pm logo

புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு
பாகம் 5, சிறுகதைகள் 91-108


Short stories of putumaippittan
part 5, short stories 91-108
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு
பாகம் 5, சிறுகதைகள் 91-108

91. சொன்ன சொல் 100 சமாதி
92. சுப்பையா பிள்ளையின் காதல்கள் 101 உபதேசம்
93. தனி ஒருவனுக்கு102. வாடாமல்லிகை
94. தேக்கங் கன்றுகள்103. வாழ்க்கை
95. திறந்த ஜன்னல் 104. வழி
96. திருக்குறள் குமரேச பிள்ளை 105. வெளிப்பூச்சு
97. திருக்குறள் செய்த திருக்கூத்து 106. வேதாளம் சொன்ன கதை
98. தியாகமூர்த்தி 107. விபரீத ஆசை
99. துன்பக் கேணி 108. விநாயக சதுர்த்தி

---------------

91. சொன்ன சொல்

நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம் உள்ளது. ஏழுமாத கர்ப்பிணியாக அவரது தாயார் அவரைச் சுமந்துகொண்டு சுப்பையா பிள்ளையுடன் மருதூரைவிட்டு புறப்படும்போது ஊரே கண்ணீர் வடித்தது என்று சொல்ல வேண்டும். வாழையடி வாழையாக நல்ல செயலிலிருந்த பண்ணையார் சுப்பு பிள்ளையின் குடும்பம் நொடிந்துவிட்டது. பண்ணையார் சுப்பு பிள்ளை சொன்ன சொல் தவறாதவர் என்று பெயர் வாங்குவதற்கே தம்முடைய நண்பரும் காசுக்கடைப் பிள்ளையுமான உமையொருபாகன் பிள்ளைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பதற்காக பூர்வீக நிலத்தை எல்லாம் விற்றார். அவருக்கு உதவினார். ஆனால் கடை முறிந்த போது சுப்பையா பிள்ளையின் குடும்பமும் முறிந்தது.

உமையொருபாகன் பிள்ளை ஆதியில் காசுக்கடை ஆரம்பிக்கும் போது பிள்ளையவர்களையும் பங்கெடுத்து கூட்டாளியாக வரும்படி கேட்டார். ஆனால் பிள்ளையவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. "எனக்கு பூமியைப் பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதமாட்டேன் என்கிறது. வியாபாரத்தில் ஈடுபடுவது என்றால் நிலம் மண்ணாகப் போய்விடும்; நான் ஒன்று சொல்லுகிறேன்; உனக்கு ஆபத்து வந்தால் எந்த நிமிஷமானாலும் என்னிடம் வா; கை கொடுக்கிறேன்" என்றார். அந்தக் காலத்தில் அவர் அப்படி கையடித்திருக்கும்போது, தன்னை ஒரு விஷப் பரீட்சைக்கு ஆளாக்கிக் கொள்ளுகிறோம் என்று நினைத்தாரோ என்னவோ.

ஒரு நாள் இரவு 11 மணிக்கு மருதூரில் உமையொருபாகன் பிள்ளை இரட்டை மாட்டு வண்டியில் வந்திறங்கி வாசலில் நார் கட்டிலில் படுத்திருந்த சுப்பையா பிள்ளையவர்களின் காலைக் கட்டிக்கொண்ட பொழுது சத்தியசந்தனாகிவிடுவது என்று உறுதியாக நினைத்தார். உமையொருபாகன் பிள்ளை கேட்ட தொகை திடீரென்று சேகரிக்கக் கூடியதுமல்ல; சேகரித்துக் கொடுத்தாலும் அவரது நிலையையே சற்று ஆட்டி வைக்கக் கூடியது. பேசாமற் உள்ளே சென்று பெட்டியை திறந்து பார்த்தார் வீட்டில் ரொக்கமாக ரூ.2000-ந்தானிருந்தது. "ஏளா, அங்கே என்ன செய்யுறே" என்று மனைவியைக் கூப்பிட்டு கைவசமுள்ள நகைகளை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார். கணவருடைய வேண்டுகோள் விபரீதமாகப்பட்டது. கர்ப்பிணி, அந்த சமயத்தில் நிதானித்துப் பேசுவதற்கு இயலுமா? யார்தான் சாதாரண காலத்தில் கூட தம்முடைய கணவரின் நண்பருக்காக கழுத்து நகையை அவிழ்த்துக் கொடுக்க சம்மதிப்பார்கள். அவள் முடியாது என்றதும், நண்பனது கஷ்டத்தைத் தீர்த்து வைப்பது தமது கடமைகளில் ஒன்று என்று நினைத்து, நிலத்தை அடமானம் வைக்க முற்பட்டார். இரண்டொரு புள்ளிகள் விற்பனை என்றால் சம்மதிப்பதாக சொன்னார்கள். இன்னும் இரண்டொரு நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கிய தொகை ரூ.5000-ம் போக மீதிக்கு நிலத்தை விற்றுக்கொடுப்பது என்று தீர்மானித்தார். சுப்பையா பிள்ளை இவ்வளவு அக்கறை காட்டுகிறதைப் பார்த்தால் இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சிலர் சந்தேகித்தார்கள். மறுநாளைக்கு பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்துகொள்ள சம்மதிப்பதாக பணம் கொடுக்கிறவரை இணங்க வைப்பதற்காக நிலத்தையும் அதற்கு இசைந்தாற்போல ஏராளமாக தியாஜியம் செய்ய வேண்டியிருந்தது. உமையொருபாகன் பிள்ளை கையில் ஏழாயிரத்துடன் டவுனுக்கு ஏகினார். மறுநாள் விற்பனைப் பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்து தொகையுடன் சுப்பையா பிள்ளையவர்கள் டவுனுக்குச் சென்றார். உமையொருபாகன் பிள்ளையையும் தொகையையும் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான்.

மூன்று நாட்கள் கழித்து உமையொருபாகன் பிள்ளை வைரத்தைப் பொடித்துத் தின்று மாண்டுபோனார். கடை முறிந்தது. ரூபாய்க்கு அரையணாக்கூடத் தேறாது எனச் செய்தி வந்தது.

மாலை ஐந்து மணி இருக்கும்; டவுனுக்கு காரியமாக சென்றிருந்த வேலப்ப பிள்ளை வேகுவேகென்று ஓடி வந்து தகவலைச் சொன்னார்.

பிள்ளையவர்கள் ஒன்றும் பேசவில்லை. வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். புகையிலையை எடுத்துச் சாவதானமாக போட்டுக் கொண்டு, "இருங்க தம்பி வர்ரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

வருவதற்கு சற்று தாமதித்தது. வந்ததும் துண்டை உதறித் திண்ணையில் போட்டுவிட்டு, சாவதானமாக உட்கார்ந்தார்.

மடியிலிருந்த வைர நகைகள் சிலவற்றை எடுத்து மௌனமாக வேலாயுதம் பிள்ளையிடம் கொடுத்தார்.

"வேலையா, வண்டியைப் போடச் சொல்லுகிறேன்? நேரே ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போயி நம்ப சிதம்பர ஐயர் கடையிலே இதை விற்று தொகையைக் கொண்டு வா. நானும் ஒரு துண்டு எழுதித் தாரேன். காதோடு காதாக இருக்க வேண்டும். நான் இங்கேயே உறங்காமல் உட்கார்ந்திருப்பேன்; என்ன சொல்லுறே" என்றார்.

"இது என்னத்துக்கு அண்ணாச்சி; நம்ம ஊர்லெதானே; மின்னெப் பின்னே சொல்லிக்கிட்டாப் போகுது" என்றார்.

"தம்பி பண விஷயம்; வாக்குத்தான் சொத்து" என்றார்.

வேலாயுதம் பிள்ளை திரும்ப வரும்போது இரவு மணி இரண்டு. இருவருமாகச் சென்று முந்திய நாட்களில் கடன் வாங்கிய புள்ளிகளிடம் சென்று வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுத்தார்கள்.

"பிள்ளைவாள் விடிஞ்சா என்ன பூனையா கொண்டு போயிடுது? என்னத்துக்கு இந்த அவசரம்" என்றார்கள். அவர்களுக்கு உமையொருபாகன் பிள்ளை செல்லாகிப் போன கதை தெரியாது.

"மனிதன் வாழ்வு என்ன நிச்சயம்?" என்றார் சுப்பையா பிள்ளை.

"எத்தினி நாளாக ஐயா இந்த வேதாந்தம். காலையிலே காஷாயமோ?" என்று கேலி செய்தார்கள்.

"ஒருவேளை கயிலாசமோ" என்றார் பிள்ளை.

இருவரும் திரும்பினார்கள்.

பிள்ளையவர்கள் நார் கட்டிலில் படுத்துக்கொண்டார்.

"வேலையா வீட்டுக்குப் போகலியா?" என்றார்.

"இனியெங்கே, நடுச்சாமத்திலே ஏன் போய் தட்டி எழுப்பணும். இங்கே திண்ணையில் சாய்ந்தால் போகிறது" என்றார் வேலாயுதம் பிள்ளை.

"நீ ரொம்பக் கெட்டிக்காரன் தாண்டா; நான் இப்படி அப்படி சாகமாட்டேன்; நாளைக்கு டவுனுக்கு போனாத் தேவலை" என்றார்.

மறுநாள் காலை அனுதாபம் கேட்க வருவதுபோல மிச்ச நிலமும் விலைக்கு வருமா என நோட்டம் பார்க்க வந்தவர்கள் சுப்பையா பிள்ளையைப் பார்க்க முடியவில்லை.

அவர் டவுனுக்குச் சென்று திரும்புவதற்கு மூன்று நாட்களாயின.

புதிய ஒளி, தொகுப்பு - 1941
----------------

92. சுப்பையா பிள்ளையின் காதல்கள்

1

வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற 'செமன்ட்' கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.

திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, 'ஜங்க்ஷன்' என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கண்பதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு 'மௌஸ்'.

அந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டி விடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒரு முறைகூட - அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர - மற்றபடி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.

'தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோ ர்ஸ்' பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலை வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.

இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.

தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.

மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.

பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'

பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...

2

காலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.

இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.

தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.

பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் ஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.

பிள்ளையவர்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். 'பீச் ஸ்டேஷன்' கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.

ஆனால் இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.

'எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்துவிட வேணும்' என்பது அவரது தினசரி உத்தேசம் - பிரார்த்தனை. எப்பவாவது... மீனம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த 'எப்பவாவது' என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன் தான். வண்டி, 'ஸ்டேஷன் பிளாட்பார'த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின் தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது பெண்ணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது - இவ்விதமாக 'பீச் ஸ்டேஷனை' நெருங்கிக் கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்ணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு ஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுதுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளியிலே போக வேண்டியிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம்... அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே - விதிதான்... எப்படியும் கேட்டுப் பாக்கது...'

வண்டி மாம்பலம் வந்து நின்றது. 'பிளாட்பார'த்தில் ஜனக்கூட்டம்; ஏக இரைச்சல். கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக் கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தடியுமாக ஏறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி 'விசுக்' என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். 'பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருக்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்து கொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே' என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.

வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் 'லாங் செயி'னுடன் ஒரு 'ஸ்டெதாஸ்கோப்'பும் அலங்காரத்துக்காக (?) தொங்கிக் கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான 'ஜாக்கெட்'. செயற்கைச் சுருளுடன் கூடிய தலை மயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.

சாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக் கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள் மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றி விட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது...

கோடம்பாக்கத்தின் 'செமன்ட்' சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. 'பெத்துப் போட்டா போதுமா...' என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக் கொள்ள அவர் மனம் மறுத்தது.

'ஷாக்' அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக்கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி 'ஸீட்டு'க்குள் இழுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் - கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.

மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை - மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்...

சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடுகிடாய்த்த சப்தம்; எதிரே ஓடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் - அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.

பிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. 'பிராட்வே' முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். 'தனியாக வந்தால் இப்படித்தான்' என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார்... பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். 'எழும்பூர் தாண்டிவிட்டதா' என்று ஆச்சரியப்படுகிறார்.

பார்க் ஸ்டேஷன்!

கூட்டம் ஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் 'ஸீட்' காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும்... வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.

மின்சார விசில்...

வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக் கொண்டு கண்களை அரைவாட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு 'சிவா' என்றபடி கொட்டாவி விட்டார்.

கோட்டை தாண்டி ரெயில் 'தகதக'வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. 'வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்... அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடும்...திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும்...'

வண்டி ஊதியது...

'அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன்... பயலெக் கண்டிக்கணும்.'

வண்டி வந்து நின்றது.

கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கால் எட்டி வைத்தார்.

டிக்கட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.

சூறாவளி, 13-08-1939
-----------------

93. தனி ஒருவனுக்கு


அம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த சொத்தை (கலப்பை முதலியன) சின்னக் கடன் விஷயங்களுக்கு, சேரி பாபத்திலும், பண்ணை சுப்பராயப் பிள்ளை பற்றிலு மாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவனுடைய வளர்ச்சிப் படலத்தைப் பற்றிய பிள்ளைத் தமிழ் யாரும் எழுதிவைக்காமல் போய்விட்டதால் இருபது வயது வரைமட்டுமுள்ள சரித்திரக் குறிப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சநாள் பண்ணையில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. பிள்ளையவர்கள் மனமுவந்து கொடுத்த சிறிய கடன் தொகையைக் கொண்டு கலியாணமும் நடந்தது. நடந்த மூன்றாம் மாதம் இவன் தாய் பரகதி - பறையருக்கு பரகதியடைய உரிமையுண்டோ என்னவோ - செத்துப் போய்விட்டாள்.

என்ன காரணத்தாலோ இவனது பெண்டாட்டியும் தாய் வீடு நோக்கிக் கம்பி நீட்டி விட்டாள். ஆக இம்மாதிரி தொல்லைகளால் பழைய கடனும் கொடுக்க முடியாமல் புதிய கடனும் வாங்க மார்க்கமில்லாமல் இருக்கும் பொழுது ஒரு ரஸவாத பண்டிதர் - சாமியார் - அங்கே வந்து சேர்ந்தார்.

சாமியாருக்கும் அம்மாசிக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டது. கேட்பானேன்; பிள்ளையவர்கள் வீட்டுப் பித்தளை செம்புப் பாத்திரங்களில் கை வைத்தால், அவ்வளவையும் சுவர்ணமாக்கித் தந்து விடுவதாகச் சுவாமியார் வாக்களித்தார்.

தொல்லை தீர வழியிருக்கும்பொழுது தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்? பண்ணைப் பிள்ளையவர்களின் பாத்திரங்கள் ஊருக்குப் பக்கத்திலிருந்த பாழ் மண்டபத்திற்கு வந்துவிட்டன. ஸ்புடம் போட்டுத் தங்கமாக்கிவிட. இதற்குள் பிள்ளையவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட, "பயலை அப்படியே புடம் போட்டுவிடுகிறேன் பார்" என்று இரைந்து கொண்டு பண்ணை ஆட்களைத் திரட்டி வந்தார்.

கூட்டத்தைத் தூரத்தில் கண்டவுடன் அந்தர்த்தியானமாவது தவிர வேறு வழியில்லை என்று கண்ட சாமியார் நடையைத் தட்டிவிட்டார். அம்மாசியைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டார்கள். அன்று பட்ட நரக வேதனைக்குமேல் ஆறுமாதக் கடுங்காவல்.

சில சந்தர்ப்பங்களில் சிறைவாசம் ஒரு புகழைக் கொடுக்கும். சமுதாயத்தில் ஒரு மகத்தான ஸ்தானத்தைக் கொடுக்கும். அம்மாசியின் சிறைவாசம் அந்த ரகத்தைச் சேர்ந்ததல்ல.

சிறையைவிட்டு வெளியேறியவுடன் அம்மாசி சொந்த ஊருக்குச் செல்லவில்லை. நியாயத்தின் முடிவைக் கண்டு பிடித்த அந்த மகான் இருக்கும் திருப்பதிக்கு - இந்தச் சண்டாளன், இந்த பதிதன், இந்த சமூகத் துரோகி, புழு - செல்ல முடியுமா?

விலை சரசமான காவிகட்டி இருக்கும் பொழுது சோற்றுக்குப் பஞ்சமா என்று பட்டது. உடனே அம்மாசிச் சாம்பான், ஏழை அம்மாவாசைப் பரதேசியானார்.

தாயுமானவரையும் குதம்பைச் சித்தரையும் தப்பும் தவறுமாக உச்சரிக்க எங்குதான் கற்றுக்கொண்டாரோ? முதலில் பக்கத்து ஊரில் முகாம் போட்டார். வீட்டுக்கு முன்வந்து நின்றால் இரண்டில் ஒன்று தீர்மானமாகத் தெரிந்தாலொழியப் போவதில்லை.

கொஞ்ச நாள் கவலையற்ற சாப்பாடு.

2

ஒரு மாதத்திற்கு முன் தான், ஏழை அம்மாவாசி சுவாமியாரின் வழியாக, இறந்துபோன தாயுமானவர் கடவுளின் பரிபூரணானந்தத்தை எங்கள் ஊர்த் தெருவழியாக வாரி இறைத்துக் கொண்டிருந்தார். ஊரைக் கவர்ச்சிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. நூற்றியோராவது பிச்சைக்காரனாகத்தான். கவலையற்ற சாப்பாடு. எங்களூர்ப் பாழ் மண்டபத்தில் கவலையற்ற நித்திரை, ஸ்வானுபூதி.

இதற்குள் யாரோ சுவாமியாரின் பூர்வாசிரம ரகசியத்தையறிந்து ஊர் பூராவும் பரப்பிவிட்டார்கள். உளவு பார்க்க வந்தவன் என்ற தங்கள் கொள்கையையும் சேர்த்துக் கட்டிவிட்டதினால், எங்களூர்க்காரர்கள் மதிப்பில் சுவாமியார் பதவியிலிருந்து திருட்டுப் பேர்வழி என்ற ஸ்தானத்திற்கு இறங்கிவிட்டார். பரி மறுபடியும் நரியாவது திருவிளையாடல் காலத்துக்காரர்களுக்கு மட்டுந்தானா உரிமை?

இவ்வளவும் ஒரே நாளில்; இது சுவாமியார் - பாவம் - அவருக்குத் தெரியாது.

வழக்கம்போல் கப்பறையுடன் 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பொருளைத் தேடி' எங்களூர்க்காரருக்குத் தெரியப்படுத்தத் தெருக்கோடியில் வருமுன்னமே அவரை சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம் கூடி விட்டது.

ஏசலும், இரைச்சலும் சுவாமியாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவரும் காதுள்ள, சாதாரண அறிவுள்ள மனிதன் தானே! பூர்வாசிரமக் கதைதான் இந்த விபத்திற்குக் காரணம் என்று தெரிந்து கொண்டார். தெரிந்து என்ன செய்கிறது? அதற்குள் தான் மரத்துடன் வைத்துக் கட்டியாகிவிட்டதே.

தர்மத்தின் காப்பாளர்களும் நீதியின் பொக்கிஷங்களுமான பெரியார்கள் நிறைந்த இந்தக் கிராதகயுகத்து எங்களூர்வாசிகள் இம்மாதிரியான மோசத்தையும் புரட்டையும் பொறுத்திருப்பார்களா? நியாயத்தைப் பரிமாறுவதற்காகக் கருட புராணத்தைப் பாராயணம் செய்த ஹிந்து தர்மத்தின் மெய்க்காப்பாளர்களான எங்களூர்ப் பெரியார்கள், அதற்குத் தகுந்த மகத்தான ஒரு மனநிலையைத் திருப்தி செய்தார்கள்.

இந்தத் 'திருத்தொண்டினால்' சுவாமியாரை எளிதில் கண்டு பிடிக்க முடியாது போய்விட்டது. காலில் பலத்த காயம். முகத்தில், முதுகில் புளியம் விளார்களின் முத்தத்தினால் உண்டான இரத்தம் உறைந்த நீண்ட வரைகள். உடம்பு, முகம் முழுவதும் ஒரே வீக்கம்.

"பயம் இருக்கட்டும். உன்னை ஜெயிலுக்கு அனுப்பாமல் மன்னிக்கிறோம். ஓடிப்போ..." என்று தங்கள் தயாள சிந்தனையைச் சுவாமியாருக்கு எடுத்துக்காட்டி ஊருக்கு வெளியே பிடித்து நெட்டித் தள்ளி விட்டார்கள். சுவாமியாருக்கு அந்தப் பாழ் மண்டபத்தையடைவதற்குள் மோக்ஷமோ நரகமோ இரண்டிலொன்றிற்குப் போய்விட்டுப் பத்துத் தடவை திரும்பிவிடலாம் என்று தோன்றிற்று.

இதற்குமேல் எங்களூரில் கவந்தப் படலத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்குமானால் அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடலாம். சுவாமியார் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த ஊரைவிட்டுப் போவதற்கும்தான் இவ்வூர் மஹா ஜனங்களின் அன்பின் திருத்தொண்டின் மூலமாகக் காண்பித்து, அவரை அங்கிருந்து அகலாமலிருக்கும்படி செய்துவிட்டார்களே.

அந்தப் பாழ் மண்டபம் எப்படி இருந்தாலும் வேளைக்கு வேளை உணவும் மருந்தும் கொடுக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி அல்ல. மூன்று நாட்கள் அவர் இருந்த ஸ்திதியில் அங்கு இருந்தால் வலுவில் சுமத்தப்பட்ட உண்ணாவிரதம் தான் நிச்சயம்.

காய்ச்சல், வலி, பசி தாகம் இவைகளின் கூத்துப் பொறுக்க முடியவில்லை. சற்றுத் தூரத்திலுள்ள கோபுரங்களிலும் மரக்கிளைகளிலும் சுவாமியாரின் இறுதியை எதிர்பார்த்து, அவரைத் தங்கள் வயிற்றில் சமாதியடையச் செய்ய, காக்கைகளும் கழுகுகளும் காத்திருந்தன. அவைகளும் இவரைத் தீண்டாத பறையன், பதிதன் என்று நினைத்தோ என்னவோ கிட்டவே நெருங்கவில்லை.

ஊருக்கு வெளியில், அந்தப் பாழ் மண்டபத்தின் பக்கத்தில்தான் ஒரு சுடலைமாடன் பீடம், ஊரின் காவல் தெய்வம் என்ற கௌரவத்துடன், நமது அரசாங்கத்துடன் கூட்டுறவு செய்துகொண்டு, வரிவாங்கும் தொல்லைகள் எல்லாம் அற்ற ஒரு மௌன அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தது. அதைப் பற்றிக் கதைகள் பல.

எங்களூர் மறவர்களுக்கு 'பிஸினஸ் டல் ஸீஸனில்' சுடலைமாடன் பாடு கொண்டாட்டம்தான். தினம் திருவிழா. நாலு பணத்தைக் கண்டால் சுடலைக்கு படைப்பு என்ற சம்பிரதாயத்தை வைத்துக் கொண்டு, குடித்துக் களிப்பார்கள்.

அன்று சின்னச்சாமித் தேவனுக்குப் படைப்புப் போட வேண்டும் என்று தோன்றிற்று. கேட்பானேன்; சாயங்காலம் முதல் ஒற்றைப்பறை மேளம் ஒன்று சுடலைமாடனுடைய கேட்காத திருச்செவிகளுக்குச் சங்கீதக் கச்சேரி நடத்தியது.

படைப்புக்குரிய பொங்கல், பக்கத்து மரத்தடியில் சின்னச்சாமித் தேவன் மனைவியின் கண்காணிப்பில் தயாராகிக்கொண்டிருந்தது. மாடனைச் சுற்றி தேவரும் அவருடைய நண்பர்களும் பூசாரியும்தான்.

இரவு பத்து மணியாகிவிட்டது. பானையும் அடுப்பிலிருந்து இறங்கி 'சாம்போர்' என்று அவர்கள் உச்சரிப்பில் மரியாதை பெறும் குழம்புடன் கலந்து, சுடலையின் திருச்சேவையை எதிர்பார்த்து நின்றது.

பூசாரி சுடலையின் பாட்டைப் பாடி ஆராதனை நடத்துகிறான். தேவரின் மனைவியும் சுடலையின் அருள்பெறச் சன்னதிக்குச் சென்று விட்டாள்.

இருளிலே ஒரு உருவம் நகர்ந்து நகர்ந்து சோற்றுப் பானையை அணுகுகிறது. சுவாமியார்தான். பசியின் தனியரசிற்குமுன் எந்தச் சுடலைமாடன் தான் எதிர்க்க முடியும்? வாரி வாரி ஆத்திரத்துடன் கொதிக்கும் சோற்றை வாயில் திணிக்கிறார். அவ்வளவுதான், ஒரு கவளத்திலே இவருடைய இவ்வுலக ஆசை நிறைவேறியது.

சற்றுத் தூரத்திலிருந்த சுடலை பக்தர்கள் இவர் ஒரு கவளம் எடுக்கும்போதே கண்டு தடுக்க ஓடிவந்தார்கள். கிட்ட நெருங்கியதும் தண்டிப்பதற்குச் சுவாமியாரின் பிணம்தான் கிடந்தது. "மாடனின் சக்தி", "அருள்" என்று வியந்தார்கள். "பறப்பயலுக்கு வேண்டும்" என்றார்கள். இதையெல்லாம் கேட்க ஏழை அம்மாவாசைச் சாமியாருக்கு கொடுத்து வைக்கவில்லை!

சுடலையின் சக்திக்காக அன்று இரட்டிப்புப் பூசை.

3

ஊரில் கொஞ்சம் பரபரப்புத்தான். சுடலையின் சக்தி வெளியாகும் பொழுது இல்லாமலா இருக்கும்?

திடீரென்று இறந்தவனை அறுத்துச் சோதனை செய்யாமல், போலீஸ் விசாரணையில்லாமல் புதைத்துவிட முடியுமா? எங்களூர் டாக்டரும் இன்ஸ்பெக்டரும் தேசபக்தர்கள் அல்ல; ஆனால் கிழக்கு மேற்காக இரண்டரைப் பர்லாங்கும், தென்வடலாக ஒன்றரைப் பர்லாங்கும் விஸ்தீரணமுள்ள எங்களூர் நிலப்பரப்பைப் பொறுத்தமட்டில் தேசபக்தர்கள் தான். வீண் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டினியால் இறந்தான் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

பிறகு என்ன? புதைக்கவேண்டியதுதான் பாக்கி.

எங்களூர் ஆஸ்பத்திரித் தோட்டி, இந்த மாதிரி பிணங்களைப் புதைத்துவிடுவதில் சமர்த்தன். ஒருவனே முடித்துவிடுவான். ஒற்றைக் கம்பில் பிணத்தை இறுக்கிக் கட்ட வேண்டியது - தலை சற்றுத் தொங்கினால் என்ன மானம் போய்விட்டது? மேலே மண்வெட்டியைச் சொருக வேண்டியது; விறகுக் கட்டை போல் தலையில் தூக்கிக் கொண்டு போய் புதைக்க வேண்டியது. இதுதான் அவனுக்குத் தெரியும். அதில் அவன் 'எக்ஸ்பர்ட்'.

அன்று சாயங்காலம்; அதாவது பிணத்தை அறுத்துச் சோதித்த அன்று சாயங்காலம்.

அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் 'பாரத ஜனங்களின் தற்கால நிலைமை' என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும் திரண்டு இருந்தது; அதைக் கேட்க அவ்வளவு உற்சாகம். முதலிலே 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற பாட்டை ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார்.

'தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை யழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

மணிக்கொடி, 12-08-1934, (புனைப்பெயர்: கூத்தன்)
--------------------------

94. தேக்கங் கன்றுகள்


வில்லி ஸ்டேதம் ஆக்ஸ்போர்டை விட்டு வெளியேறியவுடன் 'இம்பீரியல் பாரஸ்ட் (forest) ஸர்வீஸி'ல் இரண்டு வருஷங்கள் தன்னை இந்தியக் காடுகளுக்காகத் தயாரித்துக்கொண்டது வரை, நமக்கு அவ்வளவு கவலையில்லை. இங்கிலாந்தின் மூடுபனிகளுக்கும் தனது உள்ளத்தைக் கவர்ந்த அந்த டைப்பிஸ்ட் நங்கைக்கும் விடைபெற்றுக்கொண்டு, 'ஜிஹாங்கரி'ல் கால் வைக்கும்பொழுது சிறு பையனின் களை சற்றாவது மாறவில்லை. சிரித்த கண்களும், நகைச்சுவை ஒளிந்த உதடுகளும், யாரையும் விரைவில் நண்பனாக்கிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. பம்பாய் துறைமுகத்தில் கால் வைத்த ஐந்தாவது மாதத்திலேயே D.F.O. ஆனதில் ஒரு ரகஸியம். இவர் தகப்பனாரின் நண்பர் கர்னல் ரௌபாதத்தின் - மூத்த ஸ்டேதமும், இவரும் போயர் யுத்தத்தில் தோளோடு தோள் நின்ற வீரர்கள் - உதவி கொஞ்சம் உண்டு. தனது ஆக்ஸ்போர்ட் நடை நொடி பாவனைகளை, விஷக் காய்ச்சல் பிடித்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஊளையிடும் நரிகளுக்கும், புஸ்தகத்தை ஒப்பிப்பதுபோல் பேசும் இந்திய ரேஞ்சர்களிடத்தும் காண்பிக்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை.

முதன்முதலில் அவருக்கு மரங்களைச் சுற்றிப்பார்ப்பதும், வெட்டப்பட்ட மரங்களையும் ரேஞ்சர்களையும் தணிக்கை செய்வதும், அங்கு கிடைக்கும் பெரிய வேட்டைகளை ஆடுவதும் வெகு உத்ஸாகத்தைத் தந்தபோதிலும், கொஞ்ச நாட்களில் புளித்துப் போய்விட்டது. ஆனால் அங்கே தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் - அவளில்லாவிட்டால் வில்லியின் ராஜினாமா முந்தியே கவர்மெண்டுக்குக் கிடைத்திருக்கும்.

இரண்டு வருஷங்கள் சிட்டாகப் பறந்தன. வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'ஹோமிற்கு'ப் போக வேண்டும். வரும்பொழுது அந்த டைப்பிஸ்ட் தன் பெயரை மாற்றிக்கொள்வாள். பிறகு கேட்பானேன்! குதூகலந்தான்.

*****

உலாந்தி ரேஞ்ச், மலேரியா, யானை, தேக்கு மரம், இத்யாதிப் பொருள்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் ஸ்தலம் என்பது காட்டு இலாக்கா மான்யுவலின் கொள்கை. மலேரியாவிற்கு மட்டும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். போக்குவதற்குத்தான் அதன் உதவி தேவை.

ரேஞ்ச் ஆபீஸ் என்ற தகரக்கொட்டகை, ரேஞ்சர் பங்களா என்ற மூங்கில் வேய்ந்த மரக்குடிசை, தேக்கங்கட்டைகள் அடுக்கும் பெரிய கொட்டகை, மரங்களை இழுக்கும் யானைகளின் கொட்டாரம், பத்துப் பதினைந்து காடக் குடிசைகள், வெற்றிலை, சுருட்டு முதல் ஸென்ட் சீப்பு வரை தேவைக்குரிய பண்டங்களைத் தன்னுள் அடக்கும் 'ஷாப்' - இதுதான் உலாந்தி ரேஞ்சின் கரு.

அப்பையா ரேஞ்சர், கவர்மெண்டாரால் தனக்கு அருளப்பட்ட இருபத்தெட்டு வருஷ வனவாசத்தில் ஏறக்குறைய பாதியைக் காய்ச்சலாகப் படுப்பதிலும், காடை, மான் முதலியவற்றை வேட்டையாடுவதிலும், தினம் இம்மாதிரித் தனக்குக் கிடைக்கும் வன போஜனத்துடன் இரண்டு கொய்னா மாத்திரை தின்பதுமாகக் காலந்தள்ளி வந்தார். ஆபீஸ் தபால்களுக்கு 'பதில்' - ரிப்போர்டுகள் முதலியன - அவருடைய இலாக்கா எதிர்பார்த்தபடி துரிதமாகப் போவதில்லை. D.F.O. காம்ப் போட்டிருக்கும் தகவல் கிடைத்தவுடன் அவர் ஆச்சரியப்படவேயில்லை. ஒரு வனபோஜனத்தில் எல்லாரையும் 'தாஜா' செய்யும் அப்பையாவிற்கு இந்தக் கத்துக்குட்டியான ஸ்டேதமா ஒரு பெரிய காரியம்?

உலாந்தியில் ஒரு பெரிய பரபரப்பு.

மூட்டை தூக்கும் யானைகளின் மேல் கூடாரம், பட்லர், துரையின் நாய் இத்யாதி, முதல்நாளே வந்து ஸ்டேதத்தின் வருகையை எதிர்பார்த்து நின்றன. உலாந்தியைச் சுற்றி பத்துமைல் வட்டாரத்திற்கு பெட்ரோல் நாகரிகத்தின் ஜம்பம் சாயாது.

இதனால் 10-வது மைலில் துரையின் மோட்டாருக்கு ஒரு ஷெட், காவல்காரன் வகையறா தயார் செய்துகொண்டு துரையவர்களின் வருகையை எதிர்பார்த்து வெகுகாலையில் நிற்க வேண்டும் என்ற உத்தரவு.

அப்பையா ரேஞ்சர் ராஜதந்திரியாகப் பிறந்திருக்க வேண்டியவர். களைத்து வந்தவர்களுக்கு வயிற்றை நிரப்பிவிடுவதைப்போல் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு வேறு மோகனாஸ்திரம் கிடையாது என்று கண்டவர். துரையவர்களின் பாய் (Boy) - அறுபது வயதுக் கிழவனாகிலும், துரைகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் 'பாய்' தான்; மார்க்கண்டன் பிறந்த நாட்டு மண் விசேஷமாக இருக்கலாம் - அவனைக் கையில் போட்டுக் கொண்டார். காட்டில் கிடைக்கும் தீனி வகையறா, நாட்டிலிருந்து டின்களில் அடைத்த சீமைச் சரக்குகள், துரையவர்களின் கண்ணில் மண்ணைப்போட, அல்ல. புத்தியை மூடிவைக்க, சாம்பெயின், பிராந்தி, விஸ்கி, இத்யாதி, இத்யாதி.

அப்பையா ஒரு பாரஸ்டர் (forester) இரண்டு கார்டுகள், இரண்டு பெரிய ரோஜா ஹாரங்களுடன் (இது இங்கு செலவில்லாமல் கிடைப்பது; ஹாரம் கார்டு கோபால நாயகரின் கைவேலை) சேணமிட்ட குதிரை சகிதம் வெகுகாலையிலேயே வந்து குறிப்பிட்ட இடத்தில் எதிர்பார்த்து நின்றார்கள். பாய் துரைக்குத் தீனி கொண்டு வந்திருக்கிறான். 'ஸ்டேதம் மான்மியத்தை' எடுத்துச் சரடுவிட்டான்.

காலை எட்டு மணியிருக்கும். எங்கோ ஒரு மோட்டார் ஹார்ன் காற்றோடு கலந்தது.

"துரை வந்தாச்சுரா. பூச்சி மேட்டுப் பக்கம் கேக்குது. டேய் ராமராவ், நீ போய்ப்பார்" என்று கட்டளையிட்டார் அப்பையா.

கோபால நாயகர் கைவேலையில் தேர்ச்சி என்றால் 'ராமராவ்' கால விஷயத்தில் 'எக்ஸ்பர்ட்'. 'ராமராவ்' ஜாதியில் காடன். அவனுக்குத் தந்தையிட்ட பெயர் தாடகன். காருண்ய கவர்மெண்டாரின் ரேஞ்சர்களாகத் திகழும் பிரதிநிதிகளின் வழியாக மலைக்கேறிய ஆரிய நாகரிக வாசனையைப் பெற்ற தாடகன், நாஸுக்காக 'ராமராவ்' என்ற பெயர்ப் பதிவிலேயே சம்பளம் பெற்றுவருகிறான். ராவ்ஜிகளுக்கு யக்ஞோபவீதம் உண்டு என்று தெரியாவிட்டால் அது அவன் குற்றமல்ல. அப்பையாவிற்கு முந்தியிருந்த ரேஞ்சர் இவனை எப்பொழுதும் "அடே காடப்பயலே" என்று கூப்பிட்டு வந்ததின் அர்த்தம் அவனுக்குத் தெரியாது.

அப்பையா கோஷ்டி அரைமணி சாவகாசம் காத்துக்கொண்டிருந்த பிறகு ஒரு சிறிய இரண்டு பேர் இருக்கும் மோட்டார் வந்து நின்றது.

அப்பையா தன்னை யார் என்று தெரிவித்துக்கொண்டு மாலையைப் போட்டார்.

"ஓஹோ, நீர் தான் ரேஞ்சரோ! அதிக நேரம் காத்திருந்தீரோ? கையிலிருக்கும் பெரிய புஸ்தகம்? அதற்கென்ன ஆபீஸில் பார்த்துக் கொள்ளலாம்" என்று சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கிப் புஷ்ப மாலையை முகர்ந்துகொண்டிருந்தார்.

'பாய்' உடனே காரில் துரையின் உணவை வைக்க, அவர் சாப்பிட்டுக்கொண்டே ரேஞ்சைப் பற்றிப் பேசி அப்பையா மனதில் கத்துக்குட்டி என்ற எண்ணம் படும்படி செய்துவிட்டார்.

"காட்டைப் பார்த்துவிட்டே போகலாம்" என்று துரை குதிரைமேல் ஏறிக்கொண்டார்.

ராமராவையும் கூட வரும்படி அழைக்க, "நாம் இருவரும் மட்டும் போகலாம்" என்று துரை தடுத்தால் அப்பையா என்ன செய்ய முடியும்?

எட்டு மணிக்குப் புறப்பட்டவர்கள் சாயங்காலம் நாலு மணி வரை என்னதான் செய்தார்களோ? வரும்பொழுது துரையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"இரவில் நான் கணக்கைச் 'செக்' செய்துகொள்வேன். நீர் அனுப்பிவைத்தால் போதும். இம்மாதிரிக் கணக்குப் புத்தகம் இருந்தால் என்னிடம் அதிக நாள் வேலை பார்க்க முடியாது" என்று சொல்லிக் கொண்டே கூடாரத்திற்குள் சென்றுவிட்டார்.

இந்த ஸ்டேதம் 'அப்பாவி' அல்ல என்று தெரிவித்துக்கொண்டாலும் தன் கையில் துருப்பு இருக்கும்வரையில் - 'பிளான்' போட்ட விருந்து - கடைப்பிடி தனக்குத்தான் என்று நம்பினார்.

"பாத் ரெடி ஸார்" என்றான் பாய்.

ஸ்டேதம் குளித்துவிட்டு அதிகக் களைப்பாக இருந்ததினால் ஒரு 'பெக்' (peg) பிராந்தி சாப்பிட்டுவிட்டு, தனக்குக் கடைசியாக வந்த காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய சுருட்டைப் பற்ற வைத்த வண்ணம், அவருடைய நாய் முன்பு ஓட, உலாவப் புறப்பட்டார். இது அவருடைய பழக்கம்.

நினைவுகள் பலப் பலவாக ஓடின. வெகு தூரம் நடந்துவிட்டால் வெளி. அதில் ஒரு சண்பக மரம் கீழ்த்திசையில் இருக்கும் பள்ளத்தாக்கை நோக்கி இருந்தது.

மேட்டில் ஏறி, ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு, கடிதத்தை மறுபடியும் படித்து உள்ளத்தில் பொங்கும் நினைவுகளில் திளைத்துக் கொண்டிருந்தார்.

சற்று இருட்டவாரம்பித்தது. எழுத்துக்கள் தெரியவில்லை.

அதோ அந்தக் கீழ்த்திசையில் பூரண சந்திரன். அப்படியே கவனித்து மெய்மறந்தார்.

நாய் மெதுவாக, பரிதாபமாக, ஊளையிட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் ஒண்டியது. நேரமாகிவிட்டது. எழுந்தார். அந்தச் சண்பக மரத்தடியிலே என்ன? காதலி லில்லி கார்ட்டர்! எப்படி வரமுடியும்?

அவள்தான் விஷமக் குட்டியாச்சே!

வெள்ளுடை தரித்துச் சிரித்துக்கொண்டே கைகளை அசைக்கிறாள். முகம் மட்டும் சற்று வெளிறி இருக்கிறது.

கைகளை விரித்தவண்ணம். 'டார்லிங் லில்லி' என்று சொல்லிக்கொண்டு அவளை ஆரத்தழுவப் பாய்ந்து ஓடினார்.

யாராவது வெறும் வெளியை, நிலாக் கற்றையைத் தழுவ முடியுமா?

வேர்தான் தடுக்கிற்று.

'என்ன முட்டாள்தனம், அந்த பிராந்திதான்' என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.

நாய் கிளைகளின் ஊடே பாய்ந்த நிலவொளியைப் பார்த்துக் குரைத்தது.

காற்று எங்கிருந்தோ அசைந்தது. சண்பகம் தனது கனவுகளைச் சொரிந்தது.

ஸ்டேதம் கூடாரத்திற்கு வந்தபொழுது மணி எட்டிருக்கும்.

"டின்னர் ரெடி சார்" என்றான் பாய்.

மேஜையில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிளேட்டில் ஒரு 'கேபிள்' (Cable).

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாவகாசமாய், அதை எடுத்துப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்.

"ஐயோ!"

நெஞ்சில் இரும்புச் சம்மட்டியைக் கொண்டு அடித்ததுபோல் மேஜை, கூடாரம் எல்லாம் சுழலுகின்றன.

நிஜமா?

நடுங்கிக்கொண்டே திரும்ப வாசிக்கிறார்.

மிஸ்.லில்லி கார்ட்டர் நேற்று சாயங்காலம், பிக்காடில்லி மூலையில் மோட்டாரால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று காலை உயிர்துறந்தாள். அவள் வேண்டுகோளின்படி தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எங்கள் மனமார்ந்த அனுதாபம்.

டாக்டர் பர்ன்!

"கண்ணா! லில்லி! உனக்கு யாருமில்லையே! அனாதையாகவா? ஐயோ!"

"டார்லிங்! டார்லிங்!"

கையிலிருந்த தந்தி, பிடித்த பிடியில் கசங்குகிறது.

"பாய், போ! நான் பார்த்துக்கொள்ளுகிறேன்."

ஏக்கமும் பரிதாபமும் நிறைந்த உள்ளத்தின் துயரம் அந்தக் காட்டில் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது.

அன்று இரவு முழுவதும் இருவர் தூங்கவில்லை.

பாட்டில்கள் கீழே உருண்டன. துயரம், அழியாத சோகம் கலந்த சிரிப்புகள்.

விடியற்காலத்திலேயே துரை கீழே இறங்கிவிட்டார்.

அப்பையாவுக்கு நோட்டுப்புத்தகத்தைப் பார்த்ததும், என்னை மிரட்டினாலும் ஸ்டேதம் கத்துக்குட்டிதான் என்பது உறுதியாயிற்று.

*****

வில்லி ஸ்டேதத்தின் ராஜிநாமா இலாகாவில் சிறிது பரபரப்பு உண்டாக்கிற்று. அது வெகு சிறிது. உடனே ஓய்ந்தது. என்னென்னமோ வதந்திகள் உலவின. கர்னல் ரௌபாதத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

சாதாரண வில்லி ஸ்டேதம் மறுபடியும் உலாந்திக்கு வரும்பொழுது ஒரு பரபரப்புமில்லை. கூட அந்த பாய் வில்லியின் தாயின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டான்.

சண்பகமேட்டில், அதே இடந்தான். ஒரு சிறு மரக்கட்டிடம். அதில் இருவர். ஒன்று - துயரத்தின் உருவான நடைப்பித்து, மற்றொன்று அதன் தாய், பணியாள்.

சண்பக மரத்தைச் சுற்றி தேக்கங்கன்றுகள் நடுவதில் வில்லிக்கு என்ன ஆசை!

சண்பகந்தான் லில்லியாம்; தேக்கங்கன்றுகள்தான் அவர்களின் காதலின் இலக்ஷியங்களாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். குவென்டலின், லில்லி, ஆலிவ் - என்னென்ன அழகான பெயர்கள்.

கொஞ்சம் காற்று வலுத்தால் ஸ்டேதத்திற்கு உயிர் புழுவாகத் துடிக்கும்.

எந்த நேரத்திலும் அதனுடன் கொஞ்சித் தழுவிப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன இன்பமோ?

அன்று வாயு சண்டனாகத் தலைவிரித்தாடுகிறான். மேகம் கவிந்த இடைவிடாத பெருந்தாரை - ஊழிக்கூத்து.

ஸ்டேதம் அந்த இருளில் சண்பக மரத்தின் இடையைக் கையில் பிடித்துக்கொண்டு தன் தேக்கங் குழந்தைகளுக்கு அங்கலாய்க்கிறார்.

"குவென்டலீன், லில்லி" என்ற துயரக் குரல்கள் காற்றில் அமிழ்ந்து நசிந்தன.

"ஐயோ!" என்ற துயரத்தின் ஓலம்.

பாய் ஓடிவந்து பார்க்கிறான். துரைக்கு மூச்சுப் பேச்சில்லை.

உள்ளே தூக்கிச் சென்று கிடத்திவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து பிராந்தியைத் தடவி சூடு உண்டாக்கினான்.

ஒன்றுமில்லை.

சற்று நேரம் ஒரு நூலிழை போல் மூச்சு வருகிறது. பயமில்லை.

காடனுக்கு ஐந்து ரூபாய்; ரௌபாதத்திற்கு ஒரு தந்தி.

"வருவதற்கு எத்தனை நாள் சார்?"

வந்த ரௌபாதம் திடுக்கிட்டார். அறிந்த இளைஞனுக்குப் பதில் மெலிந்த துயரம் படுக்கையில் கிடந்தது; ஒருவாறு அறிந்து கொண்டார்.

மறுநாள் பிணியாளியுடன் உதகமண்டல ஆஸ்பத்திரிக்குப் பிரயாணம். ஒவ்வொரு பர்லாங்கும் மரணத்துடன் போராட்டம்.

*****

ஆஸ்பத்திரியில்...

ஸ்டேதத்தின் சாயை; துயரத்தின் வடிவம்.

நியுமோனியா. பிழைப்புக் கிடையாது; இறப்பு வரமாட்டேன் என்கின்றது.

ஒரு மாத காலம்.

அன்று ராத்திரி.

ஸ்டேதம், கர்னல் ரௌபாதத்தைப் பார்க்க வேண்டுமாம்.

இரவில் கிழவர் வருகிறார்.

ஸ்டேதம் புன்சிரிப்புடன், "முடிந்துவிடும்" என்கிறார்.

கிழவர் பேசாமல் அவன் கையைப் பிடித்து - உயிரை நிறுத்த முயற்சிக்கிறாரோ? அப்பொழுது போயர் வீரனின் கண்களில் இரண்டு துளி.

"எனக்கு ஒரு ஆசை."

"உம்!" கிழவருக்குப் பேச முடியவில்லை.

"என்னை உலாந்திச் சண்பக மரத்தடியில் புதைக்க வேண்டும். எனது சொத்துக்கள், அது கொஞ்சம்தான், அவை அந்த என்... தேக்கங் குழந்தைகளுக்கு..."

சற்று நேரம் ஒரு லிகிதம் எழுதும் சப்தம்... ஸ்டேதமின் உயில்.

நடுங்கும் கைகள் கடைசிக் கையெழுத்தை இட்டன.

"லில்லி!"

அவ்வளவுதான்.

*****

உலாந்தியில் மறுபடியும் பரபரப்பு.

சண்பக மேட்டில், சண்பகத்தடியில் ஒரு குழி, தனது காதலனை வரவேற்கிறது.

சற்று நேரத்தில் இரண்டு மோட்டார்கள்.

ஒன்றில் ஸ்டேதத்தின், என்ன? அதுதான்.

மற்றது அவனது நண்பர்கள், பரலோகத்திற்கு அனுப்பும் குரு.

'ஸர்வீஸ்' முடிந்தது.

குழியும் தன் காதலனை வரவேற்றது. இனிமேல்?

ரௌபாதம் திரும்புகிறார். ரேஞ்சர் அப்பையா, "அன்று காம்பில் குடிக்க ஆரம்பித்தார். அதன் கோளாறு. மலையில் செய்யலாமா?" என்றார்.

"அவனுடைய கனவை இழந்தான். காதலி இறந்தாள். அதுதான்" என்று சடக்கென்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அப்பையாவிற்குத் தன் துருப்பின் வேலை அல்ல என்று தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில்... காற்றும், தனிமையும்.

*****

இரவு.

நல்ல பௌர்ணமி.

சண்பகக் கிளைகளின் ஊடே நிலாக் கற்றை சவக்குழியின் பேரில் விழுகிறது.

தூரத்திலே அந்த நாயின் ஏக்கமான ஊளை.

சிறிய காற்று.

சண்பகம் தனது கனவுகளைச் சொரிகிறது.

இதனால்தான் அந்தப் பள்ளத்தாக்கிற்கு ஸ்டேதம் வாலி (பள்ளத்தாக்கு) என்று பெயர்.

ஊழியன், 28-09-1934
---------------

95. திறந்த ஜன்னல்


சாயங்காலம்.

சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.

கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.

போய் உட்கார்ந்தேன்.

"என்ன ஸார் வேண்டும்?"

ஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் கவனிக்கவில்லை.

மறுபடியும், "என்ன ஸார் வேண்டும்?" என்று குரல் கேட்டது.

"முன்பே சொல்லியாகிவிட்டதே!" என்று நினைத்துத் திரும்பினேன்.

அவன் கேட்டது என்னையல்ல; என் எதிரிலிருந்த ஒருவரை. மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப் பட்டிருந்தது. இரண்டு மூன்று வாரம் கத்திபடாத முகம்; சோர்வடைந்திருந்தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது.

கீழே குனிந்து, மேஜைக்கு அடியிலிருந்த கைகளைக் கவனித்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் (அது வெகு மெதுவாக வந்தது) "அரை கப் காப்பி!" என்றார்.

முகத்தில் 'பசி' என்பது ஸ்பஷ்டமாக எழுதியிருந்தது. கையில் சில்லறையில்லை போலும்! இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன்? நினைவில் இல்லாமலா போய்விடும்? யாரோ என்னைப்போல் இலக்கிய உலகத்தில் வேலை செய்பவர் என்ற முடிவிற்கு வந்தேன். அவர்களுக்குத்தானே இந்தக் கதி வரும்! சகோதரத் தொழிலாளி என்ற பாசம் ஏற்பட்டது. உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. தர்ம உணர்ச்சியாலல்ல, சகோதர பாசத்தால்.

எப்படி ஆரம்பிப்பது? கோபித்துக்கொள்வாரோ என்னவோ, பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடிமுழுகிப் போகிறது?

"தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!" என்று மனமறிந்து பொய் கூறினேன்.

"பார்த்திருக்க முடியாது!"

இது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை.

"எனக்குப் பசி பிராணன் போகிறதே! தங்களுக்கு உடம்பிற்கு என்ன?" என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன்.

"பசியாமல் ஏன் ஓட்டலுக்கு வரவேண்டும்?" என்றார்.

"மறந்து போயிருக்கும்; அதனாலென்ன? நீங்கள் இன்று என்னுடைய விருந்தினராக இருக்க வேண்டும், இன்று என் பிறந்த நாள்!" என்றேன்.

"காசைக் கண்டபடி இறைக்காதேயும்!" என்றார்.

"பாதகமில்லை. தயவுசெய்து..."

"சரி, உமதிஷ்டம்" என்றார். இருவரும் குதூகலமாகச் சாப்பிட்டோ ம். குதூகலம் என்னுடையது. அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண்டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி. வெகு கூச்சமுள்ள பிராணி போலும்! இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக் கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து!

ஒரு குழந்தையைப் போஷிப்பதைப் போல் மனம் கோணாமல் நாஸுக்காகச் செய்தேன். 'பில்' ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது.

எழுந்திருந்தோம். மௌனமாக அவர் முன் சென்றார்.

பணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்தேன்.

நேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான 'ஹில்மன்' காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம்.

மோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

'ஹோட்டல் காஷியர்' என்னமோ தெரிந்தவர் போல் விழுந்து விழுந்து சிரித்தார்.

நான் விழித்தேன்.

"அவன் பெரிய லக்ஷாதிபதி, பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் - இந்தச் சாப்பாட்டு விஷயத்தில்தான் - ஒரு பைத்தியம். இன்று நீர் அகப்பட்டுக்கொண்டீர் போலிருக்கிறது!" என்றார்.

நானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரியாது.

"தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த்தீரா?" என்றார்.

"நான் தர்மம் செய்யவில்லையே!" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

மணிக்கொடி, 12-08-1934
-----------------------

96. திருக்குறள் குமரேச பிள்ளை


நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, 'உயிர்க் காலேஜ்', 'செத்தக் காலேஜ்' என்று - சென்னையில் அவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம் ஒன்றுமில்லை, - அதில் இரண்டாவதாக ஒரு காலேஜ் சொன்னேனே, அதில் அவசியமாக இருக்க வேண்டிய பொருள், எங்களின் அதிர்ஷ்டத்தாலும், சென்னையின் துரதிர்ஷ்டத்தாலும், எங்களூரிலேயே இருக்கிறது. அதுதான் எங்களூர் திருக்குறள் குமரேச பிள்ளை.

இந்தத் திருவாளர் தமது திவ்ய சரீரத்திலேயே இந்த உலகத்துப் 'பென்ஷனையும்' காருண்ய அரசாங்கத்தின் பென்ஷனையும் சுமந்து மகிழும் பெரியார். இவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், குறள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வராவிட்டாலும், 'பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க' என்று வரும் பாட்டு எனது மனதில் கிடந்து கொம்மாளம் அடிக்கும்.

கொஞ்சம் வருணிக்கலாமா? உச்சிக்குடுமி. சிவனைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வைத்த 'இமிடேஷன்' நெற்றிக்கண்; கொசுவைக்கூடக் கொல்லச் சக்தியற்ற சந்தனப் பொட்டு. அதற்குப் பகைப்புலமாக விபூதி. கழுத்தில் தங்க நாண் இட்ட ருத்ராக்ஷம்... தப்பு, உருத்திராக்கம். அதை மறைக்க முடியாமல் நாணமுற்றுத் தவிக்கும் காலர்களுள்ள நாகரிகச் சீமை 'டுவில்' ஷர்ட், அதற்குமேல் நாஸுக்காகப் போடப்பட்ட டர்க்கி துண்டு, இடையில் தூய லங்காஷர் மல். இடது கையில் பொடி டப்பி, வலது கையில் மடித்த குட்டிக் குறளும், ருத்திராக்ஷ மாலையும் - இம்மாதிரி இவர் 'வெள்ளைக் கலையுடுத்து', 'புத்தகம் பொடிகை மாலை' இத்யாதி சின்னங்களுடன் தோன்றும் ஓர் ஆண் சரஸ்வதியாகவே (விஷ்ணு பெண்ணுரு எடுத்தால் சரஸ்வதி ஏன் ஆணுரு எடுக்கக் கூடாது?) தோன்றுவார். இது அவர் நமக்குச் சாதாரண நேரங்களில் சாதித்தருளும் திவ்விய சேவை. விசேஷ காலங்களில்... ஐயோ, என்னால் முடியாது.

இவர் பேச்செல்லாம் சிறு பிரசங்கங்கள். இவரைக் காணும்பொழுது எல்லாம் எனக்கு ஒரே ஒரு எண்ணம் தோன்றும். இவர் மூளையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டு இருக்கும் குறள் எல்லாம், இவர் வாயைத் திறந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருகிற மாதிரித் தெரியும். எத்தனையோ வருஷங்களாகியும் இந்தத் திருக்குறளுக்கு விடுதலை என்ற சுய ஆட்சி கிடைத்த பாடு இல்லை.

உயர் திருக்குறள் குமரேச பிள்ளைக்கு மூன்றில் எப்பொழுதும் நம்பிக்கை. தெய்வங்களும் மூன்று. இலக்கியமும் மூன்று. ஒன்று சிவஞானபோதம், இரண்டு காஞ்சி புராணம், மூன்று பெரிய புராணம். இவை மூன்றின் கருத்தையும் கலந்து பொருந்தியது திருக்குறள் என்ற தமிழ்மறை.

எங்களூரின் கிழக்குப் பக்கத்தில் ஒரு வெளியுண்டு. அதில் ஒரு கட்டிடம். வாரத்தில் ஐந்தரை நாட்கள் ஆரம்பப் பள்ளிக் கூடமாகவும், ஒன்றரை நாட்கள் உபாத்தியாயரின் மனைவி நெல் காயப்போடும் ஸ்தலமாகவும், மார்கழி மாதத்தில் பஜனை மடமாகவும், முக்கியமாக எங்களூர் கோகலே ஹாலாகவும் திகழ்ந்தது. அதில்தான் நமது குமரேச பிள்ளையின் 'அரங்கேற்று காதை' நடிக்கப்படும்.

வீட்டில் ஒரு பாகத்தைக் கோவிலாக்கி, கலைத்திறன் ஜலத்திற்கும் இல்லாத படங்களின் முன் புஷ்பங்களையும் மருந்தையும் வாரித் தெளித்து, பூஜை என்ற மகத்தான பொழுதுபோக்கு யக்ஞத்தைச் செய்தும், கழிக்க முடியாத மணிச் சங்கிலிகளை, இந்தத் திருச்சபையில் கழிக்க முயலும் பெரியவர்களும், பத்து ரூபாய்களுக்காக, 'பானா' 'ழானா' 'இம்மன்னா' 'பழம்', 'இரண்டும் இரண்டு நான்கு' என்ற அஸ்திவாரக் கப்பிகளை, கல்வி என்ற பெருங்கோவிலைக் கட்டுமாறு, சிறுவர் மூளை என்ற திவ்வியப் பிரதேசத்திலே நாள் முழுவதும் இடித்துச் செலுத்தும் திருப்பணியில் அயர்ந்து தளர்ந்து நித்திரை சுவானுபூதியை விரும்பும் மூளையின் கொற்றர்களும், வாழைப்பழத் தோலில் சறுக்கி விழுவதிலிருந்து, இரண்டு நாய்களின் குருக்ஷேத்திரம்வரை, இமைகொட்டாமல் பொறுமையுடன் பார்க்கச் சக்தி வாய்ந்த, குளிக்காத நாயனார்களும், - இவர்களுக்குத்தான் குமரேச பிள்ளையின் சண்டமாருதத்தைத் தாங்கும் எஃகினாலான மூளைகள் உண்டு.

சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆரம்பித்து, மேஜையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இருக்கும்வரை, அல்லது குமரேச பிள்ளைக்குப் பசி எடுக்கும்வரை, இந்தச் திருச்சபை நடக்கும். கேட்க வந்தவர்களைப் பற்றி அவருக்குக் கவலை என்ன? செவிக்குணவு இல்லாத போதன்றோ சற்று வயிற்றுக்கும் ஈயவேண்டும்!

ஒருநாள் எக்கச்சக்கமாக அங்கு அகப்பட்டுக்கொண்டேன்.

குமரேச பிள்ளை எழுந்து, 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்' என்று கண்ணை மூடியவண்ணம் பிலாக்கணம் வைத்துவிட்டுப் பேசலானார்:

"சென்ற ஆனித் திங்கள் பதினெட்டாம் நாள் அன்று எனது கெழுதகை நண்பர் கலசை உயர்திரு இளவழகனார், 'வள்ளுவனாரும் மேனாட்டு உடற்கூறு நூலும்' என்ற பொருள் பற்றி ஓர் பேருரை நிகழ்த்துமாறு வேண்டினர். யாமும் உடன் பட்டனம். புகழ் பற்றியோ எனின், அற்றன்று! நந்தெய்வத் திருமறையை இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வகுத்தருளிய செந்நாப்போதார்,

'புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாங் கிழங்கு தரும்'

என்றும்,

'உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு'

என்றும் அருளிப் போந்தார். ஆகலின், யாமும் உடன்பட்டனம்.

"பேரறிவாளர் குழுமியுள்ள மன்றத்தின்கண், நும் போன்றோர் மாட்டு அறைதற் கொன்றிலதாயினும், என் சிற்றறிவுக்கெட்டிய பொருளை வகுத்துரைக்குமாறு பெரிதும் விழைகின்றேன். இன்றைக்கு எனக்கு உரை செய்யுமாறு அருளப்பட்ட பொருள் நந்தொல்லறிவாளர் வள்ளுவ நாயனார் மேனாட்டு உடற்கூறு நூல்களை இற்றைக்கு ஐயாயிர வருடத்திற்கு முன்னரே எவ்வாறு தெள்ளிதில் அறிந்திருந்தார் என்பான் மொழிதல் பற்றி.

"துளாயிரத்து இருபத்தியாறாம் குறள் முதலடியில் ஓர் பெரும் உண்மையைக் கூறிப் போந்தார்.

'துஞ்சினார் செத்தாரில் வேறல்லர்'. இறந்தவர்கள் மாண்டவர்களில் வேறு அன்று என்ற உயர்ந்த கருத்தை எளிதாக நயம்பட செய்விதிறக் கூறியருளினார். உரையாசிரியர் பரிமேலழகர் 'துஞ்சினார்' என்னும் பதத்திற்கு உறங்கினவர்கள் என்று வகுக்கிறார். அஃது ஒரு பெரும் வழு. அன்னார் அறியாமையை எள்ளி நகையாடுகின்றேன். இறந்தவர் என்று பொருள் கோடல் சாலப் பொருந்தும். பரிமேலழகனார் அவ்வாறு கூறிப்போந்தார் எனின், அது ஓர் பெரும் ஆரியக்கூற்று. சூழ்ச்சி!

"நிற்க. கவரிமான் விலங்கினங்களில் கானில் உலவா நிற்கும் நாற்காற் பிராணி என்று பொருள் கோடல் தகும். அதன் உயிர் அதன் வாலில் இருப்பது மேல் நாட்டார் கண் கூடாகக் கண்ட காட்சி. அவர் அதைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். வேட்டையாடுங்கால் பையப் பையச் சென்று அதன் வாலில் ஓர் சிகையைப் பிடுங்கி விடுவார்களாம். இதை நம் நல்லிசைப் புலவன் தமிழ்மறை தந்த பெம்மன் அறிந்தன்றோ,

'மயிர்நீப்பின் வாழாக் கவரிமான்' என்று அருளிப் போந்தார். என்னே!

"இன்று இப்பொருள் பற்றி வலியுறுத்துவான் அவாய், உரையாசிரியர் பரிமேலழகனாரால் ஏற்பட்ட பெரும் பிழைகளைக் கண்டிப்பான் மிகுதியும் வேட்கையுடையேன் எனின் சாலப் பொருந்தும்.

"அவர் 'கண்ணோட்டம்' என்ற பதப் பிரயோகத்திற்கு அருள் என்று வகுக்கிறார். அஃதன்று. கண் அசைவு என்பதுதான் பொருள்.

'கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம், அஃதின்றேல்
புண் என்று உணரப்படும்.'

"கண்ணில் அசைவு இன்றேல் புண் போன்ற அஞ்சத் தக்கவாறு இருக்கும் என்பது மேனாட்டுத் தொன்னூல் வலியுறுத்தும் உண்மை. அது நாம் இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே யறிந்த செம்பொருள் என்னின், என்னே தமிழுலகம்! தமிழ் நாகரிகம்! அவை வாழ்க! அவை வெல்க!

"நிற்க. இற்றைக்கு..."

என்னால் பொறுக்க முடியவில்லை. ஓடிவந்துவிட்டேன்.

(நடைச்சித்திரம் என்ற தலைப்பில் வெளியானது)

------------------

97. திருக்குறள் செய்த திருக்கூத்து


துப்பறியும் இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ் என்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; அது ஒரு குற்றமல்ல - இரகசியப் போலீஸ் அல்லவா. ஆனால் போலீஸ் இலாகாவில் அவரது பிரக்யாதி தெரியாதிருப்பவன் உத்தியோகத்திலிருப்பதை விட பலசரக்குக்கடை வைக்கலாம். துப்பறியும் தொழிலில் அவர் யாருடைய சிஷ்யர் என்று நீங்கள் அறிந்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் எடுத்து எழுத வேண்டாம். மேல்நாட்டு ஷெர்லாக் ஹோம்ஸும் தென்னாட்டு பிரக்யாதிபெற்ற துப்பறியும் கோவிந்தனும் அவரது ஹ்ருதய கமலத்தில் தனித்தொகுதி பெற்று இருந்தனர். ஸ்ரீலஸ்ரீ திகம்பர சுவாமியார் அவர்களே துப்பறியும் தொழில் பஞ்சாட்சரத்தை அவர் காதில் உபதேசித்து அருளியது. இவ்வாறு மேல்நாடும் கீழ்நாடும் சம்மேளித்துப் பரிணமித்த இரகசியப் போலீஸ் வீரர் வித்தல் ராவின் திறமையைப் பற்றி இன்னும் சந்தேகிப்பவர்களை சுயமரியாதைக்கார நாஸ்திகர் என்று தள்ளிவிடலாம்.

நமது வித்தல் ராவிற்கு மாறுவேடத்தில் அபார நம்பிக்கை. அதிலும் தன்னுடைய திறமைக்கு எந்தத் தென்னிந்திய நாடகமேடை சார்லி சாப்பிளினும் போட்டி போட முடியாது என்பது இரண்டாவது நம்பிக்கை. சாதாரணமாக தாலுகா ஆபீஸ் குமாஸ்தா அல்லது எலிமெண்டரி பாடசாலை உபாத்தியாயர் மாதிரிதான் காட்சியளிப்பார். சிற்சில முக்கிய சமயங்களில்,மேல்நாட்டு உடைகளையணிந்து ஒரு ஜாவா சுருட்டு சகிதமாகப் புறப்பட்டுவிட்டால், அவரை வித்தல் ராவ் என்று நிரூபிப்பிபவர்களுக்கு என்ன வெகுமதி வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். சிவபிரான் சிற்சில சமயங்களில் அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்வதும் உண்டு. கிப்ளிங் கவிதைக்கு விதிவிலக்காக, நமது வித்தல் ராவ், கீழ்-மேல் நாடுகளின் நடையுடை பாவனைகள் இரண்டும் கலந்து பரிணமித்த ஒட்டு மாங்கனியாகத் தனித்தமிழ் சிவத்தை முறியடிப்பதும் உண்டு.

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நெருக்கடியான காலம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர், தம்மை ஒரு ஆதிசேஷனாக நினைத்து ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். வேதாந்திகள் 'சர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பார்கள். இன்ஸ்பெக்டரோ 'சர்வம் சந்தேகமயம் ஜகத்' என்பார். சிவப்புப் புடவை முதல் சிவப்புக் கழுத்துப்பட்டி ஈறாக சதிக்கூட்ட அங்கத்தினர்களின் சின்னமாகவே கருதுவார். தாடி வைத்த பைராகி முதல் நாவிதனுக்குக் கூலி கொடுக்க விதியில்லாத கூலிக்காரன் வரை தொழில் புரட்சி அங்கத்தினர்கள். இவ்வாறு இவர் தம் ஆழ்ந்த அனுபவத்தால் கண்டுபிடித்த விஷயங்களுடன், எடுத்த கேஸ்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்று வாகையே சூடி வந்திருந்தும், அவரது அந்தராத்மாவின் இலக்ஷியமாகிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவி இன்னும் இலக்ஷிய உலகிலேயே இருந்துவருகிறது. அடிக்கடி தான் எதிர்பார்த்தும் எட்டமுடியாத சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் தமது சூக்ஷ்ம சரீரம் நடமாடும் தோற்றமே இவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்து வருகிறது.

சாயங்காலம் 5 அல்லது 51/2 மணியிருக்கலாம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ், போலீஸ் சூப்பிரண்ட் துரை பங்களாவை நோக்கி தான் வழக்கப்படி செய்யும் புண்ணிய க்ஷேத்திர யாத்திரையை நடத்திக்கொண்டு இருந்தார்.

முன்னறிக்கைகொடாது தன்னை வேட்டையாட வரும் மோட்டார்களுடன் கிளித்தட்டு மறித்துக்கொண்டே சூப்பிரண்ட் துரையவர்களின் பங்களா வாசலைடைந்தார். இதற்குள் சாயங்காலமும் மேகங்களுடன் கூட்டுறவு செய்துகொண்டு வெளிச்சத்தை அதிக மங்கலாக்கிவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசைகளிலும் பார்த்தார். ஒரு மனிதப் பிராணிகூடயில்லை! பிறகு பூமியில் எங்காவது வெடிகுண்டு ஏதேனும் ஒருவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடுமோவென்று கூர்ந்து கவனித்தார். அப்படி ஒன்றுமில்லை. ஆனால் அவரது தீட்சண்யமான பார்வை ஒரு சிறு துண்டு கடிதத்தின் மீது சென்றது. உடனே பாய்ந்துசென்று வெகு ஜாக்கிரதையாக எடுத்தார். ஹா! என்ன ஆச்சரியம்! அது சிவப்பு இங்கியில் எழுதப்பட்டு இருந்தது. சாதாரண நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட காகிதந்தான். எழுதப்பட்டிருந்த விஷயந்தான் அதிக சந்தேகத்தை உண்டு பண்ணியது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி
துப்பர்க்கு துப்பாய தூ மழை

என்று இருந்தது. கையெழுத்தையும் அதில் எழுதியிருந்த மாதிரியையும் பார்த்தால் சட்டசபை அங்கத்தினராகவாவது அல்லது சென்னை சர்வகலாசாலை மாணவனாகவாவது இருக்க வேண்டும் என்று ஊகித்தார். ஆம்! எழுதியவருக்கு புரட்சி எண்ணங்கள் முதிர்ந்து பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மந்திரத்தை உச்சாடனம் செய்வதுபோல் தப்பும் தவறுமாக துப்பாக்கி என்ற வார்த்தையை எழுதியிருப்பானா? மழை திடீரென்று வந்து அவரது எழுத்து வேலையைத் தடை செய்திருக்க வேண்டும். பின் ஏன் "தூ மழை" என்று அதையும் எழுதவேண்டும்? யோசிக்க, யோசிக்க, துப்பறியும் வித்தல் ராவிற்கு, ஓர் பயங்கரமான, அபாயகரமான, கொலைப் பைத்தியம் பிடித்த புரட்சிக்காரனுடைய வேலை என்பது உறுதியாயிற்று. ஆனால் யார் என்ற மறுகேள்வி பிறந்தது. காலடித் தடங்கள் தரையில் இருக்கின்றனவா என்று பூமாதேவியை ஏறக்குறைய முத்தமிடும் அளவு முகத்தைக் குனிந்து கூர்ந்து நோக்கினார். ஒரே விதமான காலடித் தடங்கள் முட்புதர் நிறைந்த மைதானத்தை நோக்கி ஓர் ஒற்றையடித் தடத்தின் வழியாகச் செல்வதைக் கண்டார். முதலில் அவற்றை அளந்து கொண்டு வெகு ஜாக்கிரதையாக, 'ஙப்போல் வளை' என்பதற்கு நடமாடும் மனித உதாரணமாகச் சென்றார். உடை முட்புதர்கள் படர்ந்து ஓர் ஆள் உயரம் வளர்ந்திருந்தால் அம்மாதிரி நடப்பதற்கு வித்தல் ராவைப் போல் தொழிலில் பயிற்சி இருந்தால்தான் முடியும்.

இவ்வாறு பதுங்கிப் பதுங்கிச் சென்று ஓர் முட்புதரை நெருங்கினார். அதன் மறுபக்கத்தில் பிரசங்கம் செய்வதுபோல் ஓர் மனிதக் குரல் கேட்க, கிளைகளின் ஊடே முட்கள் கண்களில் குத்தாமல் நோக்கினார். அவரது தீட்சண்ய பார்வையில், பத்துப் பதினைந்து பேர் கூடிய ஒரு சிறு கூட்டத்தின் முன், சிவப்புக் கழுத்துப் பட்டியணிந்த ஒரு வாலிபன் உற்சாகமாகப் பிரசங்கம் செய்வது தெரிந்தது. சிவப்புக் கழுத்துப்பட்டி! சதியாலோசனைக் கூட்டம்! உடனே உடல் முழுவதும் வியர்த்தது. புரட்சிக்காரருக்கும் நமக்கும் 43/4 அடிதான் தூரமிருந்ததென்றால் யாருக்குத்தான் வியர்க்காது!

"இக்கொடுமையை, அநாகரீகமான, மனிதத் தன்மையற்ற கொடுமையை இனி பொறுக்க மாட்டோ ம். நாளைக்குத் தீர்மானமாக..." என்ற பிரசங்கியாரின் வார்த்தைகள், "ஆம்! ஆம்!", "நாளைக்கு", "கட்டாயமாக" என்ற வார்த்தைகளுடன் சபையோரின் கரகோஷத்தினிடையே மறைந்தது. நமது ராவ்ஜியின் மனக்கண்முன், "இரகசியப் போலீஸ் நிபுணர் கொலை" என்ற பத்திரிகைத் தலையங்கங்கள் முதல், உபகாரச் சம்பளம் பெறும் தன் விதவையான மனைவி வரை, சினிமாப் படம்போல் தோன்றி மறையலாயின. ஆனால் அடுத்த நிமிஷம் அவரது அந்தராத்மா அவரது இலக்ஷியமான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் மனக்கண்முன் தோன்றி ஓர் புதிய உற்சாகத்தையும் வீரத்தையும் அளித்தது. அங்கேயே சற்று உட்கார்ந்து கவனிப்பதென்று நிச்சயித்துக் கொண்டார்.

இதற்குள் பிரசங்கமும் முடிந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக, தலைவன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தத்தினால் எழுதாவிட்டாலும் சிவப்பு இங்கினாலாவது இருக்க வேண்டுமென்பது வித்தல்ராவினது திடமான நம்பிக்கை.

இப்பொழுது தலைவனைக் கூர்ந்து கவனிக்க அவகாசமிருந்தது. தனக்கு உளவு கொடுத்த சிறு துண்டு கடுதாசியை அவன் தான் எழுதியிருக்க வேண்டுமென்று பட்டது. பேச்சும் குரலும், ஓர் பயங்கரமான பைத்தியக்கார புரட்சிக்காரனுடையது போலிருந்தது. அவனது கால் பாதங்களும் தாம் முன்பு அளவு எடுத்த தடத்தையே ஒத்திருந்தது.

சபை கலைந்தது. ஒவ்வொருவராக பாதையின் வழியாக பசுப்போல் செல்ல ஆரம்பித்தனர். துப்பறியும் இன்ஸ்பெக்டரும் புறப்பட்டார். வலக்கையில் ஒரு நீண்ட உடைமரத்தின் முள் இருந்தது. இடது பையில் கூர்மையான பென்ஸில் இருந்தது. புரட்சிக்காரர் கண்டு கொலை செய்யவந்தால் உயிர் போகுமளவாவது ஒரு வீரப்போர் நடத்தியிருப்பார் என்பது திண்ணம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமன்றோ! ஆனால் அப்படிப்பட்ட அசம்பாவிதமான விஷயம் ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் யாவரும் சென்றபின் வெகு ஜாக்கிரதையாக மாறுவேடம் புனைந்தார். தலையில் முக்காடு இட்டு கிழவன் நடக்கிற பாவனையாக இரண்டாவது குழவிப்பருவம் எய்தி, இடையிடையே இருமல் பஜனையுடன் அந்தப் புரட்சித் தலைவனை தொடர்ந்தார். நாளைக்கு ஓர் மர்மமான சம்பவம் நடக்கப்போகிறது என்பதை திட்டமாக ஊகித்து அறிந்துகொண்டார்.

காலை பத்து மணி. பாளையங்கோட்டை கலாசாலை. விளையாடுமிடத்தில் இருந்த ஒரு பெரிய மாமரத்தினடியில் முந்திய நாள் புரட்சிக் கூட்டத்தார் உல்லாசமாகப் பேசிக் கொண்டே புத்தகங்களை அம்மானை விளையாடிக் கொண்டிருந்தனர். புரட்சித் தலைவர் என்று சொல்லப்பட்டவர் எவ்வளவு கம்பீரமாக கடிகாரத்தைப் பார்க்கமுடியுமோ அவ்வளவு கம்பீரமாக பார்த்துவிட்டு திடீரென்று ஒருவனை நோக்கி, "சங்கர், நீ அங்கு நின்று பண்டிதர் கிளாசிற்குப் போனதும் வந்து சொல்" என்று அனுப்பிவிட்டு, தனது புத்தகங்களின் இடையே வைக்கப்பட்டிருந்த நீண்ட உறையை ஜாக்கிரதையாகத் திறந்து, ஓர் பத்திரம் போன்ற கடுதாசியை மிகவும் ஊக்கமாக வாசித்துக்கொண்டிருந்தார். உறையில் 'மாணவர் வீர சுதந்திரம்' என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இவர்களுக்குச் சற்று தூரத்தில் தலையில் முக்காடுபோட்டு நரைத்த மீசையையுடைய கிழவர் இவர்களைப் பார்த்ததும் பார்க்காததுமாகக் கண்காணித்து வந்தார்.

கலாசாலை மணி, 'பாடம் ஆரம்பிக்கலாயிற்று' என்பதை நீண்ட ஓசையில் பிலாக்கணம் வைத்தது. சங்கர், "அவர் போய்விட்டார்" என்று தலைதெறிக்க ஓடிவந்து சொன்னான். உடனே எல்லோரும் புரட்சித் தலைவருக்குப் பின் வரிசையாக வந்து நின்றார்கள். சிவப்புக் கழுத்துப்பட்டி, வண்ணானை நெடுநாளாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்புக் கதர்ச்சட்டை, ஒரு மல் வேஷ்டி நம் 'புரட்சித் தலைவரது' தேகத்தை அலங்கரித்தன. வலது சட்டைப் பையில் ஏதோ பருத்துத் துருத்திக்கொண்டிருந்தது.

எல்லோரும் தலைவனைத் தொடர்ந்தனர். ஊர்வலம் வகுப்பின் கதவுவரை போய் நின்றதும், புரட்சித் தலைவர், மிகுந்த காம்பீர்யமாக நாடகத்தில் அயன் ராஜபார்ட் முதல் தடவை பிரவேசிப்பதுபோல் நடந்து சென்றது. தனது கையிலிருந்த நீண்ட உறையை, பண்டிதர் அருகிலிருந்த மேஜையின் மேல் அனாயாசமாக வீசி எறிந்துவிட்டுத் திரும்ப, வெளியிலிருந்து கூட்டம், "மாணவர் வாழ்க! மாணவர் வெல்க!" என்று ஏக குரலில் கோஷித்தது. பிறகு புரட்சி வீரர் தன்சைன்யத்தை யழைத்துக்கொண்டு தனது மாமரக் கோட்டைக்கு வந்துவிட்டார். அவசர அவசரமாக இவர்களைத் தொடர்ந்த கிழவனை யாரும் கவனிக்கவில்லை.

பண்டிதருக்கு இம்மாதிரியான நடத்தை மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்குமென்றாலும் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. பண்டிதரல்லவா? பிறகு அந்த உறையைப் பிரித்து உள்ளிருந்த பத்திரத்தை வாசித்தார். அது பின்வருமாறு:

மாணவர் சுதந்திரப் பத்திரம்

பாளையங்கோட்டைக் கலாசாலை பதின்மூன்றாவது வகுப்பு அல்லது பி.ஏ. முதல் வருஷத்து மாணவர்களது 'மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கத்தின்' ஆதரவின் கீழ் 13.8.33ல் நடந்த பொதுக்கூட்டத்தில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இச்சங்கம்,

1. மாணவர் சுயமரியாதைக்கு இழுக்காக, அநாகரீகமான, மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் பண்டிதர் நடப்பதை வெறுத்துக் கண்டிக்கிறது.

2. மாணவர்களின் தொன்றுதொட்டு வந்து உரிமைகளை (வியாசங்கள், புத்தகங்கள் கொண்டுவராமலிருத்தல் முதலியன) மறுபடியும் வற்புறுத்துகின்றது.

3. தண்டம் வசூலிக்கும் கோழைத்தனமான செய்கையை தனது முழு ஆத்ம பலத்துடனும் கண்டிக்கிறது.

4 மனிதரை விலங்கினத்தினின்றும் பாகுபடுத்தும் சிரிக்கும் உரிமை மாணவர்களுக்கு உண்டு என்பதை மிகவும் அழுத்தமாக வற்புறுத்துகிறது. மாணவர்கள் தனியாகவோ, சேர்ந்தோ, ஏக குரலாகவோ சிரிக்கலாம் என்பதை பண்டிதருக்கு மிகவும் கண்டிப்பாக அறிவிக்கிறது.

மாணவர் வாழ்க! மாணவர் வெல்க!

மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கம்

இதை முழுவதும் வாசித்த பின்னும் பண்டிதர் முகத்தில் ஓர் புன்னகைதான் தவழ்ந்தது.

வேலைக்காரனைக் கூப்பிட்டு, இச்சுதந்திரப் பத்திரத்துடன் ஓர் சீட்டும் எழுதிப் பிரின்ஸிபாலுக்கு அனுப்பிவிட்டு, அங்கு மிகவும் பொறுமையுடன் காத்திருந்த மரப்பெஞ்சுகளுக்கு, வெகு உற்சாகமாக மௌனப் பிரசங்கம் ஒன்று - தனித்தமிழ் வீர வாழ்க்கையைப் பற்றியிருக்கலாம் - நடத்திவிட்டு நேரம் முடிந்ததும் பிரின்ஸிபாலைக் காணச் சென்றார்.

பிறகு இருவருமாக புரட்சி வீரர்களுடைய மாமரக் கோட்டையை முற்றுகையிட அணுகினார்கள். அங்கு செல்லும் வரை பிரின்ஸிபாலின் கோபாக்கினி மீசையில் துடித்துக்கொண்டிருந்ததனாலும், அவர் நெருங்கியதும் தனது கைக்குட்டையால் வெள்ளைக்கொடி காட்டுவதுபோல காட்டி, ஆங்கிலத்தில் "நடேசா இங்கே வா" என்று அந்த புரட்சித் தலைவனை தமது சமரசக் கமிட்டிக்கு அழைத்தது ஓர் சுத்த வீரனது உயரிய மனோதர்மத்தைக் காட்டியது. நடேசன் தனது வீரர்களுக்கு கண்களினால் சமிக்ஞை செய்துவிட்டு கம்பீரமாக நடந்து சென்று, தனது பூரண சுதந்திரத்தை பிரின்ஸிபால் முன்னும் நிலைநாட்ட பயப்பட மாட்டான் என்பதைக் காண்பிக்குமாறு தனது (துருத்திக்கொண்டிருந்த) பையில் கையைப் போட்டார்.

"அடே பாவி! என்ன செய்யப்போகிறாய்" என்று கத்திக் கொண்டே அங்கிருந்த கிழவர் நடேசன் மீது பாய்ந்து, அக்கையை எட்டிப் பிடித்து வெளியே இழுக்க முயன்றார்.

தனது பூரண சுதந்திரத்தை நிலைநாட்டும் சமயத்தில் குறுக்கே விழுந்து தடை செய்யும் கிழவரையா நடேசன் பொருட்படுத்துகிறவன். "முடியாது" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, பையில் வைத்த கையை எடுக்காமல் தனது தலைமைப் பதவிக்கு வரவிருந்த இகழை தனது முழு ஆத்ம பலத்துடனும் துடைத்துவிட்டான். கிழவரோ தமது பிடிக்கும் திறமையில், உடும்பின் உடன்பிறந்த சகோதரன்போல் காணப்பட்டார். நடேசன் இதை மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கத்தின் குருக்ஷேத்திரமாக எண்ணினான். வித்தல் ராவ் இதை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டும் இரண்டாவது பிளாசியுத்தமாக மதித்தார்.

இம்மாதிரி எதிர்பாராதவிதமாய் தமது சமரச மகாநாட்டிற்கு வந்த இடையூறு பிரின்ஸிபால் துரையவர்களின் மனதில் ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்திவிட்டது. தமது தலைவரின் வீர யுத்தத்தைக் கண்ட மாணவர்கள், "மாணவர் வெல்க!" "ஸ்ரீயுத நடேசருக்கு ஜே!" என்று கோஷித்து உற்சாகமூட்டினார்கள்.

பிரின்ஸிபாலும், பண்டிதரும் என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நின்றனர்.

இதற்குள் கிழவருக்கும், குமரருக்கும் நடந்த முஷ்டி யுத்தம், ஜய லக்ஷ்மியை யாருக்கு வெற்றியைக் கொடுப்பது என்னும் ஓர் நெருக்கடியான நிலைமையில் கொண்டுவந்து வைத்துவிட்டது. கடைசியில் கிழவர் திடீரென்று தந்திரத்தை மாற்றி, குஸ்தி திறமையால் வாலிபன் கையை அப்படி இப்படி திமிறவிடாமல் பிடித்துக்கொண்டார். அந்தோ! அன்று மாணவ சு.சு. சங்கத்தின் தோல்வியாகவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வெற்றியாகவும் போர் முடிந்தது. கிழவரானாலும் சிங்கத்தின் தைரியத்தைப் படைத்த வெற்றி வீரனைக் கண்டு யாவரும் சித்திரப் பதுமைபோல் நின்றனர்.

இடக்கையால் நடேசனைப் பிடித்து இறுக்கிக்கொண்டு, மிகுந்த கம்பீரமாகவும் அனாயாசமாகவும் தனது வலது கையால் வெள்ளைக்காரர் தொப்பியை எடுக்கும் பாவனையாக பொய் மீசையை எடுத்துவிட்டு "நான் தான் வித்தல் ராவ் சி.ஐ.டி." என்று பிரின்ஸிபாலுக்கு தனது சுய உருவை கடாக்ஷித்தருளினார். காரியம் என்னதென்று விளங்காவிட்டாலும் பிரின்ஸிபாலுக்கு வித்தல் ராவின் நாடகத்திறமையைப் போற்றாமலிருக்க முடியவில்லை. அவர் உடனே, "உமக்கு எனது மாணவருடன் என்ன வேலை?" என்றார்.

"அவன் ஒரு பயங்கரமான புரட்சிக்காரன். உம்மேல் வெடி குண்டை எறிய எத்தனித்தான். நேற்றே இவன் சூழ்ச்சியை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன். என்னை இவன் ஏமாற்ற முடியுமா?" என்று சொல்லிக்கொண்டே புரட்சித் தலைவன் சட்டைப் பையிலிருந்த அந்த பயங்கரமான வஸ்துவை எடுத்தார். அது கசங்கிப்போன ஒரு சோற்றுப் பொட்டணமாக இருந்தது! உடனே யாவரும் சிரிக்காமலிருக்க முடியவில்லை.

"வாலிபனாகிலும் இவ்வளவு தந்திரம் உன்னிடம் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடிக்காதே! என் கையில் ரிக்கார்டு இருக்கிறது" என்று நடேசனை நோக்கி உறுமிவிட்டு, பிரின்ஸிபால் துரையிடம் பேச எத்தனித்தார்.

இப்பொழுது வித்தல் ராவ் தான் வரம்பு மீறி கலவரம் விளைவிக்கவில்லையென்பதை பிரின்ஸிபாலுக்கு ருசு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தான் கண்டுபிடித்த விஷயங்களை எடுத்து சொல்லி சிறு துண்டு கடிதத்தையும் காண்பித்தார்.

"எங்கே, அந்தத் துண்டுக் கடிதத்தைப் பார்ப்போம்" என்றார் பண்டிதர்.

"இதோ இந்தாருங்கள்" என்று கொடுத்தார். பண்டிதர் அதை வாங்கி, கவனித்துவிட்டு, "நடேசனுக்கு தமிழில் போய்விடும் போலிருக்கிறதே. எத்தனை தப்பு, குறள் கூடவா சீர்தளைகளைக் கவனித்து எழுதத் தெரியாது?" என்று பண்டிதர் சிறிது கோபப்பட்டுக் கொண்டார்.

"இது இவன் எழுதியதுதான் என்று தெரிந்தும் இவனையும் இவன் கூட்டத்தையும் ஏன் கைது செய்யக்கூடாது?" என்று தமது கட்சியை ஸ்தாபித்தவர் போல் வித்தல் ராவ் கர்ஜித்தார்.

பண்டிதர் மிகவும் சாவதானமாக "இது திருக்குறள்; இதற்கு பரிமேலழகர் உரை சொல்லுகிறார்..." என்று ஆரம்பித்து ஒரு சிறு பிரசங்கம் நடத்தினார்.

வித்தல் ராவ் தனது முழு சாமர்த்தியத்தாலும் ஒவ்வொரு அம்சமாகக் கண்டுபிடித்த கேஸ், அந்த சோற்றுப் பொட்டணத்தைப்போல் சிதைந்து போனது மிக்க பரிதாபகரமாகயிருந்தது.

பிரின்ஸிபாலும், "நீங்கள் வகுப்பிற்குப் போங்கள். ராயர்வாள், உமது துப்பறியும் திறமையை வேறிடத்தில் காட்டும். நீர் என் (மார்பைத் தட்டிக்கொண்டு), மாணவரை சந்தேகித்தது என்னைச் சந்தேகித்தது மாதிரி. இனி இங்கு அரை நிமிஷமும் நிற்கக் கூடாது. போம்" என்று ஒரே கல்லில் இரண்டு பட்சிகளையடித்த மாதிரி தமது அதிகாரத்தை நிலைநாட்டி மறைந்தார்.

ஐந்து நிமிஷங்களுக்கப்புறம் மா.சு.சு. சங்கத்தின் அங்கத்தினர்கள் மாமரக் கோட்டையில் மருந்திற்காவது கிடையாது.

வித்தல் ராவ் திரும்பிப்போன யாத்திரையை வர்ணிக்க நம்மால் முடியாது.

தம்மை ஏமாற்றி தமது கேஸைப் பாழாக்கின திருக்குறளையும் அதை எழுதியவரையும் அவர் இன்றும் மன்னிக்கவேயில்லை.

காந்தி, 10-05-1934
------------------------

98. தியாகமூர்த்தி


செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த,

தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
தானே வந்தால் இங்கு விடுவானே தோணி

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.

தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.

உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.

கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.

*****

'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.

மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.

அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.

*****

ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

இனி என்ன செய்வது?

இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

'இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார். ஒரு கை பார்த்தால் தான் என்ன?'

வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம் கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி. மனசு அதில் லயித்துவிட்டது.

"என்ன அப்பா, இப்படி இருக்கே?" என்றதற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை. இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம். பயந்து நடுங்கினார்கள்.

"நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார். வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை நிறைவேற்றப் புறப்பட்டார்.

எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

"வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல். நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை" என்றார் நாயுடு.

"எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது" என்றார் ராமசாமி. குரல் வித்தியாசமாக இருந்தது.

குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து, "நீ நாளைக்கு வா" என்றார்.

"நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன். என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்" என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த நோட்டுக்களில் கையை வைத்தார்.

நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான். அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா? ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். "உண்ட வீட்டில் கெண்டி தூக்கிய பயலை விடுகிறேனா பார்" என்றார்.

விவரிப்பானேன்?

பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலகமல்லவா?

பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டுபிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

காந்தி, 5-9-1934

--------------------

99. துன்பக் கேணி


1

வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக் கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம். ஊரைச் சுற்றிலும் பனை. பெட்ரோல் நாகரிகத்தின் ஏகாதிபத்தியம் செல்லும் ஜில்லா போர்ட் ரஸ்தாகூட, அது தன் மதிப்பிற்குக் குறைந்தது என்று நினைத்துக் கொண்டு, ஊரைவிட்டு விலகி 1/2 மைலுக்கு அப்பாலேயே செல்லுகிறது. ரஸ்தாவைவிட்டு இறங்கிக் கிழக்குப் பக்கமாக ஒரு மைல் சுமாருக்கு உடைமுள்ளும் சோற்றுக் கத்தாழையும் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருக்கும் வண்டித் தடத்தில் சென்றால் ஒரு பனங்காட்டில் கொண்டுவிடும். அந்தக் காட்டில் தான்தோன்றியாகச் சென்று கொண்டிருக்கும் எந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றாலும் வாசவன்பட்டி எல்லைக்கு வந்துவிடலாம்.

ஊர் ஆரம்பித்துவிட்டது என்ற குறிப்பு என்னவெனில், பனங்காடு முடிந்து மறுபடியும் அந்த வண்டித்தடம் இரண்டு குட்டிச்சுவர்களுக்கிடையில் அற்புதமாகத் தோன்றுவதுதான். அவ்விரண்டு குட்டிச்சுவர்களும் எதிர்எதிராக இரண்டு 'நந்தவனத்தை'ச் சுற்றி வருகின்றன. தங்க அரளியும், செவ்வரளியும், முல்லையும் தறிகெட்டு வளர்ந்திருக்கும் ஒரு பிரையிடம். 'நந்தவனம்' ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு உண்டு.

இதைக் கடந்துவிட்டால் கிழக்கே பார்த்த கோவில், மிகவும் பாழடைந்து, மதில்கள் இடிந்து, மொட்டைக் கோபுர அலங்காரத்துடன் காணப்படும். அந்தக் கோவிலின் அர்ச்சகர் வீடு ஒன்றையும் இரண்டு மூன்று இடிந்து கூரை விழுந்த வீடுகளையுமுடைய தெருத்தான் அக்ரகாரம். அது இருபது அடிக்கப்புறம் மறுபடியும் திரும்பி, கத்தாழைச் செடி பூவரச மரங்களுக்கிடையில் சென்று, பிள்ளைமார் வீதியாக மாறுகிறது. தட்டோ டு போட்டு நாழி ஓடுகளால் சாய்ப்பு இறக்கிய பெரிய வீடுதான் பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளையின் வீடு. அதைத் தொடர்ந்த இரண்டு மூன்று வளைவுகளில் கணக்கு முதலியார், கி.மு. சங்கரலிங்கம் பிள்ளை, பலசரக்குக் கடை ஓட்டப்பிடாரம் பிள்ளை - ஓட்டப்பிடாரம் என்ற ஊர் அவரது பூர்விகம் - வாத்தியார் சுப்புப் பிள்ளை, பிள்ளையார் கோவில் பூசாரி வேணுவலிங்கப் பண்டாரம் - இவர்கள் எல்லோரும் வசிக்கும் குடிசைகள். குடிசைகளைப் பார்த்தாலே, அவர்கள் பண்ணைப் பிள்ளையைப் போல் வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெற்றவர்கள் அல்லர் என்று தெரிந்துவிடும். எல்லாரும் பண்ணைப் பிள்ளையவர்களின் வயல்களை, வாரமாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து ஜீவிப்பவர்கள். வேளாளர் எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். கமறும் தேங்காயெண்ணெய் வாசனை பரிமளிக்கும் இந்தத் தெருவைத் தாண்டினால் ஊர்ப் பொட்டல். அதில் தனிக்காட்டு ராஜாவாக, தேஜோமயானந்தமாக, ஊர்க்காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம் நெடுமரம் போல் காறைக் கட்டியினால் உறுதியாகக் கட்டப்பட்டு நிற்கும். இடிந்து விழுந்த கோவிலில் மூர்த்தீகரமாக எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணுவை விட இவருக்கு ஊர் மக்களிடையில் அதிக மதிப்பு உண்டு. அது அந்தச் சுடலைமாடனுக்குத் தெரியுமோ என்னவோ! அதைச் சுற்றி ஐந்தாறு மறவர் குடிசைகள், இவற்றில் ஊர்த் தலையாரி முதலியோர் வசிப்பார்கள். குடிசைகளைத் தாண்டிச் சென்றால் மானாவாரிக் குளம் - அதாவது தண்ணீருக்கு வானம் பார்க்கும் ஏரி. அதன் இக்கரையின் வலப்புறத்தில் பறைச்சேரி; அங்கு ஒரு முப்பது குடிசைகள்.

வேளாளர் தெருவில், ஊர்ப் பொட்டலை அணுகினாற் போல் பண்ணைப் பிள்ளையவர்கள் கட்டிய சவுக்கை, ஓலைக்கூரை வேய்ந்த திண்ணை, ஒட்டப்பிடாரம் பிள்ளையின் பலசரக்குக் கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கும். ஊர்ப்பேச்சு, ஊர்வம்பு, கி.மு.வின் அரசாங்க நிர்வாகம், சீட்டாட்டம் எல்லாம் அங்குதான். சவுக்கையில் வேனிற்காலங்களில் இரவில் ஆட்கள் படுப்பதற்கும், பகலில் 'பெரிய மனிதர்' சாய்ந்திருந்து போவதற்கும் கோரைப் பாய், அழுக்குத் தலையணை, திண்டு முதலியவை மூலைக்கு ஒன்றாகக் கிடக்கும். ஓட்டப்பிடாரம் பிள்ளையின் கடையில் ரூலர் சிகரெட் முதல் பின்னை எண்ணெய் வரை வாங்கிக் கொள்ளலாம். மகா சிவராத்திரி, சுடலைமாடனுக்குக் கொடை முதலிய காலங்களில் அவர் சீட்டுக்கட்டுகளும் விற்பார். ஓட்டப்பிடாரம் பிள்ளை பலசரக்குகளில் மட்டும் வியாபாரம் செய்பவர் அல்லர். குழிப்பெருக்கம், அரிவரி முதலிய ஆரம்பக் கல்வி விஷயங்களிலும் பண்டமாற்று வியாபாரம் நடத்துபவர். உற்சாகம் வந்துவிட்டால் கடை முன்பு கூடியிருக்கும் தேவமார்களுக்கு 'மருதை வீரன்' கதை, அல்லியரசாணி மாலை முதலியவற்றை வாசித்துக் காலட்சேபம் செய்வார். சவுக்கையில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் அடிபட்டால் அவர் கடையிலிருந்து கொண்டே கூட்டத்தில் தம்முடைய பங்கையும் சேர்த்துவிடுவார்.

கோடைக்காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட்டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் ஓட்டப்பிடாரம் பிள்ளைக்கும் அதைவிட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்கடை வைத்திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை. சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை பிள்ளையவர்களின் கடை முன்பு சந்தை இரைச்சலாக இருக்கும்.

வாசவன்பட்டியில் அறுப்பு ஆரம்பித்துவிட்டது. சாயங்காலம் பொழுது சாய்கிற சமயம். கணக்குப் பிள்ளையும், கி.மு.வும் சவுக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கி.மு. வரி வசூலிப்பதிலும் மும்முரம். அவர் முன்பு அரசாங்கப் பழுப்புக் காகித நோட்டு புத்தகங்கள், நீளமான பை - இத்யாதி கிடக்கின்றன. பக்கத்தில் சவுக்கையின் ஓரத்தில் தலையாரி கட்டையத் தேவன் நின்று கொண்டிருக்கிறான்.

"கட்டையா, கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்தா! ஆமாம், பாக்கும் இல்லே போலிருக்கு; எல்லாமா ஒரு துட்டுக்கு வாங்கியா!" என்றார் கணக்குத் தீத்தாரப்ப முதலியார்.

"ஆமாம், அவுக கேக்கதை வாங்கியாந்திட்டு, வெள்ளையனைப் பாத்து இளுத்தா! அவன் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான். நாளெவிடியன்னைக்கிக் கச்சேரிக்குப் போகணும், யாவுகம் இருக்கா?" என்று சொல்லிக்கொண்டே குறிப்பிலிருந்தவற்றைத் தாக்கல் பண்ணிக்கொண்டிருந்தார் கி.மு.பிள்ளை.

அப்பொழுது, மேலெல்லாம் பயிரின் புழுதி படிந்து, கக்கத்தில் ஒரு குடையை இடுக்கியவண்ணம், பின்புறம் இரண்டு மூன்று மறவர்கள் கைகட்டி அவருடைய பேச்சைக் கேட்டுவர, வியர்த்து விறுவிறுத்துக் கொண்டு, பண்ணையப் பிள்ளை வந்து, "அப்பாடா!" என்றவண்ணம் சவுக்கையில் உட்கார்ந்தார்.

"வாருங்க அண்ணாச்சி! மேனி எப்படிக் கண்டது!" என்றார் கி.மு.

"மேனியாவது, எளவாவது! சவத்தைத் தள்ளுங்க. ஏலே ஆண்டி, வீட்டுக்கு என்ன வேணுமென்று பாத்துவிட்டு வா!" என்று ஒருவனை அனுப்பினார்.

"என்ன அண்ணாச்சி, ஆலடியிலே அறுப்பெத் தொடங்கிட்டிய போல இருக்கெ - இரு சவமே, அண்ணாச்சி கிட்ட பேசுதது தெரியல்லே - வர வர பறக் களுதைகளுக்கும் திமிறு ஏறுது!" என்று எதிரில் இருந்த பறைச் சிறுமியை அதட்டிக் கொண்டு, பண்ணையாரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் ஓட்டப்பிடாரம் பிள்ளை.

"ஆமாம், ஒண்ணுக்கும் குறைவில்லை, எல்லாம் ஒரு தொல்லைதான். போன திங்கக் கெளமை கோடு (கோர்ட்டு)க்குப் போயிருந்தேன். கப்பலரிசி வந்து மூட்டை மூட்டையாகக் குவியுதாம். பேட்டைப் பிள்ளை சொன்னார். இங்கையா, மண்ணோடு முட்டினாலும் ஒண்ணுமில்லை. அங்கெ நிக்கது மருதியா - ஏ மூதி! தொளுவிலே மாட்டுக்கு ரெண்டு செத்தை எடுத்துப் போட்டுவிட்டு வா!" என்று அதிகாரம் பண்ணிவிட்டு, "பிள்ளைவாள், ஆண்டி வந்தானா நந்தவனத்துக்கு வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்" என்று குறுக்குப் பாதையாக அங்கு சென்றார்.

"ஏட்டி, ஒம் புருசன் என்னமோ பணங் குடுக்கணும் என்று சொல்லுதாகளே, அதுக்குப் பண்ணையாரு கோவிச்சாகளாக்கும்; இருந்தாலும் ஊரு பெரியவுகளை பகைச்சுக் கிடலாமாட்டி!" என்று மருதியிடம் பேச்சுக் கொடுத்தார் கடைக்காரர்.

"என்ன சாமி, எம் பள்ளன் பண்ணை யெசெமாங்கிட்டெ என்னமோ ஒரு ரெண்டு நூறு வாங்கிருக்காஞ் சாமி. ஊருக்குப் பெரிய நாயம்மாரே இப்படிப் படுத்துனா, நாங்க என்ன செய்வோஞ் சாமி? அதுலெ ரெண்டு காளையும் வண்டியும் வாங்கினா, இப்பொ அதுவும் - அந்தச் சொடலைதான் பாக்கணும்! - இவிய இப்படி உறுக்கினா, பணத்துக்கு எங்கே போக? சாமி, இம்பிட்டு கருப்பட்டிப் போயிலையும் சருகும் குடுங்க சாமி, தொளுவெப் பாத்துக்கிட்டு வாரேன்!" என்று அவளுக்குத் தெரிந்ததைப் புலம்பிக்கொண்டு மாட்டுத் தொழுவத்தின் பக்கம் சென்றாள் மருதி.

2

மருதியின் புருஷன் பண்ணைப் பிள்ளையிடம் கடன் வாங்கும்பொழுது, 'நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவோம்' என்ற நம்பிக்கையிருந்துதான் வாங்கினான் என்று நினைக்க முடியாது. கொஞ்ச நாட்கள் மாட்டை உபயோகித்துக்கொண்டு, அது நோஞ்சானாகும் சமயத்தில் பண்ணை எஜமானின் காலைப் பிடித்துப் பணமாகக் கடனைக் கொடுக்காமலிருந்து விடலாம் என்ற யோசனையின் பேரில்தான் நடத்தியிருக்கவேண்டும். பண்ணை எஜமான் இவனுடைய கூழைக் கும்பிடுகளுக்கெல்லாம் மசிகிற பேர்வழியாகக் காணப்படவில்லை. மேலும் அவர்தான் என்ன செய்வார்? எங்கு பார்த்தாலும் பணமுடை; தீர்வைக்குக் கூடக் கட்டி வராது போலிருக்கிறது. நிலத்தில் ஜெண்டாவை நட்டுவிடாமலிருக்க, மசிகிற பேர்வழிகளிடத்தில் சிறிது (அரசாங்கத்தின் பயத்தினால் ஏற்பட்ட) முரட்டுத் தனத்தோடு நடந்துகொண்டார். காளைகள் அவர் வசமாயின. அவ்வளவுதான் மிச்சம். ஊர்ப் பறைச்சேரியில் ஏக களேபரம். வெள்ளையனும் அவன் பெண்டாட்டியும் குய்யோமுறையோவென்று கத்தினார்கள். வெள்ளையன் கொஞ்சம் முரண்டினான்; உதை கிடைத்தது.

பண்ணையார், 'பறச் சனமோ குறச் சனமோ!' என்று வெறுத்துக் கொண்டார். என்ன செய்தாலும் நன்றியில்லை என்ற மனக் கசப்பு.

வெள்ளையன் அன்று இரவு வெகு நேரம்வரை வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் விடியற்காலமாகப் பண்ணைப் பிள்ளையவர்கள் வெளியில் செல்லுமுன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பார்த்து விட்டுப் போகலாமே என்று உள்ளே நுழைந்தார். வெள்ளையனின் நோஞ்சான் காளைகள்தான் அசைபோட்டுக் கொண்டு ஆள் அரவத்தைக் கேட்டு எழுந்திருந்தான். மயிலைக் காளைகள் இரண்டையும் காணவில்லை. உடனே, கி.மு. பிள்ளையை எழுப்பிக் காண்பித்துவிட்டு, சவுக்கையின் பக்கத்தில் கிடந்த தலையாரித் தேவனை எழுப்பிச் சமாசாரம் சொன்னார்கள்.

தலையாரித் தேவனுக்கு வெள்ளையன்மீது சந்தேகம். உடனே அவன் வீட்டிற்குச் சென்று பார்க்க, மருதி மட்டுமே அங்கிருந்தாள். புருஷன் எங்கே என்று மூவரும் நின்று விசாரிப்பதைப் பார்த்து, உள்ளுக்குள் பயந்துகொண்டு, தன் புருஷன் அவ்வளவு நேரம் வீட்டிலிருந்துவிட்டு அப்பொழுதுதான் வெளியே போனான் என்று ஒரு பொய் சொன்னாள்.

அவள் சொல்வது நிஜமா பொய்யா என்பதைத் தீர்மானிப்பதற்குத் தலையாரித் தேவனுக்கு ஒரே வழிதான் தெரியும். உடனே தலை மயிரைப் பிடித்திழுத்து, அவளைக் கீழே, தள்ளி, உதைக்க ஆரம்பித்தான். தேவனுக்கு மருதியை உதைப்பதில் ஒரு குஷி.

அவள் குய்யோமுறையோவென்று கத்தினாலும் தலையாரித்தேவனின் ஜம்பம் சாயவில்லை. அதற்குள் சேரி திரண்டது. களவு விவரமும் பரவியது. வெள்ளையனை இரவு வெகு நேரம் வரை கள்ளுக்கடையில் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள்.

பிறகு என்ன? மருதி எவ்வளவு கூச்சல் போட்டும் பயனில்லை. வெள்ளையன் பனங்காட்டில் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்ததைக் கண்டுகொண்டார்கள். ஆள் விடப்பட்டவுடன், அவன் உண்மையில் திருடாமல் இருந்தாலும் என்ன? விஷயம் வெகு எளிதில் போலீஸ் கேசாக மாறி, வெள்ளையன் சிறைக்குச் சென்றான்.

அவன் சிறை செல்லுமட்டும் ஊர் அல்லோலகல்லோலம்தான். முடிவில்லாமல், சளைக்காமல், பேசுவதற்குச் சமாசாரங்கள் நிறைந்திருந்தன. பண்ணைப் பிள்ளையவர்கள் என்ன முட்டிக்கொண்டும் மாடுகள் வந்தபாடில்லை. அதற்காக வெள்ளையன் பயலைச் சும்மா விடுகிறதா? ஏமாற்றிய பணத்திற்காவது அங்கு போய்விட்டு வரட்டுமே என்பதுதான் அவருடைய வாதம்.

இந்தக் களேபரக் காலத்தில் மருதிக்கு இரண்டு மாதம், அவளைப் பொறுத்தவரை, சேரியில் கிடைக்கும் சௌகரியங்களுக்குத் தகுந்தவாறு, வெள்ளையனுடன் 'கண்ணாலம்' செய்து கொள்ளும்பொழுது வாழ்க்கை இன்பகரமாகத்தான் ஆரம்பித்தது. புது மாப்பிள்ளை என்ற உற்சாகத்தில் அவன் வண்டியும் மாடும் வாங்கி இக்கோலமாகும் என்றிருந்தால் அவள் என்ன செய்ய முடியும்? வெள்ளையன் மீது அவளுக்கு அளவுகடந்த பிரியந்தான். இருவரும் கள்ளைக் குடித்துவிட்டு அடிக்கடி சச்சரவிட்டுக் கொண்டாலும் சேரியின் திருஷ்டி தோஷத்தைப் பெற்றிருப்பார்கள். எப்படியோ வெள்ளையன் சிறை சென்றான். மருதி அப்பன் வீடு சென்றாள். பிள்ளையவர்களுக்கு ஏச்சும் இரைச்சலுந்தான் மிச்சம். ஆனால், வெள்ளையன் சிறைக்குப் போனதில் பணத்திற்குப் பதிலாக ஒரு திருப்தி.

எங்கு பார்த்தாலும் பணமுடையாகவும் நிலங்கள் தீய்த்து போயும் இருக்கும் காலத்தில், அப்பன் வீடானாலும், அன்பையும் ஆதரவையும் தவிர வேறு என்ன கிடைக்கப் போகிறது. அதிலும் ஏழைப் பறையனாக இருக்கும்பொழுது? அந்தச் சமயம் பார்த்துச் சாலைக்குக் கப்பி போட ஆரம்பித்தார்கள். மருதிக்கும் அவள் பெற்றோருக்கும் சிறிது வேலை கிடைத்தது. இரண்டு மூன்று மாதம் கையில் காசு ஓட்டம். வீட்டிலே, புருஷன் அநியாயமாகச் சிறை சென்றான் என்பதைத் தவிர வேறு ஒரு கவலையும் இல்லாமல் இருந்தது.

எப்பொழுதும் சாலையில் கப்பி போட்டுக்கொண்டேயிருக்க ஜில்லா போர்டிற்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மறுபடியும் கஷ்ட சக்ரம் அவர்கள் மீது சுழல ஆரம்பித்தது.

அப்பொழுது தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே! அதற்காகத் திரைகடலோடிச் சுதந்திரத்தைப் பணையம் வைத்தால் என்ன? கடைசியிலாவது ஏதாவது மொத்தமாகக் கொண்டுவரலாமே!

மருதியும் அவளுடைய தாயாரும் கங்காணியுடன் கொழும்புக்குப் புறப்பட்டார்கள்.

3

விஸ்வாமித்திரரும் வியாசரும் மலைக்குச் செல்வதற்குக் காரணம் ஒன்று; மிஸ்டர் ஸ்டோ டார்ட், ஐ.ஸி.எஸ்., மலைக்குச் செல்வதற்குக் காரணம் வேறு; ஸ்ரீமதி மருதியம்மாள் மலைக்குச் செல்வதென்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரிஷிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றி ஆராய்வது நாஸுக்கில்லை என்று கூறுவார்கள். மருதியம்மாளின் மலைவாசத்தைப் பற்றியும் அப்படித்தான்.

'வாட்டர் பால்ஸ்' என்பது தேயிலைத் தோட்டத்திற்காகவே தெய்வத்தினால் இலங்கையில் சிருஷ்டிக்கப்பட்ட இடம் என்பது கிரௌன் தேயிலைத் தோட்டத்தின் தற்போதைய முதலாளியான ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் திட்டமான, அபிப்பிராயம். இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால், ஸர் ஜோஸப் சீமையை விட்டுச் சிறிதாவது விலகியதே கிடையாது. இங்கிலீஷ் 'பீப்'பும் (மாட்டுக்கறி), இங்கிலீஷ் 'பேக்க'னும் (பன்றி இறைச்சி) அவர் சொந்தப் பார்வையிலேயே தயாரிக்கப்படாத தேசம் அவர் தேகத்திற்கு ஒத்து வராது என்று அவருடைய ஹார்லி தெரு (லண்டனில் பிரபல வைத்தியர்கள் வசிக்குமிடம்) குடும்ப வைத்திய நிபுணர் அவருக்குக் கூறியிருக்கிறாராம். அதற்காக, மலேரியாவிற்கும் சூரிய உஷ்ணத்திற்கும் வருஷம் 2000 பவுனுக்கு ஈடு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளும் நபர்களிடம் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை அவர் விட்டு விடுவது வழக்கம்.

தற்பொழுது பாட்ரிக்ஸன் ஸ்மித் என்றவர் 'வாட்டர் பால்'ஸில் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் 45 வயதுப் பிரம்மசாரி. அவருக்கு இரண்டு விஷயங்கள் சந்தேகமில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மசாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்; இரண்டாவது, தேயிலை உற்பத்தியில் கறுப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்புக் கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்.

கறுப்பு மனிதர்கள் 'வாட்டர் பால்ஸ்' என்ற இடத்தை 'வாட்டர் பாலம்' என்று கூறுவார்கள். இலங்கைக் குன்றுகளின் சரிவில் ஒரு நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அந்த மலைச்சரிவில், இரண்டு மைல் நீளமும் மூன்று மைல் அகலமுமுள்ள தேயிலைக் காடு நீர்வீழ்ச்சியின் இருபக்கத்திலும் உள்ளது. துரையவர்களின் பங்களா, நீர் வீழ்ச்சிக்கு மேலே ஒரு பாதையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே, அந்தப் பெயரற்ற காட்டாற்றின் மறுபக்கத்தில், கூலிகளின் காறைக் குடிசைகள் - கோழிக்கூடுகள் மாதிரி. அதற்கும் தள்ளி ஒரு ஆஸ்பத்திரி, மற்ற கறுப்பு அதிகாரிகள் இருக்கும் இடங்கள். அதிகாரிகளோ, தோலைத் தவிர மற்ற எல்லா அம்சத்திலும் துரைகளின் மனப்போக்கையுடையவர்கள். அங்கு போய்க் குடியிருந்தால் இரண்டு விதமான மனப்பான்மைதான் ஏற்படும். ஒன்று அங்கிருக்கும் கறுப்புத் துரைகளுடையது. இரண்டாவது சிறைக்குத் தயாராக்குவது, மூன்றாவதும் ஒன்றிருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி போடுவது.

தட்டப்பாரையில் தங்கி, பிறகு கப்பலேறி மலைக்கு வருமட்டும் மருதிக்கும் அவள் தாயாருக்கும் என்னவோ பெரிய புதையல் எடுக்கப் போவதாக உற்சாகம். 'வாட்டர் பால'த்திற்கு வந்தவுடன் அதன் சீதளமான பருவமும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த காறைக் குடிசையும் கவர்ச்சித்தன. தேயிலை பறிக்கும்பொழுது குடையாகத் தலையில் போட்டுக் கொள்ளவும் கம்பளி. வாரத்திற்கு வாரம் கைமேல் காசு! எல்லாம் வெகு சௌகரியமாக இருந்தன. அங்கிருக்கும் நாற்றம் வாசவன்பட்டிச் சேரியின் நாற்றத்தைவிடச் சிறிது அதிகம். அதுவும் சில நாட்களில் பழகிப் போய்விட்டது. குளிரின் கடுமையால் காலை 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். பிறகு கஞ்சியைக் காய்ச்சிக் குடித்துவிட்டு, முதுகில் ஒரு கூடையைப் போட்டுக் கொண்டு தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்லுவார்கள். முதலில் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுப் பழகிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வாரத்திற்குக் குஷாலாகத்தான் இருந்தது. ஆனால், கூட வேலை செய்யும் பெண் கூலிகளின் பேச்சும் நடத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மூன்றாவது வாரத்தில் தாய்க் கிழவிக்கு மலைக் காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக மருதியும் போய்விட்டு வருவாள்.

அப்பொழுது தேயிலை ஸ்டோர் மானேஜர் அவளை ஆஸ்பத்திரியில் கண்டார். 'புது உருப்படி' என்பதால் அவர் 'குளித்துவிட்டு வா!' என்றதின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. கூலிகளின் சம்பிரதாயத்தைப் பற்றி காரியம் மிஞ்சிய பிறகுதான் அறிய முடிந்தது. கிழவிக்கு வயிற்றில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. ஆனால், பக்கத்தில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் இது மிகச் சாதாரணமான காரியம் என்று ஆயிற்று. அதற்கப்புறம் அவள் அந்தத் திசையிலேயே எட்டிப் பார்ப்பதில்லை. ஆனால் ஸ்டோர் மானேஜர் லேசானவரா? விலக்க முடியாத பழக்கம். வேறு விதியில்லாமல் தலை கொடுக்க வேண்டியிருந்தது. தன் வெள்ளையனை நினைத்துக் கண்ணீர் வடித்தாள் மருதி. வெள்ளையன் இருந்தால்...

நாட்களும் ஓடின. மருதியின் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. பெண் என்று தெரிந்ததும் மருதிக்குத் தாங்கமுடியாத துக்கமாக இருந்தது. பெரிதானால் அதற்கும் அந்தக் கதிதானே...!

கிழவியிருப்பதினால் குழந்தைப் பாதுகாப்பிற்குச் சிறிது வசதியாக இருந்தது. அந்த மலேரியாப் பிரதேசத்தில் என்ன இருந்து என்ன பயன்? உயிர் வாழ வேண்டும் என்ற வேட்கை ஜீவநாடியில் இருக்க வேண்டும். அது அந்தக் குழந்தைக்கு இருந்தது.

தேயிலை பூக்க ஆரம்பித்துவிட்டது என்றால் மலேரியா தேவதைக்குப் பசி என்று அர்த்தம். நீர் வீழ்ச்சியிலும் ஜலம் வற்றிவிடும். வேலையும் அதிகம். எண்ணிக்கையில்லாமல் பிறக்கும் மலேரியாக் கொசுக்களைப் போல் கூலிகளும் மடிவார்கள். அங்கேயே பல காலம் தங்கிப் பழகிப்போன கூலிக்காரர்களைப் புலி அடித்துத் தின்றால் அதற்கும் மலேரியாக் காய்ச்சல் வந்துவிடும். அவ்வளவு சக்தி பொருந்திய மலேரியாவின் முன்பு கிழவியின் பொக்கான சரீரம் எதிர்த்து நிற்க முடியுமா? மருதியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அவள் போய்விட்டாள். கிழவியின் மரணம் மருதிக்குப் பின்பலத்தையே போக்கி, வாழ்க்கையின் தனிமையை அதிபயங்கரமாக்கியது. வேறு வழியில்லாவிட்டால், என்ன பயங்கரமாக இருந்தால்தான் என்ன?

தெய்வத்தின் கருணை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை. கண்ணைக் கெடுத்தாலும் கோலையாவது கொடுத்தது. ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைச் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்டதெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்துத்தான் சமர்ப்பிப்பார். தற்செயலாக வருவதுபோல் திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித் அவர்களை அழைத்து வந்தார். ஸ்மித்தினுடைய ரசனையும் அவ்வளவு மட்டமானதன்று.

மருதியும் குழந்தையுடன் பங்களாவின் பக்கத்தில் தோட்டக்காரியாக வசிக்க ஆரம்பித்தாள்.

இப்படி இரண்டு வருஷம் சென்றது.

4

ஸர் ஜோஸப் பிட்ஜ்மார்ட்டின் கிரௌனின் மூனாவது தலைமுறைக்கு முன்பு, குடும்ப கௌரவத்தை ஸ்தாபித்த ஸர் ரெட்மன்ட் கிரௌன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்திற்குக் காரணமான அசல் பிரிட்டிஷ் குணத்தைப் பெற்றவர். அவர் ஏதோ ஒரு பெயர் தெரியாத பாங்கியில் குமாஸ்தாவாக இருந்த தகப்பனாரை அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தில் காலாடி என்ற பட்டப் பெயருடன் கப்பலேறி, இலங்கைத் தேயிலையில் பட்டமும் பணமும் சேகரித்து, ஒரு பிரபுவின் குடும்பத்தில் கலியாணம் செய்துகொண்டவர்.

அந்த மூன்றாவது தலைமுறையின் குடும்ப இலட்சியத்தின் சகல குணங்களையும் துணிச்சலையும் ஸர் ஜோஸப்பின் ஏகபுத்திரியான மாட் கிரௌன் பெற்றிருந்தாள். இங்கிலீஷ் மோஸ்தர்படி அவள் அழகு ஆட்களை மயக்கியடிக்கக் கூடியது. அவர்கள் 'ஸெட்'டில் அவள் செய்யாத அட்டகாசம் கிடையாது. திடீரென்று அவளுக்கு ஆகாய விமானத்தின் வழியாக உலகத்தை ஒரு சுற்றுச் சுற்றி வர வேண்டும் என்று பட்டது. பிறகு என்ன? புறப்பட்ட பத்தாம் நாள் இலங்கையில் விமானத்தின் கோளாறினால் இறங்கவேண்டியதாயிற்று.

திரு. பாட்ரிக்ஸன் ஸ்மித்திற்கு ஒரு தந்தி பறந்தது. அவர் தமது மோட்டாரை எடுத்துக்கொண்டு கொழும்புக்குத் துரிதமாக வந்தார். அன்று முதல் இரண்டு நாட்கள் கொழும்பில் குதூகலம். ஸ்ரீமதி கிரௌன் குஷியான பேர்வழி என்று அவர் கண்டுகொண்டார்.

புதிய அனுபவத்தில் மிக்க ஆசையுள்ள ஸ்ரீமதி கிரௌனிற்கு இது மிகவும் பிடித்தது. இருவரும் தோட்டத்திற்குப் பிரயாணமானார்கள்.

பங்களாவில் அவளுக்கு ஒரு தனியறை. மருதி அவளுக்குப் பணிவிடைக்காரி. ஸ்ரீமதி மாட் அசட்டுப் பேர்வழியல்ல. தோட்டங்களில் பிரம்மசாரிகள் கறுப்புப் பெண்களை எப்படி நடத்துவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்தப் 'போக்கிரி'யுடன் பழகுவதில் ஒரு உற்சாகம்.

உஷ்ணப் பிரதேசம் மதனனின் ஆஸ்தான மண்டபம் என்பது மேல்நாட்டு அபிப்பிராயம். எனவே, திரு. ஸ்மித்தும் ஸ்ரீமதி மாட் கிரௌனும் காதலர்கள் ஆனதில் அதிசயமில்லை.

அப்பொழுது...

*****

சிறையிலிருந்து விடுபட்ட வெள்ளையன் நேராக ஊருக்குப் போகவில்லை. நேராக மாமனார் வீட்டிற்குச் சென்றான். அங்கு மருதியைக் காணாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. சிறையிலிருந்து வரும்பொழுதே அவன் மனம் உடைந்துவிட்டது. மருதியின் நினைவு ஒன்றுதான் பசையாக இருந்தது அவனுக்கு.

மாமனிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு, மருதியைப் பார்ப்பதற்காக அவன் தேயிலைத் தோட்டத்திற்குப் புறப்பட்டான்.

வெள்ளையனும் மாமனைப்போல் மருதியின் இலட்சியமான தேயிலைத் தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு சென்றான்.

'வாட்டர் பால'த்திற்கு வரும் ஒரே மோட்டார் பஸ் சாயங்காலம் அங்கு வரும்.

இறங்கியவுடன் பக்கத்தில் நின்றவர்களை விசாரித்தான். அவர்கள் சிரித்துக்கொண்டு பங்களாவின் பக்கத்திலிருக்கும் குடிசையைக் காட்டினார்கள்.

அவன் நேரே நடக்கும்பொழுது, எதிரே, அந்த மங்கிய வெளிச்சத்தில் துரையும் துரைசானியுமாக இருவர் இடையில் கைபோட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அவனுக்கு மருதியின் நினைவு பொங்கியது.

குடிசையை யடைந்து கதவைத் தட்டினான். உள்ளிலிருந்து ஈனஸ்வரத்தில், "யாரது?" என்று குரல் கேட்டது. மனமுடைந்த குரல்; வெள்ளையனுக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

"மருதியா?" என்று கதவைத் திறந்தான். கருங்கம்பள்ளியில் மருதி படுத்திருந்தாள். பக்கத்தில் குழந்தை படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

மாடத்தில் தகர விளக்கு புகைவிட்டுக்கொண்டிருந்தது.

வெள்ளையன் திடுக்கிட்டான். மருதி பேய் என்று பயந்தாள். பேயாக இருந்தாலும் புருஷனின் பேய் என்று பட்டதால் எழுந்து உட்கார்ந்து, "வெள்ளையனா?" என்றாள்.

வெள்ளையன்தான்! அவளைக் கையைப் பிடிக்கப் போனான். "என்னைத் தொடாதே! மேலெல்லாம் பாத்தியா?" என்று முதுகையும் கைகளையும் காட்டினாள். மேலெல்லாம் பறங்கிப் புண்.

வெள்ளையனுக்கு நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடிப்பது போல் இருந்தது.

"இங்கே இதுதான் வளமொறை!"

வெள்ளையன் பதில் பேசவில்லை. அவன், "இங்கிருந்து புறப்பட வேண்டும்!" என்றான். அவள், "என்னால் வர முடியாது. குழந்தையைக் கொண்டுபோ!" என்றாள்.

முதலில் தன் குழந்தை என்பதில் ஆசை. பின், வேறு யாருடையதோ என்பதில் பொறாமை.

"உன் குழந்தைதான்!" என்றாள்.

"கண்ணாணை?"

"கண்ணாணை!"

"கிளவி போன வருசந்தான் செத்துப்போனா!"

வெள்ளையன் பதில் சொல்லவில்லை.

மருதி கூரையிலிருந்த தகரப் பெட்டியை எடுத்தாள். அதில் 5 ரூ. நோட்டுக்களாக 200 ரூ. இருந்தது. அது துரை அப்போதைக்கப்போது கொடுத்தது.

"எஞ் சம்பளப் பணம்... புள்ளையைப் பாத்துக்கொ!" என்று அதை நீட்டினாள்.

அன்று இருவர் தூங்கவில்லை.

பேசி முடிவதற்குள் விடிந்துவிட்டது.

"இந்தா!" என்று குழந்தையை நீட்டினாள்; "அதும் பேரு வெள்ளச்சி!"

வெள்ளையன் தலை மறையும் மட்டும் ஓர் உருவம் பாறையின் மீது நின்று பார்த்துக்கொண்டேயிருந்தது.

"அந்த லெக்கிலேதான் நம்ம ஊரு!" என்று சொல்லிக் கொண்டு அடிவானத்தின் பக்கம் பார்த்துக்கொண்டே நின்றது.

ஒரு சிரிப்பு - ஒரு பெருமூச்சு!

*****

வாசவன்பட்டிச் சவுக்கையில் பண்ணைப் பிள்ளை உட்கார்ந்து 'கோடு' விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். பொழுது இருட்டிவிட்டது. எதிரில் நிற்கும் ஆள் தெரியாது.

அப்பொழுது ஓர் உருவம் தெருவின் ஓரத்தில் வந்து நின்றது.

"யாரது?"

"சாமி, வெள்ளையனில்லா!"

"எப்பலே வந்தே? புத்தியாயிரு சவமே! கையிலே என்னலே?"

"புள்ளை சாமி!"

"அவ, மருதி எங்கெலே!"

"செத்துப்போனா, சாமி!... சாமீ!"

"என்னலே!"

"பணம்!"

"போலே, முட்டா மூதி! நீயே வச்சுக்கோ! புத்தியாப் பொளெ!"

"புத்தி!"

5

'வாட்டர் பால'த்தில் வெள்ளையன் வந்துபோன பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மருதிக்கு உலகத்தின் மீது இருந்த சிறுபசையும், இப்பொழுது அவளை விட்டு விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டது. அடிக்கடி குழந்தையின்மீது நினைவு சென்று விழுந்து கொண்டேயிருந்தது. குழந்தைக்கு வெள்ளைச்சி என்ற பெயர் கொடுத்திருந்தாள். நியாயமாக, அந்த விஷயத்தில் விதி சரியாகத்தான் நடந்துகொண்டது, அதை வெள்ளையனிடம் சேர்த்து விட்டது.

துரையவர்கள், சீமைக்குத் தனது புதிய ஆங்கிலக் காதலியுடன் செல்லுமுன் மருதிக்குக் கொடுத்த பரிசு - பரங்கிப் புண். அதனுடைய ஆதிக்கம் அதிகமாக வளர ஆரம்பித்தது.

அடுத்த துரை வந்ததும் - அவருக்கு சுகாதாரம் ஒரு பெரிய பைத்தியம் - மருதிக்குத் தோட்டக்காரி என்ற அந்தஸ்துப் போய் மறுபடியும் அவள் தேயிலைக் கூலியாகிவிட்டாள். ஆனால் முன் போல் பெரிய தெய்வங்கள் இவளை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது; அதற்குப் பதிலாக வசைமொழிகள் கிடையாது போனால் அவள் அதிர்ஷ்டம்.

அங்கிருக்கும் கூலிகளில் பலர் அவளுக்குக் கள்ளுத் தண்ணி வாங்கிக் கொடுத்து அவளுடைய தயவை எதிர்பார்ப்பது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சில சமயம் மருதிக்கு, ஊரைப் பார்த்துப் போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றும். ஊருக்குப் போனால் அப்பன் வீட்டில்தான் இருக்கவேண்டும். வெள்ளையனிடம் செல்வதற்கு மனத்தில் எவ்வளவு ஆசை இருந்தும், அங்கு செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

இங்கு வந்த சில காலத்திற்குள் அவளுடைய உருவம் அதன் யௌவனக் களை எல்லாம் மாறிவிட்டது. பழைய மருதியல்ல; வாசவன்பட்டியில் இருந்த அவளுடைய சிரிப்பும் பேச்சும் பழங்கதையாகிவிட்டது.

அன்று விடியற்காலம் வெள்ளையன் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்ற காட்சி அவள் கண் முன் அடிக்கடி தோன்றும். குழந்தை, குழந்தை, குழந்தை! இதுதான் எப்பொழுதும் நினைப்பு. வெள்ளைச்சி இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள், பேசுவதற்குப் படித்திருப்பாளா? - என்பதெல்லாம் கனவு.

உள்ளூரப் பூச்சியரித்தது மாதிரி நினைவுகள் குடைய ஆரம்பித்துவிட்டால் பொக்கான தேகம் என்னதான் எதிர்த்து நிற்க முடியும்? செத்தால் வாசவன்பட்டியில் தான் சாக வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது.

இப்பொழுது மருதிக்குக் கால் கைகளில் புண். அத்துடன் குத்திருமலும் சேர்ந்து கொண்டது. ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியை எத்தனை நாள் குடித்தும் பயன் இல்லை. வைத்தியர் மருந்தூசி குத்த வேண்டும் என்றார். அது கொஞ்சநாள் கங்காணிச் சுப்பன் தயவில் நடந்தது; அதுவுமல்லாமல் அவளுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த பேச்சியும் கூட இருந்து உதவி செய்தாள்.

அது எப்படியிருந்தாலும் காலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்வது தடைப்பட்டுவிடக்கூடாது. அதில் கங்காணிச் சுப்பன் கறார் பேர்வழி. உதை, அடி, அப்புறம் வசவு முதலியவை சாதாரணத் தண்டனைகள். இதைவிடக் கொடுமையானது அபராதம் பிடித்து வாரக்கூலியில் மண்ணைப் போடுவது.

அன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டு வந்து, கொழுந்து எடுக்கப் போவதற்குச் சற்று நேரமாகிவிட்டது. கூடையைத் தோளில் போட்டுக் கொண்டாள். கங்காணிச் சுப்பன் சுற்றிப் பார்த்துவரும் இடத்தின் பக்கம் அல்லாமல் வேறு பக்கமாகச் செல்லவேண்டும் என்று பயந்து கொண்டே, தோட்டத்தின் மேல் பக்கமாகச் சென்று கொழுந்துகளை அவசர அவசரமாகப் பறித்துக்கொண்டிருந்தாள் மருதி. அப்பக்கத்தில் தேயிலைச் செடிகள் கொஞ்சம் உயரமாகச் செறிந்து வளர்ந்திருந்தன. மறுபக்கத்தில் தனக்கு உதவியான பேச்சியும் கங்காணிச் சுப்பனும் இருப்பதை அவள் பார்க்கவில்லை. அவர்கள் இருந்த நிலைமை அங்கு சர்வ சாதாரணம்.

ஆனால், இவள் நிற்பதைச் சுப்பன் பார்த்துவிட்டான். அவள் தன்னை ஒற்றுப் பார்க்கிறாள். அதனால் ஏதேனும் சச்சரவு வந்து துரை காதிற்கு எட்டிவிடும் என்ற பயம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம். சுப்பனும் ஒரு ஜீவன் தானே!

சுப்பன் அவள் மீது பாய்ந்து, இரைந்து கொண்டே, உதைக்க ஆரம்பித்தான்.

மருதி, பேயோ என்ற நினைப்பில் கதிகலங்கிக் கல்லாக நின்றாள்.

சுப்பன், கூடையைப் பிடுங்கி, இலைகளை அவள் தலை வழியாகக் கொட்டி, நெஞ்சில் ஒரு மிதி மிதித்தான். கூடையில் இருந்தவை கொழுந்துகள் அல்லாமல் பெரும் பாகம் முற்றிய இலையாக இருந்ததைக் கண்டதும் சுப்பனின் கட்சி இன்னும் வலுத்தது. கையில் இருந்த கழியினால் நன்றாகச் சாத்திவிட்டு, அபராதம் போடுவதற்கு நேராக ஆபீஸைப் பார்த்து நடந்து விட்டான்.

பேச்சிக்குத் தடுக்க ஆசையிருந்தாலும் சுப்பன் என்றால் பெரும் பயம். அதுவுமல்லாமல் அவன் தன்னிடம் நல்லதனமாக நடந்துகொள்ளும்பொழுது அதைக் கெடுத்துக் கொள்ள மனமில்லை. செடி மறைவில் ஒதுங்கியிருந்தாள். அவன் ஓடிய பிறகு மருதியிடம் சென்று பார்த்தாள்.

மருதிக்குப் பேச்சு மூச்சில்லை. பக்கத்திலிருந்த ஓடையில் ஜலம் எடுத்து, அவள் முகத்தில் தெளித்து, நினைவு வரச் செய்தாள் பேச்சி.

மருதிக்குப் பிரக்ஞை வந்ததும் ஒரு பெரிய இருமல். அதில் இரண்டு மூன்று துளி இரத்தம் விழுந்தது.

கைத்தாங்கலாக மருதி குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

6

மருதிக்கு அதிலிருந்து எழுந்து நடக்கவும் ஜீவனற்றுப் போய்விட்டது. சில சமயம், வியாதியின் மகிமையால் சித்த சுவாதீனமற்று, குழந்தையுடன் கொஞ்சுவதுபோல் சிரித்துப் பேசிக் கொள்வாள். கலியாணமான ஜோரில் இருந்த முகக்களை அப்பொழுதுதான் தோன்றும்.

மறுபடியும் புத்தி தெளிந்தால், மங்கிய கண்கள் - இடிந்த மனத்தின் செயலற்ற ஏக்கம் - அவள் முகத்தில் கவிந்திருக்கும்.

பேச்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. 'ஊருக்கு எழுத்துப் போடணும்' என்று சுப்பனிடம் சொன்னாள். வெள்ளையனுக்கு, 'இதைத் தந்தியாகப் பாவித்து வரவேண்டும்!' என்று ஒரு கார்டு எழுதப்பட்டது.

அதுபோன நான்கு தினங்களுக்குள், புதிதாக வந்த துரைக்குக் கூலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதிலும் வியாதியஸ்தராக இருப்பவர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

மருதியுடைய பெயரும் அந்த ஜாபிதாவில் சேர்ந்தது.

இந்தச் சமாசாரம் மருதிக்கு எட்டியதும், அவளுக்குத் தெளிவு ஏற்பட்டது. வாசவன்பட்டிக்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கையிலோ என்னவோ, சிறிது நடமாடவும் முடிந்தது. ஆனால் பலவீனம் மாறவில்லை.

புதன்கிழமைக் கப்பலுக்கு அனுமதிச் சீட்டு, சம்பளம் - எல்லாம் வந்து சேர்ந்தன.

7

வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது. மருதி குளக்கரை வழியாகச் சேரியை நோக்கி நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தாள். அவள் இருந்த நிலையில் யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. கையில் ஒரு கம்பு. தலையிலும் இடுப்பிலும் இரண்டு மூட்டைகள். இடையில் வைத்திருந்த மூட்டையில் நாலைந்து கதலிப் பழம், இரண்டு ஜோடி வளையல்கள் - எல்லாம் வெள்ளைச்சிக்கு.

சேரியில் பறையும் தம்பட்டமும் அடிப்பது அவள் காதில் ஒலித்து நடைக்கு வேகமூட்டியது. மூலை திரும்பினால் ஊர்ப் பொட்டல், அதற்கப்புறம் அந்த மூலையில் வெள்ளையன் குடிசை, சுடலை மாடன் பீடத்தை அணுகியாய்விட்டது.

அப்பொழுது மேளதாள முழக்கங்களுடன் அந்த மத்தியானப் பனிரெண்டு மணி வெய்யிலில் ஓர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முன் பக்கம் சிலம்பம் ஆட்டத்துடன் பறை! அதற்குப்புறம் ஒற்றைக் குதிரை சாரட்டில் மாப்பிள்ளையும் பெண்ணுமாக ஓர் ஊர்வலம்!

நெருங்கிப் பார்க்கிறாள் மருதி. கண் கூசுகிறது. கொண்டையில் பூவும், நெஞ்சில் சந்தனமும், ஜரிகைக் குல்லாவும் வைத்து உட்கார்ந்திருப்பவன் - வெள்ளையன்தான்! என்ன ஜோராக உட்கார்ந்திருக்கிறான்! அவள் மனசில் ஏதோ பாரம் நீங்கியது மாதிரி இருந்தது. அவளை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

மருதிக்குத் திடீரென்று குத்திருமல் மல்லுமல்லென்று வந்துவிட்டது. கீழே துப்பினாள்; இரண்டு துளி இரத்தம் கலந்திருந்தது.

8

"ஏ மூதி! புல்லுக்கட்டு என்ன விலை?"

"ஆறணாச் சாமி! எடுக்கறதுன்னா எடுங்க..."

"ஒரே விலையாச் சொல்லு...!"

"ஒரே வெலேதான், ஆறணா! எங்கனெ தூக்கியார...?"

அங்கே நிற்பவன் டவாலிச் சேவகன், பாளையங்கோட்டை சப் ரிஜிஸ்திராரர் சேவகன். எதிரே நிற்பவள் மருதி. வாசவன்பட்டியில் அவள் கனவு கண்ட சந்தோஷத்தைப் பாளையங்கோட்டையில் பெற முயற்சிக்கிறாள். மருதி வந்ததும் சென்றதும் வாசவன்பட்டியினருக்குத் தெரியாது. பாளையங்கோட்டையில் ஆஸ்பத்திரி இருக்கிறது. மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொள்ள. ஏதோ கூலி கிடையாமலா போய்விடும் என்ற தைரியம் அவளுக்கு.

பகலில் புல் வெட்டி விற்பது. கிடைக்கும் காசு அன்றைய வயிற்றுப் பாட்டிற்குப் போதும். தாமிரவர்ணித் தண்ணீர் விசேஷத்தினாலோ என்னவோ, நோயின் கொடுமைகள், அதாவது வெளித்தோன்றிய புண்கள், உள்ளடங்கின. மேலெல்லாம் மேக நீரின் மினுமினுப்பும் கறுப்புத் தடங்களும் இருந்தாலும் மருதி அவ்வளவு மோசமாகிவிடவில்லை.

சப் ரிஜிஸ்திரார் வீட்டில் வாடிக்கையாகப் புல் கொண்டு வந்து போடுவதாக ஒப்புக்கொண்டாள். வாடிக்கையாகப் போடுவதாலும் அன்றாடம் கைமேல் காசு கிடைப்பதாலும் நான்கணா போதும் என்று பட்டது.

மருதியின் தேவைகள் ஒன்றும் ஜாஸ்தியாகிவிடவில்லை. அதனால் அவளுக்கு அந்த நான்கணாவில் சிறிது மிச்சமும் விழுந்தது.

ஆனால், குழந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது. எப்படிப் போய்ப் பார்ப்பது? அதிலும் வெள்ளையனுக்குத் தெரியாமல்...

'குழந்தை, குழந்தை!' - இதுதான் சதாகாலத் தியானமும்.

ரிஜிஸ்திரார் பக்கத்தூருக்குப் போகவேண்டியிருந்ததால் இரண்டு மூன்று நாட்களுக்குப் புல் வெட்டும் தொழிலில் சிறிது ஓய்வு. ஏன் வாசவன்பட்டிக்குப் போய்விட்டு வரக்கூடாது?

அவள் கொழும்பிலிருந்து வெள்ளைச்சிக்கு வாங்கிவந்த ஒரு ஜோடிக் கண்ணாடி வளையல்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

புறப்படும்வரையில் வெள்ளைச்சியை எப்படிச் சந்திப்பது என்ற பிரச்னை எழவில்லை. வழியிலெல்லாம் அதே கேள்வி தான். குழந்தையை எப்படிச் சந்திப்பது?

ஊரைத் தாண்டியதும், மருதி மூட்டையை இடுக்கிக் கொண்டு, வெகு வேகமாக நடந்தாள். ஒவ்வொரு நிமிஷமும் வெள்ளைச்சியின் உயரம், பேச்சு இவையெல்லாம் எப்படியிருக்கும் என்ற மனக் கனவு.

9

மருதி வாசவன்பட்டிக்குள் செல்லும்பொழுது பகல் 11 மணியிருக்கும். அவளும் ஊரைச் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டமில்லாத பாதையின் வழியாகவே சென்றாள். நல்ல காலம், தெரிந்தவர்கள் ஒருவராவது எதிரில் வரவில்லை.

வெள்ளையனின் வீடு வந்துவிட்டது. சேரியில் பறையர்கள் நடமாட்டம் அதிகமில்லை. பகலில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்கள் என்ன ஜமீன்தார்களா? அல்லது அவர்களுக்கு வயிறில்லையா?

வெளியே எதிரே நின்று ஒரு நாய் குரைத்தது.

திடீரென்று குடிசைக்குள்ளிருந்து ஒரு குழந்தையின் கதறல், பொத்துப் பொத்தென்று விழும் அடியின் சப்தம்! அதற்குமேல், "கஞ்சிப் பானையெ கவுத்துப்புட்டியே, மூதி! என்னெத்தே குடிப்பே! உங்கப்பன் வந்தான்னா மண்ணையா திம்பான்! அந்தத் தட்டுவாணி முண்டையோட தொலையாமெ... சவவே, சவமே..." என்ற ஒரு பெண்ணின் கோபச் சொற்கள்.

மருதிக்கு உதிரம் கொதித்தது. உள்ளே பாய்ந்து சென்றாள். அடிபட்டுக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே கையில் வாரியெடுத்துக்கொண்டு, அடித்துக்கொண்டிருந்தவளைக் கன்னத்தில் ஓங்கியடித்தாள்.

எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஒரு புதிய ஆள், வீட்டிற்குள் வந்து, ஒருவரை அடித்தால் யாராவது சும்மா இருப்பார்களா?

சண்டை ஏக தடபுடலாக ஆரம்பித்தது. ஒருவரையொருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். மருதிக்கு முகத்திலும் மார்பிலும் இரத்தம் கண்டது.

இவர்கள் கூக்குரலைக் கண்டதும் குழந்தையும் வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சேரிப் பெண்கள் கூடினார்கள்.

பாதிப் பேர் மருதியின் கட்சி, சிலர் வெள்ளையனின் இரண்டாவது மனைவியின் கட்சி. ஆனால், இன்னும் ஒருவரும் மருதியை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மருதியும், தன்னை யார் என்று கூறிக்கொள்ளவும் இல்லை.

அந்நிய வீட்டிற்குள் புகுந்து யாராவது அடிக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? சேரியின் ஏச்சும் உதையும் அவளுக்குக் கிடைத்தன. மருதி துரத்தப்பட்டாள். அன்று சாயங்காலம் குழந்தை வெள்ளைச்சியை வீட்டில் காணவில்லை.

என்றும் உதையும் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற குழந்தை, பொரிகடலையும் தின்பண்டமும் வாங்கிக் கொடுக்கும் ஒருவரைக் கண்டால் உடன் வருவதற்குச் சம்மதியாமலா இருக்கும்?

மருதி குழந்தையுடன் பாளையங்கோட்டைக்கு வரும்பொழுது இரவு ஒன்பது மணி. பாளையங்கோட்டையில் இருந்தால் தொடர்ந்து வந்து பிடித்துவிடுவார்களோ என்ற பயம் அவளுக்குண்டு.

இரவில் நேராக ரயிலடியில் சென்று படுத்துக் கொண்டாள். எங்காவது வெகு தூரத்தில் போய்விடவேண்டும் - இவர்கள் இருக்கும் இடத்திற்கு வெகு தூரத்திற்கப்பால்!

மருதிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று யார் கூற முடியும்?

ரயில் ஸ்டேஷனில் கங்காணிச் சுப்பனைச் சந்தித்தாள். அவன் இடுப்பில் வெள்ளி அரைஞாணும், வெள்ளை வேட்டியுமாகத் தடபுடலாக இருந்தான்.

"ஏட்டி, மருதி! நீ எங்கெ, போறே!" என்றான்.

பிறகு என்ன! கங்காணிச் சுப்பன் 'வாட்டர் பால'த்திற்குப் போகிறானாம். அவளையும் கூப்பிட்டான். 'சரி'யென்று உடன்பட்டாள்.

"இந்தப் புள்ளெ யாரு?"

"என்னுது!"

"சவத்தெ அங்கெ ஏன் கொண்டாரே?"

"அது செத்தாலும் என் கிட்டத்தான் சாகணும்!"

10

பதிநான்கு வருஷங்கள் கழிந்தன.

கங்காணிச் சுப்பனுடன் சென்ற மருதி இத்தனை காலமும் 'வாட்டர் பால'த்திலேயே கழித்துவிட்டாள். அங்கு இப்பொழுது மருதியின் ஸ்தானம் தேயிலைக் கூலி என்பதல்ல. சுப்பனின் மனைவி என்றே அழைக்கப்பட்டாள். பதிநான்கு வருஷங்கள் ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணித்துக்கொண்ட பிறகாவது மனைவி என்ற அந்தஸ்து வரக்கூடாதா?

மருதி - அவள் இப்பொழுது கொஞ்சம் பருத்து, சற்று விகாரமாக இருந்தாள். முன் பல் இரண்டு விழுந்துவிட்டது. தலையும் கத்தை கத்தையாக ஒவ்வொரு பக்கத்தில் நரைத்து விட்டது. மருதி சுப்பனுக்கு என்ன மருந்து வைத்துவிட்டாளோ என்று கூலிகள் பேசிக்கொள்வதுண்டு. காரணம், சுப்பனின் திருவிளையாடல்கள் எப்படியிருந்தாலும், மருதியின் பேச்சை யாராவது எடுத்தால் அவர்கள் கதி அதோ கதிதான்.

வெள்ளைச்சி - அவள்தான் மருதியின் வாழ்க்கைப் பற்றுதலுக்கு ஒரு சிறு தீபம்! - 'வாட்டர் பால'த்திலேயே பதிநான்கு வருஷங்களைக் கழித்தால் ஒருவரும் களங்கமற்றவராக இருக்க முடியாது. அவளுக்குச் சகல விஷயங்களையும் அடித்துப் பேசத் தெரியும். ஆனால் அவ்வளவும் வெறும் விளையாட்டுத்தனம். அவள் நின்ற இடத்தில் மௌனத்தைக் காண முடியாது. சிரிப்பும் சத்தமும் எங்காவது கேட்டால் வெள்ளைச்சி அங்கு இருக்கிறாள் என்று திட்டமாகச் சொல்லிவிடலாம். வெள்ளைச்சி இப்பொழுது பிராயமடைந்துவிட்டாள். மருதி கலியாணமாகி வாசவன்பட்டிக்கு முதல் முதலாக வந்த சமயத்தில் இருந்த மாதிரி அதே அச்சாக மூக்கும் முழியுமாக இருந்தாள். மருதிக்கு அவளை ஒரு நல்ல இடத்தில் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டுமென்று ஆசை. அந்த 'வாட்டர் பால'க் கும்பலில், 'கருவாட்டைக் காக்கிற மாதிரி' (மருதியே இப்படிச் சொல்லிக்கொள்வாள்) காத்து வந்தாள். வெள்ளைச்சி வேலையில்லாமல் சுத்திக் கொண்டு வரவில்லை. அவளும் தேயிலைக் கூலியாகச் சிறிது காசு சம்பாதிக்கிறாள். வெள்ளைச்சியின் சம்பளம் வந்து வீடு போவதில்லை; ஆனாலும் அவள் கூலியைச் செலவு செய்யாமல் சேர்த்துவைத்தால்...

சுப்பன் இப்பொழுது தலைமைக் கங்காணி வேலை பார்த்து வருகிறான். அதனால் கொஞ்சம் சம்பள உயர்வு. மருதிக்கும் வெள்ளைச்சிக்கும் அவனுக்கும் போக எல்லோரும் சேர்ந்து குடிப்பதற்கும் சிறிது மிஞ்சும். கங்காணிச் சுப்பனுக்கு மேலதிகாரிகளிடம் தக்கபடி நடந்துகொள்ள அநுபவமும் உண்டு.

அதிலும் வெகு காலமாக இருந்துவரும் ஸ்டோர் மானேஜரின் கையாள் அவன். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகிவிட்டது. கிழவர், 'வாட்டர் பால' வாசத்தினால் பெற்ற சில வியாதிகளும் உண்டு. கம்பெனி அவருக்கு இன்னும் ஒரு வருஷத்தில் உபகாரச் சம்பளம் கொடுத்து அனுப்பிவிடும். ஆனால் தமது இடத்தில் தமது பந்து ஒருவனை வைத்துவிட்டுப் போகவேண்டும் என்று ஒரே பெண்ணைச் சகோதரியின் மகனுக்குக் கொடுத்து, அவனை அங்கு கொண்டுவந்து வைத்துவிட வேண்டும். இதை நிறைவேற்றுவதற்காகவே தம் சகோதரியின் மகன் தாமோதரனை அங்கு தருவித்தார்.

அப்பொழுது கம்பெனியின் முதலாளியிடமிருந்து 'வாட்டர் பால'த்தில் ஒரு பள்ளிக்கூடம் வைக்கவேண்டும் என்று ஓர் ஆர்டர் வந்தது.

கம்பெனியின் விளம்பரத்திற்கு ராமசந்திரன் பதில் அளித்தான். கம்பெனியும் அவனை 'வாட்டர் பால'த்துப் பள்ளிக்கூடத்தின் உபாத்தியாயராக நியமித்தது.

ராமசந்திரன் 'வாட்டர் பால'த்திற்கு வந்து கொண்டிருந்த அதே பஸ்ஸில் ஸ்டோர் மானேஜரின் மகள் மரகதம் பள்ளிக்கூட விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். மரகதம் நல்ல அழகி.

11

பள்ளிக்கூடம் என்பது ஸ்டோர் மானேஜரின் வீட்டிற்கு எதிர்புறத்தில் இருந்த தேக்கந் தோப்பில் ஒரு சிறு குடிசை. அதில் ஒரு மேஜை, நாற்காலி, ஒரு கரும்பலகை, அதற்குப் பின்புறத்தில் ராமச்சந்திரனின் நார்க் கட்டில். எதிரே பிள்ளைகள் உட்கார்ந்து கொள்வதற்கு மணைகள். கூலிக்காரப் பிள்ளைகளுக்கு இது போதாதா?

மேஜையின் வலப்புறத்தில் தேயிலைத் தோட்டத்தின் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு நாலைந்து நாற்காலிகள்.

பிள்ளைகள் எண்ணிக்கை இருபதுக்கு மேல் போகாது. டாக்டருடைய இரண்டு சிறுமிகள், தேயிலை ஸ்டோர் குமாஸ்தாக்களின் மூன்று பையன்கள் - அவர்கள் எல்லோருக்கும் இனிமேல்தான் அட்சராப்பியாசம். பதினைந்து கூலிக்காரக் குழந்தைகள். எல்லாம் ஆறு வயசுக்கு மேற்படாதவை.

ராமசந்திரனுக்கு உபாத்திமைத் தொழிலில் ஒரு கிறுக்கு. அதிலும் கொஞ்சம் இலட்சியங்களும் அவனைப் போட்டு அலைத்தன. இல்லாவிடில் அவன் ஏன் பி.ஏ. படித்துவிட்டு, தகப்பனார் சிபார்சில் கிடைக்கவிருந்த உத்தியோகத்தையும் தள்ளிவிட்டு இங்கு வர வேண்டும்?

ராமசந்திரன் நல்ல அழகன்.

குழந்தைகளில் அவன் வித்தியாசம் பாராட்டுவது கிடையாது. கூலிக்காரக் குழந்தைகள் தங்கள் மடத்தனத்தினால் அவனைக் கோபமூட்டுவதும் உண்டு. ஆனால் சாயங்காலமாகிவிட்டால் குழந்தைகள் 'ஸா'ருடன் விளையாடாமல் வீட்டிற்குச் செல்வதில்லை.

குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ரொம்பப் பிரியம். அதிலும் 'ஸார்' கதை சொன்னால் நேரம் போவதுகூடத் தெரியாது.

ராமச்சந்திரன், தன் பள்ளிக்கூடத்தின் முன்பு கொஞ்சம் அலங்காரமாக இருப்பதற்கு, புஷ்பச் செடிகள் வைத்துப் பயிர் செய்யவேண்டும் என்று நினைத்தான். ரோஜாப் புஷ்பங்கள் வனாந்தரமாக முளைத்துக் கிடக்கும் அப்பக்கத்தில் அதற்கு மட்டிலும் குறைவில்லை. மற்றச் செடிகளின் கன்றுகள் ஸ்டோர் மானேஜரின் வீட்டில்தான் ஏராளம்.

அதனால்தான் ராமசந்திரன் மரகதத்துடன் பேசிப் பழக நேர்ந்தது.

12

ராமசந்திரன் பள்ளிக்கூடத்தின் முன்பு இருக்கும் பாத்திகளுக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம் விட்டுச் சிறுவர்களெல்லாம் சென்றுவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் நிசப்தம்.

அவன் மனம் அடிக்கடி ஒரு சிந்தனையில் சென்று விழுந்து கொண்டிருந்தது. மரகதம்! - அவளுடன் தான் அதிகமாக நெருங்கிப் பழகுவது தவறு என்று அடிக்கடி பட்டுக்கொண்டிருந்தது. இந்தக் குழந்தைகளின் கலகலப்பான பேச்சுக்கப்புறம் மரகதத்திடந்தான் அவனுக்குப் பேச மனமிருந்தது.

அப்பொழுது வெள்ளைச்சி அங்கு வந்தாள்.

"என்ன விசேஷம்?" என்றான். வெள்ளைச்சியை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பேசியதில்லை.

"எளுத்துப் படிக்கணும்! அதுக்காக வந்தேன்" என்றாள் வெள்ளைச்சி.

"படிக்க வேண்டுமா? பள்ளிக்கூட சமயத்தில் நாளையிலிருந்து வா!"

"தடிச்சி மாதிரி, அப்ப வரமாட்டேன். வெக்கமாக இருக்கு. இந்த நேரத்துக்கு வந்தா என்ன?"

"யாரும் ஏதாவது நினைக்கமாட்டார்களா - நீ என்னுடன் தனியாக இருந்தால்?"

"யாருக்கு அவ்வளவு தைரியம்? பல்லை உதுத்துப்புட மாட்டேனா?" என்றாள் வெள்ளைச்சி. அவள் முகத்தின் துடிதுடிப்பைக் கண்டதும் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவ்வளவு தைரியம், களங்கமற்ற தன்மை! அவளுக்குப் படித்துக் கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

"இப்பொழுது ஆரம்பிப்போமா?" என்றான் ராமசந்திரன். உடனே அவள் உட்கார்ந்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

முதலில் உயிரெழுத்துக்களை வரிசையாகச் சொல்லிக் கொடுத்தான்.

அரை மணி நேரமாயிற்று.

"மரகதம்மா மாதிரிப் படிக்க எத்தனை நாளாகும்?" என்றாள் வெள்ளைச்சி.

"ரொம்ப ஆசை இருக்கிறதுபோல் இருக்கே?" என்று சிரித்தான் ராமசந்திரன்.

"இன்றைக்கு இவ்வளவு போதும், நாளைக்கு வா!" என்றான்.

"சரி!" என்று அவள் எழுந்தாள்.

அச்சமயம் மரகதம், "வாத்யார் ஸார்!" என்று சிரித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

இருவரும் தனியே இருப்பதைக் கண்டதும் சிறிது நின்றாள்.

ராமசந்திரன் சிரித்துக்கொண்டு, "எனது புதிய மாணவி, உன்னைப் போல் படிக்கவேண்டுமாம்!" என்றான். அவன் குரல் தொனியைக் கேட்டதும் மரகதத்திற்குத் தோன்றிய சந்தேகம் மறைந்தது.

"வெள்ளைச்சிக்கு ஆசை ரொம்ப! பொல்லாதவள்!" என்றாள் மரகதம்.

"நானும் ஒங்களைப் போலப் படிக்கப் போகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள் வெள்ளைச்சி.

"இன்று அத்தான் வந்திருக்கிறார். வீட்டுக்கு வருகிறீர்களா?"

"நான் என்னத்திற்கு? சமைத்தது வீணாகப் போகும்!" என்றான் ராமசந்திரன்.

"ஆமாம்! நாளைக்கு வேண்டுமானால் நான் செய்து தந்து விடுகிறேன், வாருங்கள் போகலாம்!" என்றாள் மரகதம்.

"புதிய ஆட்கள் இருக்கும்பொழுது நான் வருவது நன்றாக இல்லை. எப்படியும் நான் அவர்களைப் பார்க்காமலா இருக்கப் போகிறேன்? நாளைக்கு வருகிறேன்!"

"நான் சொல்வதைக் கேட்பீர்களா, மாட்டீர்களா?"

"இப்படி முரண்டினால்..."

"பின்னே..."

"இரண்டு பேருக்கும் பொதுவாக ஒன்று சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டது. பாதி வழிவரை கொண்டுவந்து விட்டுவிட்டு வருகிறேன்!"

"நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் போலிருக்கிறது!"

"இல்லை, மூன்றரை! நீ சொன்னபடிதான் பாதி கேட்கிறேனே!"

"கேட்க வேண்டாம், போங்கள்!" என்று விர்ரென்று திரும்பிச் சென்றாள் மரகதம்.

ராமசந்திரன், அவளைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடி, அவள் முன்பு நின்றான். அவள் கண்களில் நீர் தளும்பி நின்றது.

"இதற்கெல்லாம் இப்படி அழுதால்? வருகிறேன்!" என்று சொல்லி அவளுடன் சென்றான்.

பாதி வழியில் சென்றதும், "அத்தான் எதற்கு வந்திருக்கிறார் தெரியுமா?" என்றாள்.

"எதற்கு?"

"என்னைக் கலியாணம் செய்துகொள்ள!"

"அப்படியா! சந்தோஷம்."

பிறகு இருவரும் பேசவில்லை.

13

வெள்ளைச்சியின் படிப்பு வெகு மும்முரமாகச் சென்றது. உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாம் பாராமல் சொல்வாள். சிறிது கஷ்டப்பட்டு எழுதவும் தெரியும்.

ராமசந்திரனுக்கு அவளிடம் ஒரு பிரேமை ஏற்பட்டது. அவளுடைய பேச்சில் ஓர் இன்பம். சில சில சமயம், முதிர்ந்த விபசாரியின் பேச்சுக்களுடன் களங்கமற்ற அவள் உள்ளமும் வெளிப்பட்டது.

படிப்பு முடிந்தால், கூலிக்காரர்களுடைய சமாசாரங்களை யெல்லாம் தன் அபிப்பிராயங்களுடன் கலந்து, அவனிடம் சொல்லுவாள்.

யாருக்கும் தெரியாமல் ஒன்றைச் செய்தால் பாவமில்லை. இது வெள்ளைச்சியின் அபிப்பிராயம்.

இதை எவ்வளவோ மாற்ற முயன்றும் ராமசந்திரனால் முடியவில்லை. ஆனால் அவனுடன் பழகியதில் சுத்தமாக இருக்கப் பழக்கப் படுத்திக்கொண்டாள் வெள்ளைச்சி.

மருதிக்கு மகள் வாத்தியாரிடம் சென்று வருவது பிடிக்கவில்லை. ஆனால் வெள்ளைச்சியிடம் எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை. வாத்தியாரைப் பற்றி ஏதாவது பேச்செடுத்தால் மல்லுமல்லென்று சண்டைக்கு வந்துவிடுவாள்.

துரை பங்களாவில் வேலை செய்யும் குதிரைக்காரச் சின்னானுக்கு அவளைக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது மருதியின் ஆசை.

கங்காணிச் சுப்பனும் சம்மதித்தான். விஷயம் பேச்சு மட்டில் இருக்கிறது. குதிரைக்காரச் சின்னானுக்கு அவளைக் கலியாணம் செய்துகொள்வதில் இஷ்டமாம்.

அன்று சாயங்காலம் வெள்ளைச்சி சிறிது நேரம் கழித்துப் பாடம் படிக்க வந்தாள்.

பாலர் பாடப் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, "வா, வெள்ளச்சி, இந்த நாற்காலியில் உட்கார்! ஏது இவ்வளவு நேரம்?" என்றான் ராமசந்திரன்.

வெள்ளைச்சி பதில் சொல்லவில்லை.

ராமசந்திரன் சொல்லுவது அவள் காதில் ஏறவேயில்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன வெள்ளைச்சி இன்றைக்குப் படிப்பு சுகமில்லை போலிருக்கிறது! நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? வீட்டில் ஏதாவது சண்டையா?" என்றான்.

"நான் இங்கே வரப்பிடாதாம். குதுரைக்காரச் சின்னானை எனக்குக் கல்யாணம் செய்யணுமாம்!"

"அது நல்லதுதானே! முந்தியே சொன்னேனே, யாராவது சொல்லுவார்கள் என்று. மருதி சொல்லுகிறபடி கேள்!"

"நான் வரப்புடாதா? எனக்குச் சின்னான் பயலைப் புடிக்கலை. அப்போ-"

"அது எப்படி இருந்தால் என்ன? மருதி சொல்வதைக் கேள்!"

"நான் அப்படித்தான் வருவேன். மானேஜர் அய்யாகிட்ட சொல்லி என்னெ வர வுடாமெ ஆக்குவாங்களாம். நான் படிச்சா இந்த மூதிகளுக்கு என்ன?"

ராமசந்திரனுக்கு எப்படி விளக்குவதென்று தெரியவில்லை. அவள் பிடிவாதம் குழந்தையின் பிடிவாதத்தைப் போல் இருந்தது.

அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிடுவது மேல் என்று பட்டது. ஆனால் அவளை விரட்டுவதற்கு அவனுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு யோசனைப் பட்டது. ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. அவளைத் தானே கலியாணம் செய்துகொண்டால் - அவளுடைய குழந்தைத்தனம், அவளுடைய பிடிவாதம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் விளைந்த அன்பு, எல்லாம் வசீகரித்தன. ஆனால் பறைச்சி! ஒத்து வருமா?

"வெள்ளைச்சி! நீ என்னைக் கலியாணம் செய்து கொள்ளுகிறாயா?"

வெள்ளைச்சியின் முகத்தில் ஆச்சரியம், அன்பு, குதூகலம் - எல்லாம் அலைமேல் அலையாக எழுந்தன.

"கலியாணம் எதுக்கு?..." என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அப்பார்வையில், அவளது அன்பு, அதற்கு மேல், அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த தடையின் பயம் - எல்லாம் கலந்திருந்தது.

அவள் உள்ளத்தின் போக்கு ராமசந்திரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவனுக்காக அவள் எதை வேண்டுமானாலும் பணையம் வைக்கக்கூடியவள்.

"வெள்ளைச்சி! விளையாட்டிற்கல்ல - நிஜமாகக் கேட்கிறேன், என்னைக் கலியாணம் செய்துகொள்!" என்றான்.

அவள், "ஆகட்டும்!" என்று அவனை நெருங்கினாள்.

14

ஸ்டோர் மானேஜருக்கு ஐம்பது வயதிற்கு மேலானாலும் மனமும் ஆசையும் குறைந்தபாடில்லை. இப்பொழுது அவருடைய திருவிளையாடல்கள் எல்லாம் மிகவும் மறைமுகமாக நடக்கும். ஆனால், அவற்றிற்குக் கையாள் குதிரைக்காரச் சின்னான்.

நெடுநாளாக ஸ்டோர் மானேஜருக்கு வெள்ளைச்சியின் மீது கண் உண்டு. இப்பொழுது இருந்த வளமையில், மருதியும் கங்காணிச்சுப்பனும் முரடர்கள். மேலும் வெள்ளைச்சியின் குணம் 'வாட்டர் பால'த்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஆசை யாரை விட்டது? குதிரைக்காரச் சின்னான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டான். நெடுநாளாகக் கங்காணி வேலையில் அவனுக்குக் கண் உண்டு.

நீர்வீழ்ச்சியின் கீழ் 21/2 மைல் வரை தேயிலைத் தோட்டம் படர்ந்திருந்தது. அப்பக்கத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவு கிடையாது. தோட்டத்தின் எல்லையைத் தாண்டினால் அழிக்கப்படாத 'ரிஸர்வ்' காடுகள். அவற்றின் இடையே நீர்வீழ்ச்சியிலிருந்து ஓடும் ஆறு பாறைகளின் மீது சலசலத்துப் பாய்கிறது.

வெள்ளைச்சியை மெதுவாக அந்தப் பக்கமாக அழைத்து வர, அவளுடன் கூட அலையும் சிறு பெண்களுக்குக் காசு கொடுக்கப்பட்டது.

அவர்கள் அப்போதைக்கப்போது சின்னானின் நட்பைப் பெற்றவர்கள். இத்தனை நாளும் அகப்படாத வெள்ளைச்சியைப் பிடித்துக் கொடுப்பதில் அவர்களுக்குக் கொஞ்சம் குதூகலம்! ஏற்பாட்டின்படி நடந்தது. சின்னான், ஸ்டோர் மானேஜருடன் அங்கு வந்திருந்தான். வெள்ளைச்சியைக் கொழுந்து பறிக்க வைத்துவிட்டு, மெதுவாக நழுவிவிட்டார்கள் கூடவந்த சிறுமிகள்.

வேறு விஸ்தரிப்பானேன்? அவளை முரட்டுத்தனமாகப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டான் குதிரைக்காரன்.

வெள்ளைச்சியின் கூச்சலைக் கேட்டு உதவிக்கு வருவதற்கு அங்கு ஆட்கள் இல்லை. ஆனால், அன்று தற்செயலாக ராமசந்திரன் அப்பக்கம் வந்தான்.

தூரத்தில் வரும்பொழுதே வெள்ளைச்சியின் நிலையைப் பார்க்க நேர்ந்தது. முதலில் அவன் வெள்ளைச்சி என்று நினைக்கவில்லை.

கிட்ட நெருங்கியதுந்தான் அவனுக்குத் தெரிந்தது. வெறி பிடித்தவன் போல அவ்விருவரையும் தாக்கினான்.

சின்னான் முரடன். ராமசந்திரன் அடிக்கப் பார்த்துக் கொண்டிருப்பானா? தடியைப் பிடுங்கிக்கொண்டு அவன் வெளுத்துவிடவே, ராமசந்திரன் மூர்ச்சையாகி விழுந்தான்.

அவனுக்குப் பிரக்ஞை வரும்பொழுது வெள்ளைச்சியின் கூக்குரல்தான் கேட்டது. மெதுவாக எழுந்து அவள் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.

வெள்ளைச்சி அவனைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பியழுதாள். சில சில சமயம் ரௌத்திராகாரமாகக் காளியைப் போல் இடிக்குரலில் பிதற்றுவாள்.

ராமசந்திரனுக்கு வலி சகிக்க முடியாது போனாலும், யாராவது கொஞ்சம் தைரியத்துடன் இருந்தால்தானே வீட்டிற்குப் போகலாம்!

இருவரும் நேரே மருதியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

மருதிக்கு, அவர்கள் செய்தியைக் கேட்டதும் பேரிடி விழுந்தது போல் ஆயிற்று.

அதிலும், தன்னைக் கெடுத்த பாவியின் கையாள்தான் மருமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னான். குய்யோ முறையோ வென்று கூவிக்கொண்டு ஸ்டோர் மானேஜர் பங்களாவிற்கு ஓடினாள். அவர் அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் மரகதமும் தாமோதரனும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஓடிவந்த மருதி, "என்னைக் கெடுத்த பாவி, என் மகளையும் குலைத்தாயே!" என்று ஒரு கல்லைத் தூக்கி அவர்மீது போட்டாள். நெற்றிப் பொருந்தில் பட்டு உயிரைப் பறித்துச் சென்றது கல்!

தாமோதரன் மருதியை ஓங்கியடித்தான். அவள் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

மரகதம் தகப்பனார் மீது விழுந்து கதறினாள். வேலைக்காரர்கள் வந்து கிழவரை உள்ளே எடுத்துச் சென்றார்கள்.

இதற்குள் நடந்த விஷயம் கூலிக்காரர்களுக்குள் பரவி விட்டது. அவர்கள் எல்லோரும் கம்பையும் தடியையும் எடுத்துக் கொண்டு துரை பங்களாவின் பக்கம் ஓடினார்கள்.

சின்னான் அங்குதான் இருப்பான் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்பொழுதுதான் தூங்கி விழித்த துரை, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார். கூட்டம் அடக்கக்கூடியதாக இல்லை.

மறுபடியும் உள்ளே போய், கொழும்புப் போலீஸாரை டெலிபோனில் அழைத்துவிட்டு, அவர் கூட்டத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் சின்னான் வீட்டில் தீ வைத்துவிட்டது. ஆனால், சின்னான் பைத்தியக்காரனல்லன். கூட்டம் வருமுன்பே எங்கோ ஓடிவிட்டான்.

கூலிக்காரர்களின் கூட்டம் ஸ்டோர் மானேஜரின் வீட்டுப் பக்கத்தை நாடியது.

கூலிக்காரர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று தெரிந்ததும் ராமசந்திரனுக்கு பயம் அதிகமாகியது. மரகதத்தையும் அவள் வீட்டிலுள்ளவர்களையும் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்டான்.

வெள்ளைச்சியிடம் தன் மனத்தில் உள்ளதைக் கூறினான். அவளுக்கு முதலில் சம்மதமில்லை. பிறகு அவன் இஷ்டத்திற்காகச் சென்றாள். அங்கு போனதும்தான் நடந்த சமாச்சாரம் தெரிந்தது. மரகதத்தையும் தாமோதரனையும் அழைத்துக்கொண்டு துரை பங்களாவிற்கு வந்தான்.

மருதிக்குக் காவலாக வெள்ளைச்சி நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது கூட்டம் அவர்கள் வீட்டை நோக்கி வந்தது.

வெள்ளைச்சி முரட்டுத் தைரியம் கொண்டவள்: "கிழவன் போய்விட்டான், இனி ஒன்றும் செய்ய வேண்டாம்!" என்று கூவினாள்.

கூட்டத்தில் பலருக்கு அவ்வித அபிப்பிராயம் கிடையாது. ஆனால் முதல் ஆவேசம் அடங்கிவிட்டது. எல்லோரும் மெதுவாகத் திரும்பினார்கள்.

மருதிக்குப் பிரக்ஞை வந்தது; ஆனால் சித்தம் தெளியவில்லை.

ராமசந்திரன் துரையிடம் நடந்த சமாசாரங்களைக் கூறினான். துரையோ அநுபவம் பெற்றவர்.

குற்றம் அதிகாரிகள் பக்கம் இருக்கிறது என்று தெரிந்ததும் சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்து கொண்டார். பத்திரிகையில் கம்பெனியின் பெயர் அடிபடுவதில் அவருக்குப் பிரியமில்லை.

அன்று விடியற்காலம் போலீஸ் பட்டாளம் ஒன்று வந்தது.

விவகாரங்கள் ஒரு விதமாக முடிவதற்குக் காரணம் துரைதான். துரை கொலையை நாஸுக்காக அமுக்கிவிட்டார். பத்திரிகைகளில் இந்த விஷயம் வெளிவரக் கூடாது என்பதே அவர் கவலை.

மருதிக்குப் பைத்தியம் தெளியவேயில்லை. அவளும், வெள்ளைச்சியும், ராமசந்திரனும் எங்கோ சென்றுவிட்டார்கள்.

'வாட்டர் பால'த்தில் மறுபடியும் அமைதி குடிகொண்டது; தேயிலை உற்பத்தியில் அது தன்னை மறந்தது.

மரகதம்! அவளும் இப்பொழுது 'வாட்டர் பால'த்திலில்லை.

தாமோதரன் இப்பொழுது நெல்லூர்ப் பக்கத்தில் வாத்தியாராக இருக்கிறானாம். அவனுடன் மரகதம் இருப்பதைப் பார்த்தால் அவர்களுக்குக் கலியாணமாகிவிட்டது என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது. அப்படித்தான் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.

மணிக்கொடி, 31-03-1935, 14-04-1935, 28-04-1935
---------------

100. உணர்ச்சியின் அடிமைகள்


கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் - வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே?

அந்த வீட்டு மெத்தையில் ஓர் அறை. அதில் புத்தகத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபன்; அந்தக் கல்யாண மாப்பிள்ளைதான்!

ஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் சிருஷ்டித் தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?

மேடைப்படிகளிலே 'சிலிங், சிலிங்' என்ற பாதரசம்; வாலிபன் முகத்தில் ஆவலின் பரபரப்பு அலைபோல் எழுந்தது.

காப்பிதான் வருகிறது!

ஆசை, காப்பியின் மேலா? அல்ல!

ஒரு பெண் - நாணமே உருவெடுத்த மாதிரி - ஒரு வெள்ளித் தம்ளரில் காப்பியைக் கொண்டு வைத்துவிட்டு, ஒதுங்கி வெளியே போக யத்தனித்தாள்.

அழகு எல்லாம் சாதாரணந்தான். ஐயோ அந்தக் கண்கள்!

"கண்ணா, எனக்கு ஒரு முத்தம்!" கண்களில் ஒரு மிரட்சி.

"என்ன கண்ணா?"

சற்றுத் தயக்கம். ஏதோ ஒரு மாதிரி உதட்டுடன் உதடு பொருந்திய சப்தம் வந்தது. இது முத்தமா? உயிர் இல்லை. இன்பம் ஏற்றும் மின்சாரம் இல்லை.

சுந்தரத்திற்கு - அவன்தான் - ஒரு பெருமூச்சு வந்தது. இவள் தனது கனவின் பெண் அல்ல - தகப்பனார் பார்த்துவைத்த பெண். எப்படியோ தன் வாழ்க்கையில் வந்து பின்னிக் கொண்டாள்.

இவனுடைய ஆவேசம் பொருந்திய முத்தம், "ஐயோ" என்ற எதிரொலியைத்தான் எழுப்பியது.

"கண்ணா எனக்கு ஒரு முத்தம்!"

ஐந்து நிமிஷம் தயக்கம். கரங்கள் மெதுவாகக் கழுத்தில் சுருண்டன. கேசம் கண்களை மறைத்தது. அதரங்கள் முகத்தில் சற்று உலாவி அதரத்தின் மேல் பறந்து விலகின. சுந்தரத்தின் முன் இருந்த இந்த இன்பமற்ற உடல் திரை விலகியது. சுந்தரத்தின் கண்களில் ஏமாற்றத்தின் கோபம், "போ! உனக்கு என் மேல் பிரியமே கிடையாதே! போ! போ!"

கமலாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.

"போங்கள்! பக்கத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாதா...நீங்கள்..." கண்கள் சுந்தரத்தின் பக்கத்திலிருந்த வெற்றிலைச் செல்லத்தில் நீட்டிக்கொண்டிருந்த புகையிலைத் துண்டைக் கவனிப்பதுபோல் இருந்தன. முன்றானை தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தன.

சுந்தரத்தின் கண்களில் ஓர் ஒளி! குதூகலம்! எழுந்தான். கமலாவை, ஆலிங்கனமா? - இவனுள் ஐக்கியமாகிவிட்டாள். முத்தங்கள்... நெற்றியில்... கண்களில்... அதரங்களில்... எவ்வளவு ஆவேசம்! என்ன உயிர்!

கமலாவிற்குக் கவலை அறியாத ஒரு புது உணர்ச்சி. அவள் அதரங்கள் அவளை அறியாமல் பதில் பேசின.

*****

ஒன்றரை வருஷங்கள்!

தொட்டிலில் ஒரு குழந்தை.

"கண்ணா! கண்ணா! இதோ, இங்கே பார்! ஓடிவா!"

"என்ன" என்று கூறிக்கொண்டே சிரித்த கண்களுடன் வராந்தாவிற்கு ஓடி வந்தாள்.

"இங்கே வா! அதோ பார், இந்தக் கிளையில் அந்த அணிலை! எப்படி வாயில் குட்டியைக் கவ்விக்கொண்டு! இலை மறைத்திருக்கிறது; என் பக்கம் இன்னும் கிட்டவா! அதோ பார் அந்தக் கிளையில்" என்று அவளைத் தன் பக்கம் அணைத்தவண்ணம் தன் கைகளைக் காட்டினான்.

"ஆமாம்! ஆமாம்! ஐயோடி! எனக்கு வேண்டும். பிடித்து தரமாட்டீர்களா?" என்று அத்திசையை நோக்கியவண்ணம் கைகளை உதறினாள்.

சுந்தரத்தின் கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு. பேசாமல் உள்ளே சென்றான். கமலா அதைக்கூடக் கவனிக்கவில்லை.

"இதோ வந்துவிட்டது! ஐயோடி! சீக்கிரம் வாருங்கோ!" என்று பதைத்தாள் கமலா.

சுந்தரம் ஒரு குழந்தையை - தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை, தங்கள் காதலின் லக்ஷ்யத்தை - எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் நீட்டிக்கொண்டு, "இதோ பிடித்துத் தந்திருக்கிறேன்! இதைவிடவா?" என்று சிரித்தான்.

கமலாவின் கண்களில் ஓர் அற்புத ஒளி! சுந்தரத்தை அப்படியே தூக்கி விழுங்கிவிடுவதுபோல் ஒரு முத்தத்துடன் அணைத்தாள். குழந்தை 'வீல்' என்று குரலிட்டுத் தான் இருப்பதைத் தெரிவித்தது.

உடனே குழந்தையைக் கையில் பிடுங்கி மார்பில் அணைத்துக் கொண்டு அவரைப் பார்த்தவண்ணம், "எனக்கு இரண்டு பாப்பா இருக்கே! என்னடி மீனு!" என்று குழந்தையுடன் அவன் மீது சாய்ந்தாள். மூவரும் ஒருவராயினர்.

*****

இருபது வருஷம்!

சாயந்தரம்.

வெளி வராந்தாவில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. மீனுவின் குழந்தை.

இருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். நரைத்த தலை; தளர்ந்த உடல்.

கமலாப் பாட்டி, சுந்தரம் தாத்தாவுக்கு வெற்றிலை தட்டிக்கொண்டிருக்கிறாள்.

வெற்றிலைப் பொடியை வாயில் போட்டுக் கையைத் துடைத்து விட்டு, "கண்ணா ஒரு முத்தம்" என்று குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினார்.

"மாத்தேன் போ!" என்று காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு சிரித்தது குழந்தை.

"தாத்தா கண்ணோ! பாட்டி கண்ணோ!" என்று குழந்தையை நோக்கிக் கமலம் கைகளை அசைத்தாள்.

"மாத்தேன் போ!" சிரிப்புத்தான்.

இருவரும் ஒத்துப் பேசியதுபோல் ஏகோபித்துக் குழந்தையை எடுக்கிறார்கள்.

சுந்தரம் தாத்தா, "மாத்தேன் போ" என்று திருப்பிக் கொண்ட கழுத்தில் முத்தமிடுகிறார். கமலம் மார்பில் முத்தமிடுகிறாள்.

இருவர் கண்களிலும் அதே ஒளி!

மணிக்கொடி, 08-07-1934

----------------

101. உபதேசம்


டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத் தொட்டியில் போட்டார். "நர்ஸ், ஊசி" என்றார். பக்கத்தில் ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, டாக்டர் கை மடமடவென்று சக்கிலியத் தையல் போட ஆரம்பித்தது.

கிளாஸ் மேஜையில் கிடத்தப்பட்டிருக்கிற வியாதியஸ்தன் சிறிது முனகினான்; பிரக்ஞை வருவதின் முன்னணி சமிக்ஞை!

"டாக்டர் வில்க்கின்ஸன், இன்னும் கொஞ்சம் குளோரபாரம்... ஒரு நிமிஷம் போதும்... ஹும் வெற்றிதான், என்று நினைக்கிறேன்" என்று பேசினில் ஊசியைப் போட்டுவிட்டு, கை உறைகளையும் முக மூடியையும் கழற்றி விட்டுக் கைகழுவ பேசினிடம் சென்றார் விசுவநாதன். "வியாதியஸ்தனுக்கு பிரக்ஞை வந்துவிட்டது; ஆனால், அளவு கடந்த முயற்சி. ஒரு மணி நேரம் கழித்துக் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுங்கள்..." என்று சொல்லிக்கொண்டே வாயில் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு, டாக்டர் வில்க்கின்ஸன் தொடர இறங்கி நடந்தார். இவரது நரைத் தலையில் சூரிய ஒளிப் பிரகாசம் விழுந்தது. இவர் முகத்திற்கு ஒரு விபரீதமான தேஜஸைக் கொடுத்தது.

விசுவநாத்துக்கு பல மேல்நாட்டுச் சர்வகலா சாலைகளின் பட்டம். நிறபேதம் பாராட்டும் பிரிட்டிஷ் வைத்தியக் கௌன்ஸில் இந்திய வைத்தியக் கௌன்சில்கள் இவரது அபாரமான கற்பனை முறைகளைக் கண்டு பிரமிக்கும். ரண சிகிச்சை என்றால் டாக்டர் விசுவநாத் என்று அர்த்தம். சென்னை வாசிகள் அகராதிக்கு மட்டுமல்ல. யூகோஸ்லாவிய இளவரசருக்கு வந்த விசித்திரமான வீக்கத்திற்குச் சிகிச்சை செய்த நிபுணர்களில் இவரும் ஒருவர். மண்டையில் வீக்கம். மற்றவர்கள் கத்தி எடுத்தால் பிராணஹானி ஏற்படுமோ என்று பயப்பட்டார்கள். ஏனென்றால், ஆப்பரேஷன் வெற்றியடைவது, அதைச் சீக்கிரம் செய்து முடிப்பதைப் பொறுத்தது. ஒரு வினாடி அதிகமானால் இளவரசருக்குப் பிரேதப் பெட்டியை ஆர்டர் செய்ய வேண்டியதுதான்... ஆனால், விசுவநாத் கைகள், வேலையை குறைந்த நேரத்திற்கும் பாதியளவிலேயே செய்து முடித்தன. இப்பொழுது, அவர் சௌகரியமாகப் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருப்பதற்கு டாக்டர் விசுவநாத்தான் காரணம்.

சென்ற ஜெர்மன் சண்டையில் பேஸ்காம்புகளில் உழைத்ததினால், ஆப்பரேஷன் கத்தியை வைத்துக் கொண்டு யமன் வரவைத் தடுக்க, டாக்டர்கள் தப்பு வழி என்று சொல்லக்கூடிய முறைகளில் எல்லாம் பரிசீலனை செய்ய இவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது.

டாக்டர் வில்க்கின்ஸன் இவரது சகா. அவரது அந்தரங்க அபிப்பிராயம் மற்ற இந்தியர்களைப் பற்றி என்னவாக இருந்தாலும், டாக்டர் விசுவநாத்திடம் கருப்பன் என்ற பிரக்ஞை யில்லாமலே பழகி வந்தார். நாஸ்திகத்தின் பேரில் இருவருக்கும் இருந்த அபார பக்தி இந்த நெருக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். முப்பத்து முக்கோடி கருப்புத் தேவாதி தேவர்களும், மூன்றே மூன்று வெள்ளைத் தெய்வங்களும் இவர்களது கிண்டல்களை இரண்டு நாட்கள் கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்தால், இவர்கள் கண் எதிரிலேயே தூக்குப் போட்டுக் கொள்ளும். ரூபமற்ற தெய்வங்களுக்கு அப்படிப்பட்ட அடி!

அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டவன் ஒரு ஹடயோகி; விஷயங்களையும் கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரிலும் தின்று சாகாதவன். சித்தாந்தச் சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்.

அவன் ஏதோ திடீரென்று பிரக்ஞையற்றுக் கிடக்கிறான் என்று தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ் காரை அனுப்பி சத்திரத்திலிருந்து அவனை எடுத்து வரச் செய்ததும் இவர்தான். ஹடயோகியின் உட்புறம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இருவருக்கும் இருந்த ஆசை அளவில்லை. எக்ஸ்ரே பரீக்ஷையில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே. ஹடயோகி ஏதோ முறை தப்பிச் செய்ததின் விளைவு.

சித்தாந்தச் சாமிக்கு இரண்டு ஸ்பெஷல் நர்ஸ்கள்; மூன்று மணி நேரத்திற்கு ஒரு தரம் டாக்டர் பரிசோதனை எல்லாம்...!

மறுநாட் காலையில் டாக்டர் வில்க்கின்ஸன் கேட்ட செய்திகள் அவரைத் திடுக்கிட வைத்தன. ஒன்று, ஆஸ்பத்திரியில் கிடத்தப்பட்டிருந்த சித்தாந்த சாமியைக் காணோம் என்பது. மற்றொன்று, டாக்டர் விசுவநாத் காஷாயம் வாங்கிக் கொண்டார் என்பது. முதல் விஷயத்தில் டாக்டர் வில்க்கின்ஸனுக்கு அவ்வளவு சிரத்தையில்லை; அது போலீஸ் கேஸ். டாக்டர் விசுவநாத்திற்கு மூளைக் கோளாறுதான் ஏற்பட்டிருக்குமென்று முதலில் நம்பி, அதற்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

உடனே, தமது மோட்டார் காரில் டாக்டர் விசுவநாத் பங்களாவிற்குச் சென்றார். தலைமொட்டை; இடையில் ஒரு காவி வேஷ்டி; காலில் குப்பிப்பூண் பாதக்குறடு; இந்த அலங்காரத்தைக் கண்டதும் டாக்டர் வில்க்கின்ஸனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "எப்படியானாலும் இந்தியர்கள் இந்தியர்கள்தான்" என்று நினைத்துக் கொண்டார்.

"என்ன டாக்டர்! இது என்ன ஜோக்? என்றைக்கு உமது தெய்வங்கள் உம்மை பேட்டி கண்டன? தவடையில் கொடுத்து ஏன் அனுப்பவில்லை" என்று சிரித்தார்.

"வில்க்கின்ஸன்! சிரிக்காதே; இது ஒரு புதிய பரிசீலனை. எனது சித்தாந்தம் ஒரு முடிவு கட்டப் படவில்லை. பரிசீலனை செய்துதான் பார்க்க வேண்டும்" என்றார் டாக்டர் விசுவநாத். இவர்களிடத்தில், பாசறை ஆஸ்பத்திரி வாழ்க்கையில் தோன்றிய வெறி காணப்பட்டது.

டாக்டர் வில்க்கின்ஸனுக்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. 'வெல்! குட்லக்!' என்று சொல்லிவிட்டுத்தான் திரும்ப முடிந்தது.

*****

ஐந்து வருஷங்கள் கழித்து கைலாச பர்வத சிகரயாத்திரைக் கோஷ்டியில் டாக்டர் வில்க்கின்ஸனும் ஒருவராகச் சென்றார். அப்பொழுது, பிளான் போடப் பட்ட பாதையே புதிது. இதுவரை யாரும் அந்த வழியில் சென்றதில்லை. திபேத்திய சர்க்கார் கொஞ்சம் தில்லு முல்லு செய்ததால் யாத்திரைக் கோஷ்டித் தலைவர் கடைசி நேரத்தில் வகுத்தது. கோஷ்டியில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், யாத்திரைக்காரர்கள் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒத்துக்கொண்டனர்.

யாத்திரை ஆரம்பித்து இருபதாவது நாள். ஒன்றும் முளைக்காத உறைபனிப் பாலைவனத்தின் வழியாகச் செல்லுகின்றனர். மணல் பாதைதான். அருகில் அரை மைல் தூரத்தில் பனிச் சிகரம்.

கோஷ்டியின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த டாக்டர் வில்க்கின்ஸனுக்குச் சிந்தாந்தச் சாமியாரின் அடையாளங்களுடன் ஒரு மனிதன் பனிக்கட்டி உச்சியில் நிற்பதுபோலத் தெரிந்தது.

"அதோ பாருங்கள் அந்த மனிதனை! அவனை எனக்குத் தெரியும். அவன் ஒரு சாமியார்" என்று தனக்கு முன்னே செல்லுபவரிடம் சொன்னார்.

முன்னே சென்ற ஜேக் ஆல்பர்ட்ஸன், ஆல்ப்ஸ் கிளப் நிரந்தர அங்கத்தினர். தூரதிருஷ்டிக் கண்ணாடியைத் திருப்பி வைத்துப் பார்த்து, "மனிதன் மாதிரித் தான் தெரிகிறது... ஆனால்..." இவர் பேசி முடிக்குமுன் வில்க்கின்ஸன், பக்கத்திலிருந்த பாறையில் தாவி, பனிச் சிகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஜேக் ஆல்பர்ட்ஸனும் துணிந்தவர்; அவரைப் பின்பற்ற முயற்சிக்கையில் கோஷ்டித் தலைவர் தடுத்து, "இருட்டி விட்டது; அங்கு போய்த் திரும்புவதென்றால் காம்ப்புக்குப் போய்ச் சேர முடியாது" என்றார்.

"அந்த மனிதன் தனியாகப் போகிறான்; அவனைச் சாக அனுப்புவதா?" என்று கோபித்துக் கொண்டார் ஆல்பர்ட்ஸன். அப்பொழுதுதான், வில்க்கின்ஸன் போனது கோஷ்டித் தலைவருக்குத் தெரிந்தது.

வேறு வழியின்றி, "அடையாளத்திற்குத் தீ வளர்த்து வைக்கிறோம்; சீக்கிரம் வாருங்கள்" என்று சொல்லிவிட்டுக் கோஷ்டியை அழைத்துச் சென்றார் தலைவர்.

ஜேக் ஆல்பர்ட்ஸனும் பாறைகளில் தாவித் தாவி வில்க்கின்ஸனைத் தொடர்ந்து சென்றார். பனிப் பாறை நெட்ட நெடுகலாக செங்குத்தாக இருந்ததால், அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் பொழுது உச்சி தெரியாது. இரண்டு பாறைகளின் இடுக்கு. அதைத் தாண்டி எதிரில் நீட்டிக்கொண்டிருக்கும் உறைபனிக் கட்டி மீது கால் வழுக்காது எட்டி வைத்து நின்று கொண்டால், அதன் வழியாகவே பனிச் சிகரத்தின் உச்சியை அடைய முடியும். ஜேக் ஆல்பர்ட்ஸனும், வில்க்கின்ஸனும் ஒருவர் பின் ஒருவராக இடுக்கு வழியாக நுழைந்தனர். அந்த இடுக்குக்கு அப்புறம் பாதாளம். ஒரே குதியில்தான் பனிப்பாறை மீது குதிக்க வேண்டும். வில்க்கின்ஸன் மூச்செடுத்துத் தாவினார். கால் வழுக்கப் பார்த்தது. நல்ல காலம், ஐஸ் கோடரியை ஊன்றிக் கொண்டார். "நாரோ சேவ்" என்று சொல்லிக்கொண்டு, (மயிரிழை தவறினால்... என்று அர்த்தம்.)

ஜேக் பின் தொடர்ந்தார்.

இருவரும் பனித்தளத்தின் மீது வளைந்து செல்லும் பாதையில் நடக்கலாயினர். பனிக்கட்டிக்கிடையில் செங்குத்தாகக் கருங்கல் லிங்கம் போல் செதுக்கியிருந்தது. அதன் தலையில் காஷாய வஸ்திர மூட்டை!

ஜேக், அதை எடுத்துப் பிரிக்கையில், "வில்க்கின்ஸன்!" என்று கூறினார்.

வில்க்கின்ஸன் திரும்பிப் பார்த்தார். செங்குத்தாக சுவர் போல் நிற்கும் உறை பனிக்கட்டிக்குள் மனித உருவம்; டாக்டர் விசுவநாத்! பத்மாசனமிட்டு நிஷ்டையில் உட்கார்ந்த பாவனையில்.

"அய்யோ பாவம், இவருக்கு இந்த முடிவா? பெரிய டாக்டர்," என்று தலையைக் குனிந்து வணங்கினார்.

பின்பு மூட்டையைப் பிரித்தார். அதில் ஒரு தோல்ப் பர்ஸ், டைரி, அதைத் திறந்ததும்...

"நண்பன் வில்க்கின்ஸனுக்கு,

நீ இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். நான் சாகவில்லை; நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு, வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு.

இப்பொழுது வெளியில் சொல்லாதே. நீ பயித்தியக்காரனாக்கப்படுவாய்... அந்தச் சாமியார் லேசான ஆசாமியல்ல..." என்றிருந்தது. மூடையைக் கட்டி பழையபடி வைத்துவிட்டு, "ஜேக், திரும்புவோமா?" என்றார் டாக்டர் வில்க்கின்ஸன்.

"பின், வேறு என்ன செய்வது?" என்றார் ஜேக்.

ஜோதி, ஜுன் - 1938
--------------------

102. வாடாமல்லிகை


அவள் பெயர் ஸரஸு; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்கவேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது. அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டதால், அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?

ஸரஸு ஓர் உலாவும் கவிதை. இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம்; காட்டிலே ரோஜா யாருமின்றி உதிர்ந்தால் அதைப் பற்றிப் பிரமாதமாக யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நந்தவனத்திலே, மனத்தின் களிப்பில் குலாவக் கூடிய இடத்திலே தனிமை என்ற விதி ஏற்பட்டால் அதைப் பற்றிப் பரிதவிக்காமல் முடியுமா? இயற்கையின் போக்கைத் தடை செய்து கொண்டு அவள் தியாகம் செய்கிறாள்; அவள் பரிசுத்தவதி என்று சமூகம் களித்துக் கொண்டு இருப்பது அதன் ரத்த வெறிதான். அவளுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலை தானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்...?

ஸரஸுவுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் ஒரு ஹிந்துப் பெண். வாயில்லாப் பூச்சி. பெற்றோரையும், புருஷனையும், முன்னோரையும் நம்பித்தான் உயிர் வாழ்ந்து வந்தாள். பெற்றோர் கலியாணம் செய்து வைத்தார்கள். புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்றுக் காண்பித்து விட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான். அவனை இந்த உலகத்தில் இனிக் காண முடியாது. பிறகு... கண்டால்தான் என்ன? அது போகட்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டுப் போன முன்னோர்கள் கணவன் சென்ற விடத்தில் இருக்கிறார்கள். ஸரஸு பெற்றோரைத் தட்டியது கிடையாது. பிறகு முன்னோர்களை எப்படி எதிர்க்க முடியும்? அவளும் பெண்தானே! அச்சம் என்பதுதான் அவளுக்கு அணிகலன் என்று சமூகம் சொல்லுகிறதே. பிறகு அவள் வேறு என்னவாக இருக்க முடியும்? அவள் 'உயர்தரப்' படிப்புப் படித்த பெண்ணா? நாலு விஷயங்களைத் தானாக ஆராய்ச்சி செய்து கொள்ள அவளுக்குத் திறன் ஏது? இயற்கையின் தேவை கட்டுக்கடங்காமல் மீறி ஒரு மிருகத்தின் முரட்டுத் தைரியத்தைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அவளை சமூகம் தூற்றுவதற்குத் தயார்.

எந்த அமைப்பிலேயும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டுமென்று தத்துவம் பேசலாம். தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது! ஸரஸுவின் உணர்ச்சிக்கு உரிமையில்லை - அவள் விதிவிலக்கு.

ஸரஸு எப்பொழுதும் மாடியின் மேல் காலை ஏழு மணிக்கே தலையை உலர்த்த வருவாள். அப்பொழுதே ஸ்நானமாகிவிடும். பெற்றோரின் பாசம், அவளைச் சமண முனி மாதிரி, பெண்மையின் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். வாழ்க்கைக்கே வசதியில்லாமலிருக்கும் பொழுது சிகை போவதுதானா பிரமாதம்?

அவளைப் பார்த்தால் யாருக்கும் கண் கலங்கும். அவள் கண்களிலே ஒரு நிரந்தரமான துயரம், போக்க வழியில்லாத துன்பம் குடிகொண்டிருக்கும். அவள் சிரிக்கத்தான் செய்கிறாள். குதூகலமாகப் பேசத்தான் செய்கிறாள். இவை யாவற்றிற்கும் பின் சோகந்தான் நிலவும்.

பிரம்மச்சாரியாக, உண்மையான பிரம்மச்சாரியாக நீ இருந்து பார்த்திருக்கிறாயா? வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, உன்னை அப்படியே விழுங்கிவிடாவிட்டால் பிரம்மச்சரியம் உன்னைக் கொன்றுவிடும். உன்னை மிருகமாக்கி உனது உள்ளத்தைப் பேயாகச் சிதற அடித்துவிடும். ஆனால் கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலையை என்ன சொல்லுவது?

அன்று ஸரஸுவின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம். முதலிலே ஸரஸுக்குத் தாங்க முடியாத குதூகலம் - தங்கள் வீட்டிலே விசேஷம் வருகிறது என்றுதான். தம்பியின் மீது இருந்த ஒரு ஹிந்துத் தமக்கையின் அளவு கடந்த பாசத்தினால்.

அன்று பகல் வந்தது...

அன்று இரவு வந்தது. ஊரில் இருள். வீட்டில் ஒளி.

வீட்டில் ஒளி; ஸரஸுவின் உள்ளத்தில்?

அவளுக்கு என்னென்னவோ நினைவுகளெல்லாம் குவிந்தன. அப்படித்தானே மூன்று வருஷங்களுக்கு முன் முதல் முதலாக அவருக்கு... என்னென்னவோ தோன்றின. நேரமாக நேரமாக, அவள் மனத்தில் அந்த மூன்று வருஷங்களுக்கு முந்திய சந்தோஷகரமான, வாழ்க்கையை ஓர் இன்ப ஒளியாக்க முயன்ற அந்த இரவின், ஒவ்வொரு சிறு சம்பவமும்... அவர் முதலில் என்ன கூச்சப்பட்டார்! பிறகு அந்த உரிமை என்ற தைரியம் தானே... இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை இருட்டிவிடும் என்று அப்பொழுது கண்டாளா? என்னவோ சாசுவதமான அழியாத நித்திய வஸ்து வென்றல்லவோ -

துரைசாமியையும் அவள் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றனர். கூச்சலும் அமளியும் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.

தன்னை மீறிய கட்டுக்கடங்காத ஓர் ஆவேசம் அவளைப் பிடர் பிடித்துத் தள்ளியது. பின்புறம் புழக்கடைக்குச் சென்று விட்டாள்.

நானும் பின் தொடர்ந்தேன். அவள் நிலைமை எனக்கு ஒருவாறு தெரிந்தது. அவள் மீது ஒரு பரிதாபம் அதனால்...

புழக்கடையில் ஒரு பெண் தேம்பிக்கொண்டு இருந்த சப்தம் கேட்டது.

நெருங்கினேன், அவள்தான்!

"ஸரஸு!"

பதில் இல்லை.

இன்னும் நெருங்கித் தோளில் கையை வைத்தேன். உணர்ச்சியற்ற கட்டை போல் இருந்தாள் - உடல் தேம்புவதினால் குலுங்கியது.

"ஸரஸு! நான் இருக்கிறேன் பயப்படாதே" என்றேன்.

"நான் ஒரு ஹிந்துப் பெண்!" என்று கூறிவிட்டுச் சடக்கென்று உள்ளே சென்று விட்டாள்.

நான் திகைத்து நின்றேன். ஹிந்துப் பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையா?...

நான் எவ்வளவு நேரம் நின்றேனோ!

மறுபடியும் அவள் வந்தாள்.

"ஸரஸு! என்னை மன்னித்துவிடு. நான் கூறியது வேறு. நீ அர்த்தம் பண்ணிக் கொண்டது வேறு. நான் உன்னை மணம் செய்து கொள்ளுகிறேன்!" என்றேன்.

"கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் - மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத் தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்..."

"அது என்னிடம் இருக்கிறது" என்றேன். அவளிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.

"அப்படியானால் திருமணம் வேண்டாம்... பாசம் இருந்தால் போதும்" என்று சொல்லித் தலை குனிந்தாள்.

"என்ன ஸரஸு இப்படிச் சொல்லுகிறாய் - இரகசியம் பாபம் அல்லவா? கல்யாணம் இதை நீக்கிவிடுமே!"

"எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்!"

"நீ ஒரு பரத்தை!"

"உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன் - அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன்மதிப்பு ஏற்படும். தைரியசாலி என்பார்கள். அதை எதிர் பார்க்கிறீர். நான் பரத்தையன்று - நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்!" என்றாள்.

எனது மனம் கலங்கிவிட்டது. வெளியேறினேன்...

மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது. அதன் மடியில், "நான் எதிர்பார்த்தபடியே" என்று எழுதிய ஒரு நனைந்த கடுதாசி இருந்தது.

ஊழியன், 7-9-1934
--------------------------

103. வாழ்க்கை


அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், 'கிரீச்' என்ற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும். வண்டிக்காரர்களும் வண்டி மாடுகளும் சமதளத்தில் இறங்கிவிட்டால் எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்து கொண்டு செல்ல இச்சாலையில் பூரண உரிமையுண்டு. சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால், அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் போகும்வழி ஒரு நாளும் மலைப்பிரதேசத்தையடையாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான். விக்கிரமசிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள் தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

அன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச்சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன், கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சுமேகங்களில் தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கரு நீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல முடியாத அமைதி, துன்பக் கலப்பில்லாத சோகம், இவற்றை எழுப்பியது. பக்கத்தில், அதாவது இரு சிகரங்களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில், அக்னிக் கரையிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணைபுரிந்தன என்று சொல்லலாம். சக்தி பூஜைக்காரனுக்கு, சிவனும் சக்தியும் மாதிரி, இக்காட்சி தோன்றியிருக்கும்.

விக்கிரமசிங்கபுரத்திற்கு இரண்டாவது மைலில், மலையை நோக்கி, அதாவது, பாபநாசத்தை நோக்கி ஒருவன் நடந்துகொண்டிருந்தான். நாற்பது வயது இருக்கும். இடையிடையே நரையோடிய, தூசி படிந்த, கறுப்புத்தாடி. அகன்ற நெற்றியின் மீது சிறிது வழுக்கையைவிட்டு, இரண்டு பக்கமும் கோதாமல் வளர்ந்து பின்னிய தலைமயிர் உச்சியில் சிறிது வழுக்கையைக் காண்பித்து, கழுத்தை நன்றாக மறைத்தது. மூக்கு நீண்டிருந்தாலும் வாலிபத்தின் பிடிப்பு விட்டதினால், சிறிது தொங்கி மீசையில் மறைந்தது. கீழுதடு மட்டிலும் மீசைக்கு வெளியே தெரிந்தது. வாயின் இருபுறத்திலும் மூக்கிலிருந்து ஆரம்பித்து தாடியில் மறையும் கோடுகள் அடிக்கடி நினைத்து நினைத்து நெஞ்சையலட்டிக் கொள்வதனால் சுருங்கல் விழுந்து கண்ணின் மீது தொங்கும் புருவங்கள். உடல் திடகாத்திரமானதன்று; ஆனால் நாடோடியாக அலைந்து மரத்துப்போன தேகம். கிழிந்த சட்டையும் ஓரங்களில் முழங்கால் தடுக்கியதால் கரைகள் கிழிந்த வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கைகளும் கண்களும் அவன் வயிற்றிற்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன. கையிலே xU jo. தோள்பட்டையில் ஒரு மூட்டை - அதில் ஒரு செம்பும் புஸ்தகமும் துருத்திக் கொண்டிருந்தன - அதன் மேல் ஒரு கம்பளி.

கண்களில், அடிக்கடி ஏதோ ஒரு பெரிய ஏமாற்றத்தை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிப்பவன் போல் ஒரு பிரகாசம்; அதனுடன் கலந்து, ஒரு பரிதாபகரமான, தோற்றவனின் சிரிப்பு. கண்கள், அவன் செல்லும் திக்கை நோக்காது வானிலும் மலையிலும் ஒன்றையும் பற்றாது சலித்துக் கொண்டிருந்தன. கால்கள் நெடுந்தூரம் நடந்தாற்போல் ஒவ்வொரு நிமிஷமும் குழலாடின.

மூட்டையை எடுத்து மரத்தடியில் வைத்து, பக்கத்தில் தடியைச் சாத்திவிட்டு உட்கார்ந்து, முழங்காலையும் குதிரைச் சதையையும் தடவிக் கொண்டு, 'அப்பாடா!' என்று சாய்ந்துகொண்டான். இனி அந்த இடந்தான் வீடு. மூட்டையைப் பரப்பினால் தட்டு முட்டு சாமான்கள், இரவைக் கழிப்பதற்கு வேண்டிய சாப்பாட்டு வகைகள்! அங்கேயே உட்கார்ந்து கொண்டால் தண்ணீருக்கு எங்கே போவது? நாடோடிக்கு ஒன்றும் புரியவில்லை. கால் சொல்வதைக் கேட்டால் அன்றிரவு பட்டினி இருக்க வேண்டியதுதான். சீ, என்ன கஷ்டம்!

ஏதாவது அற்புதம் ஒன்று நடந்து, தான் நினைத்த இடத்திற்குப் போய்விடக்கூடாதா என்று அவன் மனக்குரங்கிற்குச் சிறிது ஆசை எழுந்தது. உதட்டில் ஒரு சிரிப்புடன் காலைத் தடவிக்கொண்டு வேஷ்டியில் ஒட்டியிருந்த ஒரு சிறு வண்டைத் தட்டினான்.

அப்பொழுது, அவன் வந்த திக்கிலிருந்து 'ஜல்! ஜல்!' என்று சலங்கைகள் ஒலிக்க, தடதடவென்று ஓர் இரட்டை மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரன் மாடுகளை 'தை! தை!' என்று விரட்டி, 'தங்கம் தில்லாலே' என்று பாடிக்கொண்டு வாலை முறுக்கினான். வண்டி காலி. இல்லாவிட்டால் பாடிக்கொண்டு போக அவனுக்கு அவ்வளவு தைரியமா?

"ஓய், வண்டிக்காரரே! எவ்வளவு தூரம்? நானும் ஏறிக்கொள்ளட்டுமா?" என்றான் சாலையில் உட்கார்ந்திருந்த நாடோடி.

"வண்டியா! பாவநாசத்திற்கு, வேணுமானா பெறத்தாலே ஏறிக்கிரும்!" என்றான் வண்டிக்காரன்.

நாடோடியின் வாழ்க்கையில் முதல்முதலாக அவன் எதிர்பார்த்தபடி சம்பவிக்கும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

"நீர் எங்கே போராப்பிலே! பாவநாசத்துக்கா?" என்றான் வண்டிக்காரன்.

"ஆமாம்! யாரு வண்டி!"

"இந்தக் காட்டுலே பண்ணையெ எசமான் வண்டி தெரியாத ஆளுவளும் உண்டுமா! கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலேயிருந்து அய்யமாரும் அம்மா மாரும் ஊரு பாக்க வந்திருக்காங்க! கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பாத்தால் சாமியாரு மாதிரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு. கூட வந்திருக்காருவளே, கிளிங்கதான்!" என்று அடுக்கிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

இதென்ன வேஷம் என்று ஆச்சரியப்பட்டான் நாடோடி. வண்டியின் ஒரு மூலையில் கிடந்த தியாசபி புஸ்தகங்கள் வந்திருப்பது யார் என்று விளக்கிவிட்டன. மனத்தின் குறுகுறுப்புச் சாந்தியானதும் வண்டிக்காரனின் பேச்சில் லயிக்கவில்லை.

'ஊச்'சென்று கொண்டு மனத்தை வெளியில் பறக்கவிட்டான் நாடோடி. அது, கூடு திரும்பும் பட்சிபோல பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது.

இன்று இந்த வண்டியில் ஏறியதுதான், இந்த நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களில் முதல்முதலாக அவன் விரும்பி நிறைவேறிய ஆசை.

'ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக்கொள்ளும் இலட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம். நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது, அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவிச்சாச்சு. என்னதான் பேசினாலும் இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ்மென்ட் சொன்ன மாதிரிதான்... பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கிறாய்!' என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்! இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்... புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும் உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை. நாமாக நினைத்துக்கொண்டால் நன்மைதான். பின் ஏன் இந்தப் பித்தலாட்டமான இலட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும்! அதனால்தானே இந்த ஏமாற்றம், தொந்தரவு. மிருகம் மாதிரி இருந்து தொலைத்தால் என்ன கெட்டுப் போகிறதோ? அசட்டுச் சமூகத்திற்கேற்ற அசட்டுப் பித்தலாட்டங்கள். இதில் 'நான் சொல்வதுதான் சரி' என்ற கட்சி. லோகத்தை மாற்றியமைக்கப் போறாளாம்... அதுவுந்தான் விடிய விடிய நடக்கிறதே...

"பெரியவரே, இங்கேயே எறங்கிகிடும்! அய்யரு கண்டா கட்டி வச்சு அடிப்பாரு... நீங்க எந்தூரு?" என்றான் வண்டிக்காரன்.

"இந்தா, பலகாரம் வாங்கிச் சாப்பிடு!" என்று ஓரணாவைக் கொடுத்துவிட்டு, இறங்கிக் கோவிலுக்குள் செல்லும் வழியில் பக்கத்திலிருந்த இட்டிலிக் கடையில் - அதற்கு 'ஓட்டல்' என்று பெயர் - நுழைந்து, கைகால் கழுவிவிட்டு முகத்தைத் துடைத்தான் நாடோடி.

அப்பொழுது நன்றாக அந்தி மயங்கி விளக்கேற்றப்பட்டுவிட்டது.

"கோவிலிலே கட்டி வாங்க நேரஞ் செல்லுமா?" என்றான் நாடோடி.

"ஆமாம், பூசையாயிருதானே! எட்டு மணி ஆகும்!"

"அப்போ ஒரு அணாவுக்கு இட்டிலி இலையில் கட்டிக் கொடு!" என்று வாங்கிக் கொண்டு, பழைய பாபநாசத்திற்குப் போகும் பாதையில் இருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தான்.

மண்டபத்தில் அவன் எதிர்பார்த்தபடி நிம்மதியில்லை. பண்ணை அய்யர் 'தியாசபி' (பிரம்மஞான கோஷ்டிக்கு) விருந்து நடத்தும் பொழுது அங்கு அமைதி எப்படி இருக்கும்! சமயம், அரசியல் முதல் நேற்றுச் செய்த சமையல்வரை சம்பாஷணையில் அடிபடுகிறது.

"வாழ்க்கையின் இணைப்பையும், சமயத்தின் சாரத்தையும் அறிவிப்பது தான் தியாசபி, ஸார்!" என்றது ஒரு குரல்.

"நேற்று ஸ்நானம் செய்யறப்போ, மிஸ்டர் கிருஷ்ணன், இதைக் கேளுங்களேன்! ஒருமான்குட்டி முண்டந்துறையிலே துள்ளித்தே, நீங்க பாத்தியளா?" என்றது ஒரு பெண்குரல்.

ஆங்கிலத்தில், "நம் கூட்டத்தில் மான்களுக்குக் குறச்சல் இல்லை!" என்றது ஒரு கரடிக் குரல். உடனே கொல்லென்ற சிரிப்பு.

"பேசாமலிருங்கள், சுவாமிஜி பேசப் போகிறார்!"

நாடோடி, படித்துறையில் இட்டிலியை வைத்துவிட்டு கால் முகம் கழுவ ஜலத்தில் இறங்கினான். அப்பா, என்ன சுகம்! மெய் மறந்தபடி கல்லில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டுத் துழாவிக் கொண்டேயிருந்தான்.

"நமது வாழ்க்கையிலே, அசட்டுத்தனத்திற்காகப் போராடுவது, மிருகத்தனத்திற்காகச் சச்சரவு செய்வது இயற்கை..." என்ற சுவாமிஜியின் குரல் கம்பீரமாக எழுந்தது.

நாடோடி இலை முடிப்பை அவிழ்த்தான்.

"சாமி, பசியா இருக்குது! ஒரு இட்டிலி..." என்ற குழந்தைக் குரல் ஒன்று அவன் பக்கத்தில் கேட்டது.

இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. இருட்டோடு இருட்டாகப் பறையர் பக்கத்தில் நின்றது ஒரு சிறு குளுவ ஜாதிக் குழந்தை.

"எங்கே! இங்கையா நிக்கிறே! இந்தா! உங்கப்பன் எங்கே! இருட்டிலே எப்படி வந்தே...?"

அப்பொழுது சுவாமிஜி பிரசங்கம் நடக்கிறது.

"அப்பன் அதோ இக்குராரு..." என்றது சிசுக்குரல். பிறக்கும் போதே பிச்சையா!

"... ஆனால் உயர்ந்த ஆதர்சங்களுக்காக மனித வர்க்கத்தின் இலட்சியங்களுக்காக, எத்தனை பேர்கள், எத்தனை சச்சரவுகள்! உண்மைக்குக் குணம் ஒன்றுதான்! அதையடையும் பாதைகள் பல... அதையறியாத மனித நாகரிகம் அதற்குப் பிரசாரத்தைத் தொடங்கியது. நாங்கள் கூறுவது ஒன்றுதான். பேதங்கள் தோல் ஆழமுள்ளவை; இன்பம் ஒன்றுதான். இதன் சோபையும் அழகுமே, கலியுக அவதார புருஷன் கிருஷ்ணாஜி."

"இவன் கண்டான் பெரிசா!" என்று ஓர் இட்டிலியை விண்டு வாயினுள் போட்டான் நாடோடி.

மெதுவாக வீசிக்கொண்டிருந்த காற்று திடீரென்று அதிகப்பட்டு, பெரும் பெரும் தூற்றலுடன் வீச ஆரம்பித்தது.

நாடோடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரு மரத்தின் நிழலுக்கு ஓடினான். அதில்தான் குளுவக் குடும்பத்தின் வாசம். குளுவச்சி மழை அதிகரிக்கிறது என்று மண்டபத்தை நோக்கி ஓடினாள்.

"சீ, மூதேவி! எங்கே ஏறுதே! ஆள் இருக்கிறது தெரியலே! போ!" என்று ஒரு பெண் குரல் சீறியது.

மழை கொஞ்சம் பலந்தான். குளுவனுடைய சின்னக் குழந்தை மழை பெய்கிறது என்று கத்த ஆரம்பித்துவிட்டது.

"ஓய்! ஜக்கம்மா! மந்தரம் போடறேன் பார்! பாப்பா, மளை நிக்குது! ஏ! மளை நிக்கலே! எங்க பாப்பாத்தி அளுவுரா! ஜல்! மந்திரக்காளி! ஜு! மந்திரக்காளி!" என்று குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான் குளுவன். குழந்தை இவன் பேச்சில் லயித்துச் சிரித்தது.

விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டு ஓடிவரும் குளுவச்சியைப் பார்த்து "வேணுண்டி உனக்கு! ஒதைக்கிலே!" என்றான் குளுவன்.

"நம்ம எடத்தை அவங்க புடிச்சுக்கிட்டாங்க இன்னிக்கி! உனக்கென்னடா குளுவா, நீ சொரணை கெட்டவன்..."

இருவரும் மழையின் உற்சாகத்தில் சண்டைபோட ஆரம்பித்து விட்டார்கள்.

நாடோடிக்கு இது வினோதமாக இருந்தது. இருக்க இடமில்லை இந்த மழையில். இதில் என்ன உற்சாகம்! வாழ்க்கையே இந்த அசட்டுத் தனந்தான் அல்லது ஏமாற்றந்தான்.

மழை விட்டு மரங்களிலிருந்து மட்டும் ஜலம் சொட்டிக் கொண்டிருந்தது. மேற்புறத்திலிருந்து வெளிவந்த சந்திரன், புதிதாக ஸ்நானம் செய்து எழுந்த பிரகிருதி தேவியின் மீது காதற்பார்வை செலுத்தினான்.

"ஏய் குளுவா! அங்கென பாருடா!" என்று இரண்டு உருவத்தைச் சுட்டிக் காண்பித்து, குசுகுசுவென்று சொன்னாள் குளுவச்சி.

"அதுவுஞ் சரிதான்!" என்று குளுவன் அவளைத் தன் பக்கமாக இழுத்தான். குளுவச்சிக்கு என்ன பலமில்லையா!

ஆனால், அந்த நாடோடி ஒன்றிலும் லயிக்காது துயரந்தேங்கிய முகத்துடன் மலைப்பாதையில் நடந்து மறைந்தான். அவன் கண்கள் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில்லை. சாலையின் இருளும் அவன் உருவமும் ஒன்றாயின.

மணிக்கொடி, 10-11-1935
------------------

104. வழி


அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது.

தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.

அவள் விதவை.

நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்ற வாழ்க்கை - அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.

அன்று முதல் இன்றுவரை வாழ்க்கை என்பது நாள் - சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயங்கள் துக்கத்தைத் தந்தாலும் பொழுதையாவது போக்கின. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.

அன்று அவர் இறந்தபின் பதினாறு நாட்களும் இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்தி, சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ, என்னவோ!

அலமி பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக 20000 ரூ. இருக்கிறது. என்ன இருந்தாலும் இல்வாழ்க்கை அந்தகாரந்தானே? அவள் நிலை உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.

அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார் இருந்தார். அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. வாழ்க்கை இன்பங்கள் புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம் அலமியையும் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.

மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாப்படத்தை அநுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது?

அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழவேண்டுமென்று துடித்தன.

உறக்கம் வரவில்லை.

எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.

வானமாத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பன போல், தன்னைப் பார்த்துச் சிரிப்பன போல் குத்தின. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல் உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!

இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். 'சதி'யை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு... ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?...

அவர் இருந்திருந்தால்...

அதை நினைத்தவுடன் மனம் ஐந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அதில் முளைக்க ஆரம்பித்தன.

அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க்கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.

எதிரே விலாசத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன, மகராஜி கொடுத்து வைத்தவள்!

அப்பொழுது...

'கட்டிக் கரும்பே தேனே...' என்ற பாட்டு. கிராமபோனின் ஓலம். பாட்டு கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.

அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?

இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை.

இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன், அந்தக் கோடித்தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லிய மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அந்நியர். மேலும்... நான் விதவை என்று தெரியும். போனால் அவருக்குத் தெரியாதா?

திரு.குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஊரிலுள்ளவர்கள் தூற்றுவார்கள்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்.

நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. 'இயற்கையின் தேவை' என்ற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால் ஓர் ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இதுவரை தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகிவிட்டால் உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகிவிடும் என்று சொல்லுகிறது. சீ! போயும் போயும், மூளையில்லாமல், ஆண்பிள்ளையிடம் போய் என்ன! கத்தரிக்காய்க் கடையா வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகமெல்லாவற்றையும் கொன்று துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ, பாவம்! உலகமாவது மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே! மார்பு வெடித்துவிடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய்விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள் புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்யவேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக்கொண்டு உள்ளே வந்து படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.

அசட்டுத்தனமாகத் தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள்வாங்கி முனை விர்ரென்று மார்பில் நுழைந்துவிட்டது.

அம்மாடி!

உடனே பிடுங்கிவிடுகிறாள். இரத்தம் சிற்றோடைபோல் பீரிட்டுக்கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமி இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாரங்கள் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளிவருவதிலே பரம ஆனந்தம்; சொல்ல முடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம். அதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி மேலுடையை நனைக்கிறது. இரத்தத்தின் பிசிபிசுப்பு தொந்தரவாக இருந்ததினால் மேலுடையை எடுத்துவிட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம்! நேரமாக, நேரமாக பலம் குன்றுகிறது. 'அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால் இந்த உடல் தொந்தரவு இருக்காது...'

அலமியின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்று கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டுவிட்டு வராந்தாவிற்கு வந்தார். அலமியின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. "இன்னும் தூங்கவில்லையா?" என்று உள்ளே சென்றார்.

என்ன?

அலமி மார்பில் இரத்தமா? அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்?

"அலமி, நெஞ்சில் என்னடி?" என்று கத்திக்கொண்டு நெருங்கினார்.

"நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்ன வாசல்!" என்றாள் ஈனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும் அதில் கலக்கமில்லை. வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.

"இரத்தத்தை நிறுத்துகிறேன்!" என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார் தகப்பனார்.

"மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்!" என்று கையைத் தள்ளிவிட்டாள் அலமி.

"பைத்தியமா? இரத்தம் வருகிறதேடி!" என்று கதறினார்.

"இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியையடைக்காதீர்கள்!" என்றாள்.

தலை கீழே விழுந்துவிட்டது.

மணிக்கொடி, 06-01-1935
-------------------

105. வெளிப்பூச்சு


ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும் ஏறக்குறைய மாசக் கடைசியாகிவிட்டது. வீட்டில் எண்ணூற்று ஐம்பது செலவு. வீட்டு வாடகைக்காரன் என்னவெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இன்று இரவு வேளைக்கு வீட்டில் அரிசி இல்லை. சாப்பாடு லங்கணம் என்றாலும் பாதகமில்லை. இந்தச் சிறிய கவலைகள் உயிரையே வாட்டிவிடுகின்றன.

ஆபீஸிற்கு வந்துவிடுவது என்றால் அது விட்டுத் தொந்தரவுகளை எல்லாம் ஒரு பெண்ணின் தலையில் போட்டுவிட்டு, அங்கு வந்து ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் என்று பட்டது.

வீட்டிற்குப் போவதற்குக் கூட மனமில்லை. கையில் பணக்கஷ்டம் ஏற்பட்டுவிட்டால் சந்நியாச உலகம் மோட்ச சாம்ராஜ்யமாகத் தோன்றும். ரங்கநாதத்திற்கு, மோட்ச சாம்ராஜ்யம் அல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கையை விட எவ்வளவோ மேலானதாகப்பட்டது.

அன்று அவன் வீட்டிற்குள் வந்தபோது அவனுடைய மனைவி, தன் கணவர் சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் அவனை எதிர்பார்த்தாள். அவள் கண்களைச் சந்திக்கக்கூட அவனுக்குத் தைரியமில்லை.

கோட்டு ஸ்டாண்டில் சட்டையைக் கழற்றி மாட்டிக் கொண்டே, "இன்று சம்பளம் போடவில்லை. ஒருவரிடம் எட்டு அணா கடன் வாங்கி வந்திருக்கிறேன்" என்றான்.

"எட்டணாவா?" என்றாள்.

ரங்கநாதத்திற்குக் காரணம் இல்லாத சிரிப்பு வந்துவிட்டது. விழுந்து விழுந்து சிரித்தான். எட்டு அணாவை வைத்துக்கொண்டு பொக்கிஷ மந்திரியாக முடியுமா?

அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"மிஸ்டர் ரங்கநாத்" என்று வெளியிலிருந்து ஒரு குரல்.

"ஓகோ! ராகவன் வந்திருக்கிறாப்போல் இருக்கிறது. வாங்கோ ஸார்?" அவளைப் பார்த்து, "வீட்டில் பால் இருக்கிறதா?"

"ஆமாம், காலம்பற வாங்கினது இருக்கிறது."

"அப்போ காப்பியாவது போடு" என்றார்.

ராகவனும் வீட்டிற்குள் வர, அவரை வரவேற்று நாற்காலியில் உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.

"வெற்றிலை போடுங்கள் ஸார்" என்று ரங்கநாதம் வெற்றிலைச் செல்லத்தை அவர் பக்கம் வைத்துவிட்டுத் தாமும் போட ஆரம்பித்தார்.

"ஏன் ஸார், இவ்வளவு நேரம் ஆபீஸிலிருந்து வர?" என்றார் ராகவன்.

"கொஞ்சம் வேலை இருந்தது; நீங்கள் அப்போதே வந்தீர்களோ?"

"இல்லை, நான் அந்த மூலையில் திரும்பும்பொழுது நீங்கள் வீட்டிற்குப் போவதைப் பார்த்தேன். என்ன ஸார்? நேற்றுச் சினிமாவிற்குப் போனீர்களா? ரொம்ப நல்லா இருந்ததாமே?"

"என்ன கதை?"

"ஸ்டீவன்ஸன் நாவலை, பிலிம் பண்ணியிருக்கிறான். ஆக்ட் நன்றாக இருந்தது."

"அப்படியா? நானும் போகவேண்டும். நாளைக்கும் இருக்குமோ?"

"அது எனக்குத் தெரியாது."

இப்படி இவர்கள் சினிமாவைப் பற்றியும் அதில் நடிக்கிறவர்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் காப்பியும் தயாராகியது. ரங்கநாதத்தின் மனைவி கதவண்டையில் வந்து நின்றாள்.

"என்ன ஸார், காப்பி கொஞ்சம் சாப்பிடுங்களேன்" என்றார் ரங்கநாதம்.

"இல்லை ஸார், இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீங்கள் சாப்பிடுங்கள் என்றார் ராகவன்.

"கொஞ்சம் சாப்பிட்டால் என்ன வந்துவிடுகிறது? ராதா, காப்பியை இங்கேதான் கொண்டுவாடி" என்றார் ரங்கநாதம்.

காப்பியும் பரிமாறப்பட்டது. இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள். மறுபடியும் வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வெற்றிலை போடச் சொன்னார் ரங்கநாதம்.

ராகவன் வெற்றிலை போட்டுக் கொண்டே, "எனக்கு நேரமாகிறது. உங்களிடம் எட்டணா இருந்தால் கொடுங்கள். அவசரம்; நாளைக் காலையில் தருகிறேன்" என்றார்.

"என்ன அவ்வளவு அவசரம்?"

"இல்லை; வீட்டிற்குப் போகவேண்டும்" என்றார்.

ரங்கநாதத்திற்கு கொடுக்க மனமில்லைதான். கேட்காத மனிதன் கேட்கும்போது? எட்டணாவை வாங்கிக் கொண்டு ராகவன் வெளியேறினார்.

ரங்கநாதத்தின் மனைவி உள்ளே வந்து, "சிறிதே அரிசியும் மண்ணெண்ணெயும் வாங்குங்கள்" என்றாள்.

"தோசை இருக்கிறதோ இல்லையோ? இன்றைக்கு அது போதும்" என்றார்.

"மண்ணெண்ணெய்!"

"ராகவன் எட்டு அணா கேட்டார்; கொடுத்திருக்கிறேன். நாளை காலையில் வாங்கிக் கொள்ளலாம்" என்றார் ரங்கநாதம்.

மணிக்கொடி, 13-01-1935
--------------------

106. வேதாளம் சொன்ன கதை


எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்; கொஞ்சம் நிலபுலன்களும் உண்டு. வருகிற கலெக்டர்களுக்கு எல்லாம் 'ஷிகாரி' உத்தியோகம் பார்த்துப் பல மெடல்கள் பெற்றவர். சமயாசமயங்களில் சில கலெக்டர்களுக்குப் புலிகளைச் சுட்டுக்கொடுத்து, புகழும் புலித்தோலும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.

எனக்கு வேட்டையில் பிரியம் பழக்க வாசனையில் பிறந்ததென்றாலும் மிளா, மான், முயல் இவைகளின் எல்லையைத் தான் எட்டியிருந்தது. ஏனென்றால், நமக்கு நிச்சயமாக இந்த ரகத்தில் அபாயம் கிடையாது அல்லவா?

அன்று நான் காசித் தேவரை அழைத்த பொழுது தமக்குக் கோர்ட்டில் வேலையிருப்பதாகக் கூறிவிட்டார். அவருடைய துப்பாக்கியை வாங்கிக் கொண்டு பழைய பாபநாசத்தை அடைந்தேன். ஏன் கலியாண தீர்த்தம் வரை சென்று வரலாகாது என்று யோசனை தட்டியது.

முட்புதர் வழியாகவுள்ள குறுக்குப் பாதையாகச் சென்றேன். அப்பொழுது சித்திரை வெய்யில். குத்துச் செடிகளையும் முட்புதர்களையும் தாண்டி, உயர்ந்த மரங்கள் அடர்ந்த பாதைகள் வழியாக, சருகுகள் வழுக்கும் சமயம் துப்பாக்கிக் கட்டையை ஊன்றிக் கொண்டுசென்றேன். கீழே திரும்பிப் பார்த்தால் பாறைகளும் கண்கூசும் கானலும்! உயர, எங்கோ இடைவெளி மூலமாகத் தூரத்துப் பொதிய மலைச் சிகரம் தெரியும். பஞ்சு மேகங்கள் சிகரத்தைத் தழுவியும் தழுவாமலும் நீல வானில் மிதந்தன.

போகும் பாதையில் வழி நெடுக, சில்வண்டுகளின் காதைத் துளைக்கும் ரீங்கார சப்தம். சமயாசமயங்களில், திடீரென்று, பேசி வைத்தாற் போல் ஒலி நிற்கும். அந்த நிசப்தம் - மௌனம் - சிரமமற்று ஒன்றிலிருந்து ஒன்றில் தாவிச் செல்லும் சிந்தனை வண்டின் போக்கைச் 'சக்'கென்று விசை வைத்ததுபோல் நிறுத்திவிடும். அந்த ஒற்றை வினாடி அமைதியின் பயங்கரத்தை விவரிக்க முடியாது. அப்பொழுதுதான், சப்த கன்னிகைகள், பிரம்ம ராக்ஷஸுகள் இவற்றின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை நம்மைப் பன்மடங்கு கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.

நான் ஏதோ நினைத்துக்கொண்டு சென்றேன். எவ்வளவு தூரம் சென்றேனோ! இந்தச் சில்வண்டு ரீங்கார அமைதிதான் என்னைச் சட்டென்று நிறுத்தியது. எந்த இடத்திலோ வழி தவறியிருக்க வேண்டும். நான் நின்ற இடத்திற்கு இதுவரை நான் வந்ததில்லை. இருந்தாலும் அவ்வளவு இலகுவில் பாபநாசம் காடுகளில் நான் வழி தவறிவிடக் கூடியவனல்லன்; சிறு பிராயம் முதலே இப்பகுதிகளில் அலைந்து பழக்கம்.

'பார்ப்போம், குடி முழுகிவிடவில்லை!' என்று கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பனிரெண்டு. உச்சி நேரம். கடிகாரம் பசியை எழுப்பியது. தண்ணீரையாவது குடித்துப் பசியாறலாம் என்று மேலும் கீழுமாகச் சுற்றிப் பார்த்தேன்.

நான் இருந்த இடத்திற்குக் கீழே, பாறைச் சரிவில் ஒரு சுனை; தூரத்துச் சூரியனின் பளபளப்பு அதில் ஒரு கணம் மின்னியது. அங்கு இறங்கித் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு, ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

மலைச்சரிவில் நேரே செங்குத்தாக இறங்க வழியில்லை. சிறிது சுற்றி இரண்டு மைல் நடந்து அந்தச் சுனையருகில் வந்து சேர்ந்தேன். கோபுரம் போல் குவிந்து சரிந்த இருபாறைகளுக்கிடையில் உள்ள ஒரு குகையில் சுனை. அதில் பெருக்கெடுக்கும் நீர் வழிந்து ஒரு சிறிய தடாகமாக முன்பக்கத்தை நிறைத்தது. தரை தெரியும்படியாக அவ்வளவு தெளிவாக இருந்தாலும் குறைந்தது நாற்பதடி ஆழமாவது இருக்கும். உள்ளே சிறு மீன்களும் கறுப்புத் தவளைக் குஞ்சுகளும் பளிச் பளிச்சென்று மின்னி ஓடின.

பாறைச் சரிவில் நின்று இரு கைகளாலும் அள்ளி அள்ளித் தண்ணீரைக் குடித்தேன். அளவுக்கு மிஞ்சிக் குடித்ததினால் சிறிது சோர்வு. வலிக்கும் கால்களைத் தண்ணீரில் முழங்கால் அளவுக்கு விட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். அப்பா, என்ன சுகம்!

பழையபடி எந்த வழியாகத் திரும்புவது என்பது பெரிய பிரச்னையாயிற்று. உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே யோசித்தேன்.

சுனைக்குப் பக்கத்தில், பாறைச் சரிவில் ஓர் உயர்ந்த ஆலமரம். நான் அத்தனை நேரம் அதைக் கவனிக்கவில்லை. அதன் ஓர் உச்சி நான் சிறிது நேரத்திற்கு முன் நின்றிருந்த உயர்ந்த மேட்டை எட்டியது. 'எத்தனை வயதிருக்கும்? பழங்கால விருட்சம்!' என்று எண்ணமிட்டுக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன்.

அந்த ஓரத்து உச்சிக் கிளையில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறது? பழந்தின்னி வௌவால்! நரித் தலையும், தோல் இறகுகளும் பிரம்மாண்டமாக இருக்கும். காசித் தேவர் இந்த ஜாதி வௌவால்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கிடைப்பதே அருமையாம்! மேலும் அவருக்குப் பிரியமான மாமிசமாம்.

'அதை ஒரு கை பார்ப்போமே!' என்று பாறையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அதை நோக்கிக் குறி வைத்தேன்.

"அடடே! சுட்டுவிடாதே! நில், நில்!" என்று பயத்தில் பிளிறும் மனிதக் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

"அடேடே! நில்! நான் வௌவாலில்லை! வேதாளம்! சுட்டு விடாதேயப்பா, தயவு செய்து!" என்று மறுபடியும் கூவியது அக்குரல்.

என் கையிலிருந்த துப்பாக்கி நழுவிச் சுனையுள் விழுந்துவிட்டது.

வேதாளம் என்றால் யாருக்குத்தான் பயமிருக்காது? அதிலும் எனக்கு!

வேதாளப் பயத்தில் துப்பாக்கியையும் சுனைக்கு அர்ப்பணம் பண்ணியாகிவிட்டது. காசித் தேவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தான் புரியவில்லை.

இச்சந்தர்ப்பத்தில், வேதாளம் ஒரு அந்தர் அடித்துச் சிறகை விரித்துப் பறந்து வந்து எனக்கெதிரில் உட்கார்ந்து கொண்டது. அதன் பல்லும் முகமும், என்ன கோரம்! முதுகின் மேல், முதுகோடு முதுகாய், அது சிறிது முன் பறந்துவர உதவிய தோல் சிறகு ஒட்டிக் கிடந்தது. தலை சுத்த வழுக்கை; கபால ஓரத்தில் இரண்டொரு நரைத்த சடைகள்; கை கால் விரல்களில் நாட்பட வளர்ந்து பழுப்பேறிய நகங்கள்.

அது பல்லைப் பல்லைக் காண்பித்துக் கொண்டு, என்னைப் பார்த்த வண்ணம் குரங்கு மாதிரிக் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் ஆழமான கண்களில் கிணற்று ஜலம் மின்னுவது மாதிரி அதன் கண்மணிகள் மின்னின.

கொஞ்சம் மரியாதையாகப் பேசி, தட்டிக் கழித்துவிட்டு அதை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.

தட்டுக்கெட்டாற் போல, "நீர் ஏன் அப்படித் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தீர்?" என்று கொஞ்சம் மரியாதைப் பன்மையிலேயே விசாரித்தேன்.

"நான் வேதாளம்! நாங்கள் தலைகீழாகத்தான் தொங்க வேண்டும்!"

"வௌவால்களல்லவா அப்படித் தொங்கவேண்டும்?" என்றேன். நான் இதுவரையில் ஒரு வேதாளத்தையாவது நேரில் சந்தித்தது கிடையாதல்லவா!

"வௌவால்களும் அப்படித்தான் என்று சொல்லும். தலைகீழாகத் தொங்குவது எங்களது அசைக்க முடியாத உரிமை. எங்கள் ஜீவனுள்ள மட்டிலும் அதற்காகப் போராடுவோம்!" என்று கொஞ்சம் ஆவேசத்துடன் தலையை ஆட்டிப் பேசியது அந்த வேதாளம்.

அது தலையை ஆட்டிய வேகத்தில் அதன் கோரப்பற்கள் இரண்டும் கீழே விழுந்துவிட்டன. வேதாளம், அவற்றை உடனே எடுத்துச் சுனை தண்ணீரில் கழுவிவிட்டு மறுபடியும் ஈற்றில் ஒட்டவைத்துக் கொண்டது.

இதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. களுக்கென்று சிரித்துவிட்டேன்.

"ஏதேது! என்னைக் கண்டால் உமக்குப் பயம் தட்டவில்லையா! ஜாக்கிரதை! மனிதர் எல்லாரும் என்னைக் கண்டால் பயப்பட வேண்டும் என்பது சம்பிரதாயம்! நீர் மனிதர்தானே!" என்று கேட்டது.

இந்த வேதாளத்தின் விசித்திர சந்தேகங்கள் அதன்மீது எனக்கு அனுதாபத்தை உண்டுபண்ணின.

"உமக்கு நான் மனிதனா அல்லவா என்று கூட ஏன் தெரியவில்லை? நான் மனிதன்தான்!" என்று சொன்னேன்.

"எனக்குப் பார்வை கொஞ்சம் மங்கல், அதனால் தான். பார்வை மங்கக் காரணம் என்ன தெரியுமா? நான் பிறந்ததே திரேதா யுகம்!" என்று தனது வயதை அறிவித்துவிட்டு, "அதெல்லாம் அந்தக் காலத்திலே! இந்தக் காலத்து மனுஷனுக்குத்தான் பயப்படக் கூடப் புத்தியும் இல்லை, திராணியும் இல்லையே!" என்று மனித வர்க்கத்தின் தற்போதைய பலவீனத்தைப் பற்றித் தன் அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டியது.

"அடபாவமே!" என்று நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.

"அந்தப் பாபத்தாலேதான், ஐயா, நான் சைவனானது! அந்தக் காலத்து மனுஷன் என்றால் எங்கள் ஜாதியைக் கண்டு பயப்படுவான், ரத்தத்தைக் கக்குவான்! இப்போதுதான் உங்களுக்குக் கக்குவதற்குக் கூட ரத்தம் இல்லையே! அதனாலேதான் அதோ இருக்கு பாரும், தேன் கூடு அதிலிருக்கும் தேனைச் சாப்பிட்டுக் கொண்டு, சென்ற ஒரு நூறு வருஷமாக ஜீவித்து வருகிறேன்!"

"தினை மாவும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளக் கூடாதோ? உடம்புக்கு நல்லதாச்சே!" என்றேன்.

"இந்தக் காலத்திலே அது எங்கய்யா கிடைக்கிறது? முந்திக் காலத்திலேன்னா எல்லாரும் பயப்பட்டா, நாங்க நினைக்கிறதே குடுத்தா. இந்தக் காலத்திலே, எதுக்கெடுத்தாலும் துட்டு இல்லாமல் காரியம் நடக்க மாட்டேன் என்கிறதே!" என்றது.

"நீர் பூர்வ ஜன்மத்தில்..."

"பூர்வாசிரமத்தில் என்று சொல்லுங்காணும்!" என்று இரைந்து என்னை அடிக்க வேகமாகக் கையை ஓங்கியது.

திடீரென்று ஓங்கியதால் அதன் கை 'மளுக்' என்ற சப்தத்துடன் சுளுக்கிக்கொண்டது. இந்தக் கிழ வேதாளத்தின் மீது நிஜமாகவே எனக்கு அன்பு தோன்றவும், அதன் கையைப் பிடித்து உதறிச் சுளுக்கைத் தடவி விட்டுக்கொண்டே, "வயசு காலத்திலே இப்படி உடம்பை அலட்டிக் கொள்ளலாமா? நீர் பூர்வாசிரமத்தில் பிராமணன் தானே! அப்படியானால் தர்ப்பணம், சிரார்த்தம் செய்துவைத்துப் பிழைக்கலாமே!" என்று ஆலோசனை சொன்னேன்.

"நீர் சொல்லுகிறதும் நல்ல யோசனைதான்; ஆனால் எனக்கு வாதமாச்சே! குளிர்ந்த ஜலத்தில் குளித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதே! என்ன செய்யலாம்?"

"அப்படியானால் உடம்புக்கு ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிட வேண்டும். உங்கள் வேதாள உலகத்தில் வைத்தியர்கள் கிடையாதா?"

"எங்களுக்குத்தான் சாவே கிடையாது என்று பிரம்மா எழுதி வைத்துவிட்டானே! அதனாலேதான் வைத்திய சாஸ்திரத்தை நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை!"

"சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடும்; உடம்புக்கு நல்லது!"

"மறுபடியும் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீரே! நான் சைவனாகித் தான் குடலே பலவீனமாகிவிட்டதே! வேறெ ஏதாவது மூலிகைச் சத்து இருந்தா சொல்லும்!"

"அப்படியானால் ஜஸ்டிஸ் ராமேசத்திடம் கேட்டுச் சொல்லுகிறேன். எனக்கு நேரமும் ஆகிறது; மேலும் இந்தக் காட்டிலே வழியும் தவறி விட்டது!" என்று சொல்லி எழுந்தேன்.

"நான் வேண்டுமானால் வழி காண்பிக்கிறேன் வாரும்!" என்று எழுந்தது வேதாளம்.

"துப்பாக்கியை எடுக்க வேண்டுமே?" என்றேன்.

"உமக்கு ஞாபகப் பிசகு அதிகமோ! தண்ணீரில் கால்பட்டாலே எனக்கு வாதஜுரம் கண்டுவிடுமே! இருந்தாலும் நீர் நல்லவராக இருக்கிறீர், உமக்காக..." என்று தண்ணீருக்குள் அந்தரடித்து, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்தது.

கரையில் அதற்கு நிற்கக்கூடச் சக்தியில்லை. ஓட்டைப் பல்லும், கை கால்களும் வெடவெடவென்று ஆடின.

என் மேல் வேஷ்டியைக் கொடுத்துப் போர்த்திக் கொள்ளும்படி சொன்னேன்.

போகும் வழியில், "அந்தக் காலத்து வளமுறை எப்படி?" என்று பேச்சுக் கொடுத்தேன்.

முன்னே சென்ற வேதாளம், நின்று திரும்பி, "எனக்கு ராமன் கிருஷ்ணன் எல்லாரையும் தெரியும். அவாள் கூடப் பயந்துண்டுதான் இருந்தா. எனக்கு அவாளைச் சின்னப் பையனாக இருக்கும்போதே தெரியும். அவாள் எல்லாம் தைரியசாலிகள் தான். ராக்ஷஸன் என்றால் தொம்சம் பண்ணிடுவாள். ஆனால், எங்களைக் கண்டா எப்போதுமே நல்லதனமா பயப்படுவா. அந்தக் காலத்து மனுஷாள்தான் என்னங்கிறீர்! தைரியத்திலே அசகாய சூரர்கள்தான். ஆனால் அவாளுக்கு மட்டுமரியாதை எல்லாம் தெரியும். முன்னோர்கள் சொன்னபடி, தெய்வம், பேய், பிசாசு, பூசாரி என்றால் ஒழுங்காகப் பயப்படுவாள். உங்கள் சுந்தரமூர்த்தி நாயனார்தான் என்ன? அவரைக் கூட எத்தனை தரம் பயங்காட்டியிருக்கேன் தெரியுமா? அந்தக் காலத்திலேதான் எங்களுக்கு முதல்லே பிடிச்சது வினை. எங்கையோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!" என்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு சிறு முயல், அதன் காலில் இடறிப் பாய்ந்து பக்கத்துப் புதரைப் பார்த்துத் தாவியது.

"ஐயோ!" என்று கூவிக்கொண்டு, வேதாளம் வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டது.

ஓடியது ஒரு முயல்தான் என்று சொல்லி அதன் பயத்தைத் தெளிவித்தேன்.

"நாங்கள் தலைகீழாகத் தொங்கித் தொங்கிக் கால்களெல்லாம் பிரயோஜனமில்லாமல் போய்விட்டன. இந்தத் தலைகீழ் ராஜ்யம் வந்ததும் அந்தச் சமணர்கள் காலத்தில்தான்!" என்றது.

"எப்படி?" என்றேன்.

"அவர்கள் எல்லாம் மரத்திலே உறியைக் கட்டி, அதிலே உட்கார்ந்து கொண்டார்கள். ஜனங்களெல்லாரும் அந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிச்சா! நான் தான் அப்போ அதற்கு இந்த வழி பண்ணி மறுபடியும் எங்களைப் பார்த்துப் பயப்படும்படி செஞ்சேன்!" என்று அது கொஞ்சம் பெருமையடித்துக் கொண்டது.

பேசி பேசி அதற்குள் பழைய பாபநாசத்திற்கு வந்துவிட்டோம்.

மண்டபத்தருகில் நின்று ஒரு முருங்கை மரத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தட்டியது.

"உமக்கு உச்சினிபுரத்து வேதாளத்தைத் தெரியுமா?" என்றேன்.

"அந்த விக்கிரமாதித்தப் பயலைத் தூக்கிக்கொண்டு அலைந்தாரே, அவரா! அவர் என் அண்ணா பிள்ளை!" என்றது.

"இதோ ஒரு முருங்கை மரம் இருக்கிறதே, இதில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்! நான் வேண்டுமானால் தினம் இங்கு வருகிறேன். உம்முடைய பழைய கதை எல்லாம் சொல்லுமே!" என்றேன்.

"ஓஹோ! அப்படியா சேதி? எங்க அண்ணா சுத்த அசடு. ஏமாந்து சொல்லிக்கொண்டு கிடந்தான்? நான் சொல்ல வேண்டுமானால், என்ன தெரியுமா? உமக்குக் கிடைக்கிற லாபத்தில் சரி பாதி எனக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டாம்பு ஒட்டிப் பத்திரம் எழுதினால்தான் மேலே பேசலாம்!" என்றது.

"இப்பொ எல்லாம் புஸ்தக வியாபாரம் கொஞ்சம் மந்தம். நீர் அப்படியெல்லாம் கேட்கக் கூடாது!"

"அப்படியானால் ஒரு கோவிலாவது கட்டி வையும்" என்றது.

வேதாளப் பொருளாதார சாஸ்திரத்தில் கோவில் அவ்வளவு லேசாகக் கட்டிவிடலாம் என்றால் மனுஷ உலகத்தில் அப்படி இல்லையே! "பிறகு யோசித்துக் கொள்ளலாம்!" என்று நினைத்துக் கொண்டு எழுந்து, தவிடுள்ள அரிசி, 'விட்டமின் டி' எல்லாம் சேர்த்து சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளும்படி அதற்கு ஆலோசனை கூறிவிட்டு, காசித் தேவர் வீட்டை நோக்கி நடந்தேன். நான் எப்படிச் சத்தியம் செய்தாலும் அவர் என்னை நம்பப் போகிறாரா? எங்கோ படுத்துத் தூங்கினேன் என்றுதான் சொல்லுவார்.

நான் திரும்பிப் பார்க்கையில் அந்த வேதாளம் வௌவால் மாதிரிப் பறந்து சென்று ஓரத்து மலைச்சரிவில் மறைந்துவிட்டது.

மணிக்கொடி, 15-02-1937

--------------------

107. விபரீத ஆசை


தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு, மோளம் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுபத்தி, எருமுட்டை கலந்த வாசனை தூரத்துப் படை எல்லாம் மெட்ராஸ் பிண 'வாசனை நாற்றம்' கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்துச் சிந்தனையையும் தாக்கியது.

நான் இப்பொழுது நிற்பது என் வீட்டு மொட்டை மாடி.

மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ!

அது ஒரு பணக்கார பிணம். அதாவது மாஜி பணக்காரனாக இருந்த பிணம்.

உடன் வருகிறவர்கள் ஜாஸ்தி, கொள்ளி வைப்பவனுக்குக் கைத்தாங்கள் சம்பிரமம் எல்லாம்.

பிணம், பட்டு அணிந்திருந்தாலும் வாயைத் திறந்திருந்தது. திறந்த வாயைச் சந்தனம் அப்பி மூடியிருந்தார்கள். அப்பொழுதுதான் குளித்து எழுந்தவர் மாதிரி வாரிவிடாத நரைத்த கிராப்புத் தலை.

என் கண்கள் இந்த நுணுக்கமான விவரங்களை உயரவிருந்து இரண்டொரு நிமிஷ காலத்தில் கவனித்த தென்றாலும் என் மனம் வேறெங்கோ சென்றுவிட்டது.

நேரத்தையும் தூரத்தையும் தாண்டிச் செல்லும் யந்திர விசை சிந்தனையிடந்தானே இருக்கிறது?

"புனரபி மரணம், புனரபி ஜனனம்... ..."

"இதிலென்ன புதுசு... சவத்தை விட்டுத் தள்ளு" என்றது விவகார அறிவு. ஆனால் பற்றுதல் விட்டால் தானே?

"புனரபி மரணம்"... இத்யாதி... இத்யாதி.

இதைக் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு நிர்விசாரமாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

கலியாணமாகாத வயது வந்த கன்னிப் பெண்ணை வைத்துக்கொண்டு, காக்க முயலும் மாஜி சுமங்கலி அவ்வாறு நிர்விசாரமாக இருப்பாளா? அதுதான் போகட்டும்; நாளைக்கு அடுப்பு மூட்ட வேண்டுமே!

வாழ்வென்ற குளத்தில் நிரந்தரக் கடன் என்ற பாசியை ஏதோ இரண்டொரு நாளாவது விலக்கும் முப்பது ரூபாயை இனி யார் வந்து போடுவார்கள். ஜட்கா வண்டிக் குதிரை மாதிரி ஓடி ஓடி உழைத்தவருக்கு நாலு பேர் சவாரி சௌகரியமாக இருக்கும். ஆனால் அவரை விட்டால் கதியில்லை என்பவருக்கு...

அந்தக் காலத்தில் ரங்கசாமி நண்பன் தான், ரொம்ப நல்லவன்; சாது. அத்தோடு அவன் மனைவியும் ரொம்ப நல்லவள், சாது. அதுமட்டுமா? விவரம் தெரியாத அழகி.

நான் அப்பொழுது அவர்கள் வீட்டுக்குப் போவேன்... அடிக்கடி.

என் குழந்தையின் வியாஜமாக நான் அங்குச் செல்லுவேன்... என் குழந்தைக்கு அவர்கள் பேரில் ரொம்பப் பிரியம். அவர்களுக்கும் அப்படித்தான்.

நான் என் நண்பனைப் பார்க்கப் போவேன். என் எண்ணம் அத்துடன் நின்றுவிடவில்லை. அது அவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. என் மனமும் விழுந்துவிட ஆரம்பித்தது. இப்பொழுது எனக்கு அவள் பேர் கூட ஞாபகமில்லை. அவ்வளவு காலமாகி விட்டது...?

ரங்கசாமி வாழ வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்திரி. என்னமோ தவறிப் போய் மேடைத்தெரு 9-ம் நம்பர் வீட்டில் குடித்தனம் நடத்தினான். அவனும் நானும் ஒரே ஆபீஸில் தான் வேலை பார்த்து வந்தோம்; அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம்; எனக்கு ஐம்பது ரூபாய் சம்பளம்; எனக்குக் கால் தடுக்கினால் எங்கப்பா வைத்துவிட்டுப்போன வயல் வரப்பின் மேலாவது விழலாம்; அவன் கடன்காரன் காலடியில்தான் விழவேண்டும்; எத்தனையோ தடவை கடன்காரன் காலடியில் விழுந்திருக்கிறான்; கடன்காரனுக்குப் பின்னால் டாக்டர் எப்பொழுதும் நிற்பார்.

நான் அப்பொழுது என் குடும்பத்தை வீட்டுக்கு, ஊருக்கு அனுப்பி விட்டிருந்தேன். என் கைச் சமையல் கசந்தால், ரங்கசாமி வீட்டுச் சாப்பாடு. அல்லது அசட்டுப் பிடித்த ஐயன் கிளப் உண்ணாவிரதம்.

இந்தச் சமயத்தில்தான் நான் ரொம்ப நெருங்கி ரங்கசாமி வீட்டில் பழக நேர்ந்தது. டாக்டர் ஏதோ லத்தீன் பெயருள்ள காய்ச்சல் என்று சொன்னார். அவனது நோய் மறுநாள் என்று எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போயிற்று. கிடப்பில் விழுந்து விட்டான். மனைவி பிரசவத்திற்காகத் தாடி வளர்க்கும் ஹோட்டல் ஐயன் மாதிரி, முகம், வரவரக் குழிந்து பிரேதக்களை காட்ட ஆரம்பித்துவிட்டது. மூன்று மாதம் அவளும் ஓயாது ஒழியாது உழைத்தாள்.

உத்தியோகமோ தனிப்பட்ட ஸ்தாபனத்தில். எத்தனை நாளைக்குத்தான் ரங்கசாமிக்காகக் காத்துக் கொண்டிருப்பான் எஜமான்? வேலையும் போய் விட்டது. சுமை முழுவதும் என்மேல் விழுந்தது...!

அவள் முதலில் எனது உதவியை சங்கோஜத்துடன் ஏற்றாள். பிறகு 'அண்ணா! அண்ணா!' என்று கூப்பிட்டு மனதைத் திருப்தி செய்து கொண்டாள்.

டாக்டர் வருவார்; மருந்து எழுதிக் கொடுப்பார்; உணவு எழுதிக் கொடுப்பார்! உயிரை உடலுடன் ஒட்ட வைக்க அவரும் என்னென்னவோ வித்தை எல்லாம் செய்துதான் பார்த்தார்.

ரங்கசாமியைத் தூக்குவது, கிடத்துவது, அவனுக்கு வேண்டிய சிசுருஷைகளைச் செய்வது எல்லாம் நானும் அவளும் தான். அந்தத் தனியான வீட்டில் நானும் அவளுந்தான்... இதே நினைப்புத்தான், எப்பொழுதும் என் மனசில். உதவி செய்யும்பொழுது எங்கள் உடலும் தொட்டுக் கொள்ளும். எனக்குச் சுரீர் என்று விஷமேறும். அவளுக்கு எப்படியோ?

ராத்திரியில் வென்னீர் ஏதாவது போடவேண்டுமென்றால், நான் அடுக்களை செல்லுவேன்; அவள் உடனிருந்து பார்த்துக்கொள்வாள்.

"அண்ணா என்னவோ போல் பார்க்கிறாரே!" என்ற ஓலம் கேட்கும். அடுப்பில் போட்டது போட்டபடி அங்கு ஓடுவேன். அவள் கணப்புச் சட்டியில் தவிட்டை வறுப்பாள். நான் வாங்கி ஒத்தடம் இடுவேன். நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சில சமயம் என் கை அவள் கைவளையலில் படும்; அல்லது ஸ்தன்யங்களில் பட்டு விடும். அந்த ஒரு நிமிஷம் எனக்கு நரக வேதனைதான். அவளுடைய இளமையில் என் மனம் லயித்து நிற்குமே ஒழிய, அவளது சங்கடமோ, அவளது ஊசலோ எனக்குப் படாது. அச்சமயங்களில் நான் அவளைத் திரும்பிப் பார்த்ததில்லை. அவள் அதில் படபடப்பைக் காட்டிக் கலவரத்தை உண்டு பண்ணிவிடவில்லை. பின் பலமுறை வேண்டுமென்றே தனியாக நாங்கள் நிற்கும்பொழுது அவள் மீது நான் பரீட்சை நடத்தியதுண்டு. ஆனால் பிரதிபலன் எதிர்ப் பிரதிபலிப்பற்ற பார்வைதான்.

நாலைந்து நாள் கழித்து நான் ஆபீசுக்குப் போகப் புறப்படும்பொழுது ரங்கசாமியைப் பார்க்க அவன் வீட்டுக்குள் போனேன். விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்துதான் என் ரூமுக்குத் திரும்பியிருந்தேன்.

முந்திய நாள் ராத்திரி ஒரு கண்டம். நடுநிசியில் டாக்டர் வந்தார். மருந்து கொடுத்தார்; தூங்கினால் விழிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்றிருந்தார். காலை வரையில் ரங்கசாமி தூங்கவேயில்லை.

பார்லிக் கஞ்சியைப் போட்டு வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு நான் ரூமுக்குச் சென்றிருந்தேன்.

திரும்பி வந்து பார்க்கும்பொழுது அவள் ரங்கசாமி பக்கத்தில் அலங்கோலமான உடையில் நின்று கொண்டிருந்தாள். தலையில் ஈரம் சொட்டுகிறது. இடையில் ஒரு துண்டுதான். மஞ்சள் இட்ட மாங்கல்யம் துல்யமாகப் பிரகாசித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. துண்டு அவளது ஈரம் காயாத அங்க லட்சணங்களை எடுத்துக் காண்பித்தது.

என்னைக் கண்டவுடன் அவள் தன் உடை அலங்கோலத்தை நினைக்கவில்லை... தழுதழுத்த குரலில், "வந்து பாருங்களேன், என்னவோ மாதிரி இருக்கே" என்றாள்.

நான் அருகில் சென்று ரங்கசாமியைத் தொட்டுப் பார்த்தேன். அங்கிருந்தது மாஜி ரங்கசாமிதான்.

இவ்வளவும் என் புலனறிவுக்குத் தெரிந்ததே ஒழிய மனம், அவள் கட்டியிருந்த துண்டின் இடை வெளியிலேயே லயித்தது. மனசில் குமுறல்; பேய்க்கூத்து!

"ஒன்றுமில்லை, அயர்ந்த தூக்கம். இப்படிப் பயப்படலாமா? வாருங்கள் இந்தப் பக்கம்"... என்னமோ அன்று தைரியமாக அவள் கையைப் பிடித்தேன். எதிர்ப்பின்றி உடன் வந்தாள்.

"அந்த புடவையை உடுத்துங்கள்" என்று கொடியிலிருந்து அதை எடுத்தேன். அவளிடம் கொடுக்கவில்லை. அவள் துண்டு நெகிழ்ந்தது! நான் மிருகமானேன்! அவள் பிணமானாள்!

நான் அன்று ஆபீசுக்குப் போகவில்லை. ரங்கசாமியின் சடலத்தைப் பின் தொடர்ந்தவர்கள் நாங்கள் இருவர்தான். அவள் தீச்சட்டி எடுத்துக்கொண்டு நடந்தாள். திரும்பி வரும்பொழுது, அவளைப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவளை ஊருக்கு அனுப்பும் வரை நான் மீண்டும் அதைப் பற்றி நினைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பையோ பாசத்தையோ அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அது எங்களுக்கு ஓர் மறந்த சம்பவமாகிறது. என் மனம் நிம்மதியடைந்தது.

இப்பொழுது என் மகள் லக்ஷ்மிக்கு, அவர்கள் இருவரும் பிரியம் வைத்த அவளுக்கு, வயது 14. பருவமடைந்து விட்டாள். எனக்கும் கொஞ்சம் கடன் இருக்கிறது; அதோடு பிராவிடன்ட் நிதியிலிருந்தும் இன்ஷுர் தொகை கொஞ்சமும் அவளுக்கும் அவள் தாயாருக்கும் கிடைக்கும் கவலையில்லை; ஆனாலும் பிணத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசில், ரங்கசாமி வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது, அதே மாதிரி மிருக இச்சை தோன்றுகிறது.

பார்க்காமல் ஓட முயலுகிறேன். முடிய வில்லையே? கீழ்ப்பாக்கத்திற்கு என்னைக் கொண்டு போகுமுன் நாலு பேர் சவாரி கிடைத்தால் தேவலை என்று தோன்றுகிறது.

எல்லாம் ரங்கசாமியால் வந்த வினை. அவன் ஏன் இப்படி நோஞ்சானாகக் குடும்பம் நடத்த முயல வேண்டும்?

இந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால் பிரேதத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் இந்தக் கற்பனை? ரங்கசாமியும் அவனது மனைவியும் வந்து ஏன் இந்த நாடகமாடிவிட்டுப் போக வேண்டும்?

"என-க்-குப் - பயமா - இ-ருக்-கே!"

ஜோதி, ஏப்ரல் - 1939

-------------

108. விநாயக சதுர்த்தி


அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின.

நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்...

பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை, நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும்.

"உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது.

"'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன்.

"ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது.

ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன்.

"அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும்.

அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின.

"ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி.

"கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன்.

"கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி.

"திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன்.

பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர்.

"சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.

"அதென்ன?"

"கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே. நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே, அங்கே தான்கும்பினியான் சரக்குகளைப் பிடித்துப்போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும் - இந்தப் பத்தமடைப் பாய் இருக்கே அது - ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். 'குஷ்டந் தீர்ந்த துறை, என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!"

"இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமோ என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி.

"இதெல்லாம் உன் 'டிபார்ட்மெண்டு'. என்னைக் கேட்டால்...?" என்று சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.

"என்னைக்குமா உங்களைக் கேக்கறேன்? ஏதோ கேட்டால்..."

அவள் காலையில் ஸ்நானம் செய்து தலையில் ஈரங்காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் விபூதி, அதற்குமேல் குங்குமம்... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை... வேகத்திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன்.

"ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன்.

"ஆமாம், அடுப்பிலே பாகு என்னமோ காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்பலில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது.

வெளியே வெய்யில் ஏற ஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா?

"அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப்பாதைதான்.

"இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக்கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொழுது உடன்காடு...(உடை மரம் - கருவேல மரம்)

"அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக் குடுமியும் பூணூலும் இருந்தாலும் முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக் காலமாக பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியாபிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா, சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே இப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி... ஆனால், நாலு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாது... எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும் 'அடியாத மாடு படியாது' என்பது வேளாரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும்படி நடந்து கொண்டான் என்றால் பயல் எவ்வளவு துடியாக இருந்திருக்க வேண்டும்!

"சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளையாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந்தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார்.

"'என்ன வே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஓடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச் சொல், 'வேய்' ஆகி, பின் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது; 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் சரி, அவர் தென்பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

"என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே. சக்கரத்துக்கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த்தேன்... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டு விட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?... வீடு முழுக்கவும் ஒரு நாளைக்குப் பார்த்தா, யானையும் குதிரையுமா பண்ணிப் போட்டுவிடுவான்... 'இதெல்லாம் சுட்டுக் கொண்டா. வர்ணம் பூசித்தாரேன். கொலுவுச் சாமானா விக்கலாண்டா!' இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி, மறுபடியும் வெறும் களிமண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மா வாவது வீட்டோ ட கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார்.

"'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை.

"'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர்.

"'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..."

"நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி.

"அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான்.

"மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள்.

அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்...

"சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு.

"அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம்.

"உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம்.

"ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள்.

"இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார்.

"ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான்.

"ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்...

"இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன.

"கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்...

"அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார்.

"ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை...

"ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு.

"அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.

"'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு.

"அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்; கேட்கவா வேண்டும்!

"முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்டமில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், காசு கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்துவிட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார்களில் ஒன்றைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்திருந்தாள்.

"சுப்பு குளித்துவிட்டு வந்தான். வீட்டில் நடந்த கதை தெரிந்தது...

"'இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல் அவன் நேரே வெளியே சென்றான்.

"அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ் திடுக்கிட்டார். ஆனால், சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள். இவன், பிள்ளையாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினதினால் பேச்சிக் கசத்தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டினால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்பட வேண்டியதுதான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்துவிட்டான். அவன் அப்புறம் வெளிவரவே இல்லை.

"வலை கூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை!"

அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன.

என் மனைவி, நின்று, கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம் அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார் கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்றுபட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை!

அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

"அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்... கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத் தின்று உயிரைவிடும்!..." என்றது மனசு!

"இதையும் நம்ப வேண்டுமா?" என்றேன்.

"இது முழுப் பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்...?"

"ஆக்கு..!"

"வெயிலாகிறதே. எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா! என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் மனைவி.

"ஒரு கதை!" என்றேன் நான்.

"உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு இலைகளைப் போட்டாள்.

"நிஜமாக!" என்றேன்.

"நாங்கள் நம்புகிறதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையில்லை. பின் நாங்கள் எப்படி உங்களை நம்புவது?"

"நம்ப வேண்டாமே!"

"இந்தப் புது மாதிரிப் பேச்சு எனக்குப் புரியலே! வாருங்கள், நேரமாகிறது!" என்றாள் அவள்.

யாரும் சாப்பிடப் பின்வாங்குவார்களா இந்தத் தேசத்தில்!

மணிக்கொடி, 30-09-1936
--------------

This file was last updated on 4 December 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)