காகித மாளிகை
எழுதியவர் : முப்பாள ரங்கநாயகம்ம
மொழி பெயர்ப்பு: பா. பாலசுப்பிரமணியன்
kAkita mALikai (Telugu Novel of mUppALa rangkammA)
Tamil Translation by P. Balasubramanian
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned
images version of this work. This etext has been prepared via Distributed
Proof-reading implementation of Project Madurai. We thank the following
volunteers for their assistance in the preparation of this etext:
V. Devarajan, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
N. Pasupathy, V. Ramasami, Sasikumar, R. Aravind and P. Thulasimani
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காகித மாளிகை
எழுதியவர் : முப்பாள ரங்கநாயகம்ம
மொழி பெயர்ப்பு: பா. பாலசுப்பிரமணியன்
Source:
அனைத்திந்திய நூல் வரிசை
"காகித மாளிகை"
எழுதியவர் : முப்பாள ரங்கநாயகம்ம
மொழி பெயர்ப்பு: பா. பாலசுப்பிரமணியன்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
புது தில்லி
பிப்ரவரி, 1972 (பால்குணம், 1893)
© முப்பாள ரங்கநாயகம்ம 1970
ரூ. 4.25
விநியோகிப்பாளர்:
பாரி நிலையம்
1/59, பிராட்வே, சென்னை-1
Original: PEKA MEDALU (Telugu)
Tamil Title: KAGITA MALIGAI
PUBLISHED BY
THE DIRECTOR, NATIONAL BOOK TRUST, INDIA, NEW DELHI
AND PRINTED AT
JANATHA PRINTING & PUBLISHING CO.,(P) LTD., MADRAS-14
-----------------------------------------------------------
காகித மாளிகை
திருமதி முப்பாள ரங்கநாயகம்ம
திருமதி முப்பாள ரங்கநாயகம்ம
இன்றைய தெலுங்கு நாவலாசிரியைகளில் சிறப்பான இடம் வகுப்பவர். "பேக்க மேடலு" (காகித மாளிகை) என்ற இந்நாவலைத் தவிர, அவர் எழுதியுள்ள "பலி பீடம்", "ரசயித்ரி" (பெண் எழுத்தாளர்), "கிருஷ்ணவேணி", "ஸ்திரீ", "கூலின கோடலு" (சரிந்த சுவர்கள்), "ஸ்வீட் ஹோம்" ஆகிய நாவல்கள் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானவை.
ஆழ்ந்த உள் எழுச்சி, இயல் வாய்மையில் ஆர்வம், பெண்களின் மேன்மையை வலியுறுத்துவதில் தீவிரப் பற்று ஆகியவை இவரது படைப்புகளின் சிறப்பிற்குக் காரணமாக விளங்கும் முக்கிய அம்சங்களாகும். இவரது படைப்புகள் எல்லாவற்றிலும் இன்பமயமான வாழ்விற்கான பேரார்வம் பல கோணங்களில் காணப்படுகிறது. ஆனந்தமயமான வாழ்க்கை நடத்துவதும் ஒரு கலை எனக் கருதுகிறார் இவர். இக்கலையின் மீதுள்ள ஈடுபாடே இவரது இலக்கியப் பணிகளின் முக்கிய இலட்சியமாகத் திகழ்கிறது.
-------------------
முகவுரை
இந்தியா ஒரு விசாலமான நாடு. இந்நாடு பண்பாட்டினால் ஒன்றாக இருந்த போதிலும், இதனை முன்னேற்றமடைந்த சக்தியுள்ளதொரு நாடாக ஆக்கக் கூடிய ஒற்றுமைத் தளைகளை இன்னும் வலிமைப்படுத்த வேண்டியிருக்கின்றது.
நம்முடைய பாரத நாட்டில் பலமொழிகள் பேசப்படுகின்றன. நம்முடைய நாட்டைப்போல உலகத்தின் மற்றெந்த நாட்டிலும் மொழிகளுடைய எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இல்லை. ஆனால், நமது அண்டையிலுள்ள பகுதியில் வழங்கும் மொழிகளைப்பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்ளுவதில்லை. அப்பகுதிகளில் இலக்கியம், கலாசாரம்- இவற்றின் செழிப்பைப் பற்றிய அறிவும் நாம் அதிகமாகப் பெற்றிருக்கவில்லை. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் முதலிய ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்தைப் பற்றியும், அம் மொழிகள் வழங்கும் சமுதாயங்களைப் பற்றியும் நமக்குள்ள அறிவை விட நமது நாட்டின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் பற்றிய அறிவு குறைவாயுள்ளது.
நாட்டின் உணர்ச்சி- பண்பாடு ஒருமைப்பாட்டிற்கு நமது நாட்டினர் தேசத்தின் பல மொழிகளிலுள்ள சிறந்த இலக்கியப் படைப்புக்களைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் வேண்டும். அவற்றின் வாயிலாகப் பல்வேறு பகுதிகளில் வழங்கும் வாழ்க்கை முறைகள், மக்களது எண்ணங்கள், நம்பிக்கைகள், நடை - உடை பாவனைகள் ஆகியவை பற்றியும் அறிய வேண்டும்.
மேற்கே சுதந்திரமான பல நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட மொழி உண்டு. ஆயினும் ஒவ்வொரு நாட்டினரும் மற்ற நாட்டினருடைய இலக்கியத்தைப் பற்றியும், சிந்தனையைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு நாம் நமது நாட்டு மொழிகளைப்பற்றி அறிந்திருக்கவில்லை. ஐரோப்பிய மொழியொன்றில் வெளியாகும் எந்தச் சிறந்த நூலும் உடனடியாக மற்ற மொழிகளில் பெயர்க்கப்படுகின்றது. இந்தியா ஒரே நாடு. ஆனால் நமக்கு நமது அண்டை மொழிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதைப்பற்றித் தெரிந்துகொள்வதில் அவ்வளவு ஆவல் கிடையாது. இந் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த மாறுதல் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையை உத்தேசித்தே, இந்திய அரசு ஒவ்வொரு இந்திய மொழியிலிருந்தும் தற்காலத்திய இலக்கியத்திலிருந்தும் தெரிந்தெடுத்த நூல்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பிப்பதற்கான திட்டமொன்றை வரைந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் படித்து மகிழக்கூடிய நூல்கள் - அதாவது, கதைகள், புதினங்கள், இன்பமளிக்கும் பயண வரலாறுகள், சுய சரிதைகள் போன்றவை தெரிந்தெடுக்கப்படும் மிகச் சிறந்தவையும், மக்களிடையே பிரபலமடைந்தவையும், அந்தந்த மொழிப் பகுதியில் வாழும் மக்களுடைய நடை- உடை பாவனைகளையும், வாழ்க்கை முறைகளையும் சமூக நிலைமையையும் கண்ணாடி போலப் பிரதிபலித்துக் காட்டக் கூடியவையுமான நூல்களே இத்தொடரில் தெரிந்தெடுக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக பலவேறு மொழிகள் பேசுவோரிடையே பரஸ்பரப் பரிவுணர்வும் ஒற்றுமையும் வளருமென நம்புகிறோம்.
வெவ்வேறு மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தெரிந்தெடுப்பதும், அவற்றை மொழி பெயர்ப்பதும் எளிய காரியமல்ல. இப்பணியில் எங்களுடைய ஆலோசனைக் குழுவுனருக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டவராவோம். அவர்கள் வழிகாட்டி, உதவி செய்து, ஒத்துழைப்புத் தராவிடில் இந்த திட்டத்தை வெற்றிப் பலனுடன் செயலாக்குவது முடியாது.
- பாலகிருஷ்ண கேஸ்கர்.
-----------------------------------------------------------
அறிமுகம்.
'பேக்க மேடலு' (காகித மாளிகை), தற்காலத் தெலுங்கு நாவல் உலகத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியையான திருமதி முப்பாள ரங்கநாயகம்ம எழுதிய சிறந்த நாவலாகும். பெண் உள்ளத்தின் புதிய சிந்தனைகளை ஆற்றல் வாய்ந்த முறையில், தங்கு தடையில்லாமல், மனத்தைத் தொடும் வகையில் இந்த நாவல் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த நாவலின் தலைவியான பானுமதி சுதந்திரமான போக்கு உள்ளவள்; சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளவள். ஆனால் அவற்றோடு இயைந்து போக இயலாதவள். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மன நிறைவற்ற உண்மை நிலையைப் போலி நம்பிக்கையால் மூடி மறைக்க அவள் விரும்ப வில்லை. ஆண்மை என்னும் மாயையில் மூழ்கித் தவிக்கும் கணவனின் காலடியில் அமைதியாக விழுந்து கிடக்க வேண்டிய அவல நிலையை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன் இளமைப் பருவத்தின் தொடக்கத்தில் பொங்கி எழுந்த நம்பிக்கைகள் யாவும் உண்மை வாழ்வில் தூள் தூளாவதைக் காணும் பொழுது அவளுடைய உணர்ச்சிகள் புயல்போல் கொந்தளித்து எழுகின்றன. இறுதியில் அவள் தன் குடும்பத்தை, தன் கணவனை, தன் பச்சிளங் குழந்தையையும், தன்னுடைய எல்லாவற்றையும் - இந்த உலகத்தையே விட்டுச் சென்றுவிடுகிறாள். சமூகத்தின் கட்டு திட்டங்களுக்கு ஆட்பட்டுக் குழம்பித் தடுமாறிய அந்தப் பெண்ணுள்ளம் தானாகவே விழித்தெழுந்து ஒரு முடிவையும் தேடிக்கொண்டு அந்த ஆணின் கண்களைத் திறந்து விடுகிறது.
தன்னுடைய இயலாமை பற்றி நன்கு அறிந்து, குழப்பமான மனநிலையிலுள்ள தற்காலப் பெண்மணியின் உண்மையான சித்திரம்தான் இந்த நாவலின் தலைவியான பானுமதியின் பாத்திரப் படைப்பு. பெண்ணின் நம்பிக்கைகள், விருப்பங்கள், இயற்கையான ஆசைகள், அவளுடைய மனிதத் தன்மை, அவளுக்கென்று ஒரு தனிநிலை இருக்க வேண்டும் என்ற அவளுடைய ஆவல் முதலியவற்றைப் புரிந்துகொள்ள முடியாத ஆண் இனத்தின் பிரதிநிதிதான் பானுமதியின் கணவனான ராஜசேகரம். அவள் கற்பனை செய்த நிலைக்கும், உண்மை வாழ்க்கைக்கும் உள்ள பெருத்த வேறுபாட்டில் பானுமதியின் உள்ளம் கொந்தளிக்கும் போதெல்லாம் அவளைச் சமாதானப் படுத்திக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறான் அவளுடைய அண்ணன் கேசவ ராவ். ராஜசேகரம், கேசவ ராவ் இருவரும் ஆண் பண்புகளின் இருவேறு துருவங்களின் பிரதிநிதிகளாவர். ராஜசேகரம் முரட்டுத் தனமாக நடந்துகொண்ட போதிலும், அண்ணன் ஆதரவால் வாழலாம் என்ற நம்பிக்கையில் பானுமதி வாழ்ந்து வருகிறாள். ஆனால் அண்ணனின் அன்பு எவ்வளவு ஆழமானது, ஆற்றல் வாய்ந்ததானாலும் அது அவளுக்குத் தற்காலிகமான மன நிறைவைத்தான் கொடுக்கமுடியுமே தவிர முழு வாழ்வையும் அளிக்க இயலாது. அன்பற்ற, துன்ப மயமான வாழ்வில் பானுமதியின் மென்மையான இதயம் பட்டுப் போய்விடுகிறது. இடறி விழுந்த பின்னரே ராஜசேகரத்தின் கண்கள் திறக்கப்படுகின்றன. மறைந்துவிட்ட அந்த இதயத்தோடு இருந்த அரைகுறை அன்புக்கும் அவன் வாழ்வில் இடமில்லாமல் போய்விடுகிறது.
நாவல் முழுவதும் கட்டுக்கோப்பு குலையாமலும், இணைப்பு அறுபடாமலும் அமைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தால் கதை முழுவதும் ஒரே மூச்சில் சொல்லப்படுவதுபோல் தோன்றுகிறது. கதை முழுவதும் பானுமதியின் சொற்களையே கேட்கவேண்டியதாக இருந்தாலும், இரக்கச் சிந்தனையுள்ள வாசகரின் உள்ளத்தில் அடுத்து என்ன நிகழப் போகிறதோ என்பதை அறியும் ஆவல் குன்றாதவண்ணம் உள்ளது. பானுமதியின் அண்ணன் கேசவ ராவைப் போலவே இந்த நாவலைப் படிப்பவர் ஒவ்வொருவரும் பசியையும் தாகத்தையும் மறந்து இந்தச் சோகக் கதையைக் கேட்பதற்குத் தயாராக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். கதைக் கூற்றிலோ, உரையாடலிலோ தேவையற்ற மிகைப்பாடு சற்றேனும் இருப்பதாகத் தெரியவில்லை.
கதையின் முடிவில் பானுமதியின் சின்னஞ் சிறு குழந்தை தாய்க்காக ஏங்கித் தவிக்கும் பொழுதும், பானுமதியின் குடும்பம் முழுவதும் பேரிழப்பினால் வேதனைப் படும்பொழுதும் அந்தக் குடும்பத்துடன் சேர்ந்து படிப்பவர் உள்ளங்கள் இரக்கப் படுவதுடன் சோக வடிவங்களாகவே மாறிவிடும்.
"பானுவுக்குத் தொடர்ந்து தோல்வியே ஏன் எதிர்ப்பட்டு வந்தது". எல்லா விஷயங்களிலும் சோக தேவதையே ஏன் வரவேற்பு அளித்தாள்? பானு கட்டியதெல்லாம் பார்ப்பதற்கீ தவிர அனுபவிப்பதற்கு இயலாத காகித மாளிகை யாகவே ஏன் முடிந்தது? அது அவளுடைய துர்ப்பாக்கியம் என்றும், முன்ஜன்ம பலனான அதிர்ஷ்டம் என்றும், கர்ம பலன் என்றும் சமாதானம் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது?" என்று நாவலின் முடிவில் பானுமதியின் அண்ணன் கேசவ ராவ் கேள்வி எழுப்பி, அதற்குக் காரணத்தையும் புரிந்துகொள்கிறான்; "பானு பாரத நாட்டில் ஒரு பெண்ணாகப் பிறந்தாள்!"
இந்தக் கேள்வியும் அதன் விடையும் தற்கால இந்தியப் பெண்களுக்கு மிக இன்றியமையாதவை. ஆம், இன்றைய பெண் விழித்துக்கொண்டு இருக்கிறாள்; அவள் அனைத்தும் அறிந்திருக்கிறாள்; ஆணுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் திறமையுடன் விளங்குகிறாள். அவள் ஆணின் நிழலாக மட்டும் வாழ்க்கையை நடத்தும் அபலையாக இல்லை; அவள் கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பதில்லை, சிந்திக்கவும் செய்கிறாள்; அவளிடமிருந்து உலகம் எப்படி எதிர்பார்க்கிறதோ அதே போல அவளும் பதிலுக்கு எதிர்பார்க்கிறாள். அறம், பொருள், இன்பம் - எல்லாத் துறைகளிலும் அவள் ஆணுக்கு இணையாக இருக்கிறாளே தவிர, அடிமையாக அல்ல. 'பேக்க மேடலு' (காகித மாளிகை) படித்த பின்னர் படித்தவர் உள்ளங்களில் இந்த எண்ணம் உண்டாவது இயல்பு. அதுவே இந்த நாவலின் முடிந்த பயன் ஆகும்.
'பேக்க மேடலு' தவிர திருமதி ரங்கநாயகம்மாவின் படைப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முதல் நாவல் 'கிருஷ்ண வேணி' 1962ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஏறத்தாழ அதே சமயத்தில் 'பேக்க மேடலு', 'ஆந்திரப் பிரபா' என்ற தெலுங்கு வார இதழில் தொடர் கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் அது புத்தக உருவில் அச்சிடப்பட்டது.
அவருடைய முதல்பதிப்பான 'கிருஷ்ணவேணி'யிலேயே அவருடைய திறமையின் அரும்பு பூத்து மிளிர்கிறது. அந்த நாவலின் தலைவியான கிருஷ்ணவேணி கன்னிப் பருவத்தில் காதல் வலையில் சிக்கிவிடுகிறாள். அவள் தொடக்கத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். ஆனால் முடிவில் வேறொருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அவளுடைய முன்னாள் காதல் விவரம் கணவனுக்குத் தெரிய வருகிறது; அந்நிலையில் அவன் அவளை விட்டுச் சென்றுவிடுகிறான். அதன் பின்னர், கதை இருவேறு ஆற்றொழுக்குகளாகச் சென்று முடிகிறது. நாவலின் முதல் பதிப்பில் ஆசிரியை கணவன் மனைவியரை மீண்டும் சேர்த்து வைத்து இன்ப முடிவு கொடுத்திருந்தார்.
ஆனால் பின்னர், கதையைத் துன்ப முடிவுடன் காண விழைந்த வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கணவனைப் பற்றற்றவனாகவும், அன்பில்லாத கொடியவனாகவும் படைத்து, கதைக்குத் துன்ப முடிவ கொடுத்து உருவாக்கிவிட்டார். இதிலிருந்து கதையை விரும்பும் முறையில் படைப்பதில் அவருடைய தனித் திறமையும், கலை வன்மையும் நன்கு புலனாகும்.
அவருடைய பிற்காலப் படைப்புகளிளெல்லாம் குடும்ப வாழ்வில் தோல்விகளே முக்கிய இடம் பெறுகின்றன. 'பேக்க மேடலு'வில் இந்தப் போக்கு உச்ச நிலையில் உள்ளது. அவருடைய படைப்புகளில் தலைசிறந்தது 'பலி பீடம்' ஆகும். இருப்பினும், 'பேக்க மேடலு'வில் காணப்படுவது போல் எழுத்துக்கு எழுத்து ஆசிரியையின் முத்திரையைப் 'பலி பீடத்தில்' காண இயலவில்லை. 'பலி பீடம்' கலப்பு மணப் பிரச்சினையைக் கருவாகக் கொண்ட நாவலாகும். இலட்சியக் கிளர்ச்சியில் சிக்குண்ட அருணாவாலும் பாஸ்கராலும் உண்மை வாழ்க்கையின் கரடு முரடுகளைக் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை. இலட்சியக் கற்பனை இனிமையாகவே
இருக்கிறது. ஆனால் உண்மை நிலை இனிமையை எல்லாம் விரட்டிவிடுகிறது. இந்த நாவல் 1963ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் 1965ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சாகித்திய அக்காதெமிப் பரிசும் பெற்றது.
'பலி பீடத்'திற்குப் பிறகு, கலைத் திறனுக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக அவருடைய 'ரசயித்ரி' (பெண் எழுத்தாளர்) என்ற நாவலைக் கூறலாம். 'ரசயித்ரி'யில் ஆசிரியையின் உள்ளம் தெளிவாகப் பிரதிபலிக்கப் படுகிறது. ஒருவனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட பெண், எழுத்துலகத்தில் மிக்கப் புகழைப் பெறுகிறாள். இந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரின் அறிமுகத்தைப் பெறுவதற்கும், அவருடன் இலக்கியத் துறைபற்றி அளவளாவுவதற்கும் எத்தனையோ பேர் வந்து செல்கின்றனர்.
ஆனால் அந்த எழுத்தாளரின் கணவனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. முடிவில் அவன் வெறுப்படைந்து தன் மனைவியைக் கைவிட்டுத் தீர்த்த யாத்திரைக்குச் சென்று விடுகிறான். ஆனால் சென்ற இடத்திலும் அவனுக்கு மன அமைதி கிட்டவில்லை. இறுதியில் கழிவிரக்கம் கொண்ட கணவனும் கைவிடப்பட்ட மனைவியும் ஒன்று சேர்கின்றனர். இந்த நாவலின் மூலம் பெண்ணின் சுதந்திர வாழ்க்கையை ஆசிரியை ஆதரித்துள்ளார்; அதே சமயத்தில் இலக்கியப் படைப்பின் இலட்சியம், எழுத்தாளரின் கடமை, ஆண் பெண்ணுக்கு இடையே இருக்க வேண்டிய தொடர்புரிமை, மற்றும் பலவற்றைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆசிரியையின் அனுபவத்தின் முகிழ்ச்சியே இந்த நாவல் என்றால் மிகையாகாது.
அண்மைக்காலத்தில் வெளிவந்த ரங்கநாயகம்மாவின் 'ஸ்வீட் ஹோம்' (இரண்டு பகுதிகளான நாவல்) வீடுதோறும் ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது. இந்த நாவலில், குடும்ப வாழ்க்கையை இன்ப மயமாக ஆக்குவதில் கணவனின் கடமையை வலியுறுத்தும் ஆசிரியை, புரையோடிப்போன சமூகத்தின் பொருளற்ற பல மரபுகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். கருத்து வேறுபாட்டுடன் புரட்சிகரமான இந்த நாவலுக்கு எதிராக அண்மையில் ஷார்வரியின் 'ஹாட் ஹோம்' என்ற ஒரு நாவல் வெளியிடப்பட்டுள்ளது.
'ஸ்திரீ' என்ற பெயர் தாங்கிய அவர் நாவலும் ஓர் உயர்ந்த படைப்பாகும். இதில், காதலில் ஏமாற்றம் கண்ட ஒரு பெண்ணின் துறவு வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் பெண் சலனமான சுபாவம் உள்ளவளாகக் கருதப் படுகிறாள். ஆனால் 'ஸ்திரீ'யின் பெண் ஆணைவிட அதிகமான அளவில் திடமனதுடன், கட்டுப்பாட்டுடன், விழிப்புடன் காட்சியளிக்கிறாள். அவருடைய மற்றொரு நாவலான 'கூலின கோடலு' (சரிந்த சுவர்கள்) பொதுவாகக் குடும்ப வாழ்க்கையில் காணப்படும் மேடு பள்ளங்களை அழகாகச் சித்திரிக்கிறது.
அவருடைய இந்தச் சிறந்த நாவல்கள் தவிர 'சோபன ராத்ரி' என்ற பெயரில் ஒரு கதைத் தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்த ஆசிரியையின் பத்துப் பன்னிரண்டு நாவல்களும், ஒரு கதைத் தொகுதியும் வெளியாகியுள்ளன. அவர் பதினைந்தாண்டு நிறை இளம் பருவத்திலேயே எழுதத் தொடங்கினார்; இப்பொழுது வயது முப்பதே ஆகிறது. எதிர்காலத்தில் அவர் வாழ்விலிருந்து அறிவு ஒளி பெறுவதற்கு வாசகர் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
அனுபவத்தின் ஆழம், உண்மை நிலையைப் பிரதிபலிப்பதில் விழிப்புணர்ச்சி, பெண் மதிப்பை நிலைநாட்டுவதில் இரண்டறக் கலந்துவிட்ட ஈடுபாடு - இவையே அவருடைய நாவல்களை இயற்கைப் பொலிவுடன் மிளிரச் செய்யும் சிறந்த பண்புகளாகும். அவருடைய படைப்புகள் அனைத்திலும் இன்ப மயமான வாழ்வுக்கான ஆர்வம் பல உருவங்களில் வெளிப்படுகிறது. இலக்கியம், இசை, நாட்டியம் முதலியவை கலைகளாகக் கருதப்படுகின்றன; அதேபோல இன்ப மயமான வாழ்வும் அவருடைய கருத்தில் ஒரு கலை ஆகும். இந்தக் கலையை வழிபடுவதே அவருடைய படைப்புச் சாதனையின் முடிந்த இலட்சிய மாகும்.
திருமதி ரங்கநாயகம்மாவைப் போன்ற புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் பலர் இன்று தெலுங்கில் எழுதி வருகின்றனர். அவர்களில் கொடவட்டிகண்டி குடும்பராவ், ராச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரி, பலிவாட காந்தா ராவ், த்விவேதுல் விசாலாட்சி, யதனபூடி சுலோசனா ராணி, கோடூரி கௌசல்யா தேவி ஆகியோர் சிறப்புடன் விளங்குகின்றனர். இந்த எழுத்தாளர் அனைவரும் மிகவும் சுறுசுறுப்புடன் நாவல் இலக்கியத்தை வளப்படுத்தி வருகின்றனர். இன்றைய தெலுங்கு வாசகர்களும் கதை நாவல் படிப்பில் மிகவும் அக்கறை காட்டி வருகின்றனர். வாசகரின் சுவையை உணர்ந்த இரக்கச் சிந்தனையுள்ள எழுத்தாளர் பலர் இந்தத் துறையில் பணியாற்ற முன்வந்துள்ளனர்.
தெலுங்கு நாவல் இலக்கியம் 1878 ஆம் ஆண்டில் கந்துகூரி வீரேசலிங்கம் அவர்களின் 'ராஜசேகர சரித்திர'த்துடன் தொடங்கியது என்றாலும், இற்றைக் காலத்தில்தான் நிறைவு பெற்று வருகிறது. வீரேசலிங்கத்திற்குப் பிறகு லட்சுமி நாராயண் அவர்களின் 'மால பல்லி' (பறச் சேரி) நாவல் துறைக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கியது. சமூக வாழ்வைச் சித்திரிப்பதன் மூலம் சமூகத்தைப் பல வழிகளிலும் சீர்திருத்துவதற்கான சிறந்த கருவியாக, நாவல் என்ற பெயரில் புதிய இலக்கியத் துறையை எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நாவலைத் தெலுங்கில் 'நவல' அல்லது 'நவலிகா' என்று சொல்வர். இந்தச் சொல் ஆங்கிலத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும், இந்திய இலக்கியத்தில் இன்றைய போக்கை வைத்துக் காணும்பொழுது பொருத்தமாகவும் பொருளுள்ளதாகவுமே தோன்றுகிறது.
கவி சாம்ராட் விஸ்வநாத சத்யநாராயணா அவர்களின் 'வேயி படகலு' (ஆயிர நாகப்படங்கள்), பாபிராஜு அவர்களின் 'நாராயண ராவ்' என்ற இரு நாவல்களும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டன. எழுத்துக் கலையின் முன்னேற்றத்துக்கு இவை இரண்டும் ஊக்க மளித்தன. சத்யநாராயணா அவர்களின் 'ஏக வீரா' அண்மையில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அது போலவே த்விவேதுல் விசாலாட்சி அவர்களின் 'வாரதி' (பாலம்) என்ற நாவலும் திரைப்படமாக்கப் பட்டுள்ளது.
இன்றைய தெலுங்குப் பத்திரிகைகளும், மாத இதழ்களும் பல நாவல்களைத் தொடர் கதைகளாக வெளியிட்டு வருகின்றன. வாசகர்களின் சுவை வளர்ச்சியும், எழுத்தாளர்களின் படைப்புத் திறன் பெருக்கமும் இணைந்து இந்தத் துறையை மிகவும் வளப்படுத்தி வருகின்றன. கவி சாம்ராட் அவர்களும் இப்பொழுது இத் துறையில் அதிக அளவில் அக்கறை காட்டி வருவதாகத் தெரிகிறது. ஆண்டுதோறும் கதைகள், நாவல்களுக்கான போட்டிகள் பல நடத்தப்படுகின்றன. இதன் மூலம் நாவல் எழுத்தாளர்களுக்கு மிக்க ஊக்கம் கிடைக்கப்பெறுகிறது.
இன்றைய தெலுங்கு நாவல் துறையில் இருந்துவரும் ஒரு தனிச்சிறப்பு குறிப்பிடத்தக்கது. பிற இந்திய மொழிகளில் இந்தச் சிறப்பு காணப்படவில்லை. ஆண் எழுத்தாளர்களைவிடப் பெண் எழுத்தாளர்கள் ஏராளமாக இருப்பதே அச் சிறப்பு ஆகும். ஒரு வகையில் இது ஒரு நல்ல அறிகுறியே. அமூக வாழ்வின் அந்தரங்கப் பிரச்சினைகளைப் பெண்கள் உணர்ந்து கொள்ளும் அளவில் ஆண்கள் தெரிந்துகொள்ள இயலுவதில்லை. மென்மையான உணர்ச்சிகளை வெளியிடும் இனிமையான சொல்லாட்சி பெண்களுக்கு எளிதாக இருப்பதுடன் மிகவும் கைவந்த கலையாகவும் உள்ளது. இலக்கியத்தின் அக நோக்கம் 'மனைவியின் இனிய அறிவுரைபோல' இருக்க வேண்டும் என்றால், அதைப் பெண்களாலேயே மேலும் சிறப்பாக நிறைவேற்ற இயலும். முற்காலத்து நாடகங்களில் ஆண்-பெண் இருவர் வேடங்களையும் ஆணே ஏற்று நடித்து வந்தான்; ஆனால் இப்பொழுது அந்நிலை மாறிவிட்டது. ஆண் வேடத்தில் ஆணும், பெண் வேடத்தில் பெண்ணும் நடிக்கின்றனர். ஏறத்தாழ இதே நிலை தெலுங்கு நாவல் துறையில் இடம்பெற்று வருகிறது. பெண் எழுதும் நாவல்கள் பெண்ணின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மேலும் தெளிவாகச் சித்திரிக்கின்றன; ஆண்கள் எழுதும் நாவல்கள் பரவலான வாழ்க்கையை விளக்குகின்றன. இரண்டு பிரிவுகளும் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் சென்றுகொண்டுள்ளன. இந்த இரட்டை நிலையில் விஸ்வநாத சத்யநாராயணா போன்ற ஆற்றல் மிக்க எழுத்தாளர்களின் தலைசிறந்த படைப்புகள் இன்றைய தெலுங்கு நாவல் இலக்கியத்துக்குத் திரிவேணியைப்போல மேன்மையான உருவத்தைக் கொடுத்து வருகின்றன. அது ஒரு பக்கத்திலிருக்க, இன்றைய தெலுங்கு நாவல் துறையில் பெண் எழுத்தாளர்களின் படைப்புச் செல்வம் கொழித்து வருகின்றது.
திருமதி முப்பாள ரங்கநாயகம்ம இன்றைய தெலுங்குப் பெண் எழுத்தாளர்களின் உண்மையான பிரதிநிதி ஆவார். அவருடைய 'பேக்க மேடலு'வை (காகித மாளிகை) இந்தப் பரவலான தமிழ் வாசகர்க்கு அறிமுகப் படுத்துவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அறிவு நிரம்பிய இந்தச் சமூகம் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் என்று நம்புகிறேன்.
புது தில்லி. பாண்டுரங்க ராவ்.
-----------------------------------------------------------
காகித மாளிகை.
பானு விழுந்து விழுந்து சிரிக்கிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். இனமறியாத பயம் சூழ்ந்து கொண்டது. பானு அழுகிறாளோ என்னவோ! இந்த நள்ளிரவில்! தன்னந்தனியாக! நீண்ட நேரம் அந்த இருட்டில் எழுந்து உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை சென்று வருவோமா என்று தோன்றியது. ஆனால் நான் அந்த நள்ளிரவில் போனால் அவர் என்னமாவது நினைத்துக்கொள்ளலாம். ஏதாவது சொல்லவும் செய்யலாம். சிந்தித்துக்கொண்டே ஒரு விதமாகச் சிறிதுநேரம் தூங்கிவிட்டேன். யாரோ அவசர அவசரமாக எழுப்புகிறார்கள். துள்ளி எழுந்தேன். அவர் தான் பானுவின் கணவர் ராஜசேகரம்! அவர் முழுவதும் வெலவெலத்துப் போயிருந்தார். "பானு... இல்லே. இந்தக் கடிதங்க..." என்றார் ஏதோ தேடிக்கொண்டே. நான் அதிர்ச்சி யடைந்தேன். உடலெல்லாம் மரத்து விட்டது. ஏதோ கெட்ட கனவு காண்பது போல் தோன்றியது. அடைத்துக்கொண்ட தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டேன். அவசரமாகக் கேட்டேன் -- "பானு வீட்லே இல்லியா? என்ன ஆனாள்?"
அவர் குற்றவாளிபோல் தலை குனிந்து கொண்டார். நடுங்கிக்கொண்டிருந்தார். "என்னவோ! எனக்குத் தெரியாது. பாபு அழுதுகிட்டிருந்ததால் முழிப்பு வந்தது. அவங்கம்மா வருவாளாகட்டும்னு கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். அவன் சமயலறை முன்னே போய் அழுதுகிட்டிருந்ததால் எழுந்து போனேன். எவ்வளவு கூப்ட்டாலும் பதிலில்லே. எனக்கு ஏதோ சந்தேகம் வந்து வேகமா அறெக்கு வந்து பாத்தேன். மேஜெமேலே கடிதங்க இருந்தது. என் பேருக்கு எழுதினது மேலே இருந்தது. எடித்துப் பாத்தா 'உங்கள் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாகத் தப்பிச் செல்கிறேன்'னு ஏதோ எழுதி இருந்தா. நான் முழுசும் படிக்கல்லே. பாபுவெ அடுத்த வீட்டுக்காரங்க கிட்டே ஒப்படெச்சிட்டு இப்படி வந்தேன்... நீங்க..." நிறுத்திவிட்டார்.
எல்லாம் புரிந்துவிட்டது. இரவு ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது. பானு எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு, பெற்ற பாசத்தையும் கூடக் கொன்றுவிடத் துணிந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக உயிரை மாய்த்துக்கொள்ளப் போய்விட்டாள். "பானூ!" என்று பைத்தியம் பிடித்தவன்போல் கத்தினேன். துக்கம் தொண்டையை அடைத்தது. தாங்கமுடியாமல் சுவரில் தலையை மோதிக்கொண்டேன். "அய்யோ! பானூ ...!"
சட்டென்று செய்ய வேண்டியது நினைவு வந்தது. ஸ்டாண்டிலிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டேன். பானு எழுதிய கடிதங்களைப் படிக்க நேரமில்லை. சட்டைப் பையில் போட்டுவிட்டேன். அடுத்த அறைக்குச் சென்று நண்பர்கள் இருவரை எழுப்பி, சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். சில வினாடிகளில் கடற்கரைப் பக்கமும், இரயில் பாதையை நோக்கியும் சைக்கிள்களில் புறப்பட்டுச் சென்றோம். இரவு மூன்று மணி. கண்ணைக் குத்திக்கொண்டாலும் தெரியாது. இருள் மையைப்போல் சூழ்ந்திருந்தது. கடற்கரை முழுவதும் சல்லடை போட்டுத் தேடினேன். ஈரமணலில் இறங்கி விடும் கால்களை இழுத்துக்கொண்டு ஓட முடியாமல் ஓடிக்கொண்டு, தண்ணீர்க் கரையை நோக்கி டார்ச் விளக்கைப் போட்டு, சிதறி விழும் அலைகளுக்குள் பார்வை செலுத்தி "பானூ! பானூ! தங்கச்சி!... பானூ!" என்று சக்தி உள்ளவரையில் உரக்கக் கத்தி மூன்று மணி நேரம் திரிந்துகொண்டே இருந்து விட்டேன். பொழுது புலர்ந்தது. ஆசை ஒளி அணைந்து விட்டது. பானு மாயமாகி விட்டாள். முடிவில்லாத கடலின் மடியில், என்றும் புதுமையான வெள்ளத்தில் கலந்துவிட்டாள். நிரந்தரமாகவே போய்விட்டாள். "தங்கச்சி!" இடிந்து விட்டேன். ஓ வென்று அழுதேன். "பானு போயிட்டா. இனி இல்லே. இல்லே." ....
அடுத்த வினாடியே அந்தத் துக்கம் - இதயத்தைப் பிழியும் அந்த வேதனை - தாங்கமுடியாத அந்த நடுக்கம் - எல்லாம் ... எல்லாம் மாறிவிட்டன. அவர் மேல் கோபம்! வெறுப்பு! அருவருப்பு! பழிவாங்கும் உணர்ச்சி! கைப்பிடிகள் இறுகி அழுத்திக்கொண்டன. பற்கள் நற நற என்றன. மூச்சு அனல்வீசியது. புறப்பட்டேன்.
அவர்கள் மூவரும் எதிர்ப்பட்டனர். இரயில் பாதையெல்லாம் தேடிவிட்டு வந்திருந்தனர். அவர் என்னைப் பார்த்ததும் சொன்னார் - "ராத்ரி ரயில்வே லைனில் விபத்து ஒண்ணும் நடக்கலியாம். ஸ்டேஷன்லே நான் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்." கொஞ்சம் தலை குனிந்து கொண்டார்.
"பெரிய காரியம் செஞ்சே. எந்த விபத்து நடந்தாலும் உன்கிட்டேதான் நடக்கணும். உண்மையெச் சொல். இரவு என்ன குழப்பம் நடந்தது?"
அவர் வெளிறிப்போனார். வெறுப்போடு, மரியாதை குறைவாகப் பேசுகிறேன் என்பதனால் போலும். மறுபடியும் கேட்காமலேயே சொன்னார் --
"ராத்ரி ஒண்ணும் நடக்கல்லியே!"
"ஒண்ணும் நடக்கல்லே! ஒண்ணும்?"
"ஒண்ணும் இல்லீங்க!"
"அப்படியா? ஒண்ணும் நடக்காமலே, சும்மா புண்ணியத்துக்கு, உயிரெவிட அதிகமா நேசிக்கும் பச்செக் குழந்தையெ - பெத்த மகனெ - விட்டுட்டுப் போயிட்டாளா? திருட்டு ராஸ்கேல்! உன் கொடுமெக் கெல்லாம் முடிவு வந்துட்டுது. என் தங்கையெ உன் இஷ்டப்படியெல்லாம் அழவெச்சி அழவெச்சி கடைசியிலே உயிரையே வாங்கிட்டே! மனுஷனெ ஈவிரக்க மில்லாமே கொலெபண்ணும் உன்னெ ... உன்னே..." பட பட வென்று கன்னங்களில் வைத்து வாங்கினேன். உதைத்தேன். குத்தினேன். கொலைபண்ணும் அளவுக்குச் செய்துவிட்டேன். நண்பர்கள் குறுக்கே வந்ததால் ஓடி விட்டேன். அந்த நிலை வர்ணிக்க முடியாதது! ஒரே குழப்பமானது! மட்டமானது! பானு இறந்துவிட்டாள். மகனை விட்டுவிட்டு இறந்துவிட்டாள். அவன் பொறுப்பு என்னுடையது. என்னுடையது.
********************
பாபு மடியில் தூங்கிக்கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க துக்கம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. கண்ணீர் வழிந்து பாபுவின் கன்னங்களில் விழுகிறது. தலை குனிந்து ஈரத்தைத் துடைக்கிறேன். இரயில் வண்டி வாயு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இரயில் வண்டிக்கு எதிராக என் மனம் பின்னோக்கி.......
***************
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வந்தன. மகிழ்ச்சி கரை புரண்டு வந்தது. சில வினாடிகளில் சென்று என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து தரவேண்டும் என்றும், பானுவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் தந்தையார் இட்ட வேலைகளால் இரண்டு நாட்கள் ஊரைவிட்டு நகரமுடியாமல் போய்விட்டது.
இரயில் வண்டியிலிருந்து இறங்கி, சித்தப்பாவின் வீட்டை அடையும்பொழுது மாலையாகிவிட்டது. தெரு வாயிற்படியில் காலை வைத்ததும் சித்தி, சித்தப்பா, அக்காமார்கள் அனைவரும் எதிர்கொண்டு பேசினார்கள். நாங்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சி தெரிவித்தார்கள். எங்கள் வீட்டினர் நலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். எங்கள் ஊர் விசேஷங்களையும் கேட்டனர். ஒருவர் நலங்களை ஒருவர் கேட்டுக்கொள்வதில் ஒரே ஆரவாரம்.! "கேசவ் அண்ணன் வந்தார்", "கேசவ் மாமா வந்தார்!" என்று சொல்லிக்கொண்டு வீட்டில் குழந்தைகள் எல்லாரும் அவரவர் முறைவைத்து மழலை மொழியில் கூப்பிட்டுக் கொண்டு என்னைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாருக்கும் இனிப்பு வழங்கி முடித்தேன். ஊது குழல்களையும் விசில்களையும் வாங்கிக்கொடுத்தேன். என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டவுடன் குழந்தைகள் அனைவரும் ஒரு - மொத்தமாகக் காதடைக்கும்படி ஊது குழல்களை ஊதிக் கொண்டும், விசில்களை அடித்துக் கொண்டும், வீட்டைச் சந்தையாக்கத் தொடங்கிவிட்டனர். இதைக் கண்ட பானு சலித்துக்கொண்டு எழுந்து போய்விட்டாள். முதல் ஆண்டே தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதால் எவ்வளவோ மகிழ்ச்சியுடன் இருப்பாளென்றும், என்னைப் பார்த்த உடனேயே சிரித்துக்கொண்டு வரவேற்று கலகலவென்று பேசுவாளென்றும்.. அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏனோ அலட்சியமாகவும், சோகமாகவும் இருப்பதுபோல் தெரிந்தது. குழந்தைகளைத் தூண்டிவிட்டு குழந்தைகளைவிட அதிகமாகச் சத்தம்படும் பானு அவ்வளவு அலட்சியமாக இருப்பதை நான் என்றும் பார்த்த நினைவில்லை.
"ஏன் பானூ! அப்படி இருக்கறே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டதற்கு "ஒண்ணுமில்லே" என்று சொல்லிவிட்டாள் ஒரே வார்த்தையில். அதற்குள்ளாகவே குழந்தைகளின் சத்தத்தைப் பொறுக்க முடியாமல் வெறுப்புடன் போய்விட்டாள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. சித்தி சமையலறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்க அவள் பின்னாலேயே நடந்துகொண்டு, "ஏன் சித்தி, பானு ஒரு மாதிரியா இருக்கறா?" என்று கேட்டேன்.
சித்தி சமையலறைக்குள் சென்று மணை ஒன்று போட்டு உட்காரச்சொன்னாள். அரிசி முறத்தை அருகில் இழுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். "சந்தர்ப்பங்களெப் புரிஞ்சிக்க முடியாமெ போனா எவ்வளவு படிப்பு படிச்சாலும் என்ன லாபம்டா? காலேஜ் படிப்பு படிக்கணுமாம். வேணாம்னு சொன்னதுக்குக் கோவிச்சிக்கிட்டு அடம்புடிச்சிக் காலையிலே இருந்து சாப்பிடாமெ வயத்தெக் காயவெச்சிக்கிட்டு உக்காந்திருக்கா. இங்கே பார் கேசவ்..." என்று சித்தி ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், வியப்போடு "அப்படீன்னா பானு காலேஜ்லே சேரமாட்டாளா!" என்று கேட்டேன்.
"நல்லா இருக்குதுடா நீ சொல்றது! எறும்பு புத்து போலெ பெரிய குடும்பம். வீடு நிறெய பொம்பளப் பசங்க. கல்யாணம் காட்சி, பிரசவம், புண்ய தினங்க- பொறக்கறவங்க பொறந்துகிட்டே இருந்தா, வயசுக்கு வர்றவங்க வயசுக்கு வந்துக்கிட்டிருந்தா, வீடெல்லாம் ஒரே செலவு மயம் ஆயிட்டிருந்தா எவ்வளவுண்ணு தாங்க முடியும்? நூறு ஆயிரம் வந்து விழுதா? இருக்கற ஊர்லே பள்ளிக்கூடம் இருக்குது. அதனாலே இதுவரெக்கும் படிச்சா. நல்லா இருக்குது. பொம்பளப் பொண்ணே வேற ஊருக்கு அனுப்பி படிக்க வெக்கற்தின்னா நமக்கு வசதி இருக்குதா? அவளுக்கு மட்டும் இதெல்லாம் தெரியாதுன்னா சொல்றதுக்கு?" சித்தி சிறிது நேரம் சும்மா இருந்தாள். நான் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.
"அவளுக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்குது. உண்மெ தான்; படிக்கவெச்சா முன்னுக்கு வருவா. ஆனா நமக்கு அருகதெ எங்கேடா இருக்குது? அவளோடெ ஆசெங்கெல்லாம் நிறெவேறணும்னு எழுதி இருந்தா என் வயத்தலே ஏன் வந்து பொறக்கறா?" சித்தியின் தொண்டை அடைத்துவிட்டது. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும்பொழுது என் மனதில் துயரம் சூழ்ந்தது. ஏழ்மை என்றால் என்ன என்பது முதன்முறையாக எனக்கு விளங்கலாயிற்று.
உண்மைதான் - சித்தப்பாவிற்குச் சொத்து குறைவு. குழந்தைகள் அதிகம். வரவு குறைவு! செலவுகள் அதிகம்! ஒரு மகளைக் கல்லூரியில் படிக்கவைப்பது சித்தப்பாவால் இயலக்கூடிய காரியமல்ல. சித்திக்கு மகள் மீது எல்லை இல்லாத அன்பு இருக்கிறது, மகளுடைய அறிவாற்றல்களில் முழுமையான நம்பிக்கை இருந்தும் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் பானுவின் விருப்பத்தை இவ்வளவு எளிதாகத் தள்ளிவிட்டால் பானு என்ன ஆவாள்? எப்படித் தாங்கிக்கொள்வாள்?
பானு...பானுமதி... என் பெரிய பாட்டியின் பேத்தி. முந்திய ஆண்டுவரையில் நாங்கள் உறவினர்கள் என்ற அளவில் தெரியுமே தவிர வேறொன்று மில்லை. நான் முதன்முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த பொழுது, அத்தையின் ஊரில் படிப்பை நிறுத்திவிட்டேன். அப்பா இங்கே உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து என்னைச் சித்தப்பாவின் வீட்டில் தங்கவைத்தார். பானு ஐந்தாம் பாரம் தேர்வு பெற்றுப் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்தாள். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் எல்லாரையும் விட பானு எனக்கு மிகவும் நெருக்கமானாள். நான் வந்த முதல்நாள் வெட்கப்பட்டுக்கொண்டு தெருப்பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்தேன். பானு வந்து மிகவும் பழகியவள் போலப் பேச்சுக்கொடுத்தாள். "அண்ணா! அம்மா சாப்பாட்டுக்கு வரச் சொல்றாங்க" என்றாள். என் உடல் முழுவதும் சிலிர்த்தது. இதயத்தில் ஏதோ ஒரு பரவசம் நிறைந்தது. அந்த "அண்ணா" - அண்ணன் என்ற அழைப்பு! என் சொந்தத் தங்கைகூட அப்படி என்றும் அழைத்து நான் கேட்டதில்லை. ஏனோ எங்கள் அம்மா அழைப்பது போல "கேசி" என்று பெயர் சொல்லி அழைப்பதே அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. சிறுவயதில் அது தவறென்று யாரும் சொல்லவில்லை. நான் பெரியவனாக வளர்ந்த பிறகு எவ்வளவு கூறினாலும் பயன் காணப்படவில்லை. "என் இஷ்டப்படி கூப்பிடுவேன். உனக்கென்ன? பதில் சொல்லாட்டா போ" என்று முறைப்பாள்.
இன்று பானு மனநிறைவுடன் 'அண்ணா!' என்று கூப்பிட்டாள். நல்ல தங்கை! பானு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன். பானு சிரித்துக் கொண்டே "பசி எடுக்கலியா என்ன?" என்றாள். நான் மௌனமாகவே எழுந்தேன். அன்றே பானு என் மனதில் மிக நிலையான, பரந்ததோர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டாள்.. அப்பொழுதிலிருந்து நான் உயிருக்குயிராக அன்பு செலுத்தும் தங்கை ஒரே ஒரு பானு தான்! பானு என்னைவிட இரண்டு ஆண்டுகள் சிறியவள். சிவப்பாக, ஒல்லியாக, அழகாக இருப்பாள். உருவத்தை மீறிய அறிவாற்றல் கொண்டவள். நான் இரண்டாவது ஆண்டு படித்தாலும், நிறைய விஷயங்கள், பாடங்கள், கணக்குகள் பானுவிடம் கற்றுக்கொண்டு வந்தேன். பானு எனக்கு ஏதோ ஒரு விஷயத்தைப் புரியும்படி விளக்கிச் சொல்லும்பொழுது எனக்கே செருக்கு வரும். பானுவுக்கு விஞ்ஞானத்திலும் கணக்கிலும் எப்பொழுதும் முதல் மார்க்கே வருவது வழக்கம். இரண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்குப் போவோம். சேர்ந்தே சினிமா பார்ப்போம். சேர்ந்து நாவல்கள் படிப்போம். சேர்ந்து நண்பர்கள் வீட்டுக்குப் போய்வருவோம். எதைச் செய்தாலும் இருவரும் செய்யவேண்டும். எங்கிருந்தாலும் இருவரும் இருக்கவேண்டும். இருவரும் அடிக்கடி சினிமா பார்த்து, கதைகள் படித்து வாதித்துக் கொள்வோம். பானுவின் உள்ளப் பாங்கைக் கத்திக்கு ஒப்பிட்டால் சரியாக இருக்குமோ என்று தோன்றும். தாயானாலும் ஒரு சொல் அதிகமாகச் சொல்லிவிட்டால் தாங்க முடியாத அளவு தன்மானம்! பேச்சுக்குப் பேச்சு பதில் சொல்லும் ஆணவம்! "அம்மா ஏதாவது சொன்னா மட்டும் பானெ உடெச்சமாதிரி பதில் சொல்லணுமா?" என்று கேட்டால், "ஏன்? என்னெ அனாவசியமாகச் சொன்னா என் மனம் நோகல்லே?" என்பாள். மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதைவிடப் பெரியது வேறொன்றும் இல்லையாம். அதுவே பானுவின் வாதம்.
"நீ ஆவேசத்தோட பேசறே பானூ! மனிதத் தன்மெக்குக் குறைவு வராமெ காப்பாத்திக்கொள்ள எல்லார்க்கும் எப்போதும் சந்தர்ப்பங்க ஒத்துழைக்கும்னு சொல்றியா?"
"எவ்வளவு வேணும்னாலும் சொல் அண்ணா! இழிவான, மரியாதை குறைவான நிலையிலே மனிதன் வாழாட்டாதான் என்ன?"
ஆமாம், தனக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையில் மனிதன் வாழா விட்டால்தான் என்ன? ஆனாலும் அத்தகைய துர்ப்பாக்கியசாலிகள் எத்தனையோ பேர் இருபத்து நான்குமணி நேரமும் மூச்சு விட்டுக்கொண்டு வினாடிக்கு வினாடி வாழ்ந்துகொண்டேதான் உள்ளனர். ஏன் என்பது எனக்குத் தெரியாது. பானுவுக்கும் தெரியாது.
பானுவின் நட்பு எனக்கு அருமையானதாகத் தோன்றுகிறது. பானுவின் நட்பினாலேயே நான் ஓரளவு நுட்ப உணர்ச்சி உள்ளவனாக உருவானேனோ என்னவோ. பொதுத்தேர்வுகள் எழுதும் நாட்களில் எந்த அளவு ஓய்வு கிடைத்தாலும் எதிர்காலத்தைக் குறித்து ஆவலுடன் பேசிக்கொள்வதே முக்கியமான வேலை. "எந்த ஊர்லே காலேஜ் நல்லா இருக்கும் சொல்லு? ரெண்டுபேரும் ஒரே குரூப் எடுத்துக்கணும் தெரியுமா! எவ்வளவு படிச்சாலும் சேந்தே படிக்கணும். உனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசெ இருக்குதா? அல்லது வக்கீலா? என்ன ஆனாலும் டாக்டருக்கே கௌரவமிருக்கும் இல்லியா! டாக்டர் கேசவ ராவ்! டாக்டர் பானுமதி தேவி!" 'களுக்'கென்று சிரித்துக்கொண்டே எல்லை யில்லாமல் விருப்பங்களைச் சொல்லிக்கொள்ளும் அந்தச் சமயத்தில் இந்த ஐயம் ஒருவருக்கும் வரவில்லையே - ஏன்?
பானு படிப்பை நிறுத்தப் போகிறாள் என்ற நினைப்பில் என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. இனி எனக்குப் பானுவின் நட்பு தூரமானாற்போலத்தான். இந்த விஷயத்தைப் பற்றி எப்படிப் பேசுவதோ, முதலில் பானுவின் முகத்தை எப்படிப் பார்ப்பதோ ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பானுவுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டும். தைரியம் சொல்ல வேண்டும். சித்தி ஏதோ வேலையில் மூழ்கி யிருந்ததால் நான் வெளியே வந்துவிட்டேன்.
அறையில் பானு அலட்சிய பாவத்துடன் உட்கார்ந்திருந்தாள். நான் மெதுவாக அருகில் சென்று நின்றேன். வாயைத் திறந்து ஏதோ சொல்லலாம் என்று எண்ணும்பொழுது என் கையைப் பிடித்துக்கொண்டாள். என் முகத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். "இனி நாம் பிரிஞ்சிகிட்டிருக்கிறோம் அண்ணா! என்னெ மறக்க மாட்டே இல்லியா?"
"பானூ!" என்னுள் ஏதோ வேதனை கிளர்ந்தது.
"நீ அதிர்ஷ்டசாலி அண்ணா! நீ எத்தனயோ பட்டங்க பெறணும். முன்னுக்கு வரணும். இல்லியா?" நான் பானு அருகில் மேஜையின் மீது சாய்ந்து நின்று கொண்டேன். "ரெண்டுபேரும் சேந்து படிக்கலாம்னு எவ்வளவோ முறெ பேசிக்கிட்டோம் பானூ! நீ நிறுத்திட்டா நான் ஒர்த்தனே... நானும் நிறுத்திட்டா நல்லா இருக்குமோன்னு தோணுது." உண்மையில் அப்படித்தான் தோன்றியது. ஏன்? அளவு கடந்த அறிவாற்றல் உள்ள பானு - படிப்பை நிறுத்திக்கொண்டால் நான் கல்லூரியில் படித்துக் கிழிக்கப்போவது என்ன?
பானு சிரித்தாள். "நானுன்னா உனக்கு எவ்வளவு அன்பு அண்ணா! நீ பெரிய மனுஷன் ஆனா எனக்குச் சந்தோஷம் இல்லியா? நான் இருக்கும்போது உன்னெ நிறுத்தற்துக்கு வுடுவேன்னு நினெக்கிறியா? எந்தக் கவலெயும் வெச்சிக்காமெ உத்சாகமாப்படி. எனக்குக் கடிதங்க எழுதிட்டிரு." பானு பொறுப்பை ஒப்படைப்பதுபோல் சொல்லும்பொழுது எனக்குப் பொறுத்துக்கொள்ள முடியாது போல் தோன்றியது. நான் ஏதோ சிந்தித்துக்கொண்டே இருந்துவிட்டேன்.
பானுவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குச் சித்தப்பாவிடம் சக்கி இல்லை என்பது உண்மைதான். ஆனால் பானுவைப் போல ஒருத்தியை அல்ல, பத்துப்பேரைப் படிக்க வைக்கும் சக்தி, சித்தப்பாவுக்கு இல்லாத அந்தத் தகுதி என் தந்தைக்கு இருக்கிறது. அவருடைய மகனான எனக்குத் தாத்தாவிடமிருந்து செல்வம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய இயலாது. தந்தைக்குச் சொல்ல முடியாது. சொல்லி ஒத்துக்கொள்ள வைக்க இயலாது. அவருக்குப் பெண்கள் படிப்பு விஷயம் பற்றி நல்ல எண்ணம் கிடையாது. அதனால்தான் என் தங்கை ஐந்தாவது வகுப்புகூட முடிக்காமல் மாமியார் வீட்டுக்குப்
போய்விட்டாள். அந்த அநியாயத்திற்கு ஓர் இளம் உள்ளம் கதறி அழுதது என்பது தந்தைக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்! இன்று மற்றொரு தங்கை விஷயத்திலும் நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பானுவைப் போன்ற மாணிக்கம் மறைக்கப்பட்டால் அது நாட்டிற்கே இழப்பல்லவா? இருக்கலாம் - மாணிக்கங்களை இழக்கும் நாடே மௌனமாக இருக்கும்போது என்னைப் போன்றவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. வேதனை தான் மிச்சமாகும்.
"என்ன யோசிக்கிறே?" என்று கேட்டாள்.
"பானு! சொத்து விவகாரமெல்லாம் இப்போ என் கையிலே இருந்தா நாம் இப்படிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லெ. ஆனா அப்பா...உனக்குத் தெரியுமில்லியா? அவருக்குச் சொல்லி லாபமில்லை"
பானு வியப்படைந்தவள் போல் உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். "இந்தத் தங்கையிடம் இவ்வளவு அன்பு செலுத்தும் அண்ணன் ஒர்த்தன் இருக்கிறான் என்பது இந்த நிமிஷம் வரெ எனக்குத் தெரியாது அண்ணா! உன்கிட்டே இந்த உணர்ச்சி, இந்த அன்பு என்னெக்கும் - நாம பெரியவங்களாய்ச் சாகற வரெக்கும் - இப்படியே இருக்கணும். அதெவிட எந்த உதவியும் பெரிசாகாது. நீ..." பானுவின் கண்களில் நீர் கசிந்தது.
நான் பானுவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். "பானூ! என் மனசிலே உனக்கு இருக்கும் இடம் சாரதாவுக்குக் கூட இல்லேன்னா அது பொய்யிலே. சாரதாவுக்கும் எனக்கும் உள்ள பந்தம் உடன் பிறப்புதான். அதெ நான் லேசாகத் தூக்கி எறிஞ்சிட மாட்டேன். ஆனா உனக்கும் எனக்கும் உள்ளது அழுத்தமான மானசீக நட்பு. இதுக்கு ஈடு வேறெ ஒண்ணும் இல்லே. எப்போதும் உன் சந்தோஷம், உன் நன்மையெ விரும்பற அண்ணன் நான் இருக்கிறேங்கற்தெ நினெவில் வெச்சிக்கோ. எந்தத் திகிலும் இல்லாமெ வழக்கம்போல இரு. உனக்கு என்ன வேணும்னாலும் எனக்கு எழுது. நீ இன்னக்கிச் சாதம் சாப்பிடலேன்னா அம்மா எவ்வளவு வேதனெப் படறாங்களோ நினெச்சிப் பாத்தியா? நாம சந்தர்ப்பங்களுக்கும் கீழ்ப்படிஞ்சு போகணும். அதிலே இருந்து தப்ப முடியாது பானூ! எல்லா விஷயங்களும் உனக்குத் தெரிஞ்சது தானே." பானுவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நான் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வேதனை வருத்தியது. நாளை என் கையில் வரப்போகும் சொத்துக்கு, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைந்த ஓட்டளவு மதிப்புகூட இல்லை. தேவைகளை நிறைவேற்றாத பணம் இருந்தாலும் பயனில்லை.
அன்று இரவு பானு தானாகவே இருவருக்கும் சாதம் பரிமாறினாள். பானுவுக்குக் கோபம் மட்டுமல்ல, பெருந்தன்மைகூட இருக்கிறது. பானு தலை குனிந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் கண்கள் ஈரமாயின.
*****************
பானுவின் நட்பு அற்றுப்போகிறது என்று நினைக்கும் பொழுது மனம் கனத்தது. எதிர்காலம்பற்றி எத்தனையோ கனவுகள் கண்டு ஆகாயக் கோட்டைகள் கட்டிய பானு இந்தத் தோல்வியை எவ்வாறு தாங்கிக் கொண்டாள்? கனவுகள் கரைந்து விட்டன. எண்ணங்கள் சிதறிவிட்டாலும் பொறுத்துக்கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறதா பானுவின் இதயத்திற்கு?
எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தக் குரூப் எடுத்துக்கொள்வது, எங்கே தங்கி இருப்பது - படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் பானுவின் ஆலோசனைகள் கேட்டுச் செய்தேன். கல்லூரி வாயிலில் கால் வைத்த வினாடியிலிருந்து எப்பொழுது என்ன நடப்பது, ஆசிரியர்கள் எவ்வாறு வருவது, மாணவிகள் எப்படி இருப்பது, மாணவர்கள் எவ்வாறு கலாட்டா செய்வது - கல்லூரியின் முழு உருவத்தை ஒன்றுவிடாமல் விவரித்துக் கடிதங்கள் எழுதினேன். எதைப்பார்த்தாலும் அதைப் பானுவுக்கு எழுதவில்லை என்றால் மனதுக்குத் திருப்தி இல்லை. பானுவுக்கு நாவல்கள் படிப்பதென்றால் மிகவும் விருப்பம். எவ்வளவாயினும் முயன்று புகழ்பெற்ற நாவல்களை வாங்கி பானுவுக்கு அனுப்பினால் ஏதோ ஓர் ஆனந்தம்! வகுப்புப் புத்தகங்களிலிருந்து சில சில விஷயங்களை எடுத்து எழுதினால் பானுவுடன் கலந்து படிப்பதுபோல் ஏதோ ஒரு மகிழ்ச்சி! பானுவின் இதயத்திலிருந்து பயத்தைப் போக்கி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பது என் பேரவா! நன்றியுடன், ஆனந்தத்துடன் பானு எழுதும் கடிதங்களைப் படிக்கும்பொழுது கண்கள் ஈரமாகும். பானு என்னுடனே படித்து ஒரு நாள் பட்டதாரி ஆனாலும் எனக்கு இந்த மகிழ்ச்சி தோன்றாது போலும்!
காலப்போக்கில் பானுவின் கடிதங்களில் கவலைக்கோடுகள் மறைந்தன. இந்தித் தேர்வுக்காகப் படித்து வருவதாகவும், நூல் நிலையத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வருவதாகவும், எப்பொழுதும் இப்படி ஓய்வே இல்லாமல் இருப்பதாகவும் அவள் எழுத எழுத என் மனத்திலும் பாரம் குறையத் தொடங்கியது.
*********************
இண்டர் தேர்வுகள் எழுதினேன். கிளாஸ் கிடைத்தது. அந்த மகிழ்ச்சி நேரத்தில் மற்றொரு நல்ல செய்தி! பானு திருமண இதழ் அனுப்பியதுடன் கடிதம் எழுதியிருந்தாள். எனக்கு வியப்பாக இருந்தது. பானுவுக்கு இப்படி எதிர்பாராமல் கலியாணமென்ன? மணமகன் ராஜசேகரம் பி.ஏ.வாம்! நல்லதுதான். இருந்தாலும் ஏனோ எங்கோ எனக்கு ஒரு குறை தோன்றியது. பானு டாக்டர் ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். நடக்கவில்லை. போகட்டும். ஒரு டாக்டருக்கு மனைவி ஆனால்? ஏனோ எனக்கு இந்தக் கற்பனை! டாக்டர் என்றால் எவ்வளவு விலை! இந்தக் கால மணமகன்களின் வரதட்சணை எனக்குத் தெரியாததல்ல! ஒரு டாக்டரை வாங்கக் கூடிய சித்தப்பா மகளைப் படிக்க வைக்க முடியாமல் இருப்பாரா? இப்பொழுது பி.ஏ.வைப் பேசி முடிப்பதற்கே மிகவும் செலவு செய்திருக்க வேண்டும். இன்னும் கலியாணத்திற்கு நான்கு நாட்களே உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னரே மீண்டும் கல்லூரிக்குச் செல்வதற்குத் துணிமணிகள் வாங்க என் தந்தை மூன்று பச்சை நோட்டுகள் கொடுத்தார். நேராகப் பட்டணம் சென்று பானுவுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம், வரப்போகும் மாமாவுக்கு நல்ல பேனா வாங்கிக் கொண்டேன்.
பானுவின் கையில் நானே கடிகாரம் கட்டும்பொழுது அந்த அழகான கண்களில் மின்னிய ஆனந்தம், வியப்பு, தன்மீது நான் வைத்திருக்கும் தனி அன்பு பற்றிய கர்வம் -- அவை போதும்! அவற்றிற்காகவே நான் பானுவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்.
"அண்ணா! இந்தப் பரிசுக்கு இவ்வளவு மதிப்பூன்னு இல்லே. ஆனா உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்?"
"சமயம் வரும்போது நானே கேக்கறேன், சரி தானே?"
மணமகனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. பானுவின் கணவராக வர இருக்கும் அந்த மனிதர் எவ்வளவு சிறந்தவராக இருக்கவேண்டும்!
"ஆமாம் பானு! கல்யாணத்துக்குப் பெண்பார்க்க வந்தாங்க இல்லியா, மாமா எப்படி இருக்கறார்? தங்கநிற உடம்பு, சுருள் சுருளான கிராப்பு, அகலமான நெத்தி, திடமான மார்பு...."
"புஜாங்கம்..சல்லடம்...நான்கு கைகள்..."
"அப்படியா? இன்னும் அவரெ நான் சாதாரண மனுஷன்னு நினெச்சிட்டிருக்கறேன் தெரியுமா!"
"சே,போடா! நீயும் உன் புத்திசாலித்தனமும்!" சிரித்துவிட்டாள் பானு.
"இல்லே பானூ! என்கிட்டே ஒண்ணுமே சொல்லாமெ உன் கணவரெ முடிவுசெஞ்சதுக்கு நீ என்கிட்டே மன்னிப்பு கேக்கணும். இன்னும், நான் கேட்டாக்கூட நீ சொல்லாட்டா... எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே" கோபித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன்.
பானு சிரித்துவிட்டு என் மோவாயைப் பிடித்துக்கொண்டாள். "எங்கப்பால்லே! சொல்றேன் ஆவட்டும். நீ இப்படி மூஞ்செ வச்சிட்டு உக்காராதே. ஏதாவது சொல்லு."
"ஓஹோ! உங்களவர்னா மூஞ்சியாலே கேப்பார், காதாலே பேசுவார்போல இருக்குது! அதனாலேதான் உனக்கு அவர் ரொம்ப பிடிச்சுப்போச்சி."
"நிஜம்தான்! அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சிபோச்சி சொல்லு!" கடிகாரம் கட்டிய கையை மோவாயின் கீழ் வைத்துக்கொண்டு சிந்திப்பதுபோல அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். இன்னும் கோபம் காட்டுவதில் பயனில்லை. கையை எடுத்துவிட்டுக் கேட்டேன் - "சொல்லு பானூ! உனக்கு மாமாவெ நல்லாப் பிடிச்சிருக்குதா?"
சிரித்துவிட்டுச் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். "நல்லாப் பிடிச்சிருக்குதுன்னா என்ன? அப்பா அவங்க பானுவுக்குத் தகுந்தவர்னு முடிவு பண்ணாங்க. நானும் பாத்தேன். இஷ்டப்பட்டேன். நினெச்சிப் பாக்காமலே அமெஞ்சிபோச்சி. அவருக்குத் தூரத்து பந்துக்களெத் தவர வேண்டியவங்க யாருமில்லியாம். அந்த பந்துக்கள் அவருக்கிருந்த சொத்தெ வெச்சி அவரெ வளத்து விட்டுட்டாங்க. சொத்து கரெஞ்சுது. டிகிரி மிஞ்சியது. இப்போ வேலை ஒண்ணுதான் ஆதாரம். அம்மா அதுக்கே கொஞ்சம் யோசனெ செஞ்சாங்க. மனிதனுக்கு மனிதன் தான் மதிப்பே தவிர, சொத்து கித்துலே என்ன இருக்குது அண்ணா." என்றாள்.
"நிஜம்தான் பானூ! நல்ல வேலெ செஞ்சே. அதுவும் நல்லதுதான். அவர் பின்னாலே பலர் சூழ்ந்தில்லாமெ இருந்தா, சுதந்தரமா சந்தோஷமா வாழற்துக்கு வழி இருக்கும். இனிமே எங்களெ மறந்துடுவே இல்லே!"
"பின்னே, மறந்துடாமே? பெரிய பட்டணத்துக்குப் போகப்போறேன். பீச்சி, ஊர் சுத்தற்து, சினிமா, பிக்னிக் - எல்லாம், ஒண்ணொண்ணா - பட்டணமே நமது தான்!"
"திரிஞ்சிக்கோயேன்! இங்கெ யாரும் பொறாமெ படபோறதில்லே. இன்னும் அவரோட அழகு லட்சணங்களெ வர்ணிக்கவே இல்லியே. மன்மதனா? இல்லே இந்திரனா?"
"ராஜகுமாரன்!"
"அப்படியா! அவ்வளவு அழகானவரா?"
"ஆமாம்! வெறும் அழகன் மட்டுமா! மூஉலக அழகன்! உலகப்புகழ் வீரன்!" பக்கென்று சிரித்துவிட்டோம். சிரித்துக் கொண்டிருக்கும்போது சித்தி வந்தாள். "பார் சித்தி! பானுவெ எவ்வளவு கேட்டாலும் புருஷனெப் பத்திச் சரியாச் சொல்லமாட்டேங்கறா" என்று குற்றம் சாட்டினேன்.
"உம் மூஞ்சி! அவ என்ன சொல்லுவாடா? மனுஷன் என்னமோ லட்சணமாத்தான் இருக்கறான். பின்னாலே ஒரு காலணா சொத்து கிடையாது. வீட்லே கொஞ்சம் கஷ்டத்துக்கோ சுகத்துக்கோ உதவிக்கு ஒரு பொம்பளெத் தொணெ இல்லே. அதான் எனக்கு யோசனெயா இருக்குது."
"இப்பவும் யோசனெ செஞ்சிட்டு உக்காந்திருக்கிறியே என்ன? பரவால்லே சித்தி! பானு மட்டும் ஒரேயடியா பொங்கி வழியறா. ஊர் சுத்தற்து, சினிமா, பிக்னிக், பார்ட்டி, ஜம்முன்னு பட்டணம் எல்லாம்... அப்பப்பா!" சதை வெளியே வருவதுபோல் கிள்ளிவிட்டாள். "ஆச்சா?" என்று கேட்டுக் கோபத்தோடு பார்த்தாள். வாயை மூடிக்கொண்டேன். சித்தி சிரித்துக்கொண்டே போய்விட்டாள்.
கலியாண நாள் மாலை பிள்ளை வீட்டார் வந்து விடுதியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டதும், பந்தலுக்குப் பூமாலை கட்டிக்கொண்டிருந்த நான் அப்படி அப்படியே விட்டுவிட்டு, கீழே குதித்து ஓடினேன். அந்த மூஉலக அழகனை, உலகப் புகழ் வீரனை இனியும் பார்க்கவில்லை என்றால் உயிர் நிற்காது. விடுதியில் அனைவரும் கண்டபடித் திரிந்து கொண்டிருந்தனர். மணமகனான அரசகுமாரனுக்காகத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்! அப்பொழுதுதான் அந்த அறையிலிருந்து ஐந்தாறு 'சூட்' போட்டவர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். அவர்களெல்லாம் அரசகுமாரனின் தோழர்கள் போலும்! அறையில் அடி எடுத்து வைத்தேன். அவர் துணி மாற்றி உடுத்திக்கொண்டு தனியாக உட்கார்ந்திருந்தார். கிளாஸ்கோ மல்வேட்டி, வெள்ளைச் சட்டையும் உடுத்தி இருந்தார். இருக்கும் இரண்டு கண்களையும் அகலத் திறந்து உற்றுப் பார்த்து என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன் - "வணக்கம்!"
"வணக்கம்! வாங்க."
"நான் பானுமதியின் அண்ணன். பெயர் கேசவ ராவ். உங்கெளெப் பாக்கணும்னு......."
"உக்காருங்க!"
நான் வேறொரு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர் சிகரெட் கொடுக்க வந்தார்.
"நோ, தாங்க்ஸ்! பழக்கம் இல்லே" என்று சிரித்தேன்.
"இந்த நாட்கள்ளே ஆச்சரியந்தான்!" அவர் சிகரெட் பற்றவைத்துக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு பின் பக்கம் சாய்ந்து கம்பீரமாகப் புகை விட்டுக் கொண்டிருந்தார். சிவப்பாக ஒல்லியாக அழகாகவே இருந்தார். முடி ஒன்றும் சுருட்டையாக இல்லை. அகன்ற நெற்றியே தவிர உறுதியான மார்பகம் இல்லை. புஜாங்கம், சல்லடம் ஒன்றும் இல்லை. மொத்தத்தில் அழகானவர். பானுவுக்கு ஏற்றவர். தங்கு தடையில்லாமல் பேசவில்லை. மணமகன் என்ற கம்பீரத்தைக் கொஞ்சம் காட்டுகிறார் போலும். "உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நினெச்சிக்கிட்டிருந்தேன். தங்கையெக் கேட்டதுக்கு 'மூஉலக அழகன் உலகப்புகழ் வீரன்'னு சொன்னா."
"ஜனரஞ்சகமான சினிமாப் படங்க நிறெய பாக்கறாப் போல இருக்குது. இப்போ நீங்க என்ன நினெக்கிறீங்க?" என்றார் சிரித்துக்கொண்டு.
"கொண்ணுட்டீங்களே! நான் பொம்பளெ இல்லே இல்லியா! எதெ நினெச்சாலும் சொல்லிட்றதுக்கு" என்றேன். அப்படி எங்கள் உரையாடல் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அவர் அறிவாற்றலுடன் நுட்பமாகவும் பேசினார். ஓர் அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து வந்துவிட்டேன். மணமகளாக உட்கார்ந்திருந்த பானுவிடம் வந்து எல்லாவற்றையும் சொன்னேன். "புஜாங்கம், சல்லடம் ஒண்ணுமில்லே பானூ! அவரெக் கேக்ககூட கேட்டேன். ஒளிச்சி வெச்சிட்டார்னு சொல்றியா?"
பானு கோபத்துடன் முகத்தைச் சுளித்தான். கன்னத்தின்மீது திருஷ்டிப்புள்ளி இன்னும் நன்றாகத் தெரிந்தது.
"நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்கறீங்க. மத்தியிலே என் மேலே என்ன உனக்குக் கோவம்?" என்றேன் முகத்தைச் சுளித்துக்கொண்டு.
பானு கண்களை இறக்கிக்கொண்டு சிரித்தாள். நிறைந்த மனதுடன் திருமணத்திற்குத் தயாராகும் கன்னிப்பெண் அவ்வளவு வெளிப்படையாகச் சிரிக்க முடியாது போலும்! அந்தச் சிரிப்பில் ஆயிரம் எண்ணங்கள்! கோடி விருப்பங்கள்!
பானுவின் கழுத்தில் - அவர் - மணமகன் - தாலியைக் கட்டும்பொழுது எனக்கு வேண்டியவர் யாரோ தூரமாவது போல் - நிரந்தரமாக எதையோ நான் இழப்பதுபோல் வேதனை தோன்றியது. இப்பொழுது பானு என் தங்கையல்ல. ராஜசேகரத்தின் மனைவி! இனி அண்ணனுடன் மணிக்கணக்கில் பேசுவதற்கு, விழுந்து விழுந்து சிரிப்பதற்கு வாய்ப்பு ஏது? எல்லாருடன் சேர்ந்து கையிலிருந்த அட்சதையை விசிறிவிட்டு, ஓசையில்லாமல் கண்ணை ஒத்திக் கொண்டேன். உள் ஆத்மா பானுவை வாழ்த்தியது - என் தங்கை ஆயிர மாண்டுகள் நன்றாக இருக்கவேண்டும், தாய்மைப் பேறு பெற்று, எல்லா நலங்களும் பெற்று விளங்க வேண்டும்!
மணமகன் இப்பொழுது மாமாவாகி அமர்ந்தார். மருமகன் போகும்வரையில் என்னை இருந்து போகுமாறு சொன்னாள் சித்தி. அந்த நான்கு நாட்கள் நகைச்சுவை பரிகாசங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாகக் கடந்தன. ஒரு முறை "நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி மாமா! எங்க தங்கெ உங்களுக்கு மனெவியா கிடெச்சா" என்றேன் சிரித்துக்கொண்டு.
"இல்லே இல்லே! உங்க தங்கெதான் அதிர்ஷ்டசாலி.என்னெப்போல புருஷன் கிடெச்சான்."
"சொந்தப் பெருமையெ டமாரம் அடிச்சிக்கிறீங்களா?" என்றேன்.
"வேறெ யாரும் இல்லேன்னா என்ன பண்ணுவாரு சொல்லு?" என்றாள் பானு. மூவரும் சிரித்துக்கொண்டோம்.
அவ்வளவு புதிதிலேயே மாமா பானுவைச் சீப்பு எடுத்துக் கொடுக்கச் சொல்லியோ - சட்டைக் கைகளை மடிக்கச் சொல்லியோ - பூட்ஸ் துடைக்கச் சொல்லியோ ஏதாவது ஒரு வேலை வாங்கிக்கொண்டு இருப்பார். பானு அவற்றை யெல்லாம் அப்படியே ஒன்று விடாமல் செய்வதற்கு வெட்கப்படுவாள். எந்த அளவு குறையாக நடந்தாலும், நேரங் கடந்தாலும் அவர் சினந்துகொள்வார். நேர்த்தியான பானுவின் முகம் சற்றுச் சிறுக்கும். அதை அவர் புரிந்துகொள்வாரோ இல்லையோ குறைந்தபட்சம் கவனித்ததாகக்கூடக் காட்டிக்கொள்ள மாட்டார். எனக்கு ஏதோ ஒரு வகையில் கஷ்டமாக இருக்கும். பானு அடிமை ஆய்விட்டாளா? எல்லா விதத்திலும் பானுவை அதட்டி வேலை வாங்கும் மனிதர் வந்து சேர்ந்தாரா? மென்மையான பானுவின் மனத்தை நோக வைக்கக் கூடாது என்று - பானுவைச் சிறப்பானதோர் முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நான் போவதற்கு முன்னர் பானுவைத் தனியாகச் சந்தித்தேன். "பானூ! இனி உன் எதிர்காலம் முடிவாயிட்டுது - அதெ எல்லா விதத்திலும் இன்ப மயமாக்கிக்கற்து உன் கையிலே இருக்குது. மாமாவுக்குக் கொஞ்சம் கோவம் அதிகம் இல்லியா? அதுக்கு நீ கொஞ்சம் சாந்தமா இருக்கணும். அம்மாகிட்டே கோவத்தெக் காட்னா மாதிரியே இருந்தா நல்லா இருக்காது தெரியுமா! எல்லா விதத்திலும் உனக்குப் பொருத்தமான புருஷனுடன் சாக்கிரதெயா, பக்குவமா..." அதற்கு மேல எனக்குப் பேச்சு வரவில்லை. பானுவின் தலைமீது கனமான சுமையைத் திணிப்பது போல - ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் திரிந்துவந்த பானுவை யாரிடமோ ஒப்படைத்துவிட்டது போலத் தோன்றியது.
"அண்ணா!" என்றாள் பானு. சில வினாடிகள் அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
"எனக்கு மாமாவெப்பத்தி எந்தப் பயமும் இல்லே அண்ணா! உண்மையிலே என் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குது" என்றாள் கீழே தரையைப் பார்த்தபடியே. பானு மனம் திறந்து யாரிடமாவது சொல்லி இருக்கிறாள் என்றாள் இதுவரை என்னிடம் மட்டும்தான். "உண்மெதான் பானூ! உன் கல்யாணப் பத்திரிகையெப் பாத்தப்போ ராஜசேகரம்னா என்னவோன்னு தோணிச்சே தவிர இப்பொ எனக்கு மகிழ்ச்சியா இருக்குது" என்றேன். பிறகு என் படிப்பு விஷயம் வந்தது. மருத்துவம் படிக்கச் சொன்னாள் பானு - "இப்பொ எனக்கு அந்த ஆசெ இல்லே பானு! பீ.ஏ.க்குப் போறேன். உனக்கு இஷ்டம்தானே?". பானு வேறு ஒன்றும் வாதிக்காமல் சரி யென்றாள்.
பானு மூன்றாவது மாதம் மாமாவிடம் சென்றுவிட்டாள். தன் புதுக் குடித்தனத்தைப் பற்றி, மாமாவின் கோபதாபங்களைப் பற்றி, தான் கற்றுக்கொண்டுவரும் வேலைகள் பற்றி விவரமாகக் கடிதங்கள் எழுதுவாள். நாட்கள் மகிழ்ச்சியுடன் கழிந்து வந்தனவாம். மாமாவுக்குக் கோபம் மட்டும் குறைவதில்லையாம். விடியற்காலம் எழுந்து வேலையில் மூழ்கவேண்டும் என்றால் சற்றுச் சலிப்பாக இருக்கிறதாம். ஒவ்வொரு முறை இந்தத் தொல்லை எல்லாம் ஏன் என்று இன்னதென்று விளங்காத ஒரு வெறுப்பு வருகிறதாம். அடுத்த வினாடியே எதனாலோ அளவுகடந்த பொறுமை வந்து அழுகின்றாளாம். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் அவளுக்கு எப்போதும் நானே நினைவு வருகிறேனாம். சிரித்துக்கொண்டு, புதிய குடித்தனத்தில் அனுபவமில்லாத தங்கைக்கு எனக்குத் தோன்றிய தைரியம் சொல்லிப் பதில்கள் எழுதி வந்தேன்.
* * *
அடுத்த ஆண்டு வருவதற்குள் பானு தாயாகக் கூட ஆகிவிட்டாள். அரசகுமாரனைப் போன்ற மருமகனைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன். தாய் தந்தையரிடம் இருந்த அழகெல்லாம் திரண்டு அவனுக்கு வந்தது. சிவப்பாக ஒல்லியாக, கதிரவன் கதிர்போல் ஒளிவீசும் அவன் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே டக்டக்கென்று நடைபோட்டு வருவதைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்போல் தோன்றும். பானு அதிருஷ்டக்காரிதான்! எல்லா நலங்களையும் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள். அந்த இரண்டு ஆண்டுகளில் பானு மிகவும் மாறிவிட்டாள். பொறுமை, சாந்தம், பணிவு அனைத்தும் பழக்கமாகி விட்டன.
"நீ ரொம்ப மாறிட்டே பானு!" நாம ஸ்கூல்லே படிக்கிறப்போ இப்படி ஏன் நீ இல்லே? இனி எப்பவும் அப்படி இருக்கமாட்டியா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பானு ஒரு விதமாகச் சிரித்தாள். "நான் மறுபடியும் அப்படியே இருக்கணும்னா அன்பு காட்ற அண்ணன் ஒர்த்தன் மட்டும் பத்தாது." எனக்கென்னவோ புரியவில்லை. "என்ன பானு!" என்றேன். "சரிதான்! ஒண்ணு மில்லே போடா!" என்று சொல்லிவிட்டாள்.
"நீ ரொம்ப பெரிய மனுஷி ஆயிட்டாமாதிரி என்னெ இன்னும் சின்ன பையனாக்கப் பாக்கறெ. பாக்கப்போனா நீயே என்னெவிடச் சின்னவ" என்றேன் கோபத்துடன். பானு சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு குறை இருந்தது.
தேர்வு முடிவுகள் தெரிந்த பிறகு பானுவுக்கு மகிழ்ச்சியுடன் கடிதம் எழுதினேன். "பானு! நான் எம்.ஏ. உங்கள் பட்டணத்தில் வந்து படிக்கவேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். இந்த நகரத்தை மாற்றிவிட வேண்டும் என்று எனக்குப் படுகிறது. மீண்டும் உனக்கு அருகாமையில் வருவதற்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது." ஆனால் எனக்கு ஒரு ஐயம் வந்தது. பானு என்னை அவர்களுடைய வீட்டிலேயே இருந்து படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாளோ என்னவோ! என்ன செய்வது? அவர்கள் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக இருந்துவரும் தம்பதிகளாவர்; அவர்களுடைய ஆனந்தத்திற்குக் குறுக்கே நான் போவதா. மேலும் என் படிப்பும் பானுவின் பேச்சால் சரியாக நடைபெறாமல் போகலாம். பானு எழுதிய, பதிலில் அதைப் பற்றிய குறிப்பே இல்லை. என் வருகையை எதிர்பார்த்துக் கொள்ளை ஆசையுடன் இருக்கிறாளாம். என் மடியில் தலைவைத்து ஆசைதீர அழ வேண்டும் போல் இருக்கிறதாம் - அப்படி எழுதி யிருந்தாள். "பைத்தியக்கார பானு!"
* * *
பல்கலைக் கழகத்தில் ஃபீஸ் கட்டிவிட்டு, மாணவர் விடுதியில் சேர்ந்து சாமான்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டுச் சிறிது நேரம் படுத்துக்கொண்டேன். மாலை எழுந்து அம்மா எனக்காகச் செய்து கொடுத்த பருப்புருண்டை டப்பாவை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன். அப்பொழுது பானுவைப் பார்த்துச் சில மாதங்கள் ஆகியிருந்தன. பானு மிகவும் இளைத்திருப்பதாகத் தென்பட்டது. என்னைப் பார்த்ததும் சிரித்த முகத்துடன் ஏதோ புதையல் கிடைத்தாற் போல கையைப் பிடித்துக்கொண்டாள்.
"நல்லா இருக்கறியா? நேத்தே வருவேன்னு நினெச்சேன். முதல்லெ உன் லெட்டரே எனக்கு நாள் கழிச்சி தான் கிடெச்சது. பெரியம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா? அப்பாடா! ரொம்ப உயரமா வளந்துட்டியே!" என்று கேள்வி மழை பெய்துவிட்டாள். பதில்களைக் கேட்காமலேயே "டேய் நானீ! மாமா வந்திருக்காருடா! மாமா! உனக்கென்ன கொண்டு வந்தாரோ கேளு" என்று நடைவண்டியுடன் ஆடிக்கொண்டிருந்தவனை அழைத்துக்கொண்டு வந்தாள்.
அவன் துள்ளித் துள்ளி நடந்து அருகில் வரும்பொழுது கன்னத்தைக் கிள்ளி "உனக்கொண்ணும் தெரியாதுடா மருமகனே!" என்றேன்.
"மருமகன்னா என்ன அவ்வளவு லேசா நினெச்சிட்டிருக்கிறியா என்னா? ஒரு பிஸ்கட் துண்டுகூட இல்லேன்னா அதெ ஞாபகம் வெச்சுக்குவான் தெரிஞ்சுக்கோ!" என்றாள் பானு சிரித்துக்கொண்டு.
"அப்படின்னா உன் பையனுக்குப் பிஸ்கட் தட்சணை போதும்னு சொல்றியா?" என்றேன் டப்பாவைக் கொடுத்துக்கொண்டே.
"இப்போதைக்குப் போதும்!" என்றாள் மதிப்புடன். ஆண் பையனுடைய தாயல்லவா! நானி பிஸ்கட்டுகள் எண்ணிக் கொண்டிருக்க நாங்கள் இருவரும் பேச்சில் மூழ்கிவிட்டோம். எல்லாவற்றிற்கும் இடையில் என் திருமண விஷயம்கூட எடுத்தாள் பானு. நான் திருமணம் செய்யப்போகும் பெண் யாராக இருந்தாலும் அவள் அதிர்ஷ்டக்காரியாம். அந்த அதிர்ஷ்டம் சுசீலாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டுமாம். சுசீலா என் தாய் மாமனின் மகள். பானுவுக்கு உயிர்த்தோழி. சுசீலா பிறந்ததிலிருந்தே கேசவின் மனைவியாகவே வழங்கப்படுகிறாள். ஆனால் அது உண்மையோ இல்லையோ என் தந்தைக்கும், கடவுளிருந்தால் அவருக்கும்தான் தெரிய வேண்டும். தந்தை எப்பொழுதும் வெளியே விடமாட்டார். கடவுள் தென்படக்கூடத் தென்படமாட்டார்.அப்படியானால் தெளிவாவதுதான் எப்படி? என் கருத்தைச் சொல்லச் சொன்னால் மட்டும் எனக்கு ஒன்றும் தடையில்லை. மேலும் சந்தோஷம் கூட - ஆனான் நான் என் திருமணம் குறித்து என்றும் சிந்தித்தது கிடையாது.
சொன்னால் பானு நம்ப மறுக்கிறாள் - என் கர்மம்!
"நீ ஒரு திருடன். உனக்கே இஷ்டம் இல்லே. சும்மா பெரியப்பா மேலே பழிசுமத்தறே. நீ அடம்பிடிச்சி உக்காந்தா ஏன் நடக்காது? யாரின்னா செய்வாங்க?" என்றாள்.
நான் சிரித்தேன். "நான் ஏன் அடம் பிடிக்கணும்? உன் சுசீலா இல்லேன்னா உலகத்திலே பொண்ணுங்களுக்கே பஞ்சம் வந்துட்டுதா?"
"உலகத்தலே எப்போதும் பெண்களுக்குப் பஞ்சம் வராது ராவு சார்!" என்றாள் ஏளனமாக. அதற்குள் தீவிரமாகத் தொடங்கினாள். "சுசீலாவின் பார்வையிலே உனக்குள்ள மதிப்பு அலாதியானது. அதெ வேற எந்தப் பெண்ணோட மனசுடன் ஒப்பிட முடியாது. அவளுக்குப் புத்தி தெரிஞ்ச நாள்ளேயிருந்து உன்னையே நேசித்து வர்றா..."
"உனக்கென்ன பீஸ் கொடுக்கறேன்னு சொன்னா?"
பானு ஒரு நிமிஷம் நிறுத்தி என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்துக்கொண்டே "உன் குணம், அவளோட அழகு சேர்ந்த மருமகளைக் குடுக்கிறேன்னு வாக்குக் குடுத்திருக்கிறா"- பானு கண்களால் சிரிக்கும்பொழுது எனக்கு வெட்கமாக இருந்தது. அதென்னவோ பானு இப்படிப் பெரிய மனுஷியைப் போல எல்லா விஷயங்களையும் வெட்கம் இல்லாமல் பேசத் தொடங்கிவிட்டாள்.
"யாரெக் கேட்டு உனக்கு அந்த வாக்கெக் கொடுத்தாளாம்?" என்றேன் கோபம் வந்தாற்போல் நடித்துக் கொண்டே.
"அதென்னவோ! அவளெக் கேளு" என்று சொல்லி விட்டாள்.
சிறிது நேரம் ஆன பிறகு "மாமா இன்னும் வரல்லியே என்ன?" என்று கேட்டேன்.
"டைம் எட்டாகப் போவுது. வருவார்...." என்றாள்.
"மாமா பத்திய விஷயங்க சொல்லேன் பானு!" என்று கேட்டேன்.
"நாளலேயிருந்து நீயே பாக்கப்போறே ஆவட்டும்" என்றாள் சிரித்துக் கொண்டே. ஒன்பது கூடக் கடந்து விட்டது. எத்தனை முறை சாப்பாட்டுக்கு எழுந்திருக்கச் சொன்ன போதிலும் "மாமாவும் வரட்டும்!" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். அவர் வருவதற்கு மேலும் ஓர் அரை மணி பிடித்தது. நாள் தோறும் அவர் வரும் நேரம் அதுதானாம். இந்தக் கால உத்தியோகத்திற்கும் மனைவி மக்களுக்கும் பொருத்தமில்லை போலும்!
"நல்லா இருக்கீங்களா? அதுக்குள்ளேயே ஹாஸ்டல்லே இறங்காமெ நாலு நாள் இங்கே இருந்து போகக் கூடாதா?" என்று பேச்சைத் தொடங்கினார்.
"ஸ்டேஷன்லே இருந்து நேராப் போயிட்டேன் மாமா!
சாமான்களெ இங்கெ அங்கே மாத்திக்கிட்டிருந்தா கஷ்டமா இருக்குமில்லே? நீங்க சௌக்கியமா? பத்து மணிவரெக்கும் என்ன வேலெங்க? இதுவரெக்கும் பொம்பளெங்க தனியா இருக்கவேண்டியதுதானா?" என்றேன்.
"ஏன்? உங்க தங்கெ தைரியசாலி இல்லே! குளிச்சிட்டு வர்றேன்!" என்று சொல்லிக் கொண்டே புழக்கடைப் பக்கம் சென்றார்.
சாப்பிட்டு முடித்ததும் தூக்கம் அழுத்திக்கொண்டு வந்தது. 'பானு சுகமா இருக்கறா, அதுபோதும்!' என்று எண்ணிக்கொண்டே தூக்கத்தில் நழுவிவிட்டேன்.
வாரத்திற்கு ஒரு முறையாவது எதையாவது வாங்கிக் கொண்டு சென்று பானுவையும் மருமகனையும் பார்த்து விட்டு, ஒவ்வொரு முறை சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கமாகி விட்டது. எப்போதோ ஒரு முறையே தவிர மாமாவைப் பார்ப்பது அரிதாக இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் காலம் மிகக் குறைவு. பானு தனியாக ஏதாவது படித்துக் கொண்டோ, தைத்துக் கொண்டோ, மகனுடன் விளையாடிக் கொண்டோ இருப்பாள். என்னைப் பார்த்ததும் போன உயிர் மீண்டு வந்தாற்போல் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆசையோடு பேசுவாள். "அப்பப்பா! இந்தத் தனிமையை எப்படித் தாங்கிக்கிறே பானூ?" என்றால் "என்ன செய்யச் சொல்றே?" என்றாள் வேதனையுடன்.
* * *
இரண்டு மூன்று மாதங்களில் நான் கிரகித்தது என்ன வென்றால் பானு அமைதி யில்லாமல் அவதிப்படுகிறாள்; துன்பத்துள் முழுகிக்கொண்டே இருக்கிறாள்; இன்பத்திற்குத் தூரமானவள் போலச் சுமையுடன் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறாள். இடி விழுந்தவன் போல் அதிர்ச்சி யடைந்தேன். பானு அமைதி யில்லாமல் அவதிப்படுவதா? துக்கத்துக்குள் முழுகிப் போவதா?
காரணம்? எவ்வளவு சிந்தித்தாலும் ஒன்றும் புரியவில்லை. பானு மட்டும் மிகவும் மாறிவிட்டாள். ஏனோதானோ என்று அலட்சியமாக, எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் நடந்து வருகிறாள். மாமா ஏதோ கேட்கிறார். எடுத்துக் கொடுக்கிறாள். இல்லை என்றால் சுருக்கமாகப் பதில் சொல்கிறாள்-- அவ்வளவு தான். கணவன் மனைவியர் இருவரும் சேர்ந்து அன்போடு அதிகமாக உரையாடுவது என்பது அருமை. மழலை மொழி பேசிக்கொண்டு வீடு முழுவதும் பம்பரம் போலச் சுற்றிவரும் மகனை இருவரும் சேர்ந்து விளையாட்டுக் காட்டுவது ஆகட்டும், அவனைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்வது ஆகட்டும் நான் பார்க்க வில்லை -- இன்னும் சொல்லப்போனால் மகனைத் தந்தை எப்பொழுதேனும் தூக்கிக்கொண்டு திரிந்து வருவது என்பதே கிடையாது. அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் அன்பாகட்டும் பற்றாகட்டும் இருப்பதாக எனக்கொன்றும் புலப்பட வில்லை.
சே! அவர்களை நான் தான் தவறாகப் புரிந்துகொண்டு வருகிறேனோ என்னவோ! அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் நான் நினைக்கும் பயங்கரமானவை மருந்துக்குக்கூட இல்லையோ என்னவோ! அவர்கள் குறையேதும் இல்லாமல் அமைதியாக வாழ்கின்றார்களோ என்னவோ! அப்படியானால் மனைவியின் முகத்தில் ஒரு புன்முறுவலின் கோடுகூடக் காணப்பட வில்லையே ஏன்? ஒளியுடன் மின்னும் அந்தக் கண்களில் துன்பம் ஏதோ குடியிருக்கிறதே ஏன்? ஆடல் பாடல்களில் மூழ்கி இருக்க வேண்டிய வீடு ஆரவார மில்லாமல் காணப்படுகிறதே ஏன்?
பானுவைக் கேட்டால்... என்ன வென்று?
என் ஊகங்கள் ஊகங்களாகவே இருந்து விட்டால்?
பானு ஏதாவது நினைத்துக்கொண்டு துன்பப் பட்டால்?
* * *
சனிக்கிழமை மாலை நான் போகும்போது மாமா வீட்டிலேயே இருந்தார். இருவரும் ஏதோ மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். என்றும் இல்லாததைப் பார்த்துக்கொண்டே நின்னுவிட்டேன்.
"என்னங்க ராவ் சார்! அதிசயம் பாக்கறாப் போல அப்படியே நின்னுட்டீங்க?"
"ஆம், அதான், அதான்.... உங்களைத்தான்!" சிரித்தேன். அன்று ஏனோ அவர் ஓய்வாக உட்கார்ந்திருந்தார். கல கல வென்று பேசிக்கொண் டிருந்தார். "நீங்க எல்லாப் படிப்பும் படிக்கிறீங்களே தவர கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க ஏங்க? என் தங்கெ யாரோ ஆவட்டும் சுகப்பட்டுப் போவா. உங்க கல்யாணத்துக்கு வந்து ஒரு பத்து நாள் தமாஷா காலம் தள்ளலாம்னு பாத்தா, நீங்க என்னடான்னா..."
"அதுக்கென்ன அவசரம்! ஒரு நூறு ரூபா நமதில்லேன்னு நினெச்சா சலிப்பு வர்றவரெக்கும் ஓட்டல்காரன் விருந்து போட்றான். அவ்வளவுதானே அண்ணா" என்றாள் பானு.
"அண்ணா இல்லே, அக்கான்னு கூப்பிடு - உங்க அண்ணனெக்கூட ஒரு ஆம்பளென்னு நினைச்சிட்டிருக்கிறியா என்ன?"
"நீங்க உங்க இனத்துக்கு நல்ல உதாரணமாத்தான் இருக்கிறீங்க!"
"சாமர்த்திய மெல்லாம் உங்க அண்ணன் தங்கெ ரெண்டுபேருக்கு மட்டும் சொந்தம் இல்லெ; உன் அண்ணனுக்கு இருக்கற பணம் மட்டும் என்கிட்டே இருந்தா, பாத்துக்கோ மாடியிலே கால், காரிலேயே..."
"காரிலே கால் கிளப்பிலேயே!"
"இல்லேன்னா உன் அண்ணனாட்டம் பொம்பளெ மாதிரி பேசிட்டே உக்காந்திருப்பேனா என்ன!" விவாதங்களிலே ஒரு மணிநேரம் கடந்தது. "நாளெக்கு எங்கேயாவது பிக்னிக் போலாமா?" என்றார்.
பானுவின் மகிழ்ச்சி எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. உடனே நான் ஒப்புக்கொண்டேன். எங்கே போவது, எத்தனை மணிக்குப் புறப்படுவது, என்னென்ன எடுத்துச் செல்வது, எப்போது திரும்பி வருவது எல்லாம் ஒன்று விடாமல் வாதிட்டு முடித்து விட்டோம். மாமாவுக்குப் புளிச்சாதம் வேண்டுமாம். நான் போளி செய்யச் சொன்னேன். பானுவுக்குத் தேங்காய் அல்வா என்றால் உயிர்! மூன்றையும் சிறிதளவு சிறிதளவு செய்வது என்று முடிவு செய்தோம். படுக்கையில் படுக்கும்வரைப் பேச்சு வளர்ந்துகொண்டே இருந்தது. அதென்னவோ அவர்கள் மகிழ்ச்சியுடன், குறையில்லாமல் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்றால் எவ்வளவு ஆனாலும் என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை.
பானு விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்திருந்தாள் போலும். அடுப்பு மூட்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தாள். விளக்கைப் போட்டு என் கட்டில் பக்கமாக வந்து அலமாரியிலிருந்து சாமான்கள் ஏதோ எடுத்துக்கொண்டாள்.
"எப்பொ எழுந்திரிச்சே பானூ?" என்றேன்.
"உனக்கு முழிப்பு வந்துட்டுதா என்ன? இனிமே வர மாட்டேன் ஆவட்டும் - படுத்துக்கோ!" என்று சொல்லி விளக்கை அணைத்துவிட்டுப் போய்விட்டாள். போர்வையை இழுத்துத் தலைவரையில் போர்த்திக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மேலும் தூங்குவதற்கு மனம் வரவில்லை. பாவம் பானு, நல்ல இருட்டில் எழுந்து விடிய விடிய வேலை செய்துகொண்டிருக்கிறாள். ஓரளவு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு வேலையும் தெரியாது - எழவு! எழுந்து சென்று மணை போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.
"இதுக்குள்ளேயே எழுந்திட்டியா என்ன?" என்றாள் அரிசி கழுவிக்கொண்டே.
"தூக்கம் பிடிக்கிலே. உனக்குத் துணையா உக்காரலாம்னு வந்துட்டேன்."
"நல்லவன் தான். கொஞ்சம் தேங்கா துருவித் தர்றியா?" என்றாள். அந்த மையிருட்டிலேயே கழுவியும் கழுவாமலும் முகத்தைக் கழுவிக் கொண்டேன். இல்லை என்றால் மனச்சாட்சி சத்தம்போடு மல்லவா! தேங்காய் நீரை நான் ஒருவனே குடித்துவிட்டேன். பானு ஏதோ வேலைகள் செய்துகொண்டே பேச்சுக் கொடுத்தாள். "தேங்கா துருவற்து இன்னும் முடியலியா? இந்த ஏலக்காயெ மெதுவா பொடிபண்ணு. இதோ இங்கே மணைமேலே வெக்கறேன். அப்புறம் முந்திரிப் பருப்பு உரிச்சு வை. கொஞ்சம் சீக்கிரமா ஆகட்டும்டா!" என்று சொல்லி அதிகாரம் செய்யலானாள்.
"நல்லா இருக்குது! விடியற்துக்குள்ளே சமயல் முழுக்கக் கத்துக்குடுத்துடலாம்னு இருக்கறியா!" என்றேன். மெதுவாகத் தேங்காய்த் துருவிக்கொண்டே.
"நல்லதுதானே? உன் மனெவி சுகப்படுவா" என்றாள்.
"அவளோட சுகத்துக்காக என்னெக் கஷ்டப்பட வெக்கிறியா"
"நாளெக்கு உன் சுகத்துக்காக அவ கஷ்டப்பட மாட்டாளா?"
"என்னானாலும் நேத்திலே யிருந்து நீ ரொம்ப பேசிக் கிட்டிருக்கறே."
"சரிதான் அண்ணா! வருஷத்துக்கு ஒரு நாளாவது புருஷனும் மனெவியும் சமயலறெலே உக்காந்து பேசிக் கிட்டே வேலே செஞ்சிகிட்டா சந்தோஷமா இருக்காது!"
"இன்னும் கேக்கணுமா? அப்படீன்னா உடனே போய் மாமாவெ எழுப்பிவரச் சொல்றியா?"
"போ போ - உனக்குப் பல்லு கொஞ்சம் உறுதியா இருக்கறாப்போல இருக்குது."
"அடேயப்பா! அம்மாவுக்குக் குதிரெ லட்சணம்கூட இருக்கறாப்போல இருக்குது" என்றேன். அதற்குள் திடீரென்று நினைவு வந்து "பானூ! இவ்வளவு வேலெங்க எப்பொ கத்துக்கிட்டேன்னு சொல்லு! காபி போடக் கூடத் தெரியாது. ஏழுமணி வரெக்கும் போர்வையெ இழுத்திப் போத்திக்கிட்டுத் தூங்கறவ. இப்போ...."
"இத்தனை நாள்ளெ என்னெ மெச்சிக்கற்துக்கு நீ வந்து சேந்தே. இது ஒரு புனர்ஜன்மம்தான்!"
"என்ன பானூ அப்படிப் பேசறே?"
அதற்குப் பதில் சொல்லாமல், "சரிதான் ஆவட்டும், ஏலக்காய் பொடி பண்ணியா? முந்திரிப் பருப்பு உரிச்சியா? அய்யய்யோ! என்ன வேலெடா! பெரிசா செய்வேன்னு உனக்குச் சொன்னேன். எல்லாம் துண்டு துண்டாக் கிள்ளிப் போட்டுட்டே துருவல் எல்லாத்தெயும் தூள் பண்ணிட்டே" என்று என்னைக் குறைசொல்லிவிட்டு மறுபடியும் அதைச் சரிப்படுத்தத் தொடங்கினாள். நான் கோபித்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
ஆறுமணி ஆவதற்குள் இரண்டு காரியர்களில் நிரப்பி வைத்துவிட்டாள். எனக்கு வெந்நீர் விளாவிக்கொடுத்து, அதற்குள் நானி எழுந்திருக்க, அவனைக் குளிப்பாட்டினாள். அவளும் குளித்துவிட்டு எல்லாவற்றையும் சரி செய்து வெளிர் நீலப் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தயாரானாள்.
மாமா எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வர, பல் ப்ரஷ்ஷை எடுத்துக் கொடுத்தாள். அவர் குளித்து விட்டுச் சிற்றுண்டி எல்லாம் முடித்துக்கொண்டு தெரு நடைக்குச் செல்வதற்குள் யாரோ ஒருவர் இதயமே வெடித்துவிடுவது போல ஓடிவந்து சேர்ந்தான். "ராஜு! ராத்ரி மெயில்லே ராமம் வந்துட்டாம்பா! இன்னக்கு ஞாயித்திக் கிழமெ இல்லியா? உன்னெக் காபி எல்லாம் ஆனதும் வரச்சொல்லி சொல்லச் சொன்னான்."
அதென்ன சொல்லோ தெரியாது, கேட்டதுமே மாமாவின் முகம் மின்சார வளக்குபோல் ஒளி வீசியது. "ராமம் வந்துட்டானா? என்ன செய்தி சொன்னேயா! போ, போ - உன் பின்னாடியே வர்றேன். அப்படியே மூர்த்தியெக் கூட கூப்ட்டுட்டு போ" என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துகொண்டே "பானூ! டிரஸ் எடுத்துவை. ஒரு வேளெ மத்தியானம் சாப்பாட்டுக்கு வர முடியாது போல இருக்குது. அந்த சாக்ஸ் அழுக்கா இருக்கறாப்போல இருக்குது. வேறே எடுத்துவை." என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டே இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதென்ன! இரவு பிக்னிக் போகலாம் என்று பேசிக் கொண்டதை மறந்துவிட்டாரா?
பானு உள்ளுக்குள் நொந்துகொண்டே சொன்னாள், "இன்னக்கித் தோட்டத்துக்குப் போகலாம்னு நினெச்சோம் இல்லியா? காரியர்கள் கூட நிரப்பி வெச்சிட்டேன்."
"பெரிய வேலை செஞ்சிட்டே! தோட்டம் எங்கேயும் ஓடிப் போவாது. ஆவட்டும்! அடுத்த வாரம் போகலாம். என்னங்க ராவு சார்! ஹாயா ஓட்டல்லே இருந்து கொண்டுவந்தா மாதிரி காரியர்களெ பிரிச்சி வெச்சி அண்ணன் தங்கெ ரெண்டுபேரும் சாப்பிட உக்காருங்க. என்ன சொல்றீங்க?" என்றார் சிரித்துக்கொண்டே. உண்மையில் எனக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலூம் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தேன். துணியை மாற்றிக்கொண்டு அவர் போய்விட்டார். ஐந்து நிமிஷங்களில் நடந்துவிட்ட இந்த எதிர்பாராத அதிர்ச்சியில் என் மூளை கலங்கியது போலவே இருந்தது. பெரு மூச்சு விட்டுத் தலையைத் திருப்பிப் பார்த்தால் பானு வாயிற்படியின் மீது தலையைச் சாய்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். கண்களில் நீர் கசிந்திருந்தது.
"சே ! இதுக்கே போய் அழறியா என்ன? சரியான ஆளுதான் நீ. ஊர்லே யிருந்து நண்பன் வந்தால் யாருக் கானாலும் சந்தோஷம் இருக்காதா? பிக்னிக் இல்லாட்டா என்ன இப்பொ? இன்னொரு முறெ போகலாம் ஆவட்டும். மாமா சொன்னாப்பலேயே உக்காந்து பேசிக்கலாம்" என்றேன் அவளுக்கு ஆறுதல் சொல்லும் முறையில்.
பானு கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள்--"உனக்குத் தெரியாது அண்ணா! அவர் போனது நண்பனெப் பாக்கறதுக்காக இல்லே. இந்தச் சீட்டாட்டத்தினாலே என் குடும்பம் எவ்வளவு சீரழியதுன்னு உனக்குத் தெரியாது."
நான் துள்ளி்விழுந்தேன், "பானூ!"
"ஆமாம் அண்ணா! உனக்கு எப்படிச் சொல்றது?"
அவருக்கு அவரே பிக்னிக் திட்டம் போட்டு, பாதி இரவில் எழுந்து மனைவி எல்லாம் செய்தால்... இறுதியில் எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டுப் போனது சீட்டாட்டத்திற்கா? என் வியப்பிற்கு எல்லை இல்லை. அவர் சீட்டு ஆடுவதற்கு அல்ல, பானு சீட்டாட்டத்தை--பொறுத்துக் கொண்டிருப்பதற்கு--சீட்டாடும் மனிதனைச் சகித்துக் கொண்டிருப்பதற்கு. பானு மிகவும் வெறுக்கும் விஷயங்களில் சீட்டாட்டம் ஒன்று. "ஆண் சூதாடி ஆனால் அதைச் சகித்துக்கொள்ளும் பொறுமை பெண்ணுக்கு இருக்கக் கூடாது" என்றாள் ஒருமுறை.
"பானு! அவ்வளவு உறுதியாக முடிவு செஞ்சிடாதே. இந்தக் காலத்லே சீட்டாட்டம் சாப்பாட்டெவிட மிக முக்கியமாக மாறிட்டது. அந்த மாதிரி விஷயங்கள்ளெ
அவ்வளவு வெறுப்பு வளத்துக்கறது நல்லதில்லே" என்ற பொழுது, ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே--"அண்ணா! நீ நிஜமாத்தான் சொல்றியா?" என்றாள். "இப்பொ உங்க வீட்டுக்காரர்க்குச் சீட்டாட்டம் ரொம்ப இஷ்டம்னு வெச்சிக்கொ--நீ என்ன பண்ணப்போறே?" என்றேன்.
"என்ன செய்றேனா? நிறுத்த வெக்கறேன்." எவ்வளவு அழுத்தம்.
"அவர் கேக்கலேன்னா?"
"என்ன நீ இப்படிப் பேசறே? புருஷன் மனெவி ஒர்த்தர் சொல்றதெ இன்னொர்த்தர் கேக்காத நாள் அந்த உறவே அர்த்தமில்லாத துன்னு நினெக்கறேன்."
எனக்கு ஏதோ சொல்லவேண்டும்போல் தோன்றியது. ஆனால் அதைவிட எப்படிச் சொல்வது என்பது புரியவில்லை. அதே பானு... இன்று! கட்டில் மீது படுத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறாள். என் உடலில் நடுக்கம் கண்டது. அந்தக் குடும்ப வாழ்க்கை முழுவதும் எனக்குப் புரிந்துவிட்டதுபோல் தோன்றியது. பானுவின் அழுகை நான் என்றும் பார்க்காதது--பார்த்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாதது--மெதுவாக அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு கூந்தல் மீது கையை வைத்தேன்.
"ஏன் பானூ அழறே?" என்றேன்.
சிறிது நேரத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். "இதுதான் எனக்கு மிஞ்சி இருக்கறது. அழுதா கொஞ்சம் திருப்தியா இருக்கும்."
நான் ஒன்றும் பேச முடியாமற் போய்விட்டேன். பானு குடும்ப வாழ்க்கையில் இன்பம், மகிழ்ச்சி அனுபவிப்பதில்லை. நான் ஊகித்த பயங்கரங்கள் யாவும் உண்மையாகிக் கொண்டிருந்தன.
"பானூ!" என்றேன் உணர்ச்சியில்லாமல். " உன் அறிவாற்றல்களால் மாமாவெ மாத்த முடியாமெ போயிட்டியா?"
"உன் திறமையால் கல்லெ மனுஷனாக்க முடியுமா? மனுஷங்கள்ளே கல்லுங்ககூட இருக்குமுன்னு எனக்கு எப்பவும் தெரியாமெ போயிட்டது."
"பானூ! நீ ரொம்ப அவசரப் படறே தெரியுமா! ஒரு மனுஷனெ விஷம்னு சொல்றதுக்கு காரணங்க பல வேணும். சீட்டாட்டங்கறது ரொம்ப சின்ன விஷயம்."
பானு பேசவில்லை. நானே சொன்னேன் -- முதல்லெ உன் முயற்சிகளெ நீ பண்ணிப் பாத்தியா?"
பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து கொண்டிருந்தது. " நான் முழுசும் தோத்துப் போயிட் டேன் அண்ணா! இன்னக்கி என் கர்வம் எல்லாம் அழிஞ்சிபோச்சி. இந்த ரெண்டு வருஷத்தலெ எத்த னெயோ உண்மைகளெத் தெரிஞ்சிகிட்டேன்." கண் களைத் துடைத்துக்கொண்டாள். " இந்த நிமிஷம்வரெ என் கஷ்ட சுகங்களெ யாரிடமும் சொல்லிக்கலெ. சொல் லப்போனா அம்மாவுக்கு, சுசீலாக்குக்கூட தெரிவிக்கலெ. மனசுலெ குழப்பம் நிறஞ்சப்பொ எல்லாம் என்னக்காவது ஒருநாள் உன் ஒருத்தன்கிட்டே மட்டும் சொல்லிக் கணும்னு நினெப்பு வரும். உன்னெத்தவர எனக்கு யாரு மில்லெ. உனக்கு என்ன சொல்றது, எப்படிச் சொல்றது? நான் எவ்வளவோ சந்தோஷமா, சுகமா வாழறேன்னு கனவு கண்டு வரும் உனக்கு உண்மையெ எப்படிச் சொல்ற தண்ணா?" தலையணை மேல் சாய்ந்து விட்டு கேவிக் கேவி அழத் தொடங்கினாள். பானு ஏன் இப்படிப் பைத்தியக்காரி போல ஆகிவிட்டாள்? பார்க்கப் பார்க்க வியப்பு பெருகியது.
"மாமா அடிக்கடி சீட்டாடிக்கிட்டு இருக்காறா?" என்று கேட்டேன் மெதுவாக.
பானு கண்ணெடுத்துப் பார்த்தாள்,"அடிக்கடியா? அடிக்கடி என்ன எழவு? ஒவ்வொரு நாளும்! ஒவ்வொரு மணியும்! ஒவ்வொரு நிமிஷமும்! கிளப்புதான் வீடுவாசல் எல்லாம்! சீட்டாட்டம்தான் குடுத்தனம்! சிநேகிதங்கதான் மனெவி மக்கள்! அவருக்கு வேறொண்ணும் வேணாம். வீடு நரகம்! மனெவி ராட்சசி! மகன் எதிரி! இன்னும் என்ன சொல்றது?"
நான் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
"பானூ! உனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் மத்தவங்களோட சூழ்நிலையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும். பாரு! இந்தப் புது யுகத்தெ நீயும் ஆமோதிக்கறெ, விரும்பறெ. தேச, காலச் சூழ்நிலெங்களினாலே மார்ற விஷயங்களுக்குக் கொஞ்சத்துக் கொஞ்சமாவது நாம பழக்கப்படுத்திக்கணும். சிகரெட் பிடிக்கற்து, ஊர் சுத்தற்து, சீட்டாடற்து, கிளப்புக்குப் போறது, சினிமா பாக்கற்து, தமாஷா பொழுது போக்கற்து இதெல்லாம் நாம விரும்பும் நவநாகரிகத்தின் சிறப்புங்கதானே--ஒரு சிநேகிதன் சிகரெட் கொடுத்தா 'தாங்க்ஸ்' சொல்லி வாங்கிக்கல் லேன்னா மரியாதெ குறவு! பத்து பேரு சேந்து சீட்டாடணும்னு சொல்லும்போது பின்வாங்கனா கோழெத்தனம்! ரோட்லே சந்திச்சவன் ஆனாலும் ஓட்டலுக்கு அழெச்சுட்டுப்போய் காபி வாங்க ஊத்தலென்னா அகௌரவம்! தனக்குச் சினிமா பாக்கணும்னு ஆசெ வந்தா சிநேகிதங்களெக் கூப்பிடாமெ ஒர்த்தனே போய் வந்தா அவமானம்! நல்லதோ கெட்டதோ சில பழக்கங்க தவிர்க்க முடியாமெ உண்டாயிட்டு வருது. இன்னக்கி எல்லாத்தெயும் நல்லதாவே ஏத்துக்கிட்டு வர்ற ஆம்பளெங்க எதுக்கும் பின்வாங்க மாட்டாங்க. காலச் சூழ்நிலையெ ஒட்டி நல்லதானாலும் கெட்டதானாலும் அனுபவிக்கறதையே பழக்கம் செய்துக்கணும் பானூ!"
" விடுதியிலெ மாமா சிகரெட் கொடுத்தப்பொ வேணாம்னு சொல்லிட்டேன்னு சொன்னே. ஞாபகம் இருக்குதா?"
" அதுக்கும் இதுக்கும் முடிபோடாதே பானூ! இரண்டு மனுஷங்க ஒரே மாதிரியா எப்படி நடந்துக்கமுடியும்? நேத்து மாமா என்னெப் பொம்பளேன்னு எப்படி கேலி பண்ணாரு பாத்தியா? நான் சிகரெட் புடிக்கற் தில் லேன்னு, சீட்டாட மாட்டேன்னு, எனக்கு எந்தப் பழக்கமும் இல்லேன்னுதானே அவரோட எண்ணம்? கெட்ட பழக்கங்களுக்குத் தூரமா இருக்கறவன் உலகத்தின் பார்வையிலே திறமெயில்லாதவன்! கோழெ! அதுக்காகத்தான் ரொம்ப பேர் ஏதோ பெருமெக்காகத் தமாஷா பொழுதுபோக்கற்துக்குப் பழக்கப் படுத்திக்கிறாங்க. அதெல்லாம் அவங்க அவங்க மனத் தத்துவப்படி இருக்குதுன்னு வெச்சிக்கோ-- நான் சொல்றது என்னன்னா காலத்தோடு கலந்து வந்து சேர்ற இந்த மாதிரி விஷயத்தெ எல்லாம் சாதாரணமாவே எடுத்துக்கணுமே தவர, கெட்டதுன்னு முடிவு செஞ்சிடக்கூடாது. மானம் மரியாதெகள்ளேயும், கட்டிக்கற்து பொட்டு வெச்சிக்கற ஸ்டயில்லே எல்லாம் அசிங்கமா வர்ற பொண்ணுங்க எத்தனெ பேர் இல்லே பானு! அந்த நைலான் புடவெங்க உடம்பு முழுதும் விதவிதமான சாயங்க. கூந்தலெ வெட்டிக்கற்து, ஒவ்வொரு ஆம்பளெயோடும் உரசிக்கிட்டு சுத்தற்து இதையெல்லாம் பாத்தா அவங்களெ எவ்வளவு மட்டமா நினெக்கணும்னு சொல்றே?ஆனா உண்மையா அப்படி நினெக்கறமா? காலம் மாறிட்டது.வேஷத்திலும் மொழியிலும் கூட மாறுதல் வந்துட்டது.அவங்க அவங்க விருப்பப்படி அலங்காரம் பண்ணிக்கறாங்கன்னு நினெச்சி சமதானப் படுத்திக்கிறெ இல்லியா? அந்த மாதிரியே ஆம்பளெங்க பழக்க வழக்கங்ககூட -- இருந்தாலும் இந்தக் கெட்ட பழக்கங்களெ ஆம்பளெங்க மட்டுமே பழக்கப் படுத்திக்கிறாங்கன்னு நீ நினெச்சிக்கிறியே தவர, சிகரெட் புடிச்சிகிட்டு, ஆம்பளெகளெ மிஞ்சிச் சீட்டாடும் 'சொஸைட்டி லேடீஸ்' எத்தனெ பேரெக் காட்டச் சொல்றே?"
"தேவெ யில்லே--அப்படிப்பட்டவங்க இல்லேன்னு நான் எப்பவும் சொல்லல்லே. நான் இனப் பற்றோடு பேசல்லே. தப்புங்கற்து யார் பண்ணாலும் தப்புதான்! பொம்பளெங்க விஷயத்தலே நீ எடுத்துச் சொன்ன அவலட்சணங்க எதுவும் என்கிட்டே இல்லேன்னு நான் நினெச்சிட் டிருக்கிறேன்; அது உனக்கும் தெரியும். மாமா எனக்குக் கல்யாணப் புடவெகள்ளே ஒரு நைலான் புடவெகூட வாங்கித் தந்தார். அதெக் கட்டிக்கற்து எனக்குப் புடிக்காது; ஆனா மாமாவுக்காக நாலெஞ்சி முறெ கட்டிக்கிட்டேன். இப்பவும் அப்படியே இருக்குது. நான் பாஷனா மேக்அப் பண்ணிக்கற்தில்லேன்னு, ஆடம்பர மில்லாமெ இருக்கறேன்னு மாமாவுக்குப் புடிக்காது. மாமாவின் விபரீதமான பழக்கங்க எனக்குப் புடிக்காது. நீ சொன்னபடி ஓரளவுன்னா தாங்கிக்கலாம். எதெச் செஞ்சாலும் அதிகமாப் போகாத வரெக்கும் நல்ல பழக்கம், போயிட்டா கெட்ட பழக்கம். இல்லேங்கறியா? பண்டிகெ நாள் ஒருவேளெ புருஷ னோட இருக்கணுங்கற மிகச் சாதாரணமான விருப்பத் தெக்கூட நிறெவேத்திக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையெ எப்படிப் பொறுத்துக்கறது?" பானு ஒரு வினாடி நிறுத்தினாள். "ஒரு விஷயம் கேள் அண்ணா! உனக்கு நிலமெ விளங்கும். போன பொங்கலுக்கு அம்மா கடிதம் போட்டுக் கூட நான் போகல்லே. அதுவரெ ஒரு பொங்கல் கூட இங்கெ கொண்டாடல்லே. இந்தப் பொங்கல் இங்கேயே கொண்டாடணும்னு எண்ணம் வந்து இங்கேயே இருந்துட்டேன். பண்டிகெக்குப் பத்து நாளிருக்கும்போதே எவ்வளவோ நினெச்சி வெச்சேன். என்னென்னவோ முடிவுபண்ணேன். அந்த நாலு நாளும் நான் என்னென்ன புடவெ கட்டிக்கற்து, பாபுவுக்கு என்னென்ன சட்டெ போட்றது, என்னென்ன டிபன் பண்றது, என்னென்ன சமயல் பண்றது - ஒண்ணொன்னா? எல்லாத்துக்கும் லிஸ்ட் எழுதி வெச்சிட்டேன். எல்லாத்தையும் மாமாவுக்குச் சொன்னேன். 'பண்டிகெ நாலு நாளெக்கும் புதுப்புது டிபன் பண்ணிச் சாப்டுட்டுப் பேசிக்கிட்டு உக்காந் திருக்கலாம். இந்தப் பண்டிகையெ சந்தோஷமா நடத்திக்கணும்னு இருக்குது--எப்பவும் உங்களெ ஒண்ணும் கேட்டதில்லே. அந்த நாலு நாளும் வீட்லெ இருக்கணும் நீங்க. இந்த ஒரு தடவெயாவது எனக்காக...' எவ்வளவு வெக்கத்தெவிட்டு, எவ்வளவு ஆசையோடெ கேட்டேன்னு புரிஞ்சிக்க முடியுமா உன்னாலே? அப்படி ஒரு பெண் கேக்கவேண்டிய நிலையே வரக் கூடாது. புருஷனுக்கே அந்த நல்ல பழக்கம் இருக்கணும்! அவர் ஒண்ணும் சொல்லல்லே. சிரிச்சிட்டு பேசாம இருந்தார். என் விருப்பத்தெத் தள்ளிட மாட்டார்னு கர்வப்பட்டேன். போகிப் பண்டிகெ அன்னக்கி காலமெ எவ்வளவு சந்தோஷமா வேலெங்களெ ஆரம்பிச்சேன். தலெ முழுகற் தெல்லாம் முடிஞ்சது. டிபன் சாப்டுட்டு அவர் பேப்பர் படிச்சிகிட்டு உக்காந்திருந்தார். நான் சமயலறெலே வேலே செஞ்சிட்டிருந்தேன். ஒரு அரெமணி நேரம் ஆயிருக்கும். அவர் சமயலறெ* வாசப்படிகிட்டே வந்து 'ஒண்ணும் பொழுது போக மாட்டேங்குது பானூ!' என்றார்.
'ஒரு கால்மணி நேரம் உக்காந்திருங்க, இதோ வந்துட்றேன்'னு சொன்னேன்.
'அப்பப்பா! இப்படி கைகட்டிட்டு வீட்லெ உக்காந்திருந்தா போர் அடிக்குது. அப்படீ கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வர்றேன்.'
நான் ஆச்சரியத்தோடு தலெ எடுத்துப்பார்த்தேன். 'இப்பொ வெளியே போனா வந்தாப்போலத்தான்? குறெஞ்சது இந்தப் பண்டிகெ நாளுங்களாவது...'
'என்னவோ உன் கழுத்தறுப்பு - பண்டிகெ ஆனதுனாலேதான் பத்துபேர் சேர்றாங்க. இப்படி வீட்லெ உக்காந்துட்டு என்ன பண்ணச் சொல்றே?'
வீட்லே உக்காந்து என்ன பண்ணச் சொல்றதாம்! வீட்லேயே இருக்கற மனுஷங்க எல்லாரும் என்ன பண்றாங்க! சொன்னதெல்லாம் எந்தத் தண்ணியிலெ போச்சி? கோவம் வந்தாலும் நிதானமாகலவே சொன்னேன். ' நாமரெண்டு பேரும் இருந்தாலே உங்களுக்கு ஒண்ணும் செய்யத் தோணல்லேன்னு சொல்றீங்களே? நீங்க போயிட்டு நான் ஒருத்தியே இருந்தா எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க.'
'அதுக்குன்னு என்னெ உனக்குக் காவல் காக்கச் சொல்றியா என்ன? எங்கேயாவது பக்கத்து வீட்டுக்குப் போ!'
என் கண்லே யிருந்து கண்ணீர் வழிஞ்சது. 'வீட்லே இருக்க வேண்டியமனிதர் - நீங்க வீட்டெ விட்டு ஊர் சுத்திக்கிட்டிருந்தா நான் அவங்களெ இவங்களெ வேண்டிக்கிட்டுப் போறதா? பண்டிகெ நாளும் அதுவுமா நம்ம வீட்டுக் கதவெ மூடிட்டு யார் வீட்லே யாவது போய் உக்காந்தா நல்லா இருக்குமா? எல்லா வீட்டு ஆம்பளெங்களும் வீட்லெ இருக்கற்தில்லே? நம்ம ரெண்டு பேரும் சேந்து பண்டிகெ கொண்டாடணுங்கற என் ஆசெ எப்போ தீர்றது?'
'உன் கேள்விகளெ நீதான் மெச்சிக்கணும். எங்கேயும் போவல்லேன்னா பாபுவெ வெச்சிக்கிட்டு வீட்லேயே உக்காந்துக்கோ-- நான் மட்டும் பொம்பளெ மாதிரி உக் காந்திருக்க முடியாது.'
நான் ஒன்னும் பேசல்லே. கறிகாய் நறுக்கிக்கிட்டு தலை குனிஞ்சிட்டு இருந்தேன். கண்ணுலே யிருந்து தாரெ தாரெயாக் கண்ணீர் வழிஞ்சி விழுந்தது. தன்னெப் பெரிசா நினெச்சி வேண்டிக்கற மனெவி மக்களெ அலட்சியம் பண்ணிட்டு வெளியே பத்துபேருக்காகச் சீட்டாடும் அந்தப் புருஷனுக்கு அதுக்கு மேலெ என்ன சொல்றது? குறெஞ்சது அந்த நாளு நாளாவது அவரெ வீட்லெ இருக்க வெக்கணும்னு விரும்பன்து தப்பா? எங்களவரோட நான் பண்டிகெ சந்தோஷமாக் கொண்டாடணும்னு ஏங்கற்து அநியாயமா? அவ்வளவு சாதாரணமான கோரிக்கையெ ஏன் நிறெவேத்திக்க முடியாமெ போயிட்டுது?
நிறெஞ்சிருக்கும் கண்ணெ அப்பப்பொ தொடெச்சிக் கிட்டே பாபுவெப் பக்கத்லே வச்சிக்கிட்டு உக்காந்திருந்தேன். பத்து. பன்னண்டு... மூணு... அஞ்சி... எட்டு... பதினொண்ணு! நடு ராத்ரி பதினோரு மணிக்கு மீண்டும் வருகை! எழுந்து சாப்பாடு போட்டேன். காலமெ செஞ்ச புளியோதரெ, சவ்வரிசி பாயசம் அப்படியே இருந்தது. நான் ருசிகூட பாக்கலெ. வீட்டுக்கு வந்தாருங்கற சந்தோசம் ஒரு நிமிஷம்கூட இருக்கற்துக் குள்ளே, சாப்ட்ட கை ஆர்றதுக் குள்ளே திரும்பி டிரஸ் பண்ணிக் கிட்டிருக்கும்போது ... அந்த நிலையெ எப்படிச் சொல்றது? என் உடம்பு கோபத்தலேயும் துக்கத்தலேயும் நடுங்கிக்கிட் டிருந்தது. எதிர்பாராமெ மண்டெ வெடிச்சி அந்த மனுஷன் எதிர்லே நான் செத்துப்போயிட்டா... ஏதாவது அபூர்வ சக்தி அவரெ நிறுத்திட்ட...? அசரீரிக் குரல் ஏதேனும் அவரெக் கண்டிச்சா... என்னாகும்? போய்க்கொண்டிருக்கும் மனிதரின் கையெ நானே பிடிச்சிக்கிட்டேன். 'இவ்வளவு ராத்ரி... தனியா இருக்கறேன்... பாபுவோட... மறுபடியும் போறீங்களா?' அதற்கு மேலெ பேச வரல்லே.
'சீ! எதுக்கு இதுக் கெல்லாம் அழுது தொலைக்கறே! நானின்னா தேசாந்தரம் போறனா? சுதந்திரம் சமத்துவம் வேணும்னு லெக்சர் அடிக்கிறீங்களே! ஒரு ராத்ரி தனியா இருக்க முடியாது? ஒண்ணும் பரவால்லே கதவு மூடிட்டுப் படுத்துக்கோ.'
நான் ஆணவத்தோட உடனே பேசறதே நிறுத்திட்டிருக்கலாம். ஆனா அந்த மனுஷனெத் திருத்த வேண்டிய கட்டாயம், கடமெ எனக்கு இருக்குது. எவ்வளவோ சாந்தமாச் சொன்னேன். 'பகலெல்லாம் அங்கேயே இருந்தீங்க. ராத்ரிகூட என்னது சொல்லுங்க? இருபத்தி நாலு மணியும் வீட்டெ விட்டு என்ன அந்த ஆட்டம்?
'அதெல்லாம் எனக்கும் தெரியு மாவட்டும். நீ வாயெ மூடிக்கோ! எப்பவும் வீடு வாசல், மனெவி, மகன், பொழக்கடெ, கெணறு, தொடப்பகட்டெ, சாதம் சாப் பாட்டுத் தட்டு - எழவு! மத்த நாள்ளே எப்படியோ அந்த ஆபிசிலே மாட்டிக்கிட்டு மாரடிக்கிறோம். சமயலறையிலேயே விழுந்து தடுமாறி கிட்டிருக்கும் உனக்கு என்ன தெரியும் ஆம்பளெங்க பொழுதுபோக்கெப் பத்தி? பெரிசா கேக்க வந்துட்டே?'
'பொழுதுபோக்கு எங்கறது ஆம்பளெக்கு மட்டும் சொந்தம் இல்லெ. பொம்பளெக்கும் இருக்குது. அதெக் கவனிக்கணுங்கற நினெப்பே உங்களுக்கில்லே. அந்தச் சமயலறையிலே விழுந்து தடுமார்றதுக்கு முடியாமெ தானே உங்களெ வேண்டிக்கற்து?'
'அவசியமில்லே. அது உனக்குப் பழக்கமானது தானே!'
அந்த ராத்ரி எவ்வளவு அழுதேனோ, அந்த அலட்சியத்தெ எப்படித் தாங்கிக்கிட்டேனோ, யாருக்குத் தெரியும்? நான் அழுதா யாரு கஷ்டப்படப் போறவங்க? நான் கோவிச்சிக்கிட்டா யாரு வேண்டப் போறவங்க? அவர் செய்ற தப்புகளெ நான் எடுத்துச் சொல்றேன்னு, குறை சொல்றேன்னு என்மேலே அவருக்குக் கோவம். நானுன்னா புடிக்காம போனதுக்கு அதான் காரணம்! அவருக்கு நல்ல பழக்கங்க குறைவு. அவரெ மாத்தற்துக்கு முயற்சிக்கக் கூடாது. வாதாடக் கூடாது. குறை சொல்லக் கூடாது. சரின்னு சொல்லணும். இன்னும் உற்சாகப் படுத்தணும். எப்படிச் செய்ய முடியும்?
அன்னக்கிப் பகல் நான் சாப்பிடல்லே. அந்த ராத்ரி கூடப் பசி எடுக்கலெ. ஆனா பாபுவுக்காக... தாயாச்சே! பாபுவெப் பட்டினி போட முடியுமா? சாதம் சாப்ட்டுட்டு பாபு பக்கத்தலெ படுத்துக்கிட்டேன். யார் தூங்கலேன்னாலும் பொழுது விடியுது. அன்னக்கி பொங்கல் பண்டிகெ! திருவிழா! நான் செவப்பு பட்டுப் புடவெ கட்டிக்கிட்டு பாபுவுக்கு வெள்ளை சில்க் புஷ்கோட் போட வேண்டிய நாள்! கோவா செஞ்சி சாப்ட்டுட்டுப் புது சினிமா பாக்க வேண்டிய நாள்! ஆனா கண்ணீரோடெ பொங்கல் லட்சுமிக்கு வரவேற்பு சொல்ல முடியாமெ போயிட்டேன். சாதாரண சமயல் செஞ்சி பாபுவுக்கு மட்டும் புதுச்சட்டெ போட்டு உக்காந்துட்டேன். மத்தியானம் பன்னண்டு மணி இருக்கும். வந்தார். சாதம் போட்டேன் துகையல், ரசத்தோடு.
'இன்னக்கி ஒண்ணும் பண்ணலியா?'
'இல்லெ'
'ஏன்?'
'யாருக்காக?'
'நான் செத்துட்டேன்னு நினெச்சிட்டியா?'
'..............'
'பண்டிகெ நாள் எல்லாரும் சந்தோஷமா சமெச்சி சாப்பட்றாங்க, என்ன இது எழவு? ஏன் நான் சாப்பட வர்றதில்லியா? இல்லேன்னா வரக் கூடாதுங்கற்து உன் எண்ணமா?'
'உங்களெ வீட்டுக்கு வரச்சொல்றதிலே, போச்சொல்றதிலே என் எண்ணம் என்னங்கற்து உங்களுக்குத் தெரியும். நீங்க வீட்லெ இல்லாம எனக்கு ஒண்ணும் செய்யத் தோணலே.'
'ஓஹோ! நான் வீட்டுக்கு வர்லேன்னா சமயல் கிமயல்லாம் நிறுத்திட்டுப் படுத்துக்குவேன்னு சொல்லு. எத்தனெ நாள் அடம் புடிக்கிறியோ நானும் பாக்கறேன். உனக்குத் தோண்றது தோணாமப் போறதெப் பத்தி எனக்கு அக்கறெயில்லே. பண்டிகெ நாள்ளே ஏதோ ஒண்ணு செய்ய வேண்டியது தான் - எத்தென நாள் உன் பிடிவாதத்தெ நிறெவேத்திக்கிறியோ நானும் பாக்கறேன்.'
'பிடிவாதம்' ஒரு பொம்பளெ பிடிவாதம் புடிச்சி ஜெயிப்பான்னு நீங்க நினெக்கறது வெறுங் கனவு. பிடிவாதத்துக்காக நான் சமயல் நிறுத்தலெ' 'இல்லேன்னா கர்வம்! அலட்சியம்! அவ்வளவுதானே?'
'...........'
'ஏன் பேசமாட்டேங்கறெ? நீ என்ன எண்ணத்தலே நிறுத்தனாப் போல?'
எனக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. பைத்தியம் புடிச்சவ போல விக்கி விக்கி அழ ஆரம்பிச்சேன்.
'சீ! வீட்டுக்கு வந்ததும் வராததுமா அழுகெ மூஞ்சியா! பண்டிகெயும் இல்லே பாழு மில்லே. எப்பவும் அழுகெ! அழுகெ! இனிமே உன் வாழ்க்கையே இவ்வளவுதான். சாவறபோது கூட அழுதுகிட்டேதான் இருப்பே.'
சாதம் பெசஞ்சி வெச்சிட்டு அறெயிலே போய் படுத் துட்டாரு. நான் எவ்வளவோ நேரம் அப்படியே உக்காந் திருந்தேன். ஒரு மனுஷனெ இன்னோர் மனுஷன் நியாய அநியாய மில்லாமே, ஈவிரக்க மில்லாமெ தண்டிக்கற்துக்கு, வாய்க்கு வந்தபடித் திட்றதுக்கு எங்கே இருந்து வருது அந்தச் சக்தி? அது எல்லார்க்கும் ஏன் இல்லாமெ போவுது? பண்டிகெ நாள் எல்லாரும் ருசியான பண்டங்க செஞ்சி சாப்பிடுவாங்களே தவர, மனைவி மக்களோட பொழுதுபோக்க மாட்டாங்களா. அதெக் கேக்கற அருகதெ எனக்கில்லே? கடவுளே! உன் படெப்பிலே இவ்வளவு பட்சபாதமா! ஒரு மனுஷன் இன்னோர் மனுஷனுக்கு அடிமெயா? குறெஞ்சது என் எண்ணெங்களெ வெளியே சொல்லிக்கற்துக்கு முடியும்னா எனக்கு இந்த ஊமெ வேதனெ இல்லாம போவுமே! மத்தியானம் வீட்லேயே இருப்பார்னு நினெச்சி அப்போவெ அடுப்பு மூட்டிரவா லட்டு செஞ்சேன். குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே படுக்கையிலே இருந்த மனுஷனெக் காணோம். ஸ்டாண்டிலே இருந்த துணிகளும் இல்லெ. வராந்தா விலே செருப்பும் இல்லெ. ஆச்சரியப்பட்றதுக்கு ஆவட்டும், துக்கபட்றதுக்கு ஆவட்டும் எனக்குச் சக்தி இல்லே. அவர் என்ன செஞ்சாலும் கவலெப்படாமெ சும்மா இருக்கணும். எவ்வளவு ராத்ரியிலெ வந்தாலும் சிரிச்ச முகத்தோட வரவேற்கணும். மனசிலே எவ்வளவு துக்க மிருந்தாலும் ஒழுங்கா காரியங்களெ கவனிக்கணும். அதுதான் எனக்கு வராது. எனக்குத் தன்மானம் இல்லே? என் மனசு வேதனெப் படாது? பொம்பளெயா இருந்தும் எனக்கு எல்லாம் லட்சணங்களும் இருக்கற்துக்கே இந்தத் தண்டனெ பத்தாதா?
தீராத வேதனெ கொடுத்துப் பொங்கல் லட்சுமி போய் விட்டாள். அம்மாவின் பேச்செக் கேட்டு பிறந்த வீட்டுக்குப் போயிருந்தா அக்காங்களோட, தங்கைங்களோ, பத்துப்பேர் சொந்தக்காரங்களோட, அம்மாவின் அன்பு மரியாதையோட... எல்லாத்தெயும் வெறுத்துட்டு நான் அனுபவிச்சது என்ன? நடந்தது என்ன.
பண்டிகெ முடிஞ்சதுமே அம்மா கடிதம் எழுதச் சொன்னாங்க. அம்மாவின் சந்தோஷத்துக்காகப் பொய்யெக் கற்பிச்சி எழுதணும். நாலாவது நாள் விடியற்காலமெ கடிதம் எழுதிட்டு உக்காந்திருந்தேன்.
'அம்மா!'
இங்கே நாங்கள் அனைவரும் நலம்! நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாபு நன்றாக இருக்கிறான். நாங்கள் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். போகி அன்று வெள்ளைப் பட்டுப் புடவை, பொங்கலன்று சின்னக்கா கொடுத்த சிவப்பு பட்டுப் புடவை கட்டிக் கொண்டேன்; நான்கு நாட்களும் எனக்குக் கைவந்த டிஃபன்கள் செய்தேன். என்ன ஆனாலும் நம் ஊருக்கு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்' கண்ணுலே யிருந்து நீர்த் துளிங்க எழுத்துங்க மேலெ விழுந்தது. முந்தானெயால் மெதுவாக ஒத்தி எடுத்தேன். கதவு தட்ற சத்தம் கேட்டது. போய்த் தெறந்தேன். கோவப் பழம் போலச் செவந்த கண்ணோட வேகமா நடந்து வந்து கட்டில் மேலெ உக்காந்துட்டார். 'சீட்டாட்டம் சீட்டாட்டம்ணு சண்டெ புடிச்சியே தவர, அதனாலே எவ்வளவு சம்பாதிச்சேன் தெரியுமா? நூத்தி முப்பது ரூபா! நாலு நாள்ளே! நீ சொன்னாப்பல வீட்லே கைகட்டிட்டு உக்காந்திருந்தா இந்தப் பணம் எப்படி வரும்? அம்பது ரூபா எடுத்துட்டு உனக்கு வேணுங்கற புடவெ ஏதாவது வாங்கிக்கோ!"
நான் சிரிச்சேன். அந்தச் சிரிப்பிலெ எத்தனெ அர்த்தங்க இருக்குதோ அவரெப் போலவங்க எப்பவும் புரிஞ்சிக்க முடியாது. "அநியாயமான பணத்துக்காக அலையும் அயோக்கியனே! உன்னெப் போலவே மனுஷங்க எல்லாரும் மனுஷத் தன்மையெ மறந்துட்டாங்களா? நொந்து போன மத்தவங்க இதயத்தெ உன் பணத்தாலே சந்தோஷப்படுத்த முடியுமா? உனக்காக உன் மனெவி குழந்தெங்க எவ்வளவு அழுதாங்களோ, உன் வேண்டா வெறுப்புக்காக எவ்வளவு வேதனெப் பட்டாங்களோ - அது என்னக்காவது உனக்கு அர்த்த மாகுமா? மட்டமான பணத்துக்காக உங்களவங்களெ அழவெக்கும் நீ, மனெவி கண்ணீருக்குக்கூட இளகாத நீ, மனசே இல்லாத நீ ஒரு மனுஷனா? இந்த உண்மெ உனக்கு என்னக்காவது தெரியவருமா?" கேக்கவேண்டிய வரெக்கும் கேக்கணும்னு, கோவம் தீர்ற வரெக்கும் திட்டணும்னு, மத்தவங்க மேலே ஏறி மிதிக்கும் மனசெக் கண்டிச்சிக்கிட்டே சிரிச்சேன். 'என் உடம்புக்குத் துணியே இல்லாத கதி வந்தா நெருப்பு மூட்டிக்கிட்டு எரிஞ்சு சாம்பலாயி மானத்தெக் காப்பாத்திக்குவேனே தவர இந்த மாதிரி பாவம் நெறஞ்ச பணத்தாலே...'
'ஆஹ்ஹஹ்ஹா!' என்று கோரமாச் சிரிக்க ஆரம்பிச்சார். 'ஆஹா! லட்சியப் பெண்! எல்லாப் பொம்பளெங்களும் இப்படிப் பெரிய குப்பெ லட்சியங்களெ வெச்சிட்டு உக்காந்திருந்தா...'
'என்னக்கோ நல்லா ஆகி இருக்கும்.'
'இல்லெ, இல்லெ - ஆண் சிங்கங் கெல்லாம் முக்காடு போட்டுட்டு சன்னியாசம் வாங்கிக்க வேண்டியதுதான்! எந்தச் சிநேகிதன் வீட்லே சீட்டாட்டம் போட்டாலும் அந்த வீட்டுப் பொம்பளெங்க காபி போட்டுத் தர்றாங்க.'
'துர்ப்பாக்கியசாலிகள்! வேறெ என்ன செய்ய முடியும்? அடிமெங்க!'
'அது அவங்க துர்ப்பாக்கிய மில்லெ. உனது! சரி உன் தலெவிதி! சந்தோஷமா நானே உலன் பாண்ட் தச்சிக்கிறேன்.'
'கடவுளே உனக்குக் கோடி நமஸ்காரங்க!' மெதுவா பெருமூச்சு விட்டேன். பிடிவாதத்துக்காக அவரே புடவெ வாங்கிவந்து கட்டியாகணும்னு கட்டாயப் படுத்தினா மறுக்கக் கூடிய சக்தி இருக்குமா? கடிதம் எழுதிக்கிட்டே உக்காந்திருந்தேன்--
'என்ன எழுதிகிட்டிருக்கே?'
திடீர்னு என்னவோ பட்டுது. 'கதெ!'
'என்ன கதெ!' ஆச்சரியத்தோடு.
'புருஷன் சீட்டாட்டத்துக்குப் போனா மனெவி அழறகதெ!'
'ஏன்? தன்னே கூட அழைச்சிட்டுப் போகல்லேன்னா? உன் திமிறும் நீயும்! வீட்டுக்கு வர்றதுக்குள்ளே ஏதாவது தகராறு! சீட்டாடற்து தப்புன்னு எந்த முட்டாள் சொல்றானோ வரச்சொல்லு பாக்கறேன். நானென்ன குடிச்சிட்டுக் கூத்தடிக்கிறேனா? பொறத்தியார் வீட்லே போய் காவல் காக்கறேனா? நீ என்ன நினெச்சிட்டிருக்கே?'
'குடிச்சாலும், கூத்தடிச்சாலும், திருடினாலும், கொலெ பண்ணாலும் யார் செய்ற வேலையையும் அவங்கவங்க சரின்னு தான் சொல்வாங்க. அதெல்லாம் தப்புன்னு நீங்க விளக்கம் தர்றது...' மானத்துக்காகக் கண்ணீர் விடாம கன்னத்தெப் புடிச்சிக்கிட்டு பொழக்கடெ பக்கம் நடந்திட்டிருந்தா 'டர்ட்டி ராஸ்கல்! தூங்கலாம்னு வந்தாக்கா விளக்கெப் போட்டுட்டு உக்காந்து கதெ எழுதறாளாம் கதெ! பெரிய எழுத்தாளி ஆயிட்டாப்போல நினெப்பு! பேச்சுக்குப் பேச்சு எவ்வளவு கர்வம்!' சொற்கள் கேட்டன.
'நியாயமானாலும் அநியாயமானாலும் அதிகாரம் பண்ணிப் பழக்கப்பட்ட ஆம்பளெ, பொம்பளெ வாயெத் தெறந்து பதில் சொன்னா சகிக்க மாட்டான். தன்னெயே நம்பி வாழற மனெவி மக்களெச் சுகப்படவெக்க முடியாத பரோபகாரி போலி சிநேகிதங்களுக்காக எல்லாத்தையும் தொலச்சித் தீப்பான். தெரு வெளக்கு எரியவெச்சி வீண் செலவு பண்ணாத சிக்கன சிகாமணி பொழுது போக்குக்காக நூறு நூறாச் செலவு பண்ணுவான். தான் நினெச்சதே நினெப்பு! தான் செய்யற்தே பெரிய காரியம்! தான் சொல்றதே நியாயம்! தான் வெச்சதே சட்டம்! இப்பொ சொல்லு. எந்த நிலையெப் பாத்து மத்தவங்க சந்தர்ப்பங்களெப் புரிஞ்சிக்கற்து சொல்லு?"
மெய்மறந்து கேட்டுக்கொண் டிருந்த நான், பானுவின் குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பு, பற்று தவிர வேறொரு மனநிலை இருக்கும் என்று எண்ணிப்பார்க்காத நான், ஓரளவு உண்மையைத் தெரிந்துகொண்ட அந்தச் சமயத்துல் என்ன சொல்வேன்? ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து இருந்துவிட்டேன் .பானுவின் இதயத்தில் கணவன்மீது, ஆண்களின்மீது எவ்வளவு சினம்! வெறுப்பு!
நான் கூறினேன்: "பானூ! நீ சொல்றதெ நான் புரிஞ்சிக்காம இல்லெ. ஒரு விஷயம் கேக்கறியா? நம் ஆசெங்க, நம்பிக்கெங்க, விருப்பங்க, மனப் பற்றுகளெ ஒரு நிமிஷம் அப்படி வை. மாமா சின்னப்போ திலிருந்து கேள்வி முறெ இல்லாம, யாருடைய கட்டுக் காவல் இல்லாம இஷ்டப்படி யெல்லாம் திரிஞ்சி வளர்ந்த மனுஷன் அவர் என்ன நினெச்சாலும் அது நடந்தே தீரணுங்கற பிடிவாதம்! அது முரட்டுத்தன மானாலும், முட்டாள்தன மானாலும் எதுவானாலும் ஒண்ணுதான். அர்த்தமில்லாத சுதந்திரம், மனுஷனெ எத்;தனெ கெட்ட பழக்கங்களுக்குக் கொண்டுபோய் விடுதோ உன்னால் கிரகிக்க முடியாதா? நீ..."
"கொஞ்சம் நிறுத்து! கல்யாணத்துக்கு முந்தி மாமா வெப்பத்திச் சொன்னேனே, அப்பொ உனக்கு இந்தச் சந்தேகம் வரல்லியா? அப்படித் தறுதலையா வளர்ந்த மனுஷனிடம் கெட்ட பழக்கங்களும் சேர்ந்திருக்கும்னு அப்பொ நீ எனக்குச் சொல்லி இருந்தா, அண்ணா..."
" பானூ! எவ்வளவு பைத்தியக்காரத்தனமா பேசறே ! இப்பொ அவருடைய நடத்தையெ வெச்சி இப்படிச் சமாதானப் படுத்திக்கணும்னு சொல்றேன். இருந்தாலும் நடந்துபோனதுக்காகக் கவலெப்பட்டு என்ன லாபம்? கால் நூற்றாண்டு வளர்ந்த வளர்ப்பிலே ஒரேயடியா மாறுதல் வரணும்னா அது சாத்தியமில்லே பானூ? நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவசரப்படாதே."
" அண்ணா! பண்டிகெ அன்னிக்கு ஒருநாள் வீட்லே இருக்கணும்னு வேண்டிக்கிட்ட மனெவியெ நிராகரிச் சிட்ட மனுஷனிடத்திலே எத்தனெ ஜன்மத்லே மாறுதல் வரும்னு சொல்றே? என் பொறுமெக்குப் பயன் என்னன்னு சொல்றே?"
" அவசரப்படாதே பானூ! நான் மாமா செய்யற்து சரின்னு சொல்லே. நீ சாந்தமா இருக்கற்து தவர வேற வழி இருக்குதா சொல்லு? அவருக்குச் சீட்டாட்டப் பைத்தியம் தவர உன்மேலே ஏதாவது வெறுப்பு இருக்குதுன்னு சொல்றியா? நீ சிந்தித்துப் பார் பானூ!"
பானு பெருமூச்சு விட்டாள். " உனக்குத் தெரிஞ்சது ரொம்ப குறெச்சல் அண்ணா! நீ இங்கே படிக்கவர்றேன்னு எழுதினப்பொ எனக்கு பயமா இருந்தது, என் குடுத்தன லட்சணம் உனக்குப் புரிஞ்சி போயிடும்னுதான். ஆனா இன்னிக்கி எனக்கு நானே எல்லாம் வெளியே சொல்லிக்கிட் டிருக்கறேன். நான் என்ன செஞ்சா இந்த வேதனெ உனக்குப் புரியும்? எவ்வளவு திகிலோட குமுங்கிக்கிட் டிரு்க்கிறேங்கறது உனக்கு எப்படிப் புரியப்போவுது? இது உனக்கு நீயே தெரிஞ்சக்கணும். அவ்வளவுதான்!"
நான் கேட்டுக்கொண்டே பேசாம லிருந்தேன். என்னவோ கேட்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் அது சமயமல்ல. பானு இயற்கையாகவே வேகம் நிறைந்தவள். .கணவனின் நடவடிக்கைகள் தவறு என்று பட்டாலும், தன்னுடைய ஆசைகள் அடி பட்டுப் போகும்பொழுதும் வேதனைதான் உண்டாகும். மாமாவை மிஞ்சிய சூதாடிகள் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும் நான் அவசரப் படுவதில் பொருளில்லை. அந்த வெறியில் அவர்கள் என்ன செய்தாலும் வியப்படைய வேண்டிய தில்லை. மெதுவாகப் பேச்சை மாற்றினேன். பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்தினேன். அந்தக்கால நண்பர்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தேன். பல்லைக் கழகச் செய்திகளைச் சொல்லலானேன்.
பன்னிரண்டு கடந்தது. "பசி யெடுக்குது பானூ!" என்றேன்.
பானு சட்டென்று எழுந்து-- " பேச்சிலே உக்காந்துட்டேன், வா போலாம்! " என்றாள். பேசாமல் காரியர்களைப் பிரித்துப் பரிமாறத் தொடங்கினாள்.
எந்த வினாடி என்ன நடக்குமோ தெரியாது என்று சொல்வது இதுதான் போலும். தோட்டத்தில் ஏரிக் கரையில் ஆலமரத்தின் கீழே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை என்னவாயிற்று!
" நீ இருந்ததனாலே ஆச்சி, இல்லேன்னா இந்த வேளெ இது இப்படியே இருந்திருக்கும்" என்றாள் பானு.
" அதுதான் தப்பு! நீ பட்டினி கிடக்கற்தோ, கண் முழிக்கற்தோ கூடாது. குறெஞ்சது நீ சாப்பிடலேங்கற்தே தெரிஞ்சிக்கறவங்க கூட இல்லே இல்லியா? பசி தீர்றதுக்கு வயித்துக்காக இவ்வளவு சாப்பிட்றதுக்கு கௌரவம் எதுக்குப் பாக்கணும்?"
"என்னவோ அண்ணா!" இந்த வீட்லெ நினெக்கறது செய்றமோ இல்லையோ, சமெக்கறது சாப்பிட்றமோ இல்லையோ தெரியாது. அதுக்குக் காரணம் அவர் ஒர்த் தரேதான்னு நான் சொல்ல மாட்டேன். நானும் ஏதோ தப்புங்க பண்ணிட்டேதான் இருக்கறேன். டிபன் வெக் கறப்பொ தண்ணி கொடுக்கற்துக்கு மறந்து போறேன். ஒவ்வொரு தடவெ சக்கரெ போடாமலேயே காபி கலந்து கொடுத்துட்றேன். மோர்க் கிண்ணத்தலெ கொஞ்சம் உப்பு போடணுங்கற்து நினெப்பு வராது. இதெல்லாம் வெறும் ஞாபகமாதியினாலே நடக்கற தப்புகளாவே இருக்கலாம். ஆனா அதுகளோட விளைவு ரொம்ப தீவிரமா இருக்கும். நான் தன்னெ அலட்சியம் பண்றதாகவும், தன் வேலெங்கன்னா இஷ்டத்தோட செய்யற்தில்லேன்னும், தன் மேலே எனக்கு எந்த அளவு மதிப்பு இருந்தாலும் இப்படி அலட்சியப் படுத்திக் காரியங்கள் பண்ணமாட்டேன்னும்--அதுக்கெல்லாம் நான் ஒரு சமாதானமும் சொல்ல முடியாது. சொன்னாலும் பலனில்லெ.
'நீ என்ன சொன்னாலும் எனக்குத் தேவையில்லே. மறந்துபோய்ச் செய்யலியோ, ஞாபகம் இருந்தே செய்யலியோ நான் யோசிக்க மாட்டேன். என் கண்ணுக்குத் தெரியற்துதான் உண்மெ. என் மேல உனக்கு எந்த அளவு மதிப்பு இருந்தாலும் சிரத்தெயோட எல்லாம் பண்ணுவெ. அது இல்லேங்கற்தனாலதான் மறதி வருது.' அது அவரோட வாதம்.
நான் செஞ்சது தப்பு. அவ்வளவுதான். அந்தத் தப்பு செய்யற்தலே என் எண்ணங்க மட்டும் அவர் ஊகிச்சபடி இல்லெ. அவரெ அலட்சியப்படுத்தி அவமதிப்பு செய்யற்தனாலே எனக்கு வர்றது ஒண்ணு மில்லே. அப்படிச் செய்யற்தெ என் மனசாட்சி ஒத்துக்காது. சக்கரெ இல்லாத காபி கொடுத்தப்பொ ' பானூ! காபியிலெ சக்கரெ போட மறந்துட்டெ, கொண்டுவா'ன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்? அந்தத் தப்புலெ உள்நோக்கம் கண்டுபுடிச்சித் திட்டிக்கொட்டனா எவ்வளவு மதிப்பா இருக்குது? நான் செய்ற தப்புங்க மன்னிக்க முடியாதது, பொறுத்துக்க முடியாதது அல்ல. அந்த அளவு விட்டுக் கொடுக்கற தன்மெ புருஷன் மனெவி இடையே இருக்கத் தேவெயில்லியா? அதுதான் அவர்கிட்டே இல்லெ. தீவிரமான எண்ணங்களெ வெளியிட்றது, அப்புறம் சாப்பட்றதையோ குடிக்கற்தையோ விட்டுட்டு எழுந்திரிச்சிப் போறது.
ஒவ்வொரு தடவெ வீட்லெ இருந்தா ஏதோ தின்பண்டம் செய்றேன்னு வெச்சிக்கோ. அப்பப்பொ நான் 'உங்களுக்கு வேணுமா? கொண்டுவரட்டுமா?'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கணும். தனக்குத் தானே கேக்கக் கூடாதாம். அவரெத் தேடிக்கிட்டுப் பின்னாடியே சுத்திக் கிட்டிருக்கணுமாம். 'உங்களுக்கு வேணுங்கறபோது எடுத்துச் சாப்பிடுங்க. இல்லேன்னா கொண்டுவரச் சொல்லி என்கிட்டெ சொல்லுங்க. அவ்வளவுதானெ தவர விருந்தாளிகளெ கவனிக்கறா மாதிரி எப்பவும் நம்மெ நாமே கவனிக்கணும்னா அது எப்படி முடியும்?'னு கேட்டா--
'விருந்தாளிகளெத்தான் கவனிப்பியே தவர கட்டிக்கிட்ட புருஷனுக்குச் செய்ய முடியாதா? என்மேல உனக்கு அக்கறெ இருந்தா நீயே பண்ணுவெ. அந்தக்
கடமெ உனக்கு இருந்து தீரணும்.' அது தான் பதில். சிலரோடெ தத்துவங்க, எண்ணங்க இயற்கைக்கு மாறாக இருக்கும். எப்போதும் ஒர்த்தர் செய்யணும். ஒர்த்தர்
செஞ்சிக்கணும். பேச்சுக்குப் பேச்சு தப்பர்த்தம் பண்ணிக்கணும். எவ்வளவுன்னு தாங்கிக்கறது? நான் எவ்வளவு அக்கறெயா வேலை செஞ்சிட்டிருந்தாலும்
வீட்டுக் கடெமெங்களே எனக்குத் தெரியற்தில்லேன்னு சொல்றாரு. கை நழுவி ஒரு கப்பு ஒடிஞ்சி போச்சின்னு வெச்சிக்கோ, கீழே விழுந்து கண்ணாடி தூள் தூளாயிடுதுன்னு வெச்சிக்கோ, அதிக்காக நான் ரொம்ப கவலெப்பட மாட்டேன். விசனப்பட மாட்டேன். நாம வேணும்னே தூக்கி எறிய மாட்டோம். ஏதோ பிசகா
நழுவிப்போயிடுது. அதுக்கு வருத்தப்பட்டுக் கட்டிலெக் கட்டிகிட்டு அழுதிட்டிருந்தா என்ன பிரயோஜனம்? அடுத்த தடவெ சாக்கிரதெயா இருந்தா சரியா போவுது.
ஆனா அதுவே அவரோட பார்வெயிலெ பெரிய குத்தம்! 'பொம்பளெங் கெல்லாரும் புதுசு புதுசா சாமானுங்களெச் சம்பாதிச்சிக்கிட்டு எவ்வளவு செட்டா குடுத்தனம்; பண்
றாங்க. உனக்குப் பொம்பளெ லட்சணமே இல்லே. ஆம்பளெ தொரெ மாதிரி கைக்கெட்னதெக் கீழே தள்ளிட்டு, காலுக்கெட்னதெ உதச்சிட்டு கர்வத்தோட
திரியறே. சாக்கிரதெயாப் புடிச்சாக்கா கப்பு ஏன் நழுவுது? பையனுக்கு எட்றாப்போல கண்ணாடியே ஏன் விக்கணும்? உனக்கு அக்கறெ எப்பொ வரப்போவுது?"
அது அவர் பேசற தோரணெ! எனக்குத் தெரியாம கேக்கறேன் -- எந்த வீட்லேயும் கப்புங்க ஒடெயற்தில்லே? குழந்தெங்க பொருளெ நாசமாக்கற் தில்லே?
இந்த அக்கிரமங் கெல்லாம் நான் ஒருத்திதான் செய்றேனா? உதவாத கப்பு ஒடஞ்சதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? துரதிர்ஷ்டவசமா நடந்த வேலெக்கு ஒரே
யடியா நடுங்கிக்கிட்டு இந்த நிமிஷமோ அடுத்த நிமிஷமோ நடக்கப் போற யுத்தத்திற்குத் தயாராக முடியாம, அந்தத் திட்டுங்களெ யெல்லாம் பொறுக்க
முடியாமெ அழுதுக்கிட்டு--சீ! ஒரு மனுஷியெப் போலவா வாழ்ந்து கிட் டிருக்கறேன் நான்! சக்கரெக்கு எறும்பு சுத்திக்கிட்டதுன்னு, ஆவக்கா ஊறுகாயெ வெய்யில்லே
வெக்கலேன்னு, காபி கிளாஸ் சன்னல்லேயே இருந்து போச்சின்னு, நானி தொடப்பத்தெப் பிச்சிப் போட்றான்னு-- சீ! சீ! நான் பாத்துக்க மாட்டேன். சந்
தோஷமா சாப்ட்டுட்டு படுத்துக்கறேன். இனி நான் மாற மாட்டேன். இருந்திருந்து என்னெப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவர் தலெவிதி! அனுபவிக்கவேண்டியதுதான்! ஒவ்வொரு நாளும் இந்த நச்சரிப்பெ எந்தப் பொம்பளெ தாங்கிக்குவா? சமயலறெக்கு வந்து தண்ணி மொண்டு குடிக்க வெக்கப்பட்ற
ஆண்மெக்கு இவ்வளவு சின்னச் சின்ன பொம்பளெங்க விஷயத்தலே இல்லாததெ உண்டாக்கிகிட்டுத் திட்றதுக்கு எப்படி மனசு வருது? என்னவோ அப்படி நினெச்சிக்
கிட்டு உக்காந்தா பைத்தியமே புடிக்குது." பானு மறுபடியும் சாதத்தைப் பிசையத் தொடங்கினாள்.
நான் எல்லாவற்றையும் கேட்டேன். பானுவைப் புரிந்து கொண்டேன். இருந்தாலும் " பானூ! நீ எல்லாத்துக்கும் தர்க்கம் பண்ணிக்கிட்டிருக்காதே. மாமா இஷ்டப்படியே நடந்துட்டாப் போவாது? "
சட்டென்று தலை எடுத்து என் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.
" உனக்குக் கோவம் வருதில்லே?"
குறுக்கே தலையைத் திருப்பினாள். " இல்லெ. எந்த ஆம்பளெயாவது பொம்பளே மனசெப் புரிஞ்சிகிறானான்னு யோசிக்கிறேன்."
" போவட்டும். புரிஞ்சிக்கறதுக்கு முயற்சிகூட பண்ண மாட்டான். காரணம் தான் ஒரு ஆம்பளெ எங்கற்தனாலே."
" ஆமாம். புல்லெவிட, பஞ்செவிட லேசான பொம்பளெக்கி ஒரு மனசு, அதுலே ஏதோ இருக்கற்துகூடவா? அதெப் புரிஞ்சிக்கற்துத்துக்கு என்ன இருக்குது? அவ்வளவு
தான் இல்லே?"
" பைத்தியக்கார பானு! நீ எவ்வளவு தப்பா நினெக்கிறியோ அது உனக்குத் தெரியுமா! உன் சொந்த அனுபவங்களெ வெச்சி மொத்தத்துக்கும் முடிவு பண்றதுன்னா அதெ ஒத்துக்க முடியுமா?"
"தப்பா நினெக்கற்து நானில்லே. ஒரு விஷயத்தெ எடுத்துச் சொன்னா பொம்பளெயெ ஒத்துக்கற்து ரொம்ப குறைவு. ஆம்பளெக்கிச் சிறப்பு இருக்குது. சிறகெ விரிச்சு பறக்கச் சுதந்திரம் இருக்குது. அது இப்பவும் இருக்குது. எப்பவும் இருக்கும். இன்னும் சொல்லப் போனா எனக்குப் பொறாமேன்னுகூட நினெச்சிக்கலாம். அப்படின்னா நீயும் அவ்வளவுதாங்கிறியா?"
"ஏன்? நான் ஆம்பளெ இல்லை?"
"இருக்கலாம். ஆனா உன்கிட்டெ ஏதோ ஒரு தனித்தன்மெ இருக்குது. உன்னெ நம்பி இருக்கறவங்களுக்கு நீ எப்பவும் அநியாயம் பண்ணமாட்டே. உன்கிட்டெ அன்பு செலுத்தறவங்களெ நீ என்னெக்கும் வெறுக்க மாட்டே. உன்னெ விரும்பறவங்களெ நீ என்னெக்கும் நிராகரிக்கமாட்டெ."
"அது உன் கற்பனெ! காலம் யாரெ எப்படி மாத்திடுதோ யாருக்குத் தெரியும். நீ சொன்ன இந்தச் சொல்லுங்க நாளெக்கி என் மனெவி வாயிலே இருந்து வரணும். இந்த எண்ணங்க எல்லாம் அவளோட இதயத்திலே நிலெச்சி இருக்கணும். அப்பொ தான் உன் நினெப்புக்கு ஏத்தவன்னு ஒத்துக்கறேன்."
"தப்பாம அது நடக்கும். காலம் எல்லாரெயும் மாத்தற்தில்லெ தெரியுமா! காலத்தெ ஜெயிக்கற மனுஷங்ககூட கொஞ்சபேர் இருக்கறாங்க."
சாப்பாடு முடிந்தது. மேலுக்கு வீரமாகப் பேசிக்கொண்டிருந்தேனே தவிர மனமெல்லாம் கசப்பான வரலாறு கேட்டாற்போலக் குழப்பம் நிறைந்திருந்தது. அப் போதுதான் தூக்கத்தி லிருந்து எழுந்த மருமகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவனிட மிருந்து புதுப்புதுச் சொற்களை வரவழைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
"டேய் நானீ! உனக்கு இன்னக்கி கணக்குச் சொல்றேன். கத்துக்கறியா?" அவன் தூக்கக் கலக்கத்தைத் தீர்த்துக்கொண்டு தலை ஆட்டினான்.
"அப்படின்னா நான் சொல்றபடியே சொல்லு. ஒன்று."
"ஒந்நு!"
"திருப்பியும் அதானா? ஒந்நுங்கிறியே ஏன்"
"நான் அப்பதிதான் சொல்வேன்."
"அப்படியே சொன்னா அடிப்பேன்."
"ஏன் அதிப்பே?"
"வாயெ மூட்றா! முட்டாள். சொல்றபடி கேக்காமெ எதுத்தாப் பேசறே? ஒரு சாண் உயரமில்லே. முட்டாப் பயலே!"
"என்னெ ஏன் தித்தறே?" நான் வியப்புடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தேன். பானு எப்போது வந்தாளோ கன்னத்தில் கை வைத்தபடி நின்றுகொண் டிருந்தாள். என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் "பாத்தியா என் மகனெ?"
"நிஜமாவே உன் மகன் தான்" என்றேன். பானு அவன் மீது முத்தமழை பொழிந்துவிட்டாள்.
"பானூ! உன் மகன் டாக்டரா? நடிகனா? வக்கீலா? யாரு?" என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே.
"பெரிய பெரிய ஆசெங்க வெச்சி ஒரு தடவை ஏமாந்து கூட புத்தி வரலேங்கறீயா? இப்பொ ஆசெங்க இல்லெ. அந்தத் தகுதியும் இல்லெ. சோத்துக்கும் துணிக்கும் பஞ்ச மில்லாமெ ஒழுங்க வாழமுடிஞ்சா போறும்." பெரு மூச்சு விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்தாள். அதற் குள்ளேயே மகிழ்ச்சியை மறந்து என் மனம் துணுக் குற்றது. "ஏம்மா அவ்வளவு அலட்சியமா பேசறே? நான் இருக்கற வரெக்கும் உனக்கும் உன் குழந்தென் களுக்கும் எந்தக் குறெயும் வராது. உன் மகனெப் பெரிய டாக்டராக்கிக் காட்றேன். எனக்குத் தந்துட்றியா?"
"அழெச்சிட்டுப் போயிடு. அவங்க அப்பாக்குப் பாதி பாரம் குறெஞ்சிடும். அந்த மீதிப் பாதி குறெஞ்சிடாதுன்னு நினெச்சிக்கோ!"
எனக்கு உண்மையில் கோபம் வந்தது. "பானூ! அந்தமாதிரி பேசாதேன்னு எவ்வளவு நேரமாச் சொல்றேன்? இப்படிப் பேசற்து உனக்கே நல்லா இருக்குதா? ஒவ்வொரு விஷயத்தையும் ஏன் அவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கறே? மகனெ பாரம்னு நினெக்கற தகப்பன் கூட இருக்கான்னு நீ சொல்லித்தான் நான் கேக்கறேன். இல்லாத பொல்லாத பழியெச் சுமத்தற்து உனக்கு மட்டும் அழகா இருக்கறப்போல இருக்குது?"
பானு ஒரு வினாடி என் பக்கம் பார்த்தாள். "ஆமாம் நல்ல மனசுக்குக் கெட்டது சொன்னாப் புடிக்காது. மனுஷங்க எல்லாரும் உன்னெப் போலவே எல்லார்கிட்டேயும் அன்பா இருக்காங்கன்னு நினெச்சா அது பிசகு. அம்மா ஆவட்டும், அப்பா ஆவட்டும், மனெவி ஆவட்டும், மகன் ஆவட்டும் - மமதெ புடிச்ச இதயத்துக்கு எல்லாம் ஒண்ணுதான்!
"மாமா ஒரு தடவெயாவது மகனெத் தூக்கிக்கிட்டுத் திரியற்தெ உன் கண்ணாலே நீ பார்த்திருக்கிறியா? தெருவுலே போறவங்ககூட, விளெயாடிக்கிட்டிருக்கற அவனுக்கு முத்தம் கொடுக்காமெ போமாட்டாங்களே! அந்த அளவு அன்பு பெத்த தகப்பனுக்கு ஏது?"
"நல்லா இருக்குது. இதுக்கே..."
"இல்லெ அண்ணா! மகனெத் தகப்பன் தூக்கிக்கிலேங்கிற ஒண்ணெ வெச்சி இவ்வளவு பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டேன். கட்டில்லே இருந்து எழுந்திரிச்ச உடனே அந்தப் பச்செக் குழந்தெமேலே கோவிச்சிக்கராரு. நான் அஞ்சி மணிக்கே எழுந்திரிச்சு பொழக்காட பக்கம் போயிட்றேன். இவன் ஒவ்வொரு தடவெ எழுந்து மெதுவா என் கிட்டே வந்துட்றான். ஒவ்வொரு தடவெ அழுதுட்டே உக்காந்திருக்கறான். அவருக்குத் தூக்கம் கலெஞ்சி போவுது. எரிஞ்சிவிழுந்து எழுந்து 'சீ! முண்டம்! எழுந்ததுமே அழுகெயும் நீயும்! அழுமூஞ்சி' அவன் தோளெப்புடிச்சி அறெ வெளியே தூக்கி எறிஞ்சிட்டி கதவெத் தாப்பாள் போட்டுக்குவார், எட்டு மணிவரெக்கும். அவன் பயந்துபோய் அழறபோது என் வயிறு பத்தி எறியுது. எவ்வளவு வேலெ இருந்தாலும் நிறுத்திட்டு அவனெப் பக்கத்திலே வெச்சிட்டு உக்காந்துக்குவேன். கண்ணு நிறெஞ்சி வழிஞ்சிபோவும் மகனுங் கெல்லாம் தகப்பங்க மார்மேலேயே தூங்கறாங்கனு சொல்றாங்க. அந்த அதிர்ஷ்டம் குடுத்து வெக்காதவங்களுக்கு எங்கே இருந்து கிடைக்கும்? அதுக்காகவே பல தடவெ நான் எழுந்து வரும்போதே அவனெத் தோள் மேலே போட்டுட்டு வந்து சமயலறெ வாசப்படி பக்கம் பாய் போட்டு படுக்க வெக்கறேன். கைக்குழந்தெ அழுகெக்கித் தூக்கம் கெட்டுப்போற பெரிய மனுஷங்க சீட்டாட்டத்துக்காக ராத்ரி பகல் கண் முழிக்கிறாங்க தெரியுமா! அதெ மத்தவங்க கேக்கலேன்னாலும் அவங்கவங்க மனச்சாட்சி தூங்கிக்கிட்டே இருக்குமா? இன்னும் அவர் சாப்பாடோ டிபனோ சாப்ட்டுட்டு இருந்தா அவன் அந்தப் பக்கத்தலேயே வர்றதுக்கு வழியில்லே. அவன் என்ன தொல்லெ குடுப்பானோ என்னவோ! அதனாலே அவர் சாப்பட்ற நேரம் அவனெப் பொழக்கடையிலே வெச்சிட்டிருக்கணும். மறுபடியும் அவருக்குப் பரிமார்றத்துக்கு நான் அவர் கிட்டவே இருக்கணும். அவன் என் பின்னாடியே வந்துட்டா 'கழுதெக்கி கால் ஒடிஞ்சி நொண்டியா உக்காந்து தொலெஞ்சா நல்லா இருக்கும்'னு திட்டிக் தீப்பார்.
என்னெ என்ன சொன்னாலும் பொறுத்துக்குவேன். ஆனா அவனெச் சொன்னா மட்டும் தாங்கிக்க முடியல்லே. அப்பொ நான் ஏதாவது பதில் சொன்னா சாப்பாட்டெ விட்டுட்டுப் போயிடுவார்னு தெரியும். ஆனாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். 'ஊர் சுத்தற்துக்கு இல்லேன்னாலும் அவன் வயித்தெ அவன் நிரப்பிக்கற்துக்காவது காலு இருக்கணும். அவன் பாரத்தெ நீங்கொண்ணும் சுமக்கற்தில்லை. அவனெப்பத்தி வாய்க்கு வந்தபடி பேசாதீங்க?'
'ஏன் என்ன பண்ணிடுவே?'
'ஒண்ணும் பண்ணமாட்டேன். ஆனா அப்படிப் பேசக் கூடாதுன்னு சொல்றேன்.'
'இன்னக்கி நீ எனக்குச் சொல்றியா? நீ சொல்றது நான் கேக்கற்தா! அது இந்த ஜன்மத்தலே நடக்காது. புரிஞ்சிதா'?
ஒவ்வொரு தடவெ எனக்கு வெறுப்பு எல்லெ மீறி போயிடும்."
"மாமா அவ்வளவு முரட்டுத்தனமா பேசறரா?"
"நமபற்து நம்பாமபோறது உன் இஷ்டம். இன்னும் கேளு. அவர் வீட்லெ இருக்கறவரெக்கும் அவன் அழக் கூடாது. கலாட்டா பண்ணக் கூடாது. பொம்ம கிம்ம விசிறி எறிஞ்சி சத்தம் போட்டு விளையாடக் கூடாது. தகப்பன் மேலெ ஏறித் தொந்தரவு கொடுக்கக் கூடாது. கொஞ்சம் கூடச் சத்தம் போடக்கூடாது. அவன் தூங்கணும். சத்த மில்லாம உக்காந்திருக்கணும். சத்தம் போடாம ஆடிக்கணும். வீடு அமைதியா இருக்கணும். அதுதான் கட்டுப்பாடு. அதுக்கு மாறா அவன் சத்தம் போட்டா, கத்திக்கிட்டு விளையாடினா, பசி யெடுத்ரது அடம்புடிச்சா, தூக்கம் வந்து அழுதா அந்தக் குத்தங்கெல்லாம் என்னுடையது.! நான் ஒருத்தியே பையனெப் பெத்தா மாதிரி ஒரேயடியாப் பண்ணிக்கிறேன். கழுதெக்கிச் செல்லம் குடுத்துக் கெடுத்தட்றேன். கண்டிப்பு இல்லாமெ வளக்கறேன். எதுக்கெடுத்தாலும் அழற்துக்குப் பழக்கிட்டு வர்றேன். மொத்தத்தலே வீட்டெச் சந்தெக்கடெ ஆக்கறேன். நிஜம்தானே?" என்னைக் கேட்டாள். கேட்டுக்கொண்டே இருந்தால் என் உடல் முழுவதும் எறும்புகள் சுற்றிக்கொண்டு பிடுங்குவது போல் இருந்தது.
"சரிதான் சொல்லு."
"ஒரு தடவெ அவனுக்கு அஜீர்ண மாச்சி. வயத்தாலே போயிட்டிருந்தா ரெண்டு மூணு நாளு அந்த மருந்து இந்த மருந்து குடுத்துப் பாத்தேன். குறையல்லே. அதிகமாயிட்டுது. இனி பிரேயோஜன மில்லேன்னு டாக்டர் கிட்டெ காட்டச் சொன்னேன். அதுக்கு என்ன சொன்னாரோ தெரியுமா? 'ஒரு தும்மல் வந்தா உடனே டாக்டர்கிட்டே ஓடச் சொல்றியா. அவனுக்கு அந்த தட்சணெ குடுக்காட்டா உனக்குத் தூக்கம் புடிக்காது. பக்கத்து வீட்டு பாமா பாட்டிகிட்டே கேட்டு எதாவது இஞ்சி கஷாயம் போட்டுக் குடிக்கக் கூடாது? எனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிட்டுது. அப்படி அதிகமாச்சுன்னா நாளெக்கி காட்லாம் ஆவட்டும்.' எனக்கு உடம்பு பத்தி எறிஞ்சுது.
'ரெண்டு நாளா அந்தக் கஷாயம் எல்லாம் குடுத்துக்தான் வர்றேன். ஒண்ணும் குணம் தெரியல்லே. பாபு கண்ணுகூட தெறக்க முடியாம இருக்கறான். இன்னும் அதிக மாகணும்னா என்ன நடக்கணும்?'
'அப்பப்பா! ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏன் இப்படி எதுத்துப் பேசறே? ரெண்டு நாளா கெடக்கறவன் இன்னிக்கி ஒண்ணும் ஆயிடமாட்டான் ஆவட்டும். சாயந்தரம் பாக்கலாம்.'
' பாக்கலாம்! அவன் மூச்சி காத்திலே கலந்து போயிட்ட பிறகு பாக்கலாம்! அது நடக்காது. நடக்கவும் விட மாட்டேன். என்னாலே ஆன முயற்சி எல்லாம் பண்ணிப் பாக்கறேன்.' உடனெ பாபுவெ தூக்கிக்கிட்டு ரிக்ஷாவிலே புறப்பட்டுப் போனேன். ஒரு கடெயிலே என் மோதரம் ஒண்ணெ ரொம்ப மலிவா வித்துட்டு டாக்டர் கிட்டே போனேன், பாபுக்கு இஞ்சக்ஷன் போட்டு மருந்து குடுத்து படுக்கவெச்சப் பிறகு எனக்கு எவ்வளவோ தைரியம் வந்தது. கர்வம்கூட உண்டாச்சி. பாபுக்கு அம்மா இருக்கிறாள்! நான் தெருத் தெருவா சுத்தறேன்னு, தன்னெ கரிச்சிக் கொட்னார்னு வெச்சிக்கோ! அது வேறெ சங்கதி. இப்பொ சொல்லு. ஒவ்வொரு தகப்பனும் ஒவ்வொரு குழந்தெயிடம் அன்புகாட்றாங்கன்னு சொல்லு."
எப்படிச் சொல்வது? அந்தச் செய்திகள் கேட்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தன. பெற்ற குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்ள முடியாத தந்தை ஒரு தந்தையா? பச்சைக் குழந்தையின் கூச்சலில் மகிழ்ச்சி அடைய முடியாத மனிதன் ஒரு மனிதனா? அமைதிக்காகச் சீட்டாடும் மனிதர் ஏன் குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஒரு வயது குழந்தைக்குக் கண்டிப்பு கற்றுக் கொடுக்கும் பெரிய மனிதர் இருபத்து நான்கு மணியும் வீட்டை விட்டு எதற்காகத் திரிந்துகொண்டிருக்க வேண்டும்? பணத்திற்காகக் கணக்குப் பார்த்து பெற்ற குழந்தையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் இருக்கக் கூடிய மனிதர் நூற்றுக் கணக்கான ரூபாய்களை எங்கே கொட்டி அழுகிறார்? அர்த்தமில்லாத இந்த விஷயங்களுக்கு நான் என்ன அர்த்தம் கற்பித்துச் சொல்ல? தன் சிறுவயதில் தாய்தந்தையரை இழந்து விட்ட பரிதாப நிலையாவது மகனிடம் அன்பு செலுத்தக் காரணமாக இருக்கலாமே! வாழ்க்கையில் அந்த மனிதர் வேறு யாரிடம்தான் அன்பு செலுத்துவார்?
" என்ன அண்ணா பேச மாட்டேங்கிறே?"
" பேசறத்துக்கு என்ன இருக்குது பானூ! பெத்த தாய் நீ பாத்துக்குவெ இல்லியான்னு அவர் கவலெப் படாமெதிரியறாரே தவர பெத்த குழந்தெயெ வெறுப்பாரா சொல்லு?"
பானுவுக்குக் கோபம் வந்தது. " கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் அமெச்சிக்கிட்டு கடமெகளெ நிறெ வேத்தவேண்டிய சமயத்தலெகூட அந்த மனிதர் மாற வேண்டிய அவசிய மில்லேன்னு சொல்றியா. அவ்வளவுதானா?" ஒரு வினாடி நிறுத்தினாள், " அண்ணா! சாரதாவே என் நிலெயிலே இருந்தா நீ இவ்வளவு சாந்தமாப் பேசமாட்டே.
" ஆமாம். இத்தனெ நாள் என் கஷ்டங்களெக் கேட்டு புரிஞ்சிக்கக் கூடிய அண்ணன் ஒருத்தனாவது இருக்கறான்னு, அவன்கிட்டெ சொல்லிக் குறெஞ்சது இரக்கமாவது பெறலாம்னு பேராசெ வெச்சிருந்தேன். போவட்டும், என்னெப் புரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னாவாவது எனக்குத் திருப்தியா இருக்கும். இனிமே எனக்கு யாரும் இல்லே. யாரும் இல்லே." பானு முழங்கால்மேல் தலையை வைத்தக்கொண்டு விக்கி விக்கி அழுவதைப் பார்க்கும்பொழுது என் மூளையே குழம்பிவிட்டது. என் கண்கள்கூட நிறைந்துவிட்டன. பானுவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன்.
" பானூ! தங்கச்சி! என்னெ எவ்வளவு தப்பா புரிஞ்சிக்கிட்டேம்மா!"
பானு தலை யெடுத்துப் பார்த்தாள்.
" நீ ஏதோ கஷ்டத்தலெ அவதிப்பட்டு வர்றேன்னு எப்பவோ ஊகிச்சேன். ஆனா உன்னெக் கேக்கற்துக்கு தைரியம் வரலே. இன்னக்கி நீ சொன்ன தெல்லாம் கேக்கக் கேக்க என் மனசு எவ்வளவு வேதனெப் படுதோ உனக்குத் தெரியுமா? உன் கண்ணுலே யிருந்து நீர் வழிஞ்சா என்னெ எப்படி ரம்பம் வெச்சி அறுக்கறா மாதிரி இருக்குதுங்கற்தெ நீ கிரகிக்க முடியுமா? பானூ! உன்னெ நான் புரிஞ்சிக்கலேன்னு நினெக்கறியா? ஆனா என் மனசிலே இருக்கற்தெ யெல்லாம் வெளியே சொல்லி உன்னெ இன்னும் வேதனெப் படுத்தற்லே லாபம் என்ன சொல்லு? மென்மையான உன் மனசு உடெஞ்சு போனா, உன் புருஷன் மேலே நீ வெறுப்பெ அதிகமாக் கிக்கிட்டா உடெஞ்ச கண்ணாடி திரும்ப ஒட்டிக்குமா? உன் மனசெப் பாழாக்கற்துக்கே என்னெ உதவி செய்யச் சொல்றியா? இத்தனெ நாள் நட்பெ எவ்வளவு லேசா தூக்கி எறிஞ்சிட்டெ பானூ!"
" அண்ணா!" பானு ஈரக் கண்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். "பானூ! சாரதா என் சொந்தத் தங்கெ! ஆனா எந்த வகெயிலும் சாரதாவுக்கு இந்த அண்ணனின் உதவி தேவெயில்லே. வேண்டிய புடவெங்க, நகெங்க, பொருளுங்க அம்மா அப்பா குடுத்து வர்றாங்க. சாரதாவோட மனசு உன் மனசுபோல மென்மெயான தில்லே. அப்படிப்பட்டவங்களுக்கு மானசீகமான வேதனெயே இருக்காது. அண்ணாவாக நான் ஏதாவது வழியிலே உதவி செய்ய முடிஞ்சிதுன்னா அது உனக்குத்தான்."
"என்னெ மன்னிச்சுடு அண்ணா! நான் அவசரப் பட்றேன்னு நீயே சொல்றே இல்லே? எனக்கு யாருமில்லேன்னு நினெச்சேனே தவர-- அது உண்மெயில்லே. எனக்கு நீ இருக்கறே. உன்னெத் தவர என்னெ நேசிக்கறவங்க யாருமில்லே" என்றாள் தன் கையால் என் கண்களைத் துடைத்துகொண்டே.
அந்தக் கையைப் பிடித்துக் கொண்டேன். "தப்பு பானூ! மாமாவுக் கப்புறம்தான் நான். ஒரு மனுஷனெ அவ்வளவு சீக்கிரமா ஒதுக்கிவிடக் கூடாது. உன் நல்லது கெட்டது, உன் கஷ்ட சுகங்களெப் பாக்கவேண்டியது மாமாதான்."
பானு வேதனையுடன் சிரித்தாள். "என் நல்லது கெட்டது கஷ்ட சுகங்க! அந்தக் குடும்ப தர்மம் இந்தக் குடும்பத்தலெ மட்டும் இல்லெ அண்ணா!"
நான் ஒன்றும் பேசவில்லை.
"நான் எதெச் சொன்னாலும் வேடிக்கையா இருக்குமோ என்னவோ!" என்றாள் சிறிது நேரத்தில்.
சொல்லச் சொல்லி கேட்பதுபோல் பார்த்தேன். என்ன கேட்கப் போகிறோமோ என்ற பயம் ஒரு பக்கம்.
"பாபு வயத்தலெ இருக்கும்போது ஒரு தடவெ காய்ச்சல் வந்தது. ராத்ரி அவர் வரும்போது படுத்திட்டிருந்தேன். 'என்ன படுத்திட்டியே'ன்னு கேட்டதற்குக் 'காய்ச்சல் வந்தாப்பொல இருக்குது. தலெ வலியினாலே படுத்திட்டே'ன்னு சொன்னேன்.
'இன்னக்கி ராத்ரி சாப்பட்றதெ நிறுத்திடு! நாளெக்கி காலெயிலே அதுவே போயிடுது'ன்னார். குறெஞ்சது உடம்பு மேலே கை வெச்சிகூட பாக்கல. குளிர் எடுத்ததனாலெ போர்வெயெப் போத்திக்கிட்டேன்.
எப்பவோ முழிப்பு வந்தப்பொ விளக்கு வெளிச்சமா எரிஞ்சிக்கிட் டிருந்தது. படுக்கெயிலே அவர் இல்லே. தெருக் கதவு சும்மா சாத்தி இருந்தது. அது வழக்கம் தான்னாலும் பயத்தலெ இதயம் படபடத்தது. அவசரமா எழுந்துபோய் தாப்பாள் போட்டுட்டு நடுங்கிக்கிட்டெ வந்து விழுந்தேன். வேர்வெயா வந்தது. அளவுக்கு மீறி தாகம் எடுத்தது. அப்பொ வெந்நீர் காய்ச்சிக்கற்துக் கில்லாமெ பச்சத் தண்ணி குடிச்சிட்டுப் படுத்தேன். எவ்வளவு நேரமானாலும் தூக்கம் பிடிக்கலெ. பன்னண்டு ஆவப்போவுது. அப்பொ வந்தாக்கா கதவு தெறந்தேன். 'சீக்கிரமா வந்துடலாம்னு போனா நேரமாயிட்டுது பானு! காய்ச்சல் எப்படி இருக்குது?'ன்னு கேட்டுட்டு கட்டில் மேலே உக்காந்தார்.
'ஒண்ணும் கவலெப்படாதே நாளெக்கி காத்தாலெ குறெஞ்சிபோயிடும்.' குறெயிலேன்னாலும் யாருக்கு இங்கெ கவலெ? எப்படித் தைரியம் சொல்லச் சொல்லி யார் கேட்டாங்க? காலெயிலே காய்ச்சல் அதிகமா யிட்டுது. அது அவருக்குத் தெரியாது.
'சமயல் பண்ண முடியாதா?'
'செய்ய முடியாது.'
'போவட்டும்! நான் ஓட்டல்லெ சாப்பட்றேன். உனக்கு ஏதாவது வேணுமா?'
'தேவெயில்லே.'
'சரி!'
காய்ச்சல் குறெயில்லேன்னா டாக்டரெ அழெச்சிட்டு வரணும்னு, காய்ச்சல்லெ அவஸ்தப் பட்றவங்களுக்காவது ரொட்டி, காபி ஏதாவது ஒண்ணு வாங்கி வந்து தரணுங்கற்து தெரியாதா? என் கண்ணு நிறெஞ்சி போச்சி. வாயும் வயிறுமா இருக்கறவங்க பட்டினி கிடக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. வயித்திலெ இருக்கற குழந்தெக்காக வாவது ஏதாவது சாப்படணும். என்ன சாப்பட்றது? யார் கொண்டு வருவாங்க? பத்து மணி வரெக்கும் அப்படியே படுத்திட்டிருந்தேன். தெருவுலெ சோடா விக்கறவன் சத்தம் கேட்டது. எழுந்து போய் சோடா விக்கற பையனெக் கூப்ட்டேன். உள்ளே வந்து காசுக்காக மேசெ டிராயருங்க, அலமாரித் தட்டுங்க, பாண்ட் ஜேபிங்க, பெட்டி மூலெங்க எல்லாம் குடெஞ்சி பாத்தேன். எங்கெயும் ஒரு செல்லாத காசு கூட கிடைக்கிலெ. நெறஞ்ச கர்ப்பத்தோட கொதிக்கற காய்ச்சல்லெ, சாப்பட்றதுக்கு ஒண்ணு மில்லாமெ சோடாத் தண்ணி குடிக்கலாம்னு ஆசெ வந்தா அரை யணா...ஒரே ஒரு அரையணா என்கிட்டெ இல்லாமெ போயிட்டுது பாத்தியா! என் புருஷன் சம்பாதனெயெ நான் எவ்வளவு சந்தோஷமா அனுபவிக்கறேனோ! வீட்லெ மனெவி என்ற முறெயிலெ எவ்வளவு சுதந்தரம் சம்பாதிச்சிக்கிட்டேன்! கண்ணெத் தொடச்சிக்கிட்டு தெருவுக்கு வந்து 'போப்பா தம்பி! காசு கிடைக்கிலே'ன்னு சொன்னேன்.
'பரவால்லேம்மா, நாளெக்கிக் கொடுங்க'ன்னான் அவன்.
'வேணாம் போப்பா'ன்னு சொல்லிட்டு உள்ளே வந்தேன். அழுகையெ* நிறுத்தற்துக்கு ஒரு முயற்சியும் பண்ணல்லெ. ஆத்தரம் தீர்ற வரெக்கும் அழுதேன். அஞ்சி நிமிஷமானாலும் தெருவிலெயே கத்திக்கிட்டிருந்தான் அவன். எழுந்துபோய் மறுபடியும் கூப்ட்டேன். 'பார் தம்பி! நாளெக்கிகூட என்கிட்டே காசு இருக்காது. ஜொரமா இருக்குது. நேத்துலே இருந்து ஒண்ணும் சாப்படல்லெ. தாகமா இருக்குது. ஒரு சோடா...சும்மா தர்றியா?'
அவன் பயந்துபோய் நின்னுட்டான்.
'நிஜம்தான் தம்பி! எனக்கு சோடா குடிக்கணும்னு இருக்குது. என்கிட்டே காசு இருக்கும்போது கண்டிப்பா குடுத்துட்றேன். ஒரு சோடா குடுக்கமாட்டே?'
அவன் பயம் தெளிஞ்சி 'குடுக்கிறேங்க'ன்னு சொல்லி வண்டியெப் பாத்து ஓட்டம் புடிச்சான். அன்னக்கி அந்தச் சோடாக்கு இருந்த மதிப்பு எந்த அம்ருதத்துக்கும் இல்லெ. அந்தத் தம்பி காட்டன கருணெ வாழ்க்கையிலெ இனிமே நான் பாக்கப் போறதில்லை. காலி பாட்டிலெ அவன்கிட்டெ குடுத்துட்டு, 'எனக்குப் பொறக்கற கொழந்த உன்னப்போல நல்லவனா இருக்கணும்'னு சொன்னேன். அவன் சிரிச்சிட்டுப் போயிட்டான். திக்கில்லாதவங்களுக்கு தெய்வமே தொணென்னு சொல்றாங்க. அன்போடு குடுத்த அந்தச் சோடா மருந்து மாதிரி வேலெ செஞ்சதுன்னு நெனக்கறேன். சாயந்திரத்துக் குள்ளெ காய்ச்சல் குறெஞ்சது. சமயல் பண்ணேன்." பானு நிறுத்தினாள். நான் பானுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"மாமா உனக்கு எப்பவும் காசு குடுக்க மாட்டாரா?"
"அதெ வேறெ கேக்கணுமா?"
"போவட்டும், நீ எப்பவாவது கேட்டுப் பாத்தியா?"
"லட்சம் தடவெ, எனக்கு ஏதாவது தேவெ இருக்கும்னு, அதுக்கும் இதுக்கும் கேக்கற்துக்கு முடியாம போவுதுன்னு, சமயம் கிடைக்கிறப்பொ காலு அரை குடுக்கச் சொல்லி எத்தனையோ விதமா புரியறா மாதிரி சொன்னேன். வெக்கத்தெ விட்டு தேவெப்பட்றப் போதெல்லாம் கேட்டுட்டு வந்தேன். எனக்கு ஒரணா குடுத்தா அதெ எதுக்குச் செலவு பண்ணேனோ சொல்லணும். அப்படிச் சொல்றது எனக்கு இஷ்டமில்லெ. கேக்கற்தெ நிறுத்திட்டேன். நம்ம ஊரு போவும்போது அஞ்சொ பத்தோ அம்மா குடுப்பாங்க. அதெயே வெச்சிட்டு சாக்கரதெயா செலவு பண்ணிட்டு வருவேன். பணத்தெ எவ்வளவு சாக்கரதெயா செலவு பண்ணாலும் குறெஞ் சிட்டு வருமே தவர வளர்றதில்லே இல்லே? அவர் சம்பாதனெ விஷயத்தலெ, இந்தக் குடும்பச் செலவுகள்ளெ ஒரு காலணாவுக்குக் கூட நான் தலையிடக் கூடாது. சுதந்தரமா ஒரு பொருள் வாங்கக் கூடாது. ஒரு தடவெ பான்சி சாமானுங்க தெருவிலே வித்துக்கிட்டு வந்தது. அக்கம் பக்கத்தவங் கெல்லாம் கூட்டம் கூடி சாமானுங்களெப் பாத்துகிட்டிருந்தாங்க. நான் தெரு வாசப்படியிலெ நின்னுட்டிருந்தேன். யார் யாருக்கு என்னென்ன புடிச்சிதோ அதெ வாங்கிகிட்டிருந்தாங்க. பக்கத்து வீட்டு பாமா பாட்டி என்னெக் கூட கட்டாயப்படுத் தனாங்க. ஊதுவத்தி கொளுத்தி வெக்கற பீங்கான் செடி ஒன்னு வாங்கிகிட்டேன். அது ரொம்ப அழகா நல்லா இருந்தது. தடியா அடிப்பாகம், மேலெ படர்ந்த கிளைகள்ளெ பூப் பூத்தாப்பொல இருந்தது. அதுகள்ளே ஊதுவத்திங்க குத்தி வெக்கறாங்க. பாமா பாட்டி ஒரு ரூபா கடன் குடுத்தாங்க. அதெ நல்லாக் காட்டிட்டுப் பணம் கேட்டாக்கா 'யாரு வாங்கச் சொன்னது?'ன்னு கேள்வி கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. யாரு வாங்கச் சொல்லணும்? வீட்டுக்காக எனக்குப் புடிச்ச பொருளெ நான் ஏன் வாங்கக்கூடாது? இவ்வளவு சின்ன விஷயத்துக்கு வீட்டுக்காரியான எனக்கு உரிமெயில்லே? அவரெக் கேக்காமெ என் இஷ்டப்படி செய்தேங்கற்தனாலே அந்த ரூபா குடுக்கவேண்டிய கடமெ தனக்கு இல்லே. அதுதான் முடிவு. என்ன பண்ணுவேன்? அந்தக் கடனெ எப்படிக் குடுப்பேன்? பாமா பாட்டி வாங்கிக்குவாளோன்னு கேட்டா, அவங்க மருமககிட்டே வெள்ளியிலே இருக்குதாம். வேணாம்னு சொல்லிட்டாங்க. வேற யாருக்காவது வேணுமான்னு சொல்லிக் காட்னா யாரு வாங்கிக்கறாங்க? தாங்க முடியாத அளவு துக்கம் வந்தது. ஏதோ திடீர்னு யோசனெ வர எழுந்துபோய் அரிசி குடுத்து கடனெத் தீத்துக்கிட்டேன்.
பிறகு 'அந்த ரூபா குடுத்திட்டியா?'ன்னு கேட்டார்.
'குடுத்திட்டேன். என்கிட்டே இருந்துது, முன்னே நீங்க குடுக்கிறீங்களோன்னு கேட்டேன்.' பெரிய வெற்றி அடைஞ்சவர்போல சிரிச்சார். 'குடும்பத்தலெ பங்கு உனக்கும் வேணும்னு சொல்றெ யில்லே!'
'ஆமாம். வெறும் காசு செலவுபண்ற விஷயத்தலெ மட்டும் எனக்குப் பங்கு குடுங்க.'
சரி என் பங்குகளும், சுதந்தரங்களும் ஒரு பக்கத்தலெ இருக்கட்டும். மாசத்துக்கு நூத்தி ஐம்பது ரூபா சம்பளம் வருதுன்னா குறெஞ்சது பத்து ரூபாயாவது மிச்சம் புடிக்க லேன்னா, தீடீர் திடீர்னு வர்றதேவெங்களெ எப்படி நிறவேத்திக்கறது? கல்யாணத்துக்கு வாங்கன துணிகளே இது வரெக்கும் வெச்சிக்கிட்டிருக்கறென். நாளலே இருந்து எந்தச் செலவெப் பாத்தாலும் வளருமே தவர குறையாதில்லே? இப்பவே நாம் கடனாளி ஆயிட்டா பையன் வளந்து படிக்க வர்றபோது என்ன ஆவற்து? இந்த மாதிரி விஷயங்களெ எத்தனெ தடவெ எடுத்துச் சொன்னேன் தெரியுமா? என்ன பலன் கிடெச்சதுங்கறே? எனக்குப் பண விஷயமா ஒண்ணுமே சொல்ல மாட்டார். எவ்வளவு வருது? எவ்வளவு செலவாவுது? எவ்வளவு மீறுது? இல்லெ எவ்வளவு கடனாவுது? முதல்லெ நம்ம அருகதெ என்ன? நாம எவ்வளவுலே இருக்கறோம்? இன்னக்கி என் குடும்ப நிலெ என்னவோ எனக்குத் தெரியாது. எனக்குப் பட்டுப் புடவெ வாங்கணும்னு இருக்குது. அந்தச் சக்தி எனக்கு இருக்குதோ இல்லியோ தெரியாது. நான் என்ன ஆசெப்படனமோ, எந்த ஆசெயெ நிறைவேத்திக்க முடியுமோ தெரியாது. 'பண விஷயம் உனக்குத் தேவெயில்லெ. உன்னாலெ ஒரு காலணா சம்பாதிக்க முடியாதப்பொ, நீ ஒரு காலணா குடுக்க முடியாதப்பொ மீறுதோ குறெயுதோ உனக்கெதுக்கு? அந்தத் தலைவலி யெல்லாம் நான் அனுபவிக்கறேன். நீ நிம்மதியா உக்காந்துக்கோ.' பாத்தியா நான் எவ்வளவு சுகப்பட்றேனோ? பண விஷயம் தெரிஞ்சிக்காம உக்காந்திட்டா எல்லாம் சுகந்தான் போல இருக்குது. ஒருத்தர் நிலெயெ இன்னொருத்தர் தெரிஞ்சிக்கணும்னு சொல்றாங்க ஒருத்தர் கஷ்ட சுகங்களெ இன்னொருத்தர் பகுந்துக்கணும்னு சொல்றாங்க. அது இந்தக் குடும்பத்தலெ எப்படி நடக்கும்? எனக்குச் சொன்னா இவ்வளவு செலவு ஏன் ஆவுதுன்னு கேக்கமாட்டேன்? இந்தச் செலவு முக்கியம்னு எடுத்துச் சொல்லமாட்டேன்? அதனாலேதான் அந்தத் தலெவலியெத் தலெயிலெ போட்டுக்காம சந்தோஷமா இருக்கணுமாம்.
இங்கெ பாரு, நம்ம ஊருக்குப் போனா அக்காங்க மத்தவங்க எத்தனெயோ ஜாக்கட் துணிங்க குடுக்கறாங்க. எவ்வளவோ சாமானுங்க வாங்கறாங்க. அதெல்லாம் வாங்கிக்கதான் முடியுதே தவர ஒருத்தருக்கும் ஒண்ணும் குடுக்க முடியாம போவுது. அக்காக் குழந்தெங்களுக்காவது ஏதாவது வாங்கிட்டுப் போகலாம்னா எனக்குப் பணம் எங்கே இருந்து வருது?
உங்க மாமா ஒருதடவெ நான் நம்ம ஊர்லெ இருக்கும் போது வந்தார். இருந்த ஒருவாரம் ஊரெல்லாம் சுத்தி ஜல்சா பண்ணி பர்ஸ்லே இருந்த தெல்லாம் செலவழிச் சிட்டார். பாக்கப்போனா திரும்பிப் போற்துக்கு ரயில் டிக்கட்டுக்குப் பணமில்லெ. அப்பொ என்கிட்டெயும் ஒண்ணு மில்லெ. அவரு ரயில் டிக்கட்டுக்காக அம்மா கிட்டேதான்னாலும் எப்படிக் கேப்பேன்? அவங்கவங்க வாழ்க்கெயெ அவங்கவங்க வாழ்ந்திட் டிருக்கிறப்பொ, அவங்கவங்க மரியாதெயெ அவங்கவங்க காப்பாத்திக்கணுமே தவர எல்லா விஷயத்தலேயும் அம்மா மகள் எங்கற சம்பந்தத்தெப் பாக்க முடியுமா? யாரெயும் கேக்கற்துக்கு எனக்கு மனசு வரல்லே. என் கழுத்திலெ தாலியோடகூட நோம்பிருந்து கட்டிக்கிட்ட வரலட்சுமி பதக்கம் இருந்தா அதெக் கழட்டிக் கொடுத்துட்டேன். அது எங்கெயோ விழுந்துட்டு துன்னு நடிச்சேன். வீட்லெ அந்த மாதிரி அசிங்கமான நிலெ ஏன் வரணும்? நான் மனெவியாகவே இருக்கலாம். அந்தமாதிரியான ரொம்ப சின்ன விஷயத்துக்கு வெக்கத்தெவிட்டு என்னெக் கேக்கவேண்டிய நிலெயெ ஏன் கொண்டு வந்துக்கணும்? அந்த ஆண்மெ யெல்லாம் எங்கே போயிட்டுது? இந்தக் குடும்பக் கதையெ இப்படி எத்தனெ மணிநேரம் சொன்னா கேட்டுக்கிட்டே உக்காந்திருப்பே?" என்றாள் சட்டென்று பேச்சை மாற்றிச் சிரித்துக்கொண்டே.
நான் பெருமூச்சு விட்டுச் சொன்னேன். "சொல்லுபானு! உன் மனசுலெ இருக்கும் வேதனெ யெல்லாம்என்கிட்டெ சொல்லு. நான் உனக்கு எந்த விதத்திலும்உதவி செய்ய முடியாமல் போனாலும் குறெஞ்சது உன்வேதனையெ நானும் பங்கிட்டுக்கறேன். இவ்வளவுதூரம் வந்த பிறகு எதெயும் மறெச்சு வெக்காதே."
"அண்ணா! எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கப்போவுதோன்னு பயமா இருக்குது. ஒவ்வொரு பொம்பளெயும் புருஷன்கிட்டேயிருந்து எந்த அன்பெ அனுபவிக்கிறாளோ அதுதான் எனக்கு இல்லெ. என்மேலெ அவருக்குக் கொஞ்சம் கூட அன்பு இல்லெ. பாபு வயத்தலெஇருக்கறப்பொ உடம்பு சரியில்லாமெ வேல செய்றதுக்குஒரு பெண்ணெ வெச்சேன். கோவிச்சிக்கிட்டார். 'உன்அந்தப்புர வேலெங்களெச் செய்யற்துக்கு சேவகிங்க வேறவேணுமா? கர்ப்பமா இருக்கறவங்க சொந்தமா வேலசெஞ்சிகிட்டா உடம்புக்கு நல்லதுன்னு டாக்டருங்கசொல்றதில்லே? சாப்டுட்டு உக்காந்திருக்கற்து தவரஉத்தியோகம் ஏதாவது பாக்கறியா என்ன? மகாராணிமாதிரி உக்கார்ந் திருக்கற்துக்கு உங்கப்பன் வீட்லேஇருந்து பணம் வந்து ஒண்ணும் குவியலே'ன்னுசொன்னார். உண்மெதான்! வேலெக்காரிக்குக் குடுக்கறஒண்ணரை ரூபா ஒரு நாளக்கு சிகரெட்டுக்கு வராது?பொறந்த வீட்லே இருந்து சொத்து கித்து கொண்டு வராதவளுக்கு வேலெக்காரி எப்படி வருவா? அன்னக்கி மறுநாள்ளேயிருந்து அந்தப் பொண்ணெ வரவாணாம்னுசொல்லிட்டேன். மாசம் ஆக ஆக எவ்வளவு சின்னவெலெ செஞ்சாலும் கஷ்டமா இருக்கும். நாலுதடவெகிணத்துக்கும் வீட்டுக்கும் திரியற்துக்குள்ளே காலெப் புடுங்கும். பாத்தரம் விளக்கிட்டிருந்தா கை மரத்துப்போவும். ஒருதடவ வெக்கத்தெவிட்டு, 'கட்டெயிலெசமெயல் பண்ணா புகெ புடிச்சி பாத்தரங்க கழுவற்துக்குக்கஷ்டமா இருக்குது. இந்த மாசம் அடுப்புக் கரி வாங்கக்கூடாதா'ன்னு கேட்டேன்.
எவ்வளவு அசட்டுக் கோரிக்கை! அவசிய மில்லாதது!முகத்தெச் சுளிச்சிக்கிட்டார். 'காலணாவுலே ஆறவேலெக்கி ஓரணா செலவழிக்கிறேங்கிறயா. கரிக்குப்பதிலா கட்டெ ரெண்டு மடங்கு வருது. முதல்லெ பணம்னாஏதோ மரத்தலெ காய்க்குதுன்னு நினெச்சிக்கிட்டிருக்கே?எனக்குத் தடுக்க முடியாத அளவு கோவம் வந்தது.'ஆமாம், என் சௌகரியம் பத்தி பேச்சு வந்தா இந்தயோசனெங் கெல்லாம்! ஜல்சா பண்றதுக்கு, தமாஷாபொழுது போக்கற்துக்கு, சீட்டாட்டத்துக்கு, சிகரெட்டுக்கு இந்தச் சிக்கனத்தெப் பத்திய அறிவெல்லாம்,பணத்தின் மதிப்பெல்லாம் அவசிய மில்லே இல்லியா.ஞாபகத்துக்கே வராது. கர்ப்பமா இருக்கறவங்க சொந்தமா வேலெ செஞ்சிக்கிட்டா உடம்புக்கு நல்லதுன்னுடாக்டருங்க சொல்றாங்களே தவிர, சிகரெட் புடிச்சாஇதயம் கெட்டு நோய் வருதுன்னு சொல்ற தில்லியா?"
'வாயெ மூடு! அவன் யாரு நடுவுலெ சொல்றதுக்கு?நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெ என் இஷ்டம் வந்தப்படி செலவு பண்ணுவேன். இந்த வீட்லெ உன்னாலெஒரு செல்லாக் காசு கூட வந்து விழற்தில்லே.'
'உங்க எண்ணம் அதுதான்னா கொஞ்சம் தெளிவாச்சொல்லுங்க. என் கைக்கு வந்ததெ நானும் செய்றேன்.'
'ஓஹோ! இனிமே நீங்க உத்தியோகம் பாக்கற்து
ஒண்ணுதான் குறெச்சல். எந்த டாக்டரெயாவது,நடிகனெ யாவது கல்யாணம் பண்ணி இருந்தா உன்சௌகரியங்களும், ஆடம்பரச் செலவுங்களும்.....'
சீ! முதல்லெ எனக்குப் புத்தி இல்லே. நிறெமாசகர்ப்பமா இருக்கற ஒரு பொம்பளெ மேலே குறெஞ்சதுகருணெகூட இல்லாத மனுஷனெ ஒரு மனிதனா நினெச்சிபேசற நானு..... நான் ஒரு மாடு!
குழந்தெ பொறக்கற காலம் வரெக்கும் நான் இங்கேயேஅடிமெ வேலெ செய்யற்துக்காக இருக்கவேண்டி யிருந்தது. பாபுவெப் பாத்த சமயத்தலெ என் மனசு எவ்வளவுஆனந்தத்தாலெ நிறெஞ்சி வழிஞ்சிதோ, எவ்வளவுதைரியம் வந்ததோ எப்படிச் சொல்றது? எனக்கு மகன்பொறந்தான். அவனெப் பாத்தா அவர் தவறாம மாறிப்போயிடுவார். என் கஷ்டசுகங்களெப் புரிஞ்சுக்குவார்.ஆசைக் கோட்டைகள்ளே மிதந்துகிட்டு மூணுமாசபாபுவெத் தூக்கிக்கிட்டு வந்தேன்.
மகனெப் பாத்து தகப்பன் சந்தோஷப்பட்டது உண்மெதான் - ஆனா அது எனக்குத் திருப்தி கொடுக்கறசந்தோஷ மில்லே. என் எதிர்காலம் மாறிப் போயிடும்னுநம்பற அளவு ஆனந்தமில்லே. என் வேதனை யெல்லாம்அதிகமாச்சே தவர இம்மி அளவு கூடக் குறையல்லே.அவருக்கு புது வெறுப்பு ஒண்ணு வந்து சேந்தது. 'நாள்முழுதும் பையன் அழறான். வீட்டுக்கு வர்றதுக்கேபுடிக்காம இருக்குது'ன்னு சொல்வார். ராத்ரியிலெஅவன் நெனச்ச துணியெ மாத்தவேண்டி யிருந்தா அதுநான் ஒருத்தியே செய்யணும். அவனெத் தொடச்சிவேற துணி போட்டுப் படுக்க வெக்கற்துக் குள்ளேஅவன் அழறான்.
"சீ!சீ! இது சத்தரம் மாதிரி இருக்குதே ஒழிய வீடாட்டம் இல்லே. பகலெல்லாம் ஹாயா படுத்துட்டு நடுராத்ரியிலே எழுந்து மோளம் அடிச்சிட்டு உக்காந்திருக்கறே.ராத்ரி முழுக்கத் தூங்கவிட்றதில்லே. என்னெ இருக்கச்சொல்றியா? இல்லெ போச் சொல்றியா? நீ என்னநினெச்சிக்கிட்டிருக்கறே?"
முரடனுக்கு எதுக்குப் பதில் சொல்லணும்? இதுதான்என் நினெப்பு. எவ்வளவு திட்டினாலும் சரி, கேட்டுக்கிட்டே பச்செக் குழந்தையெ மாரோடு அணெச்சிக்கிட்டுப் படுத்துக்கிட்டா ஏதோ ஒரு திருப்தி! சந்தோஷம்!போதும் - அவனுக்காக எதெயும் தாங்கிக்குவேன்.."
பானு அதே பாணியில் நினைவுவந்த தொல்லைகளைஎல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாள். கேட்கக் கேட்கஎனக்குப் பைத்தியம் பிடிக்கும்போல் இருந்தது. பானுவின் குடும்ப வாழ்க்கை இவ்வளவு கீழ்த்தரமாகவாநடந்து கொண்டிருக்கிறது? பானு இவ்வளவு வேதனையைத் தாங்கிவருகிறாளா?
"அண்ணா! என் கஷ்ட சுகங்களுக்கு என் புருஷன்இருக்கறார் என்ற நம்பிக்கெ என்னெக்கோ போயிட்டது.ஆனா அவருக்குப் பாபு மேலெ அன்பு இருந்தா லாவதுஎனக்குத் திருப்தியா இருக்கும்."
"பானூ!" ஈரம் படர்ந்த அந்தக் கண்களை உற்றுப்பார்க்க லானேன். பானு பேசவில்லை.
"நீ ரொம்ப மாறிட்டே பானூ!"
பானு ஒருவிதமாகச் சிரித்தாள். "மார்றதில்லேஅந்த பானு இனிமெ இல்லே. அந்த உயர்ந்த எண்ணங்க, அந்த கர்வங்க, குருட்டு நம்பிக்கைங்க, பிடிவாதங்க---ஒண்ணு மில்லே"
உண்மை யென்று சொல்வதற்காகத்தான் போலும்கடிகாரம் இரண்டு முறை அடித்தது.
"போவட்டும். கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ஏதாவது சினிமாக்குப் போலாமா?"
பானு சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள்: "நான் சினிமா பாக்கற்தெ நிறுத்திட்டேன்.எட்டு மாசமாயிட்டுது.' கடவுளே! இதற்கு எதுவும் முன்கதை இல்லை அல்லவா?
'ஏன்?' என்று கேட்பதுபோல் வியப்புடன் பார்த்தேன். "நான் மாமாவோட போய் அவரெ அவமானப் படுத்தற்துக்கு இஷ்டம் இல்லாம நிறுத்திட்டேன்."
"என்ன ஆச்சி பானூ!"
"சொல்றதுக்கு ஒண்ணுமில்லே! அப்பொ ஒரு தடவெஏதோ இங்கிலீஷ் சினிமா வந்தது. ரொம்ப் நல்லா இருக்குதுன்னு படிச்சேன். 'போலாமா?'ன்னு கேட்டேன்.அந்த நாவல் நான் படிச்சதனாலெ சினிமா பாக்கலாம்னுதோணிச்சி.
அவர் லேசா சிரிச்சிட்டு, 'உன் மூஞ்சி! இங்கிலீஷ்சினிமான்னா விளையாட்டுன்னு நினெச்சிட்டியா என்ன?எங்களுக்கே எங்க தாத்தா வரணும்'னார்.
"போவட்டும், எனக்கு அர்த்தம் புரியாத இடத்தலெநீங்க சொல்லக் கூடாதா?'
'ரொம்ப நல்லா இருக்குது. உன்னைப்போல அம்மாமியெ அழெச்சிட்டுப் போய் சொல்லிக்கிட்டே உக்காந்திருந்தா எனக்கு வெக்கமா இல்லே.'
வெக்கத்தலெ என் தலெ குனிஞ்சி போச்சின்னா நம்பு!அதுக்கப்புறம் நான் எந்தச் சினிமாக்கும் போகல்லே.போனாலும் ரெண்டுபேரும் சேந்து போறது ரொம்பஅருமெ. அவர் எப்பவும் சிநெகிதங்களோடெ பாப்பார்.நான் யாராவது, பக்கத்து வீட்டுப் பாமா பாட்டியோடபோவேன். அப்படிப் போய் அந்தச் சினிமா பாக்கலேன்னா யார் அடிக்கறா? யாருக்கு வேணும்? நிறுத்திட்டேன்."
"உனக்கு இங்கிலீஷ் வருங்கற்து மாமாக்குத் தெரியாதா?"
"எனக்குத் தெரிஞ்சது ரொம்ப குறெச்சல்னே வெச்சுக்கோ-ஆனா அந்த அளவுகூட அவருக்குத் தெரியாது.அந்த விஷயம் தெரிஞ்சா தூக்கம் புடிக்காது. என்னெக்காவது பேசறப்பொ தெரியாம ரெண்டு இங்கிலீஷ்வார்த்தெ பேசிட்டா 'அப்பாடா? லண்டன்லெ பொறந்துஇந்தியாக்கு வந்தாப்பொல இருக்குது! எந்தக் கான்வென்ட்லேங்க நீங்க படிச்சது?'ன்னு பரிகாசம் பண்ணுவார். புதுசுலெ நான் கிரகிக்கலேன்னாலும் போகப்போகஅவர் குறெயெப் புரிஞ்சிக்கிட்டேன். அவர் கண்ணுமுன்னாலெ என்னெக்கும் இங்கிலீஷ் புஸ்தகம் படிக்கமாட்டேன். இங்க வந்த புதுசுலெ எத்தனெயோஇங்கிலீஷ் புஸ்தகம் படிக்கணும்னு. இங்கிலீஷ் சினிமாபாக்கணும்னு, அந்த பாஷெ அறிவெ வளத்துக்கணும்னு,எல்லாத்துக்கும் அவர் உற்சாகப் படுத்துவார்னு...எவ்வளவு பெரிய பைத்தியக்காரிங்கற்து இப்பொ தெரியுது.
சிநேகிதங்க யாராவது அப்பப்பொ வர்றங்கன்னு வெச்சுக்கொ----ஏதோ பேச்சு வருது. அதுக்கு நடுவுலெகலந்துகிட்டு என் எண்ணம் ஏதாவது சொல்றேன்னா,அவமானப் படவேண்டியதுதான்!
அதிகமா அவங்க பேசிக்கற்து என்னன்ன நெனெக்கறே? 'கடவுள் இருக்கறாரா? இல்லெயா? இல்லே.எப்படிச் சொல்ல முடியும்? கண்ணுக்குத் தெரியற்தில்லெ அதனாலே - காத்து தென்பட்றதில்லேன்னாலும்உடம்புலெ படுது. வாசனெ மூக்குக்குத் தெரியுது. எந்தவிதத்திலும் அனுபவிச்சித் தெரிஞ்சிக்க முடியாத அந்தக்கடவுளுக்கு லட்ச லட்சமாக் கொட்டி அழாமெ வேறவிதமா ஜனங்க சுகப்படக் கூடாதா?' இது தான் முறையீடு---நிஜம்தான், ஊருக்கு இன்னும் நாலு கிளப்புங்ககட்டிப் போடக் கூடாதா? சிகரெட்டெ மலிவா விநியோகம் பண்ணக் கூடாதா? உத்தியோகம் இல்லாம சம்பளம்குடுக்கக் கூடாதா? சினிமா நட்சத்திரங்களோட பேட்டிக்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா? இன்னும் கேளு--' பைத்தியக்கார அரசாங்கம்'பா இது. இந்த நேரு போய்யாராவது ஹிட்லர் போல ஒருத்தன் வந்தாத்தான்....'இந்த ஜல்சாப் பேர்வழிங்க கதி தெரியும் நல்லா!
கடவுளிடத்தலே இருந்து புராணங்க மேலெ திரும்பும். அந்தப் பாரதம் என்னய்யா! பேச்சு எடுத்தா சாபம்,வரம்--காதுலே இருந்து குழந்தெ பொறக்கற்து!எல்லாம் வெறும் மோசம்! திரௌபதி மட்டும் அதிர்ஷ்டக்காரிய்யா!'
'முதல்லெ குந்தி, திரௌபதி எப்படிப் பதிவிரதெங்கஆனாங்க தெரியுமா?'
' அந்தக் காலத்தலே எத்தனபேர் புருஷங்க இருக்காங்களோ பொம்பளங்க அவ்வளவுக்கு அவ்வளவு பதிவிரதெங்க தெரியுமா!'
' அஹ்ஹஹ்ஹஹ்ஹா!' பயங்கரமான கொக்கரிப்பு.சிவசிவா! நம்பளப் போலவங்க காது மூடிக்கற்துதவர வேற வழியில்லே. எவ்வளவு மட்டமான மனுஷங்கஇருக்கறாங்க! நம்ப கலாச்சாரத்தெ இவ்வளவு கேலிபண்ணிச் சிரிக்கற்தனாலே இவங்களுக்கு வர்றது என்ன?
பிறகு சினிமாவெப்பத்தி--
அவங்க சம்பாஷனெ எவ்வளவு மட்டரகமா நடக்குதோ கேக்கறவங்களுக்குதான் தெரியும். கவனிச்சிப் பாத்தா எல்லாரும் பட்டம வாங்கனவங்க, எம். ஏ. படிச்சவங்க கூட -- பட்டங்களுக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லேன்னு முடிவு கட்டணும் போல இருக்குது--
' நீங்கெல்லாம் படிச்சவங்கதானே! ஒவ்வொரு விஷயத்தெயும் ஏன் அவ்வளவு தப்பா எடுத்துக்கறீங்க!' ன்னு கேட்டா--
' உன் உதவாக்கரெ அபிப்ராயத்தெ இங்கெ யாரும்கேக்கலே, போ' ன்னு சொல்லிட்டார் மாமா ஒரு தடவெ.
நான் அவங்களுக்கெல்லாம் காபி குடுப்பேன். கொஞ்சம்தெரிஞ்சவங்க ஆனதாலே எப்பவாவது உரிமெயாப் பேசுவேன். அதனாலேதான் எதெயாவது நினெச்சி என்எண்ணங்களெச் சொன்னா எல்லார் முன்னாலே தூக்கிஎறிஞ்சிப் பேசிடுவார். ஒண்ணு ரெண்டுதரம் அப்படி ஆனப்புறம் நான் சாக்கரதெயா இருந்து வர்றேன்.
சொல்லப்போனா அந்தச் சிநேகிதங்க மேல அவருக்கேநல்ல அபிப்ராயம் கிடெயாது. அவங்ககிட்டெ நான்அதிகமாப் பேசக்கூடாது. அவங்க என் கிட்டெ பேச்சுக்குடுப்பாங்க. ஏதோ பதில் சொல்லி ரெண்டு வார்த்தெபேசாமப் போனா நல்லா இருக்குதா?"
" முதல்லே அவங்களெ ஏன் அழெச்சிட்டு வரணும்?"
" பெருமெக்காக-- ஒவ்வொரு தடவெ அவங்களுக்குஅவங்களே வந்து உக்காந்துடறாங்க. அவங்க யார்சிநேகிதங்க? இவங்கெல்லாம் ஒரு குட்டையிலெ ஊற்னமட்டைங்கதானே?"
" மாமா யார் வீட்டுக்கும் போகமாட்டாரா? அங்கெபொம்பளெங்களோட பேசமாட்டாரா?"
" நீ மத்த பொம்பிளெங்களோட சிரிச்சிக்கிட்டெ பேசலாம். வேண்டிய நேரம் பேசிக்கிட்டெ இருக்கலாம்.காரணம் நீ நெருப்புத் துண்டுபோல இருக்கறவன்.ஆனா உன் மனெவியெ ஆண் ஈ கூடத் தொடக்கூடாது.வேறொரு ஆம்பிளெ கண் எடுத்துக்கூடப் பாக்கக் கூடாது.என்னவோ--யார் எப்படிப் பட்டவனோ! இவ்வளவுக்கும் உன் மனெவி மேலெ, நீ உயிரெ வெச்சிருக்கும்அந்தச் சிநேகிதங்க மேலெ நம்பிக்கை ஏது? உன்மனெவிக்கு மனுஷத்தன்மெ இருக்குதுங்கற அறிவு ஏது?உன்னெ உன் சிநேகிதங்க தப்பா நினெச்சிக்கவாங்களேங்கிற நினெப்பு ஏது?"
" அப்பொ எந்தச் சிறப்பும் குடுக்காம இருந்தா படிச்ச மனெவி வேணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்காம்?"
" கௌரவத்துக்கு--பத்துப் பேர் நடுவுலே தனக்குஒரு கார், ஒரு அல்சேஷியன் நாய் இருக்குதுன்னு சொல்றாப் போல படிச்ச மனெவி இருக்கறான்னு சொல்லிக்கற்துக்கு. கல்யாணத்துக்கு முன்னாலெ படிச்ச பெண்ணுங்கமேலெ அது ஒரு மாதிரியான மவுசு. சொற்பொழிவுகள்ளெ பெண்ணுக்குச் சுதந்தரம் கொடுத்துடறது, செத்துசொர்க்கத்தலெ இருக்கறவங்களெ இகழ்ந்து பேசற்து,பெண் வர்க்கத்தின் மேலெ அபாரமான இரக்கத்தெக்கொட்றது--எல்லாம் அந்தச் சூட்டிலேயே முடிஞ்சுபோவுது. கல்யாணமாயி குடும்பம் வெக்கற்துக் குள்ளெஆத்தரம், கோவம், வீறாப்பு--இதுதான் முடிவு. புருஷன்மனெவி, ஆண் பெண் இதுதான் மிச்சம். -- இனிமேஅந்த வேறுபாடுங்க அப்படியே இருக்க வேண்டியதுதான்.
ஒரு பெண் தனக்கு மனெவி ஆனப்புறம் அந்த மனுஷியிடம் எந்த அளவு நியாயமா நடந்துக்கறோம்னு நினெச்சிப் பாக்கறவங்க எத்தனெ பேரு? அவளுக்கு அபிப்ராயங்க இருக்கும், விருப்பங்க இருக்கும், முடிவுங்க இருக்கும், எல்லாத்துக்கும் மேலெ மனுசுன்னு ஒண்ணு இருக்கும். அதையெல்லாம் ஒத்துக்கறவங்க எத்தனெபேரு?
மனெவி ஆனப்புறம் அந்தப் படிப்பு மேலெ மட்டமானபார்வெ! ஓவ்வொரு இடத்தலெ பொறாமைகூட-- பொம்பளெ சொந்தமா யோசனெ பண்ணினா, செஞ்ச தப்பெஎடுத்துச் சொன்னா, பேச்சுக்குச் சரியான பதில்சொன்னா, அதெல்லாம் படிப்பினாலே வந்து சேந்தகர்வங்க-- தர்க்கம் பண்றா, எதுத்துப் பேசறா, ஆம்பளெமதிப்பையெ மறந்துபோறா.
பொண்ணுங் கென்னமோ பாக்கற்துக்கு நவநாகரிகமாஅழகா சினிமா நட்சத்தறங்களெத் தோக்கடிக்கறா மாதிரி, சுவர்க்கத்தலெ மிதக்க வெக்கறா மாதிரி தயாராகணும்.ஆனா மனோபாவங்க, பழக்கவழக்கங்க, வேலெ செய்றமுறைங்க இதுலெல்லாம் பழங்காலப் பொண்ணுங்களோடபோட்டி போடணும். அந்தக் கால அம்மாமி மாதிரிகோடாலு முடிச்சி போட்டு மடிசாரெ வெச்சி பொடவெகட்டினா எந்த ஆம்பளெ இஷ்டப்படறான்? வேஷத்தலேயும் பாஷன்லேயும் நாகரிகத்தெ விரும்பற மனுஷன்பொம்பளெய மானசீகமாகக்கூட வளரவிட ஏன் மறுக்கறான்? அம்மாமி லட்சணங்க இல்லாத காலத்தலெ அம்மாமியின் மனோபாவங்களும் இருக்காது. அதெ ஏன்ஒத்துக்க மாட்டேங்கறான்?"
"பானூ! கொஞ்ச பேர் பண்ற குத்தத்தெ ஏன்மொத்தமா இனத்தின் மேலே சுமத்தறே?"
"நான் எப்பவும் அப்படி முறெ தவறி பேசமாட்டேன்.போவட்டும், அந்தக் கொஞ்சபேர் பேச்சு என்னஆவற்து?"
"அவ்வளவு குறுகலான போக்கு உள்ளவங்க இருப்பாங்கன்னு நான் நினெக்க மாட்டேன்."
"இருக்காங்க - உன் இனப்பற்றெ விட்டுட்டு பாரு----பொண்ணெத் தனக்குச் சமமாக் கருதற்தில்லே. பொம்பளெ எப்படியும் குறைஞ்சவ. ஆம்பளெ அதிகாரம்பண்ணணும். நான் புஸ்தகம் படிக்கக் கூடாது. இங்கிலீஷ் சினிமா பாக்கக் கூடாது. தெருவாசப்படியெலெநிக்கக்கூடாது. மத்த ஆம்பளெங்களோடெ பேசக்கூடாது. பேசினாலும் அந்தச் சமயத்தலெ சிரிக்கக்கூடாது. போதுமா? என்னெ ஒரு பொருள் மாதிரிசாக்கரதெயா வெச்சிக்கணுங்கற அக்கறெயே தவர வேறஇதெல்லாம் என்ன? எனக்கும் கொஞ்சம் நல்லது கெட்டது தெரிஞ்சிக்கக்க் கூடிய சக்தி இருக்குதுன்னு நம்பி என்கடமெங்களெ ஏன் என்கிட்டவெ விட்டுடக் கூடாது?"
நான் ஒன்றும் பேசவில்லை.
"ஒரு எழுத்தாளனோட புத்தகங்களெப் படிக்கறோம்.அவர் போக்கு நமக்கு பிடிக்கலேன்னா நிறுத்திட்றோம்.சில வகையான சினிமாங்க பாக்கறோம். பிடிக்காததெஇன்னொரு தடவெ பாக்க முயற்சிபண்ண மாட்டோம்.சில ஆம்பளெங்களோட பேசறோம். அவங்களெப் புரிஞ்சிக்கிட்டு நம்ம சாக்கரதெயிலெ நாம் இருந்துட்டுப்போறோம். நான் சொல்ற அந்தச் சில பேர் ரொம்பவளரணும். எப்பவோ.... சரி இருக்கட்டும்....
இந்த மாதிரி பேச்செக் கேட்டுட்டு உக்காந்திருந்தாஉனக்கு வீண்தான்! இல்லெயா?" என்றாள் திடீரென்றுசிரித்துக்கொண்டே.
"பானூ! நீ ரொம்ப 'சில்லி'யா பேசற்துக்குக் கத்துக்கிட்டே."
"உண்மெதான், அதுதான் இப்பொ ரொம்ப தேவெயாஇருக்குது" என்று சொல்லிக்கொண்டே எழுந்துபோனாள். காபி போட்டுக் கொண்டு வந்தாள். அவள்சமையல் செய்து கொண்டிருக்கும்பொழுது நான் புத்தகம் திறந்துகொண்டு உட்கார்ந்தேன். என் கண்களுக்குஎழுத்துக்கள் ஒன்றும் தென்படவில்லை. புத்தகத்திலிருந்த எழுத்துக்கள் அப்படியே மாறி பானு பேசியசொற்களாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன. விக்கிவிக்கி அழுதுகொண்டிருந்த பானுவின் முகமே ஒவ்வொருபக்கத்திலும் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி இதயத்தின் கனத்தைக்குறைத்துக் கொண்டதனால் போலும் பானு சற்றுக்கவலை குறைந்து திரிந்து வருகிறாள். ஆனால் ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணியும் அனுபவிக்கும் இந்தநரகம் எப்போது முடிவடைவது? கல்வி கேள்வி,அழகு நளினம், அறிவு ஆற்றல் எல்லாம் பெற்றிருக்கிற பானு கணவனுக்குப் பிடிக்காமல் இருப்பது ஏன்? இன்பவெள்ளத்தில் மிதக்கவேண்டிய குடும்பத்தை அவர்துன்பக் கடலில் மூழ்கடிப்பது ஏன்? பானுவின் குடும்பவாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைய வேண்டுமானால் நான்செய்ய வேண்டியது என்ன? எல்லாம் கேள்விகள் தாம்!பதில்கள் இல்லை. என் அன்புக்குரிய தங்கை, உயிருக்குயிரான பானு இவ்வளவு மட்டமான வாழ்க்கை நடத்துவதை நினைக்கும்போது தோன்றும் வேதனையை மறக்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை.
புத்தகத்தை மூடிவிட்டுச் சிந்தித்துக் கொண்டேநடக்கத் தொடங்கினேன்.
சட்டென்று நின்று, "பானு! ஊதுவத்தி வெக்கற செடிவாங்கினேன்னு சொன்னியே, எங்கே? எங்கேயும்காணமே?" என்று கேட்டேன்.
"அய்யோ! அது இத்தனெ நாளும் இருக்குதா?எப்பவோ என் மேலே கோவம் வந்தது. அது தூள்தூளாயிட்டுது. எந்த மாதிரி பொருளானாலும் தூக்கிப்போட்டு ஒடெக்க வேண்டியதுதான்----என் கையிலெஇருந்து கப்பு நழுவி விழுந்தாதான் ஒரு போராட்டம்நடக்கும். ஆனா தனக்குத் தானே வேணும்னேஒடெச்சிப் போட்டா அதெக் கேக்கற்துக்கு யாருமில்லே.அவர் சம்பாதிக்கிறவர். எதெ ஒடெச்சாலும் மறுபடியும்வாங்கிக்குவார். நான் பாழாக்கனா எப்படி கொண்டுவருவேன்?"
பானுவுக்கு இந்த மனக் குழப்பத்தினாலே ஓரளவுகுதர்க்கமா பேசுவதுகூடப் பழக்க மாகிவிட்டது போல்இருந்தது.
இரவு ஒன்பது மணி இருக்கும். மாமா வந்து சேர்ந்தார்.அந்த முகத்தில் என்று மில்லாக் கொடுமை, கடுமைபொங்கி வழிந்து காட்சி யளிப்பது போல் தோன்றியதுஎனக்கு.
"என்னங்க! அப்படிப் பாக்கறீங்க? சாப்பாடெல்லாம்ஆச்சா?" என்று குரல் கொடுத்ததும் நினைவு வந்து,"ஆம், ஆம்---நான் சாப்பிட்டேன். பானு உங்களுக்காகப் போல இருக்குது அப்படியே இருந்துட்டா"என்றேன்.
"ஓஹோ! பதிவிரதெ லட்சணம் போல இருக்குது!"என்று சொல்லிச் சிரித்துவிட்டுத் துண்டை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அவர் வாய் திறந்தாலே நல்லசொல் ஒன்றும் வராது போலும் என்று தோன்றியதுஎனக்கு. சில பேருடைய இயல்பே அப்படித்தான். தெருவாயிற்படியில் சென்று நின்று கொண்டேன்.
மாமா இயற்கைக்கு மாறான ஒரு மனிதர். ஆனால்எனக்கு எங்கேயோ ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கிறது.அவரிடம் ஒருநாள் மாறுதல் வரப்போகிறது. எல்லாவகைகளிலும் தன் தவறுகளைத் தெரிந்து கொள்வார்.அந்தக் கடுமை, கொடுமை எல்லாம் குறைந்து, இருக்கும்இடம் தெரியாமற் போய்விடும். மனிதர் மனிதராக எஞ்சிஇருப்பார். அது மட்டும் உண்மை. அதற்கு இடைவெளிதேவை, பொறுமையாக இருக்க வேண்டும். அது தான்வழி!
மறுநாள் நான் போவதற்கு முன்னால் பானு ஏதோசொல்ல நினைப்பதுபோல் தயங்கி நின்றாள்."அண்ணா...." என்று சொல்லி நிறுத்தி விட்டாள்.என்ன என்று கேட்பதுபோல் பார்த்தேன்.
"அண்ணா! இப்பொ உன் முன்னாலெ நிக்கணும்னாஎனக்கு வெக்கமா யிருக்குது. என் வீட்லேயே எனக்குமதிப்பு இல்லேன்னு தெரிஞ்சா யாராவது எனக்கு மதிப்புகுடுப்பாங்களா? கொடி அசெஞ்சா வேரும் அசெயறாமாதிரி நேத்து ஏனோ அதிசயமா என் கதெ முழுசும்சொல்லிட்டேன். எல்லாத்தெயும் மறந்துடு அண்ணா!
உன் பார்வையிலெ எங்க ரெண்டு பேரையும் மட்டமாஆக்கிடாதே..." பானுவின் கண்கள் ஏறத்தாழ முழுவதும் கண்ணீரால் நிறைந்துவிட்டன. குரல் தடுமாறியது. ஏதோ ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டேஇருந்தாள்.
பானுவின் தோள்மேல் கைவைத்தேன். "முடிஞ்சிதாஉன் சொற்பொழிவு...பைத்தியக்கார பானூ! அண்ணனெஇவ்வளவு நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்னு தெரியுது! நீஎவ்வளவு சொன்னாலும் நான் மாமாவெப்பத்தி தப்பாநினெச்சிக்கப் போறதில்லே. ஒருவகெயிலே யோசிச்சாமாமாவெ மன்னிக்கணும். எவ்வளவு திட்டு திட்டிட்டுஎவ்வளவு கோவமா போயிட்டாலும் வீட்டுக்கு வந்ததும்எல்லாத்தையும் மறந்துட்டு அவராவே வந்து பேச்சுக்குடுக்கறாரு இல்லியா?"
"ஆமாம். எனக்குக் கோவம் வந்ததுன்னா நானாகப்போய் எப்பவும் பேசமாட்டேன். எப்படியோ ஒருவிதமாமாமாவே பேச வெக்கறார்."
"மாமாவிடம் நல்லதனம்கூட இல்லாம போவலெபானு! அதெ நீ ஊகிச்சியா?"
"ஒரு பானெ விஷத்தலே எவ்வளவு அமிர்தம் கலந்தாலும் அது வீணாப்போற்து தவர லாபமில்லே அண்ணா!மாமாவிடம் ஏதோ நல்லதனம் இருந்தா இருக்கலாம்.அது என் அனுபவத்தலெ தெரியவரல்லெ. இன்னொருமனுஷன் கிட்டெ இருந்து நல்லதெ அடையலாம்னு, சுகம்பெறலாம்னுதானே முயற்சி பண்றோம்? அதுவே நடக்காம போவறப்பொ என்னத்தப் பாத்து என்னெ சந்தோஷப்படச் சொல்றே? இன்னக்கி ஏதோ காரணமாக ஒருமணி நேரம் சந்தோஷமா இருந்தேன்னா... அப்புறம்கொஞ்ச நாள் வரெக்கும் வேறேதோ காரணமாக அந்தச்சந்தோஷத்துக்குத் தண்டனெ அனுபவிக்கிறேன்."
"மாமா நல்லது கெட்டது தெரியாம இருக்காரு பானூ!நீ மட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சி மூளையைக் குழப்பிக்காதே. அவர் கோவத்திலெ சொல்றஒவ்வொரு சொல்லும் நிஜம்னு நினெச்சி வேதனெபடாதே. ஒரி நாளக்கி மாமா முழுசா மாறிப் போயிடுவார் பானூ!"
பானு பேசவில்லை. நான் மீண்டும் சொன்னேன்-"மாமா வளந்த வளர்ப்புத்தான் அவ்வளவு கடுமெயானவரா, தனிக்காட்டு ராஜாவா ஆக்கியிருக்குது. நீ வர்றவரெக்கும் அவருக்கு எந்த விதத்தலேயும் பெண் அன்புஎன்பது தெரியாது. தாயின் அரவணைப்பிலெ, அக்காதங்கெ பாசத்துக் கிடையிலெ வளந்தா பொம்பளெங்களின் கஷ்ட சுகங்க புரிஞ்சுருக்கும் ஆனா அவருக்குநல்லது கெட்டது சொல்றவங்களும் இல்லெ. செஞ்சதப்புக்குத் தண்டனெ குடுக்கறவங்களும் இல்லெ. தறுதலெயாத் திரிஞ்சி வளந்த மனுஷனுக்கு நல்ல பழக்கங்கஎப்படி வரும் சொல்லு? நாம ஒரு மனிதனெ அவசரப்பட்டு ஒதுக்கிடக் கூடாது. ஏதோ ஒரு விதமா அவரெமாத்தற்தக்கே நீ முயற்சி பண்ணனும். அதெத்தான்செய்யற்தில்லே நீ. ஒரு தப்பு பண்ணினார்னு குறெசொல்றது, ஒரு சொல் சொன்னார்னு வேதனெப்பட்றது,அத்தோட அடம் பிடிச்சி உக்காந்துட்றது - இதெல்லாம்என்ன சொல்லு? நீ என்னெத் தப்பா நினெச்சிக்காதே.நான் சொன்னது சரியில்லேங்கறியா? யோசிச்சி பார்பானூ!"
"அண்ணா! என் மேலெ உனக்கு எந்த அளவுநம்பிக்கெ இருந்தாலும் நான் சொல்றதெ நிஜம்னுநம்புவெ. மாமாவெ மாத்தற்துக்கு நான் முயற்சியேபண்ணலேன்னு சொல்றே. அதுமட்டும் உண்மையில்லே. நான் எத்தனையோ ஆசிகளோட குடுத்தனம்பண்ண வந்தேன். கொஞ்சநாளு----நான் ஒண்ணும் தெரிஞ்சிக்காம இருந்த நாளு சுகமா நடந்தது. ஆனா போவப் போவ மாமான்னா என்னங்கற்து புரிய ஆரம்பிச்சது. ஒரு நாளெக்கி அஞ்சி பாக்கட் சிகரெட் புடிச்சிட்டிருந்தா, நடுராத்ரிக் கப்புறம் வீட்டுக்கு வந்துட்டிருந்தா, லீவு நாளு முழுசா இருக்கற இடம் தெரியாம திரிஞ்சிட் டிருந்தா, எந்த அளவு சின்ன பிசகு நடந்துட்டாலும் அன்பே யில்லாம கூச்சல் போட்டுட்டிருந்தா, புதுசுலெ என்ன நடந்தாலும் ஆச்சரியப்பட்டுச் டிருந்தேன். அப்பொ எனக்கு உண்மையிலெ வேதனையாத் தோணலெ. நல்லதனமா சொன்னா அவரே கேப்பாரு. குடும்பப் பொறுப்பு அவருக்கும் இல்லியா?ன்னு நினெச்சிகிட்டேன். மொதமொதல்லெ அவர் எந்தத் தப்பு வேல செஞ்சபோதும் நான் அழுத்தமா ஒண்ணும் கேட்டுக்கல்லெ. எத்தனியொ விதத்தலெ எவ்வளவோ நிதானமா சொல்லிட்டு வந்தேன்.
'உங்களுக்கு சிகரெட் ரொம்ப இஷ்டம்போல இருக்குது.'
'வெறுமனெ இஷ்டம் இல்லே, உயிரு!'
'மாசத்துக்கு உங்க உயிருக்கு எவ்வளவு ஆவுதோ?'
'முப்பதுக்கு மேலெ......'
'அவ்வளவு பணம் - எரிஞ்சி சாம்பலாகறா மாதிரி இல்லே?'
'உனக்கு தெரியாது பானு! அது இல்லேன்னா என்னாலெ இருக்க முடியாது.'
'இப்பொ உங்க செலவு அதிகமாயிட்டுது தெரியுமா? இப்பொ நான் கூட இருக்கறேன்.'
'அப்டின்னா.........'
'பாருங்க! பொகெ அவ்வளவா குடிக்கற்து உடம்புக்குக் கூட நல்ல தில்லேன்னு சொல்றாங்க. நீங்க கொஞ்ச கொஞ்சமாக் குறெச்சிக்கிட்டே வந்தா நல்லா யிருக்கும் இல்லே?'
' ஆம், பாக்கலாம். ஆவட்டும்!' அவ்வளவுதான்! அந்தப் பாக்கலாம் பாக்காமலேவேதான் இருக்குது-- அப்புறம் இன்னொரு தடவெகேட்டப்போ என்னமோ சொன்னாரு. இன்னொரு தடவெஞாபகம் பண்ணப்போ கோவம் வந்தது. கொஞ்சநாளுபோவவிட்டு மறுபடி கேட்டப்போ எரிஞ்சி விழுந்தாரு.அது எனக்குத் தேவெ யில்லேன்னாரு. அந்தப் பேச்சேநான் எடுக்கக் கூடாதுன்னாரு. என்ன பண்றது? மத்தவிஷயகள்ளேயும் இதே மாதிரிதான் ஆயிட்டுது. என்சாந்தம், நம்பிக்கெ எல்லாம் வீணாப் போயிட்டுது.ஒண்ணும் பண்ண முடியாத நிலைக்கு வந்தேன்.அப்பத்திலே இருந்து அவர் தப்புங்களெ எடுத்துச்சொல்ல, பேச்சுக்குப் பேச்சு பதில் குடுக்க, கோவம்வந்தா பேசற்தெ நிறுத்திக்க ஆரம்பிச்சேன். என்குடும்பத்தெச் சரிப்படுத்திக்கலாம்னு, என் புருஷனோடஎல்லாரெப் போல சந்தோஷம் அனுபவிக்கலாம்னுநான் ஆசெப்பட்டேன். அது பேராசெயோ என்னவோபுரியல்லே. இருந்தாலும் என் முயற்சியிலெ குறெ இருக்குதுன்னு நீ சொல்றே. அப்படின்னா இனிமேலெ என்னாலெமுடியற வரைக்கும் முயற்சிபண்றேன். நம்பறியா?"
"பானூ! எப்படியோ ஒருவிதமா உன் குடும்பத்தெச்சரிபண்ணனுங்கற எண்ணம் தவர எனக்கு வேறநினெப்பு இருக்குதுங்கறயா?"
பானு சிரித்தாள். " அண்ணா! நான் இப்பொ கர்மங்க,முன் ஜெனமங்க, செஞ்சிகிட்ட பாவ புண்ணியங்கஎல்லாத்தெயும் நம்பிட்டு வர்றேன்."
" அதெல்லாம் உண்மெயா இருக்கலாம்-- ஆனா தெரியாத அந்த உண்மெங்களெ நம்பி அனுபவிக்கறவாழ்க்கையெ அலட்சியப் படுத்திக்கலாமா? உனக்குமறுபடியும் சொல்றேன். மாமா தப்பு பண்ணினாமன்னிச்சுடு. புருஷனின் நல்ல குணங்களெ அனுபவிக்க வேண்டியது மனெவின்னா, கெட்ட குணங்களெயும்அனுபவிக்க வேண்டியது மனெவிதான். என்னெத்தப்பா நினெக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்! நீ ஒருபெண். அந்த எண்ணம் ஆணிடத்தலெ எப்போதும்இருக்கும். பொம்பளெ வாழை இலை. ஆம்பளெ முளுங்கற பழமொழி உனக்குத் தெரிஞ்சதுதானே?"
"ஆமாம் அண்ணா! வீட்டெக் காப்பாத்திக்கற்துக்குபொம்பளெதான் தனியா முயற்சி பண்ணனும். புனிதமான பாரத நாட்லெ நான் பின்பற்ற வேண்டிய அறிவுரெஇதுதானே!"
நான் பர்ஸிலிருந்து பத்து ரூபா நோட்டு எடுத்துக்கொடுத்துக்கொண்டே "வெச்சிக்கோ பானு! உனக்குஏதாவது தேவெ ஏற்படலாம்." என்றேன்.
"நல்ல ஆளுதான் நீ! எனக் கென்ன செலவு இருக்குது?" என்றாள் சிரித்துக்கொண்டு.
"உனக்கு என்ன செலவு இருக்குதோ எனக்குத்தெரியு மாவட்டும், மொதல்லெ வாங்கிக்கோ! இல்லேன்னாஎனக்குக் கோவம் வரும்."
"நல்லா இருக்குது. உனக்குக் கோவம் வந்தாவரட்டும்!"
"அப்படின்னா இனிமே நான் உங்க வீட்டுக்கு வரவேண்டிய தேவே யில்லேன்னு அர்த்தம்!"
"அதுக்கும் இதுக்கும் முடி போடாதே அண்ணா!"என்று சொல்லி---"சரி, வாங்கிக்கறேன்" என்று கூறிக்கொண்டே என் கையிலிருந்த நோட்டை வாங்கிக்கொண்டாள். "உன்கிட்டே யிருந்து பணம் வாங்கிக்கிட்டதுக் கில்லே. இந்த நிலெமெ வந்ததுக்காக வெக்கப்பட்றேன்" என்றாள் அந்தத் தன்மானத்தின் உருவம்.
"அதுக் கென்ன இப்பொ, வேறொண்ணும் நினெச்சிக்காதெ பானூ! உனக்குப் புடவெங்க இருக்குதா?"
அப்படிக் கேட்பதற்கு எனக்கே வெட்கமாக இருந்தது. பானு வியப்போடு பார்த்தாள். "ஏன்.....?"
"சொல்லு பானூ!"
"இருக்குது"
"உண்மெயெச் சொல்லு"
"உண்மெதான் அண்ணா! அம்மா வாங்கித் தர்றாங்கஇல்லே!"
"இருந்தா சரிதான்! ஆனா என்னெ நம்பு பானூ!எனக்கு உயிர்னு ஒண்ணு இருந்தா அது நீதான்! நீவேதனெப்பட்டா எனக்கு அமைதி கிடையாது. உனக்குஎன்ன வேணும்னாலும் என்கிட்டெ சொல்லு. அண்ணன்கிட்டெ உனக்கு வெக்கம் எதுக்கு!"
"இனிமே எனக்கு என்ன வேணும்னாலும் உன்னெயேகேக்கறேன்."
"அப்படி இருக்கணும். பானு ரொம்ப நல்லவ! சரிநான் போவட்டுமா?"
"ஒரு சந்தேகம் ராவு சார்! நான் தான் உங்க உயிர்னுசொல்றீங்க இல்லே! அது எது வரெக்குங்க?" பானுசிரித்தாள். பானுவின் உட்கருத்து எனக்குப் புரிந்தது.நானும் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
"சுசீலா வர்ற வரெக்குங்க!"
"அதுக்கப்புறம்....?"
"என்னமோங்க!"
சட்டென்று பானுவின் முகம் வெளுத்துவிட்டது. என்முகத்தைக் கூர்ந்து பார்க்கலானாள். "நிஜமா அப்படிமாறிப் போயிடுவியா?"
"பானு! அதெ உன் மனச்சாட்சிகிட்டெ கேள், பதில்வரும்."
பானு சிரித்தாள். பானுவின் கையைப் பிடித்துவிட்டு, மருமகனைத் தூக்கி இறக்கிவிட்டுத் தெருவுக்குநடந்தேன்.
* * *
பானுவைப் பற்றிய சிந்தனைகளே என்னைப் பற்றிக்கொண்டு எப்போதும் வேதனைப் படுத்திக்கொண்டிருந்தன. பானுவுக்கு மட்டும் ஏதோ ஆறுதல்சொன்னேனே தவிர, உண்மையில் நான் எதிர்பார்த்தது நடக்குமா? என்றைக்காவது கணவரின் அன்பைப்பெற்று பானு இன்பங் காண்பாளா? எப்படி நம்புவது?பானு இன்பம் அடைய வேண்டும் என்றால் நான் என்னசெய்ய வேண்டும்? படிப்படியாக மாமாவின் நட்பைப்பெற்று உயிருக் குயிராகும் நிலை பெற்று அவருடைய குறைநிறைகளை எடுத்துச் சொன்னால்...? அப்பொழுது அவர்என்னை அடித்து விரட்டமாட்டார் அல்லவா? என்சிந்தனைகளுக்கு ஒரு முடிவில்லை. பானுவை எப்பொழுதுபார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் பார்த்து வருகிறேன். ஒரு முறை பானு கேட்டாள் - "உனக்கு லைப்ரரிபுஸ்தகங்க கொண்டுவந்து குடுக்க முடியுமா அண்ணா?"என்று - நான் பானுவின் கண்களில் உற்றுப் பார்த்தேன்.அந்தக் கண்கள் எனக்கு எவ்வளவோ வரலாறுகளைக்கூறின. பானுவுக்குப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம்ஏராளம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ளமுயற்சி கூடச் செய்யாமலிருப்பது அறியாமை! பானுவின்ஆவல்களைப் பார்த்து ஒரு நாள் அவள் பெரிய எழுத்தாளிஆவாளோ என்று நினைத்து வந்தவன் நான்.
"இங்கே வந்ததலே யிருந்து எவ்வளவோ புஸ்தகங்கபடிக்கணும்னு நினெச்சேன். நம்ம ஊர் லைப்ரரிலே ரொம்ப புஸ்தகங்க இல்லெ. ஆனா யாரு கொண்டுவந்துதருவாங்க?"
"போவட்டும் விடு! இனிமே நான் கொண்டுவர்றேன்.சரிதானே? உனக்குப் பொறுமெ எவ்வளவுதான் இருக்குது----பாக்கறேன். எத்தனெ படிக்கிறியோ!"
பானு என்னிடம் ஓர் உதவி கேட்டால் எனக்குஎவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றுப் பேச்சுக்கல்லாமல் அண்ணனாகச் செயல் முறையில் நான் பானுவுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு அடுத்த நாளேமத்திய நூல் நிலையத்தில் இரண்டு பேருக்கு உறுப்பினர்கட்டணம் கட்டினேன். ஒரே முறையில் நன்னான்குபுஸ்தகங்கள் எடுக்கலாம். முதன் முதலில் சலத்தின்'ஸ்தீரீ' ஒன்றே எடுத்துக் கொண்டுபோனேன். அதைப்பார்த்த பானு கூறினாள் - " இது என்கிட்டெ இருக்குதுடா!இதனாலே எங்க ரெண்டு பேருக்கும் தகராறே நடந்தது"என்று.
"புஸ்தகத்தெப் பத்தித் தகராறு என்ன?"
"வேறென்னன்னு நினெச்சே? இந்த வீட்லெ தகராறுஉண்டாக்கற சக்தி தொடப்பக் குச்சிக்குக் கூட இருக்குது.அதெமட்டும் நானி எந்த ரூமிலேயாவது கொண்டுவந்துபோட்டுட்டான்னா அன்னக்கி ஒரு சின்ன யுத்தம்! சரிதான் புஸ்தகம்னு கேக்கறியா? 'ஸ்திரீ'யை நான்படிக்கற்தெப் பாத்து மாமா எரிஞ்சி விழுந்தார். 'சலத்தின்புஸ்தகங்களெ நீ படிக்கக் கூடாது'ன்னார்.
'ஏன்'னு கேட்டேன்.
'அது வெறும் குப்பெ' அதுலெ ஒண்ணுமே யில்லே.'
'அந்த விஷயம் படிச்சதனால்தானே உங்களுக்குத்தெரிஞ்சிது?'
தேவெயில்லே. நான் சொல்றேன். அந்தப் புஸ்தகங்கெல்லாம் குப்பே!"
'இருக்கலாம்! இந்த விஷயத்தெ நானெ தெரிஞ்சிக்கும்படியா விட்டா நல்லது.'
'வாயெ மூடு! நான் சொல்லிக்கிட்டிருந்தா எதுத்தாப்பேசறே. நீ மனுஷியா? மாடா?'
'மனுஷங்களுக்கு மனுஷி! மாடுங்களுக்கு மாடு!'
இந்தக் கன்னங்க புளிச்சுப்போறதுக்குக் காரணம்அந்த மாதிரி சந்தர்ப்பங்களும், அந்த மாதிரி பேச்சும்தான்! கோவத்தலெ பல்லெ நறநறன்னு கடிச்சிக்கிட்டுஎன் கையிலே இருந்து புஸ்தகத்தெப் புடுங்கி துண்டுதுண்டாக் கிழிச்சிப் போட்டுட்டார். என் இதயம் படபடத்தது. நான் நம்ம ஊரு போனப்பொ பிடிவாதமாசலம் புஸ்தகங் கெல்லாம் கிடெச்ச வரெக்கும் வாங்கிஒளிச்சி வெச்சேன். தப்புங்கறயா? அதிகாரத்தாலெயாராவது யாரையாவது மாத்த முடிஞ்சுதுன்னு கேள்விப்பட்டிருக்கிறியா?"
எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர் ஆணாகவேஇருக்கலாம்; கணவனாகவே இருக்கலாம் - அதற்காகஒரு புத்தகம் படிக்கிற விஷயத்திலேயும் தன் அதிகாரத்தைச் செலுத்தினால், ஒரு மனிதனுக்குத் தான் விரும்பும்புத்தகத்தைப் படிக்கும் உரிமைகூட இல்லை யென்றால்...
"சீ! என்ன அவ்வளவு முரட்டுத்தனம்?"
"முரட்டுத்தனம் ஒண்ணுமில்லே. முன் எச்சரிக்கெ!சலம் புஸ்தகம் படிச்சா பெண்ணுக்கு உண்மெ தெரிஞ்சிபோயிடும். எதிர்க்கிற தன்மெ பழக்க மாயிடும். அதுநடந்தாலும், நடக்கலேன்னாலும் ஆம்பளெக்கு அந்தபயம் இருக்கும்."
நான் சற்று நேரம் பேசாமலிருந்து விட்டுக் கேட்டேன்--- "சலம் பத்தி உன் கருத்தென்ன?"
"சலத்தின் வாதம் நியாயமானது, அவ்வளவுதான்----அதன்படி நடக்கற்து முடியாது."
"நியாயத்தின் படி ஏன் நடக்கக் கூடாது?"
"இந்தக் காலத்தலெ நியாயத்தெ ஒட்டி வாழ்க்கெநடக்கற்தில்லே. அதனாலேதான். அந்த நியாயத்தெப்பத்துப்பேர் ஒத்துக்க மாட்டாங்க, அதனாலே தான்... ஒருபுஸ்தகம் படிக்கற்துக்குக்கூடச் சுதந்தரம் இல்லேன்னாஎப்படி?----சொல்றியே தவர அதுலெ தன்னலமோ,இல்லெ வேற ஏதோ ஒரு எண்ணமோ இருக்குது. எங்கஅம்மாக்கு நான் கடிதம் எழுதற்துக்குக்கூட அந்தமனுஷன் உத்தரவு வேணும்னா நம்பறியா? ஒரு தடவெஇவரு நம்ம ஊரு பண்டிகெக்கி வந்தா அவங்க பண்ணமரியாதெ பத்தலியாம். இன்னொரு தடவ உடம்பு சரியில்லாம கிடந்து எழுந்தா அவங்க பாக்க வரல்லியாம்.அவங்களுக்குக் கடிதம் எழுதக் கூடாதுன்னு உத்தரவுபோட்டாரு. நிஜம் தான். ஏதோ காரணத்தாலெஅவருக்குக் கஷ்டமா யிருக்கலாம். நடுவுலெ என்னெஉபயோகிச்சிக்கற்து எதுக்குன்னுதான் நான் கேக்கறேன்."
"உன் கேள்விகளுக்கும், உங்களவர்க்கும் ஒவ்வொருகும்புடு, போவட்டும். நீ கொஞ்சம் அமைதியா இரு!மரியாதெ செய்யாம போவற்துக்கு அவங் கென்னபைத்தியக்காரங்களா? நூத்துக் கணக்கான மைல்பிரயாணம் பண்ணி கண்டதுக் கெல்லாம் வர்றதுன்னாமுடியற காரியமா?"
"நாங்க ரெண்டுபேரும் பண்டிகெக்கிக் போனப்பொஸ்டேஷனுக்கு யாரும் வரல்லியாம்! வந்தது வம்பு.வீட்டுக்குப் போனதும் கோவிச்சிக்கிட்டுப் படுத்துட்டாரு.பத்துப் பேருலே என் மானத்தெ வாங்காதீங்கன்னு கால்கையிலெ விழுந்து வேண்டிக்கிட்டேன். கேக்கல்லெ.என்ன செய்யற்துன்னு தெரியாம அம்மாகிட்டெ சொன்னேன். அம்மா தப்பெ ஒத்துக்கிட்டு வேண்டிக்கிட்டப்புறம் எழுந்திருச்சி டிபன் சாப்ட்டாரு."
"எதுக் கெடுத்தாலும் இப்படி தப்பா நினெச்சிக்கிட்டா...."
புழக்கடைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் பானுஎழுந்து போனாள். ஐந்து நிமிஷங்களில் திரும்பிவந்து"உன்கிட்டே ரெண்டு ரூபா இருக்கு மாண்ணா?" என்றுகேட்டாள்.
"அஞ்சி ரூபா நோட்டா இருக்குதுன்னு நினெக்கறேன். சில்லறெ இல்லே. எதுக்கு?"
"சொல்றென் ஆவட்டும். அதெத்தான் ஒண்ணு குடு!"
பர்ஸ் எடுத்து ஒரு நோட்டு கொடுத்த உடன் புழக்கடைப் பக்கம் எடுத்துச் சென்றாள். யாரோ பக்கத்துவீட்டு அம்மா வந்தாற் போலிருந்தது. பேசுவது ஓரளவுகேட்டது. "அஞ்சி ரூபா எதுக்குமா! வாங்கிக்கோன்னுசொன்னாரா? ஒண்ணரெ ரூபா...."
"பரவால்லே வாங்கிக்கோங்க பாமா பாட்டி! நீங்கதிருப்பிக் குடுக்கவும் வேண்டாம். ஒண்ணும் வேணாம். ஒருபத்து நாள்ளே வந்துடுங்க. எப்பவும் இருக்கற வம்புதானே?"
"அம்மா! உனக்குத் தெரியாதது ஒண்ணு மில்லே.வாழ்க்கெ எவ்வளவு சிரிப்பா சிரிச்சிப் போச்சோ பாத்தியா? என்னெப் பத்தி என்ன இருக்குது. நீ சாக்கரதெயா இரு! எடுத்ததுக் கெல்லாம் மனசுலெ குறெ வெச்சிக்காதே! குழந்தையெ பத்திரமா பாத்துக்கொ. சொன்னாப்பல ராஜாவெக் கொஞ்சம் அப்பப்பொ பாத்துக்கோம்மா! உங்க அண்ணனுக்குப் பணம் குடுக்காமபோனா..." அந்த அம்மாவினுடைய குரல் கவலையோடு ஒலித்தது.
"ஒண்ணும் பரவால்லீங்க! அவன் பணம், என் பணம்வேற வேற இல்லே."
"அப்போ நான் போறேன்"
"நல்லது பாமா பாட்டி! நீங்க திரும்பி வர்றவரெக்கும்எனக்கென்னமோ விரிச்சோன்னு இருக்கும்."
பானு உள்ளே வந்தாள் பெரு மூச்சு விட்டுக்கொண்டு.பக்கத்தில் உட்கார்ந்தாள்.
"என்னமோ அண்ணா! இந்த மனுஷங்களெ, இந்தவாழ்க்கையெ நினெச்சிக்கிட்டா கேள்விங்கதான் மிஞ்சிநிக்கிது. பாவம் பாமா பாட்டி பொண்ணு வீட்டுக்குப் போயிட்டிருக்கறாங்க. அதெல்லாம் மருமக கைவரிசெ.சுருக்கமா சொல்லணும்னா அந்த அம்மா அந்த வீட்டுக்கு மகாராணி! புருஷனெயும் மாமியாரெயும்கோவம் வந்தா வெய்யில்லே கூட நிக்கவெக்கறசக்தி உள்ளவ. மாமியார் மேலே எந்த நேரம் கருணெதிரும்பினாலும் அந்த நிமிஷமே வீட்டெ விட்டுத் துரத்தக்கூடிய கொடுமெ நிறெஞ்சவ! இன்னும் சொல்றதுக்குஎன்ன இருக்குது? அந்த இருக்கற ஒரே பொண்ணெவருஷத்துக்கொரு தடவெகூட வீட்டுக்குக் கூப்பட விடமாட்டா. இன்னும் ஸ்கூல்லெ படிக்கிற மச்சினன் ஒருத்தன் இருக்கறான். அவன்தான் ராஜா. அவன் அந்த வீட்லெ வேலெக்காரன்! அந்த அம்மா அபூர்வமா பாத்துக்கற, பெத்த குழந்தெங்க ரெண்டு பேர் இருக்கறாங்க.அவங்களெ கவனிச்சிக்கற் தெல்லாம் பாமா பாட்டி தான்.சமயல் செய்றாங்க. வேலெக்காரி மாதிரி வீட்டு வேலெஎல்லாம் பண்றாங்க. ராஜா கிணத்திலே இருந்து தண்ணியெல்லாம் இறெச்சி ஊத்தறான். கடெகண்ணிக்குப்போயிட்டு வர்றான். குழந்தெங்களெத் தூங்க வெக்கற்துக்காகத் தூக்கிட்டுத் திரிவான்"
"அப்பொ அந்த மகாராணி என்ன பண்றா!"
"கேளுடா! மகாராணி புருஷனோட சீட்டாடுவா.சினிமா பாப்பா. ஊர் சுத்துவா. பிக்னிக் போயிட்டுவருவா----தெரிஞ்சவங்க, சிநேகிதங்களெப் பாத்துட்டுவருவா. பெண்கள் சங்கத்துக்கு, லேடீஸ் கிளப்புங்களுக்குப் போயிட்டு வருவா. இந்த டியூட்டி யெல்லாம்பத்தாதா? எவ்வளவு பிஸியா இருப்பாத் தெரியுமா!இதுக்கு மேலெ நேரம் இருந்தா மாமியாரோட சண்டெபிடிப்பா. மச்சினனெத் திட்டித் தீப்பா. புருஷனெமிரட்டுவா. அதோட ரொம்ப களெச்சிப் போயிடுவா.அந்த அம்மா இருக்கப்பட்டவங்க வீட்டுப் பொண்ணு.நிறெய சொத்து கொண்டு வந்தாளாம். நேருப்பு பெட்டிகூட வெள்ளியாலே செஞ்சதாம். அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்ட மெல்லாம். நல்லது கெட்டது நினெச்சிபார்க்காதவ. ஒருதடவெ அந்த அம்மா ஏதோ கறிபண்ணச் சொல்லி உத்தரவு போட்டாக்கா, பாமா பாட்டிகாய் கொஞ்சம் முத்திப் போச்சின்னு குழம்பு வெச்சிட்டாங்களாம். எல்லாம் முடிஞ்சி மகாராணி சாப்பாட்டுக்குவந்ததும் ராமாயண மெல்லாம் நடந்தது. மாமியாரெக்கண்டபடித் திட்டினா. அந்தக் குழம்பெத் தொடக்கூடக்க்கூடாதுன்னு புருஷனுக்கு ஆர்டர் போட்டா. அவருதலெ குனிஞ்சிக்கிட்டு வேறெ கறியோட சாதம் பிசெஞ்சிசாப்டுட்டிருந்தாராம். பாமா பாட்டிக்கு விசனமா இருந்தது. 'தம்பி! நான் பண்ணது தப்பாடா? அதுக்குப்போய் அவ என்னெ இவ்வளவு பேச்சு பேசிட்டாளே -நீ கேட்டுட்டே இருக்கிறீயே...' 'போவட்டும்மா! அவபேசற்திருக்கட்டும் - அவ சொன்னா மாதிரி செஞ்சுட்டாபோவாது?'ன்னு சொன்னாராம். பாத்தியா? எவ்வளவுவேடிக்கெயான விஷயமோ!
சின்னவங்க இஷ்டப்படிப் பெரியவங்க நடக்கற காலம் வந்தாச்சி. தாய்க்கு அந்த வீட்லெ மதிப்பு இல்லவே இல்லேங்கற்து உண்மெ. குறெஞ்சது அவங்க வயசுக்காவது நாம மதிப்பு குடுக்கணுமில்லியா? 'நானே என் மனெவி சொல்றதெக் கேட்டுக்கறேன். அப்படீன்னா உன் கதி என்ன?' என்பதே அவர் எண்ணம் போல இருக்குது! 'போவட்டும்பா! இனிமே உங்க இஷ்டப்படியே செய்றேன். இந்தத் தடவே மாத்தரம் கோவத்தெ மனசுல வெச்சிக்க வேண்டாம். ஒரு கரண்டி கொழம்பு ஊத்திக்கொ---- நீ சாப்பிடலென்னா எனக்குத் திருப்தியா இருக்காது'ன்னு சொல்லி மகனெ வேண்டிக்கிட்டாளாம் பாமா பாட்டி. தாய் என்ற ஸ்தானெத்தெ நிலெநாட்றதுக்கு அந்த அம்மாவின் இதயம் துடி துடிச்சிருக்கணும். அவரு ஒண்ணும் சொல்ல முடியாம 'சரி ஊத்து'ன்னு சொன்னாராம். அவர் சாப்ட்டு எழுந்திருக்கிற்துக்குள்ளேயே மருமக சூட்கேஸ் தயார் பண்ணிட்டா. மாமியார் மேலெ போர் தொடுத்துட்டா. 'என் புருஷனெயும் என்னெயும் பிரிக்கற்துக்குத்தான் நீ முயற்சி பண்றே. நான் வேணாங்கற வேலெயே, அவரெ ஏமாத்தற்துக்கு என்னென்னவோ சொல்லி ஏன் செய்யும்படியா பண்றே?'ன்னு திட்டிக் கொட்டினா. அப்புறம் புருஷன்கிட்டெ 'என் பேச்சுக்குத் துளிக்கூட மதிப்பில்லாத இந்த வீட்லே நான் இருக்க வேண்டிய அவசிய மில்லே. உங்க அம்மாவோட நீங்க குடுத்தனம் பெண்ணுங்க, நான் போறேன் இனிமெ வரவே மாட்டேன்!'ன்னு முடிவு சொல்லிட்டுப் புறப்பட்டுட்டா. 'சரோ! சரோ!'ன்னு பின்னாடியே போனா ரயிலேத்திட்டு வர்றது தவர வேற பயனில்லாமெ போயிட்டுது. அந்தச் சரோ என்ன படிச்சிருக்கா தெரியுமா?"
"என் மூஞ்சி! ஒண்ணும் படிச்சிருக்க மாட்டா. படிச்சிருந்தா அப்படி என்னெக்கும் நடந்துக்க மாட்டா"
"அதுதான் நீ பண்ற தப்பு! அவங்க சரோஜா தேவி பி.ஏ. கிளாஸ் வாங்கனவங்க."
"நிஜமாவா!" எனக்கு வியப்பாக இருந்தது.
"சத்தியமா. வேடிக்கெயா இருக்குதில்லே?"
"அப்பொ அவங்க புருஷன்...? என்ன வேலெ?"
"காலேஜ் லெக்சரர்! அவர் வெத்துக் கடவுள்---அப்படின்னா அவ்வளவு நல்லவர்னு இல்லே. கடவுளெப் போல வாயோத்திறந்து பேசமுடியாதவர்! யார் மேலெ கருணெ வருதோ அவங்களையெ பல்லக்குலெ ஏத்தக் கூடியவர்! அந்த சரோஜா விஷயத்தே நினெச்சாத் தான் எனக்கு வேதனெயா இருக்கும். அவளுக்கு ஒரு பெண் ஆசெப்பட்ற அத்தென சுகங்களும் இருக்குது. சுதந்தரம் இருக்குது. இஷ்டப்படி நடந்துக்க முடியும். அவ பேச்சுக்கு மதிப்பு இருக்குது. புருஷனோட அன்பும் ஆதரவும் இருக்குது. ஒரு மனுஷியா வாழக் கூடிய அதிர்ஷ்டம் இருக்குது. அதுக்கு மேலெ என்ன வேணும்? ஆனா எல்லாத்தெயும் தவறாப் பயன்படுத்திக்கறா. புருஷன் தன் பேச்சைக் கேகேகறார்னு அம்மாவெயும் மகனெயும் பிரிச்சி வெக்கணுமா? தனக்கு அதிகாரம் இருக்குதுன்னு மாமியார் மேலேயா காட்டணும்? தங்களுக்குக் கிடெச்சிருக்கற நல்ல வாய்ப்புங்களெ சரியா அனுபவிக்காமெ தவறா பயன்படுத்தறாங்கன்னுதானே இந்தப் படிச்ச பெண்ணுங்களெப் பத்தி மட்டமா நினெக்கது இந்த உலகம்? தங்க வீட்டெச் சந்தெக் கடை ஆக்கிட்டு மகளிர் சங்கத்தலெ மெமபராகி என்னமோ உரிமைங்க வேணும்னு முழங்கனா நாலு பேரு சிரிக்க மாட்டாங்க? எந்த ஒரு முன்னேற்றமும் பாக்க முடியாதவங்க குருடங்களாவே விழுந்து கிடக்கறாங்க. வாய்ப்பு இருக்கறவங்க அதெ அழிச்சிக்கறாங்க. இதுலே குறை எங்கே இருக்குதுன்னு சொல்றே?"
" நான் நினெக்கற்து-- இந்த விஷயத்தெ எடுத்துக் கிட்டா, பாமா பாட்டி மகனிடத்திலேதான்........"
" அதுதான் நான் நினெக்கற்து கூட! இந்த ஆம்பளங்கள்ளே இருக்கற்து ரெண்டே ரகங்க! அம்மா அப்பாக்களிடம், அக்கா தங்கெங்களிடம் அளவுக்கு மீறி அன்பு வெச்சி தனக்கு ஒரு மனெவி இருக்காளே, அவளோட கஷ்ட சுகங்க தன்னெப் பொறுத்தே இருக்குதுங்கற நினெப்புகூட இல்லாம இருக்கறவங்க--மூணு முடிச்சு போட்டதிலே இருந்து பெண்டாட்டியின் முந்தானைக்கு அடிமையாய், சாவி கொடுக்கற பொம்மையாட்டம் உலகத்தெ ஒரேயடியா மறந்து போறவங்க--- இவங்களுக்கு இருக்கறது ஒரே கண்ணுதான்! அதெ வெச்சி அவங்க ஒரு பாகத்தெதான் பாக்க முடியும். உலகம் அந்த மாதிரியே நடந்திட்டிருக்குது.”
"சரோஜா தேவியோட உனக்கு சிநேக மில்லியா என்ன?”
“அவளுக்கு என்னெப் புடிக்காது----ஆனாலும் பாமா பாட்டியோட நான் பேசறேன்னு அவளுக்கு என்மேலே கோபம். பாவம் பாமா பாட்டி ரொம்ப நல்லவங்க அண்ணா! தன் தொல்லெங்க என்னவோ சொல்லி எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டிருப்பாங்க ‘இருந்தாலும் பொம்பளேன்னா ஆம்பளெக்கு ஏன் அவ்வளவு மட்டமாத் தெரியுது பாட்டி’ன்னு நான் கேட்டா, ’அய்யோ பைத்தியக்காரப் பொண்ணே! இன்னும் இந்தக்காலத்திலே என்ன இருக்குது? எங்கேயோ உன் புருஷனெப் போல ஒர்த்தர் ரெண்டுபேர் தவிர எல்லாரும் பொண்சாதியெத் தலெ மேலே வெச்சிக்கிறாங்க. எங்கக் காலத்திலெ பாக்கணும். ஒரு தடவெ நான் ஆசெப்பட்டு சினிமா பாக்கறத்துக்கு போனேம்மா! அப்போது தான் சினிமா புதுசா வந்த நாளு. சினிமாவுக்குப் போறதுன்னா அந்தக் காலத்தலே பெரிய தப்பா இருந்தது. உங்க தாத்தாவுக்குக் கொஞ்சம் கூடப் புடிக்காது. ஒரு நாளு அவர் வெளியூருக்குப் போயிருக்காரேன்னு நாலு பேரோட சேந்து நானும் பொறப்பட்டேன். முழுசா பத்துப் படம் பாக்கலே.அவர் ஊரிலேயிருந்து வந்து எனக்காக சினிமா கொட்டாய் கிட்டே வந்துட்டாரு. நீ நிஜமா நம்பமாட்டேன்னாலும், இந்தத் தலை மயிரெப் புடிச்சி பத்துப் பேர்லே இழுத்துட்டு வந்து ‘தேவடியா ஆட்டம் பாக்கியா முண்டே’ன்னு சொல்லி, தெரு நெடுக்க உதெச்சிக்கிட்டே கூட்டிட்டு வந்தாரு. வீட்லெ வெச்சி மயக்கம் போட்டு விழறவரெக்கும் அடிச்சாரு. அந்த பயத்தலெ நான் ரொம்ப சீக்கா யிட்டேன்'னு பாமா பாட்டி சாதாரணமாச் செல்லிட்டிருந்தா. என் உடம்பு நடுங்கத் தொடங்கிட்டது.
' ஏன் பாட்டி! அவ்வளவு அவமானத்தெ நீங்க எப்படித் தாங்கிக் கிட்டீங்க?'
' அவமானத்துக்கு என்ன இருக்குது? புருஷன் பெண் சாதியெ இல்லென்னா யாரெ அடிப்பான் ?'
' யாரெயாவது ஒருத்தரெ அடிச்சிதான் ஆகனுமா பாட்டி?'
' இல்லேன்னு வெச்சிக்கொ--ஏதோ நான் தப்பு பண்ணேன். அவருக்குப் புடிக்காதுன்னு தெரிஞ்சி கூடப் போனேன். கோவத்தலே நாலு போட்டாரு. போவட்டுமே! இன்னா போயிட்டுது?'ன்னு சொல்லிட்டா பாமா பாட்டி--பாத்தியா? அந்தக் காலத்துப் பொண்ணெயும், அந்த மனோபாவத்தெயும்!
' பாட்டி! நீங்க செஞ்சது தப்பில்லிங்க!'ன்னு சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க. புருஷனுக்கு இஷ்ட மில்லாத வேலெயெச் செஞ்சேன்னும், அது தப்புதான்னும் வாதிக்கறாங்க. பாமா பாட்டிக்கும் எனக்கும் சில நூறு மடங்கு வித்தியாசம் இருக்குது. உங்க மாமாக்குச் சலம் புத்தகங்க இஷ்ட மில்லே. என்னெக் கூடப் படிக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்றாரு. நான் கேக்கமாட்டேன். எதிர்லே படிக்கற தைரியம் இல்லேன்னா ரகசியமாப் படிக்கறேன். இப்பொ வந்த சிக்கல் என்னன்னா பொம்பளெ யோசிக்க கத்துகிட்டா. சில சொந்த அபிப்ராயங்களெ உண்டாக்கிட்டு வர்றா.தங்க தடெ இல்லாமெ ஆட்சி பண்ற தாத்தாவெப் போல ஆம்பளெங்க இன்னும் இருக்காங்களே தவர அந்த ஆட்சியெ ஏத்துக்கற பாமா பாட்டியெப் பொல பொம்பளெங்க இல்லே. அதனாலெதான் இந்தக் கால குடும்பங்க பழைய ரீதியிலெ நடக்கற்தில்லெ, புதிய மனோபாவங்களோடெயும் நடக்கற்தில்லே."
"எண்ணங்க ஒத்துப் போகாத மனுஷங்க ஜோடி சேர்றப்போதான் பிரச்சனெ வருது. முடிஞ்ச வரெக்கும் ரெண்டு பேரும் ஒத்துமெயா போவற்துக்கு முயற்சி பண்ணனும். அது தான் நடக்கற்தில்லே. உங்கக் குடும் பத்தலெ----"
"என்கிட்டெ பிசகிருந்தா என்னாலெ முடிஞ்ச வரெக்கும் அதெ சரிப்படுத்திக்கற்துக்கே முயற்சி பண்றேன்."
"இவ்வளவுக்கும் அந்த சரோஜா தேவி திரும்பி வந்தாளா?"
"நாலாவது நாளே புருஷன் போயி கூட்டிட்டு வந்தாரு. உயிரில்லாமெ உடம்பு இருக்குமா?"
"ஆனா இப்போ பாமா பாட்டி போறது எதுக்கு?"
"நல்லா இருக்குது, இவங்க நகர்லேன்னா ஒரு மணி பாத்துட்டு அந்தம்மா சூட்கேஸ் தயார் பண்ணிட மாட்டாங்க? படிப்புக்கும் குடும்பம் நடத்தற்துக்கும் சம்பந்தம் இல்லேங்கறது உலகறிஞ்ச உண்மை."
* * *
ஒவ்வொரு வாரமும் நல்ல நல்ல புத்தகங்களைக் கொண்டு சென்று கொடுத்து பானுவைப் பார்த்து வருகிறேன். அவ்வப்பொழுது நடக்கும் சிறப்புச் செய்திகளைத் தெரிந்துகொண்டு வருகிறேன். ஒரு முறை நான் முன் பக்கத்து அறையில் உட்கார்ந்து கொண்டு மருமகனுக்கு வண்ணப் படங்கள் போட்ட புத்தகத்தைக் காட்டிக் கொண்டிருந்தேன். பானு மாமாவுக்குச் சாதம் பரி மாறிக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிஷத்திற்குள்ளே அவர் ஏதோ சத்தம் போடுவது போல் கேட்டது. நான் திடுக்கிட்டேன். "உன் கவனம் நிஜமா வீட்டு வேலெயிலே இருக்குதா? இல்லெ, உன் சொந்தக் கடமெங்க எங்கற்து ஏதாவது குறுக்கே வருதா? இப்படி வேக வெச்சி கைக்கு வந்தபடி உப்பு காரத்தெத் தூக்கிப் போட்டு என் மூஞ்சியிலே எறியறியா? ஓட்டல்காரன் தேவலெ! ருசியா வயிறு நிறெய போடறான். ஒரு வேளெ நீ திருப்தியா சாப்படறாப்போல சமயல் பண்றியா? உனக்கு வெக்கமா யில்லே? கட்டியக் கணவனுக்கு வயிறு நிறெய சாதம் போடலேன்னா எதுக்கு நீ இங்கெ இருக்கற்து? நல்லா சாப்டுட்டுப் பொரள்றதுக்கா? ஹாயா புஸ்தகங்க படிக்கற்துக்கா? இருந்தாலும் உனக்கு ஆசெங்க வேற இருந்தா வீட்டெ எதுக்குக் கட்டிட்டு அழணும்? நீ டாக்டராயி உருப்பட்டிருக்கணுமே தவர எழவெடுத்த சமயல் வேலெ பண்றியா? என்னெ ஏன் இப்படி அழவெக்கறே? இங்கே இருக்கணும்னு இல்லேன்னா போய்த் தொலெ! உனக்கு இஷ்ட மானவனோடு போயிடு!....... டர்ட்டி ரோக்! நீ ஒரு பொம்பளெயா? எனக்குப் பைத்தியம்தான், இல்லேன்னா பொம்பளெக்கி இருக்க வேண்டிய நாணம், பணிவு, அடக்கம், எழவு மருந்துக்காவது உன்கிட்டே......."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பானு சொல்வது தவிர அவர் திட்டுவதை நான் நேரிலே அதுவரை கேட்ட தில்லை. என்ன நடந்தது? பானு ஏதாவது தப்பு செய்துவிட்டாளா? அவர் துணிகளை உடுத்திக்கொண்டு வீறாப்பாகப் போய்விட்டார். நான் நானியைத் தோளில் போட்டுக்கொண்டு உட்பக்கம் நோக்கி நடந்தேன். மணையின் முன்னால் தட்டில் வைத்த சாதம் பிசைந்து விட்டுவிட்டது போலிருந்தது. பானு எதிரில் தலை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள்.
" என்ன நடந்தது பானூ...!" என்றேன்.
பானு தலை எடுத்துப் பார்த்தாள். தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து விழுந்தது. என்னமோ சொல்லவேண்டும் என்று நினைத்துச் சொல்ல முடியாமல் இருந்தாள்.
"ஆமாம், என்ன நடந்தது? கறி சரியாப் பண்ணலியா?"
"கொஞ்சம் உப்பு அதிகமாப் போயிடுத்து. கவனிச்சிதான் பொறுக்கனேன். இருந்தும் சாதத்தலெ கல்லு இருந்தது." என்றாள் மெதுவாக.
எனக்கு வியப்பாக இருந்தது. "ஆனாலும், அதிக்கே அவ்வளவு திட்டு திட்டணுமா? கல்லெ எடுத்துப் போட்டுட்டு ஆவக்கா ஏதாவது போட்டு சாப்ட்டா போவுது! எவ்வளவு கவனமா பண்ணாகூட குறெயே இல்லாம இருக்குமா? ஒவ்வொரு விஷயத்துக்கும் மனசெக்குத்தறா மாதிரி பேசினா.."
சற்று நேரம் கழித்து பானு கூறினாள்----
"புதுசுலெ என் சமயல் மேலெ அவருக்குக் கெட்ட அபிப்ராயம் விழுந்துட்டுது. உண்மெயாவே அப்பொ எனக்கு ஒரு வேலையும் வராது. பசியெக் கூட தீத்துக்க முடியாத அளவு பயங்கரமா இருக்கும் சமயல்! நாலஞ்சி மாசத்தலெ எல்லாம் கத்துக்கிட்டேன்.----இப்பொ எது வானாலும் செய்ய முடியுது. ஆனா அவர் அபிப்பிராயம் மட்டும் மாறல்லெ. நான் என்னமோ கையாலாகாதவள்னும், தனக்குச் சுகமில்லாமெ போயிட்டுதுன்னும் அவர் நினெச்சிக் கிட்டிருக்காரு! இப்பொ என்னெக்காவது என் வேலெயிலே கொஞ்சம் பிசகு வந்ததுன்னா அந்தப் பழைய அபிப்ராயமே வெளியே வருது. இஷ்டம் வந்தபடி திட்றாரு. நான்என்ன பண்றது சொல்லு?"
என்தலை! நான்சொல்வது! ஒன்றும் பேசவில்லை.
"இன்னக்கி சண்டெக்கிக் காரணம் உப்பு அதிகமானது ஒண்ணு மட்டுமில்லே - அது சும்மா மேலுக்குக் காட்றது. ஆனா, நீ எனக்குப் புஸ்தகங்ங கொண்டு வந்து குடுக்கிறேன்னு, நான் சுகமா படிச்சிட்டிருக்கறேன்னு..."
நான் வியப்புடன் பார்த்தேன்.
"ஏன்? அவர் திட்னதெ நீயும் கேட்டேல்லே! அர்த்தமாகல்லியா? அவர் உள்ளர்த்தம் வெச்சிப் பேசற்தெப் புரிஞ்சிக்கணும்னா ரொம்ப அனுபவம் வேணும்."
"அதுக்காகத்தானா இடெயிலே என்கிட்ட சரியா பேசற்தில்லே?"
பானு ஒன்றும் பேசவில்லை. நான் சற்றுச் சிந்திக்கலானேன். "ஆனா பானூ! மாமாக்கு இஷ்டமில்லாத வேலெயெ நான் செஞ்சா நல்லா இருக்குமா? இனிமேலும் நான் புஸ்தகங்க கொண்டு வந்துட்டே இருந்தா... நீயும் நினெச்சி தாரு."
"அண்ணா! நான் வயிறு நிறெய சாப்பாடு சாப்பட்றது கூட அவருக்கு இஷ்டம் இல்லே. திருப்தியா சாப்டுட்டு சுகமா தூங்கறேன்னு எத்தனியோ தடவெ திட்டிட்டே இருக்கறாரு. அப்படின்னா என்னெ சாப்பாட்டெயும் தூக்கத்தெயும் நிறுத்திடச் சொல்றியா? நாம செய்யக் கூடாத வேலெயெச் செய்றோமா? புஸ்தகம் படிக்கறது கூட சாதம் சாப்பட்றா மாதிரி சாதாரணமான விஷயம்தான். அதெப் படிச்சிட்டு உக்காந்திருந்தா என் மனசுக்கு நிம்மதியாகவும் சுகமாகவும் இருக்குது. அதெக் கொண்ட வர்றதெ நீ நிறுத்திட்டீன்னா சரி... உன் இஷ்டம்!"
"சரிதான்! நான் கொண்டு வர்றேன், ஆனா நீ கொஞ்சம் ரகசியமா வெச்சிக்கோ. மாமா கண்லெ படவிடாதே, அவ்வளவு தான்!"
பானு வேதனையோடு சிரித்தாள். "எவ்வளவு திருட்டுப் பொழப்பு!"
"டாக்டராயி உருப்பட்டிருக்கணும்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டேன் நினைவு வந்து.
"அந்த மனுஷன் குத்திக் காட்றதுக் கெல்லாம் நான் என்ன அர்த்தம் சொல்றது? ஒரு தடவெ ஏதோ சாதாரணமா பேசிக்கிட்டிருந்தப் பொவாய் தவறிச் சொல்லிட்டேன். கர்மம்! ' நான் காலேஜிலே சேர்ந்திருந்தா இதுக் குள்ளே டாக்டராயிருப்பேன்'னு! அதுதான் பேச்சுக்குப் பேச்சு சொல்றது. ஏதோ சாதாரணமாச் சொல்ற வார்த்தெங்களெ வெச்சி குத்திக் காட்டிகிட்டே இருந்தா மனசு தெறந்து பேச முடியுமா?" நீண்ட நேரம் இரு வரும் வேதனையோடு உட்கார்ந்திருந்தோம்.
நான் ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரத்தில் பானு எழுந்து தட்டை எடுத்தாள். இதற்குள் சட்டென்று நினைவு வந்தாற்போல் " உனக்குச் சொன்னேனா? பாமா பாட்டி மக செத்துப் போயிட்டா!" என்றாள்.
"செத்து போயிட்டாளா?" என்றேன் வியப்போடு.
" ஆமாம், பாமா பாட்டி முகத்தெ நான் பாக்க முடியாம ஆயிட்டுது. அவங்களுக்கு இருந்த அந்த ஆதாரம் கூட போயிட்டுது. பத்து நாளாச்சி."
" என்ன சீக்கு அவங்களுக்கு? "
" சீக்குமில்லே கீக்கு மில்லே. அந்த அம்மாக்கு மாசம் ஆக ஆக வயத்திலே நோவு வருதாம். அப்படியெ அவஸ்தெ பட்டு மூன்று குழந்தெங்களெ பெத்தாங்க. அவங்க மறுபடியும் கர்ப்பம் தரிச்சா ரொம்ப ஆபத்துன்னு டாக்டர் கண்டிப்பாச் சொல்லிட்டாராம். ஆனாலும் அந்த மகானுபாவர் ஆபரேஷன் ஒண்ணும் பண்ணிக்கிலெயாம். போறது தன் பிராணன் இல்லே இல்லியா? அந்த அம்மாக்கு மறுபடியும் கர்ப்பம் வந்தது. சாவும் வந்தது. போவட்டும்! அவருக்கு சீக்ரத்தலெ அழகா புது மனெவி வர்றா!"
" சே! ஒரேயடியா அப்படிப் பேசாதே பானூ! அவரு கொஞ்சம் அலட்சியமா இருந்திருப்பார். இதுக்குள்ளே இப்படி நடக்குமுன்னு....."
" அதுவே அவர் பிராணனுக்கு ஆபத்து வருதுன்னா அப்படி அலட்சியமா இருப்பாரா சொல்லு?"
"அப்படிப்பட்ட முரடன் செய்தாலும் செய்வான். ரொம்ப பேரு வெள்ளம் வந்த பிறகுதான் அணெ கட்டு வாங்க."
" உன் சமாதானத்தெ நான் ஒத்துக்க மாட்டேன். அவருக்கு மனெவி செத்துப் போயிடுவாளேங்கற அச்சம் இல்லே. எந்த அளவு அச்சம் இருந்தாலும் அவ்வளவு அலட்சியமா இருக்க முடியாது. அந்த அம்மாவெ ஏதோ ஒரு விதமா காப்பாத்திக்கற்துக்கு முயற்சி பண்ணுவாரு."
சிந்தித்துப் பார்த்தபொழுது அது உண்மை என்றே தோன்றியது. " தன்னை நம்பி, தன் சொந்தக்காரங்களெ எல்லாம் விட்டு வந்து எல்லாத்தெயும் அர்ப்பணம் பண்ற மனெவியின் உயிரை அவ்வளவு லேசா பாக்கற ஆம்பளெங்க இருக்கறாங்கன்னா அதிசயமில்லே. கணவனெ விஷம் வெச்சி கொண்ண மனைவிகளும் இருக்கறாங்க. ஒரு கதையிலேன்னு நினெக்கிறேன். கணவன் பேர்லெ ஆயிரக் கணக்கிலெ ரூபாய்க்கு இன்ஷுர் பண்ணி அப்புறம் அவரெக் கொல்றதுக்கு முயற்சி பண்றா. இந்த மாதிரி கேசுங்க ரொம்ப குறெச்சல்னெ வெச்சிக்கொ-- ஆனாலும் நாம முடிவுகட்டிட முடியாது பானூ! கெட்டதுங்கற்து ஒரு இனத்தலெதான் அதிகம்னு சொல்லமுடியாது."
" இவங்க செஞ்சப்பொ அவங்க செஞ்சாங்களா இல்லியாங்கற் தில்லே கேள்வி. புருஷனெ அலட்சியம் பண்ண மனெவிக்கு உலகத்தலெ எவ்வளவு மரியாதெ கிடைக்குதோ தெரியுமா? அதே தப்பெப் பண்ண ஆம்பளெக்கு அந்தத் தண்டனெ இல்லியே! கடவுள் விருப்பம்! இல்லேன்னா அவளோட தலெவிதி அவ்வளதான்! அவன் பத்துப் பேர்லெ மகாராஜா போல திரியறான், குத்தவாளி யாரானாலும், ஒரே தண்டனெ அனுபவிச்சா அது நியாயம் ஆகும்."
"அப்பா! உன்கிட்டெ பேசிக்கிட்டெ உக்காந்திருக்ணும்னா ரொம்ப பொறுமெ வேணும். நான் ஒண்ணு சொல்றேன் கேளு----நீ உலகத்தெத் திருத்தி வெக்க முடியாது. உன் குடும்பத்தெயே நீ திருத்திக்க முடியலெ. தாமரெ எலெ மேலெ மின்னிக்கிட் டிருக்கும் தண்ணீர்த் துளி நமக்கொரு பாடம் கத்துக் குடுக்குது. எதலேயும் நாம ரொம்ப ஒட்டிக்கக் கூடாது. அப்படி யோசிச்சிக் கிட்டே உக்காந்திருந்தா தலெவலிதான் மிச்சம். எல்லாம் பிரச்சனைகளே! எல்லாம் கேள்விகளே! அதனாலே நாம செய்யக் கூடியது ஒண்ணு மில்லே. நடுவுலெ நம்ம மண்டெயெ ஏன் ஒடச்சிக்கணும்? உலகம் எப்படிப் போவுதோ, போவட்டும்! அதன் கூடவே நீயும் போ---- நானும் போறேன். அவ்வளவே தவர நம்ப பின்னாலே உலகம் வராது."
பானு சிரித்தாள். "எப்பத்தலே இருந்துங்க நீங்க இவ்வளவு பெரிய வேதாந்தி ஆனீங்க?"
"ஆம்...... இப்பப்பதாங்க! நீங்க எங்களுக்குச் சிஷ்யையா வர்றீங்களா?" என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.
"கண்டிப்பா! அதுக் கில்லாமலா! இந்த யோசனெங்க எதுவும் வராதபடி இந்த மூளையெ மாத்தி வெச்சிடுங்க."
"சிவோஹம்! எங்கே, ஒரு டஜன் வாழப்பழம்... ஆரத்தி கற்பூரம்...தேங்காய்..."
* * *
பிறகு நான்கைந்து வாரங்கள் வரைக்கும் ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. சிறு சிறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவை அனுபவிப்பதற்கே தவிர எடுத்துச் சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு. பானுவின் தன்மான உணர்ச்சி சிலவற்றை மறைத்து வைக்கவும் செய்யும்----நான் அவ்வப்பொழுது மாமாவின் போக்கைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவா் என்னைப் பொறுத்தவரை ஓரளவு முகம் கொடுக்காமலதான் இருக்கிறார். அதிகமாகப் பேசுவதில்லை. மொத்தத்தில் காலம் அமைதியாகக் கடந்துகொண்டு இருப்பதுபோல் இருந்தது. இந்த அமைதி புயலுக்காக இருக்காதல்லவா என்று தோன்றியது. பானுவின் பேனா முள் உடைந்து விட்டதாம். புதிது போடச் சொல்லிக் கொடுத்தாள் ஒருமுறை. ஒரு வாரம் காலம் கடத்தினாலும் நல்ல முள் போடவைத்தேன். பானுவுக்குப் பேரீச்சம் பழம் மிகவும் பிடிக்கும். இரண்டு வீசை பேரீச்சம்பழம், ஒரு நூறு சாமந்திப் பூ---சரி. மருமகனுக்கு இருக்கவே இருக்கிறது பிஸ்கட் தட்சணை. எல்லாவற்றையும் புதிய பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டேன், சாக்கிரதையாகக் புதிதாக வாங்கிய சைக்கிள் மேல்.
தெருக் கதவுகள் வெறுமனே மூடியிருந்தன. உனக்கு ஏனோ இதயம் பட படத்தது. மாமாவின் குரல் மிக உச்ச நிலையில் கேட்டது. ஏதோ உரக்கச் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தாா். "இருந்தாலும் வரவர உனக்கு கா்வம் அதிகமாயிட்டுது! எனக்குத் தெரியும். உன் மண்டெக் கனமும் நீயும்-உனக்கு வீடு, குடும்பம், புருஷன், மண்ணாங்கட்டி என்னத்துக்கு?"
சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்தி, தெரு வாசப்படி மேல் நின்றேன்.
"உன் தேவெங்களெத் தீக்கறவங்க, உனக்கு வேண்டிய தெல்லாம் வாங்கித் தா்றவங்க வேறெ இருந்தா புருஷனெங்கற முண்டத்தெ மதிச்சி நடக்கணும்னு என்ன இருக்குது? முண்டே!"
எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எவ்வளவு கேவலமாகத் திட்டுகிறார்! அதுவும் முழுக்க முழுக்க என்மேல் கோபம். இனி நான் வரமால் இருக்கட்டுமா...? "கொஞ் சம் உடம்பெ சாக்கரதேயா வெச்சிக்கிட்டு திரிஞ்சிவான்னு, உன் டாக்டா் பெரிதனத்தெ வெளியே காட்ட வாணாம்னு எத்தனெ தடவெ உனக்குச் சொல்றது? எப்பொ உனக்குத் தெரியப் போவுது? உன் கண்ணு என்ன குருடாப் போயிட்டுதா? இல்லை சோம்பேறித்தனம் அதிகமாயிட்டுதா? உனக்குக் குடும்பப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய லட்சணம் ஏதாவது இருக்குதா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகப்பட்றேன்? முதல்லே உனக்குக் கல்யாணம் என்னத்துக்குப் பண்ணானோ அது உங்க அப்பனுக்குத்தான் தெரியணும்."
கோபத்தில் கீழ் உதடு பற்களின் அடையே நசுங்கிக் கொண்டிருந்தது.
இந்தக் காலத்திலே ஒரு மட்டமான மனிதன் கூடத் தன் மனைவியைத் திட்டக் கூசும் முறையில் அவார் திட்டிக்கொண் டிருந்தார் "உனக்குச் சரியான வயசுலெ கல்யாணம் பண்ணியிருந்தா நாலு புள்ளங்களெப் பெத்திருப்பே, கழதெ மாதிாி வளத்து என் தலெயிலெ கட்டிட்டாங்க. நானொரு குருட்டு முண்டம். இல்லேன்னா உன்னெப் போய் கல்யாணம் பண்ணுவேனா? என் கா்மம் வந்து விடிஞ்சிது. அவ்வளவுதான்! பொம்பளெ முண்டேன்னு யோசிக்க யோசிக்க தலெமேலே ஏா்றே. நாலு ஓதெ குடுத்து தெருவுலெ இழுத்துத் தள்னா உங்க அப்பன் குறுக்கே வா்றனா உங்க அண்ணன் வா்றானா......"
'போக்கிரிப் பயலே!' என் உடல் பதறிக்கொண்டிருந்தது. கைமுட்டிகள் தாமாவே இறுகத் தொடங்கின. பற்கள் நற நறவென்று நசங்கிக்கொண்டிருந்தன. 'ரௌடி ராஸ்கல்! அந்த உதெங்க என்னவோ இப்ப உனக்குக் குடுத்தாக்கா உங்க அப்பன் எவன் குறுக்கெவர்றானோ நான் பாக்கறேன்.' இரயில் வண்டிப் புகைபோல மூச்சு வந்துகொண்டிருந்தது. கால்கள் முன் னோக்கி இழுத்துச் சென்றன. ஒரு நிமிஷத்தில்.............. 'நில்லு........' கூச்சலிட்டது இதயம்.
' கோவப்படாதே........' எச்சரித்தது மீண்டும்.......
ஆமாம்-- பெருமூச்சு விட்டேன். அவசரப்பட்டு அவரோடு சண்டை போடுவதால் பயன் இல்லை. என் கோபதாபங்களுக்கு இது சமயம் அல்ல. பானுவை இப்பொழுது வெளியே அழைத்துச் சென்று ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறேன். இந்தச் சிறை அவளுக்குத் தப்பாது.
என்னை நானே தடுத்து அடக்கிக்கொண்டேன். ஒரு நிமிஷம் நின்றிருந்தேன். போய்விடலாம் எந்று தோன்றியது. ஆனால் பானு எவ்வளவு வேதனைப் படுகிறாளோ! ஒரு முறை ஆறுதல் கூறிச் சென்றால்....
கதவுகள் திறந்தன. தோள்மேல் துணி மூட்டையுடன், வண்ணான் போலும், வெளியே வந்தான். நான் பேரதிர்ச்சி அடைந்தேன். அவன் என் பக்கம் பார்த்து தலை குனிந்துகொண்டு போய்விட்டான். உலகம் தெரிந்த ஒரு மனிதன். ஒரு வண்ணான் முன்னால், மனைவியை மட்டமாக, கீழ்த்தரமாக, கற்பனை செய்ய முடியாத வகையில் திட்ட முடியும் என்ற உண்மையை நான் நேரில் பார்க்கவில்லை என்றால் நம்பியே இருக்கமாட்டேன். பெண் எவ்வளவு தன்மானம் உள்ளவளாக இருந்தும், வாய் திறந்து பதில் சொல்லாமல் பொறுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. என்ன துர்ப்பாக்கியமான நிலை!
அந்த வினாடியில் ஒரு விஷயத்துக்காக வேதனைப் பட்டேன். கடவுளைத்திட்டினேன். நானும் பானுவும் ஒரே தாய் வயிற்றில் பிறக்காததற்காக; பானுவுக்குச் சொந்த அண்ணன் இல்லாததற்காக. நானே பானுவின் சொந்த அண்ணனாக இருந்தால் என் நிலை வேறு. என் சக்தி வேறு. என் உரிமை வேறு. அவனுடைய சொல்லுக்குச் சொல்லுக்கு விலா எலும்பை உடைத்து, உடலை ஊனமாக்கி விட்டுத் தங்கையை அழைத்துச் சென்று அம்மாவிடம் ஒப்படைத்திருப்பேன். அவள் அந்த நரகத்தில் எத்தனைக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறாளோ அதை யெல்லாம் விளக்கமாகச் சொல்லி இருப்பேன். ஆகட்டும்...ஆகட்டும்... நான் பானுவின் அண்ணன் அல்ல. எந்த விதத்திலும் பானுவுக்காக நான் பரிந்து கொண்டு போக முடியாது. நான் தொலைவிலேயே இருக்க வேண்டும்.
மீண்டும் திரும்பிப் போக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மெதுவாக உள்ளே காலெடுத்து வைத்தேன். மாமா...சீ! மாமா என்று அழைப்பதற்கு என் மனம் ஒத்துக்கொள்ள வில்லை. அவர்ர் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு தலைவாரிக்கொண் டிருந்தார். திடீரென்று பின்பக்கம் திரும்பி என்னைப் பார்த்ததுமே திடுக்கிட்டது போலாகி உடனே சமாளித்துக் கொண்டார்.
"வந்தீங்களா?" உங்க தங்கெ ரொம்ப புத்திசாலி போல இருக்குது. என்ன நிர்வாகம் பண்ணி இருக்கறாளோ பாத்தீங்களா?"
எனக்குக் கோபம் கரைபுரண்டு வந்தது. வீட்டுக்கு வந்ததும் வராததுமாக என் தங்கைமேல் என்னிடம் புகார் சொல்ல வேண்டுமா?"
மிகவும் சுருக்கமாகக் கேட்டேன் - "என்ன செஞ்சா?"
"ரொம்ப ரொம்ப பெரிய காரியம் பண்ணி இருக்கறாங்க! அதெ நீங்க கேட்டு மெச்சிக்க வேண்டியது ஒண்ணுதான் குறெச்சல்!"
அவர் பேசிய தோரணை எனக்கு அருவருப்பாக இருந்தது.
"இவளுக்கு கண்ணு இல்லேன்னா அந்த வண்ணாரப் பயலுக்குக் கூடவா இல்லே? குருட்டு முண்டங்க! நேத்து சாயந்தரம்தாங்க, பார்ட்டிக்குப் போட்டுக்கிட்டேன் புதூப் பேண்ட்டு. வந்ததுமே கழட்டி ஸ்டாண்ட் மேலெ போட்டேன். மத்தியானம் தூங்கி யெழுந்திருச்சிப் பாக்கறேன். அழுக்குத் துணிங்களோட அதெ மூட்டை கட்றான் அவன் - எதிரே நின்னுட்டு வேடிக்கெப் பாக்க றாங்க இந்த அம்மா! மல்லிப் பூவாட்டம் வெள்ளெயா மடிப்பு கலெயாத பேண்ட்டு கண்ணுக்குத் தெரியல்லெ?"
நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். என்ன இந்த மனுஷன்! இவ்வளவு சிறிய விஷயத்துக்கு...
"என்ன ராவ் சார்! பேச மாட்டீங்கறீங்க?"
"ஏன் பேச மாட்டேன்? முதல்லே நீங்க அந்த வெள்ள பேண்ட்டெ ஹாங்கர்லெ மாட்டாமெ ஸ்டாண்ட் மேலெ ஏன் போட்டீங்க?"
"ஓஹோ! லா பாயிண்ட்டு பேசித் தங்கெயெ ஜெயிக்க வெக்கணும்னு நினெக்கிறீங்களா என்ன? அதெ மட்டும் ஒரு நாளும் முயற்சி பண்ணாதீங்க. நானு என் இஷ்டம் வந்தபடி பண்ணுவேன். அவ தன் இஷ்டப்படி செய்வாளா?"
"மாமா! நீங்க ஒவ்வொரு விஷயத்தெயும் தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க. இதலெ இஷ்டம் வந்தபடி பண்றது என்ன இருக்குது? சாதாரணமா உங்க வீட்லே அழுக்குத் துணிங்க ஸ்டாண்ட் மேலெ இருக்கும். அங்கேயே பேண்ட்டும் இருந்தா எல்லாத்தெயும் சேத்துப் போட்டுட்டிருப்பா. கொஞ்சம் சாக்கரதெயா பார்த்திருந்தா அது அழுக்கில்லேங்கற்து தெரிஞ்சே இருக்கும்."
"ஆமாம். அவளுக்குச் சிரத்தெயா பாக்கற்துக்கு அவசியம் என்ன இருக்குது?"
"அவசியம் ஏன் இல்லே! இல்லாமெ இல்லே. பிசகா நடந்திருக்கும். ஒரு வாரத்தலெ திரும்பி இஸ்த்ரியோட வருது. ஒரு ரெண்டனா அதிகமாகும். அவ்வளவுதானே? இவ்வளவு சின்ன விஷயத்துக்கு வண்ணான் முன்னாலெ அவ்வளவு கேவலமா, மட்டமா திட்டுவாங்களா? அது யாருக்கு மரியாதெ குறெவுன்னு நினெச்சிப் பாத்தீங்களா?"
அவர் சற்றே அதிர்ச்சி யடைந்தார் - அந்தத் திட்டுகளை யெல்லாம் நானும் கேட்டேன் என்பதனால் போலும்! நான் மறுபடியும் சொன்னேன். "வெள்ளெத் துணியெப் பிசகா வண்ணானுக்குப் போட்றதுங்கற்து அவ்வளவு மன்னிக்க முடியாத குத்தம்னு சொல்றீங்களா!"
அவர் முகத்தைச் சுளித்துக் கொண்டார். "தப்பு பண்றது, மன்னிக்கற்து இதெல்லாம் எனக்குப் புடிக்காதவை! இவ்வளவு சின்ன வேலெயெக் கூடச் சரியா பண்ண முடியாமெ போனதுக்கு வெக்கப்படணும்."
"இருக்கலாம்! ஆனா கண்டிக்கற்துலெ கூட அழகு இருக்குது."
"ஓஹோ! நீங்க திட்னாக்கா மென்மெயா, நைசா, ஆனந்தமா இருக்கறாப் போல இருக்குது!"
"திட்றது எப்போதும் ஆனந்தத்தெ உண்டாக்காது. ஆனா மத்தவங்க தன்மானத்தெப் பாதிக்கற அளவு கடூரமா மட்டும் இருக்கக் கூடாது மாமா! உங்களுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிட்டே இருந்தா பானு எவ்வளவு வேதனெப் பட்றாளோ ஒரு தடவெயாவது நினெச்சிப் பாத்தீங்களா?"
"தேவெ யில்லே. நீங்க அவ்வளவு தன்மானம் உள்ள வங்களா யிருந்த உங்க தங்கெக்குக் கல்யாணம் கல்லெடுப்பு ஒண்ணும் இல்லாமெ அப்படியே வெச்சிகிட்டிருக்கணும்."
"அப்படின்னா உங்க எண்ணம்? கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு மனுஷத் தன்மெயெக் காப்பாத்திக்க முடியாதங்கற்தா?"
அவர் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார். நான் வெல வெலத்துப் போனேன்.
" ஊம்! மனுஷத்தன்மெ! வயித்துச் சோத்துக்கு ஒருத்தனெ நம்பி வாழற பொம்பளெக்கு மனுஷத் தன்மெ? எவ்வளவு அறிவோட பேசறீங்க! பசியெடுத்தா சோறு சம்பாதிச்சுக்க முடியாத பொம்பளெக்கு மனுஷத் தன்மெ, சுதந்தரம், உணர்ச்சிங்க, இலட்சியங்க...."
நான் உணர்வற்றுப் போனேன். அவர் மேலும் பேசிக் கொண்டே போனார். " பொம்பளெயெ ஆதரிக்க வேண்டியது ஆம்பளெ. பொம்பளெயக் காப்பாத்த வேண்டியது ஆம்பிளெ! பொம்பளெய அடக்கி ஆள வேண்டியது ஆம்பளெ! இந்த வேலெங்களெ யெல்லாம் ஆம்பளெங்களெப் போல பொம்பளெங்க செய்ய முடியுமா என்ன சொல்லுங்க! இயற்கெ பொம்பளெய அடக்கி வெச்சிருக்குது! இனி யாரு குடுக்கற்து சுதந்தரம் சொல்லேன்யா! இந்தப் பொம்பளெங்க சுதந்தரம், மனுஷத்தன்மெ, முன்னேற்றம் -- எல்லாம் மேடெயிலெ பேசற்துக்குத்தான் சரியா இருக்குமெ தவர, நடெமுறெயிலே வெச்சிக்கணும்னா யாராலெ முடியும்? ஆம்பளெக்கி முக்கியத்வம் இல்லேன்னா அப்பொ ஆம்பளெ பொம்பளெ வித்தியாசம் எங்கே இருந்து இருக்கும்? சரி! நீங்க எப்படி மனெவியெக் கண்டிக்காமெ மனுஷத் தன்மெயக் காப்பாத்தறீங்களோ நான் பாக்காமலா போறேன்?"
வியப்போடு நான் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். அவர் யார் என்பது முழுமையாக எனக்கு விளங்கிவிட்டது. பானுவைப் போல முற்போக்கு எண்ணம் உள்ளவளுக்கும் இத்தகைய பத்தாம் பசலிக் கணவனுக்கும் ஜோடி சேர்ந்தது. என்ன வேடிக்கை! பானுவின் மென்மையான இதயம் இந்தச் சச்சரவின் இடையில் உடைந்து சுக்குநூறாகிக் கொண்டுள்ளது. பரிகாரமே இல்லாத கொடுமை!
அவருடன் ஏதோ விவாதிக்க வேண்டும், அவருக்குப் புரியுமாறு செய்யவேண்டும் என்ற வேகம் கரை புரண்டது. ஆனால் ஒரு முரடனை மாற்றக் கூடிய ஆற்றல் என்னிடம் இல்லை. முரடன் ஒருவனே முரடன் அல்லன். அவனுடன் வாதாடும் அத்தனை பேரும் முரடர்களே! அவர் போய் விட்டார். நான் தெருக்கதவுகளைத் தாளிட்டு உள்ளே நடந்தேன். சமையலறை வாயிற்படியில் முழங்கால் மேல் தலை வைத்து உட்கார்ந்திருந்தாள் பானு. அமைதியாக அருகில் உட்கார்ந்துகொண்டு அவள் தலைமேல் கை வைத்தேன். தலை எடுத்து்ப பார்த்தாள். கண்கள் சிவந்து வீக்கம் கண்டிருந்தன. சட்டென்று முகத்தின் குறுக்கே கைகளை வைத்துக் கொண்டாள். என் கண்களில் நீர் துளிர்த்தது. எப்போதும் இதுபோல அழ வேண்டாம் என்று ஆறுதல் சொல்ல முடியாமல் போய்விட்டேன். சாந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிகள் சொல்ல இயலாமல் போய்விட்டேன். 'உன் குடும்ப நிலை மாறும்' என்று சோதிடம் கூற முடியாமல் போய்விட்டேன். ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன், இருந்தாற் போலிருந்து சொன்னேன்-- " நீ இன்னும் வாயெ மூடிக்கிட்டு சும்மா இருக்கறியே ஏன்? அந்த அளவு பதில் சொல்ல முடியாம போயிட்டியா!" கோபத்தினால்--" முரட்டு மனுஷங்களோட நயமா போற்தனாலே பிரயோஜனம் இல்லே" என்றேன். பானு கண்களைத் துடைத்துக் கொண்டாள். " வண்ணான் முன்னாலெ ஒதெகூட வாங்கச்சொல்றியா?"
உண்மைதான்! தன்னுடைய வீரத்திற்கு ஒரு பெண் குறுக்கே வந்தால் அந்த மனிதன் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் இறங்கிப் போய்விடுவான்.
" நான் பேச்சுக்குப் பேச்சு பதில் சொன்னா இந்த நிலெயிலே என்னெக்கும் இருந்திருக்க முடியாது" என்றாள்.
" இருந்தாலும் பானு! சின்ன விஷயத்தலே எல்லாம் ஏன் அவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கறாரு?" என்றேன். சற்று நேரம் வரையில் பானு பேசவில்லை. " இது சின்ன விஷயமே தவர இதுக்கு முன்கதெ எல்லாம் காலெயிலே நடந்துட்டுது. நேத்து சாயந்தரம் அவர் பேனா பார்ட்டியிலே விழுந்துட்டுதாம். அதெ மட்டும் நம்பமாட்டேன். எந்தப் பிராண சிநேகிதனோ அழுத்திட்டிருப்பான். அம்பது ரூபா பேனா!"
"அது போயிட்டுதா? நிஜமாவா!
" நீ கல்யாணத்தலெ பிரசண்ட் பண்ணியே, அதுதான் போயிட்டுது. காத்தாலெ ஆபீசுக்குப் போற்துக்கு முன்னாலெ என் பேனாவெக் கேட்டாக்கா நிப் போட்றதுக்கு உன்கிட்டெ குடுத்திருக்கேன்னு சொன்னேன். அதனாலெ வந்தது தகராறு. உன்னெயும் என்னெயும் இஷ்டம் வந்தபடி திட்னாரு. எனக்கு உலகத்தலெ இல்லாத அண்ணன் ஒருத்தன் கிடெச்சானாம். அவனெப் பாத்துச் சொக்கிப் போய் புருஷனெ மதிக்காமெ திரியறனாம். ' அந்தப் பேனா சங்கதி என்கிட்டே ஏன் சொல்லலே? நான் நிப் போட மாட்டேனா? என்னெவிட உனக்கு அவன் ஒசத்தி ஆயிட்டானா? நீஙக ரெண்டு பேரும் சேந்து என்னெப் பைத்தியக்கார னாக்கணும்னு பாக்கறீங்களா? என் உதவியில்லாம எல்லா வேலெயும் அவன் மூலமா செய்துக்கறியா? அவன் உன்னெக் காப் பாத்துவானா?' ன்னு பேசிட்டே போனாரு. பாரு. நான் பேனா சங்கதி அவர்கிட்டெ சொல்லலேன்னு என் மெல ஆத்தரம். தப்புன்னு முடிவு பண்ணிட்டா தப்புதான்! ஆனா நான் அப்படி ஏன் செய்தேங்கற்துக்குக் காரணத்தெ நானே சொன்னேன். ' நான் எதெக் கேட்டாலும் நீங்க காதுலெ போட்டுக்கற் தில்லே. லைப்ரரியிலே இருந்து புத்தகங்க கொண்டுவரச் சொன்னேன். கேக்கலெ. கலர் நூலு வாங்கிக் குடுக்கச் சொன்னேன். வாங்கல்லெ. கடிதம் எழுதற்துக்குக் கார்டுகூட வீட்லெ இல்லேன்னா காதுலெ போட்டுக்கலெ. நான் எப்பொ எது கேட்டாலும் நடக்கலெ. அப்பொ எந்த நம்பிக்கையிலெ பேனா சங்கதி உங்ககிட்டே சொல்லணுங்கறீங்க? நீங்க செய்ய மாட்டீங்கன்னு தெரிஞ்சப்பொ எங்க அண்ணன்கிட்ட குடுத்தா என்ன தப்பு?"
'வாயெ மூடு!...ராஸ்கல்! முண்டெ ஸ்கூல் படிப்பெ வெளியே காட்டி உன் சாமர்த்தியத்தெக் கொட்டறியா! என்னாலெ முடிஞ்சா செய்றேன். இல்லேன்னா இல்லெ. நீ என்ன ஆம்பளேன்னு நிலை நாட்டிக்கப் போறியா? உனக்குச் சலாம் போட்டுட்டு சொல்ற தெல்லாம் செய்யற்துக்கு நீ என்ன மகாராணியா?' பாத்தியா? நான் எப்படி மகாராணி ஆவேன்? மகாராணியா இருந்தா இப்படி உன் முன்னாலெ ஏன் தலை குனிஞ்சிக்கறேன்? மகாராணி உனக்கு உன் மனெவியெவிட ஒசத்தியா?"
"நீ மகாராஜா ஆனா, நான் மகாராணி ஆவேன்னு சொல்லி யிருக்கணும்" என்றேன் நான் கோபத்துடன்.
"நான் அப்படி பேச்சுக்குப் பேச்சு வளக்க மாட்டேன். எனக்குப் புடிக்காத விஷயங்களுக்கு நான் திலே சொல்ல மாட்டேன். எனக்கு ஒண்ணும் பேசற்துக்கு இஷ்ட மில்லாம தலை குனிஞ்சிட்டு உக்காந்திட்டேன்.
'நீ பொம்பளேங்கற்தெ ஞாபகம் வெச்சுக்கோ! நான் ஆம்பளெ, உனக்குப் புருஷனே தவர வேலெக்காரனில்லே. தெரிஞ்சிதா பானுமதிதேவி.!' கடவுளே! அடிக்கடி இந்தக் கொதிப்பு, பரிகாசம், அதிகாரம், இந்த நரகத்தெ நான்...நான் தாங்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டெ அழுதேன். ஆடிக்கிட்டே வந்த பாபு கழுத்தெச் சுத்தி கையெப் போட்டு மேலெ விழற வரெக்கும் அழுதுகிட்டெ உக்காந் திருந்தேன். பாபு பிஞ்சி கையாலெ கண்ணெத் தொடெக்கும் போது..."
"நல்லா இருக்குது பானூ! இனியே நான் வர்றது போறெதெ நிறுத்திகற்து நல்லதுன்னு நினெக்கறேன்."
"அண்ணா! நீ வர்லேன்னா பாபு, நானு..."
"உனக்கு இரக்கத்தெக் காட்ற சந்தர்ப்பம் கூட எனக்கில்லாமெ போவுது பானூ!" என் இதயத்தில் சல்ல முடியாத திகில் குடிகொள்ளத் தொடங்கியது.
நீண்ட நேரம் பேசாமல் உட்காந் திருந்துவிட்டோம்.
"சரி, எழுந்து முகம் கழுவிவிட்டு வா பானூ!" என்றேன். பானு உடனே எழுந்து சென்றாள். பையிலிருந்ததைக்கொட்டி எல்லாவற்றையும் மணை மேல் எடுத்து வைத்தேன். நானி பிஸ்கட் பாக்கட் வரும் வரைக்கும் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து அதை எடுத்துக் கொண்டு தெருவுக்கு ஓடினான்.
"டேய்! டேய்!" என்று அழைத்தால், "அப்புலம் வரேன் மாமா!" என்று சொல்லி மாயமாய் விட்டான்.
"திருட்டுப் பயலுக்குப் பேச்சு வருது" என்றாள் பானு. சாதம்போட்டுக்கொண்டு. நான் அருகில் உட்கார்ந்து கொண்டேன், "பானூ...!"
எடுத்துப் பார்த்தாள்.
"நீ ஒண்ணும் நினெச்சிக்காதே, கொஞ்ச முன்னே அவர் திட்ன தெல்லாம் கேட்டப்போ மாமா மேலெ எவ்வளவு கோவம் வந்துதோ? நான் எப்பவும் அவ்வளவு ஆத்திரப் படல்லெ. அந்த நிமிஷமே வந்து கண்ணு முன்னு தெரியாமெ அடிக்கணும்னு நினெச்சேன். ஏனோ நின்னு போயிட்டேன்."
பானு வியப்புடன் பார்த்தாள். "எவ்வளவு அவசரப் பட்டுட்டே! நீ அவரெக் கையெடுத்து ஒரு அடி அடிச்சா அப்புறம் ஏதாவது வேணுமா? எவ்வளவு அசிங்கமா இருக்கும்! வாழ்க்கெ முடியற வரெக்கும் நினெவிலே இருக்கற வேலெ இனியே எப்பவும் அப்படி நினெக்காதே என்ன! அது எனக்கு மட்டும் வெக்கமா இருக்காதா? போவட்டும்.. யார் யார் பாவத்தெ அவங்க அவங்களே அனுபவிக்கிறாங்க! மனெவி யானாலும், புருஷனா நாலும் அம்மா வானாலும், குழந்தெ யானாலும் யார் பண்ணதுக்கு அவங்களே பலன் அடையறாங்க. அந்தத் தண்டனெ கடவுளே பாத்துக் குடுக்கணுமே தவர நாம இல்லே. மாமா மேலெ உனக்கு ரொம்ப வெறுப்பு வந்ததில்லே?"
"இல்லெ பானூ! கோவம் வந்ததென்னமோ நிஜம்தான்----ஆனா ஒண்ணும் நினெச்சுக்காதெ!" என்றேன் வெட்கப்பட்டுக்கொண்டு.
பானு சாதம் சாப்பிடுவதைப் பார்த்தால் எனக்கென்னவோ வேதனையாக இருந்தது. மனைவிக்குச் சாதம் போடுகிறோம் என்று ஆணவம் கொள்ளும் கணவன் அருகிலேயே ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து வரும் பானு,---- எதிர்பாராமல் என் கண்களைப் பார்த்தாள். நான் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள முயற்சிக்க வில்லை.
பானு சொன்னாள்--" என்னெ ஒருத்தர் ஆதரிக்கறார் எங்கற நன்றி உணர்ச்சி எத்தனெ நாளக்கிக் குடும்பத்தலெ ஒட்டி வெக்கும்னு சொல்றே?"
நான் ஒன்றும் பேசவில்லை.
"காலெயிலெ யிருந்து சோறு சாப்பட மனசு வராம சும்மாவே இருந்தேன். இப்பவும் எனக்குப் புடிக்கலெ" என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் கிளாசைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
" பானு!... என்ன அது?" என்று சொல்வதற்குள் கைமேல் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். " போதும் அண்ணா! நாளெக்கி எழுந்து வேலெ செய்யற்துக்கு இப்பொ சாப்டது போதும்,"
சற்று நேரம் மௌனமாகக் கடந்தது.
"அண்ணா! லட்சுமி அத்தெயப் பற்றி உனக்குத் தெரியுமா?" என்றாள் பானு, என்னை மீண்டும் பேச வைப்பதற்கு.
"எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனா ஏதோ வேண்டிக்கிட்டு செத்துப் போயிட்டாங்கன்னு சொல்வாங்க. அந்த அத்தெதானே!"
"ஆமாம், கடவுளெ வேண்டிக்கிட்டு நோயெ வரவுழெச்சிக்கிட்டு செத்துப் போயிட்ட அத்தெ தான்! ரொம்ப அதிர்ஷ்டக்காரி!"
"ராத்ரியிலெ வாசல்லெ படுத்துக்கும்போது அத்தெயெப்பத்தி பாட்டி சொல்லிட்டிருந்தா என்னக்கி கேட்டாலும் அன்னக்கிப் புதுசா இருக்கும். கேக்கக் கேக்க என்னன்னு சொல்ல முடியாத ஆவேசம் கரெ புரண்டு வரும்."
"அத்தெ விஷயங்க உனக்கு நல்லாத் தெரியும்னு நினெக்கறேன். மாமியார் வீட்லெ ரெம்ப வேதனெங்க பட்டாங்களாம் இல்லெ?"
"அத்தெ அனுபவிச்சது வேதனெயில்லே, நரகம்! பாட்டி சொல்லிச் சொல்லி நிறுத்த முடியாம அழுவாங்க. அப்பொ நான் என்னவோ ரொம்ப பெரியவளா ஆயிட்டா மாதிரி பாட்டி கண்ணெத் தொடச்சி ஆறுதல் சொல்லுவேன். நானுன்னா பாட்டிக்கு உயிர். அத்தெ மாதிரியே இருக்கேன்னு சொல்வாங்க. என்னெப் பாத்துட்டிருந்தா அத்தெ ஞாபகம் வருதுன்னு சொல்வாங்க.
ஓரே ஒரு பொண்ணெ செல்லமா வளத்து கிட்டெ ஒரு ஊா்லெ நல்ல சொத்துக்காரரா பாத்து கல்யாணம் பண்ணாங்க. அத்தெ அழகெப் பத்திப் பாட்டி சொல்லிட்டிருந்தா அதிசயமா தோணும். எது பொய்யானாலும் அத்தெயோட அழகு பொய்யாகாது. தலெயிலே யிருந்து கால் சுண்டுவிரல் வரெக்கும் பத்தரெ மாத்துத் தங்கம் போல நிறம், வார்த் தெடுத்த விக்ரகம் மாதிரி அங்க லட்சணத்தோட கண்ணெப் பறிக்கிற அழகாம். கன்னங்கறேல்னு. அடத்தியா, அழகா இருக்கற கூந்தல் பின்ன முடியாம முடிச்சுப் போட்டா அந்த முடி முதுகெல்லாம் மூடி சந்திரனெ மூடி யிருக்கிற கறுப்பு மேகங்களெ ஞாபாகப்படுத்துமாம். ரொம்ப அகலமான அந்தக் கண்ணுங்களெத் தெறந்து பாத்தா தாமரெ பூத்திருக்குதோன்னு சந்தேகப் படும்படியாச் செய்யுமாம். சாதாரணமா செவப்பா இருக்கிற உதட்டெப் பாத்தா வெத்தலெ பாக்கு நிறம் ஒட்டி இருக்குதா இல்லெயான்னு புரியாதாம். கால் நகம் கூட தாமரெ இதழ் மாதிரி மிருதுவா சுத்தமா பிரகாசிக்குமாம். அத்தெ பச்செத் தண்ணி குடிச்சா தொண்டெயிலெ இறங்கறது தெரியுமாம். எதிரே இருக்கறவங்க உருவம் அவங்க கன்னத்தலெ பிரதி பலிக்குமாம். அந்தக் கொள்ளெ அழகெப் பாத்து சந்திரன் சிறுத்துப் போவானாம். அத்தெ அபூா்வமான அழகு உருவமாம்! தங்க நிற உடம்பிலெ அடர் நிற சேலெயெ மடிசார வெச்சி கட்டிட்டு, தலெயிலே பூ வெச்சி, ஆரத்தி தட்டெக் கையிலே எடுத்துட்டு, தினம் காலெயிலெ கோவிலுக்குப் போய் பூஜெ பண்ணிட்டு வருவாங்களாம். சாயந்தர நேரத்தலெ இனிமெயான தொண்டெயெ எடுத்துப் புராணப் புஸ்தகங்க பாராயணம் பண்ணா கேக்கறவங்க மெய்மறந்து போவாங்களாம்.
அத்தெ ஒரு தெய்வப் பெண்! ஆனா சபிக்கப்பட்டவ!
அபூா்வமான அழகி! ரொம்ப துா்பாக்கியசாலி!
அத்தெயப் புருஷன் கண்ணெடுத்து கூடப் பாக்கலெ. அத்தெயின் இன்ப மெல்லாம் கல்யாணத்தோட முடிஞ்சி போயிட்டது. கல்யாணப் பொண்ணா நரகத்திலெ காலு வெச்சா.
மாமாவின் லட்சணங்க வேறு. விருப்பங்க வேறு. பழக்கங்க வேறு. அந்த விஷயம் தாத்தாவுக்குத் தெரியாதா? அப்படின்னா தெரியும். முழுசும் தெரியும்--- ஆனா அந்தக் காலம் வேறு. அந்த மனிதா்கள் வேறு. ஆணுக்குத் தடை எங்கற்தே கிடையாது. ஆணுக்குக் கெட்ட நடத்தென்னு கிடையாது. அதனாலேதான் அத்தெ ஒரு ஒழுக்க மில்லாதவனுக்கு மனைவி ஆனா.
ஆனா மாமாவின் தீய பழக்கத்தலெ ஒரு ஆழம் இருந்தது. அது முன்னாலெ அத்தெயின் அழகு சக்தியில்லாம போயிட்டது.
மாமா ராத்ரி ஆனதும் இஸ்த்ரி போட்ட மல்லு வேட்டி கட்டி, அல்பாக்கா கோட்டு மேலெ சரிகெ துண்டு கோட்டு, வாசனெ எண்ணெ பூசி பாகவ்தா் கிராப்பெ நல்லா வாரி, கன்னத்தலெ வாசனெத் தாம்பூலம் அடக்கி, பத்து விரல்லேயும் மோதரம் நட்சத்தரம் மாதிாி ஜொலிக்க, தகதகன்னு பிரகாசிக்கற வெள்ளிப் பிரம்பெ ஆட்டிக்கிட்டு., பூட்ஸ் மாட்ன காலோட டக் டக்குன்னு ராஜ நடெ போட்டு நடந்து போவாராம். எங்கே? தாசித் தெருவுக்கு! அளவு மீறிய ஆவலோட தன்னுடையது எல்லாத்தையும் அர்ப்பணம் பண்ணி தாசிங்க சன்னதிக்கு---விடியற் காலமெ எந்த நேரத்துக்கோ, அலங்கார மெல்லாம் கலஞ்சி, தாசிங்க கையிலெ கட்ன பூமாலெ கசங்கி, பல ரகமான வாசனெங்க மணக்க வீடு சேந்து வாசல்லெ படுக்கெ போட்டுத் தூங்குவாராம்.
இந்தத் துா்ப்பாக்கிய நிலெக்கு அத்தெ வேதனெ பட்டாளோ இல்லியோ, சொல்லப் போனா எதாவது நினெச்சாளோ இல்லியோ, பாட்டிக்குக்கூடத் துப்பு கிடைக்கலெ, எந்த நேரமும் அத்தெயின் முகத்தெ அலங்கரிச்ச புன்முறுவல் எத்தனெ வேதனெ யிருந்தாலும் மூடி மறெச்சிடும். அத்தெ என்னெக்காவது துணிஞ்சி புருஷன் அறெக் குள்ளே போனா திரும்பி வரும் போது மிருதுவான கன்னங்க மேலெ காட்சி அளிக்கும் கறுப்பு வரிங்க நடந்த மோதலைச் சொல்லாமல் சொல்லும். உடம்புலெ ஓட்ற ரத்தமெல்லாம் ஒண்ணு சேந்து கன்னத்து மேலெ வரிங்கள்ளே கட்டிக்கிட்டு நாள் கணக்குலெ நின்னு போயிடும். அது புருஷன் கிட்டெ அனுபவிச்ச சுகம்!
இனி குடும்ப விஷயம் - சாதாரணமாவே அந்தக் காலத்து மாமியார் முன்னாலெ மருமக----புலி முன்னாலெ ஆட்டுக் குட்டிதான்! சச்சரவுக்கும் முரட்டுத்தனத்துக்கும் ஒரு உருவம் வேணும்னா அத்தெயின் மாமியார் தான் அது! எந்த வேளெயும் அத்தெக்குப் பசி தீர்ற அளவு சாப்பாடு கிடையாது. ஒரு நாள் விட்டு ஒரு நாளுக்காவது கூந்தலுக்குத் துளி எண்ணெ கிடையாது. அத்தெக்கு அறிவு தெரிஞ்ச நாள்ளே யிருந்து நடந்துவரும், உயிருக்குயிரான கடவுள் பிரார்த்தனெ, புராண பாராயணம் கொஞ்சமும் முன்னேற முடியல்லே. நாள் முழுவதும் வேலெ! மாமியார் நினெச்சி நினெச்சி ஆணெயிட்ற அர்த்த மில்லாத வேலெ! மகன் வீட்டுக்கு வந்ததும் மருமக மேலெ ஏதோ ஒரு குற்றச்சாட்டு----விளைவு தண்டனெ தான்! அத்தெ வீட்டுக்கு வெளியே இருக்கும் நாளுங்க அந்தப் பிடியளவு சாதம் கூட கிடைக்காது. 'ஊர்லெ மருமகங் கெல்லாம் அழகா குழந்தெங்க பெத்துகிட்டிருந்தா நீ நன்னா நின்னுட்டு உக்காந்துக்கறயா? மலட்டு முண்டெக்கிச் சாதம் வேறெ கேடா! ன்னு கரிச்சி கொட்டி அன்னக்கி பூரா பட்டினி போட்டுடு வாங்களாம் மாமியார். வீடு நிறெய எத்தனெ கட்டி லிருந்தாலும், அத்தெ எப்போதும் படுக்க வேண்டியது தரெ மேலேதான்---- எவ்வளவு தான் பாலும் தயிரும் இருந்தாலும் அத்தெ குடிக்க வேண்டியது கஞ்சித் தண்ணிதான்!
அத்தெக்கு யாராதரவும் இல்லெ. யார்கிட்டெ இருந்தும் சந்தோஷமில்லே. ஆனாலும் தன் கஷ்ட சுகங்களெ என்னெக்கும் பெத்த அம்மா கிட்டெ கூட சொல்லிக்கலெ. யார் மூலமாவது மக விஷயங்க தெரியும்போது பாட்டி பொறுத்துக்க முடியாம அழுவாங்களாம். அத்தெயெப் பார்க்கலாம்னு அவங்க ஊருக்குப் போனா வண்டியிலிருந்து இறங்கி இறங்கற்துக்குள்ளே சம்பந்தி அம்மா கடுகடுப்பாக எதிரே வந்து, 'என்னாம்மா! மகளெக் கஷ்டப் படுத்துறோம்னு பாக்க வந்துட்டியா?'ன்னு ஈவிரக்கமில்லாமெ கேப்பாங்களாம். பாட்டிக்குக் கோவம் அடக்க முடியாம வந்தாலும் பொறுத்துக்கிட்டு, 'அதுன்னா அண்ணி! அவளுக்குக் கஷ்டம் என்ன இருக்கப் போவுது? என்னவோ குழுந்தெயெப் பாக்கணும்னு தோணுச்சி.."ன்னு சொல்லிட்டிருந்தா, 'போதும் சும்மா இரும்மா! நீ ஒருத்தி தான் மகளெப் பெத்தெ! அவ என்ன பாலு குடிக்கறாளா? அடிக்கடிக்கு ஓடிவர்றே'ன்னு மூஞ்சியி லடிக்கறா மாதிரி சொல்வாளாம்.
பாட்டி பதில் ஒண்ணும் சொல்ல மாட்டாள். சொன்னா வருஷததுக் கொருதடவெ மகளெப் பாக்கற பாக்கியம் கூட இருக்காது. பாட்டி இருக்கற வரெக்கும் சம்பந்தி பக்கத்தலேயே திரிஞ்சிக்கிட் டிருப்பாளாம். அப்பொ பாட்டி ஒண்ணும் பேச முடியாத நிலெயில் இருப்பாங்களாம். மகளெக் கொஞ்ச நேரம் கண்ணாலெ பாத்துட்டு உடனே வண்டியெப் பூட்டச் சொல்லி வந்துடுவாங்களாம். சம்பந்தி அம்மா சாப்பாட்டுக்குக்கூட ஒண்ணும் ஏற்பாடு பண்ண மாட்டாங்களாம்.
வருஷத்துக் கொரு தடவெ ஏதாவது ஒரு பண்டிகெ சாக்குலெ அத்தெயப் பிறந்த வீட்டுக்கு அழெச்சிட்டு வந்தா தாத்தாக்கும் பாட்டிக்கும் அன்னக்கி ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்குமாம்.
ஒருநாளு சாயந்தரம் தாத்தா வயல் நடுவே நடந்து கிட்டிருந்தப்பொ மகளெப் பாக்கணும்னு என்னவோ தோணிச்சாம். உடனெ துண்டெ உதறி தோள் மேலெ போட்டுட்டு, தங்கப் பூண் போட்ட கைத்தடியெக் கையிலெ வீசிக்கிட்டே மருமகன் ஊருக்குப் புறப் பட்டாரு.
வீட்டு முன்னாலெ போற்துக் குள்ளே நல்லா இருட்டிட்டுது. மருமகன் கச்சேரி அறெயிலெ ஆப்த நண்பர்களோட அரட்டெ அடிச்சிட் டிருந்தாரு. தெரு வாசல்லே நின்னுட் டிருக்கற மாமனாரெப் பாத்தும்கூட ஒரு வார்த்தெ பேசல்லெ. தாத்தாக்குத் தலெ மேலெ அடிச்சா மாதிரி அவமான மாயிட்டுது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு மருமகனெப் பேரு சொல்லிக் கூப்ட்டாரு. அவரு வெளியே வராமலே-- 'யார் நீ?'ன்னு கேட்டாராம். தாத்தாக்கு ஆத்தரம் பொங்கி வந்தது. 'என்னெத் தெரியாத மாதிரி நடிக்கிறியே? நான்தான் அக்ரகாரம் ராமய்யா.'
'ஓஹோ! அக்ரகாரத்திலெ உன்னெப் போல ராமய்யாங்க லட்சம் பேரு இருக்காங்களே! எல்லாரெயும் எனக்குத் தெரிஞ் சிருக்கணுங்கறியா?'ன்னு சொல்லிட்டு சிநேகிதங்களோட சேந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாராம். தாத்தாக்குக் கோவம் கரைபுரண்டது. உறுமிக்கொண்டு தங்கக்கைத்தடியெச் சுத்தத் தொடங் கற்துக்குள்ளே சம்பந்தி அம்மா தெரு வாசப்படியிலெ எட்டிப் பாத்து 'யாரய்யா நீ?'ன்னு கேட்டாங்க. தாத்தா கொஞ்சம் சாந்தம் வந்து 'நான்தாம்மா தங்கச்சி! லட்சுமியோட அப்பா.'
'எந்த லட்சுமி?'
பேரதிர்ச்சி யடைஞ்ச தாத்தா மறு வினாடி சட்டுன்னு திரும்பிட்டார். தாத்தாக்குத் தீராத அவமானமா இருந்தது. அன்னெயிலே யிருந்து அந்த வீட்டு வாசப்படியெ மறுபடி மெதிக்கலெ. பாட்டியெக்கூடப் போகக்கூடாதுன்னு நிறுத்திட்டார்.மக செத்துப் போயிட்டான்னு நெனெச்சிட்டு, அந்த வீட்டுப் பேச்சே எடுக்க வேணாம்னு உத்தரவு போட்டார். பாட்டி தாரெ தாரெயாக் கண்ணீர் வடிச்சாங்க. தாத்தா கால்லெ விழுந்து வேண்டிக்கிட்டாங்க.கருணெ யுள்ளங் கொண்ட தாத்தா கண்ணு தொடச்சிக்கிட்டு பாட்டிக்கு ஆறுதல் சொன்னார். பண்டிகெக்கி மகளெயும் மருமகனெயும் அழெச்சிட்டு வரச் சொல்லி அனுப்பிச்சார். ஆனா மருமகன் இரக்கம் இல்லாமெ வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி உக்காந்துட்டார். ' என் பேச்செத் தட்டாதே பாபு! உன் அம்மாவெப் போல நான். பண்டிகெ நாளு எங்க வீட்லே எலெ முன்னாலெ உக்காந்து எழுந்திருச்சா, என் வயிறு நிறெஞ்ச மாதிரி இருக்கும்பா!' பாட்டி மருமகனெக் கெஞ்சிகிட்டிருந்தா. சம்பந்தி அம்மா எரிஞ்சி விழுந்து-- 'பண்டிகெ நாளு உன் வீட்லெ எதுக்கு எலெ போடணும்?* அந்த அளவு சாப்பாடு நாங்க சாப்பட்ற தில்லை? பெத்த தாய்ப் பாசத்தெக் கொட்டி அழறியா? இல்லெ தட்சணெ காணிக்கெ ஏதாவது வெக்கப் போறியா?'ன்னு கேட்டாளாம்.
அந்த அம்மாவோட குறிப்பெப் புரிஞ்சிகிட்ட பாட்டி ஏதோ தட்சணெ கொடுக்கறேன்னு சொல்லி வாக்கு குடுத்து மருமகனெ அழெச் சிட்டு வந்தா. பண்டிகெ நாள் மருமகளெயும் மகளெயும் சேத்து வெக்கற்துக்கே இந்த முயற்சியெல்லாம்-- ஆனா மாமா விருந்து சாப்ட்டுட்டு வெத்தலெ பாக்கோட இருந்த ரூபாங்களெ ஜேபியிலெ போட்டுக்கிட்டு புறப்பட்டுப் போயிட்டாராம். பாட்டி துக்கப்பட்டுக்கிட் டிருந்தா அத்தெ ஆறுதல் சொன்னாங்களாம். 'அம்மா! ஏன் அவ்வளவு வேதனெ படற? நமக்குப் புராணக் கதெங்க தெரிஞ்சதுதானே? சீதா தேவியெ விலக்கி வெச்ச ஸ்ரீ ராமச்சந்திரன் மறுபடியும் ஏத்துக்கலியா? காட்லே தமயந்தியெ விட்டுப் போன நளச் சக்கரவர்த்தி மறுபடியும் சேந்துக்கலியா? சாவித்ரியெத் தனிய விட்டுட்டு செத்துப்போன சத்தியவான் மறு படியும் உயிரோட வரல்லியா? கஷ்டப்பட்டவங்கெல்லாம் ஒண்ணுசேந்து சுகப்படலியா? தர்மத்துக்குத் தோல்வி வந்ததுன்னு எங்கேயாவது கேட்டிருக்கறமா? ஏம்மா, எல்லாம் தெரிஞ் சிருந்தும் வேதனெ படறே?'
அத்தெ அதே தைரியத்தோட எதிர்காலத்து மேலெ ஏதோ நம்பிக்கையோட நாலு வருஷம் குடுத்தனம் பண்ணாங்க. அந்தக் காலத்தலெ ஊர்லெ அத்தெயின் பொறுமெ, நல்ல குணங்க, அழகு இதையெல்லாம் புகழாதவங்களே கிடையாது.
மாமாவின் பிரியத்துக்குப் பாத்திரமான மோகனாங்கிக்கு அத்தெயின் அழகெ நேரிலே பாக்கணும்னும், அவங்க நல் குணத்தெப் பரிட்செ பண்ணனும்னும் எண்ணம் வந்தது. மாமாவெ வம்புக் கிழுத்தா. ' உங்க அதிகாரம், உங்க படாடோபம், எல்லாம் எங்கிட்டெதான் நடக்கும்.! உங்க பெண்டாட்டி முன்னாலே என்னோட சேந்து நீங்க நிக்க முடிஞ்சா உங்க பெருமெ தெரியும், நடக்குமா?' ன்னு பரிகாசம் பண்ணிகிட்டெ தூண்டிவிட்டாளாம். அப்பொ மாமா மோகனாங்கியெ ஓரக் கண்ணாலே பாத்துகிட்டே ரொம்ப லேசா, கர்வத்தோட சிரிச்சிருப்பாரோ என்னமோ!
அந்த மறுநாளே மாமா மோகனாங்கியெ, பிரயாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி வீசட்டுக்குக் கூட்டி வந்தார். பல்லக்கெ விட்டு இறங்கன உடனெ அத்தெ கையாலெ மோகனாங்கி காலெக் கழுவ வெச்சாரு. அது அபூர்வமான விஷயம்! சாமான்யமான பெண் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத விஷயம்! ஆனா அத்தெ அந்த வேலை யெப் புன்சிரிப்போட செஞ்சாங்க! மோகனாங்கி பாதத்திலே யிருந்து ஈரத்தெ ஒத்தி எடுத்தாங்க! கையெப் புடிச்சி அழெச்சிட்டுப் போய் கட்டில் மேலெ உக்கார வெச்சாங்க! விதவிதமான பலகாரத்தட்டுங்க, பால் கிளாசுங்க எடுத்துக் குடுத்து வேலெக்காரி மாதிரி பக்கத்தலெ நின்னாங்க! மோகனாங்கி கடிச்சதெ மாமாதிங்கற்து, மாமா குடிச்ச மிச்சத்தெ மோகனாங்கி குடிக்கற்து, ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிக்கிட்டு, எச்செ கலந்துகிட்டு, சரச சல்லாபங்க பண்ணிக்கிட்டிருந்தா, அத்தெயின் முகத்தலெ ஒரு கவலெக் கோடாவது, கோவத்தின் அறிகுறியாவது, பிடிக்காததெப் பாக்கற உணர்ச்சியாவது கொஞ்சம்கூடத் தெரியவே யில்லே! அத்தெயெ ஓரக் கண்ணால் பாத்துகிட்டு ஒவ்வொரு நிமிஷமும் விஷப் பரிட்சை பண்ணிட்டிருந்த மோகனாங்கி அதிர்ச்சி யடைஞ்சா. மடிசாரெ வெச்சி கட்ன புடவெயோட, ரொம்ப அழகான சிரிச்ச முகத்தோட இந்த உலக விஷயங்களுக்கு மிகத் தொலைவாக நிற்கும் அத்தெயின் முன்னாலெ, மோகனாங்கி வெக்கப்பட்டுத் தலை குனிஞ்சா. தன்னெ ஒரு உலகப் பேரழகின்னு கர்வப் பட்டுட்டிருந்த மோகனாங்கி மானபங்கப்பட்டுத் தோத்துப் போயிட்டா. போவதற்கு முன்னாலெ அத்தெயின் வாழ்த்துக்களோட முழுசா மாறிப்போயிட்டா. துக்கம் நிறெஞ்ச இதயத்தோட மோகனாங்கி கையெடுத்து அத்தெய வணங்கிட்டுத் தன் வீட்டுக்குப் போயிட்டா. அன்னக்கே மோகனாங்கி காதலன் வர்றதெ வெறுத்துட்டா. அதோட மாறிய மனசோட குருடனுக்கு அறிவு விளக்கு காட்ட முயற்சி பண்ணினா. 'சுவாமி! சாட்சாத் லட்சுமி தேவிக்குப் புருஷனா யிருக்கும் நீங்க என் வீட்டு வாசப்படி ஏறி வர்றது தீராத அபசாரம். இனி என்னாலெ சகிச்சிக்க முடியாது. ரதி தேவியெ மனெவியா வீட்லெ வெச்சிக்கிட்டு, மேலுக்கு அலங்காரத்தோட கண்ணாடித் துண்டு அழகோட, மிக மட்டமான நிலெயிலெ வாழும் எங்க மேலெ வெச்சிருக்கும் இந்த வெறிக்கு அர்த்தமென்ன? அவங்க அழகு, அவங்க நல்ல குணம் என்னெக்கும் சாசுவத மில்லியா? நீங்க நாடித் தேடிவரும் இந்த உருவம் எந்த நிமிஷத்தலெஅழிஞ்சி போவுமோ, இந்த இனமெ எந்த நேரத்தலெ மறெஞ்சி போவுமோ யோசனெ பண்ணீங்களா? நடந்ததுக்கு வருத்தப் பட்டுப் பயனில்லெ. இனிமே அந்தப் பெண் தெய்வத்துக்கு அநியாயம் நடக்கக் கூடாது. நான் விபசாரி யானாலும் எனக்கு ஆத்ம திருப்தி வேணும். இனிமே என் வாழ்க் கையிலே அடியெடுத்து வெக்கக்கூடாது நீங்க. உங்களுக்கு ஞானோதயம் வந்து உங்க குத்தத்தெ உணர முடிஞ்சா, அந்தத் தேவதெ இந்தத் துர்ப்பாக்கியசாலியெ மன்னிக்க முடிஞ்சா ...' மோகனாங்கி தாரெ தாரெயாக் கண்ணீர் வடிச்சா. மாமா அதிர்ச்சி யடைந்து 'மோகினீ!'ன்னு கதறிகிட்டு கிட்டே போனா. அந்தம்மா சரசரன்னு படுக்கை அறெக்குள்ளே போய் கதவெ அடெச்சிக்கிட்டா. அப்புறம் மாமாவுக்காக அந்தக் கதவுங்க திறக்கவே யில்லெ. மாமா மனோவியாதியிலெ படுக்கையிலெ விழுந்தார். ஒரேயடியாப் புலம்பற்து, துக்கப்பட்றது, பைத்தியம் பிடிச்ச மாதிரி எழுந்து திரியறது முதலான லட்சணங்க வரவர அதிகமாயிட்டுது. மருந்துங்க ஒண்ணும் பலன் தரல்லெ.
மாமாவின் வேதனெ அத்தெக்குத் தெரியும். தானாகவே மோகனாங்கியின் வீட்டுக்குப் புறப்பட்டாங்க. ஆனா மோகனாங்கி அடுத்த நாள் ராத்ரியே ஊரெ விட்டுப் போயிட்டா. அத்தெ ஏமாற்றத்தோட திரும்பி வந்தாங்க. இனி மாமாவின் மனோவியாதிக்கு மருந்தில்லெ, வைத்தியமில்லெ. நாட்கள் போயிட் டிருந்தது. நிலெமெ ரொம்ப மோசமாயிட் டிருந்தது. தூக்கமும் சாப்பாடும் இல்லாமெ அத்தெ செஞ்ச சேவெ வீணாப் போயிட் டிருந்தது. மாமா யமன் முகத்தலெ, சாவின் வாசப்படியிலெ நினெவில்லாமெ விழுந்து கிடந்தாரு. சோக தேவதெ போல உக்காந் திருந்த அத்தெ என்னவோ திடீர்னு நினெவு வந்தாப்பொல எழுந்தாங்க. கடவுளெ தியானம் பண்ணிக்கிட்டெ மாமாவின் படுக்கெ சுத்திப் பிரதட்சணம் பண்ணாங்க. " பிரபோ! ஸ்ரீ ராமா! என் ஆயுசெ என் புருஷனுக்குக் கொடுத்துட்டு இந்த ஏழெயெ உன் கிட்டெ அழெச்சுக்கோ அப்பா! சுமங்கலியா இந்த ஜன்மத்துக்கு முடிவு வரணும் ராமா! இதுதான் என் கோரிக்கெ! ன்னு பிரார்த்தனெ பண்ணிக்கிட்டாங்க.
பக்தர்களெ வேற விதத்தலெ சந்தோஷப் படுத்த முடியாம தன்கிட்டெ அழெச்சுக்கத் தயாரா இருக்கறார் போல இருக்குது அந்தக் கடவுள்! புனிதத்தின் உருவமான அத்தெயோட பிரார்த்தனெ பலிச்சிது. மாமாக்கு உடம்பு குணமாச்சி. அத்தெ நோயிலெ விழுந்தாங்க. அப்பொ பாட்டி நிறெஞ்ச கர்பத்தோட இருந்தாங்க. மகளோட நோய் சங்கதி தெரிஞ்சி தாங்க முடியாத துக்கத்தோட வந்தாங்க. வைத்தியம் பண்ணலாம்னு போனா அத்தெ தடுத்துட்டாங்க. ' அம்மா! என் புருஷன் ஆரோக்கியத்துக்காக என் பிராணனெ தானம் பண்ணிட்டேன். இந்த வேண்டுதல் நிறெவேறாமெ நான் உயிரோ டிருக்கணும்னு நினெச்சா அது பெரிய குத்த மில்லியா? என்னெ மறந்துடு அம்மா! நான் கடவுள் கிட்டெ போறேம்மா!' அத்தெயின் நோய் தீவிரமான நாளே தாத்தா கோபத்தெ மறந்து பிடிவாதத்தெ விட்டு, மருமகன் வீட்லெ கால்வெச்சாரு. அத்தெயின் மறுப்புக் கெதிரா வைத்தியம் பாத்தார்.
இன்னொரு துர்ப்பாக்கியம்!அத்தெ தூரமானா. உடம்பு மேலெ நெல்லு போட்டா பொறியற அந்தக் காய்ச்சல்லே மருமகளுக்குத் தலெக்கு ஊத்தி ஆகணும்னு பலவந்தப் படுத்தினா மாமியார். மனித உருவத்து ராட்சசி! நன்றி மறந்த ஜன்மம்! பாட்டி எவ்வளவு அழுதும் காதுலெ போட்டுக்கலெ. ஆசாரத்துக்கு எதிரான வேலெங்க ஒண்ணுகூட தன் வீட்லெ நடக்க கூடாதுன்னு சொன்னா. தாத்தா சட்டுன்னு எழுந்து வண்டி தயார் பண்றதுக்கு வெளியே போனாரு. அதுக்குள்ளே அந்த ராட்சசி பெரிய பாத்தரத்தலெ தண்ணி கொண்டுவந்து மருமக மேலெ ஊத்திட்டா.
அன்னக்கி ராத்ரி அத்தெக்கு நினெவு தப்ப்பிட்டது. சூரியன் உதயமானான். அத்தெ மறெஞ்சி போயிட்டாங்க. அழகுராணி, தாய்மெயின் உருவம், சுமங்கலியா உயிரெ விட்டுட்டா. நிறெஞ்ச கர்ப்பிணியான பாட்டி அந்தத் தாய்மெச் சோகத்தெ எப்படித் தாங்கிக்கிட்டாங்களோ, ஏன் புழெச்சி இருந்தாங்களோ அவங்களுக்கே புரியல்லெ.
இன்னொரு விசித்ரம்! அத்தெயின் உடம்பு நெருப்பிலெ கலந்து மாயமாய்ப் போயிட்ட அதே நேரத்தலெ பாட்டி குழந்தெ பெத்தாங்க, வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு ஒரே ஒரு ஆண்பிள்ளெ! என்ன உலகம்! எத்தனெ விசித்ரங்களெப் படெச்சு விடுது!
அப்பப்பொ கடவுள் மனுஷங்களெ பொம்மெங்களா வெச்சிகிட்டு விளையாடுவார் போல இருக்குது!
ஒரு குழந்தெ சாவு! இன்னொரு குழந்தெ பிறப்பு! அந்தத் தாயின் இதயம் துக்கப்படுமா? சந்தோஷப் படுமா? உணர்ச்சிங்க எப்படி இருக்கும்? பாட்டிகூட சரியா பதில் சொல்ல முடியாமெ போயிட்டாங்க. அந்தப் பச்செக் குழந்தெதான் எங்கப்பா!
அப்பா பெரியவராகி அவருக்கு நான் பொறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகு, பாட்டி எனக்கு இந்தக் கதெயெச் சொல்லிட்டிருந்தா. அந்த உணர்ச்சிங்களெ எப்படி வர்ணிப்பேன்?"
* * *
பானு நிறுத்தினாள். நான் அழுத்தமாகப் பெருமூச்சு விட்டேன். "எவ்வளவு விசித்ரமான கதெ சொன்னே பானு! அத்தெயெப் பேல நீ இருக்கறேன்னு சொன்னாங்களா பாட்டி?"
"ஆமாம்! ஒரு உருவத்திலெ மட்டுமில்லெ. தலை எழுத்திலே கூட இருக்கறேன்னு இப்பொ தோணுது. அத்தெயின் சரித்ரத்தெக் கேட்டு அப்பொ நான் என்ன நினெச்சேன் தெரியுமா? அத்தெக்கு எவ்வளவு அழகு இருந்தாலும், எத்தனெ நல்ல குணங்க இருந்தாலும் புருஷனெக் காலெவிட்டு நகராம வெச்சிக்க கூடிய அறிவாற்றல் இல்லியோ, அதுக்கு வேண்டிய சாமர்த்தியம் பத்தாதோ, அத்தெயின் அப்பாவித்தனமே அவங்களெ பலி வாங்கிட்டதோன்னும், அத்தெயின் இடத்தலெ நானே இருந்தா அந்த மாதிரி கஷ்டங்களுக்கு ஆளாக மாட்டேன்னும்... அண்ணா! இப்பொ நினெச்சா எனக்குச் சிரிப்பு வருது. என் தீர்மானங்களுக்குப் பின்னாலே எத்தனெ உண்மெங்க மறெஞ் சிருக்குதோன்னு அப்பொ எனக்கு யாராவது சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டேனோ என்னவோ!
அன்னக்கி - கல்யாணத்துக்கு முன்னே----என் எண்ணங்க என்னவோ கேக்கறியா? அந்த நாளுங்க வேறு அந்த மனுஷங்க வேறு. அந்தக் காலப் பெண்ணுக்கு மனெவியாகவும், மருமகளாகவும் எந்த விதமான இடமு மில்லே. பெத்த பொண்ணு மாமியார் வீட்லெ நரகம் அனுபவிச்சிக்கிட் டிருந்தா தாய் தகப்பங்க கண்ணு வெச்சிக்கிட்டுப் பாக்கற்து தவற ஒண்ணும் செய்ய முடியாது. சமூக விதிகளெ மீறக்கூடிய தைரியமில்லாதவர்கள்.
ஆனா இன்னக்கி அத்தெ மறுபடியும் பிறந்தா அவ்வளவு அநியாயமா பலியாக வேண்டிய அவசியம் வராது. இந்தக் கால ஆண் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்!
கருணெ நிறெஞ்சவன்! நியாயமானவன்! பெண்ணின் மதிப்பெ உணா்நதவன். பெண்ணெப் புரிஞ்சிகிட்டான். பெண்ணெ கௌரவிப்பாள். அவளெ நேசிப்பான். ஆதரிப்பான். போற்றுவான். கொஞ்ச கொஞ்சமாப் பெண் எல்லா விதத்திலும் ஆணின் இடத்தெ எட்டிப் பிடிக்க முடியும். அந்த வாய்ப்பெ ஆணே உண்டாக்கித் தருவான். அந்த மாதிரி ஆண் பெண்களுக் கிடையே கலகங்களுக்கும், வெறுப்புக்களுக்கும் இடமே இல்லே. படிப்பாளிகளாகி அறிவு நிறெஞ்சுள்ள இந்தக் கால மனிதா்கள் பழங்கால மனுஷங்க மாதிரி பத்தாம் பசலிங்களா, அநாகரிகமா வாழ்க்கெயெ நடத்துவாங்கன்னு நினெச்சா வெக்கக்கேடு.
அத்தெக்கும் எனக்கும் அளவில்லாத வேறுபாடு இருக்குது. அத்தெ அடைய முடியாத நன்மெங்களெ நான் அடைய முடியும். அத்தெ கட்டிக் காக்க முடியாத புருஷனெ நான் கட்டிக் காக்க முடியும்.அத்தெ பெற முடியாத கௌரவ மரியாதெங்களெ நான் பெற முடியும். அத்தெ எட்ட முடியாத சுவா்க்க லோகத்தெ நான் எட்ட முடியும். இந்தச் சிறப்பு, இந்த நல்ல நிலெமெ, இந்த மாற்றம் எல்லாத்தெயும் அத்தெ பாத்தா...? இன்னும் என்எனன்ன நினெச்சேன்!
அண்ணா! இந்த விநாடி என் தலெ வெக்கத்தாலெ தாழ்ந்து போகலியே, ஏன்? இந்த மனசு உடெஞ்சி சுக்கு நூறாகலியே, ஏன்?
நான் நினெச்ச தெல்லாம் நினெப்பு... பொய்! அன்னக்கும் இன்னக்கும் எந்த வகையான மாறுதலும் ஏற் படல்லெ. பெண்ணின் வாழ்க்கெயிலே நன்மெ ஒண்ணும் தலெ காட்டலெ, பெண்ணுக்கு இநதச் சமநிலெ, இந்த உரிமெங்க, இந்தச் சட்டங்க எதுவுமே இல்லே! மோசம்! எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! சொற்பொழிவுங்களுக்குத்தான் சரி! காகிதத்துக்குத்தான் அர்ப் பணம்! நடெமுறையிலெ, உண்மெ வாழ்க்கெக்கு இல்லெ. நானு அத்தெயெவிட ஒரு அங்குலம் கூட முன்னேறலே."
பானு சற்று நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினாள். " மாமா தாசி வீடுங்க பக்கம் திரிஞ்சிட்டிருந்தா அத்தெ அறிவாற்றல் இல்லாம சும்மா இருந்தான்னும், சித்தப்பா சீட்டாட்டத்திலெயே மூழ்கியிருந்தா சித்தி வெக்க மில்லாமெ பொறுத்துகிகிட்டிருந்தான்னும், புருஷன் ஓட்டல்லெ குடுத்தனம் வெச்சா மனெவி அன்பில்லாமெ விட்டுட்டான்னும், அந்தக் கால மனெவிங்களே புருஷங்களெக் கெடுத்தாங்கன்னும், கெட்ட பழக்கங்களுக்கு இன்னும் தூண்டிவிட்டாங்கன்னும்-- மன்னிப்பு, சகிப்புத் தன்மெ, பதிவிரதெத் தனமெ என்ற பேரிலே அர்த்த மில்லாத நிலெமெங்களெ அனுபவிச்சாங்கன்னும் எவ்வளவு நினெச்சேன் தெரியுமா!
அப்படி அவங்க ஏன் செய்தாங்களோ, செய்யாமப் போனா வழி என்னங்கற்தெ ஒரு தடவெயாவது யோசிச்சேனா? பெண்ணுக்கு எத்தனெ ஆசெங்க இருந்தாலும், எத்தனெக் குறிக்கோளுங்க இருந்தாலும், எவ்வளவு தன்மான மிருந்தாலும், அழுத்தமான மனுஷத் தன்மெ இருந்தாலும், மிகக் கீழான நிலெயிலே நிக்க வேண்டிய காலம் எப்பவோ ஒரு முறெ வந்தே தீரும். உலகத்தாலெ கௌரவிக்கப்பட்ற பெண் புருஷனுக்குப் புல்லெவிட மட்டமா தெரிவா."
பானு மிகவும் அழுத்தமான முடிவுகளுக்கு வந்து விட்டாள். பானுவின் சிந்தனைகள் எனக்குச் சரியென்று பட வில்லை. " பானூ! நான் ஒரு ஆணாகப் பேசறேன். உன் குடுத்தனம் பல குடுத்தனங்களை விடச் சீரழிஞ்சிட்டுது. உன் புருஷனிடத்திலெ தப்புங்க இருக்குது. அது உனக்கு அளவில்லாத வேதனெயெக் குடுக்குது. ஆனா தனிப்பட்ட உன் அனுபவத்தெ வெச்சி ஆண் வர்க்கத்தின் மேலேயே ஒரு வெறுப்பெ வளத்துக்காதே. வர்க்கத்துக் கெல்லாம் ஒரே குறைதான்னு முடிவு கட்டிடாதே. நீ விரும்பன பெருந்தன்மெ நூத்துக்கு நூறு பங்கு இல்லேன்னாலும் பெருமளவுக்கு இருக்குதுங்கற்து நிஜம்! அதுக்கு உதாரணம் உனக்கு இத்தனெ விஷயங்க அர்த்தமாவுது என்பதே! அண்ணன் ஆனாலும் என்னிடம்----ஒரு ஆணிடம் நீ விவாதிக்க முடிஞ்சிதே அதுவே----முன் காலத்தலெ பெண் இவ்வளவு விஷயங்களெப் பேச முடிஞ்சிதா?
நீ சொன்னபடி இன்னும் முழுசா மாத்தரம் நம்ம மனசுங்க விரியல்லெ. பானூ! சில நூறு வருஷமா பாய்ஞ்சிகிட் டிருக்கற. இந்தப் பழமெயிலெ ஊற்ன ரத்தம் எப்பொ வத்திப் போவும்? அதுக்குக் கொஞ்சம் தலெமுறெங்க போவணும். முன்னேறும் ஆர்வ முள்ள பெண் வேகமா மாறிட்டு வர்றா. அதே வேகத்தலெ அதிகாரத்தெக் கைவிடவேண்டிய ஆண் மாற முடியாமெ இருக்கறான். அதனாலேதான் இந்த மானசீகப் போராட்டம்!"
"அண்ணா கோவத்தலெ கொஞ்சம் அதிகப்படுத்திப் பேசிட்டே. இருக்கட்டும். நியாயத்தெ ஏத்துக்கற்துக்கு ஆண் ஏன் இவ்வளவு முரட்டுத் தனமா தயங்கறான்? கல்யாணம் என்ற நிகழ்ச்சிக்கு அர்த்தம் என்னன்னு சொல்றே? இந்தப் படைப்பை அடுத்த தலெமுறெங்களுக்கு வளத்துட்டு தங்க இடத்தலெ சில உயிருங்களெ இந்த உகத்துக்கு ஒப்படெச்சிட்டு உதிந்துபோற புனிதமான வெற்றிக்குத்தானா கல்யாணம்? இந்த இயற்கெயின் தர்ம நிர்வாகத்தில் ஆண் பெண் வேறுபாட் டெண்ணங்க இல்லாம வாழ்க்கெ நடக்காதா? கல்யாணத்தோட பெண் புருஷனுக்கு விக்கப்பட்றாளா? ஒரு மனுஷன் மேலெ இன்னொரு மனுஷனுக்கு எல்லா அதிகாரமும் செலுத்த உரிமை கிடைக்கிறதா?
புருஷன் ஒரு பெண்ணெச் சம்பாதிச்சிக்கிட்டோம்னு கர்வப் பட்றதலெ, பெருமெப் பட்றதலெ அர்த்தம் இருக்குதா? இந்தச் சிந்தனெங்கதான் என்னெப் பாதிக்குது. மன நிம்மதியெ விரட்டிவிடுது.
நான் எப்போதும் சிந்திக்கக் கூடாது. துக்கப்படக் கூடாது. எனக்குச் சந்தோஷம் வேணும். ஏராளமான, அளவில்லாத சந்தோஷம் வேணும்!...எப்படி?
எனக்குத் தெரியும்! என்னிடத்தலெ மாறுதல் உண்டாற நாள். நான் நானாக இல்லாமல் போகும் நாள் சந்தோஷமா, சுகமா இருக்க முடியும். நான் ஒரு மனுஷி எங்கற்தெ முழுசா மறந்துபோகக் கூடிய நாள். பெண் மேல் நல்லெண்ணமே இல்லாத புருஷனோடு வாழக்கூடிய நாள், புருஷனின் ஆதரவு இல்லாமெ பெண்ணுக்கு வாழ்க்கெ இல்லேன்னு நம்பக் கூடிய நாள். சாப்பாட்டை விடத் தன்மானம் பெரிசில்லேன்னு மனசெக் கொண்ணுக்கற நாள் --- அன்னக்கி ஒரு கவலெயும் இல்லெ. எல்லாம் சுகம் தான்! எல்லாம் சந்தோஷமே! ஆனா என்னிடத்தில் அந்த மாறுதல் வரும்னு சொல்றியா? வரணும்னு சொல்றியா?" பானுவின் கண்களி லிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நான் வியப்போடு பானுவின் வேதனையைப் பார்த்துக்கொண் டிருந்தேன். பானுவின் பேச்சிலே ஆவேசம் கரை அறுத்துக்கொண்டு வந்தது. பானு அனுபவிக்கும் மன வேதனை எல்லை மீறிக் கொண்டிருந்தது.
" பானூ! உன் கேள்விங்களுக்குச் சமாதானம் ஒண்ணும் எனக்குத் தோணல்லே. சொல்லணும்னு நினெச்சாலும் இப்பொ ஆணாக யிருக்கும் எனக்கு அந்த அருகதெ இல்லெ."
" இனி நான் எதெப் பத்தியும் பேச மாட்டேன், இருந்தாலும் எனக்கு ஒரு ஆசெ இருக்குது. என் மகன் வளந்து பெரியவனாகி முன்னுக்கு வரணும்.இலட்சியங்க நிறெஞ்ச மனிதனா விளங்கணும். ஆண்உலகத்தல, இருட்டுச் சமூகத்தலெ மாணிக்கமா ஒளி வீசணும். அநியாயத்தெப் பாத்தா சகிக்கமுடியாத, அக்ரமத்தெப் பாத்தா ஆவேசப்படும், துர்ப்பாக்கியசாலிங்களெப் பாத்தா கண்ணீர் விடும் புனிதமான மனிதனாகணும். அந்த நாள்----அந்தநாள் எப்பொ வரும்? சொல் அண்ணா!"
"வரும் பானூ! தவறாமெ வரும். உன்னெப் போல நல்ல தாயின் வளப்புலெ உன் மகன் உதயன் முழு மனிதனாக உருவாவது நிச்சயம்."
பானு வேதனையுடன் சிரித்தாள். "ஆனா...அண்ணா! என்னக்காவது அந்த வளப்புலெ குறை வந்தா...?"
"பானூ! என்ன அப்படிப்பேசறே?"
"ஏன் அண்ணா அவ்வளவு பயம்? நீதான் இருக்கறியே? என்னெ உனக்குத் தெரியும். என் ஆசெயும் உனக்குத் தெரியும்."
"பானூ! நீ இப்படிப் பேசற்து நல்லா இருக்குதா பானூ! அண்ணன் உனக்கு எந்தக் கஷ்டத்துக் கானாலும், எந்தச் சுகத்துக் கானாலும் தொணெ இருப்பான். அதுக்காக இவ்வளவு கடினமான கடமெயெ என் மேல சுமத்தறியா? அந்த நாள் எப்பவும் வராது. நீ ஒரு தாய். அந்தக் கடமெயெ நீதான் நிறைவேத்தணும். பானூ! உனக்கு ஏதாவது நடந்தா அண்ணன் என்ன ஆவானோ யோசனெ பண்ணு----கண்ணீருக்கும் கொஞ்சம் மதிப்பு குடுத்து நீ உயிரோட இருக்கணும். யாருக்காகவும் இல்லே, உனக்காகவும் இல்லே, உன் குழந்தெக்காக! நீ விரும்பும் முன்னேற்றத்துக்காக! உன்னெப் போலவங்க எல்லாத்தெயும் பொறுத்துக்கிட்டு உயிரோடு இருந்து சில குழந்தெங்களெ வளத்தாத்தானே என்னக்காவது இந்த அநியாயம் மறெஞ்சி போகும்? இதுவே உன் குறிக்கோளா வெச்சுக்கோ பானூ! எப்பவும் இப்படிப் பைத்தியக்காரத் தனமா நினெக்காதே."
"இல்லே அண்ணா! எவ்வளவு துக்க மானாலும் சகிச்சிக்கிட்டு என் பாபுவெ நான் என் கையாலே வளத்துப் பெரியவ னாக்கறேன்." என்று சொல்லி பானு மகன் முகத்தைக் கன்னத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
பானு எத்தகைய நிலைமை வந்தாலும்உயிரோடு இருப்பாள். மகன்மேல் பானுவுக்குச் சொல்ல முடியாத பாசம்! ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு குழந்தையிடம் அவ்வளவு ஆழ்ந்த அன்பு செலுத்துவாள் என்பது உண்மை யல்லாமல் இருக்கலாம்----பானு மகனைத் தாய் இதயத்தோடு மட்டுமல்ல, வரப்போகும் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டு நடத்தி வைக்கும் ஓர் இலட்சிய மனிதனை உருவாக்க வேண்டும் என்னும் பெண் இதயத்தோடு சிறப்பாக விரும்புகிறாள். அவ்வளவு பெரிய உறுதியை உண்டாக்கிக்கொண்ட பானு என்றைக்கும் எந்தத் தவறான வேலையும் செய்யமாட்டாள்.அதுதான் என் நம்பிக்கை!
ஒரு வகையில் சிந்தித்தால் பானு மனநோய்க்கு ஆளாகி இருக்கிறாள் என்பது புலனாகிறது. ஒரே கோணத்தில் சிந்தனை செய்கிறாள். நூற்றுக்கு நூறு பங்கு நியாயம் ----அநியாயம்- இரண்டே இருக்கவேண்டும் என்கிறாள். ஆனால் அந்தச் சிந்தனைகள் சிதறிப்போனால், அந்த முடிவுகள் வீணாகிவிட்டால், மனமுடைந்து போவாள். தைரியத்தை இழந்து விடுவாள். தீவிரமான கருத்துகளை உருவாக்கிக் கொள்வாள். சூழ்நிலைகள் எதிர்ப்பானால் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது பலவீனம் அல்லவா? இல்லை என்கிறாள். மனிதத் தன்மை உறுதியாக இருக்கவேண்டும். எத்தகைய சூழ்நிலைகளும் வரட்டும்...மனிதத் தன்மைக்கு குறைவு வந்தால் அனுபவித்துக்கொண்டு வாழக்கூடாது. அத்துடன் முடிவு தேடிக் கொண்டு மனிதத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பானு சூழ்நிலைகளுக்குத் தலை குனிய முடியாத துர்ப்பாக்கியசாலி! பானு எனக்கு ஒரு பிரச்சனை ஆகி விட்டாள். அது எப்படித் தீர்வடையப் போகிறதோ, என் சிந்தனைக்கு ஒன்றும் எட்டுவதாக இல்லை. ஏதோ சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு முறை தோன்றியது, பானுவுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்காத அந்தக் குடும்பத்திலிருந்து கொண்டுவந்து ஏதாவது ஒரு துறைப் பயிற்சியைக் கற்றுக்கொள்ளச் செய்தால்? எங்கேயாவது வேலையில் சேர்த்தால்? மாறாத மனிதருக்காக எவ்வளவு காலம் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வது?
இன்னும் நான்கு மாதங்கள் பொறுமையாக இருந்தால் என் படிப்பு முடிவடையும். வேலை கிடைக்கும். அப்பொழுது பானு எதற்கு விருப்பம் தெரிவிக்கிறாளோ அதைச் செய்யமுடியும். அந்த எண்ணம் எனக்கு மிகவும் மன அமைதியைக் கொடுத்தது.
****************
பானுவைப்பார்த்து ஒரு மாதகாலம் கடந்துவிட்டது. எத்தனையோ முறை போகலா மென்று புறப்பட்டு நின்று விட்டேன். போவதற்கு மனம் வரவில்லை. போனால் புதிய செய்தி ஏதாவது கேட்கவேண்டும். இந்த ஒரு மாதத்தில் ஒன்றும் நடந்திருக்காது என்றால், பானுவின் குடும்ப வாழ்க்கை ஒரு மாதகாலம் அமைதியாக நடந்து வருகிறது என்றால், அது கதிரவன் மேற்கே உதிக்கும் அளவு உண்மை யாகும். இருந்தாலும் பானுவுக்குத் தூரமாக இருப்பதற்கு என்மனம் ஒப்புக்கொள்ளவில்லை. பானு மனம் நோவாள். பானுவிடம் இருக்கும் புத்தகள்களை நூல் நிலையத்தில் கொடுக்க வேண்டிய தேதியும் கடந்து விட்டது. குளிப்பதற்கென்று துண்டு சுற்றிக் கொண்டவன் மீண்டும் துணிகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன்.
" ஒரு மாசத்துக் கப்புறம் நினெப்பு வந்தது போல இருக்குது!" என்றாள் சிரித்துக்கொண்டே பானு.
" நிஜமா ஓய்வில்லெ பானூ! பரிட்செ கிட்ட வற்துல்லியா! மருமகன் நல்லா இருக்கானா? எங்கே போயிருக்கறான்?" என்றேன் உட்கார்ந்துகொண்டே.
"பக்கத்து வீட்லெ விளையாடிக்கிட்டிருக்கறான் போல இருக்குது !"
" என்ன, ஏதாவது விசேஷம் உண்டா? மாமா நல்லா இருக்கறாரா?"
" ரெண்டு பேரும் நல்லா இருக்கறோம். பேச்சே இல்லே."
" நல்லா இருக்குது. எப்பத்தலெ யிருந்து?" " கொஞ்ச நாள் முன்னாலெ அப்பா கடிதம் எழுதனாரு."
"என்ன செய்தி?"
" ஒரு பெரிய செய்தி பாட்டி பொழச்சி இருந்தப்பொ யாருக்கோ ஒரு ஆயிர ரூபா வட்டிக்குக் கொடுத்திருந்தாங்களாம்.* போற்துக்கு முன்னாலெ அதெ வசூல் பண்ணி எனக்குக் குடுக்கச் சொல்லி சொன்னாங்க. அப்பொ எனக்குத் தெரியும். நான் அஞ்சாம் பாரம் படிச்சிட்டிருந்தப்பொ பாட்டி போயிட்டாங்க. அப்பொ எனக்குப் பதினெஞ்சி வயசு இருக்கும். எனக்கு ஆயிர ரூபா எதுக்குன்னு நினெச்சேன். அக்காங்க மத்தவங்க எல்லாரும் ஒரே கலாட்டா பண்ணுவாங்க. அந்த விஷயத்தெ நான் முழுசா மறந்து போயிட்டேன். அப்பத்தலே யிருந்து இந்த எட்டு வருஷமா செல்லு வெச்சித் திருப்பி நோட்டுங்க எழுதிட்டே வந்தாராம் அந்த ஆளு. ஒரு வாரத்துக்கு முன்னே மொத்தப் பணத்தெயும் குடுத்துட்டாராம். வட்டியோட சேந்து ரெண்டாயிர ரூபா ஆச்சாம். என்ன செய்யச் சொல்றேன்னு அப்பா கேட்டு எழுதினார். இப்பொ என்கிட்டெ ரெண்டாயிர ரூபா இருக்குது. மாமா ரொம்ப ரொம்ப மாறிப் போயிட்டாரு."
"நிஜமாயா?"
"நிஜமாவோ, இல்லியோ எனக்கென்ன தெரியும்? அந்தக் கடிதம் பாத்ததும் அவர் நடவடிக்கைங்கள்ளெ ஒரு திருப்பம் வந்துட்டுது. செஞ்ச தப்புங்களெத் தெரிஞ்சிக்கிட்டாரு. வருத்தத்தோட 'தரித்திரம் புடிச்ச' சீட்டாட்டத்தெ விட்டுத் தொலெச்சாரு. முழுசா ஒரு வாரம் ராத்ரியும் பகலும் வீட்லேயே உக்காந்திருந்தாரு. அளவில்லாத சாந்தம், நல்ல குணம் கத்துக்கிட்டாரு நானியோட விளெயாடிக்கிட் டிருந்தாரு. இனி மாற்னது போதும்னு நினெச்சி ஒரு நாள் சாயங்காலம் மெதுவா என்னெக் கிட்டெ உக்கார வெச்சிக்;கிட்டு எவ்வளவு கனிவோட பேசனாரு தெியுமா! அது காதல் சரித்திரத்தலேயே ஒரு மிகப் புதுமையான கட்டம்! 'பானு! நான் முழுசும் மாறிட்டேன், நீ நம்பறியா?'ன்னு கேட்டார்.
'அந்த நம்பிக்கெ வர்றதுக்கு இந்த டைம் பத்தாதே!'
'பானு! நான் ஒரு அவசரக்கார மனுஷன்னு உனக்குத் தெரியாதா? என் தப்புங்களெ நீயே மன்னிக்கலேன்னா நான் என்ன ஆவற்து?'ன்னு தொடங்கி- 'நான் ஒரு விஷயம் சொல்றேன். என்னெத் தப்பா நினெச்சிக்காதே பானு? என் கஷ்ட சுகங்கள்ளெ நீயில்லேன்னா வேற யாரு பங்கெடுத்துக்கப் போறாங்க? இந்தக் குடும்பக் கடமெ உனக்கு மட்டும் இல்லியா? உண்மெயிலெ நான் கொஞ்சம் பணத்தெ வீணாச் செல வழிச்சிட்டேன்-நடந்த தென்னமோ நடந்துட்டுது. இப்பொ ஆயிரத்தி இரநூறு ரூபா கடன் இருக்குது. எப்படித் தீப்பேன் பானூ?"
"ஆயிரத்து இரநூரு?"
"நான் ஒண்ணும் அப்படி ஆச்சரியப் படலே. ஆயிரத்து இரநூறு தானா?ன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது. ஒரு குமாஸ்தா கிளப்பிலேயே குடுத்தனம் வெச்சிக்கிட்டா அருகதெ எங்கே யிருந்து வரும்னு நினெச்சே? இருந்தாலும் அவர் எத்தனெ ஊருங்க திரிஞ் சார்னு நினெக்கறே? தேவெ யில்லேன்னாலும் இண்டர் வீயூங்களுக்கு அப்ளிகேஷன் போட்றது---- அவங்க டி.ஏ. கொடுக்கறாங்கன்னு மேல ஒரு அம்பதோ, நூறோ கடன் வாங்கிட்டுப் புறப்பட்றது!
'ஏன் இப்படிக் கடன்வாங்கி ஊர்திரியணும்? இந்தக் கடன்களெத் தீக்கற சக்தி நமக்கு இருக்குதா?'ன்னு கேட்டா, 'இப்படி இல்லேன்னு ஜன்மத்தலெ வேற விதத்தலெ ஊருங்களெப் பாக்க முடியாது. கடன் தானாவே தீந்துபோயிடும்!'னு சொல்வார்.
அந்த ஊருங்க பாக்கணுங்கற ஆசெ எனக்கில்லே? உன் இஷ்டத்துக்கு நீ மட்டும் பாத்துக்கிட்டா என் கதி என்ன? பத்து ஊரு நீ மட்டும் சுத்திப் பாக்காம முக்கிய மான ரெண்டு மூணு இடங்களுக்கு ரெண்டு பேரும் சேந்து போகக் கூடாதா?
சிம்லாவிலெ இண்டர்வியூ வந்தப்பொ ரெண்டு நூறு கடன் வாங்கிட்டுப் புறப்பட்டாரு. உண்மெயிலே எனக்கும் காஷ்மீர் பாக்கணும்னு தோணிச்சி. தாஜ்மகாலெ வாழ்க்கெயிலே ஒரு தரமாவது பாக்கணும்னு சொல்றாங்க. குறெஞ்சது அந்த ஒரே ஓரிடத்துக் காவது என்னெக் கூட்டிட்டுப்போனா...என்னெ என் புருஷன் இல்லேன்னா வேற யாரு கூட்டிட்டுப் போய்க் காட்டுவாங்க? எனக்காகன்னெ புறப்படச் சொல்லலியே! எப்படியும் அவரு போறா ரில்லியான்னு கேட்டேன். அதுக்கென்ன பதில் வந்ததுன்னு சொல்ல வேண்டிய தேவெ யில்லே- ஆயிரத் திரநூறு கடனாச்சான்னு நீ ஆச்சரிய மடைஞ்சா அதுக்காகச் சொல்றேன்."
"சரி, என்னாச்சி? உன்னெப் பணம் கேட்டாரா?!"
"முழுசும் கேளு! 'எனக்கு ஒண்ணும் தோணல்லே பானூ! நினெச்சிக்கிட்டா இதயம் வெடிச்சிடும் போல இருக்குது. இந்தக் கவலெயிலெ என் உடம்புகூடத் கெட்டுப் போயிட்டுது. என்ன செய்யச் சொல்றே சொல்லு!' என்ன உலக அறிவு!
எவ்வளவு விசித்திரமான மாற்றம்! பணத்துக்காக மனிதன் எவ்வளவு ஈனமான நிலெக்கு இறங்கி விடுகிறான்! எவ்வளவு கீழ் மட்டத்துக்குப் போய்விடுகிறான்! எல்லாத்தையும் விட அடுத்த மனுஷனெ ஊதனா பறந்து போற புல்லுன்னு நினெக்கற்து இன்னும் விசித்திரம் இல்லியா?
'என்ன யோசிக்கிற? என்னெ என்ன செய்யச் சொல்றியோ சொல்லு பானூ!'
'அதெ என்னெக் கேக்க வேண்டிய தேவெ யில்லே. நீங்க கடன் பண்ணப்பொ எந்த ஒரு ரூபாய்க்கும் என் ஆலோசனெயெக் கேக்கலெ. அதெத் தீத்துக்கவேண்டிய நாள்ளேயும் என் உதவி தேவெ யில்லே.'
'அப்படிச் சொல்லாதே பானூ! இப்பொ எவ்வளவு வாதிச்சாலும் கடன் தீக்கணு மில்லியா! என் கிட்டெ இருக்குதா சொல்லு?'
'உங்க கிட்டெ காசு எப்பொ இருக்கப் போவுதுன்னு, எப்படித் தீக்க முடியும்னு கடன் வாங்கனீங்க?'
'அப்பொ அவ்வளவு யோசிக்க முடியாத பைத்தியக் காரனா இருந்தேன்.'
'அதிருக்கட்டும், வீட்லெ தாங்கிக்க முடியாத செலவுங்க என்ன இருக்குதுன்னு அவ்வளவு கடன் வாங்கனீங்க? இதுவரெக்கும் எனக்கு எங்கம்மா அவங்களெ துணி வாங்கித் தர்றாங்க. வேலெக்காரியே இல்லாம வேலெ செஞ்சிக்கிட் டிருக்கறேன். சினிமா, ஊர் சுத்தற்து எல்ாம் என்னக்கோ நிறுத்தியாச்சி. மாசாமாசம் நூத்தி அம்பது ரூபா வந்திட் டிருந்தா...?'
'அதெ யெல்லாம் இப்பொ இழுக்காதே பானூ! இப்பொ நீ எவ்வளவு சொன்னாதான் என்ன லாபம்? என் கஷ்ட சுகங்கள்ளெ உனக்கு அக்கறெ இல்லியா? இந்தக் குடும்பக் கடமெங்க உனக்கு மட்டும் இல்லியா?'
நான் எத்தனையோ விஷயங்க மொத்தமா நினெவு வந்து வேதனெயுடன்--' கஷ்ட சுகங்க! நிறெஞ்ச கர்ப் பிணியா--கொதிக்கற காய்ச்சல்லெ, சோடா குடிக்கணும்னு நினெச்சா ஒரு அரை யணாக்கு வக்கில்லாமெ அழுதேனே! உங்களுக்குத் தெரியுமா? காலு சுளிக்கிக் குளிக்கற்துக்கு வெந்நீர் வெக்க முடியல்லேனு சொன்னா கன்னத்தெப் பேத்தீங்களே! நினெவிருக்குதா? நான் ஆசெப்பட்டு ஊதுவத்திச் செடி வாங்கனா அந்த உரிமெ யாரு குடுத்தாங்கன்னு கேட்டீங்களே, மறந்துட்டீங்களா? பாமா பாட்டிக்கு வாழ எலெ அறுத்துக் குடுத்தேன்னு குமுங்கிக் குமுங்கி அழும்படியாத் திட்னீங்களே--ஞாபகம் இல்லியா? இப்படி எத்தனெ விவரிக்கச் சொல்றீங்க? இந்தக் குடும்பத்தலெ நான் எவ்வளவு சுகம் அனுபவிக்கிறேனோ எனக்குத் தெரியாதா? என்னக்கும் எனக்கு இல்லாத கஷ்ட சுகங்க, குடும்பக் கடமெங்க இன்னக்கி எப்படி வந்தது? ஏன் வந்தது? எவ்வளவு காலம் இருக்கும்? என்ன சொன்னாலும் ஒதுக்கித் தள்ளி, என்னெக்கும் கிட்டெ நெருங்க முடியாம பண்ணி, மண் புழுவெ விடக் கேவலமாப் பாத்தீங்களே, மறந்துட்டேனா? நீங்க எவ்வளவு வேணும்னாலும் சொல்லுங்க-- இல்லெ சொல்றதெ நிறுத்துங்க--தேவெ யில்லெ, தொண்டெ தண்ணிக்கு நஷ்டம்! என்கிட்டே யிருந்து செல்லாக் காசு வராது. என் நெஞ்சிலே மூச்சு இருக்கறவரெக்கும் அந்தப் பணத்தெ உங்களுக்குக் குடுக்க மாட்டேன். எனக்குப் பின்னாலெகூட உங்களுக்குக் கிடைக்க விட மாட்டேன். இவ்வளவுதான் நான் சொல்றது!'
அவர் ரொம்ப நேரம் மௌனமாக உக்காந்திருந்தார்.
' பானூ! நிஜமா நான் பல தவறுங்க பண்ணியிருக்கறேன். இப்பொ யோசச்சுப் பாத்தா உண்மெ தெரியுது. என்னெ மன்னிக்க முடியாதா?'
'தவறு பண்றது, மன்னிக்கற்து இதெல்லாம் எனக்குப் புடிக்காது!'
'பானூ, உனக்கு இஷ்டம் வந்தபடியே செய்-ஆனா என்னெ மன்னிச்சுடு! நான் கோவத்தலெ சொன்னதெல்லாம் மறந்துட்டு எனக்காக...'
'இவ்வளவு சீக்கரமா வந்த மாறுதல் அவ்வளவு சீக்கரமாவே போயிடும். எதற்கும் அஸ்திவாரம் பலமா இருக்கணு மில்லியா?'
'மாறிட்டாலும் நம்ப மாட்டேங்கறே----உன் மேலெ எனக்கு அன்பு இல்லேன்னு நினெச்சிட் டிருக்கறேல்லே? அதில்லாம் உன் கற்பனெ பானூ!'
'கற்பனெ பண்றது நானில்லே, நீங்க! இன்னும் என்னெ நம்பவிக்க முடியும்னு கற்பனெ பண்ணிட்டிருக்கற நீங்க!'
'பானூ! ஒண்ணு சொல்லு-உன்னெ நானே சுயமா பாத்து, இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? யாரோட பலவந்தத்தாலெ பண்ணிக்கிட்டேனா?'
'மனெவின்னு ஒரு பொம்பளெ வேணும், அதனாலெ கண்ணுக்குப் பிடிச்ச உடனே ஒத்துக்கிட்டீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாரும் கட்டிக்கிட்டுகூட வாழறவங்களெக் காதலிக்கணும்னு கட்டாயமில்லியே?'
'என்னவோ பானூ!. இதுவரெயிலெ நீ ரொம்ப நல்லவளா யிருந்தே. ஏனோ ரொம்ப மாறிட்டு வர்றே.'
'அதுதான் தேவைப்படுது. நீங்க சொன்னதெல்லாம் நிஜம்னும், செஞ்சதெல்லாம் நல்லதுன்னும் நம்பின நாளெல்லாம், கண்ணு தெறந்து பாக்காத நாளெல்லாம், சந்தேகப் படவே தெரியாத நாளெல்லாம் நல்லவளா,
ரொம்ப நல்லவளா இருந்தேன். ஆனா இனிமே நீங்க செய்யக்கூடியது ஒண்ணுமே இல்லெ. என்னெச் சுகப்பட வெக்கவும் முடியாது, துக்கப்பட வெக்கவும் முடியாது உங்களாலே. நான் எதுக்கும் தயாரா இருக்கறேன். கண்ணாடி ஒடஞ்சா ஒட்டிக்காது! கண்ணாடியெவிட மென்மெயான மனசு உடெஞ்சா நல்லா ஆகாது.' கொஞ்சநேரம் மௌனம்----'சரி, பானூ! உன் இஷ்டம்! நான் ஒண்ணும் செய்யற்துக் கில்லெ. எப்பவாவது உன் மனசுலெ எனக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் வந்தா நான் அதிர்ஷ்டக்காரன்!'
அது கடைசி ஆயுதம்! எனக்கு வெறுப்பு வந்தது. எத் தகைய நிலெமெ வந்தாலும், ஒரு மனுஷன் தன்னெத்தானே கொலெ பண்ணிக்கிறதா?
'நீங்க தயவுசெஞ்சி அவ்வளவு கீழே இறங்கிப் போயிடாதீங்க. பொம்பளெக்குச் சாப்பாடு போட்டு, பொம்பளெயக் காப்பாத்தி, பொம்பளெகிட்டெ இவ்வளவு கெஞ்சிப் பேசற்தா? நான் மனெவியாவே இருக்கலாம், ஆனா பொம்பளெ. உங்க மனிதத் தன்மெயெ நீங்க காப்பாத்திக்கணும். அதுதான் என் வேண்டுதல்!'
அவர் முகபாவம் கொஞ்ச கொஞ்சமாக மாறிட்டது. அடக்கி வெச்ச கோவம், நடிச்சிட்டு வந்த சாந்தம், பாதிக்கப்பட்ட தன்மானம், பொங்கிவரும் ஆவேசம்----எல்லாம் சிறுகச்சிறுக வெளிப்பட ஆரம்பிச்சது.
கம்பீரமாகக் கேட்டார்----'அந்தப் பணத்தெ என்ன பண்ணப்போறே?'
'என்னவோ பண்றேன். ஒண்ணும் பண்ண முடியலேன்னா நெருப்புலெ போட்டுக் கொளுத்தறேன். உங்க கிட்டெ மட்டும்...'
என் கன்னங்க அதிர்ந்தன. கண்ணுங்க இருண்டன. தள்ளாடி விழுந்தேன்.
'திருட்டுக்கழுதெ! எவ்வளவு கொழுப்பு! கட்டிக்கிட்ட புருஷன் கால்லே கையிலே விழுந்து வேண்டிக்கிட்டா புத்திமதியா சொல்றே? பண்த்தெ நெருப்பிலெ போட்டுக் கொளுத்தறியா? நீ நெருப்பிலெ விழுந்து எரியறியா? பாக்கறேன்,. அந்தப் பணம் என் கைக்கு எப்படி வராமெ போவுதோ நானும் பாக்கறேன்!'
'இதுதானா உங்ககிட்டெ வந்த மாறுதல்?'
'வாயெ மூடு! நீ எனக்குக் கத்துத் தர்றியா?'
' இல்லெ, நீங்க ரொம்ப மாறிட்டீங்கன்னு, என் மேலெ அன்பு காட்றீங்கன்னு சொன்னா அது நிஜமா இல்லியான்னு தெரிஞ்சிக்கறேன்.'
'தேவெ யில்லெ. அந்தச் சந்தர்ப்பத்தெ நீ நழுவ விட்டுட்டே. நான் எல்லா விதத்திலும் மாறிடணும்னு நினெச்சேன். ஆனா துளிக்கூடப் பயனில்லாமெ பண்ணிட்டே. உனக்கு இப்பொ புத்தி வராது. நான் இன்னும்--இன்னும் நாசமாயி, குடிச்சி, கும்மாளமடிச்சி எவளெ யாவது இழுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தா அப்பொ....'
'எவ்வளவு அர்த்த மில்லாமெ பேசறீங்க! என் மேலெ கோவத்தலெ உங்களெ நீங்க நாசனம் பண்ணிக்கிறீங்களா? அதிகாரத்தாலெ மன்னிப்பு சம்பாதிச்சிக்கிறீங்களா? ஒரு மனுஷன் நல்ல குணங்களோட இருக்கறது பிறத்தியாருக் காகவா?'
சீ! உன்னோட எனக்கு என்ன பேசவேண்டியிருக்குது? நீ குடும்பப் பெண்ணா? கட்டிக்கிட்ட முண்டம் கடன்காரனாயி அவஸ்தெப் பட்டா நகெங்களெ சிங்காரிச்சிக்கிட்டு ஊர்கோலம் வர்றியா? கடன் காரனுங் கெல்லாம் சேந்து உன் புருஷனெ ஜெயில்லே தள்ளவெச்சா நீ ரூபாய்ங்களெ படுக்கெயிலெ பரப்பிக்கிட்டுப் படுத்துக்கப் போறியா? உனக்கு இப்பொ புத்தி வராது? அந்த நாள்... ஒரு நாள் ....'
சொல்றதுக்கு என்ன இருக்குது? முதல்லியே குரங்கு! கள்ளு குடிச்சிட்டுது! நெருப்பு மெதிச்சிட்டுது! தேளு கொட்டிட்டுது! ரோஷத்தோட குதிக்காதூ?
அப்பாவுக்குப் பதில் எழுதனேன்.----'பணத்தெ பாங்க்கிலே போடுங்க. பாபுவின் படிப்புக்கு உபயோகப்படும்'னு. ஆனா கடிதம் எழுதிட்ட எவ்வளவு அழுதேனோ தெரியுமா?
அந்தப் பணத்தெவிட என் புருஷன் மதிப்பு ரொம்பக் குறைவு. அந்த மனுஷன் கடன்காரனாகி இருந்தாலும், வெக்கத்தெ விட்டுக் கேட்டும்----அந்தக் கோரிக்கெயெ நிறெவேத்த முடியாமெ போயிட்டேன்னா, அந்தப் பணத்துக்காக அவரெ நிராகரிச்சேன்னு சொன்னா, அதுக்கு எவ்வளவு ஆழமான காரணம் இருக்கணும்? இந்தக் குடும்பம் முறையா நடக்கற நாள் அந்தப் பணத்தெ நான் கண் ணெடுத்துப் பாக்க முடியுமா? இந்தக் குடும்பம் பரஸ்பர அன்பாலெ பிணைக்கப்படும் நாள் யாருடைய கஷ்ட சுகங்க அவங்கள தாகவே இருக்குமா? தகப்பன் திறமெ யுள்ளவனா இருந்தா மகனின் படிப்புக்காகத் தாய் கவலெப்பட வேண்டிய தேவெ வருமா? 'கடவுளே! இந்த வேதனெக்கு முடிவே யில்லியா? இந்தக் கண்ணீருக்கு மதிப்பே யில்லியா?'ன்னு அழுதேன். அதூ இப்பொ சமீபத்தலெ நடந்த விஷயம். மாமா என்னோட மூணு நாளாப் பேசற்தில்லே" என்றாள் பானு.
"நல்லா இருக்குது. ஏதோ தகராறுங்க கேக்க வேண்டி யிருக்கும்னுதான் இங்கே வரணும்னா பயமா இருந்தது. போவட்டும், மாமா மாறிப் போயிட்டேன்னு சொன்னப்ப௧ நீ கடனெ ஏன் தீக்கக் கூடாது?" என்று கேட்டேன்.
"உனக் கென்ன மூளெகீளெ கெட்டுப் போச்சா என்ன? பணத்துக்காக மார்ற ம,னுஷன நம்பச் சொல்றியா? அவருக்கு இந்தச் சமயத்தலெ பணம் கொடுக்கற்து இன்னும் தூண்டி விட்றா மாதிரி ஆகும். தன்னுடைய நடவடிக்கெங்கள்ளே குறை என்னங்கற்து அவருக்கே தெரிஞ்சாகணும். அவர் மனசு அதுக்காக வருத்தப்படணும். அன்னக்கி எந்த உதவியும் பண்றதுக்கு நான் தயார்தான்!"
எனக்கு அது சரியென்றே பட்டது.
பானு சொன்னாள்----"கொஞ்சநாள் ஆனப்புறம் ஒரு ரேடியோ வாங்கணும். அது எனக்குத் தீராத ஆசெயா இருந்து வருது"
"இத்தனெ நாளா எனக்கேன் சொல்லலே?"
"இல்லெ. என்னிடம் அன்பு வெச்சிக்கற நீ, எனக்காக எதெயும் வாங்கித்தரக்கூடிய நீ இருக்கறேங் கற்து எனக்குத் தெரியும். ஆனா அந்த அன்பெ நான் எல்லாத்துக்கும் உபயோகப் படுத்திக்க மாட்டேன். அது மிகவும் உயர்ந்தது. எந்தச் சகோதரிக்கும் கிடைக்காதது----அதனோட மதிப்பு அதுக்கு இருக்குது."
"பானூ! உன்னோட பேசற்துக்கு பயமா இருக்குது. என் கற்பனெக்கு அப்பாலெ போயிட் டிருக்கறே."
பானு சிரித்தாள். "இன்னொரு புதுவிஷயம் கேக்கறியா? சமீபத்தலெ ஒரு பெண் எழுத்தாளர் நிறெய கதெங்க எழுதிட்டு வர்றா. உனக்குத் தெரிஞ்சே இருக்கும். அவளோட எழுத்தெல்லாம் கற்பனெ! பாத்திரங் கெல்லாம் தெய்வங்க! கதிக் கருவெல்லாம் குடும்ப பந்தங்க! எல்லாம் சுப முடிவுங்க! அவ எழுத்தெ எதெ எடுத்தாலும் சரி----ஆண், பெண் இடையே காதல், பாசம், அன்பு, அபிமானம் இவை யெல்லாம் ஜீவநதி போல பாய்ஞ்சிட்டே இருக்கும். மனெவி கால்லெ முள்ளு குத்திட்டா புருஷன் மூர்ச்செ ஆயிடுவான். புருஷனுக்குத் தலெவலி வந்தா மனெவி மயக்கம் போட்டுடுவா. அவங்க இரவும் பகலும் திரியற்து சுவர்க்கத்தலே தான்! படுக்கற்து பூப்படுக்கையில் தான்! அந்தப் பூங்ககூட கும்கும்னு மணக்கும் மல்லிப் பூவே தவர மணக்காத அரளிப்பூக்கூட இல்லே, உண்மையெ மறெச்சி இந்த மாதிரி கதெங்களெ எழுதற்தும் படிக்கற்தும் நல்ல தில்லே. எனக்கு அவ எழுத்திலே கொஞ்சம்கூட நம்பிக்கெ யில்லே. இருந்தாலும் யோசிச்சுப் பாத்தேன். என் எண்ணமே தவறா இருக்கக்கூடாதா? புருஷன் மனெவி யிடெயே அன்புணர்ச்சிக்கே பஞ்சம் வந்துட்டுதா? அந்த அம்மா அனு பவிக்கற விஷயங்களே எழுதற்தில்லே இல்லியா? அதனாலே அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
' உங்கள் கதைகளை நான் நிறையப் படித்தேன். எதிலே பார்த்தாலும் அளவில்லாத அன்பு, எல்லையில்லாத மகிழ்ச்சி நிறைந்து இருக்கின்றன. இவற்றை நீங்கள் உண்மையை அடிப்படையாக வைத்தே எழுதுகிறீர்களா? இல்லை, குடும்ப வாழ்க்கையை வெறும் கற்பனையி லிருந்து வடித்தெடுக்கிறீர்களா? உங்கல் கதைகளில் இருக்கும் அழகை யெல்லாம் நீங்கள் நூற்றுக்கு நூறு பங்கு அனு பவிக்கிறீர்களா? இல்லை, அப்படி அனுபவிக்கிற தம்பதிகளைப் பார்க்கிறீர்களா? தயவு செய்து மனம் திறந்து பதில் எழுதுங்கள்.' பதில் வந்தது. அதெப் பாத்தா எனக்குச் சிரிப்பு வந்தது. ' நான் பெரும்பாலும் கற்பனையையே அடிப்படையாக வைத்து எழுதுகிறேன். ஓரளவு சுற்றி இருக்கும் குடும்பங்ளைப் பார்த்து வருகிறேன். எங்கேயும் எனக்கு, என் கற்பனைக்கு எதிரான 'உண்மை நிலை' புலப்பட வில்லை. இருக்குமென்று கூட நான் நினைக்கவில்லை. இந்தக் கால மனிதர்கள் எல்லாரும் மிகவும் மென்மையான மனமுள்ளவர்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் என்றைக்கும் கடுமை காணப்படாது. எது எப்படியானாலும் எந் கதைகளில் --அழகுகளை நான் அனுபவித்து மட்டும் எழுதுவதில்லை. இன்னும் நான் மணமாகாதவள்.'
அந்தப் பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் குடுத்தது. எனக்கு அவமேலே இரக்கம் கூட வந்தது. திரும்பி ஒரு கடிதம் எழுதினேன்.----'அனுபவம் இல்லாத எழுத்தாளத் தங்கையே!
வாழ்க்கையிலே அடியெடுத்து வைக்காத உனக்கு அந்த வாழ்க்கை அனுபவத்தை ஒரு சகோதரியாக உன் மேன்மையை விரும்பும் ஒரு பெண்ணாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.! இனிமேலாவது கண்களைத் திறந்து, கற்பனை உலகத்தி லிருந்து வெளியே வந்து உண்மை வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சி செய். உண்மையை மறைக்கும் உன் கதைகளால் இன்னும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்காத அப்பாவிகள் தவறான எண்ணங்களை உண்டாக்கிக் கொண்டு, எதிர் காலத்தில் அவர்கள் கற்பனைகள் தகர்க்கப்படும்போது எத்தகைய ஆறுதலும் தேடிக் கொள்ள முடியாமல் போவது தவிர வேறு பயன் இல்லை. உன் கற்பனைகள் கற்பனைகளே என்றும், உன் கனவுகள் கனவுகளே என்றும், உன் விருப்பங்கள் நிறைவேறாதவைதாம் என்றும், நீ வெறும் பொய் என்றும் தெரிந்து கொள்ளும் நாள்----உன் வேதனை வர்ணிக்க இயலாதது தெரியுமா! வாழ்க்கையிலே தோல்வி யடைந்த நான் சொல்லும் இவை ஒருநாள் உனக்கு நினைவு வரும். அவற்றுக்குத் தேவையும் வரும். காரணம் நீ ஒரு பெண்தான்! எழுத்தாளராக, தூய்மையான இடத்தில் இருக்கும் உன்மேல் கனமான கடமை சுமத்தப்பட்டுள்ளது. என்றைக்கும் உண்மை நிலையை மறைக்காதே. வாசகர்களுக்குத் தவறான எண்ணங்களை உண்டாக்காதே. இன்றையி லிருந்து உண்மையைத் தெரிந்துகொண்டிருந்தால் நாளை வரப்போகும் நிலைமைகள் உன்னை ஒன்றும் செய்ய இயலாது. இது அனுபவத்தி லிருந்து வெளிவரும் அறிவுரை, சகோதரி!'
"எப்படி இருக்குது?" என்று கேட்டாள் பானு சிரித்துக்கொண்டே.
"சிறப்பா ஒண்ணு மில்லே----நாம் அனுபவிக்காதது யாருக்கும் கிடைக்காதுன்னு நினெக்கற்து தப்பு. குடும்ப வாழ்க்கெயிலே சுகமே இல்லாத நாள் கல்யாணங்களே நடக்காது. நாம் என்பது எவ்வளவு? நாம் பார்த்த உலகம் எவ்வளவு? பானுமதி வீட்டுப் பக்கத்தலேயே சரோஜாதேவி குடுத்தனம் பண்ணிக்கிட் டிருக்கா. மனு ஷங்கள்ளே பல ரகங்க எப்பவும் இருக்கும். இல்லியா?"
பானு பேசவில்லை----சிரித்தாள்.
"அது அப்படி இருக்கட்டும், குளிக்கணும் பானூ! துண்டு கொண்டு வந்து வை. அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே எழுந்தேன். குளித்து விட்டு வருவதற்குள் மாமா வந்திருந்தார்.
பார்த்ததும் பேச்சுக் கொடுத்தேன்.-
"நல்லா இருக்கீங்களா மாமா?"
"ஹூம்" என்று சொல்லிவிட்டு வீறாப்பாகப் போய் விட்டார். எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. குளியலறையிலிருந்து துண்டுக்காகச் சத்தம் போட்டார். பானு என்னிடமிருந்து துண்டை வாங்கிச் சென்று கொடுத்தாள். அதைக் கையில் வாங்கியதும் தூக்கி எறிந்தார். "ஈரத்துணியெக் கொடுத்தா எப்படித் தொடச்சிக்கற்துண்ணு, உன் திமிறு? தெருவுலே போற முண்டங்களும் சேந்து ... வெக்கமில்லாத முண்டங்க!"
நான் பேரதிர்ச்சி யடைந்தேன். வெட்கத்தால் இடிந்து போனேன். அவமானத்தால் குறுகிப் போனேன். அவர் தெளிவாக என்னையே திட்டுகிறார். நான் இன்னும் அஸவர் வீட்டு வாயிற்படியில் நின்று கொண் டிருந்தால் வெட்கமில்லாதவன் இல்லையா? வேகமாகத் துணிகளை அணிந்து கொண்டேன். அவர் அறைக்கு முன்னால் சென்று----
" மன்னிச்சுடுங்க மாமா! இத்தனெ நாளா நான் வந்து போறதாலே உங்களுக்குக் கஷ்டம் கொடுத்துட்டேன். இருந்தாலும் அடுத்த மனுஷங்ககிட்டே அவமானப் பட வேண்டிய அளவு நான் மோசமானவன் இல்லே. போறேன்!" என்று சொல்லிவிட்டுத் தெரு வாயிற் படியை நோக்கி நடந்தேன்.
" அண்ணா!....."
பானு உள் வாயிற்படியில் நின்று கொண்டிருந்தாள். திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஒண்ணும் நினெச்சிக்காதே தங்கச்சி! போய்ட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். தெருவில் நடக்கும்பொழுது அழுகை பொங்கி வந்தது. பானுவுக்கு எந்த உதவியும் செய்ய இயலாம லிருந்தது போக, கண்ணால் பார்ப்பதற்கும் இல்லாமல் தூரமாகிக் கொண்டிருக்கிறேன். பானு அழுகிறாள். எனக்குத் தெரியும். நான் என்ன செய்வேன்?
பானுவின் கணவன்! அன்று நான் விடுதிக்கு ஓடிச் சென்று பார்த்து தந்த ராஜசேகரம்! எதைப் பார்த்து அவ்வளவு அகமகிழ்ந்தேன்! இந்தக் கண்களால் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் மிகக் குறைவு இல்லையா!
ஒரு வாரம் கடந்தது. என் மனம் ஒன்றும் நன்றாகவே யில்லை. இரவுகளில் சரியாகத் தூக்கம் வருவதில்லை. எதையும் சாப்பிட விருப்பம் இல்லை. எந்நேரமும் பானுவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. கண்களில் நீர் கசிந்து கொண்டே இருந்தது.
அன்று இரவு தூக்கம் வருவதற்குள் கெட்ட கனவு வந்தது. பானு பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். இனம் தெரியாத பயம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பானு அழுகிறாளோ என்னவோ? இந்த நள்ளிரவில்!.... தனியாக அவள்..... நீண்ட நேரம் இருட்டில் சிந்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை சென்று வரலாமா என்று தோன்றியது. அந்த நேரத்தில், அந்த நள்ளிரவில் சென்றால் அவர் என்ன சொல்வாரோ என்று தயங்கினேன். ஆனால், அப்போது துணிந்து போயிருந்தால் பானு பிழைத்திருப்பாள். என் பானுவை என் கைகளாலேயே நழுவ விட்டுவிட்டேன்! கடவுளே! என் பானு என்னை விட்டுப் போய்விட்டாள். தாயில்லாத இந்தப் பச்சைக் குழந்தையை நான் என்ன செய்வேன்?
பானு நிரந்தரமாகத் தூக்கத்திலிருந்து விடுதலை பெற்றாள். முடிவில்லாத கடலின் அடிமடியிலே, நாள் தோறும் புதுமையுடன் வரும் புது வெள்ளத்திலே எழுந்து எழுந்து விழும் அலைகளிலே எங்கேயோ.....எங்கேயோ.... உயிரை விட்டு, எல்லாவற்றையும் மறந்து போய்க் கொண்டிருக்கிறாள். அய்யோ தங்கச்சி........!
... ... ...
பானுவின் மகனைச் சித்தியின் கைகளில் எப்படி ஒப் படைத்தேனோ எனக்குத் தெரியாது. சித்தி நினைவிழந்து விழுந்து விட்டாள். ஒரேயடியாக வீடு முழுவதும் துன்பப் பெருங்கடலில் ஆழ்ந்து விட்டது.
"அம்மா !.....பானூ!......உன்னெ வளத்து ஆளாக்கின அம்மா செத்துப்போயிட்டான்னு நினெச்சிட்டியா? ----தாயே ! பெத்த பாசத்தெ மறந்தறியாத தாய்க்கு ஆறாத சோகத்தெ வெச்சிட்டுப் போயிட்டியாம்மா! உன் கஷ்டத்தெ என்கிட்டெ சொன்னா உன்னெ வயித்திலியே வெச்சி காப்பாத்த மாட்டேனா தாயே! உன் பச்செக் கொழந்தெயெ ஒப்படைச்சிட்டுப் போயிட்டியாம்மா! பானூ....! உன்னெ நான் எப்படி மறப்பேன்மா! எந்த அலெயிலே கலந்து போயிட்டே தாயே...!
சித்திக்கு நினைவு வந்ததும் தரெமேலெ புரண்டு புரண்டு அழத் தொடங்கினாள். அந்தத் துக்கத்தில் என்னைக்கூடத் திட்டித் தள்ளினாள். பானுவின் குடும்ப விஷயத்தை நான் எப்போதும் தனக்குச் சொல்லவில்லை என்றும், ஒரு சொல் சொல்லியிருந்தாலும் இந்த அக்கிரமம் நடந்தே இருக்காது என்றும் சொல்லி ஓவென்று அழுதாள். அது உண்மைதான்-- என்றைக்காவது சித்தியிடம் சொல்லியிருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா! இப்போது செய்யக்கூடியது என்ன இருக்கிறது?
இருட்டிவிட்டது. யாரும் எழுந்து விளக்கேற்றவில்லை. வீடு சுடுகாடா யிருந்தது. அந்த வீட்டில் பானு ஒருத்தி தான் இல்லை. சித்தி மீண்டும் சத்தம் போட்டு அழலானாள். கண்களைத் துடைத்துக்கொண்டு மெதுவாக அருகில் சென்று உட்கார்ந்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். நானும் நிறுத்த முடியாமல் விக்கி விக்கி அழுதேன்.
"பாபூ... ! கேசவ் ! பானு பிழைச்சிருக்க மாட்டான்னு சொல்றியா?"
" சித்தி என்னெ மன்னிச்சுடு! பானு இப்படிச் செய்வான்னு எப்பவும் நான் நினைக்கவேயில்லே. எப்பவும் இப்படிச் செய்யமாட்டேன்னு சொல்லக்கூட சொன்னா. எனக்கு வேலெ கிடெச்சதும் பானுவெத் தனியா அழெச்சிட்டுப் போயிடலாம்னு இருந்தேன். இதுக்குள்ளேயே......"
பானுவின் மகன் அங்கே வந்தான். அவனை அணைத்துக்கொண்டு கதறிக் கதறி அழலானாள் சித்தி.
"சித்தி! பாபுவெக் குறிச்சி நீ ஒண்ணும் கவலெ வெச்சிக்காதே. அவனெக் காப்பாத்தவேண்டிய பொறுப்பெல்லாம் என்னுடையது! அவனெ வளத்துப் பெரியவனாக்கறேன். வேண்டிய வரெக்கும் படிக்க வைக்கறேன். அம்மா அப்பா இல்லேங்கற குறெயெத் தீத்துட்றேன். என்னெ நம்பு சித்தி!"
" உனக்குத் தெரியாதுப்பா! உன் கையிலே என்ன இருக்குது? என் குழந்தெ எனக்குப் பாரமில்லே. நான் மறெஞ்சிபோற வரெக்கும் வயத்திலே வச்சிக் காப்பாத்தறேன். அதுக்கப்புறம் அவன் கதி..." என்று சொல்லி ஓவென்று அழுதாள். சித்தியின் அச்சம் எனக்குப் புரிந்தது. உண்மைதான். அந்த ஐயம் யாருக்கானாலும் வரத்தான் செய்யும். ஆனால், பானுவின் மகனிடம் பானுவைப் போலவே அன்பு செலுத்தும் மனிதர் இல்லாம லில்லை. அதுதான் சுசீலா! சுசீலா என் மனைவி ஆகும் நாள் பாபுவைப் பொறுத்தவரை எந்த அச்சமும் தேவை யில்லை.
" சித்தி! அவசிய மிரு்கற்தனாலே தான் உன்கிட்டே சொல்றேன். நான் சுசீலாவெக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். இந்த முடிவுலே யிருந்து மாறப்போற்தில்லே. சுசீலா மேலே உனக்கு நம்பிக்கெ இருக்குதா? சொல்லு சித்தி!"
" பாபூ ... கேசவ்!" சித்தி கண்ணெடுத்து ஆச்சரியத்துடன் பார்த்தாள். "சுசீலாவா? பானுவோடெ செய்தி கேட்டு அவ எவ்வளவு அழுதுகிட் டிருக்கான்னு எனக்குத் தெரியும் பாபூ! பானு புதுசா குடுத்தனம் பண்ணப் போனப்போ கதறி அழுதா. சாப்பாடு கூட சாப்பிடல்லே. அவ கையிலே பாபு வளந்தா எனக்குத் திகுிலே இல்லே. ஆனாலும் இந்தப் பச்செக் குழந்தெக்கு இந்தத் தொல்லெ யெல்லாம் ஏன் வரணும் பகவானே!" சித்தி அழுது கொண்டே இருந்தாள்.
என் மனத்தில் ஒரு வகையான அமைதி வந்தது. எழுந்து வெளிப்பக்கம் நடந்தேன். இருட்டில் படியேறி வந்த சுசீலா எதிர்ப்பட்டாள்.
"சுசீலா!" என்று அழைத்தேன். என்னையறியாமலே. சுசீலா நின்றுவிட்டாள். " பானு உனக்குக்கூட கடிதம் எழுதியிருக்கா." சட்டைப் பையிலிருந்த காகி தங்களைத் தேடிப் பார்த்து ஒரு சிறிய காகிதத்தை எடுத்துக் கொடுத்தேன்.
" பானு.... நிஜமா செத்துப் போயிட்டாளா........? சுசீலாவின் குரல் கனத்து இருந்தது. "என்கிட்டேகூட எப்பவும் ஒண்ணுமே சொல்லல்லே." தலை குனிந்து கொண்டாள்.
" அது நம்ம துரதிர்ஷ்டம்! செத்துப் போயிட்டான்னு நினெச்சிக்காதே. பானு எங்கேயோ சுகமா இருக்கறா" என்றேன் கண்களைத் துடைத்துக்கொண்டு.
" நீ இருந்தும்கூட இப்படி நடக்கவிட்டியே!"
"நிஜம்தான் சுசீலா! நான் பானுகிட்டேசத்யம்பண்ணி வாங்கிட் டிருக்கணும். அவ்வளவு தூரம் யோசிக் காமே போயிட்டேன். என்னெ மன்னிச்சுடு! --- முக்கியமானது--- இன்னொண்ணு இருக்குது. இந்த நிமிஷத்தலெ யிருந்து உதயன் உன் மகன். அந்தப் பொறுப்பு நம்ம ரெண்டுபேர் மேலேயும் இருக்குது."
" மாமா...!" சுசீலா வியப்படைந்ததுபோல் அவள் குரல் ஒலித்தது. தலை எடுத்துப் பார்த்தாள்.
"நிஜம்தான் சுசீலா! நீ உள்ளே போ. சித்திக்கு ஆறுதல் சொல்லு."
நான் சரசரவென்று படியிறங்கி இருட்டில் சப்போட்டா மரத்தின் கீழே சென்று உட்கார்ந்தேன். பானுவுடன் விளையாடிய அந்தப் பாறாங்கல் அப்படியே இருந்தது. எழுந்து சென்று அந்தக் கல்லைத் தடவிக் கொடுத்தேன்.
' பானு செத்துப் போயிட்டா' என்றேன்! வளைந்திருந்த சப்போட்டாக் கிளையைக் கையால் தடவி--' பானு உனக்குத் தெரியு மில்லெ! ராத்ரி தான் செத்துப் போயிட்டா' என்றேன். கிணற்றின் கரைமேல் உட்கார்ந்து கொண்டு -- 'உனக்கு பானுவைத் தெரியு மில்லே! இப்பொ இல்லே, சமுத்ரத்தலே விழுந்து...பாவம்! செத்துப் போயிட்டா' என்றேன். எனக் கென்னவோ கண்கள் இருண்டு கொண் டிருந்தன. ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு ஜீவனிடத்திலும் பானு இறந்துவிட்டாள் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. எனக்கு அழுகை வரவில்லை. மனம் கல்லாகி விட்டது. ஒரு வேளை எனக்கு மூளை குழம்புகிறதோ என்னவோ! பைத்தியம் பிடிக்கிறதோ எனேனவோ! இல்லையென்றால் அழுகை ஏன் வராது? நீண்ட நேரம் அந்தக் கல்லின்மேல் உட்கார்ந் திருந்தேன். பானுவின் கடிதத்தை இன்னும் நான் படிக்கவில்லை. அது வரையில் படிப்பதற்கு மனம் வரவில்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை. பானு முந்திய இரவு உயிரோடு இருந்தாள். இன்னும் இறந்து போய் இருபத்தி நான்கு மணி நேரம் ஆகவில்லை. முதலில் என்ன எழுதி இருக்கிறாள்? உள்ளே சென்று வராந்தாவில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கடிதங்களை எடுத்தேன்.
" அண்ணா! நினைக்காமலேயே உனக்கு இந்தக் கடிதம் எழுத வேண்டி வந்தது. நான் செய்யும் வேலைக்கு நீ எவ்வளவு அழுவாயோ எனக்குத் தெரியும். என்னால் ஊகிக்க முடியும். ஆனால் இது எனக்குத் தப்பாது. இத்தகைய கெட்ட நாள் எப்போதும் வரக்கூடாது என்றும், எவ்வளவு துன்பமாயினும் தாங்கிக்கொண்டு உயிரோடு இருக்க வேண்டும் என்றும், என் பாபுவை இந்தக் கைகளாலேயே வளர்த்து அறிவுள்ளவனாக ஆக்க வேண்டும் என்றும் நினைத் திருந்தேன். எத்தனையோ முறை தவறான பாதையை நாடிய மனதைக் கண்டித்து வைத்தேன். ஆவேசப் பட்டுவரும் இதயத்தை எச்சரித்து வைத்தேன். ஆனால்...அண்ணா! நான் விரும்பியது வாழ்க்கையே தவிர, நடிப்பு அல்ல. எந்த விநாடியும் அமைதியில்லாத இந்த மனத்தை, எந்த நிமிஷமும் இன்பமில்லாத இந்த உடலை எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள், எத்தனை ஆண்டுகள் ஏமாற்றிக்கொண்டு இருப்பது. இம்மி யளவும் மதிப்பில்லாத இந்தச் சரீரத்தை யாருக்காக உயிரோடு வைத்துக்கொள்ள வேண்டும்?
இந்த வீட்டில் வாழ்ந்து வரும் இரண்டு மனிதர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்கள். நண்பர்கள் கூட அல்ல, குறைந்தது தெரிந்தவர்கள்கூட அல்ல. சேர்ந்து பயணம் செய்பவர்களும் அல்ல. எதிரிகள்! ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளும், ஒருவர் மீது ஒருவர் அருவருப்பு கொள்ளும், ஒருவர் வாழ்க்கையிலிருந்து ஒருவர் தூரமாகிக்கொண்டே இருக்கும் தர்ப்பாக்கியசாலிகள்! மணமேடை எனப்படும் பலிபீடத்தில் ஏறுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு தூரமோ இப்போது அதைவிட ஆயிரம் மடங்கு! அந்த நாள் பெருமையை, அந்த நாள் விருப்பங்களை, அந்தநாள் எண்ணங்களை, எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கலைக் காகவே கலை என்று சொல்வதுபோல், வாழ்க்கைக்காகவே வாழ்ந்துவரும் துரதிர்ஷ்டசாலிகள்.
இரண்டு உயிர்களையும்----இரண்டு உடல்களையும் சேர்த்து வைக்கவேண்டிய இந்த மனப் பிணைப்பு விலகி விட்டது. புது வாழ்வில் துளிர்த்து----படர்ந்த அந்த அன்புக்கொடு வாடிவிட்டது. இனி இந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒன்றுமிலர். இரண்டு கற்கள் ஒரேயிடத்தில் ஒன்றாக இயங்கினால் அவற்றிடையே மோதல் தப்பாது. நீர்ச் சுழலில் அகப்பட்ட இந்தக் குடும்பப் படகு தலைகீழாகக் கவிழாமல் போகாது.
ஒருமுறை நீ சொன்னாய்-- 'இனிமே உன் மகனே உன் ஆசைவிளக்கு பானூ!' என்று. ஆனால் அதை நான் அப்பொழுது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் கருத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றினாலும் சொல்ல முடியாமல் போய்விட்டது. 'இன்னும் எனக்கு மாமா மேல் ஆசை இருக்குது அண்ணா!' என்றால் நீ சிரிப்பாய் என்று வெட்கப்பட்டேன். உண்மையில் மாமாவை நான் எவ்வளவு வெறுத்தாலும், எவ்வளவு குறை கூறினாலும் என்னுள் எங்கேயோ ஏனோ ஓர் ஆசைக் கோடு மின்னி விளையாடிக்கொம்டிருந்தது. ஒருநாள் அவரிடம் மாற்றம் ஏற்படும்-- தனக்கு மனைவி இருக்கிறாள் என்றும், மகன் இருக்கிறான் என்றும் நினைவு வரும்; அந்த நல்ல நாள் தவறாமல் வரும் என்று.
உண்மையில் வழிதவறி நடப்பவர்கள் யாரானாலும் சில நாட்களில் வழி தெரிந்து கொள்வார்கள். மனிதன்தான் செய்த தவறுகளைத் தெரிந்துகொள்ளாமலே எப் போதும் வாழ்க்கை முடிந்துவிடாது. அப்படி நடந்தால் அது இயற்கைக்கே எதிரானது! என் பொறுமை அழியும் வரையில் அவரிடம் மாற்றம் வரவில்லை. ஆனால்....... தவறாமல் வரும். ஒரு சமயம்! நான் அனுபவிக்க முடியாமல் போகும் சமயத்தில்! இந்த வாழ்க்கையில் நான் திருத்திக்கொள்ள முடியாத பெரிய தவறு ஒன்று உள்ளது. கணவன் நொண்டியானாலும், குருடனானாலும், துர்ப் பாக்கியசாலியானாலும், முரடனானாலும் எத்தகையவனானாலும் மனைவி அந்த மனிதனிடம் அன்பு செலுத்தி மதிப்பு கொடுக்கவேண்டுமென்றும், அவர் அடிச் சுவட்டில் நடக்கவேண்டு மென்றும் நம் சாத்திரங்கள் அறிவுறுத்துகின்றன.ஆனால் சாத்திரங்களின் அறிவுரையை நான் கேட்கமாட்டேன். என் அறிவுரையைச் சாத்திரங்கள் கேட்கவே கேட்கமாட்டா. நான் என் கணவனிடம் அன்பு செலுத்த முடியாமற் போவது, அவருக்காக என்னுடையவற்றையெல்லாம் தியாகம் செய்து வாழமுடியாமற் போவது பெருங்குற்றமே. அந்தச் சாத்திரங்களையே படித்த யமதர்மராஜன் என்னைத் தடுப்பான் போலும்!
அத்தையின் அறிகுறிகள் எனக்கு எல்லா விதங்களிலும் வந்து சேர்ந்தன. திருப்தி இல்லாத இந்த வாழ்க் கையை இனியும் என்னால் நடத்த முடியாது. அதனால் என் இலட்சியம் கூட அடிப்பட்டுப் போகலாம். என்னுடைய தனிப்பட்ட இலட்சியம் அடிபடும் நாள் நான் வீணாகப் போய்விடுவேன் அல்லவா? மகிழ்ச்சிக்கே பஞ்சமான இந்த வீட்டிலே, அன்புப்பிணைப்பை அறியாத தாய்தந்தையர் இடையில் வளரும் மகன் எவ்வளவு மென்மையானவன் ஆவான்? அறிவுள்ளவனாக எப்படி அவன் ஆவான்? அதனால்தான் என் பாபு வேறோர் இடத்தில், சாந்தி நிலையத்தில்-அன்பு இல்லத்தில் வளர்வான். நான் விடைபெறுகிறேன். இதுதான் என் இலட்சியமானால் நான் சாவது தேவையில்லை என்கிறாயா? அத என்மேல் உனக்கு இருக்கும் அளவுகடந்த அன்பின் விளைவு----அவ்வளவுதான்! ஒரு பெண் துணிந்து தனியாக வாழும் அளவுக்கு நம் சமூகம் வளரவில்லை. நாம் அவ்வளவு முன்னேறவில்லை. இருந்தாலும் சமூகத்து நிலை பற்றி எனக்கு எப்போதும் அக்கறையில்லை. நான் எப்போதானாலும் இதையேதான் செய்வேன். இது ஆவேசத்தின் விளைவு என்றால் இதுவே எனக்கு விடுதலை அளிக்கும்.
வாழ்ந்திருந்தால் எனக்கு அளவில்லாத அன்பு வேண்டும். ஒருவர் ஒன்றிப்போகும், ஒருவருக்காக ஒருவர் உயிரை விடக்கூடிய, ஒருவருக்காகவே ஒருவர் வாழ்ந்திருக்கும் அன்பு வெள்ளம் பாயவேண்டும், அதுதான் உண்மையான வாழ்க்கை! உயிரோடு இருந்தால் எனக்கு அந்த வாழ்க்கைதான் வேண்டும்.
நிலைமைகள் எதிர்க்குமானால் தாங்கிக் கொள்ளக் கூடிய பொறுமை எனக்கு இல்லை. முதலி லிருந்தே என்னிடம் உள்ள குறை அதுதான்! இறைவன் என்னைச் சகிப்புத் தன்மை இல்லாத பெண்ணாக ஆகவேண்டும் என்று சபித்து விட்டார். பார்க்கப்போனால் அந்த இறைவனும் ஓர் ஆண்தானே? ஒரு பெண்ணுக்காக எந்த ஆண்மட்டும் அன்புதானம் செய்வான்?
பார் அண்ணா! என் பாபு, தந்தை அரவணைப்பே தெரியாத என் மகன்----தாயைக்கூட இழந்து விடுகிறோம் என்பது தெரியாமல், கவலையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் இனி வாழ்க்கையில் அம்மாவைப் பார்க்கமாட்டான் இல்லையா? நான் போய்விட்ட பிறகு அவன் எழுந்து அழுதால், அவங்க அப்பா தூக்கம் கெட்டதென்று கோபித்து அடித்தால்......... அறைக்கு வெளியே தள்ளி, கதவுகளை மூடிக்கொண்டால்.......அந்த இருட்டில் அவன் 'அம்மா........!அம்மா!..........' என்று பயத்தில் அலறிக்கொண்டிருந்தால்.........கடவுளே! தாய் இதயத்தை இவ்வளவு கருணையில்லாமல் படைக்கிறாயா? தாய் வயிற்றில் கடுமையை நிரப்புகிறாயா? என் பாபுவை நீ போற்றிக்காப்பாயா?' என் கண்கள் குளமாகின்றன. எழுத்துகள் கலைந்து கொண்டுள்ளன.
"அண்ணா! பரவாயில்லை இல்லையா? இந்தச் செய்தி தெரிந்ததுமே நீ வருவாய், பாபுவை அழைத்துச் செல்வாய். அம்மாவிடம் ஒப்படைப்பாய். ஆனால்......... கேசவ்! அந்தப் பொறுப்பு அம்மாவுடையதல்ல, உன்னுடையது! நான் என் குழந்தையை உனக்குக் கொடுக்கிறேன். என் இதயத்தை, என் உடலின் உடலை, என் என் மகனை, என் உதயனை உனக்குக் கொடுத்து விடுகிறேன். நீதான் அவனுக்குத் தாயும் தந்தையும், கடவுளும், எலலாமும்! என்னிடம் அழுத்தமாக உள்ள இந்த நம்பிக்கையை எப்போதும் பாழாக்க மாட்டாய் இல்லையா?
பாபுவின் படிப்பு விஷயத்தில் என் விருப்பம் ஒன்று! அவனை டாக்டருக்குப் படிக்கவை. வெளிநாட்டுக்கு அனுப்பு. அது என் பேரவா! ஆனால் பாபு டாக்டர் ஆவதற்கு விரும்பவில்லை என்றால் எப்போதும் கட்டாயப் படுத்தாதே. அவன் விருப்பப்படி----அவன் விரும்பும், மதிக்கும் படிப்பையே படிக்கவிடு. அவனுக்குத் துணி தைக்கவேண்டும் என்று ஆசை இருந்தால் தையற்காரன் ஆகட்டும்! தவறில்லை. ஆனால் அந்தத் துறையில் வல்லவன் ஆகவேண்டும்! அதுதான் முக்கியம்!
அடுத்து உன் திருமண விஷயம்- நீ சுசீலாவைத் திருமணம் செய்துகொள்! ஒவ்வொரு வினாடியும் உன்னையே தியானிக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அது உன் பாக்கியம் அல்லவா? அறிவு தெரிந்த நேரத்திலிருந்து உன்னிடம் மதிப்பு வைத்து, உன்னையே பூஜை பண்ணி வரும் பெண்ணுக்கு நீ எவ்வளவானாலும் கடன் பட்டிருக்கிறாய். அதைத் தீர்த்துக்கொள்ளும் நாள் நீ நன்றி மறக்காதவனாகக் கூட ஆவாய்.
பெரியப்பாவின் பிடிவாத குணம் எனக்குத் தெரியாததல்ல. அதனால்தான் உனக்கு இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்கிறேன். வாழ்க்கையின் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே அல்ல என்றும்; ஒருவரை யொருவர் பெரிதும் விரும்பம் இரண்டு இதயங்களைச் சேர்த்து வைப்பதில் புண்ணியம், பிரிப்பதில் பாவம் உண்டாகிறது என்பது என்றைக்காவது பெரியப்பாவுக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இருந்தாலும் நீ ஒரு ஆண்மகன், சுதந்தரமுள்ளவன்----சிந்தித்துப்பார்...தாய் தந்தையர்க்குப் பிள்ளைகள் எப்போதும் அடங்கி நடக்க வேண்டும். உண்மையே----அது தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கும்போது அல்ல. பெரியவர்களானாலும் சுய நலத்துக்கு அடிமையாகும்போது அல்ல. சுசீலாவுடன் நீ, உன்னுடன் சுசீலா, வாழ்க்கைகளை முழுமையாகச் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். உங்களைப்போன்ற தாய் தந்தையர்!...என் உதயன் அதிருஷ்டசாலி! என் கண்கள் ஈரமாகின்றன. அவன் இன்னும் தூங்கிக் கொண் டிருக்கிறான். பக்கத்தில் நான் இருக்கிறேன். என்ற நினைப்பில் அமைதியாக. என் கை நடுங்குகிறது. பேனா எழுத மறிக்கிறத. இனி முடிக்கட்டுமா...
நான் இந்த வாழ்க்கையிலிருந்து, துன்பத்தி லிருந்து, கண்ணீரி லிருந்து, அமைதியின்மையி லிருந்து, சிந்தனைகளிலிருந்து, குறை கூறுவதிலிருந்து நிரந்தரமாகச் சென்றுகொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நல்ல நாள்! அண்ணா! எனக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் உள்ளது. விழுந்து விழுந்து சிரிக்கவேண்டும் போல் உள்ளது. நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். இது ஏமாற்றம் இல்லை. தோல்வி! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பானுமதி ஆகாம லிருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூகத்தில் ஆயிரக்கணக்கான பானுமதிகள் இருக்கிறார்கள். நம்முடைய சமூக விதிகளில் தீவிரமான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிற காலம் இது. இந்த மாற்றத்திலே ஒரு பக்கம் முன்னேற்றம்! இன்னொரு பக்கம் பின்னேற்றம்! தூக்கத்திலிருந்து எழுந்துகொண் டிருக்கிற பெண்குலத்தின் விழிப்புணர்ச்சி புரையோடிய சமூகக்தில் மோதிக்கொண் டுள்ளது. பரம்பரை பரம்பரையாக நிலைகொண்டு விட்ட ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்களின் விழிப்புணர்ச்சி நசுக்கப் படுகின்றது. ஆனாலும் இந்தத் திருப்பம் உனக்காகவோ, எனக்காகவோ நிற்காது. இது தொல்லை கொடுக்கும் காட்டாற்றைப் போன்றது. அதை எதிர்த்து நிற்க முயற்சிக்கிறவன் அடித்துச் செல்லப்படுவான். அந்த நாளுக்காகவே சில பானுமதிகள் பலி ஆகவேண்டி யுள்ளது.
மேலும் என் பாபுவுக்கு ஏதோ உளறிக்கொட்டிக் கடிதம் எழுதினேன். அதைப் பத்திரமாக மறைத்து வைத்து என் பாபு வளர்ந்து பெரியவனாகித் தானாக அதைப் புரிந்துகொள்ளக் கூடிய திறமை வரும்பொழுது கொடுப்பாயல்லவா?
சரி நான் போகிறேன்... பாபு தூக்கத்திலிருந்து எழுந்தால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது...
உன் இதயபூர்வமாக எனக்குப் பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரத்தை என்னுடனே கொண்டுபோகிறேன். அது என் உடம்பின் பாகம்தான் ...என்னுடன் சேர்ந்து எத்தனையோ இகழ்ச்சிகளை அதுவும் தாங்கியுள்ளது. நிரந்தரமாக உன்னை, என் பாபுவை, என்னுடைய எல்லாவற்றையும் இழந்து செல்கிற துர்ப்பாக்கியசாலி, தங்கை பானு! ... பானுமதி!"
கடிதத்தை மடியில் வைத்து முழங்காலில் தலையை நுழைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். என் மனம் எச்சரித்துக்கொண்டிருந்தது. பானுவின் கோரிக்கையை, கோரிக்கை அல்ல, ஆணையை, மீறுவதற்கு வழியில்லை.
பானு என்னைவிடச் சிறியவள். என்னோடு சேர்ந்து படித்தாள், ஆடினாள், பாடினாள். நான் நானாகவே இருக்கிறேன். பானு வீட்டுத் தலைவி ஆனாள், மனைவி ஆனாள், தாய் ஆனாள். கடைசியில் மடிந்துகூடப் போய் விட்டாள். என் வாழ்க்கையில் எந்த மாறுதலும் இல்லை. பானு சுகங் கண்டாள்; துன்பப்பட்டாள்; சந்தோஷப் பட்டாள்; கவலைப்பட்டாள்; அனுபவித்தாள், விரக்தி அடைந்தாள்; எல்லாம் விரும்பினாள்; எல்லாவற்றையும் இழந்து விட்டாள்.
நான் உயிரோடு இருக்கிறேன். பானு இறந்து விட்டாள் ... அப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ எனக்குத் தெரியாது. பெரியக்கா தேடிக்கொண்டு வந்தாள். "பானு மகன் சாதம் சாப்பிடமாட்டேன்னு அழுதுட்டிருக்கான். பார் கேசவ்!" என்றாள். உடனே எழுந்து போனேன். பாபு கதவருகில் நின்றுகொண்டு "அம்மா!...அம்மா!..." என்று சத்தம்போட்டு அழுது கொண்டிருந்தான். எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. "நானீ!...வாப்பா!" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் போட்டுக் கொண்டேன்.
"மாமா! அம்மா..."
"வருவாப்பா ஊரு... போயிருக்கா. இப்பவே ரயில் வண்டியிலே வருவா. நீ ... சாதம் சாப்பிட்றியா? நான் ஊட்றேன்."
"ஊஹூம்! அம்மா...எங்கம்மா..."
"அம்மா வர்றதுக் குள்ளே நல்ல பையனா நீ சாதம் சாப்டிட்டு இருந்தா அம்மா நிறெய பொம்மெ கண்டு வருவா உனுக்கு. ஊதல்கூட கொண்டுவருவா. நம்ம ரெண்டு பேரும் விளெயாடலாம்."
"எங்கம்மா எங்கே போனா?"
"ஊருக்குப் போனா பாபூ! அப்பொ நீ தூங்கிட்டிருந்தே."
"ஊம்..ஊம்...என்னெக் கூத்தித்துப் போலுயே ஏன்?" என்று கேட்டு மீண்டும் அழத் தொடங்கினான். என் மனம் ரம்பங்களின் இடையில் நசுங்கிக்கொண்டிருந்தது. அவனை மார்போடு அணைத்துக் கொண்டேன்.
"அம்மா இப்பவே வந்துடுவா. அதுவரெக்கும் என்னெப் பாத்துக்கச் சொன்னா. நிஜமா நானீ! இன்னா, சாதம் சாப்பிட்றியா? நானும் சாப்பிட்றேன்."
"நீயும் சாப்பித்தியா?"
"நானும், நீயும் நல்லா ஒரே தட்லே போட்டுச் சாப்பிடலாம்."
"அப்பொ எங்க அம்மா எங்கே சாப்புதுவா?"
"அம்மா...சொந்தக்கார் ஊருக்குப் போயிருக்காங்கில்லே! அங்கே அம்மாக்கு அவங்க எல்லாம் கொடுப்பாங்க. சாப்பிடுவா."
"தயிறு போதுவாங்களா?"
"ஆமாம்.. தயிரு போடுவாங்க. நெய்யி போடுவாங்க., நீ கூடத் தயிர் போட்டுச் சாப்டக்கூடாதா?"
ஒரு மணி நேரம் வரெக்கம் எத்தனையோ கேள்விகள் போட்டு, எத்தனையோ பதில்கள் கேட்டு, அம்மா பிறகு வருவாங்க என்ற நம்பிக்கை வந்தபோது சாதம் சாப்பிட ஒப்புக்கொண்டான். பத்து மணி ஆகிவிட்டது சாதம் பிசைவதற்குள். மாலை எல்லோரும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர். எட்டு மணி இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பாட்டி யாரோ வந்து சிறிது சாதம் வடித்து வைத்தாள். பெரியக்கா எழுந்து குழந்தைகளுக்குச் சாதம் பிசைந்தாள்.
நானியுடன் நானும் நான்கைந்து கவளங்கள் சாப்பிட வேண்டி இருந்தது. சாதம் ஊட்டிவிட்டு, தோள்மேல் போட்டு நடந்துகொண்டு தூங்கவைத்தேன். அவன் தூங்கிய பிறகு எழுந்து அறைக்குள் சென்றேன்.
நள்ளிரவு...வீடெல்லாம் ஒரே அமைதியாக அச்சம் சூழ்ந்திருந்தது. சித்தி இருந்து இருந்து சத்தம் போட்டு அழுதாள். சித்தி வயிறு துக்கத்தால் பற்றி எரிந்து கொண்டிருந்தது. நான் அறைக்குள் சென்று விளக்கைப்போட்டு பானு மகனுக்கு எழுதிய கடிதத்தை எடுத்தேன். எனக்கு பானு பேசிக்கொண்டிருந்தால் அப்படியே கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று இருக்கிறது. கடிதம் மூலமாகவாவது பானுவுடன் பேசவேண்டும். கடிதத்தில் பல இடங்களில் எழுத்துகள் கலைந்திருந்தன.---- கண்ணைத் துடைத்துக்கொண்டு கடிதம் படிக்கத் தொடங்கினேனோ இல்லையோ கேவி அழுது கொண்டே எழுந்தான் நானி. கலக்கத்துடன் வெளியே சென்றேன். அவனை மறுபடியும் தோள்மேல் போட்டு நடந்து பிறகு படுக்கவைத்தேன்.
ஏனோ எனக்கு பானு மகனுக்கு எழுதிய கடிதத்தைப் படிக்க மனம் வரவில்லை. அந்தத் தாய் மகனுக்கு என்ன எழுதினாளோ! அவன் பெரியவனான பிறகு அவனிடமே கொடுக்கிறேன் - அளவு கடந்த துக்கம் வந்தது.
பானூ! ... அம்மா! ... பானூ! ... இந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நீ இழைத்த கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. உனக்காக ஏங்கும் குழந்தைக்கு இவ்வளவு அநியாயம் செய்வாயா? சுயநலத்தை விட தியாகம் எவ்வளவு உயர்ந்ததோ சிந்தித்தாயா? உன் சுயநலத்துக்காக உன்னிடம் அன்பு செலுத்துவோரை ஒரேயடியாக அழித்து விடுவதா? நீ சுகத்திலிருந்து தூரமாயிருந்தாலும்---- எனக்காக இந்த அண்ணனுக்காகப் பிழைத் திருக்கக் கூடாதா அம்மா! அப்போது என்னுடையது சுயநலம் என்கிறாயா? உன் குழந்தையை நீயே வளர்க்க முடியாமல் போய்விட்டாயா? அதற்க்கு நான் இருக்கிறேன் என்கிறாயா? இது உனக்கு நியாயமல்ல பானூ! நியாயமல்ல! நீ கட்டியதெல்லாம் காகித மாளிகையே ஆனால், அது அனுபவத்தில் முடியாமல் போனால் தவறு யாருடையது என்று சொல்கிறாய்! அது உன் துர்ப்பாக்கியம் என்று நீ ஏன் நினைக்கமாட்டாய் பானூ? இப்பொழுது நான் எவ்வளவு சொன்னால் உனக்குக் கேட்கப் போகிறது? அவ்வளவு அழுதால் உனக்குக் கருணை பிறக்கப்போகிறது தங்கச்சி!
"கேசவ்! அழுதிட் டிருக்கியா?"
"ஆமா ... இல்லெ. வா அக்கா! பானுவைப் பாத்தியா என்ன வேலை ..."
"ஆமாம், என்ன வேலெ செய்துட்டாப்பா? கடிதங்கள்ளே என்ன எழுதினா?"
"காரணம் ஒண்ணும் எழுதல்லே. எழுத முடியாதது ஏதோ நடந்திருக்கணும். இல்லேன்னா எனக்குத் தவறாமெ எழுதுவா."
அக்கா திகிலோடு நின்றுகொண்டிருந்தாள்.
"பாபு தூங்கறானா?" "அசெஞ்சிக்கிட்டிருந்தா முதுகெத் தட்டிட்டு வந்தேன். நீ கொஞ்ச நேரம் படுத்துக்க கூடாதா?"
"உக்காந்திருந்தாலும், படுத்திட்டிருந்தாலும் ஒண்ணுதான்கா! கண்ணு மூடமாட்டேங்குது. மனசெல்லாம் என்னவோ மாதிரி இருக்குது."
"பானு தனக்கு எந்த அதிர்ஷ்டமும் இல்லேன்னு நினெச்சிட்டாளே தவிர, உன்னெப் போலெ அண்ணன் போதும்! அதுக்காகவே அவ உயிரோ டிருக்கணும்."
"அக்கா! நம்ம வேதனெயிலே நாம் என்னவோ நினெச்சிக்கிறோமே தவிர, பானுவெப் போல ஒருத்திக்கு வேறெ வழியில்லே. அது எனக்குத் தெரியும்." சற்று நேரம் பேசிவிட்டு, அக்கா----மகள் எழுந்ததால் போய்விட்டாள். நான் மெதுவாகச் சென்று நானியின் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். வீடெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது. ஆனால் ஒருவரும் தூங்கவில்லை.
காலை வந்தது. பாபு மறுபடியும் அழுகையைத் தொடங்கினான். மறுபடியும் ஏதோ பூசி மெழுகப் போனேன். நம்பவில்லை. அவனுக்கு அறிவு அதிகம். "எங்க அம்மா ........ வருவான்னு சொன்னே ............ மாமா! எங்க அம்மா எங்கே?" என்று நேரடியாகக் கேட்கிறான்.
"கண்டிப்பா வருவாப்பா! சொந்தகாரங்க சீக்கிரமா அனுப்பிச்சாத்தானே! ரெண்டு நாள்ளே வந்துடுவா. அதுவரெ உன்னெயும் என்னெயும் விளையாடச் சொன்னா."
"ஊஹூம்! நான் ஆதமாத்தேன், மாமா! ....... என்ன எங்கம்மா கித்தே கூத்தித்துப் போமாத்தே...?" பாபுவின் கண்களில் நீர் திளிர்த்தது. நான் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அவன் கேள்விகளுக்கு நான் என்ன சொன்னாலும் அவன் கேட்பதாக இல்லை. குழந்தைகள் எல்லாரையும் அழைத்துக் காட்டினால் அவர்களோடு சேர்வதில்லை. என்னை விட்டு எங்கேயும் போவதில்லை. "அம்மா!" என்று மிகமிகப் பரிதாபமாக அழுது கொண்டே இருக்கிறான். அன்று அவன் சரியாகச் சாதம் சாப்பிடவில்லை. இரவு நான் பக்கத்தில் போட்டுக் கொண்டு படுத்தேன். அழுது அழுது தூங்கி விட்டான். தூக்கத்தில் கூடத் தேம்புகிறான். திடீரென்று துள்ளி எழுந்து அழத் தொடங்கினான். அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது வீட்டில் யாருக்கும் புரியவில்லை. சித்தி அவனைத் தூக்கிகப் போனாள். கேவி அழுது கொண்டே என்னைச் சேர்த்துக் கட்டிக் கொண்டான். "வேணாம் நானீ! யார் கிட்டேயும் போகவேணாம் நானே தூக்கிக்கிறேன்!"
அவன் பிறந்ததிலிருந்து ஒரு மணி நேரம் கூடத் தாயைப் பிரிந்து இருந்ததில்லை. வீட்டில் தந்தை இருந் தாலும் தாயிடம்தான் அவனுக்கு அளவு கடந்த பற்று. இப்போது அவனுக்கு அறிவு தெரியும் சமயம். அம்மாவை எப்படி மறந்து விடுவான்? என் இதயம் படபடத்தது. அவன் ஏங்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது? குழந்தைப்பருவம். போகப்போக அவனே மறந்து விடுவான் என்று நினைத்தாலும் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து மறுபடியும் அழுதால் என்ன செய்வது? மெதுவாக அவனைப் படுக்கையில் படுக்க வைத்தேன்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. பாபு ஒரேயடியாக ஏங்கத் தொடங்கினான். சாதம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டான். "அம்மா! அம்மா!" என்று பேசுவதற்கு இடைவெளி இல்லாமல் அழுகிறான். அம்மாவை அழைத்துவரச் சொல்கிறான். இல்லையென்றால் தன்னை அழைத்துப் போகச் சொல்கிறான்.
சித்தியின் அழுகையால் இன்னும் பயந்து விட்டான். தூக்கத்தில் திடுக்கிடுவது, துள்ளி எழுந்து அழுவது, எல்லார் முகத்திலேயும் எதையோ தேடுவது, ஏமாற்றத்தால் ஓவென்று அழுவது. எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. சித்தி, அக்காமார்கள் மெதுவாக அவனைச் சமாதானப் படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அவன் யாரையும் அருகில் வரவிடுவதில்லை. அந்த இரவு அவனுக்குக் காய்ச்சல் வந்தது. உடனே சென்று டாக்டரை எழுப்பி அழைத்து வந்தேன். டாக்டர் ஏதோ ஊசி போட்டுச் சென்றார்.
காலை விடியும்பொழுது காய்ச்சல் சற்றுக் குறைந்தது. அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். நான் முகம் கழுவிக்கொண்டு வந்து அருகில் உட்கார்ந்தேன்.
மெதுவாகக் கூப்பிட்டேன். "நானீ..."
மெதுவாகக் கண்திறந்தான்.
"அம்மா! திருட்டுப்பயலே, முழிச்சிட்டுதான் இருக்கிறாயா?"
"அம்மா...எங்கே?"
அய்யோ! எவ்வளவு தவறு செய்துவிட்டேன்? அந்தச் சொல்லையே அவனுக்கு நினைவுபடுத்தக் கூடாது.
"மாமா!"
"ஆமாமாம், நானீ! நீ காபி குடிக்கிறியா? கொஞ்சமா?"
"ஊஹூம்! எங்கம்மா காபி குதுக்க மாத்தா"
"போவட்டும், பாலு குடிக்கிறியா?"
"எனக்கு வேணாம்."
"நீ நல்ல பையன் இல்லே? கொஞ்சம் குடி, கொண்டு வரட்டுமா?"
"எங்கம்மா கித்தே தூக்கித்துப் போறியா?" சரியென்றால் பால் குடித்ததும் புறப்படச் சொல்கிறான் முடியாதென்றால் பாலே குடிக்கமாட்டேன் என்கிறான். நான் ஒன்றும் பேசாமல் உட்கார்ந் திருந்தேன். அவன் அழத்தொடங்கினான். அவனைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிந்தது. இவ்வளவு சிறிய வயதில் தாயை இழந்தவன் எவ்வளவு துர்ப்பாக்கியசாலி, இல்லையா! அவன் கட்டிலை விட்டு இறங்கி என் மேல் கோபமாக நான்கு அடி நடந்து சென்று நின்றுகொண்டு அழுகிறான். அவனுக்கு யாரும் இல்லாதது போலவும், அனாதை ஆகிலிட்டாற் போலவும், தனிமையில் அவதிப்படுவது போலவும் தோன்றியது. சித்தி இந்த ஏக்கத்தைக் கண்டு இன்னும் சோகத்தில் அழுந்திப் போனாள். நான் வலுக்கட்டாயமாக அவனை அருகில் அழைத்துக் கொண்டேன். அவன் செயலற்றுத் தேம்பிக்கொண்டே என் மடியில் சுருண்டு கொண்டான்.
* * *
பாபு தீவிரமான காய்ச்சலில் விழுந்து கிடக்கிறான். நினைவு இல்லாமல் கிடக்கிறான். இடை யிடையே "அம்மா! அம்மா!" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறான். டாக்டர் பக்கத்து அறையில் ஊசி போடுவதற்குத் தயார் செய்துகொண்டிருந்தார். அமைதியாக வீட்டில் எல்லாரும் பாபுவைச் சுற்றி உட்கார்ந் திருக்கின்றனர். எல்லார் முகங்ளிலும் இனமறியாத அச்சம் குடிகொண்டிருக்கிறது. நான் திடீரென்று எழுந்து சென்றேன். டாக்டர் அப்போதுதான் சிரன்ஜ் எடுத்துக்கொண்டு வந்தார். "டாக்டர்........" என்று கைகளைப் பிடித்துக் கொண்டேன் பயத்துடன். என் உடல் நடுங்கியது. குரல் சரியாக வெளிவர வில்லை. "பாபுவை....காப்பாத்தறேன்னு சத்தியம் பண்ணுங்க......டாக்டர்! ........"
"ராவு சார்! நீங்க பயப்படாதீங்க. நான் நல்ல மருந்துங்கதான் குடுக்கிறேன். என் சக்திவரெக்கும் முயற்சி பண்றேன்."
"இல்லெ டாக்டர்! பாபு...பிழைச்சிடுவான்னு சொல்ல முடியாதா? எந்தப் பட்ணத்துக்காவது அழைச்சிட்டுப் போச் சொல்றீங்களா?"
"ராவு சார்! நீங்க அவசரப் படறீங்க. பாபுக்கு அம்மாமேலெ ஏக்கம் தவற வேறெ நோய் ஒண்ணு மில்லெ. என்னெ டாக்டரா யில்லே, உங்க அண்ணனாப் பாருங்க. ஒரு பச்செக் குழந்தெக்கு நான் அநியாயம் பண்ணுவேனா?"
"மன்னிச்சிடுங்க டாக்டர்! என் வேதனெ உங்களுக்குத் தெரியாது; என் தங்கெ தன் மகனெ என்கிட்டெ ஒப்படெச்சிட்டுத் தற்கொலெ பண்ணிக்கிட்டா. பாவுவெ நான் பிழெக்கவெக்க முடியலேன்னா, டாக்டர்...! நான் ஒண்ணும் சொல்ல முடியலே...அவனெக் காப்பாத்தியே ஆவணும்."
டாக்டர் என்னைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்றார். நான் பின்னாலேயே ஓடிச் சென்றேன். ஊசி போட்ட வலியால் பாபு கேவிக் கேவி அழுதான். கண்களை மூடிக்கொண்டே படுத்துக்கொண்டு நீண்டநேரம் அழுதான்.
சிறுகச் சிறுக பகல்பொழுது நழுவுகிறது. நான்கு பக்கமும் இருள் சூழ்ந்துகொண்டு வருகிறது. சித்தியும் நானும் பாபுவின் கட்டி லருகிலே உட்கார்ந் திருக்கிறோம். எனக்கு நான்கைந்து நாட்களாகத் தூக்கமில்லை...அப்படியே பாபுவின் பக்கத்தில் படுத்துக்கொண்டால் கண்களை மூடிக்கொண்டு வருகின்றன.
* * *
வீடெல்லாம் இருட்டாக இருக்கிறது. சித்தி எழுந்து விளக்கைப் போடவில்லை. இருட்டிலேயே படிகள் ஏறி யாரோ வருகிறார்கள். நடையெல்லாம் பானுவின் நடையைப் போலவே இருக்கிறது. இன்னும் அருகில் வருகிறாள் பானூ!
"பானூ.....!" என்று கத்தினேன். சித்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பானு மேலும் அருகில் வந்து சிரித்தாள். "கோவம் வந்துதில்லே உனக்கு? அதான் வந்துட்டேனே? என்னெ அலெ அடிச்சிட்டுப் போம் போது ஒரு செம்படவன் காப்பாத்தனான். ரெண்டுநாள் எனக்கு நினெவே வரல்லே' சொல்லிக் கொண்டே போகிறாள். நான் பைத்தியம் பிடித்தவன் போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
'அய்யோ! பாபுக்கு ஜொரம் வந்துதா? தம்பி! நான்தான் அம்மா! வந்திருக்கேன்........அம்மாவெப் பாரு நானீ!' பானு நானியைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். பாபுவை எடுத்துக்கொண்டு காற்றிலே அப்படியே....... தூக்கிக்கொண்டு பறந்து போகிறாள்.
'பானூ' என்று பிதற்றிக் கூச்சல் போட்டேன்.
* * *
"கேசவ்! கேசவ்! பாபூ!"
யாரோ தட்டி எழுப்புகிறார்கள். திடுக்கிட்டேன். சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். பாபு பக்கத்திலேயே இருக்கிறான். என் உடலெல்லாம் கிடுகிடுவென்று நடுங்குகிறது. சித்தி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
"சித்தி! பானு வரல்லியா?"
"........"
"சித்தி! நீ கூட பானுவெப் பாத்தெ இல்லே?"
சித்தி நிதானமாகச் சொன்னாள் - "கனவு கண்டியா பாபு? பானு திரும்பி வருவாளா? அவ்வளவுக்குக் குடுத்து வெச்சிருக்கோமா?"
"கனவில்லே சித்தி! பானு எனக்கு நல்லா தென்பட்டா. ஒரு செம்படவன் காப்பாத்தினான்னு சொன்னா."
"உனக்குக் கனவுதான் வந்தது. அய்யோ தாயே!" என்று சொல்லி சித்தி சத்தம்போட்டு அழத்தொடங்கினாள்.
பாபு திடுக்கிட்டு எழுந்துவிட்டான். பயத்தில் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். முதுகைத் தடவிக் கொண்டே அவனை என்மேல் படுக்க வைத்துக் கொண்டேன். குச்சிபோல் உலர்ந்து மெலிந்துபோய் விட்டான். கண்கள் குழிவிழுந்து உள்ளே போயிருந்தன. தலை சிறிய புதர்போல் வளர்ந்து இருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டிக் கிடந்தது. எனக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. இப்போது பானு இருந்தால்......உண்மையில் வந்தால், பாபு இப்படி ஆகிவிடுவான் என்று நினைத்தால் ........பானு எப்போதும் அத்தகைய வேலை செய்ய மாட்டாள்.
தெருவில் இருட்டுக்குள் வெறுமையாகப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். இந்த முறை உண்மையாகவே யாரோ படிகள் ஏறி வருகிறார்கள். நான் சட்டென்று எழுந்து விளக்கைப் போட்டேன். அதிர்ச்சியடைந்தேன். மாமா! பாபுவின் அப்பா! நான் ஆச்சரியத்துடன் அப்படியே நின்றுகொண் டிருக்கிறேன். அவர் என் அருகில் வந்து என் கைகளிலிருந்து பாபுவை வாங்கிக் கொண்டார். அவன் முகத்தையே உற்றுப் பார்க்கத் தொடங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. பாபுவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
நான் மந்திரம் போட்டாற்போல் நின்றுவிட்டேன். மாமா மாறிவிட்டாரா? உண்மையில் மாறிவிட்டாரா? சித்திகூட என்னைப் போலவே கல்லாக உட்கார்ந்து விட்டாள்.
யாரோடும் யாரும் பேசவில்லை. அவர் அழுக்கேறிய தாடியுடன், கிழிந்த துணிகளுடன் பிச்சைக்காரன்போல இருந்தார். கண்களில் ஆழ்ந்த துயரின் குறிகள் தென்பட்டன. ஏதோ ஆழ்ந்த உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பவர்போல மகனின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் உண்மையான, தூய்மையான கழிவிரக்கம்! ..........உண்மையாகவா?" பானு பார்த்தால் நம்புவாளா?
பாபு எதிர்பாராமல் கண் திறந்தான். ஒன்றும் புரியாதவன்போல் சற்றுநேரம் பார்த்துவிட்டு, கேவி அழத் தொடங்கினான். ஒரே துள்ளலில் அப்பாவின் கைகளிலிருந்து தரை மேல் விழுந்து விட்டான். ஓடிப்போய் அவனை நெருங்குவதற்குள் அப்பா மறுபடியும் மகனைத் தூக்கப் போனார்.
"பாபு பயப்பட்றான். நான் தூக்கிக்கிறேன்" என்றேன் மெதுவாக. தலைகுனிந்து கொண்டு தரைமேல் உட்கார்ந்தார். பாபுவுக்கு நினைவு இல்லை. உடலைத் தடவிக் கொடுத்தபடி மடியில் படுக்கவைத்துக் கொண்டேன்.
"அ........ம்மா......அம்மா....." உதடுகள் சில்லிட்டுப் போகின்றன. எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கையைக் கூட அசைக்க முடியாமல் இருக்கிறேன். ஏதோ ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் பாபுவின் முகத்தை நோக்கிக் குனிந்து அவன் கண்களையே பார்க்கலானேன். அந்தக் குழந்தைக் கண்களில் ஒளி மிக மங்கலாகத் தெரிந்தது. கண் இமைகளைத் தூக்கிப் பார்க்க முடியாமல் போகிறான். டாக்டர் வந்தார். பாபுவின் கண்கள் மூடப்பட்டு விட்டன. உதயன் மறைந்து விட்டான்! அப்பா மகனின் செத்த உடலை மார்போடு அணைத்துக்கொண்டு புலம்பி அழுகிறார். ஆடிப்பாடும் குழந்தையை, பம்பரம் போலத் திரிந்து வந்த மகனை ஒருமுறை கூடத் தூக்கிக்கொண்டு, குறைந்தது கண்ணெடுத்தும் பார்க்காத துர்ப்பாக்கியசாலி!....'கடவுளே! என்னெ அழெச்சிக்கோ! தங்கச்சி! என்னெ மன்னிச்சுடு!' என் தலை பாரமாக.......என் கண்கள் இருளடைகின்றன. எவ்வளவோ நேரம் கழித்து எழுந்து.......துக்கத்துடன்...... பைத்தியக்காரன் போல பானு மகனுக்கு எழுதிய கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
'கண்ணே!
உதயா! என் சிரஞ்சீவி! உன்னை என்ன என்று கூப்பிடுவேன்? மூன்று வயதான உன்னை, சரியாகப் பேசவராத உன்னை, இருபத்தைந்து வயதான ஆண் மகனாக, எல்லாம் தெரிந்துகொண்ட பெரிய மனிதனாகக் கற்பனை செய்து, கடிதம் எழுதவேண்டும் என்றால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை பாபு! உனக்கு நான் இந்த இறுதிக் கட்டத்திலே ஏதாவது சொல்லவேண்டும். ஏதோ அறிவுறுத்தவேண்டும், எத்தனையோ உனக்குப் புரிய வைக்கவேண்டும் என்றும் என் மனதை உன் முன்னால் திறந்து வைக்கவேண்டும் என்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நான் உன் பக்கத்திலேதான் உட்கார்ந்திருக்கிறேன். நீ ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய். நடு நடுவே சிரித்துக்கொண் டிருக்கிறாய். உனக்கு முத்தம் கொடுக்கவேண்டு மென்று என் மனம் துடிக்கிறது. ஆனால் அதை இப்பொழுது நான் செய்யக் கூடாது. உன்னுடைய மனம் மென்மையானது. ஒவ்வொரு சிறிய சத்தத்திற்கும் எழுந்து விடுகிறாய். இப்போது நீ எழுந்தால் நான் ஏதாவது செய்யமுடியுமா? நீ ஏதாவது செய்ய விடுவாயா?
கண்ணே! உனக்கு.....அம்மா...... இல்லாமல்....... செய்கிறேன். நீ தூக்கம் விழித்ததும் அழுவாய். அறிந் தும் அறியாத உன் மனம் வேதனைப்படும். எல்லார் முகங்களிலும் அம்மாவைத் தேடுவாய். எங்கேயும் அம்மா தெரியாமற் போனால், நாட் கணக்கில் அம்மா மாயமாகி விட்டால், உன் பிஞ்சு மனம் துடிதுடிக்கும். ஏக்கத்தோடு, வாய் திறந்து சொல்லமுடியாத வேதனையோடு அழுவாய். உன் இளம் மனதை இந்த அளவு ஊமை வேதனைக்கு ஆளாக்குகிறேன் என்பதை நான் அறிவேன். இதற்கு என்னை மன்னிப்பாயாப்பா? நீயே சிந்தித்துப் பார்----காலில் முள் குத்திக் கொண்டால் துடிதுடித்துப் போகிறோமே! இவ்வளவு மென்மையாகக் காப்பாற்றிக் கொள்ளும் இந்த உடலை நமக்கு நாமே துணிந்து முடித்துக் கொள்கிறோம் என்றால், கைகளாலேயே நெருப்பு மூட்டிக்கொண்டு எரிந்து போவதற்கும், தன் கைகளாலேயே தன் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்வதற்கும் தன் உயிரைத் தானே வெறுத்து விடுவதற்கும் காரணங்கள் எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டுமோ சிந்தித்துப் பார்! சிந்திக்க முடியுமானால் நீ என்னை மன்னிப்பாயப்பா!.......மன்னிப்பாய்!
நீ வயிற்றில் இருக்கிறாய் என்று உணர்ந்த நேரத்தில் நான் எப்படியோ ஆகிவிட்டேன். என்னைத் தாயாக்கிய என் சிரஞ்சீவி! நீ பிறந்த நாள் நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். கண்கூடத் திறந்து பார்க்காத உன்னை இதயத்தோடு அணைத்துப் பூரித்துப் போனேன். நீ சூரியனோடு சேர்ந்து பிறந்தாய். அதனால் தான் உனக்கு உதயன் என்று பெயர் வைத்தேன். வாழ்க் கையில் நான் சுதந்திரமாக செய்ய முடிந்த வேலை இது ஒன்றுதான்! அதற்குக் காரண மிருக்கிறது. ஒரு மனிதன் ஒரு வேலையைச் செய்யும் பொழுது, வேண்டியவர்கள் தடை போடவில்லை என்றால் முழுதும் விருப்பம் இருப்பதால் இருக்கலாம். உன் பெயரைப் பொறுத்தவரை எது நடந்ததோ நீயே உணர்ந்து கொள் - உன் மேல் நான் எத்தனையோ ஆசைகள் வைத்தேன். என் மகிழ்ச்சி இல்லத்திற்கு நீயே அஸ்திவாரம் போடுவாய் என்றும், இந்த இருள் நிறைந்த வாழ்வுக்கு ஒளி காட்டுவாய் என்றும், என் கண்ணீரை உன் பிஞ்சுக் கைகளால் துடைத்துப் போடுவாய் என்றும்....இன்னும் ... இன்னும் நான் பிழைத்து இருந்தால் நீ எல்லாம் செய் வாய். துரதிருஷ்டம் என்னைப் பிழைக்க விடவில்லை. இப்பொழுது அதற்கு நான் கவலைப்படவும் இல்லை. என் கவலை, என் துக்கம், என் தன்மானம், என் ஆவேசம் எல்லாம் கடந்த காலத்தில் கரைந்து விட்டன.
இருந்தாலும் இந்தக் கடைசி நேரத்தில் என்னிடம் மிகுந்திருக்கும் ஒரு விருப்பத்தை உன்னிடம் சொல்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டியவன் நீதான்! நீ வளர்ந்து பெரியவனாகி முன்னேற வேண்டும். இலட்சியங்கள் நிறைந்த மனிதனாக விளங்கவேண்டும். உன் ஆண் உலகத்தில் இந்த இருட்டுச் சமூகத்தில் மாணிக்கமாகத் திகழவேண்டும். அநீதிகளைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத, அக்கிரமங்களைப் பார்த்து ஆவேசப்படும், துர்ப்பாக்கியசாலிகளைக் கண்டு கண்ணீர் விடும், கீழ்த்தன்மையைப் பார்த்தால் தலை குனிந்து கொள்ளும் தூய்மையான மனிதனாக வாழவேண்டும். அந்த நாள் வரவேண்டும், அதை நீ தேடித் தரவேண்டும். கேட்டாயா பாபூ! இது உனக்கு மிகச் சிறிய விருப்பமாகத் தெரிகிறதல்லவா? மாமாவின் பாதுகாப்பில் நீ இப்போது அப்படித்தான் வளர்ந்திருப்பாய், இல்லையா?
நீ எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. இந்தப் பரந்த உலகத்தைப் படைத்தது கடவுளாகட்டும், வேறேதாவது சக்தியாகட்டும். எதுவானாலும்----இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் சமமானவை. யானை எவ்வளவு பெரியதோ, எறும்பு அவ்வளவு சிறியது. ஆனாலும் அதனுடைய சிறப்பு அதனிடம் இருக்கிறது. அதனுடைய மதிப்பு அதற்கு உள்ளது. எறும்பு தாழ்ந்தது அல்ல. யானை உயர்ந்தது அல்ல. அதை நீ ஒத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட மனிதன் மிக உயர்ந்த நிலையில் உள்ளவன். சிந்திக்கக் கூடியவன். புரிந்து கொள்ளக் கூடியவன். எதையும் பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடியவன். இந்தத் தனித்தன்மை விலங்குகள், பறவைகளிலாகட்டும், புழுபூச்சிகளிலாகட்டும், வேறு எந்தப் பிராணி யிடமும் இல்லை. அதனால் தான் மனிதன் மனிதனாகவே இருக்க வேண்டும். எந்தப் பிராணிக்கும் கிடைக்காத அந்தத் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பசுக்களைப் பார்த்தாயா? தீனிக்காகக் கன்றோடு தாய் முட்டிக்கொள்கிறது. தாயோடு குட்டி இன்பம் காண்கிறது. அது அவற்றின் குற்றமல்ல; அவற்றிற்கு அந்தப் பகுத்தறிவைக் கடவுள் அருளவில்லை. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய மனிதன் அதிகாரத்தைப் பெரிதும் விரும்பினால், அக்கிரமங்களுக்கு அடிமையானால், கீழ்த் தன்மைக்குத் தலை குனிந்தால் அது மிருகத்தனம் அல்ல என்கிறாயா? நீ மனிதனாகப் பிறந்தாய். மனிதனாகவே வாழவேண்டும். மனிதனாகவே இறக்கவேண்டும்.
நீ ஓர் இலட்சியம் நிறைந்து அழுத்தமான மனிதத் தன்மையை உண்டாக்கிக் கொண்ட நாள் அடுத்தவர்களின் மனிதத் தன்மையைக் காப்பாற்ற முடியும். அடுத்த மனிதனை உணர்ந்து கொள்ள முடியும்.
என்னைப் பற்றி உனக்கு மாமாவின் மூலம் நிறையத் தெரிந்திருக்கும். நான் தற்போதைய சமூக வாழ்க்கைக்குப் பயன்படாதவள். அக்கிரமமான இந்த ஆணின் அதிகாரத்துக்குத் தலை வணங்க இயலாதவள். இந்தக் கதியற்ற பெண் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாதவள். அதனால் தான் விடுதலை பெறுகிறேன்.
மீண்டும் சில தலைமுறைகளுக்குப் பின்னர், பெண்ணுக்கு ஆண் மதிப்பு கொடுக்கக் கூடிய நிலைமையில், மனைவியிடம் கணவன் அன்பு காட்டக் கூடிய காலத்தில், இந்த உடல்களில் அதிகார வேட்கை மறைகின்ற நேரத்தில், ஒவ்வொரு பழமையின் இரத்தத் துளியும் உலர்ந்து காற்றிலே கலந்து போகும் காலத்தில், நீ நான் என்ற உயர்வு தாழ்வுகள் மறைந்து போகும் சமயத்தில், வீடுகளெல்லாம் அமைதி நிலையங்களாக விளங்கும் காலத்தில், ஒவ்வொரு பெண்ணின் இதயமும் மகிழ்ச்சி இல்லமாகும் நேரத்தில், மனிதன் மனிதனாகவே வாழும் காலத்தில்----அப்பொழுது----எனக்குப் பெண்ணாகப் பிறக்கவேண்டும் என்று இருக்கிறது. அவ்வளவு மாறுதல் வருவதற்கு உன்னைப் போன்ற பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கானபேர் சிரமப்படவேண்டும். தேவைப் பட்டால் புன்முறுவலுடன் பலியாகவேண்டும்.
கண்ணே! வாழ்க்கை அனுபவிப்பதற்கே தவிர, இப்படிக் கைகளாலேயே அழித்துக் கொள்வதற்காக அல்ல. ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டு மென்றால் உயிரோடு இருப்பது ஒன்றே முக்கிய மல்ல. இந்த உடலை இயக்கி வைக்கும் இதயம் பாழாகக் கூடாது. ஓர் ஆணி கெட்டு விட்டால் இயந்திரம் வேலை செய்கிறதா?
அம்மாவை நீ புரிந்துகொள்வதற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குப் பின்னல் பின்னுவதற்காக எங்க அம்மா தங்கக் குச்சைக் கொண்டுவந்து சன்னலில் வைத்தாள். அதற் குள்ளே தங்கை அழுததால் பால் கலப்பதற்குப் போய் விட்டாள். நான் அவிழ்ந்த தலைமுடியோடு விளையாடு வதற்கு ஓடிவிட்டேன். பிறகு நினைவு வந்து பார்த்தால் சன்னலில் குச்சு இல்லை, அம்மா கவலையோடு உட்கார்ந்து விட்டாள். அப்பாவுக்குத் தெரிய வந்தபோது சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தார். அம்மா அதற்குப் பிறகு அவ்வளவு அலட்சியமாக இருக்கவே இல்லை. அத்தகைய பரஸ்பர அன்புக்கிடையே வளர்ந்த நான் புது வாழ்வில் அடி யெடுத்து வைத்து நான்காண்டுகள் உயிரோடு இருக்கிறேன். துக்கத்துடன், கண்ணீருடன், பயத்துடன், ஏமாற்றத்துடன், அருவருப்புடன் வாழ்ந்து கொண்டு இந்த வினாடி வரையில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். நான் இல்லை யென்று நீ வேதனைப் படாதே; மற்றொரு பெண்ணை வாழ வைப்பதற்கே முயற்சி செய். நான் அழுதேனென்று கவலைப்பட வேண்டாம்; மற்றொரு ஜீவனின் கண்ணீருக்கு நீ காரணம் ஆகாதே. நான் கைதியைப்போல் இருந்தேன் என்று ஆவேசப்பட வேண்டாம். மற்றொரு ஜீவனின் சுதந்திரத்தை நீ பறித்து விடாதே. நான் பயந்து பயந்து வாழ்ந்தேன் என்று வெட்கப்படாதே; மற்றொரு ஜீவனை வாழ்வில் பயமுறுத்தாதே. அப்பொழுதுதான் நீ மனிதனாவாய்!
இந்தக் காலப் பெண் பெறமுடியாத நியாயத்தை வருங்காலப் பெண் அனுபவிக்க உதவி செய். இந்தக் கால ஒற்றையடிப் பாதையை நீ ராஜாபாட்டையாக மாற்றிவிடு. அப்போதுதான் நீ திறமைசாலி!
கண்ணே.......நானீ! உனக்கு என் மனத்தில் இருப்பதை யெல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிக்கிறேன். பாபூ! நீ ஏன் இந்த இரவு இவ்வளவு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிராய்? என்னுடைய இந்த முடிவை நீ ஆமோதிக்கிறாயா? உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவதற்கு இந்த மனம் ஒப்பவில்லை உதயா! ஆனால் இது தவிர்க்க முடியாது கண்ணே!......என்னைப் போகவிடு!... நீ மாமாவுடன் சந்தோஷமாக விளையாடு!... அப்பொ போகட்டுமா?
என் கண்மணி.... உனக்கு என் வாழ்த்துக்கள்! தாயாக உனக்கு நான் ஓர் ஆணையிடுகிறேன். உனக்கு இந்தப் பிறவியைக் கொடுத்த உன் தந்தையை என்றும் வெறுக்காதே. என் சொல்லைக் காப்பாற்றுவாய். எனக்குத் தெரியும்---- அன்புடன் அம்மா!'
தாங்க முடியாத துக்கத்துடன் - "இதோ! பானு மகனுக்கு எழுதிய கடிதம், படிச்சிக்கோ" என்று சொல்லிக் கடிதத்தை மாமாவின் மேல் எறிந்தேன். அவர் நடுங்கும் கைகளுடன் கடிதத்தைப் பிரித்தார் - எல்லாவற்றையும் படித்து முடித்து முகத்தைத் தாழ்த்திக் கொண்டார்.
நானியுடன் சேர்த்து அந்தக் கடிதத்தையும் பூமாதேவியின் மடியில் புதைத்து விட்டேன்.
* * *
பானு உண்மையாகவே காகித மாளிகைதான் கட்டினாளா? மனிதனுக்கு மனிதனே மதிக்க வேண்டியது என்ற நம்பிக்கையில் தவறாக அடியெடுத்து வைத்தாளா? படிப்பு விஷயத்தில்----ஆசைகளில் ஏமாற்றங் கண்டாலும் மனமுடையாமல், அது வாழ்க்கையில் ஒரு பகுதியே தவிர வாழ்க்கை அல்ல என்று உணர்ந்து கொண்டு, உண்மையான வாழ்க்கையில் விருப்பங்களை வளர்த்துக் கொண்டு தவறு செய்தாளா? மனைவியாக, வீட்டுத் தலைவியாகத் தனக்குப் பெரியதொரு இடம் கிடைக்க வேண்டும் என்று விழைந்ததிலே பேராசைப் பட்டாளா? பெண்ணாக, தாயாகப் புனிதமான இடத்தில் இருக்க வேண்டும் என்றும், தன் குழந்தையைத் தன் கைகளாலேயே வளர்த்து அறிவுள்ளவனாக ஆக்கவேண்டும் என்ற வேட்கை கொண்டதிலே அவசரப்பட்டாளா?
எவ்வளவு சிந்தித்தாலும் இவை யாவும் உண்மையல்ல என்று தான் தோன்றுகிறது. அப்படியானால் பானுவுக்குத் தொடர்ந்து தோல்வியே ஏன் எதிர்ப்பட்டு வந்தது? எல்லா விஷயங்களிலும் சோக தேவதையே ஏன் வரவேற்பு அளித்தாள்? பானு கட்டிய தெல்லாம் பார்ப்பதற்கே தவிர அனுபவிப்பதற்கு இயலாத காகித மாளிகையாகவே ஏன் முடிந்தது? அது அவளுடைய துர்ப்பாக்கியம் என்றும், முன் ஜன்ம பலனான அதிர்ஷ்டம் என்றும், கர்ம பலன் என்றும் சமாதானம் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது?
காரணம் புரிகிறது.
பானு பாரத நாட்டில் ஒரு பெண்ணாகப் பிறந்தாள்!
-----------------------------------------------------------
தமிழில் வந்துள்ள மற்ற நூல்கள்
I தேசீய வாழ்க்கை வரலாற்று வரிசை ரூ. பை.
1 தியாகராஜர் - பி சாம்ப மூர்த்தி ... 1 75
2. ராமாநுஜர் - ஆர். பார்த்தசாரதி ... 2 00
3. குருநானக் - கோபால் சிங் ... 2 25
4. முத்துஸ்வாமி தீக்ஷிதர்
- டிஎல் வெங்கடராம ஐயர் ... 2 50
5. கபீர் - பாரஸ்நாத் திவாரி ... 2 25
II. இந்தியா---- நாடும் மக்களும் வரிசை
1. வீட்டுப் பிராணிகள் *- ஹர்பனஸ் சிங் ... 4 50
2. சாதாரண மரங்கள் - எச் சாந்தபௌ ... 4 75
3. மக்கட் தொகை -எஸ் என் அகர்வாலா ... 3 75
4. இந்தியப் பாம்புகள் - பிஜே தேவரஸ் ... 6 50
5 தோட்ட மலர்கள் - விஷ்ணுஸ்வரூப் ... 6 00
6. பூ மரங்கள் - எம் எஸ் ரந்தாவா ... 6 50
7. நிலமும் மண்வளமும் - எஸ் பி ராய் சௌதுரி 5 25
III அனைத்திந்திய நூல் வரிசை
1 அக்னி நதி - குர் அதுல்ஐன் ஹைதர் ... 8 50
2. மறைந்த காட்சிகள் - பகவதி சரன் வர்மா 8 50
பல்வகை நூல்கள்
1 காந்தியின் இந்தியா -வேற்றுமையுள் ஒற்றுமை 2 25
2 அக்பர் - லாரென்ஸ் பின்யன் ... 2 25
3. அறிவு வளர்க்கும் அறிவியல் -ரிச்சி கால்டர் 4 25
4. அசோக சாசனங்கள் - என் ஏ நிகம், ரிச்சர்ட் மக்கியோன் 3 00
5 கோதம புத்தர் - ஆனந்த கே குமாரசாமி, ஐ பி ஹார்னர் ... 6 00
6 மார்கோ போலோ -மௌரின் காலிஸ் ... 5 75
7. குடதிசை-குணதிசை ஞானப்
பெண்மணிகள்- ஸ.வாமி கானாநந்தா ... 6 00
8. இன்பத்தின் வெற்றி- பெட்ராண்ட் ரஸ்ஸல் ... 3 50
9 பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் -அழ. வள்ளியப்பா ... 1 25
10 விழாவும் பூசையும் - எஸ் ஜி கணபதி ஐயர் 1 25
-----------------------------------------------------------
This file was last updated on 15 May 2012.
Feel free to send corrections to the webmaster.