அகமும் புறமும் (இலக்கிய கட்டுரைகள்)
பாகம் 2 - புறம்
ஆசிரியர் : அ.ச. ஞானசம்பந்தன்
akamum puRamum (literary essays)
part 2 (puRam)
by a.ca. njAnacampantan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing scanned
images version of this work. This etext has been prepared via Distributed
Proof-reading implementation of Project Madurai. We thank the following
volunteers for their assistance in the preparation of this etext:
Anbu Jaya, R. Aravind, S. Karthikeyan, K.S. Karthikeyan, G. Mahalingam, R. Navaneethakrishnan,
V. Ramasami, V. Devarajan and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"அகமும் புறமும்"
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
பாகம் 2 - புறம்
Source
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.
1998
------------------------
புறம்
4. இலக்கியத்தில் வரலாறு
'இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிவது அவசியமா?' எனச் சிலர் கருதலாம். சரிதம் மீண்டும் மீண்டும் திரும்புகிறதென ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு. உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் மக்கள், எவ்வளவு சிறிய நாட்டினராயினும், தங்களது பழமையைப் போற்றிக் கலையையும் பண்பையும் வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அங்ஙனம் விரும்புகிற நாட்டினர் பலருக்குப் பழமையான கலைச் செல்வமோ, பண்பாடோ இல்லை. எனினும், என்ன? அவர்கள் ஏதானும் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு அதனைப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் நமக்கு ஒரு சிறந்த பழமை உண்டு. அதை எண்ணுந்தோறும் மனத்தில் ஒரு பெருமிதம் உண்டாகிறது; நாமும் தமிழரெனத் தருக்கித் திரியலாம் எனத் தோன்றுகிறது.
'பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை' எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்று மேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்தவரை மிகுதியாக வேண்டும்.
தமிழ் இலக்கியப் பழமை.
கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னரும், தோன்றி ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தோன்றிய நூல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பகுத்தனர். பதினெண் கீழக்கணக்கு என்னும் தொகுதியுள் குறள் நீங்கலாக ஏனைய அனைத்தும் கிறிஸ்துவுக்குப் பல நூற் றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றியவையே. இம்மூன்று தொகுப்புள்ளும் சில புறப்பொருள் பற்றியன; பல அகப் பொருள் பற்றியன. அகம் என்பது ஒத்த பண்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மனமொத்து இல்லறம் நடத்தும் இயல்பினை இயம்புவது. இதனையொழிந்த வாழ்க்கையெல்லாம் புறத்தின் கண் இடம் பெறும். மனித வாழ்க்கையை முற்றுங்கண்ட தமிழன், வீட்டினுள் வாழும் வாழ்க்கை, வெளியே வாழும் வாழ்க்கை என இரண்டு பெரும் பிரிவுகளை வகுத்தான். வாழ்வு முழுதும் இவற்றில் அடங்கிவிடுதல் காண்க.
முதலாவதாக உள்ள வீட்டு வாழ்க்கை என்று கூறப்படும் 'அகத்திணை'யை ஏழு சிறுபிரிவுகளாகப் பிரித்தான் தமிழன். இனி, அவனது புற வாழ்க்கையில் அவன் எங்ஙனம் வாழ்ந்தான் என்பதை இப்பொழுது காண்போம்.
புறவாழ்வின் அடிப்படை.
மனிதனின் புற வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை, நாடு, ஊர், அரசன், சமுதாயம் என்பவையேயாம். பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெருநாட்டை அரசியல் பிழையாது ஓர் அரசன் ஆட்சி செய்வானேயாகில், அங்குச் செம்மையான ஒரு சமுதாயம் ஏற்பட வழியுண்டு. நாடு, ஊர் என்ற இரண்டும் மனிதன் உடல் உரம் பெற்று வாழவும், அரசன் சமுதாயம் என்ற இரண்டும் அவன் மனம் உரம் பிற்று வாழவும் பயன்படுகின்றன. இவை நான்கும் செம்மையாயிருப்பின், தனி மனிதன் வாழ்க்கை செம்மைப்படும். செம்மை தனித் தனியே ஏற்படின், சமுதாயம் செம்மையடையும். எனவே, இவை ஒன்றைப் பற்றி நிற்பவை என்பது தெள்ளிதின் விளங்கும்.
கவிஞன் தோன்றும் நாடு.
நாடு சிறந்ததென்று சொல்லும்பொழுது நாம் அதில் வாழும் மக்களையே குறிக்கிறோம். இக் கருத்தை ஔவையார் புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பின்வருமாறு அழகாகக் குறி்க்கிறார்:
நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே!" (புறம்-187)
(நிலமே, நீ நாடாக இருப்பினும், காடாக இருப்பினும் சரி; பள்ளமாக இருப்பினும், மேடாக இருப்பினும் சரியே; எங்கே நல்லவர்கள் உண்டோ, அங்கேதான் நீயும் நல்லை.)
எனவே தமிழன் வாழ்க்கை அன்று நன்றாயிருந்த தென்றால், அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தமிழ் நாட்டில் தமிழ் மொழி அரசு வீற்றிருந்தது. நாட்டில் வேளாளரும், வணிகரும் செல்வங்கொழிக்கச் செய்தனர்.
வறுமை என்பதே தலை காட்டாத நாட்டில் அறிவு வளமும், ஏனைய வளங்களும் கொழித்தல் இயல்பு. எலிசபெத்து மகாராணியார் காலத்தில் இங்கிலாந்து செழிப் புற்றிருந்தமையின், பற்பல கவிஞர் தோன்றி வாழ்ந்தனர் எனச் சரிதங் கூறுகிறது. அதேபோலத் தமிழ்நாட்டில் அற்றை நாளில் பல புலவர் தோன்றி வாழ்ந்தனர். காரணமென்ன? புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்று வதில்லை. ஒரோ வழித் தோன்றினாலும்,நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்ப தாகும். அத்தகைய மனநிலையை அடிமையாக வாழ்பவர் கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை இதில் எவ்வாறு கவிஞன் தோன்ற முடியும்? இன்றைய நிலையில் தமிழனுடைய உயர்ந்த மனப்பான்மையும் குறிக்கோளும் காணப்படவில்லை. தமிழன் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் நாட்டில் அறிவு வறுமையும் பொருள் வறுமையும் ஒருங்கே தொலைய வேண்டும்.
தமிழ் நாகரிகத் தொன்மை.
உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்கள், கூடிவாழும் நாகரிகத்தைக்கூட அடையாத அந்தப் பழைய காலத்தி லேயே இத்தமிழர் நாகரிகத்தில் முதிர்ந்திருந்தனர். அப் பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து வாழ்ந்து வேட்டை யாடி உயிர் வாழும் சமுதாய வாழ்வின் அடிப்படையான மருத நாகரிகத்தை அடைந்துவிட்டனர். குறிஞ்சி நாகரிகத் திலிருந்து மருத நாகரிகத்திற்கு வர எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமோ, நாம் அறியோம். அவ்வளவு பழைய காலத்திலேயே இத்தமிழினம் நாடாளும் நாகரிகம் பெற்றுவிட்டது என்பதை உறுதியாகக் கூறலாம். பிற நாடுகளைப்போல எழுதி வைக்கப்பட்ட சரித்திரம் தமிழர்க்கு இல்லை என்பது மெய்ம்மையே. ஆனால், எத்தகைய சரித்திரம் தமிழரிடம் இல்லை? தேதிவாரியாக எழுதப்பட்ட அரசர்கள் கதைகள்தாமே இன்று சரித்திரம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன. இக்கதைகளே சரித்திரம் என்று கூறினால், தமிழர் சரித்திரம் இல்லைதான். "சரித்திரம் என்பதற்குத் தேதிகளே கண்கள்", என்று கூறினால், தென்னாட்டுச் சரித்திரம் என்றுமே குருடாக இருக்க வேண்டுவதுதான். ஆனால், 'சரித்திரம் என்பது மக்கள் வாழ்க்கை, நாகரிகம், குறிக்கோள் என்பவைபற்றிக் கூறுவதுதான்,' என்று கூறினால், தென்னாட்டின் பழங்கால வரலாற்றை ஆயப் பல குறிப்புகள் பழந்தமிழ்ப் பாடல்களில் நிரம்ப உண்டு" என எழுதினார் சரித்திரப் பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார். இவை எவ்வளவு உண்மையான சொற்கள்!
எது சரித்திரம்?
இன்று நாம் சரித்திரம் என்ற பெயரில் எதனைப் படிக்கிறோம்? எலிசபெத்துக் காலத்து இங்கிலாந்து தேச சரித்திரத்தை அறிய விரும்பி ஒருவன் சரித்திரத்தைக் கையிலெடுத்தால், அவன் அங்குக் காண்பது யாது? அந்த நாளைய ஆங்கிலர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், எவற்றை உண்டார்கள், எவற்றை நினைத்தார்கள், எவற்றைக் குறிக்கோள்கள் என மதித்தார்கள், ஸ்பானியர்களைத் தோற்கடித்தமையின் அவர்கள் வாழ்வில் என்ன மாறுதல் கள் ஏற்பட்டன என்பவை பற்றி அறிய முடியுமா? இவை பற்றி அறிய வேண்டும் என்ற கருத்துடன் ஒருவன் இங்கிலாந்து தேச சரித்திரத்தைத் திறந்து பார்த்தால் என்ன இருக்கும்? மேற்கண்ட வினா ஒன்றுக்காவது விடை கிடைக்குமா? உறுதியாகக்கிடையாது. அதன் மறுதலையாக எலிசபெத்தின் வாழ்நாளில் அவள் எத்தனை கையெழுத்துக்களிட்டாள், எத்தனை சூழ்ச்சிகள் நடை பெற்றன என்பன பற்றியே எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துவிட்டு இங்கிலாந்து சரித்திரத்தைக் கற்று விட்டதாக நாமும் இறுமாந்து நிற்கின்றோம்! என்னே அறியாமை! ஸ்பானியரை வெற்றி கொண்டதற்கு எலிச பெத்து அடைந்த மகிழ்ச்சி பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இலண்டன் போன்ற நகரத்தில் வாழ்ந்த மனிதனும் கிராமத்தில் வாழ்ந்த மனிதனும், ஏழையும் பணக்காரனும், நிலச்சுவான்தாரும் அவன் பண்ணை யாளும் இவ்வெற்றி பற்றி யாது நினைத்தனர் என்பதை அறிய விரும்பினால், இச்சரித்திரப் புத்தகம் அதுபற்றி யாதொன்றும் கூறாது*. இப்படி 'ராஜா மந்திரி' கதையைத் தேதிவாரி கூறும் சரித்திரம் தமிழர்கட்கு இல்லை என்பது மெய்ம்மைதான். ஆனால், தமிழ் மக்களுடைய வாழ்வைப் படம் பிடிக்கும் சரித்திரம் நிரம்ப உண்டு. இச்சரித்திரம் ஏனைய சரித்திரங்கள்போல உரைநடையில் இல்லாமல், கவிதையில் இருப்பது ஒரு வேறுபாடு. அதிகமாக மன்னர்களைப்பற்றி மட்டும் கூறாமல், பொதுமக்களைப் பற்றியும் பேசுவது இரண்டாவது வேறுபாடு. யாரும் பிறந்த தேதியையோ இறந்த தேதியையோ பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தது மூன்றாவது வேறுபாடு.
தனிப்பட்டவர் வரலாறு இல்லை
வருடம், மாதம், தேதி என்ற இம்மெய்ம்மை பற்றித் தமிழர் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழர் தம்முடைய நாகரிகமும் பண்பாடும் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்று நினைத்தார்கள் போலும்! தனிப்பட்ட மனிதர் எத்துணைச் சிறப்புடையவராயினும், அவரைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
அவர்கள் செய்த நற்செயல்களைக்கொண்டே அவர்கள் பெருமையைக் கணக்கிட்டனர். திருக்குறள் என்ற நூல் தமிழன் வாழ்வு, நாகரிகம், பண்பாடு, சமுதாயம் என்பவற் றோடு தனி மனிதனும் சிறப்படைய உதவிற்று என்ற உண்மையை அவர்கள் மறக்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. ஆனால் திருக்குறளை இயற்றிய ஆசிரியர் இந்நூலை இற்றியருளியது தவிர வேறு சமுதாயத்திற்கு என்ன உதவியைச் செய்திருத்தல் கூடும்? எனவே திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு முதலியன பற்றி அப் பழந்தமிழன் ஒன்றுமே குறித்து வைக்கவில்லை. திருக்குறள் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிய தமிழர்கள் அதற்காக அதனைப் பெருமைப்படுத்திப் பேசிய தமிழர்கள், அதன் ஆசிரியருடைய இயற்பெயரைக்கூட அறிந்துகொள்ளா மலும், குறித்து வைக்காமலும் இருந்ததற்கு இதுவே காரணம் போலும்! நெடுஞ்செழியன் போன்ற வெற்றி வீரர்களையும், கரிகாலன் போன்ற பேரரசர்களையும் பற்றிப் பாடிய பாடல்களிற்கூட அவர்கள் வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால், இக்காலச் சரித்திரம் போன்றவை அல்ல இப்பாடல்கள்.
உண்மைச் சரித்திரம்
இன்ன நாளில் இன்ன இடத்தில் இவ்விருவரின் இடையே போர் நடைபெற்றது என்று கவிஞர் குறிப்பதில்லை. அதன் மறுதலையாக, இப்போரினால் இப்பயன் ஏற்பட்டது என்பதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் வெளியிட்டனர். எனவே, தனிப்பட்ட வருடையவும், சமுதாயத்தினுடையவுமான வாழ்வு, தாழ்வு, போராட்டம், எண்ணம், குறிக்கோள் முதலியவை பற்றி அறியவேண்டுமானால், எண்ணற்ற சரித்திரக் குறிப்புகள் உண்டு. தமிழ்ப் பாடல்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களில் இத்தகைய குறிப்புக்களைப் பரக்கக் காணலாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழருடைய சரித்திரத்தை எழுதுவது பெரிதும் பயனுடைய செயலாக இருக்கும்.
-----------------------------------------------------------
5. நாட்டு வளமும் மக்கள் வளமும்
தமிழன் கண்ட நாடு
தமிழன் வாழ்க்கையைப் பார்க்கப் புகுமுன், 'அவன் நாடு எத்தகையது? எதை அவன் நாடு எனநினைத்தான்?' என்பதைக் காணவேண்டும். தமிழனுக்கு ஒரு வேதம் தந்த திருவள்ளுவர், நாட்டைப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறார்:
'நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரு நாடு' (குறள்--739)
இதன் கருத்தென்ன? முயற்சி செய்யாமல் பலன் தரக் கூடியதே நாடு என்பது மட்டும் அன்று; பெருமுயற்சி செய்து சிறுபயன் தருவதும் நாடு அன்று.வளம் என்பன இயற்கையாகக் கிடைக்கும் நலன்களாம். இதனை வேறு பாடல்களாலும் அறியலாம். மதுரைக்காஞ்சி என்றொரு நூல் உண்டு. மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமான், பாண்டியன் தலையாலங்காலத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பாடிய பாடலாகும் அது. அதில் பாண்டி நாட்டைப்பற்றி அவர் கூறுவதாவது:
மழைதொழில் உதவ, மாதிரங் கொழிப்ப,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயனெதிர்பு நந்த
நோயிகந்து நோக்கு விளங்க, (மதுரைக்காஞ்சி,10-15)
என்பது.
[உழவுத் தொழில் நன்கு நடைபெறுமாறு வேண்டுங் காலத்தில் மழை உதவவும், ஒருமுறை விதைத்தது ஆயிரமாக விளையவும், நிலமும் மரமும் தம்முள் போட்டி இட்டுக்கொண்டு மக்களுக்கு வேண்டிய பயனைத் தரவும், விளைந்த பயனை நன்கு அனுபவித்தலால் நாட்டு மக்கள் நன்கு வாழவும்]
இப்பகுதியிலிருந்து நாம் அறியவேண்டிய செய்திகள் பல உண்டு. வளத்தைப் புலவர் எங்ஙனம் கூறுகிறார் என்பதைக் காணல் வேண்டும். 'மழை உதவ' என்று கூறியவர், பிறகு 'வித்தியது' என்று கூறலினால் இயற்கை யின் பயனாகிய மழையும், மனித முயற்சியாகிய விதைத் தலும் ஒன்று கூடலைக் கூறுகிறார், இவ் விரண்டினுள் ஒன்று குறையினும் பயனில்லை; நாடு நாடாய் இராது. அம்மட்டோ? இன்று அரசியலாரின் காட்டிலாக்கா செய்யும் வேலையை நாமறிவோம். ஆனால், அன்று தமிழர் காட்டைப் போற்றி வந்தனர் என்பதை, மரத்தின் செயலும் மேற்பாடலின் கூறப்படுதலால் அறியலாம். மனித முயற்சி நாட்டின் செம்மைக்கு இன்றியமையாதது.
நீர் வளம்
இயற்கையினால் உண்டாகும் மழைநீரை மட்டும் நம்பித் தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கி னான். குளங்களும் ஏரிகளும் அவனது விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன. இருநூறு வருட ஆங்கில ஆட்சியாற் பெற்ற பயன், நீரில்லாத ஆறுகளும் காய்ந்துபோன குளங்களுமேயாம்! ஆனால், காவிரியும் வைகையும், தாமிரவருணியும் தமிழன் முயற்சியின் சிகரங்கள். காவிரியைப் பற்றிப் பட்டினப்பாலை,
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும் (பட்டினப்பாலை, 5-8)
[மழை பெய்யாவிடினும் தான் தவறாமல் மலையிடத்துப் புறப்பட்டு நீரைப்பெருக்கிப் பொன் கொழிக்கும் காவிரி.]
என்று கூறுகிறது. அது மழைவளங் குறையினும் தான் நீர் குன்றாது பொன்னை வாரிக் கரையில் ஏற்றும் தன்மை யுடைய ஆறு.
வையை ஆற்றைப் பெண்ணாக உருவகப்படுத்துகிறார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியார்:
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலம்பு, 13: 166-170)
[குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீனாம் கண்களையும், மணம் பொருந்திய அறலாகிய கூந்தலையும், பொருந்தி உலகைக் காக்கப் பல பொருளையும் விளைவித்து ஊட்டுபவள் வையை என்ற பெண்]
இத்தகைய நீர் வளமுடைய நாடாய் இருப்பினும், தமிழ் மன்னர் சும்மா இருந்து விடவில்லை. ஆறுகள் செல்லாவிடங்களில் குளங்கள் வெட்டினர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது.
'குளந்தொட்டு வளம்பெருக்கி' (பட்டினப்பாலை-284)
'நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தொட்டோர்'
'நாட்டின் நீர்வளம் மிகும்படியாகக்
குளந் தோண்டியவரே சிறப்புடையர்' (புறம்- 28)
என மேற்காட்டிய புறப்பாடல் கூறுகிறது. எனவே இத்தகைய அருமைப்பாட்டோடு தமிழ் நாடு செழித்திருந்தது. இவ்வளவு வளம் பொருந்திய நாட்டில் வறுமை ஏற்படுவதே அரிது. ஒருவேளை இயற்கையின் கோளாறுகளால் மழைகெட்டுப் பஞ்சம் வந்தால், அதற்கும் அரசரே காரணம் என மக்களும் அரசருமே நினைத்தார்கள். இக்காலத்தில் வாழும் நமக்கு ஒருவாறு இது வியப்பாகவும் இருக்கும். ஆனால், பழந்தமிழ் மன்னன் மழை வளம் முதலியன குறையாதிருப்பது தன் செங்கோல் நலத்தால்தான், என்று நினைத்தான்.
மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;
பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;
குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல். (சிலம்பு, காட்சி. 100-104)
(நாட்டில் மழை வளங்குறையினும், உயிர்களுக்கு வேறு எத்தகைய துன்பம் வரினும், செங்கோல் பிழையாமல் ஆட்சி செய்யும் மன்னர் குடியில் மகனாய்ப் பிறத்தல் பெருந்துன்பமே அல்லது, விரும்பத்தக்கது அன்று)
இவ்வடிகள் அரசன் தன் வாழ்க்கையை எவ்வாறு நினைத்தான் என்பதை அறிவிக்கும். மன்னர்களாகப் பிறந்தது பிறர் பொருளைச் சுரண்டிச் சுகமடைவதற் காகவே என்று நினைக்கும் இந்நாளில், இவ்வடிகள் சிறிது மன அமைதியை அளிக்கின்றன. மேலே கூறிய இவை நீங்க ஏனைய துன்பங்களும் வராமல் தமிழ் மன்னர் காத்து வந்தனர்.
வழிகளின் நிலை
நாகரிகம் மிருந்துள்ள இந்நாளில் கொலையும் கொள்ளையும் எல்லையற்று நடைபெறுகின்றன. ஆனால், அந்நாளில் அவ்வாறில்லை என அறிகிறோம். போக்கு வரவு சாதனம் குறைந்திருந்த அப்பொழுதுகூட மன்னர் ஆணை மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வந்தது. அரசன் எங்கிருப்பினும் அவன் ஆணை எங்கும் சென்று உலகைக் காப்பதாக இன்றும் ஏட்டில் எழுதியிருக்கக் காண்கிறோம். அரசனைத் தம் வாழ்நாளில் கண்டிராத பலரும், அவன் ஆணை நன்கு நடைபெறுமாறு உதவி செய்கின்றனர். இக்கருத்தைப் பிற்காலத்து வந்த சிந்தாமணி ஆசிரியர் நன்கு எடுத்துக் கூறுகிறார்:*
உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி.
கறங்கு தெண்திரை வையகம் காக்குமால் (சிந்தாமணி. 248)
அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும் என்பதே இதன் பொருள். இது போலவே பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நிலவியதெனச் சங்க நூல்கள் முழங்குகின்றன.
தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்ட நாட்டைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் பின் வருமாறு கூறப்படுகிறது;
அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றுஅவன் கடியுடை வியன்புலம்;
உருவும் உரறாது; அரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா (பெரும்பாணாற்றுப்படை 400-404)
[ வழியிடைச் செல்வோர் வருந்தப் புடைத்து அவர் கைப்பொருளைத் திருடும் மக்கள் அவன் நாட்டில் இல்லை. மேலும் வனவிலங்குகளும் பாம்புகளுங்கூட அவன் நாட்டில் துன்பஞ் செய்தலில்லை)
இம்மட்டோ? ஊர்க்காவல் செய்யும் பாதுகாப்புப் படைஞர், நீண்ட வழிகளிலும் கவர்த்த வழிகளிலும் நின்று வியாபாரப் பொருள்களின் போக்குவரத்துக்குத் துன்பம் ஏற்படா வண்ணம் காவல் புரிகின்றனர். அவர்கள் எத்தகையவர்கள்? ஆசிரியர் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:
கடம்பமர் நெடுவேள் அன்னமீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காடு... (பெரும்பாணாற்றுப்படை 75-78)
(கடம்பப்பூமாலை அணிந்த முருகனைப் போன்ற எஃகுடனும், நீண்ட கைகளும் உடைய (போலீஸ்) வீரர்கள் சுங்கம் வசூலிக்கும் வழிகளிலும் நீண்ட பெருவழிகளிலும் நின்று காவல் புரிகின்றனர்)
அவர்களுட் பலர் அரசனைக் கண்டிராவிடினும், அவன் கொற்றம் நன்கு நடைபெற உதவுகின்றனர். இத்தகைய மாட்சிமையுடைய நாட்டில் ஒரு வேலி நிலம் ஆயிரங்கலம் விளைவதாயிருந்தது.
வாணிக எல்லை
இதுவரை கூறியவற்றைக் கொண்டு பழந்தமிழன் பயிர்த் தொழில் ஒன்றுமே கொண்டு வாழ்ந்தான் என்று நினைத்து விடுதலாகாது. அந்நாளில் தமிழ்நாடு வாணிகத் தில் சிறந்த நாடுகளில், தலையாய நாடாயிருந்தது. தமிழரின் வாணிகச் சிறப்பைக் குறிக்கத் தமிழ் நூல்களேயன்றி, ஏனைய நூல்களும் சான்று பகரும். பெரியபுளூஸ் (கி.பி. 75) என்ற நூலும், கிரேக்க சரித்திரமும், வேண்டும் அளவு தமிழ் நாட்டின் வாணிகத்தைப் பேசுகின்றன. இன்றும் கொற்கை, காயல்பட்டினம் போன்ற கீழ்க் கடற்கரைப் பட்டினங்களிலும், முசிரி போன்ற மேலைக் கடற்கரைப்பட்டினங்களிலும் பழைய உரோமநாட்டுக் காசுகள் அகப்படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி யான முக்கியப் பொருள்கள் - முத்து, பவளம், மிளகு, உணவுப் பொருள்கள், அரிசி, மயில் தோகை என்பவை. யாம். இன்றும் கிரேக்க மொழியில் காணப்படும் 'ருஷ்' (orydsa) என்ற சொல்லும் 'துஷ்' (taos) என்ற சொல்லும் முறையே அரிசியையும், தோகையையும் குறிக்கும் வடிவு மாறிய தமிழ்ச் சொற்களாம். கி.மு. 55ல் வாழ்ந்த உரோமாபுரிச் சக்கரவர்த்தியான மார்க்கஸ் அரேலியஸ் என்பார், 'உரோமர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையைத் திருப்தி செய்துகொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து முத்துக்களை வரவழைக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனுப்பும் பொன் எண்ணிலடங்காதது" எனக் கூறியிருக் கிறார். சிறிது காலம் தமிழ் நாட்டிலிருந்து முத்து இறக்குமதி செய்யப்படக்கூடாதென்ற சட்டமும் உரோமா புரியில் அமலில் இருந்து வந்தது. இம்மட்டோடு அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நிற்கவில்லை. உயிர்ப் பொருள் களாகிய கிளி, குரங்கு, மயில் முதலியவற்றையும் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். முத்துக் குளிப்பதி லும் சிறந்த முத்துகளைச் சேகரிப்பதிலும் பாண்டி நாட்டார் உலகப்புகழ் பெற்றவர். பிளினியின் வாக்கின்படி, மரக்காலால் அளந்து மூலைகளிற் குவிக்கும் படியான அவ்வளவு முத்துக்கள் பாண்டி மன்னனிடம் இருந்தன. எல்லா நாட்டினரோடும் தமிழர் வியாபாரஞ் செய்யினும், சிறப்பாக யவனர், கிரேக்கர் இவர்களுடன் தொடர்பு கொண்டு வியாபாரஞ் செய்தனர் என அறிகிறோம்.
(பெரிபுளூஸ்: சோமசுந்தரதேசிகர் மொழிபெயர்ப்பு, பக்கம் 62) காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற தலை நகரங் களில் யவனர்களும் கிரேக்கர்களும் குடும்பங்களோடு வந்து தங்கி வாழ்ந்தார் என்பது அறிய முடிகிறது. தங்கி வாழ்ந்த அவர்கள் தங்கள் மொழியையே பேசிவந்தமை யின் இப்பட்டினங்கள் பலமொழி வழங்கும் ஊர்களாயின.
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம். (பட்டினப்பாலை 215-217)
(பல மொழிகளும் வழங்கும் குற்றம் இல்லாத பட்டினம். வேற்றுநாட்டார் கலந்து வாழும் காவிரிப் பூம்பட்டினம்)
என்ற பட்டினப்பாலை அடிகள் இக்கருத்தை வலியுறுத்து கின்றன. யவனர்கள் சிறப்பாகக் குதிரைகளையும், சாராயத்தையும், இங்கு இறக்குமதி செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அணிகலன்களையும் முத்துக்களை யும் ஏற்றுமதி செய்து சென்றார்களென்பது மதுரைக்காஞ்சி யால் தெரிகிறது.
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப. (ம.காஞ்சி.822-824)
(இடம் அகன்ற யவனம் முதலிய தேசங்களுக்கு இந் நாட்டுப் பெரிய அணிகலன்களைக் கொண்டு போவான் வேண்டி அங்கிருந்து கொணர்ந்த குதிரைகள்)
உள்நாட்டு வாணிபம்
பழந்தமிழன் வாணிகம் கப்பல் மூலம் நடைபெற்றது ஒரு புறமிருக்க, அவனது உள்நாட்டு வாணிகமும் மிக்க பெருமை வாய்ந்திருந்தது. சங்கப் பாடல்களில் எங்கும் இதனைக் காணலாம். சகடம் என்று கூறப்படும் வண்டி களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வணிகர், பல சௌகரியங்களை முன்னிட்டுக் கூட்டமாகவே எங்கும் செல்வர். அத்தகைய கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயரும் வழங்கி வந்துளது. பொருள்களை வைத்து வாணிகஞ் செய்யும் கடைத்தெருவிற்கு அங்காடி என்ற பெயர் காணப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துத் கடைவீதியைப் பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிச் சிறப்பைப்பற்றி மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களிலும் பரக்கக் காணலாம்.
இறக்குமதியும் ஏற்றுமதியும்
இவற்றுள் ஒன்றை விரிவாக ஆராய்வோம். மதுரை மாநகரத்து நாளங்காடியைப் பற்றி மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறும் வகையால் பழந்தமிழ் நாட்டின் செல்வ நிலை நம்மால் ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தே, அந்நாட்டின் பொருளாதார நிலை இருக்கும். எந்த நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக் கிறதோ, அந்நாடு வறுமையால் வாட நேரிடும். உதாரண மாக, நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் நம்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம்.
இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம். உணவுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து அந்நாடு வர வழைக்கிறது; ஆனால், அதற்குப் பதிலாக இயந்திரங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், எவ்வித மாகவேனும் தன் பொருள்களைப் பிறர் வாங்குவதற்காகப் பல வழிகளையும் அந்நாடு கையாளுகின்றது. அந்த நாட்டில் இயந்திரங்கள் உண்டு. ஆனால், வெற்று இயந்திரங்களை ஓடவிட்டால் அவை பொருள்களை உண்டாக்குமா? மூலப் பொருள்களாகிய பஞ்சும் எண்ணெய் விதைகளும் இருந்தால்தானே துணியும் சோப்பும் உண்டாக்க முடியும்? இந்நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் உண்டாகிற பஞ்சையும் எண்ணெய் விதைகளையும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம்; அவற்றையே மீண்டும் துணியாகவும், சோப்பாகவும் பெறுகிறோம். (இது விடுதலைக்கு முந்தைய நிலை) இவ்வாறு நடைபெற்று வருமானால், நமது பொருளாதார நிலை கீழே போகாமல் வேறு எங்ஙனம் இருக்க முடியும்?
இஃதொரு புறமிருக்க, போர் நடைபெற்ற சென்ற சில ஆண்டுகளில் எண்ணற்ற பொருளை ஏற்றுமதி செய்தோம். பணத்தால் நிறைந்த பிரிட்டனைக்கூட நமக்குக் கடன்கார நாடாக்கி விட்டோம். ஆனால், இந்நிலை எங்ஙனம் முடிந்தது? நமது நாட்டிற்குத் தேவையான பொருள்களை நாமுபயோகிக்காமல் பிறருக்கு அனுப்பி வைத்ததனா லேயே இது முடிந்தது. அப்பொழுது நாம் அனுபவித்த வறுமை சொல்லிலடங்காது. இன்று நாமடைந்த பயனென்ன? நமது கடனை அத்தேசம் திருப்பித்தர இயலுகிறதா? சாதாரண மக்கள் ஒருவர்க்கொருவர் கடன்படுவதும் கொடுப்பதும் போலத் தேசங்கள் செய்ய முடியாது. சாமான்கள் மூலமாகவே கடனைத் தீர்க்க இயலும்.
இவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? சாதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நிலை கேடு அடையாமல் இருக்கவேண்டுமே யானால், அந்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி என்ற இவ்விரண்டும் தம்முள் ஒத்த அளவுடை யனவாய் இருக்க வேண்டும். இன்றேல், தீங்கே விளையும். அமெரிக்காவைப் போன்ற தேசம் பணச் செல்வத்தோடு பொருள் வளத்தையும் பெற்றிருப்பதால், மேற்கூறிய இரண்டனுள் ஒன்று மிகினும் குறையினும் நாட்டின் செல்வநிலை இடர்ப்படுவதில்லை. எனவே, எந்த ஒரு நாடு பொருள் வளம் மிக்கு விளங்குகிறதோ, எந்த நாடு தன் தேவைக்குப் பிறர் கையை எதிர்பாராமல் இருக்கிறதோ, அந்த நாடே செல்வ நாடு என்று கூறப்படும். மேலே கூறிய கருத்துக்களை மனத்திலிருத்திக் கொண்டு பழைய தமிழ் மதுரையைக் காண்போம்.
மதுரையில் வணிக நிலவரம்
மதுரையம்பதியை
'மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்' (மதுரைக்காஞ்சி. 429)
என்று மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். வானை முட்டுங் கட்டடங்கள் உலகின் பலவிடங்களிலும் தம் புகழைப் பரப்பி நிற்கின்றன. கடைத்தெரு மிகவும் அகன்றது. பணியாரம் விற்கும் பாட்டி முதல் மணியும் பொன்னும் விற்கும் பெருங்குடி வணிகர்வரை அனை வரும் நிறைந்துள்ளனர். இவர்கள் விற்கும் பொருள்களைப் பெரிதும் விரும்பி வாங்குகிறவர் வேற்று நாட்டினர் என்பதுந் தெரிகிறது. இங்ஙனம் வந்த வேற்று நாட்டவர் தங்கள் பொருள்களை இங்கு கொணர்ந்து விற்று, அவற்றிற்குப் பதிலாக இப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இற்றை நாளில் இங்ஙனம் பெருவாணிகம் நடைபெறுகிற இடங்களில் திடீரென மாறுதல்கள் ஏற்படுவது கண்கூடு. பொருள்களின் விலைகள் திடீரென ஏறியும் இறங்கியும் பலரைப் பெருஞ்செல்வராகவும், ஓட்டாண்டிகளாகவும் செய்தல் நாம் அறிந்ததொன்றே.
ஆனால், இவ்வளவு பெருவியாபாரம் நடந்தும் (வாணிக) நிலை மாறாது இருந்ததாம் மதுரை மாநகரில். இதனை ஆசிரியர் இக்காலப் பொருளாதார சாத்திரத்திற் குறிக்கப்படுஞ் சொற்களாற் குறிக்கவில்லை; ஆனால் அதனைவிடச் சிறந்த முறையிற் குறிக்கிறார். வியாபாரப் பெருக்கிற்கு ஓர் உவமை தருகிறார். அவ்வாறு உவமிக்கும் பொருள் கடல் ஆகும். அக்கடலுக்குக் கொடுக்கிற அடை மொழிகளால் முதல்பொருளையுஞ் சிறக்க வைக்கிறார். அதெங்ஙனம் என்பதுக் காண்போம். கடலுக்குப் பல இயல்புகள் உண்டு. அவற்றுள் சிறந்த ஒன்றை அவர் எடுத்தாளுகிறார். கடல் தன்பால் எவ்வளவு நீர் ஆவியாகப் போனாலும் தன்னளவில் ஓர் அங்குலமும் குறையவில்லை. இவ்வியல்பை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவ்வியல்பை மதுரையின் வியாபாரத்திற்கு வைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்
வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலவரம் மாறுபடவில்லையாம். அதாவது, நாட்டின் பொருளாதார நிலையில் வேற்றுமை காணப்படுவதில்லை. இது ஆச்சரியப்படத் தக்கது அன்றோ? ஓர் உவமானத்தால் ஆசிரியர் இந்தப் பொருளாதாரக் கருத்தை விளக்கிக் கூறிவிட்டார். இதோ பாடலைக் காணுங்கள்:
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி.
(மதுரைக்காஞ்சி 425-450)
(கரை பொருதிரங்கு முந்நீர் - கரையை மோதி ஒலிக்குங் கடல், கொளக்கொள - வேற்று நாட்டவர் பலமுறை அள்ளிச் செல்ல, தரத்தர - அவரது பொருளைப் பல முறை கொண்டு வந்து சேர்க்க.)
பண்டமாற்று வாணிகம்
தமிழ்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடை பெற்றது. அவ்வாறு நடந்தும், நாட்டின் பொருளாதார நிலையைக் குலைக்கக்கூடிய அளவில் நடைபெறவில்லை என்பதும் சில பாடல்களால் அறிகிறோம். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் வெவ்வேறானவை. ஆனால் அவற்றின் மதிப்பு ஒன்றாகவே இருந்தது என அறிகிறோம். இன்றும் அதே நிலையில்தான் வெளிநாட்டு வாணிகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பழங்காலத்தில் 'பண்டமாற்று' என்று கூறுவர். வெளி நாட்டிலிருந்து வருகிற பொருளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால், அவ்விலையை நேரடியாக நம் நாட்டில் வழங்குகிற பணத்தால் கொடுக்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேற்று நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, வருகிற பொருள் எவ்வளவு விலை மதிப்புள்ளதோ, அவ்வளவு விலை மதிப்புள்ள மற்றொரு பொருளை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் வாணிகம் இன்றும் நடைபெறுகிறது; அன்றும் நடை பெற்றது. இம்முறையில் இரண்டும் ஒத்த மதிப்புள்ள பொருள்களாக இருக்க வேண்டும் என அறிகிறோம். இக் கருத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அவரும் மழை நீரையே உவமையாகக் காட்டுகிறார். ஆனால், அவர் அவ்வுவமையைக் கையாளுகிற முறையே வேறு. மழையின் உற்பத்தி நாமறிந்ததே. கடலிலுள்ள நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக மாற்றிப் பிறகு மேக மாக்குகிறது. இம் மேகம் நிலப்பரப்பில் நெடுந்தூரம் செல்கிறது. மலைகள் நிறைந்த பிரதேசங்களில் மேகம் தன் பாலுள்ள நீரை மழையாகப் பொழிகிறது. அம்மழை நீர் மீண்டும் சிறு கால்களாகத் தொடங்கிப் பெரிய ஆறாக மாறி, இறுதியில் புறப்பட்ட கடலுக்கே வந்து சேருகிறது. வேறு வழியாகவும் இதனைக் கூறலாம். நீர் கடலிடத்திலிருந்து ஆவி வடிவாகச் சென்றது; நீர் வடிவாகத் திரும்பி வந்தது. இரண்டும் தன்மையால் மாறுபடினும் மதிப்பால் ஒத்தே உள்ளன அல்லவா? இம்மாதிரியே காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. தன்மையால் இரண்டு சரக்குகளும் மாறுபடினும், மதிப்பால் அவை ஒத்தவையே. இதனை அவ்வாசிரியர் கூறும் முறை நோக்கற்பாலது.
வான்முகத்துநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி (பட்டினப்பாலை 126-32)
[மேகம் முகந்த நீரை மலையில் பொழியவும், மலையில் பொழியப்பட்ட நீர் கடலில் சேரவும் உள்ள நிலை போல, நீரிலிருந்து மூட்டைகளைக் கரையிலேற்றவும் கரையில் இருந்து கப்பலில் ஏற்றவும் நிறைந்த பொருள்கள் உள்ளன]
கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் பிறகு மழை யாகப் பொழிந்து கடற்கு வருவதும் நீர் என்ற அளவில் ஒன்றே யாயினும் நீராவி வேறு. நீர் வேறு.
ஆழ்ந்து நோக்கினால் தமிழ்நாடு ஏற்றுமதி செய்த பொருள்கள் வேறு இறக்குமதி செய்யப்பெற்ற பொருள்கள் வேறு என்பன இவ்வுவமை வாயிலாகத் தெளிவாக எடுத்துக் காட்டப் பெறுகின்றன.
இவ்வாறு நாம் பொருள் கொள்வது சரியானதுதான் என்பதனை,
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூட்டையும்,
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு (பட்டினப்பாலை 185-193)
என்னும் தொடர்கள் விளக்குகின்றன.
(கடல் வழியாக - பாய்மரக்கப்பலில் கொண்டுவரப் பெற்ற நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும் மேலைக் கடற்புறத்திலிருந்து கொணரப்பெற்ற கரிய மிளகுப் பொதி களும், பொதிய மலையில் கிடைக்கும் சந்தன, அகிற் கட்டைகளும் கொற்கைத் துறையிலிருந்து வந்த முத்தும் கீழைக் கடல் பவழமும், கங்கையாற்றங்கரை வளமும் (யானை, மாணிக்கம், பொன்) கடாரத்திலிருந்து பெறப் பட்ட நுகர் பொருள்களும் சீனத்திலிருந்து தருவிக்கப் பெற்ற கருப்பூரம், பனிநீர், குங்குமம் முதல்வாய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட் டிருந்தன்.)
இவற்றுள் புரவி முதலியன கடல்வழி (கலத்தில்) வந்தவை. மணி, பொன் முதலியன நிலத்து வழி (காலின்) வந்தவை, என்று அறிகிறோம்.
குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை. இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் மேற்சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
கடலிலிருந்து ஆவியாகிச் செல்லும் நீரின் அளவும், மழையாகக் கடலுள் வந்து சேரும் அளவும் ஒத்து இரா.
கடலிலிருந்து ஆவியாவது மிகுதி.
வந்து சேரும் நீரின் அளவு குறைவு என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையே.
இத்தகைய ஓர் உவமை கூறுவதன் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் அளவு மிகுதி; இறக்குமதி ஆகும் பொருள்களின் அளவைவிட மிகுதி.
மேற்காட்டிய அடிகளால் அரேபியா, பர்மா ஆஸ்திரேலியா, சீனம் முதலிய வெளிநாட்டவருடன் இத்தமிழர் வாணிகம் செய்ததுடன், கங்கைவெளி, இலங்கை முதலிய அண்டை நாடுகளுடன்கூட வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அறிகிறோம்.
இத்தகைய நிலையை இக்காலப் பொருளாதாரச் சொற்களால் கூறவேண்டுமானால், 'சமன் செய் வாணிகம்' (Balanced Trade) என்று கூறலாம்.
சுங்கவரியும் பயனும்
இதனைப் பார்க்கும்பொழுது, எல்லா நாட்டினரும் அவரவர் விருப்பம் போல வேண்டுவனவற்றைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்யலாம்போலும் என்று நினைத்துவிடுதல் ஆகாது. அவ்வாறு செய்கின்றதை இக் காலத்தார் 'கட்டுப்பாடற்ற வாணிகம்' (Free Trade) என்று கூறுவர். இத்தகைய ஒரு வாணிகமே நாட்டின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்றது என்று வாதாடுகிறவர்களும் உண்டு. ஆனால், இத்தகைய ஒரு நிலை, நாட்டின் பொருளாதாரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. இவ்விரு கட்சியாரும் இன்றுங்கூட ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், பழந்தமிழர் இதனைப் பற்றி என்ன நினைத்தனர் என்பதைக் காணலாம்.
பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால், அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத்தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல் சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறை அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமே யானால், அதனை யாரும் வாங்கமாட்டார். வாங்காத பொருளை யாரும் இறக்குமதி செய்யமாட்டார். எனவே, இம்முறை யினால் வேற்று நாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையிலேயே அன்றைய தமிழ் நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை குறிக்கிறது. பட்டினப் பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன் மேல் பாடப்பட்ட அரிய பாடல். அவன் இமயஞ் சென்று புலிக் கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம் கொழித்திருக்குமென்பதில் ஐய மில்லை. அவனுடைய முக்கியத் துறைமுகப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் பொருள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றைச் சுங்க இலாக்காவைச் சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர்; அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர். பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் ஒரு நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது. அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (Demand)பொறுத்து அதன் மதிப்பும் (Value) மாறுபடும் என்பது நாமறிந்ததொன்று. எனவே, அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள நாட்டின் நிலையைச் சீர் தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார்; ஏற்ற முறையில் சுங்கம் விதிக்கிறார்; இங்ஙனம் விதிக்கின்ற முகத்தாலேயே வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்பாடு செய்கிறார். இதனை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். தினந் தோறும் இச்செயல் ஓய்ச்சல் ஒழிவின்றி நடைபெறுகிறது. இதனைச் செய்பவரும் மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாள மாக மூட்டைகளின் மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக் கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைக ளோடு கலந்துவிடாதபடியும், கொடி பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த மூட்டைகளை மிகவும் காவல் பொருந்திய பாதுகாவலான இடங்களிலும் அடுக்குகிறார்.
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
********
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி (பட்டினப்பாலை 124-135)
[வைகல்தொறும் - தினந்தோறும்; அசைவின்றி - சோம்பலில்லாமல்; உல்கு - சுங்கவரி]
சுங்க அலுவலர்
இவ்வடிகளிலிருந்து அறியவேண்டும் பொருள்கள் இரண்டுண்டு. அச்சுங்க அலுவலர் 'வலியுடைய வல்லணங் கினோன்' என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம் வசூலிப்ப் வருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம் மனவலிமை இல்லாதவன் சுலப மாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அரசனை ஏமாற்று பவன் ஆகிவிடலாமல்லவா? இந்நாளில் வாழும் நமக்கு இது ஒன்றும் புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடத்துபவர் எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்த வராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்து கின்றன. மேலும், ஒன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ் செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர் அவரை ஏமாற்றுவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படை வலியாலும், தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக 'வல்லணங்கி னோன்' (பிறரை வருத்தக்கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இம்மட்டோடு இல்லை. இவையெல்லாம் இன்றுங்கூட இருக்கக் காண்கிறோம். ஆனாலும், திருட்டுத் தனமாகச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் 'கள்ளக் கடத்தல்'(Smuggling) இன்றும் நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர் 'அருங்கடிப் பெருங்காப்பின்' பொருள்கள் இருந்தன வெனக் கூறுமுகத்தால் கூறுகிறார்.
இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங் களுடன் உள் நாட்டு வாணிகமும் நன்கு நடந்தமை அறியப்படுகிறது.
உடையார் இல்லார் வேற்றுமை
ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டில் சிலரே பொருள் படைத்தவராய் இருப்பர்; ஒரு சிலர் ஒன்றுமற்ற ஏழைகளாய் இருப்பர்; பெரும்பான்மையோர் நடுத்தர மக்கள் என்று வழங்கப்படும் நிலையிலிருப்பர். இவர்கள் வாழ்க்கைதான் நாட்டின் செல்வநிலைக்கு அறி குறியாகும். இத்தகைய மக்கள் பெரும்பாலும் உழைப்பையே நம்பி வாழ்கின்றவர்கள். உழைத்த உழைப்புக்கேற்ற பயன் கிடைக்கின்றபொழுது இவ்வகை மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் இருப்பார்கள். மேலும், தம்மினும் மேம்பட்ட பொருளாளர் நிலைமையைத் தாமும் அடைவதற்கேற்ற வழிகளை முனைந்து தேடுவர். ஆனால், இத்தகைய எண்ணம் மக்களுக்கு எல்லாக்காலமும் இருந்து வந்ததென்று கூற முடியாது. செல்வமுடையார் செம்மையாக வாழ்ந்து, செல்வத்தின் பயன் ஈதலே தவிர இறுக்கிப் பிடித்தலன்று என்று நினைக்கின்ற வரை, இடையிலுள்ள மக்கள் அவர்கள்மேல் பொறாமையோ வெறுப்போ கொள்ள மாட்டார்கள். இந்நிலை இந்த நாளில் மாறிவிட்டமை யாலேதான் பெருந்துன்பங்கள் தோன்றுகின்றன. இந்த நடுத்தர மக்கள் மேலும் பொருள் சேர்த்து அப் பொருளாளர் கூட்டத்தில் சேர முனைகின்றார்கள். அப்பொருளாளர்களோ இவர்கள் உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடாமல் இவர்களை மேலும் வறுமை யடையச் செய்ய முயல்கிறார்கள். இதனால், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பெரிதாகிப் பூசல் முற்றுகிறது.
பழந்தமிழ் நாட்டின் நிலை
இனி, பழந்தமிழ்நாட்டை நோக்குவோம். அந்நாட்டில் ஒரு சிலர் பணம் படைத்தவராய் இருந்தனர் என்பதும் பெரும்பான்மையினர் நடுத்தர மக்களாகவும் ஒரு சிலர் மிகவும் ஏழ்மை வாய்ந்த மக்களாகவும் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இன்றும் இத்தகைய நிலையே தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆனாலும், இரண்டுக் கும் எவ்வளவு வேற்றுமை! அன்று இம்மூவகை மக்களுக் கும் இடையே இருந்த மனப்பான்மை இன்று மறைந் தொழிந்தது. மறைந்ததோடு மட்டும் அல்லாமல் வெறுப்பு முதலிய தவறான குணங்களும் நிரம்பிவிட்டன. இதன் காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நாளாவட்டத் தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தி அடையாமல் இருக்கப் பழகினார்கள். இயற்கையோடு வாழ்ந்து, எளிய வாழ்க்கையைக் கைக்கொள்ளுகிற வரையில் திருப்தி மனத்தில் குடிகொண்டிருக்கும்; மனத்தில் அமைதி நிலவும். திருப்தி அடைந்த ஒருவன் மனத்தில் பொறாமை, முதலிய தவறான எண்ணங்களுக்கு இடமில்லை. அதே போலப் பெருஞ்செல்வம் படைத்தவ னும், அச்செல்வத்தை வைத்துக் காப்பாற்றி வேண்டிய வர்க்கு வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவனாகத் தன்னைக் கருதினான்; அச் செல்வம் தான்மட்டும் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று என்று நினைத்தான். எப்போதாவது ஒருவர் இருவர் தவறாக நினைக்க முற் பட்டாலும், அவ்வெண்ணம் தவறானது என்று எடுத்துக் காட்டப் பெரியோர் இருந்தனர். தகுந்த அறிவுரைகளால் இத்தகைய மனநிலைகளை அவர் அகற்றினர். உதாரண மாக நக்கீரர் கூறுவதைக் காண்க;
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்போம் எனினே தப்புந பலவே (புறம்-189)
[செல்வத்தின் பயன் பிறருக்குத் தருதலேயாம். அவ் வாறல்லாமல் 'யாமே அனுபவிப்போம்' என்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அது அழிவது உறுதி.]
பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை. செல்வர் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் காண்போம். கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன்; மணம் ஆன பிறகு தனிக் குடும்பம் நடத்தி வந்தான்; தானே வாணிகமும் செய்தான்; மாதவியோடு சேர்ந்து "குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான்" மலையத்தனை செல்வத்தை அழிப் பினும், அவளை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில், மறுபடியும் மலையத்தனை செல்வத்தைப்பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கி யிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப் படுமோ அறியோம். ஏழையாயினும் நடுத்தர வகுப்பா ராயினும் உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர். உழைப்பு அல்லது முயற்சியைத் "தாள்" என்ற சொல்லால் குறித்தனர் பழந்தமிழர். முயற்சி யற்ற அரசரைக் கூடப் பழந்தமிழர் எள்ளி நகையாடினர்.
'மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்' (புறம்- 75)
என வரும் அடி பழந்தமிழர் முயற்சிப் பெருக்கைக் காட்டும்.
நடுத்தர மக்கள் பொருளாதாரம்.
இனி, நடுத்தர வகுப்பில் உள்ள ஒரு குடும்பத்தைக் காண்போம். மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தும் இடையர் குடும்பம் அது. குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்கேயன்றி ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆளுகின்றவள் என்று பொருள் தரும் 'இல்லாள்' என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறுதலையாக 'இல்லாளன்' என்ற சொல்லை உண்டாக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி மிகு விடியற் காலத்தில் எழுந்துவிடுகிறாள் பெரியதொரு பானையிலுள்ள தயிரைக் கடைகிறாள். கடையும் பொழுது புலி உறுமுவது போன்ற ஓசை உண்டாகிறது. மோரைக் கடைந்து எடுத்துக்கொண்டு சென்று வியாபாரம் செய்கிறாள். அங்ஙனம் மோர் விற்ப தோடு மட்டுமல்லாமல் தனியாக நெய்யையும் வியாபாரம் செய்கிறாள். நெய்யின் விலை மோரைவிட மிகுதியாக இருக்குமென்பதற்கு ஐயமில்லை. இவ்விரண்டினாலும் பெற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதைக் காண்போம். மோர் விற்றுவந்த பொருளால் குடும்பத்தை உண்பிப்பதோடு சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினி கிடந்தாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பேதைமை தமிழ் நாட்டில் இல்லை. ஆனால் வருமானம் முழுவதையும் செலவிட்டுக் கடனாளி யாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இது கருதியே வள்ளுவப் பெருந்தகையார்,
ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (குறள்-478)
என்று கூறினார். 'வருமானம் குறைவாயிருப்பினுங் கெடுத லில்லை. சிலவு அதனைவிட மேற்போகாத விடத்து' என்பதே இதன் பொருள். மோர் விற்ற பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர் குல மடந்தை, நெய் விற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதை ஆசிரியர் கூறுகிறார்; இன்னது செய்யவில்லை என்றும், இன்னது செய்தாளென்றும் கூறுகிறார். அப்பொருளால் பொன்னை வாங்கவில்லையாம். அதற்குப் பதிலாகக் கறவை எருமை களையும், பசுக்களையும் வாங்கினாளாம். இங்ஙனம் கூறவேண்டிய இன்றியமையாமை யாது? கறவை மாடு களை வாங்கினாள் என்றுகூறினாலே வேறுஒன்றும் வாங்கவில்லை என்ற பொருள்தானே பெறப்படுமே! அங்ஙனமிருக்க, இவ்வாறு கூறவேண்டிய காரணமென்ன? இக்காலத் தமிழ்நாட்டில் வாழும் நம்மை இவ்வடிகள் கண் திறந்துவிடுதல் கூடும். எத்தனை கோடி ரூபாய் பெறுமான முள்ள தங்கம் நமது தமிழ்ச் சகோதரிகள் உடலை அலங்கரிக்கின்றன? 'தங்கமும் பொருள்தானே? அத் தங்கத்தை வாங்குவதால் நேரும் குறைவென்ன? என்று கேட்கலாம். ஆனால் தங்கத்துக்காகச் செலவிடும் முதல் பயனற்ற முதலாகும் (dead capital). முதல் என்றாலே அது மேலும் பொருளைச் சம்பாதிக்கக்கூடியதாகும் என்ற பொருளும் உண்டு. தங்கத்துக்காகச் செலவழிக்கப்படும் முதல் பயனற்றது என்றாலும் இன்று நம் நாட்டில் எத்தனை பெண்மணிகள் இதனை உணர்ந்திருக்கின்றனர்? ஆனால், பழந்தமிழ்ப் பெண்கள் இதனை அறிந்து அனுபவத்திலும் நடத்தினர். அதனாலேயே ஆசிரியர் அவள் பொன்னை வாங்கவில்லை என்று கூறினார். பொன்னை வாங்காமற்கூட இருக்கலாம். அதற்கு மறு தலையாக அப்பொருளைக் கலயத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அதைவிடத் தீமையான தாகும். ஆகவே, அம்முதலை வைத்து அதனால் பயன் அடையும் பண்பாடே சிறந்ததாகும். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள்; வகையறிந்து, பயன்தரும் வழியில் பொருளை முதலீடு செய்து (Investing) பயன் அடைந்தாள்.
பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலில் இக் கருத்துக் கூறப்படுகிறது. 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழிப்படி பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த நடுத்தர மக்களின் பொருளாதார நிலைக்கு இந்த உதாரதணம் ஒன்றே சாலும். இக்கருத்துள்ள அடிகளைக் காண்க:
நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
.......................
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறுஉம்
மடிவாய்க் கோவலர், (பெரும்பாணாற்றுப்படை 155-66)
(குறுநெறிக் கொண்ட கூந்தல்- வளைந்துள்ள கூந்தல்; அளை- மோர்; நல்லான்- பசுக்கள்; கருநாகு- எருமைக் கன்றுக்குட்டி)
மேட்டுக்குடி மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்பட்டாலும் மிக்க வறியவர் பற்றியும் இல்லாமல் இல்லை.
எனினும் நம்முடைய மனத்தில் ஓர் ஐயம் தோன்று கின்றது. உடையார் இல்லார் என்ற இருபிரிவினர்க்கு இடையே நடுத்தர மக்கள் என்ற ஓர் இனம் இருந்திருக்கத் தான் வேண்டும்.
அவர்களது வாழ்வுமுறை, பொருளாதார அடிப்படை என்பவை எவ்வாறு இருந்திருக்கும் என்ற நினைவும் தோன்றலாம்.
பெரும்பாணாற்றுப்படையில் மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் விடை பெறலாம்.
இன்றும் கூடப் பொதுவாக இந்தியப் பெண்கள், சிறப் பாகத் தமிழகத்துப் பெண்கள் அணிகலன்கள் என்ற பெயரில் பொன்னுக்கு அடிமையாக இருத்தலைக் காண்கிறோம்.
மிகப்பெருஞ்செல்வர் வீட்டில் முதலீடு என்ற முறை யில் (Investment) பெண்கள் பொன்னும், பொருளும் சேர்த்து வைத்தனர்.
ஆனால் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் இவ்வாறு நடைபெறுவது கொடுமையானது. பொன்னுக்கென இடப் படும் தொகை வளர்ச்சி அடையாத மூலதனம்; அன்றாடம் பயன் தராததும் ஆகும்.
எனவே ஒரு வாணிபம் செய்து அதன் வாயிலாய்க் கிடைக்கின்ற சிறு பொருளை மேலும் வளர்த்தற்குரிய முறையில் முதலீடு செய்யாமல் பொன்னை வாங்கிச் சேமிப்பது அறியாமையின் கொடு முடியாகும்.
ஆனால் நம் முன்னோர் (பண்டைத் தமிழர்) இவ்வாறு செய்யவில்லை என்று அறிகிறோம்.
நம் இருள் விடியல் புன் எழப் போகி-
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகில்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரைதெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ-
நாள் மோர் மாறும் நல் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின், பணைத்தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்-
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல்ஆன் கருநாகு, பெறுஉம். (பெரும்பாணாற்றுப்படை 155-165)
[செறிந்த இருள் மெல்ல விலகும் காலத்து பறவைக் குலம் உறக்கம் நீத்து எழுகின்றன. புலியினது முழக்கம் போல தயிர் கடையும் ஓசை எழுகிறது. குடைக்காளான் போல குமிழியிட்டு, இறுகிய வெண்பாறை போல் கிடந்தன தயிர்க்குடங்கள். தயிர்க் கடைந்து, திரளும் வெண்ணெயைத் தனித்து எடுத்து வைத்து கடைந்த போது தெளித்த தயிர்ப் புள்ளிக் கோலம் கொண்ட மோர்ப் பானையை பூவால் செய்த சும்மாட்டின் மேல் வைத்து வீடு நீங்கி, வெளிச் சென்று, காலைப் பொழுதிலேயே மோர் விற்கிறாள் இவ்வாய்க்குல மடந்தை. மாந்தளிர் மேனி; தாளுருவி அசையும் காது, மூங்கில் போல் திரண்ட தோள், குறிய கூந்தல் உடைய இவள் மோர் விற்று, பண்டமாற்றாகப் பெற்ற நெல் முதலானவற்றால் சுற்றத்தினரை உண்பிக்கிறாள்.
ஆனால் காய்ச்சிய நெய்யை விற்றுப் பெற்ற தொகை கொண்டு, பசும்பொன் வாங்கவில்லை. மாறாக பால் எருமை, பசுங்கன்று, எருமைக்கன்று இவற்றில் முதலீடு செய்கின்றாள்.]
மேலே காட்டிய இடைக்குல மடந்தையின் வாழ்க்கை நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.
அன்றைய பெண்கள், நிறைந்த உழைப்பினராக இருந்தனர் என்பதும், மிக்க விடியற்காலையிலேயே எழுந்து தம் அன்றாடக் கடமைகள் மேற்கொண்டனர் என்றும், நள் இருள் விடியல் புள் எழப் போகி என்ற தொடர் வழி விளக்குகின்றார். அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி என்றமையால் மோர் விற்ற தொகை கொண்டே சுற்றத்தவருக்கும் சேர்த்தே உணவு அளிக்கின்றாளாம்.
உறை அமை தீம் தயிர், புலிக்குரல் மத்தம் ஒலிப்பக் கடைந்து எடுத்த வெண்ணெயை நெய் ஆக்கி விலைக்கு விற்கின்றாள். மோர் வாணிபத்தில் கிடைக்கும் ஊதியத்தை விடநெய் வாணிபத்தில் மிகுதியாக ஊதியம் பெறலாம் என்றாலும் நெய் விற்ற பணத்தைப் பொன்னாக மாற்றியோ, ஆபரணங்களாக வாங்கியோ செலவிட வில்லையாம்.
நடுத்தரக் குடும்ப மகளிர் கைப்பொருளைப் பொன்னாக மாற்றவில்லை என்பதே வியப்புக்கு உரியதாகும்.
மிகத் தேர்ந்த பொருளியல் வல்லுநர் எதிர்கால நலன் நோக்கிக் கைப்பொருளை முதலீடு செய்வது போலவே இவளும் செய்கிறாள். நெய் விற்ற பணத்தைப் பசும்பொன் கட்டியாக மாற்றாமல், எருமை, நல் ஆன், கருநாகு (கன்று கள்) வாங்குகிறாளாம். கன்றுகளாக வாங்கினால் விலை குறைவு. அணிகலன்கள் வாங்குவதை விடப் பல மடங்கு அது பயன் தரும்.
மேலும் கன்றுகளாக வாங்குவதால் அன்றாடச் செலவு என்ற ஒன்று அமைவதில்லை. புல்வெளிகள் நிறைந்த நாட்டில், அவை படுபுல் ஆர்ந்து வளவிய, கொழுகொழு கன்றுகளாக ஆகும்.
இடைக்குல மடந்தையின் பசு, எருமைக் கன்றுகளில் இடப்பெறும் முதலீடு ஐந்து, ஆறு ஆண்டுகளில் முதலீட்டைப் போல் பலமடங்கு பெருகிவிடும். இதனை இன்றைய நடைமுறைப்படிச் சொல்ல வேண்டுமானால் Cumulative deposit எனலாம்.
பெருங்கல்வி அறிவில்லாத ஓர் இடைக்குல மடந்தை இத்துணைச் சிறந்த காரியத்தைச் செய்கிறாள் என்பதனால் அது அவர்களுடைய வாழ்க்கை முறையை மிக விளக்க மாக எடுத்துக் காட்டுகிறது என்று அறிய முடிகிறது.
--------------------------------
6. தமிழர் கண்ட அரசன்
தனி வாழ்க்கையும் கூட்டு வாழ்க்கையும்
இப்பரந்த உலகில் எங்கு மக்கள் முதன்முதலில் தோன்றினார்கள்? இவ்வினாவிற்கு முடிவான விடை இது காறுங் கிடைத்திலது. நிலநூல் வல்லார் தமிழ் நாட்டுப் பாறைகளும், கல்லும் மிகப் பழமை வாய்ந்தவை என்று கூறுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்நிலம் மிகப் பழங்காலத்தே மக்கள் தன்பால் தோன்ற இடமளித்தது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பழைய சமூகம் நாளாவட்டத்தில் அனுபவம் பெற்று நாகரிகத் துடன் வாழக் கற்றுக்கொண்டது. கூட்டங்கூடி வாழக் கற்றுக்கொண்டதே இத்தமிழ் நாகரிகத்தின் முதற்படி என்னலாம். தனித்தனி மனிதராக வாழ்கின்ற நாகரீகம் குறிஞ்சித் திணையில் என்றால், கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் மருதத்திணை தோன்றலாயிற்று. கூட்டங்கூடினவுடன் புதுமுறை வாழ்வு மிகுந்தது என்று கூறலாம். தனித் தனியாக வாழும்பொழுது தனக்கெனவே வாழ்ந்த மனிதன், கூட்டங் கூடினவுடன் இந்நிலை மாற வேண்டுவதன் இன்றியமையாமையை உணரத் தலைப் பட்டான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய நிலை நிற்பட்டவுடன் ஓரளவு இடர்ப்பாடு களும் தோன்றலாயின. எவ்வளவு தூரம் தனி மனிதன் தன் உரிமையை இழக்கவேண்டும் என்ற வினாவிற்கு விடை காண்பதில் மனத்தாங்கல் நிகழ்வது இயற்கை தானே? இத்தகைய இக்கட்டான சந்தருப்பங்களில் மனத் தாங்கல் கொண்ட இருவரும் ஒரு பொது மனிதனிடம் தமது முறையீட்டைத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பலருஞ் சென்று முறையிடத் தகுந்த ஒருவனே தலைவன்.
யார் தலைவன்?
எத்தகைய காரணங்களால் இத்தலைமைப் பதவி ஒருவனுக்குக் கிட்டியது? செல்வம் மிக்குள்ளவனே இத் தலைமைப் பதவிக்கு உரியவன் ஆயினன். இந்நிலை தோன்றுவதன் முன்னர் உடல் வலிவுடையவன் இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்திருப்பான். ஆனால், நாளடைவில் உடல் வன்மையுடைய பலரை வைத்து ஏவல் கொள்ளும் தகுதி வாயந்த ஒருவனே தலைவனாகத் தகுதி பெற்றிருப்பான். மக்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையில் இருப்பது 'வயிறு' ஒன்று அன்றோ? பசி தணிக்கும் செல்வம் உடையான் ஒருவன் பிறரை ஏவல் கொள்ளும் தன்மை பெற்றான் என்பதில் வியப்பென்ன? இன்றும் பணமுடையவர்களிடம் அறிவு நிரம்பியவர்கள் பலரும் ஏவல் செய்வது நாம் காணும் ஒன்றுதானே! ஆனால், அப்பழங்காலத்தில் எது செல்ஆ மாகக் கருதப் பெற்றது? ஆதிமனிதன் காட்டில் வாழும் விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு உதவி புரிய வைத்துக் கொண்டான். அவ்வாறு அவன் கொண்ட பல விலங்குகளுள் மாடு ஒன்றுதான் அவன் செல்வ நிலையைக் காட்டும் அறிகுறியாய் இருந்து வந்தது. மனிதனுக்கு உணவு தந்து அவனுக்குப் பொதி சுமக்கவும் பயன்படும் இவ் விலங்கு, வீட்டு விலங்குகளுள் முதலிடம் பெற்றது இயற்கைதானே? இத்தகைய மாடுகளை அதிகம் பெற்ற வான் செல்வமுடையவனாகக் கருதப்பெற்றான். 'மாடு' என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'செல்வம்' என்றே ஒரு பொருள் இன்றளவும் இருந்து வருகிறது. தமிழருக்கு மட்டும் மாடு செல்வமாய் இருந்தது என்பதல்லாமல், கிரேக்கருக்கும் அதுவே செல்வமாய் இருந்தது எனச் சரித நூல் வல்லார் கூறுவார். அம்மட்டோடு அல்லாமல் கிரேக்க மொழியில் முதல் எழுத்தாகிய 'ஆல்*பா' என்பதன் வரி வடிவம் மாட்டுக் கொம்பைப் பார்த்து எழுதப்பெற்றது என்றுங் கூறுவர். பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் போர் முறையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு மன்னன மாற்றானின்மேல் படை எடுப்பதாயின், முதன் முதலில் மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டான். இது வெட்சித் திணை என்று கூறப்பெறும். இது இலக்கிய வழக்காய் நின்றுவிடினும், ஆதிகாலத்தில் மன்னனெனக் கருதப் பெற்றவன் மாடாகிய செல்வத்தையே பெரிதும் நம்பியிருந்தான் என்பது வெள்ளிடை மலை.
வழிவழி அரசன்
பழந்தமிழ் இனத்தில் மாடுகளை நிரப்பப் பெற்றவனே மன்னனெனக் கருதப்பெற்றான் என்று கூறுவதில் இழுக்கு ஒன்றுமில்லை. பசுவுக்குக் 'கோ' என்றதொரு பெயரும் உண்டு. எனவே, பசுக்களை மிகுதியாக உடைமையின் அரசனாகக் கருதப்பெற்ற ஒருவன் எவ்வாறு வழங்கப் பெறுவான்? கோக்களை உடைமையின் 'கோன்' என்று கூறப்பெற்றான் அரசன். 'கொற்றவர் தம் கோன் ஆகுவை' எனவரும் மதுரைக் காஞ்சிச் சொற்றொடர் இப்பொருளை வலியுறுத்தல் காண்க. இப் பசுக்கூட்டங்களை வைத்து வளர்க்கும் பொரறுப்புடையார் 'கோவலர்' என்றே பின்னர் வழங்கப் பெற்றனர். ஆதியில் கோக்களை நிரம்பப் பெற்றிருந்தமையின் அரசனெனக் கருதிப் போற்றப்பட்ட ஒருவன், நாளாவட்டத்தில் இவ்வரசச் செல்வத்தைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றான் என்பதை அறிகிறோம். உலக முழுவதிலும் அரசச் செல்வம் பரம்பரை வழி வந்த தாகவே அறிகிறோம். கரிகாற் பெருவளத்தான் பிறப்பதற்கு முன்னரே அவன் தந்தை இறந்துபட்டதால் அவன் 'தாய்' வயிற்றிலிருந்து தாயம் எய்தினான் என்று பொருநராற்றுப் படை குறிக்கிறது. இதுகாறுங் கூறியவற்றை அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லையாயினும் இவ்வாறுதான் அரசு முறை தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் என்று உய்த்துக் கூறுவதால் இழுக்கொன்றுமில்லை.
மூவர் மன்னர்
தமிழர் கண்ட இளவரசனைப் பற்றி இனிச் சற்று விரிவாகக் காண்போம். பரம்பரையாக அரசச் செல்வம் இறங்கி வந்த காரணத்தால் தகுதியற்ற பலரும் அரசர் ஆயினரோ என்று நினைக்க வேண்டுவதில்லை. பெறும் பான்மையினர் அனைத்துத் தகுதிகளும் பெற்றவராகவே விளங்கினர். இங்ஙனம் அவர்கள் இருக்கத்தக்க ஒரு காரணமும் உண்டு. தமிழ் நாடு மிகச் சிறிய பரப்புடையது எனினும், இச்சிறிய நிலப்பரப்பிற் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி செலுத்தி வந்தனர்.
'நளி இரு முந்நீர் ஏணியாக
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்' (புறம்-35)
என்ற புறப்பாடல் இவ்வுண்மையைக் கூறுதல் காண்க. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்'தை ஆண்டு வந்த மூவருந் தமிழரேயாயினும், இவர்களுள் ஒற்றுமை உணர்வு மருந்துக்கும் இல்லாத தொன்றாயிற்று. ஒற்றுமையற்ற காரணத்தால் இம் மூவருள் ளும் ஓயாது பூசலும் போரும் நிகழலாயின. பழந்தமிழ் இலக்கியங்கலாகிய பத்துப் பாட்டையும், எட்டுத் தொகை யையும் ஒருமுறை புரட்டினவ்ரும் இவ்வுண்மையை உணராமலிரார். பல சந்தருப்பங்களில் இவருள் ஒருவர் தம் கையோங்கி ஏனைய இருவரையும் அடிப்படுத்தியிருந் தனர். இதன் விளைவாக அடிமைப்பட்டவர் தக்க காலம் வந்தவுடன் பழிவாங்கத் தவறினதில்லை. இம் மூவரை அன்றியும் பல சிற்றரசர்களும் உடன் இருந்ததை இலக்கியம் மூலம் அறிகிறோம். இச் சிற்றரசரும் ஓயாது தமக்குள் போரிட்டனர்; சில சமயங்களில் பேரரசர்களு டன் சேர்ந்து கொண்டு ஏனையவருடன் போரிட்டுள்ள னர். இத்தகைய காரணங்களால் போர் புரிவதில் வல்ல ஓர் இனமாய் இருந்து வந்துள்ளது தமிழ் இனம். ஓயாது போரில் வாழ்ந்து வந்தமையின் இவர்கள் இயற்கையின் தள்ளவியலாத ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டனர். 'வாழ்க்கைப் போராட்டத்தில் வலியுடையவர் எஞ்சுவர்', என்ற 'டார்வின்' கொள்கைப்படி வலியுடையவர் எஞ்சினர். என்சுவதற்கு வலிமை ஒன்றே துணையாய் நின்றமையின், தமிழ் மன்னர் பெரும்பாலும் வலிமை மிக்கவராகவே இருந்தனர். யானையேற்றம், வில் வித்தை முதலியன அவர் நன்கு கற்றிருந்தனர்.
களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடிக்
கணை பொருது கவி வண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்
தோல் பெயரிய எறுழ் முன்பின் (புறம்-7)
என வரும் புறப்பாட்டின் அடிகளை எல்லாத் தமிழ் மன்னர்கட்கும் பொதுவான இலக்கணமாகக் கொள்ள லாம். நாடு சிரிதாகலானும், போர் புரிந்து வெற்றிகண்டு எஞ்சுபவரே வாழத் தகுதியுடையராய் இருந்தமையானும் தமிழ் மன்னர் சிறந்த போர் வீரராகவே விளங்கினர். மிக்க பழங்காலத்தில் தத்தம் தகுதியாலும் பரம்பரை உரிமை யாலும் அரசுக கட்டில் பெற்றனர் தமிழ்மன்னர். எனினும், பிற்காலத்தில் இம்முறை தடுமாறித் தகுதி இல்லாதவருங் கூட உரிமை ஒன்றே பற்றி அரசர ஆயினர் எனவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்துக் காணும் 'அரசு வீற்றிருக் கும் திருப்பொறி உண்டு' என்ற அடி ஒரு காலத்து இந்த உரிமைத் தன்மை பெரிதாகப் பாராட்டப் பெற்றது என்பதையே குறிக்கிறது.
அரசன் சுவைஞன்
அரசைச் செல்வம் பெறும் வகை எவ்வாறாயினும், பெற்ற செல்வத்தை இவ்வரசர் நன்கு அனுபவத்தினர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. கோன்வாழும் இடம் கோயில் என்று கூறப்பெற்றது பொருத்தம் உடையதே.
'சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயில்முன்' (ஊர்சூழ்வரி-75)
என இளங்கோ குறிப்பிடுதல் காண்க. இக்கோயிலை அமைக்கப் பெரும்பொருளும், பெருமுயற்சியும் செலவழித் தனர் என்பதை 'நெடுநல்வாடை' என்ற சங்கப் பாட்டால் அறிகிறோம். போரில் பெரும்பொழுதைக் கழித்தாலும் இம் மன்னர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற பேருண்மை யை மறந்தாரல்லர். எனவே, அனுபவப்பொருள், போகப் பொருள் என்பனவற்றை வேண்டும் அளவு அனுபவித் தனர் என்றும் அறிகிறோம். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் அவன் மனைவி துயில் கொள்ளும் கட்டில் பற்றிய வருணனை, நக்கீரரால் 'நெடுநல்வாடை' என்ற நூலிற் கூறப்படுகிறது. இத்துணை முன்னேற்றம் உடைய காலத்திற் கூட அக்கட்டில் பற்றிய வருணனை நம்மைத் திகைக்க வைக்கிறது. பொருளைப் பெற்றிருக்கும் திரு வேறு; அனுபவிக்கும் திரு வேறு. இற்றை நாளில் பொருள் பெற்றிருப்பார் பலரைக் காண்கிரோமாயினும், அனுபவிப் பார் சிலரைக் காண்டலும் அரிதாகிறது. ஆனால், பழந் தமிழ் மன்னர் பொருளைப் பெறவும், அதனை நன்கு அனுபவிக்கவும் கற்றிருன்தனர் என அறிகிறோம். சிறந்த பொருளைப் பெறும் அவர்கள் 'முருகியற்சுவை' (aesthetic taste) வாழ்க!
முடியாட்சியும் உரிமையும்
பழந்தமிழ்நாட்டில் முடியாட்சியே நிலைபெற்றிருந்தது. குடியரசின் நினைவே இருந்ததாக நினைப்பதற்கில்லை. ஆனால் இற்றை நாளில் வாழும் நமக்கு முடியரசென்று கூறினவுடனே மனத்தில் ஒருவகை அச்சம் ஏற்படுகிறது. எத்தகைய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருப் பதே நமது நாட்டு முடிமன்னர் இயல்பாய் இருந்து வருகிறது. பெரும்பாலரான மன்னர், தம் கீழ் வாழும் மக்களின் பாதுகாப்புத் தம் கையிலுள்ளது என்பதைக்கூட மறந்து திரிகின்றனர். ஆனால், பழந்தமிழ் மன்னர் அவ்வாறில்லை.
இம்மன்னர்கள் பரம்பரைப் பாத்தியமாக அரசுக் கட்டில் ஏறினர். அம்முடியின் பொருட்டுச் சகோதரருள் பூசலோ பிணக்கோ ஏற்பட்டதாகவும் சான்றுகள் அதிகம் இல்லை. பிள்ளைகளுள் மூத்தவனே பட்டத்திற்கு உரியவன் என்ற நியதி இருந்து வந்தது. இளங்கோவடிகள் வரலாறே இம்முறைக்குச் சான்று பகரும். பேரரசர்கள் உயிரோடிருக்குங் காலத்திலேயே மைந்தர்களை அரசாட்சி யில் பழக்கும் முறையும் இருந்து வந்ததை அறிவோம். அரசர்கள் நல்ல கல்வி கற்றவர்களாய் இருந்தார்கள். நல்ல புலமை நிறைந்த அவர்கள் பெரும்புலவர்களை அரசவை யில் வைத்துப் போற்றினார்கள். இத்தகைய ஒரு வழக்கத் தாலேயே அவர்களைப் பற்றி அறியமுடிகிறது.
அரசுரிமையைப் பாத்தியமாக அடையினும் ஒவ்வொருவரும் தமது தோள் வலியாள் அவ்வரசைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந் தனர். இடங் குறுகியுள்ள இந்தத் தமிழ்நாட்டில் சிற்சில பேரரசர்கள் காலம் தவிர, ஏனைய மன்னர்கள் காலத்தில் பல சிறு அரசுகள் நிலைபெற்றிருந்தன. இதுவே அடிக்கடி ஒருவரோடொருவர் சண்டை செய்யக் காரணமாயிருந்தது. குறுநில மன்னர்களும் பிறருக்கு அடங்கி வாழ்வதை இழிவானதெனக் கருதினர். இவர்களே இவ்வாறாயின் பெரும்மன்னர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றி கேட்க வேண்டுவதில்லை. ஒரு சில காலந்தவிர இவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருந்ததே இல்லை. இவர்கள் மனப்பான்மையைச் சுருங்கக் கூறினால், அது கபிலர் என்ற புலவர் பெருமான் கூறிய ஐந்து அடிகளில் முடியும்.
வையங் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுசொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரலாதன் (புறம்-8)
(இவ்வுலகம் தனக்கும் பிற மன்னர்க்கும் பொது என்ற சொற்களைப் பொறுக்காமல், இதனைத் தனக்கே உரிமை ஆக்கிகொள்வதற்காக, எல்லா இன்பங்களையும் வெறுத்து போரை மேற்கொள்ளும் சேரலாதன்)
இத்தகைய மனப்பான்மை கொண்டோர் அமைதி யாய் இருத்தல் என்பது இயலாத காரியம். அரசர்களாகப் பிறந்ததன் பயனே போர் செய்தலாகும் என்று கருதினர் அம்மன்னர். இத்தகைய எண்ணம் உயர்ந்தது என்று கூருவதற்கில்லையாயினும், தமிழர் இனவளர்ச்சியில் இது ஒரு படியைக் காட்டி நிற்கிறது. ஆதி மனிதனிலிருந்து தோன்றி வளரும் எந்த இனமும் இப் படியைத் தாண்டியே முன்னேறவேண்டும். ஏனைய வகைகளிலெல்லாம் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்த தமிழர், கிரேக்கர்களைப் போல இதனையும் நாகரிகச் சின்னமாகக் கருதினர்.
உடலும் உள்ளமும்
தமிழ் மன்னன நல்ல உடற்கட்டு வாய்ந்தவனாய் இருந்தான். மிக்க இளமை தொட்டே படைக்கலப் பயிற்சி பெற்றமையானும், போர்க்களங்கட்குச் செல்லும் பழக்கம் உடைமையானும் அவனது உடல் வலிமை பெற்றிருந்தது. நல்ல உடலுறுதி பெற்றவன் உள்ளமும் பெரும்பாலும் செம்மையானதாய் இருக்கும்; அவன் அறிவும் விளக்கம் உடையதாய் இருக்கும்.
"அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்" (புறம்-20)
"ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை" (புறம்-8)
"பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒருத்தி" (புறம்-10)
"வேண்டியது விளைக்கும் ஆற்றலை" (புறம்-38)
என்னும் இவ்வடிகள் அரசனது அறிவு மேம்பாட்டை விளக்குவனவாய் உள்ளன.
இத்தகைய அரசன் ஆட்சி முறையில் தன்னேரில்லாத வனாகவே விளங்கினான். அரசன் ஆணைக்கு எதிராக ஒன்றும் நடப்பதில்லை. டியூடர் மன்னர்கள் இங்கிலாந்தில் ஆட்சி செய்கையில், தாங்கள் கடவுளால் ஆட்சி செய்வதற் காகவே படைக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். இதனை மக்களும் நம்பி வந்தனர். ஒருவாறு பழந்தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கே நிலைபெற்றிருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இறைவன் என்ற சொல்லைக் கடவுள், அரசன் என்ற இருவர்க்கும் வழங்கியமையின் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. பிற் காலத்து ஆழ்வார்,
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே" (திருவாய்மொழி)
என்று கூறியது பழந்தமிழ் வழக்குப் பற்றியதேயாகும். இத்தகைய நிலையில் அவர்கள் இருந்தமையால் ஒரோவழி ஓர் அரசன் தீயவனாக மாறித் தீச்செயலைச் செய்ய முற் படுதலும் உண்டு. ஆனால், அச்சமயங்களில் பெரும்புலவர் கள் அஞ்சாது அரசன் முன் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி, அவனை நல்வழிப் படுத்தியிருக்கின்றார் கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசன், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனொடு பொருது வென்றான்; வெற்றி வெறியில் மலையமான் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வந்தான்; அப்பிள்ளை களை யானைக் காலடியிலிட்டு மிதிக்கச் செய்ய முடிவு செய்துவிட்டான். அரசன் அங்ஙனம் நினைத்தால் அவனை எதிர்ப்பவர் யார்? யானையும் வந்தது. அந்நேரத் தில் கோவூர் கிழார் என்ற பெரும்புலவர் அங்கு வந்து சேர்ந்தார்; இக்கொடுமை நடைபெறப் போவதை அறிந்தார்; உடனே அரசன் முன் சென்றார்; கீழ்வரும் பாடலைக் கூறினார்.
நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபடுத்த துண்ணும் தண்ணிழல் வாழ்நர்;
களிறுகண் டழூஉம் அழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்;
கேட்டனை யாயின்நீ வேட்டது செயம்மே." (புறம்-46)
(நீயோ, புறாவின் பொருட்டுத் தராசில் ஏறிய சிபியின் பரம் பரையில் வந்தவன். இப்பிள்ளைகளோ, அறிவுடையனும் வள்ளற்றன்மை யுடையனுமான மலையமான் குடியிற் பிறந்தோர். மேலும், தங்கட்கு நேரப்போகும் கதியறியாது யானையைக் கண்டவுடன் அழுகை மறந்து வேடிக்கை பார்க்கின்றனர்; இங்குள்ளார் அனைவரும் புதிராயிருத்த லின் மனவாட்டம் அடைந்துள்ளனர். இனி நீ உன் விருப்பம் போலச் செய்க.)
உடனே அரசன் அக்குழந்தைகளை விட்டுவிட்டான். அக்கால மன்னன் எவ்வளவு தன்னிச்சைப்படி நடக்கும் வன்மை பெற்றிருந்தான் என்பதைக் காட்டுவதற்காகவே இப்பாடல் காட்டப் பெற்றது. இத்தகைய அரசர் எங்கோ ஒருவர் இருவர் இருந்தனரேயன்றிப் பெரும்பான்மையோர் கடமை அறிந்து நடப்பவராகவே இருந்தனர்.
"பொலங் கழற் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!" (புறம்-3)
"களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்தடி
....................
மா மறுத்த மலர் மார்பு." (புறம்-7)
(யானையைச் செலுத்தும் முயற்சியையும் வீரக் கழலணிந்த காலையும் திருமகள் பிறர் மார்பில் சென்று தங்க மறுக்கும் மார்பினையும் உடையவன்).
என்பன போன்ற பல புறப்பாடல்களில் மன்ன மார்பு விரிந்தும் கல்போன்றும் இருக்கிறது என்று கூறுவது அவனுடைய வீரத்தைக் காட்டப் பயன்படுகிறது. ஆனால், ஓயாமல் சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறான் என்றும், திருமகள் தங்கிய மார்பென்றும், மகளிர் தோள் தோயும் மார்பு என்றும் கூறுவது ஏன்? மன்னன் வெறும் உடல் வீரம் மட்டும் உடையவனல்லன்; நல்ல பண்பட்ட வாழ்வுடையவன் என்றும் குறிப்பிடுகிறார் புலவர். மனித வாழ்வு சிறக்க வேண்டுமாயின், உடல் வீரத்தோடு முருகியல் சுவையும் வேண்டும். அழகிய பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து அனுபவிக்கும் பண்பே முருகியல் சுவை எனப்படும். அத்தமிழ் மன்னர்கள் இம் முருகியல் சுவையைப் பெற்றிருந்தனர் என்பதையும் இக் குறிப்புகள் அறிவிக்கின்றன.
தமிழ் மன்னர்கள் பொறுப்பு வாயந்த அலுவலைக் கவனிக்கின்ற காரணத்தால் அல்லும் பகலும் கவலைப் படுகின்ற மனத்தை உடையவர்களோ என்று யாரும் ஐயப் படவேண்டா. மனித வாழ்வில் கடமையும், கலையுணர் வும் கலந்து திகழ வேண்டும். அவ்வாறு இல்லை யாயின் வாழ்வு முழுத்தன்மை அடையாது. முழுவதும் கடமை யாகவே அமைந்துவிட்டால், அது இயந்திர வாழ்வாகி விடும்; முழுவதும் கலையாகிவிட்டால், பயனற்றவாழ்க்கை ஆகிவிடும். எனவே, தமிழ் மன்னர்களுடைய வாழ்வில் கடமை, கலை என்ற இரண்டும் அளவுடன் கலந்தே காணப்பட்டன என்கிறார் புலவர். இதனை இவ்வாறு விரிவாக உரைநடையிற் கூறவில்லை; கவிதையில் குறிப் பாகப் பெறவைக்கிறார். ஒரே அரசனுடைய காலில் வீரக் கழலும் மார்பில் சந்தனமும் விளங்குகின்றனவென்று கூறும் பொழுது கடமையும் கலை உணர்வும் வெளிப்படக் காண்கிறோம்.
அரசனுக்கு ஏற்ற வீடு
கலையுணர்வுடனும் கடமையுணர்வுடனும் வாழ்ந்த பழந்தமிழ் அரசர்கள் பொது வாழ்வின் கடமை நெருக்கடிக்கு எப்போதும் இரையானார்கள். இதனை ஈடுசெய்யப் போலும் தமிழ்ச்சமுதாயம் தமிழ் மன்னருக்கு வளப்பமான தனி வாழ்க்கை தந்து வந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றான 'நெடுநல் வாடை' என்ற பாடலில் இதுபற்றிப் பேசப்படுகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த பழந்தமிழ் மன்னருள் ஒருவன். அவ்வளவு சீரும் சிறப்பும் உடைய ஒருவனுக்கு அரண்மனை கட்ட முடிவு செய்தனர். 'இடம்பட வீடு எடேல்', என்ற முதுமொழி அவனுக்கு அன்று; ஆதலால் பெர்ய முறையில் அரண்மனை அமைக்கப் பெறுகிறது. 'பெரும்பெயர் மன்னருக்கு ஒப்ப மனைவகுத்து' என்று நெடுநல்வாடை அதனைக் குறிக்கிறது. அவனுடைய அரண்மனை அமைப்பே பழந்தமிழ் மன்னர்களின் கோயில்கள் இருந்த நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பாண்டியனின் அரண்மனைக்குக் கால்கோள் விழாச் செய்தனர். சித்திரை மாதத்தின் நடுவில் ஒரு நாளில் பகல் பதினைந்து நாழிகை அளவில் சிற்ப நூலை நன்கறிந்த தச்சர்கள் கூடினார்கள்; நூல் பிடித்து அளவிட்டுப் பல பகுதிகளையும் வரையறுத்துக் கூறுபடுத்தினார்கள்; பிறகு மிகப் பெரிய கற்களினால் மதில் முதலியவற்றை அமைத்தார்கள்; அடுத்து உள்ளிடம் கட்டி முடித்தார்கள்.
ஓங்கு நிலை வாயில்
அரண்மனைக்கு நுழையும் பொழுது தெரியும் இது வாயிலாகும். இது ஏன் இவ்வளவு பெரிதாகவும் உயரமாக வும் அமைந்திருக்கிறது? யானை போர்க்களத்திலிருந்து வெற்றிக் கொடியுடன் வருகிறது அன்றோ? அவ்யானை அப்படியே உள்ளே நுழைவதற்காக இவ்வாயிலின் உயரம அமைக்கப்பெற்றுள்ளது.
'வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுக' (நெடுநல்வாடை-87)
என்ற அடியால் வாயிலின் உயரத்தைக் கூறுகிறார் ஆசிரியர் நக்கீரர். பார்வைக்கு மதிலும் வாயிலும் எவ்வாறு உள்ளன? மலையைக் குடைந்து வழிசெய்தது போல உள்ளது அவ்வாயில்.
'குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்' (நெடுநல்வாடை-88)
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றும் நாம் கற்பனைக் கண்முன் அதனைக் கொண்டுவர முடிகிறது. வாயிலே இவ்வளவு உயரமாய் உள்ளது; அதன்மேல் கோபுரமும் அமைந்துள்ளதாம். 'நெடுநிலை' என்பதற்குக் கோபுரம் என்பது பொருள். இவ்வாயிலை அடைத்து நிற்பன இரட்டைக் கதவுகள். வாயிலின்மேலே இலக்குமி யின் சித்திரம் அமைந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பெண் யானைகளும் செதுக்கப்பெற்றுள்ளன. இரட்டைக் கதவுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நன்கு செதுக்கப்பெற்று, இழைக்கப் பட்டு, ஒன்றற்கொன்று இடைவெளி இன்றிச் சேர்க்கப் பெற்று உள்ளன.
'கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து' (நெடுநல்வாடை- 85)
உள்ளன என்பதால் இதனை அறிகிறோம், ஒரோ வழிக் காய்ந்த மரமாய் இருப்பினும், வெயில் மழை முதலிய வற்றால் நாளாவட்டத்தில் இடைவெளி வருதல் கண்கூடு. இதனையும் நீக்க வாயிலிலும் கதவிலும் வெண் சிறுகடுகை அரைத்து அப்பியுள்ளனர் அக்காலத்தச்சர்
இதனைத் தாண்டி உட்சென்றால் மணல் பரப்பிய பெருமுற்றம் காணப்படுகிறது. ஒரு புறத்தே குதிரைப்பந்தி அமைந்திருக்கிறது. இதனை அடுத்துள்ளது அரண்மனை யின் முற்பகுதி. பெரிய கட்டடங்களின் மேற்றளத்தில் விழும் மழைநீர் கீழே வந்து விழச் சரியான வசதி இல்லை யானால் கட்டடம் பழுதுபடுமன்றோ? அரண்மனையின் முகப்பில் நிலா முற்றம் அமைந்துள்ளது. அதனையே இன்று நாம் (Portico) போர்ட்டிகோ என்று கூறுகிறோம். இத்திறந்த இடத்தில் விழும் மழைநீர் வந்து விழுவதற்கு ஒரு வாய் அமைத்துள்ளனர். அது மகர மீனின் வடிவம் பெற்று விளங்குகிறது. இன்னும் உள்ளே சென்றால், 'பல்வேறு பள்ளி' என்று கூறப்பெறும் பல பெரிய அறைகள் உள்ளன.
பூச்சு வேலையும் பூ வேலையும்
இந்த அறைகள் சூரிய ஒளி உள் வரும்படி அமைக்கப் பெற்றுள்ளன. இரவிலும் ஒளி நிறைய வரும்படி ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு பாவை இருக்கிறது. இந்தப் பாவை எவ்வளவு வேலைப்பாடும் அழகும் நிறைந்துள்ளது! நல்ல வார்ப்படத் தொழிலில் கைதேர்ந்த யவன நாட்டுக் (Greek) கொல்லன் அமைத்த அழகிய சிற்பமாகும் இது. இந்தப் பாவையின் கையில் இருக்கும் கிண்ணம் போன்ற பொருள்தான் அகல் விளக்காகும். இக்கையேந்து அகல்நிறைய நெய்யை விட்டுப் பருத்த திரிகளை நெய்யில் இட்டு எரிய விடுகின்றனர். விளக்கின் சுடர் குறையும்தோறும் ஆட்கள் இருந்து கொண்டு தூண்டிவிடுகின்றனர். இந்த விளக்குகள் ஏற்றின வுடன் சுற்றியுள்ள சுவர்தோறும் இவ்வொளியின் எதிர் ஒளி விளங்குகிறது. காரணம் என்ன? அரண்மனை ஆதாலால், மிகச் சிறந்த, 'வெள்ளி அன்ன விளக்கு கதை' (சுண்ணாம்பு) பூசியிருக்கிறார்கள்; ஆதலால், எதிர் ஒளி மிகுதியாய் இருக்கிறது. இந்த அழகிய சுவர்களும் வெறுஞ் சுவர்களாய் இல்லை. இவற்றில் எல்லாம் மிக அழகிய பூ கொடி முதலிய சித்திர வேலை செய்திருக்கிறார்கள்.
தூண்கள்
தூண்கள் எவ்வாறுள்ளன என்று காண்டல்வேண்டும். இன்றும் மதுரை சென்று திருமலை நாயக்கர் அமைத்த கட்டடங்களைக் கண்டவர்கள் பெருவியப்பை அடை கின்றனர். இதுவே இவ்வாறாயின், நெடுஞ்செழியனின் அரண்மனைத் தூண்கள் எவ்வாறு இருந்திருக்கும்? 'மாதிரள் திண்கால்' என்று கூறப் பெற்றமையின் பெரிய தூண்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் நாயக்கர் காலத் தூண்கள் கல்லாலும் சுதையாலும் கட்டப் பெற்றவை. பாண்டியனின் தூண்களோ, 'மணிகண்டன்ன' என்று கூறப் பெறுதலின், கரிய நிறத்தையுடைய 'சலவைக் கற்கள்' என்று நினைய வேண்டி உளது.
மகளிர் உறைவிடம்
இவை அனைத்தையும் தாண்டி அப்பாற்சென்றால் இருக்கும் இடம் 'ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு' எனப்படும் மகளிர் வாழும் இடமாகும். ஆடவர் குறுகாத இடம் என்று கூறினவுடன் அரசனுடைய உரிமை எவ்வளவோ என ஐயமெழுகிறதன்றோ? அதற்காகவே ஆசிரியர்.
"பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா" (நெடுநல்வாடை - 106,107)
இடம் என்று கூறி உள்ளார். பெரும்பாலும் பல மனைவி யரை வைத்து வாழ்ந்த பண்பாடுடையவர்தாம் தமிழ் மன்னர். எனினும், அவருள்ளும் சிலர் ஒரு மனைவி பண்பாட்டைக் கைக்கொண்டு வாழ்ந்தனர் என அறிகிறோம்.
கட்டில் செய்தான்
மகளிர் வாழும் இப்பெரும்பகுதியில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இதுவே அரசன் உறங்கும் இடம். பெரியதொரு கட்டில், அறைக்கு அழகைச் செய்து கொண்டு இருக்கிறது. கட்டில் என்றால் இன்று நாம் காணும் வகையைச் சேர்ந்தது அன்று, நெடுஞ் செழியனுடைய கட்டில், 'பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்தது' போலவே கட்டிலும் செய்துள்ளனர். கட்டில் செய்யுங்காலத்து அதனை உடன் இருந்து கண்டவராகிய நக்கீரர், அதன் இயல்பையும் அழகையும் எடுத்துப் பாடுகிறார். கட்டிலும் அதில் படுத்துப் புரண்ட மன்னனும், அக்கட்டில் இருந்த அரண்மனையும், ஏன் அந்தப் பண்பாடும் நாகரிகமுமே, இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டன! என்றாலும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த ஒரு தமிழ் மகன் எங்ஙனம் வீட்டை அமைத்தான் என்று அறிவதும், எங்ஙனம் வாழ்ந்தான் என்று ஆராய்வதும் பயனுடைய செயல் தாமே? நெடுஞ்செழியன் அமைத்த கட்டிலைப் பற்றிப் பார்ப்போம்.
தந்தக்கால் கட்டில்
கட்டிலின் கால்கள் யானைத் தந்தத்தால் செய்யப் பெற்றுள்ளனவாம். யானைத் தந்தத்திலும் பல வகை உண்டு. இக்கட்டில் செய்யப் பயன்பட்ட தந்தம் நாற்பது ஆண்டுகட்குமேல் வாழ்ந்த யானையினுடையதாம். அதுவும் அந்த யானை சண்டையில் இறத்திருத்தல் வேண்டும். அவ்வாறு போரில் யானை இறக்கும் பொழுது தந்தமும் தானே கழன்று விழுந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தந்தம் நான்கை எடுத்துக் கால்கள் அமைத்துள்ளனர். வெறுந்தந்தங்களை அப்படியே நிறுத்தி விடவில்லையாம். தந்தங்களைத் தொழில் வல்ல தச்ச னுடைய கூர் உளி புகுந்து அழகு பெறச் செய்தது. கடைசல் வேலை, வடிவம் உண்டாக்குமே தவிர, உருவம் உண்டாக்காது; ஆதலின் தச்சன் சிற்றுளி கொண்டு இலை பூ முதலிய வேலைப்பாடுகளைக் கட்டிலின் கால்களில் அமைத்தான் போலும்! மேலும், குடம் போன்றும், உள்ளிப் பூண்டு போன்றும் வடிவம் பெறும்படியாகவும் அமைத்தான்.
வேட்டை ஓவியம்
இவ்வகையான கால்களை நிறுவிக்கொண்டு தலை மாட்டிலும், கால்மாட்டிலும் ஓரடி உயரத்திற்குப் பலகை கள் அமைத்தான். இந்தப் பலகைகளில் வேட்டைக்குரியன வாய புலி முதலியவற்றின் உருவங்கள் பொறிக்கப் பெற்றனவாம். புலியின் உருவம் பொறிப்பதில் புலி மயிர் முதலியவற்றை வைத்து, அவற்றை அடுத்துச் சிங்கத்தின் தோல் முதலியவற்றைக் கொண்டு சிங்கத்தின் உருவத்தைப் பொறித்தான்; இவற்றை வேட்டை ஆடுவது போன்ற வேலைப்பாடுகளையும் அமைத்தான்.
இவ்விரு பலகைகளின் இவ்விரு முனையிலும் கால்கள் நட்டு முத்துக்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இந்த நான்கு கால்களையும் சேர்த்து இவற்றின் நடுவே விதானம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்த விதானத்தில் சந்திரனுடைய உருவமும், உரோகிணியினுடைய உருவமும் தீட்டப் பெற்றுள்ளனவாம்.
மெத்தை
படுக்கையாக அமைந்த மெத்தை எத்தகையது? மெல்லிய பஞ்சால் இயன்ற மெத்தையின்மேல் துணை புணர் அன்னத்தின் தூவி விரிக்கப்பெற்றுள்ளது. இம் மட்டோடு இல்லையாம் படுக்கையின் சிறப்பு. மெத்தையினுள் வைக்கவேண்டிய சரக்கு எவை எவை என்பதைச் 'சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை' என்ற ஐந்தாகும் என்று ஒரு பழைய பாடல் அறிவிக்கிறது. இவ்வளவு சிறப்பமைந்த மெத்தை யின்மேல் ஒரு வெண்மையான துணி விரிக்கப் பெற்றுள்ள தாம். அத்துணி கஞ்சியிட்டுச் சலவை செய்யப் பெற்றதாம்.
'காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமைத் தூமடி விரித்த சேக்கை' (நெடுநல்வாடை-134,135)
என்று மேல் விரிக்கும் துணியின் இயல்பும் சிறப்பும் கூறப் பெற்றுள்ளன.
படுக்கையையும் கட்டிலையும் பற்றி இவ்வளவு பெரிய வருணனை வேண்டுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். பழந்தமிழ் மன்னர் எப்பொழுதும் போரிட்டுக்கொண்டு திரியும் முரடர்கள் அல்லர்; வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் கற்றுக் கொண்டி ருந்தனர் என்பதை அறிவிக்கவே இதுகாறும் இது பற்றி விரிவாகப் பேசப்பெற்றது.
வாழ்க்கையின் குறிக்கோள் எவ்வளவு உயர்ந்ததாய் இருப்பினும் நாளை வரும் என்று எதிர்பார்க்கும் துறக்க இன்பத்திற்கு அண்ணாந்து கொண்டு இன்றைய உலகில் உள்ள இன்பத்தை வெறுத்துப் போலித் துறவு கொண்டவர் அல்லர் பழந்தமிழ் மன்னர். இத்துணை இன்பங்களின் இடையே வாழ்ந்தாலும் அவர்கள் உள்ளத் துறவுடையவர்; கடமை ஒன்று இருந்தால், அதை முடிக்க வேண்டி இத்தகைய இன்பத்தையும் துறந்து செல்லும் உறுதிப்பாடு உடையவர். இதுவன்றோ மனத்துறவு! எல்லையற்ற இன்பத்தின் இடையே வாழ்ந்தாலும் இத் தமிழ் மன்னர் உள்ளத்துறவு உடையவர்களாய்த் தாமரை இலைத் தண்ணீர் போலவே வாழ்க்கை நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. கட்டிலை இவ்வளவு சிறப்புடன் செய்து அதில் காதலியுடன் படுத்து மகிழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்தையும் துறந்து போர்க்களத்தில் வாடைக் காற்றில் வாடி மெலிவதையும் காண்கிறோம்.
ஓவியக்கருத்து
கட்டிலின் விதானத்தில் சந்திரனும் உரோகிணியும் எழுதப்பெற்றதன் காரணம், அவர்கள் காதலைத் தமக்கு நினைவூட்டுவதேயாகும். தலைமாட்டுக் கால்மாட்டுச் சட்டங்களில் புலி வேட்டை பொறித்திருப்பதிலும் ஓர் ஆழமான கருத்துண்டு. உறங்கச் செல்லு முன்னும், உறங்கி விழித்த உடனேயும் கண்ணிற்படுவன வேட்டையும் அதன் அடிப்படையான மறத்தன்மையும் ஆகும். அரசனுக்குரிய குழந்தை கருத்தரிக்கும்பொழுது அத்தாய் தந்தையரின் மனநிலை முறையே காதலிலும் மறத்திலும் ஈடுபட்டிருக்கு மாகலின் பிறக்கும் குழந்தையும் இவ்விரண்டு பண்பு களையும் பெற்று விளங்குமன்றோ?
கட்டில் செய்வதிலும் பழந்தமிழ் மக்களுடைய ஒப்பற்ற மனத்தத்துவ அறிவு நன்கு காணக்கிடக்கிறது.
மன்னன் வலிமை
இத்தகைய இன்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த தமிழ் மன்னன், தான் மன்னன் என்பதையும், பகை நீக்கி ஆள வேண்டுவது தன் கடமை என்பதையும் மறந்தானல்லன். பகை நீக்கம் என்றால் படை சேர்த்தல் என்பதுதானே கருத்து? இதோ அதனைச் செய்கிறான் தமிழ் மன்னன்.
தக்கதோர் மனை வகுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மன்னன், பரம்பரை உரிமையால் அத்தாயபாகத்தை எய்தினான் என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. கரிகாற்பெருவளத்தானுடைய தந்தை இளஞ் சேட்சென்னி, மைந்தன் பிறக்கச் சிறிது காலம் முன்னர் இறந்துவிட்டான் என்பதைக் குறிப்பிடவந்த முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர், கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கையில் தாயபாகத்தைப் பெற்றுவிட்டான் என்று குறிப்பிடுகிறார்.
'தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி' (பொருநாராற்றுப்படை 132)
என்ற அடியும்,
'உருகெழு தாயம் ஊழின் எய்தி' (பட்டினப்பாலை 227)
என வரும் பட்டினப்பாலை அடியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
படையைப் போற்றல்
பரம்பரை உரிமையாற்பெற்ற இவ்வரசைத் தமிழ் மன்னர் தமது வீரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் மன்னனுடைய வலிமையைப் பாட வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், நல்ல உவமை ஒன்றைத் தந்து அவனுடைய வலிமையை விளக்குகிறார்.
'ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும் உடையோய்!' (புறம்-2)
எனக் குறிப்பிடுகிறார். இப்பூதங்கள் உலகம் நன்கு வாழ உதவுகின்றன. என்றாவது இவ்வுலகம் தனது நிலைமை மீறிச் செல்லுமாயின், இதனை அழிக்கின்றன. அதே போலத் தமிழ் மன்னர்கள் பிற அரசருக்கும் வாழ உரிமை தந்து தாமும் வாழ்ந்தனர்; என்றாவது அப்பிறர் உரிமை மீறி வாழத் தொடங்கினால், அவரை அழித்தனர். அழிப்பதற்கு உரிய மனவன்மை, உடல் வன்மை, படைவன்மை என்ற மூன்றையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம். காலன் கூடக் காலம் பார்த்தே கொல்லுவான். ஆனால், இவ்வரசர் காலங்கருதாதுகூட வெல்லும் ஆற்றல் உடையவர் என்றுங் கூறப் பெறுகின்ற னர். இத்தமிழ் வேந்தர் 'நால்வகைப் படையுடன் மாட்சிமைப்பட்ட' அரசை நடாத்தினர் என பாடல்கள் மிகுதியும் தெரிவிக்கின்றன. போர் என்றவுடன் தோள்கள் வீங்கும் மறக்குடி மக்களை வீரர்களாகப் பெற்றிருந்தனர். அரசன் படையைத் தன் கண்போல் மதித்து நடத்தினான் என்ற உண்மையை 'படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்' என்று கூறும் வள்ளுவர் வாய்மொழி தெரிவிக் கிறது. படைகளால் தாம் பெறும் வெற்றியை நன்கு உணர்ந்தவர்களாதலின், அப்படைகட்குச் சிறு சோற்று விழா (Tea Party) பெருஞ்சோற்றுவிழா (Dinner) முதலியன நடத்தி அவர்கட்கு எழுச்சி ஊட்டி வந்தனர் என்றும் அறிய முடிகிறது. சாவைப் பெறற்கு அரிய பேறாகக் கருதிய தமிழ் வீரர்களைப் பெற்றிருந்த இம்மன்னர்கள் ஓயாது போர் இட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
மனவலி
இத்தகைய படைவலி உடைய இம்மன்னர்களின் மன வலியும் கண்டு மகிழற்குரியது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனை எழுவர் சேர்ந்து எதிர்த்தனர். அவனோ, சிறுவன். ஆனால், மனவலியால் அவ்வெழுவரினும் மேம்பட்டவன். போர் மூண்டுவிட்டது என்று அறிந்த அப்பெருந்தகை வஞ்சினம் கூறுகிறான். எவ்வாறு?
'எழுவரையும் அருஞ்சமம் சிதையத்தாக்கி
முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின் (புறம்.72)
'யான் இவ்விவ்வாறு போவேனாக!' என்று அவன் கூறுவதால் அவனுடைய உறுதி வெளிப்படுகிறது. இத் தகைய மனவலி படைத்தவர்கள் அரசராயிருந்த காரணத் தாலேதான் வீரர்களும் அத்தகையவர்களாய் இருந்தார்கள். இவர்களின் நெஞ்சு உரத்தை நன்கு அறிந்த வள்ளுவர்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (குறள்-774)
என்பது போன்ற குறள்களால் இவ்வீரர்க்குச் சாவா வரந் தந்துவிட்டார்.
உடலழகு
ஓயாது போரிடுதலில் மிக்க விருப்பம் உடையவர் களாய் இருந்தார்கள் தமிழ் மன்னர்கள் என்று நினைக்க ஆதாரங்கள் பல உள.
'இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது' (புறம்.8)
என்பன போன்ற அடிகள் இவ்வரசர்களின் மனவெழுச்சி யை அறிவிக்கின்றன. நெடுஞ்செழியன் ஓயாது போர் புரிந்து வாணாளைக் கழிப்பதைத் தடுத்து அவனை வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யவே 'மதுரைக் காஞ்சி' என்னும் மாபெருங்கவிதை தோன்றிற்று. மார்பிலும் முகத்திலும் புண்படுவதை விழுப்புண் என்று கூறுவர். அரசரும் வீரரும் இவ்விழுப்புண்களைப் பெற ஒருங்கே விரும்பினர். விழுப்புண்படாத நாட்களை வீணாளாகக் கருதுபவர் வீரர் எனக் குறள் கூறுகிறது. ஏனாதித் திருக்கள்ளி என்பவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் பாடிய பாடல் அந்நாள் அரசனின் உடல் அழகை எடுத்துக் காட்டுவதாய் உளது.
'நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே.' (புறம்.167)
ஓயாமற் செய்த போர்களிற் பெற்ற விழுப்புண் காரணமாக இவனுடைய உடல் முழுதும் தழும்பு ஏறி யிருத்தலின், கண்ணுக்கு அழகு அற்றவனாய் உள்ளான். ஆனால், மிக்க புகழ் படைத்திருத்தலின், கேள்விக்கு இனியவனாகவும் உள்ளான் என்பதே இப்பாட்டின் கருத்தாகும்.
புலவர் பாடும் புகழ்
இத்துணைச் சிறந்த வீரர்களாக அரசர் இருப்பினும் பயனில்லை, அவர்களுடைய மனம் சிறந்து இல்லையா யின், இவ்வரசர்கள் என்றும் குடிகளுக்காகத் தாம் வாழ்வதை மறந்தார் அல்லர். உயர்ந்த குறிக்கோளைப் பெற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர்.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்ந்து' (குறள்-596)
என்ற பொய்யா மொழியை வாழ்க்கை விளக்கமாகக் கொண்டிருந்தனர் இன்றேல், இத்துணைப் பெரும்புலவர் பாடும் சிறப்பு இவர்கட்கு இருந்திராதன்றோ? கேவலம் உடல் வீரம் மட்டுமே உடையராய் இருந்திருப்பின், புலவர் கள் இவர்களை மதித்துப் பாடி இரார். அவ்வாறுள்ள அரசர்களைப் புலவர்கள் பாடுவதில்லை என்ற கருத்தை யும் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் கூறுகிறார்.
'வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வல்லவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப' (புறம். 27)
(ஏற்றத் தாழ்வு இல்லாத சிறந்த குடியின்கண் பிறந்த அரசரை எண்ணுங்காலத்து, புகழும் பாட்டும் உடையோர் சிலரே. தாமரையின் இலையைப் போலப் பயன்படாமல் இறந்தவர் பலர். புலவரால் பாடப்படும் தகுதியுடையோர் ஆகாயத்திற் செல்லும் மனிதனால் செலுத்தப்படாத விமானத்தில் செல்வர்)
இவ்வாறு கூறுவதால், ஆயிரக்கணக்கான தமிழ் மன்னருள் ஒரு சிலரே அவர்தம் சிறப்புக் காரணமாகப் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கினர் என அறிய வேண்டும். என்ன சிறப்பைப் புலவர் பாராட்டினர் என்று அறிதல் வேண்டும். அடுத்து, உடல் வீரத்தை அவர்கள் மதிக்கவில்லை எனில், மனவலி அல்லது ஊக்கம் ஒன்றை யே போற்றி இருத்தல் வேண்டும். அரசருடைய மனநிலை எவ்வாறு இருந்தது என்று காணத் தமிழ் மன்னன் ஒருவன் பாடிய பாடலே நமக்குத் துணை செய்கிறது. சோழன் நல்லுருத்திரன் என்பவன் அரசனாய் இருந்தமையோடு பெரும் புலவனாயும் இருந்துள்ளான்.
மன்னன் மனநிலை
இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் கூடிய மன்னர் வாழும் நாடும் எத்தகைய சிறப்புடன் விளங்கியிருக்கும் என கூறவும் வேண்டுமோ? நெடுஞ்செழியனைப்பற்றி மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறிய சொற்கள் இன்றும் இக்கருத்தை விரிவுபடுத்தல் காணலாம், 'உலகத்தையே பெறுவதாயினும், பொய்கூறாத வாய்மை உடையன். மனிதரே அன்றித் தேவரேவரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியமாட்டான். வாணனுடைய புகழ்பெற்ற செல்வத்தையே பெறுவதாயினும், பழியொடு வருவதாயின், விரும்பமாட்டான்!'
'உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்துஒழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே'
(மதுரைக்காஞ்சி, 197-205)
தமிழ் மன்னருடைய மனநிலைக்கு இதைவிடச் சிறந்த இலக்கணம் கூறல் இயலாது. தன்னலம் என்பதைக் கனவிலும் கருதாத அப் பெருமக்கள் பிறர் பொருட்டே வாழ்ந்தார்கள் என்பது இதிலிருந்து விளங்குகின்றதன்றோ? இன்னும்,
'அரிய எல்லாம் எளிதினின் கொண்டு
உரிய எல்லாம் ஓம்பாது வீசி' (மதுரைக்காஞ்சி 145-64)
என வரும் அடிகள் முற்கூறிய கருத்தை வலியுறுத்தல் காணலாம்.
அறப்போர்
போரிடுங் காலத்திலும் இவர்கள் தம்முடைய பண் பாட்டிலிருந்து தவறுவதில்லை. போர் புரியத் தொடங்கு முன்னரே பகைவருடைய நாட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிடுமாறு எச்சரிக்கும் நற்பண்புடையவர். "பசுக்களும், பசுத்தன்மை பெற்ற அந்தணர்களும், பெண்டிரும், பிணியுடையவர்களும் பிதிர்க்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர் பெறாதவர் களும், யாம் போர் தொடுக்கப் போவதால் உடனே உமக்குப் பாதுகாவலான இடத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்" (புறம்.9) என்று பறை அறிவிப்பர் இம் மன்னர் எனில், இவர் பண்பாட்டை அறிய இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விதிவிலக்கு
அறநெறி பிழையாது போர் இட்ட இம்மன்னர் கூட்டத்தின் நடுவே ஒரு சிலர் இம்முறைக்கு மாறாகவும் நடந்து கொண்டார் என்பதும் உண்மையே. ஏனைய சமயங்களிற் செம்மையாக நடந்துகொள்ளும் நல்ல அரசர்கள்கூட ஒவ்வொரு சமயத்தில் இடித்துக் கூறுவார். இல்லாத காரணத்தாலோ, என்னவோ தவறு இழைத்து உள்ளனர். பகைவருடைய நாட்டையும் அரணையும் அழித்து அவர் நிலங்களில் கழுதை பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுவித்தலையும் (புறம். 15) ஒரு பாடலில் கேட்கத்தான் செய்கிறோம்.
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழாக,
ஏம நன்னாடு ஒள் எரி ஊட்டினை (புறம். 16)
என்பது போன்ற பாடல்கள் மிக மிகச் சிலவே. தொகை யாகச் சேர்க்கப் பெற்ற புறம் போன்ற நூல்களில் இத்தகைய பாடல்கள் ஒன்றிரண்டு காணப்படுதலான் ஓர் உண்மை நன்கு விளங்கும். அற்றை நாளில் தமிழ் மன்னர் இருந்த நிலையை உள்ளவாறு விளக்கவேண்டும் என்ற காரணத்தால் பொய் அறியா நன்மாந்தர் வேண்டும் என்றே இத்தகைய பாடல்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான மன்னர் மிகச்சிறந்தவராய் இருந்தனர் என்பதும், ஒரு சிலர் தவறான வழியில் சென்றனர் என்பதும் அறிய முடிகிறது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து இதைப் பெருந்தவறு என்றும் கூறுவதற்கில்லை. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் போரில் தோற்றாரைத் துன்புறுத்தலினும் அவர் நாட்டை எரி ஊட்டலினும் தவறு ஒன்றும் இல்லை என நினைத்திருக்கலாம் அல்லவா? எரியூட்டல் முதலிய செயல்கள் நாகரிகம் முதிர்ந்ததாகக் கருதப் பெறுகிற இற்றை நாளிலும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒன்று தானே? இற்றை நாள் மேலை நாட்டார் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் இச்செயல் கள் தவறுடையன எனக் கூறுவதற்கில்லை. ஆனால், 'யாதும் ஊரே யாவருங் கேளிர்' என்ற பழந்தமிழன் பண்பாட்டோடு ஒப்பிட்டால், தவறுடையதுதான் என்பதில் ஐயமில்லை.
தூய படுக்கை
இத்தகைய அரசர்களுடைய புறச்செயல் முதலிய வற்றைக் கண்டோம். இனித் தனித்த முறையில் அரசனைப் பற்றிச் சிறிது காண்டல் வேண்டும். தமிழ் மன்னன் காட்சிக்கு எளியனாய் இருந்தமையோடு காட்சிக்கு அழகனாயும் இருந்தனன் என நினையவேண்டி யுளது. அவன் உடை முதலியவற்றால் பொலிவுற்றிருந்ததை இலக்கியத்தில் காணலாம். அவன் படுத்து உறங்கும் கட்டில் தூக்கு மாலைகளால் பொலிந்து விளங்கினது என்ற கருத்தில்,
'கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி' (மதுரைக்காஞ்சி 7131)
என்ற 'மதுரைக் காஞ்சி' ஆசிரியர் குறிக்கிறார். 'சிந்தாமணி'யாரும்,
'ஐந்து மூன்று அடுத்து செல்வத்து அமளி இயற்றி' (சீவகசிந்தாமணி 888)
என்று கூறுகிறார். ஆதலின், இம்மன்னர்கள் தாம் உறங்கும் படுக்கையிடத்து எத்துணைக் கருத்துச் செலுத்தினர் என்பது ஆய்தற்குரியது. 'நெடுநல் வாடை' என்ற பாடல் அரசனுடைய கட்டிலைப் பற்றி வருணிக்கின்ற முறையை இன்றுங்கூட முழுவதும் அறிவது கடினமாய் உள்ளது.
இன்று நம்முடைய நாட்டில் செல்வர்கள் கூடப் படுக்கை எவ்வாறு இருந்தால் என்ன என்ற கருத்துடன் இருக்கக் காண்கிறோம். வீட்டின் பிற பகுதியை நன்கு வைத்துக் கொள்பவர்கள் கூடப் படுக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் காண்கிறோம். ஆனால் நடுத்தர வாழ்வு வாழும் ஆங்கிலேயர்கள் முதலிய பிற நாட்டார் படுக்கையை வைத்துக்கொள்ளும் சிறப்பையும், பழைய தமிழ் மன்னர்களின் படுக்கை பற்றிய வருணனைகளையும் காணும் பொழுது இதில் ஓர் உண்மை இருப்பதை அறிய முடிகிறது. படுக்கை இருக்கும் தூய்மை, சிறப்பு என்பவற்றிற்கேற்பப் படுப்பவனுடைய மனமும் தூய்மை உடையதாய் இருக்கும் போலும்! ஆடம்பரமற்ற முறையில் படுக்கை இருப்பினும், அது தூய்மையுடன் வைத்துக் கொள்ளப்பட வேண்டுவது என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வலியுறுத்துகிறார்,
"கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றால்" (குறள் - 840)
என்ற குறளில்.
திருந்து துயில்
இத்தகைய படுக்கையில் உறங்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனைவரும் நன்கு உறங்குகின்றனர் என்று கூறல் இயலாது. மனிதனுடைய மனம் எவ்வளவுக் கெவ்வளவு கவலையுற்றிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்து இனிமையாகவும் உறங்க முடியும் என்பதை அவரவர் அனுபவத்திலும் மனோதத்துவர் கூற்றிலும் காண்டல் கூடும். பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியை நடாத்திய தமிழ் மன்னர்கள் மனநிலையில் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் தமிழ்ப் பாடல்களிலிருந்து ஒருவாறு அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சியாசிரியர் மன்னன் ஒருவன் உறக்கத்தை நீத்து எழுந்தான் என்று கூறவரும் பொழுது,
'திருந்து துயில் எடுப்ப இனிதின்எழுந்து' (மதுரை. 714)
என்று கூறும் அடி அம்மன்னனைப் பற்றிய பல உண்மை களை நமக்கு அறிவிக்கிறது. சாதாரணமாகவே அதிகப் பொறுப்புள்ள வாழ்க்கை வாழ்கிறவர்கள் நன்கு உறங்கமுடியாது. அவருள்ளும் மன்னன் வாழ்க்கை பற்றிக் கேட்க வேண்டுமா?
மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுரவு உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல். (சிலம்பு. 25: 100-104)
(மழை குறைந்தாலும், உயிர்கள் துன்புற்றாலும் மன்னன் கொடுங்கோலனென்று தூற்றப்படுகிறான். ஆதலின், மக்களைக்காக்கும் மன்னர் குடிப்பிறத்தலினும் துன்பம் வேறு இல்லை.)
என்று அரசர் குடியிற்பிறந்த இளங்கோவடிகளே குறிக்கின்றார். எனவே மன்னனாய்ப் பிறந்த ஒருவன் மன அமைதியோடு உறங்குகிறான் எனில், அதில் பெரியதோர் உண்மை இருத்தல் வேண்டும். இக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாகரிகமும் பணமும் நிறைந்த நாடுகளில் வாழ்ப வர்களில் பெரும்பாலோர் 'உறக்க மாத்திரைகள்' பயன் படுத்தினால் ஒழிய உறங்க முடிவதில்லை என்பதை அறிகிறோம்.
இவை அனைத்தையும் மனத்திற்கொண்டு மதுரைக் காஞ்சியார் கூறிய 'திருந்து துயில்' என்ற சொற்களைக் காண்போம். 'திருந்து' என்ற அடைமொழியைத் துயிலுக் கும் 'இனிதின்' என்ற அடைமொழியை 'எழுந்து என்ற சொல்லுக்கும் பெய்து பாடுகிறார் ஆசிரியர். இக்காலம் போன்று பயனின்றி அடைமொழி தந்து பாட மாட்டார் கள் சங்கப் புலவர்கள். அவ்வாறு மிகுதியான சொற்கள் காணப்பட்டால், அங்கு நின்று ஆய வேண்டும்.'திருந்து' என்றும் ' இனிதின்' என்றும் கூறும்பொழுது ஆசிரியர் ஏதோ ஒரு பெரிய கருத்தைத் தெரிவிக்கின்றார். துயிலைத் திருந்து துயில் என்று குறிப்பிடுவதால், மனக் கவலையின்றி ஆழ்ந்து உறங்கும் உறக்கத்தையே குறிக்கிறார் ஆசிரியர். இத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை யார் பெற முடியும்?
பச்சிளங் குழந்தைகளும் மெய்ஞ்ஞானிகளும் மட்டுமே படுக்கையிற் படுத்தவுடன் உறங்கிவிடுகிறார்கள். மேலும், உறங்கும்பொழுதும் அரைகுறையாய் உறங்காமல், கனவு முதலியவற்றால் அல்லற்படாமல், நன்கு உறங்குகிறார்கள். குழந்தைகளும் மன உறுதியுடையாரும் இவ்வாறு உறங்கக் காரணம் யாது? இவ்விருவரும் மனக் கவலை இன்றி இருப்பதால் உறங்க முடிகிறது. எனவே, ஒருவன் திருந்திய துயில் கொள்ளுகிறான் எனில், அவன் மனம் கவலை அற்றுள்ளது என்பதே பொருள். துறவியின் மனம் கவலை இன்றி இருத்தல் கூடும். ஆனால், மன்னன் ஒருவன் இவ்வாறு சிறிதும் கவலை இன்றி இருக்கிறான் எனில், அது வியப்பானதே. பழந்தமிழ் மன்னர்கள் கவலையின்றி இருந்தார்கள். கவலை இன்றி இருப்பதென்றால், அது இருவகையிற் கூடும். கல் மனம் உடையவனாய், பிறர் வாழ்வு தாழ்வில் கவலையற்றவனாய், பொறுப்பற்றவனாய் இருக்கும் ஒருவனும் கவலையற்றிருத்தல் கூடும்.
தமிழ் மன்னர்கள் பற்றிய பாடல்களைப் பார்த்தால், அவர்கள் இவ்வாறு பொறுப்பற்றிருந்தார்கள் என்று கூறல் இயலாது. எனவே, வேறு ஒரு காரணம் பற்றியே அவர்கள் திருந்திய துயில் கொண்டிருத்தல் கூடும். அக்காரணமாவது யாது? வாழ்வின் உட்பொருளை நன்கு உணர்ந்தும் அரச ராய்ப் பிறந்துள்ள தம் பொறுப்பை நன்குணர்ந்தும் வாழ்ந் தனர் அற்றை நாள் மன்னர்கள். மேலும், அக் கடமையை நன்கு நிறைவேற்றினமையின், கிடைத்தற்கரிய அமைதி என்ற பரிசைப் பெற்றனர். கடமையை நன்கு நிறைவேற்றிய தால் உண்டாகும் மன நிறைவில் பிறந்த உறக்கமே அவர்கள் உறங்கிய உறக்கமாகும். இதனையே ஆசிரியர் 'திருந்து துயில்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார்.
இதனையடுத்து, 'இனிதின் எழுந்து' என்று வரும் சொற்களும் ஆய்தற்குரியன. விடியற்காலை எழும்பொழுது நம்மில் எத்துணைப் பேர்கள் மன நிறைவுடனும் சிரித்த முகத்துடனும் எழுகின்றோம்? இவ்வாறு எழவேண்டு மாயின், இரவு நல்ல முறையில் உறங்கி இருத்தல் வேண்டும். எனவே, இனிய முகத்துடன் மன்னன் எழுந் தான் என்று ஆசிரியர் கூறும்பொழுது அம்மன்னனுடைய வாழ்வையும் பண்பாட்டையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். தெளிந்த மனத்துடன் எழும் அம் மன்னன் நன்கு கடமையாற்றத் தயாராகிவிடுகிறான்.
வழிபாடு
இவ்வாறு எழுந்தவுடன் அம் மன்னன் படுக்கையில் இருந்தபடியே அன்றாடம் ஆற்றிமுடிக்கவேண்டிய கடமை களைப் பற்றிச் சிந்திக்கிறான். பழந்தமிழர் போற்றிச் செய்து வந்த இச்செயலைப் பிற்காலத்தெழுந்த ஆசாரக் கோவை என்ற நூல் அனைவருக்கும் உரிய கடமையாக வகுக்கின்றது.
'வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல் அறனும் ஒண்பொருளும் சிந்தித்து' (ஆசாரக்கோவை)
என்று கூறும் அடிகளில். இக்கடமை முடிந்தவுடன் அரசன் நீராடிவிட்டு உடையுடுக்கிறான். அடுத்துக் கடவுட் பூசையில் ஈடுபடுகிறான்.
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி. (மதுரைக்காஞ்சி-723-724)
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் அவன் செய்யும் இச் செயலையும் நமக்கறிவுறுத்துகின்றன. பின்னர் உணவுண்டு, நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பெரிய முத்து மாலையை அணிகின்றான். ஒளி பொருந்திய ஏனைய மணிமாலைகளுடன், மலர் மாலையையும் அணிகின்றா னாம்; கைவிரல்கள் நிறைய மணிகள் அழுத்தின மோதிரங் களையும் அணிகின்றானாம்; இத்தனைக்கும் மேலாக அன்றாடம் சலவை செய்யப்பெற்ற உடைகளை அணிகின் றானாம். துணிகட்குக் கஞ்சியிட்டுச் சலவை செய்தல் இக் கால வழக்கம் என்று யாரும் நினைத்துவிட வேண்டா. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நாட்டில் மன்னர்கள் இதனையே அணிந்தனர் என்பதைச்
"சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்" (மதுரைக்காஞ்சி-721)
என்ற அடிகளால் அறியலாம்.
உடைச் சிறப்பு
இத்துணை அலங்காரங்களுடன் காலை நேரத்தில் மன்னன் காட்சி தருகின்றான். ஆங்கிலர் ஆட்சித் தொடக்கம் வரையில் நிலை பெற்றிருந்த இந்திய நாட்டின் உடைச் சிறப்புத் தமிழ் நாட்டில் தொடங்கியதெனக் கூறலாம். அற்றை நாளில் தமிழ் நாட்டில் நெய்யப்பெற்ற மெல்லிய துணிகட்கு என்ன பெயர்கள் தந்தார்கள் என்று கூற முடியாவிடினும், 'டாக்கா மஸ்லின்' போன்றிருந்தன அவை என்று மட்டும் கூற முடியும். பழந்தமிழ் மன்னர் களும் பிற செல்வர்களும் உடுத்த உடைகள் எவ்வாறிருந் தன என்பதை அவர்கள் பாடலில் தோன்றும் உவமை களால் மட்டுமே அறிய முடிகிறது. உடைகளைப் பற்றிய சில குறிப்புகள் அறியற்பாலன.
"புகைவிரிந் தன்ன பொங்குதுகில்" (புறம், 398)
"ஆவி நுண்துகில் யாப்புறுத்து" (பெருங்கதை 1:36-64)
"நிறங்கிளர் பூந்துகில்" (சிலம்பு. 6:88)
"நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்" (சிலம்பு. 1:207)
என வரும் இவ்வடிகள் தமிழ்நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவதுடன் மன்னர் அணிந்த உடை வளத்தையும் காட்டி நிற்கின்றன. அடுத்து உணவுகொண்டு மன்னன் நாள் ஒலக்கத்திற்குச் சென்றமை அறியமுடிகிறது. அவ்வரசர்கள் அவைக்குச் செல்லு முன் அன்றைப் பொழுதுக்கு இவருக்கு ஏவலராக அமைந்துள்ளவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அறிய முடிகிறது. அன்றாடம் அரசனுடைய மெய் காப்பாளர், உறங்கும் இடத்தைக் காவல் புரிபவர் என்ற இருவகை ஏவலாளருமாவர் இவர். பெருங்கதை என்ற நூலில்,
புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய,
திருவீழ் கட்டில் திறத்துளி காத்த
வல்வேல் சுற்றத்து மெய்ம் முறை கொண்ட
பெயர் வரி வாசனை கேட்ட பின் (பெருங்கதை-34:5-8)
என வரும் அடிகள் பழந்தமிழ் மன்னரின் வாழ்வில் ஒரு பகுதியை அறிவிக்கின்றன. இப்பழக்கம் ஹிட்லர் காலம் வரையில் இருந்ததைக் கண்டோம்.
உணவுச் சிறப்பு
அரசர்கள் உணவும் பல்வகைச் சுவையுடையதாய், சத்துள்ளதாய் இருந்துளது. அரிசி உணவையே பெரிதும் விரும்பியுண்டனரெனினும், இற்றை நாளில் யாண்டுங் கிடைக்காத செந்நெல் என்பதை அற்றை நாளில் மிகுதியும் பயன் படுத்தினர். சத்துப்பொருள் முறையில் இச்செந்நெல் அரிசி மிகுதியும் சத்துடையதாய் இருந்திருக்குமெனத் தெரிகின்றது. ஒரு மன்னன் பாடிச்சென்ற பரிசிலர்க்கு உணவு தருமுறை கூறப்படுகிறது சிறுபாணாற்றுப் படை என்ற நூலில். அதிலிருந்து மன்னன் உணவையும் அதனை உட்கொள்ளு முறையையும் ஒருவாறு ஊகிக்கலாம். வீமன் இயற்றிய சமையற்கலை நூலின் நெறியில் தப்பாமல் பல சுவையுடன் செய்யப்பெற்ற அடிசிலை விண்மீன்கள் சூழப் பட்ட இளஞாயிறு போலக் காட்சிதரும் பொன் பாத்திரத் திடத்தே தந்தனனாம். இக்கருத்துப்பட வரும் பாடற்பகுதி.
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவளின் வழாப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குபொன் கலத்தில் தான் நின்று உட்டி
(சிறுபாணாற்றுப்படை 240-244)
என்பதாகும். அரசன் பரிசிலர்க்குந் தரும் முறை இதுவா னால், அவன் உணவு முறை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தமிழ் மன்னன் பெருஞ்செல்வம் பெற்றிருந்ததுடன் அதனை நன்கு அனுபவிக்கவும் பழகி இருந்தான்.
அரசர் அவை
பழந்தமிழ் மன்னர்கள் உண்டு உடுத்து வாழ்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய இடம் அரசவையாகும். பழந்தமிழ் மன்னர்கள் அலங் கரித்த அவைகள் பல பெயர்களால் வழங்கப் பெற்றன. ஒலக்கம், நாளோலக்கம், பெருநாளவை என்ற பெயர்களால் அவ்வவைகள்* குறிக்கப்பெற்றன. அரசர்கள், அமைச்சர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பிற நாட்டுத் தூதுவர் முதலியவர்களால் சுழப்பட்டிருப்பார்கள். அவ்வவைகளில் பரிசிலர் இனம் மட்டுமே அவ்வோலக்கத்தின் கண் ஆணை இன்றியும் நுழைதல் கூடும்.
"நசையுநர்த் தடையாநன்பெரு வாயில்" (பொருநராற்றுப்படை 66,71)
என்றும்,
பொருநர்க்காயினும், புலவர்க்காயினும்,
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி (சிறுபாணாற்றுப்படை 203-6)
என்றும் வரும் அடிகள் பெரு நாளவைகளின் சிறப்பை அறிவிக்கின்றன.
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
அரசர்களைச் சுற்றியுள்ளவர்கள் 'உழைவர்' (பெருங் 4:13:23) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் இவ்வுழையர்கள் சேர்ந்தனவே. ஐம்பெருங்குழுவினுள் யார் யார் அமைவர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. 'ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்' (சிலம்பு. 5:157) எனவரும் இடத்தில் அரும்பத உரையாசிரியர் இவர்களை "சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம், நெல் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்" என்றும், "வேந்தர்க்கு மாசனம், பார்ப்பார், மருத்தர், வாழ்நிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து" (சிலம்பு 5:157 குறிப்புரை) என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அடியார்க்கு நல்லார், 'அமைச்சர் புரோகிதர், சேனாபதியார், தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப் படுமே' என்றும், கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி (குதிரை) மறவர், இணையர் எண்பேர் ஆயம் என்ப,' (சிலம்பு. 5:157 உரைப் பகுதி) என்று கூறுகிறார்.
இவ்விரு உரையாசிரியர் கூற்றையும் நோக்குமிடத்து அரசரைச் சுற்றி இருப்போர் காலாந்தரத்தில் மாறினர் என்று நினைக்க இடமுண்டு என்றாலும், அடியார்க்கு நல்லார் கூறினவர்களே அரசவையில் உடனிருந்து பங்கு கொள்ளத்தக்கவர்கள் என்று கூறல் பொருந்தும். சாந்து கொடுப்போர். பூக்கொடுப்போர் முதலியவர்கள் அரசவை யில் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களா என்று ஆயு மிடத்து அடியார்க்கு நல்லார் கூறினவர்களே தகுதியுடை யார் என்பது நன்கு விளங்கும். அரசவையில் இருப்போர் அரசனுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபடத் தகுதி யுடையவராய் இருத்தல் வேண்டாவா? அமைச்சர் முதலானோருடன் பூத்தருவோரையும், உடை அணிவிப் போரையும் வைத்தெண்ணுதல் பொருத்தமுடையதாகப் படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்யுமிடமும், பரிசிலர் முதல் வெளிநாட்டுத் தூதுவர் வரை அனைவரை யும் வரவேற்குமிடமும் இந்நாளோலக்கமேயாகும்.
பழந்தமிழ் மன்னர்களுடைய நாளோலக்கத்தை நாம் இன்றும் அறிய வாய்ப்பைத் தந்தது, அவர்கள் பரிசிலர் களையும் இவ்வோலக்கத்தில் அனுமதித்ததேயாகும். ஏனை யோர் பலநாள் காத்திருந்தும் அரசனுடைய செவ்வி கிடைக்கப் பெறாமல் மனம் மறுகி இருக்கவும், பரிசிலர் மட்டும் யாதொரு விதமான தடையும் இன்றி உட்புகுதல் எத்தகைய செயல்? தமிழ் மன்னர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த செயல் வேறு யாது வேண்டும்?
'செல்வத்துப் பயனே ஈதல்:
துய்ப்பேம் எனினே தப்புந பலவே,' (புறம்-189)
என்று நக்கீரர் புறநானூற்றில் (189) கூறியதை இம்மன்னர் கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர் போலும்! தமிழ் மன்னர்கள்,
'காட்சிக் கெளியராய்' (குறள். 396)
இருத்தல் வேண்டும் என்று பொது மறை வகுத்த சட்டத் திற்கும் இம்முறை ஏற்றதாய் உளது.
அரசன் எதிரில்
அரசனுடைய அவையில் உள் நுழைவோர் நடந்து கொள்ளும் வகையை அறியப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இன்று பெருங்கதை என்ற நூலும் சிலப்பதிகாரமும் அரசவையில் புகுவோர் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறியப் பயன்படுகின்றன. கணவனை இழந்த கண்ணகி இணையரிச்சிலம்பு ஒன்று ஏந்திய கையளாய்ப் பாண்டியன் அரண்மனை வாயிற்காவலனை உள்ளே சென்று அறிவிக்க வேண்டுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்டஞ்சிய காவலன் உள்ளே ஓடுகிறான். காணாத செயலைக் கண்டிருப்பினும், நடவாத செயல் நடந்துவிட்ட தென்பதை அறிந்துங்கூட, உள்ளே சென்று மன்னன் அவையில் நுழைந்த அவன் பேசுவது வியப்பையே தருகிறது.
பாண்டியன் அவையுள் நுழைந்த வாயிற்காவலன்,
'வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி!' (சிலம்பு 20:30-34)
என்று கூறிவிட்டுப் பின்னரே தான் கூற வந்ததைக் கூறுகிறான். எனவே, இவ்வாறு அரசனைக் காண்போர் வாழ்த்திய பின்னரே வந்த காரியத்தை எடுத்தியம்ப வேண்டும் என்ற வரன்முறை அற்றை நாளில் இருந்திருக் கும் போலும்! இவ்வாறு வரன்முறை வைத்ததற்கும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அரசனைப் பார்க்க வருபவர் பல்வகையான செய்தியையும் கொணர்வர்.
அவ்வாறு நுழைபவர் தம்முடைய உணர்ச்சிகட்கு இடந் தந்து பேச முற்படுவாராயின், அரசனுக்கு அதனால் நடுவு நிலை நீங்க நேரிடும். எனவே, செய்தி கூற வருபவர், தாம் வந்த காரியத்தை உடனே கூறாமல், அவனைப் பல படியாக வாழ்த்திவிட்டுத்தான் கூறவேண்டுமெனில், வந்த உணர்ச்சி வேகத்தில் பாதியை இழந்துவிடுவர். இவ்வகை யான ஒரு நலத்தையும் இவ்வாழ்த்து முறை தருதலைக் காணலாம். பழந்தமிழ் மன்னர் அவைக்களம் முழு வதிலுமே இப்பழக்கம் இருந்துவந்ததென்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
வணங்கிய தலையர்
அவையுள் அரசனைக் காண வருபவர் இவ்வாழ்த்தை வாயினாற் கூறுவதோடன்றிச் செய்யவேண்டிய செயல்கள் சிலவும் உண்டு. அவற்றை அறியப் பெருங்கதை உதவுகிறது. "பிரச்சோதன" மன்னன் கணக்கர்களையும், அரசன் கருவூலத்தைக் (பொக்கிஷம்) காப்பவரையும் அழைத்து வர ஏவுகின்றான். இவ்விரு கூட்டத்தாரும் அரசவையுள் நுழையும்பொழுது முழங்காலிவிட்டு, போர்வையாகிய மேலுடையை மடக்கிக்கொண்டு, வணக்கஞ் செலுத்திக் கொண்டு, அண்ணாந்து அரசனைக் காணாமல், குனிந்த படியே அவன் ஏவலைக் கேட்டனர்," என்று அந்நூல் கூறுகிறது.
கணக்கரை வியன்கரக் கலவரைக் காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்வு உடுத்த நெடுநுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந்து இயலா ஆன்றுபுரி அடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழுஉப் புகுதர (பெருங்கதை 1:62-67)
என்ற அடிகள் அரசவைப் புகுந்த அரசன் ஊழியர் யாவரேனும் நடந்து கொள்ளும் முறையை நன்கு அறிவிக்கின்றன. இவ்வித முறையில் மரியாதை காட்டுவ தால்தான் அரசன் பெருமையடைகிறானோ என்று ஐயுற வேண்டா. என்ன இருந்தாலும் மன்னனே நாட்டிற்கு உயிர் போன்றவன் என்று கருதப்பட்ட நாளில் இவ்வாறு ஏவலரும் பிறரும் அவனிடம் பணிவு காட்டியதே அவனுடைய பெருமையை அறியாதாருக்கு அறிவிப்பதா யிருந்தது. இவ்வாறு பெருமை தரும் இயல்பு மன்னன் என்னும் மனிதனுக்கு மற்றுமன்றி, அவனுடைய அதிகாரத்திற்கும் காட்டப்பட்டது என்று கருதுதலும் தவறன்று.
உறங்குமாயினும் மன்னவன் தன்ஒளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால், (சிந்தாமணி-248)
என்று திருத்தக்க தேவர் கூறுவது இது கருதியேயாம். மன்னன் இல் வழியும் அவன் அமர்ந்து ஆட்சி செய்யும் இடத்திற்கும் இம்மரியாதை காட்டப்பட்டது.
தேவி உடனிருத்தல்
இத்துணைப் பெருமைவாய்ந்த அரசவையில் அரசன் வீற்றிருக்கும் பொழுது அரசியும் உடன் இருந்தாள் என்றும் அறிகிறோம்.
தேவியர்க்கு எல்லாம் தேவி யாகிக்
கோவீற்று இருப்புழிப் பூவீற்று இருந்த
திருமகள் போல ஒருமையின் ஒட்டி
உடன்முடி கவித்து கடன்அறி கற்பின்
இயற்பெருந் தேவி (பெருங்கதை 2:4:20)
என்ற அடிகள் அற்றை நாள் தமிழ் மன்னர் பெண் இனத்திற்குக் காட்டிய பெருமையை எடுத்தியம்புகின்றன.
ஆம்! ஔவையும், வெள்ளிவீதியும், ஒக்கூர் மாசாத்தியும் பிறந்த தமிழ் நாட்டில் பெண்கட்கு மதிப்புத் தருதலும், சமஉரிமை தருதலும் இயல்பே அன்றோ? இத்துணை உரிமைகளை மகளிர்க்கு அளித்திருந்தும், வருந்தத்தக்க ஒரு நிலையாதெனில், இம்மன்னர்களனைவரும் பல தார மணஞ்செய்து கொண்டவர்களாகவே இருந்தனர். பெருங்கதை போன்ற காப்பியங்கள் இவர்களை ஆயிரக் கணக்கில் கூறுவதைக் காணலாம்.
காணிக்கை
அரசனை அவையிற்சென்று காண்போர் காணிக்கை யாகச் சில பொருள்களைக் கொண்டு சென்று காண்டல் மரபாகும். இப்பொருளைப் பண்ணிகாரம் (3.18.24) என்ற சொல்லால் குறிக்கிறது பெருங்கதை. செல்பவர் தகுதிக் கேற்பவும், அவர் வேண்டும் குறைக்கு ஏற்பவும் உயர்ந்தன வும் சாதாரணமானவும் ஆன பொருள்களைக் கொண்டு செல்லல் மரபு. சேரன் செங்குட்டுவன் மலை வளங் காணச்சென்று தங்கியிருந்த பொழுது மலைவாணர் மலைபடு பொருள்களைக் கொணர்ந்து தந்து அவனை வழிபட்டமையைச் சிலப்பதிகாரம் விரிவாகப் பேசுகிறது. (சிலம்பு 25.36-55)
அவையே நீதி மன்றம்
பழந்தமிழ் மன்னனுடைய அவை நீதி மன்றமாகவும் இருந்தமையைக் கண்ணகி வழக்குரைத்தல் மூலம் கண்டோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியை நோக்கிப்,
பெண் அணங்கே,
கள்வனைக் கோறல் கடுங்கோலன்று!
வெள்வேல் கொற்றம் காண்! (சிலம்பு 20:63)
எனக்கூறியதும் அவனுடைய அவையிடத்தேதான். அற்றை நாளில் கொலையல்லாத பிற குற்றம் செய்தவர்கள் வேறு தண்டனை பெறாமல் தம் நிறையளவு பொன்னை அரசனுக்குத் தண்டமாகக் கொடுத்து விடுதலை பெறும் பழக்கமும் இருந்ததாக அறிய முடிகிறது. இக்கருத்தைப் பழைய குறுந்தொகைப் பாடல் விரிவாகப் பேசுகிறது.
மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் (குறுந்தொகை-292)
கொள்ளாத மன்னன் நன்னன் ஆவான். தமிழ் மன்னர் பல சந்தருப்பங்களில் அளவு மீறிய தண்டனையளித்தனர் என்பதையும் அறிவிக்கிறது. நீராடு துறையில் நீருடன் வந்த மாங்காயைத் தின்றுவிட்டாளாம் ஒரு பெண். அந்நாட்டு மன்னன் நன்னன் மாங்காய் தின்ற குற்றத்திற்கு அவள் தந்தை தருவதாகக் கூறிய பொருள்களையும் (81 யானை களும் அவள் நிறை பொன்னும்) பெற மறுத்து, அவளைக் கொன்றே விட்டானாம்! இத் தீச்செயலால் அவன் பெண் கொலை புரிந்த மன்னன், என்ற பழிச்சொல்லைப் பெற்றான்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகால்பெருவளத்தான், பாரி போன்ற நன்மன்னர்களே தமிழ்நாட்டை ஆண்டிருப்பார்கள் என்று கூறுவது பொருத்தம் ஆகாது.
ஒரோவழி நன்னன் போன்ற கொடுங்கோலர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
எனவே சங்கப் பாடல்களில் கொடுங்கோல் மன்னர்ப் பற்றிய குறிப்புகள் பொதுவாகவே உள்ளன.
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து
தொல்கவின் அழிந்த கண் அகன் வைப்பு (பதிற்றுப்பத்து 13)
அம்புடை ஆர்எயில்உள் அழித்து உண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன் (பதிற்றுப்பத்து 20)
பின் பகலே அன்றி பேணார் அகநாட்டு
நண்பகலும் கூகை நகும்
அளவிற்கு நகர்கள் பாழாயின. 'அறத்தாறு நுவலும் பூட்கை' என்ற புறநானூறு போர் அறம் கூறுமேனும் அதற்கு மாறாக நிகழ்ந்த போர்வெறிச் செயல்களின் மிகுதியைப் பதிற்றுப் பத்தும், புறநானூறுமே கூறக் காண்கிறோம்.
வாழ்த்தியல் துறையினும், வாடுக, இறைவ! நின் கண்ணி-ஏனோர் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே என்றெல்லாம் அறம் வேட்கும் புலவர் பெருமக்களே பாடியுள்ளமையும் காணப்படுகிறது.
தமிழ் மன்னர் நாளோலாக்கம் மிக்க சிறப்புடைய தாயினும் அவருள்ளும் சில பேதையர் இல்லாமற் போக வில்லை. இளவிச்சிக்கோ என்பானுடைய அரசியலைப் பாட வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்
வயங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின்
அணங்குசால் அடுக்கம்பொழியநும் ஆடுமழை,
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே. (புறம். 151)
என்று பாடுவதால், பரிசிலரை வரவேற்காத அவைகளும் ஒரோ வழிச் சில இருந்தன என்பது அறியப்படுகிறது.
ஆட்சியாளர்க்கு
உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதஇனம் தோன்றி வளருமுன்பே இத்தமிழகத்தில் மனிதன் தோன்றிவிட்டான் என்பது இற்றை நாளில் நிலநூல் அறிஞர் பலரும் ஒப்புகின்ற முடிபாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றி விட்டகாரணத்தால் இத்தமிழனுடைய நாகரிகமும் பழமை யானதாகும். சரித்திரம் எட்டிப்பாராத அந்த நாளிலேயே இத்தமிழர் செம்மையான அரசியல் அமைப்பைப் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல், பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். 'புறநானூறு' என்ற நூல், தொகுக்கப்பெற்றது. எக்காலம் என்பது இன்று உறுதியாக அறியக்கூடவில்லை. எனினும், கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டாவது முற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. தொகுத்தது அந்த நாளில் என்றால், அதில் காணப்பெறும் பாடல்கள் பல அதற்குக் குறைந்த அளவு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டு முற்பட்டாவது தோன்றி இருத்தல் கூடும். எனவே, புறநானூற்றில் வரும் கருத்துக்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழர் கொண்ட கருத்துக்கள் என்று கூறுவதில் அதிகம் பிழை இருக்க இயலாது.
இத்தகைய பெருநூலில் ஆட்சியாளர் இன்றும் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள் மிகப் பல உள.
பதவியால் மாற்றம்
ஒருவர் எத்துணைப் பெரிய பதவியில் இருப்பினும் தாமும் மற்றவரைப் போன்ற மனிதர்தாம் என்பதை அவர் உணரவேண்டும், இதை நாம் எடுத்துக் காட்டினால் பயன் விளையாது. எத்துணை நல்லவர்களாயினும், ஆட்சி கைக்கு வந்தவுடன், மனம் மாறிவிடுகின்றனர். இக்குறைபாடு உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படுகிற ஒன்று தான். எனினும், இத்தமிழர்கள் என்றுமே இதனை ஆட்சி யாளர்க்கு நினைவூட்ட மறந்ததில்லை. தான் பொது மக்களின் தொண்டன் என்ற நினைவு ஒருவனுக்கு இல்லையாயின், அவன் நல்ல ஆட்சியாளன் ஆதல் இயலாது. எனவே, இவர்களைப் பற்றிக் கூறவந்த பொதுமறை,
எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறுஆகும் மாந்தர் பலர். (குறள்-514)
என்று கூறிற்று. 'எத்தனை முறைகளில் ஒருவரைச் சோதித்து முடிபு செய்தாலும் அதிகாரம் கைக்கு எட்டிய பின் அவர் எவ்வாறு ஆவார் என்பதைக் கூற முடியாது, என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். குறள் வகுத்த இந்த இலக்கணத்தை ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த கம்பநாடனும் தன் இராம காதையில் பேசுகிறான்:
அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும்
பெறல் அருந் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம். (கம்பன்-1476)
பண்பாட்டால் நிறைந்தவர்கட்குக்கூட, பெறுதற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், மனம்மாறிவிடும் என்கிறான் கவிஞன், மேனாட்டு ஆக்டன் பிரபு,'அதிகாரம் மனிதனைச் சீரழியச் செய்கிறது; எதேச்சாதிகாரம் முற்றிலும் அழிந்துவிடச் செய்கிறது' என்று கூறியதும் ஆய்தற்குரியது. ஆட்சியாளர் இவ்வாறு மாறிவிடாமல் இருக்க வழி யாது? இதற்குற்ற வழி யாது என்ற வினாவை மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த 'நக்கீரர்' என்ற புலவரும் கேட்டார். பல நாள் சிந்தித்த பின் அவர் ஒரு முடிபுக்கு வந்து விட்டார். ஆட்சியாளர் சீர்திருந்த வேண்டுமாயின், அதனைப் பிறர் கட்டளை இட்டுச் செய்ய இயலாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எவ்வாறு திருந்துவது? இதோ புலவர் வழி கூறுகிறார். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் தவறாமலும் ஓயாமலும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய கருத்து இது.
திருந்த வழி
தெளிந்த நீரால் சூழப்பெற்ற உலகம் முழுவதையும் பிறவேந்தருக்கும் பொது என்று இல்லாமல் தாமே ஆளும் வெண்கொற்றக் குடையை உடைய ஒப்பற்ற பேர் பெற்ற அரசருக்கும், நடு இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறி வில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குரியது ஒரு நாழி அரிசி; உடுக்கப்படுவன இரண்டே துணிகள்; பிற எல்லாம் ஒன்றே; என்ற பொருள்பட,
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோக்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பன இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே. (புறம். 189)
என்று பாடுகிறார் தமிழ்ப் புலவர். இற்றை நாள் ஆட்சி யாளர் அனைவரும் இதனை நினைவில் வைத்துக் கொண்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்! பொது மக்களினின்றும் தம்மை வேறாக நினைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பாதவற்றையும் அதிகாரபலத்தால் திணிக்க மனம்வருமா, இந்த எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தால்?
காட்சிக்கு எளியர்
தம்மைச் சாதாரண மனிதராக இவர்கள நினைத்துக் கொண்டால்தானே முறை வேண்டியவர்களும், குறைவேண்டியவர்களும் வந்து இவர்களைக் காண முடியும்? இதனை மனத்துட் கொண்ட வள்ளுவர்,
'காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லன்
அல்லனாய்' (குறள்-386)
மன்னன் இருக்கவேண்டாம் என்று கூறுகிறார்.
ஆட்சியாளர் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டும் என்று கூறுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் உள்ளன. இக் காலத் தேர்தல் முறையில் இக்குறைபாடு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலே நின்றுதான் வாக்குரிமை பெறுகின்றனர் பலரும். தனிப் பட்டவர் என்று கூறிக் கொள்கிறவர்கட்கு இக்கால அரசியல் அமைப்பில் இடமில்லை. மேலும், தனிப்பட்ட ஒருவர் பிறர் உதவியை வேண்டாமல் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறுவது என்பதும் இயலாத காரியம். எனவே, பிறருடைய உதவி நாடப்படும் பொழுது அப்பிறர் எத்தகையவர் என்பதை ஆராய்தல் இயலாத காரியம்.
கூடா நட்பு
எவ்வாறாயினும் ஒருவருடைய உதவி தேவை என்று நினைக்கும் அந்த நேரத்தில் தம் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொளபவர் உதவியை மட்டும் நாடுவதென்பதும் இயலாது. உதவ வருபவர் பண்புடையாளரா, அல்லரா என்று ஆராய்ந்துதான் அவருடைய உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிபு செய்தால், அவர் தேர்தலுக்கு நின்றும் பயன் இல்லை. எனவே, பலருடைய உதவியையும் நாடித்தான் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது. எனில், அந்தப் பலருள் பல்வேறு பண்புடையவரும் இருப்பர் அல்லவா? தன்னலவாதிகள், பிறருக்குத் தீங்கு இழைப்பதைக் கலையாக வளர்த்தவர்கள், பிறர் பொருளைத்தம் பொருளாகக் கருதுபவர், பொதுப் பணம் என்பது தம்முடைய நலத்துக்கெனவே கடவுளாற் படைக்கப்பட்டது என்று கருதி வாழும் பண்புடையாளர் ஆகிய பல திறப்பட்டவரும் அப்பலருள் இருக்கத்தானே செய்வர்? இவர்களுடைய உதவியால் தேர்தலில் வெற்றி பெறுபவர் பிறகு அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களை எளிதில் நீக்கிவிட முடியுமா? டாலர் பெருமான் முழு ஆட்சி நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களாட்சியில் இக்கூற்றை நன்கு காணலாம்.
எனவே, ஆட்சியாளர் தீயவர்கள் நெருக்கத்திலிருந்து மிக விரைவில் விடுபடவேண்டும். அத்தகையோருடைய உதவியை மேற்கொண்டு தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவது அரசியல் நீதியாயினும், ஆட்சியில் அமர்ந்த வுடன் இத்தகையவர்களை நீக்கிவிட வேண்டுமென்பதே பழந்தமிழர் கண்ட அரசியல் நுணுக்கமாகும். 'வெள்ளைக் குடி நாகனார்' என்ற புலவரும் இந்தக் கருத்தையே வற்புறுத்துகிறார்.
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் (புறம்.31)
என்ற அடிகளில் நடுவுநிலை பிறழாமலும், முறை வேண்டு பவர்கள் எளிதில் வந்து காணுமாறும் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்பதையே குறுகிறார்.
சொல் செயல் வேறுபாடு
ஆளப்படும் பொதுமக்கள் பல்வகை நலன்களை ஆட்சியாளர் தமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தல் இயல்பே. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கட்குத் தாம் எவற்றைச் செய்யமுடியும், எவற்றைச் செய்ய முடியாது என்பவை தெரியும். ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்ப் பலவற்றையும் செய்வதாக வாக்களித்தலும், அமர்ந்த பின்னர் இந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதலும் இன்று நாம் காணும் காட்சி. இக்காலத்து மக்கள் அனைவருமே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர் போலும்! ஒரு கட்சியார் மட்டும் அல்லாமல் அனைவருமே இவ்வாறு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாயிருத்தலின், ஒருவரும் இதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால், பொதுமக்களைப் பொறுத்த மட்டில் ஆட்சியாளரின் இந்தச் சொல், செயல் மாறுபாடு மன வருத்தத்தை உண்டாக்கத்தான் செய்யும்.
ஆழ்ந்த வருத்தம் உண்டாகுமாயின், நாளடைவில் அது ஆட்சியாளருக்குத் தீமையாய் முடியும். பொது மக்களிடம் தோன்றிய இந்த வெறுப்புச் சில சந்தருப்பங் களில் உடனே பயன் தருவதும் உண்டு. இன்னும் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தராது. இவ்வாறு பயன் தராதபோது மக்கள் வெறுப்புக் கொள்ளவில்லை என்று ஆட்சியாளர் நினைத்து விடக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களைவிடச் சிறந்த பண்புடைய கட்சி வேறு இன்மையால் மக்கள் தம் வெறுப்பைக் காட்டாமலும் இருத்தல் கூடும். சந்தருப்பம் வந்தபொழுது தவறாமல் வெறுப்பைக் காட்டிவிடுவர். அமெரிக்காவில் நெடு நாட்களாய் ஆட்சியில் இருந்த 'டெமாகிராட்டிக்' கட்சியார் சென்ற தேர்தலில் தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எனவே, 'கூடுமான வரை செய்யக் கூடியவற்றைச் செய்கிறோம்' என்று கூறுலும், இயலாதவற்றை 'இயலாது' என்று கூறுதலும் நலத்தைத் தவறாமல் விளைக்கும், ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் இதோ இக்கருத்தைக் கூறுகிறார்.:
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவக்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லுக என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூ உம்வாயில் (புறம்.195)
[ஒல்லுவது-கொடுக்கக்கூடியதை; ஒல்லாது-தர இயலாத தை; ஆள்வினை மருங்கு - முயற்சி செய்வோரிடத்து உள்ள; கேண்மைப்பாலே - நட்பின் செயலாகும்; இரப்போர் வாட்டல் - எதிர்பார்க்கின்றவர்களை வீணாகத் துன்புறுத்த லும்; புரப்போர் புகழ் குறைபடூஉம்-ஈவோர் (ஆட்சி யாளர்) புகழைக் குறைக்கும்/]
இக்காலத்தே நாகரிகமும் அரசியல் முறையும் மிகுதி யும் வளர்ந்து விட்டன என்று கூறித் தருக்கடைகிறோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத் தமிழன் கண்ட அரசியல், அறம் இன்னும் தேவைப் படுதலைக் காணலாம்.
மன்னனுக்கு வேண்டுவது
நாட்டை ஆளும் அரசனுக்கு எத்தனையோ பண்பாடு கள் தேவை. என்றாலும், அவை அனைத்தையுங்காட்டிலும் மிகவும் இன்றியமையாதது அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் என்றே பழந்தமிழர் கருதினர்.
ஒரு நாட்டை ஆள்பவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூற வேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளனுக்கு இன்றியமை யாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்கு களும் பிறந்து, உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்துவிடுவானாகில், இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து மனிதன் பிரிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த காரணம் அவன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் குறிக்கோள்தான். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை உப்புச் சப்பு இல்லாமல் ஏதோ நடைபெறுகிறது என்று கூறும் முறையிலேதான் இருக்கும். தனிப்பட்ட மனிதன் வாழ்வுக்கே குறிக்கோள் தேவை என்றால், பலருடைய வாழ்க்கையை வழிகாட்டி நடாத்தும் நாடாள்வானுக்கு இது தேவை என்று கூறினால் அதில் வியப்படையக் காரணம் இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் எத்துணைப் பெருமுயற்சியுடன் ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர்! இத் திட்டம் முடிந்து பயன்தரும் பொழுது, இன்று ஆட்சி செலுத்துபவர்களே அப்பொழுதும் இருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. எனினும், இன்று ஆள்பவர்கள் அது பற்றிக் கவலை கொள்வதில்லை. தாங்கள் மீட்டும் ஆட்சியில் அமர முடியுமா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல், திட்டங்களை நிறைவேற்றவே முற்படுகிறார்கள். ஏன்? இதுதான் குறிக்கோள் என்று கூறப்படும் நாட்டுக்கும் பெரும்பாலான மக்கட்கும் நலந்தருவன எவை என்று ஓயாமல் நினைந்து, அவ்வாறு நலந்தருவனவற்றை நாடுதலே ஆட்சியாளனுடைய 'குறிக்கோள்' எனப்படும்.
குறிக்கோள் இன்மை
சிறந்த குறிக்கோள் இல்லாதவர்களும், இல்லாத கட்சியும் எத்துணை வண்மையும், கூட்டச் சிறப்பும் பெற்றிருப்பினும் சரி, அவை பயன் தாரா. இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதிலும் கட்சிகள் தாம் நாட்டை ஆள்கின்றன. மக்களாட்சி நடைபெறுவதாகப் பறை சாற்றப்படும் நாடுகளிலும், தனிப்பட்டவர் ஆட்சி என்று கூறப்பெறும் நாடுகளிலும் உண்மையில் நடை பெறுவது கட்சி ஆட்சியே! கட்சியாட்சியின் குறைவு நிறைவுகளை ஆய்வது நம்முடைய கருத்தன்று. என்றாலும், ஒரு கட்சி சிறப்படைவதும், சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளைப் பொறுத்தனவே யாகும். குறிக்கோள் இல்லாதவர்கள் கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின், நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவை இல்லை. எனவே, பலர் அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோள்களைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடிய பாடலை இங்குக் காணலாம்.
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)
என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்யவேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்கவேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தான் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும், அவனுடைய குறிக்கோள் எத்துணைச் சிறந்ததாயினும், பயன் இல்லை, அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராய் இல்லா விடத்து!
இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மை களைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமற்போய் விடுகிறது. காரணம், இடை நிற்போர்! எனவே, ஆள்வோ ருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன் படவும் வேண்டுமாயின், ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக்கொள்ளுதல். உடன் இருக்கும் அத்தக்கவர் களாலேதான் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.
அரசன் குறிக்கோள்
சோழன் நல்லுருத்திரன் என்பவன் நாடாளும் சோழர் குடியில் பிறந்த மன்னன் - அரசாட்சியின் இந்த நுணுக் கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்! இதோ குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறான் அவன்;
"நன்கு விளைந்து முற்றி வளைந்த நெல் கதிராகிய உணவைச் சிறிய இடத்தையுடைய வளையில் நிறைய வைக்கும் எலி முயன்றாற்போலச் சிறிய முயற்சியை உடையவர்களாகி, இருக்கும் தம்முடைய செல்வத்தை அனுபவிக்காமல் இறுகப் பிடிக்கின்ற பரந்த மனப் பான்மை இல்லாதவர்களுடன் பொருந்திய நட்பு இல்லாமல் போவதாக! தறுகண்மையுடைய பன்றியைப் புலி அடித்த பொழுது அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்து விட்டதாயின், அன்று அவ்விடத்தில் உணவு உட் கொள்ளாமல், மறு நாள் பெரிய மலையின்கண் உள்ள தனது குகை தனிமைப்பட உணவை விரும்பிப் புறப்பட்டு வந்து பெரிய ஆண் யானையை நல்ல வலப்பக்கத்தில் விழும்படியாக அடித்து உண்ணும் புலி பசித்தாற்போலக் குறை இல்லாத நெஞ்சுரம் உடையவர்களின் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாக!" என்ற கருத்தில் பேசுகிறான் அவ்வரசப் புலவர்.
விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன்று அனைய ராகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாது ஆகி வழிநாள்
பெருமலை விடர் அகம் புலம்ப வேட்டுஎழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித்து அன்ன மெலிவில் உள்ளத்து
உரன்உடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ! (புறம். 190)
[விளைபதம் - முற்றிய பருவம், வல்சி - உணவு, அளை - வளை, வளன் - செல்வம், வலியுறுக்கும் - இறுகப் பிடிக்கும், கேண்மை - நட்பு, கேழல் - பன்றி, வழிநாள் - மறு நாள், விடர் அகம் - குகையில், புலம்ப - தனித்துவிட; இருங் களிறு - பெரிய ஆண் யானை, உரன் உடையாளர் - நெஞ்சு வலிமை உடையார், வைகல் - நாட்கள்.]
எலி மனிதர்
உலகில் வாழும் மனிதர்கள் பல திறப்படுவார்கள். எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கி விடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் இன்றி, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலி கூட்டத்தார், இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக்காகவோ முயற்சி சிறிதும் செய்ய மாட்டார்கள்; ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப் பட்டிருப்பினும், அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். சில காலத்திற்கு முன்பு கள்ளச் சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணாமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப் பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே யாவர்.
புலி மனிதர்
இவரினும் வேறுபட்ட ஒரு கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலி போன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும், அப்பன்றி இடப் பக்கம் வீழ்ந்துவிட்டமையின் அதனை உண்ணாமற் சென்றுவிட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணான விடத்துப் பசியையும் பொறுத்துக்கொள்ளுகின்ற புலி, மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் வீழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற விலங்கைப் புலி உண்பதில்லை. அது போல இவர்களும் பிறருடைய முயற்சியால் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதே போல இவர்கள் செய்த முயற்சியில் வந்த ஊதியம் தவறானதாய் இருப்பின், இவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக்கொள்வது போல இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தங்கள் கொள்கைக்காகப் பொறுத்துக் கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டு விட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்ளுவதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதே போல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தை தமக்கே வேண்டும் என்று வைத்துக் கொள்வதுமில்லை; தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக்கூட்டத்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதுவான் அப்பழந்தமிழ் ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக்கூட்டத்தார் நட்பினர் ஆகாமல், புலிக் கூட்டத்தார் நட்பினர் ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!
ஆட்சியாளர் கவனிக்க வேண்டுவன
ஆட்சியாளர் அன்றும், இன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிந்தனர், புரிகின்றனர்? பொது மக்கள் தருகின்ற இறைப்பணத்தை(வரி) வைத்துத்தானே ஆட்சி நடை பெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளு மன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளை விதித்துப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்க லாம் எனப் பொது மக்களும் சிந்தித்தல் இயற்கை. புதிய வரிகளை விதித்தலில் எந்த அளவைக் கொள்வது என்பது பற்றி எந்த அரசினும் முடிந்த முடிபாக இதுவரை ஒன்றும் கூறப்படவில்லை. கொடுப்போருடைய வன்மை தான் வரி விதிப்போருக்கு அளவாக அமைதல் வேண்டுமே தவிர, அரசியலாருக்கு ஏற்படும் செலவு அளவாக அமைதல் கூடாது. இக்கருத்து இன்றும் சிறந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒத்துக் கொள்கிற கொள்கையாகும். இக்கருத்தைப் பிசிராந்தையார் என்ற புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் அழகிய ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.
'யானை பெருந்தீனி தின்னும் பிராணி. ஆனாலும் சிறிய மா அளவுள்ள நிலத்தில் விளையும் நெல்லை அறுத்து அரிசியாக்கித் தந்தால், பெரிய யானைக்குக்கூட அது பல நாட்கட்கு ஆகும். அவ்வாறு செய்யாமல், யானை தானே சென்று தின்னட்டும் என்றி அவிழ்த்து விட்டுவிட்டால், நூறு ஏக்கர் நிலமாயினும் வாயில் புகுவதைக்காட்டிலும் காலில்பட்டு அழிவது மிகுதி. எனவே, அறிவுடை வேந்தன் முறைதெரிந்து இறைப் பணத்தை வசூலித்தால், பல காலம் அவனும் மக்களும் இன்பமாக வாழ முடியும். அரசன் அறிவற்றவனாகித் தீயவர்களை நட்புக்கொண்டு செலவை முன்னிட்டு வரியைப் பெற்றால், யானை புகுந்த வயலைப் போல நாட்டையுங் கெடுத்துத் தானும் கெடுவான்', என்ற கருத்தில் அவர் பாடுகிறார்:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்என் கற்றமொடு
பரிவுதப எஉடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. (புறம்-184)
(காய்நெல்- விளைந்த நெல்; கவளம்- யானைக்குத் தரும் சோற்று உருண்டை; மா-ஒரு சென்ட் போன்ற நில அளவு; செறு- ஏக்கர் போன்ற அளவு; நந்தும்- பெருகும்; வைகல்- தினந்தோறும்; கல்என் சுற்றம்- ஆரவாரக் கூட்டம்; பரிவு தப- அன்பு கெடும்படி, பிண்டம்- பொருள் தொகுதி; நச்சின்- விரும்பினால்)
தமிழ் நாட்டகலம்
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்'
இந்நல் உலகத்தைப் பண்டு தொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர, சோழ, பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம்மூவரும் சேர்ந்து ஆட்சிபுரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (இப்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே) தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள், வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள், கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற விடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனை யில்) இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர்.
'மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசு முழங்குதானை மூவர்' (புறம். 35)
என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அவர்கள் ஒவ்வொரு வரும் தந்தமைக் கூறிக்கொள்ளும் பொழுது பேரரசர் களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். அவ்வரசர்கள் ஒரோவழி அதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை 'வெள்ளனக்குடி நாகனார், என்ற புலவர் பாடிய பாடம் அது.
'முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும்!' (புறம்.-35)
என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று,
'நாடு எனப்படுவது நினதே' (புறம்-35)
என்றும் கூறிவிடுகிறார். தமிழ்நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், 'அரசன்' என்று கூறினால் சோழனைத்தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால் சோழநாட்டைத்தான் குறிக்குமாம்.!
சக்கரவர்த்திகள்
இன்னுஞ் சில சந்தருப்பங்களில் அவர்கள் ஆளும் பகுதிகளை 'உலகம்' என்றுகூடக் குறிப்பிட்டனர். 'பிரமனார்' என்ற புலவர்.
'பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும். (புறம்-357)
என்று கூறிய அடிகள் ஆழ்ந்து நோக்கற்குரியவை. உலகம் என்ற சொல்லால் நாட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக் கூறுதல் அக்கால மரபுதான்.
‘மாயோன் மேய காடுறை உலகமும்’ (அகத்திணை, 5)
என்று தொல்காப்பியம் கூறுகிறது. என்றாலும் ‘மூவர் உலகம்’ என்று புறப்பாடல் புலவர் கூறும்பொழுது, அவர் இவர்களுடைய நாட்டின் பரப்பை ஓரளவு மிகுதிப் படுத்தியே கூறுகிறார் என்பது விளங்கும். ஒவ்வொரு சந்தருப்பத்தில் இம்மூவருள் வலிமை பெற்ற ஒருவன் ஏனைய இருவரையும் அடக்கி ஆளுதலும் உண்டு. இன்னும் கூறப்போனால் இவர்களுள் ஒவ்வொருவனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனன். புறநானூற்றில் 357--ஆம் பாடலில் ‘பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்’ என்று கூறுவது இவ்வாறு ஒரோவழி ஏனைய இருவரையும் வெற்றி கண்ட ஒருவனையே குறிக்கிறது.
தமிழருக்குள் அடிதடி
கரிகாற்பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று, பிறநாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும், பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிற தமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் அந்நாளில் பெரும்பான்மையான தமிழர். சில சந்தருப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கிற்று. வெல்லப்பட்டவர் நாட்டை (தமிழ் நாட்டின் மற்றொரு பகுதிதான்) அழித்து, நெருப்பூட்டல் ஒரு வழக்கம்.
கரும்புஅல்லது காடு அறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நல்நாடு ஒள்எரி ஊட்டினை”. (புறம்-16)
[கரும்பு விளையும் விளைநிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்]
என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்ற வரைப்பற்றி நினைத்ததில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழி பேசும் ஒரே நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வெற்றி வீரர்கட்கும் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப்பெரு மன்னர் கள் ஒரோவழி வாளாவிருந்தாலும், இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளாவிருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமை யின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனாரா?
போரிடக் காரணம்
புறப்பாடல்களை ஒரு முறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் இயலாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப்படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டி உளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு யாதாக இருத்தல் இயலும்?
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே (புறம். 165)
[நிலைபேறில்லாத இந்த உலகில் புகழை நிலை நாட்டிப் பலர் மாய்ந்தனர்]
புகழ்ப் பைத்தியம்
இத்தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் ஆழமாய் இருந்ததென்பதைக் காட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரவியலும்.
தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.” (குறள்-238)
என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம்மக்கள் தம் வாணாளில் பெற வேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணம் இதற்குப் பெரியதோர் இடந்தந்து, “பாடாண்திணை” என்றதொரு திணையையே வகுத்து விட்டது.
புகழடைய வழி
மனிதனாய்ப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீரவேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக் கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக் கூடுமாயின், அது மிகவும் நலமானதாகப் பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன் மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர் மேல் போர் தொடுத்து வெற்றி காணமுடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியே பிறர் புகழவும் காரணமாகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன் பெறக் கூடுமாயின், வன்மை மிக்க அரசர்கள் போர், என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம்மக்களும் இதனை நம்பினர்.
வெற்றி வெறி
பிறருடைய நாட்டின் மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப் பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப்பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நலத்தைப்பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றை நாள் தமிழர். எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டு விட்டால், அது குடிப்பழக்கம் போல ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி, மேலும் மேலும் போர்செய்யத் தூண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராயக்கூட அவர்கள் முற்படவில்லை.
வாழ்வின் குறிக்கோள் போரன்று
அரசராய்த் தாம் பிறந்ததே போர்செய்யத்தான் என்று கூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில் அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்திலாதல் ஓர் ஐயம் தோன்றியிருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்று தானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற்செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக்கிடக் கின்றன. “மாங்குடி மருதனார்” என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க “மதுரைக் காஞ்சி” என்றதொரு நூலையே (எவ்வளவு பெரிய பாடல் அது!) இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 அடிகளையுடைய அப்பாடலில், அப் புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார்.
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
விலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே (மதுரைக்காஞ்சி, 778-82)
(உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாதலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக).
இப்புலவரே இம்மன்னனையே பாடும் புறப்பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.
ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப...... (புறம்-24)
இவ்வாறு இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும் பொழுதுதான், இவ்வாறு செய்யா தவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது.
ஏனைய வழியால் பெரும் புகழ்
போர் செய்தலையே தம் வாணாளின் குறிக்கோளாகக் கொண்ட இம்மன்னர்கள் புகழடைவதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்க வில்லை! ஆனால், இப்பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடைஏழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ் படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும் என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது? போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப் படச் செய்த இப்போர் வெறியர்களும் புகழடைந்து விட்டதாகச் செருக்குற்றிருந்தனர். இவர்கள் செருக்கை வளர்க்கத் தமிழ் புலவர்களும் காரணர்களாய் இருந்தனர். குறு நிலமன்னர்கள் எழுவரை ஒரே நாளில் வென்றுவிட்டான் என்பதற்காகத் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனை எத்தனை புலவர்கள் புகழ்ந்துள்ளனர்! அதுவும் அளவுமீறிப் புகழ்ந்துள்ளனர். நன்கு ஆராய்ந்து பார்த்தால், இதனை மிகப் பெரிய வெற்றிகளுள் ஒன்று என்றுகூடக் கூறவியலாது. தம்முடைய நாட்டைவிட்டுப் பன்னூறு மைல்கள் கடந்து சென்ரு வேற்று நாட்டில் போர்கள் புரிந்து வெற்றி பெற்ற செங்கிஸ்கான் அலெக்ஸாந்தர் முதலானோருடன் ஒப்பு நோக்கினால் நெடுஞ்செழியன், கரிகாலன் போன்றார்கள் வெற்றி மிகச் சிறியதாகிவிடக் காண்கிறோம். ஆனால், அலெக்ஸாந்தர் கிரேக்கர்களுடனும், செங்கிஸ்கான் மங்கோலியருடனும் போரிடவில்லை. நெடுஞ்செழியனோ என்னில், தமிழ ருடன் போரிட்டான். வென்றவனும் தமிழன்; தோற்றவ னும் தமிழன். இவ்வெற்றியை என்னவென்று பாராட்டு வது? இவ்வெற்றியால் புகழடைந்ததாகக் கருதிய மன்னரும் நம் இரக்கத்திற்கு உரியர். புகழுக்குரிய ஒரு செயலைச் செய்துவிட்டான் அம்மன்னன் என்று கருதி அவன்மேல் பாடாண்திணைப் பாடல்கள் பாடிய புலவர்களும் நம் இரக்கத்திற்கு உரியவரேயாவர்.
இவ்வெற்றிகளால் பெறுவது இன்பமாயினும், புகழாயினும் அவை விரும்பத்தக்கனவல்ல. இவ்வுண்மையை தமிழர் நன்கு அறிந்திருந்துங்கூடப் போரால், வெற்றியால் இன்பங்காண முயன்றனர். அதனால் பெற்ற புகழையும், அப்புகழ் நிலையற்றதாயினும், விரும்பினார்கள். போர் செய்தலாகிய முறையை மேற்கொண்டு புகழடைய முயன்ற இவர்களினும் வேறுபட்ட முறையைக் கையாண்டு புகழீட்டியவர்களும் உண்டு. பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ் வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணைகொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே, உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே! இவ்விரு சாராரும் பெற்றது ஒரே புகழ்தான் என்றாலும், இருவர் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை! அடையும் பயன் ஒன்றே யாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர்.
புகழடைய இருவழிகள்
அறிவு வழி மேற்கொண்ட இவர்கள் புகழ் சிறந்ததா, அன்றி, அந்பு வழி மேற்கொண்ட அவர்கள் புகழ் சிறந்ததா? அறிவு அறிவு என்று கூவி அறிவிற்கு வணக்கம் செலுத்தும் இக்காலத் தமிழ்நாடு, ஒருவேளை இப்போர் வெறியர்களைப் பாராட்ட முன் வரலாம். ஆனால், உண்மையில் இவர்கள் புகழ் நிலை நின்றதா? இது நன்கு ஆராயற்பாலது. அன்பு வழி மேற்கொண்டு புகழ் படைத்தார் பற்றி அடுத்துக் காண்போம்.
எவ்வழி சிறந்தது?
அறிவு வழியை மேற்கொண்டு படைதிரட்டித் 'தன் வலியும் துணைவலியும் மாற்றான் வலியும் இருள் தீர எண்ணிப்' போர் மேற்கொண்டு வெற்றி பெற்றுப் புகழடைந்தவர்கள் பற்றியும் கண்டோம், புகழ் தேட வேண்டும் என்ற தலையாய விருப்பும், உள்ளே தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுக்கும் முயற்சியும் சேர்ந்து போராக வெளிப்பட்டன என்றும் கண்டோம். இவ்வரசர் கள் வாழ்ந்து இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு கூட இவர்கள் செய்கை போற்றத்தக்கது என்று ஒரு தலையாகக் கூறக்கூடவில்லை.
அகங்காரமும் மமகாரமும் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஆணவமும் மமகாரமும் இயற்கையாக அமைந்துவிடுகின்றன,. பல சந்தர்ப்பங்களில் வேறு வழியாற் கூறினவிடத்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களை மடக்க இது பயன் படுகிகிறது. 'இத்துணைப் பெரியவனான நீ இந்தக் காரியம் செய்ய லாமா' என்று கேட்டால் சிலர் திருந்திவிடக் காண் கிறோம். எனவே, ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பைத் தானே வகுத்துக்கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தான் செய்யும் காரியம் தன் மதிப்புக்கு ஏலாதது என்பதை ஒருவர் எடுத்துக்காட்டியவுடன் அச் செயல் செய்வதிலிருந்து விலகி விடுகிறான். இதிலிருந்து ஒன்றை அறிய முடிகிறது. மனிதனிடத்து அமைந்து கிடக்கும் 'அகங்காரம்' எனப்படும் 'யான்' என்பதையோ 'மமகாரம்' எனப்படும் 'எனது' என்பதையோ தொட்டு விட்டால், அவன் துள்ளி எழுகிறான். உறங்கிக் கிடக்கும் ஒருவனைத் தொழிற்படுத்த வேண்டுமாயின், இவற்றைத் தூண்டி விடுவது சிறந்த வழி என்றே படுகிறது.
தூண்டிலில் இரை
'யான் எனது' என்பனவற்றைத் தூண்டுவதன் மூலம் ஒருவனை நல்லது செய்யவும் தூண்டலாம்; அல்லது தீயவை செய்யவும் செலுத்தலாம். இவை இரண்டும் தூண்டுபவன் மன நிலையைப் பொறுத்தவை. பழந்தமிழ் அரசர்களின் புகழ் விருப்பம் இவ்வகங்காரத்திலிருந்து அரும்பினதே யாகும். அவன் புகழைப் பாடினவர்கள் ஒரு வகையில் அம்மன்னனுடைய 'யானுக்கு' இரை இட்டனர். 'யான்' என்ற மீனுக்குப் 'புகழ்' என்னும் இரையைக் காட்டிலும் சிறந்தது ஒன்றில்லை. அதிலும் 'கவிதை' என்னும் தூண்டிலிற்கோத்த 'புகழ்' என்னும் இரையைக் கண்டு மயங்காத மனிதர்களே மிகமிகக் குறைவாவர். பழந்தமிழ் மன்னர்களில் பெரும்பான்மையானவர் 'மனிதர்'களே. எனவே அவர்கள் இத்தூண்டிலில் சிக்குண்டதில் வியப்பில்லை. இது கருதியே போலும் வள்ளுவப் பெருந்தகை 'புகழ்' என்ற அதிகாரத்தை இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்துப் போனார்! மேலே கூறப்பட்ட முறையில் அறத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று கூறிய ஆசிரியர், மக்கள் இனத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்குகிறார். ஒரு சிலர் பயன் என்ற ஒன்றைக் கண்டால் ஒழிய நன்னெறி ஒழுக மாட்டார்கள். ஆனால், பயன் என்பது இம்மையில் அன்றி மறுமையில்தான் கிடைக்குமெனின், 'அது கிடக்கட்டும்' என்று கூறுகிறவர்களும் இம்மக்கள் தொகுப்பில் உளராகலின், அவர்கள் பொருட்டாகவே 'புகழை' இறுதி அதிகாரமாக வைத்தார் போலும்! இந்தத் தூண்டில் பொன் முள்ளாகலின் இல்லறத்தார்க்கே உரியது என்பார் போல இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்து உள்ளார். துறவு நெறி செல்பவர் இப்புகழ் என்னும் வலையில் பட்டால் மீள்வது அரிதன்றோ?
'யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (குறள்-346)
என்று கூறிய பிறகு துறவிக்குப் புகழ்மேல் ஆசை இருத்தல் முறையன்று. எனவே, துறவறத்தில் இவ்வதிகாரத்தை வள்ளுவர் வைக்கவில்லை.
புகழ் தேட வழி
இல்லறவியலில் 'புகழ்' அதிகாரத்தை வைக்கும் பொழுது ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் வைத்துள்ளார் என்பதை முன் பின் பார்த்தால் நன்கு விளங்கும். ஈகை என்ற அதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரம் அமைந் துள்ளது நோக்கற்குரியது. அதனை ஒருவேளை மக்கள் கவனியாமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சிப் போலும் ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் முதல் இரண்டு குறள்களிலும் ஈகை உடையா னுக்கே புகழ் உண்டு என நினைவூட்டுகிறார்! புகழ் தேடவேண்டும் எனினும் அதற்குப் போரைக் கருவியாகக் கொள்வதை வள்ளுவர் விரும்பியிருக்க மாட்டார். பிறர்க்குத் தீமை புரிந்து அதனால் புகழ் வருவதாயின் அதனைப் புகழ் என்றுகூற ஒருப்பட மாட்டார்.
'மறந்தும் பிறன்கேடு சூழற்க' (குறள்-204)
என்று கூறிய பெரியார்.
பிழை எங்கே
வள்ளுவர் கருத்து இதுவாயின் பிழை எங்கே நேர்ந் தது பழந்தமிழ் மன்னர்கள் ஏன் போரைக் கருவியாகக் கொண்டனர்? அறிவை அதிகம் நம்பியதால் ஏற்பட்ட பயன்தான் அது. ஓயாது பிறரைப் பற்றியும் அவருடைய வலிமை பற்றியும் எண்ணிக்கொண்டிருந்த அம்மன்னர் கள் இப்பிழை செய்வது எளிய காரியம். அதிலும் மன்ன ராய்ப் பிறந்த தாங்கள் செய்வன அனைத்தும் சிறந்தவை என்ற எண்ணமும் உடன் தோன்றி விட்டால் பிறகு கேட்கவும் வேண்டுமா? பெற்ற பயன் இதுதான்.
அறிவாராய்ச்சியும் பயனும்
இந்தப் பாலைவன வாழ்வில் வேறு கருத்துடையவர் களே இருந்ததில்லையா? இல்லாமல் இல்லை. ஆனால், அறிவும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில் அறிவின் துணைகொண்ட இவ்வரசர்கள் கூட்டம் மிகுதி. ஆனால், உணர்வின் துணைகொண்ட மன்னர்கள் கூட்டம் சற்றுக் குறைவு. அறிவைத் துணைக்கொண்டு உலகை நோக்கும்பொழுது, உலகம் வழங்குகின்ற காட்சியே வேறு; உணர்ச்சியைத் துணைகொண்டு காணும் பொழுது கிடைக்கும் காட்சியே வேறு; அறிவால் ஆராய்ந்த மன்னன் முதலிற்கண்டது தன்னையும், தன் பெருமையை யும் ஆம். அடுத்துக் கண்டது தன்னைப் போன்ற மன்னர் களையும், குடிமக்களையும். ஆனால், அறிவுக்காட்சி அம்மட்டோடு நிற்கவில்லை. அந்த அரசர்களைத் தன்னுடன் ஒப்புமை செய்து பார்த்து அவர்களுடைய வன்மைக் குறைவை எடுத்துக்காட்டிற்று. தன் அதிகாரத் தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறிற்று. வந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டிற்று. பிறருடன் தன்னை எடை போடத் தொடங்கியவுடன் எவ்வாறாயினும் அவர் களினும் தான் மேம்பட்டவன் என்று பிறர் கூற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் ஆளும் இந்த நிலம் 'பிறமன்னர்கட்கும் பொது' என்ற சொல்லைப் பொறுக்காத ஒரு நிலை வந்துற்றது.
"வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறா அது
இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப" (புறம்-8)
[பிற அரசர் புகழும்படி இன்பத்தை விரும்பிய வாழ்வை நடத்தாமல், இந்த உலகம் பிற மன்னருக்கும் பொது என்று பிறர் சொல்லும் சொல்லைப் பொறுக்காமல்.]
அறிவால் ஆராய்ந்த பொழுது பெற்ற பயன் இதுவாகும்.
உணர்வு வழி வாழ்வு
உணர்ச்சியால் ஆண்ட பெருமக்களுள் தலையாயவன் பாரி வள்ளல். அறிவை அடக்கிக்கூட உணர்ச்சிக்கு இடந் தந்த பெருமை அப்பெருமகனுக்கே உண்டு. 'இவ்வளவு தூரம் அறிவை இழந்து உணர்ச்சி வசப்படலாமா?' அதுவும் மன்னனாகிய அவன் இவ்வாறு செய்யலாமா? என்றுகூடக் கேட்கப்படலாம். உணர்வை இழந்து, அன்பை இழந்து, தம்மொடு பொருது மடிகிறவரும் தம்மைப் போன்ற தமிழர் என்பதை மறந்து, தமிழ் மண்ணில் தமிழ்க் குருதியைப் பரவவிட்ட நூற்றுக் கணக்கான தமிழ் மன்னர், உணர்ச்சியை விட்டு அறிவின் துணை கொண்டனர். அவர்கள் எதிரில் பாரியும் பாரி போன்ற ஒருசிலரும் அறிவைவிட்டு உணர்ச்சியைப் பெருக்கி வாழ்ந்தது தவறா? 'உடையுடுத்தாத ஊரில் உடையுடுத்தவன் பைத்தியக்காரன்' என்பது முதுமொழி. அவ்வாறு கூறுவது சரிதான் என்று கூறும், அறிவுவாதிகள் வேண்டுமானால் பாரியைத் தவறு கூறட்டும். மற்றவர் அனைவரும் பாரியைப் போற்றத்தான் செய்தனர்; செய்கின்றனர்; செய்வர்.
கொடைக்கு உவமை
பாரியின் கொடைத்திறத்திற்கு உவமை கூற வந்த புலவர், உலகம் முழுவதும் தேடியும் உவமையைக் காண முடியாமல், இறுதியில் 'மேகம்' ஒன்றைத்தான் கூறினார். 'என்ன அழகான உவமை! இதைவிடப் பாரியைத் திட்ட 'வேறு உவமை வேண்டுமா?' என்கிறார் அறிவுவாதியர்; மேகம் செய்யும் தொழிலைப்பற்றிப் பரணர் இதோ பாடுகிறார்; அதுவும் 'மேகம்' என்ற வள்ளலைப் பற்றித் தான் பாடுகிறார்.
அறுகுளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல (புறம்--142)
[வற்றிய குளத்திலும் விளை வயலிலும் பெய்து, அதனால் நாம் நினைக்கும்படியான பயனை உண்டாக்காமல், கார் நிலத்தில் பொழிந்து எவ்விடத்தும் வரையாத இயல்புடைய மேகம் போல]
இவ்வாறு கொடுப்பதை ஆராயாமல் தருவதை என்ன வென்று கூறுவது? இது முறையா? பெருமையா? அறந் தானா? இல்லை என்பார் என்க. ஆனால், இவ்வாறு தருவதன் அடிப்படையை உணர்ந்துகொண்டாலன்றிப் பாரியை அறியுமாறு இல்லை.
தனி இனம்
பாரி போன்றோர் ஒரு தனி இனமாவர். ஏனை யோருக்கு மனம் வேலை செய்வதைப் போல இவர்கட்குச் செய்வதில்லை. அறிவாளன் உலகைக் காணும்பொழுது முதலிற் காண்பது தன்னை (அகங்காரம்) என்றும் அடுத்துக் காண்பது தனதை (மமகாரம்) என்றும் கூறினோம். பாரி போன்றோர் முதலிற் காண்பது இவற்றை யன்று. கூறப்போனால் இறுதியிற்கூட இவற்றைக் காண்ப தில்லை அவர்கள். இதுவே வேற்றுமை. இதை உதாரணத் தால் நன்கு அறியலாம். யானும் எனதும் அவர்கள் பார்வையில் வராமையின், 'புகழ்' என்னும் தூண்டிலில் அவர்கள் சிக்குவதும் இல்லை. யான், எனதை உடைய மீன்கட்கே புகழ் என்னும் பொன் தூண்டில் உரியது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற திமிங்கிலங்கள் போல்வர் இவ்வள்ளல்கள். 'யான் எனது' அற்றவன் பாரி என்பதைச் சற்று விளங்கக் காணலாம்.
அறிவால் ஆய்ந்தால்.?
காட்டில் தேரூர்ந்து சென்ற பாரி முல்லைக்கொடி ஒன்று கொழுகொம்பு இல்லாமல் வாடிய துயரைக் கண்டான். கண்டவன், 'ஆறு அறிவு படைத்த' மனிதனாய் பாரி காணப்பட்டது, 'ஓர் அறிவு' மட்டும் உடைய உரு கொடி, பாரியின் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருப் பின் யாது நிகழ்ந்திருக்கும் என்று காணலாம். முதலில் இக்கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவை என்று நினைத் திருப்பான். 'எத்தகைய கொம்பு தேவை? சிறிய ஒரு கொம்பு போதுமா, அன்றிப் பெரியதொரு மரம் தேவைப் படுமா? வீட்டிற்குச் சென்றவுடன் ஏவலாளன் ஒருவனை ஏவி நல்லதொரு கொம்பை நடச்சொல்ல வேண்டும்' என்ற முறையில் நினைந்திருப்பான். இன்னுங் கொஞ்சம் அறிவு முதிர்ந்திருந்தால், கீழ்க்காணும் முறையில் அவன் நினைவு ஓடியிருப்பினும் வியப்படைவதற்கு ஒன்று இல்லை: "இது நாம் வளர்க்கும் கொடியன்று. காட்டில் இயற்கையாய் இந்த ஒரு கொடிதானா வளர்கிறது? எத்தனையோ ஆயிரக்கணக்கான கொடிகள் உள. முல்லை மட்டும் என்ன? எத்தைனையோ கொடிகள்! இவற்றிற் கெல்லாம் கொழு கொம்பு தேவையா என்று காண்பதுதானா நமது வேலை? அரசனாய் இருக்கும் நமக்கு எத்தனை தொல்லைகள்! முறை வேண்டியும் குறை இரந்தும் நம்மிடம் வருபவர்கட்கே தக்க வழிதேட முடியாத பொழுது இந்தக் கொடிக்காகக் கவலைப்படுவது அறிவீன மன்றோ? கிடக்கட்டும். இன்று நாம் இந்தக் கொடிக்கு ஒரு கொம்பு நட்டுவிட்டால் நாளை வரும் கொடிகளையெல்லாம் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அப்படியே இந்தக் கொடி அழிந்துவிட்டால்தான் என்ன? உலகமா முழுகிவிடும்? செலுத்துத் தேரை மேலே!" இவ்வாறு நினைக்க அறிவுவாதிக்கே முடியும். ஆனால், பாரி அறிவுவாதி அல்லனே!
பாரியின் மனநிலை
பாரி செய்தது யாது? தான் ஓர் அரசன் என்பதையும் எதிரே இருப்பது கேவலம் ஒரு கொடிதான் என்பதையும் அறவே மறந்துவிட்டான். அந்தப் பண்பட்ட உள்ளத்தில், கலை மனத்தில், உலகிலுள்ள உயிரெல்லாம் ஒன்று என்று கருதும் கருணை உள்ளத்தில், எதிரே முல்லைக் கொடி தெரியவேயில்லை. பின்னர் என்ன தெரிந்தது? கொழு கொம்பின்றி வாடும் ஓர் உயிர்தான் தெரிந்தது. பாரியின் உயிரே ஊசலாடிவிட்டது. கொடி கொம்பில்லாமல் ஆடினதைக் கண்ட கருணை மறவனின் உள்ளம் துடித்தது; உயிர் துடித்தது. ஓர் உயிர் மற்றோர் உயிரின் வாட்டத்தைக் கண்டுவிட்டது. தன்னுடைய இனமாகிய மற்றோர் உயிர் வருந்துவதைக் கண்டுவிட்டது. "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் என்னுள்ளம் வருந்திய வருத்தம் நீயே அறிவாய்!" என்று பிற்காலத்தில் ஒரு கருணை உள்ளம் (இராமலிங்க வள்ளலார்) பேசிற்று. பாரி இக்காட்சியில் தன்னை மறந்து, தன்னிலைமையை மறந்து, அறிவிழந்து, கூர்த்த, அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து, வருந்தும் கொடியுடன் உணர்வின் உதவியால் ஒன்றாகிவிட்டான். பாரியின் இந்த நிலைமையைக் கற்பனை செய்துகொண்டு தான் ஆசிரியர்,
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை? (குறள்-315)
என்று பாடினார் போலும்! அந்த ஓரறிவுயிர் தன்னுடைய துயரை நம் போன்றவர் காதாற் கேட்கும்படி வாய்விட்டுக் கூறவில்லை. முல்லைப் பூக்கள் பற்கள் போல் இருப்பினும், வாய்விட்டு ஒன்று வேண்டும் என்று கேட்பது உயிர் போகும் நேரத்திற்கூட இழிந்த செயலாகலின், கேட்க வில்லை போலும்! அது தமிழ்நாட்டு முல்லைக் கொடியன்றோ? ஆனால், எதிரில் நிற்பவனும் ஒரு தமிழ் மகன் அல்லனோ? எனவே, வாய் திறந்து கேட்பதன் முன்னரே தருவதுதான் முறை என்று கருதித் தந்து விட்டான். எதனைத் தந்தான்? தன் பெருமைக்கேற்பத் தன் தேரையே தந்துவிட்டான். வேறு ஆராய நேரம் ஏது? அறிவின் தூணைகொண்டு ஆராய்ந்திருப்பின், பாரியாக முடியாதன்றோ? உணர்ச்சி உலகத்தில் வாழும் அந்தக் கருணை வள்ளலுக்குத் தனக்கும், கொடிக்கும், தேருக்கும் உள்ள வேறுபாடு எங்கே தெரியப் போகிறது! தான் நடந்து செல்ல முடியும். ஆனால், அம் முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பு வேண்டும். கொம்பின் வேலையைத் தேரும் செய்யும், எனவே, தேரை நிறுத்தி விட்டான்.
மடவன் பாரி
விலையுயர்ந்த அந்தத் தேர் முல்லைக்கொடிக்குத் தேவை இல்லை; ஆனால் அரசனாகிய தனக்கு மிகவும் இன்றியமையாதது என்று கருதினானா? அரசனுக்குப் பயன்படும் தேரைத் தேவையற்ற முல்லைக்கொடிக்குப் பயன் படுத்தியது அறிவுடைய செயலா? அன்று. ஆகலாற்றான் அவனை அறியாமையுடையவன் என்று புலவர்கள் பாடினார்கள், 'மடவன் பாரி' என்று கூறி மகிழ்ந்தார்கள்.
இத்தகைய செயலால் பாரி புகழ் பெற்றானா இல்லையா? பெற்றான்; அழியாப் புகழைப் பெற்றான்.
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கஎனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி. (புறம்-200)
(நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும் ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக்கொடுத்த பரந்த புகழையுடைய பாரி)
என்று கபிலராலும்,
கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி
னும்கொடுப் பார்இலை (தேவாரம்-7,34-2)
என்று இறைவனையன்றி மக்களைப் பாடாத சுந்தரமூர்த்தி நாயனாராலும்.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும். (பழமொழி-36)
என்று பழமொழியாசிரியராலும் போற்றப்பட்டான். போர் வெறியர்களின் புகழ் பரந்ததைக்காட்டிலும் இவனுடைய புகழ் ஓங்கி வளர்ந்தது உண்மை. அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் என்பவர்களுடன் ஒப்புநோக்கக் கரிகாலன் நெடுஞ்செழியன் முதலானோர் வெற்றிப் புகழ் மங்கி விடுகிறது. ஆனால், யாருடன் ஒப்பு நோக்கினும், பாரியின் புகழ் மங்குமாறு இல்லை. காரணம், அவர்கள் புகழை வேட்டையாடிச் சென்றனர். ஆனால், புகழோ, அவர்களை விட்டுவிட்டுத் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளத் துறவால் உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று கருதி வாழ்ந்த பாரியைத்தான் வேட்டையாடிச் சென்றது. புகழை வேட்டையாடிய அவர்களினும், புகழால் வேட்டை ஆடப்பெற்ற பாரி, அறிவைவிட உணர்வு வாழ்வே சிறந்த தென்பதை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறான்!
-----------------------------------------------------------
7. தமிழர் கண்ட அமைச்சன்
இத்தாலியனுடைய நூல்
இற்றைக்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இத்தாலி தேசத்தைச் சேர்ந்த 'மெக்காவிலி' என்ற பெருஞ்செல்வன் 'அரசன்' (The Prince) என்ற பெயரால் ஒரு நூலை எழுதினான். அரசனுக்குரிய இலக்கணம், ஆட்சி முறை என்பன அந்நூலில் ஓரளவு கூறப்பெற்றுள்ளது உண்மையே. ஆனால், அதைவிட மிகுதியாக, எத்தகைய சூழ்ச்சிகளிழைத்தால் ஒருவன் அரசனாக முடியும் என்பதையே அந்நூல் பேசிற்று. மிக சமீப காலம்வரை அந்நூல் ஈடு இணையற்றதாய் ஐரோப்பா தேசம் முழுவதிலும் விளங்கி வந்தது.
குறளும் கூறுகிறது.
ஆனால், மெக்காவிலி தோன்றுதற்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே இத்தமிழ்நாட்டில் ஒப்பற்ற அரசியல் நூல்கள் தோன்றின. அத்தகைய நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்று கூறத் தேவை அன்று. திருக்குறள் அல்லாத ஏனைய தமிழ் நூல்களிலும் அரசியல் பற்றிய பல கருத்துக்கள் மிகுதியாகப் பேசப் பட்டுள்ளன. அரசியல் கருத்துக்களை அறிவிப்பது அவற்றின் தலையாய நோக்கம் அன்றாகலின், இலை மறை காயாய் இவ்வுண்மைகள் அப்பாடல்களில் அமைந் துள்ளன.
அரசாட்சியில் அரசனுக்கு அடுத்தபடியில் நிற்பவன் அமைச்சனேயாவன். மிகு பழங்காலத்தில், அரசன் உலகின் உயிர் என்று கருதப்பெற்ற காலத்திற்கூட, அமைச்சனை அரசனுடைய கண்களாகவே கருதினர். உலகப் பொதுமறை தந்த பெரியார்,
"சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்,
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்." (குறள்-445)
என்று விதித்துப் போனார்.
மெக்காவிலியின் கூற்று
மெக்காவிலி தன் நூலின் 22 ஆம் பிரிவில் அரசன் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதுப் பற்றிப் பின்வருமாறு குறிக்கிறான். "அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது எத்துணைப் பெரிய காரியமென்பதைக் கூறத் தேவை இன்று. மன்னன் தன் அறிவு விளக்கத்திற்கேற்பவே அமைச்சரைத் தேர்ந் தெடுப்பான். அறிவுடை அமைச்சரைத் தேர்ந்தெடுப்பவன் அறிவுடை மன்னனாகக் கருதப்படுவான். அமைச்ச னுடைய தகுதியை மன்னன் அறியச் சிறந்த வழி ஒன்று உண்டு. எப்பொழுது ஓர் அமைச்சன் மன்னனைக் காட்டிலும் தன்னைப் பெரியவனாக மதிக்கிறானோ, அப்பொழுதே அவன் அத்தொழிலுக்குத் தகுதியற்றவ னாகிறான். எவன் ஒருவன் அனைத்திலும் தன்னுடைய ஊதியத்தைப் பெரிதென மதிக்கிறானோ, அவனும் அமைச்சனாகத் தகுதியற்றவன். ஒரு முறை அமைச்ச னுடைய தகுதி பற்றி மன்னன் ஆய்ந்து தெளிந்து அவனுடைய உண்மை அன்பை அறிந்துவிட்டால், பிறகு அவன் அன்பை நிலைபெறச் செய்யத்தக்கனவற்றை இயற்ற வேண்டும்; மேலும் பொறுப்புக்களையும் பதவியை யும் பயத்தையும் தருவதால் அமைச்சனுடைய அன்பு மாறாமல் இருக்கச் செய்ய வேண்டும். இத்தகைய முறையில் இருவரும் நடந்துகொண்டால், இருவரும் பெறாத நன்மையும் இல்லை; இம்முறை மாறினால், இருவரும் அடையும் தீமைக்கும் ஓரளவில்லை."
அடை மொழிகள்
இத்தாலி நாட்டு அரசியல் ஞானி கூறின இவற்றைக் காட்டிலும் சிறந்த பல உண்மைகளைத் தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கண்டுள்ள முறையைச் சற்று விரிவாகக் காணலாம். அமைச்சரையும் அவரது தொழிலையும் எத்துணைச் சிறப்பாகத் தமிழர் கருதினர் என்பதை இவ்வமைச்சரைக் குறிப்பிடும்பொழுது கொடுத்த அடைமொழிகளாலேயே ஒருவாறு அறியலாம்.
'நூல் அறிபுலவர்' (சிலம்பு, 25,116)
'நுணங்கு பொருள் அமைச்சர்' (பெருங்கதை 650)
'நுண்மதி யமைச்சர்' (பெருங்கதை 302)
'நுண்வினை அமைச்சர்' (பெருங்கதை 415)
'தெரிமதி யமைச்சர்' (பெருங்கதை 422)
'நூல் வல்லாளர்' (பெருங்கதை 489)
என்ற அமைச்சரைப்பற்றி நூல்கள் நுவல்கின்றன.
பண்புகள்
இவ்வடைமொழிகளிலிருந்து அறியப்படுவது ஒன்று உண்டு. பல்வகை மக்களொடும் பழகவேண்டிய கட்டுப் பாடுடைய அமைச்சன், கூரிய அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். ஒருவர் பேசும் பேச்சுக்களிலிருந்து மட்டும் அவருடைய மனநிலையை அறிதலென்பது இயலாத காரியம். 'மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே' என்ற முதுமொழியையும் அதன் எதிர் மொழியையும் அமைச்சன் கவனத்திற் கொள்ள வேண்டும். பேசுவோர் சொற்களை மட்டும் கொண்டு முடிவு செய்யாமல், அவர் முகக் குறிப்பு முதலியவற்றைக் கொண்டும் உண்மை காண முயல வேண்டும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்ட ஆசிரியர்,
'தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார்,
அழுத கண்ணீரும் அமைத்து.' (குறள்-828)
என்று கூறினார். எனவே, பிறருடைய அழுகையைக் கண்டு மயங்கிவிடக்கூடாது என்பதையும் அறிவித்தார் ஆசிரியர். இதன் மறுதலையாகக் கல் நெஞ்சுடையவனாய் அமைச்சன் இருப்பினும் பெருந்தீமையாகும். 'நடுவு நிலையினின்றும் நீங்கிய அமைச்சன் மனத்திற் கிடந்ததை வெளிப்படுத்த அதனைக் கேட்ட மன்னவன் கொடுந் தொழிலைச் செய்தது போலக் கதிரவன் கொதிக்கிறான்" என்ற கருத்தில்,
நடுவுஇகந்து ஒரீஇ நயன்இல்லான் வினைவாங்கக்
கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின் (பாலைக்கலி 8)
என்ற பாலைக்கலிப் பாடல் ஒன்று கூறிச் செல்கிறது.
நூலறிவும் நுண்ணறிவும்
இப்பழம் பாடல்கள் அமைச்சனுடைய நுண்ணறிவுத் தேவையை இத்துணைப் பெரிதுப் படுத்திப் பேசுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கும். கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டவந்த பெருமகனாருங்கூட, 'அமைச்சு' என்றதோர் அதிகாரம் வகுத்து, அதனுள் இருக்கும் பத்துக் குறளிலும் அமைச்சனுக்கு நுட்பமான அறிவு வேண்டும் என்பதைக் குறிப்பாலுணர்த்திப் பின்னர்த் தனியே அதற்கென்றே ஒரு குறளூம் அமைக்கின்றார்.
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யாவுள முன் நிற்பவை? (குறள்-636)
என்ற குறள் ஆய்தற்குரியது. நுண்மதி என்றும், நூலறிவு என்றும், இரண்டாகப் பகுத்து இயங்கு பேசப்படுவதைக் காணலாம். நூலறிவில்லாவிடத்தும் நுண்ணறிவு இருத்த லையும், பலரிடம் நுண்ணறிவில்லாவிடத்தும் நூலறிவு இருத்தலையும் காணலாம். எனினும், இவை இரண்டும் சேர்ந்தமைந்தாலொழிய, முழுப்பயனை விளைப்பதில்லை. எத்துணைச் சிறந்த நுண்ணறிவாயினும், நூலறிவு இல்வழி வகைதொகையற்றுச் சென்றுவிடும். நுண்ணறிவில் வழி, நூலறிவு செக்கிழுக்கும் மாடு போலச் சென்ற வழியே செல்லுமே தவிர புதியன காண முற்படாது.
புதுமையும் பழமையும்
ஒரு காலத்து ஓரிடத்து அனைவரும் நம்பின ஒன்றை நூல் வழக்குச் சிறந்ததெனப் பேசும். ஆனால் காலமும் இடனும் மாறியவிடத்து இந்நிலை முறை மாறிவிடும். அதனால், முன்னர் எழுதப்பெற்ற நூலில் இப்புதுவழக்கு இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, நுண்ணறிவுடன் உலகியலறிவும் இல்லாதான் இம்மாற்றங்கொண்டு மருட்சி அடைய நேரிடும். கால மாறுபட்டான் ஏற்படும் வழக்கு மாறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நூலறிவு, வளர்ச்சியை மறுக்கும் அறிவாகும். ஆதலால், வள்ளுவர் இவ்வளர்ச்சியைக் காணுமிடத்து உடன் அறிந்துகொள்ளும் நுண்ணுணர்வை முதலிற் கூறினார். 'அவ்வாறாயின், மதி நுட்பம் மட்டும் போதாதா? நூலறிவு எற்றுக்கு? என்ற வினாத் தோன்றுமன்றோ? வளர்ச்சி என்பது தனித்துத் தோன்றுவதொன்றன்று. பழமையிலிருந்துதானே புதுமை தோன்றுதல் கூடும்? விதையிலிருந்துதானே மரம் தோன்றல் கூடும்? மரத்தில் விதையின் தன்மை காணப்படுமாறு போலப் புதுமையிலும் பழமையின் இயல்பு காணப்படும். பழமையை அறவே ஒழித்த புதுமை வேண்டுவது, விதை இல்லாத மரம் வேண்டுவது போலாகும். எனவே, பழமையை நன்கு ஓதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.
ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?
நல்லமைச்சர்
நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சரா யிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவ னாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.
'வடு நீங்கு அமைச்சர்' (பெருங்கதை 484)
'நற்புடை அமைச்சர்' (பெருங்கதை 487)
'நெஞ்சு புரை அமைச்சர்' (பெருங்கதை 487)
'அருமை அமைச்சர்' (பெருங்கதை 529)
என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை
அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5: 130)
என்று கூறுகிறது.
இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட் கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாடடினிடத்தும் உண்மையான அன்பு பாராட்டாமல், தன்னுடைய நலத்தையே பெரிதென மதிப்பானாகில், அதனால் நாட்டிற்கு எத்துணைப் பெரிய தீமை ஏற்படும் என்பது கூறவும் வேண்டுமோ? அமைச்சன் இரண்டு பெருங்காரணங்கள் பற்றியும் தூய்மையும் அன்பும் உடையவனாய் திகழலாம். இயற்கையிலேயே அரசன்மாட்டுப் பற்றும் அன்பும் உடையவனாய் இருத்தல் ஒன்று; பழி நாணும் பண்பாட் டால் நல்லவனாய் இருத்தல் இரண்டாவது. தன் கடமையை உணர்ந்து நன்மையை நன்மைக்காகவே கடைப்பிடித்தல் முதல் முறையாகும். 'நற்புடை அமைச்சர்' என்று பெருங்கதை கூறும் பொழுது நன்மையை உடைய அமைச்சர் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனையடுத்து, 'நெஞ்சுபுரை அமைச்சர்' என்று கூறுவதும் இத்தகைய மன நிலையைக் கருதியேயாம்.
குடிப் பிறப்பு
இயற்கையாகவே தீமையிலிருந்து நீங்கின மனப் பான்மையுடன், தீமை புரிய அஞ்சுகிற மனப்பான்மைகள் சில உண்டு. நன்மை புரிவதால் ஏற்படும் நற்பயன்களைக் கருதி விரும்பியோ, தீமை புரிவதால் ஏற்படும் தீப்பயன் களைக் கண்டு அஞ்சியோ, இத்தகையோர் ஒன்றைச் செய்வதில்லை. நன்மை புரிதலும், நம்பிக்கையுடன் நடத்தலும், சொன்ன சொற்களைக் காத்தலும், பிறர்மாட்டு அன்பு கொள்ளுதலும் இவர்கள் உடன்பிறந்த பண்பாடு கள். நன்மையை நன்மைக்காகக் கடைப்பிடிக்கும் தலையாய பண்புடையார் இவர். இப்பண்பாடுகள் பெரும்பான்மை நற்குடிப் பிறப்பினால் உண்டாவன. மனிதனுடைய பண்பாடுகளுள் சில இயற்கையாய்ப் பிறப்பிலேயே உறுவன; ஏனைய சில, வாழும் பொழுது பெறுவன. இங்குக் கூறிய அனைத்தும் பிறப்பில் தோன்றுவனவாகலின், நற்குடிப்பிறப்பு என்று ஒரு சொல்லால் இவற்றைக் குறித்துவிடலாம். இக்கருத்தை மனத்துட்கொண்டே பொதுமறையாசிரியர்,
அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (குறள்-68)
என்று கூறுகிறார். இக்குறளில் தூது என்ற பெயர் தரப்படினும், அது அமைச்சரையே குறிக்கும் என்பதைச் சந்தருப்பத்தாலும் பரிமேலழகர் உரையாலுங் காணலாம்.
பழிக்கு நாணல்
இரண்டாம் முறையில் நல்லவனாய் இருத்தல் பழி நாணும் பண்புடைமையால் ஏற்படுதாகும். தாம் செய்யும் தவறு பற்றி வரும் பழிக்கு அஞ்சி நடத்தல் என்பது அனைவருக்கும் இயலுவதொன்றன்று. இயல்பாகவே சில மனங்கள் பழியைக் கண்டு நடுங்கும். இத்தகையவர்களைப் பற்றிக் கூற வந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று,
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் (புறம்-182)
என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்றுவிடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த வழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.
பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. (குறள்-1015)
எனவே, அரசனே பழிக்குரியவற்றைச் செய்யினும் அரசன் செயலாதலின் தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்ததுபோலக் கருதி நாண மடையும் பண்பாடே பழியஞ்சி நடத்தலில் தலையாயவன் செய்வது. இதை மனத்துட்கொண்டே பெருங்கதை,
"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484)
என்ற அடைமொழியைத் தருகிறது. மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமை யாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது.
காவிதி மாக்கள்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மாங்குடிமருதனார் என்ற புலவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனின் உற்ற துணைவராய் இருந்து கழித்தார். பாண்டியனோ, தமிழ்நாடு முழுவதை யும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்தவன். அத்தகைய மன்ன னுடனும் அவனுடைய அமைச்சர்களுடனும் நன்கு பழகிய காரணத்தாலும், தம் கூர்ந்த அறிவால் பலவற்றைக் கண்ட காரணத்தாலும் மாங்குடிமருதனார் அமைச்சருக்கு வேண்டிய பண்பாட்டைக் குறித்துப் பாடினார். 'அரச னிடம் காணப்படும் நலம் தீங்கு என்ற இரண்டையும் கண்டு, அவற்றுள் படாமல் அவனை அடக்கி, அன்பை யும் அறத்தையும் தவறாமல் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து, பரந்த புகழ் நிறைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்' என்ற கருத்தில்,
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும். (மதுரைக்காஞ்சி 495 :499)
என்று அவர் பாடியுள்ளார்.
ஆயும் அமைச்சர்
இவ்வைந்து அடிகளில் அமைச்சருக்குக் கூறிய இலக்கணமும் பண்பாடும் மெக்காவிலி போன்றவர்களால் இரண்டு அச்சுப் பக்கங்களிற்கூடக் கூறப்படவில்லை. 'நன்றும் தீதும் கண்டு' என்ற சொற்களால் அமைச்சரின் அறிவுத்திறம் பேசப்படுகிறது. மேலும் 'கண்டு' என்று மட்டும் கூறி நிறுத்திவிடாமல்,'ஆய்ந்து' என்றுங் கூறப் பெற்றதால், நுண்மாண் நுழைபுலமும் பேசப்படுகிறது. நடைபெறுகின்ற நிகழ்ச்சியை அப்படியே பொருள் செய்வ தானதால், உண்மை காண்டல் இயலாது. தீயது போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் நலமாகவும், நலம் போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் தீமையாக வும் இருக்கலாமன்றோ? எனவே புறத் தோற்றத்தையும் நிகழ்ச்சியையும் கண்டு அவற்றின் பயனைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், தன் நுண்ணிய அறிவால் நிகழ்ச்சியின் அப்பாலுள்ள பொருளை அறிதல் வேண்டும். இதனை ஆசிரியர், 'ஆய்ந்து' என்ற சொல்லால் கூறிவிட்டார்.
இருவகைத் தீமை
நலம் கண்டவிடத்து அதனிடத்து அன்பும், தீமை கண்டவிடத்து வெறுப்பும் கொள்வானேயாகில் அது அமைச்சனுக்கு ஏலாது. எனவே, அன்பையும் அறத்தையும் ஒருசேரக் கூறினார் ஆசிரியர். 'இக்காலத் தீமை, நிலை பெற்ற தீமை' எனத் தீமை இருவகைப்படும். நிலைபெற்ற தீமையைத் தடுக்க இக்காலத் தீமை பயன்படும். உயிரை மாய்க்கும் கழலையை அறுத்துவிடுதல்போல, அமைச்சனா வான் இவை இரண்டின் தராதரத்தையும் ஆய்ந்து தீமை யைத் தடுக்கும் இடத்திலும் அன்பிலிருந்தும் அறத்திலிருந் தும் வழுவாமல் காத்தல் வேண்டும். மேலும் அன்புள்ள விடத்து அறம் மாறிவிடுமாகலானும் இவை இரண்டையும் உடன்சேர்த்துக் கூறுகிறார். அரசியல் நுணுக்கத்தையும் மனத்தத்துவத்தையும் நன்குணர்ந்த கவிஞர்.
பழந்தமிழ் அமைச்சர்
மூன்றாவது அடி நன்கு ஆய்தற்குரியது. 'பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த' என்ற அடியில் கவிஞர் தம் வன்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார். மனிதன் பல்வேறு வகையில் உயரக்கூடும். உயரவேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பெற்றும் பலவகை செயல் களைச் செய்பவர் உண்டு. இவர்கள் செயல் செய்வதன் நோக்கம் உயர வேண்டுமென்பதே. அச்செயல்களின் பயனாகத் தாம் உயர்வதை மட்டும் கவனிப்பாரே தவிர, அச்செயலால் பிறருக்கு நன்மையா தீமையா என்பது பற்றி இவர்கள் கவல்வதில்லை. பழியுடைய செயலைச் செய்தால்தான் உயரமுடியுமென்றும் அஞ்சாமற் செய்வர். அரசனுக்கு விருப்பம் என்பதற்காகத் தீயனவற்றைப் புரிந்து அவனுடைய மதிப்பில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர் எத்துணைப் பேர்! மதுரைக் காஞ்சி கண்ட மாண்புடை அமைச்சர் இவ்வினத்தைச் சேர்ந்தவரல்லர். உயரவேண்டும் என்ற குறிக்கோளுடைய வரேயாவர். ஆனால் பழியிலிருந்து நீங்கின உயர்ச்சியையே விரும்புகிறார்களாம் இவர்கள். 'ஒரீஇ' என்று அளபெடுத்த மையின் 'நீக்கி' என்ற பொருளைப் பெறவைக்கிறார் ஆசிரியர். 'நான் என் போக்கில் செயல் செய்தேன். பழி வந்தால் யான் என்ன செய்ய முடியும்?' எனப் பேசுபவர் உண்டு. அவ்வினத்திலுஞ் சேராமல் இவர்கள் கவனத் துடன் பழியை விலக்குகிறார்களாம். எளிதாக உயர்ந்துவிட வேண்டும் என்று கருதாமல் பழியை நீக்கின செயல்கள் புரிந்தே உயரவேண்டும் என்றமையின், உயருவதைவிடப் பழி நீங்கின செயல் புரிவதே தலைமையுடையதாயிற்று. அடையும் பயனையே பெரிதாகக் கொண்டு, அதனை அடைய மேற்கொள்ளும்வழி பற்றிக் கவலை கொள்ளாமல் தொழிலாற்றுபவர் பலர் உண்டு. கருதிய பயனை அடைய எவ்வழியாயினும் சரியே என்று கருதும் கயவர்கள் அல்லர் இப்பழந்தமிழ் மக்கள். பயன் எத்துணைச் சிறப்புடையதோ, அத்துணைச் சிறப்பு வழியிலும் அமையவேண்டும் என்றே கருதினர். புகழ் என்பது இறுதியில் பெறும் பயனாகும். அதற்கு அடைமொழி கூறவந்த ஆசிரியர் 'பழி ஒரீஇ' என்று கூறுவாரேயாயின், அதனுடைய கருத்து யாது? புகழாகிய பயனை அடைய மேற்கொண்ட வழியும் பழி யற்றது என்பதேயன்றோ?
பாய் புகழ்
இதனையடுத்துப் 'பாய்புகழ் நிறைய' வேண்டுமாம். புகழிற் சிறந்தது பாய்புகழ். பாய்புகழ் என்பதற்குப் பரந்த புகழ், விரிந்த புகழ் என்பதே பொருளாம். என்றோ ஒரு காலத்தில் புகழுடன் இருப்பவர் உண்டு. மேலும் சிறந்த செயல்கள் ஆற்றாமையின், அப்புகழும் அத்துடன் நின்று விடும். ஆனால், பரந்த புகழ் என்றமையின், மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதால் மேலும் விரிந்துகொண்டு செல்கிறதென்பதையும் புலவர் குறித்தாராயிற்று. பாய்புகழ் விரியுந் தன்மையுடையதாகலின் ஆழமின்றி அகலத்தில் மட்டும் பரந்துவிட்டதோ என்று எண்ணிவிட வேண்டா! பலராலும் அறிந்திருக்கப்படும் நிலை பாய்புகழ் எனப் பட்டால், மறவாமல் பல காலம் நினைக்கப்படுவதை நிறைதல் என்று கூறலாம். 'பாய் புகழ் நிறைய' என்று கவிஞர் கூறும்பொழுது பரந்தும் ஆழ்ந்தும் உள்ள புகழையே குறிக்கிறார்.
கடமை புரிபவன்
இவ்வாறு புகழ்பெற வேண்டுமாயின், எத்தகைய செயல்கள் நிகழ்த்தவேண்டும் என்று கூறத்தேவை அன்று. நல்லன தீயனவற்றைக் கண்டு, ஆய்ந்து, இவை மன்ன னிடத்துக் காணப்பெறினும் மாவிசும்பு வழங்கும் பெரியோர்போல அடக்க வேண்டுமாம் அவனை. பாம்புப் புற்றுள் கை விடுவதும் தவறு செய்கின்ற மன்னனைத் திருத்தப் புகுவதும் ஒன்றுதான். எனினும் அதனால் வரும் ஏதம் பற்றிக் கவலைகொள்ளாமல் தன் கடமையைச் செய்பவனே அமைச்சன் என்று கூறப்படத் தகுதி உடையான். மன்னனை முழு வல்லமை படைத்த இறைவன் என்று கருதிய அந்நாளிற்கூட அமைச்சனுக்கு இத்துணைப் பெருமை தந்தனர் தமிழர். இப்பெருமை காரணமாகவே அவனுடைய கடமைகளும் மிகுந்து விடுகின்றன. ஏனைய நாட்டில் அமைச்சனைப்பற்றி எழுதியவர்கள் அவன் தனித் தூய்மைபற்றிக் கூறினார்கள். ஆனால், அவனுடைய தலையாய கடமைகளுள் ஒன்றாக மன்னனைத் திருத்துவதையும், அத்திருத்தம் செய்யும் முயற்சியில் தனக்கு ஊறு நேர்வதாயினும் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இத்தமிழர் கருதினர்.
அறிகொன்ரு அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன் (குறள்-538)
என்று குறளாசிரியர் குறிப்பிடுவது இதே கருத்தைத்தான்.
'அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.' (குறள்-691)
என்று மற்றவர்களை நோக்கிக் கட்டளையிட்ட வள்ளுவர் 'உழையிருந்தான்' என்ற அடைமொழியால் அமைச்சர்கள் அரசனுடன் சேர்ந்தும் சேராமலும் இருத்தல்கூடாது என்பதையும் குறிப்பிடுகிறார். தனக்கு ஏற்படப்போகும் சில தீங்கினைப் பற்றிக் கவலையுறாத அமைச்சனைப் பற்றியே பழந்தமிழர் பெருமைப்பட்டனர். இத்துணைச் சிறப்புடையவனை வறிதே அமைச்சன் என்று மட்டும் வழங்காமல், காவிதி என்ற பட்டம் தந்து, தலைமை அமைச்சன் ஆக்கினர். அத்தகைய காவிதியமைச்சனைப் பற்றியே மதுரைக்காஞ்சி பேசுகிறது.
பழந்தமிழன் கண்ட இவ்வமைச்சன் எங்கே, 'மெக்காவிலி' கண்ட அமைச்சன் எங்கே! தமிழன் பண்பாடு எத்துணை உயர்ந்ததென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமா?
-----------------------------------------------------------
8. தமிழர் கண்ட உண்மைகள்
விடை காணா வினா
நம்முள் எத்தனை பேர் 'வாழ்க்கை' என்றால் என்ன? என்னும் வினாவிற்குச் சரியான விடைகூற முடியும்? நாம் நமது விருப்பம் இருந்தோ இல்லாமலோ பிறந்துவிட்டோம்; விருப்பம் இல்லாமலிருந்தும் இறக்கத்தான் போகிறோம். இடை நடுவே இவ்வுலகில் தங்கி இருப்பதே வாழ்க்கை என்ற கருத்துடன் பலரும் அமைந்துவிடுகிறோம். இதற்கு முன்னர் வாழ்க்கை இருந்ததுண்டா? இனி வாழ்க்கை இருக்கப்போகிறதா? இவ்வினாக்களைக் கேட்டும் பயன் இல்லை. காரணம் இவற்றிற்கு விடையை நாம் அறிதல் இயலாது. என்றாலும், 'இடையில் உள்ள இல்வாழ்க்கை யின் உட்கருத்தென்ன?' என்று ஆய்வது நமது கடமை யாகும்.
மாந்தர் பல வகையினர்
மிகப் பெரியவரான தாயுமான அடிகள், நம் போன்ற வர்கள் வாழ்க்கையை அலசிப் பார்த்து ஒரு முடிவு கூறுகிறார். 'யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்கு வதுமாக முடியும்' என்ற அவருடைய சொற்கள் நம்முள் பெரும்பாலோர் வாழ்க்கையில் நடைபெறுவ தொன்றாகும். ஆனாலும், இதிலும் ஒரு சிறப்புளது. நம்முள் எத்தனை பேர் பசிதீர உண்பவர்கள்? பசிக்காக உண்பவர் கள் மிகப் பெரியவர்களும், யோகிகளும், மிக வறியவர் களுமேயாவார்கள். ஏனையோர் உண்பது பசிக்காக அன்று. உருசிக்காகவே. உண்பதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று நினைப்போர் எத்தனை பேர்? சோம்பித் திரிவதற்காகவே வாணாளை வீணாக்குபவர் எத்தனை பேர்? கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என வாழ்பவர் எத்தனை பேர்? இவர்கட்கெல்லாம் வாழ்க்கை நடைபெறாமலா இருக்கிறது? நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுவதைக் காட்டிலும், வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுளது என்று கூறுவதே பொருத்தமுடையது. இன்றைய நாளில் இத்தொகுப்பைச் சேர்ந்தோர் பலராவர்.
நிலைபெற வழி
ஆனால் பழந்தமிழன் இவ்வாறு நினைக்கவுமில்லை; வாழவுமில்லை. அவன் கண்ட பேருண்மை, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றதாம். அஃதென்ன என்பதைக் காண்போம். வாழ்க்கை நடைபெறுவது இவ்வுலகிலாகும். எனவே இவ்வுலகைப் பற்றிப் பழந்தமிழன் என்ன நினைத் தான்? வாழத் தகுந்த இடமாக இதனை நினைத்தானா, அன்றி இதனை பயனற்ற ஓர் இடமாகக் கருதினானா? இடைக்காலத்தில் உலகைப்பற்றிப் பல கருத்து வேறுபாடு கள் தோன்றின. ஒருவாறு மனிதன் வாழ்வைக் கெடுக்கும் சூழல் நிறைந்த ஓர் இடமாகவும் இது கருதப்பெற்றது. ஆனால் பழந்தமிழன் உலகின் இயல்பை நன்கு அறிந்திருந் தான். 'உலகம் நிலையில்லாதது' என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இது நிலையில்லாதது என்பத னால், தானும் இதனோடு சேர்ந்து நிலையில்லாமல் அழிவதை அவன் விரும்பவில்லை. நிலையில்லாததாகக் கருதப்பெறும் இவ்வுலகிடை வாழ்து தான் மட்டும் நிலை பெறும் வழியை அவன் தேடினான்; தேடிக் கண்டறியவும் அறிந்தான். அவன் கண்ட முடிவு,
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே. (புறம்-165)
என்பதாகும். எனவே, நிலையற்ற உலகிடை நாம் நிலை பெற வேண்டுமாயின், செய்யத் தகுவது நம் புகழை நிலை நிறுத்துவதேயாகும். நிலையாமையின் நடுவே நிலைபேற்றுக் குரிய வழிகண்ட தமிழன் வாழ்க! உலகம் நிலையற்றது என்பது உலகிடை வாழ்ந்த அனைவருங் கண்ட உண்மை யாகும். உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர்,
"The Cloud-capp'd towers the gorgeous palaces,
The solemn temples, the great globe itself,
Yea, all which it inherit, shall dissolve,
And, like this insubstantial pageant faded,
Leave not a rack behind."
-THE TEMPEST: Act IV, SCENE 1.
என்று தாம் எழுதிய 'புயல்' என்னும் நாடகத்தில் குறிப்பிடுதல் அறிதற்குரியது.
இத்தகைய நிலையாமை பொருந்திய உலகத்தில் வாழ்ந்த மனிதன் தான்மட்டும் நிலைபெற வேண்டிச் செய்த செயல் புகழைத் தேடுதலேயாம் என்பதைக் கண்டோம். 'அப்புகழை எவ்வாறு தேடவேண்டும்?' என்பதே அறியவேண்டுவதொன்றாகும். இதற்குரிய விடை தெளியப்படுமானால், அதுவே, வாழ்க்கை வாழ்வதற்கு, என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தும். புகழ் என்பது எல்லாரும் விரும்பப்படும் ஒன்றாகும். புகழ் விரும்பாத மனிதனே உலகிடை இல்லை எனலாம். ஆனால், எல்லா ராலும் போற்றி விரும்பப்படும் இதனையடைய இவ்வனை வரும் முயற்சி எடுத்துக்கொள்கின்றனரா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவே உலகியற்கை. புகழை அனைவரும் விரும்புகின்றனர்;
ஆனால், அதற்குரிய வழியை மட்டும் மேற்கொள்வதில்லை பெரியோர்.
'புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்.' (புறம்-182)
என்று புறநானூறு பறை சாற்றுகிறது.
ஆனாலும், ஏன் அனைவரும் அதற்குரிய வழியை மேற்கொள்வதில்லை என்பதை அறிய வேண்டுமன்றோ? காரணம் இருவகைப்படும். ஒன்று, வழி இன்னது என்றே அறியாமல் இருப்பது; இன்னொன்று வழி இது என்று அறிந்திருந்தும், வேறு காரணங்களால் முயற்சியை மேற் கொள்ளாமல் இருப்பது. இவ்வினத்தைச் சேர்ந்திருப்போர் மிகச் சிலரே. பெரும்பாலோரைப் பொறுத்தமட்டில் வழி இன்னதென்று அறியாமல் இருப்பதே உண்மை. அதிலும், ஒரு விந்தை என்ன என்றால், தவறான வழிகளை உண்மை வழி என்று நினைத்திருக்கும் திரிபுணர்ச்சியே யாம். ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு அதனால் புகழ் தம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர் பெரும்பாலும் ஏமாற்றமே அடைவர். ஒருவேளை புகழ் வருவது போலத் தோன்றினும், அது நிலைத்து இருப்ப தில்லை. காரணம், வருவது புகழன்று. அது 'இசை' என்று கூறப்படும். அவன் உயிருடன் இருக்கும்வரை அதுவும் இருந்து, அவனுடன் கூடவே அதுவும் அழிந்துவிடும். போர்களால் தம்புகழ் பரப்ப நினைத்த பழந்தமிழ் மன்னர் இவ்வினத்தைச் சேர்ந்தவரேயாவர். புகழ் பின்னரும் நிலைத்திருப்பதாகலின் அதனை அடையும் வழியும் வேறாய் உளது. அதனை விரும்பி வேட்டையாடுபவர் களை அது விட்டு ஓடும் இயல்புடையது. தன்னைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாதவர்களிடம், தானே வலியச் சென்று அடையும் இயல்புடையது.
வாழ்வில் பல வகை அனுபவம்
இனி, இப்புகழ் யாரைத்தேடிச் சென்று அடைகிறது என்பதை அறிய வேண்டும். 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை அறிந்து தங்கள் கடமையைச் சரிவரச் செய்துகொண்டு வாழ்க்கையையும் நன்கு அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெரியோர்களையே புகழ் தேடிச் சென்று அடைகிறது. வாழ்க்கை வேண்டும்பொழுது நமது விருப்பம் போலக் கிடைக்கும் ஒரு கருவியன்று. அது உள்ளபொழுதே அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதோ ஒன்றின் மேற்கொண்ட பற்றுக் காரண மாக அதனையே செய்துகொண்டு வாணாளைக் கழித்து விடின், அதுவும் பயனற்ற வாழ்க்கையேயாம். எல்லா வகை அனுபவங்களும் வாழ்க்கையில் வேண்டுவனவே. எனவே, போரே பெரிது எனக்கருதி வாழும் மன்னன் ஒருவனை விளித்துப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் அறவுரை பகர்கின்றார். போர் செய்வது அரசனுக்குரிய கடமையா யினும், அதையே வாழ்க்கையின் பயன் என்று மன்னன் கருதி வாழ்வானாயின், அது மடமையன்றோ? எனவே, புலவர், 'வாழ்க்கை வாழ்வதற்கே,' என்று மன்னனுக்கு நினைவூட்டுகிறார்.
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப. (புறம்-24)
என்று மாங்குடி கிழார் என்ற புலவர் கூறுகிறார்; போரே செய்யும் ஒருவனை நோக்கி, "தேறல் மடுத்து மகிழ் சிறந்து வாழ்வாயாக! அதுவே வாழ்க்கை வாழ்வதாகும்; அதுவே புகழுடன் வாழ்வதற்கு வழியாகும்" என்று கூறுகிறார். இவ்வொரு கவிதை நமக்கு ஒரு பேருண்மையை அறிவுறுத்துகிறது. வாழ்க்கை, கேவலம் ஒரே வகையில் மூடியணியப் பெற்ற குதிரை போலச் செலுத்தப் பெறுதல் தவறு. அவ்வொரு வகை, எத்துணை சிறந்த தாயினும், அதற்கே வாழ்க்கையைச் செலவழித்தல் போற்றற்குரிய தன்று. அங்ஙனம் வாழ்வோர், 'வாழ்க்கை வாழ்வதற்கே,' என்ற பேருண்மையை மறந்தவரேயாவர். அவ்வாறல்லாமல், வாழ்க்கையில் பலதிறப்பட்ட சுவைகளையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உண்மையைத் தமிழர் அனுபவத்தில் கண்டு கூறினர்.
மனிதன் யார்?
மனித வாழ்க்கையை ஏனைய விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து பிரித்துக்காட்டப் பல சிறப்பியல்புகள் உள்ளன. பகுத்தறிவு வாழ்க்கைச் சீர்திருத்தம் முதலியன அவற்றுட் சில. எனினும், இவை எல்லாவற்றினும் மேம் பட்ட ஒன்றும் உண்டு. அதுவே குறிக்கோள் அல்லது இலட்சியம் எனப்படும். குறிக்கோள் என்பது என்ன? தனது வாழ்வு இன்னவாறு இருத்தல் வேண்டும் என்று மனிதன் செய்து கொண்டுள்ள கற்பனையே குறிக்கோள் எனப் படும். கண்டதை உண்டு, வாழ்வில் வேறுவித அலுவல் ஏதும் இன்றித் திரியும் விலங்கினங்களிலிருந்து தோன்றிய மனிதனுக்கு, விலங்கினங்களிற் காணப்படும் சில பண்புகள் மறைந்தும், பல புதிய பண்புகள் தோன்றி வளர்ந்தும் வரலாயின. அங்ஙனம் வளர்ந்தவற்றுள் ஒன்றே குறிக்கோள் என்பதாம்.
வாழ்வோருக்கு வினா
உலகிடைப் பிறந்த எல்லா மனிதரும் வாழ்ந்து, காலம் வந்தவுடன் மாய்ந்து போகின்றனர். பெரும்பாலார்க்கு, 'ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? இவ்வாழ்க்கையின் தத்துவமும் காரணமும் என்ன? வாழ்வின் முடிவு எதுவாய் இருக்கும்?' என்பன போன்ற வினாக்கள் தோன்றுவதே இல்லை. இங்ஙனம் கூறினவுடன் எல்லோ ரும் வேதாந்த விசாரணையில் இறங்கவேண்டும் என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. இத்தகைய கேள்வி களைக் கேட்டுக்கொண்டு, ஒருவாறு இவற்றிற்கு விடையுங் கண்டவர்களே பெரியோர்களாய்த் திகழ்ந்தமையை அறிகிறோம். எனவே, இவ்வினாக்கள் வாழும் ஒவ்வொரு வருக்கும் இன்றியமையாதவை என்பது பெறப்படும்.
மேலே கூறிய வினாக்களின் விடைகள் அனைத்தை யும் சேர்த்துப் பார்த்தால், வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும். ஒருவன் மனித உடலோடு பிறந்துவிட்டால் மட்டும், மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆகிவிட முடியாது. தனித் தனி மக்கள் தனித்தனியான குறிக்கோள்களைக் கொண்டு இலங்குவதைக் காண்கிறோம். இனி இக்குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்றால், வேண்டா என்று கூறிவிடலாம். தனித்தனி மனிதர் தத்தம் வாழ்க்கையின் நிலைமைக்கு ஏற்பக் குறிக்கோளைப் பெற்றிருக்கலாம். குறிக்கோள் இல்லையாயின், வாழ்க்கை சுவையற்றதாகிவிடும்.
கண்டதே கண்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் வாழும் இவ்வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுதல் இயல்பு. ஒரு சிலர் 'பொழுதே போவதில்லை!' என்று குறை கூறுவதையும் கேட்கிறோம்.
நாள் என ஒன்றுபோற்காட்டி, உயிர் ஈரும்
வாள் அஃது உணர்வார்ப் பெறின் (குறள்-334)
என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறி இருப்பவும், பொழுது போவதில்லை என்று கூறும் இவ்வகை மனிதர் களை என்னென்று கூறுவது! இவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தால் இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணத்தை அறியலாம். இவர்கள் பசி தீர உண்பதையும் உறங்குவதை யும் தவிர, வேறு வாழ்க்கையில் ஒன்றையும் அறியாதவர் கள் ஆகலின், இவர்கட்குப் பொழுது போவதில்லை.
வாழ்வில் வெறுப்பு
இங்ஙனம் தோன்றிய இவ்வெண்ணம் இம்மட்டோடு நிற்பதில்லை. ஒரு சிலர், 'வாழ்க்கையில் வெறுப்படைந் தேன்!' என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதையும் காண்கிறோம். வாழ்க்கைப் போரில் ஓயாது சண்டை செய்து, இன்றியமையாத பொருள்களைக் கூடப் பெறமுடியாது வறுமையில் ஆழ்ந்து, அதன் பயனாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் உண்டு. இத்தகையோர் சாவிற்கு நமது இரக்கம் உரியதாகும்! குறை இவர்களிடம் இல்லை. இவர்கள் சாவிற்குக் காரணம், இவர்கள் தோன்றி வளர்ந்த சமுதாயமே ஆகும். இனி, ஒருசார் மக்கள், வாழ்க்கையில் பெற வேண்டுவன அனைத்தையும் பெற்று இருந்தும் வாழ்க்கையில் வெறுப்புத் தட்டித் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம். செல்வங்கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பணத்தில் புரளும் பெரும் பொருளாளர்களுட் சிலரும் இக்கதிக்கு ஆளான மையை அறிகிறோம். ஏன் இவர்கள் வாழ்க்கை இந் நிலைக்கு வந்தது? வாழ்க்கைக்கு, அதுவும் சுகமான வாழ்க்கைக்கு, எவை எவை தேவை என நினைப்போமோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒன்றுக்கு நூறாய் இருப்பவும், வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக் காரணம் என்ன? இவற்றிலிருந்து நாம் அறிய வேண்டுவது ஒன்றுளது. வாழ்க்கையில் ஏற்படும் விருப்பும் வெறுப்பும் வாழும் மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தனவே தவிர, ஏனைய உலகப் பொருள்களைப் பொறுத்தவை அல்ல.
அழுகிய வெறுப்பு
வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகள் மனநிலையைப் பொறுத்தவை என்பதன் பொருள் என்ன? உடலை வளர்க்க உணவு தேவைப்படுவது போல, மனத்தை வளர்க்கச் சிறந்த எண்ணங்களும் குறிக்கோள்களும் தேவை. இவை இல்லையேல் மனம் உடலோடு சேர்ந்து வளர்ச்சியடையாமல், உரம் குன்றிப்போம். அம்மட்டோடு இல்லை. வாழ்க்கையிலும் வெறுப்படையுமாறு செய்யவுஞ் செய்யும். அழுகிப்போன ஓர் உறுப்பு உடலில் இருக்கு மானால் உடல் முழுமைக்கும் தீங்கு விளைத்தல் கண்கூடு அன்றோ? எனவே, மனமும் உடலோடு சேர்ந்து வளர்ச்சி யடையச் செய்ய வேண்டுவது அறிவுடையார் கடமை யாகும்.
இன்பம் எங்கே?
இம்மன வளர்ச்சிக்கு ஏதுவானவை எவை எவை என்று ஆராய்ந்து தக்க முடிவிற்கு வரவேண்டும். சாதாரண ஆசைகளைக் குறிக்கோள்கள் என்று தவறுத லாக நினைத்துவிட்டால், அவற்றால் உண்டாகும் துன்பம் ஏட்டில் அடங்காதது. இந்நிலையில் மனத்தின் இயல்பையும் நன்கு அறிதல் வேண்டும். எத்தகைய ஆசையாயினும் அது நிறைவேறியவுடன் அமைதியடைகிற இயல்பு மனத்திற்கு இல்லை. மேலும் புதிய பொருள் களின்மேல் ஆசை செலுத்துவதே மனத்தின் இயல்பாகும். இது கருதியே சாந்தலிங்க அடிகளார், "அரிதுபெற் றிடினும் பெற்றதில் விருப்பம் அறப்பெறா தனவிகும்பு உயிர்கள்" என்று கூறிப்போந்தார். ஆகவே, மட்டமான பொருள்கள் மேல் பற்றுவைத்து, அதையே வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டுவிட்டால், அவ்வாசை நிறைவேறியவுடன் வாழ்க்கையில் அலுப்புத் தட்டிவிடும். அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் கோடீசுவரர்கள் இந்த இனத்தையே சேர்ந்தவர்கள். கேவலம் சில கோடிப் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தவறாக உணர்ந்த இவர்கள், அப்பொருளைச் சேகரித்தவுடன் வேறு வாழ்க்கையிள் சுவையுண்டு என்பதை அறிய முடிவதில்லை. காரணம் மிக இன்றியமையாதது. மனம் எப்பொழுது இன்பத்தைக் காண்கிறது. ஒரு குறிக்கோளை நாடி அடைய முற்படும் பொழுது மனத்திற்கு இன்பம் பிறக்கிறது. ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வின்பம் என்று ஆய்தல் வேண்டும். குறிக்கோளை யடையச் செய்யும் முயற்சியில் இன்பமே தவிர, அடைந்து விட்ட பிறகு அங்கு இன்பம் என்ற ஒன்றும் இல்லை. எனவே, முயற்சியிலேதான் இன்பம் என்றால், அம்முயற்சி வாழ்நாள் முழுதும் நீடித்ததாக இருத்தல் வேண்டுமே தவிர, இடையே பயந்தரக் கூடியதாய் அமைந்துவிடின் முற்கூறியபடி வெறுப்பே மிஞ்சும். இது வாழ்க்கையின் எல்லா முயற்சிகட்கும் பொதுவான நீதியாகும்.
உயர்ந்த குறிக்கோள்
இந்த முடிபை மனத்துள் இருத்திக்கொண்டுதான் எத்தகைய குறிக்கோள் சிறந்தது என்னும் ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒருவன் வாழ்நாளில் எளிதாக அடைந்துவிடக் கூடியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டால், நேரும் இழுக்கைக் கண்டோம். அவ்வாறாயின், அடையம்டியாத குறிக்கோளை மேற்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கப்படலாம். 'குறிக்கோள்' என்பதற்குப் பொருளே, 'எளிதில் அடைய முடியாதது' என்பதாகும். பொதுமறை தந்த பெரியாரின் கட்டளையை உற்று நோக்குவோம்.
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)
என்றல்லவோ அவர் கூறிச் சென்றார்? வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், 'உயர்வு உள்ளல்' என்று கூறினார். 'உயர்வு' என்ற சொல் ஓர் ஒப்புநோக்குச் சொல்லேயாகும். ஒன்றை நோக்க ஒன்று உயர்வு என்றுதான் கூறவேண்டும். எனவே இங்கு உயர்வு என்று கூறினதற்கு எவ்வாறு பொருள் கூற வேண்டும் என்று ஐயுறுவார்க்கு விளக்கம் தருவார் போன்று பின் அடியைக் கூறினார். 'மற்றது தள்ளினும்' என்ற கூற்றால், அக்குறிக்கோள் அடைய முடியாததாகும் என்ற குறிப்பையும் பெறவைத்தார். 'அடைய முடியாத குறிக்கோளை வைத்துக் கொள்வதாற் பயன் என்ன?' என்று வினவினால், அதற்கு விடை 'தள்ளாமை நீர்த்து' என்பதன்கண் அடங்கி விடுகிறது. அடைய முடியாவிடினும், அக்குறிக்கோளும், அதனை அடையச் செய்யும் முயற்சியும் ஏற்றுக்கோடற்பாலன என்பதே வள்ளுவர் வகுத்த நெறியாகும்.
தாழ்ந்த குறிக்கோள்
மேலும், மட்டமான குறிக்கோளைக் கொண்டிருந்து, அதனை அடைந்துவிடுவதைக் காட்டிலும், உயர்ந்த குறிக் கோளைக் கொண்டிருந்து, அதற்கெனத் தளரா முயற்சி செய்து அம்முயற்சியில் தோல்வியுறுதலே சிறந்தது என்பதும் தமிழர் கண்ட கொள்கையாம். இதனையே பெரியார்,
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (குறள்-772)
என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெருநூல்களிற் காணப்படும் பெரு மக்கள் கருத்துக்களும் அவர்கள் செய்த செய்கைகளும் இத்தகைய கருத்தையே அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் கொண்ட குறிக்கோளை அடையாமற்போயினும் அக்குறிக்கோள் மிக உயர்ந்ததாய் இருந்தது என்பதில் ஐய மில்லை. அவர்கள் பெற்ற உயர்வையும் அவர்கள் கொண்ட வெற்றியையும் கொண்டு கணக்கிடாமல், குறிக் கோளையும் அதற்குச் செய்யப்பெற்ற முயற்சியையும் கொண்டே தமிழர் கணக்கிட்டனர். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகையார்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (குறள்-595)
என்று முழங்கினார். மனிதனின் உயர்வு அவன் உள்ளத்துட்கொண்ட குறிக்கோள் அளவாகுமே தவிர, அதனை அவன் அடைந்தானா இல்லையா என்பதைப் பொறுத்தன்று.
உலகம் ஏன் நிலைபெறுகிறது?
இவ்வுலகம் ஏன் நிலை பெற்றிருக்கிறது? எவ்வாறு நிலைபெற்றிருக்கிறது? இவ்வினாக்கட்குப் பலர் பல்வாறு விடை கூறுவர். விஞ்ஞானிகள் பெருவெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கோளங்கள் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு நிற்றலின், அந்த ஈர்ப்புச் சக்திக்குக் கட்டுப் பட்டே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்பார்கள். எவ்வாறு என்ற வினாவிற்கு, உலகம் தன்னில்தானே சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருத்தலினால் என்றும் விடை கூறுவர். இறைவனை நம்பி யிருக்கும் அன்பர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பது இறைவனுடைய கருணையால் என்பர். எதனையுமே நம்பு வதில்லை என்ற கொள்கையுடையார் சிலர், இத்தகைய வினாக்களுக்கு நாம் ஏன் விடை தேடி அலையவேண்டும்? உலகந்தான் இருக்கிறது. அது எதனால் நிலை பெற்றால் என்ன? என்பர். பழைய புராணம் முதலியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் உலகம் ஆதிசேடன் தாங்கிக்கொண்டிருத்தலினாலேதான் நிலைபெற்றிருக்கிறது என்பர்.
எது உலகம்? மேலே கூறிய விடைகள் அனைத்திலும் ஓரள்வு மெய்ம்மை இருக்கிறது. ஆனாலும் முழு மெய்ம்மையா என்றால், இல்லையென்றுதான் கூறவேண்டும். மேலும், உலகமாகிய சடப்பொருள் நிலைபெறும் காரணத்தைத் தான் இவ்விடைகள் ஒருவாறு விளங்கின் ஆனால் உலகத்தை ம்ண்ணும், நீரும், நெருப்பும், காற்றும் கலந்த ஒரு ஜடப் பொருளாக மட்டும் தமிழர்கள் கருதவில்லை. உலகம் என்ற சொல்லால் உலகில் உள்ள மக்களையே இவர்கள் குறித்தார்கள். இது பற்றியே பொலும், 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று,' என்பது பொன்ற முதுமொழிகள் தோன்றலாயின! எனவே , உலகம் என்பது மக்களைத்தான் சுட்டும் என்ற கருத்துடன் மேலே கூறிய வினாக்களை எழுப்பினால், கூறப்பட்ட விடைகள் பொருத்தமற்றவை என்பது நன்கு விளங்கும். தமிழர் கண்ட இந்த உண்மை இன்றும் ஒத்துக் கொள்ளப் பெறுகின்றது என்பதற்குச் சான்றாக 'உலகம் வரவரக் கெட்டுப்பொய் விட்டது!' என்று கூறப்படும் வாக்கியத்தைக் கூறலாம். உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது என்பது வெளிப்படை அவ்வாறா யின், இந்த உலகம் ஏன் வாழ்கிறது?
நாகரிகம் வளர்ந்த வரலாறு உலகம் தோன்றிய நாளில் அதில் மனிதன் தோன்ற வில்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பே மனிதன் தோன்றி வளரத் தலைப்பட்டான் என்று நிலநூல் வல்லுநர் கூறுகின்றனர். ஆதியில் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர் பல நூறு ஆண்டுகளின் பின்னர்க் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டனர். தனித்தனியாய் வாழ்ந்து வந்த பொழுது அவர் அநுபவித்துப் பழகிய உரிமைகள் முதலியன, கூட்டமாக வாழும்பொழுது பயன்படவில்லை. தனி மனிதனுடைய உரிமைகள் பலவற்றைக் கூட்டத் துடன் வாழும்பொழுது விட்டுக் கொடுக்க வேண்டி நேரிட்டது. காலம் செல்லச் செல்ல இப் புதுமுறை வாழ்க்கையைப் பழகிக் கொண்டான் மனிதன். அதிகக் கூட்டம் கூடி ஓரிடத்தில் வாழத் தலைப்பட்ட இடம் நகரம் எனப் பெயர் பெறலாயிற்று. கிராமங்களில் வாழும் மக்கள் ஓரளவு பிறருடைய கையை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்த முடிந்தது. ஆனால், நகரத்தில் வாழ்க்கை நடத்துபவர் பல்வேறு துறைகளில் முயற்சி செய்யத் தொடங்கினர்; ஆதலின் பிறர் கையை எதிர்பார்த்தே அன்றாட வாழ்க்கை நடத்தும் நிலைக்கு வந்தனர். பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலையில், அப்பிறருக் காகத் தம்முடைய உரிமைகள் சிலவற்றை விட்டுவிட வேண்டிய நிலைமையும் வருமன்றோ? இவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ்வதே நகர வாழ்க்கையின் அடிப்படை யாகும். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கை 'நாகரிக வாழ்க்கை' என்று பெயர் பெறலாயிற்று. 'நகரம்' என்ற சொல்லிலிருந்தே 'நாகரிகம்' என்ற சொல் பிறந்தது. நாளாவட்டத்தில் தன் நலத்தைக் குறைத்துக் கொண்டு பிறர் நலம் பேணும் வாழ்வையே 'நாகரிக வாழ்வு' என்று கூறத் தலைப்பட்டனர். இத்தகைய பண்பாடுடையவர்களை 'நாகரிகர்' என்றும், 'நாகரிகம் அறிந்தவர்' என்றுங்கூடக் கூறினர்.
எது நாகரிகம்?
நாகரிகம் உடையவராலேதான் உலகம் நடை பெறுகிறது என்று கூறினால், இன்றும் அதனை மறுப்பார் யாரும் இல்லை. நாகரிகம் என்பது யாது என்று கேட்டால்தான் விடை நன்கு கூறமுடியாது விழிக்க நேரிடும். சென்னப் பட்டினத்தில் வாழும் அனைவரும் தம்மை மிக்க நாகரிகம் உடையவர் என்றே கருதிக் கொள்கின்றனர்; தருக்கோடு பேசவும் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதனால் இவ்வாறு கூறிக்கொள்கின்ற னர் என்பதை அறிய அதிக நேரம் செல்லாது. எளிய உடை அணிந்து கோணல் எழுத்துக்களை அறியாத ஒருவர் இந் நகரப் பெருமக்கள் ஏறிச்செல்லும் பஸ் முதலியவற்றில் வந்து ஏறிவிட்டால் அவர் படும்பாட்டைப் பார்க்க பல கண்கள் வேண்டும். சென்னையில் வாழும் நாகரிகர்கள் அப்புதியவரை மனிதராகக்கூட மதிக்க மாட்டார்கள். ஏன்? பஸ் கண்டக்டர்கூடச் சென்னை யில் வாழும் ஒரே காரணத்தால் தம்மை மிக்க நாகரிக முடையவராகவே கருதிக்கொள்வதால், அப்புதியவரை நாட்டுப்புறத்தார் என்று ஏளனமாகப் பேசுதலைக் கேட்கிறோம்.
எனவே, இக்கால முறைப்படி பார்த்தால், வேட்டி உடுக்காமல் கடுங்கோடைக் காலமாயினும் கம்பளியால் நெய்யப்பட்ட சட்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு சுருக்குத் துணியும் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வாழ்வதே நாகரிகம் என்பது விளங்கும். இதுதான் நாகரிகம் எனில், இன்று வாழும் தமிழர் பலர், அவருள்ளும் இளந்தமிழர் பலர் நாகரிகம் மிகுந்தவர்களே! இத்தகைய நாகரிகம் மிகுந்துவிட்டதால், தமிழ்நாடு என்ன கதியடையும் என்று கூறத்தேவையில்லை. ஆனால், இவர்கள் நாகரிகரும் அல்லர்; இவர்கள் பண்பாடு நாகரிகமும் அன்று என்பது நன்கு அறியப்பட வேண்டும்.
உலகம் வாழக் காரணம்
உலகம் வாழ்வதற்கு உரிய காரணத்தைக்கூற வந்த வள்ளுவப்பெருந்தகையார்,
'பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்' (குறள்-996)
என்று கூறினார்.
பண்புடையவர் இருத்தலினாலேதான் உலகம் நடை பெறுகிறது என்று அவர் கூறும்பொழுது, நாகரிகம் உடையவர்களையே குறிப்பிடுகிறார். 'பண்பெனப்படுவது பாடறிந்த ஒழுகல்.' என்று கலித்தொகை கூறுவது இக் கருத்தையேயாம். பிறருடைய இயல்பறிந்து அதற்கேற்ப நடத்தலையே 'பாடறிந்து' என்று கூறுகிறார் அந்த ஆசிரியர். தனக்கு என வாழாமல் பிறர்பொருட்டு வாழ்வதே நாகரிகம் எனப்படும் என்பது தெளிவு. எந்த அளவு வரை ஒருவன் தன்னலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவது சற்றுக் கடினந்தான். வேறு வகையாகக் கூறுமிடத்து ஒருவனுடைய நாகரிகம் எவ்வளவு என்பதை எவ்வாறு அளவிட்டுரைப் பது என்பதே இவ்வினாவாகும். பெரிய படிப்புப் படித்துவிட்டு வேற்று நாடுகட்குச் சென்றுவிட்டு மீட்டும் இந்த நாட்டையும் இதில் வாழும் மக்களையும் ஏற இறங்கப் பார்க்கும் பெரியோர்தாம் இன்று நாகரிகத்தில் மேம்பட்டவராகக் கருதப்படுகின்றனர். பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதுதான் நாகரிகம் என்றால் இவர்களுடைய நாகரிகத்தை எவ்வாறு மதிப்பிடுவது? தமிழன் நாகரிகம் பற்றிக்கொண்ட கருத்தை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணை இதோ கூறுகிறது.
'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.' (நற்றிணை - 355)
'நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி 'உண்க' எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம்,' என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,
'பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.' (குறள் - 580)
என்று கூறுகிறார். 'மகாத்மா காந்தி', 'ஸாக்ரட்டிஸ்' போன்றவர்களே 'நாகரிகம் உடையவர்கள்' என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.
வழுதி கூறுகிறான்
'கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி' என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், 'இளம்பெரு' என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும் புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. 'கடலுள் மாய்ந்த' என்ற அடைமொழியால் அவன் எதிர்பாராதவிதமாகக் 'கடலுக்கு இரையாகி விட்டான்' என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ்மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்து விட்டான். அந்தப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுபபி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.
"இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திர னுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ள மாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் (முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்க மாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்த லான் (இவ்வுலகம் இருக்கிறது)" என்ற பொருள்பட அப் பெருமகன் பாடுகிறான்.
உண்டால் அம்ம! இவ் வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஒனத்
தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சீப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே. (புறம்-182)
[முனிவு--வெறுப்பு; துஞ்சல்--சோம்பல்; நோன்தாள்-- வலியமுயற்சி.]
நாகரிகத்தின் சிகரம் என விளங்குபவன் யார் என்பதை இப்பாடலில் அவ்வரசப் புலவன் மிகவும் விரிவாகப் பேசுகிறான். இந்திரனுடைய அமிழ்தத்தை நிரம்பப்பெற்ற தேவர்கள்கூட அசுரர்கட்குத் தாராமல் தாமே அதனை உண்ண விரும்பினர். ஆனால், நாகரிக மனிதர் யார் எனில், இந்த அமிழ்தத்தைக்கூடத் தனக்கே என்று எண்ணாமல் பங்கிட்டுண்பவனாவான். பிற உயிர்களிடத்து இத்துணை அன்பு காட்டும் ஒருவனுக்கு அவற்றின்மேல் எவ்வாறு வெறுப்பு உண்டாக முடியும்? பிறர்மாட்டு வெறுப்புக் கொள்ளக் காரணம் தன்னலத்தில் கொண்ட பற்றுத்தானே! எனவே, தன்னலத்தைத் துறந்த பெரியவனுக்கு வெறுப்பு என்பது இருக்க இயலாது. தன்னை அடித்துப் பல்லை உடைத்தவனையும் சோதர னாகக் கருதி, அவனை விடுதலை செய்தால் ஒழிய உணவு உண்ணமாட்டேன் என்று கூறும் ஒருவனுக்கு (மகாத்மா காந்தி) எவ்வாறு வெறுப்புத் தோன்ற முடியும்? இனி அந்த நாகரிக மனிதன் துன்பத்தைக் கண்டு அஞ்சிச் சோம்பி இருத்தலும் இல்லை. பிறர் துயரம் துடைப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவனுக்குச் சோம்பி இருக்க நேரம் ஏது? துன்பத்தைக் கண்டு அஞ்சுபவன் எவ்வாறு பிறருக்கு உதவ முடியும்? அவன் வாழ்வின் குறிக்கோள் 'புகழ்' ஈட்டுதல் ஒன்றுதான். பிறருக்குத் துன்பந்தாராத நன்முறையில் கடமையைச் செய்து நிறைவேற்றினால்தான் புகழ் உண்டு. கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ் வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்யமாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்யமாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்.
உலகம் ஏன் வாழ்கிறது என்ற வினாவிற்கு இப்பொழுது விடை கிடைக்கிறதன்றோ?
பொய் கூறார்
சரித்திரம் எட்டிப் பார்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லாத காலத்தில் இத்தமிழர் யாது நினைந்தனர்? எவ் வாறு வாழ்ந்தனர்? எதனைச் சிறந்தது என்று கருதினர்? எதனை இழிந்தது என்று கருதினர்? இவற்றை நாம் அறிவது இன்றும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். அவ்வாறாயின், இத்தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவர் அனைவரும் பொய் கூறாமல் மெய்யே கூறினரா என்று எண்ணத் தோன்றுகிறதா? இதோ பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் விடை கூறுகிறார். வன்பரணர் என்ற தமிழ்க் கவிஞர் சங்கப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். அவர் தமக்கு மட்டும் அல்லாமல் தம் இனத்தவராய தமிழ்ப் புலவர் அனைவருக்குமே சேர்த்து ஓர் உண்மையை வெளி யிடுகிறார். தமிழ்ப் புலவர்கள் பொய் கூறமாட்டார்களாம்! பெரிய அரசர்களிடத்து அவர்கள் தரும் பரிசிலைக் கருதியை அப்புலவர்கள் சென்றாலும், அவ்வரசர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழுதல் அப்புலவர்கட்கு மரபு அன்றாம்!
பீடுஇல் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே (புறம்-148)
(பிறருக்கு வாரி வழங்கும் பெருமை (பீடு) இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவர் குணங்களைக் கூறுதலை (கிளத்தல்) அறியாது (எய்யாது) எம்முடைய சிறிய செம்மையான நாக்கு]
புலவருடைய நா ஏனையோருடைய நாவைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்றார் வன்பரணர். ஆனால், தாமும் ஒரு புலவராதலின் புலவர்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும் 'சிறு' என்ற அடைமொழி தந்து 'சிறு நா' என்று மிக்க அடக்கத்துடன் கூறிக்கொள்கிறார். வன்பரணர் போன்ற பெறும் புலவர்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதனால், அத்தகைய புலவர்களை வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது!
தாழ்ந்தது எது?
இத்துணைச் சிறப்புடைய புலவர்கள் தங்களுடைய இனத்தவர் எதனை உயர்ந்தது என்றும், எதனைத் தாழ்ந்தது என்றும் கருதினார்கள் என்பதைக் கூறினால் அது அந்த இனத்தார் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாக் இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இன்று வாழும் நாம் மிகவும் தாழ்ந்தது என்று எதனைக் கருதுகிறோம்? பலரும் பலவாறு நினைப்பதற்கு ஏற்ற வினாவாகும் இது. ஆனால், நாம் எதை இழிந்தது என்று நினைத்தாலும், ஒன்றை மட்டும் நினைக்கமாட்டோம் என்பது உறுதி. பிறரிடம் ஒன்றைத் தா என்று கேட்டல் இழிவு என்று கூறினாள் நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவோம். காரணம், இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் பலருடைய கையை எதிர்ப்பார்த்தே வாழ வேண்டியுள்ளது. நம்மால் எதிர் பார்க்கப்படும் அப்பலருள் சிலர், தாமே நாம் வேண்டியவற்றைத் தருவர்; இன்னுஞ் சிலர், நாம் கெட்ட காலத்தும் கொடுக்க மறுப்பர். அத்தகையவர்களிடத்தும் வாய் கூசாமல் கேட்டால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். எனவே, நம் காலத்தில் ஒருவரை ஒன்று கொடு என்று கேட்பது தவறு அன்று என்று கருதப்பட்டாலும், அந்நாளைய தமிழன் இதனை மிக இழிந்ததாகவே கருதினான்.
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று (புறம்-204)
என்று இந்நான்கு அடிகளில் இற்றைநாள் தமிழ்ச் சமுதாயம் இழந்துவிட்ட ஒரு நாகரிகம் பேசப்படுகிறது. உலகத்தில் எவ்வாறேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற கருத்தால் தனக்கு மிகவும் வேண்டப்படுவதாக ஒன்றைக் கருதிக்கொள்கிறான் ஒருவன். அது இல்லாவிடின் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. உயிரைப் பெரிது என்று மதிக்கும் ஒரு காரணத்தால் எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறான். இத்தகையவன் தனக்கு மிகவும் தேவை என்று கருதப்படும் பொருளை அது உடையான் ஒருவனிடமிருந்து வேண்டிப் பெற முயல் கிறான். அப்பொருளை உடையானும், இந்த இல்லானும் சமமாக இருப்பின் அவனை நோக்கி இவன், 'தா' என்று கேட்கலாம். ஆனால், உடையான் உயர்ந்தவனாய் இருப்பின், அவனிடம் சென்று 'ஈவாயாக!' என்றுதானே கேட்க வேண்டும்? மானத்தைவிட்டு ஒரு பொருளை ஈ என்று கேட்டலினும் இழிந்தது வேறு இல்லை என்கிறார். மானம் என்ற ஒன்றை மிகப் பெரிதாக மதிக்கும் அற்றை நாள் தமிழ்ப் புலவர். பசுமாடு ஒன்று உயிர் நீங்கும் நிலையில் இருக்கிறது. சிறிது தண்ணீர் இருந்தால் அது உயிர் பிழைத்துவிடும். பசுவைக் காப்பது அறமாகும். வேண்டப்படும் பொருளோ, எங்கும் எப்பொழுதும் கிடைக்ககூடிய தண்ணீர்தான். என்றாலும், அந்தத் தண்ணீரை ஒருவனிடம் சென்று 'தருக' என்று கேட்பதில் மானம் போய்விடுவதாகக் கருதினர் அற்றை நாள் தமிழர்.
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல். (குறள்-1066)
இரத்தலின் இழிவு இத்தகையது என்று பேசிய தமிழ்ப் புலவர், இதனுடன் நிற்கவில்லை; இதனினும் இழிந்த ஒன்றும் உண்டு என்கிறார். இவ்வாறு மானத்தை இழந்தும் ஒருவன் ஒரு பொருளைத் 'தா' என்று கேட்டு விடுகின் றான். அவ்வாறு கேட்பவன் எதிரே அக்கேட்கப்பட்ட பொருளை இல்லை என்று கூறுதல், கேட்டலினும் மிகவும் இழிந்ததாம். கேட்பதே இழிவு எனில், கேட்டதை இல்லை என்று உரைத்தல் அதனினும் இழிந்ததாம். இழிந்தது பற்றி ஆராய்ந்த தமிழர் உயர்ந்தது பற்றியும் அடுத்துப் பேசுகிறார்.
உயர்ந்தது எது?
ஒருவன் எதிரே நின்று ஒன்றைத் தருக என்று கேட்பதன் முன்னர், நிற்போன் குறிப்பை அறிந்து, இதனைப் பெற்றுக் கொள்க என்று தருதல் உயர்ந்ததாம்; அவ்வாறு கேளாமலும் தரப்படுகின்ற ஒன்றை வேண்டா என்று மருத்துவிடுதல் தருதலைக்காட்டிலும் உயர்ந்ததாம். ஒருவருக்கு ஒன்றைத் தருதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அவ்வாறு தருவதிலும், அதனைப் பெறுபவர் மனம் நோவாமலும் இதனைப் பெற வேண்டி யுளதே என்று வருந்தாமலும் இருக்கும்படிச் செய்து ஒன்றைத் தருதல் ஒரு கலையாகும். இவ்வாறு தருபவர் மூன்றாம் அடியில் குறிக்கப்படுகின்றனர். இவரினும் மேம்பட்டவர், தானே வருகிற ஒன்றை வேண்டா என்று மறுப்பவர். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பதற்கு இந்த முறையில் இலக்கணம் கூறிய பெருமை, இந்த உலகில் வாழும் பல்வேறு சமுதாயங்களுள்ளும் தமிழன் ஒருவனுக்கே உரியது என்று கூறுதல் தவறு ஆகாது என்றே தோன்றுகிறது.
பழைய தத்துவம்
உலகில் வாழும் பல்வேறு மக்களும் ஏன் ஒன்றாக வாழ முடியாது? எல்லோரும் சோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கூறாத பெரியவர்கள் இல்லை. ஆனாலும் இன்று வரை உலகம் அவ்வாறு வாழவில்லை. உலகம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு நாட்டில் வாழும் ஒரு மொழி பேசுபவருள்ளாது இந்த ஒற்றுமை நிலைத்திருக் கிறதா? இல்லையே! ஏன்? அனைவரும் சமம் என்று கூறும் கொள்கை ஏனைய நாடுகளைப் பொறுத்த மாட்டில் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் இத் தமிழர் மிகப் பழங்காலத்திலேயே இக்கருத்தைக் கூறியுள்ள னர். 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற கருத்தைப் பலரும் கூறியிருப்பினும், தமிழர் கூறிய முறையே ஒரு தனிச் சிறப்புடையது.
ஒருவன் எல்லாம் தன்னுடைய ஊராகும், அனைவரும் தன்னுடைய சுற்றத்தார் என்று நினைத்து வாழ முற்படுகிறான் என்றே வைத்துக்கொள்வோம். எவ்வளவு வரையில் இது முடியும்? பிறர் அவனுக்குத் தீங்கு இழைக்கும் பொழுது இவ்வாறு நினைக்க முடியுமா? அதிலும் காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தீமை செய்யும் பொழுதும் சும்மா இருக்க முடியுமா? சிறு துன்பம் செய்தால் ஒருவேளை பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், உயிர்போகிற பெருந்துன்பம் இழைத்தால் என்ன செய்வது? அப்பொழுதும் துன்பம் இழைப்பவரைப் பகைவர் என்று கருதாமல் கேளிர் என்று கருத முடியுமா? முடியாதுதான். என்றால், பிறர் அனைவரையும் சோதரர் என்றே கருதவேண்டும் என்று கூறுவது பொருளற்ற சொல்லாயந் முடிந்துவிடும். இன்று நம்மைச் சுற்றி நிகழ்வது யாது? கறுப்பனை வெள்ளையன் தோலின்நிற வேறுபாட் டால் வெறுக்கின்றான். பணக்காரனை ஏழை வெறுக்கிறான். பொருள்களை உற்பத்தி செய்பவன் அதனை வாங்காத வனை வெறுக்கிறான். ஒரு வகை அரசியல் முறை உள்ள வன் பிறிதோர் ஆட்சி முறையுடையவனை முழுப்பகைவ னாகக் கருதுகிறான். இன்னமும் கூறப்போனால், தம்மைப் போல் எல்லா வகையிலும், நினைக்காமல் வேறு வகையில் நினைக்கிறவர்களைக்கூட பகைவர்கள் என்றே சில நாட்டார் கருதுகின்றனர். இத்தனை வெறுப்புக்களிடையே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறுதல் பொருந்துமா? அல்லது எடுபடுமா? இவற்றை எல்லாம் மனத்தில் நினைத்த 'கணியன் பூங்குன்றனார்' என்ற அந்தத் தமிழ்ப் புலவர் இவற்றிற்குச் சமாதானம் கூறுகிறார்.
ஒருவன் மற்றொருவன்மேல் எப்பொழுது வெறுப்புக் கொள்கிறான்? தனக்குத் தீங்கு இழைத்துவிட்டான் என்று நினைத்தால்தானே வெறுப்புத் தோன்றும்? அவ்வாறு நினையாமல் மற்றொருவன் தன்க்குத் தீமையோ நன்மையோ செய்ய முடியாது என்று நினைத்தால், வெறுப்புக்கொள்ள வாய்ப்பே இல்லையன்றோ?
இதனாலேதான் அந்தப் புலவர் பாடலின் இரண்டாம் அடியில் 'தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல என்கிறார். 'ஒருவன் நேரே நம்மைத் தாக்கும்பொழுது கண் எதிரே ஊறு விளைப்ப வனைக் காண்கிறோமே! அப்பொழுதும் அவனை வெறுக்கக் கூடாதா?' என்பாருக்கு விடை கூறுமுகமாக மூன்றாம் அடியில், 'உடலில் படும் துன்பம் நீடித்து நிற்ப தில்லை. எனவே, அதனால் வெறுப்புக்கொள்ள வேண்டா' என்கிறான். 'ஒரு வேளை பிறன் ஒருவன் நம்மைக் கொல்லவே வந்தால் அப்பொழுது யாது செய்ய வேண்டும்?' என்பாரை நோக்கி, 'இறத்தல் என்பது புதுமையன்றோ? ஏன் மனம் வெறுக்க வேண்டும்?' என்கிறார். 'வாழ்வு இனிமையுடையது, சாவு துன்பந் தருவது.' என்று நினைத்ததால்தானே கொல்லவரும் பிறர் மேல் வெறுப்புக் கொள்ள நேரிடும்? ஆதலால், அவற்றை யும் மறுத்து விடுகிறார். இவ்வாறு பல வழியிலும் காரணங் காட்டி ஒருவர் மேல் வெறுப்போ பகையோ கொள்வது தவறு என்று எடுத்துக்காட்டி விட்டார்.
நீரில் அகப்பட்ட கட்டை
இனி வேறு ஒரு வகையிலும் வெறுப்புத் தோன்றக் கூடும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவிடத்தும், நாம் செய்யும் உபகாரத் திற்கு நன்றி பாராட்டாதவிடத்தும் வெறுப்புத் தோன்றுதல் இயற்கை. இதோ புலவர் அதனையும் மறுக்கிறார். 'வானம் இடியுடன் மழை பெய்கிறது. அதனால், ஆற்றில் வெள்ளம பெருகுகிறது. அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை அகப்பட்டு விடுமாயின், யாது செய்யும்? வெள்ளம் போகும் வழி கட்டையும் செல்லுமன்றோ? அதேபோல, ஒவ்வொருவ னுடைய ஆன்மாவும் அதனுடைய ஊழின்வழி நடைபெறு கிறதாதலின் நன்மை செய்யும் ஒருவனைப் புகழவும் வேண்டா. அவன் அற்பனாய் இருக்கும் பொழுது வாய் தவறியும் இகழவும் வேண்டா,' என்கிறார் புலவர். ஒருவனைப் புகழ்வதாலும் மற்றவனை இகழ்வதாலுந்தானே உலகில் வேறுபாட்டுணர்ச்சியும், வெறுப்பும் தோன்று கின்றன? எனவே, அடிப்படையில் அவ்வாறு கூறவே வேண்டா என்கிறார் கவிஞர், 'தப்பித் தவறிப் பெரியோ ரைப் புகழந்துவிட்டாலும் தவறு இல்லை; சிறியவர்களை வாய் தவறியும் இகழ்ந்துவிட வேண்டா,' என்று கூற வந்தவர் 'சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,' என்கிறார். உலகம் உள்ள அளவும் மறவாமல் போற்ற வேண்டிய இந்த அருமையான பாடலை ஒரு தமிழர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கிறிஸ்து பிறக்கு முன்னரே பாடினார் என்பதை நினைத்து வியப் படியாமல் இருக்க இயலாது.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றாலும் இலமே; மின்னொடு
வானம் தண்துணி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்-192)
[முனிவு-வெறுப்பு; வானம்-மழை; கல்பொருது- கல்லை உருட்டி; இரங்கும்-ஒலிக்கும்; மல்லல்-வளப்பம் பொருந்திய; புணை-தெப்பக் கட்டை; முறை-ஊழ்; திறவோர்-மெய்ஞ்ஞானிகள்; காட்சி-நூல்.]
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றி னர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய பயன் கலைகளிலும், நுண்கலைகள் அனைத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இவர் சிறப்புற்று இருந்தனர்.
புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லா மலே விளங்கும்.
சங்கப் பாடல்களில் வரும் தெய்வம், சமயம் பற்றிய குறிப்புகள் அளவிறந்தனவேயாகும்.
ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கென உருவு அமைத்து நிறுவினர்; வழிபட்டனர் என்பதனைத்
தெய்வம், உணாவே மாமரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
(தோள்-பொருள். அகத்திணையியல்)
என்ற சூத்திரத்தால் உணரலாம்.
இதனோடு நில்லாமல் தெய்வத்திலும் உயர்ந்த ஒன்றாக முழு முதற்பொருள் ஒன்றனைச் சிந்தித்து வழி பட்டனர் என்பது தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.
தெய்வம், கடவுள் என்னும் இரண்டனையும் இன்று ஒரு பொருளனவாக வழங்குகின்றோம். எனினும் தொல் காப்பியர் காலத்தில் இவை வெவ்வேறு பொருளன என்று நினைக்கத் தோன்றுகிறது.
கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தில் பற்றுக் கோடில்லாத பரம்பொருளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அத்தகைய இடங்களில் 'கடவுள்' என்ற சொல்லை வேண்டுமென்றே பெய்கின்றார்.
ஆள் அமர் கடவுள் கடவுள் ஆலம் (புறநானூறு)
கடவுள் காந்தள் அருந்திறல் கடவுள் (அகநானூறு)
மலை உறை கடவுள் குன்றக் குறவன் கடவுள் பேணி (ஐங்குறு நூறு)
கடவுள் கல்சுனை கடவுள் ஓங்கு வரை (நற்றிணை)
நிலை உயர் கடவுள் நீ பூப்பலி இட்ட கடவுள் (கலித்தொகை)
உருகெழு மரபின் கடவுள் கடவுள் அஞ்சி (பதிற்றுப் பத்து)
கடவுள் கற்பின் பேஎம் முதிர் கடவுள் (குறுந்தொகை)
இவ்வாறு அமைவன எண்ணிறந்தன.
மேலும் திருக்கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஏதோ பல்லவர் காலத்தில்தான் தமிழகத்தில் இருந்தது என்ற தவறான கருத்து இக்கால ஆராய்ச்சியாளரிடை தோன்றியுள்ளது.
ஆனால் இத்திருக்கோயில்கள் முன்னர் கோட்டம், தேவகுலம் என்ற பெயரினவாக இருந்தன (சிலம்பு-கனாத் திறம் உரைத்த காதை).
ஊரானோர் தேவகுலம்
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி)
அணங்குகுடை முருகன் கோட்டம் (புறம்)
கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.
மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் (அகம)
போற்றுவார் இன்றி, வழிபடுநர் இன்றி சில கோயில்கள் பாழாயின என்றும் அறிகிறோம்.
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
........கடவுள் போகலின் (அகம்)
'கருவொடு பெயரிய காண்பின் நல்லில்' (நெடுநல்வாடை)
கர்ப்பக் கிரகம்-சிலை-அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தது.
நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன்...
அருந்திறல் கடவுள் வாழ்த்தி (பெரும்பாணாற்றுப்படை)
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகம்-167)
இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத் தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.
கோயில் வழிபாட்டு முறையில் ஏதோ சில சடங்கு கலைச் செய்து சமயம் என்ற பெயரிட்டு வாழ்ந்தனர் என்று நினைப்பது பெருந்தவறாகும்.
சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும்.
வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது.
உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத் தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பௌத்தம் சமணம் என்ற இரண்டிலும் பரம் பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை.
இந்நிலையில் வேத காலத்துக்கு முன்னும், வேத காலத்திலும், பின்னும் வீறுபெற்றிழந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர்.
பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்யப்படுகின்ற யாகம் முதலியவற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது.
ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி "பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க" எனக் கோரக் காண்கிறோம்.
பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ் வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை.
எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது.
யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலி தாரோயே! (பரிபாடல் 5-80)
என்று வேண்டியதாகத் தெரிகிறது.
இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச் சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவ தாக அமைந்திருக்கிறது.
சிவ விஷ்ணு வழிபாட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பௌத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர்.
தனி மனிதனுடைய சமய நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்போழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம்.
எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.
இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பௌத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர். தமக்குள்ள எவ்வித மனவேருபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.
சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,
"பிறவா யாக்கைப் பெரியோன்"
"திருமால் சீர்கேளாதசெவி என்ன செய்வியே"
என்றும் பாடுவான, நம் சிந்தனைக்குரியன.
சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந் திருந்தாலன்றி இவ்வாறு பாடமாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.
----------------------------
அகமும் புறமும் முற்றிற்று
This file was last updated on 7 November 2012.
Feel free to send the corrections to the Webmaster.