pm logo

மயிலை சீனி வெங்கடசாமி தொகுத்தருளிய
கூத்தியல் திரட்டு

kUttiyal tiraTTu, compiled by mayilai cIni vEngkaTacAmi
In tamil script, Unicode formatAcknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext: Preparation, Proof reading in TSCII, UTF-8 versions: N D LogaSundaram & his Sister Ms.N.D.Rani, Chennai-INDIA
Preparation of PDF version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was put online first on 15 June 2009.

© Project Madurai, 1998-2021
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
'கூத்தியல் திரட்டு'
(இசை-நாட்டியக்கலைஇயல் நுற்பாக்கள்)
திரட்டியோன்-மயிலை சீனி வேங்கடசாமி

"அப்பெரியார்தம் 'மறைந்து போன தமிழ் நூல்கள்' பக்கங்களிலிருந்து.
அந்நூல் கடையில் காண்பது"
"இணைப்பு 1 - பெயர் தெரியாத நூல்கள்


"இதுகாறும் மறைந்துபோன நூல்களைப்பற்றி ஆராய்ந்தோம். மறைந்து போன நூல்களில் சிலவற்றின் பெயர்களும் மறைந்து போயின. உரையாசிரியர்களில் சிலர் தங்கள் உரையில் சில செய்யுள்களையும் சூத்திரங்களையும் மேற்கோள் காட்டி அவை இன்ன நூலை சேர்ந்தவை என்று கூறாமலே விட்டுவிட்டனர் அந்தச் செய்யுள்களும் சூத்திரங்களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதும் அறியக்கூடவில்லை. இங்கு அந்தச் செய்யுள்களையும் சூத்திரங்களையும் தொகுத்துக் கூறுகிறோம்.

'அடியார்க்கு நல்லார்' (மற்றும் அரும்பத உரையாசிரியர்) என்னும் உரை ஆசிரியர் 'சிலப்பதிகார'க் காவியத்திற்கு எழுதிய உரையில் கீழ்க்கண்ட சூத்திரங்களில் 'பரதநாட்டிய'த்திற்கு உரிய 'கை'களை (முத்திரைகளை) புலப்படுத்துகின்றனர்.

இச்சூத்திரங்கள் எந்தநூலிலிருந்து எடுக்கப்பட்டவைஎன்பது தென்படவில்லை"
-------------

நூற்பாக்கள்
சிலப்பதிகார உரையாசிரியர் மேற்கோள்கள்


ஆடல் கலை
ஓர்இரு கைகள் கொண்டு அமைக்கும் குறிப்புகள்

"கைதான் இரண்டுவகைப்படும். 'இணையா வினைக்கை'யும்
'இணைக்கை'யும் என. இவை 'ஒற்றைக்கை' 'இரட்டைக்கை' என்று வழங்கப்படும்"

மெய்பெறத் தெரிந்து மேலோர் ஆய்ந்த
கைவகைத் தன்னைக் கருதுங் காலை
இணையா வினைக்கை இணைக்கை என்ன
அணையுமே என்ப அறிந்திசி னோரே.       1

இணையா(து) இயல்வ(து) இணையா வினைக்கை
இணைந்(து)உடன் வருவ(து) இணைக்கை ஆகும்.       2

இணையா வினைக்கை-33 வகை
(வலம்/இடம் எனும் கைகளில் ஒன்றினை மட்டும் கொண்டு செய்யும் குறிப்புகள்)
இணையா வினைக்கை இயம்பும் காலை
அணைவுறு பதாகை, திரிபதா கை,யே
கத்தரிகை, தூப(ம்), அராளம், இளம்பிறை,
சுகதுண் டம்,மே முட்டி, கடகம்,
சூசி, பதும கேசிகம், துணித்த
மாசில் காங்கூலம், வழுவறு கபித்தம்,
விற்பிடி, குடங்கை, அலாபத் திர,மே
பிரமரம், தன்னோடு தாம்பிர சூடம்,
பசாச(ம்), முகுளம், பிண்டி, தெரிநிலை,
பேசிய மெய்ந்நிலை, உன்ன(ம்), மண்டலம்,
சதுர(ம்), மான்தலை, சங்கே, வண்டே,
அதிர்வி(ல்) இலதை, கபோத(ம்), மகரமுகம்,
வலம்புரி, தன்னொடு முப்பத்து மூன்றென்(று)
இலங்குமொழிப் புலவர் இசைத்தனர் என்ப.       3

பதாகை
பதாகை என்பது பகரும் காலைப்
பெருவிரல் குஞ்சித்(து) அலாவிரல் நான்கு(ம்)
மருவி நிமிரும் மரபிற்(று) என்ப.       4
(பதாகை=பாதம்-காலடி)

(இதுவுமது)

எல்லா விரலு(ம்) நிமிர்ந்(து)இடை இன்றிப்
பெருவிரல் குஞ்சித் தல்பதாகை ஆகும்.       5

சிலம்பு 8-27 அடி, உரை மேற்கோள்,
அடியார்க்கு நல்லார்


(இதுவுமது)
பெருவிரல் குஞ்சித்(து) ஏனைய நான்கு(ம்)
நிரலே நிமர்தல் பதாகை ஆகும்.       6

சிலம்பு 8-27 அடி, உரை மேற்கோள்,
அரும்பத உரையாசிரியர்


திரிபதாகை
திரி பதாகை தெரியுங் காலை
அறை பதாகையில் நுனிவிரல் முடக்கின்(அ)·
தாம்என மொழிப அறிந்திசி னோரே.       7

கத்தரிகை
கத்தரி கையே காண்தக விரிப்பின்
அத் திரி பதாகையி(ன்) அணியின் புறத்தைச்
சுட்டு அகம் ஒட்ட விட்டு நிமிர்ப் பதுவே.       8

தூபம்
தூபம் என்பது துணியும் காலை
விளங்குகத் தரிகை விரல்அகம் வளைந்து
துளங்கும் என்ப துணி(பு)அறிந் தோரே.       9

அராளம்
அராளம் ஆவ(து) அறிவாக் கிளப்பின்
பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரல் முடக்கி
விரல்கள் மூன்று(ம்) நிமிர்ந்(து)அகம் வளைதற்(கு)
உரிய(து) என்ப உணர்ந்திசி னேரே.       10
(அராளம்=அரா=பாம்பு)

இளம்பிறை
சுட்டும் பேடு(ம்) அநாமிகை சிறுவிரல்
ஒட்டி அகம்வளைய ஒசித்த பெருவிரல்
விட்டு நீங்கும் விதியிற்(று) என்ப.       11

சுகதுண்டம்
சுகதுண்ட(ம்) என்பது தொழில்பெறக் கிளப்பின்
சுட்டு விரலும் பெருவிரல் தானும்
ஒட்டி உகிர்நுனை கௌவி முன்வளைந்(து)
அநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர(ல்)
தான்மிக நிமிர்ந்த தகுதிற்(று) என்ப.       12
(சுகம்=கிளி)

முட்டி
முட்டி என்பது மொழியும் காலைச்
சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல்
இறுக பிடித்த முறைமைத்(து) என்ப.       13

கடகம்
கடக முகமே கருதும் காலைப்
பெருவிரல் நுனியும் சுட்டுவிரல் நுனியும்
பருவ வளைந்(து) அவ்வுகிர்நுனி கௌவி
ஒழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன(ர்) என்ப முடி(பு)அறிந் தோரே.       14
(கடகம்=நண்டு)

சூசி
சூசி என்பது துணியும் காலை
நடுவிரல் பெருவிரல் என்(று)இவை தம்மில்
அடைவுபட ஒற்றிச் சுட்டுவிரல் நிமிர
ஒழிந்தன வழிவழி முடங்கி நிற்ப
மொழிந்தனர் மாதோ முடி(பு)அறிந் தோரே.       15
(சூசி=ஊசி-ஆணி / கோயில் நுழை வாயிற் காப்போர் துவாரபாலகர் ஒருவர் காட்டும் குறிப்பு)

பதுமகோசிகம்
பதும கோசிகம் பகரும் காலை
ஒப்பக் கைவளைந்(து) ஐந்து விரலு(ம்)
மெய்பட அகன்ற விதியிற்(று) ஆகும்.       16
(பதுமகோசிகம்=மலர்ந்த தாமரை-கவிநிலை / கோயில் நுழை வாயிற் காப்போர்-துவாரபாலகர் காட்டும் குறிப்பு)

காங்கூலம் 3 வகை
1 குவி காங்கூலம்
காங்கூ லம்மே கருதும் காலைச்
சுட்டும் பேடும் பெருவிரல் மூன்றும்
மொட்டின்முன் குவிய அநாமிகை முடக்கிச்
சிறுவிரல் நிமர்ந்த செய்கைத்(து) ஆகும்.       17

2 முகிழ் காங்கூலம்
முகிழ்காங் கூல(ம்) முந்துற மொழிந்த
குவிகாங் கூலம் குவிஇழந் ததுவே.       18

3 மலர்காங்கூலம்
மலர்காங் கூல(ம்) அதுமலர்ந் ததுவே.       19

கபித்தம்
கபித்தம் என்பது காணும் காலைச்
சுட்டுப் பெருவிரல் ஒட்டிநுனி கௌவியு(ம்)
அல்ல மூன்று(ம்) மெல்லப்பிடிப் பதுவே.       20
(கபித்தம்=கவித்தம்=குடை)

விற்பிடி
விற்பிடி என்பது விரிக்கும் காலைச்
சுட்டொடு பேடி அநாமிகைச் சிறுவிரல்
ஒட்டி அகப்பால் வளையப் பெருவிரல்
விட்டு நிமிரும் விதியிற்(று) ஆகும்.       21

குடங்கை
குடங்கை என்பது நுவலும் காலை
உடங்குவிரல் கூட்டி உள்குழிப் பதுவே.       22

அலாபத்திரம்
அலாபத் திரமே ஆயும் காலை
புரைமையின் மிகுந்த சிறுவிரல் முதலாய்
வருமுறை ஐந்தும் வளைந்துமறி வதுவே.       23

பிரமரம்
பிரமரம் என்பது பேணும் காலை
அநாமிகை நடுவிரல் அமைவுறப் பொருந்தி
தாம்வலம் சாயத் தகைசால் பெருவிரல்
ஒட்டிய நடுவுள் சேரச் சிறுவிரல்
சுட்டு வளைந்துபின் தோன்றிய நிலையே.       24

தாம்பிர சூடம்
தாம்பிர சூடமே சாற்றும் காலைப்
பேடே சுட்டுப் பெருவிரல் நுனிஒத்துக்
கூடி வளைந்து சிறுவிரல் அணிவிரல்
உடன்தின் முடங்கி நிமிரநிற் பதுவே.       25

பசாசம் 3 வகை
பசாசம் என்பது பால்படக் கிளப்பின்
அகநிலை முகநிலை உகிர்நிலை என்னத்
தொகைநிலை பெற்ற மூன்(று) என மொழிப
அவைதாம்
சுட்டுவிரல் நுனியில் பெருவிரல் அகப்பட
ஒட்டி வளைந்த(து) அகநிலை, முகநிலை
அவ்விரல் நுனிகள் கௌவ்விப் பிடித்தல்
செவ்விதாகும், சிறந்த உகிர்நிலை
உகிர்நுனை கௌவிய(து), ஒழிந்த மூன்றும்
தகைமையில் நிமிர்த்தல் அம் மூன்றற்கும் தகுமே.       26
(பசாசம்=பாசக்கயிறு)

முகுளம்
முகுளம் என்பது மொழியும் காலை
ஐந்து விரலும் தலைகுவிந்(து) ஏற்ப
வந்து நிகழு(ம்) மாட்சித்(து) ஆகும்.       27

பிண்டி
பிண்டி என்பது பேசும் காலைச்
சுட்டுப் பேடிஅ நாமிகை சிறுவிரல்
ஒட்டி நெகிழ முடங்கஅவற் றின்மிசை
விலங்குறப் பெருவிரல் விட்டும் கட்டியும்
இலங்குவிரல் வழிமுறை பெற்றலும் இயல்பே.       28

தெரிநிலை
தெரிநிலை என்பது செப்பும் காலை
ஐந்து விரலும் அலர்ந்துகுஞ் சித்த
கைவகை என்ப கற்றறிந் தோரே.       29

மெய்ந்நிலை
மெய்ந்நிலை என்பது விளம்பும் காலைச்
சிறுவிரல் அநாமிகை பேடொடு சுட்(டு)இவை
உறுத(ல்) இன்றி நிமிரச் சுட்டின்மிசைப்
பெருவிரல் சேரும் பெற்றித்(து) என்ப.       30

உன்னம்
உன்ன நிலையே உணரும் காலைப்
பெருவிரல் சிறுவிரல் என்றிவை இணைய
வருமுறை மூன்றும் மலர்ந்துநிற் பதுவே.       31

மண்டலம்
மண்டலம் என்பது மாசறக் கிளப்பின்
பேடு நுனியும் பெருவிரல் நுனியும்
கூடி வளைந்துதம் உகிர்நுனை கௌவி
ஒழிந்த மூன்றும் ஒக்க வளைவ(து)என
மொழிந்தனர் என்ப முழு(து)உணர்ந் தோரே.       32

சதுரம்
சதுரம் என்பது சாற்றும் காலைப்
மருவிய மூன்று(ம்) நிமிர்ந்(து)அகம் வளைய
பெருவிரல் அகம்உறப் பொற்பச் சேர்த்திச்
சிறுவிரல் பின்பே நிமிர்ந்த செவ்வியின்
இறுமுறைத்(து) என்ப இயல்(பு)உணர்ந் தோரே.       33

மான்தலை
மான்தலை என்பது வகுக்கும் காலை
மூன்(று)இடை விரலும் நிமிர்ந்(து)அகம் இறைஞ்சிப்
பெருவிரல் சிறுவிரல் என்(று)இவை நிமிர்ந்து
வருவ(து)என்ப வழக்(கு)அறிந் தோரே.       34

சங்கம்
சங்(கு)எனப் படுவது சாற்றுங் காலைச்
சிறுவிரல் முதலா(ய்)ச் செறிவிரல் நான்கும்
பெறுமுறை வளையப் பெருவிரல் நிமிர்ந்தாங்(கு)
இறுமுறைத்(து) என்ப இயல்(பு)உணர்ந் தோரே.       35

வண்டு
வண்(டு)என் பதுவே வகுக்கும் காலை
அநாமிகை பெருவிரல் நனிமிக வளைந்து
தாம்நுனி ஒன்றித் தகைசால் சிறுவிரல்
வாலிதின் நிமிர மற்றைய வளைந்த
பாலின என்ப பயன்தெரிந் தோரே.       36

இலதை
இலதை என்பது இயம்பும் காலை
பேடியும் சுட்டும் பிணைந்(து)உடன் நிமிர்ந்து
கூடிய பெருவிரல் கீழ்வரை இறுகக்
கடைஇரு விரலும் பின்னர் நிமிர்ந்த
நடையின(து) என்ப நல்நெறிப் புலவர்.       37

கபோதம்
காணும் காலைக் கபோதம் என்பது
பேணிய பதாகையில் பெருவிரல் நிமிரல்.       38
(கபோதம்=வெளியே நீளும் கூரை உறுப்பு-அணங்கு)

மகர முகம்
மகரமுக(ம்) என்பது வடிக்கும் காலைச்
சுட்டொடு பெருவிரல் கூட ஒழிந்தவை
ஒட்டி நிமிர்ந்தாங்(கு) ஒன்றா ஆகும்.       39
(மகரம்=முதலை)

வலம்புரி
வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட
நலம்திகழ் பெருவிரல் ஐயுற நிமிர்ந்து
சுட்டுவிரல் முடங்கிச் சிறுவிரல் நடுவிரல்
விட்டுநிமிர்ந்(து) இறைஞ்சும் விதியிற்(று) என்று
கூறுவர் தொல்நூல் குறிப்(பு)உணர்ந் தோரே.       40
(வலம்புரி=சங்கு)

பிணையல்-இணைக்கை
(வலம் இடம் இரு கைகளும் சேர்ந்து உணர்த்துவன)

எஞ்சுதல் இல்லா இணைக்கை இயம்பின்
அஞ்சலி, தன்னொடு புட்பாஞ் சலி,யே
பதுமாஞ் சலி,யே கபோதம், கற்கடகம்,
நலமாம் சுவத்திகம், கடகா வருத்த(ம்),
நிடதம், தோரம்,முன் சங்க(ம்), மேம்பட
உறுபுட் பபுட(ம்), மகரம், சயந்த(ம்),
அந்தம்இல் காட்சி அபய அத்தம்,
எண்ணிய வருத்த மானம், தன்னொடு
பண்ணுங் காலைப் பதினைந்(து) என்ப.       41

அஞ்சலி
அஞ்சலி என்பது அறிவுறக் கிளப்பி(ன்)
எஞ்சல் இன்றி இருகையும் பதாகையால்
வந்(து) அகம் பொருந்து மாட்சித்(து) என்ப.       42
(அஞ்சலி=வணக்கம்)

புட்பாஞ்சலி
புட்பாஞ் சலியே பொருத்தஇரு குடங்கையும்
காட்டி நிற்கும் காட்சிய(து) என்ப.       43
(புட்பாஞ்சலி=பூச்சொரிதல்)

பதுமாஞ்சலி
பதுமாஞ் சலியே பதும கோசிகம்
எனஇரு கையும் இயைந்துநிற் பதுவே.       44
(பதுமாஞ்சலி=குவிகை-தாமரை மொக்கு-வணக்கம்)

கபோதகம்
கருதுங் காலைக் கபோதக இணைக்கை
இருகையும் கபோதம் இசைந்துநிற் பதுவே.       45

கற்கடகம்
கருதும் காலைக் கற்கட கம்மே
தெரிநிலை அங்குலி இருகையும் பிணையும்.       46

சுவத்திகம்
சுவத்திகம் என்பது சொல்லுங் காலை
மணிகட் டமைந்த பதாகை இரண்டையும்
மணிக்கட்(டு) ஏற்றி வைப்ப(து) ஆகும்.       47

கடகா அருத்தம்
கருதிய கடகா வருத்தக் கையே
இருகையும் கடக மணிக்கட்(டு) இயைவது.       48

நிடதம்
நிடதம் என்பது நெறிப்படக் கிளப்பின்
முட்டி இரண்டுகை யும்சம மாகக்
ஒட்டி நிற்கும் காட்சியத்(து) என்ப.       49

தோரம்
தோரம் என்பது துணியும் காலை
இருமையும் பதாகை அகம்புறம் ஒன்ற
மருவி முன்தாழும் வழக்கிற்(று) என்ப.       50

உற்சங்கம்
உற்சங்கம் என்ப(து) உணரும் காலை
ஒருகை பிறைக்கை ஒருகை அராளம்
தெரிய மணிக்கட்டில் ஏற்றிவைப் பதுவே.       51

புட்பபுடம்
புட்பபுடம் என்பது புகலும் காலை
ஒத்(து) இரண்டு குடங்கையு(ம்) இயைந்து
பக்கம் காட்டும் பான்மைத்(து) என்ப.       52

மகரம்
மகரம் என்பது வாய்மையி(ன்) உரைப்பின்
கபோதம் இரண்டும் அகம்புறம் ஒன்ற
வைப்ப(து) என்றே உரைத்தனர் புலவர்.       53
(மகரம்=இங்கு மீன்)

சயந்தம் நூற்பா கிடைக்கவில்லை

அபய அத்தம்
அபயஅத் தம்மே அறிவுறக் கிளப்பின்
வஞ்சமில் சுகதுண்ட(ம்) இருகையும் மாட்சியின்
நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே.       54

வருத்தமானம்
வருத்த மானம் வகுக்கும் காலை
முகுளக் கையில் கபோதக் கையை
நிகழச் சேர்த்தும் நெற்யிற்(று) என்ப.       55

அவைதாம்
எழிற்கை அழகே தொழிற்கை தொழிலே
பொருட்கை கவியில் பொரு(ள்) ஆகும்மே.       56

இசை

சிலம்பு கானல் வரியின் பழைய அரும்பத உரை ஆசிரியர் மேற்கோள் காட்டிய நூற்பாக்கள்
பண்ணல்
வலக்கை பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின்(று) இளிவழி கேட்டும் - - - - -
இணைவழி ஆராய்ந்து இணைகொள முடிப்பது
விளைப்பரு மரபில் பண்ணல் ஆகும் (1) .       57

பரிவட்டணை
பரிவட் டணையின் இலக்கணம் தானே
மூவகை நடையின் முடிவிற்(று) ஆகி
வலக்கை இருவிரல் வனப்புறத் தழீஇ
இடக்கை விரலின் இயைவ(து) ஆகத்
தொடையடு தோன்றியும் தோன்றா(து) ஆகியு(ம்)
நடையடு தோன்று(ம்) நயத்த(து) ஆகும் (2) .       58

ஆராய்தல்
ஆராய்தல் என்பது அமைவரக் கிளப்பின்
குரல்முத லாக இணைவழி கேட்டு(ம்)
இணையி லாவழி பயனொடு கேட்டும்
தாரமும் உழையும் தம்மில் கேட்டும்
விளரி கைக்கிளை விதிஉளிக் கேட்டும்
தளரா(து) ஆகிய தன்மைத்(து) ஆகும் (3) .       59

தைவரல்
தைவரல் என்பது சாற்றும் காலை
மையறு சிறப்பின் மன(ம்)மகிழ்(வு) எய்தி
தொடையடு பட்டும் படாஅ(து) ஆகியும்
நடையடு தோன்றி யாப்புநடை இன்றி
ஓவாச் செய்தியின் வட்டணை ஒழுகிச்
சீர்(ஏ)ற்(று) இயன்றும் இயலா(து) ஆகியும்
நீர(து) ஆகும் நிரைய(து) என்ப (4) .       60

செலவு
செல(வு)எனப் படுவதன் செய்கை தானே
பாலை பண்முறை திறமே கூட(ம்)என
நால்வகை இடத்து நயத்த(து) ஆகி
இயக்கமும் நடையும் எய்திய வகைத்தாய்ப்
பதினோ(ரு) ஆடலும் பாணியும் இயல்பும்
விதிநான்கு தொடர்ந்து விளங்கிசெல் வதுவே.       (5) 61

விளையாட்டு
விளையாட்(டு) என்பது விதிக்கும் காலை
கிளவிய வகையின் எழுவகை எழாலும்
அளவிய தகைய(து) ஆகும் என்ப (6).       62

கையூழ்
கைஊழ் என்பது கருதும் காலை
எவ்விடத் தானும் இன்பமும் சுவையும்
செவ்விதின் தோன்றி சிலைத்துவர( ல்) இன்றி
நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
பால்படத் தோன்றும் பகுதித்(து) ஆகும் (7).       63

குறும்போக்கு
துள்ளல் கண்ணும் குடக்கூத்(து) உள்ளும்
தள்ளா(து) ஆகிய உடனிலைப் புணர்ச்சி
கொள்வன எல்லாம் குறும்போக்(கு) ஆகும் (8).       64

யாழ் வாசிக்கும் முறைமை

சிலம்பு 8-26 அடி உரையில் அரும்பத உரையாசிரியரும்
அடியார்க்கு நல்லாரும் மோற்கோள் காட்டியது


நல்லிசை மடந்தை நல்எழில் காட்டி
அல்லியம் பங்கயத்(து) அய(ன்)இனிது படைத்த
தெய்வம் சான்ற தீம்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த்(து)
இருகையின் வாங்கி இடவையின் இரீஇ
மருவிய வினய மாட்டுதல் கடனே.       65

வரிப்பாட்டு

சிலப்பதிகாரம் கானல்வரி உரையில் அரும்பத உரையாசிரியர் காட்டிய நூற்பாக்கள்
கூடைச் செய்யுள்
கூடை என்பது கூறும் காலை
நான்(கு)ஆடி ஆகி இடைஅடி மடக்கி
நான்(கு)அடி அ·கி நடத்தற்கும் உரித்தே (1).       66
(அ·கி=குறுகி-சிறுத்து, ஞானசம்பந்தர்-திருமுக்கால் 3-94>>99)

வாரச் செய்யுள்
வாரம் என்பது வகுக்கும் காலை
நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கி
தொடைஅமைந்(து) ஒழுகும் தொன்மைத்(து) என்ப (2) .       67
(தேவாரம்=தேவ+வாரம், தேவன்=கடவுள்)

முகம்உடை வரி
நில(ம்)முத(ல்) ஆகிய உலகியல் வரிக்கு
முகமாய் நிற்றலின் முகம்)எனப் படுமே (3).       68 (திருமுகப் பாசுரம்-11ம் திருமுறை முதல்பாடல்)
சிந்து நெடிலும் சேரினும் வரையார் (4).       69

சார்த்துவரி
பாட்டுடைத் தலைவன் பதியடும் பேரொடும்
சார்த்திப் பாடின் சார்த்(து)எனப் படுமே (5).       70
(சார்த்துமுறை-வைணவ மரபில் ஓதுதல்)

முரிச் சார்த்து
முரிந்தவற - - - - - - - - - - - - - - - -
குற்றெழுத்(து) இயலால் குறுகிய நடையால்
ஏற்ற அடித்தொகை மூன்றும் இரண்டும்
குற்ற(ம்) இல்எனக் கூறினர் புலவர் (6).       71
(ஞானசம்பந்தர்-திருவிருக்குறள் 1:90-96)

நிலைவரி
முகமும் முரியும் தன்னொடு முடியும்
நிலையை உடையது நிலைஎனப் படுமே (7).       72

முரிவரி
எடுத்த இயலும் இசையும் தம்மில்
முரித்துப் பாடுதல் முரிஎனப் படுமே (8).       73(*) மாடகம்
மாடகம் என்பது வகுக்கும் காலை
கருவிளம் காழ்ப்பினை நல்விரல் கொண்டு
திருவியல் பாலிகை வடிவா(ய்க்) கடைந்து
சதுர மூன்றாகத் துளைஇடற்(கு) உரித்தே (1).       74
(கருவிளம்=பெரிய விளாம்பழம், மற்றது கூவிளம்=செம்மையான கோளஉரு விளா)

(*) இணை நரம்பு
இணைஎனப் படுவ கீழு(ம்) மேலு(ம்)
அணையத் தொன்றும் அளவின என்ப (2).       75

(*) கிளை நரம்பு
கிளைஎனப் படுவ கிளக்கும் காலை
குரலே இளியே துத்தம் விளரி
கைக்கிளை எனஐந்(து)ஆகும் என்ப (3).       76

(*) பகை நரம்பு
நின்ற நரம்பிற்கு ஆறும் மூன்றும்
சென்றுபெற நிற்பது கூடம் ஆகும் (4) .       77

(*)
கண்ணிய கீழ்மூன்(று) ஆகி மேலு(ம்)
நண்ணல் வேண்டு(ம்) ஈரிண்டு நரம்பே (5).       78

(%)
குரலே துத்தம் இளிஇவை நான்கும்
விளரி கைக்கிளை மும்மூன்(று)ஆகித்
தளராத் தாரம் உழைஇவை ஈரிரண்டு
எனஎழும் என்ப அறிந்திசி னோரே (6).       79

(%)
தாரத்துள் தோன்று(ம்) உழைஉழையுள் தோன்றும்
ஓரும் குரல்குரலி னுள்தோன்றிச் சேரும்இளி
உள் தோன்றும் துத்தத் துள்தோன்றும் விளரியுள்
கைக்கிளை தோன்றும் பிறப்பு (7).       80

(*) இவை சிலம்பு 8::33-34 அடிகளின் உரையில் அரும்பத
உரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் மேற்கோள் காட்டியவை
(%)இவை சிலம்பு 8::31-32 அடிகளின் உரையில் அரும்பத உரையாசிரியர் மேற்கோள் காட்டியவை

யாழ் வகை

பேரியாழ் பின்னும் மகரம் சகோடமுடன்
சீர்பொலியும் செங்கோடு செப்பினார்-தார்பொலிந்து
மன்னும் திருமார்ப வண்கூடல் கோமானே
பின்னும் உளவோ பிற (8).       81
(நான்குவகை யாழ்)

ஒன்று(ம்) இருபது(ம்) ஒன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்ஏழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நல்நரம்பு சொல்முறையே
மேல்வகை நூலோர் விதி (9).       82
(நான்குவகை யாழ் தாங்கு நரம்புகள்)

கோட்டினது அமைதியும் கொளுவிய ஆணியும்
மாட்டிய பத்தரின் வகையு(ம்) ஆடகமு(ம்)
தந்திரி அமைதியும் சாற்றிய பிறவு(ம்)
முந்திய நூலின் முடிந்த வகையே (10).       83
(யாழ் உறுப்புகள்)

குழல்-வங்கியம்

ஓங்கிய முங்கில் உயர்சந்து வெண்கலமே
பாங்குறு செங்காலி கருங்காலி - பூங்குழலாய்
கண்ண(ன்) உவந்த கழைக்(கு)இவைக ளா(ம்)என்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து (1).       84
(குழல் செய் பொருள்கள்)

உயர்ந்த சமதளத்(து) ஓங்கிக் கால்நான்கில்
மயங்காமை நின்ற மரத்தில்-தயங்காமே
முற்றிய மாமரம் தன்னை முதல்தடிந்து
குற்ற(ம்)இல் ஓர்ஆண்டில் கொளல் (2).       85
(மாமரத்தை பயன்கொள் முறைமை)
சொல்லும் இதற்களவு நாலைந்தாம் சுற்றளவு
நல்விரல்கள் நாலரையா(ம்) நல்நுதலாய்-மெல்லத்
துளையளவு நெல்அரிசித் தூப(ம்)இடமாய் தும்(பு)இடமாய்
வளைவல(ம்)மேல் வங்கியம் என் (3).       86
(குழலின் நீளம் சுற்றளவு துளைஅளவு)

இருவிரல்கள் நீக்கி முதல்வாய்ஏழ் நீக்கி
மருவு துளைஎட்டு மன்னு-பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்ளும் பரப்(பு)என்ப நல்நுதலாய்
கோல(ம்)செய் வங்கியத்தின் கூறு (4).       87
(துளைகளிடை தூர அளவுகள்)

வளைவாய் அருகுஒன்று முத்திரையாய் நீக்கித்
துளையோ(டு)அகழி நின்ற விரல்கள்-விளையாட்(டு)
இடமூன்று நான்குவலம் ஒன்றார்காண் ஏகா
வடம்ஆரும் மென்முலையாய் வைத்து (5) .       88
(மேலும் துளைகளிடை தூர அளவுகள்)

சரிக மபதநிஎன்(று) ஏழ்எழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிஅரிய
ஏழ்இசைதோன்றும் இவற்றுள்ளே பண்நிற்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை (6).       89

சாரீர வீணை

பூதமுதல் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து
நாதமுத லாம்எழுத்து நாலாகி-வீதி
வருவரத்தால் தானத்தால் வந்து வெளிப்பட்டு
இருவரத்தால் தோற்றம் இசைக்கு (1).       90

மண்ணுடன் நீர்நெருப்பு கால்வானம் என்(று)இவைதாம்
எண்ணிய பூதங்கள் என்றறிந்து-நண்ணிய
மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
தென்னவர் கோமானே தெளி (2).       91

செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறிஅன்றே
அப்பரிசு மண்ஐந்து நீர்நாலாம்-ஒப்பரிய
தீயாகின் மூன்(று)இரண்டு காற்றாம் பரம்ஒன்று
வே(ய்)ஆரும் தோளீ விளம்பு (3).       92

மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாயும் ஆயவற்றின் மீ(து)அடுத்துத்-துய்ய
சுவைஒளி ஊ(று)ஓசை நாற்ற(ம்)என்(று) ஐந்தால்
அவைமுதல் புற்கல மாம் (4).       93
(புற்கலம்=உடம்பு)

பசிகோம்பு மைதுனம் காட்சிநீர் வேட்கை
தெசிகின்ற தீக்குண(ம்)ஓர் ஐந்தும்-மொசிகின்ற
போக்கு வரவுநோய் கும்பித்தல் மெய்ப்பரிசம்
வாக்குடைய காற்றின் வகை (5).       94

ஓங்கும் வெகுளி மதம்மானம் ஆங்காரம்
நீங்கா உலோப(ம்)உடன் இவ்வைந்தும்-பாங்காய
வண்ண முலைமடவாய் வானகத்தின் கூ(று)என்றார்
எண்ணிமிக நூல்உணர்ந்தோர் எண் (6).       95

ஒப்(பு)ஆர் பிராணன் அபானன் உதான(ன்)உடன்
தப்பா வியானன் சமானனே-இப்பாலும்
நாகன் தனஞ்சயன் கூர்மன் கிருகரன்
தீ(து)இலா தேவதத்த னே (7).       96

இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி அத்தி
புடைநின்ற சிங்குவை சிங்கினி-பூடாஓ
டம்குரு கன்னி அலம்புடை என்(று)உரைத்தார்
தங்குதச நாடிகள் தாம் (8) .       97

பூத வகைக(ள்)ஓர் ஐந்தாய் பொறிஐந்தாய்
வாதனைஓர் ஐந்தாய் மாருதமும்-மேதகுசீர்ப்
பத்(து)ஆகும் நாடிகளும் பத்(து)ஆகும் பாரிடத்தே
முத்திக்கு வித்தா(ம்) உடம்பு (9).       98

இசைக்குப் பிறப்பிடம்

துய்ய உடம்(பு)அளவு தொண்ணூற்(று)ஆறு அங்குலியாம்
மெய்எழுத்து நின்(று)இயங்க மெல்லத்தான்-வையத்து
இருபாலும் நாற்பத்தோ(டு) ஏழ்பாதி நீக்கிக்
கருஆகும் ஆதாரம் காண் (10).       99

ஆதாரம் பற்றி அசைவ முத(ல்)எழுத்து
மூ(து)ஆர்ந்த மெய்எழுத்து முன்கொண்டு-போ(து)ஆரும்
முந்தி இடைவளியாய் ஒங்கு(ம்)இடை பிங்கலையால்
வந்துமேல் ஓசையாம் வைப்பு (11).       100

ஐவகை பூதமு(ம்) ஆய சரீரத்து
மெய்பெற நின்(று)இயங்கி மெய்எழுத்தால்-துய்ய
ஒருநாடி நின்றியங்கி உந்திமே(ல்) ஓங்கி
வருமால் எழுத்துடம்பின் வந்து (12) .       101

ஆளத்தி

மகரத்தின் ஒற்றால் சுருதி விரவியும்
பகரும் குறில்நெடில் பாரித்து-நிகர்இலாத்
தென்னா தெனாஎன்றுப் பாடுவரேல் ஆளத்தி
மன்னாஇச் சொல்லின் வகை (13).       102
(மகரத்தின் ஒற்றால்= ம்ம்ம் ம்ம்ம்ம் என நீட்டி மாற்றி ஒலிப்பது)

குன்றாக் குறி(ல்)ஐந்தும் கோடா நெடி(ல்)ஐந்தும்
நின்(று)ஆர்ந்த அந்நகர(ம்) தவ்வொடு-நன்றாக
நீளத்தால் ஏழு நிதானத்தால் நின்(று)இயங்க
ஆளத்தியாம் என்(று) அறி (14).       103
(நகரம் தவ்வொடு=தந்தந்தந தநதாந்த என வாயினால் இசைக்கும் ஒலி)

பாவோ(டு) அணைதல் இசைஎன்றார் பண்என்றார்
மேவார் பெருந்தான(ம்) எட்(டு)ஆறும்-பாவாய்
எடுத்(து)எண் முதலா(ய்) இருநான்கும் பண்ணிப்
படுத்தமையால் பண்ணென்று பார் (15).       104

தோல் கருவிகள்

பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை,
சீர்மிகு மத்தளம், சல்லிகை, கரடிகை,
திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை,
தமருகம், தண்ணுமை, தாவில் தடாரி,
அந்தரி முழ,வொடு சந்திர வளையம்,
மோந்தை, முரசே, கண்விடு தூம்பு
நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம்,
மாசில் தகுணிச்சம், விரல்ஏறு பாகம்,
தொக்க உபாங்கம், துடி,பெரும் பறை, என
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே.       105
(குடமுழா=ஓர் குடத்தில் பல தனித்தனி அறையும் கண்கள் சுற்றி அமைந்த முழவு சந்திர வளையம=நெற்றி மேல் அணிந்து இயக்கும் சிறு பறை வகை)

மாதர் அணிகலன்கள்

பொன்இதழ் பொதிந்த பல்நிற மணிவடம்
பின்னிய தொடரி பெருவிரல் மோதிரம்
தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின்
புறவாய்ச் சூழ்ந்து புணர வைப் பதுவே (1) .       106
(தொடரி=படர்கொடிவகை, தமனியம்=பொன்)

அவ்வாய் மகரத்து அணிகிளர் மோதிரம்
பைவாய் பசும்பொன் பரியகம் நூபுரம்
மொய்ம்மணி நூலின் முல்லையம் கிண்கிணி
கௌவிய ஏனவும் காலுக்(கு) அணிந்தாள் (2).       107
(நூபுரம்=கணுக்காலணி-கொலுசு)
குறங்குச் செறியடு கொய்அலங் காரம்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ
பிறங்கிய முத்(து)அரை முப்பத்(து) இருகாழ்
அறிந்த(து) அமைஉற அல்குலுக்(கு) அணிந்தாள் (3).       108
(குறங்கு=காலின் மேல்பகுதி-தொடை பிறங்கிய=தொங்குகின்ற)

ஆய்மணிக் கட்டி அமைந்திலைச் செய்கைக்
காமர் கண்டிகைக் கண்திரள் முத்(து)இடைக்
காமன்பொன் பாசம் கொளுத்திக் கவின்பெற
வேய்மருள் மென்தோள் விளங்க அணிந்தாள் (4).       109

புரைதபு சித்திரப் பொன்வளை போக்(கு)இல்
எரிஅவிர் பொன்மணி எல்என் கடகம்
பரியகம் வால்வளை பாத்(தி)இல் பவழம்
அரிமயிர் முன்கைக்கு அமைய அணிந்தாள் (5).       110
(புரைதபு=துளை அற்ற, சித்திர=அளவில் சிறிய வால்வளை=சங்குவளை, பாத்தில் பவழம்=பகுக்காத பவழக்கொடி)

சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினைத்
தொங்கல் அருந்தித்(து) இரும்தூங்கு அயில்அணி
தண்கடல் முத்தின் தகைஒரு காழ்எனக்
கண்ட பிளவும் கழுத்துக்(கு) அணிந்தாள் (6).       111
(கண்டம்=கழுத்து)

நூலவர் ஆய்ந்த நுவ(ல்)அரும் கைவினைக்
கோலம் குயின்ற பொலம்செய் கடிப்பிணை
மேலவர் ஆயினும் மெச்சும் விறலொடு
காலமை காதில் கவின்பெற பெய்தாள் (7) .       112
(கடிப்பு=கம்மல்)

கேழ்கிளர் தொய்யகம் மான்முகப் புல்லகம்
சூளா மணியடு பொன்அரி மாலையும்
தாழ்தரு கோதையும் தாங்கி முடிமிசை
யாழின் கிளவி அரம்பையர் ஒத்தாள் (8) .       113
(புல்லகம்=நாசிநடுச்சுவர் தொங்கல்-புல்லாக்கு கோதை=தலையினின்று செவியினை ஒட்டி மார்பு வரை தொங்கும் மாலை வகை)
இச்செய்யுட்களை அடியார்க்கு நல்லார் சிலம்பு 6::54-108
உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்

சிறு குறிப்பு - ஈங்குள்ள வரிகளில்

1.பழுப்பு நிறத்தில் காண்பது உரையாசிரியர்தம் நூற்பாக்கள்
2.நீல நிறத்தில் காண்பது மயிலையார் குறித்தவை
3. பச்சை நிறத்தில் காண்பது இப்பக்க பதிவாளன் குறிப்பவை
------------


This webpage was last revised on 10 Nov. 2021.
Please send your comments to the webmasters of this website.