pm logo

தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
இலக்கியமும் கல்வெட்டுக்களும்


ilakkiyamum kalveTTukkaLum
by catAciva paNTArattAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இலக்கியமும் கல்வெட்டுக்களும்
தி. வை. சதாசிவ பண்டாரத்தார்

Source: நூல் பற்றிய விவரங்கள்
இலக்கியமும் கல்வெட்டுக்களும்
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
மணிவாசகர் நூலகம்,
12பி , மேல சன்னதி, சிதம்பரம். & 241, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை - 600 001.
பதிப்பு - டிசம்பர் 197. ச. திருஞானசம்பந்தம் அவர்கள் எம். ஏ.
உரிமை : பதிப்பாசிரியர் : ச. மெய்யப்பன் எம்.ஏ.,
விலை. ரூ. 5-00
அச்சிட்டோர் : ராமன்’ஸ் பிரிண்டிங் பிரஸ், சென்னை -17.
-------------
பதிப்புரை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டு ஆராய்ச்சித்துறை அறிஞராகப் பணியாற்றிப் புகழுடம்பு பெற்ற திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் தொண்டு மிக மிகப் பெரிது. தமிழ் அறிவும், வரலாற்றறிவும், நேர்மையும், தெளிவும், சிந்தனைத் திறனும் உடைய திரு. பண்டாரத்தார் அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் அரிதின் முயன்று கண்ட உண்மைகளால் தமிழ் நாட்டு வரலாறு பெரி தும் விளக்கமுற்றுள்ளது. தாம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்ற முறையில் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் நிலவக்கூடிய கருத்து வேறுபாடுகள் பலவற்றையும் ஆராய்ந்து கல்வெட்டுக்களின் துணையைக் கொண்டு எல்லாவற்றிற்கும் முடிவுகாண வழியிருக்கிறது என்பதனை இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலக்கிய ஆராய்ச்சிக்கு உதவக்கூடிய அவரது கட்டுரைகள் பலவற்றையும் ஒரு சேரத் தொகுத்துத் தந்து வெளியிடுமாறு நல்கிய அவரது மைந்தர் திரு. திருஞான சம்பந்தம், எம்.ஏ., அவர்கட்கு எங்கள் நன்றி உரியதாகுக.

மிகச்சிறந்த முறையில் நூல் வெளிவரத் துணை செய்த திருமிகு ச.மெய்யப்பன் எம். ஏ. அவர்கட்கும் நன்றி.

      - மெ. மீனாட்சி சோமசுந்தரம்
---------------

டாக்டர் உ. வே. சாமினாத ஐயர்
கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி சதாசிவ பண்டாரத்தார் இயற்றிய முதற்குலோத்துங்க சோழன் சரித்திரத்தை முற்றும் படித்துப் பார்த்தேன். தன்னை இயற்றியவர் நெடுங்காலமாகச் சிலாசாஸனங்கள், சங்கச் செய்யுட்கள் முதலியவற்றை ஆராய்ந்தவரென்பதை இது புலப்படுத்துகின்றது. தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகின்றதென்பதற்கு இந் நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். இந்தச் சரித்திரத்திலுள்ள விஷயங்கள், விளங்கும்படி நன்றாக முறைப்படுத்தி எளிய நடையில் எழுதப் பட்டுள்ளன. தமிழரசர்களுடைய சரித்திரங்களை அறிந்து கொள்வது இன்றியமையாததாதலால் இந்தப் புத்தகம் பொதுவாக யாவருக்கும் சிறப்பாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் மிகப் பயன்படுமென்று எண்ணுகிறேன்.
-----

தமிழ்ப் பெரியார் திரு வி. க.
நவ சக்தி : முதற் குலோத்துங்க சோழன் வரலாறு கொண்ட இந்நூல் வரப்பெற்றோம். இந்நூலாசிரியர் கும்பகோணம் வாணாதுறை, ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் திருவாளர் டி. வி. சதாசிவ பண்டாரத்தார் முயற்சியைப் பாராட்டுகிறோம். கலிங்கத்துப்பரணி, கல்வெட்டுகள் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் உருப் பெற்றிருக்கிறது. சரித்திர முறையில் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. குலோத்துங்கன் வரலாற்றுக் கூறுகள் பல ஆங்காங்கே ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படுமுறையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. குலோத்துங்கனது அரசியல் முறை நெஞ்சைக் கவர்வதாயிருக்கிறது. இனிய எளிய நடையில் நூல் எழுதப்பட்டிருத்தல் மகிழ்ச்சியூட்டுகிறது. சரித்திர அமைப்பில் இத்தகைய நூல் பல வெளிவரல் வேண்டுமென்பது நமது வேணவா . திருவாளர் பண்டாரத்தார்க்கு நமது நன்றி உரியதாக.
---------

திரு. நாராயணையங்கார்
செந்தமிழ் - குலோத்துங்க சோழன் :- இஃது, இப்பெயரோடு சோழகுலத்தின் திலகமாய் விளங்கிய சக்ரவர்த்தியின் சரித்திரத்தைக் கூறுவது; கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் தமிழ் நூற்சான்றுகளையும் ஆராய்ந்து ஒரு கோவைப் படத் தொகுத்துக் கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமாந். டி. வி. சதாசிவப் பண்டாரத்தாரவர்களால் எழுதப் பெற்றது.

இதன் வசன நடை எளிமையும் இனிமையும் வாய்ந்தது. அக்கால அரசியல் முறையும், நாகரிக நிலையும் முதலிய எல்லாம் இதனால் அறிந்து மகிழற்பாலன அன்றியும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் இதில் காலக் குறிப்போடு நன்கு விவரிக்கப் பட்டுள்ளது.

சரிதவாராய்ச்சியில் தமிழ்ப்புலவர்கள் அதிகமாகத் தலையிடவில்லை என்னும் குறையுடைய இக்காலத்தில் இதன் ஆசிரியருடைய ஊக்கமும் உழைப்பும் போற்றுதற்குரியன. (தொகுதி 29, பக் 85. 86)
------------

Prof. V. RENGACHARIAR (HINDU )
In this book of about 100 pages the story of the reign of the great Chola Emperor Kulothunga I is told in full. All the available materials have been laid under contribution and the author has based his conclusions on a critical examination of his date. That under Kulothungta I South India enjoyed the benefits of a well-ordered administration internal peace and external security, that that the people freely pursued their varied avocations, that learning and the arts of civilization flourished as perbaps never before, all this is brought out with quite a wealth of detail. The last chapter particularly should be of great interest to the general reader. Entitled “Kulotkunga's administration" it throws a flood of light on the social, political and economic conditions of South India in the 11th century. The first chapters deal with the Chalukyu-Chola wars and Kulothunga's early career and military exploits.

It is commendable that the work has been produced in Tamil thereby extending its sphere of usefulness.
-------------
பொருளடக்கம்

1. சுந்தரமூர்த்திகளது காலம்
2. கம்பர் காலம்
3. நம்பியாண்டார் நம்பி காலம்
4. தமிழ் முனிவர் அகத்தியர்
5. வாதவூரடிகள் காலம்
6. இளம்பூரண அடிகளும், மணக்குடவரும்
7. தேவாரம் என்னும் பெயர் வழக்கு
8. தேவாரப்பதிகங்களிற் குறிக்கப் பெற்ற சில கோயில்களின் பெயர்க்காரணம்
9. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள்
10. விநாயகர் வழிபாடும், தமிழ் நாடும்
11. புறநானூறும் கல்வெட்டுக்களும்
12. பத்துப்பாட்டும் கல்வெட்டுக்களும்
13. பதிற்றுப் பத்தும் பதிகங்களும்
14 கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள்
-----------

1. சுந்தர மூர்த்திகளது காலம்


சைவ சமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் அறுபான் மும்மை நாயன்மார்களுள் இறுதியில் வாழ்ந்தவரென்பது அவர் திருவாய்மலர்ந்தருளிய திருத் தொண்டத் தொகையால் நன்கு விளங்குகின்றது. அப் பெரியார் இந்நிலவுலகில் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதி என்று தஞ்சை ராவ் பகதூர் K.S. சீநிவாசபிள்ளை அவர்கள் தமது 'தமிழ் வரலாறு' என்னும் நூலில் கூறியுள்ளார். திருவாங்கூரில் கல்வெட்டிலாகாவிற்குத் தலைவராயிருந்து காலஞ் சென்ற T. A. கோபிநாதராயர் அவர்கள் அவ்வடிகளது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி யாகு மென்று செந்தமிழ்' மூன்றாந்தொகுதியில் வரைந் துள்ளார். ஆகவே, இவ்விரு ஆராய்ச்சியாளரும் சற்றேறக் குறைய ஒத்த கொள்கையினர் ஆவர் என் பது வெளிப்படை.

இனி, அடிகள் காலத்தை ஆராய்ந்து காண்டற்கு இன்னோர் எடுத்துக் கொண்ட கருவிகளை நிரலே ஆராய்ந்து அவற்றின் வன்மை மென்மைகளைக் காண்போம். சேரமான் பெருமாள் நாயனார் என்று வழங்கும் கழறிற்றறிவார் காலத்தில் பாண்டி நாட்டில் அரசு புரிந்தவன் வரகுணபாண்டியன் என்பதும், கழறிற்றறி வார்க்குப் பெருநட்பினராகிய சுந்தரமூர்த்திகளும் அப்பாண்டியன் காலத்தவரேயாதல் வேண்டும் என்பதும் அவர்கள் கூறும் கருவிகளுள் முதன்மையானவை களாம். கழறிற்றறிவார் சுந்தரமூர்த்திகளுக்கு நட்பின ராகவிருந்து அவருடன் திருக்கைலை சென்றவர் என்பது பெரிய புராணத்தால் அறியக்கிடக்கும் உண்மையாதலின், அதிற் சிறிதும் ஐயமில்லை. ஆனால், கழறிற்றறிவார் காலத்தில் மதுரை மாநகரில் வாழ்ந்த பாண்டிய மன்னன் வரகுணன் ஆவன் என்று அன்னோர் கூறுவது தக்க வலியுடைத்தன்று. பெரியபுராணத்தின் ஆசிரியராகிய சேக்கிழார், சுந்தரமூர்த்திகளும் கழறிற்றறி வாரும் பாண்டி நாட்டில் உள்ள திருக்கோயில்களை வணங்குதற்கு மதுரைக்குச் சென்றிருந்தபோது பாண்டிய அரசனும், அவனது மகளை மணந்து அங்குத் தங்கியிருந்த சோழமன்னன் ஒருவனும் அவ்விரு பெரியாரையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துப்போயினர் என்று கூறியுள்ளார். ஆனால், அந்நாளில் ஆட்சிபுரிந்து வந்த பாண்டி மன்னன் இன்னவன் என்றாதல் , அங்கிருந்த சோழன் இன்னவன் என்றாதல் அவ்வடிகள் வெளிப்படையாகக் கூறிச் சென்றாரில்லை.[1] எனவே, புலவர் பெருமானாகிய சேக்கிழாருக்கு அன்னோர் யாவர் என்றுரைத்தற்குரிய கருவிகள் அப்போழ்தே கிடைக்க வில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

இனி, அந்நாளில் பாண்டிய நாட்டில் அரசு செலுத் தியவன் வரகுணபாண்டியன் என்று தெரிவித்தவர், திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியராகிய பரஞ் சோதி முனிவர் ஆவர். அவர் கூறுவது –

மன்றலந் தெரியல் மார்பன் வரகுணன் செங்கோல் ஓச்சிப்
பொன்றலங் காவலானிற் பொலியுநாள் ஏம் நாதன்
என்றொரு விறல்யாழ்ப் பாணன் வடபுலத் திருந்தும் போந்து
வென்றிகொள் விருதினோடும் விஞ்சைசூழ் மதுரை சார்ந்தான்.       (திருவிளை, விறகுவிற்ற, 2.)

என்பது.

பரஞ்சோதி முனிவர் சேக்கிழாரடிகட்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னர் இருந்தவர். கி. பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நம் சேக்கிழார் பெருமான் அறிந்து கொள்ள முடியாமலிருந்த செய்திகளை மிக அண்மைக் காலத்தில் நிலவிய பரஞ்சோதி முனிவர் எங்ஙனம் கூறவல்லராயினரோ அறியேம். இங்ஙனம் இம்முனிவர் கூறும் செய்திகள் பலவும், வரலாற்றுண்மைக்கு முரண்பட்டிருத்தலை ஆராய்ச்சியாளர் பலரும் நன்குணர்வர்.

இனி, திருஞானசம்பந்தரால் வெப்பு நோயினின்று காப்பாற்றப்பட்டவன், கூன்பாண்டியன் என வழங்கும் சுந்தரபாண்டியன் ஆவன் என்று பரஞ்சோதி முனிவர் கூறியுள்ளார். இம்முனிவரே அரிமர்த்தன பாண்டியனிடத்தில் திருவாதவூரர் அமைச்சராயிருந்தனர் என்று உணர்த்தியுள்ளார். சுந்தர பாண்டியற்குப் பத்துத்தலை முறைகட்கு முந்தியவன் அரிமர்த்தன பாண்டியன் என்பது அத்திருவிளையாடற் புராணத்தால் அறியக் கிடக்கின்றது. இவ்வரிமர்த்தன பாண்டியற்கு நாற் பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுண பாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராகிய சுந்தரமூர்த்திகளும் இவ்வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்தினனாகிய சுந்தர பாண்டியற்கு ஐம்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் சுந்தரமூர்த்திகள் காலத்தினனாகச் சொல்லப்படும் வரகுண பாண்டியன் என்பது, திருவிளையாடற் புராணமுடையாரது முடிப்பாகும். தலைமுறை ஒன்றிற்கு முப்பது ஆண்டுகளாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடுவதுதான் பொருத்தமுடைத்து என்று வரலாற்று நூல் வல்லார் கூறுகின்றனர். எனவே, சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தருக்கு 1590 ஆண்டுகட்கு முன் னர் இந்நிலவுலகில் வாழ்ந்தவர் என்பது திருவிளை யாடற் புராணத்தால் அறியக்கிடக்கும் செய்தியாகும்.

திருஞான சம்பந்தர் திருக்கோலக்காவிற் பொற்றாளம் பெற்றதையும்,[2] திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதையும்[3] சுந்தரமூர்த்திகள் தாம் பாடியுள்ள தேவாரப் பதிகங்களில் குறித்திருத்தலோடு திருத் தொண்டத் தொகையில் அவ்வடிகட்கு வணக்கமுங் கூறியுள்ளனர். எனவே சுந்தரமூர்த்திகள், திருஞான சம்பந்தருக்குப் பல ஆண்டுகட்குப் பின்னர் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பது. அகச்சான்று கொண்டு நன்கு துணியப்படும். இத்துணைச் சிறந்த ஆதாரங்கட்கு முரணாகத் திருவிளையாடற் புராணமுடையார் கூறுவது சிறிதும் உண்மை யுடைத்தன்று. ஆகவே, சுந்தர மூர்த்திகள் வரகுணபாண்டியன் காலத்தினர் அல்லர் என்பது வெளியாதல் காண்க. அன்றியும் திருவிளை யாடற் புராணம் செந்தமிழ் வளஞ்செறிந்த சிறந்த நூலாதலின் தமிழ்மொழிப் பயிற்சிக்குப் பயன்படுமே யன்றி, வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறிதும் பயன்படா தென்றுணர்க. இவ்வுண்மையைத் தமிழ் வரலாற்றின் ஆசிரியரும் நன்குணர்ந்துரைத்-திருப்பது பெரிதும் பாராட்டற்பாலதாகும்.

இனி , சுந்தரமூர்த்திகள் பாடியுள்ள –

கருமையாந் தருமனார் தமர் நம்மை கட்டியகட் டறுப்பிப் பானை
யருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட
உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே.

என்னும் திருப்பாட்டால் அடிகள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்றென்றும், அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர் என்றும், பல்லவர்களுள் நந்தி வர்மன் (780- 830) ஆட்சிக்காலத்தில் தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்றும், ஆகவே அடிகள் நந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி. பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டு மென்றும் அன்னோர் கூறுகின்றனர்.

அடிகள் தம் காலத்துப் பல்லவ மன்னன் போர் வலிமையற்றவன் என்றாதல் அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறைகொடுக்க மறுத்தனர் என்றாதல் அப் பாடலில் கூறினாரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத்தெம் பெருமான் அருள் புரிபவராகவும், அவனோடு முரணிப் பகைஞராயினார்க்கு அருள்புரியாது தண்டனை விதிப்பவ ராகவும் இருந்துள்ளமையை நன்கு விளக்கி அம்மன்னனது ஒப்புயர்வற்ற சிவபக்தியின் மாட்சியைத் தெரிவித்துள்ளார். ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின் அப்பெரியார் நந்திவர்மப் பல்லவன் காலத்தினர் அல்லர் என்பது தெளிவாதல் காண்க.

இனி, சுந்தரமூர்த்திகள் வாழ்ந்தகாலம் யாதென ஆராய்வாம். அடிகள் தாம் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையில், கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்க னடியார்க்குமடியேன்' என்று கூறியிருக்கின்றனர்; இவ்வடியில் வந்துள்ள 'காக்கின்ற' என்னும் நிகழ் காலப் பெயரெச்சம், காடவர்கோனாகிய கழற்சிங்கன் அடிகள் காலத்து மன்னன் என்பதை இனிது உணர்த்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக்குரிய பெயர்களுள் ஒன்றாகும். ஆகவே, இக்கழற்சிங்கன் பல்லவ அரசனாயிருத்தல் வேண்டும். அன்றியும் இவ்வேந்தன் அறுபத்து மூன்று அடியார்களுள் வைத்துச் சுந்தரமூர்த்திகளால் போற்றப்பட்டிருத்தலின் சிறந்த சிவபக்தனாகவும் இருத்தல் வேண்டும். இனி, நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் கழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனுமில்லை.

ஆனால் நரசிங்கவர்மன், இராசசிங்கவர்மன் என்ற பல்லவ வேந்தர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் முதல் நரசிங்கவர்மன் திருஞானசம்பந்தர் காலத்தினனாதலின் சுந்தரமூர்த்திகள் அவ்வரசன் காலத்தினரல்லர் என்பது திண்ணம். ஆகவே, அடிகள் இராசசிங்கன் காலத்தினராதல் வேண்டும். இவ்வேந்தனை இரண்டாம் நரசிங்கவர்மன் என்றும், முதல் இராசசிங்கவர்மன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவனே காஞ்சியிலுள்ள கைலாய நாதர் கோயிலை எடுப்பித்தவள். இஃது அக்காலத்தில் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்னும் பெயருடையதாயிருந்தது. இக்கோயிலில் இவனது கல்வெட்டொன்று வடமொழியில் வரையப்பட்டுளது. அஃது இவ்வேந்தனைச் 'சிவசூடாமணி' என்று புகழ்கின்றது. (South Indian Inscriptions Volume I No.24). இங்ஙனமே மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரத்தில் இவனெடுப்பித்த இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற திருக்கோயிலிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலி லுள்ள கல்வெட்டும் இவனைச் 'சிவசூடாமணி' என்று புகழ்தல் ஈண்டு அறியத்தக்கது. காசாக்குடிச் செப்பேடுகள் பரமேச்சுரனே இராசசிங்கப் பல்லவனாக அவதரித்துள்ளாரென்று சிறப்பித்துக் கூறுகின்றன. (S.I.I. Volume II No.73) உதயேந்திரஞ் செப்பேடுகள் இவனைப் 'பரமமாகேச்சுர' னென்று புகழ்ந்துரைக்கின்றன. (S. I. 1. Volume II No. 74). வேலூர்ப்பாளையம் செப்பேடுகள் இவன் சிவபெருமானுக்குக் காஞ்சி மாநகரில் கைலாயத்தை யொத்த திருக்கோயிலொன்றை எடுப்பித்த பெருமையுடையவன் என்றுணர்த்துகின்றன. [S I. I. Volame II No.98] . இக் கைலாய நாதர் திருக்கோயிலில் நரசிங்கவர்மனுக்கு அந்நாளில் வழங்கிய இருநூற்றைம்பது பட்டங்கள் பொறிக்கப் பட்டிருத்தலை இன்றும் காணலாம். அவற்றுள், சங்கரபக்தன்', ஈசுவர பக்தன்' ஆகிய பட்டங்கள் இவ்வேந்தன் சிறந்த சிவ பக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றன. [S. I. I Volume IN0.25 Verse 55].

பல்லவர் சரித்திரம் எழுதிய அறிஞராகிய துப்ரே துரைமகனார் இவ்வரசனைப்பற்றிக் கூறுவது - "நெடுங் காலம் குடிகளை எவ்வகை இன்னல்களுமின்றிக் காத்து வந்த பல்லவ அரசன் இவன் ஒருவனேயாவன். இவன் தன் ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் கைலாயநாதர் கோயிலையும், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் விழுப்புரந் தாலுகாவிலுள்ள பனைமலையில் ஒரு கோயிலையும் எடுப்பித்துச் சிவனடியார்களைப் போற்றி அன்னோர்க்குப் பல நலங்கள் புரிந்தனனேயன்றி வேறு ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை' என்பது. இதனாலும் இவன் சிறந்த சிவபத்தன் என்பது இனிது புலப்படுதல் காண்க.

இவ்வேந்தன் தன் மனைவியோடு திருவாரூருக்குச் சென்று புற்றிடங்கொண்ட முக்கட்பெருமானை வணங் கித் திருக்கோயிலில் வலம் வருங்கால் இவனது மனையாள் பூக்கள் தொடுக்கப்படும் இடத்திற்குச் சென்று ஒரு மலரை எடுத்து மோந்து பார்க்க, அங்கிருந்த சிவனடியாராகிய செருத்துணையா ரென்பார் அதனைப் பொறாது அவளது மூக்கை வாள் கொண்டு அறுத்தலும், பின்னர் அங்கு வந்த அரசன் தன் மனைவி செய்த குற்றம் மிகப்பெரிது என்று அவ்வடியாரிடம் கூறியதோடு அவள் அம்மலரை எடுத்தமைக்குக் காரணமா யிருந்த கையினையும் வெட்டி வீழ்த்தினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இவ்வரலாற்றால் இவனது சிவபக்தி எத்தகைய சிறப்புடையதென்பது ஒருவாறு நன்கு புலப்படும். இவன் காஞ்சியில் கைலாயநாதர் கோயில் எடுப்பித்த நாளில் தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக் கோயில் கட்டினாரென்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும்.

சிவபெருமான், தாம் பூசலாரது மனக் கோயிலுக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின், அரசன் எடுப்பித்த கற்கோயிலுக்குக் கடவுண்மங் கலஞ் செய்யக்குறிப்பிட்டிருந்த நாளை மாற்றி அதனை வேறொரு நாளில் செய்யுமாறு அவன் கனவில் கூறி யருளினாரென்பதும் பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்திகளாம். ஆகவே, இவ்வேந்தன் எடுப்பும் இணையுமற்ற சீரிய சிவபத்தனாய் அந்நாளில் நிலவினா னென்பது திண்ணம். இத்துணைச் சிறந்த சிவபக்தியுடைய பல்லவவேந்தன் வேறு ஒருவனும் இலனாதலின் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையிற் கூறியுள்ள 'காடவர்கோன் கழற்சிங்கன்' இவனேயாதல் வேண்டும். இனி, அடிகள் இவனை இராசசிங்கன் என்றாதல் நரசிங்கன் என்றாதல் வழங்காமல் கழற்சிங்கன் என வழங்கியுள்ளாரேயெனின், சிங்கன் என்பது அவ்விரு பெயர்கட்கும் பொதுவாயிருத்தலின் அரசர்க்குரிய பெருமையையும் வீரத்தையும் உணர்த்துங் கழல் என்னும் மொழியை அதற்கு முன்பெய்து கழற்சிங்கன் என்று சிறப்பித்துக் கூறிப் பாராட்டியுள்ளாரென்று உணர்க.

இனி , அடிகள் காலத்துப் பேரரசன் நரசிங்கவர்மனே என்பது வேறொரு சிறந்த சான்று கொண்டும் உறுதியெய்துகின்றது. அடிகளை இளமையில் வளர்த்தவன் திருநாவலூரில் வாழ்ந்த நரசிங்க முனையரையன் என்ற சிற்றரசன் என்பது பெரிய புராணத்தால் அறியப் படுகின்றது. முற்காலத்தில் பேரரசர்கள் தமக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் பட்டங்கள் வழங்குங்கால் தம் பெயர்களோடு இணைக்கப்பெற்ற பட்டங்களையே கொடுப்பது பெரு வழக்காயுள்ளது. இவ்வுண்மை கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இனிது புலப்படும். உதாரணமாக, இராசராச மூவேந்த வேளான், உத்தம சோழப்பல்லவராயன், முடிகொண்ட சோழமூவேந்த வேளான், சயங்கொண்ட சோழ விழுப்பரையன் என்னும் பட்டங்கள் நெடுமுடிவேந்தர்களுடைய பெயர்களோடு இணைக்கப்பட்டிருத்தல் காண்க. முனையரையன் என்ற பட்டத்திற்கு முன் பேரரசனது நரசிங்கன் என்னும் பெயர் இணைக்கப்பட்டு நரசிங்க முனையரையன் என்று சுந்தரமூர்த்திகளது வளர்ப்புத் தந்தையாகிய குறுநில மன்னன், வழங்கப்பட்டுள்ளான். ஆகவே, சுந்தரமூர்த்திகளை வளர்த்த நரசிங்க முனையரையன் என்பான் பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனுக்குத் திறை செலுத்திய ஒரு சிற்றரசனாதலின் இவ்வடிகள் இப்பல்லவ அரசன் காலத்தின ரென்பது உறுதியாதல் உணர்க.

இனி, இவ்வேந்தன் பேரரசனென்பது, 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் - கழற்சிங்க னடியார்க்கு மடியேன்' என்னும் அடிகளது திருவாக்கினால் நன்கு துணியப்படும். இதற்கேற்பச் சேக்கிழாரும் இவனைக் கோக்கழற்சிங்கர்' என்று கூறுகின்றார். 'கோ' என்னும் ஓரெழுத்தொருமொழி பேரரசனையே உணர்த்துமென்பது 'கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர்' என்ற அடியாலும் கோஇராசகேசரிவர்மன், கோப்பரசேகரிவர்மன், கோச்சடையவர்மன் 'கோமாறவர்மன்' என்னும் கல்வெட்டுத் தொடர் மொழிகளாலும் பெறப்படுகின்றது. ஆகவே, நம் இரண்டாம் நரசிங்கவர்மன் பேரரசனாதல் காண்க. உமாபதி சிவாசாரியார் இதனை நோக்காது இவ்வேந்தனைக் குறுநில மன்னர்களும் சேர்த்திருப்பது பொருந்தா தென்க.

இனி, இரண்டாம் நரசிங்கவர்மனது ஆட்சிக்காலம் கி. பி. 690 -க்கும் 710 -க்கும் இடைப்பட்டதாதலின் சுந்தரமூர்த்திகளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். எனவே, நம் சுந்தரமூர்த்திகள் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தருளிய பெரியாரென்பது வெளியாதல் காண்க. இவ்வடிகள் காலத்தினர்களான சோமாசிமாறர், விறன்மிண்டர், மானக் கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், பெரு மிழலைக்குறும்பர், கோட்புலியார், பூசலார், செருத் துணையார் என்னுஞ் சிவனடியார்கள் வாழ்ந்த கால மும் இதுவேயாகும்.

----
[1] தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார்
அன்னவர்களுடன் கூட வணைய அவ ருங்கூடி
மன்னுதிரு ஆலவாய் மணிக்கோயில் வந்தடைந்தார்.
      -- பெரியபுராணம், கழறிற்றறிவார், 92.
[2]. நாளுமின்னிசை யாற்றமிழ்பரப்பு
      ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளமீந்தவன் பாடலுக்கிரங்குந் தன்மையாளனை
      யென்மனக் கருத்தை
யாளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன்றனை
      யெண்கணமிறைஞ்சும்
கோளிலிப்பெருங் கோயில் உள்ளானைக் கோலக்காவினிற்
      கண்டு கொண்டேனே.
      - திருக்கோலக்கா, 8.
[3] பரந்தபாரிட மூரிடைப்பலிபற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினர்
தெரிந்த நான் மறையோர்க் கிடமாய் திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் காசு நித்தனல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீ ரடியேற்கு மருளுதிரே.
      - திருவீழிமிழலை , 8
---------

2. கம்பர் காலம்

இராமாயணப் பிரதிகளில் ஒரு தனிப்பாடல் காணப்படுகிறது.

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே.

என்பதாகும். இத்தகைய பாடலை வைணவர்கள் தனியன் என்று வழங்குவர். இப்பாட்டில் சகம் 807 - ஆம் ஆண்டில் இராமாயணம் கம்பரால் அரங்கேற்றப் பெற்றது என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே கி. பி. 885-ல் இவ்வரங்கேற்றம் நடைபெற்றதாதல் வேண்டும். இக்காலத்தை ஏற்றுக்கொள்வதற்கு இப்பாடலைத்தக்க ஆதாரமாகக் கொள்ள முடியவில்லை. கம்பரைக் குறிக்கு மிடத்து இப்பாடல் "கம்பநாடன்" என்று கூறுகின்றது. இவரை இராமாயணத் தனியன்களில் ஒன்று 'கம்ப நாடுடைய வள்ளல்' என்றும் அரசகேசரியார் தம் இரகுவமிசத்தின் பாயிரத்தில் 'கம்ப நாடன்' என்றும் கூறியிருப்பன வெல்லாம் பிற்காலத் தெழுந்த வழக்கே யாம். கம்பநாடு என்ற பெயருடன் முற்காலத்தில் ஒரு நாடு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்களிலாதல் செப்பேடுகளிலாதல் சிறிதும் ஆதாரமின்மை அறியத்தக்கது. எனவே இப்பாடல் பழைமை வாய்ந்ததும் அன்று; உண்மைச் செய்தியைக் கூறுவதும் அன்று.

கம்பரது இராமாயணத்தில் சீவக சிந்தாமணியிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்களும், சூளாமணி விருத்தமுறைகளும், ஓசை நயங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். ஆகவே, இவ்விரு காப்பியங்களுக்கும் பிற்பட்ட காலத்தவர் கம்பர் என்பது தேற்றம். இவ்விரு நூல்களும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலாதல், பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலாதல், இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது முடிபாகும். 'எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழு' என்னும் பாடலை ஏற்றுக்கொண்டால், கம்பர் சிந்தாமணிக்கும் சூளாமணிக்கும் முற்பட்ட காலத்தவர் ஆவர். இஃது உண்மைக்கு முரண்பட்ட முடிவு என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, இப்பாடலின் துணை கொண்டு கம்பர் காலத்தைக் காண முயலுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

இனி, இராமாயணத்திற் காணப்படும் அகச்சான்றுகளின் துணைகொண்டு இவர் காலத்தை ஆராய்ந்து துணிவது பொருத்தமுடையதேயாம். மருத்துமலைப் படலத்திற் காணப்படும்,

'வன்னி நாட்டிய பொன் மௌளி வானவன் மலரின்மே லோன்
கன்னி நாள் திருவைச் சேர்ந்த கண்ணனும் ஆளுங் காணிச்
சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப்
பொன்னி நாட் டுவமை வைப்பப் புலன் கொள நோக்கிப் போனான்.''

என்னும் பாடலில் 'தியாகவிநோதன்' என்ற சிறப்புப் பெயரால் ஓர் அரசன் குறிக்கப் பட்டுள்ளனன. இவ் வேந்தன் கி.பி. 1178 முதல் 1218 வரையில் ஆட்சி புரிந்த மூன்றாங்குலோத்துங்க சோழனே யாவன் என்று ராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்களும், அவர்களைப் பின்பற்றி ராவ்சாகிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டும் சான்றுகள் இரண்டினுள், இம்மன்னன் தியாகவிநோதன் என்ற சிறப்புப் பெயருடையவனா யிருந்தமையோடு 'வீரக்கொடியொடு தியாகக் கொடி யெடுத்து ' ஆட்சிபுரிந்தவன் என்றும் இவன் மெய்க்கீர்த்தி இவனைப் புகழ்ந்து கூறுவது ஒன்று; மற்றொன்று ஆவின் கொடைச்சகன் ஆயிரத்து நூறொழித்த - தேவின்' என்ற பழம் பாடற்பகுதியால் அறியப்படும் காலக் குறிப்பாகும். இவற்றுள் முன்னையது; எல்லாச் சோழ மன்னர்க்கும் பொதுவான சிறப்புடைச் செயலேயா மென்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. முதல் இராசாதிராச சோழன் 'தியாகமே அணியாகக் கொண்டவன் என்றும் [1], வீர ராசேந்திர சோழன் 'வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும் அரசாண்டவன் என்றும்,[2] அதிராசேந்திர சோழன் 'தியாகக் கொடி' யுடையவன் என்றும்,[3] முதற்குலோத் துங்க சோழன் 'வீரமுந் தியாகமும் விளங்கப் பார் மிசை' ஆண்டவன் என்றும் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. ஆகவே, சோழமன்னர்கள் எல்லோருமே தியாக விநோதர்களாக இருந்தனர் என்பதில் ஐயப்பாடு சிறிதும் இல்லை. ஆதலால் தியாகவி நோதன் என்ற தொடர் மூன்றாங்குலோத்துங்க சோழனையே குறிக்குமென்று கொள்வதற்கு இடமின்மை அறியற் பாலதாம்.

இரண்டாவது சான்றாகக் காட்டப்படும் பழம்படாலில் குறிக்கப்பெற்ற 'ஆயிரத்து நூறொழித்த' சகம் ஆண்டு, தொள்ளாயிரம் ஆகுமேயன்றி ஆயிரத்து நூறாகாது. எனவே, அதிற்கண்ட காலக்குறிப்பு , கி. பி. 978-ஆம் ஆண்டைக் குறிக்குமேயல்லாமல் கி.பி. 1178 ஆம் ஆண்டைக் குறிக்காது என்பது தேற்றம். ஆகவே, இரண்டாவது சான்றும் பொருந்தாமை காண்க. இது காறும் கூறியவாற்றால் கம்பர் இராமாயணம் பாடியது மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 1178-ஆம் ஆண்டன்று என்பது நன்கு தெளியப்படும்.

இனி, கம்பர், பிலநீங்கு படலத்திலுள்ள,

'புவி புகழ் சென்னிபே ரமலன் தோள் புகழ்
கவிகள் தம் மனையெனக் கனக ராசியும்
சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும்
அவிரிழைக் குப்பையு மளவி லாதது.'

என்ற பாடலில் 'அமலன்' என்னும் பரியாய நாமத்தால் ஒரு சோழமன்னனைக் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. இவ்வேந்தன் யாவன் என்று ஆராயுமிடத்து, சிவஞானி யாகிய கண்டராதித்த சோழர்க்கும், செம்பியன் மாதேவியார்க்கும் புதல்வனாகத் தோன்றிய உத்தம சோழனாக இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இட முளது. உத்தமன் என்ற பெயரையே அமலன் என்னும் பரியாயப் பெயரால் கம்பர் குறித்துள்ளாராதல் வேண்டும். இவன் கி. பி. 970 முதல் 985 வரையில் ஆட்சி புரிந்தவன் . 'ஆவின் கொடைச்சகன்' என்று தொடங்கும் பழம் பாடலில் சொல்லப்பட்டுள்ள சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகும் என்பது முன்னரே விளக்கப்பட்டது.

இவ்வாண்டு கி. பி. 978 ஆகும். எனவே, கம்பர் இராமாயணம் பாடிய காலமாக அறியப்படும் கி.பி. 978-ஆம் ஆண்டு உத்தம சோழன் ஆட்சியின் நடுவில் அமைந்திருத்தல் அறியத்தக்கது. ஆகவே, கி. பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பர் இருந்தனர் என்பது தெள்ளிது. தமிழ்த்தாயின் அருந்தவப் புதல்வர்களாய், கவிச்சக்கரவர்த்திகள் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கியவர்கள், கம்பர், சயங்கொண்டார், ஓட்டக்கூத்தர், கச்சியப்பமுனிவர் என்ற நால்வருமே யாவர். இவர்களுள் கம்பரே காலத்தால் எல்லோருக்கும் முற்பட்ட கவிச் சக்கரவர்த்தியாவர் என்பது தேற்றம்.
---------
[1]. S. I. I., Vol. V, No. 465
[2] Epigraphia Indica, Vol. XVI. No. 38.
[3]. S. I. I., Vol. VIII. No. 4.
[4]. S.1. I., Vol. V, No 1003
---------

3. நம்பியாண்டார் நம்பி காலம்

நம்பியாண்டார் நம்பியென்பார் சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள திருநாரையூரிலிருந்த ஓர் ஆதிசைவ அந்தணராவர். இவர் இளமையிற் பொல்லாப்பிள்ளை யாரை வழிபட்டு அருள் பெற்றவர் என்பதும் இராசராச அபயகுலசேகரன் வேண்டிக்கொண்டவாறு சைவசமய குரவர்களும் பிற சிவனடியார்களும் பாடியருளிய பதிகங்கள் எல்லாவற்றையும் தேடிப் பதினொரு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தவர் என்பதும் திருமுறை கண்ட புராணத்தால் அறியப்படுகின்றன.[1] அந்நூலிற் குறிப்பிடப்பெற்ற இராசராச அபயகுலசேகரன் என்பான் முதல் இராசராச-சோழனாவன் என்றும் அவ்வேந்தனே நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு திருமுறைகளைத் தேடிக்கண்டு, பின்னர் அவற்றைத் தொகுப்பித்தவன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுபற்றியே அம்மன்னனும் திருமுறைகண்ட சோழன் என்று வழங்கப்படுகின்றன. தமிழகச் சைவசமய வரலாற்றில் உறுதிப்படுத்தப் பட்டதாகக் கருதப்படும் இக்கொள்கையிற் சில ஐயங்கள் தோன்றுவதால் இதனை மீண்டும் ஆராய்வது இன்றியமையாததாகும்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்கள் பதினோராந்திருமுறையிற் காணப்படுகின்றன. அவற்றுள், திருத்தொண்டர் திருவந்தாதி என்பதும் ஒன்றாகும். அது, சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பாடுவதற்கு ஆதாரமாகக்கொண்ட நூல்களுள் ஒன்று. அவ்வுண்மையை,

''அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்த நாதனாம் நம்பியாண் டார் நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்'' [2]

என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் நன்கறியலாம். எனவே, திருத்தொண்டர் வரலாற்றை மிகச் சுருக்கமா கக் கூறும் வழி நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பியினால் இயற்றப்பெற்றது என் பதிற் சிறிதும் ஐயமில்லை. அந்நூல், தொகையடியார் ஒன்பதின்மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எழு எழுபத்திரண்டு சிவனடியார் வரலாற்றையும் எண்பத் தொன்பது இனிய பாடல்களிற் கூறுகின்றது. தனியடியார்களை அறுபத்து மூவர் என்று கணக்கிட்டு முதலில் உணர்த்தியவர் நம்பியாண்டார் நம்பியேயாவர்.

இப்பெரியார் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், புகழ்ச்சோழர் , இடங்கழியார், கோச்செங்கட் சோழர் ஆகிய அடியார்களைப் பற்றிய பாடல்களில் தம் காலத்துச் சோழமன்னன் ஒருவனைக் குறிப்பிட்டுள்ள னர். தம்மை அன்புடன் ஆதரித்துப் போற்றிவந்த அரசர், வள்ளல் முதலானோரின் பெயர்கள் என்றும் நின்று நிலவுமாறு அவர்களைத் தம் நூல்களிற் புகழ்ந்து பாடிவைப்பது நம் தமிழ் நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் வழக்கம் என்பது தொன்னூலா-ராய்ச்சியுடையார் யாவரும் அறிந்த தொன்றாம். அத்தகைய செயல் புலவர்களின் நன்றி மறவாமையாகிய அருங்குணத்தை உணர்த்தும் எனலாம்.

பாரதவெண்பாவின் ஆசிரியர் பல்லவ அரசனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மனையும், கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பர் வெண்ணெய் நல்லூர்ச் சடையவள்ளலையும், சேக்கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்க சோழனை யும், புகழேந்திப் புலவர் முரணை நகர்ச் சந்திரன் சுவர்க்கி யையும், வில்லிபுத்துராழ்வார் கொங்கர் கோமானாகிய வரபதியாட் கொண்டானையும், அருணகிரிநாதர் விசய நகரவேந்தனான இரண்டாம் தேவராயனையும், துறை மங்கலம் சிவப்பிரகாச முனிவர் அண்ணாமலை ரெட்டி யாரையும் நன்றி பாராட்டு முறையிற் புகழ்ந்து பாடி யிருத்தலை அப்புலவர் பெருமான் இயற்றியுள்ள நூல்களிற் காணலாம்.

சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன் என்ற சோழ மன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந் தாதியில் மூன்று பாடல்களிற் பாராட்டியுள்ள செய் தியை அந்நூலை ஒருமுறை படிப்போரும் உணர்ந்து கொள்ளலாம் அப்பாடல்கள்,

'புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிப்படுத்த
குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன்னிய புகழ்ச் சோழன் தென்பர் நகுசுடர்வாள்
வலமன்னிய எறிபத்தனுக் கீந்ததொர் வண்புகழே' [திரு. அ. 50]

'சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வ மெனப்பறை போக்
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே' [௸. 66]

'செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுதல் என்பர் நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணானெனும் நித்தனையே' [௸. 82]

என்பனவாம் இவற்றில் அச்சோழன் கொங்குநாட்டி லிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தவன் என்றும், ஈழ நாட்டை வென்றவன் என்றும், புகழ்ச்சோழர் கோச்செங்கட்சோழர் ஆகிய அடியார்களைத் தன் முன்னோர்களாகக் கொண்டவன் என்றும் இவ்வாசிரியர் கூறியது உணரற்பாலதாகும். ஆகவே இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி அவ்வேந்தன் யாவன்? என்பது ஆராயற்பாலதாம்.

சோழமன்னருள் ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன் சுந்தரசோழன் மூத்தமகனும் முதல் இராசராசசோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்த சோழன் ஆவன். அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர். அவன் தன் தந்தையினாட்சியில் இளவரசனாக விருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனான் என்பது தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரந் தாலுகாவிலுள்ள உடையார்குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால்[3] அறியப்படுகின்றது. எனவே, அவ்வரசிளங்கோ தன் இளமைப்பருவத்திற் கொலை யுண்டிறந்தமை தெள்ளிது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து சிவலோக மெய்தினான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில், சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்ததாக நம்பியாண் டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற்பராந்தக சோழன் தந்தையும் கி. பி. 870 முதல் 907 வரையில் சோழமண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய முதல் ஆதித்த சோழனே யாவன். இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய காரணம் பற்றித் தொண்டைநாடுபரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனாயின் ராசகேசரிவர்மன் [4] ' என்று வழங்கப் பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலே தான் சோழராச்சியம் உயர் நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக்கொண்டான் என்று கொங்கு தேச ராஜாக்கள்' என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது[5] . ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய இம்மன்னர் பிரான்[6] அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந் திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக அமைத்த சிவபக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்[7] கூறுவது ஈண்டு அறியத்தக்கது.

இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற்பராந்தக சோழன் என்பான் தில்லைச்-சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச்செப்பேடுகளும்[8] திரு வாலங்காட்டுச் செப்பேடுகளும் [9] உணர்த்துகின்றன. கொங்குதேச ராசாக்கள் சரிதமும் இச்செய்தியை உறுதிப் படுத்துகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக் காலத்திலும் தில்லைச்சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்த முடையதாகும். அங்ஙனமே, முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44-ம் ஆண்டாகிய கி. பி. 1114ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக் கோயிலைப் பொன்வேய்ந்தனள் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று[10] அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரம் சோழன் என்பான் கி.பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன்வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது[11]. அவன் படைத்தலைவனாகிய மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்று அங்குள்ள கல்வெட்டுகளுள் ஒன்று தெரிவிக்கின்றது.[12] விக்கிரம சோழன் மகனாகிய இரண்டாங்குலோத்துங்க சோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன்வேய்ந்தான் என்று இராசராச சோழனுலா உணர்த்துகின்றது.[13]

இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கு மிடத்து, சோழ மன்னர் ஆட்சிக்காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன்முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன் வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயாவன் என்பது நம்பியாண்டார் நம்பியின் திருவாக்கினால் வெளியாகின்றது. இப்பெரியார், தம் காலத்தில் இவ்வேந்தன் அவ்வரும்பணியாற்றிய காரணம் பற்றி அச்செயலைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரை யூரிலிருந்தவராதலின் இவ்வரசன் தில்லையிற் புரிந்த அத் திருத்தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருத்தலும் இயல்பேயாம்.

ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக்கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவ ராதல் வேண்டும். இக்கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுதலால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம் பெற்ற இவன் புதல்வன் முதற் பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரையில் இருந்திருத்தல் கூடும். [14].

---
[1]. திருமுறைகண்ட புராணம், பாடல்கள் 24-29 க. வெ. -2
[2]. பெரிய புராணம், திருமலைச்சிறப்பு, பா. 39.
[3]. Epigraphia Indica Vol. XXI No 27.
[4]. South Indian Inscriptions. Vol III No.89.
[5]. செந்தமிழ் - தொகுதி 16, பக். 394.
[6]. முதற்பராந்தகன் கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டிற் காணப்படுதலாலும் அவன் அதனைக் கைப்பற்றியதாகக் கூறிக் கொள்ளாமையாலும் அந்நாடு அவன் தந்தை முதல் ஆதித்தனால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
[7]. Ep. Ind. Vol. XV, No.5. Verse 18.
[8]. ibid. Vol. XXII, No. 34. Verse 17.
[9]. S. I. I. Vol. III.No 205. Verse 33
[10].Ep. Ind. Vol. V. No. 13. C.
[11]. S.I.I. Vol.V. No. 458.
[12]. Ibid. Vol. IV. No. 225.
[13]. இராசராச சோழன் உலா, 59-66.
[14]. இவர் முதல் இராசராசசோழனைத் தம் திருத்தொண் டர் திருவந்தாதியிற் குறிப்பிடாமையொன்றே இவர் அவ் வேந்தன் காலத்தவரல்லர் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும்.
--------------

4. தமிழ் முனிவர் அகத்தியர்

தமிழ் முனிவராகிய அகத்தியனாரின் படிமங்கள் நம் தமிழகத்தில் கருங்கற் கோயில்களாகவுள்ள சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் இருத்தலை இன்றுங் காண லாம். அக் கோயில்களைக் கட்டுவித்த பண்டைத் தமிழ் வேந்தர்கள், அவற்றில் அகத்தியனாரின் படிமங்களை முற்காலத்திலேயே எழுந்தருளிவித்தமைக்குக் கார ணம், இம் முனிவர் பெருமானுக்கும் தமிழ் நாட்டிற் கும் ஏற்பட்டிருந்த தொன்மைத் தொடர்பே எனலாம். அத்துணைத் தொன்மைத் தொடர்புடையவராகிய இவர். வடக்கினின்றும் தெற்கே வந்து நம் தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்பதுதான் வடநூல்களின் முடிபு. ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய் முக்காலங்களும் உணர்ந்து நிறைமொழி மாந்தராக நிலவும் இருடிகள் யாண்டும் எளிதிற் போதற்கும் இருத்தற்கும் ஆற்றல் படைத்தவர் ஆவர். எனவே, இவர் வடபுலத்திலிருந்து தென்புலம் வந்திருக்கலாம்; தென்புலத்திலிருந்து வடபுலஞ் சென்று மறுபடியும் தென்புலத்திற்குத் திரும்பியிருக்கலாம்; கடல் கடந்து கீழ்புலஞ் சென்றிருக்கலாம். ஆகவே, இவர் நாடு யாது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டப்படுவதன்று. இனி தொன்னூல்கள் இவரைப்பற்றிக் கூறும் வரலாறுகளை ஆராய்ந்து காண்பாம்.

1. அகத்தியனாரும் தமிழ்நாடும்

சிவபெருமான் மலைமகளை மணந்த காலத்தில் எல் லோரும் இமயத்தில் கூடியிருந்தனராக, அப்பொறை யாற்றாமல் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்து விடவே, இறைவன் அகத்தியனாரைத் தெற்கின்கண் சென்று பொதியின் மலையில் இருக்குமாறு கூறியருளினர். இவரும் அங்ஙனமே போய்ப் பொதியிலில் இருத் தலும் புவியும் சமநிலை எய்தியதாம். இது கந்த புராணத்திற் கண்ட வரலாறாகும்.

இனி. அகத்தியனார் தென்றிசைக்கு வந்த வரலாற்றைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளனர். அது தேவரெல் லாருங்கூடி யாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கை யாருழைச்சென்று காவிரியாறை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதங்கியாருழைச்சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடு முடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரை யும் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தவருவத் தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினர் என்பதாம். அகத்தியனாரைப் பற்றித் தமிழ் நாட்டில் தம் காலத்தில் வழங்கிவந்த செய்திகள் சிலவற்றையே ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப் பாயிர உரையில் இவ்வாறு குறிப்பிட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இத் தமிழ் முனிவரைப்பற்றிய செய்திகள் நம் தமிழகத்தில் அந் நாளில் யாண்டும் பரவியிருந்தனவாதல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ள அகத்தியனார் வரலாற்றில் சிவபெருமான் திருமணம் சொல்லப்பட வில்லை; எனினும், வடதிசையின் தாழ்வு நீங்க இவர் தென்னாடு போந்தமையும் வேறுசில செய்திகளும் அதில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது.

இம் முனிவர்பிரான், தென்றிசை வந்தபோது காவிரியைக் கொணர்ந்தனர் என்றும் சமதக்கினி முனிவர் புதல்வர் திரண தூமாக்கினியாரை அழைத்து வந்தனர் என்றும் புலத்திய முனிவரின் தங்கையார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப மணந்து வந்தனர் என்றும் திருமால் வழியினரான அரசர் பதினெண்மரோடு பதினெண்குடி வேளிரையும் அழைத்து வந்து காடுகளை யழித்து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்தனர் என்றும் பிறகு இராவணனை இசையில் வென்று அவனைச் சார்ந்தோர் அப் பக்கங்களில் இயங்காதவாறு செய்து விட்டனர் என்றும் நச்சினார்க் கினியர் அவ்வுரைப் பகுதியில் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாம்.

2. அகத்தியனார்க்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர்

அகத்தியர் இறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு தமிழ் நாட்டிற்குப் புறப்படுங்கால், தென்னாடு தமிழ் மொழி வழங்கும் நாடு என்றும் அங்குள்ள மக்கள் அம் மொழியில் வல்லவர்கள் என்றும் அவர்கள் கேட்பவற் றிற்குத் தாம் விடை கூறுதல் வேண்டும் என்றும் ஆதலால் தமக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினராம். இறைவனும் இவர் வேண்டியவாறு இவர்க்கு அவ்விலக்கணத்தைக் கற்பித்தனர் என்று திருவிளையாடற் புராணம் உணர்த்துகின்றது. இவ் வரலாற்றால் சிவபெருமானே அகத்தியர்க்கு முதல் ஆசிரியர் என்பது நன்கு புலப்படுதல் காண்க. காஞ்சிப் புராணமும் இங்ஙனமே கூறுவது நோக்கற்பாலது.

கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பரும் இராமாயணத்துள் அகத்தியப் படலத்திலுள்ள

''உழக்குமறை நாலினும் உயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி
நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்.''

என்ற பாடலில் சிவபெருமான் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்திய செய்தியைக் குறிப்பிட்டிருத்தல் உணரற் பாலதாம்.

இனி , தொல்காப்பியப் பாயிர விருத்தியில் ஆசி ரியர் சிவஞான முனிவர் தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிற எல்லையும் உளவாகவேங்கடத்தை எல்லையாகக்கூறினார்; அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள்வரைப் பென்னும் இயைபு பற்றி என்பது என்று கூறியுள்ளனர். இதனால், அகத்தியர் குன்றமெறிந்த குமரவேளிடத்தும் ஒரு காலத்தில் தமிழ் இலக்கணம் கற்றிருத்தல் வேண்டும் என்பது அறியக் கிடக்கின்றது. பழனித்தல புராணமும் இதனை வலியுறுத்தல் காண்க.

பெளத்த சமயத்தினரான பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் என்பார், தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தில் அகத்தியர் அவலோகி தன்பால் தமிழ் கேட்டனர் என்று கூறியுள்ளனர். அச் செய்தியை

"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியிம்பிய தண்டமிழ்''

என்ற பாடற் பகுதியால் நன்கறியலாம்.
இவற்றால் அகத்தியர்க்குத் தமிழறிவுறுத்திய ஆசிரியர் யாவர் என்பது பற்றி நம் தமிழ்நாட்டில் அக் காலத்தில் வழங்கிய சில செய்திகள் வெளியாதல் காண்க.

3. அகத்தியனாரின் இல்லக்கிழத்தியாரும் புதல்வரும்

அகத்தியரின் மனைவியார் உலோபாமுத்திரையார் ஆவர். இவ்வம்மையார் புலத்திய முனிவரின் தங்கை யார் என்றும் அவர் கொடுப்ப, இவர் தமிழ்நாடு போத ருங்கால் மணம் புரிந்து கொண்டு வந்தனர் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளமை முன்னர் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. கந்தபுராணத்துள் அகத்தியப் படலத்தில் இவ்வுலோபா முத்திரையார் விதர்ப்ப நாட்டு மன்னன் ஒருவனுடைய புதல்வியார் என்று சொல்லப் பட்டிருக்கின்றது. இத்தகைய வேறுபாடுகள் எல்லாம் அவ்வரலாறுகளின் பழமையையே வலியுறுத்துவனவாகும். காலஞ் செல்லச் செல்ல வரலாறுகள் சிறிது வேறுபட்டும் புனைந்துரை வகையாற் பெருகிக் கொண்டும் போதல் இயல்பேயாம்;

இனி, அகத்தியர்க்கு உலோபாமுத்திரையார்பால் மெய்யறிவு வாய்ந்த புதல்வர் ஒருவர் பிறந்தனர் என்றும் அவர்க்குச் சித்தர் என்னும் பெயரிடப்பெற்றது என்றும் கந்தபுராணம் கூறுகின்றது. இச் செய்திகளை,

''அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கணீங்கி
மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பகோன் பயந்தலோபா
முத்திரை தனைமுன் வேட்டு முதுக்குறைத் திண்மைசான்ற
சித்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான்.''

என்ற கந்த புராணப் பாடலால் நன்கறியலாம்.

4. அகத்தியனார் தமிழ் நாட்டில் புரிந்த செயல்கள்

பண்டைக்கால முதல் சோழவளநாடு சோறு டைத்து' என்று பாராட்டப் பெற்று வருகின்றது. அதற்குக் காரணம், அந்நாடு வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியால் வளம் பெற்றுச் சிறப்பெய்தி யிருப்பதுதான். அதுபற்றியே அந்நாடு காவிரிநாடு எனவும், பொன்னி நாடு எனவும் அறிஞர்களால் புகழப் பெற்றுளது. அத்தகைய பெருமை வாய்ந்த காவிரி யாறு, அகத்தியர் தென்னாட்டிற்கு வந்து, மேற்குத் தொடர்ச்சி மலையாகிய மலையமலையில் தங்கியிருந்த காலத்தில் காந்தன் என்ற ஒரு சோழ மன்னன் வேண்டிக் கொண்டவாறு இம்முனிவரது அரும்பெரு முயற்சி யினால் தான் வெட்டப்பெற்றது என்பது அறியற் பாலதாம். அகத்தியர் கங்கையாருழைச் சென்று காவிரி யாரை வாங்கிக்கொண்டு வந்தார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருப்பது இவ்வரலாற்றையே குறிப்பாக உணர்த்துவதோடு தென்னாட்டில் ஓடுங் காவிரியாறு வடநாட்டிலுள்ள கங்கையைப் போல் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை உறுதிப் படுத்துவதும் ஆகும். அன்றியும் புலவர் பெருமானாகிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தாம் இயற்றிய மணிமேகலையில்,

''செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை.''

என்று இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடக் கூறியுள் ளமை நோக்கத்தக்கது. எனினும், அகத்திய முனிவர்க் கும் காவிரியாற்றிற்குமுள்ள தொடர்பை அவ்வாசிரி யர் எடுத்துரைத்திருப்பது நினைவில் வைத்தற்குரியது.

பிறகு, இம்முனிவர் பெருமான் பாண்டி நாடு சென்று பாண்டி வேந்தர்க்குக் குலகுருவாக அமர்ந் தனர். இச்செய்தி, கி. பி. பத்தாம் நூற்றாண்டில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் வரையப்பெற்ற சின்னமனூர்ச் செப்பேடுகளின் வட மொழிப் பகுதியில் 'அகஸ்த்ய சிஷ்ய: ' என்றும், தமிழ்ப் பகுதியில் பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது' என்றும் குறிக்கப்பட்டுள்ளவற்றால் நன்கு வெளியாகின்றது.

இறையனார் அகப்பொருளுரையில் மேற்கோளா கக் காட்டப்பெற்ற பாண்டிக் கோவைப் பாடல் ஒன்று, உசிதன் என்ற பாண்டி வேந்தன் ஒருவன் அகத்தியர் பால் தமிழிலக்கணம் கேட்டனன் என்று உணர்த்து கின்றது. இதனை.

'அரைதரு மேகலை யன்னமன்னாயன் றகத்தியன் வாய்
உரைதரு தீந்தமிழ் கேட்டோ னுசிதன்''

என்னும் பாடற்பகுதியால் அறியலாம்.

இனி, வீரபாண்டியன் கல்வெட்டொன்று, பாண்டி மன்னன் ஒருவன் திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ் நூல் தெரிந்தருளினான்' என்று கூறுவது குறிப்பிடத்தக்க தாகும். அன்றியும் காளிதாசர் என்ற மாபெருங் கவிஞர், அகத்தியருடைய சிஷ்யன் பாண்டியன் எனத் தம் இரகுவமிசத்தில் கூறியுள்ளார் என்று தெரிகிறது.

இவற்றால் அகத்தியர்க்கும் பாண்டியர்க்குமுள்ள தொடர்பினைத் தமிழ் நூல்களும் வடமொழி நூல் களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் நன்கு விளக்கி நிற்றல் காண்க.

இனி. இம்முனிவர்பிரான் தலைச்சங்கப் புலவருள் ஒருவராயமர்ந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று இறையனாரகப் பொருளுரை அறிவிக்கின்றது. அவ்வுரையிற் காணப்படும் தலைச்சங்க வரலாறு, தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீ இயனார் பாண்டியர்கள். அவருள், தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும். குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகனாரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ் நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரியும் என இத்தொடக்கத்தன. அவர் நாலா யிரத்து நானூற்று நாற்பத்திற்றியாண்டு சங்கமிருந்தா ரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்-தொன்பதின்மர் என்ப, அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்பதாம். இதில் கண்ட செய்திகள் நம் அறிவாற் றலுக்கு அப்பாற்பட்டு நிற்றலின் இவற்றை ஆராய்ந்து முடிவு கூறுதல் எளிதன்று. எனினும், பாண்டிவேந்தர்கள் தம் தலை நகரில் நிறுவி நடத்தி வந்த தமிழ்க் கழகத்தில் அகத்தியனார் முதற் புலவராயமர்ந்து தமிழாராய்ந் தனர் என்பதும் இவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் அக்கழகத்தார்க்கு இலக்கண நூலாக இருந்தது என்பதும் நன்கு துணியப்படும்.

5. அகத்தியனாரின் மாணவர்கள்

அகத்தியர் புலவர்களுடன் தமிழாராய்ச்சி செய்த மையோடு மாணவர் பலர்க்கும் தமிழ் அறிவுறுத்தினார். இம் முனிவரிடத்து இயற்றமிழ் நூல் கேட்ட மாணவர் பன்னிருவர் ஆவர். அவர்கள், தொல்காப்பியனார், அதங்பிகனார், வாய்ப்பியனார். பனம்பாரனார், கழாரம்பனார். அவிநயனார், காக்கைபாடினியார் , நற்றத்தனார். வாமனனார் என்போர். இன்னோர் பன்னிருவரும் தனித் தனி நூல் இயற்றியமையோடு எல்லோருஞ் சேர்ந்து புறப்பொருள் பன்னிருபடலம் என்னும் நூல் ஒன்று இயற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது. இதனை,

'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலையிருந்த சீர்சால் முனிவரன்
தன் பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்'

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தினால் நன்குணரலாம். அந்நூல் இந்நாளில் யாண்டும் கிடைக்காமையால் அழிந்து போயிற்று என்பது ஒருதலை. எனினும் அதன் வழிநூலாக இக்காலத்தில் கிடைத்திருப்பது, சேரமன்னராகிய ஐயனாரிதனார் என்பார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் அரிய நூலேயாம். மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் பன்னிருவருள், தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுதான் இந்நாளில் உளது. மற்றையோர் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. எனவே இப்போதுள்ள நூல்களுள் இத்தொல்காப்பியமே மிகப் பழமை வாய்ந்தது என்று கூறலாம். இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர், அகத்தியரின் மாணவருள் ஒருவரும் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவரும் ஆகிய பனம்பாரனார் ஆவர்.

இனி, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்தில் தேவ இருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவமுனி...... செய்த இசை நுணுக்கமும்' என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளமையால் அகத்தி யருடைய மாணாக்கருள் சிகண்டியார் என்பவர் ஒருவர் என்பதும் அவர் 'இசை நுணுக்கம்' என்னும் இசைத் தமிழ் இலக்கணம் ஒன்று இயற்றியவர் என்பதும் தெள்ளிதிற் புலனாகின்றன. பிற ஆசிரியர்கள் கூறியுள்ள அகத்தியர் மாணவர் பன்னிருவருள் சிகண்டியார் பெயர் காணப்படவில்லை. ஆகவே இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றுக்கும் வெவ்வேறாகப் பன்னிரண்டு மாணாக்கர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்று எண்ணுதற்கு இடம் உளது. அன்றியும், இம் முனிவர் பெருமான் பால் மருத்துவம், சோதிடம், முத லானவற்றைக் கற்ற மாணவர் பலர் இருந்தனர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இவர் சித்தர் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தனர் என்றும் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் சித்தர் மருத்துவமும் சோதிடக் கலையும் இம்முனிவராலும் இவரதுமாணவராலும் யாண்டும் பரவி வளர்ச்சியெய்தி வந்தமை குறிப்பிடத் தக்க தொரு நிகழ்ச்சியாகும்.

6. அகத்தியனாரது சமயக் கொள்கை

இம் முனிவர் பிரான் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபாடு புரிந்துள்ளமைக்கு நம் தமிழகத்தில் எத்துணையோ ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிவபெருமானிடத்தும் முருகவேள்பாலும் இவர் தமிழ் இலக்கணம் கற்றனர் என்று தொன்னூல்கள் கூறுஞ் செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. தென் பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தைச் சிவலிங்கமாக்கி இவர் வழிபட்டனர் என்பது பண்டைநாள் முதல் வழங்கிவரும் ஒரு வரலாறு ஆகும். இச்செயலால் இவரது சிவபக்தியின் மாண்பு எத்தகையது என்பது இனிது புலப்படுதல் காண்க. வேதாரண்யம் என்று வழங்கும் திருமறைக்காட்டிற்கு அண்மையில் அகத்தியான்பள்ளி என்னும் சிவஸ்தலம் ஒன்றுளது. அது, சைவசமயகுரவராகிய திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதாகும். திருமறைக்காட்டில் சிவபெருமானது திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்த அகத்தியனார் தங்கியிருந்த இடமாதல் பற்றி அத்திருப்பதி அகத்தியான்பள்ளி என்ற பெயர் பெற்றது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அங்கு அகத்தியர் திருவுருவமும் இருத்தல் அறியத் தக்கது. பொதியின் மலையிலும் சிவபெருமானது திருமணக் கோலத்தை ஒருமுறை இவர் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப பொதியின் மலையிலும் அகத்தியாச்சிரமம் என்ற பெயருடன் ஒரு கோயிலும் உளது. தமிழ் நாட்டில் பல சிவன் கோயில்களில் அகத்தியர் வந்து வழிபட்ட வரலாறுகள் ஆங்காங்குக் கூறப் படுகின்றன. அவ்விடங்களில் அகத்தியர் திருவுருவங் களும் வைக்கப்பட்டிருக்கின்றன. கி. பி. ஏழாம் நூற் றாண்டின் இறுயில் காஞ்சிமாநகரில் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிம்மவர்மனால் எடுப்பிக்கப்பெற்ற கைலாயநாதர் ஆலயத்தின் தெற்குப்பிரகாரத்தில் உள்ள அகத்தியர் கோயிலே தமிழ் நாட்டு அகத்தியர் கோயில் களுள் பழமை வாய்ந்ததாரும். ஆகவே, இவரது திருவுருவம் சிவாலயங்களில் எழுந்தருளிவித்து வழிபாடு செய்யப்பட்டிருத்தல் ஒன்றே இவரது சிவபக்தியையும் பெருமையையும் நன்கு புலப்படுத்தும் எனலாம்.

இனி, சைவ சமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், சிவபெருமான் அகத்தியர்க்கு அருள் புரிந்த சிறப்பைத் திருநின்றியூர்ப் பதிகத்திலுள்ள ஒரு பாடலில் கூறியுள்ளனர். அது.

"வந்தோ ரிந்திரன் வழிபட மகிழ்ந்து
      வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்திமூன்றிலுந் தாபர நிறுத்திச்
      சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
சிந்துமாமணி யணிதிருப் பொதியிற்
      சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த்த திருமகள் மருவுஞ்
      செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.''

என்பதாம்.

7. அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்னும் நூலைப் பற்றிய சில குறிப்புகள் :

இம்முனிவர்பிரான் இயற்றிய அகத்தியம்' என்ற நூல் இப்போது காணப்படவில்லை. எனவே அந்நூல். ஒன்று இருந்ததோ இல்லையோ என்ற ஐயப்பாடு நிகழ்வது இயல்பேயாம். ஆனால் அந்நூல், தலை இடை கடை என்னும் மூன்று சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்த தென்று இறையனாரகப்பொருளுரை கூறுகின் றது. இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலா யிருந்தது என்று அவ்வுரை கூறுகின்ற தொல்காப்பியம் இப்போதும் இருப்பது யாவரும் அறிந்ததேயாம். அவ்வாறிருக்க, அவ்வுரையால் அறியப் படும் அகத்தியம் என்னும் நூல் இப்போதில்லாமையால் முன்பும் இருந்திலது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. தொல்காப்பியத்திற்கு உரைகண்ட ஆசிரியர் பலரும் தம் உரைகளில் அகத்தியத்தைக் குறிப் பிட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூல் மயிலைநாதர் உரையிலும், அந்நூல் கூறப்பட்டிருக்கின் றது. அன்றியும், அவ்வுரையாசிரியர் எல்லோரும் தம் உரைகளில் பல அகத்தியச் சூத்திரங்களை மேற்கோள்க ளாக எடுத்துக் காட்டியுள்ளனர். புறப்பொருள் பன்னிரு படலப்பாயிரமும்,

'வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக் காகென
வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்திய னென்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்'

என்று அகத்தியத்தைக் குறிப்பிடுவது உணரற்பால தாகும். எனவே, அந்நூல் முற்காலத்தில் வழங்கிவந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க.

இனி, தொல்காப்பிய வுவமை யியல் இறுதிச் சூத்திரத்தின் உரையில், 'அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் என்று பேராசியர் கூறியிருப்பதால் அந்நூல், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணமாயிருந்தது என்பது நன்கு பெறப்படும் அன்றியும், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில், 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாயுள்ள தொன் நூல்களும் இறந்தன' என்று அடியார்க்கு நல்லார் உரைத்திருப்பதால் அவ்வுண்மை வலியுறுதல் காண்க அகத்தியர்பால் இசைத் தமிழ் கற்ற சிகண்டியார் என்பார் 'இசை நுணுக்கம்' என்னும் நூல் எழுதியுள்ளனர். என்பது முன்னர் விளக்கப்பெற்றது. ஆகவே, அகத்தியனார் முத்தமிழிலும் புலமையுடையவர் என்பது வெளிப்படை. எனவே, இம்முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணம் என்பது நன்கு துணியப்படும்.

8. அகத்தியனாரும் கீழ்நாடுகளும்

இந்தியாவிற்குக் கிழக்கேயுள்ள காம்போசம் (கம்போடியா ) இந்து சீனம், ஜாவா என்ற நாடுகளில் அகத்தியரைப்பற்றிய செய்திகள் கிடைத்தலால் அந்நாடுகளுக்கும் இம்முனிவர்க்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. கி.பி. 732-ஆம் ஆண்டில் சஞ்சயன் என்ற வேந்தன் ஒருவன் ஜாவாவிலுள்ள ஒரு குன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று உலகிற்கு நலமுண்டாகுமாறு கட்டினான் என்று அந்நாட்டிற் காணப்படும் ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. ஜாவாவில் ஏற்பட்ட சிவவழிபாடு குஞ்சர குஞ்ச நாட்டிலிருந்து வந்தது என்று அக் கல்வெட்டு அறிவிக்கின்றது. குஞ்சரகுஞ்சநாடு என்பது பாண்டி நாடு என்றும் அந்நாட்டிலிருந்த அகத்திய முனிவரே ஜாவாவில் சிவ வழிபாட்டையுண்டு பண்ணியவர் என்றும் பிறகு அந்நாட்டரசர்கள் , சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கினர் என்றும் ஆராய்ச்சி யில் வல்ல அறிஞர்கள் கூறுகின்றனர். கி.பி. 760- ல் ஜாவால் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஓர் அரசன் அகத்தியருக்குக் கோயில் ஒன்று கட்டி அதில் இம்முனிவருடைய கருங்கற்படிமத்தை எழுந்தருளு வித்தான் என்று உணர்த்துவதோடு அங்கு இவரது மரப்படிமம் ஒன்று முன்னர் இருந்ததென்றும் கூறுகின்றது. ஆகவே ஜாவாவில் சிவன் கோயில்களும் அகத்தியர் கோயில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்தன என்பதும், அவற்றை அந்நாட்டு வேந்தர்கள் பெரிதும் போற்றி வந்தனர் என்பதும் கல்வெட்டுகளால் நன்கு வெளியாகின்றன.
---------------

5. வாதவூரடிகள் காலம்

சில அறிஞர்கள் மணிவாசகப் பெருமான் தேவாரம் பாடிய மூவர்க்கும் முன் வாழ்ந்தவர் என்று கருதுகின்றனர்.

திருநாவுக்கரசர் திருவாரூர்ப்பதிகத்தில் 'நரியைக் குதிரை செய்வானும்' எனவும், திரு விசய மங்கைப் பதிகத்தில் குசையும் அங்கையிற் கோசமுங் கொண்ட வவ்வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே' எனவும், திருப்பூவணப் பதிகத்தில் வையைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந்தோன்றும்!' எனவும், தனித்திருத் தாண்டகத்தில் குடமுழநந் தீசனை வாசனாகக் கொண்டார்' எனவும் கூறியிருப்பவை மாணிக்கவாசகர் வரலாற்றுப் பகுதிகளையுணர்த்தும் என்பது அவர்கள் முடிபாகும்.

திருவாரூர்ப் பதிகத்தில் திருநாவுக்கரசர் தம் காலத்திற்கு முன் நிகழ்ந்ததோர் அரிய நிகழ்ச்சியை உணர்த்துவதாயிருந்தால் நரியைக் குதிரைசெய்வானும் என்று கூறாமல் நரியைக் குதிரை செய்தானும் தானும்' என்றுரைப்பதோடு மணிவாசகப் பெருமானது பெருமை புலப்படுமாறு அடிகளது பெயரையும் கூறியிருப்பர். அங்ஙனம் சொல்லாமையால், நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்தேவு செய்வானும் என்பன முதலாக அத்திருப்பாட்டில் சொல்லப் பெற்றவை எல்லாம் திருவாரூர்ப் பெருமானது முடிவிலாற் றலுடைமையை உணர்த்துவனவேயன்றி நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துரைப்பன அல்ல என்பது தேற்றம். எனவே, இத்தொடர்கள் அடிகளைக் குறிக்கவில்லை என்பது தெள்ளிது.

திருவிசய மங்கைப் பதிகத்தில் 'மங்கல வாசகர் என்ற தொடர் மாணிக்கவாசகரைக் குறிக்கும் எனல் பொருந்தாது. மங்கலவாசகர் குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவர்' என்பது திருநாவுக்கரசரது திருவாக்கினால் அறியப்படுகிறது. அடிகள் அவற்றைக் கொண்டவர் என்பதற்குச் சான்று இல்லை. அன்றியும் மங்கல வாசகர்' மாணிக்கவாசகர் என்று கொள்வது எங்ஙனம் ஏற்புடைத்தாகும்? மாணிக்கவாசகர் என்ற பெயர் வழக்கே கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலில் காணப்படுகின்றது. அதற்கு முன்னர் அடிகள் திருவாதவூரடிகள், திருவாதவூர்ச் சிவ பாத்தி யன், திருவாதவூரளியார், பெருந்துறைப்பிள்ளை என்றே வழங்கப் பெற்றுள்ளனர். ஆதலால், மங்கல வாசகர் என்ற தொடர் அடிகளை உணர்த்தாது என்பது திண்ணம்.

திருப்பூவணப்பதிகத்தில் 'வையைத் திருக்கோட் டில் நின்றதோர் திறமுந்தோன்றும்' எனத் திருநாவுக் கரசர் கூறியிருப்பது திருப்பூவணத்தில் வையையாற்றங் கரையில் திருக்கோயில் கொண்டு சிவபெருமான் எழுந்தருளியிருப்பதை உணர்த்துவதேயாகும். மதுரையில் வையையாற்றங் கரையில் சோமசுந்தரக் கடவுள் பிட் டுக்கு மண்சுமந்த வரலாற்றை அது உணர்த்துவதாயிருந்தால் அச்செய்தி தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கும் என்பது ஒருதலை. ஆதலால் அடிகள் வரலாற்றோடு அதனை இணைத்துப் பொருள் காண்பது சிறிதும் பொருந்துவதன்று. திருநாவுக்கரசரது தனித்திருத் தாண்டகத்திலுள்ள 'குடமுழ நந்தீசனை வாசகனாகக் கொண்டார்' என்ற தொடருக்கு நந்தியெம் பெரு மான் மாணிக்கவாசகராக அவதரித்தனர் என்று பொருள் கொள்வது எல்லாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. இதிலுள்ள வாசகன் என்ற சொல் மாணிக்கவாசகர் என எங்ஙனம் பொருள்படும்? மாணிக்கவாசகர் என்ற பெயர் வழக்கே பிற்காலத்தது என்பது முன்னர்க் காட்டப்பட்டுள்ளது. மாணிக்க வாசகர் வரலாறு கூறும் தமிழ் நூல்கள் எல்லாம் நந்தி கேச்சுரர் அடிகளாக அவதரித்தனர் என்று கூறவில்லை. ஆனால் கணநாதர் ஒருவர் அங்ஙனம் அவதரித்தனர் என்று கூறுகின்றனர். எனவே, நந்திதேவர் மாணிக்க வாசகராகத் தோன்றவில்லை என்பது தெளிவு. ஆகவே. திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களிற் மாணிக்கவாச கரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பது தெளி வாகப் புலப்படுதல் காண்க.

சுந்தரமூர்த்திகள் தம் திருத்தொண்டத் தொகையில் 'பொய்யடிமையில்லாப் புலவர்' என மாணிக்க வாசகரைக் குறித்துள்ளனர் என்பது அன்னோர் எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும். பொய்யடிமை யில்லாப் புலவரை மாணிக்கவாசகர் என்று கொண் டால் தனியடியார் அறுபத்து மூவரையும் அறுபத்து நால்வர் எனவும் தொகையடியார் ஒன்பதின்மரையும் எண்மர் எனவும் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு கொள்வது சிவாநுபூதிச் செல்வர்களும் புலவர் பெருமான்களுமான நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், உமாபதி சிவாசாரியார் என்போர் கூறியுள்ள வரலாற்றுண்மைக்கு முற்றிலும் முரண்பட்டிருத்தல் காணலாம். அன்றியும் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைக்கும் அது மாறுபடுகின்றது. மூவரும் பொய்யடிமையில்லாப் புலவர் மாணிக்கவாசகர் என்று யாண்டும் குறிப்பிடாமை அறியத்தக்கது. இவர்களுள் காலத்தால் முற்பட்டவராய்க் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளங்கிய நம்பியாண்டார் நம்பி அத்தொடர் கதைச் சங்கப் புலவரைக் குறிக்குமெனக் கருதியுள்ளமை திருவந்தாதியால் உணரப்படும். எனவே, இக்கொள்கையும் தவறாதல் காண்க.

மாணிக்கவாசகர் திருஞானசம்பந்த சுவாமிகட்கு முற்பட்டவர் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தாலும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தாலும் நன்கறியக் கிடக்கின் றது என்பர். இவ்விரு புராணங்களும் சிறந்த தமிழ் நூல்களே; ஆனால் சரித்திர கால ஆராய்ச்சிக்குப் பயன் படுவன அல்ல என்பது அறிஞர் பலரும் உணர்ந்ததே யாம். இதுகாறும் விளக்கியவற்றால் திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர் மூவருக்குப் பிந்தியவர் என்பது நன்கு புலனாதல் காண்க.

அடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் 306. 327 ஆம் பாடல்களில் முறையே 'வரகுணனாந் - தென்னவனேத்து சிற்றம்பலத்தான்' என வும், புயலோங்கலர் சடையேற்றவன் சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களியானை வரகுணன்' எனவும் வரகுண பாண்டியனைப் பாராட்டியிருத்தலால் அவ்வேந்தன் காலத்தவராயிருத்தல் வேண்டும். கடைச்சங்க காலத்தில் வரகுணன் என்ற பெயருடைய பாண்டியன் ஒருவனும் இல்லை. அக்காலத்திற்குப் பிறகு கி பி. 575 வரையில் பாண்டி நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அடிகளால் புகழப் பெற்ற பெரும் புகழ்படைத்த வரகுண பாண்டியன் இருந்தனனெனல் சிறிதும் ஏற்புடைத்தன்று. எனவே, அவற்குப் பின்னர் நிகழ்ந்த பாண்டியரது முதற் பேரரசில்தான் அடிகள் குறித்துள்ள வரகுண பாண்டியன் இருந்தனனாதல் வேண்டும். அப்பேரரசும் கி.பி. 575 முதல் கி.பி. 900 வரையில் நிலைபெற்றிருந்தது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. அக் காலப்பகுதியில் வரகுணன் என்ற பெயருடைய பாண்டியர் இருவர் பாட்டனும் பேரனுமாக இருந்தனர் என்பது சின்னமனூர்ச் செப்பேடுகளால் புலப்படுகின்றது. அவர்களுள் கி. பி. 802 முதல் கி.பி. 880 வரை அரசாண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது சிலர் கொள்கை. இதனை ஏற்றுக் கொள்வதில் சில தடைகள் உள்ளன. ஆதலால் இதனையும் ஈண்டு ஆராய்தல் இன்றியமையாததாகும்.

அடிகளால் பாராட்டப் பெற்ற வரகுண பாண்டியன் காலத்தில் சோழ நாடு அவன் பேரரசுக்கு உட்பட் டிருந்தது என்பது திருச்சிற்றம்பலக் கோவையாலும் பட்டினத்தடிகளது திருவிடை மருதூர் மும்மணிக் கோவையாலும் நன்கறியக் கிடக்கின்றது.

இரண்டாம் வரகுணன் தந்தையாகிய மாறன் ஸ்ரீவல்லபன் என்பான் தன் ஆட்சியின் இறுதியில் கி. பி. 862-ல் அரிசிற்போரில் தோல்வியெய்திச் சோழ நாட்டையிழந்து விட்டான். அவனுக்குப் பிறகு அவ்வாண்டில் முடி சூடிய இரண்டாம் வரகுணன் தன் தந்தை இழந்த சோழ நாட்டை மீண்டும் பெறும் பொருட்டுப் படையுடன் சென்று கி. பி. 880-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருவிடை மருதூருக்கு வடக்கே மண்ணி நாட்டிலுள்ளதும் தன் பாட்டன் முதல் வரகுணனது அரண்மனையிலிருந்ததுமாகிய, இடவை நகரையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றினான். அவன் சோழ நாட்டில் ஒரு பகுதியைக் கைப்பற்றியதையறிந்த பல்லவ அரசனாகிய அபராஜித வர்மனும் சோழ மன்னனாகிய முதல் ஆதித்தனும் கங்க நாட்டு வேந்தனாகிய முதல் பிருதுவிபதியின் துணைகொண்டு வரகுண வர்மனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைலில் மண்ணியாற்றங் கரையிலுள்ள திருப் புறம்பயத்தில் கி.பி. 880ல் நிகழ்ந்த பெரும் போரில் வரகுண வர்மன் தோல்வியுற்றுச் சோழ நாட்டில் தான் கைப்பற்றிய பகுதியை இழந்து தன் நாட்டிற்குத் திரும்புமாறு நேர்ந்தது. இந்நிகழ்ச்சியால் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் சோழ நாடு பாண்டிய ராட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை என்பது தெள்ளிது. ஆகவே மாணிக்கவாசகர் அப்பாண்டியன் காலத்தவர் அல்லர் என்பது தேற்றம்.

அவ்வேந்தன் கி.பி. 792 முதல் கி. பி. 835 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்; சோழநாடு , நடு நாடு, தொண்டை நாட்டின் தென்பகுதி ஆகியவற் றைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்திய பேரரசன். அவன் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங் கரையிலுள்ள அரசூரில் தங்கியிருந்தபோது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரக் கோயிலுக்கு நாள் வழி பாட்டிற்கு நிவந்தமாக 290 பொற்காசு வழற்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப்படுகின்றது. ஆகவே, அவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரது பேரரசு மிக்க உயர் நிலையில் இருந்தது என்பது திண்ணம். எனவே, அவனைத்தான் மாணிக்க வாசகர் தம் திருச்சிற்றம்பலக் கோவையாரில் பாராட்டி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பியும் முறையே திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலும் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்திலும் அவனது சிவபத்தியின் பெருமையினை விளக்கியிருத்தல் காணலாம்.

இனி, மாணிக்கவாசகர் தம் போற்றித் திருவகவலில்
'மிண்டிய மாயாவாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தா அர்த்து'

என்று கூறியிருப்பது அடிகள் சங்கராச்சாரியார் காலத் தில் இருந்தவர் என்பதை உணர்த்துதல் காணலாம்.

வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கரபாடியம் என்ற பேருரை வரைந்து அச்சமயத்தை யாண்டும் பரப்பிய ஆதிசங்கரர் கி.பி. 788 முதல் 820 வரையில் இருந்தவர் என்பது அறிஞர்களது கருத்தாகும். எனவே, ஆதி சங்கரரும் அடிகளும் ஒரே காலப் பகுதியில் இருந்தவர்கள் என்பது வலியுறுதல் அறியத்தக்கது.

இதுகாறும் விளக்கிய வாற்றால் முதல் வரகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி.பி. எட்டாம் நூற் றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலப்படுதல் காண்க.
-------------

6. இளம்பூரண அடிகளும் மணக்குடவரும்

தொல்காப்பியம் என்னும் பண்டைத் தமிழிலக் கணத்திற்கு நல்லுரைகண்ட தொல்லாசிரியராகிய இளம்பூரண அடிகளின் அருமை பெருமைகளைப் புலவர் பெருமக்கள் நன்கறிவர். இவ்வடிகள், தொல்காப்பிய மாகிய கருவூலத்துள் முதலிற் புகுந்து பண்டைத்தமிழ் மக்களின் வழக்க ஒழுக்க நாகரிகங்களாகிய அரும் பெறன்மணிகளை நம்மனோர்க்கு வழங்கிய பெரி யார் ஆவர். சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க் கினியார். தெய்வச்சிலையார், அடியார்க்கு நல்லார் ஆகிய மற்ற உரையாசிரியன்மாரெல்லாம் இவரது பெருமையினை நன்குணர்ந்து இவர்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தனர் என்பது அவர்கள் உரைகளால் இனிது அறியக் கிடக்கின்றது. அத்துணைப்பெருமையும் ஆற்றலும் வாய்ந்த இவ்வடிகள், தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளுக்கு ஓர் உரையும் கொங்குவேளிரால் இயற்றப்பெற்ற பெருங்கதைக்கு ஒரு குறிப்புரையும் எழுதியுள்ளனர் என்பது இவரது உரைப் பாயிரச் செய்யுள் ஒன்றால் புலனாகின்றது. அது,

'தண்கட லசைவளி யுறுப்பத் திரைபிதிர்ந்
தூங்கலின் பொருட்குவைப் புணரியிலையுற
[1] ''அலைவ மன் மயரினை யகற்ற" லெழுத்தால்
திணை துறை யுட்கோள் இயற்றிற னறியாக்
கவர்பொருண் மாக்கண் மயக்கினுக் கிரங்கிப்
பாயிருங் காப்பியச் சுவை பல வுணர்ந்தகந்
தோய மடுத்தோர் தொல்காப்பியனுரை
முத்திற வோத்தினுக் கொத்த சீர்க் காண்டிகை
சொன்னிலை மேற்கொள் தொகு[2] பொருள் துணிபுடன்
இயல்நூற் பாமுடி பிணைத்தபடி[3] காட்டித்
தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே
கொங்கு வேண் மாக்கத்தை குறிப்புரை கண்டோன்
தன்னறி யளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன்
குணகடற் செல்லூர்4 மணக்குடி பரியான்
தண்முலை முகையென வெண்ணூல் சூடி
யந்தணன் துறவோன் அருமறை யுணர்ந்த
இளம் போதி பயந்த புனிதன்
இளம்பூ ரணனுரை யினிதுவாழ் கீங்கென்''

என்பதாம்.

அடிகள் தொல்காப்பியத்திற்கு உரையெழுதுவதற்கு முன்னரே கொங்குவேண்மாக்கதைக்குக் குறிப்புரையும் திருக்குறளுக்கு உரையும் எழுதி முடித்து விட் டனர் என்பது இவ்வுரைப் பாயிரத்தால் வெளியாதல் காண்க.

இனி, திருக்குறளுக்கு, முற்காலத்தில் பதின்மர் உரை கண்டுள்ளனர் என்பது,

'தருமர் மணக்குடர் தாமத்தர் நச்சர்
பரிமே லழகர் பருதி - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்’

என்னும் பழையபாட லொன்றால் அறியப்படுகின்றது. இப்பாடலிற் குறிப்பிடப்பெற்ற பதின்மருள் இளம்பூரண அடிகள் பெயர் காணப்படவில்லை. உரையாசிரியன்மாருள் மிக முந்தியவராகிய இவ்வடிகள் திருக் குறளுக்கு ஓர் உரையெழுதியிருப்பதை அவ்வெண்பாவைப் பாடியவர் அறிந்திருக்கமாட்டார் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாது. அன்றியும், திருக்குறளுக்கு உரையெழுதிய அறிஞர் எல்லோரையும் கூற வந்த அப்பெரியார், அன்னோருள் இறுதியிலிருந்த பரிமேலழகரைக் கூறிவிட்டு மிகப் பழைய உரையாசிரியராகிய இளம்பூரண அடிகளைக் குறிப்பிடாமற் போகார் என்பது திண்ணம். ஆகவே, அவ்வெண்பா இயற்றப் பெற்ற காலத்தில் திருக்குறளுக்கு இளம்பூரணர் எழுதிய உரை. வேறு பெயரோடு வழங்கியதாதல் வேண்டும். அங்ஙனமாயின் அவ்வுரை எப்பெயரோடு வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஈண்டு ஆராயற் பாலதாகும்.

மேலே காட்டப்பெற்ற தொல்காப்பிய இளம்பூர ணர் உரைப்பாயிரத்தில் அடிகள், கீழ்கடலைச் சார்ந்த செல்லூரிற்பிறந்தவர் என்பதும், மறையில் வல்ல இளம் போதி என்பரின் புதல்வர் என்பதும், துறவறநெறியில் நின்ற அந்தணரென்பதும், இளம்பூரணர் என்ற இயற் பெயருடையவர் என்பதும், மணக்குடி புரியான் என்ற தொல்குடியில் தோன்றியவர் என்பதும் சொல்லப்பட் டிருக்கின்றன. மணக்குடியுடையான் என்னுங் குடிப் பெயரே மணக்குடி புரியான் என்று பாயிரத்திற் கூறப் பட்டிருக்கின்றது.

இனி, நாகன்குடியுடையான், அண்டக்குடியுடை யான், கடுவங்குடியுடையான், இளையான்குடியுடை யான், என்னும் குடிப்பெயர்கள் முறையே நாகன்குடையான் ,[6] அண்டக்குடையான்,[7] கடுவங்குடையான்,[8] இளையான்குடையான்[9] என்று முற்காலத்தில் வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, மணக்குடியுடையான் என்பதும் மணக்குடை யான் என்று அக்காலத்தில் வழங்கியிருத்தல் வேண்டும். ஆகவே, இளம் பூரண அடிகள், மணக்குடையார் என்ற தன் குடிப்பெயராலும் தொடக்கத்தில் வழங்கப்பெற் றிருத்தல் கூடும்[10]. அங்ஙனம் வழங்கிய நாளில் இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை, மணக்குடையாருரை என்று பெயர் எய்தியிருப்பதும் இயல்பேயாம். பிறகு இவர் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய காலத்தில் துறவு பூண்டு சிறப்புற்றிருந்த-மையின் இளம்பூரண அடிகள் என்று இயற்பெயராலேயே பாராட்டப் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, இளம் பூரணர் என்னும் இயற் பெயரும், மணக்குடையார் என்னும் குடிப்பெயரும் ஒருவரையே குறிப்பனவாகும்.

இனி, சில ஏட்டுப்பிரதிகளில் இவர் பெயர் மணக் குடையார் என்று குறிக்கப்-பட்டுள்ளதாம். அன்றியும், திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மர் பெயர் கூறும் பாட பேதம் காணப்படுகிறது. ஆனால், இந்நாளில் மணக்குடவர் என்னும் பெயர் வழங்குகின்றது; எனினும் மணக்குடையார் என்று வழங்குவதுதான் பொருத்த-முடையது என்பது உணரற்பாலதாகும்.

இனி, இளம்பூரண அடிகளது தொல்காப்பிய உரை யையும் மணக்குடையாரது திருக்குறள் உரையையும் கூர்ந்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் இரண்டுரை நடைகளும் ஒத்திருத்தலை யாவரும் எளிதில் அறியலாம் அன்றியும், தொல்காப்பியம் - புறத்திணையியலிலும் திருக்குறளிலும் ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, அழுக்காறாமை என்பவற்றை விளக்கியுள்ள உரைநடைப் பகுதிகள் ஒன்றாகவே அமைந்திருப்பது அறியற்பாலதாகும். தீவினையச்சம், கள்ளுண்ணாமை, கொல்லாமை, கள்ளாமை, அருளுடைமை என்பவற் றின் விளக்கவுரைகளும் இரண்டிலும் பெரும்பாலும் ஒத்திருப்பதோடு உரை நடைப்போக்கு வேறுபடாமல் ஒன்றாக அமைந்திருப்பதும் உணரத்தக்கது. அவ்வுண்மைகளை அடியிற் காண்க.

இளம்பூரணர் உரை மணக்குடையார் உரை
அதிகாரம் 1. ஒழுக்கமுடைமை
ஒழுக்க முடைமையாவது ஒழுக்க முடைமையாவது
தம் குலத்திற்கும் இல்லறத் தம் குலத்திற்கும் இல்லறத்
திற்கும் ஒத்த ஒழுக்க திற்கும் ஒத்த ஒழுக்க
முடையராதல் முடையராதல்

அதிகாரம் 2. நடுவுநிலைமை
நடுவு நிலைமையாவது நடுவு நிலைமையாவது
பகைவர் மாட்டும் நட்டார் நட்டார் மாட்டும் பகைவர்
மாட்டும் ஒக்கநிற்கும் நிலைமை மாட்டும் ஒக்கநிற்கும் நிலைமை

அதிகாரம் 3. வெஃகாமை
வெஃகாமையாவது பிறர் வெஃகாமையாவது பிறர்
பொருளை விரும்பாமை பொருளை விரும்பாமை

அதிகாரம் 4. தீவினையச்சம்
தீவினையச்சமாவது தீவினை யச்சமாவது
தீவினையைப் பிறர்க்குச் தீவினைகளைப் பிறர்க்குச்
செய்தலை யஞ்சுதல் செய்யாமை

அதிகாரம் 5. அழுக்காறாமை
அழுக்காறாமையாவது பிறராக்கம் அழுக்காறாமையாவது பிறராக்கம்
முதலாயின கண்டு பொறாமையால் முதலாயின கண்டு பொறாமையால்
வரும் மனக் கோட்டத்தைச் வருகின்ற மனக் கோட்டத்தைச்
செய்யாமை செய்யாமை

அதிகாரம் 6. கள்ளுண்ணாமை
கள்ளுண்ணாமையாவது கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத்
கள் உண்டலைத் தவிர்த்தல் தவிர வேண்டுமென்று கூறுதல்

அதிகாரம் 7. கொல்லாமை
கொல்லாமையாவது கொல்லாமையாவது
யாதொன்றையுங் கொல்லாமை யாதோ ருயிரையுங் கொல் லாமை

அதிகாரம் 8. கள்ளாமை
கள்ளாமையாவது பிறர்க் குரிய கள்ளாமையாவது யாதொரு
பொருளைக் களவினாற் கொள்ளாராதல் பொருளையுங் களவிற் கொள்ளாராதல்

அதிகாரம் 9. அருளுடைமை
அருளுடைமையாவது யாதானும் அருளுடைமையாவது யாதானும்
ஓருயிர் இடர்ப் படுமிடத்துத் ஓருயிர் இடர்ப் படின் அதற்குத்
தன்னுயிர் வருந்தினாற்போல தன்னுயிர்க்கு உற்ற
துன்பத்தினால்வருந்துமாறுபோல
வருந்தும் ஈரமுடைமை வருந்தும் ஈரமுடைமை

-----------

இதுகாறும் கூறியவாற்றால் திருக்குறளுக்கு இளம் பூரண அடிகள் எழுதிய உரை. மணக்குடையாருரையே யாதல் வேண்டும் என்பதும், அஃது இக்காலத்தில் மணக்குடவருரை என்று வழங்குகின்றது என்பதும், அங்ஙனம் வழங்குவது தவறு என்பதும் நன்கு விளங்குதல் காண்க.

-------
[1] வலைவமன், (மூன்றாமடியின் இறுதிச்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும்) லெழுத்தா றிணை துறை: என்பனவ, செந்தமிழ் 20-ஆம் தொகுயின் 503-ஆம் பக்கத்தில் வெளி வந்த இச்செய்யுளிற் காணப்படும் பிரதி பேதங்கள்.
[2] பொரு டுணிபுடன், [3] காட்டி, [4] மணக்குட புரியான்,
[5] கீங்கென; என்பவை, செந்தமிழ் 20-ஆம் தொகுதி யின் 503-ஆம் பக்கத்து வெளிவந்த இச் செய்யுளிற் காணப் படும் பிரதிபேதங்கள்.
[6]. South Indian Inscriptions, Vol III.No. 73.
[7].S.I. I. Vol III No 73. [8]. S. I. I., Vol III. No.2.
[9]. Ibid, No.57.
[10]. பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய புலவர் பெருமான் அருண்மொழித் தேவர் , இயற்பெயரால் வழங்கப் பெறாமல் சேக்கிழார் என்னும் குடிப்பெயரால் வழங்கப்பெற்று வருகின்றனர் என்பதும் அறியத்தக்கதாகும்.
----------

7. தேவாரம் என்னும் பெயர் வழக்கு

சைவசமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடியருளிய திருப்பாடல்கள் இக்காலத்தில் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன. பத்து அல்லது பதினொரு பாடல்களைக் கொண்ட அவர்களுடைய பதிகங்களும் தேவாரப்பதிகங்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால் தேவாரம் என்ற பெயரை மூவர்பாடல்கள் எப் போது பெற்றன என்பதும், அவை அப்பெயர் எய்தியமைக்குக் காரணம் யாது என்பதும் இதுகாறும் ஆராய்ந் தறியப்படவில்லை. எனினும், தேவாரம் என்பதன் பொருள் யாது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. அது, தேவாரம் என இருமொழிகளாகப் பிரிந்து கடவுள் மீது பாடப்பெற்ற சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் என்று பொருள்படும் என்பர் சிலர். அன்னோர் இப்பொருளுக்கு 'வாரம் பாடுந் தோரிய மடந்தையும்' என்ற சிலப்பதிகார வரியை[1] மேற்கோளாக எடுத்துக் காட்டுவர். வேறு சிலர், வாரம் என்பது அன்பு எனப் பொருள் படும் என்றும், ஆகவே அத்தொடர் கடவுளிடத்து அன்பை உண்டு பண்ணுவது என்ற பொருளைத் தரும் என்றும் உரைப்பர்.

மற்றுஞ்சிலர் அதனையே தே + ஆரம் எனப்பிரித்து அதுகடவுளுக்குச் சூட்டப்பெறும் பாமாலை என்ற பொருளையுணர்த்தும் என்று கூறுவர். ஈண்டு ஆரம் என்பது ஹாரம் என்ற வடசொல்லின் திரிபென்பது அன்னோர் கருத்து. இவையெல்லாம் சொல் கிடந்த முறையில் அவர்கள் கண்ட பொருளே எனலாம். அதன் உண்மைப் பொருளை-யுணரவேண்டின் அது முற்காலத்தில் எப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இன்றியமையாததாகும். சமயகுரவர்களாதல். ஒன்பதாந் திருமுறை-யாசிரியர்களாதல், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பெரியோர்களாதல் தேவாரம் என்னுஞ் சொல்லைத் தம் பாடல்களில் யாண் டும் குறித்தாரில்லை. சேக்கிழாரும் தம் பெரியபுராணத்தில் அச்சொல்லை எடுத்தாளவில்லை. ஆகவே பட்டினத் தடிகள், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகிய சைவப் பெரியார் காலங்களில் மூவர்பாடல்கள் தேவா ரம் என்று வழங்கப்படவில்லை என்பது தெள்ளிது. எனவே சேக்கிழார் காலத்திற்குப்பிறகே அவை தேவாரம் என்ற பெயரை எய்தி யிருத்தல் வேண்டும் என் பது தேற்றம்.

இனி அப்பாடல்களைத் தேவாரம் என்ற பெயருடன் தமிழ் நூலில் முதலில் வழங்கியவர் யாவரெனின் அன்னோர் புலவர் பெரு மக்களாகிய இரட்டையரேயாவர். அவ்வுண்மையை அவர்கள் பாடிய ஏகாம்பரநாதருலா விள்ள ,

’மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும்
தேவாரஞ் செய்த திருப்பாட்டும்'

என்ற அடிகளால் அறியலாம். அவர்கள் தம் உலாவில் மல்லிநாத சம்புவராயனைப் பாராட்டியிருத்தலால் அவ் வேந்தன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். அவன் தொண்டை மண்டலத்தில் அவர்கள் படைவீட்டு இராச்சியத்தில் கி.பி. 1321 முதல் 1339 முடிய அரசாண்ட வென்றுமண் கொண்ட சம்புவராயனுடைய புதல்வன்; இராசநாராயண மல்லிநாதசம்புவராயன் என்ற பெயருடன் கி. பி. 1336 முதல் 1373 வரையில் அங்கு ஆட்சி புரிந்தவன்[2]; வீரசம்பன் என்ற சிறப்புப் பெயருடையவன். அவ்வரசனைத் தம் உலாவில் புகழ்ந்துள்ள இரட்டை யரும் அவன் ஆட்சிக்காலமாகிய கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நம் தமிழகத்தில் வாழ்ந்தவர் ஆவர். ஆகவே கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங் கப்பெற்று வருகின்றன என்பது நன்கு தெளியப்படும்.

இனி, கி. பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற் றாண்டுகளில் அரசாண்ட சோழ மன்னர்களின் கல் வெட்டுக்களில் தேவாரம் என்ற சொல் காணப்படுகின்றது. அக்காலத்தில் அச்சொல் எப்பொருளில் வழங்கப்பெற்றுள்ளது என்பது ஆராய்தற்குரியதாகும்.

முதல் இராஜேந்திரசோழன் ஆட்சியில் தஞ்சைப் பெரிய கோயிலில் வரையப் பெற்றுள்ள பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர் பாதாதி கேசாந்தம் ஐவிரலே இரண்டு தோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தமும் உடையவராகக் கனமாகப் பித்தளையால் எழுந்தருளுவித்த சந்திரசேகரதேவர் திரு மேனி ஒன்று'[3] என்ற கல்வெட்டுப் பகுதியில் தேவாரம் என்னுஞ் சொல் வந்துள்ளது. முதல் இராசராச சோழன் அரசியலதிகாரிகளில் ஒருவனும் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆகிய ஆதித்தன் சூரியன் தென்ன வன் மூவேந்த வேளான் என்பான், அப்பெருங்கோயிலில் அதனை எடுப்பித்த இராசராசசோழன் படிமத்தையும், அவனுடைய வழிபடு கடவுள் சந்திரசேகரர் திருமேனியையும் கி. பி. 1015-ஆம் ஆண்டில் எழுந்தருளு வித்த செய்தியை அக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்திருத்தல் அறியத்தக்கது.

அவ்வேந்தனது மற்றொரு கல்வெட்டிலும் தேவாரம் என்ற சொல் காணப்படுகிறது; அஃது 'உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர் கங்கை கொண்ட சோழ புரத்துக் கோயிலுனுள்ளால் முடி கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தானஞ் செய்தருளாயிருந்து உடையார் ஸ்ரீ இராஜராஜ ஈசுவரமுடையார் கோயிலில் ஆசார்ய போகம் நம் உடையார் சர்வசிவ பண்டித சைவாசாரியர்க்கு'[4] என்ற கல்வெட்டுப்பகுதியில் இருத்தல் காண்க. இக்கல்வெட்டில் குறிக்கப் பெற்ற கோயில் என்பது அரண்மனையாகும். தேவாரம் என்பது அரசன் நாள் தோறும் தன் வழிபடு கடவுளைப் பூசித்தற்கு அரண் மனையில் அமைத்திருந்த வழிபாட்டறையாகும். ஆகவே. இக்கல்வெட்டில் வந்துள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு நிகழ்ந்துவந்த இடத்தைக் குறித்தல் உணரத் தக்கதாம்.

அம் முதல் இராசேந்திர சோழனது ஆட்சிக்காலத்தில் கி.பி. 1017 ஆம் ஆண்டில் நாங்கூருடையான் பதஞ்சலி பிடாரன் என்பவன் தேவாரநாயகம் செய்பவனா யிருந்தான் என்று கும்பகோணம் தாலூகா மானம் பாடியிலுள்ள கல்வெட்டொன்று[5] கூறுகின்றது. அக் கல்வெட்டில் தேவாரநாயகம் என்ற தொடரைக் கண்ட ஆராய்ச்சியாளர் எல்லோரும், கோயில்களில் தேவாரம் பாடுவோரைக் கண்காணித்தற்பொருட்டு முதல் இராசேந்திர சோழன் அமர்த்தியிருந்த ஓர் அதிகாரியே தேவாரநாயகம் ஆவன் என்று உறுதி செய்து விட்டனர்.[6] சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சமயகுரவர் மூவர் பதிகங்களும் கோயில்களில் வழிபாடு நடைபெற்றபோது இசையுடன் பாடப்பெற்று வந் தன என்பது ஆங்காங்குக் காணப்படும் பல கல்வெட் டுக்களால் நன்கறியப்படுகிறது. ஆனால், தேவாரநாயகம் என்ற அதிகாரி ஒருவன் கோயில் தோறும் சென்று அந் நிகழ்ச்சிகளைக் கண்காணித்த செய்தியாதல் அவன் அங்ஙனம் கண்காணித்தஞான்று கண்ட குறைபாடுகளை நீக்கியமையாதல் அவன் செய்த பிற சீர்திருத்தங்களாதல் அவ்வேந்தர்களின் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. கோயில்களில் நாள் வழிபாடு, திங்கள்விழா, ஆண்டு விழா முதலானவற்றை நடத்துவ தற்கு ஸ்ரீகாரியஞ்செய்வான் என்ற அதிகாரி ஒருவன் அந்நாளில் அரசனால் அமர்த்தப்பெற்றிருந்தான் என் பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.[7] அவனே அவ்வக் கோயிலில் திருப்பதிகம் பாடுவோரை மேற்பார்க்கும் கடமையுடையவன் ஆவன். எனவே, அதன் பொருட்டுத் தனி அதிகாரி ஒருவன் அரசனால் அமர்த் தப் பெற்றிருந்தான் என்று உறுதி செய்துவிடல் ஏற்புடைத்தன்று. அன்றியும் ஸ்ரீகாரியஞ் செய்வோரையும் கண்காணித்தற் பொருட்டு ஸ்ரீகாரியக்கண்காணி நாயகம்' என்ற தலைமையதிகாரி ஒருவன் அக்காலத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.[8]

இனி, தேவார நாயகம் என்போன் சிவன் கோயில்களில் திருப்பதிகம் பாடுவோரைத்தான் கண்காணித்தல் கூடும். அங்ஙனமாயின் திருமால் கோயில்களில் திருவாய்மொழி முதலானவற்றைப் பாடிவந்தவர்களைக் கண்காணித்தவன் ஒருவன் இருத்தல் வேண்டுமன்றோ? சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் திருமால் கோயில்களில் திருவாய்மொழி பாடப்பெற்று வந்தமை பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. ஆனால், அந்நிகழ்ச்சிகளைக் கண்காணித்தற்குத் திருவாய்மொழி நாயகம் என்ற அதிகாரி இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, தேவாரநாயகம் என்பவன் வேறோர் அலுவல் புரிந்து வந்த அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அரசன் நாள்தோறும் தன் அரண்மனையில் நிகழ்த்தி வந்த வழிபடு கடவுள் பூசையில் அதற்குரிய பணிகளைச் செய்து வந்த பணி மக்களைக் கண்காணிக்கும் அலுவல் பார்த்த அதிகாரியே தேவாரநாயகம் என்று வழங்கப்பெற்றனன் என்பது நுணுகியாராயுமிடத்து நன்கு புலனாகிறது. எனவே, அரசனது நாள் வழிபாட் டிற்குரிய பணிகளை மேற்பார்ப்பவன் என்பதே அத் தொடரின் பொருளாகும். அதிலுள்ள 'தேவாரம்' என்ற சொல் வழிபாடு என்று பொருள்படுதல் அறிக.

தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்களர்க் கல்வெட் டொன்றிலும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அல் லூர்க் கல்வெட்டொன்றிலும் தேவாரம் என்ற சொல் காணப்படுதலால் அவற்றையும் ஆராய்தல் இன்றிமை யாததாகும். அக்கல்வெட்டுப் பகுதிகள்,

'நம்தேவாரத்துக்குத் திருப்பதியம்பாடும் பெரியோன் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியனுக்கும் ....... வம்சத்தார்க்கும் காணியாக ............... செய்யக்கடவன எல்லாம் ............ செய்யப்பண்ணி இப்படிக் கல்வெட்டப் பண்ணுக - இது திருவாய்மொழிந்தருளின திருமுகப் படி[9] (திருக்களர்க்கல்வெட்டு)

'உறையூர்க்கூற்றத்து திருவடகுடி மகாதேவர் ஸ்தான மடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் தான நிமித்தமாகக் கொடுத்தோம்.... மடபோகமாக நித்தம் தூணி நெல் கொள்ளச் சொன்னோம்[10]' (அல்லூர்க்கல்வெட்டு) என்பனவாம்.

இவ் விருகல்வெட்டுக்களிலும் நம் தேவாரத்துக்குத் திருப்பதியம்பாடும் பெரியான் மறைதேடும் பொரு ளான அகளங்கப்பிரியன்' எனவும் 'ஸ்தானமடம் தேவா ரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யும் அம் பலத்தாடி திருநாவுக்கரையன்' எனவும் அமைந்துள்ள தொடர்கள் கூர்ந்து நோக்கற்பாலவாகும். அவை அரண்மனையிலும் கோயிலைச் சார்ந்த மடத்திலும் நடைபெற்றுவந்த நாள் வழிபாடுகளில் திருப்பதிகம்பாடியவர் இருவர் பெயர்களைக் கூறுகின்றன. அன்றியும், 'தேவாரத்துக்குத் திருப்பதியம்' என்ற தொடரே தேவாரம் வேறு திருப்பதியம் வேறு என்பதை நன்கு வலியுறுத்துதல் அறியத்தக்கது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இக் கல்வெட்டுக்களில் பயின்று வரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் அமைந்துள்ளமை காண்க.

இனி முதற்குலோத்துங்க சோழன் கி.பி. 1110-ஆம் ஆண்டில் தொண்டைநாட்டிலுள்ள தக்கோலத்தில் திரு வூறலிறைவனை வழிபட்ட பிறகு அவ்வூர்மண்டபம் ஒன்றில் பகலில் தங்கியிருந்த செய்தி காஞ்சிமாநகரி லுள்ள கல்வெட்டொன்றில் [11] காணப்-படுகிறது. அதில் வேந்தன் திருவூறலிறைவனை வழிபட்ட நிகழ்ச்சியை உணர்த்தும் பகுதி 'திருவூறல் பெருமானைத் தேவாரஞ் செய்து' என்று குறிக்கப் பெற்றுள்ளது. ஆகவே சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தேவாரம் என்ற சொல் வழிபாடு (பூசை) என்னும் பொருளில் வழங்கி வந்தது என்பது நன்கு துணியப்படும்.

கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி யில் திருமுனைப்பாடி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண் டிருந்த பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட் டொன்றில் தேவாரம் என்னுஞ்சொல் வழிபாடு என் னும் பொருளில் வந்துளது. செய்யுள் வடிவத்திலுள்ள அக்கல்வெட்டு[12]

'பொன்னி நாடனு முரிமையு மமைச்சரு
மிருப்பதுன் சிறைக்கோட்டம்
பொறுப்பிரெண்டன வளர்ந்ததோள்
வலியினாற் கொண்டது சோணாடு
கன்னி காவிரி பகிரதி நின்பரி யாடு தண் துறைவாவி
காவல் மன்னவர் திறையுடன் வணங்குவது
உன் பெருந்திருவாசல்
வென்னி டாதபோர்க் கன்னடர் வென்னிடப்
பொருத்துன் பெருஞ்சேனை
விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்து
நீ விரும்பிய தேவாரம்
பின்னி காவல அவனிநா ராயண
பேணு செந்தமிழ் வாழப்
பிறந்த காடவ கோப்பெருஞ் சிங்கனின்
பெருமையார் புகழ்வாரே''

என்பதாம்.

இதுகாறும் விளக்கியவாற்றால் கி.பி. பதின்மூன் றாம் நூற்றாண்டின் பிற்பகுதி-வரையில் கல்வெட்டுக்களில் வந்துள்ள தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில் வழங்கப் பெற்றுள்ளமை தெள்ளிதிற் புலனாகும்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த கொற்றங்குடி உமாபதிசிவாசாரியார் தம் கோயிற் புராணத்தில் தப்பற்றுயர்தவ மூவாயிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணிமுற்றப்புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்' என்று கூறியிருத்தலால் அவர்காலத்திலும் தேவாரம் என்பது வழி பாடு என்னும் பொருளில் வழங்கியுள்ளமை உணரற் பாலது. ஆகவே கல்வெட்டுக்களால் அறியப்பெற்ற இப் பொருள் நூல் வழக்காலும் உறுதியெய்துதல் காண்க. எனவே இறைவழிபாட்டில் (தேவாரத்தில்) ஓதப்பெற்று வந்தமைபற்றி மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்றனவாதல் வேண்டும். அவ்வருட் பாடல்களைத் தேவாரம் என்று தம் நூலில் முதலில் குறிப்பிட்டோர் இரட்டையரே என்பது முன்னர் விளக்கப்பெற்றது. ஆகவே, அப்புலவர்களின் காலமாகிய கி. பி. பதினான் காம் நூற்றாண்டு முதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கிவருகின்றன என்பது தேற்றம்.

இதுகாறும் கூறியவாற்றால் முற்காலத்தில் தேவாரம் என்பது வழிபாடு என்ற பொருளில் வழங்கியது என்பதும் வழிபாட்டில் பாடப்பெற்றுவந்தவைபற்றி, கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பெற்று வருகின்றன என்பதும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயரால் வழங்கப்பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகளாதல் இலக்கியச் சான்றுகளாதல் கிடைக்கவில்லை என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.

---------
[1]. ஊர்காண் . வரி. 155.
[2] Ins. 86 of 1921. Ins. 424 of 1095. . Ins. 390 of 1905.
[3]. South Indian Inscriptions, Vol. II. No. 38
[4]. ibid. No. 20.
[5]. Ins. 97 of 1932.
[6]. The Colas, Vol, II, pp. 476 and 477.
[7]. South Indian Inscriptions. Vol II, Nos, 40 and 60.
[8]. Ibid. No.36.
[9]. South Indian Inscriptions. Vol VIII. No 260
[10]. Ibid, No. 675.
[11]. Annual report OD South India Epigraphy for 1921, part II, para 33.
[12]. Epigraphia Indica, Vol. XXIII, No 27.
------------

8. தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சிலகோயில்களின் பெயர்க்காரணம்

பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுங்கால் சிவபெருமான், முருகவேள், கண்ணன், பலதேவன் ஆகிய கடவு ளர்க்குத் தமிழகத்திலுள்ள பல ஊர்களிலும் கடைச் சங்க நாளில் ஆலயங்கள் இருந்தன என்பது இனிது புலனாம். இந்நாற்பெருந் தெய்வங்களையும் 'ஞாலங்காக்குங் கால முன்பிற் - றோலா நல்லிசை நால்வர்' என்று ஆசிரியர் நக்கீரனார் புகழ்ந்து கூறியுள்ளனர். காவிரிப் பூம்பட்டினம், மதுரை ஆகிய தலை நகரங்களிலிருந்த கோயில்களைக் கூறத்தொடங்கிய ஆசிரியர் இளங்கோவடிகள் முறையே பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்' எனவும் 'நுதல் விழி நாட்டத்திறையோன் கோயிலும்' எனவும், சிவபெருமானது கோயிலையே முதலில் குறித்திருப்பது அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுள் பெரும்பகுதியினர் சைவசமயத்தைக் கைக்கொண்டொழுகினர் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்தும். அன்றியும், மணிமேகலையின் ஆசிரியராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காவிரிப்பூம் பட்டினத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த தெய்வங்களைக் கூறுமிடத்து, 'நுதல்விழி நாட்டத் திறையோன் முதலா - பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளனர். பெளத்தக்கொள் கையினரான இவ்வாசிரியரும் சிவபெருமானையே முத லில் வைத்துக் கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது. எனவே, கடைச் சங்க காலத்தில் சைவசமயம் மிகச் சிறந்த நிலையிலிருந்தது என்பது தேற்றம். ஆனால், அக்காலத்திய சிவாலயங்களை இந்நாளில் காண்பது அரிதாகும். ஆதலின், அப்பழங்காலத்துக் கோயில்களின் அமைப்பு எவ்வாறிருந்தது என்பது புலப்பட வில்லை. ஆயினும், அக்கோயில்கள் செங்கற்களினால் எடுப்பிக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மாத் திரம் அறியப்படுகின்றது.

கி. பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் தமிழகத்தின் வடபகுதியை ஆட்சி புரிந்த முதல் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னனே சிறு குன்றுகளைக் குடைந்தும் கற்பாறைகளைக் கொண்டும் நம் நாட்டில் கருங்கற் கோயில்களை முதலில் அமைப்பித்தவன். சைவ சமயகுரவருள் ஒருவராகிய அப்பரடிகள் இவ்வேந்தன் காலத்தில் விளங்கியவர். அமண் சமயத் தொடர்புடை யவனாய் அவ்வடிகளைப் பல்வகையானும் துன்புறுத்திய இம்மன்னன் பின்னர்க் சைவசமயத்தைச் சார்ந்து சிவபெருமானுக்குக் கோயில்கள் எடுப்பித்து வழிபட்டமை அறிதற்குரியது. இவன் புதல்வனும் மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் உடையவனும் ஆகிய முதல் நரசிங்க வர்மன் ஆட்சிக் காலத்தில் தான் திருஞானசம்பந்த அடிகள் திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மன் காலத்தில் நிலவியவர் சுந்தரமூர்த்திகள். எனவே சைவ சமய குரவர் மூவரும் வாழ்ந்த காலம் பல்லவ மன்னர்கள் அரசாண்ட ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளேயாம். இப் பல்லவ வேந்தர்களே சில கற்றளிகளை எடுப்பித்தனர். பிற கோயில்களெல்லாம் செங்கற் கோயில்களாகவே இருந்தன. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால் கோயில்களின் அமைப்பும், சிற்ப நுட்பங்களும், அவற்றின் வளர்ச்சியும் பிற வரலாறுகளும் நன்கு விளங்கும்.

இனி , சமயகுரவர்கள் அருளிய தேவாரப் பதிகங் களில் சில திருப்பதிகளிலுள்ள கோயில்களுக்குப் பெயர் கள் குறிக்கப்பெற்றிருத்தல் அறியற்பாலது. அப்பெயர் கள் சில ஏதுக்கள் பெற்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அவற்றுள் சிலவற்றை அடியிற் காண்க.

திருப்பதிகளின் பெயர் அங்குள்ள கோயில்களின் பெயர்
1. காவிரிப்பூம்பட்டினம் . பல்லவனீச்சுரம்
2. பழையாறை பட்டீச்சுரம்
3. திருப்பனந்தாள் தாடகேச்சுரம்
4. திருநறையூர் சித்தீச்சுரம்
5. கொட்டையூர் கோடீச்சுரம்
6. உறையூர் மூக்கீச்சுரம்
7. நன்னிலம் பெருங்கோயில்
8. குடவாயில் பெருங்கோயில்
9. கீழ்வேளூர் பெருங்கோயில்
10. அம்பர் பெருங்கோயில்
11. நல்லூர் பெருங்கோயில்
12. தண்டலை நீணெறி பெருங்கோயில்
13. தலைச்சங்காடு பெருங்கோயில்
14. திருக்கச்சூர் ஆலக்கோயில்
15. திருக்கடம்பூர் கரக்கோயில்
16. .... ...... .... ...... ஞாழற் கோயில்
17. திருக்கருப்பறியலூர் கொகுடிக்கோயில்
18. திருமீயச்சூர் இளங்கோயில்
19. ... ... மணிக்கோயில்
20. பெண்ணாகடம் தூங்கானைமாடம்
--------

1. ஈச்சுரம் :- இங்குக் குறிக்கப்பெற்ற கோயிற் பெயர்களுள் 'ஈச்சுரம்' என்று முடிவன சில. அவற்றுள், காவிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் என்பது பல்லவ மன்னன் ஒருவன் திருப்பணி புரிந்து வழிபட்ட தாகும். இங்ஙனமே , பட்டி, தாடகை என்போர் வழி பட்ட கோயில்கள் முறையே பட்டீச்சுரம் , தாடகேச்சுரம் என்று வழங்கப் பெற்றன. பிறவும் இத்தகையவே. பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதல் இராச ராசசோழனும் அவனது மகனும் எடுப்பித்து வழிபட்ட கோயில்கள் முறையே இராசராசேச்சுரம், கங்கை கொண்ட சோழேச்சுரம் என்று வழங்கப்பட்டு வருதல் இதற்குச் சான்றாகும்.

குறுநிலமன்னர் அமைச்சர் முதலானோர் தம் அரசர் பெயரால் கோயில் எடுப்பித்து நிபந்தங்கள் விடுவதும் பழைய வழக்கமாகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திய தலைவர்களுள் ஒருவனான இலங்கேசுவரன் ஆகிய உத்தமசோழவாண கோவரையன் என்பான் கீழைப்பழுவூரில் கி. பி. 1102ல் ஒரு கற்றளி எடுப்பித்து அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்குத் தில்லைக்குடி என்ற ஊரையும் இறையிலியாக அளித்துள்ளான். (Ins. Nos. 390, 392 & 393 of 1924) இவ்வாறு எடுப்பிக்கப்பெற்ற கோயில்கள் நம் நாட்டில் பல உள்ளன.

அன்றியும், இறந்த வேந்தர்களை நினைவு கூர்தற்குக் கோயில்கள் எடுப்பித்தலும் உண்டு. அவை 'பள்ளிப் படை' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் எடுப்பிக்கப்பெற்ற கோயில் ஒன்று பட்டீச் சுரத்திற்கு அண்மையில் திருமலைராயன் ஆற்றின் வட கரையில் உள்ளது. அதனை இப்போது இராமநாதன் கோயில் என்று வழங்குகின்றனர். அது 'பஞ்சவன் மாதேவீச்சுரம்' என்ற பெயருடையது என்பது அக் கோயிலிலுள்ள ஒரே கல்வெட்டால் புலப்படுகின்றது. பஞ்சவன் மாதேவி என்ற அரசி இறந்த பின்னர் பள்ளிப் படையாக அங்கு அது எடுப்பிக்கப்பெற்றது என்பது அக்கல்வெட்டால் அறியப்படும் மற்றொரு செய்தியாகும். (Ins. No. 271 of 1927) வட ஆர்க்காடு சில்லா மேற்பாடியிலுள்ள ஒரு கோயில் 'அரிஞ்சயேச்சுரம்' என்ற பெயருடன் உள்ளது. அதனை இக்காலத்தில் 'சோழேச்சுரம்' என்று வழங்குகின்றனர். அது முதல் இராசராசசோழன் பாட்டனாகிய அரிஞ்சயன் இறந்த பிறகு அவனுக்குப் பள்ளிப்படையாக எடுப்பிக்கப் பெற்றது என்பதை அடியில் வரும் கல்வெட்டினால் அறியலாம்.

(1) ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வி யுந்த ( 2) னக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்காந்த ளூர்ச்சா (3) லை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் நுளம்ப (4) பாடியுந் தடிகை பாடியுங்குடமலை நாடுங் கொல்லமுங்கலிங்கமும் (5) எண்டிசை புகழ்தர வீழமண்டலமுந் திண்டி (6) றல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளர வூழியெல்லா (7) யாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத்தேசுகொ (8)ள் ஸ்ரீ கோராஜ ராஜ ராஜகேசரி வன்மரான ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு (9) 29 ஆவது ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெரும்பாணப் பாடித்து ஞாட்டு (10) மேற்பாடியான ராஜாஸ்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ் சினதேவற்குப் பள்ளிப்படை (11) யாக உடையார் ஸ்ரீராஜ ராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீஸ்வரத்து (12) மகாதே வற்கு வெண்குன்றக் கோட்டத்து மருதநாட்டு வெள்ளாளன் அருவாக் (13) கிழான் முத்திகண்ட நேன் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு (14) வைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணுற்றாறுங் கைக் கொண்டு (15) நிசதம் உழக்கு நெய் ராஜகேசரியால் சந்திராதித்தவல் அட்டுவதானேன் இராஜாஸ்ரீய புரத்து (16) இடையன் ஏணி கெங்காதிரனேன். S. I. I. Vol. III No. 17

2. பெருங்கோயில் :- சில கோயில்கள் பெருங்கோயில்கள் என்று தேவாரப் பதிகங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றையே மாடக்கோயில்கள் என்று கூறுவதும் உண்டு. இப்பெருங் கோயில்களெல்லாம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் பழைய சோழமன் னருமாகிய கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப் பெற்றனவாகும். இதனை, 'எண்டோளீசர்க்கெழின் மாடம் எழுபது செய்துலகாண்ட செங்கட்சோழர்' என்னுந் திருமங்கை மன்னன் திருவாக்கினால் உணரலாம். அன்றியும்,

'வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசை
செம்பியன் கொச்செங்கணான் செய் கோயிலே'
எனவும்

'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில் செங் கண்ணவன் கோயில் சேர்வரே'
எனவும்

'செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே'
எனவும்

'கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான்
செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில்
நயந்தவனை
எனவும்
போதரும் சைவசமய குரவர்களது திருவாக்குகளினாலும் இச்செய்தி வலியுறுத்தல் காண்க பெருங்கோயில்களெல் லாம் செய்குன்றுகள் மேல் எடுப்பிக்கப்பெற்றவை. எனவே, இவற்றை மலைக்கோயில்கள் என்றும் கூறலாம். திருஞான சம்பந்தப் பெருமான் திருநல்லூரிலுள்ள பெருங்கோயிலை மலைமல்கு கோயில்' என்று கூறியிருப்பது அதன் அமைப்பை ஒருவாறு உணர்த்துவதாகும். அப்பரடிகள் காலத்தில் நம் தமிழ் நாட்டில் எழுபத் தெட்டுப் பெருங்கோயில்கள் இருந்தன வென்பது,

'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
      பெருங்கோயி லெழுபதினோ டெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்
      கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறைவர்கள் வழிப்பட்டேத்தும்
      இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
      தாழ்ந்திறைஞ்சத் தீ வினைகள் தீருமன்றே,

என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் அறியப்படுகின் றது. சமய குரவர்கட்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் வேந்தர்களாக எடுப்பித்த பெருங்கோயில்களும் நம் நாட்டில் பல உண்டு.

3. ஞாழற்கோயில் :- மேற்குறித்த பாடலில் வந் துள்ள கோயில்களுள் ஞாழற் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் எங்குளது என்பதைத் தேவாரப்பதிகங்களின் துணைகொண்டு அறிய இயலவில்லை. ஆயினும், சில கல்வெட்டுக்கள் இச்செய்தியை உணர்த்துகின்றன. அவற்றுள் ஒன்றை அடியிற் காண்க.

(ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரிவன் மாக்கியாண்டு பதினெட்டாவது வடகரைத் தேவஸ் தானம் பாதிரிப் புலியூர்த் திருக்கடை ஞாழற் பெருமானடி களுக்கு(2)த் திருவுண்ணாழிகைக் கணப்பெருமக்கள் வழி தென்கரைத் தேவதானம் பெருமாக்களூர் ஆஸ்வ லாபன சூத்தரத்து ....... கோத்தரதத்து நாராயணஞ் (3) சேந்தனிடை யொருதிருவமிர்துக்கு வேண்டும் முதலிவனிடைக் கொண்டோம் இது சந்திராதித்தவல் செலுத்துவோமானோந் திருவுண்ணாழிகைக் கணப் (4) பெருமக்களோம். (S. II. Vol. VII No.744.)

இக்கல்வெட்டினால் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கோயில் முற்காலத்தில் ஞாழற்கோயில் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது வெளியாகின்றது. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானும் ஞாழற்பெரு மானடிகள் என்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பது உணரற்பாலது. ஞாழல் என்பது ஒரு மரத்தின் பெயர். அம்மரத்தினடியில் எழுந்தருளியுள்ள பெருமான் ஞாழற் பெருமான் என்று வழங்கப்பெற்றனராதல் வேண்டும். 'திருவாழுங்கடை ஞாழற்சினை யமரும்' என்ற மற்றொரு கல்வெட்டுப் பகுதியினாலும் இச்செய்தி வலியுறும். எனவே, ஞாழல் மரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலை ஞாழற்கோயிலென்றும் வழங்கியிருப்பது சாலப்பொருந்து மென்க.

4: கொகுடிக்கோயில் :- சமய குரவர்களால் குறிக்கப்பெற்ற மற்றொரு கோயில் கொகுடிக் கோயிலாகும். இது திருக்கருப்பறியலூரின் கண் உள்ள கோயில் என் பது தேவாரப் பதிகங்களால் அறியக்கிடக்கின்றது. இவ் வூர் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்கப் பெறுகின் றது. இதனை மேலைக்காழி என்றுங் கூறுவர். இது சீர்காழிக்கு மேற்கே ஆறுமைல் தூரத்திலுள்ளது. கொகுடி என்பது ஒருவகை முல்லையாதலின் அம்முல்லை செறிந்துள்ள ஓரிடத்தில் அமைந்த பெருங்கோயில் கொகுடிக்கோயில் என்று வழங்கப்பெற்றது. நேரிற் சென்று பார்த்தபோது இவ்வுண்மை புலப்பட்டது.

5. இளங்கோயில் : - தேவாரப்பதிகத்தில் குறிக்கப் பெற்ற வேறொரு கோயில் இளங்கோயில் ஆகும். இது திருமீயச்சூரின்கண் உள்ளது. பழைய கோயிலைப் புதுக் குங்கால் அதற்கு அண்மையில் இறைவனை எழுந்தருளு வித்து வழிபாடு புரிந்த கோயில் இளங்கோயில் ஆகும். சேய்மையிலுள்ளார் தாம் வழிபடும் கடவுளைத் தம் மூர்க் கணித்தாக எழுந்தருளுவித்து எடுப்பித்த கோயி லும் இளங்கோயில் என்று வழங்கப்பெறும்.

இனி, கோயில்களிலுள்ள திருச்சுற்று மாளிகைகளில் சில சிவலிங்கங்கள் இருத்தலை இன்றும் காணலாம். அவற்றை அகத்தியர், வசிட்டர், விசுவாமித்திரர் முதலான முனிபுங்கவர்கள் எழுந்தருளுவித்துப் பூசித்துச் சென்றனர் என்று கூறுவது இற்றைநாள் வழக்கு ; தல புராணங்களும் இங்ஙனமே கூறுகின்றன. உண்மைச் செய்தியோ இதற்கு மாறாக உளது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றை அடியிற் காணலாம்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைலில் உள்ள திருப்புறம்பயம் சிவாலயத்தில் திருச்சுற்று மாளி கையில் சில சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றை அகத் தியர், புலத்தியர் முதலானோர் எழுந்தருளுவித்து வழி பாடு புரிந்தனர் என்பது புராணத்திற் காணப்பெறுஞ் செய்தியாகும். ஆனால், அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு விழும்பரையன் என்ற தலைவன் ஒருவன் வன்மீக முடையாரையும் திருவலஞ்சுழி-யுடையாரையும் முதற் பிரகாரத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிபந்தம் விட்டனன் என்று கூறுகின்றது. எனவே, ஆரூரிறைவனிடத்தும் வலஞ்சுழிப் பெருமானிடத்தும் பேரன்பு பூண்டு ஒழுகிவந்த அத்தலைவன் புறம்பயத்துள்ள ஆலயத்தில் அக்கடவுளரை எழுந்தருளுவித்தனன் என்பது நன்கு வெளியாதல் காண்க. கும்பகோணத்தில் நாகேசுவரர் ஆலயம் என்று வழங்கப்பெறும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் முதற் பிரகாரத்தில் செம்பியன் பல்லவ ராயன் என்ற தலைவன் திருப்புறம்பயமுடைய பெரு மானை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்குப் பதினேழாயிரம் பொன் அளித்தனன் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. புறம்பயமுடைய பெருமானுக்கு அத்தலைவன் கட்டுவித்த சிறுகோயிலை நாகேசுவரர் ஆலயத்தில் இன்றும் காணலாம். இத்தகைய கோயில்களையும் இளங்கோயில்கள் என்று கூறுவது பொருத்த முடையதேயாம்.

6. ஆலக்கோயில் :- தேவாரப் பதிகங்களில் குறிக்கப் பெற்ற பிறிதொரு ஆலக்கோயில் ஆகும் இது திருக்கச் சூரின்கண் உளது. சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று அறிஞர் கூறுவர். எனவே, இறைவன் ஆலமர நீழலில் எழுந்தருளியுள்ள கோயில் ஆலக்கோயில் என்று வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப் படுகின்றது. திருக்கச்சூர் செங்கற்பட்டிற்கு வடக்கேயுள்ள சிங்கப் பெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு நண்பகலில் சிவபெருமான் அன்னம் அளித்த தலம் இதுவேயாகும்.

7. தூங்கானைமாடம் :- இது பெண்ணாகடத்திலுள்ள கோயிலின் பெயரென்பது துன்னார் கடந்தையுள் தூங்கானைமாடச் சுடர்க் கொழுந்தே' என்னும் அப்பரடிகள் திருவாக்கினால் அறியப்படுகின்றது. கடந்தை என்பது பெண்ணாகடத்தைக் குறிப்பதாகும். இவ்வூரிலுள்ள கோயிலின் கருப்பக்கிரகத்தின் மேலுள்ள விமானத்தின் அமைப்பு தூங்கும் யானையைப் போன்றிருத்தலின் இக் கோயில் தூங்கானைமாடம் என்று வழங்கப்பெற்றது போலும். இதனை வடமொழியாளர் கஜபிரஷ்ட விமானம்' என்பர். இத்தகைய விமானமமைந்த கோயில்கள் கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள இன்னம்பரிலும் முருகப் பிரானது தலங்களுள் ஒன்றாகிய திருத்தணிகை யிலும் உள்ளன.

தூங்கானைமாடத்தைப் பற்றிய பிற செய்திகளும் கரக்கோயில், மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப்பெறும்.
-------------

9. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள்

நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத் தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் செய்திகளும் வெளி யாகின்றன அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு. இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க் கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள். அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டி லாகாவின் ஆண்டு அறிக்கைகளின் மூலம் அறியக்கிடக்கும் மூன்று தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகள், தமிழ் இலக்கிய வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதி, அவற்றை அடியிற் குறிக்கின்றேன்.

1. திருப்பாலைப்பந்தல் உலா :- திருப்பாலைப்பந்தல் என் பது தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலூகாவிலுள்ள ஓர் ஊர் . அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது எல்லப்ப நயினார் என்னும் புலவர். பெருமானால் பாடப்பெற்றது இவ்வுலா என்பது அவ்வூர்க் கோயிற் கருப்பஇல்லின் தென்சுவரில் வரையப்பெற் றுள்ள ஒரு கல்வெட்டாற் புலப்படுகின்றது. (Inscription No. 401 of 1938). உலா இயற்றி அரங்கேற்றிய இவ் வாசிரியர்க்குக் கோயில் அதிகாரிகள் சில நிலங்களும் ஒரு மனையும் அளித்ததோடு இறைவர்க்குப் படைக்கப் பெறுந் திருவமுதில் ஒரு பகுதியை நாள்தோறும் வழங்கி வருமாறு செய்திருந்தமையும் அக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. அன்றியும், அக் கல்வெட்டு இவ்வாசிரியர் உண்ணாமுலை நயினார் என்பவருடைய புதல்வர் என்றும் காலிங்கராயர் என்ற பட்டமுடையவர் என் றும் கூறுகின்றது. இவர் இயற்றிய வேறு நூல்கள், திரு வாரூர்க் கோவை[1] அருணாசல புராணம், திருவருணையந்தாதி என்பன. அன்றியும், வீரைக் கவிராச பண்டிதர் இயற்றிய சௌந்தரியலகரிக்குச் சிறந்ததோர் உரையும் இவர் எழுதியுள்ளனர். இவர் வடமொழியிலும் சிறந்த புலமையுடையவராயிருந்தனர் என்பது அவ் வுரையால் புலனாகின்றது. இவர் திருவண்ணாமலைக்கு மேற்கேயுள்ள தாழையூரினர் என்பதும் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதும் ஈண்டு அறியத் தக்கன.

2. இறைசைப் புராணம் -: இறைசை என்பது இந் நாளில் எலவானாசூர் என்னும் பெயருடன் தென்னார்க் காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலூகாவில் உளது. அது முற்காலத்தில் இறையானரையூர் என்னும் பெய ருடையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் இயற்றியருளிய திருவிளையாடல்களைக் கூறும் தலபுராணமே இறைசைப் புராணமாகும். இந் நூலின் ஆசிரியர் திருமலை நயினார் சந்திரசேகரர் என் னும் புலவர் ஆவர். எனவே இவர் சந்திரசேகரர் என்ற இயற்பெயருடையவர் என்பதும் திருமலை நயினாருடைய புதல்வர் என்பதும் அறியக்கிடத்தல் காண்க. இவ்வாசிரியர் மெய்கண்டசந்தானத்தைச் சேர்ந்த திரு வண்ணாமலைச் சத்திய ஞான தரிசினிகளின் மாணவர். இவர் இறைசைப் புராணம் பாடி அரங்கேற்றியபோது, கோயில் அதிகாரிகள் இவருக்குச் சில நிலங்களும், ஆனந்த தாண்ட வன் திருவீதியில் ஒரு மனையும் கி.பி. 1510 -ஆம் ஆண்டில் அளித்துள்ளனர். இச்செய்திகளெல்லாம் எலவானாசூர்க்கோயில் முதற் பிரகாரம் மேலைச்சுவரில் வரையப்பட்டுள்ள ஒரு கல்வெட்டினால் நன்கு புலனாகின்ற ன (Ins. 485of 1938). இந் நூலாசிரியர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர்.

3. ஓங்கு கோயிற் புராணம் :- இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருப்புத்தூரில் திருத்தளியாண்ட நாயனார் கோயிலில் எழுந்தருளியுள்ள ஓங்கு கோயிலுறைவார் என்னுஞ் சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களைக் கூறுவது இப்புராணமாகும். இது, திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் என்னும் பெரியாரால் இயற் றப்பெற்றது. இவ்வாசிரியர் திருப்புத்தூரிலிருந்த சிறு மடம் என்னும் பெயருடைய ஒரு மடத்தில் வதிந்தவர்; மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர்; கி. பி. 1484 ஆம் ஆண்டில் புராணம்பாடி அரங்கேற்றியவர். இவர் தம் நூலை அரங்கேற்றிய போது கோயிலதிகாரிகள், மேல் திருமங்கலம் என்ற மண்ணிமங்கலத்தில் இவருக்கும் ஐந்து மாநிலம் அளித்தனர் என்று தெரிகிறது. இச் செய்திகள் திருப்புத்தூர்க் கோயிற் கீழைப்பிரகாரத்திற் காணப்படும் ஒரு கல்வெட்டிற் பொறிக்கப்பெற்றுள்ளன (Ins. 180 of 1936). இவ்வாசிரியர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர். மேலே குறிப்பிட்ட திருப்பாலைப்பந்தல் உலா . இறைசைப் புராணம், ஓங்கு கோயிற் புராணம் என்னும் நூல்கள் இக்காலத்தில் உள்ளனவா என்பது புலப்படவில்லை.

----
[1]. இக்கோவை, காலஞ்சென்ற மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
----------

10. விநாயகர் வழிபாடும் தமிழ்நாடும்

வடவேங்கடம் தென்குமரிக் கிடைப்பட்ட தமிழ கத்தில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் ளாகிய தமிழ் மக்கள் கடவுள் உண்டு என்ற கொள்கை யினராக இருந்திருத்தல் வேண்டும் என்பது அச்சொல் உண்மையாலேயே பெறப்படுகின்றது. அச்சொல்லின் பொருளும் கடவுள் இலக்கணத்தை ஒருவகையில் உணர்த்துவதாக அமைந்திருப்பது மகிழ்தற்குரியதா கும். அன்றியும் 'கொடிநிலை, கந்தழி, வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும் - கடவுள் வாழ்த் தொடு கண்ணியவருமே' என்ற தொல்காப்பியச் சூத்திரமும் தமிழ் மக்கள் தெய்வங் கொள்கையுடையவர் என்பதை வலியுறுத்துதல் காண்க. எனவே, கடவுட் கொள்கையுடைய நம்முன்னோர் தாம் கடவுளை வழிபடுவதற்குரிய கோயில்களை நகரங்களிலும் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் எடுப்பித் திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. சேர சோழ பாண்டியரது தலைநகரங்களிலும் குறுநிலமன்னர் வாழ்ந்துவந்த நகரங்களிலும் பல கோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பது சங்கத் துச் சான்றோர் அருளிய பாடல்களாலும் தொடர்நிலைச் செய்யுள்களாலும் நன்கு உணரப்படுகின்றது. அவற்றை நோக்கின் அந்நாளில் கோயில்களில் மக்களால் வழி படப் பெற்ற தெய்வங்கள் எவை என்பது எளிதில் புலப்படும். சோழரது தலைநகராகிய காவிரிப்பூம்பட்டி னத்தில் தம்காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்த தெய்வங்களை ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் இயற்றியுள்ள சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். அதனை,

'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபிற் றீமுறை யொருபால்
நால்வகைத் தேவரு மூவாறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறு சிறந் தொருபால்
அறவோர் பள்ளியு மறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
துறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால்'

என்னும் இந்திரவிழவூரெடுத்த காதைப் பகுதியினால் உணரலாம். இங்ஙனமே , பாண்டியரது தலைநகராகிய மதுரையம்பதியில் அந் நாளிலிருந்த கோயில்கள்.

'நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்’

என்று அவ்வடிகளால் குறிக்கப் பெற்றிருத்தல் அறியற் பாலது. ஆகவே, கடைச்சங்க நாளில் காவிரிப்பூம்பட் டினம், மதுரை ஆகிய இருபெரு நகரங்களிலும் சிவபெருமான், முருகவேள், திருமால், பலதேவர் என்னும் நாற்பெருங் கடவுளர்க்கும் கோயில்கள் இருந்தன என்பது பெறப்படுதல் காண்க. அன்றியும் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரன் கோயிலும், அருகர் பள்ளியும் புத்தர் பள்ளியும் இருந்தமை மேலே குறித்துள்ள அடிகளது திருவாக்கினால் வெளியாகின்றது. ஆனால், பிள்ளையார் எனவும் விநாயகர் எனவும் கணபதி எனவும் வழங்கப்பெறும் யானை முகக் கடவுளைப்பற்றிய குறிப்பு அதில் காணப்பெறாதிருத்தல் ஆராய்தற்குரியதாகும். இதனைக் கூர்ந்து நோக்கின், கடைச்சங்க நாளில் பிள்ளையார் வழிபாடு நம் தமிழகத்தில் இருந்திலது என்பது தெள்ளிதிற் புலனாகும்.

இனி, காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாலதி என் னும் பார்ப்பனப்பெண் ஒருத்தி தன் மாற்றாள் மகவை எடுத்துப் பாலருத்த, அப்பால் விக்கினமையின் அஃது உயிர் துறந்தது. அதனைக்கண்ட மாலதியும் நடுக்கமுற் றுத் தன்மீது சுமத்தப்பெறும் அடாப்பழிக்கு அஞ்சிய வளாய், அம் மகவை எடுத்துக்கொண்டு காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள எல்லாக் கோயில்களுக்கும் சென்று அதற்கு உயிரளிக்குமாறு வரம் வேண்டினள். எத் தேவரும் அவ்வரம் கொடாமற் போகவே, இறுதியில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாசாத்தனார் அவள் பால் இரக்கங்கொண்டு தாமே அம்மகவாகத்தோன்றி அவளது இன்னலைப் போக்கியருளினார். இது சிலப்பதிகாரத்திற் காணப்பெறும் ஒரு வரலாறாகும், இதனைக் கூற வந்த அடிகள், அம் மாலதி என்பாள் இறந்த மகவைக் கைகளில் ஏந்தி வரம் வேண்டி நின்ற கோயில்கள் எல்லா வற்றையும் குறித்துள்ளனர். அதனை,

’- மேலோர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப்
பால்விக்கிப் பாலகன் றான் சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையா ளென் மேற் படாதனவிட்
டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்
டமரர் தருக்கோட்டம் வெள்யானைக்கோட்டம்
புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும்
தேவிர்கா ளெம்முறுநோய் தீர்மென்று மேவியோர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு ;-

என்னும் கனாத்திற முரைத்த காதைப் பகுதியினால் நன் கறியலாம். இப்பகுதியில் விநாயகர்க்கு ஒரு கோட்டம் குறிக்கப்பெறாதிருத்தல் அறியத்தக்கது. அன்றியும். இந்திரனது கற்பகத்தருவிற்கு ஒரு கோயிலும் ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு ஒரு கோயிலும் கூறியுள்ள அடிகள், விநாயகர்க்கு அந்நகரில் ஒரு கோயி லிருந்திருப்பின் அதனையும் கூறியிருப்பர் அன்றோ ? அடிகள் அதனைக் கூறாமையொன்றே கடைச்சங்கநாளில் விநாயகர் வழிபாடும் அவர்க்குரிய கோயிலும் நம் தமிழ்நாட்டில் இல்லை என்பதை நன்கு புலப்படுத்தா நிற்கும்.

ஆசிரியர் நக்கீரனார் பாடியுள்ள 55-ஆம் புறப் பாட்டில்,

’ஏற்றுவலனுயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல் வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையுமேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றி
பிணிமுக வூர்தி வொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வர்'

என்று கூறியுள்ளனர். இதில், சிவபெருமான், பல தேவன், திருமால், முருகவேள் என்னும் நாற்பெருந் தெய்வங்கள் மாத்திரம் குறிக்கப்பெற்றிருத்தல் காண்க. எட்டுத்தொகை நூற்களுள் அக நானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு என்பவற்றிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவாக உள்ளன. நற்றிணை, குறுந்தொகை என்னும் இரண்டு நூற்களிலுமுள்ள கடவுள் வாழ்த்துக் கள் முறையே திருமாலுக்கும் முருகவேளுக்கும் உரியவா யிருக்கின்றன. எனவே, சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள நூல்களில் விநாயகரைப்பற்றிய குறிப்பு இல்லா திருப்பது அவ்வழிபாடு அந்நாளில் நம் நாட்டில் இருந் திலது என்பதையே வலியுறுத்துவதாகும்.[1]

இனி, விநாயகர் வழிபாடு நம் நாட்டில் எவ்வாறு எக்காலத்தில் தொடங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது ஆராய்தற்குரியதாகும்.

விநாயகர் வழிபாடு மிகச் சிறப்பாகத் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் நாடு மகாராட்டிர தேசம் என்பது யாவரும் அறிந்ததொன்றாம். அங்கிருந்தே அது நம் நாட்டிலும் பரவியிருத்தல் வேண்டுமென்பது உய்த் துணரப்படும் செய்தியாகும். சோழமண்டலத்தில் தஞ்சை ஜில்லா நன்னிலந் தாலூகாவில் திருச்செங் காட்டங்குடியிலுள்ள கோயில் கணபதீச்சுரம் என்ற பெயருடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நிலவியது என்பது.

'பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ டுடன் வாழும்
அன்னங்காள் அன்றில் காள் அகன்றும் போய் வருவீர்காள்
கன்னவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே'

என்னும் திருஞானசம்பந்தப்பெருமான் திருவாக்கினால் அறியப்படுகின்றது. அக் கோயிலிலுள்ள விநாயகரது பெயர் வாதாபி விநாயகர் என்பதாம். தமிழ் நாட்டிலுள்ள விநாயகரது படிமங்களுள் கணபதீச்சுரத்தி லுள்ளதே மிகத் தொன்மை வாய்ந்தது எனலாம். முதன் முதலில் விநாயகர் எழுந்தருளுவிக்கப் பெற்ற கோயிலானமையின் திருச்செங்காட்டங்குடி ஆலயம் கணபதீச்சுரம் என்று வழங்கப் பெற்றது போலும்.

இனி, வாதாபிக்கும் திருச்செங்காட்டங்குடி விநாயகருக்கும் ஒரு தொடர்பு இருத்தல் ஈண்டு உணரற் பாலதாகும். வாதாபி என்பது மேலைச்சளுக்கியரது தலைநகரம்; இக்காலத்தில் பம்பாய் மாகாணத்திலுள்ள பீஜப்பூர் ஜில்லாவில் உள்ளது. அங்கிருந்து அரசாண்ட மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் புலகேசிக்கும் காஞ்சிமா நகரிலிருந்த பல்லவவேந்தனாகிய முதல் நரசிம்மவர்மனுக்கும் கி.பி. 642-ல் ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. முதல் நரசிம்மவர்மனது படைக்குத் தலைமை வகித்துப் போர் நடத்தியவர், திருச்செங் காட்டங்குடியிற் பிறந்தவரும் பரஞ்சோதி என்ற இயற்பெயருடையவரும் அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவரும் திருஞான சம்பந்த சுவாமிகளால் தேவாரப் பதிகத்தில் பாராட்டப் பெற்றவரும் ஆகிய சிறுத் தொண்ட நாயனாரே ஆவர். அப்பெரியார் புலகேசியைப் போரிற்புறங்கண்டு அவனது தலைநக ராகிய வாதாபியையும் அழித்து அங்கு வெற்றித் தூண் நிறுவி அதில் தம் வீரச்செயல்களையும் எழுதுவித்தனர். அக் கல்வெட்டின் ஒரு பகுதி இன்றும் அந் நகரில் உளது. இச்செய்திகளுள் சிலவற்றை ,

'மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன வெண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.''

என்னும் பெரிய புராணச் செய்யுளிலும் காணலாம்.

இவ்வாறு வெற்றி வீரராகத் திரும்பிய சிறுத் தொண்டர், சேய்மையிலுள்ள வாதாபி நகரில் தாம் எய்திய வெற்றிக்கடையாளமாகத் தம்மால் அழிக்கப் பெற்ற அந்நகரிலிருந்து சில விநாயகர் படிமங்களைக் கொண்டுவந்து, அவற்றுள் ஒன்றைத் தம் ஊராகிய திருச்செங்காட்டங்குடியிலுள்ள ஆலயத்தில் எழுந் தருளுவித்து அதற்கு வாதாபி விநாயகர் என்ற பெயரும் இட்டிருத்தல் வேண்டும். அன்றியும், அந் நாயனார் தாம் கொணர்ந்த விநாயகர் படிமங்களைத் தமதூருக்கு அண்மையிலுள்ள திருப்புகலூரிலும் திருவாரூரிலும் எழுந்தருளுவித்துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதனை அத் தலங்களிலுள்ள ஒவ்வொரு விநாயகர் வாதாபி விநாயகர் என்று வழங்கப் பெறுதலால் அறியலாம்.

திருவாரூரிலுள்ள வாதாபி விநாயகர் படிமம் கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்றது என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறி யுள்ளனர். இதனை,

'மேதவியருக்கிடமாய் மிளிர் திருவாரூர்த் தளியில்
போதாவி தொறுமலர்ந்து பொலிகலிங்கம் நின்றும் போந்து
ஓதாவி யனைத்துமினிது உவந்தேத்த வுவந்துதவும்
வாதாவி மழகளிற்றை மலர் தூவி யிறைஞ்சுவாம்'

என்ற தியாகராசலீலையிலுள்ள செய்யுளால் உணரலாம். ஆனால், கலிங்கத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற விநா யகர் வாதாவி விநாயகர் என்று கூறப்பெற்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. எனினும், இச் செய்தி அவ் விநாயகர் படிமம் வெளி நாட்டிலிருந்து ஒருகாலத்துக் கொண்டுவரப்பெற்றிருத்தல் வேண்டுமென்ற உண்மையை வலியுறுத்துதல் காண்க.

இனி, புற நாடுகளின் மேல் படையெடுத்துச்சென்ற தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமது வெற்றிக்கு அடை யாளமாகத் தாம் வெற்றிபெற்ற நாடுகளில் அழிந்த ஊர்களிலிருந்து கடவுட் படிமங்கள் கொண்டு வந்து தம் நாட்டில் எழுந்தருளுவிப்பது ஒரு பழைய வழக்கமாகும். இவ்வரிய செய்தி சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. கம்பன் மணியனாகிய விக்கிரம சிங்க மூவேந்த வேளான் என்னும் சோழநாட்டுப் படைத் தலைவன் சேரமண்டலத்தின் மேற் படையெடுத்துச் சென்று அதனை வென்று திரும்பியபோது, அங்கிருந்து கொணர்ந்த மரகத தேவரை முதல் இராஜ ராஜ சோழன் பால் பெற்றுத் திருப்பழனத்திலுள்ள ஆலயத் தில் கி.பி. 999-ல் எழுந்தருளுவித்தான் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.[2]

கங்கைகொண்ட சோழன் மகனாகிய விஜய ராஜேந் திர சோழன் மேலைச் சளுக்கியரது நகரமாகிய கலியாண புரத்தை வென்று அங்கிருந்து துவார பாலகர் படிமம் ஒன்று கொண்டு வந்துள்ளானென்பது, கும்பகோணத் திற்கு அண்மையிலுள்ள தாராசுரம் (இராஜராஜபுரம்) கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகின் றது. அப் படிமத்தினடியில், கலியாணபுரம் எறிந்து உடையார் விஜய ராஜேந்திர சோழதேவர் கொடுவந்த துவாரபாலகர்' என்று வரையப்பெற்றுள்ளது. பேரழகு வாய்ந்த அப் படிமம் மூன்று ஆண்டுகட்கு முன்னர்த் தாராசுரம் கோயிலிலிருந்து, தஞ்சை அரண்மனை ஆலயக் கண்காணிப்பாளரும் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சருமான திருவாளர் I. M. சோமசுந்தரம் பிள்ளையவர்களால் தஞ்சைக்குக் கொண்டு போகப் பெற்றுப் பெரிய கோயிலிலுள்ள 'சோழர் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப் பெற்றுள்ளது.

மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவனான அரையன் தேவுந் திருவும் உடையான் பொத்தப்பிச்சோழன் என்பான், வீரபாண்டியனுக்கு உதவும் பொருட்டுப் பாண்டி மண்டலத்தின் மீது படை யெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்புங்கால், அந் நாட்டில் அழிந்த ஊர்களிலிருந்து தன் வெற்றிக்கு அறிகுறியாகக் கொண்டுவந்த கூத்தாடுந் தேவரையும் (நடராசப் பெருமான்) நாச்சியாரையும் சீகாழியிலுள்ள திருத்தோணியப்பர் ஆலயத்தில் எழுந்தருளுவித்தனன் என்பது அங்கேயுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. அக்கல்வெட்டு, 'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண் டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு பதினொன்றாவது சுத்தமலி வளநாட்டு வெண்ணிக் கூற் றத்து குண நாடரான உடையான் அரையன் தேவுந் திருவுமுடையானான பொத்தப்பிச் சோழன், வீரபாண் டியன் வினை செய்து பாண்டியன் மண்டலத்து அழிந்த ஊர்களில் நின்றும் ஜெயதம்பமாக எழுந்தருளுவித்துக் கொண்டு போந்த கூத்தாடுந் தேவரையும் நாச்சியாரையும் ராஜாதி ராஜவள நாட்டு திருக்கழுமல நாட்டு உடை யார் திருத்தோணி புரமுடையார் கோயிலில் திருநடை மாளிகையிலே எழுந்தருளி இருந்து பூசைகொண்டருளப் பண்ணுகவென்று இக்கூத்தாடுந் தேவர்க்கும் நாச்சியா ருக்கும் வேண்டு நிபந்தங்களுக்கு இருப்பதாக இட்ட எண்வேலி ஆக்கூரில் தேவதானம் இரண்டு வேலி இட்ட நிலம் இருவேலி இன்னிலம் ....... வேலியும் கைக்கொண்டு பூசைசெலுத்தப் பண்ணுக வென்றும் இப்படியே இன்னாயனார் கோயிலிலே கல்வெட்டப் பண்ணுக வென்றும் பிரசாதஞ் செய்தருளின திருமுகம் வந்தமையால் இந்நிலம் இரு வேலியும் கொண்டு இந் நாயனார்க்கு நாச்சியார்க்கும் பூசை செ... பண்ணுவது 11 - பன்மகேசுரரெக்ஷெ – [3] என்பதாம்.

ஈண்டு எடுத்துக் காட்டப் பெற்ற மூன்று செய்திக ளாலும் பண்டைத் தமிழ் வேந்தர் தாம் வென்ற நாடு களிலிருந்து தம் வெற்றிக் கறிகுறியாகக் கடவுட் படிமங் கள் கொண்டு வந்து எழுந்தருளுவித்தமை வெளியாதல் காண்க . எனவே, சிறுத்தொண்ட நாயனாரும் தாம் வென்ற மேலைச் சாளுக்கியர் தலைநகராகிய வாதாபியி லிருந்து சில விநாயகர் படிமங்கள் கொண்டு வந்து நம் தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிபந்தங்களும் விட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். அன்றியும், நாயனார் தம் காலத்திலேயே அவ்வழிபாட்டைப் பரப்ப வேண்டுமென்று முயன்றிருத்தல் இயல்பேயாம். ஒவ்வோர் ஊரிலுமுள்ள பல தெருக்களிலும் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் பெருவழிகளிலும் விநாயக ராலயம் அமைக்கப் பெற்றிருப்பது அப் புதிய கடவுள் வழிபாட்டை யாண்டும் பரவச்செய்தற்குக் கையாண்ட முறையேயாகும்.

பிற்காலச் சைவ நூற்களிலும் பிறவற்றிலும் முதலில் விநாயகர் வணக்கம் அமைந்திருப்பது யாவரு மறிந்ததே. விநாயகர் வணக்கத்தை முதலில் கொண் டுள்ள நூற்கள் பலவற்றுள்ளும் மிகத்தொன்மை வாய்ந்தவை புறப் பொருள் வெண்பா மாலை, நந்திக் கலம்பகம் என்பனவேயாம். இவற்றிற்கு முந்திய காலத்தியவான தேவாரத் திருப்பதிகங்களில் விநாயகரைப் பற்றிய மிகச் சில குறிப்புக்களே காணப்படுகின்றன. ஆகவே, கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தான் நம் நாட்டில் விநாயகர் வணக்கம் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது தேற்றம்.[4].

இதுகாறுங் கூறியவாற்றால், நம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்திலது என்பதும் கி.பி. 642-ல் சிறுத்தொண்ட நாயனார் மேலைச் சளுக்கியரது தலைநகராகிய வாதாபியிலிருந்து விநாயகரைக் கொண்டுவந்து நம் நாட்டுச் சிவாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளுவித்தனர் என்பதும் அதுமுதல் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவிச் சிறப்புற்றது என்பதும் பிறவும் நன்கு விளங்குதல் காண்க.

-----
[1]. பதினோராந் திருமுறையிலுள்ள மூத்த நாயனார் திரு விரட்டை மணிமாலை, கடைச்சங்கப் புலவராகிய கபிலர் இயற்றிய தன்று. அதன் ஆசிரியர் கபிலதேவநாயனார் என்ற பிற்காலப் புலவர் ஆவர்.
[2]. Inscriptions No. 135 of 1927 -28.
[3]. இக்கல்வெட்டு, சீகாழியிலுள்ள தமிழ்ப்பேராசிரியரும், தருமபுர ஆதீன வித்துவானுமாகிய திருவாளர் ப.அ. முத்துத் தாண்டவராயப்பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள 'காழிக் கல் வெட்டுக்கள்' என்னும் புத்தகத்தில் உள்ளதாகும்,
[4] விநாயகரைப் பற்றிய புராணக் கதைகளும் பின்னரே தோன்றியுள்ளன.
----------

11. புறநானூறும் கல்வெட்டுக்களும்

11.1. தோற்றுவாய்

புறநானூறு என்பது சங்கத்துச் சான்றோர் பலரால் இயற்றப்பெற்றுக் கடைச்சங்கத் திறுதிக் காலத்தில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இஃது அறமும் பொருளும் நுதலிய புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள் அமைந்த நானூறு பாடல்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளமையின், 'புற நானூறு' என்னும் பெயர் எய்திற்று. இதனைப் புறப் பாட்டு' எனவும் 'புறம்' எனவும் வழங்குவதுண்டு. இந் நூலின் கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந் தேவனாரால் இயற்றப்பட்டது. மற்றப் பாடல்கள் முரஞ்சியூர் முடி நாகராயர் முதல் கோவூர் கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலரால் பாடப்பெற்றவை. இந் நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாவர் என்பது தெரியவில்லை. இந் நூலிலுள்ள பாடல் கள் எல்லாம் அகவற்பாக்கள் ஆகும்.

மதுரை மாநகரிலிருந்த கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது. அறி ஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையாதலின், அக் காலப்பகுதியில் தொகுக்கப்பெற்ற புறநானூற்றிலுள்ள பாடல்களும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் னர் இயற்றப் பெற்றவை என்பதில் ஐயமில்லை. இத் துணைத் தொன்மை வாய்ந்த இவ்வரிய நூல் நம் முன்னோர் வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மனோர்க்கு நன்குணர்த்தும் ஒப்பற்ற கருவூலமாக அமைந்திருப்பது பெறற்கரும் பேறேயாம்.

பண்டைக்காலத்தில் இத் தமிழகத்தில் செங்கோலோச்சிய சேர சோழ பாண்டியராகிய முடியுடை வேந் தர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர் , படைத் தலைவர், கடையெழு வள்ளல்கள், சங்கப் புலவர்கள் முதலானோர் வரலாறுகளையும், பண்டைத் தமிழ் மக்களுடைய கொள்கை, நாகரிகம், கல்வி, வீரம் முதலானவற்றையும் உணர்ந்து கொள்வதற்குப் புறநானூறு என்னும் இச் சீரிய நூல் ஒன்றே போதும் எனலாம். உண்மைத் தமிழராகவுள்ள ஒவ்வொருவரும் இந்நூல் ஒன்றையாவது கற்றல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இனி கல்வெட்டுக்கள் என்பன, கோயிற் சுவர்கள், கற்பாறைகள், மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப்பெற்றிருக்கும் கல்லெழுத்துக்களேயாம். செப்பேடுகள் எல்லாம் கல்வெட்டுக்களின் படிகளேயாதலின் அவற்றையும் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பின் கீழ் ஈண்டு அடக்கிக் கொள்வது பொருந்தும். நம் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் எல்லாம் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே உள்ளன. சிற்சில வடமொழிக் கல்வெட்டுக்களும் நம் நாட்டில் உண்டு.

கல்வெட்டுக்களில் காணப்படுஞ் செய்திகள் எல்லாம் வெறும் கற்பனைச் செய்திகள் அல்ல, பயனற்ற செய்திகளும் அல்ல, அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. சேர சோழ பாண்டியராகிய முடியுடைத் தமிழ் வேந்தரும், பல்லவரும், குறுநில மன்னரும், பிற தலைவர்களும் புரிந்த அறச் செயல்களும், வீரச் செயல்களும், அன்னோர் செய்து கொண்ட உடன்படிக்கைகளும் அக்கால அரசியல் முறைகளும், போர் நிகழ்ச்சிகளும் பழைய புலவர்களைப் பற்றிய செய்திகளும், மண்டலம், வள நாடு, கோட்டம், நாடு, கூற்றம் என்பவற்றின் வரலாறுகளும், பல ஊர்களின் உண்மைப் பெயர்களும், முற்கால வழக்கங்களும், சமயநிலையும், மற்றும் பல அரிய நிகழ்ச்சிகளும் நம் நாட்டுக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றன. சுருங்கச் சொல்லு மிடத்து. நம் நாட்டின் பழைய சரிதங்களை உள்ளவாறு உணர்ந்து கொள்வதற்குத் தக்க கருவிகளாயிருப்பன, கல்வெட்டுக்களும் செப்பேடுகளுமேயாம், ஆகவே, புறநானூறும் கல்வெட்டுக்களும் உணர்த்துவன, நம் தமிழகத்தின் பண்டை வரலாறுகளே என்பது இனிது விளங்குதல் காண்க.

இவற்றுள், புறநானூறு, கி. பி. இரண்டாம் நூற் றாண்டிற்கு முன்னர் நிகழ்ந்த வரலாறுகளையே கூறும். நம் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களோ கி. பி , ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. எனவே, புறநானூறும் கல்வெட்டுக்களும் தம்முள் எங்ஙனம் இயைபுடையன வாதல் கூடும் என்ற ஐயப்பாடு எவர்க்கும் நிகழ்தல் இயல்பே. ஆதலால், இதுபற்றிச் சில கூறி விளக்குவேன்.

இலக்கியச் செய்திகள் எல்லாம் புனைந்துரை சிறிது கலந்த நூல் வழக்கில் அமைந்தவை. கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் புனைந்துரை கலவா உலக வழக்கில் அமைந்தவை. ஆதலால், வரலாற்று ஆராய்ச்சியாளர் கல்வெட்டுக்களையே தக்க சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராயினர். அன்னோர் இலக்கியங்களைச் சிறந்த சான்றுகளாக மதித்து ஏற்றுக் கொள்வதில்லை. இலக்கியச் செய்திகளுள் சில, புனைந் துரையாக இருத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதேயாயினும், அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தள்ளி விடுதல் எவ்வாற்றானும் ஏகபுடையதன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாய்ப் புற நானூற்றில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் தாங்கப்பட்டு உறுதியெய்து கின்றன. அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் நாம் எங் ஙனம் தள்ளுதல் கூடும்? ஆகவே, செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் தாங்கப்படும் உண்மைச் செய்திகளைத் தன்னகத்துக்கொண்டு சங்க நூல்களின் சிறப்பிற்கும் மாசற்ற தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குவது புறநானூறு எனலாம்.

11.2. உறுதிப்பாடு

புறநானூற்றுச் செய்திகளுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதிப்படுவன:

1. புறநானூற்றில் காணப்படும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்களான பெருநற்கிள்ளி. சோழன் கரிகாலன், சோழன் செங்கணான் என்போர், கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆனைமங்கலச் செப்பேடுகள் [1] , திருவாலங்காட்டுச் செப் பேடுகள்[2] , கன்னியாகுமரிக் கல்வெட்டுக்கள்[3] என்பவற்றில் மிகச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர்.

2. காரிகிழார், நெட்டிமையார். நெடும்பல்லியத் தனார் என்ற புலவர் பெருமக்களால் புறநானூற்றில் பாடப் பெற்றவனும், பல பகைஞர்களையும் வென்று மறக்கள வேள்விகள் புரிந்தவனும், வேண்டிய வேண்டி யாங்கு புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங் கொடை வள்ளலும், சிவபெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனுமாகிய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான், கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற வேள்விக்குடிச் செப் பேடுகளில்,

"கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்
குழாந் தவிர்த்த பல்யாக முதுகுடுமிப்
பெருவழுதி யெனும் பாண்டியாதிராசன்"

என்று பாராட்டப்பட்டிருப்பது உணரற்பாலது

3. இம் முதுகுடுமி அரசர்க்குரிய பல வேள்விகள் செய்து சிறப்புற்றவன் என்பது, இவன் இயற்பெயருக்கு முன்னருள்ள 'பல்யாகசாலை' என்ற அடை மொழிகளாலும்,

"அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் கேள்வி முற்றி
யூபநட்ட வியன் களம் பலகொல்''

என்ற 15-ஆம் புறப்பாட்டடிகளாலும் நன்கறியக் கிடக்கின்றது.

இச்செய்தி,

'பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டி யாதிராசனால் நாகமா மலைச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர் நாட்டுச் சொற்கணாளர் சொல்லப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாது கொற்கைக் கிழான் நற் கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வியந்த ணாளர் முன்பு கேட்க வென்றெடுத்துரைத்து வேள்விச் சாலை முன்பு நின்று வேள்விக்குடி-யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார் வேந்தனப் பொழுதே நீரோட்ட்டிக் கொடுத்தமையால் நீடு புக்தி துய்த்த பின்' என்ற வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதியினால் வலியுறுதல் காண்க.

4. இனி, கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற பேரரசர் இருவரையும் குறுநில மன்னர் ஐவரையும் தலையாலங் கானத்தில் வென்ற செய்தி, புறப்பாட்டுக்களால் உணரப்படுகின்றது.[4] இப்போர் நிகழ்ச்சி கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்னமனூர்ச் செப்பேட்டில்,[5]

''தலையாலங் கானத்திற் றன்னொக்கு
மிருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக்
குறைத்தலையின் கூத்தொழித்தும்''

என்று சொல்லப்பட்டிருத்தல் காண்க.

5. மேற் குறித்த சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப்படும் மாபாரதந் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்ற தொடர்களில் பாண்டியரின் அருஞ் செயல்கள் இரண்டு கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பாண்டியன் ஒருவன், கடைச்சங்க நாளில் மாபாரதத்தை நம் தமிழ் மொழியில் செய்யுட்களாகப் பாடுவித்தமை ஒன்று. அப் பாண்டியன் வேண்டு கோளின்படி மாபாரதத்தைத் தமிழில் பாடியவர் புறநானூற்றின் முதற் பாடலான கடவுள் வாழ்த்து இயற்றிய பெருந்தேவனார் ஆவர். அதுபற்றி அவ்வாசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அந் நாளில் வழங்கப்பெற்றனர் என்பது பலரும் அறிந்ததே.

மற்றொன்று, பாண்டியர்கள் மதுரைமா நகரில் தமிழ்ச் சங்கம் நிறுவிப் புலவர்களைப் போற்றி வந்த மையேயாம். இச் செய்தியைப் புறநானூறு முதலான தொகை நூல்களால் நன்குணரலாம்.

6. ''வடதிசை யதுவே வான்றோய் இமயம்
தென்றிசை ஆஅய் குடியின் றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே'' (புறம்: 132)

என்று புறப்பாட்டில் புகழப்பட்டவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் ஆகிய வேள் ஆய் என்பான் பொதியில் மலையைச் சார்ந்த வேணாட்டை ஆட்சி புரிந்த குறுநிலமன்னன் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களால் அறியலாம். பாண்டி நாட்டிற்குத் தென் மேற்கில் பேரியாற்றுக்கும் குமரிமுனைக்கும் இடைப் பட்ட திருவாங்கூர் இராச்சியத்தின் தென்பகுதிக்கு முற்காலத்தில் 'வேணாடு' என்ற பெயர் இருந்தது என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. வேள் ஆயின் மரபினர் கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளிலும் அங்கு அரசாண்டனர் என்பதும் அன்னோர் கோச் சடையன் ரணதீரன், அவன் பேரன் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டி வேந்தர்களால் வென்று அடக்கப்பட்டனர் என்பதும் வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றன. இச்செய்திகளை,

"பொரு தூருங் கடற்றானையை மருதூருள் மாண்பழித்து
ஆய்வேளை யகப்படவே யென்னாமை யெறிந்தழித்து"

எனவும்,

"தீவார அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையுங் குறும்பரையும் அடலமருள் அழித் தோட்டி''

எனவும் போதரும் வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதிகளால் உணர்க.

7. கடையெழுவள்ளல்களுள் ஒருவனும், உண்டோர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்திருப்பதற்கு ஏது வான கருநெல்லிப்பழம் ஒன்றை ஒளவையாருக்கு அளித்தவனும்,

"ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ [புறம்: 101]

என்று ஒளவையாரால் மனமுருகிப் பாராட்டப் பெற்ற வனும் ஆகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் கொங்கு மண்டலத்தில் தகடூரிலிருந்து அரசாண்ட ஒரு குறுநில மன்னன் என்பது புறநானூற்றால் அறியப்படுவ தொன்று.

வட ஆர்க்காடு கோட்டத் (சில்லாவில் போளூருக் கணித்தாகவுள்ள) திருமலையில் காணப்படும் கல்வெட் டொன்று அதியமான் நெடுமானஞ்சியைக் குறிப்பிடுகின்றது. செய்யுள் வடிவத்தில் உள்ள அக்கல்வெட்டு,

''வஞ்சியர் குலபதி யெழினி வகுத்த வியக்கரியக்கியரோ
டெஞ்சியவழிவு திருத்தி யெண்குண விறைவனை மலைவைத்தான்
அஞ்சி தன் வழிவருமவன் முத லிகலதிகன வகன நூல் (?)
விஞ்சையர் தகைமையர் காவலன் விடுகாதழகிய பெருமாளே''

என்பது.

இதில் புறநானூற்றில் வந்துள்ள எழினி , அஞ்சி என்ற அரசர் பெயர்கள் பயின்று வருவதோடு அன்னோர் வஞ்சியர்குலபதி என்று குறிப்பிடப்பட்டிருப் பதும் அறியற் பாலதாகும். இதில் கூறப்படும் விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியமான் நெடு மானஞ்சியின் வழித்தோன்றல் என்பதும் கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த ஒரு குறுநில மன்னன் என்பதும் ஈண்டு உணரத்தக்கன. வஞ்சியர் குலபதி என்பதும் வஞ்சி மாநகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட சேரமன்னனைக் குறிக்கும் தொடராகும்.

8. 'அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்' என்று தொடங்கும் 99-ஆம் புறப்பாட்டில் அதியமான் நெடு மானஞ்சிக்குரிய அடையாள மாலையாகப் பனந்தார் கூறப்பட்டுளது. அப்பாடலின் விசேடவுரையில் 'இவனுக்குப் பனந்தார் கூறியது உதிய வேந்தாதலின்' என்று உரையாசிரியர் விளக்கியுள்ளனர். இச்செய்தி திருமலையிலுள்ள 'சேரவம்சத்து அதிகமான் எழினி செய்த தர்மம்'[6] என்ற மற்றொரு கல்வெட்டால் வலியுறுகின்றது. எனவே மழவர் தலைவர்களான அதியமான், எழனி என்போர் சேரரின் மற்றொரு கிளையினர் என்பது பெறப்படுதல் காண்க.

9. இனி, கடைச்சங்கநாளில் வேள் நன்னன் என்ற குறுநில மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது 151 ஆம் புறப்பாட்டால் அறியப்படுகின்றது. இவன் பல் குன்றக் கோட்டத்திலுள்ள செங்கைமா[7] விலிருந்து அரசாண்டவன்; இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பெருமானால் பாடப் பட்ட மலைபடுகடாம் என்ற நூல் கொண்டு புகழ்கொண் டவன். திருவண்ணாமலைக்கு மேற்றிசையிலுள்ள செங்கைமா என்பது இவன் தலைநகர் . இஃது இந்நாளில் செங்கம் எனவும் செங்கமா எனவும் வழங்குகின்றது. இந்நகர்க்கு அண்மையில் தான் இவனது நவிரமலை உளது.

திருவண்ணாமலையிலுள்ளதும் அகவற்பா வடிவத்தில் அமைந்ததும் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வரையப் பெற்றதுமாகிய கல்வெட்டொன்று ;

"நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையுங் குரங்கும் விசையமுந்தீட்டிய
அடல்புனை நெடுவேல் ஆட்கொண்டதேவன்"

என்று கூறுகின்றது.

இக் கல்வெட்டிலுள்ள 'நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு' என்ற பகுதி, புறநானூற்றில் வந்துள்ள நன்னனையும் அவன் மீது பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரால் பாடப்பட்ட மலைபடுகடாம் என்ற நூலையும் அவனது வெற்பினையும் குறிப்பிடுதல் காண்க.

10 . ''பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் ! கொள்கெனக் கொடுத்த (புறம் 200)

பெருங்கொடை வள்ளலாகிய வேள்பாரியின் வரலாற்றை யுணர்த்தும் பாடல்களைப் புற நானூற்றில் காணலாம். பாண்டி மண்டலத்தில் திருப் புத்தூர்ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற கோயில் ஒன்று இருந்தது[8] என்பது பிரான்மலையிலுள்ள மங்கைபாகரது கோயிலில் காணப்படும் 'சுரபி நாட்டு அறுநூற்ற வனேரிப் பற்றில் பாரீசுவரமும்[9] என்ற கல்வெட்டுப் பகுதியினால் அறியக்கிடக்கின்றது. பாரி எடுப்பித்து வழிபாடு புரிந்த கோயில் பாரீசுவரம் ஆகும். அக்கோயிலைத் தன்னகத்துக் கொண்ட ஊரும் பிரான்மலையே என்பது ஈண்டு உணரற்பாலது. இப்பாரீசுவரம் பிரான்மலையின் அடிவாரத்திலுள்ள மற்றொரு கோயிலாகும். எனவே பெருங்கொடைவள்ளலாகிய வேள்பாரி அமைத்த கோயிலொன்று கல்வெட்டுக்களால் புலப்படுதல் காண்க.

11. இனி , கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் வேள் பாரியும் இன்னுயிர்த் தோழர்களாக வாழ்ந்து வந்தனர் என்பது புறநாநூற்றால் அறியப்படுகின்றது. கபிலர் பிறந்த ஊர், மணிவாசகப் பெருமான் தோன்றி யருளிய பாண்டி நாட்டுத் திருவாதவூரேயாம் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தால் உணரப்படுகின்றது. 'தென்பரம்பு நாட்டுத் திருவாதவூர்' என்று ஒரு கல்வெட்டு[10] கூறுவதால் இத்திருவாதவூர் வேள்பாரியின் ஆட்சிக்குட் பட்ட பறம்புநாட்டில் இருந்தது என்பது வெளியாகின்றது. எனவே, புலவராகிய கபிலரும் புரவலராகிய வேள்பாரியும் ஒரே நாட்டினர் ஆவர். ஆகவே, அன்னோர் இருவரும் ஒரே தேயத்தினராகவும் ஒத்த உணர்ச்சி யுடையவராகவும் இருந்தமையின் நட்பிற் சிறந்து விளங் கினர் என்பது தெள்ளிது.

12. மூவேந்தர் சூழ்ச்சியினால் பாரி இறந்தபின்னர் அவன் மகளிரைத் தக்கார்க்கு மணஞ் செய்விக்க விரும்பி அழைத்துச் சென்ற புலவர் பெருமானாகிய கபிலர், விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்ட, அவர்கள் மறுக்கவே, அம்மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, பிறகு பாரியின் பிரிவுக்காற்றாது வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்பது புறநானூற்றில் கண்ட வரலாறாகும். இச்செய்திகளைத் திருகோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று[11] சிறிதுவேறுபடக் கூறுகின்றது. முதல் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1012- ல் வரையப் பெற்றதும் அகவற்பாவில் அமைந்ததுமாகிய அக் கல்வெட்டில் பாரிமகளிரையும் கபிலரையும் பற்றிக் கூறும் பகுதி அடியில் வருமாறு:

வன்கரை பொருது வருபுணற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல
மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர்
பேரெட்டான வீரட்டானம்
அனைத்தினு மநாதி யானது'

இதனால் முத்தமிழ்ப் புலவராகிய கபிலர், பாரிமகளிருள் ஒரு பெண்ணைத் திருக்கோவலூர் மலைமானுக்கு மணஞ் செய்து கொடுத்தனர் என்பதும் பிறகு அந்நகரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் துறந் தனர் என்பதும் அவரை நினைவு கூர்தற்கு அங்கு ஒரு கல் நடப்பெற்றது என்பதும் அது 'கபிலக்கல்' என்று வழங்கப்பட்டு வந்தது என்பதும் நன்கு வெளியாதல் காண்க. கடைச்சங்க நாளில் நிகழ்ந்த இவ்வரலாறு கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டொன்றில் இவ்வாறு குறிக்கப்பட்டிருப்பது அறியற்பாலதாகும். கபிலர், பாரிமகளிர் இருவருள் ஒரு பெண்ணை மலையமானுக்குத் தாமே வாழ்க்கைப் படுத்திய பிறகு மற்றொரு பெண்ணைத் தமக்கு வேண்டிய பார்ப்பாரது பாதுகாவலில் வைத்துவிட்டு உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்பது புறநானூற்றையும் இக் கல்வெட்டையுங் கொண்டு உய்த்துணரப்படுகின்றது.

புறநானூற்றுச் செய்திகளுள், கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதி யெய்துவன இதுகாறும் விளக்கப்பட்டன.

-----
[1]. Epigraphia Indica Vol. XXII, No. 34,
[2]. South indian Incriptions Vol. III. No. 205
[3]. Travancore Archaelogical Series Vol. III Ins. No. 34
[4]. புறம், 19,23.
[5]. South Indian Inscriptions Vol. III. No. 206
[6]. South Indian Inscriptions Vol. I. No.75.
[7]. இவ்வூரின் பெயர் செங்கைமா என்பது கல்வெட்டுக் களால் புலப்படுகிறது. (S. I I. Vol VII. Nos. 11, 126) செங்கண்மா என்று கூறுவது தவறு.
[8] . South Indian Inscriptions Vol. VIII, No. 69.
[9]. South Indian Inscriptions Vol. VII, Nos. 427, 423 and 435.
[10]. South Indian Inscriptions Vol. VIII, No. 423.
[11]. Do VII, No. 863.
-------

11.3. பழந்தமிழ் நாடுகள் சில

புறநானூற்றில் காணப்படும் நாடுகளைப்பற்றிக் கல்வெட்டுக்களால் அறியப்பெறுவன :

1. கோனாடு : இது புறநானூற்றிலுள்ள 54, 61, 167 முதலான பாடல்களைப் பாடிய மாடலன் மதுரைக் குமர னாரது நாடாகும். இது பாண்டி மண்டலத்திற்கும் சோழ மண்டலத்திற்கும் நடுவில் அமைந்திருந்த சிறு நாடு. 'இக்கோனாடு இருபத்து நாற்காத வட்டகையும்' என்று கூறும் கல்வெட்டொன்றால்[1] இந்நாட்டின் சுற்றளவை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் இந்நாடு 'கடலடையா திலங்கை கொண்ட சோழவள நாடு' என்று வழங்கி வந்தது என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.[2] இந்நாட்டில் ஒல்லையூர்க் கூற்றம், அண்ணல்வாயில் கூற்றம், உறத்தூர்க் கூற்றம், கூடலூர் நாடு என்ற உள் நாடுகள் இருந்தன என்று சில கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.[3] கொடும்பாளூர் என்பது இந் நாட்டின் தலைநகரமாகும். புதுக்கோட்டை இராச்சி யத்திலுள்ள திருமெய்யம் குலத்தூர்த் தாலுகாக்களில் இக்கோனாடு இருத்தல் அறியத்தக்கது.

2. ஒல்லையூர் நாடு :

'ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
'முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' (புறம் 242)

என்ற புறப்பாட்டில் இந்நாடு கூறப்படுகின்றது. திரு மெய்யந்தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் என்ற ஊர் முற்காலத்தில் ஒல்லையூர் மங்கலம் என்ற பெயருடைதாயிருந்தது என்பது அவ்வூரிலுள்ள வரகுணீசுவரர் கோயிற் கல்வெட்டால் தெரிகிறது; அக்கல்வெட்டு, "கோனாடான கடலடையா திலங்கைகொண்ட சோழ வளநாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து ஒல்லையூர் மங்கலத்து உடையார் வரகுணீசுவர முடைய நாயனார் கோயில்[4]" என்று கூறுகின்றது. எனவே, ஒல்லையூர் மங்கலத்தைத் தலைநகராகக் கொண்டது ஒல்லையூர்க் கூற்றமாகும். இக் கூற்றமே சங்கநாளில் ஒல்லையூர் நாடென்று வழங்கியதாகும். கோனாட்டிலிருந்த இவ் வுள் நாடு திருமெய்யந்தாலுகாவில் உளது.

3. பறம்பு நாடு :- இதுவேள்பாரி அரசாண்ட நாடு. 'முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு[5] என்ற புறப் பாட்டடியொன்றால் இது முன்னூறு ஊர்களைத் தன்ன கத்துக் கொண்ட நாடு என்று தெரிகிறது. இது, தென் பறம்பு நாடு , வடபறம்பு நாடு என்ற இரு பிரிவுகளை யுடையதாக அந்நாளில் இருந்தது என்பது கல்வெட்டுக் களால் புலப்படுகிறது.[6] இதன் தலைநகர், பறம்பு எனப் படும். இஃது இந்நாளில் பிரான்மலை என்று வழங்குகின்றது. இதன் பழைய பெயர் கொடுங்குன்றம் என் பது. பறம்பு என்னும் மொழி , மலை என்று பொருள் படுதலால் பிற்காலத்தில் பறம்பு நாடு திருமலை நாடு என வும் வழங்கப்பெற்றுளது. இதனைத் திருமலை நாட்டுத்

திருக்கொடுங்குன்றத்து நாயனார் நல்ல மங்கை பாகற்கு'[7] என்னும் பிரான்மலைக் கல்வெட்டுப் பகுதியி னால் நன்கறியலாம். வேள் பாரியின் தலைநகராகிய பறம்பு இந்நாளில் பிரான் மலை என்ற பெயருடன், இராமநாதபுரம் ஜில்லாவில் திருப்புத்தூர்த் தாலுகா விலும், தென்பறம்பு நாட்டுத் திருவாதவூர் மதுரை ஜில்லாவில் மேலூர்த் தாலுகாவிலும் இருத்தலால் பறம்பு நாடு அவ்விரு தாலுக்காவிலும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

4. மிழலைக் கூற்றம் : இது வேள் எவ்விக்குரியதாய்க் கடற்கரையைச் சார்ந்திருந்த நாடு என்பது 24-ஆம் புறப்பட்டால் அறியப்படுகிறது : பாண்டி மண்டலத்து மிழலைக் கூற்றத்து ஒக்கூர் [8] எனவும், 'மிழலைக்கூற் றத்து மணமேற்குடி[9] எனவும், 'மிழலைக் கூற்றத்துக் கீழ்க் கூற்றுப் பொன்பற்றி'[10] எனவும், 'மிழலைக் கூற் றத்து நடுவிற் கூற்றுப்புல்லுக்குடி"[11] எனவும் கல்வெட்டுக் களில் வரும் தொடர்களால் இக்கூற்றம் பாண்டி மண்ட லத்தில் இருந்தது என்பதும் இதில் கீழ்க்கூறு, நடுவிற் கூறு, மேற்கூறு என்ற மூன்று உட்பிரிவுகள் இருந்தன என்பதும் நன்கறியக்கிடக்கின்றன. இக் கூற்றத்திலுள்ள மணமேற்குடி பொன்பற்றி முதலான ஊர்கள் தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கித் தாலுகாவிலும், பராந்தக நல்லூர், வாளவர்மாணிக்கம் முதலான ஊர்கள் புதுக் கோட்டை இராச்சியத்தில் திருமெய்யந் தாலுகாவிலும். இருத்தலால் இம் மிழலைக் கூற்றம் அத் தாலுகாக்களில் இருந்தது என்பது தேற்றம்.

இனி , சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவரும் நெல்வேலி வென்ற நின்ற சீர்நெடுமாறனார்க்கு அமைச் சரும் ஆகிய குமச்சிறை நாயனாரது மணமேற்குடியும் வீரசோழியத்தின் ஆசிரியராகிய புத்தமித்திரனாரது பொன்பற்றியும் மேற்கூறிய மிழலைக் கூற்றத்தூர்களே யாம்.

5. முத்தூற்றுக் கூற்றம் - இது முத்தூர்க் கூற்றம் என்றும் வழங்கப் படுவதுண்டு, 24-ஆம் புறப்பாட் டால் இது பழைய வேளிர்க்குரிய தென்பதும் நெல் விளைவிற் சிறந்தது என்பதும் இனிது புலப்படுகின்றன. 'பாண்டி மண்டலத்து முத்தூர்க் கூற்றம்"[12] என்றும், முத்தூற்றுக் கூற்றத்துப் பொய்கை நல்லூர்'[13] என்றும், 'முத்தூற்றுக் கூற்றத்துத் திருப்புனவாயில்'[14] என்றும் 'முத்தூற்றுக் கூற்றத்துத் தித்தானம்'[15] என்றும் கல்வெட்டுக்கள் கூறுவதால், முத்தூற்றுக் கூற்றம் அவ் வூர்களைத் தன்னகத்துக் கொண்டு பாண்டி மண்டலத்திலிருந்த ஓர் உள்நாடு என்பது பெறப்படுகின்றது. அவ்வூர்களுள் திருப்புனவாயிலும் பெய்கை நல்லூரும் தஞ்சாவூர் ஜில்லாவில் அறந்தாங்கித் தாலுகாவிலும், தித்தாண்ட தானபுரம் என்று வழங்கும் தித்தானம் இராமநாதபுரம் ஜில்லாவில் திருவாடானைத் தாலுகாவிலும் இருத்தலால் இக்கூற்றம் அறதாங்கி திருவாடானை தாலுகாக்களில் இருந்திருந்தல் வேண்டும் என்பது ஒருதலை.

----
[1]. Inscriptions of the Pudukkottai State No.285.
[2]. Do Nos. 16r, 169 and 185.
[3]. Do Nos 301, 342,358 & 382
[4]. Inscriptions of the Pudukottai State, No. 845.
[5]. புறம். 110.
[6]. South Indian inscriptions Vol, VIII, No. 423; Ns. No. 17 of 1931 - 32
[7]. Epigrabia Indica Vol. XXI, No. 19
[8]. South Indian Inscriptions Vol. VIII. No. 247.
[9]. South Indian Inscriptions Vol. VIII. No.448,
[10]. South Indian Inscriptions Vol. VIII. No.IV No. 372.
[11]. South Indian Inscriptions Vol. VIII. No.
[12]. South Indian Inscriptions Vol. VII No. 429
[13]. South Indian Inscriptions Vol. VII No.,1042.
[14]. South Indian Inscriptions Vol. VIII.No.210, 213.
[15]. Inscriptions. No. 599 of 1326-27.
-------------

11.4. பழந்தமிழ் ஊர்கள் சில

புறநானூற்றில் காணப்படும் ஊர்களுள் கல்வெட்டுக்களால் விளக்கமுறுவன : இனி, புறநானூற்றில் காணப் படும் ஊர்களுள் தெரியாதனவும் வேறு பெயர்களால் வழங்குவனவும் உள. அவற்றுள், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியப்பெறும் ஊர்களுள் சிலவற்றை விளக்குவேன்.

1. ஒல்லையூர் : (புறம். 71) இது புதுக்கோட்டை இராச்சியத்தில் திருமெய்யம் தாலுகாவில் ஒலியமங்கலம் என்ற பெயருடன் இக்காலத்தில் உளது என்பது ஒல்லையூர்க் கூற்றம் என்ற பகுதியில் முன்னர் விளக்கப் பட்டது.

2. அழும்பில் : (புறம். 283) இது புதுக்கோட்டை இராச்சியத்தில் ஆலங்குடி தாலுகாவில் அம்பு கோவில் என்ற பெயருடன் இந்நாளில் உளது. இச்செய்தி, அவ்வூர்க் கோயிலிலுள்ள ராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழிம்பில் நாயனார் வீரராஜேந்திர சோழீசுவர முடைய நாயனார்க்கு'[16] என்ற கல்வெட்டுப் பகுதியினால் அறியப்படுகின்றது.

3. பிடவூர்: (புறம். 395) 'நெடுங்கை வேண்மாள் அருங்கடிப் பிடவூர் [17] என்று புறப்பாட்டில் குறிப்பிடப் பெற்ற இவ்வூர், சோழநாட்டு வைப்புத் தலங்களுள் ஒன்று. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் இவ்வூரில் மாசாத் தனாரால் முதலில் வெளியிடப்பட்டது என்பர் சேக்கிழாரடிகள்.

திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் முசிறி தாலுகா விலுள்ள திருப்பட்டூர் என்பது முற்காலத்தில் திருப்பிட வூர் என்ற பெயருடையதாயிருந்தது என்பது இவ்வூர்க் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.[18] எனவே இத் திருப்பட்டூரே சங்க காலத்துப் பிடவூராதல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

4. மாறோக்கம் : இது, நப்பசலையார் என்ற நல்லிசைப் புலமை நங்கையரின் ஊராகும். இவருடைய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. தொல்காப்பியச் சொல்லதி காரத்துப் பெயரியல் 10- ம் சூத்திரத்தின் விசேடவுரை யில் ஆசிரியர் சேனாவரையர், 'புறத்துப் போய் விளை யாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப" என்று கூறியுள்ளனர் . மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த நாடு என்பர் அதன் பதிப்பாசிரியர். எனவே, மாறோக்கம் என்றது மாறோக்கம் என்னும் நாட்டின் தலைநகராய்த்' தென்பாண்டி நாட்டில் கொற்கைப் பக்கத்தில் இருந்ததோர் ஊராதல் வேண்டும். ஆனால் மாறோக்கம் என்ற நாடு ஒன்றிருந்தது என்பதைக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறிய இயலவில்லை. கொற்கையைச் சூழ்ந்த நாட்டைக் குடநாடு என்றே கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. குடநாடே முற்காலத்தில் மாறோக்க நாடு என்று வழங்கியதோ என்ற ஐயம் நிகழ்கின்றது.

5. பூங்குன்றம் : படிக்குந்தோறும் மிக்க இன்பத்தை விளைவிக்கும் இயல்பு வாய்ந்த 'யாதுமூரே யாவருங் கேளிர்' என்ற 192-ஆம் புறப்பாட்டை இயற்றிய புலவர் பெருமான் இவ்வூரினர் ஆவர். இது பாண்டி மண் டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய பூங்குன்ற நாட் டிற்குத் தலைநகர் என்பது பூங்குன்ற நாட்டுப் பூங்குன் றமும்'[19]என்ற கல்வெட்டுப் பகுதியினால் பெறப்படுகின் றது. இராமநாதபுரம் சில்லா திருப்புத்தூர் தாலுகாவிலுள்ளதும், இருபெரு மொழியினும் நுண்மாணுழை புலம் படைத்த புலவர் பெருமானாகிய மகாமகோபாத்தியாய பண்டிதமணி அவர்கள் தோன்றியதுமாகிய மகிபாலன்பட்டியே இப்பூங்குன்றம் என்பது அங்குள்ள குகைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால் புலப்படுகிறது. அது,

"ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைய வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 10-ஆவது சிங்க நாயிற்று அமர பக்ஷமும் துதியையும் திங்கட்கிழமை யும் பெற்ற பூரட்டாதி நாள் உடையார் குலசேகர ஈஸ் வரமுடைய நாயனார் தேவதானம் பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றத்துடையார் திருப்பூங்குன்றமுடைய நாய னார் ஆதிசண்டேசுவர நாயனார்க்கு இந்நாட்டு நாட்டவரோம் பிரமாணம் பண்ணிக்கொடுத்த பரிசாவது' என்பதாம்.[20]

6. வஞ்சிமாநகர் : இது சேரர் தலைநகர்; சேரநாட்டில் தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தாரா புரத்திற்கும் கொங்கு நாட்டுக் கருவூர்க்கும் வஞ்சி என்ற பெயருண்டு என்பது[21] கல்வெட்டுக்களால் தெரிகிறது. திருவனந்தபுரத்துக்கு அண்மையிலும் ஒரு வஞ்சியூர் உளது என்பது அப்பக்கத்துக் கல்வெட்டால் அறியப் படுகிறது. சேரநாட்டுக் கொடுங்கோளூரே வஞ்சி என்று வழங்கிற்று என்பது சேக்கிழாரடிகளும் அடியார்க்கு நல்லாரும் கூறுவனவற்றால் புலனாகின்றது. எனவே, வஞ்சி என்ற பெயருடன் நான்கு ஊர்கள் இருந்தமை அறியத்தக்கது. இச்செய்தி, 'வஞ்சி நகர் நாலும் வளமையா ஆண்டருளும், கஞ்ச மலர்க்கை யுடையான் காண்' எனவும் 'நாலு வஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள்' எனவும் போதரும் செப்பேட்டுப் பகுதிகளாலும் உறுதியெய்துகின்றது (தமிழ்ப் பொழில், துணர் 7, பக்கம் : 576). இவற்றுள் புறநானூற்றிலுள்ள வஞ்சி யாதென ஆராய்தல் வேண் டும். செங்குட்டுவன் முதலான கடைச்சங்க காலத்துச் சேரர்கள் வீற்றிருந்து அரசாண்டதும் தண்பொருநை ஆற்றங்கரையிலுள்ளதும் ஆகிய வஞ்சியே புறநானூற் றில் காணப்படுவது. வஞ்சி என்று தற்காலத்தில் வழங் கிய கொங்கு நாட்டுக் கருவூர் ஆன்பொருநை ஆற்றங் கரையில் உள்ளது. தன் பொருநையும் ஆன் பொருநை யும் இருவேறு ஆறுகளாகும். இவ்வுண்மையை, யாறுங் குளனும்' என்று தொடங்கும் தொல்காப்பியம் கற்பி யற் சூத்திரத்துக்குக் காவிரியும் தண்பொருநையும், ஆன்பொருநையும், வையையும் போலும் யாற்றிலும்' என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரைப்பகுதியால் நன்குணரலாம். புறநானூற்றுரை யாசிரியர் இவ்வி ரண்டு ஆறுகளையும் ஒன்றென மயங்கி உரைகண்டமை யின், கொங்கு நாட்டுக் கருவூரே சங்ககாலத்து வஞ்சி என்று சிலர் கூறுவராயினர். வஞ்சி குடமலை நாட்டில் உள்ளது; கருவூர் கொங்கு நாட்டில் உள்ளது. வஞ்சி தண்பொருநை யாற்றங்கரையில் உள்ளது; (புறம் 11,387) கருவூர் ஆன்பொருறையாற்றங் கரையில் உள் ளது. (அகம், 93) வஞ்சி கடற்கரைப் பட்டினம் (சிலப் பதிகாரம், கால்கோட்காதை 80, 81), கருவூர் உள் நாட்டிலுள்ள தோர் ஊர். எனவே, கருவூர் சங்ககாலத்து வஞ்சி எனல் பொருந்தாது. கொங்குநாடு குடமலை நாட்டுச் சேரன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாயினும், அவன் தலை நகர் குடமலை நாட்டில் தானே இருந்திருத்தல் வேண்டும்; கொங்கு நாட்டில் இருந்தது எனக் கோடல் எங்ஙனம் பொருந்தும்? இங்கிலாந்து மன்னரின் தலைநகரமாகிய இலண்டன் மாநகர் இங்கிலாந்திலேதான் இருக்கின்றது; அவரது ஆட்சிக்குட்பட்ட ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் இல்லை. ஆகவே, குடமலை நாட்டிலுள்ள திருவஞ்சைக் களத்தைத் தன்னகத்துக் கொண்ட கொடுங்கோளுரே சங்க காலத்து வஞ்சி என்பது திண்ணம்.

7. தகடூர் : கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் வீற்றிருந்து அர சாண்ட நகரம் தகடூர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. சேலம் ஜில்லாவிலுள்ள தர்மபுரித் தாலுகாவின் தலை நகராகிய தர்மபுரியே முற்காலத்தில் தகடூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது அவ்வூரிலுள்ள மல்லிகார்ச்சுனரது கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட் டால் புலப்படுகிறது. இதனை, [22]'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு பன்னிரண்டாவது நிகரிலி சோழ மண்டலத்துக் கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூரில்' என்ற ஒரு கல்வெட்டுப் பகுதியினால் நன்குணரலாம்.

----
[16]. Inscriptions of the Pudukkottai State Nos. 369 and 458.
[17]. புறம். 395.
[18]. Ins. No. 591of 1907-08.
[19]. Inscriptions of the Pudukkottai State No.588.
[20]. கலைமகள் - தொகுதி 3, பக்கங்கள் : 226-27.
[21]. S. I. I. Vol. VIII, No. 441. Ep. Indi,Vol. XVII. P.298.
[22]. South Indian luscripiloUS Vol. VIII, No. 534.
----

11.5. சில வழக்கங்கள்

புறநானூற்றிலும் கல்வெட்டுக்களிலும் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்கள்.

பண்டைத் தமிழ் வேந்தருள் சிலர், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன், கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை, குளமுற்றத்துத் துஞ் சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங் கிள்ளி, குறாப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் குராப்பள்ளித் துஞ்சியகிள்ளிவளவன், காரியாற்றுத்துஞ் சிய நெடுங்கிள்ளி, இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன் மாறன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்று புறநானூற்றில்[1] குறிப் பிடப்பட்டுள்ளனர். இதனால், அரசர்கள் இறந்த பின்னர் அவர்கள் இறந்த இடங்களை அன்னோர் பெயர் களுக்கு முன்னர்ச் சேர்த்து வழங்குவது பண்டை வழக்கு என்பது புலப்படுகின்றது. கல்வெட்டுக்களில் காணப்படும் தொண்டைமானாற்றூர்த் துஞ்சிய உடை யார்[2] ஆற்றூர்த் துஞ்சிய உடையார் அரிஞ்சய தேவர்'[3] 'பொன்மாளிகைத் துஞ்சிய சுந்தர சோழ தேவர்' என்ற தொடர்களால் இவ்வழக்கம் கி. பி. 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் சோழ மண்டலத்தில் இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது.

இனி , கற்புடை மகளிர் தம் கணவர் இறந்த பின் தீப்பாய்ந் துயிர் நீத்தல் , வீரங்காட்டிப் பொருது போர்க் களத்தில் உயிர் துறந்த வீரர்களை நினைவு கூர்தற் பொருட்டுக் கல் நடுதல் ஆகிய செயல்கள் முற் காலத்தில் இருந்தன என்பது புறநானூற்றால் புலனாகின்றது. இவை கி. பி. 10, 11, 12-ஆம் நூற்றாண்டுகளிலும் நம் தமிழகத்தில் வழக்கில் இருந்தன என்பது பல கல் வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின் றது. இவற்றை எடுத்துக்காட்டுகளால் விளக்கப்புகின் இக்கட்டுரை மிக விரியுமாதலின் இந்த அளவில் நிறுத்திக் கொண்டேன்.
---
[1]. புறம்): 387,245.41,61,58, 47, 196,51, 59.
[2]. S. I. I.Vol. III No. 142.
[3].- do - Nos. 15, 16.
-------------

11.6. சில குறிப்புக்கள்

புறநானூற்றில் காணப்படும் சில சொற்றொடர்களையும் சொற்களையும் பற்றிய குறிப்புக்கள்.

1. முதுகண் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. உறையூர் என்பது அப் புலவரது ஊர்; சாத்தனார் என்பது அவரது இயற்பெயர். எனவே முது கண்ணன் என்பது எதனை உணர்த்தும் என்று ஈண்டு ஆராய்வது இன்றியமையாததாகும். முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞராயுள்ள இளை ஞர்க்கும் பெண்டிர்க்கும் அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலராக நிலவிய , ஆண்டில் முதிர்ந்த ஆண்மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. இதனை, இச் சுந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய இப்பொன்னார் மேனி பட்டன் மாதா உமையாண்டாளும்[1] எனவும், 'இவனையே முதுகண்ணாகவுடைய இவன் பேரன் சொக்கன் ஆராவமுதும்[2] எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர்களால் உணரலாம். இந் நாளில் அத்தகையார் கார்டியன்' என்றும் போஷ கர்' என்றும் வழங்கப்படுகின்றனர். அவற்றுள் கார்டி யன்' ஆங்கில மொழியிலிருந்து வந்து வழங்கும் திசைச் சொல்; போஷகர்' என்பது வடசொல். ஆகவே இச் சொல்லின் பொருளை யுணர்த்துவதாய் முற்காலத்தில் நம் நாட்டில் வழங்கி வந்தது முதுகண் ஆகும். எனவே, பிறர்க்கு முதுகண்ணாக இருப்பவன் முதுகண்ணன் என்பது வெளிப்படை

2. மண்டை : சங்க காலத்தில் பாணர்களிடத்திலிருந்த ஒருவகை உண்கலம் மண்டை என்ற பெயருடையதாயிருந்தது என்பது புறநானூற்றிலுள்ள பல செய்யுட்களால் அறியப்படுகின்றது.[3] தஞ்சைமா நகரில் இராசராசேச்சுரம் என்ற பெருங்கோயிலை எடுப்பித்த முதல் இராசராச சோழனும் அவன் உரிமைச் சுற்றத்தினரும் அக் கோயிலுக்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்தளித்த கலங்களுள் மண்டைகளும் உள்ளன என்பது, நாளதினாலே கொடுத்த பொன்னின் மண்டை ஒன்று, மேற்படி கல்லால் நிறை முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பதின் கழஞ்சே முக்கால்'[4] மண்டை ஒன்று வெள்ளி இருநூற்றிருபத்தேழு கழஞ்சு[5] என்ற அக் கோயிற் கல்வெட்டுப் பகுதிகளால் புலனாகின்றது. எனவே, கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலும் இப் பெய ருடைய கலங்கள் நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்தமை அறியத்தக்கது. வடமொழியாளர் மண் டையைக் கபஸம் என்று கூறுவர்.

[1]. S. I. I. Vol. V. No 649.
[2]. - do - VI. No. 34.
[3]. புறம் : 103, 115, 384, 398.
[4]. SII Vol. II. No. 2.
[5]. S. 1.1. Vol. II No. 91.

3. முடிநாகராயர் : சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பது புறநானூற்றால் அறியப்படுவது. இப்பெயருடைய தலைச்சங்கப் புலவர் பலர் இருந்தனர் என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகின்றது. பிற்காலச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் காணப் படும் கச்சிராயர், காலிங்கராயர், சம்புவராயர், காடவ ராயர், சேதிராயர் போன்ற தொடர்கள் சங்கநாளில் வழக்கில் இல்லை. அன்றியும், ரகரத்தை மொழி முதலாகக் கொண்ட 'ராயர்' என்ற சொல் சங்க காலத்தில் வழங்கவில்லை என்பது கற்றார் அறிந்ததே. ஆகவே, முடிநாகராயர் என்பது முடிநாகனார் என்றிருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு உண்டாகின்றது. இதனை அறிஞர்கள் ஆராய்ந்து விளக்குவார்களாக.

4. கழஞ்சு : ஏருடைய விழுக் கழஞ்சிற் - சீருடைய இழை பெற்றிசினே' என்னும் புறப்பாட்டடிகளில் கழஞ்சு பயின்று வருகிறது. மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்ப வற்றாலும், செம்பு, பித்தளை, வெண்கலம் முதலான தாழ்ந்த பொருள்கள் பலம், கஃசு என்றும் நிறைகற்க ளாலும் முற்காலத்தில் நிறுக்கப்பட்டு வந்தன என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. இரண்டு குன்றி கொண்டது ஒரு மஞ்சாடியாகும் ; 20 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு. எனவே, 40 குன்றி கொண்டது ஒரு கழஞ்சு என்பது வெளிப்படை. ஆகவே, ஒன்றேகால் வராகனெடை கொண்டது ஒரு கழஞ்சு என்பது நன்கு துணியப்படும்.

இதுகாறும் கூறியவற்றால் புறநானூற்றுச் செய்தி களுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதி எய்துவனவும், அந்நூலில் கூறப்படும் நாடுகளையும் ஊர்களையும் பற்றிக் கல்வெட்டுக்களால் புலப்படுவனவும், புறநானூறு, கல்வெட்டுக்கள் இவற்றுள் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்களும், சில சொற்களையும் சொற்றொடர்களையும் பற்றிய செய்திகளும் நன்கு விளங்குதல் காண்க.
---------------

12. பத்துப் பாட்டும் கல்வெட்டுக்களும்

பத்துப்பாட்டு என்பது சங்கத்துச் சான்றோர் எண்மரால் இயற்றப்பட்டுக் கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் தொகுக்கப்பெற்ற பத்துப்பாடல்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு நூலாகும். இது பண்டைத் தமிழ் மக்க ளுடைய வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மனோர்க்கு நன்குணர்த்தும் பெருமை உடையது. காலஞ்சென்ற பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அவர்கள் தம் மனோன்மணீயம் என்னும் நாடகத்தில்,

'பத்துப்பாட் டாதி மனம்
பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும்
இலக்கணமில் கற்பனையே'

என்று இவ்வரிய நூலைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. இதில் ஆற்றுப்படைகளாக வுள்ளவை, திருமுரு காற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படைது பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பன. எஞ்சியவை முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை , குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்தும் ஆகும். இப்பாடல்களைத் தன்பாற் கொண்ட பத்துப்பாட்டு கி. பி. இரண்டாம் நூற்றாண்டி லாதல் அதற்கு முன்னராதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது கொள்கை. தமிழ் நாட்டில் கோயில் சுவர்களில் பொறிக்கப்பெற்றுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தான் காணப்படுகின்றன. ஆகவே, தமிழ்க் கல்வெட்டுக்கள் எல்லாம் பத்துப்பாட்டிற்குக் காலத்தால் மிகப் பிற்பட்டனவேயாம். எனினும், பத்துப் பாட்டும் கல்வெட்டுக்களும் தமிழ் மக்களுடைய வரலாறுகளை யுணர்த்துவதில் தம்முள் ஒற்றுமை யுடையனவேயாம்.

இனி, கல்வெட்டுக்களால் விளக்கமுற்று உறுதி யெய்தும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சிலவற்றைக் காண்பாம்.

1. கடைச்சங்கப் புலவருள் ஒருவரும் குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியரும் ஆகிய கபிலர், திருக்கோவலூரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தனர் என்றும் அப் புலவர்பெருமானை நினைவுகூர்தற் பொருட்டு அவ் விடத்தில் ஒரு நடுகல் நிறுவப்பெற்றது என்றும், அக்கல், கபிலக்கல்' என்று அந் நாளில் வழங்கப்பட்டது என்றும் திருக்கோவலூர் வீரட்டானேசு வரர் கோயிலில் முதல் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1012-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று கூறுகின்றது. அகவற்பாவில் அமைந்துள்ள அக் கல்வெட்டுப் பகுதி ,

'வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல
மினல் புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர்
பேரெட் டான வீரட்டானம்
அனைத்தினு மநாதி யாயது' (S. I. I. Vol. VII, No. 863.)
என்பதாம்.

2. கி. பி. 1216 முதல் 1238முடிய மதுரைமாநகரில் வீற்றிருந்து பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்த முதல் மாற வர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்று, கடியலூர் உருத்திரங் கண்ணனாரையும் அப் புலவர் பிரான் சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பாடிய பட்டினப் பாலையையும் குறிப்பிடுவது அறியத்தக்கதொன்றாம். திருவெள்ளரையில் கட்டளைக்கலித்துறையாகவுள்ள அக் கல்வெட்டு,

3. 'வெறியார் தளவத் தொடை செய
மாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன்
காவிரி நாட்டி லரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்
செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண்
பதினாறு மேயங்கு நின்றனவே' (செந்தமிழ் - தொ. 41, பக். 215)

என்பது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1216-ல் சோழ நாட்டின் மேல் படையெடுத்துத் தஞ்சை யும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி, மாடமாளிகை களையும், ஆடரங்குகளையும், மணிமண்டபங்களையும் இடித்து அழித்தனன் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அப் படையெழுச்சியில் பாண்டிவேந்தனால் சோழநாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது, முற் காலத்தில் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குச் சோழன் கரிகாற்பெருவளத்தான் பரி சிலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்று தான் என்று மேலே குறிப்பிட்ட சுந்தரபாண்டியன் கல்வெட்டு உணர்த்துவது காண்க.

3. திருவண்ணாமலையில் கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று, தொண்டை மண்டலத்தில் பல்குன்றக்கோட்டத்திலுள்ள செங்கைமாவிலிருந்து அரசாண்ட வேள் நன்னன் ! என்பவனையும் அவன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் என்ற நூலையும் குறிப்பிடுதல் அறியற் பாலதாகும். அக் கல்வெட்டுப்பகுதி,

'நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையுங் குரங்கும் விசையமுந் தீட்டிய
அடல் புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்' (S. I. I. Vol. VII. No. 69)

என்பதாம்.

இதில், நல்லிசைக் கடாம்புனை நன்னன்' என்ற தொடர் 'இனிய ஓசையமைந்த மலைபடுகதாம் என்னும் நூல் கொண்டு புகழ் எய்திய நன்னன்' என்று. பொருள் படுதல் அறிக. அன்றியும், இதில் குறிக்கப் பெற்ற நன்னன் வெற்பு என்பது மலைபடுகடாத்தில் 'நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறற் - பேரிசை நவிரம்' எனவும், வாய்வளம் பழுநிக் - கழைவளர் நவிரம்' எனவும் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ள நவிரமலையாதல் வேண் டும். இந் நவிரமலை இக் காலத்தில் திருவண்ணாமலைக்கு வடமேற்கே திரிசூலகிரி, பர்வதமலை என்ற பெயர்களுடன் உளது. மலைபடுகடாத்தில் நன்னன் குன்று சூழ் இருக்கை நாடு கிழவோன்' என்று பெருங்கௌசிகனார் என்ற புலவர் பெருமானால் பாராட்டப் பெற்றுள்ளனன். அக் குன்றுசூழ் இருக்கை நாடு என்பது முற்காலத்தில் தொண்டை மண்டலத்திலிருந்த இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய பல்குன்றக் கோட்டத்தையே குறிக்கும் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.

மலைபடுகடாத்தின் ஆசிரியராகிய பெருங்கௌசிகனாரது பெருங்குன்றூர் இரணியமுட்ட நாட்டிலுள்ள தோர் ஊராகும். இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும் அந் நாடு மதுரை மாநகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனை மலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு பெருநிலப் பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றன. (S. I. I. Vol. III. No. 106) எனவே, பெருங் கௌசிகனாருடைய பெருங்குன்றூரும் அப்பதியில் தான் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அக் கவிஞர் கோமான் பாண்டி நாட்டுப் புலவர் என்பது உணரற்பாலதாம்.

4. சிறுபாணாற்றுப்படையின் தலைவனாகிய நல்லியக் கோடனுடைய ஓய்மானாடு என்பது தொண்டை மண்ட லத்தில் திண்டிவனம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கேயுள்ள கடற்கரையில் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பாகும். திண்டிவனம், கிடங்கில் , திரு அரைசிலி முதலான ஊர்கள் ஓய்மானாட்டில் இருந்தவை என்பதும் அந்நாடு சோழர்களது ஆட்சிக்காலங்களில் விசைய ராசேந்திரவளநாடு என்று வழங்கப்பெற்று வந்தது என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன.

இதுகாறும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சில, கல் வெட்டுக்களின் துணை கொண்டு விளக்கப்பெற்றமை உணர்க.
--------------

13. பதிற்றுப்பத்தும் பதிகங்களும்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சிப் பகுதியில் விரிவுரையாள ராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதி வந்தார்கள். ஒப்பற்ற சங்க நூற்பயிற்சியும் நுண்மான் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பாராட்டப் பெறும் அவர்களது பேருரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்த போது, அவ்வுரை விரைவில் வெளியிடப் பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித்துணர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி னேன். அதற்கேற்ப, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றலைவரும் என்னுடைய நண்பருமாகிய திருவாளர் வ. சுப்பையாப் பிள்ளையவர்கள் அந் நூலைப் பிள்ளையவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றினார்கள்.

இந் நிலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித் துறையில் அளவளாவிக் கொண்டும் புதிய புதிய உண்மை களை ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும் என் நண்பர் திரு. பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதி கங்களைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறி னார்கள். அதனை யேற்றுக் கொண்ட யான் அடியிற் காணும் கட்டுரையை எழுதியுள்ளேன்.

சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப்புடையனவாகும். அவை பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ் வேந்தர், குறுநில மன்னர், பிற தலைவர்கள், புலவர் பெருமக்கள், நல்லிசைப்புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலையினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து, அவை தமிழ்நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டெழுந்த அவ்விரு நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகை நூல். ஒவ்வொரு பத்தும், பத்துப் பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. இந்நூலின் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இக்காலத்தில் கிடைக்காமை யின் இதனை இன்னார் வேண்ட இன்ன புலவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும், அவன் அருஞ் செயல்கள் இன்ன என்பதும், அவனைப் பத்துப் பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும், அப் பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரைநடைப் பகுதியில் அப்பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சிபுரிந்த யாண்டின் தொகையும் கூறப் பட்டிருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பத்தின் இறுதியி லுள்ள பதிகமும், உரைநடைப் பகுதியும் வரலாற்றா ராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒருதலை. பதிற்றுப்பத்தினைத் தொகுத்துதவிய புலவர் பெருந் தகை , பதிகங்களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருந்திருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்ளோர் அறிந்து கொள்வது இயலாததாகும்.

இனிப் பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் வரைந்துள்ள மெய்க் கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந்நிகழ்ச்சியும் அவ் வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 993 இல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே மெய்க் கீர்த்தியைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப் பெற்றிருந்தால் அவை கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; ஆனால் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ளன; கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன.

இவ் வேறுபாட்டை நுணுகியாராயு மிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தியொன்று அமைக்கும் விருப்பத்தையுண்டு பண்ணியவை, பதிற்றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் 'காந்த ளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன் என்று தன்னைக் கூறிக்கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே கி. பி. 989 முதல் சேர நாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராச ராச சோழன், சேரமன்னர்களின் வீரச் செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின் பற்றித் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதி யெய்துமாயின் கி.பி பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே பதிகங்கள் இயற்றப்பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப் பட்டனவாதல் வேண்டும் பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம்.

பதிற்றுப்பத்தில் இக் காலத்தில் நமக்கு கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங் கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர். இரும் பொறை மரபினர் ஆகிய இருசேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ்விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் என்பது உணரற்பாலதாம். அவ் வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூ ரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேர விரும் பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் உதியஞ் சேரலுடைய மகன் என் பது பதிகத்தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக்காத முதல் பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தை யாகிய உதியஞ்சேரலின் மீது பாடப்பட்டதாயிருத்தல் வேண்டும்.

மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பி யாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம்பத்தின் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற் றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல், அவன் புதல்வர் இருவர், அவன் பேரன்மார் மூவர் ஆகிய அறுவர்மீதும் பாடப்பெற்றவை எனலாம்.

ஏழாம்பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோவாழி யாதன் என்பான், அந்துவஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன் எட்டாம் பத்தின் தலைவன் தகடூரெறிந்த பெருஞ்சேர விரும்பொறை என்பவன், செல்வக் கடுங் கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என்போன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகன் ஆவன். எனவே, இறுதியிலுள்ள மூன்று பத்துக்களும் செல்வக்கடுங்கோ வழியாதன் அவன் புதல்வன், அவன் பேரன் ஆகிய மூவர்மீதும் பாடப் பட்டவையாகும். இதுபோது கிடைக்காத இறுதிப் பத்து, யானைக் கட்சேய் மாந்தரஞ் சேர விரும்பொறையின் மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன்றாகும்.

இனி, அச் சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெருமக்கட்கு வழங்கியுள்ள பரிசில்களை நோக்குவாம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென்னாட்டு வருவாயுள் சில ஆண்டுகள் வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலங்களே பிரம தாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும் பட்டவிருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப் பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

செல்வக் கடுங்கோவாழியாதன், கபிலர்க்குச் சிறு புறமாக நூறாயிரம் பொற்காசும், நன்றா என்னும் குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகளையும் வழங்கினான். அவ் வேந்தனுடைய பேரன் இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர் கிழார் , 'உவலை கூராக் கவலையினெஞ்சின் - நனவிற் பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்றவூரினும் பலவே என்று பதிற்றுப்பத்தின் எண்பத்தைந்தாம் பாடலில் கூறியிருத்தலால் புலவர் பெருமானாகிய கபிலர் சேர நாட்டில் பிரமதேயமாகப் பெற்ற ஊர்கள் பலவாதல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில் சேர நாட்டிலிருந்த இவ்விரு வேந்தர்களின் பெருங் கொடைத்திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பினதாகும்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார் விரும்பியவாறு பத்துப் பெரு வேள்விகள் செய் வித்து அப்புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான். இவ்வரசனுடைய தமையன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் 'நான்மறையாளன் செய்யுட் கொண்டு, 'மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்' என்ற அடிகளில் இந் நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ்வேந்தன் இறுதியில் துறவு பூண்டு காடு போந்தனன் என்பர்.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியாற் றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான். இவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் வழங்கினான். இவர்களுள் பின்னோன்மேல் கடற்கரையிலிருந்த தொண்டியைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக் குட்பட்ட உம்பற் காட்டு வருவாயை யும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தனன். இவன் தன் புதல்வன் அப்புலவர் பெருமான் பால் கற்று வல்லனாதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கினான். அப் புலவர்பிரான் அரியணையை ஏற்றுக் கொள்ளாமல், 'நீ அரசு வீற்றிருந் தாளுக' என்று கூறி, இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர்.

இளஞ்சேர லிரும்பொறை. பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத்தீராயிரம் பொற்காசும், அவர் அறி யாமல் ஊரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210, 211 ஆம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப்பாடிய பெருங் குன்றூர் கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங் கொடாமல் அனுப்பி விட்டான் என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச் செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன் எல்லாம் அவருடைய ஊரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கையினராக இவ்வேந்தன் அனுப்பி யிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரைநடைப்பகுதியால் உறுதி யெய்துதல் அறியத்தக்கது.

இதுகாறும் கூறியவாற்றால் , பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர் களின் வரையா வண்மையும் அன்னார் புலவர் பெரு மக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலனாதல் காண்க.

இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்கு கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன. பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன்னைப் பாடிய பாலைக்கௌதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள்விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலை நாட்டில் இக்காலத்தும் செவிவழிச் செய்தியாக வழங்கி வரு கின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் குமட்டூர் கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறு ஊர்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன் பால் பரணர் வருவாய் பெற்றதும், ஆகிய உம்பற்காடு பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், சேரநாட்டிலுள்ளன வாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலானவற்றால் உணரக்கிடக்கும் பரணன் கானம், கண்ணன் காடு. காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க் கண்ண னார், காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமக்களுக்கும் மலை நாட்டிற்கும் ஏற்பட் டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க.

இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர் கள் இடப்பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப்பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட் டிலும் காணப்படும் பொருள் நயம் பொருந்திய அருந் தொடர்களாயிருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ள சில அருந்தொடர்களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனா கின்றது. அவர்களுள் தொடித்தலை விழுத்தண்டினார். இரும்பிடர்த் தலையார், கழைதின் யானையார், குப்பைக் கோழியார், அணிலாடு முன்றிலார், கங்குள் வெள்ளத் தார், கல் பொரு சிறு நுரையார், நெடுவெண்ணில வினார் முதலானோர் குறிப்பிடத் தக்கவராவார். அவர்கள் பாடல்களில் காணப்படும் அருந்தொடர்கள் அன்னோரின் இயற்பெயர்களை மறக்கும்படி செய்து விட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள் வள மிக்க அருந் தொடர்களைக் கொண்ட பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கு அத் தொடர்களையே பெயர்களாக அமைத்திருப்பது மிகப் பொருத்த முடையதேயாம். ஆனால் பிற்காலத்தில் அவ்வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங்களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக் களின் பதிகங்களில், 'வேளாவிக்கோமான் பதுமன் தேவி' என்றும் ஆறாம் பதிகத்தில் வேளாவிக் கோமான் தேவி' என்றும் பயின்று வரும் தொடர்கள் வேளாவிக் கோமன் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்க தொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி எனவும், சேரன் மகள் சேரன் மாதேவி மானவன் மாதேவி எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழமன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும்.

தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப் பத்துப் பதிகங்களின் தொட ராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாகும்.

இதுகாறும் கூறியவாற்றால் பற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவனவாகும் என்பதும், அப்பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களிலும் மெய்க்கீர்த்திகள் வரைவதற்கு ஓர் ஏதுவாக இருந் திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளேயாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகள் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக்காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க.
-----------

14. கூத்தராற் குறிக்கப்பெற்ற சில தலைவர்கள்

கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவேந்தர்களது ஆட்சிக்காலங்களிலும் அன்னோரது அவைக்களப் புலவ ராக விளங்கிய பெரியார் என்பது யாவரும் அறிந்த தொன்றாம். அவ்வேந்தர்கள் பால் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் பிற அதிகாரிகளாகவும் திகழ்ந்து நாட்டிற்கு நலம் புரிந்தவர்கள் பலர் ஆதல் வேண்டும். அவர்களது வீரச்செயல்களும் கொடைச் சிறப்பும் அருந்தொண்டுகளும் நம் தமிழகத்திலுள்ள கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்களால் இன் றும் அறியக் கிடக்கின்றன. அவர்களது வள்ளன்மை யால் மாண்புடன் வாழ்ந்துவந்த புலவர் பெருமக்கள் அன்னோரைப் பாராட்டிப் பாடியுள்ள பல பிரபந்தங் களும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வச்சத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம், புதுவைக் காங்கேயன் நாலாயிரக் கோவை, செஞ்சிக் கலம்பகம், வங்கர்கோவை, அரையர் கோவை முதலியன இவ்வகையைச் சேர்ந்தனவேயாம். இப்போது இவை கிடைக்கவில்லையாயினும் அம் முடி மன்னர்கள் மீது பாடப்பெற்ற சில பிரபந்தங்கள் இந்நாளில் கிடைத் துள்ளமை ஓரளவு ஆறுதல் அளிக்கின்றது. அத்தகைய பிரபந்தங்களுள் விக்கிரம சோழன் உலாவும் ஒன்றாகும். இதனை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக் கூத்தர் ஆவர். இது முதற் குலோத்துங்க சோழன் புதல்வனாகிய விக்கிரம சோழன்மீது பாடப்பெற்றது. இவ்வேந்தன், படைத்தலைவர், அமைச்சர், குறுநில மன்னர், மண்டலிகர் முதலானோர் இருமருங்கும் சூழ்ந்து வர உலாப்போந்தான் என்று அந்நூலில் கூத்தர் கூறி யுள்ளனர்; அங்ஙனம் கூறுமிடத்துச் சில அரசியல் தலை வர்களின் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரது வீரச்செயல்களையும் பெருமைகளையும் மிகப்பாராட்டிச் செல்கின்றனர். அவர்கள் கலிங்கம் வென்ற தொண் டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன் கண்ணன், வாணன், காலிங்கர்கோன், செஞ்சியர்கோன் காடவன், வேணாடர் வேந்து, அநந்த பாலன். வத்த வன், சேதி நாடன், காரானை காவலன், அதிகன், வல்ல வன், திரிகர்த்தன் என்போர். இதனை,

- முன்னங்
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும்- பலர் முடிமேல்
ஆர்க்குங் கழகா லனகன் றனதவையுள்
பார்க்கு மதிமந்திர பாலகரிற் - போர்க்குத்
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக்
கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையுங்
கங்கரையு மாராட் டரையும் கலிங்கரையுங்
கொங்கரையு மேனைக் குடகரையும் --தங்கோன்
முனியும் பொழுது முரி புருவத் தோடு
குனியுஞ் சிலைச் சோழகோனும் - சனபதிதன்
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப் போர்
வாளும் வலியு மதியமைச்சு - நாளுமா
மஞ்சைக் கிழித்து வளரும் பெரும் புரிசைக்
கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப்
புல்லாத மன்னர் புலாலுடம்பு பேய்வாங்க
ஒல்லாத கூற்ற முயிர்வாங்க- புல்லார்வந்
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
வாங்கும் வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும்
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோனும் -- கடியரணச்
செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக்களியானைக் காடவனும் - வெம்பிக்
கலக்கிய வஞ்சக் கலியாணர் போரில்
விலக்கிய வேணாடர் வேந்துந் - தலைத் தருமம்
வாரிக் குமரிமுதன் மந்தாகினியளவும்
பாரித் தவனனந்த பாலனும் - பேரமரின்
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலு
மட்டித்த மால்யானை வத்தவனு - மட்டையெழக்
காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த
சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய
மான வரச ரிரிய வடகலிங்கத்
தானை துணித்த அதிகனும் - மீனவர் தங்
கோட்டாறுங்கொல்லமுங்கொண்ட கொடை நுளம்பன்
வாட்டார் மதயானை வல்லவனு - மோட்டரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக் குவடொடித்த
செங்கைக் களிற்றுத் திகத்தனும் ................
…. ….. …..
……. ……….. …….
என்னும் பெரும்போர் இகல்வேந்தர் மண்டலிகர்
முன்னு மிருமருங்கு மொய்த் தீண்ட --''

என்னும் விக்கிரம சோழனுலாவடிகளிற் காண்க.

இதில் குறிக்கப்பெற்ற தலைவர்கள் எல்லோரும் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் விளங்கியவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவர்களைப் பற்றி இந் நூலால் அறியக்கூடியது இவ்வளவேயாகும். ஆயினும், விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டுக்களின் துணை கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் ஆராய் தல் அமைவுடையதேயாம்.

இனி, இவ்வுலா எழுதப்பெற்ற காலத்தை ஒரு வாறு உய்த்துணர்வதற்கு இடமுண்டு. இவ்வுலாவிற் குறிக்கப் பெற்ற தலைவர்களுள் காலிங்கர் கோன் என் பானும் ஒருவன் என்பது மேலே காட்டியுள்ள பகுதியி னால் நன்கு விளங்கும். இவன் மணவிற்கூத்தனான காலிங்கராயன் எனவும் அரும்பையர்கோன் எனவும் அரும்பாக்கிழான் எனவும் வழங்கப்பெற்றனன் என் பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இவன், முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒருவனாக விளங்கியதோடு விக்கிரம சோழனது ஆட்சி யின் முற்பகுதியிலும் அத்தகைய உயர் நிலையிலிருந் துள்ளனன். அதுபற்றியே, கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் இத் தலைவனைத் தாம் பாடிய உலா வில் உரிய இடத்தில் வைத்துப் பாராட்டுவாராயினர். இவனது கல்வெட்டுக்கள் விக்கிரம சோழனது ஆட்சி யின் ஆறாம் ஆண்டிற்குப் பின்னர் நம் நாட்டில் காணப் படவில்லை யாதலின் அவ்வாண்டிற்குப்பிறகு இத்தலைவன் இருந்திலன் என்பது ஒருதலை. ஆகவே, இக் காலிங் கர் கோனைச் சிறப்பித்துக் கூறும் இந்த உலாவும் அச் சோழ மன்னனது ஆட்சியின் ஆறாம் ஆண்டிற்கு முன் னரே பாடப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண் ணம். விக்கிரம சோழன் கி. பி. 1118 முதல் 1136 முடிய பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனன் என்பது கல் வெட்டுக்களால் அறியப்படும் செய்தியாகும். எனவே, விக்கிரம சோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 1124- க்கு முன்னரே விக்கிரமசோழனுலா இயற் றப்பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். இனி, அத்தலைவர்களைப் பற்றிய செய்திகளை ஆராய்வோம்.

1. தொண்டைமான் :- இவன் கலிங்கம் வென்ற கரு ணாகரத் தொண்டைமானே யாவன் என்பது பரணி மலையத் தருந்தொண்டைமான்' என்ற சொற்றொடர்களால் பெறப்படுகின்றது. இவன் உலா இயற்றப் பெற்ற காலத்தில் அரசியல் துறையிலிருந்து விலகியிருத் தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படுகின்றது. விக்கிரம சோழனது ஆட்சியில் அமைச்சுரிமை பூண்டு அரசியல் நடத்திவந்த தலைவர்களைக் கூறத் தொடங்கிய கவிஞர் பெருமான், கருணாகரத் தொண்டைமானை முத லில் தனியாக வைத்துப் பாராட்டியிருப்பது ஆராய்தற் குரியதாகும். ஆகவே, இந்நாளில் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அரசாங்க அலுவல்களினின் றும் நீங்கி ஓய்வு பெற்றிருப்பாரைப்போல் இக் கருணா கரத் தொண்டைமானும் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையினின்றும் விலகி ஓய்வுற்ற நிலையில் இருந்திருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது. இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சிறந்த தலைவனாக விளங்கியவன். அவ் வேந்தனது ஆட்சியின் பிற் பகுதியில் இவன் முதலமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் இருந்தவன். இவனது கலிங்க வெற்றியைப் பாராட்டித்தான் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் முதற்குலோத்துங்க சோழன்மீது கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரால் பாடப்பெற்றது. அந்நூல், இவனை, அபயன் மந்திரி முதல்வன்' எனவும் 'வண்டை யராசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகுபுகழ் கருணா கரன்' எனவும், கலிங்கப்பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்' எனவும், தொண்டையர் வேந்தன்' எனவும் புகழ்தல் காண்க. இவன், கருணாகரன் என்னும் பெயரினன்; தொண்டைமான் என்னும் பட்டம் பெற்றவன்; பல்லவர் தோன்றல், ஒப்பற்ற வீரமும் ஆற்றலும் படைத்தவன்; தமிழர்களது வீரச்செயல்களைப் பிறநாட் டினர் உணரச் செய்தவன்; சோழ மண்டலத்தில் நாச்சி யார் கோயிலுக்குத் தெற்கேயுள்ளதும் வண்டு வாஞ் சேரி என்று இந்நாளில் வழங்கப்படுவதுமாகிய வண்டா ழஞ்சேரி என்னும் ஊரில் வாழ்ந்தவன். இவனது மனைவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் எனப்படுவர். இவ் வம்மையார் காஞ்சியிலுள்ள அருளாள பெருமாளுக்கு நுந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளமை ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. அஃதிலதேல் இவனைப் பற்றிய சில செய்திகள் மறைந்தொழிந்திருக்கு மென்பது திண்ணம். அக் கல்வெட்டை அடியிற் காண்க.

''ஸ்வஸ்திஸ்ரீ கோ இராஜகேசரிவன்மரான திரிபு வன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று . ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத் தியூர் ஆழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரி யுடையான் வேளான கருணாகரனாரான தொண் டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டை யாழ்வார்வைத்த திருநுந்தா விளக்கு ................. . (S.I I. Vol. IV. No. 862)

. முனையர்கோன் - இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய செய்திகள் இதுகாறும் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ள கல்வெட் டுக்களில் காணப்படவில்லை. இவன் முனையரையன் முனையதரையன் என்ற பட்டங்களுள் ஒன்றைப் பெற்ற வனாதல் வேண்டும்.

3. சோழகோன் -- இவன் விக்கிரம சோழனது அமைச்சனும் படைத்தலைவனுமாக விளங்கியவன். இவன் அரசனால் கொடுக்கப்பட்ட 'சோழகோன்' என்ற பட்டம் பெற்றவன். இவனது இயற்பெயர் பூபால சுந்தரனென்பது. இவனது மனைவியார் கற்பகம் இரா சேந்திர சோழியார் என்பவர். இவ் வம்மையார் கி. பி. 1115ல் கொள்ளிடத்தின் வடகரையில் திருமழபாடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் திருநுந்தா விளக்கு ஒன்று வைத்து அதற்காகத் தொண்ணூறு ஆடுகள் வாங்கி விட்டனர் என்று அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. இதனால் இச்சோழ கோன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்திருத்தல் வேண்டுமென்பது தேற்றம். இவன் கங்கர், மகாராட் டிரர், கலிங்கர், கொங்கர், குடகர் முதலானோரைப் போரில் வென்று வாகை சூடியவன் என்பது விக்கிரம சோழன் உலாவினால் அறியப்படுகின்றது. இவனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை. இவன் மனைவியார் திருமழபாடி எம்பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டின் ஒருபகுதி யைக் கீழே காண்க.

''ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் வளர மலர் மகள் புணர உரிமை சிறந்த மணி முடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவர் இரியலுற்றிழி தரத் திக்கனைத்துந்தன் சக்கர நடாத்தி வீரசிம்மாசனத்து உலகுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி வன்மரான சச்கர வர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 405-ஆவது தியாகவல்லி வளநாட்டுப் பொய்கை நாட்டு உடையார் திருமழுவாடி உடைய மகாதேவர்க்கு இரவு பகல் சந்திராதித்தவல் திருநுந்தாவிளக்கு எரியக் கடவதாகவைத்தார் பூபாலசுந்தரனான சோழகோனார் தேவி யார் இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழைக் கூற் றத்துச் சிற்றாமூர் சிற்றாமூர் உடையான் பெருமாள் கற்ப கமான களப்பாளராஜர் மகள் கற்பகம் இராஜேந்திர சோழியார் யாண்டு 405-வது நாள் 260 முதல் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு 90" - (S. I. I. Vol. V. No. 640)

4 மறையோன் கண்ணன் :- இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன் ; மறையவர் குலத் தினன்; கண்ணன் என்னும் பெயரினன்; பெரும் புரிசை சூழ்ந்த 'கஞ்சை' [1] என்னும் ஊரில் வாழ்ந்தவன்.
----
[1]. ".................................... கூந்த லரிந்த ளித்தான் மலை செய் மதிற் கஞ்சை மானக்கஞ்சாறன் எனும் வள்ளலே" என்னும் திருத்தொண்டர் திருவந்தாதிப் பாடலடியினால் கஞ்சாறு என்பது கஞ்சை என்று வழங்கப் பெற்றமை அறிக .... (திருத் தொண்டர் திருவந்தாதி.... பாடல் 13.)

'கஞ்சை' என்பது கஞ்சனூர், கஞ்சாறு என்ற பெயர்களின் மரூஉ வாதல் வேண்டும். கஞ்சனூர் என்பது காவிரியாற்றின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற ஒரு சைவத் திருப்பதியாகும். கஞ்சாறு என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் வாழ்ந்து முத்தி எய்திய தலம். இஃது இந் நாளில் ஆனந்த தாண்டவபுரம் என்று வழங்கப்படும் புகைவண்டி நிலையமாகும். இவ்விரண்டு ஊர்களினும் சோழமன்னர்களது அரசியல் அதிகாரிகளுள் சிலர் முற் காலத்தில் இருந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றது. இவ்விரண்டனுள் மறையோன் கண்ணன் எவ்வூரினன் என்பது புலப்படவில்லை. வெளி வந்துள்ள கல்வெட்டுக்களும் இவனைப்பற்றி ஒன்றும் உணர்த்த வில்லை .
---
5. வாணன் : இவன் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நிலவிய படைத்தலைவன் ; வாணர் மரபினன்; வாணகப்பாடி நாட்டினன்; விருதராஜ பயங்கரவாண கோவரையன் என்ற பட்டமெய்தியவன்; கருணாகரத் தொண்டமானோடு கலிங்கப் போர்க்குச் சென்று புகழ் படைத்தவன். அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் பாராட்டப் பெற்றவன். இதனை,

'வாசிகொண் டரசர் வார ணங்கவர
வாணகோ வரையன் வாண்முகத்
தூசிகொண்டு துடிகொண்ட சோழனொடு
சூழிவே ழமிசை கொள்ளவே'

என்னும் தாழிசையால் அறியலாம்.

கி.பி. 1124-ல் இவ் வாணகோவரையன் கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாண விச்சாதர நல்லூர் முடி கொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கும் பிறவற் றிற்கும் நிபந்தமாக மூன்றேகால் வேலி நிலம் இறை யிலியளித்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டு ஒன்று கீழைப் பழுவூரிலுள்ள கோயிலில் வரையப்பட்டுள்ளது. அதனை அடியிற் காண்க.

"ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழதேவர் யாண்டு ஆறாவது வாணகோவரையர்களில் சுத்தமல்லன் முடி கொண்டானான விருதராஜ பயங்கர வாணகோவரையனேன் ஸ்ரீ கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து வேறு பிரிஞ் சூர்க் காணியான வாகுமை வாண விச்சாதர நல்லூர் முடி கொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு போது நாநாழி அரிசியாக மூன்று சந்திக்கும் உட்பட தயிரமுதும், நெய்யமுது, கறியமுது, அடைக்காயமுது உட்பட நிசதம் நெல் தூணியும் மாண் மூன்றுக்கு நெல் நிசதம் குறுணியாக மாண் இரண்டுக்கு நெல் பதக்கும் சந்திவிளக் கெரிக்க நெய் உழக்கும் நிசதநெல் குறுணியும் திருமஞ்சனம் வைக்கும் திருச்சிற்றம்பலப் பிச்ச னுக்கு நெல் குறுணியும் நந்தவனம் செய்வானுக்கு நெல் அறு நாழியும் நித்த நிபந்தம் சந்திராதித்தவல் செல்வதாக நான் இறையிலிவிட்ட நிலமாவது வேட்ட பற்குடி எல்லைக்குத் தெற்கும் தேவி கோயிலுக்கு மேற் கும் விட்ட நிலம் முக்காலும் இதற்குத் தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையான் பற்று உட்பட நிலம் அரை வேலியும் தெற்கில் குளத்தின் கீழ்க்கரை நிலத்தில் கீழ் வாரி வாய்க் காலுக்குக் கிழக்கு வார்மடைக்கு மேற்கு நாலாங் கண்ணாற்றுக்குத் தெற்கு ராஜேந்திர சோழப் பேராற்றுக்கு வடக்கு நிலம் ஒரு வேலியும் குளத்தில் இடைக்காட்டுக்குக் கிழக்கு சுடுகாட்டுக்குத் தெற்கு புஞ்சை நிலம் ஒரு வேலியும் ஆக நிலம் மூன்றேகாலும் இறையிலியாக சந்திராதித்தவல் செல்ல நீர் வார்த்துக் கல்வெட்டிக் கொடுத்தேன். சுத்தமல்லன் முடிகொண் டானான விருதராஜ பயங்கர வாண கோவரையனேன்" (SI. I. Vol. V. No.673)

6. காலிங்கர்கோன் :- இவன் தொண்டை மண்டலத் திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன்
இவன் முதற் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் படைத் தலைவ னாக இருந்தவன் என்பது முன்னரே விளக்கப்பட்டது. இவன் குலோத்துங்க சோழன் வேணாடு மலை நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத் தலைமை பூண்டு வெற்றியெய்தி அதனால் தன் அரசனுக்குப் பெரும் புகழை யுண்டுபண்ணியவன்; பொன்னம்பலக்கூத்தன், அருளாகரன், அரும்பாக் கிழான் முதலான பெயர்களையுடையவன் ; அரசனால் அளிக்கப் பெற்ற காலிங்கராயன் என்ற பட்டம் உடை யவன்; சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன்; தில்லையம்பதியிலும் திருவதிகை வீரட்டானத்திலும் திருப்பணிகள் புரிந்து பல நிபந்தங்கள் விட்டவன்; சமய குரவர்கள் அருளிய தேவாரப்பதிகங்களைச் செப்பேடு களில் எழுது வித்துத் தில்லையம்பலத்திற் சேமித்து வைத்தவன். இவன் கோயில்களுக்குத் திருப்பணி புரிந்ததையும் நிபந்தங்கள் விட்டதையும் அறிவிக்கும் கல்வெட்டுக்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று அடியில் வருமாறு:

"ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 31-ஆவது மலாடான ஜனநாதவள ..................... திருக் கோவலூர் ........... .................. கொண்............................ அரும்பாக்கிழான் ஸ்ரீ மதுராந்தகன் பொன்னம்பலக் கூத்தனான கலிங்கராஜனேன் இத் திருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கம் நான் விலை கொடுத்துக் கொண்டுடைய தெங்கந்தோட்டந் திரு வீரட்டான முடையார்க்குத் திருநந்தா வனமாக நான் விட்டுக்கொண்டு............... (எஞ்சிய பகுதி சிதைந்து போயிற்று -S. I. I. Vol. VII. 891.)

7. செஞ்சியர்கோன் காடவன் :- இவன் செஞ்சியின் கண்வாழ்ந்த ஒருகுறு நிலமன்னன். காடவன் என்பது பல்லவனைக் குறிக்கும் ஒரு பெயராகும். இவ் வுண்மையைக் காடவர்கோன் கழற்சிங்கனடியார்க்கு மடியேன் என்னும் திருத்தொண்டத்தொகை யடியாலும், 'ஐயடிகள் காடவர் கோனாயனார்' என்னும் பெயராலும் உணரலாம். பல்லவர்கள், காடவர்கள் எனவும் வழங்கப் பெற்றனர் என்று துப்ரேல் துரைமகனார் தமது பல்லவர் சரித்திரத்தில் கூறியிருப்பது ஈண்டு அறியத் தக்கது[1]. எனவே, இத்தலைவன் பல்லவர் மரபினன் என்பது வெளியாதல் காண்க. விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் உள்ள ஆலங்குடியில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில்[2] அவ் வேந்தன் காலத்திய அதிகாரிகளுள் சிலர் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள் செஞ்சி நாங்கொற்றன் ஆட வல்லான் கடம்பனும் ஒருவன் ஆவன். ஆகவே, ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலாவில் கூறியுள்ள செஞ்சியர் கோன் காடவனும், ஆலங்குடிக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள செஞ்சி நாங்கொற்றனும் ஒருவனேயாதல் வேண்டும்.
-----
[1]. The Pallavas-by J. Dubreuil page 69.
[2]. S. I. I. Vol. V No. 458.

8. வேணாடர் வேந்து :- இவன் சேரமண்டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டிலிருந்த ஒரு குறுநில மன்னன்; சேரர்மரபினன். முதற்குலோத்துங்க சோழன் காலத்திலேயே சேரவேந்தர் சோழமன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசர் ஆயினர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந் நிலையிலேயே இருந்தனர். அவர்களுள் கூத்தரால் உலாவிற் குறிக்கப் பெற்ற வேணாடர் வேந்தும் ஒருவனாவன். இவனது இயற்பெயரும் பிறவும் இக்காலத்தில் புலப்படவில்லை. வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென்பகுதிக்குரிய பெயராகும்.

9. அநந்த பாலன் :- இவன் முதற்குலோத்துங்கன் விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்த ஒரு தலைவன். இளங்காரிக் குடையான் என்ற குடிப்பெயரும், சிவலோக நாயகன் என்ற இயற்பெயரும், கங்கை கொண்ட சோழ அநந்தபாலன் என்ற பட்டப்பெயரும் உடையவன். இவன் கி. பி. 1122-ல் திருவிடைமருதூரில் 'பெருந்திருவாட்டி' என்னும் பெயருடைய மடம் ஒன்று அமைத்துத் தைப்பூச நாளில் சிவனடி யார்க்கும் பிறர்க்கும் உணவளிக்குமாறு மடப்புறமாக இறையிலி நிலம் விட்டனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால் புலப்படுகின்றது. (S. I. I. Vol. V. No 702) இவனே. முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் 47-ஆம் ஆண்டாகிய கி. பி. 1117-ல் திருவாவடுதுறையில் தன் பெயரால் ஒரு மடமெடுப்பித்து அதற்கு ஊர்ச் சபையாரிடம் பொருளளித்து நிலம் வாங்கிவிடும்படி ஏற்பாடு செய்துள்ளனன். (IDs. No. 148 of 1925) அது சிவலோக நாயகன் திருமடம் என்று வழங்கப்பெற்று வந்தது. இங்ஙனம் இவன் சோறிடுசாலை, மடம் முதலான அறநிலையங்கள் அமைத்துப் புரந்து வந்தமை,
''- தலைத்தருமம்
வாரிக் குமரிமுதல் மந்தாகினி யாவும்
பாரித் தவன நந்த பாலனும் -''

என்று கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தராலும் பாராட்டப் பெற்றுள்ளது.

இனி, திருவாவடுதுறையில் சங்கரதேவன் திருமண்டபம்' என்னும் பெயருடைய மண்டபம் எடுப்பித்தவனும், 'பெருந்திருவாட்டி' என்னும் சோறிடுசாலை அமைத்தவனும் ஆகிய சேனாதிபதி சங்கரன் அம்பலங் கோயில் கொண்டான் என்பவனொருவன் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்துள்ளனன் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவனும் அநந்த பாலன் என்ற பட்டமுடையவன். திருவாவடுதுறை மடத்தில் மருத்துவம், இலக்கணம் முதலியவற்றைக் கற்போர்க்கு இவன் பொருளும் விளைநிலமும் கொடுத்துள்ளானென்பது அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகின்ற து. (Ins. Nos. 158, 159, 160, 161, 162 of 1925 and 171 of 1926) இவன் சிவலோக நாயகனான கங்கைகொண்ட சோழ அநந்த பாலனுக்குத் தந்தையோ அன்றி உடன் பிறந்தானோ என்னும் ஐயப்பாடு உண்டாகின்றது. ஒட்டக் கூத்தரால் உலாவிற் குறிக்கப்பெற்ற அநந்தபாலன் இவ் வம்பலம் கோயில் கொண்டானாக ஒருகால் இருத்தலுங் கூடும்; ஒரு தலையாகத் துணிதற்கு இயலவில்லை.

10. வத்தவன் :- இவன் முதற்குலோத்துங்கன், விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்து படைத் தலைவர்களுள் ஒருவன்; திருவிந்தளூர்[!] நாட்டுக்கஞ்சாறு என்னும் ஊரினன்; முடிகொண்டான் என்ற இயற் பெயரை யுடையவன்; வத்தராயனென்ற பட்டமுடையவன். இது வத்ஸராஜன் எனவும் வச்சராயன் எனவும் வழங்கப்படும். வச்சத்தொள்ளாயிரம் என்ற நூல் இத்தலைவன் மீது பாடப் பட்ட ஒரு பிரபந்தமாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுண்டு. இவன் மண்ணையில் பகைவர்களை வென்று வாகை சூடினான் என்று கூத்தர் கூறியுள்ளளனர். மண்ணை என்பது பங்களூர் ஜில்லா நிலமங்கலந் தாலுகாவில் உள்ள ஒரு நகரமாதலின் இங்கே நிகழ்ந்தது மேலைச் சளுக்கியருடன் நடத்திய போராதல் வேண்டும். (Epigraphia India voi.9 Page 230) கோதாவரிஜில்லா இராமச்சந்திர புரம் தாலுகாவைச் சேர்ந்த திராட்சாரமம் என்ற ஊரிலுள்ள பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் 25- ம் ஆண்டில் இவன் ஒரு நுந்தா விளக்கு வைத்தனன் என்று அங்கேயுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அக் கல்வெட்டு ஒரு செய்யுள் வடிவத்தில் உள்ளது. அது,

''புயன்மேவு பொழிற் கஞ்சை[2]
முதற்பஞ்க நதிவாணன் புதல்வன் பூண்ட
வயமேவு களியானை முடிகொண்டான்
மாநெடுவேல் வத்தர் வேந்தன்
இயன்மேவு தோளபயற் கிருபத்தை
யாண்டதனி லிடர்க்கரம்பைச்
செயன்மேவு மீச்சிரற்குத் திருநந்தா
விளக்கொன்று திருத்தினானே.'' (S. I. I. Vol. IV. No. 1338).

என்பதாம் இவனே அக் கோயிலில் மற்றொரு நுந்தா விளக்கு தன் பெற்றோர்கள் நற்கதியெய்து மாறு வைத்தனன் என்பது.
---
[1]. திருவிந்தளூர் என்னும் இவ்வூர் இந்நாளில் திரு வழுந்தூர் என்று வழங்கப்படுகின்றது; மாயூரத்திற்கு அண் மையில் காவிரியின் வடகரையில் உள்ளது. கஞ்சாறு என்பது இப்போது ஆநந்த தாண்டவபுரம் என்று வழங்கப் படுகின்றது என்பது முன்னரே கூறப்பட்டது.
[2]. கஞ்சை என்பது தஞ்சை என்று தவறாகக் கல்வெட்டுப் புத்தகத்தில் அச்சிடப்பெற்றுள்ளது. இதன் உண்மையை மேலேயுள்ள இரண்டாம் கல்வெட்டால் உணரலாம்.

"ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்பத் தாறாவது திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சாறன் பஞ்சநதி முடி கொண்டானான வத்தராயன் மாதா பிதாக்களைச் சார்த்தி இடர்க்கரைம்பை மூல ஸ்ரீவீம நாத உடையார்க்கு ........ தா விளக்கொன்று ...... இடையன்" (S, I. I. Vol, IV No.1339) என்னும் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. சோழமண்டலத் தலைவர்கள் வேங்கை, கங்கம், கலிங்கம் முதலான வடநாடுகளில் வென்றி மாலை சூடி இத்தகைய பல அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

11. சேதியர் கோன் : - இவன் சேதிராயன் என்ற பட்டமுடையவன் ; சேதி நாடு எனவும் மலையமாநாடு எனவும் வழங்கப்பெறும் நிலப்பரப்பைத் திருக்கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்த குறுநில மன்னன் ; விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்தி வந்தவன்; கருநாட ரோடு போர்புரிந்து வெற்றி யெய்தியவன். இவனைப் பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை.

இனி, காரானைகாவலன் , அதிகன், வல்லவன், திகத்தன் இவர்களைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் கிடைக்குமாயின் அவை பின்னர் வெளியிடப்பெறும்.
---------------


This file was last updated on 19 Feb. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)