pm logo

கல்லாடர் அவர்களின்
கல்லாடம்

kallATam of kallATar
(in tamil script, unicode/utf-8 format)



Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
This etext was produced through Distributed Proof-reading approach and following persons helped in the preparation and proof-reading of the etext:
Mr. S. Anbumani, Mr. Kumar Mallikarjunan, Mr. V. Devarajan, Ms. Deeptha, Mr. M.K. Saravanan,
Mr. S. Karthikeyan Ms. Vijaya Mallikarjunan, Mr. V. Bavaharan, Mr. Kumaraguru and Ms. Vijayalakshmi Peripoilan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. This file was first put online on 6 August 2006.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்லாடர் அவர்களின் கல்லாடம்

பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம். கல்லாடர் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மரில் ஒருவர். சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம். வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது.

சிவமயம்‌
கடவுள்‌ வாழ்‌த்து :
வெண்பா
செவ்விதழ் பொகுட்டுச் செந்தா மரைவதனக்
கொவ்வையெழிற் செவ்வாய்‌ கருமத்தேனை-- நவ்வி
விழியாளை பைப்புணரும வேளைமத வெளளம்
பொழியானை யைமனமே போற்று.

விருத்தம்‌
வாய்ந்த பொருட்‌ கொருபொருளாய்க் கலைவாணிக
      கருளகொழிக்கு மன்பாய்ப் பாரி
னாய்ர்தமுது தமிழ்வடி த்துக் கல்லாட
      மெனவொருநூ லருளி யிட்டார்‌
தேய்ந்தமதிச் சடைப்பரமர்‌ கருணைபெறச்‌
      சங்கமுறு செல்வர்‌ வாழ்த்தக்‌
காய்ந்தபுல னடக்கியுயர்‌ பெருஞானம்‌
      பழுத்தருளகல லாடனாரே.

வெண்பா
கல்லாடார் செய்பனுவற்‌ கல்லாட நூறு நூல்‌
வல்லார்சங்‌ கத்தில் வதிந்தருளிச்‌--சொல்லாயு
மாமதுரை யீசர்‌ மனமுவந்து கேட்டுமுடி
தாமசைக்கார்‌ நூறு தரம்‌.

விருத்தம்‌
வடிவெடுத்த வேதமன்பிற்‌ பாடுகினு
      மறிந்தமியா வண்ணம்‌ வைகும்‌ பொடியணியுந்‌ திருமேனிப்‌ புனிதன்மது
      ரைக்கிறைவன்‌ புகழின்‌ பாடல்‌
நெடியகவிக்‌ கல்லாடர்‌ பொருட்டுறையை
      கழத்துதொறு நிலவு சூடும்‌
முடியசைத்து நன்று நன்றீ தெனமகிழு
      மெளினிகராய் மொழிவ தியாதே.

கணபதி துதி

திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி
கருமணி கொழித்த தோற்றம் போல
இருகவுள் கவிழ்த்த மதநதி உவட்டின்
வண்டினம் புரளும் வயங்கு புகர்முகத்த
செங்கதிர்த் திரள்எழு கருங்கடல் போல       5

முக்கண்மேல் பொங்கும் வெள்ளம் எறிகடத்த
பெருமலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென
கண்அருள் நிறைந்த கலின்பெரும் எயிற்ற
ஆறிரண்டு அருக்கர் அவிர்கதிர்க் கனலும்
வெள்ளை மதிமுடித்த செஞ்சடை ஒருத்தன்       10

உலகுயிர் ஆட ஆடுறும் அனலமும்
தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்
ஊழித்தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர்       15

விழிபடும் எரியும் சாபவாய் நெருப்பும்
நிலைவிட்டுப் படராது காணியில் நிலைக்கச்
சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய
ஆம்பல் முகஅரக்கன் கிளையொடு மறியப்
பெருங்காற்று விடுத்த நெடும்புழைக் கரத்த       20

கருமிடற்றுக் கடவுளை செங்கனி வேண்டி
இடம் கொள் ஞாலத்து வலம்கொளும் பதத்த
குண்டுநீர் உடுத்த நெடும்பார் எண்ணமும்
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்
அளந்துகொடு முடித்தல் நின்கடன் ஆதலின்       25

வரிவுடல் சூழக் குடம்பைநூல் தெற்றிய
போக்குவழி படையாது உள்உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டது போல
கடல்திரை சிறுக மலக்குதுயர் காட்டும்
உடல்எனும் வாயில் சிறைநடுவு புக்கு       30

போகாது அணங்குறும் வெள்ளறி வேமும்
ஆரணம் போற்றும்நின் காலுற வணங்குதும்
கால்முகம் ஏற்ற துளைகொள் வாய்க்கறங்கும்
விசைத்த நடைபோகும் சகடக் காலும்
நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும்       35

அலமரு காலும் அலகைத் தேரும்
குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும்
என்மனத் தெழுந்த புன்மொழித் தொடையும்
அருள்பொழி கடைக்கண் தாக்கி
தெருளுற ஐய! முடிப்பைஇன் றெனவே.       40

வேலன் வணக்கம்

பாய்திரை உடுத்த ஞால முடிவென்ன
முடங்குளை முகத்துப் பல்தோள் அவுணனொடு
மிடைஉடு உதிர செங்களம் பொருது
ஞாட்பினுள் மறைந்து நடுவறு வரத்தால்
வடவை நெடுநாக்கின் கிளைகள் விரிந்தென்ன       5

செந்துகிர் படரும் திரைக்கடல் புக்கு
கிடந்தெரி வடவையின் தளிர்முகம் ஈன்று
திரைஎறி மலைகளின் கவடுபல போக்கி
கல்செறி பாசியின் சினைக்குழை பொதுளி
அகல்திரைப் பரப்பின் சடைஅலைந்து அலையாது       10

கீழ்இணர் நின்ற மேற்பகை மாவின்
ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேரளி உமைகண் நின்று
தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்தநெடு வேலோய்!       15

கீழ்மேல் நின்றஅக் கொடுந்தொழிற் கொக்கின்
கூறிரண் டாய ஒருபங்கு எழுந்து
மாயாப் பெருவரத்து ஒருமயில் ஆகி
புடவிவைத்து ஆற்றிய பல்தலைப் பாந்தள்
மண்சிறுக விரித்த மணிப்படம் தூக்கி       20

விழுங்கிய பல்கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென
மணிநிரை சிந்தி மண்புக அலைப்ப
கார் விரிந்து ஓங்கிய மலைத்தலைக் கதிர்என
ஓ அறப் போகிய சிறைவிரி முதுகில்
புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய்       25

போழ்படக் கிடந்த ஒருபங்கு எழுந்து
மின்னின் மாண்ட கவிர்அலர் பூத்த
சென்னி வாரணக் கொடும்பகை ஆகி
தேவர்மெய் பனிப்புற வான்மிடை உடுத்திரள்
பொரியின் கொரிப்ப புரிந்த பொருள் நாடித்       30

தாமரை பழித்த கைமருங்கு அமைத்தோய்
ஒருமையுள் ஒருங்கி இருகை நெய்வார்த்து
நாரதன் ஓம்பிய செந்தீக் கொடுத்த
திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்!
முலைஎன இரண்டு முரண்குவடு மரீஇக்       35

குழற்காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய்
செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த
பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்
இமயம் பூத்த சுனைமாண் தொட்டில்
அறிவின் தங்கி அறுதாய் முலையுண்டு       40

உழல்மதில் சுட்ட தழல்நகைப் பெருமான்
வணங்கிநின் றேத்த குருமொழி வைத்தோய்!
ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை நடுங்குசிறை வைத்து
படைப்புமுதல் மாய வான்முதல் கூடித்       45

தாதையும் இரப்ப தளைஅது விடுத்தோய்
கூடம் சுமந்த நெடுமுடி நேரி
விண்தடை யாது மண்புகப் புதைத்த
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்
ஆறுதிரு எழுத்தும் கூறுநிலை கண்டு       50

நின்தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய்
மணிக்கால் அறிஞர் பெருங்குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர் முதல்கேட்ப
பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும்
பாய்பார் அறிய நீயே ஆதலின்       55

வெட்சிமலர் சூழ்ந்த நின்இரு கழற்கால்
குழந்தை அன்பினொடு சென்னிதலை கொள்ளுதும்
அறிவுநிலை கூடாச் சில்மொழி கொண்டு
கடவுள் கூறா உலவா அருத்தியும்
சனனப் பீழையும் தள்ளாக் காமமும்       60

அதன்படு துயரமும் அடைவுகெட் டிறத்தலும்
தென்புலக் கோமகன் தீத்தெறு தண்டமும்
நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து
மீளாக் காட்சி தருதிஇன் றெனவே.       65
------------

1. தமர் நினைவு கூறி வரைவு கடாதல்

அமுதமும் திருவும் பணிவரப் படைத்த
உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட
களவுடை நெடுஞ்சூர் கிளை களம்விட்டு ஒளித்த
அருள்நிறைந்து அமைந்த கல்வியர் உளமெனத்
தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும்       5

எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்
வள்ளி துணைக்கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்கு கால்அருவிப் பரங்குன்று உடுத்த
பொன்னகர்க் கூடல் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை       10

‍கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி,
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
என்உளம் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்அவிழ் குழல்சேர் கருணைஎம் பெருமான்
மலர்ப்பதம் நீங்கா உளப்பெருஞ் சிலம்ப!       15

கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளைமறை
சொல்லினர் தோம்என துணைமுலை யருத்தன
பலஉடம்பு அழிக்கும் பழிஊன் உணவினர்
தவம்எனத் தேய்ந்தது துடிஎனும் நுசுப்பே
கடவுள் கூறார் உளம்எனக் குழலும்       20

கொன்றை புறவுஅகற்றி நின்றஇருள் காட்டின
சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் போல
கறுத்துச் சிவந்தன கண்இணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில்மொழி
விள்ளும் தமியில் கூறினர்
உள்ளம் கறுத்துக் கண்சிவந்து உருத்தே.      27
------------

2. தாய் அறிவு கூறி வரைவு கடாதல்

பூமணி யானை பொன்என எடுத்து
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த
மலைவரும் காட்சிக்கு உரிய ஆகலின்
நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்
ஈன்ற செங்கவி எனத்தோன்றி நனிபரந்து       5

பாரிடை இன்பம், நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூடல்
உடலுயிர் என்ன உறைதரு நாயகன்
கடுக்கைமலர் மாற்றி வேப்பலர் சூடி
ஐவாய்க் காப்புவிட்டு அணிபூண் அணிந்து       10

விரிசடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து
வழுதி ஆகி முழுதுலகு அளிக்கும்
பேரருள் நாயகன் சீரருள் போல
மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல்       15

நலத்தொடர் வென்றிப் பொலம்பூண் குரிசில்
சின்னம் கிடந்த கொடிஞ்சி மான்தேர்
நொச்சிப் பூவுதிர் நள்இருள் நடுநாள்
விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென
தன்கண் போலும் எண்கண் நோக்கி       20

கள்வரைக் காணும் உள்ளம் போலச்
செம்மனம் திருகி உள்ளம் துடித்து
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனள்
மாறாக் கற்பின் அன்னை
கூறுஆம் மதியத் திருநுதற் கொடியே!       25
---------------

3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்

பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலும்
உட்பகை அமைத்தலும் உணர்ந்துசொல் பொருத்தலும்
ஒருதொழிற்கு இருபகை தீராது வளர்த்தலும்
செய்யா ‍அமைச்சுடன் சேரா அரசன்       5

நாடு கரிந்தன்ன காடுகடந்து இயங்கி
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு
இதழ்நிறை மதுவம் தாமரை துளித்தென
விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டால்
உலகியல் நிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க       10

மாறனும் புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால்
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்
கடல்அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்       15

தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்
தழற்கண் தரக்கின் சரும ஆடையன்
கூடல்அம் பெரும்பதி கூறார் கிளை என
நிறைநீர்க் கயத்துள் தருதாள் நின்று
தாமரை தவஞ்செய்து அளியுடன் பெற்ற
திருமகட்கு அடுத்ததுஎன் என்று
ஒருமை காண்குவர் துகிர்கிளைக் கொடியே!       22
------------

4. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்

அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாக
திருநுதல் முளைத்த கனல்தெறு நோக்கினில்
ஆயிர மணிக்கரத்து அமைத்தவான் படையுடன்
சயம்பெறு வீரனைத் தந்துஅவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த       5

இருள்மனத் தக்கன் பெருமகம் உண்ணப்
புக்க தேவர்கள் பொருகடற் படையினை
ஆரிய ஊமன் கனவென ஆக்கிய
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து
அருவிஅம் சாரல் இருவிஅம் புனத்தினும்       10

மயிலும் கிளியும் குருவியும் நன்றி
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல என்னும்
குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனம் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு       15

சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்இன்று
ஊற்றெழும் இருகவுள் பெருமதத் கொலைமலைக்
கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட
பிறைமதி அன்ன கொடுமரம் வாங்கி,
தோகையர் கண்எனச் சுடுசரம் துரக்கும்       20

எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதஇப்
புனக்குடிக் கணியர்தம் மலர்க்கை ஏடவிழ்த்து
வரிப்புற அணில்வால் கருந்தினை வளைகுரல்
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து
நிழலும் கொடுத்து அவர்ஈன்ற
மழலை மகார்க்கும் பொன்அணிந் தனரே.       26
----------

5. இளமை கூறி மறுத்தல்

இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல்
அளவியல் மணநிலை பரப்பும் காலம்
தளைகரை கடந்த காமக் கடலுள்
புல்நுனிப் பனியென மன்னுதல் இன்றி
பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது       (5)

வளைகாய் விட்ட புளிஅருந் தாது
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
மனைபுகை யுண்ட கருமண் இடந்து
பவள வாயில் சுவைகா ணாது
பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக்       (10)

குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது
மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என
வரிகொடு மதர்த்த கண்குழி யாது
குறிபடு திங்கள் ஒருபதும் புகாது
பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்ப       (15)

தூணம் பயந்த மாண்அமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத்து அமர்விளை யாட
நெருப்புமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்
கூடல் மாநகர் ஆட எடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன்       (20)

பேரருள் விளையாச் சீரிலர் போல
துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன
இதழ்குவித்துப் பணித்த குதலை தெரியாது
முருந்து நிரைத்த திருந்துபல் தோன்றாது
தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன,       (25)

விரிதரு கூழையும் திருமுடி கூடாது
துணைமீன் காட்சியின் விளைகரு என்ன
பார்வையின் தொழில்கள் கூர்வழி கொள்ளாது
மறுபுலத்து இடுபகை வேந்துஅடக் கியதென
வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே       (30)

செம்மகள் மாலை இம்முறை என்றால்
வழுத்தலும் வருதலும் தவிர்தி
மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே!       (33)

6. சுவடு கண்டு இரங்கல்


நிணமுயிர் உண்ட புலவு பொறாது
தலையுடல் அசைத்து சாணைவாய் துடைத்து
நெய்குளித்து அகற்றும் நெடுவேல் விடலை
அந்தணர் உகும்நீர்க்கு அருட்கரு இருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணும்       (5)

கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
நெருப்பு உருத்தன்ன செருத்திறல் வரைந்த
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;
துணைவிளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்
தோகை மண்புடைக்கும் காய்புலி மாய்க்க       (10)

வாய்செறித் திட்ட மாக்கடிப்பு இதுவே
செடித்தலைக் காருடல் இடிக்குர ல் கிராதர்
மறைந்துண்டு அக்கொலை மகிழ்வுழி இந்நிலை
தவநதி போகும் அருமறைத் தாபதர்
நன்னர்கொள் ஆசி நாட்டியது இவ்வுழை       (15)

கறையணல் புயங்கன் எரிதழல் விடத்தை
மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,
எண்ணாது கிடைத்த புண்எழு செருநிலைக்
கைவளர் கொழுந்து மெய்பொடி யாகென       (20)

சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே
குரவம் சுமந்த குழல்விரித்து இருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கை இவ்இடனே
ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டாக்கோட்டு       (25)

உதிர்பறை எருவை உணவுஊன் தட்டி
வளைவாய்க் கரும்பருந்து இடைபறிக் துண்ணக்
கண்டுநின்று உவந்த காட்சியும் இதுவே
செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்
குடுமிஅம் தழலும் அவண்இருட் குவையும்       (30)

முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
சேயிதழ் முளரியும் கார்இதழ்க் குவளையும்
ஓர்உழைக் கண்ட உவகையது என்ன
எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியின்
அண்டப் பெருந்திரன் அடைவுஈன்று அளித்த       (35)

கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள்
மலைஉருக் கொண்ட உடல்வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
‍நெடுங்கடற் கிடங்கும் ஒருங்குயிர் பருகிய
மணிவேற் குமரன் முதல்நிலை வாழும்       (35)

குன்றுடுத்து ஓங்கிய கூடலம் பதியோன்
தாள்தலை தரித்த கோளினர் போல
நெடுஞ்சுரம் நீங்கத் தம்கால்
அடும்தழல் மாற்றிய கால்குறி இவணே.       (39)

7. நற்றாய வருந்தல்


பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையள்
மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன
விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்
தன்னைநின்று அளித்த என்னையும் ஒருவுக
பல்மணிக் கலன்கள் உடற்குஅழகு அளித்தென       (5)

சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத்து ஏந்திய
மூவிரு திருமுகத்து ஒருவேல் அவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்
மனவுஅணி மடந்தை வெறியாட் டாளன்       (10)

வேல்மகன் குறத்தி மாமதி முதியோள்
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க
ஒருங்குவந்து இமையா அருங்கடன் முற்றிய
பின்னர்நின்று எற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி       (15)

தூவிஅம் தோகை வெள்ஓதிமம் தொடர்உழை
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக
சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி
புகைமுரிந்து எழுந்தென விண்ணத்து அலமர
குழைபொடி கூவையின் சிறைசிறை தீந்த       (20)

பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
உடைகவட்டு ஓமை உலர்சினை இருக்கும்
வளைகட் கூகையும் மயங்கி வாய்குழற
ஆசையின் தணியா அழல்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத்து ஏகும்       (25)

குழிகட் கரும்பேய் மகவுகண் முகிழ்ப்ப
வேம்உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப
நெடுந்தாட் குற்றிலை வாகைநெற்று ஒலிப்ப
திசைநின்று எழாது தழல்முகல் தெறிப்ப
சுடலையில் சூறை இடைஇடை அடிக்கும்       (30)

பேர்அழற் கானினும் நாடும்என் உளத்தினும்
ஒருபால் பசுங்கொடி நிறைபாட்டு அயர
பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
வையகத்து உருவினர் மலரா அறிவினைப்
புலன்நிரை மறைத்த புணர்ப்பு அதுபோல       (35)

குளிர்கொண்டு உறையும் தெளிநீர் வாவியை
வள்ளை செங்கமலம் கள்ளவிழ் ஆம்பல்
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
செந்தாள் விடுத்துறை அந்தர்கள் தம்மினும்
மூவாத் தனிநிலைக்கு இருவரும் ஓருயிர்       (40)

இரண்டெனக் கவைத்தநல் லரண்தரு தோழியை
செருவிழம் இச்சையர் தமதுடல் பெற்ற
இன்புகள் நோக்கா இயல்பது போல
மருங்குபின் ‍நோக்காது ஒருங்குவிட்டு அகல
பொருந்தியது எப்படி உள்ளம்
அருந்தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே?       (46)

8. செலவு நினைந்துரைத்தல்


உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
கட்டுடைச் சூர்உடல் காமம் கொண்டு
பற்றி உட்புகுந்து பசுங்கடல் கண்டு       (5)

மாவொடும் கொன்ற மணிநெடுந் திருவேல்
சேவலம் கொடியோன் காவல்கொண் டிருந்த
குன்றம் உடுத்த கூடல்அம் பதிஇறை
தொடர்ந்து உயிர்வவ்விய விடம்கெழு மிடற்றோன்
புண்ணியம் தழைத்த முன்ஓர் நாளில்       (10)

இருவிரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி
குழைவுடல் தலைவிரி கைத்திரி கறங்க
ஒரு விரல் தெறித்தும் ஐவிரல் குவித்தும்
பெருவாய் ஒருமுகப் படகம் பெருக்க
தடாவுடல் உம்பர்த் தலைபெறும் முழவம்       (15)

நான்முகம் தட்டி நடுமுகம் உரப்ப
ஒருவாய் திறந்து உள்கடிப்பு உடல்விசித்த
சல்லரி அங்கைத் தலைவிரல் தாக்க
கயந்தலை அடிஎன கயிறமை கைத்திரி
இருவிரல் உயர்த்திச் செருநிலை இரட்ட       (20)

இருதலை குவிந்த நெட்டுடல் தண்ணுமை
ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப
திருமலர் எழுதிய வரைஇருபத் தைந்து
அங்குலி இரண்டிரண்டு அணைத்துவிளர் நிறீஇ
மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த       (25)

கல்ல வடத்திரள் விரல்தலை கறங்க
மரக்கால் அன்ன ஒருவாய்க் கோதை
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
நாடிரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
திருவடி வினவாக் கருவுறை மாக்கள்       (30)

நெஞ்சினம் கிடந்து நீண்டவல் இரவில்
செல்லவும் உரியம் தோழி நில்லாது
எம்எதிர்வு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்
பழிநாட்டு ஆர்ந்த பாவம் போலச்       (35)

சேர மறைந்த கூர்இருள் நடுநாள்
அரிதின் போந்தனிர் என்றோர்
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே!       (38)

9. தூது கண்டு அழுங்கல்


வளைந்துநின்று உடற்றும் மலிகுளிர்க்கு உடைந்து
முகில்துகில் மூடி மணிநெருப்பு அணைத்துப்
புனம்எரி கார்அகில் புகைபல கொள்ளும்
குளவன் வீற்றிருந்த வளர்புகழ்க் குன்றமும்
புதவு தொட்டெனத் தன்புயல் முதிர்கரத்தினை       (5)

வான்முறை செய்த கூன்மதிக் கோவும்
தெய்வம் அமைத்த செழுந்தமிழ்ப் பாடலும்
ஐந்தினில் பங்குசெய்து இன்புவளர் குடியும்
தவலரும் சிறப்பொடு சால்புசெய்து அமைந்த
முதுநகர்க் கூடலுள் மூவாத் தனிமுதல்       (10)

ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த
கானம் காட்டும் புள்அடித் துணையினர்
பட்டடை எடுத்து, பாலையில் கொளுவி
கிளையில் காட்டி ஐம்முறை கிளத்தி
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி       (15)

விளரி எடுத்து மத்திமை விலக்கி
ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி
குருவிவிண் இசைக்கும் அந்தரக் குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையில் கூட்டி       (20)

விரிந்தவும் குவிந்தவும் விளரியில் வைத்து
தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும்
ஆங்கவை நான்கும் அணிவுழை ஆக்கி
பூரகம் கும்பகம் புடைஎழு விளரி
துத்தம் தாரம் கைக்கிளை அதனுக்கு       (25)

ஒன்றினுக்கு ஏழு நின்றுநனி விரித்து
தனிமுகம் மலர்ந்து தம்இசை பாட
கூளியும் துள்ள ஆடிய நாயகன்
இணைஅடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும்
திருவறம் வந்த ஒருவன் தூதுகள்       (30)

இன்பமும் இயற்கையும் இகழாக் காமமும்
அன்பும் சூளும் அளியுறத் தந்துஎன்
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும்
நாணமும் கொண்ட நடுவினர் இன்னும்
கொள்வதும் உளதோ கொடுப்பதும் உளதோ?       (35)

சேய்குறி இனிய ஆயின்
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டெமக்கே.       (37)

10. அறத்தொடு நிற்றல்


தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலின் பதுமன் ஆகியும்
அவ்வுயிர் எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்
செவ்விகொள் கருமுகில் செல்வன் ஆகியும்
கட்டிய கரைவரம்பு உட்புக அழித்து       (5)

நீர்தலை தரித்தலின் நிமலன் ஆகியும்
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரிமுதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்
மூன்றழல் நான்மறை முனிவர் தோய்ந்து
மறைநீர் உகுத்தலின் மறையோன் ஆகியும்       (10)

மீனும் கொடியும் விரிதிணை ஐந்தும்
தேனுறை தமிழும் திருவுறை கூடலும்
மணத்தலின் மதிக்குல மன்னவன் ஆகியும்
நவமணி எடுத்து நன்புலம் காட்டலின்
வளர்குறி மயங்கா வணிகன் ஆகியும்       (15)

விழைதரும் உழவும் வித்தும் நாறும்
தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தினன்
இணைஅடி வழுத்தார் அணைதொழில் என்ன       (20)

கைதையம் கரைசேர் பொய்தற் பாவையோடு
இருதிரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்
பூழிப் போனஇம் பொதுவுடன் உண்டும்
சாய்தாள் பிள்ளை தந்து கொடுத்தும்
முடவுடற் கைதை மடல்முறித் திட்டும்       (25)

கவைத்துகிர்ப் பாவை கண்ணி சூடக்
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்தும்
நின்றான் உண்டொரு காளை
என்றால், இத்தொழில் செய்வது புகழே?       (24)

11. பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல்


வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் தொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமலர் அன்பொடு
முண்டக முகையின் முலைமுகம் தருமின்
உருளின் பூமி உள்ளுற ஆடுமின்       (5)

எதிர்மின் இறைஞ்சுமின் ஏத்துமின் இயங்குமின்
கருப்புரம் துதைந்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரும் மருத்தினும் உறுமின்
பெருங்கவின் முன்நாள் பேணிய அருந்தவம்
கண்ணிடை உளத்திடை காண்மின் கருதுமின்       (10)

பூவும் சுண்ணமும் புகழ்ந்தெதிர் எறிமின்
யாழில் பரவுமின் ஈங்கிவை அன்றி
கலத்தும் என்றெழுமின் கண்ணளி காண்மின்
வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு
புவிபுனல் அனல்கால் மதிபுல வோன்என       (15)

முழுதும் நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய அந்நாள்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடல் சிறுநகைக் குறுந்தாட் பாரிடம்       (20)

ஆற்றாது அலைந்த நீர்நசை அடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத்து அருளிய
கூடலம் பதிஉறை குணப்பெருங் கடவுள்
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை ஊரன்       (25)

பொன்துணர்த் தாமம் புரிந்தொளிர் மணித்தேர்
வீதி வந்தது வரலான்நும்
ஏதம் தீர இருமருங்கு எழுந்தே.       (28)

12. கல்வி நலம் கூறல்


நிலையினின் சலியா நிலைமை யானும்
பலஉலகு எடுத்த ஒருதிறத் தானும்
நிறையும் பொறையும் பெறும்நிலை யானும்
தேவர் மூவரும் காவ லானும்
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும்       (5)

அளக்கஎன்று அமையாப் பரப்பின தானும்
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானும்
முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம்
அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்       (10)

நிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் வானத் தருஐந்து ஆகியும்
மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்
உயிர்பரிந்து அளித்தலின் புலமிசை போக்கலின்       (15)

படிமுழுது அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியாது இருத்த லானும்
மறுமைதந்து உதவும் இருமை யானும்
பெண்இடம் கலந்த புண்ணியன் ஆகியும்
அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும்       (20)

கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்
நிறைவுளம் நீங்காது உறைஅருள் ஆகியும்
இவைமுதல் ஆகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி உள்நிகழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை இருசெவி உண்ணும்       (25)

குடக்கோச் சேரன் கிடைத்துஇது காண்கஎன
மதிமலி புரிசைத் திருமுகம் கூறி
அன்புஉருத் தரித்த இன்புஇசைப் பாணன்
பெருநிதி கொடுக்கஎன உறவிடுத் தருளிய
மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்       (30)

இருசரண் பெருகுநர் போல
பெருமதி நீடுவர்; சிறுமதி நுதலே!       (32)

13. முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்


குரவம் மலர்ந்த குவைஇருள் குழலீ!
இருவேம் ஒருகால் எரிஅதர் இறந்து
விரிதலை தோல்முலை வெள்வாய் எயிற்றியர்க்கு
அரும்புது விருந்தெனப் பொருந்திமற்று அவர்தரும்
இடியும் துய்த்து சுரைக்குடம் எடுத்து       (5)

நீள்நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும்
பழம்புல் குரம்பை யிடம்புக்கு இருந்தும்
முடங்குஅதள் உறுத்த முகிழ்நகை எய்தியும்
உடனுடன் பயந்த கடஒலி ஏற்றும்
நடைமலை எயிற்றின் இடைத்தலை வைத்தும்       (10)

உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டெனின்
முலைமூன்று அணைந்த சிலைநுதல் திருவினை
அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவன் ஆகி
மேதினி புரக்கும் விதியுடை நல்நாள்       (15)

நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும்
அருட்குறி நிறுவி அருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வாழ் இறைவன்
முண்டகம் மலர்த்தி முருகவிழ் இருதாள்
உறைகுநர் உண்ணும் இன்பமே
அறையல் அன்றிமற்று ஒன்றினும் அடாதே!       (21)

14. நிலவு வெளிப்பட வருந்தல்


நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்
அடுமடைப் பள்ளியின் நடுஅவ தரித்தும்
திருவடிவு எட்டனுள் ஒருவடிவு ஆகியும்
முக்கணில் அருட்கண் முறைபெற முயங்கியும்
படிஇது என்னா அடிமுடி கண்டும்       (5)

புண்ணிய நீறுஎனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி! நின்தொழு தேற்கும்
நன்னரின் செய்குறும் நன்றிஒன்று உளதால்
ஆயிரம் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து
ஒரொரு பனிக்கலை ஒடுங்கிநின்று அடைதலின்       (10)

கொலைநுதி எயிறுஎன்று இருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை ஒருவிசை தடிந்தும்
மதுஇதழ்க் குவளைஎன்று அடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதைய புகுந்தெடுத்து அளித்தும்
செறிபிறப்பு இறப்பென இருவகை திரியும்       (15)

நெடுங்கயிற்று ஊசல் பரிந்துகலுழ் காலை
முன்னையின் புனைந்தும் முகமன் அளித்தும்
தந்தஎம் குரிசில் தனிவந்து எமது
கண்எனக் கிடைத்துஎம் கண்எதிர் நடுநாள்
சமயக் கணக்கர் மதிவழி கூறாது       (20)

உலகியல் கூறி பொருளிது என்ற
வள்ளுவன் தனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்
தன்னைநின் றுணர்ந்து தாமும் ஒன்றின்றி       (25)

அடங்கினர் போல நீயும்
ஒடுங்கிநின் றமைதி இந்நிலை அறிந்தே!       (27)

15. தேர் வரவு கூறல்


சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெனும்
ஒருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நால்திசை முகில்துகில் விரித்து
பொற்சிலை வளைத்து வாயில் போக்கி
சுருப்பணி நிரைத்த கடுக்கைஅம் பொலந்தார்       (5)

நிரை நிரை நாற்றி நெடுங்காய் மயிர் அமைத்து
ஊதையில் அலகிட்டு உறைபுயல் தெளித்து
போற்றுறு திருவம் நால்திசைப் பொலிய
மரகதத் தண்டின் தோன்றி விளக்கெடுப்ப
குடத்தியர் இழுக்கிய அளைசித றியபோல்       (10)

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப
பிடவலர் பரப்பிப் பூவை பூஇட
உயர்வான் அண்டர் கிளைவியப் பெய்த
உறவுஇணை நட்பு கிளைவியப் பெய்த
முகில்முழவு அதிர ஏழிசைமுகக்கும்       (15)

முல்லை யாழொடு சுருதிவண்டு அலம்ப
களவலர் சூடி புறவுபாட் டெடுப்ப
பசுந்தழை பரப்பிக் கணமயில் ஆல
முல்லையம் திருமகள் கோபம்வாய் மலர்ந்து
நல்மணம் எடுத்து நாளமைத்து அழைக்க       (20)

வரிவளை முன்கை வரவர இறப்பப்
போனநம் தனிநமர் புள்இயல் மான்தேர்
கடுவிசை துரந்த கான்யாற் றொலியின்
எள்ளினர் உட்க வள்இனம் மடக்கிமுன்
தோன்றினர் ஆதலின் நீயே மடமகள்!       (25)

முன்ஒரு காலத்து அடுகொலைக்கு அணைந்த
முகிலுருப் பெறும்ஓர் கொடுமரக் கிராதன்
அறுமறைத் தாபதன் அமைத்திரு செம்மலை
செருப்புடைத் தாளால் விருப்புடன் தள்ளி
வாயெனும் குடத்தில் வரம்பற எடுத்த       (30)

அழுதுகடல் தள்ளும் மணிநீர் ஆட்டி
பின்னல்விட் டமைத்த தன்தலை மயிரணை
திருமலர் விண்புக மணிமுடி நிறைத்து
வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி
வைத்தமை யாமுன் மகிழ்ந்தமுது உண்டவன்       (35)

மிச்சிலுக்கு இன்னும் இச்சைசெய் பெருமான்
கூடல்நின் றேத்தினர் குலக்கிளை போலத்
துணர்பெறு கோதையும் ஆரமும் புனைக
புதையிருள் துரக்கும் வெயில் மணித் திருவும்
தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக       (35)

இறைஇருந்து உதவா நிறைவளைக் குலனும்
பெருஞ்சூ டகமும் ஒருங்குபெற் றணிக
நட்டுப் பகையினர் உட்குடி போல
உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும்
கொலையினர் நெஞ்சம் கூண்டவல் இருளெனும்       (40)

ஐம்பால் குழலையும் அணிநிலை கூட்டுக
விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல
நீங்காத் திருவுடை நலனும்
பாங்கில் கூட்டுக இன்பத்தில் பொலிந்தே!       (44)

16. அழுங்கு தாய்க்கு உரைத்தல்


கல்லுயர் வரைதோள் செம்மனக் குரிசிலும்
கல்லா தவர்உளம் புல்லிய குழலும்
இம்மனை நிறைபுகுந்து எழில்மணம் புணர
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன்       (5)

சோதிடக் கலைமகள் தோற்றம் போல
சொரிவெள் அலகரும் பழுதில் வாய்மையர்
உடல்தொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப
பெருந்திரள் கண்ணுள் பேச்சுநின் றோர்ந்து       (10)

வாய்ச்சொல் கேட்டநல் மதியரும் பெரியர்
ஆய்மலர் தெரிந்துஇட்டு வான்பலி தூவி
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்
கருங்கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடும் மறிய       (15)

சுரிமுகச் செவ்வாய்ச் சூல்வளை தெறிப்ப
கழுக்கடை அன்ன கூர்வாய்ப் பெருங்கண்
பனைகிடந் தன்ன உடல்முதல் துணிய
ஆருயிர் கவரும் காருடல் செங்கண்
கூற்றம் உருத்தெழுந்த கொள்கை போல       (20)

நெட்டுடல் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரைவுவர் புகுந்து
நெடுஞ்சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்தும்
கருமுகில் வெளுத்த திருமிடற்று இருளும்
நுதல்மதி கிழித்த அழலவீர் நோக்கமும்       (25)

மறைத்தொரு சிறுகுடிப் பரதவன் ஆகி
பொந்தலைப் புணர்வலை கொடுங்கரம் ஆக்கி
நெடுங்கடல் கலக்கும் ஒருமீன் படுத்த
நிறைஅருள் நாயகன் உறைதரு கூடல்
வணங்கார் இனமென மாழ்கி,
குணம்குடி போய்வித்த ஆய்வுளம் தவறே.       (31)

17. வெறி விலக்கல்


உழைநின் றீரும் பிழைஅறிந் தீரும்
பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரும்
ஒன்று கிளக்க நின்றிவை கேண்மின்
ஒருபால் பசுங்கொடி திருநுதல் பொடித்த
குறுவெயிர்ப்பு ஒழுக்கு எனப்பிறை அமுதெடுக்க       (5)

படிறர் சொல்எனக் கடுவுநஞ்சு இறைப்ப
அண்டப் பொற்சுவர் கொண்ட அழுக்கை
இறைத்துக் கழுவுவது என்னக் கங்கைத்
துறைகொள் ஆயிரம் முகமும் சுழல
அப்பெருங் கங்கை கக்கிய திரைஎனக்       (10)

கொக்கின் தூவல் அப்புறம் ஆக
மாணிக் கத்தின் வளைத்த சுவரெனப்
பாணிக் குள்பெய் செந்தழல் பரப்ப
தன்னால் படைத்த பொன்அணி அண்டம்
எண்திக்கு அளந்து கொண்டன என்னப்       (15)

புரிந்த செஞ்சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடிசூழ் சூரியர் என்னத்
தங்கிய மூன்றுகண் எங்கணும் ஆக
கூடல் மாநகர் ஆடிய அமுதை
உண்டு களித்த தொண்டர்கள் என்ன       (20)

இம்மது உண்ண உம்மையின் உடையோர்
முருக நாறப் பருகுதல் செய்க
வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக
அணங்காட்டு முதியோள் முறங்கொள் நெல்எடுக்க
பிணிதர விசித்த முருகியம் துவைக்க       (25)

ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க
இன்னும்பல தொழிற்கு இந்நிலை நின்று
மாறு பாடு கூறுதல் இலனே
ஈங்கிவை நிற்க யாங்கள்அவ் அருவியில்
ஒழுக புக்குத் தழுவி எடுத்தும்       (30)

ஒருமதி முறித்துஆண்டு இருகவுட் செருகிய
ஏந்துகோட்டு உம்பல் பூம்புனம் எம்உயிர்
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்
நெடுங்கை வேலால் அடும்தொழில் செய்து
பெறுமுயிர் தந்து மருவி அளித்த       (35)

பொன்நெடுங்குன்றம் மன்னிய தோளன்
செவ்வே தந்தமை துயர்இ ருப்ப
கூறு பெயரொடு வேறு பெயரிட்டு
மறிஉயிர் உண்ணக் குறுகி வந்திருந்த
தெய்வம் கற்ற அறிவை
உய்யக் கூறிலோர் நெஞ்சிடம் பொறாதே.       (41)

18. உலகியல்பு உரைத்தல்


பழமை நீண்ட குன்றக் குடியினன்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும்
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்
பந்து பயிற்றியும் பொற்கழங்கு உந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவும்       (5)

உடைமை செய்த மடமையள் யான்என
எம்எதிர் கூறிய இம்மொழி தனக்குப்
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே
செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந்து ஈன்ற
செம்மகள் கரியோற்கு அறுதி போக       (10)

மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன
திரைக்கடல் குடித்த கரத்தமா முனிக்கும்
திங்கள் வாழ்குலம் தங்கும் வேந்தற்கும்       (15)

அமுதஊற் றெழுந்து நெஞ்சம் களிக்கும்
தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பும் நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கல்புடை ஆரம்
அணியும் மாமகிழ்நர் பதியுறை புகுந்தால்       (20)

உண்டோ சென்றது கண்டது உரைக்க
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற
புறம்ஆர் கல்வி அறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டு அருகிடத்தும்
அவர்மன அன்னை கவரக் கண்டிலம்       (25)

பெருஞ்சேற்றுக் கழனி கரும்புபெறு காலை
கொள்வோர்க் கன்றி அவ்வயல் சாயா
பூம்பணை திரிந்து பொதிஅவிழ் முளரியில்
காம்புபொதி நறவம் விளரியோ டருந்தி
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து       (30)

கடிமலர்ப் பொழிலில் சிறிதுகண் படுத்து
மயக்கநிறை காமத்து இயக்கம் கொண்டு
நின்ற நாரணன் பரந்த மார்பில்
கலவாக் குங்குமம் நிலவிய தென்னக்
கார்வான் தந்த பேர்கொள் செக்கரில்       (35)

வீதிவாய்த் தென்றல் மெல்லென் றியங்கும்
மூதூர்க் கூடல் வந்தருள் முக்கணன்
காமனை அயனை நாமக் காலனை
கண்ணால் உகிரால் மலர்கொள் காலால்
சுட்டும் கொய்தும் உதைத்தும் துணித்த       (40)

விட்டொளிர் மாணிக்க மலையின் ஒருபால்
அடங்கப் படர்ந்த பசுங்கொடி அதனை
வளர்ந்த சேண்மலை உளத்துயர் கொண்டு
தொடர்ந்ததும் இலைகீழ் நடந்தசொல் கிடக்க
பாலைக் கிழத்தி திருமுன் நாட்டிய       (45)

சூலத் தலையின் தொடர்ந்துசிகை படர்ந்து
விடுதழல் உச்சம் படுகதிர் தாக்க
பாடல்சால் பச்சைக் கோடகக் காற்றை
மையில் காட்சிக் கொய்யுளை நிற்ப
வயிற்றில் இருந்து வாய்முளைத் தென்ன       (50)

இருகால் முகனிற்கு அருகா துரந்து
படுமழல் நீக்கக் குடகடல் குளிக்கும்
நாவாய குறியாத் தீவாய் பாலையில்
தம்மில் இன்பம் சூளுடன் கூடி
ஒன்றி விழைந்து சென்றாட்கு உடைத்து       (55)

பொன்பதி நீங்கி உண்பதும் அடங்கி
முழங்கப் பெருங்குரல் கூஉய்ப்
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே.       (58)

19. மகிழ்ந்து உரைத்தல்


குங்குமக் கோட்டுஅலர் உணங்கல் கடுக்கும்
பங்குடைச் செங்கால் பாட்டளி அரிபிடர்க்
குருவில் தோய்ந்த அரிகெழு மரகதக்
கல்எனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மா க்கு ஒருவிசை புரிந்து       (5)

சோதிவளர் பாகம் ஈந்தருள் நித்தன்
முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில்
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலையோன்
கைஞ்ஞின்றவன் செங்கால் கண்டவர் போல       (10)

விளக்கமும் புதுமையும் அளப்பில் காட்சியும்
வேறொப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்
அறிவோர் காணும் குறியாய இருந்தன
இருந்திண் போர்வைப் பிணிவிசி முரசம்
முன்னம் எள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப       (15)

மணம்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று
எழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி உண்டு களியாது
மற்றது பூத்த பொன்திகழ் தாமரை
இரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும்       (20)

வற்றா மேனி வெள்ளத்துள் மறிய
நுனித்தலை அந்தணர் கதழ்எரி வளர்த்துச்
சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதறிச்
செம்மாந்து மணத்த வளரிய கூர்எரி
மும்முறை சுழன்று தாயார் உள்மகிழ       (25)

இல்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி
இலவலர் வாட்டிய செங்கால் பிடித்து
களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி
இரண்டுபெயர் காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணும் கரியோர் போல       (30)

இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ
வடமீன் காட்டி விளக்கணி எடுத்துக்
குலவாழ்த்து விம்ம மணஅணிப் பக்கம்
கட்புலம் கொண்ட இப்பணி அளவும்
வாடி நிலைநின்றும் ஊடி ஏமாந்தும்       (35)

என்முகம் அளக்கும் காலக் குறியைத்
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்
உலகம் மூன்றும் பெறுதற்கு அரியதென்று
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்
கல்லுயர் நெடுந்தோள் அண்ணல்,
மல்லுறத் தந்த ஈர்ந்தழை தானே.       (41)

20. பிறை தொழுகென்றல்


நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி
எழுமலை விழுமலை புடைமணி ஆக
மீன்புகர் நிறைந்த வான்குஞ் சரமுகம்
வால்பெற முளைத்த கூன்கோடு ஆனும்
பேச நீண்ட பல்மீன் நிலைஇய       (5)

வானக் கடலில் தோணி அதுஆனும்
கொழுநர் கூடும் காம உத*தியைக்
கரைவிட உகையும் நாவாய் ஆனும்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில்
ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ       (10)

இழைத்து வளைத்த கருப்பு வில்லானும்
நெடியோன் முதலாம் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலில்
அழுதுடன் தோன்றிய உரிமை யானும்
நிந்திரு நுதலை ஒளிவிசும்பு உடலில்       (15)

ஆடிநிழல் காட்டிய பீடுஅது வானும்
கரைஅற அணியும் மானக் கலனுள்
தலைபெற இருந்த நிலைபுக ழானும்
மண்ணகம் அனைத்தும் நிறைந்தபல் உயிர்கட்கு
ஆயா அமுதம் ஈகுத லானும்       (20)

பாற்கடல் உறங்கும் மாயவன் போல
தவள மாடத்து அகல்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்
பொன்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையும்       (25)

தாளியும் அறுகும் வால்உளை எருக்கமும்
கரந்தையும் வன்னியும் மிடைந்தசெஞ் சடையில்
இரண்டுஐஞ் ஞூறு திரண்டமுகம் எடுத்து
மண்பிலன் அகழ்ந்து திக்குநிலை மயக்கி
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும்       (30)

கங்கையில் படிந்த பொங்குதவத் தானும்
அந்நெடு வேணியின் கண்ணிஎன இருந்*து
தூற்றும் மறுஒழிந்த ஏற்றத் தானும்
மணிவான் பெற்றஇப் பிறையைப்
பணிவாய் புரிந்து தாமரை மகளே!       (35)

21. ஆற்றாமை கூறல்


பொருப்புமலி தோளினும் நெருப்புமிழ் வேலினும்
செந்ல்ரு மகளை செயம்கொள் மங்கையை
வற்றாக் காதலின் கொண்டமதி அன்றி
களவு அலர்தூற்ற தளவுகொடி நடுங்க
வேயுளம் பட்டுப் பூவை கறுக்க       (5)

தண்டா மயல்கொடு வண்டுபரந்து அரற்ற
காலம் கருதித் தோன்றிகை குலைப்ப
துன்பு பசப்பூரும் கண்நிழல் தன்னைத்
திருமலர் எடுத்துக் கொன்றை காட்ட
இறைவளை நில்லாது என்பன நிலைக்க       (10)

கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப
கண்துளி துளிக்கும் சாயாப் பையுளை
கூறுபட நாடி ஆசையொடு மயங்கி
கருவிளை மலர்நீர் அருகுநின் றுகுப்ப
பேரழல் வாடை ஆருயிர் தடவ       (15)

விளைக்கும் காலம் முளைத்த காலை
அன்பும் சூளும் நண்பும் நடுநிலையும்
தடையா அறிவும் உடையோய் நீயே
எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போல்
தோன்றி நில்லா நிலைப்பொருள் செய்ய       (20)

மருங்கில் பாதி தரும்துகில் புனைந்தும்
விளைவயல் ஒடுங்கும் முதிர்நெல் உணவினும்
தம்மில் வீழுநாக்கு இன்பமென் றறிந்தும்
தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண்வைத்து
அளவாப் பாதம் மண்பரப் பாக       (25)

தனிநெடு விசும்பு திருவுடல் ஆக
இருந்திசைப் போக்குப் பெருந்தோள் ஆக
வழுவறு திருமறை ஓசைகள் அனைத்தும்
மொழிதர நிகழும் வார்த்தை ஆக
உள்நிறைந் துழலும் பாடிரண்டு உயிர்ப்பும்       (30)

பகலிரவு ஒடுங்கா விடுவளி ஆக
அடுபடைப் பூழியன் கடுமுரண் பற்றி
இட்டவெங் கொடுஞ்சிறைப் பட்ட கார்க்குலம்
தளையொடு நிறைநீர் விடுவன போல
புரைசை யொடுபாசம் அறவுடல் நிமிர்ந்து       (35)

கூடமும் கந்தும் சேறுநின் றலைப்ப
மூன்றுமத நெடும்புனல* கான்று மயலுவட்டி
ஏழுயர் கரித்திரள் கதமொடு பிளிறும்
பெருநகர்க் கூடல் உறைதரு கடவுளை
நிறையப் பேசாக் குறையுளர் போலவும்       (40)

கல்லா மனனினும் செல்லுதி பெரும!
இளமையும் இன்பமும் வளனும் காட்சியும்
பின்புற நேடின் முன்பவை அன்றால
நுனித்த மேனித் திருவினட்கு அடைத்த
வினைதரும் அடைவின் அல்லது
புனையக் காணேன் சொல்ஆ யினவே.       (46)
-------------

22. தன்னுள்கையாறு எய்திடு கிளவி


நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து
திக்குநிலை படர்ந்த முகில்பா சடையும்
இடையிடை உகளும் மீனாம் மீனும்
செம்முகில் பழநுரை வெண்முகில் புதுநுரை
எங்கும் சிதறிப் பொங்கியெழு வனப்பும்       (5)

பலதலை வைத்து முடியாது பாயும்
எங்கும் முகம்வைத்தக் கங்கைக் காலும்
கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்
முயல்எனும் வண்டுண அமுதநறவு ஒழுக்கி
தேவர் மங்கையர் மலர்முகம் பழித்து       (10)

குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித்தா மரையே! மயங்கிய ஒருவேன்
நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள
மீன்பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி
சூல்வயிறு உளைந்து வளைகிடந்து முரலும்       (15)

புன்னையம் பொதும்பரில் தம்முடை நெஞ்சமும்
மீன்உணவு உள்ளி இருந்தவெண் குருகெனச்
சோறு நறைகான்ற கைதைய மலரும்
பலதலை அரக்கர் பேரணி போல
மருங்கு கூண்டெழுந்து கருங்காய் நெருங்கி       (20)


விளைகள் சுமந்த தலைவிரி பெண்ணையும்
இன்னும் காணாக் காட்சிகொண் டிருந்த
அன்னத் திரளும் பெருங்கரி யாக
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து
நாள்இழைக் திருக்கும் செயிர்கொள் ‍அற்றத்து       (25)

மெய்யுறத் தணந்த பொய்யினர் இன்று
நெடுமலை பெற்ற ஒருமகள் காண
நான்முக விதியே தாளம் தாக்க
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்
விசித்து மிறைபாசத்து இடக்கை விசிப்ப       (30)

மூன்றுபுரத்து ஒன்றில் அரசுடை வாணன்
மேருக் கிளைத்த தோள்ஆ யிரத்தொடும்
எழுகடல் கிளர்ந்த திரள்கலி அடங்க
முகமவேறு இசைக்கும் குடமுழுவு இரட்ட
புட்கால் தும்புரு மணக்கந் திருவர்       (35)

நான்மறைப் பயனாம் ஏழிசை அமைத்து
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்
அன்பினர் உள்ளமொடு என்புகரைந் துருக
விரல்நான்கு அமைத்த அணிகுரல் வீங்காது       (40)

நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் உணர்த்தும் நோக்கம் ஆடாது
பிதிர்கணல் மணிசூழ் முடிநடுக் காது
வயிறு குழிவாங்கி அழுமுகம் காட்டாது
நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை       (45)

பேசாக் கீழ்இசை ஒருபுறம் ஒட்டல்
நெட்டுயிர்ப்பு எறிதல் எறிந்துநின்றி ரட்டல்
ஓசை இழைத்தல் கழிபோக்கு என்னப்
பேசறு குற்றம் ஆசொடும் மாற்றி
வண்டின் தாரியும் கஞ்ச நாதமும்       (50)

சிரல்வான் நிலையும் கழைஇலை வீழ்வதும்
அருவி ஓசையும் முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியும்
இன்னுமென் றிசைப்பப் பன்னிய விதியொடு
மந்தரம் மத்திமம் தாரம் இவைமூன்றில்       (55)

துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்
கூடிய கானம் அன்பொடு பரவ
பூதம் துள்ள பேய்கை மறிப்ப
எங்குள உயிரும் இன்பம் நிறைந்தாட
நாடக விதியொடு ஆடிய பெருமான்       (60)

மதுரை மாநகர்ப் பூழிய னாகி
கதிர்முடி கவித்த இறைவன் மாமணிக்
கால்தலைக் கொள்ளாக் கையினர் போல
நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும்
கண்டது கூறுதி ஆயின்
எண்தகப் போற்றிநின் கால்வணங் குதுமே.       (66)

23. வேறுபடுத்துக் கூறல்


கண்ட காட்சி சேணின் குறியோ
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ
சூர்ப்பகை உலகில் தோன்றினர்க்கு அழகு
விதிக்கும் அடங்கா என்பன விதியோ
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி       (5)

உள்நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே ஆகி
அம்மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த
வெள்ளைகொள் சிந்துர நல்லணி ஆகி       (10)

தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்
ஒருபால் கிடந்த துணைமதி யாகி
அருவி வீசப் பறவை குடிபோகி
வீண்டுநறவு ஒழுக்கும் பாண்டில் இறாலாய்       (15)

இளமை நீங்காது காவல்கொள் அமுதம்
வரையர மாதர் குழுவுடன் அருந்த
ஆக்கியிடப் பதித்த வள்ளமும் ஆகி
இடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகம் காணும் ஆடி ஆகி       (20)

சிறந்தன ஒருசுனை இம்மலை ஆட
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்
அவளே நீயாய் என்கண் குறித்த
தெருமரல் தந்த அறிவுநிலை கிடக்க
சிறிதுநின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி       (25)

ஒருகணன் நிலைக்க மருவுதி ஆயின்
இந்நிலை பெயர உன்னும்அக் கணத்தில்
தூண்டா விளக்கின் ஈண்டவள் உதவும்
அவ்வுழி உறவு மெய்பெறக் கலந்தின்று
ஒருகடல் இரண்டு திருப்பயந் தாங்கு       (30)

வளைத்த நெடுங்கார்ப் புனத்திரு
மணிநிற ஊசல் அணிபெற உகைத்தும்
கருங்கால் கவணிடைச் செம்மணி வைத்து
பெருந்தேன் இறாலொடு குறிவிழ எறிந்தும்
வெண்துகில் நுடங்கி பொன்கொழித் திழியும்       (35)

அருவி ஏற்றும் முழைமலை *கூஉயும்
பெருஞ்சுனை விழித்த நீலம் கொய்தும்
கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்து
தினைக்குரல் அறையும் கிளிக்கணம் கடிதிர்
வெள்ளி இரும்பு பொன்எனப் பெற்ற       (40)

மூன்றுபுரம் வேவ திருநகை விளையாட்டு
ஒருநாள் கண்ட பெருமான் இறைவன்
மாதுடன் ஒன்றி என்மனம் புகுந்து
பேணா உள்ளம் காணாது நடந்து
கொலைகளவு என்னும் பழுமரம் பிடுங்கி       (45)

பவச்சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி
அன்புகொரு மேய்ந்த நெஞ்ச மண்டபத்து
பாங்குடன் காணத் தோன்றி உள்நின்று
பொன்மலர்ச் சோலை விம்மிய பெருமலர்
இமையோர் புரத்தை நிறைமணம் காட்டும்       (50)

கூடலம் பதியகம் பீடுபெற இருந்தோன்
இருதாள் பெற்றவர் பெருந்திருப் போல
மருவிய பண்ணை இன்பமொடு விளைநலம்
சொல்லுடன் அமராது ஈங்கு
வில்லுடன் பகைத்த செந்திரு நுதலே!       (55)
-------------

24. காமம் மிக்க கழிபடர் கிளவி


வானவர்க்கு இறைவன் நிலம்கிடை கொண்டு
திருவுடல் நிறைவிழி ஆயிரத் திரளும்
இமையாது விழித்த தோற்றம் போல
கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து
மணம்சூழ் கிடந்த நீள்கருங் கழியே!       (5)

கருங்கழி கொடுக்கும் வெள்இறவு அருந்தக்
கைபார்த் திருக்கும் மடப்பெடை குருகே!
பெடைக்குருகு அணங்கின் விடுத்தவெண் சினையொடு
காவல் அடைக்கிடக்கும் கைதைஅம் பொழிலே!
வெம்மையொடு கூடியும் தண்மையொரு பொருந்தியும்       (10)

உலகஇருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
காலம் கோடா முறைமுறை தோற்ற
மணிநிரை குயிற்றிய மண்டபம் ஆகி
பொறைமாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்
காளையாது உடுக்கும் பைந்துகில் ஆகி       (15)

வேனிற் கிழவன் பேரணி மகிழ
முழக்காது தழங்கும் வார்முரசு ஆகி
நெடியோன் துயிலா அறிவொடு துயில
பாயற்கு அமைந்த பள்ளியறை யாகி
சலபதி ஆய்ந்து சேமநிலை வைத்த       (20)

முத்துமணி கிடக்கும் சேற்றிருள் அரங்காய்
புலவுஉடற் பரதவர் தம்குடி ஓம்ப
நாளும் விளைக்கும் பெருவயல் ஆகி
கலமெனும் நெடுந்தேர் தொலையாது ஓட
அளப்பறப் பரந்த வீதி யாகி       (25)

சுறவ வேந்து நெடும்படை செய்ய
முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி
மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய
மணிவிளக்கு நிறைந்த ஆலயம் ஆகி
நீர்நெய் வார்த்துச் சகரர் அமைத்த       (30)

தீவளர் வட்டக் குண்டம் ஆகி
எண்திகழ் பகுவாம் இனமணிப் பாந்தள்
தண்டில் நின்றுஎரியும் தகளி யாகி
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட
மாறிக் குனித்த நீறணி பெருமாற்கு       (35)

அமுத போனகம் கதுமென உதவும்
அடும்தீ மாறா மடைப்பள்ளி ஆகி
இன்னும் பலமாய் மன்னும் கடலே
நுங்கள் இன்பம் பெருந்துணை என்றால்
தண்ணம் துறைவற்கு இன்று இவள் ஒருத்தி       (40)

நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும்
அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும்
அரவின்வாய் அரியின் பலவும் நினைந்தும்
நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம்
கொண்டனள் என்என என்முகம் நாடி       (45)

உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்
அன்றெனின் நும்மின் ஒன்றுபட் டொருகால்
'இவளோ துயரம் பெறுவதென்?' என்று
வினவாது இருக்கும் கேண்மை,
மனனால் நாடின் கொலையினும் கொடிதே!       (50)
-------------

25. இடம் அணித்து என்றல்


பொருப்பு வளன்வேண்டி மழைக்கண் திறப்ப
குருகுபெயர்க் குறைத்து உடல்பக எறிந்த
நெடுவேள் கடவுள் மயில்கொடி முன்றில்
பெருங்கிளை கூண்டு ‍வெட்சிமலர் பரப்பி
இறால்நறவு அளாய செந்தினை வெள்இடி       (5)

தேக்கினல் விரித்து நால்திசை வைத்து
மனவுஅணி முதியோன் வரை அணங்கு அயர்ந்து
மூன்று காலமும் தோன்றக் கூற
வேலன் சுழன்று குறுமறி அறுப்ப
கருவி நுதிகொள் நெறியினல் ஈந்தின்       (10)

முற்றிய பெருநறவு எண்ணுடன் குடித்து
நெட்டிலை அரம்பைக் குறுங்காய் மானும்
உளியம் தணித்தகணை கொள்வாய்த் திரிகல்
ஒப்புடைத் தாய வட்டவாய்த் தொண்டகம்
கோல்தலை பனிப்ப வான்விடு பெருங்குரல்       (15)

வீயாது துவைக்கும் கடன்மலை நாகிர்
வருந்தியேற் றெடுத்த செந்திரு மடமகள்
ஒருவுக உளத்துப் பெருகிய நடுக்கம்
எம்மூர்ச் சேணும் நும்மூர்க் குன்றமும்
பெருந்தவர் குழுவும் அருங்கதி இருப்பும்       (20)

பொதியமும் களிப்ப விரிதரு தென்றலும்
கனைகடல் குடித்த முனிவனும் தமிழும்
மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும்
உலகம்ஈன் றளித்த உமையும் மாஅறனும்
தேவர்க்கு அரசனும் காவல் தருவும்       (25)

வழுவா விதியும் எழுதா மறையும்
செங்கோல் வேந்தும் தங்கிய குடியும்
தவம்சூழ் இமயமும் கமஞ்சூல் மழையும்
எல்லையில் ஈங்கிவை சொல்லிய அன்றி
கண்ணன் கரமும் வெண்‍ணெயும் போலப்       (30)

பாசடை புதைத்த நெட்டாற்று ஏரியுள்
பூத்தலர் விரித்த சேப்படு தாமரை
உள்வளை உறங்கும் வள்ளவாய்க் கூடல்
நிறைந்துறை முக்கண் பெருந்திறல் அடிகள்
அடியவர்க்கு எவ்வளவு அதுஆம்
கொடிபுரை நுசுப்பின் பெருமுலை யோளே!       (36)

26. நின்குறை நீயே சென்று உரை என்றல்


வேற்றுப் பிடிபுணர்ந்த தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்
கருங்கை வெண்கோட்டுக் சிறுகண் பெருங்களிறு
உளத்துநின் றளிக்கும் திருத்தகும் அருநூல்
பள்ளிக் கணக்கர் பால்பட் டாங்கு       (5)

குறிஞ்சிப் பெருந்தேன் இறாலொடு சிதைத்து
மென்னடைப் பிடிக்குக் கைபிடித் துதவி
அடிக்கடி வணங்கும் சாரல் நாட!
அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்தென
நல்நயம் கிடந்த பொன்னகர் மூடிப்       (10)

புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும்
தள்ளா மொய்ம்பின் உள்உடைந்து ஒருகால்
வேதியன் முதலா அமரரும் அரசனும்
போதுதூய் இரப்ப புணரா மயக்கம்
நாரணன் நடித்த பெருவாய்த் தருக்கத்து       (15)

அறிவுநிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ளமுரண் அரக்கர் கள்ளமதில் மூன்றும்
அடுக்குநிலை சுமந்த வலித்தடப் பொன்மலை
கடுமுரண் குடிக்கும் நெடுவில் கூட்டி
ஆயிரம் தீவாய் அரவுநாண் கொளீஇ       (20)

மாதவன் அங்கி வளிகுதை எழுநுனி
செஞ்சரம் பேரிருள் அருக்கன் மதிஆக
தேர்வரை வையம் ஆகத் திருத்தி
சென்னிமலை ஈன்ற கன்னிவிற் பிடிப்ப
ஒருகால் முன்வைத்து இருகால் வளைப்ப       (25)

வளைத்தவில் வட்டம் கிடைத்தது கண்டு
சிறுநகை கொண்ட ஒருபெருந் தீயின்
ஏழுயர்வானம் பூழிபடக் கருக்கி
அருச்சனை விடாதங்கு ஒருப்படும் மூவரில்
இருவரைக் காவல் மருவுதல் ஈந்து       (30)

மற்றொரு வற்கு வைத்த நடம் அறிந்து
குடமுழவு இசைப்பப் பெரும்அருள் நல்கி
ஒருநாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும்
அரும்பெறல் உளதாம் பெரும்பதம் காட்டி
எரியிடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு       (35)

உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த
சுந்தரக் கடவுள் கந்தரக் கறையோன்
மாமி ஆடப் புணரி அழைத்த
காமர் கூடற்கு இறைவன் கழலிணை
களிப்புடை அடியர்க்கு வெளிப்பட் டென்ன       (40)

ஒருநீ தானே மருவுதல் கிடைத்து
கள்ளமும் வெளியும் உள்ளமுறை அனைத்தும்
விரித்துக் கூறி பொருத்தமும் காண்டி
ஈயா மாந்தர் பொருள்தேய்ந் தென்ன
நுண்ணிடை சுமந்து ஆற்றாது
கண்ணிய சுணங்கின் பெருமுலை யோட்கே!       (46)
-------------

27. இரவுக்குறி வேண்டல்


வள்ளியோர் ஈதல் வரையாது போல
எண்திசை கருஇருந்து இனமழை கான்றது
வெண்ணகைக் கருங்குழல் செந்தளிர்ச் சிறடி
மங்கையர் உளமென கங்குலும் பரந்தது
தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த       (5)

நல்வழி மான புல்வழி புரண்டது
காலம் முடிய கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவர்
உயிர்தொறும் வளைந்தென உயிர்சுமந்து உழலும்
புகர்மலை இயங்கா வகைவரி சூழ்ந்தன       (10)

வெள்ளுடற் பேழ்வாய்த் தழல்விழி மடங்கல்
உரிவை மூடி கரித்தோல் விரித்து
புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கின்
அதள்பியற் கிட்டு குதியாய் நவ்வியின்
சருமம் உடுத்து கரும்பாம்பு கட்டி       (15)

முன்புரு விதிகள் என்புகுரல் பூண்டு
கருமா எயிறு திருமார்பு தூக்கி
வையகத் துயரின் வழக்கறல் கருதி
தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர்
அண்ணாந்த வனமுலைச் சுண்ணமும் அளறும்       (20)

எழிலிவான் சுழலப் பிளிறுகுரற் பகட்டினம்
துறைநீர் ஆடப் பரந்தகார் மதமும்
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து
சிஞ்சை இடங்கரை பைஞ்சிலைச் சேலை
உடற்புலவு மாற்றும் படத்திரை வையை       (25)

நிறைநீர் வளைக்கும் புகழ்நீர்க் கூடல்
வெள்ளியம் பொதுவில் கள்ளவிழ் குழலொடும்
இன்பநடம் புரியும் தெய்வ நாயகன்
அருவிஉடற் கயிறும் சுனைமதக் குழியும்
பெருந்தேன் செவியும் கருந்தேன் தொடர்ச்சியும்       (30)

ஓவா, பெருமலைக் குஞ்சரம் மணக்க
வளம்தரும் உங்கள் தொல்குடிச் சீறூர்க்கு
அண்ணிய விருந்தினன் ஆகி
நண்ணுவன் சிறுநுதற் பெருவிழி யோளே!       (34)
-------------

28. நகர் அணிமை கூறல்


புயற்கார்ப் பாசடை எண்படப் படர்ந்த
வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து
நீட நிறைபாயும் வான வாவிக்குள்
ஒருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன
மூவடி வழக்கிற்கு ஓரடி மண்கொடு       (5)

ஒருதாள் விண்ணத்து இருமைபெற நீட்டிய
கருங்கடல் வண்ணன் செங்கருங் கரத்து
ஒன்றால் இருமலை அன்றேந் தியதென
உந்திஒழுக் கேந்திய வனமுலை யாட்டியும்
வரைபொரும் மருமத்து ஒருதிறன் நீயும்       (10)

முழைவாய் அரக்கர் பாடுகிடந் தொத்த
நிறைகிடைப் பொற்றை வரைகடந்து இறந்தால்
எரிதழற் குஞ்சி பொறிவிழி பிறழ்எயிற்று
இருளுடல் அந்தகன் மருள்கொள உதைத்த
மூவாத் திருப்பதத்து ஒருதனிப் பெருமான்       (15)

எண்ணில் பெறாத அண்டப் பெருந்திரள்
அடைவுஈன் றளித்த பிறைநுதற் கன்னியொடும்
அளவாக் கற்பம் அளிவைத்து நிலைஇய
பாசடை நெடுங்காடு காணிகொள் நீர்நாய்
வானவில் நிறத்த நெட்டுடல் வாளைப்       (20)

பேழ்வாய் ஒளிப்ப வேட்டுவப் பெயர் அளி
இடைவுறழ் நுதப்பின் குரவைவாய்க் கடைசியர்
களைகடுந் தொழில்விடுத்து உழவுசெறு மண்ட
பண்கால் உழவர் பகடுபிடர் பூண்ட
முடப்புது நாஞ்சில் அள்ளல் புகநிறுத்தி       (25)

சூடுநிலை உயர்த்தும் கடுங்குலை ஏற
பைங்குவளை துய்க்கும் செங்கட் கவரி
நாகொடு வெருண்டு கழைக்கரும்பு உழக்க
அமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல
நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயும்       (30)

தண்ணம் பழனம் சூழ்ந்த
கண்இவர் கூடல் பெருவளம் பதியே!       (32)
-------------

29. அறியாள் போன்று நினைவு கேட்டல்


பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி எனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்புகக் குருதி வேலவ!
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி       (5)

அமுதயில் வாழ்க்கைத் தேவர்‍கோன் இழிச்சிய
மதமலை இருநான்கு பிடர்சுமந்து ஓங்கிச்
செம்பொன் மணிகுயிற்றிய சிகரக் கோயிலுள்
அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த
ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ்சுடர்       (10)

கருவி வானம் அடிக்கடி பொழியும்
கூடம் சூழ்ந்த ‍நெடுமுடிப் பொதியத்து
கண்நுழை யாது காட்சிகொடு தோற்றிய
வெறிவீச் சந்தின் நிரைஇடை எறிந்து
மற்றது வேலி கொளவளைத்து வளர்ஏனல்       (15)

நெடுங்கால் குற்றுழி இதணுழை காத்தும்
தேவர் கோமான் சிறை அரி புண்ணினுக்கு
ஆற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தென
கமஞ்சூல் கொண்மூ முதுகு குடியிருந்து
வான்உட்க முரற்றும் மலைச்சுனை குடைந்தும்       (20)

பிரசமும் வண்டும் இரலிதெறு மணியும்
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து
துகில்நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
மறுவறு செம்மணி கால்கவண் நிறுத்தி
நிறைமதி கிடக்கும் இறால்விழ எறிந்தும்       (25)

எதிர்சொல் கேட்பக் கால்புகத் திகைத்த
நெருக்குபொழில் புக்கு நெடுமலை கூயும்
நுகப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்
பைங்காடு நகைத்த வெண்மலர் கொய்தும்
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம்       (30)

செம்பொன் செய்த வரிப்பந்து துரந்தும்
இனைய பல்நெறிப் பண்ணை இயங்கும்
அளவாக் கன்னியர் அவருள்
உளமாம் வேட்கையள் இன்னளென் நுரையே       (34)
-------------

30. சுடரோடு இரத்தல்


ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையும் கோங்கின் பொன்மலர் சூட்டிய
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
நெடுந்திசை நடக்கும் பொருள்நிறை கலத்தினைப்       (5)

பெருவளி மலக்கச் செயல்மறு மறந்தாங்கு
சேர மறுக முதுக்குறை உறுத்தி
எரிதெறும் கொடுஞ்சுரத்து இறந்தன ளாக
நதிமதம் தறுகண் புகர்கொலை மறுத்த       (10)

கல்இபம் அதனைக் கரும்புகொள வைத்த
ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை ஒருநாள் கலக்குவ போல
உழுவை உகிர்உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்
உரிவை மூடி ஒளியினை மறைத்து       (15)

தரைபடு மறுக்கம் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாம்கொடு
மண்ணகம் உருகக் கனற்றுமழல் மேனியை
எடுத்து மூடி எறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்அரை முளரி       (20)

வண்டொடு மலர்ந்த வண்ணம் போல
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
மலர்தலை உலகத்து இருள்எறி விளக்கும்
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்
மறைஉகு நீர்க்குக் கருவும் கரியும்       (25)

வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்
சேண்குளம் மலர்ந்த செந்தா மரையும்
சோற்றுக் கடன்கழிக்கப் போற்றுயிர் அழிக்கும்
ஆசைச் செருநர்க்கு அடைந்துசெல் வழியும்
அருளும் பொருளும் ஆகித்
திருவுலகு அளிக்கும் பருதிவா னவனே!       (31)
-------------

31. இன்னல் எய்தல்


வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய்       (5)

ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்       (10)

எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப       (15)

அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முத‍லோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட       (20)

கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே?       (25)
-------------

32. நெஞ்சொடு நோதல்


பொருள்செயல் அருத்தியின் எண்வழி தடைந்து
நால்திசை நடக்கும் அணங்கின் அவயவத்து
அலைதரு தட்டைக் கரும்புறம் மலைமடல்
கடல்திரை உகளும் குறுங்கயல் மானும்
கடுங்கான் தள்ளி தடைதரு நெஞ்சம்!       (5)

கயிலைத் தென்பால் கானகம் தனித்த
தேவர்நெஞ் சுடைக்கும் தாமரை யோகின்
மணக்கோல் துரந்த குணக்கோ மதனை
திருக்குளம் முளைத்த கண்தா மரைகொடு
தென்கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல்       (10)

திருமா மதுரை எனும்திருப் பொற்றொடி
என்னுயிர் அடைத்த பொன்முலைச் செப்பின்
மாளா இன்பம் கருதியோ? அன்றி
புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!
வளர்முலை இன்பெனின் மறித்து நோக்குமதி       (15)

பெரும்பொருள் இன்பெனின் பெரிதுதடை இன்றே
யாதினைக் கருதியது? ஒன்றை
ஓதல் வேண்டும் வாழிய பெரிதே!       (18)
-------------

33. அல்லகுறி அறிவித்தல்


வற்றிய நரம்பு நெடுங்குரல் பேழ்வாய்
குழிவிழி பிறழ்பல் தெற்றற் கருங்கால்
தாளிப் போந்தின் கருமயிர்ப் பெருந்தலை
விண்புடைத்து அப்புறம் விளங்குடற் குணங்கினம்
கானம் பாடிச் சுற்றிநின் றாட       (5)

சுழல்விழி சிறுநகை குடவயிற்று இருகுழைச்
சங்கக் குறுந்தாட் பாரிடம் குனிப்ப
தேவர் கண்பனிப்ப முனிவர் வாய்குழற
கல்ல வடத்திரள் மடிவாய்த் தண்ணுமை
மொந்தை கல்லலகு துத்தரி ஏங்க       (10)

கட்செவி சுழல தாழ்சடை நெறிப்ப
இதழி தாதுதிர்ப்ப பிறைஅமுது உகுக்க
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய பெருமான்
கூடல் மாநகர் அன்ன பொற்கொடி!
இரவிக்கு அணிய வைகறை காறும்       (15)

அலமரல் என்னைகொல்? அறிந்திலம் யாமே
வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து
கடைந்த செம்பவளத் தொத்துடன் காட்டும்
இரும்பு கவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
சினைமுகம் ஏந்திய இணர்கொள்வாய்க் குடம்பையின்       (20)

எக்கர்ப் புள்ளினும் வெண்மை இடம்மறைக்கும்
சிறைவிரி தூவிச் செங்கால் அன்னம்
குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ
சேவலும் இனமும் சூழும்
காவில் மாறித் துயில் அழுங்கு தற்கே.       (25)
-------------

34. வேழம் வினாதல்


தன்னுடல் அன்றிப் பிறிதுண் கனையிருள்
பகல்வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல
பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பில்
அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண்தரு நுதலோன்       (5)

முன்னொரு நாளில் நால்படை உடன்று
செழியன் அடைத்த சென்னி பாட
எள்ளருங் கருணையின் நள்ளிருள் நடுநாள்
அவனெனத் தோன்றி அருஞ்சிறை விடுத்த
முன்னவன் கூடல் மூதூர் அன்ன       (10)

வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் மகளிர்
செம்மணி கிடந்தநும் பசும்புனத்து உழையால்
வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
குழிகண் பரூஉத்தாள் கூர்ங்‍கோட்டு ஒருத்தல்
சினைதழை விளைத்த பழுமரம் என்ன       (15)

அறுகால் கணமும் பறவையும் கணையும்
மேகமும் பிடியும் தொடர
ஏகியது உண்டேல் கூறுவிர் புரிந்தே.       (18)
-------------

35. நலம் புனைந்துரைத்தல்


அருள் தரும் கேள்வி அமையத் தேக்க
பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல்
மூன்றுவகை அடுத்த தேன்தரு கொழுமலர்
கொழுதிப் பாடும் குணச்சுரும் பினங்காள்
உளத்து வேறடக்கி முகமன் கூறாது       (5)

வேட்கையின் நீயிர் வீழ்நாள் பூவினத்துள்
காருடல் பிறைஎயிற்று அரக்க‍னைக் கொன்று
வரச்சித்தடக்'கை' வரைப்பகை சுமந்த
பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள்       (10)

பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல்
ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு
நானம் நீவி நாள்மலர் மிலைந்து
கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல்       (15)

நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த
கருங்குழற் பெருமணம் போல
ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே!       (18)
-------------

36. உலகின்மேல் வைத்து உரைத்தல்


இருளொடு தாரகை இரண்டினை மயக்கி
குழலென மலரென மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்து கணையினை வாங்கி
புருவம் கண்ணென உயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து       (5)

முலையென சொல்லென அவாவர வைத்து
மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
அல்குல் இடையென நெஞ்சுழலக் கொடுத்து
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
அடியென உடலென அலமரல் உறீஇ       (10)

மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
சருக்கம் காட்டும் அருமறை சொல்லி
உள்ளம் கறுத்து கண்சிவந்து இட்ட
மந்திரத்து அழல்குழி தொடுவயிறு வருந்தி
முன்பின் ஈன்ற பேழ்வாய்ப் புலியினை       (15)

கைதைமுள் செறிந்த கூர்எயிற்று அரவினை
காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
உரிசெய்து உடுத்து செங்கரம் தரித்து
செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
திருநடம் புரிந்த தெய்வ நாயகன்       (20)

ஒருநாள் மூன்று புரம்தீக் கொளுவ
பொன்மலை பிடுங்கி கார்முகம் என்ன
வளைத்த ஞான்று நெடுவிண் தடையக்
கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து
நெருக்குபொழில் கூடல் அன்னசெம் மகளிர்       (25)

கண்ணெனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்
வெண்பொடி எருக்கம் என்புபனை கிழியினை
பூசி அணிந்து பூண்டு பரிகடவி
கரத்தது ஆக்கி அந்நோ
அருத்தி மீட்பர் நிலைவல் லோரே.       (30)
-------------

37. நாண் இழந்து வருந்தல்


மைகுழைத் தன்ன தொள்ளிஅம் செறுவில்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும்
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடல்
கரம்மான் தரித்த பெருமான் இறைவன்       (5)

பொன்பழித் தெடுத்த இன்புறு திருவடி
உளம்விழுங் காத களவினர் போலஎன்
உயிரொடும் வளர்ந்த பெருநாண் தறியினை
வெற்பன் காதற் கால்உலை வேலையின்
வலியுடைக் கற்பின் நெடுவெளி சுழற்றிக்       (10)

கட்புலன் காணாது காட்டைகெட உந்தலின்
என்போல் இந்நிலை ஆறுவரப் படைக்கும்
பேறாங்கு ஒழிக பெருநாண் கற்பினர்
என் பேறு உடையர் ஆயின்
கற்பில் தோன்றாக் கடனா குகவே.       (15)
-------------

38. தோழி இயற்பழித்து உரைத்தல்


வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள       (5)

உயர்மரம் முளைத்த ஊரி போல
ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
மாணிழை மகளிர் வயின்வை குதலால்
கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை       (10)

செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
கொலைகளவு என்னும் படர்களை கட்டு
தீப்படர் ஆணை வேலி கோலி
தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான்       (15)

முள் உடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டகம் உழக்கி
நெடுங்கால் பாய்ந்து படுத்த ஒண்தொழில்
சுருங்கை வழிஅடைக்கும் பெருங்கழிப் பழனக்       (20)

கூடற்கு இறைவன் இருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புல்லம் போல
பேரா வாய்மை ஊரன்
தாரொடு மயங்கி பெருமையும் இலனே.       (24)
-------------

39. பொழுது கண்டு இரங்கல்


கோடிய கோலினன் செருமுகம் போல
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுக
பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல்
புட்குலம் பொய்கை வாய்தாழ்க் கொள்ள
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி       (5)

இருள்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ
தணந்தோர் உளத்தில் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர்விட
அன்றில்புற் சேக்கைபுக்கு அலகுபெடை அணைய       (10)

அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க
முதுகனி மூலம் முனிக்கணம் மறுப்ப
கலவையும் பூவும் தோள்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப       (15)

நீரர மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கோள் ஆம்பல் மலர
தோளும் இசையும் கூறிடும் கலையும்
அருள்திரு எழுத்தும் பொருள்திரு மறையும்
விரும்பிய குணமும் அருந்திரு உருவும்       (20)

முதல்என் கிளவியும் விதமுடன் நிரையே
எட்டும் ஏழும் கொற்றன ஆறும்
ஐந்தும் நான்கும் அணிதரு மூன்றும்
துஞ்சலில் இரண்டும் சொல்அரும் ஒன்றும்
ஆருயிர் வாழ அருள்வர நிறுத்திய       (25)

பேரருட் கூடல் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவும்
துறவால் அறனால் பெறலில் மாந்தர்
விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும்       (30)

செக்கர்த் தீயொடு புக்கநல் மாலை!
என்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கும் உளையோ? மனத்திறன் ஓதுகவே.       (34)
-------------

40. மா விரதியரொடு கூறல்


நிலவுபகல் கான்ற புண்ணிய அருட்பொடி
இருவினை துரந்த திருவுடல் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய் பத்தர்
சுத்திஅமர் நீறுடன் தோள்வலன் பூண்டு
முடங்குவீழ் அன்ன வேணி முடிகட்டி       (5)

இருமூன்று குற்றம் அடியறக் காய்ந்திவ்
ஆறு எதிர்ப்பட்ட அருந்தவத் திருவினர்
தணியாக் கொடுஞ்சுரம் தரும்தழல் தாவிப்
பொன்னுடல் தேவர் ஒக்கலொடு மயங்கி
கொண்மூப் பல்திரைப் புனலுடன் தாழ்த்தி       (10)

பொதுளிய தருவினுள் புகுந்து இமையாது
மருந்து பகுத்துண்டு வல்லுயிர் தாங்கும்
வட்டைவந் தனைஎன வழங்கு மொழிநிற்க
தாய்கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள்
பாங்கியைப் புல்லினள் அயலும் சொற்றனள்       (15)

மக்கட் பறவை பரிந்துளம் மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் ஒன்றால்
தள்ளா விதியின் செல்குநள் என்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் துளிமுலை
பைங்கண் புல்வாய் பால்உணக் கண்ட       (20)

அருள்நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன்
மங்குல்நிரை பூத்த மணிஉடுக் கணம் எனப்
புன்னைஅம் பெதும்பர்ப் பூநிறை கூடல்நும்
பொன்னடி வருந்தியும் கூடி
அன்னையர்க் குதவல் வேண்டும்இக் குறியே.       (25)
-------------

41. ஆடு இடத்து உயத்தல்


முன்னி ஆடுக முன்னி ஆடுக
குமுதம் வள்ளையும் நீலமும் குமிழும்
தாமரை ஒன்றில் தடைந்துவளர் செய்த
முளரிநிறை செம்மகள் முன்னி ஆடுக
நிற்பெறு தவத்தினை முற்றிய யானும்       (5)

பலகுறி பெற்றிவ் உலகுயிர் அளித்த
பஞ்சின் மெல்லடிப் பாவை கூறாகி
கருங்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த
வெண்திரு நீற்றுச் செக்கர் மேனியன்
கிடையில் தாபதர் தொடைமறை முழக்கும்       (10)

பொங்கர்க் கிடந்த சூற்கார்க் குளிறலும்
வல்லியில் பரியும் பகடுவிடு குரலும்
யாணர்க் கொடிஞ்சி நெடுந்தேர் இசைப்பும்
ஒன்றி அழுங்க நின்றநிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடு படுக்கும்       (15)

புண்ணியக் கூடல் உள்நிறை பெருமான்
திருவடி சுமந்த அருளினர் போல
கருந்தேன் உடைத்துச் செம்மணி சிதறி
பாகற் கோட்டில் படர்கறி வணக்கி
கல்லென்று இழிந்து கொல்லையில் பரக்கும்       (20)

கறங்கிசை அருவியம் சாரல்
புறம்பு தோன்றி நின்கண் ஆகுவனே.       (22)
-------------

42. இயல் இடங் கூறல்


வீதி குத்திய குறுந்தாள் பாரிடம்
விண்தலை உடைத்துப் பிறைவாய் வைப்ப
குணங்கினம் துள்ள கூளியும் கொட்ப
மத்தி யந்தணன் வரல்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கால் முனிவனும்       (5)

சூயை கைவிடப் பதஞ்சலி ஆகிய
ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும்
கண்ணால் வாங்கி நெஞ்சறை நிறைப்ப
திருநடம் நவின்ற உலகுயிர்ப் பெருமான்
கடல்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல்       (10)

உருளிணர்க் கடம்பின் நெடுந்தார்க் கண்ணியன்
அரிமகள் விரும்பிப் பாகம் செய்து
களியுடன் நிறைந்த ஒருபரங் குன்றமும்
பொன்அம் தோகையும் மணிஅரிச் சிலம்பும்
நிரைத்தலைச் சுடிகை நெருப்புமிழ் ஆரமும்       (15)

வண்டுகிளை முரற்றிய பாசிலைத் துளவும்
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி
வடபால் பரிந்த பலிமணக் ‍கோட்டமும்       (20)

சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச
யாவர்தம் பகையும் யாவையின் பகையும்
வளனின் காத்து வருவன அருளும்
ஊழியும் கணமென உயர்மகன் பள்ளியும்
உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி       (25)

மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய
பாகப் பக்க நெடியோன் உறையுளும்
தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்
மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி       (30)

சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும்
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும்       (35)

அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து
நின்று நின்றோங்கி நிலைஅறம் பெருக்கும்
ஆனாப் பெரும்புகழ் அருள்நகர்க் கூடல்
பெண்ணுடல் பெற்ற ‍சென்னிஅம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிரைஎன       (40)

வண்டும் தேனும் மருள்கிளை முரற்றி
உடைந்துமிழ் நறவுண்டு உறங்குதார்க் கொன்றையன்
திருவடி புகழுநர் செல்வம் போலும்
அண்ணாந்து எடுத்த அணிவுறு வனமுலை
அவன்கழல் சொல்லுநர் அருவினை மானும்       (45)

மலைமுலைப் பகைஅட மாழ்குறும் நுசுப்பு
மற்றவன் அசைத்த மாசுணம் பரப்பி
அமைத்தது கடுக்கும் அணிப்பாம்பு அல்குல்
ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும்
இருகுழை கிழிக்கும் அரிமதர் மலர்க்கண்       (50)

புகர்முகப் புழைக்கை துயில்தரு கனவில்
முடங்குளை கண்ட பெருந்துயர் போல
உயிரினும் நுனித்த அவ்வுருக் கொண்டு
பொன்மலை பனிப்பினும் பனியா
என்னுயிர் வாட்டிய தொடிஇளங் கொடிக்கே.       (55)
-------------

43. அன்னத்தோடு அழிதல்


கவைத்துகிர் வடவையின் திரள்சிகை பரப்பி
அரைபெறப் பிணித்த கல்குளி மாக்கள்
உள்ளம் தீக்கும் உவர்க்கடல் உடுத்த
நாவலம் தண்பொழில் இன்புடன் துயில
உலகற விழுங்கிய நள்ளென் கங்குல்       (5)

துயிலாக் கேளுடன் உயிர்இரை தேரும்
நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க
பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச்
சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப
கீழ்அரும்பு அணைந்த முள்அரை முளரி       (10)

இதழ்க்கதவு அடைத்து மலர்க்கண் துயில
விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க
பால்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த       (15)

மயிர்குறை கருவித் துணைக்குழை அலைப்ப
வரிந்தஇந் தனச்சுமை மதிஅரவு இதழி
அகன்று கட்டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியும் கவலையும் மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர்       (20)

தணந்தோர் உள்ளத் துள்உறப் புகுந்தபின்
காருடல் காட்டி கண்டகண் புதைய
அல்எனும் மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கானம் முயன்று வாதியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத்து அகன்கடை       (25)

தென்திசைப் பாணன் அடிமை யானென
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி
உந்தித் தோற்றமும் ஓசைநின்று ஒடுங்க
பாலையில் எழுப்பி அமர்இசை பயிற்றி
தூங்கலும் துள்ளலும் சுண்டிநின் றெழுதலும்       (30)

தாரியில் காட்டித் தரும்சா தாரி
உலகுயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க
இசைவிதி பாடி இசைப்பகை துரந்த
கூடற்கு இறையோன் தாள்விடுத் தோர்என
என்கண் துஞ்சா நீர்மை
முன்கண்டு ஓதாது அவர்க்கிளங் குருகே.       (36)
-------------

44. தலைவற்குப் பாங்கி தலை வருத்தம் கூறல்


ஈன்ற செஞ்சூழல் கவர்வழி பிழைத்த
வெறிவிழிப் பிணர்மருப்பு ஆமான் கன்றினை
மென்னடைக் குழைசெவி பெறாவெறுங் கரும்பிடி
கணிப்பணைக் கவட்டும் மணற்சுனைப் புறத்தும்
தழைக்குற மங்கையர் ஐவனம் அவைக்கும்       (5)

உரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பும்
மானிட மாக்கள் அரக்கிகைப் பட்டென
நாச்சுவை அடுக்கும் உணவு உவவாது
வைத்துவைத் தெடுக்கும் சாரல் நாடன்
அறிவும் பொறையும் பொருள்அறி கல்வியும்       (10)

ஒழுக்கமும் குலனும் அமுக்கறு தவமும்
இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே
வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை
ஏழிடம் தோன்றி இனன்நூற்கு இயைந்து
வீதி போகிய வால்வுளைப் பரவி       (15)

ஆக்கிய விஞ்சைப் பிறைமுடி அந்தணன்
கொண்டோற்கு ஏகும் குறியுடை நன்னாள்
அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்
கண்டன கவரும் காட்சி போல
வேலன் பேசி மறிசெகுத்து ஓம்பிய       (20)

காலம் கோடா வரைவளர் பண்டம்
வருவன வாரி வண்டினம் தொடர
கண்கயல் விழித்து பூத்துகில் மூடி
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கருங்கால் மள்ளர் உழவச் சேடியர்       (25)

நிரைநிரை வணங்கி மதகெதிர் கொள்ள
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்
வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த
கூடல் பெருமான் பொன்பிறழ் திருவடி
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல       (30)

சலியாச் சார்பு நிலைஅற நீங்கி
அரந்தை யுற்று நீடநின் றிரங்கும்
முருந்தெயிற் றிளம்பிறைக் கோலம்
திருத்திய திருநுதல் துகிர்இளங் கொடியே       (34)
-------------

45. சொல்லாது ஏகல்


இலதெனின் உளதென்று உள்ளமொடு விதித்தும்
சொல்லா நி‍லைபெறும் சூளுறின் மயங்கிச்
செய்குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்
உழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்தும்
கண்எதிர் வைகி முகன்கொளின் கலங்கியும்       (5)

வழங்குறு கிளவியின் திசைஎன மாழ்கியும்
ஒருதிசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும்
போக்கென உழையர் அயர்ப்பிடைக் கிளப்பினும்
முலைகுவட்டு ஒழுக்கிய அருவிதண் தரளம்
செம்மணி கரிந்து தீத்தர உயிர்த்தும்       (10)

போமென வாய்ச்சொல் கேட்பினும் புகைந்தும்
கொள்ளார் அறுதியும் கொண்டோர் இசைத்தலும்
ஈதெனக் காட்டிய மயல்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பேறு இன்மையின்
மருமான் தன்னை மகவெனச் சடங்குசெய்து       (15)

உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
அப்புலத் துயிர்கொடுத்து அருட்பொருள் கொண்டபின்
மற்றவன் தாயம் வவ்வுறு மாக்கள்
காணி கைக்கொண்ட மறுநிலை மைந்தனை       (20)

நிரைத்துக் கிளைகொள் நெடுவழக்கு உய்த்தலும்
மைந்தனும் கேளிரும் மதிமுடிக் கடவுள்நின்
புந்தியொன் றிற்றிப் புகல்இலம் என்றயர்
அவ்வுழி ஒருசார் அவன்மா துலனென
அறிவொளி நிறைவே ஓருருத் தரிந்துவந்து       (25)

அருள்வழக் கேறி அவர்வழக் குடைத்த
கூடல் நாயகன் தாள்பணி யாரென
எவ்வழிக் கிளவியின் கூறிச்
செவ்விதின் செல்லும் திறன்இனி யானே.       (29)
-------------

46. தெளிதல்


நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன
ஓங்கி புடைபரந்து அமுதம் உள்ளூறி
காண்குறி பெருத்து கச்சவை கடிந்தே
எழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற்று       (5)

அணிபெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின
செங்கோல் அரசன் முறைத்தொழில் போல
அமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்ந்தன
செய்குறை முடிப்பவர் சென்மம் போலப்       (10)

பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன
அமுதம் பொடித்த முழுமதி என்ன
முகம்வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன
இதழியும் தும்பையும் மதியமும் கரந்து
வளைவிலை மாக்கள் வடிவு எழுந்தருளி       (15)

முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்தமுன் வரத்தால்
கருமுகில் விளர்ப்ப அறல்நீர் குளிப்ப
கண்புகை யாப்புத் திணிஇருள் விடிய
உடல்தொறும் பிணித்த பாவமும் புலர       (20)

கண்டநீள் கதுப்பினர் கைகுவி பிடித்து
குருகுஅணி செறித்த தனிமுதல் நாயகன்
குருகும் அன்னமும் வால்வளைக் குப்பையை
அண்டமும் பார்ப்பும் ஆமென அணைக்கும்
அலைநீர்ப் பழன முதுநகர்க் கூடல்       (25)

ஒப்படைத்து ஆயஇப் பொற்றொடி மடந்தை
அணங்கினள் ஆம்என நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே.       (28)
-------------

47. மெலிவு கண்டு செவிலி கூறல்


கதிர்நிரை பரப்பும் மணிமுடித் தேவர்கள்
கனவிலும் காணாப் புனைவருந் திருவடி
மாநிலம் தோய்ந்தோர் வணிகன் ஆகி
எழுகதிர் விரிக்கும் திருமணி எடுத்து
வரையாக் கற்புடன் நான்கெனப் பெயர்பெற்று       (5)

ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள்
மிடலொடு விரித்து சருக்கம் பாழி
வீயா அந்தம் பதம்நிரை நாதம்
மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கமென்று
இனையவை விரித்துப் பலபொருள் கூறும்       (10)

வேதம் முளைத்த ஏதமில் வாக்கால்
குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த
நிறைமதி நான்கின் நிகழ்ந்தன குறியும்
குருவிந் தம்செள கந்திகோ வாங்கு
சாதரங் கம்எனும் சாதிகள் நான்கும்       (15)

தேக்கின் நெருப்பின் சேர்க்கின் அங்கையின்
தூக்கின் தகட்டின் சுடர்வாய் வெயிலின்
குச்சையின் மத்தகக் குறியின் ஓரத்தின்
நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு
ஒத்த நற்குணம் உடையபன் னிரண்டும்       (20)

கருகிநொய் தாதல் காற்று வெகுளி
திருகல் முரணே செம்மண் இறுகல்
மத்தகக் குழிவு காசம் இலைச்சுமி
எச்சம் பொரிவு புகைதல் புடாயம்
சந்தை நெய்ப்பிலி எனத்தரு பதினாறு       (25)

முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்
சாதகப் புட்கண் தாமரை கழுநீர்
கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை என்னப்
பன்னுசா தரங்க ஒளிக்குணம் பத்தும்       (30)

செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்
முயலின் சோரி சிந்துரம் குன்றி
கவிர்‍அலர் என்னக் கவர்நிறம் எட்டும்
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு       (35)

கோகிலக் கண்நீடு இலவலர் செம்பெனத்
தருசெள கந்தி தன்நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம்       (40)

ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை
மணிகோ கனகம் கற்பம் பாடி
மாங்கி சகந்தி வளர்காஞ்சு உண்டையென்று
ஆங்கொரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவையெனக் கூறிய நிறையருட் கடவுள்       (45)

கூடல் கூடா குணத்தினர் போல
முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள்
அமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழல்
பெருந்தோள் சிறுநகை முன்னையள் அல்லள்
உலகியல் மறந்த கதியினர் போல       (50)

நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின
பகழிசெய் கம்மியர் உள்ளம் போல
ஐம்புலக் கேளும் ஒருவாய்ப் புக்கன
அதிர்உவர்க் கொக்கின் களவுயிர் குடித்த
புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன்       (55)

தகரம் கமழும் நெடுவரைக் காட்சி
உற்றனள் ஆதல் வேண்டும்
சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே.       (58)
-------------

48. பருவங்கண்டு பெருமகள் புலம்பல்


பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத்தாய்
அருப்பு முலைக்கண் திறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத்து அன்புடன் அணைத்து
தேக்கிட அருத்தி அலர்மலர்த் தொட்டில்       (5)

காப்புறத் துயிற்றும் கடிநகர்க் கூடல்
அருளுடன் நிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும்பு உடுத்த வால்எயிற்று அழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்கல் ஆக
ஆலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல்       (10)

சேக்கோள் முளரி அலர்த்திய திருவடி
கண்பரு காத களவினர் உளம்போல்
காருடன் மிடைந்த குளிறுகுரல் கணமுகில்
எம்முயிர் அன்றி இடைகண் டோர்க்கும்
நெஞ்சறை பெருந்துயர் ஓவாது உடற்றக்       (15)

கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினும் கவரும் கொல்லோ
உள்நிறைந்து இருந்து வாழிய மனனே.       (18)
-------------

49. முகிலொடு கூறல்


கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு
உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி
தெய்வக் குலப்பகை விண்ணொடும் விம்ம       (5)

இருநால் திசையும் உண்பலி தூவி
நன்னூல் மாக்கள் நணிக்குறி சொற்று
பக்கம் சூழ்ந்த நெடுநகர் முன்றில்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெங்கள் பெய்து நாள்குறித்து உழுநரும்       (10)

சூல்நிறைந் துளையும் சுரிவளைச் சாத்தும்
இனக்கயல் உண்ணும் களிக்குரு கினமும்
வரைப்பறை அரிந்த வாசவன் தொழுது
நிரைநிரை லிளம்பி வழிமுடி நடுநரும்
நாறு கழிதுற்ற சககு ஈர்க்குநரும்       (15)

தாமரை பாடும் அறுகால் கீளையும்
உறைத்தெழு கம்பலை உம்பரைத் தாவி
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்
அள்ளற் பழனத்து அணிநகர்க் கூடல்
நீங்காது உறையும் நிமிர்கடைப் பெருமான்       (20)

உரகன் வாய்கீண்ட மாதவன் போல
மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக்
கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி
நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு
அடைப்பது போல உடைப்பது நோக்கி       (25)

கோமகன் அடிக்க அவனடி வாங்கி
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம்
அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன்
திருமிடற் றிருளெனச் செறிதரும் மாமுகில்
எனதுகண் கடந்து நீங்கித்
துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே.       (31)
-------------

50. தழை விருப்பு உரைத்தல்


அறுகும் தும்பையும் அணிந்தசெஞ் சடையும்
கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும்
பிறிதும் கரந்து ஒரு கானவன் ஆகி
அருச்சுனன் அருத்தவம் அழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து       (5)

பொன்னுடை ஆவம் தொலையாது சுரக்கப்
பாசு பதக்கணை பரிந்தருள் செய்தோன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழ
தென்கடல் நடுத்திடர் செய்துறைந்து இமையவர்
ஊருடைத் துண்ணும் சூருடல் துணித்த       (10)

மணிவேற் குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்றம் ஒருபால் பொலிந்த
அறப் பெருங்கூடல் பிறைச்சடைப் பெருமான்
திருவடிப் பெருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை       (15)

ஒருநீ விடுத்தனை யான்அது கொடுத்தனன்
அவ்வழி கூறின் அத்தழை வந்து
கண்மலர் கவர்ந்தும் கைமலர் குவித்தும்
நேட்டுயிர்ப் பெறிந்தும் முலைமுகம் நெருக்கியும்
ஊடியும் வணங்கியும் உவந்தளி கூறியும்       (20)

பொறை அழி காட்சியள் ஆகி
நிறையழிந் தவட்கு நீஆ யினவே!       (22)
-------------

51. விரவிக் கூறல்


வெயரமுது அரும்பி முயல்கண் கறுத்து
தண்ணம்நின் றுதலலின் நிறைமதி ஆகி
பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து
நிறைஅளி புரக்கும் புதுமுகத்து அணங்குநின்
ஒளிவளர் நோக்கம் உற்றனை ஆயின்       (5)

இன்னுயிர் வாழ்க்கை உடலொடும் புரக்கலை
ஒருதனி அடியாற்கு உதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாளெடுத்து
ஆதிசாரணை அடர்நிலைப் பார்வை
வாளொடு நெருக்கல் மார்பொடு முனைத்தல்       (10)

பற்றி நின்று அடர்த்தல் உள்கையின் முறித்தல்
ஆனனத்து ஒட்டல் அணிமயிற் புரோகம்
உள்கலந் தெடுத்தல் ஒசிந்திடம் அழைத்தல்
கையொடு கட்டல் கடிந்துள் அழைத்தலென்று
இவ்வகைப் பிறவும் எதிர்அமர் ஏறி       (15)

அவன் பகை முறித்த அருட்பெருங் கடவுள்
கூடலம் கானல் பெடையுடன் புல்லி
சேவல் அன்னம் திருமலர்க் கள்ளினை
அம்மலர் வள்ளம் ஆகநின்று உதவுதல்
கண்டுகண்டு ஒருவன் மாழ்கி
விண்டுயிர் சேர்ந்த குறிநிலை மயக்கே.       (21)
-------------

52. ஊடல் தணித்தல்


அவ்வுழி அவ்வுழிப் பெய்உணவு உன்னி
முகன்பெறும் இருசெயல் அகன்பெறக் கொளுவும்
புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி
இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி
முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி       (5)

பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்
பேழ்வாய்ப் புலிஉகிர் சிறுகுரல் விளங்க
அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப்
பழம்கோள் தத்தை வழங்குசொல் போலும்
மழலைக் கிளவியும் இருநிலத்து இன்பமும்       (10)

ஒருவழி அளிக்கும் இருங்கதிர்ச் சிறுவனை
தழல்விழி மடங்கல் கொலைஅரிக் குருளையைப்
பொன்மலை கண்ட பொலிவு போல
மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின்
கறங்கிசை அருவி அறைந்துநிமிர் திவலையும்       (15)

துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும்
குறமகார் கொழிக்கும் கழைநித் திலமும்
நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும்
புனம்பட எறிந்த கார்அகில் தூமமும்
அந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும்       (20)

வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்
கந்திவிரி படிந்த மென்சிறை வண்டும்
சந்தனப் பொங்கர்த் தழைச்சிறை மயிலும்
முன்றில்அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும்
ஒன்றி னொடு ஒன்று சென்றுதலை மயங்கும்       (25)

குளவன் குன்றக் கூடல்அம் பதிநிறை
மஞ்சடை குழல்பெறு செஞ்சடைப் பெருமான்
அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்
வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன்
திருக்கண் கண்ட பெருக்கினர் போல்       (30)

முளரிஅம் கோயில் தளைவிட வந்து
நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள்
நின்உளத்து இன்னல் மன்அறக் களைந்து
பொருத்தம் காண்டி வண்டாரும்
அருத்திஅம் கோதை மன்னவன் பாலே.       (35)
-------------

53. குலமுறை கூறி மறுத்தல்


பெருமறை நூல்பெறக் கோன்முறை புரக்கும்
பெருந்தகை வேந்தன் அருங்குணம் போல
மணந்தோர்க்கு அமுதம் தணந்தோர்க்கு எரியும்
புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கும்
மலையத் தமிழ்க்கால் வாவியில் புகுந்து       (5)

புல்லிதழ்த் தாமரைப் புதுமுகை அவிழ்ப்ப
வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு
சேயிதழ்க் குவளையின் நிரைநிரை உறங்கும்
நிலைநீர் நாடன் நீயே இவளே
மலைஉறை பகைத்து வான்உறைக்கு அணக்கும்       (10)

புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்
பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே! நீயே
ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி
மாயா நல்லறம் வளர்நாட் டினையே! இவளே
தொண்டகம் துவைப்ப தொழிற்புனம் வளைந்து       (15)

பகட்டினம் கொல்லும் பழிநாட் டவளே நீயே--
எழுநிலை மாடத்து இளமுலை மகளிர்
நடம்செயத் தரள வடம்தெறு நகரோய் இவளே--
கடம்பெறு கரிக்குலம் மடங்கல்புக்கு அகழத்
தெறித்திடு முத்தம் திரட்டுவைப் பினளே       (20)

அணிகெழு நவமணி அலர்எனத் தொடுத்த நீயே--
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே இவளே--
மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற
நெட்டிதண் ஏறும் இப்புனத் தினளே
ஆதலின், பெரும்புகழ் அணைகுதி ஆயின்       (25)

நாரணன் பாற தேவர்கெட் டோட
வளிசுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக்
கருமுகில் வளைந்து பெருகியபோல
நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை
மறித்துஅவர் உயிர்பெறக் குறித்துண் டருளி       (30)

திருக்களம் கறுத்த அருட்பெறு நாயகன்
கூடல் கூடினர் போல,
நாடல் நீ இவள் தழைத்தோள் நசையே.       (33)
-------------

54. காவற் பிரிவு அறிவித்தல்


நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து
வரையறுத்து அமைந்த வகைநான் காக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை
குருமணி விரித்தலின் தேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின்       (5)

வரைஎன நிறுத்திய திருவுறை பெருந்தோள்
தரித்தும் அணைத்தும் தான்எனக் கண்டும்
செய்ததும் அன்றி திருமணம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும்       (10)

தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்
கொண்டல்வந் துலவும் நீலக் குவட்டினும்
கோடைசென் நுடற்றும் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும்
முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும்       (15)

கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும்
வேகத் தலையினும் விதிஆ கமத்தினும்
கல்வியர் உளத்தும் கலர்நெஞ் சகத்தும்
தெய்வம் விடுத்துப் பொய்கொள் சிந்தையினும்
கொலையினர் கண்ணும் குன்றா தியைந்து       (20)

வெளியுறத் தோன்றி இருளுற மறைந்த
விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும்
சின்னக் குறளும் செழுங்கார் போலப்
பெருமறை முழங்கும் திருநகர்க் கூடல்       (25)

ஒப்புற் றடைமலர் சுமந்த
மைப்புறக் கூந்தல் கொடிவணங்கு இடையே!       (27)
-------------

55. உள் மகிழ்ந்து உரைத்தல்


நுனிக்கவின் நிறைந்த திருப்பெரு வடிவினள்
உயிர்வைத்து உடலம் உழன்றன போல
நெடும்பொருள் ஈட்ட நிற்பிரிந்து இறந்து
கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகும்
கடுஞ்சுரம் தந்த கல்லழல் வெப்பம்       (5)

தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும்
என்னுயிர் யாவையும் இட்டடைத் தேந்தி
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்தநின்
பெருமுலை மூழ்கஎன் உளத்தினில் தொடாமுன்
வீழ்சுற்று ஒழுக்கிய பராரைத் திருவடக்       (10)

குளிர்நிழல் இருந்து குணச்செயல் மூன்றும்
உடலொடு படரும் நிலைநிழல் போல
நீங்காப் பவத்தொகை நிகழ்முதல் நான்கும்
உடனிறைந் தொழியா உட்பகை ஐந்தும்
மதியினின் பழித்த வடுஇரு மூன்றும்       (15)

அணுகாது அகற்றி பணிமுனி நால்வர்க்கு
அறமுதல் நான்கும் பெறஅருள் செய்த
கூடற் பெருமான் நீடருள் மூழ்கி
இருபதம் உள்வைத் திருந்தவர் வினைபோல்
போயின துனைவினை நோக்கி
ஏகின எனக்கே அற்புதம் தருமே!       (21)
-------------

56. புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்


கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து
வால்உளை எருக்கில் வளர்உழை பாடி
கூவிளங் கண்ணியில் குலக்கிளை முரற்றி
வெண்கூ தளத்தில் விளரிநின் றிசைத்து
வண்டும் தேனும் ஞிமிறும் கரும்பும்       (5)

உமிழ்நறவு அருந்தி உறங்குசெஞ் சடையோன்
மதுமலர் பறித்துக் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலிந்துயிர் கவரும்
காலற் காய்ந்த காலினன் கூடல்
திருமறுகு அணைந்து வருபுனல் வையை       (10)

வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்து
அணைந்தெடுத் தேந்திய அரும்புமுகிழ் முலையோள்
மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை
ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும்
ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும்       (15)

முழக்கியும் தபுத்தியும் முலைஒளி நோக்கியும்
விளிமொழி ஏற்றும் விதலையின் திளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும்
நிறுத்தியும் நிரைத்தும் நெறித்தும் செறித்தும்
எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும்       (20)

கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்தும்
செய்தன எல்லாம் செய்யலர் போலஎன்
நெட்டிலை பொலிந்தபொன் நிறைதிரு உறையுளில்
பாசடைக் குவளைச் சுழல்மணக் காட்டினைக்
கருவரிச் செங்கண் வசாலினம் கலக்க       (25)

வேரிமலர் முண்டகத்து அடவிதிக்கு எறிய
வெள்ளுடற் கருங்கண் கயல்நிரை உகைப்ப
மரகதப் பன்னகத்து ஆம்பல்அம் குப்பையைச்
‍சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப
படிந்து சேடெறியும் செங்கண் கவரியும்       (30)

மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பும்
மலையுடன் அ‍லைந்த முதுநீர் வெள்ளமும்
மிடைந்து வயல்இரிந்து முதுகுசரிந் துடைந்து
சிறியோன் செருஎன முறியப் போகி
உழவக் கணத்தைக் குலைக்குடில் புகுத்தும்       (35)

பெருநீர் ஊரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்எனக் கேண்மின்
மறிந்துழை விழித்த மறிநோக் கினரே!       (38)
-------------

57. தன்னை வியந்து உரைத்தல்


விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க்
கண்டல்முன் முளைத்த கடிஎயிற் றரவக்
குழுவினுக்கு உடைந்து குளிர்மதி ஒதுங்க
தெய்வப் பிறைஇருந்த திருநுதற் பேதையைக்
கண்டுகண்டு அரவம் மயில்எனக் கலங்க       (5)

நெடுஞ்சடைக் காட்டினை அடும்தீக் கொழுந்தென
தலைஏது அலையா நகுதலை தயங்க
அணிதலை மாலையை நிறைமதித் திரள்எனப்
புடைபுடை ஒதுங்கி அரவுவாய் பிளப்ப
ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு       (10)

கிடந்தொளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான்
படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநட வேந்தன்
அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி அடைப்ப
மற்றவன் தன்னை நெடுந்துயில் வருத்தி       (15)

இறையவன் குலத்து முறையர் இன்மையால்
கருதி தோரை கல்லொடு பிறங்க
மெய்யணி அளறாக் கைம்முழம் தேய்த்த
பேரன்பு உருவப் பசுக்கா வலனை
உலகினில் தமது முக்குறி யாக்       (20)

மணிமுடி வேணியும் உருத்திரக் கலனும்
நிலவுமிழ் புண்ணியப் பால்நிறச் சாந்தமும்
அணிவித் தருள்கொடுத்து அரசன் ஆக்கி
அடுமால் அகற்றி நெடுநாள் புரக்க
வையகம் அளித்த மணிஒளிக் கடவுள்       (25)

நெடுமறிக் கூடல் விரிபுனல் வையையுள்
பிடிகுளி செய்யும் களிறது போல
மயிலெனும் சாயல் ஒருமதி நுதலியை
மருமமும் தோளினும் வரையறப் புல்லி
ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை       (30)

பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம்
தலைநடுக் குற்ற தன்மை போல
ஒன்றற அகற்றி உடன்கலந் திலனேல்
அன்ன ஊரனை எம்மில் கொடுத்து
தேரினும் காலினும் அடிக்கடி கண்டு       (35)

நெட்டுயிர்ப்பு எறிந்து நெடுங்கண் நீருகுத்துப்
பின்னும் தழுவ உன்னும் அவ்வொருத்தி
அவளே ஆகுவள் யானே தவலருங்
கருநீர்க் குண்டு அகழுடுத்த
பெருநீர் ஆழித் தொல்லுல குழிக்கே.       (40)
-------------

58. புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்


அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும்
எழுமலை பொடித்தலின் அனல்தெறும் அசனியும்
கருங்கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும்
மரவுயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும்
என்னுளம் இருத்தலின் இயைந்துணர் உயிரும்       (5)

நச்சின கொடுத்தலின் நளிர்தரு ஐந்தும்
கருவழி நீக்கலின் உயர்நிலைக் குருவும்
இருநிலம் காத்தலின் மதியுடை வேந்தும்
ஆகிய மணிவேல் சேவலம் கொடியோன்
வானக மங்கையும் தேன்வரை வள்ளியும்       (10)

இருபுறம் தழைத்த திருநிழல் இருக்கும்
ஒரு பரங் குன்றம் மருவிய கூடல்
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
நாயகன் திருவடி நண்ணலர் போல
பொய்பல புகன்று மெய்ஒளித்து இன்பம்       (15)

விற்றுணும் சேரி விடாதுறை ஊரன்
ஊருணி ஒத்த பொதுவாய்த் தம்பலம்
நீயும் குதட்டினை ஆயின் - சேயாய்!
நரம்பெடுத்து உமிழும் பெருமுலைத் தீம்பாற்கு
உள்ளமும் தொடாது விள்ளமுது ஒழுக்கும்       (20)

குதலைவாய் துடிப்பக் குலக்கடை உணங்கியும்
மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
புடைமணி விரித்த உடைமணி இழுக்கியும்
சுடிகையும் சிகையும் சேர்ந்துகண் பனித்தும்
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும்       (25)

மறிக்கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்
சென்றழி யாது நின்றயர் கண்டும்
உறுவதும் இப்பயன் அன்றேல்,
பெறுவது என்பால் இன்றுநின் பேறே.       (29)
-------------

59. தலைவி தோழியொடு புகல்தல்


நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை
ஆழி வலவன் அடர்த்தன போல
புன்தலை மேதி புனல்எழ முட்டிய
வரிவுடற் செங்கண் வராலுடன் மயங்க
உள்கவைத் தூண்டில் உரம்புகுந்து உழக்கும்       (5)

நிறைநீர் ஊரர் நெஞ்சகம் பிரிக்கும்
பிணிமொழிப் பாணன் உடனுறை நீக்கி
நூலொடு துவளும் தோல்திரை உரத்தின்
மால்கழித்து அடுத்த நரைமுதிர் தாடிசெய்
வெள்ளி குமிழ்த்த வெரூஉக்கண் பார்ப்பான்       (10)

கோலுடன் படரும் குறுநகை ஒருவி
பூவிலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு
திக்குவிண் படர்நதி திருமதி கயிலை
நாமகள் பெருங்கடல் நாற்கோட்டு ஒருத்தல்
புண்ணியம் இவைமுதல் வெள்ளுடல் கொடுக்கும்       (15)

புகழ்க்கவிப் பாவலர் புணர்ச்சி இன்பகற்றி
எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கல்வியர்
பெருநகைக் கூட்டமும் கழிவுசெய்து இவ்விடை
மயக்குறு மாலை மாமகள் எதிர
ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம்       (20)

ஆயிரம் எடுத்து வான்வழிப் படர்ந்து
மண்ணேழ் உருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி ஒருங்குழி மடங்க
ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன்
இரந்தன வரத்தால் ஒருசடை இருத்திய       (25)

கூடல் பெருமான் குரைகழல் கூறும்
செம்மையர் போல கோடா
நம்மையும் நோக்கினர் சிறிதுகண் புரிந்தே.       (28)
-------------

60. வழிபாடு கூறல்


நிரைஇதழ் திறந்து மதுகண்டு அருத்தும்
விருந்துகொள் மலரும் புரிந்துறை மணமும்
செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்
பாலும் சுவையும் பழமும் இரதமும்
உடலும் உயிரும் ஒன்றியது என்ன       (5)

கண்டும் தெளிந்தும் கலந்தஉள் உணர்வால்
பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய
இன்பமர் சொல்லி நண்பும் மனக்குறியும்
வாய்மையும் சிறப்பும் நிழல்எனக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும்       (10)

அளகைக்கு இறையும் அரும்பொருள் ஈட்டமும்
கண்ணனும் காவலும் முனியும் பசுவும்
ஒன்றினும் தவறா ஒழுங்கு இயைந்தனபோல்
நீடிநின் றுதவும் கற்புடை நிலையினர்
தவமகற் றீன்ற நெடுங்கற்பு அன்னை       (15)

முன்ஒரு நாளில் முதல்தொழில் இரண்டினர்
பன்றியும் பறவையும் நின்றுரு எடுத்து
கவையா உளத்துக் காணும் கழலும்
கல்வியில் அறிவில் காணும் முடியும்
அளவுசென் றெட்டா அளவினர் ஆகி       (20)

மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும்
அளவா நோன்மையில் நெடுநாள் வருந்திக்
கண்ணினில் காணாது உளத்தினில் புணராது
நின்றன கண்டு நெடும்பயன் படைத்த
திருஅஞ் செழுத்தும் குறையாது இரட்ட       (25)

இருநிலம் உருவிய ஒருதழல் தூணத்து
எரிமழு நவ்வி தமருகம் அமைத்த
நாற்கரம் நுதல்விழி தீப்புகை கடுக்களம்
உலகுபெற் றெடுத்த ஒருதனிச் செல்வி
கட்டிய வேணி மட்டலர் கடுக்கை       (30)

ஆயிரம் திருமுகத்து அருள்நதி சிறுமதி
பகைதவிர் பாம்பும் நகைபெறும் எருக்கமும்
ஒன்றிய திருவுரு நின்றுநனி காட்டிப்
பேரருள் கொடுத்த கூடலம் பதியோன்
பதம்இரண்டு அமைத்த உள்ளக்
கதியிரண்டு ஆய ஓர்அன் பினரே.       (36)
-------------

61. ஆதரம் கூறல்


நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில்
கரும்புகை வானம் கையுறப் பொதிந்து
தருநிழல் தேவர் தம்உடல் பனிப்பப்
படர்ந்தெறி கங்கை விடும்குளிர் அகற்றும்
பொன்னம் பொருப்ப! நின்உளத் தியையின்       (5)

கனல்தலைப் பழுத்த திரள்பரல் முரம்பு
வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பே
அதர்விரிந் தெழுந்த படர்புகை நீழல்
பொதுளிய காஞ்சி மருதணி நிழலே!
தீவாய்ப் புலிப்பற் சிறுகுரல் எயிற்றியர்       (10)

கழுநீர் மிலையும் வயல்மா தினரே
அயற்புலம் அறியும் எயினர் மாத்துடி
நடுநகர்க் கிரட்டும் களிஅரி கிணையே!
இருள்கவர் புலன்எனச் சுழல்தரும் சூறை
மதுமலர் அளைந்த மலையக் காலே       (15)

எழுசிறை தீயும் எருவையும் பருந்தும்
குவளையம் காட்டுக் குருகொடு புதாவே
வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய்
தழைமடி மேதியும் பிணர்இடங் கருமே
பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை       (20)

சுருள்விரி சாலியும் குலைஅரம் பையுமே
வடதிரு ஆல வாய்திரு நடுவூர்
வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரை
பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்து அமைத்த
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி       (25)

கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை
விண்ணுடைத் துண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மாவெனக் கவிழ்ந்த
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்       (30)

முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒருபரங் குன்றம்
சூழ்கொள இருந்த கூடலம் பெருமான்
முழுதும் நிறைந்த இருபதம் புகழார்
போம்வழி என்னும் கடுஞ்சுரம் மருதம்
மாமை ஊரும் மணிநிறத்து இவட்கே.       (36)
-------------

62. முகம் கண்டு மகிழ்தல்


நிறைமதி புரையா நிறைமதி புரையா
தேரான் தெளிவெனும் திருக்குறள் புகுந்து
குறைமதி மனனே நிறைமதி புரையா
உவர்க்கடற் பிறந்தும் குறைவுடல் கோடியும்
கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த்       (5)

தழல்விழிப் பாந்தள் தான்இரை மாந்தியும்
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும்
தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும்
குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும்
கடல்சூழ் உலகில் மதிநடு இகந்தும்       (10)

பெருமறை கூறி அறைவிதி தோறும்
முத்தழற்கு உடையோன் முக்கட் கடவுளென்று
உய்த்திடும் வழக்குக் கிடக்கஎன் றொருகால்
வானவர் நதிக்கரை மருள்மகம் எடுத்த
தீக்குணத் தக்கன் செருக்களம் தன்னுள்       (15)

கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும்
வளைஉமிழ் ஆரமும் சுரிமுகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமும் சலஞ்சலப் புஞ்சமும்
நந்தின் குழுவும் வயல்வயல் நந்தி
உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும்       (20)

கூடற்கு இறையோன் குரைகழற் படையால்
ஈர்எண் கலையும் பூழிபட் டுதிர
நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும்
சிதைந்து நைந்தெழு பழித்தீ மதிபுரையா
முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும்       (25)

அமுதம் நின்றிரைத்தும் அறிவு அறிவித்தும்
தீக்கதிர் உடலுள் செல்லா திருந்தும்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி இவள்முக மதிக்கே.       (29)
-------------

63. ஆயத்து உய்த்தல்


வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து
வழிநடம் தனது மரக்கால் அன்றி
முதல்தொழில் பதுமன் முன்னாய் அவ்வுழி
மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி
தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து       (5)

மற்றதன் தாள்அம் புத்திரி ஆக்கி
நிமிர்த்தெறி காலில் கடைக்கண் கிடத்தி
பாணியில் சிரம்பதித்து ஒருநடை பதித்து
கொடுகொட் டிக்குக் குறிஅடுத்து எடுக்கும்
புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து       (10)

சச்ச புடத்தில் தனிஎழு மாத்திரை
ஒன்றைவிட் டொருசீர் இரண்டுற உறுத்தி
எடுத்துத் துள்ளிய இனமுத் திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்றெறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி       (15)

ஞெள்ளலில் குனித்த இருமாத் திரைக்குப்
பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி
புறக்கால் மடித்து குறித்தெறி நிலையம்
பதினான்கு அமைத்து விடுமாத் திரைக்கு
வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து       (20)

வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு
மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து
வலவை இடாகினி மண்இருந் தெடுத்த
காலுடன் சுழல ஆடிய காளி
நாணிநின் றொடுங்கத் தானும்ஓர் நாடகம்       (25)

பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
மோகப் புயங்க முறைத்துறை தூக்கி
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒருதாள் மிதித்து விண்உற விட்ட       (30)

மறுதாள் மலரில் மலர்க்கரம் துடக்கி
பார்ப்பதிப் பாணியைத் துடிமணி எடுப்ப
சுருதியைத் தண்டி வலிகொண்டு அமைப்ப
முதலேழ் அதனை ஒன்றினுக்கு ஏழென
வீணை பதித்து தானம் தெரிக்க       (35)

முன்துடி மணியில் ஒற்றிய பாணியை
நாதம் கூட்டி மாத்திரை அறுத்து
மாங்கனி இரண்டில் ஆம்கனி ஒன்றால்
முன்ஒரு நாளில் முழுக்கதி அடைந்த
அம்மைப் பெயர்பெறும் அருட்பேய் பிடிப்ப       (40)

பூதமும் கூளியும் பேயும் குளிப்ப
அமரர்கண் களிப்ப ஆடிய பெருமான்
மதுரையம் பதிஎனும் ஒருகொடி மடந்தை
சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல
நின்னுளம் நிறைந்த நெடுங்கற்பு அதனால்       (45)

வினையுடல் புணர வரும்உயிர் பற்றிப்
புண்ணியம் தொடரும் புணச்சி போல
காலம்உற் றோங்கும் நீள்முகில் கூடி
மணிதரு தெருவில் கொடிநெடுந் தேரும்
நாற்குறிப் புலவர் கூட்டெழு நனிபுகழ்       (50)

மருந்தயில் வாழ்க்கையர் மணிநகர் உருவின
உருளெழு பூமியும் அவ்வுருள் பூண்ட
கலினமான் துகளும் கதிர்மறை நிழலின்
நின்றுமுன் இட்ட நிறைஅணி பொறுத்து
பெருங்குலைக் கயத்துக் கருந்தாள் கழுநீர்       (55)

நிறைவினுள் பூத்த தாமரை ஒன்றென
நின்னுயிர் ஆய நாப்பண்
மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே.       (58)
-------------

64. கற்புப் பயப்பு உரைத்தல்


எழுகடல் வளைந்த பெருங்கடல் நாப்பண்
பத்துடை நூறு பொற்பமர் பரப்பும்
ஆயிரத்து இரட்டிக் கீழ்மேல் நிலையும்
யோசனை உடுத்த மாசறு காட்சிப்
பனிக்குப் பொருப்பில் திடர்கொள் மூதூர்க்       (5)

களவுடை வாழ்க்கை உளமனக் கொடியோன்
படர்மலை ஏழும் குருகமர் பொருப்பும்
மாஎனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும்
கடுங்கனல் பூழி படும்படி நோக்கிய
தாரை எட்டுறையும் கூரிலை நெடுவேல்       (10)

காற்படைக் கொடியினன் கருணயொடு அமர்ந்த
புண்ணியக் குன்றம் புடைபொலி கூடல்
பிறைச்சடை முடியினன் பேரருள் அடியவர்க்கு
ஒருகால் தவறா உடைமைத் தென்ன
பிரியாக் கற்பெனும் நிறையுடன் வளர்ந்த       (15)

நெடுங்கயல் எறிவிழிக் குறுந்தொடித் திருவினள்
தெய்வமென் றொருகால் தெளியவும் உளத்திலன்
பலவுயிர் தழைக்க ஒருகுடை நிழற்றும்
இருகுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை
நீர்வடுப் பொருவ நிறுத்திடப் படரினும்       (20)

ஏழுயர் இரட்டி மதலைநட் டமைத்த
தன்பழங் கூடம் தனிநிலை அன்றி
உடுநிலை வானப் பெருமுகடு உயரச்
செய்யுமோர் கூடம் புணர்த்தின்
நெய்ம்மிதி உண்ணாது அவன்கடக் களிறே.       (25)
-------------

65. மருவுதல் உரைத்தல்


பெண்எனப் பெயரிய பெருமகள் குலனுள்
உணாநிலன் உண்டு பராய அப் பெருந்தவம்
கண்ணுற உருப்பெறும் காட்சியது என்னக்
கருவுயிர்த் தெடுத்த குடிமுதல் அன்னை
நின்னையும் கடந்தது அன்னவள் அருங்கற்பு       (5)

அரிகடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற
நிலமகள் கடந்தது நலனவள் பொறையே
இருவினை நாடி உயிர்தொறும் அமைத்த
ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த       (10)

நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம்
பேரா வாய்மைநின் ஊரனைக் கடந்தது
மற்றவள் ஊரன் கொற்ற வெண்குடையே
ஏழுளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன       (15)

நின்முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர்
மற்றவள் பார்த்த மதிக்கிளை யினரே
உடல்நிழல் மான உனதருள் நிற்கும்
என்னையும் கடந்தனள் பொன்னவட்கு இனியோன்
கொலைமதில் மூன்றும் இகலறக் கடந்து       (20)

பெருநிலவு எறித்த புகர்முகத் துளைக்கை
பொழிமதக் கறையடி அழிதரக் கடந்து
களவில் தொழில்செய் அரிமகன் உடலம்
திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து
மாறுகொண்டு அறையும் மதிநூல் கடல்கிளர்       (25)

சமயக் கணக்கர் தம்திறம் கடந்து
புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த
மலருடன் நிறைந்து வான்வழி கடந்த
பொழில்நிறை கூடல் புதுமதிச் சடையோன்
மன்நிலை கட வா மனத்தவர் போல       (30)

ஒன்னவர் இடும்திறைச் செலினும்
தன்நிலை கடவாது அவன்பரித் தேரே.       (32)
-------------

66. பள்ளிடத்து ஊடல்


நீரர மகளிர் நெருக்குபு புகுந்து
கண்முகம் காட்டிய காட்சித்து என்ன
பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனல்
மணிநிறப் படாம்முதுகு இடையறப் பூத்து
சுரும்பொடு கிடந்த சொரிஇதழ்த் தாமரை       (5)

கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது
நிழல்தலை மணந்து புனல்கிட வாது
விண்உடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த
வானவர் மங்கையர் மயக்கம் போல
பிணர்க்கரு மருப்பின் பிதிர்பட உழக்கி       (10)

வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து
கடுக்கைச் சிறுகாய் அமைத்தவாற் கருப்பை
இணைஎயிறு என்ன இடை இடை முள்பயில்
குறும்புதல் முண்டகம் கரும்பெனத் துய்த்து
செங்கண் பகடு தங்குவயல் ஊரர்க்கு       (15)

அருமறை விதியும் உலகியல் வழக்கும்
கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து
வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி
ஐந்திணை வழுவாது அகப்பொருள் அமுதினை
குறுமுனி தேறவும் பெறுமுதல் புலவர்கள்       (20)

ஏழ்எழு பெயரும் கோதறப் பருகவும்
புலனெறி வழக்கில் புணருலக வர்க்கும்
முன்தவம் பெருக்கும் முதல்தா பதர்க்கும்
நின்றறிந் துணர தமிழ்ப்பெயர் நிறுத்தி
எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன்       (25)

மெய்த்தவக் கூடவிளைல்பொருள் மங்கையர்
முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும்
சொல்லினும் துவக்கும் புல்லம் போல
எம்மிடத்து இலதால் என்னை
தம்முளம் தவறிப் போந்தது இவ்விடனே.       (30)
-------------

67. வழிப்படுத்து உரைத்தல்


செங்கோல் திருவுடன் தெளிந்தறம் பெருக்கிய
மறுபுல வேந்தன் உறுபடை எதிர்ந்த
கொடுங்கோல் கொற்றவன் நெடும்படை அனைத்தும்
சேர இறந்த *திருக்தகு நாளில்
அவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள்       (5)

கண்ணொடு கண்ணில் கழறிய போல
ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித்
தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி
அம்பல் தூற்றும் இல்வூர் அடக்கி
கடல்கிடந் தன்ன நிரை நிரை ஆய       (10)

வெள்ளமும் மற்றவர் கள்ளமும் கடந்து
தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து
கிடைப்பல் யானே நும்மை தழைத்தெழு
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும்       (15)

பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும்
முடைத்தலை எரிபொடி உடைமையின் பாலையும்
ஆமையும் சலமும் மேவலின் மருதமும்
கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும்
ஆகத் தனது பேரருள் மேனியில்       (20)

திணைஐந்து அமைத்த இணைஇலி நாயகன்
வரும்தொழில் அனைத்தும் வளர்பெரும் பகலே
எரிவிரிந் தன்ன இதழ்ப்பல் தாமரை
அருள்முகத் திருவொடு மலர்முகம் குவிய
மரகதப் பாசடை இடையிடை நாப்பன்       (25)

நீலமும் மணியும் நிரைகிடந் தென்ன
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ்விரிப்ப
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப்
பாசடைக் குடம்பை யூடுகண் படுப்ப
துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து       (30)

விடும் அமு தருந்த விண்ணகத்து அணக்க
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்
எறிதிரைப் பழனக் கூடல்
செறிக இன்றம்ம திருவொடும் பொலிந்தே       (35)
-------------

68. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்


இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப்
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து
திருவெனும் குழவியும் அமுதெனும் பிள்ளையும்
மதியெனும் மகவும் அமருலகு அறியக்
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி       (5)

வாய்விட் டலறி வயிறுநொந் தீன்ற
மனன் எழு வருத்தம் அதுஉடையை ஆதலின்
பெருமயல் எய்தா நிறையினள் ஆக
என்ஒரு மயிலும் நின்மகளாக் கொண்டு
தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவம்       (10)

நிதிஎனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன்
தரள மும் சந்தும் எரிகெழு மணியும்
முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும்
அகிலும் கனகமும் அருவிகொண் டிறங்கிப்
பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும்       (15)

செம்புடல் பொதிந்த தெய்வப் பொதியமும்
உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து
உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும்
பெருந்தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த
தோடணி கடுக்கைக் கூடல்எம் பெருமான்       (20)

எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத்
தோன்றாது அடங்கிய தொன்மைத் தென்ன
ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கிநின்
பெருந்தீக் குணனும் ஒழிந்துளம் குளிருறும்
இப்பெரு நன்றி இன்றெற்கு உதவுதி       (25)

எனின்பதம் பணிகுவல் அன்றே நன்கமர்
பவள வாயும் கிளர்பச் சுடம்பும்
நெடுங்கயல் விழியும் நிறைமலை முலையும்
மாசறப் படைத்து மணிவுடல் நிறைத்த
பெருமுகில் வயிறளவு ஊட்டித்
திருவுலரு அளிக்கும் கடல்மட மகளே!       (31)
-------------

69. பிரிவு இன்மை கூறல்


நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக்
காலால் தடுத்துக் கனன்று எதிர்கறுத்தும்
நனிநிறை செல்வ நாடும் நன்பொருளும்
எதிர்பெறின் கண்சிவந்து எடுத்தவை களைந்தும்
தாமரை நிதியமும் வால்வளைத் தனமும்       (5)

இல்லம் புகுதர இருங்கதவு அடைத்தும்
அரிஅயன் அமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும்
மெய்யுலகு இரண்டினுள் செய்குநர் உளரேல்       (10)

எழுகதிர் விரிக்கும் மணிகெழு திருந்திழை
நின்பிரிவு உள்ளும் மனன்உளன் ஆகுக
முழுதுற நிறைந்த பொருள்மனம் நிறுத்திமுன்
வேடம் துறவா விதியுடைச் சாக்கியன்
அருட்கரை காணா அன்பெனும் பெருங்கடல்       (15)

பலநாள் பெருகி ஒருநாள் உடைந்து
கரைநிலை இன்றிக் கையகன் றிடலும்
எடுத்துடைக் கல்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி இணையாக் கூடல் மாமணி
குலமலைக் கன்னியென் றருள்குடி யிருக்கும்       (20)

விதிநெறி தவறா ஒருபங்கு உடைமையும்
பறவை செல்லாது நெடுமுகுடு உருவிய
சேகரத்து உறங்கும் திருநதித் துறையும்
நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும்
அருங்கரை இறந்த ஆகமக் கடலும்       (25)

இளங்கோ வினர்கள் இரண்டறி பெயரும்
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப்
பறந்தும் அகழ்ந்தும் படியிது என்னாது
அறிவகன்று உயர்ந்த கழல்மணி முடியும்
உடைமையன் பொற்கழல் பேணி
அடையலர் போல மருள்மனம் திரிந்தே.       (31)
-------------

70. ஊடல் நீட வாடி உரைத்தல்


நிறைவளை ஈட்டமும் தரளக் குப்பையும்
அன்னக் குழுவும் குருகணி இனமும்
கருங்கோட்டுப் புன்னை அரும்புதிர் கிடையும்
முடவெண் தாழை ஊழ்த்தமுள் மலரும்
அலவன் கவைக்கால் அன்னவெள் அலகும்       (5)

வாலுகப் பரப்பின் வலைவலிது ஒற்றினர்க்கு
ஈதென அறியாது ஒன்றிவெள் இடையாம்
மாதுடைக் கழிக்கரைச் சேரிஓர் பாங்கர்
புள்ளொடு பிணங்கும் புள்கவ ராது
வெள்ளிற உணங்கல் சேவல் ஆக       (10)

உலகுயிர் கவரும் கொலைநிலைக் கூற்றம்
மகளெனத் தரித்த நிலைஅறி குவனேல்
விண்குறித் தெழுந்து மேலவர்ப் புடை த்து
நான்முகன் தாங்கும் தேனுடைத் தாமரை
இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து       (15)

வானவர்க்கு இறைவன் கடவுகார் பிடித்துப்
பஞ்செழப் பிழிந்து தண்புனல் பருகி
ஐந்தெனப் பெயரிய நெடுமரம் ஒடித்து
கண்உளத்து அளவா எள்ளுண வுண்டு
பொரியெனத் தாரகைக் கணன்உடல் கொத்தி       (20)

அடும்திறல் அனைய கொடுந்தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெருங்குருகு அடித்து
வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான்
கூடற்கு இறையோன் குறிஉரு கடந்த
இருபதம் உளத்தவர் போல
மருவுதல் ஒருவும் மதியா குவனே.       (26)
-------------

71. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்


சிலைநுதல் கணைவிழித் தெரிவையர் உளம்என
ஆழ்ந்தகன் றிருண்ட சிறைநீர்க் கயத்துள்
எரிவிரிந் தன்ன பல்தனத் தாமரை
நெடுமயல் போர்த்த உடல்ஒரு வேற்கு
குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி       (5)

நின்பதி மறைந்த நெட்டிர வகத்துள்
குருகும் புள்ளும் அருகணி சூழ
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி
பெருந்துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்
காணூம்நின் கனவுள் நம் கவர்மனத் தவரைக்       (10)

கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு
பூவுதிர் கானல் புறம்கண் டனன்என
சிறிதொரு வாய்மை உதவினை அன்றேல்
சேகரம் கிழித்த நிறைமதி உடலம்
கலை கலை சிந்திய காட்சியது என்ன       (15)

கடுமான் கீழ்ந்த கடமலைப் பல்மருப்பு
எடுத்தெடுத் துந்தி மணிக்குலம் சிதறி
கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல
சாதகம் வெறுப்ப சரிந்தகழ்ந் தார்த்து
திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன       (20)

வழியெதிர் கிடந்த உலமுடன் தாக்கி
வேங்கையும் பொன்னும் ஓருழித் திரட்டி
வரையர மகளிர்க்கு அணியணி கொடுத்து;
பனைக்கைக் கடமா எருத்துறு பூழி
வண்டெழுந் தார்ப்ப மணி எடுத்து அலம்பி       (25)

மயில்சிறை ஆற்ற வலிமுகம் பனிப்ப
எதிர்சுனைக் குவளை மலர்ப்புறம் பறித்து
வரையுடன் நிறைய மாலையிட் டாங்கு
நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும்
கயிலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவள்       (30)

நாடகக் கடவுள் கூடல் நாயகன்
தாமரை உடைத்த காமர் சேவடி
நிறைவுளம் தரித்தவர் போல
குறைவுளம் நீங்கி இன்பா குவனே.       (34)
-------------

72. பதி பரிசு உரைத்தல்


எரிதெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை
முகில்தலை சுமந்து ஞிமிறெழுந்து இசைக்கும்
பொங்கருள் படுத்த மலர்கால் பொருந்துக!
கடுங்கடத்து எறிந்த கொடும்புலிக்கு ஒடுங்கினை
வரிஉடற் செங்கண் வராலினம் எதிர்ப்ப       (5)

உழவக் கணத்தர் உடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க்கு அணங்கினை
வேதியர் நிதிமிக விதிமகம் முற்றி
அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி
பொன்னுருள் வையம் போவது காண்க       (10)

ஆறலை எயினர் அமர்க்கலிக்கு அழுங்கினை
பணைத்தெழு சாலி நெருக்குபு புகுந்து
கழுநீர் களைநர் தம் கம்பலை காண்க
தழல்தலைப் படுத்த பரல்முரம்பு அடுத்தனை
சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த       (15)

குளிர்வெண் தரளக் குவால்இவை காண்க
அலகைநெட் டிரதம் புனல்எனக் காட்டினை
வன்மீன் நெடுங்கயல் பொதிவினை யகத்துக்
கிடங்கெனப் பெயரிய கருங்கடல் காண்க
முனகர்கள் பூசல் துடிஒலி ஏற்றனை       (20)

குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக்
கிடைமுறை எடுக்கும் மறைஒலி சேண்மதி
அமரர்கள் முனிக்கணத் தவர்முன் தவறு
புரிந்துடன் உமைகண் புதைப்ப மற்றுமையும்
ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த       (25)

ஒற்றையம் பசுங்கழை ஒல்கிய போல
உலகுயிர்க் குயிரெனும் திருவுரு அணைந்து
வளைக்கரம் கொடுகண் புதைப்ப அவ்வுழியே
உலகிருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமன் உட்பட்ட நிலவுயிர் அனைத்தும்       (30)

தமக்கெனக் காட்டும் ஒளிக்கண் கெடலும்
மற்றவர் மயக்கம் கண்டவர் கண்பெறத்
திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன்
தாங்கிய கூடல் பெருநகர்
ஈங்கிது காண்க முத்தெழில் நகைக்கொடியே!       (35)
-------------

73. தேறாது புலம்பல்


புட்பெயர்க் குன்றமும் எழுவகைப் பொருப்பும்
மேல்கடல் கவிழ்முகப் பொரிஉடல் மாவும்
நெடுங்கடல் பரப்பும் அடும்தொழில் அரக்கரும்
என்உளத்து இருளும் இடைபுகுந்து உடைத்த
மந்திரத் திருவேல் மறம்கெழு மயிலோன்       (5)

குஞ்சரக் கொடி யொடும் வள்ளியம் கொழுந் தொடும்
கூறாக் கற்பம் குறித்துநிலை செய்த
புண்ணியம் குமிழ்த்த குன்றுடைக் கூடல்
நிறைந்துறை கறைமிடற்று அறம்கெழு பெருமான்
பேரருள் விளைத்த மாதவர் போல       (10)

முன்னொரு நாளில் உடலுயிர் நீஎன
உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர்
தம்மொழி திரிந்து தவறுநின் றுளவேல்
அவர்குறை அன்றால் ஒருவன் படைத்த
காலக் குறிகொல் அன்றியும் முன்னைத்       (15)

தியங்குடல் ஈட்டிய தரும்கடு வினையால்
காலக் குறியை மனம்தடு மாறிப்
பின்முன் குறித்தநம் பெருமதி அழகால்
நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட
உள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமால்       (20)

குறித்தஇவ் இடைநிலை ஒன்றே
மறிக்குலத்து உழையின் வழிநோக் கினளே!       (22)
-------------

74. மாலைப் பொழுதொடு புலம்பல்


ஆயிரம் பணாடவி அரவுவாய் அணைத்துக்
கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து
நிறையுடல் அடங்கத் திருவிழி நிறைத்துத்
தேவர்நின் றிசைக்கும் தேவனின் பெருகி
குருவளர் மரகதப் பறைத்தழை பரப்பி       (5)

மணிதிரை உகைக்கும் கடலினின் கவினி
முள்எயிற்று அரவம் முறித்துயிர் பருகிப்
புள்எழு வானத்து அசனியின் பொலிந்து
பூதம் ஐந்துடையும் காலக் கடையினும்
உடல்தழை நிலைத்த மறம்மிகு மயிலோன்       (10)

புரந்தரன் புதல்வி எயினர்தம் பாவை
இருபால் இலங்க உலகுபெற நிறைந்த
அருவிஅம் குன்றத்து அணிஅணி கூடற்கு
இறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன்
மலர்க்கழல் வழுத்தும்நம் காதலர் பாசறை       (15)

முனைப்பது நோக்கிஎன் முனைஅவிழ் அற்றத்து
பெரும்பக லிடையே பொதும்பரில் பிரிந்த
வளைகட் கூருகிர்க் கூக்குரல் மோத்தையை
கருங்கட் கொடியினம் கண்ணறச் சூழ்ந்து
புகைஉடல் புடைத்த விடன்வினை போல       (20)

மனம்கடந்து ஏறா மதில்வளைத்து எங்கும்
கருநெருப்பு எடுத்த மறன்மருள் மாலை
நின்வரற்கு ஏவர் நல்கின நின்வரல்
கண்டுடல் இடைந்தோர்க் காட்டுதும் காண்மதி
மண்ணுடல் பசந்து கறுத்தது விண்ணமும்       (25)

ஆற்றாது அழன்று காற்றின் முகம்மயங்கி
உடுஎனக் கொப்புள் உடல்நிறை பொடித்தன
ஈங்கிவற் றடங்கிய இருதிணை உயிர்களும்
தம்முடன் மயங்கின ஒடுங்கின உறங்கின
அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன       (30)

எனப்பெறின் மாலை என்னுயிர் உளைப்பதும்
அவர்திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க
உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை என்னில் வரும்குறி கண்டிலன்
மண்ணிடை எனினே அவ்வழி யான       (35)

கூடிநின் றனைஎனின் குறிதவ றாவால்
தேம்படர்ந் தனைஎனின் திசைகுறிக் குநரால்
ஆதலின் நின்வரவு எனக்கே
ஓதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே.       (39)
-------------

75. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்


திருமலர் இருந்த முதியவன் போல
நான்முகம் கொண்டுஅறி நன்னர் நெஞ்சிருந்து
வேற்றருள் பிறவி தோற்றுவித் தெடுத்து
நிலம்இரண் டளந்த நெடுமுகில் மான
அரக்கர்தம் கூட்டம் தொலைத்து நெய்உண்டு       (5)

களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப
அழலெடுத்து ஒன்னலர் புரம்எரி ஊட்டி
இனையஎவ் வுலகும் தொழுதெழு திருவேல்
சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்
பரங்குன் றுடுத்த பயங்கெழு கூடல்       (10)

பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன்
மால்அயன் தேடி மறைஅறைந்து அறியாத்
தன்உரு ஒன்றில் அருள்உரு இருத்திய
ஆதி நாயகன் அகல் மலர்க் கழல்இணை
நண்ணலர் கிளைபோல் தன்மனம் திரிந்துநம்       (15)

துறைவன் தணக்க அறிகிலம் யாமே
பிணர்முடத் தாழை விரிமர் குருகென
நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுள் மறைந்தும்
புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம்
கருந்திரை சுமந்தெறி வெண்தர ளத்தினை       (20)

அரும்பெனச் சுரும்பினம் அலரநின் நிசைத்தும்
கலம்சுமந் திறக்கும் கரியினம் பொருப்பென
பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும்
பவளநன் கவைக்கொடி வடவையின் கொழுந்தென
சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்       (25)

வெள்ளிற உண்ண விழைந்துபுகு குருகினம்
கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்என
அரவுஎயிற்று அணிமுள் கைதையுள் அடங்கியும்
விண்தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக்
கடல்வயிற்று அடங்கிய மலையினம் வரவுஎன       (30)

குழிமணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்
முயங்கிய உள்ளம் போகி
மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே.       (33)
-------------

76. அயல் அறிவு உரைத்து அழுக்கம் எய்தல்


ஆடகச் சயிலத்து ஒருடல் பற்றி
கலிதிரைப் பரவையும் கனன்றெழு வடவையும்
அடியினும் முடியினும் அணைந்தன போல
பசுந்தழைத் தோகையும் செஞ்சிறைச் சேவலும்
தாங்கியும், மலர்க்கரம் தங்கியும் நிலைத்த       (5)

பேரொளி மேனியன் பார்உயிர்க்கு ஓருயிர்
மாவுடைக் கூற்றம் மலர்அயன் தண்டம்
குறுமுனி பெறும்மறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும்
இருந்தன இருபுறத்து எந்தை என்அமுதம்       (10)

பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற
மாதவக் கூடல் மதிச்சடைக் காரணன்
இருபதம் தேறா இருள்உளம் ஆமென
இவள்உளம் கொட்ப அயல்உளம் களிப்ப
அரும்பொருட் செல்வி எனும்திரு மகட்கு       (15)

மானிட மகளிர் தாமும்நின் றெதிர்ந்து
புல்இதழ்த் தாமரை இல்அளித் தெனவும்
உலகுவிண் பனிக்கும் ஒருசய மகட்கு
தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து
வீரம்அங்கு ஈந்துபின் விளிவது மானவும்       (20)

இருளுடல் அரக்கியர் கலைமகட் கண்டு
தென்தமிழ் வடகலை சிலகொடுத் தெனவும்
நீரர மகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு
ஆர்எரி மணித்திரன் அருளியது எனவும்
செம்மலர்க் குழலிவள் போய்அறி வுறுத்தக்       (25)

கற்றதும் கல்லாது உற்றன ஊரனை
அவள்தர இவள்பெறும் அரந்தையம் பேறினுக்கு
ஒன்றிய உவமம் இன்றிவண் உளவால்
மற்றவள் தரநெடுங் கற்பே
உற்றிவள் பெற்றாள் என்பதும் தகுமே.       (30)
-------------

77. பிரிந்தமை கூறல்


மலரவன் பனிக்கும் கவினும் குலமீன்
அருகிய கற்பும் கருதிஉள் நடுங்கித்
திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தையின்று
இருகடல் ஓருழி மருவிய தென்னச்
செருப்படை வேந்தர் முனைமேல் படர்ந்தநம்       (5)

காதலர் முனைப்படை கனன்றுடற் றெரியால்
முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த
நெடுஞ்சால் போகிக் கடுங்கயல் துரக்கும்
மங்கையர் குழைபெறு வள்ளையில் தடைகொண்டு
அவர்கருங் கண்எனக் குவளை பூத்த       (10)

இருள் அகச் சோலையுள் இரவெனத் தங்கிய
மற்றதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால்
வெள்ளுடல் ஓதிமம் தன்னுடைப் பெடைஎனப்
பறைவரத் தழீஇப்பெற் றுவைஇனக் கம்பலைக்கு
ஆற்றாது அகன்று தேக்குவழி கண்ட       (15)

கால்வழி இறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்து
எழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்து
இடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும்
மலைமுதுகு அன்ன குலைமுகடு ஏறி       (20)

முழுமதி உடுக்கணம் காதலின் விழுங்கி
உமிழ்வன போல சுரிமுகச் சூல்வளை
தரளம் சொரியும் பழனக் கூடல்
குவளை நின் றலர்ந்த மறைஎழு குரலோன்
இமையவர் வேண்ட ஒருநகை முகிழ்ப்ப       (25)

ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து
வானுடைத் துண்ணும் மறக்கொலை அரக்கர்முப்
பெருமதில் பெற்றன அன்றோ
மருவலர் அடைந்தமுன் மறம்கெழு மதிலே?       (29)
-------------

78. கலக்கங் கண்டு உரைத்தல்


பெருந்துயர் அகற்றி அறம்குடி நாட்டி
உளச்சுருள் விரிக்கும் நலத்தகு கல்வியொன்று
உளதென குரிசில் ஒருமொழி சாற்ற
பேழ்வாய்க் கொய்யுளை அரிசுமந் தெடுத்த
பல்மணி ஆசனத்து இருந்துசெவ் வானின்       (5)

நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் நீக்கிஐந் தடுக்கிய
ஆறுஐஞ் நூறொடு வேறுநிரை அடுத்த
பல்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்து
பலதலைப் பாந்தள் சுமைதிருத் தோளில்
தரித்துலகு அளிக்கும் திருத்தகு நாளில்       (10)

நெடுநாள் திருவயிற்று அருளுடன் இருந்த
நெடுஞ்சடை உக்கிரற் பயந்தருள் நிமலன்
மற்றவன் தன்னால் வடவையின் கொழுந்துசுட்டு
ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும்
விளர்த்துநின் றணங்கி வளைக்குலம் முழங்கும்       (15)

கருங்கடல் பொரிய ஒருங்குவேல் விடுத்து
அவற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்
வெம்மையும் தண்மையும் வினைஉடற்கு ஆற்றும்
இருசுடர் ஒருசுடர் புணர்விழி ஆக்கிமுன்
விதியவன் தாரா உடலொடு நிலைத்த       (20)

முத்தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள்
கனவிலும் காணாக் கண்ணினர் துயரும்
பகுத்துண்டு ஈகுநர் நிலைத்திரு முன்னர்
இல்லெனும் தீச்சொல் இறுத்தனர் தோமும்
அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர்       (25)

கோறலென் றயலினர் குறித்தன குற்றமும்
நன்றறி கல்வியர் நாட்டுறு மொழிபுக்கு
அவ் அரண் இழந்தோர்க்கு அருவிடம் ஆயதும்
ஒருகணம் கூடி ஒருங்கே
இருசெவி புக்கது ஒத்தன இவட்கே.       (30)
-------------

79. முன்பனிக்கு நொந்து உரைத்தல்


கடல்மகள் உள்வைத்து வடவைமெய் காயவும்
மலைமகள் தழல்தரு மேனிஒன்று அணைக்கவும்
மாசறு திருமகள் மலர்புகுந்து ஆயிரம்
புறஇதழ்ப் புதவடைத்து அதன்வெதுப்பு உறைக்கவும்
சயமகள் சீற்றத் தழல்மனம் வைத்துத்       (5)

திணிபுகும் வென்றிச் செருஅழல் கூடவும்
ஐயர் பயிற்றிய விதிஅழல் ஓம்பவும்
அவ் அனற்கு அமரர் அனைத்தும்வந்து அணையவும்
முன்இடைக் காடன் பின்எழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரஉள் இருந்தென்       (10)

நெஞ்சகம் நின்று நினைவினுள் மறைந்து
புரை அறும் அன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் அம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேர்ஊர்ப் பழநக ரிடத்தும்       (15)

மகிழ்நடம் பேய்பெறும் வடவனக் காட்டினும்
அருமறை முடியினும் அடியவர் உளத்தினும்
குனித்தருள் நாயகன் குலமறை பயந்தோன்
இருந்தமிழ்க் கூடல் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துள் துள்ளிய ஞான்று       (20)

நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினில் கொள்ளவும் கரிவுரி மூடவும்
ஆக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
ஆங்கவர் துயர்பெற ஈன்றஎன் ஒருத்தி
புகல்விழும் அன்புதற்கு இன்றி
மகவினைப் பெறலாம் வரம்வேண் டினளே.       (26)
-------------

80. மறவாமை கூறல்


மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பி
பசுந்தாள் தோன்றி மலர்நனி மறித்து
நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து
மணிபுறம் கான்ற புரிவளை விம்மி
விதிப்பவன் விதியா ஓவம் நின்றெனஎன்       (5)

உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்
உவணக் கொடியினன் உந்திமலர்த் தோன்றிப்
பார்முதல் படைத்தவன் நடுத்தலை அறுத்து
புனிதக் கலன்என உலகுதொழக் கொண்டு
வட்டம் முக்கோணம் சதுரம் கார்முகம்       (10)

நவத்தலை தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
கண்டன மகம்தொறும் கலிபெறச் சென்று
நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளாக் கொலைதரு நவ்வியும்
விதிர்ஒளி காற்றக் கனல்குளிர் மழுவும்       (15)

இருகரம் தரித்த ஒருவிழி நுதலோன்
கூடல்ஒப்பு உடையாய் குலஉடுத் தடவும்
தடமதில் வயிற்றுள் படும்அவர் உயிர்க்கணம்
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிதெனப்
போக்கற வளைந்து புணர்இருள் நாளும்       (20)

காவல் காட்டிய வழியும்
தேவர்க் காட்டும்நம் பாசறை யினுமே.       (22)
-------------

81. ஊடி உரைத்தல்


மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம்
பைங்கால் தடவிச் செங்கயல் துரந்துண்டு
கழுக்கடை அன்னதம் கூர்வாய்ப் பழிப்புலவு
எழில்மதி விரித்தவெண் தளைஇதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயல்அணி ஊர       (5)

கோளகைக் குடிலில் குனிந்திடைந் தப்புறத்து
இடைநிலை அற்றபடர் பெருவெளி யகத்து
உடல்முடக்கு எடுத்த தொழிற்பெரு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறைஎயிற் றிருள்எழில் அரக்கன்
அமுதம் உண்டிமையா அவரும் மங்கையரும்       (10)

குறவரும் குறவத் துணையரும் ஆகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை இறும்பிடை
பறவைஉண் டீட்டிய இறால்நறவு அருந்தி
அந்நிலத் தவர்என அடிக்கடி வணங்கும்
வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்தொரு       (15)

தேவனும் அதன்முடி மேவவும் உளனாம்
எனப்புயம் கொட்டி நகைத்தெடுத் தார்க்க
பிலம்திறந் தன்ன பெருவாய் ஒருபதும்
மலைநிரைத் தொழுங்கிய கரம்இரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவும் திசையுட்கி முரியவும்       (20)

தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரல் தலைநக நுதியால்
சிறிதுமலை உறைத்த மதிமுடி அந்தணன்
பொன்அணி மாடம் பொலிநகர்க் கூடல்
ஆவண வீதி அனையவர் அறிவுறில்       (25)

ஊருணி அன்னநின் மார்பகம் தோய்ந்தஎன்
இணைமுலை நன்னர் இழந்தன அதுபோல்
மற்றவர் கவைமனம் மாழ்கி
செற்றம்நிற் புகைவர்இக் கால்தீண்டலையே.       (29)
-------------

82. தோழி பொறை உவந்து உரைத்தல்


உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர
திரைவிழிப் பருந்தினம் வளைஉகிர்ப் படையால்
பார்ப்பிரை கவரப் பயனுறும் உலகில்
கடனுறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத்       (5)

தழல்உணக் கொடுத்த அதன்உண விடையே
கைவிளக்கு எடுத்துக் கரைஇனம் கரைய
பிணம்விரித் துண்ணும் குணங்கினம் கொட்ப
சூற்பேய் ஏற்ப இடாகின கரப்ப
கண்டுளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி       (10)

பிறைநுதல் நாட்டி கடுவளர் கண்டி
இறால்நறவு அருவி எழுபரங் குன்றத்து
உறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றினள்
ஒருபால் பொலிந்த உயர்நகர்க் கூடல்
கடுக்கைஅம் சடையினன் கழல்உளத்து இலர்போல்       (15)

பொய்வரும் ஊரன் புகலரும் இல்புக
என்உளம் சிகைவிட்டு எழும்அனல் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின என்றால்
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
கைவரல் ஏற்றும் கனவினுள் தடைந்தும்       (20)

திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்
பொருட்கான் தடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் இறந்தும்
காவலில் கவன்றும் கல்வியில் கருதியும்
வேந்துவிடைக்கு அணங்கியும் விளைபொருட்கு உருகியும்       (25)

நின்ற இவட்கு இனிஎன்ஆம்
கன்றிய உடலுள் படும்நனி உயிரே?       (27)
-------------

83. கலவி கருதிப் புலத்தல்


நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி
வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கி
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை
கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து       (5)

புலனறத் துடைத்த நலனுறு வேள்வியர்
ஆரா இன்பப் பேரமுது அருந்தி
துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன்       (10)

மண்திரு வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியும் கிளையும் கிளர்படை நான்கும்
திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட
எரிவாய் உரகர் இருள்நாட்டு உருவக்
கொலைக்கொண் டாழி குறியுடன் படைத்து       (15)

மறியப் புதைத்த மறம்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும்
கல்வியும் திருவும் காலமும் கொடியும்
மாடமும் ஓங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினில் அருளுடன் நிறைந்த       (20)

பவளச் சடையோன் பதம்தலை சுமந்த
நல்இயல் ஊரநின் புல்லம்உள் மங்கையர்
ஓவிய இல்லம்எம் உறையுள் ஆக
கேளாச் சிறுசொல் கிளக்கும் கலதியர்
இவ்வுழி ஆயத் தினர்களும் ஆக       (25)

மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய்
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தஇத்
திருமணம் கொள்ளாச் சேக்கையது ஆக
நின்வுளம் கண்டு நிகழ்உணவு உன்னி       (30)

நாணா நவப்பொய் பேணியுள் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனும் நீயும்
திருப்பெறும் அயலவர் காண
வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே.       (34)
-------------

84. வரும்புனம் கண்டு வருந்தல்


உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும்
அளவாத் திருமணி அளித்த லானும்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத்து இளங்கா நிலைத்த லானும்       (5)

பாசடை உம்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானும்
நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி
உடையா அமுதம் உறைத லானும்
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால்       (10)

வாடாத் தேவர்கள் மணத்த லானும்
நூறுடை மகத்தில் பேறுகெமண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்எயில் எறிந்த
மணிவேற் குமரன் திருவளர் குன்றம்
பேரணி உடுத்த பெருநகர்க் கூடல்       (15)

கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்றம்
அருந்தவக் கண்ணினோடு இருந்தமா முனிபால்
பேரிருள் மாயைப் பெண்மகவு இரக்க
உவர்முதல் கிடந்த சுவையேழ் அமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய       (20)

எழுநீர்ச் சகரர்கள் ஏழ்அணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க
பல்முக விளக்கின் பரிதியில் தோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு அரும்பிய மிடற்றோன்       (25)

எறிந்துவீழ் அருவியும் எரிமணி ஈட்டமும்
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுதுறைக்கும்
திருமுத் தமிழும் பெருகுதென் மலையத்து
ஆரப் பொதும்பரி அடைகுளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணைமலர்க் கொடியே       (30)

விண்விரித்து ஒடுக்கும் இரவிவெண் கவிகைக்கு
இட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதம் சினைத்த சிறைமயிற் குலமே!
நீலப் போதும் பேதையும் விழித்த
பொறிஉடல் உழையே! எறிபரல் மணியே!       (35)

பாசிழைப் பட்டு நூல்கழி பரப்பிய
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!
மைந்தர்கண் சென்று மாதர்உள் தழைத்த
பொழிமதுப் புதுமலர்ப் போர்க்குடைச் சுரும்பே!
வெறிமுதிர் செம்மலர் முறிமுகம் கொடுக்கும்       (40)

சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளைஅம் சுகமும் குருவியும் கடிய
இருகால் கவணிற்கு எறிமணி சுமந்த
நெடுங்கால் குற்றுழி நிழல்வைப்பு இதணே!
நெருநல் கண்டஎற்கு உதவுழி இன்பம்       (45)

இற்றையின் கரந்த இருள்மனம் என்னை?
இவண்நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கும்
ஈங்கிவை கிடக்க என்நிழல் இரும்புனத்து
இருந்தொளிர் அருந்தேன் இலதால் நீரும்       (50)

நின்புனம் அல்லஎன்று என்புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அப்புனம் நீரேல்
முன்னம் கண்டவன் அன்றென்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே.       (54)
-------------

85. நெஞ்சொடு வருந்தல்


வடமொழி மதித்த இசைநூல் லழக்குடன்
அடுத்த எண்நான்கு அங்குலி யகத்தினும்
நாற்பதிற் றிரட்டி நால்அங் குலியினும்
குறுமையும் நெடுமையும் கோடல்பெற் றைதாய்
ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து       (5)

கோடி மூன்றில் குறித்து மணிகுயிற்றி
இருநிலம் கிடத்தி மனம்கரம் கதுவ
ஆயிரத் தெட்டில் அமைத்தன பிறப்பு
பிறவிப் பேதத் துறையது போல
ஆரியப் பதம்கொள் நாரதப் பேரியாழ்       (10)

நன்னர்கொள் அன்பால் நனிமிகப் புலம்ப
முந்நான்கு அங்குலி முழுஉடல் சுற்றும்
ஐம்பதிற் றிரட்டி ஆறுடன் கழித்த
அங்குலி நெடுமையும் அமைத்து உள்தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுந்தி நிலைநீக்கி       (15)

அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரைகட்டி
தோள்கால் வதிந்து தொழிப்படத் தோன்றும்
தும்புருக் கருவியும் துள்ளிநின் றிசைப்ப
எழுஎன உடம்புபெற் றெண்பது அங்குலியின்
தந்திரி நூறு தழங்குமதி முகத்த       (20)

கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயல்உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்புகடிப் பமைத்து
அந்நரம்பு இருபத் தாறுஅங் குலிபெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து       (25)

புறவிரல் மூன்றின் நுனிவிரல் அகத்தும்
அறுபத் திரண்டிசை அனைத்துயிர் வணக்கும்
மருத்துவப் பெயர்பெறும் வானக்கருவி
தூங்கலும் துள்ளலும் துவக்கநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற       (30)

முனிவர்அஞ் சலியுடன் முகமன் இயம்ப
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச
இன்பப் பசுங்கொடி இடப்பால் படர
வெள்ளி அம் குன்றம் விளங்க விற்றிருந்த
முன்னவன் கூடல் முறைவணங் கார்என       (35)

அரவப் பசுந்தலை அரும்பவிழ் கணைக்கால்
நெய்தற் பாசடை நெடுங்காட்டு ஒளிக்கும்
கண்எனக் குறித்த கருங்கயல் கணத்தை
வெள்ளுடல் கூர்வாய் செந்தாட் குருகினம்
அரவுஎயி றணைத்தமுள் இலைமுடக் கைதைகள்       (40)

கான்றலர் கடிமலர் கரந்துறைந் துண்ணும்
கருங்கழி கிடந்த கானல்அம் கரைவாய்
மெய்படு கடுஞ்சூள் மின்எனத் துறந்தவர்
சுவல்உளைக் கவனப் புள்இயல் கலிமான்
நோக்கம் மிறைத்த பரிதிகொள் நெடுந்தேர்ப்       (45)

பின்னொடும் சென்றஎன் பெரும்பிழை நெஞ்சம்
சென்றுழிச் சென்றுழிச் சேறலும் உளவோ
அவ்வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ?
இடைவழி நீங்கிஎன் எதிர்உறுங் கொல்லோ?
அன்றியும் நெடுநாள் அமைந்துடன் வருமோ?       (50)

யாதென நிலைக்குவன் மாதோ
பேதை கொள்ளாது ஒழிமனம் கடுத்தே.       (52)
-------------

86. கண் துயிலாது மொழிதல்


கடுவினை அங்குரம் காட்டிஉள் அழுக்காறு
எண்திசைச் சாகைகொண் டிருள்மனம் பொதுளி
கொடுங்கொலை வடுத்து கடும்பழிச் சடைஅலைந்து
இரண்டுஐஞ் ஞூறு திரண்டஅக் காவதம்
சுற்றுடல் பெற்று, துணைப்பதி னாயிரம்       (5)

மற்றதின் நீண்டு மணிவுடல் போகி
ஐம்பது நூறுடன் அகன்றுசுற் றொழுக்கி
பெருங்கவிழ் இணர்தந்து அவைகீழ்க் குலவிய
அடல்மாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப்       (10)

பன்னிரு கண்விரித்து என்வினை துரக்கும்
அருட்பரங் குன்றம் உடுத்தணி கூடல்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை ஒருத்தனைத்
தெய்வம் கொள்ளார் சிந்தைஅது என்னக்
கிடந்தவல் இரவில் கிளர்மழை கான்ற       (15)

அவலும் உம்பரும் அடக்குபுனல் ஒருவி
தேஅருள் கல்லார் சிந்தையின் புரண்ட
கவலையும் காற்குறி கண்டுபொழில் துள்ளும்
இமையாச் சூரும் பலகண்டு ஒருங்காத்
துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர்       (20)

கடியும் துனைவில் கையகன்று எரிமணித்
தொகையிருள் கொல்லும் முன்றில் பக்கத்து
இணைமுகப் பறைஅறை கடிப்புடைத் தோகை
வயிற்றுள் அடக்கி வளைகிடை கிடக்கும்
முழக்கிமெய் கவரும் முகக்கொலை ஞாளி       (25)

அதிர்குரைப்பு அடக்கி இற்புறத்து அணைந்தநம்
பூம்புனல் ஊரனை பொருந்தா நெடுங்கண்
அன்னையின் போக்கிய அரும்பெருந் தவறு
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்
மயங்காத் தேவர் மருந்துவாய் மடுக்க       (30)

முகம்கவிழ் வேலையில் அறம்குடி போகிய
மாயவல் அரக்கர் தட்டிக்
காய்பார் உகுத்த விதிஒத் தனவே.       (33)
-------------

87. தலைவன் வரவு உரைத்தல்


நாற்கடல் வளைத்த நானிலத்து உயிரினை
ஐந்தருக் கடவுள் அவன்புலத் தினரை
நடந்துபுக்கு உண்டும் பறந்துபுக்கு அயின்றும்
முத்தொழில் தேவரும் முருங்கஉள் உறுத்தும்
நோன்தலைக் கொடுஞ்சூர்க் களவுயிர் நுகர்ந்த       (5)

தழல்வேற் குமரன் சால்பரங் குன்றம்
மணியொடும் பொன்னொடும் மார்பணி அணைத்த
பெருந்திருக் கூடல் அருந்தவர் பெருமான்
இருசரண் அகலா ஒருமையர் உளம்என
சுடர்விளக்கு எடுமின் கோதைகள் தூக்குமின்       (10)

பூவும் பொரியும் தூவுமின் தொழுமின்
சுண்ணமும் தாதும் துனைத்துகள் தூற்றுமின்
கரும்பெயல் குளிறினம் களிமயில் என்னக்
கிடந்தயர் வாட்குமுன் கிளிர்வினைச் சென்றோர்
உடலுயிர் தழைக்கும் அருள்வரவு உணர்த்த       (15)

முல்லைஅம் படர்கொடி நீங்கி, பிடவச்
சொரிஅலர் தள்ளி துணர்ப்பொலம் கடுக்கைக்
கிடைதரவு ஒருவி களவுஅலர் கிடத்தி
பூலைஅம் புடைமலர் போக்கி அரக்கடுத்துக்
கழுவிய திருமணி கால்பெற் றென்ன       (20)

நற்பெருந் தூது காட்டும்
அற்புதக் கோபத் திருவரவு அதற்கே.       (22)
-------------

88. இரங்கல்


பழுதறு தெய்வம் காட்டிப் பண்டையின்
உழுவலின் நலத்தால் ஓருயிர் என்றும்
கடுஞ்சூள் தந்தும் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுடன் உண்டும்
குழமகற் குறித்தும் சிலமொழி கொடுத்தும்       (5)

கையுறை சுமந்தும் கடித்தழை தாங்கியும்
உயிரினில் தள்ளா இரங்கியும் உணங்கியும்
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்
இறடியம் சேவற்கு எறிகவண் கூட்டியும்
புனமும் எம்உயிரும் படர்கரி தடிந்தும்       (10)

அழுங்குறு புனல்எடுத்து அகிற்புகை ஊட்டியும்
ஒளிமணி ஊசல் பரியவிட்டு யாத்தும்
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்
இருவிஅம் புனத்திடை எறிஉயிர்ப்பு எறிந்தும்
தெரித்தலர் கொய்தும் பொழில்குறி வினவியும்       (15)

உடலொடும் பிணைந்தகை ஆய்துயில் ஒற்றி
செறிஇருள் குழம்பகம் சென்றுபளிங் கெடுத்த
இற்பொழில் கிடைக்கும் அளவும்நின் றலைந்தும்
பல்நாள் பல்நெறி அழுங்கினர் இன்று
முகன்ஐந்து மணத்த முழவம் துவைக்க       (20)

ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து
மூவுடல் அணைத்த மும்முகத்து ஓர்முகத்து
எண்கடிப்பு விசித்த கல்லலகு எறிய
இருட்குறள் ஊன்றிஎம் அருங்களி ஆற்றி
உருள்வாய்க் கொக்கரை உம்பர்நாட் டொலிக்க       (25)

கரம்கால் காட்டி தலையம் இயக்கி
இதழ்அவிழ் தாமரை எனும்தகு ணிச்சம்
துவைப்ப நீள்கரத்துக் கவைகள் தோற்றி
கரிக்கால் அன்ன மொந்தைகலித் திரங்க
துடிஎறிந்து இசைப்ப துகளம் பரப்பி       (30)

வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மலக்க
எரியகல் ஏந்திவெம் புயங்கமிசை ஆக்கி
எரிதளிர்த் தன்ன வேணியில் குழவிப்
பசும்பிறை அமுதொடு நிரம்பிய தென்ன
மதுக்குளிர் மத்தமும் மிலைத்தொரு மறுபிறை       (35)

மார்பமும் இருத்திய தென்னக்கூன் புறத்து
ஏனக் கோடுவெண் பொடிப்புறத் தொளிர
பொலன்மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்
தனிக்கொடி காணஎவ் இடத்துயிர் தழைப்ப
ஆடிய பெருமான் அமர்ந்துநிறை கூடல்       (40)

கனவிலும் வினவா தவரினும் நீங்கி
சூளும் வாய்மையும் தோற்றி
நீளவும் பொய்த்தற்கு அவர்மனம் கரியே!       (43)
-------------

89. ஐயம் உற்று ஓதல்


பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும்
எழுமலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி
வரைஉலகு அனைத்தும் வருவது போல
திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும்
வையைநீர் விழவு புகுந்தனம் எனஒரு       (5)

பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்
பொலம்பூண் பெயர்ந்துறை பூணை அருள்தரும்
மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச்
சேக்கோள் கண்ணை செம்மொழிப் பெயர்தந்து
ஒன்றுடன் நில்லா மொழியை மதுத்த       (10)

முதிரா நாள்செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தைஎம் கண்மனம் தோன்ற
அரும்பிய நகையை அன்றே நின்கெழு
என்கண் கண்ட இவ்இடை என்னுளம்
மன்னிநின் றடங்காக் குடுமிஅம் பெருந்தழல்       (15)

பசுங்கடல் வளைந்து பருகக் கொதித்த
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல்செய்
விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும்
கொடுஞ்சூர்க் கொன்ற கூரிலை நெடுவேல்
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன்       (20)

குருகொலி ஓவாப் பனிமலர் வாவி
வயிறு வாய்த்த குழலியம் கிழவோன்
வாழ்பரங் குன்றெனும் மணிஅணி பூண்ட
நான்மறை புகழும் கூடல் எம்பெருமான்
வான்முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும்       (25)

முழுதுணர் ஞானம் எல்லாம் உடைமை
முழுதனுக் கிரகம் கெழுபரம் அநாதி
பாசம் இலாமை மாசறு நிட்களம்
அவிகா ரக்குறி ஆகிய தன்குணம்
எட்டும் தரித்து விட்டறு குற்றமும்       (30)

அருச்சனை வணக்கம் பரஉயிர்க்கு அன்பகம்
பேரருள் திருநூல் பெருந்துறவு எங்கும்
நிறைபொருள் அழுந்தல் அருளினர்க் கூட்டம்
இருள்பவம் நடுங்கல் எனும்குணம் எட்டும்
தமக்கும் படைத்த விதிப்பேற் றடியவர்       (35)

நிலையருள் கற்பென நெடுங்கற்பு உடையோள்
முன்னுறின் அவள் மனம் அங்கே
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே?       (38)
-------------

90. தலைவனோடு ஊடல்


மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்
நகைத்தொகை கூட்டிக் கவைத்தெழு சொல்லும்
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்
இருமனப் பொய்உளத்து ஒருமகள் தன்னை
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர்அலர்       (5)

விதியினும் பன்மைசெய் முகன்படைத்து அளவாச்
சோதியின் படைக்கண் செலஉய்த்து அரும்புசெய்
முண்டக முலையில் சாந்தழித்து அமைத்தோள்
எழுதிய கழைக்கரும்பு எறிந்துநூல் வளர்த்த
கோதை வகைபரிந்து மணிக்கலன் கொண்டு       (10)

கழைத்தோள் நெகிழத் தழைவுடல் குழையத்
திரையினைத் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து
ஒள்நிற வேங்கையின் தாதும் பொன்னும்
சுண்ணம் அவைகலந்து திமிர்ந்துடல் தூற்றி
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி       (15)

இறால்புணர் புதுத்தேன் ஈத்துடன் புணரும்
அவ்வயின் மறித்தும் அன்னவள் தன்னுடன்
கெழுமிய விழவுள் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி அணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும்       (20)

பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடித்து அவிந்த
நிலம்படர் தோகைக் குலம்கொள் சேதாவும்
அவ்வுழி மாத்திரை அரைஎழு காலை
திருநுதற் கண்ணும் மடமகள் பக்கமும்
எரிமழு நவ்வியும் பெறும்அருள் திருவுருவு       (25)

எடுத்துடன் அந்தக் கடுக்கொலை அரவினை
தீவாய்ப் புலியினை திருந்தலர் நகைப்ப
எடுத்தணி பூண உரித்துடை உடுப்ப
முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப
தருவன அன்றி மலரவன் அவன்தொழில்       (30)

நாரணன் ஆங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரருள் நாளினும்
முத்தொழில் தனது முதல்தொழில் ஆக்கி
ஒருதாள் தாரைகொள் முக்கவைச் சுடர்வேல்
தலைஇருந்து அருங்கதி முழுதுநின் றளிக்கும்       (35)

திருநகர்க் காசிப் பதியகத்து என்றும்
வெளியுறத் தோன்றிய இருள்மணி மிடற்றோன்
நேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
தன்பரங் குன்றம் தமர்பெறு கூடற்கு
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும்       (40)

பெரும்புனல் ஊர! எம்இல்
அரும்புனல் வையைஅம் புதுநீர் அன்றே.       (42)
-------------

91. உடன்பட உரைத்தல்


வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையில் சிறுகால் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
ஓர்உழி நில்லாது அலமரல் கொள்ளும்என்
அருந்துணை நெஞ்சிற்கு உறும்பயன் கேண்மதி       (5)

மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்
இருளரு புலனும்மெய்ப் பொருள்அறி கல்வியும்
அமரர்பெற் றுண்ணும் அமுதுருக் கொண்டு
குறுஞ்சொல் குதட்டிய மழலைமென் கிளவியில்
விதலைஉள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும்       (10)

நின்நலம் புகழ்ந்துணும் நீதியும் தோற்றமும்
துவருறத் தீர்ந்தநம் கவர்மனத்து ஊரன்
பொம்மல்அம் கதிர்முலை புணர்வுறும் கொல்எனச்
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்கால் தோல்முலைப் பெரும்பேய்       (15)

அமர்பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,
பேழ்வாய் இடாகினி கால்தொழுது ஏத்திக்
கையடை கொடுத்த வெள்நிண வாய்க்குழவி
ஈமப் பெருவிளக்கு எடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புடல் துளங்கச் சுரிகுரல்       (20)

ஆந்தையும் கூகையும் அணிஓல் உறுத்த
ஓரிபாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செஞ்செவிச் சேவல் கவர்வாய்க் கழுகும்
இட்டசெய் பந்தர் இடைஇடை கால்என
பட்டுலர் கள்ளிஅம் பால்துயில் கொள்ளும்       (25)

சுள்ளிஅம் கானிடை சுரர்தொழுது ஏத்த
மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தில் வாடாது இருத்தி
போர்வலி அவுணர் புகப்பொருது உடற்றிய       (30)

முக்கண் பிறைஎயிற்று எண்தோட் செல்வி
கண்டுளம் களிப்ப கனைகழல் தாமரை
வானக வாவி யூடுற மலர
ஒருதாள் எழுபுவி உருவத் திண்தோள்
பத்துத் திசையுள் எட்டவை உடைப்ப       (35)

ஒருநடம் குலவிய திருவடி உரவோன்
கூடல்அம் பதியகம் போற்றி
நீடநின் றெண்ணார் உளமென நீயே.       (38)
-------------

92. பரத்தையிற் பிரிவு உரைத்தல்


பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப
மற்றவர் மகத்துள் வளர்அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையன் முன்னவன்
அன்னவன் தன்னுடன் கடிகைஏழ் அமர
அன்றியும் இமையவர் கண்எனக் காட்ட       (5)

ஆயிரம் பணாடவி அரவுகடு வாங்க
தேவருண மருந்துடல் நீடநின் றுதவ
உடல்முனி செருவினர் உடல்வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற
தண்மதிக் கலைகள் தானற ஒடுங்க       (10)

எறிந்தெழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன்தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க
பாசுடல் உளைமா ஏழணி பெற்ற
ஒருகால் தேர்நிறைந்து இருள்உடைத்து எழுந்த       (15)

செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தேன் அருந்திஎப் பேர்இசை அனைத்தினும்
முதல்இசைச் செவ்வழி விதிபெறப் பாடிஅத்
தாதுடல் துதைந்தமென் தழைச்சிறை வண்டினம்
பசுந்தாள் புல்இதழ்க் கருந்தாள் ஆம்பல்       (20)

சிறிதுஉவா மதுவமும் குறைபெற அருந்தி அப்
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனல்அணி ஊர!
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப
உழல்தேர் பத்தினன் மகவுஎன நாறி       (25)

முனிதழற் செல்வம் முற்றிப் பழங்கல்
பெண்வரச் சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகட்புணர்ந்து எரிமழு இராமன்
வில்கவர்ந்து அன்னைவினை உள்வைத்து ஏவ
துணையும் இளவலும் தொடரக் கான்படர்ந்து       (30)

மாகுகன் நதிவிட ஊக்கி வனத்துக்
கராதி மாரீசன் கவந்தனுயிர் மடித்து
இருசிறைக் கழுகினர்க்கு உலந்தகடன் கழித்து
எறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்கு
அரிக்கு கருங்கடற்கு ஒரோஒரு கணைவிடுத்து       (35)

அக்கடல் வயிறுஅடைத்து அரக்கனுயிர் வௌவி
இலங்கைஅவ் அரக்கற்கு இளையோன் பெறுகஎனத்
தமதூர் புகுந்து முடிசுமந் தோர்க்கும்
நான்முகத் தவர்க்கும் இருபால் பகுத்த
ஒருநுதல் கண்ணவன் உறைதரு கூடல்       (40)

தெளிவேற் கண்குறுந் தொடியினர் காணின்
நின்பால் அளியமும் நீங்கி
இன்பும்இன்று ஒழிக்கும்எம் கால்தொடல் சென்மே.       (43)
-------------

93. பாணனை வெகுளுதல்


உளம்நகைத் துட்க ஊக்கும்ஓர் விருந்தினை
குவளைவடி பூத்தகண் தவள வாள்நகைக்
குறுந்தொடி மடந்தைநம் தோழியும் கேண்மோ!
கவிர்அலர் பூத்தசெஞ் செம்மைவில் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முள்தாள்       (5)

கூரரி வாளின் தோகைஅம் சேவல்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடல்
கணிச்சிஅம் கைத்தலத்து அருட்பெருங் காரணன்
உலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக்கு ஒருபால்
பகுத்துயிர்க்கு இன்பம் தொகுத்தமெய்த் துறவினன்       (10)

முளரிநீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்துணை
மணிமுடி சுமந்தநம் வயலணி ஊரர்பின்
வளர்மறித் தகர்எனத் திரிதரும் பாண்மகன்
எனக்குறித்து அறிகிலம் யாமே எமது
மணிஒளிர் முன்றில் ஒருபுடை நிலைநின்று       (15)

அன்ன ஊரர் புல்லமும் விழுக்குடி க்கு
அடாஅக் கிளவியும் படாக்கரும் புகழும்
எங்கையர் புலவியில் இகழ்ச்சியும் தம்பால்
தனதுபுன் புகழ்மொழி நீளத் தந்தும்
ஒன்றுபத்து ஆயிரம் நன்றுபெறப் புனைந்து       (20)

கட்டிய பொய்பாப் புனைந்துநிற்கு உறுத்தின்
பேரெழிற் சகரர் ஏழெனப் பறித்த
முரிதிரை வடிக்கும் பரிதி அம்தோழம்
காட்டையுள் இம்பரும் காணத்
தோட்டிநின் றளக்கும் தொன்மையது பெறுமே.       (25)
-------------

94. பாணன் புலந்து உரைத்தல்


இலவுஅலர் தூற்றி அனிச்சம் குழைத்து
தாமரை குவித்த காமர் சேவடித்
திருவினள் ஒருநகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்
தன்னுள் தோன்றித் தான்அதில் தோன்றாத்       (5)

தன்னிடை நிறையும் ஒருதனிக் கோலத்து
இருவடிவு ஆகிய பழமறை வேதியன்
நான்மறைத் தாபதர் முத்தழற் கனல்புக்கு
அரக்கர் துய்த்துடற்றும் அதுவே மான
பாசடை மறைத்தெழு முளரிஅம் கயத்துள்       (10)

காரான் இனங்கள் சேடெறிந்து உழக்கும்
கூடற்கு இறையவன் காலற் காய்ந்தோன்
திருநடம் குறித்தநம் பொருபுனல் ஊரனை
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையர்ப்
புணர்த்தினன் பாண்தொழில் புல்லன்என் றிவனை       (15)

கோலின் கரத்தின் தோலின் புடைப்ப
கிளைமுள் செறிந்த வேலிஅம் படப்பைப்
படர்காய்க்கு அணைந்தபுன் கூழைஅம் குறுநரி
உடையோர் திமிர்ப்ப வரும்உயிர்ப்பு ஒடுக்கி
உயிர்பிரி வுற்றமை காட்டிஅவர் நீங்க       (20)

ஓட்டம் கொண்டன கடுக்கும்
நாட்டவர் தடையமற் றுதிர்ந்து நடந்ததுவே.       (22)
-------------

95. தோழிக்கு உரைத்தல்


வாய்வலம் கொண்ட வயிற்றெழு தழற்கு
ஆற்றாது அலந்து காற்றெனக் கொட்புற்று
உடைதிரை அருவி ஒளிமணி காலும்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்
கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண்       (5)

பவளம் தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுனல் ஊரனை பொதுஎன அமைத்த
அக்கடி குடிமனை அவர்மனை புகுத்தி
அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோஎன
சுரைதலை கிடைத்த இசைஉளர் தண்டெடுத்து       (10)

அளிக்கார்ப் பாடும் குரல்நீர் வறந்த
மலைப்புள் போல நிலைக்குரல் அணைந்தாங்கு
உணவுளம் கருதி ஒளிஇசை பாட
முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து
ஒருபால் அணைந்தஇவ் விரிமதிப் பாணற்கு       (15)

அடுத்தன உதவுழி வேண்டும்
கடுத்திகழ் கண்ணி அக்கல்லை இக்கணமே.       (17)
-------------

96. பாங்கி அன்னத்தோடு அழுங்கல்


வெறிமறி மடைக்குரல் தோல்காய்த் தென்ன
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியகம் மெய்எனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழுமுடி தேய்ப்ப
தளிர்த்துச் சிவந்த தண்டையம் துணைத்தாள்       (5)

சேயோன் பரங்குன்று இழைஎனச் செறித்து
தமிழ்க்கலை மாலை சூடிதாவாப்
புகழ்க்கலை உடுத்துப் புண்ணியக் கணவர்
பல்நெறி வளனின் பூட்சியின் புல்லும்
தொல்நிலைக் கூடல் துடிக்கரத்து ஒருவனை       (10)

அன்புளத்து அடக்கி இன்பம்உண் ணாரென
சேவல் மண்டலித்துச் சினைஅடை கிடக்கும்
கைதைவெண் குருகுஎழ மொய்திரை உகளும்
உளைகடற் சேர்ப்பர் அளிவிடத் தணப்ப
நீலமும் கருங்கொடி அடம்பும் சங்கமும்       (15)

கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து
அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அணுங்கலின்
வட்குடை மையல் அகற்றிஇன்பு ஒருகால்
கூறவும் பெறுமே ஆறு அதுநிற்க
இவள்நடை பெற்றும் இவட்பயின்று இரங்கியும்       (20)

ஓருழி வளர்ந்த நீரஇவ் அன்னம்
அன்றெனத் தடையாக் கேண்மை
குன்றும் அச்சூளினர் தம்மினும் கொடிதே.       (23)
-------------

97. இரவு இடை விலக்கல்


முதுகுறிப் பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதல் தெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்காடு உருத்திப் பலிமுதல் பராவக்
கிள்ளைஅவ் அயலினர் நாவுடன்று ஏத்தப்
பக்கம் சூழுநர் குரங்கம் மண்படப்       (5)

பெற்றுயிர்த் தயரும் பொற்றொடி மடந்தைதன்
குருமணி ஓவியத் திருநகர்ப் புறத்தும்
கரியுடன் உண்ணார் பழிஉளம் ஒத்த
இருளுடைப் பெருமுகில் வழிதெரிந்து ஏகன்மின்
அரிமான் உருத்த நூற்றுவர் மதித்த       (10)

புடைமனச் சகுனி புள்ளிஅம் கவற்றில்
அத்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு
ஒலிவாய் ஓதிமம் எரிமலர்த் தவிசிருந்து
ஊடுஉகள் சிரலைப் பச்சிற அருந்தும்
பழனக் குருநாடு அணிபதி தோற்று       (15)

முன்னுறும் உழுவலின் பன்னிரு வருடம்
கண்டீ ரவத்தொடு கறையடி வளரும்
குளிர்நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின்
அனைத்துள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக       (20)

ஊழ்முறையே எமக்கு உளமண் கருதிச்
சேறி என்றிசைப்ப செல்பணித் தூதினர்க்கு
ஒருகால் அளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணம்குறித் தெனவே.       (24)
-------------

98. பருவம் குறித்தல்


அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க
காந்தளம் கடுக்கை கனல்தனம் மலர
கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப
பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன்பூ மறைய       (5)

கோபம் ஊர்தர மணிநிரை கிடப்ப
தென்கால் திகைப்ப வடகால் வளர
பொறிவிழிப் பாந்தள் புற்றளை வதிய
வரிஉடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப
இடிக்குரல் ஆனேற் றினம்எதிர் செறுப்ப       (10)

பொறிக்குறி மடமான் சுழித்தலைக் கவிழ
முடையுடல் அண்டர் படலிடம் புகுத
கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப
காயாக் கண்கொள முல்லை எயிறுற
முசுக்கலை பினவுடன் முழையுறை அடங்கக்       (15)

கணமயில் நடன்எழ காளி கூத்தொடுங்க
சாதகம் முரல்குரல் வாய்மடை திறப்ப
மாக்குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்ப
பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப
உடைநறவு உண்டு வருடை வெறுப்ப       (20)

அகில்சுடு பெரும்புனம் உழுபதன் காட்ட
வெறிவிழிச் சவரர் மாஅடி ஒற்ற
மணந்துடன் போக்கினர்க்கு உயங்குவழி மறுப்ப
புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப
குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க       (25)

இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற
நிலமகள் உடலமும் திசைகளும் குளிர
ஒலிகடல் இப்பி தரளம் சூல்கொள
இவைமுதல் மணக்க எழுந்தகார் கண்டை       (30)

வறுநீர்மலர் என மாழ்கலை விடுமதி
மறைஅடி வருத்திய மறைவனத்து ஒருநாள்
மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்கு
இருவகை ஏழ்எனும் திருஉலகு அனைத்தும்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல       (35)

இருபுறம் போற்ற ஒருதேர் வரத்தினர்க்கு
ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர
பாசறை சென்ற நாள்நிலம் குழிய
எண்ணி விரல்தேய்ந்த செங்கரம் கூப்புக
கொய்தளிர் அன்ன மேனி
மொய்இழை பூத்த கவின்மலர்க் கொடியே!       (41)
-------------

99. நெறி விலக்கிக் கூறல்


வனப்புடை அனிச்சம் புகைமூழ் கியதென
இவ்வணங்கு அவ்வதர்ப் பேய்த்தேர்க்கு இடைந்தனள்
தென்திசைக் கோமகன் பகடுபொலிந் தன்ன
கறையடிச் சென்னியின் நகநுதி போக்கி
குருத்தயில் பேழ்வாய்ப் பல்படைச் சீயம்       (5)

அதர்தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன்
கடுங்கால் கொற்றத்து அடும்தூ துவர்எனத்
தனிபார்த்து உழலும் கிராதரும் பலரே
ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி
இருவான் போகிய எரிசுடர்க் கடவுள்       (10)

மாதவர் ஆமென மேல்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோய்! அன்பினர்க்கு அருளும்
கூடற் பதிவரும் ஆடற் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டமர் சடையோன்
இருசரண் அடைந்த மறுவிலர் போல       (15)

அருளுடன் தமியை ஆடினை ஐய!
தண்ணீர் வாய்த்தரும் செந்நிறச் சிதலை
அதவுஉதிர் அரிசி அன்ன செந்தினை
நுண்பதம் தண்தேன் விளங்கனி முயல்தசை
வெறிக்கண் கவைஅடிக் கடுங்கால் மேதி       (20)

அன்புமகப் பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறள்பால் இன்னஎம் முழைஉள அயின்று
கார்உடல் அனுங்கிய பைங்கன் கறையடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடுமறை அதள்வேய் சில்இடக் குரம்பையில்       (25)

மற்றதன் தோலில் உற்றிரு வீரும்
கண்படுத்து இரவி கீறுமுன்
எண்பட நும்பதி ஏகுதல் கடனே !       (28)
-------------

100. ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி


வெறிக்குறுங் கதுப்பின் வெள்எயிற்று எயிற்றியர்
செம்மணி சுழற்றித் தேன்இலக்கு எறிதர
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யாரு உந்தும் கல்வரை நாட
சொல்தவறு உவக்கும் பித்தினர் சேர்புலன்       (5)

சிறிதிடைத் தெருள்வதும் உடனுடன் மருள்வதும்
ஆமெனக் காட்டும் அணிஇருள் மின்னலின்
நிணம்புணர் புகர்வேல் இணங்கு துணையாக
காமம் ஆறுள் கவர்தரும் வெகுளநர்
படிறுளம் கம்ழௌம் செறிதரு தீஉறழ்       (10)

கொள்ளிவாய்க் குணங்கு உள்ளுதோறு இவறிய
மின்மினி உமிழும் துன்னலர் கள்ளியை
அன்னைஎன்று அணைதரும் அரைஇருள் யாமத்து
கடுஞ்சுடர் இரவி விடும்கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேல்நிலம் புடைத்து       (15)

துணைக்கரம் பிடித்தெனத் தோற்றிடும் பொழில்சூழ்
கூடல் பதிவரும் குணப்பெருங் குன்றினன்
தாமரை பழித்த இருசரண் அடையாக்
கோளினர் போலக் குறிபல குறித்தே
ஐந்தமர் கதுப்பினள் அமைத்தோள் நசைஇ       (20)

தருவின்கிழவன் தான்என நிற்றி
நின்னுயிர்க்கு இன்னல் நேர்தரத் திருவின்
தன்னுயிர்க்கு இன்னல் தவறில ஆ!ஆ!
இரண்டுயிர் தணப்பென எனதுகண் புணரஇக்
கொடுவழி இவ்வரவு என்றும்
விடுவது நெடும்புகழ் அடுவே லோயே !       (26)
--------

This file was last revised on 31 October 2021.
Please send corrections and comments to the webmaster (pmadurai AT gmail.com).