pm logo

ந. சுப்புரெட்டியார் எழுதிய
கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
(வரலாறு))


kalingkattup paraNi - research
by na. cuppu reTTiyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ந. சுப்புரெட்டியார் எழுதிய
கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி

Source:
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
வித்துவான் ந. சுப்பு ரெட்டியார் எம்.ஏ., பி.எஸ்ஸி., எல். டி.,
தமிழ்த்துறைத் தலைவர்,
அழகப்பா பயிற்சிக் கல்லூரி, காரைக்குடி.
செல்வி பதிப்பகம், காரைக்குடி
முதற் பதிப்பு - மார்ச்சு 57
(உரிமை பதிப்பகத்தார்க்கே)
பக்கங்கள் 151
-------
சமர்ப்பணம்

தீந்தமிழ் அன்னைக்கு இனியநற் புதல்வன் ;
      செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன் ;
காந்திஎம் பெருமான் நெறிவழி நிற்போன் ;
      கல்சொலும் கதையுணர் அறிஞன் ;
சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன் ;
      தண்டமிழ்க் கம்பனுக்கு அடியான் ;
மாந்தருள் சிறந்தோன் கணேசனும் எங்கள்
      வள்ளலுக்கு உரியதுஇந் நூலே.
--------

APPRECIATION
By V. R. M. Chettiar, B. A.


Here is a sound delightful critical study of a great Tamil classic Kalingathu Parani ( கலிங்கத்துப் பரணி) sung by the poet Jayam Kondan of the 12th Century A. D.

Our critic Sri. N. Subbu Reddiar, M. A., B. Sc., L. T. has critically summarised within a short campass the central situations of the poetic narrative, psychologically emphasising the inspired poetic excellences of this great classic, and subtly interpreting the hidden poetic splendour of certain glorious passages which reveal, and revel in the glory of the human war and human love wherein demons also enjoy their unique participation by a tumultuous display of their revelrous dance and ceaseless gluttony, when the King's victory is cheerfully celebrated as a great public exhilaration.

Our author Mr. N. Subbu Reddiar, already the author of “ கவிஞன் உள்ளம் ”, has used a very simple effectual prose as a convenient medium for interpreting Jayam Kondan's mighty poetic masterpiece, and has surely succeeded in achieving a lucid exposition of the poetic theme of glorious war and glorious love, without allowing any confusion to creep in.
-----------
Kalingathu Parani, as a poetic composition, is a close-knit tangle of heavy human incidents culminating in the overwhelming glory and distinction of the great king Kulothunga and his commander-in-chief Karunakara Thondaiman.

The Thalisai (தாழிசை) Metre has been so very skillfully handled by Jayam Kondan that the poetic movement of the entire poem is easy, natural, rapturous, and enjoyable indeed—, certainly a perpetual delight !

I have enjoyed this entire criticism, and I strongly believe that this book may be safely recommended as a suitable Tamil text for the College and University classes.

Karaikudi       V. R. M. CHETTIAR
29-3–1957
--------------

அறிமுகம்

'கலிங்கத்துப் பரணி ' சுவைமிக்க ஓர் அரிய நூல். தமிழ்த் தாய் பெற்ற அரிய அணிகளுள் கலிங்கத்துப் பரணி சிறந்த இடம் பெறுகின்றது. வீரச் சுவைக்கு நிலைக்களனான கலிங்கத்துப் பரணி, காதல் சுவையை அதனினும் திறம்பட எடுத்துக் கூறுவது பாராட்டி மகிழ்தற்குரியது. பதின்மூன்று பகுதிகளைக் கொண்ட இப் பரணி நூலில் ' கடை திறப்பு ' என்ற ஒரு பகுதி, காதற் சுவையைப் பிற எந்த நூலினும் மேம்பட வாரி வழங்குகிறது.

தடையறாப் பெருந்துறவியாகிய தாயுமான அடிகளும் இப் பரணி நூலின் கடை திறப்புப் பகுதியில் உள்ளத்தைப் பறிகொடுத்து ‘உபய தனம் அசையில்” என்ற தாழிசையை எடுத்துத் தமது பாட்டில் நயம்படக் கையாண்ட முறையை இத் திறனாய்வு நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார் அன்பர் சுப்பு ரெட்டியார்.

கவிஞர் சயங்கொண்டார் சுமார் 800 ஆண்டுகட்கு முன்னர் இருந்தவர் என்று காலக் கணக்கர் கூறுவர். சயங்கொண்டாரின் பாடல்களில் அவருக்கு முன்னே இருந்த சிறந்த புலவர்களின் கருத்துச் செறிவை ஆங்காங்குக் காணலாம்.

காணாக்கால் காணேன் தவறாய; காணுங்கால்
காணேன் தவறல் லவை

என்ற திருக்குறளையும்

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்;-கண்டக்கால்
பூண் ஆகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோடு உடன்பிறந்த நான்.

என்ற முத்தொள்ளாயிரப் பாடலையும் உள்ளத்திற் கொண்டே,

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்து அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனப்பொற் கபாடந் திறமினோ

என்று சயங்கொண்டார் பரணியில் பாடியிருத்தல் வேண்டும்.

தரைமகளும் தன்கொழுநன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

என்ற கலிங்கத்துப் பரணிப் பாடலில் உள்ள வீரச்சுவையும் கருத்து நயமும் ஈடும் எடுப்பும் அற்றவை.

சிற்றரசர்கள் பேரரசர்களின் அடியில் விழும் போது திருவடியில் சூடும் முடிபற்றி, கவிச் சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட புலவர் பலரும் பாடியுள்ளனர். எனினும்,

முடிசூடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான்
அடிசூடும் முடிஎண்ணில் ஆயிரம்நூ றாயிரமே.

என்ற சயங்கொண்டாரின் பாட்டு எல்லாவற்றிற்கும் சிகரமாக விளங்குகின்றது.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி

என்ற இலக்கணத்துக்கு

மாவா யிரமும் படக்கலிங்கர்
      மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நாவா யிரமும் கேட்போர்க்கு
      நாளா யிரமும் வேண்டுமால்

என்ற சயங்கொண்டாரின் பாட்டு இலக்கியமாக நயம்பட அமைந்திருக்கின்றது.

எடுத்துக்கொண்ட பாட்டுடைத் தலைவன் கடவுள் அவதாரமே என்று கொண்டு,

தேவரெலாம் குறையிரப்பத் தேவகிதன்
      திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள்
      அவதாரஞ் செய்த பின்னை,
அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
      பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
      எனஉதித்தான் விளம்பக் கேண்மின் !

என்று ஆசிரியர் பாடியிருக்கும் நயம் பெரிதும் இன்புறத் தக்கது.

அருமறையின் நெறிகாட்ட அயன் பயந்த
நிலமகளை அண்டங் காக்கும்
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்
தமன்அபயன் வாழ்க

என்று பாட்டுடைத் தலைவனை ஆசிரியர் வாழ்த்துவது சீரியது.

இந்த கலிங்கத்துப் பரணி என்ற அரிய நூலுக்குத் திறவுகோலாக அமைந்திருப்பது ' கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி ' என்னும் இந்த நூல். இத் திறனாய்வு நூலை எழுதியவர், என் அரிய நண்பரும் நன்கு கற்றவரும் வள்ளல் அழகப்பனாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமாகிய அன்பர் சுப்பு ரெட்டியார் அவர்கள். அன்னார் கலிங்கத்துப் பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங்களை யெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கிறார். கலிங்கத்துப் பரணி கற்பார்க்கு இந்நூல் பேருதவி செய்ய வல்லது.

'கடைதிறப்பின் உட்பொருள்' என்ற பகுதியில் திரு. ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் இந்நூலையும் இதற்கு மூலமாகிய கலிங்கத்துப் பரணி நூலின் சிறந்த பாடல்களையும் படித்து உணர்ந்து இன்புற்று உயரத் தமிழ்த் தாய் அருள்வாளாக.

வணக்கம்.
29–3–57       ராய. சொ
------------

நூல் முகம்

'கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி' என்ற இச்சிறு நூல் புலவர்க்கே உரியது என்று பொதுமக்கள் மருள வேண்டாம். பொதுமக்களுக் கென்றே எண்ணி எழுதப்பெற்றது இது. பொதுமக்களும் இலக்கியங்களைத் திறனாயும் நோக்குடன் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அம்முறையில் இந்நூல் வழிகாட்டியாக அமையுமானல், அதுவே யான் பெற்ற பேறு; எனது முயற்சியின் பயன்.

இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஆறு, நூலை ஆறு வித கோணத்திலிருந்து பார்ப்பவை; நூல் முழுவதும் செல்லக்கூடிய பார்வைகள் அவை. கற்களாலும் சுண்ணத்தாலும் எழுப்பிய மாளிகையைப் பலவித கண்ணோட்டத்தால் பார்ப்பதுபோல சொற்களாலும் சுவைப் பொருள்களாலும் எழுப்பப் பெற்ற காவிய மாளிகையைப் பல்வேறு நிலையிலிருந்து நோக்கி அனுபவித்தேன். இப்பார்வைகள் மூல நூலைப் படித்துச் சுவைக்க விரும்புவார்க்கு ஓரளவு துணையாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

இந்நூலை எங்கள் கணேசன் அவர்கட்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். திரு. கணேசன் அவர்கள் புலவர்கட்குப் புலவர் ; தலைவர்கட்குத் தலைவர் ; தொண்டர்கட்குத் தொண்டர். அவர் அலாதி மனிதர். அனைத்தையும் அப்பர் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து வாழ்வைத் துணையாக்கிக் கொண்டு வாழ்ந்த - பெரிய புராணத் தொண்டர் - அப்பூதியடிகள் போலவே, அனைத்தையும் கம்பனுக்கென்றே உரிமையாக்கித் தம் வாழ்வைத் தூய்மையாக்கிக் கொண்டு வாழ்பவர் திரு. கணேசன். கம்பன் காவியத்தைத் துணைக் கொண்டு பாமர மக்கள் மீதும் இலக்கிய வானத்தைக் கவியச் செய்து கொண்டு வருபவர். அவருக்குச் சமர்ப்பணம் செய்வதே பல்லாற்றானும் பொருத்தம் என்து கருதினேன்; அவ்வாறே செய்தும் உள்ளேன்.

எங்கள் ராய. சொ. அவர்கள் இலக்கியச் செல்வர் ; தமிழ் இலக்கியங்களின் எல்லைகளை யெல்லாம் கண்ட மேதை ; வரையாது வழங்கும் வள்ளல். பண்டைக் காலத்தில் அரசர்கள் ஆண்டு தோறும் துலாபாரம் ஏறுவார்களாம். அன்று தன்னைக் காண வருபவர்கட்குப் பொன்னும் வெள்ளியும் மணிகளும் அள்ளி அள்ளி வழங்கப் பெறுமாம். எங்கள் ராய சொ. அவர்கள் சனிக் கிழமை தோறும் இலக்கியத் துலாபாரம் ஏறுவார். அப்பொழுதெல்லாம் எங்கட்கு நல்ல வேட்டை! நாங்கள் பல்வேறு இலக்கியச் செல்வங்களே செவியாரப் பருகுவோம். இந்த இலக்கிய தானம் சுமார் நான்காண்டுகளாகக் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இங்ஙனம் 'இலக்கிய வள்ளலாக' வாழ்பவர்கள் என்மீது காட்டிவரும் அளவற்ற அன்பின் காரணமாக முன்னுரை அருளி எனக்கு ஆசி கூறி என் நூலையும் சிறப்பித்துள்ளார்கள். அப்பெரியாருக்கு என் உளங் கனிந்த நன்றி.

திரு. வி. ஆர். எம். செட்டியார் அவர்கள் நல்ல இலக்கியச் சுவைஞர்; சிறந்த பதிப்பாளர். காரைக்குடி ஸ்டார் பிரசுரத்தின் அதிபர். அவர் என் நூலை முற்றும் நோக்கிப் பாராட்டுரை வழங்கினமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

இந் நூலிலுள்ள கட்டுரைகளில் ஐந்து 'தினமணிச் சுடரில்' வெளிவந்தவை. அவற்றை வெளியிட்டுக் கொள்ள இசைவு தந்த அப் பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றி. காரைக்குடி செல்விப் பதிப்பகத்தார் இந் நூலை அழகுறப் பதிப்பித்து, வெளியிட்டு, கற்போர் கரங்களில் கவின் பெறச் செய்தமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

யான் மேற்கொண்டுள்ள இலக்கியத் தொண்டில் வெற்றி காண்பதற்கு உறுதுணையாக நிற்கும். எல்லாம் வல்ல இறைவனுக்கு என் வணக்கங்கள்.

காரைக்குடி
30-3-'57       ந. சுப்பு ரெட்டியார்
-----------
உள்ளுறை பக்கம்

1. தென்தமிழ் தெய்வப் பரணி
2. கடைதிறப்பின்" உட்பொருள்
3. பேய்கள் உலகம்
4. வரலாற்று கருவூலம்
5. கற்பனை ஊற்று
6. சுவைகளின் களஞ்சியம்
7. கருணாகரத் தொண்டைமான்
8. குலோத்துங்கன்
9. சயங்கொண்டார்
-------------

1. தென்தமிழ் தெய்வப் பரணி

செஞ்சொற் கவியின்பம் பயக்கவல்ல இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் எண்ணற்றவை இருக்கின்றன. எப் பெயர்களால் வழங்கினாலும், நம் தமிழ் மொழியில் வழங்கும் ஒன்பது சுவைகள் அவ்விலக்கியங்களில் மலிந்து கிடந்தோ விரவிக் கிடந்தோ அவற்றைச் சிறப்பித்துப் படிப்போரை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றன. காப்பியங்களும், பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் இச் சுவைகளைக் கொண்டு இலங்குவதை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்போர் நன்கு அறிவர். பல்சுவைகள் ததும்பும் பிரபந்தங்களில் கலிங்கத்துப் பரணியும் ஒன்று : சுவைநலங்கனிந்த ஓர் அற்புதச் சிறு பிரபந்தம்: ' பரணிக்கோர் சயங்கொண்டான் ' என்று புலவர்களால் சிறப்பித்துப் பாராட்டப் பெறும் சயங் கொண்டார் என்ற புலவர் பெருமானால் பாடப் பெற்ற நூல்.

பொதுமக்கள் சுவைக்கும் பிரபந்தங்கள்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாடு களப்பிரர் என்ற வேற்று மொழியார் ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை நூற்றாண்டுகள் பல்வேறு சீர்கேடுகளை அடைந்தது. இவர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்ட காலம் என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் தமிழ் மொழி தனித் தலைமையை இழந்து தளர்ச்சியுற்று இலக்கிய வளர்ச்சி பெறாது மங்கிக் கிடந்தது. பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர்கள் ஆட்சியிலும் சோழர்களின் ஆட்சியிலும் தமிழ் மொழி ஏற்றம் பெற்றது. புலவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுப்புதுப் பிரபந்தங்களை இயற்றினர் ; பக்திப் பாடல்களும் பெருங் காப்பியங்களும் தோன்றத் தொடங்கின. காவியங்கள் கல்வியாளர்க்கென்றே இயற்றப் பெற்றன ; பக்தி இயக்கத்தின் விளைவாக எழுந்த பாடல்கள் பொதுமக்கள் மனத்தைக் கௌவும் நிலையில் அமைந்தன. வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பை பெருக்கிய அரசர்களையும் கொடையாலும் பிறவற்றாலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்றவர்களையும் புலவர்கள் கவிகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணி போன்ற பிரபந்தங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. எனவே, அவர்கள் எளிதில் பொருள் உணரக்கூடிய ஒரு சீரிய நேர்மை அவற்றில் வாய்ந்திருந்தது. கற்றுவல்லோரும் புலவர்களும் நிரம்பிய அரசவையில் அவர்கள் அனைவரும் வியந்து போற்றும் முறையில் அப் பிரபந்தங்கள் பாடப்பெற்றன. கலிங்கத்துப் பரணியும் அங்ஙனம் பாடப்பெற்ற நூல்தான்.

பிரபந்த வகை

பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்று சொல்லுவது ஒருவகை மரபு. பிரபந்த இலக்கணங்கூறும் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவ நீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களில் ஒன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்ற வரையறை காட்டப் பெறவில்லை ; அவற்றிற்கு இலக்கணமும் கூறப் பெறவில்லை. அவற்றில் கூறப் பெறும் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துக்களுடன் மிளிர்கின்றன. தொண்ணூற்றாறு என்ற வரையறைக்குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற் பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, ஆனந்தக் களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், சாழல், தெள்ளேனம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப்பாட்டு, காதல், ஏற்றப்பாட்டு முதலான பல பிரபந்தங்களையும் காண்கின்றோம்.

பரணியின் இலக்கணம்

போர் முகத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் ' பரணி ' என்று வழங்குவர்.

ஆனை யாயிரம் அமரிடை வென்ற
மாணவ னுக்கு வகுப்பது பரணி[1]

என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் சூத்திரம். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்கும் மரபு உண்டு இவ்வாறு பரணி நூல் அரசர் முதலியவர்கள் மேல் செய்யப்படுவதன்றி, தெய்வங்கள் மேலும் தத்தம் ஆசிரியர்கள் மேலும் அறிஞர்களால் இயற்றப் பெற்று வழங்கும். கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி என்பன அவற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும். நூல் பாடுவோர் கொச்சகக்கலி என்னும் பாட்டின் உறுப்பாகிய ஈரடிக் கலித்தாழிசை என்ற உறுப்பை மேற்கொள்வது வழக்கம். இதனை,

மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.[2]

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அறியலாம். பொதுவாக நூலில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு, காளிகோயில் முதலிய பல்வகைச் சிறப்புக்களும் பல்வேறு சுவைகள் கொப்புளிக்கும் படி அமைக்கப் பெறும், இந்த வழக்கத்தை,

'கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல்
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்
கடிகணம் உரைத்தல் காளிக் கதுசொலல்
அடுபேய்க் கவள்சொலல் அதனல் தலைவன்

வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணை யுற
வீட்டல் அடுகளம் வேட்டல்[3]

என்ற இலக்கண விளக்கச் சூத்திரப்பகுதியாலும்,

தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை
மேவி அமரும் காளி கோயில்
கன்னியை ஏத்தல் அலகை விநோதம்
கனாநிலை நிமித்தம் பசியே ஒகை
பெருந்தேவி பீடம் அழகுற இருக்க
அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா
மன்னவன் வாகை மலையும் அளவு
மரபினி துரைத்தல் மறக்களம் காண்டல்
செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல்
பரவுதல் இன்ன வருவன பிறவும்
தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.[4]

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தாலும் அறியலாம். இதனைத் தேவ பாணியில் அடக்குவர் பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர். "பரணியுள் புறத்தினை பலவும் விராய் வருதலின் அது தேவ பாணியாம் என்றது என்னையெனின் அவையெல்லாம் காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர், வழக்குபற்றி, அதனுட் பாட்டு டைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆதலால் அவை யெல்லாவற்றானும் தேவபாணியாம்” என்பது அவர் உரையாகும்.[5] நச்சினார்க்கினியரும் அதே சூத்திரத்திற்கு உரையெழுதுங்கால், "பரணியாவது-காடு கெழு செல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழி படுவதோர் வழக்கு பற்றியது ; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராயிற்று ” என்று கூறுகிறார்.

பரணி என்ற பெயர்க் காரணம்

பரணி என்ற பெயர்க் காரணம் பலவாறாகக் கூறப் பெறுகின்றது. டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் அவ்வாறு கொள்வதே ஏற்புடைத்து என்றும் கூறுகிறார்கள். இதற்கு

காடு கிழவோள் பூத மடுப்பே
தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்
பாகு பட்டது பரணிநாட் பெயரே.

என்னும் திவாகரத்தையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டார்கள். திரு. அய்யர் அவர்களின் கொள்கையை நாமும் அப்படியே ஒப்புக் கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில் தொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணமாக அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டுவகை வனப்புக்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் விருந்து என்பதை,

விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.[6]

என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இளம்பூரணர் " "விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்ற வாறு...புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல்" என்று இதற்கு விளக்கம் தருகிறார். பேராசிரியர்," விருந்து தானும் புதிதாகப் பாடும் தொடர்நிலை மேற்று " என்று உரை கூறி சில பிரபந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார். நச்சினர்க்கினியரும் அவ்வாறே சில பிரபந்தங்களை உதாரணங்களாகக் காட்டுகின்றார். எனவே, இப் பொது விதியே பல புதிய பிரபந்தங்கட்கு இடனாக அமைந்துள்ளது என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

கலிங்கத்துப் பரணிபற்றிய வரலாறு

"கலிங்கத்துப் பரணி" என்னும் நூல் அக் காலத்துப் பேரரசனாகத் திகழ்ந்த முதற் குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைக் கொண்டு கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து வென்ற செய்தியைக் கூறுவது. கலிங்கப் போர் நிகழ்ந்த ஒரு சில நாட்கள் கழித்து அரசவையில் குலோத்துங்கனும் அவன் அவைப் புலவராகிய சயங்கொண்டாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அரசன் வேடிக்கையாக, 'புலவர் அவர்களே, கலிங்க நாட்டைச் சயங்கொண்டமையால் யானும் தங்களைப்போல் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். அதனைக் கேட்ட புலவர் அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் சாலப் பொருத்தமாகும் என்று மாற்றம் உரைத்து கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்ததாக ஒரு வரலாறு வழங்கி வருகிறது. நூல் அரங்கேற்றப் படுங்கால் அந்நூலின் சொற்சுவை பொருட்சுவைகளைக் கண்டு வியந்து ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி அவரையும் அவரது நூலையும் சிறப்பித்ததாகவும் அவ்வரலாற்றால் அறிகின்றோம். இது எத்துணை உண்மையாயிருக்கும் என்பதை ஆராய்ந்த பின்னர்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

நூற் பொருள்

சயங்கொண்டார் தம் நூலில் குலோத்துங்கன் அவையில் வீற்றிருக்கும் சிறப்பு, அவன் நால் வகைச் சேனையுடன் புறப்பட்டுப் பயணம் செல்லும் இயல்பு, படைகள் போருக்கெழுந்த தன்மை, அவை போர் புரியும் பான்மை, போர்க்களக் காட்சி முதலிய செய்திகளை நூலைப் படிப்போர் அவற்றைத் தம் மனக்கண்முன் நிறுத்திக் கண்டு மகிழுமாறு அழகிய சொல்லோவியங்களால் காட்டுகின்றார். அவற்றை ஆங்காங்கு கண்டு மகிழ்க. நூலிலிருந்து அக்கால அரசர் இயல்புகள், அக்காலப் போர்முறை, அக்கால மக்கள் இயற்கை, அவர்களின் பழக்க வழக்கங்கள் போன்ற செய்திகளை நன்கு அறியலாம். இவற்றைப் பின்னர்க் காண்போம்.

நூல் அமைப்பு

நூலைத் தொடங்குமுன் பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது வாழுமாறு சிவபெருமான், திருமால், நான்முகன், ஞாயிறு, யானைமுகன், ஆறுமுகன், நாமகள், உமை, சப்தமாதர்கள் ஆகியவர்களை வணங்கி வாழ்த்துக் கூறுகின்றார் ஆசிரியர். அடுத்து 'கடைதிறப்பு' என்ற பகுதி வருகிறது. கலிங்கப்போர் மேற்சென்ற வீரர் மீண்டு வரக் காலம் தாழ்த்தியதாகவும் அதுகண்ட அவர்களுடைய காதல் மகளிர் ஊடல் கொண்டு கதவடைத்துக் கொண்டதாகவும் கொண்டு, புலவர் தாம் பாடப் போகும் அக்கலிங்கப் போர்ச் சிறப்பைக் கேட்டு மகிழ்தற் பொருட்டு கதவைத் திறக்குமாறு வேண்டுவதாக இப்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இது பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.

அடுத்து பேய்களின் தலைவியாகிய காளிதேவியின் சிறப்பு கூறப் பெறுகின்றது. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவளுடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப்பது நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றது. தேவி வீற்றிருக்கும்பொழுது இமயத்திலிருந்து ஒரு முதுபேய் வருகிறது. அது தான் கற்ற இந்திர சாலங்களையெல்லாம் காளிதேவி முன் அரங்கேற்றுகின்றது. இப்பகுதி நகைச்சுவை ததும்பி நிற்கின்றது.

பிறகு குலோத்துங்கன் பிறந்த 'குடிவழி' கூறப் பெறுகின்றது. இது இமயத்திலிருந்து வந்த முதுபேயின் வாயில் வைத்துப் பேசப்பெறுகின்றது. முதுபேய் இமயத்தில் வாழ்ந்த பொழுது கரிகாலன் இமயத்தைச் செண்டால் எறிந்து திரித்து மீண்டும் அது நிலை நிற்குமாறு தன் புலிக் கொடியைப் பொறித்தான். அப்பொழுது அங்கு வந்த நாரதர் திருமாலே குலோத்துங்கனாகப் பிறக்க இருக்கும் சோழர் குடி பெருமையுடைத்து என்று கூறினார். அவர் கூறிய சோழர் குடி வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் எழுதுவித்தான். அந்த வரலாற்றையே முதுபேய் காளிக்குக் கூறுகின்றது.

இனி, குலோத்துங்கன் சிறப்பைக் கூறுவதற்கு முன்பதாக பரணிப்போர் நிகழ்வதற்கான நிமித்தங்களைக் கூறுகிறார் ஆசிரியர். பேய்கள் தம் பசிக் கொடுமையைத் தேவியிடம் கூறி அதைப் போக்குமாறு அம்மையை வேண்டி நிற்கின்றன. அவ்வமயம் இமயத்திலிருந்து வந்த முதுபேய் கலிங்க நாட்டின் வழியாக வந்த பொழுது ஆங்குக் கண்ட சில தீநிமித்தங்களைக் கூறுகின்றன. காளி தேவி கணிதப்பேய் கண்ட கனவு நிலையையும் நனவில் கண்ட தீக்குறிகளையும் அவர்களுக்குக்கூறி 'மிக்க விரைவில் கலிங்கநாட்டில் பெரும் போர் நிகழும் உங்கள் பசி முற்றுந் தொலையும்," என்று உரைக்கின்றாள்.

குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு,முடிசூடல் முதலிய செய்திகள் காளி பேய்களுக்கு உரைப்பதாக அமைக்கப் பெற்றுள்ளன. அங்ஙனம் காளி உரைத்துக் கொண்டிருக்குங்கால் ஒருபேய் ஓடி வந்து கலிங்க நாட்டில் நிகழும் போரையுரைக்க, எல்லாப் பேய்களும் தாம் உணவு பெறப் போவதை நினைந்து மகிழ்ந்து கூத்தாடுகின்றன. கலிங்கப் போர்க் காரணத்தைக் கூறுமாறு காளி வினவ, இமயத்திலிருந்து வந்த முதுபேய் அக்காரணத்தை உரைக்கின்றது. குலோத்துங்கன் சோழ நாட்டை ஆண்ட பொழுது ஒரு நாள் பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் செல்லுகின்றான், வேட்டை முடிந்ததும் காஞ்சியிலுள்ள மாளிகை ஒன்றில் செய்தமைத்த சித்திர மண்டபத்தில் முத்துப்பந்தரின் கீழ் தேவியர், அமைச்சர், தானைத் தலைவர் முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் பொழுது சிற்றரசர் பலர் வந்து அவனைத் திறையுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்தபன்மன் மட்டிலும் வந்து காணவில்லை. அதைக் கண்ட குலோத்துங்கன் தன் தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமானை தண்டெடுத்துச் சென்று கலிங்க அரசனின் செருக்கை அடக்கி வருமாறு ஏவுகின்றனன். அது கேட்ட கலிங்க வேந்தன் 'வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி' ,

வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
      மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
      தடம்புயங்கள் குலுங்க நக்கே[7]
கானரணும் மலையானும் கடலரணும்
      சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
      வருவதுமத் தண்டு போலும்.[8]

[கவிகை - வெண்கொற்றக்குடை ; தண்டு - சேனை நக்கு - சிரித்து ; கான்-காடு,]

என்று கூறி போர் தொடங்குகிறான் ; போர் கடுமையாக நடைபெறுகின்றது; இறுதியில் கலிங்க வேந்தன் தோற்றோடுகின்றன். கருணாகரன் கலிங்கத்தை எரிகொளுவி அழித்துப் பல்வகைச் செல்வங்களைக் கவர்ந்து வாகை மாலை சூடி குலோத்துங்கன் அடியை வணங்கி நிற்கின்றான். இப் பகுதியில் வீரச் சுவை செறிந்துள்ளது.

போரைச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களத்தை வந்து காணுமாறு அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்று காளிதேவி பேய்கள் சூழ களத்திற்கு வந்து பல்வேறு காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுகின்றாள். காட்சிகளைக் கண்டு களித்த பிறகு தேவி நீராடிக் கூழ் சமைத்து உண்ணுமாறு பேய்களைப் பணிக்கின்றாள். அங்ஙனமே பேய்கள் பல் துலக்கி, நீராடிக் கூழ் அட்டு உண்ணுகின்றன. உண்டபின் பேய்கள் வள்ளைப் பாட்டுக்களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன.

யாவ ரும்களி சிறக்கவே தருமம்
      எங்கும் என்றும் உள தாகவே
தேவர் இன்னருள் தழைக்கவே முனிவர்
      செய்த வப்பயன் விளைக்கவே[9]

வேத நன்னெறி பரக்கவே அபயன்
      வென்ற வெங்கலி கரக்கவே
பூத லம்புகழ் பரக்கவே புவி
      நிலைக்க வேபுயல் சுரக்கவே[10]

[களி-மகிழ்ச்சி; அருள்-மக்கள் மாட்டு வைக்கும் ⁠அருள் ; பரக்க-எங்கும் பரவுக; கலி-துன்பம் : ⁠கரக்க-தலை காட்டாது மறைக; புகழ்-புகழ்ச் ⁠செயல்கள் ; நிலைக்க-கலங்காமல் நிலை ⁠பெறுக.]

என்ற வாழ்த்துடன் நூலும் முற்றுப் பெறுகின்றது.

இறுவாய்

கலிங்கத்துப் பரணி தாழிசையால் முதன் முதலாகப் பாடப்பெற்ற ஓர் ஒப்பற்ற பரணி நூல். இந்நூல் பரணி நூல்களுக்கெல்லாம் தலை சிறந்ததாய், பரணி பாடுவோர்க்கெல்லாம் முன்மாதிரியாய், இலக்கிய வானில் ஒரு கலங்கரை விளக்கம் போல் நின்று நிலவுகிறது. காவியங்களுக்கெல்லாம் சிறந்ததாய்க் கம்ப ராமாயணம் திகழ்வது போல, பரணி நூல்களுக்கெல்லாம் சிறந்தாய்க் கலிங்கத்துப் பரணி மிளிர்கின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய தக்க யாகப் பரணியில் "தென்தமிழ் தெய்வப் பரணி" என்று இந்நூலைச் சிறப்பித்துள்ளார். நூலைப் பாடிய கவிஞரையும் பிற்காலத்துப் புலவர் பல பட்டடைச் சொக்கநாதர் என்பார், "பரணிக்கோர் சயங் கொண்டான்" என்று பாராட்டியுள்ளார். எனவே, அணி நலன்களும் சுவை நலன்களும் பிற நூல்களில் காண்டற்கரிய கற்பனைகளும் செறிந்துள்ள இந்நூலைத் தமிழ்மக்கள் படித்துச் சுவைக்க வேண்டியது அவர்கள் கடமை.
-----------
[1]. இலக்கண விள-சூத்-78.
[2]. பன்னிருபாட்-சூத், 57
[3]. இலக்கண விள-சூத்
[4]. பன்னிருபாட்-சூத். 58
[5]. தொல்-பொருள்-செய்யுளி-சூ 149-ன் உரை.
[6]. தொல் பொருள் செய்யுளி.சூ 231.
[7]. தாழிசை-376
[8]. தாழிசை-377
[9]. தாழிசை-595,
[10]. தாழிசை-596.
----------------

2. கடைதிறப்பின்" உட்பொருள்

' கடைதிறப்பு ' என்பது பரணி என்னும் பிரபந்தத்தின் உறுப்புக்களுள் ஒன்று என்பதையும் இதுபற்றி இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் மேலே குறிப்பிட்டோம். அக் கருத்துக்களை இங்கு ஆராய்வோம்.

அவை :

ஒன்று : கலிங்கப் போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வாயிற் கதவுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள்ளேயிருக்க, சயங்கொண்டார் அவர் வீட்டு முன்புறம் சென்று தாம் பாடும் கலிங்க வெற்றியைக் கேட்கக் கதவு திறக்குமாறு வேண்டுதல் எனபது.

மற்றொன்று : முதற் குலோத்துங்கன் அடைந்த கலிங்க வெற்றியைக் கொண்டாடும் விழாவுக்கு நகரத்துப் பல்வேறு மகளிரும் அதிகாலையில் எழுந்து ஒருவரை யொருவர் துயிலெழுப்புவது என்பது.

இந்த இரண்டிலும் முன்னது அமைவுடையதன்று. போருக்குச் சென்றிருந்த தம் கணவன்மார் திரும்பி வருவதற்குக் காலம் தாழ்த்தினமையால் அவர்தம் மனைவிமார் கதவுகளை அடைத்துக்கொண்டு கவலையுற்றிருந்தனர் என்று கருதுவதற்கு ' கடைதிறப்பு ' என்ற பகுதியுள் வரும் செய்யுட்களில் யாதொரு குறிப்பும் காணப் பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக மகளிர் தத்தம் கொழுநருடன் இருந்து அவர்களுடன் ஊடல் கொண்டும் கூடல் புரிந்தும் மகிழ்கின்ற நிலையில் அம்மகளிரைக் கடை திறக்கும்படி வேண்டும் பாடல்களே மிகுதியும் காணப் பெறுகின்றன. மகளிரின் கலவி புலவிகளை ஆடவர் எடுத்துக் கூறி அவர்களை விளித்தல் அசம்பாவிதம். ஒருகால் கற்பனைக் கதையுள்ள இலக்கியத்தில் அவ்வாறு கொள்ளல் மரபாக இருந்தாலும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தில் அவ்வாறு மரபாகக் கொள்ளுதல் சிறிதும் பொருத்தமன்று. அதிலும் சயங்கொண்டார் அத்தகைய சூழ்நிலையை உண்டாக்க ஒருப்பட்டார் என்று கருதுவது பெரியதோர் அபவாதமாகும். தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணிகளுள் வரும் 'கடைதிறப்பு’க்களில் வானர மகளிர், நீரர மகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப் படுகின்றனர். கவிஞரே அவ்வாறு விளிப்பதாகக் கொள்ளின் ஒட்டக்கூத்தரும் இரணியவதைப் பரணியாசிரியரும் வானம், மேரு, கயிலை முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்களில் தூக்கத்தினுல் பகலில் கதவடைத் திருக்கும் மகளிரைக் கதவு தட்டுபவராகக் கூற வேண்டும். இது எவ்வாற்றானும் பொருந்தாது என்பது எண்ணிப் பார்ப்பார்க்கு எளிதில் புலனாகும். அன்றியும், இரவில் நிகழ்ந்த ஊடல் கூடல் முதலிய செய்கைகளால் அயர்ந்து துயிலெழாது வைகறையில் உறங்கிக் கிடக்கும் மகளிரை அவர்கள் செயல்களைப் பலபடியாகவும் அசதியாடிக் கூறித் துயிலுணர்த்தும் உரிமை தாமே அவரே என்ற வேற்று மையின்றிப் பழகும் தோழியர்க்கன்றி அவர்களுடன் அங்ஙனம் பழக வாய்ப்பே இராத ஆடவர்க்கு யாங்ஙனம் இயலும்?

இரண்டாவது கருத்துதான் மிகவும் பொருத்த முடையது; கொள்ளக்கூடியது. அது திருப்பாவை, திருவெம்பாவைகளின் அடிப்படைக் கருத்துக்களை யொட்டியுமிருக்கின்றது. கோகுலத்திலுள்ள ஆய்ச்சியர் கண்ணபிரானின் பேர்பாடி மகிழ்வதற்குத் தம் தோழியரின் முன்றிலிற் சென்று அழைப்பதை,

"நாயகப் பெண்பிள்ளாய்
      நாரா யணன் மூர்த்தி
கேசவனப் பாடவும்நீ
      கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்!
      திற[1]

என்றும்,

"பந்தார் விரலி நின்
      மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால்
      சீரார் வளையொலிப்பு
      வந்து திறவாய்'[2]

என்றும் அழைப்பதாக ஆண்டாள் கூறுகிறார், திருவெம்பாவையிலும் சிவபெருமானின் புகழ் பாடுமாறு திருவண்ணாமலையிலுள்ள மகளிர் ஒருவரை யொருவர் வேண்டுவதாக மணிவாசகப் பெருமான் பேசுகிறார்,

முத்துஅன்ன வெண்ணகையாய்!
      முன்வந்து எதிர்எழுந்து, என்
அத்தன், ஆனந்தன்
      அமுதன் என்று அள் ஊறித்
தித்திக்கப் பேசுவாய்;
      வந்துஉன் கடைதிறவாய்![3]

என்றும்,
கேழில் பரஞ்சோதி
      கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள்
      பாடினுேம் ; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன
      உறக்கமோ? வாய் திறவாய் ;
ஆழியான் அன்புடைமை
      ஆம்.ஆறும் இவ்வாறோ ?
ஊழி முதல்வனாய்
      நின்ற ஒருவனை
ஏழைபங் காளனேயே
      பாடேல் ஓர் எம்பாவாய் ![4]

என்றும் அவர் பாடியுள்ளதைக் காண்க. இங்கு குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுவதற்கு நகரத்து மகளிர் ஒருவரையொருவர் சென்று அழைப்பதாகச் சயங்கொண்டார் அமைத்துள்ளார். பெண்களின் இயற்கையழகு, செயற்கையழகு, மென்மைத்தன்மை, கணவன்மாருடன் அவ்ர்கள் ஊடியும் கூடியும் அனுபவித்த இன்பம் முதலியவற்றை நேரில் எடுத்துக்கூறி அவர்களைத் துயிலுணர்த்துதல் மகளிர்க்கே இயல்பான செயலாகும்.

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
      கலவி மடவீர் ! கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
      களப்போர் பாடத் திறமினோ[5]

[காஞ்சி-இடை அணி, காஞ்சிபுரம்; கலிங்கம்- ⁠உடை, கலிங்க நாடு; குலைந்த-நிலைபெயர்ந்து ⁠கிடந்த, அழிந்த.]

இலங்கை எறிந்த கருணா கரன்தன்
      இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
      களப்போர் பாடத் திறமினோ.[6]

[இலங்கை எறிந்த கருணாகரன்-இராமன்; ⁠களப்போர்-கலிங்கக்களப்போர்.]

என்ற தாழிசைகளால் கலிங்க வெற்றியைப் பாடுதற்கே நகரத்து மகளிர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அறியலாம்.

வைகறையில்

⁠திருப்பாவை திருவெம்பாவைகளில் இங்ஙனம் மகளிர் ஒருவரை யொருவர் எழுப்புதல் விடியற் காலையில் நடைபெறுதல் போலவே, கடைதிறப்பிலும் வைகறையிலேயே நடைபெறுகிறதாக சயங்கொண்டார் கூறுகிறார்.

மெய்யே கொழுநர் பிழைநலிய
      வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கும் மடநல்லீர்!
      புனைபொற் கபாடம் திறமினோ"[7]

[கொழுநர்-கணவர்: வேட்கை-(கலவி) ஆசை; நலியமனத்தை வாட்ட]

போக அமளிக் களிமயக்கில்
      புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
      அம்பொற் கபாடம் திறமினோ."[8]

[போகம்-கலவியின்பம்; அமளி-படுகை; புலர்ந்தது. விடிந்தது; அகம்-மார்பு]

வருவார் கொழுநர் எனத்திறந்தும்
      வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
      தேயும் கபாடம் திறமினோ."[9]

[திருகும்-சுழலும் ; குடுமி-வாயிலின் மேற்புறத் தமைந்த குழிவிடத்தோடு பொருத்தப்பெறும் கதவின் தலைப்பகுதி]

என்ற தாழிசைகளால் இதனை அறியலாம்.எல்லா மங்கலங்களும் தொடங்குவதற்கு ஏற்றதாகிய காலைப் பொழுதே பரணி விழாவின் தொடக்கத்திற்கும் உரியது என்பது மிகவும் பொருத்தமானதொன்று. கடைதிறப்புப் பகுதியிலுள்ள தாழிசைகளை ஊன்றிப் படித்தால் இங்ஙனம் துயிலெழுப்பியவர்கள், உயர் குல மகளிர், அரசனும் தலைவரும் விழைந்த மகளிர், சிறையாகவும் திறையாகவும் பெற்ற மகளிர், ஓதுதல் போன்ற காரணம் பற்றிக் கணவனைப் பிரிந்து நிற்கும் மகளிர், பொது மகளிர் ஆகிய எல்லா வகுப்பைச் சார்ந்தவர்களும் இதில் பங்கு கொள்வதை அறியலாம். நாட்டு அரசன் வெற்றி எல்லோருடைய வெற்றியல்லவா? தக்கயாகப் பரணி, இரணிய வதைப் பரணிகளுள் வரும் கடைதிறப்புக்களில் வானரமகளிர், நீரரமகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடை திறக்குமாறு விளிக்கப்பட்டிருப்பது ஈண்டு கருதத் தக்கது.

வேறு இலக்கியச் சான்றுகள்

இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல்வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்விழாவின் பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானை பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவன் வெற்றித் திறன்களைக் கொண்டாடுவர்; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென்பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்துவதை,

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீக்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி.[10]
[நோலை - எள்ளுருண்டை; விழுக்குடைமடை - நிணத்துடன் கூடின சோறு; அணங்கு-தெய்வம்; வசி-மழை]

என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியலாம் அன்றியும், செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்த ஆயச் செவிலியர் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று துயிலெழுப்பி யுணர்த்திப் பாட்டொடு தொடுத்து வாழ்த்தியதையும்,

வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக்
குணதிசை குன்றத் துயர்மிசைத் தோன்றக்
........................................
துணையணை பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம்
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுனை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த[11]

இளங்கோவடிகள் சுட்டுகிறார்,எனவே,சயங்கொண்டாரும் செருக்களத் தியல்புகளை மகளிர்க் கூற்றில் வைத்துச் சிறப்பித்தார். அங்ஙனம் கூறுவது பண்டைய மரபை யொட்டியே உள்ளது.

சில காதல் நிகழ்ச்சிகள்

கடை திறப்புப் பாடல்கள் அனைத்தும் 'காதல் ரஸம்' சொட்டும் அற்புதப் பாக்கள். அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.

பட்டப்பகலைப்போல் நிலவு வீசும் இரவில் மேல்மாடியில் மங்கையொருத்தி கலவியின்பத்தில் திளைத்த பிறகு தூங்கி விடுகிறாள். அவள் அணிந்திருந்த ஆடை நெகிழ்ந்துபோய் விடுகிறது. அரைத் துக்கத்தில் நிலவொளியை ஆடையென நினைத்துக் கொண்டு அதைப் பற்றி இழுத்து உடுத்திக் கொள்ள முனைகிறாள். இதைக் கவிஞர்,

கலவிக் களியின் மயக்கத்தால்
      கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
      நீள்பொற் கபாடந் திறமினோ.[12]

என்று காட்டுகிறார்.

கலவிப் போரில் ஒருத்தியின் கொங்கையில் எப்படியோ நகக்குறி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குறியை அடிக்கடி பார்க்கும் பொழுதெல்லாம் கலவியில் தான் பெற்ற இன்பத்தை அடைகிறாள். நித்திய தரித்திரன் ஒருவனுக்கு எதிர்பாராத வண்ணம் நிறைந்த பொருட் குவியல் கிடைத்தால் அவன் அச்சத்தின் மிகுதியால் அப்பொருட் குவியலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்துப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியுறுதல் போல, தன் கொங்கையில் புதியனவாய்த் தோன்றியுள்ள தம் கொழுநரின் நகக் குறியை நாணம் மிகுதியால் தனியிடத்திற்குச் சென்று அங்குப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றாள். இதனைச் சயங்கொண்டார்,

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
      முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனும் இல்லாவி டத்தே
      கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின்.[13]

[கொழுநர்-கணவர் ; கல்-மேலாடை ; நீவி-விலக்கி]

என்று காட்டுகிறார்.

அழகிய மங்கை ஒருத்தி காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்குமாறு ஒய்யார நடை போட்டுக் கொண்டு நடந்து வருகின்றாள். அவள் கொங்கை பாரத்தை அவள் நுண்ணிய இடை தாங்க முடியாது போகும் என்று சிலம்புகள் எண்ணி " அபயம், அபயம்” என்று ஒலிக்கின்றன என்று கவிஞர் காட்டுகின்றார்.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
      ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபயம் அபயமென அலற நடைபயிலும்
      அரிவை மீர்கடைகள் திறமினோ.[14]

என்ற தாழிசையைப் படித்துப் படித்துச் சுவைக்க. இயல்பாக எழும் சிலம்பு ஒலிக்கு கற்பனைத் திறத்தால் கவிஞர் புதுப்பொருள் கற்பித்துச் சிறப்பிக்கும் திறனை எண்ணி மகிழ்க. தாயுமான அடிகளும் இத் தாழிசையின் கருத்தை அடியொற்றி அப்படியே,

மின்போலும் இடைஒடியும்
      ஒடியுமென மொழிதல்போல்
      மென்சிலம்பு ஒலிகள்ஆர்ப்ப
வீங்கிப் புடைத்துவிழு
      சுமையன்ன கொங்கைமட
      மின்னார்கள்.[15]

என்று தன் பாடலில் ஆண்டிருப்பது எண்ணி மகிழ்வதற்குரியது.
இரவில் ஒரு மங்கையும் அவள் கணவனும் கலவிப்போர் நிகழ்த்திய பொழுது காமம் மீதுார மனங்கனிந்து முறை பிறழ்ந்து காதற் சொற்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் வளர்த்த கிளி, 'சொன்னதைச் சொல்லுமாம் கிளி' என்ற தன் குணத்திற்கேற்பப் பகலில் அவற்றைச் சொல்லத் தொடங்கிற்று. அவற்றைக் கேட்ட அம்மங்கை மிகவும் நாணி கிளியை மேலும் பேசவிடாது அதன் வாயைப் புதைத்தாள். இதனைக் கவிஞர்,

நேயக் கலவி மயக்கத்தே
      நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர்
      மணிப்பொற் கபாடந் திறமினோ[16]

என்று காட்டுகிறார், பிற்காலத்தில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களும் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயரும் வினாவிடையாக அமைத்துப் பாடிய

தத்தை யொருத்திதன்கைத்
      தத்தையையோ யாதடித்த
வித்தையென்ன தென்முகவை
      வேல்வேந்தே-மெத்தையின்மேல்
புல்லினவென் மன்னன்
      புகன்மொழிகற் றுச்சகிபால்
சொல்லினையே என்று துடித்து[17]

என்ற வெண்பாவில் மேற்கூறிய தாழிசையின் பொருள் அமைந்திருக்கின்றது. இம்மாதிரியாக கலவிப்போர் நிகழ்ச்சிகளை வருணிக்கும் பாடல்கள் இப்பகுதியில் பலவுள்ளன. அன்பர்கள் அவற்றினைப் படித்துச் சுவைப்பார்களாக.
புறத்தில் அகம்

⁠இனி, புறப்பொருளாகிய போர், வெற்றி முதலியவற்றைப் பாடவந்தவிடத்து அகப்பொருள் சுவைகளைப் பாடியதன் கருத்துதான் என்ன என்று பார்ப்போம்.

நூலில் கடைதிறப்பை அடுத்து வரும் உறுப்புக்களுள் இராசபாரம்பரியம் 'அவதாரம்' என்ற இரண்டைத் தவிர ஏனையவைகள் குரூரமான அம்சங்களையே வருணித்துச் செல்லுகின்றன. பேயும் பிடாரியும், பிணமும் நினமும், இடுகாடும் சுடுகாடும், அறுபட்ட தலையும் மிதிபட்ட உடலும், செங்குருதி வெள்ளமும் சினமறவர் வீரமும், போர்க்களத்திலுள்ள பல்வேறு பயங்கர நிகழ்ச்சிகளும், கேட்டாரிடம் அச்சத்தை விளைவிக்கும் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் காட்சிகளும் காணக் கிடக்கின்றன. இவற்றிற்கு முன்னதாக துவரத் துறந்த ஞானியர் உள்ளத்தையும் ஈர்க்கவல்ல இன்பப் பாடல்களைத் தக்க முறையில் பொருத்திப் பாடினுல், வீரச்சுவையும் உவகைச் சுவையும் (சிருங்காரம்) சிறக்கும் என்றே கவிஞர் இவற்றிற்கு இடம் தந்திருக்க வேண்டும். அன்றியும், நிமிர்ந்த செல்வமும் நிறைந்த இளமையும் உள்ள வீரர்கள் தம் காதலியரைத் துறந்து போர்க்காதலில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் வீரத்தை என்னென்று சொல்வது ? இது சிறந்த தியாகம் அல்லவா? இந்த நிலையைக் காட்டிய பிறகு அவர்களின் வீரத்தையும் காட்டினால் அவர்களுடைய மனப்பான்மையும் உடற்பான்மையும் எளிதில் புலனாகும் என்று எண்ணித்தான் போர் பாடும் நூலில் கலவிப் போர்க் குறிப்புக்களையும் கவிஞர் காட்டினர் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இன்னொரு விதமாகவும் கருதலாம். எல்லாச் சுவைகளிலும் சிறந்தது சிருங்காரம் ; எல்லா உயிர்ப் பிராணிகளிடமும் பரம்பரை வாசனையாய் அமைந்து கிடப்பது; அவற்றின் இனப் பெருக்கத்துக்கும் பெருந்துணை புரிவது, ஆண்டவன் படைப்பில் அற்புதமாக அமைந்து கிடப்பது படைப்பின் பெருவிசையாக உள்ளதும் இதுவே. தவிர, தாவர உலகத்திலுள்ள ஒரு செய்தியை அறிந்தால் இதை இன்னும் நன்கு உணரலாம். தாவரங்களில் சிலவற்றின் இனப் பெருக்கத்திற்குத் துணை புரிபவை வண்டுகள். அவ்வண்டுகளைத் தம்பால் ஈர்ப்பதற்கு அவற்றின் மலர்கள் பல்வேறு வண்ணங்களுடனும், மணங்களுடனும் அமைந்துள்ளன ; அன்றியும், அவை வண்டுகளின் உணவாகிய தேனையும், மகரந்தங்களையும் கொண்டுள்ளன. தம் இனப் பெருக்கத்தின் உயிர்நாடியே வண்டுகளின் உணவாக அமைந்திருப்பது படைப்பின் விந்தை என்று கருத வேண்டும். படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த கவிஞர்கள் சிறுமதியினரையும் இன்பச் சுவையால் ஈர்த்து விடலாம் என்று கருதியே தம் நூல்களில் அகப்பொருள் துறைகளையமைத்துப் பாடுகின்றனர். இதைக் கருதி நூலினைப் படிப்போர் நூலில் காட்டும் பேருண்மைகளையும் பிறவற்றையும் அறிந்து பெரும்பயன் எய்துகின்றனர். நூலிற்கு அகப்பொருட் சுவையூட்டுவது கொயினா மருந்திற்குச் சருக்கரைப்பாகு ஊட்டிச் செய்வது போன்ற முறையாகும். இந்த முறையை மேற் கொண்டே சயங்கொண்டாரும் போரைக் குறிக்கும் தம் நூலில் கலவிப் போரையும் காட்டினார் என்று கொள்ளுவது ஏற்புடைத்தாகும்.

[1]. திருப்-7
[2]. திருப்-18
[3]. திருவெம்-3
[4]. திருவெம்-8
[5]. தாழிசை-63,
[6]. தாழிசை-54.
[7]. தாழிசை-36
[8]. தாழிசை-37
[9]. தாழிசை-69
[10]. சிலம் - 5 : 67.73,
[11]. சிலப் 27: 195-212.
[12]. தாழிசை-34,
[13]. தாழிசை-47
[14]. தாழிசை-58,
[15]. தாயுமானவர்:தேசோமயானந்தம்-செய். 10,
[16] தாழிசை-67,
[17]. தனிச் செய்யுள் சிந்தாமணியிலுள்ளது இப்பாடல்.
-----------

3. பேய்கள் உலகம்

கவிதைகளைக் கணிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்துவது கற்பனைத் திறன் ; கவிதையின் பிற பண்புகளுக்கெல்லாம் அடிநிலமாக அமைவது அதுதான் ; முடியாக இருப்பதும் அதுவே. உணர்ச்சிகளின் நிலைகளனாக எழுதப் பெறும் எல்லா வகையான இலக்கியங்களுக்குமே கற்பனையாற்றல் மிக மிக இன்றியமை- யாததாகும். கற்பனை என்றால் என்ன என்பதைச் சொற்களால் எல்லை கட்டிக் காட்ட இயலாது, ரஸ்கின் என்ற மேற்புலக் கவிஞர், " கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது ; சொற்களால் உணர்த்த முடியாதது ; அது அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அறியப்படுவ தொன்றாகும்"[1] என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது. கவிஞன் யதார்த்த உலகில் நிகழும் சில நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே தன் கற்பனைத் திறனால் புதியதோர் உலகைப் படைத்துக் காட்டுகிறான். நாம் அவ்வுலகில் உலவும் பொழுது பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம் ; பேரின்பத்தில் திளைக்கின் றோம். கவிஞன் படைப்பு ஒர் அற்புதப் படைப்பு. இதனாலன்றோ குமரகுருபர அடிகள் நான்முகன் படைப்பையும் கவிஞன் படைப்பையும் ஒப்பிட்டு,

      மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு, [2]

என்று கூறியுள்ளார்?

'கலிங்கத்துப் பரணி' என்பது கவிஞர் சயங் கொண்டாரது அற்புதப் படைப்பு; அவரது கற்பனையிலிருந்து மலர்ந்த ஈடற்ற ஒரு சிறு காப்பியம். காவியத்தில் இருவேறு உலகங்களைப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர். ஒன்று, மக்கள் உலகம் , மற்றொன்று, பேய்கள் உலகம், பதின்மூன்று அதிகாரங்களைக் கொண்ட அந்நூலில் கடவுள் வாழ்த்து போக நான்கு அதிகாரங்கள் மக்கள் உலகைப் பற்றிய செய்திகளைக் கொண்டவை ; ஐந்து அதிகாரங்கள் பேய்கள் உலகைக் காட்டுபவை; மூன்று அதிகாரங்கள் பேய்களின் தலைவியாகிய காளிதேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவள் கோவில் ஆகிய செய்திகளைப் பற்றியவை. எனவே, நூலினுள் எட்டு அதிகாரங்கள் பேய்கள் உலகத்தைக் காட்டுகின்றன என்று துணிந்து கூறலாம். இனி, கவிஞர் படைத்துள்ள பேய்களின் உலகைக் காண்போம்.

பேய்கள்

கலிங்கத்துப் பரணியில் கவிஞர் படைத்துள்ள பேயுலகிலுள்ள பேய்கள் பன்னெடுநாள் உணவின்றிப் பசிப்பிணியால் வாடுபவைகளாக வுள்ளன. அவை வாழ்விலும் தாழ்விலும் தம் தலைவியாகிய காளிதேவியின் அடியை மறவாதிருக்கின்றன. இதனை

எவ்வனங்கும் அடிவனங்க
      இப்பெருமை படைத்துடைய
அவ்வணங்கை அகலாத
      அலகைகளை இனிப்பகர்வாம்.[3]

[அணங்கு-தெய்வமகளிர், காளி; அலகை-பேய்]
என்பனால் அறியலாம். தமக்கு உணவின்மையால் உயிர்விடும் காலம் நெருங்கி விட்டது என்று தம் தேவியிடம் கூறிக்கொண்டு அவளை விட்டு அகலாதிருக்கின்றன. பசிக் கொடுமையைக் கவிஞர்,

புயல ளிப்பன மேலும வளித்திடும்
      பொற்க ரத்தபயன்புலி பின்செலக்
கயலொ ளித்தக டுஞ்சுரம் போலகங்
      காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்[4]

[புயல்-மேகம்; கயல்.கயற்கொடி, சுரம்-பாலை நிலம்; பசியின்-பசியால்; தீதல்-கரிதல்]
என்று காட்டுகிறார். ஈகையில் மேகத்தையும் வென்ற சோழனுடைய புலிக்கொடி துரத்த அதற்கு ஆற்றாது பாண்டியனுடைய மீனக்கொடி ஒளித்துள்ள கொடிய பாலை நிலத்தைப் போல, வயிற்றின் உட்பக்கத்தில் வருத்தும் பசியின் வெம்மையால் உடலின் வெளிப்பக்கம் தீந்து கரிந்திருக்கின்றது. ஒவ்வொரு பேயின் வயிறும் பசியென்ற பொருளை அதிகமாக அடைத்து வைத்துள்ள குப்பி போன்றது. பேய்களின் கால்களும் கைகளும் பனங்காடுகள் போல் உள்ளன. கால்கள் மிக நீண்டு விகார வடிவமாக உள்ளன. வாய் பெரிய குகையை வெல்லுந் தன்மையது. 'வன்பிலத்தொடுவாதுசெய் வாயின' என்று கூறுகிறார் கவிஞர். இத்தகைய வாயால் உணவு கொண்டாலும் நிரம்பாத வயிறு அவற்றிற்கு வாய்த்திருக்கின்றது.

உடல் மிகவும் இளைத்திருக்கின்றது; எலும்பும் நரம்புமாய்க் கிடக்கின்றது. இதனைக் கவிஞர்

வெற்றெ லும்பைந ரம்பின்வ லித்துமேல்
வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பினர்[5]
[வலித்தல்-கட்டுதல்; ஏய்ந்த-ஒத்த]

என்று கூறுகிறார். பேய்களின் கன்னங்கள் இரண்டும் ஒட்டி கண்கள் குன்றுகளின் குகைகளில் தோன்றும் கொள்ளிக்கட்டைகளைப்போல் விளங்குகின்றன. அவற்றின் முதுகிற்கு மரக்கலத்தின் பின் புறத்தைத்தான் உவமை கூறலாம். அவற்றின் கொப்பூழில் பாம்பும் உடும்பும் புகுந்து தாராளமாக உறங்கலாம்; அத்துணைப் பெரிதாக இருக்கின்றது. எனவே, கவிஞரும் அதனை 'ஒற்றைவான் தொளைப் புற்று' டன் உவமை கூறினார்.

பேய்களின் உடலிலுள்ள மயிர்கள் கரிய பாம்புகள் தொங்குவன போலிருக்கின்றன. மூக்குகளில் பாசி படர்ந்திருக்கின்றது. காதுகளில் முன்னதாகவே ஆந்தைகள் புகுந்து பதுங்கிக்கொண்டமையால் வௌவால்கள் பதுங்க இடமின்றி வலக்காதுகளுக்கும் இடக்காதுகளுக்குமாக உலாவுகின்றன. அவற்றின் பற்கள் மண்வெட்டி இலையைப்போல் அகன்றும் கொழுவைப்போல் நீண்டும் இருக்கின்றன. அவற்றின் உதடுகள் மிகவும் தடித்து நீண்டு மார்பளவும் தொங்குகின்றன. பாம்புகளில் ஓந்திகளைக் கோத்துத் தாலிகளாக அணிந்திருக்கின்றன. இந்த வடிவங்களுடன் உள்ள பேய்கள் வானை எட்டும் உயரமாக உள்ளன.

மூங்கில்களுக்கும் பேய்களுக்கும் வேறுபாடு புலப்படவில்லை; பேய்களின் குழந்தைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேற்றுமை தெரியவில்லை.

அட்ட மிட்டநெ டுங்கழை காணிலென்
      அன்னே யன்னையென் றாலுங்கு ழவிய;
ஒட்ட வொட்டகங் காணிலென் பிள்ளையை
      ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.[6]

[அட்டம்-அண்மை; ஆலும்-ஒலியிடும்; குழவி-பேயின் குழந்தை; ஒட்ட-அண்மையில் ஒக்கலை-இடுப்பு]
உயர்ந்த மூங்கில்களைக் காணுங்கால் பேய்க்குழவிகள் 'அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டு செல்லுமாம்; ஒட்டகங்கள் தம்மை நெருங்கி வருங்கால் தாய்ப்பேய்கள் அவற்றைத் தம் இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்ளுமாம்.

பேய்கள் இருக்கும் காடு

பாலை நிலந்தான் பேய்களின் இருப்பிடம், சங்க இலக்கியங்கள் காட்டுகின்றனவே அது போன்ற காடுதான். எங்கும் ஒரே மணற்பரப்பு. ஒரு மணலைக் கடலிலிட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப் போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல் தான் இராமாயண காலக் குரங்குகள் கடலை அணைப்பதற்கு மலைகளைத் தூக்கி வருந்தின.

அணி கொண்ட குரங்கினங்கள்
      அலைகடலுக் (கு) அப்பாலை
மனலொன்று காணாமல்
      வரைஎடுத்து மயங்கினவே.[7]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த; வரை- மலை; மயங்கின-வருந்தின.]
என்று கூறுகிறார் கவிஞர். அக்காட்டில் கதிரவன் வெம்மையால் பொரிப் பொரியாய்ப்போனகாரை மரங்களும், கரிந்துபோன சூரை மரங்களும், பிற மரங்களும், செடிகளும் காட்சியளிக்கின்றன. மரங்கள் தண்ணீரின்றி வாடுதலால், தங்கள் நிழலைத் தாமே உட்கொள்ளக்கூடுமெனக் கருதி அவற்றின் நிழல் இல்லாது மறைந்து போயிற்றாம்.

பருந்துகளும், புறாக்களும், மான்களும் ஆங்காங்குச் சிற்சில இடங்களில் காணப்படுகின்றன. சிவந்த நெருப்பைத் தகடாக அடித்துப் பரப்பியது போல் பாலைநிலப் பரப்பு அமைந்திருக்கின்றது. அந்நெருப்பிலிருந்து திரண்ட புகைக் கூட்டத்தை யொப்ப ஒரு சில இடங்களில் புறாக்கள் தென்படுகின்றன. பருக நீரின்மையால் செந்நாயின் வாயில் ஒழுகும் நீரைத் தண்ணீர் என்று உவந்து மகிழ்ந்து மான்கள் நக்கி நிற்கின்றன. அக்காட்டின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் கருமுகிலும் வெண்மதியும் ஓடுகையில் அவற்றின் உடலில் தோன்றிய வேர்வையே பனிநீராகப் பெய்கின்றது.

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும்
      வெண்மதியும் கடக்க அப்பால்
ஓடியிளைத் துடல் வியர்த்த வியர்வன்றே
      உருபுனலும் பனியும் ஐயோ. [8]

[கடத்தும் கடப்போம்; முகில் மேகம்; மதி- நிலா; புனல்-மழைநீர்.]
என்பது கவிஞன் கூற்று. இந்நிலத்தின் வெம்மைக்குப் பயந்துதான் தேவர்களும் நிலத்தில் கால் வைத்து நடப்பதில்லை. அவர்கள் விண் முகட்டிவிருந்துகொண்டே கார்மேகங்களாகிய திரைச் சீலையிட்டுச் சந்திரனாகிய ஆலவட்டத்தால் விசிறிக் கொள்ளுகிறார்கள். அந்த வெம்மை நிலத்திலிருந்து வீசும் காற்று தம்மிடம் வராதிருக்கும் பொருட்டே கடல்கள் ஓயாது தம் அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. திக்கு யானைகளும் தம் காதுகளை விடாது அடித்துக் கொண்டிருப்பதும் அதற்காகத்தான்.

நிலத்தில் பல வெடிப்புக்கள் காணப்படும். கதிரவன் தன் மனைவி சாயாதேவியின் பிரிவைப் பொறுக்கமாட்டாது அவ்வெடிப்புக்களில் தன் கதிர்களாகிய கைகளை விட்டு அவளைத் தேடுகிறான். பசிப் பிணியால் வாயுலர்ந்த பேய்கள் தம் வறண்ட நாக்குகளை நீட்டுவனபோல், மரப் பொந்துகளிலிருந்து பெரியபாம்புகள் வெளிக் கிளம்பும். நிலத்தில் கானலில் நீர் மிதந்து வருவதுபோல் தோன்றும்; அந்நீரில் சுழன்று வரும் சுழிகள் போல் சூறாவளி சுழன்று சுழன்று அடிக்கும். அக்காட்டில் சுடலையிலுள்ள சாம்பலில் இரத்தினங்கள் மறைந்து கிடக்கும்; அவை புகையாலும் நீறாலும் மூடுண்ட தணலை ஒத்திருக்கும். மூங்கில்கள் முத்துக்களை உதிர்த்தல், அவை அந்நிலத்தின் வெம்மை கண்டு மனமுருகிச் சொரிகின்ற கண்ணீரை யொக்கும். அம் முத்துக்கள் நிலத்தில் கிடக்கும் தன்மை, பாலை நிலத்தின் உடலில் தோன்றிய வியர்வைத்துளிகளை அல்லது கொப்புளங்களை ஒத்திருக்கும்.

காளி கோயில்

இத்தகைய கொடிய காட்டில் தான் காளி தேவியின் கோவில் அமைந்திருக்கின்றது. குலோத்துங்கன் வென்று கொன்ற அரசர்களின் தேவிமார்களுடைய ஆபரணங்களிலுள்ள இரத்தினங்கள் கோவிலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. சேனாவீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழைத்து அவர்கள் தலைகளைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டுதுள்ளது. மாற்றரசர்களின் காவற்காடுகளிலுள்ள மரங்கள் தாம் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைந்துள்ளன, யானையின் கொம்புகள் அரிச்சந்திரக் கால்களாகவும், அவற்றின் விலா வெலும்புகள் கைமரங்களாகவும் பகை வேந்தர்களின் கொடிகள் மேல்முகட்டின் கூடல் வாய்களாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. யானைகளின் முகபடாங்கள் கூரையாக அமைக்கப்பெற்றுள்ளன, கோவிலின் மதிற் சுவர்களும் கோபுரமும் எலும்புகளாலமைந்துள்ளன. கோவிலுக்கு முன்னால் இரண்டு இரும்புத் தூண்கள் நடப்பெற்று அவற்றின்மீது ஓர் இரும்பை வளைத்து மகர தோரணமாக அமைக்கப்பெற்றிருக்கின்றது. மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துடனுள்ள வீரர்களின் தலைகள், நிணத்தாலாகிய கொடிகள், பச்சிளங் குழந்தைகளின் தலைகள் ஆகியவை கோவிலின் எல்லா இடங்களிலும் தொங்கவிடப் பெற்றிருக்கின்றன.

வீற்றிருக்கும் காளிதேவி

இத்தகைய கோவிலில் வீற்றிருக்கும் காளி எவ்வாறு காணப்படுகிறாள்? அவள் உருவம் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகிறது. அவள் வாசுகி, ஆதி சேடன் ஆகிய இரண்டு பாம்புகளில் முத்துக்களாகிய பாற் கற்களை நிரப்பி அவற்றின் மீது நட்சத்திரங்களாகிய இரத்தினங்களைப் பதித்து அவற்றைச் சிலம்புகளாக அணிந்திருக்கின்றாள். நெற்றியில் சிந்தூரப் பொட்டு திகழ்கின்றது. செப்புக் கிண்ணங்கள் போன்ற கொங்கைகளில் வெண்ணீறு பூசப்பெற்றிருக்கின்றது. அவள் யானைத்தோலை ஆடையாக அணிந்திருக்கின்றாள். அதன் குடலையும் பாம்பையும் முறுக்கிக் கச்சாகக் கட்டியிருக்கின்றாள். பாம்பை மேலாடையாக அணிந்திருக்கின்றாள். பொன்னணிகளும், முத்துமாலைகளும், பவள மாலைகளும் அவள் கழுத்தில் இலங்குகின்றன. நான்முகன், இந்திரன், யானை முகத்தோன், முருகன் ஆகியவர்களைப்பெற்ற வயிற்றினையுடையவள் அவள். வீரர்கள் உதிரத்தைக் குடித்து சிவப்புற்ற கைகள், திசை யானைகளின் மத நீரில் கழுவியதால் கருமை நிறத்தையடைந்திருக்கின்றன. அமுதம் கடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சை உண்ட சிவபெருமானைத் தனது அதரபானமாகிய அமுதத்தால் தணிக்கக் கூடியவள் அவள். அவளுடைய கடைக்கண் பார்வை படுவதால் சிவமெருமானுக்கு உண்டாகும் காம நோயைத் தன் இனிய சொற்களால் தணிவிப்பாள். உலகிலுள்ள மலைகளைக் காதணிகளாகவும் அணிவாள்; விரும்பினால் அவற்றைக் கோத்து இரத்தின மாலையாகவும் சூடுவாள். அந்த மலைகள் அவளுடைய கையில் அம்மானையாகவும் அமையும்; பந்துக்களாகவும் கூடும்; கழங்குகளாகவும் கொள்ளப்பெறும். அவள் விரும்பினால் என்னதான் ஆகாது?

தேவி வழிபாடு

தேவியை வழிபடுவோர் அவள் திருக்கோவிலைப் பெருக்கி பசுங்குருதி நீரைத் தெளித்து, கொழுப்பாகிய மலர்களைத் தூவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள விறகு விளக்குகளை எங்கும் ஏற்றி வைப்பர். அவளை வழிபடுவோரின் ஒலி கடலொலி போல் எங்கும் முழங்கும். இதனைக் கவிஞர்,

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
      தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
      பரவும் ஒலி கடல் ஒலிபோல் பாக்கு மாலோ[9]

[தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்; பரக்கும் பரவும்]
என்று கூறுகிறார். பலவகை வாத்திய ஒலிகளை, ஒலிக்கும் வீரர்கள் தங்கள் விலா எலும்புகளைச் சமித்ததாகவும் குருதியை நெய்யாகவும் கொண்டு ஓமத் தீவளர்த்து வேள்வி புரிவர். சில வீரர்கள் தங்கள் சிரங்களை அறிந்து தேவியின் கையில் கொடுப்பர்; அத்தலேகள் தேவியைப் பரவும்; தலை குறைந்த உடலங்கள் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரித்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
      குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[10]

[அணங்கு-காளி; கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]
என்பது கவிஞன் வாக்கு. பலி பீடத்தில் அரிந்து வைத்த வீரர்களின் தலைகளை ஆண்டலைப் புட்கள் அணுகும்பொழுது அவற்றை அத்தலைகள் வெருட்டியோட்டும். தலைகளை அரிந்தபின் களிப்பால் துள்ளும் உடல்களைப் பேய்கள் தொடுவதற்கு அஞ்சி அவை நிலத்தில் விழும் வரையில் அவற்றைத் தொடர்ந்து நிற்கும்.

மூங்கில்களின் நுனியில் தொங்கும் வீரர்களின் தலைகள் எல்லாத்திசைகளிலும் கண்விழித்து இமையாது சிரிக்கும் காட்சிகளைக் கண்டு சில பேய்கள் விடியும் வரையிலும் தூங்காதிருக்கும். வீரர்களின் தலைகளைக்கொண்ட சில மூங்கில்கள் பாரத்தால் வளைந்து இரத்தப்பெருக்கில் மூழ்கியிருக்கும். அவை இறந்துபட்ட வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களைப்போல் தோன்றும்.

அரிந்ததலை யுடன் அமர்ந்தே ஆடுகழை
      அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற
      நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்[11]

[அமர்ந்து பொருந்தி; கழை-மூங்கில்; காலன் யமன்;]
என்பது கவிஞனின் சொல்லோவியம்.

வழிபடுவோர் பல வகை வாத்திய ஒலிகளைக் கேட்டுத் தேவியை வணங்க வருவர். சாதகர் என்ற தேவியின் மெய்காப்பாளர் தோற்கருவிகளின் ஒலி கேட்டு வருவர் ; யோகினிமார் என்ற தேவியின் பரிவார மகளிர் வாளாயுதத்தை வலக்கையிலும் வீரர்களின் தலைகளை இடக்கையிலும் கொண்டு தேவியிடம் வருவர், பிணங்களைத் தின்னும் பருந்துகள், பேய்கள் முதலியன தேவியின் கோவில்சூழ இருக்கும்; பிணங்களைக் கவருவதில் நரிகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும். பேய்கள் தம் குழந்தைகளின் பொருட்டு நரிகளின் வாயிலுள்ள இனிய தசைகளைப் பறித்துச் செல்லும்.

காளி தேவியின் கோவிலில்தான் மக்கள் உலகமும் பேய்கள் உலகமும் சந்திக்கும் இடமாகும். ஆனால் அவ்விரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்வதில்லை.

இந்திர சாலம்

ஒருநாள் காளிதேவி பேய்கள் சூழ கொலுவீற்றிருக்கும்பொழுது சுரகுரு என்ற சோழன் காலத்தில் காளி தேவியின் சீற்றத்துக்கு அஞ்சி இமயமலையில் ஓடி யொளித்த பேய் முதற் குலோத்துங்கன் காலத்தில் தேவியின் முன் வந்து கண்டோர் வியப்புறுமாறு இந்திரசால வித்தைகளைக் காட்டுகின்றது. போர்க்கத்திலுள்ள காட்சிகள் 'தத்ரூபமாக'க் காளிக்குக் காட்டப் பெறுகின்றன. முதுபேய்,

துஞ்சி வீழ்துரக ராசியார்! உடல்து
      ணிந்து வீழ்குறைது டிப்பபார் !
அஞ்சி யோடுமத யானைபார்!
      உதிர ஆறும் ஓடுவன நூறுபார்![12]

[துஞ்சல்-இறத்தல்; துரகம் குதிரை]
என்று தன் மாய வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெட்டுண்டு துடிக்கும் வீரர் உடல்களையும் வெருவியோடும் யானைகளையும் பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டுகின்றது. இத்தகைய சாலவித்தைகளில் மயங்கின பேய்கள் பிணங்களைப் புசிக்கும் ஆவலால் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து அடித்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றன. மாயப்போரில் கண்ட பிணங்களின் குருதியையும் தசையையும் விரும்பி வெறுங்கை முகந்து நிலத்தைத் துழாவலாயின. முதுபேய் தேவியை நோக்கி,

கொற்றவர்கோன் வாளப்யன் அறிய வாழும்
      குவலயத்தோர் கலையனைத்தும் கூறஆங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
      கடைபோகக் கண்டருள்என் கல்வி என்றே[13]

[கொற்றவர் கோன்- அரசர்க்கரசன்; குவலயம் -உலகம்; கடைபோக-முடிய.]

மீண்டும் வேண்டியபோது, பேய்கள் யாவும் அவற்றைக் காட்ட வேண்டாமென்று முறையிட, அவ்வாறே வித்தை காட்டல் நிறுத்தப்பெறுகின்றது.

பேய்கள் குறை இரத்தல்

எல்லாப் பேய்களும் ஒன்று திரண்டு வந்து காளி தேவியிடம் தம் பசிக்கொடுமையைக் கூறி அதைப் போக்குமாறு வேண்டுகின்றன.

சாவத்தால் பெறுதுமோ சதுமுகன்றான்
      கீழ் நாங்கள் மேனாள் செய்த
பாவத்தால் எம்வயிற்றில் பசியை வைத்தான்
      பாவியேம் பசிக்கொன் றில்லேம்[14]

[சாவம்-சாபம்; சதுமுகன்- நான்முகன்]
என்று பேய்கள் தம் நிலையைத் தெரிவிக்கின்றன. தம்முடைய மூக்கின் அருகே வழு நாறுவதாலும், முடைநாறுவதாலும் உதடுகள் துடிக்கும்படி ஈக்கள் மொய்ப்பதாலும் அவற்றை நன்னி மித்தங்களாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாக உரைக்கின்றன.

அப்பொழுது இமயத்தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் அங்கு கண்ட சில தீய நிமித்தங்களைக் கூறுகின்றது. ஆண் யானைகளுக்குக் கொம்பு முறிதல், பெண் யானைகளுக்கு மருப்புக்கள் முளைத்தல், ஒளி வீசி எரியும் விளக்குகள் கறுத்து எரிதல், பருவமுகில்கள் செங்குருதிகளைப் பெய்தல், முரசங்கள். தாமே முழங்குதல், இரவில் இந்திரவில் தோன்றுதல், ஊரிலுள்ள இல்லங்களில் கோட்டான்கள் தோன்று தல், நரிகள் ஊளையிடுதல், வேள்வித்தீ சுடலைத்தீ போல் நாறுதல், பூமாலைகள் ஒளியிழத்தல், ஓவியங்களில் வியர்வை நீர் தோன்றுதல், தடாகத்தில் இரத்தம் மாறுதல் ஆகியவை அது கண்ட தீ நிமித்தங்களாம்.

அவற்றைக் கேட்ட காளிதேவி கணிதப்பேய் நனவிலும் கனவிலும் கண்டதைக்கூறி ஒரு பரணிப் போர் நடைபெறப் போவதாக உரைக்கின்றாள். பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன.

போர்க்களத்தில் கூழ் சமைத்தல்

முதுபேயின் வேண்டுகோளுக் கிணங்க காளி தேவி தன் பேய்க்கூட்டங்களோடு போர்க்களத்துக்குச் சென்று அங்குள்ள காட்சிகளை ஒவ்வொன்றாக தம் பேய்களுக்குக் காட்டுகின்றாள். பிறகு அவைகளைக் கூழடுமாறு ஆணையிடுகின்றாள்.

முதலில் பேய்கள் காலைக்கடன்கள் செய்து முடிக்கின்றன. யானைகளின் மருப்பால் பல்லை விளக்கி அவற்றின் பழு எலும்பால் நாக்கை வழித்துக்கொள்கின்றன. கூரிய அம்புகளால் நகங்களைக் களைந்து யானையின் மத நீராகிய எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு வெண்மூளையாகிய களிமண்ணைக்கொண்டு நன்றாகத் தேய்த்து குருதித்தடாகத்தில் நீந்தி விளையாடுகின்றன. குளித்தபிறகு நிணத் துகில் உடுத்திப் பல்வேறு அணிகளைப் புனைந்து கொள்ளுகின்றன.

பிறகு கூழடுதல் தொடங்குகின்றது. பருந்து நிழற்பந்தலின் கீழ் யானைப் பிணங்களின்மேல் சமையலறை அமைக்கப்பெறுகின்றது. யானையின் மதநீரால் நிலத்தை மெழுகி முத்துத்தூளால் கோலமிட்டு யானைத்தலைகளை அடுப்பாக அமைத்துக் கொள்கின்றன. யானை வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரைகளின் இரத்தம் உலை நீராகவும், அவற்றின் பற்கள் வெங்காயமாகவும், வீரர்களின் நகங்கள் உப்பாகவும் கொள்ளப் பெறுகின்றன இறந்துபட்ட வீரர்களின் அம்புகள், வேல்கள், கோல்கள். முதலியவற்றை விறகாகக் கொண்டு வீரர்களின் கோபக்கனலாகிய தீயைக் கொண்டு அடுப்பு மூட்டப் பெறுகின்றது. கலிங்க வீரர்களின் பற்களாகிய அரிசியை முரசங்களாகிய உரல்களில் சொரிந்து யானைக் கோடுகளாகிய உலக்கைகளால் நன்கு குற்றி, சல்லவட்டம் என்னும் சுளகால் புடைத்து உலையிலிட்டுக் கூழ் காய்ச்சப்பெறுகின்றது. கூழ் பானையிற் பிடித்துக் கொள்ளாதிருக்கும்பொருட்டுப் போர் வீரர்களின் கைகளாகிய துடுப்புக்களைக் கொண்டு நன்கு துழாவப் படுகின்றது. நல்ல பதம் வந்ததும் குதிரைகளின் இறைச்சியாகிய நுணியைப் பிடித்து மெதுவாக இறக்கப்படுகின்றது.

கூழுண்ணல்

பிறகு பேய்கள் கூழுண்ணத் தொடங்குகின்றன. யானைகளின் மத்தகங்களில் குருதிப் பேராற்றில் நீர் முகந்து குடிநீராக வைத்துக் கொள்ளப் பெறுகின்றது. வேழங்களின் வால்களைக்கொண்டு பெருக்கி, குருதி நீர் தெளித்து, உண்ணும் இடம் ஆயத்தம் செய்யப்பெறுகின்றது. அரசர்களின் கேடகங்கள் மண்டையோடுகள் ஆகியவை உண்கலன்களாகவும், மன்னர்களின் கேடகங்கள் பொற்பாத்திரங்களாகவும் , அவர்களின் வெண்கொற்றக் குடைகள் வெள்ளிப் பாத்திரங்களாகவும், யானைச் செவிகள் பரிமாறும் பாத்திரங்களாகவும், வேல் பாய்ந்த வீரர்களின் தலைகள் அகப்பைகளாகவும் பயன்படுகின்றன. தேவியருளால் உயர் பதவி பெறுவோரின் விழிக்கனல் பகல் விளக்காகவும் நிணம் பாவாடையாகவும் கொள்ளப்படுகின்றன. பார்ப்பனப் பேய்கள், சமணப் பேய்கள், புத்தப் பேய்கள், பார்வைப் பேய்கள், குருட்டுப் பேய்கள், ஊமைப் பேய்கள், செவிட்டுப் பேய்கள், சூற்பேய் கன், மூடப் பேய்கள், நோக்கப் பேய்கள், கூத்திப் பேய்கள், கனவுகண்ட பேய்கள், கணக்கப் பேய்கள் ஆகிய பேய்களுக்கு அவையவை தகுதிக் கேற்றவாறு கூழ் வார்க்கப்பெறுகின்றது. கூழுண்ட பின் குதிரைகளின் காதுகளாகிய வெற்றிலையும் அவைகளின் கணைக்கால் பிளவுகளாகிய பாக்கையும் கலிங்க வீரர்களின் கண்களிலுள்ள வெண்மணியாகிய சுண்ணாம்பையும் கலந்து தாம்பூலம் தரித்துக் கொள்ளுகின்றன. தாம்பூலத்தை அதிகம் தின்று புரையேறின பேய்கள் பூதத்தின் தலையிலுள்ள மயிரை மோந்து பார்க்கின்றன.

உண்டகளிப்பு

நீண்ட நாட்கள் பசியால் வாடிக்கிடந்த பேய்கள் உண்டு வயிறு நிரம்பியதும் மகிழ்ச்சியால் மலைகள் கூத்தாடுவனபோல் கூத்தாடுகின்றன. சில பேய்கள் ஆடைகளை மேலே வீசிப் பாடி விளையாடுகின்றன; சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடி கைவீசி ஆடுகின்றன; சில யானைகளின் வயிறுகளில் புகுந்தும், இரத்த வெள்ளத்தில் விழுந்தும், விளையாடுகின்றன; சில தரையில் வீழ்ந்து புரண்டும் தலைவிரி கோலமாய் ஓடியும் ஆடுகின்றன. சில பேய்கள்,

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
      பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
      கங்கை மணாளனை வாழ்த்தினவே[15]

[பொன்னி-காவிரி; பொருநை - தாமிரவரணி; கன்னி
கன்னியாகுமரி; கங்கை-கங்கையாறு]

எல்லாப் பேய்களும்,

யாவ ருங்களிசி றக்கவே; தருமம்
      எங்கு மென்றுமுள தாகவே;
தேவ ரின்னருள்த ழைக்க வே;முனிவர்
      செய்த வப்பயன்விளைக்கவே;[16]

வேத நன்னெறி பரக்க வேயபயன்
      வென்ற வெங்கலிக ரக்கவே;
பூத லம்புகழ்ப ரக்க வேபுவிதி
      லைக்க வேபுயல்சு ரக்கவே [17]

என்று சொல்லி வாழ்த்துகின்றன.

இவ்வாறு, சயங்கொண்டார் தன் கற்பனை ஆற்றலால் புதியதோர் பேய்கள் உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார். கவிஞர் மனித உலகை ஊன்று கோலாகக்கொண்டு பேசுவதால் மனித உலகத்தேவைகளே பேய்கள் உலகத் தேவைகளாகக் காணப்பெறுகின்றன, அவர் செய்த காவியமும் மனித உலகைச்சார்த்த நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டுள்ளது. மனித உலகையே ஊன்று கோலாகக்கொண்ட நம்மைத்தவிர வேறு யார் தான் அதனைச் சுவைத்துப் பயன் காண முடியும்?
-------------
[1]. The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effects only. - Ruskin.
[2]. குமரகுருபரர் : நீதி நெறி விளக்கம்.செய். 6.
[3]. தாழிசை-134
[4]. தாழிசை-143
[5]. தாழிசை-137
[6]. தாழிசை-142
[7]. தாழிசை-96.
[8]. தாழிசை -86.
[9]. தாழிசை -109
[10]. தாழிசை -111
[11]. தாழிசை -118.
[12]. தாழிசை-165.
[13]. தாழிசை -174
[14]. தாழிசை -216
[15]. தாழிசை 592.
[16]. தாழிசை 595.
[17]. தாழிசை-596
------------------

4. வரலாற்றுக் கருவூலம்

வரலாற்று ஆராய்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வேண்டப்படுபவைகளுள் முக்கியமானதொன்று. முன்னோர் ஒழுகிக்காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னோர் கொண்டிருந்த உயர்ந்த பண்புகளையும் பின்னோர்க்கு எடுத்துக்காட்டுவது வரலாற்று நூல். வரலாற்றுத்துறை அறிவு வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துத் தரும் இன்றியமையாத துறை. அதுபற்றியே நாகரிகம் எய்தியுள்ள மேற்புல அறிஞர் தம் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து பல நூல்கள் வடிவாக வெளியிட்டு வருகின்றனர்; அதனால் நிறைந்த பயனையும் எய்தி வருகின்றனர். மேனாடுகளில் எத்தனையோ விதமாக வரலாற்று நூல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவை அவர்களுடைய தாய்மொழியில் வெளியிடப் பெற்றிருப்பதாலும், அனைவரும் அவற்றைப் படித்து வருதலாலும், அவர்களிடம் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. எனவே, ஒரு நாட்டு மக்களுடைய வரலாறு அந்நாட்டு மக்களின் தாய் மொழியில் வெளியிடப்பெற்றால் அஃது அன்னோரது அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி புரியும் என்பதற்குச் சிறிதளவும் ஐயம் இல்லை.

வரலாற்று மூலங்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை நன்கு அறிந்து கொள்வதற்கு மூலங்களாக இருப்பவை அந்நாட்டில் முன்னோர் எழுதிவைத்துள்ள கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கோவில்கள், சிற்பங்கள், நாணயங்கள், இலக்கியங்கள் ஆகியவையாகும். அவற்றில் காணக்கிடைக்கும் ஒருசில குறிப்புக்களைக்கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நூலை எழுதுவர்; அக்கால மக்கள் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, வாணிகம் முதலிய பல்வேறு செய்திகளையும் அவற்றின் மூலம்தான் அறியவேண்டும். 'கலிங்கத்துப் பரணி' யிலிருந்து சோழர்கால வரலாற்றையும் அக்கால மக்களின் வாழ்க்கையைப்பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ளலாம். அதில் காணக்கிடைக்கும் ஒரு சில செய்திகள் கல்வெட்டுக்கள் போன்ற பிற மூலங்களால் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு உறுதிப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியில் காணக் கிடைக்கும் அத்தகைய ஒரு சில குறிப்புக்களை ஈண்டு நோக்குவோம்.

சோழர் கால வரலாற்று மூலம்

கலிங்கத்துப் பாணியிலுள்ள 'இராச பாரம்பரியம்' என்ற பகுதியில் சோழர் குலமுறை தொடக்கம் முதல் கிளததப்படுகின்றது. கவிஞன் நாரதன் என்ற இதிகாச முனிவனக் கொண்டுவந்து நிறுத்துவதால் அதிலுள்ள செய்திகள் யாவும் 'உயர்வு நவிற்சி’யாகவே இருக்கின்றன. சோழர் வரலாற்றை நாரதன் உரைப்பதாகவும், அதைக் கரிகாலன் இமயத்தில் பொறித்து வைப்பதாகவும் அதை ஒரு முதுபேய் கற்றுவந்து காளிக்கு உரைப்பதாகவும் நூல்கூறுகின்றது. அதுபோலவே, அவதாரம் என்ற பகுதியில் பாட்டுடைத் தலைவனுகிய முதற் குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல் படைக்கலப் பயிற்சி, முடிபுனைதல் முதலிய செய்திகள் விரித்துப் பேசப்பெறுகின்றன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே பேசப்படுகின்றான்.

அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
      பாரதப்பேரர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
      எனஉதித்தான் விளம்பக் கேண்மின்[1]
[ ஆழி-சக்கரம், ஆணைச்சக்கரம்; விசயதரன்-குலோத்துங்கன் ]
என்று முதுபேயின் வாயில் வைத்துக் குலோத்துங்கன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிறார் கவிஞர். இலக்கியமாதலால், அப்பகுதியிலுள்ள செய்திகள் கற்பனை நயம் செறிய உயர்வு நவிற்சிகளாகவே உள்ளன. என்றாலும், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்கள் தெளிவாக இல்லாமல் இல்லை. அவற்றைத் தவிர 'காளிக்குக் கூளி கூறியது' என்ற பகுதியில் குலோத்துங்கனின் திருவோலக்கச் சிறப்பு, அவன் கலிங்கநாட்டின் மீது படை எடுத்தற்குரிய காரணம், படைகள் கலிங்க நாட்டுடன் பொருது வென்றமை முதலிய செய்திகளும், 'பேய்களைப் பாடியது', 'கோயில் பாடியது' என்ற பகுதிகளில் பேய்களின் குறையுறுப்புக்களைக் கூறுவதுபோல் குலோத்துங்கனின் வெற்றிகளைப்பற்றிய செய்திகளும் 'களம் பாடியது' என்ற பகுதியில் பேய்கள் கூழ் சமைத்தற்கு அரிசியைக் குற்றும்போது பாடுவதாக அமைந்துள்ள வள்ளைப் பாட்டுக்களிலும் கூழை உண்டபின் பாடும் வாழ்த்துப் பாடல்களிலும் சோழ அரசர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

வரலாற்று நூல் குறிப்பிடும் சோழ அரசர்கள்

திருமாலே சோழர்குல முதல்வனுகக் குறிக்கப் பெறுகின்றான்.திருமால் நாபியிலிருந்து நான்முகன் பிறந்த செய்தியும், நான்முகன் மரீசியைப் பெற்றதும், மரீசிக்குக் காசிபன் மகனாகப் பிறந்ததும், காசிபன் சூரியனைப் பெற்றெடுத்ததும் உரைக்கப் பெறுகின்றன. அன்றியும், மனுச்சோழன், இட்சுவாகு, விருட்சி, ககுத்தன், மாந்தாதா, முசுகுந்தன், பிருது லர்ட்சன், சிபி, கராதிராசன், இராச கேசரி, கிள்ளிவளவன், கவேரன், மிருத்யுசித்து சித்திரன், சமுத்திரசித்து, பஞ்சபன், திலீபன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், உபரி சரன், பாரதப்போரில் பங்குகொண்ட சோழன், சூர வர்க்கன், கோச்செங்கணான், கரிகாலன், முதற் பராந்தகன், முதல் இராசராசன், முதல் இராசேந்திர சோழன், முதல் இராசாதிராசன், இராசேந்திர தேவன், இராச மகேந்திரன், வீர ராசேந்திரன், முதற் குலோத்துங்கன் (கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத்தலைவன்) ஆகியவர்களைப்பற்றிய குறிப்புக்களும் காணப்பெறுகின்றன. கரிகாலனுக்கு முற்பட்டவர்கள் யாவரும் இதிகாச உலகைச் சேர்ந்தவர்கள்; அவனுக்குப் பின் வந்தவர்கள் வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் செய்த போர்கள், அடைந்த வெற்றிகள், கொடைத்திறன் போன்ற செய்திகள் நூலில் குறிக்கப்பெற்றுள்ளன.

இந்நூல் குறிக்கும் போர்கள்

முதல் இராசராசன் சேர நாட்டில் சதய விழாவை ஏற்படுத்தி அந்த நாட்டிலுள்ள உதகை என்னும் நகரை வென்றவன். கலிங்கத்துப்பரணி இவனை 'உதகை வென்ற கோன்' என்று குறிப்பிடுகின்றது. இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரையில் களிறுகளுக்கு நீரூட்டினான்; பர்மா தேசத்தைச் சார்ந்த கடாரத்தை வென்றான். இச் செய்தியை,

களிறு கங்கைநீர் உண்ண மண்ணையிற்
      காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
      கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்.[2]

என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. முதல் இராசாதி ராசன் மேலைச் சளுக்கியர்களுடன் போர்புரிந்து துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள கம்பிலி என்னும் நகரத்தையும் அதிலிருந்த அரண்மனையையும் அழித்தொழித்த செய்தி 'கம்பிலிச்சயத் தம்ப நட்டதும்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவனும் இவன் தம்பி இராசேந்திர தேவனும் மேலைச் ச ளுக்கியருடன் கிருஷ்ணா நதிக் கரையிலுள்ள கொப்பத்தில் போர் புரிந்து போர்க்களத்திலேயே முடி கவிழ்த்துக் கொண்ட செய்தியையும் இந்நூல் குறிக்கின்றது.[3] கிருஷ்ணாவும் துங்கபத்திரையும் கலக்கும் இடத்திலுள்ள கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரன் குந்தளருடன் போர் புரிந்து வெற்றியடைந்த செய்தி,

குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற
      கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை[4]
[கோன்-அரசன், குவலயம்-உலகம்]

என்ற அடியால் குறிப்பிடப் பெறுகின்றது. இது விக்கிரமசோழனுலாவிலும்,

      - கூடல்
சங்ககத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும்[5]

என்று குறிப்பிடப் பெற்றுள்ளது.

பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களனைத்தும் நூலில் நுவலப்படுகின்றன. குலோத்துங்கன் இளவரசனானவுடன் திக்கு விசயஞ் செய்து வெற்றி கொண்ட நிகழ்ச்சிகள் முதல் பின்னர் பேரரசனானவரை அவன் அடைந்த வெற்றிகள் யாவும் அவதாரம் என்ற பகுதியில் குறிப்பிடப் பெற்றுள்ளன. குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து வடதிசை நோக்கிச் சென்று மத்திய மாகாணத்திலுள்ள வத்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம் என்ற இடத்தே பொருது வெற்றி கொண்டதுதான் இவனது கன்னிப் போராகும். [6] இதனைக் கவிஞர்,

மனுக்கோட்டம் அழித்தபிரான்
      வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம்
      பட்டதுசக்கரக் கோட்டம்[7]
[மனு-மனிதர்கள்; கோட்டம்-தீநெறி; புருவத்தனு-புருவவில்; நமன்-யமன்]
என்று குறிப்பிடுகிறார். வயிராகரத்தை எரியூட்டியதை 'திகிரி புகை எரிகுவிப்ப வயிரா, சுரமெரி மடுத்து'[8]என்ற அடியால் பெற வைக்கிறார். இதையே எங்கவராயன் வாயில் வைத்தும்,

மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
      வேறு பட்டதும் இம்முறையே யன்றோ?"[9]

என்று பின்னால் குறிப்பிடுகிறார் கவிஞர்.

குலோத்துங்கன் துங்கபத்திரை நதிக்கரையில் நடைபெற்ற போரில் குந்தள அரசனையும் அவன் தம்பியையும் வென்று அவர்கள் தலைநகரமாகிய கலியாணபுரத்தைக் கைப்பற்றிய செய்தியும்[10] மீண்டும் அளத்திப் போர்க்களத்தில் குந்தள அரசனை வென்ற செய்தியும் நூலில் குறிப்பிடப் பெறுகின்றன{11}. மைசூர் நாட்டைச் சேர்ந்த நவிலையில் பல சிற்றரசர்களை வென்று பல யானைகளைக் கைக் கொண்டமை,

கண்ட நாயகர் காக்கும்ந விலையில்
      கொண்டதாயிரம் குஞ்சரம் அல்லவோ[12]

என்று குறிக்கப் பெறுகின்றது. இன்னும் இவன் அக்காலத்தில் ஆண்ட ஐந்து பாண்டிய அரசர்களையும் வென்றான்.[13] பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த பொழுது முத்துக்கள் மிகுதியாகக் கிடைக்கும் மன்னார் குடாக் கடலைச் சார்ந்த நாட்டையும், பொதியிற் கூற்றத்தையும், கன்னியாகுமரியையும், கோட்டாற்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். இவற்றை மீண்டும் பாண்டியர் கவராதவாறு கோட்டாற்றில் கோட்டாற்று நிலைப்படை என ஒரு படையை ஏற்படுத்தினான்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஒட
      முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
      வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்[14]

[ஆறு-வழி; தென்னர்-பாண்டியர்; முனிதல்-வெகுளல்; வெள்ளாறு-ஒர் ஆறு; கோட்டாறு-நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஓர் ஊர்]

என்ற தமிழிசையில் இச்செய்தி குறிப்பிட்டுள்ளமை காண்க. சேரரையும் வென்று வாகை சூடினான்.[15] சேரனை வெற்றி கொண்டு திருவனந்தபுரத்திற்குத் தெற்கேயுள்ள விழிஞம், காந்தளூர்ச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில் இருந்த மரக்கலங் களைச் சிதைத்தழித்த செய்தி,

வேலை கொண்டு விழிஞ மழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றோ?[16]

[சாலை-காந்தளூர்ச்சாலை]
என்ற தாழிசையில் குறிப்பிடப் பெற்றுள்ளது. -------------
[1]. தாழிசை-232
[2]. தாழிசை-202
[3]. தாழிசை-204
[4]. தாழிசை-208
[5]. கண்ணி-22
[6]. தாழிசை-252
[7]- தாழிசை-254
[8]. தாழிசை-252
[9]. தாழிசை-384
[10]. தாழிசை-103
[11]. தாழிசை-385
[12]. தாழிசை-386
[13]. தாழிசை-381
[14]. தாழிசை-95
[15]. தாழிசை-382
[16]. தாழிசை-383.
----------
அக்கால அரசர் இயல்புகள்

அரசர்கள் படைக்கலப் பயிற்சி பெற்ற பின் உடைவாளைத் தம் அரையில் பூண்டிருப்பர். அரசவை யில் அரசு வீற்றிருக்கும் பொழுது அரசன் தன் தேவியுடன் இருத்தல் வழக்கம். குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்த செய்தியைக் குறிக்கும் கவிஞர்,

" தேவியர் சேவித் திருக்கவே "[17]

என்று கூறுவதிலிருந்து இதை அறியலாம். அரசனுடைய அணுக்கிமார் நாடகம் நிருத்தம் முதலியவற்றிலும் பாலை, குறிஞ்சி, செவ்வழி, மருதம் என்ற நால்வகைப் பண்களிலும் வல்லோராய் இருப்பர்.[18] அரசவையில் வீணை, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.[19] அரசருடைய புகழைப் பாடுவதற்குச் சூதர், மாகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதாளிகர் என்போர் அரசவையில் இருந்தனர்.[20] அரசனுடைய ஆணையைப் பிறருக்கு அறிவிப்பதற்கும் பிறருடைய விருப்பங்களை அரசனுக்குத் தெரிவித்தற்கும் உரிய அதிகாரி ' திருமந்திர ஓலையாள் ' என்ற பெயரைப் பெற்றிருந்தான்.[21]

அரசன் ஒன்று குறித்து வெளிச்செல்லுங்கால் மறையோர்க்குத் தான தருமங்கள் செய்தும் கவி வாணர்க்குப் பரிசளித்தும் புறப்படுவது வழக்கம்[22] பேரரசர் புறப்படுங்கால் சிற்றரசர் சயஒலி முழக்குவர்; மறையவர் மறைகளை மொழிவர்.[23] சங்கு, பல்லியங்கள் முதலியவை ஒலிக்கப்பெறும், சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பெற்றது.[24] பயணம் செய்வோர் யானை, தேர், சிவிகை ஆகியவற்றில் ஏறிச் செல்வர். அரசர்கள் களிறூர்ந்து செல்லலும் தேவியர் பிடியூர்ந்து செல்லலும் அக்கால வழக்கமாகும்.[25]

சிற்றரசர்கள், மணிமாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச்சரடு, மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியவற்றையும் யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும் பேரரசர்கட்குத் திறைப்பொருள்களாகத் தரும் வழக்கம் இருந்தது.[26] திறைப் பொருள்கள் எருதுகளின்மீது கொண்டுவரும் வழக்கம் இருந்தாகத் தெரிகிறது. இதனைப்,

'பகடு சுமந்தன திறைகள் '[27]

என்ற சொற்றொடரால் அறியலாம். மகளிரையும் திறைப் பொருளாகக் கவர்வதும் உண்டு, சிற்றரசா்கள் பேரரசர்கட்கு மகளிரைத் திறைப்பொருளாகத் தருவதும் உண்டு.[28] அம்மகளிர் தனியாக வாழு இடத்தை 'வேளம்'என்று குறிப்பிடுவர். அந்தப்புரத்தில் சேடியராகப் பணியாற்றுவர்.[29] இது போலவே, சிற்றரசர்கள் பேரரசர்கட்குக் குற்றேவல் புரிவர்.[30]
-------------
[17]. தாழிசை-320
[18]. தாழிசை-321
[19]. தாழிசை-323
[20]. தாழிசை-322
[21]. தாழிசை-328
[22]. தாழிசை-281
[23]. தாழிசை-294
[24]. தாழிசை-283
[25] தாழிசை-285, 286.
[26]. தாழிசை 334, 335, 326
[27]. தாழிசை-272
[28]. தாழிசை-41, 459
[29]. தாழிசை-40, 826,
[30]. தாழிசை-325.
--------
அக்காலப் போர் முறை

கலிங்கத்துப் பரணியால் அக்காலப் போர் முறைகளையும் அறியலாம். அரசர்கள் போருக்குப் புறப்படுங்கால் சங்கு முழக்கியும் முரசதிர்ந்தும், இயமரம் இரட்டியும், கொம்புகளை ஒலித்தும் செல்வது வழக்கம்.[31] பகையரசர் நாட்டினைப் படைகள் தாக்குங்கால் அவர் ஊரினை எரிகொளுவியும் சூறை கொண்டும் அழித்தல் இயல்பாக இருந்தது. கருணாகரனின் படை கலிங்க நாட்டினை அழித்த செய்தியை,

அடையப் படர் எரி கொளுவிப் பதிகளை
      அழியச் சூறைகொள் பொழுதத்தே[32]

என்று கவிஞர் கூறுவதைக் காண்க.

போர்க்களத்தில் இருதிறத்துப் படைகள் ஒன்றோடொன்று போரிடுங்கால், நால்வகைப் படையுள் ஒவ்வொரு வகைப் படையும் அவ்வப் படையுடனேயே போரிடுவது மரபு. உலக்கை, சக்கரம், குத்தம், பகழி, கோல், வேல் முதலியவை போர்க்கருவிகளாகப் பயன்பட்டன. இரவில் போர் செய்தலை மேற்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. கலிங்கப்போரின் மேற்சென்ற படை,

உதயத்து ஏகுந்திசை கண்டு அது
      மீள விழும் பொழுது ஏகல் ஒழிந்து.[33]

என்று கூறப்படுதலாலும், கலிங்க வேந்தன் படை சூழப்பற்றியிருந்த மலைக்குவட்டை சூரியன் மறையும் நேரத்தில் அணுகிய படை,

வேலாலும், வில்லாலும் வேலி கோலி
      வெற்பதனை விடியளவும் காத்து நின்றே,[34]

என்று கூறப்படுதலானும் இவற்றை அறியலாம்.

போர்க்களத்தில் தோற்றோடிய அரசர் விட்டுப் போன குடை, சாமரம் முதலியவற்றை வென்ற வேந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன் பயன்படுத்துவர். குலோத்துங்கன் காஞ்சியிலமைக்கப்பெற்ற சித்திரமண்டபத்தில்வீற்றிருந்தபொழுது

வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
தங்கள் தங்கரத் தாற்பணி மாறவே.[35]

[வெந்இடுமுன்பு முதுகுகாட்டியோடுமுன்பு ; இடுவிட்டுப்போன ; பனிமாற-குற்றேவல் புரிய]
என்று கவிஞர் கூறுவதை நோக்குக, போரில் தோற்றோடிய அரசர்கள் மலைக்குகைகளிலும், மலைப் பள்ளத்தாக்குகளிலும், மறைவது அக்கால இயல்பாக இருந்தது.[36] காடு, மலை, கடல் முதலியவை சிறந்த அரண்களாக மதிக்கப்பெற்றிருந்தன.

கானரணும் மலையரணும் கடலரணும்
      சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தான் அரணம் உடைத்தென்று கருதாது
      வருவதும் அத் தண்டு போலும்[37]

என்றவற்றால் இதனை அறியலாம்.

சினங் கொண்ட படைவீரர் பகையரசர் நாட்டில் புகுந்து எதிர்ப்பட்ட ஆடவரை யெல்லாம் அழிப்பர். போரிற் பிடித்த அரசர்களை விலங்கிடு தலும் அக்கால இயல்பாக இருந்தது. வெற்றி கொண்ட அரசர் தாம் வென்ற இடத்தில் வெற்றித் தூண் நாட்டலும் அக்கால வழக்கமாகும். கலிங்க நாட்டில் கருணாகரன் இவ்வாறு செய்தமை,

கடற்கலிங்கம் எறிந்துசயத்
      தம்பம் நாட்டி.[38]

என்ற அடியால் அறியப்படும். குலோத்துங்கனக் குறிக்குமிடத்தும்,

தனித்தனியே திசையான தறிகளாகச்
      சயத்தம்பம் பல நாட்டி[39]

என்று கூறுவதாலும் இதனை அறியலாகும்.

சில வழக்காறுகள்

இலக்கியம் 'வாழ்க்கையின் விமர்சனம் ' என்று உரைத்தார் மாத்யூ ஆர்னால்டு என்ற ஆங்கிலத் திறனாய்வாளர். மக்கள் வாழ்க்கையில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் உள்ளன ; காலத்திற் கேற்றவாறு அப்பழக்க வழக்கங்கள் மாறக் கூடியவை. கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒருசில அக்காலப் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
----------
[31]. தாழிசை-344,
[32]. தாழிசை-370.
[33]. தாழிசை:362
[34]. தாழிசை 464,
[35]. தாழிசை 325
[36]. தாழிசை.449
[37]. தாழிசை-377
[38]. தாழிசை-471
[39]. தாழிசை-20
--------------
அரசன் பிறந்தநாள்

அக்காலத்தில் மக்கள் அரசன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது ; அன்று அரசன் மக்கள் மகிழ்ச்சி பெருகுவதற்குப் பல காரியங்களைப் புரிவான். அந்நாள் 'வெள்ளணி' நாள் என்றும் 'நாண்மங்கலம்' என்றும் வழங்கப்பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்தில் மக்கள் மகிழ்ந்திருந்ததுபோல எந்நாளும் மகிழ்ந்திருந்தனர் என்பதைச் சயங்கொண்டார்,

எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்
      இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே
      குலோத்துங்கச் சோழனைப் பாடீரே.[40]

என்று பேய்களின் வள்ளைப் பாட்டாகக் கூறுகிறார்.

அஞ்சல் அளித்தல்

பேரரசர் தம்மை அடைந்த சிற்றரசர்கட்கு அஞ்சல் அளிப்பர் ; அதற்கு அறிகுறியாகத் தம் அடியினைகளை அவர்கள் முடிமீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்தது.[41] இங்ஙனமே பேரரசர் யானைமீது ஏறுங்கால் தம் அடியைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகின்றது.

அமைச்சர் புகழ்

சிற்றரசர்கள் பேரரசர்களின் அமைச்சர்களைப் பெரிதும் சிறப்பாக மதித்திருந்தனர்; அவர்கள் அவ்வமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகிவந்தனர் என்பதும் தெரிகிறது. கவிஞர் இதனை,

தார்வேய்ந்த புயத்தபயன்
      தன்னமைச்சர் கடைத்தலையில்
பார்வேந்தர் படுகின்ற
      பரிபவம்நூ ருயிரமே.[41a]

என்ற தாழிசையால் குறிப்பிடுகின்றார்.

நிமித்தங்கள்

கண்துடித்தல் போன்றவை நற்குறி தீக்குறி கண்டு உணர்வதற்கு மேற்கொள்ளப் பெற்றன. ஆந்தை கூவல் முதலியவை தீநிமித்தங்களாகக் கருதப்பெற்றன. கணாப்பயன் கண்டு உணர்தலும் அக்கால மக்கள் வழக்கமாக இருந்தது. இவற்றை யெல்லாம் கவிஞர் பேயின் வாயில் வைத்துப் பேசுகிறார்.[42]

சில வழக்கங்கள்

வீரர்கள் தம் உறுப்புக்களை யறிந்தும் தெய்வத்திற்கு வழிபாடு செய்தனர்.[43] இதனை இக்காலத்தில் காவடி எடுப்போர் நாக்கிலும் உடலிலும் அம்புகளைக் குத்திக் கொள்வதுடன் ஒப்பிட்டு அறியத்தக்கது. தெய்வத்திற்கு எருமைக் கடாவைப் பலி இடுங்கால் உடுக்கையை முழக்குவர்.[44] மண வினை முதலிய மங்கல காரியங்களில் அறுகம்புல்லை நெல்லுடன் இடல் மங்கலச் செயலாகக் கருதப் பெற்றது.[45] கோயில், அரண்மனை முதலியவற்றிற்குக் கடைகால் பறித்த உடன் அதில் பொன், மணி முதலியவற்றை இடுதல் வழக்கமாக இருந்தது.[46] அரசர் போன்ற உயர்ந்தோர்க்கு விருந்து அளிக்குங்கால், பகல் விளக்கு வைத்தலும் பரப்பிய ஆடையின்மேல் பொற்கலத்தை வைத்து அதில் உணவிடுதலும் வழக்கமாக இருந்தது.[47] இன்றும் கோவிலில் கடவுளர்க்குப் பாவாடை போடுதல் என்ற வழக்கம் இருந்து வருதல் ஈண்டு கருதத்தக்கது. வெறு நிலத்தில் உண் கலம் பரப்ப வேண்டின் நிலத்தில் நீர் தெளித்துப் பின் கலம் வைத்தல் வழக்கமாக இருந்தது[48] கூழுக்கு வெங்காயத்தைக் கறித்துண்ணும் வழக்கம் இருந்தது.[49] மகளிரிடம் கூடல் இழைத்துப் பார்க்கும் வழக்கம் இருந்தது.[50] கணவன் இறந்த பின் கற்புடைப் பெண்டிர் கணவனுடன் தீக்குளிப்பது வழக்கத்தில் இருந்தது.[51]

அக்காலச் சமணர்கள் நாள்தோறும் நீராடுவதில்லை; ஆடை உடுப்பதில்லை; தலையை மழித்திருப்பர்; ஒரு வேளைதான் உண்பர்.[52] புத்தர்கள் தலையை முண்டித்துக்கொண்டு செவ்வாடை போர்த்திருப்பர். ஒருசார் புத்தர்கள் தோலைப் போர்க்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர்.[53]

மைகொண்டும் மந்திரங் கற்றும் புதையல் காண்போராயும் நோய் தீர்ப்போராயும் 'பார்வைக் காரர்' எனப் பெயர் பெற்றுச் சிலர் இருந்தனர். இக்காலத்தில் நாட்டுப்புறத்தில் 'பில்லி சூனியக் காரர்' என்று வழங்கப்படுபவர்களை அவர்களுடன் ஒப்பிடலாம். இறந்தார் வீட்டு முன் நீண்ட தாரையை வைத்து ஊதும் வழக்கம் பூண்டவர்கள் 'நோக்கர் ’ என்று வழங்கப்பெற்றனர். நீண்ட குழாய் வடிவமான நீரைச் சொரியும் துருத்தி என்னும் கருவியைத் தோளில் சுமந்து தொழில் புரிவோர் 'துருத்தியாளர்' எனப்பட்டனர்.[54]

காட்டில் வேட்டையாடிப் பிடித்துக்கொணர்ந்த காட்டுப் பன்றியை தொழுவில் அடைத்துக்காத்து நிற்கும் வழக்கம் இருந்தது. இதனைக் கவிஞர்,

தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி

தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல[55]
என்று சுட்டுகிருர்.
------------
[40]. தாழிசை-533
[41a]. தாழிசை-337 530.
[41b]. தாழிசை-539
[42]. தாழிசை-222-226.
[43]. தாழிசை-111
[44]. தாழிசை-114.
[45]. தாழிசை-264.
[46]. தாழிசை 98,
[47]. தாழிசை-561.
[48]. தாழிசை-557,
[49]. தாழிசை.579
[50]. தாழிசை-51,
[51]. தாழிசை-480.
[52]. தாழிகை-466,
[53]. தாழிசை-468, 567.
[54]. தாழிசை-435, 568, 573.
[55]. தாழிசை-464.
----------
அணிகள்

மகளிர் மிக மென்மையான ஆடைகளையணிந் திருந்தனர். இது,

கலவிக் களியின் மயக்கத்தால்
      கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்(று) எடுத்துடுப்பீர்.[56]

என்ற தாழிசையில் புலனுகின்றது.

வளை, பாடகம், விடுகம்பி, இரட்டைவாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகுவலயம், ஒற்றைச்சரடு, வன்னசரம், மணிமாலை, முத்து மாலை, பதக்கம், மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் முதலியவை மகளிரின் அணிகளாக வழங்கின. கவிஞர் இவற்றைப் பேய்கள் அணிந்தவையாகக் கூறுகிறார்.[57] குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இருந்தது. குழந்தை தளர் நடை பயின்று மழலை மொழியத் தொடங்கும் பருவத்தில் காப்புக் கடவுளாகிய திருமாலின் ஐம்படையாகிய சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் ஐந்தன் உருவங்களைப் பொன்னால் செய்து அவற்றைக் கோத்து அணிதல் வழக்கம். இது ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான் அணியப்படும்.[58]

படுக்கை

மக்கள் உறங்குவதற்காக வெண் பஞ்சு, செம் பஞ்சு, இலவம்பஞ்சு, மயிர், அன்னத்தின் தூவி ஆகிய ஐந்து பொருள்களாலான மெத்தைகளைப் பயன்படுத்தினர். அரசன் முதலியோர் படுக்கையில் இந்த ஐவகை மெத்தைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக இடுவர். இதனால்தான் இப்படுக்கையைப் 'பஞ்சசயனம்' என்று வழங்குவர். காளி பேய்கள் சூழப் பஞ்சசயனத்தின் மீது வீற்றிருந்தாளாகக் கூறப்பெறுகின்றாள்.[59] தீபக்கால் கட்டில் என்ற ஒருவகைக் கட்டில் உபயோகத்திலிருந்ததாகத் தெரிகின்றது.[60]

பொழுதுபோக்கு

அரசர்கள் புலவர்களுடன் இலக்கியச் சுவையில் ஈடுபட்டு இன்புறுதல் வழக்கம். குலோத்துங்கன் இவ்வாறு மகிழ்ந்திருந்ததைக் கவிஞர்,

கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
இசையினொடும் காதன் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும்
மறையினொடும் பொழுது போக்கி.[61]

என்று குறிப்பிடுகின்றார். கோழிச் சண்டை, யானைப்போர், மற்போர், வாதப்போர் முதலியவற்றை மக்கள் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர்.

வருசெருவொன் றின்மையினான் மற்போரும்
சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா
ரணப்போரும் இனைய கண்டே.[62]

என்ற தாழிசையால் இதனை அறியலாம். மகிழ்ச்சி மிகுதியால் மேலாடையை மேலே வீசியெறிந்து விளையாடும் வழக்கம் ஒன்றும் குறிக்கப்பெறுகின்றது.[63]

எனவே, கலிங்கத்துப்பரணி சோழர்கால நாட்டு நிலை, மக்கள் வாழ்க்கை நிலை, அவர்கள் பழக்கவழக்கங்கள் முதலிய செய்திகளைக் காட்டும் ஒரு இலக்கியக் கண்ணாடியாக, வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது என்று கூறலாம்.
----------
[56]. தாழிசை-34.
[57]. தாழிசை-510-514.
[58]. தாழிசை- 239.
[59]. தாழிசை-154
[60]. தாழிசை-153.
[61]. தாழிசை, 277
[62]. தாழிசை, 276
[63]. தாழிசை, 585.
-------------

5. கற்பனை ஊற்று

கற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக்கொண்டுவந்து அப்பொருளினிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றவல்ல ஒரு வகையாற்றல். இக்கருத்தைச் சொற்களால் தெளிவாக விளக்க முயல்வதைவிட ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவது சிறந்தது.

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?[1]

என்ற அடிகள் காலைக்கதிரவனை வருணிக்கும் பாரதியாரின் அற்புதச் சொல்லோவியம். இளஞ் சூரியனது கதிர்கள் உருக்கி ஓடவிட்ட தங்கம் போலப் பரவிவருகின்றதாம்; உருக்கிய தங்கமாயினும் என்ன மாயத்தாலோ சூடுகுறைந்திருக்கின்ற தாம். இத்தகைய ஒளியுடன் அக்காட்சியில் இனி மைப்பும் கலந்து கொஞ்சுவதைக் காண்க. இதைத் தான் கவிஞன் “தழல் குறைத்துத் தேனாக்கி” என்று மிக இங்கிதமாக வெளியிட்டுள்ளான். நாமும் அக்காட்சியின்பத்தில் மூழ்கி அதை அனுபவிக்கின்றோம் கவிஞன் தான் அனுபவித்தவற்றை நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றான். இதை ஒரு பௌதிக அறிஞன் வருணித்திருந்தால் வேறு விதமாக வருணித்திருப்பான். அவனது வருணனைப்போக்கு அறிவியல் அடிப்படையில் தான் சென்றிருக்கும். அதனால் வெறும் செய்திகளை நாம் அறியலாமேயன்றி அனுபவத்தை உணரமுடியாது. கவிஞன் அனுபவித்தவற்றை யெல்லாம் நம்மையும் அனுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது கற்பனை.

கற்பனை இல்லாதவர்கட்கு காலைக் கதிரவனின் காட்சி யாதொருவிதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞன் காணும் பொழுது தன்னை மறந்து விடுகிறான். காணும் கதிரவன், காண்பவனாகிய கவிஞன், காண்பதால் அவன் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஓர் உலகிற்குச்சென்று விடுகிறான். கதிரவனின் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றன. கதிரவனைக் காணும் நம் மனத்தில் கனவிலும் தோன்ற முடியாத கற்பனைகள் கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவைகள் அன்று, அவை அவன் மனத்தில் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கை கிளப்பிவிடும் அமுத ஊற்றுக்கள். அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்டபிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான அக்கற்பனையிலிருந்தே கவிஞன் அனுபவித்த உணர்ச்சியை நாமும் உணர்கின்றோம். பாடலிலுள்ள சொற்கள் நாம் அறிந்தவைகளாக இருப்பினும், அவை கவிதை வேலிக்குள் அமைந்து கிடக்கும் பொழுது புதியதோர் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. அவற்றைக் கொண்டு கவிஞன் புதிய "ரசவாதமே" செய்து விடுகின்றான்.

சொல்லோவியம்

கவிஞன் காட்டும் சொல்லோவியம் வெறும் பொருள்கள் அல்லது கருத்துக்களைத் தெரிவிக்கும் குறியீடுகளின் கோவை அன்று. நாம் சொற்களாகிய அக் குறியீடுகளைப் படிக்கும்பொழுதே அப்பொருள்களையே நேரில் காணுவது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம்.

"ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து
      அவயவம் அமைக்குந் தன்மை
யாதெனத் திகைக்கும் அல்லால்
      மதனக்கும் எழுத ஒண்ணாச் சீதை" [2]

பான்ற கம்பநாடனின் சொல்லோவியம் சீதையை நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மழைக்காலத்தை நாம் 'கார்காலம்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுவோம். சேக்கிழார் பெருமான் அறையிலிருந்து படிக்கும் நம் முன்னே ,

நீலமா மஞ்ஞை ஏங்க
      நிறைகொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லைக்
      கோபம்வாய் முறுவல் காட்ட
ஆலுமின் இடைசூழ் மாலைப்
      பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீ டரங்கில் ஆடக்
      காரெனும் பருவ நல்லாள்[3]

என்ற தன் சொல் லோவியத்தால் கார்காலத்தையே கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்.

அணிகள்

ஒரு கருத்தை சாதாரணமாகத் தெரிவிப்பதற்குப் பதிலாகக் கவிஞர்கள் 'அலங்காரமாக'த் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடை பெறும் முறைகளை இலக்கண நூலார் தொகுத்து 'அலங்காரங்கள்' என்றும் 'அணிகள்' என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இவற்றை Figures of speech என்று வழங்குவர். தான் காணும் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே அமைந்து கிடப்பது, அந்த இயல்பு தான் உவமை அணியின் வித்து. பொருள்களிடம் காணப்பெறும் ஒப்புமைப்பகுதி பொறிகளால் காணக்கூடிய அளவிற்கு வெளிப்பட்டு நிற்பதைத் தான் மனிதன் உவமையால் கூறி மகிழ்கின்றான்; அவ்வுவமை செய்திகளை நினைவில் இருத்திக்கொள்வதற்கும் அவற்றை நெஞ்சில் ஆழப் பதித்துக் கொள்வதற்கும் துணையாக இருக்கின்றது. இந்த உவமை அணிதான் பிற்காலத்தில் தோன்றிய எல்லா அணிகளின் தாய் என்பது அறிஞர் பலரின் ஒப்ப முடிந்த துணிபாகும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இதுபற்றியே தன் நூலில் “உவமயியல்" என்ற ஒன்றையே வகுத்துக்கொண்டார். உவமையிலிருந்தே ஏனைய - அணிகள் தோன்றின என்பதை,

"உவமை யென்னும் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே[4]

என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். அது கிடக்க.

இந்நூலிலுள்ள அணிகள்

இனிக் கலிங்கத்துப்பரணியில் காணும் அணி வகைகளை ஆராய்வோம். சயங்கொண்டாரின் கற்பனை ஊற்றிலிருந்து எத்தனையோ அணிகள் தோன்றியுள்ளன. அவர் காட்டும் சொல்லோவியங்கள் பல்வேறு காட்சிகளையும் நம் மனக்கண் முன் அழகுபெறக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சொல்லணிகளும் பொருளணிகளும் நூல் முழுவதும் மலிந்து காணப்படுகின்றன. தன்மை நவிற்சி பயணிகள் பொருள்களின் உண்மையான இயல்புகளை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன. உவமை பணிகள் பொருள்களின் தன்மைகளை விளக்கமுற எடுத்தோதுகின்றன. தற்குறிப்பேற்ற அணிகள் பொருள்களின் இயல்புகளைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. உயர்வு நவிற்சி பொருள்களின் மேம்பாட்டைப் புலனாக்குகின்றன. சிலேடையணிகள் கூறப்படும் பொருள்கள். இருவேறு வகைப்பட்டு இன்பம் தோன்றத் துணைசெய்கின்றன. இவை ஒன்பான் சுவைகளை வெளிப்படுத்தி நூலினைச் சிறப்பிக்கின்றன. இடத்திற்கேற்றவாறு சந்த நயம் அமைந்திருப்பது இச்சிறப்பைப் பின்னும் மிகுவிக்கின்றது.

தன்மை நவிற்சி

உள்ளதை உள்ளவாறு கூறுதல் பெரும்பாலோருக்கு இயலும். அதை அழகு ஒழுகவும் இனிமையாகவும் எடுத்து இயம்புவது கவிஞன் ஒருவனுக்கே இயலும். சயங்கொண்டாரின் கவிதைகளில் இத்தகைய பண்பைக் காணலாம். பெண்ணொருத்தி துயிலெழும் நிலை மிக அழகான சொல்லோவியத்தால் தீட்டப் பெற்றிருக்கின்றது. காலையில் துயில் நீங்கி படுக்கையை விட்டெழுகின்றாள் ஒருத்தி. துயின்றபொழுது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது; ஆடை நெகிழ்ந்து நின்றது. எழுந்தவள் அவிழ்ந்து நின்ற கூந்தலை ஒருகையால் தாங்கியும் நெகிழ்ந்து நின்ற ஆடையை மற்றொரு கையால் பற்றியும் இரண்டோரடி எடுத்துவைத்து நடக்கின்றாள். துயில் நீங்கி எழுந்த நிலையிலும் அவள் முகம் மலர்ச்சியுற்றுக் காணப்படுகின்றது.

சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
      ஒருகை கீழ் அலைசெய் முகிலோடே
திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு
      தெரிவை மீர்கடைகள் திறமினோ[5]

[கொந்து-பூங்கொத்து; அளகம்-கூந்தல்; அலைசெய்(காற்றால்) அசையும்; துகில்-ஆடை; அனந்தல்-தூக்கம்; தெரிவை-பெண்]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரித்திருப்பதைக் காண்க. இத்தாழிசையின் முதலடியின் கருத்து,

'அகில்ஏந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி
      அசைந்தொருகை துகில் ஏந்தி'[6]

[அகில்-அகிற்புகை, துகில் ஆடை)
என்ற தஞ்சை வாணன் கோவை அடியிலும் அமைந்திருப்பது ஒப்புநோக்கி எண்ணி மகிழ்வதற் குரியது. மகளிரின் நடையைக் காட்டும் சொல் லோவியம் மிக இன்பம் பயப்பது.

சுரிகுழல் அசைவுற அசைவுறத்
      துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலிஎழ ஒலிஎழப்
      பனிமொழி யவர்கடை திறமினோ[7]

[சுரிகுழல்-நெளிந்தகூந்தல் (Curling, hair): பரிபுரம் கிண்கிணி]

என்ற தாழிசையில் அந்நடை காட்டப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்க. இன்னொரு இடத்தில் மகளிர் நடை கற்பனை நயம் தோன்றக் காட்டப் பெற்றுள்ளது.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
      ஒழியும் ஒழியும்என ஒண்சிலம்பு
அபயம் அபயம்என அலற நடைபயிலும்
      அரிவை மீர்கடைகள் திறமினோ[8]

[உபயம்-இரண்டு; தனம்-கொங்கை; இடை-இடுப்பு; ஒழியும்-விட்டொழியும், ஒண்சிலம்பு-ஒளிபொருந்திய சிலம்பு; அலற-ஒலிசெய்ய, அரிவை-பெண்]
நுண்ணிடையையுடைய ஒருத்தி கொங்கையின் பளுவைத் தாங்க முடியாது நடந்து வருகின்றாள். பளுவின் மிதியால் இடைமுறிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவள் நடந்து வருங்கால் காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கின்றன. அச் சிலம்பின் குரல் அச்சக்குரல் போல் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர். 'கொங்கையின் பாரம் தாங்கமுடியாது இடைமுறிந்து போகக்கூடும்; நடப்பதை நிறுத்துக” என்று சிலம்புகள் அபயக்குரல் எழுப்பி அம்மங்கையிடம் முறையிடலாயின என்று கவிஞர் கற்பனை நயம் தோன்றக் கூறுகின்றார். இவ்வாறு ஒரு பொருளின் கண் இயல்பாக நிகழும் தன்மையொழியக் கவிஞன் தான் கருதிய வேறொன்றினை அதன் கண் ஏற்றிச் சொல்வதை அணி நூலார் "தற்குறிப்பேற்றம்’ என்று வழங்குவர். அதைப் பின்னர் விரிவாகக் காண்போம்.
-
மகளிரின் கலவிப் போரை இயல்பாகச் சித்திரிக்கும் சொல்லோவியங்கள் பன்முறை படித்து இன்புறத் தக்கவை.

அளக பாரமிசை அசைய மேகலைகள்
      அவிழ ஆபரணம் இவையெலாம்
இளக மாமுலைகள் இணைய றாமல்வரும்
      இயல்ந லீர்கடைகள் திறமினோ[9]

கூடும் இளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
      கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
      கலவி விடாமடவீர் கடைதிற மின்திறமின்[10]

[அளகம்-கூந்தல்; மிசை-மேலே ; மேகலை-இடையில் அணிவது; இளக-நெகிழ ; மா.பெரிய இணையறாமல்-ஒன்றோடொன்று உயர்வு தாழ்வின்றி; நலீர்-நல்லீர், பெண்களே; பிறை-நெற்றி; வெயர்-வெயர்வை ; வடம் - மாலை; குலைந்து -கலைந்து ; அலைய-புரள ; பூசல்-ஒலி: கலவி-புணர்ச்சி.] என்ற தாழிசைகளில் கலவிப்போர் நிகழுங்கால் இயல்பாக நடைபெறும் செயல்கள் உரைக்கப்பெற் றிருப்பதை எண்ணி மகிழ்க.

வாயின் சிவப்பை விழிவாங்க
      மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
      துங்கக் கபாடம் திறமினோ[11]

[வாங்க - பற்றிக்கொள்ள ; தோயம் - கடல் ; கலவி - புணர்ச்சி; துங்கம் - மேன்மை.]

என்ற தாழிசை கலவிப் போருக்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்த சொல்லோவியமாகும். விழி சிவக்க, உதடு வெளுக்கக் கலவிப்போர் புரிந்தமை இதில் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றது.
------------
உவமை

கலிங்கத்துப் பரணியில் உவமையணி மிகச் சிறப்பான முறையில் கையாளப் பெற்றுள்ளது. அணிகள் பலவற்றுள்ளும் மிகவும் எளிமையானது உவமையணி தான். குழந்தைகளிடமும் ஒப்புமைச் சக்தி இருப்பதால், அவர்களிடமும் இவ்வணி தோன்றக்கூடும். எனவே, உவமையணி இல்லாத கவிதைகளே இரா என்று கூடக் கூறி விடலாம். ஏனைய அணிகள் யாவும் அழிந்து பட்டு இவ்வொன்று மட்டிலுமே எஞ்சி நின்றாலும் கவிதை சிறப்புடன் இலங்கக் கூடும். இந்த உவமையணியைக் கவிஞர் சயங்கொண்டார் பல்வேறு வடிவங்களில் கையாண்டுள்ளதை நூல் முழுவதும் படிப்பவர் நன்கு கண்டு மகிழலாம். ஒன்றிரண்டை மட்டிலும் ஈண்டு காட்டுவோம்.

பொருளுக்கேற்ற உவமையை அமைத்துப் பொருளைச் சிறக்கச் செய்வதில் ஆசிரியர் சயங் கொண்டார் வெற்றி பெற்றுள்ளார். பேய்களின் கைகால்களின் இயல்பைக் கூறுபவர் அவற்றிற்குப் பனைமரங்களை உவமையாக அமைத்துள்ளார்.

கருநெ டும்பனங் காடுமு ழுமையும்
      காலும் கையும் உடையன போல்வன.[12]

என்பது கவிஞரின் வாக்கு. அவற்றின் முதுகுகளின் தோற்றத்தைக் கூறுகிறவர்,

மரக்க லத்தின்ம றிப்புறம் ஒப்பன. [13]
என்று மரக்கலத்தின் பின்புறத்தை உவமையாக வைத்துப் பேசுகிறார். பேய்களின் பல்லைக் கூறுங் கால், மண்வெட்டியையும் கலப்பை மேழியையும் உவமைகளாக அமைத்துள்ளார்.

கொட்டும் மேழியும் கோத்த பல்லின[14]

இவை போன்ற பல உவமைகளை ஆங்காங்கு காணலாம் உவமேயத்தின் உயர்விற்கேற்பச் சிறந்த பொருள்களை உவமையாகவும், உவமேயத்தின் புன்மை தோன்ற இழிந்த பொருள்களை உவமையாகவும் கூறுந் திறம் மெச்சத்தக்கது. சோழநாடு அரசனை இழந்து அல்லலுற்ற நிலையில் குலோத்துங்கனை ஞாயிற்றுக்கு உவமையாகவும், அவன் பகைவர்களை வென்று வாகை சூடியதை ஞாயிற்றின் முன் இருள் மாண்டொழிந்தாற் போல பகை வர் ஒடுங்கினர் என்றும் கூறியுள்ளார்.[15] போர்க் களத்தினின்றும் மறைந்தோடிய கலிங்க வேந்தன் ஒரு மலைக் குவடு பற்றி அதில் மறைந்திருந்த பொழுது கலிங்க வீரர்கள் விடியுமளவும் அதனைக் காத்து நின்றதை தொழுவிலடைத்த காட்டுப் பன்றியை வேடர்கள் காத்து நிற்கும் உவமையால் பெறவைக்கிறார்.[16] நூலில் காணப்பெறும் இல் பொருளுவமை அணிகள், கூறும் பொருள்களை மிகவும் சிறப்பித்து நிற்கின்றன. குலோத்துங்கன் காஞ்சியில் சித்திர மண்டபத்தில் அரியணையில் வெண் கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த பொழுது இருபாலும் கவரி வீசப்பெறும் சிறப்பிற்கு, பாற்கடலின் அலை இரு புறத்தும் நின்று பணி செய்யும் தோற்றத்தை உவமையாக வைத்துள்ளார்.[17] இங்ஙனமே ஈதலறம்புரியும் மேலோர் இயல்பு, ஈயாத உலோபியர் இயல்பு, பொருட் பெண்டிர் இயல்பு, கற்புடை மகளிர் இயல்பு ஆகியவை உவமைகளாக அமைந்து அவற்றைப் படிப் போரின் சிந்தையில் ஆழப் பதிக்கும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.[18] போர்க்களக் காட்சியைக் காட்டும் இடங்களிலும் பல உவமைகள் படிப்போரை களிப்புக் கடலில் ஆழ்த்துகின்றன.[19]
-----------
[1]. பாரதி : குயில்
[2]. கம்ப-பாலகா. மிதிலைகாட்சி செய் 4
[3]. பெரியபு ஆனாய நாயனார் செய் 19
[4]. செந்தமிழ் -தொகுதி-7. பக்கம் - 144 லிருந்து எடுத்தது."
[5]. தாழிசை -46
[6]. தஞ்சை வாணன் கோவை-செய் 27,
[7]. தாழிசை-23
[8]. தாழிசை-58
[9]. தாழிசை-53
[10]. தாழிசை-62
[11]. தாழிசை-61 இதைத் தாழிசை 33-உடன் ஒப்பிடுக
[12]. தாழிசை-135
[13]. தாழிசை-139
[14]. தாழிசை 141
[15]. தாழிசை-251, 261
[16]. தாழிசை,464
[17]. தாழிசை 317
[18]. தாழிசை-477, 478, 479, 480, 483.
[19]. தாழிசை-498, 499.
---------
தற்குறிப் பேற்றம்

சயங்கொண்டார் கூறும் தற்குறிப் பேற்ற அணிகள் அவரது கற்பனை வளத்தைப் புலப் படுத்துகின்றன. காளிதேவி உறையும் பாலைவனத்தின் வெம்மையைக் கூறுமிடத்தே பல தற்குறிப் பேற்ற அணிகள் அமைந்து நூலை அணி செய்கின்றன. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கநூல்களில், பாலையைக் கூறும் பகுதிகள் மிகச் சிறந்து விளங்குகின்றன. பாலை நிலம் வெம்மை மிக்க வறனுள்ள இடம் ; உண்ண நீரற்றது : மக்கள் நடந்து கடந்து செல்ல இயலாதது. இந்த வெம்மை நிலத்தின் கொடுமையை விளக்கும் அற்புதச் சொல்லோவியங்களைச் சங்கப் பாடல்களில் காணலாம். ஐந்திணையைக் கூறும் பாடல்களுள் பாலைத்தினைப் பாடல்கள் அதிகமாகவும் உள்ளன: மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. துன்பத்தை நினையுங்கால் மனித தத்துவம் விளங்குமாப் போல, காட்டின் வெம்மையையும் கொடுமையையும் எண்ணுங்கால் இனிய கவிதைகள் முகிழ்த்தன போலும் !

மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிய புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடு[20]

[மரைஆ-மரைமான் ; மரல்-ஒருவகைத் தாழை; தவிர: உண்ண; வரை - மலை ; புரையோர் - குற்றத்தை யுடைய மறவர்;]

என்பது கலித்தொகை காட்டும் பாலை ஓவியம். கானம் மாரி வறப்ப, மரம் வெம்ப, மரையா மரல் கவர நிற்கின்றது. இரண்டு புறங்களிலும் மலைகள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. கொள்ளும் பொருளிலராயினும் கானவரது பகழி உடலில் மூழ்கி வழிப்போக்கர் சுருங்கி, உண்ண நீரற்று, புலர்ந்து வாடும் நாவினைத் தமது கண்ணீரைக் கொண்டு நனைக்கின்றனர். இத்தகைய கொடுமையைக் காட்டுகிறது பாலை பாடிய பெருங்கடுங்கோவின் சொல்லோவியம். அகநானூறு என்ற தொகை நூலில் பாலையைப் பற்றியே இருநூறு பாடல்கள் காணப்படுகின்றன. ஏனையவற்றிலும் பல இனிமையான பாலைத்திணைப் பாடல்கள் உள்ளன. இங்ஙனம் பண்டையோர் சிறப்பித்த பாலை நிலத்தைச் சயங்கொண்டாரும் தன் சொல்லோவியங்களால் அழகு ஒழுக, இனிமை சொட்ட, கற்பனை நயம் பொதுள, வருணித்துள்ளார். அத்தகைய ஓவியங்கள் ஒரு சிலவற்றை ஈண்டு காண்போம்.

கதிரவன் வெம்மையைத் தாங்க முடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றினுளெல்லாம் பகலவன் கிரணங்கள் பாய்ந்து செல்கின்றன. இயல்பாக உள்ள இதனைக் கவிஞர்,

தீய அக்கொடிய கான கத்தரைதி
      றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி
      தன்க ரங்கொடுதி ளைக்குமே.[21]

[தரைதிறந்தவாய்-வெடிப்புக்கள்; சாயை-கதிரவனின் மனைவி; பரிதி-ஞாயிறு, கரம்-கை; திளைத்தல்-தொழி லில் இடைவிடாது பயிலுதல்.]

என்று தன் கற்பனை நயம் தோன்றப் புலப்படுத்துகிறார், வெடிப்புக்களில் சூரியனின் கதிர்கள் பாய்ந்து செல்வது சூரியன் தன் மனைவியாகிய சாயாதேவியின் பிரிவைப் பொறாமல் அவளைப் பல இடங்களிலும் தேடித் திரிவதாகக் கவிஞர் தான் கருதிய வேறொன்றினை ஏற்றிச் சொல்லும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாமல் பருந்துக்கள் பறந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது பூமியின் மீது படும் அதன் நிழல் ஓடுவது போலிருக்கும். இது இயல்பாக நாம் காணும் காட்சி. இதனைக் கவிஞர் கூறும் பொழுது பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாது நிழல்கள் ஓடுகின்றன என்றும், அந்நிலத்தில் நிற்கும் நிழலையே காண்பது அரிது என்றும் தன் கருத்தை ஏற்றிப் புனைந்து கூறுவது இன்பம் பயக்கின்றது.

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல்
      அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல்
      ஓரி டத்துமுள வல்லவே.[22]

[ஆடுகின்ற-அசைகின்ற; சிறை-சிறகு]

என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். பாலை நிலத்திலுள்ள மரங்களில் நிழலே இருப்பதில்லை; தழையிருந்தால் தானே நிழல் இருப்பதற்கு ? இதில் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிப் புனைந்து கூறும் திறம் படிப்போருக்குக் களிப்பினை நல்குகிறது.

ஆத வம்பருகு மென்று நின்றநிழல்
      அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன
      பருகு நம்மையென வெருவியே.[23]

[ஆதவம்-வெயில்;பாதவம்-மரம்,உணங்குவன-உலர்வன] பாலை நிலத்தின் வெம்மையும் தண்ணீர் கிடைக்காது உலர்ந்து வாடும் மரங்களும் தன்னைப் பருகும் என்று மரத்தின் நிழல் மறைந்து போயிற்றாம்! என்னே கவிஞரின் கற்பனை இக்கருத்து,

நிழலுரு இழந்த வேனிற்குன் றத்து
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்.[24]

என்ற மதுரைக்காஞ்சி அடிகளில் வந்துள்ள கருத்துடன் ஒப்பு நோக்கி உணர்தற் பாலது.
இனி, வானவர்கள் நிலத்தில் அடியிட்டு நடவாமல் இருப்பதற்கும்,[25] சூரியன் பாதிநாள் உலகில் திரிவதற்கும் பாதிநாள் திரியாததற்கும்,[26] மழையும் பனியும் தோன்றுவதற்கும்[27] இயல்பாகவுள்ள காரணங் களைத் தவிர்த்துக் கவிஞர் தன் காரணங்களை ஏற்றிக் கூறும் இடங்களில் இத் தற்குறிப்பேற்ற அணிகளைக் காணலாம். மகளிர் கூந்தலில் முடிந்திருந்த பூக்களிலுள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவை மேலுங் கீழுமாகப் பறந்து நிற்பது இயல்பு. கொங்கைகளின் பாரத்தால் அவர் தம் சிற்றிடை வருந்தா நின்றமையால், தாம் அவர்கள் கூந்தலில் உட்கார்ந்தால் அவர்கள் நுண்ணிய இடை முறிந்து போகக்கூடும் என்று எண்ணி அவை மேலே வருவதும், வேறு புகலிடம் இன்மையால் அவை கூந்தலின் மீது விழுவதும் ஆயின என்று கவிஞர் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார்.[28]

இடையின் நிலை அரி(து) இறும்இறும் என எழா
      எமது புகலிடம் இனிஇலை எனவிழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
      அளக வனிதையர் அணிகடை திறமினோ[29]

[இடை-இடுப்பு: இறும் ஒடியும்; புகலிடம்-அடைக்கலம்; மதுகரம்-வண்டு, அளகம்-கூந்தல்; வனிதையர் - பெண்கள்]

என்பது கவிஞரின் சொல்லோவியம். இதே கருத்து,

நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண்
      தேன் நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்: கொண்டை
      சார்வதுவே,[30]

என்ற திருக்கோவையாரின் அடிகளில் வந்துள்ளது. இரண்டையும் ஒப்பு நோக்கி எண்ணி மகிழ்க.

உயர்வு நவிற்சி

பொருள்களின் மேம்பாட்டைப் புலப்படுத்துவ தற்கு சில இடங்களில் கவிஞர் மேற்கொண்டுள்ள உயர்வு நவிற்சி யணிகள் பொருளை விளக்கமுறுத்தி இன்பம் பயக்கின்றன. பாலை நிலத்தின் வெம்மையைக் கவிஞர்,

அணிகொண்ட குரங்கினங்கள்
      அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல்
      வரை எடுத்து மயங்கினவே[31]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த வரைமலை]
என்று உயர்வு நவிற்சியாக உரைக்கின்றார். " சிறையிருந்த செல்வியை மீட்பான் வேண்டி இராமன் பொருட்டுக் கடலுக்கு அணையிடப் புகுந்த குரங்கினங்கள் மலைகளைச் சுமந்து வீணான தொல்லைகளை மேற்கொண்டனவே: இப்பாலை நிலத்தின் மணல் ஒன்றினைக் கடலில் இட்டாலே போதுமே, கடல் முழுதும் வறண்டிருக்க ? அறிவற்ற குரங்குகள்!” என்பது சயங்கொண்டாரின் பாலை நில விளக்கம்.

கலிங்க நாட்டின் மீது தண்டெடுத்துச் செல்லுங்கால் கருணாகரத் தொண்டைமான் நடத்திச் சென்ற படையின் அளவைக் கூறுங்கால் உயர்வு தவிற்சியணிகளைக் காணலாம்.

பார்சி றுத்தலின் படைபெ ருத்ததோ
      படைபெ ருத்தலின் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க்(கு) அறிது நிற்பிடம்
      நெடுவி சும்பலால் இடமும் இல்லையே[31]

[பார்-உலகம், விசும்பு-ஆகாயம்]

என்பது கவிஞரின் வாக்கு. சேனையின் மிகுதியைக் கண்ணுற்ற மக்களில் ஒரு சிலர், " பூமி சிறியதாக இருப்பதால் படை பெரிதாகக் காணப்படுகிறதோ?" என்றும் வேறு சிலர் படைகள் மிகுதியாகவுள்ளதால் பூமிதான் சிறிதாகத் தெரிகின்றதோ?" என்றும் பேசிக் கொண்டார்களாம் என்பது கவிஞர் பெற வைத்த குறிப்பு. எண்ணற்ற தேர்கள் கலிங்க நாட்டில் மிக்க விரைவாகச் செல்லுகின்றன. அவற்றில் கட்டியுள்ள கொடிச் சீரைகள் உலகிடையே இருளை உண்டாக்குகின்றன. திசை யானைகளின் மதநீரை உண்டு களித்திருக் கும் வண்டுகளையும் வெருவியோடச் செய்து விடுகின்றன.

கடுத்த விசையிருள் கொடுத்த உலகொரு
      கணத்தில் வலம்வரு கணிப்பில்தேர்
எடுத்த கொடிதிசை இபத்தின் மதமிசை
      இருக்கும் அளிகளை எழுப்பவே.[32]

[கடுத்த-மிகுந்த விசைவேகம்; கணிப்பில்-அளவிடுதலில்; ::திசைஇபம்-திக்கு யானை அளிவண்டு]
என்பது சயங்கொண்டாரின் கற்பனை ஓவியம். இவ் வாறு பல இடங்களில் உயர்வு நவிற்சி யணிகள் நூலை அலங்கரிக்கின்றன.

சொல்லணிகள்

மேற்கூறிய பொருளணிகளைத் தவிர சொல்லணிகளும் நூலினை அலங்கரிக்கின்றன. அவற்றிலுள்ள சிலேடை நயம் அவ்வணிகனின் தரத்தை இன்னும் உயர்த்துகின்றது. கடை திறப்பில் ஒரு தாழிசை,

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
      கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த
      களப்போர் பாடத் திறமினோ[33]

[காஞ்சி-இடையணி, காஞ்சிநகர்;கலிங்கம்-மேலாடை, கலிங்கநாடு; குலைந்த-நிலைபெயர்ந்த, அழிந்த]
இத்தாழிசையில் 'யமகம் ' என்ற சொல்லணி வந்துள்ளதைக் காண்க, யமகம்-மடக்கு. ஓரடியில் பல இடங்களிலாயினும், பல அடிகளிலாயினும் முன்வந்த எழுத்துத் தொகுதிகளே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது மடக்கு என்னும் சொல்லணியின் இலக்கணம். மகளிரிடம் மேற்கொண்ட கலவிப் போரால் அவர்களது இடையணி அப்படியே அணிந்த வண்ணம் இருக்க மேலாடை மட்டிலும் நிலை பெயர்ந்து கிடக்கின்றது; கருணாகரனது போரால் காஞ்சி அழியாதிருக்க, கலிங்க நாடு அழிந்து விட்டது என்ற வேறுபட்ட பொருள் முறையே முதலாவது, இரண்டாவது அடிகளில் வந்துள்ளமை காண்க. இன்னும்,

ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே[34]
என்ற தாழிசையிலும் 'யமகம்' வந்துள்ளது. கருணாகரன் கலிங்க நாட்டை அழித்த பொழுது கலிங்க வீரர் மேலாடை வீழ்ந்ததையும் கவனியாது உயிர் பிழைக்க ஓடினர் என்பது இதனால் கவிஞர் பெற வைத்த செய்தி.

மனுக்கோட்டம் அழித்தபிரான்
      வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்டம் நமன்கோட்டம்
      பட்டதுசக் கரக்கோட்டம்[35]

என்ற தாழிசை குலோத்துங்கன் சக்கரக்கோட்டத்தை அழித்ததைக் கூறுவது. இதில் திரிபு என்ற சொல்லணி வந்துள்ளது. எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்து முதலிய பல எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபடுவதைத் 'திரிபு'என்று கூறுவர் இலக்கண நூலார். இத்தாழிசையில் முதலடியிலுள்ள மனுக்கோட்டம் இரண்டாம் அடியிலுள்ள 'தனுக்கோட்டம்' ஆகிய இரண்டு சொற்களிலும் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத் துக்கள் ஒன்றி நின்று பொருள் வேற்றுமையைப் புலப்படுத்தியமை காண்க.

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும்
      நடுவில் வெளிக்கே வேடனை விட்(டு)
அக்கா னகத்தே உயிர்பறிப்பீர்
      அம்பொற் கபாடம் திறமினுே.[36]

[வடமலை-மாலையணிந்த முலை, இமயம் ; வெளி - இடை, போர்க்களம்; வேடனை = வேள் +தனை, கானகத்தே கான் நகத்து; மணம் பொருந்திய மலை போன்ற கொங்கைகளால்.]

என்ற தாழிசையிலுள்ள சிலேடை நயம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இதில் காஞ்சி இடையணியையும், காஞ்சி நகரையும் குறித்தது; வடமலை மாலையணிந்த முலையையும், இமயத்தையும் குறித்தது ; வெளி இடையையும், போர்க்களத்தையும் குறித்தது. வேடனை என்பது 'மன்மதனை' என்றும் வேடன் போன்ற 'கருணாகரனை' என்றும் பொருள் பட்டது. கானகம் என்பது 'காடு' என்றும் மணம் பொருந்திய மலை போன்ற கொங்கை என்றும் இருபொருள் பட்டது. மகளிர் தம் இடையழகாலும், கொங்கையழகாலும் தம் கொழுநர்க்குக் காம வேதனையை மிகுவித்து அவர்களைத் தம் வயமாக்கிக் கொள்வர் ; கருணாகரனும் வேடன் விலங்கு, பறவை முதலியவற்றின் உயிரைக் கவர்தல் போல் தன் பகைவரின் உயிரைக் கவர்வான். இத் தாழிசை இந்த இரண்டு பொருள்களையும் பயந்து நிற்கின்றமையை எண்ணி உணர்க. இவ்வாறு சிலேடைப் பொருள் தந்து நிற்கும் இடங்கள் பல உள்ளன.

வேறு இடங்களில் கற்பனை

இவ்வாறு அணிகளைக் கூறும் இடங்களைத் தவிர, வேறு இடங்களிலும் கவிஞரின் கற்பனைத் திறத்தைக் காணலாம். இயல்பாகவுள்ள நிகழ்ச்சிகளே வரலாற்று நிகழ்ச்சியுடன் பொருத்திக் கூறுங் கால் பல கற்பனைச் சிகரங்கள் தென்படுகின்றன. பேய்களின் இயல்புகளைக் கூறுங்கால் நொண்டிப் பேய், முடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப் பேய், குறட்டுப்பேய், கூன்பேய் ஆகிய பேய்களுக்கு உறுப்புக் குறை நேர்ந்ததற்குக் கூறும் காரணங்கள் கவிஞரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டிலும் காண்போம்.

விருத ராசப யங்கரன் முன்னொர் நாள்
      வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங்
குருதி யுங்குட ருங்கலந்(து) அட்டவெங்
      கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும்.[37]

[விருதசாசபயங்கரன்-குலோத்துங்கன் ; குருதி-செந்நீர்;]

இது குருட்டுப் பேயின் நிலையைக் காட்டுவது. குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்து வெற்றி கொண்ட பொழுது போர்க்களத்தில் பேய்கள் கூழட்டு உண்டனவாம். அப்பொழுது தாழியிலிருந்து கூழ் தெறித்து ஒரு பேயின் கண்ணில் விழ, அதன் கண் குருடாய் விட்டதாம்.

ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்(து)
      ஐம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் ருர்த்திடும் ஆர்ப்பினில்
      திமிரி வெங்களத் திற்செவி டானவும்.[38]

[ஆனை-யானை ; பரி-குதிரை: ஆர்ப்பு-பேரொலி]

இத்தாழிசை செவிட்டுப்பேயின் நிலையைக் கூறுவது. குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் போர்மேற் சென்றபொழுது அவன் படைவீரர்களின் ஆர்ப்பொலியைப் பொறுக்கமாட்டாது ஒரு பேயின் காதிலுள்ள சவ்வு பிய்ந்துபோயிற்றாம்.

காளிதேவி வாழும் காட்டின் வெம்மையைக் கூறுங்கால் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சி கட்டப்பெறுகின்றது. குலோத்துங்கன் வடவரை வென்ற பின் பாண்டியருடன் போர் தொடுத்து அவர்களையும் வென்றான். அப்பொழுது புகையால் மூடப் பெற்ற பகைவரின் காவற்காட்டின் வெப்பமும் தேவி வாழும் காட்டின் வெப்பமும் ஒரே மாதிரியாக இருந்ததனவாம்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஒட
      முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
      வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்"[39]

என்ற தாழிசையில் இந்நிகழ்ச்சி கற்பனைத் திறத் துடன் காட்டப்பெற்றமையைக் காண்க. இவ்வாறு அணி நயங் காணும் இடங்களிலும் பிற இடங்களிலும் சயங்கொண்டாரின் கற்பனைத் திறத்தினைக் காணலாம். இக் கற்பனைத் திறன், பாடிய புலவர் உணர்ந்த அனுபவத்தை நாமும் உணரத் துணை செய்கிறது. சயங்கொண்டாரின் பரணிக்காப்பியத்தில் இத்தகைய கற்பனை நயங்கள் அமைந்து அது இன்றும் ஒரு 'கற்பனை ஊற்றாக’ தம்மிடையே நின்று நிலவுகிறது.
-----------
[20]. பாலைக்கலி - 6
[21]. தாழிசை-79.
[22]. தாழிசை-80
[23]. தாழிசை-81
[24]. மதுரைக்காஞ்சி-வரி : 313-34
[24a]. தாழிசை-84
[25]. தாழிசை-85
[26]. தாழிசை.86
[27]. தாழிசை-96
[28]. தாழிசை-57 [29]. திருக்கோ-45
[30]. தாழிசை-96

[31]. தாழிசை.348
[32]. தாழிசை-357
[33]. தாழிசை-63
[34]. தாழிசை 354
[35]. தாழிசை - 254
[36]. தாழிசை-73
[37]. தாழிசை-147
[38]..தாழிசை -149
[39]..தாழிசை-95
------------

6. சுவைகளின் களஞ்சியம்

ஒரு காவியத்தைப் படித்தால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே 'ரஸம்' என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. தமிழில் இதை 'மெய்ப்பாடு' என்ற பெயரால் குறிப்பர். பண்டைக் காலத்து முனிவர்கள் ஆண்டவனிடம் பக்திப் பெருக்கால் உள்ளம் பூரித்து நிற்கும் பொழுதுதான் வேதங்கள் பிறந்தன என்று ஆன்றோர் கூறுவர். வால்மீகியின் உள்ளம் ரஸப்பெருக்கால் திளைத்து நின்ற பொழுது தான் இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்தாகக் கதை. ரஸத்தை ஒன்பது என்று கூறுவது வழக்கம்; "நவரஸங்கள்’ என்ற வழக்காற்றை நாம் கேட்டிருக்கினறோம் அல்லவா? தொல்காப்பியம் ரஸத்தை 'எண் சுவை' யாக வகுத்து விளக்கியிருப்பதை அதன் மெய்ப்பாட்டியலில் காணலாம். ரஸ தத்துவத்தை விளக்குவதற்கு வடமொழியில் பல நூல்கள் உள்ளன.

பரம்பரை வாசனை

உலகத்தில் நாம் பல பொருள்களைப் பார்க்கின்றோம். அவை நமக்கு சில சமயம் இன்பம் நல்கும்; இன்பம் நல்காத சமயங்களும் உள்ளன. நாம் அடையும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவ்வப் பொழுது நாம் கொண்டுள்ள மனோ நிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனம் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. இவ்வாறு தொன்றுதொட்டு எத்தனையோ பொருள்களை நாம் அனுபவித்து வருகின்றோம். இவ்வாறு அனுபவிக்கும் பொழுது அப்பொருள்கள் நாம் அனுபவித்தவாறே தமது உருவங்களை நம் மனத்தில் செதுக்கி விட்டுப் போகின்றன. இதைத்தான் அறிஞர்கள் 'வாஸனை’ என்று குறிப்பிடுகின்றனர். நாம் வெளியில் ஒரு பொருளைக் காணும் பொழுது உள்ளே உறங்கிக் கிடக்கும் அப்பொருள்களைப் பற்றிய'வாஸனை' மலருகின்றது. குணநலன்கள் யாவும் மனத்தின் போக்கையொட்டியே இருக்கின்றன என்பது எண்ணிப் பார்த்தால் புலனாகும். எல்லாவற்றையும் இன்பமயமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.

நூலைக் கையிலெடுத்தவர்கள் எல்லோரும் சுவையில் ஈடுபட முடியும் என்று எண்ணுதல் தவறு. நன்றாக மனத்தைச் செலுத்திப் படித்து அடிக்கடி சுவைக்கும் இயல்பு கொண்டவர்களுக்கு மட்டிலும்தான் சிறிதளவு சுவை புலனாகத் தொடங்கும். இரத்தினம் ஓர் உயர்ந்த பொருள்தான் ; அதன் பெருமையை அனைவரும் அறிய முடிகின்றதா? இல்லையன்றோ ? அதன் தரத்தை ஆராய்ந்து பழகியவர்களுக்கு மட்டிலுந்தான் அதன் பெருமை புலனாகும்; இரங்கூன் கமலத்திற்கும் நல்ல இரத்தினத்திற்கும் உள்ள வேற்றுமை நன்கு தெரியும். இரத்தினத்தை அறியும் 'வாஸனை' உள்ளிருப்பவர்களுக்கே பலதடவைப் பார்ப்பதால் அதனை அறியும் திறம் பெருகும். வாஸனை இல்லாதவர் பலநாட்கள் பல்லாயிரம் இரத்தினங்களைப் பார்த்தாலும் அவர் மனத்தில் யாதொரு மாறுபாடும் உண்டாக மாட்டாது. காவியத்தில் சுவை காண்பதும் அப்படித்தான். அதிலுள்ள மெய்ப்பாடுகளை அறிந்து சுவைப்பதற்குப் 'பரம்பரை வாசனை’ வேண்டும். அவற்றை அறிவதும் எளிதான செயலன்று.

ஒன்பது சுவைகள்

கவிஞர்கள் எல்லாப் பொருள்களையும் சுவையுடன் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அனைத்தையும் இன்பமாகப் பாவிக்கும் மனநிலை அவர்களிடம் அமைந்து கிடக்கின்றது. அத்தகைய மனநிலை உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவதாகும். பண்டைத் தமிழர்கள் அவ்வுணர்ச்சியை எட்டுவகையாகப் பிரித்துப் பேசினர். அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. பிற்காலத்தார் 'சமநிலை' என்ற ஒன்றைச் சேர்த்து சுவைகளை ஒன்பதாகக் கூறுவர். இந்த ஒன்பது சுவைகளையும் வடமொழியாளர்கள் முறையே ஹாஸ்யம், கருணம், பீபத்லம், அற்புதம், பயானகம், வீரம், ரெளத்ரம், சிருங்காரம், சாந்தம் என்று வழங்குவர். இச்சுவைகள் தோன்றி வளரும் செய்திகளை சுவை இலக்கண நூல்களில் கண்டறிக.

'கலிங்கத்துப் பரணி' யில் இச்சுவை வேறு பாடுகள் நன்றாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன. நூலைப் படிக்கும்பொழுது நாமும் உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூரிக்கின்றோம் ; மகிழ்வடைகின்றோம். எல்லாவிதச் சுவைகளும் நம் உள்ளத்தைக் கனிவு பெறச் செய்கின்றன என்றே சொல்ல வேண்டும். நூலிலுள்ள சுவைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

உவகைச்சுவை

சுவை நூலார் உவகையை முதல் சுவையாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில் காதல் சுவை உயர்ந்த பீடத்தைப் பெற்றிருக்கின்றது. காதலையே ஒரு உயர்ந்த கலைபோல் வளர்த்திருக்கின்றனர். இவ்வாறு இலக்கியங்களில் வரும் காதற் சுவையை அனுபவிக்க உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். அவை இரண்டும் இல்லாதவர்கள் கற்பனை உலகில் காணும் இன்பக் கனவுகளாகின்ற வருணனைகளை யதார்த்த உலக நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு நம் இலக்கியங்களைக் குறை கூறுகின்றனர். உவகைச் சுவையை இலக்கண நூலார் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். இரண்டிலும் எண்ணற்றதுறைகள் உள்ளன. இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள செய்திகளையே வடமொழிவாணர்கள் விப்ரலம்ப சிருங்காரம், சம்போக சிருங்காரம் என்று பாகுபாடு செய்து காட்டுவர். அவையே இவை என்று சொல்ல இயலாவிடினும் அவற்றிலுள்ள செய்திகளே இவற்றிலும் வருகின்றன என்று கூறிவிடலாம்.

போரைப்பற்றிய கலிங்கத்துப் பரணியிலும் உவகைச்சுவை இடம் பெற்றிருப்பதிலிருந்தே அச்சுவையின் உயர்வை அறியலாம். நூலிலுள்ள 'கடைதிறப்பில்' இச்சுவை பல்வேறு கோணத்தில் சித்திரிக்கப் பெறுகின்றது. ஒரு சிலவற்றை முன்னர்க் கண்டோம். ஈண்டும் சிலவற்றைக் காண்போம்.

போரில் புண்பட்ட வீரர்களுக்கு வீட்டில் மருத்துவம் தரப் பெறுகின்றது. அப்புண்களுக்கு அவ் வீரர்களின் துணைவியரே சிகிச்சை தருகின்றனர். இதைக் கவிஞர்,

தங்குகண் வேல்செய்த புண்களைத்
      தடமுலை வேதுகொண்டு ஒற்றியும்
செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர்!
      செம்பொன் நெடுங்கடை திறமினோ.
பொருங்கண் வேல்இளைஞர் மார்பின் ஊடுருவு
      புண்கள் தீரஇரு கொங்கையின்
கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு
      கட்டு மாதர்கடை திறமினோ.[1]

[கண்வேல்-கண்ணாகிய வேல் ; வேது-சூடான ஒத்தடம்; வாய்மருந்து-இதழ் அமுது ; கருங்கண்-முலைக்கண் ; கட்டும் தழுவும்]

என்று காட்டுகின்றார். புறப்பொருள் அனுபவத்தை அகப்பொருள் அனுபவத்துடன் பிணைத்துக்காட்டும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. மகளிர் ஆடவர்களின் மனத்தை எளிதில் கவரவல்லவர்கள் என்பதை எவரும் அனுபவத்தில் அறியலாம். இவ்வனுபவத்தைக் கவிஞர்,

முருகிற் சிவந்த கழுநீரும்
      முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
      செம்பொற் கபாடம் திறமினோ[2]

[முருகு-மணம்; கழுநீர்-கழுநீர்ப்பூ குழல்-கூந்தல்]

செக்கச் சிவந்த கழுநீரும் -
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழன்மடவீர்
உம்பொற் கபாடம் திறமினோ[3]

[செகம்-உலகம்: ஒக்க-ஒன்றுசேர; பொன்-அழகு]

என்று காட்டுகிறார். இம்மாதிரி சிருங்காரச் சுவையூட்டும் " சுளைகளைக் " கடைத்திறப்பில் கண்டு மகிழ்க.

நகைச் சுவை

இயற்கைக்கு மாருக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நமக்கு நகைப்பை விளைவிக்கும். ஆனல் அத்தகைய அம்சங்கள் யாவும் நகைச்சுவையைத் தூண்டிவிடும் என்று கூறுதல் ஒண்ணாது. ஆங்கிலத்தில் 'Humour ' என்று வழங்கப்படுவதும் நாம் நசைச்சுவை என்று குறிப்பதும் ஒத்ததல்ல என்பதை நாம் உணரவேண்டும். Humour-ல் நாம் கூறும் நகைச்சுவையும் உள்ளடங்கலாம். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவை விளைக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு குருட்டுப் பேயின் உண்கலத்தை ஒரு திருட்டுப்பேய் ஒளித்து வைத்துக்கொள்கிறது; குருட்டுப்பேய் கையில் கூழ் ஏற்று அருந்துகிறது; இந்நிகழ்ச்சி,

ஊணா தரிக்கும் கள்ளப்பேய்
      ஒளித்துக் கொண்ட கலம்தடவிக்
காணாது அரற்றும் குருட்டுப்பேய்
      கைக்கே கூழை வாரீரே[4]

[ஊண்-உணவு; ஆதரிக்கும்-ஆசைப்படும்; கலம்-
பாத்திரம்; அரற்றல்-கதறியழல்]
என்ற தாழிசையில் சுட்டப் பெறுகின்றது.

ஒர் ஊமைப்பேயின் நிலை இது.

பையாப் போடு பசிகாட்டிப்
      பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையால் உரைக்கும் ஊமைப்பேய்
      கைக்கே கூழை வாரீரே[5]

[பையாப்பு:துன்பம்; பதலை-பானை]
கருப்பத்துட னிருக்கும் பேய் பசியால் செவிகளடைத்துப் போகிறது. கூழைக்கண்டதும்காதடைப்பு நீங்குகிறது; நாக்கைத் துழாவிக் கொண்டு உண்ணுவதற்குத் தயாராக இருக்கின்றது. இதைக் கவிஞர்,

அடைத்த செவிகள் திறந்தனவால்
      அடியேற் கென்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணும்
      சூற்பேய்க்கு இன்னும் சொரியிரே[6]

[சூல்-கருப்பம்,சொரியீர்-வாருங்கள்]
என்று காட்டுகிறார். பேய்களிலும் குறை மதியுள்ளவை இருக்கும் போலும்! ஒரு பேய் ஓட்டைக்கலத்தில் கூழ்பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலையைப்பார்க்க கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது! கூழெல்லாம் கொட்டிப்போகிறது!

பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ்
      புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து
எல்லசங் கவிழ்த்துத் திகைத்திருக்கும்
      இழுதைப் பேய்க்கு வாரிரே[7]

[பொல்லா-கெட்ட மறித்துப்பார்த்து தலைகீழாகத் திருப்பி: இழுதை-அறிவற்ற]

என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்குப் பாத்திரம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைத்துதிக்கையின் ஒருதுணியை பல்லின்மேல் நிறுத்திக்கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும்படி வேண்டி நிற்கின்றது.

துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்
      செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும்
      தோக்கப்பேய்க்கு வாரீரே[8]

[துணி-துண்டம்,செவ்வே-செவ்வையாய், நுதி.நுனி) என்பது இப்பேயின் நிலையைக்காட்டும் சொற் சித்திரம்.

அழுகைச் சுவை

போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சிகள் பல அழுகைச்சுவை பயக்கவல்லவை துன்பத்திலும் இன்பத்தைக் காணுவதுதான் ஆன்மாவை உணர்வது என்று அறிஞர் கூறுவர். இச்சுவையை மேல் நாட்டார்போல் நம் நாட்டார் இறுதிவரையில் வளர்த்துக்காட்ட முனைவதில்லை. கலிங்கப்போர் முடிந்தபின் திரும்பிவராத தன் கொழுநனைத்தேடிக் கொண்டு போர்க்களத்துக்கு வருகிறாள் மங்கை ஒருத்தி. அங்கு தன் கணவனின் உடல், முகம் வேறாகவும் கை வேறாகவும் கால் வேறாகவும் துண்டுபட்டுக் கிடக்கின்றது. தலைமட்டும் அவளுக்குக் கிடைக்கிறது; ஏனைய உறுப்புக்களை நரிகள் இழுத்துச் சென்றன போலும் அவள் அவற்றை அடையாளம் காட்டுமாறு பயிரவி என்ற பெண் தெய்வத்தை வினவுகின்றாள்.

பொருதடக்கை வாளெங்கே? மணிமார்பு எங்கே?
      போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே என்று
      பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்[9]

[மணி. அழகிய வயிரம்-அழுத்தமானது: பயிரவி-யோகினி]
இன்னொருத்தி தன் கணவன் முகத்தைக்கண்ட பிறகு தன் உயிரைத் துறக்க விரும்புகின்றாள்.போர்க் களத்துக்கு வந்து சாதகரையும் இடாகினியையும் அவ்வுடலைக் காட்டுமாறு வினவுகின்றாள்.

தங்கணவர் உடன் தாமும் போக என்றே
      சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தஇடம் எங்கே என்றென்று
      இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்[10]

[சாதகர்-காளியின் மெய்காப்பாளர்; இடாகினி-சுடலைப் பிணம் தின்னும் பேய்]

என்பது அவள் நிலையைக் காட்டும் சொற்படம்.

வெகுளிச் சுவை பகைவர்கள் செய்த தீச்செயல்களை நினைத்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று கூறுவர். குரோதத்தின் அடிப்படையில் மலர்ந்த சுவையே வெகுளி எனப்படும். தான் திறை கொடாத செயலைக் காரணமாகக்கொண்டு குலோத்துங்கன் தன் நாட்டின் மீது படையை ஏவியுள்ளான் என்பதைக் கேள்வியுறும் அனந்தபன்பன் சினங்கொள்ளுகின்றான்.

அந்தரமொன் றறியாத வடகலிங்கர்
      குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
      கைபுடைத்து வியர்த்து நோக்கி[11]

[அந்தரம்-மாறுபட்டநிலை; தறுகண்-கொடுமை மிக்க]

பின்வருமாறு பேசுகின்றான்.

வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
      மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
      தடம்புயங்கள் குலுங்க நக்கே ;
கானரணும் மலையரனும் கடலரணும்
      சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரணம் உடைத்தென்று கருதாது
      வருவதுமத் தண்டு போலும்.[12]

[மலர்க்கவிகை-பரவுதலையுடைய குடை; தண்டு சேனை; வெகுண்டு -கோபித்து; கான்- காடு ; அரணம்- பாதுகாப்பு]
இத்தாழிசைகளில் வெகுளிச் சுவை பீறிட்டுக் கொண்டு வருவதைக் கண்டு மகிழ்க.

வீரச்சுவை இது 'பெருமிதம்' என்றும் வழங்கப் பெறும். எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனங் குன்றாது செயலாற்றுவதை வீரம் மிக்க செயல் என்று கருதுவர். வீரனது அடையாளம் போர்க்களத்தில் முன்னணியில் நிற்பது மட்டுமல்ல ; ஆயுள் முழுவதும் தன் புலன்களை அடக்கப் பாடுபடுவதும்கூட வீரம் உள்ளிருப்பதைக் காட்டுவதாகும். எனவே, புலனைந்தையும் அடக்கியாண்ட முற்றத்துறந்த முனி வரையும் சிறந்த வீரர்கள் என்றே சொல்லவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து செயலாற்றுவதையும் வீரம் என்று வழங்கலாம்.

தேவியை வழிபடும் வீரர்களைக் குறிப்பிடுமிடத்து வீரச்சுவை வெளிப்படுகின்றது. தாங்கள் கோரும் வரத்தைத் தரும்படியும் அதற்கு ஈடாகத் தங்கள் உறுப்புக்களை அறிந்து தருவதாகவும் வீரர்கள் பரவும் முழக்கம் எம்மருங்கும் கேட்கப்படுகின்றது. சில வீரர்கள் ஓமத்தீயை வளர்த்துத் தங்கள் விலாவெலும்புகளைச் சமித்தாகவும் செந்நீரை ஆகுதியாகவும் ஊற்றுகின்றனர். இதனைக் கவிஞர்,

சொல்லரிய ஓமத்தி வளர்ப்ப ராலோ
      தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
வல்லெரியின் மிசையெரிய விடுவராலோ
      வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ[13]

[பழுஎலும்பு-விலா எலும்பு; தொடர- தொடர்ந்தார்
போல்; வாங்கி-பிடுங்கி; குருதி-செந்நீர்]

என்ற ஓவியத்தால் புலனாக்குகிறார். இன்னும் சிலர் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுப்பர். அறுபட்ட தலைகள் தேவியைத் துதிக்கும்; தலை குறைந்த உடலங்கள் அவளைக் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
      குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[14]

[அணங்கு-காளி; கொற்றவை - காளி; பரவும்- துதிக்கும்]
என்ற தாழிசையில் அக்காட்சியைக் கண்டு மகிழ்க.
---------
[1]. தாழிசை-55, 56.
[2]. தாழிசை - 50
[3]. தாழிசை - 74
[4]. தாழிசை-569
[5]. தாழிசை-570
[6]. தாழிசை-571
[7]. தாழிசை-572
[8]. தாழிசைக் 273
[9]. தாழிசை-484
[10]. தாழிசை-481
[11]. தாழிசை-375
[12]. தாழிசை-376, 377
[13]. தாழிசை-110
[14]. தாழிசை-111
------------
அச்சச் சுவை

அச்சம் மாந்தர்களின் உடன்பிறந்த சொத்து என்று சொல்லவேண்டும். அச்சவுணர்ச்சி இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. அவரவர்கள் மனோதைரியத்திற் கேற்றவாறு அச்சத்தை உண்டாக்கும் பொருள்கள் வேறுபடலாம் ; பயவுணர்ச்சி மட்டிலும் எல்லோரிடமும் அமைந்திருக்கும். இவ்வளவு பழக்கமான சுவையைக் கவிஞர்கள் ஒரு இலக்கியத்தின் முக்கிய சுவையாகக் கொண்டிராவிடினும், அதனை ஆங்காங்கு சிறப்புடன் சித்திரித்திருக்கின்றனர்.

குலோத்துங்கனின் சேனை கலிங்க நாட்டிற்குள் புகுந்து ஊர்களை நெருப்பால் கொளுத்தி சூறையாடுவதைக் கேட்டவுடன் கலிங்கநாட்டு மக்கள் எங்கே புகலிடம்? யாரோ அதிபதி? என்று கூறிக்கொண்டு தம் அரசனிடம் ஓடி முறையிடும் காட்சியை,

உரையிற் குழறியும் உடலிற் பதறியும்
      ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ அடையச் சனபதி
      அடியிற் புகவிழு பொழுதத்தே[15]

[துகில்-ஆடை அடைய-எல்லாரும்]
என்று காட்டுகிறார் கவிஞர். இதில் அச்சம் பொதுளுவதைக் கண்டு மகிழ்க. இன்னும் கருணாகரன் போரில் இறங்கிப் பொருதபொழுது அவன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாது அனந்தபன்மன் வெருவியோடியபொழுது கலிங்கரின் நிலையைக் கவிஞர்,

எதுகொல் இதுஇது? மாயை யொன்றுகொல்?
      எரிகொல்? மறலிகொல்? ஊழியின்கடை
அதுகொல்? எனஅல ருவி ழுந்தனர்
      அலதி குலதியோ டேழ்க லிங்கரே[16]

[இது-போர்; எரி-தீ; மறலி-யமன்; ஊழி-யுகாந்தம்; அலதி குலதியுடன்- மிக்க நடுக்கத்துடன்]
என்று காட்டுவதிலும் அச்சச் சுவையைக் காண்க.

இவ்வாறு நடுங்கியோடிய வீரர்களில் சிலர் கடலில் பாய்வர் ; சிலர் யானையின் வயிற்றில் புகுந்து மறைவர் ; சிலர் மலைக் குகையிலும் சிலர் புதர்களிலும் ஒளிவர். இன்னும் சிலர் தத்தம் நிழலுக்கே அஞ்சி ஒடுவதற்குப் பயந்து அபயம் என்று அலறுவர். இச்செய்திகளைக் கூறும் தாழிசைகள் யாவும் அச்சச்சுவை பற்றியனவே.[17]

இமயத்திலிருந்துவந்த முதுபேயின் இந்திர சாலங்களைக் கண்ட அலகைகள் அவ்வித்தைகளைக் கண்டு வெருவி அவற்றை நிறுத்துமாறு காளி தேவியை வேண்டும்,

அக்கணம் ஆளும் அணங்கினை
      வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கணம் ஆளும்இ னித்தவிர்
      விச்சையெ னக்கைவி திர்த்தலுமே.[18]

[கணம்:பேய்க்கூட்டம்; அணங்கு-காளி; விச்சை-இந்திர சாலம்; கைவிதிர்த்தல்-கைநடுங்குதல்]
என்ற தாழிசையிலும் அச்சச் சுவையைக் காணலாம். இந்திர சாலத்தைக் கண்டு வெருவி ஓடின. நிலையினைக் காட்டும் தாழிசைகளும் அச்சச்சுவை பயப்பனவாம்.[19]

இளிவரல் சுவை

அருவருப்பு அல்லது 'இழிவு' தோன்றதிற்கும் செயல்களனைத்தும் இளிவரல் சுவையை நல்கும்; நாணத்தக்க செய்கையாலும் இச்சுவை பிறக்கும். கருணாகரனும் அவன் வீரர்களும் கலிங்க நாட்டைத் தாக்கியபொழுது அவர்கள் முன்நிற்க மாட்டாது 'கலிங்க வீரர்கள்' மாற்றுருக் கொண்டு மறைகின்ற செய்திகளைக் கூறும் தாழிசைகளில் இச்சுவையைக் காணலாம். சிலர் சமணர்கள் போலவும், சிலர் புத்தர்கள்போலவும், சிலர் வேதியர்கள் போலவும், சிலர் பாணர்கள் போலவும் மாற்றுருக்கொண்டு மறைகின்றனர்.

வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
      வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
      அமனரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே

[வரை-மலை; மாசு-பழிச்சொல்; தூறு-புதர் வாங்கி-களைந்து; அரை-இடை; கலிங்கம்-ஆடை; உரிப் புண்ட-களையப்பெற்ற; அமணர்-சமணர்.]

வேடத்தால் குறையாது முந்நூ லாக
      வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
      அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே

[சிலை-வில்; மடித்திட்டு-சுருட்டி; அரி-போர்க்கருவி]

குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்
      கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்(து)
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என்
      அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே

[குறி-புத்தர் அடையாளம்; குருதி-செந்நீர்; கொடி-கொடிச்சீலை; குஞ்சி -முடிமயிர்; முண்டித்து - மொட்டை யடித்து, சாக்கியர்-புத்தர்]

சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
      தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்(டு)
      அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே[20]

என்ற தாழிசைகளில் இளிவரல் சுவையினைக் காண்க. வீரர்கள் மறைந்தோடுவது தகுதியன்றன்றோ?

மருட்கைச் சுவை

இயற்கைக்கு மாறுபாடாக எதையாகிலும் கண்ணுற்றால் வியப்புத் தோன்றுகிறது. நகையினை வினைவிப்பவை வேண்டாதவையாக இருக்கும் ; வியப்பினை நல்குபவை அப்படியன்று ; விரும்பும் வண்ணமேயிருக்கும். நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டாலும் வியப்பெய்துகின்றோம். இமயத்திலிருந்து மீண்ட முதுபேய் காளியின் முன்பு காட்டிய தான் கற்ற இந்திர சாலங்கள் பலவும் நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றன; காட்சிகளையெல்லாம் நேரில் காண்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஒரு கையில் யானையின் துதிக்கையை வைத்து அதை மறு கையில் மாற்றும்பொழுது யானைத் தலையாகிறதைக் காட்டுகிறது.

ஏற தின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்
      இக்கை யிற்சிலது திக்கைபார்!
மாறி விக்கையில ழைக்க மற்றவெம
      தக்க ரித்தலைக ளானபார்![21]

[ஏற-நேரே; மதக்கரி-மதயானை]
என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரிக்கப் பெறுகின்றது. யானைத் தலையுடன் குறையுடலையும் காட்டிய இந்திர சாலத்தை,

இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர
      நீர்கு டித்துருமி டித்தெனக்
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவைகு
      றைத்த லைப்பிணமி தப்பபார்![22]

[கரி-யானை; உதிரநீர்-குருதி; உரும்-இடி; கொக்கரித் தல்-இரைச்சல் இடல்; அலகை-பேய்] என்ற தாழிசையில் காணலாம். அடுத்து பரணி காட்டப்பெறுகின்றது.

அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய
      அம்மை வாழ்கஎன வெம்மைபார்!
கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள்
      களம்பெ ரும்பரணி யின்றுபார்![23]

என்ற தாழிசையில் பரணிக் காட்சியைக் கண்டு மகிழ்க.

தன் மாயா வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெகுண்டு துடிக்கும் வீரருடல்களையும் பயந்தோடும் யானைகளையும், பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டும் இந்திர சாலத்தை,

துஞ்சி வீழ்துரக ராசி பார்! உடல்
      துணிந்து வீழ்குறைது டிப்பபார்!
அஞ்சி யோடுமத யானை பார்! உதிர
      ஆறு மோடுவன நூறுபார்[24]

[துஞ்சுதல்-இறத்தல் ;துரகம்-குதிரை ]
என்ற தாழிசையில் காண்க. அடுத்து முறையே குருதி வெள்ளமும் நிதர்சனமாகக் காட்டப்பெறுகின்றது.

அற்ற தோளிவைஅ லைப்ப பார் !உவை
      யருத நீள்குடர்மி தப்பபார் !
இற்ற தாள் நரியி ழுப்ப பார் ! அடி
      யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்![25]

[அலைப்ப - குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலை; இற்ற -உடலினின்றும் இற்று விழுந்த ; தாள்-கால்கள்; அடி-பாதம்; இழுக்கும்-வழுக்கும் ]

நிணங்கள் பார்!திண்ம மனங்க னிந்தன்
      நிலங்கள் பார்!நிலம் அ டங்கலும்
பினங்கள் பார்!இவைகி டக்க நம்முடைய
      பேய லாதசில பேய்கள் பார் ![26]

[நினம்.கொழுப்பு ; மனம்-நாற்றம்; கனிந்த-முதிர்ந்த]
என்ற தாழிசையில் அவற்றைக் காணலாம். மேற்கூறிய தாழிசைகளில் வியப்புச் சுவை வெளிப்படுவதை அறியலாம். இன்னும், கலிங்கப் போருக்கெழுந்த படையின் பெருக்கத்தைக் கண்டவுடன் மக்கட்கு ஏற்பட்ட மருட்சியைக் காட்டும்,

அகில வெற்புமின்று ஆனை யானவோ?
      அடைய மாருதம் புரவி யானவோ?
முகில னைத்துமத் தேர்க ளானவோ?
      மூரி வேலையோர் வீரரானவோ?[27]

[வெற்பு-மலை; மாருதம்-காற்று; முகில்-மேகம்; வேலை-கடல்.]
என்ற தாழிசையிலும் வியப்புச் சுவையைக் காணலாம். மலைகள் யாவும் யானைகளாயிற்றோ? காற்று தான் குதிரைகளாக மாறினதோ?மேகங்கள் அனைத்தும் தேர்களாக வந்தனவோ? கடல்தான் போர் வீரர்களாகத் தோன்றினதோ? என்று மக்கள் வியப்பெய்துகின்றனர்.

சமநிலை

சமநிலை என்பது யோகியர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஒருநிலை, அந்தச் சுவைக்கு இந்த நூலில் இடம் இல்லை. போரை நாடுபவர்களிடம் எங்ஙனம் அமைதி இருத்தல் இயலும்?

முடிவு

இலக்கியங்களை எல்லோரும் ஒரேமாதிரி அனுபவிக்க முடியாது. அதுபற்றியே இலக்கியங்களைப் படிப்பதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. நம் நாட்டவர் இலக்கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதைவிட உள்ளத்திற்கும் அமைதியை நல்க வல்லதாக இருக்க வேண்டும் என்றும் கருதினர். இலக்கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப்பயனைத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும். எனவே, கவிஞர்கள் தம் இலக்கியங்களில் சுவைக்கு முதலிடம் தரலாயினர். கலிங்கத்துப் பரணியைச் 'சுவைகளின் களஞ்சியம்' என்று கூறலாம்.
------------
[15]. தாழிசை-374,
[16]. தாழிசை-450
[17]. தாழிசை-451, 452, 453.
[18]. தாழிசை-173
[19]. தாழிசை188-171,
[20]. தாழிசை.466, 167, 468. 469.
[21]. தாழிசை-162
[22]. தாழிசை-163
[23]. தாழிசை-164
[24]. தாழிசை-165
[25]. தாழிசை-166.
[26]. தாழிசை 167
[27]. தாழிசை-347
-----------

7. கருணாகரத் தொண்டைமான்

கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழளின் படைத்தலைவர்களில் முதன்மை பெற்று விளங்கியவன்; கலிங்கப்போரை நேரில் சென்று நடத்தித் தன்னரசனான விசயதரனுக்கு வாகைமாலை சூடியவன். எனவே, கவிஞர் சயங்கொண்டார் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்ட கலிங்கத்துப் பரணியில் இவனையும் சில இடங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். குலோத்துங்கனைத் திருமாலின் அவதாரம் என்று சிறப்பித்துப் பாடியவர். இவனை அத்திருமாலின் சக்கரம் என்று உருவகித்துப் பாடுகிறார்.[1] நூலில் இவனைப்பற்றி வந்துள்ள செய்திகளைத் தொகுத்துக் கூறுவோம்.

கருணாகரன் என்ற பெயர் இராமபிரானின் திருநாமங்களுள் ஒன்று என்பதைக் கம்ப ராமாயணத்தால் அறியலாகும். அணை கட்டுவதற்குமுன் இராமன் வருணனை வேண்டி தருப்ப சயனத்திலிருத்ததைக் கூறுங்கால்,

தருண மங்கையை மீட்பதோர்
   ,   நெறி தரு கென்னும்
பொருள் நயந்து நன் நூல்நெறி
   ,   யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் கிடந்தனன்
   ,   கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
   ,   விதிமுறை வணங்கி[2]

என்ற பாடலிலும், பரதன் கங்கை வேடனாகிய குகனுக்குத் தன் தாயை அறிமுகம் செய்யுங்கால் "கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேக"[3] என்ற தொடரிலும் 'கருணாகரன்' என்ற பெயரின்" பொருளை விளக்கிக் கூறுதலைக் காண்க. இவற்றை யெண்ணியே சயங்கொண்டாரும்,

இலங்கை யெறிந்த கருணா கரன்றன்
   ,   இசைவெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
   ,   களப்போர் பாடத் திறமினோ[4]

என்று பாடியுள்ளார் என்று கொள்ளலாம். இருவரும் கருணாகரப் பெயருடையராயினும் ஒருவன் இலங்கையெறிந்தபுகழுடையவன்; மற்றவன் கலிங்கமெறிந்த புகழுடையவன்.

-------------
[1]. தாழிசை -247, 363, 383
[2]. கம்ப-வருணனை வழிவேண்-செய் 5
[3]. கம்ப குகப் பட-செய் 69.
[4]. தாழிசை -64
----------
கருணாகரத் தொண்டைமான் பல்லவ அரச குலத்தைச் சார்ந்தவன்; தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின் தலைவன். இவ்வாறு சிற்றரசனாகத் திகழ்ந்த இவன் குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதியாகவும் மந்திரத் தலைவனாகவும் விளங்கினான். இச்செய்திகள்,

மண்ட லீகரும் மாநில வேந்தரும்
   ,   வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்
   ,   சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே[5]

இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை
   ,   எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
   ,   திலகன் வண்டைநகர் அரசனே[6]

வண்டை வளம்பதி பாடீரே
   ,   மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே
   ,   பல்லவர் தோன்றலைப் பாடீரே ![7]

என்ற தாழிசைகளால் அறியலாகும் இன்னும் கருணாகரன் பல இடங்களில் வண்டை நகர் அரசன்' என்றும், வண்டையர் அரசன்' என்றும், 'வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெறுகிறான். மத்தியகாலத்துச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெருவலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், பட்டைத் தலைவர்களாகவும், ஏனைய அதிகாரிகளாகவும் வாழ்ந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணாட்டிலும் பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்களுக்குத் தலைவர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேந்தர்களுள் இக்கருணாகரனும் ஒருவன்.
------------
[5]. தாழிசை-327
[6]. தாழிசை-841
[7]. தாழிசை-534
----------
கருணாகரன் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டைநாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகைவண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந்துள்ள வண்டலூரே அவ்வண்டை என்றும் காலஞ்சென்ற திரு. வி. கனகசபைப்பிள்ளை, டாக்டர் ஹீல்ஷ் துரை போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்ஙனம் கருதினமைக்குக் காரணம், கருணாகரன் பல்லவ மரபினனாய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருப்பதும், தொண்டைமண்டல சதக நூலார் அவனைத் தொண்டை நாட்டினனாகப் பாடியுள்ளதுமாகும்.[8] ஆனால், திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள வண்டலூர் அல்லவென்றும், அது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர் என்றும், அந்த ஊர் கல்வெட்டுக்களில் 'வண்டாழஞ்சேரி' என்று வழங்குகிற தென்றும், அந்த வண்டாழஞ் சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி என மருவி வழங்குகிறது என்றும் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர் குறிப்பிடும் கல்வெட்டு:

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ. இராஜகேசரி வன்மரான திருபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங் கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திரு நறையூர்காட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரனான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திரு நுந்தா விளக்கு"[9]

இதில் குறிப்பிடப் பெற்றுள்ள 'கருணாகரனரான தொண்டைமானார்' தான் கருணாகரத் தொண்டைமான் என்பது திரு. அய்யங்கார் அவர்களின் கருத்தாகும். அமைச்சர் குலம் போன்ற உயர்பதவியிலுள்ள மகளிரை ஆழ்வார் என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுகளிவிருந்து சான்றுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.[10] அவ் வண்டுவாஞ்சேரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் தாலூகாவின் தென்கிழக்கில் திருநறையூராகிய நாச்சியார் கோவிலுக்கும் திருச்சேறைக்கும் இடையில் உள்ளது.
-------------
[8]. பண்டையொர் நாளையில் ஒரேழ்
   ,   கலிங்கப் பரணிகொண்டு
செண்டையும் மேருவில் தீட்டுவித்
   ,   தோன்கழல் செம்பியன் சேய்
தொண்டநன் னாடு புரக்கின்ற
   ,   கோனந்தி தோன்றல் எங்கள்
வண்டையர் கோணங் கருணா
   ,   கரன்தொண்டை மண்டலமே.
-- தொண்டைமண்டல சதகம்.செய், 93.
[9]. S.I.I. iv No. 862
[10]. ஆராய்ச்சித் தொகுதி பக்.428
.-----------
கருணாகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் கருணாகரன் கலிங்கத்தின் மேல் தண்டெடுத்துச் சென்ற பொழுது துணைப்படைத் தலைவனாகச் சென்றான் என்றும் சயங்கொண்டார் குறிப்பிடுகின்றார்.

தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி
   ,   துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு
   ,   மால்க ளிற்றின் மிசை கொள்ளவே[11]

என்ற தாழிசையால் இவற்றை அறியலாம். தமையன் காஞ்சியிலிருந்து தொண்டைநாடு முழுவதும் ஆண்டு கொண்டிருந்ததால் 'பல்லவர்க் கரசு’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளான்.குலோத்துங்கனுக்குப் படைத் தலைவ னாய் அமைந்த கருணாகரன் வண்டை நகரின் கண் இருந்து சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் 'வண்டையர்க்கரசு' என்று சுட்டப் பெறுகின்றான். தம்பியைப் போலவே தமையனும் பெருவேந்தனை குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர்களுள் ஒருவனாய் நெருங்கிய நண்பனாக இருந்து வந்தான் என்று யூகம் செய்ய வேண்டியுள்ளது. இந்நட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்கரையில் பரி வேட்டையாடிய பின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒரு தாய்வயிற்றுப் பிறந்த சகோதரர்களுள் மூத்தோனிருப்பவும் இளையோன் அரசியலில் தலைமை வகிக்க நேர்ந்தது,

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்[12]

என்ற ஆன்றோர் வாக்குப்படி ஒக்குமென்றே கொள்ள வேண்டும்.

கலிங்கப் போரின் வெற்றிக்குக் கருணாகரத் தொண்டைமானின் அடலாண்மையும் பெருவீரமும் முதற்காரணமாகும். சோழப் படைகளால் அழிக்கப் பட்டன போக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் சிதறியோடி ஒளிந்தன. தொண்டைமான் வாகை சூடி குலோத்துங்கனை வந்தடைகின்றான். இதனைக் கவிஞர்,

கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்
   ,   கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ்
   ,   சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே.[13]
[சயத்தம்பம்-வெற்றித்தூண்.]
என்று சிறப்பிக்கின்றார்.

--------------
[11]. தாழிசை-364
[12]. புறம்-283
[13]. தாழிசை-471
----------
முதற் குலோத்துங்கனது 45-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக் கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. கல்வெட்டின் அப்பகுதி வருமாறு :

வடதிசை வேங்கை மண்டலங் கடந்து
தாங்கிய கலிங்கமுந் தழலெரி பரப்ப
விலங்கல் போல விளங்கிய வேந்தர்
விட்டவெங் கரியொடு பட்டனர் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர்வரு
கோமட் டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சனன்
மாப்பிறளா(?) மதகரி யிராசனன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்பாத்(?)திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனவரும்

வெற்ற லேழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யோடு வெண்ணிணங் கழுகொடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வயர்த்துத்
தருங்கட லாடைத் தராதலத் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டொருபகல்
..... ..... ......
வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின
கோவிராச கேசரி வன்மரான......
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு-” [14]

இப்பகுதியிலிருந்து கருணாகரன் சேனையுடன் எதிர்த்துப் பட்ட கலிங்க சேனாபதிகள் இன்னாரின்னார் என்பதை அறியலாம். ஆனால் சில பெயர்கள் தெளிவாக அறியக்கூடவில்லை. அபயனது ஏனைய கல்வெட்டுக்கள் யாவும் கலிங்க வெற்றியை பொதுவாகத்தான் சிறப்பித்துக் கூறுகின்றன, இக்கல்வெட்டு மட்டிலுந்தான் விவரமாகச் சிறப்பித்துக் கூறுகின்றது. இதனுள் காணும் எங்கராயன் தான் கருணாகரனை எதிர்க்காது அவனுடன் சந்து செய்து கொள்ளும்படி கூறினவன். இது,

என்று கூறவே யெங்க ராயனான்
ஒன்று கூறுவன் கேளென்று ணர்த்துவான் [15]

என்ற பரணித் தாழிசையால் அறியப்பெறுகின்றது.
-----------------
[14]. S.I.I.IV-P. [15]. தாழிசை-378
------------------- மேற்கூறிய கல்வெட்டினால் குலோத்துங்கனது. 45-ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு கி. பி 1115) கருணாகரனது படையெடுப்பு நடந்திருக்கவேண்டு மென்பது பெறப்படும்.

குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழன் அக்காலத்தில் இளவரசனாக இருந்தனன் என்றும் அவனும் கருணாகரனுடன் கலிங்கப் போருக்குச் சென்றனன் என்றும் ஆங்கு நடந்த போரொன்றில் வெற்றி பெற்றான் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். அவ்வரலாறு உண்மையாக இருந்திருத்தால் அப்போருக்குச் சென்றிருந்த சேனாதிபதி உபசேனாதிபதிகளின் பெயர்களை[16] எடுத்துச் சிறப்பித்துக் கூறும் சயங்கொண்டார் அந்த இளவரசனைச் சிறப்பித்துக் கூறாததாலும், வேறு கல்வெட்டுச்சான்று இல்லாததாலும் அதை உறுதிப்படுத்தக் கூடவில்லை. ஆனல் விக்கிரம சோழனின்,

தெலுங்க வீமன் விலங்கன்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படைத் தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத் தருளி

என வரும் மெய்க்கீர்த்தியுள் குறிப்பிடப் பெறும் கலிங்கப் போர் அபயன் கி. பி. 1095-6ல் மேற்கொண்ட தென்கலிங்கப் போரைக் குறிக்கும் என்று திரு. மு. இராகவய்யங்கார் குறிப்பிட்டுள்ளார்கள்.[17] இரண்டாம் முறையாக அபயன் நடத்திய வடகலிங்கப்போர் அவன் ஆட்சி முடிவிற்குச் சில ஆண்டுகட்கு முன் கருணாகரன் நடத்தியதாகும். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில்,

"ஏனைக் கலிங்கங்கள் ஏழனையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே[18]

என்று பாடியது முதற்கலிங்கப் போரையே குறிக் கும் என்பது திரு அய்யங்கார் அவர்களின் கருத்தாகும்.

கல்வெட்டுப் பரிசோதகரும் இம் முடிவை ஒத்துக் கொண்டுள்ளனர்.
-------------
[16]. தாழிசை-364, 385
[17]. ஆராய்ச்சித் தொகுதி,பக்.498.
[18]. கன்னி- 331
------------
கலிங்கத்துப்பரணிப் பிரதிகளிலும், தண்டியலங்கார மேற்கோள்களிலும் கலிங்கப் போரையும் கருணாகரனையும் பற்றிக் காணப்பெறும் ஒரு சில பழம் பாடல்களை ஈண்டு கூறுதல் ஏற்புடைத்து.

தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில்
விடங்குலவு வெள்வாள் விதிர்ப்பு-நடுங்கியதே
கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண்.[19]

சரநிரைத் தாலன்ன தண்பனி
   ,   தூங்கத் தலைமிசைச்செங்
கரநிரைத் தாரையுங் காண்பன்கொ
   ,   லோகலிங் கத்துவெம்போர்
பொரநிரைத் தார்விட்ட வேழமெல்
   ,   லாம்பொன்னி நாட்டளவும்
வசநிரைத் தான்றொண்டை மான்வண்டை
   ,   மாநகர் மன்னவனே.

இப்பாடல்கள் இரண்டும் சென்னை 'மியூசியம்’ கையெழுத்துப் புத்தக சாலையிலும், தஞ்சைச் சரசுவதி மாலிலும் உள்ள பரணிப் பிரதிகளின் இறுதியிற் கண்டதாக திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.[20]

கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும்
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ்-சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.[21]

கோட்டத் திருப்புருவங் கொள்ள வவர்செங்கோல் கோட்டம் புரிந்த கொடைச்சென்னி-நாட்டஞ்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தித் தெற.[22]

அருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவ ரருவரென வஞ்சி-வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது[23]

இவை மூன்றும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்கள்.
-------------
[19]. 'மன்' என்றும் பாடம்.
[20]. ஆராய்ச்சித் தொகுதி-பக். 445
[21] தண்டி-கருவிக் காரக ஏதுவணியின் மேற்கோள்.
[22]. குணக்குறை விசேட அணியின் மேற்கோள்.
[23]. சொற்பொருள் பின்வரு நிலையணியின் மேற்கொள்
----------------
இனி, 'ஸூக்திரத்நஹாரம்' என்ற வடமொழி நீதித்திரட்டை எழுதி 'குலசேகரன்' என்று தன் அரசன் பெயரிட்டு வழங்கியவன் குலசேகரனுடைய தலைமை அமைச்சனான காலிங்கராசன் என்பவன் என்றும், அக்காலிங்கராயன்தான் அபயன் சேனாதிபதியாகவும் சிதம்பரம் முதலிய கோவில்களில் திருப்பணி .செய்தவனாகவும் கல்வெட்டுக்களால் அறியப்படும் காலிங்கராயனேயாதல் வேண்டுமென்றும், இக்காலிங்கராயனது கல்வெட்டுக்களில் இவனுக்கு அருளாகரன் என்ற மறுபெயரும், தன்னரசனான அபயன் பொருட்டு வடநாட்டு அரசருடன் போர்கள் பல புரிந்த செய்தியும் காணப்படுதலால் இவனே அவ்வபயனுடைய தலைமைச் சேனாதிபதியாய்க் கலிங்கமெறிந்த கருணாகரனாக வேண்டுமென்றும், வண்டை என்ற ஊரின் தலைவனாகக் கருணாகரனையும், மணவில் என்ற ஊரின் தலைவனாக இக் காலிங்கராயனையும் பரணியும் கல்வெட்டுக்களும் முறையே வேறுபடக் கூறினும், முதலில் வண்டையிலிருந்த கருணாகரனே கலிங்கப் போருக்குப் பிறகு மணவிலைத் தனக்குரிய ஊராக மாற்றியிருக்கக் கூடுமென்றும், ஸூக்திரத்நஹாரப்தில் குலசேகரன் அமைச்சனாக இக்காலிங்கராயனைக் கூறியிருப்பது, அக்குலசேகரப் பெயர் அபயனுக்குரியதென்பது 'வாழி சோழ குலசேகரன்'[24] என்ற பரணித் தொடரால் அறியப்படுதலால் அவ்வபயனே அந் நீதிநூல் கூறும் குலசேகரன் என்றும் திருவனந்தபுரம் கல்வெட்டுத் துறைத் தலைவராக இருந்த திரு. ஏ. எஸ். இராமநாத அய்யரவர்கள் கூறுவர்.[25] இவற்றால் குலசேகரன் மந்திரி காலிங்கராசன், மணவிற் காலிங்கராயனான அருளாகரன், கலிங்கம் வென்ற கருணாகரன் ஆகிய மூவரும் ஒருவரே என்பது திரு அய்யரவர்களின் முடிபாதல் பெறப்படுகின்றது.

⁠இக்கருத்தைத் திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் மறுத்து, ஸூக்திரத்நஹாரம் செய்த காலிங்கராசனும், அபயன் சேனாதிபதிகளுள் ஒருவனை மணவிற் காலிங்கராயனும், அவன் தலைமைச் சேனாதிபதியான வண்டைக் கருணாகரனும் மூவேறு தலைவர்கள் என்றும், அம்மூவரையும் ஒருவராகக் கொள்ளுவதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லையென்றும் தெளிவாக ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள்.[26] கருணாகரனைப்பற்றி அறிய விரும்பும் அன்பர்கள் அப்பகுதியையும் படித்தறிந்து கொள்வார்களாக.

[24]. தாழிசை.285
[25]. "கருணாகரத் தொண்டைமானும் ஸ்ரீ ஸூக்திரத்நஹாரமும்" என்ற கட்டுரையில்.
[26]. ஆராய்ச்சித் தொகுதி-பக், 439-445.
--------------

8. குலோத்துங்கன்

குலோத்துங்கன் சளுக்கியர் மரபில் வந்தவன்; சோழர் குலத்தை விளங்கவைத்துப் பெருவீரனாய்த் திகழ்ந்த பேரரசன். இவன் தந்தை சளுக்கிய குலத்து இராசராசன்; தாய் கங்கைகொண்ட சோழனின் மகளான அம்மங்கை. இராசராசனும் கங்கைகொண்டானின் உடன் பிறந்தாள் மகனேயாவன்[1]. மூன்று தலைமுறையாக சோழர்களும் சளுக்கியர்களும் ’கொள்வினை கொடுப்பினை’யுடன் உறவு கொண்டிருந்தனர். சோழர்-சளுக்கியர் உறவினை அடியிற் குறிப்பிட்ட மரபு வழிப்படம் (fig.1) ஓரளவு விளக்கும்.
மரபு வழிப்படம்

இந்த உறவு முதன் முதலில் எவ்வாறு தொடங்கிற்று என்பதை விளக்குவோம். முதலாம் இராசராசன் காலத்தில்தான் (கி. பி. 985-1014) இடைக்காலத்துச் சோழர்களின் புகழ் பல்வகையானும் சிறப்புற்றோங்கியது. நாட்டின் பரப்பும் விரிந்தது. இராசராசன் கி. பி. 985-ல் அரியணை ஏறனான். கி. பி. 972 முதல் 989 வரை கீழைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாடு உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது.[2] அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு முதலாம் இராசராசன் தன் மகனாகிய முதலாம் இராசேந்திரனை ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்று அந்நாட்டைத் தனக்குரிமையாக்கிக் கொண்டதுடன் அந்நாட்டு மன்னனாகிய விமலாதித்தனையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இராசராசன் விமலாதித்தனைச் சிறைவீடு செய்து தன் மகள் குந்தவையை அம்மன்னனுக்கு மணமியற்றித் தந்தான். அஃதுடன் அமையாமல் அவன் நாட்டையும் அவனுக்கு வழங்கி, அதனை ஆட்சி புரியும் உரிமையையும் அளித்தான். விமலாதித்தன் கி. பி. 1015 முதல் கி. பி. 1022 வரை ஆட்சி புரிந்து வந்தான். விமலாதித்தனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இரு மக்கள் இருந்தனர். விமலாதித்தன் இறந்த பிறகு இராசராச நரேந்திரனே மணிமுடி கவிக்கப் பெற்று நாட்டை ஆளத் தொடங்கினான். அந்தக் காலத்தில் சோழநாட்டை முதலாம் இராசேந்திரன் (கி. பி. 1012-1944) ஆண்டு வந்தான் ; தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம்[3] என்ற புதியதோர் தலைநகரை ஏற்படுத்தினான். அவன் தன் மகள் அம்மங்கையை தன் உடன்பிறந்தாளது மகனான இராசராச நரேந்திரனுக்குக் கடிமணம் இயற்றினான் மனமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டுகள் கழித்த பின்னர் அம்மங்கை தேவி கருவுற்றனள். கருவுயிர்ப்பதற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கு ஒர் ஆண் மகனை ஈன்றாள். அந்தப் பிள்ளைதான் பிற்காலத்திய முதலாம் குலோத்துங்கன். பிள்ளை பிறந்த சமயத்தில் பல நன்னிமித்தங்கள் தோன்றின. மக்கள் பெருமகிழ்வுற்றனர். குழந்தையின் பாட்டியார், முதல் இராசேந்திரனின் பட்டத்தரசி, தன் காதற் பேரனைக் கையில் ஏந்திப் பாராட்டிய பொழுது, காலஞ்சென்ற தன் கணவனது அடையாளங்கள் பல அக் குழந்தையின் பால் இருத்தல் கண்டாள். கண்டதும் களிபேரின்பத்துடன்,

இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
   ,   பாரிக்கத் தகுவன் என்றே[4]

என்று வாழ்த்தினாள் ; அக் குழந்தைக்கு இராசேந்திரன் என்றும் பெயரிட்டாள்.[5] சந்திரகுலத்தைச் சார்ந்த சளுக்கிய அரசர்களும் சூரிய குலத்தைச் சார்ந்த சோழ அரசர்களும் இக் குழந்தையின் பிறப்பால் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தனர். இராசேந்திரன் கல்வி பயின்று பல கலைகளிலும் தேர்ச்சியுற்றான்; படைக்கலப் பயிற்சி போன்ற துறைகளிலும் தேர்ந்து தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தான். முதல் இராசேந்திரனுக்கு இாாசாதி ராசன், விசயராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று மக்கள் இருந்தனர். மூவரும் தம்மருகன் இராசேந்திரனிடத்துப் பெரிதும் அன்பு காட்டினர். இராசேந்திரனின் ஆற்றலையுணர்ந்த சான்றோர்கள் தாயின் குலத்தையும் தந்தையின் குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்யப் பிறந்தவன் என்று கருதி, இவனை 'உபய குலோத்தமன்' என்று பாராட்டிப் பேசினர்.

-----------
[1]. S. I. I. vol 1. No. 39. A grant of Vira choda, verses 6-8.
[2]. வேங்கி நாடு என்பது கிருஷ்ணா, கோதாவரி என்ற இரு பேராறுகளுக்கும் இடையில் கீழ்க்கடலைச் சார்ந்துள்ள ஒருநாடு. அந்நாட்டை ஆண்டுவந்தவர்கள் கீழைச் சளுக்கியர்கள்.
[3]. இது திருச்சி மாவட்டம்-உடையார் பாளையம் வட்டத் தில் உள்ளது.
[4]. தாழிசை-237
------
இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த நாளில், வேங்கி நாட்டில் தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஒரு திருமுகம் வரப்பெற்றனன். அதைக் கண்டதும் மிகவும் கவன்று தன் அம்மான்மார்களிடம் விடை பெற்றுக் கொண்டு வேங்கி நாட்டிற்கு விரைந்தான். வேங்கி நாட்டையடைந்ததும் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமை அவன் மனமுடையச் செய்தது. அருகில் அமர்ந்து அணுக்கத் தொண்டனாய்த் தந்தையை நன்கு கவனித்து வந்தான். கி. பி. 1062-ல் அவன் தந்தை இறந்தனன். இராசேந்திரன் தன் தந்தையின் பெரும்பிரிவிற் காற்றாது மிகவும் வருந்தினன். தந்தைக்கு ஆற்ற வேண்டிய இறுதிக் கடன்களை யெல்லாம் குறைவின்றிச் செய்தான். அம்மான்மார்களும் ஆன்றோரும் கூறிய ஆறுதல்களால் ஒருவாறு அவன் துன்பம் நீங்கியது. அமைச்சரும் உறவினரும் முடிசூட்டுவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

தென்னாட்டில் சோழர்கள் பல அரசர்களையும் தம்மடிப்படுத்தி முடி வேந்தர்களாய் மேன்மையுற்றுத் திகழ்ந்ததைப் போலவே, தக்கணத்தின் வட பாகத்தில் மேலைச் சளுக்கியர் பெரும் புகழுடன் விளங்கினர். இவ்விரு குலத்தரசர்களும் ஒருவரையொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டவரா யிருந்தனர். முதலாம் இராசராசன் காலத்திலிருந்தே சோழர்கள் கீழைச் சளுக்கிய மன்னர்கட்குத் தம் பெண்களை மணம் புரிவித்து அன்னாரைத் தமது நெருங்கிய உறவினராகச் செய்து கொண்டிருந்தனர். இதனால் கீழைச் சளுக்கியர் உறவு மேலைச் சளுக்கியருக்குக் கிடைக்கச் சந்தர்ப்பமே இல்லாது போய் விட்டது. ஆனல், சோழர்களின் வலியும் பெருமையும் வளர்ந்தோங்கின.[6

அக்காலத்தில் மேலைச் சளுக்கியரின் அரசனாகத் திகழ்ந்தவன் ஆறாம் விக்கிரமாதித்தன்; ஒப்பற்ற பெருவீரன். அவன் கீழைச் சளுக்கியரைச் சோழர்களிடமிருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தான். வேங்கி நாட்டதிபன் இராசராச நரேந்திரன் இறந்ததையறிந்து அதுவே தக்க காலம் என்று கருதி வனவாசியில் தன் பிரதிநிதியாகவிருந்த மாதண்ட நாயனான சாமுண்டராயன் தலைமையில் வேங்கி நாட்டிற்கு ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.

அக்காலத்தில் சோழநாட்டு அரசனாகத் திகழ்ந்தவன் வீரராசேந்திரன்.[7] மேலைச் சளுக்கியர் படை வேங்கி நாட்டை நோக்கி வரும் செய்தி அவனுக்குக் கிடைத்தது. தன் முன்னோர் காலம் முதல் நெருங்கிய உறவினால் பிணைக்கப் பெற்றிருந்த வேங்கி மன்னரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் மாசு தரும் என்று எண்ணினான்; உடனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு விரைந்தான். மேலைச் சளுக்கியர்கட்கும் சோழர்கட்கும் ஒரு கடும் போர் நிகழ்ந்தது. போரில் சாமுகாட்டராயன் கொல்லப்பட்டான் ; அவன் கீழ் வந்த படைகள் யாவும் சிதறியோடின.

----------
[5]. S.I.I. Vol 7 No.765 (செல்லூர்ச் செப்பேடு)
[6]. S. I. I. vol 1. No. 39. [7]. முதலாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோனாட்டை ஆண்ட இராசாதிராசன் சளுக்கிய மன்னனான ஆகவ மல்லளனோடு புரிந்த கொப்பத்துப் போரில் கி பி. 1058-ல் உயிர் துறந்தான்; உடனே அவன் தம்பி விசயராசேந்திரன் பொருகளத்தில் முடி கவித்துக் கொண்டு போரை நடத்தி வெற்றி பெற்றான். (தாழி-204: S. i. 1. vol.-V. No. 64.) இவன் தன் மகள் மதுராந்தகியைத் தன் மருமகன் இராசேந்திரனுக்கு மணம் புரிவித்துக் கொடுத்தான். இவனும் சளுக்கியருடன் நிகழ்த்திய போரொன்றில் இறந்தான். இவனுக்குப் பிறகு இவன் தம்பி வீரராசேந்திரன் கி-பி 1663-ல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு கட்டில் ஏறினான். இவன் பேராற்றல் வாய்ந்த பெரு வீரன். இவன் காலத்தில்தான் கூடல் சங்கமப் போர் நடைபெற்றது.
----------
குலோத்துங்கன் தன் தந்தை இறந்த பிறகு வேங்கி நாட்டை ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் இல்லை. அவன் சிறிய தந்தையான விசயாதித்தன் நாட்டையாள பெருவிருப்பங் கொண்டிருந்ததாலும், அவனும் இளைஞனாக இருந்தமையாலும், இளவரசுப் பட்டம் பெற்றிருந்தும்[8] நாட்டின் ஆட்சியைப் பெறமுடியவில்லை. அவன் மாமனான வீரராசேந்திரன் மேலைச்சளுக்கியருடன் போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், வேங்கி நாட்டின் நிலையை உணர்ந்து தன் மருமகன் விஷயத்தில் தலையிடுவது இயலாததாயிற்று. [9] நாட்டை விசயாதித்தனே ஆட்சி புரிந்து வந்தான். இதுபற்றி குலோத்துங்கனுக்கும் அவன் சிற்றப்பனுக்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசாயாதித்தன் செப்பேடுகளாலும் அவன் மகன் சக்திவர்மன் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது.[10] ஆனால் அப்பகைமை முற்றாமல் நாட் செல்லச்செல்ல குறைந்து கொண்டே போய் யில் நீங்கியது. சத்த்சவர்மன் கி. பி. 1063-ல் இறந்த பின்னர் விசயாதித்தன் தன் தமையன் மகனாகிய குலோத்துங்கமீது அன்பு காட்டினான். குலோத்துங்கனும் தன் சிறிய தந்தை உயிர்வாழுமளவும் வேங்கி நாட்டை ஆளட்டும் என்று அமைதியுடன் இருந்துவிட்டான். சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டை ஆளலாம் என்ற எண்ணம் மட்டிலும் அவனிடம் இருந்தது என்பது ஒருதலை.

விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபொழுதுகுலோத்துங்கன் சோழநாட்டில் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது சோழநாட்டை ஆண்டவன் வீரராசேந்திரன், வீரராசேந்திரன் மேலைச் சளுக்கியர்களுடன் நடத்தியபோர்களில் குலோத்துங்கன் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவி புரிந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியக்கிடக்கின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியருடன் போரிட்டு வெற்றி பெற்று, தன்னிடம் அடைக்கலம் புகுந்த விசயாதித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில் குலோத்துங்கனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும்.[11] அன்றியும், வீரராசேந்திரன் கடாரத்தரசனுக்கு உதவி புரிவான் வேண்டி பெரும் படை ஒன்று அனுப்பியபொழுது கடாரத்திற்குச் சென்ற தலைவர்களுள் குலோத்துங்கனும் ஒருவன்.[12] எனவே, இவன் வீரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு கொண்டு இளமையிலேயே போரில் சிறந்த பயிற்சி பெற்று ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தான் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

------------ [8]. தந்தையிருந்த பொழுதே இளவரசுப் பட்டம் பெற்று 'எழாம் விஷ்னுவர்த்தனன்' என்ற பெயருடன் விளங்கினான். Ins 396 & 400 of 1933
[9]. Ep. Ind. Vol 25 p 248
[10]. Ryali piates of Vijayaditya VII and the Telugu Academy piates of Sakthivarmaan II
[11]. K. A. Nilakanta Sastri: The Colas (Second Edition) pp. 261-2
[12]. தாழிசை-151. ஆனால் இவனது மெய்க்கீர்த்திகளில் அச்செயல் குறிக்கப் பெறவில்லை. எனவே, இவனது ஆட்சிக் காலத்தில் அது நிகழவில்லை என்பது ஒருதலை. ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படையெடுப்பில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். (T. V. சதாசிவ பண்டாரத்தார். பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக். 5 அடிக் குறிப்பு)
------------
வீர ராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1007ல், தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திரசோழன் என்ற அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. கி. பி. 1070 ன் தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறந்தவுடன் அதிராசேந்திரசோழன் முடிசூடப் பெற்றான். ஆனால், முடிசூடிய சில மாதங்களில் அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இச்செய்தி தஞ்சை மாவட்டத்திலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.[13] இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று வழங்கும் செய்தியை திரு. பண்டாரத்தார் அவர்கள் பல ஆதாரங்காட்டி மறுத்திருக்கிருர்கள்.[14]

அங்ஙனமே முதற் குலோத்துங்கன் தான் சோழநாட்டைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் திகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்[15] கருதுவதையும் மறுத்து குலோத்துங்கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதும் அவனால் இவ்வதிராசேந்திரன் கொல்லப்படவில்லை என்பதும நன்கு நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.[16] அதிராசேந்திரனேப்பற்றியே கலிங்கத்துப்பரணி குறிப்பிடாததற்கும், வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் இரண்டடிகளும் 'புகழ் மாது விளங்கச் செயமாது விரும்ப' என்று தொடங்கும் இவ்வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப் பெற்றிருப்பதற்கும் காரணம் வீரராசேந்திரனுக்குப் பிறகு உரிமைப்படி சோழராஜ்யத்திற்கு அரசனாக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கேயாம் என்று திரு K. A. நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[17]

சோழ ராஜ்யத்தின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் குலோத்துங்கன் தலைநகரிலில்லாது திக்விஜயம் புறப்பட்டதும், குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்ததும் அவனை வீழ்த்துவதற்கு ஆறாம் விக்கிரமாதித்தன் முயற்சி செய்ததும், அதிராசேந்திரனைப்பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடாததும் அதிராசேந்திரன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப் பெறும் உள்நாட்டுக் கலகத்தில் குலோத்துங்கனும் பங்கு கொண்டிருத்தல் கூடும் என்று யூகிக்க இடமுண்டு என்று திரு.சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[18] திரு.பண்டாரத்தார் அதிராசேந்திரன் காலத்தில் நாடு அமைதியாக இருந்தது என்று கல்வெட்டு ஆதாரத்தால் நிறுவியதும், வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டவர்களாதலால், குலோத்துங்கனுக்கு முன்னதாக பரகேசரி என்ற பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் இருந்தமையையும் அவன் உரிமையையும் ஒப்புக் கொண்டவன் என்று காட்டியதும் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணங்களாகும். விக்கிரமாங்கதேவ சரிதமும் விக்கிரம சோழன் உலாவும், அதிராசேந்திரன் ஆட்சியைக் குறிப்பிடுகின்றன. கலிங்கத்துப் பரணி அவன் ஆட்சியைக் குறிப்பிடாததற்கு யாது காரணமாக இருத்தல் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. அதுகிடக்க.

-----
[13]. inscription 280 of 1917,
[14]. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக்-252-237,
[15]. Annual Report on Epigraphy for 1904, page 11
[16]. பிற்காலச் சோழர் சரித்திரம். பகுதி. பக். 259-60; பகுதி-II பக். 11-12.
[17]. The Colas (Second Edition) p. 294.
[18]. ibid p. 294 & 295.
----
வீர ராசேந்திரனுக்குப் பிறகு சில திங்கள் வரை அரசாண்ட அதிராசேந்திரன் கி.பி.1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். சோழர் மரபில் அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையால், குறுநில மன்னரது கலகமும் உள்நாட்டுக் குழப்பமும் எழுந்தன. இவற்றைத்தான் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடுகிறார்.[19] இச்செய்தி குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகளாலும் உறுதிப்படுகின்றது.[20].
இங்ஙனம் சோழநாடு நிலை குலைந்திருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த குலோத்துங்கன் அறிந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு விரைந்தான். அங்கிருந்த அமைச்சர், படைத் தலைவர் முதலியோர் சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமை பற்றி இவனை அரசனாக ஏற்றுக் கொண்டு முடிசூட்டினர். அந்த நாளிலிருந்துதான் குலோத்துங்கன் என்ற அபிடேகப் பெயரைப் பெற்றான்; அதற்கு முன் அவனுக்கு வழங்கி வந்த பெயர் இராசேந்திரன் என்பது. அவன் அடைந்த வெற்றிகள், அவனுடைய ஆட்சி முறை முதலிய செய்திகளை வரலாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற்கொண்ட போர்களைப் பற்றி கலிங்கத்துப் பரணி குறித்திருப்பது முன்னரே சுட்டப் பெற்றது.[21] அவன் கருணாகரனைக் கொண்டு கி. பி. 1112-ல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணியின் நூற் பொருளாக அமைந்தது. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப் பெறும் நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப் பெறும் செய்திகளோடு ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.[22]
------
[19]. தாழிசை,258, 259, 260, 261
[20]. "அருக்கனுதயத் தாசையி லிருக்கும்
கமலமனைய நிலமக டன்னை
முந்நீர்க் குளித்த வ ந்தாள் திருமால்
ஆதிக் கேழலாகி யெடுத்தென்ன
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழலி லின்புற விருத்தித்
திகரியும் புலியு ந் திசைதொறும் நடாத்திப்
புகழும் தருமமும் புவிதொறும் நிறுத்தி ( S.I.I. vol. 3, no. 66 )

   ,   தென்றிசைத்
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவை
தனிமையும் தவிர வந்து புனிதத்
திருமணி மகுடம் உரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
தொன்னில வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல (S.I.I: vol. III, no. 701)
[21]. இந்நூல் பக்கம்--60
[22]. T. V. சதாசிவ பண்டாரத்தார் ; பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி-II. பக்கம்-29,
-------------

9. சயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணியைப் பாடிக் குலோத்துங்கன் புகழையும் அவன் தலைமைச் சேனாதிபதி கருணாகரத் தொண்டைமானின் பெருமையையும் இந்நிலவுலகில் என்றும் நிலை பெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக்களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர் மணி. அவர் கலிங்கத்துப் பரணியைப் பாட வேண்டிய சந்தர்ப்பத்தை முன்னர்க் குறிப்பிட்டோம்.[1] அவ்வரலாற்றை மெய்யெனக் கொண்டால் அவரது இயற்பெயர் ' சயங்கொண்டான் ’ என்ற பெயர் அன்று என்பது சொல்லாமலே போதரும்.

சயங்கொண்டாரது ஊர்,அவரது இயற்பெயர் இன்னது என்பது அறியக் கூடவில்லை. அது போலவே அவரது பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு புலப்படவில்லை. ஆனால்,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
   ,   தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
   ,   பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்


கையும் முகமும் இதழும் விழியும்
   ,   காலும் நிறமும் போலும் கமலம்
கொய்யும் மடவார் கண் வாய் அதரம்
   ,   கோபம் கமழும் தீபங் குடி.[2]

என்ற ஒரு பாடலில் அவரது ஊர் 'தீபங்குடி' என்ற செய்தி கிடைக்கின்றது. ஆனால் தீபங்குடி என்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஓருரும் சோழ நாட்டில் ஓருரும் உள்ளன. தஞ்சைமாவட்டத்துக் கல்வெட்டொன்று "இளங்கா நாட்டுத் தீபங்குடி” என்று ஓர் ஊரைக் குறிக்கின்றது.[3] இவற்றுள் சயங்கொண்டார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும், இவர் முதற் குலோத்துங்கனைச் சிறப்பித்திருப்பதால் சோழநாட்டுத் தீபங்குடியினர் என்று கோடல் பொருந்தும்.

சமயம்

இவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும் நிச்சயிக்கக் கூடவில்லை. 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்[4] என்ற திருவாய் மொழிப்படி இவர் குலோத்துங்கனைத் திருமால் அவதாரம் என்று கூறுகின்றனரேனும்,[5] இவரை வைணவர் என்று கொள்ள இயலாது. கலிங்கத்துப் பரணியிற் கூறப்பெற்றுள்ள,

புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
   ,   தொழில் காட்டப் புவன வாழ்க்கைச்
செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப்
   ,   புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்[6]

என்ற தாழிசையாலும், திருமால் முதலிய ஏனைய தேவர்க்கும் வணக்கம் கூறப் பெற்றிருப்பினும் சிவ பிரானது வணக்கம் முதலில் கூறப் பெற்றிருப்பதாலும், உமாதேவி, ஆனைமுகன், முருகவேள், உமா தேவியின் அம்சமாகிய அன்னையர் எழுவர் ஆகியோருக்கெல்லாம் தனித்தனி வெவ்வேறு வணக்கம் கூறப் பெற்றிருப்பதாலும் இவரைச் சைவ சமயத்தினர் என்று சற்று உறுதியாகவே கூறலாம். நான்முகன், திருமால் முதலியவர்கட்கும் வணக்கம் கூறியிருப்பதால் இவர் சமரச நோக்கென்னும் பொது நோக்குடையவர் என்பதையும் அறியலாம்.

காலம்

முதலாம் குலோத்துங்கன் (கி. பி. 1070-1118) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங்கப் போர் நடைபெற்றது கி. பி. 1112-ல். இந்தப் போரைத்தான் சயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியின் காவியப் பொருளாகக் கொண்டார், எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத்துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்ள வேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால் இக்கவிஞர் கம்பருக்கு முந்தியவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பர் தன் காவியத்தை கி. பி. 1178-ல் பாடி முடித்து கி. பி. 1185-ல் அரங்கேற்றினர் என்பதைப் பல சான்றுகளுடன் நிறுவியுள்ளமை இவ்டத்தில் நினைவு கூரத் தக்கது.[7]

புகழ்க்கொடை

சயங்கொண்டார் அபயன் என்ற முதற் குலோத்துங்கனுக்களித்த நிலைத்த புகழ்க்கொடை அவன் அவருக்கு உதவியிருக்கக் கூடிய நிலையாப் பொருட் கொடையினும் பல்லாயிரம் மடங்கு பெரிது என்பதை விதந்து கூற வேண்டியதில்லை. ஒரு சமயம் இவர் அபயன் மீது முனிவு கொண்டு பாடியதாக தமிழ் நாவலர் சரிதையில் காணப்பெறும் வெண்பாவாலும் இதனை நன்கு அறியலாம்.

அவ்வெண்பா :
காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்
பாவலர் நல்கும் பரிசுஒவ்வா—பூவில் நிலை
யாகாப் பொருளை அபயன் அளித் தான்புகழாம்
ஏகாப் பொருள் அளித்தேம் யாம் [8]

ஒருகால் சோழன் தனக்குச் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தவே அதனைப் பொறாராய்ச் சினங்கொண்டு சயங்கொண்டார் இதனைப் பாடினர் என்று கூறுவர்.

கவித்திறமை

சயங்கொண்டாரது பாக்களனைத்தும் பத்தழகுங் கொண்டனவாய் மிளிர்கின்றன. முன்னர்க் காணப் பெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் இவர் பாடல்களில் சொல் நயமும் பொருள் நயமும் சந்த வின்பமும் கொப்புளித்து நிற்பதை அறியலாம். கலிங்கத்துப் பரணியில் 54-சந்த பேதங்கள் காட்டப்பெறு கின்றன. இவை பற்றியே பிற்காலத்தராகிய பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார் இவரது கவித்திறமையை ஏனைய சிலருடைய கவித்திறமையுடன் ஒப்ப வைத்து,

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
   ,   சயங்கொண்டான்; விருத்த மென்னும்
ஒண்பாவில் உயர்கம்பன்; கோவைஉலா
   ,   அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
   ,   வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
   ,   லாலொருவர் பகரொ ணாதே [9]

என்று சிறப்பித்து ஓதியுள்ளார்,

இவர் பாடிய மற்றொரு நூல்

இப்புலவர் பிரான் கலிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து 'இசையாயிரம்’ என்ற மற்றொரு நூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக் கிடக்கின்றது. அந்நூலில் "செட்டிகள் மேல் இசையாயிரம் பாடிய போது செக்கார் 'புகார் தங்கட்கு ஊர்' என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது” என்ற தலைக்குறிப்புடன் காணப்படும்,

ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே
கூடுவதும் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க்
கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்
உச்சிக்குப் பின்புகார் ஊர் [10]

என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.

--------------
[1]. இந்நூல்-பக்கம்-15
[2]. தமிழ் நாவலர் சரிதை-செய் 117. இப்பாடல் தீபங்குடிப் பத்தென்னும் நூலில் சில பாட வேறுபாட்டுடன் மூன்றாவது பாட்டாகவுள்ளது.
[3]. A. R. No. 28 of 1917
[4]. திருவாய்மொழி நாலாம்பத்து.செய்.8,
[5]. தாழிசை,232,
[6]. தாழிசை-1.
[7]. எஸ். வையாபுரிப்பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள்— கம்பர். பக்கம்-130.
[8]. தமிழ் நாவலர் சரிதை செய்-116
[9]. தனிப்பாடல்
[10]. தமிழ் நாவலர் சரிதை செய். 119
-------------------
ஆசிரியரின் மற்ற நூல்கள்

1 கவிஞன் உள்ளம்
2 அறிவியல் பயிற்றும் முறை
3 தமிழ் பயிற்றும் முறை (அச்சில்)
4 காதல் சித்திரங்கள் (அச்சில்)
5 காலமும் கவிஞர்களும் (அச்சில்)

விலை ரூ. 2-00
சௌத் இந்தியா பிரஸ், காரைக்குடி,
----------

This file was last updated on 25 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)