நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
பாகம் - 3
உ.வே.சாமிநாதையர் எழுதியது.
nalluraikkOvai - 3
of u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
P. Thulasimani and Thamizhagazhvan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நல்லுரைக்கோவை (கட்டுரைகள்)
பாகம் -3
உ.வே.சாமிநாதையர் எழுதியது.
உ
கணபதி துணை
Source:
நல்லுரைக்கோவை (மூன்றாம் பாகம்)
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது.
127,லாயிட்ஸ் ரோட், சென்னை-5
உரிமைப்பதிவு] 1952 [விலை ரூ. 1-4-0
நான்காம் பதிப்பு 23-2-52
ஸ்ரீ தியாகராச விலாஸ வெளியீடு
Kabeer Printing Works, Madras (1847)
-----------
குறிப்பு
இதன் முதற் பதிப்பு 1938 - ம் ஆண்டு என் தந்தையாரவர்களால் வெளி வந்தது. அவர்கள் எழுதியுள்ள முகவுரையால் இந்நூலைப்பற்றிய விவரங்கள் நன்கு தெரியவரும். ஸர்வகலாசாலை அதிகாரிகளும் ஆங்காங்குள்ள பாடசாலைத் தலைவர்களும் அபிமானிகளும் இப்புத்தகத்தைத் தங்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் வழக்கம்போலவே பரவச்செய்து எனக்கு ஊக்கமளித்து வருவார்களென்று நம்புகிறேன்.
சென்னை இங்ஙனம்
15-1-47 S. கலியாணசுந்தரையர்.
-------------
உ
முகவுரை
நல்லுரைக் கோவையின் மூன்றாம் பாகமாகிய இந்நூல், முன்னரே வெளிவந்த இரண்டு பாகங்களைப் போலவே கலைகள், சரித்திரம், பழைய வரலாறுகள் சம்பந்தமான பதினைந்து கட்டுரைகள் விரவத் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றுள் திவான் ஸர். அ. சேஷையா சாஸ்திரியார், கச்சியப்பனை உதைத்தகால் என்னும் இரண்டும் சுதேசமித்திரன் விஜய தசமி மலர்களிலும், மூப்பனார் தேசத்து ராஜா வென்பது ஜயபாரதி வாரப் பத்திரிகையிலும், அபசாரத்திற்கு உபசாரமென்பது ஜோதியிலும், பெண்கள் கடமையென்பது சாரதா ஸ்திரீகள் சங்க மலரிலும், ஒரு குமரன் என்பது ஆனந்தவிகடன் தீபாவளி மலரிலும் வெளிவந்தவை. 'பண்டைத் தமிழர் இசையும் இசைக் கருவிகளும்' என்பது கோடைக்காலச்சங்கீதப் பள்ளிக்கூடத்திலும் 'இந்திய இலக்கியக் கழகம்' என்பது பாரதீய ஸாஹித்ய பரிஷத்திலும் செய்த உபந்யாஸங்கள். ஏனையவை கலைமகளில் வெளிவந்தவை.
வசன நூல்களிலும் பழைய வரலாறுகளிலும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது விருப்பம் அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இதனை யறிந்த அன்பர்கள் சிலர் வற்புறுத்தியபடி இத்தகைய வசனத் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. தமிழ் நாட்டாருடைய ஆதரவு இவற்றிற்குக் கிடைக்குமென்பதே எனது நம்பிக்கை.
'தியாகராஜ விலாஸம்' இங்ஙனம்
திருவேட்டீசுவரன் பேட்டை வே. சாமிநாதையர்
1-4-38
-----------
பொருளடக்கம்
1. கூத்தரும் குலோத்துங்கனும்
2. அழையா விருந்து
3. திவான் ஸர்.அ.சேஷையா சாஸ்திரியார்
4. மாணாக்கர் விளையாட்டுக்கள்
5. மூப்பனார் தேசத்து ராஜா
6. பண்டைத் தமிழர் இசையும் இசைக் கருவிகளும்
7. அன்னம் படைத்த வயல்
8. அழைத்த காரணம்
9. இந்திய இலக்கியக் கழகம்
10. இன்னும் அறியேன்!
11. கச்சியப்பனை உதைத்த கால்
12. திருமலைராயன் பட்டினத்தில் ஏடு தேடியது
13. அபசாரத்திற்கு உபசாரம்
14. பெண்கள் கடமை
15. ஒரு குமரன்
-------------
நல்லுரைக்கோவை : மூன்றாம் பாகம்
1. கூத்தரும் குலோத்துங்கனும்
முற்காலத்திலிருந்த சோழ அரசர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றி வருவதை ஒரு முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுள் விக்கிரம சோழன் என்பவன் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரைத் தன் அவைக்களப் புலவராக நியமித்து உபசரித்து வந்தான். கூத்தர் அம்மன்னனுடைய அன்புக்கு இருப்பிடமாகி யாவராலும் மதிக்கப்பெற்று வாழ்ந்து வந்தார். விக்கிரம சோழன் அத்தகைய கவிஞர் ஒருவர் தனக்கு வாய்த்திருப்பதை ஒரு பெறும் பேறாக எண்ணி மகிழ்ந்தான். தான் அவராற் பயன் பெறுவதோடு தன் குமாரனாகிய குலோத்துங்கனும் இளமைக்கால முதலே அப்பெரியாருடைய நல்லுரைகளைக் கேட்டுச் சிறந்த அறிவுடையவனாகலாமென்பது அவனுடைய கருத்து. அதன்படியே ஒட்டக்கூத்தரிடத்தில் இளமையிலேயே மாணாக்கனாக ஒப்பிக்கப் பட்டவன் இரண்டாங் குலோத்துங்க சோழன்.
அக் குலோத்துங்கன் முடிபுனைந்து சக்கரவர்த்தியான பிறகும் கூத்தருக்கு மாணாக்கனாகவே இருந்து வந்தான். பலகாலம் பழகி அவருடைய சிறந்த கவித்துவத்தை நன்கு உணர்ந்தவனாதலின் அவரது மனம் கோணாமல் நடந்து வந்தான். தமிழ் மொழிப் பரப்பைத் தம் அறிவினால் ஆண்டுவந்த அக்கவிச் சக்கர வர்த்தியின் பெரும்புலமையையும் தமிழ்நிலப் பரப்பைத் தன் ஆணையால் ஆண்டுவந்த புவிச் சக்கரவர்த்தியின் பேரன்பையும் தமிழ்நாட்டார் உணர்ந்து வியந்தனர்.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவன் அவைக்களத்துப் பெரும் புலவராகவும் விளங்கினார். ஆசிரியராக இருத்தலின் கூத்தருக்குத் தலைமையும், அரசனாக இருத்தலின் குலோத்துங்கனுக்குத் தலைமையும் இருந்தன. இரண்டு முறையாலும் அவர்களுக்குள் அன்பும் பற்றும் வளர்ந்து வந்தனவேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை.
கூத்தர் குலோத்துங்கனுக்கு ஞானத் தாயாக விளங்கினார்; அதனால் அவனை அவர் பிள்ளையாக வைத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார்; உலாவொன்றையும் இயற்றினார்; இவற்றையன்றி நாள்தோறும் ஒவ்வொரு செய்யுள் கூறி அவனை வாழ்த்தி வந்தார்.
இங்ஙனம் தன்னை அரசனென்ற முறையிற் பல படியாகக் கவிச்சக்கரவர்த்தி பாராட்டி வருதலை அறிந்த குலோத்துங்கன், 'தமிழ் நயங்களை வெளியிடும் இந்நூல்களாற் புகழப் பெறுவது நம் பாக்கியம்' என்று எண்ணினான். தன்னை அவ்வாறு புகழும் ஆசிரியரை வணங்கி ஒரு பாட்டேனும் இயற்றி அவர்பால் தனக்குள்ள நன்றியறிவைப் பலரும் அறியும்படி செய்யவேண்டுமென்பது அவனது உள்ளக் கருத்து. அதற்குரிய செவ்வியை எதிர்பார்த்திருந்தான்.
வழக்கம்போல் ஒருநாள் அரசவை கூடியிருந்தது. நியாய சபையினராகிய அறங்கூறவையத்தினரும் மந்திரிகளும் பிற அதிகாரிகளும் தங்கள் தங்களுக்குரிய இருக்கைகளில் இருந்தனர். புலவர் பலர் ஒரு வரிசையில் களி துளும்பும் முகங்களோடு உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்குத் தலைவராகக் கூத்தர் அமர்ந்திருந்தார்.
நாள்தோறும் சொல்லும் வழக்கப்படி ஒரு புதிய கவியை அன்று ஒட்டக்கூத்தர் சொல்லத் தொடங்கி,
"ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் றரித்த பிரான்"
என்று சொல்லிச் சிறிது நிறுத்தினார். உடனே தொடர்ந்தாற்போல சிங்காதனத்திலிருந்து,
"...............என்றுநித்த*நவம்
பாடுங் கவிப்பெருமான்"
என ஓர் ஒலி கேட்டது, எல்லோரும் நிமிர்ந்து அங்கே பார்த்தார்கள். என்ன வியப்பு! சோழ மன்னன். தன் ஆசிரியர் பாடலின் பிற்பகுதியைப் பாடுகிறான் :
"...............என்றுநித்த*நவம்
பாடுங் கவிப்பெரு மானொட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவாரே"
என்று முடித்து நிறுத்தினான். சபையோர் யாவருக்கும் மயிர்க்கூச்செறிந்தது.
-----------------
*நவம் பாடுதல் - புதிய செய்யுளைப் பாடுதல்.
புலவர்கள் தம் காதையும் கண்ணையும் நம்பவேயில்லை. ஒட்டக்கூத்தர் தம்மையே
மறந்துவிட்டார். சோழவரசனோ நெடுநாளாக எண்ணியிருந்த ஓர் அரும்பெருங் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி முகத்தே தோன்றக் குறுநகையுடன் வீற்றிருந்தான்.
"உண்மையா இது? அரசரா பாட்டுச் சொன்னார்? கூத்தருடைய பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்கனென்றல்லவோ சொல்லுகிறார்!" என்று ஒவ்வொருவரும் தமக்குள் வினாவிக்கொண்டனர்.
ஒட்டக்கூத்தர் தம்முடைய உணர்வு வரப்பெற்று, 'எதிர்பாராதபடி மன்னர்பிரான் இங்ஙனம் வாய் மலர்ந்தருளக் காரணம் என்ன?" என்று பணிவோடு கேட்டார்.
"காரணமா? உலகம் அறிந்ததுதானே? நான் தங்களுடைய மாணாக்கன். தங்களிடம் நான் கற்றுக் கொண்டதன் பயனையும் எனது நன்றியறிவையும் ஒருவாறு தெரிவிக்க எண்ணினேன்" என்றான் வேந்தன்.
"நான் ஒரு புலவன்தானே? என்னை இப்படிச் சொல்லலாமா? நீங்கள் முடிமன்னரல்லவா?" என்றார் புலவர்பிரான்.
"ஆனாலும் நான் தங்கள் மாணாக்கன்தானே? என்னைப் பலவாறு பாராட்டி உலகமுள்ள்ளவும் என் புகழ் நிலைத்திருக்கும்படி செய்யும் தேவரீருக்கு நான்
என்ன கைம்மாறு செய்யமுடியும்? இந்த ஒரு செய்யுளைத் தாங்கள் பெரிதாகப் பாராட்டுகிறீர்களே! இதிலும் தங்கள் அடியைப் பின்பற்றித்தானே நான்
பாடினேன்? எனக்குத் தமிழ் விஷயத்தில் தனித் தலைமை ஏது?" என்று அரசன் கூறித் தன் பணிவையும் நன்றியறிவையும் புலப்படுத்தினான். ஒட்டக்கூத்தரிடத்தில் அவனுக்கிருந்த அன்பை அதுகாறும் ஓரளவு யாவரும் அறிந்திருப்பினும் அன்று மிகவும் நன்றாக அறிந்து கொண்டனர்.
பின்பு ஒருநாள் குலோத்துங்கன் தன் அரண்மனையில் உணவருந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் வாயில் ஒரு சிறு கல் அகப்படவே அவனுக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. அரசனுக்கு ராஜஸகுணம் இயல்பல்லவா?
"இவ்வாறு கவனமில்லாமல் சமைத்த சமையற்காரனை வேலையிலிருந்து தள்ளிவிட வேண்டும்" என்று மன்னன் உத்தரவிட்டான். அவனது கட்டளைப்படியே அச்சமையற்காரன் வேலையினின்றும் விலக்கப்பட்டான். பலகாலமாக அரசனுக்கு ஊழியம் புரிந்த அவன் தன் குற்றத்தை நினைந்து வருந்தி அதிகாரிகளிடம் கெஞ்சியும் அவர்கள் இரங்கவில்லை. அரசன் ஆணைக்கு மேலும் ஓர் ஆணை யுண்டோ?
சமையற்காரன், 'இனி என் செய்வது!' என்று கவலையோடு யோசித்தான்; 'அரசனது ஆணைக்கு மேலே ஒருவர் வார்த்தையும் செல்லாதே!' என்று எண்ணி வருந்தினான். திடீரென்று ஒட்டக் கூத்தருடைய நினைவு அவனுக்கு வந்தது. உடனே ஓடிச்சென்று கண்ணீர் ஆறாகப் பெருக ஒட்டக் கூத்தரது மாளிகையினுள்ளே புகுந்து அவர் காலடியில் அவன் கதறிக்கொண்டு வீழ்ந்தான்; "உங்களைத்தவிர எனக்கு வேறு கதியில்லை. இவ்வளவு காலம் சக்கரவர்த்திக்கு ஊழியம் செய்துவந்தேன். என் தலைவிதி குறுக்கே நின்றதால் இன்று என் வேலை போயிற்று. நீங்களே அடியேனைக் காப்பாற்றவேண்டும். சக்கரவர்த்தியின் கோபத்தை உங்களை யன்றி வேறு யாராலும் தணிக்க முடியாது" என்று முறையிட்டான். அவனுடைய முறையீடு கூத்தருடைய உள்ளத்தை உருக்கியது. நடந்தவற்றை அவன் வாயிலாக அவர் அறிந்தார்; "அரசருடைய உணவென்றால் கவனமாக இருக்க வேண்டாமா? இவ்வளவு குடிகளுக்கும் அவர் உயிரல்லவா?" என்று கேட்டார் கூத்தர்.
"பெருமானே, நான் செய்தது பிழை. அதற்கு என் தலைவிதியை நொந்துகொள்வதை யன்றி வேறு வழியில்லை. பெரியவர்கள் இந்த ஏழையடிமையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்" என்று மீண்டும் கதறினான் அவன்.
கூத்தர், "சரி; நீ வீட்டுக்குப் போ. என்னால் ஏதாவது முடியுமானால் செய்கிறேன்" என்று சொல்லி அவனை அனுப்பினார்.
சில தினங்கள் சென்றன. ஒருநாள் மாலையில் அரசனும் புலவரும் மகிழ்ச்சியோடு தனியே பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். இடையே உணவைப்பற்றிய பேச்சு வந்தது. அதுதான் சமயமென்றறிந்த ஒட்டக்கூத்தர், "மகாராஜாவுடைய மடைப்பள்ளியில் ஏதேனும் மாறுதல் உண்டோ?" என்று விசாரித்தார். "வழக்கமாக இருந்த ஒரு சமையற்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்" என்றான் அரசன்.
கூத்தர்: என்ன காரணமோ?
அரசன்: மடையன்; சோற்றிற் கல்லும் மண்ணும் இருப்பதாக் கவனியாமலிருந்தான்.
கூத்தர்: அவன் தொழிலாலும் மடையன்தானே! மகாராஜா இந்த சிறு குற்றத்தைப் பெரிதாக எண்ணலாமோ? நாங்களாவது கல்லும் மண்ணும் இருந்தால் கஷ்டப்படுவோம். மாகாராஜாவுக்கு அவற்றைச் சாப்பிட்ட பழக்கம் உண்டே!
அவர் சொல்லுவதன் கருத்து அரசனுக்கு விளங்கவில்லை; "என்ன! எனக்கு எப்படி அது பழக்கம்?" என்று வியப்போடு அவன் கேட்டான்.
"பாரிய மலைகளையும் மண்ணையும் விழுங்கிய பழக்கம் மாகாராஜாவுக்கு உண்டே! அது மறந்து போயிற்றா?" என்று கவிச்சக்கரவர்த்தி சொல்லி விட்டு உடனே,
*"மீனகம் பற்றிய வேலையை மண்ணையவு வெற்படங்கப்
போனகம் பற்றிய மாலலை யோபொருந் தாவரசர்
கானகம் பற்றக் கனவரை பற்றக் கலங்கள்பற்ற
வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனுதுங்கனே"
என்று ஒரு செய்யுளைப் பாடினார். குலோத்துங்கனுக்கு அவர் கருத்து விளங்கி விட்டது.
-----
* பகையரசர்கள் உனக்கு அஞ்சிக் காட்டை யடையவும் பெரிய மலைகளை யடையவும் கடல் கடந்து புறநாடுகளுக்குச் செல்லும்பொருட்டுக் கப்பலை யடையவும் உயிர் நீங்கி மேலுலகமடையவும் கூர்மையான வேலைவிட்ட குலோத்துங்கனே! மீன்கள் உள்ளே வாழும் பொருட்டுப் பற்றிய சமுத்திரத்தையும் பூமியையும் அந்த மலைகள் யாவற்றையும் உணவாகப் பற்றிய திருமால் நீயல்லவா?
அரசர்களைத் திருமாலின் அம்சமாக எண்ணுவது பெரியோர் வழக்கம் அதனைப் பின் பற்றித் திருமால் செய்த செயல்களை யெல்லாம் அம்மன்னர்கள் செய்தனவாகப் பாடுவர் புலவர். இந்தச் செய்யுளிலும் ஒட்டக் கூத்தர் அங்ஙனம் பாடியிருக்கிறார். "நீ முன்பு சமுத்திரத்தையும் மண்ணுலகத்தையும் மலைகளையும் உணவாக உண்ட திருமாலல்லவா?" என்ற கருத்து இப்பாடலில் அமைந்துள்ளது; 'இவ்வாறு மண் பரப்பையும் மலைகளையும் உணவாக உண்ட நீ இப்பொழுது மண்ணும் சிறு கல்லும் உணவில் இருந்தனவென்று சினங்கொள்ளலாமா?' என்ற குறிப்பும் வெளிப்படுகின்றது.
சோழமன்னன் அந்தப் பாட்டின் நயத்தில் ஈடு பட்டான். ஒட்டக்கூத்தருடைய சாதுர்யத்தை உணர்ந்து வியந்நான். அவருடைய திருவுள்ளத்தில் மடையன்பாற் கருணை யுண்டாயிருத்தல் புலப்பட்டது. 'ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங்
குலோத்துங்க சோழ'னாகிய தான் அப்புலவர் பிரானுடைய குறிப்பறிந்து நடத்தல் கடமையென்று துணிந்தான்.
" தங்கள் உள்ளக் குறிப்பை உணர்ந்தேன். இன்றிரவே அவன் நம் அரண்மனையில் மீட்டும் பணி செய்யத் தொடங்குவான். தாங்களும் இன்றிரவு அரண்மனையில் விருந்துண்டு மகிழவேண்டும்" என்று அன்போடு அரசன் புகன்றான்.
வேலையினின்றும் விலக்கப்பட்ட சமையற்காரன் அன்றிரவு சமைத்த தமையல் மன்னனுக்காகவா, அன்றிப் புலவருக்காகவா என்பதை யாரேனும் வரையறுத்துச் சொல்ல முடியுமா?
---------------------
2. அழையா விருந்து
இராமநாதபுரம் அரசராக இருந்து புகழ்பெற்ற ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதியவர்களை அறியாத தமிழர் இரார்; சற்றேறக்குறைய 50 வருஷங்களுக்கு முன்பு ஒருமுறை அவர் திருவிடைமருதூரு்க்கு வந்து ஒரு மாதம் அத்தலத்தில் தங்கியிருந்தார். அக்காலத்தில் திருவாவடுதுறை யாதீனத்தில் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலேயே இருந்து வந்தனர்.
இராமநாதபுரம் ஸமஸ்தானத்திலிருந்து திருவாவடுதுறை யாதீனத்திற்கு மகமைகளும் வேறு வரும்படிகளும் உண்டு. ஆதலின் இரண்டு இடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது. அம்பலவாண தேசிகர் அரசரையும் அவருடைய பரிவாரங்களையும் மிகவும் செவ்வையாக உபசரித்து வந்தார். அவருடைய உபசாரங்களிலும் திருவிடைமருதூரிற் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ மகாலிங்கமூர்த்தியின் தரிசனத்திலும் சேதுபதி மன்னர் ஈடுபட்டு மகிழ்ந்தனர். அச்சமயம் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழாவாக இருந்தது.
அரசருக்கும், உடனிருந்த தானாதிகாரி தர்மாதிகாரி முதலிய உத்தியோகஸ்தர்களுக்கும், ஏனையவர்களுக்கும் திருவிடைமருதூரில் தனித்தனியே ஏற்ற விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளியூர்களிலிருந்து செல்வவான்கள் பலர் வந்து தேசிகரையும் அரசரையும் பார்த்துச் சில தினம் இருந்து ஸல்லாபம் செய்து மகிழ்ந்து சென்றார்கள். தஞ்சாவூர் மகாராஷ்டிர அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வந்து அரசரைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். சிறந்த அறிவாளியாகிய சேதுபதி மன்னர் திருவிடைமருதூரிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில பிரசங்ககங்கள் செய்தனர். அப்போது கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பலர் வந்து கேட்டு இன்புற்றனர்.
அச்சமயம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. இயல்பாகவே மகாலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் முதலியன நன்றாக நடைபெறும். அரசர் வந்திருந்ததனால் அந்த வருஷம் பின்னும் மிகுதியான அளவில் அவை நடைபெற்றன. பாஸ்கர சேதுபதி மன்னர் அன்று மாலையில் தம்முடைய பூஜையை முடித்துக்கொண்டு ஆலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தார். அவருடன் இருவர் இருந்து அவரது ஆத்மார்த்த பூஜைக்குரிய தொண்டு செய்வது வழக்கம். அவ்விருவரும் தோற்றப் பொலிவும் சீலமும் உடையவர்கள். அவர்களுள் ஒருவருக்குச் சிவராத்திரியன்று மாலையில் வாந்திபேதி கண்டது. தக்க வைத்தியர்கள் கவனித்தும் அந்நோய் நீங்காமல் மறு நாட்காலையில் அவர் மரணமெய்தினார். அதனையறிந்த பாஸ்கர சேதுபதிக்கு மனவருத்தம் மிகுதியாக
உண்டாயிற்று.
சிவராத்திரிக்கு மறுநாள் அரசர் மாயூரம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்ய எண்ணியதால் அதற்குரிய ஏற்பாடுகள் மாயூரத்தில் செய்யப்பட்டிருந்தன,. அரசர் தம் பரிவாரங்களுடன் மாயூரத்திற்குப் பகல் 12 மணி வண்டியிற் புறப்பட்டார். அவருடன் திருவாவடுதுறை மடத்து அதிகாரிகள் சிலரும் சென்றனர். திருவிடைமருதூரிலும் திருப்பெருந் துறையிலும் கட்டளை வேலை பார்த்துப் பல திருப்பணிகள் செய்தவரும் திருவாவடுதுறையில் பெரிய காறுபாறாக இருந்தவருமாகிய ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானென்பவரும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்பொருட்டு மாயூரம் சென்றனர்.
மாயூரத்தில் திருவாவவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடமொன்று உண்டு. அங்கே பரந்த இடங்கள் இருந்தன. அவ்விடங்களில் அமைக்கப்பட்டிருந்த விடுதிகளில் அரசரும் பிறரும் தங்குவதற்குரிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சேதுபதி வேந்தர் மாயூரம் ஸ்டேஷனில் இரண்டு மணிக்கு வந்து இறங்கினார். அதே வண்டியிற் கும்ப கோணத்திலிருந்தும் பலர் வந்து இறங்கினர். அரசருக்காகவும் உடன் வந்தவர்களுக்காகவும் பலவகையான பல்லக்குகளும் வண்டிகளும் வந்திருந்தன. அவரவரகள் தங்கள் தங்களுக்கு உகந்த வாகனங்களில் ஏறிச் செல்லுவதற்காக மடத்து அதிகாரிகள் அவற்றைக் கொண்டு வந்திருந்தார்கள்.
வந்திருந்த வாகனங்களுள் அழகிய மேனாப் பல்லக்கொன்றில் மன்னருடைய கருத்துச் சென்றது; அதில் அவர் ஏறிக்கொண்டு கட்டளை மடத்துக்குப் புறப்பட்டனர். உடன் வந்தவர்களும் தங்கள் தஙகளுக்கு இயைந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். சேது வேந்தர் எறுவதற்கென்று இரட்டைக் குதிரை பூட்டிய அழகிய பெரிய வண்டியொன்று வந்திருந்தது. அவர் அதில் ஏறாமையால் அது தனியே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏறும் குறிப்போடு அதற்கருகில் ஒரு கனவான் வந்து நின்றனர். எல்லாம் ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானுடைய உத்தரவின்படி நடை பெற்றமையால் வண்டிக்காரன் அத்தம்பிரானது கட்டளையை எதிர்பார்த்திருந்தான். தம்பிரான் அவ்வண்டியின் அருகே வந்தார். அப்போது அங்கே நின்றிருந்த கனவான் அவரை நோக்கிக் கம்பீரமாக, " தாங்களும் ஏறலாமே" என்று சொன்னார். அக்கனவான் உயர்ந்த சட்டையொன்றை அணிந்திருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன்கள் ஒளிவிட்டன. கையில் மோதிரம் மின்னியது. நல்ல வேலைப் பாடுடைய பிரம்பொன்றை அவர் கையில் வைத்திருந்தார். அடிக்கடி மீசையை முறுக்கிக்கொண்டு நின்றார். ஒரு பெரிய செல்வராக யாவரும் நினைக்கும்படி அவருடைய தோற்றம் இருந்தது.
அக்கனவான் அரசரைச் சேர்ந்தவர்களுள் ஒரு தக்க அதிகாரியென்று தம்பிரான் எண்ணினார். 'இல்லாவிடில் இவ்வளவு உரிமையோடு பேசுவாரா?' என்பது அவர் எண்ணம். ஆதலின் உடனே கனவானைத் தம்முடன் ஏற்றிக்கொண்டு கட்டளை மடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். மாயூரம் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து கட்டளை மடம் மூன்று மைல் தூரம் இருக்கும். இருவரும் வண்டியில் மௌனமாகவே சென்றனர்.
அரசருக்கு நிகழ்ந்த உபசாரங்கள் அளவற்றன. உபசாரங்கள் செய்வதில் அம்பலவாண தேசிகரைப் போன்றவர்கள் உலகத்தில் சிலரே இருக்கக்கூடும். அவருடைய கட்டளையின்கீழ் ஓர் அரசருக்கு நடைபெறும் உபசாரத்தைப்பற்றி எழுதுவது எங்ஙனம் இயலும்?
கட்டளை மடத்தில் அங்கங்கே தோட்டங்களில் கொட்டகைகளும் பந்தல்களும் அமைக்கப் பெற்றிருந்தன. நாற்காலிகளும் ஸோபாக்களும் மேஜைகளும் போடப்பட்டிருந்தன. மடத்தின் பின்புறத்திலுள்ள பெரிய வெளியினிடையே இருந்த 'சவுகண்டி'யில் அரசர் தங்கியிருந்தார். சுப்பிரமணியத் தம்பிரான் தம்முடன் வந்த கனவானுக்கு அங்கேயுள்ள இடங்களைக் காட்டிச் சௌகரியமான இடத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு மற்றக் காரியங்களைக் கவனித்தற்குச் சென்றனர்.
அக்கனவான் ஒரு நல்ல இடத்தில் தங்கினார். அரசருள்ள இடத்திற்குச் செல்வோரும் அங்கிருந்து திரும்பி வருவோரும் செல்லும் வழியின் இடையில் அவருக்கு இடம் அமைந்திருந்தது. அங்கே நல்ல ஸோபாக்களும் வட்ட மேஜையும் நார்காலிகளும் இருந்தன.
பிற்பகலில் அரசர் வந்து இறங்கினாராதலின் அவருக்கும் பிறருக்கும் பலகாரங்கள் பழவகைகள் முதலியன அளிக்கப்பட்டன. அரசருள்ள இடத்திற்கு அவற்றை மடத்து வேலைக்காரர்கள் எடுத்துச் சென்றார்கள். இடையே தங்கியிருந்த கனவான், " என்ன அது?" என்று கேட்டார். அவர்கள், "பலகாரங்கள்" என்றார்கள். " இங்கே கொண்டு வாருங்கள். என்ன என்ன கொண்டு போகிறீர்கள்? எல்லாம் சுத்தமான நெய்யில் செய்தவைகளா?" என்று அவர் கேட்டார். வேலைக்காரர்கள் அக்கனவானிடம் அவற்றைக் கொண்டு சென்றார்கள்; அவர் ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிது எடுத்து வைக்கச் செய்து உண்டு சுவை பார்த்தார் பேஷ்! நன்றாக இருக்கிறது; கொண்டு போங்கள்" என்று அனுமதி கொடுத்தார்.
வேலைக்காரர்கள் அக்கனவானுடைய தோற்றத்தாலும் சற்றேனும் அச்சமின்றி அதிகாரத் தொனியோடு பேசும் பேச்சாலும் அவர் அரசருடைய அதிகார்களுள் முக்கியமானவரென்று எண்ணினார்கள். அரசருடைய உணவில் குற்றமில்லாதிருப்பதை அறிந்துகொள்ள அரண்மனையில் 'உண்டுகாட்டிகள்' என்ற ஒருவகையினர் இருப்பதுண்டு. அவர்கள் அரசருக்குரிய உணவை அவருக்கு முன்பு உண்டு குற்றமற்றதென்று தெரிவித்த பின்னரே அவ்வுணவு அரசருக்கு அளிக்கப்படும். அவர் அத்தகையவர்களில் முக்கியமானவராக இருக்கலாமென்று சிலர் எண்ணினர்.
கனவான் திருப்தியோடு அனுமதி கொடுத்ததனால் வேலைக்காரர்கள் மிக்க மகிழ்ச்சி பெற்றுப் பலகாரம் முதலியவற்றை அரசருள்ள இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். அப்பால் அவர்கள் எதைக் கொண்டு போனாலும் தாமாகவே அக்கனவானிடம் காட்டிவிட்டு அனுமதி பெற்றுச் செல்லத் தலைப் பட்டார்கள். கனவானும் ஒவ்வொன்றையும் நாவாரச் சுவைத்து வயிறார உண்டு வந்தனர். இடையிடையே, " இரண்டு கைகளாலும் எடுத்துச் செல்லுங்கள்", "அதை மூடிக்கொண்டு போங்கள்" என்பன போன்ற சில கட்டளைகளையும் இட்டு வந்தார்.
அரசரிடம் செல்வோர்களை இங்ஙனம் அதிகாரம் செய்ததோடு நில்லாமல் அரசரிடமிருந்து வரும் அரண்மனை வேலைக்காரர்களிடமும் அக்கனவான், " எல்லாம் சரியாக நடக்கின்றனவா? அந்தப் பக்ஷணம் எப்படி? இன்னும் யாருக்காவது ஏதாவது வேண்டுமா?" என்று சில கேள்விகளையும் கேட்டார். மடத்தைச் சேர்ந்த அதிகாரியாக அவர்கள் அவரை எண்ணி அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மரியாதையாக விடையளித்துச் சென்றார்கள். இங்ஙனம் இரு சாராராலும் மதிக்கப்பட்டு விருந்துணவை முதலில் சுவைத்துக்கொண்டு சுகமாக அவர் இருந்து வந்தார்.
பாஸ்கர சேதுபதியரசர் இரண்டு மூன்று நாட்கள் மாயூரத்திலேயே தங்கியிருந்து அயலிலுள்ள ஸ்தலங்களைத் தரிசனம் செய்து வந்தார். நான் அக்காலத்தில் கும்பகோணம் கலாசாலையில் இருந்தேன். எனக்கு விடுமுறை நாட்களாக இருந்தமையின் நானும் திருவிடைமருதூர் சென்று அம்பலவாண தேசிகர் நோக்கத்தின்படியும் அரசரது விருப்பத்தின்படியும் அங்கிருந்து மாயூரம் போய் உடனிருந்தேன்.
மூன்றாம் நாள் இரவு எட்டு மணிக்குச் சேதுபதி மன்னருக்குத் திருவிடைமருதூரிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில், அரசருடைய பூஜா கைங்கரியம் செய்பவர்களில் மற்றொருவரும் இறந்துவிட்டாரென்ற செய்தி இருந்தது. முதலில் ஒருவர் இறந்து போனதனால் உண்டான வருத்தமே அரசருக்கு அதிகமாக இருந்தது. அவர் திருவிடைமருதூரிலிருந்து புறப்படும் காலத்தில் மற்றொருவருக்கும் சிறிது வாந்திபேதி கண்டது. அவரும் இறந்துவிட்டாரென்ற செய்தியையறிந்த அரசருக்கு ஒன்றும் தோன்றவில்லை. பேசாமல் தலை குனிந்தபடியே துயரத்தில் மூழ்கியிருந்தார். அவருக்கு அருகிலே சென்று ஆறுதல் கூறவோ பேசவோ யாவரும் அஞ்சினர். அங்கே வந்திருந்த பல்லவராயப்பட்டு அழகப்பப்பிள்ளை, வல்லம் பரம சிவம்பிள்ளை முதலிய பெரியசெல்வர்கள் பலரும் கூடி எவ்வாறு அரசரோடு பேசி அவருடைய
மனதை மாற்றவேண்டுமென்று யோசித்தார்கள்;
"யார் முதலிற் போய்ப்பேசுவது?" என்ற கேள்விக்கு விடை பகர்வார் ஒருவரும் இல்லை. அப்பால் அவர்கள் சுப்பிரமணியத் தம்பிரானிடம் தம் கருத்தை விண்ணப்பித்து அவரையே போகும்படி வேண்டினர். அவரும் அரசரை அணுக அஞ்சினர்.
இங்ஙனம் யாவரும் ஒருங்கே கூடி ஒரு வழியும் தெரியாமல் கவலையுற்று அங்கே வந்த என்னிடம் தெரிவித்தனர். அவர்களுடைய முகவாட்டத்தின் காரணத்தையும் விஷயத்தையும் உணர்ந்தேன்; " ஏதோ ஒருவாறு முயன்று பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு யாவரையும் அழைத்துக்கொண்டு சேதுபதியரசர் இருக்குமிடம் சென்றேன். அவரோ எங்கள் வரவைக் கவனிக்கவுமில்லை; தலை நிமிரவுமில்லை; கற்சிலையைப்போல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். அவர் அங்ஙனம் இருந்ததனாலேயே அவருடைய மனத்துள் இருந்த துக்கத்தை ஒருவாறு அளந்து உணர்ந்தேன்.
"அவ்விடத்துக்குத் தெரியாததல்ல. நம்முடைய இஷ்டப்படி என்ன நடக்கிறது? ஈசுவர சங்கற்பத்தையார் மாற்றக் கூடும்?" என்று துக்கம் விசாரிக்கத் தொடங்கினேன்; அரசர் தலை நிமிரவில்லை.
" வந்த இடத்தில் இப்படி நேர்ந்தது மனத்துக்கு மிக்க வருத்தம் தரக்கூடியதுதான். ஆனாலும் மகாலிங்க மூர்த்தியின் நினைவாகவே அவர்கள் காலமாகியிருக்க வேண்டும். அந்த இரண்டு ஆத்மாக்களும் நல்ல கதி யடையுமென்பதில் சந்தேகமே இல்லை. ஒரு கால் பெரிய விருந்தில் அதிகமாகச் சாப்படிடருக்கலாம். அதனால் உண்டான அஜீரணத்தினால் இப்படி நேர்ந்துவிட்டது. ஒருவர் போனாரென்றால் மற்றொரு வருமா போகவேண்டும்? இந்த இருவருடைய கதியையும் பார்க்கும்போது எனக்கு வேறொரு கவலை உண்டாகிவிட்டது. கவலைக்கிடமான மனுஷர் ஒருவர் இவ்விடத்திலும் இருக்கிறார். அவர் செய்யும் காரியங்களைப் பார்க்கையில் அவருக்கு எந்தச் சமயத்தில் என்ன நேருமோவென்ற பயம் எல்லோருக்கும் உண்டாகியிருக்கிறது" என்றேன்.
" என்ன!" என்று அரசர் தலை நிமிர்ந்து கேட்டார்.
"இந்த விஷயத்தை நினைத்தால் ஒரு பக்கத்தில் ஆச்சரியமும் ஒரு பக்கத்தில் கவலையும் உண்டாகின்றன. இவ்விடத்தில் ஒரு கனவான் இருக்கிறார். அவர் இந்த மூன்று நாட்களாக இவ்விடத்துக்கு வரும் ஆகாரங்களையெல்லாம் வாய் கொண்டமட்டும் சாப்பிட்டு வருகிறார். அரண்மனையைச் சேரந்தவர்கள் அவரை மடத்து அதிகாரியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மடத்தைச் சேரந்தவர்களோ மகாராஜாவைச் சேர்ந்தவராக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவரோ இரண்டு பக்கத்தாரையும் ஏமாற்றி அதிகாரம் செய்துகொண்டு கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வருகிறார். அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் குற்றமில்லை பின்னால் ஏதாவது விபரீதமுண்டானால் என்ன செய்வதென்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது*. என்ன செய்வது? சபலம் யாரைத்தான் விடுகிறது?" என்று சொல்லி அந்தக் கனவான் ரெயில் வண்டியிலிருந்து இறங்கினது முதல் யாதொரு சம்
பந்தமும் இல்லாமல் உபசாரங்களைப் பெற்று வருவதை விரிவாகக் கூறினேன்.
அரசருக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது; "அதென்ன சங்கதி?" எங்கே இருக்கிறான் அந்த மனுஷன்?" என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். அழையா விருந்தினராகிய அந்தப் போலிக் கனவானைப் பார்க்க யாவரும் புறப்பட்டனர். தம்பிரானோ மிக்க கோபத்தோடு விரைவாக முதலிற் சென்றனர். ஆரம்பத்தில் மோசம் போனவர் அவரல்லவா? தம்பிரான் வருவதைக் கண்ட அக் கனவான், "வாருங்கள், வாருங்கள்" என்றார். தம்பிரானோ கோபத்தோடு, " யாரடா நீ?" என்று கேட்டார். "நானா? நான் தஞ்சாவூர் ராஜ வம்சத்தைச் சேரந்தவனென்பது தெரியாதா?" என்றார் கனவான். இருவருக்கும் சிறிது வாக்கு வாதம் நிகழ்ந்தது. அதற்குள் மற்றவர்களும் வந்து விட்டார்கள். அக்கனவானை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்கத் தொடங்கினர். வேலைக்காரர் சிலர் அவரை வெளியிலே அழைத்துச் சென்றனர்.
சேதுபதி மன்னருடைய துயரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது; "என்ன தைரியம்!" என்று சொல்லி நகைத்தார். அவருடைய துயரம் மாறியது கண்டு யாவருக்கும் ஆறுதல் உண்டாயிற்று. சுப்பிரமணியத் தம்பிரானும் மற்றச் செல்வர்களும் என்னை நோக்கி, " அந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்கள்.
" அந்த மனிதர் கும்பகோணத்தில் பொடிக்கடை வைத்திருக்கிறார்; மகாராஷ்டிரர். சில சிப்பந்திகளை வைத்துக்கொண்டு கௌரவமாக இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும்; என்னை அவருக்குத் தெரியாது. அவரை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தேன். இதைப்பற்றி நான் ஏன் சொல்ல வேண்டுமென்று விட்டுவிட்டேன். இந்தச் சமயத்தில் வேறு வழியில்லை. மகாராஜாவினுடைய துக்கத்தை மாற்றுவதற்கு அவர் வரலாறு உபயோகமாயிற்று. பாவம்! என்னால் அவருடைய வேஷம் வெளிப்பட்டது" என்றேன்.
அன்று முழுவதும் அரசரும் மற்றவர்களும் கல்யாணங்களிலும் வேறு விசேஷங்களிலும் அழையா விருந்தாக வந்து நுழைந்து கொண்டு ஆரவாரம் செய்பவர்களைப் பற்றியே பேசிப் பொழுது போக்கினார்கள்.
--------------------
3. திவான். ஸர். அ. சேஷையா சாஸ்திரியார்*
* சுதேசமித்திரன், விஜயதசமி மலர், 1936
அமராவதி சேஷையா சாஸ்திரியார் தென்னாட்டில் தோன்றிய ஆச்சரிய புருஷர்களுள் ஒருவர். அவர் திருவனந்தபுரம் ஸமஸ்தானத்திலும் புதுக் கோட்டை ஸமஸ்தானத்திலும் திவானாக இருந்த காலத்தில் அவ்விடங்களில் செய்த திருத்தங்கள் பல. அவர் சிறு பதவியிலிருந்து தம்முடைய விடா முயற்சியினாலே உயர்ந்த நிலைக்கு வந்தவர். ஆதலின் உலகியலை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
செயல்கள்
பலவகையான குறைபாடுகளை அடைந்திருந்த புதுக்கோட்டை ராஜ்யத்தை அவர் திவான் ரீஜெண்டாக இருந்து மீட்டும் நல்வளப்படுத்தினார். அவருடைய நிர்வாகத் திறமையும், குடிகளைப் பாதுகாத்த முறையும், வேறு சிறந்த குணங்களும் அவருடைய பெரும் புகழுக்குக் காரணமாயின. கவர்னரவர்களே தம்முடைய வீட்டுக்கு வந்து கண்டு பேசி இன்புறும் கௌரவம் அவருக்கு இருந்தது. புதுக்கோட்டையில் நல்ல தண்ணீர் வசதியையும், அழகிய சாலைகளையும், பிறநலங்களையும் அமைத்து அழகுபடுத்தி மற்ற இராசதானி நகரங்களிலுள்ள சிறப்புக்களில் ஒன்றும் குறைவின்றி யிருக்கச் செய்தார்.
புதுக்குளமென்று இப்பொழுது வழங்குகின்ற குளத்தை வெட்டி அதிலிருந்து குழாய் வழியாக நகரின் பல பாகங்களுக்குப் பருகும் தண்ணீர் செல்லும்படி செய்தார். அங்ஙனம் செய்வதற்குமுன் தண்ணீரிலுள்ள கெடுதலால் அவ்வூரிற் பலருக்கு நரம்புச் சிலந்தியென்ற வியாதி வருவது வழக்கம். சாஸ்திரியாருடைய ஏற்பாடுகளால் அவ்வியாதி இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது.
ஸமஸ்தானத்தில் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதற்கு வசதியாக இருந்த வண்டிகளை நன்றாக அமைக்கச் செய்து ஒழுங்குபடுத்தினார். குதிரை வண்டிக்காரர்கள் தம் குதிரைகளைப் பலவிடங்களில் அடித்துப் புண்ணாக்கி ஓட்டுவதை யறிந்து அவ்வாறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களைத் திருத்தினார். இதனால் வாயில்லாப் பிராணிகளாகிய அவை தமக்கு உண்டாகும் துன்பத்தினின்றும் காப்பாற்றப்பட்டன.
பல தெருக்களைச் சாஸ்திரியார் ஒழுங்காக உண்டாக்கினார். அங்கங்கே காய் கறிகள் முதலியவற்றை விற்பதை நீக்கி ஒரேயிடத்தில் விற்பதற்குரிய வசதிகளை அமைத்தார். அங்கங்கே தீப ஸ்தம்பங்களை நிறுவினார்.
பின்னும் அவர் செய்த பல சாதுரியமான் காரியங்களை இன்றும் புதுக்கோட்டையிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் உள்ளவர்கள் கதை கதையாகச் சொல்லிக் கொள்வார்கள். அவற்றில் சில வருமாறு:-
(1) தடிகொண்ட ஐயனார்
புதுக்கோட்டையில் இப்பொழுது மார்த்தாண்ட பைரவபுரமென்ற பெரிய தெரு ஒன்று இருக்கிறது. அது சேஷையா சாஸ்திரிகளால் உண்டாக்கப்பட்டது. அங்கே முன்பு ஓரிடத்தில் ஓர் ஆலமரமும் அதன் கீழே ஐயனார் கோவிலொன்றும் இருந்தன. அவ்வையனாருடைய பெயர் தடிகொண்ட ஐயனாரென்பது. மார்த்தாண்ட பைரவபுரத்தை உண்டாக்குவதற்கு முன் அங்கே சாலையை அமைக்க வேண்டியிருந்தது. அச்சாலைக்கு முற்கூறிய ஆலமரமும் கோயிலும் தடையாக இருந்தன. ஆலமரத்தை வெட்டிவிட்டுத் தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்துவிட்டால் தாம் உத்தேசித்த காரியம் நன்றாக நிறைவேறுமென்று சாஸ்திரியார் எண்ணினார். உடனே வேறோரிடத்தில் அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார். ஐயனாரை அங்கே எழுந்தருளச் செய்விப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தார். சிலர் அங்ஙனம் செய்தல் தகாதென்று தடுத்தனர். சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இதைச் செய்கிறேன். ஐயனாரிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் பக்திக்கு என் பக்தி சிறிதேனும் குறைந்ததன்று. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித் தருள்வாரென்ற உறுதி எனக்குண்டு" என்று அவர்களைப் பார்த்துக் கூறினார். பிறகு ஐயனாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர் முன்பு வைக்கச் செய்து நமஸ்காரம் செய்தார். அதன் சாரம் வருமாறு:
'கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஶ்ரீ ஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷயா சாஸ்திரி பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்:
'நகரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எழுந்தருளி யிருக்கும் தேவரீர் திருவருளால் இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன் தேவரீருடைய ஆஞ்ஞையை எதிர் பார்த்துச் சில காரியங்கள் செய்து வருகிறேன். இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணி யிருக்கிறேன். அந்தச் சாலை நேராகச் செல்வதற்கு இந்த ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். நெடுங் காலமாக இந்தப் பழைய கோயிலில் மழையால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் எழுந்தருளி யிருக்கும் சிரமம் நீங்கி அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்தருளி வழி விட வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு நல்ல நாளொன்றில் ஐயனாரை அவ்விடம்விட்டு எழுந்தருளச் செய்து புதுக்கோயிலில் பிரதிஷ்டை செய்வித்துச் சிறப்பாகக் கும்பாபிஷேகமும் நடத்திப் பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார். அப்பால் ஆலமரத்தை வெட்டுவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதனை வெட்டினால் ஐயனாருடைய கோபம் ஏற்படுமென்று பயந்து கூலியாள் யாரும் அதனை வெட்டத் துணியவில்லை. " ஐயனாருடைய அருளை எதிர்பார்த்து நான் இதைச் செய்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் வெட்ட ஆரம்பிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சாஸ்திரியார் தம் கையில் கோடரியை எடுத்துக் கொண்டார். அவர் மிகப் பருத்த தேகமுடையவர். அவர் வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக அளவற்ற ஜனங்கள் வந்து கூடி நின்றனர்.
சாஸ்திரியார், " தடிகொண்ட ஐயனார் துணை" என்று சொல்லிக்கொண்டு கோடரியை ஓங்கினார். ஐயனாரிடத்தில் பயமுள்ள பல ஜனங்களும் சாஸ்திரி யாருக்கு ஏதேனும் அபாயம் நேரிடுமென்றே எண்ணினார்கள். சிலர், அவர் ஓங்கிய கோடரி அவர் காலிலேயே வுிழுந்து துன்பத்தை விளைவிக்குமென்று நினைத்தார்கள். வேறு சிலரோ ஆலமரத்திலிருந்து குபீரென்று இரத்தம் சாஸ்திரிகளுடைய முகத்தில் பீரிட்டு அடிக்குமென்று கருதினர். கூட்டத்தினர்கள் கண்கள் அத்தனையும் சாஸ்திரியார் ஓங்கிய கோடரியின்பால் இருந்தன.
'சொத்'தென்று பச்சை ஆலமரத்தின் மேல் கோடரி பாய்ந்தது. அபாயமான நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. சாஸ்திரியாருக்குப் பின்னும் உத்ஸாகம் உண்டாயிற்றேயன்றிச் சிறிதேனும் சோர்வு உண்டாகவில்லை. 'பெரிய பக்திமானும் குணவானுமாகிய சாஸ்திரிகளிடத்தில் ஐயனாருக்குக் கோபம் வர நியாயம் இல்லை. சாஸ்திரிகள் தெய்வ ஸம்மதமான காரியத்தையே செய்கிறார்' என்று சிலர் தம் முள்ளே கூறிக் கொண்டனர். ' இவர் வெட்டி விட்டார். ஐயனார் இவருக்கு உத்தரவு கொடுத்திருப் பதனால்தான் கோடரி மரத்தில் பாய்ந்தது. இனிமேல் இந்த மரத்தை வெட்டத் துணியலாம்' என்று சிலர் கூறினர். உடனே அருகிலிருந்த வேலையாட்கள் சிறிதும் அச்சமின்றி ஆலமரத்தை வெட்டிச் சாய்த்தனர்.
ஆலமரம் வெட்டப்பட்டது. அதனால், உத்தேசித்திருந்த சாலை ஒழுங்காக அமைந்தது. மார்த்தாண்ட பைரவபுரமும் அழகாக அமைக்கப் பெற்றது. ஐயனார் புதுக் கோயிலில் பின்னும் சிறப்பாக வீற்றிருக்கிறார். அவர் முன்பு இருந்த இடத்தில் ஒரு பீடம் மட்டும் இருக்கிறது. அதையும் இப்பொழுது நகரவாசிகள் பயபக்தியோடு பூசித்து வருகிறார்கள்.
(ii) "லாந்தல் பத்திரம்"
சாஸ்திரியார் அரசாங்கத்துக்கு வரும் விண்ணப்பங்களையும் மற்றக் கடிதங்களையும் நேரில் கவனித்துச் சுருக்கமாகவும் விநோதமாகவும் உத்தரவு எழுதியனுப்புவார். எந்தப் பாஷையில் விண்ணப்பம் உள்ளதோ அந்தப் பாஷையிலேயே உத்தரவெழுதிக் கையெழுத்திடுவார்.
புதுக்கோட்டையில் சில வீதிகள் கூடுகிற சந்தியில், முன்பு ஐந்து லாந்தர் கம்பமொன்றும் அதைச் சார்ந்த மேடையொன்றும் இருந்தன. அவ்வூரில் ஒரு 'முகம்மதியர் காலணா, அரையணா விலையுள்ள பாட்டுப் புத்தகங்களைப் பாடிக்கொண்டே விற்பனை செய்து வந்தார். அவரைச் சுற்றிப் பலர் கூடிப் பாட்டுக் கேட்பார்கள்; அவர்களிற் சிலர் புத்தகத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். நிலையாக ஓர் இடத்தில் இருந்து விற்றால் அனுகூலமாக இருக்குமென்று அம்முகமதியர் எண்ணினார். அதற்கு உரிய இடம் முற்கூறிய ஐந்துலாந்தல் மேடையே யென்று அவருக்குத் தோற்றியது. அங்கே யிருந்து பாட்டுப் பாடிக் கொண்டு புத்தக விற்பனை செய்வதற்குத் *'தர்பார் ஆபிஸி'ன் அனுமதி வேண்டியிருந்தது. அதனால், அனுமதி அளிக்க வேண்டுமென்று அவர் தர்பார் ஆபிஸிற்கு ஒரு விண்ணப்பமெழுதி அனுப்பியிருந்தார்.
------------
* புதுக்கோட்டை, அரசாங்க ஆபீஸைத் தர்பார் ஆபீஸென்று சொல்வது வழக்கம்.
சேஷையா சாஸ்திரியிடம் விண்ணப்பம் வந்தது. அவர் உடனே அதன் மேல் நீலப் பென்ஸிலால், "சாயப்பூ லாந்தல் பத்திரம்" என்று எழுதி அனுப்பிவிட்டார். புத்தக வியாபாரி அதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. "லாந்தலாவது! பத்திரமாவது! இந்த மனிதர் இப்படியா உத்தரவு போடுவார்? லாந்தலுக்கு இது பத்திரமா? இல்லை யென்றால், நான் லாந்தலைத் தூக்கிக்கொண்டு போய்விடுவேனென்ற பயமா?" என்று சொல்லிக் கொண்டார். அந்த லாந்தல் மேடையிலிருந்து பாட்டுப் பாடி அவர் புத்தக வியாபாரஞ் செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் அளவற்ற கூட்டம் அவரைச் சுற்றிக் கொண்டது. அவர் உத்ஸாகமாகப் பாடும்போது கூட்டத்தில் இருந்த சிறு பையன் ஒருவன் மேடை மீதேறி லாந்தலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே கேட்டான். அதைப் புத்தக வியாபாரி கவனித்தார். சிறிது நேரம் அவன் அப்படியே இருந்தாலும், தினந்தோறும் அப்படி யாராவது செய்தாலும் லாந்தல் உடைந்துவிடுமென்பதை அவர் உணர்ந்தார். அப்பொழுதுதான் சாஸ்திரிகளுடைய உத்தரவு அவருக்கு விளங்கியது; "அச்சா எஜமான்!" என்று சொல்லிக் கொண்டே அந்தப் பையனைக் கீழே வரச் செய்தார். 'நான் விற்கும்போது இவ்வாறு கூட்டம் கூடுமென்பதையும், கூட்ட மிகுதியால் யாரேனும் இந்த மேடை மீது ஏறி லாந் தலை உடைத்து விடுவாரென்பதையும் முன் யோசனை செய்து எழுதின எழுத்தை நாம் அவசரப்பட்டு அவமதித்தோமே!' என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார். அதுமுதல் அவருக்கு விற்பனையில் ஒரு கண்ணும் லாந்தலில் ஒரு கண்ணும் இருந்து வந்தன.
(iii) "அவர் செத்தாலோ?"
ஒரு கிராமத்திலிருந்த கணக்குப் பிள்ளை யொருவர் சரியாகக் கணக்குகளை வைத்துக்கொள்ளவில்லை; வேறு சில குற்றங்களையும் செய்தார். அதனால் சாஸ்திரியார் அவரை வேறொரு கிராமத்துக்கு மாற்றி விட்டனர். பல வருஷங்களாக இருந்து வந்த கிராமத்தை விட்டுப் போவதில் அந்தக் கணக்குப் பிள்ளைக்கு மனம் இல்லை. அதனாற் பெரு முயற்சி செய்து, அவரை மாற்றினால் தங்களுக்கு மிக்க கெடுதி விளையுமென்றும், அவரையல்லாமல் வேறு யாரும் இருந்து நிர்வகிக்க முடியாதென்றும், பணவசூல் செய்வதற்கு இயலாதென்றும், அவர் மிகவும் நல்லவரென்றும் எழுதிய மகஜர் ஒன்றில் பல நூற்றுக்கணக்கான பேர்களைக் கையெழுத்திடச் செய்து தர்பாருக்கு அனுப்புவித்தார். அதைச் சேஷையா சாஸ்திரியார் பார்த்தார்; அதன் மேலே, "அவர் செத்தாலோ-?" என்று நீலப் பென்ஸிலால் எழுதி அவ்வூராருக்கே அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். அப்பால் பேசுவதற்கு வாயேது?
(iv) "வறுத்த கொள் முளைக்குமோ?"
ஒரு சமயம் உத்தியோகஸ்தர் ஒருவர் தாம் செய்த குற்றங்களுக்காக வேலையிலிருந்து நீக்கப் பட்டார். தமக்கு எப்படியேனும் மீண்டும் வேலை தர வேண்டுமென்று அவர் எவ்வளவோ முயன்றார்; பல கனவான்களிடமிருந்து சிபார்சுக் கடிதங்களை வாங்கி யனுப்பினார். தம்முடைய குடும்ப நிலையையும், தம்முடைய தகுதியையும், பிறவற்றையும் மிக விரிவாக எழுதி ஒரு விண்ணப்பத்தை அனுப்பினார். சாஸ்திரியார் பார்த்தார். "வறுத்த கொள் முளைக்குமோ? * பர்த்ருப்பானபின் வேலை கிடைக்குமோ?" என்று அந்த விண்ணப்பத்தின்மேல் எழுதி அனுப்பி விட்டார்.
---------
* பர்த்ருப் - வேலையைவிட்டுத் தள்ளுதல்
(v) "பணம் இருந்தால்"
சில கனவான்கள் கூடி நகரத்திலே சில சௌகரியங்களைச் செய்துதர வேண்டுமென்று எழுதியிருந்தனர். இன்ன இன்ன காரியங்களைச் செய்தால் இன்ன இன்ன அனுகூலங்கள் உண்டாகுமென்று அவர்கள் எடுத்துக் காட்டியிருந்தார்கள். சாஸ்திரியார் அந்தக் காரியங்கள் செய்ய முடியுமென்றேனும் முடியா வென்றேனும் நேரே எழுதாமல், "பணம் இருந்தால் இதுவும் செய்யலாம்; இன்னமும் செய்யலாம். பணமில்லாக் குறைக்கு யார் என்ன செய்யலாம்?" என்று மட்டும் எழுதி யனுப்பினார்.
(vi) எதுகை மோனை உத்தரவுகள்
சாஸ்திரியாருடைய உத்தரவுகளிற் சில எதுகை மோனையோடு கூடி இருக்கும்.
இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தம் சேவகனுக்கு வில்லை தரிக்கும் உரிமை வழங்க வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்து கொண்டிருந்தார். அங்ஙனம் செய்ய அனுமதி அளித்தால் பலர் இங்ஙனமே விண்ணப்பம் எழுதித் தொல்லை அளிப்பார்களென்பதைச் சாஸ்திரிகள் அறிந்தவர். ஆதலின் அவ்விண்னப்பத்திற்கு எழுதி விடுத்த விடை வறுமாறு:
"கேட்பதோ வில்லை; கொடுப்பதோ வில்லை; கொடுத்தாலும் தொல்லை."
வேறொரு சமயம் வல்லநாட்டைச் சேர்ந்த 'ரெவின்யூ இன்ஸ்பெக்ட' ரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. அவர் எப்பொழுதும் கீழே பட்டுப்பாயும் கம்பளியும் விரித்து அதற்கு மேலே சிறிய கணக்குப் பிள்ளை மேஜை யொன்றை வைத்துக்கொண்டு வேலை பார்ப்பார். தம்முடைய உத்தியோக நிலைக்கு அப்படியிருத்தல் குறைவானதென்று அவர் எண்ணினார். ஆதலின், தமக்கு ஒரு மேஜையும் நாற்காலியும் தர்பாரில் உத்தரவாக வேண்டுமென்று விண்ணப்பம் செய்துகொண்டார். அதற்கு அவர் பெற்ற உத்தரவு, "வட்டமோ எட்டு, வல்ல நாட்டு மாகாணம், பட்டுப் பாயும் கம்பளியும் பற்றாவோ?" என்பது, எட்டே வட்டமுடைய வல்லநாட்டு மாகாணத்தின் ரெவினியூ இன்ஸ்பெக்டருக்கு அவ்வளவு ஆடம்பரம் வேண்டியதில்லை யென்பதை இதன் மூலம் சாஸ்திரியார் தெரிவித்து விட்டார்.
----------
4. மாணாக்கர் விளையாட்டுக்கள்
முன்னுரை
ஒரு கலாசாலையில் வேலை பார்ப்பது எளிதான காரியமன்று. உபாத்தியாயருக்கு அடிக்கடி கோபம் வரும்படி மாணாக்கர்கள் நடப்பார்கள். பாடம் சொல்லும் முறை, அடக்கியாளும் முறை இரண்டிலும் நல்ல பழக்கம் இருந்தாலன்றி ஒரு கலாசாலையில் காலந்தள்ள முடியாது. ஆசிரியர்களிடத்திலுள்ள குறைபாடுகளை யெல்லாம் விளம்பரப்படுத்துவதில் மாணாக்கர்களுக்கு ஒரு தனி ஊக்கம் இருக்கும். ஆனால் தம்முடைய ஆசிரியர் சிறந்தவரென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு உண்டாகும் அன்பு வேறுவிதமாகவே இருக்கும். தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் ஆசிரியர்களை அவர்கள் போற்றி வருவார்கள். அத்தகைய மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உண்டாகும் அன்பு மிக உயர்ந்தது; ஆசிரியராக இருக்கும் கால முழுவதும் இன்பமாக இருப்பதற்கு அவ்வன்பே உதவி செய்யும்; இல்லையெனில் ஏதோ கடமைக்கு வேலை பார்ப்பதாகத்தான் முடியும்.
1880-ஆம் வருஷத்தில் கும்பகோணம் காலேஜில் வேலையில் நியமிக்கப்பெற்று அது முதல் 1903-ஆம் வருஷம் வரையில் அவ்விடத்திலும், அப்பால் 1919-ஆம் வருஷம் வரையில் சென்னை, பிரஸிடென்ஸி காலேஜிலும் வேலை பார்த்து வந்தேன். ஏறக்குறைய 40 வருஷ காலம் கலாசாலை உபாத்தியாயராக இருந்து வரும் நிலை இறைவனருளால் எனக்கு ஏற்பட்டது. கும்பகோணம் வருவதற்கு முன்பு நான் திருவாவடுதுறை மடத்தில் படித்துக்கொண்டும் பாடஞ்சொல்லிக் கொண்டும் இருந்தேன்; பிரஸிடென்ஸிலிருந்து விலகிய பின்பும் சிதம்பரம் ஸ்ரீமீனாட்சி தமிழ்க் காலேஜில் பாடஞ் சொல்லியதுண்டு. ஆயினும் கும்பகோணத்திலும் சென்னையிலும் இருந்த காலமே என்னுடைய தமிழ்ப்பணியில் ஒரு சிறந்த பகுதியாக அமைந்தது.
நான் காணும் கனவுகளில், கலாசாலையிற் பல மாணாக்கர்களிடையே இருந்து அவர்களுடைய உத்ஸாகமான செயல்களையும் அவர்கள் பேசும் பேச்சுக்களையும் அறிந்து மகிழுங் காட்சிகளே பல. தம்முடைய குடும்பத்தையே மறந்துவிட்டுக் கல்வி கற்றல் ஒன்றையே நாடிப் பறவைகளைப்போலக் கவலையற்றுப் படித்துவந்த மாணாக்கர்களுடைய கூட்டத்திடையே பழகுவதைப் போன்ற இன்பத்தை வேறு எங்கும் நான் அனுபவித்ததில்லை. அவருகளுடைய அன்பை நினைத்தாலே என் உள்ளத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகும். அந்தக் காலம் போய்விட்டதனாலும் அக்காலத்து நிகழ்ச்சிகளின் நினைவு இன்னும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. அதனால், நான் நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தால் மீண்டும் கலாசாலையிலிருந்து பாடஞ் சொல்லுகிறேன்; இன்புறுகிறேன்.
இக்காலத்து மாணாக்கர்களுக்கும் அக்காலத்து மாணாக்கர்களுக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. நல்ல பொருளை நல்ல பொருளென்று உணர்ந்து பாராட்டும் சக்தி அவர்களுக்கு இருந்தது. தெய்வ பக்தி, மரியாதை, அடக்கம் முதலியன அவர்களால் உயர்ந்த குணங்களாக எண்ணப்பட்டன. அத்தகைய மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதற்குப் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென்றே நான் கருதினேன்.
இளைஞர்களுக்கு விளையாட்டுத்தனம் இருப்பது இயல்பு. வகுப்பில் சில விளையாட்டுக்களை மாணாக்கர்கள் காட்டுவார்கள். ஆயினும் அவர்களை அடக்கும் முறையில் அடக்கினால் அவர்கள் பெட்டிப் பாம்பு போல் அடங்கிவிடுவார்கள்; பின்பு தாம் செய்த குற்றத்திற்கு இரங்குவார்கள். அவர்கள் பெருங் குற்றம் செய்தார்களென்றும், அதற்குத் தண்டனை விதிப்பதற்குரிய அதிகாரி தாமென்றும் எண்ணுவது ஆசிரியருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். உலக இயல்பை நன்றாக அறியாத அவர்கள் பேதைமையாற் செய்கிறார்களென்று எண்ணிப் பிரியமாக நல்லறிவு புகட்டினால் அவர்கள் வணங்கிவிடுவார்கள்.
வகுப்புகளில் யாரேனும் குற்றம் செய்தால் அம் மாணாக்கரைச் சுட்டி, "ஏன் இங்ஙனம் செய்தாய்?" என்று வெளிப்படையாகக் கேட்பது என் வழக்கம் அன்று. அவர் செய்த குற்றத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பொதுவாக இத்தகைய குற்றங்களைச் செய்வதால் மாணாக்கர்களுடைய அபிவிருத்திக்கே பாதகம் நேருமென்று பாடத்தில் ஒரு சந்தர்ப்பத்தைக் கற்பித்துக்கொண்டு குறிப்பாகச் சொல்வேன்; அல்லது ஒரு கதையைக் கூற ஆரம்பித்து அதன் முகமாக, அத்தகைய குற்றம் செய்வது கெடுதலென்பதைப் புலப்படுத்துவேன். இதனால் குற்றஞ் செய்த மாணாக்கர் மனம் வருந்தி இரங்கித் தனியே என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்பார்; பிறகு திருந்தி விடுவார்.
மாணாக்கர்கள் செய்யும் இத்தகைய விளையாட்டுச் செயல்களில் ஒவ்வொன்றும் விநோதமாக இருக்கும். ஆசிரியர்களாக இருந்தவர்கள் யாவரும் இத்தகைய செயல்களைப்பற்றி அனுபவத்தில் நன்கு அறிந்திருப்பார்கள். இவற்றை விஷமமென்றோ, குறும்பென்றோ, அசட்டுச் செயலென்றோ கூறுவதைவிட விளையாட்டென்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக எனக்குத் தோற்றுகிறது. இத்தகைய மாணாக்கர் விளையாட்டுக்களில் எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்தவற்றுள் சிலவற்றை எழுத விரும்புகின்றேன்.
அண்டருலகம்
நான் கும்பகோணம் காலேஜில் சேர்ந்தவுடன், என்னைத் தன்னுடைய ஸ்தானத்தில் வைத்து உபகாரம் செய்தவரும் எனக்கு முன் அங்கே தமிழாசிரியராக இருந்தவருமாகிய வித்துவான் ஸ்ரீதியாகராச செட்டியார் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லும் முறையை எனக்குக் கற்பித்தார். அதற்கு முன் ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற் பாடஞ்சொல்லும் பழக்கம் எனக்கு ஒரு சிறிதும் இல்லை. மடத்திற் பாடஞ் சொல்லிக் கொடுப்பதற்கும் காலேஜில் பாடஞ் சொல்லிக் கொடுப்பதற்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு.
பாடஞ் சொல்லும்போது செய்யுளைப் படிக்கச் செய்து அதிலுள்ள விஷயத்தைச் சுருக்கமாக முதலிற் சொல்லிவிடுவேன்; அப்பால் கடினமான பதங்களுக்கு உரை கூறுவேன். இயன்றவரையிற் பிள்ளைகளை இசையுடன் படிக்கச் சொல்வேன். இசைப் பயிற்சி இல்லாதவர்களை வற்புறுத்தமாட்டேன். படிக்கும்போது சொற்கள் நன்றாக விளங்குமாறு பிரித்துத் திருத்தமாகப் படிக்கும்படி கற்பிப்பேன். முதல்நாள் நடைபெற்ற பாடத்தில், மறுநாள் கேள்வி கேட்ட பிறகே புதுப் பாடத்தைத் தொடங்குவது எனது வழக்கம்.
ஒருமுறை எப்.ஏ. முதல்வகுப்பில் நைடதம் பாடஞ்சொல்லி வந்தேன். அதில் இந்திரப் படலம் பாடமாக அமைந்திருந்தது. ஒரு நாள் வழக்கம் போல் முதல்நாள் நடந்த பாடத்திற் கேள்வி கேட்டுக் கொண்டு வந்தேன். ஒரு செய்யுட்பகுதியாகிய, "அண்டருலகத் திறைவ னவ்வுழி யிருப்ப" என்பதிலுள்ள அண்டருலக மென்பதன் பொருளென்ன வென்று ஒரு மாணாக்கரைக் கேட்டேன். அவர் சிறிதும் யோசியாமல், "நாகருலகம்" என்று சொன்னார். அவர் சொல்லும் விடை என் காதில் விழுவதற்குமுன் வகுப்பில் உள்ள பிள்ளைகள் யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். சிலர் சிரிப்புத் தாங்க மாட்டாமல் வாயைத் துணியால் பொத்திக் கொண்டனர். விடை கூறியவர் பிழையாகக் கூறினாரென்பது யாவருக்கும் தெரியும். 'ஆனால் அதற்காக இவ்வளவு சிரிப்பு ஏன்?' என்று நான் நினைத்தேன். விடை சொன்ன மாணாக்கரும் ஒன்றும் விளங்காதவரைப் போல் நின்றனர். நான் எல்லோரையும் சும்மா இருக்கும்படி குறிப்பித்து விட்டு, "ஏனப்பா நாகருலகம் என்றாய்?" என்று கேட்டேன். அவர் மிக்க மயக்கத்தை உடையவராகிப் பிள்ளைகளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துப் பசபசவென்று விழித்தார். அவர் ஒன்றும் சமாதானம் கூறவில்லை யென்பதை யறிந்த வேறொரு மாணாக்கர் எழுந்து, " இங்கிலீஷில் அண்டர் (Under) என்பதற்குக் கீழென்று பொருள், அண்டருலகம் என்பதைக் கீழுலகமென்றெண்ணி இப்படிக் கூறினாரென்று தோற்றுகின்றது" என்று சொன்னார். பின்புதான் எனக்கு விஷயம் விளங்கியது.
ஸம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த தொடர்மொழிகளே தமிழில் வருவதுண்டென்றும் இங்கிலீஷ் கலந்த மொழிகள் வருவதற்கு நியாயமில்லை யென்றும், இங்கிலீஷ் இந்நாட்டுக்கு வருவதற்குமுன் நைடத ஆசிரியருக்கும் இங்கிலீஷுக்கும் சம்பந்தமே யில்லை யென்றும் ஒருவாறு சொல்லி அம்மாணாக்கரை உட்காரச் செய்தேன்.
அப்பால், "பாடம் படிக்கும்போது வார்த்தை களை நன்றாக ஆராய்ந்து படிக்கவேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் எந்த உருவத்திலிருந்து எப்படி மாறி வந்ததென்று தெரிந்து கொள்வது நலம். எந்தச் சொல்லுக்கும் மனம் போனபடி பொருள் செய்யக் கூடாது. வடமொழிப் பதங்களாக இருந்தால் அவற்றினுடைய மூலத்தை அறிந்துகொள்ளவேண்டும்" என்று மற்ற வகுப்புப் பிள்ளைகளுக்கும் சொன்னேன்.
வயலிலுள்ள முத்துக்கள்
நைடதம் நாட்டுப்படலத்தில் உள்ள,
"அருமறைக் கிழவ ருள்ளத் தவர்க்கெட வன்பி னல்கும்
பெருநிதிக் குப்பை யோடு பெய்புனல் பெருகி யோடி
வரிவளை யலறி யீன்ற மணியிள நிலவு காலும்
திருவநீள் கழனி தோறுஞ் செந்நெலை வளர்க்கு மாதோ"
என்ற பாடலை ஒருமுறை பாடஞ் சொல்ல நேர்ந்தது.
"நிடத நாட்டிலுள்ள செல்வர்களின் பெருங் கொடையையும் நாட்டு வளத்தையும் கூறுவது இச் செய்யுள். அரிய வேதத்தை உணர்ந்த அந்தணர்களுடைய உள்ளத்திலுள்ள ஆசை நீங்கும்படி அந்நாட்டிலுள்ளோர் அன்போடு பெரிய திரவியத் தொகுதிகளைத் தானமாக அளிப்பார்கள். அங்ஙனம் தானஞ் செய்யும்போது தாரை வார்க்கும் ஜலம் ஓடிச் சென்று வயல்களிற் பாய்ந்து அங்குள்ள செந்நெற் பயிரை நன்றாக வளரச் செய்யும். அவ்வயல்களில் சங்குகள் முழங்கிப் பல முத்துகளைப் பெறும். அம்முத்துக்களின் ஒளி இளநிலவைப் போல இருக்கும்" என்று பொருள் சொல்லி அரும்பதங்களுக்குப் பொருளும் வேறு விசேடங்களும் சொன்னேன். அவ்வாறு சொல்லி முடித்தவுடன் வகுப்பிலிருந்த மாணாக்கர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒரு மாணாக்கர் எழுந்து நின்றார். அவருக்கு 14 பிராயம் இருக்கும். "ஏன் நிற்கிறாய்?" என்று கேட்டேன். "இந்தப் பாட்டில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று" என்றார்.
நான்: சொல்லலாமே!
மாணாக்கர்: யாசகத்துக்கு வருகிறவர்கள் வயல்களை யெல்லாம் தாண்டிக்கொண்டுதானே ஊருக்குள் வரவேண்டும்.! அப்படி வரும்போது வயல்களில் முத்துக்கள் நிரம்பியிருப்பதைப் பார்ப்பார்களே. அவற்றை எடுத்துத் தங்கள் மடியிலே கட்டிக்கொன்டு போய் விற்றுச் செல்வத்தை அடையலாமே! எதற்காக அவர்கள் யாசிக்க வேண்டும்?
இப்படிக் கேட்டவர் உண்மையில் விளங்காமையால் கேட்டாரென்று எனக்குத் தெரியும். நல்ல
குணமுடையவராதலின் இயற்கையாகவே அவர் சந்தேகித்துக் கேட்டாரென்று உணர்ந்தேன். இத்தகைய
வருணனைகளை அவர் முன்பு படித்திருக்க மாட்டாரென்று தோற்றியது.
"இந்தப் பாட்டினுடைய கருத்து நிடத நாட்டில் தர்மவான்கள் அதிகமாக இருந்தார்களென்பதுதான். அதைச் சாதுர்யமாக இவ்வாசிரியர் வருணித்திருக்கிறார். இங்ஙனம் சொல்லுவது கவிகளுடைய இயல்பு. இதைக் கவிமதமென்று சொல்லுவார்கள். இந்த வருணனை உயர்வு நவிற்சியணி யென்னும் இலக்கணத்தின் பாற்படும். நாம் பேசும்போதுகூடச் சில சமயங்களில் இயற்கைக்கு மாறான விஷயங்களைச் சொல்லுகிறோம். ஒரு குதிரையைப்பற்றிப் பாராட்டும்போது 'அதுவா! மணிக்கு நூறு மைல் போகாதா! ' என்கிறோம். ஒருவனுடைய ஆற்றலைச் சொல்லுகையில், 'இவன் அவனை எடுத்துச் சாப்பிட்டு விடுவான்' என்று கூறுகிறோம். ஒருவருடைய கைராசியை, 'நீ தொட்டதெல்லாம் பொன்னாகுமே!' என்று புகழ்கிறோம். இத்தகைய வார்த்தைகளுக்கு உள்ளவாறே பொருள் கொள்ளக் கூடாதல்லவா? உப்பில்லாமல் கலக்கஞ்சி குடிப்பவனென்று ஒருவனைப் பாராட்டினால், உடனே கலக்கஞ்சியை முன்னே வைத்து, 'இதைக் குடி' என்று சொல்லிவிடலாமா? மற்றவர்கள் சிரமப்பட்டுச் செய்யும் காரியத்தை எளிதில் முடிப்பவனென்றுதானே கொள்ளவேண்டும்? இவை போலவே கவிகள் தங்கள் நூல்களில் வருணனைகளை அமைத்திருக்கிறார்கள்.
ஒரு நகரத்தினுடைய மதில் உயர்ந்து கற்பக மரத்துக்கு வேலியாக இருக்குமென்று சொல்வார்கள்; மதில் மிக உயர்ந்ததென்பதுதான் கருத்து. ஒரு நகரத்தை வர்ணிக்கும்போது வீதியின் இருபக்கங்களிலுமுள்ள தென்னமரங்கள் மிகவும் உயர்ந்து வளர்ந்திருத்தலால் சூரியனுடைய குதிரைகள் மேலே போகும்போது மிதிக்க அம்மரங்களிலுள்ள இளநீர்கள் உடைந்து அவற்றிலிருந்து நீர் வீதிகளில் ஓடிச் சேறாவதற்குக் காரணமாகுமென்று சொல்லியிருப்பார்கள். அந்தச் சேற்றில் நெல் விளைக்கலாமே யென்று கேட்கலாமா? தென்ன மரங்கள் மிக்க செழிப்புடையன வென்ற கருத்தை மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி உள்ள வருணனைகள் நம் தேச பாஷைகளிலுள்ள பிற்கால நூல்களில் மிக அதிகம்" என்று சொன்னேன். அம்மாணாக்கர் ஒருவாறு சமாதானமடைந்து உட்கார்ந்தார். ஆனாலும் முழுச் சமாதானமும் அடைந்தாராவென்பது எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. மற்ற வகுப்பிலுள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய சந்தேகங்கள் நேராமலிருக்குமாறு இவ்வருணனைகளை உள்ளபடியே பொருள் செய்துகொண்டு அதன் மேல் ஆராய்ச்சி செய்வது விபரீதமாகுமென்றும், கவியினுடைய கருத்தை யறிந்து சந்தோஷிக்க வேண்டுமென்றும் சொன்னேன்.
'எங்கள் ஐயா'
ஸ்ரீ தியாகராஜ செட்டியார் காலேஜ் வேலையிலிருந்து விலகிய பின்பும் சில மாதங்கள் கும்பகோணத்திலே மகாதளம்பேட்டைத் தெருவில் இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் காலேஜ் வேலை முடிந்தவுடன் பிற்பகலில் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துப் பேசியிருந்துவிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு வருவேன்.
அக்காலத்தில் எப்.ஏ. பரீட்சைக்கு நைடதத்தில் ஒரு பகுதி பாடமாக இருந்தது. செட்டியார் வேலையிலிருந்து நீங்கும்போது அதில் ஒரு பாகத்தைச் சொல்லி முடித்திருந்தார். நான் வேலைக்கு வந்தபிறகு எஞ்சியிருந்த பாகத்தைப் பாடஞ் சொன்னேன்.
ஒருநாள் வழக்கம்போல் காலேஜ் வேலை முடிந்தவுடன் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்றேன். அங்ஙனம் செல்லும்பொழுது, என்னுடன் சில மாணாக்கர்களும் வந்தார்கள். மகாமகக் குளத்தைச் சுற்றிக் கரையில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரால் மிக அழகாகக் கட்டப்பெற்ற பதினாறு சிவாலயங்கள் உண்டு. அவற்றுள் மேல்புறமாக இருக்கும் ஆலயம் ஒன்று ஜபம் செய்வதற்கும் மாலை வேளையில் இருந்து பொழுது போக்குவதற்கும் வசதியாக இருக்கும்.
அங்கே தியாகராச செட்டியார் இருந்தார்; உடனிருந்த இராமகிருஷ்ணபிள்ளை யென்ற ஒரு மாணாக்கருக்கு ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழைப் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது நாங்கள் போய் உடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். பாடஞ் சொல்லிவந்த செட்டியார் ஒரு செய்யுட் பகுதியை விளக்கி அதற்கு அநுகூலமாகக் கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார். சொல்லும்போது அவர் உள்ளமுழுதும் கம்பர் வாக்கிற் பதிந்தது; மிகவும் உருகி அச்செய்யுளைப் பாராட்டினார். அப்பொழுது அங்கே வந்திருந்தவரும், மகா மகக் குளத்தின் மேல்கரையில் வசிப்பவரும், செட்டியாரிடம் பாடங்கேட்டு முதல் வருஷத்தில் பீ.ஏ. பரீட்சையில் தேறியவருமாகிய பி. கோபாலைய ரென்பவர், செட்டியார் சொன்ன கம்பராமாயணச் செய்யுளை அடுத்துள்ள இரண்டு மூன்று பாடல்களைச் செட்டியார் சொல்லுகிற ஓசையின்படியே சொல்லிவிட்டு, "ஐயா அவர்கள் இந்தப் பாட்டுக்களைப் பாடஞ் சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!" என்று மிகவும் பாராட்டினார்.
செட்டியார் உள்ளங் குளிர்ந்து என்னை நோக்கி, "இப்படிப் பிள்ளைகளுடைய மனத்திற் படும்படியும் அவர்களாகச் செய்யுட்களில் ஈடுபட்டு மனப்பாடம் செய்யும்படியும் நீங்கள் பாடஞ் சொல்லுவீர்களா?" என்று கேட்டார். "நான் என்ன சொல்வேன்! உங்களைப்போலே சொல்வதற்கு யாரால் முடியும்? நீங்களெங்கே? நானெங்கே? ஏதோ ஒருவாறு உங்களை நினைத்துக்கொண்டு சொல்லுவேன். உங்களைப் போல், மாணாக்கர்கள் பாடம் பண்ணிக்கொள்ளும்படி சொல்ல இயலாது" என்று பணிவாகச் சொன்னேன். செட்டியாருக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டதில் உள்ளத்துள் சிறிது திருப்தியுண்டாயிற்றென்பதை அவர் முகம் புலப்படுத்தியது.
அப்பொழுது என்னுடன் வந்தவருள் ஒருவரும், முற்கூறிய கோபாலையருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிப்பவரும் எப்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவரும், தைரியசாலியுமாகிய எம்.ராம சந்திரைய ரென்பவர் கனைத்துக்கொண்டு செட்டியாருடைய முகத்தைப் பார்த்தார்; "என்ன ஐயா சொன்னீர்கள்! என் கண்ணுக்கு முன் எங்கள் ஐயாவை இப்படிக் கேட்கிறீர்களே. இந்தத் தர்ம சங் கடமான கேள்வியை நீங்கள் இவர்களிடம் கேட்கலாமா? இவர்களும் என்னால் முடியாதென்று சொல்லி விட்டார்கள். எனக்கு மிக்க வருத்தமாக இருக்கிறது. நீங்களே இவர்களை வேலையிற் சேர்க்கும்போது நல்ல படிப்பாளி யென்றும் நன்றாகப் பாடஞ் சொல்லுவாரென்றும் சொல்லியிருக்கிறீர்களே; அப்படிச் சொல்லி விட்டு இப்பொழுது எங்களுக்கு முன்னே இப்படிச் சொல்லுவது நன்றாக இல்லையே! இவர்கள் நன்றாகத்தான் பாடம் சொல்லுகிறார்கள்; மனத்திற் படும்படியே கற்பிக்கிறார்கள்" என்றார்.
செட்டியார்: அதெல்லாம் சரி; பாடமாகும்படி சொல்வாரா?
ராமசந்திரையர்: ஏன் சொல்ல மாட்டார்கள்? இவர்கள் சொல்லும்போதே செய்யுட்கள் தாமாக எங்களுக்குப் பாடமாகி விடுகின்றன.
செட்டியார்: அப்படியானாற் சில செய்யுட்களைப் பாராமற் சொல்லுவாயா?
ராம: அதில் என்ன தடை? இதோ, ஒப்பிக்கிறேன்; கேளுங்கள்.
இவ்வாறு சொல்லிவிட்டு அந்த மாணாக்கர் தம்முடைய பாடமாகிய நைடதம், பிரிவுறு படலத்திலிருந்து சில பாடல்களைச் சொன்னார்; அப்பால், "போதுமா? இன்னும் சொல்லவேண்டுமா?" என்றார்.
செட்டியாரோ அதோடு விடாமல், "நீ என் மாணாக்கன்தானே?" என்றார். அவர் செட்டியாரிடம் சிலகாலம் பாடங் கேட்டவர்.
ராம: ஆமாம்; ஆனாலும், இந்தப் பாடல்களெல்லாம் இவர்கள் சொல்லிக் கொடுத்தவை. நீங்கள் சொன்ன பாடத்திற் சில மறந்தாலும் மறந்திருக்கும்; இவர்கள் பாடத்தில் சிறிதளவும் மறதியில்லை. உங்கள் பிரிவினால் எங்களுக்கு வருத்தமில்லாதபடி பாடஞ் சொல்லி உங்கள் ஸ்தானத்தின் கௌரவத்தை இவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அத்தகைய எங்கள் ஐயாவைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாமா?
செட்டியார்: உன்னுடைய பழைய உபாத்திய்யாயரைப் பார்த்து இவ்வளவு தைரியமாகப் பேசலாமா?
ராம: எங்கள் புதிய உபாத்தியாயரைப் பார்த்து நீங்கள் மட்டும் இப்படிச் சொல்லலாமா? உங்களிடம் படித்த நான் இந்தத் தைரியத்தை உங்களிடமே கற்றுக் கொண்டேன்.
செட்டியார் சிரித்தார்; "நீ சொல்லியது சரிதான். நான் கொண்டுவந்து வைத்தவரைப்பற்றி நீ இவ்வளவு புகழ்ந்து பேசுவது எனக்குத்தான் முதலில் சந்தோஷத்தை அளிக்கிறது" என்று சாதுரியமாகக் கூறி முடித்தார்.
'செட்டியார் பாடஞ் சொன்ன இடத்திலிருந்து கற்பிக்க வந்திருக்கிறோமே; நாம் பாடஞ் சொல்வதில் பிள்ளைகளுக்கு எத்தகைய அபிப்பிராயம் இருக்குமோ!' என்று எண்ணியிருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்தது.
பாடஞ் சொல்லாத பாட்டு
கும்பகோணம் காலேஜில் நான் வேலையை ஒப்புக்கொண்ட இரண்டு வருஷங்களுக்குப் பின் பி.ஏ. பரீட்சைக்குப் பிரபோதசந்திரோதய மென்னும் நூலிலிருந்து ஒரு பகுதி பாடமாக வந்தது. அகலிகையை விரும்பிய தோஷத்தால் இந்திரனுடைய * தேகம் முழுவதும் விகாரமடைந்ததென்ற ஒரு செய்தி அதில் சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி ஏனைய நூல்களிற் சொல்லியபடி இராமல் வேறு ஒரு விதமாக இருந்தது. அந்தச் செய்யுள் மாணாக்கர்களுக்குப் பொருளை விளக்கிப் பாடஞ்சொல்லத் தக்கதன்று. நான் பாடஞ் சொல்லி வருகையில் அச்செய்யுளுக்கு மட்டும் பொருள் சொல்லாமல் மற்றச் செய்யுட்களுக்குப் பொருள் சொன்னேன்; அன்றியும், "இந்தச் செய்யுளை நீங்கள் கவனிக்க வேண்டாம். இதில் அருவருப்பான செய்தி யொன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதிற் கேள்வி வராது" என்றும் சொன்னேன். பாடமாக வைப்பதற்கே தகுதியில்லாத அச்செய்யுளில் யாரும் கேள்வி கேளாரென்பது என் எண்ணம்.
-------------
* பிரபோத சந்திரோதயம், விவேகன் ஒற்றுக் கேள்விச் சருக்கம், 12
அக்காலத்தில் பி.ஏ. பரீட்சையானது சென்னையில் மட்டும் நடந்து வந்தது. கும்பகோணம் காலேஜ் பிள்ளைகள் அவ்வருஷம் சென்னைக்குச் சென்று பரீட்சையில் விடை எழுதிவிட்டு வந்தார்கள். அவர்களுள் ஒருவர் தமிழ்ப் பரீட்சை முடிந்தவுடன் சென்னையிலிருந்தே தபால் மூலம் தமிழ் வினாப் பத்திரத்தை எனக்கு அனுப்பினார். நான் அதைப் பார்த்தேன். எந்தச் செய்யுளுக்கு நான் பொருள் சொல்லாமல் விட்டுவிட்டேனோ அதற்கு பொருளெழுதும்படி ஒரு கேள்வியும் வேறு சில சிறு கேள்விகளும் அதில் இருந்தன. அப்போது என்னுடைய மனநிலை இன்னபடி யிருந்ததென்பதை இங்கே எழுதுவது இயலாது. நான் வேலைக்கு வந்து சில வருஷங்களே ஆகியிருந்தன; 'நம்மைப் பிள்ளைகளெல்லாம் நன்றாக வைத்திருப்பார்கள்; நாம் செய்தது பெரும்பிழை' என்று எண்ணித் தவித்தேன்; 'இதை அறிந்தால் பிரின்ஸிபாலாகிய ராயரவர்கள் என்ன எண்ணுவார்களோ!' என்றும் பயந்தேன்.
பரீஷையானபின், மாணாக்கர்கள் கும்பகோணம் வந்து சேர்ந்தனர். வந்த தினத்திலே அவர்களுள் பத்துப்பேர்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள். அவர்கள் வருதலை நோக்கிய நான், 'இவர்கள் நம்மிடம் சண்டை போடத்தான் வருகிறார்கள்' என்று நிச்சயம் செய்து கொண்டேன். செய்தது செய்தாகி விட்டது; அப்பால் அதை எப்படி மாற்றுவது!
அவர்கள் அருகில் வந்தவுடன் நான் மிக்க வருத்தத்தோடு, "நான் உங்கள் விஷயத்தில் துரோகம் செய்துவிட்டேன். அந்தச் செய்யுள் அருவருப்பான கருத்தையுடையதாக இருந்தாலும் பொருள் சொல்லியிருக்கவேண்டியது என் கடமை. என்னுடைய பொல்லாத வேளையினால் இப்படி வந்து சேர்ந்தது" என்றேன்.
அம் மாணாக்கர்கள் முகமலர்ச்சியோடு, "நீங்கள் சிறிதும் கவலைப்படவேண்டாம். வினாப்பத்திரத்தை நீங்கள் கண்டவுடன் வருத்தத்தை அடைந்து கவலை யோடிருப்பீர்களென்- றெண்ணினோம்; உங்கள் கவலையைப் போக்குவதற்காகவே நாங்கள் இவ்வளவு அவசரமாக உங்களிடம் வந்தோம். அந்தச் செய்யுளை நீங்கள் பாடஞ் சொல்லவில்லை யென்ற குறையே எங்களுக்கு இல்லை. மற்றக் கேள்விகளைக் காட்டிலும் இந்தக் கேள்விக்கே நாங்கள் நன்றாக விடையெழுதி யிருக்கிறோம்" என்றார்கள்.
நான், "உங்களுக்கு அந்தச் செய்யுளின் பொருள் எவ்வாறு தெரிந்தது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
மாணாக்கர்கள்: நீங்கள் அந்தப் பாட்டிற்கு அர்த்தம் சொல்லாமல் விட்டமையால், அதில் ஏதோ விசேஷம் இருக்குமென்று எங்களுக்குத் தோன்றி விட்டது. நாங்கள் எல்லோரும் ஒருங்கு சேர்ந்தோம். அகராதிகளை யெல்லாம் புரட்டிப் புரட்டி வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டோம். வடமொழி வித்துவான்களைக் கேட்டு அதிலுள்ள வரலாற்றைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். சிறிதேனும் சந்தேகமே இல்லை. இந்தக் கேள்விக்கு எங்களைப் போல ஒருவரும் செவ்வையாக விடை எழுதவில்லை.
நான்: அப்படியா! ஆனாலும் நான் சொல்லாமலிருந்தது பிழைதானே?
மாணாக்கர்கள்: நீங்கள் சொல்லாமல் இருந்ததனாலேதான் அதில் எங்களுக்கு அதிக ஞாபகமும் கவனமும் உண்டாயின. பிழை செய்ததாக நீங்கள் எண்ணவேண்டாம்.
*இந்த மட்டில் நம்மைக் கடவுள் காப்பாற்றினாரே!' என்று எண்ணி ஆறுதலடைந்தேன்.
ஆஜானுபாகு
கம்பராமாயணப்பகுதி ஒன்றை ஒரு சமயம் பாடஞ்சொல்லி வந்தேன். அதிலுள்ள ஒரு செய்யுளில் இராமபிரான், 'முழங்காலளவும் நீண்ட கைகளை உடையவன்" என்று கூறப்பட்டுள்ளார். அப் பொழுது, "சிறந்த புருஷ லக்ஷணங்களுள் ஒன்று இது. இராமரைப் போலவே வேறு சிலரிடத்திலும் இந்த லக்ஷணம் அமைந்திருந்ததாகச் சொல்வார்கள். இங்ஙனம் முழங்காலளவும் நீண்ட கைகளையுடைய வரை ஆஜானுபாகு வென்று வடமொழியிற் சொல்வது வழக்கம். அவர்கள் கல்வி, வீரம், செல்வம் முதலியவற்றிற் சிறந்தவர்களாக இருப்பார்கள்; எளிதிற் பிறர் மனத்தைக் கவரும் சக்தி அவர்களுக்கு இருக்கும்" என்று சொல்லி வேறு சில செய்யுட்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டினேன்.
பாடத்தில் விசேஷமான செய்திகளை நான் சொல்லும்போது மாணாக்கர்கள் அவற்றை யெல்லாம் குறித்துக் கொள்ளுகிறார்களா வென்று கவனிப்பது என் வழக்கம். மேற் கூறிய விஷயத்தைச் சொல்லிவிட்டு, அவ்வாறு வகுப்பு முழுவதும் பார்த்தேன். நெருக்கமாகப் பிள்ளைகள் உட்கார்ந்திருந்த வரிசையில் ஒரு கோடியிலுள்ள ஒருவர் மெல்ல எழுந்து நின்று தம் கையைக் கீழே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சொன்ன லக்ஷணம் தம்மிடம் அமைந்துள்ளதா வென்று பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது அவரது ஆசை. அதைக் கவனித்த நான், "சரியாக இருக்கிறதா, அப்பா?" என்று கேட்டேன். அவர் வெட்க முற்று அப்படியே உட்கார்ந்து விட்டார். பிள்ளைகள் யாவரும் சிரித்தார்கள். அது முதல் அந்த மாணாக்கரை யாவரும் ஆஜானுபாகு வென்றே அழைக்கலாயினர்.
தேனுசுவாஸபுரம்
ஒவ்வொரு வருஷமும் நூதனமாக வந்து சேரும் மாணாக்கர்களுடைய ஊர், அவ்வூரிலிருந்த பெரியவர்கள், கோயில், அவ்வூர் சம்பந்தமான சரித்திரம் முதலிய விஷயங்களை அவர்களிடம் நான் விசாரித்துத் தெரிந்து கொள்வேன். பிள்ளைகளுக்கும் தங்கள் ஊர்ப் பெருமைகளைப் பற்றி சொல்லிக் கொள்வதில் விருப்பம் இருக்கும். அவ்வாறு வினாவித் தெரிந்து கொண்டவற்றிற் பல செய்திகள் மிகவும் அருமை யானவை.
ஒருமுறை ஒரு மாணாக்கரைப் பார்த்து, "உன் ஊர் எது?" என்று கேட்டேன். "அவர், தேனுசுவாஸபுரம்" என்றார். அதுகாறும் அத்தகைய ஊரொன்றை நான் கேட்டிராமையால், "அந்த ஊர் எங்கே இருக்கிறது?" என்று வினவினேன். "கும்பகோணம் தாலுகாவில் தான்" என்றார் அவர்.
கும்பகோணம் தாலுகாவிலுள்ள ஊர்களிற் பெரும்பாலன எனக்குத் தெரிந்தவை. ஆனால் தேனுசுவாஸபுரத்தைப்பற்றி அதுவரை நான் கேள்விப் பட்டதுகூட இல்லை. ஆகையால் மறுபடியும், "அப்படியா! எனக்குத் தெரியவில்லையே; எந்த ஊருக்கு
அருகில் இருக்கிறது அது?" என்று கேட்டேன்.
"ஆவூருக்கு அருகில்" என்று கூறினார் அவர்.
"ஆவூருக்கு அருகிலா? ஆவூருக்கு அருகில் இப்படி ஓரூர் இருப்பது இதுவரையில் எனக்குத் தெரியவில்லையே! ஆவூரும் அதற்கு அருகிலுள்ள ஊர்களும் எனக்கு நன்றாகத் தெரியுமே" என்றேன்.
அவர், "ஊற்றுக்காடுதான் அது" என்றார்.
ஏதோ புதிய ஊரென்று நினைக்கும்படி அம்மாணாக்கர் சொன்னமையால் நான் மயங்கினேன்; "ஊற்றுக்காடா? அதற்கு அந்தப் பேர் எப்படி வந்தது?" என்று விசாரித்தேன்.
"அருகில் உள்ள ஆவூரில் காமதேனு சிவபெரு மானைப் பூசை செய்தது; செய்துவிட்டு எங்கள் ஊருக்கு வரும்போது மூச்சு விட்டது; அதனால் இதற்குத் தேனுசுவாஸபுரமென்ற பேர் வந்தது; அது தமிழில் மூச்சுக்காடென்று வழங்கிப் பிறகு ஊற்றுக்காடென்று ஆயிற்று" என்று அவர் வியாக்கியானம் செய்தார்.
வகுப்பிலுள்ள பிள்ளைகள் சிரித்தார்கள்; தேனுசுவாஸபுரவாசி அவர்கள் சிரிப்பதைக் கேட்டு வெறுப்போடு அவர்களைப் பார்த்தார்.
"சந்தோஷம்! உங்கள் ஊர் மகாத்மியம் எனக்கு இன்று தெரிந்தது. நீ முதலில் ஊற்றுக்காடென்று சொல்லியிருந்தால் இவ்வளவு சிரத்தையாக விசாரித்திருக்க மாட்டேன். ஏதோ புதிய ஊரென்று தோற்றும்படி நீ சொல்லி மயங்கச் செய்தாய்; அதனால் இவ்வளவு விவரங்கள் தெரியவந்தன. ஆனாலும் நீ முதலிலே ஊற்றுக்காடென்று சொல்லியிருந்தால் நான் மயங்காமல் இருந்திருப்பேன். வழங்கும் பெயரை விட்டுப் புராணப் பெயரைச் சொல்லி வியாக்யானம் செய்தாய்; இப்படிச் சொன்னதில் உன் நண்பர்களுக்கு ஒருகால் விருப்பமில்லாமல் இருக்கலாம்" என்றேன். நண்பர்களென்றது மற்ற மாணாக்கர்களையே. அவர்கள் மீண்டும் ஒருமுறை சிரித்தார்கள். அதுமுதல் அம் மாணாக்கருக்குத் தேனுசுவாஸபுர மென்ற புனைபெயர் வழங்கலாயிற்று.
'உரையாசிரியர் எழுதியிருக்கிறார்'
நாலடியார் பாடஞ்சொல்லி வந்தேன்; முதல்நாட் பாடத்தில் வழக்கம்போலே கேள்வி கேட்கும்போது ஒரு மாணாக்கர் ஒரு தொடருக்குச் சிறிதேனும் பொருத்தமில்லாத பொருளொன்றைச் சொன்னார். அதை நான் கேட்டு, "பொருத்தமில்லாதபடி அர்த்தம் சொல்லுகிறாயே; நான் சொன்னதைக் கவனித்துப் படித்து வரலாகாதா?" என்றேன்.
அவர், "நீங்கள் நேற்றுச் சொன்னது எனக்கு ஞாபகம் இல்லை; அதனால் உரையைப் படித்தேன்; உரையாசிரியர் இப்படித்தான் எழுதியிருக்கிறார்" என்றார்.
'உரையாசிரியர் இப்படித்தான் எழுதி யிருக்கிறார்' என்றபோது கையினால் அவர் புத்தகத்தை வேகமாக சுட்டிக்கொண்டே உத்ஸாகத்தோடு பேசினார்; அந்த அபிநயம், 'உரையாசிரியரே எழுதியிருக்கிறபோது நீங்கள் எவ்வாறு பிழையென்று சொல்லலாம்?' என்ற கருத்தை வெளியிடுவதுபோல இருந்தது.
நான், "இப்படி யாரும் எழுத நியாயமில்லை. எழுதியிருந்தால் அதைக் கிழித்தெறிய வேண்டியதுதான். எங்கே, அந்த உரையைக் கொண்டுவா, பார்க்கலாம்" என்றேன்.
அவர் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு கம்பீரமாகவும் வேகமாகவும் என் மேஜை வரையில் நடந்து வந்தார். வகுப்பில் இருந்த பிள்ளைகளூம் உரையாசிரியர் யாரென்பதை அறிய வேண்டுமென்ற விருப்பத்தோடிருந்தனர்.
என் மேஜைவரையில் மிகவும் வேகமாக வந்த அந்த மாணாக்கரோ மேஜைக்கு வந்தவுடன் மெல்லக் குனிந்தார்; அவர் முகத்திலே கம்பீரம் இல்லை; ஏதோ ஒரு குற்றம் செய்தவன் மன்னிப்பை வேண்டும்போது இருக்கும் தோற்றம் அதில் உண்டாயிற்று; "நான் படிக்கவில்லை; தெரியாமல் சொன்னேன். மன்னிக்க வேண்டும். உரையாசிரியர் எழுதியிருக்கிறாரென்றால் நீங்கள் பயந்து விடுவீர்களென்று எண்ணி அவ்வளவு கம்பீரமாகச் சொன்னேன். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்" என்று பணிவாகக் கூறினார். "இனியாவது கவனமாகப் படி" என்று நான் உரைத்தேன். அப்பால் முகம் கவிழ்ந்துகொண்டே தம் இடத்திற் போய் அவர் உட்கார்ந்தார்.
தேர்வலான்
கம்பராமாயணம், அயோத்தியா காண்டத்திலுள்ள ஒரு செய்யுளில் சுமந்திரனைப்பற்றி, 'தேர்வலானினைய கூற' என்ற தொடர் வருகிறது. அதற்குப் பொருள் சொல்லும்போது "தேர்வலான் என்பதற்குத் தேரைச் செலுத்துதலில் வல்ல சுமந்திரனென்பது பொருள். சுமந்திரன் மந்திராலோசனை செய்வதற்குரிய மந்திரிகளுட் சிறந்தவனாதலின் ஆராய்ச்சியில் வல்லவனென்பதும் இங்கே பொருத்தமாக இருக்கிறது. தேர் என்பது தேர்தல் என்னும் பொருளைத் தந்து முதனிலைத் தொழிற் பெயராக நின்றது" என்றேன்.
இந்தப் பொருளை மாணாக்கர் யாவரும் கேட்டு மகிழ்ந்தார்கள். அவர்களுடைய அகமகிழ்ச்சியை முகமலர்ச்சி தெரிவித்தது; அவர்களுள், கோவிந்த ராவ் என்ற ஒருவர் அந்தப் பொருள் மிகவும் பொருத்தமாக இருப்பதை யெண்ணி இன்புற்றார்; தாம் அடைந்த சந்தோஷ மிகுதியால், "ஐயா, இந்த அர்த்தம் மிகவும் நன்றாக இருக்கிறது!" என்று சொல்லிப் பாராட்டினார். அவ்வார்த்தைகள் அவருடைய மனங்கனிந்து வந்தனவாதலின் எனக்குத் திருப்தியை விளைவித்தன; "இவ்வளவு கவனித்து நீ கேட்டதைப்பற்றி எனக்கு மிக்க சந்தோஷம் உண்டாகிறது. நீ நல்ல நிலைக்கு வருவாய்" என்று சொன்னேன்.
இது நடந்து சற்றேறக்குறைய 15 வருஷங்கள் சென்ற பின், தஞ்சாவூரில் வந்திருந்த புதுக்கோட்டை ஜாகீர்தாராகிய ஶ்ரீமான் ராமசந்திரத் தொண்டைமானவர்கள் பங்களாவுக்கு அவரைப் பார்க்கும்பொருட்டு நானும் அந்நகரிற் பிரபல வக்கீலாக இருந்த கே. கல்யாணசுந்தரையரவர்களும் சென்றோம். நாங்கள் வந்திருப்பது தெரிந்தவுடன் தொண்டைமான் எங்களை நோக்கி வந்து வரவேற்றார்; அவரோடு வேறொருவரும் வந்து அமர்ந்தார். புதியவர் என்னை நோக்கி, "நமஸ்காரம்" என்று சொன்னார். அவருடைய தோற்றப் பொலிவையும் உயர்ந்த உடைகளையும் காதில் இருந்த கடுக்கன் முதலியவற்றையும் கண்டபோது அவர் யாரோ மகாராஷ்டிர அரச பரம்பரையினராக இருக்கலா மென்று எண்ணினேன். அவர் யாரென்று என்னுடன் வந்த கனவானை விசாரித்தேன். "இவர் ஜாகீர் தாரவர்களின் அந்தரங்கக் காரியதரிசி" என்றார் அவர். நான் கேட்பதை அறிந்து அக்காரியதரிசியே, "நான் தங்கள் மாணாக்கன்" என்றார். அப்போதிருந்த அவருடைய தோற்றப் பொலிவினால் அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ள என்னால் இயலவில்லை.
நான்: பேர் என்ன?
அவர்: கோவிந்த ராவ்.
நான்: தேர்வலானோ?
அவர்: ஆமாம்!
எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அருகிலிருந்த மற்ற இருவருக்கும் எங்கள் சம்பாஷணை விளங்கவில்லை. அப்போது நான் 15 வருஷங்களுக்கு முன் காலேஜில் நடந்ததைச் சொன்னேன்; "அடிக்கடி எனக்கு இவருடைய ஞாபகம் வரும்; அப்பொழுதே இவர் நல்ல புத்திசாலி என்றும், நல்ல நிலைக்கு வரக்கூடியவரென்றும் நான் கண்டுகொண்டேன். படித்த பொழுது இருந்த உருவத்தையே நான் மனக்கண்ணால் பார்ப்ப வனாதலின், இந்தத்தோற்றம் எனக்குப் புதிதாக இருந்தது. அதனால் தெரிந்து கொள்ளவில்லை. சுமந்திரன் தேர்ச்சியில் வல்லவனாக இருந்தது போலவே இவரும் ஜாகீர்தாரவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராக இருப்பதனால் இவரையும் தேர்வலானென்று சொல்லலாம்" என்றேன்.
கோவிந்த ராவ், "தாங்கள் என்னை நினைத்துக் கொண்டிருப்பதுபோல நானும் உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அன்று தாங்கள் 'நீ நல்ல நிலைமைக்கு வருவாய்' என்று ஆசிர்வாதம் செய்ததன் பலனே இந்த ஸ்திதியில் நான் இருப்பது" என்று பழைய விசுவாசத்தோடே பேசியபோது என் மனம் சந்தோஷக் கடலில் முழுகியது.
'எங்கள் ஊர், ஐயா!'
வில்லிப்புத்தூரார் பாரதப் பகுதியொன்றை எப். ஏ. வகுப்புக்கு ஒரு வருஷம் பாடம் சொல்லி வருகையில் திருக்கோவலூரைப்பற்றிச் சொல்லும் சந்தர்ப்பம் நேர்ந்தது. அது புறநானூற்றை நான் பதிப்பித்து வந்த காலம்; ஆதலின் அந்நூலிலிருந்து அவ்வூரைப் பற்றித் தெரிந்த விஷயங்களையும் வேறு சில செய்திகளையும் சொல்லத் தொடங்கினேன்: "திருக்கோவலூர் மிகவும் பழைய ஊர். சங்க காலத்தில் மலையமான் திருமுடிக்காரி யென்ற சிற்றரசன் ஒருவன் அங்கே இருந்து வந்தான். அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். மகாவீரன். போரில் சேர சோழ பாண்டியர்களுள் யாருக்கு அவன் படைத் துணையாகச் செல்வானோ அவ்வரசனுக்கே வெற்றி உண்டாகும். திருக் கோவலூருக்கு அருகில் முள்ளூர்க்கானமென்ற காடொன்று இருந்தது. அதைப்பற்றிப் பழைய தமிழ் நூல்கள் மிகவும் சிறப்பாகச் சொல்லுகின்றன. சங்கப் புலவர்களுட் சிறந்தவராகிய கபிலரென்பவர் தம்முடைய இறுதிக் காலத்தில் திருக்கோவலூருக்கு வந்து தங்கி யிருந்தார். அன்றியும் அவ்வூர் ஒரு பெரிய ஸ்தலம். சிவபெருமானுக்குரிய அட்ட வீரட்டங்களுள் ஒன்று. திருமால் திருப்பதிகளில் ஒன்றாகவும் அது விளங்குகின்றது. முதலாழ்வார்கள் மூவரும் அங்கே ஒரு சமயத்தில் ஒருங்கிருந்து திருமாலை வழிபட்டார்கள்" என்று அவ்வூர்ப் பெருமையை ஒருவாறு கூறி நிறுத்தினேன்.
நிறுத்தினவுடன் இந்தச் செய்திகளைக் காது குளிரக் கேட்டுக்கொண்டிருந்த மாணாக்கர் ஒருவர் எழுந்து நின்றார். ஏதாவது சந்தேகம் இருக்கக் கூடுமென்று நான் எண்ணினேன்; "ஏன் நிற்கிறாய்?" என்றேன். அவர் மிகவும் பணிவாக, "அந்த ஊர் எங்கள் ஊர், ஐயா!" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார். அவருடைய முகத்தில் ஒரு பிரகாசம் அப்பொழுது காணப்பட்டது. ஞானிகளுக்கே தங்கள் தங்கள் ஊரினிடத்தில் அபிமானம் இருக்கும்போது அம்மாணாக்கருக்கு இருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை. நான் திருக்கோவலூர்ப் பெருமையைச் சொல்லச் சொல்லத் தாம் அந்த ஊர்க்காரரென்பதை வெளியிட வேண்டுமென்ற ஆவல் சிறிது சிறிதாகப் பெருகி, நான் சொல்லி நிறுத்திய மறு கணத்திலேயே அதனை வெளியிட வைத்ததென்பதை உணர்ந்தேன்; "அப்படியா! மிக்க சந்தோஷம்! அந்த ஊருக்கு ஏற்றபடி நீ நல்ல புகழை அடையவேண்டும்" என்று அம்மாணாக்கரிடம் சொல்லிவிட்டு மற்றவர்களையும் பார்த்து எல்லோருக்கும் இப்படியே தங்கள் தங்கள் ஊரினிடத்து அபிமானம் இருக்கவேண்டும்" என்று கூறி மேலே பாடத்தை நடத்தலானேன்.
"கேள்வி முறை இல்லையா?"
விநோத ரஸமஞ்சரியில் ஒரு பகுதி பாடமாக வந்திருந்தது. அதில் ஓரிடத்தில் முகம்மதிய அரசரொருவரைப் பற்றிக் கடுமையான வரலாறு ஒன்று எழுதப்பட்டிருந்தது. அவர் கோவில்களை இடித்தாரென்றும், குடிகளைத் துன்புறுத்தினாரென்றும், வேறு சில தீமைகளைப் புரிந்தாரென்றும் அதில் கூறப் பட்டிருந்தது. வகுப்பில் அந்தப் பகுதி நடக்கும்போது மாணாக்கர்களுள் ஒரு முகம்மதியர் திடீரென்று எழுந்து நின்று, "இதற்கொன்றும் கேள்வி முறையில்லையா? இவ்வளவு அவதூறாக அவ்வரசரைப் பற்றி எழுதியிருக்கிறார்களே!" என்றார்.
அவர் மிக்க பணிவாக்வும் அடக்கமாகவும் இருப்பவர். ஆயினும் தம்முடைய மதத்தினரைப் பற்றிக் குறைகூறி யிருப்பதைக்காண அவர் உள்ளம் பொறுக்கவில்லை. அவருக்கு உண்டான உணர்ச்சியின் மிகுதி அது வகுப்பென்றும், பல பிள்ளைகளும் உபாத்தியாயரும் இருக்குமிடமென்றும் நினையாமல் இந்த வார்த்தைகளைச் சொல்லச் செய்தது. அபாண்டமான பழி சுமத்தப்பட்ட ஒருவன் பெருங் கூட்டத்தின் நடுவில் முறையிடுவதைப்போல இருந்தது. அவர் பேச்சின் தொனி. நான் அவரை நோக்கி, "இத்தகைய பாடங்கள் உங்களைப் போன்றவர்களுக்கு ஏற்றனவல்ல. எவ்வளவோ பொது விஷயங்கள் இருக்கையில், ஒரு வகுப்பார் மனத்தைப் புண்படுத்தும்படியான விஷயங்களைப் பாடமாக வைப்பது பெரும்பிழை. இந்த விஷயம் சரித்திர சம்பந்தமானது. ஆதலால் இதிற் கூறப்பட்ட வரலாறு உண்மையாவென்பதை ஆராய்ச்சிக்காரர்கள் தேர்ந்து துணியவேண்டும். நீ இதைக் குறித்து வருந்தவேண்டாம். உன்னிடத்தில் யாவரும் பிரியமாக இருக்கும்படி நடந்துகொள். உண்மையில் ஒருவன் குற்றம் செய்தவனாக இருந்தால் அவனை யாவரும் குறைகூறுவது இயல்பே. அத்தகைய குற்றவாளி நம் சாதியினன், நம் சமயத்தானென்பதற்காக அவனைக் குறை கூறுவதைப் பிழையாகக் கருதக்கூடாது. குற்றமுள்ளவனை உலகமே வெறுக்கும். நம் வீட்டு நெருப்பென்று நமது வஸ்திரத்துக்குள் வைத்துக் கொள்ளலாமா?" என்று ஒருவாறு ஆறுதல் கூறினேன்.
கணபதி சுப்பிரமணியர்
ஒரு சமயம் பி.ஏ. வகுப்பில் கணபதி ஐயர், சுப்பிரமணிய ஐயரென்ற இருவர் படித்து வந்தனர். இருவரும் சிறந்த புத்திமான்கள்; ஒருவருக்கொருவர் நெருங்கிய நட்புடையவர். ஆயினும், வகுப்பில் ஒருவருக்கொருவர் மாறுபாடுடையவர்போல நடந்து வருவர். நாள்தோறும் ஒருவர்மீது மற்றொருவர் ஏதேனும் குறைகூறிக்கொண்டே யிருப்பர். பாடத்தில் கேட்கும் கேள்விக்கு ஒருவர் விடை சொன்னால், அது பிழையென்று மற்றொருவர் சொல்லி வாதிப்பார். இங்ஙனம் நடந்துவந்ததை எவ்வாறேனும் குறைக்க வேண்டுமென்று எண்ணினேன்.
ஒருநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் துறைமங்கலம் ஸ்ரீசிவப்பிரகாச ஸ்வாமிகளைப்பற்றிப் பேச நேர்ந்தது. அவர் கற்பனைக் களஞ்சியமென்று சிறப்பிக்கப்படுவாரென்றும், சாதுரியமான செய்யுட்களைப் பாடும் வன்மையையுடையவரென்றும் சொல்லிவிட்டு அவர் இயற்றிய செய்யுளொன்றைச் சொல்லிக்காட்ட எண்ணி, அதிலுள்ள விஷயத்தை முதலிலும் அப்பாற் செய்யுளையும் சொல்லலானேன்:-
"ஒருசமயம், சிவபெருமானும் உமாதேவியாரும் கைலாசத்தில் வீற்றிருக்கையில் அவர்களிடம் கணபதி அழுதுகொண்டே வந்தார்; வந்து, தம்முடைய துதிக் கையால் காதைத் தடவித் தடவிச் சிணுங்கினார். அவரைக் கண்ட சிவபிரான், 'ஏனப்பா அழுகிறாய்?' என்று கேட்டார். அவர், 'சுப்பிரமணியன் என் காதில் அழுத்திக் கிள்ளி விட்டான்!' என்று சொல்லி விட்டு மேலும் மேலும் அழத் தொடங்கினார். உடனே சிவபெருமான் முருகக் கடவுளை வேகமாக அழைத்து, 'நீ ஏன் இப்படிச் செய்தாய்!' என்று கேட்டார். முருகக் கடவுள், 'அவன் மட்டும் என் முகத்தில் எத்தனை கண்கள் இருக்கின்றனவென்று எண்ணலாமோ?' என்று கோபத்துடன் கூறினார். தந்தையார் விநாயகரைப் பார்த்து, 'ஏன் அப்பா இப்படி 'வேடிக்கை பண்ணினை?' என்று கேட்டார். அவர், என் துதிக்கையைப் பிடித்திழுத்து முழம்போட்டு, அளந்தால் நான் சும்மா இருப்பேனா? என்று சொன்னார். முருகக் கடவுள் அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டு நின்றார். இந்தப் பிள்ளைகளின் விளையாட்டை விசாரிக்கத் தொடங்கினால் அதற்கொரு முடிவே இரா தென்று சிவபிரான் எண்ணி உமாதேவியாரைப் பார்த்து, 'உன் பிள்ளைகளின் லக்ஷணத்தைப் பார்!' என்று சொன்னார். உடனே அத்தேவியார் அழுது கொண்டிருந்த கணபதியை அழைத்து முதுகைத் தடவிக்கொடுத்து, அவன் கிடக்கிறான் விஷமக்காரன்; நீ அழாதேயப்பா!' என்று ஆறுதல் கூறினார். இந்த விஷயமே,
'அரனவ னிடத்திலே யைங்கரன் வந்துதான்
ஐயவென் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில்
விளங்குகண் ணெண்னி னனென
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படி
விகடமேன் செய்தாயென
மருவுமென் கைந்நீள முழமளந் தானென்ன
மயிலவ னகைத்து நிற்க
மலையரைய னுதவவரு முமையவளை நோக்கிநின்
மைந்தரைப் பாராயெனக்
கருதரிய கடலாடை யுலகுபல வண்டங்
கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்
களிப்புட னுமைக்காக்கவே'
என்ற பாட்டில் அமைந்திருக்கிறது. கணபதி சுப்பிர மணியர்களுக்கிடையில் விஷமம் நடப்பது இயல்பென்று தோன்றுகிறது. இந்த வகுப்பிலுள்ள இந்த இரண்டு பேரே அதற்குச் சாக்ஷி" என்று சொல்லிக் கொண்டே முற்கூறிய இருவரையும் சுட்டிக் காட்டினேன். பிள்ளைகளெல்லாம் கொல்லென்று சிரித்தார்கள். அதுமுதல் அவ்விருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறை கூறுவதை நிறுத்திவிட்டனர்.
'இது கும்பகோணமல்ல'
சென்னை இராசதானிக் கல்லூரியில் நான் 1903-ஆம் வருஷம் டிசம்பர் முதல் வேலைபார்க்கத் தொடங்கினேன். இங்கே வருவதற்குமுன் பலர், "அது பெரிய நகரம்; பிள்ளைகள் அடங்க மாட்டார்கள்" என்று கும்பகோணத்தில் பயமுறுத்தினார்கள். கடவுளே துணை யென்று நான் வந்து சேர்ந்தேன். வந்த சில காலத்தில் அவர்கள் கூறியது உண்மை என்பதை உணர்ந்தேன். நாகரிகம் அதிகமாகவுள்ள சென்னையில் மாணாக்கர்கள் சுதந்தரபுத்தி மிக்கவர்களாகவே இருந்தார்கள். உபாத்தியாயரைப் பாடஞ் சொல்லிக் கொடுக்கும் யந்திரமாகவே அவர்கள் கருதினார்களென்று தோற்றியது. ஆசிரியர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுமென்ற விஷயமே அவர்களுக்குத் தெரியவில்லை. 'பிரின்ஸிபால்' முதலிய அதிகாரமுள்ள பெரிய ஆசிரியர்களிடத்தில் மாத்திரம் பயத்தில் அடங்குவதும் மற்றவர்களிடம் மனம் போனவாறு நடப்பதுமாக இருந்தார்கள்.
ஒரு சமயம் பல மாணாக்கர்கள் ஒரு வகுப்புப் பரீட்சைக்காக வந்து அமர்ந்திருந்தார்கள். தேச பாஷா பண்டிதர்களுக்குத் தலைவராக இருந்த ஸ்ரீமான் ராவ்பகதூர் ம. ரங்காசாரியவர்கள் வந்து வினாப்பத்திரங்களைக் கொடுப்பது வழக்கம். அவர் வரும் வரையில் பண்டிதர்களும் மாணாக்கர்களும் காத்திருந்தார்கள். அப்பொழுது பிள்ளைகள் கூச்சலிட்டுக் கொண்டும் சிரித்துக்கொண்டும் கால்களால் பெஞ்சுகளை ஓசையுண்டாகும்படி இடித்துக்கொண்டும் இருந்தார்கள். பின் வரிசையில் இருந்த சில மாணாக்கர் தம் தொப்பியை மேலே வீசினர். அதை முதல் வரிசையில் இருப்பவர் தலையால் ஏந்தினர். காகிதம், புஸ்தகம், பென்ஸில்கள் முதலியன ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு ஆகாய மார்க்கமாகப் பிரயாணம் செய்தன.
இந்தக் குழப்பத்தை நான் பார்த்தேன்; 'சென்ன பட்டணத்துக்கே உரியதாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் காட்சி இதுதான் போலிருக்கிறது!' என்றெண்ணினேன். மெல்ல ஒரு மாணாக்கரிடம் சென்று, "பேசாமல் இரும்; ஏன் சத்தம் போடுகிறீர்?" என்று கூறினேன். அவர் என் பேச்சைக் கடுகளவுகூட லக்ஷியம் செய்யவில்லை. "நீங்கள் பேசாமல் போங்கள்! இங்கே இப்படித்தான் நடக்கும். இது கும்பகோண மல்ல" என்று கம்பீரமாக விடைகூறினார். நான் மேலே பேசுவதனாற் பயனொன்றுமில்லை என்று அறிந்தேன். 'இதையும் கும்பகோணம்போல் ஒரு காலத்தில் ஆக்கிவிடலாம்' என்று நம்பியிருந்தேன். தெய்வானுகூலத்தால் விரைவில் மாணாக்கர்கள் பின்பு அடங்கி நடப்பாராயினர். கும்பகோணத்தைப் போலவே சென்னையும் எனக்குத் திருப்தியைத் தந்தது. கும்பகோணத்தைக் காட்டிலும் இந்நகரில் அதிகப் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லி வந்தமையால் என்னுடைய சந்தோஷம் மிக்கது.
சமயத்திற்கு உபகாரம்
முன் எழுதிய நிகழ்ச்சி நடந்த மறுநாள் வகுப்பில் பாடஞ்சொல்லத் தொடங்கினேன். முதல் வரிசையில் இருந்த மாணாக்கர் ஒருவர் வலது காலைத் தூக்கி இடது துடைமேற் போட்டு அவ்வலது முழங்காலை இரண்டு கைகளாலும் கட்டி மேலே உயர்த்திக் கொண்டும், இடையிடையே காலை அசைத்துக் கொண்டும் உட்கார்ந்திருந்தனர்; எனையாவது பாடத்தையாவது அவர் சிறிதும் கவனிக்கவேயில்லை. நான் அவரைக் கவனித்தேன். அவர் வேறு ஊரில் படித்து விட்டு இந்தக் காலேஜில் வந்து சேர்ந்தவர். இங்கே உள்ள சிறந்த கட்டிடங்களையும் வசதியான இடங்களையும் போன்ற அமைப்புக்களை அவர் முன்படித்த ஊரில் காணாதவர். அவருடைய இருப்பு,'இவ்வளவு அழகான இடத்திலிருந்து படிக்கும் பாக்கியம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்தக் கடற் காற்றும், கட்டிடமும் நம்மோடு கீழ் வகுப்புக்களில் படித்த எல்லோருக்கும் கிடைக்குமா? நமக்கல்லவா கிடைத்திருக்கிறது!' என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாரென்று காட்டியது.
அப்பொழுது நடந்த பாடம் கம்பராமாயனம். அனுமானைப் பற்றிச் சொல்லும் சஃதர்ப்பம் தற் செயலாக, நேர்ந்தது. "அனுமான் மகா தீரர். அவர் இராணனுடைய சபைக்குச் சென்றார். இராவணன் உயர்ந்த சிங்காதனத்தில் ராஜஸத்தோடு வீற்றிருந்தான்.வந்த அனுமானுக்கு ஆசனம் கொடுக்கவுவுமில்லை; அவரை உட்காரச் சொல்லவுமில்லை. அனுமான் பார்த்தார். அவனை அவமானப்படுத்த வேன்டுமென்பது அவருடைய எண்ணம். மிக விரைவாக இராவணனுடைய சிங்காதனத்தின் அருகில் தம் வாலைச் சுற்றிச் சுற்றி அச்சிங்காதனத்தைவிட உயரமாக ஓர் ஆசனத்தை உண்டாக்கி அதன்மேல் தாவினார். கால்மேல் காலைப் போட்டு முழங்காலை உயர்த்திக் கைகளாற் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் உட்கார்ந்திருந்த நிலையை எப்படி நான் தெளிவாகச் சொல்லமுடியும்? இதோ இவர் உட்கார்ந்திருக்கிறாரே, இப்படித்தான்!" என்று அந்த மாணாக் கரைச் சுட்டிக் காட்டினேன். பிள்ளைகளுடைய சிரிப்புக் கோஷம் அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. எல்லாரையும்போல அதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மாணாக்கர் அந்தக் கதை தம்மிடத்தில் வந்து முடிந்தவுடன் திடுக்கிட்டார். அவர் கைகள் கட்ட விழ்ந்தன; காலை மெல்ல நழுவ விட்டார்; சரியானபடி வைத்துக்கொண்டார்.
பாடம் முடிந்த பிறகு பிள்ளைகள் வேறு வகுப்புக்குச் சென்றார்கள். முன்னே குறிப்பிட்ட மாணாக்கர் என்னிடம் தனியே வந்து "என்னை இப்படி அவமானம் பண்ணலாமா?" என்று கேட்டார். "உன்னுடைய தோற்றமும் நீ உட்கார்ந்திருந்த நிலையும் நன்றாக இருந்தன. நான்மட்டும் பார்த்துச் சந்தோஷிப்பதில் என்ன பயன்? எல்லோரும் பார்க்க வேண்டுமென்றுதான் காட்டினேன். அன்றியும், நீ அப்படியிருந்தது சமயத்திற்கு நல்ல உபகாரம் செய்தது. இல்லாவிட்டால் நான் உதாரணம் சொல்ல முடியாமல் விழித்திருப்பேன்" என்றேன்.
அவர் பேசாமல் சென்றார். 'அவர் உட்கார்ந்திருந்த கோலத்திற்குக் கதை உதாரணமாக வந்ததா? கதைக்கு உதாரணமாக அக்கோலம் ஆயிற்றா? என்ற சந்தேகம் யாருக்கும் இராதென்று கருதுகின்றேன்.
ஒரு கிழவியின் வாழ்த்து.
வில்லிபுத்தூரார் பாரதம் பாடம் நடக்கையில் திருமாலுக்குரிய நாமங்களுள் பன்னிரண்டு ஒருவகை யென்றும் அவை கேசவாதிகளென்றும் சொல்ல நேர்ந்தது. அப்பொழுது ஒரு பிராமண மாணாக்கரைப் பார்த்து, "கேசவாதி நாமங்கள் பன்னிரண்டும் ஸந்தியாவந்தனத்தில் வருவதுண்டே; தெரியுமா? தெரிந்தால் சொல்" என்றேன்.
"எனக்குத் தெரியாது" என்றார் அவர்.
"ஆசமன மந்திரம் தெரியுமா?" என்றேன்.
"தெரியாது" என்றார்.
பின்பு வேறு சில மந்திரங்களைக் கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
அப்பால், "ஒவ்வொருவருக்கும் தம் தம் குலாசாரங்களைக் கடைப்பிடித்து அனுஷ்டானம் செய்து வரவேண்டும். தெய்வப் பிரார்த்தனையை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உரியகாலத்திற் செய்ய வேண்டியது அவசியம். உலகத்திலுள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு ஜாதியினருக்கும் உரிய பிரார்த்தனைகள் பெரியோர்களால் அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைச் செய்துவந்தால் நமக்குக் கடவுள் அருளால் நன்மை உண்டாகும். சந்தியா வந்தனமும் ஒருவகையான தெய்வப் பிரார்த்தனையே. அதனை ஒழுங்காகச் செய்து வந்தால் ஞாபகசக்தியும் கூரிய அறிவும் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு மேலே பாடத்தை நடத்தலானேன்.
சிலநாட்கள் சென்றன. ஒருநாள் காலேஜ் வேலை முடிந்தவுடன், நான் யாரைச் சந்தியாவந்தன மந்திரங்களைப் பற்றிக் கேட்டேனோ அந்த மாணாக்கர் என்னிடம் வந்து, "பல நாளாக என் தகப்பனார் தங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார். இன்று எங்கள் வீட்டுக்கு வந்து போகவேண்டும்" என்றார். அவர் வீடு காலேஜிலிருந்து என் வீட்டுக்குப் போகும் வழியிலுள்ள தெருவில் இருந்தமையால் நான் உடன்பட்டேன். அங்கே சென்றதும் அவர் தந்தையார் மிகவும் உபசரித்துச் சிற்றுண்டிகள் கொடுத்துப் பிரியமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் கும்பகோணத்திற் படித்தவர்.
அப்பொழுது சமையலறையிலிருந்து ஒரு கிழவியின் தலை மட்டும் வெளியிலே தெரிந்தது. அதைக் கண்டவுடன் அவர், "இவர்தான்" என்று விரைவாகச் சொல்லி என்னை அந்தக் கிழவிக்குச் சுட்டிக் காட்டினார்.
என் மனம் திடுக்கிட்டது. என்னை யாருக்கு எதற்காகச் சுட்டிக் காட்டினாரென்று விளங்கவில்லை. ஏதேனும் அவர்களுக்கு வெறுப்பான காரியத்தை நான் செய்து விட்டேனோவென்று பயந்தேன்.
என்னுடைய பார்வையினால் நான் விஷயமறியாமல் மயங்குகிறேனென்பதை யுணர்ந்த அம்மாணாக்கரின் தந்தையார், "அவள் என்னுடைய தமக்கை. சில காலமாக என்னுடைய பிள்ளை ஒழுங்காகச் சந்தியாவந்தனம் செய்து வருகிறான். தனியே பஞ்ச பாத்திரம், உத்தரணி, விபூதிப்பை ஆகியவற்றை வாங்கியிருக்கிறான். வேளை தவறாமல் சந்தியா வந்தனம் செய்கிறான். என்னுடைய தமக்கை முன்பு எத்தனையோ முறை அதை விடக்கூடாதென்றும், செய்யவேண்டுமென்றும் சொல்லிவந்தும் இவன் கவனிக்கவேயில்லை. அதனால் அவளுக்கு வருத்தமாக இருந்தது. திடீரென்று இவன் ஒருநாள் சாஸ்திரிகளை அழைத்து வந்து அவரிடம் மந்திரங்களை நன்றாகக் கற்றுக்கொண்டு சந்தியாவந்தனம் செய்யத் தொடங்கினான்; ஒழுங்காகச் செய்யலானான். எங்களுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவில்லை. 'ஏதப்பா இவ்வளவு தூரம் உனக்குப் புத்தி வந்தது?' என்று விசாரித்தோம். இவன், 'எங்களுக்கு ஒரு புதிய தமிழ் வாத்தியார் வந்திருக்கிறார். அவர் சந்தியா வந்தன மந்திரம் கேட்கிறார்; வேறு மந்திரங்களையும் கேட்கிறார்; சந்தியாவந்தனம் பண்ணாமல் இருக்கக் கூடாதென்றும் சொல்கிறார்' என்றான். அதுமுதல் ஒவ்வொருநாளும் என் தமக்கை தங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறாள். 'இந்தப் புதிய நாகரிகத்தில் இப்படியும் சொல்லுகிறவர் ஒருவர் இருக்கிறாரா! அவரை ஒருமுறை பார்க்கவேண்டும்' என்று அவள் தினந்தோறும் சொல்லி வந்தாள். அதனால்தான் இன்று அழைத்துவரச் சொன்னேன்" என்றார்.
"தாயார் தகப்பனாரை விட்டுப் பல பிள்ளைகள் இங்கே வந்து படிக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக நடந்து வருவார்களென்று அவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். இங்கே பிள்ளைகளைப் பற்றிக் கவலை கொள்ளுவோர் யாரும் இல்லை. உபாத்தியாயர்களே கவனிக்கவேண்டும். இந்தக் காலத்திற் சிலருக்கு நான் செய்வது சரியாகத் தோற்றாது. ஆனாலும் நான் பிள்ளைகளின் நன்மையை உத்தேசித்தே செய்வதனால் அவர்கள் அபிப்பிராயத்தை நான் பொருட்படுத்துவதில்லை. உங்களைப் போன்ற சிலராவது என் செயலை நல்ல தென்று ஆமோதிக்கிறார்களென்று தெரிந்ததில் எனக்கு உண்டாகும் திருப்தி சொல்வதற்கரியது" என்று நான் என் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.
உள்ளே யிருந்த கிழவி தட்டு நிறையப் பழமும் தாம்பூலமும் வைத்து ஒரு குழந்தையின் மூலம் அனுப்பினாள்.
பேச்சுக்குத் தடை
ஒருநாள் பாடஞ் சொல்லிக்கொண்டிருக்கையில் வகுப்பில் இடைவரிசையிலிருந்த இரண்டு பிள்ளைகள் பாடத்தைக் கவனியாமல் பேசிக்கொண்டேயிருந்தனர். நான் சிலமுறை கவனித்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. உடனே நான் பாடம் சொல்லுவதை நிறுத்திவிட்டுப் பேசாமலிருந்தேன். நிறுத்தினதற்குக் காரணத்தை மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளவில்லை. முதல் வரிசையில் இருந்த மாணாக்கர் ஒருவர் எழுந்திருந்து, "மேலே சொல்ல வேண்டும்" என்றார்.
"சொல்லலாம். அந்த இரண்டு பேர்களும் மிக அருமையாக ஏதோ சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சுக்குத் தடையாக நான் பாடஞ் சொல்வது உசிதமாக இராதென்று எண்ணுகிறேன். இருவரும் ஒருவருக்கொருவர் நெடுந்தூரத்தில் வசித்து வருபவர்களாக இருக்கலாம். அவசியமான விஷயங்களைப் பேசவேண்டுமென்றால் அவ்வளவு தூரம் வந்து பேச முடியாதல்லவா? இந்தச் சமயத்தைப் போலக் கடற்காற்று வீசும்போது சந்தோஷமாகப் பேசுவதற்கு வேறு அவகாசம் கிடைப்பது அருமை. அதனால் அவர்கள் பேசுகிறார்கள். நான் அதற்கு அனுகூலமாக இராவிட்டாலும் பிரதிகூலமாவது செய்யாமல் இருக்கலாமே. அதனால் தான் பாடத்தை நிறுத்தினேன்" என்று நான் சொல்லிவிட்டு அவ்விருவர்களையும் பார்த்து, "ஏன், இன்னும் சிறிது நேரம் ஆகலாமா?" என்று கேட்டேன். மலர்ந்த தாமரைகளுக்கு நடுவில் இரண்டு வாடிய தாமரைகளைப்போல் அவ்விருவர் முகங்களும் மாறியதைக்கண்டு மேலே பாடஞ் சொல்லத் தொடங்கினேன்.
துரைராஜா நாற்காலி
புதுக்கோட்டை மன்னருடைய இளைய சகோதரர்களில் ஒருவரான ஸ்ரீசுப்பிரமணிய துரைராஜா என்பவர் காலேஜில் படித்துவந்தார். 'பிரின்ஸிபா'லுடைய உத்தரவின்படி அவருக்கு மட்டும் தனி நாற்காலி யொன்று வகுப்பில் போடப்பட்டிருந்தது. அதில் அவர் இருந்து பாடங் கேட்டு வந்தார்.
ஒருசமயம் அவர் சிலநாட்கள் கலாசாலைக்கு வரவில்லை. அவர் வரமாட்டாரென்பதை ஒரு மாணாக்கர் அறிந்துகொண்டார். வகுப்பிற்கு வந்தவுடன் அவருடைய் நாற்காலி வறிதே இருப்பதை யறிந்து அதிற்போய் உட்கார்ந்துகொண்டார். மாணாக்கர்களும் நானும் அதைக் கவனித்தோம். மாணாக்கர்கள் அவரை அடிக்கடி பார்த்து நறுமொறுத்தார்கள்.
மறுநாள் அந்த மாணாக்கர் உயர்ந்த முறையிற் கூடியவரையில் துரைராஜாவைப் போல உடையணிந்துகொண்டு வந்தார். நாற்காலிக்கு ஏற்றபடி தம் உடை இருக்கவேண்டுமென்பது அவர் நினைவு. நெடுநாட்களாக அந்த நாற்காலியில் உட்கார வேண்டுமென்ற அவா அவருக்கு இருந்திருக்கலாமென்று தோற்றியது. அவர் வெகு வேகமாக நாற்காலிக் குரிய இடத்திற்கு வந்தார். அங்கே அது காணப்பட வில்லை. ஏமாந்துபோய் நின்றார். அப்பால் வேறு எங்கேனும் இருக்கிறதாவென்று ஆராய்ந்தார்.
வகுப்பில் இருந்த நான் "ஏனப்பா? ஏதாவது விழுந்து விட்டதா? எதைத் தேடுகிறாய்? என்று கேட்டேன்.
அவர் விடையளிப்பதற்குள் வகுப்பிலிருந்த நாராயணசாமி ஐயரென்பவர், "நாற்காலியைத் தேடுகிறார்!" என்றார். எனக்கு விஷயம் தெரியுமாயினும் தெரியாதவனைப் போலவே இருந்தேன்.
"நாற்காலியா? எந்த நாற்காலி?"
"துரைராஜா நாற்காலி. நேற்று உட்கார்ந்தது போல இன்றைக்கும் உட்கார எண்ணித் தேடுகிறார்."
"அப்படியா? எங்கே அது?"
"அது பத்திரமாக இருக்கிறது; துரைராஜா வரும்போது வரும். இவ்வளவு பேர் தங்கள் தங்கள் ஆசனத்தில் இருக்கும்போது இவருக்குமட்டும் நாற்காலி என்ன? பிறருடைய நாற்காலியில் உட்காருவதனால் திருப்தியடைவது நியாயமாகுமா?"
"வாஸ்தவந்தான். துரைராஜாவுக்குப் பிரின்ஸி பாலவர்களே நாற்காலியிலிருக்க உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர் ராஜ வம்சத்தினர். எல்லோரும் நாற்காலியில் இருப்பது சாத்தியமாகுமா? அன்றி, இங்கே நாற்காலியில் உட்காரவா வருகிறீர்கள்? வருவது பாடம் கேட்பதற்கல்லவா? நாற்காலியில் உட்கார்ந்தால்தான் பாடம் கேட்க முடியுமோ? இன்றைக்கு இவர் அந்த நாற்காலியில் உட்காருவதற்குத் தக்கபடி உடை யணிந்து வந்திருக்கிறார். ஆனாலும் பாதகமில்லை. பழைய இடத்திற்கூட உட்காரலாம்" என்றேன். அம்மாணாக்கர் பேசாமல் ஓரிடத்திற் போய் அமர்ந்தார்.
நாமம் இட்டுக்கொண்டு வந்த மாணவர்
ஒரு நாள் நெற்றியில் விபூதி முதலியன தரிப்பதைப் பற்றிய செய்தி பாடத்தில் வந்தது. இந்துக்கள் சூன்யமான நெற்றியுடன் இருக்கலாகாதென்று சொன்னேன்.
மறுநாள் அந்த வகுப்பில் பாடஞ் சொல்லத் தொடங்குகையில் மாணாக்கர் பெயர்கள் வாசிக்கப் பட்டன. ஒரு ஸ்மார்த்த மாணாக்கரின் பெயரைக் கூப்பிடுகையில், விடையளித்தவர் வேறொருவராக எனக்குத் தோற்றினார். அவரைப் பார்த்தேன். முகத்தில் மிகவும் பிரகாசமாக் அவர் திருமண் இட்டுக் கொண்டிருந்தார்.
"அவனுக்காக நீ ஏன் விடையளிக்கிறாய்?" என்று அவரைக் கேட்டேன்.
"நான் தான் அவன்" என்றார் அவர்.
நான் அவரை உற்றுக் கவனித்தேன்; "அடடா? நாமமல்லவா உன்னை மறைத்துவிட்டது! இதை ஏன் இட்டுக்கொண்டாய்?" என்று கேட்டேன்.
"நேற்று நீங்கள், எல்லோரும் நெற்றிக்கு இட்டுக் கொண்டு வரவேண்டுமென்று சொன்னீர்களே!"
"இதை நீயாக இட்டுக்கொண்டாயா? வேறு யாராவது இட்டார்களா?"
"இவனே எனக்கு நாமம் போட்டான்" என்று அவர் ஒருவரைச் சுட்டிக்காட்டினார். எல்லோரும் சிரித்தார்கள்.
"நீ செய்தது சரியன்று. அவரவர்கள் எந்த எந்தச் சின்னங்களைத் தரித்துக்கொள்ள வேண்டுமோ அவற்றைத்தான் தரிக்க வேண்டும். உங்கள் முன்னோர்கள் எப்படி நெற்றிக்கு வைத்துக் கொண்டார்களோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். உனக்குப் பதிலாக ஐயங்கார் யாரோ வந்திருக்கிறாரே என்று நான் மயங்கினேன். நீ இன்று செய்தது ஒருவகையில் நல்லதுதான்; நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதே; அதுவே போதும்!"
அதுமுதல் அவர் சரியாக நெற்றிக்கு இட்டுக் கொண்டு வரலானார்.
'ரஸத்தைச் சொல்லுங்கள்'
ஒருநாள், பாரதத்தில் துரோணாச்சாரியார் இறந்த போது அசுவத்தாமன் வருந்துவதாக உள்ள செய்யுட்களைப் பாடஞ்சொன்னேன். சொல்வதற்குமுன் வில்லி புத்தூராழ்வாரது பெருமையையும் கல்வியாற்றலையும் எடுத்துச் சொல்லிவிட்டு, "இந்தப்பகுதி மிகவும் ரஸமுள்ள பாகம்" என்று கூறினேன். பாடஞ் சொல்லிமுடித்த பிறகும், "பார்த்தீர்களா? இந்தச் செய்யுட்கள் எவ்வளவு ரஸமுள்ளனவாக இருக்கின்றன! இப்படியே தமிழில் ஆயிரக் கணக்கான செய்யுட்கள் உண்டு. தமிழ்ச் சுவையை அனுபவிப்பதைக் காட்டிலும் சிறந்த இன்பம் வேறொன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை" என்றேன்.
பாடம் முடிந்தவுடன் பிள்ளைகள் வெளியே சென்றார்கள். ஒருவர் மாத்திரம் தனியே உட்கார்ந்திருந்தார். அவர் தம் கையில் பென்ஸிலும் குறிப்புப் புத்தகமும் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்த வண்ணம் எதையோ எழுதத் தொடங்குபவரைப்போல
இருந்தார்.
"ஏன் நீமட்டும் இருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"ஒன்றும் இல்லை. நீங்கள் அந்தச் செய்யுளில் ரஸம் இருக்கிறதென்று சொன்னீர்களே. அந்த ரஸத்தைச் சொன்னால் எழுதிக் கொள்ளலாமென்று காத்திருக்கிறேன்" என்றார்.
எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். செய்யுளின் ரஸம் எலுமிச்சம்பழ ரஸமா? இன்ன விடை கூறுவதென்று எனக்குத் தோற்றவில்லை; பிறகு, "ரஸத்தை நம்முடைய அறிவினால் அறிந்து கொண்டு சந்தோஷிக்க முடியுமேயன்றி எழுதவும் சொல்லவும் முடியாது. தமிழில் அன்பும் பழக்கமும் அதிகமாக ஆக அந்த ரஸம் உனக்கே புலப்படும்" என்று சொல்லி அனுப்பினேன்.
தாம் எதிர்பார்த்தபடி எழுதிக்கொள்ள முடியவில்லையே யென்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதற்கு நான் என்ன செய்வேன்!
மாப்பிள்ளைகள்
காலேஜில் படிக்கும் தங்கள் மாப்பிள்ளைகளைப் பற்றிப் பலர் என்னிடம் குறை கூறுவதுண்டு. அவர்களை நான் திருத்தக்கூடுமென்பது அவர்கள் எண்ணம். மாப்பிள்ளைகளால் நேரும் செலவு, மன வருத்தம் முதலியவற்றை அவர்கள் மூலம் நன்றாக நான் அறிந்தேன்.
பாடஞ் சொல்லும்போது மாப்பிள்ளைகளைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது; "இந்தக் காலத்து மாப்பிள்ளைகள் சிலரை நினைத்தால் வருத்தமடைய வேண்டியிருக்கிறது. காலேஜில் படிக்கிற மாப்பிள்ளைகள் தம் தகப்பனாரிடமிருந்து வருகிறபணம் போதாமையால், மாமனாருக்கும் எழுதிப் பணம் பெற்றுப் பலவகையான வீண் செலவு செய்கிறார்கள்; மாமனாருக்கு அதிகாரத் தொனியோடு எழுதி அவரைப் பயமுறுத்துகிறார்கள். நீங்கள் அப்படிச் செய்யமாட்டீர்கள். ஆனாலும், உலகிலுள்ள இயல்பைச் சொல்ல வந்தேன்" என்றேன்.
அப்பொழுது பின்வரிசையில் இருந்த இருவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
"நீங்கள் இன்ன விஷயத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களென்று எனக்குத் தெரியும். இந்த உபாத்தியாயருக்கு மாப்பிள்ளைகளால் தொந்தரவு உண்டாயிருகிறதென்று பேசுகிறீர்களல்லவா?" என்று அவர்களைக் கேட்டேன்.
"ஆமாம்" என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
"நீங்கள் நினைத்தது தவறு. எனக்குப் பெண்களே இல்லை. ஆனாலும் பல மாமனார்களோடு பழகுவதனால் இந்த விஷயங்கள் தெரியவந்தன. உங்களுக்குச் சொன்னால் இந்த அபக்கியாதிக்கு நீங்கள் பாத்திரராகாமல் இருப்பீர்களென்று சொல்லலானேன்" என்றேன்.
பல்லவி ராகம்
வகுப்பில் பாடஞ் சொல்லும்போது செய்யுட்களை இசையோடு படிக்க வேண்டுமென்பதை நான் அடிக்கடி வற்புறுத்துவதுண்டு. இனிய சாரீரமுடையவர்களைப் படிக்கச் செய்து யாவருக்கும் ஊக்கம் உண்டாக்குவேன். நானும் பல ராகங்களிற் படித்துக் காட்டுவேன்.
செய்யுட்களை இசையுடன் படிப்பதே முறையென்று பிள்ளைகளுக்கு நான் சொல்லும்போது சிலர் "இவன் செய்யுட்களை நன்றாகப் பாடுவான்" என்று யாரையேனும் சுட்டிக் காட்டிக் கூறுவர். "கீர்த்தனங்களைப் பாடுவதும் ராகங்களைப் பாடுவதும் ஆகிய இவைகளையே பாடுதலென்று சொல்லவேண்டும். சங்கீத வித்துவான்கள் அங்ஙனம் பாடுவார்கள். இந்தச் செய்யுட்களை இசையுடன் படித்த மாத்திரத்தாலே அது பாடுவதாகாது; அப்படிப் படித்தவன் சங்கீத வித்துவானாக ஆகமாட்டான். இசையோடு படிக்கத் தக்க முறையிலே தமிழ்ச் செய்யுட்கள் அமைந்திருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது இசையோடு படித்தால்தான் அச்செய்யுட்களின் ஓசை நயம் புலப்படும். செய்யுளிலக்கணத்திற் சொல்லப்படும் சீர் என்பது தாளத்தைக் குறிக்கும் பெயர். இசையைப்போல ஓசையை வரையறுத்து அமைத்த செய்யுளுறுப்பிற்குச் சீர் என்ற பெயரை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். எல்லோரும் செய்யுட்களைச் சிறிதளவாவது இசையோடு படித்துப் பழக வேண்டும்" என்று நான் சொல்லி அவர்களை அங்ஙனம் கூறாதவாறு செய்வேன்.
ஒருநாள் சில விருத்தங்களைப் பலவகை ராகத்திற் படித்துக் காட்டினேன். மாணாக்கர்களைப்ப் பார்த்து, "உங்களுக்குத் தெரிந்த ராகங்களைச் சொல்லுங்கள். அவற்றிற் படித்துக் காட்டுவேன்" என்று சொன்னேன். ஒவ்வொருவரும் தாம் தாம் கேட்டறிந்தராகப் பெயர்களைக் கூறினர். நான் படித்துக் காட்டிக் கொண்டே வந்தேன். அப்பொழுது ஒரு மாணாக்கர் திடீரென்று, "பல்லவி ராகம்" என்றார். சங்கீதத்தைப்பற்றிச் சிறிதளவு தெரிந்த மாணாக்கர்களும் கொல்லென்று சிரித்தனர். நானும் சிரித்தேன். அவர் ஒன்றும் விளங்காமல் மயங்கி நின்றார். 'மற்றவர்கள் சொன்ன ராகத்திலே இவர் படித்தார். நாம் சொன்ன ராகத்தில் மட்டும் படிக்காமல் சிரிக்கிறாரே' என்று அவர் நினைத்திருப்பார்.
"ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமோ?" என்று அவரை நான் வினாவினேன்.
"தெரியவில்லையே!" என்றார் அவர்.
"பல்லவி என்பது ஒரு ராகத்தின் பெயரன்று. கீர்த்தனங்களில் முதலில் உள்ள உறுப்புக்குப் பல்லவி என்று பெயர். எல்லாக் கீர்த்தனங்களுக்கும் பல்லவி உண்டு" என்றேன்.
"பல்லவி பாடுகிறது என்று சொல்லுகிறார்களே" என்று அவர் கேட்டார்.
"அந்தப் பல்லவியைப் பலவகையாக மாற்றி மாற்றிப் பலவகையான சங்கதிகளை அமைத்து விரித்துப் பாடுவதைப் பல்லவி பாடுவது என்று சொல்வார்கள். சில வித்துவான்கள் அவ்வாறு பாடுவதிற் புகழ் பெற்றவர்கள்.பல்லவி கோபாலையர் முதலியோர் அத்தகையவர்களே. ஆதலால் பல்லவி என்பது ராகமன்று. நீ இது தெரியாமல் அதையும் ராகமாக எண்ணிக் கேட்டதனால் யாவரும் சிரித்தார்கள்" என்று சொன்னேன்.
---------------
5. 'மூப்பனார் தேசத்து ராஜா'
தஞ்சையில் இருந்து அரசாண்ட சரபோஜியரசர் ஒருமுறை வடதேச யாத்திரை செய்தார்.தமக்குரிய பரிவாரங்களுடன் அவர் சென்றபோது அங்கங்கே உள்ள அரசர்களாலும் பிரபுக்களாலும் உபசரிக்கப் பெற்றார். அவர் போய்க் கொண்டிருக்கையில் அங்கங்கே உள்ள ஜனங்கள் கூட்டங் கூட்டமாகத் திரண்டுவந்து அவரையும் அவருடைய யானை முதலியவற்றையும் பார்த்துச் சென்றார்கள்.அங்ஙனம் வந்து கூடியகூட்டத்திற் பல பைராகிகளும் இருந்தார்கள்.
பைராகிகள் எப்பொழுதும் யாத்திரை செய்து கொண்டிருப்பவர்கள்.ஆதலின் அவர்கள் எல்லா நாடுகளையும் அறிந்தவர்கள்.அவர்கள் மற்ற ஜனங்களிடம் சரபோஜி அரசரைச் சுட்டிக்காட்டி,"இவர் மூப்பனார் தேசத்து ராஜா"என்று சொல்லிவிட்டு, மேலே தஞ்சாவூரின் பெருமையை வருணிக்கத் தொடங்கினார்கள்.இங்ஙனமே பலர் சரபோஜி அரசரைச் சுட்டினமையின் வடதேசத்தினரிற் பெரும்பாலோர் அவரை 'மூப்பனார் தேசத்து ராஜா' என்றே வழங்கலாயினர்.
இது சரபோஜி அரசருடைய காதிற் பட்டது. 'நாம் ஓர் அரசராக இருக்கும்போது,நம்மை நேரே அறிந்து கொள்ளாமல் நம் குடிகளுள் ஒருவராகிய மூப்பனார் மூலமாக அறிந்த இந்த ஜனங்களுக்கும் அந்த மூப்பனாருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தார்.தம்முடன் வந்தவர்களை விசாரித்தார். அவர்கள் அந்தப் பைராகிகளையே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
"மூப்பனார் தேசமாவது!இவர் தஞ்சாவூர் ராஜாவல்லவா?"என்று சில பைராகிகளை அவர்கள் கேட்டனர்.
"ஆமாம்.மூப்பனாரும் அதற்குப் பக்கத்தில் .....?"
"எந்த மூப்பனார்?"
"கபிஸ்தலம் மூப்பனார்!"
"அவர் பெயர் என்ன?"
"அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?பல தேசங்களையும் கடந்து அவருடைய புகழ் வீசும் பொழுது அருகிலுள்ள உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?ராம பத்திர மூப்பனாரென்று அவர் பெயரைச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்."
விசாரித்த அதிகாரிகளுக்கு மூப்பனாரைப்பற்றி நன்றாகத் தெரியும்.ஆனாலும் பைராகிகளின் கருத்தை விளக்கமாகத் தெரிந்துகொள்ள எண்ணிக் கேட்டார்கள்.
"அவர் என்ன செய்து விட்டார்?"
"அவர் என்ன செய்யவில்லை?இப்படி நீங்கள் கேட்கிறீர்களே; நீங்கள் அவர்களுடைய விரோதிகளோ? என்ன அன்னதானம்!என்ன உபசாரம்! அங்கே சாப்பிட்ட சாப்பாடு இன்னமும் மணக்கிறது.மூப்பனார் தேசத்துக் காய்கறிகளுக்கு எத்தனை ருசி!"
பைராகிகள் மேலும் மேலும் வருணிக்கத் தொடங்கினார்கள்.அதிகாரிகளுக்குக் காது கொப்பளித்து விட்டது.
"சாப்பாடு மட்டுமா? சனி, புதன் கிழமைகளில் எண்ணெய் கூடக் கொடுக்கிறார்.எந்த மகாராஜன் அப்படி அன்னம் போடப் போகிறான்?அந்தத் தேசத்தை விட்டு வர எங்கள் மனம் இடம் தருவதில்லை. ராமேசுவரத்துக்குப் போகும்போதும் திரும்பி வரும்போதும் மூப்பனார் ஊருக்குப் போகாமல் இருக்க மாட்டோம்.எங்களுக்குத் தமிழ் தெரியாது; அவர் பிரியமாகப் பேசுவதை அறிய முடிவதில்லை. ஆனாலும் அவருடைய முகவிலாஸம் எங்களை அவரிடம் இழுக்கும்.எங்கள் பாஷையிற் பேசி உபசாரம் செய்வதற்குச் சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.நீங்கள் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டதில்லையோ?"*
அதிகாரிகள் பல்லைக் கடித்துக் கொண்டார்கள். 'நம்மையும் பரதேசிப் பயல்களாக எண்ணிப் பேசுகிறார்கள்'என்ற கோபத்தினால் அவர்களுக்கு மீசை *துடித்தது.
சரபோஜியரசர் இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்தார். அவர் நல்ல அறிவாளியாதலின் மூப்பனார்பாற் பொறாமை கொள்ளவில்லை. அவர் குணங்களையே நாடுபவர். 'சரபோஜி தேசத்து மூப்பனார்' என்று யாவரும் சொல்ல வேண்டியிருப்ப, 'மூப்பனார் தேசத்து ராஜா'என்று மாறிச் சொல்லவைத்தது.
அம் மூப்பனாருடைய அன்னதானமே என்பதை ஆரய்ந்தறிதார்; தாம் அங்ஙனம் செய்யாதது பெருங்குறை யென்பதையும் உணர்ந்தார்; வட தேசத்து யாத்திரையால் உண்டான பெரும் பயன்களில் இந்த உணர்வு வந்ததும் ஒன்றென்றே கருதினார்.
அரசர் மனம் வைத்தால் பின்பு சொல்ல வேண்டுமா?அவர் ஊருக்கு மீண்டபின்பு பல அன்ன சத்திரங்களை ஏற்படுத்தினார்; எல்லாச் சாதியினருடைய பசியையும் போக்கினார்.ஆயினும் அவர் வடதேசத்துப் பைராகிகளுக்கு மூப்பனார் தேசத்து ராஜாவாகவே இருந்து வந்தார்.*
* ஜயபாரதி-வாரப்பதிப்பு-- 11-4-37
-----------
6. பண்டைத் தமிழரின் இசையும் இசைக் கருவிகளும்
இசையின் பெருமை
† இசையினுடைய பெருமையை ஓர்ந்தே தமிழர், முத்தமிழுள் இசைத்தமிழை நடுநாயகமாக வைத்திருக்கின்றனர்.இயற்றமிழாகிய இலக்கிய நூல்கள் செய்யுட்களால் இயன்றன.அவை இசையுடனேயே பயிலப்படவேண்டும்.நாடகத்திற்கு இசை இன்றியமையாததென்பதை யாவரும் அறிவர்.தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சியும், ஆங்கிலம் தெலுங்கு முதலிய பாஷைகளின் பயிற்சியும் உடையவர்களால் அவ்வக் கலைகளில் அறிவுடையாரையே இன்புறுத்த முடியும்.ஆனால் இசையோ கற்றார்,கல்லார், விலங்கினங்கள், பறைவைகள் முதலிய எல்லா உயிர்க்கும் இன்பம் நல்கும்.பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருதிணை உயிர்களும் இசையின் வயப்பட்டு நின்றனவென்று பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.
------------
† 1929-ஆம் வருஷம் மே மாதம் 16-ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் கோடைக்கால வாத்திய சங்கீதப் பள்ளிக்கூடத்தின் ஆதரவில் செய்த பிரசங்கம்.
காட்டிலுள்ள புஷ்பங்கள் மலரும் பருவத்தில் வண்டுகள் சென்று அவற்றிலிருந்து ஊதும். மலரும் பருவத்திலிருக்கும் பேரரும்பு 'போது'என்று தமிழிற் கூறப்படும். காட்டிலுள்ள முனிவர்களும் பிறரும் சிற்சில போதுகள் மலர்வதாற் காலத்தை அறிந்து வந்தனர். நள்ளிருள் நாறி என்றொரு மலர் உண்டு. அது நடுயாமத்திலேதான் மலரும். சூரியன் மறைந் திருப்பினும்,மலர்தலாலும் குவிதலாலும் போதினைப் புலப்படுத்தலின் போதென்று அப் பேரரும்புகள் பெயர் பெற்றன.அப்போதுகளில் வண்டுகள் இசை பாட அவை மலரும்; "புதலும், வரிவண் டூத வாய்நெகிழ்ந்தனவே" என்பது குறுந்தொகை.
பாம்பு இசைக்கு அடங்கும் என்று கூறுவர். மதம் பிடித்து அலையும் யானைகளும் இசையால் அடங்கிவிடும்; பரிக்கோல்,குத்துக்கோல் முதலிய ஆயுதங்களாலும் அடக்க முடியாத யானை வீணயின் இசைக்கு அடங்கி விடுமாம்; இச்செய்தியே உவமானமாக,
"காழ்வரை நில்லா கடுங்களிற் றொருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு"
என்று கலித்தொகை யென்ற சங்க நூலிற் கூறப்பட்டுள்ளது.
"அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்
மணியொலி வீணையும்"
என்று பெருங்கதையும்,
"மகரயாழ் வல்ல மைந்தன்
ஒருவனைக் கண்ட மத்தப்
புகர்முகக் களிற்றின்"
என்று மேருமந்தர புராணமும் கூறுகின்றன.
குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையைக் காக்கும் ஒருபெண் தெள்ளிய சுனையில் நீராடிப் பரணின்மேல் நின்று இனிய காற்றில் தன்கூந்தலை ஆற்றிக் கொண்டும் மிகுந்த களிப்புடன் அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டும் நிற்கையில், தினைக்கதிரை உண்பதற்காக அங்கே வந்த யானை யொன்று அந்தப் பெண்ணின் இசையிலே மயங்கிக் கதிரை உண்ணாமல் தான் கொண்ட பெரும்பசியையும் மறந்து மயங்கி நின்றதாக ஒரு செய்தி அகநானூறு என்னும் நூலில் காணப்படுகின்றது. இந்தக் காட்சியையே,
"ஒலியல் வார்மயி ருளரினன் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகன் மழகளி றுறங்கு நாடன்"
என்ற அடிகள் தெரிவிக்கின்றன.
பெருங்கதையில், உதயணன் நளகிரி யென்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை எடுத்துத்தர அதனையே ஏவி ஊர்ந்தானென்று ஒருசெய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை உதயணனுக்கு அடங்கி நின்றதை ஆசிரியர் கூறுகையில்,
'குருவினிடத்துப் மிகுந்த பக்தியுள்ள ஒரு சிஷ்யனைப் போல யானை படிந்தது'என்னும் பொருள் பட,
"வீணை யெழீஇ வீதீயி னடப்ப
ஆனை யாசாற் கடியுறை செய்யும்
மாணி போல மதக்களிறு படிய"
என்று பாடியுள்ளார்.
பசுக்கள் இசையின் வயப்படுகின்றன என்பதைக் கண்ணன் கதை விளக்கும்.பசுக்களைப் பல இடங்களிலும் மேயவிட்டு விளையாடிக் கொண்டிருந்த கண்ணபிரான் மாலைக் காலத்தில் அவற்றை ஊருக்கு ஓட்டிப் போக வேறு ஒன்றும் செய்வதில்லை.குழலை யெடுத்து ஊதுவான்; உடனே பல இடங்களிலும் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களெல்லாம் ஒருங்கே திரண்டு கண்ணன்பால்வந்து சேரும்.இதனையே,
"ஆக்குவித் தார்குழ லாலரங் கேசர்",
என்று திவ்ய கவி ஒருவர் சுருக்கமாக விளக்குகின்றார். பெரிய புராணத்திற் கூறப்படும் நாயன்மார்களுள் ஆனாய நாயனாருடைய புராணத்தும் இத்தகைய செய்திகள் காணப்படுகின்றன.
அசுணமா என்றொரு விலங்கு உண்டு.அதனைப் பறவை யென்பாரும் உளர்.இசையை அறிவதிற் சிறந்தது அது. இனிய இசையைக் கேட்டுக் களிக்கும்; இன்னாத இசையைக் கேட்பின் மூர்ச்சையுற்று விழுந்து விடும்.அதன் தன்மையை,
"இருஞ்சிறைத் தொழுதி யார்ப்பயாழ் செத்து
இருங்கல் லிடரளை யசுண மோர்க்கும்"
என்ற அகநானூற்றடிகளாலும்,
"இன்ன ளிக்குரல் கேட்ட வசுணமா
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாள்"
என்ற சீவக சிந்தாமணிப் பாட்டாலும்,
. யாழ்
நறைய டுத்த வசுணநன் மாச்செவிப்
பறைய டுத்தது போலும்"
என்ற கம்பர் வாக்காலும் அறியலாகும்.அதனைப் பிடிக்க எண்ணியவர்கள் மறைவிலிருந்து யாழ் வாசிப்பார்களென்றும் அதன் இசையைக் கேட்டு அருகுற்று அசுணம் களிக்கு மென்றும் அப்பொழுது அதனைப் பிடித்துக் கொள்வார்க ளென்றும் தெரிகிறது. அவர்கள் கை முதலில் யாழின் இசையால் அசுணத்திற்கு இன்பத்தை விளைவித்துப் பின்பு அதன் உயிருக்கே அழிவு சூழ்வதை நற்றிணையில் உவமையாக எடுத்தாண்டு,
"அசுணங் கொல்பவர் கைபோ னன்றும்
இன்பமுந் துன்பமு முடைத்தே"
என்று ஒரு நல்லிசைப் புலவர் பாடியிருக்கின்றார். கின்னரப் பறவையும் இத்தகையதே.
வண்டி மாடு,ஏற்றக் காளைகள் முதலியவற்றை இயக்கும்பொழுது தெம்மாங்கு,ஏற்றப் பாட்டு முதலிய பாடல்களைப் பாடுவதையும்,அவைகளைக் கேட்டு அவ்விலங்குகள் தம் வேலையை வருத்தமின்றி அமைதியாகச் செய்து வருவதையும் இன்றும் காண்கிறோம். அந்தத் தெம்மாங்கு தேன் பாங்குபோலும்! குழந்தைகள் அன்னையின் இனிய தாலாட்டிசையைக் கேட்டு அழுகை ஓய்ந்து உறங்குவதை எவர்தாம் அறியார்?
வன்மனக் கள்வரும் தம் கொடுஞ் செயலை மறந்து இசை வயத்தாராவர். ஒரு பழைய நூலில் இத்தகைய செய்தி காணப்படுகிறது. பாலை நிலத்தில் ஆறலைகள்வர் வழிவருவோர் பொருளையும் உயிரையும் கவர்வார்; பொருளில்லையெனினும் வாளால் வெட்டப்பட்ட உடம்பு துள்ளுவதைப் பார்த்தேனும் களிக்கும் பொருட்டுக் கொலை செய்வர். அவர்முன் பொருநர்கள் பாலைப்பண்ணைப் பாடினால், அக்கள்வர் தம் கையிலுள்ள ஆயுதங்களை நழுவவிட்டுத் தங்கள் வன்றொழிலை மறந்து அன்புற்று இசைக்கு உருகுவார்களாம். இதனையே,
"ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருளின் பாலை"
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
சீவக சிந்தாமணியின் கதாநாயகனான சீவகன், ஆண்களைப் பார்ப்பதுகூட இல்லையென்ற விரதத்துடன் இருந்த சுரமஞ்சரியென்ற பெண்ணின்பால் ஒரு பழுத்த கிழவன் வேடங் கொண்டு சென்று இசை பாடி அவளை வசப்படுத்தினான். அவனது இசையைக் கேட்ட பெண்கள் யாவரும் வேடன் பறவைபோற்கத்தும் ஓசையைக் கேட்டு மயங்கி ஒரே கூட்டமாக ஓடிவரும் மயிலினங்களைப்போல விரைந்து வந்தனரென்று கவி அவ்விடத்தில் வருணிக்கிறார்.
"கள்ள மூப்பி னந்தனன்
கனிந்த கீத விதியே
வள்ளி வென்ற நுண்ணிடை
மழைம லர்த்த டங்கணார்
புள்ளு வம்ம திமகன்
புணர்த்த வோசை மேற்புகன்
றுள்ளம் வைத்த மாமயிற்
குழாத்தி னோ*...."
என்பது அந்தப் பாட்டு.
பிறரை இசை தன்வயப்படுத்தும் என்னும்போது என்னுடைய இளமைக் காலத்தில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. என்னுடைய தமிழாசிரியாகிய திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடத்துச் சிறப்புப்பாயிரம் பெறப் பல புலவர்கள் முயற்சி செய்வதுண்டு. சிறந்த சங்கீத வித்துவானும் மிக்க சிவபக்தரும் ஆகிய கோபாலகிருஷ்ணபாரதி யவர்கள் தாம் இயற்றிய நந்தன் சரித்திரக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் வேண்டியபோது பிள்ளையவர்கள் தருவதற்கு மறுத்து விட்டார்கள். மறுத்தாலும் பாரதியார் முயன்றே வந்தார். ஒருநாள், பிள்ளையவர்கள் உள்ளே படுத்திருக்கும்போது அவர்கள் வீட்டிற்கு வந்த பாரதியார் பிள்ளையவர்கள் நித்திரை செய்கிறார்களென்பதை அறிந்து எழுப்புதல் கூடாதென்று எண்ணி வெளியேயிருந்து தமது நந்தன் சரித்திரக் கீர்த்தனையிலுள்ள, "கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டாற் கலி தீரும்" என்ற கீர்த்தனையை இனிமையாக மெல்லப் பாடிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து கீர்த்தனை முழுவதையும் பாடும் வரையில் இருந்து கேட்டு மனம் உருகி,'இதற்குச் சிறப்புப் பாயிரம் கொடாமல் இருப்பது முறையன்று' என்று உடனே வந்து சிறப்புப் பாயிரமொன்றை வழங்கினார்கள்.*
--------
*இவ்வரலாற்றின் விரிவை கோபாலாகிருஷ்ண பாரதியார் சரித்திரத்திற் காணலாகும்.
பரமசிவனே இசையின் வடிவமாய் இருப்பவனென்றும் இசையிற் பிரியம் உடையவனென்றும் பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.
"ஏழிசையா யிசைப்பயனாய்"
"இயலவன் இசையவன்"
"இயலிசைப் பொருள்க ளாகி"
"ஏழிசையை"
என வரும் தேவாரப் பகுதிகள் சிவபெருமான் இசையுருவினனென்பதை நன்கு தெரிவிக்கின்றன.இசையிலுள்ள விருப்பத்தினால் அனவரதமும் இசையைக் கேட்டு ஆனந்திக்கும் பொருட்டுக் கம்பளர் அசுவதரர் என்ற இசையில் வல்ல இரண்டு கந்தருவர்களைச் சிவ பெருமான் காதிற் குழையாக வைத்தருளியிருக்கின்றனனென்று நூல்கள் கூறும்.
"இசைவிரும்புங் கூத்தனார்" என்பதும் இறைவனுடைய இசை விருப்பத்தை வெளியிடும். ஈசுவரன் திருக்கரத்தில் வீணையை வைத்து வாசித்து இன்புறுவதாகப் பெரியோர் கூறுவர்; "எம்மிறை நல் வீணை வாசிக்குமே" என்பது தேவாரம். இத்தகைய மூர்த்தி 'வீணா தட்சிணாமூர்த்தி' என்று வழங்கப் படுவர். கண்ணன் வேய்ங் குழலோடு விளங்கி இசை பரப்பியதை அறியாதார் யார்? கடவுளாலேயே விரும்பப்படுவது இசையென்பதை அறிந்து பல தொண்டர்கள் இசையாலேயே இறைவனை வழிபட்டிருக்கின்றார்கள். நாயன்மார்களுள் ஆனாய நாயனார், திருநாளைப் போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் முதலியவர்கள் இசையால் வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். ஆனாய நாயனார் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குழலில் இசைத்து ஊதி வழிபட்டார். மதுரையில் பாணபத்திரர் என்னும் அடியார் யாழ் வாசித்துச் சிவபெருமானை வணங்கி வந்தார். அவருக்காகச் சோமசுந்தரக் கடவுள் விறகு சுமந்து இசைபாடி அவருடைய எதிரியைப் பயந்து ஓடச் செய்தார். திருமாலடியார்களுள்ளும் திருப்பாணாழ்வார், நம் பாடுவான் முதலியோர் இசைபாடித் திருமாலை வழிபட்டார்கள். இத்தகையவர் இன்னும் பலருளர்.
கடவுளைத் துதிக்கும் தோத்திரங்களெல்லாம் இசைப்பாட்டாக அமைந்து விளங்குதல் கடவுளுக்கு இசையிலுள்ள விருப்பத்தை வெளியிடுமன்றோ? தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகளும், திவ்யப்பிரபந்தமும்,திருப்புகழும்,தத்துவராயர் பாடுதுறை முதலியனவும் இசைப்பாட்டுக்களாலாகிய நூல்களே. தேவாரங்களின் பண்கள் முற்கூறப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த ஒருவரால் அமைக்கப்பட்டன.அ ங்ஙனமே திவ்யப் பிரபந்தத்திற்கும் பண்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இவற்றைத் தெரிவிக்கும் நூலைத் தேவகானமென்பர்.எ ல்லோரும் அனுசந்திக்க இயலுமாறு ஒருவித இசையுடன் இப்போது பயிலப்பட்டு வரினும், திவ்யப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய பண்கள் முன்பு அமைந்திருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது பதிப்பிக்கப்பட்டுள்ள திவ்யப் பிரபந்தப் புத்தகங்களிற் பலவித ராகங்களைப் பொருத்தமின்றி அமைத்திருக்கின்றார்கள். ஒரே பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ராகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருப்பது முறையன்று.
இதுகாறுங் கூறியவை இசையின் பெருமையைப் புலப்படுத்தும். இனி, தமிழர் இசையை வளர்த்த முறையை ஆராய்வோம்.
தமிழர் இசை
பழைய தமிழ்ச் சங்கங்களில் மூன்று தமிழையும் ஆராய்ந்து வந்தார்கள். இசைத் தமிழாராய்ச்சியும் இசைப் பயிற்சியும் அப்பொழுது ஏனைய இயல் நாடகங்கள் போல மிகவும் சிறந்து விளங்கின.
இசைத் தமிழ்ச் சங்கங்களே தனியே அமைக்கப் பட்டுப் பல இசைவல்லார்கள் இசைத் தமிழை வளர்த்து வருவதற்கு நிலைக்களனாக இருந்தனவென்று தெரிய வருகிறது.
"ஏழிசைச் சூழல்புக்கோ"
என்று வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரால் இசைச் சங்கங்களும் இருந்தனவென்பதை அறியலாம். கடைச்சங்கப் புலவர்களுள்ளும் இசையையே சிறப்பாகப் பயின்று ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர்களும் இருந்தார்கள். அவர்கள் கண்ணகனார், கண்ணனாசனார், கேசவனார், நந்நாகனார், நல்லச் சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர். இவர்களையன்றி நெடும்பல்லியத்தனார் என்று ஒருவர் இருந்தார். அவர் பல வாத்தியங்களிலும் பயிற்சியுடையவராதல் பற்றி அப்பெயர் பெற்றார் போலும். அவர் பாட்டிற் பல வாத்தியங்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கினறன. புதுக்கோட்டைத் தச வாத்தியம் கிருஷ்ணையர் என்ற ஒரு சங்கீத வித்துவானுடைய ஞாபகம் இங்கே வருகிறது. அவர் பத்து வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவர். கூடாரம்போல ஓர் இடம் அமைத்து அதில் இருந்து கொண்டு சுற்றிலும் பல வாத்தியங்களை வைத்து அவர் வாசிப்பார்.
கடைச்சங்க காலத்தில் இருந்த இசைத்தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் பல. இப்பொழுது சிலப்பதிகார உரைகளே அந்த நூல்களின் பெயர்களையும் அவற்றிற் சிலவற்றிலிருந்து சில பகுதிகளையும் தெரிவிக்கன்றனவே யன்றி அந்நூல்கள் அகப்படவில்லை. அந்தச் சிலப்பதிகார உரைகளால் தெரிந்த தமிழ் இலக்கண நூல்கள் பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், கச்சபுட வெண்பா, இந்திரகாளியம், பதினாறு படலம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை முதலியன. பிற்காலத்தில் எழுந்த சுத்தானந்தப்பிரகாசம் முதலிய சில நூல்களும் இசையிலக்கணத்தைக் கூறுவனவே. பழைய இசைத்தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், பரிபாடல் முதலியனவாம். சிலப்பதிகாரம், இலக் கணங்களையும் கூறும். சீவகசிந்தாமணி, சூளா மணி, கல்லாடம், திருவால வாயுடையார் திரு விளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல், அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் முதலிய பிற்கால நூல்களிலும் இசைத் தமிழ் இலக்கணங்கள் காணப்படுகின்றன.
குறவஞ்சி, பள்ளு, சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங்களும் இசையைச் சேர்ந்தனவே.
இசைத் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்தன வென்பதால் அக்காலத்தில் இருந்த இசையமைப்பின் விரிவு உணரப்படும். சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் இசையைப் பற்றித் தெரிந்தவற்றிற் சில கூறுவேன்.
இசைவகை
இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமுங் கொண்டவை ஸம்பூர்ண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தாவென்று கூறப்படுவதும் அதுவே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும்; அவற்றையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஸட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற் பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று இப்போது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இக்காலத்தில் ஜன்ய ராகங்களென்று வழங்கப்படும்.
"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்
குறை நரம்பிற்றே திறமெனப் படுமே"
என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் என்பவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பருங்கல விருத்தி யுரையில் காணப்படும் மேற்கோட் செய்யுளாகிய,
"பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையாற் பண்ணின்
நிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்"
என்பதில் இது விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.
இப்படிப் பிறக்கும் பண்ணும் திறமுமாம் இசை வகைகள் ஒரு வழியில் தொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன.
பண்கள் பல வகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப்பெரும்பண்கள் ஐந்து. இவற்றின் வகையாகும் பண்கள் பல. இவற்றுள் பகற் பண்கள் முதலியனவும், அவ்வப்பொழுதிற்கு அமைந்த பண்களும், யாமங்களுக்குரியனவும் எனப் பலவகை யுண்டு. புறநீர்மை முதலிய பன்னிரண்டு பண்கள் பகற்பண்களெனப்படும். தக்க ராக முதலிய ஒன்பது பண்கள் இராப் பண்களெனப்படும். செவ்வழி முதல் மூன்று பொதுப் பண்களாம். காலைக்குரிய பண் மருதம். மாலைக்குரியது செவ்வழி என்பாரும் உளர். இந்தப் பண்களால் இசை வல்லோர்கள் சில குறிப்பினை அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனை மாலையில் வரவேண்டி மாலைப்பண்ணைப் பாடினாரென்று ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரங்கற் பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். சிவபெருமானால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கம் உண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட,
"விராய்மலர்ப்பூங் குழலிபங்கன் மகிழ்வி னோங்கும்
வெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரிபாடும், இராவணனார்"
என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இச் செய்யுட்பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க.
இத்தகைய பண்களை அமைத்துப் பாட்டுக்கள் இயற்றப்பெறும். பொருட்கு ஏற்றனவும், சுவைக்கு ஏற்றனவுமாகிய பண்களை யமைத்து இசைப் பாட்டுக்களைப் புலவர் பாடினர். பண்ணும் பாட்டும் இயைந்திருத்தல் வேண்டும்.
"பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல்"
என்ற குறள் இதனை வலியுறுத்தும். பண்ணமைந்த இசைப்பாட்டுக்கள் உருக்கள், வரிகள் எனக் கூறப்படும். இக்காலத்தில் கீர்த்தனங்களைக் குறிக்க வழங்கும் உருப்படிகள் என்ற சொல் உரு என்ற பழைய வழக்கிலிருந்தே வந்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அவ்வுருக்கள் பத்துவகை யென்று ஒரு சாரார் பகர்வர். அவை செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி. கானல்வரி, விரிமுரண், தலை போகு மண்டிலம் என்பனவாம். தாளக்கிரியையுடன் பொருந்தும் பாட்டுக்கள் ஒன்பதென்பர்; அவை,சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறு தேவபாணி, வண்ணம் என்பனவாம்.
இவைகளை யன்றி இசைப்பகுதியில் கந்தர்வ மார்க்க மென்பதொன்று உண்டு. இடை மடக்காகப் பாடுவதாகும் அது. காந்தர்வ சாஸ்திர மென்பது சங்கீத சாஸ்திரத்துக்கு ஒரு பெயர்.
பாடுங்கால் இன்னவகை யிலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களை மிக விரிவாக இசை நூல்கள் கூறும். குற்றம் சிலவகைப்படும்; இன்ன குற்றங்கள் இசை பாடுவோர்பால் இருத்தல் கூடாவென விலக்கியும் நூல்கள் கூறும்.
"வயிறது குழிய வாங்கல்
அழுமுகங் காட்டல் வாங்கும்
செயிரறு புருவ மேறல்
சிரநடுக் குறல்கண் ணாடல்
பயிரரு மிடறு வீங்கல்
பையென வாயங் காத்தல்
எயிறது காட்ட லின்ன
உடற்றொழிற் குற்ற மென்ப"
என்று திருவிளையாடற் புராணம் தெரிவிக்கின்றது.
பெரிய வித்துவான்கள் சிலரிடத்தும் இத்தகைய குற்றங்கள் காணப்படும்: காரணம் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளாமையே.
இனி, இசைக் கருவிகளைப் பற்றிப் பேசுவேன்.
இசைக் கருவிகள்
இசைக்கருவிகள் கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என மூவகைப்படும். பாடும்பொழுது மட்டும் கொள்ளுதற்குரியன கீதாங்க வாத்தியங்கள். நிருத்தரங்கம் நாடகத்திற்குரியன. இரண்டிலும் பயன் படுவன உபயாங்கமாம். எல்லா வாத்தியங்களுள்ளும் குழலையே முன்னதாகக் கூறியிருக்கிறார்கள். ஏனெனில், இயற்கையை அனுசரித்து அது செய்யப்பட்டது. காட்டில் வளர்ந்திருக்கும் மூங்கில்களில் வண்டுகள் துளைத்த துளைகளின்வழியே காற்று வீசும்பொழுது இனிய ஓசை எழும். அதைக் கேட்டே குழலை அமைத்தார்கள். இயற்கையில் மூஙகிலில் எழுந்த அந்த இனிய ஓசையைப்பற்றி அகநானூற்றிற் காணப்படும்
" ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத்
தோடலின் முழவின் றுதைகுர லாக"
என்ற அடிகள் விளக்குகின்றன. புல்லாங்குழலென்னும் பெயர் அது மூங்கிலால் செய்யப்பட்டமையால் ஏற்பட்டது. சிறுவர்கள் விளையாடும் கிட்டுப்புள் போன்று இருப்பதால் புள்ளாங்குழல் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர் சிலர்; அது பொருந்தாது.
" புறக்கா ழெல்லாம் புல்லெனப்படுமே"
என்ற சூத்திரத்தின்படி புறத்தே வயிரமுடைய மூங்கில் முதலியன புல்லெனப்படும். எனவே மூங்கிலாற் செய்யப்பட்டமை காரணமாகப் புல்லாங்குழலென்னும் பெயர் ஏற்பட்டதென்பதே பொருத்தமாகும். வங்கியம் என்றும் குழலுக்கு ஒரு பெயர் சொல்லப்படும். அது வம்சமென்பதன் திரிபு; வம்ச மென்பது மூங்கிலைக் குறிக்கும் வடமொழிப் பெயர்.
இயற்கை மூலமாக அறிந்து அமைத்தது பற்றிக் குழலே முதல் இசைக் கருவியாயிற்று.
"குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைந்த தாமந் திரிகை"
என்ற சிலப்பதிகார அடிகளில் இசைக்கருவிகள் முறையாகக் கூறப்பட்டிருக்கின்றன.
"குழலினிதி யாழினி தென்ப"
என்னும் குறளில் குழல் முன் வைக்கப்பட்டிருத்தல் காண்க.
குழலில் பலவகை உண்டு. கொன்றையங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையங்குழல் முதலியன பல இலக்கியங்களிற் சொல்லப்படுகின்றன. குழலின் இலக்கணங்களை விரிவாக நூல்களிற் காணலாம்.
இப்படியே யாழ்வகைகளும் பல உண்டு. யாழ் வேறு; வீணை வேறு. பேரியாழ் என்பதொன்றுண்டு. அஃது இருபத்தொரு நரம்புகளை உயையதென்பர். பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழ் என்பதொன்றும், பதினான்கு நரம்புளைடைய சகோட யாழ் என்பதொன்றும் இசை நூல்களிற் கூறப்பட்டுள்ளன. செங்கோட்டியாழென்பதொன்று ஏழு நரம்புகளை உடையதாம். ஆயிரம் நரம்பு கொண்டதும் ஆதியாழ் என்றும் பெருங்கலமென்றும் பெயர் கொண்டதுமாகிய ஒன்று இருந்ததென்பர்.
நரம்புகளின் குணங்கள் குற்றங்கள் முதலியனவும் இலக்கணங்களில் கூறப்பட்டுள்ளன.
தண்ணுமை வகைகளும் பல. பேரிகை, பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி,முழவு, சந்திரவளையம், மொந்தை,முரசு,கண்விடுதூம்பு,நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம்,விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை முதலிய தோற்கருவிகளின் பெயர்கள் நூல்களிற் காணப்படுகின்றன. மத்தென்ற ஓசையை எழுப்புதலின் ஒரு வாத்தியம் மத்தளம் எனப்படும். கரடியின் முழக்கம் போன்று சப்திப்பதால் ஒன்று கரடிகை எனப்பட்டது. இப்படியே வாத்தியங்களில் பெயர்க்குக் காரணங்கள் அமைந்திருக்கின்றன.
இதுகாறும் கூறிவந்த இசைக்கருவிகளை யன்றி வேறு பல கருவிகளும் ஆங்காங்கே கூறப்படுகின்றன. அவை ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப்பறை, பதலை முதலிய பல.
இந்த இசைக் கருவிகளோடும், இசையைப் பரம்பரையாகவே பயின்று அரசர்கள் பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசுபெற்றுவந்த வகுப்பினர் சிலர் இருந்கனர். பெரும்பாணர், சிறுபாணர், பொருநர், கூத்தர் முதலியோர் அத்தகையவர்களே. மலைபடு கடாம் என்ற நூலில் அவர்கள் பல வாத்தியங்களையும் பலா மரத்திற் காய்கள் தொங்குவதுபோல் தோன்றும்படி பின்னும் முன்னும் சுமந்துகொண்டு சென்றதாகச் சொல்லப் பட்டிருகின்றது.
பாணர் என்பார் பாட்டுப்பாடி ஜீவனம் செய்து வந்தவர்கள். அவர்கள் பெரிய அரசர்களிடத்தும் குறுநில மன்னர்களிடத்தும் தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசு பெற்றார்கள். பொன்னாற் செய்யப்பெற்ற தாமரைப் பூவை அவர்கள் பரிசாகப் பெறுதல் வழக்கமென்று தெரியவருகின்றது. இக் காலத்தில் நல்ல வன்மையையுடைய சங்கீத வித்துவான்கள் தங்கப் பதக்கங்களைப் பெறுவதைப்போன்ற செயலாகவே அதை நாம் கருதவேண்டும்.
பாணர்களுள் சிறிய யாழை வாசிப்பவர்கள் சிறு பாணரென்றும், பேரியாழை யுடையவர்கள் பெரும்பாணரென்றும் சொல்லப்படுவர். பெரியநகரங்களில்
அவர்கள் வாழ்ந்து வந்த வீதிகள் தனியே இருந்து வந்தன.
----------------
7. அன்னம் படைத்த வயல் *
* கலைமகள்
கும்பகோணத்தில் நான் இருந்த காலத்தில் ஒருமுறை திருவையாற்றில் நடைபெறும் ஸப்த ஸ்தானஉத்ஸவத்திற்குப் போகவேண்டு மென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. இற்றைக்குச் சற்றேறக் குறைய 45 வருஷங்களுக்குமுன் நிகழ்ந்த செய்தி இது. ஸப்தஸ்தானம் சித்திரை மாதத்துப் பௌர்ணிமையில் நடைபெறும்.
ஸப்தஸ்தானத்திற்கு முதல்நாள் நான் புறப்பட்டேன். ஐயம்பேட்டை என்னும் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் காவிரிக்கரை மார்க்கமாகச் சென்றேன். இடையிலேயுள்ள ஸ்தலங்களில் சில நேரம் தங்கி அந்த அந்த ஸ்தல சம்பந்தமான விஷயங்களை விசாரித்து நன்கு தெரிந்து கொண்டேன். எந்த ஊருக்குப் போனாலும் அவ்வூரில் இருந்த புலவர்கள் பிரபுக்கள் முதலியவர்கள் வரலாறுகளையும், சரித்திரம் புராணம் என்பவற்றையும், கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்துத் தொகுப்பது எனது வழக்கம். இதனால் பலநாளாகத் தெரியாமலிருந்த பல அரிய விஷயங்கள் மிக எளிதில் விளங்கியதுண்டு.
போகும் வழியில் திருச்சோற்றுத்துறை யென்பதொரு சிவஸ்தலம் உண்டு. திருச்சத்துறையென்று இப்பொழுது அது வழங்குகிறது. அது தேவாரப் பாடல் பெற்றது. * ஓதனவனமென வடமொழியிற் கூறப்படும். அங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீஓதனவனேசுவர ரென்பது; அம்பிகையின் திருநாமம் அன்னபூர்ணி யென்பது. திருவையாற்றோடு சம்பந்தப்பட்ட ஸப்தஸ்தான க்ஷேத்திரங்களுள் அதுவும் ஒன்று. அத்தலத்தைப் பற்றிய சில வரலாறுகளை நான் முன்பே அறிந்திருந்தேன். கௌதம மகரிஷி அங்கே இருந்து தவம் புரிந்ததாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அதனால் அத்தலம் கௌதமா சிரமமென்றும் வழங்கப்படும்.
------
* ஓதனம் - அன்னம்.
பஞ்சகாலம் ஒன்றில் அம்பிகை அங்கே பல ஏழைகளுக்கு அன்னம் படைத்ததாகச் சொல்வார்கள். சில வயல்களில் அன்னமே விளைந்ததாம். இது பழைய வரலாறு. இவ்வரலாற்றுக்குரிய அடையாளங்களாகச் சில இடங்கள் அத்தலத்தில் உள்ளன. எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது என்னுடைய அவா.
வழியிலே சந்தித்த சில பேரை " ஸ்தல சம்பந்தமாக ஏதாவது தெரியுமா?" என்று கேட்டேன். அவர்களிற் சிலர் என் கேள்விகளுக்கு விடையே சொல்ல வில்லை. சிலர், " குருக்களையாவைக் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். கோவிலைப்பற்றித் தெரிந்தவர் குருக்களை யன்றி வேறில்லை யென்பது அவர்கள் எண்ணம் போலும்!
நான் அவ்வூர் அக்கிரகாரத்திற்குச் சென்றேன். அங்கே ஓர் ஓட்டுவில்லை வீடு இருந்தது. அவ்விடம் சென்று வெளியில் நின்றபடியே உள்ளே இருப்பவர்களைப் பார்த்தேன். ஸப்த ஸதான உத்ஸவத்தின் பொருட்டு வருவோர் போவோர்களுக்கு உபசாரம் செய்து உணவளிக்கும் காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
"யார் ஐயா உள்ளே? " என்று நான் கூப்பிட்டேன். யாரோ ஒருவர் வந்தார். வரும்போதே, "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்டுக்கொண்டு வந்தார். அதைத்தான் நான் கேட்பேனென்று அவர் நினைவு. நான், "அதுவுந்தான் வேணும்" என்றேன்.
அவர் தீர்த்தம் கொணர்ந்து கொடுத்துவிட்டு, "வேறு என்ன வேணும்?" என்று கேட்டார்.
" ஒன்றும் இல்லை. இந்த ஸதலத்தைப் பற்றிச் சில சமாசாரங்கள் தெரியவேண்டும். இங்கே அம்பிகை ஒரு சமயம் எல்லோருக்கும் அன்னம் அளித்துண்டாம். அதைப்பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்ல வேண்டும்" என்றேன்.
" அதுதான், நீங்களே சொல்லுகிறீர்களே; நான் வேறு என்ன சொல்லவேண்டும்?"
"அது சம்பந்தமான அடையாளம் ஏதாவது இந்த ஊரில் இருக்கிறதா? தெரிந்தால் அநுகூலமாக இருக்கும்"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு அவர் தம்முடைய வேலையைக் கவனிக்க உள்ளே சென்றார்.
அப்பொழுது, "யாரையா அது?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. வெயிலிலே வந்த களைப்பினால் என் கண்கள் சரியானபடி பார்க்கும் சக்தியை இழந்திருந்தன. சற்று நிதானித்தேன்.
"என்ன ஐயா தெரிந்துகொள்ளவேணும்?" என்று மறுபடியும் ஒரு கேள்வி வந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்கு அருகில் இருந்த நீளமான திண்ணையின் ஒரு கோடியில் ஒரு கிழவி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அந்தக் கிழவிதான் என்னைக் கேட்டாளென்பதை உணர்ந்தேன்.
"என்னைத்தான் கேட்கிறீர்களா?" என்று சொல்லிக்கொண்டே அந்தத் திண்ணையின் கோடிக்குச் சென்றேன்.
"ஆமாம்" என்றாள் கிழவி.
அவளுடைய பிராயம் எண்பதுக்குமேல் இருக்கும். கண் ஒளி இல்லை; ஒரு தடிக்கம்பை அருகிலே வைத்துக் கொண்டு சில கந்தைத் துணிகள், ஒரு கொட்டாங்கச்சியில் ஜபம் செய்வதற்கான கூழாங் கற்கள், ஓர் அழுக்கடைந்த செம்பு, ஏதோ தின்பண்டத்தை மூடிவைத்திருந்த சிறிய தகரப் பாத்திரம் ஒன்று ஆகிய இவற்றோடு அக்கிழவி அங்கே வீற்றிருந்தாள். அவளுக்குத் திரையிட்டது போல ஒரு நிரைச்சல் இருந்தது. அதன்மேல் வெள்ளை அழுக்குப் புடைவை யொன்று காய்வதற்காகக் கட்டப்பட்டிருந்தது. கிழவி எதையோ மென்றுகொண்டே கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி ஜபம் செய்து கொண்டிருந்தாள்.
நான் அருகில் நின்றேன்.
"என்னவோ உள்ளே கேட்டீரே; என்ன கேட்டீர்?" என்று என் காலடி யோசையை அறிந்து கிழவி வினவினாள்.
"இந்த ஊரைப்பற்றித்தான் கேட்டேன். கோவிலைப்பற்றி விசாரித்தேன்" என்றேன்.
"இப்படி உட்காரும். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது; அவர்களுக்குத் தலை பின்னிக் கொள்ளத் தெரியும்; பூ வைத்துக் கொள்ளத் தெரியும். கோவிலாவது! குளமாவது! அதெல்லாம் எனக்குத் தான் தெரியும். உங்களுக்கு அவர்கள் பதில் சொன்னார்களா?"
"தெரியாதென்று சொல்லிவிட்டார்கள்."
"அவர்களுக்குத்தான் தெரியாதென்று சொல்கிறேனே. நீர் அவர்களைப் போய்க் கேட்கப்போனீரே! என்னை யார் லக்ஷியம் பண்ணுகிறார்கள்? ஏதோ பசித்த வேளைக்குச் சோறு போடுவதோடு சரி. என்னைக் கேட்டு என்ன காரியம் நடக்கிறது? பழைய காலமா?"
பாட்டி சிறிது நேரம் பேசவில்லை. அவளுடைய மனோரதம் பழைய காலத்தில் சஞ்சாரம் செய்வதாகத் தெரிந்தது. மறுபடியும் பாட்டி நிகழ்காலத்துக்கு வந்தாள்.
"குழந்தைக்கு ஜ்வரம் வரட்டும்; அப்பொழுது பாட்டி வேணும்; மருந்து, மாத்திரை, பச்சிலை சொல்ல வேணும். சரி, அது கிடக்கட்டும். உமக்கு எந்த ஊர்?"
"நான் உத்தமதானபுரம்."
"உத்தமதானபுரமா? அங்கே எங்களுக்குக்கூடச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே. நீர் என்ன ?"
"நான் அஷ்டஸஹஸ்ரம்."
"அடே! எங்கள் ஜாதிதான். நீர் யார் பிள்ளை?"
நான் சொன்னேன். விரைவிலே ஸ்தல வரலாறுகளைக் கேட்டுக்கொண்டு திருவையாறு போகலாமென்றெண்ணிய நான் அந்தக் கிழவியின் பேச்சுக்கும்
கேள்விகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று. என்ன செய்வது!
"எங்கள் தகப்பனாருடைய பாட்டியின் மாமியார் இந்த ஊரிலே பிறந்தவள்" என்று நான் சொன்னேன்.
"சரிதான். எல்லாம் பந்துக்களாகத் தான் இருக்கும். கிட்டி முட்டிப் பார்த்தால் சொந்தமாய்விடும். இந்தக் காலத்தில் உறவு, ஒட்டு இதெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? பழைய காலமா? இப்பொழுது ரயில் போட்டுவிட்டான் வெள்ளைக்காரன். பம்பாயாம், கல்கத்தாவாம், அங்கெல்லாம் சம்பந்தம் செய்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கிற பந்துக்களை யார் ஐயா கவனிக்கிறார்கள்?"
பாட்டிக்கு உத்ஸாகம் உண்டாகிவிட்டது. அவளோடு யாரும் பேசுவதில்லை! எத்தனையோ நாட்களாகக் கட்டுக் கிடையாக மனத்துக்குள் புதைத்து வைத்திருந்த அபிப்பிராயங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துவிட ஆரம்பித்தாள். பொறுமையோடு கேட்பதற்கு நான் ஒருவன் அகப்பட்டுக் கொண்டேன்.
பேசாமல் எழுந்துபோய் விடலாம். அப்படிச் செய்ய என் மனம் துணியவில்லை. 'கல உமி தின்றால் ஓர் அவலாவது கிடைக்காதா?' என்று எதிர்பார்ப்பவன் நான்; முதியவர்களிடத்திலே பொறுமையோடு விசாரித்தால் பல செய்திகளை அறியலாமென்பது என் அனுபவம். ஆதலால் நான் அந்தக் கிழவியின் கேள்விகளுக்கெல்லாம் தக்கபடி பதில் சொல்லி வந்தேன்.
ஊர், சாதி, குலம், கோத்திரம், வேலை, சம்பளம், குழந்தை, கல்யாணம், குடும்ப சமாசாரம் முதலிய பல விஷயங்களை அந்தக் கிழவியிடம் நான் சொல்ல வேண்டி யிருந்தது.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தக் கிழவியின் கேள்விகளுக்கும் பிரசங்கத்துக்கும் ஒரு முடிவு இராதென் றெண்ணி, "பாட்டீ, இந்த ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டும்" என்று ஞாபகப் படுத்தினேன்.
"ஆமாம். ஞாபகம் இருக்கிறது. சொல்லுகிறேன்: இங்கே அம்பிகை ஒரு பஞ்ச காலத்திலே ஏழைகளுக்கெல்லாம் பெரிய வயல் ஒன்றில் அன்னம் போட்டாளாம். அந்த வயல்கூட இருக்கிறது. அதற்கு அன்னம் படைத்த வயல் என்று பேர்."
நான் எதிர்பார்த்த விஷயம் வெளிவந்தவுடன்
எனக்கு, 'இவ்வளவு நேரம் வீணாகப் பேச்சிலே கழிந்ததே?' என்றிருந்த வருத்தம் மறைந்து விட்டது.
"அப்படியா! அந்த வயல் எங்கே இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டேன்.
"எனக்குக் கண் தெரிந்தால் நான் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிவிடுவேன்" என்று சொல்லிவிட்டு அந்த வயல் உள்ள இடத்திற்குரிய அடையாளங்களைமட்டும் அந்தக் கிழவி சொன்னாள்.
"இந்த ஊரில் சோறுடையான் வாய்க்காலென்று தெற்கே ஒன்று இருக்கிறது. சோறுடையான் என்பது இந்த ஊர் ஸ்வாமி பெயர்" என்று மற்றொரு செய்தியை வெளியிட்டாள் கிழவி. இப்படி அந்தக் கண்ணில்லாத முதியாள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல நான் கேட்டு என் மனத்துள் தொகுத்துக் கொண்டேன். இடையிடையே எனக்கு வேண்டாத சமாசாரங்களும் பாட்டியால் விரிவாகச் சொல்லப்
பட்டன. அவற்றை அந்த நிமிஷத்திலேயே மறந்து விட்டேன்.
"இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட கர்நாடக சமாசார மெல்லாம் யார் கேட்கிறார்கள்? கேட்டாலும் யார் சொல்லப்போகிறார்கள்? ஏதாவது பழுத்த கட்டையா யிருந்தால் உளறிக் கொண்டிருக்கும்" என்று கிழவி பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள்.
அவளுடைய பேச்சிலே இரக்கத்தொனி இருந்தது. அந்தப் 'பழுத்த கட்டை' உளறிய செய்திகளை நான் அப்பால் குறித்து வைத்துக் கொண்டேன். அவற்றை வேறு வகையால் அறிதல் இயலாத காரியம்.
பிறகு அந்தப்பாட்டி, "இன்னும் ஏதாவது தெரிய வேணுமா?" என்று கேட்டாள்.
அவளுக்குச் சலிப்பில்லை. எனக்கோ திருவையாற்று ஞாபகம் வந்துவிட்டது. "நான் போய் வருகிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டேன். அப்பொழுது என்னை அறியாமலே எனக்கு அந்தக் கிழவியிடத்தில் ஓர் அன்பும், காரணந்தெரியாத
துக்கமும் உண்டாயின. அவளைப் போன்ற 'பழுத்த கட்டைகள்' எவ்வளவு பேர், எத்தனை விஷயங்களைக் கேட்பார் இல்லாமல் மனத்துக்குள்ளே புதைத்து
வைத்து மறைந்தார்களோ!
[குறிப்பு:- இத்தலத்தில் இப்பொழுது வழங்கும் செய்திகளைக் குறித்து எழுதிக் கேட்டபோது, திருவையாற்று ராஜா காலேஜில் தமிழாசிரியராகவுள்ள ஸ்ரீமான் வித்துவான் டி.ஜி. சோமசுந்தர தேசிகரவர்கள் தெரிவித்த விஷயங்கள் வருமாறு:-
திருவையைற்றுப் புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்னாவதாரஸ்தலம் என்பதும் இதன் பெயர். இங்கே கௌதமர் தவம் புரிந்தனர்; பன்னிரண்டு வருஷம் பஞ்சம் உண்டான காலத்தில் சிவபெருமானைப் பிரார்த்தித்து இத்தலத்திற் சில வயல்களில் அரிசியாகவே விளைய அவர் வேண்டினார். அங்ஙனமே இறைவன் வரமருள, கௌதமர் அவ்வாறு விளைந்த அரிசியினால் அன்னதானம் செய்து வந்தார். கோயிலுக்குத் தென்மேற்கிலுள்ள அல்லிக்குளத்தின் கரையில் இருக்கும் வயலொன்றை அரிசி விளைந்த வயலாகக் கூறுகின்றனர். சோறுடையான் வாய்க்காலென்பது சோடறான் வாய்க்காலென்று இப்போது வழங்குகின்றது]
-------------------
8. அழைத்த காரணம்*
*கலைமகள்.
திருவாவடுதுறை மடத்தில் இருந்த 16-ஆம் பட்டத்தில் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீமேலகரம் சுப்பிரமணிய தேசிகரவர்களைப்பற்றிய பல விஷயங்களை நான்
இதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் எழுதியிருப்பதை அன்பர்கள் அறிந்திருக்கலாம். என்னுடைய தமிழ் ஆசிரியர்களில் அவரும் ஒருவர். திரிசிரபுரம் மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலத்திற்குப் பின்பு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடத்திலே சில நூல்களை நான் பாடங்கேட்டும், மடத்திலிருந்த சிலருக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லியும் வந்தேன்.
வித்துவான்களுடைய மனத்திற்கு உவந்த செயல்களை அறிந்து செய்வதில் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் மிகவும் தேர்ந்தவர். கல்வி கேள்வி மிக்கவராகிய அவர் வித்துவான்களுடைய புலமையை அளந்து அறிந்து இன்புறுபவர். அவருடைய ஆதரவினால் இளம்புலவர்கள் ஊக்கம்கொண்டு மேன்மேலும் அறிவாற்றல்களைப் பெற்றுப் பெரும் புலவர்கள் ஆவார்கள்.
தம்மிடம் வந்தவரை உபசரித்து அவரவர்களுக்கும் தெரிந்த வித்தையைப்பற்றி உசாவி அறிந்து ஏற்ற வண்ணம் ஸம்மானம் செய்து அனுப்புவார். ஒருவருக்கேனும் இல்லையென்பது அவர்பால் இல்லை. அவரிடம் பெறும் பரிசுகள் சிறிதளவாக இருப்பினும், தங்கள் தங்களுடைய கல்வியின் ஆழத்தை அறிந்து உவந்து அளிக்கப்படுதலின் அவற்றை மிகவும் பெரியனவாகவே வித்துவான்கள் எண்ணி மகிழ்வார்கள். ஒரு வருஷம் வந்தவர் சுப்பிரமணிய தேசிகருடைய ஆதரவான இன்மொழிகளில் ஈடுபட்டு மறுவருஷம் வரும்போது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு வருவார். இதனால் அவரிடம் வந்தவர்களுடைய கல்வியறிவு வரவர வளர்ச்சி பெற்று விளங்கும்.
கல்வியறிவுள்ளவர்களைத் தாமே உபசரித்துப் பரிசளிப்பதோடு தம்மைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் மதிப்பு வைத்து ஒழுக வேண்டுமென்று அவர் விரும்புவார்; தம்மிடம் பாடங் கேட்கும் மாணாக்கர்களிடம் தாயைப் போன்ற அன்புடையவராக அவர் விளங்கினார்.
இற்றைக்கு 62 வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்த செய்தியொன்று இன்னும் என் மனத்தில் மங்காது தங்கியிருக்கின்றது. அப்பொழுது எனக்கு 22 பிராயம். ஒருநாள் மாலையில் மடத்திலுள்ள பன்னீர்க்கட்டு என்னுமிடத்தில் சங்கீத கேசரியாகிய ஸ்ரீமகா வைத்தியநாதையரவர்களது பாட்டு நடைபெற்றது. அவர் வந்திருப்பதையறிந்து வெளியூரிலிருந்து பலர் வந்திருந்தார்கள். அத்தகைய சமயங்களில் தேசிகரே அயலூர்களுக்குச் செய்தி சொல்லியனுப்புவது வழக்கம். 'தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுபவர்' ஆகையால் பலரோடும் சேர்ந்து இசைவிருந்து நுகர வேண்டுமென்பது அவருடைய எண்ணம்.
திருவாலங்காடு, சாத்தனூர் என்னும் ஊர்களிலிருந்து பல வித்துவான்களும், வேறு பல ஊர்களிலிருந்து பல அறிஞர்களும், செல்வர்களும் வந்திருந்தனர். சற்றேறக்குறைய ஆயிரம் ஜனங்கள் வரையில் கூடியிருந்தனர். மடத்தைச் சார்ந்த தம்பிரான்களும் உத்தியோகஸ்தர்களும் பிற பணியாளர்களும் தங்கள் தங்கள் நிலைமைக்கு ஏற்றபடி அங்கங்கே இருந்தும் நின்றும் சங்கீதத்தைக் கேட்டு மகிழ்ந்திருந்தனர்.
அக்கூட்டத்தினிடையே சுப்பிரமணிய தேசிகர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அமர்ந்திருந்தார். அவருக்கருகில் பெரிய தம்பிரான்களும் செல்வர்களும் இருந்தனர்.
பாட்டு நடந்தது. நான் ஏதோ சில காரியங்களை முன்னிட்டு இங்கும் அங்கும் போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது, "சாமிநாதையர்!" என்று கம் பீரமான தொனியோடு தேசிகர் என்னை அழைத்தார். அவ்வளவு பெருங் கூட்டத்தினிடையே தேசிகர் என்னை அழைத்தது அவருடைய அன்புடைமையைக் காட்டினாலும் எனக்கு சிறிது அச்சத்தை விளைவித்தது. அவரருகிலே சென்றேன். "இப்படி இரும்!" என்று தமக்கருகிலே உட்காரும்படி அவர் குறிப்பித்தனர். அவருக்கருகில் நான் உட்காருதல் சிறிதும் தகாத செயலென்பதை எண்ணி நான் மயங்கினேன். "சும்மா உட்காரும்!" என்று அன்பு கனிந்த குரலில் அவர் மீண்டும் கூறியபோது என்னால் மறுக்க முடியாமையால் உட்கார்ந்தேன். எனக்குப் பின்புறம் பல பெரிய மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். அவர்களைக் கண்டபோது ஒதுங்கி உட்கார வேண்டுமென்று எண்ணினேன். ஒதுங்குவதற்கோ இடமில்லை. என்னைச் சுற்றிலும் மதிப்பு வாய்ந்த பலர் இருந்தனர். வீணாக ஒதுங்குவதற்கு முயன்று உடம்பை அசைத்ததைத் தவிர வேறு ஒன்றும் என்னாற் செய்ய முடியவில்லை. அங்கே உட்காருவதற்கு என் மனம் இடங் கொடுக்கவில்லை. பயந்து கொண்டே இருந்தேன். சங்கீதத்திற் கூட என் மனம் பூரணமாகச் செல்லவில்லை. ஒன்றும் தெரியாதவனைத் திடீரென்று சிங்காதனத்தில் தூக்கி வைத்தால் அவன் யாதும் விளங்காமல் விழிப்பது போன்ற நிலையில் நான் இருந்தேன்.
ஒருவாறு பாட்டு முடிந்தது. மற்ற நாட்களிலெல்லாம் மகா வைத்திய நாதையரவர்களுடைய இன்னிசை அமுதத்தை ஆவலோடு பருகிப் பருகி, 'இன்னும் நீண்ட நேரம் பாடிக்கொண்டே இருக்க மாட்டாரா!" என்று எண்ணும் யான் அன்றைக்கோ, 'இவர் விரைவிலே நிறுத்தமாட்டாரா?' என்று எண்ணினேன். ஆதலால் அவர் பாடத் தொடங்கிய சமயத்தைவிட நிறுத்திய சமயத்தில் எனக்கு மிக்க இன்பம் உண்டாயிற்று. நான் ஒரு சங்கடமான நிலையினின்றும் விடுதலை பெற்றேன்.
வந்த கனவான்கள் தாம்பூலம் பெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். மடத்துப் பணியாளர்கள் தங்கள் தங்கள் வேலையை கவனிக்கச்
சென்றனர்.
அன்று இரவில் ஆகாரம் செய்த பிறகு நான் வழக்கம்போலவே சண்பகக் குற்றாலக் கவிராயரென்னும் அன்பரோடு ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடங் கேட்கச் சென்றேன். அப்பொழுது திருக்குறள் பரிமேலழகருரையை நாங்கள் பாடங் கேட்டு வந்தோம்.
நாங்கள் தேசிகரை அணுகினோம். அவர் என்னக் கண்டவுடன் புன்னகையரும்பி, "என்ன? சாமிநாதையர்! சாயங்காலம் பாட்டுக் கச்சேரி நடக்கும் போது உம்மை அழைத்தோமே; அதற்குக் காரணம் தெரியுமா?" என்று கேட்டார்.
நான்: எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைக் கூப்பிட்டவுடன் நான் திகைத்துப்போனேன். அவ்விடத்து உத்தரவுக்கு அஞ்சி நான் இருந்தேன். அவ்விடத்துக்கு அருகில் துணிச்சலாகவும் அவ்வளவு பெரிய மனுஷர்களுக்கு முன்னால் மரியாதையின்றியும் மற்றச் சமயங்களிலே உட்கார நான் துணிய மாட்டேன்.
தேசிகர்: நீர் இந்த மடத்தில் இருக்கிறீர். உம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். உமக்கு வேண்டியதை அவ்வப்போது செய்து வருவோம். ஆனால் மடத்தில் ஒவ்வொரு காரியத்திற்கும் தனித் தனியே ஒவ்வோர் அதிகாரி இருக்கிறார். அவர்களிடம் உமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர்களுக்கும் உம்முடைய அருமை தெரிந்தால்தானே அதைப் பெறலாம்? ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்வதென்பது இயலாத காரியம்; அநுசிதமாகவும் இருக்கும். நமக்குப் பிரியமானவர் நீர் என்பதை மடத்திலுள்ள யாவரும் அறிந்து கொள்வதற்காகவே நாம் அப்படி அழைத்து அருகிலே இருக்கச் செய்தோம். இப்பொழுது மடத்திலுள்ள தம்பிரான்கள், காரியஸ்தர்கள், கணக்குப்பிள்ளைகள், சேவகர்கள், வண்டிக்காரர்கள் எல்லோருக்கும் உம்மைப் பற்றித் தெரிந்திருக்கும். இனிமேல் யாதொரு தடையுமின்றி அவர்களுடைய உதவியை நீர் பெறலாம். இதுதான் நாம் உம்மை அழைத்ததன் காரணம். நீர் வேறு விதமாக நினைக்கக் கூடுமென்றே இதை இப்போது தெரிவித்தோம்.
அதைக் கேட்ட எனக்கு வியப்பும் நன்றியறிவும் மாறி மாறி உண்டாயின. "அவ்விடத்து அன்பு எனக்குப் பலவகையிலும் தெரிந்திருப்பினும் என்னை அழைத்தது என் நன்மையைக் கருதியேயென்பது அப்போது தெரியவில்லை; இப்பொழுதுதான் தெரிந்தது" என்றேன். இயல்பாகவே மடத்திலிருந்த யாவரும் என்னிடம் அன்பு பாராட்டினாலும், அன்று முதல் 'பண்டார ஸந்நிதியவர்களுக்கு இவர் மிக வேண்டியவர்' என்று எண்ணிப் பின்னும் அதிகமாக என்னை ஆதரிக்கத் தொடங்கினர்.
-------------
9. இந்திய இலக்கியக் கழகம் *
* பாரதீய ஸாஹித்ய பரிஷத்தின் முதலாவது மகாநாட்டு வரவேற்புப் பிரசங்கம் - 27-3-37.
முன்னுரை
புண்ணிய பூமியாகிய பாரதவர்ஷத்திலுள்ள பல வேறு நாடுகளினின்றும் இலக்கிய ஆராய்ச்சியின் பொருட்டு இங்கே வந்து கூடியிருக்கும் உங்களுடைய காட்சி என் உள்ளத்தில் ஆனந்தத்தை உண்டாக்குகிறது. தென்னிந்தியர் சார்பாக உங்களை நான் சந்தோஷத்தோடு வரவேற்கிறேன். மேலும், சிறியதாயினும் என் மனம் விசுவரூபத்தை அடைந்து இந்திய நாடு முழுவதையும் இப்பொழுது தழுவிக் களிக்கின்றது. எல்லாச் சபைகளிலும் அறிவு விளக்கத்தைத் தரும் சபைகளே சிறப்புடையனவாகும். அறிவின் பெருக்கத்தையும் இலக்கிய ஒற்றுமையையும் குறித்து நாம் கூடியிருக்கின்றோமென்று எண்ணும்பொழுது என் ஞாபகம் பழைய காலத்துக் காட்சிகளிற் போய்ப் பதிகின்றது. தமிழரசர்களுடைய ராஜதானிகளிலும் வடநாட்டு நகரங்களாகிய உஜ்ஜயினி முதலிய இடங்களிலும் பல பாஷைகளைப் பேசும் அறிஞர்கள் தமக்குள் மனங் கலந்து பழகிய செய்திகள் என் அகக்கண்முன் தோன்றுகின்றன; இக்கழகத்தினால் உண்டாகும் அரிய பயனை நினைந்து இன்ப சாகரத்தில் உள்ளம் ஆழ்ந்துவிடுகிறது.
இந்த ஸாஹித்ய பரிஷத் அறிவொளியைத் தரும் மலைமேல் விளக்காகத் திகழ்கின்றது. இந்த விளக்கை ஏற்றிவைத்த பெரியார் இன்று தலைவராக வீற்றிருத்தல் இதன் விசேஷ வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும். உலகத்துப் பேரறிஞர்களாற் புகழப் பெற்றவரும், "தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரும்" ஆகிய மகாத்மா காந்தியடிகளின் அன்பினால் உண்டான இந்த மகாசபையில் நானும் கலந்து கொள்ள நேர்ந்த இந்த நாளை என் வாழ்க்கையிற் சிறந்த நாளாக எண்ணுகிறேன்.
திராவிட பாஷா ஸமூகத்தின் தாயிடமாக விளங்கும் இச்சென்னையில் நடைபெறும் இந்தப் பரிஷத்தில் உங்களை வரவேற்கும் தகுதி வாய்ந்த பெரியோர்கள் பலர் இருக்கின்றார்கள். திராவிட பாஷைகளுள் பழமையான தமிழில் பல வருஷங்களாக ஈடுபட்டுக் கறையானோடும் ராமபாணப் பூச்சிகளோடும் போராடி ஏட்டுச் சுவடிகளின் புழுதியால் மங்கிய கண்களோடு முதுமைப் பருவமும் துன்புறுத்த, உங்கள் முன்வந்து நிற்கும் என்பால் உள்ள குறைபாடுகள் பல. ஆனாலும் முதியவனென்ற ஞாபகத்தினால் இந்த நாட்டினர் உங்களை வரவேற்கும்பொருட்டுத் தங்களுடைய பிரதி நிதியாக என்னை முன்னே நிறுத்தியிருக்கிறர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக!
எனக்குத் தமிழையன்றி வேறு பாஷைகளிற் பயிற்சியில்லை; ஆதலால் தமிழ் நூல்களால் அறிந்த சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு இப்போது தெரிவிக்கிறேன்.
தமிழ் வித்துவான்களின் தலைமை
தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் வித்துவான்களுக்கே தலைமை இருந்து வந்தது. அவர்களு அறிவைப் பரப்புவதற்குச் செய்து வந்த தொண்டுகள் சிறந்தனவாக யாவராலும் கருதப்பட்டன. அரசர்கள் புலவர்களுக்கு உயர்ந்த மதிப்பை அளித்தனர்; அவர்களுடைய அறிவுரையைப் பொன்னேபோற் போற்றி வந்தனர். சில சமயங்களில் புலவர்கள் அரசர்களுடைய குற்றங்களை எடுத்துக் காட்டிக் கண்டித்ததும் உண்டு. சில புலவர்கள் மந்திரிகளாகவும் வேறு பல சிறந்த உத்தியோகஸ்தர்களாகவும் இருந்து அரசாங்கம் நல்வழியில் நடைபெறுவதற்குக் காரணமாக விளங்கினர்.
புலவர்களின் ஒற்றுமை
புலவர்களிடத்தே காணப்பட்ட ஒற்றுமை வியக்கத்தக்கதாக இருந்தது; "புலவர்களோடு சேர்ந்து பழகும் இன்பத்தைக் காட்டிலும் தேவலோக இன்பம் சிறந்ததாக இருக்குமாயின் ஒரு முறை பார்த்து வரலாம்" என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நாலடியாரிலுள்ள ஒரு செய்யுள் சொல்லுகிறது. சுவர்க்க இன்பத்தைவிட அறிவுடையோர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் இன்பமே சிறந்ததாக அவர்கள் கருதினார்கள்.
பழைய காலத்துப் புலவர்களிடத்தில் பகைமையென்பது மருந்துக்கும் இல்லை; "எல்லா நாடுகளும் எங்கள் நாடே; எல்லாம் எங்கள் ஊரே; யாவரும் எங்கள் சுற்றத்தாரே; பகைவர் யாரும் இல்லை" என்று புறநானூற்றில் ஒரு புலவர் சொல்லியிருக்கிறார். ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டிய அரசர்களிடம் வித்துவான்கள் சென்று மகிழ்வித்துப் பரிசுகளைப் பெற்று வந்தனர்; பின் அப்பகையரசர்களைச் சமாதானப்படுத்தி ஒற்றுமையாக வாழச் செய்தார்கள். ஒற்றுமையும் சமரஸ பாவமும் வித்துவான்களுடைய சிறந்த இயல்புகள். அவர்களுக்கு எல்லோருடைய வீடுகளும் திறந்திருந்தன.
பிறநாட்டினரோடு பழக்கம்
தமிழ்நாடு முழுவதும் சென்று பழகியதோடு பிற நாடுகளுக்கும் அவர்கள் சென்று அங்கங்கேயுள்ள அறிஞர்களுடைய பழக்கத்தை அடைந்தனர். அப்படியே பிற நாட்டிலுள்ள வித்துவான்களும் தமிழ் நாட்டிற்கு வந்து பழகிப் பாராட்டப்பெற்றுச் சென்றார்கள்.
சிலப்பதிகார மென்னும் பழைய தமிழ் நூல் இற்றைக்குச் சற்றேறக்குறையப் பதினேழு நூற்றாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. காவிரிப்பூம் பட்டினத்தில் பல பாஷைகளைப் பேசும் பல நாட்டு மனிதர்கள் மனங் கலந்து இனிது வாழ்ந்து வந்தனரென்று அது தெரிவிக்கின்றது. மதுரை முதலிய நகரங்களிலும் அப்படியே இருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் பாஷைகளின் நயங்களை ஒருவருக் கொருவர் சொல்லி இன்புற்றனரென்பது சொல்லாமலே விளங்கும்.
இப்பொழுது கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகவும் பழையதும் பல ஆயிர வருஷங்களுக்கு முன் இயற்றப் பெற்றதுமாகிய தொல்காப்பியத்தில், கல்யாணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தும் தலைவன் படிப்பதற்காக வேற்று நாட்டிற்குப் போவதைப் பற்றிய விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற நாட்டாரோடு வியாபாரம் செய்தவர்கள் புறத்தேயுள்ள அவ்வந்நாட்டுப் பாஷைகளில் வல்லுநராக இருந்தார்களென்பதை மணிமேகலை முதலிய நூல்கள் சொல்லுகின்றன. காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்திருந்த வியாபாரி ஒருவன் நாக சாதியினர் வாழும் தீவிற் சிக்கிக் கொண்டான். அச்சாதியினர் நரமாமிச பக்ஷணிகள். அவனை அவர்கள் கொல்ல வந்தபோது, அவன் அவர்களுடைய பாஷையை அறிந்திருந்தானாதலின் அதிலேயே பேசினான். உடனே அவர்கள் மகிழ்ந்து தம் தலைவனிடம் அவனை அழைத்துச் சென்று பல பரிசுகளை அளித்து அனுப்பினார்கள். இது மணிமேகலையிற் கண்ட வரலாறு.
கூர்ஜரம், வங்கம், நேபாளம், இலங்கை முதலிய இடங்களிலுள்ள சிற்பிகளும் தொழிலாளிகளும் தமிழ் நாட்டு வேலைக்காரரோடு கலந்து உழைத்துக் கட்டிடங்களை அழகுபடுத்தினர்; தங்கள் கலைத்திறனைப் பல வகையில் அமைத்து விளக்கினர்.
பதினெண் பாஷை
முற்காலத்தில் இந்திய பாஷைகளில் முக்கியமானவை பதினெட்டு என்ற கொள்கை இருந்தது.பதினெட்டுப் பாஷைகளிலும் வல்லவர்கள் தமிழ்நாட்டில் அங்கங்கே இருந்தார்கள்; மகளிரும் வேறு பாஷைகளில் அறிவு பெற்று இருந்தனர்.
ஆரியர்
தமிழ் நூல்களை ஆராய்ந்தால்,வடநாட்டினரைத் தமிழர் ஆரியரென்று குறித்து வந்ததாகத் தெரிகின்றது. சிலர் கருதுவதுபோல ஆரியரென்பது ஒரு சாதியினரையோ, ஒரு குலத்தினரையோ குறிப்பதாகத் தோற்றவில்லை. வடநாட்டுக் கூத்தரை ஆரியக் கூத்தரென்றும், வடநாட்டு அரசர்களை ஆரிய அரசர்களென்றும், பல சாதியினரும் கலந்த வட நாட்டுப் படையை ஆரியப்படை யென்றும் கூறும் தமிழ் நூல் வழக்கங்களால் இது விளங்கும்.
வடநாட்டு அரசர்களுள் ஒருவனாகிய ஆரிய அரசன் பிரகத்தனென்பவன் தென்னாட்டுப் புலவர் பெருமானாகிய கபிலரிடம் தமிழ் கற்றான். தமிழின் நயங்களை அவனுக்குப் புலப்படுத்த அவர் 'குறிஞ்சிப் பாட்டு'என்ற ஒரு நூலை இயற்றினார். அது தமிழுக்குச் சிறப்பாக அமைந்துள்ள தெய்விகக் காதலைப் பற்றிச் சொல்லுவது. பல அரிய மலர்களின் பெயர்கள் அதில் வந்துள்ளன; அதைக் கேட்ட அரசன், தமிழர் எத்தகைய உயர்ந்த லக்ஷ்யங்களை உடையவர்கள்! அவர்கள் இயற்கையை எவ்வளவு நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்! எத்தனை மலர்கள்! எத்தனை மரங்கள்! என்று ஆச்சரியப்பட்டிருப்பானென்பதில் ஐயமில்லை.
மற்றோர் ஆரிய அரசனாகிய பிரமதத்தனென்பவன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஒரு புலவனாக இருந்து தமிழ்ச் செய்யுட்களை இயற்றியிருக்கின்றான். அவன் இந்நாட்டு இலக்கியங்களைப் பயின்றதையன்றி இந்நாட்டுக்கே உரிய இசையையும் பயின்று தமிழ் நாட்டு இசைக் கருவியாகிய யாழில் வல்லவனானான். இதனால் அவர் ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன் என்று வழங்கப் பட்டான்.
கோசர்
தமிழரசர்களுடைய நியாய சபையில் வட தேசத்து அறிஞர்கள் இருந்தனர். அங்ஙனமிருந்த கோசரென்ற ஒரு வகையார் வடநாட்டில் இருந்த சத்திய புத்திரர்களைச் சேர்ந்தவர்களென்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
இதுகாறும் கூறிய விஷயங்களால் பண்டைக் காலத்தில் இந்திய பாஷைகளைக் கற்ற வித்துவான்களுள்ளும் மற்றவர்களுள்ளும் ஒற்றுமையிருந்த தென்பதும் தமிழர் பிற பாஷைகளைக் கற்றதன்றிப் பிற நாட்டினருக்குத் தமிழைக் கற்பித்து வந்தனரென்பதும் புலனாகும்.
பிற நாட்டிற் பரிசு பெற்ற புலவர்
பிற்காலத்தில், இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த கம்பர் தெலுங்கு நாடு சென்று தம் தமிழறிவை வெளிப்படுத்திப் பிரதாபருத்திரனென்ற அரசனால் சம்மானம் பெற்றார். முந்நூறு வருஷங்களுக்கு முன் இருந்த குமரகுருபர முனிவரென்பவர் ஹிந்துஸ்தானி பாஷையை நன்றாகக் கற்று டில்லி பாதுஷாவிடம் சம்மானங்கள் பெற்றுக் காசியில் மடங் கட்டிக் கொண்டு வாழ்ந்தார். அங்கே அவர் கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதுண்டென்றும், அக்காலத்தில் அம் முனிவரோடு பழகிய ஸ்ரீதுளசிதாசர் 'தம் இராமாயணத்தில் கம்பர் கருத்துக்களை அமைத்திருக்கின்றனரென்றும் சிலர் கூறுவர். அருணகிரிநாதர் முதலியோரும் அங்ஙனமே வட நாட்டினராற் போற்றப் பட்டனரென்பதற்குரிய குறிப்புகள் கிடைக்கின்றன.
தமிழ் நாட்டுச் சங்கீத வித்துவான்கள், மகாராஷ்டிரம், ஹிந்துஸ்தானி, தெலுங்கு முதலிய பாஷைகளையும் அறிந்து உபயோகப்படுத்தினர்; அந்த அந்த நாட்டிற்குச் சென்று புகழ்பெற்றனர். இவை பழைய வரலாறுகள்.
இக்காலத்து நிலை
இப்பொழுது அரசியல் சம்பந்தமான விஷயங்களாலும் சாதி சமய வேறுபாட்டுணர்ச்சியாலும் பாஷை விஷயத்திலும் வேறுபாடான சில கொள்கைகள் உண்டாகி யிருக்கின்றன. ஆயினும் தமிழன்பர்களுடைய முயற்சிகளால் புது வகையில் தமிழ் நூல்கள் இயற்றப்பட்டு வருகின்றன; கலை, கதை, ஆராய்ச்சி முதலிய விஷயங்களில் உபயோகமுள்ள அபிவிருத்தி ஏற்பட்டு வருகின்றது.
இந்தப் பாரதீய ஸாஹித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால், குறுகிய நோக்கங்களும் சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிடபாஷா ஸமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா ஸமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்று நம்புகிறேன்.
இந்தியாவின் பொதுமொழி
இந்தப் பரிஷத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று ஒரு பாஷையிலுள்ள அரிய விஷயங்களை எல்லாப் பாஷைகளுக்கும் பொதுவாக்கிக் கொள்ளுதலாகும். நம்முடைய பொதுப் பாஷையாக ஹிந்தியை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவிலுள்ள பல பாஷைகளிலும் இது பொதுவாக இந்தியாவிற்கே உரியதென்பதை இதன் பெயரமைதியே குறிக்கின்றது. பழைய காலத்தில் ஸ்ம்ஸ்கிருதம் இந்தியாவின் பொது மொழியாக இருந்ததென்று சில பழைய நூல்களால் தெரியவருகின்றது.
சில காலமாகத் தமிழ் நாட்டு இலக்கியப் பகுதிகளிற் சில 'ஹம்ஸ்' முதலிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழின் விரிந்த நூற்பரப்பைப்
பார்த்தால் அது பல அரிய விஷயங்களை உலகத்திற்கே உதவும் பெருமை வாய்ந்ததென்பதை அறியலாம்.
தமிழின் பழமை
இப்பொழுது இந்திய நாட்டில் வழங்கும் பாஷைகளுள் வடமொழியை யல்லாமல் இலக்கிய வளம் படைத்தவற்றுள் மிக்க பழமையானது தமிழ். இதன் இலக்கணத்தை நாட்டும் தொல்காப்பியம் இன்ன காலத்ததென்று வரையறுக்கப்படாத நிலையில் உள்ளது; மூவாயிர வருஷங்களுக்கு மேற்பட்ட பழமையுடைய தென்பதில் தடையில்லை.
சங்க நூல்களென்று சொல்லப்படும் நூல்கள் 2000 வருஷங்களுக்கு முன் இயற்றப்பட்டவை. அவற்றுள் அழிந்தன போக இப்பொழுது கிடைக்கும் நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கென்று மூன்று பிரிவாக வகுக்கப்பட்டுள்ளன. தமிழுக்கே சிறப்பாக அமைந்த இசை நூல்களும் நாடக நூல்களும் பிற கலைகளைப் பற்றிய நூல்களும் அழிந்தன. பெருங் கடலைப்போலப் பரந்திருந்த அக் கலைகளிற் சில துளிகளே இப்பொழுது கிடைக்கின்றன.
இலக்கியத்திலும் பல நூல்கள் இறந்து விட்டனவாயினும் முற்கூறிய முப்பத்தாறு நூல்கள் இப்பொழுது புத்தக உருவத்தில் வெளிவந்துள்ளன.
தமிழின் சிறப்பு
தமிழ் மொழியில் மற்றப் பாஷைகளில் வரையறுத்துச் சொல்லப்படாத பொருளிலக்கணமென்ற பகுதியொன்று சிறப்பாக இருக்கிறது. அகப்பொருள், புறப்பொருள் என்று இரண்டு வகைப்படுவது அது. அகப்பொருள் காதல் வாழ்வைப் பற்றியது; புறப் பொருள் பல வகையாக அமைந்தாலும் அதிற் பெரும் பகுதி வீர வாழ்வைப் பற்றியது. இலக்கியத்துக்கு உயிரை ஊட்டும் காதலும் வீரமுமே தமிழர் பொருளிலக்கணத்தால் வரம்பு செய்யப்பட்டிருக்கின்றன. சங்க நூல்களில் இந்த இரண்டு வகையிலும் உள்ள செய்யுட்கள் பல.
பண்டைத் தமிழ் நூல்களில் இயற்கையழகின் வருணனை அதிகம். ஸ்வபாவோக்தியாகிய தன்மை நவிற்சியணியே எங்கும் காணப்படும்; அதிசயோத்தி பெரும்பாலும் இல்லையென்றே சொல்லவேண்டும்.
பண்டைத் தமிழ்க் கவிதை
அக்காலத்துப் புலவர்களின் கவிதை இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து, தெய்விகக் காதலிலும் அறந்திறம்பா வீரத்திலும் விளையாடி, சமரச நிலையில் வீற்றிருக்கின்றது. கவிஞர்கள் சிருஷ்டிகளில், அருவிகள் இடையறாத சங்கீதத்தோடு வீழ்வதும், அதில் மகளிர் துளைந்து விளையாடி இன்புற்று மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்து அழகு பார்ப்பதும், நாயகன் ஒருவன் வேட்டையாடிக்கொண்டு வருவதும், அவன் அம் மகளிர் கூட்டத்திலுள்ள நாயகி-யொருத்தியைக் காண்பதும், இருவர் கண்களாகிய மடை வழியாகப் பாய்ந்த அன்பு வெள்ளத்தில் இருவருள்ளமும் கலந்து கரைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்.
ஏழை இடையன் வீட்டில் பந்தற்காலில் கட்டியிருக்கும் தழையை ஆட்டுக்குட்டி உண்பதும், கடற்கரையிலுள்ள வலைஞர் தெருக்களில் முத்துக்களைக் கிளிஞ்சிலுக்குள் இட்டுக் குரங்குகள் குழந்தைகளோடு கிலுகிலுப்பை விளையாடுவதும், இடையன் மாலைக் காலத்தில் தன் புல்லாங்குழற் கீதத்தினால் பசுக்களை யெல்லாம் ஒன்று கூட்டி வீட்டுக்கு வருகையில் வழியிலே மலர்ந்துள்ள முல்லைப் பூக்களைக் கொத்தோடு பறித்துத் தலையிற் செருகிக் களிப்பதுமாகிய காட்சிகளைக் காண்கிறோம். அரசர்கள் வித்துவான்களோடு கூடிப் பொழுது போக்குவதும், காலவரையறைப்படி அரசியற் காரியங்களைச் செய்வதும், குடிகளுடைய வழக்கை நடுநிலைமை பிறழாது தீர்ப்பதும், விழாக் கொண்டாடுவதுமாகிய காட்சிகளையும் பார்க்கிறோம்.
நெடுநாட்களாகத் தீ மூட்டப் படாமையால் காளான் முளைத்த அடுப்பும் ஓட்டைக் கூரையும் உள்ள வறுமை நிலையும் ஒரு பக்கம் சித்திரிக்கப் படுகின்றது; பல பண்டங்களை விற்கும் இடங்களில், பகலிற் கொடிகளாலும் இரவில் விளக்குகளாலும் பாஷை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி இன்ன இன்ன பண்டங்கள் விற்கப்படுமென்பதைக் குறிப்பிக்கும் கடைவீதிகளிலும், அரண்மனைகளிலும் திருமகள் நடனம்புரியும் கோலம் ஒரு புறம் சித்திரிக்கப்படுகின்றது.
வீரம், காதல், கருணை, சோகம் முதலிய ரஸபாவங்கள் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன. இவற்றிலெல்லாம் தமிழர் காட்டிய நடையை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமன்றோ?
"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலிற் பின்"
[துன்பத்தைப் பொறுத்து விரதமிருப்பவர்கள் ஆற்றுவது பசியை; அவர்கள் செய்யும் தவம் அப்பசியை அன்ன தானத்தால் மாற்றுபவர்களுடைய தவத்திற்குப் பிற்பட்டதேயாகும்]
"சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை"
[மரணத்தைக் காட்டிலும் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; ஆயினும் கொடுக்க முடியாதபோது அம்மரணமும் இனிதாகும்]
என்பவை போன்ற பல நீதிகள் அடங்கிய திருக்குறளும்,
"....நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"
[தம்முடைய உண்மை யன்பர்கள் கொடுப்பாராயின் நஞ்சினையும் நாகரிகர் உண்பார்கள்],
"செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சோர்ந் தோடா நிலைமை"
[உடம்பின் மேல் சந்தனத்தை எறிந்தாலும் உடம்பைச் செதுக்கினாலும் பிளந்தாலும் மனத்தில் வேறுபாடுண்டாகாத சமநிலை],
"செய்தி கொன்றோர்க் குய்தியில்"
[நன்றி மறந்தவர்களுக்குப் பிராயச்சித்தமே இல்லை]
என்பன போன்ற நீதிகளைச் சொல்லும் வேறு பல நூல்களும் அடங்கிய தமிழருடைய பொக்கிஷத்தை யாவரும் வாரிக்கொண்டு பயன்படுத்த வேண்டாமா?
பகைவனுக்குப் பயந்து காட்டிலிருந்தபோது தன்பால் பரிசுபெற வந்த புலவனுக்குத் தன் கை வாளை நீட்டித் தன் தலையை அரிந்து சென்று பகைவனிடம் கொடுத்துப் பொருள் பெறும்படி சொன்ன குமண வள்ளலது வள்ளன்மையையும், தம் நண்பராகிய புலவர் இன்ன நாளில் வருவாரென்று கூறித்தான் உயிர் நீங்கும்பொழுது அவருக்கும் இடமொழிக்கச் செய்த கோப்பெருஞ் சோழனென்னும் அரசனுடைய நட்புணர்ச்சியையும், பசுவின் கன்று இறத்தற்குக் காரணமாகிய குற்றத்தை அறியாமற் செய்த தன் மகனைத் தேர்க்காலின் கீழ் இட்டுக் கொல்லத் துணிந்த சோழனது நீதி நிலைமையையும் தம்மைக் குத்திய பகைவனுக்குத் தீங்கு நேராவண்ணம் செய்துபின் உயிர் விட்ட மெய்ப்பொருள் நாயனாருடைய மன வலியையும் மற்றப் பாஷைகளைப் பேசுவோர் படித்து அறிந்து பாராட்டினால் அப்பொழுதாவது தமிழருக்கு ஓர் ஊக்கம் உண்டாகாதா?
சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய காவிய ரத்னங்களை இந்தியர் யாவரும் ஆராய்ந்து ஆனந்தமடையும் நாள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நிலப் பகுப்பு
தமிழர் நிலங்களைப் பகுத்த பகுப்பும், காவிய கதியை வரையறுக்கும் இலக்கணங்களும் மற்றப் பாஷைகளுக்குப் புதியவை. தமிழ் நாட்டார் நிலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி; காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை; வேனிலால் நீரற்றுப் போன மலையும் காடும் சேர்ந்த இடம் பாலை; வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம்; கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல். இவ்வைந்து நிலங்களுக்கும் தனித்தனியே தெய்வம், மக்கள், விலங்கு, பறவை, மரம், மலர், நீர் நிலை, தொழில் முதலிய வரையறைகள் உண்டு. பூமி சாஸ்திரம், தாவர சாஸ்திரம், பிராணி சாஸ்திரம், மனோதத்துவம் முதலிய பல சாஸ்திரங்களால் அறியப்படும் உண்மைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கின்றன.
சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்து விளங்கிய டாக்டர் ஸர். எஸ். சுப்பிரமணிய ஐயரவர்கள் மதுரை நகரசபைத் தலைவராக இருந்த காலத்தில் அந்நகரைச் சார்ந்த சில இடங்களில் சில மரங்களை வைத்து வளர்க்கச் செய்தனர். முதலில் வைத்த மரங்கள் பட்டுப்போயின. தமிழ் நூல்களை அறிந்தவராதலின் அவர் அப்பொழுது தமிழ் அகப்பொருள் நூல்களைப் படிக்கச் செய்து அந்த அந்த இடத்திற்கேற்ற மரங்கள் இன்னவை யென்பதை யறிந்து அவற்றை வைக்கச் செய்தபோது அவை நன்றாக வளர்ந்தனவாம். இச்செய்தியை அவர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் தமிழ் இலக்கியத்திலுள்ள செய்திகள் இயற்கையோடு பொருந்தியிருத்தலை அறியலாம்.
அரசியல் முதலியன
நாட்டை ஆளும் முறை, நகரத்தின் அமைப்பு, பாதுகாப்பு, ஒழுக்கங்கள், தெய்வ வழிபாடு முதலியவைகளைப் பற்றித் தமிழ் நூல்களில் உள்ள செய்திகளைப் பாரத்தால் தமிழர் நாகரிக வாழ்வின் நிலை நினைக்குந்தோறும் வியப்பை உண்டாக்குகிறது. அரசன் குடிகளோடு கலந்து நாட்டு நன்மைகளைச் செய்வதும், அறிஞர்களுடைய சபையைக் கூட்டி நன்றாக ஆராய்ந்து காரியங்களைச் செய்வதும் ஆகிய செயல்கள் தமிழர் அரசாட்சியைச் சிறந்த நிலையில் வைத்தன. குடிகளுக்கு எந்த வகையிலும் துன்பமில்லாத அரசியல் ஏற்பட்டிருந்தமையால் தமிழர் வாழ்வு இன்ப வாழ்வாக இருந்தது; அதனால் அரசனைத் தெய்வமாகக் கருதிவந்தனர்.
வைஷ்ணவ பக்தர்களுள் ஒருவராகிய நம்மாழ்வார், "அரசனைக் கண்டால் திருமாலைக் கண்டவன் போலாகின்றேன்" என்று ஒரு தலைவி சொல்வதாக அமைக்கின்றார். அங்கங்கே நகரங்களிலும் ஊர்களிலும் இருந்த் அதிகாரிகள் உலகமே பிறழ்ந்தாலும் தம் கடமையைக் குறைவின்றி நிறைவேற்றி வந்தனர். அரசன் குடிகளின் சேவகனாக வாழ்ந்தான். புலவர்களுக்குள் ஒரு புலவனாகவும், வீரர்களுக்குள் ஒரு வீரனாகவும், ரஸிகர்களுக்குள் ஒரு ரஸிகனாகவும், ஏழை ஜனங்களுக்குள் ஓர் ஏழை மனிதனாகவும் இருந்து குடிகளுக்கு உயிரைப்போல் விளங்கினான். இத்தகைய அரசியலைப்பற்றித் தமிழ் நூல்களிற் காணும் அரிய செய்திகள் நம்மை ஒரு கனவுலகத்திற்கு இழுத்துச் செல்லுகின்றன.
கலைகள்
தமிழ் வைத்திய நூல்கள் அருமையான விஷயங்களடங்கியவை. சித்த வைத்திய நூல்களென்று அவை வழங்கப்படும். சிற்பம் முதலிய கலைகளின் திறத்தில் தமிழ் நூல்களின் உதவியால் பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். பிற்காலத்தில் ஸ்தல சம்பந்தமான இலக்கியங்களும் பிரபந்தங்களும் ஆயிரக்கணக்காக உண்டாகி யிருக்கின்றன.
புலவர்களின் ஒற்றுமையால் உண்டாகும் பயன்
பழைய தமிழ் நூல்களிலுள்ள அரிய சரித்திர விஷயங்களிற் பல இன்னும் விளங்காமல் இருக்கின்றன. பரந்து வளர்ந்த இந்திய நாகரிகம் ஒன்றுபட்டு நின்ற காலத்தில் இயற்றப்பட்ட அந்நூல்களைப் பரந்த அறிவோடு பார்த்தால் பல உண்மைகள் வெளியாகலாம். ஜாவா, கம்போடியா, ஸையாம் முதலிய இடங்களிலுள்ள சிற்பங்களாலும் அங்கே வழங்கும் வரலாறுகளாலும் இதுகாறும் விளங்காத தமிழ் நூற் செய்திகள் பல விளங்குகின்றன. இந்திய பாஷா பண்டிதர்களுள் ஒற்றுமை உண்டாகுமாயின் அவர்கள் இந்நூல்களைப் படித்தோ மொழிபெயர்க்கச் செய்தோ அறிந்து கொண்டு ஆராய்ந்து பல விஷயங்களை விளங்கச் செய்யலாம். இனி, நாம் இயற்றப்புகும் இலக்கியங்களில் இந்த ஒற்றுமையைப் பயன்படுத்திக் கொள்ளுவது நலமாகும்.
நம் கடமை
பிற்காலத்து நூல்களில் வரவர உயர்வு நவிற்சியும், ஸ்வபாவ விரோதமாகிய வருணனைகளும், அளவுக்கு மேற்பட்ட சிருங்காரமும், விரோத வுணர்ச்சியை உண்டாக்கும் மத விஷயங்களும் புகுந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தன. இனி நூல் செய்யப் புகுவார் அவற்றை நீக்கவேண்டும்; பழைய நூல்களில் இருந்தால் அவற்றை இன்பத்துக்காகப் பாதுகாத்துக் கற்றல் வேண்டும்.
புது இலக்கியங்கள் இயற்றுவதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றன. பல பாஷைகளிலுள்ள விஷயங்களை அறிவதனால் இத்துறைகள் விரிவடையும். நாளடைவில் மனிதர்களுடைய வாழ்க்கைநிலை மாறுபடுகின்றது; அதற்கேற்ப கொள்கைகளும் மாறுபடுகின்றன; அக்கொள்கைகளுக்கு ஏற்றபடி இலக்கியங்களும் நல்வழியில் மாற வேண்டியது இயல்பேயாகும்.
தங்கள் தங்கள் நாட்டினரின் உள்ளத்தை வசீகரிக்கும் இலக்கிய ஆசிரியர்களாகிய நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்கள் பேரறிவின் துணையினால் பொதுவாகத் தென்னாட்டாரும் சிறப்பாகத் தமிழ்நாட்டாரும் அறியவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. உங்கள் தேச பாஷைகளாகிய ஆறுகள் ஞானமாகிய சாகரத்தில் ஒன்று சேர்ந்து விளங்குகின்றன. இந்தப் பாரதீய ஸாஹித்ய பரிஷத்தின் மூலம் உங்களுடைய ஞானச் செல்வம் இந்நாட்டினருக்குப் பயன்பட்டு நம்மிடையே பரந்த பாஷாபிமானத்தையும் அன்பையும் விருத்தி செய்வதாகுக! இறைவன் நமக்குத் தோன்றாத் துணையாக இருந்து நல்லருள் பாலிப்பானாக!
-------------
10. இன்னும் அறியேன்!
தமிழ் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்ட பிறகு தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகி விட்டது. அச்சிட்ட புத்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்பொழுது ஏதோ ஒரு தெய்வத்தின் உருவத்தைக் காண்பதுபோலவே நான் எண்ணுவது வழக்கம். சுவடிகளைத் தேடி அவை இருக்குமிடம் சென்று மூலை முடுக்குகளிற் கிடக்கும் அவற்றைத் தொகுத்து ஆராய்வதில் என் உள்ளம் ஒரு தனி இன்பத்தை அடையும். என் உடலில் முதுமைப் பருவத்தின் தளர்ச்சி ஏறிக்கொண்டே வந்தாலும் என் உள்ளத்தில் மட்டும் ஏட்டுச் சுவடிகளிலுள்ள பற்று இறங்கவே இல்லை.
சில வருஷங்களுக்குமுன் வரையில், ஒவ்வொரு வருஷமும் எங்கேனும் சென்று ஏட்டுச் சுவடிகள் தேடி வருவதை முறையாகவே செய்துவந்தேன். எனக்கு அதுவே தீர்த்த யாத்திரையாகவும் தலயாத்திரையாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் ஏட்டுச்சுவடிகள் இருக்கும் இடங் கள் பெரும்பாலனவற்றிற்குச் சென்று பார்த்திருக்கிறேன். நான் இப்படி ஏடு தேடும் முயற்சியை மேற் கொண்டிருப்பதைத் தமிழ் நாட்டினர் பலரும் அறிவர். அதனால் எனக்கு சில அபவாதங்கள் கூட நேர்ந்ததுண்டு; நான் போகாத இடங்களில் உள்ளவர் சிலர் தம்மிடமுள்ள சுவடிகளை நான் கொண்டுபோய் விட்டேனென்று சொல்வதாகக் கேள்வியுற்றிருக்கின்றேன்.
கும்பகோணம் காலேஜில் நான் வேலையில் இருந்தபோது, மாணாக்கர்களிடம் சில சமயங்களில் அவர்களுடைய ஊர்களில் யார் யார் தமிழ் வித்துவான்கள் இருந்தார்களென்றும், யார் வீட்டிலேனும் ஏட்டுச் சுவடிகள் உள்ளனவாவென்றும் கேட்டு அறிவேன். சிலர் கூறிய செய்திகளைக் கொண்டு நான் பயனடைந்ததும் உண்டு.
1900-ஆம் வருஷம் மே மாதம் இரண்டாம்தேதி பிற்பகல் மூன்று மணிக்கு நான் பி.ஏ. வகுப்பில் வழக்கம்போலப் பாடஞ் சொல்லத் தொடங்கினேன். அப்பொழுது * ஒரு மாணாக்கர் எழுந்து நின்றார். ஏதேனும் ஒரு வேலையாகப் போகவேண்டி அவர் என்னிடம் அநுமதி கேட்க நிற்பதாக எண்ணி, "எங்கேயாவது போக வேண்டுமானால் போய் வரலாமே" என்றேன்.
---------
* இப்போது மாயூரத்தில் அட்வொகேட்டாகவுள்ள ஸ்ரீமான் சாம்பசிவ செட்டியார்.
"இல்லை; உங்களிடம் ஒரு சமாசாரம் சொல்ல வேண்டும்" என்றார் அம்மாணாக்கர்.
நான்: சொல்லலாமே.
அவர்: நான் சாப்பிடும் விடுதியில் ஒருவர் வந்திருக்கிறார். அவர் மிக்க செல்வராக இருந்தவராம்; பெரிய குடும்பத்திற் பிறந்தவராம்; நல்ல நிலையில் இருந்தவராம். அவரைப் பார்க்கும்போதே அவர் பெரிய மனிதரென்று தோற்றுகிறது. இப்பொழுது தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்துவிட்டுக் கடன்காரர்களுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கிறாராம். அவர் தம்முடைய வீட்டிற் பல தலைமுறையாக உள்ள ஏட்டுச் சுவடிகளை யெல்லாம் கொண்டு வந்திருக்கிறார்.
அதுவரையில் அம்மாணாக்கர் கூறியது சத்தில்லாத சமாசாரமாக இருந்தது; சற்றுப் பராமுகமாகவே கேட்டுவந்தேன். ஏட்டுச் சுவடிகளென்ற வார்த்தை என் காதில் விழவே கவனமாகக் கேட்கத் தொடங்கினேன்.
"என்ன? ஏட்டுச்சுவடிகளா கொண்டுவந்திருக்கிறார்?" என்று ஆவலோடு வினவினேன்.
"ஆமாம்; நூறு சுவடிகளுக்கு மேலே கொண்டு வந்திருக்கிறார். அவைகளை அவருடைய முன்னோர்கள்
பாதுகாத்து வைத்திருந்தார்களாம். அவர் வீட்டில் இருந்த பலவகைப் பொருள்களையும் கடன்காரர்கள் ஏலம் போட்டு விட்டார்களாம். இந்தச் சுவடிகளையும் அவர்கள் கையில் விட்டுவிட்டால் என்ன கதியாகுமோவென்று பயந்தாராம்; அவற்றைப் பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தி கொள்பவர்களிடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணினாராம். தங்களிடம் ஒப்பித்தால் நல்லதென்றறிந்து அவற்றைக் கொண்டு வந்திருக்கிறார்."
தங்கப் புதையலுக்கு வழி சொல்லும் மந்திரவாதியைப்போல் அம்மாணாக்கர் சொல்லச் சொல்ல என் மனம் ஊக்கமிகுதியால் நிலை கொள்ளாமல் தவித்தது.
"அந்தச் சுவடிகளை என்னிடம் விற்றுவிடலாமென்றுதானே வந்திருக்கிறார்?" என்று நான் கேட்டேன்.
"இல்லை, இல்லை; எனக்கும் அந்தச் சந்தேகம் வந்தது; 'இவ்வளவு சுவடிகளையும் விலைக்கு வாங்கிக் கொள்ள எங்கள் தமிழாசிரியரால் முடியாதே' என்று அவரிடம் சொன்னேன். 'பணம் வேண்டாம்; இவைகளை வாங்கிக்கொண்டு பாதுகாக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்; என்னுடைய கஷ்டகாலம் இவைகளைத் தரும்படியாயிற்று! அருமை தெரியாத வர்கள் கையில் அகப்பட்டு வீணாவதைவிடத் தக்கவர்களிடம் இருந்தால் நல்லதென்று எண்ணிக்கொண்டு வந்தேன்' என்று அவர் சொன்னார்."
"அப்படியானால் வா; அவரைப்போய்ப் பார்க்கலாம்" என்று புறப்படத் தொடங்கினேன்; காலேஜ் தலைவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு போகலாமென்பது என் கருத்து. அதனை உணர்ந்த மாணாக்கர் என்னைத் தடுத்து, "இப்பொழுது போகவேண்டிய அவசியமில்லை. அந்தக் கனவான் சாயங்காலம் வரையில் காத்திருப்பதாகச் சொன்னார். காலேஜில் வேலை முடிந்தவுடன் போகலாம்" என்றார்.
அதன்பின் என் உடல்தான் காலேஜில் இருந்தது; என் உள்ளம் நான் பெறப்போகும் சுவடித் தொகுதியை நினைந்து ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிஷம் ஒரு யுகம்போலத் தோன்றியது. 'எப்பொழுது கடைசிமணியாகும்!' என்று எதிர்பார்த்திருந்தேன். மணியும் அடித்தது! ஒரே ஓட்டமாக ஓடி அந்தக் கனவான் முன் நிற்கவேண்டு மென்பது என் ஆசை!
அந்த மாணாக்கர் வந்தார். நான் அவருடன் புறப்படலானேன்; அப்பொழுது அவர், "நீங்கள் வீட்டிற்குப் போங்கள். அவர் சாப்பாட்டு விடுதியில் இருக்கிறாரா என்று பார்த்து வருகிறேன். தம்மை யாராவது பார்ப்பதாக இருந்தால் அவர் மிகவும் லஜ்ஜைப்படுகிறார்" என்றார்.
நான் என் வீடு சென்றேன். என் வீட்டிலிருந்து அவ்விடுதி மிகவும் சமீபமாகவே இருந்தது. நான் வீட்டுக்குப் போன சிறிது நேரத்தில் அம் மாணாக்கர் தம்மால் தூக்கக்கூடிய சுவடிகளை அள்ளிக் கொணர்ந்து என் வீட்டிற்கு வந்து என்முன் போட்டார்.
"ஏன் அப்பா! நான் வருகிறேனே; அவர் இருக்கிறாரா?" என்று கேட்டேன்.
"அவர் தங்களைப் பார்க்க மிகவும் நாணுகிறார். தம் ஊர் பெயர் இவைகளில் எதையும் தெரிவிக்க மறுக்கிறார். இன்னும் சுவடிகள் உள்ளன; கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் சென்றார். அவர் ஊக்கமும் தேகவன்மையும் உடையவர். அப்பால் நாலைந்துமுறை முன் கொணர்ந்தபடியே சுவடிகளை எடுத்து வந்தார்.
சுவடி தேடுங் காலங்களில் நான் பலவிதமான துன்பங்களை அடைந்தவன், பலவிடங்களில் சுவடிக் குரியவர்களைத் தேடிச் சென்று அலைந்து கால்கள் தேய்ந்துபோயின. சிலர் வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்லி யனுப்பிவிடுவார்கள். சிலர் பலமுறை வரச்சொல்லி அலைக்கழிப்பார்கள். சிலரிடம் எவ்வளவோ நயந்து கெஞ்சிப் பிணைகொடுத்துச் சுவடிகளைப் பெறவேண்டியிருக்கும். சிலரிடம் அவ மதிப்புக்கூட அடைந்திருக்கின்றேன். குழந்தையைப் பெறும் பொழுது படுந்துன்பமெல்லாம் அக் குழந்தையைக் கண்ட காலத்திலே மறைந்துவிட, தாய் பேரின்பத்தை அடைகிறாள். அதுபோலவே சுவடிகளுக்காகப் படும் சிரமங்களெல்லாம் அவற்றைப் பெற்றவுடன் மாறிவிடுகின்றன; என் உள்ளம் பெரு மகிழ்ச்சியை அடைகின்றது.
பலவகையில் துன்பங்களை அடைந்து தேடாமல் சுவடிகள் வலிய வந்து எனக்குமுன் குவிந்தன வென்றால் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு வேறு எதையாவது ஒப்பிட முடியுமா? 'இவற்றை வழங்கிய உபகாரியைப் பாராமல் இருப்பது பிழை' என்று எண்ணினேன்.
"சுவடிகளின் அருமை எனக்குத் தெரியாது. இவற்றைத் தந்த அந்தக் கனவானை நான் பாராமல் இருப்பது பாவம்! வா; பார்க்கலாம்" என்று நான் அம்மாணாக்கரிடம் சொன்னேன்.
"நான் என்ன செய்வேன்! அவர் கண்டிப்பாகத் தம்மைப் பார்க்கவேண்டா மென்று சொல்லுகிறார்" என்று பின்னும் அவர் சொன்னார்.
"அவர் அப்படிச் சொன்னாலும் அவரைப் பாராமற் போனால் எனக்குத் திருப்தியாக இராது" என்று புறப்பட்டேன். மாணாக்கர் என்னைத் தொடர்ந்து வந்தார்.
போகும்போதே என் மனத்தில் அக்கனவானுடைய நிலையைப்பற்றிய எண்ணங்கள் எழுந்தன. 'நல்ல குடும்பத்திற் பிறந்தவராக இருக்கலாம்; பாவம்! தமிழ்ச்சுவடிகளைப் பிறரிடம் கொடுப்பது பெரிய அகௌரவமென்றும் பஞ்சகாலத்தில் பிள்ளையைக் கொடுத்துவிடுவது போன்றதென்றும் எண்ணினார் போலும்! இவ்வளவு கஷ்டத்தில் இவைகளை நம்மிடத்தில் ஒப்பிக்கவேண்டுமென்ற கருத்து வந்தது நம்முடைய நல்லகாலந்தான். அக் கனவான் ஓர் அபூர்வப் பிறவியை யுடையவர்; அவரைப் பார்த்து மகிழ்ந்து சல்லாபம் செய்ய வேண்டும்' என்று விரும்பினேன்; வறுமையின் கொடுமையைப்பற்றி நினைத்தேன்; சுவடிகள் கிடைத்ததுபற்றிச் சந்தோஷமும் அக்கனவானது நிலைமைபற்றி வருத்தமும் மாறி மாறி என் மனத்தே உண்டாயின. என்னுடைய நன்றியறிவை அவருக்கு நன்றாக வெளிப்படுத்த வேண்டுமென்று கருதினேன்; ஆயினும் என் உள்ளிருந்த முழு உணர்ச்சியையும் வார்த்தைகளால் எப்படி வெளியிட முடியுமென்று தயங்கினேன்.
இங்ஙனம் பலவாறு எண்ணமிட்டுக்கொண்டே சாப்பாட்டு விடுதிக்குள் நுழைந்தேன். மாணாக்கர் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.
நான் யாரைப் பார்க்கவேண்டு மென்று அவ்வளவு ஆவலோடு சென்றேனோ அந்தக் கனவான் தம்முடைய சுவடிகளெல்லாவற்றையும் அம்மாணாக்கர் என்னிடம் சேர்ப்பித்து விட்டனரென்பதை அறிந்தவுடன் ஒருவரிடமும் சொல்லாமற் போய்விட்டார். நான் அவரை அங்கே காணவில்லை.
"அப்பொழுதே அவர் சொன்னார்: தம்மை யாரும் பார்க்க வேண்டாமென்றும், தம் ஊர் பேர் ஒன்றும் சொல்ல விருப்பமில்லை யென்றும் வற்புறுத்தினார். சுவடிகளைத் தங்களிடம் சேர்ப்பித்தோமென்ற திருப்தியோடு போய்விட்டார் போலும்!" என்று
மாணாக்கர் கூறினார்.
என்னுடைய நன்றியறிவை எதிர்பாராமலே அவ்வுபகாரி சென்று விட்டார். உபசாரத்தை அவர் விரும்ப வில்லை. சுவடிகளுக்கு அடைக்கல ஸ்தானம் ஒன்று வேண்டுமென்று அவர் கருதினார்; தக்க இடம் அகப்படாமற் கஷ்டப்பட்டார்; அப்பால் ஓரிடம் தெரிந்தது; அவ்விடத்தில் சேர்ப்பித்தார்; அந்தக் கடமையைச் செய்துவிட்டு அவர் போய்விட்டார்.
நான் அவரை காணாமையால், சிறிது நேரம் அங்கே ஸ்தம்பித்து நின்றேன். 'தம்மைக் காட்டிக் கொள்ளாமல் மகோபகாரம் செய்த அவரைப் பார்க்க முடியவில்லையே!' என்று வருந்தினேன். 'ஒரு சிறு காரியம் செய்தாலும் ஊரறிய விளம்பரம் செய்து கொள்ளும் இந்தக் காலத்தில் இப்படி மௌனமாகப் பிறர் அறியாவாறு உபகாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்' ஏன்ன்பதை நினைக்கும்போது என் உள்ளம் 'வலக்கை செய்யும் உபகாரம் இடக்கைக்குத் தெரியாமற் செய்க" என்று பைபிளில் இருப்பதாகச் சொல்வார்கள். இவ்வாக்கியத்திற்கு இலக்கியமாகிய பேருபகாரியினிடம் உபகாரம் பெற்றும் நான் அவரை அறியக்கூட வில்லை.
எனக்குக் கிடைத்த சுவடிகளை அப்பால் ஆராய்ந்தேன். அவற்றிற் பெரும்பாலன அச்சிட்ட நூல்களாகவே இருந்தன. ஒரு பழஞ்சுவடியின் ஈற்றில் * 'தமிழ்விடு தூது' என்னும் பிரபந்தம் இருந்தது. அதைப் படித்து வந்தேன். என் வாழ்க்கையின் லக்ஷியம் அந்த நூலில் இரண்டடிகளிலே சொல்லப் பட்டிருப்பதைக் கண்டேன்;
"இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்னும் கண்ணியிலே என் உள்ளம் சிக்கிக்கொண்டது. அப்பொழுது, பெயர் தெரிவியாமல் அதனையும் மற்றச் சுவடிகளையும் உதவிய பெருந்தகையாளரை
மீட்டும் நினைந்து நினைந்து பாராட்டி வாழ்த்தினேன். அவர் யாரோ! இன்னும் அறியேன்!
-----------------
11. கச்சியப்பனை யுதைத்த கால்
* இந்நூல் என்னால் 1930-ஆம் வருஷம் அச்சிடப்பட்டது.
தொண்டை நாட்டிலுள்ள வல்லப்பாக்கமென்னும் ஊரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காளத்தி முதலியாரென்னும் வேளாளப் பிரபு ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வர்; தமிழ்ப் புலவர்களிடத்தில் அன்பும் ஏழை மக்களிடத்தில் இரக்கமும்
உடையவர். அவரைப் பாராட்டி வித்துவான்கள் பாடிய செய்யுட்கள் சில இப்பொழுதும் தமிழகத்தில் வழங்கி வருகின்றன.
காளத்தி முதலியாருக்குக் கச்சியப்ப முதலியாரென்ற குமாரர் ஒருவர் இருந்தார். அவரும் கற்பகத்தின்கீழ்க் கன்றேபோற் புலவர்களை ஆதரித்துப் பெயர்பெற்றார். பரம்பரையாகக் கவிஞர்களுக்கு எய்ப்பில் வைப்பாக விளங்கிய அவருடைய வீட்டிலே எப்பொழுதும் தண்டமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ் நயங்களை எடுத்து உரைத்தும் புதிய செய்யுட்களைக் கூறி மகிழ்ந்தும் அளவளாவுவார்கள். கச்சியப்ப முதலியாருக்குத் தமிழ் நயத்தைக் கேட்பதிலும் தமிழ் வித்துவான்களோடு சம்பாஷிப்பதிலும் அளவிறந்த ஆவல்உண்டு. புலவர்களோடு பழகும்போது அவர்களுடைய கற்பனா சக்தியையும் அறிவாற்றலையும் உணர்ந்து உணர்ந்து இன்புறுவார். இன்ன இன்னபடி விஷயத்தை அமைத்துக் கவிபாட வேண்டுமென்று அவர் விரும்புவார். அப்படியே புலவர்கள் பாடுவார்கள். அவற்றைக் கேட்டு அப் பாட்டுக்களின் நயத்திலே முதலியார் ஈடுபட்டு மகிழ்வார்.
ஒருநாள் புலவர் சிலரோடும் நண்பர்கள் சிலரோடும் முதலியார் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது புலவர்கள் தங்கள் தங்கள் செய்யுட்களை எடுத்துச் சொன்னார்கள். கேட்டுவந்த முதலியார் ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினார்:
"நேற்று இரவு ஒரு துஷ்டப்பயல் சிறிதும் பயப்படாமல் என் மார்பிலே காலால் உதைத்தான். அவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?" என்று அவர் கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,"என்ன!யார் அந்தப் பயல்?" என்று ஆத்திரத்தோடு வினவினார். மற்றவர்களும் திடுக்கிட்டார்கள்.
"இந்த மகாப் பிரபுவை உதைக்கவாவது! இது பெரிய அக்கிரமமல்லவா? சரியானபடி தண்டிக்கத்தான் வேண்டும்" என்று வேறொருவர் கூறினார்.
அருகில் இருந்த முதலியாருடைய நண்பர் ஒருவர் "அவனைத் தேடிப்பிடித்து அவனுடைய காலை வெட்டி விட்டு மறுகாரியம் பார்க்க வேண்டும்" என்று மிகவும் கடுமையாகச் சொன்னார்; அப்பொழுது அவர் மீசை துடித்தது.
மற்றொருவர்,"இவ்வளவு நிதானமாகச் சொல்லுகிறீர்களே; அந்தப் பாவியை உடனே அந்த இடத்திலேயே சிக்ஷித்திருக்க வேண்டாமா?" என்று கேட்டார்.
முதலியார் எல்லாவற்றையும் கேட்டு வந்தார்; விடையொன்றும் சொல்லவில்லை.
அங்கே யிருந்த புலவர்களுள் வீர கவிராயரென்பவர் ஒருவர். அவர் இனிய கவிகளைப் பாடும் ஆற்றலும் கூரிய அறிவும் உடையவர். அவரிடத்திலே முதலியாருக்கு அந்தரங்க அபிமானம் உண்டு.
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றிய அபிப் பிராயங்களைச் சொல்லிவந்தபொழுது வீர கவிராயர் மட்டும் ஒன்றும் பேசவில்லை. மற்றவர்கள் சொன்னவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்த அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. கோபமும் ஆச்சரியமும் இரக்கமுமாகிய உணர்ச்சிகளையுடைய அக்கூட்டத்தினருள் அவர் மாத்திரம் புன்னகையோடு வீற்றிருத்தலை முதலியார் கவனித்தார்.
"உங்கள் கருத்து என்ன?" என்று கவிராயரை முதலியார் கேட்டார்.
"இராத்திரி உங்கள் சயன அறையிலே தானே அவன் உங்களை உதைத்தான்?" என்று கவிஞர் வினவினார்.
"ஆமாம்" என்றார் முதலியார்.
"எங்கே இருந்தால் என்ன? அவனைச் சிக்ஷிக்காமல் இவ்வளவு நேரம் இருப்பது பெரிய தவறு" என்று இடைமறித்து ஒருவர் சொன்னார்.
கவிஞரோ சிரித்துக் கொண்டே, "அப்படி உதைத்த காலுக்குத் தண்டையும் கொலுசும் பண்ணிப் போடவேண்டும்" என்று புகன்றார்.
முதலியாரும் புன்னகை கொண்டு, "நீங்கள் மகா மேதாவி; மனத்திலுள்ளதை அறியும் அற்புதசக்தி வாய்ந்தவர்கள்!" என்றார்.
மற்றவர்களுக்கு விஷயம் யாதும் விளங்கவில்லை.
"உங்களை உதைத்த கால் கண்ணிலே எடுத்து ஒற்றிக்கொள்ளக் கூடியதாயிற்றே! அதில் மண் படலாமா? வெயிலிலே அந்தக் கால் வாடலாமா? அந்தக் காலை அறிவீனர்கள் கண்டால் திருஷ்டி தோஷம் வந்து விடுமே! அதற்குத் தண்டையும் சங்கிலியும் அணிந்து அழகு பார்ப்பதே சரியான தண்டனை" என்று கவிஞர் உரைத்துவிட்டுப் பின்வரும் செய்யுளையும் கூறினார்:
(நேரிசை வெண்பா)
"மண் படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு
கண் படுமோ எப்போதும் கற்றவர்க்குப் - பண்புடனே
மெச்சியப்பா லுங்கொடுக்கும் ளீறுவல்லைக் காளத்திக்
கச்சியப்ப னையுதைத்த கால்"
பாட்டைக் கேட்டு உவகையில் மூழ்கினார் முதலியார். அதனைப் பாடிய கவிஞர் உடனிருந்தவர்களைப் பார்த்து, "தர்மப் பிரபுவாகிய முதலியாரவர்களிடத்தில் ஈ எறும்புகளுக்குக் கூட வெறுப்பு உண்டாகாது. அப்படி இருக்கையில் இவர்களை ஒருவன் கோபித்து உதைப்பதென்றால் முடியுமா? பராக்கிரமசாலிகளாகிய இவர்கள், அப்படி உதைக்கும் வரையிற் பேசாமல் இருப்பார்களா? அல்லாமலும் சயன அறையிலே இரவில் ஒருவன் வந்து உதைக்க வேண்டுமென்றால் அது சாத்தியமாகுமா? அப்படி உதைத்தாலும் அதை முதலியாரவர்கள் இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வார்களா? இவற்றை யெல்லாம் யோசித்தால், இவர்களை உதைத்தவன் இவர்களுடைய அன்புக்குப் பாத்திரனாக இருக்கவேண்டுமென்றே தோற்றுகிறது. முதலியாரவர்களுடைய குழந்தையை யல்லாமல் வேறு யாருக்கு அப்படிச் செய்யும் உரிமை உண்டு? அப்படி உதைத்த அந்த இளைய மலர்க்காலுக்கு அணி அணிந்து அழகு பார்ப்பதைத் தவிரத் தகுதியான தண்டனை ஏது?" என்று தம் கருத்தை வெளியிட்டார்.
யாவரும் உண்மையை உணர்ந்து வியந்தனர்; புலவருடைய கூரிய அறிவையும் பாராட்டினர்; 'அவசரப்பட்டு வாய்க்கு வந்ததைக் கூறினோமே!' என்று இரங்கினர்.
'கச்சியப்பனை யுதைத்த காலை'ப் பாடி அக்கவிராயர் தக்க பரிசு பெற்றார். *
-----------
* இவ் வரலாறு நான் கேட்டபடி எழுதப்பட்டது; வேறுவகையாக வழங்குவதும் உண்டு.
------------------------
12. திருமலைராயன் பட்டினத்தில் ஏடு தேடியது
கும்பகோணத்தில் நான் இருந்த காலத்திலும் சென்னைக்கு வந்த பிறகும் விடுமுறை நாட்களில் வெளியூர்களூக்குச் சென்று ஏட்டுச் சுவடிகளைத் தேடி வருவது வழக்கம். கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று பல நாட்களாகப் புழுதியும் புகையும் படிந்த பல ஏட்டுச் சுவடிகளைப் பார்த்திருக்கிறேன். அக்காலங்களில் சில முறை தனியே செல்வேன்; சில சமயங்களில், என் உடனிருந்து ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளைச் செய்து வருபவர்களையும் அழைத்துச் செல்வேன். ஏடுகளைப் பார்க்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு செல்வேனாதலின், போகுமிடங்களில் உண்டாகும் அசௌகரியங்களையும் அவமதிப்பையும் கருத் திற் கொள்வதில்லை. என்னுடைய சௌகரியத்தையும் பெருமையையும் பாராட்டிக் கொண்டிருப்பின் எவ்வளவோ அரிய நூல்களைப் பெறாமல் இழந்திருப்பேன்; தமிழ்த்தாயின் பெருமையை நிலைநிறுத்தும் நூற்செல்வங்களைப் பார்த்திருக்க முடியாது.
ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் திருவாரூர்ப் பக்கத்திலுள்ள ஊர்களுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அக்காலத்தில் எழுதுதல் ஒப்பிடுதல் முதலிய உதவிகளை எனக்குச் செய்துவந்த பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரென்பவர் என்னோடு வந்தார். அம்முறை திருவாரூர், கீழ்வேளூர், தேவூர், நாகபட்டினம், நாகூர் முதலிய ஊர்களுக்குப் போய் வந்தேன்.
நாகபட்டினம் போயிருந்த போது அதற்கு வடக்கே கடற்கரையில் திருமலைராயன் பட்டினம் இருப்பதை அறிந்தேன். சிறந்த கவிராயராகிய காள மேகத்தின் பெருமையை உலகுக்கு விளக்கிய அந் நகரத்தைப் பற்றித் தமிழ்ச் செய்யுட்களால் ஒருவாறு அறிந்திருந்தேன். காளமேகம் வசைக்கவி பாட அந் நகரம் மண்மாரியால் அழிந்ததென்று சொல்வார்கள். இந்தச் செய்திகளை அறிந்த எனக்கு அவ்விடம் சென்று பார்த்துவரவேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது; மண்மாரியால் அழிந்த பட்டினத்துக் கருகில் ஊரொன்று உள்ளது. அங்கே யாரேனும் புலவர் பரம்பரையினராக இருப்பாராயின் அவரது வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்க்கலாமென்பது என் அவா.
காலையில் நாகபட்டினத்திலிருந்து ஒரு குதிரை வண்டியில் ஏறித் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேர்ந்தேன். அங்கே பழைய பட்டினம் அழிந்த பிறகு உண்டாகிய புதிய பட்டினம் அதன் கீழ்ப்புறத்தில் அப்பெயரோடே இருக்கிறது. அப்பட்டினத்தில் பலவகைச் சாதியினரும் தொழிலாளிகளும் தனித்தனியே குடியிருந்த வீடுகளையுடைய பரந்த வீதிகளும் வேறு பலவகை அமைப்புக்களும் சிவ விஷ்ணு ஆலயங்களும் பல குளங்களும் காணப்பட்டன. நகரத்தைச் சார்ந்து திருமலைராயனென்னும் ஆறு ஓடுகின்றது. அது பழையகாலத்தில் அப்பெயரையுடைய அரசனால் காவிரியாற்றிலிருந்து ஒரு பிரிவாக வெட்டப்பெற்றது. அந்நதி அப்பட்டினத்திற்குக் கிழக்கே சென்று கடலோடு கலக்கிறது.
அங்கே நாயன்மார்களிடத்தில் பக்தியுள்ள சிலர் சேர்ந்து பஜனை செய்து காலங்கழிக்கும் மடமொன்று இருந்தது. அதனுள்ளே சென்று அங்கிருந்தவர்களிடம், "இந்த ஊரில் யாரேனும் தமிழ் படித்தவர் இருக்கிறாரா?" என்று கேட்டேன். அவர்கள், "இந்த ஊர்ப் பள்ளிக்கூட உபாத்தியாயர் இராமசாமி பிள்ளையென்பவர் படித்தவர். செங்குந்தராகிய குமாரசாமி முதலியாரென்று ஒருவர் இருக்கிறார்; அவரும் நன்றாகப் படித்தவர்" என்றார்கள்.
பள்ளிக்கூடத்து உபாத்தியாயர், அதிக வியாபகமுடையவராக இருப்பாராதலால் அவரைக் கொண்டு என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்றெண்ணி நேரே பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தை விசாரித்துக்கொண்டு சென்றேன்.
அந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பழைய கோலத் தோடு விளங்கியது. மேலே கீற்று வேயப்பட்டிருந் தது. எவ்வளவு வருஷங்களுக்கு முன் கீற்று வேய்ந்தோமென்பது அதில் இருப்பவர்களுக்கே மறந்து போயிருக்கும். கூரையிலிருந்த இடைவெளிகளின் மூலமாகச் சூரியனுடைய கிரணங்கள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தன. தளவரிசை, குறடுகளெல்லாம் செங்கல் பெயர்ந்தும் குழிந்தும் இருந்தன.
அங்கே கீழே மணல் பரப்பப்பட்டிருந்தது. பிள்ளைகள் மிக்க பயபக்தியோடு தரையில் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் கையில் பனையோலைச் சுவடிகளும் சிலர் கையில் அச்சுப் புத்தகங்களும் இருந்தன. சிலர் இசையோடு பாடத்திற்குரிய பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.
பழம்பொருள்களினிடையே நடுநாயகமாக ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் உள்ள பிரம்பு பலவிடங்களில் பிய்ந்திருந்தது; மரச்சட்டங்கள் பொலிவழிந்து காணப்பட்டன. அதன்மேல் ஒருவர் சாய்ந்த வண்ணமாக இருந்து அடிக்கடி பிள்ளைகளை அதட்டிக்கொண்டிருந்தார். ஒரு சிங்காதனத்தில் வீற்றிருக்கும் அரசனுடைய அதிகாரத்தொனி அவருடைய அதட்டலில் இருந்தது.
பள்ளிக்கூடத்தின் அமைப்பையும் பிள்ளைகளின் காட்சியையும் உபாத்தியாயரின் நிலையையும் பார்த்துக் கொண்டு நானும் என்னுடன் வந்த நாராயணசாமி ஐயரும் சிறிது நேரம் நின்றோம். உபாத்தியாயர் எங்களைக் கவனிக்கவில்லை. நாங்கள் வந்திருப்பதை உணர்த்துவதற்காகக் கனைத்தோம்; அப்பொழுதும் அவர் எங்களைக் கவனிக்கவில்லை. நாராயணசாமி ஐயருக்குச் சிறிது கோபம் உண்டாயிற்று; "இங்கே நமக்கு என்ன வேலை? மரியாதை தெரியாத மனுஷனிடம் என்ன இருக்கப்போகிறது?" என்று என்னை நோக்கி மெல்லக் கூறினார். நான், "இருக்கட்டும்; நாம் மரியாதைக்காக இங்கு வரவில்லையே. அவசரப்படக் கூடாது" என்று கையமர்த்திவிட்டுச் சாய்வு நாற்காலியை அணுகினேன். நாற்காலியில் வீற்றிருந்த ஆசிரியர் அசையவே யில்லை. "போதும்! போதும்! போகலாம்" என்று முணுமுணுத்தார் நாராயணசாமி ஐயர். "எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? யாரறிவார்? இப்படியுள்ளவர்களிட மிருந்து எவ்வளவோ லாபம் அடைந்திருக்கிறேன். இங்கேதான் பண்டம் இருக்கும்" என்று சொல்லிவிட்டு அந்த உபாத்தியாயரைப் பார்த்து, மெல்ல "இந்தப் பள்ளிக் கூடத்துத் தலைவர் யாரோ?" என்று கேட்டேன். அந்த மனிதர் சாய்ந்தபடியே, "நான் தான்" என்றார். நாராயணசாமி ஐயர் கண்கள் சிவந்தன; கையைத் தட்டிப் போகலாமென்று குறிப்பித்தார்.
நான் உபாத்தியாயரைப் பார்த்து, "இராமசாமி பிள்ளையவர்கள் தாங்களோ?" என்றேன்.
"ஆமாம்" என்று சொல்லித் தம் முகத்தை நிமிர்த்து எங்களைப் பார்த்தார் அவர்.
"உங்களோடு சில சமாசாரம் பேசவேண்டும்" என்றேன்.
"இப்பொழுது ஒன்றும் முடியாது. இரண்டு மணிக்குமேல் வாருங்கள்; பார்த்துக் கொள்ளலாம்" என்று அவர் சொன்னார்.
சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த நாராயணசாமிஐயர், "அட கிரகசாரமே!" என்று தலையில் அடித்துக்கொண்டார்.
"உங்களைப் பற்றி இவ்வூராரெல்லாம் சொல்லுகிறார்கள். அதனால் பார்த்துவிட்டுப் போக வந்தோம்" என்று நான் பணிவாகக் கூறினேன்.
உபாத்தியாயர் என்னை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்; "நீங்கள் யார்?" என்று கேட்டார். அவர்திருவுள்ளத்தில் அப்பொழுதுதான் கிருபை உதயமாயிற்றென்பதைக் கண்டுகொண்டேன்.
"நான் இருப்பது கும்பகோணம் பக்கம். இவ்வூரைப் பார்த்துப் போக வந்தேன். இங்கே தமிழ் படித்தவர்கள் யார் இருக்கிறார்களென்று விசாரித்ததில் எல்லோரும் உங்களைச் சொன்னார்கள்" என்றேன்.
"அப்படியா?" என்று அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்; அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. "அடே, 'பெஞ்சை' க் கொண்டு வாடா" என்று தம் மாணாக்கர் ஒருவருக்குக் கட்டளையிட்டார். ஓர் உடைசற் 'பெஞ்சு' வந்தது. "நிற்கிறீர்களே; உட்காருங்கள்" என்று என்னையும் நாராயணசாமி ஐயரையும் பார்த்துச் சொன்னார். உட்காருவதற்கு எங்களால் என்ன தடை?
"யாரைக் கேட்டீர்கள்? என்ன சொன்னார்கள்?" என்று கேட்டார் இராமசாமிப் பிள்ளை. தம்முடைய புகழைப் பின்னும் விரிவாக என் வாயால் கேட்பதை அவர் விரும்பினாரென்பதை அறிந்தேன். இது மனித இயல்புதானே!
"பஜனை மடத்தில் விசாரித்தேன்; வேறு சிலரையும் விசாரித்தேன். தாங்களும் குமாரசாமி முதலியாரென்ற ஒருவரும் நன்றாகப் படித்தவர்களென்று எல்லோரும் சொல்லுகிறார்கள்."
"ஆமாம், அவரையும் சொல்வார்கள். இரண்டு பேரையும் ஒருவிதமாகவே சொன்னார்களோ?"
"இல்லை, இல்லை; முதலியார் சாதுவாம். சிவ பூஜை செய்துகொண்டும் சாந்தமாகப் படித்துக் கொண்டும் வீட்டில் இருப்பாராம். உங்களைப்போல அவருக்கு வியாபகம் இல்லையாம். எல்லோரும் உங்களை ஒருபடி உயர்வாகவே சொல்லுகிறார்கள்."
"சொல்வார்கள்" என்று புன்முறுவல் செய்தார் உபாத்தியாயர்.
"இந்த ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் வீடுகளில் இருக்கும் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க வேண்டும். அதற்குத்தான் உங்கள் உதவியை நாடி வந்தேன்" என்றேன்.
"தான் பேதிமருந்து சாப்பிட்டிருக்கிறேன். இரண்டு மணிக்கு மேல் வந்தால் பார்க்கலாம். இப்போது முடியாது" என்று அவர் சொன்னார். நாங்கள் விடை பெற்றுக்கொண்டு சென்றோம்.
அவ்வூரில் உணவு கொள்வதற்கு ஏற்ற இடமில்லாமையால் பெருமாள் கோயிலுக்குச் சென்று பிரசாதத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டுக் குமாரசாமி முதலி யாரையும் பார்க்கலாமென்று சென்றோம். அவர் வீட்டில் இல்லை; ஸ்நானம் செய்யப் போயிருந்தார். அவ்விடத்திற்கே போகலாமென்று புறப்பட்டோம். அவர் நீராடிவிட்டுக் கையில் தீர்த்த பாத்திரத்தோடும் ஈர ஆடையோடும் எதிரே வந்துகொண்டிருந்தார். அவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய சாமிநாத கவிராயரிடம் பாடங் கேட்டவரென்றும் நல்ல படிப்பாளி யென்றும் கேள்வியுற்றிருந்தேன். ஆதலின் அவரைக் கண்டவுடன், "உங்களைப்பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றேன். அவர் உடனே, "நீங்கள் யார்?" என்று என்னை விசாரித்தார். நான் இன்னானென்பதை அறிந்து மிக்க சந்தோஷத்தோடு விரைந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். நான் ஏடு தேட வந்திருப்பதை அறிந்து அப்பொழுதே ஈர ஆடையோடு தம் வீட்டுப் பரணின்மேல் ஏறி அங்கிருந்த சுவடிகளை யெல்லாம் எடுத்தெடுத்து என்னிடம் கொடுத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அவற்றிற் பெரும்பாலன அச்சிலுள்ள புத்தகங்களாகவே இருந்தன; எனக்கு வேண்டியதாக ஒன்றும் கிடைக்கவில்லை. *"தேவர் குறளும் என வரும் பாட்டிற் சொல்லப்பட்டுள்ள 'முனிமொழி' என்ற பெயரையுடைய பழைய சுவடி ஒன்று *(sentence incomplete) அதிகமான பழக்கமில்லாதவர்களிடமிருந்து ஏட்டுச் சுவடிகளைக் கேட்டால் அவர்கள் கொடுக்க யோசிப்பார்கள்; ஆதலால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
-----------------------------------------
*"தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும்,மூவர் தமிழு முனிமொழியும்-கோவை, திருவா சகமுந் திருமூலர் சொல்லும், ஒருவா சகமென் றுணர்" (மூதுரை.) முனிமொழியென்பது ஒரு நூலென்று தெரியாமல் 'பிரம்ம சூத்திரம்'என்று சிலரும் வேறு நூலென்று சிலரும் கூறி வந்தனர்.
அப்பால் குமாரசாமி முதலியார்,"ஐயாவுக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஆலயத்திற் பிரசாதம் சித்தம்செய்யச் சொல்லுகிறேன்" என்று பேரன்போடு கூறினார். நான் முன்னமே ஏற்பாடு செய்துவந்ததைச் சொல்லிவிட்டுப் பெருமாள் கோயில் சென்று நாரயணசாமி ஐயருடன் போசனம் செய்து கொண்டேன்.
பிற்பகல் இரண்டு மணிக்கு ராமசாமி பிள்ளையிடம் சென்றோம்.அவரை,"உங்களிடம் ஏதேனும் ஏடு இருக்கிறதா?"என்று கேட்டேன்.
"என்னிடம் ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டும்போது, 'யாரிடமாவது வாங்கிப் படித்துத் திருப்பிக் கொடுத்து விடுவது வழக்கம்" என்றார் அவர்.
நான், "தாங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?" என்று வினவினேன்.
"மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களென்ற ஒரு பெரிய கவிஞரை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார்.
நான் இன்னானென்பதை அவர் அறிந்துகொள்ள முயலவில்லை. நானும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. ஆதலின் நான் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதை அவர் அறிய வழியில்லை யல்லவா?
"கேட்டிருக்கிறேன்" என்றேன்.
"அவர்களிடம் படித்தவர்களுள் சவேரிநாத பிள்ளை யென்ற ஒருவர் காரைக்காலில் இருந்தார். அவர் பிள்ளையவர்களோடு ஒரு கணமும் இடை விடாமல் இருந்து பலகாலம் படித்தவர். அவரிடம் நான் பாடங்கேட்டேன்" என்றார் அவர்.
சவேரிநாத பிள்ளை என்னுடைய நண்பர். அவரைப் பற்றி நான் அறிந்த அளவு இராமசாமி பிள்ளை அறிந்திருக்க முடியாது. ஆயினும் ஒன்றும் எதிர் பேசாமல் அவர் சொன்னதை மட்டும் மௌனமாகக் கேட்டு வந்தேன். நாராயணசாமி ஐயருக்கோ சிரிப்பும் கோபமும் மாறி மாறி வந்தன.
நாங்கள் முதலில் பழைய பட்டினத்தைப் பார்க்கப் புறப்பட்டோம். அதற்குள் குமாரசாமி முதலியார் மூலமாக என்னைப் பற்றிப் பலர் அறிந்துகொண்டனர். பல நாட்களாக என்னைக் காண வேண்டுமென்ற ஆவலோடு சிலர் இருந்தனர். நாங்கள் போகும் வழியில் ஒருவர்பின் ஒருவராகச் சற்றேறக்குறைய ஐம்பது பேர்கள் வந்து கூடிவிட்டார்கள். எல்லாரோடும் சென்று பழைய பட்டினம் முழுவதையும் பார்த்தேன். பல விஷயங்களை அறிந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டேன்.
உடன்வந்த இராமசாமி பிள்ளை என்னைப்பற்றி மெல்ல அறிந்துகொண்டார். பழைய முறுக்குத் தளர்ந்தது; பணிவு உண்டாயிற்று. அவருடைய முகம், 'தவறு செய்துவிட்டோமே!' என்ற அவரது எண்ணத்தைப் புலப்படுத்தியது.
பழைய பட்டினத்தைப் பார்த்த பிறகு பல வீடுகளுக்குச் சென்று ஏடுகள் பார்த்தேன். ஒரு குளக்கரையிலிருந்த நந்தவனத்தினிடையே செங்குந்தர் மடமொன்று இருந்தது. அதில் இருந்த முதியவர் ஒருவர் தம்மிடமுள்ள ஏட்டுச் சுவடிகளையெல்லாம் காட்டினார். அங்கும் முனி மொழியென்ற நூல் இருந்தது. நான் ஒன்றும் பெற்றுக்கொள்ளவில்லை. அங்கே ஒட்டக்கூத்தரைப் பற்றிய பேச்சு வந்தது; "அவர் அம்பர் நாட்டு முதலியார்" என்று ஒருவர் கூறினார். செங்குந்தர்களில் ஒவ்வொரு வகையாரும் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர். ஒட்டக்கூத்தர் அம்பர் நாட்டினரென்பதை அன்று அவரால் அறிந்து கொண்டேன்.
அன்றிரவு திருமலைராயன் பட்டினத்தில் தங்கியிருந்தோம். ஊரிலுள்ள அன்பர்கள் எங்களை ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வித்தார்கள்; பிரசாதங்களும் கிடைத்தன. மறுநாட் காலையில் அவர்களுடைய முயற்சியால் எங்களுக்காக இரண்டு மரக்கால் பால் வந்தது. அவர்கள் அன்பால் அளித்த அவ்வினிய ஆன்பாலை நாங்கள் இயன்றளவு உண்டு மகிழ்ந்தோம்.
பிறகு ஜட்காவில் ஏறிக்கொண்டு நாகபட்டினத்திற்குப் பிரயாணமானோம். அன்பர்கள் பலர் வண்டியைத் தொடர்ந்து வழியனுப்பினார்கள். இராமசாமிபிள்ளை அவர்கள் நின்ற பிறகும் தொடர்ந்து வந்தார்; பலமுறை நிற்கச்சொல்லியும் நிற்கவில்லை. நெடுந் தூரம் வந்தபின்பு, "நான் தங்களை முதலில் தெரிந்து கொள்ளாமல் அபசாரம் செய்துவிட்டேன்; பிறகு தெரிந்துகொண்டேன்; நான் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று நயந்த குரலோடு கூறினார்.
"நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே. உங்களால்தானே எனக்கு இவ்வளவு பேர்களும் பழக்கமானார்கள்? நீங்கள் நிற்க வேண்டும்" என்றேன்.
"ஐயா, என் பேதைமையை மறந்துவிட வேண்டும்; எளியேனை மறக்கக் கூடாது" என்று பணிவோடு சொல்லி அவர் விடை பெற்றுக்கொண்டார்.
அவர் சென்ற பிறகு நாராயணசாமி ஐயரைப் பார்த்து, "பார்த்தீர்களா? நேற்று அவரிடம் இருந்த முறுக்கு என்ன? இன்று இருக்கும் பணிவு என்ன? நாமாக நம்மைப் பிறரிடம் தெரிவித்துக்கொள்வதை விட அவர்கள் தாமாக அறிந்துகொண்டால்தான் அதிக அன்பு உண்டாகும். நாம் முதலிலேயே சொல்லியிருந்தால் பயந்துகொண்டு நம்மோடு வந்திருக்கமாட்டார். தெரியாமல் இருந்ததனால்தான் புகழுரையில் மயங்கிப்போய் நமக்கு உதவிபுரிய வந்தார். நல்ல மனிதர். ஆனாலும் உபாத்தியாயரென்ற நினைவினால் அவரிடம் சிறிது அதிகாரதோரணை இருந்தது" என்றேன்.
இந்த நிகழ்ச்சி 40 வருஷங்களுக்கு முன் நடந்தது. 1936-ஆம் ௵ திருப்பனந்தாட் காசி மடத்தில் நடைபெற்ற ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் தினவிசேஷத்துக்கு நான் சென்றிருந்தேன். வெளியூர்களிலிருந்து பல வித்துவான்களும் சைவர்களும் வந்திருந்தனர். வந்திருந்தவர்களிற் பெரும்பாலோர் எனக்குப் பழக்கமானவர்கள். ஆதலின் அவர்கள் வந்து என்னோடு பேசிச் சென்றார்கள். அவர்களுள் ஒருவர் விபூதி ருத்திராக்ஷ தாரணம் செய்துகொண்டிருந்தார். பற்களெல்லாம் விழுந்திருந்தன. அவர் என்னைப்பார்த்து அஞ்சலி செய்தார். அவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமையால். " நீங்கள் எந்த ஊர்?" என்று விசாரித்தேன். " திருமலைராயன் பட்டினம்" என்றார். அவர். " அங்கே பள்ளிக்கூட உபாத்தியாயர் இராமசாமிப் பிள்ளையென்பவர் எனக்குத் தெரிந்தவர். அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டேன். "நான்தான்" என்று சொல்லி அவர் சிரித்தார். உடனே பழைய ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனத்தில் தோன்றின.
"அந்தச் சாய்வுநாற்காலியில் சாய்ந்துகொண்டு பேசினவர்கள் நீங்களா?" என்று அவரைக் கேட்டேன்.
"ஆமாம்" என்று சிரித்தார் அவர்.
" அந்தப் பழைய முடுக்கெவல்லாம் இப்பொழுது காணோமே; இப்படி ஆகிவிட்டீர்களே!" என்றேன். அவருடைய பழைய கதையை அங்கே உடனிருந்தவர்களுக்குச் சொன்னேன். அவரும் அதை ஒப்புக் கொண்டார். அப்பால்சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். தாம் இயற்றிய சில தமிழ்ச் செய்யுட்களை அவர் சொல்லிக்காட்டி அப்பால் விடைபெற்றுச் சென்றார்.
------------
13. அபசாரத்திற்கு உபசாரம் *
* ஜோதி, செப்டம்பர், 1937.
மோசிகீரனாரென்பவர் கடைச் சங்க காலத்தில் இருந்த புலவர்களுள் ஒருவர். அவருக்குப் பல அரசர்களும் சிற்றரசர்களும் பழக்கமானார்கள். ஒரு நாள் அவர் சேர அரசனாகிய பெருஞ்சேரல் இரும்பொறையைப் பார்த்து பரிசில் பெற்றுவரச் சென்றார். அப்போது வழி முழுவதும் வெயிலில் நடந்து போக வேண்டி யிருந்தது. சேரமானது அரண்மனையை அணுகியவுடன் அவருக்கு மிக்க களைப்பு உண்டாயிற்று. எங்கேனும் படுத்து உறங்கிக் களைப்பு ஆற்றிக் கொண்டு அப்பால் அரசனைப் பார்க்கலாமென்று எண்ணி அரண்மனையிற் புகுந்தார். அங்கே ஓர் அழகிய பெரிய கட்டில் அவர் கண்ணிற்பட்டது. அதில் மெத்தென்ற அணைகளும் எண்ணெய் நுரையைப்போன்ற மெல்லிய விரிப்புகளும் மலர்களும் இருந்தன. வந்த களைப்பின் மிகுதியினால் அவர் அதன்மேல் ஏறிப் படுத்துக்கொண்டார். அவருக்கு இருந்த அயர்ச்சியும் அந்த அணைகளின் மென்மையும் இனிய தூக்கத்தை அவருக்கு உண்டாக்கின; மெய்ம்மறந்து ஆனந்தமாக அவர் தூங்கலானார்.
அந்தக் கட்டில் சேரமானது முரசை வைத்து வழிபடுவதற்குரியது. அதனை முரசு கட்டிலென்று கூறுவர்; போர் செய்யத் தொடங்குவதற்கு முன் அம்முரசத்தை முழக்குவர்; அதனை மலராற் பூசித்துப் பலிகொடுத்து வழிபடுவர்; அதில் தெய்வம் உறைவ தாகக் கருதித் தெய்வ விக்கிரகத்துக்கு எவ்வளவு சிறப்புக்கள் செய்யப்படுமோ அவ்வளவு சிறப்புக்களையும் அதற்குச் செய்வது பழைய வழக்கம்.
அன்று பகைவனது மதிலைக் கைப்பற்றுவதற்காக சேரமான் அம்முரசிற்குப் பூஜை செய்ய எண்ணியிருந்தான். அதற்கு அபிஷேகம் செய்து வரும் பொருட்டு ஏவலாளர்கள் அதனை எடுத்துச் சென்றிருந்தனர். ஆதலின் அக்கட்டிலினருகே ஒருவரும் அப்பொழுது இல்லை. புலவர் அதனை முரசு கட்டிலென்று அறியாமல் அதிற் படுத்து உறங்கி விட்டார்.
அப்பொழுது அவ்வழியே சேரமான் வந்தான். அவனுடைய கண்கள் முரசு கட்டிலின் மேல் விழுந்தன; தான் கண்டதை அவன் நம்பவில்லை. 'என்ன! மனிதனா படுத்திருக்கிறான்!' என்று திடுக்குற்றுப் பார்த்தான். 'ஆம்! மனிதன் தான். சந்தேகமே யில்லை. சுகமாகத் தூங்குகிறான். என்ன துணிவு! என்ன தைரியம்! கடவுளுக்குரிய பீடத்தில் மனிதனா படுத்துறங்குவது!' என்று அவன் எண்ணினான். அவன் கண்கள் சிவந்தன; மீசை துடித்தது; அவனை அறியாமலே அவன் கை உறையினின்றும் வாளை உருவியது. ஒரே வீச்சில் இரண்டு துண்டாக வெட்டி விடுவதையன்றி வேறு தண்டனை இவருக்கில்லையென்று கட்டிலை அணுகினான். புலவரோ தம்முன் நிகழும் இந்தப் பயங்கரமான செய்கை யொன்றையும் அறியாமல் துயின்றனர்.
புலவருக்கு அருகில் வந்ததும் அரசன் கையை ஓங்கினான். அவன் கண்கள் அவரது முகத்தை நோக்கின; 'ஆ!' என்று அவன் கூவினான்; அவன் கை சோர்ந்தது! வாள் உறைக்குள்ளே சென்றது; "என்ன பாதகம் செய்ய இருந்தோம்? மோசிகீரனாரையல்லவா கொல்லத் துணிந்தோம்? நல்ல காலம்! கடவுள் நம்மைக் காப்பாற்றினார்!" என்று வாய் விட்டுச் சொல்லும்போது அவன் உடல் பதறியது. "ஆ! ஆ! என்ன அயர்ச்சியோடு தூங்குகிறார்! எங்கிருந்தோ பசியோடு வந்திருக்கிறார் போலும்! இவரைக் கொன்று விட்டு ஏழேழு பிறப்பிலும் அழியாத பாதகம் செய்யவல்லவா இருந்தோம்! இவர் தூக்கத்தைக் கலைப்பது கூடப் பெரும் பாவம்!" என்று அவன் நினைத்தான்.
தன்னைச் சுற்றி அங்குமிங்கும் அரசன் பார்த்தான். அங்கே ஒரு கவரியைக் கண்டதும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியுண்டாகியது. அதனை எடுத்து மெல்ல அவன் புலவருக்கு வீசிக்கொண்டு நின்றான். புலவருடைய தூக்கம் எளிதில் அகல்வதற்கு வழியேது? பின்னும் சுகமாகத் தூங்கினார்.
சில நேரம் சென்றது. மோசிகீரனார் ஒருவாறு துயிலின் கரையைக் கண்டார். துயிலுணர்ந்து விழித்துப் பார்த்தார்; அருகிலே சேரர்பிரான் சாமரை வீசிக்கொண்டு நின்றான்! "கனவு காண்கின்றோமோ!" என்றெண்ணி எழுந்து கண்ணைத் துடைத்துப் பார்த்தார். முரசு கட்டிலில் அவ்வளவு நேரம் துயின்றதும் தெளிவாயிற்று. திடீரென்று கீழே குதித்தார்; "என்ன அன்பு! என்ன தமிழன்பு!" என்று கூவினார். அவருக்கு மேலே பேச நா எழவில்லை. 'என்ன ஆச்சரியம்! நான் பண்ணிய குற்றத்திற்கு இதுவா தண்டனை? வாளை யெடுத்து வீசவேண்டிய இக்கை கவரியை யல்லவா வீசுகிறது! அபசாரத்திற்கு உபசாரமா தண்டனை! என்னை வெட்டித் தண்டிக்காமல் இருந்த பொறுமையொன்றே இவரது தமிழன்பை வெளியிடப் போதுமே!
அதற்குமேல், அபராதியாகிய எனக்கு உபசாரம் வேறுசெய்யும் இவருக்கு இம்மையில் உண்டாகும் புகழுக்கு அளவேது? இப்பிறவிக்குப் பின் சுவர்க்க நிலை உண்டென்பதிலே சிறிதும் ஐயம் உண்டோ? இவருக்கு எப்பொழுதும் வெற்றியே உண்டாகுக!' என்று அப்புலவர்பிரான் தம் உள்ளத்திற்குள் வியந்து கொண்டே இருந்தார். அக் கருத்துக்களெல்லாம் அப்பால் ஒரு செய்யுளாக வெளிப்பட்டன; அச்செய்யுள் வருமாறு:-
"மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மகையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினி யீங்கிது செயலே."
(புறநானூறு, 50)
14. பெண்கள் கடமை *
* ஸ்ரீசாரதா ஸ்திரீகள் சங்கம், மயிலை (Sri Sarada Ladies Union, Mylapore) வெள்ளி ஜூபிலி வெளியீடு.
நான்கு நிலை
பெண்களுடைய வாழ்க்கைநிலை காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப மாறுபடுவனவாக இருப்பினும், அவர்கள் எக்காலத்திலும் செய்யவேண்டிய கடமைகள் சில உண்டு. அவற்றை எல்லாப் பெண்களும் தவறின்றிச் செய்ய வேண்டியது இன்றியமையாதது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையை முற்காலத்தார் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என ஏழு பருவங்களாகப் பிரித்தார்கள். இப்பொழுது அவர்களுடைய கடமைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்; அவை மகள், சகோதரி, மனைவி, தாய் என்னும் நான்கு நிலைகளில் செய்யும் கடமைகளே யாகும். பெண்கள் வாழ்வில் இவை முக்கியமானவை. இவற்றைக் குமரகுருபர முனிவர்,
"அனக நாட கற்கெம் மன்னை
மனைவிதாய் தங்கை மகள்."
என்று ஒரு செய்யுளில் புலப்படுத்தி யிருக்கின்றார்; இந்நான்கு நிலைகளிலும் பெண்கள் ஆற்ற வேண்டிய கடமைகளிற் சில எக்காலத்திற்கும் எவ்வகையாருக்கும் பொதுவானவை.
மகள்
இப்பருவத்தை பயிற்சி நிலையென்று சொல்லலாம். தாய் தந்தையாராலும் மற்றப் பெரியோராலும் கற்பிக்கப்படும் ஒழுக்கங்கள் மனத்திற் பதிந்து பிற்காலத்தில் வாழ்க்கையை உருப்படுத்துவதற்குரிய அடிப்படை யாகின்றன. ஆண்பாலாருக்கும் பெண் பாலாருக்கும் இப்பருவத்தில் அதிக வேற்றுமை இல்லை. கல்வி யறிவு, நற்குண நல்லொழுக்கங்கள், உலகஞானம் முதலியவை இப்பருவத்தில் உண்டாக வேண்டும்.
இக்காலத்தில், இந்நிலையிற் கல்விப் பயிற்சி மிகவும் இன்றியமையாதது. நவீன நாகரிக வாழ்க்கையில் அளவுக்குமீறிப் புகாமலிருப்பதற்குரிய மனவுறுதி இந்நிலையில் உண்டாக வேண்டும். அது நாளடைவில் வன்மைபெற்று நற்பயனை அடையச் செய்யும்.
சகோதரி
பிறரோரு பழகும் காலத்தில் ஒரு பெண் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டு. சகோதர உணர்ச்சியோடு பழகினால் மன வொற்றுமை வளர்ச்சியுறும். பழைய காலத்தில் பெண்களால் சண்டை விளையுமென்ற கொள்கை சிலரிடத்தில் இருந்தது. பிறரோடு மனங்கலந்து பழகுவதனால் ஒருவரையொருவர் குறைகூறும் இயல்பு குறைந்து மனவொற்றுமை உண்டாகும்; மேற்குறிய அவதூறு நேராது. பிறருடைய குற்றங்களைக் குறித்து வம்பு பேசும் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும். உபயோகமான வேலைகளைக் கவனித்துப் பொழுது போக்குவதற்குப் பழகவேண்டும். காலத்தை வீணாக்குவதனால் உண்டாகும் நஷ்டங்கள் பல. தக்க துணையின்றி ஒரு காரியத்தை மேற்போட்டுக் கொள்வதும் ஓரிடத்திற்குச் செல்வதும் துன்பத்தை உண்டாக்கும். இவற்றில் மிக்க கருத்தோடு நடந்துகொண்டால் பெண்களுடைய நிலை உயர்வடையும். பிறருடைய இன்ப துன்பங்களை உணர்ந்து நடக்கும் சிறந்த பழக்கம் சகோதரியென்ற நிலையில் அமையவேண்டும்.
மனைவி
பெண்களுடைய கடமைகளிற் சிறந்த பகுதி மனைவியாக இருந்து செய்வதாம். எந்த நாட்டில் இந்தக் கடமையிற் குறைவு நேருமோ அந்த நாட்டின் நன்மை குன்று மென்பதில் தடையில்லை. அடக்கம், நாயகனையும் தன்னையும் பாதுகாத்தல், நாயகனுக்கும் தனக்கும் உள்ள அன்பை விருத்தி செய்தல் முதலிய இயல்புகள் இப்பருவத்திற் சிறப்பாக அமைய வேண்டுவன. இந்த நிலையிற் பெண்களிடம் அன்பு தலை சிறந்து நிற்கின்றது.
இல்லறம் ஒழுங்காக நடைபெறவேண்டி மனைவியும் கணவனும் அன்பாற் பிணைக்கப்படுகிறார்கள். மனைவியும் கணவனும் கருத்து ஒருமித்து இல்லறத்தை நடத்த வேண்டும். கணவனுக்குத் தெரியாமல் ஒரு காரியத்தையும் மனைவி செய்தல் கூடாது; அவனுடைய மனத்திற்குப் பொருந்தாத செயல்களில் பிரவேசிக்கக் கூடாது. பெண்கள் இயல்பாகவே மேன்மையுடையவர்கள். அவர்கள் தம்முடைய ஒழுக்கத்தையும் கற்பையும் காத்துக்கொள்வதில் கண்ணாக இருக்க வேண்டும். அவை பிறழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை உண்டாக்கும் முயற்சி எவ்வளவு சிறப்புடையதாயினும் அதில் ஈடுபடுதல் பெரும் பிழையாகும்.
குடும்பத்தின் நிர்வாகம் மனைவிக்கு உரியது. வருவாய்க்கேற்ற செலவு, விருந்தினரை உபசரித்தல் முதலிய செயல்களில் மனைவியே அதிகமாகக் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவள் செலவுகளைச் சுருக்கவேண்டும். ஆடம்பரமான விஷயங்களில் பொருளை அழித்தல் குடும்ப நன்மைக்குக் கேடு விளைவிக்கும். தான் உயர்ந்த நிலையில் இருப்பதனால் மனம் போனபடி செலவழிக்கலாமென்று எண்ணக் கூடாது. அங்ஙனம் உயர்ந்த செல்வநிலை இருக்குமாயின் பிறருக்கு உதவி செய்வதிற் பொருளைச் செலவிடலாம். கல்யாணம் முதலியவற்றில் வீணாகப் பொருளைச் செலவிட்டு அடையும் மதிப்பைக் காட்டிலும் வறியவர்களுக்கு உதவிசெய்து பெறும் மதிப்பே சிறந்தது; அதனால் குடும்பத்திற்கு நற்புகழும் உண்டாகும்.
கணவனுடைய இயல்பை அறிந்து அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்து அவனது உடல் நலத்தைப் பாதுகாத்தும், அவன் கவலைப்படும் காலங்களில் இன்மொழி கூறித் தேற்றியும், தளர்ந்த காலங்களில் அன்புடன் ஆவன செய்தும் வாழ்வது மனைவியின் கடமை. அவள் தன்னுடைய அன்பினால் வீட்டுக்கு ஒரு விளக்கைப்போல விளங்குகின்றாள். "மனைக்கு விளக்கமடவாள்" என்பது ஒரு பழந்தமிழ்ச் செய்யுள். அவளுடைய முயற்சிகள் பல துறைகளிலும் நன்மையை உண்டாக்கி அவளை ஒரு தெய்வ மாக எண்ணச் செய்கின்றன. அதனால் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அவளே காரணமென்ற நினைவு யாவருக்கும் உண்டாகின்றன.
"ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்" என்ற முதுமொழி இக்கருத்தையே விளக்குகின்றது.
தாய்
பெண்களால் உலகத்துக்கு உண்டாகும் பயன்களிற் பெரும்பாலன இப்பருவத்திற் செய்யப்படுவனவாம். இல்லறம் நடத்துவது நல்ல சந்ததிகளை உண்டாக்குவதற்கென்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. ஒரு பெண் அன்புடைய மனைவியாக இருந்து இல்லறம் நடத்தினாலன்றி நல்ல தாயாக விளங்கமுடியாது. ஆதலின் நன்மனைவியாக இருந்து அன்பை வளர்த்துப் பின் அருளை வளர்க்கின்றாள். அன்பின் முதிர்ச்சி அவள்பால் அருளை உண்டாக்குகின்றது. "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்று மாணிக்கவாசக்ர கூறுகின்றார். இதனால் தாயினிடத்திலுள்ள குணங்களிற் சிறந்தது தயையென்பது அறியப்படும்; "அன்னை தயையும்" என்று வேறொரு பழம்பாடல் தெரிவிக்கின்றது. தயையே அருளாகும்.தாய்த்தன்மை இவ்வருளாலே சிறப்படையும். இக்காரணத்தினாலேதான் இறைவனது அருளையே சைவர்கள் தாயாக வைத்து வணங்குகிறார்கள்.
"அருளது சத்தி *யாகு மரன்றனுக்கு"
என்பது சிவஞான சித்தியார்.
தான் மகளாக இருந்து கற்ற கல்வியையும் ஒழுக்கங்களையும் தன் குழந்தைகளுக்குத் தாய் பயிற்ற வேண்டும். வருங்கால மக்களாகிய அவர்களை நல்லவர்களாகவும் அறிவுடையவர்களாகவும் பழக்க வேண்டியது அன்னையின் கடமை. நல்ல சகோதரியாக இருந்து பெற்ற மன ஒற்றுமை அவளுடைய குடும்பத்தில் மகளையும் மருமகளையும் ஒற்றுமையாக இருக்கும் வண்ணம் செய்ய உதவும்.
பிறரிடத்தும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு அவள் ஒரு தூண்டுகோலாக விளங்குவாள். மனைவியாக இருந்து வளர்த்த அன்பினால் அவள் குடும்பத்தினர் அனைவருள்ளத்தையும் கவர்ந்து நன்மைகளை உண்டாக்குவாள். அருளுணர்ச்சி மிகுந்தால் ஆவள் தன் குடும்பத்தைச் சீர்ப்படுத்துவாள்; தன் ஊருக்கும் நாட்டுக்கும் பெருமையை உண்டாக்குவாள்.
பொது
இவற்றால் ஒரு பெண், மகளாக இருந்து பல சிறந்த பயிற்சிகளைப் பெற்று, சகோதரியாக இருந்து மனவொற்றுமையை வளர்த்து, மனைவியாக இருந்து அன்பினால் இன்பம் உண்டாக்கி, அன்னையாக இருந்து அருளினால் உலகத்திற்கு நன்மையை விளைவிக்கின்றா ளென்பது தெரியவரும். இந்நான்கு நிலைகளில் ஒன்றனைவிட ஒன்று சிறந்த்தாகவும் விரிந்த பயனையுடையதாகவும் விளங்குகின்றது.
ஆண்டாள் நன்மகளாக இருந்து திருமாலையே நாயகனாக அடையும் பேறு பெற்றாள்; திலகவதியார் நல்ல சகோதரியாக இருந்து திருநாவுக்கரசு நாயனாரை நல்வழிப்படுத்தி உயர்வுபெற்றார்; திரு வள்ளுவர் மனைவியாராகிய வாசுகி முதலியோர் நன் மனைவியராக இருந்து உலகுள்ளளவும் அழியாப் புகழ்பெற்றனர்; கோசலை, சுமித்திரை முதலியோர் நற்றாயராக இருந்து நன்மக்களைப் பெற்று அருட்டிறம் பூண்டு உலகை உய்வித்தனர். நம் நாட்டுப் பெண் மணிகள் அவர்களுடைய சரிதைகளை அறிந்து தம் வாழ்க்கையிற் பயன்படுத்திக் கொள்வார்களானால் நாட்டிற்கே விளக்கங்களாகத் திகழும் நிலையை அடையலாம்.
------------------
15. ஒரு குமரன்*
*ஆனந்தவிகடன், தீபாவளி மலர், 1937.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டிலுள்ள மணலியென்னும் ஊரில் சின்னையா முதலியாரென்ற வேளாள கனவான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் 'கிழக்கிந்தியா கம்பெனி' (East India Company) யாரிடம் உத்தியோகம் பார்த்தவர்; பெரிய செல்வர்; தமிழ்நாட்டிற் பலவிடங்களில் அவருக்கு நிலங்கள் இருந்தன. ஒரு சிற்றரசரைப் போலவே அவர் வாழ்ந்து வந்தார்.
தமிழ்ப் பாஷையில் அவருக்கு பேரபிமானம் இருந்தது. அவர் பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தார். அப்புலவர்கள் முதலியாரைப் பாராட்டி இயற்றிய பாமாலைகள் பல; தனிப்பாடல்களும் கீர்த்னங்களும் பல உண்டு; இராம நாடகக் கீர்த்தனத்தை இயற்றிய சீகாழி அருணாசலக்கவிராயர் அவருடைய ஆதரவைப் பெற்றவர்.
முதலியார் தெய்வபக்தி மிக்கவர். தானதர்மங்கள் செய்வதில் ஊக்கமுள்ளவர். சிவ விஷ்ணு ஸ்தலங்கள் பலவற்றில் அவர் பலவகையான தர்மங்கள் நடைபெற ஏற்பாடு செய்தார்; பல இடங்களில் அன்னசத்திரங்களை அமைத்தார். வடை பாயஸம் முதலியவற்றோடு அங்கே உணவளிக்கப்பட்டு வந்தது. ஸ்தல யாத்திரை செய்பவர்களும் தேசாந்திரிகளும் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் குறைவற உண்ணும் இடங்களாக அவை விளங்கின.
முதலியார் ஆண்டுதோறும் ஸ்தல யாத்திரை செய்து வருவதுண்டு.அவருக்குப் பல மனைவியர் இருந்தனர். சில சமயங்களில் அவர்களையும் உடனழைத்துச் செல்வர். அவர்கள் 'கோஷா' ஸ்திரீகள்; ஆடவர்களுள்ள இடத்திற்கு வாராதவர்கள்.
ஒரு முறை சின்னையா முதலியார் தம்முடைய மனைவியாரோடும் மற்றப் பரிவாரங்களோடும் தலயாத்திரை செய்யப் புறப்பட்டுச் சோழநாட்டிலுள்ள சிதம்பரம் முதலிய க்ஷேத்திரங்களைத் தரிசித்தார். செல்வம் உடையவர்களுக்கு எல்லா இடமும் சொந்த இடம்போலவே இருக்குமல்லவா? அவர் அங்கங்கே உள்ளவர்களுடைய உபசாரங்களைப் பெற்றார். அவருக்கு முன் அவருடைய தான தர்ம்ப் புகழ் எங்கும் பரவி யிருந்த்து. அவர் திருவடைமரு தூருக்கு வந்து ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டு அதற்கருகிலுள்ள திருவாவடுதுறைக்குச் சென்றார்.
திருவாவடுதுறை யாதீனத்தில் அக்காலத்தில் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரென்னும் பெரியார் தலைவராக விளங்கினார். அவர் அவ்வாதீனத்தின் 14-ஆம் பட்டத்தில் விளங்கியவர். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் எண்பது பிராயம் வாழ்ந்தவர். அதனால் அவருக்கு "எண்பது திருநக்ஷத்திரப் பண்டார ஸந்நிதி" என்ற பெயர் வழங்கி வருகின்றது.
அவர் கல்வி கேள்வி மிக்கவர். வடமொழி தென்மொழி நூல்களை நன்றாக ஆராய்ந்து படித்தவர். ஆகம சாஸ்திர அறிவுடையவர். தம்முடைய ஆதீனம் செவ்வையாகவும் ஒழுங்காகவும் நடை பெறுதற்குரிய சட்டதிட்டங்களை வகுத்துத் தம்முடைய தவ அரசியலை நடத்தி வந்தார். அவர் அமைத்த வரையறைகள் அவ்வாதீன மடத்தில் * இப்பொழுதும் இருந்துவருகின்றன.
முதியவராகவும் அறிவு மேம்பாடுடையவராகவும் விளங்கிய அவரைத் தமிழ் நாட்டிலிருந்த ஜமீன்தார்களும், பெருஞ் செல்வர்களும், சைவ அடியார்களும் அடிக்கடி வந்து தரிசித்துச் செல்வார்கள். அவருடைய தெய்வ பக்தியையும் பேச்சுச் சாதுரியத்தையும் அறிந்து வருவோர் அவரைப் போற்றிப் போவார்கள். அவர் முருக்க் கடவுளிடத்திலே மிக்க பக்தியுடையவர். அவருடைய உருவம் திருவாவடுதுறை-யாலயத்தில் முருகக்கடவுளது ஸந்நிதியில் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் மணலி சின்னையா முதலியாருக்கு நெடுநாளாகவே இருந்துவந்தது. தல யாத்திரையில், அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று அவர் எண்ணினார். திருவாவடு துறைக்கு வந்தவுடன் அவர் தம் மனைவியரோடு தங்குதற்குரிய உடவசதி முதலியன மடத்து அதிகாரிகளாற் செய்து கொடுக்கப்பட்டன. தலைவருடைய கட்டளைக்கடங்கி எல்லாக் காரியங்களும் முறையாக நடைபெற்று வருவதையும் சிவபக்தியும் கல்வி மணமும் அத்தலத்தில் நிறைந்து இருப்பதையும் அறிந்த முதலியார், 'இதுகாறும் இத்தகைய அரிய இடத்திற்கு வந்திலமே!' என்று இரங்கினார். விரைவிலே ஆதீனத் தலைவராகிய பெரியாரைத் தரிசிக்கவேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஓங்கி நின்றது. "எப்பொழுது தலைவர்களைத் தரிசிக்கலாம்?" என்று விசாரித்த பொழுது, "இப்பொழுது பூஜா காலம். இப்போதே தரிசிக்கலாம். அல்லது பின்னால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம்" என்று அவர் கேள்வியுற்றார்.
முதலியார் பூஜா காலத்தில் தாம் மட்டும் சென்று காணிக்கையோடு தரிசனம் செய்துகொண்டார். அப்பால் மாலையில் தம்முடைய மனைவியரோடு வருவதாகவும் அதற்குரிய ஏற்பாடு செய்யும்படியும் மடத்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். "மாலையில் ஸந்நிதானம் தனியாக இருந்தால் நலமாக இருக்கும். வேறு ஆடவர்கள் ஒருவரும் உடன் இருக்க வேண்டாம். ஆடவர்கள் உள்ள இடத்திற்கு என்னுடன் வந்திருக்கும் ஸ்திரீகள் வருவதில்லை. இதைமட்டும் உசிதம்போல் ஸந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். இவ் விஷயம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவிக்கப் பட்டது. "அப்படியே செய்யலாம். ஆனாலும் நம்மோடு ஒரு குமரன் மாத்திரம் இருப்பான்" என்று அவர் சொல்லி அனுப்பினார்.
கேட்ட முதலியாருக்கு ஒன்றும் தோற்றவில்லை; 'ஒருவரும் இருக்கக் கூடாதென்று நாம் விண்ணப்பம் செய்துகொண்டிருக்க இவர்கள் இப்படிச் சொல்லியனுப்பி இருக்கிறார்களே; மடாதிபதியவர்களுக்கு லௌகிகம் தெரியாதுபோல் இருக்கிறது. இவர்கள் எவ்வளவோ சிறந்த அறிவுடையவர்களென்று கேள்வியுற்றிருந்தோம். இப்படி விடையனுப்பி யிருக்கிறார்களே. இனி என்ன செய்யலாம்?' என்று யோசித்தார்.'சரி, இராத்திரியும் நாம் மாத்திரம் தரிசனம் செய்து கொண்டு வருவோம். நாளைக்கு இந்த ஊரை விட்டே புறப்பட்டுப் போய்விடுவோம்' என்று அடுத்தபடி நினைத்தார். 'இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்பெரியாருடைய தரிசனம் கிடையாமற் போனால் அவர்கள் வருந்துவார்கள். நாமும் அவர்களோடு வருவதாகச் சொல்லியனுப்பி விட்டோம். தெய்வ ஸந்நிதானத்திலும் ஆசாரிய ஸந்நி தானத்திலும் மரியாதை, உபசாரம், சம்பிரதாயம் முதலியவற்றைப் பார்க்கக்கூடாது. இந்தமுறை வந்துவிட்டோம். தரிசனம் செய்து கொண்டு போவோம். அப்பால் வருவதை நிறுத்திக் கொள்வோம்' என்று ஒருவகையாக நிச்சயம் செய்து கொண்டார்.
மாலையில் விளக்கு வைத்தபிறகு முதலியார் தம்முடைய மனைவியர்களை அழைத்துக்கொண்டு பல வகையான காணிக்கைப் பொருள்களோடு தேசிகரைத் தரிசிக்கச்சென்றார். அவர்கள் செல்லும்போது யாரும் வழியிலே இராதபடி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆதீனத் தலைவர் ஒடுக்கத்தில் இருப்பதையறிந்து அங்கே முதலியார் சென்றார். ஒடுக்கமென்பது மடாலயத்துத் தலைவர்கள் தனியே இருக்கும் இடம். அங்கே சென்றதும் முதலியார் குறிப்பிட்ட அந்த 'ஒரு குமரன்' எங்கே உள்ளான் என்பதைத்தான் முதலிலே கவனித்தார். பழுத்த பழம்போல ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தாரேயொழிய வேறு யாரையும் காணவில்லை. முதலியாருக்குச் சிறிது சந்தோஷம் உண்டாயிற்று; 'நம்முடைய விண்ணப்பத்தை இவர்கள் அங்கீகரித்துக் கொண்டார்கள்' என்று கருதினார். அப்பால் அவர் தேசிகருக்கு வந்தனம் செய்தார்; அவருக்குப்பின் அவருடைய மனைவியர் ஒருவர்பின் இருவராக வணங்கினர். வணங்கும்போது தத்தம் கையிற் கொணர்ந்திருந்த ரூபாய்களையும் பொன்னாலாகிய பல பண்டங்களையும் காணிக்கையாக வைத்தனர்.
தேசிகர் முருகக் கடவுளிடத்தில் பேரன்புடையவரென்பதை முதலியார் அறிந்தவராதலின் 'ஒருகுமரன் மாத்திரம் இருப்பான்' என்பதைத் தமக்கு முருகக் கடவுள் எப்போதும் துணையாக இருப்பாரென்ற கருத்தோடு சொல்லியிருக்கக் கூடுமென்றெண்ணி மகிழ்ந்தார். அப்பால், சிறிது நேரம் சல்லாபம் செய்திருந்து பின்பு, "இவர்களை விட்டு விட்டு வருகிறேன்" என்று தேசிகரிடம் முதலியார் விடைபெற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
மடத்திற்கு வரும் சைவச் செல்வர்களில் ஆண்பாலாருக்கு விபூதிப்பை பீதாம்பரம் தாம்பூலம் முதலியனவும் பெண்மணிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாம்பூலமென்பனவும் அளிப்பது வழக்கம். முதலியார் விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கியபோது தேசிகர், "சிறிது நேரம் இருக்கவேண்டும்" என்று கூறி விட்டு, "அடே குமரா!" என்று அழைத்தார்.
முதலியாருக்கு உடனே திடுக்கிட்டது. "ஒரு வரும் இங்கே இல்லையென்றல்லவா நினைத்தோம்? இவர்கள் யாரையோ கூப்பிடுகிறார்களே?" என்று மயங்கினார். அப்போது அருகில் இருந்த ஓர் அறையிலிருந்து 'அடியேன்' என்ற சப்தம் வந்தது. "சீக்கிரம் வா" என்று ஆதீனத்தலைவர் கட்டளை யிட்டார். 'அடியேன், அடியேன்' என்ற சப்தம் மீட்டும் கேட்டது.
இவர்களை யாரையோ கூப்பிடுகிறார்கள்; நம்முடைய விஷயந்தெரிந்த அவன் வருவதற்கு யோசிக்கிறான். இவர்கள் எதற்காக மறுபடியும் வற்புறுத்திக் கூப்பிடவேண்டும்?' என்று முதலியார் மனத்துக்குள் எண்ணினார். ஒடுக்கத்திலிருந்து அந்த அறைக்குள் போவதற்கு ஒரு கதவுநிலை இருந்தது. அவ்வறையிலிருந்து ஓர் உருவம் மெல்ல வேளிப்பட்டது. அவ்வுருவத்தை அவர் கூர்ந்து கவனித்தார். வந்தவன் ஒரு தள்ளாத கிழவன்; தொண்ணூறு பிராயத்துக்கு மேற்பட்டவன். அவன் உள்ளிருந்து கையிலே எதையோ எடுத்து வந்தான். தள்ளாடித் தள்ளாடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு அவன் வருவதற்கு நெடு நேரமாயிற்று. தான் வருவதைப் புலப்படுத்தவே, "அடியேன், அடியேன்" என்று அவன் கூறினான்.
அவன் ஒரு காலைத் தூக்கி நிலையைத் தாண்ட முயன்றபோது ' எங்கே கீழே விழுந்து விடுவானோ' என்ற பயம் முதலியாருக்கு வந்துவிட்டது. அந்தக் கிழவன் நிலையைத் தாண்டி வருவதைவிடத் தன் கையிலுள்ள பொருள்களைக் கீழே வைத்துவிடுவதே நல்லதென்றெண்ணி உள்ளிருந்தபடியே கையிலே கொண்டு வந்த தாம்பூலக் கொப்பரையை நிலைக்கு வெளியிலே வைத்தான். அவனை முதலியார் ஏற இறங்கப் பார்த்தார்.
அவருக்கு உண்டான ஆ்சரியம் அளவிறந்தது. அவருக்கு இருந்த கவலையெல்லாம் அடியோடு நீங்கி விட்டது. " அடியேனே எடுத்துவருகிறேன்" என்று சொல்லி முதலியார் எழுந்துபோய் நிலைக்கு வெளியில் வைக்கப்பட்ட பாத்திரத்தை எடுத்துவந்து தலைவர் முன் வைத்தார்.
" தாங்கள் சிரமப்படவேண்டாம். அவனே கொண்டு வருவான்" என்று தேசிகர் சொன்னார். அவன் பின்னும் சில பாத்திரங்களைக் கொண்டு வந்தான். அவனுடைய போக்கிலே விட்டுவிட்டால் அவன் கதவு நிலையைத்தாண்டி வருவதற்குள் பொழுது
விடிந்து விடுமென்றெண்ணிய முதலியார் அவற்றைத் தாமே எடுத்துவந்து தலைவர்முன் வைத்துவிட்டார்.
அப்பால் முதலியாருக்கு விபூதிப்பையும் உயர்ந்த பீதாம்பரங்களும் தாம்பூலமும் அவருடைய மனைவிமார்களுக்குத் தாம்பூலம் மஞ்சள் குங்குமம் முதலியனவும் தேசிகரால் வழங்கப்பட்டன.
முதலியார்," ஸந்நிதானத்தில் ஒரு குமரன் உடனிருப்பானென்று உத்தரவானது இந்தக் கிழவனைத்தானா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.
தேசிகர், "ஆமாம், இவன் பெயர் குமரனென்பது. இவன் நம்மைக்காட்டிலும் முதுமையுடையவன். நாம் இவனைத்தான் உடன் வைத்துக்கொள்வது வழக்கம். யாரேனும் தங்களைப்போல் வந்துவிட்டால் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்யமுடியாது. ஆனாலும் மிகவும் அனுகூலமானவன். இவன் மெல்லச் செய்யச் செய்ய நாம் வந்தவர்களோடு சல்லாபம் செய்ய அதிக நேரம் வாய்க்கின்றது" என்று கூறிப் புன்னகை புரிந்தார்.
" அடியேன் வேறு யாரேனும் ஆடவன் இருப்பானென்றெண்ணிக் கவலையுற்றேன். அப்படிக் கவலை யடைந்தது அபசாரமென்று இப்பொழுது தோன்றி
விட்டது. ஸநிநிதானத்தின் பரிபூர்ணமான கிருபையை எப்பொழுதும் எதிர்பார்த்து நிற்கிறேன்" என்று முதலியார் சொல்லி மனமுருகிப் பாராட்டிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
அந்தக் குமரனாகிய கிழவன் அவர்கள் பேசிய வார்த்தைகளில் அரையுங் குறையுமான சில காதில் விழக் கேட்டு " நம்மைப் பற்றியும் இவர்கள் பேசுகிறார்கள்!" என்று சந்தோஷ மடைந்தான்.
-----------------------------------------------------------
This file was last updated on 1 January 2013.
Feel free to send corrections to the webmaster.