நினைவு மஞ்சரி (கட்டுரைகள்)
முதற் பாகம்
உ.வே.சாமிநாதையர் எழுதியது.
ninaivu manjcari -part 1
of u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, G. Mahalingam, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, P. Thulasimani,
P. Radhakrishnan, G.S. Raghu, K. Vinayagar and S. Karthikeyan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நினைவு மஞ்சரி (கட்டுரைகள்)
முதற் பாகம்
உ.வே.சாமிநாதையர் எழுதியது.
கணபதி துணை
Source:
நினைவு மஞ்சரி
(முதற் பாகம்)
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதியது.
கேசரி அச்சுக்கூடம்
சென்னை.
Copyright Registered] 1940 [விலை ரூபா ஒன்று
-----------------------------------------------------------
பொருளடக்கம் ( கட்டுரைகள்)
முகவுரை
1. கடல் கடந்து வந்த தமிழ்
2. மணிமேகலையும் மும்மணியும்
3. செண்டலங்காரா
4. இடையன் எறிந்த மரம்
5. மாவிந்த புராணம்
6. உத்தம சம்பாவனை
7. அந்தத் தொடிசு
8. அடுத்த குறள்
9. மணி ஐயர்
10. வி.கிருஷ்ணசாமி ஐயர்
11. பெற்ற மனம்
12. மல்லரை வென்ற மாங்குடியார்
13.மன்னார்சாமி
14. ஆவலும் அதிர்ஷ்டமும்
15. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
16. கிர்ர்ர்ரனி
17. அன்னமும் சொன்னமும்
18. பூசைத் தாயார்
19. நாயகர் மீட்சி
20. பொன்னம்பலம் பிள்ளையின் திருப்பணி
21. எங்கள் பாபம்.
22. ஒருவன்தானா?
23. உயிர் மீட்சி
24. தாய் நாடு
-----------------------------------------------------------
உ
முகவுரை
காலத்துக்கும் நாகரிகத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்றபடி ஜனங்களுடைய கருத்துக்களும் விருப்பங் களும் மாறி வருகின்றன. செய்யுள் நூல்களே எங்கும் பரவி வசன நடை நூல்கள் அருகி வழங்கிய காலம் ஒன்று. இப்பொழுது செய்யுள் நூல்கள் குறைந்தும் வசன நூல்கள் அதிகமாகவும் வழங்கி வருகின்றன. காரணம் செய்யுளைக் காட்டிலும் வசன மூலமாக ஜனங்கள் விஷயங்களை மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ள இயல்வதுதான்.
ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான வசன நூல்கள் பல துறைகளிலும் இயற்றப்பெற்று வெளியாகி வருகின்றன.
என் இளமை முதல் என் ஞாபகம் முழுவதும் செய்யுள் நூல்களிலேயே ஊன்றியிருந்தமையால் வசன நூல்களில் என் கருத்து அதிகமாகச் செல்லவில்லை. ஆயினும் சில வருஷங்களாகப் பல பத்திரிகைக்காரர்கள் தூண்டவே என் அனுபவத்தில் கண்ட விஷயங்களையும் நான் அவ்வப்போது தெரிந்து கொண்டவற்றையும் என் ஞாபகத்திலுள்ளவற்றையும் கட்டுரைகளாக எழுதிவரத்தொடங்கினேன். அவற்றைப் படித்த அன்பர்கள் மிகவும் பாராட்டிக் கடிதமெழுதினார்கள். அதனால் மேலும் மேலும் எழுத எனக்கு ஊக்கமுண்டாயிற்று. வசன நூல்களை ஜனங்கள் மிக்க ஆவலுடன் படிக்கிறார்களென்பதையும் அறிந்து கொண்டேன். அதனால் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளையெல்லாம் சிதறிப் போகாமிலிருப்பதற்காகத் தொகுத்து 'நான் கண்டதும் கேட்டதும்', 'புதியதும் பழையதும்', 'நல்லுரைக் கோவை' என்ற பெயர்களையாமைத்துத் தனிப் புத்தகங்களாக வெளியிட்டேன். "நினைவு மஞ்சரி" என்ற இத்தொகுதியும் அவற்றைப்போன்ற ஒன்றாகும். இதில் 24 விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் மணிமேகலையும் மும்மணியுமென்பது தினமணி வருஷமலரிலும், ஆவலும் அதிர்ஷ்டமும், கிர்ர்ர்ரனி* என்பவை ஹநுமான் ஆண்டு மலர்களிலும், பெற்ற மனம்* என்பது மணிக்கொடியிலும், பெரிய திருக்குன்றம்* சுப்பராமையரென்பது சிலபஸ்ரீயிலும், தாய் நாடு என்பது ஆனந்த போதினி வெள்ளி விழாமலரிலும் வெளிவந்தவை; ஏனையவை கலைமகளில் வெளிவந்தவை.
தமிழ்நாட்டார் இவ்வெளியீட்டையும் ஆதரித்து உதவுவார்களென்று நம்புகிறேன்.
இங்ஙனம், வே. சாமிநாதையர்.
'தியாகராஜ விலாசம்' திருவேட்டீசுவரன் பேட்டை. 15-8-1940.
---------------------------------------------------------
நினைவு மஞ்சரி
1. கடல் கடந்துவந்த தமிழ்
சீவக சிந்தாமணியை நான் முதன்முதல் 1887-ஆம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அன்புடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலிருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுல கத்தில் அந்த நூல் உண்டாக்கிய இன்பக்கிளர்ச் சிக்கு அடையாளமாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ்நூலாராய்ச் சியில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று.
அயல் நாட்டிலிருந்து 1891-ஆம் வருஷம் ஏப்ரில் மாதத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் நகர முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப்பட்டிருந்தது. பாரிஸிலிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக்குத்தான் வியப்பு உண்டாகாது? அந்தக் கடி தத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவுகடந்தது. அக் கடிதம் வருமாறு:-
SOCIETE HISTORIQUE
CERCLE St. SIMON Parris la April 3d 1891.
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசுமா நகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன: சிந்தா மணியாஞ் சிறப்புடைய காப்பியமே பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேனே சிலப்பதிகாரமுதற் சீர்நூல்கள் நான்கு மளித்தலா மென்மரறைந்து. நீர் 1887-ஆம் ஆண்டி லச்சிற் பதிப்பித்த சிந்தாமணி யைக்கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த வுலகோர்க்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்க ளச்சிற் பதிப்பித்தற் குரியவா யுண்டென் றும் உமக்கு நாமெழுத வேண்டுமென் றெண்ணிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களிகூர்ந்து வாழ்வோ மெப்போ தென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையா பதியென்னும் வேறு நாற்பெருங்காப்பியங்கள் பரிசோதித் துக் கொடுத்தவப்போதே சொல்லுவோம்.
சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற் காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோ மானா லிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்த ரெல்லோருங் கேட்போர்.
மணிமேகலையோ வென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழைய வெழுத்துக்களறியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளு மெழுதாமல் விட்டான். ஆதலினாலிந்தப் பிரதி படித்தற் குரிய தல்லது.
சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலின்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசுமா நகரத்தில் printing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம்.
எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக் கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம்.
சுவாமியுடைய கிருபையெல்லாமும் மேலே வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம்.
Prof. J. Vinson
பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வளவு ஊறியுள்ளதென்பதை அக்கடி தம் நன்றாக வெளிக்காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந்தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.
அதனை எழுதிய ஜுலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந்நகரத்தில் என்ன என்ன ஏட்டுச்சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென்பதையும் எழுதும்படி வேண்டினேன்.
அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அனபர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சி யுற்றேன். ஜூலியன் வின்ஸோனுடைய தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக் காலத்தில் வின்ஸோன் தமிழ் படித்தாரென்றும் தெரியவந்தது. வின்ஸோன் பாரிஸ் ஸர்வகலாசாலை யில் கீழ்நாட்டுப் பாஷைகளுக்கு ஆசிரியராக இருந்து விளங்கினார்.
நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிடும்பொருட்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். அந்நூல்களின் உரைச் சுவடிகள் பாரிஸில் கிடைக்குமா வென்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு:
Paris la May 7th 1891
எனதன்பிற்குரிய மகா சாஸ்திரிகளே,
நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகித மடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறே னென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிற தென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத் துப் பிரதியுண்டோ வென்றும் கேட்கிறீர்.
அதுக்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.
Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலை யிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க்கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த்தெரியும். அவைகளின் list or catalogue பண்ணினோ மானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.
பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திர் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்கத்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலு மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப்பிரதியாகும். நாம் அதைக் கடுதாசியி லெழுதினோம், நங்கட சிறு புத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்.
நாமிங்குத் தமிழைப் படித்தோ மல்ல. நாம் பிள்ளையா யிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவு மெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம்.
இங்ஙனம், Julien Vinson அன்புடையவன்
உரை குறையதாயினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்!!
அக்கடிதத்தைக் கண்டவுடன் மணிமேகலையிற் சில பகுதிகள் எழுதியனுப்ப வேண்டுமென்று அவருக்கு எழுதினேன். அவர் மிகுந்த ஊக்கத்தோடு அந்நூலிலுள்ள பதிகத்தை மாத்திரம் எழுதியனுப் பினார். முற்றும் எழுதி அனுப்ப அவர் சித்தமாக இருந்தார். பார்த்தவரையில் அந்தப் பிரதி என் ஆராய்ச்சிக்கு உதவியாக இராதென்று தோற்றியதால் அவரை மேலும் சிரமப்படுத்த வேண்டா மென்று நிறுத்திக்கொண்டேன். அவர் அனுப்பிய பாட்டுக்கள் இலக்கணப் பிழையின்றி இருந்தன.
அப்பால் அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் பல. ஒவ்வொரு கடிதத்திலும் பழைய தமிழ் நூல்கள் வெளிவர வேண்டுமென்பதில் அவருக்கிருந்த ஆவலைப் புலப்படுத்துவார். பிரெஞ்சு பாஷையில் அவைகளை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம்.
சிந்தாமணியின் சுருக்கமொன்றைப் பிரெஞ்சு பாஷையில் எழுதியிருந்தார். அப்புத்தகத்தை அவர் எனக்கு அனுப்பினார். அதை நான் ஆங்கிலப் புத்தகமென்றெண்ணிக் கும்பகோணம் காலேஜில் முதல் ஆசிரியராக இருந்த ஸ்ரீமான் ராவ் பகதூர் ஸாது சேஷையரிடம் காட்டினேன். அவர் அது பிரெஞ்சு பாஷையென்றும் பிரின்ஸிபாலுக்குக் காட்டினால் படித்துச் சொல்லுவாரென்றும் கூறினார்.
அப்போது பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே.பி. பில்டர்பெக் துரையவர்களிடம் அதை உடனே காட்டினேன். அவர் அதில் வின்ஸோன் துரை என்னை விசேஷமாகப் பாராட்டி யுள்ளாரென்று எடுத்துக் கூறி, "உங்களால் இந்தக் காலேஜுக்கு ஒரு கௌரவம்" என்றார். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்க் கல்வியுடையாரோடு பழகித் தமிழாராய்ச்சி செய்து வருவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் புலப் படவில்லை. அயல் நாட்டில் ஒரு துணையுமின்றித் தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியன் வின்ஸோனுடைய தமிழன்புதான் எனக்கு மிகவும் சிறந்ததாகத் தோற்றியது.
(இங்கே ஸ்ரீமான் ஜே. பி. பில்டாபெக் படம் உள்ளது.)
என்னுடைய நூற்பதிப்புக்களை மிக்க அன்போடு வின்ஸோன் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். அடிக்கடி என்ன வேலை நடந்து வருகிற தென்று விசாரித்து எழுதுவார். நான் அனுப்பும் புதிய புத்தகங்களை உடனே ஆழ்ந்து படித்து மகிழ்ந்து என் முயற்சியைப் பாராட்டி வரைவார். இன்ன இன்ன விஷயங்களை நூதனமாக அறிந்து கொண்டேனென்று அறிவிப்பார்.
சிலப்பதிகாரப் புத்தகம் எப்பொழுது வெளிவரு மென்று அடிக்கடி கேட்டு வந்தார். அது வெளி வந்தவுடன் அவருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு அவர் அடைந்த இன்பத்துக்கு எல்லையில்லை. என்னைப் பாராட்டி அகவலாக ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு.--
குருவே துணை
(ஆசிரியப்பா)
இளங்கதிர் ஞாயி றிருடொறு நீக்கியபின்
விளங்கிடைச் சங்கெறி வெண்டிரைக் கடல்சூழ்
மாநில மதனில்வாழ் மறைமிகு சோழப்
பூநிலத் தலர்ந்த புகார்நக ரத்துக்
கோவலன் கண்ணகிதங் கூறரு மன்பொடு
பாவல முடையாட்குப் பற்பொருட் பரத்தலு
மாங்கவன் றுயரமு மணிகிளர் சிலம்பு
வாங்குபு போயது மதுரை யிற்கொலைப்
படலு முதலிய பறைதருஞ் சரிதை
யடல்வினைப் பயனெறி யமைபொரு ளின்பம்
வீடெனயாந் தெளிவுற வின்மொழிக் காப்பியஞ்
சிலப்பதி காரஞ் சிறந்த பெயரா
லுலகெலா மறிய வொளிதரு சென்னைக்கண்
அச்சிட வளர்த்தீ ரடைந்த பெரும்புகழ்
மாசிலா நாமகண மதிதெரிந் திசைக்கு
மொருபே ரகத்திய னுருக்கொண்டு
மருளுடை மணமிசை வந்துதோன் றினானென.
Julien Vinson 52, Parris, 8 June 1893
புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார்.
(வின்சன் அவர்கள் கைப்பட தமிழில் எழுதிய கடிதத்தின் நகல் படமாக இங்குள்ளது)
கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளில் அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரெஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் எழுதியிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார்.
ஏட்டுச்சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ்நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!
இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி வி்ட்டேன்.
வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்த தில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப்பார்த்தபோது வில்வ வனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப் பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ் நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பற்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.
அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மை யென்று தெரியவந்தது. அப்போது,
"பக்குவ மாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கர ணம்மெதிர பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி யலுத்துவந்த
குக்கலை யாண்டருள் வில்வவனத்துக் குயிலம்மையே "
என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்துக்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வ நல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரியவந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக் குமாவென்று தேடச்செய்தேன். நல்ல காலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற் றின் உதவியால், கடல்கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்துகொண்டேன்.
அந்தப் புராணம் வீரராகவரென்னும் பெய ருடைய ஒரு புலவரால் இயற்றப்பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்ற போது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலயதரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப்பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், "இது மிகப் பழைய தலம். தேவா ரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்புஸ்தலம் இதுதான்" என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சி யுற்றேன்.
வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சி யடைந்தார். அவர் தமிழ் இலக்கண மொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.
----------
வில்லைப்புராணம் 1940-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் ம-ள-ள-ஸ்ரீ ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளையவர்களுடைய பொருளுதவியைக்கொண்டு குறிப்புரை முதலியவற்றுடன் என்னால் பதிக்கப் பெற்றுள்ளது.
ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் புத்தகமொன் றை அனுப்பி, 'இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்' என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியாராகவும் அவர் இருப்ப தை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும், என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ (Marquis De Barrique Fontanneu) என்பது.
1902-ஆம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழநாட்டுக் கலைஞர் மகாசபை (On- entalists' Congress)யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக் கொண்டுவரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரெஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப்கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரை யென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதெனபதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார்.
அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது.
நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், "இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?" என்று கேட்டார். நான், "என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்" என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம் போகும் மகா சபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப்பற்றிய கட் டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அநுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப் படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:
தஞ்சாவூர் , 6 அக்டோபர், '02
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாதைய்யரவர்களுக்கு அனேக வந்தனம்.
நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும் போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப்படுத்த எனக்கு மனதில்லை.
ம-ள-ள-ஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும் போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப்புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக் கொண் டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம்.
அதின் சாராம்சத்தை அறிந்து கீழநாட்டுப் பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு (Orientalists' Congress) எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தீர்களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன்.
நான் தங்கள் சினேகிதரும் என உபாத்தியாயருமாகிய ம-ள-ள-ஸ்ரீ வின்சோன் துரை (M.Vinson) பேரைச் சொல்வித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன்.
சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப் பாஷையின் பெருமையையும் வெளிப்படுத்தவுமே இந்த உப காரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்.
தங்களுடைய அபிமானத்தை எதிர்பார்க்கும்,
Marquis De Barrique Fontainieu
நான் மதுரை இராமேசுவரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுதவேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும்.
அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தைப் பிரதி செய்ய இயலவில்லை-யாதலின் என்னிடமுள்ள காகிதப்பிரதியையே அனுப்பினேன். அவர் அதனை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.
அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதியிருந் தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தன் மாணாக்கரைப்பற்றி எழுதினார்.
ஸ்ரீ பொண்டேனூ தம் கடிதத்தில் 'உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்' என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ஆம் ௵ ஜனவரிமாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்துவருவதை நன்குமதித்து ஒரு நன்மதிப்புப்பத்திரம் ( Certificate of merit in recognition of researches and work in connection with the ancient Tamil manuscripts) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசிய தன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன் முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக் கொண்டேன்.
எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிட மிருந்து 1910-ஆம் வருஷத்திற்குப்பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும் போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசிரியரையும் தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப்புராணம் இன்னும் வெளிப்படவில்லை.
ஜுலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்களாவது எழுதியிருப்பார். அவர் இல்லை. ஆனல் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக் கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டி லும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.
2. மணிமேகலையும் மும்மணியும்
சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம் பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தெரிந்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் மணிமேகலையைப்பற்றி நச்சினார்க்கினயர் இரண்டிடங்களில் (செய்யுள், 1625, 2107) கூறுகின்றார். ஓரிடத்தில் மணிமேகலை யிலிருந்து சில அடிகளையே எடுத்துக் காட்டி யிருக் கின்றார். வேறு சில உரைகளிலும் பிரபந்தங்களி லும் உள்ள குறிப்புக்களால் மணிமேகலை யென்பது ஒரு பழைய நூலென்பதும், அது பழைய நூலாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் மிக வும் பாராட்டப் படுவதென்பதும் வர வர உறுதி பெற்றன. சேலம் இராமசுவாமி முதலியாரவர்கள் அந்நூலின் மூலப் பிரதி யொன்று தந்தார். ஆசை உண்டாகி விட்டால் ஊக்கமும் முயற்சியும் தொடர்ந்து உண்டாகின்றன. வேறு மணிமேகலைப் பிரதிகளைத் தேடித் தொகுத்தேன். சில சுவடிகள் கிடைத்தன. காகிதத்தில் ஒரு பிரதி செய்து வைத்துவிட்டேன்.
சிந்தாமணியை நான் சோதிக்கையில் இடையே மணிமேகலையையும் பார்ப்பேன். அதன் நடை சில இடங்களால் எளிதாக இருந்தது. ஆனாலும், சில சில வார்த்தைகள் நான் அதுகாறும் கேளாதனவாக இருந்தன. 'இந்நூல் இன்ன கதையைக் கூறுவது, இன்ன மதத்தைச் சார்ந்தது' என்பவற்றில் ஒன்றேனும் எனக்குத் தெளிவாகவில்லை.
சிந்தாமணி பதிப்பித்து நிறைவேறியவுடன் மணிமேகலை ஆராய்ச்சியில் நான் கருத்தைச் செலுத்தினேன். பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் அப்போது நடைபெற்று வந்தது. மணிமேகலை விஷயம் தெளிவுபடாமையின் பத்துப்பாட்டையே முதலில் வெளியிடலானேன்.
புதிய புதிய பரிபாஷைகளும், புதிய புதிய தத்து வங்களும் மணிமேகலையில் காணப்பட்டன. நான் பார்த்த அறிவாளிகளை யெல்லாம் சந்தேகம் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். தெரியாததைத் தெரியாதென்று ஒப்புக் கொண்ட பெரியோர் சிலர்.
சிலர் தெரியாதென்று சொல்லிவிட்டால் தங்கள் நன்மதிப்புக்குக் கேடு வந்து விடுமென்ற கருத்தினால் ஏதோ தோன்றியபடி யெல்லாம் சொன்னார்கள். தங்களுக்கே தெளிவாகாத விஷயமாதலின் ஒரே விஷயத்தை ஒருவரையே வெவ்வேறு சமயத்தில் கேட்டால் வெவ்வேறு விதமாகச் சொல்லத் தொடங்கினர். ஒரே விஷயத்தைக் குறித்துப் பலர் பல சமாதானங்களைச் சொன்னார்கள். இவ்வாறு தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு அமைதியே உண்டாகவில்லை. 'நாம் மணிமேகலையைத் துலக்க முடியாதோ!' என்ற சந்தேகம் என் மனத்திற் குடிபுக ஆரம்பித்தது. 'தமிழ் மகள் தன் மணி மேகலையை அணிந்து கொள்ளும் திருவுள்ளம் உடை யவளாயின், எப்படியாவது நற்றுணை கிடைக்கும்' என்ற நம்பிக்கை மாத்திரம் சிதையாமல் இருந்தது.
அந்தக் காலத்தில் நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். என் கையில் எப்பொழுதும் கையெழுத்துப் பிரதியும் குறிப்புப் புத்தகமும் இருக்கும். ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அந்தப் பிரதியைப் புரட்டிப் பார்ப்பதும், குறிப்பெடுப்பதும் எனது வழக்கம்.
ஒரு நாள் ஒருமணிக்கு மேல் இடை வேளையில் உபாத்தியாயர்கள் தங்கும் அறையில் உட் கார்ந்து மணிமேகலைப்பிரதியை வழக்கம்போல் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கே மற்ற உபாத்தியாயர்களும் இருந்தார்கள். அப்போது என்னோடு அதிகமாகப் பழகுபவரும் எனக்குச் சமமான பிராயம் உடையவருமாகிய ஸ்ரீ சக்கரவர்த்தி ஐயங்கா ரென்னும் கணித ஆசிரியர், " என்ன? அறுபது நாழிகையும் இந்தப் புஸ்தகத்தையே வைத்துக் கொண்டு கஷ்டப் படுகிறீர்களே?" என்று கேட்டார்.
"என்ன செய்வது? விஷயம் விளங்கவில்லை. நிதானமாகப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை" என்றேன் நான்.
"புரியாதபடி ஒரு புஸ்தகம் இருக்குமோ?"
" தமிழில் அப்படித்தான் பெரும்பாலும் இருக்கின்றன. புரியும்படி பண்ணலாம். அதற்குக் காலம் வரவேண்டும்."
" இதில் என்ன புரியவில்லை?"
"எவ்வளவோ வார்த்தைகள் தெரியாதனவாக இதில் இருக்கின்றன; அவை மற்றப் புஸ்தகங்களிலே காணப் படவில்லை. ஜைனம், சைவம், வைஷ்ணவம் ஆகிய மதநூல்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. பாருங்கள்: அரூபப் பிடமராம் உரூபப் பிடமராம். இவையெல்லாம் புதிய பாஷை மாதிரி இருக்கின்றன. பிடமரென்ற வார்த்தையை இதுவரையில் நான் கேட்டதில்லை."
இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் ஓரத்திலிருந்து, " அதைப் பிரமரென்று சொல்ல லாமோ?" என்று ஒரு கேள்வி பிறந்தது. அந்தப் பக்கம் பார்த்தேன். காலேஜில் ஆசிரியராக இருந்த ராவ்பகதூர் மளூர் ரங்காசாரியாரவர்களே அப்படிக் கேட்டனரென்பதை உணர்ந்தேன்.
"எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது பிடமரோ, பிரமரோ தெரியாது" என்று பதில் கூறினேன்.
அவர் தம் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் குனிந்தபடியே படித்துக் கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் படித்த வண்ணமாகவே இருப்பார். ஒரு கணப்போதையும் வீணாக்க மாட்டார். அவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது கவனித்தால், அந்தப் புத்தகமும் அவரும் வேறாகத் தோற்றாதபடி அதிலே அமிழ்ந்து தம்மை மறந்து ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அதுதான் அவ ருக்கு ஆனந்தம்; அதுதான் அவருக்கு யோகம்!
என்னுடைய விடையைக் கேட்டு விட்டுச் சிறிது நேரம் தலை நிமிர்ந்தபடியே யோசித்தார்; பிறகு, "எங்கே, அந்தப் பாகத்தை படித்துக் காட்டுங்கள்" என்றார்.
நான் என்னுடைய பிரதியை எடுத்துக் கொண்டு அவர் பக்கத்திற்குப் போனேன். "இவரை விட்டு விடாதீர்கள். இவரிடம் அபூர்வமான சரக்குகள் இருக்கும்" என்று என் நண்பர் சக்கரவர்த்தி ஐயங்கார் எனக்கு ஊக்கமூட்டினார். நான் கையெழுத் துப் பிரதியைப் பிரித்து வாசிக்கலானேன்:
"நால்வகை மரபினரூபப் பிடமரும்
நானால் வகையினுரூபப் பிடமரும்
இருவகைச் சுடரு மிருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்..."
என்று வாசித்து நிறுத்தினேன். அவர் காது கொடுத்துக் கேட்டார்; சிறிது நேரம் யோசித்தார்.
அவர் முகத்தில் சிறிது ஒளி உண்டாயிற்று; என் னுடைய மனக் கலக்கமாகிய இருட்பிழம்பில் அந்த ஒளி ஒரு மின்னலைப் போலவே தோன்றி நம்பிக்கை உண்டாக்கிற்று.
(இங்கே ராவ்பகதூர் ம. ரங்காச்சாரியவர்களின் படம் உள்ளது.)
"வந்து-, இந்தப் புஸ்தகம் பௌத்த மத சம்பந்தமுள்ள தாகத் தோணுகிறது" என்று அவர் மெல்லக் கூறினார்.
எனக்கு ஒரு துளி அமிர்தம் துளித்தது போல இருந்தது.
"எப்படி?" என்று கேட்டேன்.
"அதுவா? அவர்களிலேதான் இந்தப் பிரம் மாக்களில் இத்தனை வகை சொல்லுகிறார்கள். பிடமரென்பதற்குக் பிரமரென்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அவர்கள் லோகக் கணக்கு, அது சம்பந்தமான ஏற்பாடுகளெல்லாம் தனி" என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு உள்ளத்துக்குள்ளே குபீர் குபீரென்று சந்தோஷ ஊற்றுக்கள் எழுந்தன. ரகரத்துக்கு டகரம் வரலாமென்று எனக்குத் தோற்றியது; முகரியென்பது முகடியென்று வருவது என் ஞாபகத்துக்கு வந்தது.
அப்போது அவர், " இன்னும் இப்படி இருப்பவைகளையும் படித்துக் காட்டினால், எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். வெள்ளைக்காரர்கள் நிறையப் புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பார்த்தும் சொல்லுகிறேன்" என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அசோக வனத்தில் இருந்த சீதை இராமபிரானின் கணையாழியைக் கண்டபோது எத்தகைய மகிழ்ச்சியை அடைந்தாளோ, அத்தகைய மகிழ்ச்சியை நான் அடைந்தேனென்றே சொல்லலாம்.
'இனி இராமன் வந்து நம்மை மீட்பான்; அச்சமில்லை' என்று சீதை நினைத்தாள்; நானும் இனி மணிமேகலையை உருவாக்கிவிடலாம்; அச்ச மில்லை' என்று நினைத்தேன்.
வழி கண்டு கொண்டால் அப்புறம் விடுவேனா ? அன்று முதல் காலையிலும், மாலையிலும் ரங்காசாரியார் வீட்டிற்குப்போக ஆரம்பித்தேன். மணிமேகலை முழுவதையும் சிக்கறச் செய்துவிட வேண்டுமென்ற பேராசை என்னை ஆட்கொண்டது.
அவருடன் பழகப்பழக அவருடைய விரிந்த அறிவும் பல துறைப் பயிற்சியும் தெளிவான ஞான மும் பொறுமையும் பரோபகாரத்தன்மையும் எனக்கு நன்கு விளங்கின. அவருடைய உதவி எனக்குக் கிடைத்திராவிட்டால் மணிமேகலையை நான் வெளி யிடுவதோ அதற்கு உரை எழுதுவதோ ஒன்றும் நிறைவேறாமற் போயிருக்கும். பௌத்த சமய சம்பந்தமான விஷயங்களை யெல்லாம் அம்மகோபகாரி மிகவும் தெளிவாக எனக்கு எடுத்துரைத்தார். அந்த அறிவோடு மணிமேகலையை ஆராய்ந்தபோது எனக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் நிலையும், பௌத்த பரிபாஷைகளும் விளங்கலாயின. மணிமேகலையில் சில இடங்களில் உள்ள கருத்துக்களை நான் சொல்லும்போது ரங்காசாரியார் பிரமித்துப் போவார்; சில சொற்களின் மொழி பெயர்ப்பைக்கேட்டு ஆச்சரியப்படுவார்; "எவ்வளவு சிரமப்பட் டிருக்கிறார்கள்! எவ்வளவு அழகாகச் சொல்லியிருக் கிறார்கள்!" என்று அடிக்கடி விம்மிதம் அடைவார்.
என்னிடம் இருந்த நீலகேசித்திரட்டின் உரை, வீரசோழிய உரை, சிவஞான சித்தியார்-பரபக்கம் ஞானப் பிரகாசர் உரை என்பவற்றில் வந்துள்ள பௌத்த சமய சம்பந்தமான செய்யுட்களையும் செய்தி களையும் தொகுத்து வைத்துக்கொண்டேன். மணி மேகலை ஆராய்ச்சியில் அவையும் உபயோகப்பட்டன.
ரங்காசாரியார் முன்னரே தாம் படித்த நூல்களில் இருந்த விஷயங்களை எனக்குச் சொன்னார். எனக்காகப் பல புதிய புத்தகங்களைப் படித்துச் சொன்னார். நானும் சில ஆங்கிலப் புத்தகங்களை அவர் விருப்பப்படி விலைக்கு வருவித்துக் கொடுத்தேன் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிட்ஸ் முதலிய அறிஞர்கள் எழுதி யுள்ள விஷயங்களை யெல்லாம் அவர் படித்துக்கூறக் கூற நான் உணர்ந்து கொண்டேன். மணிமேகலையில் நிலவுகின்ற பௌத்த உலகக் காட்சிகள் எனக்கு ஒவ்வொன்றாகத் தெளிவாயின.
ஒன்றரை வருஷ காலம் ரங்காச்சாரியார் கும்பகோணத்தில் இருந்தார். அந்தக் காலங்களில் ஓய்வு உள்ள போதெல்லாம் அவருக்குச் சிரமங் கொடுத்துக் கொண்டே வந்தேன். அப்பால் அவரைச் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜூக்கு மாற்றிவிட்டார்கள். பிறகும் விடுமுறைக் காலங்களில் சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்து அவரைக் கண்டு விஷயங்களைக் கேட்டுக் குறிப்பெடுக்கலானேன். இப்படி ஐந்தாறு வருஷங்கள் பௌத்த மதத்தைப் பற்றிய செய்திகளை நான் அறிந்துவந்தேன்; ரங்காசாரியாரவர்கள் எனக்கு உபாத்தியாயராக இருந்து கர்பித்தார்களென்று சொல்வது பின்னும் பொருத்தமாக இருக்கும்.
'இனிமேல் மணிமேகலையை வெளியிடலாம்' என்ற துணிவு எனக்கு உண்டாயிற்று. அதற்குப் பழைய உரை இருப்பதாகத் தெரியாமையால் நானே என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஒரு குறிப்புரை எழுதினேன். அதனோடு பௌத்த சமயத்தைச் சார்ந்த மும்மணிகளாகிய புத்தன், பௌத்த தர்மம், பௌத்த சங்கம் என்னும் மூன்றையும்பற்றிய வரலாற்றையும் எழுதினால் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கு மென்று ரங்காசாரியார் வற்புறுத்திக் கூறினார். அங்ஙனமே அதனையும் அவர் உதவியினால் எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலானேன்.
புத்த சரித்திரம் முதலியவற்றை எழுதியபோது இடையிடையே பல பழைய தமிழ்ச்செய்யுட்களைப் பொருத்தியிருப்பதைக் கேட்டு ரங்காசாரியார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. "அந்தக் காலத்திலே இவ்வளவு பிரசித்தமாக இருந்த விஷயங்கள் இப்போது அழிந்து போயினவே!" என்று அவர் வருந்தினார்.
மணிமேகலை 1898-ஆம் வருஷம் பதிப்பித்து நிறைவேறியது. அதன் முகவுரையில் ரங்காசாரியார் செய்த மகோபகாரத்தை நான் குறித்திருக்கிறேன்.
தமிழ்மகள் தன மணிமேகலையை இழந்திருந் தாள். அதனைக் கண்டெடுக்கும் பேறு எனக்கு வாய்த்தது. ஆயினும், அதிற் பதித்திருக்கின்ற ரத் தினங்களின் தன்மை இன்னதென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனை ரங்காசாரியார் அறிவித்தார். மணிமேகலை மீட்டும் துலக்கப் பெற்றுத் தமிழ்மகளின் இடையை அலங்கரித்து நிற்கின்றது.
இதனை எழுதும்போது என் மனத்திலுள்ள நன்றியறிவு முழுவதையும் உணர்த்த எனக்குச் சக்தி யில்லை. அதனை நேருக்கு நேர அறிந்துகொள்ள ரங்காசாரியாரும் இல்லை. ஆனாலும் என்ன? அவர் பெயரை இன்றும் நான் நினைந்து நன்றியறிவுடன் வாழ்த்துகின்றேன்; என் மனத்தில் அவர் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்.
3. செண்டலங்காரர்
வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர் களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற் றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவர வில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங் கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.
நன் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.
சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளை-யிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.
"தண்டார் விடலை தாயுரைப்பத்
தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன்குலைய
மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
கொண்டா ளந்தோ கொடியாளே"
என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. "தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்" என்பது இச்செய்யுளின் பொருள்.
திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில்,
"தீண்டாத கற்புடைய செழுந்திருவை"
என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.
'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி'
என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப் பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும் கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்?' என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.
திருவிளையாடற்புராணத்தில் சோமசுந்தரக் கடவுள் உக்கிரகுமாரருக்கு வேல் வளை செண்டு வழங்கியதாக ஒரு திருவிளையாடல் இருக்கிறது. அங்கே கூறப்படும் செண்டு எது? அந்தச் செண்டைக் கொண்டு அவர் மேருவை எறிந்ததாகப் புராணம் கூறுகின்றது. பலர் அதற்குப் பந்தென்றும், பூச்செண்டு போன்ற ஆயுதமென்றும் பொருள் கூறினர். ஐயனார் திருக்கரத்தில் செண்டு இருக்கிறதென்றும், கரிகாற்சோழன் இமயமலையைச் செண்டாலடித்துத் திரித்தானென்றும் சில செய்திகள் நூல்களால் தெரிந்தன. அந்தச் செண்டுகள் யாவை? பந்தா? மலர்ச்செண்டா? செண்டு போன்ற ஆயுதமா? எல்லாம் சந்தேகமாகவே இருந்தன. நான் பலரைக் கேட்டுப் பார்த்தேன். சமயம் போல அவர்கள் விடை பகர்ந்தார்கள்.
சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.
யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.
ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.
தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.
கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.
அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.
" ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.
" இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.
" சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.
அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.
4. 'இடையன் எறிந்த மரம்'
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ஆம்வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அநுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் செல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவித மான சௌகரியங்களும் கிடைப்பதுபற்றி நன்றி யறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத் துரைத்தான். கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட் டினான்.
அவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளை வித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப் பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறிய வற்றையெல்லாம் மனத்திற் பதித்துக் கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளை களையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன்.
அவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அநுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தகாக்க் கேட்டுவந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.
"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும் போது, 'நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற' என்று வாழ்த்துவார்கள்" என்றான் அவன். எருமை கிடாரிக் கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாய்க் குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும்.
அந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான்.
இடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயித் துக் காட்டினான்; "ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டு வோம். நாங்கள் வெட்டும்போது கிளை முதுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழை களைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்" என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.
அவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும் போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும்! என் உள்ளத்திலோ வேறு விதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்கக் என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்யத்தொடங்கியது.
'இடையர்கள் ஆடு மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.
நம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளா கப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்து விட்டோம்; நம்முடைய அளவை நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாகி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். "முடியாது" என்று கடைசியில் சொல்வது நியாமாக தோன்றவில்லை . இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம் 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம். உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை.
இந்த விஷயத்தையே பதினேண்கீழ்கணக்கு நூலுக்குள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.
*"அடையப் பயின்றாசொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின்-படைபெற்
றடைய அமாத்தகட் பைந்தொடி அகஃதால்
இடை னெரிந்த மரம்."
-------------
"பயின்றா - பழகினவா. ஆற்றுவரா - செய்வாராக, ஒட்டின - சம் மதித்தால். பைந்தொடி : விளி. எறிந்த - வெட்டிய.
இடையன் விரித்துரைத்த காட்சியும் பழ மொழி செய்யுளும் ஒருங்கே என் மனதில் ஓடின.
அவ்வாறு வெட்டும் போது கிளை அடியோடி விழும்படி வெட்டினால் என்ன ?" என்று நான் கேட்டேன்.
"அப்படி வெட்டினால் அந்த கிளை அப்பால் உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ, மரத்தோடு ஒட்டிக்கொண் டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்."
'இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்தவாறே,
" இடைமகன் கொன்றவின்னா மரத்தினேன்"(1914)
என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.
சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையை, "நான் என் தந்தை மரணமடையப் பின் பிறந்தேன்; அன்றியும் நீ துன்பத்தில் தங்கவும் நட்புடையவர்கள் மனம் வருந்தவும் இடைமகன் கொன்ற இன்னா மரம் போல இருந்தேன்" என்னும் சொற்களால் விளக்குகிறான். நச்சினார்க்கினி யர் அந்த உவமையை விரித்து, 'உயிருடன் இருந் தேனாய்ப் பகையை வென்றேனுமல்லேன், உயிரை நீத்தேனுமல்லேனென்று கருதி மரத்தினேனென் றான்' என்று விசேஷவுரை எழுதுகின்றார். அவ் வுரை இடையன் கொன்ற மரத்தின் தன்மையை நன்கு விளக்குகிறது.
அந்த இடையன் சொல்லிவந்த செய்திகள் இலக்கியப்பொருளைத் தெளிவாக விளக்கின. இலக் கியங்களில் இடையர்களைப்பற்றி வருணிக்கும் இடங் களில், 'ஒடியெறிதல்' என ஒரு தொடர் வரும். 'ஒடிய எறிதல்' என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறிவார்களே அன்றி அற்றுவிடும்பட எறியார் என்பதை அத்தொடர் குறிப்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்தேன்.
"அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டுவது கஷ்டமல்லவா?"என்று நான் கேட்டேன்.
"அது கைப்பழக்கம். இல்லாவிட்டால் பழ மொழி வருமா?" என்றான் அவன்.
"பழமொழியா? என்ன அது?" என்று ஆவ லுடன் வினவினேன்.
"'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற பழமொழியைத்தான் சொல்லுகிறேன். எங்கள் கைப்பழக்கத்தை அந்தப் பழமொழி தெரிவிக்கிறதே."
நான் ஸ்தம்பித்துவிட்டேன் என்ன அது? சொல்"நான் மறுபடியும் கேட்டேன்.
'இடையன் வெட்டு அறாவெட்டு'என் பதை மறுபடியும் அவன் சொன்னான். அது காறும் அந்தப் பழமொழியை நான் கேட்டதே இல்லை. ஆதலின் அதைக் கேட்டபோது எனக்குப் பெரிய சந்தோஷம் உண்டாயிற்று. இலக்கியங் களிலே 'இடையன் எறிந்த மரம்'என்பதைப் படித்தவுடனே கருத்து விளங்காது. அதற்கு விசேஷ உரை சொல்லி விளக்கினால்தான் தெரிய வரும். ஆனால் அவன் கூறிய அந்தப் பழமொழி இலக்கியத்திற் கண்ட தொடர்மொழியாகிய பூட் டைத் திறக்கும் திறவுகோலாக விளங்குகிறது.
'இடையன் வெட்டு அறாவெட்டு'என்ற பழ மொழி எவ்வளவு சுலபமாகவும் சுருக்கமாகவும் இடையனது கைத்திறமையையும், மற்றவர்கள் வெட்டும் வெட்டிற்கும் அவனது வெட்டிற்கும் உள்ள வேற்றுமையையும் தெரிவிக்கின்றது!
*"படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற னருளே"
(பெரிய திருமொழி)
என்ற பாசுரத்தில் ஆழ்வார் கடவுளது திரு வருளைப் பெறவில்லையே என்ற ஏக்கத்தால் மன மழிந்தும் பெறுவோமென்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் நிற்கும் நிலையை 'இடையன் எறிந்த மரத்தை' உவமையாக்கிப் புலப்படுத்து கின்றார். அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதை விட 'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற சூத் திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினாலே போதும். 'சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளை'ச் செறித்து இனிது விளக்கும் அப்பழமொழியைச் சூத்திரமென்று சொல்வதில் என்ன பிழை?
----------
*நீலம்-நீலோற்பலமலர். ஆலி-திருவாலி திருநகரியென் னும் திருமால் திருப்பதி
5. மாவிந்த புராணம்
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத் துப் பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத் துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியாரக இருந்த ராவ்பகதூர் ம.ரங்காசாரியார் அதிபராக இருந்தார். நான் சென்ன பட்டணத்துக்கு வேலையாக வந்த ஆரம்பத்தில் புதிதாக எழுதப்பெற்று வந்த அப்புத்தகசாலைத் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளின் விரிவான அட்ட வணையை அவர் என்னிடம் காட்டினார்.அந்தப் புத்தகசாலை பெரும்பொருள் செலவிட்டு அமைக்கப் பெற்றது. பலர் அதில் வேலையில் அமர்ந்து உழைத்து வந்தார்கள். தெலுங்கு,கன்னடம்,மலையாளம் இவற்றிலுள்ள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு.
புத்தகசாலைத் தலைவர் அப்புத்தக அட்ட வணையை என்னிடம் கொடுத்து, "எங்கள் புத்தக சாலையில் இந்த அட்டவணையைத் தொகுத்து எழுதி யிருக்கிறோம். இதைக் கவனித்து ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் செய்து கொடுத்தால் அநுகூலமாக இருக்கும்" என்றார். அந்த அட்டவணையில் பல தமிழ்நூல்களின் பெயர்கள் காணப்பட்டன. அப்பெயர்களிலே சில சில பிழை களும் இருந்தன.
ஏட்டுச் சுவடிகளைப் பற்றித் தெரிந்து கொள் வதில் மிக்க ஆவலுடைய எனக்கு அக்கனவான் அளித்தவேலை "கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல்' இருந்தது. அப்புத்தகசாலையில் இன்ன இன்ன சுவடிகள் உள்ளனவென்பது தெரிந்து எனக்கு ஏதேனும் உதவுமானால் பார்த்துப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
ஆதலால் அந்த அட்டவணையை ஆவலோடு பார்த்தேன். பல பிரபந்தங்கள், புராணங்கள், இலக் கணங்கள், சாஸ்திரங்கள், வைத்தியம், சோதிடம் முதலிய பலவகை நூல்களின் பெயர்களை அதிற் கண் டேன். சங்கநூல்கள் அதிகமாக இல்லாவிடினும் பிற் காலத்துநூல்கள் பல இருந்தன. அச்சிட்ட புத்தகங்க ளாக இருந்தாலும் ஏட்டுச்சுவடிகளின் உதவியால் பல அரிய திருத்தங்கள் கிடைக்கும். ஆதலால் ஏட்டுச் சுவடிகளை நான் எங்கேனும் காணும்போது, இவை அச்சிடப்பட்டவை என்று நினைத்து அலக்ஷியமாக இருப்பதில்லை. அச்சுப் பிரதிகளில் பலகாலமாகத் தீராமல் இருந்த சந்தேகங்கள் ஏடுகளிலே கண்ட பாட பேதங்களினால் தெளிவாகியதுண்டு. ஆதலின் மேலே கூறிய புத்தகசாலையிலுள்ள சுவடிகளை இயன்ற வரையில் மிகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளலா மென்று கருதினேன்.
புத்தக அட்டவணையைக் கூர்ந்து பார்த்து வந் தேன். புராண வரிசையிலே மாவிந்தபுராணம் என்ற ஒரு பெயரைக் கண்டேன். அப்பெயரை அதற்குமுன் நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; தரும புத்திரரது பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள வரலாறுகளைக் கூறுவதாகிய மாவிந்தமென்ற ஒரு நூல் உண்டு. அது மிகவும் எளிய நடையில் அமைந்தது. அதுவாக இருக்கலாமென்று முதலிலே எண்ணினேன். அப்பால், 'மாவிந்த புராணமென்று இருப்பதனால் அந்த நூல் ஒரு ஸ்தல புராணமாக இருக்குமோ' என்ற ஐயம் எனக்கு உண்டாயிற்று. மாவிந்தமென்ற ஸ்தலம் எங்கே உள்ளதென்று யோசித்தேன். அப்படி ஒரு ஸ்தலம் இருப்பதாக எனது ஞாபகத்துக்கே வரவில்லை. தேவியை விந்தாசனி என்று கூறுவதுண்டு. விந்தகிரியில் எழுந்தருளியிருக்கும் தேவியின் புகழைக் கூறும் புராணமாக இருக்கலாமோ என்று கருதினேன். வேறு சமயத்தாருக்குரிய நூலாக இருக்குமோ என்ற ஐயமும் இடையே எழுந்தது.
வசவபுராணம், சாந்திபுராணம் முதலிய வேறு மதநூல்களின் பெயர்கள் அப்போது என் ஞாப கத்திற்கு வந்தன. 'சரி, அந்தப் புத்தகத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்யவேண்டும்' என்று தீர் மானம் செய்து கொண்டேன்.
எனக்கு இருந்த ஆவலினால் விரைவில் அந்தப் புத்தகசாலைக்குச் சென்றேன். அங்கே சுவடிகளைப் பலர் பார்த்துப் படிப்பதற்கும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கும் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற் குரிய வேலைக்காரர்களும் இருப்பார்கள்.
மாவிந்த புராணத்திற்குரிய எண்ணைக் கூறி அதை வருவிக்கும்படி அங்கிருந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் ஒரு வேலைக்காரனை அனுப் பினார். அவன் தன் வழக்கப்படியே அடிமேல் அடிவைத்து அந்த்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வரச் சென்றான். எனக்கிருந்த மனோவேகத்தை அவன் கண்டானா? அவன்பால் எனக்கு அப் போது மிக்க கோபம் உண்டாயிற்று. என் செய்வது! 'புத்தகம் வராமலா போய்விடும்? ஆக்கப் பொறுத் தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?' என்று சமா தானம் செய்துகொண்டு பொறுத்திருந்தேன்.
வேலைக்காரன் கால்மணிநேரம் கழித்து ஒரு சுவடியைக் கொண்டுவந்து என் கையில் கொடுத் தான். அவசர அவசரமாக அதைப் பிரித்துப் பார்த் தேன். அதில் முற்பகுதியில் சில ஏடுகள் இல்லை. பிரித்தவுடன் முதலில் இருந்த ஏட்டைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 'மலை கல்லி எலி பிடித்தது' போல இருந்தது. நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். 'இதற்குத்தானா இவ்வளவு ஆவலோடு ஓடிவந்தோம்!' என்று என் செயலை நானே இகழ்ந்துகொண்டேன்.
"இந்த அட்டவணையைத் தொகுத்த புத்திசாலி யாரோ?' என்று அந்த அதிகாரியை வினவினேன்.
"எங்கள் புத்தகசாலைப் பண்டிதர்" என்றார் அவர்.
"பண்டிதரா?" என்று நான் வியப்போடு கேட்டேன்.
"ஆமாம்" என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
"அவரை நான் பார்க்கலாமோ?"
"ஆகா! தடையின்றிப் பார்க்கலாம்."
அவர் சொல்லியனுப்பவே பண்டிதர் வந்தார். வரும்போதே அவர் எதையும் லக்ஷியம் செய்யாத இயல்புடையவரென்று தெரிந்தது.
"இந்த அட்டவணையை எழுதியது தாங்களோ?" என்று அவரைக் கேட்டேன்.
"ஆமாம். பின் வேறு யார் எழுதுவார்கள்? நான்தான் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிரமப் பட்டுக் குறித்தேன்."
"அப்படியா! இதில் மாவிந்தபுராணம் என்று ஒரு புத்தகத்தின் பெயர் இருக்கிறதே; அந்தப் பெயரை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?"
"எல்லாம் அந்த அட்டவணையிலேயே தெளிவாக இருக்கும். புத்தகம் தானே சொல்லுமே. அதைப் பார்த்தால் எல்லாம் தெரியும்."
"அட்டவணையைப் பார்த்துத்தான் புத்தகத் தைத் தேடினேன். இதோ இருக்கிறது அந்தச் சுவடி. இதன் பெயர் மாவிந்தபுராணமென்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்."
"ஆமாம். நான்தான் நன்றாக ஆராய்ந்து ஊகித்துக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறேன்."
எனக்கு அவருடைய இயல்பைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் வந்தன.
"எதைக் கொண்டு ஆராய்ந்தீர்கள்?" என்று மீண்டும் வினவினேன்.
"இங்கே கொடுங்கள் அதை. நான் சொல்லு கிறேன்" என்று பண்டிதர் அந்தச் சுவடியை என் கையிலிருந்து வாங்கிக்கொண்டார். அதில் உள்ள செய்யுளை அவர் படித்தார்.
"மாவிந்த மென்னும் வளநாக கூற லுற்றாம்"
என்ற பகுதி முதலில் இருந்தது. அதைப் படித்துக் காட்டி, "இந்தப் பாட்டைப் பாருங்கள். இதில் மாவிந்த மென்னும் பெயர் தெளிவாக இருக்கிறதே. இது தெரியவில்லையா? இந்தப் பெயரே இது மாவிந்த மென்னும் ஸ்தலத்தின் புராணமென்பதை விளக்க வில்லையா? முதற் பக்கத்திலேயே இந்த அடையாளம் இருக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்காமல் என்னைக் கேட்கிறீர்களே" என்று அவர் கூறினார்; முன்பிருந்த்தைவிட அப்போது அவர் தொனி மிகவும் கம்பீரமாகவே யிருந்தது. என் அறியாமை யால் நான் விஷயத்தைத் தெரிந்துகொள்ளவில்லை யென்பது அவர் எண்ணம்.
அவர் பேசப் பேச எனக்குச் சிரிப்போ தாங்க முடியவில்லை. "நீங்கள் நைடதம் படித்ததுண்டா?" என்று கேட்டேன்.
"நைடதம் படிக்காமலா இருப்பேன்? நான் ஒரு பெரிய வித்துவானுடைய மருமகன்" என்று அவர் சிறிது சினக் குறிப்போடு சொன்னார். உடனே பக்கத்தில் நின்ற வேலைக்காரன் ஒருவனை அழைத் தேன்.
"அப்பா, இந்தப் புஸ்தகசாலையில் நைடத மென்ற புஸ்தகத்தின் அச்சுப் பிரதியிருந்தால் எடுத்துக்கொண்டு வா" என்றேன். அவன் அதைக் கொணர்ந்தான். அதைப் பிரித்து நாட்டுப்படலத் தின் இறுதியிலுள்ள மேற்கூறிய செய்யுளைக் காட்டினேன். பண்டிதர் அதைப் பார்த்தார்;
"கொல்லுலை வேற்க ணல்லார் கொழுநரோ டூடி நீத்த
வில்லுமிழ் கலன்கள் யாவு மிளிர்சுட ரெரிக்கு மாற்றால்
எல்லியும் பகலுந் தோன்றா திமையவ ருலக மேய்க்கும்
மல்லன்மா விந்த மென்னும் வளநகர்* கூற லுற்றாம்."
என்பது அச்செய்யுள்.
"நீங்கள் நைடதத்தைச் சரியாகப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இந்தச் சுவடியைக் கொஞ்சம் பின் னாலே புரட்டிப் பார்த்திருந்தால் உங்களுக்கே இது நளன் கதையென்று தெரிந்திருக்கும். போனது போகட்டும். நான் ஏமாற்றம் அடைந்தமாதிரி மற்ற வர்கள் ஏமாறாதபடி இந்தச் சுவடியின் பெயரை இனிமேல் நைடதமென்று மாற்றிவிடுங்கள்" என் றேன்.
"படித்ததெல்லாம் ஞாபகத்திலே இருக்கிறதா? ஆயிரத்தில் ஒன்று தவறுவது வழக்கந்தான்" என்ற முணுமுணுப்போடு அப்பணிடிதர் வேறிடஞ்சென்ற விட்டார்.
அப்பால் நான் ராவ்பகதூர் ரங்காசாரியாரவர் களிடம் சென்று புத்தக அட்டவணையை முதலி லிருந்து நன்றாகப் பரிசோதித்தே வெளியிடவேண்ட மென்று தெரிவித்தேன். அங்ஙனமே வேறோரு தக்க பண்டிதரைக்கொண்டு முழுவதையும் பரிசீலனை செய்வித்து அட்டவணையை வெளியிட்டார்கள்.
6. உத்தம சம்பாவனை
அமரவதி ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகளைத் தெரியா தார் தமிழ்நாட்டில் இரார். தென்னாட்டில் தோன்றிய ஆச்சாரிய புருஷர்களுள் அவர் ஒருவர். அவர் புதுக்கோட்டை ஸமஸ்தானத்தில் திவானாக இருந்தபோது செய்த திருத்தங்கள் பல. அவரு டைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் மிக்க சுவையுள்ளன.
இராமச்சந்திரத் தொண்டைமானென்னும் அர சரே சேஷையா சாஸ்திரிகளைத் திவானாகப் பெற்ற பேறுடையவாராக இருந்தனர்.
புதுக்கோட்டையில் தொன்று தொட்டு வருஷந் தோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெறும். வடமொழி, சங்கீதம் முதலியவற்றில் வல்ல வித்துவான்களும், வேதம், சாஸ்திரங்கள் முதலிய வற்றில் தேர்ந்த அறிஞர்களும் அங்கே சென்று தக்க சம்மானங்களைப் பெற்றுச் செல்வார்கள், அன்னதானம் விசேஷமாக நடைபெறும். நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்து கூடுவார்கள். வாக்கியார்த்தம் நடைபெறும்; உபந்யாஸங்கள் செய்யப்படும். அவரவர்களுக்குத் தக்கபடி உபசாரம் செய்து அவரவர்கள் தங்கி இருக்க வசதியான இருக்கைகள் அமைக்கப்படும். தங்கியிருக்கும் நாட் களுக்கு அவர்களுக்கு அரண்மனையிலிருந்து உலுப் பைகள் வரும். சபைகள் நடைபெறுவது மிகவும் விமரிசையாக இருக்கும். விஜயதசமியன்றோ மறு நாளோ அந்த வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி சம்மானங்கள் செய்யப்பெறும்.
(அமராவதி ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகள் படம் இந்தப் பக்கத்தில் உள்ளது)
சேஷையா சஸ்திரிகள் திவானாக வந்த பிறகு பல வகையாக உள்ள வித்துவான்களுடைய தகு தியை அறியும் பொருட்டு அவர்களுக்கு வினாப் பத்திரங்கள் கொடுத்துப் பரீக்ஷித்து அவர்கள் பெறும் அம்சத்தின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சம்மானம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இங்ஙனம் நடைபெறும் பரீக்ஷையில் தேறுபவர்களுக்கு அவர் களுடைய தகுதிக்கேற்ப நூறு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரையிற் பரிசு அளிக்கப் படும். நூறுரூபாயே உயர்ந்த சம்மானம்; அதனை உத்தம சம்பாவனை என்று சொல்வார்கள். பரீக்ஷை நடைபெறும்போது சாஸ்திரிகள் உடனிருந்து கவனித்துவருவார். பிரசித் தர்களான வித்துவான்களுக்குப் பரீக்ஷை யில்லா மலே சம்மானங்கள் அளிக்கப்படும்.
இப்படி நடந்து வந்தமையால் வித்துவான்கள் தங்கள் தகுதிக்கேற்ற சம்மானங்களைப் பெற்றார் கள். தராதரமறிந்து பரிசளிப்பதையே பெரிதாகக் கருதுபவர்களாகிய அவர்கள் இந்த முறையின் சிறப்பை அறிந்து மிகவும் மகிழ்ந்தார்கள். வருஷத் திற்கு வருஷம் அதிகமான வித்துவான்கள் வர ஆரம்பித்தனர்.அ வர்களெக்கெல்லாம் வழக்கப் படியே மரியாதைகள் செய்யப்பெற்று வந்தன.
ஒரு வருஷம் நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜைக்கு முதல்நாள் சாஸ்திரிகள் வித்தியா மண்ட பத்தில் வித்துவான்களுடைய கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். மறுநாள் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சம்மானம் செய்வதென்று நிச்சயம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் அவரருகில் வந்து ஒரு கடிதத்தை நீட்டினார். அதில் "இதைக் கொண்டு வருபவரை உத்தம சம்பாவனை வரிசையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்பது எழுதப்பட்டிருந்தது. அதன் கீழ் அரசருடைய முத் திரை இருந்தது. சாஸ்திரிகள் அதைப் படித்துப் பார்த்து வியப்புற்றார். படித்தபின்பு கடிதம் கொணர்ந்தவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த் தார்.அ ந்த மனிதருடைய முகத்தில் சிறிதளவாவது அறிவின் ஒளியையே அவர் காணவில்லை. சாஸ்திரி களுக்கு அவரைக் கண்டபோது புன்னகை உண்டா யிற்று; வந்தவரைப் பார்த்து "சந்தோஷம்! நீர் என்ன வேலை பார்த்து வருகீறீர்?" என்று கேட்டார்.
வந்தவர்: நான் மகாராஜாவுக்கு நீர்மோர் செய்து கொடுப்பேன்.
சாஸ்திரிகள்: அப்படியா! நீர் மோரில் என்ன சேர்ப்பீர்?
வந்தவர்: பெருங்காயம், சுக்கு, உப்பு, எலுமிச் சம்பழரஸம் முதலியவற்றைப் பக்குவமாகச் சேர்த்துத் தாளிதம் செய்வேன்; மகாராஜாவினுடைய விருப்ப மறிந்து வேண்டியதைச் செய்து கொடுப்பேன்.
சஸ்திரிகள், "நல்ல காரியம். மகாராஜாவின் மனம் கோணாமல் செவ்வையாக நடந்துவாரும்; நல்லபேர் எடும்; போய்வாரும்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
வந்தவர் மிக்க சந்தோஷத்தோடு சென்றார். அவர் போன ஐந்து நிமிஷங்களுக்குப்பின் மற்றொரு வர் வந்தார். அவரும் ஒரு கடிதத்தைச் சாஸ்திரி களிடம் கொடுத்தார். அதிலும் முன்பு எழுதின படியே எழுதப்பட்டிருந்தது. சாஸ்திரிகளுக்குப் பின்னும் வியப்பு அதிகமாயிற்று. அவரும் முன்ன வரைப் போன்றவரென்றே சாஸ்திரிகள் உணர்ந்து கொண்டார்; அவரைப் பார்த்து "நீர் மகாராஜவுக்கு என்ன பணி செய்து வருகிறீர்" என்று கேட்டார்.
வந்தவர்: நான் நல்ல ரஸம் செய்து கொடுப் பேன். சீரக ரஸம், மைசூர் ரஸம் முதலிய பலவகை களில் மகாராஜாவுக்கு எது பிரீதியோ அதைச் செய்துதருவேன்.
சாஸ்திரிகள்: அப்படியா!சந்தோஷம்,மகா ராஜாவின் திருவுள்ளத்துக்கு உகந்தபடி தவறாமற் செய்துவாரும்.
வந்தவர் தம்முடைய நோக்கம் நிறைவேறு மென்று எண்ணி மிக்க ஊக்கத்துடன் போய் விட்டார்.
பிறகு ஒருவர் வந்தார்; மகாராஜாவின் முத்திரை யிட்ட கடிதமொன்றை நீட்டினார்; தாம் மகாராஜா வுக்கு வேப்பிலைக்கட்டி பண்ணித் தருவதாச் சொன்னார். சாஸ்திரிகள் அவரிடமும் பிரியமாகப் பேசி அனுப்பி விட்டார். இப்படியே பொடி செய்து தருபவரும், உடையணிவிப்பவரும், வேறு பணி விடை செய்பவர்களுமாகப் பத்துப்பேர் வரையில் வந்து சாஸ்திரிகளிடம் கடிதங்களைக் கொடுத்துச் சென்றார்கள். சாஸ்திரிகள் அதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எண்ணி அவர்கள் கொடுத்த கடிதங்களை யெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்.
மறுநாட்காலையில் சாஸ்திரிகள் எட்டுமணிக்கு அரசரைப் பார்க்கச் சென்றார். சாஸ்திரிகளைக் கண்டவுடன் அரசர் அவரை ஓர் ஆசனத்தில் இருக் கச்செய்தார். பிறகு, "நவராத்திரி உத்ஸவத்தில் தங்களுக்கு அதிக சிரமம்; எல்லாம் நன்றாக நடை பெறுகின்றனவா? கோயில்களில் தர்மங்கள் ஒழுங் காகச் செய்யப்பட்டு வருகின்றனவா? வித்வத்சபை இந்த வருஷம் எப்படி இருக்கிறது?" என்று கேட் டார்.
"எல்லாம் நன்றாக நடக்கின்றன. வித்துவான் கள் சென்ற வருஷத்தைக் காட்டிலும் இவ்வருஷம் அதிகமாக வந்திருக்கிறார்கள். சுமங்கலி பூஜை, கோயிற் காரியங்கள் முதலிய யாவும் குறைவல்லா மல் நடைபெறுகின்றன. எல்லோரும் திருப்தியாக இருக்கின்றார்கள்" என்றார் சாஸ்திரிகள்.
அரசர்: தாங்கள் கவனித்துவரும்போது குறைவு நேர்வதற்கு நியாயம் இல்லை. தாங்கள் செய்து வரும் உபகாரங்களை இந்த ஸமஸ்தானம் என்றைக் கும் மறவாது.
சிறிது நேரம் அரசரிடம் இவ்வாறு பேசியிருந்து விட்டு விடைபெற்றுக்கொண்டு சேஷையா சாஸ்திரி கள் பத்து அடி நடந்தார், பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர் போலத் திரும்பிவந்தார்.
அரசர் மிக விரைவாக, "என்ன? என்ன? சாஸ்திரி கள் ஏதாவது சொல்ல வேண்டுமோ?" என்று கேட்டார்.
சாஸ்திரிகள்: ஆமாம். இப்போது ஒன்று ஞாப கம் வந்தது. அதைச் சொல்லலாமென்று வந்தேன்.
அரசர்: சொல்லலாமே.
சாஸ்திரிகள்: இந்த வருஷம் வந்திருக்கிற வித்து வான்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கே உள்ளம் பூரிக்கிறது. நம்முடைய ஸமஸ் தானத்துக்கு இந்தப் பெருமை ஒன்றே போதும். விஜயதசமியன்று எல்லா வித்துவானகளையும் ஒரு வரிசையாக வைத்து மகாராஜா அவர்களே பிரதக்ஷி ணம் செய்து மரியாதை செய்யும் இந்த வழக்கம் வேறு எந்த இடத்திலும் இல்லை. இதனால் வேறு இடங்களுக்குச் செல்லாத மகா வித்துவான்கள்கூட இங்கே சம்மானம் பெறுவதைப் பெரிதாக எண்ணி வந்நுபோகிறார்கள். வேறு சில ஸமஸ்தானங்களில் கிடைக்கும் சம்மானங்களைக் காட்டிலும் இங்கே கிடைப்பது குறைவு. ஆனாலும் இந்தக்கௌரவத் தையே உயர்வாகக் கருதி வருகிறார்கள். எவ்வளவோ பிரசித்திபெற்ற வித்துவான்கள் வந்திருக்கிறார்கள். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இரண்டு தினங்களாக ஏதோ சில வார்த்தைகள் என் காதில் விழுகின்றன.
அரசர்: என்ன? என்ன? சொல்லவேண்டும்.
சாஸ்திரிகள்: அடுத்த வருஷம் இப்படி யடப்பது சந்தேகமென்று தோற்றுகிறது.
அரசர்: ஏன்? என்ன காரணம்?
சாஸ்திரிகள்: நான் அங்கங்கே இரகசியமாக ஆள் வைத்து அவரவர்கள் பேசுவதைக் கவனித்து வந்து சொல்லும்படி செய்வது வழக்கம். அதனால் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. முன்பே சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள், 'நாமெல் லாம் இங்கே தாரதம்யம் அறிந்து கௌரவிக்கிறார் களென்று வருகிறோம். சம்மானத்தை உத்தேசித்து வரவில்லை. இந்த வரம்பு இந்த வருஷம் கெட்டுப் போகுமென்று தெரிகிறது. ஆராரோ சாமான்ய மனிதர்களெல்லாம் நம்முடன் வந்து உட்காரப் போகிறார்களாம். இந்த வருஷம் ஏதோ வந்து விட்டோம்; நடுவில் திரும்பிப்போவது நன்றாக இராது. அடுத்த வருஷம்முதல் வருவதில்லை; வந் தால் மதிப்புக் கெட்டுவிடும்' என்று அங்கங்கே கூடிப் பேசிவருகிறார்கள்.
அரசர்: அப்படி அவர்கள் எண்ணுவதற்கு என்ன காரணம்?
சாஸ்திரிகள்: உத்தம சம்பாவனை செய்யவேண்டு மென்று மகாராஜாவின் உத்தரவைக் கொண்டு வந்து சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அவரு களோடு சிறிது நேரம் பேசியிருந்து அனுப்பினேன். அவர்கள் தமக்கு உத்தம சம்பாவனை கிடைக்கப் போவதாகப் பலரிடம் உத்ஸாகத்தோடு சொல்லிக் கொண்டே போய்விட்டார்களென்று தோற்றுகின் றது. அதைக் கேட்ட வித்துவான்களெல்லாம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசர்: அடடா! நான் அப்படி ஒருவரையும் அனுப்பவில்லையே!
சாஸ்திரிகள் தாம் வாங்கி வைத்திருந்த கடிதங் களை உடனே எடுத்துக் காட்டினார். அரசர் அதைப் பார்த்துத் திகைத்தார்; "நான் அனுப்பவில்லையே" யாரோ பண்ணிய விஷமமென்றே எண்ணுகிறேன்" என்றார் அரசர்.
சாஸ்திரிகள்: இவைகளைக் கொண்டுவந்து கொடுக் கும்போது நான் வேறு என்ன நினைக்கமுடியும்? மகாராஜாவிடம் தொண்டுசெய்பவர்கள் கவலை யின்றி இருக்கவேண்டியது அவசியந்தானே? மகா ராஜாவினுடைய வேலைக்காரனாகிய நான் மகாராஜா வின் திருவுள்ளத்தின்படி நடக்கவேண்டியவனல் லவா?
அரசர்: அப்படி அவசியமொன்றும் நேர வில்லையே.
சாஸ்திரிகள்: ஒருவேளை யாருக்கேனும் உதவி செய்யவேண்டுமென்று மகாராஜாவின் திருவுள்ளத்திற் படுமானால் எனக்குத் தனியே சீட்டு அனுப்ப லாம்; நான் உசிதம்போல அவர்களுக்கு அநுகூலம் செய்வேன். வித்துவான்களுடைய வரிசையில் அவர் களைச் சேர்ப்பது நன்றாக இராது. மகாராஜா உத் தரவின்படி நான் செய்யக் காத்திருக்கிறேன். அவர் களுக்குக் கொடுக்கும் பணத்தைக் குதிரைக்கான கொள்ளுச்செலவென்று எழுதிக்கொள்ளலாம்; பசு வின் புல்லுக்குரிய செலவில் சேர்த்துக் கொள்ள லாம்; பருத்திக்கொட்டைச் செலவில் எழுதலாம்; வாணமருந்துச் செலவில் கூட்டிக்கொள்ளச் செய் கிறேன். அதனாற் குற்றமில்லை.
அரசர் தம்மிடமுள்ள வேலைக்காரர்களைக் கூப் பிட்டு யார் கடிதம் கொடுத்தாரென்று விசாரித்தார். ஒவ்வொருவரும் "நான் அல்ல","நான் அல்ல" என்றே சொல்லிவிட்டனர். பிறகு ஒருவர் மட்டும் தாம் செய்ததாக ஒப்புக் கொண்டார். அரசர் அவ ரைக் கண்டித்து அனுப்பினார்.
சாஸ்திரிகள் அரசரிடம் விடை பெற்றுச் சென்றார். வித்துவான்களுடைய சம்பாவனையும் வழக் கம்போலவே சிறப்பாக நடந்தது.
இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் என்னிடம் சாஸ்திரிகளே கூறியதுண்டு; அப்பொழுது அவர் "மகாராஜாவை வேலைக்காரர்கள் பலமுறை வற் புறுத்தி யிருக்கலாம்.அ வர் அவர்களுடைய நச்சுப் பொறுக்க முடியாமல் ஏதாவது அநுகூலமாக விடை கூறியிருப்பார். அதை அறிந்து மகாராஜாவோடு நெருங்கிப் பழகுபவர் யாரோ மகாராஜவினுடைய முத்தி ரையை வைத்துக் கடிதங்களைக் கொடுத்தனுப்பி விட் டார். நான் ஏமாந்து போகலாமா? இதை ராஜா வுக்குத் தெரிவிக்கவேண்டுமென்றே போய்ச் சொன் னேன். அந்தக் கடிதம் கொண்டு வந்தவர்களை, குதிரை, மாடு முதலியவைகளோடு சேர்க்க வேண்டு மேயன்றி வித்துவான்களோடு சேர்க்கக் கூடா தென்பதைக் குறிப்பாக மகாராஜாவிடம் சொல்லி விட்டேன். மகாராஜாவும் தெரிந்துகொண்டார்.
நான் சொன்ன விஷயங்களில் அநேகம் என் கற் பனை" என்று சொல்லிச் சிரித்தார்.
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்."
என்ற குறள் அப்போது என் ஞாபகத்துக்கு வந் த்து.
7. "அந்தத் தொடிசு"
கும்பகோணம் காலேஜில் நான் வேலைபார்த்து வந்தபோது, கடைசியாக 1894-ஆம் வருஷம் முதல் காவிரியாற்றின் ஓரத்தில் சகாஜி நாயகர் தெருவில் உள்ள என் சொந்த வீட்டில் வசித்து வந் தேன். அப்போது ஒருநாள் என் புத்தக ஆராய்ச்சி வேலைக்கு உதவியாக இருந்த ஒரு நண்பரும் நானும் என் ஜாகையிலிருந்து தெருவழியாக மேற்கே சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே பெரிய இரட்டை மாட்டு வண்டி யொன்று வந்தது. அவ்வண்டி எங்கள் அருகே வந்ததும், "நிறுத்து; நிறுத்து" என்று வண்டிக்காரனுக்கு உள்ளேயிருந்த வர் உத்தரவுசெய்தார். வண்டி நின்றது. அதிலிருந்து ஒரு கனவான் கீழே குதித்தார். அவர் எங்களைக் கண்டுதான் இறங்கினாரென்று தெரிந்துகொண்டு நாங்களும் நின்றோம்.
அவர் ஒரு பெரிய தனவான். அறுபது பிராயத் திற்கு மேற்பட்டவர். நன்றாக உண்டு உடுத்து வாழ வேண்டு மென்பது அவருடைய கொள்கை.
அக்கனவானை நான் கண்டவுடன்,"வாருங்கள், வாருங்கள்" என்று சொன்னேன்.
அவர் எங்களருகே வந்தார்.
"எங்கே, உங்களை இப்பொழுது காண முடிய வில்லையே. உங்களைப் நான் பார்த்து நாலு வருஷங்களுக்கு மேலே இருக்கும்" என்றேன்.
"ஆமாம்! அதெல்லாம் இருக்கட்டும்; இப் பொழுது அந்தத் 'தொடிசு'இருக்கிறதா? விட்டுவிட்டீர்கள?" என்று அவர் என்னைக் கேட்டார். என் பக்கத்தில் இருந்தவர் திகைத்தார்.
நான் சிரித்துக் கொண்டே "நீங்கள் சொன் னதை நான் கேளாமல் இருப்பேனா? என்னுடைய சந்தோஷத்தையும் சௌக்கியத்தையும் கெடுத்துக் கொள்வேனா?" என்றேன்.
"நான் சொன்னதைக் கேட்பீர்களென்றுதான் சொன்னேன். சந்தோஷம். இப்போதாவது நான் நல்லதற்காகச் சொன்னேனென்று தெரிந்து கொண்டீர்களே! அதுவே போதும். உங்கள் தேகம் இப்பொழுது கொஞ்சம் மினுமினுப்பாக இருக்கிறது. அதிலிருந்தே அந்தத் தொடிசை விட்டிருப்பீர்களென்று ஊகித்தேன். உங்கள் முகமும் தெளிவாக இருக்கிறது" என்றார் அவர்.
'உங்களுடைய அன்பையும் அநுகூல வார்த்தையையும் நான் மறக்கமாட்டேன்" என்று நான் சொன்னேன்.
உடனே அவருக்கு அதிக மகிழ்ச்சி உண் டாயிற்று. தம்முடைய வார்த்தையை நான் கேட்டுப் பயனடைந்தேனென்று அவர் எண்ணிக் கொண்டார்.
"நான் உங்களைவிட மிகவும் பெரியவன். தியாக ராச செட்டியார்கூட இப்போது இல்லை. உங்களுக் குச் சொல்லுகிறவர்களும் இல்லை.நீங்கள் இப்போது இருக்கிறபடி முன்பே இருந்தால் இன்னும் சௌக் கியமாக இருக்கலாம். அநாவசியமாக உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்" என்று சொல்லி அவர் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.
அவரைக் கண்டது முதலே எனக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. அவர் போனபிறகும் சிரித் துக் கொண்டே சென்றேன். எங்கள் இருவருக்கு மிடையே நடைபெற்ற சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு என்னுடன் வந்த நண்பருக்கு விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. 'அந்த்த் தொடிசு' என்று அக்கனவான் குறித்த விஷயம் இன்னதென்று அவருக்குப் புலப்படவில்லை. என்னைக் கேட்கவும் அவருக்குத் துணிவில்லை. அடிக்கடி ஒரு சந்தேகக் குறிப்போடு என் முகத்தைப் பார்த்துக்கொண்டே உடன் வந்தார்.
அவரை நான் கவனித்தேன். அவருடைய மனக்குழப்பத்தை அவருடைய முகக்குறிப்பினால் அறிந்துகொண்டேன்.
"எங்கள் சம்பாஷணை இன்ன விஷயத்தைப் பற்றியது என்று உங்களுக்கு விளங்கவில்லையோ?" என்றேன்.
"விளங்கவில்லை; அதைப்பற்றித்தான் யோசித் துக்கொண்டே இருக்கிறேன்" என்றார் அவர். நான் அவர் சந்தேகத்தைத் தெளிவிக்கத் தொடங் கினேன்.
"இந்தக் கனவானை உங்களுக்குத் தெரிந்திருக் கும். இவர் தியாகராச செட்டியாருக்கு மிகவும் பழக்கமானவர். நான் திருவாவடுதுறை மடத்தில் இருந்த காலமுதலே இவரை அறிவேன். தியாக ராச செட்டியாரைப் பார்க்க வரும்போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன். இந்த ஊர்க் காலே ஜுக்கு நான் வேலையாக வந்தபிறகு தியாகராச செட்டியார் ஜாகைக்கு ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் நான் போய்வருவேன். அக் காலங்களிலும் பலமுறை இவரைப் பார்த்துப் பேசிப் பழகி யிருக்கிறேன்.
"இவர் பெரிய பணக்காரர். ஆனால் பிறருக்குப் பொருளுதவி செய்வது அனாவசியமென்னும் அபிப் பிராயம் உடையவர். 'நாம் எதற்காகப் பணம் சேர்க்கவேண்டும்? நன்றாகச் சாப்பிட வேண்டும், திருப்தியாக ஆடையாபரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சுகத்தில் சிறிதும் குறையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்' என்று அடிக்கடி சொல்லுவார். இவருடைய தூய உடை யும் பட்டு உருமாலையும் வயிரக் கடுக்கனும் மோதிரங் களும் இவர் ஒரு சுகபுருஷரென்பதைக் காட்டுகின் றனவல்லவா?
"தியாகராச செட்டியார் அடிக்கடி ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்; அல்லது யாருக்காவது பாடம் சொல்லுவார். அவர் அப்படிச் செய்வதைக் காணும்போது இக்கனவானுக்கு மிகுந்த கோபம் உண்டாகும். 'இப்படி யெல்லாம் உடம்பை வீணாகக் கெடுத்துக் கொள்ளக்கூடாது! இராத்திரி கண்விழித்துப் படிப்பதனால் யாருக்குப் பயன்? எதற்காக வாசிக்கிறோம்? தேக அசௌக்கியத்தை உண்டுபண்ணிக் கொள்ளவா படிக்கிறோம்? எல்லா வற்றைக் காட்டிலும் தேக சௌக்கியந்தான் முக்கி யம். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுதவேண்டும்?' என்பார். இராத்திரி வேளை களில் தியாகராச செட்டியார் கையில் புத்தகத்தை இவர் கண்டுவிட்டாற் போதும்; உடனே உபதே சம் செய்யத் தொடங்கி விடுவார். சில சமயங்களில் அவர் கையிலிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி வைப்பார்.
"இவர் சில சமயங்களில் கச்சேரிக்கு ஏதாவ தொரு வழக்கின் சம்பந்தமாக வருவார். அப்போ தெல்லாம் அருகிலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டுப் போவார்.
"அச்சமயங்களில் இவர் தம்முடைய பெருமை யையே அதிகமாகச் சொல்வார். தியாகராச செட்டி யாருடைய நன்மைக்குத் தாமே பல வழிகளில் காரணமென்று கூறுவார். அவரிடம் சொல்லி எனக்கு வேலை பண்ணிவைத்ததகவும் சில சமயங்களில் உரைப்பார். இவர் கூறுவது ஒன்றையும் நான் மறுப்பதில்லை.மறுப்பதிற் பயனில்லை யென்று சிரித்துக்கொண்டே கேட்டு வருவேன்.
"ஒருநாள் பகல் ஒரு மணிக்கு இவர் கச்சேரியி லிருந்து வந்தார். நான் காலேஜிலிருந்து வீட்டிற்கு வந்தேன். இடையே ஒருமணி நேரம் ஓய்வு இருப்ப தால் அந்த வேளையில் ஏதாவது ஏட்டுச்சுவடியைப் பார்ப்பது வழக்கம். அந்தக் காலத்தில் நான் சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருந் தேன். இந்தக் கனவான் வந்தபொழுது நான் சிலப்பதிகார ஏட்டுப் பிரதியையும் கையெழுத் துப் பிரதியையும் வைத்துத் தனியே ஓப்பிட்டுக் கொண்டிருந்தேன். இவர் வந்ததுகூட எனக் குத் தெரியாது. அவ்வளவு மன ஒருமையோடு அதில் நாட்டம் செலுத்தியிருந்தேன். 'ஐயா, கீழே வையுங்கள்' என்று அதிகாரக் குறிப் போடு ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். இந்தக் கனவான் நின்றார். 'நான் வந்ததைக்கூடப் பாராமல் அந்தப் புஸ் தகத்தை அவ்வளவு அழுத்தமாகக் கவனிகிறீர் களே. நல்ல காரியம் செய்தீர்கள்! நீங்கள் நல்ல வழக்கங்களை உடையவர்கள். சிறு பிராயம். இப் போதே இம்மாதிரியான காரியங்கள் செய்யத் தொடங்கிவிட்டீர்களே! உங்கள் உடம்பு எதற்காகும்? இங்கே பாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு வேலையாக வேண்டும், சௌக்கியமாக இருக்க வேண்டுமென்று செட்டியாரிடம் சொல்லி வேலை பண்ணிவைத்தேன். நீங்கள் செட்டியாரைப் போலப் பைத்தியக்காரராக இருக்கமாட்டீர்க ளென்று நம்பினேன். நான் அவரிடம் அடிக்கடி இம்மாதிரியான காரியங்களையெல்லாம் செய்யக்கூடா தென்று சொல்லி வந்தேன். அதை நீங்களும் கவனித் திருக்கலாம். ஆனாலும் நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. அதனால்தான் சீக்கிரம் இறந்துபோய் விட்டார். புஸ்தகத் தொல்லையைவிட்டுச் சுகமாக இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இன்னும் பலகாலம் அவர் ஜீவித்திருக்கலாம். அவ்வளவுதான் அவர் கொடுத்து வைத்தது. என்ன புஸ்தகம் வேண்டியிருக்கிறது! இவைகளை யெல்லாம் எடுத்து அப்படியே காவிரியாற்றில் போட்டு விடவேண்டு மென்ற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது' என்றார்.
"நான் ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டே அந்தச் சுவடிகளைக் கட்டி உள்ளே வைத்துவிட் டேன். இவர் என்மேல் கொண்ட அளவற்ற ஆதர வினால் தம்முடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டால் என்ன செய்வதென்ற பயம் என் உள்ளத்துள் உண்டாயிற்று.'இந்தப் புஸ்தங்களை யெல்லாம் கட்டிப் போட்டு விடுங்கள். நான் சொல் வதைக் கேளாவிட்டால் எனக்குக் கோபம் வந்து விடும். உங்கள் முகத்திற்கூட விழிக்கமாட்டேன். உங்களுக்குச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்' என்று இவர் இரக்கமும் அதிகாரமும் கலந்த தொனியில் பேசினார். 'உங்கள் அன்பு எனக்குத் தெரியாதா? செட்டி யார் காலமுதல் உங்களைத் தெரியுமே? உங்கள் விருப்பத்தை நான் அறிந்து கொண்டேன். எனக்கு நல்லது இன்னதென்றுதானே நீங்கள் சொல்லுகிறீர்கள்? எனக்கு எது நல்லதோ அதைச்செய்வது என்கடமை' என்றுசொன்னேன்.
"என்னுடைய வார்த்தைகளின் உட்கருத்தை அவர் உணரவில்லை. தமக்கு அநுகூலமாகவே நான் பேசியதாக நினைத்துக்கொண்டு திருப்தியோடு விடைபெற்றுப் போய்விட்டர்.
"அதுமுதல் இவர் வந்தால் என்னை இப்படி விசாரிப்பது வழக்கம். நான் ஒருவாறு பதிலளிப் பேன். இவர் வரும்போது இவர் கண்ணில் புத்த கங்கள் படாதவாறு ஒளித்து வைத்துவிடுவேன். நான்கு வருஷங்களாக இவர் கச்சேரிக்கு வருவ தில்லை. அதனால் நானும் பார்க்க நேரவில்லை. இப்போதுதான் பார்த்தேன். புத்தகப்படிப்பைத் தான் இவர் 'அந்தத் தொடிசு'என்று குறிப்பிட்டார்."
இந்த வரலாற்றைக் கேட்டவுடன் நண்பர் நகைத்தார். "அட பாவி! இதையா சொன்னான்? நான் என்னவெல்லாமோ யோசனை செய்தேனே! அப்போது ஒன்றும் விளங்கவில்லை. இப்பொழுது தான் விளங்கியது" என்றார் அவர்.
8. 'அடுத்த குறள்'
கும்பகோணம் காலேஜில் ஸ்ரீமான் ராவ்பகதூர் ஸாது சேஷையரென்னும் கனவான் பிரின் ஸிபாலுக்கு அடுத்தபடி பலகாலம் புரொபஸராக இருந்தார். அவர் 1880-ஆம் வருஷம் மே மாதம் தம் முடைய மூத்த குமாரிக்குக் கல்யாணம் செய்வித் தார். அது திருப்பாதிரிப்புலியூரில் மிக்க விமரிசை யாக நடைபெற்றது. அவர் பலபேர்களுக்கு உபகாரம் செய்தவர்; நல்ல செல்வாக்குடையவர். ஆதலின் அக் கல்யாணத்திற்குப் பல முன்சீப்புகளும் சப்ஜட்ஜு களும் வக்கீல்களும் பிரபுக்களும் மிராசுதார்களும் வந்திருந்தார்கள். காலேஜ் ஆசிரியர்களும் ஸம்ஸ் கிருத வித்துவான்களும் தமிழ் வித்துவான்களும் சங் கீத வித்துவான்களும் வந்திருந்தனர். அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் இருந்த நானும் மற்ற ஆசிரியர்களுடன் போயிருந்தேன்.
நான்கு நாட்களும் கல்யாணம் பெரிய அரச குடும்பத்துத்திருமணத்தைப்போலவே மிகவும் சிறப் பாக நடைபெற்றது. வந்தவர்களுக்கு நடந்த உப சாரங்களுக்கு அளவே இல்லை. ஐந்தாவதுநாள் யாவரும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். ஆனால், சென்னை ஹைகோர்ட்டில் ஜட்ஜாக இருந்த ஸ்ரீ ஸர் தி. முத்துசாமி ஐயர் அன்று கல்யாணம் விசாரிக்க வரப்போகிறாரென்று தெரிந்தமையால் யாவரும் தங்கள் பிரயாணத்தை நிறுத்திக்கொண்டார்கள். முத்துசாமி ஐயரைப் பார்க்கவேண்டு மென்ற அவா எல்லோருக்கும் உண்டாயிற்று.
அக்காலத்தில் முத்துசாமி ஐயருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அவர் ஏழை யாக இருந்ததையும், முதலில் சொற்பச் சம்பளம் பெற்றுக் கணக்குப்பிள்ளை வேலை பார்த்ததையும், விளக்குக் கம்பத்தின் கீழிருந்து படித்ததையும் கதை கதையாக் சொல்லிக் கொள்வார்கள். "படித்தால் முத்துசாமி ஐயரைப்போல் படிக்கவேண்டும்" என்று வவரும் கூறுவார்கள். அவர் சென்னைக்குச் சென்று ஜட்ஜ் உத்தியோகம் பார்த்துவரும் திறமை யைப்பற்றிப் பலர் பலவிதமாகப் பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பார்கள். வெளிப்பார்வைக்கு அவர் மிக்க அடக்கமுடையவராக இருந்தாலும் அவருடைய அபிப்பிராயத்தை ஒருவராலும் மாற்ற முடியாதென் றும் சொல்லுவார்கள். வக்கீல்களுக்கும் முன்சீபுகள் முதலிய உத்தியோகஸ்தர்களுக்கும் அவரைப் பற்றிப் பேசுவது ஒரு பெருமையாக இருந்தது. அவ ருடைய பேராற்றல், சட்ட ஞானம், அடக்கம் முதலியவைபற்றி ஸ்ரீமான் ராய் பகதூர் பூண்டு அரங்கநாத முதலியார் போன்ற பெரி யோர் முக்கியமான சந்தர்ப்பங்களில் பாராட்டிக் கூறுவர்.
"அவ்வளவு உயர்ந்த உத்தியோகத்தைப் பெற் றும் இவர் தம்முடைய வைதிக ஒழுக்கங்களை விட வில்லையாம். பழைய ஏழைமை நிலையை மறக்க வில்லையாம். தமது இளமையில் தம்மைப் பாதுகாத்த வர்களுக்கெல்லாம் உபகாரம் செய்துவருகிறாராம்" என்று சிலர் சொல்வார்கள்.
"இவரைச் சீமைக்குக் கூப்பிட்டார்களாம். இவர் வரமுடியாதென்று சொல்லிவிட்டாராம்" என்று சிலர் சிறிது கற்பனையையும் சேர்த்துக்கொண்டு கூறுவார்கள்.
"இவர் தெய்வ அம்சமுடையவர். இல்லாமற் போனால் இப்படி வர முடியுமா!" என்று ஆச்சரியப் படுவோர் சிலர்.
இவ்வாறு அவரைப்பற்றிப் பெருமையோடும் வியப்போடும் அங்கங்கே தமிழ்நாட்டினர் பாராட் டிக்கொண்டே இருந்தார்கள். அத்தகைய பாராட் டுக்குரிய பெரியார் வருவதாக இருந்தால் பாராமற் போக எப்படி மனம் வரும்? 'அவர் எப்படிப் பேசு கிறார்? எப்படி உடை உடுத்துக்கொண்டிருக்கிறார்? எப்படி நடக்கிறார்?' என்று கவனிக்க வேண்டுமென் பது பலர் எண்ணம்.
பிற்பகல் இரண்டுமணிக்கு முத்துசாமி ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதாரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தார். ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஸாது சேஷையர் போய் அவரை வரவேற்றனர். கல்யாண வீட்டின்முன்பு பெரிய பந்தல் போடப்பட்டிருந் தது. நடுவிலே ஒரு மேஜையும் அதைச் சுற்றி லும் நான்கு நாற்காலிகளும் இருந்தன. முத்து சாமி ஐயரைப் ஸ்ரீ ஸாது சேஷையரும் வேறு இரண்டு பெரிய உத்தியோகஸ்தர்களும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். நான்கு பேரும் நான்கு நாற்காலி களில் உட்கார்ந்தனர்.
பலபேர் அந்தப் பந்தலில் அந்த நால்வரையும் நெருங்காமல் சிறிது தூரத்திலிருந்து முத்துசாமி ஐயரைப் பார்த்தபடியே இருந்தார்கள். பெரிய உத்தியோகஸ்தர்கள் கூட அச்சத்தினால் அவரை அணுகத் துணியவில்லை. அந்தக் கூட்டத்துதில் நானும் இருந்தேன்.
முத்துசாமி ஐயர் வெள்ளைத் தலைப்பாகை தரித் திருந்தார். நெடுஞ்சட்டையையும் அதன்மேல் ஐயம் பேட்டைப் பட்டுருமாலையையும் அணிந்திருந்தார். இடையில் தூய வெள்ளை வஸ்திரத்தைப் பஞ்சகச்ச மாக உருத்திருந்தார். காலில் 'பாபாஸ்' ஜோடு போட்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு இருந்தது. ஆஜானுபாகுவான அவருடைய உருவத்தில் ஒரு தனிச்சிறப்பு விளங்கியது. அவருடைய தூய்மையும் எளிமையும் அவருக்கு உள்ள மதிப்பை அதிகப்படுத் தின. அவர் வெள்ளைக்காரரைப் போல உடையணிந் திருப்பாரென்றும், ஆடம்பரமான ஆடைகளை உடுத் திருப்பாரென்றும் பலர் எண்ணி யிருந்தனர். அத் தகையவர்கள் அவருடைய உடை முதலியவற்றைக் கண்டு வியப்பை அடைந்தார்கள்.
பந்தலுக்கு நடுவில் வீற்றிருந்த நால்வரும் தமக் குள்ளே மெல்லப் பேசிக்கொண்டிருந்தனர். அவர் கள் என்ன பேசுகிறார்களென்பதைத் தெரிந்து கொள்ள எல்லோரும் ஆவலுள்ளவராக இருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் ஷாப்பு ராஜப்பையரென்ற முதியவர் ஒருவர் இருந்தார்; அவர் கும்பகோணவாசி; திவான் ஸர். டி. மாதவ ராவ், மைஸூர்த் திவான் ரங்காசாரியார், புதுக்கோட்டைத் திவான் அ. சேஷையா சாஸ்திரியார் முதலிய மேதாவிகளின் பழக்கத்தை உடையவர். தமிழ், ஸம்ஸ்கிருதம், ஆங் கிலமென்னும் மூன்று பாஷைகளிலும் தேர்ச்சிபெற்ற வர். மிகவும் இனிமையாகச் சம்பாஷணை செய்யும் ஆற்றலுடையவர். அவர் கூட்டத்திலிருந்து நடுவி லுள்ளவர்களை நோக்கிச் சென்றார்.
அவர் செல்வதைப் பார்த்த சிலர், "இந்தக் கிழம் எதற்காக அங்கே போகிறது? எவ்வளவு துணிச்சல்!" என்று தம்முள் இகழ்ந்து பேசலா யினர். முத்துசாமி ஐயருக்குப் பின்புறத்திலிருந்து சென்றார்ராதலின் ராஜப்பையரை அவர் கவனிக்க வில்லை. உடனே அம்முதியவர் முத்துசாமி ஐய ருக்கு முன்பக்கத்திலே போய், அங்கிருந்து மேஜை யினருகே சென்றார். தம் கண்ணில் அவர் பட்ட வுடன், "ராஜப்பையர்வாள்! வாருங்கோ. சௌக்கி யமா?" என்று கேட்டார் முத்துசாமி ஐயர்.
ராஜப்பையரைப்பற்றித் தாழ்வாக எண்ணிய வர்கள் பிரமித்துப் போனார்கள். அங்கே இருந்த ஒரு பெரிய உத்தியோகஸ்தர் ஒரு நாற்காலியை எடுத்து மேஜையின் அருகே போட்டார். "உட்காருங் கள்" என்று முத்துசாமி ஐயர் சொல்லவே அந்த முதியவர் உட்கார்ந்தார். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்:
"உங்களைக் கண்டவுடன் இங்கே உள்ளவர் களுக்கு உண்டாகும் சந்தோஷம் சொல்லி முடி யாது. சந்திரனைக் கண்ட கடல்போல யாவருக்கும் ஆனந்தம் பொங்குகிறது. எல்லோரும் உங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருந் தார்கள். நீங்கள் சென்னப்பட்டணத்தில் உயர்ந்த பதவி வகித்துவருவதை அறிந்து எல்லோரும் மகிழ் கிறார்கள். உங்களுக்குக் கிடைத்த கௌரவத்தால் இந்த ராஜதானி முழுவதும் சந்தோஷிக்கிறது. தஞ்சைஷில்லாவாசிகள் தங்கள் ஜில்லாவிலே பிறந்த நீங்கள் இவ்வாறு உலகமெல்லாம் கொண்டாடும்படி இருப்பதுபற்றி எண்ணி எண்ணிப் பூரிக்கிறார்கள்.
*'தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது'
என்று குறளில் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதை இப்போது உங்கள் விஷயத்தில் பிரத்தியக்ஷ மாகப் பார்க்கிறோம். உங்களுடைய மேதை உலகத் துக்கெல்லாம் இனிதாக விளங்குகின்றது."
-----------------------
* 'தம்மக்களது அறிவுடைமை பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினும் இனிதாம்' என்பது பரிமேலழகர் உரை.
கிழவர் பேசிக்கொண்டே இருந்தார். "இந்தக் கிழவர் என்ன தைரியமாகப் பேசுகிறார்! எவ்வளவு உசிதமாகப் பாராட்டுகிறார்!" என்று அங்கிருந்த வர்கள் எண்ணித் தம் கவனம் முழுவதையும் அந்த எழுபது பிராயமுள்ள கிழவர்மீதும் ஜட்ஜ் முத்து சாமி ஐயர் மீதும் செலுத்தினர்.
கிழவர் பேசி நிறுத்தினார்; முத்துசாமி ஐயர், "ஐயர்வாள், நீங்கள் ஒரு குறள் சொன்னீர்களே; அதற்கு அடுத்தகுறளையும் சொல்லி அதனுடைய அர்த்தத்தையும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றார்.
நான் இந்த சம்பாஷணையில் மிகவும் ஊக்கத் தோடு கருத்தைப் பதித்திருந்தேன். அந்த முதியவர் ஒரு குறளைச் சொல்லிப் பாராட்டும்போது எனக்குத் தனிமகிழ்ச்சி உண்டாயிற்று. அதன்பிறகு அதற்குப் பதிலாக, அடுத்த குறளைச் சொல்லும்படி முத்துசாமி ஐயர் கூறினதைக் கேட்டவுடன் எனக்கு மிக்க வியப்பு ஏற்பட்டது. 'இவருக்குக் குறளில் இவ்வளவு ஞாபகம் இருக்கிறதே; அடுத்த குறளில் இந்த ஸந் தர்ப்பத்துக்குப் பொருத்தமான செய்தியிருப்பதை இவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாரே!ய என்று நினைத்தேன்.
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய்'
என்பது அடுத்த குறள்தானே? அதற்குப் பொருள் சொல்லுங்கள்" என்று முத்துசாமி ஐயர் மறுபடியும் சொன்னார்.
அங்கிருந்த கனவான்களிற் பலர், "நாமும் காலேஜில் தமிழ் படித்தோம்; திருக்குறளையும் படித்தோமே; நமக்கு இவ்வளவு ஞாபகம் இல்லையே; இவர் எப்போதும் இங்கிலீஷிலே பழகுகின்றவர்; தமிழ்ச் செய்யுளை மறக்க வில்லையே!" என்று பேசிக் கொண்டது என் காதிலே பட்டது.
ராஜப்பையர், "ஆமாம்! உங்களைப் பெற்ற தஞ்சாவூர் ஜில்லா இப்போது மிகவும் சந்தோஷிப் பதற்கு நீங்கள் மற்றொரு குறளை உதாரசமாக்க் காட்டுகிறீர்கள். தன்னுடைய பிள்ளை அறிவிற் சிறந்தவனென்று உலகத்தார் கூறக்கேட்ட தாய் அப்பிள்ளையைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மகிழ்ச்சியை அடைவாளென்று அந்தக் குறளிலே சொல்லியிருக்கிறது. நீங்கள் உங்கள் ஜில்லாவைத் தாய்போல எண்ணியிருப்பதையும் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டீர்கள். நீங்கள் தீர்க்காயுஸோடு வாழவேண்டும்" என்ற வாழ்த்தினார்.
அன்று இரவு அங்கே விருந்துணவு ஆன பிறகு முத்துசாமி ஐயர் விடைபெற்று மாயூரம் சென்றார். "அடுத்த குறளைச் சொல்லுங்கள்" என்று அவர் அன்று கூறியபோது அவருடைய தமிழபிமானத்தையும் சந்தர்ப்பத்திற்கேற்பச் சுருக்க மாகப் பேசும் திறமையையும் உணர்ந்தேன். அவர் குறளைக் கூறியதுபோலத் தாமும் சொல்லவேண்டு மென்று அதுமுதல் சிலமாதங்கள் சில ஆசிரியர்களும் கனவான்களும் முயன்றார்கள். அவருடைய தமிழபி மானம் இயல்பானது. இவர்களுடையதோ அத் தகையதன்று. வெறும் கௌரவத்திற்காகத் தமிழ் படிப்பது, புகழ்பெறுவதென்பது சாத்தியமாகுமா?
அந்தக் காலத்துக்குப் பிறகு பலமுறை முத்து சாமி ஐயரை நான் பார்த்திருக்கிறேன்: அவரோடு பேசிப் பழக வேண்டுமென்ற அவா எனக்கு நெடு நாளாக இருந்தது. சிலப்பதிகாரப் பதிப்பு நடந்து கொண்டிருந்தபோது நான் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஸாது சேஷையரும் வந்திருந்தார். அவரோடு அப்பெரியாரைத் தரிசிக்க லாமென்று ஒருமுறை சென்றேன். ஒரு பெரிய 'ஹாலி'ல் நாற்காலி மேஜைகள் இருக்குமென்றும் அங்கே அவர் இருந்து வேலைபார்த்துக் கொண்டிருப் பாரென்றும் எண்ணினேன். அங்கே போன போது நான் பார்த்த காட்சி வேறுவிதமாக இருந் தது. 'ஹால்' இருந்தது; மேஜை நாற்காலிகளும் இருந்தன; ஆனால் அப்பெரியார் அங்கே காணப்பட வில்லை. முன்பக்கத்தில் தரையின்மேல் கோரைப் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே அவர் ஒரு தூணில் சாய்ந்து கீழே உட்கார்ந்திருந்தார்; ஒரு கைமேஜையை முன்னால் வைத்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் சிறிய சிறிய காகிதத் துண்டுகள் சில சில குறிப்புகளோடு வைக்கப்பெற் றிருந்தன. அருகில் நாலைந்து பென்ஸில்கள் இருந்தன. தனியே ஒரு காகிதத்தில் கொட்டைப் பாக்குச் சீவல்மாத்திரம் இருந்தது.
முத்துசாமி ஐயர் எங்கேனும் பிரசங்கம் செய் வதாக இருந்தால் முன்பே நன்றாக ஆராய்ந்து குறிப் பெடுத்துக் கொண்டுபோவாரென்று சொல்வார்கள். அன்று அப்பேரறிஞர் தம்மைச் சுற்றிலும் கரடாக் காகிதங்களைச் சிறிய சிறிய அளவில் கிழித்துக் குறிப் பெடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த்தைப் பார்த்தபோது நான் கேள்வியுற்றது உண்மை என்றே புலப்பட்டது.
நான் அப்பெரியாருக்கு வந்தனம் புரிந்தேன். ஸாமு சேஷையர் என்னைப்பற்றி அவருடம் சொன் னார். "அடுத்த குறளைச் சொல்லுங்கள்" என்று அவர் கூறியது என் நினைவிலே நின்றமையின் நான் செய்யும் தமிழ்ப்பணி அப்பெரியாருடைய ஆசீர் வாதம் இருந்தால் நன்றாக நடைபெறுமென்ற உறுதி எனக்கு இருந்தது. நான் பழந்தமிழ்நூல்களை ஆராய்ந்து அச்சிட்டு வருவதைச் சேஷையர் அவரிடம் தெரிவித்தர். அவர், "நல்ல காரியந்தான். இந்தக் காலத்தில் படிக்கிறது வேலைபார்க்கத் தானென்று எல்லோரும் நினைக்கிறார்கள், வேலை கிடைத்துவிட்டால் சௌக்கியமாகச் சாப்பிட்டுக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். புத்திக்கு வேலை கொடுப்பதே இல்லை. தமிழ்ப்பாஷையிலே இப்படி வேலைசெய்து வருவது மிகவும் நல்லது" என்று ஆசீர்வாதம் செய்தார். நான் ஒரு பெரும்பேறு பெற்றவனைப்போல இன்புற்றேன்.
பெரும்பாலும் மௌனமாகவே இருந்து தம் காரியங்களைக் குறைவின்றி நிறைவேற்றும் அவ் வுத்தமருடைய ஆசி எனக்கு மனவுறுதியையும் ஊக்கத்தையும் உண்டு பண்ணியது. தாம் பிறந்த நாட்டுக்குப் பெருமை அளித்த அப்பெரியார் தமிழி னிடத்தில் மிக்க அன்பும் பழக்கமும் உடையவராக இருந்தாரென்பதை ஆங்கிலம் படித்த யாவரும் உணர்ந்துகொள்ள வேண்டுவது மிகவும் அவசியம்.
9. மணி ஐயர்
முதற்காட்சி
சென்ற ஈசுவர வருஷம்(1877) மதுரையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவருக்கு மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அமராவதிபுதூர் வயிநாக ரம் குடும்பத்தினர் லக்ஷக்கணக்கான ரூபாய் செலவிட்டுத் திருப்பணி செய்வித்தார்கள். கும்பாபி ஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மது ரைக்கு அக்காலத்தில் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையி லுள்ள இடங்களிலிருந்து லக்ஷக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை யாதீனத்தின் தலை வராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தனவைசியர்களுடைய அழைப்பிற்கு இணங்கித் தம்முடைய பரிவாரங்களுடன் வந்திருந்தனர். அவர் களோடு வந்தவர்கள் 500 பேர்களுக்குமேல் இருக்கும். திருவாவடுதுறை யாதீனத்தில் அப் போது சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரும் கல்லிடைக் குறிச்சியிலிருந்து வந்திருந் தார். அக்காலத்தில் நான் சுப்பிரமணிய தேசி கரிடம் பாடங் கேட்டுக்கொண்டும் திருவாவடுதுறை மடத்தில் உள்ளவர்களுக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லிக்கொண்டும் இருந்தேன். ஆதலின் நானும் தேசிகருடன் மதுரை சென்றிருந்தேன்.
திருவாவவடுதுறை ஆதீனத்திற்கே மதுரையில் தானப்ப முதலியார் அக்கிரகாரத்தில் ஒரு மடம் உண்டு. ஆனால் கட்டிடம் சிறியது. ஆதீனகர்த்த ரவர்கள் பரிவாரங்களுடன் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் அதில் அக்காலத்தில் இல்லை.
(படம் -- மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்)
ஆதலின் தேவஸ்தான ஸபையைச் சேர்ந்த ஸ்ரீமான் வேங்கடசாமி நாயுடு என்பவர் வையை யாற்றங்கரையிலுள்ள தம்முடைய பங்களாவில் தேசிகருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் இடம் அமைத்துக் கொடுத்திருந்தார். பங்களாவைச் சுற்றி நெடுந்தூரம் பந்தல் போட்டிருந்தார். அதன் மேல்மெத்தையிலும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய சைவாதீனத்துத் தலைவரென்பதற்கு ஏற்றபடி சுப்பிரமணியதேசிகருக்குச் சிறிதும் குறை வின்றி உபசாரங்கள் நடைபெற்றுவந்தன.
சைவ மடத்தின் தலைமைப் பதவியினால் இயல் பாகவே சுப்பிரமணிய தேசிகரிடம் யாவருக்கும் மதிப்பு இருந்தது; அதனோடு அவருடைய குணங்கள் அம்மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தி விட்டன. யாரிடமும் சுலபமாகப் பழகும் குணமும், அன்பும், தர்மசிந்தனையும், வடமொழி தென்மொழி சங்கீத மென்பவற்றிலுள்ள பேரன்பும், பயிற்சியும், வித்து வான்களை ஆதரிக்கும் வண்மையும் ஆகிய இயல்புகள் அவரிடத்திற் குடிகொண்டிருந்தன. ஆதலின் தமிழ் நாட்டில் அவரிடத்திற் பலர் ஈடுபட்டனர். திருவா வடுதுறைக்கு வந்து அவரைப் பார்த்து இன்புற்றோர் பலர். பாராதவர்கள் பலர் அவரைப் பார்க்க வேண்டு மென்னும் ஆவல்மிகுதியினால் அதற்குரிய சமயத் தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேசிகர் மதுரையில் தங்கிய காலத்தில் தேனை ஈ மொய்ப்பதுபோல அவரைப் பலர் வந்து மொய்த்துக் கொண்டார்கள். சேற்றூர், சிவகிரி முதலிய இடங் களிலுள்ள ஜமீன்தார்களும், வேறு பல பிரபுக் களும், உத்தியோகஸ்தர்களும் வந்து வந்து பேசி மகிழ்ந்து சென்றார்கள். மகாவைத்தியநாதையர் முத லிய சங்கீத வித்துவான்களும் அப்பா தீக்ஷிதர் முதலிய வடமொழி வித்துவான்களும் தமிழ் வித்துவான்களும் எப்பொழுதும் உடனிருந்தே வந்தார்கள்.
நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர். அங்கங்கே சமாராதனை களும், மகேசுவர பூஜைகளும் செவ்வையாக நடை பெற்றன. கும்பாபிஷேக சமயத்தில் கோயிலுக் குள்ளே செல்ல யாவருக்கும் இடம் கிடைப்பது அரி தாயிற்று. ஆதலின் தக்கவர்களுக்குமாத்திரம் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். சேலம் முதலிய இடங்களிலிருந்து வந்த மிட்டாதார்களும் வேறு பல ரும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் சொல்லித் தங் கள் தங்களுக்குரிய அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
கும்பாபிஷேகதினத்தன்று காலையில் சுப்பிர மணிய தேசிகர் பூஜையை முடித்துக் கொண்டு சின்னப் பண்டாரஸந்நிதியுடன் கோயிலுக்குச் சென்றார். முத்து வேலை செய்யப்பட்ட சிவிகையில் தேசிகர் சென்றார். அதனைத் தொடர்ந்து மற்றொரு சிவிகையில் நமச்சிவாய தேசிகர் சென்றார். வழி முழு வதும் ஜனக்கூட்டம் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. போலீஸ்காரர்கள் அங்கங்கே நின்று ஜனங்களுக்கு அனுகூலம் செய்து கொண்டிருந்தார்கள்.
தெற்குக் கோபுரவாயில் வழியாகக் கோயிலுக் குள் செல்ல வேண்டியிருந்தது. சிவிகைகள் இரண் டும் அங்கே வந்து நின்றன. அவ்விடத்தில் ஜனங்கள் மிதமிஞ்சி உள்ளே நுழையாதவாறு போலீஸ் உத்தி யோகஸ்தர்கள் காவல் புரிந்து வந்தனர். இறங்கி உள்ளே செல்ல இயலாதென்பதையறிந்த சுப்பிர மணிய தேசிகர் சிவிகையில் இருந்தபடியே இங்கே நின்ற மதுரைக் கலெக்டரைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். உடனே வெள்ளைக்கார உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து மிக்க பாதுகாப்புடன் தேசிகரை உள்ளே அழைத்துச் சென்றார். அப்பால் தேசிகர் உள்ளே ஓரிடத்தில் தங்கியிருந்தார். சின்னப் பண் டாரஸந்நிதி பின்னே தங்கிவிட்டார். அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. தம்பிரான்கள் சிலரு டைய பேருதவியால் எப்படியோ நெட்டித் தள் ளிக்கொண்டு உள்ளே சென்றார். ஆயினும் அவ முடைய தாழவட*ப் பெட்டி வெளியே சிவிகையில் தங்கிவிட்டது. அவருடைய ருத்திராட்ச கண்டி, வைரமோதிரங்கள், காதிலிடும் ஆறுகட்டி முதலி யவை அப்பெட்டியில் இருந்தன. அந்தப் பெட்டி ஓர் ஆள் தூக்குமளவு கனமுள்ளது.
நமச்சிவாய தேசிகர், சுப்பிரமணிய தேசிகர் தங்கியிருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் தரிசனத்திற்கு உள்ளே செல்ல நினைத்தபோது சின்னப் பண்டார ஸந்நிதி யினுடைய தாழ்வடப் பெட்டி வெளியிலே தங்கிவிட் டதை அறிந்தார். ருத்திராட்சகண்டி முதலியவற்றை அணிந்து கொள்ளாமல் நமச்சிவாய தேசிகரைத் தரி சனத்திற்கு அழைத்துச் செல்வதில் அவருக்கு மனம் இல்லை. அது சம்பிரதாயமும் அன்று. ஆதலின் அப் பெட்டியை வருவிப்பதற்கு என்ன வழியென்று யோசிக்கலானார்.
அப்பொழுது தேவஸ்தானக் கமிட்டியைச் சேர்ந்த சிலர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசனம் செய்வதற்கு அழைக்க வந்தார்கள். அவர்கள் அழைத்தபோது தேசிகர், "வெளியில் சின்னப் பண் டாரத்தினுடைய தாழ்வடப் பெட்டி தங்கிவிட்டது. அது வந்த பிறகுதான் தரிசனம் செய்யப் போக வேண்டும்" என்றார். நமச்சிவாய தேசிகரோ பெட் டியை விட்டுவந்ததற்காகத் தவித்துக் கொண்டிருந் தார். அந்தக் கூட்டத்தில் யார் போய் அதை எடுத்து வரமுடியுமென்று யாவரும் யோசித்துக் கொண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் ஒரு கனவான் வந்தார். "ஏன் புறப்படாமல் நின்றுகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர் வரும்போது யாவரும் அவரிடம் மரி யாதை காட்டினார்கள். அவரிடம் சிலர் தாங்கள் தாம தப்படுத்துவதன் காரணத்தைச் சொன்னாரகள். அவர், "இதற்குத்தானா இவ்ளவு யோசனை? நான் போய்க் கேட்டால் கொடுக்கும்படி நம்பிக்கையான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். லக்கினம் நெருங்கிவிட்டது" என்று கம்பீரமாகக் கூறினார். அருகிலிருந்த யாவருடைய முகத்திலும் ஓர் ஆச்சரி யக்குறிப்புத் தோற்றியது. அந்தக் கனவானுடைய தொனியில் உறுதியும் தைரியமும் ஒலித்தன.
உடனே அவர் தேசிகரால் அனுப்பப்பட்ட ஒருவருடன் கூட்டத்தனிடையே அம்புபோல் பாய்ந் தார். அவர் வருவதைக் கண்டவுடன் உத்தியோகஸ் தர்களும் மற்றவர்களும் விலகி வழிவிட்டார்கள்.
யாவரும் ஸ்தம்பித்து நின்றிருந்தார்கள். ஐந்தே நிமிஷத்தில் அவர் தாழவடப் பெட்டியைக் கொண்டு வந்து தேசிகர் முன்வைத்து, "நாழிகையாய் விட்டது; புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.
அவருடைய முகத்தில் ஒரு பிரகாசம் இருந்தது. சுறுசுறுப்பென்பதற்கு ஒரு வடிவம் உண்டென்றால் அவரைத்தான் சொல்ல வேண்டும். பிறரைக் கவரும் முகப்பொலிவும், நீண்ட மூக்கும், கணீரென்ற பேச் சும்,எந்த நற்காரியத்திலும் துணிவு கொள்ளும் இயல்பும் அவர்பால் விளங்கின. முப்பத்தைந்து பிராயந்தான் அவருக்கு இருக்கும். அவருடைய தோற்றத்திலும் செயலிலும் சுப்பிரமணிய தேசி கரும் பிறரும் மயங்கி விட்டார்கள்.
பெட்டி வந்தபோது சின்னப் பண்டார ஸந் நிதிக்குப் பிராணணே வந்ததுபோல் இருந்தது.
"இவர்களைத் தெரிந்து கொள்ளவில்லையே!" என்றார் சுப்பிரமணிய தேசிகர். அவரே மணி ஐயர வர்கள் என்பதை உடனே தேசிகர் தெரிந்து கொண்டபோது அவருக்குப் பின்னும் வியப்பு அதிக மாயிற்று.
"தங்களைப் பற்றிப் பல முறை கேட்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில் தாங்கள் உதவி செய்திராவிட் டால் எங்கள் விருப்பம் நிறைவேறியிராது. தங் களுக்கு இந்த வேலையைக் கொடுத்தது அபசார மானாலும் இந்த வேளையில் இதைவிடப் பெரிய உப காரம் வேறு இல்லை" என்று சுப்பிரமணிய தேசி கர் கூறினார்.
"நீங்கள் வேலை கொடுக்கவில்லையே. நான் தானே போய் எடுத்து வந்தேன்? சரி; புறப் படலாமே" என்றார்.
புகழ்ச்சியை அவர் விரும்பவில்லை. காரியங்கள் ஒழுங்காக உரிய காலத்தில் நடைபெற வேண்டுமென் பதிலேயே அவருடைய ஞாபகம் இருந்தது.
அவருடைய பேச்சும், நடையும், காரியங்களும் மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. மதுரை நகர முழுவதற்கும் அவர் ஒரு மணியாக விளங்கி யதை அப்பொழுது நாங்கள் அறிந்தோம்.
சுப்பிரமணிய தேசிகரும் மற்றவர்களும் மகா கும்பாபிஷேக தரிசனம் செய்து கொண்டு திரும்பினா ர்கள். தேசிகருக்கு மணி ஐயரவர்களைப் பார்த்துப் பேசி இன்புற வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிருந் தது. "தங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் அதிகமாக இருக்கிறது. ஒரு ஸ்தானத்தில் இருப்ப தால் நாமே நேரில் வர இயலவில்லை" என்று தேசிகர் சொல்லி அனுப்பினார். கேட்ட மணி ஐயர் "நானே இரவில் வருகிறேன்" என்று விடையனுப்பினார். தேசிகர் அன்றிரவு அவரை அழைத்து வரும்படி தக்க மனிதர்களை விடுத்தனர். ஜன நெருக்கத் தால் வண்டிப் போகுவரத்து நிறுத்தப் பட்டிருந் தது. ஆதலின் மணி ஐயர் தாமே நடந்து சுப்பிர மணிய தேசிகர் தங்கியிருந்த பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். அவரைத் தேசிகர் தக்க உபசாரங்க ளுடன் வரவேற்றார். மணி ஐயர் வரப் போகிறா ரென்பதை அறிந்து பல பெரிய மனிதர்கள் அவரைப் பார்ப்பதற்கும் அவர் பேச்சைக் கேட்பதற்கும் வந்து காத்திருந்தார்கள். அதனால் அவருடைய புகழ் எவ்வாறு பரவியிருந்ததென்பதை ஒருவாறு அறிந்து கொண்டோம்.
(படம் -- மணிஐயரென்று வழங்குகிற *ஸர்.எஸ்.சுப்பிரமணிய ஐயரவர்கள்)
சுப்பிரமணிய ஐயரும் சுப்பிரமணிய தேசிகரும் நெடுநேரம் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தனர்.
சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள், வேதநாயகம் பிள்ளை முதலியவர்களாற் பாடப்பெற்ற கவிகளை நான் அங்குள்ள பெரியோர்கள் விரும்பியபடியே அப் பொழுது சொல்லிக் காட்டினேன். மணி ஐயர் தமிழில் அன்புடையவரென்பது அச்சமயம் எனக் குத் தெரிய வந்தது.
அந்த முதற் காட்சியிலே, ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்களிடத்தில் என்மனம் ஈடுபட்டது. அவர் அக்காலத்தில் மதுரையில் மிக்க செல்வாக்குடைய வக்கீலாக விளங்கி வந்தார். அவருடைய பேச்சின் கம்பீரமும் மனிதர்களை வசப்படுத்தும் முறைகளும் யாவராலும் போற்றிப் பாராட்டப் பெற்றன.
சகோதரர்கள்
மணி ஐயருடைய தந்தையாராகிய சுப்பைய ரென்பவர் இராமநாதபுரம் ஸமஸ்தானத்தில் 'மானேஜ'ராக இருந்த பொன்னுசாமித் தேவரிடம் உத்தியோகம் பார்த்து வந்தார். தேவருக்கு அவரிடம் மிக்க அன்பும் நம்பிக்கையும் உண்டு. அவருடைய பெருந்திறமையைக் கண்டு அவருக்குப் பொன்னு சாமித் தேவர் ஒரு பெருந்தொகையை ஒரு சமயத் தில் நன்கொடையாக அளித்தார். அதனைச் சுப்பை யர் தம் குடும்பத்திற்கு உபயோகப் படுத்திக் கொள் ளாமல் அதைக்கொண்டு மதுரை ஸ்ரீ மீனாட்சிசுந்த ரேசுவரர் கோயிலில் ஒரு வேத பாடசாலையை ஏற் படுத்தினார். இன்னும் அது நடைபெற்று வருகின்றது.
சுப்பையருக்குக் குமாரர்கள் மூவர். முதல்வர் இராமசாமி ஐயரென்பவர். இரண்டாமவர் சங்கரைய ரென்பவர். மூன்றாமவரே சுப்பிரமணிய ஐயர்.
இவர்களுள் இராமசாமி ஐயர் சிலகாலம் தாசில் தாராக இருந்தார். பிறகு ஹூஸூர் சிரஸ்தே தாரானார்.
சங்கரையரென்பவர் மிக்க தைரியமும் திறமை யும் உடையவர். அவர் சிவகங்கை ஸமஸ்தானத் திலும் இராமநாதபுரம் ஸமஸ்தானத்திலும் சிறந்த உத்தியோகங்களை வகித்து விளங்கியவர்; ஏழை ஜனங்கள்பால் இரக்க முடையவர், பெருங்கொடை யாளி. தம்முடைய தமையனாரும் தம்பியும் சம்பா திக்கும் பொருள்களை உசிதமாகவும் தாராளமாகவும் செலவிட்டு வந்தவர், அவ்விருவருக்கும் குடும்பக் கவலையே உண்டாகாதபடி பார்த்து வந்தார்; அவ ருக்கு இராமயாதபுரம், மதுரை முதலிய இடங்களில் மிக்க செல்வாக்கு இருந்துவந்தது.
மணி ஐயர் மதுரையிலே பிரபலமாக இருந்த காலத்தில் அவர் வைத்திருந்த பெட்டியொன்று காணாமற் போயிற்று. அதில் ஒரு முக்கியமான வழக்கின் சம்பந்தமான பத்திரங்கள் இருந்தன. அதனால் மணி ஐயர் சிறிது கலக்கமுற்றார்; சங்கரையரிடம், "அண்ணா, நான் என்ன செய்வேன்!" என்று விஷயத்தைத் தெரிவித்தார். அவர் மணி ஐயரைத் தேற்றி, "நீ கவலைப்படவேண்டாம். அப் பெட்டி எங்கே போயிருந்தாலும் வருவித்துத் தரு கறேன்" என்று தைரியம் கூறினார்.
'யாரோ திருடிக் கொண்டு சென்று விட்டதை இவர் எப்படி வருவிப்பார்?'என்று மணி ஐயர் எண் ணினார்.
சங்கரையருக்கு அப்பக்கங்களிலுள்ள மறவர் களும் கள்ளர்களும் பழக்கமானவர்கள். அவர்கள் அவரிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். தம் முடைய தம்பியின் பெட்டி களவு போய்விட்டதை அவ்விரு வகுப்பாரிலுமுள்ள தலைவர் சிலரிடம் அவர் சொன்னார். அடுத்த நாளே பெட்டி சங்கரையரிடம் வந்து விட்டது. 'எங்கேயிருந்தது எப்படி வந்தது?' என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் அந்தப் பெட்டியைத் தம்பியிடம் கொடுத்து, "ஏதாவது பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறதா? பார்" என்றார். மணி ஐயர் பார்த்தார். எல்லாப் பொருள் களும் முன் இருந்தபடியே இருந்ததைக் கண்டு அவர் அளவற்ற ஆச்சரியங் கொண்டார்.
மணி ஐயருக்குத் தம் தமையன்மார்களிடமும் அவரைச் சார்ந்தவர்களிடமும் என்றும் குறையாத அன்பு இருந்து வந்தது. சங்கரையர் காலமான போது மணி ஐயர் மிக வருந்தினார்; "நான் இது வரையிலே குடும்ப பாரம் இன்னதென்று தெரியாமல் வாழ்ந்து வந்தேன். எல்லாவற்றையும் அண்ணாவே கவனித்து வந்தார். இனிமேல் குடும்பக் கவலை என்னைச் சார்ந்து விட்டது" என்று கூறிக் கலங்கினார்.
தம்முடைய பந்துக்களைப் பாதுகாப்பதில் மணி ஐயர் மிகச் சிறந்தவர். அவர் பொருளைத் தமக்காகச் சம்பாதிக்கவில்லை. யாவருக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் இன்புறுவதைப் பார்த்து மகிழ்வதே தம் கடமையாகக் கொண்டிருந்தார். தாம் செய்யும் உதவிகளைப் பிறர் அறியாதபடி செய்வார்.
மதுரை நிகழ்ச்சிகள்
மணி ஐயர் 1842-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி பிறந்தார். இளமையிலேயே கல்விப் பயிற்சியைப் பெற்றார். சிறு பிராயத்தில் ஒரு தையற்காரர் அவருக்கு இங்கிலீஷ் எழுத்துக் களைக் கற்றுக் கொடுத்தாரம்.
அவர் சில பாடசாலைகளிலே கல்வி பயின்றார். வருஷந்தோறும் அவர் தம் கல்வித் திறமையி னால் பரிசுகள் பெற்று வந்தார். மதுரையில் இருந்த பள்ளிக்கூடத்திலே படித்தபிறகு, மேற்படிப்புக்காக அவரைச் சென்னைக்கு அனுப்ப அவருடைய பெரி யோர்கள் விரும்பவில்லை. அக்காலத்தில் அங்கே கலெக்டர் ஆபீஸில் இருந்த அவர் தமையனாராகிய இராமசாமி ஐயர் அவருக்கு இருபது ரூபாய் சம்பளத் தில் ஒரு வேலை வாங்கி வைத்தார். கலெக்டராபீஸில் இருந்துகொண்டே வக்கீல் பரீக்ஷைக்குப் படித்து அதில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். பிறகு எப்.ஏ. பரீக்ஷையில் தேர்ச்சியடைந்தார். அப்பால் பி.எல். பரீக்ஷைக்கும் போய்ப் பட்டம் வாங்கி வக்கீல் ஸன்னது பெற்று மதுரையில் இருந்துவர லானார். இடையே சிலகாலம் தாசில்தாராக இருந்தார். மதுரையில் அவர் வக்கீலாக இருந்த போது அவருக்கு வரவர மதிப்பு உயர்ந்து வந்தது. பெரிய வழக்குகளை அவர் ஏற்று வாதம் புரிந்தார்.
1870-ஆம் வருஷத்தில் அவர் மதுரை நகர பரி பாலன சபையில் கமிஷனராக நியமிக்கப் பெற்றார். 1880-ஆம் வருஷம் வரையில் அதன் தொடர்பு அவருக்கு இருந்து வந்தது. அக்காலத்தில் அவர் நகரவாசிகளுடைய நன்மையைக் கருதிப் பல அனு கூலங்களைச் செய்தார். 1882-முதல் மூன்று வருஷங் கள் நகர பரிபாலனசபையில் தலைவராக இருந்தார். அக்காலத்தில் ஒரு சிங்காரச்சோலையை உண்டாக் கினார். நகரத்தைச் சார்ந்த சாலைகளில் மரங்களை வைத்து வளர்க்கச் செய்தார். அவற்றில் சில மரங்கள் பட்டுப் போயின.
அவர் தமிழ் நூல்களைப் படித்தும் படிப்பித்துக் கேட்டும் வரும் வழக்கமுடையவர். தமிழ் படித்தவர்க ளிடமிருந்து பல அரிய விஷயங்களைக் கேட்டுணர்ந்து பாராட்டுவார்.அ தனால் தமிழ் அகத்திணை நூல் களில் இன்ன இன்ன நிலத்திற்கு இன்ன இன்ன மரங்கள் உரியன என்று கூறியிருப்பதை உணர்ந்து அவற்றை ஆராய்ந்து சாலைகளில் அவ்வந் நிலங்க ளுக்கு ஏற்ற மரங்களை வைத்து வளர்க்கச் செய்தார்.
அக்காலத்தில் மதுரை கலெக்டராக இருந்த கரோல் துரையென்பவர் மணி ஐயருடைய பெரு மையை நன்கு அறிந்து அவரிடம் மிக்க அன்பு பாராட்டி வந்தார். மதுரைத் திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக்கொண்டிருந்தனர்; சிலருடைய வீடுகளும் இருந்தன; அவர்களால் பல வகை அசுத் தங்கள் உண்டாயின. அக்கோயிற் கும்பாபிஷேகம் செய்வித்த அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத் தைச் சேர்ந்த நால்வருள் ஒருவராகிய வேங்கடா சலஞ் செட்டியார் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி பண்ணுவதற்கு முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. மணிஐயர் மிக்க இரக்கமும் அன்பும் உடையவரென்பதை அறிந்து அவரிடம் சென்று, "திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே! அதைச்சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக் காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்" என்று முறையிட்டுவந்தார்.
மணி ஐயர் அவர் கூறுவதன் உண்மையையும் அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார். உடனே கரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதிற் புறத்தே இருந்தவர்களுக்கு வேறிடங்கள் வாங்கித் தந்தும் வீடுகட்டப் பணம் உதவியும் நிலத்துக்கு விலை தந்தும் அவர்களைத் திருப்திசெய்வித்தார். பின்னும் வசதியான இடங்களிலே அவர்களைக் குடியேற்றிப் பாதுகாத்தார். அப்பால் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைக்கச் செய்தார். அதைப் பாதுகாக்க அதைச் சுற்றி இரும்புக் கிராதியால் ஒரு வேலி போடச்செய்தார். அன்றியும் உள்ளே கிணறு களை வெட்டுவித்துப் பூஞ்செடிகளுக்கு நீர் பாய்ச்சு தற்குரிய ஏற்பாடுகளும் செய்வித்தார். அந்த நந்தவனம் இன்றும் சிறப்பாக விளங்குகின்றது. கோயி லும் நந்தவனமும் சேர்ந்துள்ள அமைப்பு ஒரு பெரிய புஷ்பத்தோட்டத்தின் மத்தியில் அவ்வால யம் இருப்பதுபோலத் தோற்றும். மணி ஐயர் அமைத்த நந்தவனத்தைக் கண்டு சிவநேசச் செல் வர்கள் யாவரும் மனம் குளிர்ந்தார்கள். வேங்கடா சலம் செட்டியார் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு அவரை வாயார வாழ்த்தினார்.
ஆலயசம்பந்தமாக மணி ஐயர் செய்துவந்த நன்மைகள் பல. அவற்றை அறிந்த மதுரை நகர வாசிகள், 'இத்தகைய உபகாரியே ஆலயத்தை நிர் வாகம் செய்யவேண்டும்' என்று எண்ணி அவரைத் தேவஸ்தான சபையின் அங்கத்தினராகத் தேர்ந் தெடுத்தார்கள். கோயிற்பணம் வீணாகாமல் ஆலய சம்பந்தமான காரியங்களுக்கே உபயோகப்பட வேண்டுமென்ற கொள்கையையுடையவர் மணி ஐயர். ஆலயத்துக்குரிய பொருளை வீணாகச் செலவு செய் பவர்களிடத்தில் அவருக்கு உண்டான கோபம் மிக அதிகம். சில சமயங்களில் அத்தகையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்படியும் செய்திருக்கிறார்.
கும்பகோணம் காலேஜில் நான் இருந்த காலத் தில் சில வழக்குகள் சம்பந்தமாக மணி ஐயர் கும்ப கோணம் வருவதுண்டு. அக்காலங்களில் அவரைக் கண்டு பேசி இன்பமடைவேன். தாம் வாதிக்க வேண்டிய வழக்கின் சம்பந்தமாகச் சைவசம்பிர தாயங்கள் சில தெரியவேண்டியிருந்தன. சைவசமய நெறி யென்னும் தமிழ் நூலினால் பல விஷயங்கள் புலப்படுமென்று அறிந்து அந்நூல் முழுவதையும் ஒரே இரவில் படித்து மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார்.
அவர் கோர்ட்டில் வாதம் புரியும்போது அவர் பேச்சைக் கேட்பதற்காகவே பலர் வருவார்கள். காலேஜானது கோர்ட்டுக்கு அருகே இருத்தலால் அங்குள்ள உபாத்தியாயர்களிற் பெரும்பாலோரும் மாணாக்கர்கள் பலரும் ஒழிவு நேரங்களிற் போய் அவர் பேச்சைக் கேட்டு மகிழ்வார்கள். அதன் பிறகு ஒரு வாரம் வரையில் அவர் பேச்சைப் பற்றியே பேசிப் பாராட்டி வியப்பார்கள்.
பிரசங்கங்கள்
ஒருமுறை கும்பகோணம் 'போர்ட்டர் டவுன் ஹாலி'ல் அவர் ஓர் உபந்யாஸம் செய்தார். திர ளான ஜனங்கள் வந்திருந்தனர். அன்று பிரசங் கத்தில் அவர் மடங்களின் நிலையைப் பற்றிச் சில விஷயங்கள் சொன்னார். "மடங்கள் தம்முடைய நிலைமாறி வழக்குகளிலும் வியவகாரங்களிலும் ஈடு பட்டிருக்கின்றன. அவைகளிலே அதிகமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவை வக்கீல் களின் பணப்பெட்டிகளாக இருக்கின்றன" என்று அவர் கூறினார். அவர் அப்போது ஒரு மடத்து வக்கீலாக வந்திருந்தார். அவர் இவ்வாறு பேசிய போது கூட்டத்தில் இருந்த வக்கீல்கள் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். அதைக் கவனித்த மணி ஐயர். "நீங்கள் இன்ன விஷயம் இப்போது பேசுகிறீர்களென்பது எனக்குத் தெரியும். நான் மடத்து வக்கீலாக இருந்து கொண்டு மடத்து வக்கீல்களைக் குறை கூறுவது சரியன்றென்று நீங் கள் எண்ணுகிறீர்கள். மடங்களின் பழக்கம் ஏற் பட்டதனால் உண்மைகளை உணர்ந்து குறைகளை நீக் கிக் கொள்ள வேண்டும் என்றெண்ணித்தான் இதைச் சொல்கிறேன். மடங்கள் அறிவை விருத்தி செய்யும் விஷயங்களிலே பணத்தைச் செலவிடுவதுதான் நியா யம்" என்று கூறினார்.
வேறொரு முறை அவர் தமிழில் ஒரு பிரசங்கம் செய்தார். பெரிய வக்கீலும் சிறந்த அறிவாளியு மாகிய ஒருவர் தமிழிலே பேசுவதென்றால் அந்தக் காலத்தில் பெரிய அற்புதச் செயலாகும். கூட்டத் திற்குப் பலர் வந்திருந்தனர். மணி ஐயர் பேசத் தொடங்கினார். தமிழிலே பேசிப் பழக வேண்டிய தன் அவசியத்தை அவர் முதலில் வலியுறுத்தினார்: "நம்மவர்கள் இங்கிலீஷ் பாஷையைப் படித்துப் படித்து அந்தப் பாஷையிலேயே நினைப்பதற்கும் பேசுவதற்கும் பழக்கம் செய்து கொண்டுவிட்டார்கள். நம்முடைய தமிழ்ப் பாஷையிலே விஷயங்களை நினைக்க முடிவதில்லை. தமிழிலே பேசுவதை அகௌரவமாக நினைத்துக்கொள்ளுகிறார்கள். அது மிகவும் தப்பான எண்ணம். நான்கூட இங்கிலீஷ் அப்பியாசம் செய்த தோஷத்தினால் சில சில வாக்கி யங்களை இங்கிலீஷில் நினைத்து அப்பால் தமிழில் பேசுகிறேன். என் கையில் வைத்திருக்கும் குறிப்பு இங்கிலீஷில்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் இயன்றவரையில் தமிழிலேயும் பேசுவதை விடு வதில்லை" என்றார்.
அவரது பிரசங்கம் நன்றாக இருந்தது. எளிய தமிழ்நடையில் பேசினார். விஷயங்களை மிகவும் தெளி வாக எடுத்துரைத்தார். இடையிடையே குறள்முதலிய தமிழ்நூல்களிலிருந்து சிலபாடல்களையும் சிலபாடல் களின் கருத்தையும் கூறினார். அந்தப் பிரசங்கம் நடந்தபோதுதான் மணிஐயருக்குத் தமிழ்ப்பாஷை யின்பாலுள்ள பேரன்பை ஒருவாறு நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு வேறு பல சமயங்களில் அவர் தமிழிலே பிரசங்கம் செய்வதையும் கேட்டிருக் கிறேன். தமிழ் சம்பந்தமான சபைகளில் தமிழிலே தான் பேசுவார்; அப்பொழுதெல்லாம் அவர் சில தமிழ்ச் செய்யுட்களை இடையே சொல்லுவதில் தவறுவதே இல்லை. அவ்வாறு சொல்வதைத் தாம் ஒரு விரதமாகக் கொண்டிருப்பதாக அவரே ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். இங்கிலீஷில் பிரசங்கம் செய்யும்போதும் பெரும் பாலான சமயங்களில் தமிழ்ச் செய்யுட்களின் கருத்தை அவர் கூறுவதுண்டென்று சொல்வார்கள்.
திருவாவடுதுறை மடத்திற்கும் அவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலகரம் ஸ்ரீ சுப்பிர மணிய தேசிகரும் அவரும் அடிக்கடி சந்தித்துப் பழகினர். பிற்காலத்தும் அந்த மடத்தின் அபிமானத்துக்கும் மதிப்புக்கும் உரியவராக மணி ஐயர் விளங்கினார்.
சென்னை வாசம்
மணி ஐயர் சென்னையில் வாசம் செய்யத் தொடங் கிய காலம் முதல் அவருடைய திறமை மிகவும் அதிகமாக வெளிப்பட்டது. பலர் அவருடைய பழக் கத்தால் நல்ல பயனை அடைந்தார்கள்.
அவர் சென்னைக்கு வந்த சமயம் ஒரு நாள் நான் ஒரு கனவானைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் பரம்பரைச் செல்வக் குடும்பமொன்றிற் பிறந்தவர்; தமிழபிமானம் மிக்கவர்; என்பால் அன்புடையவர். அக்கனவான் அரசாங்க உத்தி யோகத்தில் இருந்தார். பிறகு அதை விட்டு விட்டுச் சென்னைக்கு வந்து வக்கீல் தொழில் நடத் தத் தொடங்கினார். அத் தொழிலில் அவருக்குத் தக்க வருமானம் கிடைக்கவில்லை.
நான் அவரோடு பேசிக் கொண்டிருக்கையில், "இப்பொழுது வழக்குகள் அதிகமாகத் தங்களிடம் வருகின்றனவா?" என்று கேட்டேன்.
அவர், "என் வருமானம் பழையபடியேதான் இருக்கிறது. ஆனால் இந்தத் தெருவில் கட்சிக்காரர் களின் போக்குவரவு சில காலமாக அதிகமாக இருக்கின்றது" என்றார்.
அவர் கூறியதன் கருத்து இன்னதென்று எனக்கு விளங்கவில்லை; "என்ன சமாசாரம்?" என்று சந்தேகத் தொனியோடு வினாவினேன்.
"சிலகாலமாக மணி ஐயரவர்கள் மேற்பக்கத்தி லுள்ள ஒரு பங்களாவில் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக்கொண்டு பல கட்சிக்காரர்கள் தினந் தோறும் வந்து போகிறார்கள்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
மணி ஐயர் சென்னைக்கு வந்ததுமுதல் அவரு டைய வக்கீல் தொழில் மிகவும் விருத்தியடைந்தது. பலர் அவரிடம் 'ஜூனியர்'களாக இருக்க முயன்ற னர். ஸ்ரீமான் பி. ஆர். சுந்தரமையரவர்களும் ஸ்ரீமான் வி. கிருஷ்ணசாமி ஐயரவர்களும் ஸ்ரீமான் சிவசுவாமி ஐயரவர்களும் அவருடைய பழக்கத் தினால் மிக உயர்ந்த நிலைமைக்கு வந்தவர்கள். அவர் களிடத்தில் மணி ஐயருக்கு இருந்த அபிமானம் அளவற்றது.
விடியற்காலை மணி ஐயர் எழுந்துவிடுவார். எழுந்து ஸ்நானம் மந்த்ர ஜபம் முதலியவற்றை முடித்துக்கொள்வார். பிறகு எட்டு மணிக்கு உத்தி யோக அறைக்கு வருவார். அவரைப் பார்ப்பதற் கும் அவரிடம் யோசனை கேட்பதற்கும் சட்ட புத்த கங்கள் வாங்கிக்கொள்வதற்கும் பலர் காத்திருப்பார் கள். அவர்கள் யாவரையும் கண்டு பேசி அவரவர் களுக்கு ஆகவேண்டியவற்றை விரைவாகவும் சுருக்க மாகவும் தெளிவாகவும் சொல்லி அனுப்பி விடுவார்.
காலத்தை வரையறை செய்துகொண்டு அதன் படி நடக்கும் வழக்கத்தை அவரிடம் நான் கண்டு வியந்தேன். கடிகாரம் அவருக்கு நேரத்தைக் காட்டுகிறதா, அவர் வேலைகள் கடிகாரத்தை ஓட்டு கின்றனவா வென்றே சந்தேகங்கூட எனக்குச் சில சமயங்களில் உண்டாகிவிடும். கடிகாரத்தைப்போல நேரம் தவறாமல் செய்ததனால் அவர் பல அரிய காரி யங்களைச் செய்ய முடிந்தது. எந்தக் காரியத்தையும் பல நாட்களுக்கு முன்பே ஆராய்ந்து முடிவுபண்ணி வைத்துவிடுவார்.
இராமநாதபுரத்து ஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதியவர்களோடு சென்னையில் ஒருமுறை நான் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழ் நூல் ஆராய்ச்சியைப்பற்றிய பேச்சு வந்தது. செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன வென்றேன். அப்பொழுது சேதுபதி அவர்கள், "மணி ஐயரவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். காலவரையறை செய்துகொண்டு வரிசையாக ஒவ் வொன்றாகக் கவனித்துவாருங்கள்" என்று சொன்னார்கள். என்னைப்போலவே அம்மன்னரும், மணி ஐயர் காலவரையறைப்படி வேலைசெய்வதைக் கவனித்திருப்பதை அறிந்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. மணி ஐயரே சில முறை காலத்தின் அருமையையும், காலத்துக் கேற்ப வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் முறையை யும் பற்றி என்னிடம் சொல்லியிருக்கின்றார்.
கும்பகோணத்தில் நான் இருந்தபோது பல நண்பர்களின் ஆதரவும் மற்ற அனுகூலங்களும் மிகுதியாக இருந்தன. ஆதலின் சென்னைக்கு மாற் றப்பெற்றுவந்த சில வாரங்கள் வரையில் இந்நகர வாழ்க்கை என் மனத்துக்குப் பொருந்தவில்லை.
ஒரு நாள் மணி ஐயரைக் காணச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த காலத்தில் அவர்,
"இந்த ஊர் எப்படி இருக்கிறது?" என்று என்னைக் கேட்டார்.
"கும்பகோணத்துக்கும் இதற்கும் அஜகஜாந் தரமென்று தோற்றுகிறது. இங்கே படித்தவர்களுக் கும் படியாதவர்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. மனிதருக்கு மனிதர் விசுவாசம் வைப்பதில்லை. எல் லோரும் அயலார்களாக இருக்கிறார்கள். செலவும் அதிகம்" என்றேன். அக்காலத்தில் எனக்கு அறு பது ரூபாய் சம்பளம்.
இந்த ஊரை அப்படி நினைக்கக்கூடாது. எல்லாம் வர வரச் சௌகரியமாகப் போய்விடும். உங்களைப் போன்றவர்கள் இந்த நகரத்திலே நன்றாகப் பிரகாசிக்கலாம். நான் மதுரையை விட்டு வரும்போது முதலில் அப்படித்தான் இருந்தது. மதுரையிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் பிரி வது மிகவும் கஷ்டமாக இருந்தது. இங்கே வந்து பழிகிய பிறகு இங்கும் பல நண்பர்கள் உண்டாகி விட்டார்கள். மதுரையைவிட அதிகமான சௌக் கியம் ஏற்பட்டது; உத்ஸாகமும் மிகுதியாயிற்று. இப் போது இந்த இடத்தை விட்டுப் பிரிவதென்றால் வருத்தமாக இருக்கும். நீங்களும் இனிமேல் நல்ல நிலைமைக்கு வருவீர்கள். உங்கள் தமிழ்ப்பணி நன் றாக நடைபெறும். இந்த ஊர் முழுவதும் உங்களுக் குப் பழக்கமாகிவிடும், பாருங்கள்" என்று அவர் தைரியம் கூறினார்.
எனக்கு அதனால் ஊக்கமுண்டாயிற்று. உண் மையில் அப்பெரியாருடைய வாக்குப் பலித்தது. கும்பகோணத்தில் செய்த தமிழ்த்தொண்டுகளைவிடப் பன்மடங்கு அதிகமாகச் செய்யும் நிலை சென்னையில் எனக்கு வாய்த்தது. இன்றும்,சென்னை வாழ்வைப் பற்றியும் இங்கே வந்த பிறகு செய்த வேலைகளப் பற்றியும் எண்ணும்போது தீர்க்கதரிசியாகிய மணி ஐயருடைய வார்த்தைகள் என் நினைவுக்கு வரு கின்றன.
பரோபகாரமும் இரக்கமும்
சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி அப்பெரியா ரைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் செல்லும் காலங்களிலெல்லாம், நான் என்ன புத்தகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறே னென்று விசாரிப்பார். அவ்வப்போது பொருளுதவி யும் செய்வார். "என் நண்பர்களிடம் சொல்லி உங்களுடைய வேலைக்கு உபகாரம் செய்யச்சொல்லு கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? சொல்லு ங்கள்" என்று வெகு வேகமாகக் கடிதம் எழுதத் தொடங்குவார். நான் இடைமறித்து, "பணத்தை முதலில் வாங்கி வைத்துக்கொண்டால் வேலை ஓடாது. செய்ய வேண்டியதைச் சித்தப் படுத்திக்கொண்டு அப்பால் பணம் பெறுவதுதான் நேர்மையானது" என்று சொல்லுவேன். அவருடைய கட்டளைக்குப் பணிந்து எனக்கு உதவிசெய்ய முன்வருபவர் களுக்கு என்பால் நேரே அன்பு இருக்குமென்று நான் எங்ஙனம் கருதுவேன்? அவர்களிடமிருந்து பெறும் பணத்தைவிட அன்புடைய மணிஐயர் வார்த்தைகளே அதிக மதிப்புள்ளவையாகத் தோன் றின.
நான் புதிய நூலைப் பதிப்பிக்கத்தொடங்கும் போதெல்லாம் மணிஐயர் உதவி புரிந்து வந்தார். "பணம் இல்லாமல் என்ன காரியம் நடக்கும்? நீங் கள் பணம் வேண்டாமென்று சொல்வது தப்பு. பணக்காரர்கள் உங்களுக்குக் கொடுப்பதனால் அவர் களுக்கும் கியாதி; உங்களுக்கும் அனுகூலம்" என்று பலமுறை அவர் வற்புறுத்தியதுண்டு. அவர் தம் முடைய பெருந்தன்மையினால் அவ்வாறு கூறினாரா யினும், அவருடைய தூண்டுதலால் பிறர் செய்யும் உதவிகளை முயற்சிசெய்து பெறுவதற்கு என் மனம் துணியவே இல்லை.
மணி ஐயர் ஏழைகளிடத்தில் அதிக இரக்க முடையவர். தம்மிடம்வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை யென்னாமல் கொடுத்து வந்தார். ஒவ்வொரு ஞாயிற் றுக்கிழமையும் பல பேர்கள் அவரிடம் வந்து பணம் பெற்றுப் போவார்கள். அவரிடம் சம்பளம் பெற் றுப் படித்த மாணாக்கர் பலர்; உணவுக்காகப் பணம் பெற்றுப் படித்து முன்னுக்கு வந்தோர் பலர். சிறு குடும்பங்களில் ஆதாரமாக இருந்த ஒருவர் இறந்து போனால் குடும்பத்தாரனைவரும் ஜீவனோபாயத்திற்கு வழியில்லாமல் தவிப்பார்கள். அத்தகையவர்களிற் பலர் மணி ஐயரிடம் வந்து முறையிடுவார்கள். அவ் வுபகாரி அவர்களுக்குத் தக்க தொகையளித்து உதவி புரிவார். அவர்களுக்கு நூற்றுக்கணக்காகக் கொடுத்ததும் உண்டு. இவ்வளவு செய்தும் அச்செயல்கள் பிரசித்தப்படலாகாதென்று அடக்கி வைத்திருப்பது அவர் இயல்பு.
அவர் சென்னையில் ஜட்ஜாக வந்த காலத்தில் ஹைகோர்ட்டில் பங்கா இழுக்கும் கிழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய குடும்பி. நல்ல உடை களை அணிந்து கொள்ள அவனுக்கு வருவாய் போத வில்லை. சில சமயங்களில் அழுக்கான உடை அணிந்து வருவான். அதுகண்ட மற்றொரு ஜட்ஜ் அவன் கிழவனாகிவிட்டமையால் வேலைக்கு உதவ மாட்டானென்று கூறி வேலையினின்றும் நீக்கிவிடும் படி ரிஜிஸ்ட்ராருக்கு எழுதிவிட்டார். அதனை அறிந்த அக்கிழவன் அடைந்த வருத்தத்துக்கு அள வில்லை. மணி ஐயரிடம் வந்து அவன் முறையிட் டான். அவர் உடனே அவனைத் தமக்குப் பங்கா இழுக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டார்; "இவன் கிழவன், வேலை செய்ய இயலாதவனென்றால், நான் இவனைவிடப் பிராயத்தில் முதிர்ந்தவன். ஏழு ரூபாய் சம்பளம் வாங்கும் இவன் வேலை செய்ய உப யோகமற்றவனென்றால், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் நான் இவனைக் காட்டிலும் உபயோகம் இல்லாதவனே" என்று கூறினார்.
கிழவன் மணி ஐயரால் தன் வேலை நிலைத்ததை அறிந்துகொண்டு அவரை வாயார வாழ்த்தினான்.
வேலைத் திறமை
கவர்ன்மெண்டு வக்கீலாகவும், ஜட்ஜாகவும் வேலை பார்த்த காலங்களில் அவருடைய அறிவின் திறமை மிகவும் பிரகாசித்தது. ஸ்ரீ முத்துசாமி ஐயருக்குப் பிறகு ஹைகோர்ட்டு ஜட்ஜ் பதவியை வகித்துப் பெருமை யடைவதென்றால் அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் இருக்கவேண்டுமல்லவா? மணி ஐயர் அவ்வப்போது அளித்துவந்த தீர்ப்புக்களை உலகமுழுதும் பாராட்டியது. சட்ட நிபுணர் களுக்கு அவருடைய தீர்ப்புக்கள் மிகவும் பயன் பட்டன.
எந்த காரியத்தையும் விரைவாகவும் திருத்த மாகவும் செய்து முடிக்கும் திறமையுடையவர் அவர். அவர் தாம் எழுதும் தீர்ப்புக்களை ஹைகோர்ட்டில் ரிஜிஸ்ட்ராராக இருந்த ஓர் ஐரோப்பியரிடம் காட்டு வாராம். "ஆனைக்கும் அடி சறுக்கும்" ஆதலின் தாம் எழுதுவதில் குற்றம் இருக்கக்கூடுமென் றெண்ணி அங்ஙனம் செய்து வந்தார். அதனை அவர் ஒரு குறைவாகக் கருதவில்லை. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டுமென்பதே அவரது நோக்கம்.
இங்ஙனம் அவர் தம் தீர்ப்புகளை ரிஜிஸ்ட்ரா ரைக் கொண்டு பார்க்கச் செய்வதைச் சிலர் விரும்ப வில்லை; "இவ்வளவு சிறந்த அறிவாளியாகிய இவர் எழுதுவதில் என்ன பிழை இருக்கப்போகிறது? அவ ரிடம் காட்டுவது கௌரவக் குறைவன்றோ?" என்று முணுமுணுத்தார்கள். அதனை உணர்ந்த மணி ஐயர் ஒரு சமயம் பல நண்பர்கள் கூடியிருந்த கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி, "நாம் வருந்தி உழைத்துக் கற்றுக்கொண்ட இந்தப் பாஷையில் நாம் தவறு செய்தல் இயல்பே.
இதையே தம் தாய்ப் பாஷையாகக் கொண்டவருக்கு ஏதேனும் குறை தோற்றலாம். அந்தக் குறையை நாம் நிவர்த்திசெய்து கொள்ளுவதனால் நமக்கு அகௌரவம் உண்டாகாது. குறையைத் தெரிந்து கொள்ளாமலே விட்டுவிட்டால், குறை குறையாகவே நிலைபெற்று என்றும் மாறாத இழிவை உண்டாக்கும். ஆகையால்தான் நான் இந்த முறையை மேற் கொண்டேன்" என்று தம் கொள்கையை விளக் கினார்.
பிறருக்குக் கிடைத்தற்கரிய ஹைகோர்ட்டு முதல் ஜட்ஜ் பதவி அவருக்குக் கிடைத்தது . அந் தப் பதவியில் அவர் மிக்க கௌரவம் பெற்றார். திடீ ரென்று ஒருநாள், அவர் தம் வேலையை ராஜீநாமாச் செய்துவிட்டாரென்ற செய்தியை யாவரும் அறிந் தனர். 1907-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். தேக அசௌக்கியம் காரணமாக அவர் ராஜீநாமாச் செய்தாரென்று பத்திரிகைகள் கூறின. அவர் பின்னும் சில மாதங்கள் வேலை பார்த்திருந்தால் வருஷத்திற்கு 1200 பவுன் பென் ஷன் கிடைத்திருக்கும்; முன்னதாக விலகி விட்ட மையால் 880 பவுன்களே கிடைத்தன.
முதல் நாள் இரவு பத்திரிகையில் அவரது உத்தியோகத்துறவைப் பற்றிய செய்தியைப் பார்த் தேன். மறுநாட்காலையில் அவர் ஜாகைக்குப் போனேன். அப்பொழுது அவர் அநுஷ்டானம் செய்துவிட்டு வழக்கம்போல் வந்து உட்காரந்தார்.
"நேற்று ராத்திரிதான் பத்திரிகையில் பார்த் தேன்" என்று ஆரம்பித்தேன்.
"அதுவா? ஆமாம். நான் இப்போது பந்தத் திலிருந்து விடுபட்டேன். இவ்வளவு நாள் பரா தீனனாக இருந்தேன். இப்போது என் இஷ்டப்படி நல்ல காரியங்களைச் செய்துகொண்டும் இஷ்டர் களோடு பேசிக்கொண்டும் சுகமாக இருக்கலாம்."
"இன்னும் சில மாதங்கள் இருந்தால் அதிகப் பென்ஷன் கிடைக்குமென்று சொல்லுகிறார்களே."
"அவ்வளவு மாதங்கள் நிர்ப்பந்தத்திற்கு அடங்கியிராமல் விடுதலை பெற்றதுத்தான் எனக்கு ஸந்தோஷம். இனிமேல் ஈசுவரத்தியானம் செய்து கொண்டு இருக்கலாம். பணத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? 'பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்.' பரோபகாரம் செய்வதற்கு முடியாமல் நிர்ப்பந்தங்களில் அகப்பட்டுக்கொண்டு இருப்பதாவிடச் சீக்கிரமே விலகிவிடுவது நல்ல தல்லவா? இனிமேல் நான் சர்வ சுதந்திரன். பட்டினத்துப் பிள்ளையார் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்களே. அவர் வர்த்தகராக இருக்கும் வரையில் ராஜாவுக்கு அடங்கி யிருந்தார். துறவி யானவுடன் ராஜா சொல்லியனுப்பினார். போக வில்லை. ராஜாவே அவரைத் தேடிக்கொண்டு சென்றார். பட்டினத்துப் பிள்ளையார் கடற்கரை யில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தபடியே இருந் தார். 'இப்போது என்ன நன்மையை அடைந்து விட்டீர்கள்?' என்று ராஜா கேட்டார். 'நீர் நிற்க நான் உட்கர்ந்தபடியே இருப்பது முதல் நன்மை' என்று அவர் சொன்னார். அவருடைய சரித்திரம் எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று அவர் கூறினார்; கூறும்போது அவருடைய கண் களில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. பல நாட்க ளாகக் கட்டுக்குள் அகப்பட்டு வெளிவரவேண்டும், வெளி வரவேண்டும் என்று எப்பொழுதும் எண்ணி, அதற்குரிய சமயம் வந்தவுடன் விடுதலைபெற்றால் ஒருவருக்கு எத்தனை சந்தோஷம் இருக்குமோ அத்தனை சந்தோஷம் அவரிடம் உண்டாகி யிருந் தது. துறவு மார்க்கத்தில் அவர் மனம் பதிந் திருந்ததென்பதை அவர் கூறிய வரலாற புலப் படுத்தியது. அவர் அன்று 'பரோபகார: புண் யாய பாபாய பரபீடனம்' என்று கூறிய அரிய வாக்கியம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருந்தபோது அவ ருடைய பேரர் சங்கரையர் அங்கே வந்து நின்றார். அவரைக் கண்டவுடன், "நீ இன்ன விஷயமாக வந் தாயென்று தெரிகிறது. நான் ராஜீநாமாக் கொடுத்துவிட்டதைப்பற்றிக் கவலையுற்று விசாரிக்க வந்திருக்கிறாய். நான் இனிமேல் அடிக்கடி உன் னோடு பேசலாம். எல்லா விஷயங்களையும் நானே கவனிக்கலாம். பத்து மணியாய் விட்டதே, கோர்ட்டுக்குப் போகவேண்டுமே என்ற நிர்பந்த மில்லை. நீயும் இங்கே எப்போதும் வரலாம்; எப் போதும் பேசலாம்" என்று சொல்லியனுப்பினார்.
பிறகு வெளியில் புறப்பட்டார். அங்கே கோர்ட்டுச் சேவகன் நின்று கொண்டிருந்தான்; "இனிமேல் நீ இங்கே வந்து அலையவேண்டாம். நான் வேலையிலிருந்து விலகிவிட்டேன். ஆனாலும் அடிக்கடி வந்து பார். தீபாவளி பொங்கலுக்கு இனாம் வாங்கிக் கொண்டு போ" என்று அவனிடம் கூறினார்.
இப்படியே தம் வேலைக்கார்களிடம் சொல்லி அனுப்பியதோடு அவரவர்களுக்குப் பொருளுத வியும் செய்தார். அக்கால முதல் அவர் பரோப கார முயற்சிகளில் அதிகமாக ஈடுபடலானார்.
இருமுறை நான் மதுரைக்குப் போயிருந்தேன். அக்காலத்தில் மணி ஐயர் அங்கே வந்திருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். அவ ருடைய தமையனார் குமாரரும் பிரபல வக்கீலுமாகிய ஸ்ரீ ராமஸுப்பையருடைய பங்களாவில் தங்கியிருந் தார். நான் மாலையில் சென்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அன்றிரவு அங்கே தம்முடன் போஜனம் செய்ய வேண்டு மென்று மணி ஐயர் சொன்னார்.
அன்று நண்பர்களும் சுற்றத்தார்களும் சேர்ந்த ஒரு சிறு கூட்டத்தினருக்கு விருந்து அளிக்கப் பெற் றது. வீட்டுத்தோட்டத்தில் அது சடைபெற்றது. நல்ல நிலா எறித்தது. மரங்களிக்குக் கீழ் இலைபோட்டிருந் தார்கள். மணி ஐயர் ஓர் இலையில் உட்கார்ந்து கொண் டனர். அவருக்கு அப்பால் ஓர் இலைவிட்டு அடுத்த இலையில் அவருடைய மூத்தகுமாரராகிய சுப்புசாமி ஐயர் உட்கார்ந்தார். மணி ஐயர் என்னை அழைத்து இடையிலுள்ள இலையில் உட்காரச் சொன்னார். நான், "அப்படி உட்கார என் மனம் அஞ்சுகிறது. குமார ருக்கும் பிதாவுக்கும் இடையில் உட்காரக் கூடாதெ ன்பார்கள்" என்று மெல்லச் சொன்னேன், "நீங் களும் அப்படித்தானே? அவனுடைய ஸ்தானம் உங் களுக்கும் உண்டு; உட்காருங்கள்" என்று பளிச் சென்று அவர் கூறினார். அந்த வார்த்தை என் காதில் விழுந்தபோது, உடலில் மயிர்க் கூச்செறிந் தது. எனக்கு ஏதோ என்றும் கிடையாத ஒரு பாக்கியம் கிடைத்துவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.
மணி ஐயரை நான் உண்மையிலே சில விஷயங் களில் என் தந்தையாரைப் போலவே எண்ணி யிருந்தேன். என்னுடைய தமிழாராய்ச்சி விஷயத் திலும் அபிவிருத்தி விஷயத்திலும் அவருக்கிருந்த பேரன்பே அதற்குக் காரணம். நான் கும்ப கோணத்தில் வேலைபார்த்து வந்தபோது தமிழ் நூற்பதிப்பின் பொருட்டு விடுமுறைக் காலங்களில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருப் பேன். அக்காலங்களில் ஒவ்வொரு முறையும் மணி ஐயரைப் பார்த்துச் செல்வேன். போகும் போதெல்லாம் அவர் கூறும் வார்த்தைகளால் என் காது குளிரும். அலைச்சலினாலும் உழைப்பினாலும் சரியான வேளையில் ஆகாரமில்லாமல், ஏதோ கிடைத்ததை உண்டுவிட்டுக் காரியத்திலே கண்ணா யிருப்பேன். என் நிலையை அவர் நன்கு உணர்ந்தவர். ஆதலின் நான் போனால் ஸ்நானம் செய்யச் சொல்லித் தம்மோடு சாப்பிடச் சொல்வார்; தம் சமையற்காரனை அழைத்து. "அடே, அவர் இரவும் பகலும் உழைத்துக் கஷ்டப்படுகிறார். நிறைய நெய் விடு. தேங்காய்ப்பால் காய்ச்சிக்கொடு. பாலிலே கற்கண்டு போட்டுக் காய்ச்சிக்கொடு" என்று உத் தரவு செய்வார். அந்த உபசாரத்தினாலும் உணவி னாலும் என் வயிறு குளிரும். அக்காலங்களில் அவரை என் தாய்போலக் கருதினேன். எனக்கு இன்னது வேண்டுமென்று அறிந்து உதவும் அவரைப் 'பால் நினைந்தூட்டுந் தாயினும் சாலப் பரிவுடையவர்' என்றே கூறவேண்டும்.
இவ்வாறு பெற்றோர்களின் ஸ்தானத்தில் வைத்து மதித்திருந்த என் கருத்துக்கு இணங்க மணி ஐயர் அந்த நிலவொளியில் கூறிய வார்த்தை கள் உடலில் அமுத தாரைபோலப் பாய்ந்தன. இன்று முதல் சிலநாட்கள் வரையில் அவ்வார்த்தை களினால் உண்டான இன்ப உணர்ச்சி என் நெஞ் சத்தினின்றும் நீங்காமல் இருந்தது.
மயிலாப்பூரில் பென்னாத்தூர் சுப்பிரமணிய ஐயர் ஹைஸ்கூலை மணி ஐயர் 1905-ஆமை வருஷம் ஜனவரி மாதம் 13-ம் * தேதி திறந்து வைத்தார். அன்று அங்கே பெருங் கூட்டம் கூடியது. அந்தப் பள்ளிக் கூட விஷயமாகச் சில செய்யுட்கள் இயற்றிப் படிக்கவேண்டுமென்று அதன் காரியதரிசி விரும் பினார்; அங்ஙனமே நான் நான்கு செய்யுட்களை எழுதிக்கொண்டு போயிருந்தேன்.
அன்று நான் அங்கே போகும்போது அந்தக் கட்டிடத்தின் உள்ளும் புறம்பும் ஜனங்கள் மொய்த் திருந்தனர். வாசலில் போய் நின்றேன். அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளேசெல்ல என் னால் முடியவில்லை. வாழ்த்துச் செய்யுட்களை வாசிக்க நான் உள்ளே செல்லவேண்டும். கூட்டத்தினரோ சிறிதேனும் வழிவிடவில்லை. நின்றவர்களும் என்னை அழைத்துச் செல்லவில்லை. நான் ஒன்றும் தெரியா மல் மயங்கி நின்றேன். அப்பொழுது உள்ளே இருந்த மணி ஐயர் என் தலையைக் கண்டு விட்டார்; நான் உள்ளே புக முடியாமல் தவிப்பதைக்கூட அவரு உணர்ந்திருத்தல் கூடும். அங்கிருந்தபடியே "ஸ்வாமிநாதையர்வாள்! வாருங்கோ! இப்படி வர வேண்டும்" என்று பலத்த தொனியோடு அழைத்த னர். அடுத்த நிமிஷமே எல்லோரும் என்பக்கம் பார்க்கத்தொடங்கினர். கூட்டம் வழிவிட்டது. என் கையைப் பிடித்து இருவர் உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களெல் லாம் ஆளுக்கு ஒரு நாற்காலியை எடுத்து எனக்குப் போட ஆரம்பித்தனர். நான் சிரித்துக்கொண்டே மணி ஐயருக்கு அருகில் போய் அமர்ந்தேன்.
செய்யுட்களைப் படித்துக் காட்டுவதற்கு முன் சபைத்தலைவரைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்லும்போது நான் உள்ளே புகுவதற்குப் பட்ட கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னேன்; "இவர்கள் என்னைக் கூப்பிடாவிட்டால் நான் உள்ளே வந்திருக்கமுடியாது. இவர்களுடைய அழைப்பு இவ்வளவு போரையும் என் பக்கம் திருப்பிவிட்டது. அந்தச் சமயத்தில் நான் பெறாத உபசாரங்களைப் பெற்றேன். எனக்கு முன்பு பழக்கமில்லாதவர்களும், என்னைக் கண்டு பராமுகமாக இருந்தவர்களும் என்னைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர் கள் பார்வை விழுந்ததன் விசேஷம் அது. எனக்குத் தனியே ஒரு கௌரவம் இல்லை.
'மாகஞ் சிறுகக்* குவித்து *நிதிக்குவை ஈகையி னேககழுத்த மிக்குடைய-மாகொல்* பகைமுகத்த வென்வேலான் பார்வையிற றீட்டம் நகைமுகத்த நன்கு மதிப்பு'
என்று பழைய காலத்திலே ஒரு பெரியார் சொல்லிய யிருக்கிறார். பெரிய மனிதர்கள் தங்கள் பார்வை மூல மாக உண்டாக்கும் மதிப்பு, பலகோடி திரவியங் களைக் காட்டிலும் சிறப்புடையதென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் எனக்கு இப்போது தெளிவாக விளங்கியது" என்று பேசி னேன்.
அதைக் கேட்ட மணி ஐயர், "கூட்டம் அதிகம். உங்கள் அருமையை அவர்கள் அறிவார்களா? நான் ஜட்ஜ்; அதனால் மதிப்பு" என்று சொல்லிச் சிரித்தார். அன்று நான் இயற்றிய செய்யுட்களைப் படித்தேன். மணி ஐயர் கேட்டு மகிழ்ச்சியுற்றார்.
ஒரு முறை நான் காலேஜிற்குப் போய்க் கொண்டிருந்தேன். என்பின்னால் கோச்சுவண்டி யில் வந்துகொண்டிருந்த மணி ஐயருடைய பேரராகிய சங்கரையர் என்னைக் கண்டதும் கீழே இறங் கித் தம் வண்டியில் ஏற்றிக்கொண்டு காலேஜில் விட்டார். அவர் அக்காலேஜில் அப்போது படித் துக்கொண்டிருந்தார். அன்று மாலையில் நான் மணி ஐயரைச் சந்தித்தபொழுது, "தங்கள் உயர்ந்த குணங்கள் தங்கள் சந்ததியாரிடத்தும் விளங்குவதை இன்று கண்டேன்" என்று சொன்னேன்.
"என்ன சமாசாரம்?" என்று அவர் கேட்டார். நான் விஷயத்தைக் கூறினேன். அவர் மகிழ்ச்சி யடைந்ததோடு உடனே சங்கரையரைக் கூப்பிட் டனுப்பினார்; "நீ காலையில் இவர்களை வண்டியில் ஏற் றிக்கொண்டு காலேஜில் விட்டாயாமே. அப்படித் தான் செய்யவேண்டும். ஸந்தோஷம். இப்படியே எப் போதும் மற்றவர்களுக்கு உபகாரம் செய்து கொண் டிருக்கவேண்டும்" என்று அவரைப் பாராட்டினார்.
என்னுடைய தமிழாராய்ச்சிக்கு மணி ஐயர் செய்த உதவிகளுள் ஒன்று முக்கியமானது. எனக் குத் துரைத்தனத்தார் ஒரு சமயம் தமிழ் நூல் வெளி யீடுகளுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். அதற் குக் காரணமாக இருந்தவர்கள் மணி ஐயரும், பிரஸி டென்ஸி காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் பில்டெர்பெக் துரையுமேயாவர்.
இயல்புகள்
விடியாற்காலையில் தவறாமல் எழுந்து நீராடுவது மணி ஐயர் வழக்கிம். பிறகு ஜபம் செய்வார். மந் திர ஜபத்தில் அவருக்கு மிக்க நம்பிக்கை உண்டு.
ஸ்காந்தபுராணக் கீர்த்தனம் இயற்றிய பெருங்கரை ஸ்ரீ கவிகுஞ்சரபாரதியாரிடத்தில் அவர் பஞ்சாக்ஷ்ர உபதேசம் பெற்றார். பாரதியாருடைய குடும்பத்தின ருக்கு அவர் பல சமயங்களில் உதவிபுரிந்திருக்கிறார்.
அவருடைய உபாஸனா மூர்த்தி ஸ்ரீ வேணுகோ பாலர்; அம் மூர்த்தியினுடைய மந்திரஜபத்தை நெடு நேரம் இருந்து செய்வார். பகவத்கீதை ஆராய்ச்சி யில் அவர் மனம் பெரிதும் ஈடுபட்டது. தேவார திருவாசகப் பாடல்களைக் கேட்டு உருகிப்போவார். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஆசிரியராக இருந் தவரும், எட்டயபுரம் ஜமீனில் சிலகாலம் மானேஜ ராக இருந்தவரும், என் நண்பருமாகிய மஹாலிங் கையரென்பவரை அழைத்துக்கொண்டு ஒருநாள் மணி ஐயரிடம் சென்றேன். மஹாலிங்கையர் இனிய சாரீரவளம் படைத்தவர். தேவார திருவாச கங்களையும் திருப்புகழையும் பொருள் புலப்படும்படி இசையுடன் நன்றாகச் சொல்வார்.
மணி ஐயரோடு பேசிக்கொண்டிருந்தோம். மஹாலிங்கையர் சில பாட்டுக்களைப் பாடினார்; திருத் தாண்டகம் சிலவற்றை இசையுடன் சொன்னார். கேட்டு மணி ஐயர் உருகினார். மஹாலிங்கையர் திரு வையாற்றுத் திருத்தாண்டகத்தை ஆரம்பித்தார்:
"ஓசை யொலியெலா மானாய் நீயே உலகுக் கொருசுடராய் நின்றாய் நீயே"
என்று பாடினார். "உலகுக் கொருசுடராய் நின் றாய் நீயே" என்ற பகுதியைக் கேட்டபோது மணி ஐயர், "ஹா! ஹா!" என்று கூறிக்கொண்டு எழுந்து நின்று தலைமேல் கைகளைக் குவித்துக் கொண்டார்: "உலகுக்கு ஒரு சுடராய் நின்றாய் நீயே, உலகுக்கு ஒரு சுடராய் நின்றாய் நீயே" என்று திருப்பித் திருப்பிச் சொன்னார்; அவர் கண்களி லிருந்து தாரைதாரையாக நீர் பாய்ந்தது; "ஹா! ஹா! என்ன வாக்கு! என்ன உண்மை!" என்று அவர் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் களித்துக் குதூ கலித்து ஆரவாரித்தார். அந்த ஆனந்தம் அடங் கச் சிறிதுநேரம் ஆயிற்று. அப்பால் அமைதி பெற்று, "நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு மர மோபகாரம் செய்திருக்கிறாரகள். என்ன பாடல்! என்ன பண்! இரண்டுமே இசையும்போது மனத்தை எப்படி உருக்குகின்றன! எவ்வளவு உயர்ந்த பாடல் கள் தமிழிலே இருக்கின்றன!" என்று கூறினார்.
மணி ஐயருக்குச் சங்கீதத்திலே மிக்க விருப்பம் உண்டு. ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு மலரை அடையாளமாக்க் கூறுவார்கள். சில ராகங்களைப் பாடும்போது சில மலர்களின் வாசனை உண்டாகு மென்றும் சொல்வார்கள். சில ராகங்களால் சில மலர்கள் மலருமென்றும் சொல்வதுண்டு.
ஒருநாள் அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது பழைய தமிழ்நூல்களிலுள்ள அரிய செய்திகள் சிலவற்றைச் சொல்லிக்கொண்டே வந்தேன்; "வண்டுகள் பாடவதனால் காட்டிலுள்ள மலர்கள் மலருமென்று சில செய்யுட்களில் ஒரு செய்தி சொல்லப்பட் டிருக்கின்றது" என்று சொன்னேன். "ஆமாம்; அவ்விஷயம் உண்மை யாகத்தான் இருக்கும். ராகத்திற்கும் புஷபங்களுக் கும் சம்பந்தம் உண்டென்பதை நான் ஆராய்ந்து அறிந்திருக்கிறேன். ஒரு சமயம் புஷ்பங்களிலுள்ள மகரந்தப் பொடிகளை ஒரு தட்டில் வைத்து அருகில் இருந்த ஒரு வித்துவானைப் பாடச் சொன்னேன். பல இடங்களில் சிதறுண்டிருந்த அந்தப் பொடிகள் தாமாகவே சேர்ந்துகொண்டன. சிருஷ்டியில் எத் தனையோ ரகசியங்களைப் பகவான் அமைத்திருக் கிறார். அவைகளை மனிதன் எங்கே அறிய முயல் கிறான்!" என்று எனக்கு ஒரு புதிய விஷயத்தை அவர் எடுத்துரைத்தார்.
கட்டிடங்களை அழகாகக் கட்டி அவைகளில் பல பூஞ்செடிகளை வைக்க வேண்டுமென்பது அவர் விருப் பம். மதுரையிலும், கோடைக்கானலிலும், சென்னை யிலும், வேறு சில இடங்களிலும் அவர் பங்களாக் கள் கட்டினார். அங்கங்கே சண்பகம், ரோஜா முத லிய புஷ்பச்செடிகளையும் வில்வம் முதலியவற்றையும் வைக்கச் செய்தார்.
ஒருநாள் அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த போது கோடைக்கானலைப்பற்றிய பேச்சு வந்தது. "சங்க நூலாகிய புறநானூற்றில் கோடைக்கான லைப்பற்றி ஒரு பாட்டு இருக்கிறது. அங்கே கடிய நெடுவேட்டுவன் என்ற உபகாரி ஒருவன் வாழ்ந் திருந்தானாம்" என்றேன்.
"அப்படியா? இன்னும் என்ன சொல்லப்பட் டிருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டார்.
"அங்கே வேலிகளாலெல்லாம் முல்லைக் கொடி கள் படர்ந்து பூத்திருக்குமாம். 'வெள்வீ வேலிக் கோடை' என்று புலவர் அதைப் பாராட்டியிருக் கிறார்."
"அடே! இயற்கையழகை அவர்கள் நன்றாகச் சொல்கிறார்களே! நம்முடைய பங்களாவில் முல்லைக் கொடி வைக்கச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் வந்து பாருங்கள்" என்று அவர் கூறி மகிழ்ந்தார்.
அவருடைய ஸௌலப்ய குணத்தையும் நன்றி யறிவையும் நான் என்றும் மறவேன். ஓரு இந்திய கனவானால் அடையமுடியாத உயர்ந்த பதவியை அவர் அடைந்திருந்தார். ஆனலும் எளியவர்கட்கு எளியராகி உபகரித்த அவருடைய இயல்பு மிகச் சிறந்தது. மதுரையில் அவருக்கு ஒரு முகம்மதியக் கிழவன் கோச்சுவண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். சென்னைக்கு அவர் வந்தபோது அவனையும் இந்நகரத் துக்கு வருவித்துக்கொண்டார். இங்கும் அவன் அவருக்கு அந்த வேலை புரிந்துவந்தான். இறுதிக் காலம் வரையில் அக்கிழவனை அவர் பாதுகாத்து வந்தார். தம்மோடு பழகியவர்கள், தம்பால் வந்து ஆதரவு தேடினவர்கள், தம் சுற்றத்தார், தம் சுற்றத் தாருக்கு உதவி புரிந்தோர் முதலிய யாவர்க்கும் தம் மால் இயன்ற உபகாரங்களை அவர் செய்துவந்தார்.
சில சமயங்களில் நல்ல காரியங்களுக்குத் தாமே வலிய முன்வந்து உதவி புரிவது அவர் இயல்பு. தபால் இலாகாவில் பெரிய உத்தியோகத்திலிருந்த வி. கனகசபைப் பிள்ளை யென்பவர் '1800 வருஷத்திற்கு முந்திய தமிழர்நிலை' என்னும் புத்தகமொன் றைத் தாம் எழுதி வெளியிடப்போவதாக ஓரிடத்திற் பிரசங்கம் செய்தார். மணி ஐயர் அச்செய்தியைப் பத்திரிகையிற் கண்டு, அப்புத்தகத்தை வெளியிடும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக வலிந்து கடிதம் எழுதி ஊக்கமூட்டினார். அங்ஙனமே உதவி புரிந்தார்.
பழமை மறவாது பாராட்டும் சிறந்த குணம் அவர்பால் விளங்கி வந்தது. இராமநாதபுரம் ஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதியவர்கள் ஒருமுறை மணி ஐயரிடம் ஒரு காரியத்தை உத்தேசித்துச் சென் றிருந்தார். நானும் உடன் சென்றேன். அவரைக் கண்டவுடன் மணி ஐயர் வர்வேற்றுத் தம் ஆஸ ன்தைவிட உயர்ந்த ஆஸனமொன்றை அளித்து உட்காரச் சொன்னார். சேதுபதி சிறிது தயங்கி நின்றார்; "ஒன்றும் யோசிக்காதீர்கள். தகப்பனார் உங்கள் ஸமஸ்தான உத்தியோகத்தில் இருந்தவர் கள். அவருடைய பிள்ளையாகிய நான் உங்களுக்கு மரியாதை செய்வது என்கடமை. உட்காருங்கள்" என்று சொல்லி அவ்வாஸனத்தில் இருக்கச் செய் தார். மணி ஐயருடைய நன்றியறிவையும் பழமை பாராட்டுங்குணத்தையும் அன்று நன்றாக உணர்ந்து வியந்தேன்.
பிற்காலத்தில் மணி ஐயர் பெரும்பாலும் உல குக்கு உபகாரமான செயல்களைச் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். காங்கிரஸ், பிரும்ம ஞானசபை முத லியவற்றில் தொடர்புடையவராக இருந்தார். தர்ம ஸம்ரக்ஷண சபை என்று ஒன்றை ஏற்படுத்திக் கோயில்களின் நிர்வாகத்தில் பலவகையான திருத் தங்கள் செய்யவேண்டுமென்று முயன்றார்.
ஓய்வில்லாத வேலைத்தொல்லைகளினால் அவரு டைய தேக சௌக்கியம் குறைவுற்றது. கண்ணொ ளியும் குறைந்தது. அஜீர்ணம் ஏற்பட்டது. தினந் தோறும் உலாத்துவார், பழத்தின்ரசம், காய்களை வேகவைத்து இறுத்துப் பண்ணிய ரசம் ஆகிய இவற்றை உண்பார். ஆனாலும் இடியிடையே வயிற்றுவலி வந்துவிடும். 1924-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அவர் இறப்பதற்கு இரு வாரத்திற்குமுன் நான் அவரைச் சந்தித்தேன். அக்காலத்தில் நான் சதம் பரம் மீனாட்சி தமிழ்க்காலேஜில் இருந்தேன். சென் னைக்கு வந்திருந்தபோது அவரைக் கண்டேன். அவர் உடம்பில் முதுமை இருந்ததேயன்றி வெடுக்கு வெடுக்கென்று பேசும் அவர் பேச்சிலே அதன் அடையாளம் சிறிதும் இல்லை. "இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது?" என்று தமிழாராய்ச் சியைப்பற்றி வினவினார். "நீங்கள் விடாமல் இந்த வேலையைச் செய்துவாருங்கள். உலகத்தார் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உங்கள் ஊக் கத்தைத் தளரவிடாதீர்கள்" என்று உத்ஸாகப் படுத்தினார். அதுவே நான் அவரிடம் பெறும் கடைசி உபதேசம் என்பதை அப்பொழுது உணர வில்லை. சிதம்பரத்திற்குச் சென்றேன். ஒரு வாரத் திற்குப் பின் மணி ஐயருடைய மரணச் செய்தி கிடைத்தது; திடுக்கிட்டேன். ஊக்கந் தரும் அவருடைய உபதேசங்களை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
அவருடைய பெருமையை தமிழ்நாட்டார் மறக்கவில்லை. அவர் பெயாரால் ஒரு மண்டபம் (மணி ஐயர் ஹால்) திருவல்லிக்கேணியில் இருக்கிறது. அவருடைய கம்பீரமான உருவச்சிலை பழைய செனேட் மண்டபத்தை அடுத்து விளங்குகின்றது. அவருடைய சரித்திரத்தைப் பலர் எழுதி யிருக் கிறார்கள்.
இந்த நாட்டின் அறிவுநிலையும் பெருமையும் இத்தகையனவென்பதை அறிந்துகொள்ள வேண்டு மானால் சிலருடைய வாழ்க்கை வரலாறுகள் உதா ரணமாக விளங்கும். அவற்றுள் மணிஐயருடையதும் ஒன்றென்பதைக் கூசாமல் சொல்லலாம். செந்தமிழ் நாட்டின் பெருமை மணிஐயர் பிறந்ததனால் ஓரளவு உயர்ந்த்தென்பதில் சிறிதும் ஐயமே இல்லை.
10. வி. கிருஷ்ணசாமி ஐயர்
தந்தையார்
கல்வி கற்பது, பொருள் ஈட்டுவது, உத்தியோகம் பார்ப்பது முதலிய காரியங்களால் ஒருவருக்கு இக்காலத்தில் புகழுண்டாவது இயல்பு. தாம் கற்ற கல்வியைப் பிறருக்கும் பயன்படுத்தி இன்பமளிப் பது, தாம் ஈட்டிய பொருளைப் பிறருக்கும் அன்புடன் அளித்து மகிழ்வது, தம்முடைய உத்தியோக சக்தி யினால் ஏழைமக்களையும் முன்னேறச்செய்வது ஆகிய நன்மைகளைச் செய்பவர்கள் பின்னும் பெருகிய புகழை அடைகிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு பிறருக்கு உபகாரமான செயல்கள் விரிவடைகின் றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு புகழும் விரி வடையும். தம் காலத்தில் தொடங்கிய தர்மம் பிற்காலத்திலும் நடைபெறும்படி ஏற்பாடுகள் செய்த பெரியோர்கள் இறந்தும் இறவாதவர்களே.
வி. கிருஷ்ணசாமி ஐயர் அத்தகைய புகழுடம்பை அடைந்த பெரியார். அவர் காலத்தில் அவருக்கு இருந்த புகழ் பெரிது. அப்புகழ் பிற் காலத்திலும் மங்கவில்லை; இன்னும் ஒளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. மயிலாப்பூர் ஸம்ஸ்கிருத காலேஜ், வேங்கடரமண வைத்தியசாலை முதலிய ஸ்தாபனங்கள் அவருடைய புகழ் நிலயமாக விறங்கு கின்றன.
குற்றத்தைச் சிறிதும் பயமின்றிக் கண்டித்தல், ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் அதனை உடனே திருத்தமாகச் செய்தல், எந்தக் காரியத்திலும் ஊக்கத்துடன் முற்படுதல் முதலிய குணங்களுக்குக் கிருஷ்ணசாமி ஐயர் ஒரு சிறந்த உதாரண புருஷராவர். குற்றம் செய்பவர்களும் இழிந்த குணமுடையவர்களும் அவரை அணுகுவதற்கே பயப்படுவார்கள். அவருடைய கருணைச் செயல்காளால் நன்மை அடைந்தவர்கள் பலர்.
கிருஷ்ணசாமி ஐயருடைய தந்தையார் வேங்கட ராமைரென்பவர்; அவர் மிக்க தைரியசாலி. கிருஷ்ணசாமி ஐயருடைய தைரியம் அவருடைய தந்தையாரிடமிருந்து வந்ததென்று சொல்லலாம். வேங்கடராமையருடைய முன்னோர்களின் ஊர் நன் னிலந் தாலூகாவில் உள்ள அரிவிழிமங்கலம். அவர் சீகாழி முதலிய இடங்களில் ஜில்லா முன்ஸீப் உத்தி யோகம் பார்த்துவந்தார்; ஆங்கிலத்திலும் வட மொழியிலும் சிறந்த பயிற்சியுடையவர்; வடமொழியிலுள்ள சைவநூல்களில் மிக்க அன்பும் ஆராய்ச்சியுமுடையராக இருந்தார்; வைதீக ஆசார அநுஷ்டானங்களில் சிறிதும் பிறழாது ஒழுகி வந்தார்; ஒழுக்கநெறி தவறியவர்களைக் கண்டால் அவருக்கு வெறுப்பு உண்டாகும்.
அப்பெரியாரை நான் சிலமுறை பார்த்துப் பேசியிருக்கிறேன். அவரது முகத்திலே ஒரு பிரகாசம் இருக்கும். அவருடைய மேதையும் மனோ தைரியமுமே அதற்குக் காரணங்கள். யார் வந்தாலும் தம் வீட்டில் ஆகாரம் செய்வித்து அனுப்புவது அவரது வழக்கம். குற்றம் செய்பவர்கள் எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தாலும், வெளிக்கு எவ்வளவு ஆசார அநுஷ்டானசீலர்களாகத் தோன்றினாலும் அவர்களை அவர் மதியார்.
பெரிய மிராசுதாராகிய பிராமணர் ஒருவர் தம் முடைய வயல்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் தண்ணீர் பாயவொட்டாமல் தடுத்து வந்தார். அவருடைய இயல்பை வேங்கடராமையர் பலராலும் அறிந்திருந்தனர். ஒரு சமயம் அந்த மிராசுதார் தம்மை அஞ்சலி செய்தபோது வேங்கடராமையர் பிரதி நமஸ்காரம் செய்யவில்லை. உடனிருந்த ஒருவர் அவரைப் பார்த்து, "பெரிய மிராசுதாரராகிய இவர் அஞ்சலி செய்தபோது, தாங்கள் பேசாமல் இருந்து விட்டீர்களே! ஏன்" என்று கேட்டார். அதற்கு அவர் "இவரை நான் நன்றாக அறிவேன்; இவர் பல ஜனங்களுக்குத் தீமை புரிபவர். இவரிடம் எனக்குப் பிரியமில்லை. ஆதலால் பிரதி நமஸ்காரம் செய்யவில்லை"எ ன்று சொல்லிவிட்டார்.
பெரிய உத்தியோகத்திலிருந்தாலும் வேங்கட ராமையர் உத்தியோக காலந்தவிர மற்ற வேளைகளில் சிவ சம்பந்தமான நூல்களை ஆராய்வதிலும் வித்து வான்களோடு பழகுவதிலுமே தமது மனத்தைச் செலுத்துவார். ஹரதத்த சிவாசாரியார், நீலகண்ட தீக்ஷிதர், அப்பைய தீக்ஷிதர், ஸ்ரீதர வேங்கடேசர் முதலிய பெரியோர்கள் இயற்றிய நூலகளிலும் சிவ புராணங்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு.
திருவிசை நல்லூரிலிருந்த ஸ்ரீ மகாமகோபாத்தி யாய ராமசுப்பா சாஸ்திரிகளென்ற பெரியார் 'விஷ்ணுதத்வ ரஹஸ்யம்' என்று வடமொழியில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். அதிலுள்ள பல விஷயங்கள் சிவபக்தர்களுடைய மனத்தைப் புண் படுத்தக் கூடியனவாக இருந்தன. அதைப் படித்துப் பார்த்த வேங்கடராமைய்யர் மிகவும் வருத்த மடைந்தனர். அந்தப் புத்தகம் முழுவதிலும் சிவத் துவேஷமான வாக்கியங்கள் நிரம்பி யிருந்தன.
உடனே அவர் அக்காலத்தில் இடையாற்று மங்கலத்தில் இருந்தவரும் நான்கு சாஸ்திரங்களிற் பயிற்சி யுடையவருமாகிய அப்பு சாஸ்திரிகளின்பவரிடம் அந்த நூலுக்கு ஒரு கண்டனம் எழுத வேண்டுமென்று கூறிப் பொருளுதவி செய்தார். அந்த வித்துவான் அங்ஙனமே 'விஷ்ணுதத்வ ரஹஸ்ய கண்ட னம்' என்று ஒரு புத்தகம் எழுதினார். பின்பு, அதனைத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் இரண் டாயிர ரூபாய் உதவிசெய்து பதிப்பிக்கச் செய்தார். அந்தப் புத்தகம் எல்லாருக்கும் விலையின்றி அளிக்கப் பெற்றது. அப்பால் அந்தக் கண்டன நூலுக்குச் சமாதானம் ஒன்றும் வெளிவரவில்லை.
வேங்கடராமையருக்குப் பத்தினிகள் இருவர். மூத்த தாரத்தின் குமாரர்கள் இருவர். அவருள் மூத்தவர் சாமிநாதையரென்பவர். இளையவரே கிருஷ்ணசாமி ஐயர். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுடைய பெண்களைக் கல்யாணம் செய்துகொள்வதுதான் கௌரவம் என்று யாவரும் நினைத்துவந்த காலம் அது. வேங்கடராமையர் அதை விரும்பவில்லை. திருவாலங்காட்டில் சாஸ்திர வல்லுநரும் சீலமுடையவருமாக இருந்த ஸ்ரீ ராம ஸ்வாமி சாஸ்திரிகளென்பவருடைய புதல்வியைத் தம் இளைய குமாரருக்கு மணம் செய்வித்தார். இந்த நிகழ்ச்சியை அறிந்து சிலர் தமக்குள்ளே குறை கூறிக் கொண்டனர். "உத்தியோகஸ்தர்களுடைய பெருமையும் சிறுமையும் எனக்கு நன்றாகத் தெரியும். எங்கே உண்மைக் கௌரவம் இருக்கின்ற தென்பதை அறிந்தே இந்த ஸம்பந்தத்தை நான் செய்தேன்" என்று அவர் தம் நண்பர்களிடம் கூறினார். அது கேட்டு அவர்கள் அவருடைய தைரியத்தையும் அறிவையும் வியந்து பாராட்டி னார்கள்.
மணி ஐயருடைய பழக்கம்
தந்தையார்பாலிருந்த தைரியம், வடமொழி விருப் பம், எளியவர்களிடத்தில் அன்பு, தெய்வபக்தி முதலிய யற்குணங்களை வி. கிருஷ்ணசாமி ஐயர் இயல்பாகவே பெற்றிருந்தார். அவை அவருடைய மேதாவிலாசத்தோடு கலந்து பின்னும் பரிமளித்தன. அவருடைய தைரியம் அவரது உத்தியோக நிலையிலே விளங்கியது; அவருடைய வடமொழி யன்பு வித்துவான்களுக்கிடையே பிரகாசித்தது; அவர் ஏழைகள்பால் காட்டிய அன்பு அவரது வாழ் நாள் முழுவதும் புலப்பட்டது.
தைரியத்தின் உருவமே அவரென்று கூறுவது மிகையாகாது; நிமிர்ந்த நடையும், எடுத்த பார்வையும், சிங்க கர்ச்சனை போன்ற குரலும் அவருடைய தைரியத்துக்கு அடையாளங்கள். அவருடைய விரோதிகள் அவற்றைக் கண்டு அஞ்சியோடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால், வித்துவான்களும் அறிஞர்களும் ஏழைகளும் அவரது நிமிர்ந்த நடையிலே ஓரழகையும், அவரது எடுத்த பார்வையிலே ஒரு கருணையையும், அவருடைய கம்பீரத் தொனியிலே ஓர் ஆதரவையும் கண்டு மகிழ்வார்கள்.
(ஸ்ரீவி. கிருஷ்ணசாமி ஐயர் படம்)
கவர்னரது நிர்வாகசபையில் அவர் அங்கத்தினராக இருந்தார். உயர்ந்த பதவிகளை வகித்து நிர்வாகம் செய்யும் திறமை இந்தியர்களுக்கும் உண்டு என்று நிரூபிக்க வேண்டுமென்பதே கிருஷ்ணசாமி ஐயரது நோக்கம். அந் நோக்கத்தை அவர் நன்கு நிறைவேற்றினார். அவருக்குப் பின் பல இந்தியர் அப்பதவிகளை வகிக்கலானார்கள். அந்த நிலைக்கு வழி காட்டியாக விளங்கியவர் கிருஷ்ணசாமி ஐயரென்றே சொல்ல வேண்டும்.
ஒருவருக்கும் கிடைத்தற்கரிய பதவி அவருக் குக் கிடைத்ததென்று அறிஞர்கள் அக்காலத்திலே கூறுவதில்லை; "இவருடைய தைரியத்துக்கும் அறிவுத் திறத்திற்கும் ஏற்ற வேலை கிடைத்தது; அந்த வேலைக்கு இவராற் பெருமை உண்டாயிற்று" என்றும், "உண்மையில் இவர் இரண்டு மூன்று அங்கத்தினரின் வேலைகளைக்கூடப் பார்த்துக் குறை வின்றி நிர்வகிக்கும் ஆற்றலுள்ளவர்" என்றும் புகழ்ந்தார்கள். மற்ற யாவருக்கும் "வேலை அதிகம், வேலை அதிகம்" என்று கூறுவதே இயல்பாக இருக்கும்; அவருக்கோ "வேலை போதாது" என்று சொல்வதே இயல்பு.
எந்த வேலையையும் மிக விரைவிலே முடித்து விடும் தனியாற்றல் படைத்தவர் அவர். அந்த விரைவினால் அவருடைய வேலைகளில் ஏதேனும் நிறைவேறாமல் இருக்குமென்பதற்கு இடமில்லை. எல்லாவற்றையும் ஒழுங்காகவும் செம்மையாகவும் விரைவிலே நிறை வேற்றி விடுவார். அந்த விரைவைக் கண்டு யாவரும் ஆச்சரியப்படுவார்கள்; சிலருக்குப் பயம் உண்டாகும்; சிலர் பொறாமை கொள்வார்கள்.
அவரது இளமை தொடங்கியே அந்த வேகம் அவர்பால் குடி கொண்டிருந்தது. 1885-ஆம் வருஷமுதல் அவர் ஹைகோர்ட்டு வக்கீலாக இருந்து வந்தார். அப்பொழுது அவருடைய பிராயம் 22. ஆரம்பத்தில் அவருடைய தீவீரசக்தியும் அறிவும் பிறருக்குப் புலனாகவில்லை.
மணி ஐயரவர்களுடைய பழக்கம் ஏற்பட்டது முதல் அப்பெரியாரால் அவரது திறமை உலகத் தாருக்கு வெளிப்பட்டது. அவரை ஒரு பேரறிஞ ரென்று யாவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாயிற்று. மணி ஐயரின் கீழ்க் கன்றாக வளர்ந்த அவர் சிலவிஷயங்களில் அப்பெரியாரையும் வென்று விளங்கினார். சில சமயங்களில் கிருஷ்ண சாமி ஐயருடைய தைரியத்துக்கு மணி ஐயருடைய இரக்க குணம் பின் வாங்கி நின்றது. மணி ஐயரே பார்த்து வியந்து பாராட்டும் திறமை அவரிடம் விளங்கலாயிற்று.
நான் கும்பகோணத்தில் இருந்தபோது தமிழ் நூற்பதிப்பின் பொருட்டு ஒரு விடுமுறையில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது இந்நகரத்திலே வாழ்ந்திருந்த பல பெரியோர்களுடைய பழக்கமும் ஆதரவும் எனக்கு ஏற்பட்டன. திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய கருணையையும் ஆதரவையும் வித்துவான்களை அவர் பாதுகாக்கும் இயல்பையும் அனுபவத்தில் அறிந்து உருகிவரும் இயல்புடைய எனக்கு அத்தகைய குணமுடையவர்களைப் பார்க்கும் போதெல் லாம் தேசிகருடைய ஞாபகம் உண்டாகும்; என் இளமையில் அந்த உபகாரி ஒருவரையே உணர்ந்திருந்தேன். நாளடைவில் உலகத்தின் விரிவு என் கண்ணிற் புலப்பட, இறைவன் இவ்வுலகத்திலும் கற்பக விருஷங்களையும் காமதேனுக்களையும் மனித உருவத்திற் படைத்துள்ளா-னென்னும் உண்மை தெளிவாயிற்று. சேலம் இராமசாமி முதலியாருடைய தமிழன்பும், பூண்டி அரங்கநாத முதலியாருடைய நட்புநலமும், மணி ஐயருடைய அருளும் கடவுள் அருளின் பலவேறு உருவமென்று நான் கருதுவ துண்டு. அந்த வரிசையிலே வி.கிருஷ்ணசாமி ஐயருடைய ஆதரவையும் சேர்த்து எண்ணும் நிலை எனக்கு வாய்த்தது.
பத்துப்பாட்டை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்த காலத்தில் சென்னைக்கு வருவேன்; அப்போது மணி ஐயருடைய இல்லத்திற்கு அடிக்கடி சென்று என் உடலிளைப்பையும் உள்ளத்திளைப்பையும் போக்கிக் கொள்வதுண்டு. அங்ஙனம் இருந்த காலத்திலேதான் முதன்முதலாக ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயரை நான் பார்க்க நேர்ந்தது.
கிருஷ்ணசாமி ஐயருடைய தந்தையாரோடு நான் பழகினவனாதலால் அவரை மணி ஐயர் வீட்டில் முதலில் பார்த்தபோதே அவருடைய முக விலாஸத்தில் என் மனம் ஈடுபட்டது.அவர் வேங்கடராமையுடைய குமாரரென்பதை உணர்ந்தேன். அவருடைய சுறுசுறுப்பும் நிமிர்ந்த நடை யும் ஒரு சிங்கக் குட்டியின் இயல்புகளை நினை வூட்டின. மணி ஐயரிடத்தில் அவரைப் பற்றி விசாரித்தேன். "இவர் சிறந்த புத்திசாலி. மிகவும் உயர்ந்த ஸ்தானத்திற்கு வருவார். பெரியவருடைய பிள்ளை; அவருடைய தைரியம் இவரிடத்தில் இருக்கி றது" என்று கூறினார். எல்லாவகையிலும் சிறந்து விளங்கிய அப்பெரியாருடைய பாராட்டுக்கு உரியவ ராக இருந்த கிருஷ்ணசாமி ஐயரிடத்தில் அக்காலத் திலிருந்தே எனக்கு அன்பு உண்டாயிற்று. அப் பெரியார் அன்று உரைத்தவை யாவும் வர வர உண்மையாயின.
மணி ஐயரோடு கிருஷ்ணசாமி ஐயருடைய பழக் கம் வர வர வன்மை பெற்றது. அன்பு முதிர்ந்தது சில சமயங்களில் மணி ஐயருடைய யோசனைகளைக் காரணங்கூறி மறுக்கும் உரிமையையும் கிருஷ்ண சாமி ஐயர் பெற்றுவிட்டார். அந்தச் சமயங்களில் நூதனமாகப் பழகுபவர்கள் கிருஷ்ணசாமி ஐயர் மறுத்துக் கூறும் கூற்றால், மணி ஐயருக்கும் அவ ருக்கும் இடையே மன வேறுபாடு உண்டு போலு மென நினைக்கக்கூடும்; அவர்களுக்கு அவ்விருவருடைய உள்ளமும் அன்புத்தளையாற் பிணிக்கப் பட்டவையென்பது எளிதிற் புலப்படாது.
ஒரு சமயம் கிருஷ்ணசாமி ஐயருக்கு ஜில்லா முன்ஸீப் உத்தியோகம் கிடைப்பதாக இருந்தது. அந்த உத்தியோகத்திற்குப் போகலாமா வென்று அவர் மணி ஐயரை வினவினார். கிருஷ்ணசாமி ஐயருடைய ஆற்றல் அந்த உத்தியோகத்திற் புதைந்து மங்கிவிடுமென்று அறிந்த மணி ஐயர் அதற்கு இணங் கவில்லை; "இந்த உத்தியோகமெல்லாம் உமக்குப் பெரிதா? உம்முடைய புத்திசாலித்தனத்திற்கு இவ் வேலை எம்மாத்திரம்? நீர் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். கிருஷ்ண சாமி ஐயர் அப்பெரியார் கூறிய யோசனையை ஏற்றுக் கொண்டு அவ்வுத்தியோகத்திற்குச் செல்ல வில்லை. இவ்விஷயத்தை மணிஐயரே என்னிடம் நேரில் ஒருமுறை உரைத்ததுண்டு.
மணி ஐயர் கிருஷ்ணசாமி ஐயரிடத்தில் வைத் திருந்த அன்பை வாத்ஸல்யமென்றுதான் கூற வேண்டும். மணி ஐயர் அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் மனங்குளிர்ந்து பாராட்டுவார். அவர் இறந்தபோது ஸ்மசானத்தில் அவருடைய சரீரத்தைக் கண்டு உருகிய மணி ஐயர், "வெள்ளைக்காரருடைய மனத்தை உருக வைக்கும் உன்னுடைய தைரியத்தை எங்கேயப்பா வைத்துச் சென்றாய்? கல்லைக்கூடக் கரைக்கும் உன்னுடைய வாக்கு எங்கே போயிற்று? உன் வார்த்தைகளை இனி யாரிடம் கேட்கப் போகிறேன்!" என்று கூறி வருந்தினாராம். கிருஷ்ணசாமி ஐயருடைய பெருமை முழுவதும் அறிந்து பாராட்டுவதற்கு அவ்வறிவாளியைவிட அதிகமான தகுதி பெற்றவர் வேறு யாரும் இலர்.
செய்வன திருந்தச் செய்
கிருஷ்ணசாமி ஐயர் தஞ்சை, கும்பகோணம் முதலிய இடங்களுக்கு வழக்கில் வாதம் செய்வதற்கு வருவதுணைடு. அக்காலங்களில் அவரைக் கண்டு பேசி மகிழ்ந்திருக்கிறேன். அவருடைய வாக்கு வன்மையைக் குறித்து யாவரும் பாராட்டிப் பேசுவார்கள். எதிரிகளைத் திகைக்க வைக்கும்படி அவர் பேசுவாராம். எந்த விஷயத்தைப்பற்றியும் பூர்ணமாக ஆராய் வார். அந்த ஆராய்ச்சிக்கு அவர் அதிக காலம் செல விடமாட்டார். ஒவ்வொரு விஷயத்திலும் ஜீவநாடியாக இருப்பதை உடனே பற்றிக் கொள்வார். அநாவசியமாக விஷயங்களை வளர்த்திப் பேசுவோர்களைக் கண்டால் அவருக்கு வெறுப்பு உண்டாகும். அவருடன் பழகும் வக்கீல்கள் அவருக்கு ஏற்றபடி விஷயங்களை எடுத்துக் கூறுவதற்கு மிகவும் சிரம்ப்படுவார் கள். அவருடைய கூர்மையும் வேகமும் உள்ள கிராஹ்ய சக்திக்கு முன் அவர்களுடைய திறமை நிற்கமுடிவதில்லை. அவர் ஜட்ஜாக இருந்த காலத் திலும் வக்கீல்களுடைய வாதங்களை அநாவசியமாக வளரவிடுவதில் அவருக்கு விருப்பம் இருப்பதில்லை. எவரேனும் அங்ஙனம் பேசினால், "இவை எனக்குத் தெரியும்; அடுத்த விஷயத்துக்கு வாருங்கள்" என்று சொல்லித் துரிதப்படுத்துவாராம். இதைக் கண்டு சில வக்கீல்களுக்கு அவரிடம் துவேஷம் உண்டாயிற்று. அந்தத் துவேஷம் அவர்களிடைய பல ஹீனத்தால் ஏற்பட்டதாகையினால் கிருஷணசாமி ஐயரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
அவர் காலத்தில் அவரிடம் பழகிய வக்கீல் களுக்கு அவரோடு தொடர்ந்து செல்வது கஷ்டமாக இருந்தாலும் அவரைப் பிரிவதற்கு அவர்கள் விரும்ப வில்லை; அவருடைய பெருமையை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தது அதற்கு ஒரு காரணம்; அதோடு அவரது கருணையும் மற்றொரு காரணமாகும். என் னிடம் படித்தவார்கள் சிலர் அவரிடம் வேலை பார்த்ததுண்டு. அவர் இறந்தபோது அவர்கள், "அவர் எங்களுடைய தாமதத்தைக் கண்டு கோபித்துக் கொள்வார். விஷயங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவில்லையென்று கண்டிப்பார். நாங்கள் குறித் தவற்றைக் கிழித்து எங்கள் தலையிலே போடுவார். இவ்வாறு எங்களை நடத்தியபோதிலும் எங்க ளுடைய வரும்படியை மட்டும் குறைப்பதில்லை. எங்களை வாயிலடித்தாலும் வயிற்றிலடிக்காத கருணா மூர்த்தி" என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார்கள்.
அவரிடம் இருந்து வேலை பழகிய வக்கீல்கள் நல்ல திறமையுடையவரானார்கள்; நன்மதிப்பை அடைந்தார்கள்; அவர்களுக்கு நல்ல பொருள் வரு வாயும் உண்டாயிற்று. அவர்கள் மூலமாக நடை பெறும் வழக்குகளில் வரும் ஊதியம் முழுவதையும் கிருஷ்ணசாமி ஐயர் அவர்களுக்கே கொடுத்து விடு வார்.
எந்தக் காரியமும் திருத்தமாக நடைபெற வேண்டுமென்பது அவருடைய கொள்கை. குறைகளைக் கண்டால் சிறிதும் அச்சமின்றி நேருக்கு நேரே கண்டிக்கும் தைரியம் அவல்பால் விளஙுகியது. அவர் நிர்வாகசபை அங்கத்தினராக இருந்தபோது உத்தியோகஸ்தர்கள் யாவரும் அவரிடம் நடுங்கிக் கொண்டிருந்தனர். 'எந்தச் சமயத்தில் இவர் வருவாரோ? எந்த விஷயத்தில் இவருடைய கவனம் செல்லுமோ? எந்தக் குறைகள் இவர் கண்ணிற்பட்டு விடுமோ?' என்று அவர்கள் அஞ்சித் தம் தம் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற முயன்று வந்தனர்.
எங்கேனும் ஸ்தலங்களுக்குச் சென்றால் அந்த அந்த ஸ்தலங்களின் வரலாறுகளை விசாரித்துத் தெரிந்து கொள்வார். அங்கே உள்ள சிற்ப அழகு களை அறிந்து வியப்பார். நம் முன்னோருடைய பெருமை இத்தகையதென்பதை உணர்ந்து கொள் வதிலும் அதனைப் பிறரும் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்துவதிலும் அவருக்கு ஆவல் அதிகம் இருந்தது. ஒரு கோயிலைத் தரிசித்தால் அந்தக் கோயில் தர்மகர்த்தாவை அதன் சம்பந்தமான விஷயங்களை யெல்லாம் வினவுவார்; கோயிலின் வரலாறு, சொத்து விவரங்கள், பூஜா சம்பிரதாயங்கள் முத லியவற்றை விசாரிப்பார். அவர் இவற்றிற்குத் தக்கபடி விடை கூறாவிட்டால், "உங்களையெல்லாம் இந்த வேலையில் வைக்காமல் உடனே தொலைத்து விடவேண்டும். நீர் பணக்காரராக இருந்தால் மட்டும் போதுமா? ஆலய நிர்வாக்துக்கேற்ற திறமை வேண்டாமா?" என்று கண்டிப்பார். அது முதல் அந்தத் தர்மகர்த்தா தம் குறையை உணர்ந்து திருத்தமாக நடக்க முயல்வார். குருக்களைக் கண்டு, "இந்த ஸ்தலத்தில் நித்திய நைமித்திகங்கள் எந்த ஆகமப்படி நடைபெறுகின்றன்? உமக்கு உத்ஸ வாதிகளுக்குரிய மந்திரங்கள் தெரியுமா? இதற்கு ஸ்தலபுராணம் இருக்கிறதா? படித்திருக்கிறீரா?" என்பனபோன்ற கேள்விகளைக் கேட்பார். அவர் கள் அவற்றை அறிவிக்க இயலாவிடின் அவர்களை யும் கண்டிப்பார்.
இவ்வாறே மற்றத் துறைகளிலும் ஊடுருவி ஆராய்ந்து குறைகளை உணர்ந்து அக்குறைகளுக்கு யார் காரணமென்று விசாரித்துக் கண்டிப்பார். இங்ஙனம் அவர் செய்துவந்தமையால் உத்தியோகஸ் தர்கள் தம்முடைய கௌரவத்தை மாத்திரம் பாராட்டிக் கொள்வதோடு நில்லாமல் தம் கடமைகளை உணர்ந்து நிறைவேற்ற ஆரம்பித்தனர்.
சென்னை ஸர்வ கலாசாலையில் ஸிண்டிகேட், ஸெனெட் என்னும் சபைகளில் அவர் அங்கத்தினராக இருந்தார். அங்கும் செய்வன திருந்தச்செய்ய வேண்டுமென்ற தம் கொள்கையை மேற்கொண்டு குறைகளை நீக்கலானார். மிகவும் ஆராய்ந்து பல புதிய விதிகளை உண்டாக்கினார். வடமொழி தென் மொழிப் பண்டிதர்களுடைய நிலையை உயர்த்துவதற்கு அவர் மிகவும் பாடுபட்டார்.
ஆங்கிலம் படித்தவர்களுக்குப் பண்டிதர்களைக் கண்டால் வெறுப்பு இருந்துவந்தது. பண்டிதர்களை ஒரு தனி ஜாதியினரைப் போல நினைத்து வந்தனர். அவர்களுடைய உண்மைப் பெருமையை உணர்ந்த கிருஸ்ணசாமி ஐயர் பலவகையிலே அவர்களுக்கு உபகாரம் செய்யத் தொடங்கினார்.
ஆங்கிலம் அறியாத பண்டிதர்களைப் பரீக்ஷாதி காரிகளாகவும் கலைக்கழக அங்கத்தினராகவும் நியமிக்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. இதை உணர்ந்த கிருஷ்ணசாமி ஐயர் பண்டிதர் களுக்கும் அத்தகைய ஸ்தானங்களை வழங்கவேண்டு மென்று தக்க காரணங்களை எடுத்துக்கூறி முயன்றார். அவருடைய முயற்சி நற்பயன் அளித்தது. அதுமுதல் பல பண்டிதர்கள் அப்பதவிகளைப் பெற்றனர். சிலர் பரீக்ஷாசபைத் தலைவர்களாகவும் ஆயினர். நான் பல வருஷங்கள் அத்தகைய பதவிகளை வகித்ததுண்டு. அங்ஙனம் வகித்ததற்குக் காரணம் ஸ்ரீ வி. இருஷ்ண சாமி ஐயரவர்களே; அதனை இக்காலத்துப் பண்டிதர்கள் யாவரும் உணர்ந்து அவ்வுபகாரியை வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளனர்.
தமிழபிமானம்
பெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலங் கற்றவர்களை வியப்பது, இங்கிலீஷ் நூலிலுள்ள கருத்து எந்தப் பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலிய வற்றைப் பெருமையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு; ஆனால் இப்போது அத்தகைய வர்களது தொகை குறைந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர் காலத்தில் ஆங்கிலமோகம் உச்சநிலையை அடைந்திருந்தது.
அவர் ஆங்கில அறிவில் சிறந்தவர்; அவருடைய தந்தையாரும் தமையனாரும் அவரும் வட மொழிப் பயிற்சியும் அந்த மொழியினிடத்தில் அன்பும் உடையவர்கள். இந்த இரண்டு பாஷைகளிலும் கிருஷ்ணசாமி ஐயருக்கு இருந்த அறிவும் அபிமானமும் மற்றப் பாஷைகளை வெறுக்கச் செய்யவில்லை. தமிழினிடத்தில் அவருக்கு இருந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.
வடமொழியில் அன்பிருந்தால் தமிழினிடத்தும் அபிமானம் உண்டாவது அந்தக்காலத்தில் அருமை. அறிவுக்கு உண்மையான மதிப்பை அளிக்கும் பெரியார்கள் ஒவ்வொன்றின் பெருமையையும் நன்மு அறிந்து பாராட்டி வருவார்கள்.
"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன? மனத்திற் பதியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கின்றதோ அதைத் தேடி அறிந்துகொள்ள வேண்டும்" என்பது கிருஷ்ணசாமி ஐயரது கொள்கை.
ஒருநாள் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி. ஏ. வைத்திய ராமையர் அன்று 'தமிழின் பெருமை' என்னும் விஷயத்தைப்பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத் திற்கு வந்திருந்தனர். ஸ்ரீ சுப்பிமணிய பாரதி யாரும் வந்திருந்தார்.
கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், 'இவர் தமாழைப்பற்றி என்ன பைசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டு மானாற் பேசுவார்' என்று நினைத்தார்கள். உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத்தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர் பேசலானார்:
"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷை யிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை, ஆழ் வார்கள் திவ்யப்பிரபந்தம் பாடியதும் இதிலேதான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவேயில்லை" என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். அவருடைய பேச்சில் ஒரு பெருமிதமும் கம்பீரமும் இருந்தன. யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத் தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவ ருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது.
கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தை களும் பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை உரைத்து வந்தார்.
அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ண சாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித் தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப்பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப்பற்றிப் பாடத் தொடங்கினார்.
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"
என்பது ஒரு செய்யுள்.
'கம்பன் இராமயணம் செய்த பாஷை; திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை' என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,
"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு"
என்றும்,
"வள்ளுவன் றன்னை யுலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென் றோமணி யாரம் படைத்த தமிழ்நாடு"
என்றும் பாடினார்.
இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெருமகிழ்ச்சியை அடைந்தார். பாரதி யாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச்செய்து அவற்றைச்சேர்த்து ஆயிரக்கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுள் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர், பாரதியாருடைய கொள்கைகளிற் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறே பலவேறு கொள்கைகளையும் பல வேறு பழ்க்கங்களையும் உடையவர்களாக இருப்பினும் தமிழ் முதலியவற்றில் அறிவுடையவரென்பது தெரிந்தால் மற்றவற்றையெல்லாம் மறந்து பாராட்டு வது கிருஷ்ணசாமி ஐயரது இயல்பு.
தேவார திருவாசகங்களில் அவருக்கு நிறைந்த அன்பு உண்டு. யாரேனும் இசையுடன் தேவாரம் பாடினால் மணிக்கணக்கில் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார், மனமுருகிக் கண்ணீர் பெருக்குவார்; 'ஹா! ஹா!' என்று தம் ஆனந்தத்தை வெளியிடுவார். அவர்களுக்கு வேன்டிய உதவியும் செய்வார். "ஸம்ஸ்கிருத பாஷையில் எவ்வளவோ ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றிற் பலவற்றைப் படித்ததுண்டு. ஆயினும் நெஞ்சை உருக்கும் விஷயத்தில் தேவார திருவாசகங்களைப் போல எதுவும் இராது" என்று அவர் அடிக்கடி சொல்வார். "'தேடிக் கண்டுகொண்டேன்' என்று எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார்கள்! அவர் களுடைய அனுபவம் எவ்ளவு சிறந்தது!" என்பர்.
தேவாரம் தெரிந்தவராக யார் வந்தாலும் அவரை இசையுடன் பாடச்சொல்லிக் கேட்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். கவிக்குஞ்சர பாரதியின் பேரராகிய காலஞ் சென்ற கோடீசுவரையர் அடிக்கடி அவரிடம் வந்து பாடி அவரை மகிழ் விப்பார். வேறு பலரும் அங்ஙனம் செய்வதுண்டு. இருமுறை கோடீசுவரையர் திருவாசகத்தை மோகன ராகத்தில் பாடிக்கொண்டிருந்தார். கிருஷ்ணசாமி ஐயர் அவ்விசையைப் பருகி விம்மித மடைந்து இருந்தார். உடனிருந்து அவருடைய நண்பர் சிலரும் நானும் கேட்டு வந்தோம். கிருஷ்ணசாமி ஐயர் மன முருகிக் கேட்டார். தடையின்றி கோடீசுவரையர் பாடிக்கொண்டே வந்தார். அப்போது உடனிருந்த ஒருவர் கோடீசுவரையரைப் பார்த்துத் தமக்குப் பிரியமான வேறு பாட்டு ஒன்றைப் பாடச்சொன் னார். கிருஷ்ணசாமி ஐயருக்கு உடனே கோபம் வந்துவிட்டது; "சட்! என்ன பைத்தியாக்காரத் தனம்! தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கொஞ்சம் பிண்ணாக்குக் கொண்டு வா என்று சொல்வது போலிருக்கிறது உம்முடைய பேச்சு. திருவாசகத்தைக் கேட்ட காதால் வேறொரு பாட்டைக் கேட்க உமக்குப் பிடிக்கிறதா? மற்ற வேளைகளில் கேட்டுக்கொள்ளுமே" என்று கடுகடுப் போடு சொன்னார். கோடீசுவரையர் திருவாசகமே பாடலானார்.
பலமுறை திருவாசகமும் தேவாரமும் பாடக் கேட்டுக் கேட்டு அவருக்கு அவற்றின் பொருளில் மனம் லயித்துவிட்டது. பொருள் தெரியாத பாடல்களை அவர் விரும்புவதில்லை. தேவாரத்தின் சிறப்பைப் பற்றிப் பலரிடம் அவர் வாதம் செய்வார். ஒரு முறை ஒரு பெரிய ஸம்ஸ்கிருத பண்டிதரோடு அவர் பேசிக் கொண்டிருந்தார்; "பக்திரசம் தேவாரத்திலே இருப்பது போல வேறு எதிலும் இல்லை" என்று அவர் சொன்னார். ஸம்ஸ்கிருத பண்டிதர், "ஸம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான சுலோகங்கள் மகான்களால் இயற்றப் பெற்றிருக்கின்றன. அவற்றின் அர்த்த புஷ்டியும் பெருமையும் அனந்தம்" என்று சொன்னார். கிருஷ்ணசாமி ஐயர், "நானும் அவைகளைப் படித்திருக்கிறேன். உயர்ந்த அர்த்தம் அவைகளில் இருப்பது வாஸ்தவந்தான். ஆனால் பாடின மாத்திரத்தில் மனத்தைக் கவ்விக்கொண்டு உருக்குவதில் தேவார திருவாசகங்களுக்குச் சமமாக ஒன்றும் இல்லை. ஒன்று, இரண்டு இருக்கலாம். இந்த உருக்கம் அவைகளில் இல்லை" என்று அழுத் தமாகக் கூறினார்.
இந்த விஷயத்தைப்பற்றிக் கிருஷ்ணசாமி ஐய ருக்கும் அவருடைய தமையனாராகிய சாமிநாதையருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் எழுவ துண்டு. கிருஷ்ணசாமி ஐயர் தேவாரத்தைப் புகழ்வார்; அவர் தமையனார் ஸம்ஸ்கிருத சுலோகங்களைப் பாராட்டுவார்.
முன்பு குறிப்பிட்ட எட்டயபுரம் மஹாலிங்கைய ரென்பவரோடு ஒரு முறை கிருஷ்ணசாமி ஐயருடைய தமையனாரிடம் போயிருந்தேன். மகாலிங்கைய்யர் இனிய சாரீரம் உடையவர். எவ்வளவு நேரம் பாடினாலும் சோர்வு தோற்றாத குரல் வன்மை பெற்றவர். தேவார திருவாசகங்களைக் கேட்பாருக்குப் பொருள் விளங்கும்படி தெளிவாகப் பாடுவார். அன்று அவர் தேவார திருவாசகங்களை மிகவும் அற்புதமாகப் பாடினார். சாமிநாதையர் அவற்றைக் கேட்கக் கேட்க மனமுருகலாயினர். வர வர அவருடைய உருக்கம் அதிகமாயிற்று. தேம்பித் தேம்பிக் கண்ணீர் விட்டு ஆனந்தமடைந்தார். "ஆகா! என்ன பக்தி! என்ன பக்தி!" என்று பாராட்டினார். "என் தம்பி தேவார மகிமையைப் பற்றி என்னோடு வாதாடுவான். இன்றுதான் அதனை அனுபவத்திலே அறிந்தேன்" என்றார்.
புதிய புதிய பாடல்களைக் கேட்கவேண்டு மென்று கிருஷ்ணசாமி ஐயர் விரும்புவார். ஒருமுறை மகாலிங்கையரை அவரிடம் அழைத்துச் சென்றிருந்தபோது, "இவரை எனக்குத் தெரியுமே. சொன்னதையே திருப்பிச் சொல்லாமலே பாடு வாரா?" என்று கேட்டார். "அப்படியே பாடு வார்" என்றேன். அன்று நெடுநேரம் தேவார இன்னிசையை நாங்கள் நுகர்ந்தோம்.
கம்ப ராமாயணத்தில் கிருஷ்ணசாமி ஐயருக்கு அன்பு உண்டு. அதிலுள்ள செய்யுட்களை நான் சிலமுறை அவரிடம் எடுத்துக் கூறி மகிழ்வித்திருக்கிறேன். வேறு சிலர் வாயிலாகவும் அவர் கேட்டிருக்கிறார். "கம்பன் மகாகவிதான். ஒவ்வொருவருடைய குணத்தையும் நன்றாக அறிந்து தவறாமல் அமைத்திருக்கிறான். ஆனால் அவனுடைய வருணனைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விடுகின்றன; பத்துப் பாடல்கள் இருக்கவேண்டிய இடத்தில் நூறு பாடல்களைப் பாடிவிடுகிறான். அங்கே தெவிட்டிப் போகிறது" என்று அவர் சொல்வார். அவருடைய வேகமான புத்திக்கு அந்த நீண்ட வர்ணனையைப் படித்து அனுபவிக்கும் பொறுமை இருப்பதில்லை.
ஒருநாள் நான் பிற்பகலில் அவர் வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது 'மெயில்' பத்திரிகாலயத்தில் முக்கியமான வேலையில் இருந்த முனிசாமி ஐயர் என்பவர் அங்கே வந்திருந்தார். அவர் பேசிக் கொண்டே இருந்தபோது, தமிழைப்பற்றிய பேச்சு வந்தது; "தமிழில் என்ன இருக்கிறது? ரஸமில்லாக் குப்பையே அதிகம்" என்று அவர் சொன்னார். எனக்குத் துனுக்கென்றது. "நீங்கள் எங்கே படித்தீர்கள்? தமிழ் உபாத்தியாயர் யார்? என்று நான் கேட்டேன். புறப்படுவதற்கு ஸித்தமாக இருந்த அவரைக் கிருஷ்ணசாமி ஐயர் பார்த்து, "உட்காரும்" என்று சொல்லிப் புன்முறுவல் செய்தார். அவருடைய முகக்குறிப்பினால் முனிசாமி ஐயருடைய வார்த்தையை மறுக்கும் தைரியம் எனக்கு உண்டாயிற்று. அவர் என் கேள்விக்கு விடைகூறத் தொடங்கித் தாம் சித்தூரில் படித்த தாகச் சொன்னார்; தமக்குத் தமிழ்ப்பாடம் சொன்ன உபாத்தியாயர் இன்னாரென்பதையும் தெரிவித்தார்; அப்பால் பண்டிதர்களைப்பற்றிச் சிறிதுநேரம் குறைவாகவே பேசினார். அதைக் கேட்டபோது எனக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று.
"எங்கேயோ தெலுங்கு தேசத்தில் யாரோ உபயோகமற்ற பண்டிதர் ஒருவரிடம் படித்ததை வைத் துக்கொண்டு இப்படி ஒரேயடியாக நிந்திப்பது கூடாது. தமிழின் பெருமையை அறிந்து கொள் ளாதது உங்கள் குற்றமே யொழியத் தமிழின் குற்ற மன்று. உங்கள் பண்டிதர் உங்களுக்குத் திருப்தி யுண்டாகும்படி பாடம் சொல்லவில்லை. அதனால் எல்லாருமே அத்தகையவர்களென்று நினைப்பது தவறு. இங்கிலீஷ் படித்துவிட்டால் தேச பாஷா பண்டிதர்களைக் குறைவாகக் கருதும் இயற்கை வந்து விடுகிறது. மற்றவர்கள் இப்படிச் சொன்னாலும் அதிகக் குற்றமில்லை. உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பேசுவது அழகன்று" என்றேன். கிருஷ்ணசாமி ஐயர் என்னுடைய பேச்சில் திருப்தி யடைந்து புன்னகை பூத்துக்கொண்டே இருந்தார். அப்போது என்னை இன்னாரென்று அவருக்குக் கிருஷ்ணசாமி ஐயர் அறிவித்தார். அந்தப் பத்திரிகைக்காரருக்கு எதிர்பாராத உணர்ச்சி உண்டாயிற்று; முகத்தில் பிரகாசம் மங்கியது; தாம் கூறியதற்காக மனத்துக்குள் அஞ்சி இறங்குவது அவர் முகக் குறிப்பினால் வெளியாயிற்று.
"எனக்கு உங்களைத் தெரியாது; தோற்றியதைப் பேசிவிட்டேன்" என்று அவர் என்னை நோக்கிக் கூறினார்.
அப்பால் புறநானூறு முதலிய பழந்தமிழ்ச் செய்யுட்களிலுள்ள விஷயங்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரிய வில்லை. முனிசாமி ஐயர் கேட்டுக்கொண்டே இருந் தார். அவ்வப்போது தம்முடைய மகிழ்ச்சியை நன்றாக வெளிப்படுத்தினார்.
அப்போது கிருஷ்ணசாமி ஐயர், "தமிழில் ஒன்று மில்லையென்று சொன்னீரே; இந்தமாதிரி நாட்கணக்காக இவர்கள் விஷயங்களை எடுத்துச் சொல்வார்கள்" என்று கூறினார்.
முனிசாமி ஐயர், "ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன்: எனக்குத் தெரியாத குறையைப் பாஷை மேலும் பண்டிதர்கள் மேலும் ஏற்றிச் சொன்னேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டார். அவர் அப்படிக் கூறும்போது தமிழின் பெருமையை அவர் உணர்ந்து கொண்டமையைத் தெரிந்ததும் என் மனத்தில் ஓர் ஊக்கம் உண்டா யிற்று; 'இப்படிக் காரணமில்லாமல் தம்முடைய அறியாமையினால் தமிழையும் பண்டிதர்களையும் தூஷிக்கும் கனவான்களும் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்களே! அவர்கள் யாவரும் இவரைப் போல மனம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' என்று எண்ணினேன்.
தமையனார்
கிருஷ்ணசாமி ஐயருடைய தமையனாராகிய ஸ்ரீ சாமிநாதையர் தெய்வ பக்தியிற் சிறந்தவர். அவர் சப் ஜட்ஜ் உத்தியோகம் வகித்துவந்தார். கல்வி சம்பந்தமான சபைகளில் அவர் பல சமயங்களில் அக்கிராசனம் வகித்து நடத்தியதுண்டு. ஸம்ஸ்கிருதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. சிறந்த நூல்களை அடிக்கடி பாராயணம் செய்துகொண்டே இருப்பார். வேதாந்த நூல்களைக் கேட்டும் படித்தும் வந்தனர். அவருடைய உள்ளம் துறவறத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இருந்தது.
உத்தியோக காலத்திற்குப்பின் அவர் பெரும்பாலும் வேதாந்த நூல்களையெல்லாம் ஆராய்வதிற் பொழுது போக்கிவந்தார். கிருஷ்ணசாமி ஐயருக்கு அவரிடத்து மரியாதையும் அன்பும் மிகுதியாக இருந்தன. அவர் நோய்வாய்ப்பட்டுச் சில காலம் துன்புற்றார். அக்காலத்தில் கிருஷ்ணசாமி ஐயர் தம்முடைய பங்களாவிலே அவரை வைத்திருந்து வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்துப் பாதுகாத்தார்.
அப்போது அடிக்கடி பலர் சாமிநாதையரைப் பார்க்க வந்து சென்றார்கள். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பழக்கமான செல்வர்களும் பிரபல உத்தி யோகஸ்தர்களும் அவரைப் பார்த்துப் போனார்கள். நானும் அடிக்கடி போய்ப் பார்த்து வருவதோடு சில சமயங்களில் தேவாரம் முதலிய தோத்திரங்களைச் சொல்லுவோரை என்னுடன் அழைத்துச் செல்வேன். அவர்கள் தேவாரம் முதலியவற்றைப் பாடுகை யில் கேட்கும்போது சாமிநாதையர் மனமுருகுவார். நானும் பல பாடல்களைச் சொல்லிக் காட்டுவேன்.
ஒருநாள் நான் சென்றிருந்தபோது ஸ்ரீ பாஷ்ய மையங்கார், ஸ்ரீ தேசிகாசாரியர் முதலிய சிலர் சாமிநாதையரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் உள்ளே சென்றிருந்தபோது நான் வெளித் தாழ்வாரத்தில் இருந்தேன். உள்ளே சென்றவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். அவர்களுள் எனக்குத் தெரிந்தவர்களைக் கண்டு பேசினேன். ஸ்ரீ தேசிகாசாரியவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பாஷ்யமையங்கார் வெளியே வந்தனர். நான் அவரைக் கண்டு ஒதுங்கி நின்றேயேயொழிய அவருடன் பேசவில்லை. அங்கே இருந்த ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் அப்பெரியாரை அனுப்பிவிட்டு என்னிடம் வந்தார்; "ஆமாம்; இங்கே வந்த பெரும்பாலோரிடம் நீங்கள் பேசினீர்களே. பாஷ்யமைங்காரவர்களிடம் நீங்கள் ஏன் பேசவில்லை? அவரைத் தெரிந்ததாகக்கூடக் காட்டிக் கொள்ளவில்லையே!" என்று கேட்டார்.
(சப்ஜட்ஜ் ஸ்ரீ வி. சாமியாதையர் படம் உள்ளது)
அவருடைய கேள்வி எனக்குச் சிறிது வியப்பை உண்டாக்கியது. பாஷ்யமைங்காருக்கு உரிய மரியாதையை நான் செய்யத் தவறினேனென்று அவர் கருதுவதாகத் தெரிந்தது; "அவரை நான் அதிக மாகச் சந்தித்துப் பேசியதில்லை. அவருண்டு; அவருடைய சட்டமுண்டு. தமிழ், ஸம்ஸ்கிருதம், சங்கீதம் முதலியவற்றிலே அவருக்கு அபிமானம் இருப்பதாக நான் தெரிந்துகொள்ளவில்லை. அவர் சட்டத்தில் மகாமேதாவி என்று மட்டும் கேள்வியுற்றிருக்கிறேன். அவ்வளவுதான். என்னைப்போன்ற வர்களிடத்தில் அவருக்கு அன்பு உண்டாவதற்கோ, அவருடைய பழக்கம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுவதற்கோ வழி ஏது?" என்றேன். கிருஷ்ணசாமி ஐயர் பார்வையிலே ஒரு வேகம் உண்டாயிற்று; "அப்படியா? உட்காருங்கள்; சொல்லுகிறேன்" என்று அவர் என்னை இருக்கச் செய்து தாமும் அமர்ந்தார். அவர் ஏதோ பெரிய விஷயம் ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்கப்போகிறா ரென்று எனக்குத் தோற்றியது.
"இந்தக் கனவானைப்பற்றி நீங்கள் நன்றாக அறிந்துகொள்ளவேண்டும். இந்தப் 'பாரி' (Bar)ல் இந்தியர்களைப் பேசும்படி வைத்த மகான் இவர். முன்பெல்லாம் வெள்ளைக்காரப் பாரிஸ்டர்கள் வந்து இந்தியர்களே தலையெடுக்காமல் செய்து வந்தார்கள். 'பார்' அவர்களுடைய ஏகபோக உரிமையாக இருந்தது. இந்த மேதாவி வந்தார். சட்டநுணுக்கங் களை அலசி ஆராய்ந்து தெளிவித்தார். இந்தியர் களுக்கு மதிப்பு ஏற்பட்டது. நாங்களெல்லாம் விளங்குவதற்குக் காரணமானவர் இவரே. இவர் 'பாரி'லே புகுந்தபிறகு எவ்வளவோ துரைகள் வெளியூர் நியாய சபைகளுக்குப் போய்வரத் தொடங்கினார்கள். ஜட்ஜ் முத்துசாமி ஐயரால் ஜட்ஜ் ஸ்தானத்தில் அமரும் பதவியை இந்தியர்கள் அடைந் தனர். பாஷ்யமையங்காரால் இத்தியர்களுக்குப் 'பாரில்' பெருமை உண்டாயிற்று. இவருடைய கௌரவத்தாலேதான் அட்வொகேட் ஜனரல்வேலை இந்தியராகிய இவருக்கு முதலில் கிடைத்தது. சட்டமே இவருடைய சொரூபம்" என்று கிருஷ்ண சாமி ஐயர் சொன்னார்; மேலும் பேசிக்கொண்டு போவாரென்றே தோற்றியது.
"எனக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரியாது; இன்று தங்களால் தெரிந்து கொண்டேன்" என்று நான் விடை கூறினேன்.
சாமிநாதையர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஆபத் சந்நியாஸம் வாங்கிக்கொண்டார். அதன் பின்பு குடும்பத்திலுள்ளவர்களும் மற்றவர்களும் அவரை அடிக்கடி சென்று பார்த்து அவருடைய மனவமைதியைக் கெடுக்காதபடி கிருஷ்ணசாமி ஐயர் கவனித்து வந்தார், சாமியாதையர் ஈசுவரத் தியானத்திலே பொழுது போக்குவதற்கேற்ற சௌகரியங்களை அமைத்துக் கொடுத்தார். சில காலத்துக்குப்பின் அவர் பூதவுடம்பை நீத்தார். சந்நியாஸம் வாங்கிக்கொண்டபடியால் அவருடைய உடலம் திருவான்மியூரில் சமாதியில் வைக்கப் பெற்றது. கிருஷ்ணசாமி ஐயர் தம்முடைய தமையனார் பேரால் சில தருமங்கள் செய்திருக்கின்றார்.
பரந்த புகழ்
கிருஷ்ணசாமி ஐயருக்கு இந்த நாட்டில் இருந்த கௌரவம் சிலருக்குத்தான் அமையும். எங்கே சென்றாலும் அவரைச் சிலர் சூழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவருடைய பேச்சையும், தைரியத்தையும், வேகத்தையும் கண்டு கண்டு பலர் வியந்து பாராட்டுவார்கள். ஒரு கவர்னர் ஒரு சமயம் ஏதோ பேசும்போது, "இந்த ஊரில் எங்கே போனாலும் கிருஷ்ணசாமி ஐயர் பேச்சாகவே இருக்கிறது" என்று கூறியதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கிருஷ்ணசாமி ஐயர் மனைவியார் தேக சௌக்கியமின்றி இருந்தபோது அவரை வில்லிவாக்கத் தில் இருக்கச் செய்திருந்தார். ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றார். நானும் உடன் சென்றேன். மீண்டும் சென்னை வந்தபோது குறிப்பிட்ட காலத் துக்கு முன்பே ரெயில்வண்டி வந்துவிட்டமையால் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அவரது வண்டி வரவில்லை. அவர் சிறிது தூரம் நடந்து வந்தார். அப்போது யாரோ ஒரு கனவான் கிருஷ்ணசாமி ஐயரைக் கண்டார். உடனே ஓடிவந்தார். மிகுந்த பயத்துடனும் மரியாதையுடனும் அவரை நோக்கி, "என்னுடைய வண்டி ஸித்தமாக இருக்கிறது. தங்களைத் தங்கள் பங்களாவிலே கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறேன்; தயைசெய்ய வேண்டும்" என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். அந்தக் கனவானை இன்னா ரென்று கிருஷ்ணசாமி ஐயர் அறியார். ஆயினும் அவருடைய ஒளி எங்கும் பரவியிருந்தது. "அப்படியா! சரி" என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி, "இவர் அன்புடன் சொல்கிறார். நான் இவர் வண்டியில் முன்னால் போகிறேன்" என்று சொல்லி அந்தக் கனவானது வண்டியில் ஏறிக் கொண்டார். முன் பழக்கமில்லாத ஒரு கனவான் அவ்வளவு பணிவாகத் தம்முடைய வண்டியை உதவியது கிருஷ்ணசாமி ஐயருடைய கௌரவத் தையே காட்டியது. கிருஷ்ணசாமி ஐயரைக் கண்ட வுடன், 'இவரை ஏற்றிச் செல்லும் பாக்கியம் கிடைக்க வேண்டுமே!' என்ற எண்ணத்துடன் அந்தக் கனவான் இருந்ததாகத் தெரிந்தது.
ஒருசமயம் மயிலாப்பூரிலுள்ள கனவான்களிற் சிலர் அங்குள்ள ஸ்மசானத்தை வேறோரிடத்திற்கு மாற்றவேண்டுமென்று எண்ணி அதற்குரிய முயற்சி களைச் செய்து வந்தனர். அது சில பங்களாக் களுக்கு அருகில் இருப்பதாகவும் அதன் புகை ஊருக் குள் அடிப்பதாகவும் அவர்கள் குறை கூறினார்கள். பலருக்கு இந்த ஏற்பாடு சம்மதமாக இல்லை, இந்த விஷயம் கிருஷ்ணசாமி ஐயர் காதிற்கு எட்டியது. பழைய வழக்கப்படியே எல்லாம் திருத்தமாக நடை பெற வேண்டுமென்பது அவரது நோக்கம். ஸ்மசா னத்தை வேறிடத்திற்கு மாற்றுவது பிழையென் பதே அவருடைய எண்ணம்; மாற்றும் முயற்சி செய்பவர்களில் முக்கியமான கனவான் ஒருவரை அவர் சந்தித்தபோது அந்தப் பேச்சு வந்தது; நான் உடன் இருந்தேன்; அவர் உடனே, "மிகவும் ஒழுங்குதான்! நமக்குப் பிடிக்காவிட்டால் பழைய இடத்தை மாற்றிவிடுவதோ? இந்தக் குளம் தடையாக இருக்கிறது; இதை அப்படியே வேறிடத்துக் குத் தூக்கிக்கொண்டுபோய் வைத்துவிடலாமா? இந் தக் கோவில் நமக்குப் பிரதிகூலமாக இருக்கிற தென்று பேர்த்து வைத்துவிடலாமா? என்ன பைத்தியக்கார யோசனை!" என்று கண்டித்தார். அப்பால் யார் அதைப்பற்றிப் பேசுவார்கள்? அந்த முயற்சி அதோடு அடங்கிவிட்டது.
அவருடைய தேவியார் நோயுற்றிருந்தபோது அவர் பங்களாவிற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது அவர் வெளியே அமர்ந்து ரகு வம்சத்தைப் படித்துக்கொண்டே இருந்தார். தம் முடைய மனைவியாருக்கு வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொண்டும், வருபவர்களுடன் பேச வேண்டியவற்றைப் பேசிக்கொண்டும், வேறு பலவித யோசனைகளைச் செய்துகொண்டும் இருத்தற்குரிய அவர் அவ்வளவு அமைதியாக அந்த நூலை அனுபவித்துப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது அவர் மனநிலை எனக்கு விளங்கியது. எந்தச் சமயத்திலும் மனத்தைத் தாம் மேற்கொள்ளும் விஷயத்திலே ஈடுபடுத்தும் ஆற்றல் சிலருக்கே வாய்க்கும். அவர்களே உலகிற் பெரும்புகழை அடைவார்கள். அத்தகைய மனோசக்தியை அவரிடம் கண்டேன். படித்துக்கொண்டே இருந்தவர் என்னைக் கண்டவுடன், "வாருங்கள்" என்று சொல்லிவிட்டுக் காளி தாசருடைய கவித்துவத்தைப் பற்றிப் பாராட்டத் தொடங்கினார்.
"இப்போது எந்தப் பாகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டேன்.
"திலீபன் சரித்திரம்"என்றார்.
அப்பால் என்னுடைய வேண்டுகோளின்படி அந்தச் சரித்திரத்தைத் தமிழில் எடுத்துச் சொன்னார்; அவர் சொன்னபடியே காளிதாசர் சொல்லி யிருக்கிறாரோ, இல்லையோ, எனக்கு அப்போது தெரியாது: அவர் அதைச் சொல்லிய முறையும் சொன்ன விஷயங்களும் நன்றாக இருந்தன. பழைய இதிஹாஸங்களிலும் புராண வரலாறுகளிலும் உள்ள அரிய விஷயங்களை வெளிப்படுத்த வேண்டு மென்பது அவருடைய ஆவல். நம்முடைய முன்னோர்கள் தர்மத்தையும் ஒழுக்கத்தையும் எவ்வளவு சிறந்தனவாக எண்ணினார்களென்பது அவற்றால் நன்றாக விளங்குமென்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
இந்தத் தேசத்தில் இராஜப் பிரதிநிதியாக இருந்த ஒருவர் ஒருமுறை பேசும்போது, "இந்தியர்களுக்கு ஒழுக்கம் இல்லை" என்று சொன்னார். அதனை உணர்ந்து இத் தேசத்திலுள்ளோர் மனம் மிகவும் புண்பட்டது. கிருஷ்ணசாமி ஐயர் அதற்குத் தக்க விடையளிக்க வேண்டுமென்று விரும்பினார். நேரே ஒரு விடை எழுதியனுப்பவில்லை. புராண இதிஹாஸங்களிலுள்ள வரலாறுகளை ஆரய்ந்து சுருக்க மாகத் தொகுத்து வெளியிட்டால் இந்தியர்களின் சிறப்பை விளக்குவதற்கு அதுவே கருவியாக இருப்ப தோடு இராஜப்பிரதிநிதி கூறிய பழிக்குத் தக்க விடையாகவும் இருக்குமென்று எண்ணி அந்தவேலையைச் சில ஸம்ஸ்கிருத பண்டிதர்களிடம் ஒப்பித்தார். அவர்கள் அங்ஙனமே தொகுத்துத் தந்தவற்றை 'ஆரிய சரித்திரம்' என்னும் பெயரால் கிருஷ்ணசாமி ஐயர் வெளியிட்டார். அதன் முகவுரையில், அந்தப் புத்தகத்தை வெளியிட நேர்ந்த காரணத்தைத் தெரிவித்துத் தக்க விடையும் அளித்திருக்கின்றார். அந்தப் புத்தகம் நம் முன்னோர்களின் ஒழுக்கச்சிறப் பையும் தருமத்தின் பெருமையையும் தெரிந்து கொள்வற்கு ஒரு சிறந்த கருவியாக விளங்கு கின்றது.
ஒருநாள் அவர் என்னுடைய விருப்பத்தின்படி சில அன்பர்களுடன் என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னுடைய புத்தகங்களையும், ஏட்டுச்சுவடிகளை வைத்திருக்கும் இடத்தையும், படிக்குமிடத்தையும், கையெழுத்துப் பிரதிகளையும் பார்க்கச் செய்தேன். "வெள்ளைக்காரராக இருந்தால் தனியே பங்களா இருக்கும்; புஸ்தகசாலைக்குத் தனியிடம் இருக்கும்; வேலைக்காரர்கள் இருப்பார்கள்; பலர் பாராட்டி ஆதரிப்பார்கள். நீங்கள் இந்தத் தேசத்திலே இருப்பதனால் இதற்கேற்றபடி வறிய நிலையில் சுருக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் தனியே சகாயமின்றி யிருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகின்றது' என்று அவர் சொன்னார்.
'நீங்கள் பார்த்து மகிழ்ச்சியடைவதே பலருடைய பாராட்டுதலைப் பெற்றதற்குச் சமானம்' என்று நான் சொன்னேன்.
அவர் வாயளவில் புகழ்ந்து பேசிவிட்டுச் செல்பவரல்லர்; எவ்வளவோ வித்துவான்களுக்கு எத்தனையோ விதமான உபகாரங்களைச் செய்திருக்கிறார். மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றவர்களுக்கு வருஷந்தோறும் துரைத்தனத்தார் நூறு ரூபாய் அளிப்பதற்கு அவர் முயற்சியே முக்கிய காரணம்.
யாசகமென்று அவரிடம் வந்தவர்கள் வெறுங் கையோடு திரும்பியதே இல்லை. அவருடைய பேச்சைப் பார்த்தால், "இவர் கொடுக்கமாட்டார்" என்றுதான் முதலில் தோற்றும்; ஆனால் அவர் கொடுப்பதைப் போல் கொடுப்பவர் சிலரே. ஒருமுறை யாரோ ஒரு குருடர், "நான் காசிக்குப் போக எண்ணி யிருக்கிறேன்; அதற்குப் பொருளுதவி செய்ய வேண்டும்" என்று சொன்னார். "ஓய், உமக்கோ கண் தெரியாது; நீர் காசிக்கு எப்படிப் போவீர்? போமையா, போம்; இவ்வளவு துணிச்ச லாகப் பொய் சொல்லுகிறீரே" என்று கிருஷ்ணசாமி ஐயர் கடுமையாகப் பேசினார். வந்தவர், 'இங்கே நமது ஜபம் பலிக்காது' என்று எண்ணிக்கொண்டு வந்த வழியே போகத் திரும்பினார்; சட்டென்று அவ் வுபகாரி, "நில்லும்; இந்தாரும், இதை வைத்துக் கொள்ளும்" என்று சொல்லி ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அந்தக் குருடர், 'சற்றுநேரத்திற்குமுன் கடிந்து கூறியவாரா இதைத் தந்தார்!' என்று ஆச்சரியப்பட்டிருப்பாரென்பதில் என்ன சந்தேகம்? கிருஷ்ணசாமி ஐயருடைய இயல்பு மேற்பார்வைக்கு வலியதாகத் தோற்றினும் அவர் உள்ளம் கனிவுடையதே.
நல்ல சங்கீதத்தைக் கேட்பதும் நல்லவர்களைப் பாராட்டுவதும் எளியவர்களாயினும் அறிவுடைய வித்துவான்களை உடன்வைத்துக் கொள்வதும் அவருக்கு வழக்கம். ஒரு முறை ரானடே புத்தக சாலையில் நடந்த ஒரு சபையில் முதலில் இரண்டு ஸம்ஸ்கிருத மாணாக்கர்கள் தெய்வ ஸ்தோத்திரமாக ஒரு சுலோகத்தைச் சொன்னார்கள். அவர்களுடைய அபஸ்வரத்தைக் கேட்ட கிருஷ்ணசாமி ஐயர் , "இந்தச் சுலோகத்தின் பெருமையே இவர்கள் சொல்வதானால் குறைந்துவிட்டது. நான் மாதம் பன்னிரண்டு ரூபாய் தருகிறேன். நல்ல சாரீரத்தோடு அபஸ்வரமின்றிச் சுலோகங்கள் சொல்லும் பிள்ளை கள் பெற்றுக்கொள்ளட்டும்" என்றார். இசையும் கருத்தும் ஒன்று சேரும்போது மனத்தை உருக்கு மென்பதை அவர் அனுபவத்தில் உணர்ந்தவ ரல்லவா?
கிருஷ்ணசாமி ஐயர் தைரியத்திற்கு இருப் பிடம்; பிறருக்கு உபகாரம் செய்வதே அவருக்கு விருப்பமான தொழில். உலக வாழ்க்கையில் உண்டா கும் பலவகையான இடையூறுகளைக் கண்டு அஞ்சுபவர்களும், ஈகை யின்பத்தை அறியாதவர்களும் அவருடைய சரித்திரத்தைப் பன்முறை படித்து உணர்ந்து கொள்ள முற்பட்டால் அவர்களும் திருந்தக்கூடும்; தேசத்திற்கும் நன்மை உண்டாகும்.
அவருடைய செல்வக் குமாரர்கள் இருவரும் அவரைப் போலவே குணசாலிகளாகவும், பரோப கார சீலர்களாகவும் இருப்பது அவருடைய பெருமை யைக் காட்டுகின்றது.
11. பெற்ற மனம்
கும்பகோணத்தில் நான் வேலைபார்த்துவந்த காலத்தில் அங்கே ஒரு வக்கீல் குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவர் சுறுசுறுப்பும் முயற்சியும் உள்ளவர். அவருடன் அவருடைய தாயும் இருந்தாள். அவள் தன் குமாரரிடம் மிக்க அன்புள்ளவள், தன் பிள்ளை சாப்பிடுவதற்கு முன் உணவு கொள்ள அவளுக்கு மனம் வருவதில்லை. குமாஸ்தாவும் தம் அன்னையிடம் அன்புடையவராகவே இருந் தார்.
அநேகமாகக் குடும்பங்களில் ஒற்றுமை நிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கல்யாணம் ஆவதற்கு முன் உள்ள அமைதியும், ஆனபின்பு வீட்டில் உண்டாகும் கலகங்களும், அந்தக் கலகங்களைப் பெண்கள் விருத்தி செய் வதும் புதுமையான விஷயங்கள் அல்ல. முன்னே குறித்த வக்கீல் குமாஸ்தாவுக்கு விவாகம் ஆயிற்று. அவருடைய மனைவி வீட்டிற்கு வந்தாள். அன்று முதல் அந்த வீட்டில் முன்பு தடையில்லாமல் வளர்ந்து வந்த அன்பும் அமைதியும் கலக்கத்தை அடைந்தன. தாயினிடம் உள்ள குறையோ, வந்த பெண்ணிடம் உள்ள குறையோ, இருவருடைய குறை களுமேயோ தெரியவில்லை; அந்த வீட்டில் மூவரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
மாமியாருக்கும் மருமகளுக்கும் மனப்பொருத்தம் ஏற்படவில்லை; பகைமைதான் உண்டாயிற்று; அது வரவர விருத்தி யடைந்தது.
வந்த பெண்ணுக்கு அதிகாரம் செலுத்த வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாயிற்று. தன் கனவன் இருக்கும்போது ஒரு விதமாகவும், இல்லாதபோது வேறு விதமாகவும் மாமியாரை நடத்தி வந்தாள். 'இது வரையில் நாம் இந்த வீட் டில் நடத்திவந்த அதிகாரத்தை இந்தச் சிறு பெண்ணா தடுப்பது?' என்ற ரோஷம் அந்தக் கிழவிக்கு உண்டாயிற்று. அப்புறம் யுத்தம் உண்டாவ தன்றி அமைதிக்கு வழி ஏது?
வீட்டுக்காரரிடம் இரண்டு பேர்களும் முறையிட் டார்கள். ஒவ்வொருவரும் தம் தம் கட்சியே நியாய மானதென்று தோன்றும்படி சொல்லினர். அவ ருக்கோ மனைவியின் பேரில் ஆசை; அன்னையின்பால் அன்பு. இரண்டுக்கும் இடையில் இருந்து தவித்தார். 'இந்தக் கலகத்தை வளரவிடக் கூடாது' என்று மட்டும் நினைத்தார்.
"இனிமேல் உங்கள் அம்மா இந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க முடியாது. என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். என்றைக்கு உங்கள் அம்மாவை அனுப்புகிறீர்களோ, அன்றைக்கு என்னை அழைத்துக் கொண்டு வரலாம்" என்று மனைவி கண்டிப்பாக உத்தரவு போட்டாள். வீட்டுக்காரர் ஆசைக்கு அடிமைப் பட்டவர்; மோகத்தினால் தைரியத்தை இழந்தவர். தம்முடைய வீட்டிலே தனியாக ஓரிடத்தைப் பிரித்துக் கொடுத்து அங்கே தம் தாயை இருக்கச் செய்தார். அவள் தனியே சமைத்துச் சாப்பிட்டு வந்தாள்.
இந்த ஏற்பாடுகூட அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை. "என் கண்ணில் படவே கூடாது" என்று கூப்பாடு போட்டாள். தனியே ஒரு வீட்டில் தம் தாயை இருக்கச்செய்து வேண்டிய சாமான்களை அவர் அனுப்பி வந்தார். கிழவி முணு முணுத்துக் கொண்டே தனிமையாக இருந்து வரலானாள்.
நாளடைவில் இந்த ஏற்பாடும் மனைவியின் உப தேசத்தால் கைவிடப்பட்டது; கிழவிக்குச் சாமான்கள் கொடுப்பதைக் குமாஸ்தா நிறுத்திக்கொண்டார்.
கிழவி தன் தலையெழுத்தை நொந்துகொண்டு கும்பகோணத்திலேயே தெருத்தெருவாய் அலைந்து உபாதானம் எடுத்து வயிறு வளர்க்க ஆரம்பித்தாள். "நான் எத்தனையோ கஷ்டப்பட்டு அவனை வளர்த்தேன். இப்போது அவனுக்கு முன்னாலே பிச்சையெடுத்துச் சாப்பிடும்படி ஆகிவிட்டது தலை விதி" என்று அவள் அழுதுகொண்டே உபாதானம் வாங்கினாள். அவளுடைய நிலையைக் கண்டு ஊரா ரெல்லோரும் இரங்கினார்கள். அவளுடைய பிள்ளையைத் தூற்றாதவர் யாருமில்லை. அவரோ காவேரியில் விடியற்காலம் ஸ்நானம் பண்ணுவதிலும் முறைப் படி அனுஷ்டானம் பூஜை செய்வதிலும் தவறுவ தில்லை.
"அப்படியாவது சமர்த்தாய்ப் பிழைத்தால் நல்லதாயிற்றே; அவளுக்கு ஒன்றுமே தெரியாதே. அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவாளே!" என்று கிழவி இரங்குவாள். அவளுடைய அன்பு குறையவில்லை.
ஒரு சமயம் குமாஸ்தாவுக்கு ஜ்வரம் வந்தது. மிகவும் கடுமையாக இருந்தது. அவருடைய தாய் அதைக் கேள்வியுற்றாள். அவள் நெஞ்சம் படபடத்தது. 'பெற்ற மனம் பித்து' அல்லவா? வீட்டிற்குள் போய்த் தன் பிள்ளையைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் அவளுக்கு உண்டாயிற்று. உள்ளே போனாள் தன் மருமகள் ஏதாவது அவமானப் படுத்தினால் என்ன செய்வதென்ற பயம் வேறு இருந்தது. அப்பால் துணிவோடு அந்த வீட்டிற்குச் சென்றாள்; திண்ணையில் உட்கார்ந்தாள். உள்ளே போக அவளுக்கு மனம் துணியவில்லை. பயம் பாதி; 'அவள் முகத்தில் விழிக்கக் கூடாது' என்ற எண்ணம் பாதி. உள்ளே போய் அவள் பிள்ளையைப் பலர் பார்த்து வந்தனர். அவர்களைப் பார்த்துப் பார்த்து, "இப்பொழுது எப்படி யிருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டே யிருந்தாள்.
"உள்ளேதான் வந்து பாரேன்" என்று சிலர் அழைத்தார்கள்.
"நான் எதற்கு வரவேண்டும்? அவள்தான் இருக்கிறாளே. அவளிடம் சொல்லுங்கள்: அவனுக்கு வேண்டியதைப் பண்ணிப் போட அவளுக்குத் தெரியாது. வாய்க்கு ருசியாகச் சமையல் பண்ணத் தெரியாது. மருந்து குழைத்துக் கொடுக்கத் தெரி யாது. மருந்து காரமாக இருக்கும். தேன் நிறைய விட்டுக் குழைத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று சொன்னாள் கிழவி.
தன் பிள்ளைக்கு அபாயம் ஒன்றும் இல்லை யென்று தெரிந்து கொண்ட பிறகே அன்று அவள் உபாதானம் எடுக்கச் சென்றாள். அவருக்கு உடல் நிலை வரவரக் குணமாகிக்கொண்டிருந்தது. ஒவ் வொரு நாளும் அநதக் கிழவி அந்த வீட்டுத் திண்ணைக்குப் போய் அயலார் மூலமாக விஷயத்தை விசாரித்து அறிந்து வந்தாள்.
ஒரு நாள் நான் அந்தத் தெரு வழியே சென்று கொண்டிருந்தேன். கிழவி திண்ணையில் இருந்தாள். அங்கே வந்த ஒருவரிடம் அவள் பேசிக் கொண்டிருந்தாள்; "அவனுக்கு அதிகக் காரம் கூடாது. ஜ்வரம் கிடந்த உடம்பு. வாய்க்கு இதமாகவும் பத் தியமாகவும் பண்ணிப் போடச் சொல்லுங்கள்: மோர்க் குழம்பு பண்ணினால் அவள் தேங்காய் அரைத்துவிட மாட்டாள். நிறைய அரைத்துவிடச் சொல்லுங்கள். அப்படிச் செய்கிறதனால் அவள் அப்பன் வீட்டுச் சொத்து ஒன்றும் குறைந்து விடாது. நான்தான் மகாபாவி. அவனுக்கு ஏற்ற படி பண்ணிப்போடக் கொடுத்து வைக்கவில்லை" என்று அவள் கூறியது என் காதில் விழுந்தது.
'நான்தான் மகாபாவி' என்ற போது அவ ளுக்குப் பேச முடியவில்லை; குரல் தடுமாறியது. அந்தத் தடுமாற்றத்தில் அவளுடைய அன்பின் நிலை யும் பெற்ற மனத்தின் இயல்பும் வெளிப்பட்டன. அந்த ஒரு கணத்தில் என் கால்கள் கூட மேலே செல்லாமல் தடுமாறின.
"'மகாபாவி'என்று இவள் சொல்லிக் கொள்கிறாளே. யார் பாவி?" என்று என்னை நானே கேட்டுக்கொண்டு மேலே நடந்துசென்றேன்.
12. மல்லரை வென்ற மாங்குடியார்
மஹாராஷ்டிர அரசர்கள் காலத்தில் தஞ்சாவூர் அரண்மனையில் நவராத்திரி உத்ஸவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். வடமொழி தென் மொழி வித்துவான்களும் சங்கீத வித்துவான்களும் வேறு பல கலை வல்லுநர்களும் அந்நகரத்திற்கு வந்து அரசரையும் மற்றவர்களையும் மகிழ்வித்துச் சம்மானங்கள் பெற்றுச்செல்வார்கள். வெளிநாடுகளி லிருந்தும் பலர் வந்து போவதுண்டு.
ஒரு வருஷம் நவராத்திரி விழாவிற்கு வட நாட்டிலிருந்து மல்லர் ஒருவர் தம் பரிவாரங்களுடன் வந்திருந்தார். அவர் பல சமஸ்தானங்களிலுள்ள மல்லர்களோடு மல் விளையாட்டுப் புரிந்து வெற்றி யடைந்து அங்கங்கே பல சம்மானங்களும் விருதுகளும் பெற்றவர். அவர் வந்திருப்பது தெரிந்து தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கிராமத்தினர் பலர் அவருடைய மல் விளையாட்டைப் பார்க்கும்பொருட்டு வந்து கூடியிருந்தனர். வந்த மல்வீரர் மற்ற இடங்களிலிருந்து வந்திருந்த வேறு மல்லர்களை அறை கூவி அழைத்தார். மற்போர் நடைபெறத் தொடங் கியது. ஏழு நிலைகளையுடைய மாடம் அமைந்த அரண்மனையின் கிழக்கு முகப்பிலுள்ள வெளியில் சுற்றிலும் வாடி(வேலி) கட்டப் பட்டது. அதைச் சுற்றிப் பல ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். வாடிக்குள் மல்யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் வடநாட்டு மல்வீரரே தம்மோடு போர்புரிந்த மல் வீரர்களை ஜயித்து வந்தார். ஸமஸ்தானத்து மல்வீர ரும், வேறு மல்லர்களும் ஒவ்வொருவராகத் தோல்வி யுற்றனர். அரண்மனையில் இரண்டாவது நிலையிலிருந்து அரசர் ஒவ்வொருநாளும் அதைக் கவனித்து வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல் மற்போர் ஆரம்ப மாயிற்று. தினந்தோறும் பெற்று வந்த வெற்றி யினால் பெருமித மடைந்த மல்வீரர் அன்று மிகவும் உத்ஸாகத்தோடு இருந்தார். வந்திருந்த கூட்டத்தையும் அந்த வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸா கத்தையும் கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்த முண்டாயிற்று; 'இவரை ஜயிப்பதற்கு நமது ஸமஸ்தானத்தில் ஓர் ஆள் இல்லையே' என்ற எண்ணமே அதற்குக் காரணம். அரசருடைய உள்ளக் குறிப்பை யறிந்த மந்திரிகள் அருகிலிருந்து பல வகையாக அவருடைய கவலையைப் போக்கத் தொடங்கினார்கள்.
"மற்றோர் அரசாங்கமாக இருந்தால் இப்படிப் பிற நாட்டு வீரனுக்கு இடங் கொடுக்குமா? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷபாதியாகையால் வித்தைக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மல்வீரர் எந்த நாட்டினராக இருந்தால் என்ன? நாம் அளிக் கும் சம்மானத்தை அவர் மிகவும் உயர்வாகப் போற்றிப் பாதுகாப்பார்" என்றார் ஒருவர்.
"மகாராஜா! இதற்குள் மனம் சலிக்க வேண்டாம். இன்னும் ஸமஸ்தானத்து வீரர்கள் யாவரும் வரவில்லை. யாரோ சிறு பிள்ளைகள் இவ்வளவு நாள் அந்த வீரரோடு போக்குக் காட்டி விளையாடி னார்கள். அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்று தெரிந்து கொண்ட பிறகு நாம் போவோமென்று சில பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்" என்று மற் றொருவர் சொன்னார்
"இந்த ஸமஸ்தானத்தைப் போல இவ்வளவு சிறப்பாகப் பலவகையான வித்தைகளுக்கும் ஆதரவு அளிப்பது வேறொன்றும் இல்லையென்று ஜனங்கள் பேசிக்கொள்ளுகிறார்கள். மற்ற இடங்களில் இந்த மற்போரைக் காணுவது அரிது. ஆதலால் இங்கே வெளியூர்களிலிருந்து பல ஜனங்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மகாராஜாவினுடைய பெருமையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக் கிறார்கள்" என்று வேறொருவர் பேசினார்.
அரசரோ மல்விளையாடும் இடத்தையே பார்த் துக்கொண்டிருந்தார். திடீரென்று அவர், "அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெரிய மூட்டை தெரிகிறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. ஏதாவது வண்டி நிற்பதாகவும் தெரியவில்லையே. அங்கே அவ்வளவு பெரிய மூட்டை இருக்கக் காரணமென்ன?' என்று கேட்டார்.
அருகிலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கிடையே தெரிந்தது. கூட்டம் நெருக்கமாக இருந்தமையால் அந்த மூட் டைக்கு ஆதாரமான பொருள் இன்னதென்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
மந்திரிமார் அந்த மூட்டை எங்கே இருக்கிற தென்று தெரிந்துவர ஓர் ஆளை அனுப்பினர். சிறிது நேரத்தில் ஒருவன் வந்து செய்தியைத் தெரிவித்தான்; "ஒரு பிராமணர் தம் தலையில் நெல் மூட்டையைச் சுமந்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்" என்று அவன் கூறினான். "பிராமணரா! மூட்டை மிகவும் பெரிதாக இருக்கிறதே; அதை அவர் சுமந்துகொண்டே வேடிக்கை பார்ப்பதேன்?" என்று அரசர் ஆச்சரியத்தோடு கேட்டார். மறுபடி யும் சமாசாரம் வந்தது; "அவர் அதைச் சிறிதும் கஷ்டமில்லாமல் சுமந்துகொண்டு நிற்கிறார். கீழே இறக்கவேண்டியது அவசியமில்லையென்று சொல்லுகிறார்" என்று தெரியவந்தது.
"அத்தகைய மனிதரை நாம் பார்க்கவேண் டும்" என்று அரசர் உத்தரவிட்டார். அவரை அழைத்து வருவதற்காக ஒருவன் சென்றான்.
அந்தப் பிராமணர் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஐயம்பேட்டைக்கருகில் இருக்கும் மாங்குடியென்னும் ஊரினர். ஸ்மார்த்தப்பிராமணர்களுள் மழநாட்டுப் பிருகசரண வகுப்பைச் சார்ந்தவர். கைலாசைய ரென்பது அவர் பெயர். தஞ்சாவூரில் இருந்த ராஜபந்துக்களாகிய மகாராஷ்டிரர்கள் பக்கத்துக் கிராமங்களிலுள்ள தங்கள் நிலங்களைக் குத்த கைக்கு விட்டுவிடுவார்கள். அந்தக் குத்தகைக்காரர் கள் வருஷந்தோறும் நெல்லைக் கொணர்ந்து வ்வர்க ளிடம் கொடுத்துவிடுவாரக்ள. சிலர் தாமே சுமந்து வந்து போட்டுவிட்டுச் செல்வார்கள். கைலாசையர் அத்தகைய குத்தகைதாரர்களுள் ஒருவர்.
அவர் இரண்டு கலம் நெல்லை ஒரு கோணியில் மூட்டையாக்க் கட்டித் தம் தலையிற் சுமந்துகொண்டு வந்தவர்; அந்த வழியே செல்லுகையில் பெருங்கூட்ட மொன்று இருப்பதைக் கண்டு அங்கே வந்தார். வளைவுக்குள்ளே மல் விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்.
மிக்க பலமும் கட்டுமுடைய ஆஜானுபாகு வான அவருடைய உடம்பு இரும்பைப் போன்றிருந்தது. நெற்றியில் இருந்த திருநீறும் கழுத்திலிருந்த ருத்திராட்சமும் அவருடைய சிவபக்தியைப் புலப் படுத்தின. அவரும் அவருடைய வகுப்பினரும் சிறந்த சிவபக்தர்கள்; மூன்று காலத்தும் ஏகலிங் கார்ச்சனை செய்பவர்கள். கைலாசையருடைய வன்மை பொருந்திய உடலும் சிவ சின்னங்களின் தோற்றமும் பார்ப்பவர்களுக்குப் பீமசேனனது ஞாபகத்தை உண்டாக்கின. சிவபக்தியும் தேக பலமும் பொருந்தியவர்களிற் சிறந்தவனல்லவா அவன்?
கைலாசையர் தம் தலையிலிருந்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால் அதை இறக்கி வைக்காமல் நின்றபடியே மற்போர் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. அதில் ஐந்தாறு கவுளி வெற்றிலையும் கொட்டைப் பாக்கும் ஒரு பெரிய பாக்கு வெட்டியும் தேங்காயளவுள்ள சுண்ணாம்புக் கரண்டகமும் வைத்திருந்தார். அந்த மல் விளையாட்டைப் பார்த்துக் கொண்டு நின்றபடியே அவர் தாம்பூலம் தரிக்கத் தொடங்கினார்.
அவர் நின்றபடியே பையிலிருந்த பாக்குவெட் டியை எடுத்துப் பாக்கைச் சீவிச் சீவி வாயில் போட்டுக்கொண்டார். பிறகு வெற்றிலையை எடுத் தார். சுண்ணாம்புக் கரண்டகத்தின் சங்கிலியிலுள்ள வளையத்தைச் சுண்டு விரலில் மாட்டிக்கொண்டார். அதிலிருந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி ஒரே தடவையில் நான்கைந்து வெற்றிலை களின் நரம்பைக் கிழித்து அப்படியே சுருட்டி வாயி லிட்டு மெல்லத் தொடங்கினார். தலையில் ஒரு சுமை இருப்பதை உணராதவரைப்போல அநாயாசமாக அவர் சின்று கொண்டிருந்தார். அருகில் இருந்த வர்கள் மல்யுத்தத்தைப் பார்ப்பதோடு இடையிடையே அவரையும் பார்த்து வியந்தனர்.
அரசரிடத்திலிருந்து வந்த சேவகன் அவரை அணுகினான்; "மகாராஜா உங்களை அழைக்கிறார்; பார்க்கவேண்டுமாம்" என்றான்.
"மகாராஜாவா? என்னை ஏன் அழைக்கிறார்? ராஜ சமூகத்திற்கு வெறுங்கையோடு போகலாகாதே, நான் ஒன்றும் கொண்டு வரவில்லையே?" என்றார் அந்த பிராமணர்.
"நீங்கள் வாருங்கள். அதெல்லாம் வேண்டாம்" என்று சேவகன் சொன்னான்.
"அப்படியானால் வருகிறேன்; இந்த மூட்டையை ஓரிடத்தில் இறக்கிவிட்டு வருகிறேன்" என்று கூட்டத்தை விட்டு ஓரிடத்திற்குச் சென்றார். அரண்மனை வேலைக்காரர்கள் அவர் தலையிலிருந்த மூட்டையை இறக்க முயன்றார்கள். ஒருவராலும் முடியவில்லை. அவ்வந்தணர் சிரித்துக்கொண்டே அவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சிறிதே தலையை அசைத்தார். அந்த மூட்டை வில்லிலிருந்து வீசிய உண்டையைப் போலத் தரையில் பொத்தென்று விழுந்தது.
"சரி, வாருங்கள்; போகலாம்" என்று கைலா சையர் அரசரிடம் சென்றார்.
அரசர்: நீர் எந்த ஊர்? எதற்காக இங்கே சுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறீர்?
கைலாசையர்: நான் இருப்பது மாங்குடி. இந்த நெல்லை இந்த ஊரில் ஒரு கனவானிடம் கொடுப்பதற் காகச் சுமந்து வந்தேன். இங்கே ஏதோ மல்விளை யாட்டு நடக்கிறதென்று சொன்னார்கள். கொஞ்சம் பார்த்துவிட்டுப் பொகலாமென்று நிற்கிறேன்.
அரசர்: இந்த விளையாட்டில் உமக்கு அவ்வளவு சிரத்தை என்ன?
அந்தணர்: எங்களுக்கும் மல் விளையாட்டுத் தெரி யும். யாரோ வடநாட்டான் வந்திருக்கிறானென்று சொன்னார்கள். அவன் எப்படி விளையாடுகிறா னென்று பார்க்கலாமென்றுதான் நின்றேன்.
அரசர்: எப்படி இருக்கிறது விளையாட்டு?
அந்தணர்: என்னவோ நடக்கிறது! இந்த மனுஷ் யனை இவ்வளவு பேர்கள் கூடிக்கொண்டு பிரமாதப் படுத்துகிறார்களேயென்று எனக்கு ஒரு பக்கம் சிரிப்ப வருகிறது.
அரசர்: அந்த வீரன் பல தேசங்களுக்குச் சென்று பலபேரை ஜயித்தவனென்பது உமக்குத் தெரியாதோ?
அந்தணர்; இவனா! எங்கள் ஊரிலுள்ள ஒரு பொடிப் பையனுக்கு இவன் ஈடு கொடுக்க மாட்டான். என்னவோ அதிர்ஷ்டம் அடித்திருக்கும்; சில இடங்களில் பலஹீனர்கள் அகப்பட்டிருப்பார்கள்; ஜயித்திருக்கலாம்.
அரசர்: அப்படியானால் இவனை ஜயிப்பது சுலப மென்றா எண்ணுகிறீர்?
அந்தணர்: ஜயிப்பதா? ஒரு நிமிஷத்தில் இவ னைக் கியா கியாவென்று கத்தும்படி பண்ணிவிட லாமே.
அரசர்: நீர் மல் யுத்தம் செய்வீரா?
அந்தணர்: பேஷாகச் செய்வேன்.
அரசர்: இவனோடு இப்போது செய்யமுடியுமா?
அந்தணர்: மகாராஜா உத்தரவிட்டால் செய்யத் தயார்.
அரசர்: அதற்குவேண்டிய உடுப்பு ஒன்றும் இல் லையே; சட்டை, சல்லடம், வஜ்ர முஷ்டி முதலியவை வேண்டாமா?
கைலாசையர் சிரித்தார்; "அவைகளெல்லாம் அநாவசியம். வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு இவனுக்கு முன்னே நின்றால் அடுத்த நிமிஷமே அவன் மண்ணைக் கவ்விக்கொள்வதில் சந்தேக மில்லை" என்றார்.
அரசர் அவ்வந்தணரோடு பேசிக்கொண்டிருந்த போதே அவருடைய மனத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்த்து. வடநாட்டு வீரரை ஜயிப்பவரில்லையே என்று வருந்தியிருந்த அரசருக்குக் கைலாசையருடைய தோற்றமும் பேச்சும் ஒரு புதிய நம்பிக்கையை உண்டாக்கின. தாம் மல் யுத்தம் செய்வதாக அவர் கூறவே அரசருக்கு அந்நம்பிக்கை உறுதி பெற்றது. ஆயினும், 'இவர் உண்மையில் ஜயிப்பாரா?' என்ற சந்தேகமும், 'தோல்வியுற்று ஏதேனும் துன்பத்தை அடைந்தால் சாதுவான ஒரு பிராமணரைக் கஷ்டப்படுத்தின அபவாதம் வந்தால் என்ன செய்வது!' என்ற அச்சமும் இடையிடையே அரசருக்கு எழுந்தன.
அரசர்: அவன் நல்ல மாமிச போஜனம் செய் பவன; பலசாலி, பல நாள் பழக்கமுள்ளவன். அவனை ஜயிப்பதாக நீர் கூறுகின்றீரே; உம்மிடம் என்ன பலம் இருக்கிறது?
அந்தணர்: நான் சுத்தகான உணவுகளை உட் கொள்ளுபவன். எனக்கும் மல்வித்தையில் அப்பி யாசம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலான பலம் ஒன்று என்னிடம் இருக்கிறது.
"என்ன அது?" என்று அரசர் மிகவும் ஆவ லோடு கேட்டார்.
"நாங்களெல்லாம் ஈசுவர் ஆராதனம் செய்பவர்கள்; ஈசுவரனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தையே சாப்பிடுகிறவர்கள். எங்களுடைய உடம்புக்கு அந்தப் பிரசாதம் பலத்தை உண்டாக்கு கின்றது. பரமேசுவரனது கிருபையாகிய பலம் எங்களுக்கு உண்டு. அதைக் காட்டிலும் வேறு பலம் என்ன வேண்டும்?"
அரசருக்குக் கண்ணில் நீர் துளித்தது. மகாராஷ்டிர அரசர்கள் மிக்க பலசாலிகள்; மிகவும் சிறந்த சிவ பக்தர்கள். ஆதலின் பலசாலிகளிடத் திலும் சிவ பக்தர்களிடத்திலும் அவர்களுக்கு அபிமானம் இருந்து வந்தது. இருவகை இயல்பும் ஒருங்கே காணப்படுமானால் அவர்களுடைய அன்பு அங்கே பதிவதற்கும் ஐயமுண்டோ?
" வாஸ்தவம். நீங்கள் அந்தப் பலத்தை உடையவர்களானால் ஜயிப்பீர்கள். அடுத்த படியாக நீங்கள் அவனோடு போர்புரிந்து இந்த ஸமஸ்தானத்தின் புகழை நிலை நாட்டுங்கள் " என்று அரசர் சொன்னார். அவ்வந்தணர்பால் அவருக்கு அதிக மதிப்பு உண்டாகிவிட்டது.
கைலாசையருக்கும் வடநாட்டு மல்லருக்கும் போராட்டம் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டன. கைலாசையர் விளையாட்டு வாடி(வளைவு)க்குள் சென்றார். மல்லரோ பலரை வென்றோமென்ற இறுமாப்பினாலும், வரு பவர் ஒரு பிராமணரென்ற அசட்டையினாலும் துள்ளிக் குதித்தார். உடுப்போ, ஆயுதமோ ஒன்றும் இல்லாமல் அவர் வருவதைப் பார்த்தபோது மல்லருக்கு அவரிடம் அலக்ஷிய புத்திதான் ஏற்பட்டது. தம் மீசையை முறுக்கிக்கொண்டார்; தோளைத் தட்டினார்; துடையையும் தட்டினார்.
கைலாசையர் அங்கே சென்று தம் வஸ்திரத் தின் முன் பகுதியை அப்படியே எடுத்து முழங்காலுக்குமேல் நிற்கும்படி பின்பக்கத்தில் இறுகச் செருகிக் கொண்டார். மேல் வஸ்திரம் கையைத் தடுக்காதவாறு மார்பின் இரண்டுபக்கமும் குறுக்கே செல்லும்படி போர்த்து முதுகில் முடிந்து கொண்டார். இந்தக் கோலத்தில் வடநாட்டு வீரர்முன் மிக்க அமைதியோடு நின்றார்.
மல்லர் ஆரவாரம் செய்துகொண்டு வேகமாக ஓடிவந்து வஜ்ரமுஷ்டியணிந்த தம் வலக்கையை அவருடைய இடப்பக்கத்தில் குத்தினார். அந்தக் குத்துத் தம்மேல் படுவதற்குமுன் அக்கையை அப் படியே தம் இடக்கையால் கைலாசையர் பற்றிக் கொண்டார். மல்லர் வலப்பக்க விலாவில் இடக்கையைக் கொடுத்து அவரைத் தள்ள முயன்று கையை நீட்டினார். அந்தக் கையைக் கைலாசையர் தம் கட் கத்தில் இறுகச் சிக்க வைத்துக்கொண்டார். இரண்டு கைகளையும் அவர் பற்றிக்கொள்ளவே மல்லர் தம் வலக்கையை இழுத்து மீட்டும் குத்த எண்ணி னார். கைவந்தால் தானே மேலே போராடலாம்?
கைகளை அவரால் இழுக்க முடியவில்லை. கைலாசையர் வரவர அதிகமாக இறுக்கலானார். கைகள் நசுக்குண்டன. மல்லருக்கோ கையை எடுக்க முடியாததோடு வரவர வேதனையும் அதிகமாகி விட் டது; வலி பொறுக்க முடியவில்லை. தம்மால் ஆன வரையும் திமிரிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
" இன்றோடு நம்முடைய அகம்பாவம் ஒழிந்து போம்" என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டார். அழாக் குறையாக அந்தணருடைய முகத்தைப் பார்த்தார்.
" ஏன், சும்மா நிற்கிறீர்? விளையாடுகிறது தானே?" என்று கைலாசையர் கேட்டார்.
மல்லர் என்ன சொல்வார்! தாழ்ந்த குரலில், "என்னை விட்டு விடுங்கள்" என்றார்.
"ஏன் விளையாடவில்லையோ? " என்று கைலா சையர் கேட்டார்.
மல்லர்: உங்கள் பெருமை தெரியாமல் அகப்பட் டுக் கொண்டேன். என்னை விட்டுவிடுங்கள்.
அந்தணர்: நீர் தோல்வியுற்றதாக ஒப்புக்கொள் வீரா?
மல்லர் : அதற்கென்ன தடை? அப்படியே ஒப் புக்கொள்வேன்; ஒப்புக்கொண்டு விட்டேன்; என்னை இப்போது விட்டுவிட்டால் போதும்
அந்தணர்: இப்போது கையை விட்டுவிடுகிறேன். மறுபடியும் விளையாடலாமா?
மல்லர்: முடியவே முடியாது. உங்களோடு விளை யாடுவதாக இனிமேல் கனவிலும் நினைக்கமாட்டேன்.
அந்தணர்: மகாராஜாவிடம் உம்முடைய தோல்வியை ஒப்புக்கொள்வீரா?
மல்லர்: அப்படியே ஒப்புக் கொள்ளுகிறேன்?
அவ்வளவு நாட்களாகப் பலரை வென்ற மல்லர் அந்தப் பிராமணரோடு போராடாமலே தோற்றுப் போனதைப் பார்த்தபோது ஜனங்கள் பிரமித்து நின்றனர்." என்ன ஆச்சரியம்! அந்தப் பிராமணர் கையை அசைக்கக்கூட வில்லை. அவன் சரணா கதி அடைந்து விட்டானே!" என்று யாவரும் வியந்தனர்.
அரசருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவு ஏது? இருவரும் அரசரால் அழைக்கப் பட்டனர். அவரிடம் சென்ற மல்லர் தலை கவிழ்ந்துகொண்டே, "உங்கள் ஸமஸ்தானத்திலேதான் நான் தோல்வியுற்றேன்" என்று கூறினார்.
அவருடைய நெஞ்சத்துள் உண்டான துக்கத்தை அரசர் ஒருவாறு உணர்ந்து, "தோல்வியும் வெற்றியும் மாறி மாறியே வருகின்றன? எல்லாவற்றிற்கும் மேலே ஈசுவர கடாட்சமொன்று இருக்கிறது. அதுதான் இன்று ஜயித்தது. எங்கள் நாட்டின் பெருமை உமது மூலமாக வெளிப்பட்டது" என்று ஒருவாறு சமாதானம் கூறி அவருக்கு நல்ல சம்மானங்கள் செய்தார்.
தம்முடைய ஸமஸ்தானத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிய கைலாசையரை வாயாரப் பாராட்டி, "எல்லாம் பரமேசுவரன் செயலென்பதை இன்று உங்களால் நன்றாக அறிந்து கொண்டேன். நீங்கள் இந்த ராஜாங்கத்துக்கு மிகவும் அவசியமானவர்கள். இன்று முதல் ராஜாங்கத்தைச் சேர்ந்தவர்களாகி விட்டீர்கள்" என்று மனமுவந்து சொல்லி அரசர் பலவகையான பரிசுகளை வழங்கினார்.
சம்மானங்களைப் பெற்றுக்கொண்ட மல்லரும் கைலாசையரும் அங்கே சிலநாள் இருந்தனர். அப்பால் அரசரிடம் இருவரும் விடைபெற்றுக்கொண்ட போது மல்லர் அரசரைப் பார்த்து, "ஒரு பிரார்த்தனை" என்றார்.
"என்ன?" என்று கேட்டார் அரசர்.
"இவ்வளவு பலம் பொருந்திய இந்தப் பிராமண சிரேஷ்டருடைய ஊரையும் உறவினர்களையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகின்றது. அதை நிறைவேற்றிக் கொள்ளும்படி உத்தரவாக வேண்டும்" என்று மல்லர் வேண்டிக் கொண்டார்.
"அப்படியே செய்யலாமே" என்று அரசர் உத்தரவிட்டார்.
மல்லரும் அவருடன் வந்த இருபது பேர்களும் கைலசையருடன் மாங்குடி சென்றனர். போன சமயம் காலைவேளை. கைலாசையர் அவர்கள் வரவை முன்னதாகவே தெரிவித்து அவர்கள் யாவருக்கும் பழையது ஸித்தம் செய்துவைக்கும்படி சொல்லியனுப்பியிருந்தார். அப்படியே வீட்டிலுள்ளவர்கள் முன்னதாகவே நிறைய அன்னம் வடித்து நீரிற் போட்டிருந்தார்கள்.
"உங்களுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?" என்று மல்லர் கேட்டார்.
"நாங்கள் காலையில் சாத்தீர்த்தத்துடன் பழையது சாப்பிடுவோம். இன்று உங்களுக்கும் அது கிடைக்கும்" என்றார் கைலாசையர்.
வந்தவர்களுக்கெல்லாம் இலைகள் போடப்பட்டன. உப்பும் மாங்காய், நாரத்தங்காய், இஞ்சி முதலிய ஊறுகாய்களும் பழங்கறிகளும் பரிமாறப்பட்டன. அப்பால் பழையதைப் பரிமாறினார்கள். பிறகு ஒருவர் ஊறின எள்ளைக் கொணர்ந்து ஒவ்வோர் இலையிலும் ஒரு கைப்பிடி எடுத்து வைத்துச் சென்றார். வந்தவர்கள் சாதத்தைப் பிசைந்துகொண்டார்கள். ஊறுகாயையும் சுவைத்துப் பார்த்தார்கள். அந்த எள்ளை என்ன செய்வது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். தலைவராகிய மல்லர் கைலாசையரைப் பார்த்து, "இதை என்ன செய்வது?" என்று கேட்டார்.
"அதுதானே உடம்புக்குப் பலம்? அப்படியே எடுத்துச் சாதத்தில் பிழிந்துகொண்டால் எண்ணெய் வரும். இந்தப் பழையதும் எண்ணெயும் சேர்ந்தால் நரம்புக்கு அதிக வன்மை உண்டாகும்."
விருந்தினார்கள் எள்ளை எடுத்துப் பிழிந்தார்கள். ஊறி ஜலந்தான் வந்ததேயொழிய எண்ணெய் வரவில்லை; அதற்குரிய பலம் அவர்களிடம் இல்லை. மல்லர் தலைவராலும் பிழிய முடியவில்லை. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்த கைலாசையர் அங்கே நின்ற பையனைப் பார்த்து "அடே, இந்த எள்ளைப் பிழிந்து வை" என்று கட்டளையிட்டார். அவன் ஒவ்வோர் இலையிலும் இருந்த எள்ளை எடுத்து அப்படியப்படியே சாதத்தில் பிழிந்து சக்கையைப் போட்டுவிட்டான். அவன் சரசரவென்று வரிசையாக எல்லோருடைய இலையிலும் இருந்த எள்ளை இவ்வாறு பிழிந்து சென்றதைப் பார்த்தபோது அவர்களுக்கு, 'அடேயப்பா ! இங்கே எல்லோரும் இரும்பால் உடம்பு படைத்தவர்கள் போலல்லவோ தோற்றுகிறது!' என்று தம்முள் நினைத்துக் கொண்டார்கள். அப்பால் யாவரும் உண்டனர்; இரண்டொரு நாள் அங்கே தங்கிய பிறகு கைலாசையரிடம் விடை பெற்றுக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தனர்.
கைலாசையருடைய குமாரராகிய அண்ணாவையரென்பவர் தம் தந்தையாரைப் போலவே அஞ்சா நெஞ்சமும் தேக பலமும் படைத்தவர். அவர் காலத்தில் ஐயம் பேட்டைக்கு அருகிலுள்ள சாலைகளில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடைய தொந்தரவு அதிகமாக இருந்தது. ஜனங்கள் அவர்களுடைய தொல்லையினின்றும் விடுபடுவதற்கு வழி தெரியாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்த மன்னருக்குக் குடிகள் அந்த விஷயத்தைத் தெரிவித்து முறையிட்டார்கள். அம் மன்னர், "இந்தத் துஷ்டர்களை அடக்குவதற்குத் தக்க பலசாலிகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் யாரேனும் இவர்களை அடக்கிப் பிடித்தால் தக்க சம்மானம் செய்வோம்" என்று தெரிவித்தார்.
பொது ஜனங்களுக்குக் கொள்ளைக்காரரால் நேர்ந்துவரும் பெருந்துன்பங்களை உணர்ந்து எவ்வாறேனும் அவர்களைப் பிடித்துவிட வேண்டுமென்று அண்ணாவையர் எண்ணினார். தம்முடைய சிஷ்யர்களும் மிக்க பலசாலிகளுமாகிய ஒரு கூட்டத்தினரோடு சென்று ஒரு நாள் அவர் கொள்ளைக்காரரை எதிர்த்தார். கடும்போர் மூண்டது. கடைசியில் அண்ணாவையர் அவர்கள் அனைவரையும் வென்று கைகளைக் கட்டித் தஞ்சை அரசருக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் அனைவருக்கும் தக்க தண்டனை அளிக்கப்பட்டது.
ஜனங்களுக்கும் ராஜாங்கத்துக்கும் பெரிய பெரிய இடையூறுகளை விளைத்து வந்த அக்கொள்ளைக் கூட்டத்தாரை வென்றதனால் அண்ணாவையருக்கு அரசர் பல சம்மானங்களும் மானியங்களும் வழங்கினார். அன்றியும் ராஜாங்கம் என்னும் பட்டத்தையும் அளித்தார். அதுமுதல் அவ்வந்தணரை ராஜாங்கம் அண்ணாவையரென்று யாவரும் வழங்கலாயினர்.
"தந்தையாருக்கு ஏற்ற குமாரர். இவர் தகப்பனார் மல்லரை வென்று சோழநாட்டின் பெருமையை நிலைநாட்டினார்; இவர் கொள்ளைக்காரரை அடக்கி இத் தேசத்தின் அபாயத்தைப் போக்கினார்" என்று ஜனங்களெல்லாம் பாராட்டினர்.
ராஜாங்கம் அண்ணாவையருக்குப் பின் அப்பரம்பரையில் உதித்தவர்களும் 'ராஜாங்கம்' என்ற பட்டத்தை வகித்து வருகின்றனர்.
[இவ் வரலாறுகள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஊர்தோறும் வழங்கும். இளமையில் இவற்றைப் பலர் வாயிலாகக் கேட்டதோடு இப்பரம்பரையினரும் சிவபக்திச் செல்வருமாகிய ராஜாங்கம் ஸ்ரீபிரணதார்த்திஹர ஐயர் என்பவர் கூறவும் கேட்டிருக்கிறேன்.]
13. மன்னார்சாமி
கும்பகோணத்திலிருந்து நான் சென்னை இராசதானிக் கலாசாலைக்கு மாற்றப் பெற்று வந்த சில மாதங்களுக்குப் பின் ஒருநாள் மாலையில் 'ப்ளாக் டௌ'னுக்குப் போக வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் அதற்கு 'ஜார்ஜ் டௌன்' என்னும் பெயர் வரவில்லை என் குமாரனையும் உடன் அழைத்துக்கொண்டு போனேன். போன வேலையை முடித்துக்கொண்டு திரும்புகையில் டிராம் வண்டிக்காகப் பச்சையப்ப முதலியார் கல்லூரிக்கு எதிரிலே நானும் என் குமாரனும் ஓரிடத்தில் காத்திருந்தோம். அங்கே எனக்குத் தெரிந்த கனவான் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு காலேஜில் தலைமையாசிரியராக இருந்தவர்.
அவர் என்னைக் கண்டவுடன் க்ஷேமாசாரம் விசாரித்தார்; "நீங்கள் இவ்வூர்க் காலேஜில் வந்து விட்டதாகத் தெரிந்தது. மிகவும் சந்தோஷம். உங்களுடைய தமிழ் ஆராய்ச்சிக்கு இந்த இடம் அனுகூலமாக இருக்கும். இப்போது என்ன ஆராய்ச்சி நடந்து வருகிறது?" என்று அவர் கேட்டார். நான் உசிதமாக விடைக்கூறினேன். அவருக்கு அருகில் வேறொருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. அவரிடம் என் நண்பர் என்னைப்பற்றிக் கூறத்தொடங்கினார். "இவர்கள் மணிமேகலையை அச்சிட்டிருக்கிறார்கள்
பௌத்தமத சம்பந்தமான அதை வெளியிடுவதில் மிக்கசிரமம் எடுத்துக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் பௌத்தமதத்தைப் பற்றிய விஷயங்கள் வழக்கத்தில் இல்லை. இவர்கள் சிறிது சிறிதாக ஆராய்ந்து அந்த நூலுக்குக் குறிப்புரை எழுதி வெளியிட்டதோடு புத்த பகவானது சரித்திரத்தையும் பௌத்த தர்மம், பௌத்த சங்கம் என்பவற்றைப் பற்றியும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழில் முதல் முதலாக இந்தப் புஸ்தகந்தான் பௌத்த சமயத்தைப் பற்றித் தமிழ் நாட்டாருக்கு உபயோகப்படும்படி வெளிவந்த நூல். பல பேருக்கு இவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் பயன்படுகின்றன" என்றார்.
அவர், "அப்படியா? நான் மணிமேகலையைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். இவர் சாமிநாதையரா?" என்றார்.
"ஆம்" என்றார் என் நண்பர்.
"உங்களைத் தெரிந்துகொண்டது மிகவும் சந்தோஷம். பௌத்த தர்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் இந்தப் பக்கத்தில் அருமை. நீங்கள் தமிழில் அந்த மத விஷயங்களைப் பற்றிப் புஸ்தகம் எழுதியிருப்பது சிறந்த உபகாரமாகும்" என்று புதியவர் என்னைப் பார்த்துச் சொன்னார்.
"நான் என்ன செய்து விட்டேன்! பௌத்த மதத்தைப் பற்றி எனக்கு இயல்பாக என்ன தெரியும்! எங்கள் காலேஜ் புரொபஸர் ஸ்ரீமான் மளூர் ரங்காசாரியரவர்கள் பல அருமையான புஸ்தகங்களைப் படித்தறிந்து எனக்கு விஷயங்களை விளக்கினார்கள். அவற்றைக் கிரகித்துக் கொண்டு அந்த அறிவோடு பார்க்கும்போது மணிமேகலை விளங்கியது. வீரசோழியம் முதலிய நூல்களில் சிதறிக் கிடக்கும் பல பழைய செய்யுட்களுக்கும் நன்றாகப் பொருள் தெரிந்தது. நம்மைப்போல மற்றவர்களும் கஷ்டப்படுவார்களே என்ற எண்ணத்தால் நான் அறிந்து கொண்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு புஸ்தகமாக எழுதினேன்" என்றேன்.
இந்தச் சம்பாஷணை நடக்கும்போது அந்தப் புதியவர் இன்னாரென்பதை நான் அறிந்துகொள்ளவில்லை. 'சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு முதலிய பழைய நூல்களைப்பற்றி இவரிடம் சொல்லாமல் மணிமேகலையைப் பற்றி மாத்திரம் நம் நண்பர் சொன்னதற்குக் காரணம் என்ன? அவற்றை விட இது சிறந்த நூலென்பது இவர் அபிப்பிராயமா?' என்று நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் புதியவரைப்பற்றி என்னிடம் கூறத்தொடங்கி, "இவர் ஒரு காலேஜில் ஆசிரியராக இருக்கின்றார். பௌத்த மத சம்பந்தமாகவே எப்போதும் ஆராய்ச்சி செய்து வருகிறார். பௌத்தமத நூல்களையெல்லாம் படித்திருக்கிறார்" என்று சொல்லி அவர் பெயரையும் கூறினார்.
அந்த ஆசிரியர் தொடர்ந்து என் நண்பரிடம் பேசத் தொடங்கினார்;' அவர் ஆங்கிலத்திலே பேசினாலும் அருகிலிருந்தவர்கள் எனக்கு அதை மொழிபெயர்த்துச் சொன்னார்கள். பௌத்த மதத்தைப்பற்றியே அவர் பேசினார். பேசும்போது அவருக்கு உத்ஸாகம் உண்டாகிவிட்டது. பக்கத் தில் வேறு சிலரும் நின்று அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"தமிழ் நாட்டில் பௌத்தமதம் எங்கும் பரவி இருந்தது. ஆதிகால முதல் இங்கே புத்தர் வழிபாடு தொடர்ச்சியாக இருந்தது. அதற்கு ஆயிரக்கணக் காண அடையாளங்கள் இருக்கின்றன" என்றார் அவர்.
"ஆயிரக்கணக்கான அடையாளமா? நான் பார்த்ததில்லையே? சிலப்பதிகாரத்தினாலும் மணி மேகலையாலும் காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த விஹாரங்கள் இருந்தனவென்றும் காஞ்சீபுரத்தில் பௌத்தர்கள் இருந்தனரென்றும் தெரிகின்றது. ராஜராஜசோழன் காலத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹார மென்ற பௌத்த ஆல யத்திற்கு அவ்வரசன் மானியங்கள் வழங்கினா னென்று சிலாசாஸனத்தால் தெரியவருகிறது. இன்னும் சில இடங்களில் புத்தவிக்கிரகங்கள் இருக்கின்றன; வேறு சில அடையாளங்களும் உள்ளன. ஆனால் நீங்கள் தமிழ்நாடு முழுவதும் இருப்பதாகச் சொல்லுகிறீர்களே!" என்று நான் கேட்டேன்.
" நான் சொல்வது கற்பனை அல்ல. உண்மை. இந்தத் தேசத்தில் உள்ள கோவில்களில் அநேகம் பௌத்தவிஹாரங்கள்; பல வழக்கங்கள் பௌத்த சம்பிராதாயங்கள்; மனிதர்கள் பௌத்தர்கள்."
எனக்கு மேலும் மேலும் ஆச்சரியம் உண் டாகிக்கொண்டிருந்தது. அவர் தமிழ் பேசுபவரல்ல வென்று நான் அறிந்துகொண்டேன். ஆதலால் தமிழ்நூல்களைப் படித்துத் தெரிந்துகொண்டவரென்று சொல்வதற்கில்லை. 'இவர் கூறும் செய்தி களுக்கு வேறு என்ன ஆதாரம்?' என்ற கேள்வி என் மனத்துள் எழுந்தது. 'இன்னும் பொறுத்துப் பார்க்கலாம்; இவர் சொல்லுகிறாரா இல்லையா வென்று கவனிப்போம்' என்றெண்ணி அவர் பேச்சைக் கவனிக்கலானேன்.
"பௌத்த விஹாரங்களைப் பின்னால் வந்தவர்கள் சிவ விஷ்ணு ஆலயங்களாக மாற்றிக் கொண்டார்கள். இந்த ரகசியத்தை நான் தெரிந்து வைத் துக் கொண்டிருக்கிறேன். மணிமேகலை போன்ற தமிழ்ப்புஸ்தகங்கள் இந்த நாட்டில் உண்டாக வேண்டுமானால் பௌத்தமதம் எவ்வளவு பரவி யிருந்திருக்கவேண்டும்?"
"மற்ற மதங்களும் அவற்றிற்குரிய நூல்களும் தமிழ் நாட்டில் வழங்கி வந்தன. பௌத்த நூல்கள் மற்றவற்றை நோக்க அளவில் குறைந்தனவே" என்று நான் இடைமரித்துச் சொன்னேன்.
"அது சரியல்ல. பௌத்த சாஸ்திரங்களை மற்றவர்கள் அழித்துவிட்டார்கள். பௌத்த விஹாரங்களை மாற்றிவிட்டார்கள். பௌத்தர்களையும் தங்கள் தங்கள் மதத்திற் சேரச் செய்தார்கள்."
"இதற்கெல்லாம் ஆதாரம் என்ன?" என்று கேட்டேன்.
"ஆதாரமா? ஆயிரம் காட்டுவேன். உங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கும் உதாரணம் ஒன்று சொல்லுகிறேன். இந்த ஊரில் ராயபுரத்தில் மன்னார்சாமி கோவில் இருக்கிறது; தெரியுமா? அந்தக் கோவில் பௌத்த விஹாரந்தான். மன்னர்சாமியை யாரென்று நினைக்கிறீர்கள்? புத்தருடைய வடிவந்தான் அது."
எனக்குக் களுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. சாந்தமே வடிவாக எழுந்தருளியிருக்கும் புத்தபகவானது அழகிய திருவுருவம் எங்கே! கையில் வாளும் முகத்தில் முறுக்கிய மீசையும் பயங்கர உருவமும் உடைய மன்னார்சாமி எங்கே! 'இவர் புத்த சமயத்தில் தீவிரமான ஆராய்ச்சியுடையவர். அந்த ஆராய்ச்சியில் இவர் தம்மையே இழந்து விட்டார். தாம் காணும் பொருள்களைப் புறம்பே நின்று பற்றின்றிக் காணுவதை விட்டு அந்தப் பொருள்களின் வசப்பட்டு மயங்குகிறார்' என்று நான் நிச்சயம் செய்துகொண்டேன்.
அவர் வரவர எடுப்பான தொனியில் பேசுவதை அருகில் இருந்தவர்கள் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மன்னார்சாமியை நானும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பல கிராமங்களில் மன்னார்சாமி கோவில்கள் இருக்கின்றன. ஒரு திண்ணையில் உட் கார்ந்தபடியேயுள்ள அந்தச் சாமியின் உருவம் மிகவும் பெரியதாக இருக்கும். சுற்றுமுள்ள சுவர் ஓர் ஆள் உயரம் இருக்கும். அந்தச் சுவருக்கு மேலும் அரைப்பனைமர உயரத்திற்கு அந்தப் பிம்பம் காணப்படும்.
புத்த தேவருடைய விக்கிரகமும் மன்னார்சாமியின் கோலமும் என் அகக்கண் முன் நின்றன. பகலுக்கும் இரவுக்கும், மலைக்கும் மடுவுக்கும், நீருக்கும் தீக்கும் உள்ள வேற்றுமையை நான் கண்டேன்.
" தமிழ் நாட்டில் பல இடங்களில் மன்னார்சாமி கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அந்த உருவத்தைப் பார்த்தவர் யாரும் அதைப் புத்த விக்கிரக மென்று சொல்லமாட்டார்களே" என்று நான் அந்த ஆசிரியரிடம் கூறினேன். அவர் அதோடு விடுபவராகத் தோற்றவில்லை. சொல்லாராய்ச்சியிலே புகுந்துவிட்டார்.
"அந்தப் பெயரை ஆராய்ந்து பாருங்கள். மன்னார்சாமி! ஆகா என்ன அழகான பெயர்!"
தமிழ் அதிகமாய்த் தெரியாத அவருக்கு அந்தப் பெயரில் மட்டும் அழகு எவ்வாறு தோன்றிய தென்பது எனக்கு விளங்கவேயில்லை.
"புத்தபகவானுக்குத் தர்மராஜா என்பது ஒரு பெயரென்று தெரியுமா?"
"ஆம்; தெரியும்" என்று தலை யசைத்தேன்.
"தர்மராஜா என்ற பெயரைத்தான் தமிழில் மன்னார்சாமி என்று சொல்லுகிறார்கள்."
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. எனக்குத் தெரிந்த தமிழைக்கொண்டு அவர் கூறியதைத் தெளிந்துகொள்ள இயலவில்லை!
அவரோ தம் ஆராய்ச்சியை விளக்கத் தொடங் கினார்: "மன் - ராஜா. ஆர - தர்மம். மன்னார்சாமி- தர்மராஜா" என்று அழுத்தந் திருத்தமாக அவர் சொல்லிவிட்டு அருகில் நின்ற என் நண்பரைப் பார்த்தார்.
அவரோ, "எக்ஸாக்ட்லி (exactly), எக் ஸாக்ட்லி" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
"ஆர் என்பதற்குத் தருமமென்று அர்த்தம் இல்லையே. அறம் என்றால்தான் தர்மத்துக்கு ஆகும்?" என்று நான் மெல்லச் சொன்னேன். அந்த ஆராய்ச்சியாளருடைய உற்சாகமான தொனியி லும், அருகிலிருந்த நபர் அவர் பிரசங்கத்தில் ஈடுபட்டுப் போய்ச் சொல்லும் "எக்ஸாக்ட்லி" என்னும் பல்லவியிலும் என் தடை மங்கி மறைந்தது. நான் 'இனி இங்கே இருப்பதில் பயனில்லை. நம் வேளையைக் கவனிப்போம்' என்றெண்ணி விடைபெற்றுக் கொண்டு பிரிந்தேன்.
அன்று அந்தச் சம்பாஷணையினால் நான் புதிய லாபம் ஒன்றும் அடையவில்லை. ஆயினும் இங்கிலீஷே தெரியாத எனக்கு 'எக்ஸாக்ட்லி' என்ற பதத்தை எந்தச் சமயத்தில் எந்த அர்த்தத்தில் உபயோகிக்க வேண்டுமென்பது தெளிவாக விளங்கியது. அந்த வார்த்தையை நினைக்கும்போது புத்தபகவானும் மன்னார்சாமியும் எவ்வளவோ யோஜனை தூரத்தில் இருந்தாலும் நெருங்கி வந்து காட்சியளிக்கிறார்கள்.
14. ஆவலும் அதிர்ஷ்டமும்
தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள சைவ மடங்களில் ஒன்றாகிய திருப்பனந்தாள் காசி மடத்தில் சில வருஷகாலம் குமாரசாமித் தம்பிரானென்பவர் தலைவராக இருந்துவந்தார். அவர் திருவாடுதுறை யாதீனத்து மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் என்னுடன் பாடங் கேட்டவர். அவ்வாதீனத் தேசிகருடைய ஆதரவில் இருந்து வந்த நாங்கள் இருவரும் ஒரேகாலத்தில் அம்மடத்தினின்றும் பிரிந்தோம். அவர் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவராகச் சென்றார். எனக்குக் கும்பகோணம் காலேஜில் தமிழ்பண்டிதர் வேலை கிடைத்தது.
குமாரசாமித் தம்பிரான் நல்ல அறிவாளி; சிறந்த சிவபக்தி யுள்ளவர்; என்னிடம் பேரன் புடையவர். செய்யுள் நடையிலே கடிதப்போக்கு வரவு எங்களிடையே நடந்ததுண்டு. அவர் சில காலம் திருவாவடுதுறை மடத்திற் காறுபாறாக இருந் துவந்தார். அவருக்கு அம்மடத்தில் வித்துவான் தம்பிரானென்ற பட்டம் அளிக்கப்பட்டது.
அவர் காசிமடத்துத் தலைவராக இருந்த போது அவர் சம்பந்தமாகக் கும்பகோணம் 'ஸப் கோர்ட்'டில் ஒரு வழக்கு நடைபெற்று வந்தது. அவரும் எதிர்க் கட்சியினரும் சிறந்த பாரிஸ்டர்களையும் அவர்களுக்கு உதவியாகப் பல பெரிய வக்கீல்களையும் நியமித்திருந்தனர். வழக்கு மிகவும் பெரியது. ஏறக்குறைய நானூறு சாட்சிகள் வரையில் விசாரிக்கப்பட்டனர். அந்த வழக்கு நடை பெற்று வந்தகாலத்தில் கும்பகோணத்திலும், அதைச் சூழந்துள்ள இடங்களிலும் அதைப்பற் றிய பேச்சாகவே இருந்தது. சாட்சி விசாரணை யைப் பற்றியும் குறுக்கு விசாரணையைப் பற்றியும் ஜனங்கள் அங்கங்கே உத்ஸாகமாகப் பேசிக்கொண் டிருந்தார்கள்.
ஒவ்வொரு கட்சிக்காரரும் தங்கள் தங்கள் பக்கத்தில் வெற்றி உண்டாக வேண்டுமென்பதற் குரிய முயற்சி யெல்லாம் செய்துவந்தார்கள். தெய்வங்களைப் பிரார்த்தித்தார்கள் பணத்தை வாரி இறைத்தார்கள்.
இன்ன கட்சிக்குத்தான் ஜயமுண்டாகுமென் பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை. பலநாள் நடந்துவந்த வழக்கு விசாரணை முடிவுபெற்றது. தீர்ப்புக் கூறுவதற்காக ஒருநாள் குறிப்பிடப்பட் டிருந்தது. அந்தநாளை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இருந்த ஆவலும் பயமும் இத்தகையன வென்று சொல்ல முடியாது. ஜனங்களோ, 'இவ்வளவு விரி வாக நடந்த வழக்கில் தீர்ப்பு எப்படியாகுமோ பார்க்கலாம்!' என்று வியப்போடு எதிர்பார்த்தனர்.
வழக்கு முடிவடையும் காலத்தில் குமாரசாமித் தம்பிரான் கும்பகோணத்திற்கு அருகே காவிரியின் வடகரையில் இருக்கும் சத்திரம் கருப்பூர் என்னுமிடத்தில் உள்ள மடத்தில் தங்கியிருந்தார். அந்த மடம் திருப்பனந்தாள் காசி மடத்தைச் சார்ந்தது. அது கும்பகோணம் காலேஜுக்குக் கிழக்கே ஏறக் குறைய ஒரு மைல் தூரத்தில் உள்ளது. காவிரியில் ஜலமில்லாதபோது ஸப் கோர்ட்டிலிருந்து குறுக்கே போனால் அந்த மடம் முக்கால் மைல் தூரந்தான் இருக்கும். காவிரியில் வெள்ளம் உள்ள காலத்தில் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்; அப்போது ஒன்றரை மைல் தூரம் இருக்கும்.
தீர்ப்புக்கூறக் குறிப்பிட்டிருந்த தினம் காவிரியில் ஜலமுள்ள காலமாதலால் அவ்வாற்றின் தென் கரையிலுள்ள கோர்ட்டிலிருந்து சமாசாரம் வருவதை ஒவ்வொரு கணமும் தம்பிரான் எதிர்பார்த்திருந்தார். அங்கங்கே வேலைக்காரர்களை அரைப் பர்லாங்குக்கு ஒருவராக அஞ்சலில் நிறுத்தித் தமக்கு விரைவிலே சமாசாரம் எட்டும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
காலையில் பதினொரு மணியிருக்கும். காவிரியாற்றில் பூரணப் பிரவாகம் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு மனிதன் கோர்ட்டிலிருந்து வெகு வேகமாக ஓடி வந்தான். காலேஜுக்கு நேர் எதிர்கரையில் இறங்குந் துறை இருந்தது. அதற்குக் கீழே கச்சேரிக் கட்டிடங்கள் உள்ளன. அங்கிருந்து பாலத்தின் வழியே இக்கரைக்கு வருவதென்றால் நேரமாகும். வேகமாக ஓடிவந்த ஆள் தொப்பென்று செங்குத்தாக இருந்த கரையிலிருந்து கீழே காவிரியில் குதித்து நீந்தலானான். காலேஜில் கரையை நோக்கியுள்ள அறையில் நான் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆள் மிகவும் வேகமாக ஓடிவந்து குதித்ததை நான் பார்த்தேன். வழக்கில் குமாரசாமித் தம்பிரானுக்கு ஜயம் உண்டாயிற்றென்று அவன் சொல்லப் போவானென்பதை நான் ஊகித்து உணர்ந்து கொண்டேன். காவிரிநீரின் வேகத்தைக் காட்டிலும் அவன் வேகம் அதிகமாக இருந்தது.
அந்த மனிதன் தண்ணீரில் திடீரென்று குதித்ததுதான் தாமதம்; இந்தக் கரையில் இருந்த ஒருவன் விஷயத்தைப் பளிச்சென்று ஊகித்துக்கொண்டான். அவ்வளவுதான்; உடனே கருப்பூர் மடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். அவன் ஓடி வருவதைக் கண்டு அவனுக்கு முன்னே இருந்த ஒருவன் 'இதுதான் சமயம்' என்று எண்ணி அவனுக்குமுன் ஓட ஆரம்பித்தான். இப்படியே ஒருவனைக் கண்டு மற்றொருவன் ஓடினான். பாலத் துறையிலிருந்த ஆட்களும் இவ்வாறே ஒருவன்முன் ஒருவனாக ஓடினார்கள்.
கருப்பூர் மடத்தில் முன்பக்கத்தில் இருந்த வாசற்காரன் கும்பகோணத்திலிருந்து வரும் சாலையிலேயே கண்வைத்தபடி நின்று கொண்டிருந்தான். நெடுந்தூரத்தில் தலைதெறிக்க ஒருவன் ஓடிவருவது அவனுக்குப் புலப்பட்டது; "எசமானுக்கு ஜயம்" என்று கோஷமிட்டுக் கொண்டு அவன் வந்தது தெரிந்தது. உடனே வாசற்காரன் உள்ளே ஓடினான்; " எசமானுக்கே ஜயம்" என்று தம்பிரானிடம் சொல்லி வணங்கினான்.
குமாரசாமித் தம்பிரான் தம்மை மறந்தார். பெரிய வழக்கில் யாருக்கு ஜயம் கிடைக்குமோ என்ற கவலையினால் குழம்பியிருந்த அவர் மனம் மெத்த ஆறுதல் அடைந்தது. அந்தச் சமாசாரம் சொன்ன வாசற்காரனுக்கு உடனே பணம் வேஷ்டி முதலிய நல்ல பரிசுகள் கிடைத்தன; அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது; சிரமமில்லாமல் பரிசு கிடைத்து விட்டது.
இரண்டு நிமிஷங்களுக்கு அப்பால் மற்றொருவன் ஓடி வந்தான்; "சாமீ! எசமானுக்கு ஜயம்!" என்று அவன் கூவினான். அவனுக்குச் சில பரிசுகள் கொடுக்கப்பட்டன. பின்பும் இரண்டு மூன்று பேர்கள் வந்து பரிசு பெற்றார்கள்; பரிசின் அளவு குறைந்துவந்தது. இப்படியே பலர் வரவே, தம்பிரானுக்கு அலுப்பு உண்டாகிவிட்டது; "போக்கிரிப் பயல்கள்! முதலில் நம்மிடம் சொன்னவனுக்கு இனாம் தருவதுதான் நியாயம். ஊரில் இருப்பவர் களுக்கெல்லாம் கொடுக்கமுடியுமா?" என்று அவர் சொல்லி விட்டார்.
"சாமி! நான் இரைக்க இரைக்க ஓடிவந்தேன். நான் வருவதைக் கண்டு தெரிந்துகொண்டு இவன் முன்னே வந்து சொல்லிவிட்டான்" என்று ஒவ் வொருவரும் சொல்லலாயினர். இந்தத் தொந்தரவு பொறுக்க முடியாமல், " இனிமேல் இந்தமாதிரி யாராவது வந்தால் உள்ளே விடவேண்டாம்" என்று தம்பிரான் உத்தரவிட்டார்.
கால்மணி கழித்து நனைந்த துணியுடன் வேகமாகக் காவிரியில் குதித்து நீந்தியவன் வந்து சேர்ந்தான். மடத்து வேலைக்காரர்கள் அவனை உள்ளே விடவில்லை. அவன் மன்றாடிப் பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை; எவ்வளவுக்கெவ்வளவு உத்ஸாகமாக ஓடிவந்தானோ, அவ்வளவுக்கவ்வளவு சோர்வு உண்டாகிவிட்டது அவனுக்கு. அப்படியே வாசற்படியில் உட்கார்ந்துவிட்டான். 'கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லையே!' என்று அவன் தன் தலைவிதியை நொந்துகொண்டான்.
ஒரு மணிக்குக் காலேஜ் பாடம் முடிந்தது. இரண்டுமணி வரையில் உள்ள இடைவேளைக்குள் கருப்பூர் மடத்திற்குச் சென்று தம்பிரானிடம் சந்தோஷம் விசாரித்துவரலாமென்று புறப்பட்டேன். கருப்பூர்மடம் வந்து சேர்ந்தேன். நீந்தி வந்த ஆள் அங்கே வாசற்படியில் தலையில் கையை வைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவனைப்போல உட்கார்ந்திருந்ததைக் கண்டேன்.
"ஏன் அப்பா, இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? எசமானைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டேன்.
அவன் தன் துக்க ஸ்வப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டான்; "ஐயோ சாமீ! நான் காவேரியிலே குதித்து நீந்தி ஓடிவந்தேன். என்னை உள்ளே விடாமல் அடித்துத் தள்ளுகிறார்கள். எனக்கு ஏதாவது இனாம் கிடைக்குமென்ற ஆத்திரத்தில் வெள்ளத்தைக்கூடப் பார்க்கவில்லை" என்று அவன் கூறினான்.
நான் சிரித்துக்கொண்டே உள்ளே போனேன். தம்பிரானைக் கண்டு சந்தோஷம் விசாரித்தேன். அப்பால், "பல பேருக்கு இனாம் கிடைத்திருக்குமென்று எண்ணுகிறேன்" என்றேன்.
"ஆமாம். பத்துப் பேர்களுக்குமேல் கொடுத்தோம். அப்புறம் எத்தனையோ பேர்கள் வந்தார்கள்."
"யாருக்கு அதிகமாகக் கிடைத்ததோ?"
"முதலிலே எவன் சொன்னானோ அவனுக்குத் தான் அதிகம்."
"இதிலே ஒரு வேடிக்கை; நியாயமாக முதலில் பரிசைப் பெறவேண்டியவனுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை."
"ஏன்? என்ன சங்கதி?"
"இப்போது இந்த மடத்து வாசலில் ஒருவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனுக்குத்தான் நியாயமாக முதற்பரிசு கிடைக்கவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து இந்தச் சமாசாரத்தை முதலில் வெளிப்படுத்தியவன் அவன்தான்" என்று சொல்லிவிட்டு அவன் ஓடிவந்ததையும், ஜலத்தில் திடீரென்று குதித்ததையும், அவனைப் பார்த்து மற்றவர்கள் அவனுக்கு முன்னே ஓடிவந்ததையும் விரிவாகச் சொன்னேன்.
தம்பிரான் புன்னகை பூத்தார்; "எங்கே, அவனை இங்கே அழைத்து வா" என்று ஒரு வேலைக்காரனுக்கு உத்தரவிட்டார். அப்படியே அவன் போய் அழைக்கவே ஏமாந்துபோய் உட்கார்ந்திருந்த ஆள் ஓடிவந்து தம்பிரான் காலில் விழுந்தான். விம்மி விம்மி அழுவதைத்தவிர அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் பட்ட கஷ்டமும், கொண்டிருந்த ஆவலும் அவனுக்கல்லவா தெரியும்?
தம்பிரான் உண்மையை உணர்ந்து அவனுக்கும் பணமும், வேஷ்டியும் அளித்தார்.
"இவன் இப்போது பரிசு பெற்றுவிட்டாலும் முதற்பரிசு மற்றொருவனுக்குப் போய் விட்டது. கடைசியிலே நின்றவன் அதைப் பெற்றுக்கொண்டான். அவனுடைய அதிர்ஷ்டம் அது. முதலில் பெற வேண்டியவன் கடைசியிலே பெற்றான்; பெறாமற்போய் இருந்தாலும் போய் இருப்பான்" என்றேன் நான்.
"உலக இயல்பு இப்படித்தான் இருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அருமை; உழைப்பில்லாதவர்க்கே அதிக ஊதியம் கிடைக்கிறது" என்று அவர் பதில் சொன்னார்.
15. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
தமிழ்நாட்டிலே சென்ற நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சங்கீத வித்துவான்களில் ஒரே பெயருடைய பலர் இருந்தனர். ஒருவருக்கு மேற்பட்ட வைத்தியநாதையர்களும், கிருஷ்ணையர்களும், சுப்பராமையர்களும் சங்கீத தேவதையின் உபாசனை புரிந்து வந்தனர். சுப்பராமையர்களுள் வைத்தீசுவாரன் கோயிலில் இருந்த சுப்பராமையர் ஒருவர்; பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் மற்றொருவர்.
அவர்களுள் காலத்தால் முந்தியவராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமைய்யரென்பவர் கனமார்க்கத்தைத் தமிழ்நாட்டில் முதன் முதலில் அனுபவத்திலே கொணர்ந்துகாட்டிப் புகழ்பெற்ற* கனம் கிருஷ்ணருடைய தமையனார். அவர் சங்கீதத்திலும் ஒருவாறு சாஹித்தியத்திலும் ஒருங்கே திறமையுடையவராக இருந்தார்.
-----
*இவரது சரித்திரம் தனியே என்னால் எழுதப் பெற்று வெளிவந்திருக்கிறது.
பெரிய திருக்குன்றமென்பது திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். அங்கே பரம்பரையாகவே சங்கீத வித்தையில் மேம்பட்டுவந்த ஒரு குடும்பத்தில் சுப்பராமையர் உதித்தார். அவர் அந்தணர்களுள் அஷ்டஸஹஸ்ரமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்.
அவருடைய தந்தையார் இராமசாமி ஐயரென்பவர். இராமசாமி ஐயருக்கு ஐந்து குமாரர்களும் ஒரு பெண்ணும் உண்டு. அவர்களுள் மூத்தவரே சுப்பராமையர். அக்குடும்பத்தில் பரம்பரையாக இருந்துவந்த இசைச் செல்வத்தால் பல சிற்றரசர்கள் வழங்கிய பொருட்செல்வமும் பூமியும் கிடைத்தன. அதனால் சுப்பராமையருடைய தந்தையாருக்கு வறுமைப்பிணியின் துன்பம் இல்லை. தம்முடைய நில வருமானங்களை வைத்துக்கொண்டு அவர் சங்கீதக் கலையையும் வளர்த்து வாழ்ந்திருந்தார். அக்காலத்தில் கபிஸ்தலத்தில் இருந்த ஸ்ரீமான் முத்தைய மூப்பனாருக்கும் இராமசாமி ஐயருக்கும் மிக்க நட்பு இருந்து வந்தது. அவ்விரண்டு குடும்பத்தினரும் தொடர்ந்து பலகாலம் நண்பர்களாகவே வாழ்ந்து வந்தனர். இராமசாமி ஐயருக்கு அவ்வப்போது மூப்பனாருடைய உதவி கிடைத்துவந்தது.
அங்ஙனம் வாழ்ந்து வந்த இராமசாமி ஐயருக்குப் புத்திரராகத் தோன்றிய சுப்பராமையர் யாதொரு குறைவுமின்றி வளர்த்துவந்தார். அவருடைய தந்தையார் அவருக்கு இன்றியமையாத தமிழ்க்கல்வியையும் சங்கீதப்பயிற்சியையும் அளித்தார்.
நாளடைவில் சுப்பராமையாருக்குப் பின் தோன்றிய சகோதரர்களுள், சுந்தரையர் கிருஷ்ணையர் என்னும் இருவரும் சுப்பராமையரைப் போலவே சங்கீதத்தில் நாட்டமுடையவர்களாக இருந்தனர்.
அம்மூவருக்கும் சிறந்த சங்கீதப் பயிற்சியை அளித்து, 'அவையகத்து முந்தியிருப்பச்' செய்ய வேண்டுமென்பது தந்தையாருடைய விருப்பம். அதற்குமுன் அடிப்படையாகத் தமிழறிவு அவசியமென்பதை அவர் உணர்ந்தவராதலின், அரியிலூரில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த ஸ்ரீ சண்பக மன்னாரென்னும் ஸ்ரீவைஷ்ணவ வித்துவானிடம் தமிழ் பயிலும்படி செய்தனர். சண்பகமன்னார் தமிழிலும் இசையிலும் சிறந்த திறமை வாய்ந்தவர்; பல கீர்த்தனங்களை இயற்றியவர்; சமரஸ ஞானி; மிக்க அடக்கமான குணம் வாய்ந்தவர்.
அவரிடம் தமிழ் பயின்ற காலத்தில் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக அதில் ஈடுபட்டவர் சுப்பராமையரே. மற்றவர்களுக்கும் ஓரளவு சிரத்தை இருந்தாலும் சுப்பராமையாருக்கு இருந்த ஊக்கம் அவர்களுக்கு உண்டாகவில்லை. சண்பக மன்னாருடைய பழக்கத்தினால் விசேஷ நன்மையடைந்தவர் சுப்பராமையரே. தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் அப்பெரியாரிடம் சுப்பராமையர் ஊன்றிப் பயின்று வந்தார். அப்பெரியாரைப் போல அடக்கமாக வாழ வேண்டுமென்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. இளமையிலேயே ஏற்பட்ட அக்கருத்து அவர் நெஞ்சில் ஊறி அவருடைய வாழ்வில் அவருக்குப் பெருமையை அளித்தது. அவருடைய சகோதரர்கள் தங்கள் சங்கீதப் பயிற்சியினாலும் உண்ண உடுக்கக் குறைவில்லாத குடும்ப நிலை முதலியவற்றாலும் மிக்க திருப்தியோடு காலங்கழித்தனர்; அத்திருப்தி சில சமயங்களில் பிறருக்கும் புலனாயிற்று. கனம் கிருஷ்ணையர் அந்தத் திருப்தியினால் சிறிது செருக்குடையவராகவும் காணப் பட்டனர். ஆனால் சுப்பராமையரோ அடக்கத்திலே சிறந்தவராக விளங்கினார்.
இராமசாமி ஐயர் தம்முடைய குமாரர்களுள் முன்னே கூறிய மூவருக்கும் பின்னும் உயர்ந்த சங்கீதப்பயிற்சியை அளிக்க வேண்டுமென்று எண்ணினார். தஞ்சாவூர் ஸமஸ்தானத்தில் பச்சை மிரியன் ஆதிப்பையரென்பவர் பெரும்புகழ் பெற்ற சங்கீத ஆசிரியராக அக்காலத்தில் விளங்கினார். அவரிடம் தம் குமாரர் மூவரையும் இராமசாமி ஐயர் ஒப்பித்தார். மூவரும் சங்கீத வித்தையிலே தேர்ச்சி பெற்று வந்தனர்.
சுப்பராமையர் சங்கீதத்தோடு தமிழையும் இடைவிடாமல் பயின்று வந்தார். அவ்வப்போது சில கீர்த்தனங்களையும் பாடல்களையும் இயற்றிப் பழகினார். அவருக்கு முருகக்கடவுளிடத்தில் பக்தி அதிகம். அக்கடவுள் விஷயமாக அவ்வப்போது தாம் பாடிய கீர்த்தனங்களைத் தம் குருமூர்த்தியாகிய ஆதிப்பையரிடம் காட்டுவார். அக்கீர்த்தனங்களைக் கேட்டு அம் மகாவித்துவான் அளவற்ற மகிழ்ச்சியடைவார்; சங்கீதமும் சாஹித்தியமும் ஒன்றனோடு ஒன்று நன்றாக இயைந்து விளங்குவதைப் பாராட்டுவார். அன்றியும் அக்கீர்த்தனங்களில் உள்ள பக்திச்சுவையை உணர்ந்து, "நீ சின்ன ஸ்ரீ நிவாஸன்" என்று மனங்குளிர்ந்து கூறி அவரை ஆசீர்வாதஞ்ச செய்வார்.
ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்திருந்த சங்கீத வித்துவான்; தமிழிலும் வடமொழியிலும் தெலுங்கிலும் பயிற்சியுள்ளவர்; அவர் பல அருமையான கீர்த்தனங்களை ஸ்ரீரங்கநாதர் விஷயமாக இயற்றியிருக்கின்றார். அவர் பெரிய பக்தராதலால் அவருடைய கீர்த்தனங்களிலே பக்திச்சுவை ததும்பி நிற்கும்; சங்கீத அமைப்புகள் மிகவும் செவ்விய நிலையிலே பொருந்தி விளங்கும்.
அவற்றைப் பச்சை மிரியன் ஆதிப்பையர் நன்கு உணர்ந்தவர். சங்கீதமும் சாஹித்தியமும் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டாலன்றிச் சிறப்புடையனவல்ல வென்பது நம்முடைய பெரியோர் கொள்கை. நம்நாட்டில் எத்தனையோ கலைஞர்களும் புலவர்களும் வாழ்ந்திருந்தாலும், காலவெள்ளத்தில் அவர்களுடைய சிற்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. தெய்வ பக்தியாகிய கனம் அவற்றில் இருந்தால் அவை மாத்திரம் பலகாலம் காலவெள்ளத்தை எதிர்த்து நின்று விளங்கு கின்றன. நூற்றுக்கணக்கான வித்துவான்கள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து ஆயிரக்கணக்கான சாஹித்தியங்களை இயற்றினார்கள். அவற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. அதற்கு முக்கியமான காரணம் வித்தையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யாமல் ஜமீன்தார்களையும் பிரபுக்களையும் பாடினமையே. ஸ்ரீ தியாகையர் முதலிய மகான்களோ தெய்வபக்தி மணம் கமழும் பாமலர்களை இறைவன் திருவடிகளிலே அணிந்தனர். அதனால் அம்மலர்கள் வாடாமல் விளங்குகின்றன.
தம் கீர்த்தனங்களிலே தெய்வபக்தி நிறைந்திருப்பதையறிந்து ஆதிப்பையர் பாராட்டியதனால், சுப்பராமையருக்கு மேலும் மேலும் ஊக்கமுண்டாயிற்று. முருகக்கடவுள், அம்பிகை, பரமசிவன், திருமால் முதலியவர்கள் விஷயமாக அவ்வப்போது அவர் செய்த கீர்த்தனங்கள் பல.
தஞ்சாவூர் ஸமஸ்தானத்து வித்துவான்கள் வரிசையிலே சேரும் சிறப்பைச் சுப்பராமையரும், சுந்தரையரும், கனம் கிருஷ்ணையரும் பெற்றனர். சரபோஜி அரசர் காலத்தில் சுப்பராமையர் தஞ்சாவூரிலே இருந்துவந்தார். அப்போது பிருஹதீசுவரர் மீது அவர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றினார். இடையிடையே பெரிய திருக்குன்றம் சென்று சில காலம் இருந்துவருவார். கபிஸ்தலம் சென்று தம்முடைய குடும்ப நண்பராகிய முத்தைய மூப்பனாருடன் சம்பாஷணை செய்து வருவார். அம் மூப்பனாருடைய அன்பிலே ஈடுபட்டு அக்காலத்தில் சுப்பராமையர் அவர்மீது ஒரு குறவஞ்சிப் பிரபந்தம் இயற்றினார்.
சுப்பராமையருடைய தம்பியாராகிய கனம் கிருஷ்ணையர் திருவிடைமருதூரில் முதலில் இருந்து அப்பால் உடையார்பாளையம் ஸமஸ்தான வித்துவானாக விளங்கலாயினர். அக்காலத்தில் சுப்பராமையரும் சுந்தரையரும் தஞ்சையிலே இருந்தனர். அவ்விருவரையும் வித்துவான்கள் முறையே பெரிய துரை, சின்னதுரை என்று அழைப்பது வழக்கம்.
சரபோஜி அரசருக்குப் பின்பு சிவாஜி அரசர் பட்டத்திற்கு வந்தார். சரபோஜி அரசரோடு பழகி யதுபோல அவருடைய குமாரரோடு பழகுவதற்குச் சுப்பராமையருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆயினும் ஸமஸ்தானத்தின் பெருமையை எண்ணி அங்கே இருந்துவந்தார்.
சரபோஜி அரசர்மீது கொட்டையூர் ஸ்ரீ சிவக் கொழுந்து தேசிகர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றி யிருக்கிறார். அது யாவராலும் பாராட்டப் பெற்றது. சிவாஜி அரசர்மீதும் ஒரு குறவஞ்சி இயற்ற வேண்டு மென்று சில நண்பர்கள் சுப்பராமையரிடம் வற் புறுத்திக் கூறினார்கள். அப்படியே அவர் ஒரு குற வஞ்சி இயற்றினார். ஆயினும் அது பிரசித்தமாக வழங்கவில்லை. சில கீர்த்தனங்களை மாத்திரம் நான் இளமையில் கேட்டிருக்கிறேன். பிறகு சில அதி காரிகள் விரும்பியபடியே சிவாஜி மன்னர்மீது ஐந்து ராகங்களில் பஞ்சரத்தினமாக ஐந்து கீர்த் தனங்களை இயற்றினார். அக்கீர்த்தனங்களைக் கேட் டவர்கள் அவற்றின் அமைப்பைப் பாராட்டினர். சிவாஜி அரசரும் கேட்டு மகிழ்ந்தனர். அதற்குப் பரிசாக ஒரு கிராமம் வழங்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார்.
அதையுணர்ந்த சில பொறாமைக்காரர் கள், "மகாராஜா அவர்கள் தமிழ்ப் பாட்டைக் கேட்கக் கூடாது. கேட்டால் வம்சம் அழிந்து விடும்" என்று பயமுறுத்தினார்கள். வரவரத் தம்முடைய சுதந்திர நிலையையும் சௌகரியங்களையும் இழந்துவந்த சிவாஜியரசர் அவர்கள் வார்த்தையை நம்பினார். இயல்பாக அதிர்ஷ்டக் குறைவுள்ள தமக்கு அந்தக் கீர்த்தனங்கள் ஏதேனும் தீமையை உண்டாக்கினால் என்ன செய்வதென்று அஞ்சினார். அவருக்கு உண்மையிலேயே சங்கீதத்திலும், சங்கீத வித்துவான்களிடத்திலும் அன்பு இருந்தால் அந்தப் பொறாமைக்காரர்களுடைய வார்த்தைகளைச் செவியில் வாங்கியிருக்கமாட்டார். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதுபோல அவர் நிலை பலஹீனமாக இருந்தமையால், அவருக்கு எதைக் கண்டாலும் சந்தேகமும் அச்சமும் உண்டாயின. உண்மையில் வித்தையினிடத்தில் அன்பு இருந்தமையால் எந்த இடையூற்றையும் கவனியாமல் அதை வெளியிட்ட பெரு வள்ளல்கள் தமிழ்நாட்டில் விளங்கவில்லையா? 'புகழெனின் உயிரும்' கொடுக்கும் தமிழ்வள்ளல்கள் எத்தனை பேர்! தன் இன்னுயிர் போவதாக இருப்பினும், தமிழினிமையை நுகருவதற்கு இடையூறு இருத்தல் கூடாதென்று நந்திக்கலம்பகத்தைக் கேட்டுத் தமிழின்பத்திலே உயிரை நீத்த பல்லவ மன்னனுடைய வரலாறு கலையின்பத்தை மதிக்கும் அறிஞர்களின் இயல்பாய் நன்றாக விளக்குகின்றதன்றோ?
சிவாஜி மன்னர் தமக்கு மான்யம் அளிப்பாரென்ற விஷயம் பலர் வாயிலாகச் சுப்பராமையருக்கு எட்டியது. பிறகு அந்த எண்ணம் மாறிப்போனதையும் உணர்ந்தார். 'நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை இழந்தோமே' என்று அவர் வருந்தவில்லை. 'இத்தகைய இடத்தில் இருப்பதாலன்றோ நமக்கு இழிவு உண்டாவதோடு தெய்வத் தமிழுக்கும் இழுக்கு உண்டாயிற்று? இனி இங்கே இருப்பது தகாது' என்று கருதித் தம் ஊருக்கு உடனே புறப்பட்டு விட்டார்.
அது முதல் அவர் ஈசுவர பக்தி பண்ணிக் கொண்டு சங்கீத சாஹித்திய இன்பத்தை நுகர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் தஞ்சை ஸமஸ்தானத்தின் தொடர்பை விட்டு விட்டாலும் சங்கீத உலகத்தில் அவருக்கு இருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. சங்கீத வித்துவான்கள் அவருடைய கீர்த்தனங்களைப் பெரிய சபைகளிலெல்லாம் பாடி ஜனங்களை இன்புறுத்தி வந்தனர். ராகபாவங்களை நன்றாக வெளிப்படுத்தும் முறையில் அவருடைய கீர்த்தனங்கள் அமைந்திருப்பதையறிந்து அவர்கள் மகிழ்ந்தனர். அவருடைய உருப்படிகள் பெரும்பாலும் இலக்கணவழுவின்றி எளிய நடையில் நல்ல பொருளுடையனவாக இருத்தலை அறிந்த தமிழ் வித்துவான்கள் பாராட்டினர்.
அவ்வப்போது தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து இன்புறுவதும் அவ்வத்தல விஷயமாகக் கீர்த்தனங்களை இயற்றிப் பாடுவதும் சுப்பராமையருக்கு உவப்பைத் தரும் செயல்களாக அமைந்தன. அவருடைய கீர்த்தனங்கள் பெரியனவாகவே இருக்கும். அவற்றில் தலசம்பந்தமான வரலாறுகளைக் காணலாம். 'திருவாரூர் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்கள் வடமொழியில் இயற்றியுள்ள கீர்த்தனங்களைப்போல இவை தமிழில் விளங்குகின்றன' என்று அக்காலத்தில் வித்துவான்கள் பாராட்டினர்.
ஒரு சமயம் சுப்பராமையர் கும்பகோணம் சென்றிருந்தார். அங்கே உபயஸமஸ்தான திவானாக விளங்கிய ஸ்ரீ வாலீஸ் அப்புராயரென்பவர் வசித்து வந்தார்; அவர் வித்துவான்களிடத்தில் அன்புடையவராக விளங்கினார். அவருக்கும் சுப்புராமையருக்கும் பழக்கம் உண்டு. சுப்புராமையர் அப்புராயர் வீட்டிற்குப் போனார். சங்கராபரணத்தைச் சிலகாலம் அடகு வைத்தவராகிய *நரஸையரென்னும் வித்துவானும் அங்கே ஆஸ்தான வித்துவானாக இருந்தார். அப்புராயர் வீடே ஓர் அரசருடைய மாளிகைபோல விளங்கும். அடிக்கடி விருந்துகளும் சங்கீத வினிகைகளும் அங்கே நடைபெறுவதுண்டு. அன்று நரஸையருடைய வினிகை நடைபெற்றது. அப்போது வாலீஸ் அப்புராயர் சுப்பராமையரைப் பார்த்து, "சங்கராபரணத்தில் இப்போது புதிதாக ஒரு கீர்த்தனம் பாடவேண்டும்" என்று கூறினார். அப்புராயர் சுப்பராமையருடைய ஆற்றலை நன்கு உணர்ந்தவர். அதைப் பலரும் அறியும்படி செய்ய வேண்டுமென்பது அவருடைய அவா. ராயருடைய விருப்பத்தின்படியே சுப்பராமையர் அங்கு அப்போதே அந்த ராயர் விஷயமாகவே சங்கராபரண ராகத் தில் திரிகாலமும் அமைத்து ஒரு கீர்த்தனம் பாடினார். 'மிஞ்சுதே விரகம்' என்பது அதன் பல்லவி. நரஸையரும் மற்றவர்களும் கேட்டு மகிழ்ந் தார்கள். சுப்பராமையர் ஆடம்பர மின்றி அடங்கி யிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றார்கள்.
-----------------------
* இவர் சங்கராபரணத்தை அடகு வைத்த வரலாறு தனியே எழுதி அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.
சுப்பராமையர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார். தூய்மையான ஒழுக்கமுடையவராதலின் அவர் தேக வன்மையோடு விளங்கினார். கனம் கிருஷ்ணையரும் வேறு சில சகோதரர்களும் அவருக்கு முன்பே காலமாயினர்.
ஒருவர் பின் ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்தனர். முதல் தாரத்திற்குச் சுப்பையரென்ற பிள்ளை ஒருவர் பிறந்தார். அவருக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு. அவரையன்றி மூன்று பெண்களும் பிறந்தனர்.
சுப்பராமையருக்குத் தேங்காய்ப் பாலில் மிக்க விருப்பம் உண்டாம். தம் முதிய பிராயத்தில் அவருடைய மூன்றாந் தாரத்தினிடம், 'தேங்காய் இருக்கிறதா?' என்று கேட்பாராம். அந்தப் பெண்மணி அவர் கருத்தை அறிந்து தேங்காய் இல்லாவிடினும் வருவித்துத் துருவிப் பால்காய்ச்சிக் கற் கண்டு சேர்த்து அவருக்குத் தருவது வழக்கமாம்.
சுப்பராமையருடைய கீர்த்தனங்களை அவர் சகோதரராகிய சுந்தரையருடைய புதல்வியார் தம் எழுபதாவது பிராயத்திலே பாட நான் கேட்டிருக்கிறேன். என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் வேறு பலரும் அவற்றைப் பாடுவார்கள். சுப்பராமையர் என் தந்தையாருடைய தாயாருக்கு அம்மானாவார். காலம் மாறிக் கொண்டே வருகின்றது. பழைய சிருஷ்டிகளை நாம் மறந்து விடுகின்றோம். சுப்பராமையருடைய கீர்த்தனங்களை இப்போது பாடுவாரே இல்லை. ஆனாலும், அவருடைய கீர்த்தனங்கள் முத்துசாமி தீக்ஷிதருடைய கீர்த்தனங்களை ஒப்ப அறிஞர்களால் மதிக்கப்பெற்ற காலம் ஒன்று இருந்ததென்பதை இவ்வரலாறு ஞாபகப்படுத்துகின்றது.
16. "கிர்ர்ர்ரனி"
சென்ற நூற்றாண்டில் தஞ்சாவூரில் பல சங்கீத வித்துவான்கள் தஞ்சை ஸமஸ்தானத்தின் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுள் துரைசாமி ஐயர் என்பவர் ஒருவர். அவர் பிறந்த இடம் திருவையாறு. அது காவிரியின் வடபால் அமைந்துள்ள சிறந்த சிவஸ்தலம். பல சங்கீத வித்துவான்கள் அவதரித்துப் புகழ் பெற்று விளங்கிய பெருமையை உடையது அது. அதில் உள்ள தெருக்களில் பதினைந்து மண்டபத் தெரு என்பது ஒன்று. அங்கே துரைசாமி ஐயர் வசித்து வந்ததால், பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயேரென்றே யாவரும் அவரை அழைத்து வந்தனர்.
துரைசாமி ஐயர் சங்கீத மார்க்கங்கள் எல்லாவற்றிலும் பயிற்சியுடையவர். நல்ல உடல் வன்மையும் இனிய சாரீரமும் அமைந்தவர். அவர் வாய்ப்பாட்டில் வல்லவராக இருந்ததோடு பிடில் வாத்தியத்தையும் மிகவும் அருமையாக வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர்கள் இசைப் பயிற்சி செய்து வந்தனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய பாஷைகளிலே துரைசாமி ஐயர் தக்க அறிவுடையவர். சங்கீத அமைப்புக் கேற்ற சாஹித்தியங்களை அமைக்கும் திறமையும் அவர்பால் இருந்தது. அவர் இயற்றிய சில கீர்த்தனைகள் இன்றும் வழங்கி வருகின்றன. இவ்வாறு சிறந்த வாய்ப்பாட்டுடையவராகவும், வாத்திய வித்துவானாகவும், சாஹித்திய கர்த்தாவாகவும் விளங்கிய பெருமை தஞ்சாவூர் ஸமஸ்தான சம்பந்தத்தால் வரவர அவருக்கு விருத்தியாகி வந்தது.
தஞ்சாவூரில் அக்காலத்தில் இருந்தே சங்கீத வித்துவான்களின் கோஷ்டியைப் போன்றதொன்றை வேறு இடங்களில் பார்த்தல் அருமை. ஒவ்வொரு ஸமஸ் தானத்திலும் சிறந்த சில வித்துவான்கள் இருந்தாலும், எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய வித்துவான்களை ஒருங்கே பார்க்க வேண்டுமாயின் தஞ்சையிலே தான் பார்க்கலாம். அதனால் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துக்குச் சங்கீத வித்துவான்களைப் போஷித்து வளர்க்கும் தாயகம் என்ற புகழ் வளரலாயிற்று. வேறு இடங்களில் உள்ள சங்கீத வித்துவான்கள் தஞ்சாவூருக்கு வந்து அங்குள்ள சங்கீத கோஷ்டியின் பெருமையையும், அவர்களை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதியாகிய அரசரின் இயல் பையும் அறிந்து செல்ல ஆசைப்படுவார்கள். அதனால் தஞ்சாவூருக்கு அடிக்கடி பிற இடங்களி லுள்ள வித்துவான்கள் வந்து சம்மானம் பெற்றுக் கொண்டு போவார்கள். அவர்கள் தஞ்சைக்கு வந்து அங்குள்ள வித்துவான்களோடு கலந்து மகிழ்ந்து சென்ற பின்பு தம்மை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதி களிடம் சொல்லித் தஞ்சை வித்துவான்களைத் தம் மிடத்திற்கு வந்து உபசாரம் பெற்றுச் செல்லும் வண்ணம் செய்வர்.
இதனால் தஞ்சை வித்துவான்கள் மைசூர் முதலிய ஸமஸ்தானங்களுக்கும் சென்று தங்கள் வித்தையை வெளிப்படுத்திச் சம்மானமும் புகழும் அடைந்தனர். இத்தகையோரது வரிசையிலே ஒரு வராக விளங்கியவர் துரைசாமி ஐயர்.
ஒரு சமயம் ஆந்திர தேசத்திலுள்ள ஒரு ஸமஸ் தானத்திலிருந்து வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் துரைசாமி ஐயரைப்போலவே வாய்ப் பாட்டிலும், பிடில் வாத்தியத்திலும் சிறந்தவர். அவர் வந்திருந்த காலத்தில் அவரது வினிகை அரசர் முன் னிலையில் நடைபெற்றது. தம்முடைய சிறந்த ஆற்றலை அவர் காட்டினார். யாவரும் அவருடைய சங் கீதத்தைக் கேட்டு இன்புற்றனர். அரசரும் அவ்வப் போது அந்த வித்துவானைப் பாராட்டிக்கொண்டே இருந்தனர். பல சங்கீத வித்துவான்களைப் பரிபா லித்து வரும் அரசர் அந்த வித்துவான்களுக்கிடையில் விற்றிருந்து அவர்கள் முன்னிலையிலேயே தம் மைப் பாராட்டும்பொழுது ஆந்திர வித்துவானின் உள்ளத்தில் சிறிது கர்வம் உண்டாயிற்று; 'இங்கே நம்மைப்போலப் பாடுபவர் இல்லையெனத் தோற்று கிறது.இவ்வரசர் நம்முடைய சங்கீதத்தில் மயங்கி விட்டார். இவரிடத்தில் இன்னும் நம் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும்'என்று அவர் எண்ணினார். அரசர் மிகவும் சுலபராகப் பழகியதால் அவரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலானார்:
"இங்கேயுள்ள வித்துவான்களில் யாரேனும் என்னோடு போட்டிபோட்டால் என்னுடைய திறமை நன்றாக வெளியாகும்"என்று தம்முடைய உத் ஸாக மிகுதியால் அரசரை நோக்கிக் கூறினார். அரசர் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்துக் கொண்டே,"அதற்கென்ன ஆக்ஷேபம்?அப்படியே செய்யலாம்.நாளைத்தினம் நம்முடைய வித்துவான் களில் ஒருவர் உங்களோடு பாடுவார்"என்று கூறி னார்.ஆந்திரதேச வித்துவானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.
அந்தச் சம்பாஷனையைக் கேட்டுக் கொண் டிருந்த தஞ்சை வித்துவான்களும் உள்ளம் பூரித் தனர். வந்த வித்துவான் அகங்காரம் கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் 'சோழ நாட்டுச் சங்கீதம் அவருடைய பாட்டுக்கு இம்மியளவும் குறைந்ததன்று' என்பதை நிரூபிக்க வேண்டுமென்று ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் அதற்குரிய சந்தர்ப்பத்தைமட்டும் அரசர் தரவேண்டுமேயென்று ஆவலோடு நோக்கியிருந்த அவர்கள் தங் கள் விருப்பப்படியே தக்க சமயம் வாய்த்ததை அறிந்து எல்லையற்ற மகிழச்சியை அடைந்தனர். தமக்குள் எவ்வகையிலும் சிறந்த ஒருவரை அந்த ஆந்திர வித்துவானோடு பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரே.
மறுநாள் சங்கீத வாதம் அரண்மனையில் நடை பெறும் என்ற செய்தி நகர்முழுவதும் பரவியது. வித்துவான்களும் சிஷ்யர்களும் மறுநாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆந்திர வித்துவானோ மறுநாள் தம்முடைய வித்தைக்கு ஒரு தனிமதிப்பு ஏற்படப்போவதாக எண்ணி மிக்க இறுமாப் புடன் இருந்தார்.
விடிந்தது. அரசர் முன்னிலையில் ஒருமகாசபை கூடியது. வித்துவான்களும், ரஸிகர்களும் குழுமியிருந்தனர். தஞ்சை ஸமஸ்தானத்தின் சார்பில் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் வித்துவானகளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பணிவு தோன்ற முன்னே அமர்ந்திருந்தனர். அவருக்கு எதிரில் ஆந்திர தேச வித்துவான் இருந்தார். அரசர் தம்முடைய ஆசனத்தில் வீற்றிருந்தார். சங்கீந வித்தையிலும், பிராயத்திலும் முதிரந்த வித்துவான்களு சிலர் அந்த வாதத்திற்கு விதாயகர்த்தாக்களாக நியமிக்கப் பெற்று அரசருக் கருகில் உட்காரந்திருந்தனர். பிடில், வாய்ப்பாட்டு இரண்டிலும் வாதம் நடைபெறும்படி ஏற்பாடு செய் யப் பெற்றது. முதலில் இருவரும் வாய்ப்பாட்டைப் பாடுவதென்றும், அப்பால் வாத்தியத்தை வாசிப்ப தென்றும், பிறகு ஒருவர் பாடுவதை மற்றவர் பிடி லில் வாசிப்பதென்றும் வரையறை செய்து கொண்டார்கள்.
முதலில் ஆந்திர வித்துவான் பாடினார். சங்கீ தத்தில் அவருக்கிருந்த பயிற்சி அப்பொழுது நன்றாக வெளிப்பட்டது. துரைசாமி ஐயரிடம் பொறாமை கொண்டிருந்த சில இளைஞர், " சரி சரி; நமது ஸமஸ் தானத்தின் கௌரவம் இன்றோடு போய்விடும்" என்று எண்ணினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. அவர் பாடியவற்றை யெல்லாம் துரை சாமி ஐயர் அப்படியே பாடிக் காட்டினார். பிறகு துரைசாமி ஐயர் பாடியவற்றை வந்த வித்துவான் பாடிக் காட்டினார். இவ்வாறு அந்தச் சங்கீத வாதத்தின் ஒரு பகுதி ஒருவருக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி முடிந்தது. அப்பால் வாத்தியவாதம் தொடங்கியது. ஆந்திர சமஸ்தானத்து வித்துவான் பிடில் வாத்தியத்தலே சிறந்தவர். அவருடைய வாசிப்புக்கு முன் மற்ற சமஸ்தானங்களில் உள் ளோர் யாவரும் தலைவணங்கும் நிலையினரே யாவர்.
துரைசாமி ஐயர் தைரியமாகத் தம் வாத்தி யத்தை எடுத்து வாசித்தார். எந்த நிமிஷத்தில் துரைசாமி ஐயர் தோல்வியுறுவாரோ வென்று பொறாமைக்கார்ர எதிர் பார்த்திருந்தனர். தெலுங்கு நாட்டு வித்துவான் நிச்சயமாகத் தம் வாத்தியத்துக்கு நேராகத் துரைசாமி ஐயர் வாசிக்க இயலாது என்றே எண்ணியிருந்தார். அவர் நினைத்தபடி நடக்கவில்லை. தாம் பிடித்த பிடிப்பையெல்லாம் துரைசாமி ஐயர் தவறாமற் பிடிப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியமடைந்தார். பிறகு துரைசாமி ஐயருடைய முறை வந்தது. அவர் பிடிலில் வாசித்ததை மற்றவர் அணுவளவும் பிசகாமல் தம்முடைய வாத்தியத்திலே வாசித்துக் காட்டினார். இவ்வாறு இரண்டாம் பகுதியும் பூர்த்தியாயிற்று.
அப்பால் மூன்றாவது போட்டி தொடங்கியது. ஆந்திர வித்துவான் பாடினார்; துரைசாமி ஐயர் பிடில் வாசித்தார். அந்தப் போட்டியில் சபையிலுள்ள அத்தனை பேரும் ஒன்றியிருந்தனர். பொழுது போவதே தெரியவில்லை. அரசரும் தம்மை மறந்து அதில் ஈடுபட்டனர். தாம் நெடுநாளாக அப்பியாசம் செய்து கைவரப்பெற்ற அரிய வித்தியா சாமர்த்தியதையெல்லாம் தெலுங்கு தேச வித்துவான் எடுத்துக் காட்டினார். அவருடைய குரல் போனவழியே துரைசாமி ஐயருடைய கை சென்றது. அந்த வித்துவானது சாரீர வீணையில் உண்டாகிய சங்கீதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துரைசாமி ஐயர் தம்முடைய பிடில் தந்தியிலே எழுப்பிக் காட்டினார். தஞ்சாவூர் வித்துவான்களுக்கே அவருடைய வாசிப்பு அளவற்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிராயத்தில் முதிர்ந்த வித்துவான்களும், அவருக்கு ஆசிரிய நிலையிலே உள்ள பெரியோர்களும், "இந்தப் பிள்ளையாண்டான் இவ்வளவு வித்தையை இத்தனை நாள் எங்கே அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் ! இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே!" என்று வியந்து உள்ளம் பூரித்தனர். ஆந்திரதேச வித்துவானுடைய மனத்திலோ வர வர உத்ஸாகம் குன்றியது. 'இனிமேல் இந்த ஸமஸ்தானத்தில் நம் ஜபம் பலியாது' என்றே அவர் உறுதிசெய்து கொண்டார்; ஆனாலும் அவருடைய மானம் இறுதி வரையில் போராட வேண்டுமென்று அவரை ஊக்கியது. அவர் பாடிக்கொண்டே வந்தார்.
ஒருவகையாக அவர் பாடி நிறுத்தினார். அது வரையில் வெற்றியோ தோல்வியோ ஒருவர் பக்ஷமும் காணப்படவில்லை. தம்மோடு யாராலும் போட்டி போட முடியாதென்று வந்தவர் எண்ணிய எண்ணந்தான் தோல்வியுற்றது. அதன் பின்பு துரைசாமி ஐயர் பாட, மற்றவர் பிடில் வாசிக்க வேண்டியது ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அவ்வித்துவானுடைய முகம் ஒளியிழப்பதை அரசர் கண்டார். "இதோடு நிறுத்திக் கொள்ளலாமே; உங்களுக்கு மிகுந்த சிரமம். துரைசாமி ஐயர் பாடுவதை நீங்கள் வாசிக்க வேண்டியது இப்பொழுது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை" என்றார். அவர் அதற்கு இணங்கவில்லை; "இல்லை இல்லை" நாம் செய்து கொண்ட நிபந்தனையிற் பிறழக் கூடாது. அவர் பாடட்டும்; நான் வாசிக்கிறேன். இவ்வளவு அருமையான வித்துவானோடு வாசிக்க நான் எவ்வளவு புண்ணிய செய்திருக்க வேண்டும்" என்றார். அவருடைய குரலிலே பழைய மிடுக்கு இல்லை; பணிவின் சாயை புலப்பட்டது.
நிபந்தனையின்படியே துரைசாமி ஐயர் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஒவ்வொரு விநாடியும் உத்ஸாகம் ஏறிக்கொண்டே வந்தது. ஆந்திர வித்துவான் துரைசாமி ஐயருடைய வாய்ப்பாட்டைப் பிடிலில் வாசித்துக் கொண்டு வந்தார். ஒரு கீர்த்தனம் முடிந்தது. "இன்னும் ஒரு கீர்த்தனம் ஆகட்டுமே" என்றார் ஆந்திரா. துரைசாமி ஐயர் ஒரு சிறு கனைப்புக் கனைத்துக்கொண்டார். சிங்கமொன்று குகைக்கு வெளியிலே புறப்படுவதற்கு முன் செய்யும் கர்ஜனையிலுள்ள கம்பீரம் அதில் இருந்தது. அவர் தம்முடைய வாய்ப்பாட்டையும், பிடில் வாத்தியப் பயிற்சியையும் அந்த மகா சபையில் நிரூபித்ததோடு திருப்தி உறவில்லை. தம்முடைய சாஹித்திய சக்தியையும் வெளிப்படுத்த வேண்டுமென்றெண்ணினார். அவருக்கிருந்த மனவெழுச்சி அவருக்குத் துணை செய்தது. போட்டிபோடும் வித்துவான் ஓர் ஆந்திரராதலின் ஒரு புதிய தெலுங்குக் கீர்த்தனத்தை அந்தச் சமயத்திலேயே பாடிக் காட்ட வேண்டுமென்றும், முடிந்தால் வாசிக்க முடியாமல் செய்து அந்த வித்துவானைக் கலங்க வைக்க வேண்டுமென்றும் அவர் யோசித்தார். அந்த யோசனையைச் செய்வதற்கு வெகு நேரம் ஆகவில்லை. மின்னல்போல ஒரு கருத்து அவர் மனத்திலே தோற்றியது. கீர்த்தனம் ஒன்றைப் புதிதாகப் பாடத் தொடங்கிவிட்டார்.
"ஆடினம்ம ஹருடு த்ருகுடுத தையனி"
என்று பல்லவியை ஆரம்பித்தார். சிவபெருமானது திருநடனத்தை வருணிக்கும் பொருளையுடையது அக்கீர்த்தனம். 'சிவபெருமான் த்ரு குடுத தை யென்று ஆடினான்' என்பது அதன்பொருள். அனு பல்லவி அந்தப் பொருளைச் சிறப்பித்து நின்றது. 'அவனுடைய நடனத்தைக் கண்ட கிரிகன்யையாகிய உமாதேவி சபாஷென்று சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டும் அப்பிராட்டியைப் பார்த்துக் கொண்டும் வர வர வேகமாக நடனமாடினான்' என் பது அதன் கருத்து. சரணமும் வெளியாயிற்று. 'சிவபெருமான் திருச்செவியில் குழையும் தோடும் ஆடின; கங்கையணிந்த திருமுடி குலுங்கியது; சடை விரிந்தாடியது; சிறு நகை முத்துப்போலத் தோன்றியது; திரிபுரஹரனாகிய சிவபெருமான் கிர்ர்ர்ரென்று சுழன்று ஆடினான்' என்பது சரணப் பொருள். 'சுழன்று நடன மாடினான்' என்னும் கருத்துள்ள "கிர்ர்ர்ரனி திருகி யாடினம்மா" என்ற பகுதியைத் துரைசாமி ஐயர் பாடினபோது ஆந்திர வித்துவானது கை தளர்ந்து விட்டது. அதுகாறும் துரைசாமி ஐயருடைய உத்ஸாகமும் அவருடைய சாஹித்தியமும் அந்தச் சாஹித்தியப் பொருளும் ஆந்திர வித்துவானது கருத்தும் கையும் ஒன்றி யாவரையும் பிரமிக்க வைத்தன. 'கிர்ர்ர்ரனி' என்ற சப்தம் உண்டானவுடன் அதைப் பிடிக்க மார்க்கமில்லாமல் ஆந்திர வித்வான் தவித்தார். உயிருள்ள சாரீர வீணையோடு உயிரற்ற நரம்பு போராட முடியுமா?
சந்தோஷ ஆரவாரம் ஒன்று அப்பொழுது சபையில் எழும்பியது. 'கிர்ர்ர்ரனி' என்ற சாஹித்தியத்தைத் தொடர்ந்து எழுந்த அந்த ஆரவாரம் பரமேசுவரனது பரமானந்த தாண்டவத்தில் திசை முழுதும் எழுந்த முழக்கத்தையொத்தது.
ஆந்திர வித்துவான் வாத்தியத்தைக் கீழே வைத்தார்; துரைசாமி ஐயருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்; "நான் தோற்றேன்; என் கர்வம் ஒழிந்தது" என்று தழுதழுத்த குரலில் கண்ணீர் துளிக்க அவர் கூறினார்.
அரசர் புன்னகை பூத்து அவரை இருக்கச் செய்து, "நீங்கள் மகாவித்துவான். பல இடங்களுக்குச் செல்லுபவர்கள். இந்தப் பால்ய வித்துவான் உங்கள் வாழ்த்தைப் பெறவேண்டியவர். உங்கள் காதிலே படும்படி இவருடைய சங்கீதம் உபயோகமானது இவருடைய பாக்கியம். உங்களுடைய வித்தையைப் பூர்ணமாக அனுபவிக்கும்படியான சந்தர்ப்பம் இன்று நேர்ந்தது நமக்கு மிகவும் சந்தோஷம்" என்று சமாதான வார்த்தைகள் கூறிப் பலவகையான சம்மானங்களைச் செய்தார்.
துரைசாமி ஐயருக்கு அன்று உண்டான கீர்த்தியும், அவர் அன்று இயற்றிய சுவை மிக்க அக்கீர்த்தனமும் சங்கீத உலகத்தில் இன்றும் நிலவி வருகின்றன.
[துரைசாமி ஐயருடைய பேரர் சாம்பசிவையரென்பவர் ஸ்ரீ மகா வைத்தியநாதையருடன் இருந்து பிடில் வாசித்துக் கொண்டு வந்தார். இந்த வரலாற்றை எனக்குக் கூறியவர்கள் அவரும் லாலுகுடியிலிருந்த பிடில் ராஜூவையருமாவர்.
17. அன்னமும் சொன்னமும்
திருநெல்வேலி ஜில்லாவில் வடகரை யாதிக்கமென்னும் பெயருடைய சொக்கம்பட்டி ஜமீனில் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் பொன்னம்பலம் பிள்ளையென்பவர் ஸ்தானாதிபதியாக இருந்து வந்தார். அவர் கூரிய அறிவும், தமிழ்ப்புலமையும் உடையவர்; சமயத்திற்கு ஏற்றபடி உபாயங்களை மேற்கொண்டு வேலைகளை நிறைவேற்றுபவர். அவர் காலத்தில் ஸமஸ்தானாதிபதியாக இருந்த பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவரென்பவர் தம் அமைச்சருடைய அறிவையும் பெருமையையும் நன்கு உணர்ந்து அவர்பால் நன்மதிப்பும் பேரன்பும் கொண்டிருந்தார். ஜமீன்தாருக்கும் அமைச்சருக்கும் அவ்வளவு நட்பும் மனவொற்றுமையும் இருப்பதைக் கண்டோர் யாவரும் வியந்தனர்.
அக்காலத்திலே சேற்றூரில் இருந்து வந்த ஜமீன்தாராகிய சிவப்பிரகாசத் திருவணாதத்துரையென்பவர் பொன்னம்பலம் பிள்ளையிடத்திலும் சின்னணைஞ்சாத்தேவரிடத்திலும் பெருமதிப்பு வைத்திருந்தார். இப்பொழுது சிவகிரியென்னும் பெயரோடு வழங்கும் ஜமீன் அக்காலத்தில் தென்மலையென வழங்கி வந்தது. தென்மலையாருக்கும் சேற்றூராருக்கும் எப்பொழுதும் பகைமை உண்டு. தென்மலையார் மிக்க பலமுடையவராதலின் அவர்களால் சேற்றூராரே அதிகமான துன்பத்தை அடைந்து வந்தனர்.
இவ்வாறு தென்மலையாரால் தமக்கு அடிக்கடி இடையூறுகள் உண்டாவது பற்றி மிகவும் வருந்திய சேற்றூர் ஜமீன்தார் பலமுடையாரொருவருடைய துணையைப் பெற்றால் அவ்விடையூறுகளினின்றும் நீங்கலாமென்று எண்ணினர். வடகரையாருடைய ஆதரவு கிடைத்தால் இக்கருத்து நிறைவேறுமென்று நம்பி அதனைப் பெறுவதற்குரிய முயற்சிகளையும் செய்யத்தொடங்கினர்.
ஒருநாள் சேற்றூர் ஜமீன்தாராகிய சிவப்பிரகாசத் திருவணாதத்துரை தம்முடைய பரிவாரங்களை அழைத்துக்கொண்டு தக்க காணிக்கைகளுடன் புறப்பட்டுச் சொக்கம்பட்டி வந்து சேர்ந்தார். அங்கே ஸமஸ்தானாதிபதியையும் அப்போது இளவரசுப்பட்டத்தில் இருந்த இராஜகோபாலத்தேவரையும் கண்டுபேசித் தம் குறைகளைக் கூறித் தமக்கு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். ஸமஸ்தானாதிபதி அங்ஙனமே செய்வதாக வாக்களித்தனர்.
சேற்றூர் ஜமீன்தார் தமிழ்க்கல்வியிற் சிறந்தவர். வடகரை ஸமஸ்தானாதிபதி தமக்கு உதவி புரிவதாக வாக்களித்ததைக் கேட்டு அவர் உள்ளம் பூரித்தார். அந்த உவகைமிகுதியால் பின்வரும் செய்யுளை அவர் கூறினர்:
"கரைகாணா திருந்ததுன்பக் கடல் கடந்து
வரகரையுங் கண்டேன் கல்விக்
குரைகாணுந் துரைபெரிய சாமியைக்கண்
டேன்மழைக்கா ரோங்கக் கண்டேன்
நிரைகாணாக் குன்றெடுத்த ராஜகோ
பாலனையும் நேரே கண்டேன்
வரைகாணும் படிபுயமும் பூரித்தேன்
நிலைமைபெற்றேன் வாழ்வுற் றேனே."
[மழைக்காரா – கருமேகம், நிரை – பசுக்கூட்டம், ராஜகோபாலன் – இவ்வரசுப் பட்டத்தில் இருந்த இராஜகோபாலத் தேவர்]
தாம் படைகளை அவருக்கு உதவிபுரிய அனுப்பவதாக வடகரை ஸமஸ்தானாதிபதி சொல்லியிருந்தார். அதனைக் கேட்டுத் தைரியம்கொண்ட சேற்றூர் ஜமீந்தார் தம் ஊர் சென்று வடகரையிலிருந்து துணைப்படை வரும் வருமென்று காத்திருந்தனர். ஆனால், அப்படையோ வரவில்லை. அதனால் திருவணாத்துரை சின்னணஞ்சாத் தேவருக்கு மீட்டும் ஒரு விண்ணப்பம் செய்துகொண்டார். தமிழ்சி செய்யுட்களால் அவரைப் பாராட்டிப் பல கடிதங்கள் எழுதினார். ஒன்றும் பயனளிக்கவில்லை. தேவர் அவ்வாறு பராமுகமாக இருப்பதை உணர்ந்த சேற்றூர் ஜமீன்தார், 'பொன்னம்பலம் பிள்ளை மனம் வைத்தால் இந்தக் காரியம் எளிதிற் கைகூடும்' என்பதை அறிந்து நிகழ்ந்த வரலாறுகளைத் தெரிவித்து அவருக்கு ஒரு நிருபம் எழுதி யனுப்பினார்.
திருவணாத்துரையினுடைய பணிவையும் அன்பையும் அறிந்த பொன்னம்பலம் பிள்ளை அவருக்கு உதவி செய்வது அவசியமென்று தம்முடைய ஜமீ ந்ன் தாரிடம் உசிதமாகத் தெரிவித்தனர். "துரையவர்களுக்கு இவர் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கடிதத்திலும் இவர் எழுதியுள்ள தமிழ்ச் செய்யுட்களோ மிகவும் சுவையுள்ளன. திரையவர்கள் பராமுகமாக இருந்தும் இவர் கடிதம் எழுதச் சலிக்காமல் அடிக்கடி விண்ணப்பித்து வரும் இவருக்கு உதவி செய்தால் இந்த ஸமஸ்தானத்துக்கே பெருமை உண்டாகும்" என்று கூறினார். அன்றியும் தம் கருத்தை அமைத்துப் பின்வரும் செய்யுளையும் இயம்பினார்:
"வேலைகள் சூழ்புலி வேந்தர்கள் போற்ற விதிமறையோர்
நூலை யெழுதப் படாதென்று வைத்தனா நுண்ணிசைப்பா
மாலை யெழுதப் பரராசா மந்திரி மார்கள்மெச்ச
ஓலை யெழுதச் சடையான் றிருவனொருவனுமே."
[ நூலை – வேதத்தை, எழுதாக்கிளவி யென்பது அதன் பெயர். சடையான் – சலியான்]
பொன்னம்பலம் பிள்ளை சொன்னபிறகு சின்னணைஞ்சாத் தேவர் அசட்டையாக இருக்கமுடியுமா? பல வேலைகளினிடையே இதை மறந்து விட்டோம்.
அவர் நம்மைப் பாராட்டிப் பல பாடல்கள் எழுதியது உண்மையே. ஆனாலும் அவ்வளவு பாடல்களுக்கும் மேற்பட்டதாக உங்களுடைய செய்யுளொன்றை இப்போது அவர் பெற்றார். உங்கள் அன்புக்கு உரியவராக இருக்கும் அவருக்கு உதவி செய்வதில் என்ன தடை இருக்கிறது? நீங்களே ஒரு படை யுடன் சென்று அவருக்கு உதவி செய்து அவர் விருப்பத்தை நிறை வேற்றி வருக" என்று கூறித் துணைகளுடன் அனுப்பினார்.
அவ்வாறே பொன்னம்பலம்பிள்ளை சேற்றூரா ருக்கு உதவியாகச் சென்று தென்மலையின்மேற் படையெடுத்து வென்றார். அதுமுதல் சேற்றூராருக்குத் தைரியம் உண்டாயிற்று. அந்த வெற்றியினால் சிவப்பிரகாசத் திருவணாதத் துரை, "எம் குடியைப் பாதுகாக்க வந்த தெய்வம் நீங்கள்" என்று பொன்னம்பலம் பிள்ளையைப் பாராட்டினார்.
"சேற்றூரார் நெஞ்சந் திடப்பட்டார் தென்மலையார்
தோறோமென் றோடித் துயருற்றார் - மாற்றலர்கள்
தெண்டனிடுஞ் சின்னணைஞ்சான் சேனா பதிபொன்னன்
தண்டிகையைக் கண்டவுடன் றான்"
என்ற செய்யுளையும் கூறினர். புலமைமிக்கவர் இருவர் கூடினால் அவர்களுடைய மகிழ்ச்சியும் துக்கமும் செய்யுளாகவே வெளிப்படுகின்றன. சேற்றூர் ஜமீன்தாருடைய அன்பிலும் தமிழறிவிலும் பொன் னம்பலம்பிள்ளை மிகவும் ஈடுபட்டார். "தங்கள் ஸமஸ்தானாதிபதியவர்கள் இங்கே அடிக்கடி வருவதென்பது சாத்தியமன்று. தாங்கள் அக்குறையை நீக்க இங்கே வந்து சல்லாபம் செய்து போக வேண்டும்" என்று ஜமீன்தார் கேட்டுக்கொண்டார். பொன்னம்பலம்ம்பிள்ளையும் அங்ஙனமே செய்வதாக வாக்களித்தார். அதுமுதல் அவ்விருவருடைய நட் பும் வன்மை பெற்றது.
ஒருமுறை பொன்னம்பலம்பிள்ளை சேற்றூருக்கு வந்தார். அவர் வந்தபோது அரண்மனையில் ஜமீன்தார் உணவருந்திக்கொண்டிருந்தார். பொன் னம்பலம்பிள்ளை வந்திருப்பது தெரிந்தவுடன் அவர் தம் உணவையும் மறந்தார். அவ்வளவு பெரிய மதியூகியைப் பாராமல் அரைக்கணம் காக்கவைப் பதுகூடப் பிழையென்பது அவர் எண்ணம். ஆதலின் உடனே எழுந்து அவசரமாகக் கையைக் கழுவிக்கொண்டு மிகவும் விரைவாக வந்து பொன்னம்பலம் பிள்ளையை வரவேற்றார்.
ஜமீன்தார் வந்த விரைவையும் அவர் வாயும் கையும் ஈரமாக இருத்தலையும் கண்ட பொன்னம் பலம்பிள்ளை அவருடைய அன்பின் மிகுதியையும் வேகத்தையும் உணர்ந்து மகிழ்ந்தார். ஜமீன்தார் அவசரமாகக் கை கழுவினராதலின் அக்கையில் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. உண்ணும்போது தம் வலக்கையிலே இருந்த மோதிரத்தை இடக் கையிலே அணிந்திருந்தனர்; அதை மீண்டும் வலக் கையில் மாற்றி அணிந்து கொள்ளவில்லை.
அந்தக் கோலத்தைக் கண்டவுடன் பொன்னம் பலம் பிள்ளைக்குச் சிரிப்பு வந்தது. ஜமீன்தார் வரவேற்றபோது அவர் தம் நகைப்பை அடக்க முயன்றார். ஜமீந்தார் ஏன் நகைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
உங்களுடைய அன்பின் திறத்தைக் கண்டுதான் சந்தோஷிக்கிறேன். உங்களுக்கு ஒரு கையிலே அன்னமும், ஒரு கையிலே சொன்னமும் உள்ளன. வரும்போதே என்னைப் பாரட்டிக்கொண்டு வருகிறீர்கள். அவை உங்கள் அன்பின் பெருமையைக் காட்டுகின்றன என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து,
ஒருகையிலே யன்ன மொருகையிலே சொன்னம்
வருகையிலே சம்மான வார்த்தை – பெருகுபுகழ்ச்
சீமான் றிருவாழ் சிவப்பிரகா சத்திருவக்
கோமானுக் குள்ள குணம்.
(சொன்னம் - பொன்)
என்னும் வெண்பாவையும் கூறினார்.
ஒரு கை நிறையச் சோற்றையும் ஒரு கை நிறையப் பொன்னையும் ஏந்திக்கொண்டு அன்பான வார்த்தைகள் கூறி யாசகருக்கு அவற்றைக் கொடுக்கும் குணமுடையவர் சிவப்பிரகாசத் திருவணாதத்துரை என்ற அர்த்தம் தோன்றும்படி அந்தச் செய்யுள் அமைந்திருக்கிறது. ஆயினும், ஒரு கையிலே அன்னப்பருக்கையும் ஒரு கையிலே பொன் மோதிரமும் கொண்ட கோலத்தையும் குறிப்பாக அது தெரிவிக்கின்றது.
ஜமீந்தார் செய்யுளைக் கேட்டார். என்னை இப்படி இப்போது பாராட்டக் காரணம் என்ன? என்று அவர் பொன்னம்பலம் பிள்ளையை வினவினார். பிள்ளையினுடைய முகத்தையே மிகவும் விருப்பத்தோடு பார்த்து நின்ற அவருக்குத் தம் கையை நோக்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
"உங்கள் கைகளைப் பார்த்தேன். உங்களுடைய வண்மையை அவை நினைப்பூட்டின. ஆதலின இந்தச் செய்யுளைச் சொன்னேன்" என்று பொன்னம்பலம்பிள்ளை கூறினார். அப்போதுதான் ஜமீன் தார் தம் கைகளைப் பார்த்தார். வலக்கையிலுள்ள சோற்றுப் பருக்கையும் இடக்கையிலுள்ள மோதிரமும் அவர் கண்களிற் பட்டன. அவருக்கே சிர்ப்புத் தாங்கமுடியவில்லை. உடனே உள்ளே சென்று கையை நன்றாகச் சுத்தம் செய்து மோதிரத்தை வலக்கையில் அணிந்து கொண்டு வந்தார்.
பொன்னம்பலம்பிள்ளை, "நீங்கள் உங்கள் கைகளிலுள்ள பொருள்களை மாற்றிக் கொண்டாலும் நான் என் பாட்டிலுள்ள பொருளை மாற்றுவது அவசியமன்று" என்று கூறினார். அவர் கூறியது உண்மைதானே?
18. பூசைத் தாயார்
ஊற்றுமலை யென்பது திரு நெல்வேலி ஜில்லாவில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்துவந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த தென்மலையென்னும் சிவகிரியிலிருந்த ஜமீன் தாருக்கு உதவிபிரிந்து வந்தார். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீந் தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் தென்மலையார். வடகரை ஸ்தானாதிபதியாகி இருந்த பொன்னம்பலம்பிள்ளை பல படையுடன் சேற்றாருக்கு உதவியாக நின்று தென்மலையாரை வென்றனர். அதன்பின் தென்மலையும் அதற்கு உதவியாக நின்ற ஊற்றுமலை ஜமீனும் தம்முடைய நிலையிற் குலைந்தன. ஊற்றுமலை ஜமீன் தார் பகைவர் கையில் அகப்பட்டார். அவர் தம்முடைய மனைவியாரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டு இறந்தனர்.
அவர் மனைவியாரின் பெயர் பூசைத்தாயாரென்பது. அவர் தம் குழந்தைகளுக்காகவே உயிர் வைத்திருந்தனர். குழந்தைகளில் மூத்தவர் மருதப்பத் தேவர், இளையவர் சீவலவதேவர் என்பார். பூசைத்தாயார் தெய்வ பக்தியும் தைரியமும் தமிழிற் சிறந்த பயிற்சியும் உடையவர். ஊற்றுமலை ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்துவான்களுடைய பேச்சுக்கள் நடந்து வருகையில் அவ்வம்மையார் ஜமீன் தார் அருகிலிருந்து அவற்றைக் கவனிப்பது வழக்கம். ஆதலின் செய்யுட்களை சுவை தெரிந்து அனுபவிக்கவும் புதிய செய்யுட்களை இயற்றவும் ஆற்றலுடையவராக ஆனார்.
தம்முடைய கணவர் இறந்தபோது, மிகவும் இளைஞர்களாக இருக்கும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று அவர் மனம் ஏங்கினார். ஊற்றுமலையில் தனியே இருப்பின் தம் குலக் கொழுந்துகளாகிய அவ்விருவருக்கும் ஆபத்து வருமென்று பயந்து தென்காசிக்குச் சென்று அங்கே அடக்கமான வாழ்க்கையை நடத்தி வருவாராயினர். புலமை நிரம்பிய பெண்மணியாராதலின் கல்வியினால் உண்டாகும் பெருமையே பெருமை என்றுணர்ந்து எவ்வாறேனும் தம் மக்களுக்குக் கல்வி யறிவூட்டவேண்டு மென்னும் ஊக்கமுடையவராக இருந்தார். தென்காசியில் இருந்த பள்ளிக்கூட மொன்றில் தம் குமாரர் இருவரையும் சேர்ப்பித்துப் படிக்கச் செய்தார்.
அவ்விருவருள் இளையவராகிய சீவலவதேவர் நல்ல லக்ஷணமும் வசீகரமான தோற்றமும் உடையவர். தைரியமும், சோம்பலின்றி உழைக்கும் ஊக்கமும் அவருக்குப் பிறவியிலேயே அமைந்திருந்தன. பிறர் உள்ளக் கருத்தைக் குறிப்பாக அறியும் நுண்ணறிவும் அவர்பால் இருந்தது. அவருடைய முகத்தைப் பார்த்துப் பூசைத்தாயார், 'இவனால் நாம் ஈடேறலாம்' என்று எண்ணி மகிழ்ந்து வந்தார்.
ஒரு நாள் சகோதரர் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும்போது அத்தலத்தில் உள்ள தேரடியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டபோது இளங்குழந்தையாகிய சீவலவத்தேவருக்குத் தாமும் விளையாட வேண்டுமென்னும் ஆசை உண்டாயிற்று. சிறிது நேரம் அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அவருடைய தமையனாராகிய மருதப்பத் தேவர் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி விட்டதென்று கூறினார். அதனைக் காதில் வாங்காமல் சீவலவதேவர் விளையாடிக் கொண்டே இருந்ததனால், மூத்தவருக்குக் கோபம் மூண்டது; உடனே தம்பியை அடித்துப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனார்.
சீவலவதேவர் மானமுள்ளவராதலின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாயாரைக் கண்டவுடன் கோவென்று அழத் தொடங்கினார். தம்முடைய கண்மணியைப்போன்ற குழந்தை அங்ஙனம் எதிர்பாராத விதமாக அழுவதைக் கண்ட பூசைத்தாயாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விசாரித்தபோது விஷயம் தெரிந்தது. குற்றம் இருவரிடமும் இருப்பதாக அவர் எண்ணினார். கல்வியே செல்வமென்று எண்ணி அவர்களைப் படிக்க வைத்தவராதலின் இளையபிள்ளை விளையட்டிற் போதைக் கழித்தது குற்றமென்பதும், இருப்பினும் நல்லுரை கூறாது இளங்குழந்தையை அடித்தது மூத்தவரது குற்றமென்பதும் அவர் கருத்து. யாரை நோவது? 'எல்லாம் நம்முடைய பழைய நிலையிலிருந்து மாறியதனால் உண்டாகியவையே' என்று எண்ணும்போது பூசைத்தாயாருக்கு துக்கம் பொங்கி வந்தது. தம்முடைய உள்ளுணர்ச்சியை வெளிப்படையாக அந்தக் குழந்தைகளுக்கு உணர்த்தத் துணியவில்லை. ஆயினும் தமிழ்க் கல்வியறிவுடைய அப்பெண்மணியார் ஒரு செய்யுளால் அதை வெளியிட்டார். அது வருமாறு:
தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராத டாதம்பி சீவல் ராய மருதப்பனே.
இச் செய்யுளைச் சொல்லும்போதே அவர் கண்களில் நீர் துளித்தது.
அடிபட்ட சீவலவதேவர் தம்முடைய துக்கத்தை மறந்தார். தம் தாயார் அவ்வாறு வருந்துவதற்க்குக் காரணமென்ன என்பதில் அவர் மனம் சென்றது. தங்களை அன்போடு பாதுகாத்துவரும் அன்னையார் வருந்துவதைக் கண்டபோது அவர் மனம் உருகியது. துணையற்ற நிலையில் இருந்தாலும் தம் உள்ளத்துள் இருந்த துயரத்தை அதுகாறும் அவ்வம்மையார் வெளியிட்டதே யில்லை; தைரியமாக வே இருந்துவந்தார். தம்முடைய பழைய நிலையும் குழந்தையகளுக்குச் சொல்லவில்லை. அன்றைத் தினமோ வருத்தம் அடக்குவதற்கு அரிதாகிவிட்டமையால் அந்தச் செய்யுளைக் கூற நேர்ந்தது.
ஒரு நாளும் வருந்தாத தாயர் அங்ஙனம் வருந்துவதைக் கண்டு பொறாத இளையவர், 'நம்மால் அல்லவா இந்த வருத்தம் தாய்க்கு வந்தது' என்று எண்ணி அதிகமாக அழுதார். "நீ ஏனம்மா இப்படி வருத்தமடைகிறாய்? இதற்குக் காரணம் என்ன? சொல்லத்தான் வேண்டும்" என்று பிடிவாதம் செய்தார். தாயார் வேறு வழியில்லாமல் எல்லாச் செய்திகளையும் குழந்தைகளிடம் சொல்லி வருந்தினார்.
"இனிமேல் எப்படி அம்மா நாம் பழைய நிலைக்கு வரமுடியும்" என்று சீவலவதேவர் கேட்டார்.
"ஆண்டவன் அருள் செய்யவேண்டும். இப்போது வடகரையார் மிக்க பராக்கிரமம் கொண்டு விளங்குகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் நம்மைப் பழையபடியே நிலை நாட்டலாம்" என்றார் பூசைத்தாயார்.
"வடகரை யரசரை நான் போய்ப் பார்த்து வரட்டுமா, அம்மா?" என்று தைரியத்துடன் சீவலவதேவர் கேட்டர்.
"உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா? வடகரை ஸமஸ்தானாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமான் காரியமல்லவே!"
"பின் என்ன செய்வதம்மா?"
"பார்க்கமுடியாது. ஆனால் ..... ...."
தாயார் சிறிது யோசித்தர். அவர் மனத்தில் ஏதோ ஒரு புதிய கருத்து உதித்தது.
"பொன்னம்பலம் பிள்ளையென்பவர் அந்த ஸமஸ்தானத்தில் ஸ்தானதிபதியாக இருக்கிறார்; அவர் மிகவும் நல்லவர். தமிழில் சிறந்த புலமையுடையவர். அவர் மனம் வைத்து நமக்கு உதவி செய்ய இசைந்தாரானால் ஸமஸ்தானாதிபதியும் இணங்குவார்" என்று தாயார் கூறினார்.
"அவரையே போய்ப் பார்த்து வருகிறேனே. உன்னுடைய அன்பையும் ஆண்டவன் கிருபையையும் துணையாகக் கொண்டு நான் போய்வருகிறேன்" என்று சீவலவதேவர் முன்வந்தார்.
வீரக்குடியிற் பிறந்த பெண்மணியாராகிய பூசைத் தாயருக்குத் தம் மகனிடத்தில் அளவற்ற நம்பிக்கை இருந்தது. "போய் வா" என்று வாழ்த்தி அனுப்பினார்.
சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக்கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, "மகாராஜா உடனே வரச் சொன்னார்" என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்து கொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும் பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவதேவர்மேல் அவர் பார்வை சென்றது. அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது.
"நீ யாரப்பா?" என்று ஸ்தானாதிபதி வினாவினார்.
சீவலவதேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன் தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருக்கிறார். ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், "இங்கே யாரேனும் உம்மை இன்னரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே" என்று அஞ்சினார்.
"ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்" என்றார் இளைஞர்.
அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே 'இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்' என்ற சங்கற்பத்தை செய்துகொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு "இங்கே படுத்து இளைப்பாறிக் கொண்டிரும். நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்க வேண்டாம்" என்று சொல்லி அரண்மனைக்கு சென்றார்.
பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை. சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம். தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழுயுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும். அனாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம் என்றார்.
"நீர் எப்படிச் செய்தாலும் நமக்குச் சம்மதமே" என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.
பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாயரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையுடைய அவரைச் சந்தித்த போது பொன்னம்பலப்பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று. "இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இன்னிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்" என்று இரங்கினார்.
அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப்பட்டது.
பொன்னம்பலம் பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றை செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்னத்தில் கிருகப் பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன் தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப் பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்ல வேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.
ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமாயென்ற நம்பிக்கையை முழுவதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம் பிள்ளையே அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:
கூட்டினான் மிகுந்தபா ளையக்கார சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிரதத் தாலே
*தீட்டினானம்பலம்பொன்னம்பலத்தான் றிரிகூட வரையிற் கீர்த்தி
நாட்டினானூற்றமலை நாட்டரசு தழைக்க நிலை நாட்டினானே.
----------
* அம்பலமென்றது திருக்குற்றாலத்திலுள்ள சித்திர சபையை, அதனைப் பொன்னம்பலம் பிள்ளை புதுப்பித்தாரென்று தெரிகிறது.
பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின. தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர்-பிரானாகிய பொன்னம்பலம்பிள்ளையை அவர்கள் தம் குலதெய்வமாகவே போற்றிவந்தனர்.
19. நாயகர் மீட்சி
திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள சங்கர நயினார் கோயிலென்னும் ஸ்தலம் மிக்க பெருமை வாய்ந்தது. சங்கரன் கோயிலென்றும் அதன் பெயர் வழங்கும். சிவபெருமானும் திருமாலும் ஒரு திரு உருவமாகக் கலந்தமைந்த சங்கர நாராயணமூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார். அந்த ஸ்தலத்தில் பல வகையான நோயுள்ளவர்கள் வழிபட்டுத் தங்கள் தங்கள் நோய் தீரப் பெறுவர். ஸ்தல் விருக்ஷம் புன்னையாதலின் அந்த ஸ்தலத்திற்குப் புன்னைவனமென்பது ஒரு பெயர். இறைவன் புற்றிலிருந்து எழுந்ததாகப் புராணம் கூறும். அங்கே நாகசுனையென்னும் தீர்த்தம் ஒன்று உண்டு. நித்திய பூஜைகளும் நைமித்தியங்களும் அந்த ஸ்தலத்தில் விசேஷமாக நடைபெறும்.
சற்றேறக்குறைய 200 வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அங்கிருந்த உத்ஸ்வமூர்த்தி திடீரென்று காணப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக அந்த ஸ்தலத்தில் எழுந்தருளியிருந்த மூர்த்தி காணவில்லை யென்ற அச்செய்தி யாவருக்கும் பெருங்கலக்கத்தை உண்டாக்கிற்று. திரு நெல்வேலிச் சீமையிலுள்ளார் மிக்க வருத்தமுற்றனர். எங்கும் சங்கரன்கோயில் நாயகரைக் காணவில்லை என்பதே பேச்சாக இருந்தது.
அக்காலத்தில் நாயக்க அரசர்களுடைய பிரிதிநிதியாகத் திருநெல்வேலிச் சீமையை ஆண்டு வந்தவர் ஆறை அழகப்ப முதலியாரென்பவர். அவர் நல்ல அறிவாளி. தம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் அந்த நிகழ்ச்சி நேர்ந்ததை அறிந்து அவர் ஆத்திரங் கொண்டார். திருநெல்வேலிச் சீமையின் பெருமைக்கும் , பல நாடுகளிலிருந்து தங்கள் தங்கள் நோய் தீரும்பொருட்டுப் பக்தர்கள் வருவதற்கும் காரணமாகிய அந்தத் திவ்ய ஸ்தலத்தில் அத்தகைய கொடுமை நேர்ந்தது தம்முடைய அதிகாரத்திற்கு ஒரு பெரிய இழுக்கு என்று எண்ணினார். சிவபக்தராதலின் அவர் மனம் கசிந்து உருகினார். நாயகரை மீண்டும் வருவித்துப் பழையபடியே பிரதிஷ்டிக்கும் வரையின் நான் அன்னம் உண்ணேன். என் உயிர் போனாலும் குற்றம் இல்லை. அவன் அருள் அதுவானால் அதை நான் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வேன். இந்த க்ஷணமுதல் இரவுபகலாக இந்த முயற்சியிலேதான் ஈடுபட்டிருப்பேன்" என்று சங்கற்பம் செய்துகொண்டார். கடுமையான அச்சபதத்தைக் கேட்டோர் அஞ்சினர். அப்பால் சில அன்பர்கள், உங்கள் சங்கற்பத்தைக் கேட்டு அஞ்சுகிறோம். தவம் செய்வோருக்கு இது தகுதியேயல்லாமல் தங்களைப்போல ராஜ்ய நிர்வாகம் செய்பவர்களுக்குத் தக்கதன்று. அன்றியும் இந்த முயற்சியில் ஈடுபடுவதற்கு உடம்பில் பலம் வேண்டாமா? சிவபெருமான் இதை ஒரு சோதனையாக உண்டாக்கியிருக்கலாமேயன்றி வேறன்று. தங்கள் விரதத்தின் கடுமையைத் தளர்த்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவர், "நம் நாட்டுக்கு உயிர் நிலை அந்த ஸ்தலம். அங்கே இத்தகைய களவு நேராமற் பாதுகாக்கக் கடமைப்பட்டவன் நான். அதில் நான் தவறினேன். ஆதலால் இந்த விரதத்தால் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதை நான் அனுபவிக்க வேண்டியவனே" என்றார். பின்னும் அன்பர்கள் வற்புறுத்தவே அழகப்ப முதலியார் சுத்த உபவாஸத்தை நிறுத்திவிட்டுப் பாற்கஞ்சி மாத்திரம் உட்கொள்வதாகக் கூறினார்.
அவருக்கு இரவில் தூக்கம் வரவில்லை. எப்பொழுதுமே அதே கவலையாக இருந்தார். தம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட ஸமஸ்தானத்து ஸ்தானாதிபதிகளை யெல்லாம் வருவித்து, 'என்ன செய்யலாம்?' என்று யோசித்தனர். ஒருவருக்கும் இன்னது செய்வதென்று தோன்றவில்லை.
நாயகர் மறைந்த நாள் முதல் சங்கர நயினார் கோயில் அர்ச்சகருள் ஒருவராகிய சண்பகக்கண் நம்பியென்பவரையும் காணவில்லை யென்ற ஒரு செய்தி கிடைத்தது. அந்த நம்பியே நாயகரைக் கொண்டு சென்றிருக்க வேண்டுமென்று யாவரும் நிச்சயம் செய்தனர்.
சண்பகக்கண் நம்பியாரே அந்தக களவைச் செய்தவர். அவர் ஒரு நாள் இரவு நாயகரைக் கைக்கொண்டு இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கைக்குச் சென்று ஒருவரிடம் அந்த மூர்த்தியை அடகு வைத்தார். அங்கே ஆறை அழகப்ப முதலியாரது அதிகாரம் செல்லாது. அந்த விஷயம் சேது வேந்தருக்குத் தெரியவே அவர் அம்மூர்த்தியைப் பெறச்செய்து உத்தரகோச மங்கைக் கோயிலிலே வைத்துப் பூஜை முதலியன நடைபெறும்படி ஏற்பாடு செய்தார்.
சங்கரநயினார் கோயில் நாயகர் சேதுபதியினது பாதுகாப்பில் உத்தரகோசமங்கைக் கோயிலில் இருப்பது ஆறை அழகப்ப முதலியாருக்கு ஒற்றர் மூலம் தெரிய வந்தது. 'அங்கிருந்து எவ்வாறு பெறுவது?' என்று அவர் யோசிக்கலானார். தாம் சேதுபதிக்கு எழுதினால் நட்பு முறையில் இல்லாத அரசர், " தம் ஊரில் இருந்த மூர்த்தியைக் காப்பாற் றத் தெரியாமல் களவுபோகும்படி விட்டவருக்கு மறுபடியும் அம்மூர்த்தி எதற்கு?" என்று விடை யனுப்பினால் தம் மானம் குலைந்து விடுமேயென்று எண்ணினார். தம் கீழுள்ள ஸமஸ்தானத்து மந்திரி மார்களுள் யாரையேனும் அனுப்பலாமென்று எண்ணினாலோ, அவர்களுள் யாரும் சேதுபதியைப் போய்ப் பார்ப்பதென்பது இயலாத காரியம். ' நாயகர் இருக் கும் இடம் தெரிந்தும் கொண்டுவர வழியில்லையே!' என்று முதலியார் வருந்தினார்.
அக்காலத்தில் சொக்கம்பட்டி ஸமஸ்தானமும் அவரது ஆட்சிக்கு அடங்கியிருந்தது. மற்ற ஸமஸ்தானங்களிலிருந்து ஸ்தானாதிபதிகள் அடிக்கடி திருநெல்வேலி வந்து அழகப்ப முதலியாரைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் வரும்போது முதலியாருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது வழக்கம். அவ்வாறு வணங்க வேண்டுமென்று முதலியாரே விரும்பினார். சொக்கம்பட்டி ஸ்தானாதிபதியாகிய பொன்னம்பலம் பிள்ளை மாத்திரம் அவ்வாறு செய்வதில்லை. தம் ஸமஸ்தானத்திற்குரிய கப்பத்தை மாத்திரம் அனுப்பிவந்தாரே ஒழிய நேரிற் சென்று முதலியாரை அவர் பார்ப்பதில்லை. அதனால் அழகப்ப முதலியார், 'இவன் மட்டும் என்ன பெரியவனோ?' என்று நினைத்திருந்தார்.
எல்லா ஸமஸ்தானத்து மந்திரிகளும் அழகப்ப முதலியார்முன் கூடி யோசித்தபோது எல்லோரும் ஒருமுகமாக ஒரே அபிப்பிராயத்தைக் கூறினர்; "இந்தக் கஷ்டத்தை நீக்குவதற்கு நாங்கள் சிறிதும் பயன் படமாட்டோம்; எத்தகைய தீரராக இருந்தா லும் முடியாது. சொக்கம்பட்டி ஸ்தானாதிபதிப் பிள்ளையவர்கள் மனம் வைத்தால் எப்படியாவது காரியத்தைச் சாதித்து விடுவார்கள்" என்று அவர்கள் பன் முறை சொன்னார்கள்; "சமுகத்தில் அவர்களை வரு வித்து விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சீமையின் கௌரவமே போனமாதிரிதான்" என்று வற்புறுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம், 'இவர் நம்மை வணங்கச் செய் கிறாரே யொழிய அவரைச் செய்ய முடியவில்லை. இப்பொழுது அகப்பட்டுக் கொண்டார்' என்று மனத்துக்குள் ஒரு மகிழ்ச்சி வேறு இருந்தது.
முதலியார் பெரிய தர்மசங்கடத்தில் அகப்பட் டார். அந்த இறுமாப்புக் கொண்ட மனிதனிடமா உதவியை வேண்டுவது? என்று அவர் நினைத்தார்.
தம்முடைய இறுமாப்பே அந்த மதியூகியைத் தம் பால் வரவொட்டாமல் தடுத்ததென்பதை அவர் உணரவில்லை. 'இந்த விபத்து எல்லாவற்றைக் காட்டிலும் பெரியதாகையால், இப்போது நம் கௌர வத்தைப் பார்ப்பது அழகன்று' என்ற முடிவிற்கு வருவதற்குள் அவர் எவ்வளவோ சஞ்சலத்துக்கு ஆளானார். 'வேறு வழியில்லை' என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அவர் பின்பு பொன்னம்பலம் பிள்ளையை அழைத்துவரவேண்டுமென்று தக்க மனிதர்களை அனுப்பினார்.
சிறந்த அறிவாளியும் சிவபக்தருமாகிய பொன்னம்பலம் பிள்ளை உடனே திருநெல்வேலிக்கு வந்தார். அவருக்கும் அந்த விஷயத்திற் கவலை இருந்தே வந்தது. முதலியார் அவரைக் கண்டவுடன் மரியாதையாக வரவேற்று உபசரித்தார்; தம் கவலையை எடுத்துரைத்தார்.
"சமூகத்தில் உண்டாயிருக்கும் கவலையை நான் முன்பே அறிந்திருக்கிறேன். ஆனாலும் 'அவ்விடத்து அதிகாரத்துக்கு எதுதான் கைகூடாது? விரைவில் நாயகர் எழுந்தருள்வார்; போய்த் தரிசிக்கலாம்' என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்றார் பொன்னம்பலம் பிள்ளை.
"நான் அன்றுமுதல் அன்னம் உண்ணவில்லை. உம்மால்தான் இந்தக் காரியம் நிறைவேறுமென்று எல்லோரும் கூறுகிறார்கள். நம் சீமையின் கௌர வத்தைக்காப்பதில் உமக்கும் பங்கு உண்டல்லவா?" என்றார் முதலியார்.
"உத்தரவுப்படியே செய்யக் காத்திருக்கிறேன். சங்கரன் திருவருள் துணைசெய்யு மென்றே நம்புகிறேன்" என்று பொன்னம்பலம் பிள்ளை அந்தப் பணியை ஏற்றுக்கொண்டனர்; அப்போது அழகப்பா முதலியாருக்குச் சிறிது தைரியம் வந்தது.
"உத்தரகோச மங்கையிலிருந்து எப்படிக் கொண்டு வருவது? அங்கே யார் போவார்கள்? நாமும் திருட்டு நடத்துவதா?" என்று கவலையோடு கேட்டார் முதலியார்.
"அந்த விஷயங்களைப் பற்றி யெல்லாம் சமூகத்திற் கவலையே கொள்ள வேண்டாம். என் விருப்பத்தின்படியே நடக்க வேண்டுமென்று கூறிச் சில தக்க மனிதர்களை என்னுடன் அனுப்பினால் போதும். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்."
அங்கே இருந்த ஸ்தானாதிபதிகளும் வித்துவான் களும், "நான் வருகிறேன்; நான் வருகிறேன்" என்றார்கள்; 'இந்தக் கைங்கரியத்தில் பொன்னம் பலம் பிள்ளைக்கு ஏவல் புரிவதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா?' என்பது அவர்கள் எண்ணம்.
சேது வேந்தருக்கும் சொக்கம்பட்டியாருக்கும் பகைமை இருந்து வந்தது. ஒருமுறை சொக்கம் பட்டியாரைச் சேதுபதி அடக்கத் தலைப்பட்டபோது அவரால் முடியவில்லை.
அந்த நிலையில் 'பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியின் ராஜ்யத்திலிருக்கும் மூர்த்தியை எப்படிக் கொண்டு வர முடியும்?' என்றே யாவரும் மயங்கினர்.
" அவர் சமர்த்தர்; ஒருவருக்கும் தெரியாத தந்திரம் அவருக்குத் தெரியும்" என்று சிலர் கூறினர்.
சில ஸ்தானாதிபதிகளும் வித்துவான்களும் வேறு சிலருமாக நூறுபேர்களைப் பொன்னம்பலம் பிள்ளை அழைத்துக் கொண்டார். மேள வாத்தியக் காரர் சிலரையும் கூட்டிக்கொண்டு எல்லோருட னும் இராமனாதபுரத்தை நோக்கிப் புறப்பட்டார். இராமநாதபுரம் எல்லைக்கருகில் ஓர் ஊரில் தங்கி முன் ஏற்பாட்டின்படி அங்கே வந்திருந்த காவடி யொன்றை பொன்னம்பலம்பிள்ளை எடுத்துக் கொண்டார். வாத்தியக் காரர்களை அவர் வாத்திய கோஷம் செய்யச் சொன்னார்; மற்றவர்களைப் பழனிக்கு ஒரு கோஷ்டியாகச் செல்பவரைப்போல வேடம் புனையச் செய்தார். தாம் காவடி யெடுத்துக் கொண்டு ஆவேசம் வந்தவர்போல நடந்தார். அந்த நூறு பேரும் 'அரோஹரா! அரோஹரா!' என்று முழக்கம் செய்தனர். சிலர் சேகண்டி தட்டினர். சிலர் பழங்களைச் சும்ந்து வந்தனர்.சிலர் தேங்காய் மூட்டையைத் தாங்கினர். சிலர் பெரிய விபூதிப் பைகளைக் கொணர்ந்தனர். சிலர் தூபமுட்டிகளில் அடிக்கடி சாம்பிராணியைத் தூவிப் புகைத்தனர். சிலர் திருப்புகழ் பாடினர். அடிக்கடி காவடிக்குத் தீபாராதனை செய்தனர். அத்தகைய பெருமுழக் கத்தோடு அக்கூட்டம் இராமநாதபுரத்து எல்லையிற் புகுந்தது.
சேதுவேந்தரை ஒருவர் பார்ப்பதென்பது மிகவும் கடினமான காரியம். அரண்மனை வாயிலைக் கடந்து செல்வதே அரிது. ஆயினும் பழனிக்குச் செல்லும் காவடிகளை மாத்திரம் யாரும் தடைசெய்வ தில்லை.காவடி கொணர்வோர் நேரே உள்ளே செல்வார்கள். சேதுபதியரசர் எழுந்து வந்து வணங்கி ஆவேசம் வந்தவர்கள் கூறும் உத்த ரவுகளை'க் கேட்டுப் பழனி ஆண்டவருக்குக் காணிக்கைகளை அனுப்புவார். மகா மேதாவியாகிய பொன்னம்பலம் பிள்ளை அவற்றையெல்லாம் விசா ரித்து அறிந்து வைத்திருந்தவராதலின், " பழனி யாண்டவா! உன்னைத்தான் நம்பி யிருக்கிறேன். உன்னுடைய தாய் தந்தையரை உரிய இடத்திலே மீட்டும் ஸ்தாபிக்க உன் திருவருள்தான் துணைசெய்ய வேண்டும். நான் செய்வது அபசார மானாலும் க்ஷமிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டே அந்த நாடகத்தைத் தொடங்கினர்.
காவடியோடு வந்தவர்கள் நூறு பேரே எனினும் வரவர ஊரிலுள்ளோரும் கூடிக்கொண்டனர். அவரவர்கள் பக்தியினால் உந்தப்பட்டு, 'அரோஹரா' என்று முழக்கம் செய்தனர். பெரிய கோஷத்துடன் அந்தக் கூட்டம் இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள இராமலிங்க விலாசத்திற் புகுந்தது. வருவோரை அந்த மண்டபத்திலேதான் அரசர் சந்தித்துப் பேசுவது வழக்கம்.
பழனிக்குக் காவடி கொண்டுசெல்லும் கூட்டம் ஒன்று வருகிறது; இதுகாறும் இவ்வளவு சிறப்பாக வும் பக்தியாகவும் பிரார்த்தனை செலுத்துவோர்களைக் கண்டதில்லை' என்று அரண்மனை உத்தியோகஸ்தர்கள் பிரமித்தனர். சேதுபதியரசர் கூட்டம் வரு வதை உணர்ந்து வழக்கப்படியே எதிர்சென்று வர வேற்க முன்வந்தார்.
கூட்டம் பெரிதாகிவிட்டமையால் பலர் வெளி முற்றத்திலே நின்றுவிட்டனர். முக்கியமானவர்கள் மட்டும் உள்ளே சென்றனர். காவடி வந்தவுடன் சேதுவேந்தர் பொன்னம்பலம் பிள்ளைக்கு அருகில் வந்தார். அப்போது ஒருவர் காவடிக்குத் தீபாராதனை செய்தார். மன்னர் இரு கைகளையும் குவித்தனர். அந்தச் சமயத்தில் பொன்னம்பலம் பிள்ளை திடீ ரென்று அருகில் நின்ற ஒருவரிடம் காவடியைக் கொடுத்துவிட்டுச் சேதுபதியை நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்; உடனே,
"சேதுபதி யென்றுநர சென்ம்மெடுத் தாய்கமல
மாதுபதிக் குன்னையன்றி வாயாதே-நீதிபதி
நீயே விசயரகு நாத னினையீன்ற
தாயே யருட்கோ சலை"
என்ற செய்யுளையும் கூறினார்.
அரசர் அவர் நிலையைக் கண்டும் கூறிய செய்யு ளைக் கேட்டும் ஒன்றும் விளங்காமல் நின்றனர்; காவடி கொண்டு வருவோர் நம்மை வணங்கு கிறாரே; இவர் இந்தப் பாட்டை எதற்காகச் சொல்லுகிறார்?" என்று ஆச்சரியமடைந்தார்.
"அடியேன் சொக்கம்பட்டி ஸ்தானாதிபதி பொன்னம்பலம்; மகாராஜா அவர்களுடைய ப்ரு மையை அறிந்து தரிசிக்க வேண்டுமென்று நெடுங்காலமாக எண்ணியிருந்தேன். ராஜ தரிசனம் சுலபமாகக் கிடைக்கக்கூடியதாக இல்லை. அதனால் இந்த மாதிரி செய்யலானேன். பழனியாண்டவன் தரிசனத்தைக் காட்டிலும் மகாராஜா தரிசனந்தான் எனக்கு முக்கியமாக வேண்டும்" என்றார்.
பொன்னம்பலம் பிள்ளையின் புத்தி சாதுர்யத்தையும் பராக்கிரமத்தையும்பற்றி அரசர் முன்பே கேள்விப்பட்டிருந்தார். அப்போது அவரை நேரே கண்டபோது திடுக்கிட்டார்.
"அப்படியா! சந்தோஷம். நாம் உம்மைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். நீர் சொல்லிய செய்யுளில் நம்முடைய பெயரைச் சொன்னது சரியே; தாயாருடைய பெயர் உமக்கு எப்படித் தெரியவந்தது?" என்று அரசர் கேட்டார்.
அரசரது பெயர் விஜயரகுநாதசேதுபதியென்பது. அவர் தாயார் பெயர் கோசலை நாச்சியாரென்பது. பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியை இராமராகப் புகழ்ந்து சொல்ல வந்தவர், 'நீதான் விஜயத்தையுடைய ரகுநாதன்; நின் அன்னையே கோசலைக்கு ஒப்பானவள்' என்னும் பொருள்படப் பாடினார். அவருக்கு உண்மையில் சேதுபதியின் அன்னையார் பெயர் தெரியாது. அந்தப் பெயரும் பாட்டில் வெறும் உவமையாகமட்டும் நில்லாமல் உண்மைக்கும் பொருத்தமாக அமைந்துவிடவே மன்னர் வியப்படைந்தார். 'பொன்னம்பலம் பிள்ளை சிறந்த கவிஞர்; தெய்வபக்தியுடையவர்; கடாக்ஷ வித்துவான்' என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். 'அதற்கு இதைவிட வேறு சாக்ஷியம் என்ன வேண்டும்?' என்று அவர் அப்போது எண்ணினார்.
பொன்னம்பலம்பிள்ளை, "ஏதோ அடியேனுக்குத் தோற்றியது; சொன்னேன்" என்று பணிவாகக் கூறினார். சேதுபதியரசருக்கு அவரிடம் பெருமதிப்பு உண்டாயிற்று. அவரை நிற்கவைத்துப் பேசுவது தவறு என்று உள்ளத்திற் பட்டது. உடனே தாம் ஓர் ஆசனத்தில் அமர்ந்து தமக்கு அருகில் ஓர் ஆசனத்தில் பொன்னம்பலம்பிள்ளையை இருக்கச் சொன்னார்.
தம்முடன் வந்திருக்கும் அன்பர்கள் நிற்கும் போது தாம் மட்டும் ஆசனத்தில் அமர்வதை அவர் விரும்பவில்லை. தம் கருத்தை அவர் அரசருக்குத் தெரிவித்தார். அது கேட்ட அரசர், 'இவரல்லவோ மனிதர்! தமக்கு மாத்திரம் நன்மையைத் தேடிக் கொள்வோரே மலிந்திருக்கும் இவ்வுலகத்தில் பிறரது மரியாதையையும் பாதுகாப்போர் மிகவும் அரியர்' என்று எண்ணி அவரை மனத்திற்குள் பாராட்டினார். அப்பால் அங்கு வந்திருந்த ஸ்தானாதிபதிகளுள்ளும் வித்துவான்களுள்ளும் முக்கியமான மூவருக்கு ஆசனம் அளிக்கச் செய்து அமரும்படி கூறினார். அரசருக்கு முன் சம ஆசனத்தில் இருப்பதென்பது அக்காலத்தில் அரசபதவியையே பெறுவதற்கு ஒப்பானது.
சேதுபதியும் பொன்னம்பலம்பிள்ளையும் நெடுநேரம் சல்லாபம் செய்து கொண்டிருந்தனர். பிள்ளையினுடைய பேச்சில் அவருடைய சிறந்த குணங்களும் புத்தி வன்மையும் வெளிப்பட்டன; 'உலகத்தார் இவரைப்பற்றிக் கூறும் புகழுரை பொய்யல்ல; மெய்யே' என்பதைச் சேதுபதியரசர் தெளிந்தார்.
பொன்னம்பலம்பிள்ளை தம் நண்பர் கூட்டத்துடன் இராமநாதபுரத்தில் சிலநாள் தங்கினார்; இடையில் ஒருமுறை பழனிக்குப் போய் முருகக்கடவுளைத் தரிசித்து மீண்டும் இராமநாதபுரத்துக்கு வந்தார். பின்பு தம்முடன் வந்தோர்களிற் சிலரை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றவர்களை அவரவர் இடங்களுக்கு அனுப்பிவிட்டார்.
ஒருநாள் பொன்னம்பலம்பிள்ளை சேதுபதியோடு பேசிக்கொண்டிருக்கையில், "இந்த ஸமஸ்தானத்தில் பல பெரிய ஸ்தலங்கள் இருக்கின்றன. அவ்விடங்களுக்கெல்லாம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வரவேண்டுமென்பது நெடுநாளாக எனக்கு உள்ள அவா. அதற்குத் தக்க காலம் வரவில்லை. இப்போது மகாராஜா அவர்களின் கடாக்ஷத்திற்குப் பாத்திரனாகிவிட்டமையால் அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாமென்று தோற்றுகிறது. முதலில் உத்திரகோசமங்கையைத் தரிசிக்க வேண்டும். மணிவாசகப் பெருமான் திருவாக்கால் உருகிப் பாடிய திருப்பாடல்கள் பல அந்த ஸ்தலத்தைப்பற்றி உள்ளன. அவற்றைப் படிக்கும்போதெல்லாம், இவ்வளவு அருகிலுள்ள அந்தத் திவ்ய ஸ்தலத்தைப் பார்க்க முடியவில்லையேயென்ற வருத்தம் உண்டாகும். மகாராஜாவுடைய திருவுள்ளக்குறிப்பு எனக்குத் துணையாக இருந்தால் அந்த ஸ்தல தரிசனத்தைச் செய்து பெறப்பேறு பெற்றவனாவேன்" என்றார்.
"இந்தக் காரியம் பெரிதல்லவே. நீர் உமது விருப்பப்படியே ஸ்தல தரிசனம் செய்யலாம். தக்க மனிதர்களை அனுப்புகிறோம்" என்றார் மன்னர்.
அரசர் ஏற்பாடு செய்யும்போது காரியம் கைகூடுவதில் தடை ஏது? பொன்னம்பலம்பிள்ளை தம் அன்பர்களுடன் அரண்மனை அதிகாரி ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டார். உத்தரகோசமங்கையின் எல்லையில் அடிவைக்கும்போது அவர் உள்ளம் துடித்தது. 'நாம் மேற்கொண்ட காரியம் முற்றும் நிறைவேறவேண்டுமே' என்ற கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது. அவர் உண்மையில் உத்தரகோசமங்கையில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளையா பார்க்கச் சென்றார்? இல்லை. சங்கர நயினார் கோயில் நாயகரையே தேடிச் சென்றார். அவர் தம் மனத்திலிருந்த விரைவை வெளியிலே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.
ஆலயத்துக்குட் சென்று முறையாகத் தரிசனம் செய்யத் தொடங்கினர். பூஜகர்களிடம், "இந்த ஸ்தலம் மிகவும் புராதனமானது. இங்கே உள்ள மூர்த்தி பேதங்களின் வரலாறுகளையெல்லாம் விவரமாக நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு மூர்த்தியையும் நன்றாகத் தரிசனம் செய்ய வேண்டும்" என்றார்.
அவ்வாறே ஒவ்வொரு மூர்த்திக்கும் மெல்லத் தீபாராதனை செய்து முதிய பூஜகரொருவர் அவ்வம்மூர்த்தியின் திருநாமம், அவற்றின் சம்பந்தமான உத்ஸவம், வரலாறு முதலியவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லிவந்தார்.
"இவர் சங்கர நயினார் கோயில் நாயகர்" என்று குருக்கள் சொன்னபோது பொன்னம்பலம்பிள்ளையின் உடல் பதறியது; " ஆ! அவர் இங்கே எப்படி எழுந்தருளினார் ?" என்று கேட்டார்.
குருக்கள் விஷயத்தை விரிவாகச் சொன்னார். அதைக் கேட்ட போது பொன்னம்பலம்பிள்ளைக்கு, 'இப்படியே இந்தப் பெருமானை எடுத்து அணைத்துக் கொண்டு போய்விடவேண்டும்' என்ற வேகம் உண்டாயிற்று. அவர் அமைதி பெறுவதற்குச் சிறிது நேரம் சென்றது. அவர் கண்களில் நீர் ததும்பியது. உள்ளம் உருகியது; ஓர் அரசர் தம் அரசை இழந்துவிட்டு மற்றோர் அரசன் கைக்கீழ் மறைந்து வாசம் செய்வதைக் காண்பது போன்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அவர் அந்த மூர்த்தியைப் பார்த்தபோது சங்கர நயினார் கோயிற் காட்சி அவர் அகக்கண்முன் நின்றது; "எம்பெருமானே, தேவரீருக்குரிய சிறப்பெல்லாம் அங்கே இருக்க அவற்றை விட்டுவிட்டு இங்கே எழுந்தருளியதற்கு என்ன காரணம்? தேவரீருக்குரிய புற்று இங்கே இல்லையே; புன்னைவனம் இல்லையே; நாகசுனையும் இல்லையே" என்று நைந்தார். கவிஞராகிய அவரது வருத்தம் ஒரு வெண்பாவாக வெளிப்பட்டது:
"புற்றெங்கே புன்னை வனமெங்கே பொற்கோயிற் சுற்றெங்கே நாக சுனையேங்கே - இத்தனையும் சேரத்தா மங்கிருக்கத் தேவநீ தான்றனித்தித் தூரத்தே வந்ததென்ன சொல்."
கோயிற்பரிவாரங்களும் பிறரும் அவர் நெடுநேரம் அந்த மூர்த்தியைத் தரிசித்துக்கொண்டே நின்றதையும் மனமுருகிச் செய்யுள் ஒன்றைக் கூறியதையும் கண்டு அவருடைய அன்பை வியந்தார்கள்.
ஒருவாறு தரிசனம் செய்துகொண்டு பொன்னம்பலம்பிள்ளை மீண்டும் இராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவருக்கு முன்பே சென்ற ஓர் அதிகாரி அரசரிடம் உத்தரகோசமங்கையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லிவிட்டார்.
பொன்னம்பலம்பிள்ளையைக் கண்ட அரசர், "திருப்தியாகத் தரிசனம் ஆயிற்றோ?" என்று வினவினார்.
"மகாராஜாவின் கிருபை இருக்கும்போது அதற்கு என்ன தடை?"
"தாங்கள் கவிஞரல்லவா? அங்கே ஏதேனும் புதிய தோத்திரப் பாடல் சொன்னதுண்டோ?"
அதுதான் தம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற சமயமென்று பொன்னம்பலம்பிள்ளை உணர்ந்தார்; "அங்கே சில காலமாக உள்ள ஒரு புதிய மூர்த்தியைத் தரிசித்தேன். அப்போது நான் ஒரு செய்யுள் இயற்றிச் சொன்னேன். அதற்கு விடையாக ஒரு செய்யுளும் கிடைத்தது" என்றார்.
"என்ன ஆச்சரியம்! எங்கே அவற்றைச் சொல்லுங்கள்."
பொன்னம்பலம் பிள்ளை "புற்றெங்கே" என்ற வெண்பாவைச் சொல்லிவிட்டு, "இதற்கு விடையாக அம்மூர்த்தியினிடமிருந்து கிடைத்த வெண்பாவையும் கேட்டருள வேண்டும்:
விள்ளுவமோ *சீராசை வீடுவீட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற்
காடுதொறு மேயிழுத்தக் கால்"
என்று சொல்லி நிறுத்தினார்.
--------
*சீராசை - சங்கர நயினார் கோயில்
சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கைக்கு வந்த வரலாறு தமக்குத் தெரியுமென்பதைச் சாதுர்யமாக அந்த வெண்பா மூலம் பொன்னம்பலம் பிள்ளை புலப்படுத்தினார். அந்த மூர்த்தியை மீட்டும் சங்கர நயினார் கோயிலிலேயே எழுந்தருளச் செய்விக்க வேண்டுமென்ற குறிப்பையும் அவர் கூறிய வெண்பாக்களால் அரசர் அறிந்து கொண்டார். "உமது பக்தியையும் சாமர்த்தியத்தையும் பாராட்டுகிறோம். அந்த நாயகர் கரிசற்காட்டிலே வந்து அவஸ்தைப்பட்டாலும், இங்கே வந்த பிறகு அவருக்கு ஒரு குறைவும் இல்லை" என்றார் அரசர்.
"இங்கே குறைவு இருப்பதாக யாரேனும் சொல்லுவாரா? ஆனாலும் அவரவர் இடத்தில் அவரவர் இருப்பதுதானே சிறப்பு !" என்றார் பொன்னம்பலம்பிள்ளை.
அரசர் புன்னகை பூத்தார். "உம்முடைய விருப்பப்படியே அந்த மூர்த்தியை அவருக்குரிய இடத்திலே சேர்த்துவிடச் செய்யலாம்" என்று அவர் கூறியபோது பொன்னம்பலம்பிள்ளைக்குச் சந்தோஷம் பொங்கியது.
அரசர் உத்தரவுப்படி தக்க உபசாரங்களுடன் உத்தரகோசமங்கையிலிருந்த மூர்த்தி எழுந்தருளினார். பொன்னம்பலம்பிள்ளை அரசரிடம் விடை பெற்றுக்கொண்டு அன்பர்களுடன் அம்மூர்த்தியைத் தொடர்ந்து சென்றார். செல்லுகையில் தாம் நாயகருடன் வரும் செய்தியையும், திருமங்கலத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்பதையும் ஆறை அழகப்ப முதலியாருக்கு அறிவிக்கும் வண்ணம் ஒருவரை முன்னதாக அனுப்பியிருந்தார். ஒவ்வொரு நாளும் மிக்க ஆவலுடன் 'என்ன செய்தி வருமோ!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலியார் தம் அதிகாரத்தை மறந்தார். பொன்னம்பலம்பிள்ளையை வாழ்த்தி அவரை எதிர்கொள்ளப் புறப்பட்டு விட்டார். அவருடன் பல பக்தர்கள் புறப்பட்டனர்.
திருமங்கலத்தில் முதலியார் பிள்ளையைச் சந்தித்தனர். எல்லோரும் நாயகரைத் தரிசித்து ஆராமை மீதூர விம்மி விம்மி நைந்து உருகினர். பொன்னம்பலம்பிள்ளையை வாயார வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டினர்.
நாயகர் சங்கரன் கோயிலில் மீண்டும் தமக்குரிய இடத்தில் எழுந்தருளினார். அந்தச் செயலால் ஆறை அழகப்ப முதலியாரும் பொன்னம்பலம்பிள்ளையும் அதிகாரி, ஏவலரென்னும் முறை மாறி நட்பு முறையிற் பழகலாயினார்.
20. பொன்னம்பலம் பிள்ளையின் திருப்பணி
பொன்னம்பலம்பிள்ளையின் அருமையை அறிந்து பழகி வந்த சொக்கம் பட்டி ஜமீன்தாராகிய பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் கி.பி. 1721-ஆம் வருஷத்திற்கு முன் உலக வாழ்வை நீத்தார். தம்முடைய தலைவராகவும் நண்பராகவும் இருந்த அவருடைய பிரிவைப் பொன்னம்பலம்பிள் ளையால்தாங்க முடியவில்லை. அவர் இல்லாத உல கத்தில் வாழ்வதை விட அவரோடு செல்வதே நல்ல தென்று நினைத்தார். ஆனால் விதி அதற்கு இணங் குமா? அன்பு, அருள், அறம் எல்லாவற்றிற்கும்மேல் நின்று ஆணை செலுத்தும் விதியின் வலிமையைக் கடப்பார் யார்?
பொன்னம்பலம்பிள்ளையின் துக்கம் கரை கடந்து நின்றது. அவர் ஒரே ஒரு செய்யுள்தான் சொல்லியிருக்கிறார். அவருடைய துயரத்தின் முழு இயல்பையும் அச்செய்யுள் புலப்படுத்தும்.
'அந்த மகாராஜன் இந்த நாட்டின் அரசாட்சியைத் துறந்து வானாட்டை அரசாளப் போய்விட்டான். ஆனால் இங்கே என்னை ஸ்தானாதிபதியாக வைத்துக்கொண்டு ஆட்சிபுரிந்ததைச் சிறிதளவாவது மதியாமல் தனியே சென்று விட்டான். அந்த சேனாபதிப் பெருமானாகிய சின்னணைஞ்சானைப் பிரிந்து நான் இங்கே இருப்பதனால் என் உள்ளம் புண்பட்டுத் தவிக்கின்றது. அவன் போனவழி போனாலொழிய அப்புண் தீராது' என்று நைந்து புலம்பி அவர் பாடிய செய்யுள் வருமாறு:
(தரவு கொச்சகக் கலிப்பா)
*"வானா டரசாளப் போன மகாராசன்
தானா பதியெனவுஞ் சற்றுமதித் தானிலையே
சேனா பதிப்பெருமான் சின்னணைஞ்சான்
போனவழி போனா லொழியமனப் புண்பாடு தீராதே."
--------
*இச்செய்யுள், "வானா டரசாளப் போன மதப்புலி தான் தானா பதிதனையுந் தானழைத்துப் போகாதோ, சேனா பதிராசன் சின்னணைஞ்சான் போனவழி, போனா லொழிய மனப் புண்பாடு தீராதே" என்றும் வழங்கும்.
பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவருக்குப் பின் சிலர் சில காலம் ஜமீன் ஆட்சியை நடத்தி வந்தனர். கி.பி. 1729-ஆம் வருஷம் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவரென்பவர் ஜமீன்தாரானார். அவர் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவருடைய தம்பியின் குமாரர். அவர் காலத்தில் பொன்னம்பலம்பிள்ளையும் பெரியநாயகம்பிள்ளையென்பவரும் ஸ்தானாதிபதிகளாக இருந்தனர். தம்பெரிய தந்தையார் காலத்தில் இருந்தவரென்ற நினைவினால் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவர் பொன்னம்பலம்பிள்ளையை ஸ்தானாதிபதியாக வைத்திருந்தாரேயன்றி உண்மையில் அவரிடத்தில் அன்பு வைக்கவில்லை.
வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்த பொன்னம்பலம்பிள்ளையின் உள்ளம் தருமத்திற் சென்றது. திருக்குற்றாலம் முதலிய ஸ்தலங்களில் தம் பெயரால் சில தருமங்கள் செய்யவேண்டுமென்று எண்ணினார். அவருக்கு முன்பு சொக்கம்பட்டி ஸமஸ்தானத்தில் ஸ்தானாதிபதியாக இருந்த வைத்தியப்ப பிள்ளையென்பவர் திருக்குற்றாலத்தில் தம் பெயரால் வைத்தியப்ப விலாசம் என்ற மண்டபம் ஒன்று கட்டினார். அவ்வாறு தம் பெயராலும் ஒன்று கட்ட அனுமதி தர வேண்டுமென்று பொன்னம்பலம் பிள்ளை ஜமீன்தாரை வேண்டினார். ஜமீன்தார் அதற்கு இணங்கவில்லை. அப்பால் பண்புளிப்பட்டணத்திலுள்ள திருமலையிலேனும் தம் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்து ஒரு மண்டபம் கட்ட இடம் கேட்டார். அதற்கும் ஜமீன்தார் சம்மதிக்கவில்லை. சில முறை வற்புறுத்திக் கேட்டபோது, "நமக்கு இஷ்டமில்லாத காரியத்தில் இவ்வளவு பிடிவாதம் பண்ணுவது நன்றாக இல்லை; உம்முடைய மனம் போன படியெல்லாம் நாம்செய்வது இயலாத காரியம்" என்று கோபித்துக் கொண்டார்.
பொன்னம்பலம் பிள்ளையின் உள்ளத்தை அவ்வார்த்தைகள் சுட்டன; தம் பழைய நிலையை அவர் எண்ணிப் பார்த்தார். அந்த ஸமஸ்தானத்தில் அவர் வைத்தது சட்டமாக நடந்தது ஒரு காலம். ஆனையோடு பழகிவிட்டுப் பூனையைக் கெஞ்சவேண்டிய நிலை வந்ததை நினைந்து அவர் இரங்கினார். 'சரி; இனி இந்த இடத்தில் இருப்பதில் பயன் ஒன்றும் இல்லை' என்று தீர்மானம் செய்து கொண்டார். 'இவ்வளவு நாள் உங்கள் பரம்பரைக்குரிய செம்புலியென்னும் பட்டத்திற்கேற்ற குணம் எப்போது வரும் எப்போது வருமென்று காத்திருந்தேன். கோபமென்பது சிறிதும் இதுகாறும் உமக்கு வரவில்லை. இப்போது தான் அந்தப் பட்டம் பொருளுடையாதாயிற்று. உம்மிடம் புலியின் குணம் இருப்பதை உம்முடைய கோபம் காட்டியது' என்ற கருத்தைக் குறிப்பாக வெளியிடும் ஒரு செய்யுளைக் கூறி விட்டு அவர் சொக்கம்பட்டியை நீத்துச் சங்கர நயினார் கோயிலுக்குச் சென்றார். அச்செய்யுள் வருமாறு:
(வெண்பா)
"என்றுவரு மென்றுவரும் என்றிருந்தேன் திவ்யகுணக்
குன்றமே கோபங் குறியாதே – மன்றுதனில்
செம்பியன்போல் வாழுஞ் சிவராம தேவமன்னா
அம்புவிமேற் செம்புலிப்பட்டம்."
[கோபம் குறியாதே செம்புலிப்பட்டம் என்று வருமென்றிருந்தேன் என்று கூட்டிப் பொருள் செய்க. குணக் குன்றமென்றது குறிப்பு மொழி. சிவராம செம்புலிச் சின்னணைஞ்சாத் தேவரென்பது ஜமீன்தாரின் முழுப் பெயர்.]
சங்கர நயினார் கோயில் எம்பெருமானிடம் பொன்னம்பலம்பிள்ளை நெடுநாட்களாக ஈடுபட்டவர். அந்த ஸ்தலத்து நாயகரை உத்தரகோசமங்கையிலிருந்து மீட்டவர். அவ்வாலயத்திற் புகுந்து சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்தபோது அவருக்குத் துக்கம் பொங்கி வந்தது. உலக இயல்பை நினைந்து அவர் வருந்தினார். 'இதம் அறியாதவரிடம் ஊழியம் செய்வதைக் காட்டிலும் காவியாடை புனைந்து துறவியாகி விடலாம்; இல்லையேல் அவர் கண்முன்னே இராமல் கப்பலேறி வேற்று நாட்டுக்குப் போய்விடலாம்; அதுவும் இயலாவிட்டால் இறந்து விடலாம்; மறுபிறவியிலேனும் இந்த நிலை வராமல் இருக்கும். கல்லிலே அம்பை எய்து பிளக்க முடியுமா? இங்கிதம் அறியாதவர்களோடு பழகுவது அத்தகையது தான்' என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தே எழுந்தன; அவற்றையே ஒரு செய்யுளுருவத்தில் அவர் வெளியிட்டார்.
(கட்டளைக் கலித்துறை)
"காவிக் கலையிலே யோகப்ப லேறக் கடலிலையோ
ஆவிக்கு மீளப் பிறப்பிலை யோகல்லி லம்புதனை
ஏவிப் பிளப்பது போலே யிதமறி யாதவரைச்
சேவிப்ப ரோசிவ சங்கரராசைச் சிவக்கொழுந்தே."
[கலை - ஆடை. ராசை - சங்கரநயினார் கோயில்; ராஜ புரமென்பதன் மரூஉ.]
சில தினங்கள் சங்கரநயினார் கோயிலில் இருந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை திருநெல்வேலி சென்றார். அங்கே இருந்த ஆறை அழகப்ப முதலியார் அவரை வரவேற்று உபசரித்தார். அவரைக் கண்டு பேசி மகிழ்வதில் முதலியாருக்கு மிக்க விருப்பம் உண்டு. பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் இறந்த பிறகு பொன்னம்பலம்பிள்ளை ஊக்கக்குறைவாக இருப்பதை முதலியார் அறிந்திருந்தார். அவரை நேரில் கண்டபோது முதலியாருக்குப் பழைய நினைவுகளெல்லாம் வந்தன.
"இப்போது உங்கள் ஜமீன் எப்படி இருக்கிறது?" என்று முதலியார் கேட்டார்.
"எங்கள் ஜமீனா? எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? என்னுடைய மகராஜன் எப்போது போனானோ அப்போதே என் ஜீவனும் போய்விட்டதென்றே சொல்ல வேண்டும். இப்போது நடைப் பிணமாகத் தான் இருக்கிறேன்."
"அங்கே இப்போது நீங்கள் ஸ்தானாதிபதியாக இல்லையா?"
"இருந்தேன்; பெயருக்கு மாத்திரம் அப்படி இருந்தேன். அருமை அறியாத இடத்திலே இருப்பதில் என்ன பயன்? அதனால் தங்களைத் தேடி வந்து விட்டேன்."
அந்த வார்த்தைகள் முதலியார் நெஞ்சில் மிக்க இரக்கத்தை உண்டாக்கின; 'இவர் எத்தகைய மனிதர் ! ஆயிரம்பேர் இருந்தாலும் அவர்கள் இவருக்குச் சமானமாவார்களா? இவரை அருகில் வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு தவம் செய்திருக்கவேண்டும்!' என்று எண்ணி வருத்தமுற்றார்.
பொன்னம்பலம்பிள்ளை தம் கருத்தை அமைத்து,
"தானா பதியெனும் போமாத் திரமென் றமிழருமை
ஆனா லறிவது நீமாத் திரமெனக் காதரவு
நானா விதத்திலுங் காணே னுனைமுற்றும் நம்பிவந்தேன்
மானா கராதொண்டை நாடா வழகப்ப மன்னவனே"
என்று பாடலைக் கூறினார்.
முதலியார், "நீங்கள் இங்கே வந்தது என் பாக்கியம். இந்த வீடு உங்களுடையது. சௌக்கியமாக இங்கேயே இருக்கலாம்" என்று அன்பு ததும்பக் கூறினார்; அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் உதவிப் பாதுகாத்து வந்தார்.
அவ்வாறு பொன்னம்பலம்பிள்ளை திருநெல்வேலியில் இருந்த காலத்தில் சொக்கம்பட்டியிலிருந்த சிவராமத்தேவரிடம் பலர் வந்து, "உங்கள் ஜமீன் ஸ்தானாதிபதி அங்கே போய் இருப்பது உங்களுக்கு அகௌரவமல்லவா?" என்று கூறினர். ஜமீன்தார் ஆறை அழகப்ப முதலியாருக்கு அடங்கினவர். ஆதலின் தம்மைப் பற்றி முதலியார் ஏதேனும் தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வதென்ற அச்சம் ஜமீன்தாருக்கே உண்டாயிற்று. ஆதலின் பொன்னம்பலம்பிள்ளையை மீட்டும் சொக்கம்பட்டிக்கு வருவிப்பதற்கு முயன்றார். பிள்ளையின் விருப்பத்தின்படியே திருமலையில் திருப்பணிகள் செய்துகொள்ளலாமென்று சொல்லியனுப்பினார்.
தம் கருத்து முற்றுப்பெறுமென்பதை உறுதி யாக அறிந்துகொண்ட பொன்னம்பலம் பிள்ளை முதலியாரிடம் விடைபெற்றுச் சொக்கம்பட்டி வந்துசேர்ந்தார். பிறகு தம் பொருளை விசேஷ மாகச் செலவிட்டுத் திருமலை ஆண்டவர் ஆலயத்திற் சில திருப்பணிகள் இயற்றுவித்தார். அவற்றை இயற்றிய பின்னர் அவர் மனம் ஒருவாறு ஆறுதலுற்றது.
சொக்கம்பட்டி ஜமீனில் பல குழப்பங்கள் நேர்ந் தன. பட்டத்தின் உரிமைபற்றிப் பல கலகங்கள் நிகழ்ந்தன. பொன்னம்பலம் பிள்ளை அவற்றில் ஊக்கம் கொள்ளவில்லை. முதுமைப் பருவத்தில் அவருக்குத் தெய்வ சிந்தையும் தமிழன்புமே பற்றுக் கோடாக இருந்தன. அவர் 1762-ஆம் ஆண்டு*(கொல் லம் ஆண்டு 937, மாசிமாதம் 7-ஆம் தேதி) சிவபத மடைந்தனரென்று தெரிகிறது.
மதியூகியும் தமிழ்ப்புலவரும் சிவபக்திச் செல் வருமாகிய பொன்னம்பலம் பிள்ளையின் செயல் ஒவ் வொன்றும், 'அவர் சாதாரண மனிதர்களோடு சேர்த்து எண்ணுதற்குரியவரல்லர்; மனிதவர்க்கத் தில் தமக்கென்று தனிச்சிறப்புடைய ஸ்தானத்துக் குரியவர்' என்றே நினைக்கச் செய்யும்.
{குறிப்பு: பொன்னம்பலம் பிள்ளையைப் பற்றி நான் எழுதிய வரலாறுகளுக்கு ஆதாரமாக உள்ளவை 'வடகரை யென்ற சொக்கம்பட்டிப் பாளையப்பட்டுச் சரித்திரம்' என் னும் புத்தகமும் நான் கேள்வியுற்ற கர்ண பரம்பரைச் செய்திகளுமேயாம்.}
21. "எங்கள் பாவம்!"
தென்னாட்டுச் சைவமடங்களில் ஒன்றாகியதும் தமிழ் வடமொழி வித்துவான்கள் பலரையும் சங்கீதத் தில் திறமை பெற்றவர்களையும் ஆதரித்துப் பாது காத்த பெருமை வாய்ந்ததுமான திருவாவடுதுறை யாதீனத்தில் ஏறக்குறைய 200 வருஷங்களுக்கு முன்பு திருச்சிற்றம்பல தேசிகர் என்னும் பெரியார் ஆதீன கர்த்தராக இருந்து விளங்கினார். அவர் சிவஞானமும் தவவொழுக்கமும் உடையவர். அவர் காலத்தில் ஆதீன நிர்வாகங்களை உலகியலறிவும் கணக்கு வழக்குகளில் திறமையும் நம்பிக்கையும் குருபக்தியும் வாய்ந்த தம்பிரான்களே கவனித்து வந்தனர். தலைமையதிகாரத்தையுடைய தம்பி ரானுக்குப் பெரிய காறுபாறு என்னும் பெயர் வழங்கும். அவருக்கு அடுத்தபடியாகச் சின்னக் காறுபாறு முதலிய வேறு பல உத்தியோகங்களுக் குரிய தம்பிரான்கள் இருந்தனர்.
மடத்தில் இவ்வாறு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பிரான்களோடு தமிழ்கற்போரும் வடமொழி பயில்வோரும் சைவசித்தாந்த சாஸ்திரல் கள் பாடம் கேட்போருமாகிய வேறு பல தம்பி ரான்களும் இருந்தனர். அத்தம்பிரான்களுடைய ஒழுக்கமும், சிவசின்னங்கள் விளங்கும் தவக்கோல மும் திருவாவடுதுறையைச் சிவராசதானி யென்றே நினைக்கச் செய்தன.
தம்பிரான்கள் துறவு பூண்டவுடனே மடத்தின் உத்தியோகத்தில் சேர்க்கப் பெறுவதில்லை.அத் தகையவர்களுடைய நிலை படிப்படியாக உயர்ந்து கொண்டுவரும்.பொறுமையும் ஒழுக்கச் சிறப்பும் உடையவர்களே நாளடைவில் சிறந்த உபசாரத்தைப் பெறும் நிலையை அடைவார்கள்.பந்தியிலே உணவு கொள்ளும் தம்பிரான்களுக்கு நடைபெறும் உப சாரங்களில் பல தரங்களுண்டு.உணவுவகையிலும் இலையின் அளவிலும் தொன்னை முதலியவற்றிலும் வேறுபாடுகள் இருக்கும்.பந்தியில் ஒரு தம்பிரானுக் குக் கிடைக்கும் ஸ்தானத்தைக் கொண்டே மடத் தில் அவருக்கு உள்ள மதிப்பின் அளவை உணர்ந்து கொள்ளலாம்.நீண்ட இலையும் பல தொன்னைகளும் சிறந்த அன்னமும் பலவகை வியஞ்சனங்களும் படைக்கப்படும் முதல் வரிசையிலே காறு பாறுத் தம்பிரான் போன்றவர்களே இருந்து உண்ணுவார் கள்.வர வர இலையின் நீளம் குறையும்;வியஞ்சன முங் குறையும்,வேறு வகையான அன்னம் பரிமாறப் படும்.
ஆசிரியரிடத்தில் வந்தடைந்த சிஷ்யன் சுவை முதலியவற்றிலே கருத்தை ஊன்றாமல் எது கிடைத் தாலும் அருந்த வேண்டும் என்பது நூற்கருத்தாத லின் அத்தகைய ஏற்பாடு அமைந்தது போலும்! அந்தச் சோதனையில் தேர்ச்சி பெற்றோர் பிறகு நன் னிலையை அடைவார்கள்.தம்பிரான்களுடைய கூட்டத்துக்குத் திருக்கூட்டம் என்று பெயர். சிறிய குட்டித் தம்பிரான்களைக் குட்டித் தம்பிரான்களென்றும் குட்டியென்றும் வழங்குவது மடத்து வழக்கம்.
முன்னே குறிப்பித்த திருச்சிற்றம்பல தேசிகர் காலத்திலும் பந்தியில் அத்தகைய தராதரங்கள் இருந்து வந்தன.அக்காலத்தில் விக்கிரமசிங்க புரத் தில் உதித்து இலக்கண இலக்கியப் பயிற்சியுடையவ ராக விளங்கிய ஸ்ரீ சிவஞான முனிவர் பல தம்பிரான் களாலே அழைக்கப்பெற்று வந்து திருவாவடுதுறை யிலுள்ள திருக்கூட்டத்தாரோடு ஒருவராக இருந்த னர்.ஆதீனத்திற் சேர்ந்தபோது அவர் இளமைப் பிராயத்தினராக இருந்தனர்.வருஷ அடைவிலே பின் வந்தவர்களுக்குக் கிடைக்கும் முறைப்படி பந்தி யில் அவருக்குக் கடைசி இலைதான் தரப்பட்டது. அந்த இலை அளவில் மிகச் சிறியது;வியஞ்சனங் களிற் சில பரிமாறப்பெறும்;மிகவும் மட்டமான அரிசியும் அன்னமும் பெயரளவில் நெய்யும் படைக்கப் பெறும்.அவருக்கு முன்பு இருந்த சிலரும் நூதனமாக வந்தவர்களாதலின் அத்தகைய உப சாரத்தையே பெற்றனர்.
ஒருநாள் பந்தி நடந்துகொண்டிருந்தது.சிவ ஞான முனிவரும் அவருக்கு முன் இருந்த சிலரும் தாம் பெற்ற உணவை உண்ணமாட்டாதவராகி விழித்தனர்.அன்று அவர்களுக்குக் கிடைத்த அன்னம் அதுகாறும் கிடைத்தவற்றைவிட மிகவும் மட்டமாகப் புளியம் பூவைப் போன்ற நிறமும் வறட் சியும் உடையதாக இருந்தது. அரிசியின் உருவமே தெரியவில்லை.கையில் அதனை எடுத்தால் வாய்க்குள் இட மனம் வரவில்லை. அந்த அன்னமும் நன்றாகப் பக்குவம் பண்ணப்படவில்லை. "இதை யாரப்பா பொங்கினான்?" என்று ஒருவர் கேட்டார். "யாரோ ஒரு கொங்கன்" என்று ஒருவர் விடை பகர்ந்தார். மற்றவர்கள் அதனை உண்ணமாட்டாமல் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தனர். முன் வரிசைகளில் இருந்தவர்களோ நன்றாக உண்ணத் தொடங்கினர். இந்த நிலையில் தமிழ்க் கல்வியுடைய அவர்களில் ஒருவர் தமக்குக் கிடைத்த அன்னத்தைப் பற்றி ஒரு செய்யுள் செய்யத் தொடங்கி,
"கொங்கன்வந்து பொங்கினான்
கோழியரிசிச் சோற்றினை"
என்று முதலடியைக் கூறினார். அடுத்தவர்,
"சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின"
என்று இரண்டாவது அடியை உரைத்தார்.
மூன்றாமவர், "சாப்பாட்டிற் கண் இல்லாமல் அங்கும் இங்கும் பார்க்கிறீரே" என்ற கருத்தையமைத்து,
"அங்குமிங்கும் பார்க்கிறீர்
அமுதினிற்கண் ணில்லையே"
என்று மூன்றாவதடியினைப் பாடினார். அடுத்தபடி சிவ ஞான முனிவர் உட்கார்ந்திருந்தார். நான்காவதடி எஞ்சி நின்றது.
"எங்கள்பாவ மெங்கள்பாவம்
எங்கள்பாவ மீசனே"
என்று அவர் அதனையும் பாடி முடித்தார். முதல் மூன்று அடிகளைச் சொன்னவர்கள் அந்த நான்காவது அடியிலே அமைந்துள்ள கவிச்சுவையைக் கண்டு, "நன்றாக இருக்கிறது !" என்று சிரக்கம்பம் செய்து ஆரவாரித்தார்கள். எல்லோரும் சேர்ந்து,
"கொங்கன் வந்து பொங்கினான்
கோழியரிசிச் சோற்றினைச்
சங்கமங்கள் கூடியே
சாப்பிடத் தொடங்கின
அங்குமிங்கும் பார்க்கிறீர்
அமுதினிற்கண் ணில்லையே
எங்கள்பாவ மெங்கள்பாவ
மெங்கள்பாவ மீசனே"
என்று பாடினர்.
அவர்கள் அங்ஙனம் கவி பாடியதை அந்தப் பந்தியிலே இருந்த தொண்டைமண்டலத்துச் சைவ வேளாளச் செல்வர் ஒருவர் கேட்டார். பந்தி முடிந்த பிறகு சிவஞான முனிவரைக் கண்டு பேசி அவருடைய பேரறிவை யுணர்ந்தனர். அப்பால், "தொண்டை நாட்டுக்கு எழுந்தருளினால் அங்கே தங்கி இருக்கலாம்" என்று வேண்டினர். திருக்கூட்டத்தை விட்டுப் பிரிவதற்கு அம்முனிவருக்கு மனம் வரவில்லை. அவ்வேளாளர் வற்புறுத்தியதோடு பண்டார ஸந்நிதிகளிடமும் தெரிவித்து அனுமதி பெற்று அவரை அழைத்துச் சென்றனர். சிவஞான முனிவர் தொண்டைமண்டலம் சென்று சென்னை, தொட்டிக்கலை, குளத்தூர் முதலிய இடங்களிலும் காஞ்சீபுரத்திலும் இருந்து வந்தனர். அப்போது அவர் இயற்றிய அரிய நூல்களும் உரைகளும் தமிழ்நாட்டின் செல்வங்களாக இன்னும் விளங்குகின்றன. சிவ ஞானபோதத்துக்கு மகாபாஷ்யம் இயற்றிப் பெரும் புகழ்பெற்ற அப்பெரியார் திருவாவடுதுறையாதீன வித்துவானாயினர். பிற்காலத்தில் அவ்வாதீனத்தில் 16-ஆம் பட்டத்தில் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரை, "ஆதீன குல தெய்வம்" என்று பாராட்டுவதுண்டு.
22. ஒருவன் தானா?
சங்க காலத்துப் புலவர்களுள்ளே கபிலரென்பவர் தலைமை பெற்றவர். புலமை நிரம்பிய மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பெருமக்கள் பலரால் அவர் பாராட்டப்பெற்ற பெருமை வாய்ந்தவர். பாரியென்னும் வள்ளலுக்கும் அவருக்கும் இருந்த நட்பு மிகவும் சிறந்தது. பாரியினுடைய வாழ்நாளிலே வேறு எங்கும் செல்லாமல் அவனது ஆஸ்தான வித்துவானாகவே அவர் இருந்து வந்தார்.
பாரியும் கபிலரிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தான்; தன்னுடைய நண்பராகவும் புலவராகவும் மந்திரியாகவும் அவரை எண்ணி ஒழுகிவந்தான். அவனுடைய மகளிர் இருவரும் கபிலருடைய மாணாக்கியர்களாக இருந்து தமிழ் கற்றுவந்தனர்.
பாரியினுடைய குணங்களையும் செயல்களையும் பாடுவதில் கபிலருக்கு ஒரு தனியான மகிழ்ச்சி இருந்தது. பிறரைப் பாடுவதற்கு அவர் மனம் இடங் கொடுப்பதில்லை. பாரியினுடைய கொடைச்சிறப்பைக் குறித்து அவர் பல செய்யுட்களைப் பாடினார்.
கபிலருடைய இணையற்ற பெரும்புலமை தமிழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவருடைய வாக்கினால் ஒரு செய்யுளேனும் பெற வேண்டுமென்று அரசர்கள் தவங்கிடந்தார்கள். பல வேறு புலவர்கள் நூற்றுக் கணக்கான செய்யுட்களைப் பாடியிருப்பினும் அவற்றால் அவர்களுக்குப் பூரணமான திருப்தி உண்டாகவில்லை. கபிலர் பாட்டு ஒன்றுக்கு அவ்வளவும் ஈடாகமாட்டாவென்பது அவர்கள் நினைவு. 'பொய்யா நாவிற் கபில'ருடைய பாட்டைப் பெறுதலைப்போன்ற பாக்கியம் வேறில்லையென்பது புரவலரும் புலவரும் ஒருங்கே ஒப்புக் கொண்ட விஷயம்.
'முந்நூறே ஊர்களையுடைய பறம்பு நாட்டுக்கு இந்தப் பாரி தலைவன். இவனுக்கு இருப்பதோ ஒரு மாலை. சில சிறிய அருவிகளே இவனுடைய நதிகள். இவனுக்கு அமைந்த பாக்கியந்தான் என்ன! உலகுள்ளளவும் மறையாத புகழையல்லவா இவன் அடைந்து விட்டான்! நமக்கு ஆயிரக்கணக்கான ஊர்கள் உள்ளன. எவ்வளவோ மலைகள் நமக்குச் சொந்தம். நதிகள் பல நம் நாட்டை வளம்படுத்துகின்றன. இருந்து என்ன பயன் ! கபிலரது வாய் மொழியால் நம் நாடு வளம பெறவில்லையே! ஆயிரம் ஆபரணங்களை நாம் அணிந்தும் என்ன பயன்? அவருடைய செய்யுள் ஒன்றுக்கு ஈடாகுமா? நம்முடைய மணிமுடிதான் அதை நிகர்க்குமா? அவர் பாடும் பாட்டு உலகுள்ளளவும் நிற்கும். இந்த அலங்காரங்கள் இன்றே அழிந்தாலும் அழியும்' என்று முடியுடை வேந்தர்கள் எண்ணி மறுகினர்.
பாரியின் பாக்கியத்தைத் தமிழுலகு முழுதும் கொண்டாடியது. "கபிலர் மற்றவர்களிடம் ஒரு குணமும் இல்லையென்று எண்ணி விட்டாரோ? பாரியைப் போன்றவர்கள் இந்த உலகத்தில் இல்லாமலா போய் விட்டார்கள்? அவருக்கு என்ன அவ்வளவு பக்ஷபாதம்? நல்லிசைச் சான்றோராகிய அவர் யாரையும் ஒருபடியாகக் கருதவேண்டியவரல்லவா? அப்படியிருக்க, வேறு யாரையும் அவர் பாடாமல் எப்பொழுதும் பாரியின் புகழையே பாராட்டிக் கொண்டிருப்பது நியாயமா? தமிழ்நாடு முழுவதற்கும் அவர் உரியவர். அவர் எங்கே போனாலும் அவருடைய புலமைக்கு உயர்வு அளிக்கப்படும். அவரை யாவரும் போற்றுவார்கள். அவரோ ஒரு மூலையில் ஒரு சிறுகுன்றில் அடங்கி ஒடுங்கி இருக்கின்றார்" என்று சிலர் குறை கூறினர்.
கபிலர் மனம் பாரியின் ஆதரவிலே இன்பம் கண்டதேயன்றிப் பல இடங்களுக்கும் சென்று பலரையும் பார்த்துப் பாராட்ட வேண்டுமென்று விரும்பவில்லை. தமிழ்நாட்டிலேயுள்ள வள்ளல்களும் சிற்றரசர்களும் வேறு சிலரும் அவரை விரும்பி நிற்பது அவருக்கு ஒருவாறு தெரிந்தும் பாரியை ஒரு கணமேனும் பிரிந்து செல்லும் துணிவு அவருக்கு உண் டாகவில்லை. அந்த வள்ளலின் அன்பிலே அவர் மனம் கட்டுப்பட்டு நின்றது.
"பாரியை எப்போதும் பாடிக்கொண்டே இருக் கிறாரே;அவரைப் போல இங்கே வேறு யாரும் இல்லையோ?" என்று சிலர் கூறியது அவர் செவிக்கு எட்டியது. அவர் மனத்துக்குள் சிரித்துக் கொண்டார்; 'இந்த உலகம் இவ்வளவு பேதை மையைஉடையாதா? பாரியின் பெருமையை இவர்கள் முற்றும் உணரவில்லையே!' என்று எண்ணி னார்.'பாரியைப் போன்றவர்கள் இல்லையா?' என்று இவர்கள் கேட்கிறார்கள். ஆம்; உண்டு. அவர் இன்னாரென்று இவர்களுக்குத் தெரிவிப்பது நம் கடமையே' என்று அவர் நிச்சயம் செய்தார்.
ஒரு நாள் வேற்றுநாட்டிலிருந்து வந்த பல புலவர்களும் வேறு செல்வர்களும் நிறைந்திருந்த கூட்டத்திலே கபிலர் புகுந்தார். யாவரும் அவரிடம் மரியாதை காட்டினர். அவர்களிடம் அன்பொழுகப் பேசி உபசரித்தார். பேச்சுக்கு இடையே, "இந்தப் புலவர்கள் பைத்தியக்காரர்கள்" என்று கூறினார். யாவரும் திடுக்கிட்டனர். "ஏன்? எதற்காக இப்படி இவர் கூறுகிறார்? இவரும் ஒரு புலவர் அல்லவா?" என்று பலர் பலவிதமான கேள்விகளைத் தம் மனத்துக்குள்ளே கேட்டனர்.
கபிலர், "ஆமாம்; இவர்கள் பைத்தியக்காரர்களே. பாரியை இப்படி எல்லோரும் சேர்ந்து எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பாரி, பாரி என்று அந்த ஒருவனையே இவர்கள் பாடுகிறார்கள். பாரியை விட்டால் இவர்களுக்கு வேறு ஒருவரும் கிடைக்க வில்லையா?" என்று கேட்டார்.
அந்தக் கருத்தையுடையவர்களும் அதே வினாவை வேறிடங்களிற் கேட்டுக் கொண்டிருந்தவர்களுமான பலர் அங்கே இருந்தனர். அவர்கள் 'என்ன இது? நாம் சொல்லுவதை இவரும் சொல்லுகிறாரே! நாம் இவரை எந்தக் கேள்வி கேட்க எண்ணுகிறோமோ அதையே இவர் கேட்கிறாரே! என்ன விபரீதம்!' என்று எண்ணினார்கள். கபிலர் மேலே என்ன சொல்லப்போகிறாரோவென்று அவர் வாயையே அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"பாரியையே இவர்கள் புகழ்வது எவ்வளவு பேதைமை! பாரிதானா இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான்? வேறு ஒருவரும் இல்லையா?" என்று மேலும் சில வினாக்களைக் கபிலர் வெளியிட்டார். கூட்டத்தினர் அவ்வளவு பேரும் பிரமித்து ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். 'இதற்கு யார் விடை சொல்வது!' என்ற எண்ணமே அவ்வளவு பேர்களுடைய மனத்திலும் எழுந்தது.
"பாரியைப் போன்றவர் ஒருவரும் இல்லையா? இல்லையென்று சொன்னால் அது பொய்யாகும். ஒருவரேனும் இல்லாமற் போய் விடுவாரா? இருக்கிறார்; உண்மையில் இருக்கிறார்."
கூட்டத்தினருக்குப் பின்னும் வியப்பு அதிகமாயிற்று. "யார் அவர்?" என்று சிலர் யோசித்தனர். "அவரை ஏன் இவர் பாடவில்லை?" என்று சிலர் கேட்டனர்.
"ஆம், நான் உண்மையைத் தான் சொல்லுகிறேன். பாரி பாரியென்று பல ஏத்தி ஒருவனையே இச்செந்நாப் புலவர் புகழ்வர். பாரி ஒருவன் மாத் திரம் அல்லன்; இன்னும் கைம்மாறு கருதாமல் உலகு புரக்கும் தன்மையுடையார் ஒருவர் உளர். அவரை நீங்கள் யாவரும் அறிவீர்கள்."
கூட்டத்தினர் யாவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒருவருக்கும் அந்த மூடுமந்திரம் விளங்கவே இல்லை.
"உலகைப் பாதுகாக்கும் மாரி இல்லையா? பாரி ஒருவன்தானா? ஈண்டு உலகு புரப்பது பாரிக்கு மாத்திரந்தானா உரிமை? மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பது" என்று கபிலர் கூறி முடித்தார்.
அலையோய்ந்த கடலிலே திடீரென்று கொந்த ளிப்பு உண்டானது போல மகிழ்ச்சியின் அறிகுறி யாகிய பேரொலி அப்போது எழுந்தது.
"மறுபடியும் பாரியின் புகழ்தானா?" என்று சிலர் முணுமுணுத்தனர். கபிலரைக் குறை கூறியவர் களின் முகங்கள் ஒளியிழந்தன; அவர்கள் ஏமாந்து போயினர். யாவரும் பிரியும் போது, "பாரிக்காகவே கபிலர் பிறந்திருக்கிறார்; கபிலருக்காகவே பாரி பிறந்திருக்கிறான்" என்று பேசிக் கொண்டார் கள்.
கபிலர் அன்று கூறியதே பின் வரும் அவரது செய்யுளில் அமைந்திருக்கின்றது.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீன் டுலகுபுரப் பதுவே." (புறநானூறு, 107.)
23. உயிர் மீட்சி
தமிழ்நாட்டிற் பழங்காலத்தில் நாட்டுப் பிரிவுகள் பலவாறு இருந்தன. இப்பொழுதுள்ள பிரிவு களுக்கும் பண்டைக் காலத்துப் பிரிவுகளுக்கும் வேற்றுமைகள் பல. திருக்கோவலூரும் அதைச் சார்ந்த பகுதிகளும் சேர்ந்து ஒரு சிறு நாடாக இருந்தன; அதற்கு மலையமானாடு என்று பெயர்; அப்பெயர் மலாடு என்று மருவியும் வழங்கும்.
அந்நாட்டைப் பரம்பரையாக ஆண்டுவந்த சிற் றரசர்களுக்கு மலையமான் என்பது குடிப்பெயராக வழங்கிவந்தது. அந்தக் குடியினர் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர். அந்தக் குடியிலே பிறந் தவர்கள் சேர சோழ பாண்டியர்களுடைய படையில் சேனாதிபதியாக இருந்து விளங்கினார். மலையமான் திருமுடிக்காரி யென்பவன் அக்குடியிலே பிறந்த வன்.அவன் பெரிய வீரன். எந்த அரசனுக்குப் படைவன்மை குறைவாக இருக்கிறதோ அவ்வரசன் காரியின் துணையை வேண்டுவான். அவன் துணை யாகப் போனால் அப்படையே வெற்றி பெறுமென்பதில் யாருக்கும் ஐயம் இராது. ஆதலின் முடியுடை வேந்தர்களுக்குத் துணையாகச் செல்லுவதேஅவ னுடைய வாழ்க்கைத் தொழிலாயிற்று. துணையைத் துப்பு என்று புலவர் கூறுவர். மலையமான் திருமுடிக் காரியை,'துப்பின் மலையன்' என்று அவர்கள் சிறப்பிப்பார்கள்.
அவ்வாறு தமக்குப் படைத்துணையாக நின்று வெற்றியை ஈட்டித் தருகின்ற அவ் வீரனுக்கு முடியுடை வேந்தர் ஒரு பெருஞ்சிறப்புச் செய்ய எண்ணினர். அவன் பரம்பரையினர் பெறாத சிறப் பொன்றை அவனுக்குச் செய்ய வேண்டுமென்று யோசித்தனர். சிற்றரசர்கள் முடிபுனைதல் அக் காலத்தில் வழக்கமன்று. அதனையறிந்த வேந்தர்கள், "இவன் சிற்றரசனாயினும் முடிபுனையும் சிறப்பை இவ னுக்கு வழங்குவோம். நம் முடி நம் தலையில் இருத் தற்கு இவன் துணைவலியே காரணம்; ஆதலின் இவனும் முடியணிதல் எல்லா வகையிலும் தக்கதே" என்று தீர்மானித்துக் காரிக்குத் திருமுடி சூட்டினர். அதுவரையில் காரியாக இருந்த அவன் அன்றுமுதல் திருமுடிக் காரியானான்.
மலையமான் குடியினர் வீரத்திற் பெயர்பெற்றது போலவே கொடையிலும் புகழ் பெற்றவர். அவர் களுள் திருமுடிக்காரி பெருங்கொடையாளியாக விளங்கினான். அறிவுடைய புலவர்களுக்குக் கணக் கில்லாத பொருள்களை வழங்கினான். மன்னருக்குத் துணையாகப் போய் வெற்றியடைந்தால் அவர் தரும் பரிசுக்கு அளவேது? அவ்வளவு பரிசையும் அவன் வித்துவான்களுக்கே வழங்கி இன்புறுவான். அவ னுடைய தோள்வலியினால் அரசர் வெற்றிபெறுவர்; புலவர் பரிசு பெறுவர்.
அவ்வாறு தோள்வலிமையும் கொடைவலிமையுமுடைய மலையமான் பரம்பரையினரைக் கண்டால் பகையர சர்கள் அஞ்சி நடுங்குவர். தமக்கு எதிர்வரும் படைக்கு மலையமான் துணையாக இருப்பின் தம் சேனை தோல்வியுறுமென்ற உறுதியினால் மனமழிவர். அத்தகைய நினைவினால் ஒருசாராருக்கு மலையமான் குடியினிடத்து வெறுப்பு இருந்துவந்தது. அங்ஙனம் வெறுப்படைய்தவர்களுள் கிள்ளிவளவன் என்னும் சோழன் ஒருவன்.
அவன் காலத்திலிருந்த மலையமான் இறந் தான். அவனுக்குச் சில இளங்குழந்தைகள் இருந்தன. தன்னைப் போன்ற அரசர்களுக்கு இடியேறு போலத் தோற்றும் மலையமான் குடியை அடியோடு அழித்துவிட வேண்டுமென்ற எண்ணம் கிள்ளிவளவனுக்கு உண்டாயிற்று. மலைய மானது பூண்டே அற்றுவிட்டால் தன் கவலையின்றி இருக்கலாமென்பது அவன் நினைவு. 'அதற்கு இதுவே தக்க சமயம்' என்று அவன் உணர்ந்தான். 'இந்தக் குழந்தைகளே இப்போது மலையமான் குடி யில் இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்தால் பகை மன்னர் குடிக்குப் பயத்தை உண்டாக்குவர். முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே அழித்துவிடு தல் நல்லது. இவர்களைப் பிடித்துவந்து தொலைத்து விட்டால் மலையமான்குலம் வேரோடழிந்துவிடும்' என்று துணிந்து வஞ்சகத்தால் அக்குழந்தை கள்க் கொணரச் செய்தான்.
மலையமான் குழந்தைகள் வந்தனர். அவர் களுடைய தேகக்கட்டையும், இளமையையும் கிள்ளி வளவன் பார்க்கவில்லை. பாம்புக் குட்டிகளைக் கண் டால் மனிதன் எப்படி அஞ்சுவான்! அப்படி அவன் அஞ்சினான். பாம்புக்குட்டியின் அழகிய தோற்றத் தையும் இளமையையும் யார் பார்த்து வியப்பார்கள்? அதன் விஷந்தான் யாவர் கண்முன்னும் நிற்கும். கிள்ளிவளவனுக்கு அச்சிறார்களைக் கண்டபோது அத்தகைய எண்ணமே உண்டாயிற்று. அக்குழந்தை களை யானைக் காலால் இடறச் செய்து உயிர் வாங் கும்படி கட்டளையிட்டுவிட்டான்.
அந்தச் செய்தி எப்படியோ புலவர்கள் காதுக்கு எட்டியது. வீரத்தையும் கொடையையும் சிறப்பித் துப் பாராட்டுதலையே தொழிலாகவுடைய அவர்கள் மலையமான் குடிக்கு விளக்காக இருந்த அக்குழந்தை கள் அவிதலை விரும்பவில்லை. கிள்ளிவளவன் அவர்களை முட்செடியாகக் கண்டான்; அவர்களோ கற்பகத்தின் கீழ்க்கன்றாகக் கண்டார்கள். "ஐயோ! இந்தச் சோழனுக்குக் கண் இல்லையா? இளங் குழந் தைகள்! விரக்குடியில் உதித்த கான் முளைகள்! இவர்களைக் கொல்ல மனந்துணிந்தானே! என்ன செய்வோம்!" என்று துடிதுடித்தனர். "யார் இவ னுக்குச் சொல்வார்கள்?" என்று அவர்கள் நெடு நேரம் யோசிக்கும்போது கோவூர்க்கிழாரென்ற புல வர் பெருமானது ஞாபகம் அவர்களுக்கு வந்தது.
"அவர் முயன்றால் அக்குழந்தைகள் உயிர் பெறுவர்" என்று அவர்கள் நினைத்து அவரை வேண்டினர்.
கோவூர்கிழார் அந்தப் பெருங்கடமையை மேற் கொண்டார் அவர் தமிழுலக முழுதும் மதிக்கப்பெற் றவர். அவருடைய மெல்லிய நாவிலிருந்து எழும் சொற்களுக்குப் படைப்பலம் மிக்க அரசர்களும் அஞ்சுவார்கள்.
மலையமான் மக்களை யானைக் காலால் இடறச் செய்வதற்கேற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன. கிள்ளி வளவன் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தான். உடன் சிலர் நின்றனர். ஊர்முழுதும் அந்தக் கொடிய காட்சியையைக் கண்டு கண்ணீர் விட்டது. கிள்ளிவளவனோ தன் கன்னெஞ்சு உருகாமல் தான் கொண்ட கருத்தை நிறைவேற்றும் துணிவோடு நின் றான். 'மலையமான் குடி இன்றோடு ஒழியும்! புலவர்கள் புகழைப்பெற்று இடையறாமல் வந்த அப் பரம்பரைக்கு முடிவு காலம் வந்துவிட்டது. இக்குழந் தைகள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் நீங்கிவிடும். இவர்கள் உயிர் நீங்கினும் மலையமான் குடிப்புகழ் என்றும் மங்காது; அதுபோல இவ்வளவனுடைய பழியும் நீங்காது. இரண்டும் உலகுள்ளளவும் நிற்கும். தெய்வத்திற்குக் கண் இல்லாமற்போயிற்றே!' என்று அறிவுடையோர் நைந்தனர்.
முன்னே நிறுத்தப் பெற்றிருந்த சிறார்களோ புதிய இடத்தையும் கூட்டத்தையும் பார்த்துப் பயந்து அழுதுகொண்டிருந்தனர்.
அந்த நிலையில் கிள்ளவளவனோடு இருந்த கூட் டத்தினரிடையே ஒரு பரபரப்பு உண்டாயிற்று. மதிப்புள்ள ஒருவர் வருவதாகத் தெரிந்தது. யாவ ரும் விலகி வழிவிட்டனர்; கோவூர்கிழார் வேகமாக வந்து அரசனை அணுகினார்; அந்தப் பக்கத்தில் அரசன் நின்றிருக்கும் காட்சியையும், மற்றோரிடத் தில் மலையமான் குழந்தைகள் அழுதுகொண்டு நிற்கும் கோலத்தையும், வேறொருபக்கம் மதயானை யொன்று காலதூதுவனைப்போலச் சமயம் பார்த்து ஏவுவதற்கு நிற்கும் பாகர்களோடுள்ள கொடுமையை யும் பார்த்தார்.
அழுது அழுது குரல் கம்மிய சிறுவர்கள் யானையுள்ள திக்கை நோக்கினர். அப்போது அவர் கள் அழுகை சிறிது நின்றது. அந்த யானையைப் பார்த்தபோது அவர்களுக்கு விசித்திரமாகத் தோற் றியது. உடனே அழுகை மாறியது. அழுங்குழந் தைக்கு முன்பு பொம்மையை வைத்தால் அதைப் பார்த்து அழுகை ஓய்வது அதன் இயல்பல்லவா?
அதைப் பார்த்தார் கோவூர்கிழார். அவர் கண் ணில் நீர் துளித்தது. அதுகாறமு அழுத சிறார் கள் யானையைக் கண்டு அதன் காட்சியிலே ஒன்றி அழுகை ஓய்ந்தன ரென்பதை யுணர்ந்து அவர்க ளுடைய பேதைமையையும் இளமையையும் நினைந்து இரங்கினார்; வளவனை நோக்கிப் பேசத் தொடங்கினார்.
"மகாராஜாவுக்கு ஒரு விண்ணப்பம். திருச் செவி சாய்த்தருள வேண்டும்" என்று பணிவோடு கூறலானார்.
"இப்பொழுதே சொல்லவேண்டுமா? அரண் மனைக்குள் சென்றபிறகு சொல்லாமே" என்றான் கிள்ளி வளவன்.
"இல்லை. இப்பொழுதே கேட்டருள வேண்டும். இதைக் கேட்டுவிட்டு இப்போது தொடங்கி யிருக்கும் காரியத்தைச் செய்யலாம்" என்றர் புலவர்.
புரவலனாயினும் புலவர் சொல்லை மறுப்பதற் குத் துணியவில்லை. அந்தக் காலத்துப் புலவர் பெருமை அது!
"சரி; சொல்லுங்கள்" என்றான்.
"நீங்கள் பரம்பரையாகப் புகழ் பெற்ற சோழர் குடியில் உதித்தவர்கள். சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் தோன்றியவர்கள். சிபியின் பெரு மையை இன்று இதிகாசம் ஓதுகின்றது. அவன் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடம்பையே அரிந்து கொடுத்தான். பிறர் துன்பத்தைப் போக்கவே தான் துன்பத்தை ஏற்றுக்கொண்டான். அவன் குடியிற் பிறந்த நீங்கள் இத்தகைய காரியத்தை யோசித்தல்லவா செய்யவேண்டும்? இவர்கள் யார்? உங்கள் குடிக்குச் சமானமான குடியினர்களா? அல்லவே. புலமையையே தமக்குச் சொத்தாக உடையவர்களது வறுமையைப் போக்கி ஆதரிக்கும் குடியிற் பிறந்தவர்கள். இவர்களுக்கு வரும் துன் பம் புலவர்களுக்கு வரும் துன்பமே யாகும்."
தன்னுடைய பயத்தினால் அக் குழந்தைகளைப் பகைப் பிண்டமாகக் கருதிய கிள்ளிவளவனுக்குக் கோவூர்கிழார் அவர்களை வள்ளன்மையுடைய குடி யினரென்பதை ஞாபக மூட்டினார். அதுமட்டுமன்று; புலவரைக் காக்கும் குடியை அழித்தால் புலவர் கூறும் பழிக்கு ஆளாக நேருமென்ற அச்சத்தையும் அவர் குறிப்பாக உண்டாக்கினார்; 'ஏதேது! இந்தக் குடியினரால் விளையும் பயம் போக வேண்டுமென்று எண்ணி ஒரு காரியம் செய்தால் புலவர்கள் வாயில் விழவேண்டும் போலிருக்கிறதே! அவர்கள் பழிக்கு ஆளாவதைவிட இவர்கள் பகைக்கு ஆளாவதேமேல்' என்ற எண்ணங்கூட அவன் மனத்தில் உண்டாயிற்று.
கோவூர்கிழார் மேலும் சொல்லத் தொடங்கினார்: "உங்கள் குடிக்குத் தகாத காரியம் இது; உங்க ளுடைய தண்டனைக்குரியவர்களும் அல்லர் இவர்கள். இவை கிடக்கட்டும். இந்தக் குழந்தைகளைச் சற்றுக் கண்திறந்து பாருங்கள். முகத்தில் பால் வடிகின றது. தம்மை இப்போது கொல்லப் போகிறார்க ளென்று அவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு பச்சைப் பசும் பாலகர்கள். ஏதோ புதிய இடமாக இருக்கிறதே என்று வெருவி அழுகிறார்கள். அதற் குள் அந்த யானையைப் பார்த்தவுடன் அழுகை போய்விடுகிறது. உயிரை வாங்க வந்த யானையை இவர்கள் விளையாட்டுப் பொருளாக நினைக்கிறார்கள். இவ்வளவு பேதைமையை யுடையவர்கள்! பாவம்! பச்சைப் பசுங்கொழுந்துகள். இவர்களையா நீங்கள் கொல்லத் துணிந்தீர்கள்! இதோ பாருங்கள் இவர் கள் நிலைமையை."
கிள்ளிவளவன் பார்த்தான். கோவூர்கிழார் கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சிலே உறைத் தன. "பாவம்! இளங்குழந்தைகள்" என்று அருகி லுள்ளார் முணுமுணுக்கும் ஒலியும் காதிலே பட்டது. அதுகாறும் முட்சொடியாகப் பாவித்திருந்த அவர் களது இளமை அப்பொழுதுதான் அவன் கண் ணிலே பட்டது. அவன் மனத்திலே ஒரு குழப்பம் உண்டாயிற்று. அதை அவனது முகக்குறிப்பால் புலவர்பிரான் உணர்ந்துகொண்டார்; "ஏதோ நான் சொன்னேன். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். அப்பால் உங்கள் இஷ்டம்போல் செய் யுங்கள்" என்று விநயமாகக் கூறினார்.
கிள்ளிவளவன் மனம் உருகியது. "நிறுத் துங்கள். அந்தக் குழந்தைகளை விட்டுவிடுங்கள்" என்று அரசனது கட்டளை பிறந்தது. கோவூர் கிழார் விரைவாக ஓடி அந்த இளஞ்சேய்களைக் கட்டி யணைத்துக் கொண்டார். ஆனந்தத்தால் அவர் கண்களில் நீர் பெருகியது. அந்தச் சிறுவர்கள் யாரோ ஒரு புதிய மனிதர் தம்மை யணைப்பதனால் பயந்துபோய் அழுதனர். அழுதால் என்ன? அவர் தம் உயிர்கள் அன்று காலன் வாயிலிருந்து மீண் டன. {புறநானூறு, 46-ஆம் செய்யுளிற் கண்ட செய்தியை விரித்து எழுதியது இது.}
24. தாய் நாடு
பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும் பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும். மொழிக்குத் தெய்வமாகிய கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரி யோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னை யாக வணங்கி வருவது நம் நாட்டினர் வழக்கம்.
பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட் டினிடத்தே அன்புகொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களுக்கு இருந்து வருகின்றது. காப்பி யங்களில் கடவுள் வாழ்த்துக்குப்பிறகு நாட்டுப் படலம் சொல்லப்படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும்.
மனிதராகப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில்,
"சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது"
என்பதன் விசேட வுரையில், பரிமேலழகர் 'ஆண்மை யுடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கட் சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதற் றுணிவினரன்றிச் சாதற் றுணிவினராவர்; ஆகவே அவர்க் குப் பெரும்படை உடையுமென்பதாம்' என்று எழுதியிருக்கின்றார். பலத்திற் குறைந்த வீரர்களும் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்க ளென்ற செய்தி அவ் வுரையினால் தெளிவாகின்றது. உயிரிடத்தே உள்ள பற்றிலும் தாய் நாட்டினிடத்து வீரர்களுக்குப் பற்று மிகுதி யென்பதை இதிலிருந்து உணரலாம்.
நக்கீரரென்னும் நல்லிசைப்புலவர் தம்முடைய ஊராகிய மதுரையைச் சிலகாலம் நீங்கிச் செல்ல நேர்ந்தது. அப்பொழுது அவர்,
"என்றினி மதுரை காண்பேம்
எப்பகல் சவுந்த ரேசன
தன்றிரு வடிகள் காண்பேம்
தாயையெஞ் ஞான்று காண்பேம்"
என்று கூறி வருந்தினாரென்று சீகாளத்திப்புராணம் இயம்பும். அப் புலவர் தம் நாட்டைப் பிரிந்துசெல் வதனால் மிக்க வருத்தத்தை அடைந்தாரென்பதையே அவ்வரலாறு புலப்படுத்துகிறது.
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் ஒரு பாண்டி நாட்டுப் புலவர். அவர் பெயர் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பது. அவர் கடவுள் வணக்கசெ செய்யுட்களோடு நாட் டுக்கும் வணக்கம் செய்யும் செய்யுளொன்றைப் பாடி யுள்ளார்.
"ஆவியந் தென்றல் வெற்பின்
அகத்தியன் விரும்புந் தென்பால்
நாவலந் தீவம் போற்றி
நாவலத் தீவந் தன்னுள
மூவர்கட் கரியான் நிற்ப
முத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றி ருககும்
பாண்டிநன் னாடு போற்றி"
என்பது அப் பாடல்.
தமிழ்ப் பிரபந்தங்களில் ஒருவகையாகிய குற வஞ்சிகளில் குறத்தி தான் பிறந்த நாட்டுவளம் கூறு வதாக ஒரு பகுதி உண்டு. அப்பகுதியைப் படிப் பாருக்கு அக்குறமகளிருக்கும் தாய் நாட்டன்பு சிறப்பாக அமைந்திருந்ததென்பதைப் புலவர்கள் புலப்படுத்திச் செல்லும் முறை வெளியிடப்படும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற விரிந்த அன்புடைய பெரும்புலவர்களும் தம்முடைய தாய் நாட்டின்கண் ஒரு தனி யன்பை வைத்திருந்தார்கள். தாம் தாம் மேற்கொண்ட பொருளுக்கு ஏற்பப் பல நாடுகளையும் வருணிக்கும் ஆற்றலுடையவர்களாயி னும் தாய் நாட்டன்பு அவர்கள் உள்ளத்துள் இருந்து வந்ததற்குரிய அடையாளங்கள் அவர்கள் வாக்கினிடையே இருத்தலைக் காணலாம்.
பரதன் தன் நாட்டைக் கடந்து சித்திர கூடத்தை நோக்கிச் செல்கிறானென்ற செய் தியை மகா கவியகிய கம்பர்,
"காவிரி நாடன்ன கழனி நாடொரீஇ"
என்று புலப்படுத்துகின்றார். தம்முடைய தாய்நாடா கிய சோழநாட்டை அங்ஙனம் சிறப்பித்தலால் அவ ருடைய நாட்டன்பு வெளியாகின்றது. பின்னும், அனுமன் சஞ்சீவி மலையைத் தேடிச்சொல்கையில் பல நாடுகளைக் கண்டு சென்றானென்று சொல்கின் றார். அங்கே ஒரு நாட்டை அனுமன் பார்த்துச் சென்றா னென்பதை,
"பொன்னிநாட் டுவமை வைப்பைப்
புலன்கொள நோக்கிப் போனான்"
என்று தெரிவிக்கின்றார். அங்கே ஏதோ ஒரு நாட் டின் பெருமையைச் சுருக்கமாக்க் குறிக்க வந்த கம்ப ருக்கு அவரது தாய்நாடே உவமையாக முன்வந்து நிற்கின்றது.
சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் ஒவ்வொரு நாயன்மாருக்கும் உரிய நாட்டையும் ஊரையும் சுருக்கமாகக் கூறிச் செல்கின்றார். சில இடங்களிற் சிறிது விரிவும் உண்டு. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலோ அந் நாயனா ருடைய வரலாற்றைச் சில செய்யுட்களாலே சொல்லி அதற்கு முன்பு பல செய்யுட்களால் தொண்டை நாட்டின் வருணனையை விரிவாகச் சொல்லுகின்றார். தாம் பிறந்த தாய்நாடாகிய தொண்டைநாட்டைப் பாராட்டுவதில் அவருக்கிருந்த ஊக்கத்தை அந்த வருணனைகள் நன்றாக விளக்குகின்றன.
கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாசாரியார் தம் நூலில் தொண்டை நாட்டையும் காஞ்சிமா நக ரத்தையும் வருணிக்கின்றார். எல்லா நாடுகளிலும் கோயில் கொண்டுள்ள முருகக்கடவுள் காப்பியத் தலைவனாக இருப்ப, அக் காப்பியத்தில் தொண்டை நாட்டைச் சிறப்பிப்பதற்கு முக்கியமான காரணம் அவருடைய தேசாபிமானமே ஆகும்.
வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில் நாட்டு வரு ணனை காணப்படவில்லை; ஆயினும் அந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் கூறவந்த அவர் குமாரராகிய வரந் தருவார் என்பவர் அதன்கண் திருமுனைப் பாடி நாட் டைச் சிறப்பித்துப் பல செய்யுட்கள் பாடியுள்ளார். தமிழ் நூற் சிறப்புப் பாயிரங்களில் அத்தகைய நாட்டு வருணனையின் விரிவு பெரும்பாலும் இல்லை. வரந்தரு வார் தம் தந்தையாரைச் சிறப்பிக்கப் புகுந்த விடத் தில் தாய் நாட்டையும் பாராட்டி யிருத்தல் அவ ருடைய தாய்நாட்டன்பின்மிகுதிக்கு ஓர் அடை யாளமாகும். அச் சிறப்புப் பாயிரத்தில் வில்லிபுத்தூ ராழ்வாரைப் பாரதம் பாடும்படி கொங்கர் குலபதி வரபதி யாட்கொண்டான் கேட்டுக் கொண்டா னென்ற செய்தி வருமிடத்தில் அவன் கூற்றாக,
"..... .... .... .... நீயும் நானும்
பிறந்ததிசைக் கிசைநிறபப் பாரதமாம் பெருங்கதையை
... .... .... ..... செய்க என்றன்"
என்பதை அமைக்கின்றார். 'நாம் பிறந்த நாட்டுக் குப் புகழ் உண்டாகும்படி நீங்கள் பாரதத்தை இயற்றவேண்டும்' என்று அவன் கூறினானாம். பார தம் இயற்றுவதனால் நாட்டுக்கு உண்டாகும் புகழை அவன் விரும்பினானென்ற கருத்து அவனது நாட் டன்பைப் புலப்படுத்துகின்றதன்றோ?
தாய்நாட்டைப் பிரிந்திருத்தல் மிக்க துயரத்தை உண்டாக்கும். இது முற்கூறிய நக்கீரர் வரலாற்றாலும் அறியப்படும். அதனால்தான் பண்டைக் கால முதல் ஒருவனை அவனது நாட்டைவிட்டு ஓட்டிவிடு தல் ஒரு பெரிய தண்டனையாக விதிக்கப்பட்டு வரு கின்றது. திருக்குற்றாலப் புராணத்தில் பாதகங்கள் செய்த ஒருவனை ஊரினர் நாட்டைவிட்டு ஓட்டி விட் டனரென்று ஒரு வரலாறு வருகின்றது. சிதம்பர புராணத்தில், பாண்டி நாட்டிற் பிறந்தவன் ஒருவன் செய்த குற்றத்துக்காக அந் நாட்டினின்றும் ஓட்டப் பட்டானென்ற செய்தியொன்று உண்டு. இவையும் இவற்றைப் போன்ற வேறு வரலாறுகளும் முன் கூறிய செய்தியை விளக்கும்.
ஆகவே, தாய் நாட்டன்பு மக்களுக்கு இருத்தல் இயல்பென்பதும் அதனைப் பாராட்டுதல் புலவர்க ளிடத்தும் பிறரிடத்தும் காணப்படுவ தென்பதும், தாய் நாட்டைப் பிரிதல் துன்பத்துக் கிடமாவ தென் பதும் இதுகாறும் தெரிவித்த செய்திகளால் அறியலாகும்
-----------------------------------------------------------
This file was last updated on 30 November 2011.
Feel free to send corrections to the webmaster.