pm logo

nEminAtam of
Gunaveera Panditar
(a work on Tamil Grammar)

குணவீர பண்டிதர் எழுதிய
நேமிநாதம்
(ஒரு தமிழ் இலக்கண நூல்)



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation & proof-reading : Mr. N.D. Logasundaram (input), Ms. L. Selvanayagi (proof-reading), Chennai, Tamilnadu
HTML version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu & Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This page was first put up on Feb. 2, 2001
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குணவீர பண்டிதர் எழுதிய நேமிநாதம்

Source
Neminatam,
VAviLLa ramaswAmi sAstrulu and sons, 292, Esplanade, Chennai,
printed at The Sri Rama Press 15, Broadway Madras, 1927.
PatippAaciriyar: paccaiyppan kallUri tamizAciriyar 'maNi thirunavuKaracu mudaliar

பாயிரம்

கடவுள் வாழ்த்து

பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.

அவையடக்கம்
உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.

1. எழுத்ததிகாரம்


ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
மெவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு.      1

ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால் - ஊன்றிய
வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு.      2

ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும்.      3

தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு
அடைய வருமிகரம் அன்றி - மடநல்லாய்
மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து      4

குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங்
குறுகுமவ் வாய்தம் உயிர்மெய் - பெறுமுயிரே
மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
ஐஔ வளவொன் றரை.     5

உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின்
நாசிநா அண்ணம் இதழெயிறு மூக்கெனப்
பேசும் எழுத்தின் பிறப்பு.     6

காட்டு முயிருங் கசதநப மவ்வரியும்
ஈட்டிய வவ்வரியி னெட்டெழுத்தும் - ஈட்டு
ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்று
அயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து.     7

உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று
அயர்வில் இடையினங்க ளாறும் - நயனுணர்ந்து
நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
சொன்முடிவு கண்டோர் துணிந்து.     8

ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா
எஒமெய் புள்ளிபெரும் என்ப சஞயமுன்
அஐயாம் ஆதி யிடை.     9

அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற் - ககல்வரிய
வாருமாம் ஏயாம் மிகரத்திற்கு ஒவாகிச்
சேரும் உகரத்தின் திறம்.     10

நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்தது உடலாயிற் றன்னுடல் போஞ் - சார்ந்ததுதான்
ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஔவாம்
மேவிய ஏவும் விரைந்து.     11

மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா
எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற்
தோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
மூன்றென்ப சந்தி முடிவு.     12

மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற வுயிர்ப்பின்னும் ஆவிவரின் - தோன்றும்
யகர வகர மிறுதியிடைத் தோரோர்
மகரங் கெட வகரமாம்.     13

குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல்
லொற்றுமுன் தோன்றுதலும் உண்டாகும் - முற்றோன்று
மென்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணாய் முற்றுகரத்
தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து.     14

குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண்
நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் - ஒற்றாம்
பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி
யிணைந்தபடி யேமுடியும் ஏய்ந்து.     15

வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுதும் இயல்புமாம் - ஆய்ந்த
இறுதி வருமெழுத்ததா மீறரா மோரோர்
மறுவில்பதங் கெட்டு வரும்     16

வன்மை வரினே ளணலன மாண்டறவா
மென்மை வரினே ளலணனவாந் - தந்நக்கண்
முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவாம்
ஒன்றழிந்து போதலு முண்டு.     17

மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும்
புகரிலா மென்மைவரிற் பொன்றும் - நிகரில்
வகரம்வந் தால்குறுகும் வவ்வழிந்து மவ்வாம்
மகரந் தவயவாம் வந்து.     18

உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம்
வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத்
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்தாறு முன்றும்
பொருந்தமிடம் கண்டு புகல்.     19

நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியவெண்
பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டு நீளாது
மற்றவைபோய் ஈறு வரும்.     20

ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான்
முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான
வெல்லாங்கெட் டாறிரண்டு ஆவியின்பின் வல்லுகர
நல்லா யிரமீறாய் நாட்டு.     21

மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர்
ஆவிபோ மொற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி
மேவியசுட் டாங்கே மிகும்.     22

உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
பெற்றிடுநீ யாமாவின் பின்னிறுதி - யொற்றணையுஞ்
சாவவக மென்புழிச் சார்ந்த இறுதியிடைப்
போவதுயிர் மெய்யென்றே போற்று.     23

ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
வந்துறழு மன்ன வயனலக்கள் - சந்திகளின்
அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க
எல்லாம் முடியும் இனிது.     24
-----------

2. சொல்லதிகாரம்


கடவுள் வாழ்த்து

தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.

2.1. மொழியாக்க மரபு

ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகையாறும் - ஆற்றரிய
மூன்றிடமுங் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால்
தோன்ற வுரைப்பதாஞ் சொல்.     1

மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
தொக்க வுயர்திணையாந் தூமொழியாய் - மிக்க
வுயிருள் ளனவும் உயிரில் லனவுஞ்
செயிரில் அஃறிணையாஞ் சென்று.     2

ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று
மருவியபா லைந்தும் வகுப்பின் - பொருவிலா
வோங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
பாங்கில் அஃறிணைப்பா லாம்.     3

அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா
முன்னை யுயர்திணைப்பான் மூன்றற்குந் - தன்வினைகொண்டு
ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
எய்த அஃறிணைப்பாற் கீங்கு.     4

பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே - போலும்
பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வுஞ் சிதைந்த வுரை.     5

ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற
விறுத்தலே போலு மிவை.     6

ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தா
லன்மை துணிபொருண்மேல் வைக்கவொரு பேர்ப்பொதுச்சொல்
பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு.     7

குழுவடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கண் மகவும் - பழுதில்
உயர்திணைப் பண்போடு உயிருப்பு மெய்யும்
அயர்வில் அஃறிணையே யாம்.     8

எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம்
எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற்
றன்மையாம் அஃறிணையுஞ் சொன்னமொழி தன்னினத்தை
யுன்னி முடித்தலு முண்டு.     9

உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபான் மயங்குஞ் - செயிரில்
வழக்குந் தகுதியுமாய் வந்தொழுகுஞ் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு.     10

பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல்
உண்மை யிருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி
யினைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம்
வினைப்படுப்பின் உம்மை மிகும்.     11

பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா
பொதுத்தொழிலை யொன்றாற் புகலார் - மதித்த
ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு
ஒருவினையே சொல்லுக ஓர்ந்து.     12

ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத்
தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக
சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து.     13

இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்
திண்ண மடையுஞ் சினையு முதலுமாய்
வண்ணச் சினைசொல் வரும்.     14

2.2. வேற்றுமை மரபு

காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென்
றீண்டுரைப்பின் வேற்றுமை யெட்டாகு - மூண்டவைதாந்
தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்
ஏற்ற பொருள்செய் யிடத்து.     15

பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு
பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
ஈற்றின் உறுபாறும் ஏற்றன்முக் காலமுந்
தோற்றாமை நிற்ற றுணிபு.     16

ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
எய்துங் குறிப்பும் இயலவருந் - தையலாய்
ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்
ஏனைக் கருவியுமாம் ஈங்கு.     17

ஓதுங் குகர உருபுநான் காவதஃது
யாதிடத்தும் ஈபொருளை யேற்குமாங் - கோதிலாது
இன்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி
தென்னு மொருநான் கிடத்து.     18

அதுவென்ப தாறாம் உருபாம் இதனது
இதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற்
கண்ணென்பது ஏழாம் உருபாகும் காலநில
நண்ணும் வினையிடத்து நன்கு.     19

2.3. உருபு மயங்கியல்

வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று
தோற்றல் உருபு தொகவருதல் - ஏற்றபொருண்
மாறினுந் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்ற
றேறவரு மெய்ந்நுற் றௌிவு .     20

இருசொல் லிருதி யிரண்டே ழலாத
உருபு தொகாதென் றுரைப்ப - வுருபுதான்
தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத்
தொக்கவிரி சொல்லு முள.     21

ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைந்தாந் தம்முதலிற் சேர்தலோடு - ஒன்றாத
வேறொன்றிற் சேர்தல் எனவிரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு.     22

2.4. விளி மரபு

ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய்யில்புங் - கூறும்
இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிைக்கண் ணென்றுந்
திரண்டுவிளி யேற்குந் திறம்.     23

இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம்
உகரவோ கார வுயிர்கள் - பகர்விளிகள்
அண்மை யிடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும்
உண்மை யியல்பா யுறும்.     24

அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம்
மின்னு முறைப்பெயரே லேயாகு - முன்னியல்பாம்
ஆனும் அளபெடையும் ஆனீற்று பண்புதொழின்
மான்விழி யாயாய் வரும்.     25

ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
ஒரோ விடத்துளதாம் ஓங்களபாம் - பேர்கள்
இயல்பாம் விளியேலா வெவ்வீற்றுப் பேரும்
புயல்போலுங் கூந்தலாய் போற்று.     26

ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற
அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கு மிடத்து.     27

விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை
மரபிற்றாம் அஃறிணைபேர் வந்தான் - மரபிற்
கொளவரும் ஏகாரமுங் கூவிங்காற் சேய்மைக்கு
அளவிறப்ப நீளும் அவை.     28

2.5. பெயர் மரபு

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொன் முதனான்கு மெய்தும் - பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுப்
பெயரு மெனவுரைப்ப ரீங்கு.     29

சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
வொட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
கூடியற்பெர் காலங் குலந்தொழிலின் போமகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பே ராம்.     30

பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
ஆதி யுயர்திணைப்பே ராம்.     31

ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
ஓதியவெண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
சாதிப்பேர் சார்ந்த வினாவுறுப்பின் பேர்தலத்தோர்
ஓதிய அஃறிணைக்கா முற்று.     32

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய்
பெண்ணாணே பன்மை யெருமையொடு பேர்த்துறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு.     33

தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
வந்த மகன்மகளோ டாங்கவையு - முந்திய
தாந்தானும் நீநீயிர் என்பனவுந் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பே ராம்.     34

பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
என்னென்னை யென்றாகும் யாமுதற்பே ராமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்.     35

பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு.     36

ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
இயலும் வழக்கி னிடத்து.     37

2.6. வினை மரபு

இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து.     38

அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு
புல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய்
அல்லுந் தனித்தன்மை யாம்.     39

ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய்
யாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப
தோரு மிருபாற் குறித்து.     40

சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை
யெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ்
சிவணுதலாந் தொன்னூல் தௌிவு.     41

மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்
பொருவென் பனவும் புகல்.     42

செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய்
பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
சொன்முன் வகுத்தோர் துணிவு.     43

ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும்
இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
உடனொன்றிச் சேறலு முண்டு.     44

சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
இன்றாதன் மெய்ந்நூ னெறி.     45

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மதத்தன் கரியன் - தொடியனென
ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு.     46

கரிதரிது தீது கடிது நெடிது
பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
மேய வினைகுறிப்பா மிக்கு.     47

சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
அன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும்
மொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும்
மெய்தும் கடப்பாட் டின.     48

இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை
ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
வேந்திரட்டைச் சொற்க ளிரட்டு.      49

2. 7. இடைச்சொல் மரபு

சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
னேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல்
வினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொ லளவு.     50

தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
ணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
தேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகார மென்.     51

காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
பயநின்மை தில்லை பருவம் விழைவு
நயனில் ஒழியிசைபு நாட்டு.     52

வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான்
மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
என்றா எனாவிரண்டு மெண்.     53

சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
உருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த
வொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
வொழிபொருளுஞ் சார்த்தி யுணர்.     54

2.8. உரிச்சொல் மரபு.

ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு.     55

கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு.     56

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் கடிசொற் றிறம்.     57

வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை
யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து.     58

புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்
எல்லும் விளக்க மெனல்.     59

2.9 எச்ச மரபு.

வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந்
தோற்றிய வன்மொழியுந் தொக்கவிடத் - தேற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
ஒருசொல்லாய் சேரலு முண்டு.     60

உருபுவமை யும்மை விரியி னடைவே
யுருபுவமை யும்மைத் தொகையாம் - ஒருகாலந்
தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந்
தோன்றுமேற் பண்புத்தொகை.     61

ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய்
செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகர
மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு.     62

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியு மென்றிவற்றில் ஆம்பொருள்கண் - முன்மொழிதான்
கால மிடத்தாற் கருத்தோடுஞ் சேர்த்தறிதன்
மேலையோர் கண்ட விதி.     63

உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான்
பலர்சொன் னடைத்தாய்ப் பயிலுஞ் - சிலைநுதலாய்
முற்றும்மை யெச்சப் படுதலுமுண் டாமிடைச்சொன்
நிற்றலுமுண் டிறு திரிந்து.     64

இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற
வென்னு மவையன்றி யிட்டுரைத்த - தன்வினையாற்
செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
எய்தப் படும்வழக்கிற்கு கீங்கு.     65

மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும்
வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாங் கற்றோர் செயல்.     66

அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
டடிமறி யாற்று வரவுந் - துடியடையாய்
தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி
பாப்புப் பொருளொடொன் பான்.     67

சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
றெல்லாப் பொருளு மிரண்டாகும் - மெல்லியலாய்
தொன்மொழியுன் மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையு முண்மையுமா மீங்கு.      68

முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும்
வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய்
சான்றோர் வழக்கினையுஞ் செய்யுளுஞ் சார்ந்தியலின்
ஆன்ற மரபா மது.     69

புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா இலக்கணத்த தென்றொழிக - நல்லாய்
மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா
தொழிந்தனவுஞ் சார்த்தி யுரை.     70


This webpage was last revised on 27 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).