pm logo

works of Kumarakurupara cuvAmikaL:
tillai civakAmiyammai iraTTai maNimAlai
(in tamil script, unicode format)

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation: Mr. S.A. Ramchandar, Bombay, India;
Proof-reading: Mr. S.A. Ramchandar and Dr.K.S.V. Nambi, Tirunelveli, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script in Unicode encoding.
This file was last revised on 27 May 2003

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

நேரிசை வெண்பா

சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்
கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்
ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய
வைய மொருங்கீன்ற மான்.       1

கட்டளைக் கலித்துறை

மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே
ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த
ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே.       2

நேரிசை வெண்பா

அங்கம் பகுந்தளித்த்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை
வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு.       3

கட்டளைக் கலித்துறை

ஒருவல்லி யல்லிக் கமலத்து
      ளூறுபைந் தேறலொத்த
திருவல்லி தில்லைச் சிவகாம
      வல்லியென் சித்தத்துள்ளே
வருவல்லி செம்பொன் வடமேரு
      வில்லியை வாட்கணம்பாற்
பொருவல்லி பூத்தலி னன்றேயிப்
      பூமியைப் பூவென்பதே.       4

நேரிசை வெண்பா

பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம்
காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர்
பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்க
ஆடுகின்ற வேதமே யங்கு.       5

கட்டளைக் கலித்துறை

அங்கைகொண் டேநின் னடிதைவந்
      தாரழ லாறமுடிக்
கங்கைகொண் டாட்டுநங் கண்ணுத
      லாரக் கனகவெற்பைச்
செங்கைகொண் டேகுழைத் தார்சிவ
      காமிநின் சித்திரமென்
கொங்கைகொண் டேகுழைத் தாயவர்
      பொற்புயக் குன்றெட்டுமே.       6

நேரிசை வெண்பா

குன்றஞ் சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன்
மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ்
வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல்
முரைசன்றே வென்றி முரசு.       7

கட்டளைக் கலித்துறை

முருந்தடர்ந் தார முகிழ்த்தபுன்
      மூரன் முதல்விகயல்
பொருந்தடங் கண்விழிக் கும்புலி
      யூரர்பொன் மார்பின்மற்றுன்
பெருந்தடங் கொங்கை குறியிட்ட
      வாகண்டப் பிஞ்ஞகர்க்குன்
கருந்தடங் கண்ணுங் குறியிட்ட
      போலுங் கறைக்கண்டமே.       8


நேரிசை வெண்பா

கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று
மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்
டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர்
மயிலிருக்கத் தில்லை வனத்து.       9

கட்டளைக் கலித்துறை

வன்னஞ் செறிவளைக் கைச்சிற
      காற்றன் வயிற்றினுள்வைத்
தின்னஞ் சராசர வீர்ங்குஞ்
      சணைத்திரை தேர்ந்தருத்திப்
பொன்னம் பலத்துளொ ரானந்த
      வாரிபுக் காடும்பச்சை
அன்னம் பயந்தன கொல்லாம்பல்
      லாயிர வண்டமுமே.       10

நேரிசை வெண்பா

அண்டந் திருமேனி யம்பல்த்தார்க் கென்பதுரை
கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில்
விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ
வண்ணம் பொலிந்திருந்த வா.       11

கட்டளைக் கலித்துறை

வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென்
      றேதில்லை வாணரம்மே
காய்ந்தது வென்றிவிற் காமனை
      யேமுடிக் கங்கையைப்பின்
வேய்ந்தது பாவநின் மென்பதந்
      தாக்கவவ் வெண்மதியும்
தேய்ந்தது பெண்மதி யென்படு
      மோவச் சிறுநுதற்கே.       12

நேரிசை வெண்பா

சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை
மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த
ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம்
நண்ணுதலைக் கண்ணுதலே நன்று.       13

கட்டளைக் கலித்துறை

நங்காய் திருத்தில்லை நன்னுத
      லாய்நுத னாட்டமொத்துன்
செங்காவி யங்கண் சிவப்பதென்
      னேசெழுங் கங்கையைநின்
பங்காளர் நின்னைப் பணியுமப்
      போதுகைப் பற்றிமற்றென்
தங்கா யெழுந்திரென் றாலவட்
      கேது தலையெடுப்பே.       14

நேரிசை வெண்பா

தலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும்
குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள்
நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும்
தான்குமரி யாகியிருந் தாள்.       15

கட்டளைக் கலித்துறை

தாளிற் பதித்த மதித்தழும்
      புக்குச் சரியெம்பிரான்
தோளிற் பதித்த வளைத்தழும்
      பேதொல்லைத் தில்லைப்பிரான்
வாளிற் பதித்த முலைத்தழும்
      பங்கவர் மார்பினிலந்
நாளிற் பதித்ததொன் றேயெம்
      பிராட்டி நடுவின்மையே.       16

நேரிசை வெண்பா

இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதலை கற்பிக்கும்
பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம்
பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள்
ஆகத் திருந்தா ளவள்.       17

கட்டளைக் கலித்துறை

அல்லிக் கமலத் துணைத்தாள
      தென்றுமென் னாவிக்குள்ளே
புல்லிக் கிடந்தது போலுங்கெட்
      டேன்புன் மலக்கிழங்கைக்
கல்லிப் புலக்களை கட்டருள்
      பூத்துட் கனிந்தமலை
வல்லிக் கிலைகொன் மருங்கென்
      றிரங்கு மறைச்சிலம்பே.       18

நேரிசை வெண்பா

மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்
பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும்
நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின்
தாட்கமலஞ் சூடத் தரின்.       19

கட்டளைக் கலித்துறை

தருவற நாணத் திருவறச்
      சாலை சமைத்தம்மைநீ
பொருவறு நல்லறம் பூண்டதென்
      னாமெந்தை பொற்புலியூர்
மருவறு மத்த முடித்துக்
      கடைப்பலி தேர்ந்துவம்பே
தெருவற வோடித் திரிதரு
      மான்மற்றுன் சீர்த்திகொண்டே.       20


தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை முற்றிற்று.

This webpage was last revised on 31 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).