tirumantiram of tirumUlar - part IIc - tantiram 5, 6
(10th tirumuRai in nampi ANTAr nampi anthology)
(in Tamil Script, utf-8 format)
திருமந்திரம் - (திருமூலர்)
பத்தாம் திருமுறை
ஐந்தாம் தந்திரம் (1419 - 1572) &
ஆறாம் தந்திரம் (1573-1703)
Acknowledgement :
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation & web version:: K. Kalyanasundaram, Lausanne, Switzerland and
Proof-reading by Mr. G. Venugopalan, Dubai
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and converted to this unicode version on 13 Sept. 2002.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com".
திருமூலர் அருளிய திருமந்திரம்
ஐந்தாம் தந்திரம் (1419-1572)
1. சுத்த சைவம்
1419
ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே. 1
1420
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. 2
1421
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. 3
1422
வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 4
2. அசுத்த சைவம்
1423.
இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்
தினையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. 1
1424
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 2
1425
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3
1426
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 4
3. மார்க்க சைவம்
1427
பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1
1428.
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 2
1429
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன்
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 3
1430
சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 4
1431
சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்துள தானே. 5
1432.
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 6
1433
பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 7
1434
மாறாத ஞான மதிப்பற மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 8
1435
வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 9
1436
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 10
1437
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 11
4. கடுஞ் சுத்த சைவம்
1438.
வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1
1439
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 2
1440.
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 3
1441.
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 4
1442
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5
5. சரியை
1443
நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1
1444.
உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 2
1445.
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3
1446.
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4
1447
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 5
1448.
கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே. 6
1449.
சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7
1450
சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 8
6. கிரியை
1451
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1
1452.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2
1453.
கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3
1454.
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 4
1455.
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5
1456.
அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6
7. யோகம்
1457.
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1
1458.
ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 2
1459
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. 3
1460.
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4
1461
எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5
1462
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 6
1463.
பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 7
1464
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 8
1465.
யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 9
1466
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 10
8. ஞானம்
1467
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1
1468
சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2
1469
தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3
1470
இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4
1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 5
1472
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6
1473
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7
1474
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8
1475
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9
1476
ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10
9. சன்மார்க்கம்
1477
சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1
1478.
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2
1479
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3
1480
தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4
1481
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5
1482
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6
1483
சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7
1484
சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8
1485
அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9
1486
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10
1487
மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11
10. சகமார்க்கம்
1488
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. 1
1489
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 2
1490
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 3
1491
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 4
1492
ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. 5
1493
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6
1494
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 7
11. சற்புத்திர மார்க்கம்
1495
மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. 1
1496
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. 2
1497
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே. 3
1498
அருங்கரை யாவது அவ்வடி நீழற்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. 4
1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. 5
1500
நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. 6
1501
திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. 7
12. தாச மார்க்கம்
1502
எளியனல் தீப miடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1
1503
அதுவிது வாதிப் பரமென் றகல்வர்
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 2
1504
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்ப வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 3
1505
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 4
1506
வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே. 5
13. சாலோகம்
1507
சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1
1508
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 2
14. சாமீபம்
1509
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே. 1
15. சாரூபம்
1510
தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே. 1
1511
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே. 2
16. சாயுச்சியம்
1512
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1
1513
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே. 2
17. சத்திநிபாதம்
மந்தம்
1514
இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே. 1
1515.
தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே. 2
1516
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே. 3
1517
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 4
மந்ததரம்
1518
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 5
1519
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே. 6
1520.
செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே. 7
1521
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநா யகமென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 8
1522
கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 9
தீவிரம்
1523
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே. 10
1524
பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 11
1525
தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 12
1526
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே. 13
தீவிரதரம்
1527
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 14
1528
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே. 15
1529
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)
ஊனை விளக்கி யுடனிருந் தானே. 16
18. அருசமயப் பிணக்கம்
1530
ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1
1531
உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 2
1532
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 3
1533
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 4
1534
சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)
அவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. 5
1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே. 6
1536
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே. 7
1537.
நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயமவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா
ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 8
1538
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 9
1539
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 10
1540
சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே. 11
1541
வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே. 12
1542.
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 13
1543.
அரநெறி யப்பனை யாதிப் பிரானை
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 14
1544
பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே. 15
1545
ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே. 16
1546
அந்நெறி நாடி அமரரு முனிவருஞ்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 17
1547
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 18
1548
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 19
1549
வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 20
19. நிராசாரம்
1550
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1
1551
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2
1552
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3
1553.
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4
1554
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5
1555.
மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6
1556.
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7
20. உட்சமயம்
1557.
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1
1558.
ஒன்றது பேரூர் வழியா றதற்கு
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2
1559.
சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துயமினே. 2
1560.
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே. 3
1561.
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 4
1562.
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 5
1563.
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே. 6
1564.
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே
வாரு மரநெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 7
1565.
மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி
னயக்குறி காணில் அரநெறி யாமே. 8
1566.
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 9
1567.
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 10
1568.
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 11
1569
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே. 12
1570.
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 13
1571.
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 14
1572.
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி
அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 15
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று
திருமந்திரம் - ஆறாம் தந்திரம் (1573-1703)
1. சிவகுரு தரிசினம் (1573-1589)
1573
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே. 1
1574.
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே. 2
1575.
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3
1576.
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4
1577.
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5
1578.
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே. 6
1579.
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7
1580.
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே. 8
1581
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9
1582.
சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10
1583.
தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11
1584.
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12
1585.
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13
1586
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே. 14
1587.
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15
1588
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16
1589.
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17
2. திருவடிப் பேறு (1590 -1604)
1590.
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1
1591.
தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2
1592.
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3
1593.
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 4
1594.
குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்
றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5
1595.
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6
1596.
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7
1597.
திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8
1598.
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9
1599.
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10
1600.
கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்
குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11
1601.
முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12
1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13
1603
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14
1604
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15
3. ஞாதுரு ஞான ஞேயம் (1605 -1613)
1605
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே. 1
1606
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 2
1607.
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென்ற பூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 3
1608
வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 4
1609
முன்னை யறிவறியாதஅம் மூடர்போற்
பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்து
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 5
1610
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 6
1611.
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 7
1612.
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 8
1613
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 9
4. துறவு (1614- 1623)
1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1
1615
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2
1616
அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே 3
1617
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 4
1618
கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 5
1619
உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 6
1620
மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 7
1621
நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படம்செய் துடம்பிட மாமே. 8
1622
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றாள் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 9
1623
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 10
5. தவம் (1624 -1632)
1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1
1625
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து)
இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2
1626
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3
1627
இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4
1628
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5
1629
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே. 6
1630
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7
1631
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8
1632
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9
-----
6. தவ நிந்தை (1633-1644 )
1633.
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1
1634
கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2
1635
விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3
1636
கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே. 4
1637
மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5
1638
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6
1639
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 7
1640
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8
1641
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே. 9
1642
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10
1643
பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11
1644
சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12
-----
7. அருளுடைமையின் ஞானம் வருதல் (1645- 1654)
1645
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1
1646
தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதியறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2
1647
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3
1648
முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4
1649
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 5
1650
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6
1651
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7
1652
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8
1653.
கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9
1654
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலெனே. 10
---
8. அவ வேடம் (1655-1660)
1655
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1
1656
ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 2
1657
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 3
1658
இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 4
1659
பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 5
1660
பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 6
---
9. தவவேடம் (1661 -1664)
1661
தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1
1662.
பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2
1663.
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3
1664
காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4
----
10. திருநீறு (1665 -1667) )
1665
நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1
1666
கங்காளன் பூசுng கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. 2
1667
அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3
----
11. ஞான வேடம் (1668-1675)
1668.
ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்
ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1
1669.
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2
1670
சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3
1671
சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4
1672
அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5
1673
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6
1674
ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 7
1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8
----
12. சிவ வேடம் (1676- 1679)
1676
அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1
1677
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 2
1678
மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 3
1679
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4
---
13. அபக்குவன் (1680 -1689 )
1680
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1
1681.
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2
1682
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 3
1683
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4
1684
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5
1685
தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6
1686
கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7
1687
விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே. 8
1688
வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9
1689
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவன் அசற்சீட னாமே. 10
---
14. பக்குவன்(1690 -1703)
1690
தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1
1691
பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2
1692
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3
1693
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4
1694
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5
1695
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 6
1696
சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7
1697
சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 8
1698
அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9
1699
சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10
1700
உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11
1701
இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12
1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13
1703
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14
---
ஆறாம் தந்திரம் முற்றிற்று
This file was revised on 20 Sept 2018 and on 16 August 2021
Feel free to send the corrections to the webmaster.