாங்கள் செல்லும்போதே செட்டியார் என்னைப் பார்த்து, ”என்ன என்ன நூல்கள் பாடம் கேட்டீர்?” என்று கேட்டார். விவரமாக நான் சொன்னேன். “சரி; இப்போது என்ன கேட்டு வருகிறீர்?” என்றார். அதற்கும் விடை கூறினேன்.
செட்டியார் என்னை விசாரிப்பதை அறிந்த பிள்ளையவர்களுக்கு மேலே கால் ஓடவில்லை. நான் பாடல் சொல்வதையும் பொருள் சொல்வதையும் அவர் கேட்கவேண்டுமென்று என் ஆசிரியர் எண்ணினார். ஆதலின், “எங்கேயாவது ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்ளலாமே; நடந்துகொண்டே கேட்பதைவிட ஓரிடத்தில் இருந்தால் அவரும் பாடல்கள் சொல்லிக்காட்ட அனுகூலமாயிருக்கும்” என்று செட்டியாரைப் பார்த்துச் சொன்னார்.
நாங்கள் கும்பேசுவரர் கோயிலுக்கு அருகில் அப்போது நடந்து வந்தோம். ஆதலின் அக்கோயிலின் மேற்கு வாசல் வழியே உள்ளே சென்று புறத்தே ஸ்ரீ சுப்பிரமணியமூர்த்தி ஆலயத்தின் முன்மண்டபத்தில் என் ஆசிரியர் அமர்ந்தார்; நாங்களும் உட்கார்ந்தோம்.
செட்டியார், “ஏதாவது பாடல் சொல்லி அர்த்தமும் சொல்லும்” என்றார். இத்தகைய சந்தர்ப்பங்களில் பாடல் சொல்வதும் பொருள் சொல்வதும் எனக்கு வழக்கமாயிருந்தன. நான் துறைசையந்தாதியிலிருந்து, “அண்ணா மலையத்தனை” என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு சொல்லி அர்த்தமும் சொன்னேன். நான் இசையோடு சொன்னதை அவர் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.
செட்டியார் கேட்கக் கேட்க மேலும் மேலும் வேறு பிரபந்தங்களிலிருந்து செய்யுட்களைச் சொல்லி வந்தேன். செட்டியார் கேட்டுத் திருப்தியடைந்தாரென்றே எண்ணினேன். திருப்தியை அவர் வெளிப்படையாகக்காட்டவில்லை.
’பாடம் சொல்லுவீரா?’
“துறைசையந்தாதிப் பாட்டுச் சொன்னீரே; அந்நூல் முழுவதும் நன்றாகத் தெரியுமா?”
“ஏதோ ஒருவாறு தெரியும்.”
“அதைப் பாடம் சொல்லுவீரா?”
அக்கேள்வி என்னைப் பிரமிக்கச் செய்தது. துறைசையந்தாதி யமகமாதலால் கடினமானது. ஆதலின் அதை முற்றுமறிந்து தாரணம் செய்துகொள்வது அருமை. அவ்விஷயத்தைச் செட்டியார் உணர்ந்தவர். ஆயினும் அவரது கருத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை.
“பாடம் யாருக்குச் சொல்வது? இவருக்கா? பாடஞ் சொல்லுவேன் என்று சொன்னால் கர்வமுள்ளவனென்று எண்ணிக் கொள்வாரோ என்னவோ!” என்று நான் யோசிக்கலானேன். அதனால் நான் ஒன்றும் பதிலே சொல்லவில்லை.
என் ஆசிரியர் அப்போது செட்டியாரை நோக்கி, “என்ன அப்படிக் கேட்கிறாய்? நீ அந்த அந்தாதியைப் பாடங் கேட்டதில்லையா?” என்று வினவினார்.
“நான் கேட்டதில்லை. நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு இயற்றியதல்லவா அது? நான் கும்பகோணம் வந்த பிறகு நீங்கள் இயற்றிய நூல்களைப் பாடங் கேட்டதில்லை. ஆனாலும் அவற்றைப் படித்துப் பார்த்து இன்புற்றுப் பாடமும் சொல்லி வருகிறேன். நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு செய்த நூல்களுக்கும் அதற்கு முன்பு செய்தவற்றிற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. முன்பு பாடின பாடல்களில் சாஸ்திரக் கருத்துக்கள் அதிகமாக இல்லை. இப்போது பாடியுள்ள பாடல்களில் எவ்வளவோ அரிய கருத்துக்களும் சாஸ்திர விஷயங்களும் அமைந்துள்ளன. அவற்றைப் படித்துப் பார்க்கும்போது சிலவற்றிற்குப் பொருள் விளங்குவதே இல்லை. எவனாவது ஒரு புஸ்தகத்தை எடுத்துவந்து பாடஞ் சொல்ல வேண்டும் என்றால் விழிக்க வேண்டியிருக்கிறது. இந்த அந்தாதியிலுள்ள யமகத்துக்கு லேசில் அர்த்தம் புரியுமா? உங்களிடம் வந்து கேட்டால்தான் விளங்கும். சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?”
“வரவில்லை”
“அவனைப்போல இன்னும் யாராவது வந்து அர்த்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.”
‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’
அப்போது ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரை நோக்கி, “நீங்கள், ஐயா முன்பு செய்த நூல்களெல்லாம் கேட்டிருக்கிறீர்களோ? ஐயா, இளமைக்காலத்தில் பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப் பத்தந்தாதி செய்திருக்கிறார்கள். அதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“என்ன? பட்டீச்சுரத்துக்கு அந்தாதியா? நான் படித்ததில்லையே! எங்கே உங்களுக்கு ஞாபகம் இருந்தால் ஒரு பாடல் சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார் செட்டியார்.
ஆறுமுகத்தாபிள்ளை உடனே அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார் அதைச் செட்டியார் கேட்டார்; கேட்டபின் ஆறுமுகத்தா பிள்ளையையும் ஆசிரியரையும் ஏற இறங்கப் பார்த்தார்; “இந்தப் பாட்டு பிள்ளையவர்கள் செய்ததென்று எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
“ஏன் தெரியாது? எங்கள் ஊர்ப் பிரபந்தத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? எங்கள் தகப்பனார் காலத்தில் ஐயா இயற்றியது இது.”
“இப்புஸ்தகம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் யாருக்கும் சொல்லாமல் கிழித்து ஆற்றிலே போட்டுவிடுங்கள். நீங்களும் அப்பாடல்களை மறந்து விடுங்கள்; ஐயா இப்படி ஒரு நூல் இயற்றியதாக யாரிடத்திலும் இனிமேற் பிரஸ்தாபம் செய்யவேண்டாம்”
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“ஏனா? இப்போது ஐயா செய்கிற பாடல்களைக் கேட்டவர்களிடம் இப்பாடல்களைப் பற்றிச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். உங்களுக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள். இப்போதெல்லாம் ஐயா செய்யும் பாடல்கள் எவ்வளவு ‘தங்கந் தங்கமாக’ இருக்கின்றன! பூசை வேளையிற் கரடியைவிட்டு ஓட்டினாற்போல நல்ல நல்ல பாடல்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் இப்பாட்டைச் சொல்ல வந்துவிட்டீர்களே!”
ஆறுமுகத்தா பிள்ளை சொன்ன செய்யுள் நன்றாகவே இருந்தது.
“வரைமா திருக்கு மொருகூறும்
மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும்
அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமறை
மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை
நகரி லருளப் பெற்றேனே”
என்பதே அச்செய்யுள். அதில் யமகம் இல்லை; திரிபு இல்லை; அரிய சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்தும் இல்லை. ஆனாலும் எளிய நடையும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பொருளும் உள்ளன. செட்டியார் அதைக் குறைகூறியது எனக்கு அப்பொழுது பொருத்தமாகத் தோற்றவில்லை. அதோடு அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாகவே பேசுபவரென்றுகூட நினைத்தேன். துறைசை யமக அந்தாதி முதலியவற்றிற்கு எளிதில் பொருள் விளங்கவில்லை என்று அவர் முதலில் கூறினார். எளிதில் பொருள் விளங்கும் இந்தப் பாடலில் அழகில்லை என்றார்.
ஆறுமுகத்தா பிள்ளைக்குப் பாடல்களின் உயர்வு தாழ்வைப் பற்றிய கவலை உண்டாகவில்லை. தங்கள் ஊர் விஷயமாகப் பிள்ளையவர்கள் செய்த நூலை, அவர் அருமையாகப் பாராட்டுபவர். அதைச் செட்டியார் குறைகூறியபொழுது அவருக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று.
“ஐயாவையே கேட்டுப் பாருங்கள். இந்த அந்தாதி அவர்கள் பாடியதுதான் என்று தெரியவரும். ஐயா அவர்கள் வாக்கை நீங்கள் தூஷிப்பது நன்றாக இல்லை” என்று ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரிடம் சொன்னார்.
“ஐயாவைத்தான் கேட்கலாமே” என்று சொல்லிக்கொண்டே செட்டியார் ஆசிரியரைப் பார்த்து, “இவர் ஏதோ சொல்கிறாரே; இது நிஜந்தானா? இந்த மாதியும் நீங்கள் ஒரு நூல் இயற்றியதுண்டா? இவருக்காகச் சொல்லவேண்டாம். ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லுங்கள். இத்தகைய நூலை நீங்கள் எதற்காகச் செய்தீர்கள்?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
எல்லாவற்றையும் மிக்க பொறுமையுடனே கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையவர்கள், “என்னப்பா தியாகராசு, மேலே மேலே ஓடுகிறாயே; இந்த மாதிரியான பிரபந்தத்தை நான் செய்திருக்கக் கூடாதா? இதிலே ஏதாவது பிழை இருக்கிறதா? எளிய நடையில் பாடல் செய்வது தவறா? சாதாரண ஜனங்களும் படித்துப் பொருளறியும்படி இருந்தால் நல்லதுதானே? கடினமாக இருந்தால் கஷ்டமல்லவா?” என்று கூறினர்.
கேட்ட செட்டியார், “அப்பாடியானல் சரி; உங்களுக்கு இதனால் அகௌரவம் வரக்கூடாதென்பதுதான் என் விருப்பம். சரி; நேரமாகிவிட்டது; புறப்படலாமே” என்றார்.
செட்டியார் இவ்வளவு சகஜமாகப் பிள்ளையவர்களிடம் பேசுவாரென்று நான் நினைக்கவில்லை. அவர் தம் அன்பினாலும் பணிவினாலும் மாணாக்கராகப் புலப்படுத்திக்கொண்டார். பேச்சிலோ மனமொத்துப் பழகும் நண்பரைப் போலவே பேசினார். தம் மனத்திலுள்ள அபிப்பிராயங்களை ஒளிவுமறைவின்றி மரியாதைக்குப் பயந்து மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு பொருமாமல் வெளியிட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தம் அபிப்பிராயங்களை அவர் சொல்லுவதை முதல் முதலாகக் கேட்பவர்கள், ‘அவர் மரியாதை தெரியாதவர், முரடர், அகங்காரி’ என்றே எண்ணக்கூடும். அவருடைய அந்தரங்க இயல்பை அறிந்துகொண்டவர்களுக்கு அவர் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவரல்லரென்பதும் தமக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைத் தோற்றியபடியே தெளிவான வார்த்தைகளிலே சொல்லிவிடுபவரென்பதும் தெரியவரும்.
நல்லுரை
செட்டியார் எழுந்தார். நாங்களும் எழுந்தோம். “ஐயாவிடம் நீர் நன்றாகப் பாடங் கேட்டுக்கொள்ளும். இவர்களுடன் இருப்பதையே ஒரு கௌரவமாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாக இருந்துவிட வேண்டாம். கொஞ்சகாலம் இருந்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணி ஓடிப்போய்விடவும் கூடாது. இம்மாதிரி பாடஞ் சொல்பவர்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. உம்முடைய நன்மையை உத்தேசித்துச் சொல்லுகிறேன்” என்று செட்டியார் என்னைப் பார்த்துச் சொன்னார். அவ்வார்த்தைகள் எனக்குச் சிறந்த ‘நல்லுரை’களாக இருந்தன. மற்றவர்களெல்லாம் பிள்ளையவர்கள் பெருமையையும் என் பாக்கியத்தையும் பாராட்டிப் பேசுவதையே கேட்டிருந்தேன். செட்டியாரோ நான் இன்னவாறு இருக்க வேண்டுமென்பதைச் சொன்னார். அவர் என்னைப் பாராட்டவில்லை; அதனால் என்ன? என் வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியைச் சொன்னார். அவர் கூறிய அனுபவ சாரமான வார்த்தைகள் எனக்கு அமிர்தம்போல இருந்தன.
செட்டியாரும் அவருடன் வந்தவர்களும் விடைபெற்றுச் சென்றனர். நாங்கள் வண்டியில் ஏறிவந்து பட்டீச்சுரத்தை அடைந்தோம்.
-----------
அத்தியாயம் 40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்
ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக ரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது.
“சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று தொடங்கும் பாட்டு ஒன்றே அவரிடத்தில் இயல்பாக உள்ள கவித்துவத்தைத் தெளிவாக வெளியிடுகிறது. பனங்கிழங்கு பிளந்தாற் போன்ற கூரிய வாயையுடைய நாரையே என்று நாரையை அவர் அழைக்கிறார். இந்த உவமை பாண்டிய மன்னனது உள்ளத்தைக் கவர்ந்ததாம். ஆடையின்றி வாடையினால் மெலிந்து கையினார் உடம்பைப் பொத்திக்கொண்டு கிடக்கும் தம் நிலையை அந்த வித்துவான் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார். தாம் படுகின்ற கஷ்டம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தம் மனைவி தமது வீட்டிற்படும் துன்பங்களை நினைந்து வாடுகிறார். அந்த அருமையான பாடலை இயற்றினவர் இந்த ஊரிலேதான் வாழ்ந்து வந்தார்” என்று என் ஆசிரியர் பட்டீச்சுரத்தை அடைந்தவுடன் கூறினார்.
சத்திமுற்றம்
“இது பட்டீச்சுரமல்லவோ?” என்று நான் கேட்டேன்.
“ஆம்; அதோ தெரிகிறதே அதுதான் சத்திமுற்றம் கோயில்; பட்டீச்சுரமும் சத்திமுற்றமும் நெருங்கியிருக்கின்றன. பட்டீச்சுரத்தின் வடக்கு வீதியே சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாக இருக்கிறது.”
“அந்தப் புலவருடைய பரம்பரையினர் இப்போது இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள். ஒருவர் தமிழறிவுள்ளவராக இருக்கிறார். அவரை நீரும் பார்க்கலாம்.”
பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். ஸ்தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக்கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ்நாட்டு ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்.
அரண்மனைச் சுவர்
பட்டீச்சுரத்தில் நாங்கள் புகுவதற்கு முன், ஓரிடத்தில் மிகவும் உயரமாக இடிந்த கட்டிடம் ஒன்றைக் கண்டோம்; இரண்டு சுவர்கள் கூடிய மூலையாக அது தோற்றியது; அதன் உயரம் ஒரு பனைமரத்தின் அளவுக்குமேல் இருந்தது. பின்பு கவனித்ததில் பல படைகளையுடைய மதிலின் சிதைந்த பகுதியாக இருக்கலாமென்று எண்ணினோம்.
“இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் இருத்தற்குக் காரணம் என்ன?” என்று அதைப்பற்றி என் ஆசிரியரைக் கேட்டேன்.
“பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றாகிய சோழன் மாளிகை என்பது இது. இந்த இடத்திலே சோழ அரசர்களுக்குரிய அரண்மனை முன்பு இருந்தது என்றும், இந்த இடிந்த கட்டிடம் அரண்மனைச் சுவர் என்றும் இங்குள்ளவர்கள் சொல்வதுண்டு.”
பழையாறை
பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பழைய சரித்திரத்தை விளக்கும் சின்னங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த காலங்களில் தெரிந்துகொண்ட செய்திகளையன்றி அப்பால் இலக்கியங்களாலும் கேள்வியாலும் சிலாசாஸனங்களாலும் தெரிந்துகொண்ட விஷயங்கள் பல. சோழ அரசர்கள் தமக்குரிய இராசதானியாகக்கொண்டிருந்த பழையாறை என்னும் நகரத்தின் பல பகுதிகளே இப்போது தனித்தனி ஊர்களாக உள்ளன. அந்தப் பழைய நகரத்தைச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில், “பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை” என்று பாராட்டுகிறார். இப்போது பட்டீச்சுரத்திற்கு அருகிலே கீழைப்பழையாறை என்னும் ஓர் ஊர்தான் அப்பழம் பெயரைக் காப்பாற்றி வருகிறது. சரித்திர விசேஷங்களால் பெருமைபெற்ற அவ்விடங்கள் பிறகு தல விசேஷங்களால் ஜனங்களுடைய அன்புக்கு உரியனவாக இருந்தன. இப்போது அந்த மதிப்பும் குறைந்துவிட்டது.
நாங்கள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் தங்கினோம். அவர் அந்த ஊரில் ஒரு ஜமீன்தாரைப்போலவே வாழ்ந்து வந்தார். பிள்ளையவர்களை அவர் மிக்க அன்போடு உபசாரம் செய்து பாதுகாத்துவந்தார். அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில் நான் ஆகாரம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
விலகிய நந்தி
பட்டீச்சுரம் சென்ற முதல்நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்திமுற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப்பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப்பந்தரின் கீழேவரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்.
மேலைப் பழையாறை
அப்பால் திருமலைராயனாற்றிற்கு நாங்கள் சென்று அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டோம். அந்த ஆற்றிற்குத் தெற்கே மேலைப்பழையாறை என்னும் ஊர் இருக்கிறது. அதன்பெரும் பகுதி ஆறுமுகத்தா பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த அவ்வூரில் தென்னை, மா, பலா, கமுகு முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு தோட்டத்தின் நடுவில் ஆறுமுகத்தா பிள்ளை அழகிய கட்டிடம் ஒன்றைக் கட்டியிருந்தார். வெயில் வேளைகளில் அங்கே சென்று தங்கினால் வெயிலின் வெம்மை சிறிதேனும் தெரியாது. பிள்ளையவர்கள் அடிக்கடி அவ்விடத்திற்சென்று தங்கிப் பாடஞ் சொல்லுவதனால் பிற்பகலில் ஆறுமுகத்தாபிள்ளை நல்ல பழங்களையும் நீரையும் கொணர்ந்து அளிப்பார். அங்கே மிகவும் இனிமையாகப் பொழுதுபோகும்.
ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு
ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி, ஞாயிறுகளில் வந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவுகொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர வேண்டுமென்பதற்காகவே விசேஷமான விருந்துணவை அளிப்பார். திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம் வீட்டிலும் அமைத்துக்காட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம்.
பிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தா பிள்ளை பணிவாக நடந்துகொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை ஜனங்களைக் கடுமையாகவும் தண்டிப்பார்.
நாகைப் புராணம்
நான் கையில் கொண்டுபோயிருந்த பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடங் கேட்டு முடித்தேன். மேலே பாடம் கேட்பதற்கு என்னிடம் வேறு புஸ்தகம் ஒன்றும் இல்லை. இந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.
“தம்பியிடம் புஸ்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம். முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி அந்நூலை ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார். அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புஸ்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.
அப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போஜனத்திற்குப் பின் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.
இவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்குத் திருப்தி. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டாம். இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது. செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.
அங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.
அப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான திருப்தி உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விஷயங்கள் அப்போது எனக்கு விளங்கின.
மாயூரப் புராணம் ஆரம்பம்
நாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரஸ்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க திருப்தி உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விஷயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.
பிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த ஸந்தோஷம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.
------------
அத்தியாயம் 41. ‘ஆறுமுக பூபாலர்’
ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்புகாட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர் என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால் அன்புடையவராக இருப்பதைக்கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு. பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.
நள்ளிரவில் விருந்து
ஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும் விசித்திரமானவை. மாலையில் அவர் அனுஷ்டானம் செய்த பிறகு கந்த புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டுவிட்டதாகவும் பலரிடம் சொல்லி மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.
நான் பாடங் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை நான் அலக்ஷியம் செய்வதாக ஒருவேளை எண்ணிவிடுவாரோ என்று பயந்து என் பாடத்தை உடனே நிறுத்திப் புஸ்தகத்தை மூடிவைப்பேன். அவர் படிக்கும்போது நானும் கவனித்து வருவேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொள்வார்கள்; சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலைபோடச் சொல்லுவார். தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும் வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவுகொள்ளச் சொல்லுவார்.
இந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும்பொழுது நான் பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடங் கேட்க வேண்டும். ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.
ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொண்ட பிறகு நான் சிறிதுநேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அஸ்தமித்தவுடன் பிள்ளையவர்கள் அனுஷ்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என் ஆகாரத்தை முடித்துக்கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக்கொண்டு பிள்ளையவர்கள் சாப்பிடும்போது பாடங் கேட்பதால் என்ன பயன் விளையப்போகிறது? எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர் உண்ணும்போதே எப்படித் தடை இல்லாமல் பாடஞ் சொல்ல முடியும்? ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான் அர்த்தராத்திரியில் பாடங் கேட்டு வந்தேன்.
ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்
ஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக்கொள்ளாமல் தூங்கிப் போய்விடுவேன். அதனால் பாடங் கேளாமற்போக நேரும். அத்தகைய சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக் கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறுநாளாவது கண்டிக்கத் தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப்போகிறது? சாப்பிடுவதும் தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி. இராத்திரி எழுந்து பாடங் கேட்பதைவிட உமக்கு வேறு வேலை என்ன?” என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கஷ்ட சுகங்களை அறிந்துகொள்ள முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல் வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே!” என்று அவருடைய கோபச்சொற்களைக் கேட்டு வாய்பேசாமல் நிற்பேன்.
புஸ்தகம் மறைந்த மாயம்
ஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடங் கேட்கத் தவறிவிட்டேன்; எல்லோரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை. விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வழக்கம்போல் பாடங் கேட்க எண்ணி முதல்நாள் இரவு புஸ்தகம் வைத்த இடத்திலே போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப் புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில் அப்புஸ்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது படிக்கலாமென்று எண்ணி என் புஸ்தகக்கட்டு இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன கஷ்டங்களை விளைவிக்குமோ!” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே!” என்று வருந்தினேன்.
வாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புஸ்தகங்களைக் காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த விஷயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார். ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை. அவர் எப்பொழுதும் எட்டுமணி வரையில் தூங்குவார். எட்டுமணியளவில் கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி” என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று “ஏன்?” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து வெளியே வருவார். தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும் சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ்நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே!
ஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின் முகத்தில்தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வளவு ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்துகொண்டு விழிக்கும் ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புஸ்தகத்தைக் காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை நான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும் நான் பேசாமல் வாடியமுகத்துடன் அங்கேயே நின்றேன்.
‘ஒரு செய்யுள் செய்யட்டும்’
சிறிதுநேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில்நீங்கி எழுந்து அவ்வழியே சென்றார். செல்லும்போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன் இவர் சும்மா நிற்கிறார்? பாடங் கேட்பதற்கு என்ன?” என்று சொன்னார். என் ஆசிரியர் மெல்ல, “இவர் புஸ்தகம் வைத்த இடத்தில் அது காணப்படவில்லையாம்” என்றார்.
“அப்படியா சமாசாரம்? படிக்கிற புஸ்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார்? இவருக்கு ஐயா பாடம் சொல்வது வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம் கவலையில்லாமல் இருப்பாரா?” என்று அவர் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
இப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா?” என்றுகூட எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில்கூறும் துணிவு எனக்கு உண்டாகவில்லை.
மறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் வருந்தி வருந்தி ஓயாமல் பாடஞ் சொல்லிக்கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச் சிந்தனை செய்து அறிந்துகொள்ளுகிறாரா? உங்களுடன் பழகும் இவர் ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும் பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் போய் வருவதற்குள் ஒரு செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புஸ்தகங்கள் எங்கே இருந்தாலும் வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புஸ்தகங்களை வாங்கித் தருகிறேன்” என்று சொன்னார்.
“தம்பியின் விஷயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும், பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக் கவனிக்கும்பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள் செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து சென்றார்.
‘மாறுமுகச் செம்மல்’
பிள்ளையவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வேறிடம் சென்றார். அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை ஆசிரியருக்குச் சொல்லிக்காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த் தவசிப்பிள்ளையிடம் என் பூஜைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே” என்றும் பிரிக்கலாம். தம்பி அதைக் கேட்டால் கோபித்துக்கொள்வார். இவ்வித தவறான அர்த்தம் தோன்றும்படி செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம் செய்துகொண்டேன்.
அந்தச் செய்யுள்
ஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.
“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார் - கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”
என்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில் சிறிது சந்தோஷத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று சொன்னதில் அதிகமான சந்தோஷம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய முகத்தைக் கவனித்துக்கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.
கண்டத்தினின்று தப்பியது
“இனிமேல் நன்றாகப் பாடங் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை விட்டுவிடும். செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’ செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புஸ்தகக்கட்டையும் மாயூரப்புராணத்தையும் எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப்புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புஸ்தகக்கட்டை முன்னிருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான் அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.
அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிதுநேரம் உதாரணங்களுடன் சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்டஇடத்திலிருந்து பாடங் கேட்க ஆரம்பித்தேன்.
ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என் மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்றுவிட்டது. நானும் அதை மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக் கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே அறிவார்!
------------
அத்தியாயம் 42. சிலேடையும் யமகமும்
அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையே கும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுது நானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள் சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன. அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து வந்தனராம்.
சிலேடைப் பாட்டு
மற்றொரு நாள் சிறந்த சுப்பிரமணிய ஸ்தலமாகிய ஸ்வாமிமலைக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசனம் செய்தோம். முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருவேரகமென்பது அந்த ஸ்தலமென்று சொல்லுவர். ஸ்ரீ சாமிநாதனென்பது அங்கே எழுந்தருளிய முருகக் கடவுளின் திருநாமம். நாங்கள் அங்கே போனபோது ஆறுமுகத்தா பிள்ளையும் வந்திருந்தார்.
சுவாமிதரிசனம் செய்தபிறகு பட்டீச்சுரத்திற்குத் திரும்பினோம்; காவிரிக் கரைக்கு வந்தபோது அங்கே பட்டுச்சாலியர்களிற் சிலர் பட்டுநூலை ஜலத்தில் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று என்னைப் பார்த்து, “இந்த நூலுக்கும் நீருக்கும் சிலேடையாக ஒரு வெண்பாப் பாடும், பார்க்கலாம். பத்து நிமிஷத்தில் சொல்லவேண்டும்” என்றார்.
“இதுவே பெரிய துன்பமாகிவிடும் போலிருக்கிறதே!” என்ற நினைவுதான் எனக்கு முதலில் எழுந்ததே ஒழிய அவர் சொல்லியபடி பாடல்செய்ய முயல்வோம் என்று தோன்றவில்லை. அவர் அன்போடு இன்முகங்காட்டி இன்சொல்லால் என்னிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பின் என் மனத்தில் உத்ஸாகம் உண்டாகியிருக்கும். அதிகாரதோரணையோடு அவர் இட்ட கட்டளைக்குப் பணியவேண்டுமென்ற நினைவில் அந்த உத்ஸாகம் ஏற்பட வழியேது?
ஆறுமுகத்தா பிள்ளை கூறியதைக் கேட்ட என் ஆசிரியர் அப்பொழுது அவர் இயல்பை நினைந்து வருந்தினாரென்றே தோற்றியது. “என்ன தம்பீ, திடீரென்று இவ்வளவு கடினமான விஷயத்தைச் சொல்லிச் சீக்கிரத்தில் பாடச்சொன்னால் முடியுமா? பாட்டென்றால் யோசிக்காமல் யந்திரம்போல் இருந்து செய்வதா?” என்று கூறி விட்டு, ‘சிலேடை அடையும்படி இரண்டு அடிகளை நான் செய்துவிடுகிறேன். மேலே இரண்டு அடிகளை நீர் செய்து பாடலைப் பூர்த்தி செய்யும்” என்று என்னை நோக்கிக் கூறினார். உடனே,
“வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையரற் றோயக் குறியினால்”
என்ற இரண்டு அடிகளைச் சென்னார். எனக்கு ஆறுமுகத்தா பிள்ளையின் நினைவு, அவர் என்னைச் செய்யுள்செய்யச் சொன்னது எல்லாம் மறந்துபோயின. சிலேடை அமைய என் ஆசிரியர் அவ்வளவு விரைவில் இரண்டடிகளைக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த இரண்டடிகளை ஆசிரியர் மீண்டும் சொல்லி, “மேலே இரண்டடிகளைப் பூர்த்தி செய்யும்” என்றார். நான் சிறிதுநேரம் யோசித்து அவர் கட்டளையை நிறைவேற்றினேன். பாட்டு முழுவதும் வருமாறு:
“வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால் - உள்ளவன்பில்
தாய்நோந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த
ஆய்நூலு நீருநிக ராம்”
[நூலுக்கு: வெள்ளை நிறத்தை உடைமையாலும் செய்கையினால் வெவ்வேறு நிறத்தை அடைதலாலும் சாயத்தில் தோய்க்கின்ற அந்தச் செயலாலும்.
நீருக்கு: இயல்பாக வெண்மை நிறம் உடைமையாலும் செயற்கையால் வேறு வேறு நிறங்களைக் கொள்ளுதலாலும் தோயமென்னும் பெயரை உடைமையாலும்
தோய் அக்குறி, தோயம் குறி என இரண்டு வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்; தோயம் - நீர்; குறி - பெயர். தாய் நேர்ந்த - தாயை ஒத்த.]
நான் செய்யுளை முடித்துச் சொன்னதைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை ஏதேனும் குற்றம் கூற ஆரம்பித்தால் என்ன செய்வதென்ற பயம் எனக்கு இருந்தது. என் ஆசிரியர் என்னை அதிலிருந்து மீட்டார். ஆறுமுகத்தா பிள்ளை தம் அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு முன்பே, “நன்றாயிருக்கிறது; ‘உள்ள அன்பில் தாய் நேர்ந்த ஆறுமுகத் தாளாளா’ என்ற பகுதி பொருத்தமாக உள்ளது. அந்தரங்கத்தில் தம்பிக்கு எல்லோரிடத்திலும் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அது விளக்குகிறது” என்று அவர் கூறினார். ஆறுமுகத்தா பிள்ளையின் முகத்திலே புன்னகை சிறிது அரும்பியது.
“முன் இரண்டடியில் அல்லவோ செய்யுளின் அருமை இருக்கிறது? பின்பகுதியில் என்ன நயம் இருக்கிறது?” என்று நான் எண்ணினேன். சிலேடை பாடுவதும், செய்யுள்நயம் தெரிவதும் அப்போது முக்கியமாக இல்லை; ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியைப் பெறுவதுதான் முக்கியமாக இருந்தது. இந்த இரகசியத்தை ஆசிரியர் உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடந்துகாட்டினார்.
நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம். பாடம் நடந்து வந்தது. ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பும் அதிகாரமும் கலந்து கலந்து வெளிப்பட்டன.
யமகப் பாட்டு
பின் ஒருநாட் காலையில் பட்டீச்சுரம் கோயிலுக்குச் சென்றோம். ஆறுமுகத்தா பிள்ளையும் வந்திருந்தார். அக்கோயிலில் திருமாளிகைப்பத்தியின் மேற்குக் கோடியில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு மதவாரணப் பிள்ளையார் என்பது திருநாமம். அம்மூர்த்தியைத் தரிசித்து நிற்கையில் ஆறுமுகத்தாபிள்ளை, “இந்த விநாயகர் திருநாமத்தை யமகத்தில் அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்றார். யமகம் பாடுவது சுலபமானதன்று. யமகச் செய்யுட்களைப் படித்து அர்த்தம் தெரிந்துகொள்வதே சிரமமாக உள்ளபோது அந்நிலையில் விரைவில் மதவாரணப் பிள்ளையார் திருநாமத்தை வைத்து யமகச் செய்யுள் ஒன்று நான் பாடுவதென்பது சாத்தியமான காரியமா? ஒன்றும் தோன்றாமல் ‘மிரள மிரள’ விழித்தேன். எனக்கு உண்டான வருத்தத்திற்கு ஓர் எல்லை இல்லை. வாய்விட்டு அழவில்லையே ஒழிய என் முகம் அகத்திலுள்ள வருத்தம் முழுவதையும் புலப்படுத்தியது. அதை என் ஆசிரியர் கவனித்தார். அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது தெரிந்தது. ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தார். “என்ன தம்பீ, இந்த மாதிரி அடிக்கடி இவருக்குக் கடினமான விஷயங்களைக் கொடுத்துப் பாடச் சொல்வது தர்மமா? இவர் செய்யுள் இயற்றக்கூடிய பழக்கமுடையவரே. ஆனாலும் இப்படி வற்புறுத்தித் திடீர் திடீரென்று சொல்லச் செய்தால் செய்யுள் வருமா? தானாகக் கனிந்து வரவேண்டியதைத் தடியால் அடித்துக் கனியவைக்கலாமா?” என்று சொன்னபோது ஆறுமுகத்தா பிள்ளை மேலே ஒன்றும் பேசவில்லை. தாம் செய்வது பிழை என்று அவர் உணர்ந்தாரோ இல்லையோ, மரியாதைக்குப் பயந்து பேசாமல் இருந்து விட்டார்.
நாங்கள் வீடு சென்றவுடன் ஆசிரியர் தாமே மதவாரணப் பிள்ளையார் விஷயமாக யமகச் செய்யுளொன்றை இயற்றி, என்னை எழுதச் சொல்லி ஆறுமுகத்தா பிள்ளையிடம் படித்துக் காட்டச் சொன்னார். நான் அவ்வாறே செய்தேன்.
விரத பங்கம்
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சில வீடுகளில் அட்சதை வாங்கிக்கொண்டு சமைத்து ஒருவேளை மாத்திரம் உண்ணுதல் எங்கள் குடும்ப வழக்கம். காலையில் ஸ்நானம் செய்து அயலார் வீடுகளுக்கு ஈரவஸ்திரத்தோடு மௌனமாகச் சென்று ஈரச்சவுக்கத்தில் அட்சதை வாங்குவதை ஒரு விரதமாக எங்கள் முன்னோர் கொண்டிருந்தனர்.
இதனை, ‘கோபாலம் எடுத்தல்’ என்று சொல்வார்கள். பட்டீச்சுரத்தில் நானிருந்தபோது முதல் சனிக்கிழமையன்று கோபாலம் எடுக்கும் பொருட்டுக் காலையில் ஸ்நானம் செய்யப் புறப்பட்டேன். ஆறுமுகத்தா பிள்ளை என்ன விசேஷமென்று விசாரித்தார். நான் விஷயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு மிக்க கோபம் உண்டாகி விட்டது. “நீர் வைஷ்ணவரா? இந்த விரதத்தை எல்லாம் உங்களூரில் வைத்துக்கொள்ளும். இந்த எல்லைக்குள் அப்படிச் செய்யக் கூடாது. சைவர்களாகிய எங்களோடு பழகும் உமக்கு இப்படிப் புத்திபோனது ஆச்சரியம்” என்று கண்டிக்க ஆரம்பித்தார். அன்றியும் நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டிற்கு, நான் கோபாலம் எடுத்து வந்தால் உணவு அளிக்க வேண்டாமென்று சொல்லியனுப்பிவிட்டார். நான் என்ன செய்வேன்! பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிடக்கூடாதென்றும், அதனால் பெருந்தீங்கு நேருமென்றும் நான் நம்பியிருந்தேன். எங்கள் குல தெய்வமாகிய ஸ்ரீ வேங்கடாசலபதியை நினைந்து மேற்கொள்ளும் அந்த விரதத்திற்கு பங்கம்நேர்ந்தால் குடும்பத்திற்கே துன்பம் வருமே என்று அஞ்சினேன். அத்தகைய நம்பிக்கையுள்ள குடும்பத்திற் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த எண்ணம் மிகவும் பலமாக இருந்தது. அன்று மத்தியான்னம் நான் உணவு கொள்ளவே இல்லை. தென்னந்தோப்பிற் சென்று கீழே படுத்துப் பசியினால் புரண்டேன். இத்தகைய துன்பங்களுக்கு ஆளாக்கிய என் விதியை நொந்துகொண்டேன்.
நான் உண்ணவரவில்லை என்று தெரிந்து எனக்கு ஆகாரம் அளிக்கும் வீட்டினர் மிகவும் வருந்தினர். அவர்கள் அங்கே வந்து என்னை கண்டு வற்புறுத்தினமையால் அன்று பிற்பகலில் ஐந்து மணிக்குப் போய் உணவருந்தினேன். புரட்டாசி மாதச் சனிக்கிழமை விரதத்திற்கு அந்த ஊரில் விடை கொடுத்துவிட்டேன்.
மாயூரத்தில் இருந்தபோது இத்தகைய துன்பம் நேரவில்லை. அன்றியும் சவேரிநாத பிள்ளையின் பழக்கம் எனக்கு மிக்க இன்பத்தை அங்கே உண்டாக்கும். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசும் பேச்சு எவ்விதமான வருத்தத்தையும் போக்கிவிடும். பட்டீச்சுரத்திலோ மனம்விட்டுப் பேசி மகிழ்வதற்குரிய நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை.
சவேரிநாத பிள்ளை வரவு
இப்படியிருக்கையில், நல்லவேளையாக ஆசிரியர் சவேரிநாத பிள்ளையை அழைத்துவரும்படி மாயூரத்திற்குச் சொல்லியனுப்பினார். அவர் பட்டீச்சுரம் வந்தபோது எனக்கு எவ்வளவு சந்தோஷம் உண்டாயிற்று என்பதை எழுதி உணர்த்துவது இயலாது. “இனிமேல் ஆறுதலாகப் பேசி மகிழலாம்” என்று எண்ணினேன்.
சவேரிநாத பிள்ளை வந்தவுடனே ஒரு பெரிய காரியத்தைச் சாதித்தார். ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஆகாரம்செய்து வந்த வழக்கம் அவரது முயற்சியால் நின்றது. அவர் தைரியமாகப் பேசுபவர். “பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரமதேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!” என்ற கருத்து அமைய ஒரு பாட்டுப் பாடி அதை வெளிப்படையாகச் சொல்லி வந்தார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார். சவேரிநாத பிள்ளை, அவருக்கு ஏற்றபடி விஷயங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதுமுதல் இரவு பத்து மணிக்குள் யாவரும் ஆகாரம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டாயிற்று. பிள்ளையவர்களும் நானும் வேறு பலரும் சவேரிநாத பிள்ளையின் தைரியத்தையும் சாதுர்யத்தையும் மெச்சினோம். “இவருக்கு ஏற்ற கோடரி சவேரிநாத பிள்ளையே” என்று நான் எண்ணி மகிழ்ந்தேன்.
சவேரிநாத பிள்ளையின் சல்லாபத்திலும் ஆசிரியரது அன்பிலும் பட்டீச்சுர வாசத்தில் இருந்த கசப்பு எனக்கு நீங்கியது.
-----------
அத்தியாயம் 43.ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்
நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின. சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்ரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில் இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். தமிழ் இலக்கிய சம்பந்தமான விஷயங்களோடு உலகத்திலுள்ள பலவேறு வகைப்பட்ட மனிதர்களின் இயல்புகளையும் உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப் பார்த்தேன். அவர்களுள் அடக்கம்மிக்கவர்களையும் கர்வத்தால் தலைநிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும் புறத்தில் மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும் காண நேர்ந்தது. வறுமைநிலையிலும் உபகாரம் செய்வதை மறவாத பெரியோர்கள் பழக்கமும் ஏற்பட்டது. அடிக்கடி இன்ப நிகழ்ச்சிகளுக்கிடையே துன்பங்களும் விரவி வந்தன. பட்டீச்சுரத்தில் திருமலைராயனாற்றிலிருந்து ஒரு வாய்க்கால் பிரிகிறது. நான் அவ்விடத்தில் ஒருநாள் ஸ்நானம் செய்யும்பொழுது சுழலில் அகப்பட்டுக்கொண்டேன். இரண்டு பேர்கள் என்னை எடுத்துக் கரையேற்றினார்கள்.
இவ்வாறு இருந்த எனக்கு உணவினர்களைக் காணவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. என் தாய், தந்தையர் அப்போது சூரியமூலையில் இருந்தார்கள். பட்டீச்சுரத்திற்குச் சமீபத்தில் உத்தமதானபுரம் இருக்கிறது. அதனால் ஒருமுறை அங்கே சென்று அங்கிருந்த சிறிய தந்தையாரையும் சிறிய தாயாரையும் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. புரட்டாசி மாதமாதலால் நவராத்திரி ஆரம்பமாயிற்று. என் ஆசிரியரிடம் விடைபெற்று ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரம் சென்றேன். செல்லும்போது ஆசிரியர், “போய் நான்கு நாள் இருந்துவிட்டு வாரும்” என்று கூறினார். பட்டீச்சுரத்தில் நிகழ்ந்த கஷ்டங்களைச் சில தினங்களேனும் நான் மறந்திருக்கலாமென்பது அவர் எண்ணம் போலும்.
விஜயதசமி
ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரத்தில் இருந்தேன்; ஊருக்குச் செல்லும்போது அங்கே சில நாட்கள் தங்கலாமென்றுதான் எண்ணினேன். ஸரஸ்வதி பூஜை செய்துவிட்டு மறுநாட்காலையில் புனப்பூஜையும் செய்தேன். விஜயதசமியாகிய அன்று மாணாக்கர்களுக்கு விசேஷமான தினம் அன்றோ? தங்கள் தங்கள் ஆசிரியர்களிடம் புதிய பாடத்தை அன்று தொடங்குவது நம் நாட்டு வழக்கம். பிள்ளையவர்கள் கையால் அன்று ஒரு நூல் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. “இவ்வளவு நாட்கள் அவர்களோடு இருந்தோம். என்றைக்கு அவர்களோடு இருந்து பாடங் கேட்க வேண்டுமோ அன்றைத் தினத்தில் அவர்களைப் பிரிந்து இருப்பது நியாயம் அன்று. எப்படியாவது இன்று போய் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்று உறுதி செய்துகொண்டேன்.
என் சிறிய தந்தையார் சில தினம் இருந்துவிட்டுப் போகும்படி என்னை வற்புறுத்தினார். அவரும் சிறிய தாயாரும் என்னிடம் அளவற்ற அன்பு பூண்டவர்கள். என்னைக் கடிந்து கோபிக்கும் இயல்பை அவர்களிடம் நான் கண்டதே இல்லை. “சாமா, உன்னைப் பார்த்து ஆறு மாதங்கள் ஆயின. நான் மாயூரம் வரலாம் வரலாமென்று இருந்தேன். இங்கே வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் வரமுடியவில்லை. நீ வந்தாயே என்று எவ்வளவோ சந்தோஷம் அடைந்தேன். உடனே போகவேண்டுமென்று சொல்லுகிறாயே! நான்கு நாள் பாடங் கேளாவிட்டால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?” என்று அவர் சொன்னார். அவ்வூரில் அவர் கிராம முன்சீபாக இருந்தார். அவருக்குப் பல வேலைத் தொல்லைகள் உண்டென்பதை நான் அறிவேன். என்சிறிய தாயாரும் இருந்து போகும்படி வற்புறுத்தினார். “இங்கே இருப்பதில் எனக்கு ஆக்ஷேபம் ஒன்றும் இல்லை. விஜயதசமியாகிய இன்றைக்குப் பிள்ளையவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் வாங்கிக்கொண்டால் நல்லதென்று தோற்றுகிறது. நான் மறுபடியும் வருகிறேன்” என்று விடைபெற்று, பிற்பகலில் பட்டீச்சுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். பட்டீச்சுரத்திற்கு மாலை நான்கு மணியளவுக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டவுடன்,. “ஏன் அதற்குள் வந்து விட்டீர்?” என்று ஆசிரியர் கேட்டனர்.
“இன்று விஜயதசமி; ஐயாவிடம் ஏதாவது ஒரு புஸ்தகம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணி வந்தேன்” என்றேன்.
‘கலி தீர்ந்தது’
உடனே ஆசிரியர் அங்கு வந்த ஒருவரிடம், அந்த வீட்டிலே பூஜையில் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்றை எடுத்து வரும்படி சொன்னார். அவர் அங்ஙனமே ஒன்றை எடுத்து வந்து பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை அவர் என்னிடம் அளித்தார். நான் அதை மிக்க ஆவலோடு பெற்றுக்கொண்டேன். “என்ன நூலென்று பிரித்துப் பாரும்” என்று அவர் கூறவே, நான் பார்த்தேன். அது நைடதமாக இருந்தது. “நைடதம் படித்தால் கலிபீடை நீங்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். உமக்குக் கலி இன்றோடு நீங்கிவிட்டது. இனிமேல் கவலைப்பட வேண்டாம்” என்று ஆசிரியர் கூறிய பொழுது எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. நான் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதை அறிந்த அவர் என் மனத்தில் அவற்றால் துன்பம் உண்டாகியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அன்று அவ்வாறு எனக்கு ஆறுதல் கூறினார். உண்மை அன்புடையார் சொல்லும் வார்த்தைகளுக்குப் பயன் இல்லாமற் போகுமா?
“மாயூரத்தில் ஐயாவிடம் முதலிற் பெற்றுக்கொண்டது நைடதந்தான். அப்பொழுதே இந்த மாதிரி எண்ணினேன்” என்று நான் சொன்னேன். பிறகு நைடதத்திலிருந்து சில செய்யுட்களை ஆசிரியர் முன்னிலையில் படித்தேன். அதனால் எனக்கு உண்டான திருப்தி மிக அதிகம். அதுவரையில் ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த வருஷத்து விஜயதசமியில் நான் என் ஆசிரியர் கைப்பட ஒரு புஸ்தகம் பெற்றுப் படித்த பாக்கியம் கிடைத்தது. அதனால் அதற்கு ஒரு தனி விசேஷம் இருந்தது.
உச்சிஷ்ட கணபதி தரிசனம்
சவேரிநாத பிள்ளையும் நானும் பாடம் கேட்டு வந்தோம். கும்பகோணத்திற்கு ஒருமுறை யாவரும் சென்று தியாகராச செட்டியாரைக் கண்டுபேசி இருந்துவிட்டு வந்தோம். அவரும் சில முறை பட்டீச்சுரத்திற்கு வந்து சென்றார். ஒரு நாள் சத்திமுற்றம் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். அங்கே அம்பிகை தவம்புரிந்து இறைவன் பிரசன்னமானபொழுது தழுவிக்கொண்டதாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அங்ஙனம் தழுவிய திருக்கோலத்தில் ஒரு விக்கிரகம் அங்கே இருக்கின்றது. அதையும் தரிசித்தோம். அங்கே ஆலயவாசலில் உச்சிஷ்ட கணபதியின் கோயில் ஒன்று இருக்கிறது. அந்த மூர்த்தியை உபாஸனை செய்தால் நல்ல வாக்கு உண்டாகுமென்று பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தேன். ஆதலால் மனத்தில் அந்நினைவுடனே அப்பெருமானை வணங்கினேன்.
கோட்டூரில் தீபாவளி
புரட்டாசி மாதம் போய் ஐப்பசி மாதம் வந்தது. தீபாவளி அணுகிற்று. என் தாய், தந்தையரையும் குழந்தையாக இருந்த தம்பியையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. தீபாவளிக்குப் போய் என் பெற்றோர்களோடு இருந்து வரலாமென்று எண்ணிப் பிள்ளையவர்களிடம் என் கருத்தை வெளியிட்டேன்.
“அப்படியே செய்யலாம்” என்று அவர் அனுமதி அளித்தார். புறப்படும்பொழுது இரண்டு பட்டுக்கரை அங்கவஸ்திரங்களை வருவித்து என்னிடம் அளித்து, “தீபாவளியில் உபயோகப்படுத்திக்கொள்ளும். சௌக்கியமாகத் தீபாவளி ஸ்நானம் செய்து சிலநாள் தங்கிவிட்டு அப்படியே மாயூரத்திற்கு வந்துவிடலாம். நான் தீபாவளிக்கு அங்கே போவதாக எண்ணியிருக்கிறேன்” என்றார்.
அவருடைய அன்பை அறிந்து நான் வியந்தேன்; அந்த அங்கவஸ்திரங்களைப் பணிவுடன் ஏற்று விடைபெற்றுப் புறப்பட்டேன்.
கோட்டூரென்பது, பாடல் பெற்ற சிவஸ்தலமும் ஹரதத்த சிவாசாரியரவர்களுடைய அவதார ஸ்தானமுமாகிய கஞ்சனூருக்குக் கிழக்கே கார்காத்த வேளாளர்களுக்கு ஆசிரியர்களாகிய சோழியப் பிராமணர்கள் வசிக்கும் துகிலிக்கு மேற்கே சமீபத்தில் உள்ளது. அதன் பெயர் கோடையென்று செய்யுட்களில் வழங்கும். கஞ்சனூர், துகிலி, மணலூர் முதலிய இடங்களில் மாறி மாறித் தங்கிவந்த என் தந்தையார் அப்போது கோட்டூரில் என் சிறிய தாயார் (தாயாரின் தங்கை) வீட்டில் இருந்தார்; துலா மாதமாதலால் காவிரி ஸ்நானம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் அங்கே இருந்தனர். சூரியமூலையிலிருந்து என் பாட்டனாரும் வந்திருந்தார். கோட்டூரில் காவிரி உத்தரவாகினியாக ஓடுகிறது. அதனால் பலர் அங்கே ஸ்நானம் செய்வதற்கு வருவார்கள். நான் அங்கே போனது பலபேரையும் ஒருங்கே பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது யாவரும் என்னுடைய க்ஷேம சமாசாரத்தையும் கல்வியபிவிருத்தியையும் பற்றி விசாரித்தார்கள். நான் கொண்டுபோயிருந்த அங்கவஸ்திரங்களைப் பார்த்த என் தந்தையார் மிக்க திருப்தியை அடைந்தார். என் தாயாருக்கோ அவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. “என்னவோ. பகவான்தான் காப்பாற்றவேணும். எங்களால் ஒன்றும் முடியாதென்று தெரிந்து இப்படி ஒரு நல்லவரைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது, அவர் கிருபைதான்” என்று அவர் சொல்லி உளம் பூரித்தார்.
தீபாவளி ஸ்நானம் செய்தேன். என் ஆசிரியர் அன்புடன் அளித்த அங்கவஸ்திரங்களைத் தரித்துக்கொண்டேன். அப்போது எனக்கு ஒரு தனிமகிழ்ச்சி உண்டாயிற்று.
ஒரு கனவான்
கோட்டூரில் இருந்தபோது பல பேர்கள் என்னைப் பார்த்துப் பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அநேகமாக யாவரும் அவரைப் பாராட்டினார்கள் உலகத்தில் எல்லோரும் ஒரேவிதமான அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்களா? நல்லதை நல்லதென்று சொல்பவர்களுக்கு நடுவில் அதைக் கெட்டதென்று சொல்பவர்களும் இருந்து வருகிறார்கள். ஒருநாள் என் தகப்பனாருக்குத் தெரிந்த ஒருவர் வந்திருந்தார். நெடுநேரம் பேசினார். “உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்?” என்று விசாரித்தார். என் தந்தையார், “தமிழ் படிக்கிறான்” என்று சொன்னார். அவர் ஏதோ ஆச்சரியத்தைக் கேட்டவரைப் போலவே திடுக்கிட்டு, “என்ன? தமிழா!” என்று கூறினார். அதோடு அவர் நிற்கவில்லை. “தமிழையா படிக்கிறான்! இங்கிலீஷ் படிக்கக் கூடாதா? ஸம்ஸ்கிருதம் படிக்கலாமே? இங்கிலீஷ் படித்தால் இகத்துக்கு லாபம்; ஸம்ஸ்கிருதம் படித்தால் பரத்துக்கு லாபம். தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை” என்று அவர் மேலும் தம் கருத்தை விளக்கினபோது எனக்குக் தூக்கி வாரிப் போட்டது. அவ்வளவு அருமையான அபிப்பிராயத்தைச் சிறிதேனும் யோசனையில்லாமல் சொல்ல முன்வந்த அந்தப் பேர் வழி யாரென்று அறிய எனக்கு விருப்பம் உண்டாயிற்று. அவர் போனவுடன் நான் விசாரித்தேன். பாவம்! அவருக்கு இங்கிலீஷூம் தெரியாது; ஸம்ஸ்கிருதமும் தெரியாது; தமிழ் தெரியவே தெரியாது ஆகவே அவர் கருத்துப்படி அவரே இகபர சுகத்துக்கு வேண்டியதைத் தேடவில்லையென்று தெரிய வந்தது ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ!’ என்று யோசனை இல்லாமலும், பிறர் மனம் புண்படுமே என்பதைத் தெரிந்துகொள்ளாமலும், தமக்கு இந்த அபிப்பிராயத்தைக் கூற என்ன தகுதி இருக்கிறதென்று ஆலோசியாமலும் வாய்க்கு வந்ததை, “என் அபிப்பிராயம் இது” என்று சொல்லும் கனவான்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்குக் கோட்டூரில் கண்ட மனிதர் ஞாபகம் வரும்.
ஜ்வர நோய்
கோட்டூரில் ஒன்றரை மாதம் இருந்தேன். தீபாவளியான சில நாளில் எனக்குக் கடுமையான ஜ்வரம் வந்துவிட்டது. மிகவும் சிரமப்பட்டேன். அவ்வூரிலிருந்த சக்கரபாணி என்ற ஒரு பரிகாரி வைத்தியம் பார்த்தார். “கண்காணாமல் சௌக்கியமாக இருந்து வந்த குழந்தை இங்கே வந்தவுடன் நம்முடைய துரதிர்ஷ்டம் அவனையும் பிடித்துக்கொண்டது” என்று என் தாயார் அழுதார்.
தீபாவளிக்குப் பின் நான் மாயூரம் செல்லாமையால் என் ஆசிரியர் மிகவும் கவலைப்பட்டுக் கோட்டூருக்கு மனுஷ்யர்களை அனுப்பி விசாரித்து வரச்சொன்னார். நான் நோய்வாய்ப்பட்டது தெரிந்து பெரிதும் வருந்தினார். அடிக்கடி அவரிடமிருந்து யாரேனும் வந்து என் தேகஸ்திதியைப்பற்றி அறிந்துகொண்டு சென்றனர். “அன்பென்றால் இதுவல்லவா அன்பு!” என்று ஊரினர் ஆச்சரியப்பட்டனர்.
-----------
அத்தியாயம் 44. திருவாவடுதுறைக் காட்சிகள்
மார்கழி மாதக் கடைசியில் எனக்கு ஜ்வர நோய் முற்றும் நீங்கிற்று; ஆயினும் சிறிது பலக்குறைவு மட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம் போக வேண்டுமென்ற விருப்பம் வரவர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில், சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப் பாடஞ் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர் திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளை வாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என் சந்தேகத்தை அறிந்த என் தந்தையார் தாமே திருவாவடுதுறை சென்று என் ஆசிரியர் இருக்கும் இடத்தை அறிந்து வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுச் சென்றார்.
தந்தையார் விசாரித்து வந்தது
திருவாவடுதுறைக்குச் சென்ற தந்தையார் அங்கே சிவாலயத்தில் ஸ்ரீ குமாரசாமித் தம்பிரானைப் பார்த்தார். தம்பிரானுக்கும் தந்தையாருக்கும் பழக்கமாதலால் அவரிடம் என் தந்தையார் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிக்கவே அவர்கள் மாயூரத்தில் இருப்பதாகவும் தைமாதம் நடைபெறும் குருபூஜைக்கு அவசியம் திருவாவடுதுறைக்கு வரக்கூடுமென்றும் தம்பிரான் கூறியதோடு என் தேகநிலையைப் பற்றியும் கேட்டார்.
விஷயத்தைத் தெரிந்துகொண்ட என் தந்தையார் சூரியமூலை வந்து அதை எனக்கு அறிவித்து, “குரு பூஜைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இப்போது நீ மாயூரம் போனால் மறுபடியும் பிள்ளையவர்களோடு திருவாவடுதுறைக்கு வரவேண்டியிருக்கும். திருவாவடுதுறைக்கே குரு பூஜையின் பொருட்டு அவர்கள் வருவதால் நீயும் அப்போது அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றார். நான் அவ்வாறே குருபூஜையை எதிர்நோக்கியிருந்தேன்.
கண்ட காட்சிகள்
தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் குருபூஜை நடைபெறும். குருபூஜை நாளன்று காலையில் நான், என் சிறிய தாயார் குமாரர் கோபாலையரென்பவருடன் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். நான் முன்பு பார்த்த திருவாவடுதுறையாக அவ்வூர் அப்போது காணப்படவில்லை. குருபூஜை, குருபூஜையென்று அயலிலுள்ள கிராமத்தினர்கள் மிகவும் சிறப்பாகப் பேசிக்கொள்வதைக் கேட்ட எனக்கு அத்திருநாள் ஒரு பெரிய உத்ஸவமாக நடை பெறுமென்ற கருத்து மாத்திரம் இருந்தது. ஆனால் அன்று நான் கண்ட காட்சிகள் என் கருத்துக்கு எவ்வளவோ அதிகமாக விளங்கின.
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில் ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும் பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும் வந்திருந்தனர். வித்துவான்களில் எத்தனை வகையினர்! சங்கீத வித்துவான்களில் நூற்றுக் கணக்கானவர்களைக் கண்டேன். அவர்களில் கதை பண்ணுபவர்களும், வாய்ப்பாட்டுப் பாடுபவர்களும், வீணை, புல்லாங்குழல், கோட்டு வாத்தியம், பிடில் முதலிய வாத்தியங்களில் கை தேர்ந்தவர்களும் இருந்தனர். ஸம்ஸ்கிருத வித்வான்களில் தனித்தனியே ஒவ்வொரு சாஸ்திரத்தையும் கரை கண்டவர்கள் அங்கங்கே தங்கியிருந்தனர். வேதாத்தியயனம் செய்தவர்கள் கோஷ்டி கோஷ்டியாக வேத பாராயணம் செய்தபடி ஆலயத்திலும் பிற இடங்களிலும் இருந்தனர். தேவாரங்களை இன்னிசைப் பண்ணுடன் ஓதும் இசைவாணர்கள் விபூதி ருத்திராக்ஷ தாரணத்தோடு முகத்திலே ஒரு வகையான தேஜசு விளங்க மனத்தைக் கவரும் தேவாரம் முதலியவற்றை ஓதிக்கொண்டிருந்தனர்.
பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர். மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும் வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜை தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச் செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில் வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.
அன்ன தானம்
குருபூஜை காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும். யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில் உத்ஸவத்தின் முதல்நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடுநாட்களாகக் காய்ந்துகொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.
தெருத்தெருவாக வீடுவீடாகக் குருபூஜையின் விமரிசை விளங்கியது. அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டில் விசேஷம் நடப்பது போன்றே மாவிலைகளாலும் தோரணங்களாலும் வீடுகளையும் தெருக்களையும் அலங்கரித்திருந்தனர். விருந்தினர்களை வரவேற்று உண்பித்தனர். குரு பூஜை மடத்தில் மாத்திரம் நிகழ்வதன்று; திருவாவடுதுறைக்கே சொந்தமான திருநாள் அது. ஒரு வகையில் தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம். தமிழ் நாட்டிலுள்ள பலரும் அத்திருநாளில் அங்கே ஒன்று கூடி ஆனந்தமுற்றார்கள்.
ஸ்தல விசேஷம்
திருவாவடுதுறையிலுள்ள மடம் மிகச்சிறப்புடையதாயிருப்பது அவ்வூருக்கு முக்கியமான பெருமை. அதனோடு இயல்பாகவே அது தேவாரம் பெற்ற ஸ்தலம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தம் தந்தையார் செய்த வேள்விக்காக ஆயிரம்பொன் சிவபெருமானிடமிருந்து அத்தலத்திற் பெற்றனர். அதனால் அங்கே உள்ள தியாகராசமூர்த்திக்கு ஸ்வர்ணத் தியாகரென்ற பெயர் வழங்கும்.
ஸ்வாமியின் திருநாமம் மாசிலாமணியீசரென்பது; அம்பிகையின் திருநாமம் அதுல்யகுசநாயகியென்பது; ஒரு முறை அம்பிகை சிவாக்ஞையால் அங்கே பசுவடிவத்துடன் வந்து அங்குள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் அத்தலத்திற்குக் கோமுக்தி, கோகழியென்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற காலத்து அப்பிராட்டியைச் சிவபெருமான் அணைத்தெழுந்தாரென்பது புராணவரலாறு. அதற்கு அடையாளமாக அணைத்தெழுந்த நாயகரென்ற திருநாமத்தோடு ஒரு மூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார். உத்ஸவத்தில் தீர்த்தங் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே.
அத்தலத்தின் ஆலயத்தில் பல அரசமரங்கள் உள்ளன. அவை படரும் அரசு. மண்டபத்தின் மேலும் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தல விருக்ஷம் அந்த அரசே; அதனால் அதற்கு அரசவனம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன்மார்களுள் ஒருவருமாகிய திருமூலர் இத்தலத்தில் தவம்புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர். ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.
மடத்தைச் சார்ந்த ஓரிடத்தில் திருமாளிகைத்தேவரென்னும் சித்தருடைய ஆலயம் உண்டு. போகரின் சிஷ்யரும் திருவிசைப்பாப் பாடியவர்களுள் ஒருவருமாகிய அவர் ஒரு சமயம் அக்கோயில் மதில்களின் மேலுள்ள நந்தி உருவங்களையெல்லாம் உயிர்பெறச் செய்து ஒரு பகையரசனோடு போர்புரிய அனுப்பினாரென்பது பழைய வரலாறு. அது முதல் அவ்வாலய மதிலின்மேல் நந்திகளே இல்லாமற் போயினவாம். அங்கே ஸ்வாமி சந்நிதியிலுள்ள ரிஷபம் மிகப் பெரியது. “படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்” என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.
அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும் சிறப்புடையதாக விளங்குகிறது.
உத்ஸவச் சிறப்பு
குருபூஜை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் ரதோத்ஸவம் நடைபெறும். உத்ஸவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். ரத சப்தமியன்று தீர்த்தம். பெரும்பாலும் ரத சப்தமியும் குருபூஜையும் ஒன்றையொன்று அடுத்தே வரும்; சில வருஷங்களில் இரண்டும் ஒரே நாளில் வருவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோமுத்தீசர் வீதியில் திருவுலா வருவார். அப்பொழுது ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து உத்ஸவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார். தியாகராஜ மூர்த்தியின் நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்க் காட்சியென்று பெயர். ஆலயத்தில் உத்ஸவமும் மடத்தில் குருபூஜையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே இருக்கும். அயலூரிலிருந்து வருபவர்களுடைய கண்களையும் உள்ளத்தையும் கவர்வதற்கு உரிய பல விசேஷங்களுக்கும் அவ்விரண்டு நிகழ்ச்சிகளே காரணமாக அமைந்தன. சிவபக்தியுள்ளவர்கள் ஆலய உத்ஸவத்திலே ஈடுபட்டனர். ஞானாசிரிய பக்தி உடையவர்கள், குருபூஜா விசேஷங்களில் ஈடுபட்டனர். இரண்டும் உடையவர்கள் “எல்லாவற்றையும் ஒருங்கே தரிசித்து இன்புறுவதற்குப் பல தேகங்களும் பல கண்களும் இல்லையே!” என்று வருந்தினார்கள்.
சாப்பாடு
நான் திருவாவடுதுறை வீதியில் நுழைந்தது முதல் அங்குள்ள ஆரவாரமும் நான் கண்டகாட்சிகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன. ஒவ்வோரிடத்திலும் உள்ளவற்றை நின்று நின்று பார்த்தேன். அக்கூட்டத்தில் பிள்ளையவர்கள் இருக்குமிடத்தை நான் எங்கே கண்டுபிடிப்பது? என்னுடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலைந்தேன். எங்கள் கண்களும் அலைந்தன. பன்னிரண்டு மணி வரையில் சுற்றிச்சுற்றிக் கால்வலி கண்டது; வயிற்றிலும் பசி கிண்டியது. சாப்பிட்ட பிறகு பார்க்கலாமென்று எண்ணிப் போஜனசாலைக்குப் போனோம். அடேயப்பா! எத்தனை கூட்டம்! என்ன இரைச்சல்! என்ன சாப்பாடு! எங்களுக்கு அக்கூட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. காலையில் ஒன்பது மணி முதல் அன்னதானம் நடந்து வருகிறது. நாங்கள் போனபோதும் கூட்டத்திற்குக் குறைவில்லை. மெல்ல இடம்பிடித்துச் சாப்பிடுவதற்குள் மிகவும் திண்டாடிப் போனோம். அவ்வுணவின் மிகுதியால் சாப்பிட்ட பிறகும் சிறிது சிரமப்பட்டோம்.
மறுபடியும் ஆசிரியரைத் தேடும் வேலையைத் தொடங்கினோம். சாப்பிட்ட சிரமத்தால் காலையில் தேடியபோது இருந்த வேகம் எங்களுக்கு அப்போது இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாகச் சுற்றினோம். இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?” என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார ஸந்நிதிகளோடு சல்லாபம் செய்துகொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில் இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லி வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை உண்டாகும். “அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்துகொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக எடுத்துவைப்பேன்.
பிள்ளையவர்களைக் கண்டது
கடைசியில், தெற்கு வீதியில் மடத்துக் காரியஸ்தராகிய நமச்சிவாய முதலியாரென்பவர் வீட்டுத் திண்ணையில் என் ஆசிரியர் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அவர் பக்கத்திலே சில கனவான்களும் தம்பிரான்களும் இருந்தார்கள். எல்லோரும் மிகவும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். பிள்ளையவர்கள் என்னைக் கண்டவுடன், “எப்பொழுது வந்தீர்? ஆகாரம் ஆயிற்றா? தேக சௌக்கியம் எப்படி இருக்கிறது?” என்று அன்பு ததும்ப விசாரித்தார்கள். நான் பதில் சொன்னவுடன், “உடம்பு இளைத்திருக்கிறது. இன்னும் ஏதாவது மருந்து சாப்பிடுகிறீரோ?” என்றார். “இல்லை” என்றேன். பிறகு என் தாய் தந்தையரைப் பற்றி விசாரித்தனர்.
“குருபூஜையை இதுவரையில் நீர் பார்த்ததில்லையே?” என்று கேட்டார்.
“இல்லை” என்றேன்.
“இந்த மாதிரி விசேஷம் எங்கும் இராது. எல்லாம் ஸந்நிதானத்தின் பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”
ஸந்நிதானமென்றது ஆதீனத்தலைவராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை.
“இனிமேல் பாடங் கேட்க வரலாமல்லவா?”
“நான் காத்திருக்கிறேன்.”
“குருபூஜையானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன் பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம் குளிர்ந்தது. பாடங் கேட்பதில் எனக்கு இருக்கும் ஆவலைப் புலப்படுத்துவதற்கு முன்பே பாடஞ் சொல்வதில் தமக்குள்ள சிரத்தையை அவர் புலப்படுத்தினார்.
நான் பிள்ளையவர்களுடன் இருந்து அங்கே நிகழும் சம்பாஷணைகளைக் கவனித்து வந்தேன். பல கனவான்கள் வந்துவந்து பேசிவிட்டுச் சென்றார்கள். ஐந்து மணியளவுக்கு ஆசிரியர் மடத்திற்குச் சென்றார். நானும் அவர் பின் சென்றேன். எதிரே வந்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன் ஒதுங்கி நின்று முகமலர்ச்சியால் தம் அன்பை வெளிப்படுத்தினர். உட்கார்ந்திருந்த தம்பிரான்கள் அவரைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்றார்கள். அங்கே குமாரசாமித் தம்பிரானும் பரமசிவத் தம்பிரானென்பவரும் இருந்தனர். அவர்கள் பிள்ளையவர்களோடு பேசிக்கொண்டே மடத்தின் கிழக்கே இருந்த குளத்தின் கரையிலுள்ள (இப்போது குளம் தூர்ந்துவிட்டது) கீழைச்சவுகண்டிக்குச் சென்று அமர்ந்தனர். எல்லோரும் தமிழ் சம்பந்தமாகவும் மடத்தின் சம்பந்தமாகவும் பல விஷயங்களைப் பேசியிருந்தனர்.
காசிக் கலம்பகம்
“இன்று நல்லநாள். ஐயாவிடம் நல்ல தமிழ்நூல் ஒன்றைப் பாடங் கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொன்னார்.
“கேட்கலாமே” என்று சொல்லவே, அவரும் பரமசிவத் தம்பிரானும் காசிக் கலம்பகம் கேட்க வேண்டுமென்றார்கள்.
“காசிச்சாமிக்கு முன் காசிக் கலம்பகம் நடப்பது பொருத்தமே” என்று ஆசிரியர் கூறினார்.
எனக்கு முதலில் விஷயம் விளங்காவிட்டாலும் பிறகு விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பரமசிவத் தம்பிரான் சில வருஷங்கள் காசியில் இருந்தவர். அத்தகையவர்களைக் காசிச்சாமியென்று அழைப்பது மடத்துச் சம்பிரதாயம்.
காசிக் கலம்பகத்தை நானே படித்தேன். அந்தப் பெரிய குருபூஜை விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோஷங்களும் கொண்டாட்டங்களும் ஸந்தோஷ ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங்கரையில் சிறிய சவுகண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் ஸ்ரீ விசுவநாதரது கருணா விசேஷத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம் அனுபவித்து வந்தோம். ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும் தமிழ்ப்பாடத்தையும் விட்டுப்பிரிந்திருந்த எனக்கு அன்று பிள்ளையவர்களைக் கண்ட லாபத்தோடு பாடங் கேட்கும் லாபமும் சேர்ந்து கிடைத்தது.
இரவு எட்டுமணி வரையில் அப்பிரபந்தத்தைக் கேட்டோம். ஐம்பது பாடல்கள் நடைபெற்றன. பிறகு அவரவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். பிள்ளையவர்கள் தெற்கு வீதியில் தாம் தங்கியிருந்த விடுதியாகிய சின்னோதுவார் வீட்டுக்குச் சென்றார்.
-----------
அத்தியாயம் 45. புலமையும் அன்பும்
குருபூஜைத் தினத்தன்று இரவு ஆகாரமான பிறகு அங்கே நடைபெறும் விசேஷங்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதஸ்வரகாரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிஷ்யர்கள் வீடுகளில் தீபாராதனை நடந்தது.
கொலுக் காட்சி
பட்டணப் பிரவேசம் ஆன பிறகு கொலு நடைபெற்றது. அப்போது கொலுமண்டபத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருக்க அவருக்குப் பூஜை முதலியன நடைபெறும். புஷ்பங்களால் அலங்கரிக்கப் பெற்ற மண்டபத்தின் இடையே சுப்பிரமணிய தேசிகர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மேனியின் அமைப்பும் ஒளியும் ஏதோ ஓர் அழகிய விக்கிரகத்தை அங்கே வைத்துத் தூப தீபங்களுடன் பூஜை செய்வதாகவே தோற்றச் செய்தன. கொலு நடைபெறும் இடத்தில் பெருங்கூட்டமாக இருந்தது. தேவாரப் பண்ணிசையும் வாத்திய கோஷமும் இடைவிடாமல் ஒலித்தன.
எல்லாவற்றையும் கண்டுகளித்துப் பின்பு பிள்ளையவர்கள் தங்கியிருக்கும் ஜாகைக்கு வந்தேன். ஆசிரியர் உறங்காமல் தம் நண்பராகிய மகாலிங்கம் பிள்ளையென்பவருடன் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சினால் அந்த மடத்துச் சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகரது சிறப்பும் எனக்குத் தெரியவந்தன.
கொலு நடந்த பிறகு தேசிகர் சிரமபரிகாரம் செய்துகொள்ளாமல் வந்தவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புவது வழக்கம். மறுநாள் காலையிலே புறப்பட்டுப்போக வேண்டியவர்கள் குருபூஜையன்று இரவே தேசிகரைத் தரிசித்து உத்தரவுபெற்றுச் செல்வார்கள், குருபூஜையன்று காலையில் வேளாளப் பிரபுக்களும் பிறரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளைப் பாதகாணிக்கையாக வைத்துத் தேசிகரை வணங்குவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி சம்மானம் செய்து அனுப்பும் காரியத்தை ஆதீனகர்த்தர் குருபூஜையன்று இரவு கவனிப்பார். சுப்பிரமணிய தேசிகர் இவ்விஷயத்தில் சிறிதேனும் தாமதம் செய்யாமல் வந்தவர்களுடைய சௌகரியத்தை அனுசரித்து உடனுக்குடன் அனுப்பிவிடுவார். பிரபுக்களை அனுப்புவதோடு வித்துவான்களையும் தக்க சம்மானம் செய்து அனுப்புவார். பலர் மறுநாளும் இருந்து சல்லாபம் செய்து விடைபெற்றுச் செல்வதுண்டு.
செய்யுள் தானம்
இச்செய்திகளெல்லாம் பிள்ளையவர்களும் மகாலிங்கம் பிள்ளையும் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையால் தெரியவந்தன. கொடையாளிகள் கொடைபெறுவாருடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்வதை நான் அதற்கு முன் எங்கும் கேட்டதில்லை; கண்டதுமில்லை. சுப்பிரமணிய தேசிகர் அத்தகையவரென்பதை அறிந்தபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ் முற்றும் தகுதியானதே என்று நினைத்தேன். நான் அக்காட்சியை நேரே சிறிதுநேரம் பார்த்துவிட்டும் வந்தேன்.
மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர் அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக்கொண்டார். ஒரு நிமிஷங்கூட இராது; அதற்குள் யாரோ ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்பது. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீக்ஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்துப் பேசினார். கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித்தந்தால் சுப்பிரமணிய தேசிகரிடம் தாமே செய்ததாகச் சொல்லிச் சம்மானம் பெற அனுகூலமாகும் என்று சொன்னார். அக்கவிஞர்பிரான் உடனே சர்வசாதாரணமாக ஒரு பாடலை எழுதச்செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு போனார். ஆசிரியர் மறுபடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிஷமே மற்றொருவர் வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.
இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர் பிள்ளையவர்களிடம் பாடல் வாங்கிக்கொண்டு போய்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் ஸம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிகளை நான் சில நாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற்காலையில் எழுந்தபோதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை என்று தெரிந்தது.
புலவரும் புரவலரும்
பொழுதுவிடிந்தவுடன் அவர் அனுஷ்டானம் செய்துகொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் ஸ்நானம் முதவியவற்றை முடித்துக்கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு முகமலர்ச்சியும் அதன் மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள் அவரை வந்தனம் செய்துவிட்டுத் திருநீறிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.
“இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டார்கள்போல இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.
“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகிவிட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!” என்றார் தேசிகர்.
“எல்லாம் மகாஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.
“நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்துகொண்டோம்”
“கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால்தான் எல்லாம் பிரகாசப்படுகின்றன.”
புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு அளவுண்டோ? அங்கே இருந்தவர்கள் யாவரும் விஷயத்தைச் சுப்பிரமணிய தேசிகரிடம் கேட்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனார்கள்.
தாயினும் அன்பு
பிறகு ஆசிரியர் விடைபெற்று வெளியே வந்து கொலுமண்டபத்தில் நின்றிருந்த காரியஸ்தராகிய ராமையரென்பவரை அழைத்தார்; “சாமிநாதையர் காலையில் ஆகாரம் செய்துகொள்வது வழக்கம்; அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அவர் என்னை அழைத்துக்கொண்டு அக்கிரகாரத்துக்குச் சென்றார். தம்முடைய ஆகார விஷயத்திலுள்ள கவனத்தைக் காட்டிலும் என் ஆசிரியருக்கு என் உணவு விஷயத்தில் இருந்த ஜாக்கிரதை அதிகம். இதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். தன் குழந்தை வயிறுவாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய அன்புக்கும் வேற்றுமையே இல்லை. இதை நான் மனமார அறிந்தவன். கோட்டூரில் இருந்த காலத்தில் ஒருமுறை பிள்ளையவர்களைப் பற்றிப் பேசும்போது, “பெற்ற தாயாரைவிட மிகவும் அன்பாக நடத்துகிறார்” என்று சொன்னேன். அந்த வார்த்தைகள் என் தாயார் காதில் விழுந்தன. “என்ன அப்பா அப்படிச் சொல்கிறாய்! தாயாரைக் காட்டிலும் ஒருவர் அதிக அன்புகாட்ட முடியுமா?” என்று கேட்டார். என் வார்த்தைகளால் அவர் சிறிது வருத்தத்தையே அடைந்தார். பெற்ற தாய்க்கு அன்பு இருக்கலாம்; ஆனால் அதைச் செயலிற்காட்ட இயலாதபடி அவள் நிலை இருக்கும். என் ஆசிரியருடைய அன்போ அவ்வப்போது செயல்களாகப் பரிணமித்தது. அச்செயல்கள் மற்றவர்களுக்குச் சிறியனவாகத் தோற்றலாம். நான் அவற்றைப் பெரியனவாகவே கருதுகிறேன்.
அன்னபூரணி
ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக்கொண்டே ராமையருடன் அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்று ராமையர் தம் தமக்கையை அழைத்தார். பல சமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்துவிடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விஷயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல சகுனமாகத் தோற்றியது. ஒருவிதமான ஆனந்தமும் ஏற்பட்டது. எனக்கு ஆகாரம் உதவ அன்னபூரணியையே அவர் அழைத்தால் என்ன சந்தோஷம் விளையுமோ அத்தகைய சந்தோஷம் உண்டாயிற்று. காசியில் அன்னபூரணி அம்பிகையின் திருக்கோயில் விசேஷச் சிறப்புடையதென்று கேள்வியுற்றிருந்தேன். முதல்நாள் இரவு காசிக் கலம்பகத்தைப் படித்தபோது காசி நகரத்தை மனத்தால் அனுபவித்தேன்; மறுநாள் காலையிலே அன்னபூரணிதேவியே எனக்கு அன்னம் படைத்ததாகப் பாவித்துக்கொண்டேன். “நமக்குக் குறைவில்லை என்பதை இறைவன் இத்தகைய நிமித்தங்களால் உணர்த்துகிறான்” என்று நினைத்து மகிழ்ந்தபடியே அன்னபூரணியம்மாள் இட்ட ஆகாரத்தை உண்டு மீண்டும் பிள்ளையவர்களை அணுகினேன்.
பாடம்
“காசிக் கலம்பகத்தில் எஞ்சிய பாடங்களையும் படித்து விடலாமே” என்று ஆசிரியர் சொன்னார். குமாரசாமித் தம்பிரான் முதலியவர்கள் பாடம் கேட்பதற்காக வந்தார்கள். முதல் நாளைக் காட்டிலும் அதிக ஊக்கத்தோடு நான் அன்று படித்தேன். முற்பகலில் அந்தப் பிரபந்தம் முடிந்தது. அப்பால் குமாரசாமித் தம்பிரானும் வேறு சிலரும் பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்த இரண்டு தினங்களில் ஒரு நல்ல நூலைக் கேட்டு முடித்தோம். ஐயா அவர்கள் இங்கேயே இருந்து பாடம் சொன்னால் இன்னும் பல நூல்களை நாங்கள் கேட்போம். எங்கள் பொழுதும் பயனுள்ளதாகப் போகும்” என்று கேட்டுக்கொண்டனர்.
ஆசிரியர் மாயூரம் சென்று சில தினங்களில் வந்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். திருவாவடுதுறைக் காட்சிகளையும் அங்கு உள்ளோரின் அன்பையும் கண்ட எனக்கும் பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கே வந்திருந்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் உண்டாயிற்று.
சோழ மண்டல சதகம்
அன்று பிற்பகலில் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆசிரியரைப் பார்க்க வந்த கனவான் ஒருவர், தாம் கொண்டுவந்த சோழ மண்டல சதக ஏட்டுப் பிரதியைப் பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய ஆசிரியர் என்னிடம் அளித்துப் பிரித்துப் படிக்கும்படி சொன்னார். புதிய நூல்களைப் படிப்பதில் எனக்கு அளவில்லாத சந்தோஷம் உண்டு. ஆதலால் அதை ஊக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன். அங்கங்கே அவர் விஷயங்களை விளக்கிக்கொண்டே சென்றார்.
சோழ மண்டல சதகமென்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நான் படித்த சதகங்களின் ஞாபகந்தான் வந்தது. நீதிகளை நூறு நூறு பாடல்களால் எடுத்துக்கூறும் அந்தச் சதகங்களில் உள்ள செய்யுட்களைப் போன்ற பாடல்களை இச்சதகத்திற் காணவில்லை. “சதகமென்றால் பெரிய பாட்டுக்களாக இருக்குமே” என்று ஐயுற்று நான் வினாவியபோது, நீதி சதகங்களுக்கும் மண்டல சதகங்களுக்குமுள்ள வேற்றுமையை ஆசிரியர் விரிவாக எடுத்துச் சொன்னார்.
ஒவ்வொரு நாட்டின் பெருமையையும் அந்நாட்டில் வாழ்ந்திருந்த அரசர், புலவர், உபகாரிகள் முதலியோருடைய பெருமையையும் தனியே தொகுத்துப் பாடுவது ஒரு சம்பிரதாயமென்றும் அப்படிப் பாடிய நூலே சோழ மண்டல சதகமென்றும் அதனை இயற்றியவர் வேளூர் ஆத்மநாத தேசிகரென்றும் படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலச் சிறப்பைப் பாராட்டிப் பாடிய தொண்டை மண்டல சதகம் மிகவும் சிறந்ததென்றும் கூறினார்.
விடைபெற்றது
சில மணிநேரத்தில் சோழ மண்டல சதகம் முழுவதையும் நான் படித்து முடித்தேன். அதிலே குறிப்பிட்டுள்ள சில பழைய வரலாறுகள் விளங்கவில்லை.
அப்பால் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “இப்படியே என்னுடன் மாயூரம் வரலாமல்லவா?” என்று கேட்டார்.
“இல்லை. புத்தகங்கள், வஸ்திரங்கள் முதலியன ஊரில் இருக்கின்றன. ஐயாவைப் பார்த்து எப்போது வரலாமென்று கேட்டுப் போகவே வந்தேன். போய் உடனே திரும்பிவிடுகிறேன்.”
“அவசரம் வேண்டாம். ஊருக்குப் போய் இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டே வரலாம். அதற்குள் நான் மாயூரம் போய்விடுவேன். அங்கே வந்துவிடலாம்.”
அன்றிரவு திருவாவடுதுறையில் தங்கியிருந்து மறுநாட்காலையில் நான் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சூரியமூலை போய்ச் சேர்ந்தேன். என் தந்தையார் முதலியவர்களிடம் குருபூஜைச் சிறப்பையும் ஆசிரியருடைய அன்புச் செயல்களையும் பற்றித் தெரிவித்தேன். கேட்டு அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
சூரியமூலையில் பத்து நாட்கள் வரையில் இருந்து பழைய பாடங்களைப் படித்து வந்தேன். அப்பால் ஒருநாள் தந்தையாரை அழைத்துக்கொண்டு மாயூரம் வந்தேன். பிள்ளையவர்கள் அங்கே இருந்தார்கள். என் தந்தையார் மாயூரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள் விடைபெற்றுச் சூரியமூலைக்குச் சென்றுவிட்டார்.
மாயூர நிகழ்ச்சிகள்
நான் மாயூரம் வந்தபோது பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளைக்கும் வேறு சிலருக்கும் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்களைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்திருந்தார். நால்வர் நான்மணி மாலை முதலிய சில பிரபந்தங்கள் நிறைவேறியிருந்தன. நான் போன சமயத்தில் பிக்ஷாடன நவமணிமாலை நடந்து வந்தது. அத்தமிழ்ப் பாடத்தில் நானும் கலந்துகொண்டேன். இடைவேளைகளில் முன்பு நடந்த பிரபந்தங்களையும் கேட்டு முடித்தேன். மத்தியில் ஆசிரியர் காரைக்காலில் இருந்த ஓர் அன்பர் விரும்பியபடி அவ்வூர் சென்று அப்படியே திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குப் போனார். மாயூரத்தில் என்னுடன் சவேரிநாத பிள்ளை இருந்து வந்தார்.
மாயூரத்தில் நான் சாப்பிட்டு வந்த விடுதிக்குக் கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க இயலாமையால் அங்கே ஆகாரம் செய்யப் போகவில்லை. ஆதலால் அரிசி முதலியவற்றைப் பெற்று நானே சமையல் செய்து சாப்பிடத் தொடங்கினேன். பிள்ளையவர்கள் வெளியூர்ப் பிரயாணத்தில் இருந்தாலும் என்னை மறக்கவில்லையென்பதை அவரிடமிருந்து சவேரிநாத பிள்ளைக்கு வந்த ஒரு கடிதம் வெளிப்படுத்தியது. திருச்சிராப்பள்ளியிலிருந்து அதை எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் என்னை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று சவேரிநாத பிள்ளைக்குத் தெரிவித்திருந்தார்.
சில தினங்களில் ஆசிரியர் மாயூரத்துக்குத் திரும்பி வந்தனர். வந்தவுடன், நானே சமையல் செய்து சாப்பிடுவதை அறிந்து அவர் மிகவும் வருத்தமுற்று என்னிடம் மூன்று ரூபாயைக் கொடுத்த, “இதைக் கொண்டுபோய் விடுதியிற் கொடுத்துச் சாப்பிட்டு வாரும்” என்று அனுப்பினார். அது முதல் பழையபடி முன் சொன்ன விடுதியிலேயே ஆகாரம் செய்துவந்தேன்.
அம்பர்ப்புராணம்
ஒரு நாள் ஆசிரியர் தம் புஸ்தகக்கட்டில் உள்ள ஓர் ஏட்டுச் சுவடியை எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது; ‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தல வரலாற்றைச் சொல்லுவது. அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப் படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான் சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள் முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து ஒரு வருஷமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக் கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர் செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன். சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர் ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்.
“காத்திருக்கிறேன்” என்றேன் நான்.
“திருவாவடுதுறைக்கு வந்து இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். தம்பிரான்களுக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. இதை அங்கே போய் முடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார். அப்போது நான் திருவாவடுதுறைப் பிரயாணம் சமீபத்தில் இருப்பதை அறிந்து சந்தோஷமடைந்தேன்.
-----------
அத்தியாயம் 46. இரட்டிப்பு லாபம்
அத்தியாயம்-46 இரட்டிப்பு லாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில் ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள் திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும் உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய வஸ்திரங்களும் நாங்கள் எடுத்துக்கொண்டு போனவை.
மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக்கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக்காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.
கவிதை வெள்ளம்
ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப்பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிதுநேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா? கற்பனை எழுமா? கவிகள் தோன்றுமா? அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன்.
அவர் மனப்பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பதுபோலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டி மெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறுபோல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.
வடதேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப் பேறுபெற்றானென்பது புராண வரலாறு. அவன் அந்த ஸ்தலத்துக்கு வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்த ஸ்தலங்களின் பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக்கொண்டார். அக்கவிஞர். சிவஸ்தல விஷயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்து இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.
அப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53 பாடல்கள் பாடப்பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன.
அவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக் குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத் தொடர்ச்சியாகப் பேசுவதுபோலவே செய்யுட்கள் செய்வதென்பதைக் கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள் பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற முடியுமா? அது கட்டுக்கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன். அன்றைத் தினம் ஆசிரியர் செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப் பின் பல சமயங்களில் அவருடைய கவிதைவெள்ளம் பெருக்கெடுத்து வருவதையும் நேரே அறிந்த எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று.
வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சிலநேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டுவிடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றிவிடுவேன்.
திருவாவடுதுறையை அடைந்தது
“திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியையும் மறந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும்நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஓர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழைவிரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே!
திருவாவடுதுறையில் தெற்குவீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான் நிழல்போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன் அவரை அழைத்துக்கொண்டு உள்ளே ஆதீனகர்த்தரிடம் சென்றார்கள்.
வரவேற்பு
சுப்பிரமணிய தேசிகருடைய சந்தோஷம் அவர் முகத்திலே வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தார். நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல் தம்பிரான்களுக்கு உத்ஸாகம் உண்டாகும். நமக்கும் சந்தோஷம்” என்று சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார்.
“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.
“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது. நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல விஷயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடைபெற்று நாங்கள் எங்கள் விடுதிக்குச் சென்றோம்.
பாடத்தைப் பற்றிய யோசனை
மறுநாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள். அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே!” என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப் பார்த்தேன்.
“என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்தபோது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விஷயங்களைப் பேசினார்.
எனது வாட்டம்
தம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்தபொழுது எனக்கு ஒருவகையான மனவருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்துவிட்டார்களே. நான் தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக்கூடாதோ! ஆதீன சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ! பிள்ளையவர்கள் ஜாகையிலே இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா? இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு லாபம் ஒன்றுமில்லையே!” என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முகவாட்டத்தோடு யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.
என் ஆவல்
அப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த எண்ணங்களை அவர் உணர்ந்துகொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர் பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர் கருத்தையும் உணர்ந்தவர்போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?” என்று கேட்டார். அக்கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று. யோசனையினின்றும் திடீரென்று விழித்துக்கொண்டேன். என்கிருந்த ஆவல் தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன். யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம் புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.
“எல்லோருக்கும் லாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு லாபம்” என்று தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல் மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோஷ உச்சியில் நின்றேன்.
“உம்மிடம் புஸ்தகங்கள் இருக்கின்றனவா!” என்று அந்த வள்ளல் கேட்டார்.
அவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக, இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டுவரச்செய்து எனக்கு வழங்கினார்.
“பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா?
பாட ஆரம்பம்
குமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில் ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப் படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை கூறினார்.
இவ்வாறு அந்த நல்லநாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம் சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப் புராணம் நடைபெறும். பிற்பகலில் மற்றவர்களுக்குரிய சீகாளத்திப் புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில் நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.
பாடம் நடந்த முறை
சுப்பிரமணிய தேசிகர்முன் பாடம் நடக்கும்போது இடையிடையே நான் இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப் புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல் நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை உரிய இடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில் அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம் நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப் பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக்காட்டுவார். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வருமிடங்களில் தேசிகர் மெய்கண்ட சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விஷயங்களை அருமையாக எடுத்து விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுதுபோவதே தெரியாது. தமிழ் விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான் அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது. உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.
பாடங் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்றுமுறை வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும் படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப் படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒருமுறை பாடல் முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப் பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்னசத்திரத்தில் நான் காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.
ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும் புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில் வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுக்குள்ளும் குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி வந்தோம்.
எங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவுபெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.
-----------
அத்தியாயம் 47. அன்பு மூர்த்திகள் மூவர்
அத்தியாயம்-47 அன்பு மூர்த்திகள் மூவர் திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும் மாலையிலும் முறையாக நடந்து வந்தன. சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு என்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது. பிள்ளையவர்களுக்கு என்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவு காட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும் நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்த ஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகஸ்தர்கள் என்னிடம் பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனே கொடுத்து உதவித் தங்கள் அன்பைப் பலப்படுத்தினர். எல்லோருடைய அன்பும் நிலைத்திருக்க வேண்டுமென்ற கவலையால் யாரிடமும் நான் மிகவும் பணிவாகவும் ஜாக்கிரதையாகவும் நடப்பதை ஒருவிரதமாக மேற்கொண்டேன்.
‘சந்நிதானத்தின் உத்தரவு’
மாசி மாதம் மகாசிவராத்திரி வந்தது. திருவாவடுதுறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் சாமான்கள் வேண்டுமானால் மடத்து உக்கிராணத்திலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் அவ்வூரில் கடைகள் இல்லை. சிவராத்திரியாதலால் மாலையில் கோமுத்தீசுவரர் ஆலயத்துக்குச் சென்று ஸ்வாமி தரிசனம்செய்ய எண்ணினேன். தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வேண்டும். கடைகளோ இல்லை. ஆதலால் ‘மடத்து உக்கிராணத்திலே வாங்கிக்கொள்ளலாம்’ என்று நினைத்துக் காலைப் பாடம் முடிந்தவுடன் அவ்விடத்தையடைந்து வெளியில் நின்றபடியே உக்கிரணக்காரரிடம் எனக்கு வேண்டியவற்றைச் சொன்னேன். “ஐயரவர்கள் எப்போது எது கேட்டாலும் கொடுக்கவேண்டுமென்று சந்நிதானத்தில் உத்தரவு” என்று கணீரென்று ஒரு சப்தம் கேட்டது. அசரீரி வாக்கைப்போன்ற அவ்வொலி எங்கிருந்த வந்ததென்று கவனித்தேன். கந்தசாமி ஓதுவாரென்பவர் அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே அயலிலிருந்த ஒரு ஜன்னலுக்கு அப்புறத்தில் பண்டார சந்நிதிகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன். உடனே எனக்குச் சிறிது நாணம் உண்டாயிற்று. “எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமென்று உத்தரவாகிறது” என்று அருகில் வந்த ஓதுவார் மீட்டும் சொன்னார். அதனை உறுதிப்படுத்துவது போலத் தேசிகர் புன்னகை பூத்தார். வேண்டிய பொருள்களையெல்லாம் தடையின்றி நான் பெற்றுக்கொண்டேன். இயல்பாகவே வேண்டும்போது எனக்கு உதவிவரும் அந்த உக்கிராணக்காரர் அன்று முதல் என் குறிப்பறிந்து எனக்கு வேண்டுவனவற்றை அப்பொழுதப்பொழுது உதவிவந்தார். பிற்காலத்திலும் எனக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய சமயங்களில் அந்த உக்கிராணம் கொடுப்பதும் நான் பெற்றுக்கொள்வதும் வழக்கமாயின.
காலைப் பாடத்தில் திருவானைக்காப் புராணம் முற்றுப்பெற்றது. அதன்பின் திருநாகைக்காரோணப் புராணம் ஆரம்பமாயிற்று. முன்னரே அந்நூலை நான் பட்டீச்சுரத்திலே பாடங் கேட்டிருந்தமையால் மடத்திற் படிக்கும்போது மிக்க தெளிவோடு படித்தேன். அவ்வப்போது இன்ன இன்ன ராகத்தில் படிக்கவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் கூறுவார். அங்ஙனமே நான் படிப்பேன்.
ஓதுவாரது அன்பு
ஒருநாள் காலையில் மடத்திலிருந்து வெளியே வந்து ஆகாரம் செய்யும் இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும். எனக்கெதிரே மடைப்பள்ளி விசாரணைக்காரராகிய முத்துசாமி ஓதுவாரென்பவர் வந்தார். அவருடைய அன்பும் மரியாதையும் எப்போது கண்டாலும் அவரோடு சில வார்த்தைகள் பேசவேண்டுமென்று என்னைத் தூண்டும். ஆதலால் அவரைப் பார்த்தவுடன், “கிழக்கேயிருந்து வருகிறீர்களே; அக்கிரகாரத்தில் ஏதேனும் வேலை இருந்ததோ!” என்று கேட்டேன்.
“ஐயாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.
“உங்கள் வீடு வடக்கு வீதியில் அல்லவா இருக்கிறது? இங்கே உங்கள் தாயார் தகப்பனார் வரக் காரணம் என்ன?”
“இல்லை. அண்ணாவுடைய ஐயா, அம்மா வந்திருக்கிறார்கள்” என்று அவர் சொன்னவுடனே, “என்ன! எங்கே வந்தார்கள்?” என்று பரபரப்போடு அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆவலைப் புலப்படுத்தினேன்.
ஓதுவார் பிராயத்தில் என்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும் என்னை அண்ணாவென்றே அழைத்துவந்தார். என் பெற்றோர்கள் அன்றைத்தினம் வருவதாக எனக்கு முன்னமே தெரிவிக்கவில்லை. அவர்களை நான் எதிர்ப்பார்க்கவுமில்லை. “அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்களோ? பழக்கமில்லாத இடமாயிற்றே! சாப்பிடும் நேரமாயிற்றே! அப்பா பூஜை பண்ணவேண்டுமே!” என்றெல்லாம் நான் விரிவாக யோசனை செய்தேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை முகக்குறிப்பால் ஒருவாறு ஊகித்துணர்ந்த ஓதுவார், “கவலைப்பட வேண்டாம். அவர்கள் காலையிலே வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து அண்ணாவைப் பற்றி விசாரித்தபோதே இன்னாரென்று தெரிந்துகொண்டேன். அவர்களுக்குச் சத்திரத்தில் தக்க இடம்கொடுத்து வேண்டிய சாமான்களை அனுப்பினேன். ஐயாவின் பூஜைக்குவேண்டிய பால் முதலிய திரவியங்களையும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அங்கே ஸ்நானத்தையும் பூஜையையும் முடித்துக்கொண்டு அண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். போய் ஆகாரம் செய்யவேண்டியதுதான். இப்போது அங்கே போய் விசாரித்துவிட்டுத்தான் வருகிறேன்” என்றார்.
எனக்குத் தெரியாமலே நிகழ்ந்த அச்செயல்களைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். ஓதுவாருடைய அன்பையும் விதரணையையும் மடத்தில் உள்ள ஒழுங்கையும் பாராட்டியபடியே நான் விரைவாக என் தாய், தந்தையர் உள்ள இடத்துக்குச் சென்றேன்.
பெற்றோர் மகிழ்ச்சி
நான் அங்கே போனவுடன், “எப்படிப்பட்ட மனுஷ்யர்கள்! என்ன ஏற்பாடுகள்! என்ன விசாரணை!” என்று என் தந்தையார் தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். “சாமா, இம்மாதிரியான இடத்தை நான் பார்த்ததேயில்லை. நாங்கள் உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று இன்று காலையில் இங்கு வந்தோம். சிலர் சத்திரத்தில் தங்கலாமென்று சொன்னார்கள். அப்போது இவ்விடம் வந்தோம். இங்கே ஒருவர் எதிர்ப்பட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். உன்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே எங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் விசாரித்து விசாரித்துக் கொடுத்து உதவினார். “இந்த மாதிரியான மனுஷ்யர்களை நான் இதுவரை பார்த்ததில்லை அவர் யார்?” என்று என் தாயாரும் கேட்டார்.
“அவர் எனக்கு ஒரு தம்பி” என்று மனத்துக்குள்ளே சொல்லிக்கொண்டேன். ஓதுவாருடைய அன்பை என் மனம் நன்றாக அறியும். அவர்களுக்கு அவ்வளவு தெரியாதல்லவா?
“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையாக இருந்த என் தம்பியை என்னிடம் அன்னையார் அளித்தார். நான் சந்தோஷமாக வாங்கி அணைத்துக்கொண்டேன். என் அன்னையார் சமைத்துத் தந்தையார் பூஜையில் நிவேதனம் செய்யப்பெற்ற உணவை நான் உண்டு பல நாளாயின. அன்று அவ்வுணவை உண்டு மகிழ்ந்தேன். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்ற திருப்தியால் அவர்களும் மகிழ்ந்தார்கள்.
ராக மாலிகை
அன்றைய தினம் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் நடக்கவேண்டிய பாடம் பிற்பகல் மூன்றுமணி முதல் ஏழுமணி வரையில் மடத்திலுள்ள பன்னீர்க்கட்டில் நடந்தது. சில நாட்களில் அவ்வாறு நடப்பதுண்டு. பாடம் நடக்கையில் சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து அமர்ந்திருந்தார். குமாரசாமித் தம்பிரானும் நானும் பாடங்கேட்டு வந்தோம். பிள்ளையவர்கள் சொன்னபடி நான் திருநாகைக்காரோணப் புராணத்தைப் படித்தேன். என் பெற்றோர்களைக் கண்ட சந்தோஷமும் என் அன்னையார் இட்ட உணவை உண்ட உரமும் சேர்ந்து எனக்கு ஒரு புதிய ஊக்கத்தை உண்டாக்கின. அதனால் அன்று நான் படித்தபோது ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு ராகத்தில் மாற்றிமாற்றி வாசித்தேன். சங்கீதப் பிரியராகிய தேசிகர் ராகங்களைக் கவனித்து வந்தார். இடையிலே பிள்ளையவர்களைப் பார்த்து, “உங்கள் சிஷ்யர் ராகமாலிகையில் படிப்பது திருப்திகரமாக இருக்கிறது” என்றார்.
இவ்வாறு பாடம் நடக்கையில் வடக்குப் புறத்தேயுள்ள ஓரிடத்தில் சிறிது தூரத்தே சிலர் மறைவாக இருந்து கவனிப்பது வழக்கம். அன்றும் அப்படியே சிலர் இருந்தனர். என் தந்தையார் மாலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு அப்பக்கமாக வந்தவர் பாடம் நடப்பதையும் சிலர் தூரத்திலே இருந்து கவனிப்பதையும் கண்டு தாமும் அவர்களோடு ஒருவராக அங்கே இருந்து நான் படிப்பதையும் பிள்ளையவர்கள் பொருள் சொல்வதையும் கேட்டு வந்தார். அவர் வந்து கேட்டது எனக்குத் தெரியாது.
நான் ராகத்தோடு வாசிப்பதைக் கேட்டு அவரும் மகிழ்வுற்றார். நான் படிப்பதைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பாராட்டிப் பேசிய வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. அப்போது அவருக்கு உண்டான சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் அளவுகூற முடியுமோ! இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டோடு நடந்ததுபோல் இருந்தது. தற்செயலாக என் தந்தையார் அங்கே வந்ததும், நான் ராகமாலிகையில் படித்ததும் தேசிகர் பாராட்டித் தம் அன்பை வெளிப்படுத்தியதும் என் தந்தையார் மனத்தில் இருந்த கவலையைப் போக்கவும் ‘இவனுக்கு ஒரு குறைவும் இல்லை’ என்ற தைரியத்தை உண்டாக்கவும் காரணமாயின. பாடம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து வந்தோம்.
நான் முன்னே வந்தேன். ஆசிரியர் பின்னே சிறிது தூரத்தில் தம்பிரான்களோடு வரலாயினர். நான் வரும் வழியில் தந்தையாரைக் கண்டபோது, “அப்பா! நீ படித்ததைக் கேட்டேன். பண்டார சந்நிதிகள் சொன்ன வார்த்தைகளையும் கவனித்தேன். எல்லாம் ஈசுவரானுக்கிரகந்தான்” என்று சொன்னபோது உள்ளே இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது. மேலே பேசத் தெரியவில்லை. அவர் ஜாகைக்குச் சென்றார். பின் வருவதாகச் சொல்லி நான் மீண்டும் ஆசிரியரோடு சேர்ந்துகொண்டேன்.
இரு முதுகுரவரும் ஆசிரியரும்
ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறையிலுள்ள கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவது என் வழக்கம். இருட்டு வேளைகளில் ஆசிரியர் கையைப் பிடித்து அழைத்து வருவேன். அன்றைத் தினமும் அவ்வாறு சென்று திரும்பும்போது, “உம்முடைய தாயார், தகப்பனார் வந்திருப்பதாகச் சொன்னீரே; அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்? இப்போது பார்த்துவிட்டுப் போகிறேன்” என்றார்.
“சிரமம் வேண்டாம். அவர்களே ஐயாவைப் பார்க்க வருவார்கள்” என்று நான் சொல்லியும் அவர் வற்புறுத்தவே, அவரை என் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றேன்.
சத்திரத்தில் ஒரு விசிப்பலகையில் ஆசிரியர் அமர்ந்தார். தந்தையாரும் அமர்ந்தார். தந்தையாரிடம் ஆசிரியர் யோக க்ஷேமங்களை விசாரித்துக்கொண்டு இருந்தபோது என் தாயார் வந்தார். அதற்கு முன் ஆசிரியரை அவர் பார்த்ததே இல்லை.
“குழந்தையை நீங்களே தாயார், தகப்பனாரைப்போலக் காப்பாற்றி வருகிறீர்கள். நாங்கள் எந்தவிதத்திலும் இவனுக்குப் பிரயோசனப்படாமல் இருக்கிறோம். உங்களுடைய ஆதரவினால்தான் இவன் முன்னுக்கு வரவேண்டும்” என்று கண்ணில் நீர்ததும்ப அவர் சொன்னார். ஒரு தெய்வத்தினிடத்தில் வரங்கேட்பது போல இருந்தது அந்தத் தொனி.
“நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குமாரர் நல்ல புத்திசாலி, நன்றாகப் படித்து வருகிறார். கடவுள் கிருபையால் நல்ல நிலைமைக்கு வருவார்” என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் உள்ளத்தைக் குளிர்வித்தன. என்னிடம் அன்பு வைப்பவர்களுக்குள்ளே அந்த மூன்று பேர்களுக்கு இணையானவர்கள் வேறு இல்லை. அம்மூவரும் ஒருங்கே இருந்து என் நன்மையைக் குறித்துப் பேசும்போது அவர்களுடைய அன்பு வெளிப்பட்டது. அந்த மூவருடைய அன்பிலும் மூன்றுவிதமான இயல்புகள் இருந்தன. அவற்றினிடையே உயர்வு, தாழ்வு உண்டென்று சொல்ல முடியுமா? இன்ன வகையில் இன்னது சிறந்தது என்றுதான் வரையறுக்க முடியுமா? ஒரே அன்புமயமாகத் தோற்றிய அக்காட்சியை இப்போது நினைத்தாலும் என் உள்ளத்துள் இன்பம் ஊறுகின்றது. அம்மூவரையும் மூன்று அன்பு மூர்த்திகளாக இன்றும் பாராட்டி வருகிறேன்.
மறுநாள் விடியற் காலையில் என் பெற்றோர்கள், “உன்னைப் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்தோம். பார்த்ததில் மிகவும் திருப்தியாயிற்று. ஊருக்குப் போய் வருகிறோம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சூரியமூலைக்கு என் தம்பியுடன் போனார்கள்.
-----------
அத்தியாயம் 48. சில சங்கடங்கள்
ஒரே மாதிரியான சந்தோஷத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே செழித்திருப்பவர்களாயினும் வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம், துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல் இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும் அபாக்கியர்களும் இல்லை.
எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க்கல்வி லாபமும் திருவாவடுதுறையிலே கிடைத்தன. மனத்திலே சந்தோஷம் இடையறாது உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோஷத்திற்குத் தடை நேராமல் இல்லை.
ஒவ்வாத உணவு
இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும்போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன். என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்னவகையான உணவு செய்துபோட வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில் அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும் உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு அவற்றைக்கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்துவருமென்பது மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.
சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான் அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துச் சாப்பிட்டதுண்டு. அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும் கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.
குழம்பு செய்த குழப்பம்
ஒருநாள் எனக்கு வயிற்றுப்போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக் குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று எனக்குத் தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்துபோடும்படி கேட்டுக்கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்துபோட்டாள். நான் ஆகாரம்செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப் பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார். திருவாலங்காட்டுக்குச் சென்று ஸம்ஸ்கிருதம் படித்து வருபவர் அவர். அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லோரும் சாப்பிடுகிற இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்துபோடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும் சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில்விழும்படி செய்துவிட்டார். உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர் சாப்பிடுகையில் ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல் இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று காரியஸ்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.
இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார சந்நிதிகள் நம்மிடமே நேரில் விஷயத்தை விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச் செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேஷ உபசாரம் நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பக்ஷபாதம் இருப்பது சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம். நமக்கு நடந்த உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேஷ அன்பு வைத்திருக்கும் அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.
இரவில் பொழுதுபோக்கு
இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு அங்கேயே படுத்துக்கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள் இரவு அவருடன் வழக்கம்போலவே படித்து வந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில் இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள் உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர் நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து கவனிப்பார். படித்துக்கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே படுத்துத் தூங்கிவிட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித் தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி ஓதுவார் அங்கே வந்தார்.
எதிர்பாராத சம்பவம்
மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும் பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக்கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக் தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும். குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம் தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச் சம்பாஷித்திருந்தனர்.
பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுக ருத்திராக்ஷ கண்டியை அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புக்கள் உண்டு ஏறக்குறைய இரண்டாயிர ரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது நேரமான பிறகு பார்த்தபோது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த பொருளாதலால் மடத்துக் காரியஸ்தர்கள் அதைத் தேடலாயினர்.
“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில் இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார் பன்னிருகைத் தம்பிரான்.
“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன் லேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார் குமாரசாமித் தம்பிரான்.
அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன விஷயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம்கூட மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன் யாராயிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்”என்று சொல்லி அச்சம்பாஷணையில் கலந்தனர்.
அவர்கள் மூவரும் பேசிய சப்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத் தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல் மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்தவண்ணமே இருந்தேன். அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.
“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார் குமாரசாமித் தம்பிரான் “அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர் எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.
அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு நடுக்கமெடுத்தது. அரைகுறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து போயிற்று.
“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே! திருட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச் சொன்னார்.
குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக்குறிப்புடன், “உம்மை யாரையா கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் லவலேசமும் தெரியாத நீர் அபிப்பிராயம் சொல்ல வந்துவிட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போம். இனி இங்கே நிற்க வேண்டாம்” என்று கடுமையாகக் கூறினார். ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம். இருந்திருந்து பரமசாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம் வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்விட்டார்.
அபய வார்த்தை
அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை, பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன். “இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாஷணையைக் கவனித்தேன். எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். என் உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது. என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒருவிதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான், “நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா? எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்யமாட்டோம். வந்த மனுஷ்யன் ஏதோ அசட்டுத்தனமாய்ச் சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்துவிடுங்கள்” என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான் ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.
கண்டி அகப்பட்டது
எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத் தம்பிரான் சிலரோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான் எல்லா இடங்களையும் பெருக்கிக்கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாடமொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது. உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.
அதை வாங்கிக்கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “நேற்று நான் அனுஷ்டானத்துக்குப் போகையில் அங்கே இதை மாடத்தில் வைத்துவிட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும் மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன். சந்நிதானம் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம் அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான் வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும் தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும் தெரிந்துவிட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப் பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை அடைந்துவிட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும் அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான் விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.
கோளால் வந்த துன்பம்
வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று என்னைப்பற்றிக் கோள் கூறினார். அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங்கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங்கொண்டால் அவரிடம் பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும் ஆசிரியர் ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்துவந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக்கொள்ளும், எழுதும்” என்று சொல்லமாட்டார். படுத்துக்கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல் அடியை ஆரம்பிப்பார். அது புதுப்பாடலாக இருந்தால் அதனை எழுத வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன். அவர் சொல்லிக்கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை அறிந்து நான் நிறுத்திவிடுவேன்.
தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள் நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.
அப்போது மாயூரத்தில் வசந்தோத்ஸவம் நடந்தது. அந்த உத்ஸவ தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக்கூட்டத்துடனும் பரிவாரங்களுடனும் சென்றார். ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம். சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் ஸ்ரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த் தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு காரியஸ்தரோடு அனுப்பி ஆகாரம்செய்து வரும்படி சொன்னார். இவ்விஷயம் பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.
நான் போஜனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே ஆகாரம்செய்துகொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.
ஆச்சரிய நிகழ்ச்சி
மடத்தில் பந்தி நடைபெறும்பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே போய் உணவுகொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய வெள்ளை வேஷ்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள். வெள்ளை வேஷ்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு உரியது.
வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும் இருப்பதைப்போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர் முகத்தில் தோற்றியது. போஜனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர் திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும் பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமிநாதையர் என்னுடன் வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்துவிட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு காரியஸ்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர் போஜனம்செய்து வந்திருப்பார்” என்றார்.
'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’
ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போஜனம்செய்பவர் போலப் பாவனைசெய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச் சுத்திசெய்துகொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த நான் எழுந்து நின்றேன்.
நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில் வந்து முகத்தை உற்றுநோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம்செய்தாயிற்றா?” என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம் சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.
பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர் அவ்வளவு வேகமாக வந்ததும் என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும் சில தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு நிகழ்ச்சிகளைப்போல இருந்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக் கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்துகொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்” என்று கூறி அங்கே நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டிவந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப்போல என் ஆசிரியர் விளங்கினார்.
அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட அன்பு என்றாவது ஒரு நாள் மிகவேகமாக வெளிப்படத்தான் வேண்டும் அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.
----------
அத்தியாயம் 49. கலைமகள் திருக்கோயில்
மாயூரத்தில் வசந்தோத்ஸவமான பிறகு சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன் பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படி மடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன.
தேசிகரின் பொழுது போக்கு
சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும் வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாஷணை செய்வது, மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச் செய்வது ஆகிய விஷயங்களிலே பெரும்பாலும் பொழுதைப்போக்கி வந்தார்.
நீராடல்
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் எழுந்துவிடுவார். சில சமயங்களில் ஒரு முதிய தம்பிரான் வந்து அவரை எழுப்புவார். எழுந்தவுடன் ஐந்து மணியளவுக்குக் காவிரிக்கு நீராடச் செல்வார். மடத்திலிருந்து காவிரித்துறை அரைமைல் தூரம் இருக்கும். நடந்தே செல்வார். ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி முதலியவற்றுடன் தவசிப் பிள்ளைகளும் தம்பிரான்களும் உடன் செல்வார்கள். ஸ்நானம்செய்து திரும்பி வரும்போது, காவிரி சென்று ஸ்நான அனுஷ்டானாதிகளை முடித்துக்கொண்ட பிராமணர்களும் சைவர்களும் அவரைக் கண்டு பேசிக்கொண்டே உடன் வருவார்கள். காவிரிக்குச் செல்லும்பொருட்டு அமைக்கப்பெற்ற சாலையின் இரு பக்கங்களிலும் மருத மரங்கள் வளர்ந்திருக்கும். அம்மருதமரச் சாலையில், தேசிகர் ஸ்நானம்செய்துவிட்டு வரும்போது அவருடன் சல்லாபம் செய்வதற்காகவே சிலர் காவிரித்துறையில் காத்திருப்பார்கள்.
ஆலய தரிசனம்
வரும் வழியில் சமாதித்தோப்பு என்ற ஓரிடம் இருக்கிறது. அதைச் சார்ந்து திருவாவடுதுறை மடத்தில் தலைவர்களாக இருந்த பலருடைய சமாதிக் கோயில்கள் உள்ளன. அதற்கு முன்னே சிறிது தூரத்தில் சாலையின் ஓரமாக மறைஞான தேசிகர் என்ற பெரியாரின் சமாதி இருக்கிறது. சுப்பிரமணிய தேசிகர் காவிரியிலிருந்து மடத்துக்கு வரும்போது அவ்விடத்தில் நின்று தரிசனம் செய்துவிட்டு வருவார். அப்பால் சிவாலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து பிறகு மடத்திற்குச் செல்வார். செல்லும்போது ஆலயத்தின் கிழக்கு வாயிலிலுள்ள துணைவந்த விநாயகருக்குச் சில சிதர்த் தேங்காய்கள் உடைக்கப்படும்.
மடத்தில் முதலில் திருமாளிகைத் தேவரைத் தரிசித்துவிட்டுப் பிறகு ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி ஸந்நிதியில் வந்து தரிசிப்பார். அம்மூர்த்தியின் தோத்திரமாகிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலை என்னும் பிரபந்தத்திலிருந்து பத்துப் பாடல்களை ஓதுவார்கள் முறையே சொல்வார்கள். ஒவ்வொரு பாடல் சொல்லி முடிந்ததும். ஒருமுறை தேசிகர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார். இவ்வாறு பத்து நமஸ்காரங்கள் செய்துவிட்டு அடியார்களுக்கு விபூதி அளிப்பார். பிறகு ஒடுக்கத்திற்குச் சென்று தம் ஆசனத்தில் அமர்வார். ஐந்து மணிக்கு முன்னரே எழுந்தவர் ஒடுக்கத்துக்கு வந்து அமரும்போது காலை மணி எட்டாகிவிடும்.
உடனே மடத்திலுள்ள தம்பிரான்களும் மற்ற அடியார்களும் தேசிகரைப் பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். பிறகு யாரேனும் யாசகர் வந்திருக்கிறாரா என்று தேசிகர் விசாரிப்பார்.
தர்மச் செயல்
யாரேனும் தேசிகரிடம் பொருளுதவி பெறும்பொருட்டு வந்தால் அவர்கள் காலையிலே தேசிகரைப் பார்த்துத் தம் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள். தேசிகர் தம் ஆசனத்தில் அமர்ந்தவுடன் கவனிக்கும் முதற்காரியம், “யாசகர் வந்திருக்கிறார்களா?” என்ற ஆராய்ச்சிதான். யாரேனும் வராவிட்டால். “இன்று ஒருவரும் வரவில்லையே!” என்று சிறிது வருத்தத்தோடு சொல்வார். காலையில் அவர் எந்த உணவையும் உட்கொள்வதில்லை. முதலில் சைவசித்தாந்த சாஸ்திரங்களைப் பாடஞ் சொல்ல ஆரம்பிப்பார். சில தம்பிரான்கள் கேட்பார்கள்.
வரிசை அறிதல்
சாஸ்திரங்களில் விற்பத்தி உள்ள வித்துவான் யாரேனும் வந்தால் அவரைப் பார்த்துப் பேசுவதிலும் அவர் என்ன என்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்துகொள்வதிலும் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. வித்துவான்கள் வந்தால் மடத்து வேலைக்காரர்கள் உடனே தேசிகரிடம் தெரிவிப்பார்கள்.
கொலுமண்டபத்து வாயிலில் ஒரு காவற்காரன் இருப்பது வழக்கம். அக்காலத்தில் முத்தையன் என்ற ஒரு கிழவன் இருந்தான். சுப்பிரமணிய தேசிகரிடம் தொண்டுபுரிந்து பழகிய அவன் அவருடைய இயல்புகளை நன்றாக அறிந்திருந்தான். யாராவது சாஸ்திரிகள் வந்தால் அவரிடம் மரியாதையாகப் பேசி அவர் இன்ன இன்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்துகொள்வான். பிறகு ஓரிடத்தில் அவரை அமரச்செய்து உள்ளே சென்று பண்டார சந்நிதிகளிடம் “ஒரு பிராமணர் வந்திருக்கிறார்” என்பான்.
“என்ன தெரிந்தவர்?” என்று தேசிகர் கேட்பார்.
“தர்க்கம் வருமாம்” என்றோ, “மீமாம்சை தெரிந்தவராம்” என்றோ, வேறுவிதமாகவோ அவன் பதில் சொல்வான்.
உடனே வித்துவான் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அவர் சென்று தேசிகரோடு சம்பாஷணை செய்வார். பேசப் பேச வந்த வித்துவான், “நாம் ஒரு சிறந்த ரஸிக சிகாமணியோடு பேசுகிறோம்” என்பதை உணர்ந்துகொள்வார். வித்துவானுடைய திறமையை அறிந்து தேசிகரும் ஆனந்தமுறுவர். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே, தேசிகர் வந்த வித்துவானுடைய தகுதியை அறிந்துவிடுவார். அப்பால் அவருக்கு ஏற்றபடி சம்மானம் செய்வார். தம்முடைய திறமையை அறிந்து அளிக்கப் பெறும் அந்தச் சம்மானத்தை வித்துவான் மிக்கமகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்.
“இங்கே சிலகாலம் தங்க வேண்டும்; அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று தேசிகர் சொல்வார். அவ்வார்த்தை உபசார வார்த்தையன்று; உண்மையான அன்போடு கூறுவதாகவே இருக்கும். “இம்மாதிரி இடத்துக்கு வராமல் இருப்பது ஒரு குறை” என்ற எண்ணம் வித்துவானுக்கு உண்டாகிவிடும். அவர் அது முதல் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவராகிவிடுவார். இவ்வாறு வருகிற வித்துவான்களுக்கு ஊக்கமும் பொருள் லாபமும் உண்டாவதோடு தேசிகருடைய அன்பினால் அவர்களுடைய கல்வியும் அபிவிருத்தியாகும். ஒருதுறையிலே வல்லார் ஒரு முறை வந்தால் அவருக்குத் தக்க சம்மானத்தைச் செய்யும்போது தேசிகர். “இன்னும் அதிகமான பழக்கத்தை அடைந்து வந்தால் அதிக சம்மானம் கிடைக்கும்” என்ற கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவார். வித்துவானும் அடுத்தமுறை வரும்போது முன்முறையைக் காட்டிலும் வித்தையிலே அதிக ஆற்றல் பெற்று வருவார். அதன் பயனாக அதிகமான சந்தோஷத்தையும் சம்மானத்தையும் அடைவார்.
பல ஸமஸ்தானங்களில் நூற்றுக்கணக்காகச் சம்மானம் பெறும் வித்துவான்களும் தேசிகரிடம் வந்து சல்லாபம் செய்து அவர் அளிக்கும் சம்மானத்தைப் பெறுவதில் ஒரு தனியான திருப்தியை அடைவார்கள். தேசிகர் அதிகமாகக் கொடுக்கும் பரிசு பதினைந்து ரூபாய்க்கு மேல் போகாது. குறைந்த பரிசு அரை ரூபாயாகும். ஆனாலும் அப்பரிசை மாத்திரம் அவர்கள் கருதி வருபவர்களல்லர்; வித்தையின் உயர்வையும், அதை உடையவர்களின் திறமையையும் அறிந்து பாராட்டிப் பேசும் தேசிகருடைய வரிசையறியும் குணத்தை அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணியே வருவார்கள்.
மடத்திற்கு வரும் வித்துவான்கள் சில சமயங்களில் வாக்கியார்த்தம் நடத்துவார்கள். தாம் தேசிகரைப் பாராட்டி இயற்றிக்கொணர்ந்த சுலோகங்களையும் செய்யுட்களையும் சொல்லி விரிவாக உரை கூறுவார்கள். பல நூற்கருத்துக்களை எடுத்துச்சொல்வார்கள். இடையிடையே தேசிகர் சில சில விஷயங்களைக் கேட்பார். அக்கேள்வியிலிருந்தே தேசிகருடைய அறிவுத்திறமையை உணர்ந்து அவ்வித்துவான்கள் மகிழ்வார்கள். இப்படி வித்தியா விநோதத்திலும் தியாக விநோதத்திலும் தேசிகருடைய பொழுதுபோகும்.
மடத்து நிர்வாகம்
மடத்துக் காரியங்களைக் கவனிப்பதற்கு நல்ல திறமையுள்ளவர்களைத் தேசிகர் நியமித்திருந்தார். பெரிய காறுபாறு, சின்னக் காறுபாறு, களஞ்சியம் முதலிய உத்தியோகங்களில் தம்பிரான்கள் பலர் நியமிக்கப் பெற்றிருந்தனர். உக்கிராணம், ராயஸம் முதலிய வேலைகளில் மற்றவர்களையும் நியமித்திருந்தார். மடத்தில் தினந்தோறும் நிகழவேண்டிய காரியங்கள் ஒழுங்காக ஒரு தவறும் இல்லாமல் காரியஸ்தர்களுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெறும். ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தாமே தலையிட்டுத் தம் மனத்தையும் பிறர் மனத்தையும் குழப்பும் இயல்பு சுப்பிரமணிய தேசிகரிடம் இல்லை. ஏதேனும் விசேஷமான காரியமாக இருப்பின் கவனித்து இன்ன இன்னபடி நடக்க வேண்டுமென்று கட்டளை இடுவார். காறுபாறு முதலியோர் அக்கட்டளையைச் சிரமேல் தாங்கி ஒழுங்காக நிறைவேற்றுவார்கள். இம்முறையில் எல்லாம் நடந்து வந்தமையால் மடத்து நிர்வாக விஷயத்தில் கவலையடையாமல் வித்துவான்களுக்கிடையில் சிறந்த ரஸிகராகவும் இரவலர்களுக்கு இடையில் உயர்ந்த தாதாவாகவும் விளங்குவது அவருக்குச் சாத்தியமாயிற்று.
தேசாந்தரிகள்
பதினொரு மணிக்குப் பூஜை செய்துவிட்டுப் பன்னிரண்டு மணிக்குச் சுப்பிரமணிய தேசிகர் அடியார்களோடு பந்தியில் பகற் போஜனம் செய்வார். பிறகு சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அப்பால் மீண்டும் பாடம் சொல்வதும் மாணாக்கர்களோடு பேசுவதும் வித்துவான்களோடு சல்லாபம் செய்வதும் ஆகிய காரியங்களில் ஈடுபட்டிருப்பார். இரவில் இரண்டாங்கால பூஜை நடக்கும் சமயத்தில் சிவாலயத்துக்குச் செல்வார். அவருடன் தம்பிரான்களும் மற்றவர்களுமாக முப்பது, நாற்பது பேர்கள் போவார்கள். தரிசனம்செய்து மடத்திற்குத் திரும்புகையில் ஆலயத்திலுள்ள நந்திக்கருகில் வந்து, “தேசாந்தரிகள் வந்திருக்கிறார்களா?” என்று பார்ப்பார். பிராமணர்கள் வந்திருந்தால் சத்திரத்தில் உணவுகொள்ளச் சொல்வார். அதிகப்படியானவர்கள் வந்திருந்தால் சத்திரத்திலுள்ள கிழவிக்குத் துணைசெய்யச் சில சமையற்காரர்களை அனுப்பச் செய்வார். கோயிற்பிரசாதங்களையும் கொடுக்கச் செய்வது உண்டு. மற்றவர்களுக்கு மடத்திலே உணவளிக்க ஏற்பாடு நடக்கும். அபேக்ஷையுள்ளவர்களுக்கு மடத்திலிருந்து பாலும் பழமும் கொடுப்பதுண்டு.
வடமொழி மாணாக்கர்கள்
திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள திருவாலங்காடு, திருக்கோடிகா முதலிய ஊர்களில் வடமொழியில் வல்ல வித்துவான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் மடத்து வித்துவான்களே. அவர்களுக்கு மடத்திலிருந்து வருஷாசனம் அளித்து வந்தனர். அவ்வித்துவான்களிடத்திலே சாஸ்திரங்களைப் பாடங் கேட்பதற்காகப் பல மாணாக்கர்கள் வருவார்கள். திருநெல்வேலி, மதுரை, சேலம் முதலிய இடங்களிலிருந்து அவ்வாறு படிப்பதற்காக வந்தவர்கள் பலரோடு நான் பழகியிருக்கிறேன். அம்மாணாக்கர்களிற் சிலர் திருவாவடுதுறையிலுள்ள அன்னசத்திரத்திலே உணவுகொண்டு வித்துவான்கள் உள்ள இடத்திற்கு முற்பகலிலும் பிற்பகலிலும் சென்று பாடங் கேட்டு வருவார்கள். சிலர் அவ்விடங்களிலே இருந்து சமையல் செய்து உண்டு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய அரிசி முதலிய பொருள்கள் சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி மடத்திலிருந்து அளிக்கப்பெறும்.
சங்கீதம் பயில்வோர்
மடத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான்களிடமும் நாதசுரக்காரர்களிடமும் சிலர் சங்கீதம் பழகி வந்தனர். அடிக்கடி மடத்திற்குச் சங்கீத வித்துவான்கள் வந்து வினிகை நடத்துவார்கள். அதனால் அம்மாணாக்கர்களுக்கு உண்டாகும் லாபம் அதிகம்.
தமிழ் மாணாக்கர்கள்
பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடங் கேட்டு வந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற வகுப்பினர்கள் முதலிய பல வகையினர் இருந்தனர். பிராமணர்கள் அன்னசத்திரத்தில் உண்டு வந்தார்கள். சைவப் பிள்ளைகள் மடத்திற் பந்தியிலே ஆகாரம்செய்து வந்தனர். மற்றவர்களுக்கும் தக்கபடி உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன.
என்னோடு பிள்ளையவர்களிடம் தமிழ்ப் பாடங் கேட்டு வந்தவர்களில் சிலர் முதிய தம்பிரான்கள்; சிலர் குட்டித் தம்பிரான்கள். அண்ணாசாமி ஐயர், சாத்தனூர்ச் சுப்பிரமணிய ஐயர், கஞ்சனூர்ச் சாமிநாதையர் என்பவர்கள் பிராமண மாணாக்கர்களில் முக்கியமானவர்கள். மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர், விக்கிரமசிங்கபுரம் அனந்த கிருஷ்ண கவிராயர், மதுரைச் சாமிநாதபிள்ளை, முகவூர் அருணாசலக் கவிராயர், சந்திரசேகர முதலியார், பூமிநாத செட்டியார் முதலிய பலர் சைவர்கள். இராமகிருஷ்ண பிள்ளையென்ற ஒருவர் இருந்தார். அவர் வைஷ்ணவ வேளாளர். இப்படிப் பல வகுப்பினரும் பல நிலையினருமாக மாணாக்கர்கள் இருப்பினும் யாவரும் ஒரு குடும்பத்தினரைப் போலவே பழகி வந்தோம். எல்லா மாணாக்கர்களிடத்தும் சுப்பிரமணிய தேசிகருக்கு உள்ள அன்புக்கு இணை வேறு ஒன்றும் இல்லை. மடத்திற் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு குறைவும் வராமற் பாதுகாக்க வேண்டுமென்பது அவரது கட்டளை. அவருக்குக் கோபம் வருவது அரிது. அப்படி வருமானால் அதற்குத் தக்க காரணம் இருக்கும். மாணாக்கர்களில் யாருக்காவது குறை நேர்ந்தால் அதற்குக் காரணமானவரிடம் தேசிகருக்கு உண்டாகும் கோபம் மிகவும் கடுமையானது.
சர்வ கலாசாலை
மடத்தின் விஷயம் ஒன்றும் தெரியாத அயல்நாட்டார் ஒருவர் வந்து பார்த்தால் அவ்விடம் ஒரு சர்வகலாசாலையோ என்று எண்ணும்படி இருந்தது அக்காலத்து நிலை. அங்கே ஆடம்பரம் இல்லை; பெரிய விளம்பரங்கள் இல்லை; ஊரறியச் செய்யும் பிரசங்கங்கள் இல்லை; வேறு வேறாகப் பிரித்து வகுக்கும் பிரிவுகள் இல்லை. பொருள் இருந்தது; அதைத் தக்க வழியிலே உபயோகிக்கும் தாதா இருந்தார்; அவர் உள்ளத்திலே அன்பு நிறைந்திருந்தது; எல்லோரிடமும் ஒற்றுமை இருந்தது; கல்வி நிறைந்திருந்தது; வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் போக்கி வாயுணவும் செவியுணவும் அளிக்கும் நித்தியோத்ஸவம் அங்கே நடந்து வந்தது. அத்தகைய இடத்திலே கல்வி விளைந்து பெருகுவதற்குத் தடை என்ன? கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயிலாகவே அது விளங்கியது.
----------
அத்தியாயம் 50. மகா வைத்தியநாதையர்
ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள் வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும் கடிதங்களையும் எழுதுவேன்.
தேசிகர் பாடம் சொல்லுதல்
அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப் பாடங் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க விருப்பம் உண்டு. அதனையும் திருக்கோவையார், இலக்கண விளக்கம் என்னும் நூல்களையும் யாருக்கேனும் பாடஞ் சொல்லுவார். தேசிகர் இலக்கணச் செய்திகளை வரையறையாகச் சொல்வதும் உரிய இடங்களில் வடமொழிப் பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும் இனிமையாக இருக்கும். சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விஷயம் வந்தால், “பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.
மகா வைத்தியநாதையர் பட்டம்பெற்ற வரலாறு
சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம் நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விஷயங்கள் சொன்னார்கள் என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச் சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின் சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.
ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர் கேட்டார்.
“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை” என்றேன்.
“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விஷயத்தில் பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிஷயத்தில் அவரைச் சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”
‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற்போனது என் துரதிர்ஷ்டமே” என்றேன்.
“அவரை முதலில் நாம் கல்லிடைக்குறிச்சியில் சின்னப்பட்டத்தில் இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார். அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும் வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக்குறிச்சியிலும் அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒருநாள் ஒரு மகாசபை கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம். மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக இருந்தது. இவ்விஷயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லா வித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஹா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மஹா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”
சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர். செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரியபுராணம் முழுவதையும் கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.
மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்துகொண்டது முதல் அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம் அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒருநாள் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.
சுந்தர சுவாமிகள்
சுந்தர சுவாமிகள் என்பவர் அதிவர்ணாசிரமம் பூண்ட ஒரு துறவி. வேதாந்த கிரந்தங்களிலும், சிவபுராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர். சூதசம்ஹிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய உள்ளத்தில் சிவபக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு சார்ந்த ஸப்த ஸ்தான ஸ்தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல செல்வர்களைக்கொண்டு திருப்பணிகள் செய்வித்து அந்த எட்டு ஸ்தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த எண்ணிய அப்பெரியார் அதன் பொருட்டுத் தமிழ்நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி பெற்று வந்தனர்.
அவருடைய சிஷ்யர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச் சிஷ்யர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடங் கேட்டனர். திருநெல்வேலியில் ஐயாசாமி பிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம் கட்டிக்கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார். தத்துவராயர் இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர் அவர்.
திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிஷேகத்திற்குப் பொருளுதவிபெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர், திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர். பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு. பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஹிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச் சூதசம்ஹிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ்நூலின் பெருமை நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே தமிழ்ச் சூதசம்ஹிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.
சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.
சுவாமிகளும் தேசிகரும்
அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விஷயங்களைப் பற்றி ஒருவரோடொருவர் சிலநேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள். எங்களுக்கு அச்சம்பாஷணையால் பல நூதன விஷயங்கள் தெரியலாயின.
சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு வந்து சுவாமிகளை வரவேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச்செய்து தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில் இருந்தனர். அக்கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர் முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக்கொண்டு அப்பால் பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்தகாரியத்தைச் சுவாமிகள் தெரிவித்தார். தேசிகர் உசிதமான பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.
என் ஆவல்
மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின் இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல் அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராக இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா?........ எப்படியாவது ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே.....ஒரு பாட்டானால் என்ன? நூறு பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும் தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக் கவனிக்கவில்லை.
திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர் பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்கவேண்டுமென்று இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள் வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறியபோது, நான் என் காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய யோசனையினால் விளைந்த பகற்கனவா இது?’ என்று கூட நினைத்தேன். நல்லவேளை, அது வாஸ்தவமாகவே இருந்தது.
தேவகானம்
“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா வைத்தியநாதையர் பாட ஆரம்பித்துவிட்டார். தேவகானமென்று சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத் தோற்றியது. முதலில் தமிழ்ச் சூதசங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாக இருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு என்றுமில்லாத அழகைக்கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை நிர்மாணம் செய்து வந்தது.
சூதசங்கிதையில் கைலாஸத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம் படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம் கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.
பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல் சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.
பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா? கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூதசங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர் இசையுடன் சொன்னார்.
பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரியபுராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார். வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வர அந்தச் சங்கீத சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.
அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப் பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப்பாட்டோடு ஒன்றிப் பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்.
இணையற்ற இன்பம்
அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன். ‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடைபெற்றுக்கொண்டனர். அவரோடு மகா வைத்தியநாதையரும் பிறரும் விடைபெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும் மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது, “காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர் கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை. அவர்களுடைய சாரீரம் எல்லோருக்கும் அமையாது. வெறும் சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.
“சாதகம் மாந்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர் செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லிவிட்டு, “அவர் தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.
“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது” என்றேன்.
-----------
This file was last updated on 4 Sept. 2016
Feel free to send corrections to the webmaster.